pm logo

எம். ஆர். ஸ்ரீனிவாஸய்யங்கார் எழுதிய
உருக்குமணி கலியாணக்கும்மி


urukkumaNi kalyANak kummi
by M.R. srinivAca aiyangkAr
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
We thank Dr. Meenakshi Balaganesh, Bangalore, India for her assistance in the preparation of the soft
copy of this work for publication
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

எம். ஆர். ஸ்ரீனிவாஸய்யங்கார் எழுதிய
உருக்குமணி கலியாணக்கும்மி

Source:
உருக்குமணி கலியாணக்கும்மி.
இஃது பாடசாலைகளிற் கற்கும் இந்துவாலிபர்கள்
மகாநவமி காலத்தில் போடுற கோலாட்டத்திற்கும்
இந்துப்பெண்கள் விவாகம் ருதுசாந்தி முதலிய காலங்களில்
கும்மியடிப்பதற்கும் பல இராகங்களிலும் இசைத்துச்சொல்லத் தக்கதாய்
முதலிலும் கடையிலும் பிராஸங்களுடையதாய்
திருநெல்வேலி ஜில்லா ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா மங்கலம்
ஆந்திர திராவிட, ஸம்ஸ்கிருத வித்வான்
மகாஸ்ரீ இராயலுவய்யங்காரவர்கள் குமாரரும்
தற்காலத்தில் கோயம்புத்தூரில்< மிஸ்டர் ஸ்டேன்ஸ் துரையவர்கள்
பாடசாலை யுபாத்தியாயருமாகிய
எம். ஆர். ஸ்ரீனிவாஸய்யங்காரால் இயற்றப்பட்டது.
சென்னை : கலாரத்நாகர அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது
காப்பிரைட் ரிஜிஸ்டர் செய்யப்பட்டது
1896
----------------------------------

‘உருவுகண் டெள்ளாமை வேண்டுமுருள் பெருந்தேர்க்
கச்சாணி யன்னா ருடைத்து.’

ஸ்ரீ
ஸ்ரீமதேராமாநுஜாயநம:

முகவுரை.

ஸ்ரீ கண்ணபிரான் ருக்மணீதேவியை மணம் புரிந்த சரித்திரம், வடமொழியிலும் தென்மொழியிலும் செய்யுளாக முன்னோராற் செய்யப்பட்டிருப்பது வித்வான்கள் மாத்திரம் அறியக்கூடியதாயிருத்தல் பற்றி வித்வான்களும் மற்றவரும் கேட்டானந்திக்கும் படி முதலிலும் கடையிலும் பிராஸங்களுடையதாயும், பல இராகங்களிலும் இசைத்துக் கும்மி கோலாட்டங்களுக்குச் சொல்லக் கூடியதாயும், பொருள் எளிதில் விளங்கும்படி செந்தமிழிலேயே இக்கும்மி செய்யப்பட்டுளது. இதைச் சகல ரஸிக ஜனங்களுங் கண்டு களிகூர்வதால் யானியற்ற முயன்றிருக்கும் வேறு சில நூல்களையும் பிரசுரிக்க வெனக்கு மனவூக்க முண்டாக்குவார்களென்று நம்புகின்றேன்.

1896 பிப்பிரவரி 25       ம. ரா.ஸ்ரீ.
-------------------------

உருக்குமணி கலியாணக்கும்மி.
ஸ்ரீ
ஸ்ரீமதேராமாநுஜாயநம:

தாரணியும் ருக்மணியின் சரித்திரம்சொலத்தானே
தாரணியிற்சேனையர் கோன் - சரணம் துதிப்பேனே.       (1)

சதுர்முகனார்தேவியரே - சரஸ்வதியேதாயே
மதுரமிகும் அமிர்தம் நிகர் - வாக்கருள்வாய் நீயே.       (2)

கற்றவர்கள் முன் சிறிதும் - கல்லாதவர் சொல்லும்
குற்றமுள்ள பாடல்களும் - குணமெனவேசெல்லும்,       (3)

ஆதலினாற்கலைகளெல்லாம் - அறிந்த பெரியோரே
பேதைமையால் நான் செய்திடும் - பிழைகள் பொறுப்பீரே.       (4)

ஆயிரமாம்பணங்களொளிர் - அனந்தன் மீது படுத்தான்
ஆயர்பாடி தனிலுதித்தே - அனைவர்க்குமருள் கொடுத்தான்.       (5)

அங்கவனை மணம்புரிய - அவனிதனிலுதித்துச்
செங்கமலை வளர்ந்ததேசச் - சிறப்புகளை மதித்து.       (6)

சொல்லலரி தானாலும் – சொல்லுவே னிப்போதே
முல்லை மலரணிந்திலங்கும் – மொய்குழ லேமாதே,       (7)

தேன்மலர்களினிலிருந்தே – திரள்நதி போற்பாயும்
மான்மதத்தால் வழுக்கிமலை - மந்திகள் கீழ்ச்சாயும்       (8)

கமகமவென் றேபலவின் - கனியின் மணம் அடிக்கும்
குமுகுமென்றவாசனையால் - குரங்குகளும் நடிக்கும்.       (9)

தென்னமரத்திளநீரைத் - திண்கமுகம் தாங்கும்
அன்னதன் குலை தாங்குவதற் - கருங்கத லியோங்கும்.       (10)

பால் சொரியுமெருமைவிழப் - பசுங்கரும்புகளொடியும்
கால்வாய்கள் வழிவயலில் - கரும்பிரசம் வடியும்.       (11)

ஆலயிட்ட கரும்பிரசம் - ஆறுகளாயோடும்
வாலைப்பெண்கள் கூந்தல்கண்டு – மயில்களெங் குமாடும்.       (12)

அணியான தாமரையில் - அன்னங்கள் துயில் கூரும்
தணிவில்லாத கழனிகளில் - சங்கினங்கள் ஊரும்.       (13)

இன்னும்பலவளங்கள் பெற்றே - இலக்குமியாள் வாசம்
என்னும் மகிமை பெறும் விதர்ப்பம் - என்னுமொருதேசம்.       (14)

அந்த நாட்டிற்குண்டினமென் - றணிநகரொளிவீசும்
இந்திரன்றன் நகருமதற் – கிணையென நாக்கூசும்.       (15)

மாரிதரும் வானம்வரை - மாளிகைகள் ஓங்கும்
சூரியன்றன் பரியவற்றிற் - சுகமுடனே தூங்கும்.       (16)

மேடைமீது பந்தடிக்கும் - மெல்லியலார் தாமே
ஓடுமதியைப் பந்தென்றுற – வொளித்தது வும்போமே.       (17)

சந்த்ரகாந்தக் கற்களினால் – தளவரி சைகூடும்
இந்துகிரணம் அதிலுறவே - இனிய ஜலம்ஓடும்.       (18)

வேதியர்கள் வீதிகளில் – வேதவொ லிசேரும்
நாதர்களாம் மன்னர்தெருவில் - நாணொலியே சாரும்.       (19)

