pm logo

புதுமைப்பித்தன் சிறுகதைகள்
தொகுப்பு - பாகம் 4 , சிறுகதைகள் 61-90


Collection of Short stories of
putumaippittan
part 4, short stories 61-90
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

புதுமைப்பித்தன் சிறுகதைகள் - பாகம் 4
சிறுகதைகள் 61-90

61. நொண்டி 76. சாப விமோசனம்
62. ஒப்பந்தம் 77. சாளரம்
63. ஒரு கொலை அனுபவம் 78. சாமாவின் தவறு
64. பால்வண்ணம் பிள்ளை 79. சாயங்கால மயக்கம்
65. பறிமுதல் 80. சமாதி
66. பாட்டியின் தீபாவளி 81. சமாதி
67. பித்துக்குளி 82. சாமியாரும் குழந்தையும் சீடையும்
68. பொய்க் குதிரை 83. சணப்பன் கோழி
69. 'பூசனிக்காய்' அம்பி 84. சங்குத் தேவனின் தர்மம்
70. புரட்சி மனப்பான்மை 85. செல்வம்
71. புதிய கூண்டு 86. செவ்வாய்
72. புதிய கந்த புராணம் 87. சிற்பியின் நரகம்
73. புதிய நந்தன் 88. சித்தம் போக்கு
74. புதிய ஒளி 89. சித்தி
75. ராமனாதனின் கடிதம் 90. சிவசிதம்பர சேவுகம்

---------------

61. நொண்டி


இந்தச் சம்பவம் எனக்குக் கொஞ்ச நாட்களுக்கு முன் நேர்ந்தது.

ரயிலில், ஒருவரும் இல்லாத தனி வண்டியாகப் பார்த்து, சௌகரியமாகப் படுக்கையை விரித்துவிட்டு, தொந்தரவில்லாமல் பிரயாணம் செய்யலாம் என்று நினைத்துக்கொண்டே உட்காருமுன், மறுபடியும் வண்டியின் கதவு திறக்கப்பட்டது.

"ஜாக்கிரதையாக ஏறுங்கள்; தரையிலிருந்து படி வெகு உயரமாக இருக்கிறது" என்றது ஒரு குரல்.

"அதற்கென்ன, நான் கெட்டியாகத்தான் பிடித்துக் கொண்டிருக்கிறேன்" என்றது மற்றொரு குரல்.

கதர்குல்லாய் அணிந்த தலை, பிறகு இரும்புக் கம்பியைக் கெட்டியாகப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும் இரு கைகள். மெதுவாகத் தடித்த சரீரத்தை அப்படியே உயர இழுக்கும்பொழுது, மரக்கட்டைகள் ரயில் வண்டியின் படிகளில் இடிபடும் சப்தம் கேட்டது.

மனிதனின் உடம்பு மேலே வந்ததும், தொள தொளவென்று பஞ்சகச்சம் வைத்துக்கட்டிய வேஷ்டிக்கிடையில் இரண்டு மரக்கால்கள் தெரிந்தன.

"சரிதானே ஸார்" என்று வெளியே யிருந்த குரல் கேட்டது.

"ஆமாம் அப்பா" என்றார் வந்தவர்.

"இதோ இருக்கிறது. உங்கள் கைத்தடியும் மூட்டைகளும்."

வேலைக்காரன் உள்ளே வந்து கையிலிருந்த மூட்டைகளை மேற்பலகையில் ஒவ்வொன்றாக வைத்தான்.

"ஐந்து மூட்டைகள், பட்சணங்கள், விளையாட்டுப் பொம்மைகள், கொட்டு, விளையாட்டுத் துப்பாக்கி, புதிதாக வாங்கிய துணிகள்."

"சரி! சரி!"

"சௌகரியமாய்ப் போய்விட்டு வரணும்" என்று கும்பிட்டான்.

"உன் உடம்பையும் பார்த்துக் கொள்" என்று ஒரு ரூபாயை அவன் கையில் கொடுத்து விட்டுச் சிரித்தார்.

அவனும் கதவைச் சாத்திக் கொண்டு போய்விட்டான்.

வந்தவருக்கு வயது முப்பது அல்லது முப்பத்தைந்திற்கு மேல் இராது; தலை பூராவும் நரைத்துவிட்டது. கதர் உடைதான். நல்ல கறுத்து அடர்ந்த மீசை. திடீரென்று வந்த ஊனத்தினால், உழைப்பு நின்றுவிட அதனால் ஏற்பட்ட உடல் பருமன்.

வந்தவர் முகத்தைக் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டு, "பீடி குடித்தால் உங்களுக்குத் தொந்தரவாக இருக்காதே?" என்றார்.

"தாராளமாகக் குடியுங்கள்."

அந்தப் பார்வை, அந்தக் குரல் எங்கோ கேட்ட மாதிரி இருக்கிறது. எப்பொழுது? அதுதான் ஞாபகம் வரவில்லை.

அவரும் என்னையே கவனித்துக் கொண்டு இருந்தார். அவருக்கும் பிடிபடவில்லைபோல் இருக்கிறது.

இப்படி மரியாதைக் குறைவாக வெருகுபோல் விழிப்பதில் கூச்சமாயிருந்ததால் முகத்தைக் கொஞ்சம் வேறு பக்கம் திருப்பினேன். ஆனால் இந்த மனம் இருக்கிறதே! மறுபடியும் கண்கள் அந்த திசையே நோக்கின.

"தங்களை எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறதே. எனக்குப் பிடிபடவில்லை" என்றேன்.

"அப்படித்தான் எனக்கும் இருக்கிறது" என்றார்.

"என் பெயர் ஹரிஹரய்யர். ரெவினியு இன்ஸ்பெக்டர்" என்றேன்.

அவரும் கொஞ்சம் யோசித்தார். "ஆமாம் ஸார், நாம் சென்னையில் நான்கு வருஷங்களுக்கு முன் சந்தித்ததாக ஞாபகம்" என்றார்.

"ஆமாம்! ஆமாம்! தாங்கள்தான் தொண்டர் ராமகிருஷ்ணனோ?"

"ஆமாம்! இந்தக் கால்கள் தடியடியில் போகும்வரை தொண்டனாக இருந்தேன்."

நினைவு வந்து விட்டது. நான்கு வருடங்களுக்கு முன் என்ன அழகு? என்ன வாலிபம்! மெலிந்ததாயினும் நல்ல கட்டுள்ள உடல். அவரைப் பற்றி நினைவிருக்க வேண்டிய காரணங்கள் உண்டு. ஆமாம், அவரைப் பற்றிய ஒரு காதல் விஷயம் நன்றாக நினைவிற்கு வருகிறது. அந்தப் பெண் மணோன்மணி. மறியலுக்காக வந்த ஸ்திரீ தொண்டர்களில் ஒருத்தி. திருமணத்தை எதிர்நோக்கிக்கொண்டு இருந்தார்கள். என்ன காதல், என்ன குதூகலம்! அப்பொழுதுதான் அவர்களைச் சந்தித்தேன்.

எனது கண்கள் மேலே பலகையில் இருந்த விளையாட்டுச் சாமான்களில் சென்றன. ரயில் வண்டி தண்டவாளங்களில் சற்றுக் குதித்துச் செல்லும்பொழுது, அந்த வேலைக்காரனது வார்த்தைகள் நினைவிற்கு வந்தன.

"ஐந்து மூட்டைகள், பக்ஷணங்கள், விளையாட்டுப் பொம்மைகள், கொட்டு, விளையாட்டுத் துப்பாக்கி, புதிதாக வாங்கிய துணி."

உடனே பளிச்சென்று எனது மனம், முடிவுபெறாத காதல் கதையின் கதைகளைத் தானே கட்டிக்கொண்டு போக ஆரம்பித்தது. உலகத்தில் எந்தப் பாகத்திலும் எழுதப்படும் காதல் கதைகளைப் போலத்தான். தேச விடுதலைக்காகக் காலிழந்த காதலன். தனக்காகக் காத்திருந்த கன்னியை மணந்து கொள்வது.

நினைக்க நினைக்க அதன் அழகு, அதன் பொலிவு, அதன் தியாகம் எல்லாம் புஸ்தகத்தில் இருக்கிற மாதிரி வெகு எளிதாக நிறைவேறிவிட்டன. இந்த மாதிரிச் சம்பவங்களைப் படிப்பதில் எவ்வளவு ஆனந்தம்! அப்படியே தன்னை மறந்து விடுகிறோம். அந்த உயர்ந்த லட்சியத்தில் - உலகத்தில் அப்படியிருக்கிறதா? ஏமாற்றந்தான்.

இதைவிட வேறு மாதிரி என் மனது கதை திரிக்க ஆரம்பித்தது. ஒரு வேளை அவன் கால்களை இழக்குமுன் திருமணமாகியிருக்கலாம். காலிழந்த கணவனின் பத்தினிப் பெண். அவனது சுகத்திற்காகவே தன்னைத் தியாகம் செய்து கொள்ளும் ஒரு பத்தினிப் பெண்ணின் உருவம் எனது மனக் கண்ணின் முன் தோன்றலாயிற்று.

அவனுக்கு வாழ்க்கை, சுகமா அல்லது இன்னலா, அதை அறியும்படி ஒரு சிறிய அவா வரவரப் பெரிய ஆசையாகிவிட்டது.

நான் பேசிக் கொண்டுதான் இருந்தேன். மனது அதிவேகமாக வேறு பக்கம் ஓடிக்கொண்டிருந்தது.

"அவனுக்கு மூன்று குழந்தைகள் இருக்கலாம். இரண்டு ஆண்கள், ஒரு பெண். பொம்மைகள் பெண்ணுக்கு; மற்றவை ஆண்களுக்கு; புதிய துணி மனைவிக்கு."

திடீரென்று "உங்களுக்குக் குழந்தைகள் இருக்கின்றனவா?" என்றேன்.

"இல்லை" என்றார்.

மரியாதைக் குறைவாக நடந்துகொண்ட மாதிரி என் மனதில் ஒரு குழப்பம் ஏற்பட்டது.

"மன்னிக்க வேண்டும், சாமான்களைக் கண்டவுடன் கேட்டேன். காதில் விழுவதைக் கேட்காமலிருக்கலாம். கண்டதைக் கேட்காமலிருக்கலாம். கண்டதை வைத்துக் கொண்டு அனுமானிக்கலாம்" என்றேன்.

புன்சிரிப்புடன், "இன்னும் எனக்குக் கலியாணங்கூட ஆகவில்லை." என்றார்.

திடீரென்று ஞாபகப்படுத்திக் கொண்டவன் போல், "மன்னிக்க வேண்டும், மனோன்மணியம்மாள்...?"

"தங்களுக்கு நல்ல ஞாபகம் இருக்கிறது" என்றார்.

"மனோன்மணியம்மாள் யாரையோ கலியாணம் செய்து கொண்டதாகவும் ஒரு வதந்தி..."

"மிஸ்டர் பார்வதி நாதனை..."

"தங்கள் காயங்கள்தான் அதற்குக் காரணம் என்றும்..." முகத்தை நன்றாகக் கவனித்தேன். முகம் வெட்கத்தால் சிவந்தது.

தோற்றுப்போன கட்சியை தோற்றுவிட்டது என்று தெரிந்த பிறகும் வாதிப்பவர் போல், ஒரு பரபரப்புடன் பேசிக்கொண்டே போனார்.

"மிஸ்டர் பார்வதிநாதனுடைய பெயருடன் என்னையும் முடிச்சு போடுவது வெறும் அபத்தம். நான் ஆஸ்பத்திரியிலிருந்து வெளியேறியதும், அவள் என்னைக் கலியாணம் செய்துகொள்ள நான் அனுமதிக்கவேயில்லை. அனுமதிப்பேனா? எதற்கு ஒருவனைக் கலியாணம் செய்து கொள்வது? ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணியும், ஒவ்வொரு நிமிஷமும், ஏன், ஒவ்வொரு வினாடியும் கூடி வாழவே ஒருவனைக் கலியாணம் செய்து கொள்வது. அவனுக்கு என்னைப்போல் கால் இல்லாமலிருந்தால் மரணம் வரை துன்பந்தான். தியாகத்தைப் போற்றுகிறேன். ஆனால் எனக்காக ஒரு பெண்ணின் வாழ்க்கையையே தியாகமாக்க நான் சம்மதிக்க மாட்டேன். நான் நடக்கும் பொழுது எல்லாம் இந்த மரக் கால் 'லொட்டு லொட்டு!' என்று இடியாக முழங்குகிறது. அவளை முத்தமிட நெருங்குமுன் இந்த சப்தந்தானே காதைத் துளைக்கும்? அதை அவள் சகித்துக் கொண்டு இருக்கும்படி செய்வேனோ? அவள் வேண்டுவது புருஷன்; நான் வேண்டுவது அடிமை, பணியாள், அல்லது தாய், இது ஒத்து வருமா?"

பிறகு மௌனமாக இருந்தார். அவர் சொல்வது சரி என்று பட்டது. அவளைக் குற்றம் சொல்ல முடியுமா? ஆனால் எனக்கு என்னவோ சுவாரஸ்யமான கதையின் இறுதியைப் பிய்த்துவிட்ட மாதிரிப் பட்டது. எனது கதை உணர்ச்சி சாந்தியடையவில்லை. என்னவோ ஏமாற்றப்பட்ட மாதிரிதான் இருந்தது.

"மனோன்மணியம்மாளுக்குக் குழந்தைகள் இருக்கின்றனவா?" என்று திடீரென்று கேட்டேன்.

"ஒரு பெண்ணும் இரண்டு ஆணும்; இவைகள் எல்லாம் அவர்களுக்குத்தான். அவள் புருஷன் என்மேல் அதிகப் பிரியமாக இருக்கிறார்!"

அதற்குள் அந்தச் சிறு டன்னல் வழியாக ரயில் சென்று பிளாட்பாரத்தில் நின்றது.

அவருக்கு உதவி செய்யும்படி நான் எழுந்தேன். அதற்குள் ஒரு மனிதனின் இரண்டு கரங்கள், திறந்த கதவின் வழியாக நீட்டப்பட்டன.

அந்த மனிதனுக்குப் பின், அவனுடைய மனைவி குழந்தைகளுடன் நின்றாள் - அதரத்தில் புன்சிரிப்பு.

குழந்தைகள், வெளியில் வைத்த சாமான்களைத் தூக்கிக்கொண்டன. இந்த நொண்டி பிளாட்பாரத்தில் இறங்கியதும் குழந்தைகள் அவரைச் சுற்றிக் கொண்டன.

எல்லோரும் வெளியே புறப்பட்டார்கள். அந்தப் பெண் குழந்தை, அவர் அக்குளில் கொடுத்து ஊன்றி நடந்த தடிகளைத் தனது சிறிய விரல்களால் பிடித்துக்கொண்டே நடந்தது.

1934
--------------------

62. ஒப்பந்தம்

பார்வதிநாதனுக்கு பி.ஏ. பாசாகிவிட்டது. அது மட்டுமல்ல. ஸர்வீஸ் கமிஷன் பரீட்சையிலும் முதல் தொகுதியில் வந்துவிட்டான். சீக்கிரத்தில் வேலையாகிவிடும். கலியாணம் ஒன்றுதான் பாக்கி. அதையும் செய்து முடித்துவிட்டால் பையனைப் பற்றிய கவலை ஓய்ந்துவிட்டது என்று நினைத்தார் சங்கரலிங்கம் பிள்ளை.

ஒரு நாள் காலை. பிள்ளையவர்கள், தாம்பிரவர்ணியின் ஸ்நான இன்பம், நீண்ட பூஜை முதலியவற்றுக்கு முற்றுப்புள்ளியான காலை போஜனத்தை முடித்துக் கொண்டதும், சுக ஜீவனத்தின் குதூகலத்தை அனுபவித்தவராய், "ஏளா, அங்கே என்ன செய்யுதே" என்று தமது பத்தினியைக் கூப்பிட்டார்.

"என்ன, நீங்களா கூப்பிட்டிய; இன்னா வாரேன்."


"நம்ம குட்டிக்கு" - பார்வதிநாதனின் செல்லப் பெயர் - "பொண்ணு பார்க்க வேண்டாமா?"

"எனக்கென்ன தெரியும்? நீங்க சொல்லுதது சதி. நம்ப சிங்கிகுளத்துப் பொண்ணெப் பாத்தா என்ன? பொண்ணு நல்ல செவத்த பொண்ணு; கண்ணும் முளியும் அப்படியே பாத்துக்கிட்டே இருக்கலாம். ஆனா, புள்ளையவாளுக்குப் பிடிக்குமோ என்னமோ? இந்தக் காலத்துப் புள்ளையளை என்ன சொல்ல?"

"அதாரு, சிங்கிகுளத்திலே?"

"என்ன உங்களுக்குத் தெரியாதாக்கும்? பேட்டையக்கா இருக்காஹள்ள, பார்வதியக்கா, அவளுக்கு ஒண்ணுவிட்ட தம்பி மக."

"சரி! சரி! நம்ம சுப்பராயப்பிள்ளை மகளா? என்ன நகை போடுவா?"

"அது எனக்கென்ன தெரியும்? கோமதியக்காக்கிட்ட விசாரிச்சா தெரியும். நா அவளைக் கூப்பிடுதேன்" என்று வெளியே சென்று ஒரு விதவையைக் கூப்பிட்டு வந்தாள்.

"அம்மா, வா. இரி. நம்ம குட்டிக்கு இவ என்னமோ சிங்கி கொளத்துப் பொண்ணு ஒண்ணு இருக்காமே. அதைப் பாக்கலாமென்னு சொல்லுதா. நீ என்னமோ, பாத்திருக்கியாமே. அதெப்படி நகை என்னம்மா போடுவா?" என்று கேட்டார் சங்கரலிங்கம் பிள்ளை.

"அதா, நல்ல எடமாச்சே. பொண்ணு தங்கமான கொணம். அவுஹளும் அப்படித்தான். என்னமோ ரெண்டு ஆயிரத்துக்கு செய்வாஹ இன்னு சொல்லி இருந்தாஹ."

"இம்புட்டுத்தானே! சதி, சதி. பேச்செ விட்டுத் தள்ளு. நம்ம பேட்டைப்பிள்ளை ஐயாயிரம் நகை மருக, கலியாணச் செலவு ஒரு ரெண்டாயிரம் யென்று சொன்னாரே!"

"ஆமா, பொண்ணு கறுப்பில்லியா? எதுக்கும் கேட்டுப் பாருங்களேன்."

"சதி, நீ என்ன சொல்லுதே?"

"பாத்தா என்ன? நானும் அக்காளும் போயிட்டுத்தான் வாரமே!" என்றாள்.

"சதி, நாளைக்கு மேக்கெ சூலம். நாளைக் கழிச்சி உதயத்திலெ வண்டியப் போட்டுகிட்டுப் போய் பாத்துட்டு வாருங்க. பொறவு நாவன்னாவை விட்டு நான் விசாரிக்கேன்."

"அய்யா, தபால்!" என்று தபால்காரன் உள்ளே நுழைந்து கவர்மென்டு முத்திரையிட்ட நீண்ட 'ஸ்கோடா'வைக் கொடுத்தான்.

"நம்ம குட்டிக்குப் போல இருக்கு. ஏலே அய்யா!" என்று கூப்பிட்டார்.

"என்னப்பா?" என்று கீழே வந்தான் பார்வதிநாதன்.

கடிதத்தைப் பிரித்துப் பார்க்க, சென்னையில் குமாஸ்தா வேலையாகியிருப்பதாகவும், 25-ந் தேதி வந்து வேலை ஒப்புக்கொள்ளும்படியும் எழுதியிருந்தது.

வீட்டில் ஒரே குதூஹலம். தபால்காரன் 'பக்ஷிஸ்' தட்டாமல் போகவில்லை.

"ஏலே அய்யா! உனக்கு ஒங்கம்மை சிங்கிகொளத்துப் பொண்ணைப் பார்த்திருக்கிறா, அப்பா. ஒனக்குப் புடிக்குமா?" என்று கேட்டார்.

பார்வதிநாதனுக்கு இந்த விஷயம் திடுக்கிடச் செய்தது. இந்த மாதிரி தகப்பனார் பேசியது இதுதான் முதல் தரம். முகம் வெட்கத்தால் சிவந்தது. ஒன்றும் பேசாமல் மெத்தைக்கு ஏறினவன். "நாளைக்குப் புறப்பட வேண்டும்" என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டான்.

2

பெண்ணை எல்லாம் போய்ப் பார்த்துவிட்டு வந்தாகிவிட்டது. சங்கரலிங்கம் பிள்ளையின் மனைவிக்கு சிங்கிகுளத்துப் பெண் பேரில் நோக்கம்.

சங்கரலிங்கம் பிள்ளைக்கு இப்பொழுது மகனுக்கு வேலையாகி விட்டதால் ரேட்டை உயர்த்த வேண்டும் என்ற நோக்கம். நகை வழியாகக் குறைந்தது மூவாயிரமாவது கறந்துவிடவேண்டும் என்ற தீர்மானம்.

நாவன்னா - நாராயண பிள்ளை அவர் பெயர் - அவரை விட்டுப் பெண் வீட்டுக்காரரைத் தூண்டிவிடும்படி ஏற்பாடு செய்தார்.

நாராயண பிள்ளை ஒரு தடவை சிங்கிகுளத்துப் பக்கம் சென்றார். "நம்ம பையன் ஒருவன் இருக்கிறான். கொடுக்கலாம். நல்ல இடம்!" என்றார். விஸ்தரிப்பானேன்? பெண்ணின் தகப்பனார் மாப்பிள்ளை வீட்டாரைக் கண்டு பேசப் புறப்பட்டார். நண்பர் நாவன்னா வீட்டில் ஜாகை.

மறுநாள்.

இருவரும் சங்கரலிங்கம் பிள்ளை வீட்டிற்கு வருகிறார்கள்.

"அண்ணாச்சி, இவுஹதான் நம்ம சிங்கிகுளத்துப் பிள்ளையவாள். இந்தப் பக்கத்திலே வந்திருந்தாஹ பாத்துக்கிட்டுப் போகட்டுமே என்று கூட்டி வந்தேன்" என்றார் நாவன்னா.

"அப்பிடியா! வாருங்க! வாருங்க! ஏளா! வெத்திலை செல்லத்தை எடு. அங்கே தூத்துட்டு சமுக்காளத்தை விரி! காப்பி சாப்பிடுங்களேன். அம்மாளு ரெண்டு எலையைப் போடு!" என்று துரிதப்படுத்தினார்.

அவருடைய தர்மபத்தினியும், "வாருங்க! சேவிக்கேன்!" என்று வரவேற்றுவிட்டு, அவசர அவசரமாகப் பெருக்கிவிட்டு, ஜமுக்காளத்தை எடுத்து விரித்து, வெற்றிலைச் செல்லத்தை எடுத்து வைத்துவிட்டு உள்ளே சென்றாள்.

"நாங்கள் எல்லாம் காப்பி ஆச்சு. நீங்கள் ஆச்சா? இல்லவிட்டா முடிச்சுக்கொண்டு வந்துவிடுங்கள்" என்றார் நாராயண பிள்ளை.

"நான் எல்லாம் ஆச்சு! வெத்திலைப் போடுங்க" என்றார் சங்கரலிங்கம் பிள்ளை.

பேச்சு மெதுவாகப் பெண் விஷயத்தில் வந்து விழுந்தது.

"ஆமாம்! பையனுக்கு வேலையும் ஆச்சே, முடிச்சுவிடலாம் என்று எண்ணுகிறேன்" என்றார்.

"ஆமாம் அது செய்ய வேண்டியதுதான்" என்றார் சிங்கிகுளத்துப் பிள்ளை.

"உங்களுக்குத் தெரியாததா? நகை ஒரு ரெண்டாயிரம், மத்தச் செலவு ஒரு ஆயிரம்!" என்றார்.

"என்ன, நம்ம பேட்டையப்பிள்ளை சொன்னதைக் கேட்டியள்ள?" என்றார் சங்கரலிங்கம் பிள்ளை.

"ஆமா, ஆமா. அதிருக்கட்டும். இந்தக் காலத்திலே ஆயிரத்தைச் சொன்னாப் போதுமா? சொன்னதைச் சொன்னபடி செய்யணும். அது நம்ம பிள்ளையவாள்தான். நான் ஒன்று பொதுவாகச் சொல்லுகிறேன். நகை மூவாயிரம், மத்தது ரெண்டாயிரம்!" என்றார்.

எல்லாரும் சற்று மௌனம்.

"அண்ணாச்சி! நீங்க ஒரேடியா மொதொண்டாதிக. பிள்ளைவாள்! நீங்க காலைத் தேச்சா பிரயோசனமில்லை. நல்ல இடம். பையனுக்கு நல்ல அதிர்ஷ்டம் கவர்மெண்டு வேலை. இனிசூபெக்டரு, தாசில்தாரா வரலாம் உங்க பெண்ணுக்கு ராஜயோகம்!" என்று மத்தியஸ்தம் பேசினார் நாவன்னா.

"சதி! பொறவு நீங்க சொல்லுறப்பா என்னா?" என்றார் சிங்கிகுளத்துப் பிள்ளை.

"வேறெ என்ன அய்யா? இப்பவே வெத்தலை பாக்கு கைமாறிடுத்து. வர வியாழக்கிழமை நல்ல தினம். அன்னைக்கி திருமங்கிலியத்திற்குப் பொன்னுருக்கி விடுகிறது. சரிதானே பிள்ளைவாள்?" என்று ஒரு வெள்ளித் தாம்பாளத்தைச் சங்கரலிங்கம் பிள்ளையின் தர்மபத்தினியிடம் வாங்கி அந்தச் சிறு சடங்கை நடித்து முடித்தார்கள்.

*****

சென்னையில் அன்று சாயங்காலம்.

பார்வதிநாதன் வேலை ஒப்புக்கொண்டாகிவிட்டது. தகப்பனார் கொடுத்த பணம் கொஞ்சம் கையில் ஓட்டம். சினிமாவிற்குச் சென்றான்.

இவனுக்குப் பக்கத்தில் ஒரு ஆங்கிலோ இந்திய மாது - இளநங்கை - உட்கார்ந்திருந்தாள்.

தகப்பனார் அன்று பெண் விஷயத்தைக் கேட்டதிலிருந்து அவனுக்கு ஒரு புதிய உணர்ச்சி, இயற்கையின் தேவை, அடிக்கடி மனத்தில் சுற்றிக்கொண்டே இருந்தது. பார்வதிநாதன் நல்ல பையன் தான். இதுவரை அந்த நினைப்பிற்கு அவகாசமில்லை.

ஆனால் அந்தத் தினத்திலிருந்து அவனது உடல் கட்டுக்கடங்கவில்லை.

அன்று இருவர் சினிமா பார்க்கவில்லை.

அந்த நங்கை ஐந்து ரூபாய்க்கு இரண்டு மணி நேரம் அவன் மனைவியாக இருக்கச் சம்மதித்தாள்.

இருவரும் கடற்கரைக்குச் செல்லுகிறார்கள்.

அந்தச் சிங்கிகுளத்துப் பெண் மூவாயிரம் ரூபாயைப் பணயமாக வைத்து, அவனுடன் வாழ்க்கையைப் பிணைத்துக் கொள்ளச் சம்மதிக்கும் பொழுது, ஐந்து ரூபாய்க்கு இரண்டு மணி நேரம் சரிதானே?

மணிக்கொடி, 05-08-1934
------------------

63. ஒரு கொலை அனுபவம்

இருள். எங்கு பார்த்தாலும் கரியவிருள். ரோட்டில் வெளிச்சம் மங்கியது. ஒற்றை விளக்கு.

அந்த இருட்டிலே ஒரு மனிதன் தள்ளாடித் தள்ளாடி நடந்து கொண்டு போகிறான். உள்ளூர ஒரு பாட்டு. குடிப் பேர்வழி. அந்த இருட்டிலும் பாடிக்கொண்டு போகிறானே. ஆசாமி தைரியசாலியாகத்தான் இருக்க வேண்டும். நான் என்றால் பேசவே மாட்டேன்.

இதென்ன வேடிக்கை? அவனுக்கென்ன பைத்தியமா? விளக்கைப் பிடித்துத் தொத்திக்கொண்டு ஏன் ஏற வேண்டும்? விளக்கு ஏற்றி இருக்கும்பொழுது இவன் என்ன அங்கு போய் சாதிக்கப் போகிறான்? இதுவும் ஒரு வேடிக்கைதான்.

ஏறி இரும்புக் கம்பத்தின் குறுக்கில் உட்கார்ந்துகொண்டு "ராஜாதி ராஜன் நானே" என்று பாடுகிறானே. அவனும் ராஜன் தான்! இவனுக்கும் ஹிட்லருக்கும் ஒரு வித்தியாசமும் கிடையாது.

அடடா! முகத்தைப் பார்த்தால் என்போல் இருக்கிறதே! நான் தான் அவன். இதென்ன வேடிக்கை? முகத்தைப் பார்த்தால் எனக்கு இரட்டைச் சகோதரன் மாதிரி இருக்கிறான். எங்கே வந்து சொத்தில் உரிமை கேட்கப் போகிறானோ?

விளக்கெல்லாம் அணைந்துவிட்டதே! இதென்ன அதிசயம்? ஏன் விளக்கு அணைய வேண்டும்? இரவு பூராவும் எரிவதென்றால் முனிஸிபாலிட்டியாருக்கு குடி முழுகிவிடும்போல் இருக்கிறது.

அந்த இருட்டில் பாதையின் திருப்பத்திலிருந்து இன்னொரு உருவம் வருகிறது. ஏன் இப்படி நடக்கவேண்டும்? ஆசாமியைப் பார்த்தால் பொம்மை மாதிரி. கிட்ட நெருங்கட்டும். அதைத்தான் பார்ப்போம். இதென்ன அதிசயம்? அவனும் நான் தான். முதல் வந்த ஆசாமிதானா அவன்? தலைதான் கம்பத்தின் மேல் தெரிகிறதே. எனக்குப் பைத்தியமா? அல்லது பிரம்மாவிற்குத்தான் பைத்தியம் பிடித்துவிட்டதா? அல்லது பிரம்மாவிற்கு நான் சொத்து சுகம் வைத்துக்கொண்டிருப்பதில் பொறாமையா?

அந்த 'எனக்கு' ஏன் பயம் போட்டு ஆட்ட வேண்டும்? இரண்டு பிரதிபிம்பங்கள். இயற்கையின் கூத்தா? அல்லது பைத்தியக்கார ஆஸ்பத்திரியா?

இரவில் இன்னொரு உருவம் அதற்குப் பின் ஒளிந்துகொண்டு வருகிறது. அவனாவது வேறு மாதிரியாக இருக்க வேண்டும். இரண்டாவது ஆசாமியை நெருங்குகிறானே.

முகம் தெரிகிறது. நல்ல காலம். அவனுக்கு தாடியும் மீசையும் இருக்கிறது. நானல்ல! என்ன? நன்றாகப் பார். அவனும் நான் தான். எனக்கு தாடியும் மீசையுமா முளைத்திருக்கிறது? எனது முகத்தில் ஒன்றையும் காணோமே! முகத்தையும் கண்ணையும் பார்த்தால் என்ன பயமாக இருக்கிறது. மூன்று பேரும் நான் தானா அல்லது 'எல்லாம் நானே' என்ற முக்தியை அடைந்துவிட்டேனா?

தாடியுடைய 'என்' கையில் என்ன மின்னுகிறது?

கத்தி.

முன் செல்லும் 'எனக்குப்' பின் வந்த இரண்டாவது 'நான்' ஏன் பதுங்கிப் பதுங்கிச் செல்ல வேண்டும்? முதல் 'நான்' எங்கே?

ஆமாம்! அவன் குஷியாக கம்பத்தின் மீது பாட்டுப் பாடுகிறான்.

நெருங்கிவிட்டான்!

'அய்யோ கொல்கிறானே!'

மூன்றும் என் குரல். எல்லாம் இருள். ஒன்றையும் காணோம்!

விழித்தேன். பக்கத்தில் எனது நண்பன். 'பகலில் என்ன தூக்கம்?' என்று முதுகைத் தட்டிக்கொண்டிருந்தான். எதிரே எழுதுகோல், காகிதம், இத்யாதி. துப்பறியும் நாவல் எழுதுவது என்றால் லேசா? தூக்குத் தண்டனை இல்லாமல் ஆட்களைக் கொல்ல வேண்டும். பிறகு துப்பறிவோனாகக் கண்டுபிடிக்க வேண்டும். அப்பப்பா? அந்தத் தொழில் நமக்கு வேண்டாம். மானுடன் ஓடிக் கொண்டு நாயுடன் துரத்த என்னால் முடியாது.

ஊழியன், 22-02-1935
----------------

64. பால்வண்ணம் பிள்ளை

பால்வண்ணம் பிள்ளை கலெக்டர் ஆபீஸ் குமாஸ்தா. வாழ்க்கையே தஸ்தாவேஜிக் கட்டுகளாகவும், அதன் இயக்கமே அதட்டலும், பயமுமாகவும், அதன் முற்றுப்புள்ளியே தற்பொழுது 35 ரூபாயாகவும் - அவருக்கு இருந்து வந்தது. அவருக்குப் பயமும், அதனால் ஏற்படும் பணிவும் வாழ்க்கையின் சாரம். அதட்டல் அதன் விதிவிலக்கு.

பிராணிநூல், மிருகங்களுக்கு, முக்கியமாக முயலுக்கு நான்கு கால்கள் என்று கூறமாம். ஆனால் பால்வண்ணம் பிள்ளையைப் பொறுத்தவரை அந்த அபூர்வப் பிராணிக்கு மூன்று கால்கள்தான். சித்த உறுதி, கொள்கையை விடாமை, இம்மாதிரியான குணங்கள் எல்லாம் படைவீரனிடமும், சத்தியாக்கிரகிகளிடமும் இருந்தால் பெருங் குணங்களாகக் கருதப்படும். அது போயும் போயும் ஒரு கலெக்டர் ஆபீஸ் குமாஸ்தாவிடம் தஞ்சம் புகுந்தால் அசட்டுத்தனமான பிடிவாதம் என்று கூறுவார்கள்.

பால்வண்ணம் பிள்ளை ஆபீஸில் பசு. வீட்டிலோ ஹிட்லர். அன்று கோபம். ஆபீஸிலிருந்து வரும் பொழுது - ஹிட்லரின் மீசை அவருக்கு இல்லாவிட்டாலும் - உதடுகள் துடித்தன. முக்கியமாக மேலுதடு துடித்தது. காரணம், ஆபீஸில் பக்கத்துக் குமாஸ்தாவுடன் ஒரு சிறு பூசல். இவர் மெக்ஸிகோ தென் அமெரிக்காவில் இருக்கிற தென்றார். இவருடைய நண்பர் பூகோள சாஸ்திரம் வேறு மாதிரிக் கூறுகிறதென்றார். பால்வண்ணம் பிள்ளை தமது கட்சியை நிரூபிப்பதற்காக வெகு வேகமாக வீட்டிற்கு வந்தார்.

பால்வண்ணம் பிள்ளைக்கும் அவருடைய மனைவியாருக்கும் கர்ப்பத் தடையில் நம்பிக்கை கிடையாது. அதன் விளைவு வருஷம் தவறாது ஒரு குழந்தை. தற்பொழுது பால்வண்ண சந்ததி நான்காவது எண்ணிக்கை; பிறகு வருகிற சித்திரையில் நம்பிக்கை.

இப்படிப்பட்ட குடும்பத்தில் பால்வண்ணக் 'கொடுக்கு'கள் 'பேபி ஷோ'க்களில் பரிசு பெறும் என்று எதிர்பார்க்க முடியாது. பால்வண்ணம் பிள்ளையின் சகதர்மிணி, உழைப்பிலும் பிரசவத்திலும் சோர்ந்தவள். தேகத்தின் சோர்வினாலும், உள்ளத்தின் களைப்பினாலும் ஏற்பட்ட பொறுமை.

கைக்குழந்தைக்கு முந்தியது சவலை. கைக் குழந்தை பலவீனம். தாயின் களைத்த தேகம் குழந்தையைப் போஷிக்கச் சக்தியற்று விட்டது. இப்படியும் அப்படியுமாக, தர்ம ஆஸ்பத்திரியின் மருந்துத் தண்ணீரும், வாடிக்கைப் பால்காரனின் கடன் பாலுமாக, குழந்தைகளைப் போஷித்து வருகிறது. அந்த மாதம் பால் 'பட்ஜட்' - எப்பொழுதும் போல் - நான்கு ரூபாய் மேலாகி விட்டது.

இம்மாதிரியான நிலைமையில் பால் பிரச்னையைப் பற்றி பால்வண்ணம் பிள்ளையின் சகதர்மிணிக்கு ஒரு யுக்தி தோன்றியது. அது ஒன்றும் அதிசயமான யுக்தியல்ல. குழந்தைகளுக்கு உபயோகமாகும்படி ஒரு மாடு வாங்கி விட்டால் என்ன என்பதுதான்.

தெய்வத்தின் அருளைத் திடீரென்று பெற்ற பக்தனும், புதிதாக ஒரு உண்மையைக் கண்டுபிடித்த விஞ்ஞானியும், 'சும்மா' இருக்க மாட்டார்கள். சளசளவென்று கேட்கிறவர்கள் காது புளிக்கும்படி சொல்லிக் கொட்டி விடுவார்கள். பால்வண்ணம் பிள்ளையின் மனைவிக்கும் அதே நிலை ஏற்பட்டது.

பிள்ளையவர்கள் வீட்டிற்கு வரும்பொழுது, அவர் ஸ்கூல் பைனல் வகுப்பில் உபயோகித்த பூகோளப் படம் எங்கு இருக்கிறது, மாடியிலிருக்கும் ஷெல்பிலா, அல்லது அரங்கிலிருக்கும் மரப் பெட்டியிலா என்று எண்ணிக் கொண்டு வந்தார்.

வீட்டிற்குள் ஏறியதும், "ஏளா! அரங்குச் சாவி எங்கே?" என்று கேட்டுக்கொண்டே மாடிக்குச் சென்று ஷெல்பை ஆராய்ந்தார்.

அவர் மனைவி சாவியை எடுத்துக் கொண்டு பின் தொடர்ந்தாள். அவளுக்குப் பால் நெருக்கடியை ஒழிக்கும் மாட்டுப் பிரச்னையை அவரிடம் கூற வேண்டும் என்று உதடுகள் துடித்துக் கொண்டிருந்தன. ஆனால் மெக்ஸிகோ பிரச்னையில் ஈடுபட்டிருக்கும் பால்வண்ணம் பிள்ளையின் மனம் அதை வரவேற்கும் நிலையில் இல்லை.

"என்ன தேடுதிய?" என்றாள்.

"ஒரு பொஸ்தகம். சாவி எங்கே?"

"இந்தாருங்க. ஒங்ககிட்ட ஒண்ணு சொல்லுணுமே! இந்தப் புள்ளைகளுக்குப் பால் செலவு சாஸ்தியா இருக்கே! ஒரு மாட்டெத்தான் பத்து நூறு குடுத்து புடிச்சிப்புட்டா என்ன?" என்றாள்.

"இங்கே வர வேண்டியதுதான், ஒரே ராமாயணம். மாடு கீடு வாங்க முடியாது. எம் புள்ளெய நீத்தண்ணியை குடிச்சு வளரும்!" என்று சொல்லி விட்டார். மெக்ஸிகோ வட அமெரிக்காவிலிருந்தால் பிறகு ஏன் அவருக்குக் கோபம் வராது?

பால் பிரச்னை அத்துடன் தீர்ந்து போகவில்லை. அவர் மனைவியின் கையில் இரண்டு கெட்டிக் காப்பு இருந்தது. அவளுக்குக் குழந்தையின் மீதிருந்த பாசத்தினால், அந்தக் காப்புகள் மயிலைப் பசுவும் கன்றுக் குட்டியுமாக மாறின.

இரண்டு நாள் கழித்துப் பால்வண்ணம் பிள்ளை ஆபீஸிலிருந்து வந்து புறவாசலில் கை கழுவச் சென்ற பொழுது, உரலடியில் கட்டியிருந்த கன்று, வைக்கோல் அசை போட்டுக் கொண்டிருக்கும் மாட்டைப் பார்த்து 'அம்மா' வென்று கத்தியது.

"ஏளா?" என்று கூப்பிட்டார்.

மனைவி சிரித்துக் கொண்டே - உள்ளுக்குள் பயம் தான் - வந்தாள்.

"மாடு எப்பொழுது வந்தது? யார் வாங்கிக் கொடுத்தா?" என்றார்.

"மேலவீட்டு அண்ணாச்சி வாங்கித் தந்தாஹ. பாலு ஒரு படி கறக்குமாம்!" என்றாள்.

"உம்" என்றார்.

அன்று புதுப்பால், வீட்டுப் பால் காப்பி கொண்டு வந்து வைத்துக் கொண்டு கணவரைத் தேடினாள். அவர் இல்லை.

அதிலிருந்து பிள்ளையவர்கள் காப்பியும் மோரும் சாப்பிடுவதில்லை.

அவர் மனைவிக்கு மிகுந்த வருத்தம். ஒரு பக்கம் குழந்தைகள். மற்றொரு பக்கம் புருஷன் என்ற குழந்தை. வம்சவிருத்தி என்ற இயற்கை விதி அவளை வென்றது.

இப்படிப் பதினைந்து நாட்கள்.

மாட்டை என்ன செய்வது?

அன்று இரவு எட்டு மணி இருக்கும். பால்வண்ணம் பிள்ளையும் சுப்புக் கோனாரும் வீட்டினுள் நுழைந்தார்கள்.

"மாட்டைப் பாரும். இருபத்தஞ்சி ரூபா!" என்றார்.

"சாமி! மாடு அறுபது ரூபாய் பெறுமே!" என்றார் சுப்புக் கோனார். "இருபத்தைந்து தான். உனக்காக முப்பது ரூபாய் என்ன? இப்பொழுதே பிடித்துக் கொண்டு போக வேண்டும்!"

"சாமி! ராத்திரியிலா? நாளைக்கு விடியன்னே பிடிச்சிக்கிறேன்!" என்றார் சுப்புக்கோனார்.

"உம் இப்பவே?"

மாட்டையவிழ்த்தாய் விட்டது.

மனைவி 'மாடு எழுபது ரூபாயாயிற்றே, குழந்தைகளுக்குப் பாலாயிற்றே' என்று தடுத்தாள். மேலும் வரும்படி வேறு வருகிறதாம்.

"என் புள்ளெகள் நீத்தண்ணி குடிச்சு வளந்துக் கிடும்" என்றார் பிள்ளை.

சுப்புக் கோனார் மாட்டை அவிழ்த்துக் கொண்டு போகும் பொழுது, மூத்த பையன், "அம்மா! என் கன்னுக் குட்டி!" என்று எழுந்து உட்கார்ந்து கொண்டு அழுதான்.

"சும்மா கெட, சவமே!" என்றார் பால்வண்ணம் பிள்ளை.

மணிக்கொடி, 30-12-1934
---------------------

65. பறிமுதல்

43 நெர். கைதி ஒரு பயங்கரப் புரட்சிக்காரன். அவன் பேரில் அரசியல் விஷயமாகக் கொலைக் குற்றம் சாட்டப்பட்டு, கோர்ட்டில் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

பயங்கரப் புரட்சிக்காரன் என்று சமுதாயத்தின் சார்பாக அரசாங்கம் முடிவு கட்டிவிட்டது. ஆனால் அவனைப் பார்த்தால் அப்படித் தோன்றாது. இயற்கைச் சிருஷ்டியில் வசீகரப்படுத்தும் ஒரு ஜீவன் இருந்தால் அது 43 நெர். கைதி.

அவன் இருக்கும் அறை தனி. வெளிச்சம் வருவதற்கு அல்லாமல் காற்று வருவதற்கு மட்டும் ஒரு சிறிய துவாரம். அதன் வழியாகப் பெரிய பூனை நுழையலாம். ஆனால், புரட்சிக்காரர்கள் பூனை வடிவம் எடுக்கக்கூடும் என்று பயந்தோ என்னவோ அதிலும் இரும்புக் கம்பி.

இந்தத் தனிமையில் ஒருவனுக்குப் பித்துப் பிடிக்காமலிருந்தால் அவன் மன உறுதியை என்னவென்று கூறுவது!

வாரத்திற்கு ஒரு முறை - தவறுதலாகவோ என்னவோ - அவனது சிநேகிதியைப் பார்க்க அனுமதித்தார்கள். அதுதான் காரணம் அவன் அந்தச் சிறையிலிருந்து ஓர் அற்புதமான கிரந்தத்தை எழுத.

தூக்குத் தண்டனை அநுபவிக்க இன்னும் பதினைந்து நாட்கள். இன்னும் ஒரு முறை வருவாள். கிரந்தம் உலகத்திற்குப் போய்விடும். அதற்கு மேல் சாந்தி! வேறு என்ன வேண்டும்?

அந்தச் சின்ன அறையில் இரகசியங்களை மானஸீகமாக அல்லாமல் வேறு முறையில் வைத்துக் காப்பாற்ற முடியுமா?

ஜெயில் சூப்பிரண்ட் பரமேச்வரத்திற்குத் திடீரென்று சோதனை போடவேண்டும் என்று பட்டது. அவருடைய அந்தராத்மா அப்படிச் செய்யச் சொல்லியதோ, என்னவோ?

கேட்பானேன்? வெகு நுணுக்கமாக எழுதிய அந்தக் காகிதக் கத்தை அகப்பட்டுக் கொண்டது; அதைப் பறிமுதல் செய்தார்.

43 நெர். அதை எடுத்துக்கொள்ளும்பொழுது பட்ட துடிப்பைப் பார்க்க வேண்டுமே! உயிரையே வேண்டுமென்றாலும் பணயம் வைப்பது போல் - இவனைக் கேட்காமலே பிரியப் போகிற இந்தப் பொக்கான உயிரை மட்டுமா? தனது சக்தி முழுவதையுமே வைத்துப் போராடினான். நான்கு வார்டர்களும் ஒரு சூப்பிரண்டும் எதிர்க்கும் பொழுது, அந்தச் சின்ன அறையில் எப்படிப்பட்ட சண்டைக்கும் ஒரே வித முடிவுதான் உண்டு. அதுதான் நடந்தது.

43-ம் நெம்பருக்குப் பலத்த காயம். புற உடம்பில் மட்டுமா? அது மட்டுமானால்தான் அதை ஒரு பொருளாக மதிக்க மாட்டானே? ஆத்மா, உலகம், இலட்சியம் எல்லாம் பறிபோனது போல் துடித்தான்; சோர்ந்தான். அந்தப் பெண் - தனது சிநேகிதை - வந்தால்... ஐயோ!... அவனுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது.

ஜெயில் ஆஸ்பத்திரியில் மருந்து போட்டார்கள். தூக்குத் தண்டனை ஒத்திவைக்கப்பட்டது.

அன்று சிநேகிதியைக் காண அனுமதிக்கவில்லை.

2

'நல்லார்... அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை' என்பது ஒரு தத்துவப் பிரமை. இதற்கு எதிர்மறையாக, 'தீயார், அவர் பொருட்டாகச் சிலரை வலுவாகச் சிறைசெய்ய வேண்டியது' என்பது ஒரு சமூக உண்மை.

பரமேச்வரம் சூப்பிரண்டாக இருந்தாலும் அவரும் ஒரு சிறைவாசி தான். அந்தச் சமூக உண்மைக்கு உதாரணம். இவரும் அந்த ஜெயில் காம்பௌண்டிற்குள்ளேதான் நாள் முழுதும் குடியிருக்கிறார். இவரும் இஷ்டம்போல் அனாவசியமாகச் சுற்ற முடியாது. கைதிகளைக் காப்பதற்கு இவரும் சிறைவாசம் செய்யவேண்டியிருக்கிறது. இது பரமேச்வரத்திற்குத் தெரியாது; அவர் அதைப் பற்றி நினைத்ததே இல்லை.

பரமேச்வரத்திற்கும் மற்றக் கைதிகளுக்கும், இருக்கும் அறையைப் பற்றியமட்டில், வித்தியாசமுண்டு. சிறையிலே, ஏ கிளாஸ் பி கிளாஸ் இல்லையா? இதற்கெல்லாம் மேலாக ஜெயில் சூப்பிரண்ட் கிளாஸ் என்று வைத்துக்கொண்டால் போகிறது.

அன்று இரவு சூப்பிரண்ட் பரமேச்வரம் பிள்ளை பறிமுதலைப் பற்றி ரிப்போர்ட் தயார் செய்து கொண்டிருந்தார். எழுதியவர் 43 நெர். கைதி. தலைப்பு ஒன்றும் தெரியவில்லை. படித்துத்தான் ஆகவேண்டும்!

படிக்க ஆரம்பிக்கிறார்...

"நல்ல இருள்...
தொட்டால் கையில் கறுப்பு ஒட்டிக் கொள்ளும் மாதிரி.
அப்பொழுது நீ வந்தாய்.
இருளில் ஜோதிப் பிழம்பாக இருந்தாய்.
நீ யார்?
முகத்தை ஏன் மறைக்க வேண்டும்?
முத்தமிட்டுவிடுவேன் என்று பயமா? ஆனால் நீ என்னைத்
தழுவலாமோ?
உனது ஸ்பரிசம் என்னைப் புனிதனாக்கிவிட்டது.
நீ யார்?...
இன்று நீயேன் வரவில்லை? இன்று நிலவு காய்கிறது.
நிலவுக்கு நீ அவசியமில்லையா? அல்லது உனக்கு நிலவு
அவசியமில்லையா?
இன்று என் மனம் தகர்ந்துவிடுகிறதே? இப்பொழுது
வர மாட்டாயா?
உள்ளத்தில் ஒரு ஊழிக் கூத்து, ஊழியின் இறுதி... உனக்கு
இரக்கமில்லையா?
நீ யார்?...
இன்று நள்ளிரவு.
நீ வருவாய். வந்துவிட்டாய்! அடி, நீ யார்?
என்னை வாழ்விக்க வருகிறாயோ?
காதலா, கருணையா?
தாயின் அன்பா?
உன்னைத் தாய் என்று நினைக்க முடியவில்லை. நீ எனக்கு...
அடி, நீ யார்?
உன் முகத்திரையைக் களைந்தால் நீ என்ன செய்வாய்?
அடி, நீ யார்?"

பரமேச்வரம் வாசித்து முடிக்கும் பொழுது இரவு வெகு நேரமாகி விட்டது.

இதில் என்ன குற்றமிருக்கிறது? இருந்தால் அழித்துவிடத்தான் வேண்டுமா? அழித்தால் என்ன கிடைத்துவிடுகிறது? அழித்துத்தான் ஆக வேண்டுமா?

புது உலகத்தை சிருஷ்டிப்பவனை, இன்று உடலை அழித்துவிடலாம். அவன் பிரம்மா! அவனை அழிக்க முடியுமா? சமூகம் அசட்டுத்தனம் செய்யும்.

அரசாங்கம் எப்பொழுதும் இப்படித்தான். நமது அரசாங்கமாக இருந்தால் என்ன? அந்நியனுடையதாக இருந்தால் என்ன? சரித்திரத்தில் எங்கும் இப்படித்தான்.

கடமை இருக்கிறது. கடமை அவசியந்தான். கடமைக்காக எதையும் செய்துவிடுகிறதா?

பரமேச்வரத்தின் மனது ஒரு கொந்தளிக்கும் கடல்போல் தறிகெட்டுப் புரண்டது.

வெளிக் காம்பௌண்டில் உலாவ வருகிறார்.

தம்மையறியாமல் அந்தச் சிறு காகிதக் கட்டு அவர் பைக்குள் செல்லுகிறது. அதை அழிப்பதா? வைத்துக் கொண்டால் என்ன?

நல்ல இருட்டுத்தான்.

காம்பௌண்ட் சுவரிலிருந்து ஒரு கறுத்த உருவம் குதிக்கிறது.

கடமை! வார்டர்களைக் காணோம். அந்தப் பக்கம் சற்று ஒரு மாதிரித்தான்.

ஒரே பாய்ச்சலில் எட்டிப் பிடித்துக் கொள்ளுகிறார்.

சல்லடம் தரித்த பெண்.

அவன் சிநேகிதை.

"நீ..." என்கிறார்.

"ஆம்! அவரைப் பார்க்க வேண்டும். அனுமதி இல்லாவிட்டால் வழியுண்டு."

"பார்க்கக் கூடாது! வீணாக நீயும் அகப்பட்டுக் கொள்ளாதே! போய்விடு! நீ சிறுமி!"

"நான் பெண்ணுமல்ல, சிறுமியுமல்ல. எங்கள் சமுதாயத்தின் அடிமை; தொண்டர்."

"நம்முடைய சமுதாயமில்லையா?" என்று சிரித்தார்.

"நீ ஒரு துரோகி. உனக்கு அங்கு இடம் கிடையாது!" என்றாள்.

அவள் கையில் தொங்கிக் கொண்டிருந்த பையில் என்னமோ சிறிய கட்டு பொத்தென்று விழுந்தது.

இருவரும் மௌனமாக நிற்கின்றனர்.

"நீ!..." என்றாள்.

"போ! போ!"

அவளை ஒரே துக்காகத் தூக்கி, காம்பௌண்ட் மதில் மேல் வைத்தார். அடுத்த நிமிஷம் அந்த உருவம் மறைந்தது.

"பறிமுதல் செய்யப்பட்ட சிறு காகிதக் குப்பை, கைதி 43-ம் நெம்பரின் பைத்தியக்கார உளறல்களாக இருந்ததால் அழிக்கப்பட்டது" என்று எழுதிவிட்டு நாற்காலியில் சாய்ந்தார்.

எது பறிமுதலானது?

மணிக்கொடி, 19-08-1934
------------------

66. பாட்டியின் தீபாவளி

'குத்து விளக்கேற்றி கோலமிட்டு பாரேனோ.'

சங்கரிப் பாட்டியின் வீடு வெறிச்சோடிக் கிடந்தது. பாட்டியின் வாழ்க்கை திடீரென்று இந்திரப் பதவியை இழந்த நஹுஷகன் நிலைமை மாதிரி. அவள் வாழ்க்கை சுகமான கவலையற்ற முடிவை எதிர்நோக்கித் தன் பிள்ளை, மாட்டுப்பெண், குழந்தை மீனு இவர்கள் இடையில் கழிந்து வந்தது. திடீரென்று சென்ற ஐப்பசியில், அந்தக் கண்ணற்ற விதி எல்லோரையும் ஒரேயடியாகக் கொண்டு போய்விட்டது. காலராவிற்குத் தராதரம் தெரிகிறதா? அந்தக் குழந்தை, குழந்தை மீனு, அவள் என்ன பாபம் செய்தாள். கிழக்கட்டையைத் தவிக்கவிட்டுத் திடீரென்று போய்விட்டாளே.

அதன் பிறகு...

அதன் பிறகென்ன? கிழவிக்கு நாட்கள் சென்றது தெரியாது. யோகிகள் காலம் கடந்துவிடுகிறார்கள். காலத்தின் மாறுபாடுகளை மீறி மோன நிலையில் இருந்துவிடுகிறார்களாம். அது எனக்குத் தெரியாது. சங்கரிப் பாட்டிக்கு நாட்கள் கழிந்தது தெரியாது. நடைப்பிணம்... நடையற்ற பிணமாக இருந்தாலும் தேவலை.

அன்று விடியற்காலம் தீபாவளி ஆரம்பிக்கிறது. சாயங்காலம் முதல் கிழவிக்கு துக்கம் நெஞ்சையடைத்தது. கிழக்கட்டைக்குத் தீபாவளி வேறு வேண்டியாக்கும். மடிசஞ்சி மூட்டையைத் தலைக்கு வைத்துப் படுத்துக் கொண்டாள். இரவு பூராவாகவும் துக்கம்... தூக்கமாவது மண்ணாவது!

விளக்கையாவது ஏற்றி வைக்கலாமே. கிழவி குடுகுடுவென்று நடுங்கியவண்ணம் எழுந்திருக்கிறாள். என்ன நேரம் என்று தெரியாது. வெளி எல்லாம் இருள், உள் எல்லாம் இருள். உள்ளத்திலும் இருள். எங்கோ தூரத்திலே பேச்சுக் குரல்... அர்த்தமற்ற மனிதக் குரல் அவள் காதைக் குத்துகிறது.

நெருப்புக் குச்சியைக் கிழித்து குத்துவிளக்கை ஏற்றுகிறாள். குச்சிதான் சீக்கிரம் பிடிக்கிறதா? நனைந்த தீப்பெட்டி. அடுப்பண்டை போகிறாள். குவிந்த சாம்பலில் மங்கி மடியும் கங்கு. அதைக் கரண்டியில் கொண்டுவந்து அதன் உதவியால் நெருப்புக் குச்சியைப் பற்ற வைத்து விளக்கை ஏற்றுகிறாள். விளக்கின் மங்கிய தீப ஒளி, குச்சிலில் இருக்கும் தட்டுமுட்டுச் சாமான்களைப் பேய் சாயையாகக் காண்பிக்கின்றன. அசைந்தாடும் தீபவொளி பொருள்களை அசைக்கின்றன. மூலையிலும் மோட்டிலும் பம்முகின்ற இருளையும் அசைந்தாடச் செய்கின்றன.

பாட்டிக் கிழவிக்கு மீனுவின் நினைவு உள்ளத்தைக் கவ்வியது நெஞ்சையடைத்தது. போன தீபாவளிக்கு முந்திய தீபாவளியில் அவள் கைக்குழந்தையாக, தவழும் குழந்தையாக செல்லத்தின் மடியில் சிரித்துக்கொண்டிருக்கும்போது தைத்த சட்டை, பாட்டியின் மடிசஞ்சி மூட்டையிலே, பரிசுத்தமான விபூதிச் சம்புடத்துடனும், ருத்திராட்சத்துடனும் இருந்தது. அதை மெதுவாக எடுத்து (மங்கிய கண்களின் கண்ணீர் அதை நனைக்கிறது) மீனு என்று குழறிக்கொண்டு, குத்துவிளக்கின் பாதத்தில் சமர்ப்பித்து வணங்குகிறாள். கிழவியின் பொக்கை வாயில் ஒரு பரிதாபமான சிரிப்பு. பட்டுச் சட்டையில் இரண்டு துளிகள்.

பாட்டி குத்துவிளக்கின் பாதத்தில், பட்டுச் சட்டையில் முகம் வைத்து, வணங்குகிறாள். உள்ளம் 'மீனு, மீனு' என்று ஒலி செய்கிறது.

ஏன் அப்படியே சிலையாக, குத்துவிளக்காக இருந்துவிட்டாள். உயிர்தான்...

"பாட்டி!"

குழந்தைக் குரல்... குழந்தை மீனுவின்...

கிழவி திரும்புகிறாள்.

"வாடியம்மா! கோந்தே... வாடியம்மா!"

ஆவலுடன் கையை நீட்டுகிறாள்.

"மாத்தேன் போ!" குழந்தை சிரிக்கிறது. ஆனால் கைகளைப் போட்டுத் தாவுகிறது. குழந்தை அவள் வற்றிய நெஞ்சில் தாவுகிறது. அப்பா! பால் வார்த்த மாதிரி... என்ன சுகம்!

"பாட்டி! பாட்டி!" என்று நெஞ்சில் குழைகிறது. நெஞ்சிடையே நெளிந்து, வளைந்து குமைகிறது.

"பாட்டி, பாப்பா வெச்சு விளையாடலாமா?"

"வாடியம்மா? மரப்பாச்சி எடுத்துண்டு வரட்டா?"

