pm logo

நா. வானமாமலை எழுதிய
தமிழர் வரலாறும் பண்பாடும்
(ஆராய்ச்சிக் கட்டுரைகள்)


tamizar varalARum paNpATum
by nA. vAnamAmalai
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

நா. வானமாமலை எழுதிய
தமிழர் வரலாறும் பண்பாடும்
(ஆராய்ச்சிக் கட்டுரைகள்)

Source:
தமிழர் வரலாறும் பண்பாடும்
(ஆராய்ச்சிக் கட்டுரைகள்)
நா. வானமாமலை எம்.ஏ.எல்.டி.
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட்
41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்
சென்னை-600 098.
முதற் பதிப்பு : பிப்ரவரி,1966
ஐந்தாம் அச்சு : ஆகஸ்ட் 2001; ஆறாம் அச்சு : ஜூலை 2007
© உரிமை பதிவு
ISBN : 81-234-0033-0
விலை ரூ.50.00
ஒளி அச்சு : NCBH கம்ப்யூட்டர்ஸ்
அச்சிட்டோர் : Sri Saravanan Offset Printers, Chennai-81.
---------------------------

பதிப்புரை

நண்பர் திரு.நா. வானமாமலை அவர்கள் தமிழக கிராமிய இலக்கியங்களில் நல்ல ஈடுபாடும் புலமையும் பெற்றவர்கள். ‘தமிழர் வரலாறும் பண்பாடும்’ என்ற இவ் ஆராய்ச்சிக் கட்டுரைத் தொகுப்பில் காணப்படும் கட்டுரைகள் சமுதாயத்தை முழுக் கோணத்திலும் ஆராய்ந்து சிறப்புச் செய்கின்றன.

இத்தொகுப்பின் முதல் கட்டுரை சமுதாய மாற்றங்களைப் புதிய அடிப்படையில் அணுகி, ‘தமிழக வரலாறு’ படைக்க வேண்டியதன் அவசியத்தை அழகுற வலியுறுத்துகிறது.

பண்டை வரலாற்றின் அரசியல், மொழி, கலை, இலக்கியம் முதலிய தமிழ்ப் பண்பாட்டினை இக் கட்டுரைத் தொகுப்பு புதிய பார்வையோடு ஆராய்கிறது. தமிழர் வரலாற்றை வரைவதற்கு இந்நூல் ஒரு தூண்டுகோலாக அமையுமென்று நம்புகிறோம்.

      -பதிப்பகத்தார்
---------------------

பொருளடக்கம்

1. பண்டைத் தமிழர் வரலாறு தேவை
2. பொங்கல் விழா
3. சோழர் ஆட்சியில் அறப் போர்கள்
4. புராதன ஆரியரும் திராவிடரும்
5. தமிழக வரலாற்றுக் கண்ணோட்டங்கள்
6. மூடு திரை
7. மொழிப் பற்றும், மொழி வெறியும்
8. தமிழும்விஞ்ஞானமும்
9. தமிழ் நாட்டில் தாய்வழிச் சமுதாயம்
10. தமிழ் இலக்கியத்தில் மோரியர்
11. சிலப்பதிகாரம் பற்றி இளங்கோ
12. இராமலிங்கரின் மனித நேயம்
13. காற்று - ஷெல்லியும் பாரதியும்
14. நாட்டுக் கதைப்பாடல்கள் (ஓர் ஆராய்ச்சி)
15. சமூகக் கதைப்பாடல்கள்
-------------------

தமிழர் வரலாறும் பண்பாடும்
1. பண்டைத் தமிழர் வரலாறு தேவை

உயர்நிலைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், இன்று இந்திய வரலாறு கற்பிக்கப்படுகிறது. இந்திய வரலாற்றுப் பாடப் புத்தகங்களை நீங்கள் படித்துப் பார்த்தால் பண்டைத் தமிழ் நாட்டின் வரலாற்றுக்கென, பத்துப் பதினைந்து பக்கங்கள் ஒதுக்கப்படிருக்கும். அப்பக்கங்களை வரிவிடாமல் வாசித்தால் கீழ்க்கண்ட செய்திகள் காணப்படும்.

‘தமிழ்நாடு இந்திய நாட்டின் தென் பகுதியில் உள்ளதோர் பிரிவு. பழமையான நாகரிகம் படைத்த நாடு. சங்க காலம் எனப்படும் பழமையான காலத்தில் பல நூல்கள் தோன்றின. அவற்றுள் திருக்குறளை இயற்றியவர் வள்ளுவர் என்பார். பிற்காலத்தில் தமிழ் நாட்டில் முடியுடை வேந்தர் மூவர் ஆண்டனர். சோழருள் கரிகாலனும் ராஜராஜனும், ராஜேந்திரனும் புகழ் பெற்றவர்கள். சேரருள் செங்குட்டுவன் சிறந்தவன். பாண்டியருள் குறிப்பிடத்தக்கவர் யாருமில்லை. சோழர் பெருவாழ்வு வாழ்ந்த காலத்தில் கம்பன் தோன்றினான். சமணத்தை முறியடித்து சைவ வைணவ மதங்கள். தோன்றின. தமிழ் நாட்டின் வடபிரிவில் பல நூற்றாண்டுகளாக பல்லவர் செங்கோல் செலுத்தினர்.’

இதற்குமேல் தமிழ் நாட்டின் பழம் பெரும் பண்பாட்டைப் பற்றியோ, இலக்கிய வளத்தைப் பற்றியோ, இவ்விரண்டையும் உருவாக்கிய தமிழினத்தவரைப் பற்றியோ, அவர்களது சமூக வாழ்க்கையில் நூற்றாண்டு, நூற்றாண்டுகளாக ஏற்பட்டு வந்த மாறுதல்களைப் பற்றியோ, அம்மாறுதல்களுக்குரிய காரணங்கள் எவை என்பன பற்றியோ, இந்நூல்கள் எதுவும் கூறுவதில்லை.

தமிழர் வரலாறு இவ்வளவுதானா; சிற்சில அரசர்கள், கவிஞர்கள், போர்வீரர்கள், அமைச்சர்கள் ஆகியோரது வாழ்க்கைக் குறிப்புகள்தான் தமிழ்நாட்டின் முழுமையான சரித்திரமா? தமிழ்நாட்டின் சமூக வாழ்க்கையையும், பண்பாட்டையும், இலக்கிய வளத்தையும் கலைச்செல்வத்தையும், உருவாக்கியவர்கள் குறிப்பிட்ட நூற்றுக் கணக்கான புகழ் பெற்ற மனிதர்கள்தானா என்ற கேள்விகள் தமிழர் வரலாறு பற்றி எழுந்துள்ள சில நூல்களைப் படிக்கும்போது நமக்குத் தோன்றுகின்றன.

தமிழ் நாட்டின் வரலாறு பற்றி இந்திய வரலாற்றுப் பாடப்புத்தகங்களைத் தவிர வேறு பல நூல்கள் சென்ற ஐம்பது ஆண்டுகளில் வெளியாகியுள்ளன என்பதை நான் மறக்கவில்லை. சங்க காலத்தைப் பற்றி ‘1800 ஆண்டுகளுக்கு முந்திய தமிழர்’ என்ற ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கனகசபைப் பிள்ளையின் நூலும், சமணர்களது ஆதிக்கத்தைப் பற்றி சக்கரவர்த்தி நயினார் அவர்கள் எழுதிய நூல்களும், சோழ வம்சத்தைப் பற்றி கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியார் எழுதிய நூல்களும், பல்லவர் வரலாறு பற்றி பி.டி. ஸ்ரீனிவாச அய்யங்கார் எழுதிய நூல்களும், இன்னும் பலவும் தமிழாராய்ச்சியாளர்களுக்குப் பழக்கமானவையே. ஆயினும் இவையாவும் முழுமையான தமிழர் வரலாறு ஆகா. குறிப்பிட்ட சரித்திர காலங்களின் நிகழ்ச்சிகளை இவை விவரிக்கின்றன என்பது உண்மையே. ஆனால் தமிழர் சமூகம் மாறி வந்துள்ளது எவ்வாறு என்பதையும், அம்மாறுதல்களுக்கு அடிப்படையான காரணங்கள் யாவை என்பதையும், இந்நூல்கள் சுட்டிக் காட்டவில்லை.

ஆகவே முழுமையான தமிழர் வரலாறு ஒரு புதிய அடிப்படையில் எழுதப்பட வேண்டும்.

இதுவரை பொதுவாக எந்த அடிப்படையில் வரலாற்று நூல்கள் எழுதப்பட்டுள்ளன? ‘பல நூற்றாண்டுகளுக்கு ஒரு முறை மகா புருஷர்கள் தோன்றுகிறார்கள், அவர்களே நாட்டின் வரலாற்றை உருவாக்குபவர்கள்’ என்பர் ஒரு சாரார். இக்கொள்கையின்படி இரு மகா புருஷர்கள் தோன்றுவதற்கு இடைப்பட்ட பல நூற்றாண்டுகளில் வாழும் மக்கள் வாயில்லாப் பூச்சிகள் சொல்வதைச் செய்து வாழும் இயந்திரங்கள் ஆட்டி வைக்கிறபடி ஆடுகிறவர்கள். ‘சமூக மாறுதல்கள், சரித்திர மாறுதல்கள் நிகழ்வது திடீர்ப் பிரளயம் போன்ற புரட்சிகளால்’ என்பர் மற்றோர் சாரார். இப்பிரளயங்கள் யாராலும் உருவாக்க முடியாத எரிமலைகளைப் போல பழைமையைத் தகர்த்து புதுமையை நிறுவுகின்றன என்று தங்கள் கொள்கைக்கு அவர்கள் விரிவுரை கூறுவார்கள்.

இவை செல்லரித்துப்போன கொள்கைகள். மார்க்ஸீயவாதிகள் இக்கொள்கைகளை எதிர்த்துத் தாக்கி முறியடித்து விட்டார்கள். மகா புருஷர்கள் சமூக உணர்வின் சிருஷ்டிகள். அவ்வக்காலச் சமூக உணர்வின் சிறந்த பிரதிநிதிகள் என்ற உண்மையை அவர்கள் நிரூபித்து விட்டார்கள். இதே போல் நம் கண்ணுக்குத் தெரியாத, ஆனால் சூட்சுமமான கருவிகள் மூலம் அறியக் கூடிய பல மாறுதல்களின் கடைசி விளைவே பூகம்பமும், எரிமலையின் சீற்றமுமென் விஞ்ஞானிகள் முடிவு கட்டியுள்ளார்கள். அதேபோல்தான் சமூக விஞ்ஞானிகளும் படிப்படியான பல சமூக மாறுதல்களின் இறுதிக் கட்டமே புரட்சிகரமான மாறுதல் என்பதை நிரூபித்திருக்கிறார்கள். ஆகையால் மேற்சொன்ன அடிப்படைகளில் தமிழர் வரலாறு என்ற மாளிகையைக் கட்ட முடியாது.

பின் எந்த அடிப்படையில் தமிழர் வரலாறு எழுதப்பட வேண்டும்? வாழ்க்கை நிலைமைகளில் ஏற்படும் மாறுதல்களே, சமூக மாறுதலாகப் பரிணமிக்கின்றன. வாழ்க்கை நிலைமைகள் என்றால் என்ன? மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத தேவைகள் உணவு, உடை, உறைவிடம் முதலியன. இம்மூன்றும் இன்றி மனிதன் வாழ முடியாது. மனிதன் உலகில் தோன்றிய காலத்திலிருந்து உணவையும், உடையையும், இயற்கையினின்றும் பெற பல முறைகளில் முயன்றிருக்கிறான். அவ்வாறு மனிதன் இயற்கையோடு போராட்டம் நிகழ்த்தும் காலத்தில் இயற்கையின் இயக்க விதிகளை அறிந்து கொண்டு அதனைத் தன்னுடைய வாழ்க்கைக்குத் தேவையான பொருள்களை உற்பத்தி செய்து கொள்ளப் பயன்படுத்துகிறான். இவற்றை உற்பத்தி சக்திகள் என்று நாம் அழைக்கிறோம். அவை வளர்ந்து கொண்டே செல்லுகின்றன. அவற்றின் வளர்ச்சியால் மனித சமூகம் மாறுகிறது. ஆகவே உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி சரித்திர மாறுதல்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு பெறுகிறது. அவற்றின் வளர்ச்சியில் ஒரு கட்டத்தில் அவற்றைத் தமக்கு உடைமையாகக் கொண்ட ஒரு வர்க்கமும், அவற்றைப் பயன்படுத்தி வேலை செய்யும் மற்றொரு வர்க்கமும் தோன்றுகின்றன. இவ்விரு வர்க்கங்களுக்கிடையே இயற்கையில் இருக்கும் முரண்பாடுகள் காரணமாகப் போராட்டம் நிகழ்கிறது. அப்போராட்டங்களின் விளைவாக சமூக மாறுதல்கள் தோன்றுகின்றன.

இவ் அடிப்படையில் தமிழரது சமூக மாறுதல்களைக் கவனிப்போம்.

தமிழர் வாழ்க்கை முதன் முதலில் மலைச் சாரல்களிலே தோன்றிற்று. அப்பொழுது அவர்கள் வேட்டையாடி உணவைப் பெற்றனர். வில், அம்பு, ஈட்டி, கவண்கற்கள் முதலியவற்றைக் கருவிகளாகப் பயன்படுத்தினர். காய், கனி, கிழங்குகளைத் தேடி அலைந்தனர். மிகச்சிறிய அளவில் புன்செய் பயிர் செய்யவும் அறிந்திருந்தனர். புல் பூண்டுகள், இலைத் தழைகளால் வேயப்பட்ட குடிசைகளில் குடியிருந்தனர். இக்கூட்டத்தார் குறவர் எயினர் எனப்படுவர். அவர் கூட்டுண்டு வாழ்ந்தனர். வேலன் என்ற தெய்வத்தைப் போற்றினர். தம்மைப் போன்ற ஒரு கடவுளை மலைநாட்டு மக்கள் கற்பனையில் உருவாக்கினர். அவர்களுடைய வாழ்க்கையை மிகப் பழமை வாய்ந்த தமிழ் நூல்கள் குறிஞ்சித் தினையில் விவரிக்கின்றன. அவர்களுடைய மண வாழ்க்கையைப் பற்றியும் பொழுது போக்குகளைப் பற்றியும், சிற்சில செய்திகளை சங்க நூல்கள் நமக்கு அறிவிக்கின்றன. புராதன தமிழ் மக்களின் வாழ்க்கை நிலையை மேலும் ஆராய்வது அவசியம். அதற்குத் தொல்காப்பியம், பத்துப் பாட்டு, புறநானூறு போன்ற நூல்கள் துணை செய்வன.

இதன் பின்னர் இயற்கையின் கருணையை நம்பி வாழ்ந்த கூட்டத்தார் ஆடு மாடு வளர்க்கத் தொடங்கினர். ஆடு மாடுகளுக்கு வேண்டிய தீனியையும் தங்களுக்கு வேண்டிய உணவையும் பயிர் செய்து பெற முயன்றனர். ஆட்டுத் தோலை உடையாகத் தைத்துக் கொண்டனர். செருப்புத் தைத்துக் கொண்டனர். குழல் என்னும் இன்னிசைக் கருவியைக் கண்டுபிடித்தனர். வேலை செய்த களைப்புத் தீரவும். மழை வளம் வேண்டியும், மால் என்னும் தெய்வத்தை வேண்டிக் கூத்தாடினர். மால் பசு நிலைகளைப் புரக்கும் கடவுள். இவ்வாழ்க்கையை முல்லை நில வாழ்க்கையென்று சங்க நூல்கள் கூறுகின்றன. இவர்களுக்கும் மலை நாட்டு மக்களுக்கும் சிறிதளவு பண்டமாற்று வாணிபம் நிகழ்ந்திருக்க வேண்டும். மலைநாட்டார் தேனும் தினையும் கொடுத்துத் தோலுடையும் கயிறும் பெற்றார்கள். மலைநாட்டினரும், காட்டுச் சாதியினரும், சேர்ந்து விழாக்கள் நடத்துவதுண்டு. அவற்றில் ‘சல்லிக் கட்டு’ என்று இன்று அழைக்கப்படும் ‘கொல்லேறு தழுவுதல்’ என்ற விளையாட்டு நடத்தப் பெறும். பாணர், பாணியர் ஆகிய கலைஞர்களது பாட்டும் கூத்தும் நடைபெறும்.

நிலைத்த வாழ்க்கை காரணமாக உற்பத்திச் சக்திகள் வளர்ந்திருக்க வேண்டும். ஆடு மாடுகளுக்குத் தீனியும், தங்களுக்கு உணவும் பெறுவதற்கு முல்லை நில மக்களிலே ஒரு பகுதியார் ஆற்றங்கரைகளிலே குடியேறி நன்செய்ப் பயிர் செய்யக் கற்றுக் கொண்டார்கள். குளங்கள் தோண்டப்பட்டன. ஆறுகளை மறித்து அணைகள் கட்டப்பட்டன. அகன்ற நிலப்பரப்புக்கள் சாகுபடிக்கு வந்தன. இப்புதிய வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் சிறிதளவு உணவுக்குப் போக தானியம் மிஞ்சியது. மேலும் நீண்ட வாய்க்கால்களைத் தோண்டினார்கள். மடைகளை அமைத்தார்கள். மேலும் விளைச்சல் பெருகியது. உழவுக்கு வேண்டிய கருவிகள் செய்யவும், ஆடு மாடுகளைப் பாதுகாக்கவும், ஆடை நெய்யவும். தோலிலே ஏற்றங்களுக்கு வேண்டிய பைகள் செய்யவும், விளைந்த நெல்லைப் பாதுகாக்கக் கட்டடங்கள் எழுப்பவும் தனித்தனிப் பிரிவினர் தோன்றினர். இவ்வாறு சிக்கலான வேலைப் பிரிவினை எழுந்தது. இவற்றை மேற்பார்க்க சிறுசிறு பிரதேசங்களில் குறுநில மன்னர்கள் தோன்றினர். பெரிய ஆறுகளின் நீரை முழுதும் பரந்த அளவு நிலத்தில் பாய்ச்சி விவசாயம் செய்யவும் பல பகுதியினரையும், ஒருங்கு விவசாயத் தொழிலிலே ஈடுபடுத்தவும் மத்திய ஆட்சி தேவையாயிற்று. பரந்த நிலப்பரப்பின் தலைவர்களாக இருந்தவர்கள் முடியுடை மன்னர்களானார்கள். எந்தப் பகுதியில் விளைச்சல் அதிகம் கண்டு தானியம் மிஞ்சியதோ அப்பகுதி வலிமையுடையதாயிற்று. பக்கத்திலுள்ள வளர்ச்சியடையாத பகுதிகளைப் போரின் மூலம் தன் ஆட்சிக்கு கீழ் கொணர்ந்தது. இவ்வாறு நூற்றுக்கணக்கான குறுநில மன்னர்கள் சேர, சோழ, பாண்டியரது ஆட்சிக்குட்பட்டனர். தனித்தனியாக வாழ்ந்த மலை நாட்டினரும், காட்டுச் சாதியினரும் பயிர் செய்து உற்பத்திச் சக்திகளை வளர்த்துவிட்ட மருத நிலத்தவருடைய ஆதிக்கத்திற்குட்பட்டனர். இவர்களிடையே பல போராட்டங்கள் நிகழ்ந்தன. பாரி, பேகன் போன்ற மலைநாட்டு குறுநில மன்னர்கள் முடியுடை மன்னர் மூவரால் தோற்கடிக்கப்பட்டனர். வாழ்க்கை முறை மாறிற்று. சமூக அமைப்பும் மாறிற்று. இம்மாறுதல்கள் பல நூற்றாண்டுகளாக நிகழ்ந்திருக்க வேண்டும். பயிர்த்தொழிலை அடிப்படையாகக் கொண்ட சமூக அமைப்பைப் பற்றிய செய்திகள் மருத நிலத்தைப் பற்றிய செய்யுட்களிலே காணப்படுகின்றன. முன்னிருந்த இரண்டு சமூக அமைப்புகளைவிட இச்சமூக அமைப்பில் மனிதன் வளமாக வாழ்ந்த காரணத்தாலும், மிகுந்த ஓய்வு கிடைத்ததின் காரணமாகவும் கலைகள் வளர்ந்தன. கோயில்கள் தோன்றின. சிற்பங்கள் எழுந்தன. நீண்ட காவியங்கள் தோன்றின.

