pm logo

வாக்கும் வக்கும்
(திரைப்படத்திற்காக எழுதப்பட்ட கதை)
புதுமைப்பித்தன்


vAkkum vakkum
by putumaip pittan
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

வாக்கும் வக்கும்
(திரைப்படத்திற்காக எழுதப்பட்ட கதை)
புதுமைப்பித்தன்

Source:
வாக்கும் வக்கும்
புதுமைப்பித்தன்
ஸ்டார் பிரசுரம்
திருவல்லிக்கேணி, சென்னை-5.
மேலக்கோபுரத் தெரு, மதுரை.
முதற் பதிப்பு - செப்டம்பர், 1952. இரண்டாம் பதிப்பு - பிப்ரவரி, 1955.
விலை ரூ.180
-----------------------

பதிப்புரை

இந் நூற்றாண்டில் தமிழ் மக்களைத் தீன் எழுத்து வன்மையால் தன் வசமாக்கிய முதல் எழுத்தாளர் புதுமைப்பித்தன். மக்களின் நிலைமையை முன் வைத்து அவர்களின் வாழ்க்கை நிலையைச் சொல்லில் வடித்தெடுத்துக் காட்டிய முதற் சிறுகதை எழுத்தாளர் புதுமைப்பித்தன். இலக்கியம் மக்களுக்காக, மக்களின் நல்வாழ்வுக்காக என்று தன்னந் தனியாக ஒற்றைப் பனையாக நின்று குரல் கொடுத்தவர் புதுமைப்பித்தன். அவருடைய நூல்கள் பல வெளிவந்துள்ளன. இன்னும் வரவேண்டியவையும் அநேகம்.

இது அவர் காலமாவதற்குப் பல வருடங்கட்கு முன் எழுதப் பெற்றது. கைப்பிரதியைப் பார்க்கும்பொழுது இது சினிமாக் கதைக்காக எழுதப் பெற்றுள்ள ஒன்று என்று தெரிய வருகிறது. முதலில் மூலக் கதையை எழுதிவிட்டுப் பின்னர் சினிமாவிற் கேற்ற முறையில் காட்சி, காட்சியாக விரிவு படுத்தி எழுதத் திட்டமிட்டிருந்தார் என்றும் தெரிகிறது. ஆனால் அவர் வேறு சில சினிமாப் படங்களுக்கு வசனம் எழுத ஒப்புக் கொண்டு அம் முயற்சியில் இறங்கியதினாலும் பின்னர் உடல் நலம் நலிவுற்றதினாலும் இம் மூலக் கதை விரிவாக்கப்படாது இருந்து விட்டது. அந்த மூலக் கதைதான் இந் நூலில் அப்படியே தரப்பட்டுள்ளது. தலைப்பும் அவரே கொடுத்துள்ள தலைப்புத்தான்.

அவருக்கென அமைந்துள்ள தமிழ் நடையையும், குத்தலும், கிண்டலும், கேலியும் நிறைந்த சொற்கூட்டங்களையும் இந் நூல் முழுதும் காணலாம். வாக்கும் வக்கும் என்ற இத் தலைப்பே எடுத்த எடுப்பில் அதற்குச் சான்றாக நிற்கிறதல்லவா?

கண. இராமநாதன்,
பதிப்பாசிரியன்.
-----------------

வாக்கும் வக்கும்
புதுமைப்பித்தன்

(சரஸ்வதித் திருநாள். சகல லோகங்களும் அறிவின் விளக்கான
வாணியைக் கொண்டாடும் நல்ல நாள்.]

பூவுலகத்தில்

ஒரு பள்ளிக்கூடம். வாணியின் படம் மாலையலங் காரங்களுடன் விளங்குகிறது. உபாத்தியாயர் சரஸ்வதி யந்தாதியிலிருந்து ஒரு விருத்தத்தைப் பாடி தீபாராதனை செய்கிறார். பிறகு மாணவர்களிடை பொரி, கடலை வழங்குகிறார். யாவரும் சேர்ந்து வாணியின் பேரில்' ஒரு பாட்டுப் பாடுகிறார்கள்.
* * *
ஒரு தனவைசியர் வீடு

தனவைசியர் எழுத்து வாசனையற்ற லட்சாதிபதி. அவருடைய கடையில் கோலாகலமாக சரஸ்வதி பூஜை நடக்கிறது.

வெள்ளியில் செய்த சரஸ்வதி படம், அதனடியில் சந்தனமும், குங்குமமும் பொட்டுப் பொட்டாகக் காட்சி யளிக்கும் கல்லாப் பெட்டி, அதன் பேரில் பேரேடும் சிட்டையும் மற்றும் கடைக் கணக்குப் புத்தகங்களும் வைக்கப்பட்டுள்ளன.

செட்டியார்: என்ன அய்யரே! பூசே நேரம் தவறிப் போயிடும் போலிருக்கே. லேனா எங்கே...

செட்டியார் மகன் : அப்பச்சி! எனக்குப் பொரி .....

செட்டியார்.: சித்த இருடா. அய்யிரு பாட்டுப் படிப் பாரு......அப்பரம் தூவங் காட்டிப்புட்டுன்ன அய்யரே, வாயிலென்ன கொழுக்கட்டையா? லேனா எங்கன்னு கேட்டாக்க..

(தோரணத்தைச் சரியாகக் கட்ட முயலும் கடைக் கணக்குப் பிள்ளையான அய்யர் பதறித் திரும்பி..."லேனா ஒரு வினாடியிலே வரதாக வெளியே வண்டியை எடுத்துக் கிட்டு...")

('லேனா' என் றவிலாஸமுள்ள செட்டியார் பிரவேசம்.)

லேனு : நம்ப பூசெலே நின்னு கும்ப்டறப்போ நீலக்கல்லு விரல்லே கெடக்க வேண்டாமா? அதான் நம்ம வண்டியை எடுத்துக்கிட்டு ஓடினேன்... நமக்கு அவ கருணை வரணும்னா, அரிச்சுவடியும், குளிப்பெருக்கமு மாவது அதுமேலே வைக்க வேண்டாமா...என்ன அய்யரே! தட்டுலே எத்தனை பொட்டணம்?...

அய்யர் : ஆயிரத்தெட்டு ....

லேனு : ஆயிரத்தெட்டுப் பொரி கடலைப் பொட்டணமா! உருப்பட்டாப்பிலேதான். என்ன ? உங்கப்பன் வீட்டுச் சொத்துன்னு நினைச்சிக்கிட்டையா? எட்டே எடுத்து கடைப் பயலுகளுக்குக் கொடுத்துப் போட்டு மீதியை வாங்கின கடையிலேயே...

முதல் செட்டியார்: என்ன லேனா, பூசை நேரத்திலே ... அய்யன் மொரச்சுக்கிட்டா, ஆரு படிக்கிறது பாட்டெ சீக்கீரம் ஆகட்டும் !...

[கடைக் கணக்குப் பிள்ளையான அய்யீர் "மாணிக்க வீணா என்ற ஸம்ஸ்கிருத ஸ்லோகத்தைக்
கர்ண கடூரமான குரலில் ஆரம்பித்து தீபாராதனை செய்கிறார்.]
* * *

கவிஞன் வீடு

கூடத்தில் கிழக்குப் பார்த்த ஒரு பிறையில் மஞ்சளில் செய்து வைத்த சரஸ்வதி தலையுள்ள கும்பம். எதிரில் சில சுவடிகள். முன்பு பரப்பியுள்ள இலையில் சில புஷ்பங்கள். தாமரை மலர்கள்...

சுமார் ஐம்பது வயதுள்ள வயோதிகர் தெய்வத்தி னருகில் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்திருக்கிறார். அவருக்குப் பின்புறம் ஒரு வாலிபன் கைகூப்பி நிற்கிறான். மிகவும் அழகான வடிவம். ஆனால் முகத்தில் களையில்லை. கண்களில் அறிவின் தீட்சண்யம் இல்லை.

கிழவர் : தாயே, தெய்வங்களுக்கு அரும்பொருளும் கொடுக்கும் தாமரைக் கனவே! உன்னைத் திரிகரண சுத்தியாக வாழ்வையே,திரியாக ஏற்றி, வணங்கி வழிபட்டேன். பூர்வ வினை வசத்தால் உன்னை அணுக வொட்டாமல் எனது செயல் பயன் பிணித்துவிட்டது. நானோ பட்ட மரம்.வாழையடி வாழையாக என் குடும் பத்தில் தவழ் நின்னருள் என் குழந்தைக்காவது கிட்டும் என நம்பி நம்பிப் பணிந்தேன். அவனுக்கு வாக்கே யில்லாது அவிந்துவிட்டது. உன்னருள் கொண்டு காளமேகம், காளமேகமாகக் கவி பொழியவில்லையா? பேசாத குமரகுருபரன் பேசவில்லையா? இமையவர்தம் மெளலி இணையடிதாள் நிற்க ஒவ்வொரு சமயத்திலும் நின்று விளையாடும் தையலே! எனது மகனுக்கு வாக்கைக் கொடு அல்லது என் நாக்கைக் கெடு.....

(கிழவர் கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் வழிய, தாமரை மலர்களை எடுத்து அர்ச்சனை செய்கிறார்.)

இத்தனை நேரம் சிலைபோல் நின்ற பையன் வாய் திறந்து பேசுவதுபோல் அசைக்கிறான். மிருகத்தின் குரல் போல வெறும் சப்தங்கள் வெளி வர அவனும் குனிந்து பூவை எடுக்கிறான்.

கிழவர் திரும்பிக் கண்களை உருட்டிப் பத்திரம் காண்பிக்கிறார். பையன் அடங்கி ஒடுங்கி நிற்கிறான்.

கிழவர் மணியடித்துக் கற்பூரம் ஏற்றி, 'சகல கலாவல்லி மாலை'யிலிருந்து இரண்டு பாசுரங்களைச் சொல்கிறார். அப்பொழுது உட்கட்டிலிருந்து ஒரு கிழவி, அவர் மனைவி, கூடத்துக்கு வந்து வணங்குகிறாள். வாலிபனும் விழுந்து கும்பிடுகிறான். கிழவரின் இனிமையான குரல் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
* * *

ஒரு நர்த்தன மண்டபம்

மத்தியில் கிழக்குப் பார்த்து, ஏடு அலர்ந்த தாமரை யில் அமர்ந்து வீணை வாசிக்கும் பாவனையில் பளிங்கில் செதுக்கப்பட்ட வாணியின் உருவம், மலர்களால் அலங் கரிக்கப்பட்டுள்ளது.

மண்டபத்தின் மையத்தில் சரவிளக்குக் கோத்தது போல கையில் விளக்கேந்திய யுவதிகள் இரு வரிசையாக நின்று வாணியின் புகழ் பாடுகிறார்கள். பாடிக்கொண்டே நாட்டியமாடுகிறார்கள்.

நாட்டியத்தின் சதங்கை ஒலி மட்டும் கேட்கிறது. வாணியின் உருவச் சிலையில் மங்கிய வீணையின் நாதம் கேட்பதுபோல ஒரு பிரமை.
-----------------------

2

பிரம்ம லோகத்தில்

பளிங்குச் சிலை மெதுவாகக் கரைந்து அதிலிருந்து வெள்ளைப்பளிங்கு ஆசனத்தின்மீது அமர்ந்த சரஸ்வதியின் உருவம் தெளிவாகிறது. அவள் கையில் வீணை ஏந்தி வாசித்துக் கொண்டிருக்கிறாள். அவள் அமர்ந்துள்ள கொலு மண்டபம், மகா கவியின் மனம்போல் தூய வெண் வண்ணம்...... அறுபத்துநான்கு கலைகளும் அங்கு அவளது கொலு மண்டபத்தில் பரிமளிக்கின்றன. வெள்ளை ஆடைகளணிந்த பணிப்பெண்கள் பலர் கொலு மண்டபத்தின் அணிகலனாக விளங்குகின்றனர்.
* * *

பிரமன் நிஷ்டையில் அமர்ந்திருக்கிறார். வீணையின் நாதம் கேட்டுக் கண்களை விழித்து எழுந்து நிற்கிறார். மெதுவாக நடந்து பிரமதேவர் தேவியின் கொலு மண்ட பத்தைச் சுற்றுமுற்றும் கவனிக்கிறார். முகத்தில் திருப்தி யும் புன்னகையும் அரும்புகின்றன.

பிரமன் : இன்று உன் கொலுமண்டபம் எப்படி யிருக் கிறது தெரியுமா? கண் தொட்ட இடமெல்லாம் மனம் குளிரும் காட்சி! லட்சுமிகரமான பசுமை, அழகு ...

[சரஸ்வதியின் கையிலிருந்த வீணையின் நாதம் நிற்கிறது.
அவள் முகம் வாடுகிறது. எழுந்து நிற்கிறாள் ......]

பிரமதேவன் (திடுக்கிட்டு): என்ன ?......

சரஸ்வதி : இன்று என்னுடைய தினம் என்று பெருமிதம் கொண்டிருந்தேன், இன்றும்,எனக்கு என்று ஒதுக்கப் பட்ட இந்த ஒரு நாளிலும்...

பிரமதேவன் : இந்த ஒரு நாளில் உனக்கென்னக்குறை?.....

சரஸ்வதி: எனக்குக் குறை ஒன்றுமில்லை என்றுதான் இந்தக் கணம் வரை நினைத்திருந்தேன். எப்படி இருந் தாலும் இன்றைக்குக்கூட உங்கள் தாயார்தானே உங்க ளுக்குப் பெரிதாகப்படுகிறது...?

பிரமதேவன் : இதென்ன விகல்பமாகப் படுகிறது உனக்கு? சகல சௌபாக்கியங்களுக்கும் தாய் அவள்தானே? மேலும்...

சரஸ்வதி: உங்கள் சிருஷ்டிக்குப் பொருள் கொடுக்கும் வேதத்தைத் தாங்கள் உபதேசிக்கத் தங்கள் நாவில் அமர்ந்து உழைத்த உழைப்பிற்குப் பலன் இது.

பிரமதேவன்: இது என்ன வேடிக்கையாக இருக்கிறது. நான் என்ன அதிசயமாக உன்னைக் குறைத்துச் சொல்லி விட்டேன்? உலகத்தில் கண்ணும் மனமும் கவர்ந்த எதையும் லக்ஷ்மிகரமாகத் தென்படுகிறது என்று சொல்வதுதானே இயல்பு.

சரஸ்வதி : இது பூலோகமல்ல. பிரம்மலோகம். அதன் இயல்பு இங்கு எப்படிப் பொருந்தும்?
மனித வம்சம் கற்பகோடி காலம் தவமிருந்துதான் எனது பக்தனைப் பெறுகிறது.உங்கள் அன்னையின் அருள் பெற்றவர்கள் புற்றீசல் போலத் தோன்றுவதும் மடிவதும் தாங்கள் அறியாததல்லவே.

பிரமன் : உன்னுடைய பக்தன் அபூர்வப் பிறவி.ஆனால்....

சரஸ்வதி : ஆனாலாவது, கீனாலாவது, உங்களுக்கு உங்கள் தாயார்தான் பெரிது. அப்படிச் சொல்லிவிட்டுப் போங் களேன். அம்மாவைப் பிரமாதமாக நினைத்துக் கொண்டு ஆற்றங்கரையிலே ஒரு பிள்ளை போயிருக் கிறது. தெய்வங்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கே இந்த மாதிரி....

பிரமன் : (காதைப் பொத்திக் கொண்டு) என்ன பேச்சுப் பேசுகிறாய், உன் வாக்கிலிருந்து, வேதம் சொன்ன உன் வாக்கிலிருந்து இப்படி வரலாமா?

சரஸ்வதி: என் வாக்குத் தெவிட்டாத தெய்வ கீதமாகவும் இருக்கும். சங்கரமூர்த்தியின் நெற்றிக்கண் போலவும் சுடும். என்னை நீங்கள், தொட்டால் உதிரும் இதழ் அலர்ந்த தாமரை மலர் என்று நினைத்துக்கொள்ள வேண்டாம்.

பிரமன் : உனது திருநாளிலேயே உன் மனம் கோணலாமா? உலகம் என்ன நினைக்கும்? அசடு அசடு ...."

சரஸ்வதி. வேதம் சொன்னவளுக்கு அசட்டுப் பட்டம். பிரம்மலோகமே இப்படி இருந்தால்...

[வெளியில் வீணாகானம் கேட்கிறது. நாரதர் உள்ளே சிரித்த முகத்துடன் பிரவேசிக் கிறார். இருவரையும் வணங்கிவிட்டு]

நாரதர் : பிரம்மலோகத்துக்கு என்ன குறைச்சல்? அதுவும் தங்கள் திருநாள் கண்ணும், மனமும் குளிரும்படி லக்ஷ்மி கரமாக இருக்கிறது...

சரஸ்வதி : லக்ஷ்மிகரமாக இருக்கிறது! ஏன் சரஸ்வதிகர மாக இருக்கிறது என்று சொல்லக்கூடாதோ?

நாரதர்: சொன்னால் என்ன! பேஷாய் சொல்லிவிட்டு போகிறது, ஆனால் கேட்பவர்களுக்குத்தான் நாம் இன்னது சொல்கிறோம் என்று புரியாது.

சரஸ்வதி: என் வாக்குப் புரியாது! அடே நாரதா, யாரிடம் பேசுகிறோம் என்பதை நினைத்துப் பேசு.

நாரதர்: (பயந்ததுபோல் பாவனை செய்து) தேவி. நான் யாரிடம் பேசுகிறேன் என்பதை க்ஷணமும் மறப்பேனா? லோக இயல்பை ஒட்டி நான் சொல்ல வந்தேன். உலகத்தில் மங்களகரமான எதையும் அப்படித்தான் குறிப்பிடுகிறார்கள்.

சரஸ்வதி : உலகத்துக்கு உண்மையறிய சக்தி உண்டா? ஏன், சிருஷ்டியின் நாடியான பிரமதேவருக்கும். உனக் குமே தெரியாது போகும்போது பிறப்புக்கும் சாவுக்கும் மத்தியில் ஊசலாடும் மனிதர்கள் பிரமாதமா? சக்தியை நிரூபிக்கிறேன். கல்வியின் வாசனை சற்றுமே இல்லாத ஒருவனுக்கு வரமளித்து அவன் வாழ்வில் சுகம் பெறுகிறான் என்பதை நிரூபிக்கிறேன். அப்பொழுது தெரிகிறது உங்கள் அசட்டுத்தனம் எம்மட்டும் என்பது.

நாரதர் : தாங்கள் நினைத்தால் நடக்காதது உண்டா? கண்ணால் கண்ட பிறகு எனக்கும், ஏன் பிரம தேவருக்குமே இந்தச் சந்தேகம் அடிபட்டுவிடும். தங்கள் சக்திக்கு எல்லையுண்டா?

சரஸ்வதி : என் சக்திக்கு உலகம் எத்தனை கடமைப்பட்டிருக்கிறது என்பதை நிரூபிக்கிறேன்.

(நாரதர் வணங்கிவிட்டு வெளியே செல்கிறார். வீணையின் நாதம் ஒலிக்கிறது.)
* * *

காட்சி மறைந்து பரமபதத்தில் உருவாகிறது



ஆதிசேஷன் மீது அறிதுயிலமர்ந்த, மகாவிஷ்ணு பாதத்தருகில் மகாலக்ஷ்மி அமர்ந்து கால்களை வருடிக் கொண்டிருக்கிறாள். மண்டபத்தில் நித்திய ஆசிகள் எம்பெருமான் நினைவும் தானுமாக நிற்கின்றனர். வீணையின் நாதம் கேட்கின்றது. நாரதர் உள்ளே பிரவேசிக் கிறார்; வணங்குகிறார்.

மகாலக்ஷ்மி : நாரதனா! வா, நீயோ திரிலோக சஞ்சாரி, உன்னிடம் கேட்டால்தான் அனந்தகோடி ஜீவராசிகளின் சௌக்கியமும் சௌபாக்கியமும் தெரியவரும். உனது சஞ்சாரத்தில் என்ன கண்டாய்...?.

(மகா விஷ்ணு அறிதுயிலிலும் புன்னகை காட்டுகிறார்.)

நாரதர்: தேவி, நான் திரிபுவனங்களையும் சுற்றித் திரிந்து பார்த்துவிட்டுத்தான் வருகிறேன். அனந்தகோடி ஜீவ ராசிகளையும், தேவர், யக்ஷர்,கின்னரர், கிம்புருடர் இத்தி யாதி தேவகணங்களையும் நேரில் கண்டுவிட்டுத்தான் வருகிறேன். எங்கும் தங்களது மங்களகரமான கருணை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. எல்லோருடைய மனமும் எல்லா இடமும் சரஸ்வதிகரமாக இருக்கிறது !

லக்ஷ்மி: என்ன நாரதா, நீ சொல்லுவது புரியவில்லையே ! என் கருணை என்கிறாய், சரஸ்வதிகரமாக இருக்கிறது என்கிறாய்? எதை நினைத்துக்கொண்டு எதைச் சொல்கிறாய்?

நாரதர் : தாயே, வேதம் சொல்லியவள் வாக்குப் புரிய வில்லை என்று சொல்லலாமா? சொல்லின் தெய்வம் சொல் வதைப் புரியவில்லை என்று தாங்கள்...

லக்ஷ்மி : எனது கருணையால் சௌபாக்கியத்துக்கும் சரஸ்வதிக்கும் என்னடா சம்பந்தம்...

நாரதர்: தேவி, நான் இன்று பிரம்ம லோகத்திற்குச் சென் றிருந்தேன். வாக்கின் அன்னையின் திருநாள் அல்லவா? அவளைத் தரிசிக்கச் சென்றேன். அங்கு சென்ற இடத் தில் மங்களகரமான காரியங்களை சரஸ்வதிகரமானது என்று சொல்வதுதான் சரியென்பதைத் தாமரையின் எழிலான அன்னையிடம் கற்றேன்.

லக்ஷ்மி : அவள் என்ன சொன்னாள்?

நாரதர்: வாழ்வில் சௌக்கியமாக இருப்பதற்குத் தனது கருணைதான் அவசியமென்றும், தங்களுடைய சக்திக்கு மேலானது அது என்பதை நிரூபிக்கப் போவதாகவும் சொன்னாள்...

லக்ஷ்மி: என்ன பார்த்தீர்களா? தங்கள் மகன் குடும்பம் நடத்துகிற சம்பிரமத்தை. கொண்டவன் இடம் கொடுத்தால் குடும்பம் கூத்தாடிக் கதையாகத்தான். போகும். உங்கள் மருமகள் போடுகிற உத்தரவுகளை, போடுகிற பந்தயங்களைப் பார்த்தீர்களா?

மகா விஷ்ணு: (கண்களைத் திறந்து முழங் கையை ஊன்றி யமர்ந்து கடகடவென்று சிரிக்கிறார்) என்ன சொன்னாய், லக்ஷ்மி?

-லக்ஷ்மி : நான் சொல்வது உங்கள் காதில் ஏன் விழுகிறது? உங்கள் மருமகள் நானே அவசியமில்லை என்று நினைத்து விட்டாளே. அது உங்களுக்குத் தெரியுமா?

மகா’விஷ்ணு : வாழ்விலே உன் கருணை, பசியைப் போக்கும்; சுகத்தைத் தரும். அவள் அருள், வாழ்வைத் தரும்; வாழ்வுக்குப் பொருளைத் தரும்; வாழ்விற்குச் சந்துஷ்டி யைத் தரும்; இப்படி அவள் நினைப்பதில் என்ன தவறு ?

லக்ஷ்மி: நீங்களும் அவள் கட்சியில் சேர்ந்து கொண்டீர்களா? வேதத்தில் ஒளிந்துகொண்டு, உங்களைப் புகழ்ந் தால் நீங்கள் என்ன செய்வீர்கள்!என்ன நாரதா, அவள் நிரூபிக்கப் போகிறாளாக்கும்.உம்!