குழந்தையுடன் ஒரு மூலைப் பக்கம் திரும்புகிறாள். குழந்தை எட்டி ஒரு பொம்மையை எடுக்கிறது. கையொடிந்த மரப்பாச்சி.

"பாட்டி! நீதான் அம்பி மாமாவாம். நான் தான் பொண்ணாம். வச்சு விளையாடலாமா!"

குழந்தைக்குச் சட்டைப்போட்டுக் குத்துவிளக்கின் முன்பு மரப்பாச்சியுடன் உட்கார வைத்தாகிவிட்டது. கிழவி சோபனப் பாட்டு தனது நாதமிழந்து நடுங்கும் குரலில் பாடுகிறாள்.

"பாட்டி, கதை சொல்லு பாட்டி... அன்னிக்குச் சொன்னையே, அந்தக் கதை சொல்லு பாட்டி... நன்னா... நாந்தான் இப்படி மடிலே உக்காந்துப்பேனாம்..." மறுபடியும் குழந்தை மடியில் ஏறி உட்கார்ந்து கொண்டது. ஆடி ஆடி அசைந்து கொண்டு கேட்கிறது.

"நரகாசுரன்னு ஒத்தனாம். அவன் பொல்லாதவனாம். அக்ரமம் செய்தானாம். எல்லாரையும் அடிச்சு, குத்தி, பாடுபடுத்தினானாம்..."

"நான் படுத்துவேன்பியே அது மாதிரியா?"

"அடி கண்ணே உம்மாதிரி யார் சமத்தாட்டம் படுத்துவா?" குழந்தையைத் தழுவி முத்தம் கொஞ்சுகிறாள். "அவன் பொல்லாதவன்... அவனை கிருஷ்ணன் வந்து அம்பாலே - வில்லாலே..."

"அம்புன்னா என்ன பாட்டீ!"

"அம்புன்னா..."

"பாட்டீ ஒரு பாட்டு சொல்லு பாட்டீ!"

கிழவி பாடுகிறாள்.

"பார்க்குமிடத்திலெல்லாம் நந்தலாலா - நின்றன்
ஆசை முகம் தோன்றுதடா நந்தலாலா"

"பாட்டீ நான் ஓடறேன் பிடிப்பையோ?"

"சமத்தாட்டம் ஓடு! பிடிக்கிறேன்."

குழந்தை குதித்துக்கொண்டு வாசல் பக்கம் ஓடுகிறது. வெளியில் இருக்கும் இருள் திரையை நோக்கி ஓடுகிறது. கிழவியும் தள்ளாடிக் கொண்டு பின் தொடர்கிறாள்.

குழந்தை வாசலை நெருங்கிவிட்டது.

வெளியிலே 'டபார்' என்று ஓர் யானை வெடிச் சப்தம்.

அவ்வளவுதான்.

உலகத்திற்கு தீபாவளி ஆரம்பித்தது.

பாட்டிக்கு...?

ஊழியன், 09-11-1934
---------------

67. பித்துக்குளி

மாவேலிக் கரை என்றால் மனதில் என்ன என்னவோ எண்ணங்கள் எல்லாம் குவிகின்றன. இயற்கை அன்னைதன் எழில்களை எல்லாம் அந்த மேற்கு மலை மறைவிலே கொட்டிக் குதூகலித்து விளையாடுகிறாள். வாலிபனுக்குக் காதல் தோன்றும். கவிஞனுக்குக் கனவு தோன்றும். அறிவில் முதியவனுக்குச் சாந்தி தோன்றும் அந்த இடத்திலே.

சுற்றிலும் காயல் நீலவானைத் தழுவியது. அதன் ஓரத்திலே கமுக மரங்களைக் குழைந்து தழுவின காதற் கொடிகள் - மிளகுதான். அந்த மிளகுக் கொடி... உள்ளத்தையும் உடலையும் ரகஸ்யமற்று அர்ப்பணம் செய்யும் கங்கையின் களங்கமற்ற அன்பு மாதிரி...

காயலுக்கு வட பக்கத்தில் வடசேரி. அதில் வல்லியத் தம்பிரான் என்றால் பழைய அரச வம்சம். மலை நாட்டு வீரம் முதலிய இழந்த இலக்ஷியங்கள் எல்லாம் நினைவிற்கு வரும். அவருக்கு ஒரு மகள் சகுந்தலா. காளிதாசன் கனவில் கண்ட சாகுந்தலை இவளைப் போல்தான் இருந்திருக்க முடியும். இயற்கையின் மடியில் வளர்ந்த குயில். பழைய படாடோ பத்தின் அம்சமான வல்லியத் தம்பிரானுக்கு உயிர். சமஸ்தான சம்பந்தத்தில் தமது இழந்த சிறப்புகளைப் பெறவிருந்தார். அவளுடைய ரகஸிய நாடிகளை அவர் அறிவாரா?...

மாவேலிக்கரைக்கும் வடசேரிக்கும் இடையில் காயல் ஒரு மைல்தான்.

மாவேலிக்கரையில் நீரருகில் ஒரு பிறையிடம் தம்பிரானைச் சேர்ந்ததுதான். அங்கே மார்த்தாண்டவர்மன் என்ற வாலிபன். ஓலைச்சுவடி, விவசாயம் இதுதான் அவனுடைய பொழுதுபோக்கு, வாழ்க்கை இலட்சியம்.

அன்று இரவு சற்று மழை தூறிக்கொண்டிருந்தது.

ஓங்கி வளர்ந்த தென்னங்கீற்றுகளிலிருந்து சொட்டுச் சொட்டென்று நீர்த்துளிகள்.

நாளைக்குச் சகுந்தலா புருஷன் வீடு சென்றுவிடுவாள்.

இன்றாவது கடைசி முறை காண...

இருளிலே படகு வரும் சப்தம்.

மார்த்தாண்டவர்மன் ஒரு மூலையில் மணையில் உட்கார்ந்திருக்கிறான்.

இருட்டு.

அவள் வந்தாள். தீபத்தை ஏற்றினாள்.

மூலையிலிருந்த கரியடுப்பில் பாலைக் காய்ச்சினாள்.

அதைக் கையில் எடுத்துக்கொண்டு அவன் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள்.

மார்த்தாண்ட வர்மன் நினைவற்றவன்போல் இருந்தான்.

பால் கிண்ணம் அவனது வாயண்டை வந்தது. குழந்தை மாதிரி அருந்தினான்.

பிறகும்...?

மௌனந்தான்.

மெதுவாக அவன் கால்களை எடுத்து இடையில் சுற்றிக் கொண்டாள்...

அவளது மழையில் நனைந்த உடலை மறைத்த கேசத்தை ஒதுக்கி அவனது சிரத்தை தோள் மீது மெதுவாக சாய்த்தாள். அவனது உஷ்ணமான கன்னங்கள்... அவள் கழுத்திலிருந்து முகம்வரை செக்கச் சிவப்பாக மாறியது...

மெதுவாக அணைத்த அவன் கரத்துடன் அவன் மடியில் கண்ணை மூடிய வண்ணம் படுத்தாள்.

என்ன நம்பிக்கை! அவள் கடைக்கண்ணில் சுடர்விட்ட இரண்டு துளிகள் எதை நினைத்தனவோ!

ஆமா... சகுந்தலா... என்னுடைய... சகுந்தலா... அவள் என்னுடையவள்... அவள் கழுத்து, அந்தப் பிளவுபட்ட கேசம் எவ்வளவு அழகாக... இப்படியே என் பக்கத்தில்... எப்பொழுதுமே... ஆமாம். எப்பொழுதுமே... அதை அவள் கழுத்தில் அப்படியே சுற்றினால்...

அவனது கரங்கள் இருகூறாகப் பிளந்து கிடந்த சிகையை அவள் கழுத்தில் சுற்றுகின்றன, இறுக்குகின்றன.

"ஆமாம்! என்னுடையவள்!" என்ற வார்த்தைகள் அவன் வாயிலிருந்து வருகின்றன.

அவள் கண்கள் மூடியபடிதான்... அதரத்திலும் அந்தப் புன்சிரிப்பு. அந்தத் தழுவல், அவனைத் தன்னுள் அழுத்திய கை இன்னும் அவனை இழுப்பது மாதிரி அழுத்துகின்றது... அந்த நிலையில்...

அவ்வளவுதான்.

அந்த இரண்டு துளிகள் என்ன நினைத்தனவோ?

அன்று அவனை அணைத்த வண்ணமே இரவு கழிகிறது.

அவள் எப்படி விலகுவாள்? உயிர் இருந்தால்தானே.

அன்று இரவு அவள் விலகவில்லை.

அவன் மனதில் காதலின் வெறி! ஐக்கிய வெறி!...

அவள் எப்படி நீங்குவாள்?

அன்று இரவு அவள் நீங்கவில்லை!

உயிர் இருந்தால்தானே!

மணிக்கொடி, 30-09-1934
-----------------

68. பொய்க் குதிரை

"வாழ்க்கையே பிடிப்பற்றது; வாழ்வாவது மாயம்!" என்றெல்லாம் நினைவு ஓடிக்கொண்டிருந்தது விசுவத்திற்கு; ஏனென்றால், அன்று ஆபீஸில் அவனுக்கும் சம்பளம் போடவில்லை. வீட்டிலே சாமான் கிடையாது; வாடகைக்காரன் நெருக்குகிறான். மனைவி கமலத்தின் துயரந்தேங்கிய முகம் அவன் மனக்கண் முன்பு நின்றது.

பூக்கடைத் தெரு வழியாக நடந்துகொண்டிருக்கிறான். இரவு 7 மணியிருக்கும். மின்சார வெளிச்சமும், டிராமின் கண கணப்பும், மோட்டாரின் கிரீச்சலும் அவன் மன இருளுக்குப் பகைப்புலமாக இருந்தன.

ரஸ்தாவின் ஓரமாக, உலகத்தின் பரபரப்பிற்கும், போட்டி ஆவேசத்திற்கும் வழிவிட்டு விலகி நடப்பவன் போல நடந்து கொண்டு போகிறான்.

ஜனங்கள் ஏகபோகமாக, இரைச்சலாக இடித்துத் தள்ளிக் கொண்டு செல்லுகிறார்கள். ஏதோ பிரக்ஞையற்றவன் போல் நடக்கிறான், வழிவிட்டுக் கொள்ளுகிறான், நடக்கிறான் - எல்லாம் பிரக்ஞையற்று.

ரஸ்தாவில் ஒரு திருப்பம்; சற்று இருள் படர்ந்த வெளிச்சம்; பாதசாரித் திண்ணையிலே, அல்ல அதன் கீழே ஓர் ஓலைப் பாயின் சுருள்; எதேச்சையாகக் கண்கள் அதன்மீது படிகின்றன. ஓலைப் பாய்ச் சுருளா! ஓர் ஏழைக் குழந்தையின் தொட்டில்; சுருட்டிய பாயில் குழந்தை சுகமாக உறங்கியது. உறக்கமா? சீச்சி, என்ன நினைப்பு! அதன் தாயின் கஷ்டம் என்னவோ! கமலத்திற்கு ஒரு குழந்தை இருந்தால்... நினைப்பில் என்ன குதூகலம்...!

சீச்சீ! இன்றும் சம்பளம் போடாவிட்டால் என்ன? நாளை போடுகிறான். அந்தக் குழந்தையின் தகப்பனை ஒப்பிட்டால் நாம் ராக்பெல்லர், ஏன், குபேரனல்லவா?

இந்த உற்சாகம் மற்றக் கவலைகளை மறக்கடிக்கிறது. அன்று டிராமிற்குக்கூடச் செலவழிக்காமல் கொண்டு செல்லும் அந்த ஓரணாவை வைத்துக்கொண்டு...

வழி நடை தெரியவில்லை; திருவல்லிக்கேணிவரை உற்சாகமாக நடக்கிறான்.

கமலா, பாவம் தனியாகக் கொட்டுகொட்டென்று உட்கார்ந்திருப்பாள். நவராத்திரிக் கொலு வைக்கக் கூடாத... என்ன ஜன்மம்... என்ன பிழைப்பு... அவளுக்கு அந்தச் சிறு சந்தோஷத்தையாவது கொடுக்க முடியாத பேடி...

மௌண்ட் ரோட்டைத் தாண்டி திருவல்லிக்கேணிப் பக்கம் நெருங்கிவிட்டான். வல்லபாய் அக்ரகாரம் கிட்ட வந்துவிட்டது.

வழியிலே ஒரு கூடைக்காரி.

புஷ்பம்! நல்ல முல்லை, மலரும் பருவம் - கம்மென்ற வாசனை! கமலாவின் தலையில் வைத்தால் அவள் முகத்தில் வரும் புன்சிரிப்பாவது பசியை ஆற்றுமே!

உடனே கூடைக்காரியிடம் வேறு யோசனையில்லாது புஷ்பத்தை வாங்கிவிடுகிறான். வழி நெடுக அவள் புன்சிரிப்புத்தான்... அவன் உதட்டில் ஒரு புன்சிரிப்பு...

"கமலா! கமலா!!"

"யாரது! நீங்களா?" என்று கதவைத் திறக்கிறாள் கமலம். வீடு என்ற ஹோதாவில் இருக்கும் காற்றற்ற சிறு அறையில் மேஜையிலே மங்கிய விளக்கு, துணிமணி சிதறிய கொடி, சுவரோரம் பூராவும் டிரங்குப் பெட்டியும், தட்டுமுட்டுச் சாமான்களும், படுக்கையும்.

கமலா சிரித்துக்கொண்டு கதவைத் திறக்கிறாள். அந்த மங்கிய வெளிச்சத்தில் அவள் கண்கள் எதையோ எதிர்பார்ப்பவை போல் தோன்றின. அவ்வளவுடனும் ஒரு மகிழ்ச்சியிருந்தது. மகிழ்ச்சியை விட எதிர்பார்த்த ஆசை அதிகம்.

"கமலா! உனக்கு ஒன்று கொண்டுவந்திருக்கிறேன். என்ன, சொல் பார்ப்போம்!" என்றுகொண்டே கொடிப்பக்கம் திரும்பிச் சட்டையைக் கழற்றினான்.

கமலத்தின் முகத்தில் ஒரு சமாதானம், மகிழ்ச்சி பொங்கியது.

விசுவம் அதைக் கவனிக்கவில்லை. அவசர அவசரமாக, "கமலா, இன்று சம்பளம் போடவில்லை. அதற்கென்ன நாளை போடுவார்கள். நான் உனக்கு என்ன கொண்டுவந்திருக்கிறேன், தெரியுமா?" என்றான். குரல், அவன் மனத்திலிருந்த கஷ்டத்தைப் பொருட்படுத்தாத மாதிரி பாவனை செய்து தேற்றியது.

"என்ன கொண்டு வந்திருக்கிறீர்கள்?" என்று தளர்ந்த குரலில் கேட்டாள்.

"இதோ பார்!" என்று அவள் பின்புறமிருந்துகொண்டு, அவளுக்குச் சிரிக்கும் முல்லையைக் காண்பித்துவிட்டு, அவள் தலையில் சூட்டி, அவள் தோள்களைப் பிடித்து உடலைத் திருப்பிய வண்ணம் முத்தமிட எத்தனித்தான்.

கமலாவின் கண்களில் கண்ணீர் பொங்கியது. முகத்தை அவன் மார்பில் மறைத்துக் கொண்டு பொருமி, விம்மி விம்மியழுதாள்.

விசுவத்தின் மனத்தில் கதையைக் கொண்டடித்தது போல் ஓர் உணர்ச்சி! கண்களில் என்ன கோழைத்தனம்!

"அசடே! அசடே! இன்றைக்கு இல்லாவிட்டால் நாளைக்கு வருகிறது. அதற்காக அழுவாளோ! மண்டூகம்!" என்றான் விசுவம்.

"அதற்காக இல்லை!" என்றாள் கமலம். அவள் கண்கள் அவன் கண்களைச் சந்தித்தன. கண்களிலே ஒரு பரிதாபம், ஏக்கம், மகிழ்ச்சி கலந்திருந்தது.

"பின் எதற்கு?"

"தோணித்து; அழுதேன். என்னமோ அப்படி வந்தது!" என்று அவன் அதரத்தில் முத்தமிட்டாள். முத்தம் அந்த மலர்ந்த முல்லையின் ஸ்பரிசம் போலும், கனவின் நிலவு போலும் மென்மையாக இருந்தது.

விசுவம் அவளை அணைத்து, முகத்திலும் அதரத்திலும் முத்தமிட்டான். சோர்ந்தவள் போல் அவன் தோள்களில் சாய்ந்த அவள் மெதுவாகக் கையை நீக்கி விலக்கிவிட்டு, "சாயங்காலம் உங்கள் நண்பர் அம்பியும், லட்சுமியும் வந்திருந்தார்கள்" என்றாள்.

"என்ன விசேஷம்?"

"இன்றைக்குக் கொலுவுக்கு என்னைக் கூப்பிட வந்தாள். உங்களையும் நேரே வந்து அழைக்க அவரும் வந்திருந்தார். கட்டாயம் வரவேண்டுமாம்!"

"கொலுவில் நான் எதற்கு?" என்று சிரித்தான் விசுவம்.

"அதுமட்டுமில்லையாம், இன்னிக்கு ஒரு விருந்தாம். எல்லா நண்பர்களையும் கூப்பிட்டிருக்காளாம். அவசியம் வரணும் என்று சொன்னார்கள்!" என்றாள் கமலம்.

இப்படியாவது அவளை அழைத்துச் சென்று சற்று அவளுக்குக் களிப்பூட்டலாமே என்று நினைத்தான் விசுவம்.

"கமலா, நீயும் புறப்பட்டேன், போகலாம்" என்றான்.

கமலம் தயங்கினாள்.

"சீ, அசடு! முகத்தைக் கழுவிவிட்டு அந்தச் சுதேசிப் புடவை வாங்கினோமே - அதுதான் வெளுப்பாகி வந்திருக்கிறதே! - அதை எடுத்துக் கட்டிக்கொள். நானும் புறப்படுகிறேன்" என்று துரிதப் படுத்தினான் விசுவம்.

அவளும் அவன் இஷ்டத்தைப் பூர்த்திசெய்ய முகத்தைக் கழுவி, சிறு குங்குமப் பொட்டிட்டுக்கொண்டு தயாரானாள்.

"கமலா! இங்கே வா!" என்று அவளை மடிமீதிருத்திக் கொண்டு, "கண்ணாடியில் பார்!" என்று சிரித்தான்.

"போங்கள், உடை கசங்கிவிட்டால்?..." என்று எழுந்திருக்க முயன்றாள். அவள் எவ்வளவு விடுவித்துக்கொள்ள முயன்றும் அவன் அவள் அதரங்களை முத்தமிட்டு விட்டான்.

"பாருங்கோ! கசங்கிவிட்டதே!" என்றாள் கமலம்.

இருவருக்கும் கண்ணாடியில் சிறு பாகத்தைத் தவிர மற்றதெல்லாம் வெறும் பலகை என்பது ஞாபகத்திலில்லை.

*****

அம்பி விசுவத்தின் பால்யத் தோழன். இருவரும் ஒன்றாகப் படித்தவர்கள். ஆனால் அம்பி பணக்காரன். சம்பாதிக்க வேண்டிய அவசியமில்லை. அவனும் அவன் மனைவி லட்சுமியும் வாழ்க்கை என்பது இன்பமயமான மோட்சம் என்றுதான் அறிந்தவர்கள். அம்பிக்கும், லட்சுமிக்கும், விசுவமும் கமலமும் வராத ஒரு விசேஷம் விசேஷமில்லை.

அன்று ஒரு விருந்து நடத்தவேண்டுமென்று தோன்றியது அம்பிக்கு. அத்துடன் நவராத்திரிக் கொலுவும் சேர்ந்துவிட்டால் கேட்பானேன்!

வீட்டு உள்ஹாலில் பொம்மைகள், விக்ரகங்கள் வைத்துக் கொலு அடுக்கியிருக்கிறது. லட்சுமியும் அவள் தோழிகளும் கம்பளத்தில் உட்கார்ந்து சிரித்துப் பேசிக்கொண்டிருக்கின்றனர்.

கிராமபோனில் முசிரி இவர்களுடைய மனத்தைக் கவர முயற்சித்தும் முடியவில்லை. ஆனால், வெறுப்புத் தோன்றாமல் பாட அவர் கிராமபோன் ப்ளேட்டாக மாறினால்தான் முடியும். அது அங்கு நடந்துகொண்டிருக்கிறது.

"அதோ, கமலா வந்துவிட்டாள்!" என்று எழுந்து ஓடினாள் லட்சுமி.

"வாருங்கோ!" என்று சிரித்துக்கொண்டு கமலத்தின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு உள்ளே செல்ல முயன்றான்.

"அம்பி எங்கே?" என்றான் விசுவம்.

"அவர் மச்சில்லே இருக்கார்!" என்று கூறிவிட்டு உள்ளே இழுத்துச் சென்றுவிட்டாள் லட்சுமி.

"அதார் விசுவமா? வாடா! ஏண்டா இவ்வளவு நேரம்? யூஸ்லெஸ் பெல்லோ! அப்படி என்ன ஆபீஸ் கேடு? வா உயர!" என்று கத்தினான் அம்பி.

மெத்தை வராந்தாவில் நாலைந்து நாற்காலிகளிடையே பெரிய ஜமக்காளம் விரிக்கப்பட்டிருந்தது. இரண்டிலும் நண்பர்கள் உட்கார்ந்துகொண்டிருந்தனர். அம்பி மட்டும் ஒரு குழந்தையைத் தோளில் சாத்தியவண்ணம் நடந்துகொண்டு அத்துடன் விளையாடிக் கொண்டிருந்தான். விசுவம் உயர வந்ததும், "அந்தப் பயலை இங்கு கொண்டு வா!" என்றவண்ணம் நெருங்கினான்.

குழந்தை அந்தப் பாதி இருளில் அடையாளம் தெரியாததால் அம்பியைப் பிடித்துக்கொண்டு கத்த ஆரம்பித்தது.

"அடே, திரும்பிப் பாரடா, விஸ்வ மாமா வந்திருக்கார்! அழலாமோ? பிஸ்கோத்து வாங்கித் தருவார். அன்னிக்கித் தரலே! ஏண்டா வாங்கித் தருவாயோ இல்லையோடா?" என்று குழந்தையைச் சமாதானப்படுத்தினான்.

விசுவத்திற்கு குழந்தைக்கு ஏதாவது வாங்கிக் கொடுத்தாக வேண்டும் என்று பட்டது.

"மாமா, பிஸ்கோத்து!" என்றது குழந்தை.

விசுவம் மனத்தில் ஏற்பட்ட நினைவை மறைத்துக்கொண்டு, கையிலிருந்த சாவிக் கொத்தை எடுத்துக் குலுக்கி, வேறு விளையாட்டில் அதன் மனத்தைத் திருப்பினான்.

அதற்குள் கீழேயிருந்து வீணையின் தொனி கேட்க ஆரம்பித்தது. பிறகு கமலத்தின் குரல் - 'சாந்தமுலேக' என்ற தியாகராஜ கீர்த்தனம்.

"அடே, உன் 'ஒய்ப்' (மனைவி) பாடுகிறாள்டா! கேளு!" என்று கத்திக்கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தான் அம்பி.

திடீரென்று பாட்டு பாதியில் நின்றது. "அம்மாமி கொஞ்சம் ஜலம்" என்ற தனது மனைவியின் குரல் விசுவத்தின் காதில் மட்டும் விழுந்தது. மத்தியானம் என்ன சாப்பிட்டாளோ?

"டேய் விசுவம்! நீ அந்தக் கீர்த்தனத்தை முடி!" என்றான் அம்பி.

"உனக்கு வேலையில்லை!"

"ஸார்! இந்தப் பயல் நல்லாப் பாடுவான் ஸார்! நீங்கதான் கேளுங்கோ! இல்லாவிட்டால் நான் பாட ஆரம்பித்துவிடுவேன்!" என்றான் அம்பி. அம்பியின் சங்கீத ஞானத்திலும் குரல் இனிமையிலும் அவன் நண்பர்களுக்கெல்லாம் பயம். ஏன்? கேட்கத் துர்ப்பாக்கியம் பெற்ற எல்லோருக்கும் அப்படித்தான்.

விசுவத்திற்கு மனத்தில் குதூகலம் இல்லை. உடலில் சோர்வு. ஆனால் அவன் கேட்டதற்குத் தான் கடமைப்பட்டவன் போலிருந்தது. ஏன் வந்தோம் என்ற நினைப்பு. கமலம் என்ன நிலையில் இருக்கிறாளோ?

"பாடுடா!"

விசுவம் அந்தக் கீர்த்தனத்தை எடுத்துப் பாட ஆரம்பித்தான். அதைக் கீழேயிருந்த பெண்கள் கேட்டுவிட்டார்கள். உடனே கமலத்தை, 'இன்னொரு பாட்டு, இன்னொரு பாட்டு' என்றார்கள். அம்பியும் இவனைச் சும்மா விடவில்லை. கமலம் தனது கணவர் குரலைக் கேட்டவுடன், அவர் மனத்திற்குச் சாந்தியும் சந்தோஷமும் அளிக்கிறதென்று, இவர்களுக்காக அல்லாமல் அவருக்காகப் பாடினாள். எப்படியிருந்தாலும் மனித தேகந்தானே! ஆனால், களைப்பைக் காண்பிக்கவும் முடியவில்லை. மரியாதைக் குறைவல்லவா?

அம்பி கடிகாரத்தைப் பார்த்துவிட்டு, "நேரமாகிவிட்டதே! எனக்காக இல்லாவிட்டாலும் உன் நண்பர்களுக்காகவாவது கொஞ்சம் போஜனத்தைப் பற்றிக் கிருபை செய்யக் கூடாதா?" என்றான்.

உடனே மங்களம் பாடி முடித்துவிட்டு, மற்றப் பெண்கள் எல்லாரும் ஏதேதோ சாக்குகளுடன் தாம்பூலம் வாங்கிக்கொண்டு புறப்பட்டு விட்டனர். லட்சுமியும் கமலமும் தவிர வேறு பெண்கள் இல்லை. கமலத்திற்கு என்னவோ அங்கு அன்று சாப்பிட மனமில்லை. ஆனால் கணவர் என்ன சொல்லுவாரோ?

ஐந்தாறு இலை போட்டு இருவரும் பரிமாறினார்கள். அம்பியும் அவன் நண்பர்களும் சாப்பிட வந்து உட்கார்ந்தார்கள்.

"கமலா! நீ நெய்யைப் பரிமாறு. நான் பப்படத்தைப் போடுகிறேன்!" என்றாள் லட்சுமி.

"நான் எதற்கு?" என்றாள் கமலம்.

"இதென்ன கூச்சம்! எடுத்துக்கொண்டு..." என்று அவள் கையில் நெய்க் கிண்ணத்தைக் கொடுத்துவிட்டு, பப்படத்தை எடுத்துக் கொண்டுவர உள்கட்டிற்குச் சென்றாள் லட்சுமி.

கமலம் கூசிக் கூசிப் பரிமாறிக்கொண்டு சென்றாள். அம்பிக்கும் பரிமாறியாய்விட்டது. வரிசையாக அவர்கள் நண்பர்களுக்குப் பரிமாறிக்கொண்டு அந்தக் கோடியில் உட்கார்ந்திருந்த விசுவத்திடம் சென்றாள்.

அம்பி உடனே சிரித்துக்கொண்டு, "ஊரார் வீட்டு நெய்யே! பெண்டாட்டி கையே" என்று பாட ஆரம்பித்தான்.

"அந்தப் பழமொழி பொய்த்துப் போகாமல் ஊற்றுங்கள்!" என்று உரக்கச் சிரித்தான்.

கமலத்தின் மண்டையில் பின்புறத்திலிருந்து யாரோ அடித்த மாதிரி இருந்தன இந்த வார்த்தைகள். அவள் கைகள் நடுங்கின! இருவர் கண்களும் கலந்தன. கை நடுக்கத்தில் விழுந்த இரண்டு துளிகளுடன் ஒரு கண்ணீர்த் துளியும் கலந்தது. கமலம் ஜாடையாகச் சமாளித்துக் கொண்டாள். மற்றவர்கள் கவனிக்கவில்லை. எப்படி முடியும்?

இதற்குள் லட்சுமி பப்படத்தை எடுத்துக்கொண்டு வந்தாள்.

"என்னடா விசுவம். சுத்த அசடனாக இருக்கிறாய்! அவளுக்கு ஏதாவது டோ லக் கீலக் வாங்கக் கூடாதா? லட்சுமி போட்டிருக்கிறாள் பார்த்தாயா? அவள் முகத்திற்குச் சரியாக இருக்கும். ஏண்டி, நீ அந்தப் புடவை என்னமோ வாங்கினாயே, அதை அவாளிடம் காண்பி!" என்று அடித்து வெளுத்துக்கொண்டு போனான் அம்பி.

"வாங்க வேண்டும் என்றுதான் உத்தேசித்திருக்கிறேன்" என்றான் அம்பி.

போஜனம் ஒருவாறு முடிந்தது. தாம்பூலம் வாங்கிக்கொண்டு இருவரும் திரும்பினார்கள்.

விசுவத்தின் வீட்டில் மங்கிய விளக்கு. அவன் படுக்கையில் சாய்ந்திருக்கிறான். பக்கத்தில் கமலம் உட்கார்ந்திருக்கிறாள். வெற்றிலையை மடித்துக் கொடுத்தவள், அவன் முகத்தைப் பார்த்ததும் 'கோ!'வென்று கதறிக்கொண்டு அவன் மார்பில் முகத்தை மறைத்துக் கொண்டாள். சிறைப்பட்ட துக்கம் பீரிட்டுக் கொண்டு வருவது போல் இருந்தது.

"சீ, அசடு! ஏன் அழுகிறாய்! அம்பி ஒரு அசட்டுப் பயல். அவன் வார்த்தைக்கு ஒரு மதிப்பு வைக்கலாமா? உலகம் தெரியாமல், குடி முழுகிப் போன மாதிரி... அசடு!... அசடு!" என்று தேற்றினான்.

"அதற்கல்ல..." என்றாள் கமலா.

"பின் என்னவோ துக்கம்!"

"இன்றைக்கு மனசே ஒரு நெலை கொள்ளல்லெ!"

"சீ! நான் செய்தது முட்டாள்தனம்! கமலா!" என்று அவள் அதரத்தில் முத்தமிட்டான். கண்ணீரின் ருசி உப்பு மட்டும் கரிக்கவில்லை.

'ஆறு கதைகள்', தொகுப்பு -1941
---------------------

69. 'பூசனிக்காய்' அம்பி

எந்தப் பெற்றோராவது தன் குழந்தைக்கு இப்பெயரைத் துணிந்து வைத்திருப்பார்கள் என்று நான் கூற வரவில்லை. அது நான் கொஞ்ச காலத்திற்கு முன்பு அறிந்திருந்த சிறு பையனின் பட்டப்பெயர் என்றுதான் எனக்குத் தெரியும். அவனைப் 'பூசனிக்காய் அம்பி' என்றுதான் எல்லோரும் கூப்பிடுவார்கள். அவனுக்கு வேறு பெயர் இருந்ததாக எனக்கு ஞாபகம் இல்லை.

இந்தப் பெயர் எப்படி வந்திருக்கலாம் என்று எங்களூர் ஆராய்ச்சியாளர்கள் ரொம்பவும் சிரமப்பட்டிருக்கிறார்கள். அம்பியின் தலை வழுக்கை. அதன் மேல் பொன்னிறமான பூனை மயிர். பூசனிக்காயின் வர்ணத்தைப் பெற்றிருப்பதிலிருந்து அந்தப் பெயரை அவனுக்குக் கொடுத்திருப்பார்கள் என்று ஒரு கட்சியினர் வாதாடினார்கள். இதற்கு நேர்மாறாக அம்பிக்குப் பூசனிக்காயின் மீது இருந்த அபாரப் பிரேமையினால் அப்பெயர் வந்திருக்கலாம் என்று உறுதிபடக் கூறியது மற்றொரு கட்சி. இதற்கு இடையில் கொஞ்சம் கவிதைக் கிறுக்குப் பிடித்த ஒரு கோஷ்டி, அவன், பூசனி காய்க்கும் காலத்தில் பிறந்ததினால் அப்பெயர் இடப்பட்டிருக்கலாம் என்று அறைந்தார்கள். இம் முக்கட்சிகளின் வாதப்பிரதிவாதங்கள் ஒரு முடிவிற்கும் வந்து சேராததினால் அதில் நாமும் சிக்கிக்கொள்ளாமல் ஊர்ப்பிள்ளைகள் மாதிரி அவனைப் 'பூசனிக்காய்' அம்பி என்று மட்டும் கூறி மகிழ்வோம்.

அம்பியின் ராஜ்யம் என் வீட்டுப் பக்கத்திலுள்ள ஒரு வளைவு. திருநெல்வேலிப் பக்கத்தில் வளைவு என்பது பத்துப் பதினைந்து வீடுகள் சூழ்ந்த ஒரு வானவெளி. இப்படிப் பல வளைவுகள் சேர்ந்ததுதான் ஒரு தெரு, அல்லது ஒரு சந்து. மாவடியா பிள்ளை வளைவு என்றால் அழுக்கு, இடிந்த வீடு, குசேல வம்சம் என்பவற்றின் உபமானம். அந்த வளைவில்தான் எனது 'பூசனிக்காய்' அம்பி தனியரசு செலுத்தி வந்தான். மாவடியா பிள்ளை வளைவு கட்டிட வேலைக்குப் பெயர் போனதல்ல. 'பூசனிக்காய்' அம்பியைத் தவிர அந்த வளைவில் ஒரு அபூர்வமும் கிடையாது. வருங்காலத்தில் அதிக நம்பிக்கை வைக்கும் சூதாடிக்குக் கூட அம்பியை விட வேறு ஒன்றைப் புதிதாகப் பார்த்துவிடலாம் என்ற நம்பிக்கை வராது. அந்த வளைவின் நடு மத்தியில் ஒரு கிணறு. அங்கு பகலில் வண்ணானைக் கூடத் தோற்கடிக்கும் வெளுப்பு வேலை நடக்கும். அவற்றையெல்லாம் காயப்போடும் ஒரு கம்பிக்கொடி. இந்தக் கம்பிக்கொடி அம்பியின் முக்கியமான துணைக்கருவியாகையால் அதைப்பற்றி அவசியம் கூற வேண்டியதாகிவிட்டது.

எனது வீட்டுச் சன்னல் அந்த வளைவை நோக்கியிருந்தது. எனது படிப்பு, படுப்பு, அம்பியின் திருவிளையாடல்களைப் பார்த்தல் எல்லாம் அச்சன்னலின் வழியாகத்தான்.

அம்பிக்கு ஏழு வயதிருக்கும். ஆனால் முகத்தைப் பார்த்தால் 10 அல்லது 12 வயதிற்கு மதிக்கலாம். அவன் உயரம் இன்னதுதான் என்று திட்டமாகக் கூற முடியாது. ஏனென்றால் அவன்மீது பெரிய மனிதனது கிழிந்த ஷர்ட் ஒன்று அலங்கரித்து நிற்கும். அதற்குள் சிறு துண்டு ஒன்று கட்டியிருப்பான் என்பது பலருடைய உத்தேசம். இம்மாதிரியான 'சாமியார்' அங்கி போன்ற சட்டைக்குள் இருந்து கொண்டே அவன் தனது திருவிளையாடல்களை நடத்திவிடுவான். 'அந்தர்' அடிப்பது முதலிய சிறு வேலைகள் எல்லாவற்றிலும் அவனுக்குத்தான் வெற்றி. அவனது சட்டை எப்பொழுதாவது அவனைத் தடுக்கிவிட்டிருக்கிறதா என்றால் அது சரித்திரத்திற்குத் தெரியாத விஷயம். பகலில் எந்தச் சமயத்திலும் கம்பியில் 'பூசனிக்காய்' தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருப்பது சாதாரணமான காட்சி. அவன் ஏறாத கூரை கிடையாது. அவன் தாண்டாத சுவர் கிடையாது. பூசனிக்காய் அம்பிக்கு பக்கத்திலுள்ள சுவர்களின் உயரம், தொத்தி ஏறும் வசதி முதலிய விஷயங்களில் தண்ணீர் பட்ட பாடு. அந்தச் சந்தில் இருக்கும் முனிசிபல் தகரத்தை அடித்து 'லொடபட' வென்று உருட்டிச் செல்வதுதான் அவனது அமைதியான விளையாட்டு.

'பூசனிக்காய்' அம்பிக்கு அவ்வளவாக நண்பர்கள் கிடையா. சில சமயம் அவனது 'சினேகிதர்கள்' அவனைப் பேட்டி காண வருவார்கள். அவர்கள் வரும்பொழுதெல்லாம் கல்லும் மண்ணாங்கட்டியும் ஆகாயமார்க்கமாகப் பறப்பதுதான் அவர்களது 'சினேக' பாவத்தை எடுத்துக் காட்டும். கடைசியாக, பெருத்த கூக்குரலுடன் அவர்கள் வளைவைவிட்டு ஓடுவதுதான் 'பூசனிக்காய்' அம்பியின் வெற்றி. இது எப்பொழுதும் தவறாது நடக்கும் இயற்கை.

பாரதியார், 'தனிமை கண்டதுண்டு அதிலே சாரமிருக்குதம்மா' என்று பாடிவிட்டுப்போனார். 'பூசனிக்காய்' அம்பியும் அந்தச் சாரத்தை மிகவும் அனுபவித்திருப்பான் போல் தெரிகிறது. அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் விஷந்தானாமே. அம்பிக்குத் தனிமைச் சாரமும் ஒரு தடவை புளித்துப் போய்விட்டது. அவன் குருட்டுப்பிச்சைக்காரனை வளைவிற்கு உள்ளே இழுத்து வந்துவிட்டான். குருடனும் ஏதோ நீண்ட தெருவில் போவதாக நினைத்து சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தான். இவ்வளவையும் ஒரு குட்டிச்சுவரின்மீது அமர்ந்து திருப்திகரமாக நோக்கிக் கொண்டிருந்தான் அம்பி. பக்கத்துப் 'பெரியதனக்காரர்' வீடுகளில் எல்லாம் அம்பி 'பொல்லாத' பயல் என்று பெயர் வாங்கிவிட்டான். இதனால் பெரிய வீட்டுக் குழந்தைகளுக்கு எல்லாம் 'பூசனிக்காய்' அம்பி என்றால் அபாரப் பிரேமை. குழந்தை விரல்கள் பலகாரத்தைப் பகிர்ந்து தின்ன அவனை அழைக்கும். 'அப்பா', 'அம்மா' என்ற தொந்தரவுகள் எல்லாம் இல்லாத பெரிய மனிதன் என்பது குழந்தை உலகத்துப் பேச்சு.

ஒருநாள் மாவடியா பிள்ளை வளைவில் பெருத்த கூச்சல். நான் எட்டிப் பார்த்தபொழுது, 'பூசனிக்காய்' அம்பி வளைவின் கூரையொன்றின் மேல் இருந்துகொண்டு பக்கத்துப் பெரிய வீட்டுக்காரர் குழந்தையொன்றைக் கயிற்றின் உதவியால் உயர இழுத்துக் கொண்டிருந்தான். கீழே கூடியிருந்த கூட்டம் பையனை இறக்கிவிடும்படிக் கெஞ்சின. ஆனால் 'பூசனிக்காய்' அவசர அவசரமாகக் குழந்தையைக் கூரைக்கே கொண்டு போய்விட்டான். குழந்தைப் பயல் உயரச் சென்ற பின் தான் அவனும் 'பூசனிக்காயின்' சதியாலோசனையில் சேர்ந்திருந்தான் என்று தெரியவந்தது. பயலும் தாயாரைப் பார்த்து அழகுக்காட்டிச் சிரித்தானாம். அவன் உதவிக்கு ஏணி வந்து சேர்வதற்குள் அம்பியின் பலத்த நண்பனாகி, அவனுடைய தூண்டுதலில் பெற்றோரையே கேலி செய்ய ஆரம்பித்து விட்டான். ஏணி வந்து குழந்தையைப் பிடிக்குமுன் 'பூசனிக்காய்' கம்பி நீட்டி விட்டான். அதில் இருந்து, இருவருடைய நட்பும், 'ஏ! பூசனிக்காய்', 'ஹி! பட்டு' என்ற சம்பாஷணையுடன் நின்றது.

இச்சந்தர்ப்பத்தில் நான் அம்பியிடம் அதிகமாகப் பழக நேர்ந்தது. அக்காலத்தில், தமிழ்நாட்டில் இலக்கியத்தின் காலியான பாகங்களை நிரப்புவதற்காக உழைத்துக்கொண்டிருந்தேன். இலக்கியத்தில் இருக்கும் காலி கொஞ்சம் பெரியது என்றும், தமிழ்நாடு அதனால் கண்ணுறங்காமல் வாடிக்கொண்டிருக்கிறது என்றும் கேள்விப்பட்ட நான், ஒரு நாளில் இரண்டு மணி நேரத்தில் இந்தக் காலியை நிரப்பும் வேலைக்குத் தத்தம் செய்திருந்தேன். வேலை பெரிய வேலையல்லவா? ரஷ்யர்கள் போடுகிற ஐந்து வருஷ திட்டங்களைப் பற்றி எல்லாம் படித்த நானும் ஒரு திட்டம் போடாமலா இருப்பேன். அந்தத் திட்டத்தின்படி ஆபீஸிலிருந்து நான் வந்தபிறகு, உலகத்தை வெறுத்து, சன்யாசி மாதிரி எனது அறைக்குள் சென்று பூட்டிக்கொள்ளுவேன். முந்திய நாள் என்ன எழுதினேன் என்பதை வாசிப்பேன். இதில் சிறு மாறுதல்கள் செய்யவேண்டும் என்று எனக்குத் தோன்றும். உடனே அதைத் திரும்ப எழுத ஆரம்பிப்பேன். அப்பொழுது மேற்கோளுக்காக தமிழ்நாட்டில் மேற்கோள் இல்லாத ஆராய்ச்சிப் புஸ்தகமும் பருப்பில்லாத கலியாணமும் உண்டா? என்று புஸ்தகத்தை எடுப்பேன். எப்பொழுதும் அம்மாதிரிப் புஸ்தகங்கள் எழுதுவதைவிட மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். அது வேறொரு நல்ல வழியில் இக்காலியை நிரப்புவதற்கு வழி கூறும். இந்தப் புதிய திட்டத்தைப் பற்றி ஆலோசிக்க ஆலோசிக்க, இதுவரை எழுதிய முறையைத் தள்ளிவிட வேண்டியதுதான் என்று திட்டமாகப்படும். இச்சமயத்தில்தான் மூளைக்குக் களைப்பு ஏற்பட்டு ஒருதடவை வெற்றிலை - வெற்றிலை என்றால் என் அகராதியில் வெற்றிலை + புகையிலை என்று அர்த்தம் - போட வேண்டி வந்துவிடும். வெற்றிலை போடும்பொழுது நிம்மதியாக ஆலோசிப்பது நல்லது என்று தோன்றும். உடனே ஜன்னலின் பக்கத்தில் சென்று உட்கார்ந்துகொண்டு வெளியே பார்ப்பேன். அப்பொழுது மிஸ்டர் 'பூசனிக்காய்' அம்பி தென்படுவான். 'ஸார்' என்பான். 'என்னடா பூசனிக்காய்' என்பேன். இதற்கு மேல் எங்கள் சம்பாஷணை வளர்ந்ததில்லை. ஆனால் இருவர் உள்ளத்திலும் இருக்கும் 'நாடோ டி'த் தன்மை இருவரையும் பிணித்தது. இவ்விதமான ஆத்மீகப் பிணிப்பு 'பூசணிக்காய்கள்' சர்க்கஸ் வேலைகளுக்கிடையே நடந்தேறும். இதற்குள் நேரமாகிவிடுமாகையால் வேறு ஒரு பக்கத்தில் இருக்கும் 'காலி' ஸ்தானத்தை நோக்கிச் சென்றுவிடுவேன்.

இப்படி இருக்கையில் எனது நண்பர் ஒருவர் ஒரு குலைச் செவ்வாழைப் பழங்களை எனக்கு அனுப்பியிருந்தார். பழங்கள் கொஞ்சம் காய்வாட்டாக இருந்தன. நான் ஆபீஸிற்குப் போகும்முன் அதை ஜன்னலின் பக்கம் தொங்கவிட்டுச் சென்றேன். பழமும் பழுக்கவாரம்பித்தது. அறை முழுவதும் அதன் வாசனை பரிமளித்தது.

மறுநாள் சாயுங்காலம் ஆபீஸில் இருந்து திரும்பி வரும்பொழுது ஒரு சிறுவன் செவ்வாழைப்பழம் ஒன்று தின்றுகொண்டிருப்பதைக் கண்டேன். கொஞ்ச தூரம் சென்றதும் இன்னும் ஒரு சிறு பையனும் ஒரு செவ்வாழைப் பழம் தின்று கொண்டிருந்தான். இதிலிருந்து என்ன நடந்திருக்கும் என்பதைக் கண்டுபிடிக்க ஒரு துப்பறியும் கோவிந்தனும் வேண்டாம். வாசகர்களே இதற்குள் அந்த மகத்தான தொழிலைச் செய்து முடித்திருப்பார்கள். எனது அறைக்குச் சென்று பார்த்தேன். பழக்குலை மாயமாக மறைந்துவிட்டது என்று கண்டுகொண்டேன். 'பூசனிக்காய்' வேலைதான். அவனைப்பற்றி நினைக்கும்பொழுதெல்லாம் என் மனம் கொதித்தது. அவனைப் பார்த்தவுடன் துப்பறியும் நாவலில் கடைசி அத்தியாயத்தில் நடக்கிறபடி 'அடே, பூசனிக்காய், வாழைப்பழக்குலைத் திருட்டிற்காக உன்னைக் கைது செய்கிறேன்' என்று அவன் தோள்மீது கையை வைத்துச் சொல்ல வேண்டும் என்று ஆசையாகிவிட்டது.

கொலைகாரனும் திருடனும் தாம் குற்றம் செய்த இடத்தைப் பார்க்க வருவது இயற்கையாம். அதுதான் 'பூசனிக்காயை' என் சன்னலின் பக்கம் வரும்படித் தூண்டியிருக்க வேண்டும்.

அவன் ஜன்னல் முன்பாக இரண்டு மூன்று தரம் நடந்தான். நான் கவனிக்காததுபோல் இருந்தேன்.

பிறகு பக்கத்திலிருக்கும் குட்டிச்சுவரில் ஏறிக்கொண்டு, "இங்கே சர்கேசு வந்திருக்குதே, அதிலே ஒருத்தன் ஆறு குருதெயிலே சவாரி பண்ணுரான்" என்றான்.

குதிரயை஢ல் சர்க்கஸ் என்னை இளக்கவில்லை. நான் பேசாமல் இருந்தேன்.

"சேஷனைத் தெரியுமா?" என்றான்.

அவனைப் பற்றிச் சிறிது ஞாபகம் வந்தது. 'பூசனிக்காயின்' நண்பன்.

"துச்சனக்காரப் பயல். போலீஸ்காரனைக்கூடக் கொன்னுட்டான். மடியிலே கத்திகூட வச்சிருக்கான். இன்னிக்கு அவனை சன்னலுக்கிட்டெப் பார்த்தேன்" என்றான்.

ஒரு சின்னப் பயல் காது குத்துவது என்றால் யாருக்குத்தான் கோபம் வராது.

"ஏண்டா பூசனிக்காய் பொய் சொல்லுகிறாய். சேஷனைப் பற்றி உனக்கென்ன? நீதான் பழத்தை எடுத்தாய். அதற்குத் திருட்டு என்று பெயர். உன்னை ஜெயிலுக்குப் பிடித்துப் போகப் போகிறேன்" என்றேன்.

சொல்லி முடிப்பதற்கு முன் ஆசாமி கம்பி நீட்டிவிட்டான். அப்படிச் செய்வான் என்று எனக்குத் தெரியும். இப்பொழுது இந்தப் பக்கமே வருவதில்லை. யாருக்காவது அவன் இருக்குமிடம் தெரிந்தால், அவனிடம் விளையாட்டிற்குச் சொன்னேன் என்று சொல்லுங்கள். இப்பொழுது அவன் இல்லாது மாவடியா பிள்ளை வளைவு வெறிச்சென்று கிடக்கிறது.

ஊழியன், 01-02-1935 (புனைப்பெயர்: நந்தன்)
-----------------

70. புரட்சி மனப்பான்மை

அன்று என் நண்பரின் பத்திரிகை ஆபீஸிற்குப் போயிருந்தேன். அங்கே ஓர் புரட்சிக்காரர் - அசல், 'அப்படமானவர்', கொஞ்சம் கூடக் கலப்புக் கிடையாது - நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அவர் மாஜி - ஏதோ ஓர் - சதிக் கைதி.

என் நண்பர் என்னை அவருக்கு அறிமுகம் செய்துவைத்தார். "நம் போன்றவர்கள் எல்லாரும் தெரிந்து கொள்ள வேண்டியவராக்கும்" என்றார் என் நண்பர். புரட்சிக்காரர் 'ஓய், உமக்கு வெள்ளைக்காரனைச் சுடத் தெரியுமாங்காணும்' என்ற ஒரு பார்வை பார்த்தார்.

சரி, இதுதான் ஸ்ரீமான் புரட்சியா என்று நிர்ணயித்துக் கொண்டு நாற்காலியில் உட்கார்ந்தேன். புரட்சிக்காரர் அணிய வேண்டிய அசல் விதேசிச் சரக்கு, யாரையும் எடுத்தெறிந்து பேசும் தன்மை... சர்வ லட்சணமும் பொருந்தியிருந்தது. சாட்சாத் புரட்சிக்காரர் தரிசனத்திற்காக என் முன்னோர்கள் வழிபட்டுவந்த கடவுளை நான் கும்பிட்டுக்கொண்டேன்.

பாட்லிவாலா, பண்டார சன்னிதி, கங்காரு, 1939 மாடல் மோட்டார் கார், இரட்டைப் பெண்கள், ஸினிமா ஸ்டார் காந்தாமணி பாய், உயர்திரு தேசபக்தர், இத்யாதி இத்யாதி ரகத்தைப் பார்க்க மனுஷருக்கு சுபாவமாக உள்ள ஆசையை என் விஷயத்தில் திருப்தி செய்துவைத்த அந்த ஸ்ரீமான் இன்குவிலாப் ஜிந்தா பாத்துக்கு என் மனமார்ந்த வந்தனம்.

என் நண்பரும் சிறைசென்ற தேசபக்தர். கார்ல் மார்க்ஸ் பாராயணமும் கொஞ்சம் உண்டு. சுருங்கச் சொல்லுகிறேனே - வெகு தீவிரம்.

குசலப் பிரச்னங்களுடன் பரஸ்பர போலீஸ் காவல், சிறையில் கசையடி, இடைமறிக்கப்பட்ட கடிதங்கள், சமீபத்தில் வெளியான விக்டர் கொலான்ஸின் தீவிரவாத கிரந்தம் - சுங்க அதிகாரிகள் கண்ணில் பிஸ்கோத்து டின் மாதிரி இந்தியாவிற்குள் நுழைந்தது - எல்லாம் சேர்த்து அந்தச் சமயத்தில் ஸ்ரீமான் எழுத்தாளரைச் சென்ற வருஷத்துப் பஞ்சாங்கமாக, அதாவது சமயா சமயங்களில் திருப்பிப் பார்க்க வேண்டிய விஷயமாக ஆக்கியது.

வேண்டாத இடங்களில், வெற்றிலைப் பாக்கு + புகையிலை என்ற அழுத்தமான வாய்ப்பூட்டை - (144 உத்திரவைவிடக் கடுமையானது) - பிரயோகித்துக் கொள்ள எனக்குத் தெரியும் என்பது அவருக்குத் தெரியாது...

எனது நண்பரை இப்படிப் புரட்சி சக்தி அமுக்கிவிடும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. லாட்டியடி முதல் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கோபம் வரை தாலுகா டிவிஷன்களில் ஏற்றுத் தாங்கியவர். அவர் தாலுகா பிராந்தியம் என்று நான் விசேஷமாகக் குறிப்பிடுவதின் காரணம், அங்குள்ள மலையாளத்து ரிஸர்வ் போலீஸ்காரர்கள் சட்டத்தையும் ஒழுங்கையும் தங்கள் சொந்த பாங்கியில் இருக்கும் கரண்ட் டெபாஸிட்டாகக் கருதி அதில் அத்து மீறித் தலையிடுகிறவர்களைத் தங்கள் சொந்தக் கோபாவேசத்திற்கு ஆளாக்குகின்றனர். பட்டணத்துப் போலீஸ்காரன் என்றால் கொஞ்சம் தாராள புத்தியுண்டு. இப்படி எல்லாம் அனுபவமுள்ள ஒரு மனிதன் சர்வசூன்யமாகத் தன்னை யிகழ்ந்துகொள்ளுவார் என்று நான் நினைக்கவேயில்லை.

வெற்றிலையில் நரம்பைக் கீறி எறிந்தேன். அது 'பினாமி' (காரமில்லாத மெட்ராஸ்) வெற்றிலை. வெறுப்புடன் சுண்ணாம்பைத் தடவினேன். சுவரில் சுரண்டி எடுத்தது போல உருண்டு உருண்டு வெற்றிலையை ஓட்டை போட்டது. இந்த சம்பிரமத்தில் களிப்பாக்கு. அதற்கு மேலாக முகப் பவுடர், செண்டு இவைகளில் நம்பிக்கை வைத்து ஆட்களை மயக்கிவரும் குரூபியான விபச்சாரிக்கு உதாரணம் போன்ற புகையிலை.

இவை போதாதென்பது போல "ஸ்ரீமான் வெங்கு ராவைத் தெரியுமோ, கவர்னர் ஸ்பெஷல் வெடிகுண்டு வழக்குக் கைதி; பெல்லாரி ஜெயிலிலே தனி வார்டில் போட்டு அடித்தார்களே. ஓகோ, அப்பொழுது உங்களை திருச்சி ஜெயிலுக்கு மாற்றி விட்டார்களோ - வீரன்னா வீரன் தான் சார் - என்ன வேலைகளெல்லாம் பண்ணியிருக்கிறான் தெரியுமோ..."

"அவரைப் பார்க்க உங்களுக்கு அரிய சந்தர்ப்பம் கிடைத்திருக்குமே? பாவிப்பயல்கள் என்னை மாத்திப் போட்டானே!" என்று பரிதவித்தார் புரட்சி மோகன லாகிரியில் சிக்கிய என் நண்பர்.

"மூவ்மெண்ட் டயம்ல என்ன செய்தார் தெரியுமா... செப்டம்பர் நடுராத்திரி ரூம்ல டார்ச்கூட இல்லை. வெளியிலே சடபுடவென்று கதவு தட்ற சப்தம் கேட்டது - என்ன செய்தார் தெரியுமா?" என்று ஒரு ஆணித்தரமான கேள்வி போட்டார்...

"தெரியாது, அதற்கப்புறம்" என்றேன் நான்.

அரிச்சந்திரன் மயான காண்டத்தில் ஊன்றிக்கொண்டு நிற்க வேண்டிய தடி சடக்கென்று ஒடிந்துவிட்டால் எப்படியிருக்கும்? 'பின் - அரிச்சந்திரன்' அந்த சமயத்தில் சோகம் குலைய மிருதங்கக்காரனைப் பார்த்து உறுமுவது போலிருந்தது என் நண்பரின் பார்வை.

ஸ்ரீமான் புரட்சியின் ரசனை கொஞ்சம் கட்டை போலும் "அவர் அசல் கோதுமை சப்பாத்திதான் சார். பஞ்சாபிக்காரன் மாதிரிச் சாப்பிடுவார்" என்றார், பாவம் ஸ்ரீமான் புரட்சி.

சரி, நேரம் சரியில்லை என்று நினைத்துக்கொண்டு, "உம்மிடம் ரெண்டு ரூபாய் கடன் வாங்க வேண்டுமென்று வந்தேன். நாளைக்கும் வருவேன். உம்மால் என்னை ஏமாற்ற முடியாது" என்று சொல்லிக்கொண்டு வெளியேறினேன்.

உப்பங்காற்று மட்டிலும் வீசும் சமுத்திரக் கரைக்குப் போகும் பொழுதுதான் விஷமத்தனமான என் கசப்பு என்னைவிட்டு அகன்றது.

அப்பொழுது அங்கு வந்தான் ஸ்ரீ பாலு; மெஸர்ஸ் பீபரிவாலா ஹுக்கும் சந்த் அண்ட் சன்ஸ் கம்பெனியின் பல ஜோலி குமாஸ்தா. கம்பெனியில் காப்பிக் கொட்டை கேஸ்களுக்கு ஆணியடித்து விலாசம் ஒட்டுவது முதல் வரவு செலவு கணக்கு தயாரிப்பது, சேட்ஜி மகள் ஸோனியாவுக்கு வர்ணப் பென்ஸில் வாங்கிக் கொடுப்பதுவரை உள்ள வேலைகள் எல்லாவற்றையும் விரக்தியுடன் செய்யும் அபேதவாதி அவன்.

"என்ன சார் இப்படி உட்கார்ந்திருக்கேள்! ஹி! ஹி! போன வாரம் நீங்க எழுதின கதை ரொம்ப ஜோர் சார், வாழ்க்கையின் நுணுக்கங்களை அப்படியே எழுத்தோவியமா பண்ணியிருக்கேள் சார், ஹி! ஹி!" என்று அசட்டுச் சிரிப்புச் சிரித்தான். அவன் அடிக்கடி என் கதைகளைப் படிப்பான். அதைவிட என் விமர்சனங்களைப் படிப்பான். முக்கால்வாசி என் கைச்சரக்கே என் தலைமேல் தூக்கிப்போட்டு உடைக்கப்படும்.

என்ன இருந்தாலும் புகழல்லவா சார்? யாருக்குத்தான் இழக்க மனசு வரும். வர்ணக் கடுதாசி ஒட்டிய ஜப்பான் விளக்கு மாதிரியான சுடாத புகழ் வெளிச்சத்தில் உடம்பைக் கொஞ்சம் காயவைத்துக் கொண்டேன்.

'...' என்ற பத்திரிகையைக் குறிப்பிட்டு "போன வருஷம் மே மாசப் பிரதியைப் பார்த்தீர்களா?" என்றான்.

"எதற்கு?" என்றேன்.

"அதிலே ஓர் ஆழ்ந்த உண்மை இருக்கு; பார்த்தேன் சார். நேற்று இப்படி மூர் மார்க்கெட் பக்கம் போனேன். இதை அடுக்கியிருந்தான். அட்டைப் படம் எல்லாம் கிழிஞ்சு போச்சு. காலணாவுக்கு ரெண்டுன்னான். ஏன் சார் நமக்கு விஷயந்தானே வேணும். அப்படியே ஒரு ரெண்டணாவுக்கு ஒரு கத்தை வாங்கினேன். நம்ம வீட்டுக்காரி இருக்காளே, அவளுக்குக் காகிதக் கூடை பண்ணணுமாம், அப்படியே குடுத்துடுன்னு வாதாடினாள். அதிலே ரொம்ப விஷயங்கள் இருக்கு, படிச்சுட்டுத்தான் தருவேன்னுட்டென். எப்பப் பார்த்தாலும் இந்தத் தொந்திரவுதான் சார். நல்ல கோட் சார், மூணா வருஷந்தான் வாங்கினது. கை ஓரத்திலேதான் கொஞ்சம் கிழிசல். அதைக் கொடுத்து ஒரு கண்ணாடி ஜாடி வாங்கிப்பிட்டாள் சார். என்ன பண்ணச் சொல்ரேள், என்னெ?" என்று ஒரு மூச்சு பேசி முடித்தான்.