வணிகர்குல திலகர்வளர் – மனைகளி லேயெங்கும்
பணிகளுடன் மணிகள்தனம் - பலவிடங்களில் தங்கும்.       (20)

க்ஷேத்திரங்கள் உழுதுநன்றாய்ச் - செந்நெல்பயிர் செய்யும்
சூத்திரர்தங் குலங்களுமத் – தொன்னக ரிலுய்யும்.       (21)

அந்தவள நன்னகரை யரசுசெய்யும் ராஜன்
சுந்தரமா யெல்லார்க்கும் - சுமுகன காம்போஜன்,       (22)

பெருமையுடன் வீமன்எனும் – பெயரதனைப் பூண்டான்
உரிமையுடன் கடல்சூழும் – உலகமதை யாண்டான்.       (23)

சினப்புலியும் பசுவுமொன்றா சேர்ந்து நீரையுண்ண
கனத்தயானை சிங்கமுடன் – கைச்சரசம் பண்ண.       (24)

சீறிவரும் பகைவர்களைச் - செருக்களத்தில் வென்றான்
ஆறிலொரு கடமைகொண்டே - யரசுசெய்து நின்றான்.       (25)

இந்தவிதம் அரசுபுரிந்- தினிதிருக் கும்போது
அந்தராஜன் நாயகியாள் - அரம்பை நிகர்மாது.       (26)

மங்களமாய் ஐவர்களாம் - மைந்தர்களைப் பெற்றாள்
அங்கவர்க்கெல்லாம் பிறகா - றாம்கருப்பமுற்றாள்.       (27)

செங்கமலை வயிற்றினுக்குள் - சேர்ந்திருத்தலாலே
பொங்கிமிகுந்தெளிய விடை- பூரித்ததுமேலே.       (28)

வனசமலர் மொட்டுகளில் - வண்டிருப்பதென்ன
கனகமணிமுலை முகத்தில் - கரிய நிறம் துன்ன.       (29)

பதுமினியாள் தேகமெலாம் - பசியநரம் போட
விதம்விதமா முணவுகளில் - மிகவுருசிகூட       (30)

மும்மூன்று மாசங்கள் - முழுதுநிறைவுற்றாள்
இம்மூன்றுலோகம்புகழ் - ஏந்திழையைப் பெற்றாள்.       (31)

கண்மணிநேர் பெண்மணியைக் கைகளிலேயெடுத்தார்
திண்மையுடன்தாதியர்கள் சேனையுள்ளே கொடுத்தார்       (32)

பதினோராம் நாளதனில் - பலசடங்குகள் செய்து
விதிமுறையேயந்தணர்க்கு - மிகுகனகம் பெய்து.       (33)

மங்களமாயெல்லாரும் - மனமகிழ்ந்துவந்தார்
நங்கை தனக்குருக்மணியெனும் - நாமமதைத் தந்தார்.       (34)

சுக்லபக்ஷசந்திரன் போல் தோகையவள்வளர
விக்ரமம் சேர்மன்னனுக்கு - மகமகிழ்ச்சிகள் கிளர       (35)

பவளவிதழ் வாய் திறந்தே - பைந்தொடியாள் பேசும்
அவிர்மழலைச் சொற்கேட்டே யருங்கிளிகள் கூசும்.       (36)

அழகிய வள்தாமரைமெல் லடிபெயர்த்துவைக்கும்
அழகைநோக்கி மனம் வெருண்டே - யனங்களும்திகைக்கும்       (37)

தன்னைநிகர்பெண்களுடன் சரசமாகக்கூடி
மின்னைநிகர் நுண்ணிடையாள் - மிக மகிழ்ந்தேயாடி.       (38)

செம்பொன் தகடுகளாலே - சிறுவீடுகள் அமைத்துப்
பைம்பொன்மயப்பாத்திரங்களில் - பாலடிசில் மைத்து.       (39)

தங்கமணிப்பாவைகட்குச் – சாதமெடுத்தூட்டி
மங்கையர்களுடனாடி - மகிழ்வள் பெருமாட்டி,       (40)

சிங்காரவனந்தனிலே - சேர்ந்துவூசல்மீது
அங்கனைமாருடனேறி - ஆடுவளம்மாது.       (41)

பரிமளங்கள் வீசுகிற - பலமலர்கள் கொய்வாள்
அரியகருங்கூந்தலுக்குள் - அம்மலர்கள் பெய்வாள்.       (42)

இன்னவகையிளமைதனை - இந்திரையும்கழிக்க
கன்னியவட்கெவ்வனமாம் - காலமது செழிக்க       (43)

செறிகுழலும் கருமுகிலைச் – சீயெனவே யிகழும்
சிறுநுதலும் அஷ்டமியின் – திங்களெனத் திகழும்       (44)

கரும்புருவம் மன்மதன்கைக் - கரும்புருவமாகும்.
திருந்துமெழில் விழியிரண்டும் – செவிவரைக் குமேகும்.       (45)

நாசிநறும் செண்பகத்தின் - நன்மலர் போல்மின்னும்
ஊசலினை யுவமையாக - வொளிர்செவிகள் துன்னும்.       (46)

வித்துருமம் அவளிதழ்க்கு மிகுதியுமே சொந்தம்
முத்துகளை முலயரும்பை முழுதுமொக் கும்தந்தம்,       (47)

சங்கதனைக் கழுத்தெனவே - சாற்றுவதொவ்வாது
செங்கரும்பைத் தோட்கிணையாய் - செப்புவர் பார்மீது.       (48)

மெல்விரல்கள் காந்தண்மலர் - மேன்மைதனைப் பொருந்தும்
நல்விரலின் நகங்கிளியின் – நாசியெனத் திருந்தும்.       (49)

எலுமிச்சம் பழமெனவே - இளமுலைகள் பருக்கும்
இலையுண்டென் றையமுற - எளியவிடை இருக்கும்.       (50)

தொடையதனைச் செவ்வாழைத் - தூண்எனலாம் கண்டு
வடிவமிகு முழந்தாட்கு – மயங்குவது நண்டு.       (51)

அனிச்சமலர் மேன்மையினை - அவளால்தான்பெறவும்
பனிச்சமதி பத்தெனவே பதநகங்களுறவும்,       (52)

அன்னங்களின் கூட்டமெல்லாம் - அவள் நடைக்குத்தோற்கும்
இன்னமிர்தத்தின் சுவையை - யெழில்மொழிகள் ஏற்கும்,       (53)

சுந்தரமாம் பார்வையினால் - தோழியரும் மயங்க
இந்தவிதம் யவ்வனத்தில் - எந்திழையாளியங்க,       (54)

தந்தைசமு கந்தனிலே - சார்ந்தவர்களாலே
நந்தன்மைந்தன் வடிவழகை - நன்குணர்ந்தாள் மேலே.       (55)