நாரதர் : ஏன் தங்கள் கட்சி சரியென்றால், தாங்களும் அதை நிரூபிப்பது எளிதுதானே?

லக்ஷ்மி : என் கட்சியில் சரி தப்புப்பற்றி உனக்கு எதற்குச் சந்தேகம்? எனது அருளால் சுகப்படுகிறவர்கள் அனந் தம். இருந்தாலும் அவளது கட்சி சரி இல்லை என்பதை நான் நிரூபிக்கிறேன்.

நாரதர்: தேவியார் நினைத்தால் நடக்காத காரியமுண்டா?
---------------------

3

நடுப்பகல் -- கவிஞனிருக்கும் வீதி. ஊமைச் சிறுவன் திண்ணையிலமர்ந்து சாக்கடைக்குள் கூழாங்கற்களை விட்டெறிந்து ஒவ்வொன்றும் விழுந்து 'டுளக்' என்ற சப்தத்துடன் மறைவதைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருக்கிறான்.

அப்பொழுது சற்று தூரத்தில் இரு பிச்சைக்காரர்கள் பசியால் சோர்ந்து தள்ளாடிப் பிச்சையெடுத்து வரு கிறார்கள். அதில் ஒன்று ஆண்; மற்றது பெண். பிச்சைக் காரனுக்கு வயது சுமார் 40 அல்லது 45. க்ஷவரம் காணாத முகம். எண்ணெய் காணாத தலை. உடம்பெல்லாம் காட்டும் கிழிசல் உடை. அவனுக்கு ஒரு வியாதி. முகத்தை ஒரு பக்கம் வினாடிக்கொரு தரம் வெட்டியிழுப்பது, கண்ணடிப்பது மாதிரி இருக்கும். கையில் திருவோடு, தோளில் மூட்டை

பிச்சைக்காரிக்கு வயது 16 -க்கு மேல் இராது. பிரமாத மான அழகி. வாரி ஒழுங்கு படுத்தாத கூந்தலும் அவளுக்கு ஒரு சோபையைக் கொடுக்கிறது. தோளிலே மூட்டை. கையிலே தகர டப்பா. விரலில் உள்ள கண்ணாடி மோதிரத்தைத் தட்டித் தாளத்துக்கு இசையப் பாடிப் பிச்சை யெடுக்கிறாள்.

கவிஞன் வீட்டுக்கு எதிர்ச் சரகத்தில் இவ்விரு பிச் சைக்காரர்களும் குரல் எழுப்பிப் பிச்சை கேட்கிறார்கள். பிச்சைக்காரப் பெண் 'பசியா வரம் அருள்வாய் முருகா' என்ற கருத்துள்ள பாட்டை இரண்டடி பாடுகிறாள். ''அப்பா?நாக்கு இழுக்குது, கண்ணு சுத்துது, பாட முடியல்லே...நீ கொஞ்சம்..."

பிச்சைக்காரன்: பாட முடியல்லைன்னு சொன்னா படியளப் பாங்களா? பசிக்குப் பதறித்தானே பாடுரோம். அம்மா, தாயே, அகிலாண்டேச்வரி, அன்ன தாதா! இந்த ஏழை ஜீவன்களுக்குப் பிடியமுது' போடம்மா. ஓடுகிற சீவனை ஓடாமெத் தடுக்கிற புண்ணியம் அம்மா தாயே... மகாலெக்ஷ்மி...

(எதிர்ச் சரகத்து வீட்டு வாசல் திறக்கவில்லை. பெண் கையிலுள்ள தகர டப்பாவில் தாளம் தட்டுகிறாள். கிழவன் கைத்தடியை நடையில் தட்டுகிறான்.)

பிச்சைக்காரன் : படபடக்கும் வெய்யிலிலே படியளக்கும் பகவானே, பிடியமுது போடுங்க தாயே மகாலெட்சுமி! அன்னந் தண்ணி கண்டு ஆறு நாளாச்சு! கவளஞ்சோறு போடம்மா...

பிச்சைக்காரி: அம்மா தாயே!
.
(அவளுக்கு மேலும் பேச முடியாமல் தள்ளாடித் திண்ணையில் சாய்கிறாள். கிழவன் ஓடி நெருங்கி, அவளைக் கீழே விழவொட்டாமல் கையில் தாங்கி, தரையில் உட்கார வைக்கிறான்...)

திண்ணையிலிருந்த சிறுவன் அவர்கள் பாடுவதையும் சாய்வதையும் கவனிக்கிறான்.

அச்சமயம் உள்ளிருந்து அவனுடைய தாயார் வந்து வாசலில் எச்சில் இலைகளை எறிந்துவிட்டு சொம்பு தண்ணீரை விட்டுக் கைகழுவியபடி உள்ளே போகிறாள்.

எதிர்ச் சரகத்தில் நின்ற பிச்சைக்காரன் விழுந்த எச்சில் இலைகளைக் கண்டு ஓட்டமாக ஓடி வருகிறான்.

அவனை முந்திக்கொண்டு ஒரு நாய் ஒன்று இலைகளை முகத்தைக் கொண்டு நிமிர்த்தி வாய் வைக்கிறது.

ஓடிவந்த பிச்சைக்காரன் குனிந்து ஒரு கல்லை எடுத்து, நாசமாப் போர நாயே, அதுக்கும் பங்குக்கு
வாரியா" என்று கண்களைக் கோணிக்கொண்டு எறிகிறான். நாய் பதறிப் போய் இலையை இழுத்துக்கொண்டு ஓட முயலுகிறது. இலை சாக்கடையில் விழுந்து மறைகிறது.

ஆத்திரம் மிஞ்சிய பிச்சைக்காரன் குனிந்து மற்றொரு கல்லை யெடுத்து வீசப்போகிறான். அப்பொழுது அவனைத் தொடர்ந்து தள்ளாடி நடந்து வந்த பிச்சைக்காரி அவன் கைகளைப் பிடித்துத் தடுக்கிறாள்.

பிச்சைக்காரி: அதை நாம கல்லாலே அடிச்சா. விதி நம்மெ பசியாலே அடிக்கிறது நின்னு போவுமா !
பிச்சைக்காரன்: போம்மே, நீ எப்போப் பாத்தாலும் இப்படித்தான்.

(கோபத்தால் முகம் வெட்டி வெட்டி இழுக்கிறது.)

இதைப் பார்த்த திண்ணையிலிருந்த வாலிபன் இவர்களைப் பார்த்து, "வாவா. உள்ளே சென்று வருகிறேன் '' என்பதுபோலக் கைகளால் சைகை செய்து விட்டு, உள்ளே போகிறான். நிறையப் பழம், தேங்காய் பொரிகடலை, வடை, அப்பம், விபூதி குங்குமம் உள்ள இலையைக் கொண்டு வந்து பிச்சைக்காரி கையில் கொடுத்து விட்டுச் சிரித்துக்கொண்டு நிற்கிறான்.

"பூஜை நைவேத்யங்களை எங்கடா கொண்டு ஓடுகிறாய்?" என்ற தாயின் குரல் கேட்கிறது.

வாலிபன் திரும்பி நின்று ஊமை பாஷையில் மிருகம் போலக் கத்தி ஏதோ சைகை செய்கிறான்.

பிச்சைக்காரி: ஊமை; மனம் நிறைந்தவர்களுக்கு வாய்ப் பூட்டா! வீடு நிரெஞ்ச மகராசிகள் கைக்குப் பூட்டுப் போட்டியே. இது என்ன பாவம் பண்ணிச்சு... விதி... விதி.

பசியா வரம் அருள்வாய்' எனப் பாடுகிறாள்.
----------------------

4

நட்ட நடுநிசி. கவிராயர் வீட்டுக்கூடம். பிறையில் உள்ள சரஸ்வதி கும்பத்தின்மீது மங்கிய குத்துவிளக்கின் ஒளி. எதிரில் வாலிபன் உட்கார்ந்து கையில் ஏடு பிடித்து ஏதோ வாசிப்பதுபோல ஊன்றிக் கவனிக்கிறான். தூரத் தில் உள்ள கோவிலில் நடைபெறும் அர்த்தசாம பூஜையின் மணிச் சத்தம்.

முன் கட்டில் கிழவர் படுத்துத் தூங்குகிறார். பின் கட்டில் தலைக்கு ஒரு மணையை அண்டைக் கொடுத்து இவனது தாயார் தூங்குகிறாள். தூக்கத்தில் அவளுக்கு ஒரு பெருமூச்சு வருகிறது.

விளக்கெதிரிலிருந்த வாலிபன் யாரும் பார்க்கிறார்களா என்று சுற்றுமுற்றும் பார்க்கிறான். சரியாக உட்காருவது போலக் கால்களை இறுக மடக்கிக்கொண்டு நிமிர்ந்து உட்காருகிறான்.கையிலிருந்த ஏட்டைச் சரியாகப் பிடித் துக்கொண்டு, படிக்கப் போகிறவன்போல முகத்தைச் சுளித்து விட்டுக் கவனிக்கிறான்.

மெதுவாய் முனகுகிற அவனுடைய மிருகக் குரல் லேசாகக் கேட்கிறது. புஷ்பாஞ்சலி செய்வதுபோல விரல் களால் எதிரிலிருந்த தரையைத்தொட்டு, பிறையை நோக்கி விட்டெறிகிறான். குரல் படிப்படியாக உயருகிறது. மிருகக் குரல் உச்சஸ்தாயியில் எட்டும்பொழுது தாளக்கட்டில் அடங்கி இசைக்குப் பொருந்தியதுபோல அமைகிறது.

தன்னுடைய குரலைக் கண்டே பயந்தவன் போலச் சுற்றுமுற்றும் கவனிக்கிறான்.

மறுபடியும் வாய் மெதுவாக முனகுகிறது. எங்கோ வெளியில் மணியும் சேகண்டியும் கலந்து அர்த்த ஜாம பூஜா காலத்தை, தீபாராதனை நேரத்தைக் குறிக்கிறது.

ஏட்டிலே மங்கிய எழுத்துக்களாகத் தெரிந்த வரி வடிவங்கள் மெதுவாகத் தங்க எழுத்துக்கள் மாதிரி மின்னு கின்றன. ஏட்டிலே மெதுவாக ஒரு பிம்பம் தெரிகிறது. தரித்திர நிலையில் இல்லாமல் சாந்தமாகவும் புன்சிரிப் புடனும் தோன்றும் பிச்சைக்காரியின் உருவம். க்ஷணத் துக்குள் அது மறைந்து சரஸ்வதி தேவியின் உருவம் தெரிகிறது.

வாலிபன் கண்களில் ஒரு மாறுதல். முகத்தில் ஒரு பிரகாசம், மலர்ச்சி. ஊமையனாக இருந்தபோது அடைந்த நிலை மாறி முகத்தில் தேஜஸ் தெரிகிறது. வாய் விட்டுப் பேசுகிறான், பாடுகிறான்.

வாலிபன் : அம்மா! அம்மா! அம்மா!

அம்மா அம்மா என்ற பதம் இசையில் பொருந்தி வருகிறது. கையில் உள்ள ஏட்டில் அம்மா என்று ஆரம் பிக்கும் பாடலின் வரிகளைப் பிறவிச் செல்வம் பெற்றவன் போல அனாயாஸமாகப் பாடுகிறான்.

பின் கட்டிலுள்ள தாய் திடுக்கிட்டு எழுந்திருக்கிறாள்.

கிழவி: சொப்பனமா! என் குழந்தையின் குரல் மாதிரி இருக்கிறதே! அந்தக் கூடத்தில் கேட்கிறது...

கிழவி வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்து வருகிறாள்.

அதே சமயத்தில் கிழவர் திடுக்கிட்டு எழுந்து உட்காருகிறார்.

கிழவர்: கூடத்தில் யாரது? என்ன இந்த நேரத்தில்?... எழுந்து விரைந்து வருகிறார்.

கிழவரும் கிழவியும் எதிர் எதிர் வாசற்படியில் நின்று வாலிபன் தன்னை மறந்து பாடுவதைப் பார்க்கிறார்கள்

கிழவர் ஓடியே வந்து பிறையின் முன்பு சாஷ்டாங்க மாக விழுந்து உணர்ச்சி மிகுந்த குரலில் சரஸ்வதியை அஞ்சலி செய்கிறார்.

கிழவி ஓடியே வந்து மகனைக் கட்டிக் கொள்கிறாள்.

கிழவர் : தாமரையின் தாயே! வாக்கின் தாயே! வாக்கின் பத்தினியே, உன்னை வணங்குவேனா? வாழ்த்துவேனா! ஆடிப் பாடி அஞ்சலி செய்வேனா? வறண்டு போன வாழ்விலே கற்பக நிழலை வருவித்த தெய்வமே, உன்னருள் கிடைத்த பின் ஊன் பாரம், உடற் பொதி என்ற நினைவு அகன்று உடல் எலாம் நாவாய் காலமும் கணக்கும் நீத்த நிலையிலே சர்வசதா உன்னையே வழுத்த விரும்புகிறேன். வாக்கருளிய கலி கால தெய்வமே, என் வாழ்விலே விளக்கேற்றிய எந்திழையே !

கிழவர் ஒரு பாட்டுப் பாடுகிறார்.

கிழவி : (வாலிபனது முகத்தைத் தடவியபடி] அம்மான்னு சொல்லு!

வாலிபன் : அம்மா?...

கிழவி : அப்பான்னு சொல்லு!

வாலிபன் : அப்பா!...

கிழவர் : அகிலத்தையே வாக்கால் அளக்க அவள் அருள் பெற்றவன் அம்மா, அப்பா என்று மட்டுமா சொல்லப் போகிறான்! அவன் இனிமேல், திருவிக்ரமன் பாதத்தால் அளந்த உலகை வாக்கால் அளப்பான். கனவை நனவாக்குவான். நனவை நிலையாக்குவான். அவன் இனி நம்முடைய மகன் அல்ல. வாக்கருளிய வாணியின் புதல்வன். அப்பா. இனிமேல் நீ உன் பெயரை வாணி புத்ரன் என்று வைத்துக்கொள்.

வாலிபன் : தங்கள் சொல் எனக்கு உத்தரவு.

கிழவர் : அதிருக்கட்டும். நான் நெடுங்காலமாக ஒரு விரதம் பூண்டிருக்கிறேன். இத்தனை காலம் எவ்வளவுதான் சஞ்சலமடைந்தாலும் என் மனம் மட்டும் உனது குறை அகலும் என்று சொல்லிக்கொண்டே வந்தது. உனக்கு எந்தக் கணத்தில் வாக்கு வருகிறதோ அச்சமயத்திலே வீட்டை விட்டுப் புறப்பட்டுத் தீர்த்த யாத்திரை செய்து திரும்புவது என்று வைராக்கியம் கொண்டிருந்தேன். அதை நடத்தப் போகிறேன்.

கிழவி : இந்தத் தள்ளாத வயசிலா !

கிழவர்: (சிரித்தபடி) தள்ளுகிறவிதி தள்ளிக் கொண்டு போகிறபோது தள்ளாத வயதாவது தள்ளுகிற வயதா வது. வாணிபுத்ரன் இருக்கும்போது, உனக்குக் குறை என்ன? அப்பா, உனக்கு நான் புத்திசொல்வது பொருந் தாது. கிழவனுடைய வாத்சல்யம். வாக்கைத் திரியாக அமைத்து அன்பு விளக்கேற்று. இருட்டுக்கும் பொய் மைக்கும் பணியாதே. வாக்கின் செருக்குக் கொள்ளாதே. நான் வருகிறேன்.

கிழவி : இருட்டிலே புறப்படுகிறீர்களே!..:

வாலிபன்: அவர் மனதில் இருட்டில்லை...அம்மா வா!

கிழவி : (அன்பு ததும்ப) அம்மான்னு சொல்லு!
வாலிபன்: (புன்சிரிப்புடன்) அம்மா!...
* * *

விலாசபுரி அரண்மனை

விலாசபுரி அரண்மனைச் சயன க்ருஹம்! மஞ்சத்திற்கு எதிரே அறையின் மையத்தில் அன்ன விளக்கு ஒன்று எரிகிறது. நடுநிசி. மஞ்சத்தில் வேந்தன் வீரபராக்ரமன் உறங்குகிறான். வயது எழுபதுக்கு மேல் இருக்கும். காடு வா, வா என அழைக்கும் உடல் கட்டு.

உறக்கத்தில் அவன், "அம்மா" என ஏங்குகிறான். மறுபடியும் நிதானமான மூச்சு.

விளக்குப் பிரகாசமாகச் சுடர் விடுகிறது. கதவு திறவாமலே லக்ஷ்மி தேவி வருகிறாள். மஞ்சம் நோக்கிக் கையை நீட்டுகிறாள். மன்னன் திடுக்கிட்டு எழுந்து உட் காருகிறான்.

மன்னன் : பெண்! யாரம்மா? கதவு சாத்தி இருக்கிறது, எப்படி வந்தாய்?...

லக்ஷ்மி : (புன்சிரிப்புடன்) என்னைத் தெரியவில்லையா? உன் தேஜஸிலே என்னை சௌபாக்யலக்ஷ்மி என்பார்கள். உன் தோளிலே வீரலக்ஷ்மி என்பார்கள். உனது கைகளிலே தன - தான லக்ஷ்மி என்பார்கள்.

மன்னன்: (விழுந்து வணங்கி) தேவி! புலன் வலைப்பட்ட வனுக்கு உண்மை புலனாகுமா? நனவிலே தோன்றிய நலமே! என் வாழ்வின் பலனை இன்று அடைந்தேன்.

லக்ஷ்மி : உனக்கோ மூப்பு மிகுந்துவிட்டது. உன்னை சாந்த லக்ஷ்மி அழைக்கிறாள். தீர்த்த யாத்திரையின் எல்லை யிலே அவளைக் காண்பாய். ராஜ்யம் என்னவாகுமோ என்று மருகாதே; அதோ அந்த நிலைக் கண்ணாடியைப் பார்!

(நிலைக் கண்ணாடியிலே அந்தப் பிச்சைக்காரனின் உருவம் தெரிகிறது.)

லஷ்மி : நாளைக்கு உதயகாலத்தில் உனது மந்திரி பிரதானிகளுடன் கிழக்குக்கோட்டை வாசலுக்குப் போ அவனைச் சந்திப்பாய். ராஜ மரியாதை கொடுத்து அவனிடம் அங்கேயே ராஜ்ய பாரத்தை ஒப்படைத்து விட்டுப் புறப்படு.

மன்னன் : உன் ஆக்ஞை என் கடமை.

லக்ஷ்மியின் உருவம் மறைகிறது. உறக்கம் கலைந்த மன்னன் அறையில் முன்னும் பின்னுமாக நடக்கிறான். ஏதோ தீர்மானித்தவன்போல மணியடிக்கிறான்.
--------------------

5

காலை நேரம் டிங்டிங் என்ற மணியோசையுடன் அசைந்து செல்லும் பட்டத்து யானை. அதைத் தொடர்ந்து உருவிய வாளேந்திச் செல்லும் வீரர்கள்.


சற்று இடைவிட்டு, வெள்ளுடையில் ராஜ சின்னங்க ளின்றி வீரபராக்ரமன் நடந்து செல்கிறான். அவனைத் தொடர்ந்து அமைச்சர், சேனாதிபதி, ஆஸ்தான அர்ச்சகர் ஆகியோர் வருகிறார்கள்.

அவர்களுக்குப் பின்புறம் பிரதானிகள், பணியாட்கள் யாவரும் வருகிறார்கள். பின்புறம் ஒரு பல்லக்குக் காலியாக வருகிறது.

ஊர்வலம் கிழக்கு ராஜவீதி வழியாக நகரத்தின் வெளி வாசலை நோக்கிச் செல்கிறது.

வழியில் ஒருவன் : (ரகசியமாகப் பக்கத்தில் நின்றவனிடம்) மகாராசா கால்நடையா எங்கே போராரு?

பக்கத்திலிருப்பவன்: யார் கண்டா! அவுங்க அவுங்க அதிர்ஷ்டம். ராசா நடையா நடக்க யார் முகத்திலே முளிச்சாரோ?

முதல் மனிதன் : நாமும் கூடப் போய்ப் பார்ப்போம்.
* * *

குடிசை

குடிசைக்குள் பிச்சைச்காரி ஒரு மூட்டையைத் தலைக்கு அணை கொடுத்துப் படுத்திருக்கிறாள்.

பிச்சைக்காரன் அதிகாலையானதால் தனது தோளில் திருவோட்டையும் எடுத்துக்
மூட்டையையும் கையில் கொண்டு புறப்படத் தயாராகிறான்.

பிச்சைக்காரன் : என்னம்மே இன்னந் தூங்கிக்கிட்டு, வெயில் எழுகிறமுந்தி பொறப்புட்டாத்தானே, காயிர வயித்துக்குக் கஞ்சி ஊத்தலாம். எந்திரி! உம்!

பிச்சைக்காரி: அப்பா, மேலெல்லாம் அடிச்சுப்போட்டாப் புலே வலிக்குது. தலை தூக்க முடியலே. என்னால் எந்திரிச்சு ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியாது. நீங்க மாத்திரம் போயிட்டு வந்திருங்களேன்.

பிச்சைக்காரன்: (திடுக்கிட்டு) என்ன காய்ச்சலா! (நெற்றி யைத் தொட்டுப் பார்க்கிறான்) கொதிக்குதே! நாலு நாளா வவுறு காஞ்சுதில்லே? அதான் மேலு காயுது பயப்படாதே, நெத்தியிலே இந்த ஈரத் துணியை நனைச் சுப்போடு, (கிழிந்த துணி ஒன்றை நனைத்து அவளது நெற்றியில் போடுகிறான்) அப்ப நான் வரேன். எந்திரிச்சு நடமாடாதே !

பிச்சைக்காரி: அப்பா, முருகான்னு நெனச்சு முந்தியை விரியுங்க! திருமால்மருகான்னு நினச்சு திருவோட்டை நீட்டுங்க. காயுதுண்ணு கண்ணு மண்ணு தெரியாமெ எச்சியெ கிச்சியெ எடுத்தாராதிங்க !

பிச்சைக்காரன்: வயிறு காயிரப்ப எச்சியாவது பிச்சை யாவது. எல்லாம் ஏழப்பட்டா ஒண்ணாத்தான் தெரியுமம்மா!

பிச்சைக்காரி: அப்பா, அப்பா, அதுமட்டும் சொல்லறேன். பிடியரிசி கொண்டாந்தாலும் போதும். எச்சியை மட்டும் எடுத்தாராதிங்க.
* * *

கிழக்குக் கோட்டை வாசல்

பிச்சைக்காரன் நடந்து வருகிறான். பட்டத்து யானை யும் பரிவாரமுமாக எதிரே ஒரு பெரிய ஊர்வலம் வருவ தைப் பார்க்கிறான். ராஜகோலாகலமாய் வரும் ஊர்வலத்தை அண்டிக் கை நீட்டினால் யாராவது கொடுக்கமாட்டார்களா என்ற நம்பிக்கை வருகிறது.

பிச்சைக்காரன் : (கனைத்துக்கொண்டு) அவமொகத்திலே முளிச்ச அண்ணக்கி அரிசிக்குப் பஞ்சமில்லே. (மறுபடியும் கனைத்துக்கொண்டு பாடுகிறான்)

ஐந்து கல்லால் ஒரு கோட்டை
அந்த ஆசாரக் கோட்டைக்குள்
ஆயிரமாசை ஆயிரமாசை
(ஐந்து கல்லாலொரு கோட்டை)

அண்டங்கள் கொண்டாலும் ஐயா
அவியாது ஆர்த்திடும்
ஆயிரம் ஆசை, ஆயிரமாசை...

பாடிக்கொண்டே ஊர்வலத்தை நெருங்குகிறான். ஊர்வலம் நிற்கிறது. யானை ஒருபுறம் ஒதுங்கி நிற்கிறது. முன்புறம் பந்தியாக நின்ற வீரர்கள் இரு பிளவாக இரு புறமும் ஒதுங்குகிறார்கள். பின்புறம் நடு மையத்தில் அரசனும் அவனுக்குப் பின்புறம் நிற்பவர்களும் தெரிகிறது.

