pm logo

சிவஞானதேசிக பரமாசாரிய சுவாமிகள்
எழுதிய "அசபா நடனப் பதிகம்"


acapA naTanap patikam by
civanjAnatEcika paramAcAriya cuvAmikaL
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
We thank Dr. Meenakshi Balaganesh, Bangalore, India for her assistance in the preparation of the soft copy of this work for publication.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

சிவஞானதேசிக பரமாசாரிய சுவாமிகள்
எழுதிய "அசபா நடனப் பதிகம்"

Source:
குருபாதம்
தருமபுர ஆதீனம் பத்தாவது மகாசந்நிதானம்
ஸ்ரீ-ல-ஸ்ரீ சிவஞானதேசிக பரமாசாரிய சுவாமிகள்
அருளிச்செய்த "அசபா நடனப் பதிகம்".
இந்நூல் திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனம்
இருபத்தைந்தாவது மகாசந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த
பரமாசாரிய சுவாமிகள் திருவுள்ளத்தின்படி வெளியிடப்பெற்றது.
1951.
ஞானசம்பந்தம் பதிப்பகம், தருமபுரம்
வெளியீடு எண் 250.
---------------------
வெளியீடு எண் 250.
அசபா நடனப் பதிகம்
தருமபுர ஆதீனம்.
உ -- குருபாதம்
      தருமபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மகாசந்நிதானம் அவர்கள்
திருவாரூர் ஸ்ரீ செல்வத் தியாகேசப் பெருமான் திருவடிகளில் சாத்திய அன்பு மலர். ----
-----------


முகவுரை
சிவத்தலங்கள் எண்ணிறந்தன. அவற்றுள் பிருதிவிக்ஷேத்திரமாகிய கமலாலயம் என்னும் திருவாரூரே சிறந்தது. இது பராசக்தி பீடங்களுள் தலையாயது. இத்தலத்தில் எழுந்தருளியிருப்பவர் அசபா நடேசராகிய ஸ்ரீ செல்வத்தியாகேசப் பெருமான்.

இப்பெருமானைப் பாற்கடலில் பள்ளிகொள்ளும் திருமால் தமது நெஞ்சத்தாமரையில் வைத்துப் பூசித்து வந்தார். இவ்வண்ணம் யோகநித்திரையில்

இருக்கின்ற திருமாலின் இதயத்தானத்து சோமாஸ்கந்தத் திருமேனி தாங்கிய செல்வத் தியாகராசப் பெருமான் அசைந்தாடிக்கொண்டிருந்தமையால் அசபா நடனர் எனத்திருநாமம் தாங்கினார்.
உயிரெடுத்த உடம்பில் பிராணவாயுவின் இயக்கத்தால் ஏற்படும் உச்சுவாச நிச்சுவாசங்களால் அவன் நான் என்னும் பொருளைத் தரும் ஸோஹம் என்னும் பெரியமந்திரம் மக்களால் ஜெபிக்காமலே ஜெபிக்கப்பட்டு வருகிறது, இதனை நன்கு உணர்ந்து இறைவன் நான் என்றெண்ணுவதே அஜபை மந்திர ஜெபமாகும். இதனால் ஸ என்பது ஆன்மாக்களை அருளால் ஆட்கொள இருக்கும் ஆண்டவன் என்பதும், அவன் முற்பட்டு நிற்கின்றான் என்பதும் அஹம் என்ற பதத்தின் பொருளாகிய நான் என்பது இரண்டாவதாக எண்ணப்படுவதால் ஆன்மா இறைவனது வியாபகத்துளடங்கி தானற்று, தன்செயலற்று, சிவச்செயலேயாய், சிவமேயாய் இருக்கின்ற உயர்ந்த நிலையைக் காட்டுவது என்பதுமாகிய உண்மை விளக்கப் பெறுகின்றது. இதனையே நமது ஸ்ரீமத் குமரகுருபர சுவாமிகளும்,

தானின் றெனைத்தனக் குள்ளே ஒளிக்கும்என் தன்மைநிற்க
யானின்ற போதுஎனக் குள்ளே ஒளித்திடு மிப்பரிசே
வானின்ற சின்மய மாமாசி லாமணி மன்னுந்தன்மை
நானின்று கண்டனன் காணேன் இதற்கொத்த நன்மணியே.

