pm logo

குமாரவேல் முதலியாரவர்கள் இயற்றிய
தில்லைவெண்பாமாலை. & சிவகாமியம்மை பதிகம்


tillai veNpAmAlai & civakAmiyammai patikam
by kumaravEl mutaliyAr
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
We thank Dr. Meenakshi Balaganesh, Bangalore, India for her assistance in the preparation of the soft copy of this work for publication.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

குமாரவேல் முதலியாரவர்கள் இயற்றிய
தில்லைவெண்பாமாலை. & சிவகாமியம்மை பதிகம்

Source:
புதுவை இயற்றமிழ்ப் போதகாசிரியராகிய
குமாரவேல் முதலியாரவர்கள் இயற்றிய
தில்லைவெண்பாமாலை. & சிவகாமியம்மை பதிகம்
இவை சென்னை ஹைஸ்கூல் என்னும்சகலகலாசாலைத்
தமிழ்ப்பண்டிதர் ம----ஸ்ரீ, கோமளபுரம். இராசகோபால பிள்ளையவர்களால்
பார்வையிடப்பட்டு ம-----ஸ்ரீ, ச. நாகப்ப செட்டியாரென்பவராலும்
செ. சுப்பராயவாசாரி யென்பவராலும்
சென்னைத் தண்டையார்பேட்டை லக்ஷ்மீவிலாச அச்சுக்கூடத்தில்
பதிப்பிக்கப்பட்டன.
யுவ௵ ஐப்பசி௴
இதன் விலை. அணா, 1.
-------------
சிவமயம்.
சாத்து கவி.

மதுரை ஜில்லாத் தேவகோட்டைச் சமஸ்தானம் ஸ்ரீ சுப்பிரமணிய ஐயரவர்கள்
இயற்றிய அறுசீர்க்கழிநெடிலாசிரிய விருத்தம்.

பார்தழுவி வளர்தில்லை யம்பலவாணன் புயத்திற் பன்னா ளும்பூ,
ணார்தழுவி தழிமாலை வண்டுபடுஞ் சோர்வுகொளு மலரா யாரும்,
பேர்தழுவி யுரைக்கவுறுமென் றவைநீத் துவந்தணியப் பேசம்மூன்றுஞ்,
சார்தழுவா மொழிவெண்பா மாலைதந்தான் குமாரவேற் தமிழ்வல் லோனே.

சென்னைஹைஸ்கூல் என்னும் சகலகலாசாலைத் தமிழ்ப்பண்டிதர்
ம- - - - - ஸ்ரீ கோ. இராசகோபால பிள்ளையவர்களால் இயற்றிய
மேலை விருத்தம்.

அருகுலாம் பொய்கையுகள் கயல்பாயவழியிறா லதுதேன்பாய,
முருகுலாந் தணபவை யோங் குயா புதுவை முன்செ யானி தவமேயென்ன,
வருகுலாங் குவளை யணி வரைப்புயத் தான் குமாரவே னாவலோனன்
குருகுலாந்தில்லை வெண்பாவு ரைதந்தான் னுயாக்கடலக் கரைவந்தானே.


சிவமயம்
திருச்சிற்றம்பலம்.

1. தில்லை வெண்பாமாலை.

விநாயகர்காப்பு.
நேரிசை வெண்பா.
திருவுண்டாங் கல்வித் திறமுண்டா நல்ல
உருவுண்டா நெஞ்சே யுயர்திண் - கிரிமகண் முன்
தந்ததனித் தந்தனிரு தாள்பரவி யன்பினொடும்
சிந்தித் திடுதி தினம்.

நால்வர் துதி.
அறுசீர்க்கழிநெடிலாசிரிய விருத்தம்
திரம்படவிவ்வுலகியற்கை செயற்கையெலாந்தெளிவாக்கித்
      திரிபில்லாரும்
நிரம்பவமைத்தருடரவந்தார் பணியுந்திருத்தில்லை
      நிமலன்வானார்
பரம்பரன்றாண்மலர்மிசை வெண்பாமாலை சொலத்துணையாப்
      பாரிற்றோன்றி
வரம்பறுபுண்ணியமியற்று நால்வர்மருமலர்க்கழல்கள்
      வணங்குநெஞ்சே.