பிச்சைக்காரன் : (கனைத்துக்கொண்டு) ஐயா தருமதொரை களே, மகாராஜா, ஆறு நாளாப் பட்டினி. அடிவயிறு காயுது.
.
(பிச்சைக்காரன் திருவோட்டை நீட்டுகிறான்.)

அரசன் : (பக்கத்தில் நிற்கும் மந்திரியைப் பார்த்து) அதே முகம், அதே ஜாடை, அதே உருவம். நேற்று நிலைக் கண்ணாடியில் பார்த்தது அவரைத்தான். (பிச்சைக் காரனைச் சுட்டிக் காண்பித்து) அவர்தான். சந்தேக மில்லை. அவர்தான்.

பிச்சைக்காரன்: (திடுக்கிட்டுத் தனக்கு ஆபத்துத்தான் என்று பயந்து) நான் ஒரு தப்பும் பண்ணலிங்க எசமானே! பிச்சை கேட்டா தப்பிதமா!

பிச்சைக்காரன் தறிகெட்டு ஓடுகிறான். அரசனுக்குப் பக்கத்தில் நிற்கும் சேனாதிபதி கண்ணைக் காட்ட வாளேந் திய வீரர்கள் இருபுறமும் கவிந்து மடக்கி ஓடாமல் தடுக் கிறார்கள். பிச்சைக்காரன் ஓடிப்போய் ஒரு மரத்துக்கு அப்பால் போகமுடியாமல் அதோடு ஒண்டிக்கொள்கிறான். இருபுறமும் வாள் உருவிய வீரர்கள் நிற்கிறார்கள்.இடது பக்கமாகப் பிச்சைக்காரன் தலையைத் திருப்புகிறான். உணர்ச்சி மிகுதியால் முகம் கோணி இழுக்கிறது.

பிச்சைக்காரன்: நான் என்னய்யா பண்ணேன்? இப்படி மடக்கிக்கிட்டு கொல்லுறீங்களே ! நான் உங்களை என்னய்யா பண்ணிப்புட்டேன்! ஐயோ, என்னை விட்டுடுங்களேன்.
(அழுகிறான்)

அரசன் : ( அவனை நெருங்கி) விலாசபுரியின் ராஜ பதவி தங்களை நாடி வருகிறது.ஏற்று எங்களைக் கௌரவிக்க வேண்டும்.

பிச்சைக்காரன்: ஏனய்யா! உங்களுக்கு ஏழைப்பட்டவங் களைப் பாத்தா எளக்காரமா இருக்கோ? கையை நீட்டாதெடா கயுதேன்னா ஒதுங்கிப் போறேன்.

அரசன் : தாங்கள் தான் இந்தக் கணத்திலிருந்து விலாச புரியின் அரசர். நேற்று வரை நான்தான் அந்தப் பொறுப்பை வகித்து நடத்தி வந்தேன். இனிமேல் தாங்கள்தான் அரசர். தங்களைத் தேடித்தான் வந்தேன்!

பிச்சைக்காரன் : நானா-ராஜாவா! சொல்லிவிடப்படாது- அப்ப குடிசெலெ குந்திக்கிட்டு இருப்பேனே ! நான்- ராஜா (அழுகிறான், சிரிக்கிறான். கண்ணீரும் சிரிப்பும் வருகிறது) நெஜம்மா நான்தான் ராஜாவா! எங்கே எந்தலையிலே அடிச்சு சத்தியம் பண்ணு பார்ப்போம்! (சுற்றுமுற்றும் திரும்பிப் பார்க்கிறான். முகம் வெட்டி இழுக்கிறது.)

அரசன்: அரசர் தலையில் ஆணையிடுவதா? நிச்சயமாக நம்புங்கள் ...

பிச்சைக்காரன்: சத்தியம் பண்ணமாட்டேல்ல, எனக்கு அப்பவே தெரியுமே! ராஜாவாம், கூஜாவாம்...ராஜா... (சிரிக்கிறான்).

முதல் மந்திரி: அரசே ! வேடிக்கை பேச நாங்கள் சகல பரிவாரங்களும் வருவோமா? இதோ பணியாள் தங்கள் ராஜாங்க உடைகளை எடுத்து வந்திருக்கிறான்.- அடே, இங்கு கொண்டுவா. தயை செய்து அங்கீகரிக்கவேண்டும்.

பிச்சைக்காரன்: (பணியாட்கள் கொண்டு வந்த உடை களைத் தொட்டுத் தொட்டுப் பார்த்து) நெசத்துக்கும் நான்தான் ராஜா!- அப்போ நீங்க என்ன பண்ணப் போறீங்க?

அரசன்: தேசாந்திரியாக க்ஷேத்ராடனம் செய்ய உத்தேசம்.

பிச்சைக்காரன்: சோத்துக்கு?

அரசன் : இந்தப் பரந்த உலகில் அவள் அருள் கொழிக்கும்போது அன்புள்ள மக்களுக்கா பஞ்சம்...

பிச்சைக்காரன்: அதெல்லாஞ் சரிதான் - என்னெக்கேளுங்க நான் சொல்றேன். கரடியாக் கத்தினாலும் அன்பா பேசுவாங்க, ஆசையாக சிரிப்பாங்க,பிடி அரிசின்னா பொத்துக்கிட்டு வரும் கோபம் ! அவுங்களை நம்பி நடக்காதிங்க.

அரசன் : அவள் அருள் உள்ளபோது...

பிச்சைக்காரன் : அதெல்லாஞ் சரிதான், பளைய மவராசா, எனக்குத் தெரியும். கையை நீட்டிப் பாருங்க நீங்களே தெரிஞ்சிக்குவீங்க. நம்ம திருவோடு இருக்கே, இது ஆகி வந்த திருவோடு, வேணும்னா எடுத்துக்கொள்ளுங்க.
(திருவோட்டை நீட்டுகிறான்)

அரசன்: வேண்டாம், வேண்டாம். ஊன் பாரம் தவிர வேறு ஒரு பாரமும் சுமப்பதாக உத்தேசமில்லை. தங்களை ராஜாங்கக் கோலத்தில் பார்க்க ஆசை. இந்த உடைகளை அணிந்துகொள்ள வேண்டும்...

பிச்சைக்காரன் : என்னாங்க நடுத்தெருவிலா!

(பணியாட்கள் பெரிய திரைச் சீலை கொண்டு வந்து அவனைச் சூழ மறைத்து நிற்கிறார்கள்.)

அர்ச்சகர் : (சேனைத் தலைவனைப் பார்த்து) விதி, விலாச புரியைப் பார்த்துச் சிரிக்கிறது.

சேனைத்தலைவன் : (அவரை ஏற இறங்கப் பார்த்துவிட்டுச் சிரிக்கிறார்.) யார் சிரிக்கிறது?

அரசன்: திரும்பிப் பார்த்து) என்ன?

சேனைத்தலைவன் : விலாசபுரியின் வருங்காலம் பற்றி அர்ச்சகர் ஆரூடம்.
(சேனைத் தலைவர் சிரிக்கிறார்.)

பிச்சைக்காரன்: (திரையை அகற்றி வெளி வருகிறான். அதிகாரமாக) என்ன ஐயா சிரிக்கிறே, இப்பொ எப்படி இருக்கு?

(முகத்தில் மூன்று நாள் தாடி களைந்து திலகமும் ராஜ உடையுமாகக் கம்பீரமாக நிற்கும் பாவனையில் காலைப் பரப்பிக்கொண்டு நிற்கிறான்.)

ஊர்வலத்தில் பின்புறம் சிரிப்பு. ஒரு பணியாள் அகன்ற தாம்பாளத்தில் கிரீடமும், வாளும் கொண்டு வந்து நீட்டுகிறான்.

பிச்சைக்காரன் : எதுக்கு?

அரசன் : இவை ராஜ சின்னங்கள். நானே கிரீடத்தைத் தங்களுக்குச் சூட்டுகிறேன்.

(அரசன் கிரீடத்தை எடுத்துப் பிச்சைக்காரன் தலையில் சூட்டுகிறான். பிச்சைக்காரன் முகம் வெட்டி இழுக்கிறது.)

வந்திருந்தவர்கள் : விலாசபுரி வேந்தன் வாழ்க!

அர்ச்சகர் வேத மந்திரம் சொல்லிப் புண்ய தீர்த்தம் புரோட்சிக்கிறார். மற்றொரு பணியாள் பிச்சைக்கார அரச னிடம் வாளைத் தாம்பாளத்தில் வைத்து நீட்டுகிறான். அவன் மிரண்டு விலகுகிறான்.

சேனைத் தலைவன் : தாங்கள் வீரத்தின் சின்னம். எடுக்க வேண்டும்.

பிச்சைக்கார மன்னன் வாளை உறையிலிருந்து எடுக் காமல் மற்ற வீரர்கள் பிடித்துக்கொண்டு நிற்பதுபோல் கவாத்துப் பிடித்து நிற்கிறான்.

சேனைத்தலைவன் : (நெருங்கி) அப்படியல்ல. அது தங்கள் இடையில் இப்படி இருக்கவேண்டும்!

பிச்சைக்காரன் : அப்படியா?

பழைய மன்னன் : நான் வருகிறேன்.

பிச்சைக்காரன் : அப்பப் போரீங்களா? நீங்க வரவேண் டாம். நானே பார்த்துக்கிடுவேன்.கவலைப்படாதீங்க.

அரசன் திரும்பிப் பாராமல் செல்கிறான். முதல் மந்திரி பெருமூச்சு விடுகிறார். கண் கலங்குகிறது. சேனைத் தலைவன் முகத்தில் புன்னகை.

முதன்மந்திரி: தள்ளாத வயது!

சேனைத்தலைவன்: (அவன் காதருகில்) விலாசபுரியின் விதி!

:
பிச்சைக்காரன் : என்னா அவரு போனாப்புலியே காதைக் கடிக்கிறியே?

சேனைத்தலைவன் : அரசே, தங்கள் பவனிக்குப் பட்டத்து யானையை அருகில் வரும்படி உத்தரவு போடச் சொன்னேன்,

பிச்சைக்காரன்: பட்டத்து யானையா? மொதல்லே அதைக் கொண்டுபோயிடச் சொல்லு. தள்ளாதவரே அதோ நடக்கல்லே. நான் நடந்தே வரேன் - ராசாவாயி உசிரையா விடச் சொல்றே?

சேனைத்தலைவன் : அப்படியல்ல மகாராஜா. பதவிக்கு ஏற்றபடி

பிச்சைக்காரன் : பட்டத்து யானை வாண்டவே வாண்டாம்.

சேனைத்தலைவன்: பல்லக்கிலாவது...

பிச்சைக்காரன்: கொண்டாரச் சொல்லு! (பல்லக்கு வருகிறது. அதைச் சுற்றி வந்து பார்க்கிறான். குனிந்து உள்ளே தலையைவிட்டுப் பார்க்கிறான்.)

பிச்சைக்காரன் : (நிமிர்ந்து) கீழே போட்டுட மாட்டாங்களே.

சேனைத்தலைவன் : கீழே போட்டால் அவர்கள் தலை கீழே உருளும்.

பிச்சைக்காரன்: அய்யோ! ஆத்தாடி! (மெதுவாக உள்ளே குனிந்து உட்காருகிறான். போயிகள் பல்லக்கை உயரத் தூக்குகிறார்கள். உள்ளிருந்தபடி) எறக்கு, எறக்கு. எறக்கய்யா எறக்கு.

பல்லக்குக் கீழே வைக்கப்படுகிறது. பிச்சைக்காரன் இறங்கி வெளியே அவசர அவசரமாக வந்து தனது பழைய மூட்டையையும் திருவோட்டையும் தூக்கிக்கொண்டு ஓடிப் பல்லக்கில் ஏறிக்கொள்கிறான்.

பிச்சைக்காரன்: (உள்ளிருந்தபடி) ஊம் நடக்கட்டும்.

சேனைத்தலைவன்: (அர்ச்சகரிடம் ரகசியமாக) விதி நம்மிடம் தோழமை கொள்கிறது.

பிச்சைக்காரன் பல்லக்கிலிருந்து எட்டிப் பார்க்கிறான். அவன் முகம் வெட்டி இழுக்கிறது.
--------------

6

விலாசபுரியின் கொலு மண்டபம். மையத்தில் காலி யான சிங்காதனம். முகப்பில், பிச்சைக்காரன் முன்னே வர, பரிவாரம் பின் தொடர்ந்து வருகிறது.

பிச்சைக்கார மன்னன் : (கொலு மண்டபத்தின் மையத்தில் வந்து நின்று சுற்று முற்றும் அண்ணாந்து பார்க்கிறான்.) இதுதான் நம்ம வூடாக்கும். கூரை தலை இடிக்காது. நல்லாத்தான் இருக்கு. இந்தத் தரையிலே போட் டிருக்கே மெத்து மெத்துன்னு கம்பளி, குளிருக்கு அடக்கமாயிருக்கும். சுருட்டி நம்ம கையிலே கொடுக்கச் சொல்லு.

மந்திரி: தங்கள் மேனி நலந்தீண்ட சீனத்துப்பட்டும் காஷ் மீரச் சால்வையும் தவங்கிடக்கும்போது நாலு பேர் காலில் படும் இதை நாடுவது பொருந்துமா?

மன்னன்: அப்படியா, அது கெடக்கட்டும். (சிங்காதனத் தைச் சுட்டிக் காண்பித்து) அதுதானே நான் உட்கார்ர எடம்.

மந்திரி: ஆமாம் அரசே, தங்கள் அரியணை.

மன்னன்: அதென்ன அரியணை, அருவாமணை, அதுக்குப் பேரு சிங்காசனம், எனக்குத் தெரியாதோ!- என்னை ஏமாத்தலாம்னு பாக்கிறயா,- அவனுங்க ஏன் வெட் ராப்பலே கத்தியை ஓங்கிக்கிட்டு நிக்கிறான்கள்!

சேனாதிபதி: தங்கள் மெய்க்காப்பாளர்கள். தாங்கள் இட்ட வேலையைச் செய்வார்கள்.

மன்னன்: நான் சொன்னபடி கேட்பாங்களா? பொய்யி...

சேனாதிபதி: வாஸ்தவம் அரசே! நீங்கள் வேண்டுமென்றால் பரீட்சித்துப் பாருங்களேன்.

மன்னன் : டேய், (சேனைத்தலைவரைக் காண்பித்து) இவனை இரண்டு துண்டா வெட்டிப் போடுங்கடா!

மந்திரி திடுக்கிட்டுப் பிரமிக்கிறார். சேனாதிபதி தனது வாளை நிலத்தில் ஊன்றியபடி சிரித்துக்கொண்டு நிற்கிறான். வீரர்கள் உருவிய கத்தியுடன் சேனாதிபதியை நோக்கி ஓடி வருகிறார்கள். சிரித்துக்கொண்டே பார்த்த மன்னன் அவர்கள் வெகு சமீபத்தில் நெருங்குவதைக் கண்டு "ஓடய்யா, வெட்டிப்போடப் போராங்க. ஓடு, ஓடு!"

வீரர்கள் ஓங்கிய வாட்கள் சிதறி விழும்படி சேனாதிபதி வாளைச் சுழற்றுகிறான். மன்னன் ஒரு தூண் பக்கம் ஓடி ஒளிகிறான்.முகம் வெட்டுகிறது.

சேனாதிபதி : அரசே, தங்கள் பணியாட்களின் விசுவாசத் தையும் என் தைரியத்தையும் சோதித்துப் பார்த்துவிட் டீர்கள். இனித் தங்களுக்குக் கவலை இருக்காது.

(ஒரு கணம் நிசப்தம்)

தூணருகில் நின்று நடுங்கிய அரசன் பயம் தெளிந்து வருகிறான்.

மன்னன் : அடேயப்பா? பசங்க பொல்லாப் பசங்க.

மந்திரி: தாங்கள் சிங்காதனத்தில் அமரவேண்டும்.
மன்னன் : அட தெரியும்பா! சும்மா நொண் கொண்ன்னு பேசிக்கிட்டு தள்ளாதவருதான் நான் ராசான்னு அப்பவே சொல்லிப்பிட்டாரே.

மன்னன் போய்ச் சிங்காதனத்தில் அமர்ந்து கால் மேல் கால் போட்டுக் கைகளை முறுக்கி உடம்பை நெருக்குகிறான்.

மன்னன் : எனக்கு ராசாங்கம் நடத்தத் தெரியாதுன்னு 'உங்க நினைப்புல்ல - என்னய்யா முளிக்கிறே, உம்மத் தானே?

மந்திரி: அரசே....?

மன்னன்,: உங்களாஇல ஏன்னெ ஏமாத்த முடியாது. நான் ராசாங்கம் நடத்துறேன் பாக்கிறியா? என்ன .....

மந்திரி: ''அரசே!

மன்னன் : (கூத்தில் அரசன் பிரவேசம்போல் தாளம் போட்டுக் குதித்துவிட்டு) இதிலிருந்து சபையிலுள்ள
கனதனவான்களுக்கும் தெரிவிப்ப தென்ன வென்றால்.(கை வீசி ஒய்யாரமாக நடந்து) ராஜாதி ராஜன் வந்தேனே, அதி வீரசூர ராஜன் வந்தேனே! (ஆட்டம் போட்டுவிட்டுச் சிங்காதனத்தில் அமர்ந்து) அடே சேவகா! (அவனே குரலை மாற்றிக் கொண்டு) ஏன் மகராஜ் (தன் குரலில்) மந்திரியை அழைத்து வா'!

(மந்திரியின் குரலில்) ; மந்திரி வந்தேன்! நன்மந்திரி வந்தேன். சபையோருக்கும் சகலருக்கும் வணக்கம், அரசே தாங்கள் அழைக்க வந்தேன்.

(தன் குரலில்) : அஹோவாராய் மதிமந்திரி!மாதம் மும்மாரி பெய்து வருகிறதா!

(மந்திரி குரலில்) ஆம் அரசே!

(தன் குரலில்) : அந்தணர் அர்ச்சனை புரிகின்றனரா? ஆவினம் மேய்கின்றதா?

(மந்திரி குரலில்) : ஆம் அரசே !

(தன் குரலில்): புலியும்... புலியும்...(விரைவாக) புலியும் பசுவும் தண்ணி குடிக்கின்றனவா?

(மந்திரி குரலில்) : ஆற்றில் தண்ணீர் இல்லை.

(தன் குரலில்): அப்படியானால் அந்தணரை அழைத்து வருண ஜபம் செய்யச் சொல்லு.

(மந்திரி குரலில்): ஆகட்டும் அரசே!

(தன் குரலில்) : அதுவே சரி . சபை கலைந்தது.(பாட்டாக) போய்வருகிறேன்; போய்வருகிறேன் சபையோரே.
(பாடி ஆடிவிட்டுச் சிங்காதனத்தில் வந்து உட்காரு கிறான்.)

மன்னன்: எப்பிடி? (முகம் இழுக்கிறது)

சபையில் நிசப்தம்

சேனதிபதி: அரசே, வந்த சிரமம் தீரக்களைப்பாற வேண்டாமா? தங்களுக்காக அறுசுவை விருந்து காத்திருக்கிறது.

மன்னன் அப்படிச் சொல்லுடா தம்பீ! (நாடக ரீதியில்) சபை கலைந்தது. போய்வருகிறேன் போய்வருகிறேன் சபையோரே.

(சேனைத் தலைவனும் அரசனும் போகிறார்கள்)
------------------

7

அரண்மனைக்குள் ஒரு அறை. சேனைத்தலைவனும் அரசனும் உள்ளே பிரவேசிக்கிறார்கள். அரசன் உள்ளே குனிந்து நுழைந்து தலையை உயர்த்திச் சுற்றுமுற்றும் பார்க்கிறான். ஒரு பணியாள் அவனுடைய பிச்சைக்கார மூட்டையையும்,திருவோட்டையும் கொண்டு வந்து வைத்துப் போகிறான்.

சேனைத்தலைவன் : ராஜாங்க உடைகளை மாற்றிக் கொள்ளலாமே?

மன்னன் : அறைக்குள்ளாரக் கூட்டியாந்து எல்லாத்தை யும் புடிங்கிக்கலாம்னு பாக்கிரியா ? (சற்று நடுங்குகிறான்)

சேனைத்தலைவன். அப்படி அல்ல அரசே!உணவு அருந்த ஏற்ற உடைகளை மாற்றிக்கொள்ளலாமே?
--அங்கே யாரடா?

சில பணியாட்கள் ஓடி வருகிறார்கள். அரசனிடம் அணுகி உடைகளைக் களைய முயலுகிறார்கள்.

மன்னன்: வெலகி நில்லுங்கடா. நான் எடுத்துத் தாரேன் - எனக்கு இந்தப் பசங்க வாரது போரது புடிக்கலெ...

சேனைத்தலைவன் : அதற்கென்ன, மாற்றி விடுகிறது!

அரசன் கண்கள் மெதுவாக எதிரில் உள்ள பழத் தட்டைக் கவனிக்கின்றன.

அரசன்: அதோ வெளியே தெரியுதே தோட்டம். அதெல்லாம் நமக்குத்தானா!

சேனைத்தலைவன் : அவையா - அவைமட்டுமென்ன? கண்ணுக்கு எட்டிய தூரம் வரையிலும் தங்கள் பொருள்கள் தான்.

ஜன்னலருகில் சென்று தூரத்தில் கைகளைக் காட்டுகிறான். அவனுடைய பார்வை வேறு திசை திரும்பியதும் மன்னன் 'லபக்' என்று ஒரு பழத்தை எடுத்து ஒளித்துக் கொள்கிறான்.

அரசன் : 'சாப்பாடு"சாப்பாடு எங்கரே, எல்லாம் வெறும் பேச்சாருக்கு

சேனைத்தலைவன் : இதோ, இந்தக் கணத்தில் (வெகு வேகமாக ஓடுகிறான்.)

அரசன் : சனியன் ஒழிந்தது. ஓரண்ட தனியா உக்கார உட்ராங்களா?

(பழத்தைக் கடித்துக் கடித்து விழுங்குகிறான்)

கதவு திறப்பதைக் கண்டு, பழத்தை மறைத்துக்கொண்டு

மன்னன் : சனியங்க, இப்ப என்னவாம்?

சேனைத்தலைவன்: உணவுக்கு வரவேண்டும்...

மன்னன் ; சாப்பிடக் கூப்பிட்ரியா ... வெளியே இருந்தே சொல்லப்படாது! (எழுந்து) எங்கே?

இருவரும் அடுத்த அறைக்கு வருகிறார்கள். அங்கே இரு இலைகளில் உணவு பரிமாறப் பட்டுள்ளது. உணவு ருசி பார்ப்பவனும் சுயம்பாகியும் நிற்கிறார்கள்,

அரசன் : எதுக்கு ரெண்டு எலை? நீயும் எங்கூடக் குந்திக்கப் போரியா?

சேனைத்தலைவன் அல்ல அரசே, ஒன்று தங்களுக்கு, மற்றொன்று அங்கே நிற்கும் உணவு ருசி பார்ப்பவருக்கு!

அரசன்: அப்போ, எனக்கென்ன ருசி கிசி தெரியாதுன்னு நெனச்சுக்கிட்டியா? என்னய்யா காது குத்தப் பாக்கிறே?

சேனைத்தலைவன் : அப்படியல்ல அரசே.

ஒரு வேளை உணவில் விஷங்கலந்திருந்தால் தங்களுக்கு ஆபத்து ஏற்படாமலிருக்க.

அரசன் : உணவிலே விஷத்தை ஏன் கலக்கணும்...நான் கேட்டதுக்குப் பதில் சொல்லு. இப்போ இதிலே விஷம் கலந்திருக்கா...

சேனைத்தலைவன் : இல்லை என்று நினைக்கிறேன் - நிச்சயமாகச் சொல்ல முடியாதே...