இந்தச் சமூகத்தில் தமிழ் மக்கள் உற்பத்தி சக்திகளுக்கும், தங்களுக்குமுள்ள உறவு காரணமாக இரு பிரிவாகப் பிரிந்தனர். ஒன்று ‘நிலக்கிழார்’ அல்லது நிலவுடைமையாளர். மற்றொரு பிரிவினர் அவற்றில் உழைத்துப் பிழைக்கும் உழவர்கள். இச்சமூகத்தில் வர்க்கப் பிரிவினையும், முரண்பாடும் தோன்றிவிட்டன. அது எவ்வாறு தோன்றிற்று. எப்படி வளர்ச்சியுற்றது என்பது ஆராய்ச்சிக்குரிய விஷயம். தங்களுடைய வாழ்க்கை நிலைமையில் தோன்றிய மகிழ்ச்சிகரமான மாறுதலைச் சுட்டிக்காட்டும் முறையில் மருத நிலத்தவர் இந்திரனைத் தங்கள் தெய்வமாகக் கொண்டனர். இந்திரன் சுக வாழ்வின் பிரதிநிதி.

தமிழ்நாடு முப்பெரும் பிரிவுகளாக இணைக்கப்பட்ட காலத்தில் வாணிபமும் தலை தூக்கத் தொடங்கியது. சிறுசிறு கிராமங்களில் கைத்தொழில் செய்து கிராமத் தேவைகளைப் பூர்த்தி செய்வது மட்டும் முடியரசு தோன்றியபின் போதாது. ஆகவே தொழில் பிரிவு தோன்றி, தனித்தனியாக தொழில் செய்து தங்கள் செய்பொருட்களை நெல்லுக்குப் பரிவர்த்தனை செய்து கொண்ட முறை நிலைகுலைந்தது. பொன்னும் பொற்காசுகளும் பரிவர்த்தனைக்குப் பொதுப் பொருளாயின. பொருள்களைத் தமிழ் நாட்டின் பல பகுதிகளுக்குக் கொண்டு செல்லும் ‘வணிகச் சாத்துக்கள்’ என்ற வணிகர் கூட்டம் தோன்றியது. இவர்கள் பொருள்களை உற்பத்தி செய்வதில்லை. ஆனால் ஒரு பகுதியில் இருந்து மற்றோர் பகுதிக்குக் காளைகள் மீதும், சகடங்கள் மீதும், பொருள்களை ஏற்றிச் சென்று விற்பர். உள்நாட்டு வாணிபம் பெருக, மன்னர்கள் சாலைகள் அமைத்தனர்.

இவ்வணிகச் சாத்தினர் பல பொருட்களை நாடெங்கும் பரப்பினர். ஆடைகள், அணிகலன்கள், தானிய வகைகள், மிளகு, பாக்கு, வாசனைத் திரவியங்கள் ஆகிய பொருட்களைத் தமிழ்நாட்டின் ஒரு பகுதியிலிருந்து மற்றோர் பகுதிக்குக் கொண்டு சென்று விற்றனர். இவர்களுள் ஒரு பகுதியினர் பெரும் பொருள் திரட்டினர். அவர்கள் சமூகநிலை உயர்ந்தது. மூலப் பொருள்களை உற்பத்தி செய்யும் நிலங்கள் குறுநில மன்னர்களின் உடைமையாக இருந்தன. செய்பொருட்களை ஆக்குபவர்கள் தொழிலாளிகள். அவர்களை ஒரிடத்தில் சேகரித்து அவர்கள் செய்து தரும் பொருட்களுக்கு விலை கொடுத்து வணிகர்கள் வாங்கினார்கள். ஆக, நிலத்தொடர்பு இல்லாத இரு வர்க்கங்கள் இப்பொழுது தோன்றத் தொடங்கின. வணிகர்களது செல்வாக்கு ஓங்க ஓங்க அவர்கள் மூலப்பொருள் உற்பத்திக்குச் சாதனமான நிலத்தின் சொந்தக்காரர்களது ஆதிக்கத்துக்கு எதிர்ப்புக் காட்ட வேண்டியதாயிற்று. அவர்களது நிலவுடைமையைப் பாதுகாக்கும் திட்டத்தையும் கொள்கையையும் காக்க வேண்டி வந்தது. அதற்காகக் கைத்தொழில் செய்யும் தொழிலாளரையும், விவசாயிகளையும் தங்கள் பக்கம் திருப்பிக் கொள்ள முயன்றார்கள். இவ் வணிகர்கள் பெருங்குடி வணிகர்கள் என்று அழைக்கப்பட்டனர். இவர்களுடைய ஆதிக்கம் ஓங்கியிருந்த காலத்தைச் சிலப்பதிகாரம் சித்தரிக்கிறது. சமணமும், பெளத்தமும் இவர்கள் ஆதரித்த மதங்கள். அவை சமூக அடிமைத்தனத்தைத் தாக்குகின்றன. புத்த மதத்தையும் இவர்கள் ஆதரித்தார்கள். இவர்கள் காலத்தில் பெரு நகரங்கள் தோன்றின. நகரங்கள் கைத்தொழில் உற்பத்திக் கேந்திரங்களாக இருந்தன. நகரங்களின் உள்ளமைப்பையும், வாணிப வளத்தையும், வாழ்வோர் நிலையையும் சிலப்பதிகாரம் வர்ணிக்கிறது. சேர, சோழ, பாண்டிய ராசதானி நகரங்களை அது வர்ணிக்கிறது. அப்பொழுது பெருங்குடி வணிகர்களுடைய செல்வாக்கு உச்ச நிலையிலிருந்தது என்பதையும், கட்டிக் காட்டுகிறது. இது தவிர அயல்நாடுகளோடு மரக்கலங்கள் மூலம் வாணிபத் தொடர்பிருந்தமைக்கும், அதன் மூலம் பெருங்குடி வணிகர்கள் பெரு நிதியம் திரட்டினார்கள் என்பதற்கும் சான்றுகளுள்ளன. இவர்களுடைய வளர்ச்சிக் காலத்திலேதான் கடற்கரையில் மீன் பிடித்தும், உப்புக் காய்ச்சியும் பிழைத்து வந்த பரதவரும், உமணரும், சங்கு குளித்தல், முத்துக் குளித்தல் போன்ற தொழில்களைக் கற்றிருக்க வேண்டும். அயல் நாட்டு வாணிபத்துக்காக, புகார், கொற்கை, தொண்டி, முசிறி போன்ற துறைமுகங்கள் தோன்றின. அங்கே யவனர் கலங்கள் வந்து தங்கிச் சென்றன. துறைமுகச் சாவடிகளில் பொதிகள் அடுக்கப்பட்டுச் சுங்கம் வசூலித்ததற்கு அடையாளமாக மன்னனது முத்திரை பதிக்கப்பட்டன. இச்செய்தியைப் ‘பட்டினப் பாலை’ கூறுகிறது.

இவ்வாறு பெருங்குடி வணிகரின் செல்வாக்கு உயர்ந்தோங்கிய காலத்தில் அரசியல் வாழ்விலும் அவர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். சோழ நாட்டின் வளப்பம் காரணமாக அங்குதான் பெருங்குடி வணிகர் வர்க்கமும் வளர்ந்து வாணிபத்தைப் பெருக்கியது. வாணிபத்துக்குச் சந்தையாக தமிழ்நாடு முழுதும் இருக்க வேண்டும் என்பது அவர்களது நலனுக்கு உகந்ததாக இருந்தது. ஆகையால் அவர்கள் தமிழ்நாட்டின் முப்பெரும் பிரிவுகளிலும் தங்குதடையற்ற வியாபாரம் பெருக விரும்பினர். அதற்குத் தகுந்த சித்தாந்தத்தையும் உருவாக்கினர். மூன்று பிரிவுகளும், ஒன்றென்னும் எண்ணத்தை வளர்த்தனர். மூன்று மன்னர்களும் போராடாமல் வாழவேண்டுமென விரும்பினர். தமிழ் மன்னர் மூவரும் போராடாமல் வாழ்ந்தால் தங்கள் வாணிபம் பெருகுமல்லவா? ஆகவே சமாதானம் தமிழரின் பொதுவான கலை பண்பாட்டு ஒருமை இவற்றை அவர்கள் வலியுறுத்தினர். சேர வம்சத்தினராயினும், இளங்கோவடிகள் தன் கால சித்தாந்தத்தால் உருவாக்கப்பட்டவராதலால் சிலப்பதிகாரத்தில் இக்கொள்கைகளை வெளிப்படையாகவும், உட்பொருளாகவும் கூறுகிறார். தமது வாழ்த்துக் காதையில் சேர, சோழ, பாண்டிய நாட்டின் தலைநகரங்களுக்கும் மன்னருக்கும் வாழ்த்துக் கூறுகிறார். இது தமிழ்நாட்டின் ஒருமையை வலியுறுத்துவதற்காகவே.

'வாழியரோ வாழி
      வருபுனல் நீர் வையை
குழு மதுரையார் கோமான்
      தன் தொல்குலமே!
'வாழியரோ வாழி
      வருபுனல் நீர்த் தன் பொருதை
சூழ்தரும் வஞ்சியர் கோமான்
      தன் தொல்குலமே'
'காவிரி நாடனைப் பாடுதும் பாடுதும்
      பூவிரி கூந்தல் புகார்

இம்முறையில் பொருளாதார வாழ்வையும் வர்க்க முரண்பாடுகளையும் அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாட்டு மக்களின் வரலாறு முழுதும் எழுதப்பட வேண்டும். இவ்வரலாற்றைத் தனியொருவர் எழுதுவது இயலாது. நூற்றுக்கணக்கான வரலாற்று வல்லுநர்கள். தமிழ் அறிஞர்கள், மார்க்ஸியவாதிகளின் கூட்டுமுயற்சியால் இவ்வரலாறு உருவாக வேண்டும். முதன்முதலில் பல கருத்து வேற்றுமைகள் தோன்றுவது இயற்கையே; பல கருத்து மோதல்களின் விளைவாக உண்மை வெளிப்படும். பண்டைத் தமிழர் சரித்திரத்தை ஆரம்ப முதல் மத்திய காலம் வரைக்கும் ஆராய்ந்து எழுதுவதற்குப் பரவலான சான்றுகள் இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் கிடக்கின்றன. அவற்றைச் சேகரித்துச் சமூக வளர்ச்சி தொழில் கண்ணோட்டத்தில் ஒரு வரலாறு உருவாக்கப்பட வேண்டும். அப்படிப்பட்ட தமிழர் வரலாறு நமக்கு அவசியம் தேவை.
---------------------

2. பொங்கல் விழா

தமிழ்நாட்டில் தை மாதம் அறுவடை காலமாக இருந்தது. இப்பொழுது காலநிலை மாறுபாட்டால் பங்குனி அதுவடைக் காலமாக ஆகிவிட்டது. முற்காலத்தில் தைப் பொங்கல் விழா அறுவடை விழாவாகவே கொண்டாடப்பட்டது. இன்று தைமாதம் அறுவடைக் காலமாக இல்லாவிட்டாலும் வழக்கத்தையொட்டி இன்று தைமாதப் பிறப்பை அறுவடை விழாவாகவே தமிழ் மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.

அந்நாளில் கதிரவனைத் தமிழ் மக்கள் வணங்குவதாக ‘கல்கி’ கூறுகிறது. ஏனெனில் கதிரவனே பூமியின் செழிப்புக்குக் காரணம் என்று கல்கி கருதுகிறது கல்கியின் கருத்து தற்கால விஞ்ஞானக் கருத்துக்கு ஒருவாறு ஒத்திருக்கலாம். ஆனால் வரலாற்றுக்கோ, வழக்கத்துக்கோ, மரபுக்கோ அது பொருந்துவதாக இல்லை. பொங்கல் எவ்வாறெல்லாம் கொண்டாடப்பட்டு வந்தது. இன்று பொங்கல் விழாக் கொண்டாடப் படும் முறையில் வரலாற்று எச்சங்கள் ஏதாவது இருக்கிறதா என்பதை ஆராய்ந்து பொங்கல் விழாவின் உண்மையான தன்மை பற்றி நாம் முடிவுக்கு வர வேண்டும்.

பொங்கல் விழாவிற்கும் பாவை நோன்பிற்கும் தொடர்பு உண்டு. பாவை நோன்பு மார்கழி மாதம் தொடங்கி தை மாதப் பிறப்பன்று முடிவது. ஏழாம் நூற்றாண்டில் பாவை நோன்பு கொண்டாடப்பட்ட விதத்தைக் குறித்து ‘திருப்பாவை’யினின்று நாம் அறியலாம்.

வையத்து வாழ்வீர்காள்!
நாமும் நம் பாவைக்கு,
செய்யும் கிரிசைகள்,
கேளீரோ பாற் கடலுள்
பையத் துயின்ற
பரமன் அடிப்பாடி

நெய்யுண்ணோம் பாலுண்ணோம்
நாட் காலே நீராடி,
மையிட்டு எழுதோம்
மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம்
தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும்
ஆந்தளையும் கைகாட்டி
உய்யுமாறு எண்ணி
உகந்தேல் ஓரெ ம்பாவாய்!

மார்கழி மாதம் முழுவதும் கன்னியர்கள் மேற்கண்ட முறையில் நோன்பு நோற்கிறார்கள்.

இந்நோன்பு யாரை மகிழ்விக்க? கண்ணனை மகிழ்விக்கவா? இல்லை. ‘அவன் அடிபாடி’ அவர்கள் நோன்பு நோற்றாலும் நோன்பு பாவை நோன்பே; பாவை மகிழ்விக்கவே. பாவை யார்? பாவை மண்ணாலோ, சாணத்தாலோ, மணலாலோ செய்த படிமம். இது பூமியையே குறிக்கும். இந்நோன்பு பூமியை மகிழ்விக்கவே நோற்கப்படுகிறது. பூமி மகிழ்ந்தால் செழிப்பைத் தருவாள். ஆண்டாள் ஆயர் மகளிர் கொண்டாடும் பாவை நோன்பை வருணிக்கிறாள். ஆகையால் அவர்களுக்குச் செல்வச் செழிப்பு எதுவோ, அதனைப் பாவை அருளும் என்று பாடுகிறாள்.

‘ஓங்கி உலகளந்த
      உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்குச்
      சாற்றி நீராடினால்,
தீங்கின்றி நாடெல்லாம்
      திங்கள் மும்மாரி பெய்து
ஓங்குபெரும் செந்நெல்
      ஊடு கயல் உகள

பூங்குவளைப் போதில்
      பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து
      சீர்த்த முலைப்பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும்
      வள்ளற் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம்
      நிறைந்தேல் ஓர் எம்பாவாய்’

ஆயர் மகளிர் விரும்பும் செல்வம் எதுவென்று ஆண்டாள் செய்யுளில் குறிப்பிடுகிறாள். இச்செல்வத்தைப் பாவை தருவாள். அவள் தருவதற்கு, ஆயர் மகளிர் தங்கள் உடல் வருந்த நோன்பு நோற்கிறார்கள். பூமி செழிப்பைத் தருவதற்கு இவர்கள் உடலை வருத்துவானேன்? இவ்வினாவிற்கு விடைகாண தொல்குடி மக்களின் உலகக் கண்ணோட்டத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

இயற்கையின் இயக்க விதிகளைத் தொல்குடி மக்கள் அறிந்தவர்களல்லர். கூட்டுழைப்பினால் அவர்கள் இயற்கையோடு போராடினார்கள். போராட்டத்தின் முதல் வெற்றியே புன்செய்ப் பயிர்த்தொழில். அதற்கடுத்த வெற்றி ஆடுமாடுகளைப் பழக்கியது. மனிதன் தனது செயலால் இயற்கையினின்று தனக்குத் தேவையானவற்றைப் பெற முடியுமென்று கண்ட தொல்குடி மக்கள் இயற்கை விதிகளோடு எவ்விதத் தொடர்புமில்லாத தங்களது செயல்களால் இயற்கையை வசப்படுத்த முடியுமென்று நம்பினார்கள். இடிமுழக்கம் போன்ற ஓசைகளை எழுப்பிக் கூத்தாடினால், தங்களைப் பார்த்து இயற்கையும் மழையைப் பொழியும் என்று எண்ணினார்கள். அதற்காக ஒரு கூத்தும் வகுத்துக் கொண்டார்கள். காற்றிலிருந்து பயிரைப் பாதுகாக்கக் காற்றில் அசைந்தாடுவதுபோல் நடனமாடி அதைப்போலப் பயிரையும் ஆடும்படிக் கேட்டுக் கொண்டார்கள். அசைந்தாடினால் காற்று பயிரை வேரோடு பிடுங்கி எறியாது என்பது அவர்கள் நம்பிக்கை. உலக முழுவதிலும் இத்தகைய வழக்கங்கள் இருந்திருக்கின்றன. தொல்குடி மக்களினத்தவர் பலரிடம் இத்தகைய வழக்கங்களைக் காணலாம். இதனை நாம் (Magic) மந்திரம் என்றழைக்கிறோம். இம் மந்திரம்தான் மனிதனுக்கும் இயற்கைக்கும் ஏற்பட்ட முதல் தொடர்பு, மனிதன் மந்திர முறைகளினால் இயற்கையை வசப்படுத்த முயன்றான். இயற்கையை அறிய புறவய முறைகள் தோன்றிய பின் மந்திரத்தைக் கொன்று விட்டு, அதன் வயிற்றில் விஞ்ஞானம் தோன்றியது. இம்மந்திரத்தின் எச்சமே பாவை நோன்பு. தங்கள் உடலை வருத்தித் தூய்மையாக இருந்தால் பாவையும் வரந்தரும் என்ற ஆயர் மகளிரது நம்பிக்கையே திருப்பாவையில் கவிதா ரூபத்தில் வெளிப்படுகிறது.

இதை உறுதிப்படுத்த ஒரே ஒரு சான்று காட்டுவோம். மந்திர முறையில், இயற்கைச் சக்திகளை அழைத்து மனிதன் கட்டளையிடுவது போல் சொற்களை மறுபடி உச்சரிப்பது வழக்கம். தெய்வத்தை வேண்டிக் கொள்வதென்பது மனிதன் தன் உடலில் சக்தியை வரவழைக்கவே. சக்தி பெற்றதாக அவனுக்குத் தோன்றியதும் இயற்கைச் சக்திகளை நோக்கி மனிதன் கட்டளைகளைப் பிறப்பிப்பான். இவ்வாறு ஆயர் மகளிர் மழையைப் பார்த்துக் கூறுவதைக் கேளுங்கள்:

‘தாழாதே சார்ங்கம்
உதைத்த சரமழை போல் வாழ
உலகினில்
பெய்திடாய், நாங்களும்;
மார்கழி நீர் ஆட
மகிழ்ந்தேல் ஓர் எம்பாவாய்;’

‘நாங்கள் வாழ நீ பெய்’ என்ற மந்திர மொழியாக அவர்கள் கட்டளையிடுகிறார்கள்.

மழை பெய்து பூமி விளைந்து அறுவடை ஆனபின் பாவைக்கு அவர்கள் செய்யப்போகும் விழாச் சிறப்புக்களைப் பற்றியும் முன்கூட்டியே ஆயர் மகளிர் சொல்லுகிறார்கள். அதுதான் அறுவடைத் தினத்தன்று அவர்கள் பாவைக்குச் செய்யப்போகும் சிறப்பான விழா.

கூடாரை வெல்லும் சீர்க்
கோவிந்தா! உன்தன்னைப்

பாடிப்பறை கொண்டு
யாம்பெறும் சம்மானம்
நாடும் புகழும்
பரிசினால் நன்றாகச்
சூடகமே, தோள் வளையே
தோடே, செவிப் பூவே
பாடகமே என்று அனைய
பல்கலனும் யாம் அணிவோம்
ஆடை உடுப்போம்
அதன் பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து
முழங்கை வழிவார
கூடி இருந்து
குளிர்ந்தேல் ஓர் எம்பாவாய்!

**
கறவைகள் பின் சென்று
காரணம் சேர்ந்துண்போம்.

அறுவடையின் பயனை அவர்கள் அனுபவிக்கும் மகிழ்ச்சியே பாவைக்குச் செய்யும் விழா.