நான் எப்பொழுது ஓயப் போகிறதோ என்று கேட்டுக் கொண்டே இருந்தேன்.

"ஏன் சும்மா ஒரு மாதிரி இருக்கேள்? கொஞ்சம் வெத்திலெயேப் போடுங்களேன்" என்று விதேசி டப்பி நாசூக் வெற்றிலைச் செல்லத்தை என்னிடம் நீட்டிவிட்டு, "நீங்கள் என்ன நினைக்கிறேள் - எண்ணெய் தேய்ச்சுக் குளிச்சால் உடம்புக்கு நல்லதா சார்?" என்றான்.

"எனக்கெப்படி தெரியும்? நான் தேய்ச்சுக்காம இருந்ததில்லையே" என்றேன்.

"சும்மாத்தான் கேட்டேன். அதிலே போட்டிருக்கான், எண்ணெய் தேய்ச்சுண்டா கெடுதல்னு. கெடுதல் எப்படின்னா ஜன்னி வந்துவிடுமாம். பாம்பு கீம்பு கடிச்சா விஷத்தோட ரோஷம் (உக்கிரம் - மெட்ராஸ் வார்த்தை) ரொம்ப ஜாஸ்தியாம். இந்தக் கெடுதல்கள் எல்லாம் எதற்கு? அவன் ஒரு மருந்து சொல்றான். அதிலே எனக்கு அவ்வளவு நம்பிக்கையில்லை - வெல ஜாஸ்தி - அது மட்டுமா (காதோடு காதாக) சுக ஜன்னி வந்திடுமாம். இன்னிக்கு ஒரு காரியம் செய்ரதுன்னு தீர்மானம் பண்ணிப்புட்டேன். இனிமே எண்ணெயே தேய்ச்சுக்கறதில்லென்னு. வீட்ல ஏக ரகளை. இன்னிக்கு என்ன கிழமை தெரியுமா - புதன்! ஒரே பாட்டா முடியாதின்னுப்பிட்டேன். தலைலே கூட எண்ணெயைக் கொண்டுவந்து வச்சிப்பிட்டா. நான் தீரமா உதறித் தள்ளிட்டு ஆபீஸுக்கு வந்துட்டேன். இன்னும் வீட்டுக்குப் போகல்லே. இப்படியே பீச்சுக்கு வந்திட்டு பூ வாங்கிக்கிண்டு போகலாமுன்னு வந்தேன்..."

"ஏன் ஓய், உம்ம வீட்டு மூலக்கிரகத்து சமாசாரத்தை வெளியில் போட்டு உடைக்கிறீர்? என்ன சமரசக் கமிட்டி ஏற்படுத்தணுமா?" என்றேன்.

"போமையா! உங்களைப் பார்த்ததும், ரொம்ப நாளாச்சே, வீட்டுக்கு வாருங்களேன் காப்பி சாப்பிட்டுட்டுப் போகலாம் என்று கூப்பிடலாம்னு வந்தேன்" என்றான் பாலு.

"வீட்லே காப்பி சாப்பிடரதிருக்கட்டும். என் கூட ஹோட்டல்லே காப்பி சாப்பிடுமே!" என்றேன்.

"ஹுஹும்! வீட்லெ காப்பி பாழாப் போச்சேன்னு கத்துவா. வாருங்கள் போகலாம்" என்றான் பாலு.

"பாலு நீ... பார்த்திருக்கையா" என்றேன்.

"புரட்சிக் கைதி! அவரையா... நான் எப்படிப் பார்த்திருக்க முடியும்?"

"இல்லெ பாக்கணும்னு ஆசை இருக்கா?"

"ஆசையா! மனசு அப்படியே துடிதுடிக்கிறது. ஆமாம்; புரட்சிக்காரரா? எப்படி இருப்பார்? ரொம்பத் தீவிரமாக இருப்பாரோ?"

"பாக்கணும்ன்னா கூட்டிண்டு போறேன்" என்று புதிய சிஷ்யன் சேர்த்துக்கொடுக்கும் சேவையில் இறங்க முயன்றேன்.

"இல்லே, வீட்லெ காப்பி ஆறிப் போய்விடும். சுருக்க போவோம் வாருங்க. இல்லாட்டா ஒரே தொல்லைதான்" என்று எட்டி நடந்தான் பாலு.

இரண்டு தெய்வங்களுக்கு ஒரே சமயத்தில் சிஷ்யனாகும் திண்டாட்டத்தை பாலுவுக்கு ஏற்படுத்தக்கூடாது என்ற ஜீவகாருண்ய சேவையில் ஈடுபட்டேன்.

ஜோதி, ஜுலை 1938
--------------------

71. புதிய கூண்டு

1

அருவங்குளம் என்ற நாரணம்மாள்புரம் தாமிரவருணியின் வடகரையில் ஒரு சிறு கிராமம். சுற்றிலும் தோப்புத்துரவு; கண்ணுக்கெட்டிய வரையில் வயல்கள்; அதாவது, திருநெல்வேலி ஜில்லாவின் வசீகர சக்தியின் ஒரு பகுதி அது.

சாயங்காலம்.

வேனிற்கால ஆரம்பமாகையால் இரண்டாவது அறுவடை சமீபித்துவிட்டது. பயிர்கள் பொன்னிறம் போர்த்து, காற்றில் அலை போல் நிமிர்ந்து விழுந்து, ஆகாயத்தில் நடக்கும் இந்திர ஜாலங்களுக்குத் தகுந்த, அசைந்தாடும் பொற்பீடமாக விளங்கியது.

அகன்ற மார்பில் யக்ஞோபவீதம் போல் ஆற்றில் நீர் பெயருக்கு மட்டிலும் ஓடிக்கொண்டிருந்தது. நீர், ஸ்படிகம்போல் களங்கமற்று மனிதனைக் குனிந்து அள்ளிக் குடிக்கும்படி வசீகரித்தது.

ஆற்றுமணலில் பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பும் இரு மாணவர்கள் நடந்து கொண்டிருந்தனர். இருவருக்கும் ஒரு கையில் புஸ்தகம், மற்றொரு கையில் போஜனப் பாத்திரம் என்ற மாணவ சின்னங்கள். இருவரும் 'குடுத்துணி' மட்டும் அணிந்து இடையில் ஒரு நாட்டு வேஷ்டி கட்டியிருந்தனர். ஒருவன் மூத்தவன்; இன்னொருவன் சற்று வயசில் குறைந்தவன். இருவரும் சகோதரர் என்பதைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை; முகத்தோற்றமே தெரிவிக்கும் இருவரும் நல்ல அழகர்கள் மூத்தவன் அதிதீக்ஷண்ய புத்தியுடையவனாயினும் கறுத்த கண்களும் கூரிய நாசியும் சற்று அகன்ற நெற்றியும் சற்றுத் தடித்த ஆனால் அழகான உதடுகளும் அவன் சிறிதே உணர்சிவசப்படுகிறவன் என்பதைத் தெரிவித்தன. தம்பியின் மெல்லிய உதடுகள் திடசித்தமும் எதையும் தனது அறிவுத் தராசில் போட்டு நிறுக்கும் உறுதியும் உடையவன் என்பதையும் தெரிவித்தன. இருவரும் ஒற்றைநாடியான சரீரம். அவர்கள் குடுமி, தற்கால அழகுணர்ச்சியைத் திருப்தி செய்யாமல் குறுக்கே விழுந்தாலும், பொதுவாக அவர்களைப் பார்த்ததும் அழகர்கள் என்பதை எடுத்துக் காட்டத் துணைபுரிந்தன.

இருவரும் மிக வேகமாக நதியைக் கடந்தனர். முகத்தின் சோர்வும் களைப்பும் அவர்களைப் பேசவிடாமல் தடுத்து, வீடு என்ற ஒரே எண்ணத்தை மனசில் நிறுத்தியதால் அவர்கள் மிக வேகமாகச் சென்றார்கள்.

தோப்பைத் தாண்டியதும் திடீரென்று ஒரு வரிசை வீடுகள்; தெருவின் மேற்குக் கோடியில் ஒரு கோயில்; அதுதான் நாரணம்மாள்புரம் என்ற அக்கிரகாரம்.

நாரணம்மாள்புரம் மகாவிஷ்ணுவின் பெயரை வைத்துக்கொண்ட மட்டிலேயே திருப்தியடைந்தது. செல்வம் என்பது என்னவென்று கேட்கக்கூடிய மாதிரி அதன் சகோதரனின் ஆதிக்கம் அங்கே தாண்டவமாடியது.

*****

மீனாட்சியம்மாள் ஒரு விதவை. தகப்பனார் வீட்டில் தரித்திரம். புக்ககம், நம்பிக்கையைக் கொண்டு உயிர் வைத்திருக்க வேண்டிய இடம். போதாததற்கு இரண்டு ஆண் குழந்தைகளின் பொறுப்பை அவள் தலையில் சுமத்திவிட்டு அவள் கணவன் இந்த உலகத்தை நீத்தார். அந்த மட்டில் பெண் சுமையை ஏற்றாமல் போனாரே என்ற ஆறுதல் தான் அவளுக்கு.

மீனாட்சியம்மாள், இட்டிலி, முறுக்கு, அப்பளம் இட்டு அவைகளிலே தன் இரண்டு பொறுப்புக்களின் சம்ரட்சணையையும் நடத்தி வருகிறாள். பாதிரிகளின் பள்ளிக்கூடத்துப் புண்ணியவான்களின் உதவியால் தன் புத்திரர்களுக்குக் கல்வி என்ற மகத்தான கண் திறக்கப்படுவதற்காகத் தனது பூஜைகளில், அவர்களுக்காகக் குலதெய்வத்தை மீனாட்சியம்மாள் தொழுது வந்தாள். இப்பொழுதும் வெள்ளைக்காரன் என்றால் மீனாட்சியம்மாளுக்குத் தெய்வத்திற்கு நிகர் தன் புத்திரர்களுக்குக் கல்வியை இலவசமாகப் போதிக்கும் தயாநிதிகளை யார்தாம் போற்றாமல் இருப்பார்கள்!

வீட்டு முற்றத்தில் 'அம்மா' என்ற குரல் தன் புத்திரர்கள் வந்து விட்டார்கள் என்பதைத் தெரிவித்தது. புறக்கடையில் உழுந்து கழுவிக் கொண்டிருந்த மீனாட்சியம்மாள், "அம்பியா? அண்ணாவும் வந்தாச்சோ? கையைக் காலைக் கழுவிப்பிட்டு, இந்த உறியிலே முறுக்கு வெச்சிருக்கேன்; எடுத்துச் சாப்பிடுங்கே. கையிலே உளுந்து இருக்கு" என்றாள்.

அம்பி புஸ்தகத்தை வைத்துவிட்டு வருமுன், அவனுடைய மூத்த சகோதரன் புஸ்தகத்தை ஜன்னலில் வைத்துவிட்டுக் கால் முகம் கழுவ நேரே புறக்கடைக்கு ஓடி வந்தான். வைத்த அவசரத்தில் புஸ்தகங்கள் கீழே விழுந்தன. அம்பி அதையும் ஜாக்கிரதையாக எடத்து வைத்துவிட்டுச் சட்டையைக் கழற்றிய பிறகு உள்ளே வந்தான்.

"என்னடா, தீட்டையும் கீட்டையும் அப்படியே உள்ளுக்குக் கொண்டுவர்றே? அம்பிக்கு இருக்கிற புத்திகூட, ஏண்டா கிட்டு ஹும் நான் தான் பொண்ணாப் பிறந்தேனே..." என்று தலையில் அடித்துக்கொண்டாள்.

கிட்டு சிரித்துக்கொண்டே, "அம்மா, உன்னைத் தொட்டுவிடுவேன்; பேசாதே" என்று நெருங்கினான்.

"அடே, கட்டேலெ போறவனே, சித்தெ மடியா கிடியா இரு" என்று பதறினாள் மீனாட்சி.

"என்னடா கிட்டா, அம்மா கிட்ட என்னடா! அவளுக்குத் தெரியுமோ" என்றான் அம்பி.

இருவரும் காலைக் கழுவிவிட்டு, தாய் வைத்திருந்த முறுக்கைச் சாப்பிட்டுவிட்டு ஆற்றங்கரைப் பக்கம் நடந்தார்கள்.

"அம்பி, பரீக்ஷை நெருங்குகிறதே" என்றான் கிட்டு.

"அதற்கென்ன அண்ணா! பயமில்லை" என்று சொல்லிவிட்டுத் தன் நண்பன் ஒருவனைத் தேடிக் கொண்டு சென்றுவிட்டான்.

கிட்டு என்ற கிருஷ்ணமூர்த்தி இந்த வருஷம் பி.ஏ. பரீட்சைக்குச் செல்ல இருக்கிறான். அவன் சகோதரன் அம்பி - அவன் பெயர் ராமசாமி - இண்டர்மீடியட் பரீட்சைக்குப் போகிறான். இருவரும் பாளையங்கோட்டையில் இருக்கும் கிறிஸ்தவக் கலாசாலையில் படிக்கிறார்கள். கிட்டு, தனக்குப் பரீட்சை தேறியதும் குடும்பப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு குடும்ப சம்ரட்சணையில் களைத்த தன் தாயின் கவலையை நீக்கிவிடுவான் என்பதுதான் அவர்கள் தற்போது கொண்ட லட்சியம். மேலும் சகோதரனது கல்விக்கு இனியாவது தர்மத்தை எதிர்பாராது இருக்கவேண்டும் என்பதும் அவன் நோக்கம்.

2

பாளையங்கோட்டை கிறிஸ்தவக் கலாசாலை ரோமன் கத்தோலிக்க மதத்தினருடையது. அதாவது இருள் சூழ்ந்த பிரதேசங்களில் கர்த்தருடைய மதத்தைப் பரப்ப ரோமாபுரியிலிருந்து அனுப்பப்படும் கருவி. தன் கையை வைத்தே தன் கண்ணில் குத்திக் கொள்ள வைப்பதுபோல் பழகிய யானையை வைத்துக்கொண்டு காட்டு யானைக் கூட்டங்களைப் பிடிப்பதுபோல், இந்தத் தொழில் நடந்து வந்தது.

ஞானாதிக்கம் என்ற கிறிஸ்தவச் சாமியாருக்குக் கிட்டுவின் மீதும் அம்பியின் மீதும் ஒரு கண். அதாவது ரோமாபுரியில் பேதுரு அப்போஸ்தலர் கட்டிய மகத்தான கோவிலின் சக்தியைப் பரப்ப இந்த இருவரும் ஏற்றவர்கள் என்பது அவர் துணிபு. அதனால் இருவரைப் பற்றியும் அவர் மிக்க கவலை மேற்கொண்டார். இது மறைமுகமாகவே நடந்தது. ஆனால் நாளடைவில் கிட்டுவை மிக எளிதில் வசப்படுத்திவிடலாம் என்றும் அம்பியிடம் தம் முயற்சி சாயாது என்றும் கண்டுகொண்டார். ரோமாபுரி போப்பின் ஆதிக்கத்தையும் கர்த்தரின் பரிசுத்தமான வார்த்தைகளையும் பரப்புவதற்கு எத்தனையோ வழிகள் உண்டு.

ஞானாதிக்கம் சாமியார் ஓர் உண்மைக் கத்தோலிக்க பாதிரியார். அவர் தமக்குத் தோன்றிய உண்மைகளுக்குத் தம் முழு வாழ்க்கையையும் அர்ப்பணம் செய்தவர். அம்பியையும் வசப்படுத்துவதற்கு ஒரு புது வழியைத் தேடிக்கொண்டிருந்தார். ஏனெனில் அம்பியிடம் கிறிஸ்தவ தர்மத்தையும் ஹிந்து சமயத்தின் தவறுகளையும் பற்றித் தர்க்கிக்க ஆரம்பித்தால் அவன் அதற்கு இடம் கொடுப்பதே இல்லை. "தர்க்க சாஸ்திரமும் சமயமும் ஒத்துவராது; வேண்டுமானால் எங்கள் பண்டிதர்களிடம் தர்க்கம் செய்து கொள்ளுங்கள்" என்று கூறிவிடுவான். ஆனால் கிட்டுவை, உணர்ச்சியில் மயங்கக்கூடிய கிட்டுவைத் தர்க்கத்திற்கு இழுக்காமல் கிறிஸ்தவ நாயன்மார்களின் தியாகத்தையும் தரிசனத்தையும் காண்பிக்கும் இலக்கியங்களினால் பண்படுத்திவந்தார்.

ஸ்ரீ ஜான் சகரியாஸ் நாடாரின் முன்னோர்கள் புரோட்டஸ்டாண்ட் கிறிஸ்தவ மதத்தைத் தழுவியது திருநெல்வேலி ஜில்லாவிலே ஒரு ரஸமான கதை. 19-ம் நூற்றாண்டின் இறுதியில், இங்கிலாந்து, வியாபாரப் பொருள் உற்பத்தி முறையில் ஒரு நூதன வழியைக் கடைபிடித்தது. பொருள்களை ஏக காலத்தில் நூற்றுக்கணக்காகச் செய்து குவிப்பதில் பெரும் நம்பிக்கை வைத்தது; அதே சமயத்தில் பாதிரிகள், இந்தியாவின் தெற்கு மூலைகளில் நூற்றுக்கணக்காக ஞானஸ்நானம் கொடுப்பதில் நம்பிக்கை வைத்தார்கள். அவர்கள் நாசரேத், மெய்ஞ்ஞானபுரம் முதலிய பிரதேசங்களில் வந்ததும், முன்பு, கிறிஸ்து பிறப்பதற்கு நெடுங்காலத்திற்கு முன்பு, "உண்டாகுக" என்று கர்த்தர் அருளியதும், உலகம் அவர் போட்ட வரிசைப்படி தழைத்து அப்பெருமானுக்குக் களிப்பூட்டியதாம். இதைப்போல இந்தப் பாதிரிகளும் அந்தப் பிரதேசங்களை அடைந்ததும் தாங்களே கர்த்தர் பெருமான் என்று நினைத்துக்கொண்டனரோ என்னவோ? அங்கிருந்த நாடார்களை நீரைத் தெளித்து, 'நீங்கள் கிறிஸ்தவர்களாகக் கடவது!' என்றதன் பயனாக விளைந்தவற்றில் சகரியாஸ் குடும்பமும் ஒன்று.

அவர் அங்கிருந்த புரோட்டஸ்டாண்ட் பள்ளிக் கூடத்தின் தலைமையாசிரியர். தமக்குக் கர்த்தருடைய கருணை கிடைத்த போதெல்லாம் அஞ்ஞானிகளுக்கு விழிப்பைக் கொடுப்பதில் முனைந்து வந்தார்.

அவருக்கு ஒரு புதல்வி. எந்த மதத்தினரானாலும் உபாத்தியாயர்களுக்கு மட்டும் வம்ச விருத்தியில் தனிச் சிறப்பு உண்டு. அதற்கு விலக்காக இருந்தார் ஸ்ரீ சகரியாஸ். அவருக்கு அந்தப் புதல்வியே மகன், மகள் என்ற இரண்டு ஸ்தானத்தையும் நிரப்பி வந்தாள். அவள் பெயர் லில்லி அற்புதம் ஜயலக்ஷ்மி. அவள்தான் அவர்கள் குடும்பத்தின் விளக்கு; உயிர் நாடி; அதாவது அவள்தான் அந்த வீட்டில் ஒரு முசேலினியின் எதேச்சாதிகாரத்தை ஸ்தாபித்து வந்தாள். பிரேமையினால், தாய் தந்தையர் இருவரும் அவளுக்கு அடிமைகள்.

அவளுடைய அழகு ஆளை மயக்கும் போதைப் பொருள் போன்றதல்ல; மனசில் கனவுகளைத் தோற்றுவிக்கும் ஓர் இன்பகரமான மோகன அழகு. அதன் பின்னே ஒரு சாந்தியின் சோபை அவளுடன் பேசுவதில் பெரும் இன்பத்தைக் கொடுத்தது. தமிழ்க் கவிஞர்களின் கனவுகள் எல்லாம் திரண்டு வடிவெடுத்தது போன்றது அவள் தேக அமைப்பு.

கிறிஸ்தவ சமூகத்தின் சுதந்திரமும் சிறுமைப் புத்தியும் அறிவும் படைத்தவள். கணக்கு, விஞ்ஞானம் முதலியவற்றில் ஒரு விதப் பிரேமை; அதில் ஆசையோடு ஈடுபட்டவள் என்று கூற முடியாது. பள்ளிக்கூட உலகத்திலே, அந்தப் பாடங்களைப் படிப்பவர்கள் எல்லாரும் பெரிய மேதாவிகள் என்ற ஓர் அபிப்பிராயத்தை உபாத்தியாயர்களும் மாணவர்களும் சேர்ந்து வளர்த்து வருகிறார்கள். இதனால் ஏற்படும் ஒரு போட்டி மனப்பான்மையில் அவள் அதைப் படிக்க ஆரம்பித்திருக்கலாம். ஆனால் கலாசாலையைப் பொறுத்தவரையில் அவர்கள் 'மார்க்கு' என்ற அளவுகோலைப் பொறுத்தவரையில் அவள் கெட்டிக்காரிதான்.

இவள் தெரிந்தெடுத்த பாடங்களை உடையது அந்தக் கத்தோலிகர் கலாசாலை ஒன்றுதான். அதனால் அவள் அங்கே சென்று படிக்க வேண்டியதாயிற்று.

வகுப்பில் இரண்டு கெட்டிக்காரர்கள் இருந்தால் இரண்டு பேர்களுக்கும் நட்பு ஏற்படுவது இயற்கை; பகைமை ஏற்படுவதும் சகஜம். இவை இரண்டு அற்று இருப்பது விதிக்கு விலக்கு. ஆனால் ஒன்று ஆணும், மற்றது பெண்ணுமாக இருந்தால்...? அது... தான் நடக்கவில்லை.

அம்பி, ஹிந்து தர்மம் என்றால் ஏதோ புனிதமான பொருள் என்று அவளை வெறுப்புக் கண்களால் நோக்கினான். அது கிறிஸ்தவக் கலாசாலையில் படிக்கும் மாணவர்களுக்கு உண்டாகும் ஒரு தனி மனப்பான்மை. சில சமயம் அசட்டுச் சமய வெறி என்ற மூடக் கொள்கை வரையில் கொண்டுபோய் விட்டுவிடும் அம்மனப்பான்மை. நல்ல காலம், அம்பிக்கு இந்த வியாதி பீடிக்கவில்லை. ஏதோ அவன் வயசிற்கு மேற்பட்ட அதிதீஷண்ய அறிவில் ஹிந்து தர்மத்தின் உயிர்நாடியை அறிந்து கொண்டான். அதனால் அவளைப் பார்க்குந்தோறும் ஒரு பரிதாபம் அவனுக்குத் தோன்றும். ஹிந்துப் பெண்ணாக, நாடாராகவே இருந்துவிட்டாலும் காதலிக்கலாம் என்ற கனவில் இருப்பவனுக்கு இது இயற்கைதானே?

அற்புதம் ஜயலக்ஷ்மி அவனை அஞ்ஞானி என்ற முறையில்தான் அறிந்திருந்தாள். அதுவும் அல்லாமல் அழகை மறைக்கும் தரித்திரமும் குடுமியும் அவனை அவள் அறிவதற்குப் பெருந்தடையாக இருந்தன. ஆனால் அவன் அறிவுத் திறமையை வியக்காமல் இருக்க முடியவில்லை. எப்படியாயினும் அஞ்ஞானி; அதுவும் குணப்படுத்த முடியாத அஞ்ஞானிதானே அவன்!

ஏறக்குறைய பரீட்சைக் காலமும் நெருங்கிவிட்டதால் ஆசிரியர்களின் நம்பிக்கையெல்லாம் இவர்களுடைய கீர்த்தியைக் கொண்டு வரும் வெற்றியைக் குறித்தவண்ணமாக இருந்தது.

அன்று ரசாயன அறையில் இருவரும் ஒரு ரசாயன சோதனை செய்துகொண்டிருக்கிறார்கள். இருவருக்கும் அடுத்தடுத்த மேஜையானாலும், இருவரும் அந்த இரண்டு வருஷங்களில் இரண்டு முறை பேசியிருப்பார்களோ என்னவோ? ஆனால், அவர்கள் பேசாதது கூச்சத்தினால் அல்ல.

ரசாயன வகுப்பில் மாணவர்களின் சிறு குறும்பிற்குத் தகுந்த வசதிகள் இருக்கின்றன. ஒன்றுமில்லை; சாக்குக் கட்டியைப் பொடித்து மேஜையில் பதித்திருக்கும் இங்கிப் புட்டிகளில் போட்டுவிட்டால் அது பொங்கிப் பக்கத்தில் இருக்கிறவர்கள் உடைகளை நாசமாக்கிவிடும். இதைவிடச் சிறிது அபாயகரமான, ஆனால் குஷியான வேடிக்கை இரண்டு மூன்று அமிலங்களை ஒன்றாகக் கலந்து வைத்துவிடுகிறது; அது சில சமயம் டபீர் என்று வெடித்து உடைகளைச் சிதைத்துவிடும். சில சமயம் தேகத்தில் பட்டுப் பொத்து விடுவதும் உண்டு.

அன்று இருவரும் ரசாயன சோதனையில் ஈடுபட்டிருக்கும் பொழுது - (இயற்கையான வகுப்புச் சமயம் அல்ல) ஜயலக்ஷ்மியின் பக்கத்தில் ஒரு பாட்டில் டபீர் என்று வெடித்து அவள் உடைகளை நாசமாக்கிவிட்டது. ஜயா பயந்துபோய்ச் சிறு கூக்குரலிட்டாள். அம்பி திடுக்கிட்டு நின்றான். அடுத்த கணம் ஜயாவிற்கு பயம் தெளிந்தது.

"மிஸ்டர் ராமசாமி! இந்த மாதிரிக் குறும்புசெய்யும் ஒரு கோழை என்று தங்களை நான் நினைக்கவில்லை" என்று ஆங்கிலத்தில் சொன்னாள்.

அம்பிக்குச் சுறுக்கென்று அவ்வார்த்தை உள்ளத்தே தைத்தது. அவனும் பெருமிதமாக, "ஒரு ஹிந்து கோழையல்ல" என்று சொல்லிவிட்டு வேறுபுறம் திரும்பிக் கொண்டான்.

அவளுக்கு இது தன் மதத்தினரைக் கேலி செய்த மாதிரிப் பட்டது. உடனே ஆசிரியரின் உதவியை நாடி - கத்தோலிக்கராயினும் கிறிஸ்தவர்தானே - இவனுக்குப் புத்தி புகட்ட வேண்டும் என்று சரேலென்று வெளியே சென்றாள்.

நேராக ஞானாதிக்கம் சாமியாரிடம் சென்று விஷயத்தைச் சொல்ல, தம் லட்சியத்திற்கு ஒரு வழி அகப்பட்டதென்று நினைத்தார் அவர். இதை வளர்ப்பது (அவர் ஊடல் என்று நினைத்தார்) இவ்விருவரையும் தமது மதத்திற்கு அவளுடன் கொண்டுவரும் வழி என்று நினைத்து, அவளைப் பார்த்துச் சிரித்துவிட்டு "உனக்கு ஹாஸ்ய உணர்ச்சி போதாது. நான் அவனைக் கண்டிக்கிறேன். நீ, ஏன் அவனுடன் சண்டை பிடித்துக் கொள்ள வேண்டும்?" என்று சொல்லி அனுப்பிவிட்டார். ஜயாவிற்கு இது திருப்தி அளிக்கவில்லை. அதுவும் அல்லாமல் அவருடைய நடத்தை ஆச்சரியமாக இருந்தது.

4

ஜயாவிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அம்பியை எப்படியாவது தண்டனை பெறச் செய்ய வேண்டும் என்று தோன்றியது. அவன் அதைச் செய்திருப்பானோ, இல்லையோ என்ற பிரச்சனையே இப்போது இல்லை. தன்னால் அவனை என்ன செய்ய முடியும்? இப்பொழுது அவன் அண்ணனிடம் சொன்னால்? அப்படித்தான் செய்ய வேண்டும். அதுதான் அவள் மனப்போக்கு.

அன்று சாயந்தரம் கலாசாலை விட்டாயிற்று. கிருஷ்ணமூர்த்தி நேராக 'லைப்ரரி'க்குச் சென்றான், வாசிப்பதற்குப் புஸ்தகம் ஏதாவது எடுத்துக்கொண்டு செல்ல.

அங்கே ஜயா அவனைச் சந்தித்தாள்.

"மிஸ்டர் கிருஷ்ணமூர்த்தி, ஒரே ஒரு வார்த்தை" என்றாள்.

எப்பொழுதும் பெண்களுடன் - அதாவது தாயைத் தவிர - வேறு யாருடனும் பேசிப் பழகாதவன் சற்றுத் திடுக்கிட்டுத் திரும்பினான்.

"என்ன!" என்று தழுதழுத்த குரலில் கேட்டான்.

ஜயலக்ஷ்மிக்கு உள்ளூர நகைப்பு. 'இந்த அஞ்ஞானிகள் பெண்களுடன் பேசுவதென்றால் என்ன இவ்வளவு கோழையாக இருக்கிறார்கள்! ஒரு கிறிஸ்தவப் பையன் இப்படி இருப்பானா? இவனைச் சிறிதே கிண்டல் செய்யவேண்டும்' என்று நினைத்தாள்.

"உங்களுடன் தனியாகச் சற்றுப் பேச வேண்டும்; வராந்தாவிற்கு வாருங்கள்" என்றாள்.

கிட்டுவிற்கு உடல் முழுவதும் வியர்த்தது. மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்? பதில் பேசத் தைரியம் இல்லை. பின்னால் சென்றான்.

அவள் அன்று மத்தியானம் நடந்ததை, அம்பி செய்ததை, கூறினாள்.

கிட்டுவிற்குப் பிரமாதமான கோபம் வந்துவிட்டது; "அவன் வரட்டும் கண்டிக்கிறேன்; நீங்களும் இருங்கள். உங்கள் முன்னிலையிலேயே" என்றான் கிட்டு.

கீழே 'காம்பவுண்டி'ல் அம்பி நிற்பதைக் கவனித்தான் கிட்டு. "அம்பி! உயரே வா?" என்று கூப்பிட்டான். அந்தக் குரலில் கோபமும் பெருமிதமும் கலந்திருந்தன.

"அவன் வரட்டும்; அவனுக்குப் புத்தி கற்பிக்கிறேன்."

அம்பி வந்தான். மத்தியான சம்பவம் அவனுக்கு ஞாபகமே இல்லை. ஆனால் அவர்கள் இருவரும் நின்றிருப்பது ஆச்சரியமாக இருந்தது.

நெருங்கினான்.

"என்னடா அம்பி! இத்தனை நாள் உன்னை மனிதனாக நினைத்திருந்தேன். உனது 'கிளாஸ் மேட்'டினிடம், அதுவும் ஒரு பெண்ணினிடம் இந்த மாதிரிக் குறும்புத்தனமாக நடக்கலாமா?" என்று கோபித்தான் கிட்டு.

அம்பிக்குத் தூக்கிவாரிப் போட்டது. இத்தனை நாள் தன்னுடன் நெருங்கிப் பழகிய கிட்டுவே இப்படி நினைத்தால்... அவனுக்குக் கோபம் வந்தது.

"தாங்கள் எத்தனை நாளாக இந்தக் காலேஜில் பிரின்ஸிபால்" என்று கிட்டுவைக் கேட்டுவிட்டு, "தங்களுக்குப் பிரின்ஸிபால் யாரென்று தெரியாவிட்டால் நான் அறிமுகம் செய்துவைக்கிறேன்" என்று ஜயாவைப் பார்த்தான் அம்பி.

இதற்கு முன் எதிர்க்காதவன், அடங்கியிருக்க வேண்டியவன் எதிர்த்தால் ஏன் கோபம் வராது? கிட்டு, பளீரென்று கன்னத்தில் அடித்தான். இதை எதிர்பார்க்காத அம்பி மலைத்துக் கல்லாகச் சமைந்தான். அடிகள் வெகு பலமாக, மூர்க்கமாக, ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்தன.

ஜயாவின் நிலைமை மிகக் கஷ்டமாகிவிட்டது; ஏன் சொன்னோம் என்றாகிவிட்டது. அவள் எதிர்பார்த்தது ஓர் அதட்டல், ஒரு மன்னிப்பு. ஆனால் இப்போது அம்பியின் மீது இரக்கம்!

"மிஸ்டர் கிட்டு? நிறுத்துங்கள், இதென்ன? நிறுத்துங்கள்..."

அம்பிக்கு ஏற்பட்ட மலைப்பு நீங்கியது; "நீயா அண்ணன்?" என்று கூறிக்கொண்டே கிட்டுவின் மூக்கிலும் முகத்திலும் இரண்டு குத்துவிட்டான்.

அந்தக் குத்தில் கிட்டுவிற்குத் தலை சுற்றியது; அம்பியின் குத்து ஒன்று வயிற்றில் விழுந்தது அவ்வளவுதான். ஆனால் அம்பி திரும்பிப் பார்க்காமல் நடையைக் கட்டிவிட்டான்.

"அட மிருகமே!" என்று மறையும் உருவத்தைப் பார்த்து எரிந்து விழுந்துவிட்டு ஜயா கீழே விழ இருந்த கிருஷ்ணசாமியைத் தாங்கினாள். வாலிபனை, வெறும் கனமான உடலை, தாங்கப் போதுமான சக்தி அவளுக்கு இல்லை. பாரம் அவளைக் கீழே இழுத்தது. ஆனால் லாவகமாகத் தாங்கியபடியே கீழே படுக்க வைத்தாள். கிட்டுவிற்கு மூச்சுப் பேச்சு இல்லை. ஜயா பயந்து நடுநடுங்கிவிட்டாள். என்ன செய்வது என்றே தெரியவில்லை. மடியில் தூக்கிக் கிடத்தியவண்ணம், "கிருஷ்ணசாமி! கிருஷ்ணசாமி!" என்று அவன் பெயரைக் கூப்பிட்ட வண்ணமாக இருந்தாள். கையிலிருந்த கைக்குட்டையால் அவன் முகத்தைத் துடைத்தாள். சற்று விசிறினாள்.

மெதுவாக, "அம்பி!" என்று கூப்பிட்டுக் கொண்டே அவன் கண்ணைத் திறந்தான்.

கிட்டு ஒரு பெண்ணின் மடியில் இருப்பதை உணர்ந்ததும் உண்டான கூச்சம், அவனைத் தடுமாறி எழுந்திருக்கச் செய்தது.

அவர்கள் கண்கள் சந்தித்தன. ஜயா சிரித்தாள்; ஆனால் அவன் கண்கள் கலங்கின.

"கிட்டு!" என்றாள். கிட்டுவின் மனம் அவன் வசம் இல்லை. அவளை நோக்கிக் கைகளை விரித்தான். ஜயாவின் மார்பு அவன் மார்பில் விழுந்தது. அவளுடைய கரங்கள் அவன் கழுத்தைச் சுற்றின.

அடுத்த கணம் நிலைமையை அறிந்து இருவரும் விலகினார்கள். ஜயாவின் முகம் நாணத்தால் சிவந்தது.

"ஜயா!"

"கிட்டு!"

ஜயாவிற்கு முகம் அவனுடைய மார்பில் மறைந்தது. அவளை வாரியெடுத்துத் தனக்குச் சொந்தமாக்கினான். அவள் அவனைத் தன்னுள்ளத்தில் சிறை செய்தாள்.

"நாளைக்கு உன் அப்பாவிடம் கேட்போம்" என்று கிட்டு சொன்னதும் ஜயாவின் கனவு பாழானதுபோல், அவளுக்குப் பட்டது.

அவன் அஞ்ஞானி! அவள் கிறிஸ்தவப் பெண்.

5

அம்பியும் கிட்டுவும் சிறு குழந்தையாக இருக்கும் பொழுது எத்தனை தடவை 'டூ' விட்டுக் கொண்டார்கள் என்று அம்பிக்கு ஞாபகம் இல்லையானாலும் இந்த மாதிரி எதிர்பாராதவிதமாய், எதிர்பாராத காரணத்திற்காகப் பெரும் சண்டையிட்டுக் கொள்ளுவோம் என்று அவன் நினைக்கவேயில்லை. அதிலும் தன்னுடைய அண்ணன் இப்படி இருப்பான் என்று சிறிதும் எதிர்பார்க்கவேயில்லை. ஆதலால், அம்பிக்கு அவனுடன் பேசவே மனமில்லை. இருவரும் ஒன்றாக வீட்டிற்குச் செல்லும் வழக்கம் நின்றது.

இது கிட்டுவிற்கு ஒரு விதத்தில் நன்மையாகவே இருந்தது. அவன் சென்ற பிறகு செல்வது என்ற காரணத்தை வைத்துக்கொண்டு ஜயாவை அடிக்கடி சந்திக்க வசதி ஏற்பட்டது அவனுக்கு.

ஜயாவிற்கு அந்த முதல் உணர்ச்சியில் தன்னை மறந்ததாக, வீட்டிற்குச் சென்ற பிறகு நொந்துகொண்டாளாயினும் கிட்டுவை அடிக்கடி சந்திக்கவே, படிப்படியாக அவன் ஓர் அஞ்ஞானி என்ற எண்ணமும் அவள் தனிமையாய் இருக்கும்பொழுதும் தோன்றாமல் ஒழிந்தது.

கிட்டுவிற்கு 'இனிமேல்' என்ற நினைவு ஏற்படாதிருந்ததில் ஆச்சரியம் இல்லை. உணர்ச்சி விஷயங்களில் இனிமேல் என்ற பிரச்னையைப் பெண்களே சீக்கிரத்தில் கவனிக்கக் கூடியவர்கள். தன்னை ஒப்புக்கொடுப்பது. தன்னுடைய வாழ்க்கையை ஓர் ஆண் மகனிடம் பணயமாக வைப்பது எவ்வளவு சீக்கிரத்தில் நடக்கிறதோ, அவ்வளவு விரைவிலேயே வருங்காலத்தைப் பற்றித் திட்டம் போடும் திறனும் படைத்துவிடுகிறார்கள் அப்பெண்கள்.

சம்பவம் நடந்து பத்துப் பதினைந்து நாட்கள் கழித்து ஒரு சாயந்தரம் இருவரும் சந்தித்தபோது, ஜயா பேச்சை அந்த விஷயத்தில் திருப்பினாள். "கிட்டு, நான் ஒன்று கேட்கப் போகிறேன். கோபித்துக் கொள்வாயோ?"

"என்னடி ஜயா? இப்படிக் கேட்கிறாய்?"

"உன்னிடம் ஒரு விஷயம் கேட்க வேண்டுமென்று... கோபித்துக் கொள்வாயோ என்றுதான் பயமாக இருக்கிறது!" என்று கிட்டுவின் மீது சாய்ந்து அவன் கழுத்தில் கரங்களைச் சுற்றி, அவன் கண்களை நோக்கினாள்.

"ஜயா, சொல்கிறதைச் சொல்லேன்... நான் என்ன முரடனா?"

"கோபப்பட மாட்டீர்களே?"

"கோபப்பட மாட்டேன் என்று எத்தனை தரம் சொல்லுகிறது?" என்று அவளை முத்தமிட்டான்.

"கிட்டு... நாம் இப்படியே... பிறகு என்ன செய்வது?"

கிட்டு திடுக்கிட்டு விழித்தான். தான் ஒரு பெண்ணை அநியாயமாகச் சதிசெய்து வாழ்க்கையைக் குலைத்துவிட்டதாக நினைத்தான். வருங்காலம் என்பது அந்தகாரம்போல் அவன் அறிவை மறைத்தது.

"ஜயா, என்னுடன் வந்துவிடு. சமூகத்தில் இடம் இருக்காது... ஆனால்... ஜயா, என்ன செய்வது? நீ சொல் நான் கேட்கிறேன்..." என்று காதில் கேட்ட லட்சியங்களை ஒப்பித்தான்.

"கிட்டு, கோபம் வருமா நான் சொன்னால்?... நீ எங்கள் மதத்தைத் தழுவிவிடு... அப்புறம் கஷ்டமில்லை. எனக்காக நீ செய்வாயோ?" என்று அவன் மார்பில் தலையைச் சாய்த்த வண்ணம் அவன் கண்களை நோக்கினாள்.

கிட்டு அவளை இறுக அணைத்துக்கொண்டு, "ஆ... ஆ... க...ட்டும்" என்றான். அது லேசான வழிதான். ஆனாலும் அவன் மனம் எந்தத் திக்கில் தத்தளித்தது என்று அவனுக்குத் தெரியாது. ஒரு பெண்ணைக் காப்பாற்ற எது வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நினைத்தான்.

"அப்படியானால் அப்பாவிடம் வாயேன் அநுமதி கேட்கலாம்" என்று அழைத்தாள் ஜயா.

இருவரும் சகரியாஸ் நாடாரிடம் சென்றார்கள். அவர் முதலில் திடுக்கிட்டார். ஆனால், கடைசியாகத் தம் செல்வக் குழந்தைக்கு அநுமதி தர வேண்டியிருந்தது. அதில் பிறகு அவருக்கு இரட்டிப்புச் சந்தோஷம். ஒன்று தமக்கு ஒரு பிராம்மண மாப்பிள்ளை கிடைப்பது. இன்னொன்று தம்முடைய மகளின் கல்யாணத்தினால் அநியாயமாகச் சாத்தானின் நரக ராஜ்யத்திற்குப் போகாது, ஓர் ஆவியைக் கர்த்தரின் பரமண்டலத்திற்குச் சேர்க்க முடிந்தது என்பது. அன்று அவர் படுக்கைக்குப் போகுமுன் ஜபம் செய்யும்போது பாவியான அஞ்ஞானியின் மனத்தைக் குணப்படுத்தக் கர்த்தராகிய இயேசுவிடம் மன்றாடிக் கேட்டுக்கொண்டார்.

பரீட்சை முடிந்ததும் கிட்டுவிற்கு ஞானஸ்நானத்துடன் திருமணத்தையும் நடத்திவிடுவது என்றும், அங்கிருந்த ரெவரண்ட் பீட்டர்ஸன் துரை உதவியால் புரோட்டஸ்டாண்ட் கல்லூரியில் ஓர் உபாத்தியாயர் உத்தியோகத்தை வாங்கிக் கொடுப்பது என்றும் பேசி முடிந்தது.

கிட்டு, தன் வாழ்க்கைப் பிரச்னைகள் இவ்வளவு எளிதாக, இனிமையாக நடைபெறும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆகையால் இதில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிற்று. மேலும் எவ்வளவு நாஸுக்காக நாகரிகமாக இருக்கிறது என்பதில் மிகுந்த குதூகலம். இந்த இரகசியத்தை அவனுடன் பகிர்ந்துகொள்ள ஜயாவே போதும் என்று பட்டது. போகும்போதெல்லாம் காப்பி அருந்தப் பழக்கிக் கொண்டான். ஜயா சாமர்த்தியசாலியாகையாலும், கிட்டுவின் காதலுக்காகத் தன் உயிரையும் தியாகம் செய்யக்கூடியவளாகையாலும் மாமிச உணவுகளைப் பற்றி வாசனைகூடப் படாமல் ஜாக்கிரதையாக இருந்து வந்தாள்.

பரீட்சையும் வந்து சென்றது. அதுவரையில் தன்னுடைய இரகசியத்தைக் கிட்டு வெகு ஜாக்கிரதையுடன் காத்துவந்தான். அவனுக்குத் தன் வீட்டிற்குச் செல்லும்போதெல்லாம் அங்கு இருண்டு சிதைந்து கிடக்கும் தரித்திரக் கோலம், அவனது மனசில் தாயின் மீதும் ஒரு வெறுப்பைத் தோற்றுவித்தது.

ஒரு நாள் காலையில் அவன் குளத்தைவிட்டுச் சென்றவன் திரும்பி வரவில்லை. போகும்பொழுது, "அம்மா? கொஞ்சம் தீர்த்தம் தா?" என்று வாங்கிச் சாப்பிட்டுவிட்டுச் சென்றவன் தான்.

அன்று மத்தியானம் கிட்டு, கிறிஸ்தப்பர் கிருஷ்ணமூர்த்தியாகி, ரெவரண்ட் பீட்டர்ஸனின் முன்பு, ஜயாவுக்குத் தன் வாழ்விலும் தாழ்விலும் பங்கெடுத்துக்கொள்ளும் உரிமையைக் கொடுத்தான். திருமணம் மிகச் சுருக்கமாக இரண்டு மூன்று சகரியாஸ் நாடாரின் நண்பர்களுடன் நடந்தபின் தம்பதிகள் திரும்பினர்.

அன்று பாளையங்கோட்டைச் சந்தைக்குச் சென்றிருந்த சாமண்ணா இந்தச் செய்தியைத் தலைதெறிக்க ஓடிவந்து அம்பிக்கும் அவன் தாய்க்கும் அறிவித்தார். மீனாக்ஷியம்மாளுக்குத் தூக்கிவாரிப் போட்டது. சாமண்ணாவிற்குப் பைத்தியம் பிடித்துவிட்டதோ என்ற சந்தேகம் தொடர்ந்து தோன்றிற்று. "அம்பி, எதுக்கும் நீ போய்ப் பார்த்துவிட்டு வா!" என்று அனுப்பினாள். அவளால் அதை நம்ப முடியவில்லை. கிட்டு அப்படிச் செய்வான் என்று அவள் மனம் ஒப்புக் கொள்ள மாட்டேன் என்றது.

அம்பியை இந்தச் செய்தி திடுக்கிடச் செய்தது. ஆனாலும் அவனுக்கு இப்படி நடக்கக்கூடும் என்று முன்பே பட்டது. முன் சம்பவங்கள், அது நடக்கக் கூடியதுதான் என்றாலும் கிட்டு அவ்வளவு அசடன் என்று அம்பி எதிர்பார்க்கவில்லை.

நேரே தான் படிக்கும் கலாசாலைக்குச் சென்று ஞானப்பிரகாசம் சாமியாரின் அறைக்குள் நேராகச் சென்றான். சாமியாருக்குக் கிட்டுவின் மீது பரமகோபம். தம் வலைக்குத் தப்பிப் புரோட்டஸ்டாண்ட் மதத்தைத் தழுவியதில் அடங்காத சீற்றம். அவரால் அதை மன்னிக்கவே முடியவில்லை. கிட்டு இப்படிச் செய்ததை விட ஹிந்து மதத்திலே ஓர் அஞ்ஞானியாகக் காலங்கழிக்க முரணி இருந்தாலும் அவருக்கு அவ்வளவு கோபம் இருந்திராது.

வெண்ணெய் திரண்டு வரும்பொழுது பானை உடைந்தால் சீற்றம் வருவது இயற்கைதானே? ஆனால், அதைவிடப் பன்மடங்கு சீற்றம் வெண்ணெயை மற்றவன் அடித்துக் கொண்டு போகும் ஏமாற்றத்தினால் ஏற்படும்பொழுது அது மன்னிக்கப்படவேண்டிய விஷயம். மேலும் ஸ்ரீலஸ்ரீ ஞானப்பிரகாச சாமியாரும் மனிதன் தானே? கிட்டுவின் மீது உண்டான சீற்றத்தையெல்லாம் வைத்து அம்பியைக் கண்டதும் அவன் மீது பாய்ந்தார். கிட்டு புரோட்டஸ்டாண்ட் ஆனது அம்பியின் தவறு என்று அவர் நினைப்பது போல இருந்தது.

கிட்டுவின் மேல் இருந்த வெறுப்பையெல்லாம் அம்பியிடம் கொட்டி, உண்மையையும் கக்கி, கடைசியாக, "அந்தச் சைத்தானின் மதத்தினனுடன் நீ ஒன்றும் வைத்துக்கொள்ளக்கூடாது" என்று புத்தி கற்பித்து அனுப்பி வைத்தார்.

அம்பிக்கு இருந்த சிறிது சந்தேகமும் போய்விட்டது. இனிக் கிட்டுவைப் பார்த்து என்ன பயன்? வீண் மனத்தாங்கலும் கசப்புந்தான்!

நேராகத் தாயிடம் வந்து நடந்ததைக் கூறினான். "அப்படி இருக்காது; அப்படி இருக்காது" என்ற மனப்பால் குடித்துக்கொண்டிருந்தவளுக்கு நெஞ்சில் சிவதனுசைக்கொண்டு அடித்ததுபோல் இருந்தது.

உடனே ஏகமாகப் பிரலாபித்துக்கொண்டு பாளையங்கோட்டைக்குப் புறப்பட்டாள். வழிநெடுக அழுகை, பிரலாபம், பொருமல்! கிட்டு இறந்தமாதிரிதான்!

சகரியாஸ் நாடாரின் வீட்டின் முன்பு பெரிய கூட்டம் கூடிவிட்டது.

"கிட்டு! கிட்டு!" என்ற மீனாக்ஷியம்மாளின் பிரலாபம். தெய்வத்தையும் தனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் வைதுகொண்டு கிட்டுவை வரும்படி மன்றாடினாள். வந்தால் ஹிந்து சமூகம் சேர்த்துக் கொள்ளுமா? அதுவும் அவளுக்குத் தெரியும்; பெற்ற மனம்.

கிட்டுவிற்கு இது பெரிய அவமானமாக இருந்தது. தன்னுடைய புதிய மாமனாரைப் போலீசுக்கு அனுப்பிவிட்டு, வெளியே விறுவிறென்று வந்து, "வரமுடியாது! கூச்சல் போடாதே, போ"வென்று அதட்டிவிட்டு உள்ளே சென்றுவிட்டான்.

இத்தனை நேரமும் அம்பி ஒரு வார்த்தையும் பேசாமல் பார்த்துக் கொண்டிருந்தவன், தன் தாய்க்குப் பெரும் அவமானம் வந்துவிடக்கூடாதென்று ஒரு ஜட்காவில் அவளைத் தூக்கிப் போட்டு வண்டியை வேகமாக விடச் சொன்னான். அங்கே கூடியிருந்த கிறிஸ்தவ சகோதரர்கள், 'ஓ'வென்று கூவிக் கேலிசெய்தார்கள்.

வண்டி நேராக அருவன்குளத்திற்குச் செல்ல முடியாது. ஆற்றிற்கு இக்கரையிலேயே வாடகையைக் கொடுத்துவிட்டு இருவரும் சென்றார்கள்.

மீனாக்ஷியின் பொருமல் அவள் துக்கத்திற்குப் போக்குவீடாக இருந்தது. அம்பியின் சாந்தமான முகம் ஹிருதயத்தில் கொட்டும் இரண்டாயிரம் தேள்களின் விஷத்தைச் சகித்துக்கொண்டிருந்தது என்பதை யாரால் உணரமுடியும்?

அவர்கள் ஊருக்குள் வரும்போது நன்றாக இருட்டிவிட்டது. இருவரும் தனித்துச் செல்வதை அக்கிரகாரத் தெருவில் வாசற்படியில் நின்றுகொண்டு குசுகுசு என்று பேசியவண்ணம் பார்த்திருந்தனர் யாவரும்.

இருவரும் அந்த இடிந்த குச்சினுள் செல்லும் வரையில் ஒருவராவது ஏன் என்று பேசவில்லை. அம்பி உள்ளே சென்று விளக்கை ஏற்றினாள். மீனாக்ஷி ரேழியிலேயே படுத்து ஏங்கிக் கொண்டிருந்தாள்.

"ஆமாம், விளக்கு ஒன்றதான் குறை!" என்ற முனகல்.

வெளியில் யாரோ, "அம்பி! அம்பி!" என்று கூப்பிடும் சப்தம்.

வெளியே வந்தான்.

அங்கே தீக்ஷிதர் நின்று கொண்டிருந்தார். வயசு எண்பதிற்கு மேல் இருக்கும். நல்லவர். அநுபவம் உள்ளவர்.

"அம்பி!" என்று கூப்பிட்டுவிட்டுத் தயங்கினார்.

"என்ன?"

"அம்பி, நான் ஊருக்கு நல்லவன் தாப்பா. நீயும் நல்லவன். ஊரோடு ஒக்க ஓடு. மடப்பயல் கிட்டு செய்ததற்காக உங்களை விலக்கி வைத்திருக்கிறார்கள் ஊரார். என்ன செய்யலாம்? விதி! இங்கிருந்தால் பிரயோஜனம் இல்லை. விலகிண்டூட்டா ஒருவருக்கும் கஷ்டமில்லை..."

"அப்படியா!" என்றான் அம்பி. கிட்டுவின் மீது ஒரு பச்சாத்தாபம் தோன்றியது.

"அதற்கென்ன? சரிதான்" என்றான் மறுபடியும்.

ஆமாம் பழைய, ஓநாயும் ஆட்டுக் குட்டியும் கதைதான். அதற்கு என்ன?

6

கிட்டு அந்த ஆவேசத்தில் உள்ளே சென்றவன் ஒருவருடனும் பேசாமல் தன் அறைக்குள் சென்று கதவை அடைத்துக்கொண்டான். அவன் மனசில் பேய்கள் சுதந்தர நடனம் புரிந்தன. மனம் குழம்பியது. இருள்!

ஒரு பக்கம் தாய்; மறுபக்கம் ஜயா!

ஜயா, கிறிஸ்தவ மதத்தினளானாலும் ஒரு பெண். தன்னுடைய கணவனின் கஷ்டத்தை அறிந்து கொண்டாள். தனது பணிவிடைதான் அவனுக்குச் சாந்தி தரும் என்று தெரிந்து கொண்டாள்.

மெதுவாகப் பின்புறம் வந்து நின்றான்.

கிட்டுவின் கழுத்தில் அவள் கரங்கள் சுருண்டன.

"கிட்டு!"

அவள் கண்களிலிருந்து முத்துக்கள் உதிர்ந்தனபோல் அவன் நெற்றியை இரண்டு துளிகள் நனைத்தன.

"ஜயா!" ஒரு பெருமூச்சுத்தான் வந்தது.

அவனுடைய தலையைத் தன் மார்பில் ஆதரவுடன் அணைத்தாள்.

அன்று நெடுநேரம் அந்த அறை மௌனமாக இருந்தது.

சாந்தி பிறக்கவில்லை!

ஜயாவிற்குப் பயத்தில் பிறந்த ஒரு யோசனை தோன்றியது. அவனுக்கும் மாமிச உணவு பழக்கிவிட்டால் இனித் தாயை நோக்கிக் கிட்டுவின் மனம் செல்லாது என்ற நினைத்தாள்.

உடனே கீழே சென்று கறிவடையை ஒரு தட்டில் எடுத்து வந்து அவன் முன்பு வைத்தாள். இதுவரையில் அவன் மனம் கோணாது இருக்கச் சபதம் செய்தவள் அன்று அவன் பக்கலில் உட்கார்ந்து ஒன்றை எடுத்து அவன் வாயில் ஊட்டினாள்.

கிட்டு ஏதோ யந்திரம் மாதிரிக் கடித்தான். வடை மாதிரித் தெரியவில்லை. நடுவில் ஏதோ கடிபடாமல் ஜவ்வுப்போல் தட்டுப் பட்டது.

"இது என்ன ஜயா?" என்றான்.

ஒரு புன்சிரிப்புடன் தன்னுடைய வாயில் ஆள்காட்டி விரலை வைத்துக்கொண்டு இரகசியமாக அவள், "கறிவடை?" என்றாள்.

"ஜயா! உன் காதல் எனக்குப் போதாதா! நான் ரப்பரையுமா தின்ன வேண்டும்?" என்று பரிதாபகரமாகச் சிரித்தான்.

சட்டென்று அவன் முகம் மாறியது. வடைகளை அப்படியே சிதறிவிட்டு, "போ! போ!" என்று இரைந்தான்.

ஜயாவிற்கு நெஞ்சில் வாள்கொண்டு குத்திய மாதிரி இருந்தது. அவனுடைய நிலையைக் கண்டு வெளியே சென்றுவிட்டாள்.

அவள் அன்று இரவு தலைவிரி கோலமாகத் தலை வாயிற்படியில் படுத்துக் கிடந்தது அவனுக்குத் தெரியாது; வீட்டில் உள்ளவர்களுக்கும் தெரியாது. அன்றிலிருந்து அவளும் மாமிச உணவு தொடுவதில்லை.

7

அம்பியும், மீனாக்ஷியம்மாளும் உயிர் வாழவேண்டி ஆசைப்பட்டால் கிராமத்தைவிட்டு விலக வேண்டியதுதான். அவர்கள் அதை விட்டுப் புறப்படுவதற்கு ஒரு வாரத்திற்குமுன் நரகம் எப்படி இருக்கும் என்பதைச் சிறிது அறிந்தார்கள்.

அம்பி, கைலாசபுரத்தில் இரண்டு ரூபாய்க்குள் ஒரு குடிசை வாடகைக்கு எடுத்தான். அங்கிருந்து வரும்பொழுது வீட்டையும் அநாவசியச் சாமான்களையும் விற்றுவிட்டதனால் சிறிதே கையில் பணம் இருந்தது.

வேளாளத் தெருவில் இருந்துகொண்டு, மீனாக்ஷியம்மாள் முறுக்கு, அப்பளம் விற்றுக் காலட்சேபம் செய்ய முயலுவதென்றும் அதற்குள் அம்பி ஒரு வேலை தேடிக்கொள்வதென்றும் ஏற்பாடு.

வேலை என்ன மரத்தில் காய்த்துத் தொங்குகிறதா? ஏக்கத்தினால் நாளுக்கு நாள் மெலிந்து வந்த மீனாக்ஷியம்மாளுக்கு முன்போல் ஒன்றும் செய்ய முடியவில்லை.

இதற்குள் நாலைந்து மாசங்கள் சென்றன; கையில் இருந்த பணமும் செலவாகி விட்டன. அம்பியும் தேடாத இடத்தில் எல்லாம் தேடுகிறான். வேலைக்கு என்ன செய்வது?

அன்று மத்தியான்னம் வெயிலில் அலைந்துவிட்டுச் சோர்ந்து வீட்டிற்குள் வந்தான். அன்று காலையிலிருந்து பட்டினி. மீனாக்ஷி அப்போது படுத்த படுக்கையாகக் கிடந்தாள். மருந்திற்கு என்ன செய்வது? அது இப்போது எங்கிருந்து கிடைக்கும்?

தபாற்காரன், "ஸார்! ராமசாமி. மணியார்டர் ஸார்?" என்றான்.

அம்பிக்குத் தூக்கிவாரிப் போட்டது. அவனுக்கு யார் மணியார்டர் அனுப்பப் போகிறார்கள்? ஒரு வேளை தவறான விலாசமாக இருக்கலாம்.

அப்படி ஒன்றும் இல்லை. கிட்டுவிடமிருந்து வந்திருக்கிறது. அவனுக்கு அடங்காத கோபம்! எதனாலோ?

தபாற்காரனை அதைத் திருப்பி அனுப்புமாறு சொல்லிவிட்டு உள்ளே சென்று ஒரு கார்டில் பின்வருமாறு எழுதினான்.

ஸ்ரீ கிறிஸ்தப்பர் கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு. தங்கள் மணியார்டர் எங்களுக்கு அநாவசியம். இரத்தத்தையும் வாழ்நாட்களையும் தியாகம் செய்தவருக்குப் பதில் உபகாரமாக, அவள் சுகமாக ஒரு கணமாவது இருக்க வேண்டும் என்ற நினைப்பே இல்லாமல், பொறுப்பை உதறித் தள்ளின ஒருவருடைய போலி அன்பு அல்லது பச்சாத்தாபம் அவளுக்கு வேண்டாம். இனியாவது தயவுசெய்து எங்களைப் புண்படுத்தாதிருந்தால் போதும். மடிந்தாலும் ஹிந்து தர்மத்திற்காக மடிவோம்! இனியாவது அந்த அன்பு மட்டிலும் இருந்தால் போதும்.