என்று அநுபவித்துக் கூறுகின்றார்கள். மூச்சுக் காற்றை உள்ளே இழுப்பதாலும் வெளியிலே தள்ளுவதாலும் உண்டாகும் அசைவே அஜபா நடனம் என்பது. இதனையே எமது ஆதீனப்புலவர் மணியாகிய சம்பந்தமுனிவர்,

மேகமொன்று நீள்வெள்ளி வெற்பணைந்தென
      விளங்கு நாகணை மேவி
யோகநற்றுயில் கொண்டுறை கடவுள்நெட்
      டுயிர்ப் பசைவா லன்னான்
ஆகமீ தசைந்தாடியே யமர்ந்தனன்
      அமுத சந்திரமௌலி
ஏகநாயகன் அம்பிகை கந்தனொ
      டெண்ணிலா வுலகுய்ய

என்றருளுகின்றார். இந்தப்பாட்டில், பாற்கடலில் ஆயிரம் தலைகளோடுகூடிய ஆதிசேடனாகிய படுக்கை அமைக்கப்பெற்றுள்ளது. அதன்மேல் திருமால் யோகநித்திரை புரிகின்றார். அவருடைய இதயமாகிய அநாகதசக்ரத்தில் தியாகராஜப்பெருமான் அசைந்தாடிக்கொண்டேயிருக்கிறார். அவருடைய அசைவு அஜபா நடனம். அந்த நடனமே அனைத்துலகத்தையும் ஐந்தொழிற்படுத்துகிறது.

இங்ஙனம் எல்லா ஆன்மாக்களிடத்தும் அஜபையாக இருந்து எல்லாருக்கும் துன்ப நீக்கத்தையும் இன்பப்பேற்றையும் இறைவன் அருளிச்செய்கின்றார். நாம் ஒவ்வொரு நாளும் விடும் இருபத்தையாயிரத்து அறுநூறு சுவாசங்களில் ஸோகம் என்ற மகாமந்திரத்தின் அர்த்தம் அடங்கியிருப்பதைத் தியானித்து உயிர்ப்பினும் தியாகேசனது அஜபா நடனத்தைத் தரிசனம் செய்து வருவோமானால் தியாகேசப் பெருமானை உள்ளபடி வழிபட்டவர்களாவோம்.
இத்தகைய அநுபவநிலையில் பெருமானை வழிபட்ட எமது ஆதீனத்துப் பத்தாவது குருமூர்த்திகளாகிய ஸ்ரீலஸ்ரீ சிவஞானதேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அந்த அசபாநடேசப் பெருமானிடத்தில் ஈடுபட்டுப் பதிகம் ஒன்றை அருளிச்செய்திருக்கிறார்கள்.
தருமையாதீனத்து நிர்வாகத்திலுள்ளது திருவாரூர் இராஜாங்கக்கட்டளை. இந்தக் கட்டளைச் சொத்து நிர்வாகம் முழுமையும் தருமையாதீனத்துக்குச் சொந்தமானது. இதன் பரம்பரை டிரஸ்டியான தருமபுர ஆதீனம் 25-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அவர்கள் 23-7-51 சோமவாரதினம் திருவாரூர் நிறைசெல்வத் தியாகேசன் தரிசனத்திற்கு எழுந்தருளியானபோது அவர்கள் விஜய நினைவுமலராக இந்நூல் வெளியாகிறது. அன்பர்கள் படித்துப் பயன்பெற்று உய்வார்களாக.

தாண்டவ மான தனியெழுத் தோரெழுத்
தாண்டவ மான தனுக்கிரகத் தொழில்
தாண்டவத் கூத்துத் தலைநின்ற தற்பரந்
தாண்டவத் கூத்துத் தமனியந் தானே.

திருவாரூர்,. இங்ஙனம்,
21-7-51 சோமசுந்தரத்தம்பிரான்,
இராஜாங்கக்கட்டளை கட்டளை விசாரணை
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அசபா நடனப் பதிகம்

திருச்சிற்றம்பலம்

நீடுசந்த் ரோதயம் போல்வதன மசையவருள்
      நிறைகமல நயனமசைய
நின்றுநதி மதியசைய வொன்றுசடை முடியசைய
      நிகழ்மந்த காசமசையத்
தோடலர் செவந்தியந் தோடசைய மார்பிற்
      றொடுத்தசெங் குவளையசையத்
துங்கமழு மானசைய வங்கதஞ் சதகோடி
      சூரியர்கள் போலசையமால்

தேடுமர வக்கிண் கிணிப்பாத மசையவொரு
      செம்பொன்மலை வல்லியசையச்
செய்யகும ரேசர்நடு நின்றசைய நவரத்ன
      சிம்மா சனத்திருந்தே
யாடுமுன் னசபநட மடியனென் றுங்காண
      அருளுவாய் தியாகேசனே
யசைவில்கம லேசனே யசபா நடேசனே
      ஆனந்த வுல்லாசனே.       1