கன்னிகைக்குக் கண்ணன் மீது - காதல்மிக மீற
கன்னல்விற் காமன்கணைகள் – கன்னிகை மேற்சீற.       (56)

காதல்மிகமிஞ்சியந்தக் - கன்னிகையுந்துள்ள
மாதின்மணம் நடத்துதற்கு - மன்னன் மனங்கொள்ள.       (57)

சகலகலையு ணர்ந்தவரைச் - சபைக்குவரவிட்டான்
மகட்குமணம் செயும்நினைவை - மன்னன் வெளியிட்டான்       (58)

சதுர்மறைகள் சாஸ்திரங்கள் - தமையறிவீர் வாரீர்
வதுவைசெய்யும் பருவமதென் - மகளடைந்தாள் பாரீர்.       (59)

தாரணியில் தேசமெலாம் - சஞ்சரித்தோர் நீரே
சீரணியும் ஒருவரனைத் தெரிந்து சொல்லுவீரே       (60)

மன்னனிவ்வா றுரைக்கலுமே - மாட்சிமைக்கேயுரியோர்
மன்னவனுக் கின்னவிதம் - வழுத்திரனப்பெரியோர்.       (61)

எங்கோவே கேட்டருளும் - எத்திசையும் சேர்ந்தோம்
அங்கங்கார சாட்சிசெய்பல் - லரசரிடம்சார்ந்தோம்.       (62)

கண்ணுற்ற வரசரில்நின் - கன்னிக்கேற்கும் நாதன்
கண்ணன் செழுந்துவாரகையைக் - காத்தருளும் நீதன்.       (63)

பாதகியாம் பூதனையின் - பாலொடுயிர் குடித்தான்
மீது வரும் சகடமதை மெல்லடியாற்பொடித்தான்       (64)

ஜகம்புகழ மருதமரம்- தாரணியிற்சாய்த்தான்
மகிமைபெறக்கொடுந்திருணா - வர்த்ததனுயிர் மாய்த்தான்       (65)

பாதம்ஒன்று தாக்கியராப் - படத்தினிலேநடித்தான்
மா…….. புவியில் விழ - மார்பினிலேயிடித்தான்.       (66)

கையிலொரு குன்றேந்தி கல்மழையைத்தடுத்தான்
மெய்யன்ப ரானவர்க்கு மேன்மைதனைக்கொடுத்தான்.       (67)

நீராரும் மேகமதை- நிகருமுடல்வண்ணன்
சீராரும்தாமரை போல் - திகழுமிருகண்ணன்.       (68)

பொன்மயமாம் உடையணியந்தே பொலிவு பெறும் மெய்யன்
சின்மயமாம் ஞானியரும் -தேர்ந்தறியா வையன்.       (69)

மங்கலம்ராயலுஸ்ரீநி - வாஸன் தமிழ்க்குவந்தான்
திங்கள் வழியதுகுலத்தில் - திலகனெனவந்தான்       (70)

தேவகிவசு தேவருக்குச் சிறுபுதல்வன் ஆகி
கோவலர்பாடியில் நந்த கோபன்மனைக்கேகி.       (71)

வளர்ந்ததி னாலுயர்ந்தராஜ - வம்சத்தினானவனே
கிளர்ந்தொளிர் வெண்குடைகவித்தாய் கேட்டருள்மன்னவனே       (72)

அன்னவற்குநின்மகளை - யளித்திடுதல் நன்றாம்
அன்னியராம்மன்னவர்கட் – களித்திடல் நன்றன்றாம்       (73)

இன்னபடி நற்சபையோர் - எடுத்துரைத்தார் மெள்ள
மன்னனுமவ் வாறியற்ற - மனம் சிறிது கொள்ள       (74)

பூமன்னன்ற னதுமுதற் - புதல்வன் ருக்மியென்று
நாமமுறும்மா கொடியன் - நவின்றனேநின்று,       (75)

ஆமாமாம்நன் குரைத்தீர் – அவையோரே நீங்கள்
மாமகிமை பெற்றவர்காள் - மனைகளுக்கே போங்கள்.       (76)

மாடுமேய்க்கு மிடையனுக்கு - மன்னர்பெண் தருவாரோ
நாடுகாக்கு மன்னரெல்லாம் - நம்மையி கழாரோ.       (77)

நற்றாய்போல் பால்கொடுத்த - நங்கையுயிர் குடித்து
சற்றும் வலியில்லாத – சகடமதை யொடித்து,       (78)

மருதமரம் சாய்த்ததுவும் – மாடுகள் மேய்த்ததுவும்
கருதாமல் மாமனுயிர் – கவர்ந்திடர் செய்ததுவும்,       (79)

ஆயர்பெண்கள் வீட்டிலில்லா – வச்சமயம் கண்டு
---------------- - -------------- வாரித்திருடியண்டு,       (80)

வயிற்றைவளர்த்துத் திரிந்ததுவும் வனங்களிற் சேர்ந்ததுவும்
கயிற்றினிலே கட்டுப்பட்டுக் கால்கைகள் சோர்ந்ததுவும்       (81)

வையகத்தில் வீரர் செய்யும் - வன்றொழில்கள் தாமோ
ஐயனுடனிதை நீங்கள் – அறிவிக்க வுமாமோ,       (82)

சேதிநாட்டையாளுகின்ற - சிசுபா லபூபன்
மேதினியில் அரசர்க்கெல்லாம் - மிஞ்சும் பிரதாபன்,       (83)

ஆதலினால் ருக்மணியை – ஆயற்குத் தரலீனம்
சேதியதிப திக்குதவச் – சிந்திப்பதே ஞானம்.       (84)

இன்னவிதம் ருக்மியுதைத் - தெழுந்து மிகக்குதித்தான்
அன்னவன் சொல்மிஞ்சவஞ்சி - யரசனும் சம்மதித்தான்.       (85)

அங்கிருந்த மேலோர்கள் - அரசன் விடைபெற்றார்
மங்கைக்காக மனதிரங்கி மனைகளிலேயுற்றார்.       (86)

இந்தவிதம் நிச்சயித்தே - இறைவனு மக்காலை
அந்தமுறும் சிசுபாலற் – கனுப்பினன் மணவோலை.       (87)

நகரமதை யலங்கரிக்க – நாதனுரை கொடுத்தார்
சகலரும் அவ்வாறு செய்யத் – தகுமுயற்சிக ளெடுத்தார்.       (88)

பனிநீரால் நிலமெழுகிப் பந்தல்களை யிடுவார்
கனிவாழைத் தூண்களுடன் - கமுகுகளை நடுவார்,       (89)

முத்துகளால் ஜாலர்களை – முன்முகப் பிற்கூட்டி
சுத்தமான மணிமகர தோரணங்கள் நாட்டி       (90)

பவளக்கால் மீதினில்வெண் பட்டுகளைச் சேர்ப்பார்
அவைகளை வெள்ளன்னமென அனைவர்களும் பார்ப்பார்.       (91)