இவ்விழாவைக் கொண்டாடுபவர்கள் பெண்கள். ஆரம்பத்தில் உழவுத் தொழிலைக் கண்டுபிடித்தவர்கள் பெண்களாதலால் அவர்களே அவ்விழாவிற்குரியவர்களாகிறார்கள். பாவையும் பெண் தெய்வம். அதன் பூமியின் படிமம். அவளை மந்திர மூலமும் பாட்டின் மூலமும் மகளிர் மகிழ்விக்கிறார்கள். மகளிர் கண்ணனை வழிபடுகிறார்களென்றாலும் கண்ணனிடம் பறை மட்டுமே கேட்கின்றார்கள். பறை எதற்கு? குரவைக் கூத்தாடப் பறையை முழக்க வேண்டி பறையைக் கண்ணனிடம் பெற்று அவர்கள் பாவைப் படிமம் செய்து அதன் முன் குரவையிடுவார்கள். அவர்கள் சம்மானம் பெறுவது கண்ணனிடமல்ல, பாவையிடமே. இன்றும் பொங்கல் பொங்கும்போது பெண்கள் குரவையிடுகிறார்கள். இது மகிழ்ச்சியைத் தெரிவிக்கும் குரல் ஒலி. இது குரவைக் கூத்தின் எச்சம்.

இவ்விழா புறநானூற்றுக் காலத்தில் கொண்டாடப்பட்டது. நெல் களத்தைப் போர்க்களத்துக்கு உவமை கூறுவது பண்டைப் புலவர் மரபு. குறுங்கோழியூர் கிழாரென்னும் புலவர் நெல் களத்தை வருணித்து அதனைப் போர்க்களத்துக்கு உவமை கூறுகிறார். அன்று அறுவடை விழா. ‘சாறு கொண்ட களம்’ என்று புலவர் கூறுகிறார். சாறு என்றால் விழா. அறுவடை விழாவைப் பற்றி இச் செய்யுளிலிருந்து நமக்குச் சில வரலாற்றுக் குறிப்புகள் கிடைக்கின்றன. 2000 ஆண்டுகளுக்கு முன்பு நம் நாட்டு உழவர் பொங்கல் கொண்டாடிய முறையைப் பற்றி இச்செய்யுள் அறிவிக்கிறது.

‘வலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த
வாய் கரும்பின் கொடிக் கூரை
சாறு கொண்ட களம் போல,
வேறு வேறு பொலிவு தோன்ற
குற்றானா வுலக்கையால்
கலிச் சும்மை வியாலங் கண்’

நெற் கதிர் வரிந்த கூரை வீடுகள். கரும்பை வாசலில் தோரணமாகக் கட்டியிருக்கிறார்கள். இவ்வலங்காரம் விழா நாளை அறிவிக்கின்றது. தானியம் குவியலாகக் கிடக்கிறது. உலக்கையைக் கழுவி அணி செய்து வைத்திருக்கிறார்கள். அது நெல்குற்ற அல்ல. வள்ளக் கூத்தாடு களத்தின் நடுவே கிடத்துவதற்காக வைத்திருக்கிறார்கள். இவ்வாறு விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழா வள்ளைக் கூத்து. நெல் குற்றுவது போல ஆடும் கூத்து. ஆகவே பெண்கள் ஆடும் கூத்து. இக்கூத்து விழாவில் மகளிரின் பங்கை வலியுறுத்தும். உழவுத் தொழிலின் ஆரம்ப காலத்தில் மகளிர் அத்தொழிலில் ஈடுபட்டிருந்ததன் எச்சமாக இக்கூத்து காணப்படுகிறது.

அறுவடை விழா, அறுவடையன்று தான் நிகழும். அன்று உழவர் மனமகிழ்ச்சி கொள்வார்கள். அன்றுபோல் என்றும் மகிழ்ச்சி கொள்ளும் உழவர் பெருமக்கள் வாழும் நாட்டையுடையவன் எங்கள் அரசன் என்று பிசிராந்தையார், கோப்பெருஞ் சோழனைப் புகழ்ந்து பாடுகிறார். ஒரு நாள் விழாவன்று வயிறு நிறைந்தாற் போதாது; என்றும் நிறைய :வேண்டும் என்ற இன்றைய உழவரது கோரிக்கையைக் கவிஞர் தமது ஆர்வமாகவும் வெளியிடுகிறார்.

‘நுங்கோ யாரென வினவின் எங்கோ
களமர்க் கரித்த விளையல் வெங்கள்
யாமைப் புழுக்கிற் காமம் வீடவாரா
வராற் கொழுஞ் சூடங் கவுளடாஅ
வைகு தொழின் மடியு மடியா விழுவின்
யாணர் நன்னாட் டுள்ளும் பாணர்
பைதற் சுற்றத்துப் பசிப்பகை யாகி
கோழியானே கொப்பெருஞ் சோழன்’
      (புறம், 282)

‘உழவர்கள் நாள்தோறும் விழாக் கொண்டாடுகிறார்கள். நாள்தோறும் ஆமை இறைச்சியும், மீன் கறியும் உண்டு கள் குடிக்கிறார்கள். தினந்தோறும் புது வருவாய் கிடைக்கிறது. ஆடல் பாடல் கலைஞர்கள் பசியறியாதவர்களாக உழவர்களை மகிழ்விக்கிறார்கள். நாட்டின் தலைநகரான கோழியில் கோப்பெருஞ் சோழன் அரசு வீற்றிருக்கிறான். அவனே எங்கள் அரசன். அறுவடை நாள் ஆண்டின் ஒருநாள் விழாவாகப் போய்விடக் கூடாது. தினந்தோறும் அறுவடை விழாவாக, செல்வச் செழிப்போடு உழவர்கள் வாழ வேண்டும்’ என்ற கவிஞரின் கனவை இச்செய்யுள் சித்திரிக்கிறது.

பொங்கல் விழாவிலே பூமியை வாழ்த்தியது போலவே, மகளிர் நீர் தரும் ஆற்றையும் வாழ்த்தினார்கள். ஆறு பெண் பாலாகக் கருதப்பட்டது. தைந்நீராடல் என்பது பண்டைய வழக்கம். பொங்கலிட்டுப் பூசனை புரிகின்றனர் மதுரை நகர மகளிர். நாட்டுக்கு வளம் தர வேண்டுமென வையை நதியை வேண்டுகிறார்கள். பின்பு தங்கள் தாய்மாரருகில் நின்று நீராடுகிறார்கள். நீராடும்போது வையையை நோக்கிப் பாடுகிறார்கள்.

‘வையை நினக்கு மடைவாய்த் தன்று
மையாடல் ஆடல் மழுபுலவர் மாறு எழுந்து
பொய் ஆடல் ஆடும் புணர்ப்பில் அவர், அவர்
தீ எரிப்பாலும் செறிதவம் முன்பற்றியோ,
தாயருகா நின்று தவத்தை நீராடுதல்
நீ உரைத்தி வையை நதி!’
(பரிபாடல்-11)

அவர்கள் வையையை வாழ்த்தும்போது தங்கள் வேண்டுகோள்களையும் வையையிடம் சமர்ப்பிக்கிறார்கள்.

‘நீ தக்காய், தைந்நீர் நிறம் தெளித்
தாய்’ என்மாரும்,
கழுத்து அமை கை வாங்காக்
காதலர்ப் புல்ல
விழுத்தகை பெறுக! என
வேண்டுதும்’ என்மாரும்,
’கிழவர் கிழவியர் என்னாது
ஏழ் காறும்
மழ ஈன்று மல்லற் கேள்
மன்னுக!’ என்மாரும்,
(பரிபாடல்-11)

சிறந்த கணவனைப் பெறவேண்டுமென தை நீராடும் மகளிரின் வேண்டுகோள் வையையிடம் சமர்ப்பிக்கப்படுகிறது.

எனவே, பொங்கல் விழா உழவர்களின் ஆர்வங்களை வெளியிடும் விழாவாகக் கொண்டாடப்பட்டது. அவர்கள் வாழ்க்கை, விழாவன்று மட்டும் வளம் பெற்று விளங்காமல் என்றும் வளம்பெற வேண்டும் என்பதே அவர்கள் ஆர்வம். மந்திர மொழியின் மூலமும், வணக்கத்தின் மூலமும் இயற்கையை வசப்படுத்த அவர்கள் செய்த முயற்சி இன்று வேறு வழியில் நிறைவேறி வருகிறது. மனிதன் விஞ்ஞானத்தின் மூலம் இயற்கையை வென்று வருகிறான். இயற்கையளிக்கும் சக்தியைத் தங்கள் சுயநலத்திற்காகப் பயன்படுத்தி, உழவர்களை அடிமைப்படுத்தும் சுரண்டல் வர்க்கத்தை எதிர்த்துத் திரளும் உழவர் பெருமக்கள் நாள்தோறும் பொங்கல் விழாக் கொண்டாடும் காலத்தை நோக்கி முன்னேறுகிறார்கள்.
---------------------

3. சோழர் ஆட்சியில் அறப் போர்கள்

தமிழ்நாட்டில் நீண்டகாலம் நிலைத்து நின்ற பேரரசு சோழப் பேரரசு ஆகும். அது கி.பி. 846 முதல் 1281 முடிய நிலவியிருந்தது. பல்லவர் கீழ் சிற்றரசனாக இருந்த விஜயாலயன் கி.பி.846ல் தனி அரசை நிறுவினான். அவனது மகனும் பெயரனும், தொண்டை நாட்டையும், பாண்டிய நாட்டையும் போரில் தோற்கடித்துக் கைப்பற்றினார்கள். அதற்குப் பின் பட்டம் பெற்ற அரிஞ்செயன், சிங்கள நாட்டின் மீது படையெடுத்துச் சென்று போரிட்டான். ராஜராஜன், கங்கை பாடி, நுளம்பாடி, வேங்கைநாடு இவற்றை வென்று சோழ சாம்ராஜ்யத்தை விசாலப்படுத்தினான். அவனது மகன் ராஜேந்திரன் தன் வாழ்நாளின் பெரும்பகுதியைப் போரிலேயே கழித்து இடைத்துறை நாடு, வனவாசி, கோசலம், விராடம், வங்காளம் ஆகிய நாடுகளைக் கைப்பற்றினான். சோழரது படை வலிமை குன்றியவுடன் இந்நாட்டு மன்னர்கள் தாங்களே சுதந்திரமாக ஆட்சி நடத்தத் தலைப்பட்டனர். இராஜேந்திரனுக்குப் பின்பு பட்டமெய்திய மூன்று சோழ மன்னர்கள் தங்களின் முன்னோர்களின் வெற்றிகளை உறுதிப்படுத்தப் பல போர்களில் ஈடுபட்டனராயினும், வட புல நாடுகளை அதிக நாட்கள் அடிமைப்படுத்தி வைத்திருக்க முடியவில்லை. கி.பி.1070 முதல் 1120 வரை தமிழ்நாடு முழுவதையும் தெலுங்கு நாட்டின் பெரும் பகுதியையும் ஆண்டு வந்த முதல் குலோத்துங்க சோழ தேவன் வனவாசி, கலியாணபுரம், கன்னியாகுமரி, கோட்டாறு, தென்கலிங்கம், வடகலிங்கம் ஆகிய நாடுகள் மீது போர் தொடுத்து வென்று ஆண்டு வந்தான். அவனது வெற்றிகளின் பயனை அவனது மகன் விக்கிரம சோழனும், அவனது பெயரன் குலோத்துங்க சோழனும் அனுபவித்தார்கள். இராஜேந்திரனுடைய காலத்திற்குப் பின்பு குலோத்துங்க சோழனுடைய காலத்தில்தான் சோழ சாம்ராஜ்யம் அதிகப் பரப்புடையதாய் இருந்தது. முதல் குலோத்துங்கன் கலிங்கத்துப் பரணியின் தலைவன். விக்கிரம சோழன் இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராஜராஜன். மூவரும் ஒட்டக்கூத்தர் பாடிய ‘மூவருலா’வின் தலைவர்கள். இரண்டாம் இராஜராஜனுக்குப் பின் பட்டமெய்திய சோழ மன்னர்கள் காலத்தில், வெளிநாட்டு மன்னர்கள் சோழ நாட்டிலும் படையெடுத்து வந்தார்கள். சிற்றரசர்கள் கலகம் விளைவித்தார்கள். பாண்டியர்கள் முத்துச் சலாப வருமானத்தாலும், அராபிய வர்த்தகத்தாலும் தமது படைபலத்தைப் பெருக்கிக் கொண்டு சோழ நாட்டின் மீது படையெடுத்தார்கள். மாறவர்மன் சுந்தர பாண்டியனும், சடைய வர்மன் சுந்தர பாண்டியனும் நடத்திய இறுதிப் போர்களால் சோழ சாம்ராஜ்யம் சரிந்து விழுந்தது.

இதுவே சோழர் காலத்துச் சரித்திர சுருக்கம். ஒவ்வொரு சோழ மன்னனும், சாம்ராஜ்ய விஸ்தரிப்புப் போர்களில் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியைச் செலவிட்டு இருக்கிறார்கள். இவ்வாறு பெரும் போர்களை நடத்துவதற்கும் போரிட்டு வென்ற நாடுகளை அடிமைப்படுத்தி வைப்பதற்கும் சோழ மன்னர்கள் பெரும்படைகளை வைத்திருந்தனர்.

சோழர் கல்வெட்டுகளில் மூவகை நிலைப்படைகளைக் குறித்த செய்திகள் காணப்படுகின்றன. வலங்கைப் படை, இடங்கைப் படை, மூன்று கை மகாசேனை என்ற மூன்று படைப் பிரிவுகள் இருந்தன என்று கல்வெட்டுக் குறிப்புகளால் தெரிகிறது.

இப்படைகளுக்கு வேண்டிய உடை, உணவு முதலியவற்றையும், படைக் கலங்களையும், யானை, குதிரை முதலிய ஊர்திகளையும் சேகரித்துத் தருவது மன்னனது கடமையாக இருந்திருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் படைவீரர்களது குடும்பங்களைப் பாதுகாக்கும் பொறுப்பை மன்னனே ஏற்றுக் கொள்ள வேண்டி வந்தது. ஏனெனில் அக்காலத்தில் போர்வீரர்களுக்கு மாத ஊதியம் அளிப்பதில்லை. நிலங்களையோ, நிலங்களின் வருமானத்தில் வரும் ஒரு பகுதியையோ, மானியமாகவும், கடமையாகவும், அக்குடும்பங்களுக்கு அளிப்பதுண்டு. கோயில் வருமானத்தின் ஒரு பகுதியைப் படைகளுக்கு அளித்ததாகவும், சில கோயில்களைப் படைகளின் பாதுகாப்பில் விட்டதாகவும், சில சாசனங்கள் கூறுகின்றன. உதாரணமாகச் சில சாசனச் செய்திகளைக் கீழே தருவோம். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சேரன் மகாதேவிக் கோவிலில் கல்வெட்டு ஒன்று மூன்று கை மகாசேனையார் பக்தவத்ஸல ஸ்வாமி கோவில் தர்மங்களைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டதாகக் கூறுகிறது. இது முதல் குலோத்துங்கச் சோழன் காலத்துக் கல்வெட்டு. பிரம்மதேசம் என்று பெயர் வழங்கும் திருவாலீச்வரம் கல்வெட்டு ஒன்று, அவ்வூர்க் கோவிலையும் - ஸ்ரீபண்டாரத்தையும் (பொக்கிஷம்) தேவ கன்மிகளையும், (கோவில் ஊழியர்கள்) மூன்று கை மகாசேனை ஏற்றுக் கொண்டதாகக் கூறுகிறது. இக்கல்வெட்டு முதல் இராஜேந்திரச் சோழனது மகன் பாண்டிய நாட்டில் மண்டலேச்வரனாக ஆண்ட காலத்தில் வெட்டிக் கொடுத்தது. இச்சான்றுகள் லட்சக்கணக்கான போர்வீரர்களது ஊதியம் கோவில் வருமானத்திலிருந்து கொடுக்கப்பட்டது என்பதைக் காட்டுகின்றன.

அப்படியானால், சோழர் காலத்தில் கோயில்களின் வருமானத்தைப் பெருக்க வழிவகைகள் செய்திருக்க வேண்டும். சோழர் காலத்து முன்பு கோவில்கள் மிகச் சிறியவையாயிருந்தன. பல்லவர் காலத்துக் கோயில்கள் மிகச் சிறிய குடைகோயில்களே. அவற்றை மாமல்லபுரத்திலும் திருக்கழுக்குன்றத்திலும் காணலாம். அவற்றிற்கு நிரந்தர வருமானமோ சொத்தோ இருந்ததில்லை. ஆனால் சோழர் காலத்தில் பிரம்மாண்டமான கற்கோயில்கள் எழுப்பப்பட்டன. ராஜராஜன் பிருகதீசுவரர் ஆலயம் கட்டினான். ராஜேந்திரன் கங்கை கொண்ட சோழபுரத்தில் அதே போன்றதொரு கோயில் கட்டினான். ஊருக்கு ஊர் கோவில்கள் தோன்றின. இதனைப் பெரிய புராணத்திலுள்ள வரலாறுகளிலிருந்து அறியலாம். கல்வெட்டுச் சான்றுகளும், ஏராளமாக உள்ளன. இக்கோயில்களைக் கட்ட போரில் சிறைப்பட்ட யுத்தக் கைதிகளையும் போரில்லாத காலத்தில் உள்நாட்டு மகாசேனைகளையும் ஈடுபடுத்தினார்கள் என்று தெரிகிறது. இக்கோயில்களுக்கு ஏராளமான நிலங்களை சர்வ மானியமாக சோழ அரசர்கள் விட்டார்கள். இதற்குச் சில சான்றுகள் கீழே தருவோம்.

‘ராஜராஜன் பெரியகோவில் பணிகள் நடைபெற 35 கிராமங்களை சர்வமானியமாக விட்டதாகக் கல்வெட்டுகள் குறிக்கின்றன. அவற்றுள் நான்கு சிற்றூர்கள் 500 முதல் 2000 ஏக்கர் பரப்புள்ளவை மூன்று சிற்றூர்கள் 300 முதல் 400 ஏக்கர் பரப்புள்ளவை. ஆறு 100 முதல் 200 வரை; மற்றும் ஆறு 25 முதல் 50 வரை இரண்டு சிற்றூர்கள் 25 ஏக்கருக்கும் குறைவு (சோழர் வரலாறு, மு.இராச மாணிக்கனார்). கல்வெட்டுக்களில், கிராமங்களின் பயிருள்ள நஞ்செய் நிலம் முழுவதையும் கோயில் காணியாக்கிய செய்திகள் காணப்படுகின்றன. இவற்றுள் புஞ்செயை உழவர்களுக்கு வெள்ளான் வகை (சொந்த நிலம்}யாக விடுத்து, அது நஞ்செயாகத் திருத்தினால் கோயில் காணியாக எடுத்துக் கொண்ட விவரங்களையும் கல்வெட்டுகள் அறிவிக்கின்றன. உதாரணமாகக் கீழ் வரும் கல்வெட்டைப் பார்க்கலாம்.

‘ஸ்வஸ்தி ஸ்ரீ ஸ்ரீமான் ராஜாதிராஜ ஸ்ரீ வீர நாராயண சோழ தேவர்க்கு செல்லா நின்றயாண்டு ஒன்பதாவது பரஞ்சரா வள்ளியில் மகாதேவர் நட்டுரமர்ந்தார்க்கும், (கோவில் மூர்த்தியின் பெயர்) பல நிமந்தப் படிக்கும், தீபாராதனைப் படிக்கும் ஊரார் பிடாரியூர்க்குப் போகும் வழிக்குக் கீழ்பாகம் கொடுத்தோம். இதுக்கு நிலம் அரைக் கிடவுக்காக, பரஞ்சரா வள்ளியில் நிலத்தில் புஞ்செய் நீக்கி, நஞ்செய் கொடுத்தோம். இந்த நிலம் தேவதானமாக உழுது மேல் வாரம் மேற்கொண்டு படித்தரம் தீபாராதனை நடந்து வருகிறதற்காக’

இவை போன்ற ஆயிரக்கணக்கான கல்வெட்டுக்களைத் தமிழ்நாட்டில் கோயிலுள்ள ஊர்களில் காணலாம். அவற்றில் பெரும்பாலானவை சோழர் காலத்துக் கல்வெட்டுக்கள். இக்கல்வெட்டுக்களின் மூலம், சோழர்கள் அதற்கு முன்பிருந்த நிலவுடைமை முறையை மாற்றினார்கள் என்பது புலனாகிறது. எவ்வாறு மாற்றினார்கள் என்பதறிய அவர்கள் காலத்தில் எத்தகைய நிலவுடைமை முறை நிலவியது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். நிலவுடைமை அக்காலத்தில் நான்கு வகையாகவிருந்தது. (1) வெள்ளான் வகை: இது சொந்த நிலம், இந்நிலங்களில் ஒரு பகுதி ‘உழுவித்துண்பார்’ என்ற உழவர்களிடமிருந்தன. (2) தேவதானம்: இந்நிலங்கள் கோயில்களுக்கு உடமையாக இருந்தன. அவற்றின் மேற்பார்வை சபையாரிடமிருந்தன. அவர்கள் பெரும்பாலும் நிலவுடைமையாளர்களே. சிறுபான்மை படையாரிடம் இருந்தன. (3) பிரமதேயம்: இந்நிலங்கள் பிராமணர்களுக்கு உடமையாக இருந்தன. (4) ஜீவிதம்: இந்நிலங்கள், கோயில் பணிசெய்வார்க்கு இனாம் நிலங்களாக ஆயுள் காணியாக இருந்தன.