அரசன் : டே. அவன் சோறு திங்கரதுக்காக எங்கிட்ட தபாய்க்காதே. எங்கிடி, வெஷமா? வெஷம்! அப்படிச் சொல்லிக்கிட்டே மொக்குவியாக்கும். இந்தக் காலத்திலே எங்கணாச்சும் பிடி சோறு போடுவாங்களா! அதான் வெஷமே இருந்துதுன்னு வச்சுக்க, துண்ணுப்புட்டு நீட்டிப் படுத்துட்டான்னா அந்த ஒரு வேளச் சோறு நட்டந்தானே! அதெ யாரு குடுப்பா? உங்கப்பன் வீட்டுச் சொத்தோ எடுத்துத் தானம் பண்ண வந்துட்டே. எல்லாரும் போங்கடாவெளியே. போங்கடா, போங்கடா,
போங்கடா!

எல்லோரையும் விரட்டிக் கதவைச் சாத்துகிறான். போங்கடா போங்கடா என்று அடித் தொண்டை யினால் பாடிக்கொண்டே இலையில் உட்காருகிறான். படைத்திருந்த வெறும் அன்னத்தை உருட்டி உருட்டி விழுங்குகிறான். காய்கறிகளைத் தனித்தனியாக விழுங்கு கிறான். பிறகு சாதத்தில் குழம்பையும் ரஸத்தையும் சேர்த்து ஊத்தி இரண்டு கவளம் போட்டுக்கொண்டு நாக்கைச் சப்புக்கொட்டுகிறான் - மற்றொரு பாத்திரத்தில் பாயசத்தைப் பார்க்கிறான். எழுந்து சென்று இரண்டு கைகளாலும் ஆற்றுத் தண்ணீர் குடிப்பது போல அள்ளிக் குடிக்கிறான். தட்டிலிருந்த லட்டைக் கடிக்கிறான். என்னது சாப்பிடுவது என்று தோன்றாமல் தவிக்கிறான்.

மன்னன்: இப்படிப்பண்ணா சரிப்படாது.

இலையில் எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து பேய் போல விழுங்குகிறான். முடிவில் தண்ணீர் என நெய்யைக் குடித்துவிட்டு "நெய்யா" எனச் சொல்லிக் கொண்டே மோரைக் குடிக்கிறான். பிறகு கைகளை மேல் துண்டில் துடைத்துக் கொள்கிறான்.கடைசி யாகச் சுற்றிப் பார்த்து இரண்டு லட்டை மடியில் கட்டிக்கொண்டு கதவைத் திறந்து கொண்டு வெளிவருகிறான்.
.
மன்னன்: (பணியாட்களைப் பார்த்து) இலையை எடுத்து ஏழை பரதேசிங்களுக்குப் போடு. நீயே மொக்கிப் பிடாதே.

(மன்னன் தனது அறைக்குச் செல்கிறான்)
சேனைத் தலைவன் வாசலில் காத்து நிற்கிறான்.

மன்னன்: (அவனைக் கண்டு) என்னய்யா குட்டி போட்ட பூனை மாதிரி சுற்றிச் சுற்றி வர்ரே

சேனைத் தலைவன் : தங்கள் உத்தரவுக்காக...

மன்னன் : கிட்டவா! அந்த மந்திரீன்னு ஒரு கிழம் வந்துதே அதும் மூஞ்சி ஒனக்குப் புடிக்குதா?

சேனைத் தலைவன் திடுக்கிடுகிறான்

மன்னன் : எனக்குப் புடிக்கலே, நம்ப ஊட்லே ஜயில் இருக்கா?

சேனைத் தலைவன் : தங்கள் முத்திரை மோதிரத்தைக் காட்டி அனுப்புகிறேன் சிறைக்கு; அதற்கென்ன?

மன்னன் : மோதிரத்தைத் திருப்பத் தரணும். சத்திய மாகத் தரணும் (அவிழ்த்துக் கொடுக்கிறான். ஒரு வேலைக்காரனைப் பார்த்து) அவருகூடவே, கையோடவே போயி மோதிரத்தை வாங்கியாந்துரு...ஜாக்கிரதை!
-------------------

8

இரவு மாளிகையில் சயனக்கிரகம். அறையின் உச்சியி லிருந்து ஏழு திரியிட்ட வெண்கல அன்ன
விளக்குத் தொங்குகிறது. கிழக்குச் சுவரில் ஒரு நிலைக்கண்ணாடி; விளக்கு வெளிச்சம் மங்கித் தெரிகிறது. மஞ்சத்தின் மையத்தில் பிச்சைக்கார மன்னன் உட்கார்ந்து தனது கிரீடத்தினுள் கைவிட்டு எடுத்து ஒவ்வொரு மலை வாழைப் பழமாகத் தின்று கொண்டிருக்கிறான்.

கைவிட்டுப் பார்க்க, பழம் தட்டுப்படாததினால், தான் ஏற்கனவே தின்று விட்டுக் கிரீடத்தில் போட்டு வைத்தி ருந்த பழத் தோல்களில் உள்ள சதைப்பற்றை நகத்தினால் நோண்டித் தின்று தோலை மறுபடியும் கிரீடத்துக்குள் போட்டுக் கொள்கிறான்.

எதிர்ச் சுவர் அருகில் உள்ள ஆசனத்தின் மீது தட்டில் வைத்துள்ள பழங்கள் அவன் பார்வையில் விழுகின்றன.

இடது குடங்கையில் கிரீடத்தை ஏந்தியபடி மெது வாக எழுந்து தட்டருகிலே சென்று ஒரு பழத்தை எடுத்துக்கொண்டு நிலைக்கண்ணாடி அருகில் சென்று பிம்பத்தைப் பார்த்தபடி பழத்தை ஒரு கடி கடிக்கிறான். முகம் வெட்டி இழுக்கிறது.

"இருந்தாலும் இப்போ நீதாண்டா ராசா" என்று சொல்லிவிட்டு உறக்க வாய்விட்டுச் சிரிக்கிறான்.

சிரித்துக்கொண்டே மறுபடியும் மஞ்சத்தருகில் வந்து உட்கார்ந்து கொள்ளுகிறான். கையிலிருக்கும் பழத்தை மறந்தவன்போல, சிரிப்பு ஓய, ஏதோ யோசனையில் ஆழ்ந் தவன் போல இருக்கிறான். வெளியே காவல்காரர்கள் முன்னும் பின்னுமாக நடந்து காவல் செய்யும் காலடிச் சத்தம் கேட்கிறது.

ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்து "என்னடா சுத்திக் கிட்டுத் திரியரே. உனக்குத் தூக்கம் கீக்கம் வரலே" என்று அதட்டுகிறான்.

பதறிப்போன காவல்காரர்கள் "மகாராசா சமூகத் துக்குக் காவல்."

பிச்சைக்கார மன்னன்: (யோஜனையுடன்) வெளியே போரதுக்கும் காவலா?

காவல்காரர்கள் மன்னனைத் திருப்தி செய்விக்கும் நோக்கத்துடன், ''ஆமாம் மவராசா''

மன்னன்: அப்பொத் தள்ளிப்போய் நின்னு காவப் பாருங்க. உங்க சத்தம் எனக்குப் புடிக்கலே. வேணும்னா
போயித் தூங்குங்க.

காவல்காரர்கள் : மகராசா!

மன்னன் . தூங்குங்கடா!

காவல்காரர்கள் : நாங்க தூங்கலாமா?

மன்னன்: (கடுமையாக) பின்னே நான் தூங்கவேண்டாமா? போங்கடான்னா போங்க போங்க...

காவல்காரர்கள் திருதிருவென்று விழித்துக்கொண்டு செல்லுகிறார்கள்.

அவர்களையே பார்த்துக் கொண்டிருந்த மன்னன் ஜன்னலருகிலிருந்து மறுபடியும் மஞ்சத்தருகில் வந்து கையில் இருந்த கிரீடத்தை மஞ்சத்தில் போடுகிறான். மெதுவாகத் திரும்பி அறைக் கதவு அருகில் சென்று தாள் சரியாகப் போட்டிருக்கிறதா என்பதை அழுத்திப் பார்க்கிறான். தாள் பலமாக இருக்கிறது என்பதை ஊர்ஜிதம் செய்து கொண்டு மறுபடியும் அறையின் மத்திக்கு வருகிறான். கையிலிருந்து முத்திரை மோதிரத் தைக் கழற்றி இடுப்பு வேட்டி முனையில் இறுக முடிந்து வேட்டியைப் பலமாக வரிந்து கட்டிக் கொள்கிறான்.

அவனுடைய பார்வை தனது பட்டயத்தின் மீது விழு கிறது. திடுக்கிடுகிறான்.(தனக்குள்) "தூங்கரப்ப மெதுவா வந்து வெட்டிப் போட்டா. எமன்க! செய்வாங்கள்!".

தனது உத்தரியத்தை எடுத்து அதற்குள் கத்தியை வரிய வரியச் சுற்றிப் பொதிகிறான். மஞ்சத்தினடியில் சென்று தரையில் விரித்திருக்கும் கம்பளத்தின் கீழ் மறைத்து வைக்கிறான்.

(சிரித்துக்கொண்டு) "இப்போ என்னடா பண்ணுவே, வந்தின்னாலும் என்னை எங்கேண்ணு எழுப்பித்தாண்டா கத்தி கேக்கணும்!"

மெதுவாக மஞ்சத்தினடியிலிருந்து வருகிறான். நேரா கப் பழத்தட்டருகில் சென்று மறுபடியும் ஒரு பழத்தை எடுத்துக்கொண்டு மஞ்சத்தின் மீது உட்காருகிறான்.

மன்னன் :கொள்ளு மட்டும் திண்ணு. நேத்து, எச்சி எலைக்கு ஏங்கிக்கிட்டுக் கெடந்தயே.துண்ணு,
கொள்ளு மட்டும் துண்ணுடா! துண்ணு.

கையிலுள்ள பழத்தை ஆவேசத்துடன் கடித்துக் கடித்துத் தின்கிறான்.

முகம் வெட்டி வெட்டி இழுக்கிறது. கண்களிலிருந்து பொல பொலவென்று கண்ணீர் வருகிறது. வாயைக் குவித்துக்கொண்டு சிரிக்கிறான். சிரிப்பு எக்காளச் சிரிப்பா கிறது. பேய்ச் சிரிப்பாகிறது. ஒரே பாய்ச்சலில் நிலைக் கண்ணாடி அருகில் போய் நின்று கொள்கிறான். விரைப் யாக நிற்கிறான். முகத்தை வலித்துக் கோரணி செய்து கொள்கிறான். மஞ்சத்தினருகில் ஒரு பதுமையின் கையி லிருக்கும் பந்தம் போன்ற விளக்கை வெடுக்கென்று எடுத்துக்கொண்டு பேய்ச் சிரிப்புடன், பேய்ச் சங்கீதத் துடன் குதித்து ஆடுகிறான். ஒரே வெறியாட்டம்.

சட்டென்று நிற்கிறான். உடம்பு வெட வெட என்று நடுங்குகிறது. விளக்கை வீசியடித்துவிட்டுக் கட்டிலில் பாய்ந்து படுத்துக்கொண்டு போர்வையை இழுத்து மூடிக் கொள்கிறான். விம்மும் சப்தம் கேட்கிறது. ஓய்கிறது.

தலைக்கருகில் பழத்தோல் நிறைந்த கிரீடம்.
-----------------

9

அரசனுடைய சயனக் கிரகத்தின் வெளிப்பக்கம். சாத்திய கதவு. அதன் எதிரில் இருவர் நிற்கிறார்கள். ஒருவன் சேனாதிபதி, மற்றவன் ஒரு பணியாள்.

சேனாதிபதி: டேய், இனிமேல் நீ மகாராஜாவுக்குப் பக்கத்திலேயே இருக்கிற பணியாள்.

பணியாள்: (கண்ணைச்சுழட்டிக்கொண்டு)

பக்கத்திலேயே இருக்கிற பணியாள்.

சேனாதிபதி: சரி அளக்காதே. அவரைப் பார்த்திருக்கிறாயா?

பணியாள் : (பணிவுடன்) இனிமேல்தான் பார்க்கப் போரேனுங்க.

சேனாதிபதி: அட மடையா! மெதுவாகக் கதவைத் தட்டி, மகாராஜா மகாராஜான்னு கூப்பிடு.

பணியாள் : கூப்பிடலாமா ?

சேனாதிபதி: ஆமாண்டா, (பணியாள் மெதுவாக அடி எடுத்து வைத்துச் சென்று லேசாகக் கதவைத் தட்டி) 'மகாராசா" "மகாராசா" என்று அடித் தொண்டையில் ரகசியம் போலக் கூப்பிடுகிறான்.

சேனாதிபதி: சத்தம் போட்டுக் கூப்பிடுடா.

பணியாள் தொண்டை கிழியக் கத்துகிறான்.

சேனாதிபதி: (திடுக்கிட்டு, உதட்டைக் கடித்து) 'டே மடையா" என்று இரண்டடி பின் வாங்குகிறான். அறைக்குள் சலனமேயில்லை.

சேனாதிபதி : நல்ல தூக்கம்,நேரமாகிறது, எழுப்பியாகணும்.

இருவரும் சுற்றி, திறந்த ஜன்னலருகில் வருகிறார்கள்.

சேனாதிபதி: டேய்,எட்டிப் பார்!

பணியாள் : (உள்ளே தலையை நீட்டிப் பார்த்துக் கொண்டே) அதோ கட்டில்லே தூங்குராருங்க.

சேனாதிபதி : நீ உள்ளே குதிச்சுப்போய், சத்தம் போடாமே கதவைத் திற. அப்புறம் மகாராஜாவை மரியாதையாய் எழுப்பு.

பணியாள் ஜன்னல் வழியாகக் குதிக்கிறான். ஓசைப் படாமல் போய்க் கதவைத் திறந்த பிற்பாடு மஞ்சத் தருகில் நின்று தலையிலிருந்த முண்டாசை மரியாதையாக இடுப்பில் கட்டிக்கொண்டு வாய் புதைத்து அடித் தொண்டையில் 'மகாராசா' என்று எழுப்புகிறான். அசையவில்லை. சுற்றுமுற்றும் திரும்பிப் பார்த்து, ஒன்றும் தட்டுப் படாததினால் மெதுவாக உலுக்கி எழுப்புகிறான்.
.
மன்னன் : (தூக்க வெறியில்) போம்மே! இன்னிக்கி நீதாம் போயிச் சீக்கிரம் ஏதாச்சும் எடுத்தாயேன். எச்சியெலை கிலைன்னு பாத்துக்கிட்டுத் திரியாதே.

பணியாள் : மகாராசா!

மன்னன் : (தூக்கத்திலேயே) போமே.

பணியாள் வெகு வேகமாக வாசல் வழியாக ஓடுகிறான்.

சேனுதிபதி : எங்கேயடா !

பணியாள் : ராசா உத்தரவு!

வெகு வேகமாக ஓடி மறைகிறான். சேனாதிபதி அவனையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு வாசலுக்குள் நுழைந்து உரத்த குரலில் "மகாராஜா” என்று அழைக்கிறான்.

மன்னன்: திடுக்கிட்டுக் கட்டிலில் எழுந்து உட்கார்ந்து) யாரது? என்ன? (முகம் வெட்டி இழுக்கிறது).

சேனாதிபதி: தங்கள் ஊழியன் சேனாதிபதி. தங்களுக்கு ஏற்ற .....

மன்னன்: நீ யெப்படி உள்ளே வந்தே?

பணியாள் துணியிட்டு மூடிய தாம்பாளம் ஒன்றை எடுத்துக்கொண்டு உள்ளே நுழைகிறான்.

மன்னன்: யாரடா? என்னது!

பணியாள்: உங்க நாய்க்குட்டி; உத்தரவுப்படி கொண்டாந்தேன்.

சேனாதிபதி: இவனைத் தங்களுக்கு ஏற்ற ஊழியன் என அழைத்து வந்தேன். இவன்தான் உள்ளே குதித்துக் கதவைத் திறந்தான். பிறகு தங்கள் உத்தரவு கேட்டு..

மன்னன்: உத்தரவா!

பணியாள்: ஆமாம், எசமான். நீங்க தூங்கரப்ப மருவாதி யா உசுப்புனேன். இத்தெ கொண்டார
உத்தரவாச்சு... மன்னன்: எதை?

பணியாள்: இதை! (துணியை எடுத்து எச்சில் இலைகளைக் காண்பிக்கிறான்.)

சேனாதிபதி: சீ மடையா! அரசருடன் விளையாடுகிறாயா? பணியாள் : நான் விளையாடுவேனா ?

மன்னன் : (உறக்கச் சிரிக்கிறான். முகம் வெட்டுகிறது) தூக்கத்திலே நான் ராசா இல்லை.முளிச்சுக்கிட்டு இருக்கப்பத்தான் ராசா! தூக்கத்திலே போடுற உத்தரவைக் கேக்காதே. கெட்டிக்காரனா இருக்கியே! ஒம் பேரென்ன?

பணியாள் : ஏம் பேரு பூரணம்.

மன்னன்: அதான் ஓம் மூஞ்சியப் பாத்தாக் கொழுக் கட்டை மாதிரியிருக்கு. பூரணத்தை வாயிலே திணுச்சுப் பிட்டா அசல் கொழுக்கட்டேதான்.

பணியாள் மெதுவாக நிலைக்கண்ணாடி யருகில் சென்று முகத்தைச் சோதிக்கிறான்.

பணியாள்: எனக்கும் அப்படித்தான் தோணுது மகராசா. கொஞ்சம் பூரணத்துக்கு உத்தரவானா, நான் கொழுக் கட்டை ஆயிடுவேன்.

சேனைத் தலைவன் : சரிதாண்டா. ராஜகாரியம் எத்தனையோ, மரியாதையாய்ப் பேசு.

மன்னன்: அவனை ஏன் அதட்டரே? அவன் நம்ம வேலைக் காரன். ஓங்க ராசாங்கத்திலே அவனைப்போல புத்திசாலி உண்டா? ஆமாம் கேக்கறேன்!

பணியாள்: ஆமாம் கேக்கிறேன்!

சேனைத் தலைவன் தலைவணங்கிவிட்டு வெளியே போகிறான்.
-----------------

10

கவிஞன் வீடு. திண்ணையில் அவன் அமர்ந்திருக் கிறான், நிலைக்குப் பின் அவனுடைய தாயார் தரையில் உட்கார்ந்து, வெற்றிலை உரலில் வெற்றிலை தட்டிக் கொண்டிருக்கிறாள்.

தாயார் : அப்பா, உனக்குத் தெய்வ சகாயத்தால் வாக்கு வந்துவிட்டது. வாக்கு இருந்தால் வயிறு நிறையுமா? இப்பொ வயிறு பேச ஆரம்பித்துவிட்டதே !

கவிஞன்: அவள் அருள் இருக்கும்போது நமக்கு எதுக் கம்மா கவலை? பேசாத என்னைப் பேச வைக்கவில்லையா? ஊரிலே என்னைப் பார்க்கிறவர்கள் எல்லாம் மந்திரவாதி என்று பேயோட்டச் சொல்லுகிறார்கள். வேலைக்குப் போக ஆசைதான். கொடுக்கிறது யார்? மேலும் வாணியை வாழ்த்திக் கொண்டே இருந்தால் போதும் என்று...

தாயார்: அது சரிதானப்பா.... வேலைதான் பார்க்கப் புடிக்கலேன்னா ராசாவைப் போயிப் பாரு. நம்ம பரம்பரைத் தொழில்தான் பாடுவதாச்சே......

கவிஞன்: வயிற்றுக்காக வாணியை அடகு வைக்கச் சொல்லுகிறாயாக்கும்.

தாயார்: என்னப்பா செய்யரது? உலகம் அப்படி...

கவிஞன்: அம்மா, எனக்கு இந்த உலகம் வேண்டாம். வேண்டுமானால் ஊமையாகவே இருந்துவிட்டுப் போகிறேன்.

தாயார் : துக்குறித் தனமாப் பேசாதே. நான் சொல்லுகிறதைக் கேளு. (ரகசியமாக) ஏதோ புது ராசா வந்துட் டார் என்று பக்கத்து வீட்டிலே சொல்கிறார்களே...
மேலக்கோட்டை வாசல்லே வச்சு இவரை அவர் அழைச்சு அனுப்பிச்சாராம். இவர் ஏழை எளியதுக கஷ்டம் தெரிஞ்சவராம். நீதான் போயிப்பாரேன் கவிஞன் : ஆமாம்... என்னமோ பிச்சைக்காரன்னு சொல்றாங்க.

தாயார் : சத்தம் போட்டுச் சொல்லாதே.

கவிஞன் : உள்ளதைச் சொன்னா என்ன? உள்ளதை மூடிப் பொதியப்படாது அம்மா...

தாயார் : மூடிப் பொதிகிறதை மூடித்தான் பொதியணும் உலகம் உன்னைப்போல இல்லை. ராசா கோபம் வீண் பொல்லாப்பு.நமக்கு ஏன் இந்தத்தொல்லை? இன்னைக்கு அவன் ராசா உன் தொழில் பாடுவது. சன்மானம் கேட்டுப் போய்ப் பாடு. சொல்வதைக் கேளு......

கவிஞன் : உனக்காகத்தான் போகிறேன். எனக்கு மனம் ஒப்பவில்லை.
----------------

11

கடைவீதி. பிச்சைக்காரப் பெண் கவலை கொண்ட முகத்துடன் வருகிறாள்.

ஒரு கடைக்குச் சற்று விலகி நின்று, அங்கு நின்று கொண்டிருந்த இரண்டு ஆண்டிகளை அணுகிப் பேச எத்தனிக்கிறாள்.

பிச்சைக்காரி : எங்கப்பாரைப் பார்த்தீங்களா? நேத்து முச்சூடும் அவரைக் காணவே இல்லை.

முதல் ஆண்டி : உலகம் மாயை அம்மா! தெரியரது தெரியாது; தெரியாதது தெரியும்.

பிச்சைக்காரி: அப்பொ எங்கப்பாரு? (கண் கலங்குகிறது)

இரண்டாவது ஆண்டி : இனிமே அவரைப் பார்க்க ஒன்னா லேயும் முடியாது, என்னாலேயும் முடியாது. அவரெப் படைச்ச ஆண்டவன் வந்தாலும் முடியாது. நீ கவலெப் படாதே. கையிலே ஓடும் கழுத்துக்குள்ளே குரலும் இருக்கப்பக் கவலை எதுக்கு? எங்ககூடச் சேந்துக்கோ...

பிச்சைக்காரி : எங்கப்பாரு செத்தா ஒங்களுக்கு எளக்காரமாப் போச்சாக்கும். கசமாலம்... கசமாலம்

முதல் ஆண்டி: யாரம்மா அவரு செத்துப் போனாருன்னு சொன்னா! நாங்க சொல்லாததை நீ நடுத்தெருவிலே ஞாயத்தை மறந்து சொல்லலாமா?

பிச்சைக்காரி: (நம்பிக்கையுடன்) அப்ப சாவுலீங்களா!

இரண்டாவது ஆண்டி: யாரம்மா அப்படிச் சொன்னா? அப் பாரைச் சாமி பார்த்துதா. எல்லாம் மாயை. இல்லாதது இருக்கு. இருக்கிறது தெரியலெ...

பிச்சைக்காரி : என்னிடம் விளையாடாதிங்க. உங்களுக்குக் கோடி புண்ணியம் உண்டு.

முதல் ஆண்டி : சம்பிரதிப் பிள்ளை வீட்டு முதல் பந்தி முடிஞ்சிருக்கும். சின்ன மாயைகூடப் பேசிப் பொழுதைக் களிச்சா, பசி, மாயையைத் தொலைச்சி சம்மாரம் பண்ணிப்படும். சப்பரைச் சாமி இப்படி நடக்கட்டும்...

இருவரும் வேகமாக நடக்கிறார்கள்.

பிச்சைக்காரி: உங்களுக்குக் கோடி புண்ணியமுண்டு..... இருவரும்: கூட வராப்பிலியா?