இப்படிக்கு,
ராமசாமி.

இந்தக் கார்டு கிட்டுவின் ஹிருதயத்தைப் பிளந்தது. இருளில் முட்டிக்கொள்ளும் போது நட்சத்திரம் கிடைத்தாலும் புழுதியில் தானே புரள வேண்டும்?

ஜயாவைப் போல் ஒரு சகதர்மிணி அகப்படாள் என்பதும் உண்மையே! வாழ்க்கையின் லக்ஷ்யம் அதனோடு முடிவடைந்துவிடுகிறதா? கிறிஸ்தவ மதம், 'நான் சொல்வதை நம்பு; நீயாக ஆலோசிக்க உனக்கு அநுமதி இல்லை' என்கிறது. ஹிந்து மதம், 'நீ என்ன வேண்டுமானாலும் எண்ணு; ஆனால் சமூகக் கட்டுப்பாடு என்ற வேலியைத் தாண்டாதே!' என்கிறது. இவற்றில் எது பெரியது?

எப்படியாவது தாயைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை! ஆனால் அம்பியின் கோபத்திற்குப் பயம். ஜயா! அவள் அவன் தான்! இவன் நினைத்ததெல்லாம் அவளுக்குச் சரி.

*****

நாட்கள் கழிந்தன.

அம்பிக்குப் பெட்ரோல் கம்பெனியில் 15 ரூபாய் சம்பளத்தில் ஒரு வேலை.

மீனாக்ஷியம்மாளுக்குப் படுக்கை நிரந்தரம்; கிட்டுவின் நினைவு நிரந்தரம்.

அன்று சாய்ந்தரம் மீனாக்ஷியம்மாளின் நினைவு தடுமாறியது.

ஏதோ, தற்செயலாகக் கிட்டுவும் துணிந்து தன் மனைவியுடன் வந்தான்.

உள்ளே ஜயாவை அழைத்துச் செல்வதற்குப் பயம். அதற்குள் ஜயா முந்திக்கொண்டாள். "நான் வெளியில் நிற்கிறேன்; பார்த்துவிட்டு வாருங்கள்" என்றாள்.

கிட்டு உள்ளே சென்றதும் திடுக்கிட்டான். தாயின் சாயைதான் படுக்கையில் கிடந்தது.

அம்பி ஒன்றும் பேசவில்லை.

சற்று நேரம் பொறுத்து, "இதுதான் உன் வேலை, பார்த்தாயா?" என்றான்.

கிட்டுவிற்குக் கோபம் வந்தது.

"நான் எனது லக்ஷியத்தை அடைந்தேன். அதற்கு யார் தடை?" என்றான்.

"ஒரு பெண்ணுக்காக அசட்டுத்தனமான மதந்தான் உனது லக்ஷியமோ? தனது தர்மத்தைப் பற்றிக் கேட்டாவது இருக்க வேண்டும். லக்ஷியம் என்ன குட்டிச்சுவர்?" என்றான் அம்பி.

இருவருக்கும் வாக்குவாதம் வலுத்துவிட்டது.

மீனாக்ஷியம்மாள் விழித்தாள்.

"தெய்வமே! நீ இருக்கிறாயா? என் இரத்தம், என் குழந்தைகள்! இவைகள் இரண்டிற்கும் இப்படிச் சண்டையை உண்டுபண்ணிவிட்டதே, தர்மமா? அது நிஜந்தானா!" என்று பரபரப்புடன் எழுந்து உட்கார்ந்து பேசினாள். முகத்தில் தேஜஸ் இருந்தது; புதிய சக்தி இருந்தது. சொன்னவுடன் களைப்படைந்து சாய்ந்தாள்.

வெளியே எங்கோ ஒரு மாடு கன்றை நோக்கி, "அம்மா!" என்று கதறியது. மீனாக்ஷியம்மாள் ஆவியும் எந்தத் தாயையோ நோக்கி விடுதலை பெற்றது.

"போ! வெளியே!" என்றான் அம்பி.

"என் தாய்!" என்றான் கிட்டு.

அப்போது ஜயா உள்ளே தைரியமாக நுழைந்தாள்.

"இந்த இடத்திலா சண்டை? நீங்கள் ஆண் பிள்ளைகளா?" என்றாள்.

ஓடிச்சென்று மீனாக்ஷியம்மாளை மடிமீது எடுத்துக் கிடத்திக் கொண்டு கதறினாள்.

கிட்டுவைக் கொடுத்த புனிதமான சரீரம் அல்லவா?

அம்பிக்கு என்ன? அவன் தைரியசாலி; அறிவின் தராசு.

இவள் செய்கை இருவர் மனசிலும் ஒரு சாந்தியைத் தந்தது.

அவள் பெண். உணர்ச்சிவசப்பட்டவள். மதம் அவளுக்குத் தெரியாது. அம்பிக்கு அவள் செய்கை அவன்முன் அவளைப் பெரிய புனிதவதியாக்கியது.

மெதுவாகச் சரீரத்தைக் கிடத்திவிட்டு, கிட்டுவின் பக்கத்தில் வந்து நின்றுகொண்டு, "போய் வருகிறோம்" என்றாள்.

"நீ ஒரு ஹிந்துப் பெண்" என்றான் அம்பி.

"நான் கிட்டுவின் மனைவி" என்றாள் ஜயா.

"கிட்டு..." என்று என்னவோ சொல்ல வாயெடுத்தான் அம்பி. அதற்குள் இருவரும் சென்றுவிட்டார்கள்.

அம்பி அந்த அறையில் இருந்து, அந்தப் புனிதவதியான தாயின் சரீரத்திற்குச் சாந்தியைக் கொடுக்க மனித உலகால் முடியாது போனதைப் பற்றிக் குமுறினான்.

அதற்கென்ன செய்யலாம்? அதுதான் வாழ்க்கை!

தினமணி, பாரதிமலர் - 1935
-------------------------

72. புதிய கந்த புராணம்

தற்சிறப்புப் பாயிரம்

இரண்டும் இரண்டும் நான்கு என்ற மகத்தான உண்மையைக் கவிதையாக இசைக்கும் இந்த காலத்தில், உள்ளது உள்ளபடியே சொல்லவேண்டுமென்ற சத்திய உணர்ச்சியும் பகுத்தறிவும் பிடர் பிடித்துத் தள்ளும் இந்தக் காலத்திலே, அதன் தனிப் பெருமையாக ஓர் அழியாத காவியம் செய்ய என்னை எனது உள்ளுணர்வு தூண்டியது. அதன் விளையாட்டை யாரேயறிவர்! இந்தக் காவியத்தில் பச்சை உண்மையைத் தவிர வேறு சரக்கு ஒன்றும் கிடையாது. ஆதலால் பகுத்தறிவு அன்பர்களும் ஏனையோரும் படித்து இன்புறுமாறு வேண்டிக் கொள்ளுகிறேன். காவியமும் உங்களைக் களைப்புறுத்தாதபடி, கம்பனைப் போலல்லாமல், சிறிய கட்டுக்கோப்பிலிருப்பதற்கு நீங்கள் எனக்கு வந்தனமளிக்க வேண்டும்.

நாட்டுப் படலம்

திருநெல்வேலி ஜில்லா மூன்று விஷயங்களுக்குப் பிரசித்தி பெற்றது. ஒன்று சிவன் என்ற 'பிறவாத பெம்மான்' பிறந்தது அங்கு. இரண்டாவதாகத் தென்றல் பிறந்தது அங்கு. மூன்றாவதாகத் தமிழ் பிறந்ததும் அங்குதான். இந்த மூன்று பெருமையிலேயே 20ம் நூற்றாண்டு வரை திருநெல்வேலி ஜில்லா மெய்மறந்து இருந்தது.

துன்பம் தொடர்ந்துவரும் என்பது பழமொழி. புகழும் பெருமையும் அப்படித்தான் போலிருக்கிறது. 20ம் நூற்றாண்டிலே உலக மகாயுத்தம் நடந்து கொண்டிருக்கும் பொழுது இந்தப் பொல்லாத அதிர்ஷ்டம் மறுபடியும் திருநெல்வேலியைத் தாக்கிற்று. இந்த முக்கியமான சம்பவம் என்னவெனில், கந்தப்ப பிள்ளை 1916ம் வருடம் திருநெல்வேலியில் திரு அவதாரம் செய்ததுதான்.

ஆற்றுப்படலம்

தாமிரவருணி நதி எப்பொழுதும் வற்றாது என்பது சம்பிரதாயம். அந்தச் சம்பிரதாயத்திற்குப் பங்கம் இந்தக் கலிகாலத்தில் வந்துவிடுமோ என்று பயந்து முனிசிபல் உபநதிகள் பல அதில் வந்து சேருகின்றன.

நகரப் படலம்

இந்தப் புனிதமான நதி தீரத்திலே, வண்ணாரப்பேட்டை என்ற திவ்யப் பிரதேசம் ஒன்று உண்டு. சாட்சி சொன்ன கோமுட்டிச் செட்டி கண்ட குதிரையைப் போல் பட்டணத்தின் தொந்திரவுகளுடன் கிராமத்தின் அழகையும் பெற்றிருந்தது. அதாவது தமிழர்களில் நாகரிக வைதீகர்கள் மாதிரி குடுமியும், விபூதியும் ருத்திராட்சமும், ஸெர்ஜ் ஸுட்டும் ஐக்கியப்பட்டுப் பரிணமிக்கும் தமிழ்நாட்டு வைதீகர்கள் மாதிரி இரண்டையும் பெற்ற ஓர் ஸ்தலமாக இருந்தது.

இதன் ஸ்தல புராணம், கபாடபுரம் கடலுடன் ஐக்கியப்படும் பொழுது மறையாவிட்டாலும் சமீபத்தில் வந்த தாமிரவருணியின் வெள்ளத்தினால் ஆற்றில் நித்திய மோன சமாதியடைந்தது என்பது வண்ணாரப்பேட்டை முதியோர்களின் வாக்கு.

இந்தக் கிராம நகரில் கூட கோபுரங்களும் மாட மாளிகைகளும் இல்லாவிடினும் கூரை வீடுகளுடன் தோளோடு தோள் கொடுத்து நிற்கும் காரை வீடுகளும் உண்டு. இவையெல்லாம் அவ்வூர் பெரியார்களின் வாசஸ்தலம் என்பது உண்மையிலும் உண்மை.

இவ்வூரில் கோவில்களும் உண்டு. அதாவது பட்சபாதமில்லாமல், சிவபிரான் விஷ்ணுவாக முயன்ற (அது ஊர்க்காரர்களின் முயற்சி; இந்த உரிமை சிதம்பரத் தலத்தில் மட்டுமில்லை) ஒரு கோவில். "கூறு சங்கு தோல் முரசு கொட்டோ சை"யல்லாமல் மற்றொன்றும் அறியாத வேறொரு சிவபிரான். அப்புறம் ஒரு பேராச்சி - எங்கள் ஸ்தலத்திலிருக்கும் மக்களின் ரத்த வெறியையும் வீரத்தையும் எடுத்துக் காட்டும் பேராச்சி. இன்னும் ஒன்றிரண்டு குட்டிச் சுடலைமாடன்கள். இவைதான் அத்தலத்தின் தெய்வங்கள்; காவல் தெய்வங்கள்.

திருஅவதாரப் படலம்

திருநெல்வேலியில் நான்காவது முக்கிய விஷயம் கி.பி. 1916ம் வருடம் ஒரு இரவில், திரு.அம்மையப்ப பிள்ளைக்கும் சிவகாமி அம்மாளுக்குமாக - அந்த இரவில் முக்கியமாக அந்த அம்மாள்தான் பங்கெடுத்துக் கொண்டார்கள் - திரு. கந்தப்ப பிள்ளை இந்த உலகில் ஜனித்தார்.

பிறக்கும் பொழுது உலகத்தில் ஒரு உற்பாதங்களும் தோன்றவில்லை. ஆனால் அவர் மற்றவரைப் போன்றவரல்ல என்பதை வருகையிலேயே எடுத்துக் காண்பித்துவிட்டார். இவருடைய தாயார் இவர் வரும்வரை பிலாக்கணத்தையும் முனகலையும் கடைப்பிடித்திருந்தாலும் வேர் தாயின் வழியைப் பின்பற்றவில்லை. இதை அவர் தமது பெருமையை ஸ்தாபிக்க சரியான வழியென்று நினைத்திருக்கலாம். ஆனால் அவர் வருகையின் வரவேற்புக் கமிட்டியின் தலைவரான மருத்துவச்சியம்மாள் அப்படி நினைக்கவில்லை. அவரைத் தலைகீழாகப் பிடித்துக் குலுக்கி, முதுகில் கொடுத்த அறையில் ஆரம்பித்த அழுகை, அவர் வாழ்க்கையின் சூக்ஷும தத்துவமாக ஜீவியத்தின் இறுதிவரை இருந்தது.

திரு. கந்தப்ப பிள்ளை இவ்வுலகத்தில் வந்த பிறகு கார்த்திகைப் பெண்கள் அறுவரால் பாலூட்டி வளர்க்கப்படாவிட்டாலும் ஜாம்புத் தீபத்தின் மேற்கே இருக்கும் ஒரு ராஜ்யத்திலிருந்து வந்த இரும்பினாலான காமதேனுவின் பாலை அதாவது மெல்லின்ஸ், கிளாஸ்கோ என்ற அம்ருதத்தை அருந்தி வளர்ந்தார் என்பதை உணர வேண்டும். பழைய ஹோதாவில் சிறு பறையும் சிறு தேரும் இழுத்துத் திரியாவிட்டாலும், சிறு டிரமும் (drum) சிறு தகரமோட்டாரும் அவருக்கு விளையாட்டுக் கருவியாக இருந்தன. சிவகாமியம்மாள், "செங்கீரையாடியருளே" என்றும் "முத்தந்தருகவே" என்றும் சொல்லாவிட்டாலும், கையிலிருந்ததை வைத்துக் கொண்டு அவர் இந்த உலகத்தில் ஜனித்தவுடன் ஆரம்பித்த பிலாக்கணத் தத்துவத்தை நன்றாக வளர்த்து வந்தாள். காலாகாலத்தில் வித்யாரம்பமும் ஆயிற்று. அவரது குரு, கல்வி என்ற ஹோதாவில் புதிதாக ஒன்றும் சொல்லிக்கொடாவிட்டாலும், "தான்பெற்று, தாய் வளர்த்த" கந்தப்ப பிள்ளையின் பிலாக்கணத் தத்துவத்தை, அருங்கலையாகத் தமது செங்கோலால் பாவித்து வந்தார். கந்தப்ப பிள்ளையும் உருண்டு செல்லும் கல் போலும், காற்றிலகப்பட்ட காற்றாடி போலும், வகுப்புப் படிகளைக் கடந்து கல்விக் கோவிலின் வெளி வாயிலையடைந்தார்.

திருமணப் படலம்

இச்சமயத்தில் அம்மையப்ப பிள்ளையும் சிவகாமியம்மாளும் ஒரு சிறு கூட்டுக் கமிட்டியில் ஆலோசித்து, தமது திருமகனுக்குத் திருமணம் செய்விப்பது என்று தீர்மானித்தார்கள்.

வேங்கை மரத்தடியில் யானையைக் கொண்டு பயமுறுத்திக் காதல்கொள்ள வண்ணாரப்பேட்டையில் வசதியின்மையால், "தந்தை சொல்மிக்க மந்திரமில்லை" என்று, 4000 ரூபாய் தொகையுடன் தினைவிளை கிராமத்து நம்பியா பிள்ளையின் ஏக புத்திரியாகிய ஸ்ரீமதி வள்ளியம்மாளை மணம் செய்ய உடன்பட்டார். திருமணம் ஏக தடபுடலாக அதற்கிருக்க வேண்டிய சண்டை, தோரணைகளுடன் இனிது நிறைவேறியது. மணம் முடியும்வரை கந்தப்ப பிள்ளைக்குத் தனது சுகதர்மிணியைப் பார்க்கத் தைரியமில்லாமலிருந்தது. மணம் முடிந்த பிறகும் பார்க்காமலிருக்க முடியாதாகையால் பார்த்தார். அம்மணி என்னவோ அவர் கண்களுக்கு அழகாகத்தான் தோன்றினாள்.

அவருக்குத் தமது சகதர்மிணியைப் பற்றி கிடைத்த செய்திக் குறிப்பில், அவள் படித்தவள் என்றும் சங்கீதப் பயிற்சி உடையவள் என்றும் கண்டிருந்தது. அவள் கல்வி 'குட்டிப்பாலர்' என்பதில் முற்றுப் புள்ளி பெற்றது என்றும் ஹார்மோனியம் வாசிப்பது சுருதிக் கட்டைகளின் மீது எலி ஓடுவது போன்ற இனிய கீதம் என்றும் கண்டு கொண்டார். திரு. கந்தப்ப பிள்ளைக்கு சங்கீதம் பிளேட் கேள்வி ஞானம். அதிலும் வண்ணாரப்பேட்டையில் கிடைக்கக்கூடிய ஓட்டைப் பிளேட் ஞானம். இரண்டும் ஏறக்குறைய ஒத்திருந்ததினால் தமது சகதர்மிணிக்கும் சங்கீதப் பயிற்சி உண்டு என்பதை உணர்ந்தார்.

உலாவியல் படலம்

இதற்குள் கலாசாலை என்ற வானத்திலிருந்து பேனா என்ற தெய்வீக ஆயுதமான வேலும் கிடைத்தது. பசி என்று சூரபத்மனைக் கொல்லப் புறப்பட்டார். தாயின் இளமைப் பயிற்சியானது கல்வி மன்றத்தில் நன்றாகக் கடைந்தெடுக்கப்பட்டு, இப்பொழுது நன்றாகப் பரிணமித்துவிட்டது. அந்த மகத்தான பிலாக்கணம் என்ற சங்கநாதத்துடனும், பேனா என்ற வேலுடனும் அவர் ஏறி இறங்கிய மாளிகைகள் எண்ணத் தொலையாது. கடைசியாக 30 ரூபாயென்ற முக்தி பெறும் காலம் வந்ததும், தினம் பசி என்ற சூரபத்மனைத் தொலைத்த வண்ணம் தமது இல்லறத்தை நடத்துகிறார்.

சுபம்! சுபம்! சுபம்!
புதிய கந்த புராணம் முற்றிற்று.
திருச்சிற்றம்பலம்.

மணிக்கொடி, 28-10-1934
-------------------

73. புதிய நந்தன்

நந்தா சாம்பானை நந்த நாயனாராக்க, சிதம்பரத்தில் அக்கினிப்புடம் போட்ட பின்னர் வெகு காலம் சென்றது.

அந்தப் பெருமையிலேயே ஆதனூர் சந்தோஷ - அல்லது துக்க - சாகரத்தில் மூழ்கி அப்படியே மெய்மறந்தது.

இங்கிலீஷ் சாம்ராஜ்யம் வந்த சங்கதிகூடத் தெரியாது. அப்படிப்பட்ட நெடுந்தூக்கம்.

இப்பொழுது ஆதனூரிலே ரயில்வே ஸ்டேஷன், வெற்றிலை பாக்குக் கடை என்ற ஷாப்பு, காப்பி ஹோட்டல் என்ற இத்யாதி சின்னங்கள் வந்துவிட்டன. எப்படி வந்தன என்ற சமாசாரம் யாருக்கும் தெரியாது.

ஆனால், நந்தன் பறைச்சேரியில் விடை பெற்றுக்கொண்ட பிறகு பறைச்சேரிக்கு என்னமோ கதிமோட்சம் கிடையாது. பழைய பறைச்சேரிதான். பழைய கள்ளுக்கடைதான். ஆனால் இப்பொழுது பழைய வேதியரின் வழிவழிவந்த புதிய வேதியரின், ஆள் மூலம் குத்தகை. சேரிக்குப் புறம்பாக அல்லது தீண்டக்கூடாது என்ற கருத்துடனோ, மரியாதையான தூரத்திலே ஒரு முனிஸிபல் விளக்கு. அதை ஏற்றுவதைப் பற்றி ஒருவருக்கும் தெரியாது. சேரிப்பறையர்கள் ஆண்டையின் அடிமைகள், அத்துடன் அவர்களுக்குத் தெரியாத வெள்ளைத் துரைகளின் அடிமைகள்.

அந்தப் பழைய வேதியரின் வாழையடி வாழையாக வந்த (அவர்கள் குலமுறை கிளத்தும் படலம் எந்தப் புராணத்திலும் இல்லை) வேதியர் அக்கிரகாரத்தில் பெரிய பண்ணை. 100 வேலி நிலம் இத்யாதி வகையறா. இது மட்டுமல்ல. ஒரு பென்ஷன் பெற்ற ஸப் ரிஜிஸ்திரார் விஸ்வநாத் ஸ்ரௌதி; இவருக்குப் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திலும், இறந்து போன ஸனாதன உண்மைகளிலும் அபார நம்பிக்கை. இதையறிந்து நடப்பவர்கள்தான் அவருடைய பக்தர்கள்.

அவருக்கு ஒரு பையன்; பெயர் ராமநாதன். எம்.ஏ. படித்து விட்டு கலெக்டர் பரிக்ஷை கொடுக்கவிருந்தவன். ஏதோ பைத்தியக்காரத்தனத்தினால் - இது அவர்கள் வீட்டிலும் அக்கிரகாரத்திலும் உள்ள கொள்கை - சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுவிட்டான். பையனுக்கு இதிலிருந்த பிரேமையை ஒரு நல்ல சம்பந்தத்தில் ஒழித்துவிடலாம் என்பது ச்ரௌதியின் நம்பிக்கை. பிள்ளையின் பேரிலிருந்த அபார வாத்ஸல்யத்தின் பயன்.

2

சேரியிலே கருப்பன் ஒரு கிழட்டு நடைப்பிணம். 60 வயது. பெரிய நயினாரின் தோட்டக்காவல். இதில் ஒரு ஸ்வாரஸ்யம். கருப்பன் சிறு பிராயத்தில் தெரியாத்தனத்தினாலோ, ஐயரவர்கள் இப்பொழுதும் சொல்லிக்கொண்டிருக்கிறபடி, 'பறக்கிருதி'னாலோ, ஒரு நாள் இரவு அக்ரஹாரத்தில் இருக்கும் தெப்பக்குளத்தில் இறங்கி ஒரு கை தண்ணீர் அள்ளிக் குடித்து விட்டான். கோயில் தெய்வத்தின் உலாவுப் பிரதிநிதியான சுப்பு சாஸ்திரிகள் கண்டுவிட்டார். அக்ரஹாரத்தில் ஏக அமளி. அப்பொழுது சிறுவனாகவிருந்த விஸ்வநாத ச்ரௌதி தன்னை மீறிய கோபத்தில் அடித்த அடி கருப்பனைக் குருடாக்கியது. விளையும் பயிர் முளையிலே தெரியாதா?

ஆனால் ச்ரௌதி இளகிய மனம் உடையவர். கருப்பனுடைய ஸ்திதிக்கு மிகவும் பரிதபித்து தோட்டத்தில் காவல் தொழிலைக் கொடுத்தார். கல்யாணம் செய்து வைத்தார். தோட்டத்திலே குடிசை கட்டிக் கொடுத்தார். பிறகு தங்கக் கம்பியாகிவிட்டான் என்று எல்லோரிடத்திலும் சொல்லுவதில் வெகு பிரேமை.

3

அதெல்லாம் பழைய கதை.

கருப்பன் குருடனாகிவிட்டால் குழந்தைகள் பிறக்காதா? முதலில் ஒரு ஆண் குழந்தை. அவன் பெயர் பாவாடை. ஆண்டை 'சின்ன சாமி'யும் ஏறக்குறைய இதே காலத்தில்தான் பிறந்தான். ராமநாதன் சில சமயங்களில் தோட்டக் காட்டிற்கு வரும்பொழுது பாவாடையுடன் கேணியில் முக்குளித்து விளையாடுவதிலும் மரக்குரங்கு விளையாடுவதிலும் பரம உத்ஸாகம்.

அதெல்லாம் பழைய கதை.

இரண்டு பேரும் வித்தியாசமான இரண்டு சமூகப் படிகளின் வழியாகச் சென்றார்கள். இரண்டு பேரும் ஒரே உண்மையை இரண்டு விதமாகக் கண்டார்கள்.

பரமண்டலங்களிலிருக்கும் பிதாவாகிய கர்த்தரின் நீதிகளை ஆதனூரில் பரப்பும்படி ரெவரெண்ட் ஜான் ஐயர் ஒரு தடவை ஆதனூர் சேரிக்கு வந்தார். பாவாடையின் புத்தி விசேஷத்தைக் கண்டு, அவனைத் தம் மதத்தில் சேர்க்க அனுமதித்துவிட்டால், பெரிய பண்ணை மாதிரி ஆக்கிவிடுவதாக ஆசை காட்டினார். கருப்பனுக்கு தன் மகன், 'இங்குருசி' (English) படிக்க வேண்டுமென்று ஆசை. நீட்டுவானேன்? பாவாடை ஜான் ஐயருடன் சென்றான்.

ரெவரெண்ட் ஜான் ஐயர் வேளாளக் கிருஸ்துவர். முதலில் போர்டிங்கில் போட்டுப் படிக்கவைத்தார். பையன் புத்தி விசேஷம். மிகுந்த பெயருடன் 10 கிளாஸ் படிக்கும் வரை பிரகாசித்தது. இன்னும் பிரகாசிக்கும் பரமண்டலங்களிலிருக்கும் கர்த்தரின் விதி வேறு விதமாக இருந்தது.

ஜான் ஐயருக்கு ஒரு பெண் உண்டு. மேரி லில்லி என்ற பெயர். நல்ல அழகு.

அவளும் அந்த மிஷன் பள்ளிக்கூடத்தில் ஆண் பிள்ளைகளுடன் படித்தாள். எல்லாவற்றிலும் முதல் மார்க் எடுக்கும் பாவாடையிடம் (இப்பொழுது அவனுக்கு தானியேல் ஜான் என்ற பெயர்) சிறிது பிரியம், நட்பு, வரவரக் காதலாக மாறியது.

கிருஸ்தவ சமுதாயத்தில் இந்துக் கொடுமைகள் இல்லையென்று ஜான் ஐயர் போதித்ததை நம்பி, மனப்பால் குடித்த ஜான் தானியேல், ஒரு நாள் ஐயரிடம் நேரிலேயே தன் கருத்தை வெளியிட்டான்.

ஜான் ஐயரவர்களுக்கு வந்துவிட்டது பெரிய கோபம். "பறக்கழுதை வீட்டைவிட்டு வெளியே இறங்கு" என்று கழுத்தைப் பிடித்து நெட்டித் தள்ளினார்.

மனமுடைந்த தானியேலுக்குப் பாழ்வெளியாகத் தோன்றியது உலகம். இந்த மனநிலைக்கு மதம்தானே சாந்தி என்கிறார்கள். கிருஸ்துவனாக இருந்தபொழுது வேத புத்தகத்தை நன்றாகப் படித்திருந்தான். சுவாமியாராகப் போய்விட வேண்டுமென்று கத்தோலிக்க மதத்தைத் தழுவி, சுவாமியார் பரீட்சைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாவிஸ் பிரதராக (Novice Brother) Father ஞானப்பிரகாசம் மேற்பார்த்த மடத்தில் இரண்டு வருஷங்கள் கழித்தான். சுற்றி நடக்கும் அபத்தங்களும், சில சுவாமியார்களின் இயற்கைக்கு விரோதமான இச்சைகளும், மனதிற்குச் சற்றும் சாந்தி தராத இரும்புச் சட்டம் போன்ற கொள்கைகளும் அவன் மனத்தில் உலகக் கட்டுப்பாடே ஒரு பெரிய புரட்டு என்ற நம்பிக்கைகளைக் கிளப்பிவிட்டன.

அதனிடமும் விடை பெற்றுக்கொண்டு, திரு. ராமசாமிப் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபட்டுவிட்டான். அதிலே அவன் ஒரு பெரும் தீவிரவாதி. இப்பொழுது தோழர் நரசிங்கம் என்ற பெயருடன், தனக்குத் தோன்றிய உண்மைகளை அதில் ஒரு பைத்தியம் பிடித்ததுபோல், பிரசாரம் செய்து கொண்டு வந்தான்.

ஒரு தடவை தகப்பனாரைக் காண ஆதனூருக்கு வந்தான். பழைய எண்ணங்கள் குவிந்திருக்கலாம். அதைப் பற்றி எனக்குத் தெரியாது. அவனுக்கு இரண்டு உண்மைகள் தெரிந்தன. தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் இடையே எண்ணங்களில், செய்கைகளில் ஏன் எல்லாவற்றிலுமே ஒரு பெரிய பிளவு இருக்கிறது என்பது ஒன்று. இன்னும் ஒன்று, தான் சென்ற பிறகு, தனக்கு ஒரு அழகான - பறைச்சிகளுக்கும் அழகாயிருக்க உரிமையுண்டு - தங்கை, பதினாறு பிராயத்தாள் இருப்பதையறிந்தது தான்.

ஆனால், இவர்களை மனிதரின் நிலைமைக்குக் கொண்டுவர எந்தப் பகீரதன் உண்டாகப் போகிறானோ என்ற மலைப்பு ஏற்பட்டுவிட்டது. தனது பிரசங்கங்கள் படித்தவர்களிடம் செல்லும்; இந்த வாயில்லாப் பூச்சிகளிடத்தில்?

4

ராமநாதன் வீட்டில் செல்லப்பிள்ளை. இட்டது சட்டம். பக்கத்து ஜில்லாத் தலைநகரில் மெட்ரிக்குலேஷன் வரை படித்தான். அவனுடைய படிப்பு வேறு ஒரு தினுஸு; கெட்டிக்காரன் பள்ளிக்கூடத்தில் மட்டுமல்ல. சிலரைப்போல் பள்ளிக்கூடத்தில் மூழ்கிவிடவில்லை. காலத்தின் சக்தி வசப்பட்டு அதன் நூதன உணர்ச்சிகளில் ஈடுபட்டு இன்பப்பட்டவன்.

சென்னைக்குச் சென்று மேல்படிப்புப் படித்தான்; எம்.ஏ. வரையில். அதற்குள் 1930 இயக்கம் வந்தது. தந்தை நினைத்த கலெக்டர் பதவியைவிட்டு, தடியடிபட்டு ஜெயிலுக்குச் சென்றான்.

ஜெயிலில் இருந்து வந்ததும் ஹரிஜன இயக்கத்தில் ஈடுபட்டான். தகப்பனாருக்கு வருத்தம்தான். ராமநாதனின் அசையாத மனத்தின் முன் ச்ரௌதியின் அன்புதான் நின்றது. கொள்கைகள் பறந்தன.

ஒரு தடவை ஆதனூருக்கு வந்திருந்தான். அப்பொழுது கருப்பனின் மகளுக்கு வயது வந்துவிட்டது. நல்ல இயற்கையின் பூரண கிருபை இருந்தது.

ஒரு நாள் இரவு நல்ல நிலா. தோட்டத்திற்குச் சென்றான். இரவு கொஞ்ச நேரந்தான். அதுவும் ஆதனூரில் கேட்க வேண்டுமா?

தோட்டக் கிணற்றில் யாரோ குதிப்பது போல் சப்தம். ஓடிப் பார்க்கிறான்; ஒரு பெண் உள்ளே. அவனுக்கு ஒன்றும் தெரியவில்லை. உடனே அவனும் குதித்தான்.

"சாமி, கிட்ட வராதிங்க. பறச்சி, கருப்பன் மவ. சும்மானாச்சிங் குளிக்கறேன்" என்ற குரல்.

"சரி, சரி, நீ விழுந்துவிட்டாயாக்கும் என்று நினைத்தேன். ஏறி வா" என்று கரை ஏறினான்.

"இல்லை, சாமி" என்று தயங்கினாள். பிறகு என்ன? இயற்கை இருவரையும் வென்றது.

ராமநாதனுக்கு... பிறகு ஒரு மகத்தான பாபம் செய்து விட்டோ ம் என்ற நினைப்பு. கருப்பன் மகளுக்கு, சின்னப் பண்ணையின் தயவு கிடைத்ததில் திருப்தி.

ராமநாதன் அவளைக் கலியாணம் செய்து கொள்வதாக வாக்களித்தான். "அதெப்படி முடியும் சாமி" என்று சிரித்தாள்.

கருப்பனிடம் போய் நடந்ததைச் சொல்லிப் பெண்ணைக் கொடுக்கும்படி கேட்டான். அவனுக்குப் புதிய கொள்கைகள் எப்படித் தெரியும்?

"அது நயிந்தோ மகாப் பாவம். கண்ணானே அப்படிச் செய்யக் கூடாது."

ராமநாதனுக்கு இடி விழுந்தது போலாயிற்று.


5

மகாத்மா காந்தி தென்னாட்டில் ஹரிஜன இயக்கத்திற்காக பிரசாரம் செய்ய வந்தார். ஆதனூரில் ஐந்து நிமிஷம் தங்குதல். எல்லாம் ராமநாதனின் ஏற்பாடு. ச்ரௌதிகள் அவருடன் வாதம் செய்ய புராண அத்தாட்சிகளுடன் தயார். இதில் ச்ரௌதிகளுக்கு இரட்டை வெற்றி என்ற நம்பிக்கை. ஒன்று, காந்தியின் கொள்கைகளைத் தகர்ப்பது; இரண்டாவது காந்தியின் முன்பே தன் புத்திரனிடம் சனாதனத்தின் புனிதத்தைக் காண்பிப்பது.

தோழர் நரசிங்கம் காந்தியை எதிர்த்துக் கேள்விகள் கேட்க ஆதனூருக்கு வந்தான். தங்கையின் சமாசாரம் தெரிந்துவிட்டது. தகப்பனாரிடம் கலியாணம் செய்து வைத்துவிட வேண்டுமென்றும், அதற்குப் பறையரின் சமுதாயத்தின் கட்டுப்பாட்டால் செய்ய முடியும் என்று தெரிவித்தான். தகப்பனாரின் முட்டாள்தனமான நம்பிக்கையைத் தகர்க்க முடியவில்லை. 'பாப்பானின் சாயத்தைத் துலக்கி விடுகிறேன்' என்று காத்திருந்தான்.

ரயில்வே ஸ்டேஷன் பக்கத்திலிருந்து மைதானத்தில் ஒரு மேடை; கியாஸ் லைட்; இத்தியாதி, இத்தியாதி. பெருங்கூட்டம். வெற்றிகொள்ள ஆசைப்படும் சனாதனமும் அதில் கலந்திருக்கிறது.

கருப்பன் கிழவன். 'மவாத்துமா' கிழவரைப் பார்க்க ஆசை. கண் ஏது? அதென்னமோ? குருடனுக்கு என்ன செய்ய முடியுமோ?

தட்டுத் தடுமாறிக்கொண்டு வந்தான். எங்கோ, தன் மகன் சப்தம் போல் கேட்கிறது. வந்துவிட்டாற்போல் இருக்கிறது என்று தடுமாறிக் கொண்டு ஓடினான்.

மாலைகள் வந்துவிட்டனவா என்று கவனித்து ஓடிக் கொண்டிருக்கும் ராமநாதன் சற்றுப் பின்னல் வந்தான். குறுக்குப்பாதை வழியாகத் தோழர் நரசிங்கம் எங்கிருந்தோ வந்து கொண்டிருந்தான்.

நெற்றிக் கண்ணைத் திறந்த சிவபிரான் போல் தலைப்பு வெளிச்சத்தைப் போட்டுக் கொண்டு கோஷித்துக் கொண்டு வருகிறது. மதறாஸ் மெயில். ஆதனூர் அதன் மரியாதைக்குக் குறைந்தது; நிற்காது. நாற்பது மைல் வேகம்.

என்ஜின் டிரைவர் விஸிலை ஊதுகிறான்; கோஷிக்கிறான். குருடன் கம்பி வழியாகவே நடக்கிறான். மனம் குழம்பிவிட்டதா?

தூரத்திலிருந்து இருவர் அவனைக் கண்டுவிட்டார்கள். மகனும் மருமகனும்; இயற்கைச் சட்டத்தின்படி அப்படித்தான். சமுதாயம் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும்.

வேகமாக ஓடி வருகின்றனர்.

வெளிச்சம்; வெளிச்சம்.

மூவரும் சேரும் சமயம். இழுத்துவிடலாம்.

"ஐயோ?"

ஹதம். ரத்தக் களரி.

முவரின் ரத்தங்கள் ஒன்றாய்க் கலந்தன. ஒன்றாய்த்தான் இருக்கின்றன.

இதில் யாரை நந்தன் என்பது?

புதிய ஒளியை இருவர் கண்டனர். இருவிதமாகக் கண்டனர்.

இறந்த பிறகாவது சாந்தியாகுமா?

சமுதாயத்திற்குப் பலிதான். அதை யார் நினைக்கிறார்கள்.

பத்திரிகையில் பெரிய நீண்ட செய்திகள்...

பிறகு ஆதனூரில்...?

மணிக்கொடி, 22-07-1934
------------------

74. புதிய ஒளி

அன்று இரவெல்லாம் நல்ல மழை.

காற்றும் மழையும் இருளுடன் சேர்ந்து ஒரு பெரிய கூத்து நடத்திவிட்டுச் சென்றன.

இரவு பூராவும் "ஹோ! ஹோ!" என்ற ஓலம். பேயின் எக்காளச் சிரிப்பு. கத்திவீச்சு மின்னல்கள். சடசடா என்ற குமுறல்கள் குடலைக் கலக்கின.

மழை நின்றது.

காற்று ஓய்ந்தது.

சொட்டுச் சொட்டென்று நீர்த்துளிகள்.

வீட்டு வெளிச்சத்தில் ஒளிபெற்று, ஜன்னல் உயரம் உயிர் பெற்று மறுபடியும் இருள் துண்டமாக மறைந்தன.

வீட்டிலே நிசப்தம்...

இந்த ஓலத்திலே அதன் நிரந்தர சப்தத்திலே தூங்கிக் கொண்டிருந்த எனக்கு மழை ஓய்ந்ததும் விழிப்பு வந்தது.

அந்த நிசப்தம்; அந்த மௌனம்! என் மனத்திலே என்னென்னவோ குவிந்து மறைந்தன. ஒன்றோடொன்று ஓடித் தகர்ந்து மறையும் எண்ணக் குவியல்கள்.

திடீரென்று...

தூளியிலிருந்து குழந்தை... என் குழந்தை...

"அம்பி! அம்பி! குச்சியை எடுத்துண்டுவா... சீமா எடுத்துடுவா..." வீறிட்டு அழுகை...

"என்னடா கண்ணே... அழாதே..." என்று என் மனைவி எழுந்தாள்.

"அம்பி, இந்தக் குச்சிதான் ராஜாவாம்... சாமிடா... நீ கொட்டு அடி நான் கும்படரேன்... நான் தான் கும்பிடுவேன்..." ஒரே அழுகை...

நான் படுக்கையைவிட்டு எழுந்திருந்தேன்... ஜன்னலருகில் சென்று நின்றேன்...

சிதறிய கருமேகங்களிடையே நட்சத்திரங்கள் கண் சிமிட்டின.

உள்ளே நிசப்தம்...

தாயின் மந்திரந்தான்.

குழந்தை எந்தக் கனவு லோகத்திலோ முல்லைச் சிரிப்புடன் மகிழ்ந்து தூங்கினான்.

தாய்... அவளுக்கு என்ன கனவோ!

என்ன கனவு! என்ன ஆதரவு! அந்தத் தூக்கத்தின் புன் சிரிப்பு.

குழந்தையின் உதட்டிலே ஒரு களங்கமற்ற, கவலையற்ற மெல்லிய நிலவுச் சிரிப்பு.

தாயின் அதரங்களிலே கனிவு, ஆதரவிலே அவற்றின் கனியான சிரிப்பு.

என் மனதில் சாந்தி...

*****

அன்று விடியற்காலம். கீழ்த்திசையிலே தாயின் ஆதரவு. குழந்தையின் கனவு - இரண்டும் கலந்த வான் ஒளி.

என் மனதில் ஒரு குதூஹலம்.

எனக்குமுன் என் குழந்தையின் மழலை...

பூவரச மரத்தடியிலே... "இந்தக் குச்சுதாண்டா சாமி... நான் தான் கும்பிடுவேன்..."

மணிக்கொடி, 16-09-1934 (புனைப்பெயர்: கூத்தன்)
------------------

75. ராமனாதனின் கடிதம்

யாருக்கு எழுத... எல்லாருக்கும்தான்... நாளைக்கு இந்நேரம்... 'சற்றுப் புத்தி சுவாதீனமில்லாதபொழுது பிராணத்யாகம் செய்து கொண்டான்' என்ற தீர்ப்புக் கூறியாகிவிடும். 'சற்றுப் புத்தி சுவாதீனமில்லாதபொழுது' அட முட்டாளே! உனக்குத்தான் அப்படி. இந்த இரண்டு கால் ஓநாய் இருக்கிறதே அதற்கு வெறி... சீச்சி! உன்னைப்பற்றி எனக்கென்ன! நாகரிகம், நாகரிகம், படிப்பு, அந்த இழவுதானே! என்னை என் இஷ்டப்படி செய்து கொள்ள உரிமையில்லையாம்! உன்னைக் கேட்டுக்கொண்டா நான் பிறந்தேன்? நான் துடிதுடித்துக் கொண்டு இருந்தேனே. அப்பொழுது வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க உரிமையுண்டு போலிருக்கிறது... அட, ஓட்டைப்பானை வேதாந்தமே!... பறந்து குதிக்கலாமே! அடடே! விளக்கின் கிட்டப்போகாதே. அது நாகரிகம்! என்னைப்போல் தீய்ந்து போவாய்! இல்லை, இல்லை. நீதான் பட்டதாரி. அந்த விளக்குத்தான் கலாசாலை... விளக்கினால் உள்ளத்தைக் கருக்க முடியுமா! அதால் உன்னைத் தூக்குப் போட்டுக் கொள்ளச் செய்ய முடியுமா? அதற்குள் குதிக்காதே. எழுதி முடியட்டும். எண்ணை இருந்தால்தானே! நாளைக்கு அந்த எண்ணைக் கடைச் செட்டியின் மூஞ்சியைப் பார்க்கவேண்டும். திட்டினானே நாக்கில் நரம்பில்லாமல். பயலுக்கு வேண்டும்! கொஞ்சம் பொறுத்துக்கொள். நானும் அணைய வேண்டும். நீயும் அணைய வேண்டும். இரண்டு பேறும் குதித்துக்கொண்டு...

அம்மா இருந்தால்! இருந்தால் என்ன? 'படிக்க வச்சேன், பாட வச்சேன், பல்லுக்கருவான் பாதியிலே போனான்' என்று அழுவா. அப்பறம்? நல்லகாலமாய் முன்னாலேயே போய்ச் சேர்ந்தாள். பொதுவிலே நல்லவள்தான்... அப்பா இருக்கிறாரே, படிபடி என்று திட்டித் திட்டி இந்தக் கதிக்கு கொண்டுவந்தாரே... அன்றைக்குக் 'கிளாஸிற்கு' டோ க்கர் விட்டுவிட்டு கோயில் மா மரத்திலே அந்த ராமாநுஜம் பயலோட குசாலாய் மரக் குரங்கு விளையாடும் பொழுது அடிச்சாரே, பாவி! என்ன, எங்கள் வீட்டு உங்கள் வீட்டு அடியா... அந்தப் பயல் சுத்த மசளை, களிமண்தான். பள்ளிக் கூடத்தில் அவனுக்கு அந்த வாத்தியார் வேட்டை! படிப்பே வராது... படிச்சென்ன பண்ண... இந்தக் கதிதான். கொஞ்சச் செலவா? ரூ.2000 இருக்கும். ஏன், அதற்கு மேலே வட்டிக்காவது போட்டால் இந்தக் கதி வருமோ? இந்த மண் குதிரையை நம்பி கொண்டுவந்து கொட்டப் போகிறான் என்று எண்ணிக்கொண்டு எல்லாவற்றையும் விற்றுத் தொலைத்தார். அவர் என்ன செய்வார்? பாவம், பழைய காலத்து மனுஷ்யன். வேலை காய்த்துத் தொங்குகிறது, பறிக்க வேண்டியதுதான் பாக்கி என்று எண்ணிக்கொண்டிருக்கிறார். அவர் பாடு கொஞ்சம் கஷ்டந்தான். என்ன, இன்னும் கொஞ்ச நாளில் அவரும் சாம்பல்தானே. நான் பட்டதையும் கொஞ்சம் தெரிந்து கொண்டு வரட்டுமே. அவர் சாம்பல், நான் மண்... இந்த வயிற்றைத்தானே நாளைக்குக் கீறுவான். அதற்குள் எரிச்சல் எல்லாம் அவிந்து போயிருக்கும். ஓய் டாக்டரே! உமக்கு கை ஒன்றும் சுட்டுப் போகாது. குசாலாய்க் கீறும்... உம்! விஷம் இருக்கிறதா என்று பார்க்கவாக்கும். இந்த ஒண்ணாந்தரம் மணிக்கயிறு இருக்கிறபோது விஷம் வேறா? இரட்டை மேளமாட்டமாய்! தபேலா!... ஆமாம் அந்த ராஸ்கல்தான் ராமானுஜம். அமச்சியூர் டிராமாவிலே தபேலா அடிக்கிறதுதான் - இப்பொழுது வக்கீலாம் - கண்ட பலன். அந்தப் பயலை நேத்திக்கு 1 ரூ. கேட்டேன். குரங்கு, முகத்தை அப்படியே தூக்கிக் கொண்டு போய்விட்டது. அந்தக் காலத்திலே கணக்குக்கூட அவனுக்குப் போட்டுத் தொலைச்சிருக்கேன்! முதலில் டிக்கட் வேற என்னிடம் விற்க வந்தது... நீயேன் சொல்ல மாட்டாய்... உன் கையிலும் நாலு காசு இருந்தால் அப்படித்தான். அட முட்டாளே! உனக்கு வேலை பார்க்கத் திறமில்லாவிட்டால்? ஏறி இறங்கின படிக்கட்டு காலுக்குத் தெரியும். பட்ட இடி மனதிற்குத் தெரியும். தொழில் செய்ய மூளை இருக்கிறது. வெற்றிலைக் கடையாவது வைக்க காசு? மூட்டை தூக்க வேண்டும். ஜம்பத்தை எல்லாம் கட்டி வைத்துவிட்டு, டிரில் டிரில் என்று ஈ விரட்டின பலத்திலே - அதற்கு எத்தனை டிமிக்கி - எத்தனை சோற்றுப் பொட்டணம் தூக்க முடியும்! அவன் தான் அந்த மக்காலி, உன்னைக் குமாஸ்தாவாகப் பிடித்துவைக்க திட்டம் போட்டானே. பயலை முக்காலியில் கட்டி அடிக்க வேண்டும்! சீ! கண்ணில் கொசு விழுகிறது. சாகிற கழுதைக்குக் கண்ணில் கொசு விழுந்தால் மோசமோ!... பாரதியைப் பட்டினி போட்டுக் கொன்ற பயல்களல்லவா. அவனை மூட்டை தூக்கச் சொல்லக்கூடாது. நைந்துபோனவனைக் கொன்று விடுவதுதானே இயற்கை, உங்கள் ஓநாய் வேதாந்தம். அவனுக்குக் கவிதையாவது இருந்தது நீங்கள் இப்பொழுது பாரதியார் என்று பெருமையடித்துக்கொள்ள. எல்லாம் விதி, விதி. என்னைப் போல் எத்தனை பேர். அவர்களின் துயரத்தை நீக்கும் ஆகுதியாக நான். தற்கொலை இல்லை. தற்கொலை செய்பவன் கோழையாம்! நீ செய்துபார். ஒய்யாரமாக நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு பேசுவதைப் பாரேன். அதற்கும் ஒரு பிசாசுத் துணிச்சல் வேண்டும். பட்டாளத்து ஸோல்ஜர் சாகப் போகிறது தெரியாமலா போகிறான். அது மட்டும் தற்கொலையல்ல, வீரம்! சமூகத்திற்கு தியாகம்; தியாகம்... நன்றாயிருக்கிறது! நானும் அவனைப்போல் எனது கதியிலுள்ள முட்டாள் பூச்சிகளுக்கு அவசரப்படாதே. இதோ அந்த பிவட்டல் ஜாயிண்டில் (Pivotal Joint) சரியாக வைத்து ஒரு இறுக்கு, ஒரு குதி! ஜேக்கப் ஏணி தெரியுமா? பரீட்சைக்குக்கூட வந்ததே. அது ஒரு மாதிரி. இது நாகரிக நூலேணி. உங்களுக்கு இவ்வளவு போதும். நான் இருக்கிற வரை நீங்கள் தூக்கி நிறுத்தின மண்ணாங்கட்டிக்கு இவ்வளவு நீளம் போதாதா?

இறக்கும்வரை
வெறுக்கும்
ராமனாதன்.
சுதந்திரச் சங்கு, 01-06-1934
---------------------

76. சாப விமோசனம்

ராமாயண பரிசயமுள்ளவர்களுக்கு இந்தக் கதை பிடிபடாமல் (பிடிக்காமல் கூட) இருக்கலாம். அதை நான் பொருட்படுத்தவில்லை.

1

சாலையிலே ஒரு கற்சிலை. தளர்ந்து நொடிந்துபோன தசைக் கூட்டத்திலும் வீரியத்தைத் துள்ளவைக்கும் மோகன வடிவம்; ஓர் அபூர்வ சிற்பி பூலோகத்தில் இதற்காகவென்றே பிறந்து தன் கனவையெல்லாம் கல்லில் வடித்துவைத்தானோ என்று தோன்றும் அவ்வளவு லாகிரியை ஊட்டுவது. ஆனால் அந்தப் பதுமையின் கண்களிலே ஒரு சோகம் - சொல்லில் அடைபடாத சோகம் - மிதந்து, பார்க்கிறவர்களின் வெறும் தசை ஆசையான காமத்தைக் கொன்று அவர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. அது சிற்பியின் அபூர்வக் கனவு அன்று. சாபத்தின் விளைவு. அவள்தான் அகலிகை.

அந்தக் காட்டுப் பாதையில் கல்லில் அடித்துவைத்த சோகமாக, அவளது சோகத்தைப் பேதமற்ற கண் கொண்டு பார்க்கும் துறவி போன்ற இயற்கையின் மடியிலே கிடக்கிறாள். சூரியன் காய்கிறது. பனி பெய்கிறது. மழை கொழிக்கிறது. தூசும் தும்பும் குருவியும் கோட்டானும் குந்துகின்றன; பறக்கின்றன. தன் நினைவற்ற தபஸ்வியாக - கல்லாக - கிடக்கிறாள்.

சற்றுத் தூரத்திலே ஒரு கறையான் புற்று. நிஷ்டையில் ஆழ்ந்து தன் நினைவகற்றித் தன் சோகத்தை மறந்து தவம் கிடக்கிறான் கோதமன். இயற்கை, அவனையும் அபேதமாகத்தான் போஷிக்கிறது.

இன்னும் சற்றுத் தூரத்திலே இந்தத் தம்பதிகளின் குடும்பக் கூடு கம்பமற்று வீழ்ந்ததுபோல, இவர்களுக்கு நிழல் கொடுத்த கூரையும் தம்பம் இற்று வீழ்ந்து பொடியாகிக் காற்றோடு கலந்துவிட்டது. சுவரும் கரைந்தது. மிஞ்சியது திரடுதான். இவர்கள் மனசில் ஏறிய துன்பத்தின் வடுப் போலத் தென்பட்டது அது.

தூரத்திலே கங்கையின் சலசலப்பு. அன்னை கங்கை, இவர்களது எல்லையற்ற சோகத்தை அறிவாளோ என்னவோ!

இப்படியாக ஊழி பல கடந்தன, தம்பதிகளுக்கு.

ஒரு நாள்...

முற்பகல் சூரிய ஒளி சற்றுக் கடுமைதான். என்றாலும் கொடிகளின் பசுமையும் நிழலும், இழைந்துவரும் காற்றும், உலகின் துன்பத்தை மறைக்க முயன்று நம்பிக்கையையும் வலுவையும் தரும் சமய தத்துவம் போல, இழைந்து மனசில் ஒரு குளுமையைக் கொடுத்தன.

ஆண் சிங்கம் போல, மிடுக்கு நடை நடந்து, எடுத்த கருமம் முற்றியதால் உண்ட மகிழ்ச்சியை மனசில் 'அசை போட்டுக்கொண்டு' நடந்து வருகிறான் விசுவாமித்திரன். மாரீசனும் சுவாகுவும் போன இடம் தெரியவில்லை. தாடகை என்ற கிழட்டுக் கொடுமை நசித்து விட்டது. நிஷ்டையில் ஆழ்ந்தும், எரியோம்பியும் தர்ம விசாரத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு நிம்மதியைத் தரும் சாதனமாகத் தன்னை ஆக்கிக் கொண்டதில் ஒரு திருப்தி.

அடிக்கடி திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொள்கிறான். பார்வையில் என்ன பரிவு! இரண்டு குழந்தைகள் ஓடிப்பிடித்து விளையாடி வருகின்றன. அவர்கள் வேறு யாருமல்ல; அவதார சிசுக்களான ராம லக்ஷ்மணர்களே. அரக்கர் நசிவை ஆரம்பித்து வைத்துவிட்டு, அதன் பொறுப்புத் தெரியாமல் ஓடிப் பிடித்து வருகிறார்கள்.

ஓட்டம் புழுதியைக் கிளப்புகிறது. முன்னால் ஓடி வருகிறான் லக்ஷ்மணன்; துரத்தி வருபவன் ராமன். புழுதிப் படலம் சிலையின் மீது படுகிறது...

என்ன உத்ஸாகமோ என்று உள்ளக் குதுகலிப்புடன் திரும்பிப் பார்க்கிறார் விசுவாமித்திரர். பார்த்தபடியே நிற்கிறார்.

புழுதிப் படலம் சிலையின் மீது படிகிறது.

எப்போதோ ஒரு நாள் நின்று கல்லான இதயம் சிலையுள் துடிக்கிறது. போன போன இடத்தில் நின்று இறுகிப் போன ரத்தம் ஓட ஆரம்பிக்கிறது. கல்லில் ஜீவ உஷ்ணம் பரவி உயிருள்ள தசைக் கோளமாகிறது. பிரக்ஞை வருகிறது.

கண்களை மூடித் திறக்கிறாள் அகலிகை. பிரக்ஞை தெரிகிறது. சாப விமோசனம்! சாப விமோசனம்!

தெய்வமே! மாசுபட்ட இந்தத் தசைக்கூட்டம் பவித்தரம் அடைந்தது.

தனக்கு மறுபடியும் புதிய வாழ்வைக் கொடுக்க வந்த தெய்விக புருஷன் எவன்? அந்தக் குழந்தையா?

அவன் காலில் விழுந்து நமஸ்கரிக்கிறாள். ராமன் ஆச்சரியத்தால் ரிஷியைப் பார்க்கிறான்.

விசுவாமித்திரருக்குப் புரிந்துவிட்டது. இவள் அகலிகை. அன்று இந்திரனுடைய மாய வேஷத்துக்கு ஏமாறிய பேதை. கணவன் மீதிருந்த அளவுக்குள் அடங்காத பாசத்தின் விளைவாக, தன் உடம்பை, மாய வேஷத்தால் ஏமாறி, மாசுபடுத்திக் கொண்டவள்; கோதமனின் மனைவி. அவ்வளவையும் ராமனிடம் சொல்லுகிறார். அதோ நிற்கும் புற்று இருக்கிறதே; அதில் வலை முட்டையில் மோனத்தவங்கிடக்கும் பட்டுப்பூச்சி போலத் தன்னை மறந்து நிஷ்டையில் ஆழ்ந்து இருக்கிறான். அதோ அவனே எழுந்து விட்டானே!

நிஷ்டை துறந்த கண்கள் சாணை தீட்டிய கத்திபோல் சுருள்கின்றன. உடலிலே, காயகற்பம் செய்ததுபோல் வலு பின்னிப் பாய்கிறது. மிடுக்காக, பெண்ணின் கேவலத்திலிருந்து விடுவித்துக்கொள்ள முடியாதவனைப் போலத் தயங்கித் தயங்கி வருகிறான்.

மறுபடியும் இந்தத் துன்ப வலையா? சாப விமோசனத்துக்குப் பிறகு வாழ்வு எப்படி என்பதை மனசு அப்பொழுது நினைக்கவில்லை. இப்பொழுதோ அது பிரம்மாண்டமான மதிலாக அவனது வாழ்வைச் சுற்றியே மண்டலிக்கிறது. அவள் மனமும் மிரளுகிறது.

ராமனுடைய கல்வி, தர்மக்கண்கொண்டு பார்த்தது. தெளிவின் ஒளி பூண்டது. ஆனால் அநுபவச் சாணையில் பட்டை பிடிக்காதது; வாழ்வின் சிக்கலின் ஒவ்வொரு நூலையும் பின்னலோடு பின்னல் ஒடியாமல் பார்த்த வசிஷ்டனுடைய போதனை. ஆனால் சிறுமையை அறியாதது. புது வழியில் துணிந்து போக அறிவுக்குத் தெம்பு கொடுப்பது.

உலகத்தின் தன்மை என்ன, இப்படி விபரீதமாக முறுக்கேறி உறுத்துகிறது! மனசுக்கும் கரணசக்தியின் நிதானத்துக்கும் கட்டுப் படாமல் நிகழ்ந்த ஒரு காரியத்துக்கா பாத்திரத்தின் மீது தண்டனை? "அம்மா!" என்று சொல்லி அவள் காலில் விழுந்து வணங்குகிறான் ராமன்.

இரண்டு ரிஷிகளும் (ஒருவன் துணிச்சலையே அறிவாகக் கொண்டவன்; மற்றவன் பாசத்தையே தர்மத்தின் அடித்தலமாகக் கண்டவன்) சிறுவனுடைய நினைவுக் கோணத்தில் எழுந்த கருத்துக்களைக் கண்டு குதுகலிக்கிறார்கள். எவ்வளவு லேசான, அன்புமயமான, துணிச்சலான உண்மை!

"நெஞ்சினால் பிழை செய்யாதவளை நீ ஏற்றுக்கொள்ளுவதுதான் பொருந்தும்" என்கிறான் விசுவாமித்திரன் மெதுவாக.

குளுமை பூண்ட காற்றில் அவனது வாதக் கரகரப்பு ரஸபேதம் காட்டுகிறது.

கோதமனும், அவள் பத்தினியும், அந்தத் தம்பமற்றுத் திரடேறிப் போன மேடும் அவ்விடத்தை விட்டு அகலவில்லை. முன்பு உயிரற்றிருந்த இடத்தில் ஜீவகளை துவள நினைத்தது.

சாட்டையின் சொடுக்கைப் போலப் போக்கை மாற்றியமைக்க வந்த சக்திகள் அவ்விடம் விட்டுப் பெயர்ந்துவிட்டன. மிதிலைக்குப் பொழுது சாயும்பொழுதாவது போக வேண்டாமா? மணவினை, இரு கைகளை நீட்டி அழைக்கிறதே.

கோதமனுக்கு அவளிடம் முன்போல் மனக் களங்கமின்றிப் பேச நாவெழவில்லை. அவளை அன்று விலைமகள் என்று சுட்டது, தன் நாக்கையே பொசுக்க வைத்துவிட்டது போல இருக்கிறது. என்ன பேசுவது? என்ன பேசுவது?