சோழர் காலத்தில் நிலவுடைமை முறைகளில் செய்த மாறுதல்களின் தன்மையைக் கல்வெட்டுக்களின் மூலம் நாம் அறிந்து கொள்ள முடிகிறது. வெள்ளான் வகையில் சிறு நிலச் சொந்தக்காரர்களின் உடைமைப் பறித்து கோயில் தேவதானமாகவும் இறையிலி நிலமாகவும் மாற்றினார்கள். உழவர்கள் தங்கள் உரிமைகளை இழந்தார்கள், உழுதுண்போரின் நிலங்களின் பலவற்றைப் பிரமதேயமாக்கினார்கள். ஆகவே நிலவுடைமை கோயிலுக்கோ, கோயில் நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்திய மேல் வர்க்கங்களுக்கோ மாற்றப்பட்டது. இதனால் உழுதுண்போர் நிலை தாழ்ந்தது. இது மட்டுமல்ல; போர்களுக்கும், கோயில் செலவுகளுக்கும் அரசனது அரண்மனை ஆடம்பரச் செலவுகளுக்கும் சாதாரண மக்கள் மீது வரிகள் விதிக்கப்பட்டன. இவ்வரிகளை வசூலிக்கும் உரிமை மேல் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களை அங்கத்தினர்களாகக் கொண்ட ஊர்ச்சபைகளிடமே விடப்பட்டிருந்தன. அவர்கள் தங்கள் உடைமைகளுக்கும், நலன்களுக்கும் பாதகம் ஏற்படாத வகையில் வரியையும், கடமைகளையும் இறைகளையும் வசூலித்தார்கள். வரிகொடுக்க முடியாத ஏழைகளைக் கொடுமைப் படுத்தினார்கள். வரி கோயிலுக்கென வசூலிக்கப்பட்டதால் வரி கொடாதவர்களுக்குச் ‘சிவத் துரோகி’ என்ற பட்டம் சூட்டி நிலங்களைப் பறிமுதல் செய்தார்கள். அல்லது நிலத்தில் ஒரு பகுதியை விற்று ‘தண்டம்’ என்ற பெயரால் கோயிலுக்கு அளித்தார்கள். இத்தகைய ஒரு சுரண்டல் முறையைப் படைகளின் பாதுகாப்போடும், மதக் கொள்கைகளின் அனுசரனையோடும் சோழ மன்னர்கள் பாதுகாத்தனர்.

இச்சுரண்டல் முறைகளை மக்கள் எப்பொழுதும் சகித்துக் கொண்டிருந்தனர் என்று சொல்ல முடியாது. வாழ்க்கை துயரங்கள் அவர்களை ஒற்றுமைப்படுத்தின. கொடுமை அளவு மீறும்போது அவர்கள் போராடினர். அப்போராட்டங்களைப் பற்றி நாம் இதுவரை சோழர் வரலாறுகளில் வெளிவந்துள்ள நூல்களில் காண முடியாது. ஏனெனில் அவை மன்னர் வரலாறுகளேயன்றி மக்கள் வரலாறுகளல்ல. அப்போராட்டங்கள் வர்க்கப் போராட்டங்கள். இன்று நடைபெறும் உழவர் தொழிலாளிகளின் அறப்போர்களின் முன்னோடிகள். வரலாற்றை இயக்கும் தலைமையான சக்தியான சக்தி அவை. அவற்றுள் சிலவற்றைச் சுட்டிக் காட்டுவதும், அப்போர்களின் முறைகளை எடுத்துக் காட்டுவதுமே இக்கட்டுரையின் நோக்கம்.

தற்காலத்தில் அநீதிகளை எதிர்த்து உண்ணாவிரதம் ஒரு போர் முறையாகக் கையாளப்படுகிறது. இது உயிரைப் பணயம் வைத்து மக்களை அநீதிகளுக்கு எதிராகத் திரட்டும் முயற்சி. இது போலவே உயிரைப் பணயம் வைத்து அரசனது அநீதிகளை எதிர்த்து மக்கள் உணர்வைத் திரட்டிய நிகழ்ச்சிகளைப் பற்றி அபூர்வமாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன.

தஞ்சாவூரில் புஞ்சை என்ற கிராமத்தில் ஓர் கல்வெட்டு அகப்பட்டது. அதன் விவரம் வருமாறு:-அக்கோயிலில் பணியாட்கள் சிலர் இருந்தனர். அவர்களுக்கு ஜீவிதமாக அளிக்கப்பட்ட நிலத்தை ஊர்ச் சபையார் கைக்கொண்டு வேலையாட்களை வெளியேற்றினர். அவர்கள் அதிகாரியிடம் முறையிட்டுப் பார்த்தனர். பயனில்லை. அவ்வநீதியை எதிர்க்க அவர்கள் கோயில் முன் தீ வளர்த்துத் தீயிலிறங்கி உயிர்த்தியாகம் செய்து கொண்டனர்.

இதேபோலத் தங்கள் உரிமையை நிலைநாட்ட, உழைக்கும் மக்கள் வீரமாக உயிர் நீத்த செய்திகள் அபூர்வமாகக் கல்வெட்டுகள் மூலம் தெரிய வருகின்றன. தங்களுடைய உரிமைக்கு மக்கள் ஆதரவைத் திரட்டவும், மன்னனது கவனத்தை ஈர்க்கவும், சிலர் ஊர்க் கோபுரத்தின் மேலேறி கீழே விழுந்து உயிர் நீத்த செய்திகள் சில கோயில் சாசனங்களிலிருந்து தெரிய வருகின்றன.

கோயில்களில் ஆடல் பாடல் நிகழ்த்தவும், பணி செய்யவும், தேவரடியார்கள் இருந்தனர். அவர்களில் இரு வகையினர் உண்டு. அரச குடும்பம், வணிகர் குடும்பம், அதிகாரிகள் குடும்பம் ஆகியவற்றைச் சேர்ந்த பெண்கள் பெருஞ்செல்வத்தோடு கோயில் பணிக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டனர். இவர்கள் பெயரிலிருந்து இவர்களது சமூக நிலையை அறியலாம். அதிகாரிகளின் பட்டங்கள் இவர்கள் பெயரோடு சேர்த்து வழங்கப்படும். உதாரணமாக, நக்கன் ஸ்ரீதேவி. சோழ மாணிக்கம், மாசாத்து பூவேந்திய சோழ மாணிக்கம் என்ற பெயர்கள் பட்டம் சேர்ந்து வழங்குபவை. இவர்கள் கொணர்ந்த செல்வங்களால் கோயில்களுக்கு நிலங்கள் வாங்கி அளிக்கப்பட்டிருந்தன. அவற்றில் சில உரிமைகள் இத்தேவரடியார்க்கு உண்டு. தேவரடியாரில் மற்றோர் வகையினர் ஏழைப் பெண்கள். பஞ்சக்காலத்தில் நிலமிழந்தவர்களும், வெள்ளக் காலத்தில் நிலமிழந்தவர்களும் தங்களுடைய பெண்களைக் கோயில்களுக்கு விற்று விடுவார்கள். அப்பெண்களுக்கென்று கொடுக்கப்படும் விலையை நிலமாக அவர்களுக்கே ஜீவிதமாகக் கொடுப்பார்கள். அப்பெண்களின் தந்தையோ, தமையனோ, அல்லது உறவினனோ அதனைக் காணியாக அனுபவிப்பர். இவர்களுடைய எண்ணிக்கை அதிகமாகும்போது கோவில் செலவு அதிகமாகும். அதனைக் குறைக்கச் சபையாரும், அரசனும் முயற்சி செய்வார்கள். அவர்களுடைய ஜீவிதங்களைப் பறித்து கோயில் செலவில் உணவு மட்டும் அளிக்க முற்படுவார்கள். அச்சமயங்கள் உழவர்களாயிருக்கும் தேவரடியாரின் உறவினர்கள் நிலமிழப்பார்கள். இக்கொடுமையை எதிர்த்து நடந்த ஒரு நிகழ்ச்சியை ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது. தேவரடியாரது ஜீவித நிலங்களைக் கைப்பற்றிக் கொள்ளும்படி நாடாள்வனான சோழ மன்னனது அதிகாரி கட்டளை அனுப்பினான். சபையார் கட்டளையை நிறைவேற்றினர். இதனை எதிர்த்து உழவர்கள் போராட்டம் தொடங்கினர். அவர்களை ஆதரித்து ஏழைத் தேவரடியாரான திருவீதிப் பணி செய்வாரும் திரண்டனர். தங்கள் போராட்டத்துக்கு மக்கள் ஆதரவைத் திரட்ட ஒரு தேவரடியாள்முன் வந்தாள். அவள் பெயர் சதுரி மாணிக்கம். அவள் தனது வர்க்கத்தாரின் உரிமையை நிலைநாட்டக் கோபுரத்தின் மேலேறி விழுந்து உயிர் விட்டாள். நாட்டார் கட்டளையை எதிர்த்தனர் சபையார் கட்டளையை மாற்ற அரசனிடம் விண்ணப்பித்தனர். கட்டளையை மாற்ற அரசன் திருமுகம் (ஓலை) அனுப்பினான்.

அநியாயமான வரிகளை எதிர்க்க மக்கள் வரி கொடா இயக்கம் நடத்தியதும் உண்டு. அப்போர் முறை மேற்கூறிய தனிப்பட்ட தியாகங்களால் மக்கள் உணர்வைத் திரட்டிய பின் நடத்தப்படும். அதற்கு ஒரு உதாரணம் ஆடுதுறைக் கல்வெட்டு ஒன்றில் காணப்படுகிறது. அதிகாரிகளின் உதவியுடன், வன்னியர்களும், வேளாளர், பிராமணர் முதலிய நிலச் சொந்தக்காரர்களும் சேர்ந்து இடங்கைப் பிரிவில் அடங்கிய 95 வகைச் சாதியினருக்கு இழைத்த அநீதிகளைக் கல்வெட்டு கூறுகிறது. இதேபோல இடங்கை வகுப்பார் அந்தக் காலத்தில் ஏறக வேண்டி வந்த வரிச் சுமைகளையும் தெரிவிக்கும் கல்வெட்டுகள் நாட்டின் பல பாகங்களிலும் கிடைத்துள்ளன. ஆவணியிலிருந்து கிடைத்துள்ள கல்வெட்டு முக்கியமானது. அரசன் ஆணைக் கிணங்கக்கூடிய பெரிய விஷயத்தாரின் முடிவை அது தெரிவிக்கிறது. நிகரிலிச் சோழ மண்டலத்து 78 நாடுகளும், ஜயங்கொண்ட சோழ மண்டலத்து 48,000 பூமியும் உள்ளிட்ட நாடுகளில் சோழ வமிசம் தோன்றிய நாள் முதல், எருமை முதலியவைகளுக்கு வரி விதிக்கப்பட்டதில்லை என்றும், அதனால் அதிகாரியான சோழ மூவேந்த வேளான் விதித்த இவ்வரியைக் கொடுக்க வேண்டியதில்லை என்றும் முடிவு கட்டினார்கள். அன்றி 18 விஷயங்களிலும் உள்ளவர்கள் கொடுக்க வேண்டிய வரி விகிதத்தையும் நிச்சயித்து நிர்ணயித்தார்கள் இதே சாசனத்தின் பிரதி உத்தனூரிலிருந்து கிடைத்துள்ளது (கோயில் சாசனங்கள் முன்னுரை).

பெரிய விஷயத்தார் என்பவர் நாட்டாரின் பிரதிநிதிகள். மக்களின் கிளர்ச்சி வலுப்படவே மேல் வர்க்கப் பிரதிநிதிகளைக் கொண்ட சபைகள்கூட மக்களின் கோரிக்கைகளை ஆதரித்தன. இந்நிகழ்ச்சி முதல் குலோத்துங்க சோழன் காலத்தில் நடந்திருக்க வேண்டுமென்று தெரிகிறது.

சில சமயங்களில் ஆட்சியின் அநீதியையும், நில உடைமையாளரின் கொடுமையையும் எதிர்க்க மக்கள் ஆயதம் தாங்கிப் போராடியுமிருக்கிறார்கள். அரசனது ஆணைகளும், சபையாரின் முடிவுகளும், கோவில் சுவர்களில் எழுதி வைக்கப்பட்டிருந்ததால், இம்முடிவுகளை எதிர்ப்பதற்கு அடையாளமாகச் சில சமயங்களில் மக்கள் கோவில் சுவர்களை இடித்து கல்வெட்டுகளை அழித்திருக்கிறார்கள். அநியாயமான நிலப் பரிவர்த்தனைகள், கோயில் மூர்த்தியின் பெயராலோ, சாண்டேசுவரா பெயராலேயோ, செய்யப்பட்டிருந்ததால் விக்கிரகங்களைப் புரட்சிக்காரர்கள் உடைத்திருக்கிறார்கள். அக்கல்வெட்டுக்கள் மன்னர் ஆணையால் வெட்டப்பட்டதால் கலகங்களின் காரணங்கள் எவை என்பதைக் குறிப்பிட மாட்டா. ஆனால் கலகங்களால் கல்வெட்டுகள் அழிந்து விட்டதையும், மூல பத்திரங்கள் அழிந்ததையும் குறிப்பிட்டு புதிய பத்திரங்கள் பிறப்பித்ததை மட்டும் குறிப்பிடும் இக்கலகங்கள் வர்க்கப் போராட்டமே என்பதும் உறுதி. இத்தகைய கல்வெட்டுகள் மிகச் சிலவே கிடைக்கின்றன. உதாரணத்துக்கு, உடையாளூர் சாசனத்தையும், தலைச் செங்காட்டுக் கல்வெட்டையும் குறிப்பிடலாம். மூன்றாம் ராஜராஜனது 5ம் ஆண்டு கல்வெட்டு, அதற்கு முன் நடந்த கலகங்களால் மூல பத்திரங்கள் அழிந்து போயினமையால் நான்காம் ஆண்டு அளவில் உள்ள அனுபோகப் பற்றொழுகை ஒட்டி புதிய பத்திரங்கள் வழங்க அரசன் ஆணையிட்டதைக் கூறுகிறது. (உடையாளூர்) இதுபோன்றே மூன்றாம் ராஜராஜனது 19ம் ஆண்டுக் கல்வெட்டு, ஐந்தாம் ஆண்டில் நடந்த கலகங்களால் பழைய கணக்குகள் அழிந்ததால் அனுபோகப்படி புதிய ஆதாரச் சீட்டுகள் பிறப்பிக்கப்பட்டன என்று கூறுகிறது (தலைச் செங்கோடு சாசனம்). இக்கலகங்களில் நிலவுடைமையைக் குறிக்கும் கல்வெட்டுக்களும், ஆதாரச் சீட்டுகளுமே மக்கள் கோபத்துக்கு இலக்காயின என்பது குறிப்பிடத்தக்கது. ‘அவை நம் வாழ்க்கையை அழிக்கும் சின்னங்கள் அவற்றை அழித்து நமது உரிமையை நிலைநாட்டுவோம்’ என்று பழந்தமிழ் உழவர்கள் கிளர்ந்தெழுந்திருக்க வேண்டும்.

இக்கிளர்ச்சிகளாலும், புரட்சிகளாலும் சில சலுகைகள் உழவர்களுக்குக் கிடைத்தன. ஆனால் கிளர்ச்சிக்காரர்கள் கடுமையாக அடக்கப்பட்டார்களென்றும் தெரிகிறது. மேற்குறித்த புரட்சிகளுக்குப் பின் வரி கழித்ததையும் தேவரடியார் முதல் கொள்ளாதபடி ஆணை பிறப்பித்ததையும் நிலங்களை உரியவர்களுக்கு அளித்ததையும், பற்றி சாசனங்கள் கூறுகின்றன. இக்கிளர்ச்சிகள் இன்றைய வர்க்கப் போராட்டத்தில் முதல் சுடர்.
---------------

4. புராதன ஆரியரும் திராவிடரும்
(டாக்டர் ஆனந்த குமாரசுவாமி

1877-ல் பிறந்தவர். அவர் தந்தையார் யாழ்ப்பாணத் தமிழர். தாயார் ஆங்கிலப் பெண்மணி, இங்கிலாந்தில் பூகர்ப்ப இயலில் டாக்டர் பட்டம் பெற்று இலங்கை திரும்பினார். இந்திய இலங்கைக் கலைகளின் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். கலை வரலாறு, பண்பாட்டு வரலாறு, தத்துவ வரலாறு ஆகிய துறைகளில் உலகிலேயே சிறந்த ஆராய்ச்சியாளருள் ஒருவராகத் திகழ்ந்தார். சுமார் 100 நூல்களுக்கு மேல் எழுதியுள்ளார். 1947ம் ஆண்டில் உயிர் நீத்தார். அவர் எழுதிய நூல்களுள், இந்திய இந்தோனேசியக் கலைகளின் வரலாறு தலைசிறந்தது. அதைப் போன்றதோர் சிறந்த நூல் வரலாற்றுத் துறையில் இதுவரை எழுதப்பட்டதில்லை. இந்நூலில் ஆரிய திராவிடப் பண்பாடுகளைப் பற்றியும், அவற்றின் கலப்பினால் தோன்றிய இந்தியப் பண்பாட்டைப் பற்றியும் அவர் விளக்கியுள்ளார். அவரது கருத்துக்களைத் தொகுத்து இக்கட்டுரையில் விளக்க முயன்றுள்ளேன். -நா.வா.)

கிறிஸ்து சகாப்தத்துக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னரே திராவிடர்கள் இந்தியா முழுவதிலும் சிறு சிறு குடியினராகப் பரவியிருந்தனர். இவர்கள் மேற்கிலிருந்து வந்தனர் என்று சில ஆராய்ச்சியாளர் கருதுவர். ஆனால் புதிய கற்காலம் தொட்டு இந்நாட்டிலேயே பண்பாட்டு வளர்ச்சி பெற்றவர்கள் திராவிடர் என்பதே ஆனந்தரின் கருத்து. ஆரியர்கள் ‘தாஸ்யூக்கள்’ அல்லது ‘தாஸர்’ என்ற வகுப்பாரோடு ஓயாமல் போராடி வந்தார்களென்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. அவர்களது நகரங்கள் ஆரியர்களால் புரங்கள் என்று அழைக்கப்பட்டன. அவர்கள் ஆரிய இனத்தவர் அல்ல என்பது ‘அனாஸர்’ (மூக்கற்றவர்கள்) என்று ஆரியர் அவர்களுக்கு இட்ட பெயரிலிருந்து தெரிகிறது.

இன்றைய இந்தியப் பண்பாட்டில் திராவிட அம்சங்களை நாம் சுட்டிக்காட்டலாம். லிங்க வணக்கம், சக்தி வணக்கம், நாகர், யக்ஷி வணக்கம் இன்னும் இயற்கைத் தேவதை வணக்கம் முதலிய திராவிடப் பண்பாட்டிலிருந்து தோன்றியவை பல கலைகளிலும் அவர்களது காணிக்கையைக் காணலாம். ஆரியர்கள் வட நாட்டார், திராவிடர் தென்னாட்டார்; ஆரியர் திராவிடரை வெற்றி கொண்டனர். இவ்வெற்றி முடியரசு அமைப்பு இன ஆட்சி முறையின்மீது கொண்ட வெற்றி என்று வரலாற்று ஆசிரியர் கூறுவர். ஆனால் வெற்றி பெற்றவர்களது பண்பாடு, தோற்றவரது கலைகளாலும் பண்பாட்டாலும் மூழ்கடிக்கப்பட்டு, தோற்றுவிட்டது. திராவிடர் பண்பாட்டின் முக்கிய அம்சங்களான லிங்க வணக்கம், சக்தி வணக்கம், பக்தி இயக்கம், அது தோற்றுவித்த உருவ வழிபாடு முதலியன ஆரியர் பண்பாட்டை ஆட்கொண்டது. ஆரியரது யக்ஞம் என்ற வழிபாட்டு முறையை திராவிடரது பூசை என்ற வழிபாட்டு முறை ஆக்கிரமித்து மாற்றிவிட்டது.