தத்துவ சொரூபமுந் தத்துவா தீதமுந்
      தத்வகர்த் தாவுமென்றுஞ்
சகளா களாதீத சந்தோஷ சல்லாப
      சருவ சூ னியவஸ்துவும்
நித்திய நிராமய நிராதங்க நிர்த்தொந்த
      நிர்க்குண நிராதாரமும்
நிர்மல நிராவாச நிற்சங்க நிர்விகற்ப
      நிஷ்ப்ரபஞ் சச்சோதியாய்ச்
சுத்தபூ ரணசச்சி தானந்த முஞ்சோம
      சூரிய ரனந்தகோடி
துங்கவொளி கங்குலென மங்கவரு மோர்தற்
      சொரூபப்ர காசமும்விடா
அத்துவித சித்தாந்த முத்திநீ யானதால்
      ஆரறிவர் தியாகேசனே
அசைவில்கம லேசனே யசபா நடேசனே
      ஆனந்த வுல்லாசனே.       2

வதனமுங் கருணைசடை மகுடமுங் கருணைசெவ்
      வடிவமுங் கருணைகழுநீர்
மாலையுங் கருணைசெவ் வந்தியுங் கருணையின
      மானுமழு வுங்கருணைமேல்
உதரமுங் கருணைகங் கணவரவ முங்கருணை
      உழுவையத ளுங்கருணையை
யுரககிண் கிணிதழுவு சரணமுங் கருணைஅரு
      குமையம்மை யுங்கருணைவேல்
மதலையுங் கருணைபல சிங்கஞ் சுமந்திடும்
      மணிப்பீட முங்கருணைமேல்
வளரண்ட கோடிகளெ லாம்வாழ ஆரூரில்
      வாழ்வதுங் கருணைபாசம்
அதிரநட மிடும்சபை யுங்கருணை நின்கருணை
      யாரறிவர் தியாகேசனே
அசைவில்கம லேசனே யசபா நடேசலே
      ஆனந்த வுல்லாசனே.       3

கருணைவா ரிதியேகு ணாதிசய மேபூர்ண
      கற்பதரு வே அனந்தங்
கலைமதிய மேஞான பாநுவே தேட்டாத
      கண்ணின்வளர் கருவூலமே
திருவருட் செல்வமே யானந்த வாழ்வே
      தெவிட்டாத தெள்ளமிர்தமே
செங்கரத லாமலக பலமேசெ கத்தையாள்
      தேவர்கள் சிரோரத்னமே
ஒருபரப் பிரமமே யென்றுனைப் பாடினான்
      உல்லாச மாயாடியே
யொண்பூர ணானந்த வின்பவமு தினைமேவ
      வுனதுள மகிழ்ந்தருளுவாய்
அருணகண பணவுரக கிண்கிணிக் காலனே
      யழகார் தியாகேசனே
அசைவில்கம லேசனே யசபா நடேசனே
      ஆனந்த வுல்லாசனே.       4

மண்டலந் தன்னிலா ரூரென்னு முண்டக
      மலர்ந்தமூ லாதாரமும்
மண்டனந் தஞ்சந்த்ர சூரியர்கள் போல்வதனம்
      வயங்கிடுங் கரியமேக
கண்டனா முன்றனையு மண்டகோ டிகளீன்ற
      கௌரியையு மென்னையாளுங்
கந்தசா மியையுமரு உருகழற் காலிலே
      கட்டுமா டாவமென்னுங்
குண்டலியு மொன்றுகிண் கிணியென்று நாதமுங்
      கொள்விசுவ மாதாரமாய்க்
கொண்டோடி மீளவும் ப்ராணனீ தென்னுமுன்
      குலவுமச பா நடத்தை
அண்டத்தி லுள்ளபடி பிண்டத்தி னான்காண
      அருளுவாய் தியாகேசனே
அசைவில்கம லேசனே யசபா நடேசனே
      ஆனந்த வுல்லாசனே.       5