அகிற்புகையின் படலமெலாம் அண்டமதை மூடும்
முகிற்குலமென் றையமுற்று – முன்மயில் களாடும்.       (92)

கல்யாணப் பந்தலணி கணக்கிடவும் போமோ
துல்யமாகச் சொல்லுதற்குத் – துணிவது வும்நாமோ,       (93)

மரகதநல் மணித்தூண்கள் வரிசையாக நாட்டி
விரிகதிர்க்கோமேதகத்து - விட்டங்களைப்பூட்டி,       (94)

குருவிந்த மணிகளினால் கொடுங்கை தனையிணைத்து
பொருவரு வைடூரியத்தால் போதிகை ………………..       (95)

இந்தரநீல மணிகளினால் – எழில்விதா னமாக்கி
விந்தைபத்ம ராகமணி - விளக்குகளைத் தூக்கி.       (96)

சந்தமாக வெங்குமுத்து சரங்கள்பல தொங்க
பந்தல் ……….. டத்தும் பதுமைகளும் தங்க       (97)

தளமதனைப் பலநிறம்சேர் சரிகைப்பட்டால் மறைத்தார்
வளமையாகக் கலியாண - வஸ்துக்களை நிறைத்தார்.       (98)

இவ்விதமாய்க்கலியாணம் - எத்தனம் செய்சேதி
அவ்வுருக்கு மணியிடத்தில் – அறிக்கையிட் டாள்தாதி,       (99)

சேதிபதி தனையடையும் – சேதிகேட்டுத் துடித்தாள்
மாதுமிக மனமுருகி - மாதருடன் நொடித்தாள்.       (100)

சகிமாரேயென்ன செய்வேன் – தந்தைசெய்த நியாயம்
மகியிலெவர் எனைக்காக்க வழுத்துவாருபாயம்.       (101)

மடமைமிகும் ருக்மியுரைக்கு - மன்னவனும் தணிந்தான்
கொடியன் சிசுபாலற் கெனைக் - கொடுத்திடவும் துணிந்தான்       (102)

மாயனையே நாதனென - மனதிலெண்ணியிருந்தேன்
தீயவனா முருக்மியாலிச் - சீவனையும் பொருந்தேன்.       (103)

அகமகிழ்ந்தே யிருந்ததெல்லாம் – அழித்தா னேபாவி
சுகஞ்சிறிது மில்லாமல் - துடிக்குதே என்னாவி.       (104)

உருக்குமணி யிவ்வகையா – யுருகிமிக வேங்கி
இருக்குமந்த வேளையிலே - யிசைத்தனளோர் பாங்கி.       (105)

மாதரசே கண்மணியே - மனத்துயர் கொள்ளாதே
மாதவனை யடையும்வகை – வழுத்துவே னிப்போதே       (106)

இப்புரத்திலோர் மறையோன் எவரிலுமே மிக்கோன்
ஒப்பிலாத குணங்களினால் - உயர்வுபெறும் தக்கோன்.       (107)

ஆகமங்கள் சாஸ்திரங்கள் - அறையும் வழிநின்றோன்
மோகமிகு மிந்திரியங்கள் – முழுவதுமே வென்றோன்,       (108)

உங்கள் குலகுருவான – வுயர்மறை யோன்புத்ரன்
இங்கிதமாய் ராஜதயை – இனிதுபெறும் பாத்ரன்,       (109)

அன்னவனைக் கண்ணனிடம் – அனுப்பி விடில்மானே
அன்யோகமாய் நொடிப்பொழுதில் - அழைத்து வருவானே.       (110)

செறிகுழலாள் ருக்மணிக்குத் – தெரிவித்தா ளிவ்வணமே
மறையவனைப் போயழைத்து – வந்தாளக் கணமே.       (111)

வந்தவந்த வந்தணனை - மங்கையருச்சித்தாள்
சுந்தரம் சேராசனத்தைத் - தோகைசமர்ப்பித்தாள்       (112)

மறையவனும் வீற்றிருக்க – மங்கைய வளடுத்தாள்
குறைகளெல்லா மவனுடனே - கூறுதற்குத்தொடுத்தாள்,       (113)

வேதியனேயான் செய்திடும் - விண்ணப்பம்கேளாய்
மாதவனே நாதனென - மகிழ்ந்தேன் வெகுநாளாய்.       (114)

தாதையுமிவ் வுருக்மியெனும் - தமையன் மனம்போலே
சேதிபதிக் கெனையுதவச் – சிந்தித்த தனாலே.       (115)

முந்திவரும் வெள்ளியன்று - முகூர்த்தம் குறிப்பிட்டான்
தந்தை விவாகத்தினுக்குச் – சகலமும் சரியிட்டான்.       (116)

ஆதலினால்கலியாணம் - ஆவதுவும் திண்ணம்
நாதனாகமுகுந் தனைநான் – நண்ணுவதெவ் வண்ணம்,       (117)

மங்கிலியம் தரிக்குமுன்னே - மலைமகள் தன்கோயில்
செங்கையுற வணங்கிமெள்ளத் - திரும்பும் தருவாயில்.       (118)

ஆர்வமுடன் பாதிவழி - யடைந்திடுமப்போது
கார்வண்ணன் எனைவலுவில் – கவர்ந் திடுதல்சூது.       (119)

கருதியெழில் துவாரகையில் - கண்ணனிடம் செல்லு
சரியான தருணத்தில்யான் - சாற்றினதைச் சொல்லு.       (120)

உன்னருளால் மாயனுமிவ் - வூரினிலேவந்தால்
என்னை வலக்கைபிடித்தே - யின்பமதைத் தந்தால்,       (121)

உன்னையுமோர் தெய்வமென வுளத்தில் வணங்கிவருவேன்
பொன்னையு மணிகளையும் - பூரணமாய்த் தருவேன்.       (122)

திடமுடனே யிவைகளெலாம் - செப்பியவள் முடிக்க
கடவுளர்கோ விலின்மணியும் – கணகண வென்றடிக்க.       (123)

கன்னிகையே பெண்மயிலே - கனத்துயர் கொள்ளாதே
பொன்னகாரந் துவாரகைக்குப் போகிறே னிப்போதே.       (124)

கண்ணனிடம் நின்னழகும் – கவலைகளு முரைப்பேன்
திண்ணமாக நன்மொழிகள் - செப்பிமனங்கரைப்பேன்.       (125)

காதல்கொண்ட வெண்ணமெல்லாம் – கைகூட்டித் தருவேன்
மாதவன்வந் தெடுத்துப்போகும். மார்க்கம் செய்துவருவேன்.       (126)

என்னவுரைத் தந்தணனும் ஏந்திழை யைத்தேற்றி
கன்னிமனங் கொண்டிருந்த - கலக்கமெலா மாற்றி.       (127)

ஏகமனதுள் ளவனாய் - எழுந்தவனும் அன்று
வேகமுடன் புறப்பட்டான் - வீமனகர் நின்று,       (128)