"என்ன வேண்டும்?" என்றான் கோதமன். அறிவுத் திறம் எல்லாம் அந்த உணர்ச்சிச் சுழிப்பிலே அகன்று பொருளற்ற வார்த்தையை உந்தித் தள்ளியது.

"பசிக்கிறது" என்றாள் அகலிகை, குழந்தை போல.

அருகிலிருந்த பழனத்தில் சென்று கனிவர்க்கங்களைச் சேகரித்து வந்தான் கோதமன். அன்று, முதல் முதல் மணவினை நிகழ்ந்த புதிதில் அவனுடைய செயல்களில் துவண்ட ஆசையும் பரிவும் விரல்களின் இயக்கத்தில் தேக்கத்தில் காட்டின.

'அந்த மணவினை உள்ளப் பரிவு பிறந்த பின்னர்ப் பூத்திருந்தாலும் ஏமாற்றின் அடிப்படையில் பிறந்ததுதானே! பசுவை வலம் வந்து பறித்து வந்ததுதானே!' என்று கோதமனுடைய மனசு, திசைமாறித் தாவித் தன்னையே சுட்டுக் கொண்டது.

அகலிகை பசி தீர்ந்தாள்.

அவர்களது மனசில் பூர்ணமான கனிவு இருந்தது. ஆனால் இருவரும் இருவிதமான மனக்கோட்டைகளுக்குள் இருந்து தவித்தார்கள்.

கோதமனுக்குத் தான் ஏற்றவளா என்பதே அகலிகையின் கவலை.

அகலைகைக்குத் தான் ஏற்றவனா என்பதே கோதமனின் கவலை.

சாலையோரத்தில் பூத்திருந்த மலர்கள் அவர்களைப் பார்த்துச் சிரித்தன.

2

அகலிகையின் விருப்பப்படி, ஆசைப்படி அயோத்தி வெளி மதில்களுக்குச் சற்றுத் ஒதுங்கி, மனுஷ பரம்பரையின் நெடி படராத தூரத்தில், சரயூ நதிக்கரையிலே ஒரு குடிசை கட்டிக் கொண்டு தர்மவிசாரம் செய்து கொண்டிருந்தான் கோதமன். இப்பொழுது கோதமனுக்கு அகலிகை மீது பரிபூர்ண நம்பிக்கை. இந்திரன் மடிமீது அவள் கிடந்தால் கூட அவன் சந்தேகிக்க மாட்டான். அவ்வளவு பரிசுத்தவதியாக நம்பினான் அவன். அவளது சிற்றுதவி இல்லாவிடின் தனது தர்மவிசாரமே தவிடுபொடியாகிவிடும் என்ற நிலை அவனுக்கு ஏற்பட்டது.

அகலிகை அவனை உள்ளத்தினால் அளக்க முடியாத ஓர் அன்பால் தழைக்க வைத்தாள். அவனை நினைத்துவிட்டால் அவள் மனமும் அங்கங்களும் புது மணப் பெண்ணுடையன போலக் கனிந்துவிடும். ஆனால், அவள் மனசில் ஏறிய கல் அகலவில்லை. தன்னைப் பிறர் சந்தேகிக்காதபடி, விசேஷமாகக் கூர்ந்து பார்க்கக்கூட இடங்கொடாதபடி நடக்க விரும்பினாள். அதனால் அவள் நடையில் இயற்கையின் தன்மை மறைந்து இயல்பு மாறியது. தன்னைச் சூழ நிற்பவர்கள் யாவருமே இந்திரர்களாகத் தென்பட்டார்கள்; அகலிகைக்குப் பயம் நெஞ்சில் உறையேறிவிட்டது. அந்தக் காலத்திலிருந்த பேச்சும் விளையாட்டும் குடியோடிப் போயின. ஆயிரம் தடவை மனசுக்குள் திருப்பித் திருப்பிச் சொல்லிப் பாடம் பண்ணிக்கொண்டு, அந்த வார்த்தை சரிதானா என்பதை நாலு கோணத்திலிருந்தும் ஆராய்ந்து பார்த்துவிட்டுத்தான் எதையும் சொல்லுவாள். கோதமன் சாதாரணமாகச் சொல்லும் வார்த்தைகளுக்குக்கூட உள்ளர்த்தம் உண்டோ என்று பதைப்பாள்.

வாழ்வே அவளுக்கு நரக வேதனையாயிற்று.

அன்று மரீசி வந்தார். முன்னொரு நாள் ததீசி வந்தார். மதங்கரும் வாரணாசி செல்லும்போது கோதமனைக் குசலம் விசாரிக்க எட்டிப் பார்த்தார். அவர்கள் மனசில் கனிவும் பரிவும் இருந்தபோதிலும் அகலிகையின் உடம்பு குன்றிக் கிடந்தது. மனசும் கூம்பிக் கிடந்தது. அதிதி உபசாரங்கூட வழுவிவிடும்போல் இருந்தது. ஏறிட்டுச் சாதாரணமாகப் பார்க்கிறவர்களையும் களங்கமற்ற கண்கொண்டு பார்க்கக் கூசியது. குடிசையில் ஒளிந்து கொண்டாள்.

கோதமனுடைய சித்தாந்தமோ இப்பொழுது புதுவித விசாரணையில் திரும்பியது. தர்மத்தின் வேலிகள் யாவும் மனமறிந்து செய்பவர்களுக்கே. சுயப்பிரக்ஞை இல்லாமல் வழு ஏற்பட்டு, அதனால் மனுஷ வித்து முழுவதுமே நசித்துவிடும் என்றாலும் அது பாபம் அல்ல; மனலயிப்பும், சுயப்பிரக்ஞையுடன் கூடிய செயலீடுபாடுமே கறைப்படுத்துபவை. தனது இடிந்துபோன குடிசையில் மறுபடியும் பிறர் கூட்டிவைத்த ஒரு தன்மையில் இருந்துகொண்டு புதிய கோணத்தில் தன் சிந்தனையைத் திருப்பிவிட்டான் கோதமன். அவனுடைய மனசில் அகலிகை மாசு அற்றவளாகவே உலாவினாள்; தனக்கே அருகதை இல்லை; சாபத் தீயை எழுப்பிய கோபமே தன்னை மாசுபடுத்திவிட்டது என்று கருதினான்.

சீதையும் ராமனும் உல்லாசமாகச் சமயாசமயங்களில் அந்தத் திசையில் ரதமூர்ந்து வருவார்கள். அவதாரக் குழந்தை, கோதமனின் மனசில் லக்ஷ்ய வாலிபனாக உருவாகித் தோன்றினான். அவனது சிரிப்பும் விளையாட்டுமே தர்மசாஸ்திரத்தின் தூண்டாவிளக்குகளாகச் சாயனம் (வியாக்கியானம்) பண்ணின. அந்த இளம் தம்பதிகளின் பந்தந்தான் என்ன? அது கோதமனுக்குத் தனது அந்தக் காலத்து வாழ்வை ஞாபகப்படுத்தும்.

அகலிகையின் மனப் பாரத்தை நீக்க வந்த மாடப்புறா சீதை. அவளது பேச்சும் சிரிப்பும் தன்மீதுள்ள கறையைத் தேய்த்துக் கழுவுவன போல் இருந்தன அகலிகைக்கு. அவள் வந்த போதுதான் அகலிகையின் அதரங்கள் புன்சிரிப்பால் நெளியும். கண்களில் உல்லாசம் உதயவொளி காட்டும்.

வசிஷ்டரின் கண்பார்வையிலே வளரும் ராஜ்ய லக்ஷ்யங்கள் அல்லவா? சரயூ நதியின் ஓரத்தில் ஒதுங்கி இரு தனி வேறு உலகங்களில் சஞ்சரிக்கும் ஜீவன்களிடையே பழைய கலகலப்பைத் தழைக்க வைத்து வந்தார்கள்.

அகலிகைக்கு வெளியே நடமாடி நாலு இடம் போவதற்குப் பிடிப்பற்று இருந்தது. சீதையின் நெருக்கமே அவளது மனச்சுமையை நீக்கிச் சற்று தெம்பை அளித்தது.

பட்டாபிஷேக வைபவத்தின் போது அயோத்திக்கு வருவதாக ஒப்புக்கொண்டிருந்தாள். ஆனால் அரண்மனைக்குள் ஏற்பட்ட உணர்ச்சிச் சுழிப்புக்குத்தான் என்ன வலிமை! ஒரே மூச்சில் தசரதன் உயிரை வாங்கி, ராமனைக் காட்டுக்கு விரட்டி, பரதனைக் கண்ணீரும் கம்பலையுமாக நந்திக்கிராமத்தில் குடியேற்றிவிட்டது.

மனுஷ அளவைகளுக்குள் எல்லாம் அடைபடாத அதீத சக்தி, ஏதோ உன்மத்த வேகத்தில் காயுருட்டிச் சொக்கட்டான் ஆடியது போல், நடந்து முடிந்துவிட்டது.

விசிஷ்டர்தான் என்ன, சர்வ ஜாக்கிரதையோடு மனுஷ தர்மத்தின் வெற்றியாக ஒரு ராஜ்யத்தை ஸ்தாபிக்கக் கண்ணில் எண்ணெயூற்றி வளர்த்தார். அவருடைய கணக்குகள் யாவும் தவிடுபொடியாகி, நந்திக்கிராமத்தில் நின்றெரியும் மினுக்கு வெளிச்சமாயிற்று.

சரயூ நதிக் குடிசை மறுபடியும் தம்பமற்று விழுந்தது என்று சொல்ல வேண்டும். கோதமன் தர்மவிசாரமெல்லாம் இந்தப் பேய்க் காற்றில் சூறை போயிற்று. மனசில் நம்பிக்கை வறண்டு சூன்யமாயிற்று.

அகலிகைக்கோ? அவளது துன்பத்தை அளந்தால் வார்த்தைக்குள் அடைபடாது. அவளுக்குப் புரியவில்லை. நைந்து ஓய்ந்துவிட்டாள். ராமன் காட்டுக்குப் போனான். அவன் தம்பியும் தொடர்ந்தான்; சீதையும் போய்விட்டாள். முன்பு கற்சிலையாகிக் கிடந்தபோது மனசு இருண்டு கிடந்த மாதிரி ஆகிவிட்டது. ஆனால் மனப்பாரத்தின் பிரக்ஞை மட்டும் தாங்க முடியவில்லை.

கருக்கலில் கோதமர் ஜபதபங்களை முடித்துக்கொண்டு கரையேறிக்குடிசைக்குள் நுழைந்தார்.

அவர் பாதங்களைக் கழுவுவதற்காகச் செம்பில் ஜலத்தை ஏந்தி நின்ற அகலிகையின் உதடு அசைந்தது.

"எனக்கு இங்கு இருப்புக் கொள்ளவில்லை. மிதிலைக்குப் போய் விடுவோமே."

"சரி, புறப்படு; சதானந்தனையும் பார்த்து வெகு நாட்களாயின" என்று வெளியே இறங்கினார் கோதமர்.

இருவரும் மிதிலை நோக்கி நடந்தார்கள். இருவர் மனசிலும் பளு குடியேறி அமர்ந்திருந்தது. கோதமர் சற்று நின்றார்.

பின் தொடர்ந்து நடந்து வந்த அகலிகையினுடைய கையை எட்டிப் பிடித்துக் கொண்டார்; நடந்தார்; "பயப்படாதே" என்றார்.

இருவரும் மிதிலை நோக்கி நடந்தார்கள்.

பொழுது புலர்ந்துவிட்டது. கங்கைக் கரைமேல் இருவரும் சென்று கொண்டிருக்கிறார்கள்.

யாரோ ஆற்றுக்குள் நின்று கணீரென்ற குரலில் காயத்திரியைச் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

ஜபம் முடியுமட்டும் தம்பதிகள் கரையில் எட்டிக் காத்து நின்றார்கள்.

"சதானந்தா!" என்று கூப்பிட்டார் கோதமர்.

"அப்பா... அம்மா!" என்று உள்ளத்தின் மலர்ச்சியைக் கொட்டிக் காலில் விழுந்து நமஸ்கரித்தான் சதானந்தன்.

அகலிகை அவனை மனசால் தழுவினாள். குழந்தை சதானந்தன் எவ்வளவு அன்னியனாகிவிட்டான், தாடியும் மீசையும் வைத்துக் கொண்டு ரிஷி மாதிரி!

கோதமருக்கு மகனது தேஜஸ் மனசைக் குளுமையூட்டியது.

சதானந்தன் இருவரையும் தன் குடிசைக்கு அழைத்துச் சென்றான்.

சிரமப்பரிகாரம் செய்து கொள்ளுவதற்கு வசதி செய்துவைத்துவிட்டு, ஜனகனது தத்துவ விசார மண்டபத்துக்குப் புறப்படலானான்.

கோதமரும் உடன் வருவதாகப் புறப்பட்டார். மகனுக்கு அவரை அழைத்துச் செல்லுவதில் பிரியந்தான். நெடுந்தூரத்துப் பிரயாணமாச்சே என்று ரத்த பந்தத்தின் பரிவால் நினைத்தான். ஊழிகாலம் நிஷ்டையில் கழித்தும் வாடாத தசைக்கூட்டமா, இந்த நடைக்குத் தளர்ந்துவிடப் போகிறது? அவனுக்குப் பின் புறப்பட்டார். அவருடைய தத்துவ விசாரணையின் புதிய போக்கை நுகர ஆசைப்பட்டான் மகன்.

மிதிலையின் தெருக்கள் வழியாகச் செல்லும்போது அயோத்தியில் பிறந்த மனத்தொய்வும் சோகமும் இங்கும் படர்ந்திருப்பதாகப் புலப்பட்டன கோதமருக்கு. அடங்கிவிட்ட பெருமூச்சு காற்றினூடே கலந்து இழைந்தது.

ஜனங்கள் போகிறார்கள், வருகிறார்கள்; காரியங்களைக் கவனிக்கிறார்கள்; நிஷ்காம்ய சேவை போல எல்லாம் நடக்கிறது; பிடிப்பு இல்லை; லயிப்பு இல்லை.

திருமஞ்சனக் குடம் ஏந்திச் செல்லும் அந்த யானையின் நடையில் விறுவிறுப்பு இல்லை; உடன் செல்லும் அர்ச்சகன் முகத்தில் அருளின் குதுகலிப்பு இல்லை.

இருவரும் அரசனுடைய பட்டிமண்டபத்துக்குள் நுழைந்தார்கள். சத்சங்கம் சேனா சமுத்திரமாக நிறைந்திருந்தது. இந்த அங்காடியில் ஆராய்ச்சி எப்படி நுழையும் என்று பிரமித்தார் கோதமர். அவர் நினைத்தது தவறுதான்.

ஜனகன் கண்களில் இவர்கள் உடனே தென்பட்டார்கள்.

அவன் ஓடோ டியும் வந்து முனிவருக்கு அர்க்கியம் முதலிய உபசாரங்கள் செய்வித்து அழைத்துச் சென்று அவரைத் தன் பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டான்.

ஜனகனுடைய முகத்தில் சோகத்தின் சோபை இருந்தது. ஆனால் அவன் பேச்சில் தழுதழுப்பு இல்லை; அவனுடைய சித்தம் நிதானம் இழக்கவில்லை என்பதைக் காட்டியது.

என்னத்தைப் பேசுவது என்று கோதமர் சற்றுத் தயங்கினார்.

"வசிட்டன் தான் கட்டிய ராஜ்யத்தில் உணர்ச்சிக்கு மதகு அமைக்கவில்லை" என்றான் ஜனகன், மெதுவாகத் தாடியை நெருடிக் கொண்டு.

ஜனகனின் வாக்கு, வர்மத்தைத் தொட்டுவிட்டது.

"உணர்ச்சியின் சுழிப்பிலேதானே உண்மை பிறக்கும்" என்றார் கோதமர்.

"துன்பமும் பிறக்கும், உணர்ச்சியைப் பயன்படுத்திக் கொள்ளத் தெரியாது போனால். ராஜ்யத்தைக் கட்ட ஆசைப்படும்போது அதற்கும் இடம் போட்டு வைக்க வேண்டும்; இல்லாவிட்டால் ராஜ்யம் இருக்காது" என்றான் ஜனகன்.

"தங்களதோ?" என்று சந்தேகத்தை எழுப்பினார் கோதமர்.

"நான் ஆளவில்லை; ஆட்சியைப் புரிந்து கொள்ள முயலுகிறேன்" என்றான் ஜனகன்.

இருவரும் சற்று நேரம் மௌனமாக இருந்தார்கள்.

"தங்களது தர்மவிசாரணை எந்த மாதிரியிலோ?" என்று விநயமாகக் கேட்டான் ஜனகன்.

"இன்னும் ஆரம்பிக்கவே இல்லை; இனிமேல் தான் புரிந்துகொள்ள முயலவேண்டும்; புதிர்கள் பல புலன்களையெல்லாம் கண்ணியிட்டுக் கட்டுகின்றன" என்று சொல்லிக்கொண்டே எழுந்தார் கோதமர்.

மறுநாள் முதல் அவர் ஜனகன் மண்டபத்துக்குப் போகவில்லை. புத்தியிலே பல புதிர்கள் ஹிமாசலத்தைப் போல ஓங்கி நின்றன. தனிமையை விரும்பினார். ஆனால் நாடிச் செல்லவில்லை. அகலிகை மனசு ஒடிந்துவிடக் கூடாதே!

மறுநாள் ஜனகன், "முனீசுவரர் எங்கே?" என்று ஆவலுடன் கேட்டான்.

"அவர் எங்கள் குடிசைக்கு எதிரே நிற்கும் அசோக மரத்தடியில் தான் பொழுதைக் கழிக்கிறார்" என்றார் சதானந்தர்.

"நிஷ்டையிலா?"

"இல்லை; யோசனையில்."

"அலை அடங்கவில்லை" என்று தனக்குள்ளே மெதுவாகச் சொல்லிக்கொண்டான் ஜனகன்.

*****

அகலிகைக்கு நீராடுவதில் அபார மோகம். இங்கே கங்கைக் கரையருகே நிம்மதி இருக்கும் என்று தனியாக உதய காலத்திலேயே குடமெடுத்துச் சென்றுவிடுவாள்.

இரண்டொரு நாட்கள் தனியாக, நிம்மதியாகத் தனது மனசின் கொழுந்துகளைத் தன்னிச்சையோடு படரும்படி விட்டு, அதனால் சுமை நீங்கியதாக ஒரு திருப்தியுடன் குளித்து முழுகி விளையாடிவிட்டு நீர் மொண்டு வருவாள்.

இது நீடிக்கவில்லை.

குளித்துவிட்டுத் திரும்பிக் குனிந்த நோக்குடன், மனசை இழைய விட்டுக்கொண்டு நடந்துவந்து கொண்டிருந்தாள்.

எதிரே மெட்டிச் சப்தம் கேட்டது. ரிஷி பத்தினிகள் யாரோ! அவர்களும் நீராடத்தான் வந்துகொண்டிருந்தார்கள். அவளைக் கண்டதும் பறைச்சியைக் கண்டதுபோல ஓடி விலகி, அவளை விறைத்துப் பார்த்துவிட்டுச் சென்றார்கள்.

"அவள்தான் அகலிகை" என்பது தூரத்தில் கேட்டது. கோதமனுக்கு அன்று அடிவயிற்றில் பற்றிக்கொண்டு பிறந்த சாபத் தீயைவிட அதிகமாகச் சுட்டன அவ்வார்த்தைகள்.

அவள் மனசு ஒரேயடியாகச் சுடுகாடு மாதிரி வெந்து தகித்தது. சிந்தனை திரிந்தது. "தெய்வமே! சாபவிமோசனம் கண்டாலும் பாப விமோசனம் கிடையாதா?" என்று தேம்பினாள்.

யந்திரப் பாவை போல அன்று கோதமருக்கும் சதானந்தருக்கும் உணவு பரிமாறினாள். 'மகனும் அன்னியனாகிவிட்டான்; அன்னியரும் விரோதிகளாகிவிட்டார்கள்; இங்கென்ன இருப்பு?' என்பதே அகலிகையின் மனசு அடித்துக் கொண்ட பல்லவி.

கோதமர் இடையிடையே பிரக்ஞை பெற்றவர் போல் ஒரு கவளத்தை வாயிலிட்டு நினைவில் தோய்ந்திருந்தார்.

இவர்களது மன அவசத்தால் ஏற்பட்ட பளு சதானந்தனையும் மூச்சுத் திணற வைத்தது.

பளுவைக் குறைப்பதற்காக, "அத்திரி முனிவர் ஜனகனைப் பார்க்க வந்திருந்தார். அகத்தியரைப் பார்த்துவிட்டு வருகிறார். மேருவுக்குப் பிரயாணம். ராமனும் சீதையும் அகத்தியரைத் தரிசித்தார்களாம். அவர்கள் இருவரையும், 'நல்ல இடம் பஞ்சவடி. அங்கே தங்குங்கள்' என்று அகத்தியர் சொன்னாராம். அங்கே இருப்பதாகத் தான் தெரிகிறது" என்றான் சதானந்தன்.

"நாமும் தீர்த்த யாத்திரை செய்தால் என்ன?" என்று அகலிகை மெதுவாகக் கேட்டாள்.

"புறப்படுவோமா?" என்று கைகளை உதறிக் கொண்டு எழுந்தார் கோதமர்.

"இப்பொழுதேயா?" என்றான் சதானந்தன்.

"எப்பொழுதானால் என்ன?" என்று கூறிக்கொண்டே மூலையிலிருந்த தண்டு கமண்டலங்களை எடுத்துக் கொண்டு வாசலை நோக்கினார் கோதமர்.

அகலிகை பின் தொடர்ந்தாள்.

சதானந்தன் மனம் தகித்தது.

4

பொழுது சாய்ந்து, ரேகை மங்கிவிட்டது. இருவர் சரயூ நதிக்கரையோரமாக அயோத்தியை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள்.

பதினான்கு வருஷங்கள் ஓடிக் காலவெள்ளத்தில் ஐக்கியமாகிவிட்டன. அவர்கள் பார்க்காத முனிபுங்கவர் இல்லை; தரிசிக்காத க்ஷேத்திரம் இல்லை. ஆனால் மனநிம்மதி மட்டிலும் அவர்களுக்கு இல்லை.

வலுவற்றவனின் புத்திக்கு எட்டாது நிமிர்ந்து நிற்கும் சங்கரனுடைய சிந்தனைக் கோயில் போல, திடமற்றவர்களின் கால்களுக்குள் அடைபடாத கைலயங்கிரியைப் பனிச் சிகரங்களின்மேல் நின்று தரிசித்தார்கள்.

தமது துன்பச் சுமையான நம்பிக்கை வறட்சியை உருவகப்படுத்தின பாலையைத் தாண்டினார்கள்.

தம் உள்ளம் போலக் கொழுந்துவிட்டுப் புகைமண்டிச் சாம்பலையும் புழுதியையும் கக்கும் எரிமலைகளை வலம்வந்து கடந்தார்கள்.

தமது மனம் போல ஓயாது அலைமோதிக்கொண்டு கிடக்கும் சமுத்திரத்தின் கரையை எட்டிப் பின்னிட்டுத் திரும்பினார்கள்.

தம் வாழ்வின் பாதை போன்ற மேடு பள்ளங்களைக் கடந்து வந்துவிட்டார்கள்.

'இன்னும் சில தினங்களில் ராமன் திரும்பிவிடுவான்; இனி மேலாவது வாழ்வின் உதயகாலம் பிறக்கும்' என்ற ஆசைதான் அவர்களை இழுத்து வந்தது.

பதினான்கு வருஷங்களுக்கு முன் தான் கட்டிய குடிசை இற்றுக் கிடந்த இடத்தை அடைந்தார்கள்.

இரவோடு இரவாக, குடியிருக்க வசதியாகக் கோதமர் அதைச் செப்பனிட்டார். வேலை முடியும்போது உதய வெள்ளி சிரித்தது.

இருவரும் சரயூவில் நீராடித் திரும்பினார்கள்.

கணவனாருக்குப் பணிவிடை செய்வதில் முனைந்தாள் அகலிகை. இருவரது மனசும் ராமனும் சீதையும் வரும் நாளை முன்னோடி வரவேற்றது. இருந்தாலும் காலக் களத்தின் நியதியை மனசைக் கொண்டு தவிர, மற்றப்படித் தாண்டிவிட முடியுமா?

ஒருநாள் அதிகாலையில் அகலிகை நீராடச் சென்றிருந்தாள்.

அவளுக்கு முன், யாரோ ஒருத்தி விதவை குளித்துவிட்டுத் திரும்பிவந்து கொண்டிருந்தாள்; யார் என்று அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை; ஆனால் எதிரே வந்தவள் அடையாளம் கண்டு கொண்டு விட்டாள். ஓடோ டியும் வந்து அகலிகையின் காலில் சர்வாங்கமும் தரையில் பட விழுந்து நமஸ்கரித்தாள்.

தேவி கைகேயி! தன்னந்தனியளாக, பரிசனங்களும் பரிவாரமும் இல்லாமல், துறவியாகிவிட்டாளே!

குடத்தை இறக்கிவைத்துவிட்டு அவளை இரு கைகளாலும் தூக்கி நிறுத்தினாள். அவளுக்குக் கைகேயின் செயல் புரியவில்லை.

"தர்ம ஆவேசத்திலே பரதன் தன்னுடைய மனசில் எனக்கு இடம் கொடுக்க மறந்துவிட்டான்" என்றாள் கைகேயி.

குரலில் கோபம் தெறிக்கவில்லை; மூர்த்தண்யம் துள்ளவில்லை. தான் நினைத்த கைகேயி வேறு; பார்த்த கைகேயி வேறு. படர்வதற்குக் கொழுகொம்பற்றுத் தவிக்கும் மனசைத்தான் பார்த்தாள் அகலிகை.

இருவரும் தழுவிய கை மாறாமல், சரயுவை நோக்கி நடந்தார்கள்.

"பரதனுடைய தர்ம வைராக்கியத்துக்கு யார் காரணம்?" என்றாள் அகலிகை. அவளுடைய உதட்டின் கோணத்தில் அநுதாபம் கனிந்த புன்சிரிப்பு நெளிந்து மறைந்தது.

"குழந்தை வைத்த நெருப்பு ஊரைச் சுட்டு விட்டால் குழந்தையைக் கொன்றுவிடுவதா?" என்றாள் கைகேயி.

குழந்தைக்கும் நெருப்புக்கும் இடையில் வேலி போடுவது அவசியந்தான் என்று எண்ணினாள் அகலிகை. "ஆனால் எரிந்தது எரிந்ததுதானே?" என்று கேட்டாள். "எரிந்த இடத்தைச் சுத்தப்படுத்தாமல் சாம்பலை அப்படியே குவித்து வைத்துக்கொண்டு சுற்றி உட்கார்ந்திருந்தால் மட்டும் போதுமா?" என்றாள் கைகேயி.

"சாம்பலை அகற்றுகிறவன் இரண்டொரு நாட்களில் வந்து விடுவானே" என்றாள் அகலிகை.

"ஆமாம்" என்றாள் கைகேயி. அவள் குரலில் பரம நிம்மதி தொனித்தது. ராமனை எதிர்பார்த்திருப்பது பரதனல்ல; கைகேயி.

மறுநாள் அவள் அகலிகையைச் சந்தித்தபொழுது முகம் வெறிச்சோடியிருந்தது; மனசு நொடிந்து கிடந்தது.

"ஒற்றர்களை நாலு திசைகளிலும் விட்டு அனுப்பிப் பார்த்தாகிவிட்டது. ராமனைப் பற்றி ஒரு புலனும் தெரியவில்லை. இன்னும் நாற்பது நாழிகை நேரத்துக்குள் எப்படி வந்துவிடப் போகிறார்கள்? பரதன் பிராயோபவேசம் செய்யப் போகிறானாம். அக்கினி குண்டம் அமைக்க ஏற்பாடு செய்து வருகிறான்" என்றாள் கைகேயி.

பரதன் எரியில் தன்னை அவித்துக் கொள்ளுவது தன்மீது சுமத்தப்பட்ட ராஜ்ய மோகத்துக்குத் தக்க பிராயச்சித்தம் என்று அவள் கருதுவது போல இருந்தது பேச்சு.

சற்று நிதானித்து, "நானும் எரியில் விழுந்துவிடுவேன்; ஆனால் தனியாக, அந்தரங்கமாக" என்றாள் கைகேயி. அவள் மனசு வைராக்கியத்தைத் தெறித்தது.

பதினான்கு வருஷங்கள் கழித்து மறுபடியும் அதே உணர்ச்சிச் சுழிப்பு. அயோத்திக்கு ஏற்பட்ட சாபத்தீடு நீங்கவில்லையா?

அகலிகையின் மனசு அக்குத்தொக்கு இல்லாமல் ஓடியது. தனது காலின் பாபச் சாயை என்றே சந்தேகித்தாள்.

"வசிட்டரைக் கொண்டாவது அவனைத் தடைசெய்யக் கூடாதோ?" என்றாள் அகலிகை.

"பரதன் தர்மத்துக்குத்தான் கட்டுப்படுவான்; வசிட்டருக்குக் கட்டுப்படமாட்டான்" என்றாள் கைகேயி.

"மனிதருக்குக் கட்டுப்படாத தர்மம், மனித வம்சத்துக்குச் சத்துரு" என்று கொதித்தாள் அகலிகை.

தன்னுடைய கணவர் பேச்சுக்குப் பரதன் ஒரு வேளை கட்டுப்படக் கூடாதோ என்ற நைப்பாசை. மறுபடியும் அயோத்தியில் துன்பச் சக்கரம் சுழல ஆரம்பித்துவிடக் கூடாதே என்ற பீதி.

கோதமன் இணங்கினான். ஆனால் பேச்சில் பலன் கூடவில்லை.

பரதனை உண்டு பலிகொள்ள அக்கினி தேவன் விரும்பவில்லை. அனுமன் வந்தான்; நெருப்பு அவிந்தது. திசைகளின் சோகம், கரை உடைந்த குதுகல வெறியாயிற்று. தர்மம் தலை சுற்றியாடியது.

வசிட்டனுக்கும் பதினான்கு வருஷங்கள் கழிந்த பிறகாவது கனவு பலிக்கும் என்று மீசை மறைவில் சிரிப்புத் துள்ளாடியது.

இன்ப வெறியில் அங்கே நமக்கு என்ன வேலை என்று திரும்பி விட்டான் கோதமன்.

சீதையும் ராமனும் தன்னை பார்க்க வருவார்கள் என்று அகலிகை உள்ளம் பூரித்தாள். வரவேற்பு ஆரவாரம் ஒடுங்கியதும் அவர்கள் இருவரும் பரிவாரம் இன்றி வந்தார்கள்.

ரதத்தைவிட்டு இறங்கிய ராமனது நெற்றியில் அநுபவம் வாய்க்கால் வெட்டியிருந்தது. சீதையின் பொலிவு அநுபவத்தால் பூத்திருந்தது. இருவர் சிரிப்பின் லயமும் மோக்ஷ லாகிரியை ஊட்டியது.

ராமனை அழைத்துக்கொண்டு கோதமன் வெளியே உலாவச் சென்றுவிட்டான்.

தன் கருப்பையில் கிடந்து வளர்ந்த குழந்தையால் சுரக்கும் ஒரு பரிவுடன் அகலிகை அவளை உள்ளே அழைத்துச் சென்றாள். இருவரும் புன்சிரிப்புடன் உட்கார்ந்திருந்தார்கள்.

ராவணன் தூக்கிச் சென்றது, துன்பம், மீட்பு எல்லாவற்றையும் துன்பக்கறை படியாமல் சொன்னாள் சீதை. ராமனுடன் சேர்ந்து விட்ட பிறகு துன்பத்துக்கு அவளிடம் இடம் ஏது?

அக்கினிப் பிரவேசத்தைச் சொன்னாள். அகலிகை துடித்து விட்டாள்.

"அவர் கேட்டாரா? நீ ஏன் செய்தாய்?" என்று கேட்டாள்.

"அவர் கேட்டார்; நான் செய்தேன்" என்றாள் சீதை, அமைதியாக.

"அவன் கேட்டானா?" என்று கத்தினாள் அகலிகை; அவள் மனசில் கண்ணகி வெறி தாண்டவ மாடியது.

அகலிகைக்கு ஒரு நீதி, அவனுக்கு ஒரு நீதியா?

ஏமாற்றா? கோதமன் சாபம் குடலோடு பிறந்த நியாயமா?

இருவரும் வெகு நேரம் மௌனமாக இருந்தனர்.

"உலகத்துக்கு நிரூபிக்க வேண்டாமா?" என்று கூறி, மெதுவாகச் சிரித்தாள் சீதை.

"உள்ளத்துக்குத் தெரிந்தால் போதாதா? உண்மையை உலகுக்கு நிரூபிக்க முடியுமா?" என்றாள் அகலிகை. வார்த்தை வறண்டது.

"நிரூபித்துவிட்டால் மட்டும் அது உண்மையாகிவிடப் போகிறதா; உள்ளத்தைத் தொடவில்லையானால்? நிற்கட்டும்; உலகம் எது?" என்றாள் அகலிகை.

வெளியில் பேச்சுக் குரல் கேட்டது. அவர்கள் திரும்பிவிட்டார்கள்.

சீதை அரண்மனைக்குப் போவதற்காக வெளியே வந்தாள். அகலிகை வரவில்லை.

ராமன் மனசைச் சுட்டது; காலில் படிந்த தூசி அவனைச் சுட்டது.

ரதம் உருண்டது; உருளைகளின் சப்தமும் ஓய்ந்தது.

கோதமன் நின்றபடியே யோசனையில் ஆழ்ந்தான். நிலைகாணாது தவிக்கும் திரிசங்கு மண்டலம் அவன் கண்ணில் பட்டது.

புதிய யோசனை ஒன்று மனக்குகையில் மின்வெட்டிப் பாய்ந்து மடிந்தது. மனச்சுமையை நீக்கிப் பழைய பந்தத்தை வருவிக்க, குழந்தை ஒன்றை வரித்தால் என்ன? அதன் பசலை விரல்கள் அவள் மனசின் சுமையை இறக்கிவிடாவா?

உள்ளே நுழைந்தான்.

அகலிகைக்கு பிரக்ஞை மருண்ட நிலை. மறுபடியும் இந்திர நாடகம், மறக்கவேண்டிய இந்திர நாடகம், மனத்திரையில் நடந்து கொண்டிருந்தது.

கோதமன் அவளைத் தழுவினான்.

கோதமன் உருவில் வந்த இந்திரன் வேடமாகப் பட்டது அவளுக்கு. அவள் நெஞ்சு கல்லாய் இறுகியது. என்ன நிம்மதி!

கோதமன் கைக்குள் சிக்கிக் கிடந்தது ஒரு கற்சிலை.

அகலிகை மீண்டும் கல்லானாள்.

மனச் சுமை மடிந்தது.

*****

கைலயங்கிரியை நாடி ஒற்றை மனித உருவம் பனிப் பாலைவனத்தின் வழியாக விரைந்து கொண்டிருந்தது. அதன் குதிகாலில் விரக்தி வைரம் பாய்ந்து கிடந்தது.

அவன் தான் கோதமன்.

அவன் துறவியானான்.

கலைமகள், மே 1943
----------------

77. சாளரம்

அடையார் பஸ் மயிலாப்பூருக்கு வந்து கொண்டிருக்கிறது. பஸ்ஸுக்குள் இருந்த மங்கிய 'பல்ப்' வெளிச்சம் இருட்டை எடுத்துக் காட்டுகிறது. பிரயாணிகளின் முகமும் மார்பும் தவிர வேறொன்றும் தெரியவில்லை.

"டிக்கெட் ப்ளீஸ்" என்று கத்தினான் கண்டக்டர்.

"இந்தாப்பா, மயிலாப்பூருக்கு ஒன்று" என்றார் நரைத்த தாடியுடைய ஒரு கிழவர்.

"ஸார்! நீங்களா! எங்கிருந்து இந்த இருட்டில்?" என்றார் ஓர் உச்சிக்குடுமி.

"பெஸண்ட் அம்மையாரின் மரணத்தைக்குறித்து ஒரு பொதுக்கூட்டம் நடக்கிறது. அம்மையார் ஆவியுலகிலிருந்து தந்த ஆசிமொழிகள் - ஹா! என்ன அருள்வாக்கு!" என்று பதில் சொன்னார்.

"ஒரு மதமும் பின்பற்றாத ஒரு ஸ்திரீ. அவள் போனதே நல்லது" என்றார் ஓர் அரை மீசைப் பாதிரியார்.

"உமக்கென்ன தெரியும்? அம்மையாரின் சாவு, இந்தியாவுக்கு அல்ல, இந்த உலகத்துக்கே ஒரு பெரிய நஷ்டம்" என்று சொல்லி ஏற இறங்கப் பார்த்தார் அந்த தியாஸபிக் கிழவர்.

"ஆனால் அவர் இத்தனை நாள் படுத்த படுக்கையாய்..." என்று ஓர் இருள் பிழம்பு பேச ஆரம்பித்தது.

"அப்படிக் கிடந்து போனாலும் பரவாயில்லை! ஒரு சமாதானமாவது இருக்கும். இன்றைக்கு மத்தியானம் பாருங்க, ராயப்பேட்டையிலே ஒரு புதுவீடு கட்டுறாங்க. பாருங்க, தூண் கல் தூண், தூக்கி நிறுத்தறப்ப கீழே ஒரு ஆள். மேலே பாருங்க பொத்தென்று விழுந்தது. ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போறதுக்குள்ளே, பாருங்க, ஆள் டன், - தீந்து பூட்டான்" என்றார் ஒரு 'பாருங்க' பேர் வழி.

"என்ன, என்ன, எங்கே? ராயவரத்திலியா? யாரு, எந்தத் தெரு?" என்று ஆத்திரப்பட்டார் மூட்டையை ஆலிங்கனம் செய்து கொண்டிருந்த ஒருவர்.

"இல்லிங்க, ராயப்பேடையிலிங்க பாருங்க, அவன்..."

"ஓ! சரிதான்! ராயபுரமாக்குமென்று கேட்டேன். நமக்கு அங்கேதான்" என்றார் அந்த மூட்டைக்காரர்.

"இறந்தவர் யார்?" என்று கேட்டார் உச்சிக்குடுமியார்.

"அவன் பறயனுங்க. பாருங்க அவன்..."

"இதற்குத்தானா! அன்னிக்கு பேப்பரிலே, சார்! நீங்க பார்த்தீங்களா? குற்றாலத்தில் திடீரென்று வெள்ளம் வந்து ஆள்களை அடித்துக்கொண்டு போய்விட்டதை. நம்ம சேஷன் நேத்து அங்கிருந்துதான் வந்தான். ஆறு பிராம்மணாள் கூடப் போயிட்டாளாம்" என்று மீண்டும் விஸ்தரித்தார் உச்சிக்குடுமி.

"பாப்பான்னா என்ன, பறையன்னா என்ன? சாவிலே! விதி கொண்டு போய்த் தள்ளிற்று என்று சொல்லுவீர்கள். இதற்கென்ன சொல்லுகிறது? நம்ம வீட்டுப் பக்கத்தில் ஒரு பையன். இன்கம்டாக்ஸ் ஆபீஸ் கிளார்க். நேற்று ஆபீஸிலிருந்து வந்தான். என்னமோ மார்பு வலிக்கிறாப்பலே இருக்கு என்று உட்கார்ந்தான். அவ்வளவுதான்" என்றார். இதுவரையும் பேசாத ஸ்தூல சரீரி.

"எங்கே? எங்கே?" என்றார்கள் இரண்டுபேர்.

"இங்கேதான் பஸ்ஸருக்குப் பக்கத்தில் அவன் வீடு."

"என்ன நம்ம கிருஷ்ணப்பிள்ளையா? போயிட்டானா! ஆளைப் பார்த்தால் பிரம்ம களை அப்படியே முகத்தில் ஜொலிக்கும்" என்றார் அந்த உச்சிக்குடுமி நண்பர்.

"அவரு கூடவா? பாருங்க நம்ம கடைக்கு அவருதான் போட்டாரு. நல்ல மனிதன். நூற்றுக்கொன்று."

"கலி முற்றிவிட்டது. கொஞ்ச நாளில் உலகம் முடிந்துபோகும்" என்று மழலை மாறாத ஒரு சிறு குழந்தைக்குரல் கேட்டது. நாங்கள் அத்திசையை நோக்கினோம். புத்தகங்களைச் சுமக்க முடியாமல் சுமக்கும் ஒரு சிறு மாணவன், பெரிய தலை, பெரிய கண்ணாடி. எல்லோரும் மௌனமாக அவனையே பார்த்தார்கள்.

"காலம் எல்லாம் அப்படியே புரண்டு கிடக்கு; விலைவாசியோ கேட்க வேண்டாம். எதற்குத்தான் இப்படிப் போகுதோ?" என்று தத்துவ விசாரணையில் இறங்கினார் ஒருவர். பஸ்ஸும் மயிலாப்பூர் ஸ்டாண்டில் நின்றது. நாங்களும் இறங்கினோம். தூரத்தில் காந்த வெளிச்சங்களுடன் ஓர் ஊர்வலம் தெரிந்தது. அப்பொழுது நாகஸ்வரக்காரன் மிகுந்த சுவாரஸ்யமாக, "சாந்தமுலேக்" என்று கீர்த்தனத்தை அப்படியே உருக்கி வார்த்துக் கொண்டிருந்தான்.

"கல்யாணமோ? பெரிய மோக்ளா போல இருக்கிறது?" என்றார் ஒருவர்.

நாங்களும் அவிழ்த்து உதறின நெல்லிக்காய் மூட்டை மாதிரி பிரிந்தோம்.

ஆனந்த விகடன், 12-11-1933 (புனைப்பெயர்: பித்தன்)
------------------

78. சாமாவின் தவறு

மகத்தான தியாகம் என்பதற்கு சாமாவின் அகராதியில் வெள்ளி குளத்திலிருக்கும் பாட்டியின் வீட்டிற்குப் போவது என்று பொருள். இந்தத் தியாகத்தைச் செய்யாவிட்டால், வருஷம் முழுவதும் கையில் சில்லறை ஓட்டத்திற்கு மிகுந்த தடை ஏற்படும் என்று பூரணமாக அறிவான்.

சாமா பள்ளிக்கூட மாணவன். கல்விக் கடலில் இண்டர்மீடியட் என்ற சுழலின் பக்கம் நீந்திக் கொண்டு இருக்கிறான். வீட்டிலே பிள்ளை 'காலேசில்' படிக்கிறான் என்றதினால் ஓரளவு மரியாதை. வெளியிலே மாணவ உலகத்தின் கவலையற்ற குஷால் செலவு.

இவ்வளவு கவர்ச்சிகளையும் விட்டுவிட்டுப் பாட்டியின் வீட்டிற்குப் போக வேண்டுமென்றால் அது தியாகம்தான். அந்தத் தியாக விஷயத்தை கோடை விடுமுறையில் அவன் வைத்துக்கொள்ளுவது வழக்கம். ஏனென்றால் டவுனில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றும் இருக்காது, மறு ஜுன் மாதம் வரை.

இருந்தாலும் பாட்டியின் முறுக்கும், 'எண்ணைக் குளி' தொந்தரவுகளும் சகித்துக்கொள்வதற்குக் காரணம், பாட்டியை விட்டுப் புறப்படும்பொழுது 'வழிச் செலவிற்கு'க் கொடுக்கும் தொகைதான்.

சாமா வெள்ளி குளத்திற்குப் போக பஸ் ஏறும்பொழுது வேண்டா வெறுப்பாகத்தான் ஏறினான்.

பஸ் வெள்ளி குளத்துச் சாலையில் வந்து நிற்கும் பொழுது கருக்கல் நேரமாகிவிட்டது. இவனைத் தவிர வேறு பிரயாணிகள் கிடையாது. ரஸ்தாவின் பக்கத்தில் கண்ணுக்கெட்டிய தூரம் ஒரு மனிதப் பிறவிகூடக் கிடையாது. டவுனில் புத்தகத்தைச் சுமப்பதே அநாகரிகம் என்று கருதும் சாமாவிற்கு, டிரங்குப் பெட்டியும் சுமப்பது என்றால் கொஞ்சம் மனம் கூசியது. ஆனால் கண்ணுக்கெட்டியவரை அவன் நண்பர் ஒருவரையும் சந்திக்க மாட்டோ ம் என்ற நம்பிக்கையில் பிறந்த உற்சாகத்தில் அதைக் கையில் எடுத்துக் கொண்டு ஊரை நோக்கி நடந்தான்.

கருக்கலில் செல்வதற்கு மனம் நிம்மதியாகவிருந்தது. ஆனால் அடிக்கடி காலில் முள்ளுக் குத்திவிடுமோ என்ற பயம். போகும் வழி பனங்காட்டுகளிடையே செல்லும் ஒற்றையடித் தடம். இடைஇடையே குத்துச் செடிகள், கருவேல், இலந்தை முட்செடிகள் முதலியவை படர்ந்து நின்றன.

டிரங்கு கையைக் கீழே அறுத்துக் கொண்டு விழுந்துவிடும்போல் வழியாய் வலித்தது. அடிக்கடி ஒரு கையிலிருந்து மறு கைக்கு மாற்றிக் கொண்டான். 'சீ, என்ன இருட்டு... என்ன டிரங்கு, உளியாய் கனக்கிறது' என்று சொல்லிக்கொண்டான். இனிமேல் தூக்கிச் செல்ல முடியாது. இந்தப் பாழும் ஊர்தான் ரஸ்தாவின் பக்கத்தில் இருந்து தொலையக் கூடாதா? வேறு வழியில்லை. நாஸுக்கு மானம் எல்லாவற்றையும் கட்டி வைத்துவிட்டு, மேல் அங்கவஸ்திரத்தைத் தலையில் கட்டிக் கொண்டு, டிரங்கை முக்கி முனகித் தலைமேல் வைத்துக் கொண்டு நடந்தான்.

கொஞ்சநேரம் கைகளுக்கு மோட்சம். சற்று கவலை தீர்ந்தது. ஆனால் மூச்சுத் திணறுகிறது. தலை உச்சியும் கழுத்து நரம்புகளும் புண்ணாக வலிக்கவாரம்பித்துவிட்டன. சாமாவின் மனதில் வேறு ஒன்றும் தோன்றவில்லை. ஒரே எண்ணம் 'பெட்டி'. கால்நடைகள் 'டிரங்க்' 'டிரங்க்' என்று தாளம் போட்டு நடக்கிறது. நாவரள்கிறது.

'பெட்டி!'

உலகம் பூராவாகவும் அவன் எண்ணத்தில் தோய்ந்து கழுத்துப் பெட்டி மயமாகத் தெரிகிறது. கண்களில் கபாலத்தில் எல்லாம் பொறுக்க முடியாத வலி. 'சீ! பெட்டியாவது கிட்டியாவது! பெட்டியை எறிந்துவிட்டுப் போய்விடலாமா?' என்று இருக்கிறது.

பனங்காட்டில் காற்றில் அலையும் ஓலைச்சப்தம். பழுத்துவிழும் பனம்பழங்களின் 'தொப்' , 'தொப்' என்ற சப்தம். தலையிலாவது ஒன்று விழுந்து தொலையாதா என்ற ஏக்கம்; எங்கு விழுந்துவிடுமோ என்ற பயம்.

தூரத்தில் சிறு வெளிச்சம். அப்பாடா! ஊர் வந்துவிட்டது! வாய்க்கால் பாலத்தைத் தாண்டிவிட்டால் கொஞ்ச தூரந்தான். இதில் ஒரு ஊக்கம். கால் கொஞ்சம் விசையாக நடக்கின்றன. ஆனால் சிறிது நேரத்தில் கால்கள் தொங்கலாடுகின்றன...

உடனே திடீரென்று ஒரு எண்ணம். எப்படித் தலையில் பெட்டியைச் சுமந்துகொண்டு ஊருக்குள் போகிறது. யாரும் பார்த்துவிட்டால், என்ன கேவலம்! அந்த நினைப்பிலேயே உடல் எல்லாம் வேர்க்கவாரம்பிக்கிறது. வாய்க்கால் பக்கத்தில் கருப்பன் அல்லது வேறு யாராவது பயல்கள் நிற்பார்கள். இருட்டில் போகிறவனை ஏன் என்று கூடவா கேட்காது போய்விடுவார்கள்? காலணா கொடுத்தால் போகிறது!

அதற்கு இப்படித் தலையிலா தூக்கிக் கொண்டு போகிறது! மெதுவாகத் தலையில் இருந்து இறக்கிக் கீழே வைக்கிறான். கைகள் தள்ளாடுகின்றன. தலையிலிருந்த சும்மாட்டுத் தலைப்பாகை கழன்று மாலையாக விழுந்துவிடுகிறது. வேர்வையில் நனைந்த அங்கவஸ்திர விளிம்புகள் கழுத்திற்குச் சுகமாக இருக்கின்றன. தலைக்கு என்ன நிம்மதி! இரும்பு வளையத்திலிருந்து விடுபட்டது போல் மேல் மூச்சு வாங்குகிறது.

கட்டாயம் யாராவது, 'அங்கே யாரது' என்று கேட்பான். கூப்பிட்டுப் பெட்டியைத் தூக்கிக் கொண்டு வரச்சொல்லிவிடலாம் என்ற நம்பிக்கை.

வாய்க்காலைக் கடக்கும் வரை ஒருவரும் கூப்பிடவில்லை. கருப்பனையும் காணோம்; ஒருவனையும் காணோம். கை பச்சைப் புண்ணாக வலிக்கிறதே. இந்தப் பயல்கள் இன்றைக்கு என்று எங்கு தொலைந்திருப்பார்கள். திருட்டுப் பசங்கள்! சனியன்கள்.

வாய்க்காலையும் கடந்தாய்விட்டது. அப்பாடா பெட்டியைக் கீழே வைக்க வேண்டியதுதான். கை என்ன இரும்பா? சீச்சீ! இன்னும் கொஞ்ச தூரந்தானே. பெட்டியைக் கையில் எடுத்துக்கொண்டு நடக்கிறான். ஒவ்வொரு அடியும் எத்தனையோ மைல்கள்! அந்த மூலையிலேதான் பாட்டியின் வீடு! எல்லாம் என்ன ஊரே அடங்கிக் கிடக்கிறது. அதுவும் ஒரு நல்ல காலந்தான். இல்லாவிட்டால் பெட்டி தூக்கிய அவமானம் தெரிந்து போகாதா.

அப்பாடா! வந்தாச்சு பாட்டியின் வீடு! உள்ளே சென்று திண்ணையில் பெட்டியை வைத்துவிட்டு கதவைத் தட்டுகிறான்.

உள்ளே இருந்து "அதாரது?" என்ற குரல்.

"பாட்டி! நான் தான் சாமா!" என்கிறான். கதவு திறக்கப்படுகிறது. அங்கு பாட்டி நிற்கவில்லை. ஓர் இளம் பெண் மங்கிய குத்துவிளக்கின் வெளிச்சத்தில் சிரித்துக்கொண்டு நிற்கிறாள்.

சாமாவின் உடல் குன்றிவிடுகிறது. பெட்டியைத் தூக்கிச் சுமந்து கொண்டு அவள் முன்பு கூலிக்காரன் மாதிரி எப்படிப் போவது. அவள்தான் பங்கஜம். அவன் அத்தையின் மகள்.

"பாட்டி! சாமா வந்திருக்கான்!" என்று உள்ளே பார்த்துக்கொண்டு சொன்னாள்.

"என்னடி சாமாங்கரே? மொளச்சு முணெலைகுத்தலை, சாமா! நன்னாருக்கு! வாடாப்பா! ஏன் அங்கேயே நிக்கரே" என்றாள்.

பாட்டியின் வீட்டிற்குள் செல்லும்போது வெட்கமாக இருந்தாலும் உள்ளத்திலே ஒரு காரணமற்ற சந்தோஷம் இருந்தது.

"என்னடா 'உம்' இன்னு இருக்கரே. அங்கே கொழந்தைகள் எல்லாம் எப்படி இருக்கு? பரீட்சை எப்படிக் குடுத்தே? அடியே! அந்த மண் எண்ணை வெளக்கை ஏத்துடீ, தொரைகளுக்கு இது புடிக்காது!" என்றாள்.

விளக்கைத் துடைத்துக் கொண்டு சிரிக்கும் பங்கஜத்தைப் பார்த்ததும் அவனுக்கும் சிரிப்பு வந்துவிட்டது.

"பாட்டி! இவள் எப்போ வந்தாள்?" என்றான் அதை மறைக்க.

மணிக்கொடி, 10-02-1935
----------------

79. சாயங்கால மயக்கம்

எனது சொந்த ஊரிலிருந்து வந்து வெகு நாட்களாகிவிட்டது.

ஊர் ஆசை என்பது கட்குடி மாதிரி ஒரு போதை வஸ்து. அந்த ஆசை வந்துவிட்டால் அதற்கு மாற்றுக் கிடையாது, போய்த்தான் தீரவேண்டும். இந்த ஊர்ப்பித்தம் காதலைப் பார்க்கினும், தேசபக்தி, கடவுள் பக்திகளைப் பார்க்கினும் மிகக் கொடூரமானது. அதன் ஏகச் சக்ராதிபத்தியம் மனத்தில் என்னென்ன கனவுகளையெல்லாம் எழுப்பும், தெரியுமா?

அன்று சின்னப் பையனாக இருக்கும்பொழுது தோழனுடன் ஆற்றங்கரையில் சண்டைபோட்டது முதல், நான் முதலில் விடியற்கால ஸ்நானத்திற்குச் செல்லும் இன்பம் முதல், எல்லாச் சிறு அற்பச் சம்பவங்களும் - அடே, அதில் என்ன மோகம்!

ஊருக்குப் போனேன்.

திருநெல்வேலி ஜில்லாவில் தாமிரவருணி நதிக்கரையில் ஒரு சிறு கிராமம். சென்னையில் வசிப்பதால் ராஜீயக் கைதி சிறையில் அநுபவிக்கும் சிரமத்தையெல்லாம் தியாகம் செய்யாமல் அநுபவித்துவிடலாம். அதிலே ஊருக்குப் போக வசதி கிடைத்தது. இந்த உலகத்திலே கிறிஸ்து சொன்ன மோக்ஷ சாம்ராஜ்யம் கிடைத்துவிட்ட மாதிரியே இருந்தது.

ரயில் ஏறுவதும், வண்டி போவதும், ஸ்தூலத்தில் நான் ஊரை அநுபவிப்பதும் நடப்பதற்குப் பல மணி நேரத்திற்கு முன்னமேயே நான் ஊருக்குப் போய்விட்டேன்.

ரயில், கட கட, குப் குப் என்று எனது தியானத்தைக் கலைக்க முயன்றது.

ரயில் செல்லச் செல்ல, சென்னையின் இரைச்சல், ஓம் என்ற ஹுங்காரம், நாகரிக யக்ஷனின் திருக்கண் நாட்டங்கள் - எல்லாம் மெதுவாக மறைந்தன. ஏன்? வேகமாகவே நான் ரயிலில் செல்லவில்லை.

வெளியே நிலா... ஆனால்...

ஆற்றங்கரை மணல்... கரையில் பேராய்ச்சி கோயில்... கண் பொட்டையாக்கும் மாலை மயக்கத்தில் இதன் கோபுரத் தளத்தில், எத்தனை நாவல்கள் எனது மன உலகத்தில் ஒரு வாழ்க்கையைச் சிருஷ்டித்தன!

அப்பொழுது, எங்கெங்கோ வாரியிறைத்த பிரம்ம தேவனின் சிதறுண்ட நம்பிக்கைகள் போல, வாழ்க்கை எரியிட்ட கனல்கள் போன்ற நட்சத்திரங்கள்!

மேல் வானத்திலே அந்த மரமடர்ந்த இருட்டுத் திரைக்கு மேல் செவ்விருள்! அந்தித் தேவனின் சோக நாடகம்!

அந்தச் சாயங்காலம், சீதையின் சோகத்தையும், கதேயின் பாஸ்டையுமே எப்பொழுதும் என் நினைவிற்குக் கொண்டு வருகிறது.

பேராய்ச்சி, கோயில் உச்சித் தளத்தில் கையில் புஸ்தகத்துடன் நான்!

நிசப்தம்...

பேராய்ச்சி. காளியின் ஸ்வரூபம்... எங்கள் பெரியண்ணத் தேவருக்குக் குடும்பத் தெய்வம் - தலைமுறை தலைமுறையாகக் காத்துவந்த பேராய்ச்சி...

பேராய்ச்சி! அதில் என்ன தொனி! எவ்வளவு அர்த்த புஷ்டி!

இருண்ட வெளிச்சத்தில் இருண்ட கோரமான சிலை...

தாயின் கருணை. என்ன நம்பிக்கை!

நாளைக்கு அம்மனுக்குக் கொடை.

நாளைக்கு இவ்வளவு நேரத்தில் இங்கு எப்படியிருக்கும்!

இந்த மௌன சுகம் மருந்திற்காவது கிடைக்குமா?

என் கண்கள் இருட்டில் அசட்டையாகத் துழாவுகின்றன.

கோயில் வாசலில் இரண்டு ஆட்டுக் கிடா.

பெரியண்ணத் தேவருடையவைதான்... அம்மனுக்கு வளர்த்து விடப்பட்டவை.

வாழ்வு நாளை வரைதான் என்று அவற்றிற்குத் தெரியுமா? சித்திரபுத்திரன் மாதிரி எனக்குத் தெரியும்.

எங்கெங்கோ புல்லையும் பூண்டையும் தின்ற கொழுப்பு முட்டி விளையாடுகின்றன... "டபார்!"

மண்டை வெடித்துவிடும் போலிருக்கிறது!

பின்னுக்குச் சென்று மறுபடியும் ஓடிவந்து ... "டபார்!"

ரத்தங் கண்டாகிவிட்டது! என்ன கொள்கைப் பிணக்கோ?

நாளைக்கு இரண்டினுடைய இரத்தமும் அந்தப் பலிபீடத்தில் கலக்கு முன், அதற்குள் என்ன அவசரம்?

அதுதான் சுவாரஸ்யம்!

அந்தச் சண்டைதான் வாழ்க்கையின் ரகசியம், தத்துவம். அதிலே தான் நம்பிக்கை வைத்து மனித நாகரிகம் இதுவரை வளர்ந்து வந்திருக்கிறது. இனி!... அதைப் பற்றி எனக்குத் தெரியாது. 'நாளைக்குப் பலியாகப் போகிறோம்!' என்று தெரிந்தால் இந்த மாதிரி முட்டிக் கொள்ள மனம் வருமா? வந்தால், முட்டிக் கொள்வதில், வாழ்க்கைப் போட்டியில், சுவாரஸ்யம் ஏற்படுமா?...

"ஸார்! கொஞ்சம் நகர்ந்து உட்காருங்கள்!"

நான் ரயிலில்தான் உட்கார்ந்திருந்தேன். அந்த மாலை மயக்கந்தான்... அந்த ஊர் பைத்தியந்தான்!

மணிக்கொடி, 23-09-1934
---------------

80. சமாதி

நடுநிசி.

மௌன்ட் ரோடு சாலையினருகில் இருக்கும் கல்லறைத் தோட்டக் காவல்காரன் குடிசையிலிருந்த நாய் அபாரமாகக் குலைக்கிறது. தோட்டக்காரன் நாயை அடக்கிப் பார்க்கிறான். அது கல்லறைத் தோட்டத்தைப் பார்த்துக் கொண்டே குலைத்தது.