சிற்பக் கலையில் மூங்கில் வேலைப்பாட்டின் அடிப்படையில் தோன்றிய கலை உருவங்கள், திராவிடர் கலையில் தோன்றி, இந்தியக் கலைக்குப் பரவியிருக்க வேண்டும். புத்த சைத்தியங்கள், (பிரார்த்தனை மண்டபங்கள்) புராதன திராவிடக் கல்லறைகளின் சிற்ப அமைப்பிலிருந்து தோன்றியவை. ஆரியர்கள் கடற்கரையில் வாழ்ந்தவர்களல்லர். ஆகவே கப்பல் நிர்மாண அறிவிலும், மீன் பிடித்தல், தொழில், புராதன கடல் வழி வாணிபம் அனைத்தும் திராவிடர்களுடையதே.

தட்சிணத்திலும், தென்னிந்தியாவிலும் வாழ்ந்த திராவிடருடைய வரலாறு தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் கிறிஸ்து சகாப்தத்துக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே அவர்கள் வளர்ச்சி பெற்றதோர் பண்பாட்டை உடையவர்கள் என்பதைப் புலப்படுத்தும் சான்றுகள் உள்ளன. மூன்றாம் நூற்றாண்டில் மேற்குக் கடற்கரை முதல் கிழக்குக் கடற்கரை வரை பரந்து கிடந்த ஆந்திரப் பேரரசு புகழ் பெற்று விளங்கியது. அக்காலத்திலேயே கொற்கையைத் தலைநகராகக் கொண்டு பாண்டியர் பேரரசு வலிமை பெற்று விளங்கியது. முதல் மூன்று நூற்றாண்டுகளில் தமிழ் இலக்கியமும் இன்கலைகளும் மகத்தான வளர்ச்சிபெற்று உலகப் புராதனப் பண்பாடுகளுள் சிறந்ததொன்று என விளங்கியது. தமிழ்நாடு, ரோம் சாம்ராஜ்யத்தோடும் இந்தோனேசியாவோடும் வாணிபத் தொடர்பும் கொண்டிருந்தது. தமிழகத்திலிருந்து மிளகு, முத்து, சந்தனம், தேக்கு முதலிய பொருள்கள் ஏற்றுமதியாயின.

இந்தியத் தொல் பொருள்களில் சில, கிறிஸ்து சகாப்தத்திற்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன்பும், பின்புமாகத் தோன்றியவை. அவற்றின் தோற்றகாலம் சரியாகக் கணக்கிடப்படவில்லை. பழங்கற்காலச் சின்னங்களும், நடுகற்காலச் சின்னங்களும் இந்தியா முழுவதிலும் கிடைக்கின்றன. புதிய கற்காலச் சின்னங்கள் கிறிஸ்து சகாப்தத்திற்கு அணித்தானவை. அவற்றில் கல் ஆயுதங்களும், மண்பாண்டங்களும் அடங்கும். வட இந்தியாவில் புதிய கற்காலத்தில் செம்புப் பண்பாடு தோன்றியது. இவ்வுண்மைக்கு மோஹன்ஜோதராத் தொல் பொருள்களே சான்தாக அமையும். மத்தியப் பிரதேசத்திலுள்ள ‘குங்கேரியா’ என்ற பகுதியில் செம்புக் கருவிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. சாதாரண ஈட்டி முனைகளும், பிளவற்ற ஈட்டி முனைகளும், போர்வாள்களும், மீன் தூண்டில்களும் இவ்விடத்தில் அகப்பட்டன. அவற்றுள் சில திறமையான வேலைப்பாடுடையவை. இவற்றுள் சில மிகவும் கனமாகவிருக்கின்றன. இவை தொழில்களில் பயன்பட்டிரா. பூசைக்குரியனவாக இவை இருந்திருக்கலாம். வட இந்தியாவில் கி.பி. முதல் நூற்றாண்டு வரை வெண்கலச் சாமான்கள் இருந்ததாகத் தெரியவில்லை. இரும்பு கி.மு.1000 ஆண்டுகளாகப் பழக்கத்தில் இருந்திருக்கலாம்.

ஆரியர்களுக்கு அதற்கும் முன்னரே இரும்பின் பயன் தெரிந்திருக்க வேண்டும். செம்புக்காலம் என்றதோர் பண்பாட்டுக் கட்டம் தென்னிந்தியாவில் இருந்ததாகத் தெரியவில்லை. கற்காலத்திற்கும், இரும்புக் காலத்திற்கும் இடைவெளியற்ற தொடர்பு உள்ளது. தென்னாட்டில் வரலாற்று முற்காலப் புதை பொருள் தலங்களில் இரும்புக் கருவிகள் கிடைக்கின்றன. தென்னிந்தியாவில் இரும்புக் கணியம் ஏராளமாகக் கிடைக்கிறது என்பதைக் காணும்பொழுதும், சங்க வளையல் முதலிய அணிகலன்களைச் செய்வதற்கு இரும்பு அரங்கள் தேவை என்பதை நினைவில் கொண்டும் இரும்பு தென்னிந்தியாவிலேயே உருக்கி எடுக்கப்பட்டது என்ற முடிவுக்கு வருவது தவறாகாது. வேதங்களில் இரும்பு என்ற சொல் இல்லாததைக் கவனத்தில் கொண்டு கி.மு.1500ம் ஆண்டிற்கு முன் இரும்பு வட இந்தியாவில் உபயோகத்தில் இருந்ததில்லை எனக் கூறுவாரும் உளர். ஆயினும் இந்தியா முழுவதிலும் சுமார் 3000 ஆண்டுகளாகவே இரும்புக் கால நாகரிகம் தோன்றிவிட்டது என்று கூறலாம்.

திராவிடருக்கும் முந்திய பண்பாடு ‘நிகிரிடோ’ பண்பாடு என்றும், அதுவும் இந்தியா முழுவதிலும் காணப்பட்டதென்றும் நினைக்கப் பல சான்றுகள் உள்ளன.

இந்தியாவினுள் ஆரியர் நுழைந்த காலம் சுமார் கி.மு.2000 முதல் 1600 வரை இருக்கலாம். சிந்து சமவெளியில் குடியேறி பின்னர் அவர்கள் கங்கைச் சமவெளியிலும், விந்திய மலையடிவாரத்திலும் பரவினார்கள் என்று நாம் கருதலாம். பின்னர் அவர்கள் தென்னிந்தியாவிலும் குடியேறினர். வேதகால ஆரியர் தச்சுத் தொழில், வீடுகட்டும் தொழில், ரத நிர்மாணம், உலோக வேலைகள், செம்புப் பாத்திரங்கள் செய்தல், தங்க நகைத் தொழில் முதலியனவற்றை அறிந்திருந்தார்கள். நெசவும். மண்பாண்டத் தொழிலும், தோல் பதனிடும் தொழிலும் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. தெய்வப் படிமங்களை அவர்கள் கல்லாலோ, உலோகத்தாலோ செய்தார்கள் என்பதற்குப் புராதன நூல்களில் சான்று கிடைக்கவில்லை. ஆரியர்களது கலை அழகுபடுத்தும் கலையாக அடையாளபூர்வமான கலையாக இருந்தது. இயற்கையையோ, மனிதர்களையோ, உருவபூர்வமாக அல்லாமல், அடையாளபூர்வமாக இக்கலை வெளியிட்டது. ஆனால் திராவிடக் கலையில் உருவபூர்வமான வெளியீடு காணப்பட்டது. ஆனால் வளர்ச்சியுற்ற நிலையில் அடையாள பூர்வமான கலைப்போக்கும், உருவபூர்வமான கலைப் போக்கும் கலந்து (Synthesis) புதியதோர் கலைப் போக்கு உருவாயிற்று. உதாரணமாக பெளத்தக் கலையில் உருவமும், அடையாளமும் ஒன்றி நிற்பதைக் காணலாம். யானையின் உருவமும், அதன் பொருளான செழிப்பும் பழங்கால நாணயங்களின் சின்னங்களாகக் காணப்படுகின்றன. யானையின் உருவம் செழிப்பை அடையாளமாக உணர்த்தும். இதில் இரண்டு கலைப்போக்குகள் கலந்து பரிணமித்து முழுமையடைவதைக் காணலாம். இதுபோலவே உடைகளின் கரைகளிலும், சுவரில் எழுதிய கொடி சித்திரங்களிலும் இக்கலப்புப் போக்கைக் காணலாம். ஆனால் இக்கலை இணைப்பு மிகப்பழங்காலத்திலேயே தோன்றி விட்டது. குஷானர் காலகட்டத்தில் நிலவிய கலை பக்தி இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. இது சாராம்சத்தில் திராவிடர் கலையாகும். புத்த கயாவிலுள்ள ‘இந்திர சாந்தி’ உருவம் திராவிடர் கலையை ஆரியர் கலை மாற்றியமைத்ததின் விளைவாகும். குப்தர்காலப் புத்தர் படிமங்களும் எலிபான்டா குகையிலுள்ள மகேசுவரர் திருவுருவமும், பல்லவர் காலத்து லிங்கங்களும், நடராஜர் மூர்த்தங்களும், இரு ஆன்ம ஓட்டங்களினால் விளைந்த கலை உருவங்களாகும். தென்னாட்டில் ஆயிரக்கணக்கான தெய்வத் திருவுருவங்கள் உள்ளன. இவை யாவும் இந்திய சிற்பக் கலையின் ஆழ்ந்த தத்துவத்தை வெளியிடுகின்றன. ஒவ்வொரு தெய்வத்தின் உருவமும் அடையாள பூர்வமானதாகும். வழிபடுபவன் தனது உணர்வின் உருவமாகவும் சிலையைக் காண்கிறான். வரலாற்றுக் கால இந்தியக் கலையிலும், தத்துவத்திலும், புலனுணர்விற்கும், அகத்துறவிற்கும் இடையேயுள்ள முரண்பாட்டைத் தீர்த்து ஒன்றுபடுத்த நிகழ்ந்த நிகழ்ச்சியை நாம் காண்கிறோம். மேற்கும், கிழக்கும், வடக்கும், தெற்கும் இவ்வாறாக ஒன்றி உருமாறிப் புதியதொரு முழுமையான கலை இந்தியாவில் தோன்றி வளர்ந்தன. இவை யாவும் 2000 ஆண்டுகளுக்கு முன்னேரே நிகழ்ந்து வளர்ச்சியுறத் தொடங்கி விட்டன. உலோகங்கள் கண்டுபிடிக்கப்படுவதன் முன்னரே ஆரியத் திராவிட பண்பாட்டுக் கலப்பு முழுமை பெற்று விட்டது.
-------------------

5. தமிழக வரலாற்றுக் கண்ணோட்டங்கள்

கடந்த 5 ஆண்டுகளில் தமிழக வரலாற்றுச் சான்றுகள் பல வெளியாகியுள்ளன. புதைபொருள் ஆராய்ச்சியாலும் கல்வெட்டு ஆராய்ச்சியாலும் இலக்கிய நூல்களிலுள்ள வரலாற்றுச் சம்பவங்கள் குறித்த ஆராய்ச்சியாலும் பற்பல வரலாற்று நிகழ்ச்சிகள் ஆராய்ச்சியாளர்களது கவனத்திற்கு வந்துள்ளன.

வரலாறு நிகழ்ச்சிகளின் கோர்வையல்ல. வரலாற்று ஆசிரியர் நிகழ்ச்சிகளைத் தமது கண்ணோட்டத்திற்கு ஏற்ற முறையில் பகுத்து ஆராய்ந்து அவற்றிற்குப் பொருள் கொடுக்கிறார்கள். அதனாலேயே ஒரேவிதமான நிகழ்ச்சிகள் கண்ணோட்ட வேறுபாட்டால் இருவிதமான பொருள் பெறுவதுண்டு.

தமிழக வரலாற்றுத் துறையில் இருவகையான கண்ணோட்டங்களை நாம் காண்கிறோம். ஒவ்வொரு கண்ணோட்டமும் குறிப்பிட்ட அரசியல்-சமூக சூழ்நிலையில் எழுகின்றது. பின்னர் அக்கண்ணோட்டம் வரலாற்று நிகழ்ச்சிகளுக்குக் குறிப்பிட்ட முறையில் பொருள் அளிக்கின்றது. இவ்வாறு வரலாற்றின் பொருள், கண்ணோட்டத்தைப் பொறுத்ததாகி விடுகிறது.

நமது வரலாற்றை நாம் அறிந்து கொள்வதற்கு மேற்குறித்த இரு கண்ணோட்டங்கள் எவ்வகையில் வழி காட்டுகின்றன? எச்சூழ்நிலையில் அவை எழுந்தன? அவற்றின் மூலம் வரலாற்றுண்மையை அர்த்தப்படுத்திக் கொள்ள முடியுமா? என்னும் வினாக்களுக்கு விடை காண முயலுவோம்.

இந்திய வரலாறு முதன்முதலில் ஆங்கிலச் சரித்திர ஆசிரியர்களால் எழுதப்பட்டது. அவர்களில் வின்சென்ட் ஸ்மித் முக்கியமானவர். அவர் சரித்திரம் எழுத மேனாட்டு ஆசிரியர்களது கீழ்திசைத் தத்துவ ஆராய்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டார். ஆங்கில ஆதிக்கம் இந்நாட்டில் பரவுவதற்கு முன் இந்தியாவில் தோன்றியிருந்த நாகரிகத்தைப் பற்றி உயர்வான எண்ணம் அவருக்குக் கிடையாது. ஆங்கில ஆதிக்கம் இந்நாட்டில் பரவியது இந்நாட்டின் தவப்பயன் என்று எண்ணினார். ஆங்கில ஆட்சியின் மேன்மையை விளம்பரப்படுத்த விரும்பினார். இக்கண்ணோட்டம் வரலாற்றுண்மைகளை அவருடைய போக்கில் காண உதவிற்று. இவரைப் போன்றே பல ஆங்கில ஆசிரியர்கள் இந்நாட்டு உண்மைகளைக் கண்டார்கள். இது ஏகாதிபத்தியக் கண்ணோட்டமாகும். இவர்கள் இந்நாட்டு மக்களின் ஒற்றுமையை விரும்பவில்லை. எனவே ஒவ்வொரு இன மக்களின் நாகரிகத்தையும் தனிப்பட்டதாகவும், ஒன்றிற்கொன்று முரண்பட்டதாகவும் வருணித்தார்கள். ஆரிய நாகரிகம், திராவிட நாகரிகம் இவற்றிடையே தவிர்க்க முடியாத முரண்பாடுகள் இருப்பது ஆகிய தன்மைகளை இவர்கள் கண்ணோட்டக் கண்ணாடி மூலம் பெரிதாக்கிக் கொண்டார்கள். இந்து முஸ்லீம் முரண்பாடுகளைப் பெரிதாக்கி வரலாற்றில் அதனையே நமது இடைக்கால வரலாற்றின் அச்சாணியாக்கிக் காட்டினார்கள். ஆங்கில ஆசிரியர்களில் சிலர் ஆரிய நாகரிகத்தை உயர்த்தினர். சிலர் இந்து மன்னர் ஆட்சியை உயர்த்திப் பேசினர். இன முரண்பாடுகளையும் மிக விரிவாக எழுதினர்.

இந்நூல்கள்தாம் நமது தமிழக வரலாற்று ஆசிரியர்களின் மூல நூல்கள். அவற்றை அவர்கள் பயன்படுத்திய விதத்தை நாம் ஆராய்தல் வேண்டும்.

தமிழக வரலாற்றை எழுதியவர்களில் இரு கண்ணோட்டங்கள் கொண்டவர்கள் உண்டு என்று முன்னர் குறிப்பிட்டேன். முதல் கண்ணோட்டம் எது என்று தற்போது காண்போம்.

தமிழக வரலாற்றில் சிற்சில பகுதிகளை முதன் முதலில் எழுதியவர்கள் எஸ். கிருஷ்ணசாமி அய்யங்கர், நீலகண்ட சாஸ்திரியார், பி.டி.ஸ்ரீனிவாச அய்யங்கார் முதலியோர். இவர்கள் யாவரும் ஆங்கில ஆட்சிக் காலத்தில் ‘அறிவாளி’ வர்க்கம் என்று கருதப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள். இவ்வர்க்கம் ஆங்கில ஆட்சியில், அதன் உதவியோடு உயர்ந்து அதன் ஆதிக்கத்தில் பணிபுரிந்தது. ஆரிய உயர்வு பற்றி தமக்கே உரிய உணர்வு, ஆங்கில ஆசிரியர்களால் போற்றப்பட்டது கண்டு பெருமை கொண்டது. ஆரிய நாகரிகம், வேத நூல்கள், உபநிஷத் தத்துவங்கள், வடமொழி நூல்களில் காணப்படும் அரசியல் கருத்துக்கள் இவற்றை ஆங்கிலேய மொழி பெயர்ப்பாளர்கள் மூலம் உணர்ந்து அவற்றைப் பெருமையோடு போற்றினர். ஆங்கில நாகரிகம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் எவ்வாறு கீழ் நிலையிலுள்ள இந்திய நாகரிகத்தை மாற்றியமைத்ததோ, அதுபோலவே இந்தியாவின் பழங்காலத்திலுள்ள பல்வேறு நாகரிகங்களையும் ஆரிய நாகரிகம், மாற்றியமைத்தது என எண்ணினர். இந்நாகரிகத்தின் பிரதிநிதிகள் தமிழ்நாட்டில் ‘பிராமணர்’கள் என்று அவர்கள் நினைத்தனர். உதாரணமாக, எஸ்.கிருஷ்ணசாமி ஐயங்காரின் சொற்பொழிவுகளுக்கு, அவர் எழுதிய முன்னுரையில் இக்கருத்தை அவரே கூறுகிறார்:

‘தென்னாட்டில் பிராமணருடைய ஸ்தானம் தனித்தன்மை வாய்ந்தது. வெளிநாட்டாருடைய மதிப்பீட்டில், வேதகால முறை, அடிப்படை மாறுதல் எதுவுமின்றி தென்னாட்டில் நிலவி வருகிறது. தென்னாட்டில் பிராமணருடைய ஸ்தானம் பற்றிய விவாதம் தற்பொழுது முன்னணிக்கு வந்துள்ளது. இந்நிலையில் வரலாற்று ரீதியாக இப்பிரச்சினையை ஆராய்வது அவசியம். இந்திய சமூகத்தில் பிராமணருடைய ஸ்தானம் பற்றி ‘ஸ்த பாத பிராமணம்’ கூறுகிறது. தென்னாட்டிலும் அதே ஸ்தானம் அவர்களுக்கு இருந்தது (வட நாட்டிலிருந்து தென்னாட்டிற்குக் குடியேறிய காலத்திலிருந்து சமீப காலம் வரை இந்நிலை மாறவில்லை). அவர்களுக்கு இரண்டு பொறுப்புகள் சமூகத்தில் இருந்தன. ஒன்று சமூக நன்மைக்காக யாகம் முதலிய வழிபாடுகளைச் செய்வது; மற்றொன்று கல்வி கேள்விகளைப் பாதுகாத்து வளர்ப்பது. இவற்றைப் பாதுகாப்பது என்றால் இவற்றைச் சமூகத்தில் பரப்புவதும் அடங்கும்.

கிடைக்கும் ஆதாரங்களினின்றும், பிராமணர் தங்களது கடமையைத் திறமையாகச் செய்து, தங்கள் நடைமுறையினின்றும் பிற மக்களின் உயர்வுக்கு வழிகாட்ட உதாரணமாகத் திகழ்ந்தார்கள் என்று தெரிகிறது. அவர்களுக்குக் கீழ்நிலையிலிருந்த பிறர் அவாகளைப பின்பற்றி அவாகளுடைய நிலைக்கு உயர முயன்றார்கள். எனவே இந்தியாவிலுள்ள பெருவாரியான மக்களின் சமூகம் உயர்வதற்கு பிராமணர்கள் முக்கிய காரணமாக இருந்தார்கள். தமிழ் இலக்கியத்தில் புகழ்பெற்ற பெயர்களைப் பார்த்தால் இந்த உண்மை விளங்கும். பிராமண முறை சமுதாய அமைப்பே கல்வி, நாகரிகம் முதலியன தமிழ் தாட்டில் முன்னேறியதற்குக் காரணம்.’

இந்த மேற்கோளிலிருந்து தமிழக வரலாற்றின் ஒரு கண்ணோட்டம் தெளிவாயிற்று. மேலும் அது எழுந்த சமூகச் சூழ்நிலையும் ஒருவாறு விளங்கப்பட்டது.

இனி இரண்டாவது கண்ணோட்டத்தை ஆராய்வோம்.