காகமது வலமாகக் – காடையி டம்போக
வேகமுடனே கருடன் – விண்ணி லிடமேக.       (129)

மறையவர்க ளிருவரெதிர் - மகிழ்வுடன் மேவிடவும்
நிறைகுடத்தை யெடுத்தொருபெண் நேரிலெதிர்ப் படவும்.       (130)

சுபசகுனம் பலகண்டே கயவனும் நடந்தான்
அபரிமித மானமலை - யாறுறுவனம் கடந்தான்.       (131)

சுந்தரம்சேர்த் துவாரகையைத் – தூரமதில் கண்டான்
அந்தணன் மெய்பூரித்தே - யானந்தம் கொண்டான்,       (132)

வானம்வரையுயர் கோட்டை - மதிற்சி கரம்தெரியும்
வானவர்கள் நாட்டினிலே – மணியினொ ளிவிரியும்.       (133)

இன்பமிகும் மாளிகைகண் - ணெட்டுமட்டும் தோன்றும்
அன்புடனே பார்த்தவர்கள் – அகலாரெஞ் ஞான்றும்.       (134)

பட்டணத்திற் குள்ளாகப் - பார்ப்பானும் சென்றான்
வட்டமதில் சூழ்ந்தவரண் – மனையினெதிர் நின்றான்.       (135)

மேலரிய காவலுடன் – விளங்கிடுமக் கோயில்
காவலர்கள் கப்பமிடக் காத்திருக்கும் வாயில்.       (136)

வாயிலைக்காப் போரிடம்தன் - வரவதனைச் சொல்ல
மாயனிடம் சென்றவர்கள் - மகிழ்ந்துரைத்தார் மெல்ல.       (137)

அண்ணலுரை பெற்றந்த அந்தண னுட்போக
கண்ணனெதிர் கொண்ட வனைக் - கண்டனன் விரைவாக       (138)

அயர் விலாமல் அர்க்கிய பாத்தியம் - ஆசமனம் அளித்தான்
உயர்மணி சேராசனத்தை - யுதவமனங்களித்தான்.       (139)

வேதியர்தங் குலதிலகா - மிகுமறைகள் கற்றாய்
எதுநினைந் தெளியேன்றன் இல்லமதி லுற்றாய்,       (140)

என்மனைசெய் புண்ணியமோ – யான்முன்செய் புண்ணியமோ
என்முனோர்கள் முன்னாளி லியற்றியபுண் ணியமோ       (141)

இந்தவித முபசாரம் – இறைவனு மேகூற
அந்தணனும் கேட்டுமிக - ஆனந்தம் மீற,       (142)

கருதிவந்த காரியத்தைக் - கண்ணன் செவிகுளிர
பரிதிமுன் தாமரைபோற்கோ - பாலன் முகமொளிர.       (143)

உரைத்திடலும் கண்ணனந்த – வுருக்குமணி யினுருவம்
திருத்தமுட னவளிப்போது - சேர்ந்திருக்கும் பருவம்.       (144)

விவரமாகவு ரையெனவே வேதியன் சொல்வானே
தவளநகைப் பவளவிதழ் - தையலே பொன்மானே.       (145)

தங்கநிறம் பெற்றிருக்கும் - தையலவள் தேகம்
இங்கிதமா யெடுத்துரைக்க – எவர்க்கு நிருவாகம்,       (146)

காதுவரை நீண்டிருக்கும் – கண்மன் மதனம்பு
மாதுளம்பூ வென்றிதழை – வர்ணிப்ப தும்வம்பு.       (147)

வதனமதை மதியெனவே - வருணித்தல் கூடும்
இதமான மொழிகளைக்கேட் டிளங்கிளி களோடும்       (148)

மின்னலையே யொப்பாக – விளங்கியமெல் லிடையாள்
அன்னமெனக் கண்டோர்கள் - அதிசயிக்கும் நடையாள்       (149)

சாதுர்யமாய வள்பேசும் – சரசமான வாக்கியம்
மாதுர்யமாய்க் கேட்டுமன - மகிழ்ந்திடலுன் பாக்கியம்.       (150)

மங்கையுனை மாலையிட – மனதினிலே மோகம்
துங்கமுறக் கொண்டதினால் தொடர்ந்த துனையோகம்       (151)

அன்னவளைச் சிசுபாலற் களித்திடவே சித்தம்
மன்னன்வீமன் கொண்டதினால் - மாதரசி நித்தம்       (152)

மனக்கவலை கொண்டுமிக வாடுவதி னாலே
உனக்கவளைக் கவரும்வகை உரைக்கறேன் கேள்மாலே       (153)

சீர்மைபெறுங் கலியாண தினத்தினி லேமாது
பார்வதியைத் தொழுதுபூசை பண்ணி வரும்போது,       (154)

குதித்தவளைக் கைபற்றிக் கொண்டுதேரிற் செல்வாய்
எதிர்த்துவரும் பகைவர்களை ரணகளத்தில் வெல்வாய்       (155)

இப்படி வேதியனுரைக்க இருதோள் பூரித்தான்
அப்படியே செய்வேனென் றையன்வாக் களித்தான்.       (156)

வேதியர்க்கு விலையுயர்ந்த வெகுமதிகள் கொடுத்தான்
மாதவனும் விடையளித்தே மறையவனை விடுத்தான்.       (157)

பூமிபுகழ் துவாரகையாம் பொன்னகரை விட்டான்
வீமநகர்க் கந்தணனும் விரும்பிப் புறப்பட்டான்.       (158)

இங்கிவ்வித மிருக்கையிலே இளங்குயி லேமானே
நங்கைருக்கு மணிநிலைமை நவின்றிடு வேன்நானே.       (159)

வேதியனை யனுப்பியந்த மெல்லிய லாள்வாட
பாதகன்மன் மதன்கணைகள் – பாவையின் மேல்போட       (160)

வெம்புலிபோல் தென்றல்வந்து மேல்விழவும் துடிப்பாள்
அம்புநிகர் விழியிலிருந் தைங்கலநீர் வடிப்பாள்.       (161)

மாவின்தளிர் தின்றுகுயில் மாங்கிளை மேல்தாவி
பாவையின் பக்கத்தில்வந்து பஞ்சமஸ்வ ரம்கூவி       (162)

திரிவதுகண் டஞ்சியந்தத் – தெரிவை மிகக்கலங்க
கருமுகில்வண் ணன்வடிவம் - கண்ணன் முன்னேயிலங்க,       (163)

சந்த்ரகிரணம் கொடிய – தழலென வேவீசும்
சுந்தரமா மலரணையைத் – தொடவவள் மெய்கூசும்.       (164)

இந்தவிதம் நொந்துமெலிந் – திருக்குமந்த மின்னாள்
பைந்தொடி தோழியினுடனிப் - படிபலசொல் சொன்னாள்.       (165)

தூதுசென்ற வேதியனும் - துவாரகை சேர்ந்தானோ
மாதவனைக் கண்டென்மன - வருத்தமும் சொன்னானோ.       (166)