அவையடக்கம்.
தேன்பெருகமடல்விரிசெம்மலர் பொய்கைபுடை சூழுந்
      தில்லைமேவும்
மான்மருளுங்கண்ணி சிவகாமியிடமருவி மகிழ்
      மணாளன்றாண்மேல்
நான்சொலுமிப்பாமாலை நன்குணர்வோரிருசெவிக்கு
      நலமின்றேனும்
ஊன்பிறவியொழித்தருளம்பலவாணன் பெயருளதா
      லுவப்பரன்றே

நூல்.
நேரிசை வெண்பா
பூந்தவிசோன்போற்றப்புலிபதஞ்சலிக்கெதிரில்
தேந்துளவோன் வாழ்த்தத்திருத்தில்லைப் - போந்தாடு
பாதாசிவகாமிபாகாநினைப்புகழ
நாதாநாதாநீநயந்து.       (1)

மங்கையர் தமல்குலிடை வார்விழிசெவ் வாய்கதித்த
கொங்கையரா நூலயில்வேல் கோவைபந்தென்- றுங்கமுறி
நாளுமுனை யேத்தாமனைந் தேன்றுயர் கெடவந்
தாளுயர் சிதம்பர வையா.       (2)

துயரின்றி யுன்றன் றுணைமலர்த் தாட்கன்பு
செயநாயேற் கின்றருள் செய்செய்ய - கயற்கண்
உமையவள் பாகாதில்லை யூரவிடைப் பாகா
கமையுறு மெண்வாகா கனிந்து.       (3)

மெய்த்தவர் போற்றுந் தில்லைமேவு பரம்பரனே
மொய்த்தளி பாண்செய்குழ லார்மோகத்தால் - எய்த்தேனை
ஆதரித்தா ளாக்குதிநின் னன்பர்தமக் கத்தத்தில்
தீதரித் தாய்மா தேசிகா.       (4)

கயற்கண் ணிபங்கா கடையே னின்பத்திக்
கயமூழ்கி நன்மைபெறக் கண்பார் - பயந்தருகார்
மேதியனை யன்றுதைத்த மென்பதனே தில்லைவளர்
பூதியணி வாகா புரிந்து.       (5)

சேவேறுமைய திருத்தில் லையிற்கூத்தா விமையோர்
கோவே திருக்கழுக் குன்றத்த - மாவஞ்ச
நெஞ்சமு டையேனை நீயல்லாற் கைதூக்கி
அஞ்சலென் பாருல கிலார்.       (6)

ஐயந்திரிபற நூலாய்ந் தோர்நிதந் துதிக்கும்
ஐயன்றிருத் தில்லையம் பதியோன் - செய்ய
திருவடிக் காளாவா யேற்றீவி னைக்காளாகி
உருவெடுக் காய்நெஞ் சேயுணர்.       (7)

சித்தங்கள் சிறப்பத் தீவினை விட்டேக
உத்தமர் கடம்பா லுறவாக - நித்தமுனைப்
பூசிக்கத் தில்லையனே பூந்தாள் புரிநடனம்
நேசிக்க வென்மனத் துணில்.       (8)

வாசிப்பரி யேறுமா தவர்மூவா யிரவர்க்
காசிதரத் தில்லைய மர்ந்தோனே - வேசைக்
கிரக்கமு டையேற்கவ் விணையில் லாவீடு
தரக்கரு துவாயோ தடுத்து.       (9)

கச்சியா னைக்காவ ணாமலைசீர் காளத்தி
மெச்சுதில் லையென்னும் வியன்றலத்து - நிச்சலுமிக்
குச்சிதமா யோங்குமும் பர்கோன் றாணெஞ்சே
நச்சிலை யெங்குய் திகவில்.       (10)

சுற்றத் தொடரைத் தொடராதுன் றாண்மலரைப்
பற்றற் கெனக்கருள் பாவிப்பாய் - முற்றுணர்வோர்
போற்றுந் திருத்தில்லைப் புண்ணியனே வெள்விடையின்
மேற்றங் குமையவி ழைந்து.       (11)

உணவுக் குழல்ல தொருநாளு நீங்காப்
பணியுடை நெஞ்சேநற் பணிவாய்ப் - பணியணையின்
மேற்றுயின் மால்வாழ்த்து விமலன்றி ருத்தில்லை
போற்றுவரு மாக்கதி யப்போது.       (12)

அனமார் வயற்றில்லை யம்பலவன் றாளேத்
தினரன் றோசேணுல லயிந்து - தினகரனார்
பூவிலு றைபுத்தேள் பொற்புள்ளூர் திகொய்ம்மலர்ப்பூ
காவினிழற் கோனெஞ் சேகாண்.       (13)