தமிழ்நாட்டில் பிராமணருக்குச் சமமாகத் தங்களைக் கருதிக் கொண்ட சைவர்களான முதலியார், பிள்ளை, சைவச் செட்டியார்கள், நகரத்தார், கவுண்டர் முதலிய நிலப்பிரபுத்துவ வர்க்கத்தைச் சார்ந்தவரும் சமூக நிலையில் பிராமணருடைய ஆதிக்கம், தங்களுக்கு வேண்டுமென்று எண்ணினர். ஆங்கில ஆதிக்கத்தில் ‘அறிவாளி வர்க்கமா’கத் தாங்கள் உயர வேண்டுமென எண்ணினர். பிராமணர்களுடைய ஆரிய நாகரிகக் கொள்கை இவர்களுக்கு வரப்பிரசாதமாகக் கிடைத்தது. இவர்களும் ஒரு தத்துவத்தை உருவாக்கிக் கொண்டனர் அதற்கு அடிப்படை ஆரிய, திராவிட நாகரிகங்களிலுள்ள முரண்பாடுகளைப் பற்றி, ஆங்கில ஆசிரியர்களுடைய கருத்துக்கள்தாம் தமிழிலக்கியத்தில் இவர்கள் தென்னாட்டுப் பெருமையைக் கண்டார்கள் தமிழின் சிறப்பையும், தமிழ் நாட்டின் தொன்மையையும் நிறுவ இவர்கள் வரலாறு காணத் துணிந்தனர். இச்சமயம் ‘மோகன்ஜதாரோ, ஹரப்பா’ அகழ்வு ஆராய்ச்சிகள் வெளிவந்தன. அவற்றைப் பற்றி ஹீராஸ் பாதிரியார் என்ற மேனாட்டு ஆராய்ச்சியாளர் கருத்துக்களை விமர்சனம் எதுவுமின்றி அப்படியே ஏற்றுக் கொண்டனர். பிராமணர்கள் ஆரிய உயர்வைப் பற்றி எழுதினால் இவர்கள் ஆரிய இழிவையும் திராவிட உயர்வையும் பற்றி எழுதினர்.

வரலாற்று நிகழ்ச்சிகளை திராவிட உயர்வு என்ற கண்ணோட்டத்தில் இவர்கள் கண்டனர். வேத கால முறை தமிழ் நாட்டில் மாறாமல் இருக்கிறதென்று முதல் கண்ணோட்டமுடையவர்கள் கூறினால் இவர்கள் கற்கால முதல், தமிழ் நாடும், திராவிட நாடும் எவ்விதத்திலும் மாறவில்லை என்று கூறினர். தங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தேட, தென்னாட்டு வரலாறே, திராவிட ஆரிய முரண்பாடுதான் என்று கூறினர். இராமாயணக் கதையை ஆரிய திராவிடப் போராகச் சித்தரித்தனர். சுக்ரீவனையும், அனுமானையும் ஆரிய அடிவருடிகளாக்கினர். வாலியை ஆரிய ஆதிக்கத்தை எதிர்க்க திராவிட வீரனாக்கினர். ஆரியர் ஆதிக்கத்தை எதிர்க்கத் திராவிட நாடு என்றும் போராடியுள்ளது; இது விடுதலை காக்கும் உணர்வு என்று அந்த மூச்சில் வடநாட்டை அடக்கியாண்டான் கரிகாலன் என்றும், கனக விசயர் தலையில் கல்லேற்றிக் கொணர்ந்தான் செங்குட்டுவன் என்றும் ஆதிக்கப் பெருமை பேசுவர். ஆரியப் படைக் கடந்த நெடுஞ்செழியன் என்ற பெயரைக் கொண்டு, பெரும் போர் ஒன்று நடந்ததாக ஆதாரமின்றியே கயிறு திரிப்பர்.

இவ்விரண்டு போக்குடையோர் ஆங்கில வரலாற்று ஆசிரியர்கள் தனித் தனியே விரித்து வைத்த இரண்டு வலைகளில் விழுந்து அதனையே வரலாற்று ஆதாரமாகக் கற்பனை செய்து கொண்டார்கள்.

தமிழ்நாட்டு வரலாற்றை இவ்விரு கண்ணோட்டமுடையோராலும் புரிந்து கொள்ள முடியாது. ஏனெனில், இவையிரண்டுமே விஞ்ஞானக் கண்ணோட்டங்களல்ல.

தமிழ்நாட்டு வரலாற்றை உண்மையாக்கிப் புரிந்து கொள்வதற்குத் தமிழ் நாட்டு வளர்ச்சியையும், பிற இனங்களோடு தமிழர் சமுதாயம் கொண்ட தொடர்புகளையும் ஆராய வேண்டும்.

தமிழர் சமுதாய வளர்ச்சியை வரலாற்றுத் தொடக்ககால முதல் ஆராய்வதற்கு, சிற்சில பிராமிக் கல்வெட்டுகளும், சங்க இலக்கியங்களும் ஆதாரமாக அமையக் கூடும். புத்த மத வரலாற்று நூல்களும், சைவ வைணவ சமய நூல்களும் ஒரளவு உதவி புரியக் கூடும். பல்லவர் காலத்திற்குப் பின் ஏராளமான கல்வெட்டுக்கள் கிடைக்கின்றன. அவையாவும் பெயர்த்து எழுதப்பட்டால் வரலாற்றின் அடிப்படை செம்மையாக அமையும். காசுகள், பழம் பொருள்கள் முதலியவை பற்றிய ஆராய்ச்சி இனிதான் தொடங்க வேண்டும். அவை மேற்கொள்ளப்பட்டால் சரித்திரத்தைப் பற்றிய புதிய உண்மைகள் வெளியாகும். தமிழ் நாட்டுப் பண்டைய நகரங்கள் இருந்து மறைந்து போன இடங்கள் அகழ்ந்து ஆராயப்பட்டால், புதிய புதிய உண்மைகள் வெளியாகும்.

இவ்வாறு கிடைக்கும்.ஆதாரங்களின் சமுதாய வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு தமிழ் நாட்டு வரலாறு எழுதப்பட வேண்டும். மலையிலும் கடற்கரையிலும் சிறு குடியாக வாழ்ந்த தமிழன், தனது உழைப்பினால் உற்பத்திச் சக்திகளை வளர்த்து முன்னேறி, முல்லை நிலத்திலும், மருதத்திலும் பெருவாழ்வடைந்து பேரரசுகளை நிறுவி, பல்வேறு நாட்டு மக்களோடு நேசப்பான்மையோடும், போர் புரிந்தும் எவ்வாறு வாழ்ந்தான் என்பதை சமூக வளர்ச்சி அடிப்படையில் அன்றி எழுத முடியாது. இது போலவே பிற இன மக்களும், படிப்படியாக வளர்ச்சி பெற்றனர். இந்தியாவில் வளர்ச்சி பெற்ற பல இனங்களைச் சேர்ந்த மக்கள் வாணிபத்தின் மூலம், அறிவுத் தேட்டத்தின் மூலம் நிலப்பிரபுத்துவப் போர் வெறியர் துண்டுதலாலும், சிற்சில வேளைகள் நேச உறவோடும், சிற்சில வேளைகள் போரின் மூலமாகவும் தொடர்பு பெற்றனர்.

இவற்றால் சமூக வளர்ச்சிகள் சிக்கலடைந்தன. பண்பாட்டுக் கலப்புகள் ஏற்பட்டன. சமுதாய மாறுதலுக்கேற்ற வகையில் பண்பாட்டு மாறுதல்களும் நிகழ்ந்துள்ளன.

ஒரு இன மக்களின் பண்பாட்டில் வளர்ச்சியுறும் அம்சங்களும் உண்டு தேய்வுறும் அம்சங்களும் உண்டு. பண்பாட்டுக் கலப்பு நிகழும் போது சூழ்நிலை, இரு பண்பாடுகளின் பக்குவ நிலை பொறுத்து பண்பாட்டு அம்சங்கள் சில இணையும், சில அம்சங்கள் இணையா,

இதை மனத்துட் கொண்டு தமிழர் சமுதாய வளர்ச்சிப் போக்கை உண்மையாகச் சித்தரிக்கும் வரலாறு எழுதப்பட வேண்டும். இனக் கண்ணோட்டமோ சாதிக் கண்ணோட்டமோ உண்மையைக் கான உதவாது. வரலாறு ஒரு சமூக விஞ்ஞானம். அது பல விஞ்ஞானங்களின் துணையோடு எழுதப்பட வேண்டும். மானிட இயல், அகழ்வு ஆராய்ச்சி, காசு ஆராய்ச்சி, சமூக இயல், அரசியல், பொருளாதாரம் ஆகிய விஞ்ஞானங்களின் துணையோடு வரலாறு எழுதப்பட வேண்டும். இலக்கியமும் கலைகளும் சமூக வளர்ச்சிக் கண்ணோட்டத்தில் சரித்திரம் எழுதத் துணையாகும்.

இத்தகைய கண்ணோட்டத்தை உருவாக்குவது உண்மை வரலாறு காண விரும்புவோர் கடமையாகும்.
------------------

6. மூடுதிரை

(‘நாடும் நாயன்மாரும்’ என்றதோர் ஆராய்ச்சிக் கட்டுரையை இலங்கைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறை உரையாளர் க. கைலாசபதி அவர்கள் எழுதி வெளியிட்டுள்ளார்கள். சைவம் பெருவெள்ளம் போலத் தமிழ் நாட்டில் பெருகிய காலத்தில் நிலவிய சமூக அடித் தளத்தையும், தத்துவ மேற்கோப்பையும் அவர் அக்கட்டுரையில் ஆராய்கிறார். இத்தகைய முயற்சி நம் நாட்டுத் தத்துவங்களை, சமூக அடித்தளத்தோடு சேர்த்துக் கற்றுக் கொள்வதற்கோர் வழிகாட்டியாக உள்ளது. இம்முயற்சி மிகவும் போற்றத்தக்கது. ஆயினும் அவருடைய வரையறுப்புகளிலிருந்து நான் பல விஷயங்களில் மாறுபடுகிறேன். கண்ணோட்டம் ஒன்றாயினும் அது ஆதாரங்களை வரிசைப்படுத்தும் போது வேறுபடக் கூடும். அது கண்ணோட்டத்திலுள்ள குறைபாடாகவோ ஆதாரங்கள் போதிய அளவு சேகரிக்கப்படாததாலோ இருக்கலாம் இது அவருடைய கட்டுரைக்கு மட்டுமல்ல, என்னுடைய இச்சிறு கட்டுரைக்கும் பொருந்தும். இது போன்ற பல கட்டுரைகள் வெளியாகுமாயின், நமது கருத்துக்களைத் தொகுத்து விவாதித்து நமது பொதுவான கண்ணோட்டத்தையும் புரிந்து கொண்டு ஆதாரங்களை ஆராய்வதில் கருத்து ஒற்றுமை ஏற்படும் என்ற உறுதியான நம்பிக்கையோடு இதனை எழுதுகிறேன்-நா.வா.)

நாயன்மாரது பக்தி வெள்ளமான இலக்கியத்தின் அடித்தளத்தைக் காண ‘நாடும்-நாயன்மாரும்’ என்ற கட்டுரை முயலுகிறது. இம்முயற்சி மிகவும் கடினமானது. கடினமான இப்பணியை மேற்கொண்ட கைலாசபதி அவர்களின் துணிவை நாம் போற்ற வேண்டும். அம்முயற்சி இத்துறையில் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தினால் அதுவே மேற்கொண்டு ஆராய்ச்சிகள் தோன்ற வழிவகுக்கக் கூடும். இப்பயனை இக்கட்டுரைத் தோற்றுவிக்கும் என்பதே என் நம்பிக்கை.

இக்கட்டுரையில் சைவம் தனக்கு முன் தமிழ் நாட்டில் வேரூன்றி நின்ற இரண்டு சமயங்களை எதிர்த்துப் போராடி வளர்ந்தது என்று ஆசிரியர் எடுத்துக் காட்டுகிறார். அதனைப் பற்றி அவர் தரும் முடிவுகளே பின்னர் சைவம் இவ்விரு சமயங்களை எதிர்க்க எத்தத்துவத்தை உருவாக்கிக் கொண்டது என்பதை விவரிக்க அடிப்படையாக அமைந்துள்ளது. ஆகவே இவ்விரு சமயங்களின் சமூக அடிப்படையை விரிவாக ஆராய்தல் அவசியம்.

கி.மு. நான்காம் நூற்றாண்டளவில் தமிழ் நாட்டில் குலங்களும், குடிகளும் அழியத் தொடங்கி நிலவுடைமை முறை தோன்றத் தொடங்கிவிட்டது. அம்முறையின் அரசியல் வடிவம் குறுநில மன்னர் ஆட்சி, தென் தமிழ் நாட்டில் பொருநைக் கரையிலும், காவிரிக் கரையிலும், பெருவிளைச்சல் காரணமாக அரசுகள் எழுந்தன. இதுவும் இரண்டாம் நூற்றாண்டு முதல் நடை பெற்று வந்ததென ஆதாரத்தோடு சொல்லலாம்.[1]

குலங்களையும், குடிகளையும் விழுங்கிவிட்ட சிற்றரசுகள் தம்முள் போட்டியிட்டு மூன்று முடியரசுகளாயின. அவை, சிதைவைத் தவிர்க்க பெளத்தத்தைக் கருவியாக்கிக் கொண்டன. பெளத்தம் இணைப்புக் கருவியாகப் பயன்பட்டது. குழுக்களிலுள்ள மாற்ற முடியாத பழைமைப் பற்றை ஒழிக்கப் பெளத்தம் பயன்பட்டது. குழுவினுள் அடங்கிச் சிறு தெய்வ வணக்கத்தில் ஆழ்ந்திருந்த மக்களை பெளத்தம் தனது ஜாதகக் கதைகளினாலும், எழுத்தறிவினாலும். நீதி போதனையாலும், புத்தனைக் கடவுளாக வழிபடும் வணக்க முறையைப் புகுத்தியதாலும், புதிய அகன்ற உலகத்தை கற்பனையில் காண உதவிற்று.[2]

கி.மு. ஆறாம் நூற்றாண்டில் வடமேற்கு இந்தியாவில் காணப்பட்ட நிலைமையையும், தமிழ் நாட்டில் கி.மு.2, 1ம் நூற்றாண்டில் நிலவிய நிலைமையையும் ஒன்றெனக் கொள்ள முடியாது. இக்காலத்தில் தென்னாட்டில் அரசுகள் நிலைத்துவிட்டன. வர்க்கப் பிரிவினைகள் தீவிரமடையத் தொடங்கி விட்டன. உணவுக்குத் திண்டாடிய நாட்டில் தேவைக்கு மிஞ்சும் உற்பத்தி தோன்றிவிட்டது. அதன் காரணமாக உள்நாட்டு வாணிபமும் தலைதூக்கத் தொடங்கிற்று. முதலில் நிலக்கிழாரில் ஒரு பகுதியினரே வாணிபத் துறையில் இறங்கியிருக்க வேண்டும். ஏனெனில் அவர்களிடம் தானே தேவைக்குப் போக எஞ்சிய தானியம் இருக்கும்? விவசாய உற்பத்தி அதிகமாக வாணிபமும் செழித்தது. பல புதிய பொருள்களுக்குத் தேவை பிறந்தது. இத்தேவை வணிக வர்க்கத்தை வளர்த்தது. முதலில் நிலக்கிழார் வர்க்கத்திலிருந்து தோன்றிய வணிக வர்க்கம் நிலக்கிழார்களின் நிலப்பிடிப்பை எதிர்த்து நிற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதுதான் கி.பி. முதல் நூற்றாண்டு முதல் 8ம் நூற்றாண்டுவரை நிலவிய வர்க்க முரண்பாட்டின் சித்திரம். [3]

இந்நிலையில் பெளத்தம் தமிழ் நாட்டில் பரவியது. பிராமி சாசனங்களின் காலம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டு என்பது உண்மையானால் அது அக்காலத்தில் பரவத் தொடங்கியது என்று கொள்ளலாம். ஆனால் செல்வாக்கு பெறவில்லை. அது தமிழ் நாட்டிற்கு வந்த காலத்தில் கி.மு.6ம் நூற்றாண்டில் தோன்றிய ‘தர்ம பாதையாக’ வரவில்லை, 6-ம் நூற்றாண்டில் சமூக மாறுதல்கள், பெளத்த தத்துவங்களையும் மாற்றியிருந்தது. இங்கு வந்த தத்துவம் ‘ஹினாயன’ தத்துவம். இதில் விக்ரக வணக்கம் உண்டு. சக்ரவர்த்திகளும் போதி சத்துவர்களும் சமமாகக் கருதப்படுகிறார்கள், சக்கரவர்த்திகள் பல பிறப்புகளில் செய்த புண்ணியம் காரணமாக அப்பதவியடைகிறார்கள் என்ற கருத்துக்கள் காணப்படுகின்றன. ஆணைச் சக்கரமும், தர்ம சக்கரமும் இணைக்கப்படுகின்றன. நிலப்பிரபுத்துவம் வடநாட்டில் பரவி பேரரசு தோன்றிய காலத்தில் அதற்காதரவாகத் தோன்றிய தத்துவம் இது. இதுதான் தமிழ் நாட்டில் நிலப்பிரபுத்துவம் வளருவதற்கும் அவசியமான தத்துவமாக இருந்தது. இக்காலத்தில் போர் அவசியமில்லை. ஆகவே அஹிம்சையை ஒரு தத்துவமாகக் கொண்ட ‘ஹினாயன பெளத்தம்’ ஆளும் வர்க்கத்தினரால் ஏற்றுக்கொள்ளப் பட்டது.

சமணம் தமிழ்நாட்டில் பின்னரே தோன்றியது. தோன்றும் காலத்தில் அது பேரரசு தோன்றவே ஆதரவான கொள்கைகளைக் கொண்டிருந்தது. பெருங்கதை முதலிய முற்காவியங்களின் அடிப்படைக் கருத்துக்களும் கதாநாயகர்களது பண்புகளும் இதற்குச் சான்று. ஜீவக சிந்தாமணி பேரரசு ஆதரவில் மிக மிக முன்னேறிச் சென்றது. [4]

இவை யாவும் சமணக் காப்பியங்களாயினும், உலகியலில் கௌடலியத்தைப் பின்பற்றுகின்றன. பேரரசுகள் நிலைக்கவே சாணக்கியர் தமது அர்த்த சாஸ்திரத்தை எழுதினார் என்பது அறிஞர்கள் ஒப்புக்கொள்ளும் உண்மையே.

இவ்விரு சமயங்களும், அவற்றின் வளர்ச்சிக் காலத்தில் சாதித்த மாறுதல்கள் எவை?

சிறு குழு உணர்வைத் தகர்த்தன.
பேரரசு தோன்றத் துணை செய்தன.
வாணிபம் வளரவும், வணிக வர்க்கம் தோன்றவும் துணை செய்தன.
குழுக்களையும் சாதிகளையும் ஒரளவு ஒன்றாக இணைத்தன.
மொழி வளர்ச்சிக்கு உதவின.
புதிய பாட்டுருவங்களைப் புகுத்தி காவிய காலத்துக்குப் பாதை அமைத்தன.
ஒரே தமிழ்நாடு என்ற அமைப்பை மக்களும், மன்னரும் வணிகரும், நோக்கமாகக் கொள்ள உதவின.
இதன் மூலம் கலாச்சார ஒருமையை வளர்த்தன.

காவியங்களின் மூலம் இந்தியப் பண்பாட்டோடு, தமிழ் நாட்டின் பண்பாட்டை இணைத்தன.
போரைத் தவிர்த்து வாணிப வளர்ச்சிக்கு உதவின.
இம்மாறுதல்களின் காரணமாக சமூகச் சித்திரம் மாறுபாடடைந்தது. மன்னர்கள், நிலக்கிழார் வர்க்கம் வலுப்பெற்றால் அதனோடும். வணிக வர்க்கம் வலுவடைந்தால் அதனோடும் மாறி மாறிச் சேர்ந்துகொண்டார்கள். சமூக மாறுதல்களால் தோன்றிய நிலமற்ற உழவரும், நிலத்தொடர்பிழந்த கைத்தொழிலாளரும், விதிக் கொள்கையால் உயர் வர்க்கங்களின் பிடிப்புக்குள்ளாயினர். அவற்றை எதிர்க்க முடியாதபடி விதிக்கொள்கை அவர்களைச் செயலற்றவராக்கியது.