கண்ணனெனைப் பலவந்தமாய்க் – கவரவெண் ணுவாரோ
அண்ணன் பலராமன்முத – லவர்தடை செய்வாரோ       (167)

தடையிலாம லவர்வரினும் – சமுத்திரத்தைப் போலே
படைகளுடன் வந்திருக்கும் - பகைவர் திரள்மேலே.       (168)

போர்தொடுத்து ஜயிக்காமற் – போவாரே யானால்
சீர்பெறவே யென்னைமணம் செய்யாமற் போனால்.       (169)

என்னசெய்வே னென்றந்த – ஏந்திழை யும்நோக
முன்னிருந்த தோழியர்கள் – மொழிந்தனர் சீராக       (170)

அஞ்சாதே பெண்மயிலே - அன்னமே செந்தேனே
கஞ்சமலர்க் கண்ணனுனைக் கவரவரு வானே.       (171)

பகலவர்முன் பனிபோலப் - பகைவர்திரள் போகும்
மகிழ்வுடனே கண்ணனைநீ மாலையிட லாகும்.       (172)

இந்தவிதம் தோழியர்கள் – இசைத்திடு மப்போது
அந்தணன்றன் வரவதனை யறிந்தன ளேமாது.       (173)

வேதியன்றன் வழியினைக்கண் விழித்த படிநோக்க
மாதவனும் வந்தனனம் - மங்கைதுயர் நீக்க       (174)

வருமறையோன் முகமிருக்கும் மகிழ்ச்சிதனைக் கண்டாள்
அரிவையுடல் பூரித்தே - யானந்தம்கொண்டாள்.       (175)

சந்தோஷம் ஜயமெனவே - சதுர்மறையோன் சொல்லி
வந்தவுடன் சிந்தைமிக – மகிழ்ந்தன ளவ்வல்லி.       (176)

அந்தணற்கு நவமணிசேர் – ஆசனமொன் றளித்தாள்
சந்தரமுகி யானந்த – சமுத்திரத்திற் குளித்தாள்.       (177)

அரியவழி கடந்துவந்த - ஆயாசம் போக
இருபுறமும் வெண்கவரி – யிரட்டினர் நன்றாக       (178)

பனிநீரால்கால்விளக்கிப்- பலமலர்கள் தூவி
இனிமையுட னுபசரித்தே இயம்பின ளத்தேவி.       (179)

தூயவனேகலை வல்லோய் – துவாரகை சென்றாயோ
மாயவானைக் கண்டென்மன – வருத்த முரைத்தாயோ,       (180)

மாதவனும் என்மீதில் – மனதிரங்கி னாரோ
நாதனாக வெனைவரிக்க - நாளை வருவாரோ       (181)

இந்தவிதம் வேதியனை – யேந்திழை வினாவ
அந்தணனும் எடுத்துரைத்தான்ஆநந்தம் மேவ.       (182)

பெண்ணரசே துவாரகையைப் – பிரியமுடன் சேர்ந்தேன்
கண்ணனது கொலுவினிலே – களிப்புடனே சார்ந்தேன்.       (183)

கிளிமொழியே நின்குணங்கள் – கேட்டுமனங் களித்தான்
இளமைபெறு முனைக்கவர்வேன் - என்றுநல்வாக் களித்தான்       (184)

நாளைவந்து பகைவருடன் நடுங்கவம்பு தொடுப்பான்
வாளையொத்த விழியாளே – மாலைதனைக் கொடுப்பான்       (185)

இன்னவிதம் மறையவனும் - இயம்பச் சந்தோஷித்தாள்
பொன்னுடனேமணியுதவிப் போகவிடை யளித்தாள்,       (186)

வன்னமயில் தன்னுடனே மங்கையருமுகந்தார்
கன்னிவிவா கத்தினுக்குக் - காவலர்கள் வந்தார்.       (187)

அங்கமுடன் கொங்கணமும் – அவந்தி மலையாளம்
வங்கமுங் கலிங்கமுதல் – மகராஷ்ட்ரம் சோளம்,       (188)

மாளவம் கோசலம்பாண்டி – மச்சங்கா னாடம்
சாளுவம் கூர்ச்சரத்துடனே – தகுதியார் மராடம்       (189)

சகலதேச ராஜர்களும் - சார்ந்திட வேவீமன்
தகுதியாக மகிழ்வொடுப- சரித்தா னப்பூமன்,       (190)

மேவியநல் லரசர்களும் – விடுதிகளிற் சேர்ந்தார்
காவலருமந் நகரைக் கண்டுகளி கூர்ந்தார்.       (191)

சேதியதி பதியான - சிசுபாலன டைந்தான்
ஈதறிந்த ருக்மியப்போ தெதிர்கொண்டு நடந்தான்.       (192)

கண்டவனை யழைத்துவந்தே - காவலன்றன் மைந்தன்
விண்டொடுநன் மாளிகையில் விடுத்தா னேமந்தன்.       (193)

பலராமன் தன்னுடனே - பலமிகும்யா தவரும்
உலவிர வீமனகர் - உற்றார் மாதவரும்.       (194)

மாமனானவீ மனுமம் – மாதவனெ திர்சென்று
கோமகனை வளர்நகர்க்குள் – கூட்டிவந்தா னன்று.       (195)

கோபாலன் தெருவில்வரக் - கோதையர்கள் கண்டார்
மாபாரத்தனங் கள்விம்ம - மையல்மிகக் கொண்டார்.       (196)

முகமதனைப் பார்த்தவர்கள் முகத்தினையே பார்ப்பார்
நகையதனைக் கண்டவர்கள் நகையினிற்கண் சேர்ப்பார்       (197)

ஆயர்பிரானைப்பார்க்கும் - அவசரத்தினாலே
ஆயிழையா ளொருத்திசிலம் – பணிந்தனள் கைமேலே.       (198)

நீலவிழியிற் றிலகம் - நெற்றியில் மையிட்டாள்
மாலைவந்து காணவொரு மங்கைபுறப் பட்டாள்,       (199)

இடையிற்பாதிச் சேலையுடுத் - திருந்த வொருமாது
வடிவுமிகு குமரியைக் காணவந் தனளப்போது       (200)

பட்டணத்துப் பெண்களெல்லாம் பார்த்து மதிமயங்க
நெட்டுயிர்ப்பு விட்டவர்கள் நின்றுமிகத் தியங்க       (201)

கண்ணன்பல ராமருக்குக் களிப்புமிகப் பொங்க
கண்ணியம்சேர் விடுதியிலக் காவலருந்தங்க       (202)

மறுதினஞ் சூர்யோதயத்தில் மறைகளிலே தேர்ந்தார்
முறைமையாகச் சடங்குகளை முடிக்கவந்து சேர்ந்தார்       (203)

லக்னம் சமீபத்ததென்றி ராஜனுக்கு ரைத்தார்
விக்னம்நீக்கும் ஸ்வாமிபூஜை விதிப்படித் தொடுத்தார்       (204)