நின்புகழ்கே ளாச்செவியு நீள்சிரமும் பாழ்மனமும்
அன்புடனேத் தாநாவு மஞ்சலிசெய் - தின்பணுகாக்
கைத்தல முந்தில்லைக் கருணாக ராவமைத்த
தெத்தொழிற் காவைய வியம்பு.       (14)

பொய்யுலகை மெய்யென்றுன் பொற்கமலத் தாளேத்தா
வெய்யேகு வெம்பிறவி வேரறுமோ - செய்யதிரு
மேனியாய் தில்லையுறை வித்தகச டாடவிமேல்
பானிலவு சேர்திகம் பரா.       (15)

வேளை யெரிந்தவி மலசிதம் பரவிவ்
வேளை யெனைக்காப்பார் விறலயில்வேல் - வேளைங்
கரனைய ளித்த சிவகா மிமகிழும்
அரனேயு னையன்றி யார்.       (16)

ஐந்துமு கஞ்செவியீ ரைந்துடையாய் நின்முன்பென்
வெந்துய ரெலாமடக்கி விண்ணப்பம் - தந்துமெதிர்
நின்றுபுகன் றுந்தில்லை நின்மலா சோர்வுறலென்
என்றுரை யாளறே தியம்பு.       (17)

இன்றைக் காகாதென் றிருந்ததா லியமன்வரும்
அன்றைக் கறமுயலற் காமோபொன்- மன்றுள்
நடித்தோன் கழல்பூண்டு நன்னெஞ் சேயன்பு
பிடித்தாற் றுறுமறனே பேண்.       (18)

நேரார் புரமெரித்த நித்தியனே மெய்யன்பு
நேராத நெஞ்சா னிலைகெட்டேற் - காராவார்
உன்னையன்றி வீடுதவற் கோதுதிருத் தில்லைநகர்
மன்னுஞ்சி தம்பர தேவா.       (19)

கடலணை யோன்பூவணை யோன்கார்க் கிருட்டியன்ன
வடிவெடுத் துங்காணா மலர்த்தாள் – முடிய..........
நாடருந் தில்லைநகர் நம்பாநா யேன்செய்
பாடலுவப் பாயோ பகர்.       (20)

கற்றுமன முருகிக்கன் மமொழித் தாசையெலாம்
அற்றற மெண்ணான் கியற்றியாகமங்கள் - முற்றுமுயன்
றேத்தினரை யாடில்லை யெந்தாயடியேனை
காத்திட னின்றாட்கே கடன்.       (21)

அன்னம்பா லிக்குமருங் கல்வியுண் டாக்கும்
முன்னம்பா லிக்குமுயர் முத்தியினைத் - தன்மயமாம்
எல்லையி லானந்தமெய் துவிக்குந் தில்லையினில்
அல்லல றச்சென் றாங்கணை.       (22)

தில்லைச் சிதம்பரதே சிகவென்றே யொருகால்
சொல்லிப் பணிவோர் சுரர்வணங்க - வல்லவராய்
நின்றுநெறி மயக்கு நீலக்கடா வூர்திக்
கென்றுமஞ் சார்நெஞ்சே யிவண்.       (23)

நின்னாம மோர்கா னினைக்கே னெறியுணர்வோர்
சொன்னவ கையோரேன் சுடர்வீசு - பொன்னம்
பலத்தைவ லஞ்செய்யேன் பரம்பர னேவீணே
நிலத்திற் சுமையானே னின்று.       (24)

கண்டவர்தங் கன்மவினைக் கட்டழித்து வீட்டுநெறித்
தண்டிகை மீதேறித் தரணியெலாம் - கொண்டாட
முத்தியடை வாரதனான் முன்னுகநெஞ் சேசிற்
சத்தியுறை எல்லைத் தலம்.       (25)

மூர்த்தித லந்தீர்த்த மூன்றுமார் தில்லைதனைப்
பார்த்தள வில்யார்க்கும் பழைவினையைத் - தீர்த்தங்கு
வேண்டுவன வெல்லாம் விரும்பித் தருசெஞ்சே
வீண்டுய ரெல்லாமக லலுற்று.       (26)

பூதிநுதற் பூசிப்புண் ணியமெல் லாம்போற்றி
ஓதிவல மாகியுயர் தில்லை - ஆதிபரன்
என்னநுவ லேனீச னெற்கருள லக்காலத்
தின்னவகை யென்றுணர் கிலேன்.       (27)