ஜன்னல் வழியாக இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. உடன் கைவிளக்கை எடுத்துக்கொண்டு, நாயையும் அழைத்துக் கொண்டு வெளியே வருகிறான். நாய் கல்லறைகளின் பக்கமாகக் குலைத்துக் கொண்டே ஓடுகிறது.

அதோ அந்த கல்லறையின் பக்கத்தில் என்ன? யாரோ குனிந்திருப்பது மாதிரித் தெரிகிறதே?

ஓட்டமாக ஓடிச்சென்று பார்க்கிறான்.

லாந்தலின் மங்கிய வெளிச்சத்தில் ஒரு வாலிபன், பிரேதக் குழியைத் தோண்டி அதனுள் இருந்த சவப்பெட்டியை யுடைத்து அதிலிருக்கும் பிணத்தை வெளியே இழுக்கும் பொழுது பிடித்துக் கொள்ளுகிறான்.

அந்தப் பிரேதம் நேற்றுப் புதைக்கப்பட்ட ஒரு வெள்ளைக்காரப் பெண்மணியின் பிரேதம். பிரேதத்தை இழுத்துக் கொண்டிருந்தவன் வாலிபன். நல்ல நிலைமையில் இருப்பவன் போல் தோன்றியது.

உடனே அவனைப் பின்கட்டாகக் கட்டிப் போலீஸ் ஸ்டேஷனில் கொண்டு சேர்த்துவிட்டான்.

அந்த வாலிபன், ஒரு பிரபல வக்கீல். மல்ஹரிராவ் என்ற பெயர்.

விசாரணை நடந்தது. மல்ஹரிராவ் செய்த கோரமான, வெறுக்கத்தக்க செய்கையைப் பற்றி விஸ்தரிக்கப்பட்டது.

விசாரணையைப் பார்க்க வந்தவர்களுக்கும், இந்த வக்கீலின் நடத்தை மனதைக் கொதிக்க வைத்தது. "தூக்கில் போட வேண்டும்" என்று பார்க்க வந்தவர்கள் தங்கள் இலவசத் தீர்மானத்தைக் கூறினார்கள்.

கோர்ட்டில் ஏற்பட்ட அமளியை ஒருவாறு அடக்கிய பிறகு, நீதிபதி, குற்றவாளியை நோக்கி, "உன் சார்பாகக் கூற வேண்டியவற்றை சொல்" என்றார்.

மல்ஹரிராவ் தனக்கு வாதிக்க ஒரு வக்கீலும் வேண்டாம் என்று முன்பே தடுத்துவிட்டார்.

மெதுவாக எழுந்து நின்றார். நல்ல அழகர்; கட்டுறுதியுள்ளவுடல், மனவுறுதி காண்பிக்கும் உதடுகள், களங்கமற்ற முகம்.

"மாட்சிமை தாங்கிய நீதிபதியவர்களே, ஜுரர்களே!

"நான் அதிகமாகச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. சமாதியிலிருந்து என்னால் வெளியே இழுக்கப்பட்ட நங்கையை, நான் காதலித்தவன். நாங்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தோம்.

"நான் அவளைக் காதலித்தேன். எனது காதல் சரீர சம்பந்தமான வெறும் காமத் தீயல்ல. அது ஒரு தெய்வீகமான காதல். அது களங்கமற்ற தனிப்பெரும் உணர்ச்சி.

"இன்னும் கேளுங்கள்.

"நான் அவளை முதன்முதலாகச் சந்தித்த பொழுது எனக்கு ஏற்பட்ட உணர்ச்சிகள் ஆச்சரியமானது. கண்டதும் காதல் என்ற அழகின் மயக்கம் அல்ல. அவளைக் கண்டவுடன், எங்கோ கண்டது மாதிரி, மீண்டும் சந்திப்பது மாதிரி உணர்ந்தேன். அவளுடைய நடத்தைகளும், அவள் குரலும், எல்லாம் என்னை அவளுள் ஐக்கியப்படுத்தி விட்டன.

"அவள் எனது ஆத்மிக ஆசையின் பதில் போலும், நம்பிக்கையின் பயன்போலும் எனக்குப் பட்டது.

"சிறிது பழக்கம் அதிகப்பட்டது. அவள் என்னுடன் வாழச் சம்மதித்தாள். உலகம் தூற்றலாம். அதற்கு அதைத் தவிர வேறு என்ன தெரியும்? ஆனால் அந்தத் தெய்வத்தின் முன்பு அவள் எனது மனைவிதான். நான் அவளைப் பெற்றேன். அவள்தான் என் வாழ்க்கை. இதற்குமேல் நான் ஒன்றும் விரும்பவில்லை.

"ஒருநாள் சிறிது தூரம் உலாவச் சென்றிருந்தோம். அப்பொழுது ஒரு சிறு தூறல் வந்தது. அவளால் குளிர் தாங்க முடியவில்லை.

"நெஞ்சில் சளி பிடித்தது. எட்டு நாள் கழித்து அவள் உயிர் நீத்தாள்."

"அவள் மரணபரியந்தம், எனது மனம் குழம்பியது. மனம் இடிந்துவிட்டது.

"அவள் இறந்தாள். குருட்டு விதியின் கதை என் உள்ளத்தை ஒடித்தது. என் சிந்தனை நின்றது. நான் அழுதேன்.

"அவளது பிரேத சமஸ்காரத்திற்கு வேண்டி அவள் உடலைத் துணியினால் சுற்றி, சவக்குழியில் புதைக்கும் வரை அவள் பக்கத்திலிருந்தேன். ஒவ்வொரு நிமிஷமும் பக்கத்திலிருந்தேன்.

"பிறகு... பிறகு என் சித்தம் தெளிந்தது. உள்ளம் புழுவாகத் துடித்தது. என் காதலுக்கு அவள் கொடுத்த பணயம் அபாரமானது.

"பிறகு நினைப்பு என் உள்ளத்தைக் கவ்வியது. இனி என்னால் ஒரு காலத்திலும் அவளைப் பார்க்க முடியாது என்பதுதான்.

"இப்படியே ஒருவன் ஒருநாள் பூராவாகவும் நினைத்துக் கொண்டிருந்தால் பைத்தியந்தான் பிடிக்கும். எண்ணிப் பாருங்கள். ஒருத்தி, காதல் பூராவையும் வசீகரித்த ஒருத்தி, உலகத்தில் ஈடு இணையற்ற ஒருத்தி, அவள் தன்னையே கொடுத்து விடுகிறாள். காதல் என்ற அந்த அற்புதமான விளக்கை உள்ளத்தில் ஏற்றி வைக்கிறாள். அவள் கண்கள், வானவெளியிலும் பெரிய எல்லையற்ற கண்கள், களங்கமற்ற கனிவுடன் புன்சிரிப்புக் காண்பிக்கின்றன. அவள் காதலிக்கிறாள். அவள் பேசும்பொழுது அவள் குரல் இனிமையிலே, இன்ப வெள்ளம் உள்ளத்தில் பெருக்கெடுக்கிறது.

"பிறகு திடீரென்று மறைந்து விடுகிறாள். எண்ணிப் பாருங்கள். எனக்கு மட்டுமல்ல, உலகத்திற்கே மறைந்து விடுகிறாள். அவள் இறந்துவிட்டாள். அந்த வார்த்தையின் அர்த்தம் என்ன தெரியுமா? இனி இல்லை, இல்லை, இல்லை. ஒரு இடத்திலும் அவள் இருக்கமாட்டாள். இனி அந்தக் கண்கள் ஒன்றையும் நோக்காது. இனி அந்தக் குரல், ஆம், அந்த இனிமையான குரல் கேட்காது.

"அவள் முகத்தைப் போல் இன்னொரு முகம் இருக்குமா? சிலைகள், படங்கள், அவளைப் போன்றதாகச் செய்துவிடலாம். ஆனால் அந்த உடல், அந்த முகம், இனி இப் புவியில் தோன்றாது. ஆயிரக்கணக்கான, கோடிக்கணக்கான மக்கள் பிறப்பார்கள். ஆனால் இனிப் பிறக்கும் அந்தப் பெண்கள் கூட்டத்தினுள் அவள் இனிவரப் போகிறாளா? அது முடியுமா? இதை எண்ணிக் கொண்டிருந்தால் ஏன் பைத்தியம் பிடிக்காது?

"அவள் இருபது வருஷங்கள் இருந்தாள். அவள் மறைந்தாள். ஒரேயடியாக மறைந்தாள்.

"அவள் சிந்தித்தாள்; சிரித்தாள்; என்னைக் காதலித்தாள், - என்னை! - இப்பொழுது அதன் சின்னம் என்ன இருக்கிறது? பிறந்து மடியும் ஈசலும் நம்மைப்போல்தான் சிருஷ்டிக்கப்படுகின்றது. எதுதான் இருக்கிறது? அவள் உடல், உஷ்ணமும் ஜீவனும் பொதிந்த உடல், அந்தப் பெட்டியில், சமாதியின் அடியில் அழுகும் என்று நினைத்தேன். அவள் ஆத்மா, அவள் சிந்தனை, அவள் எங்கே?

"அவளை இனி பார்க்க முடியாது. இனி அவளைப் பார்க்க முடியாது!

"மண்ணாக மாறும் சவம், இனியும் அடையாளம் கண்டு கொள்ளக் கூடிய சவம், என் சிந்தனையில் அடிக்கடி எழுந்தது. அவளை ஒருமுறை பார்க்க ஆவல்கொண்டேன். ஒரே ஒரு தடவை.

"கையில் மண்வெட்டியும் விளக்கும் சம்மட்டியும் எடுத்துக்கொண்டு கல்லறைத் தோட்டத்திற்கு வந்தேன். சுவரேறிக் குதித்து உள்ளே சென்றேன். வெகு எளிதில் அவள் சமாதியைக் கண்டுகொண்டேன். இன்னும் சரியாகக் கூட கல் பதிக்கப்படவில்லை.

"தோண்டி, சவப்பெட்டியை எடுத்துத் திறந்தேன். தாங்க முடியாத துர்நாற்றம் வீசியது. பிணத்தின் அழுகிய வாடை. ஆமாம்! அவள் பஞ்சணை எவ்வளவு சுகத்துடன் கமழ்ந்தது!

"பிணத்தின்மேல் சுற்றிய துணியை விளக்கின் வெளிச்சத்தில் பார்த்தேன்... அவளைப் பார்த்தேன். அவள் முகம் நீல நிறமாகப் பருத்து, பயங்கரமாக இருந்தது. வாயிலிருந்து கறுத்த சீழ் வடிந்து கொண்டிருந்தது.

"அவள், அவள்தான். பயம் என்னைப் பிடித்துக் கொண்டது. அவள் தலைமயிரைப் பிடித்து முகத்தை நன்றாகப் பார்க்க என் பக்கம் தூக்கினேன்.

"அப்பொழுதுதான் என்னைப் பிடித்துக் கொண்டார்கள்."

"அன்று இரவு முழுவடும் - ஒவ்வொருவனும், காதலியின் ஆலிங்கனத்தில் ஏற்ற பரிமள கந்தத்தைப் பெறுவான் - பிணத்தின் அழுகிய வாடையை, என் காதலியின் பரிமள கந்தத்தை முகர்ந்து கொண்டு இருந்தேன்.

"இனி நீங்கள் என்னை என்னவேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்."

கோர்ட்டு முழுவதும் நிசப்தமாய் இருந்தது. இன்னும் எதையோ கேட்கக் காத்திருப்பதுபோல் இருந்தது. ஜுரர்கள் முடிவு கட்ட உள்ளே சென்றார்கள்.

அவர்கள் திரும்பியும், குற்றவாளி பயமற்று, சிந்தனையற்று நின்றான்.

நீதிபதி கேட்க வேண்டியதைக் கேட்டார்.

ஜுரர்கள், "குற்ற... குற்றவாளி" என்று முடிவு கட்டினார்கள்.

அவன் சிந்தனையற்று நின்றான்.

கோர்ட்டில் ஒரு பெருமூச்சு வந்தது.

ஊழியன், 21-12-1934 (புனைப்பெயர்: நந்தன்)
---------------

82. சாமியாரும் குழந்தையும் சீடையும்

"மனிதன் கடவுளைப் படைத்தான். அப்புறம் கடவுள் மனிதனை சிருஷ்டிக்க ஆரம்பித்தான்.

"இருவரும் மாறிமாறிப் போட்டிபோட ஆரம்பித்தார்கள். இன்னும் போட்டி முடியவில்லை.

"நேற்றுவரை பிந்திப் பிறந்த கடவுளுக்கு முந்திப் பிறந்த மனிதன் ஈடு கட்டிக் கொண்டு வந்தான்.

"இதில் வெற்றி தோல்வி, பெரியவர் சின்னவர் என்று நிச்சயிப்பதற்கு எப்படி முடியும்?

"நிச்சயிக்க என்ன இருக்கிறது?..."

இப்படியாகப் பின்னிக்கொண்டே போனார் ஒரு சாமியார். எதிரிலே தாமிரவருணியின் புதுவெள்ளம் நுரைக் குளிர்ச்சியுடன் சுழன்று உருண்டது.

அவர் உட்கார்ந்திருந்தது ஒரு படித்துறை. எதிரே அக்கரையில் பனைமரங்களால் புருவமிட்ட மாந்தோப்பு; அதற்கப்புறம் சிந்துபூந்துறை என்று சொல்வார்களே அந்த ஊர். இப்பொழுது பூ சிந்துவதற்கு அங்கு மரம் இருக்கிறது. அதைப் போல எண்ணக் குலைவையும் ஏமாற்றத்தையும் சிந்துவதற்கு சுமார் ஆயிரம் இதயங்கள் துடிக்கின்றன. துடிப்பு நின்றவுடன் வைத்து எரிக்க அதோ சுடுகாடு இருக்கிறது. இப்பொழுதும், இந்த நிமிஷத்தில் கூடத்தான் அது புகைந்து கொண்டிருக்கிறது. தோல்வியின், ஏமாற்றத்தின் வாகனங்களை வைத்துப் பெருமைப்பட்டுக் கொண்டிருப்பது பலவீனந்தானே. பலவீனத்தை வைத்துக்கொண்டு நாலு காசு சம்பாதிக்கப் பிச்சைக்காரனுக்கு முடியும். மனுஷனால் வாழ முடியுமா? அதனால் தான் இந்தச் சுடுகாடு என்ற ரண சிகிச்சை டாக்டர், வாழ்க்கை என்ற நோயாளிக்கு மிக அவசியம்.

அதை இந்தச் சாமியார் அறிந்து கொண்டிருந்தார். அதனால்தான், இவருக்கு விரக்தி ஏற்பட்டது. இவருக்கு இடது பக்கத்தில் சுலோசன முதலியார் பாலம். கட்டபொம்மு சண்டையின் போது சமரசம் பேச முயன்ற துபாஷ் அவர். அவர்தான் அதைக் கட்டியது. திருநெல்வேலிக்காரர்களுக்கு அதில் அபாரப் பெருமை. முட்டையும் பதநீரும் விட்டு அரைத்த காரையில் கட்டியதாம். அதில் ஒரு தனிப் பெருமை.

இதற்கு முன் எப்போதோ ஒரு முறை இது போல வந்த வெள்ளம் அடித்துக் கொண்டு வந்த வைக்கோல் போர், முன் பல்லைத் தட்டிய மாதிரி இரண்டு மூன்று கணவாய்களைப் பெயர்த்துக் கொண்டு போய் விட்டது. இப்பொழுது, மறுபடியும் கட்டி விட்டார்கள். பொய்ப்பல் கட்டிக் கொண்டால் எப்படியும் கிழவன் தானே; அப்படித்தான் அதுவும். வயசு முதிர்ந்த நாகரிகம் ஒன்று தன்னை வலுவுள்ளது மாதிரி காட்டிக் கொள்வது போன்றிருந்தது. அதற்கும் சற்று அப்பால் பொதிகை. குண்டுக்கல் மாதிரி ஒரு குன்று; தெத்துக்குத்தான வானத்தின் சிவப்பு கோரச் சிரிப்பைத் தாங்குவது போலப் படுத்திருந்தது குன்றின் தொடர்.

சாமியாருக்குப் பின்புறத்தில் சுப்பிரமணியன் கோவில். அதாவது வாலிபம், வலிமை, அழகு, நம்பிக்கை இவற்றையெல்லாம் திரட்டி வைத்த ஒரு கல் சிலை இருக்கும் கட்டிடம். அதற்குப் பின்னால் ஒரு பேராய்ச்சி கோவில். மேற்குத் திசையின் கோரச் சிரிப்புக்கு எதிர்ச்சிரிப்பு காட்டும் கோர வடிவம். இருட்டில் மினுக்கும் கோவில். வாலிபமும் நம்பிக்கையும் அந்தக் கோரச் சிரிப்பின் தயவில் நிற்பது போல, சாமியாரின் முதுகுப் புறத்திலிருந்தன.

அவர் வெறுத்து விட்டவை; ஆனால், மனிதனால் வெறுக்க முடியாதவை. அதனால்தான், அவரது முதுகுப் புறமானது அவற்றிற்கு அப்பால் விலகிச் செல்ல முடியாது தவித்தது.

சாமியாரின் வலது பக்கத்தில்...

சாமியாரின் வலது பக்கத்தில் ஒரு சின்னக் குழந்தை. நான்கு வயசுக் குழந்தை. பாவாடை முந்தானையில் சீடையை மூட்டை கட்டிக் கொண்டு, படித்துறையில் உட்கார்ந்து காலைத் தண்ணீரில் விட்டு ஆட்டிக் கொண்டிருக்கிறது. சின்னக் கால் காப்புகள் தண்ணீரிலிரிந்து வெளிவரும் பொழுது, ஓய்ந்து போன சூரிய கிரணம் அதன் மேல் கண் சிமிட்டும். அடுத்த நிமிஷம், கிரணத்திற்கு ஏமாற்றம். குழந்தையின் கால்கள் தண்ணீருக்குள் சென்று விடும். சூரியனாக இருந்தால் என்ன? குழந்தையின் பாதத் தூளிக்குத் தவம் கிடந்துதான் ஆக வேண்டும்.

குழந்தை சீடையை மென்று கொண்டு சாமியாரைப் பார்க்கிறது.

சாமியார் வெள்ளத்தைப் பார்க்கிறார். வெள்ளம் இருவரையும் கவனிக்கவில்லை.

"மனிதன் நல்லவன் தான்; தான் உண்டாக்கின கடவுளிடம் அறிவை ஒப்படைத்திருந்தால் புத்திசாலியாக வாழ்ந்திருக்க முடியும். அப்பொழுது, அது தன்னிடமிருந்ததாக அவனுக்குத் தெரியாது... இப்பொழுது, அறிவாளியாக அல்லல்படுகிறான்.

"சிருஷ்டித் தொழிலை நடத்துகிறவனுக்கு அறிவு அவசியம் என்பது அப்போது அவனுக்குத் தெரியாது. இப்பொழுது அவஸ்தைப்படுகிறான். அதற்காக அவனைக் குற்றம் சொல்ல முடியுமா?

"மனிதன் தன் திறமையை அறிந்து கொள்ளாமல் செய்த பிசகுக்குக் கடவுள் என்று பெயர். மனிதனுக்கு உண்டாக்கத்தான் தெரியும். அழிக்கத் தெரியாது. அழியும் வரை காத்திருப்பதுதான் அவன் செய்யக்கூடியது.

"அதனால் தான் காத்திருக்கிறான். ஆனால், அவனுக்குத் துரு துருத்த கைகள். அதனால்தான் பிசகுகளின் உற்பத்திக்கு கணக்கு வரம்பை மீறுகிறது..." என்றார் சாமியார்.

துறையில் தலை நிமிர்ந்து வந்த நாணல் புல் ஒன்று சுழலுக்குள் மறைந்து விட்டது. குழந்தையும் 'ஆமாம்' என்பது போல் தலையை அசைத்துக் கொண்டு ஒரு சீடையை வாயில் போட்டுக் கொண்டு கடுக்கென்று கடித்தது.

அந்தப் படித்துறையில் கடுக்கென்ற அந்த சப்தத்தைக் கேட்க வேறு யாரும் இல்லை.

சூறாவளி, 23-04-1939
---------------

83. சணப்பன் கோழி

பரமேச்வரன் ஓர் இலட்சியப் பைத்தியம். கலாசாலையை விட்டு வெளியே வரும்பொழுது, தற்காலத்திய புதுமை இளைஞர்களின் வெறி இருந்ததில் ஆச்சரியம் இல்லை. முதல் முதலாகப் பட்டினி கிடந்தாலும் கவர்ன்மெண்டு வேலைக்குப் போகவே கூடாது என்ற சித்தாந்தம். அவன் நிலைமைக்கு வேலை கிடைப்பது ரொம்ப சுலபம். அப்பா பென்ஷன் உத்தியோகஸ்தர் இவன் சித்தாந்தத்தைக் கேட்டதும் இத்தனை நாள் போஷித்த அப்பாவுக்குப் பலத்த சந்தேகம் - பரமேச்வரனுக்கு மூளைக் கோளாறு ஏற்பட்டதோ என்று - உண்டாயிற்று. அதிலே தகப்பனாருக்குக் கொஞ்சம் ஏமாற்றம். காலை மடக்கிக் கொண்டு முரண்டு செய்யும் மாடு என்றால் வாலைக் கடித்தாவது எழுப்பலாம்; பரமேச்வரனுக்கு வாலில்லையே!

மனிதனுடைய வாழ்க்கையில் - தென்னிந்தியத் தமிழனுடைய வாழ்க்கையில் - வேலையை எதிர்பார்த்துக் காலத்தைக் கலாசாலையில் கழித்துப் படிக்கவைக்கும் முதல் முக்கியத்திற்குப் பிறகு, பெரிய இடத்துப் பெண்ணை - கை நிறையப் பணம் கொண்டுவரும் பெண்ணை - கலியாணம் செய்து வைப்பது இரண்டாவது முக்கியமான விஷயம். தான் பென்ஷனாவதற்குள், தன் மகனுக்கு வேலை பார்த்துக் கொடுத்துவிட்டு, தன் அந்திமக் கிரியைகளைப் பையன் சரியாக நடத்தும் நிலையில் கொண்டு வந்து வைப்பது மூன்றாவது வேலை.

பரமேச்வரனுடைய தகப்பனாருக்கு முதல் வேலை விழலுக்கு இறைத்த நீராகிவிட்டது. இரண்டாவதோ, அவருக்குப் பெரிய ஏமாற்றமாகிவிட்டது.

பையன் பெரிய இடத்துப் பெண்ணை, கை நிறையப் பணமும் கழுத்து நிறைய நகையும் போட்டுவரும் பெண்ணை கலியாணம் செய்து கொள்ள முடியாது என்று சொல்லிவிட்டான். பையனது தர்க்கம் தகப்பனாருக்கு விளங்கவில்லை. சுகமாக இருக்க விரும்புவது மனித இயற்கை என்பது தகப்பனார் அனுபவம். அதில் இன்பம் கிடையாது என்பதுதான் பையன் சிந்தாந்தம். தகப்பனாருக்குப் பையன் நடத்தை அர்த்தமாகவில்லை.

ஏழைப் பெண், சிறிது படித்த பெண், முக்கியமாகக் குணசௌந்தரியமுடைய பெண் வேண்டும் என்றான் பையன். முதல் இரண்டு நிபந்தனைகளும் சாதாரணமாக நிறைவேறிவிடும். மூன்றாவது? அதுதான் அதிசயம். பரமேச்வரன் எதிர்பார்த்தபடி, ஆசைப்பட்டபடி ஒரு பெண் கிடைத்தது.

லால்குடிப் பெண். ஏழைப் பிரைமரிப் பள்ளிக்கூடத்து உபாத்தியாயர் வீட்டுப் பெண் சாரதா. அந்த மூன்று நிபந்தனைகளுக்கு மேல் நான்காவது நிபந்தனை ஒன்றையும் நிறைவேற்றிவிட்டாள் சாரதா. அவள் நல்ல அழகி. பரமேச்வரன், கண்டதும் காதல் என்பதெல்லாம் பற்றிப் படித்திருக்கிறான். அதை அசம்பாவிதம் என்று நினைத்தவன்; கலியாணமான பிறகுகூடக் கட்டுக்கடங்காத பாசம் ஒருவனைப் பிடிக்கும் என்பதிருந்தால் பரமேச்வரன் அதற்கு ஓர் உதாரணம். அவன் சாரதாவிடம் தன்னை மறந்த மாதிரி, அவளும் பரமேச்வரனிடமே தன்னை மறந்தாள். இது பக்கத்திலிருப்பவருக்குப் பொறாமைப்படும்படியாக இருந்தது.

பரமேச்வரனுடைய வாழ்க்கைச் சகடம் கலியாணமாகும் வரை 'கிர்ர்' என்ற சப்தமில்லாமல் மையிட்டதுபோல் ஓடிக்கொண்டிருந்தது. கலியாணமான 'பிறகு, முதல் அதிர்ச்சி, தனது சாரதாவின் மனம் கலங்குமோ என்றுதான். கலங்கும் நிலைமையும் ஏற்பட்டது. பறவை பெரிதான பிறகும் கூண்டில் இருக்க, அதுவும் கூட ஒரு ஜோடி சேர்த்துக் கொண்டு இருக்க, பெற்ற குருவிகள் இடம் கொடுக்குமா? இது இயற்கை. சிறிது மனத்தாங்கல், சாரதாவை அவள் பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு அவனை வேலை தேடும்படியாக்கிற்று.

2

எங்கெங்கோ அலைந்து கடைசியாகப் பம்பாயில் அவனுக்கு 80 ரூ. சம்பளத்தில் வேலை கிடைத்தது. கிடைத்த மறு மாதம் கூட்டிப் போவதாக எண்ணம். சந்தர்ப்பம் ஒத்துவரவில்லை. எப்பொழுதும் சாரதா தியானந்தான். பக்கத்திலிருப்பவர்கள் பெண்டாட்டிக் கிறுக்கனோ என்று கூட நினைக்கும்படி இருக்கிறதென்று அவனுக்குத் தெரியும். பரமேச்வரன் என்ன யோகீஸ்வரனா, மனத்தை ஒரே இடத்தில் கட்டி வைக்க!

சாரதாவுக்குத் தினம் ஒரு கடிதம். பதிலும் அடிக்கடி வந்து கொண்டிருந்தது - அவளுடைய குதலை எழுத்தில். அதைப் படிப்பதில் அவனுக்கிருந்த பிரேமை இலக்கிய ரஸிகனுக்குக் கம்பனைப் படிக்கும் பொழுது கூட இருந்திருக்காது.

திடீரென்று அவள் கடிதம் வரவில்லை.

முதலில் என்னென்னவோ அபாயங்கள் அவளுக்கு நேர்ந்திருக்கலாம் என்று நினைத்தான். அவள் தகப்பனார் ஏன் எழுதவில்லை? ஏமாற்றத்தினால் அவள் மீது காரணமற்ற கோபம் தோன்றலாயிற்று. அவள் தகப்பனார் மீதும் சிறிது ஓடிற்று. தனது இலட்சியம் என்பதற்காகச் செய்த தனது திருமணத்தை அவமதித்தார்களல்லவா என்ற கோபம். நிலையாகச் சாரதா மீது கோபப்பட அவனால் முடியவில்லை. ஏமாற்றம் வளர வளரக் கோபமும் வளர்ந்தது.

அவளுக்கு ஒரு முரட்டுத்தனமான கடிதம் - அவள் ஹ்ருதயத்தைப் பிளக்கும் கடிதம் - எழுதிக் கொண்டு போய்த் தபாலில் போட்டான். அதனால் சிறிது மானஸிக வெற்றியின் குதூகலம்; குமுறும் நெஞ்சில் பின்னால் சமாதானம் ஏற்படவில்லை.

தகப்பனும் மகளும் வியாதியாகப் படுத்திருக்கிறார்கள் என்று அவனுக்குத் தெரியுமா?

அரை மணி நேரம் கழித்துத் தந்திச் சேவகன் அவன் மாமனார் இறந்து போனதாக ஒரு தந்தியைக் கொடுத்துவிட்டுச் சென்றான்.

3

பரமேச்வரனுக்கு நெஞ்சில் சம்மட்டியால் அடித்ததுபோல் பட்டது. மாமனார் மரணத்தில் கூட வருத்தம் ஏற்படவில்லை. அந்தக் கடிதம் - அது அவளை என்ன செய்யும்! அதைத் தடுக்க வேண்டும். பம்பாயிலிருந்து லால்குடி என்ன பக்கத்துத் தெருவா? அல்லது பெட்டியில் போட்ட காகிதத்தை எடுக்க முடியுமா? ஒரே ஒரு வழி. கடிதம் மத்தியானந்தான் கிடைக்கும் அதற்கு முன்பு நேரில் சென்று விட்டால்?

லீவு எழுதிப் போட்டுவிட்டு ரயிலுக்குச் சென்றான். வழி முழுவதும் கடிதமும் சாரதாவும் மாறி மாறித் தோன்றிக் கொண்டிருந்தனர். தனது முட்டாள்தனத்திற்கு நொந்து கொண்டான். தனது குற்றத்தை அவள் மன்னிப்பாளா? அவள் மன்னிப்பாள் பரமேச்வரன் மனம் மட்டும் அவனை மன்னிக்க மறுக்கிறது.

பரமேச்வரனும் மாமனார் வீடு வந்துசேர்ந்துவிட்டான். வரவேற்பு அழுகையும் துக்க விசாரணையும் ஓய்ந்தன. சாரதா கதவின் பக்கம் வந்து நின்றாள்.

பரமேச்வரன் கண்களைத் துடைத்துக் கொண்டான். துக்கமும் தேக அசௌகரியமும் அவளை உருமாற்றிவிட்டன. துயரத்தின் உரு! முந்திய அழகின் சாயை! பரமேச்வரனுக்குத் துக்கம் நெஞ்சையடைத்தது. கண்கள் கலங்கிவிட்டன.

"சாரதா!" என்றான். கூப்பிடும்பொழுதே கடிதத்தின் நினைவு வந்தது.

"எனக்கு உடம்புக்குக் குணமில்லாமல் இருந்தது. நீங்கள் ஏன் காயிதம் எழுதலே? உடம்புக்கென்ன? இளைத்திருக்கிறீர்களே!" என்றாள்.

"வேலை ஜாஸ்தி!" என்றான், கடிதத்தை நினைத்துக்கொண்டே.

"நான் உனக்குக் கடிதம் எழுதியிருந்தேனே!" என்று அவன் வாய் தவறிச் சொல்லியது.

"வரவில்லை!" என்றாள் சாரதா.

தடுத்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் பரமேச்வரனுக்குக் குதூகலம்.

"நான் வெளியே போய் வருகிறேன்!" என்று, தபால்காரனை எதிர்பார்த்துக் கொண்டு வெளியே வந்தான் பரமேச்வரன்.

தபால்காரன் வழியிலேயே சாரதாவின் தம்பியிடம் கடிதத்தைக் கொடுத்துவிட்டது அவனுக்குத் தெரியாது. தபால்காரன் பேசாமல் போய்விடவே சாயங்காலம் வரும் என்று சிறிது அசட்டையாக இருந்தான்.

அவன் வரும்பொழுதெல்லாம் அவனுக்கு மாமனார் வீட்டில் ஒரு சிறிய அறை, அதிலே தான் அவன் தங்குவது.

மத்தியானம் சாப்பிட்டுவிட்டு அங்கு வந்தான். அப்பொழுது அதை நினைக்கவில்லை. கடிதம் கிடைக்கவில்லை என்ற நினைப்பில் உள்ளே வந்ததும் திடுக்கிட்டு நின்றான்.

தலைவிரி கோலமாக அவன் படத்தின் முன்பு கையில் கடிதத்துடன் கிடந்தாள் சாரதா.

"சாரதா!" என்று எடுத்தான்.

"உங்கள் கடிதம் வந்தது!" என்றாள். உள்ளிருந்த துயரம் பொங்கி ஓலமிட்டுவிட்டாள்.

"சாரதா!" என்றான்.

அவள் முகம் அவன் மார்பில் மறைந்தது. ஏங்கி, ஏங்கி அழுது அவனைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டாள்.

அவன் மனது தணலாக வெந்தது. அவள் மன்னிப்பாளா?

"சாரதா?"

"என்னை உடன் கூட்டிப் போங்கள்!" என்றாள். கடிதத்தின் காரணம் அவளுக்குத் தெரிந்துவிட்டது.

அவள் பெண்.

மணிக்கொடி, 16-12-1934
-----------------------

84.சங்குத் தேவனின் தர்மம்

முறுக்குப் பாட்டி முத்தாச்சியென்றால் சிறு குழந்தைகளுக்குத்தான் தெரியும். அவள் நாவல் உலகில் காணப்படும் மனித உருவங்கள் போல் முறுக்கு விற்ற பணத்தினாலோ, ரங்கூனிலிருந்து திடீரெனத் தோன்றும் தமயனின் ஐசுவரியத்தினாலோ, கோடீசுவரியாகிவிடவில்லை. வறுமையில் குசேலரின் தமக்கை. சமயக் குரவர்கள் இயற்றும் அற்புதங்கள் என்ற செப்பிடுவித்தைகள் நடவாத இந்தக் காலத்தில் அவள் தினந்தினம் காலந்தள்ளுவதுமல்லாமல், தனது ஒரே குமாரத்திக்கு விவாகம் செய்யவும் ஆரம்பித்ததுதான் அற்புதத்திலும் அற்புதம்.

நமது ஹிந்து சமூகத்தின் பழைய உலர்ந்துபோன கட்டுப்பாடுகளின் கைதிகளாக ஏழைகள்தாம் தற்போது இருந்துவருகிறார்கள். ஏழ்மை நிலைமையிலிருக்கும் பெண்கள் கொஞ்சக் காலமாவது கன்னிகையாக இருந்து காலந்தள்ள ஹிந்து சமூகம் இடந்தராது. இவ்விஷயத்தில் கைம்பெண்களின் நிலைமையைவிட கன்னியர்கள் நிலை பரிதாபகரமானது. மிஞ்சினால் விதவையை அவமதிப்பார்கள், ஆனால் ஒரு கன்னிகையோவெனின் அவதூறு உலகத்தின் நிஷ்டூரம் என்ற சிலுவையில் அறையப்படுவாள். பணக்காரர்களான பூலோகத் தெய்வங்களின்மீது சமுதாயக் கட்டுப்பாட்டின் ஜம்பம் பலிக்காது. இவ்வளவும் முத்தாச்சிக்குத் தெரியாது. ஆனால் எப்படியோ வின்டில் (windle) துரை பங்களாவில் பங்கா இழுக்கும் மாடசாமி பிள்ளைக்குத் தன் மகளைக் கொடுக்க நிச்சயித்து விட்டாள். நாளை காலையில் கலியாணம்.

சாயங்காலம் ஐந்தரை மணியிருக்கும். முறுக்குப் பாட்டி தங்கவேலு ஆசாரியின் வீட்டுத் திண்ணையில், சுவரருகில் சாய்ந்து, காலை நீட்டி உட்கார்ந்திருக்கிறாள். செம்பாதி நரைத்த தலை, ஜீவியத்தில் பட்ட கஷ்டங்களைப் படம் (Graph) போட்டுக் காட்டுவது போல் கோடுகள் நிறைந்த முகம், பாம்படமில்லாது* (*பாம்படம் என்பது திருநெல்வேலி ஜில்லாவில் பெண்கள் காதில் அணியும் ஓர் ஆபரணம்.) புடலங்காய்த் துண்டுகள் மாதிரித் தொங்கும் காதுகள், 'இந்திரன் கலையாய் என் மருங்கிருந்தான்' எனக் காணப்படும் சம்பிரதாயமாய்ப் புடவை என்ற இரண்டு வெள்ளைத் துண்டுகள் (ஒரு காலத்தில் வெள்ளையாயிருந்தவை) இவள் பணக்காரியல்லள் என்பதை இடித்துக் கூறின. கையிலிருந்த உலர்ந்த வெற்றிலையை வாயில் போட்டுக்கொண்டு, அதற்குத் துணையாக ஒரு நீளத்துண்டுக் கருப்பட்டிப் புகையிலையையும் உள்ளே செலுத்தி, கைகளைத் திண்ணையில் துடைத்துவிட்டு, "ஆசாரியாரே! என்ன? வேலையெ சுருக்கா முடியும். மோசம் பண்ணிப்பிடாதீரும்!" என்றாள்.

"ஆச்சி! பயப்படாதே, பொழுது சாயிரத்துக்கு மின்னே ஒன் வேலெ முடிஞ்சிடும்!" என்று, தன் கையிலிருந்த பாம்படத்திற்கு மெருகிட்டுக் கொண்டே தேற்றினான் தங்கவேலு ஆசாரி. போன மூன்று மாத காலமாக மாதாந்தரம் நடந்து, அன்று விடியற்காலை முதல் உண்ணாவிரதமிருந்த முறுக்குப் பாட்டிக்கு இது ஆறுதலளித்ததோ என்னவோ - ஒரு பெருமூச்சுத்தான் வந்தது.

பிறகு சில நிமிஷங் கழித்து, புன்னகையுடன், "நான் கைலாசவரத்துக்குப் போகணும், வழி காட்டுப் பாதை, இன்னம் நான் போய்த்தான் மேலெ வேலையைப் பாக்கணும். எல்லாம் அப்படி அப்படியே கெடக்கு" என்று பின்னும் துரிதப்படுத்தினாள்.

"ஒன் வேலெ அண்ணைக்கே முடிஞ்சிடும், அந்தச் சிறுகுளம் சுப்பையர் வேலை வராட்டா. அவர்தான் விடேன் தொடேனுன்னு அலஞ்சு சாமானை நேத்துத்தான் வாங்கிக்கிட்டுப் போனார். இல்லாட்ட ஒரு நொடிலெ; இதென்ன பெரிய காரியமா? அது சரிதான், இருக்கட்டும் ஆச்சி. ஒன் வீட்டிலே இதுதானெ முதல் கலியாணம். செலவு என்ன ஆகும்?" என்று பேச்சையிழுத்தான் ஆசாரி.

"என்னமோ, ஏளெக்கு ஏத்தாப்பிலே, எல்லாஞ் சேந்து ரெண்டு நூறு ஆகும்" என்றாள்.

"நகை எம்பிட்டு?" என்று மீண்டும் பேச்சைப் பெருக்கினான் ஆசாரி.

"எல்லாமென்ன, அந்த எங்க வீட்டுக்காரர் போனாரே அவர் போட்டதுதான். என்ன, ரெண்டு மோருதம், இப்பொ நீர் அழிச்சுப் பண்ணற ஒரு சோடு பாம்படம், வேறு செலவு என்ன, ஒரு அம்பது அது கெடக்கட்டும், வேலெ என்ன இப்பொ முடியுமா?" என்று மீண்டும் ஒருமுறை கேட்டாள்.

"இதோ! நீதான் பாத்துக்கொண்டிருக்கயே! ஏங் கைக்கிச் செறகா கட்டியிருக்குது? வேலையெ ஓட்டத்தான் செய்யிரேன். அவசரப்படாதே... நீ இந்தச் சமுசாரத்தைக் கேட்டியா? ஊருலெ களவுங் கிளவுமாயிருக்கே? அண்ணைக்கி நம்ப மேலப் பண்ணை வீட்டிலெ 2000த்துக்குக் களவாம்! காசுக் கடெ செட்டியாரு பத்தமடைக்கிப் போயிட்டு, வட்டிப் பணத்தை மடிலே முடிஞ்சுக் கிட்டு வந்தாராம், மேலேப் பரம்பு கிட்ட வாரப்போ, பொளுது பலபல இண்ணு விடியராப்பிலே, வந்து தட்டிப் பறிச்சுக்கிட்டுப் போயிட்டான்! செட்டியாரு வயித்தில அடிச்சுக்கிட்டு வந்தாரு. காலங் கெட்டுப் போச்சு! இதெல்லாம் நம்ம கட்டப்ப ராசா காலத்துலெ நடக்குமா?" என்றான் ஆசாரி.

"இம்பிட்டுஞ் சேசுபிட்டுப் போனானே அவனாரு?" என்றாள் கிழவி.

"அவன் தான், நம்ம சங்குத் தேவன். எல்லாம் இந்தக் கும்பினியான் வந்த பிறவுதான்! ஊர்க்காவலா எளவா? எல்லாம் தொலைந்து போயுட்டதே!"

"சவத்தெ தள்ளும். எம் பாவத்துலெ வந்து விழாமெ இந்த மூங்கிலடியாணும் பேராச்சித் தாயுந்தான் காப்பாத்தணும்... என்ன, ஆச்சா?"

"இரு, இரு, ஒரு நொடி. இதெ மாத்ரம் ராவித் தாரேன்" என்று சொல்லி, ராவப்பட்ட பாம்படத்தையும், தங்கப் பொடியையும் இரண்டு சிவப்புக் காகிதங்களில் மடித்து மரியாதையாகக் கொடுத்தான். முத்தாச்சியும் மடியிலிருந்த முடிப்பையவிழ்த்து ஒரு கும்பினி ரூபாயை வைக்க, "என்ன! ஒனக்காக இண்ணக்கி முச்சோடும் கஞ்சி கூடக் குடியாமெ பண்ணித்தர, நல்ல வேலே செஞ்சை!" என்றான்.

"என்னெத்தான் தெரியுமே, ஏழெக்கி..."

"அப்பிடின்னா தொள்ளாளிக்கிக் கூலி குடாம முடியுமா?" என, அவனுடன் வாதாட நேரமில்லையென்று கருதிக் கேட்டதைக் கொடுத்துவிட்டு, நகையைப் பத்திரமாக முடிந்து இடுப்பில் சொருகிக் கொண்டு வெகு வேகமாய்க் காலாழ்வானைத் தட்டிவிட்டாள் கிழவி.

2

எவ்வளவு வேகமாக நடந்தாலும், மனித உடல் என்ன மோட்டார் வண்டியா? அதிலும் ஒரு கிழவி! கவிஞர் வெகு உற்சாகமாக வருணிக்கும் 'அந்தி மாலை' போய், இரவு துரிதமாக வந்தது. கிழவி போகும் பாதை ராஜபாதையானாலும், அக்காலத்தில் ஜன நடமாட்டமேயில்லாமல் மரங்கள் அடர்ந்து நெருங்கிய காட்டுப் பாதை. இருள் பரவ ஆரம்பித்தது என்றால் - வெகுவாக அர்த்த புஷ்டியுடைய வார்த்தைகள் அல்ல - கிழவி கூறிய மாதிரி 'தன் கை தெரியாத கும்மிருட்டு'.

கிழவி இதுவரை பேய்க்கும் பயப்பட்டவள் அல்லள், திருடருக்கும் பயப்பட்டவள் அல்லள். ஆனால் இன்று, ஒவ்வொரு மரத்தடியிலும் ஒவ்வொரு சங்குத் தேவன்! மரக் கிளைகள் மீது குதிக்கும் தருவாயில் பதுங்கியிருக்கும் சங்குத் தேவன்! இவ்வாறு ஒவ்வொரு மரத்தைத் தாண்டுவதும் ஒரு வெற்றியாக, தனது மனவுலகில் தோன்றும் சங்குத் தேவர்களிடம் தப்பித்துக்கொண்டே செல்கிறாள்.

இப்படி அவள் தவித்துத் தவித்துச் செல்லும்பொழுது, தனக்கு முன் சிறிது தூரத்தில் ஓர் இருண்ட கரிய உருவம் தோன்றலாயிற்று. கிழவியின் வாய் அவளை யறியாமலே, "சங்குத் தேவன்!" என்று குழறிற்று. கால் கைகள் வெடவெடவென்று நடுங்கின. முன் அடியெடுத்துவைக்க முடியவில்லை. மடியை இன்னொரு முறை இறுக்கிச் சொருகிக்கொண்டு, "ஏ, மூங்கிலடியான்! நீதான் என்னைக் காப்பாத்தணும்!" என்று ஏங்கினாள். அந்தக் கரிய உருவம் தான் போகும் திசையில் இருளில் மறைவதைக் கண்டவுடன், அதுவும் தன்னைப் போன்ற பாதசாரியாக இருக்கலாம் என்று நினைத்தாள். மூங்கிலடியான் மீது பாரத்தைப் போட்டுவிட்டு, "அதாரது! ஐயா! ஐயா!" என்று கூவிக்கொண்டே நடக்கலானாள்.

"யாரங்கே கூப்பாடு போடுவது?" என்ற கனத்த ஆண் குரல் இருளோடு வந்தது.

"சித்தெ பொறுத்துக்கும், இதோ வந்தேன்!" என்று நெருங்கினாள்.

தலையில் பெருத்த முண்டாசு, நீண்ட கிருதா, வரிந்து கட்டின அரைவேஷ்டி, திடகாத்திரமான சரீரம், அக்குளில் ஒரு குறுந்தடி - இவ்வளவும் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரியவாரம்பித்தன. சரீர ஆகிருதியைப் பார்த்ததும் கிழவிக்குப் பெரிய ஆறுதல் - இனிக் கவலையில்லாமல் வீடு போய்ச் சேரலாம் என்ற நம்பிக்கையினால்.

"ஏ கெழவி! இந்தக் கும்மிருட்டிலே நீ எங்கே கெடந்து வாரே?" என்றான் அந்த அந்நியன்.

"நான் இங்கனெ இருந்துதான். எம்பிட்டுப் பறந்து பறந்து வந்தாலும் கெழவிதானே! பொளுது சாஞ்சு எத்தினி நாளியிருக்கும்? நான் போயித்தானே கொறெ வேலேயும் முடியணும், நாழி ரொம்ப ஆயிருக்குமா?" என்று கேட்டுக்கொண்டே பின் தொடர்ந்தாள்.

"பொழுதா? நேரம் ஒண்ணுமாகல்லே! நீ எங்கே போரே?" என்றான் துணைக்கு நடந்த பாதசாரி.

"நான் எங்கே போனா என்ன? ஒங்க பச்சேரிலெ ஒரு பள்ளனெ பாக்கணும், அதுதான்!"

"நீ என்ன சாதி?"

"நாங்க வெள்ளாம் புள்ளெக (வேளாளர்கள்)! நீ யாரு?"

"நான் தேவமாரு!"

"தேவமாரா! என்ன அய்யா, இப்படியும் உண்டா? உம்ம சாதிக்காரன் ஊரெல்லாம் இப்பிடி கொள்ளெ போடுரப்ப, நீங்க பெரிய மனிசரெல்லாம் சும்மா இருக்கலாமா? அந்த அநியாயத்தெ நீங்க பார்த்துச் சும்மா இருக்கலாமா? கலிகாலமா?" என்றாள்.

"கெழவிக்கு வாய்த்துடுக்கெப் பாரு!" என்று கோபித்தவன், கலகலவென்று சிரித்துவிட்டு, பிறகு, "அது கொலைத் தொழிலுதானே! ஆமாம், நீ சொல்லுவது போலே கலிதான். நீ என்னமோ தெரியாம பேசுறயே. அவன் வேறே கிளை, நான் வேறே. அந்தப் பய கொண்டையங் கோட்டையான். நான் வீரம் முடிதாங்கி... ஆமாங் கெழவி, ஏன் பதறிப் பதறிச் சாகிறெ?" என்று கேலியாகக் கேட்டான் அந்தத் தேவன்.

"ஆமாம்! எங்கிட்டெ லெச்ச லெச்சமா இருக்கு, நான் பதரறேன்!" என்று ஒரு அசட்டுச் சிரிப்புச் சிரித்தாள்.

"பொய் சொல்லாதே. மடிலே கனமிருந்தா, வழியிலே பயம்" என்று சிரித்தான் அந்த அந்நியன்.

"ஒம்ம கிட்ட உண்மையெச் சொன்னா என்ன? என் மகளுக்குக் கலியாணம். நான் போயித்தான் நாலு வேலே பாக்கணும். ஒரு சோடு இரவல் பாம்படம் வாங்கிக்கிட்டுப் போறேன். ஏதோ பகட்டா செய்தாத்தானே நாலு பேரு மதிப்பான்!" என்றாள் கிழவி.

"பாம்படமாவதிருக்கே!" என்று கேட்டுவிட்டு அவளைக் கூர்ந்து நோக்கினான். பிறகு, "எத்தினி மக்கள் உனக்கு? மகள் என்ன மூத்ததா?" என்று கேட்டான். அவன் கண்களும் மனமும் கிழவியைத் துருவிக் கொண்டிருந்தன.

"எல்லாம் ஒத்தைக்கொன்னுதான்!"

"சரி"

பிறகு இருவரும் பேசாமல் நடந்தனர். அந்த மறவன் கிழவியை நோக்குவதும், பிறகு குனிந்து யோசிப்பதுமாக நடந்தான்.

சற்று நேரத்தில் கிழவி, "அதோ கோயில் தெரியுது. நான் இனிமே போயிக்கிடுவேன்" என்றாள்.

"ஏ ஆச்சி! நில்லு, ஒரு சமுசாரம். நீ ஏழெதானெ? இன்னா, இதெ வச்சுக்க! முதல் பேரனுக்கு ஏன் பேரிடு!"

"நீங்க மகராசரா இருக்கணும். என்ன பேரு இட?" என்று சொல்லிக்கொண்டே, தனது எதிர்பாராத அதிர்ஷ்டத்தில் மதிமயங்கிக் கையை நீட்டினாள்.

"சங்குத் தேவரின்னு!"

கையில் வாங்கிய பணப்பை பொத்தென்று விழுந்தது. "வேண்டாம், வேண்டாம்! என்னெ விட்டிருங்க, நான் ஓடிப் போரேன்!" என்று பதறினாள்.

"இல்லெ ஆச்சி, எடுத்துக்கோ! ஒன்னெ கண்ணாணை ஒண்ணுஞ் செய்யலே!" என்று கையில் கொடுத்து அனுப்பினான். கிழவியும் திரும்பிப் பார்த்தபடியே இருட்டில் மறைந்தாள்.

சங்குத் தேவன் அங்கிருந்த கல்லில் சற்று உட்கார்ந்தான். குழம்பிய மூளை சரியானது போல் தெரிந்தது. "ஆமாம், கிழவி திடுக்கிட்டுப் போயிட்டா. ஒண்ணா ரெண்டா, நூறு! இதுவும் ஒரு வேடிக்கெதான்! சங்குத் தேவனெக் கெழவி..." என்று முனகிக் கொண்டே எழுந்து ஓர் ஒற்றையடிப் பாதையில் நடந்தான்.

காந்தி, 25-04-1934
---------------

85. செல்வம்

அன்று டிராமில் வந்து கொண்டிருந்தேன். சென்ட்ரல் வரை தரையில் புரண்டு தொங்கும் புடலங்காய்தான்.

அப்பா! உட்கார்ந்தாகிவிட்டது. மனிதனுக்கு உட்கார இடங்கொடுத்து விட்டால் கொஞ்சம் அப்படி இப்படிச் சுற்றிப் பார்க்க வேண்டும். அங்கே பேசுகிறவர்கள் - சென்னை அவசரத்தில் அந்த மாதிரிப் பிரகிருதிகள் மிகவும் சொற்பம் - யாராவது இருந்தால் கொஞ்சம் காது கொடுக்க வேண்டும்; கூடுமானால் பேசவேண்டும். பிறகு வெற்றிலை நீண்ட நட்பு. இறங்கும்வரை, எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாய்.

சென்ட்ரலில் ஒரு கூட்டம் வந்து ஏறியது. இடம் வசதி பார்த்தாகி விட்டது. வந்தவரில் ஒருவர், வைதிகச் சின்னங்கள்; மெலிந்த தேகம் சுகமாகக் காலை நீட்டிக் கொண்டு சொல்லுகிறார்:

"செல்வம் இருக்கிறதே, அது வெகு பொல்லாதது. இன்று ஒரு இடத்தில் இருக்கும், நாளை ஒரு இடத்தில் இருக்கும்; அதோ அந்த வண்டிச் சக்கரம் போல. அதைத் துறந்தால்தான் மோட்சம்..." இப்படி அடுக்கிக்கொண்டே போகிறார்.

என் மனம் இருக்கிறதே, அது எப்பொழுதுமே இப்படித்தான். ஒன்றைக் கேட்டால் எதிர்த்தோ, பேசவோ செய்யாது. அப்படியே நீண்ட யோசனைகளை இரகஸியமாக என்னிடம் வந்து கொட்டும்.

இந்தச் 'செல்வம்' என்ற சொல் 'செல்வோம் செல்வோம்' என்ற பொருள்பட நின்றதாம். அதிலே தமிழுக்கு வேறே பெருமை. அதன்மீது, செல்வத்தின் மீது ஒரு வெறுப்பு உணர்ச்சி - முக்கால்வாசிப் பெயரிடம், 'சீச்சீ, இந்தப் பழம் புளிக்கும்' என்ற தத்துவந்தான்.

செல்வம் சென்றுவிடுமாம்! அதனால் அதை வெறுக்க வேண்டுமாம். நீ வெறுக்காவிட்டாலும் தானே அது சென்றுவிடுமே! அது செல்லாவிட்டால், அந்தச் சகடக்கால் மாதிரி உருண்டு செல்லாவிட்டால், அதற்கும் இந்த மண்ணாங்கட்டிக்கும் என்ன வித்தியாசம்? ரூ.அ.பை. வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும்? அது பண்டம் மாற்றுவதற்கு இடையிலே சங்கேதமாக வைத்துக்கொண்ட ஒரு பொருள். வெறும் பணத்தை உண்ண முடியுமா? உடுக்க முடியுமா? இது தேவையைப் பூர்த்தி செய்யும் ஒரு வஸ்து. அது சென்று கொண்டிருப்பதினாலேதான் அதற்கு மதிப்பு.

வெள்ளைக்காரன் செல்வத்தை வெல்த் (Wealth) என்று சொல்லுகிறான். அது பூர்த்தியாகும் வஸ்து என்று அர்த்தப்படும்படியாக இருக்கிறது. ஜடத்தின் தேவையைப் பூர்த்தி செய்யத்தான் வேண்டும். அது முதல்படி, மற்ற எல்லா இலக்ஷியங்களுக்கும்.

நமக்குச் செல்வம் ஜகந்நாதத்தின் தேர்ச்சக்கரம் மாதிரி இருக்கிறது. அது நம்மை நசுக்குகிறது. அதன் உருளைகள் சரியானபடி சுற்றவில்லை. போகும் வழியும் கண்மூடித்தனமாக இருக்கிறது. அதை நீக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, செல்வமே வேண்டாம் என்று பேசுகிறவனைக் கண்டால், "உன் (அசட்டு) வேதாந்தத்தில் இடி விழ!" என்று சீறும்படியாகக் கோபம் வருகிறது.

வாஸுதேவ சாஸ்திரியை - அதுதான் ராஜமையர் எழுதிய இங்கிலீஷ் கதையில் வருகிறவர் - முக்கால்வாசித் தமிழர்களுக்குப் பிடிக்கும். அவரை எல்லோரும் இலக்ஷியமாக வைத்துக்கொள்ள ஆசைப்படுவார்கள். எனக்கு அந்த அசட்டு வேதாந்தியின் தர்மபத்தினிதான் நமக்குச் சரியான இலக்ஷியம் என்று சொல்லுகிறேன். சாக்கடையிலிருந்து நட்சத்திரங்களைப் பற்றிக் கனவு காண்பது வெகு கஷ்டமல்ல; அது நம்மவருக்கு ரொம்ப நாளையப் பழக்கம். பக்கத்திலிருக்கும் குறட்டில் ஏற முயல்வது, முதலாகச் செய்ய வேண்டியது. நம்மவருக்குச் செல்வத்தின் தீமையைப் பற்றிச் சொல்லுவது, நம்புஸகனுக்கு பிரம்மச்சரியத்தின் உயர்வைப் பற்றி உபதேசிப்பது போல்தான்.

செல்வம் நிலையில்லாதது என்று கடிந்து கொள்ளுகிறீர்களே! எதுதான் உலகத்தில் நிலையாக இருக்கிறது? கடவுளைப் பற்றி வெகு லேசாக, எப்பொழுதும் இருக்கிறார் என்று கையடித்துக் கொடுப்பார்கள் நம்மவர்கள். கடவுளும் நம்மைப்போல், பிறந்து வளர்ந்து அழிகிறவர்தான்.

"அட போடா, நாஸ்திகா!" என்பீர்கள். இந்தக் காலத்துப் பிராமணன், வேத காலத்துப் பிராமணனைச் சந்தித்தால், 'அவன் பதிதன்' என்று முடிவு கட்டி விடுவான். அந்தக் காலத்தில் இருந்த கடவுள்கள் எல்லாம் எங்கே? அந்தக் காலத்துத் தமிழன், கொற்றவை என்ற தெய்வத்தைக் கும்பிட்டானாம். அது எங்கே? இந்த மாதிரி எத்தனையோ அடுக்கிக் கொண்டு போகலாம்.

இந்தச் செல்வமும் இப்படித்தான். பழைய காலத்து மனிதனுக்குக் கையிலிருந்த கல், ஈட்டிதான் செல்வம். வேத காலத்துப் பிராமணனுக்கு மாடும், குதிரையும்தான் செல்வம். அவன் அதை நிரையாகப் பெருக்கினான். யாகம் செய்தான். ஏன், தெய்வமாகக் கொண்டான்? தேவையைப் பூர்த்தி செய்யும் இலக்ஷியந்தான் தெய்வம்; அது எந்தத் தேவையானால் என்ன?

அந்த ட்ராம் கார் நண்பர் மாதிரி நமக்கு அசட்டு வேதாந்தம் வேண்டாம். அஸ்திவாரக் கப்பிகளை நன்றாகக் கட்டிவிட்டுப் பிறகு மெத்தைக்கு என்ன வார்னீஷ் பூசலாம் என்று யோசிக்கலாம்.

மணிக்கொடி, 29-07-1934
-----------------

86. செவ்வாய் தோஷம்

முருக்கம்பட்டிக்கு லோகல் பண்டு ஆஸ்பத்திரிதான் உண்டு. அதாவது சின்னக் காய்ச்சல், தலைவலி, கைகால் உளைச்சல், வெட்டுக்காயம் அல்லது வேனல்கட்டி - இவைகளை மட்டிலுமே குணப்படுத்துவதற்கான வசதி அமைந்தது. கிராமவாசிகள் திடமான தேகமுள்ளவர்களானதால் பட்டணத்துக்காரர்களைப் போல் நாகரிகமான வியாதிகளைப் பெறுவதில்லை. கொய்னா மாத்திரம் மத்ய சர்க்காரின் மலேரியா எதிர்ப்பு முயற்சியால் கிராமவாசிகளிடையே இலவச விநியோகத்திற்காக வேண்டிய மட்டிலும் உண்டு.

டாக்டர் வீரபத்திர பிள்ளை எல்.எம்.பி. அந்தப் பிரதேசத்தின் தேக சௌக்கியத்திற்குப் பொறுப்பாளியல்லரானாலும், கிராமவாசிகள் வருவித்துக்கொள்ளக்கூடிய வியாதிகளைத் தடுக்க முயற்சி செய்யும் பாத்தியதை அவருக்கு உண்டு. 'கைராசிக்காரர்' என்ற அக்கிராமவாசிகளின் பட்டம் அவருடைய வைத்திய கௌரவத்திற்குப் பின்னொளியாக இருந்துவந்தது.

அவருடைய வைத்தியம் தெரிந்த வியாதிகளுக்கு ராஜ பாதை; அவருக்குச் சிறிது சந்தேகம் தோன்றிவிட்டால் போதும், சாதாரணமானதானாலும் வியாதியஸ்தனை நூறு சதவிகிதம் பயமூட்டையுடன், வண்டி கட்டி, ஜில்லா ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவிடுவார்.