பிச்சைக்காரி : கசமாலம்.

பிச்சைக்காரி மறுபடியும் தெரு வழியாக நடந்து செல்லு கிறாள். பதிவாகப் பிச்சை வாங்கும் ஒரு கடையை நெருங்கி ஓரத்தில் நிற்கிறாள்.

கடைக்காரன் : கடன்காரி, கடன்காரி. கடையைத் திறக்கர துக்கு முன்னே கையை நீட்டிக்கிட்டு மாதிரி வந்திட்டியாக்கும், கொடுத்து வைச்சவன் தவணை தண்ட வர வந்துட்டியாக்கும். போ மூதேவி.போ.போ!

பிச்சைக்காரி : எசமான், எங்கப்பாரே நேத்து முச்சூடும் பாக்கலே. கடைப்பக்கமா வந்தாரான்னுட்டு கேக்கலா முன்னு வந்தேன். கோவிச்சுக்காதிங்க எசமான்.......

கடைக்காரன் : ஓங்கப்பன் வந்தானா தொலஞ்சானான்னு பாக்கரதா எஞ்சோலி? கழுதே, அப்பெனத் தேடிக்கிட்டு வாராப்பிலே இதுவேரெ வேசமாக்கும். தொலஞ்சு போ.

ஒரு காலணாவை விட்டு எறிகிறான்.

பிச்சைக்காரி காலணாவை ஏறிட்டுப் பார்த்தபடி நின்றுவிட்டு, அதை எடுத்துக் கொள்ளாமல் போகிறாள்.

கடைக்காரன்: கொளுப்பப் பாரு கொளுப்பெ. ஏ மூதேவி, எடுத்திக்கிட்டுப் போரியா இல்லியா...

பிச்சைக்காரி திரும்பிப் பாராமல் செல்லுகிறாள்.

வேறு ஒரு பிச்சைக்காரன் வந்து குனிந்து அந்தக் காலணாவை எடுத்துத் துடைத்து மடியில் கட்டிக்கொண்டு கடைக்காரனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டு வருகிறான்.

கடைக்காரன் : என்ன! 'மொறவச்சுக் கொள்ளையடிக்க நெனப்போ? தடியா.

பிச்சைக்காரன் : கூச்சப் போடாதிங்க எசமான்.ஆபத்து.

கடைக்காரன் : என்னடா ஆபத்தைக் கண்டுபிட்டே..

பிச்சைக்காரன் ; கூச்சப் போடாதிங்க; அவ இருக்காளே அவ எங்க சாதிக்காரிதான். இப்பொ (ரகசியமாக) ராசாவா ஆயிப்புட்டாரே அவரு மவ. அவரு எங்க சித்தப்பாரு மகன். இண்ணக்கிக் கண்ணு தெரியுமா? அவரு யோசனெலதான் இந்தப் பொண்ணு இப்படிப் பழய கோலத்துலெ திரிஞ்சு ஆராருகிட்டப் பணம் இருக் குன் நோட்டம் பாக்குது. நீங்க காலணாவெ விட்டெறிஞ்சிங்க பாரு, உங்களுக்குத் தீம்புதான்.

கடைக்காரன் . ராசா மவளா? அவளெக் கூப்புடுடா அவளெக் கால்லெ உளுந்து...

பிச்சைக்காரன்: அவளக் கூப்புடவா? யாராவது நாகப் பாம்பெக் கூப்பிடுவாங்களா? நீங்க,இருக்கிற ரொக் கத்தைக் கட்டி முடிச்சிக்கிட்டு, வாருங்க. தலெமறெவா உங்களக் கூட்டிக்கிட்டுப் போரேன்...

கடைக்காரன் :இரு, இரு. இப்பவே வரேன் (உள்ளே ஓடித் திரும்பி) பொம்பிளைங்களையும் அழைச்சுக்கிட்டுப் போயிருவமா?

பிச்சைக்காரன் : ஊரறிஞ்சு போகும். பொறவு ஆபத்து. நீங்க ரொக்கத்தையும், நகையையும் எடுத்துக்கிட்டு சீக்கிரமா வந்திருங்க...
-------------

12

அரண்மனையில் ஒரு அறை. மஞ்சத்தில் மன்னன் உட்கார்ந்திருக்கிறான். அவனுடைய காலடியில் பூரணம் உட்கார்ந்திருக்கிறான். மன்னன் கிரீடத்தில் வேர்க்கடலை களைப் போட்டு வைத்துக்கொண்டு ஒவ்வொன்றாய் உரித் துத் தின்பதும் சமயத்தில் கீழே இருக்கும் வேலைக்கார னுக்கு ஒன்று கொடுப்பதுமாக மென்று மென்று தின்று கொண்டிருக்கிறான்.

கீழே தரையில் உட்கார்ந்திருக்கும் பூரணம் ஒரு வேர்க்கடலையை உரித்துத் தோலை விட்டெறிந்துவிட்டு, வித்தின் மெல்லிய தோலை நிமிண்டி ஊதிவிட்டுக் கடலையை வாயில் போட்டுச் சுவைத்துக்கொண்டே பேசுகிறான்.

பூரணம் : மகாராசா, எனக்கு ஒண்ணு தோணுது. அர மனைன்னா ரொம்ப லக்ஷ்மிகரமாக இருக்க வாண்டாமா எங்க பாத்தாலும் தடித்தடியா...

மன்னன் : (அவனை முதுகில் ஓங்கித்தட்டி) அப்படிச் சொல்லுடா அதிரசமேன்னு. டே! பூரணம்,இந்த அர மனைக்கு வந்ததம் பரவு நானும் எத்தினியோ பயலு வளெப் பாத்தேன். ஒன்னியப்போல எனக்குப் புடிச் சாப்புலே பேச ஒரு பயலுக்கும் தெரியுதில்லெ.

பூரணம்: (வலியைக் காட்டாமல் முதுகைத் தடவிக் கொண்டே) ஆமாம் மகராசா.

மன்னன் : (வேர்க்கடலையை உரித்துத் தோலை எதிர்ச்சுவரிலுள்ள சரஸ்வதி படத்தின் மீது விட்டெறிந்து)
சொல்லு...

பூரணம்: (மன்னனைப்போலவே வேறு ஒரு கடலைத்தோலை விட்டெறிந்து) என் புத்திக்குப் படுது - நீங்க இந்த அந்தப் புரத்தைவுட்டே வெளியே வரப்புடாது. நான் தான் வெளியே நடமாடஇருக்கேனே. நீங்க இங்கே லக்ஷ்மி மாதிரி இருக்கிற பொம்புளெங்களெ அளச்சு வச்சுக்கிட்டு, கிட்ணசாமி மாதிரி இருக்கணும்.
மன்னன் : (ஒரு அசட்டுச் சிரிப்புடன்) அப்படிச் சொல் லுடா ஆம்புளை சிங்கம்! டே பூரணம், இந்த நிமிசத் திலே இருந்து நீதான் நமக்கு மந்திரி...தெரியுமா? மந்திரி!

பூரணம்: நான்தான் மந்திரி!

மன்னன் : அதிருக்கட்டும், எதுக்க மாட்டியிருக்கே, அந்தப் பொம்புளெ படம் யாரு?

பூரணம் : சரஸ்வதி மாதிரி என் புத்திக்குப் படுது. நிச்சயமாச் சொல்ல...

மன்னன்: (கோபமாக) மடையா - மந்திரிக்கு என்னாவேலை தெரியுமா?

பூரணம்: தெரியும் மகராசா. வரும் பொருளுரைத்தல். சேனாதிபதி வாராரு!

மன்னன் : எங்கே !

சேனைத்தலைவன் : அவசர காரியம். அதனால்தான்.

மன்னன் : அவசர காரியமா? இங்கே நம்ம மந்திரி கூடக் கலந்து பேசிக்கிட்டு இருக்கேன்... இனிமே பூரணம், நம்ம மந்திரி... தெரிஞ்சுக்கோ.

சேனைத் தலைவன் பூரணத்தைக் கூர்ந்து கவனிக்கிறான்.

பூரணம்: (சரஸ்வதி படத்தைப்பார்த்துக்கொண்டு ) இது சரஸ்வதி படந்தானே, மகராசா கேட்டாங்க

சேனைத்தலைவன் : நீதான் மந்திரியாச்சே, நீ சொல்லு.
(கோபமாகச் செல்கிறான்)

மன்னன் : சனி தொலஞ்சுது!

பூரணம்: எனக்கு அப்படித்தான் தோத்துது. இது சரஸ்வதி படம்தான். மவராசா. கையிலே வீணை இருக்கு!
மன்னன் . (யோசித்துவிட்டு) இந்த மோதிரத்தைப் பார்த்தியா?
(அவன் முகம் வெட்டுகிறது)

பூரணம்: ஆமாம்.

மன்னன்: இதைக் கொண்டு போயி (ரகசியமாக) அவங்கிட்ட காமி. அவன் ஜெயிலுக்குப் போயிடுவான்!

பூரணம்: (பயந்துகொண்டு) போகாட்டா?

மன்னன்: போவாண்டா. நீ போ. போவாட்டா நீ மோதிரத்தை எடுத்திட்டு ஓடியாந்திரு. போ
---------------

13

அரண்மனை அத்தாணி மண்டபம். சேனாதிபதி தனி யாக முன்னும் பின்னும் நடந்து கொண்டிருக்கிறான்.

உள்ளிருந்து பூரணம் வருகிறான்.தயங்கித் தயங்கி அவன் எதிரில் வந்து நிற்கிறான்.

சேனாதிபதி: (கோபச் சிரிப்புடன்) வருக மந்திரியாரே!

பூரணம்: (தலையைச் சொரிந்து கொண்டே) இல்லீங்க...

சேனாதிபதி: அற்பனுக்கு எடம் கொடுத்தால்... இப்ப என்னவாம், எங்க வந்தே?

பூரணம்: இல்லீங்க (மடியிலிருந்து முத்திரையை எடுத்து அவரிடம் காண்பித்து) இத்தெ ஒங்க கிட்டக் காமிக்கச் சொன்னாருங்க...

சேனதிபதி : (உரக்கச் சிரித்து விட்டு) காண்பித்து விட்டு?

பூரணம் : காமிச்சா நீங்க ஜெயிலுக்குள்ளே போயி உக்காந்துக்குவிங்கன்னு சொன்னாரு......

சேனாதிபதி: (விழுந்து விழுந்து சிரித்து விட்டு) நான் ஜெயிலுக்குப் போயாச்சுன்னு போய்ச் சொல்லு. வேறெதும் சொன்னியோ...?
(கத்தியை எடுத்துச் சுழற்றுகிறான்)

பூரணம்: நான் சொல்லுவனா? நீங்களும் அவரைக் கண்டா அப்படி நான் சொன்னேன்னு சொல்லுங்க

சேனாதிபதி : மடையன்கள் மடையன்கள்...

சிறைச்சாலை

சிறையில் சேனைத் தலைவனும் மந்திரியும் உட்கார்ந்திருக்கிறார்கள்.

சேனாதிபதி : மடையனை ராசாவாக்கினால் ஊர் சிரிச்சுப் போகும். நான் அப்பொழுது சொன்னது உங்கள் காதில் ஏறி இருக்காது. அதனால் தான் அவன் உத் தரவுப்படி உங்களை இங்கே அனுப்பினேன். நான் சொல்லுகிறபடி...

மந்திரி: நீங்கள் சொல்வது சரியில்லை. அவருக்கு ஆள் விடுவோம். அல்லது ஜனங்கள் சம்மதப்படி நடப்போம்.

சேனைத் தலைவன் : வெள்ளம் வந்த பின் அணைபோட முடியுமா? ஜனங்களுக்கு என்ன தெரியும்? என்ன சொல் லப் போகிறார்கள்? ஒரு வேளைச் சோறு போடுகிறவன் அவர்கள் உள்ளத்தைக் கைக்குள்ளாக்க முடியும்: வேண்டுமெனில் அவர்களை நமக்குச் சாதகமாக...

மந்திரி: அது வெறும் பேச்சு. ராஜ்யத்தின் உயிர் ஜனங்கள். அவர்கள் வாக்கு ராஜ்யத்தின் வாக்கு.
-------------

14

நகரத்தின் சவுக்கையின் முன்பு ஏராளமான கூட்டம். நகரத்துப் பெரிய மனிதர்கள் சவுக்கையில் உட்கார்ந்தி ருக்கிறார்கள். அவர்களுக்கு மத்தியில் கவிஞன் உட்கார்ந்திருக்கிறான்.

கூட்டத்தில் ஒருவன் : நம்ப கவிராயரின் மகன் ஊமை யல்ல.

2-வது நபர்: சீ! வாயை மூடு. எச்சிணி மந்திரத்திலே அவன் ரொம்பக் கெட்டிக்காரண்டா. அதனாலேதான் பேச்சு வந்திடுத்து. துண் ணூரு குடுத்தா பேயி,பிசாசு நோயி எல்லாம் நொடியிலே பறந்து போகும். (ரகசியமாக) அவன் சொந்த அப்பாரேப் பலி குடுத்து இந்த சக்தியை வரம் வாங்கி இருக்கானாம். கண்ணைப் பாரு தெரியும்.

3-வது ஆசாமி : அப்படியா!தகப்பனெக் கொண்டா?

2-வது நபர்: உம்,சத்தம் போடாதே. அதோ பேசறான் பாரு !

கவிஞன் : (அருகிலிருப்பவரைப் பார்த்து) அறியாமை அரியணையில் அமருவதா? தருமம் தலையிறங்கி விட்டதா? உலக நாயகி ஒடுங்கி விட்டாளா? நீங்கள் சொல்வது.

முதல் பெரியவர் : அரண்மனையில் நடப்பதை நேரில்கண்டவர்கள் சொன்னதைத்தான் உங்களுக்குச் சொல்கிறேன். அமைச்சரைச் சிறையில் தள்ளிவிட்டானாம்.

2-வது பெரியவர்: திடீரென்று அதிர்ஷ்டம் வந்தால் மூளை பேதலித்துப் போவது சகஜம். போன பணம் கிடைத் தது என்பதைக் கேட்ட மேகலிங்கம் பிள்ளை வேஷ் டியைக் கிழித்துக் கொண்டது தெரியாதா? கிடைத்ததை இன்றுவரை சித்த சுவாதீனத்துடன் அனுபவிக்க முடிந்ததா?

கவிஞன் : அப்பொழுது அரசருக்கும் பைத்தியமா?

முதல் பெரியவர் : நிச்சயமாக எப்படித் தெரியும்? கவிஞன்: நேரில் போய்ப் பார்ப்பது!

2-வது பெரியவர் : அரசர் கொலுவில் வந்து இருந்தால் தானே?

கவிஞன் : ஊர்ப் பெரியவர்களாகப் பார்த்து ஏகோபித்துச் சொன்னால்!

முதல் பெரியவர் : பைத்தியக்காரனிடம் போய் வலுவில் மாட்டிக் கொள்வதா? அந்த விவகாரம் நமக்கு ஒத்து வராது.

கவிஞன்: நான் போய் வருகிறேன்.

கூட்டத்திலிருந்து: என்னையா உக்காந்துக்கிட்டுப் பேசிறிங்க. ரெண்டு பாட்டுப் பாடுங்க.

மறுபக்கத்திலிருந்து அவன் ஊமைடா சும்மா டபாய்க்கிறாங்க.

கவிஞன் சிரித்துக் கொண்டு எழுந்திருக்கிறான்.
ஜனங்கள் ஆரவாரம் செய்கிறார்கள். பிறகு நிசப்தம்.

கவிஞன் : நான் இது பரியந்தமும் ஊமையாக இருந்ததை நீங்கள் அறிவீர்கள்.எனக்கு வாக்கு வந்து விட்டது. ஆனால் நீங்கள் யாவரும் ஊமையாகக் கிடக்கிறீர்கள். அரசன் என்ற பெயரில் அறியாமை இன்று உங்கள் சிங்காதனத்தில் உட்கார்ந்து கெக்கலி கொட்டுகிறது. அதை அடக்க வாயற்று ஊமையாகி விட்டீர்கள். பைத்தியக்காரர்களையும்,மூடர்களையும் அரசன் என்று சம்மதித்து நீங்கள் தலை வணங்க வேண்டுமென்று தர்ம சாஸ்திரங்கள் சொல்லவில்லை. உங்கள் மந்திரியைக் காரணமில்லாமல் சிறை செய்ததை எதிர்த்தீர்களா? உங்கள் சொத்துக்களை நாளைப் பிடுங்குவதற்கு உத்தரவுகளைப் போட்டால் அதற்கும் தலை குனிவீர்களா?

கவிஞன் பாடுகிறான்: (தேசத்தின் வளம் பிரஜைகளின் உழைப்பு; அவ்வளவையும் உறிஞ்சும் வேதாளம்தான் அரசன்; அறிவுத் தெய்வம் காளியின் கோலம் பூண்டு புன்மையை அழித்து விடும்.)

கூட்டம் அவசர அவசரமாகக் கலைகிறது.

ஒருவன்: என்னென்னமோ பேசராண்டா!

மற்றவன்: இங்கே நின்னா நம்மையும் பிடிச்சுக்கிட்டுப் போயிருவாங்க. சவுக்கையிலிருந்தவர்களும் வேகமாகப் போகிறார்கள்.

கவிஞன் : ஜனங்களின் சன்மானம் இப்படி. ராஜ சன் மானம் எப்படியோ?
(கசங்கிய பூவுடன் நடக்கிறான்)
---------------

15

மாலை நேரம். கையில் ஒரு கசங்கிய மாலையுடன் கடைத்தெரு வழியாக நடந்து வந்து கொண்டிருக்கிறான்.

"கசங்குகிற ஜனங்களுக்காகப் பேசினால் கசங்கின மாலைதான் மிச்சம். வீட்டுக்குப் போய் விடிய விடியப் பட்டினியுடன் தோழமை கொள்ள வேண்டியதுதான், நான் என்றாலும் பெரிய காரியமில்லை. அம்மாவுக்கு என்ன பதில் சொல்வது? ஊர் வழக்குத் தீர்க்கப் போனேன் என்பதா..."

கடைகளைத் தாண்டிச் சற்று நடமாட்டமில்லாத இடத்திலிருந்து ஒரு அலறல் கேட்கிறது.

அறியாப் பிள்ளைகிட்ட அநியாயம் பேசுராங்களே. கேக்க ஆளில்லையா?"

கவிஞன் அத்திசையை நோக்கி ஓடுகிறான். எதிரில் ஒரு பிச்சைக்கார யுவதி ஒருவனிடம் திமிறிக் கொண்டிருக்கிறாள்.

கவிஞன் அந்த இடத்துக்கு வெகு வேகமாக விரைந்து ஓடி "அடே, அவளை விடு, அவளை விடு" என்று அதட்டிக் கொண்டு அந்த விடனைப் பிடித்துத் தள்ளுகிறான்.

விடன்: நீ யாரடா, சாக்கி சொல்லிக்கிட்டு வாரது? என் பொண்டாட்டியே நான் அடிப்பேன், கொல்லுவேன், என் இஷ்டம்!

மீண்டும் அவள் கையை எட்டிப் பிடிக்கிறான்.

கவிஞன் : பொய் சொல்லாதே. பதரே, அவளைத் தெரியும்.

(அந்த விடன் கன்னத்தில் கவிஞன் ஓங்கி ஒரு அறை விடுகிறான். அறை பொறுக்கமாட்டாமல் அம்மாடி என்று அலறிக்கொண்டு ஓடி விடுகிறான்.)

கவிஞன் : இப்படி வாம்மா. இருட்டிலே இப்படி வரலாமா? பிச்சைக்காரி: பிச்சைக்காரிக்கு இருட்டுன்னு ஒண்ணு இருக்குங்களா?

இருவரும் விளக்கருகில் வருகிறார்கள்.

பிச்சைக்காரி: நீங்களா! நெசமா நீங்களா!

கவிஞன் : (சிரித்துக்கொண்டு) என்னை இன்னும் ஞாபகமிருக்கிறதா?

பிச்சைக்காரி : கை நீட்டிப் போட்டவங்களை மறக்க முடியுமா? அதுவும் அன்னிக்கி உங்களைப் பார்த்த மாதிரி பொய்யா, அல்லது இன்னிக்கு உங்களெக் காதாலெ கேக்கரெனே அது பொய்யான்னு மலப்பாருக்கு.

கவிஞன்: இரண்டும் நிஜம்.அன்று ஊமை. இன்றைக்குப் பேசுகிற ஊமை...?

பிச்சைக்காரி: என்னாங்க அப்படிச் சொல்லிப்புட்டிங்க? கவிஞன் : வாயிலிருந்து வார்த்தை வந்தால் போதுமா? உன்னைப் பார்த்த அதிர்ஷ்டம் அன்று எனக்கு வாக்குக் கிடைத்தது என்று நினைத்தேன். இன்று அதே (வாக்கு வார்த்தை தன்னுடைய திறமைக் குறைவை நிமிஷத் துக்கு நிமிஷம் இடித்துக் காட்டுகிறது. வா போவோம். எங்க வீட்டிலே மூன்று பேர் பட்டினியாகப் பேசிக் கொண்டிருக்க இடமிருக்கிறது. இரண்டு பேர் என்று தான் நான் நினைத்தேன்.

பிச்சைக்காரி: ஏங்க பட்டினி? என் பையிலே அரிசி இருக்குதுங்க. நல்லாச் சொன்னிங்க... வாங்க வூட்டுக்கு...

கவிஞன் : (சிரித்துக்கொண்டு) நீ சிரமப்பட்டுச் சேகரித் ததை நான் தட்டிப் பிடுங்குவதா?உன் மனம்போல உலகத்து மனம் இருந்தால் வேதனையே இருக்காது!

பிச்சைக்காரி : எம் மனசு குளிந்திருக்குன்னு நீங்கதான் சொல்லணும். அது வேவுர வேவு கொதி கஞ்சிகூட வேவாது.நேத்திக் காத்தாலெ எங்கப்பாரு பிச்சை வாங்கப் போனாரு. பொறவு காணலே, இண்ணக்கி முச்சூடும் தேடித் தேடிக் காலு கடுத்துப் போச்சு. இருக்காரா செத்தாரா தெரியல்லை!

கவிஞன்: அப்பொ உன் தகப்பனாரைத் தேடிப் பிடிக்கும் வரை எங்கள் வீட்டிலேயே இருந்து விடு-

பிச்சைக்காரி: அது எப்படி சாமி, உலகம் ஒப்புமா? நான் ஒப்பி இருந்தாலும் உலகம் ஒப்புமா... நான் உங்ககூட நடக்கரதே தப்பு. இந்தாங்க அரிசி. சும்மா எடுத்துக் கிடுங்க...

கவிஞன் : (சிரித்துக்கொண்டு ) நீ ஒப்பினாலும் உலகம் ஒப்புமா?

பிச்சைக்காரி : ஆமாம் சாமி. எப்படியானாலும் பிச்சைக்காரச் சாதிதானே. நான் வர்ரேனுங்க...

பிச்சைக்காரி வெகு வேகமாக இருட்டில் மறைகிறாள். கவிஞன் : இவளா பிச்சைக்காரி!...
------------------

16

அரண்மனை அந்தப்புரம். வாசலருகில் பூரணம் நின்று கொண்டிருக்கிறான்.

பூரணம் : (உள்ளே தலையை நீட்டி) மகாராசா கூப்பிட் டிங்களா?

உள்ளிருந்து மன்னன் குரல் ஒன்னத்தாண்டா கூப்பிடு றேன். உள்ளார வா!