இனமில் லாடாய் தந்தையீன்ற சுதரில்லம்
தனமென் றிடரிற் றளரேல் - மனமேசீர்
பாடுதும் வாதில்லைப் பரமன் றிருத்தாளை
நாடுதும் வாதில்லை நகர்க்கு.       (28)

தில்லையெனச் சொற்றாற் றிருவருமெப் பாலுந்தீ
தில்லையெனைச் சேர்நெஞ்சே யின்புறுவாய் - வல்லகொடும்
பாதகமலத் தானபற் றற்றோருக் களிக்கும்
பாதகமலத் தான் பதி.       (29)

சிவகாமித் தாயார் வாழ்தில்லைப் பரம
சிவகாமிக் கென்றுள மேதிங்கள் - இவர்சோ
தியஞ்சக் கரத்தான் றிசைமுகன் காமன்று
தியஞ்சக் கரத்தான் றாடேர்.       (30)

சிவகாமித் தாய்வாழி தில்லையம் பலத்தர்
அவிர்மலர் த்தாள்வாழி யருமா - தவநிறைந்த
போதமுனி வோர்வாழி பூதலத்தினாற் குலத்தர்
நீதிமறை வாழி நிதம்.       (31)
முற்றும்.
---------------
திருச்சிற்றம்பலம்


கணபதி துணை.

2. தில்லைச் சிவகாமியம்மைபதிகம்.

விநாயகர் காப்பு:
நேரிசை வெண்பா.

தில்லைச் சிவகாம தேவிக்கிங் கொண்பதிகம்
ஒல்லைசொல வேவந் துதவுமால் - வல்லோர்
நயக்கு மியலிசையை நாடோறு மென்னுள்
சயக்குஞ் சரமுகந்து தான்.

நூல்.
பன்னிருசீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்.

நித்தியகல் யாணிசுப மங்கள சவுந்தரி
      நிரந்தரவ நந்தரூபி
நிக்கிரகிய னுக்கிரகி நிரஞ்சனி தயாவதனி
நிதானசிவை செகரட்சகி
சுத்தபரி பூரணை கிர்பாகரை சதாநந்தி
      தூலசூட் சுமகாரணி
சூலிகுண சாலிபரி பாலியென் றனுதினந்
      துதிசெய்து கதிபெறுவனோ
புத்தமிர் தமொத்த வசனத்தி யிமயத்தரசு
      பொற்புடன ளித்தபுதல்வி
பொங்குபாற்கடலில்வளர் செங்கண் மால்சோதரி
      பராந்தகற்கினி யமனைவி
சத்தமறை யாகம புராணசாத் திரவொலி
      தழைத்திடும் புலியூரில்வாழ்
சலசமக லாதவல்லி கலையினி சாகவல்லி
      தலைவிசிவ காமவல்லியே.       (1)

உத்தமகு ணத்தின ரிணக்க மறியாமூட
      னுட்பகைய றாதமூடன்
ஒப்புரவி லாமூட னற்பரைவி டர் மூட
      னொத்தமன மற்றமூடன்
சித்தமிள காமூட னித்தநிய மாதிகள்
      செயத்திற மிலாமூடன்
தீதற்ற மெய்ஞ்ஞான நெறியினிற் கனவிலுஞ்
      சிந்தைசெல் லாதமூடன்
பித்தரினு மெத்தகுழ றித்திரியு மூடன்வெகு
      பேராசைகொண் டமூடன்
பிரியா தசஞ்சல நிறைந்தச முசாரமாம்
      பேய்பிடித் தாடுமூடன்
தத்துநனி பட்டுளந் தடுமாறு மூடனின்
      றாளினிழல்பெற் றுய்வனோ
சலசமக லாதவல்லி கலையினிரு வாகவல்லி
      தலைவிசிவ காமவல்லியே.       (2)

ஆனாலு மம்மம்ம வென்போலு மொருபாவி
      யம்புவியி லெங்குமிலையே
அறிவற்ற பாவிநன் னெறியற்ற பாவியில்
      லறமுறை யிலாதபாவி
மானனார் தொண்டுசெய் பெரும்பாவி நல்லோரை
      மதியாத கொடியபாவி
வசனத்தி னிசமற்ற மாபாவி மூவாசை
      வாரியில்வி ழுந்தபாவி
மேனாளி லிட்டுண்டு வாழாத பாவிதீ
      வினையெலாஞ் செய்தபாவி
வெஞ்சின மடங்காத பஞ்சமா பாவிநோய்
      வெறுமைகுடி கொண்டபாவி
சாநாளும் வந்துமுனை நினையா தபாவிநின்
      றாளினிழல்பெற் றுய்வனோ
சலமச லாதவல்லி கலையினிரு வாகவல்லி
      தலைவிசிவ காமவல்லியே.       (3)