படியாட மேலண்ட பாதாள மாடஇப்
      பார்தாங்கு பாந்தளாடப்
பானுமதி யாடமறை யாடவய னாடவிரு
      பத்மலோ சனனாடவான்
முடிவிலா வமரர்களு முனிவர்களு மாடஅலை
      மோதுமெழு கடலோசைபோல்
முழவுமத் தளதாள சங்கநா தம்பெரிய
      மூதண்ட முகடளப்பச்
செடிகுடிலை மாயையிரு திரைவளைத் தேமலஞ்
      சிதையதிந் திமிதியென்றே
செங்கனக தண்டதனில் வீற்றிருந் தாடுமுன்
      திருந்துமச பாநடத்தை
அடியனேன் காணமுன் பென்னதவ மாற்றினேன்
      அருளுவாய் தியாகேசனே
அசைவில்கம லேசனே யசபா நடேசனே
      ஆனந்த வுல்லாசனே.       6

வம்பான தனுகரண புவனபோ கங்கடிய
      வல்லிரு ளெனப்போகவும்
வளர்கர்ம மாயையும் பஞ்சமல முங்கொடிய
      வலியவினை விட்டோடவும்
கெம்பீர நாதநா தாந்தமுஞ் சத்தியுங்
      கிளர்வியா பினிசமனையுங்
கிட்டவரு முன்மனை வியோமரூ பியுமன்பர்
      கிட்டிடு மனந்தையமுதக்
கம்போ லனாதையு மனாசிருதை யுஞ்சந்த்ரர்
      கதிரவ ரனந்தகோடி
கங்குலென வெங்கும்ப்ர காசித் தொலித்திடக்
      கட்டுமர வக்கிண்கிணி
யம்போ ருகச்சரணை யடியனேன் முடியில்வைத்
      தருளுவாய் தியாகேசனே
அசைவில்கம லேசனே யசபா நடேசனே
      ஆனந்த வுல்லாசனே.       7

ஊனந் தவாமல மெனுங்கோடை தணியவும்
      உற்றமா யேயமென்னும்
ஒழுகுபெய ரழியவும் மாயையெனு மொழியாது
      வுடலழுக் கொழியவுமுனே
யீனந் தருந்திரோ தானமென் றிடவரு
      மிளைப்பாற வுங்கன்மமா
மீடில்வட வாமுகச் சூடுபோ கவுமெனை
      யிருந்தபடி யிப்படியிலே
தானந்த மடிநடுவு மில்லாமை பெருகியே
      தன்கருணை யூற்றெடுத்துத்
தங்கிடும் பரையாதி யென்றிடுந் திரைவீசி
      சார்ந்திடுஞ் சொரூபசச்சி
தானந்த வெள்ளத் தழுத்திவிடு நின்னுடைய
      காலினால் தியாகேசனே
அசைவில்கம லேசனே யசபா நடேசனே
      ஆனந்த வுல்லாசனே.       8

பொல்லாத விருண்மனையை நில்லாத வாழ்வைவெகு
      புழுமலங் கட்டுபொதியைப்
புன்புலால் நாறிடும் புலைக்கலத் தைத்தினம்
      புதுமைதரு பொய்ப்புரட்டை
நல்லோ ரெறிந்திடும் பாண்டத்தை நாய்நரிகள்
      நாடிடும் பீழையுடலை
நானென்று மெனதென்று நானடு விராமனீ
      நானா யிருக்கவைப்பாய்
கல்லாலி னீழலி லிருந்தகற் பகமே
      கருணையங் கடலமுதமே
கரும்பினின் கட்டியே யொருவர்பூ ணாதக்
      கவுத்துவ மகாரத்னமே
அல்லாரு மணிகண்ட வகளங்க துங்கத்ரி
      யம்பகத் தியாகேசனே
அசைவில்கழ லேசனே மசபா நடேசனே
      ஆனந்த வுல்லாசனே.       9

பொன்னையும் மண்ணையும் பெண்ணையும் பொருளென்று
      பொய்க்கடலி லேவிழுந்து
போம்வழிகள் காணாமல் முன்தவத் தாலுனது
      பொன்னடிப் பிணைபிடித்த
என்னையுங் கைதந் தெடுத்துரட் சித்தனை
      யின்னமு மிரங்கியிங்கே
யேகாந்த மாகவே யின்பபூ ரணவீட்டி
      லிறுமாந் திருக்கவைப்பாய்
தன்னிகரி லாதசிவ ஞானதே சிகனே
      சிதம்பர சபாநாதனே
தண்கயிலை நாதனே சகலபுவ னேசனே
      சரவணோற் பவசகத்துக்
கன்னையுட னவரத்ன சிங்கா தனத்திருந்
      தருளுந் தியாகேசனே
அசைவில்கம லேசனே யசபா நடேசனே
      ஆனந்த வுல்லாசனே.       10

திருச்சிற்றம்பலம்.
------------------------------------------

This file was last updated on 14 Dec- 2022
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)