கௌரிபூஜை செய்யுமந்தக் காலமும் வந்தடுக்க
காரிகையை யலங்கரிக்கக் கட்டளையுங்கொடுக்க       (205)

பரிமளம்சேர் தைலமதைப் - பாவைதலைக் கிட்டார்
அரிவையர்கள் மஞ்சனநீ – ரங்கனைக் குவிட்டார்.       (206)

விரைகுழலி னீரமதை - மென்றுகி லால்போக்கி
தெரிவையர்க ளகிலதனை சிறுபொடி களாக்கி       (207)

அகிற்பொடியைத் தீயிலிட்டே - யப்புகையைப் பிடித்தார்
முகிற்குலம் போற்கூந்தலையம் - மொய்குழலார் முடித்தார்.       (208)

மங்கைகுழல் முடிச்சினிலே – மல்லிகைப் பூச்சூட்டி
திங்கள்பாதி எனும்நுதலில் - திலகமதைத் தீட்டி       (209)

வரிவிழிக ளிரண்டினிலும் – மையதனை யிட்டார்
அரியவைரத் தோடுகளை – யவள்செவி யிலிட்டார்.       (210)

ஜோதிமணி மூக்குத்திச் - சூரியன் போல்மின்ன
காதினிலே முருகுமுதல் - கலன்கள் பலதுன்ன.       (211)

விலையுயர் நல்லட்டிகையும் -வெண்முத்து மாலை
உலகமெலா மொளிவீசும் – ஒருகனக மாலை.       (212)

பொற்பாவை பாதங்களில் – புதுச்சேரி கொலுசும்
நற்பாத சரங்களிலே - நல்லநல்லதினுசும்.       (213)

நகைகளெல்லாம் பூட்டியந்த – நங்கையருட் சென்றார்
சகலவிதச் சேலைகளைத் - தாங்கொணர்ந்து நின்றார்.       (214)

தாதியவள் சரிகைநிறை – தாட்டுப்பத் திரியெடுக்க
கோதையொருத்தி யதையணிதல் – குணமன்றெனத் தடுக்க.       (215)

சபையலங்கா ரத்தையொரு - தையல்கையில் கொள்ள
அபுரூப மிதுவோவென் - றதையொருத்தி தள்ள.       (216)

பளபளவென் றொளிர்காசிப் பட்டதனை யெடுக்க
அளவிலாத வுவகையுடன் – அங்கனையு முடுக்க.       (217)

தோடாப்பாட்டீல் காப்புத் தோள்வளையுமிலங்க
ஆடுமிடையில் தங்க – வொட்டியாண மதுதுலங்க.       (218)

ரஞ்சனையாய் ஜகமொரட்டி - ரவிக்கைதனைத் தொட்டார்
மஞ்சள்நிற பாசிபந்தும் – மணிவங்கியு மிட்டார்.       (219)

இந்திரையோ சரஸ்வதியோ - இந்திரனிடம் ஆரும்
சுந்தரியோஎனத் துதித்தார் – தோகைய ரெல்லாரும்.       (220)

மாதர்களா யத்தமென - மன்னனிடம் சொல்ல
கோதையர்க்குத் தரவளித்தான் - கோவிலுக்குச் செல்ல.       (221)

இதமானவாத்திய கோஷம் – எழுகடலை யடக்க
விதம்விதமா யிருக்குபல - விருதுகள் முன்நடக்க,       (222)

தாதியர்களிரு புறம்வெண் - சாமரங்கள் போட
மாதர்களெங்கும் நிறைந்து - மங்களங்கள் பாட       (223)

பரதசாஸ்திரத்தின்படி – பாவையர் களாட
இரதங்களிலே றியெல்லா ராஜர் களும்கூட.       (224)

பரிமளப்பூ ஹாரங்களும்- பால்பழம் தேங்காயும்
அரியகருப் பூரம்களிப் பாக்கும் அடைக்காயும்,       (225)

பட்டுகள் பீதாம்பரங்கள் – பலமணி சேரணிகள்
தட்டுகளிலெ டுத்துவந்தார் - தாதிகள் பெண்மணிகள்,       (226)

அரசர்வீதி முதலான - அனந்தம்வீதி தாண்டி
அரண்மனையா ளாலயத்தை யடைந்தார்கள் வேண்டி.       (227)

பொன்மயமாங் கோவிலுக்குள் - பொற்கொடியாள் சென்றாள்
சின்மயமா யொளிருமுமா – தேவிமுன்னே நின்றாள்       (228)

நங்கையவள் சாஷ்டாங்க - நமஸ்காரம் செய்தாள்
செய்கையிப்பூ வெடுத்துமையின் - திருவடியில் பெய்தாள்.       (229)

தாபந்தீரப்பார்வதிக்குச் சந்தனா பிஷேகம்
தூபதீபநை வேத்தியம் - சொல்லவும் அனேகம்.       (230)

செய்துகைகள் கூப்பிநின்று தேவிநமஸ் கரித்தாள்
எய்துபக்தி மீறவப்போ இவ்விதம் ஸ்தோத்தரித்தாள்.       (231)

அண்டமெலா முண்டுமிழும் அரியின் சகோதரியே
தெண்டனிட்டு வணங்குமெனைத் தேவிநீ யாதரியே       (232)

எண்ணரிய வென்துயரம் - இப்பொழுதே யரிவாய்
கண்ணனென்னை மணம்புரிய- கருணயென் மேற்புரிவாய்.       (233)

அம்பிகையாட் கிவ்விதமாய் அனந்தந் தெண்டனிட்டாள்
கொம்பனையா ளம்பிகையின் – கோவில்தனை விட்டாள்       (234)

வெளியேறி வரும்போது – வேந்தர்கள் பார்த்துருக
அளிகள்மொய்க்கும் குழலியைக் கண்டாசை மிகப்பெருக.       (235)

அன்னமென்ன நடந்துவந்த - ஆயிழையப் போது
மன்னர்கூட்டத் துள்ளிருக்கும் – மாதவன் றன்மீது.       (236)

கடைக்கண்கள் செலுத்திமிகு களிப்பதனைக் கொண்டாள்
அடிமுதலா முடிவரையும் அவனழகைக் கண்டாள்.       (237)

பூரணசந் திரன்போலப் பொருந்துமவன் முகமும்
தாரணியும் மலையெனவே– சார்ந்திடு மார்பகமும்,       (238)

வடிவுமிகும் தாமரைபோல் – மாதவன்நேத் திரமும்
இடையினிலே பளபளவென் - றிலங்குபீ தாம்பரமும்.       (239)

கார்முகமேந் திச்சிவந்த – கமலமலர்க் கையும்
கார்முகிலைப் போன்றொளிரும்- கட்டழகன் மெய்யும்.       (240)

கண்டுவகை கொண்டுதனைக் – கன்னி சமீபிக்க
அண்டர்தொழும் நாயகனுக் – கங்கம் புளகிக்க.       (241)