வாங்குசிலை போலுடல் வளைந்தொ ருகைகோலூன்றி
      வாயில்வெண் பல்லுநழுவி
வசனமுங் குழறியிரு விழிகளும ருண்டுநோய்
      வந்துகுடிகொண் டுவெகுவாய்த்
தீங்குநனி செய்திடச் சிறுமையெனு மொருபாவி
      சேர்ந்துபெரு வாதுசெய்யச்
சிறுவருந் தாரமுமி கழ்ந்துநகை செய்திடத்
      தீமூப்புவந் துமேலிட்
டோங்குவெங் கொடியநம னார்வரும் போதினி
      லுளம்பதை பதைக்குமுனமே
உனதுபொற் பதநிழலில் வருகவென் றருள்புரிந்
      துய்யும்வகை செய்யவேண்டும்
தாங்குதலை யுனையன்றி வேறில்லை போதுமிச்
      சஞ்சலச்சு கமம்மையே
சலசமக லாதவல்லி கலையினிரு வாகவல்லி
      தலைவிசிவ காமவல்லியே.       (4)

அரிதான மானிடப் பிறவிவந் தென்னபல
      னறியாமை தீரவில்லை
அன்பென்று வாயினாற் சொல்வதி லையானெனு
      மகந்தைசற் றகல்வதில்லை
பெரிதான வெஞ்சின மடங்கவிலை யைம்புலப்
      பிழைவழியொ துங்கவில்லை
பேராசை தீரவிலை நல்லோரி ணக்கமென்
      பிறவியில றிந்ததில்லை
பரிதாவல் போலெங் கணுந்தாவு பாழ்மனம்
      பதைபதைப் போய்வதில்லை
பசுபாச பதிமொழிப் பொருள்வின விலெங்ஙனின்
      பதயுகத்த டைவதம்மா
சரியாதி நான்கையு மணந்துநின் றவருளத்
      தாமரையில் வாழுமனமே
சலசமக லாதவல்லி கலையினிரு வாகவல்லி
      தலைவிசிவ காமவல்லியே.       (5)

காளைவய தோய்ந்துமெய்க் கட்டழக ழிந்துநற்
      கல்விமுத லானவெல்லாம்
கைவிட்டு மையிட்ட கண்மாதர் புன்முறுவல்
      காட்டக்கடும் பிணியெலாம்
வேளையிது வெனவந் தடுத்திடர் படுத்திட
      மெலிந்துதடு மாறுமுனமே
வினையேனு முன்பதப் போதினிழல் பெற்றுலக
      வேதனையொ ழிந்துய்வனோ
மூளைதசை யென்புதோல் போர்த்தவுட லாசையை
      முனிந்துசிவ யோகத்திலே
முயலுமெய் யன்பரிரு வினைவலை யறுத்துமேன்
      முத்திக்கு வித்தாமலர்த்
தாளையே தருமொரு தயாபரை பராபரை
      சகாயிமக மாயியாயி
சலசமக லாதவல்லி கலையினிரு வாகவல்லி
      தலைவிசிவ காமவல்லியே.       (6)

ஆலவிட மோருரு வெடுத்துக் கடாவேறி
      யந்தகனெ னும்பெயர்தரித்
தழல்விடுஞ் சூலமும் பாசமுங் கைப்பிடித்
      தாருயிர்குடித் திடவரூஉம்
காலமற வாமலரை நொடியும்பொ றாமலென்
      கண்காணவெள் ளைவிடைமேல்
கண்ணுதலு நீயும் வந்தஞ்சலஞ் சேலென் று
      காத்தருள வேண்டுமம்மா
மூலமென வோலமிடு மானையைக் காத்தருண்
      முராரிதிரு மால்சோதரி
மூதண்டப கிரண்ட பிரமாண் டமும்பெற்ற
      முதல்விமலை யுதவுபுதல்வி
சாலவுமெய் யன்பருட் கமலம லரகலாது
      சஞ்சரித் திடுமன்னமே
சலசமக லாதவல்லி கலையினி ருவாகவல்
      தலைவிசிவ காமவல்லியே.       (7)