கம்பௌண்டர் வெங்கிடசாமி நாயுடு அப்படியில்லை. அவருடைய ஞானம் இரண்டு களஞ்சியங்களில் இருந்தது; ஒன்று, யூனியன் ஜாக் கொடி போட்ட - டாக்டர் பிள்ளையவர்களின் கைக்குள் அடங்கிய - சீமைச் சிகிச்சை; இன்னொன்று, எண்ணற்ற ஓலைச் சுவடிகளிலிருந்து திரட்டப்பட்ட மூலிகை சாஸ்திரம். வியாதியஸ்தனைக் குணப்படுத்துவதைவிட, குறிப்பிட்ட முறையின் தன்மையைப் பரிசீலனை செய்வதில் நெஞ்சழுத்தமுடையவர். ஆயுர்வேத சாஸ்திரத்தில் ஏற்பட்ட அபாரப் பிரேமையின் விளைவே அவருடைய இந்த நெஞ்சழுத்தத்திற்குக் காரணம் என்று சொல்லவேண்டும்.

முருக்கம்பட்டி ஆஸ்பத்திரியில் பெரும்பான்மையான நாட்களில் குழந்தைகளுக்குப் பேதி மருந்து அல்லது மலச்சிக்கலால் ஏற்பட்ட காய்ச்சலுக்கு மருந்து, இவை தயாரிப்பதிலேயே காலம் கழிந்துவிடும். அதனால் பிணமறுக்கும் கிடங்கின் பூட்டு துருப்பிடித்துச் சிக்கிக் கிடப்பதில் ஆச்சரியமில்லை.

கிடங்கு, ஆஸ்பத்திரிக் காம்பவுண்டின் கீழ்க்கோடி மூலையில் இருக்கிறது. அன்று ராத்திரி பத்து மணி சுமாருக்கு ஆஸ்பத்திரித் தோட்டியான ராக்கன் வந்து எசமானிடம் கோயிலூரிலிருந்து பிணம் ஒன்று வந்திருப்பதாகச் செய்தி அறிவித்து, சாவியை வாங்கிக் கொண்டு போய்த் திறக்கக் கஷ்டப்பட்டான். முடியாமற்போகவே பூட்டுச்சிக்கெடுக்க டாக்டர் அம்மாளிடம் எண்ணெய் வேறு வாங்கிச் செல்ல வேண்டியதாக இருந்தது.

கோயிலூர் கி.மு., அந்த வட்டாரத்தில் 'ரவுண்டு வரும்' ஏட்டு கந்தசாமி பிள்ளை - எல்லாரும் அந்தக் கேஸை எடுத்து வந்திருந்தார்கள். கேஸ், கோயிலூர்ப் பள்ளனுடைய பிரேதம். அவர்கள் சொன்ன விபரந்தான் விசித்திரமாக இருந்தது; அது வைத்திய சாஸ்திரத்துக்கு அதீதமானது.

ரத்தக் காட்டேரி அடித்துவிட்டதால், அந்தப் பள்ளன் மாண்டு போனதாகக் கூறப்படுகிறது.

இ.பி.கோ.வில் பேயடிப்பதற்குத் தனிப் பிரிவு இல்லை என்பதைத் தெரிந்துகொண்டிருந்தும், ஏட்டுப்பிள்ளை கூட வெட்டியான் கூற்றை நம்பி ஆமோதிக்கிறார்.

டாக்டர் வீரபத்திர பிள்ளைக்குப் பிரேத பரிசோதனையெல்லாம் வைத்தியக் கலாசாலையில் முதல் இரண்டு வருஷங்களில் கற்றுக் கொள்வதற்காக அநாதைப் பிரேதங்களை அறுத்துப் பார்த்ததோடு முடிவடைந்துவிட்டது. பட்டிக்குள் சரணாகதியடைந்த பிறகு அவருக்கு இதுவரை பிரேத பரிசோதனை உத்தியோகம் ஏற்பட்டது கிடையாது. அப்படிப்பட்டவருக்கு இதுமாதிரி விதிவிலக்கான ஒரு கேஸ் சம்பவித்தது ஊர்க்காரர்கள் பொதுப்பகையில் செய்த குற்றத்தை மறைப்பதற்குச் செய்யப்படும் ஒரு முட்டாள்தனமான முயற்சியோ என்று நினைத்தார்.

கம்பௌண்டர் நாயுடுவுக்கு ஆள் அனுப்பிவிட்டு, "யாருடா அது?" என்ற அதட்டலுடன், பாதக்குறடு சரல்கற்களில் கிரீச்சிட அவர் பிரேதக் கிடங்குக்குச் சென்றார்.

இவரைக் கண்டதும் ஏட்டு கந்தசாமி பிள்ளை போலீஸ் ஸலாம் செய்து, தமது கேஸ் புஸ்தகத்தை நீட்டிக் கையெழுத்து வாங்கிக்கொண்டு, விலகி நின்றார். "என்ன கந்தசாமி பிள்ளை, பய கதை விடரானே!" என்று சிரித்தார் டாக்டர்.

"பேய் பிசாசு இல்லை என்று சொல்ல முடியுமா?" என்றார் கந்தசாமிபிள்ளை.

"பயந்தான் பேய். ரிப்போர்ட்லெ பேயடிச்சதுன்னு எழுதி வையாதியும், சிரிச்சுத் துப்பப்போறான்!" என்றார் டாக்டர்.

"நீங்கள்தான் முகத்தைப் பாருங்களேன்! அப்பந் தெரியும் - ஏலே வெட்டியான், அந்தச் சாக்கெ விலக்கடா!" என்று உத்தரவு போட்டார் கந்தசாமி பிள்ளை.

டாக்டர், கையில் அரிக்கன் விளக்கை உயர்த்திப் பிடித்துக் கொண்டு, குனிந்து பிரேதத்தைப் பார்த்தார்.

கண் பிதுங்கி வெளியே தள்ளிக்கொண்டிருந்தது. சொல்ல முடியாத பயத்தில் முகத்தை வார்ப்பு எடுத்த மாதிரி அவ்வளவு கோரம்! கிட்டிப்போன பற்களுக்கிடையில் நாக்கு வெளியே தள்ளிக் கிடந்தது. பல் நாக்கில் பதிந்து விறைத்துக் கொண்டதால் வாயை அகற்றிக்கூட நாக்கை உள்ளே தள்ள முடியாது.

"சாக்கை அப்புறம் எடுத்தெறி!" என்றார் டாக்டர்.

பிரேதம் ஒரு பக்கமாகச் சாய்ந்து கிடந்தது. முதுகில் பலத்த அறை விழுந்ததால் அதைத் தேக்குவதற்காக உடம்பை வளைத்த பாவனையில் வளைந்துவிறைப்பேறிக் கிடந்தது. கை விரல்களும் வக்கிரமாக முறுக்கிக் கிடந்தன.

"சரி, உள்ளே எடுத்துக்கொண்டு போய் மேஜையிலே கெடத்துங்கடா!" என்று சொல்லி நிமிர்ந்தார் வைத்தியர்.

"உடம்பில் கோறை ஒன்றையும் காணவில்லை. ஆனால் அடிக்குக் குனிந்த மாதிரிக் கிடக்கிறது" என்று ஏட்டைப் பார்த்தபடியே கூறினார்.

அச்சமயம் இருட்டில் ஓர் உருவம் தெரிந்தது. "அதாரது?" என்ற குரலுக்கு, "நான் தான் நாயுடு!" என்று சொல்லிக்கொண்டே கம்பௌண்டர் அருகில் வந்தார்.

"பேயடிச்ச கேஸ்கூட நம்ம ஆஸ்பத்திரிக்கு வருதுவே!" என்று சிரித்தார் டாக்டர் வீரபத்திர பிள்ளை.

"பேயா, அடிச்சா சாகத்தான்! இரண்டு மூன்று நாளாக இந்தப் பக்கம் ஒரு ரத்தக் காட்டேரி தெரிகெட்டுப்போய் அலையிது. அதாத்தானிருக்கும்!" என்றார் நாயுடு.

"நீரும் பேயை நம்புறீரா - உருப்பட்டாப்லேதான்!" என்று சொல்லி, டாக்டர், "ஏலே இன்னுமா - எத்தினி நேரம், சவத்தெ இளுத்துக் கெடத்த?" என்று அதட்டினார்.

"வே, கந்தசாமி பிள்ளை, நம்ம தோட்டி பாத்துக்கிடுவான் - நீங்க வேணும்னா ஆஸ்பத்திரி வெராண்டாவுலே படுத்துக்கிடுங்க - காலையிலே வேலையைச் சுருக்கா முடிச்சுடுவோம்!" என்று சொல்லிக் கொண்டே ஆஸ்பத்திரிக் காம்பவுண்டுக்கு எதிரில் உள்ள தமது வீட்டிற்குப் புறப்பட்டார்.

"ஸார், ஒரு நிமிசம், நான் ஒரு பார்வை பார்த்துப்புட்டு வந்திருதேன்!" என்றுகொண்டே உள்ளே நுழைந்தார் கம்பௌண்டர் நாயுடு.

டாக்டர் சிறிது தூரம் தள்ளிச் சென்று நின்றார்.

உள்ளே சென்ற கம்பௌண்டர் நாயுடு சிறிது நேரத்தில் விறைக்க விறைக்க ஓடிவந்தார்.

"வெட்டியான் சொல்லுறதில் அணுவளவு சந்தேகமில்லெ; ரத்தக் காட்டேரிதான்!" என்றார் நாயுடு.

"உமக்கும் என்ன பைத்தியமா? வேறெ வேலெ இருந்தாப் போய்ப் பாரும்!" என்று அதட்டினார் டாக்டர்.

"இப்பவே வேணும்னா அறுத்துப் பாருங்க! நான் சொல்லுறது சரியா தப்பா என்று தெரியும்" என்றார் நாயுடு.

"பார்க்க வேண்டியது உமது மூளைக்குத்தான் வைத்தியம்!" என்று சொல்லிக்கொண்டே மேல் துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு, கைகளைத் தோளுக்கு மேல் உயர்த்தி சுடக்கு முறித்துக் கொட்டாவி விட்டார் டாக்டர்.

"நீங்க எங்கூட ஷெட்டுக்குள் வாருங்க, காண்பிக்கிறேன்!" என்று தமது கட்சியை நிரூபிக்க அவசரப்பட்டார் கம்பௌண்டர்.

"என்னதான் சொல்லுமே!"

"நீங்க வாருங்க, ஸார்!" என்று ஷெட்டுக்குள் நுழைந்து, பிணத்தின் மீது கிடந்த சாக்கை அகற்றினார் கம்பௌண்டர்.

"டேய் தோட்டி! விளக்கைக் கொஞ்சம் ஒசத்திப் பிடி!" என்று சொல்லி, மடியிலிருந்து சூரிக்கத்தி ஒன்றை எடுத்தார்.

அவர் என்னதான் காட்டப் போகிறார் என்பதைப் பார்க்க ஷெட் வாசலில் நின்றுகொண்டிருந்த டாக்டர், "என்னவே வேலை!" என்று சொல்லுமுன், பிணத்தின் கையில் கத்தியைக் குத்திக் கிழித்து, மாங்காயைப் பிளந்து காட்டுவதைப்போல், காயத்தை விரித்துப் பிடித்துக் காண்பித்து, "இதில் ஒரு சொட்டு ரத்தம் இருக்கிறதா பாருங்கள்!" என்றார்.

"ரத்தம் இருந்தாலும் பிணமான பின் வடிவதை எங்கே கண்டீர்?" என்றுகொண்டே நெருங்கினார் டாக்டர்.

"ரத்தம் வடியாது, உறைந்தாவது இருக்க வேண்டுமே! எங்கே பாருங்கள்?" என்றார் நாயுடு.

டாக்டர் குனிந்து பரிசோதித்துப் பார்த்தார். ரத்தத்தை வடிகட்டிப் பிழிந்தெடுத்த சதைபோலக் கிடந்தது பிணம்.

டாக்டர் வேறு ஓர் இடத்தில் பரிசோதிக்கும்படி கூறினார். அங்கும் அப்படியே இருந்தது. டாக்டருக்குப் புல்லரித்தது.

"அப்புறம்!" என்றார். அவருடைய நாக்கு மேல்வாயில் ஒட்டிக்கொண்டது.

"வாருங்க, போவோம்!" என்று வெளியே வந்த கம்பௌண்டர், "இவன் ரத்தம் எங்கே இருக்கிறது என்று பார்க்க வேண்டுமா?" என்றார். "கோயிலூர்க் கணியான் செத்துப் போனானே அவனைப் பொதைக்கத்தானே செய்தார்கள்?" என்று கேட்டார் தோட்டியிடம்.

"ஆமாஞ் சாமி! அங்கனெதான் இவனும் மாட்டிக்கிட்டான்!" என்றான் தோட்டி ராக்கன்.

"எப்படா நடந்தது?"

"சாயங்காலம் சாமி!"

"வருகிறீர்களா, போவோம்?" என்றார் கம்பௌண்டர்.

"அவ்வளவு நிச்சயமா உமக்கு? அப்படியானாப் போவோம்!" என்றார் டாக்டர்.

"ஏட்டுப்பிள்ளையையும் கூட்டிக்கொள்ளுவோம், ஏலே ராக்கா, மம்பட்டியை எடுத்துக்கிட்டு கூட வா!" என்றார் நாயுடு.

"நான் வரமாட்டேன் சாமி, எனக்குப் புள்ளை குட்டியில்லே!" என்றான் ராக்கன்.

"நாங்க இருக்கறப்ப என்னடா பயம்? சும்மா வா, ஒண்ணும் நடக்காது!" என்று தேற்றினார் கம்பௌண்டர்.

2

இந்தப் பரிசோதனைக் கோஷ்டி கோயிலூர் பள்ளர் சுடுகாட்டை அடையும்போது மணி பன்னிரண்டு.

வானத்திலே துளி மேகங்கூடக் கிடையாது. நிலவொளியும் இல்லை, வெறும் நட்சத்திரப் பிரகாசம்தான்.

சுடுகாடு ஆற்றங்கரையிலிருந்தது. அது ஒரு வெட்டவெளி. நாலைந்து பர்லாங்குக்கப்புறந்தான் அந்தப் பகுதியில் மரம் என்ற பேருக்கு ஒன்றிரண்டு பனை முளைத்துக் கிடந்தது.

"எங்கடா அவனைப் பொதெச்சாங்க?" என்று அதட்டினார் டாக்டர். தம்மை இழுத்தடிக்கிறானே அந்தக் கம்பௌண்டர் என்று அவருக்கு நினைப்பு.

"அதோ, அந்தக் குத்துக்கல் தெரியுதே அதுதான் சாமி!" என்றான் ராக்கன். அவன் சொல்லி வாய் மூடவில்லை...

நாயின் ஊளை போல ஆரம்பித்த ஒரு சப்தம் கணநேரத்துக்கு நேரம் சுருதி கூடி, ஆந்தையின் அலறலாக மாறி, வெறும் பேய்ச் சிரிப்பாக வானமுகட்டைக் கிழித்தது.

கடகடவென்று விக்கி விக்கிச் சிரிப்பது போன்ற அலறல் ஒரு கணம் வானத்தையே நிறைத்தது.

அடுத்த கணம் அமைதி.

அதே பேய் அமைதி!

நடந்து கொண்டிருந்தவர்கள் யாவரும் தரையுடன் தரையிட்டது மாதிரி கல்லாய் உறைந்துநின்றனர்.

"சாமி, நான் வரமாட்டேன், பேய்!" என்று ஓட்டம் பிடித்தான் ராக்கன்.

மண்வெட்டி, ஓடிய வேகத்தில் அவன் கைவிட்டு நழுவியது. அதை எடுத்துக்கொள்ள அவன் தாமதிக்கவில்லை.

"நாய் ஊளையிட்ட மாதிரி இருந்துதல்ல!" என்றார் ஏட்டுப்பிள்ளை.

"சுடுகாட்டில் நாய்க்கா பஞ்சம், அது நாயில்லை!" என்றார் கம்பௌண்டர்.

மூவரும் அந்தக் கணியானைப் புதைத்திருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள்.

கம்பௌண்டர் நாயுடு விளக்கை உயர்த்திப் பிடித்துக் கொள்ள, ஏட்டுப்பிள்ளை தைரியமாக வேஷ்டியை வரிந்து கட்டிக்கொண்டு மண்வெட்டியால் தோண்ட ஆரம்பித்தார்.

ஆற்றருகில் உள்ள இடந்தானே, வேலை சுளுவாக நடந்தது.

"அதோ வெள்ளையா என்னமோ தெரிகிறது!" என்றார் கம்பௌணடருடன் ஒண்டிக்கொண்டிருந்த டாக்டர்.

ஏட்டுப்பிள்ளை மண்வெட்டியைக் குழிக்கு வெளியில் எறிந்துவிட்டு, கைகளால் மண்ணைப் பரசி எடுக்க ஆரம்பித்தார். கம்பௌண்டரும் கையிலிருந்த விளக்கை டாக்டரிடம் கொடுத்துவிட்டு, உள்ளே இறங்கி, துணியின் முனையைப் பிடித்து இழுத்துத் தூக்கவே பிரேதம் தென்பட்டது.

டாக்டர் குழிக்குள் விளக்கைப் பிடித்துக்கொண்டு குனிந்து பார்த்தார்.

பிரேதம், கைக் கட்டு, கால்விரல் கட்டு, வாய்க் கட்டுகளுடன் மலத்திக் கிடத்தப்பட்டிருந்தது.

புதைத்து நான்கு நாட்களாகியும் நெற்றியிலிருந்த சந்தனமும் குங்குமமும் அழியவில்லை. கழுத்தில் கிடந்த மாலை வாடவில்லை. பிரேதம்போல் கட்டப்பட்டு ஒருவன் படுத்துத் தூங்குவது போலவே தென்பட்டது.

"அவன் எமை ஆடுது!" என்று அலறிக் கொண்டே விளக்கை நழுவவிட்டார் டாக்டர்.

நல்ல காலம், கம்பௌண்டர் அதை ஏந்திக் கொண்டார்.

பிரேதத்தின் வலது இமை ஆடியது. யாவரும் அதையே பார்த்து நின்றார்கள்.

பிணம் எழுந்து உட்கார்ந்து பேசும் என்று எதிர்பார்ப்பது போலிருந்தது அவர்கள் பார்வை.

வலது கண் இமைகள் மெதுவாக அசைந்தன. உள்ளிருந்து சிரமப்பட்டு ஒரு கருவண்டு வெளியே வந்தது. வெளிச்சத்தைக் கண்டு திகைத்தது போலத் தள்ளாடியது. பிறகு சிறகை விரித்து உயரப் பறந்து சென்றது.

"வண்டுகளைப் போல அது ரீங்காரமிடவில்லை, பார்த்தீரா?" என்றார் நாயுடு.

வண்டு போனதையே பின்பற்றிய கண்கள் அதை இருளில் இழந்தன.

"இதோ பாருங்கள்!" என்று பிரேதத்தின் வலது கரத்தைக் கத்தியால் கிழித்துக் காயத்தை விரித்துப் பிடித்தார் நாயுடு.

புது ரத்தம் குபுகுபு என்று பொங்கி அவர் விரல்களை நனைத்தது!

*****

மூவரும் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார்கள்.

"ரிப்போர்ட் எப்படி எழுத?" என்று கைகளை மணலால் தேய்த்துக்கொண்டே கேட்டார் ஏட்டுப்பிள்ளை. தன் கையில் ரத்தம் பட்டதுபோல அவ்வளவு பிரமை.

"பயத்தால் மரணம் என்று எளுதிப்புடும்!" என்றார் கம்பௌண்டர்.

"நாயுடு, இது எப்படித் தெரிந்தது?" என்றார் டாக்டர்.

"அவன் ஜாதகத்தைப் பார்த்திருக்கிறேன். அவனுக்குச் செவ்வாய் தோஷம்; அந்த ஜாதகமெல்லாம் ரத்தக் காட்டேரிதான்!" என்றார் கம்பௌண்டர்.

சூறாவளி - 09-07-1939
-------------------

87. சிற்பியின் நரகம்

1

சூரியாஸ்தமன சமயம். காவிரிப்பூம்பட்டினத் துறைமுகத்தில் என்றையும்விட அதிக நெருக்கடி. கறுத்து ஒடுங்கிய மிசிர தேசவாசிகளும், வெளுத்து ஒடுங்கிய கடாரவாசிகளும், தசை வலிமையின் இலட்சியம் போன்ற கறுத்த காப்பிரிகளும், வெளுத்த யவனர்களும், தென்னாட்டுத் தமிழும், வடநாட்டுப் பிராகிருதமும் - எல்லாம் ஒன்றிற்கொன்று முரண்பட்டுக் குழம்பின. சுங்க உத்தியோகஸ்தர்கள் அன்னம் போலும், முதலைகள் போலும் மிதக்கும் நாவாய்களிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பண்டங்களையும், வேலைக்காரர்களையும் பொற் பிரம்பின் சமயோசிதப் பிரயோகத்தால் தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அரசனுக்குக் கடாரத்திலிருந்து வெள்ளை யானைகள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. அவற்றைப் பார்க்கத்தான் என்றுமில்லாத கூட்டம்!

அஸ்தமன சூரியனின் ஒளியே எப்பொழுதும் ஒரு சோக நாடகம். கோவில் சிகரங்களிலும், மாளிகைக் கலசங்களிலும் தாக்கிக் கண்களைப் பறிப்பது மட்டுமல்லாது, கடற்கரையில் கரும்பாறையில் நிற்கும் துவஜஸ்தம்பத்தின் மீது, கீழ்த்திசை நோக்கிப் பாயும் பாவனையில் அமைக்கப்பட்ட பொன் முலாம் பூசிய வெண்கலப் புலியின் முதுகிலும் வாலிலும் பிரதிபலிப்பது அவ்விடத்திற்கே ஒரு மயக்கத்தைக் கொடுத்தது.

இந்திர விழாவின் சமயத்தில் மக்களின் வசதிக்காக அமைக்கப்பட்ட ஸ்நான கட்டத்தின் படிக்கட்டில், பைலார்க்கஸ் என்ற யவனன் கடலை நோக்கியபடி உட்கார்ந்திருந்தான். நீண்ட போர்வையான அவனது டோ கா காற்றில் அசைந்து படபடவென்றடித்து, சில சமயம் அவனது தாடியையும் கழுத்துடன் இறுகப் பின்னியது. பெரிய அலைகள் சமயா சமயங்களில் அவனது பின்னிய தோல்வார்ப் பாதரட்சையை நனைத்தன. அவ்வளவிற்கும் அவன் தேகத்தில் சிறிதாவது சலனம் கிடையாது. மனம் ஒன்றில் லயித்துவிட்டால் காற்றுத்தான் என்ன செய்ய முடியும், அலைதான் என்ன செய்ய முடியும்?

பைலார்க்கஸின் சிந்தனை சில சமயம் அலைகளைப் போல் குவிந்து விழுந்து சிதறின. கனவுகள் அவனை வெறியனைப் போல் விழிக்கச் செய்தன.

திடீரென்று, "சிவா!" என்ற குரல். ஒரு தமிழ்நாட்டுப் பரதேசி!

"யவனரே! உமது சித்தம் உமக்குப் பிரியமான ஒன்றுமற்ற பாழ் வெளியில் லயித்ததோ? நான் நேற்றுச் சொன்னது உமக்குப் பதிந்ததா? எல்லாம் மூல சக்தியின் திருவிளையாடல், அதன் உருவம்! கொல்லிப் பாவையும் அதுதான்; குமரக் கடவுளும் அதுதான்! எல்லாம் ஒன்றில் லயித்தால்...?"

"உமது தத்துவத்திற்குப் பதில் ஒரு கிண்ணம் திராட்சை மது எவ்வளவோ மேலானது. அதுவும் ஸைப்பிரஸ் தீவின் திராட்சை... அதோ போகிறானே, அந்தக் காப்பிரியும் ஏதோ கனவை நம்புகிறான். உமது முதல் சூத்திரத்தை ஒப்புக் கொண்டால், உமது கட்டுக் கோப்பில் தவறு கிடையாதுதான்... அதை எப்படி ஒப்புக் கொள்ள முடியும்? ஒவ்வொருவனுடைய மனப் பிராந்திக்கும் தகுந்தபடி தத்துவம்.. எனக்கு அது வேண்டாம்... நாளங்காடியில் திரியும் உங்கள் கருநாடிய நங்கையும், மதுக் கிண்ணமும் போதும்..."

"சிவ! சிவ! இந்த ஜைனப் பிசாசுகள் கூடத் தேவலை, கபாலி வெறியர்கள் கூடத் தேவலை... உம்மை யார் இந்த அசட்டு மூட்டையைக் கட்டிக் கொண்டு யவனத்திலிருந்து வரச் சொன்னது?"

"உம்மைப் போன்றவர்கள் இருக்குமிடத்தில் நான் இருந்தால் தான் அர்த்தமுண்டு. எங்கள் ஜுபிட்டரின் அசட்டுத்தனத்திற்கும் உங்கள் கந்தனின் அசட்டுத்தனத்திற்கும் ஏற்றத் தாழ்வில்லை..." என்று சிரித்தான் பைலார்க்கஸ்.

"சிவ! உம்மிடம் பாசத்தை வைத்தான். அதுவும் அவன் விளையாட்டுதான்!" என்று தம் சம்புடத்திலிருந்த விபூதியை நெற்றியில் துலாம்பரமாக அணிந்து கொண்டார் பரதேசி.

"நாளங்காடிப் பக்கம் போகிறேன், வருகிறீரா?" என்றார் மீண்டும் அச்சந்நியாசி.

"ஆமாம்! அங்கே போனாலும் சாத்தனைப் பார்க்கலாம். அவனிடம் பேசுவதில் அர்த்தமுண்டு... அவனுக்குத் தெரியும் சிருஷ்டி ரகசியம்..."

"ஓஹோ! அந்தச் சிலை செய்கிற கிழவனையா? உமக்கு ஏற்ற பைத்தியக்காரன் தான்... ஏதேது! அவனே அதோ வருகிறானே!" என்றார் சாமியார்.

பைலார்க்கஸ் எழுந்து அவனை யவன முறையில் வணங்கினான்.

சாத்தனுக்கு எண்பது வயதிருக்கும்; தொண்டு கிழவன். ஆனால் வலிமை குன்றவில்லை; கண்களின் தீட்சண்யம் போகவில்லை. பிரமன் மனித வடிவம் பெற்றது போல் காணப்பட்டான். அவனும் கைகூப்பி வணங்கி, "பைலார்க்கஸ், உன்னைத்தான் தேடி வந்தேன்! வீட்டிற்கு வருகிறாயா? எனது லட்சியம் இன்றுதான் வடிவம் பெற்றது...!" என்று ஒரு குழந்தையின் உற்சாகத்துடன் கூவியழைத்தான்.

"இவரைத் தெரியுமா? பாண்டிய நாட்டு, உங்கள் பரதேசி... அவர் தத்துவங்களை எல்லாம் என்னுள் திணித்துப் பார்த்தார்... பைலார்க்கஸிடம் முடியுமா?" என்று கேலியாகச் சிரித்தான் யவணன்.

"சுவாமி வரணும், இன்று என் குடிசையில் அமுது படி கழிக்க வேண்டும்" என்று பரதேசியைச் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தான் சாத்தன்.

"என்ன, என்ன! நீயுமா?" என்றான் பைலார்க்கஸ்.

"பைலார்க்கஸ்! நீ நிரீசுவரவாதியாக இருப்பதில் எனக்கு வருத்தமில்லை; மற்றவரைக் கேலி செய்யாதே..."

"அதற்குத்தான் நான் பிறந்திருக்கிறேன், அப்பா! எனது வேலை அது..."

"சரி, வாருங்கள் போகலாம், சுவாமி வரணும்!" என்று இருவரையும் இரட்டை மாட்டு வண்டிக்கு அழைத்துச் சென்றான் சிற்பி.

வண்டியின் கதி மெதுவாகத்தான் இருக்க முடிந்தது. எதிரே யானைகளும், பொதி கழுதை, பொதி மாடுகளும், துறைமுகத்தை நோக்கிவரும் நேரத்தில் தீப்பந்தம் பிடித்துச் செல்லும் மக்களை விலக்கிக் கொண்டு வண்டி செல்வது கடினந்தான். திடீரென்று அரசாங்க உத்தியோகஸ்தர்களின் ரதம், யானை வந்துவிட்டால் தெருவே தூளிபடும். முரசொலி இருந்து என்ன பயன்? அந்த உப்பு வண்டி ஓட்டிச்செல்லும் பெண் சிறிது தவறினால் ரதத்தின் அடியில்தான்! சாத்தனின் வண்டி அதில் முட்டிக் கொள்ளவிருந்தது.

"தெய்வச் செயல்!" என்றான் சாத்தன்.

"உன் சிருஷ்டி சக்தி!" என்றான் பைலார்க்கஸ், வேறு எதையோ நினைத்துக் கொண்டு.

"பைலார்க்கஸ், உனது பேச்சு எனது பெருமையைச் சாந்தி செய்யலாம். நான் எத்தனை நாள் கஷ்டப்பட்டேன்! அது உனக்குத் தெரியுமா? நீ நேற்றுப் பிறந்தவன்... கூத்து!... அதில் எவ்வளவு அர்த்தம்! மனிதனுக்குத் தெரிந்ததெல்லாம், தெரியவேண்டுவதெல்லாம்... இந்தப் பிரபஞ்சமே, பைலார்க்கஸ், நீ நினைப்பது போல் வெறும் பாழ் வெளியன்று; அர்த்தமற்ற பேய்க் குழப்பம் அன்று... இருபது வயசிருக்கும்; அப்போ ஒரு தரம் பாண்டிய நாட்டுக்குப் போயிருந்தேன்... சிற்பத்தைப் பார்க்க வேண்டுமானால் கொல்லிப் பாவையைப் பார்க்க வேண்டும். அங்கேதான், ஒரு மறவன், நாகன், ஒரு கூத்தில் அபிநயம் பிடித்தான். அந்தக் கால் வளைவு, அதை அதிலே பிடித்தேன்... உலகத்தின் அர்த்தத்தை... ஒவ்வொன்றாக, படிப்படியாக வளர்ந்தது... அந்த மலையத்து நடிகைதான் முகத்தின் சாந்தியை, அந்த அபூர்வமான புன்சிரிப்பை, அர்த்தமற்ற அர்த்தத்தை - பைலார்க்கஸ், உனக்கென்ன! நீ கேலிக்காரன் - உப நிஷத்தில் தேடியலைந்தேன்... ஹிமயத்தில் தேடியலைந்தேன்... சாந்தி அந்த இரவு... என் மனைவி அங்கயற்கண்ணி இறந்த அன்று கிட்டியது... பிறகு வெண்கலக் கலப்பிற்கு என்ன பரீட்சை! என்ன ஏமாற்றம்!... ஆசை தான் வழிகாட்டியது. அந்த ரூப சௌந்தரியம் பெறுவதற்கு எத்தனை ஆட்களைத் தேடினேன்!... அதன் ஒரு சாயை... நீலமலைக் கொடுங்கோலன் - பத்து வருஷங்களுக்கு முன்பு சிரச்சேதம் செய்யப்பட்டானே - அவனுடைய இடைதுவளுதலில் கண்டேன்... தெய்வம் ஒன்று உண்டு... அதன் அர்த்தத்தை என் சிலை உணர்த்த முடிந்தது எனது பூர்வ ஜன்மப் பலன்... இந்தக் கைகளால்... பின்னாலிருந்து ஓர் அர்த்தமுள்ள வஸ்து தூண்டாவிட்டால்... அதைச் சாதிக்க முடியும்?"

"நீதான் சாதித்தாய்! நீதான் பிரம்மா! உன் சாதனை தான் அது. சிருஷ்டி! மயங்காதே! பயப்படாதே! நீதான் பிரம்மா! சிருஷ்டித் தெய்வம்!" என்று பைலார்க்கஸ் அடுக்கிக் கொண்டே போனான்.

சாமியார் புன்சிரிப்புடன் வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்.

வண்டியும் நாளங்காடியை அடைந்து, கீழ்ச் சதுக்கத்தின் வழியாக ஒரு சந்தில் திரும்பி, ஒரு வீட்டின் முன்பு நின்றது.

மூவரும் இறங்கி வாசற்படியில் ஏறினர். ஒரு யவனப் பெண் வந்து காலைக் கழுவினாள். ஒரு காப்பிரி, மரியாதையாகக் குனிந்து, கலிங்க வஸ்திரத்தினால் துடைத்தான்.

"சுவாமி, வரவேண்டும்! பைலார்க்கஸ், இப்படி வா!" என்று இருவரையும் அழைத்துக் கொண்டு ஓர் அறைக்குள் சென்றான் சாத்தன்... அவன் வயதிற்கு அவ்வளவு துடிதுடிப்பு ஆச்சரியமானதுதான்!

"மூபாங்கோ, தீபம்!" என்று கத்தினான். அந்தக் காப்பிரி ஒரு கைவிளக்கை எடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தான். ஜன்னல் இல்லாத அந்த அறையிலும் காற்று நூலிழை போல் வந்து உள்ளத்தையும் உடலையும் மயக்கியது.

"இங்கு கூடவா விளக்கு இல்லை! திரையை ஒதுக்கு! ஸ்வாமி, பைலார்க்கஸ், இதுதான் என் வாழ்க்கை!" என்று திரையை ஒதுக்கினான்.

இருவரும் ஸ்தம்பித்து நின்றனர். அந்த மங்கிய தீபவொளியில், ஒற்றைக் காலைத் தூக்கி நடிக்கும் பாவனையில், ஆள் உயரத்தில் மனித விக்ரகம்! விரிந்த சடையும் அதன் மீது விளங்கும் பிறையும், விரிந்து சின்முத்திரைகளைக் காண்பிக்கும் கைகளும், அந்த அதரத்தில் தோன்றிய அபூர்வப் புன்னகையும் மனத்தில் அலைமேல் அலையாகச் சிந்தனைக் கற்பனைகளைக் கிளப்பின. மூவரும் அந்தச் சிலையேயாயினர். சிலையின் ஒவ்வொரு வளைவிலும், ஒவ்வொரு அங்கத்திலும் என்ன ஜீவத் துடிதுடிப்பு!

சந்நியாசி, தம்மையறியாமல் பாட ஆரம்பித்தார்...

பனித்த சடையும், பவளம்போல்
மேனியும், பால் வெண்ணீறும்,
குனித்த புருவமும், கொவ்வைச்
செவ்வாயும், குமிண் சிரிப்பும்,
இனித்தங்கசிய எடுத்த பொற்
பாதமும் காணப் பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே
இந்த மா நிலத்தே!

"சுவாமி, அப்படிச் சொல்லக் கூடாது!"

"சாத்தா! அவர் சொல்லுவதுதான் சரி! இது கலையா! இது சிருஷ்டி! இதை என்ன செய்யப் போகிறாய்?"

"அரசன் கோவிலுக்கு... இதென்ன கேள்வி?"

"என்ன! இந்த அசட்டுத்தனத்தை விட்டுத் தள்ளு... அரசனுடைய அந்தப்புர நிர்வாண உருவங்களின் பக்கலில் இதை வைத்தாலும் அர்த்தம் உண்டு... இதை உடைத்துக் குன்றின் மேல் எறிந்தாலும் அந்தத் துண்டுகளுக்கு அர்த்தம் உண்டு; ஜீவன் உண்டு..." என்று வெறி பிடித்தவன் போல் பேசினான் பைலார்க்கஸ்.

"சீ, பைலார்க்கஸ்! உனது வெறி பிடித்த கொள்கைகளுக்கு யவனந்தான் சரி! அகஸ்தூஸா - அந்த உங்கள் சாம்ராட் - அவனுக்குத் தான் சரி உன் பேத்தல்!"

"சாத்தனாரே! உமது இலட்சியத்திற்கு அரசன் கோரிக்கைதான் சரியான முடிவு. இனி ஏன் இந்த ஜைனர்கள் தலைதூக்கப் போகிறார்கள்...!" என்றார் சாமியார்.

"இந்த வெறிபிடித்த மனிதர்களை விட, அந்தக் கடலுக்கு எவ்வளவோ புத்தியிருக்கிறது..." என்று கோபித்துக் கொண்டு பைலார்க்கஸ் வெளியேறிவிட்டான்.

2

அன்று தான் கும்பாபிஷேகம். சிலையைப் பிரதிஷ்டை செய்த தினம். சோழ தேசத்திலேயே அது ஒரு பெரும் களியாட்டம் என்று கூறவேண்டும். சாத்தனுக்கு இலட்சியம் நிறைவேறிற்று. அன்று பைலார்க்கஸ் தனது குதூகலத்தில் பங்கெடுத்துக் கொள்ள உயிருடன் இல்லையே என்ற வருத்தம் சாத்தனுக்கு அதிகம்.

புதிய கோவிலிருந்து வீடு சேரும்பொழுது அர்த்தஜாமமாகி விட்டது.

வயதின் முதிர்ச்சி அன்றுதான் அவனைச் சிறிது தளர்த்தியது. சோர்ந்து படுத்தான். அயர்ந்துவிட்டான்...

அப்பா! என்ன ஜோதி! அகண்டமான எல்லையற்ற வெளி! அதிலே சாத்தனின் இலட்சியம், அந்த அர்த்தமற்ற, ஆனால் அர்த்தபுஷ்டி மிகுந்த, ஒரு புன்சிரிப்பு! மெதுவான ஹிருதய தாளத்தில் நடனம்! என்ன ஜீவன்! என்ன சிருஷ்டி!

திடீரென்று எல்லாம் இருண்டது! ஒரே கன்னக் கனிந்த இருள்! ஹிருதய சூனியம் போன்ற பாழ் இருட்டு!

பிறகும் ஒளி... இப்பொழுது தங்கத்தினாலான கோவில்! கண்கள் கூசும்படியான பிரகாசம்!... கதவுகள் மணியோசையுடன் தாமே திறக்கின்றன... உள்ளே அந்தப் பழைய இருள்!

சாத்தன் உள்ளே செல்லுகிறான். இருட்டின் கரு போன்ற இடம். அதில் மங்கிய தீபவொளி தோன்றுகிறது! என்ன! இதுவா பழைய சிலை! உயிரில்லை! கவர்ச்சிக்கும் புன்னகையில்லையே!... எல்லாம் மருள்... மருள்...!

அந்தகார வாசலில் சாயைகள் போல் உருவங்கள் குனிந்தபடி வருகின்றன. குனிந்தபடி வணங்குகின்றன.

"எனக்கு மோட்சம்! எனக்கு மோட்சம்!" என்ற எதிரொலிப்பு. அந்தக் கோடிக்கணக்கான சாயைகளின் கூட்டத்தில் ஒருவராவது சிலையை ஏறிட்டுப் பார்க்கவில்லை! இப்படியே தினமும்...

நாட்கள், வருஷங்கள், நூற்றாண்டுகள் அலைபோல் புரள்கின்றன. அந்த அனந்த கோடி வருஷங்களில் ஒரு சாயையாவது ஏறிட்டுப் பார்க்கவேண்டுமே!

"எனக்கு மோட்சம்...!" இதுதான் பல்லவி, பாட்டு, எல்லாம்!

சாத்தன் நிற்கிறான்...

எத்தனை யுகங்கள்! அவனுக்கு வெறி பிடிக்கிறது. "உயிரற்ற மோட்சச் சிலையே! உன்னை உடைக்கிறேன்! போடு! உடை! ஐயோ, தெய்வமே! உடைய மாட்டாயா! உடைந்துவிடு! நீ உடைந்து போ! அல்லது உன் மழு என்னைக் கொல்லட்டும். அர்த்தமற்ற கூத்து...!" இடி இடித்த மாதிரி சிலை புரள்கிறது - சாத்தனது ஆலிங்கனத்தில், அவன் ரத்தத்தில் அது தோய்கிறது... ரத்தம் அவ்வளவு புனிதமா! பழைய புன்னகை!...

சாத்தன் திடுக்கிட்டு விழித்தான். வெள்ளி முளைத்துவிட்டது. புதிய கோவிலின் சங்கநாதத்துடன் அவனது குழம்பிய உள்ளம் முட்டுகிறது.

"என்ன பேய்க் கனவு, சீ!" என்று விபூதியை நெற்றியில் அணிந்து கொள்கிறான்.

"பைலார்க்கஸ் - பாவம் அவன் இருந்தால்..." சாத்தனின் மனம் சாந்தி பெறவில்லை.

மணிக்கொடி, 25-08-1935

('சில்பியின் நரகம்' என்ற பெயரிலேயே மணிக்கொடியில் இக்கதை வெளியாகி உள்ளது)
------------

88. சித்தம் போக்கு

அன்று ஆபீஸிலிருந்து வரும்பொழுது ரொம்பக் களைப்பு.

அச்சு யந்திரத்தின் கவந்த உபாசனைக்கு ஈடுகொடுக்க முடியவில்லை.

வெளியிலே வந்தேன்.

தெருவிலே கூட்டம்.

குப்பைத் தொட்டியில் ஒரு இறந்த குழந்தை.

எந்தத் தாயோ? அவள் யாராயிருந்தாலென்ன? சமூக ஒப்பந்தத்திற்குப் பயந்து செய்துவிட்டாள். அதற்கென்ன? கூடியிருந்த பெண்கள் அந்தக் குற்றவாளியை - அவள் அப்படித்தான்; சீர்திருத்தவாதிகள் என்ன கத்தினாலும் தானென்ன? - அடிவயிற்றிலிருந்துதான் திட்டினார்கள். அவர்கள் உணர்ச்சியும் சரிதான். அவர்களுக்குத்தான் தெரியும் அந்த சிருஷ்டியின் உத்ஸாகம், மேதை, துன்பத்தின் இன்பம்.

அவள் உணர்ச்சிகள்? அதற்கென்ன?

*****

அங்கிருந்து திரும்பினேன். ஒரு பால்காரன் ஒரு வீட்டின் முன்பு கறந்து கொண்டிருக்கிறான். அவன் வழி வெகு சுருக்கமானது; லேசானது.

அவனுக்கு அந்தப் பசுவின் கன்றைப் பற்றிக் கவலையில்லை.

பசுவின் பாலைப் பெற்றுக்கொள்வதற்கு அந்தப் பசுவின் கன்று இறந்து போனாலென்ன? அதன் தோல் எங்கு ஓடிப்போய் விடுகிறது? அதைப் பசுவின் காலில் கட்டிவைத்துவிட்டால் பசு சாந்தியடைந்து விடுகிறது. பசுவும் உள்ளன்புடன் பால் கொடுக்கிறது. இதைவிட வேறு என்ன வேண்டும்?

செத்த குழந்தை; தோல் கன்றுக்குட்டி!

போதும்! போதும்!

நாம் கெட்டிக்காரர்கள்தாம்.

எனக்குக் கடற்கரைக்குப் போகவேண்டும் என்ற ஆசை.

மனிதனின் வெற்றியைக் கவனித்தது போதாதா?

கடற்கரைக்குச் சென்றேன்.

லேசான தென்றல், டாக்கா மஸ்லினை உடுத்திய மாதிரி மேலே தவழ்ந்தது. நல்ல காலமாக ரேடியோ முடிந்துவிட்டது.

கடற்கரையில் சற்று தூரத்தில் ஒரு பெண்ணின் கீதம். சங்கரா பரணம்; இன்பந்தான். நின்று கேட்டால் குடி முழுகிப்போகுமாமே, ஹிந்து சமூகத்திற்கு.

*****

எனக்குத் தகுந்தவள் அந்தக் கடல்தான்.

அவளைப் பார்த்தால் யாரும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள் - உற்றுப் பார்த்தாலும்.

வானத்திலே சந்திரன். அவனைப் பற்றி அக்கறையில்லை. அன்று அவன் ஆதிக்கம் அதிகமில்லை. சுற்றி மேகப்படலம்; மங்கிய ஒளி.

நீலக்கடல்; அதற்குப் பெயர் அன்றுதான் தெரிந்தது. நீலக்கடல்!

நீலமா? அதிலே உயிர் ததும்பிக்கொண்டல்லவா இருந்தது!

தூரத்திலே - அடிவானத்தில் அல்ல - அதுவும் கடலும் சந்திக்கும் இடத்தில் - அவள் குறுநகை.

அலைகள் மேலெழுந்து வெள்ளை வழிகாட்டி கண்சிமிட்டலுடன் விழுந்து மறைந்தன.

அதில் என்ன பொருள்? என் மனதில் ஒரு குதூகலம்; காரணமில்லாத துக்கத்தினால். அதன் பொருள் என்ன?

என்னடீ! ஏன் அகண்ட சிருஷ்டியின் மர்மமாக - மந்திரமாக - இருக்கிறாய்? உன்னுடைய குறுநகையின் மர்மமென்ன?

நீ யார்?

ஏன் என் மனதில் இந்த துக்கம்? எனது துயரம்...?

கண்சிமிட்டி மறைகிறாயே, யாருக்கு? அதன் பொருள் என்ன?

வரவா? அடியே! உன் மனந்தான் என்ன?

பொருள் விளங்கவில்லையே! நீ யார்?

ஆம்; அறிந்து கொண்டேன்.

நீதான் என் அரசி!

என் கா...த...லி! மனித ஹ்ருதயத்தின் துக்கத்திலே பிறக்கும் கவிதை என்னும் என் தேவி!

மணிக்கொடி, 02-09-1934
-----------------

89. சித்தி

1

செண்பகராமன் பிள்ளைக்கு வைராக்கியம் திடீரென்று ஏற்பட்டது. உலக வியவகாரங்களில் நொடித்துப் போய், மனசு கைத்து அவர் காஷாயத்தை மேற்கொள்ளவில்லை. தொட்டதெல்லாம் பொன்னான கைதான் அது. ஊரிலே செல்வாக்கு, உள்ளத்திலே நிறைவு ஏற்பட வேண்டியதற்குப் போதுமான சௌகரியம் எல்லாம் இருக்கத்தான் செய்தது. அவர் சிரித்துக்கொண்டேதான் காவி அணிந்து, கால் விட்ட திசையில் நடந்தார். துணை காரணமாகத் துன்பமோ, தீட்சையோ அவரை உந்தித் தள்ளவில்லை. பிள்ளையவர்கள் புறப்பட்ட தினம் வெள்ளிக்கிழமை. மூன்று நாட்கள் வீட்டில் யாரும் அவர் வரவில்லையே என்று கவலைப்படவில்லை. காரணம் அடிக்கடி அவர் அவ்வாறு 'சோலியாக' அசலூருக்குப் புறப்பட்டுவிடுவது வீடறிந்த பழக்கம். மூன்றாம் நாள் வந்த கார்டுதான் 'அவர் இப்பொழுது செண்பகராமன் பிள்ளை அல்ல; முப்பது கோட்டை விதைப்பாடும், மூன்று லக்ஷம் பாங்கி டிபாசிட்டும் உள்ள பண்ணையார் அல்ல; மண்டபத்துக்கு மண்டபம் கொடுங்கை வைத்துப் படுத்துத் தூங்கிக் கால்கொண்ட திசையில் செல்லும் ஆண்டி' என்பதை அறிவித்தது.

பிள்ளையவர்கள் செயல்கேட்டு ஊரே கலகலத்து விட்டது. திடீரென்று வைராக்கியம் ஏற்படுவதற்குக் காரணம் என்ன என்பது தெரியாத பலருக்கு, மனங்கண்டது எல்லாம் காரணமாகத் தெரிந்தது. யார் யாரெல்லாமோ என்ன என்ன எல்லாமோ சொன்னார்கள். அவ்வளவு காரணமும் தப்பு என்பது தெரிந்த ஒருவர் உண்டு. அவரே மீனாட்சியம்மாள் என்ற ஸ்ரீமதி செண்பகராமன் பிள்ளை. சம்சார பந்தத்தில் மனிதன் எப்படி நடந்துகொள்கிறான் என்பதைப் பூர்ணமாகத் தெரிந்துகொள்வதற்கு ஒருவருக்குத்தான் முடியும். அம்மி மிதித்து அருந்ததி பார்த்து ஊரறிய ஒரே தலையணையில் தலை சாய்க்கச் சம்மதித்துக் கொண்ட ஜீவனுக்குத் தான், அன்று தொடங்கிய ஒழுங்கு எந்தக் கதியில், எந்த நியதியில் செல்லுகிறது என்பதைப் பூரணமாகத் தெரிந்துகொள்ளச் சௌகரியம் உண்டு. விவேகிகள் தெரிந்து கொள்ளுவார்கள்; அந்த வசதி பெறாதவர்கள் தலையைத் தாங்கிய தலையணையைப் போல பாரத்தைத் தாங்கியதால் விழுந்த குழியைத்தான் மன உலகில் பெற்றிருக்க முடியும். மீனாட்சியம்மைக்கு, தன் கணவர், தன்னுடன் அந்த இளமையிலே, நிதானம் இழந்த தெப்பம் போல உணர்ச்சிச் சுழிப்பில் மிதந்த காலத்திலும், பிறகு குடும்பம், குடித்தனம் என்ற வேட்கையில் வேரூன்ற நினைத்து ஆவேசத்துடன் சம்பாத்தியத்தில் தம்மை மறந்து இறங்கிய காலத்திலும், ஊரின் நன்மை தின்மைகளிலும் வல்லடி வழக்குகளிலும் தர்மாவேசம் உந்தத் தம்மை மறந்து வேலைசெய்த காலத்திலும், தாமரையிலையில் உருண்டு உருண்டு விளையாடும் தண்ணீர் போல இருந்து வருகிறார் என்பதைப் பூரணமாக அறிந்திருந்தாள். அவரது செயல் அவளுக்கு அதிசயமாகத் தெரியவில்லை.

செண்பகராமன் பிள்ளையின் தங்கை சித்திரை அம்மாள் அண்ணனுக்கு யாரோ 'செய்வினை' செய்துவிட்டார்கள் என்று தான் எண்ணினாள். கண் கண்ட ராசாவாக ஊரை ஆண்ட அண்ணன், ஒரே நாளில் ஆண்டியாகி ஓடுவதற்கு வேறு காரணம் இருக்க முடியாதென்று தீர்மானமாக நம்பினாள்; அவளுடைய புருஷரோ சற்றுச் சந்தேகச் சுபாவி. "அத்தானுக்குப் பித்தந்தான்" என்று தீர்மானித்து விட்டார். தலைக்குனிவாக இருந்தது. பிள்ளையவர்களை மீண்டும் கைப்பிடியாகப் பிடித்துவந்து வைத்தியம் செய்து குணப்படுத்திக் குடும்பத்தில் மறுபடியும் கட்டிப்போட வேண்டும் என்று ஆசைப்பட்டார். சேதி கேட்டு வந்த இவ்விருவருக்கும், "அவுக திரும்ப மாட்டாக; நீங்க போனா அலச்சல்தான் மிச்சம்; நல்ல வளியிலே நாம போய் நல்ல பாம்பெ போடலாமா?" என்று நிதானம் குறையாமல் பேசிய மீனாட்சியம்மையின் வார்த்தைகள் தாம் புரியவில்லை. ஒருவேளை... ஒருவேளை, அவரை விரட்டிவிட்டுச் சொத்தையும் பொருளையும் தாய் வீட்டுக்குச் சுருட்டிக்கொண்டு போக மீனாட்சியம்மை வெட்டிய குழியோ என்று சந்தேகித்தார்கள்.

பிள்ளைகளுக்குத் தாமே மைனர் கார்டியன் என்றும், செண்பகராமன் பிள்ளையவர்களின் குடும்ப நிர்வாகம் முழுவதும் தம் அதிகாரத்தின் கீழ் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் அவர் முதல் காரியமாகக் கோர்ட்டில் வழக்குத் தாக்கல் செய்தார். மீனாட்சியம்மையின் பந்துக்கள் இதைப் பார்த்துக்கொண்டிருப்பார்களா? அவளுக்கு ஒன்றுவிட்ட சகோதரர் ஒருவர் உண்டு. அவர்தாம் கிராமத்தில் இருந்துகொண்டு செண்பகராமன் பிள்ளையின் நிலபுலன் வரவுசெலவுக் கணக்குகளைப் பார்த்துக்கொண்டிருந்தார். நிர்வாகம் தம்வசமேதான் கொடுக்கப்படுவது நியாயம் என்பதற்கு அனுசரணையாக, செண்பகராமன் பிள்ளையின் ஒரு மகன் சார்பாக ஸிவில் வழக்குப் புலியான ஒரு வக்கீலுடன் சேர்ந்து எதிர் வழக்குத் தாக்கல் செய்தார். மஞ்சட் கயிறு அகலாது போனாலும் மீனாட்சியம்மையின் கதி வெள்ளைப் புடைவை வியவகாரமாயிற்று.

தங்கையம்மாள், ஊர் ஊராக ஆள்விட்டுத் தேட ஏற்பாடு செய்தாள். ஸிவில் வழக்கு ஆவேசத்திலிருந்த அவளுடைய கணவருக்கு அது பிடிக்கவில்லை. வீணாகக் காலத்தைப் போக்கி, சொத்துச் சீரழிந்த பிறகு அத்தான் வந்தென்ன, அப்படியே ஆண்டியாகப் போயென்ன என்று நினைத்தார். ஆள்விட்டுத் தேடுவதை அப்புறம் பார்த்துக் கொள்வோம் என்பது அவரது கட்சி. ஊரிலே அவருக்குச் செல்வாக்கு உண்டு; செயலுண்டு. செண்பகராமன் பிள்ளையுடைய வாண்டுப் பயலுக்கு முறைப்பெண் என்ற பாத்தியதைக்கு வாண்டுப் பெண் ஒருத்தி அவருக்கு உண்டு. அவ்விருவருக்கும் செல்லக் கல்யாணம் செய்துவைத்துச் செண்பகராமன் பிள்ளை விளையாடியதனால் பிடி பலமாகத்தான் இருந்தது. அது இன்னும் கொஞ்சம் பலமாகுமென்ற நைப்பாசையும் உண்டு. அவருக்குப் பிடி மட்டும் பலம். உரிமையோ பாத்தியதையோ இல்லை. எதிர்பாத்தியதைக்காரனுக்கு ஒரு வகையில் உரிமை இருந்தாலும் ஊர் தன் பக்கந்தான் சேரும் என்ற பலத்த நம்பிக்கை அவருக்கு உண்டு.

2

செண்பகராமன் பிள்ளை காவிபோட்டுக்கொண்டு பக்கத்துச் சத்திரம் வரையில் நடந்தார். அங்கே சாப்பிடவில்லை. உடம்பிலே ஒரு தெம்பு, மனசிலே ஒரு கலகலப்பு. காரணம் அற்ற சந்தோஷம் என்று தான் சொல்ல வேண்டும்; சிட்டுக்குருவி மாதிரி, அவருக்கு இந்தத் தீர்க்கமான காரியம் இவ்வளவு சுளுவில் கைகூடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டதே இல்லை. கண்ணீரும் அழுகையும் வழிமறிக்கக் கூடும். ஊரார் வந்து நின்று எழுப்பும் கௌரவம் என்ற மதில்களைத் தாண்ட முடியாது போய்விடக் கூடும் என்ற அச்சம் அவருக்கு இருந்து வந்ததுண்டு. ஆனால் ஒன்று: யாரோ ஒருவர் கணீர் என்ற குரலில் "அப்பா, செண்பகராமா!" என்று கூப்பிடுவது போன்ற தோற்றம் அவரைப் பலமுறை ஏமாற்றியதுண்டு. சில சமயம் காலமாகிவிட்ட அவருடைய தகப்பனாரின் குரல் போலக் கேட்கும்.

முன்பு எப்பொழுதோ ஒரு முறை, நடுநிசிப் போது, வாலிபம் குன்றாத காலம், மனைவியுடன் சல்லாபமாகப் பேசிக் கட்டித் தழுவும் சமயத்தில், யாரோ ஜன்னலுக்கு வெளியே வந்து நின்று, "அப்பா, செண்பகராமா!" என்று கூப்பிட்டது போலக் கேட்டது. "அப்பாவா? இதோ வருகிறேன்" என்று தழுவிய கையை வழுவவிட்டு, எழுந்து வெளியே கதவைத் திறந்து கொண்டு வந்தார். வந்து, வெளியே வெறிச்சோடிக் கிடந்த பட்டகசாலையில் நின்றபொழுதுதான் 'இதென்ன முட்டாள்தனம்!' என்ற பிரக்ஞை எழுந்தது. குரலும் தகப்பனாருடையது போல இருந்தது என்ற புத்தித் தெளிவு போன்ற ஒரு சந்தேகமும் ஏற்பட்டது. இவர் குரல் கொடுத்துக் கொண்டு எழுந்து சென்ற நிலையில் உடலும் மனமும் கூம்பிப் போன மீனாட்சியம்மாள், "அப்பா செத்து அஞ்சு வருஷமாச்சே. இதென்ன தெய்வக் குத்தமோ, சோதனையோ" என்று நடுங்கிக் கொண்டு கேட்டாள். அவளைத் தேற்ற, வேறு எங்கோ கேட்ட சத்தம் என்று சொல்லி சமாளித்துக் கொள்வதற்குள் அவர் பாடு பெரும்பாடாகிவிட்டது.

இதே மாதிரிதான் நடுப்பகல்: கடையில் உட்கார்ந்து பெரிய கணக்கப்பிள்ளை எடுத்துக்கொடுத்த பேரேடுகளைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும்போது, இதே மாதிரி யாரோ கூப்பிட்டார்கள்; பதில் குரல் கொடுக்க வாயெடுத்தவர் மின்னலதிர்ச்சியுடன் எதிர்மோதி வந்த சூழ்நிலை உணர்ச்சி வேதனை கொடுத்தபடி வாயடைத்தது. கடையிலே உட்கார்ந்திருந்தபடி சமாளிப்பதற்கு மிகவும் சங்கடப்பட்டார்.

சாலையிலே, சுருக்கிருட்டிலே முன் என்ன இருக்கிறது என்ற கவலை சற்றும் இல்லாமல், முதுகில் போட்ட சரடு புரண்டு விழாமல், 'கினிங் கினிங்' என்ற மணிச் சத்தத்துடன் நடந்துபோகும் காளைகளைப் போல மனசை அசை போடவிட்டு நடந்தார். சமயா சமயங்களில் ஊரில் எப்படி இந்தக் காரியம் கழித்துக் கொண்டு எதிர் ஒலிக்கும் என்பதை அவர் மனசு கற்பனை செய்ய முயலும். அவ்வளவையும் தப்பித்து வந்துவிட்டதில் ஓர் எக்களிப்பு; அதாவது, தாய் கிணற்றடியில் தண்ணீர் எடுக்கச் சென்றபோது மெதுவாக அடுக்குச் சட்டியைக் கவிழ்த்து அதன்மேல் ஏறி நின்று, உறியில் உள்ள நெய்விளங்காயைத் திருடித் தின்றுவிட்டு, உதட்டோ ரத்தில் ஒரு பொடி இல்லாமல் துடைத்துக் கொண்டதாக மனப்பால் குடித்துக்கொண்டு, "ஏளா, எனக்குப் பண்டமில்லையா?" என்று பாசாங்கு செய்யும் தன்னுடைய சுப்பையாவின் காரியம் போல, பிறர் கண்களில் படாதபடி வியவகாரத்தை நடத்திக் கொண்டதில் ஓர் எக்களிப்பு.