மாதரசி தனக்கேற்ற - மங்கையென மதித்தான்
மாதவன வளைக்கவர - மண்ணின் மிசைகுதித்தான்.       (242)

பாவைதனை மல்லிகைப்பூப் பந்தென வேதாங்கி
யாவரும்பார்த் திடத்தேரில் ஏறினன் மிகவோங்கி,       (243)

பம்பம்பம்பம் மெனவே – பாஞ்சஜன்ய மூதி
தம்புரம் நோக்கிச் செல்லச் - சத்துருக்கள் மோதி.       (244)

சிசுபாலன் சாள்வன்முதல் தேர்வீரர்க ளடுத்தார்
பசுபாலன் மீதில்வந்து பாணங்களைத் தொடுத்தார்.       (245)

இடதுகையில் வில்லேந்தி – ரணகளத்தில் நின்றான்
கடல்போலும் சேனையெல்லாம் - கணப்பொழுதில் கொன்றான்.       (246)

உருக்மி முதலானவரை - யொருநொடியில் வென்றான்
உருக்மணியொடு துவாரகையாம் – ஊர்நோக்கி சென்றான்       (247)

நாரணன்மா தோடுவரும் - நற்சேதி யறிந்தார்
ஊரிலுள்ள ஜனங்களெல்லாம் – ஒருமிக்கச் செறிந்தார்.       (248)

மந்தாரப்பூ மழையை - வானவர்கள் பெய்ய
அந்தண ரெல்லாங்கூடி – யாசிகளைச் செய்ய,       (249)

தோகையர்க ளாலாத்தி சுற்றிதிர்ஷ்டி கழிக்க
ஓகையினாற் சகலருக்கும் உள்ளமது செழிக்க       (250)

நகரதனை வலம் வந்தே - நற்கோவில் சேர
அகமகிழ்ந்தே ருக்மணியும் – அரண்மனைக் குளார.       (251)

குலகுருவை வரவழைத்துக் கோபாலன் அன்று
கலியாண முகூர்த்தமதைக் கண்டுசொல்க வென்று.       (252)

உத்தரவு கொடுத்தவுடன் - யோசனைகள் பண்ணி
வித்தகன் முகூர்த்தமிட்டான் - மிகமனதில் எண்ணி,       (253)

நல்லதிதி வாரமுடன் – நக்ஷத்ரம் யோகம்
எல்லாஞ்சேர் தினத்திற்குறிப் - பிட்டான் விவாகம்,       (254)

கண்ணனுத்தா ரப்படியே - கடிநகர் சிங்காரம்
பண்ணுவித்தா ரெல்லாரும் – பரிவுட னந்நேரம்.       (255)

கலியாணப் பந்தலது கண்டவர் மனங்கவரும்
விலைமதிப்பு மில்லையென – மெச்சுவார்க ளெவரும்,       (256)

நாகசுரம் தவிலுடனே – நல்லிரட்டை மேளம்
மோகந்தரும் கைத்தாளம் – முரசுட னெக்காளம்,       (257)

தம்புருமீட்டிப் பலபேர் – சங்கீதம் பாட
தும்புருவும் நாரதரும் – தூரமதி லோட,       (258)

தித்திபுல்லாங் குழலூதச் - சேயிழையார் பாட
தத்திமித்தோ மென்றுசொல்லித் – தையலர் களாட       (259)

முகுர்த்தத்தினத் தன்றைக்கு – முகுந்தனுடன் மாது
மகத்துவஞ்சேர் மணவறைக்கு – வந்தாளப் போது       (260)

மங்களஸ்நானங்கள் பண்ணி - மங்கையுமா தவரும்
இங்கிதமா யங்கிருக்க - எழிலார்மா தவரும்,       (261)

ஓமகுண்டம் வைத்துலாஜ - ஹோமமது செய்தார்
நேமமுடன் மாமுனிவர் – நெய்களதிற் பெய்தார்.       (262)

மைம்முகில்வண் ணன்கையால் - மங்கிலியம் பூண்டாள்
அம்மிமிதித் தருந்ததியை - அங்கனையும் கண்டாள்.       (263)

கோதானம் பூதானம் – கோடிகன்னி தானம்
மாதானம் பலகொடுத்தே – வழங்கினான் சம்மானம்.       (264)

பூரிதக்ஷிணை களினால் - பொங்கினர் பூசுர்கள்
வாரிச்சொரிந்த வாகுதியால் - மகிழ்ந்தனர் விண்சுரர்கள்.       (265)

நலங்குகளிட் டூசலிலே - நாதன் ருக்மணியாட
இலங்குமவரைக் கண்டவர்கள் – எவர்களுங் கொண்டாட.       (266)

பள்ளியறை யலங்காரம் - பார்த்துக்களி கூர்ந்தான்
கிள்ளை மொழியாளுடனே – கிருஷ்ணனுள்ளே சேர்ந்தான்.       (267)

செங்கரும்பே கண்மணியே - தெவிட்டிடாத தேனே
மங்கையர் சிரோன்மணியே – மருவிடவா மானே.       (268)

ஊடல்தனை யிவ்விதமாய் – உபசரித்தே போக்கி
கூடலினா லானந்தம் – கோதையர்க் குண்டாக்கி,       (269)

அனுபவித்தே தாரணியை – யாண்டிருந் தானந்த
கனகவஸ் திரந்தரித்த - கண்ணபிரான் என்று.       (270)

அருந்தவர் முன்கூறியதை அம்புவியின் மேலே
தெரிந்துரைத்தா னமிழ்துங்கர் – செந்தமி ழினலே.       (271)

வில்லிபுத் தூர்மங்கலத்தில் - விளங்கும் ஸ்ரீநிவாஸன்
அல்லிமலர்க் கோதையின்சே வடிபணியும் தாளன்,       (272)

அண்ணன்மலர்த் திருவடியில் – ஆச்ருதனாம் பத்தன்
கண்ணனா யிரம்பெயரைக்- கருதுகின்ற சித்தன்.       (273)

திடமுறுநற்………. ………………. சேர்ந்தோன்
வடமொழியும், ஆந்திரமும் - வண்டமிழும் தேர்ந்தோன்       (274)

பூமியெலாம் வாழியதில் – பொருந்துயிர் கள்வாழி
மாமறையோர் வாழியெழில் - மன்னவரும் வாழி.       (275)

கண்ணனுடன் ருக்மணியும் காசினி யில்வாழி
புண்ணியஞ்சேர் அவர்கதையைப் புகன்றவர் கள்வாழி.       (276)

கர்த்தன்மீது சொன்னகும்மிக் கதைய துவும்வாழி
பக்தியுடன் கேட்பவரும் படிப்பவ ரும்வாழி.       (277)

உருக்குமணி கலியாணக்கும்மி
முற்றுப்பெற்றது.


This file was last updated on 27 Nov. 2022
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)