களப்பிரர் காலத்தில் (இக்காலத்தில் தமிழ் மொழி இலக்கண அடிப்படை பெற்றது.) ஆரம்ப இலக்கியங்கள் தொகுக்கப்பட்டன. காவிய காலத்தின் தொடக்கமும், நீதி நூல்களின் ஆரம்பக் காலமும் அதுவே. இம்மாறுதல்கள் நெருக்கடியை நோக்கி விரைந்தன. நிலப் பிரபுத்துவ வர்க்கம், நிலத் தொடர்புடைய தொழில் புரியும் மக்களைத் திரட்ட முயன்றது. இவ்வர்க்கங்கள் சமூக அடிப்படை அமைத்துக் கொள்ளும் முயற்சியில் வர்க்கப் போராட்டம் முற்ற ஆரம்பித்தது. இச்சமயம் உழைக்காத ஆயிரக்கணக்கான பிரபுக்களும், திகம்பர ஸ்வேதாம்பரத் துறவிகளும், உணவு பெற பள்ளிச்சந்த நிலங்களை அரசர் உதவியால் பெருக்கிக் கொண்டனர். விகாரைகளும், சைத்தியங்களும் சமணப் பள்ளிகளும் நிலப்பிரபுத்துவ ஸ்தாபனங்களாயின. இவை வணிக வர்க்கத்தாரோடு பொருளாதாரத் தொடர்பு பூண்டன. அவர்கள் நிலத்தில் விளைந்தவற்றை வணிகர் வாங்கி விற்றனர், அல்லது கச்சாப் பொருளாக வாங்கிச் செய் பொருள்களைச் செய்தனர். இவைத் தவிர நிலக்கிழார்கள். சிறு நில உடைமையாளர்கள் ஏராளமாக இருந்தனர். சமண, பெளத்த சமய நிறுவனங்கள் பெரும் சுரண்டல் ஸ்தாபனங்களாயிருந்தன. அவை, தாம் நேரடியாகச் சுரண்டும் உழவர்கள். தமது செல்வாக்கினால் பாதிக்கப்பட்ட நிலக்கிழார்கள், சிறு நில உடைமையாளர் ஆகிய பகுதியினரின் வெறுப்புக்காளாயின. தம்மை ஆதரிக்கும் வியாபாரிகளின் நலனுக்காகவே ‘மத ஸ்தாபனங்கள், நிலங்களை நிருவகித்தன. ‘மத்தவிலாசப் பிரகசனம்’ பெளத்த விகாரைகளின் செல்வச் செழிப்பையும், செல்வாக்கையும் கூறுகிறது.

இவ் வர்க்கங்களில் பெருநிலக் கிழார்கள், சமண பெளத்த எதிர்ப்புக்குத் தலைமை தாங்கினர். அவர்களது போராட்டத்திற்கு பக்தி இயக்கம் உதவியாக இருந்தது. வெளிப்படையாக அது எந்த நலனையும் ஆதரிக்காவிட்டாலும் சமண, பெளத்த, எதிர்ப்பு - பொருளாதாரத் துறையில் வாணிக வர்க்க எதிர்ப்பாகவே சாராம்சத்தில் இருந்தது.

நிலப்பிரபுத்துவ சமூக அடிப்படையை விரிவுபடுத்த எல்லோரையும் ஆகர்ஷிக்கும் வண்ணம், மக்கள் அனைவரும் சகோதரர்கள். ஒரே குலம் என்ற தத்துவத்தை சமயம் பரப்பியது. கொள்வினை, கொடுப்பு வினை செய்துகொள்ள ஆதரவு காட்டியது. உறவில்லாத உறவை சிருஷ்டித்தது. (ldylic retations) சிவனை, விதியை வெல்ல வழி காட்டும் மூலத் தலைவனாக்கியது. நிலப்பிரபுத்துவச் சுரண்டலால் ஏற்படும் வேதனைகளுக்கும், துன்பங்களுக்கும் விகாரைகளும், பள்ளிகளும் காரணமாயிருந்ததால், அவற்றை எதிர்த்து அவர்களுடைய விதிக் கொள்கையை எதிர்த்து, மக்களைத் திரட்டுவதற்காக வேதனை நீக்கச் சிவனிடம் சரணடையும்படி சைவம் கோரியது. விதியை வெல்லச் சிவனிடம் சரணடையக் கோரியது.

‘நமச்சிவாயம்’ என்ற சொல்லே இகபர செல்வங்களையெல்லாம் அளிக்குமென்றது. மக்கள் புரிந்து கொள்ள இது எளிதாயிருந்தது. புத்த, சமண தத்துவச் சுழல்கள் ஆரம்ப சைவ சமயத்தில் இல்லை, சிவன் யாரும் வழிபடக் கூடிய பொதுக் கடவுளாயிருந்தார். பிறவிப் பெருங்கடலை நீந்த பிரபுக்களின் தர்ம போதனையோ, சமணக் குரவர், குரத்தியரது துணையோ தேவையில்லை. சைவ மடங்களும் அப்பொழுது தோன்றவில்லை.

சைவம் தழைக்கப் பணி செய்த முதன் நாயன்மார்கள் நாடு முழுவதும் அலைந்து மக்களிடையே வழங்கி வந்த இனிய பண்களில் மனித உணர்வை உருவமாக்கிச் சிவனை மனிதருக்கு மட்டும் எட்டும் தந்தையாக தாயாக வருணித்துப் பாடினார்கள். அறிவைப் பின் தள்ளி உணர்ச்சியை ஆழமாக்கி பக்தி வெள்ளத்தில் நாட்டை மூழ்கடித்தார்கள்.

இந்நிலையில் வாணிக வர்க்கம் பலம் குன்றியிருந்தது. மூவரசுகளிடையே வாணிகத் தடைகள் தோன்றியிருந்தன. மேனாட்டு வாணிபம் சீர்குலைந்தது. இஸ்லாமிய வளர்ச்சியாலும், வெற்றியாலும் அண்டை நாடுகளில் இவர்களது வாணிபம் நின்றது. நாட்டுக்குள் முடங்கிய வணிக வர்க்கம் வலிமை குன்றி இத்தாக்குதலைச் சமாளிக்க இயலாது நின்றது.

இந்நிலையில் சைவம் சேர, சோழ, பாண்டிய நாடுகளிலும் பல்லவர் நாட்டிலும் பரவிற்று. சமூக ஒற்றுமைக்கு அது துணை செய்தது. சமண பெளத்த மடங்கள் செல்வாக்கிழந்தன. அரசர்கள் செல்வாக்குப் பெற்ற சைவத்தை ஆதரிக்கத் தொடங்கினர். சமண பெளத்த மடாலயங்களின் சொத்துக்கள் புதிதாகத் தோன்றிய சிவாலயங்களுக்கு மாறின. புதிய தேவ தானங்களும், பிரம தேசங்களும் சிருஷ்டிக்கப் பட்டன. பாண்டி நாட்டின் வேள்விக்குடி செப்பேடுகளும் திருநெல்வேலி செப்பேடுகளும் களப்பிரர் காலத்தில் அந்தணர்களிடமிருந்து பறித்துக் கொண்ட நிலங்களை மீண்டும் அவர்களுக்கு உரிமையாக்கியதைக் கூறுகின்றன. மகேந்திரன், மாமல்லன் காலத்துச் சாசனங்கள், காஞ்சி கைலாயநாதர் கோவிலுக்கு, பண்டைச் சமணப் பள்ளிகள் விகாரைகளின் நிலங்களை உரிமையாக்கியதைக் கூறுகின்றன. இவ்வாறு சிவன் கோயில்கள் படிப்படியாக நிலவுடைமை ஸ்தானங்களாயின. இம்முறை நாடு முழுதும் பரவிற்று. ஊர் நிலத்தின் பெரும் பகுதி கோயில்களுக்குச் சொந்தமாயிற்று. அதற்கடுத்தாற்போல நிலமுடைய பெரு நிலக் கிழார்கள் கோயில் நிலங்களை மேற்பார்வை செய்யும் சபையினராகவும். ஆயத்தினராகவும், வாரியத்தினராகவும், ஊரவராகவும் நாட்டினராகவும், அதிகாரம் பெற்றனர்.[5] இப்படி ஒர் புதிய நிலவுடைமை முறை உருவாகியது. வாணிக வர்க்கத்தினரும் தமிழ்நாடு முழுவதும் வாணிபம் செய்யும் வாய்ப்பை மறுபடி பெற சைவத்தை அனுசரித்தனர். அவர்களில் பெரும் பகுதியினர் வீர சைவர்களாயினர். இது நிலவுடைமை வர்க்கத்தினரோடு வணிக வர்க்கத்தினர் நட்புறவு கொண்டதையே காட்டுகிறது. 8-ம் நூற்றாண்டிலும் அதற்குப் பின்னும் வணிக வர்க்கத்தினர், பல சிவன் கோயில்களுக்குப் பொன்னளித்ததும், மகமை முறைகள் ஏற்படுத்தியதும் சமகாலச் சாசனங்களால் புலனாகின்றன. கூட்டுச் சுரண்டலுக்கு இவ்வுறவு காரணமாயிற்று.

[1]. தமிழ் நாடும் மோரியரும் - நா. வா. (தாமரை பொங்கல் மலர் 1961)
[2]. (Ρhilosophies of India — Essay on Buddihism– Zimmer).
[3]. சிலப்பதிகாரத்தில் வர்க்கப் போராட்டம், - நா.வா. ஜனசக்தி மே.மலர் 1957
[4]. காவியக் கதைத் தலைவர்கள் - நா.வா. தாமரை
[5]. South Indian Polity - K.S.Krishnaswamy Iyengar உத்திரமேரூர் சாசனம்.
----------------

7. மொழிப் பற்றும், மொழி வெறியும்

தமிழ் மொழியுணர்ச்சியும் பிரதேசப் பற்றும் தமிழிலக்கியத்தில் எவ்வாறு உருவாகியுள்ளன என்று டாக்டர் தனிநாயக அடிகள் ‘தமிழ் கல்ச்சர்’ ஜனவரி-1 மார்ச்சு இதழில் ஆராய்ந்துள்ளார்கள். அக்கட்டுரையில் கடந்த 50 ஆண்டுகளில் இவ்வுணர்ச்சி வளர்ந்து வந்த வரலாற்றை விவரித்துள்ளார்.

தமிழுணர்வும், தமிழ் நாட்டுப் பற்றும் பேராசிரியர் சுந்தரம் பிள்ளையவர் காலத்திலிருந்து இன்றுவரை ஆழ்ந்து பரந்து வளர்ச்சி பெற்றுள்ளன.

இதன் அடிப்படை, வடமொழி ஆதிக்கம், வடமொழி தென்மொழிகளுக்கு உயர்ந்தது என்ற பிரசாரம் இவற்றின் எதிருணர்வேயாகும்.

இந்திய நாட்டுப் பற்றையும் ஒருமையுணர்வையும் தேசீய உணர்வு பரப்பியது. அதன் விளைவினால் தமிழ் நாட்டில் தமிழ் நாட்டுப் பற்றுக்கும். இந்திய நாட்டுப் பற்றுக்கும் முரண்பாடு எழுந்தது. இதன் குரல்களாக தேசீய இயக்கக் கவிகளான பாரதியும், நாமக்கல் இராமலிங்கம் பிள்ளையும் ஒலித்தார்கள். உரை நடையில் இம்முரண்பாட்டைத் திரு.வி.க. வின் கட்டுரையில் காணலாம். சேதுப்பிள்ளையவர்கள் இந்திய நாட்டின் கலாசார ஒருமையைப் பல கட்டுரைகளில் விளக்கியுள்ளார்கள்.

இராமலிங்க பிள்ளையும், சேதுப்பிள்ளையும், இந்தியால் தமிழுக்கு அழிவு நேராது என்று கருதுகின்றனர். தமிழின் உரமும் வலிமையும். எம்மொழித் தாக்குதலையும் எதிர்த்து நிற்க வல்லதென அவர்கள் கருதுகிறார்கள்.

தற்காலக் கவி பரம்பரை தி.மு.க. வினுடையது. பாரதிதாசன் அதன் மூலவர். கண்ணதாசனும், முடியரசனும் அவர் வழித்தோன்றல்கள். திராவிடநாடு என்னும் பிரதேச உணர்வை வளர்க்க முயலும் அவர்கள் தமிழுணர்வில் நின்றுதான் தங்கள் கருத்துக்களை வெளியிடுகிறார்கள். அவர்களது தமிழுணர்வு ஆழ்ந்தது. இதில் முரண்பாடு காணப்பட்டாலும் அவர்கள் தமிழுணர்வை ஒழிக்க முடியாது.

தமிழுணர்வும், பிரதேச உணர்வும் வளர்ந்த வரலாற்றைப் பற்றித் தனிநாயக அடிகளின் முடிவுகள் இவை.

இவ்வுணர்வின் வளர்ச்சியை முழுமையாக அறிந்து கொள்வதற்கு இவ்வுணர்ச்சியின் தோற்றம் முதல் இன்றுவரை அதன் வரலாற்றைச் சுருக்கமாக அறிந்துகொள்ளுதல் அவசியம்.

சரித்திர காலத்தில் தமிழ்நாடு நான்கு வகை நிலங்களாக இயற்கையாகவே பிரிந்திருந்தது. அவை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்பன. குறிஞ்சி மக்கள் வேட்டுவ வாழ்க்கை மூலமாகவும், முல்லைநில மக்கள் மாடு வளர்ப்பதின் மூலமாகவும், மருத நில மக்கள் உழவுப் பயன் மூலமாகவும், நெய்தல் நிலமக்கள் மீன் பிடித்தல், உப்புக்காய்ச்சுதல் முதலிய தொழில்களின் மூலமாகவும், உணவும், உடையும், உறையுளும் பெற்று வாழ்ந்தனர்.

உழவுப் பயன் அதிகமாக அதிகமாக, மற்ற நிலப்பகுதிகளுக்குப் பண்டமாற்று வாணிபம் பரவிற்று. தமிழ் நிலப் பாகுபாடுகள் மறையத் தொடங்கின. இந்நிலையைத்தான் பத்துப் பாட்டும், புற நானூறும் சித்திரிக்கின்றன.

ஒவ்வொரு நிலப் பகுதியிலும் தோன்றிய கலைகள் நான்கு நிலப் பகுதிகளிலும் பரவின. இதனைப் பரப்பியவர்கள், பண்டைப் பாணர்களும், பொருநரும், விறலியரும் கூத்தரும், கூத்தியரும் ஆவார்கள். அவர்கள் நானிலங்களிலும் தோன்றி வளர்ந்த கலைகளைத் தமிழ்நாடு முழுவதும் பரப்பினர். கலை மரபுகளை அவர்கள் ஒருமுகப்படுத்தினர். இக்காலத்தில் தமிழகம் ஒன்றுபட்ட மரபின் நூற்றுக்கணக்கான குறுநில மன்னரும், முடியுடை மன்னர் மூவரும் சிறு சிறு நிலப் பகுதிகளில் ஆட்சி புரிந்து வந்தனர். பண்ட மாற்றும் கலைப் பரிவர்த்தனையும் தமிழகத்தில் ஒற்றுமையுணர்வைத் தோற்றுவித்தன.

இக்கூற்றுக்குச் சில சான்றுகள் காட்டுவோம்.

1. பட்டங்கொற்றன் என்னும் குறுநில மன்னனது வள்ளன்மையை கருவூர் ககதப்பிள்ளை சாத்தனார் பாடுகிறார். அவன் குதிரை மலையின் சிறு குறவர் குடியொன்றின் தலைவன். அவனது ஆதிக்கவரம்பு மிகக் குறுகியதாயினும் அவனது புகழ் தமிழ்நாடு முழுவதும் பரவியிருந்தது. ஏனெனில் அவனிடம் பரிசில் பெற்ற புலவர் அவனது புகழைத் தமிழகம் முழுவதும் பரப்பிவிட்டார்கள். இதனைப் புலவர் பின் வருமாறு கூறுகிறார்:

'ஊரார்க் குதிரைக் கிழவ, கூர் வேல்
நறை நார்த் தொடுத்த வேல்கையங்
கண்ணி வடி நவிலம்பின் வில்லோர் பெரும்,
கை வள்ளிகைக் கடுமான் கொற்ற,
வையக வரைப்பில் தமிழகம் கேட்பப்
பொய்யாச் செந்நா நெளிய ஏத்தி,
பாடுப வென்ப பரிசிலர் நாளும்,
ஈயா மன்னர் நாண,
யாது பரந்த நின் வசையில் வான் புகழே'
      (புறம். 168)

2. இமய வரம்பன் நெடுஞ்சேரலாதனை குமட்டூர் கண்ணனார் பதிற்றுப் பத்து இரண்டாம் பத்தில் போற்றிப்பாடியுள்ளார். அவன் முடியுடை மன்னர் மூவரில் ஒருவனே யாயினும், அவன் புகழ் தமிழகமெங்கும் பரவியிருந்தது என்று புலவர் கூறுகிறார்.

‘அமைவரல் வேலி இமயம் விற்பொறித்து
இமிழ் கடல் வேலித் தமிழகம் விளங்கத்
தன் கோல் நிற்க இ’

(பதிற்றுப் பத்துப் பதிகம்)
3. மதுரை நகரின் புகழ் தமிழகமெங்கும் பரவியிருந்ததென பரிபாடல் (திரட்டு 9) கூறுகிறது.
தண் தமிழ் வேலித் தமிழ் நாட்டகம் எல்லாம்
நின்று நிலை இப்புகழ் பூத்தல் அல்லது
குன்றுதல் உண்டோ மதுரை-கொடித்தேரான்
குன்றம் உண்டாகும் அளவு?

மொழி, கலை, பண்பாடு இவற்றால் ஒன்றுபட்டு வந்த தமிழகம் ஆட்சிமுறையால் பிரிவுபட்டு நின்றது. அது மட்டுமல்ல. சேரர்களுக்கும் சிற்றரசர்களுக்கும் இடையேயும், சேரருக்கும் பாண்டிய சோழர்களுக்கும் இடையேயும், இடை விடாமற் போர்கள் நிகழ்ந்து வந்தன. ஆயினும் தமிழுணர்வும், தமிழக உணர்வும் நிலை பெற்றிருந்தன. மூவரசுகள் ஒன்று பட்ட பொழுதெல்லாம் புலவர்கள் மன்னர்களின் ஒற்றுமையைத் தமிழக ஒற்றுமையாகப் போற்றி வரவேற்றனர்.

இவை யாவும் கி.மு. 3-ம் நூற்றாண்டு முதல் கி.பி. 3ம் நூற்றாண்டு வரையுள்ள காலத்தைக் குறிப்பிடுவன.

கி.பி. முதல் நூற்றாண்டு முதல் 4-ம் நூற்றாண்டு வரையுள்ள காலத்தில் சிற்றரசுகள் அழிந்தன. மூவரசுகளும் வலிமை பெற்றன. பெரிய அணைகள் கட்டப்பட்டன. தானிய விளைச்சல் மிகுதியாயிற்று. ஆற்றங்கரையோரங்களில் மக்கள் கூடினர். நகரங்கள் தோன்றின. வாணிபம் வளர்ச்சியுற்றது. முதல் நூற்றாண்டு முதலே அந்நிய நாட்டு வாணிபம் தொடங்கி வளர்ந்தது. இந்நிலையைப் பட்டினப் பாலையில் காணலாம். அதற்கும் மேலாக சிலப்பதிகாரத்தில் காணலாம்.