"என்னலே திருட்டு மூதி! உன் ஒதட்டிலேதான், உறிப்பானேலெ இருந்த நெய்விளங்காய் உக்காந்திருக்கே" என்று அவனுடைய தாய் அவன் குண்டுணித்தனத்தைச் செல்லமாக வெளிப்படுத்துவது போல், காலம் என்ற அன்னையும் தம்முடைய திருட்டுத்தனத்தை வெளிப்படுத்திவிடும் என்பதை அவர் புரிந்து கொள்ளாமலில்லை. அப்போது நாம் இங்கு இருக்கமாட்டோ ம் என்பதில்தான் அவருக்கு ஏகமேனியாக எக்களிப்புத் தலைசுற்றி ஆடியது.

ஆனால் ஒரு காரியம். "நாம் ஏன் இந்தக் காவியைப் போட்டுக் கொள்ள வேண்டும்?" என்ற கேள்வி மட்டும், செய்கிற காரியத்தை எதிர்த்துக் கேள்வி போட்டு மடக்கிக் கொண்டே இருந்தது.

மாடு இழுக்க வண்டி உருண்டது. மனசு இழுக்க அவரும் நடந்தார், நடந்தார், நடந்தார்... நடந்துகொண்டே இருந்தார். கறுப்பாகச் செறிந்து கிடந்த மரங்கள், கரும்பச்சை கண்டு, கடும்பச்சையாகிப் பளபளவென்று மின்னின. நக்ஷத்திரங்கள் எப்பொழுது மறைந்தன என்ற விவரம் அவருக்குத் தெரியாது. ஊருக்கு வெகு தொலைவில், இரட்டை மாட்டு வண்டிக்குப் பின்னால் எங்கோ நடந்து கொண்டிருப்பது அவருக்குத் தெரிந்தது.

தூங்கிக்கொண்டிருந்த வண்டிக்காரன் எழுந்து, அவிழ்ந்து கிடந்த முண்டாசை எடுத்துக் கட்டிக்கொண்டு, "தை, தை" என்று காளைகளை நிமிண்டினான். சக்கரங்கள் சடபடவென்று உருண்டன.

வண்டியும் தூசிப்படலத்தை எழுப்பிக்கொண்டு அந்தத் திரை மறைவில் ஓடி மறைந்தது.

எதிரியை மடக்குவதற்குத்தான் சரக்கூடம் போடுவார்கள்; பிரம்மா ஸ்திரத்தைப் பிரயோகித்தால் தான் புகைப்படலத்தின் மறைவில் வருகை தெரியாமல் வந்து எதிரியின் வல்லுயிரை வாங்கும். ஓடுகிற மாட்டுவண்டிக்கு இந்த ராசாங்கமெல்லாம் என்னத்திற்கு? இப்படியாக நினைத்துக்கொண்டு சிரித்தார் பிள்ளை. படித்த படிப்பு எல்லாம் மனசில் திசைமாறித் தாவி, தம்முடைய பயனற்ற தன்மையைக் காட்டிக் கொள்வதாக நினைத்தார். இனிமேல் படித்துப் பாழாய்ப் போன கதையை எல்லாம் தலையில் விஷம் ஏறுவதுபோல் ஏறித் தம்மைக் கிறங்க வைப்பதற்குச் சற்றும் இடம் கொடுக்கக் கூடாது என்று நினைத்தார். படித்த படிப்பென்ன! அறிந்த ஞானம் என்ன! எல்லாம் எதற்கு? யார் கூப்பிடுகிறார்கள் என்ற விடுகதையை விடுவிக்க வகையில்லாமல் திண்டாடுகிறதே!

சாலை இருந்த இடத்தில் திடுதிப்பென்று வளைந்து திரும்புகிறது. பிள்ளையவர்களும் திரும்பினார். திருப்பத்துக்கு அப்பால் ஆலமரமும் ஒரு சின்ன மண்டபமும் கிணறும் இருந்தன. வண்டிக்காரன் காளைகளை நுகத்தடியில் கட்டிவிட்டு, அடுப்பு மூட்டி, ஆலம் விழுது கொண்டு பல் துலக்கிக்கொண்டிருந்தான். மண்டபத்து முகப்புத் தூணில் முதுகைச் சாய்த்து, அருகே ஆண்டிப் பொட்டணம் துணை இருக்க, கிழட்டுச் சாமி ஒன்று மனசைச் சோம்பலிலே மிதக்கவிட்டு நிர்விசாரமாக உட்கார்ந்துகொண்டிருந்தது. வண்டிக்காரனிடம் பட்டையை வாங்கி, பல் துலக்கி, ஸ்நானம் செய்து இரண்டு மிடறு தண்ணீர் பருகிவிட்டு மண்டபத்தில் கால் உளைச்சலைப் போக்கிக் கொண்டு நிதானமாக நடந்தால் என்ன என்று செண்பகராமன் பிள்ளை கருதினார்.

வழக்கம் போல, "ஏலே, அந்தப் பட்டையை இப்படிப் போடு" என்று அதிகாரம் செய்யத்தான் அவருக்குத் தெரிந்திருந்தது.

ஆண்டியாகிப் பன்னிரண்டு மணிநேரம் கடந்தும் அதிகார வாசனை போகவில்லை.

"என்ன சாமி, ஏலே, ஓலே இங்கிய? ஓலே பட்டெல இருக்கும்" என்று எடுப்பாகப் பதில் சொன்னான் வண்டிக்காரன்.

குத்துக்கல்லில் சாய்ந்திருந்த கிழட்டுச் சாமி சிரித்தது. முத்து முத்தான பல்லும், தாடியும் பார்ப்பதற்கு மோகனமாகத்தான் இருந்தன. பிள்ளையவர்களுக்கு வேட்டியின் காவிக்கு அடுத்த சொல் அதுவல்ல என மௌனத்தைக் கடைப்பிடித்து நிழலில் உட்கார்ந்தார்.

குதிரைச் சதையை வருடிக்கொண்டார். தடவிக் கொடுத்துக் கொள்வது சுகமாக இருந்தது.

அவருக்குச் சற்றுத் தூரத்தில் மாடுகள் படுத்து அசை போட்டுக் கொண்டிருந்தன. கறுத்த காளை போன ஜன்மத்தில் வழிமறிச்சான் உத்தியோகம் போலும்! ரஸ்தாவில் பாதி தனக்கென்று படுத்துக் கொண்டிருந்தது.

இவர்கள் நடந்துவந்த திசையிலே, திருப்பத்துக்கு அப்பால், பூம்பூம் என்ற ஹார்ன் சப்தத்துடன் ஒரு வாடகை மோட்டார், கொள்ளுமட்டும் ஜனங்களை ஏற்றிக்கொண்டு பேரிரைச்சலுடன் ஐக்கிய ஜனநாயக நாடுகளின் 'ஏகோபித்த' அணி வகுப்பினர்களைக் கூட்டிக்கொண்டு திரும்பியது. வழிமறிச்சான் காளை உதறியடித்துக் கொண்டு எழுந்திருந்தது. பஸ் டிரைவர் 'ஸ்டியரிங்' சக்கரத்தை ஒடித்துத் திருப்பினான். பஸ் எதிரிலிருந்த புளியமரத்தில் ஏற முயன்றது; கவிழ்ந்தது. உள்ளே குமைந்த ஜனக் குமைச்சல் பிரலாபிக்கும் ரத்தக் களரியாயிற்று. அதிலிருந்து ஜனங்களும் மூட்டை முடிச்சுகளும் வெளியே பிய்த்து எறியப்பட்டன. உள்ளே பலர் அகப்பட்டு நசுங்கினர். ஸ்டியரிங் சக்கரத்தின் மீது டிரைவரின் பிரேதம் கவிழ்ந்து படுத்திருந்தது. ஒடிந்த கண்ணாடித் துண்டு அவன் மூக்கைச் செதுக்கி எங்கோ எறிந்துவிட்டது.

பதறி அடித்துக்கொண்டு எழுந்திருந்தார் பிள்ளை. மோட்டாரின் அடியில் சிக்கிக் கிடப்பவர்களை விடுவிப்பது எப்படி என்று தெரியாமல், அர்த்தமற்ற கூப்பாடு போட்டுக்கொண்டு வண்டியைச் சுற்றி சுற்றி ஓடிவந்தார். விபத்து பலமாகிவிட்டதனால் தனக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று உலைப் பானையைச் சற்றும் கவனிக்காமல், கட்டை வண்டிக்காரன் வண்டியைப் பூட்டிக்கொண்டு குறுக்குப் பாதையாக ஓடி ஆட்களை அழைத்துவருவதாகச் சொல்லிச் சிட்டாகப் பறந்துவிட்டான். விழுந்த காக்கையைச் சுற்றி ஓலமிடும் காக்கை மாதிரிதான் செண்பகராமன் பிள்ளை கத்தினார். அவருக்கு எப்படி உதவிசெய்வது என்று புரியவில்லை. இதற்குள் மோட்டார் வண்டியில் பின்னே இருந்தவர்கள் அதிர்ச்சியின் வேகம் அடங்கியதும் இறங்கினார்கள். செண்பகராமன் பிள்ளைக்கு மூட்டைகளை எடுத்து வரிசையாக அடுக்கத்தான் முடிந்தது. எதிரே கண்ட ஆபத்து அவரைக் கதிகலங்க வைத்துவிட்டது.

எதிரே வந்து போக்கு வண்டிகள் இரண்டொன்று நின்றன. அடிபட்டவர்களை அடுத்த ஊர்வரையில் ஏற்றிச் செல்லச் சம்மதித்தனர்.

கோடை இடி மாதிரி நிகழ்ந்த இந்த ரௌத்திர சம்பவத்தின் ஆரவாரம் ஒடுங்கி அந்த இடம் மறுபடியும் நிம்மதியாக இரண்டு மணி சாவகாசம் பிடித்தது.

தம்மை அழைக்கும் குரலின் மாயக்கூத்துப் போலத் தென்பட்டது பிள்ளைக்கு. ஆனால் ஒடிந்து வளைந்த இரும்பாக நின்ற வாடகை மோட்டார்தான் அச்சம்பவத்தை நினைப்பூட்டும் தழும்பாக, கண்களை உறுத்தியது.

செயல் ஒடுங்கி நின்ற பிள்ளை, நிதானம் பெற்றுக் கட்டை வண்டிக்காரன் போட்டுவிட்டு ஓடின பட்டையை எடுத்துக்கொண்டு கிணற்றருகில் சென்றார்; பல் துலக்கினார்; குளித்தார்; ஈரவேட்டியை ஆலம் விழுதுகளில் தொங்கவிட்டார்; மண்டபத்தில் வந்து உட்கார்ந்தார்.

அடுப்பு, புகைந்து கொண்டிருந்தது. அதையே கவனித்துக் கொண்டிருந்தார்.

"இன்னும் நெருப்பு அணையவில்லை" என்றது கிழட்டுச்சாமி.

இத்தனை கோரத்தையும் கல்லுப் பிள்ளையார் மாதிரி இருந்த இடத்தைவிட்டு அசையாமல் கிழட்டுச்சாமி பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தது என்ற உணர்ச்சி செண்பகராமன் பிள்ளையின் மனசில் ஈட்டி கொண்டு செருகியது. துறவித் தன்மையை வெறுத்தார். மறுகணம் 'அவ்வளவு கல்நெஞ்சோ!' என்று பதைத்தார். அதே மண்டபத்தில் உட்காரக் கூடப் பயந்தவர் மாதிரி சற்று நகர்ந்து தள்ளி உட்கார்ந்தார். பதில் சொல்லத் தெரியவில்லை.

"மோட்டார் வண்டியைச் சுற்றிச் சுற்றி ஓடி வந்ததனால் யாருக்கு என்ன லாபம்?" என்று கேட்டது கிழட்டுச்சாமி.

சும்மா இருந்தது போதாதென்று தம்மையும் வேறு கேலி செய்கிறான் இந்தக் கிழட்டு ஆண்டி என்று கோபப்பட்டார் செண்பகராமன் பிள்ளை. எழுந்தார். பதில் பேசவில்லை.

"அடுப்பு இன்னும் புகைகிறது; அணையவில்லை" என்று சிரித்தது கிழட்டுச்சாமி.

"அதை அணைத்துவிடட்டுமா?" என்றார் பிள்ளை. அவருக்குப் பேச்சுக் கொடுத்துக்கொண்டிருக்க விருப்பம் இல்லை. ஒரு பட்டை தண்ணீர் மொண்டு, அடுப்பில் ஊற்றி அணைத்துவிட்டு, வேட்டி உலர்ந்துவிட்டதா என்று வேட்டியைத் தொட்டுப் பார்த்தார்.

"கிழட்டுப் பட்டையானாலும் ஒரு பட்டை தண்ணீருக்கு எவ்வளவு சக்தி இருக்கு பாத்தியா?" என்றது கிழட்டுச்சாமி.

உலர்ந்த வேட்டியைக் கொசுவி, உதறிக் கட்டிக்கொண்டார் பிள்ளை.

மறுபடியும் மண்டபத்தில் வந்து உட்கார்ந்தார்.

"சாமி எங்கே போறதோ" என்று கேட்டார்.

"எல்லாரும் போற எடத்துக்குத்தான்? வேற எங்கே போக்கடி; இந்தா இந்த அவலைத் தின்னுகிறாயா?" என்று மூட்டையை அவிழ்த்துக் கையில் ஒரு குத்து அவலைக் கொடுத்தது கிழட்டுச்சாமி.

பிள்ளை இரண்டு கைகளையும் நீட்டி வாங்கிக்கொண்டார். வாயில் கொஞ்சம் இட்டுக் குதப்பிக்கொண்டே, "அது என்ன புஸ்தகம்?" என்று புருவத்தை நிமிர்த்திச் சுட்டிக் காட்டினார். கிழட்டுச்சாமி அதை எடுத்துக் கையில் கொடுத்தது. பிழைகள் மலிந்த திருவாசகப் பதிப்பு அது அநாதியான சிவபிரான் மாதிரி முன்னும் பின்னும் அற்றிருந்தது.

பிள்ளையவர்களுக்கு மனப்பாடமான கிரந்தம்; ருசியோடு படித்த புஸ்தகம்.

"அதை வாசியும்" என்றது கிழட்டுச்சாமி.

பிள்ளையவர்கள் அவலை மடியில் கட்டி வைத்துவிட்டு ராகத்துடன் வாசிக்க ஆரம்பித்தார். சாமி கேட்டுக்கொண்டே இருந்தது.

"வெளியிலே குப்பையிலே கிடந்தது; ஆருக்காவது உதவுமே என்று எடுத்து வந்தேன்; எனக்கு எழுதப் படிக்கத் தெரியாது" என்றது கிழட்டுச்சாமி.

படிக்காதவன் தூக்கின சுமையா என்று அதிசயப்பட்டார் பிள்ளை. எழுத்தறிவற்ற மூடமோ, வயிற்றுப் பிழைப்புக்குக் காவியோ என்று சந்தேகித்தார் பிள்ளை.

கிழடு சிரித்துக்கொண்டிருந்தது.

"நான் கைலாசத்துக்குப் போகிறேன்" என்றது கிழட்டுச்சாமி.

'கிண்டல் ரொம்பப் பலமாக இருக்கிறதே' என்று நினைத்தார் பிள்ளை. உதறியடித்துக்கொண்டு சாடிப் பேச அவருக்குத் தைரியம் இல்லை.

"கூண்டோட கைலாசம் இல்லை; கைலாச பர்வதத்துக்குத்தான் போகிறேன்; நீரும் வருகிறீரா?" என்று அவரைப் பார்த்துச் சிரித்தது அந்தக் கிழட்டுச்சாமி.

"எங்கே போனால் என்ன? வருகிறேன்" என்று எழுந்தார் பிள்ளை.

"சரி, இருக்கட்டும். உம்ம பேரு என்ன?" என்றது கிழட்டுச்சாமி.

"சாந்தலிங்கம் என்று சொல்லணும்" என்றார் பிள்ளை.

"இதுவரை சொல்லிக்கொண்டு வந்தது?" என்றது கிழட்டுச்சாமி.

"செண்பகராமன் பிள்ளை என்று சொல்லுவார்கள்" என்றார்.

3

செண்பகராமன் பிள்ளையின் வாண்டுப்பயல் வடிவேலுவுக்கு மாமனாரான ஆனையப்ப பிள்ளைக்கு எதிராக வழக்குத் தொடுத்த மனைவிவழி மைத்துனர் நல்லசிவம் பிள்ளை, அவருடைய இரண்டாவது மகன் முத்துசாமியின் சார்பாகச் சொத்தைத் தம் நிர்வாகத்தின் கீழ் ஒப்படைக்க வேண்டும் அல்லது கோர்ட்டார் மேற்பார்வையில் வைத்திருக்க வேண்டும் என்று கட்சி ஆடினார். அவருடைய வக்கீல் கெட்டிக்கார வக்கீல். ஆனையப்பப் பிள்ளைக்கு ஊரில் செல்வாக்கு உண்டு. நல்லசிவம் பிள்ளையின் வக்கீல், வருகிற அறுவடைவரை வழக்கை ஒத்திவைத்து, பூநெல்லை அகற்றிக் கிஸ்திப் பணத்தையும் மீனாட்சியம்மை சார்பாகத் தாமே கட்டிவிட்டால், குடுமி தம் கைக்குள் சிக்கிவிடும் என்று திட்டம் போட்டார்.

வடிவேலுவின் நலத்தை முன்னிட்டு வழக்காடப் புகுந்த ஆனையப்ப பிள்ளையின் யோசனை வேறு. அறுவடையின் போது களத்து நெல்லை மடக்கிவிட வேண்டும், அப்பொழுது நல்லசிவம் பிள்ளையின் கொட்டம் அடங்கும் என்று மனப்பால் குடித்தார் ஆனையப்ப பிள்ளை. கோர்ட்டில் இன்ஜங்ஷன் வாங்கி அப்படியே நெல்லை மடக்கிக் கொண்டு போய்விட வேண்டும் என்று அவர் யோசனை பண்ணியிருப்பது வாண்டு வடிவேலு மூலம் மீனாட்சியம்மையின் காதுக்கு எட்ட, நல்லசிவம் பிள்ளை உஷாரானதில் அதிசயம் இல்லை. ஆனையப்ப பிள்ளை மருமகனைத் தன் வீட்டோ டு கூட்டிப் போய் வைத்துக் கொண்டு அவன் படிப்பை மேற்பார்வை செய்யாவிட்டால் அவன் கெட்டுக் குட்டிச்சுவராகப் போவான் என்பதைத் தன் மனைவி மூலம் மீனாட்சியம்மைக்குச் சொல்லிவிட்டார். பையன் மீது உள்ள பாசத்தினால் அது சரியெனவே அவளுக்குப் பட்டது. "ஒங்க வீட்டு மருமகன் தானே? அவனை ஒப்படியாகப் பண்ணுவது இனி உங்க பொறுப்புத்தானே?" என்று பதில் சொல்லித் திருப்தி அடைந்தாள்.

கிராமத்திலிருந்து வந்த நல்லசிவம் பிள்ளை அக்கா என்று உறவு கொண்டாடிக்கொண்டு வந்து, "பிள்ளையை வேறு வீட்டில் விட்டு வைப்பது நமக்குக் குறைச்சல்; மேலும் ஆனையப்ப பிள்ளைக்கு இப்பொழுது கடன் தொல்லை அதிகம்; சிறுசை வைத்துக் கொண்டு தன் காரியத்தைச் சாதித்துக் கொள்ளப் பார்க்கிறான்" என்று ஓதினார்.

"செண்பகராமன் பிள்ளையின் சம்பாத்தியம் மண்ணாங்கட்டியாகப் போகும்; முதலில் வடிவேலை வீட்டுக்கு அழைத்துக்கொண்டு வா" என்று யோசனை சொன்னார்.

மீனாட்சி அம்மாளுக்கு அவர் சொல்லுவதும் சரியாகத்தான் பட்டது. அவனுடைய நன்மையை எண்ணி முத்துசாமியை உருப்படாமல் ஓட்டாண்டி ஆக்கிவிடுவதா என்று மனசு பொங்கியது. பகல் மூன்று மணிக்குத் தன்னுடைய நாத்தனார் வீட்டுக்குப் போனாள். பள்ளிக்கூடம் போகாமல் வீட்டிலே கொட்டமடித்துக்கொண்டிருந்த வடிவேலைத் தரதரவென்று இழுத்துக் கொண்டு வந்தாள். "நான் மாமா வீட்டில்தான் இருப்பேன்" என்று வடிவேலு கத்தினான். அவளுடைய கைகளைப் பிறாண்டினான். ஆனால் அவளுக்கு பின்னால், 'ஓ ராமா' என்று படைப்பயம் போட்டுக்கொண்டுதான் தெரு வழியாக இழுபடவேண்டி இருந்தது.

நயினார்குளத்தங் கரையில் மாலை மயங்கும் சமயத்தில் ஆனையப்ப பிள்ளையும், நல்லசிவம் பிள்ளையும் சந்தித்துக் கொண்டார்கள். வார்த்தை தடித்தது; நல்ல காலம், உடல் தடிக்கவில்லை.

"உன் கொட்டத்தை அடக்குகிறேன்" என்றார் ஆனையப்ப பிள்ளை.

"செண்பகராமன் பிள்ளை ஊரிலே கண்ட மழுமாறிகளுக்குச் சொத்துச் சம்பாதித்து வைத்துவிட்டுப் போகவில்லை" என்று உறுமினார் நல்லசிவம் பிள்ளை.

"யாரடா மழுமாறி? செண்பகராமன் பிள்ளை சொத்து என்ன கொள்ளியற்றுப் போச்சு என்று நினைத்துக்கொண்டாயா?" என்று பதிலுக்கு உறுமினார் ஆனையப்ப பிள்ளை.

கிராமத்தில் பயிர் அரிவாளை எதிர்பார்த்துத் தலைசாய்த்து நின்றது.

"அண்ணாச்சி, நாளைக்கு நாம் நினைக்கிற காரியம் கைகூடத் திருச்செந்தூருக்குப் போய் ஓர் அர்ச்சனை நடத்திவிட்டு வருவோம்" என்று சொல்லிக்கொண்டே ஆனையப்ப பிள்ளையின் வீட்டுக்குள் ஒரு புல்லுருவி நுழைந்தது. பரமசிவம் பிள்ளை நல்லசிவம் பிள்ளை சார்பில் கிருஷ்ண பரமாத்மாவாக எதிர்கோட்டைக்குள்ளே சென்று விளையாடினார். முருகனுக்கு வெள்ளியன்று அர்ச்சனை நடத்தி, பிறகு கோர்ட்டுக்கும் வக்கீலுக்கும் அர்ச்சனை நடத்தினால் காரியம் நிச்சயமாக ஜயம் என்று இரவோடு இரவாகத் திருச்செந்தூருக்குப் பிரயாணமானார்கள். ஆனையப்ப பிள்ளையும் புல்லுருவி பரமசிவமும், பணத்தைப் பணம் என்று பாராமல் நல்லசிவம் பிள்ளை அறுவடையை அசுர கதியில் நடத்த ஆரம்பித்தார்.

வெள்ளி, சனி, ஞாயிறு மூன்று நாட்களில் நெல்லை எத்தனை கோட்டையானாலும் ஒதுக்க முடியாதவன் ஒரு வேளாளனா என்பது நல்லசிவம் பிள்ளையின் கட்சி.

அர்ச்சனை பாலபிஷேகம் செய்துவிட்டு, நெஞ்சில் சந்தோஷத்தோடு கோவில் வசந்த மண்டபத்தில் உட்கார்ந்து, மேற்கொண்டு நடக்க வேண்டிய காரியத்தைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்கும்போது அவருடைய மறவன் ஓட்ட ஓட்டமாக ஓடிவந்து காரியம் மிஞ்சிப் போனதாகச் சொன்னான். பக்கத்தில் பரமசிவம் பிள்ளை இல்லை. அவர் கோவிலிலிருந்தே நழுவி விட்டார். "அண்ணாச்சி இங்கே ஒரு எடத்துக்குப் போயிட்டு வருகிறேன்" என்று அவர் சொல்லும்போது அவர் வார்த்தையைக் கபட நாடகம் என்று ஆனையப்ப பிள்ளை நினைக்கவில்லை. இன்ஜங்ஷன் யோசனையைக் கைவிடவேண்டியதாயிற்று.

இப்படியாக, செண்பகராமன் பிள்ளையின் குடும்ப நிர்வாகத்தை யார் கவனிப்பது என்பதற்காக, இரண்டு நபர்கள் அவருடைய சொத்தை வாரி இறைத்துக் கொண்டு கோர்ட்டு வாசலில் காத்துக் கிடந்தார்கள்.

4

சாந்தலிங்கச்சாமி மறுபடியும் தென் திசை நாடும்பொழுது வருஷம் பத்து ஓடிவிட்டன. எங்கெங்கோ கிழட்டுச்சாமியுடன் சுற்றினார். கைலாச பர்வதத்தில் கிழட்டுச்சாமி ஒடுக்கமானபோது அருகில் இருந்தவர் சாந்தலிங்கச்சாமிதான்.

அவர் கொடுத்த திருவாசகப் புஸ்தகம், அவர் வைத்துவிட்டுப் போன மூட்டை இரண்டோ டும், நிம்மதி இன்மை என்ற நிஜச் சொத்துடன் உலகம் முழுவதும் சுற்றித் திரிந்தார். கடைசியாக, திருச்செந்தூருக்கு வந்து உட்கார்ந்தார். மனசு மட்டும் இருப்புக் கொள்ளவில்லை. யாரோ தம்மைத் தேடி அழைப்பது போன்ற ஒரு மனநிலை; வாசியை வசப்படுத்தும் பழக்கம் பெற்றும் அடங்கவில்லை. கூப்பிட்டவர் யார்? ஏன் கூப்பிட வேண்டும்? பத்து வருஷங்களாக வாட்டும் கேள்வி.

கடைசியில் ஆனையப்ப பிள்ளையின் பாலபிஷேகத்துக்கு ஏமாறாத முருகன் காலடியில்தான் அவர் வந்து விழுந்தார். ஓயாத கடலும் ஓயாத மனசும் அவரை அலட்டின. காவித் துணியை அணிந்துகொண்டபோது இருந்த மன உல்லாசம் எங்கோ ஓடி மறைந்துவிட்டது. புறப்பட்ட இடத்தையே அலகை போல, தாம் சுற்றிச் சுற்றித் திரிந்து கொண்டிருப்பதாக நினைத்துக்கொண்டார். தமக்குச் சாந்தலிங்கம் என்று பெயர் இட்டுக் கொண்டதைக் கண்டு கிழட்டுச் சாமி சிரித்ததில் அர்த்தபுஷ்டி இருந்ததாகவே இப்பொழுது அவருக்குப் பட்டது.

நல்ல வெள்ளிக்கிழமையும் நாளுமாக வௌவால் மாதிரி இருட்டில் அல்லாடக் கூடாது என்று நினைத்துக் கோவிலுக்குச் சென்றார்.

சந்நிதியில் தம்மை மறந்த நிஷ்டை சற்றுக் கைகூடியது. லயத்தில் இருப்பவரை "அத்தான்" என்று யாரோ ஓடி வந்து கட்டிப் பிடித்துக் கொண்டார்.

ஆனையப்ப பிள்ளைதான். வழக்கம்போல வெள்ளிக்கிழமை வழிபாட்டுக்காகத் திருச்செந்தூருக்கு வந்திருந்தார்.

மங்கிய விளக்கொளியும் பத்து வருஷங்களும் போட்ட திரை அவருடைய பார்வையை மழுங்க வைக்கவில்லை. முருகனிடம் மாறாத நம்பிக்கை வைத்ததன் பலன் என்று அவர் கருதினார்.

சாந்தலிங்கச்சாமி அதிர்ச்சியிலிருந்து தெளிந்து நிதானப்பட்ட பிறகு தம்முடைய சகோதரி புருஷன் என்பதை உணர்ந்தார். செண்பக ராமன் பிள்ளையாக நடந்துகொள்ள மனம் ஒப்பவில்லை.

ஆனையப்ப பிள்ளைக்கு எப்படித் தம் காரியத்தைச் செண்பகராமன் பிள்ளையிடம் சாதித்துக்கொள்வது என்ற யோசனை. எதிர்க்கக் கூடாது; போக்கில் விட்டுத் திருப்ப வேண்டும்; அவ்வளவுதான்.

இரவு இரண்டு மணிவரையில் இரண்டு பேரும் வசந்த மண்டபத்தில் உட்கார்ந்து பேசினார்கள்.

"நீங்கள் நல்ல வழியில் இருப்பதை நான் கெடுக்க விரும்பவில்லை; சிறு பையன்கள் என்ன பாவம் பண்ணினார்கள்? சொத்தை ஊர்க்காரன் தின்னாமல் ஒரு ஒழுங்குபடுத்திவிட்டு மறுபடியும் காஷாயம் போட்டுக்கொள்ளுங்கள்" என்றார் ஆனையப்ப பிள்ளை.

மறுபடியும் வெள்ளை உடுத்துக் கோர்ட்டு ஏறிக் குடும்பத்தைச் சீர்தூக்கி வைக்க வேண்டும். ஆமாம். வடிவேலுவும், முத்துசாமியும் என்ன பாவம் பண்ணினார்கள்? அவர்களுக்காக இந்தக் கட்டை உழைப்பதில் குற்றம் இல்லை என்றது சாந்தலிங்கச்சாமியின் மனசு. 'ஊர்ப் பயல்கள் கொட்டத்தை அடக்காமல் ஓடியா போவது?' என்றது செண்பகராமன் பிள்ளையின் மனசு.

"சரி, வருகிறேன். எழுந்திருங்கள். மீனாட்சி எப்படி இருக்கா?" என்றார் செண்பகராமன் பிள்ளை.

"அவளை உங்களுக்குத் தெரியாதா? கேப்பார் பேச்சைக் கேட்டுக் கேட்டுத்தான் குடும்பம் குட்டிச்சுவராய்ப் போச்சு. காலையில் நான் சொல்லுவதற்குச் சரி என்று தலையாட்டுவாள். மாலையில் அவன் சொல்லுவதற்குச் சரி என்று தலையாட்டுவாள். கடைசியில் வீண் சிரமமும் பணவிரயமுந்தான் மிச்சம்" என்றார் ஆனையப்ப பிள்ளை.

இரண்டு பேரும் மூன்று மணி சுமாருக்குத் திருநெல்வேலிக்குப் போகும் பஸ்ஸில் ஏறினார்கள். சாந்தலிங்கசாமியின் மனசு என்னவோ செய்யத் தகாத காரியத்தில் ஈடுபடுவதாகவே அல்லாடியது.

'நான் இந்த வேஷத்தில் வீட்டு நடைப்படியை மிதிக்கலாமா?' என்றது செண்பகராமன் பிள்ளையின் மனசு.

பலபலவென்று விடியும்போது பஸ் ஸ்ரீவைகுண்டத்துக்கு வந்து விட்டது. இன்னும் ஒரு மணிநேரம் கழித்தால் சாந்தலிங்கச் சாமிக்கு ஒடுக்கம்; அதாவது அப்புறம் செண்பகராமன் பிள்ளைதான்.

"ஆனையப்ப பிள்ளையவாள், நீங்க சொல்லுவது ரொம்பச் சரியாத்தான் படுகிறது; எனக்குக் குடும்பம் ஏது, குட்டி ஏது? நான் ஆண்டி" என்றார் சாந்தலிங்கச்சாமி.

"அத்தான், வண்டியைவிட்டு இறங்குங்க, நாம் காப்பியைச் சாப்பிட்டுவிட்டு அப்புறம் பேசிக்கொள்வோம்" என்றார் ஆனையப்ப பிள்ளை.

இருவரும் இறங்கி எதிரில் இருந்த ஹோட்டலுக்குள் போனார்கள். அங்கே இரைச்சல் காதை அடைத்தது. இருவரும் குழாயடியில் முகத்தைத் தேய்த்துக் கழுவிப் பல் துலக்கினார்கள்.

குனிந்து வாயை உரசிக் கொப்பளித்துக் கொண்டிருக்கும் சாந்தலிங்கச்சாமிக்கு, "அப்பா செண்பகராமா!" என்று யாரோ உரத்த குரலில் கூப்பிட்டது கேட்டது.

"அத்தான், அதாரது என்னை அடையாளம் கண்டு கூப்பிட்டார்கள்?" என்று தலையை நிமிர்ந்து கேட்டார் செண்பகராமன் பிள்ளை.

பக்கத்தில் இருந்த சிறுவன், "சாமி, ஒங்களை யாரும் கூப்பிடலியே? நான் தானே பக்கத்தில் நிக்கேன்?" என்றான்.

'இந்தச் சென்மத்திலே நான் சாந்தலிங்கமாக மாட்டேன் போலும்!' என்று தனக்குள்ளே சிரித்துக்கொண்டது ஜீவாத்மா.

காவி தரித்த செண்பகராமன் பிள்ளைதான் அங்கு நின்றார். சாந்தலிங்கம் மனசுக்குள்ளாகவே ஆழ்ந்து முழுகிவிட்டது. மனசு ஆழம் காணாத கிணறு அல்லவா?

"அத்தான், நேரத்தைக் களிக்காதிய" என்று ஆனையப்ப பிள்ளை குரல் கொடுத்தார்.

செண்பகராமன் பிள்ளைக்குப் பத்து வருஷங்களுக்குப் பிறகு காப்பி உடலிலே வேறு ஒரு விதமாகப் புழுக்கத்தையும் புளகாங்கிதத்தையும் கிளப்பியது.

இருவரும் மீண்டும் பஸ்ஸில் ஏறினார்கள். பஸ் புறப்பட்டது.

எப்போதோ ஒரு காலத்தில் கிழட்டுச் சாமி, கல்லுப் பிள்ளையார் மாதிரி உட்கார்ந்திருந்ததும், இப்போது தம்முடைய சதை ஆடுவதும் பக்கத்தில் பக்கத்தில் நினைவுக்கு வந்தன. கைலயங்கிரியில் ஒடுக்கமான கிழட்டுச்சாமி எதிரே உட்கார்ந்துகொண்டு கேலி செய்வது மாதிரி இருந்தது.

"சாமி, ஒங்களெ செலம்பரத்திலே பாத்த மாதிரி தோணுதே" என்றான் பக்கத்தில் உட்கார்ந்திருந்த கிழவன்.

"நீ யாரைச் சொல்லுகிறாய்?" என்று கேட்டார் செண்பகராமன் பிள்ளை.

"ஒங்களை எனக்குத் தெரியாதா? நீங்க சாந்தலிங்கச்சாமி இல்லே? பொத்தாமரை பக்கத்திலியே உக்காந்திருப்பியளே?" என்றான் அந்தக் கிழவன்.

"சாந்தலிங்கச்சாமி ஒடுக்கமாயிட்டுது. எனக்கும் அவரைத் தெரியும்" என்றார் செண்பகராமன் பிள்ளை.

"எப்பம்?" என்றான் கிழவன்.

"அவங்க ஒடுக்கத்தில் ஆகி சுமார் நாலு மணி நேரமாச்சு" என்றார் செண்பகராமன் பிள்ளை, நிதானமாக.

கலைமகள், ஜனவரி 1944
-----------------

90. சிவசிதம்பர சேவுகம்

தாடி வளர்த்தால் ஞானம் ஏற்பட்டாலும் ஏற்படும். முகவாய்க் கட்டையில் பேன் பற்றினாலும் பற்றும். சிவசிதம்பரம் பிள்ளைக்கு பேன் பிடிக்கவில்லை. ஆனால் மேற்கு ரத வீதி வர்த்தகர்கள் அவரை சாமி, சாமி என்று கூப்பிட ஆரம்பித்தார்கள். கழுத்துப்பிடரி வரை வளர்ந்த சிகை; அதாவது அள்ளிச் சொருகி, நிலைகுலைந்து தவழும் சிகை; நரையோடி நெஞ்சை மறைக்கும் தாடி; கண்ணுக்கு மேல் பார்த்து சாரம் கட்டிவிட்ட மாதிரி புருவம்; மல் வேஷ்டி, சிட்டி துண்டு, ஐந்து பெண்கள், பதினைந்து ரூபா சம்பளம், கல்லத்தி முடுக்குத் தெருவில் வறுமையில் இருளடித்த 'கர்ப்பக்கிருகம்' - இவர்தான் சாமி சிவசிதம்பரம் பிள்ளை. லேயன்னா மேனா வீனா ஜவுளிக் கடையில் அவருக்கு சேவகம். பட்டணத்திலே அந்தக் காலத்தில் குண்டு விழுந்தபோது, முறிந்து மூடிய ஜவுளிக்கடை ஒன்றின் 'ஸ்பிளின்டர்ஸ்களாக' திருநெல்வேலி மேற்கு ரத வீதியில் வந்து விழுந்தார். அன்று விழுந்த இந்தச் சதைப்பிண்டம் இன்றும் நாடியின் தாள அமைதி குன்றாமல் அடித்துக் கொண்டிருக்கிறது. அவர் மாறியது கிடையாது. அவரது குடும்பமும் மாறியது கிடையாது. அவருடைய சேவகமும் மாறியது கிடையாது. அவர் வந்தபோது லேயன்னா இருந்தார்; தாமிரவருணி ஆற்றில் பெருவெள்ளம் வந்து பையன்களைப் பரீட்சைக்குப் போகவிடாதபடியடித்து, ஊழியின் இறுதிக் காலத்தைக் கோடு போட்டுக் காட்டியபோது மேயன்னா இருந்தார்; சற்றுக் கண் விழித்து எழுந்த விராட புருஷன் எழுந்து உட்கார்ந்து சோம்பல் முறித்த மாதிரி வந்த 1930-ம் வருஷ உப்பு யுகம் வந்த போது வீயன்னா இருந்தார். இப்பொழுது இம்மூன்றும் கலந்து தேசத்தை நெருக்கிய போது, விலாச முதலாளிகளின் புதல்வர்கள் பெயரால் கடை நடந்து கொண்டிருந்தது. முறையே மூத்த மக்கள் மூவரும் தம்முள் அத்தான் மைத்துனர்களாகி விட்டார்கள். அவர்கள்தானிருந்து கடையை நடத்துகிறார்கள். மற்றவர்கள், லேயன்னாவுக்கு இவர் தவிர ஒரு மகனும், மற்றும் இருவருக்கும் முறையே இரண்டிரண்டு பேரும் உண்டு. இவர்கள் சர்க்கார் முதல் மார்வாடி சேட் மாவுத் தொழிற்சாலை வரையுள்ள பெரிய வர்த்தக ஸ்தாபனங்களில் சேவகத் தொழில் செய்து கொண்டிருந்தார்கள். எப்போதோ ஒரு தடவை எட்டிப்பார்ப்பது, ஏட்டுக் கணக்குகளைப் பார்ப்பது, பிறகு 'ஒத்தி வைத்த' நலத்துக்காக சேவகம் செய்து சம்பளம் வாங்குவது, இப்படியே ஓடிய ரத்த பந்த சக்கரத்துக்குப் பின்னால் இழையாக அமைந்திருந்தார் சிவசிதம்பரம் பிள்ளை. சிவசிதம்பரம் பிள்ளைக்குத்தான் ஆதி முதல் அந்த ஜவுளிக்கடையின் உட்கணக்குத் தெரியும்; கடையின் மேசைப் பெட்டி மாதிரி, புத்தியும் ஜீவனும் விவேகமும் உள்ள மேசைப் பெட்டி மாதிரி, அவர் இருந்து வந்தார்.

சிலர் பூட்டின் வாயிலேயே சாவியைத் தொங்கப் போட்டிருப்பார்களல்லாவா, அதேமாதிரி இந்த இளவட்ட முதலாளிகளும் இவரது மடியிலேயே சாவியைப் போட்டு வைப்பார்கள். அதாவது இவரது மடியில் அல்லது மூத்த பிள்ளை வள்ளியூர் லெச்சமணப்பிள்ளை பெட்டக சாலை கிழக்குச் சுவர் காந்தி படத்துக்குக் கீழே அல்லது சிவசிதம்பரம் பிள்ளை இடுப்பில் சாவி தொங்கிக்கொண்டிருக்கும். தான் உண்டு, தன் கணக்கு உண்டு, தன் காரியம் உண்டு என்றிருப்பவராகையால் முதலாளிகளுக்கு இவர் யாரோ காவேரிப் பாசனத்து மருதூர் கார்கார்த்த வேளாளர் என்பது மட்டும் தெரியும். சிவசிதம்பரம் பிள்ளை அதற்கு மேல் யாரையும் தெரிந்துகொள்ள விடுகிறதில்லை. லேயன்னாவினுடைய மூத்த மகனுக்கு கணக்குத் தப்பாமலிருப்பதில்தான் குறி. யாராயிருந்தால் என்ன; பேசுகிற பேரேடு என்று நினைத்து, அதற்குமேல் அவரைப் பற்றிச் சிந்திக்கிறதில்லை. அவர் 'மெட்டிக்கிலேஸனுக்கு' ஒரு வகுப்பு முந்தி தோத்துப்போய் பள்ளிக்கூடத்துடன் 'கத்திகிட்டு' வந்துவிட்ட காலம்; மைனர் பிள்ளையாக நடமாடுவதற்கு சற்று கால் தள்ளாட ஆரம்பித்தபோது, சிவசிதம்பரம் பிள்ளையின் 'உத்தியின்பேரில்' ஒரு தாலியும் கட்டி, வீட்டோ டு கட்டிப்போட்டு மேல ரத வீதி ஜவுளிக்கடை சொருகு பலகைகளுக்குள் சென்று வெளிவரும் சரக்கானார்கள். லேயன்னா கண்ணை மூடிய பிறகுதான் அவர் முதலாளி ஸ்தானத்துக்கு வந்து அப்பால் சென்று உலாவும் சரக்காகப் பரிணமித்தார். லேயன்னா கண்ணை மூடும்போது, "செலம்பரம், செலம்பரம்" என்ற ஜெபந்தான். பிரிவு, கடையைப் பிரித்துவிடாமல் சிவசிதம்பரம் பிள்ளைதான் இருந்து லேயன்னா கடைப் பங்கு வகையராவையும், கன்னடியன்கால் பாசன நன்செய் வகைகளையும் ஈவு செய்து மக்களுக்குள் குடுமிப்பிடி வராமல் பார்த்துக் கொண்டார்.

கடை மேற்பார்வை பிறகு மேயன்னா வசம் இருந்து, அவர் காலத்துக்குப் பிறகுதான் லேயன்னாவின் மூத்த மகன் வசம் திரும்பியது. மேயன்னாவுக்கு வில்லங்க சொத்துக்கள் கொஞ்சம் உண்டு. அதைத் திருப்புவது, அகப்படுகிற சாமியார்களை எல்லாம் கும்பிட்டு ரசக்கட்டு சோதனையில் இறங்குவது தவிர வேறு எதிலும் நாட்டம் செலுத்த ஜீவிய காலம் முழுவதிலும் சவுகரியமே கிடைத்ததில்லை. மண்ணாந்தைச் சாமியிடம் வாகடநூல் சோதனையிலீடுபட்டிருக்கும் போதுதான் வீரபாகு பிள்ளை வந்து "நம்ம சவுந்தரத்தை, பழமலைக்குக் கட்டிப்போட்டு விடலாம் என்று நினைப்பதாக"ச் சொன்னார்கள். "அதுக்கென்ன சவுகரியப்படி செய்யிங்க, ரசத்தை மொறையாக் கெட்டினா, அட்டதிக்கும் கட்டியாளலாம், சாமி சொல்லுதாக" என்றார் மேகலிங்கம் பிள்ளை. "அட்ட திக்கும் கட்டியாளுவது அப்புறம் இருக்கட்டும், ஒங்க கேசு நாளைக்கு வருதாமே, அதுக்கு என்ன செய்ய உத்தேசம்" என்றார் வீரபாகு பிள்ளை. "செலம்பரத்தை வக்கீல் ஐயரிடம் அனுப்பி இருக்கேன். எல்லாம் அவன் பார்த்துக்கிடுவான். நம்ப சாமிக்கு கோவில் திருப்பணி செய்யணும்னு நாட்டம்; வடக்குப் பிரகார பொற்றாமரைக் கொளத்துப் படிகளை எடுத்துக் கட்டினா என்னான்னு கேக்கராஹ" என்றார் மேகலிங்கம் பிள்ளை. "ஆமாம் உங்களுக்கு வேலையும் தொளிலும் இல்லை, ரசத்தை கெட்டட்டா குளத்துப்படியைக் கெட்டட்டா என்று கருத்துப் போகுது! மொதல்லெ, ஒங்க பொண்ணுக்கு வாசல்லெ வந்த வரனைப் பார்த்துக் கெட்டி வையுங்க" என்று துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு எழுந்தார் வீரபாகு பிள்ளை.

லெச்சுமணப் பிள்ளை ஜேஷ்டகுமாரன் பழமலைக்கும், மேகலிங்கம் பிள்ளை புத்திரி சவுந்தரத்துக்கும் கல்யாணமாயிற்று. பழமலை பழையபடி வரட்டு வேளாளனானான். மண்ணாங்கட்டிச் சாமிக்கு கோவில் திருப்பணிக்குத் தொகை கிடைத்தது. வக்கீலய்யருக்கு வழக்கை ஈரங்கி ஒத்திப்போட்டு சவ்வு மிட்டாய் மாதிரி இழுத்துக் கொண்டு போக சவுகரியம் கிடைத்தது.

லேயன்னா காலமானார். கடையை மேகலிங்கம் பிள்ளை பார்த்துக் கொள்ளுவதுதான் முறை என்றார் வீரபாகு பிள்ளை. அவருக்கு ஜில்லா போர்ட் ரஸ்தா குத்தகை, தலைக்கு மேல் வேலையாக இருந்தது. யாரையாவது கெடுப்பது என்றால் மண்ணை வாரிப்போடுவது என்பது, யாரையும் கெடுத்தல் என்பதுதான் தமிழில் வெகுஜன வாக்கு. வீரபாகு பிள்ளை ரோடின் தலையில் கப்பிக் கல்லையும் மண்ணையும் வாரி வாரிப் போட்டுக்கொண்டே இருந்தார்; பிறகு அதில் மறுபடியும் ரிப்பேர் நடத்த லாயக்காக பஸ் செர்விஸ் நடத்தினார். அதனால் மேகலிங்கம் பிள்ளை கடையைப் பார்த்துக் கொள்ளுவதுதான் முறை என்ற நியாயம் அவருக்குப் புரிந்தது.

மேகலிங்கம் பிள்ளை கடைக்கும் வந்து போகலானார். மண்ணாந்தைச் சாமியாரும் கோவில் திருப்பணிகளில் ரொம்ப ஊக்கம் காட்டினார். இப்படிக் கொஞ்ச காலம் சிதம்பரம் பில்ளையின் விசுவாச பாத்திரம் சற்று மாறியது.

இப்பொழுது சிவசிதம்பரம் பிள்ளை இகபர சுகங்கள் இரண்டுக்காகவும் பண வசூலுக்குப் புறப்படுவார். ஒன்று கடை வரவு செலவு, இன்னொன்று திருக்குள வரவு செலவு. அவர் இவ்விரண்டு சேவகங்களையும் பகிர் நோக்கு இல்லாமலேயே கவனித்தார் என்றால் நிஷ்காம சேவையில் அவருக்கு இருந்த அளவு கடந்த மனப்பக்குவத்தால் அன்று; அவருக்கு அப்படி ஒரு பிரயோகம் இருப்பதாகவே தெரியாது. பிரதிப் பிரயோசனம் எல்லாம் ஜவுளிக்கடை பசியாற்றுவதற்குப் போதும் என்று நிர்ணயம் செய்து கொடுத்துவரும் சம்பளமேயாகும்.

மேகலிங்கம் பிள்ளைக்கு திடீரென்று காலன் வந்தான். 'கிடக்கப்படுத்தார், கிடந்தொழிந்தாரே' என்ற வாக்கு பூர்ணமாகப் பலித்தது. கர்மம் முதலிய சகல கிரியைகளும் முடிந்தபின்பு கடை கணக்கைப் பரிசோதனை செய்ததில் மேயன்னா பங்குக்கு மேல் பற்று வகையறாவாக பதினையாயிரத்துச் செல் வளர்ந்து தொகை பற்றில் இருந்தது தெரிந்தது. வீரபாகு பிள்ளை திடுக்கிட்டார்! இதில் எவ்வளவு ரசவாதப் புகையாகப் போச்சு, எவ்வளவு சட்ட வக்கணை வியவகாரத்தில் மறைந்தது என்று புலன் கண்டு சொல்லுவதே கடினமாகிவிட்டது. இது தவிர கப்பலில் பாதிப் பாக்குப் போட்ட கதையாக மண்ணாங்கட்டிச் சாமியார் திருவிளையாடல் எவ்வளவு குழி தோண்டியது என்பது பிரம்ம ரகசியம் போல திக்குமுக்காட வைத்தது. "என்னவே, இடிச்ச புளி மாதிரி இழுத்த இழுப்புக்கெல்லாம் ஆடினீர், என்னிடம் ஒரு வார்த்தை சொல்லக் கூடாதா?" என்றார் வீரபாகு பிள்ளை. சிவசிதம்பரம் பிள்ளநக்கு ரொக்க வியவகாரம் இவ்வளவு ஓட்டை என்று அன்றுதான் தெரியும். "தெரிந்தால் விடுவேனா" என்று பதில் சொல்லிவிட்டுத் தலையைத் தொங்கப் போட்டார் சிவசிதம்பரம்பிள்ளை. வீரபாகு பிள்ளைக்குத் தம்முடைய ரொக்கத்தைப் பற்றிக் கவலை பெரிதாயிற்று. பழமலையும், பால்வண்ணமும் - அதாவது மேயன்னாவுடைய பி.ஏ. படித்த மகன் - மைத்துனனும் மைத்துனனுமாச்சே, இரண்டு பேருமாகச் சேர்ந்துகொண்டு தம்முடைய ரஸ்தாவில் மண்ணைப் போட்டுவிட்டால் என்ன செய்வது என்ற கவலை ஏற்பட்டது. டெண்டர் பிடித்துப் பழக்கமல்லவா, தன் மகளைப் பால்வண்ணத்துக்குக் கொடுத்து, இந்தப் பக்கத்தில் முடிச்சை இறுக்கிப் போட்டால் அதில் தப்பிதம் இல்லை என்று நினைத்தார். நினைத்தபடி நடத்துவதில் காலத்தை வீணாக்கவில்லை. தஞ்சாவூர் ஜில்லாவில் தண்ணீர் வசதி இல்லாத் தாலுகா குமாஸ்தாவாகப் பால்வண்ணம் புறப்பட்டபொழுது மீனாட்சியும் தொடர்ந்தாள்.

மண்ணாந்தைச் சாமியாருக்கு பக்தன் மண்ணாகிவிட, குளப்பறி திருப்பணி முன்போல் அவ்வளவு சீராக நடக்கவில்லை. ரொம்ப நாள் பழகினாலும் கடவுள்கூடப் புளித்துப் போவார் அல்லவா. திருநெல்வேலி சைவ வேளாள குலதிலகங்களுக்கு ஏககாலத்தில் தக்ஷிணாமூர்த்தியாகவும், கும்பமுனியாகவும் தென்பட்ட மண்ணாந்தைச் சாமியார், போகராக ஆகிவிட்டார்! குலதிலகங்களின் சம்மத வரம்புக்கு மீறிய அளவில், பிள்ளைவரம் கொடுக்கப் புகுந்ததாக சாமியார் மீது புகார். அவர் அங்கிருந்து அந்தர்த்தானமாகி, பட்டிவீரன்பட்டி கந்தவேள் ஆலயத்தின் மேற்குக் கோபுரவாசல் திருப்பணியில் ஈடுபட வேண்டியதாயிற்று. இப்படியாக மேயன்னாவின் ஆசைகள், திருவிளையாடல்கள் எல்லாம் ஜவுளிக் கடை பேரேட்டுக் கணக்கைத் தவிர மற்ற இடத்தில் தடந்தெரியாது போயிற்று.

திருநெல்வேலிச் சீமான்கள் தெய்வத்தை சந்தியில் விட்டுவிட்டு ஓடிப்போக மாட்டார்கள். போன கணக்கைக் குளத்தில் போட்டுத் தூற்றுவிட்டு, திருப்பணியையாவது அரையும் குறையுமாக நிற்காமல் நிறைவேற்றிவிட ஆசைப்பட்டார்கள். திருச்செந்தூர் - ஸ்ரீவைகுண்டம் ரஸ்தா குத்தகையில் எதிர்பார்த்த வரம்புக்கும் அதிகமாகக் கணக்கு லாபம் காட்டியதால், திருப்பணிக்கு என்று ஆயிரம் ரூபாய் கொடுத்து, பழமலை கடையையும், சிவசிதம்பரம் பிள்ளை கோயில் திருப்பணியையும் பார்த்துக் கொள்ளுவது என்று சேவகப் பங்கீடு செய்துவைத்தார். சிவசிதம்பரம் பிள்ளைக்கு ஜவுளிக்கடை நிழல்போய் ஆயிரங்கால் மண்டப நிழலும், நரி வௌவால் நெடியும் பரிச்சயமாயிற்று.

2

சிவசிதம்பரம் பிள்ளை சொப்பனத்திலிருந்து விழித்துக் கொண்டதுபோல் தம் வாழ்வின் பேரேட்டுக் கணக்கைப் பார்த்தார். ஐந்து பெண்கள், எம்டன் குண்டு போட்டபோது கிடைத்துவந்த சம்பளம், குடவயிறு, சில நரையோடிய தலைமயிர்கள் - இவைதான் இவரது வரவிலிருந்தது. மற்றதெல்லாம் பற்றிலிருந்தது. எம்டன் போட்ட குண்டு விரட்டின காலத்திலிருந்து மேயன்னா கண்ணை மூடிவிட்ட நேரம் வரை அவர் வாழ்வு தனிச்சாகை பிடிக்கவில்லை. ஜவுளிக் கடையும் மூன்று குடும்பமும் அவர்களது வாழ்வும் போக்குமே இவரை இழுத்து வந்திருக்கிறது. குதிரை லாயத்தை எட்டும் நேரத்தில் குத்துப் புல் கூட அகப்படவில்லை என்றால்... இதுவரை இந்த மாதிரி நினைத்ததே கிடையாது. ஐந்து பெண்களைக் கரையேற்ற வேண்டுமே; அவருக்கு நினைக்க நினைக்க மூச்சே திணற ஆரம்பித்தது. நெஞ்சு சுளுக்கிக் கொள்ளும் போலிருந்தது.

ஆனால் ஒன்றில் பரமசுகம். படித்துறை கட்டிக் கொண்டிருப்பதில் பரமசுகம். நிச்சிந்தையாக, யாரோ கொடுக்கிற பணத்தைக் கொண்டு ஏதோ தெய்வத்துக்குச் சேவை நடக்கிறது, நடந்து கொண்டிருக்கிறது. சிற்றுளியும் டொங் டொங் என்று எதிரொலிக்கிறது. நரி வௌவால் கிறீச்சிடுகிறது. எங்கு பார்த்தாலும் கருங்கல் தளத்தின் எதிரொலி.

அதிலிருந்துதான் அவருக்கு தாடி வளர ஆரம்பித்தது. இடையிடையே நரையோடிய தாடி வளர ஆரம்பித்தது. ஒரு வரிசை முடிந்தவுடன், பிறகு மறுபடியும் பணவசூல், அப்புறம் கட்டுமான வேலை. கோவிலிலே வசனம் இருந்தமாதிரி சேவகம். முன்பு நரசேவகம். இப்பொழுது தெய்வ சேவகம். லோகத்திலும் அயோக்கியர்கள் நடமாடுகிறார்கள்; தெய்வ சந்நிதிதானத்திலும் நடமாடுகிறார்கள். அங்கே வியாபாரார்த்தமாக மனசை அடமானம் வைக்கிறார்கள்; இங்கே உலகத்தை உய்விக்கும் பரந்த நோக்கத்துடன் வியாபாரார்த்தமாக மனசை அடமானம் வைக்கிறார்கள். மானத்தை விற்கிரயம் பண்ணுகிறார்கள். பொற்றாமரைக் குளம் இடிந்து கிலமாகுமுன்பு அதன் ஜீவ முடிச்சு இடிந்து கிலமாகிவிட்டது. அது அவருக்குத் தெரியாது. நிச்சிந்தையாகப் படித்துறை கட்டிக்கொண்டு இருக்கிறார்; அதாவது, செத்துப்போன உடலத்துக்கு ரணசிகிச்சை செய்து, பாண்டேஜ் கட்டிக் கொண்டிருக்கிற மாதிரி சட்டத்தின் அடித்தளத்திலே அமைந்த சர்க்காரின் நிழலுக்குள்ளேதான் சாமியே தஞ்சமாகிவிட்டார். இன்று அவரைப் பட்டினி போடலாம்; அவர் கணக்கை ஆடிட் செய்யலாம்; ஆனால், பட்டினி கிடக்கும் மனுஷனுக்கு ஐயோ பாவம் என்றிரங்கி, கால் காசு எடுத்துப்போட அவர் நினைத்தால் அவருடைய கையை முறித்துப் போடுவார்கள். அவருக்குக் குளிக்க குளம் வேண்டாமா? அவருடைய பக்தர்களின் மனப்பாசியை அகற்ற பொற்றாமரைக் குளம் வேண்டாமா? சிவசிதம்பரம் பிள்ளை நிச்சிந்தையாகக் குத்துக்கல்லில் உட்கார்ந்து குளப் படி கட்டிக் கொண்டிருக்கிறார். டொங் டொங் என்று சிற்றுளிச் சத்தம் ஆயிரக்கால் மண்டபத்தில் எதிரொலிக்கிறது. ஐந்து பெண்களுக்குக் கலியாணம் இன்னும் ஆகவில்லை என்று அது எதிரொலிக்கிறது. அந்த சத்தம் அவருக்கு மனசில் அந்த நினைப்பை அகற்றுகிறது. பற்றில்லாமல் திருப்பணி செய்து, மறுபிறவியில் கிடைக்கும் செல்வத்தைக் கொண்டுவந்து இவர் கலியாணம் செய்து வைப்பார் என்று மக்களனைவரும் காத்துக் கொண்டிருந்துதான் முடியுமா? தெய்வம் சிருஷ்டித்ததே ஒழிய தர்ம சாஸ்திரத்தையும் கையில் எழுதி நம் கையோடு கொடுத்தனுப்பியதா? இவர்களது கலியாணத்துக்கு தெய்வம் எப்படிப் பொறுப்பு? கொஞ்சம் பொய் சொன்னால், முதல் மக்கள் கலியாணத்தைக் கூட முடித்துவிடலாம். அப்புறம் மண்ணாந்தைச் சாமி மாதிரி ஓடுவதற்கு சிவசிதம்பரம் என்ன, கால்கட்டு இல்லாத நபரா?

சிற்றுளி டொங் டொங் என்று ஒரு நாதத்தை எழுப்பி அந்த லயத்தில் மனப்போக்கை மிதக்க விட்டது. சிவசிதம்பரம் பிள்ளை தாடியை நெருடிக்கொண்டே கேட்டுக் கொண்டிருந்தார்.

"ஐயா, ஒங்க முதலாளி ஐயா தவறிப் போனாக தெரியுமா? மோட்டார் மரத்திலே மோதி, ஒங்க வீரபாகு பிள்ளைதான். என்ன ஒரு மாதிரி" என்றது ஒரு குரல்.

"இன்னும் ஒரு வரிசைதான் பாக்கி, இன்னம் இருநூற்றி ஐம்பது இருந்தால் போதும்" என்றார் சிவசிதம்பரம் பிள்ளை.

தமிழ்மணி பொங்கல் மலர், 1944
------------------

This file was last updated on 4 December 2022
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)