சாகாதவ ரமுனைக் கேட்கவிலை யம்மையே
      சாம்போது நோயிலாமல்
சங்கடமி லாமலொரு வஞ்சநம னர்வருஞ்
      சமயத்தி லஞ்சிடாமல்
கூகாவெனக் கிளைஞர் சூழ்ந்துளம யக்கினுங்
      குறியினை மறந்திடாமல்
குவலயம யக்கமெள் ளளவுமில் லாமற்
      குணங்கள்பே தித்திடாமல்
வாகான வைம்புலனு நிலைகலங் காமலுடன்
      மரணவேத னையிலாமல்
மறைமுடியி னிகழுமுன் றிருவடிநி ழற்குளெனை
      வரவரமளித் தருள்செய்வாய்
தாகாதிபிணி கள்வெம் மோகாதி யெவையுந்
      தகர்ப்பவரு ளத்தமிர்தமே
சலசமக லாதவல்லி கலையினி ருவாகவல்லி
      தலைவிசிவ காமவல்லியே.       (8)

ஓயுமோ வல்வினைச் சல்லிய மடங்கலு
      மொடுங்குமோநா னெனும்பேய்
ஒழியுமோ மூவாசை யழியுமோ வெஞ்சின
      மொதுங்குமோ பாழ்த்தசிந்தை
மாயுமோ காமாதி மடியுமோ குணமின்மை
      மறியுமோ சிறியநேயம்
வளருமோ மெய்யன்பு தளருமோ வன்கண்மை
      வடியுமோதுன் பவெள்ளம்
வீயுமோவஞ் ஞாநம் விளையுமோ மெய்ஞ்ஞாநம்
      விலகுமோ வுலகமாயை
வேறுவே றுருவெடுத் தாடலைப் பெறுபிறவி
      வேதனையெ னும்பெருவனம்
சாயுமோவுன தருளை யன்றியொன் றிசையுமோ
      சலசாட்சிகாத் தருள்செய்வாய்
சலசமக லாதவல்லி கலையினிரு வாசவல்லி
      தலைவிசிவகா மவல்லியே.       (9)

வீணார வாரப்ர பஞ்சப்பொய் வாழ்வின்மதி
      மெத்தவும யங்கிமூழ்கி
விழலுக்குமூன் றுதுலையிட் டிறைப்பார் கள்போல்
      வீணுக்கு ழைத்துழைத்து
நாணாம லின்னுமதி லேயலைப் புண்டிட்டு
      நாள்கழிக் குமென்னை
நல்லவரி டத்தினில டுத்தவர் கள்சொல்வழி
      நடந்துநன் னெறியறிந்திட்
டூணாசை கொண்டுழலு முடலாசை தனையொழித்
      தொழியாத சுகமளிக்கும்
நின்பதாம் புயநிழலில் வந்துசேரத் திருவுளங்
      கனிந்தருள் செய்குவாய்
தாணுவன்று வகைகொள வுலகெலாங் காக்குமொரு
      தநயனைப் பெற்றகொடியே
சலசமக லாதவல்லி கலையினிரு வாகவல்லி
      தலைவிசிவ காமவல்லியே.       (10)

இன்னமிப் பாழுடலெ டுத்துழல வைப்பையோ
      வீணர்பின் செலவிடுவையோ
இல்லாமை யென்னுமொரு பொல்லாப் பிலேசற்று
      மெண்ணாம னுழைவிப்பையோ
நன்னயமி லாக்கொடும் புல்லரொ டிணங்கி
      நனிநாள்கழித் திடவைப்பையோ
நச்சுவிழி யார்கண்மே லிச்சைகொ டுபிச்சனாய்
      நரகெய்திடச் செய்வையோ
அன்னமுத லானவுண் டிகளெனுஞ் சனிபிடித்
      தாடலையுறச் செய்வையோ
அடுபிணியெ னும்பெருங் கொடுமைக டொடர்ந்தவற்
      றல்லலேபட வைப்பையோ
தன்னிகரி றென்னனருள் புதல்வியென் செய்யினுந்
      தகுநினக்கியா னென்செய்வேன்
சலசமக லாதவல்லி கலையினிரு வாகவல்லி
      தலைவிசிவ காமவல்லியே.       (11)

முற்றும்.
திருச்சிற்றம்பலம்.

This file was last updated on 15 Dec. 2022
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)