பூரணம் : புத்தி மகா ராசா (உள்ளே விரைந்து செல்கிறான்]

பத்து, இருபது பணிப் பெண்கள் சூழ மன்னன் ஒரு மஞ்சத்தில் படுத்திருக்கிறான். ஒருத்தி கால் பிடிக்க, ஒருத்தி வீச, இன்னொருத்தி பன்னீர் தெளிக்க, வேறு ஒருத்தி கிரீடம் நிறைய இருக்கும் பொரி கடலையை ஒவ்வொரு குத்தாக அள்ளி, அள்ளி வாயில் போட, வாயைக் குதப்பி அசை போட்டுக் கொண்டே, என்ன மந்திரி பூரணத் தாரே, நம்மெப் பாத்தா எப்படி இருக்கு ?” என்று கேட்கிறான்.
.
பூரணம்: பசுந்தா இருக்கு!

மன்னன் தலையைத் திருப்பி அவனைப் பார்த்து) என்னப் பார்த்தா கிட்ணசாமி மாதிரி இல்லெ?

பூரணம்: மஹாராசா சொல்வது வாஸ்தவம். அச்சுந் தரமும் அப்படியெ இருக்கு.இனிமேல் நான் கிட்ணசாமியைக் கூட நேரில் பார்க்க வேண்டாம்.இப்பவே துண்டைப் போட்டுத் தாண்டி சத்தியம் பண்ணுவேன்.

மன்னன் : அப்பிடிச் சொல்லு, அதிசயத்தை விள்ளு இந்தா ஒரு பிடி பொரி கடலை.இந்தா..

பூரணம் வரங்கி வாயில் போட்டுக் கொள்ளுகிறான்.

மன்னன் : (வேறு பக்கம் திரும்பி, எதிர்ப்பட்டம் சேடி யிடம்) ஏம்மெ மொறச்சுப் பாக்கிறே? உனக்கு நெசமாத் தெரியலையாக்கும்.

பணிப்பெண் : இல்லெ மகாராஜா! தாங்கள் கிருஷ்ணன் என்றால் அவர்...

மன்னன் : அவனா, அருச்சுனன். இது தெரியலையாங்காட்டியும். போம்மெ...

பூரணம்: அருச்சுனனா...நானா...

மன்னன்: (உத்சாகமாக) வில்லுப் பாத்திருக்கிரியா... வில்லு..

பூரணம்: ஆமாங்க, வண்டிக்கு அடியிலே வச்சுருக்குமெ.

மன்னன்: (படுத்திருந்தவன் முழங்கையை ஊன்றி எழுந்துகொண்டு) சீ, அதல்லடா. சண்டெலெ தோள்ளெ வச்சுக்கிட்டுப் போவாங்களே, அது ....

பூரணம்: நான் அதைப் பாக்கரதில்லை மகராசா...

மன்னன் : ஏண்டா..

பூரணம்: அருச்சுனனாயிப்பிடுவேனோன்னு பயம்.

மன்னன் :பயம் எதுக்கு ?

பூரணம்: ஏதாச்சும் ஒரு ஊருக்குத்தான் போனோம்னு வச்சுக்குங்க (குனிந்து பொரி கடலையை எடுத்து வாயில் போட்டு மென்றுகொண்டே அங்கேயாவது அக்க டான்னு தலெயச் சாய்க்க முடியுமா? அங்கே பெண் டாண்டி வந்து தலைமாட்லே உக்காந்துக்கிட்டு, அத்தெக் குடு இத்தெக்குடுன்னு கொடஞ்சு தள்ளிப்புடுவா; அதுக் காவத்தான் எங்கப்பாரு என்னெ அர்ச்சுனனா ஆவாதெ ஆவாதென்னு அடிச்சுக்குவாரு...

மன்னன்: எம்மெ, வாயைப் பிளந்துகிட்டு கதை கேட்டுக் கிணு, வேலை இருந்தாப் பாருங்களென். கொப்பியடிங்க. நாட்டியமாடுங்க.பாடுங்க. நான் மந்திரிகூட ராசாங்கம் பண்ணிக்கிட்டிருக்கேன்...

ஒரேயடியாக ஏகக் கதம்பமாக நாட்டியமும் கூத்தும் காதைத் துளைக்கின்றன.

மன்னன்: அப்பொ உனக்குக் கண்ணால மாவலியா?

பூரணம் : ஆவுமா மவராசா! அப்படி வலுவிலே மாட்டிக்குவனா?
----------------

17

அரண்மனை உப்பரிகை. மன்னனும் பூரணமும் நிற்கிறார்கள்.

மன்னன்: அதோ வாசல் கிட்ட தெரியுதே, அவ ஆரு? பாரு!

பூரணம் : எனக்குப் புதுசாத்தான் தெரியுது? வயசுப் புள்ளெ, பிச்சைக்காரச்சனம், மவராசா.

மன்னன்: எம்மவடா! உம் பார்வையும் அருச்சுனன் பார் வையா இருக்கே. அவளே இங்கே அவசியமா அளச் சிக்கிட்டுவா...
# # #

அரண்மனை வாசல்

பிச்சைக்காரப் பெண் : உள்ளே நான் கட்டாயம் போய்த் தான் ஆகணும்.ராசா இருக்காரே அவரு எங்கப்பாரு.

காவல்காரர்கள் இருவரும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்.

முதல் காவல்காரன் : மவராசா ஓங்கப்பாரா?'

பிச்சைக்காரி: ஆமாம் ஐயா! எத்தினி தரம் சொல்ல.

2-வது காவல்காரன்: அந்த மூலையிலே கல்லு குவிச்சு வச்சிருக்கே பார்த்தியா?

பிச்சைக்காரி : எங்கிட்ட வம்பு பேசாதிங்க ஐயா...

முதல் காவலானி: உன்னியும் சேத்தா மகாராசாவுக்கு இருநூத்தி ஐம்பத்திரெண்டு புள்ளங்க இருக்கணும். டேய், கணக்குச் சரியா ஆவட்டும். புள்ளெக் குவியல்லெ ஒரு கல்லெப் போட்டுக் கணக்கைச் சரிக்கட்டு.

2-வது காவலாளி: (ஒரு சிறு கல்லை எடுத்துப் போட்டு விட்டு) அதில்லாமெ முந்நூறு மச்சான், நூத்தி எளு வத்தி எட்டு அண்ணென் இன்னம்......

பிச்சைக்காரி: பொய் சொல்லிப் பலர் வந்து நின்றால் நான் சொல்வதும் பொய் ஆகிவிடுமா?

முதல் காவலாளி : நீ சொல்லுகிறது நிசமாகவே யிருக் கலாம். பொய்யாக்கூட இருக்கலாம். போகக்கூடாது என்றுதான் சொல்லுகிறேன்...

அப்பொழுது பூரணம் வெகு வேகமாக வந்து அவளைக் கும்பிட்டு "மகராசா அளச்சிக்கிட்டு வரங் சொன்னாங்க... அட தள்ளி நில்லுங்கடா ; இவுங்க ராசாவோட மக என்று அதட்டுகிறான்.

காவலர்கள்: புத்தி, புத்தி. உள்ளாரப் போங்கம்மா. நாங்க காவல்கார நாக்குட்டிங்க; தெரியாமச் சொன்னதை மன்னிக்கணும்.

பூரணமும் பிச்சைக்காரியும் உள்ளே போகிறார்கள்.

முதல் காவலன் : அப்பவெ யோசிச்சேன். மொகத்திலே லேசா அந்தச் சாயல் தெரியுதுல்லே? நீ ஏண்டா சொல்லப்படாது ......?

2-வது காவலாளி : சாயல் தெரியுதா? ராசாவுக்கு மூஞ்சி புடிச்சிப் போனா மகளாயிடுவாளாக்கும். ஏண்டா புத்தியெக் கடன் குடுக்கறே .....

முதல் காவலன்: வீண் பாவம் சொல்லாதே. தலைக்குத் தீம்பு வரப் போவுது......

2.வது காவலன்: நீதான் போயி ராசாகிட்டச் சொல்லிப் பாரு. ஓங்க ராசாவும் நீயும்..
-------------------

18

நகரத்துச் சவுக்கை. சேனாதிபதி, ஊர்ப் பெரியவர்கள். சிலர் உட்கார்ந்திருக்கிறார்கள்.

சேனாதிபதி: நான் சொல்லுகிறபடி நடந்தால்தான் இந்தப் பைத்தியங்க ளிடத்திலிருந்து தப்புவதற்கு வழியுண்டு. ஜனங்களைக் கூட்டிக்கொண்டு திரளாகப் போய் அரண் மனையைச் சூழ்ந்து கொண்டால்..:

பெரியவர் : நீங்கள் சொல்லுகிறது சரிதான்.பூனைக்கு மணி கட்டின கதையாப் போச்சுன்னா? யாரு உள்ளே போரது? மந்திரியை ஜயிலுக்குள்ளே போட்டவன்...

சேனாதிபதி : என்னையும் ஜெயிலில் போடத்தான்: முயன்றான். என் புத்தியினால் தப்பித்துக் கொண்டேன். நானிருக்கும்போது உங்களுக்கு என்ன பயம்?
மற்றொருவர் : ஜனங்களே எப்படித் திரட்டுகிறது?

இன்னொருவர் : அண்ணைக்கி அந்தக் கவிராயர் வந்தானே, அவனைக்கொண்டு ஜனங்களைத் தூண்டிவிட்டா.........

சேனாதிபதி: அவன் யாரு?

முதலில் பேசியுவர் அன்று இந்தச் சவுக்கைக்கு முன்னாலெ பேசினானெ, சாமுண்டி கதை சொல்கிறேன் என்று ஜனங்களைப் பார்த்து உருக்கமாகப் பேசினான். உருப்படாக் கழுதைங்க ஓடிப்போச்சு..

வேறு ஒருவர் : அவன் எதுக்கும் துணிஞ்ச கட்டை. நாம?

சேனாதிபதி: நீங்கள் மனதைத் திடப்படுத்திக் கொண்டு வரிந்து கட்டு முன்னே ஊர் எரிந்து சாம்பல் கூட இல்லாமல் போய்விடும். என்ன சொல்கிறீர்கள்? மந்திரி உங்கள் வாக்குப்படிநடக்க ஆசைப்படுகிறார். இரண்டில் ஒன்று தீர்மானமாகச் சொல்லுங்கள்.......
-----------------

19

அரசனுடைய அந்தப்புரம். உள்ளே பாட்டும் சதங்கைச் சத்தமும் கேட்கின்றன.

வாசலில் பொக்கிஷக் கணக்கன் வந்து நிற்கிறான்.

காவல் நிற்கும் பூரணம் அவனை நோக்கி "என்ன விசேஷமாம்?" என்று கேட்கிறான்.

பொக்கிஷக் கணக்கன் : அரசரிடம் சில செலவு சம்பந்த மாகக் கையெழுத்து வாங்க வேண்டும். அவசரம்......

பூரணம் : மகராசா மந்திராலோசனை பண்ணிக்கிட்டிருக்காரு. சத்தம் காதிலே விழலெ.

பொ.க.: விளுதப்பா, நல்லா விளுது. அதான் அவசரம்னு சீக்கிரம் போயிச் சொல்லு... வாசலெக் காத்துக்கிட்டுக் கெடக்கரதே விட்டு வாய் பேசாதே.

பூரணம் : நான் மந்திரியாக்கும். நினெச்சுப் பேசுங்க......

பொ.க. சரிதாண்டா. மூஞ்சியைப் பார்த்தாலெ தெரியுது. நீ போயிச் சொல்லு. எத்தினி நாளடா இந்தச் சேவுகம்?

பூரணம்: போய்ச் சொல்ரேங்க எசமான். (தலையைச் சொறிந்துகொண்டு) போன திங்களுக்குத் திங்கள் எட்டு நாளாச்சு.அப்புறம் ஒரு...

பொ.க.: சரிதாண்டா. உள்ளே போயிச் சொல்லு. கணக்கும் நீயும் ....

பூரணம்: புத்தி எசமான்.

(உள்ளே செல்லுகிறான்)

உள்ளே

ஒரு விசாலமான அறையில் ஏராளமான பணிப் பெண்கள் மத்தியில் மன்னன் நின்றுகொண்டிருக்கிறான். தலையிலே ஒரு சிறு பாத்திரத்தை வைத்துக் கொண்டு கும்பம் ஆடுகிறவன் அடியெடுத்து வைப்பதைச் செய்து காண்பித்து ஒரு பணிப் பெண்ணிடம் அதைக் கொடுத்து விட்டு வந்து உட்காருகிறான்.

அருகில் உள்ள வயலினையும் வில்லையும் எடுத்துக் கொண்டு "இப்போ..."

பூரணம்: மகாராசா,பொக்கிசக் கணக்கரு வந்திருக்காரு, அவசரமாம்.

மன்னன்: அப்படி என்ன அவசரம்? வரச் சொல்லு. இங்கே பாரு (வில்லைக் காட்டி) இத்தெ இப்படிக் கீழே இளுத்தா, காலெ, எடது காலெ நீட்டி வலது காலெக் கொண்டு குத்த வச்சு உக்காரணும், தெரிஞ்சுதா? ஏம்மே கும்பம்,பதனம், ஒன்னிய வித்தாலும் ஈடாகாது...

பொ.க. : மகாராஜா, நமஸ்காரம்.

மன்னன் : நீதானா...இந்தப் பொண்டுகளுக்கு கூத்தாடவே தெரியலே. கண்ணெயும் கையையும் நெளிச்சுப்பிட்டு கூத்துங்குதுக. எங்கிட்ட ஏமாத்த முடியுமா? இதோ பாரு..

மன்னன் வயலின் மீது வில்லை வைத்து இழுக்கிறான். வயலின் வீரிடுகிறது. பணிப்பெண் அவன் சொல்லிக் கொடுத்தபடி காலை நீட்டுகிறாள். தலையிலிருந்து குடம் தரையில் உருளுகிறது.

மன்னன் : கசமாலம், கசமாலம். இந்தப் பொட்டச்சிங் களைக் கட்டிக்கிட்டு மாரடிக்கிறதே இப்படித்தான். கணக்கப்பிள்ளை நீ வந்த காரியம் சொல்லு.

பொ. க: அமைச்சர் இப்பொழுது சிறையிலிருப்பதால் போன வருஷக் கணக்கிருப்புக்குக் கையெழுத்து வாங்கிக் கொண்டு சில தகவல்கள் விசாரித்துக் கொண்டு போக வந்தேன்...

மன்னன் : கையெழுத்தா, அது எதுக்கு?

கணக்கன் : கணக்கில் தவறில்லை என்பதைத் தாங்கள் ஊர்ஜிதம் செய்வதாக.

மன்னன் : கணக்குச் சரி என்பது எனக்கு எப்படித் தெரியும்?

கணக்கன்: வேண்டுமாகில் நான் எடுத்துச் சொல்கிறேன்.

மன்னன்: வேண்டாம் வேண்டாம். இப்படிக் கொண்டா.

கணக்கன் கணக்குப் புத்தகத்தைக் குனிந்து நீட்டி "இங்கே" என்று காட்டுகிறான்.

'மன்னன் : 'ஏம்ப்பா, மேலெ இடிச்சுகிட்டு நிக்கிற.வேர்வே நாத்தம் கப்புண்ணுது...என்ன குளிக்க மாட்டியா?

கணக்கன் திடுக்கிட்டு, சாட்டையடிபட்டவன் போலப் பின் இரண்டு எட்டு வைக்கிறான். அவன் நிற்கும் கோலம் அவமானம் தாங்காமல் புழுவாகத் துடிக்கிறான் என்பதைக் காட்டுகிறது.

மன்னன் கணக்குப் புத்தகத்தைக் கூர்ந்து கவனித்த படியே "இன்னும் நாலு எட்டுத் தள்ளி நிக்கலாம்" என்று சொல்லுகிறான். இந்தக் கூத்தைப் பார்த்து ஒரு பணிப் பெண் களுக் என்று சிரிக்கிறாள்.

மன்னன் அத்திசையைத் திரும்பிப் பார்த்து "ஏம்மே, சிரிப்பாணி தாங்குதில்லையோ? அலகு பேந்து போகும்" என்று சொல்லிக்கொண்டே கணக்குப் புத்தகத்தில் ஒரு புள்ளி போடுகிறான். அதை வேறு ஒருத்தி கவனிப்பதைப் பார்த்துவிட்டுக் கணக்குப் புத்தகத்தில் கையை வைத்து மூடிக் கொள்கிறான். பிறகு மூடிய விரல்களின் கீழே ஏழுகோபுரங்கள்மாதிரி கோடுகள் கிழித்துப் புத்தகத்தைச் சடக்கென்று மூடிக் கணக்கனிடம் கொடுத்துவிட்டு "அப்புறம்" என்று தலையைத் தூக்குகிறான். முகம் வெட்டி இழுக்கிறது.

பொ.க.: முந்திய மகாராஜாவின் ஜன்ம தினம் இன்னும் ஒருவாரத்தில் வருகிறது. வருஷா வருஷம் அதற்காக ஒரு லட்ச ரூபாய் செலவாகும். இந்த வருஷம்...

மன்னன் : இந்த வருஷம் அண்ணைக்கே எம்பொறந்த நாளைக் கொண்டாடேன். ரெண்டுலெச்சம் செலவு பண்ணி ஒரு லெச்சம் எஞ்செலவுன்னு நாளைக்கே எங்கிட்டக் கொடு.

பொ. க.: அன்றுதான் தங்கள் ஜன்ம தினமோ?

மன்னன் : து என்ன கேள்வி? அண்ணக்கி வராட்டாக் கொண்டாடப் படாதுங்கரது உண்டா? நான் சொல் ரென் கொண்டாடித்தான் ஆகணும்...... தெரிஞ்சுதா. எங்கிட்டியே கயிரு திரிக்கிறயே. தெரியாதுன்னு நெனச் சுக்கிட்டியா?

அச்சமயம் அரண்மனை வாசல் திசையில் ஏராள மான ஜனக் கும்பல் இரைந்து கொண்டு வரும் சத்தம் கேட்கிறது.

மன்னன்: (சடக்கென்று எழுந்து) இதென்னடா ரோதனை!

பூரணம் தலைதெறிக்க ஓடி வருகிறான்.

பூரணம் : மகாராசா, மகாராசா ஊர்ச்சனங்க ஒங்களெப் பார்க்கணும்னு கூச்சப் போட்டுகிட்டு வந்து அத்தாணி மண்டபத்திலே நிக்கிராங்க. காவல்காரங்க தடுக்க முடியாமெ விலகிப் புட்டானுங்க. ஒண்ணு, போய்ப் பாருங்க. அல்லாட்டி ஒளிஞ்சுக்கிடுங்க .... இங்கியே வந்துடுவாணுக...

மன்னன்: எனக்கு இண்ணக்கி ரொம்ப சந்தோஷண்டா... வாடா நீயும் அவங்களைப் பாப்போம்.

கையில் பொரிகடலைக் கிரீடத்தை எடுத்துக் கொண்டு செல்லுகிறான். சில பெண்கள் வாசலில் எட்டிப் பார்க்கிறார்கள்.
----------------

20

அரசனின் அத்தாணி மண்டபம். சுமார் நூறு இரு நூறு பேர் கூடிக் கூச்சல் போட்டுக் கொண்டு நிற்கிறார் கள்... பெரும்பாலும் ஏழைகள், பிச்சைக்காரர்கள்.

ஒருவன்: அதோ வாராருடா

மற்றவன் : (சற்றுத் தாழ்ந்த குரலில்) எங்கே ஓடிப் போவான்?

3-வது நபர்: நம்ம ஆளுத்தாண்டா. நேற்று வரைக்கும் நம்ம கூடத் தாளம் போட்டுக்கிட்டு ....

இரண்டு காவல்காரர்கள் உட்புகுந்து "டேய்,வாயை மூடிக்கிட்டு நிக்கலியா, என்ன சலசலன்னு?"

பேசியவர்கள்: இல்லெ துரையே; இல்லெ மகாராசா...

உள்ளிருந்து பூரணத்தின் குரல் "மகாராஜா பராக்'' காவல்காரர்கள் : (ரகசியமாக) ராசா வாராரு உளுந்து
கும்புடுங்க.

மன்னன் ஒரு கையில் பொரி கடலைக் கிரீடத்துடன் வந்து நின்று இவனுங்க தானா பார்க்க வந்தவனுங்க ?
கும்பல்: கும்புடுரோம் மவராசா!

மன்னன்: (வாயில் கொஞ்சம் பொரி கடலையைப் போட் டுக் குதப்பிக்கொண்டு இன்னும் கொஞ்சத்தைக் கூட் டத்திடையே விசிறிவிட்டு) பார்த்தாச்செ போகலாமே..
ஒரு கிழவன் : ஏழை எளியதுங்க கஸ்டம் நீங்க அறியா மலா? இண்ணக்கி நீங்க சந்தோசமா இருக்க மாதிரி நாங்களும் சந்தோசமா இருக்க வழி பண்ணனும் யசமான்.

மன்னன் கடகடவென்று சிரித்துவிட்டு யோசிக்கிறான். முகம் வெட்டுகிறது.

கூட்டத்தில் ஒருவன் : (ரகசியமாக) மவளும் கூடவே வந்து ஒட்டிக் கிட்டாளாண்டா?

மற்றவன் : அதோ பேசுராரு கேளுடா.

மன்னன் : எனக்கு ஒண்ணு தோணுது. இன்னம் கொஞ்ச நாள்ளெ, எம்பொறந்த நாளு வருது. அண்ணைக்கு நீங்க பிச்சை எடுக்கவேணாம். சோறு நான் போடரேன். ஏழைங் களும் சந்தோசமாத்தான் இருக்கணும். அதுக்கு எனக்கு ஒரு வழிதான் தோணுது. பணக்காரனும் ஏழைங்க மாதிரி இருந்தா சந்தோசத்திலே வித்தியாசம்" இருக்கா துல்லே...அதுக்காகப் பணக்காரங்க கிட்ட இருக்க பணத்தையும் வாங்கி அவங்களையும் உங்களைப் போல ஆக்கி ....

கூட்டத்தில் சிலர் : (உற்சாகமாக) அந்தப் பணத்தை எங்களுக்கு...

மன்னன் : சீ ! அது பணக்காரங்களுக்கு அநியாயண்டா! அதெ நான் எடுத்துக்குவேன். நீங்க எல்லாரும் ஒண்ணா வவுரு எரியாமெ சந்தோசமா இருக்கலாம். போயிட்டு வாருங்க...தெரிஞ்சுதா... போயிட்டு வாருங்க. வெரட் டுங்கடா கழுதைங்களை, வேடிக்கையா பாத்துக்கிட்டு நிக்கிறீங்க..

மன்னன் சடக்கென்று திரும்பி உள்ளே செல்கிறான்.

பூரணத்தின் குரல் : மகாராசா போகிறார்.

கசையடிச் சத்தம். கதவு படார் என ஜன சந்தடியுடன் சாத்தப்படுகிறது.
---------------

21

கவிஞனுடைய வீடு

தாயாரும் மகனும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். தாயார் அவனைக் கடிந்து கொள்கிறாள்.


தாயார் : உன் வீட்டில் அடுப்புப்பத்த வழியில்லாதபோது ஊரே பத்தி எரிஞ்சா உனக்கென்ன கவலை? நான் சொல்லுகிறதைக் கேளு. ஊர் வழக்குக் கெடக்கட்டும். ஒன்னால் என்ன செய்துவிட முடியும்?

கவிஞன்: அம்மா, நீ இப்படிப் பேசலாமா? ஊர் பற்றிக் கொண்டால் வீடு தப்புமா? முதலில் ஊர் நெருப்பை அணைத்தால் தன் வீட்டு அடுப்புத் தானே எரிகிறது.

தாயார் : சின்னப் பிள்ளை மாதிரிப் பேசாதே. ஊரிலிருக்க பெரியவங்களுக்கு இல்லாத அக்கறையா உனக்கு? நாலு நாளாய்க் கோயில் கட்டியைத் தின்னுக்கிட்டு கெடக்கப் பண்ணிப்பிட்டே. பிச்சை எடுத்த சோறு எறங்குமா? அவுக காலத்திலே கூட, படாத கஷ்டமெல்லாம் பட் டேன் - பிச்சையெடுக்கிற கெதிக்கு அவுக தள்ளாத அந்த வயசிலெகூடக் கொண்டு வந்து வைக்கலை.

கவிஞன் : வேலை வேலை என்று சொல்கிறாயே, என்ன வேலை பார்க்க?

தாயார் : அதுவும் நானா சொல்லிக்கொடுக்கணும்? உனக்கு வாக்குக் கொடுத்தாளே அந்த மவராசியைக் கேளு. ஒரு திண்ணைப் பள்ளிக்கூடத்தை வைக்கறது, நடைப்படியெ விட்டு எரங்காமெ மானமாப் பிழைக்கிறது.

கவிஞன் : ஊருடைய மானமே போகிறபோது மானம் எங்கிருந்தம்மா நமக்கு வரும்?

தாயார்: வாக்குக் கொடுத்த மகராசி வாளவைப்பான்னு நினைச்சேன்.சொப்பனமாப் போச்சு...நீ ஊமையாவே ....

கவிஞன்: அம்மா,அம்மா. நீ இப்படி யெல்லாம் நொந்து கொள்ளக்கூடாது. இன்றைக்குச் சாயங்காலம் வருகிற போது உன் மனம் குளிரும்படி வரலேன்னா... இப்பொ உத்தரவு கொடு.

தாயார் : பிறகு உன் இஷ்டம்..
---------------

22

நகரத்தின் சவுக்கை

அந்தி மாலை. தீப ஒளி இல்லாமல் இனம் காணுவது கஷ்டம். அந்த நேரத்தில் சவுக்கையிலும் வெளியிலுமாகப் பலர் கும்பல் கும்பலாக நின்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒருவன்: ஆட்டைக் கடிச்சு,மாட்டைக் கடிச்சு, கடைசியா மனிசனையும் கடிக்க ஆரம்பிச்ச கதையா, போட்டிருக்கிற உத்தரவைப் பார்த்தீர்களா?

2-வது : என்னமோ வெறும் பித்துக்குளின்னு நினைச்சது என்ன ஆபத்தாகப் போய்விட்டது

3-வது: நம்ம வீட்டிலிருந்த ரொக்கம் அத்தனையும் கொட்டிக் கொடுத்தும் மங்கிலியத்தையும் உருவிக்கிட்டுப் போய்விட்டான். இதுக்கு ஒரு வழி செஞ்சாத்தான்...
முதல் : அண்ணைக்கே கவிராயன் சொன்னபடி கேட்டிருந்தா இப்படி வருமா...

2-வது : அது பூனைக்கு மணி கட்டுகிற கதை ஐயா. சேனா திபதி இன்னும் கொஞ்சநேரத்திலே வருவாங்க. அதோ அவுங்களே வந்திட்டாங்க- உங்க உத்தேசம் என்ன?...

சேனுதிபதி: (சிரித்துக்கொண்டே) என்ன உத்தேசம்... 3-வது ஆசாமி : நீங்களெல்லாம் சம்மதிச்சு சிங்காதனத் திலே அமர்த்தினீங்களே அந்தக்கெட்டிக்காரனைப்பற்றி.

சேனாதிபதி: (கலகலவென்று சிரித்துவிட்டு) ராஜத் துவே ஷம் பேசாதீர்கள். நான் இன்னும் அவன் சேனாதிபதி; அவன் உத்தரவுப்படி சிறையிலிருக்கும் சேனாதிபதி. நீங்கள் அவன் பிரஜைகள்.

2-வது ஆசாமி : அதை மாற்றத்தான் உங்களிடம் உத்தேசம் என்னென்று கேட்கிறோம்.

சேனாதிபதி: நான் சொல்லுகிறபடி நடப்பீர்களா? அந்தப் பித்துக்குளி பிறந்தநாள் கொண்டாடப் போகிறது; அன்று நம் காரியத்தைச் சாதித்துக்கொள்ள வேண்டும்.

பெரியவர் ஒருவர் : அப்படின்னா

சேனதிபதி: பெரியவரே, அப்படின்னா என்னவென்று தெரிந்துகொள்ளவேண்டுமானால் அன்றைக்கு வந்திருந்து வேடிக்கை பாருமே.

பெரியவர்: பூனை பக்கத்திலே இல்லாதபோது சுண்டெலி சுண்டிக் குதித்த கதைதான்... நான் சொல்றதைக் கொஞ்சம் கேளுங்க... நம்ம ராச்சியத்திலே இது பரியந் தமும், எனக்கு இந்தப் பங்குனியோட எண்பத்தி அஞ்சு ஆகுது; இந்த நாள் வரைக்கும் வெட்டுப் பளி குத்துப் பளின்னு நடந்ததே கிடையாது. அவரு ஆண் டாரே, பராக்ரமகேது அவரு காலத்திலும் அப்படித் தான். அவருடைய தோப்பனார் விக்ரமகேது காலத்திலும் அப்படித்தான்...

வாலிபன் ஒருவன் : காலம் மாறிப் போச்சு, தாத்தா. தருமமும் மாறும்.

கிழவனர் : காலம் மாறுண்டா கண்ணே. தருமம் மாறாது... அம்மா கிட்டெ பாலு குடிக்கிற பய நீ, எனக்கு அறிவு சொல்ல வந்திட்டாயாக்கும்.

சேனாதிபதி : பெரியவரே. என் சொல்புடி. நீங்கள் கேட்ப தற்கு முந்தி அரண்மனையில் வெட்டுப்பளி, குத்துப்பளி நடக்காது போலிருக்கிறதே.

கிழவனர்: அதைத்தான் நானும் சொல்லுறேன். ஊர்கூடி செக்குத் தள்ள முடியாது. ஒளக்கு எண்ணே காணுவ தற்கு ஊரும் லேசுலே கூடிக்கிடாது...

தூரத்திலிருந்து ஒரு கம்பீரமான குரல் உழக்கு உழக்கு எண்ணெய் உயிர்காக்கும் ஜீவாம்ருதம் என்று ஜனங்கள் என்றைக்கு உணருகிறார்களோ, அன்று நாம் சொல்லாமலே கூடி விடுவார்கள்..

பலகுரல்கள் : அதோ கவிராயர் அய்யர் வந்துட்டாரு. அவர் சொல்வதைக் கேளுங்கள்...

சேனாதிபதி கேட்டுக் கேட்டு என்ன புண்ணியம்? யாரா வது ஒருவர் சொல்வதை ஒழுங்காகக் கேட்டு, அதன்படி நடங்கள். நீங்கள் என்னுடன் சேராவிட்டால் நான் ஒருவன் எனக்குத் துணையுண்டு...

கவிஞன்: சேனைத் தலைவரே, பதட்டம் வேண்டாம். ஜனங்கள் கோழைகள் அல்ல; அவர்கள் நினைத்தால் நடக்காத காரியம் கிடையாது; நின்று கேட்கும் கட வுளைப் போலக்குடிபடைகள் பொறுமைசாலிகள்; எழுந் தால் கால பைரவர்கள்தான். அவர்களைச் சாந்தப்படுத் துவதற்குத் தர்ம தேவதையாலும் முடியாது. ஆத்திர மூட்டுவது ஆபத்தான காரியம்.

சேனைத் தலைவன்: உமது நொள்ளை "வேதாந்தங்களைக் கொண்டு நல்ல அழகான காவியங்களை அரங்கேற்றும். ராஜாக்கள் சன்மானம் செய்வார்கள்; தோடாச் செய்து போடுவார்கள்; மான்யம் எழுதித் தருவார்கள்.

கவிராயன் : அரசர்கள் அத்தனையும் செய்வார்கள். நான் அதை எதிர்பார்த்து இங்கு வரவில்லை. அரசன் ராஜ்ய மல்ல. அரசன் கொடுமை செய்தால் முள்ளை எடுப்பது போல் அவனை எடுத்தெறிய வேண்டும். இதை அன்று நான் சொன்னபோது கேட்பதற்கு ஆள் இல்லை. அரசன் நோக்கம் என்ன? அவன் அரசனா அல்லது சித்த சுவாதீனமில்லாத பிராணியா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டாமா?

சேனைத் தலைவன்: ராஜாங்கமாகத் தெரிந்துகொள்ளும். எனக்கு அதற்கெல்லாம் நேரமில்லை. ஜனங்கள் கஷ்டத் திற்கு உள்ளாகிறார்கள்; அரசனது அறியாமையினாலா, குரூரத்தினாலா, சித்த சுவாதீனமில்லாத- தினாலா என்று ஆராய்ந்து கொண்டிருக்க எனக்கு நேரமில்லை. நான் என் வழியில் செல்கிறேன், நீங்கள் உங்கள் வழியில் செல்லுங்கள். சந்திக்க முடிந்தால் சந்திப்போம்...

வெகு வேகமாகச் செல்கிறான்.

கவிஞன்: (சிரித்துக்கொண்டு) அவசியம் சந்திக்கத்தான் போகிறோம். எங்கு என்பது இருவருக்கும் தெரியாது (ஜனங்களைப் பார்த்து) மகா ஜனங்களே, ஊர் இருக்கும் நிலைபற்றி நான் உங்களுக்கு எடுத்துச்சொல்லி உருக்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் உள்ளங்களே பாகாக் உருகும்போது என் வார்த்தைகள் வெற்று வாய்ப் பந்தலாகத்தான் அமையும். நான் அன்று சொன்னபடி, அரசரைச் சந்தித்து நியாயத்தை எடுத்துச் சொல்லுகிறேன். தருமத்திற்கு எந்த மனத்திலும் இட முண்டு என்ற திட நம்பிக்கை எனக்குண்டு. நீங்கள் ஆசி சொல்லி அனுப்புங்கள். உங்கள் உள்ளத்தைக் குளிர்விக்க வாணி எனக்கு அருள்புரிவாளாக.

ஜனங்கள் அவன் மீது ஏகமாகப் புஷ்பத்தை எடுத்து வீசுகிறார்கள். மலர்மாரியிடை புன்சிரிப்புடன் கவிஞன் அரண்மனை நோக்கிச் செல்கிறான்.

ஜனக்கூட்டம் பெருந் திரளாகத் தொடர்கிறது
--------------

23

அரண்மனை அந்தப்புரம்

மன்னனும் அவன் மகளும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இரவு நேரம்.

மன்னன் முன்னும் பின்னுமாக நடந்துகொண்டிருக்கிறான். அவன் முகம் வெட்டி வெட்டி இழுக்கிறது.
மன்னன்: சும்மா என்னை மெரட்டிக்கிட்டுக் கெடக் தாதெ,நான் இப்போ ராசா...

மகள் : உங்களை அரசர் அல்ல என்று யார் சொன்னது? நடந்து பதவி வந்தால் பைத்தியக்காரத்தனமாகவா கொள்வது? தெய்வம் திடீரென்று கண்களைத் திறந்து விட்டதனால் கண்கள் கூசுகின்றனவா?

மன்னன் : நான் எண்ணைக்கும் கண்ணு குருடாக இருந்த தில்லை. உனக்குத்தான் இண்ணக்கிக் கண்ணு குருடு. அண்ணைக்கி நாம் தெருத் தெருவாகச் சுத்தறப்ப எந்தப் பயமவனாவது நம்மை மனிசனா மதிச்சானா? நாயிலும் கேடு கெட்ட நாயாயல்ல நம்ம வெரட்னானுக. இண்ணைக்கி யெவனோ நம்மை ராசாவா இருடான்னா அதுக்காக நம்மைக் கண்டு என்னமா மெரள்ரான்! எனக்கு அண்ணக்கி இருந்த மூஞ்சிதான்; அண்ணக்கி இருந்த புத்திதான் இருக்கு. இடம் மாறினா ஆள் மாறுமா? ஆள் மாறினாப்பலெ நான் சொல்றத கேட்டுக்கிட்டு ஆடுறான் பாரு. இந்தப் பசங்களை யெல்லாம் மதிக்கணு மாக்கும். என் உடம்பு மறந்தாலும் மனசு மறக்கலெ...

மகள்: சீ! என்ன பேச்சுப் பேசுகிறீர்கள். நீங்கள் இருந்த நிலை வேறு. இன்றைக்கு இருக்கும் நிலை வேறு. இன்று இந்த ராஜ்யத்திற்கு நீங்கள் உயிர், அன்று உடம்பில் ஒரு பாகம்....

மன்னன். நீ சொல்ற உசிரு ஒடம்ப வருத்துதுன்னு வச் சுக்கோ... இண்ணக்கி இருக்கிற சக்தியை வச்சு இந்த மனுசப் பசங்க எம்பிட்டுக் கேவலமான .....

மகள் : நீங்கள் உயிரைப் பணயமாக வைத்து விளையாடுகிறீர்கள்...

மன்னன்: அண்ணைக்கி வவுத்துக்காவ, ஒரு வேளைக் கும்பிக் கொதிப்புக்காவ உசிரைப் பணயமா வச்சு அவமானப் படலெ, வெளையாடலே? அந்த உசிரு போயிட்டாத் தான் என்ன... இந்தாப் பாரு, நீ எங்கிட்ட வாதாடாதே. தரும நாயம் பேச வராதே. நானும் உனக்குச் சொல்லிக் கொடுப்பேன். அதனாலெ தம்பிடிக்குப் பிரயோஜன மில்லை.

முகம் வெட்டுகிறது.

வெளியே பெரிய ஆரவாரம் கேட்கிறது.

மன்னன் : (ஜன்னலருகில் போய்) இதென்ன புது கலாட்டா...

பூரணம்: (ஓடி வருகிறான்) மகாராசா உங்களை ஒரு கவி ராயர் பாக்க வந்திருக்காரு...

மன்னன்: கவிராயனா! நேத்திக்கி ஆண்டிக் கூட்டம். இண்ணக்கிக் கவிராயன். நாளைக்கி?

மகள் : கவிராயரா! எந்தக் கவிராயர்?

மன்னன்: எனக்கென்ன ஜோசியமா தெரியும்? வா போய்ப் பார்ப்போம்.
--------------

24

அரசனது அத்தாணி மண்டபம்

சிங்காதனத்தருகில் மன்னனும் மகளும் வந்து நிற்கி றார்கள். மகள் கவிஞனை இனம் கண்டு கொண்டு மனம் பூரிக்கிறாள். நேரம் இரவு.

கவிஞன் மண்டபத்தின் மையத்தில் நிற்கிறான். வாச லருகில் காவலர்களுடைய ஈட்டி வேலிக்கு அப்பால் ஜன சழுத்திரம்.

மன்னன் : என்ன, நீர்தான் கவிராயரோ? எல்லாரையும் போலத்தானே இருக்கிறீர்? எங்கேயோ பாத்த மாதிரி?..

கவிஞன் : (அவனை இனங் கண்டு கொள்கிறான்.) நாம் இதற்கு முன்பு சந்தித்திருக்கிறோம் அரசே.
..
மன்னன்: ஆமாம், அப்ப நீ ஊமை. இண்ணக்கி கவிராயன். நிலைமை மாறித்தான் போச்சு.

கவிஞன்: ஆம் அரசே, நிலைமை மாறித்தான் போய் விட் டது! தெய்வத்தின் அருளால் நிலைமை மாறித்தான் போய்விட்டது.

மன்னன் : ஏன் ஓய் முழுங்கரே, எல்லாரும் அறிஞ்ச கதை தான். அண்ணக்கி நம்ம ரெண்டு பேரையும் உலகம் மதிக்கலெ. இண்ணக்கி மதிக்குது. நாம் ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் மதிச்சுக்குவம்னு நெனச்சு நீர் வந்து, நல்ல மனிசன் ஒருத்தனாவது

கவிஞன் : அரசே,தங்களை ... தங்களை..... ஆரசே தங்கள் செயல்கள், தங்கள் வார்த்தைகளுக்குப் பொருத்தமாக இல்லையே,..

மன்னன் : நீ கவிராயன்னு பேரை வச்சுக்கிட்டாலும் சிருசு. பொருத்தத்தை என்ன கண்டுப்பிட்டெ?


கவிஞன்: தங்கள் காரியங்கள் ஜனங்களைக் கஷ்டத்திற்கு உள்ளாக்குகின்றனவே..

மன்னன் : ஜனங்கள்னா யாரு?

கவிஞன் : தாங்கள் யாருடைய சுகதுக்கங்களுக்காகப் பதவி வகித்திருக்கிறீர்களோ அவர்கள்.

மன்னன்: அப்படி ஒருவரும் இருக்கிறதாக எனக்குத் தெரி யலெ......சமயம் கெடச்சா நம்மை.. எனக்குத் தெரியா துன்னு இந்தப் பசங்க நெனச்சிக்கிட்டு இருக்காங்க. அது கெடக்கட்டும். நீ எதுக்கு வந்தே....

கவிஞன்: ஜனங்கள் கஷ்டத்தை எடுத்துச் சொல்ல.

மன்னன்: மனிசனாப் பொறந்து கஷ்டமில்லாதவங்க யாரு? கஷ்டத்தை எங்கிட்டச் சொல்லி என்ன பண்ண?

கவிஞன் : தங்கள் செயல்களை மாற்ற ...

மன்னன்: தம்பி,கவிராயரே, ஒண்ணு தெரிஞ்சுக்கோ. உன் விதியெ மாத்த எனக்கு முடியும், என் செயலை மாத்த ஒனக்கு இல்லை.நீ சாக்கி எடுத்துக்கிட்டு வந்தியே அந்த சனங்களாலேயே முடியாது. போனாப்போரே. உன் தொழிலிலேயாவது திறமை இருக்கா பாப்போம். எங்கே என்னைப் பத்தி ஒரு பாட்டுப் பாடு. உன் செயலை மன்னிச்சு உன்னை உட்டுடுறேன்.

கவிஞன் :என் செயலை மன்னிப்பதாவது. உன்னைப்பற்றி நான் எதற்குப் பாட வேண்டும்? உன்னைப்பற்றி நான் பாட என்ன இருக்கிறது? உனது அகந்தை, அறிவீனம்,விலாசபுரியின் நற்பெயரைப் புழுதிக் காளாக்கும் உன் செயல்கள்..... உன்னைப் பற்றிப் பருந்தும்,பேயும், நரியும், நாயும் எனக்கேற்ற உணவு
எனப் பறையடித்துப் பாடும். மனிதப்பிறவியில் எவனும் உன்னைப்பற்றிச் சித்த சுவாதீனத்தை இழந்தாலும் பாடமாட்டான்.

மன்னன்: சித்த சுவாதீனம் எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்கோ... டேய் பசங்களா...

பூரணம் : மகாராசா...

மன்னன் : தெரியும்டா உன்னை... அவுங்களைக் கூப்பிடுறேன். டேய், இவனைக் கால் வெலங்கு, கை வெலங்கு போட்டு ஜெயில்லே கொண்டுத் தள்ளு. என்னடா என் செயலைப் பாத்தியா ....

மன்னன் மகள் : தருமத்தின் மீது ஆணை ! அவரைச் சிறை செய்யக்கூடாது!

மன்னன் : மஹா தருமத்தைக் கண்டவளே, வாயை மூடு. ஒனக்கும் பாத்துக்கோ...

மகள் : அடேய்! அரசகுமாரி ஆணையிடுகிறேன்; அவரைக் கைது செய்யாதே.

காவலர்கள் தயங்குகிறார்கள்.

மன்னன் : போம்மே உள்ளே. இது பொட்டச்சி ராச்சிய மில்லே. டேய், இவளெக் கூட்டிக்கிட்டுப் போய் அவ அறையிலே வுட்டு வெளியே வராமப் பாத்துக்கோ.அரச குமாரி ஆணை.. யாருகிட்ட.

கவிஞன் : அரச வேடம் தாங்கிய அறிவிலி, இன்று தர்மத் தின் வார்த்தை உன் காதில் ஏறவில்லை. உன் சிறையில் நான் ஜலபானமும் செய்யமாட்டேன். உன் அந்தம் தொட்ட எதையும் தொட மாட்டேன்.

மன்னன்: (சிரித்துக்கொண்டு) பட்டினி இருந்து சாவப் போறியா? எனக்கும் செலவு கொரஞ்சுது. டேய் பசஞ்களா, அந்தப் பய கெஞ்சினாலும் ஒரு பருக்கை, தண்ணி அவன் பல்லுலெ படாமெப் பாத்துக்கோ.


உத்தரவைக் கேட்ட ஜனங்கள் உள்ளே இடித்துத் தள்ளிக்கொண்டு வர முயலுகின்றார்கள். பிரமாண்டமான வாசல் கதவு சாத்தப்படும் இரைச்சல், வெளிச் சந்தடியை அமுக்கி விடுகிறது.

மன்னன் தனியாக அத்தாணி மண்டபத்தில் நிற்கிறான்.

மன்னன் : நாளைக்கிப் பிறந்த நாள். இரவல் பிறந்த நாள் இரவல் பிழைப்புத்தானே. ஓடுகிற வரைக்கும் ஓடட்டும். முட்டாப்பசங்க.கோளைப்பசங்க...
-----------

25

நடுச்சாமம், விளக்குகள் ஒன்று விட்டு ஒன்று எரிகின் றன. கவிஞன் வாழும் தெரு கவிஞன் தாயார் அடிக்கடி கதவைத் திறப்பதும் வெளியில் வந்து எட்டிப் பார்ப்பது மாக இருக்கிறாள்.

தெருக் கோடியில் சரஸ்வதி தேவி வந்து நின்று பிச்சைக்காரியாக மாறுகிறாள்.

தூரத்தில் தெருக் கோடியில் பாட்டுச் சத்தம் கேட் கிறது. குரல் மதுரமான. அபூர்வமான குரல். நின்று நின்று வருவதிலிருந்து பிச்சைக்காரி எனத் தெரிகிறது. குரல் கவிஞனுடைய வீட்டு வாசலருகில் வருகிறது.

பிச்சைக்காரி: (இருட்டில் சிரித்துக் கொள்கிறாள்) அம்மா தாயே! தரும தேவதையே ! ஒரு பிடி கவளம் போடுங் கம்மா, ஒரு ஜீவன் தருமத்துக்காக ஜீவனைப் பணயம் வைத்துவிட்டது...

கவிஞன் தாயார்: ஏனம்மா, ராத்திரி இப்பொ எத்தினி ஜாமம் கழிஞ்சிருக்கும்...?

பிச்சைக்காரி: நாலாஞ் சாமம் ஆயிருக்கும் அம்மா. ஒரு ஜீவனுக்காக ஒரு கவளம்.

தாயார்: நீயாவது துணிஞ்சு கையை நீட்டி வாங்கப் படிச் சுக்கிட்டே. ஒரு கவளம் தேடிவரப் போரேன்னு போன சீவனுக்காகத்தான் இங்கு ஒரு சீவன் தவிக்கிறது.

பிச்சைக்காரி: அதுக்கு ஒரு நாளும் ஒரு கொரவும் வராது; நீங்க கவலைப் படாதீங்க...

தாயார் : சம்பாதிச்சுக்கிட்டு வாடான்னு அனுப்பின பிள்ளை திரும்பல்லைன்னா கவலை இருக்காதாம்மா-
அது வும் இல்லாமெ - எனக்கு ஓங்கிட்ட எங்குறையெல்லாம் சொல்லணும்னு தோணுது- சொல்றேன் - ஊ ருலே ராசாவே எதித்துக்கிட்டு என்னமோ நடக்குது. அதிலெ இவனும் போயி, சிறு பிள்ளத்தனமா...

பிச்சைக்காரி: தருமத்தைக் காப்பாத்த ஆசைப்படறது தப்பில்லெ அம்மா.

தாயார்: ஏழே எளியதுக்கு அந்த ஆசை பொறக்கக்கூடா தம்மா. உன்னைப் பார்த்தா பிச்சைக்காரி-யாட்டமா தெரியில்லையே அம்மா. ஏம்மா, உனக்கு இந்தக் கதி வந்தது? இந்தக் காலத்திலே...

பிச்சைக்காரி: (சிரித்துக்கொண்டு) ஆச்சி ஒங்க பார்வை பளுதாகலியே ஆச்சி.நிண்ணு பேசினா வவுரு ரொம் புமா...நாலெடத்திலெ போனாத்தாம்மா..

தாயார் : எனக்கு வீட்டிலே இருப்புக் கொள்ளலெ, அவனைப் பார்த்துத் தேடிக்கிட்டு வரலாம்னு இருக்கு. பிச்சைக்காரி: நீங்க இருட்டிலே கிடந்து தடமாட வேண்டாம். நான் விசாரிச்சுக்கிட்டு வந்து சொல்றேன்.

தாயார் : எனக்கு இருப்புக் கொள்ளலெ. நானும் வரேன். பிச்சைக்காரி: ஆமாம் ஒங்களோட வந்தாலும் ஒரு நல்ல காரியம் செஞ்சாப்பிலே ஆச்சு. இங்கே ஒரு கவளம் அன்னம் வாங்கிறதுக்குள்ளே தெய்வங்கள் கிட்டே ஒரு கோடி வரம் வாங்கிடலாம் போல இருக்கு.

தாயார் : என் மகன் தெய்வத்துக்கிட்ட வரம் வாங்கித் தான் அந்தக் கவளத்தைக்கூட மறந்து விட்டான்.
------------

26

சிறைச்சாலை

மந்திரியும் கவிஞனும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

கவிஞன்: இந்த அரசன் அறிவீனன்தான்; கொடூர சிந்தை. படைத்தவனல்ல.

மந்திரி: இல்லாவிட்டால், தன்னைச் சூழ ஆபத்து வரு வதைப்பற்றிக் கொஞ்சமும் சட்டை செய்யாதிருப்பானா? சிறைக்கு எல்லாரையும் அனுப்புகிறானே, சிறைக் காவ லைப் பற்றிக் கொஞ்சமாவது சிரத்தை இருக்கிறதா? சேனைத் தலைவனிடம் அவன் கொஞ்சம் பயப்படுகிற மாதிரி நினைத்தேன். அவன் சிறையில் தானிருக்கிறானா. சிறையைச் சதிக்கிடங்காக உபயோகிக்கிறானா என்பது பற்றிக் கொஞ்சமாவது சட்டை செய்வதாகத் தெரிய வில்லை. சேனைத் தலைவன் வெளியில் போவதுகூடத் தெரியும் என்று சந்தேகிக்கிறேன்.

கவிஞன்: அவன் நினைத்தால் க்ஷணத்தில் யாரையும் கொல்லலாமே...

மந்திரி: இதுவரையும் அந்த யோஜனையே தட்டவில்லை. கண்ணெதிரிலிருந்து அகன்றால் அவன் மனதை விட்டு யாரையும் அகற்றி விடுகிறான்.

கவிஞன்: மேற்கொண்டு.

மந்திரி : இனி நடக்கப் போவதை நினைத்தால் தான் எனக்குப் பயமாக இருக்கிறது. சேனைத் தலைவனுக்குச் சிங்காதனத்தின் பேரில் நாட்டமிருக்கிறது. சிங்கா தனம் அவனுக்கு இடம் கொடுத்தால்...

கவிஞன்: சிறு குழந்தைகளுக்கு நாம் ஒரு கதை சொல் வோமே, தவளைகள் வரங் கேட்டு வாங்கிய மரக்கட்டை, ராசாவுக்குப் பதில்...

சிறைக் கதவு திறக்கிறது. இருவரும் திடுக்கிட்டு விலகுகிறார்கள். கவிஞனின் தாயார் உள்ளே வருகிறாள்.
கவிஞன்: (அதிசயத்துடன்) அம்மா!

தாயார்: (சிரித்துக்கொண்டு) தருமத்தைக் காப்பாற்ற நீ எந்தக் கோட்டைக்குள்ளே வந்து
அகப்பட்டுக் கொண்டாலும் சோற்றுப் பொட்டணத்தைத் தூக்கிக் கொண்டு நான் தான் வரவேண்டும். ஒரு மகராசியோட உதவியாலெ நீ இருக்கிற எடமும் இந்தச் சாப்பாடும் கிடைத்தது. அந்த அம்மா அதோ நிற்கிறார்கள்.

கவிஞன் : எங்கே ?

தாயார்: அதோ தெரியவில்லையா உனக்கு?

சிறைக்குள் அரசனுடைய மகள் வருகிறாள். மந்திரி யும், கவிஞனும் திடுக்கிட்டு எழுந்திருக்கிறார்கள்

கவிஞன் : இவர்களா?

மன்னன் மகள் : என்ன? (சுற்று முற்றும் பார்க்கிறாள்) வெளியில் ஒருவருமில்லையே...

தாயார்: என்ன உன் கண்ணுக்குக்கூடத் தெரியவில்லையா? யாராயிருந்தால் உனக்கென்ன? இதைச் சாப்பிடு.

மன்னன் மகள் : சாப்பிடுங்கள். முதலில் சாப்பிடுங்கள். அரசனின் போக்கு எந்த மாதிரி மாறுமோ? நீங்கள் தப்பித்துக்கொண்டு ஓடி விடவேண்டும். அதற்காகத் தான் சிறைச் சாவியைக் கூடச் சிரமப்பட்டுக் களவாடி னேன்.

கவிஞன். அன்று வயிற்றைக் காக்கப் பிடி அரிசி தர முற் பட்டீர்கள்.இன்று உயிரைக் காப்பாற்றச் சிறைச் சாவி கொண்டுவந்து விட்டீர்கள். உங்கள் மனதுக்கு ஈடாக...

மன்னன் மகள் : நல்லவர்களைக் காப்பாற்றுவது ஒரு பெரிய செயலா? மேலும் நீங்களும் பிரதிப் பிரயோஜன நினைப்பின்றிப் பிச்சையிட்டவர்கள் தானே. அதற்கு ஈடாக...
:
கவிஞன்: அதொன்றும் பிரமாதமில்லை. இன்று உங்கள் தந்தையால் யாருக்கும் ஆபத்து விளையாது. நீங்கள் அதைப்பற்றிக் கவலை கொள்ள வேண்டாம். சிறைக் குள் வேறு ஆட்கள் கையில் அகப்பட்டுச் சாகாமலிருக்க விடுதலை தரும்படி சொல்லுங்கள். அதைப் பிரமாதமாகக் கருதாமல் செய்வார். அவர் குணத்தை நான் அறிவேன். நாங்கள் எங்கிருந்தாலும் அவரால் எங்களுக்கு ஆபத் தில்லை.

மன்னன் மகள் : எதற்கும் இந்தச் சாவி உங்கள் கையில் இருக்கட்டும்.நான் வருகிறேன்.

கவிஞன்: அம்மா, நீயும் வீட்டுக்குப் போ. நான் நாளைக் காலைக்குள் வந்து சேருகிறேன்..

தாயார் பதில் பேசாமல் வெளியே செல்லுகிறாள். கவிஞன் முன்னும் பின்னுமாக நடக்கிறான்.
:
கவிஞன்: எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. மந்திரி: என்ன?

கவிஞன்: இளவரசிக்கு முடி சூட்டிவிட்டால்...

மந்திரி கடகடவென்று சிரிக்கிறார்.

"என்ன உற்சாகம் தாங்க முடியவில்லையோ? சிறையே இப்படி இருந்தால்...' இருட்டிலிருந்து சேனாதிபதியின் உருவம் வருகிறது.

மந்திரி: இந்த அரசன் சிரிப்பதற்கு ஒன்றுக்குத்தானே வரி விதிக்கவில்லை. அதையாவது அனுபவிப்போமே என்றுதான்...

சேனாதிபதி: என்ன உங்கள் மனம் அதற்குள் கசந்து விட்டது.நாளைக் காலை அத்தாணி மண்டபத்திலே கணக்குத் தீர்ந்துவிடும்.

வெளியே ஜல்ஜல் என்று கழற்சத்தம் கேட்கிறது. சிறைக் கதவுகள் திறக்கப்படுகின்றன. நாலைந்து காவலர் கள் உள்ளே பிரவேசிக்கிறார்கள்.

காவலர் தலைவன் : அரசர் தமது ஜன்மதினத்தை முன்னிட்டு மந்திரிக்கும் கவிஞருக்கும் விடுதலை அளித்திருக்கிறார். சேனைத்தலைவர் சிறைக்குள் இருந்தால் அவருக்கும் விடுதலையளித்திருப்பதாகச் சொல்லச் சொன்னார்.

நிசப்தம்.

சேனைத்தலைவன் திடுக்கிடுகிறான். திருதிருவென்று. இருவரையும் கவனிக்கிறான்.

சேனைத்தலைவன் : துரோகம். எப்படியானால் என்ன? நாளைக் கணக்குத் தீர்ந்துவிடும்.
----------------

27

அரசன் அந்தப்புரம்

அரசன் தனது மஞ்சத்தில் சாய்ந்திருக்கிறான். வழக்கம் போலப் பணிப் பெண்கள் அவனைச் சூழ நிற்கிறார்கள்.

மன்னன் : நாளைக் காலை ஒரு வழியாகக் கணக்குத் தீர்ந்து போய்விடும்.

ஒருத்தி : என்ன' மகாராசா!

மன்னன்: நாளைக்கு என் பொறந்த நாளில்லையா? என் பொளப்புலே ஒரு வருசக் கணக்குத் தீர்ந்துவிடும் என்று நினைச்சேன். இதற்கு முந்தி, போன வருஷத்திலே எப் படி நான் இருந்தேன் தெரியுமா? நீங்கள் எல்லோரும் வரிசையா தூணுக்குத் தூண் நில்லுங்க. ஒவ்வொரு தூணும் ஒரு வூடு. நான் திருவோட்டை எடுத்துக் கொண்டு, இப்படி (கிரீடத்தைத் திருவோடு மாதிரி பிடித்துக்கொண்டு முத்திரை மோதிரத்தைக் கொண்டு தட்டித் தாளம் உண்டாக்குகிறான்) பாடிக்கொண்டு நடந்தேன். அந்தத் தாய்மாருங்க ஒரு புடி அரிசி போடலே. நீங்க செளிப்புலெ இருக்கவுங்க. என் மனசே செனிக்கப் பண்ண ஏதாச்சும் போடுங்க. நான் பாடிக் கொண்டு வர்ரேன் பாருங்க. பரம்பரை ஆண்டிக்குத்தான் தெரியும். எப்படிப் பாடணம்னு. கொரல்லே சோகம் காட்டணும்... இப்படி...

மன்னன் தூணுக்குத் தூண் நின்று அங்கு நிற்கும் சேடிப் பெண்கள் வசம் தான் ஏற்கெனவே கொடுத்திருந்த நகை நட்டுக்களைப் பிச்சை வாங்குகிற பாவனையில் வாங்கி விடுகிறான். கடைசிச் சுற்றில் மேல் முன்றானையையும் பறித்துக்கொண்டு முகத்தில் ஆவேசத்துடன் பேசுகிறான்.

மன்னன் : அண்ணக்கி நான் என்னை கிட்ணசாமிண்ணா சொன்னதை நீங்க நம்பலேல்ல. நம்ப வைக்கத்தான் இப்படிப் பண்ணினேன். அவன் திருப்பிக்கொடுக்கிற கிட்ணசாமி. இது நாமம் சாத்தர கிட்ணசாமி, யாரை மொட்டை அடிக்கலாம்னு நெனப்பு? ஓடுங்க களுதை களா.

சாட்டையைக்கொண்டு ஓட்டி விரட்டுகிறான். முதலில் விளையாட்டு என்று நினைத்த பணிப்பெண்கள் அவனுக்குச் சித்தப் பிரமை என்று நினைத்துக் கூக்குரலிட்டு ஓடுகிறார்கள்.

பணிப் பெண்கள்: அரசருக்குப் பைத்தியம்! அடிக்கிறாரே. அரசருக்கு...

மன்னன் : (சாட்டையைச் சுடக்கிக்கொண்டு) யாருக்கடி, உங்கள் பேராசைக்கு, முட்டாத்தனத்துக்கு .

சாட்டையின் சுடக்குச் சத்தம் கேட்கிறது.
------------

28

விலாசபுரி,நக்ரம் முழுவதும் தோரணங்களாலும் கமான்களாலும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. "பராக் ரமகேது வாழ்க' என்று அரசனைப் புகழ்ந்து வாக்கியங்கள் தொங்கப் போடப்பட்டுள்ளன.

ஆக்ரோஷமாக ஜனக் கும்பல் ஒன்று இந்த அலங் காரங்களையெல்லாம் பிய்த்தெறிந்து கொண்டு வருகிறது.

கூட்டத்தில் ஒருவன் : இவன் பேரும் பராக்ரமகேது வாண்டா?

வேறு ஒருவன்: சொந்தமாப் பேரு வச்சுக்கக்கூடத் தெரி யலே. அந்த ராசா பொறந்த நாளத்தானே இரவல் வாங்கிக் கொண்டாடுறான்!

மற்றும் ஒருவன் : அவன் பரம்பரை ஆண்டிடா! எதையும் பிச்சை எடுப்பாண்டா.

இன்னும் ஒருவன் அவசரமாக ஒரு சுவர் அருகில் ஓடி கோணி வலித்துக் கொண்டிருக்கும் முகத்தைப் படம் வரைகிறான்.

உடம்பெல்லாம் கரி பூசிக் கோமாளிக் குல்லாயுடன் ஒருவன் கழுதைமேல் சவாரி வருகிறான்.

அடிக்கடி முகத்தைக் கோணிக் கோணி அரசனைக் கேலி செய்து ஒரு பாட்டும் பாடிக்கொண்டிருக்க சுற்றி யிருக்கும் ஜனக்கும்பல் அவமானகரமாக "ஆண்டி பராக்!" "கோணமூஞ்சி பராக்" "இரவல் பவிஷு பராக்" என்று கூக்குரலிட்டு நடக்கிறது.

இந்தக் கூட்டங்கள் வழியில் இருக்கும் அலங்காரங் கள் எல்லாவற்றையும் அழித்துக்கொண்டு அரண்மனை நோக்கி நடக்கின்றன
-------------

29

அரசனுடைய அத்தாணி மண்டபம்

மன்னன் சிங்காதனத்தில் உட்கார்ந்திருக்கிறான். அவனருகில் அவன் மகள் சர்வாலங்கார பூஷிதையாக அமர்ந்திருக்கிறாள்.

அரசனுடைய காலடியில் அவனுடைய பட்டாக்கத்தி துணியில் பொதிந்து வைக்கப்பட்டிருக்கிறது.

மேடைக்குக் கீழ் இரண்டு வரிசையிலும் மந்திரி பிர தானிகள் உட்கார்ந்திருக்கிறார்கள். சிறையிலிருந்து விடுவிக் கப்பட்ட மந்திரி, அவரருகில் கவிஞன், பிறகு பொக்கிஷக் கணக்கன் முதலியோர் இருக்கின்றனர்.

எதிர் வரிசையில் சேனைத் தலைவன் ஆசனம் மட்டும் காலியாக இருக்கிறது. அதைத் தொடர்ந்த ஆசனங்களில் நகரத்துப் பெரியவர்கள் ஏழ்மையின் சின்னமாக இருக்கிறார்கள்.

முதலில் நாட்டியம் நடைபெறுகிறது. பின்னர் ஒரு சங்கீத வித்வான் வந்து அமர்ந்து குரலைக் கனைத்துக் கொண்டு பரிசை எதிர் பார்த்துப் பாட ஆரம்பிக்கிறார்.

அப்பொழுது சேனைத் தலைவன் பூரண யுத்த சன்னத் தனாக உள்ளே பிரவேசிக்கிறான். அவன் முகத்தில் ஒரு கொடுமையான புன்சிரிப்புத் தெரிகிறது. அவனைத் தொடர்ந்து ஆயுதபாணிகளான பலர் சிற்றெறும்புச்சாரை போல் வருகின்றனர். தொடர், மண்டபத்துக்கு வெளி யிலும் செல்கிறது.

சேனைத் தலைவன் வந்து, காலால் சங்கீத வித்வானை ஒதுங்கிப் போகும்படி சமிக்ஞை செய்து அந்த இடத்தில் நின்று வணங்கி, "என்னை விடுவித்ததற்குத் தங்களுக்கு நன்றி" என்று சுற்று முற்றும் பார்க்கிறான்.

மன்னன் : உன்னை உள்ளே அனுப்பினதும் வெளியே அனுப்பினதும் என் இஷ்டம். அதிலே நன்றி எதற்கு? இருந்தியா? இஷ்டம்போலத் தானே நீ உள்ளே சுத்துனெ......

சேனைத் தலைவன் : (திடுக்கிட்டுச் சுற்று முற்றும் பார்க் கிறான்) தனி மனிதன் இச்சைப்படி ராஜ்யம் நடந்தால்

மன்னன் : என்ன குடி முழுகிப் போச்சாம்?

சேனைத் தலைவன் : போலிப் பிறந்த நாள் 'கொண்டாடும் பதரே, உன்னைக் கொன்று சிங்காதனத்தை உன் ரத்தத் தில் கழுவி அதைப் புனிதப்படுத்துகிறேன்.

கத்தியை ஓங்கிக்கொண்டு ஓடி வருகிறான்.

மன்னன்: (சிரித்துக்கொண்டு) வெட்ட வாரியா, வந்துக்கோ. எதுக்கும் துணிஞ்ச கட்டையடா இது. அண்ணக்கிப் பிச்சைக்காரச் சவம். இண்ணக்கிப் பேரரசன் சவம். எப்படியானாலும் போர உசிரு ஒண்ணுதான்.

கவிஞன் ஒரே பாய்ச்சலில் சிங்காதனத்தருகில் பாய் கிறான். சேனைத் தலைவனும் அவனும் மோதுகிறார்கள். கவிஞனை இழுத்துத் தள்ளிவிட்டு அரசனை நெருங்குகிறான்.

அச்சமயம் இருவருக்கு மிடையில் லக்ஷ்மி தோன்று கிறாள். அவளது பார்வையில் சேனைத் தலைவன் ஸ்தம் பித்துப் போகிறான்.

மன்னன்: எனக்காகத் திடீரென்று அவனைக் கல்லாக்கிப் பிட்ட நீ யாரம்மா? இந்த வட்டாரத்திலே இருக்க தாய்மாரெல்லாரையும் எனக்குத் தெரியும்.

லக்ஷ்மி (அவனை ஏறிட்டுப் பார்த்துவிட்டு) உனக்கு எப்படித் தெரியப் போகிறது?

மற்றொரு புறத்திலிருந்து நாரதரும் சரஸ்வதியும் வரு கிறார்கள்.

லக்ஷ்மி: என்ன நாரதரே, யார் தோற்றது?

நாரதர்: கோபப்படாவிட்டால் உண்மையைச் சொல்லுகிறேன்.

லக்ஷ்மி : கோபமென்ன இருக்கிறது, சும்மா சொல்லும்.

நாரதர் : யாரும் ஜெயிக்கவில்லை.

மன்னன்: சுவாமி நாரதரே, நீர்தான் கதையிலே வர்ர் நாரதர்னா, நல்ல நாளும் பெரிய நாளுமா இங்கே வந்து கலகத்தை மூட்டிப்பிட வேண்டாம். இந்த அம்மா யாரு? அந்த அம்மா யாரு ?

நாரதர் : அரச, உன்னைக் காப்பாற்றியவர் மகாலக்ஷ்மி. இதோ நிற்பவர் வாணி, சரஸ்வதி.

மன்னன்: அப்படியா / இப்பத்தான் புரிகிறது. நாரதரே. நீர் சொன்னது தப்பு. ரெண்டு பேரும் ஜெயிக்க லேங்கரது மாத்திரமில்லே, தோத்தும் போனாங்க. ஊமையைப் பேச வைக்கறது, ஓட்டாண்டியை ஒசத்தி வைக்கிறது, அப்பரம் இரண்டு பேரும் கீழே விளுகிற தைப் பார்த்துக் கை கொட்டிச் சிரிக்கரது. தேவதை களே, உங்களுக்குப் பந்தயமும் வௌயாட்டுமாக இருக் கிறது எங்களுக்கு உயிர் வாதை. அது புரிஞ்சுதா.....

ஏ மகாலக்ஷ்மித் தாயே! எம் மூஞ்சியெப் பாரு. கோணிக் கோணி வலிக்குது. வயசு ஐம்பதுக்கு அந்தப் பக்கம்.படிப்பு,பரம்பரை ஆண்டிக்குப் படிப்பு ஏதம்மா? என்னைத் தூக்கி இங்கே கொண்டாந்து போட்டு எனக்கு முட்டாப் பட்டம் கட்டப், பாத்தியே, எனக்கா முட்டாப் பட்டம்? உனக்கு, உன் பந்தய ஆசைக்கு. உன் கடாச் சம் உளுகிறதுன்னா அதுக்கேத்த மத்ததும் வாண்டாமா? ஏ சரஸ்வதித் தாயே, எனக்காக உயிரைக் கொடுக்க ஓடியாந்துதே, இந்தச் சிறு பிள்ளை, இதுக்கு வாக்கைக் குடுத்தியே வக்கு வேண்டாமா அது சோபிக்க. உன் வாக்கு மகிமையிலே அவன் சொப்பனமில்லெ கண்டுக் கிட்டுக் கிடப்பான். வீட்டிலெ பூனை படுத்துடாது?

ஏ தேவதைகளே, நேரிலே என்னைப் பாத்துச் சொல் லுங்க. மனிசப் பிறவியே உங்க இஷ்டத்துக்குப் போட்டு உருட்டறதுக்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கு? என்னெக் குளிக்குள்ளெ தள்ளின மாதிரி இந்தக் கும்பலுக்குள்ளே தள்ளி கெட்ட பெயர் வாங்கிக் கொடுத் தியே அதுக்கு யாரம்மா பொறுப்பு ? பிச்சைக்காக வந்த வனிடம் போன ராசா இந்த ராச்சியத்தைப் பிச்சையாகப் போட்டான். அது பிச்சைக்காரப் பொளப்பாப் போச்சு. இன்னக்கி நான் உசிரோட இருக்க காரணம் உங்க அருள் னாலெ இல்லெ. நான் பைத்தியக்கார வேசம் போட்டது னாலெ. இந்த ராச்சியத்தை யாருவானாலும் ஆளட்டும்.
நான் கேட்டு வரல்லெ. எங்கிட்டக் கேட்டு எடுத்துக் கொள்ளனும்னு நான் சொல்லலெ.

கவிஞன்: இளவரசிக்குப் பட்டம் கட்டினால் யாவருக்கும் திருப்தியாக இருக்கும்.

மந்திரி: எனக்கும் சம்மதம்.

மன்னன்: (கடகடவென்று சிரித்துவிட்டு) என்ன தம்பி இன்னம் சொப்பனம் காணுரே.ஆம்பிளே முட்டாத் தனத்தெவிட பொம்புளை முட்டாத்தனம் எந்த விதத் திலெ தேவலை?

சபையில் நிசப்தம்

நாரதர்: எனக்குத் தோன்றுவதை நான் சொல்கிறேன். கவிஞனுக்கு முடிசூட்டி அவரை இளவரசிக்கு மணம் செய்து வைக்கவேண்டும். அப்பொழுது தேவியார் இருவருடைய கடாட்சமும் ராஜ்யத்தின் மீது விழும்.
ஜனங்களின் சந்தோஷ ஆரவாரம்.

மன்னன்:ஓய் நாரதரே, என் கதையிலேதான் நீர் கலகம் பண்ணாமெ ஒளுங்கா நடந்துகிட்டீர் ... ஏ தேவதைகளே. எனக்கு ராச்சியத்தெக் குடுத்து அவமானப் படுத்த வேண்டாம். புத்தியெக் குடுங்க. அந்தா மரமா நிக்கிறானே அவனையும் ஒளுங்காக்குங்க...

மன்னன் முகம் வெட்டுகிறது

மன்னன்: கடெசியா ஓங்களெக் கேக்கிறேன்; மனிசப் பிறவியெக் குளியிலே தள்ளிப் பரிச்சை பாக்காதிங்க.


This file was last updated on 20 Dec 2022
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)