அக்காலத்தில் வணிக வர்க்கம் பெருஞ் செல்வாக்குப் பெற்றது மூவரசர்களது நாடுகளிலும் அதற்கு வெளியிலும், கடல் கடந்த கீழ் நாடுகளிலும் அவர்களது வியாபாரம் பெருகியது. மூவரசு நிலங்களிலும் தங்குதடையற்ற வாணிபம் செய்ய ஒன்றுபட்ட தமிழ்நாடு வேண்டுமென வணிகர்கள் விரும்பினர். வாணிபத்துக்கு இடையூறான பாண்டியன் ஆட்சியைக் கண்ணகி அழித்தாள். அக்காலம் தமிழுணர்வும், தமிழ்ப் பிரசேத உணர்வும் மிகத் தெளிவாகத் தோன்றின. இவ்வுணர்வைச் சிலப்பதிகாரம் பலவகையில் புலப்படுத்துகிறது. கதையில் மூன்று காண்டங்களும் முடியரசர் மூவருடைய தலை நகரங்களில் நிகழும் நிகழ்ச்சிகளைக் கூறுகின்றன. புகார்க் காண்டம் சோழ நாட்டில் நடைபெறும் கதையையும் மதுரை காண்டம் பாண்டிய நாட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகளையும், வஞ்சிக் காண்டம் சேர நாட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகளையும் விவரிக்கின்றன. ஒவ்வொரு காண்டமும் அந்தந்த நாட்டின் கலை வளர்ச்சியையும் பண்பாட்டையும் புலப்படுத்துகின்றன. வாழ்த்துக் காதையில் மூன்று மன்னர்களும் வாழ்த்தப் பெறுகிறார்கள்,

‘வாழியரோ வாழி
வருபுனல் நீர்ப் பொருநை
சூழும் மதுரையார்
கோமான்றன் தொல் குலமே!’
‘வாழியரோ வாழி
வருபுனல் நீர்த்தண் பொருநை
சூழ் தரும் வஞ்சியர்
கோமான்தன் தொல் குலமே!’
‘எல்லா நாம்’
காவிரி நாடனைப் பாடுதும்
பூவிரி கூந்தல் புகார்’

ஒல்வோர் காண்ட முடிவுக் கட்டுரையிலும், முறையே சேரன், சோழன், பாண்டியன் ஆகிய மூவரும் போற்றிப் பாடப்பட்டுள்ளனர். இனி நூல்கட்டுரையில், தமிழ்நாடு முழுவதற்கும் பொதுவான ஒழுக்கத்தையும் பண்பாட்டையும் மலையைக் கண்ணாடியிற் காட்டுவது போல இந்நூல் காட்டுகிறதென இளங்கோவடிகள் கூறுகிறார். தமிழ் நாட்டை ஒரு நாடாகக் குறிப்பிடும் அடிகள் வருமாறு:

‘குமரி வேங்கடங்
குண குட கடலா

மண்டினி மருங்கில்
தண் தமிழ் வரைப்பில்
செந்தமிழ் கொடுந்தமிழ்
என்றிரு பகுதியில்’

இனி, 7-ம் நூற்றாண்டு முதல் 13-ம் நூற்றாண்டு வரையுள்ள காலத்தில் இப்பிணைப்பு இறுகி வந்ததென்றே சொல்லலாம். ஆழ்வார், நாயன்மார்களது பக்திப்பாடல்கள் தமிழ்நாடு முழுவதும் பரவின. தமிழிசை வளமடைந்தது. கடவுளைத் தமிழாசானாக சமயக் குரவர்கள் பாடினர். பக்திப் பாடல்களில் தமிழுணர்வும் கலந்தன. பக்தி வெள்ளத்தோடு தமிழுணர்வும் வெள்ளமாகப் பாய்ந்தது. இக்கால முடிவில் கம்பன் தோன்றினான். வால்மீகியின் காவியத்தைத் தமிழ்க் காவியமாக்கினான். அவனும் தமிழுணர்வை வளர்த்தான். நாட்டுப் பற்றையும் வளர்த்தான். இராமனைத் ‘தென்மொழி கடந்தான். வடமொழிக் கெல்லை தீர்ந்தான்’ என்று அழைக்கிறான். ‘தமிழெனும் அளப்பரும் சலதி’ என்று தமிழைக் கடக்க முடியாத கடலுக்கு ஒப்பிடுகிறான். தமிழ் நாட்டிற்கு தேவர் நாடு ஒப்பாகாது என்று காரணத்தோடு கூறுகிறான்.

‘அத்திருத்தகு நாட்டினை அண்டர் நாடு
ஒத்திருக்கு மென்றால் அது ஒக்குமோ
எத்திறத்தினும் ஏழுலகும் புகழ்
முத்தும் முத்தமிழும் தந்து முற்றலால்?’

கம்பனையடுத்துள்ள பிரபந்த காலத்திலும் தேவர்களையும், மன்னரையும் பாடிய கவிகள் தமிழுணர்வை மறக்கவில்லை, வேதங்கள் முறையிட, தமிழின் பின் சென்றவன் திருமால் என்று குமர குருபரர் கூறுகிறார்.

‘அருமறைகள் முறைவிட
பைத் தமிழ்ப் பின் சென்ற
பச்சைப் பசுங் கொண்டலே.’

நாயக்கர்கள் காலம் தொடங்கி அவர்கள் காலம் முடியும் வரை,
சிறு பிரபந்தங்களில் தமிழுணர்வு மங்காமல் நிலவுவதைக் காண்கிறோம்

பள்ளுப் பாடல்களும், குறவஞ்சிகளும், இக்காலக்கவிஞர்கள் படைப்புகளே. ஆங்கில ஆட்சிக் காலமே தமிழுணர்வு மங்கிய காலம் ஏன்? அடிமைக்கு மொழிப்பற்று ஏது? ஆங்கில மொழியும், பண்பாடும் மனிதப் போலிகளைப் படைத்தது. நாட்டிலேயே அயல் நாட்டு ஆன்மாவுடன் நடமாடிய மனிதரைச் சிருஷ்டித்தது இதனால் இலக்கிய ஊற்று உள்கரந்தது. பண்பாடு உறங்கிப் போயிற்று.

விடுதலை நாதம் நாட்டில் பரவத் தொடங்கியது. நமது வாழ்வின் முன்னேற்றத்திற்கு அன்னியர் ஆட்சி தடையென விடுதலை இயக்கத் தலைவர்கள் முழங்கினர். நாட்டுப் பற்று விழித்தெழுந்தது. புதியதோர் ஒற்றுமை தோன்றியது. ஆங்கில ஆட்சி வலிமையால் இணைத்துப் பிணைத்திருந்த இந்தியாவின் ஒவ்வொரு பகுதியும் விடுதலையடைய அவர்களை எதிர்த்துப் போராட ஒன்றுபட்டனர். அவர்கள் பலாத்காரத்தால் இணைத்து வைத்திருந்த பொருளாதார வாழ்வு சிதறியது. மக்களுடைய ஒற்றுமையால் அந்நியச் சுரண்டல் நீங்கி முன்னேற மக்கள் ஆர்வம் கொண்டனர். இந்த ஆர்வம் மொழி மீதும் பண்பாட்டின் மீதும், பிரதேசத்தின் மீதும் தோன்றி, இவற்றைப் பாதுகாக்கவும், வளம் பெறச் செய்யவும், இதே நோக்குடைய பல பகுதியினரோடு ஒன்றுபட்டுப் போராடத் தூண்டியது. விடுதலை இயக்கத்தோடுதான் பண்பாட்டு ஆர்வமும், மொழி மறுமலர்ச்சியும் தோன்றின.

இம்மறுலர்ச்சியின் குரல் பாரதி. அவனுடைய வழி வந்தோர் நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை, திரு.வி.க. முதலியோர். ஒருகால கட்டத்தில் பாரதிதாசனும், பாரதி வழியில் நின்றார்.

நாட்டு விடுதலையில்லாமல், மொழி மறுமலர்ச்சியும், பண்பாட்டு மலர்ச்சியும் இல்லை.

நாட்டுக்கு, விடுதலைக்கு. அவரவர் பண்பாட்டுப் பெருமையையும், இவை யாவிலும் ஒன்றி நிற்கும் இந்தியப்பண்பாட்டின் ஒருமையையும் உணர்தல் அவசியம் எனப் பாரதி கண்டார்.

‘செந்தமிழ் நாடெனும் போதினிலே
இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே’
‘சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே,
இதைத் தொழுது படித்திடடி பாப்பா’
‘யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்.’

என்று தமிழுணர்வூட்டும் பாரதி இந்திய ஒருமைக்கு அது விரோதமல்ல என்றும் பாடுறார்.

‘முப்பது கோடி முகமுடையாள், உயிர்
மொய்ம்புற ஒன்றுடையாள்’
செப்பு மொழி பதினெட்டுடையாள்,
எனிற் சிந்தனை ஒன்றுடையாள்.’

தேசிகவிநாயகம் பிள்ளையும் பாரதியின் உணர்வில் ஒன்றி நிற்பதைக் காண்கிறோம். நாமக்கல்லாரும் நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் ஒன்றிற் கொன்று முரண்பட்டதாகப் பார்க்கவில்லை.

இவையனைத்தையும் சுட்டிக்காட்டி இந்திய நாட்டுப்பற்றுடைய கவிகளுக்கு தமிழ் மொழி உணர்வு முரண்பட்டதோர் உணர்ச்சியென்றும், இவையிரண்டிற்கும் பாலம் அமைக்க அவர்கள் முயலுவதாகவும் தனிநாயக அடிகள் கூறுகிறார்.

புதிய மறுமலர்ச்சி சுந்தரம் பிள்ளையின் தமிழ் வாழ்த்துப் பாடல் தோன்றிய காலத்திலிருந்து துவங்குவதாக அடிகள் கூறுகிறார். ‘கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு முதலிய தென்னிந்திய மொழிகளுக்குத் தமிழ்தான் தாய். இத்தனை மொழிகளைப் பெற்றெடுத்தும், தமிழ் ஆரியம் போல் முதுமையடைந்து அழிந்தொழிந்து போகாமல் இளமையோடு நிலவுகிறது. இத்திறத்தை எண்ணித் தமிழை வாழ்த்துவோம்’ என்பது அப்பாடலின் கருத்து. தமிழ் பிறமொழிகளிலும் சிறந்தது. பிற மொழிகளை இகழ்ந்து நமது மொழியைப் போற்றுவோம் என்ற தனிமையுணர்வையும், பிரிவினையுணர்வே தமிழுணர்ச்சிக்கும், நாட்டுப் பற்றுக்கும் அவசியம் என்பது சுந்தரம் பிள்ளையின் கருத்து. மேலும், எல்லாப் பகுதி மக்களும், ஒன்றுபடும் முயற்சி துவங்கிய காலத்தில் இக்கருத்து தமிழரைத் தனிமைப்படுத்த உதவும் கருத்து.

‘வடமொழி உயர்ந்தது, அதனிடம் கடன் வாங்கியே தமிழ் பிழைக்கிறது.’ என்று பேசிய பிராமணர்களின் கருத்துக்கு இது எதிர்த்தாக்குதல் என்று கட்டுரையாசிரியர் கூறுகிறார். அது வடமொழி வெறியென்றால் சுந்தரம் பிள்ளையின் கருத்து தமிழ் வெறியாகாதா? ஒரு வெறியை மற்றொரு வெறியால் அடக்க முடியுமா? சிவன் உயர்ந்தவன், திருமால் உயர்ந்தவன் என்ற சண்டை தமிழ்நாட்டில் யாருக்காவது வெற்றியில் முடிந்ததா? சமரசவாதியான கம்பன்,

‘அரனதிகன், உலகளந்த அரியதிகன்
என்றுரைக்கும் அறிவிலார்.’

என்று தீர்ப்பு வழங்கினான்.

இக்காரணம் கூறி தமிழ் வெறியை நியாயம் என்று கூற முடியாது. இக்கருத்துக்களின் வளர்ச்சியை மறைமலையடிகளின் எழுத்துக்களில் காண்கிறோம்.

அவரைப் பற்றி தனிநாயக அடிகள் கூறுவதாவது:- ‘மறைமலையடிகள் இந்திய விடுதலையின் மீது மோகம் கொண்டவரல்ல. மேல் சாதியினர் கீழ் சாதியினரை அடக்கி ஒடுக்குவதை அனுமதிக்கும் சுதேச அரசாங்கத்தைப் பார்க்கிலும், பிரிட்டிஷ் அரசாங்கம் நீதியாகவும், நேர்மையாகவும் ஆட்சி நடத்தும் என்று அவர் கருதினார். ஓய்வு பெற்று தனித்து வாழ்ந்த அறிவாளியாதலால், அவர் அரசியல் இயக்கங்களின் சுழலில் சிக்காமல் வாழ்ந்தார்.’

இந்திய விடுதலை தேவையில்லை; வெள்ளைக்காரன் நியாயமானவன்; பிராமணன் மோசமானவன். நம் நாட்டவன் ஆட்சி வேண்டாம் என்று கருதிய மறைமலை அடிகளுக்குத் தமிழர் வாழ்வு பற்றி ஒரே ஒரு எண்ணம் தான் இருந்தது. அது வடமொழியிலிருந்து தமிழைப் பாதுகாப்பது, பிராமணரிடமிருந்து தமிழைப் பாதுகாப்பது ஆங்கில மொழியாதிக்கத்தால் தமிழ் அழிவதைக் காணாத கண்கள் வடமொழிப் பூதத்தைக் கண்டன. பூதம் என்பது மனப்பிராந்திதானே? இல்லாத பூதத்தைக் கொல்ல அவர் வாளைச் சுழற்றினார். இதுதான் அவரது தமிழுணர்வு, இந்திய விடுதலை தேவையில்லை என்று எண்ணியவருக்கு இந்திய ஒருமையைப் பற்றி என்ன கவலை இருக்க முடியும்? தமிழ் வெறிக்கும், இந்திய விடுதலையார்வத்திற்கும் ஒட்டும் உறவும் ஏது? எனவே முரண்பாடில்லாத தமிழுணர்வு என்று தனிநாயக அடிகள் அழைப்பது பிற மொழிகளைப் பழிப்பது பிறமொழி பேசுவோரைப் பழித்து, தமிழின் உயர்வை நிலைநாட்டுவது தான் என்று தோன்றுகிறது.

இனி தனிநாயக அடிகள் திராவிட இயக்கத்தினரின் தமிழுணர்வைப் போற்றிக் கூறுகிறார். அவருடைய கருத்தை அவர்களது சொற்களாலேயே கூறுவோம்.

‘தமிழ் நாட்டிற்கும், திராவிடஸ்தான் கருத்திற்கும் விசுவாசமுடைய முரண்பாட்டை நாம் ஒரு குறிப்பிட்ட கவிஞர் வரிசையில் காண்கிறோம். இந்திய நாட்டின் மீது விசுவாசம் இருத்தல் வேண்டுமென அவர்கள் சொல்லுவதில்லை. ஐக்கிய உலகத்தைப் பற்றி அவர்கள் பேசுகிறார்கள். இது பழந்தமிழரது கருத்துத்தான். இந்த வரிசையில் இருப்பவர் பாரதிதாசன். கண்ணதாசனும், முடியரசனும் அவரது வழித் தோன்றல்கள்.’

இதுமட்டுமல்ல; திராவிடஸ்தானுக்குப் பாரதிதாசன் எல்லைகூறி அதற்கப்பால் ஒரு காலத்தில் கடல்தான் இருந்தது என்று கூறுகிறார். பிற்காலத்தில் தோன்றிய ஆரிய நாட்டிற்கு எதிராக, அதனைச் சிறுமைப்படுத்தத் திராவிடத்தின் தொன்மையை நிலைநாட்ட பாரதிதாசன், முயலுகிறார்:

‘அடேடே, வடபெருங்குன்றமே இல்லை,
அவ்விடம் நீர்ப்பரப்பு-ஆழ்கடல் உள்ளதே,
அப்பெருங்கட அலை, அழகிய விந்தியல்

வெற்பின் வடபுறத்து விளையாடினவே!
மேற்கு-அரபிக் கடல் கிழக்கு வங்கக் கடல்
இல்லை, என்ன வியப்பிது?

தமிழுணர்வுக்கும் திராவிடஸ்தான் கருத்துக்கும் முரண்பாடு இருந்தபோதிலும் பாரதிதாசன் போன்றோரின் எழுத்துக்களில் ஆழ்ந்த தமிழுணர்வு இருக்கிறது என்று தனிநாயக அடிகள் எழுதுகிறார்.

‘தமிழுக்கு அமுதென்று பேர்’ என்றும் ‘தமிழெங்கள் உயிருக்கு நேர்’ என்றும் பாடிய பாரதிதாசன் கவிதையில் தமிழுணர்வு இருக்கிறது. ஆனால் பிற மொழிகளை வெறுப்பதையும், பிற மக்களை இழிவுபடுத்துவதையும், தமிழின் உயர்வுக்கு ஆதாரமாக்கும்போது, அவரது எழுத்துக்கள் தமிழ் வெறியாகத் தாழ்ந்து விடுகின்றன.

‘ஆரியன் அல்லேன் எனும் போதில்
எத்தனை மகிழ்ச்சி, எத்தனை மகிழ்ச்சி!’
‘அயல் என்று கொட்டுக முரசே, உறவான
திராவிடர் அல்லார்.’
‘பொங்கும் வடநாட்டுப் பொய்யும் புனைகருட்டும்
எங்கும் தலைவிரித்தே இன்னல் விளைத்தனவே.’

(பாரதி தாசன் கவிதைகள்)
முரண்பாடற்ற தமிழுணர்வு என்று தனிநாயக அடிகள் சுட்டிக் காட்டுவது சுந்தரம் பிள்ளை, மறைமலையடிகளின் எழுத்துக்களை, அவற்றில் சுதந்தர ஆர்வம் இல்லை. பிற மொழி வெறுப்பு உண்டு.

முரண்பாடுள்ள தமிழுணர்வு என்று அவர் காட்டுவது தேசியக் கவிகளின் படைப்புக்களையும், பாரதிதாசன் முதலிய திராவிட இயக்கத்தாரின் பாடல்களையும். இவற்றுள் தேசியக் கவிகள் தேசிய உணர்விற்கும். மொழியுணர்விற்கும் பாலம் அமைக்க முயலுகிறார்கள் என்று அவர் சொல்லுகிறார். வெற்றி பெற்றதாகச் சொல்லவில்லை. திராவிட இயக்கத்தினரின் பாடல்களில், திராவிடஸ்தான் பற்றுக்கும், தமிழுணர்வுக்கும் முரண்பாடு இருக்கிறது என்றாலும் அவர்களது தமிழுணர்வு ஒதுக்கிவிடக் கூடியதல்ல என்று தனிநாயக அடிகள் சொல்லுகிறார்.

ஆங்கில ஆட்சி ஓர் ஸ்துலமான உண்மை. அதனை எதிர்த்து எழுந்த தேசிய உணர்வு மறைத்தற்கரிய உண்மை.

அதனோடு மறுமலர்ச்சியுற்றது மொழியுணர்ச்சி. இது தமிழ் நாட்டிற்கு மட்டுமல்லாமல் எல்லா மொழி வழிப் பிரிவுகளுக்கும் பொருந்தும். இவை இரண்டிற்கும் முரண்பாடு எதுவுமில்லை. பாரதியே இவ்விரண்டு உணர்ச்சிகளின் ஒற்றுமைக்குத் தமிழ் நாட்டில் இலக்கிய வழிகாட்டி.

திராவிடஸ்தான், அடிகள் கூறுவதுபோல ஒரு கருத்துத்தான் (Concept) அது ஸ்தூலமான உண்மையல்ல. அதன் அடிப்படை ஆங்கில ஆட்சியின் எதிர்ப்பல்ல. நாட்டின் விடுதலைப் பற்றுமல்ல. தமிழுணர்ச்சி அக்கருத்தை வலிவுபடுத்துவதாகாது. ஏனெனில் கற்பனைத் திராவிடத்திற்கு எந்த மொழியும் அடிப்படையாகாது. அதுவும் தமிழ்வெறி, தெலுங்கையும், கன்னடத்தையும், மலையாளத்தையும் எவ்வாறு உறவாக்க உதவும்? இது தான் தீர்க்க முடியாத முரண்பாடு. பிரிவினை இயக்கத்தாரின் தமிழுணர்வு தமிழ் மரபின் வழிவந்ததல்ல.

ஏனெனில் தமிழனது பண்பாடு எல்லோருடனும் உறவுகொண்டு வளர்ந்தது.

‘யாதும் ஊரே யாவரும் கேளிர் (உறவினர்)’ என்று பாடியவன் சங்ககாலத் தமிழ்ப் புலவன்.

பல மொழிகள் பேசும் மக்களோடு தொடர்பு கொண்டு வாழ்ந்தவன் தமிழன். கிரேக்கர், ஆரியர், துருக்கர், தெலிங்கர், கன்னடர், மராட்டியர், மலையாளி முதலிய பல இனத்தவரின் பண்பாடுகளின் இணைப்பைத் தமிழ்ப் பண்பாடு பெற்றுள்ளது. நமது பண்பாட்டின் பல அம்சங்கள் இந்திய நாடு முழுவதும் பரவியுள்ளன.

காஷ்மீரத்தில் சைவத்தைப் பரப்ப திருநெல்வேலி சிவாச்சாரியார்கள் சென்றிருக்கின்றனர்.

ஆழ்வார்களது பாடல்கள் தெலுங்கு மொழியில் எழுதப்பட்டு பாடப்படுகின்றன. வங்கத்து வைஷ்ணவர்கள் இராமானுஜரது பாஷ்யத்தைப் போற்றுகிறார்கள்.

ரிக் வேதத்தில் 500 தமிழ்ச் சொற்கள் இருக்கின்றன என்று டாக்டர் கமில் ஸ்வலயில் கூறுகிறார்.

தமிழ் நாட்டுக் கோவில் அமைப்பில் கோபுரங்கள் சாளுக்கிய சிற்பக் கலையிலிருந்து தோன்றியவை.

பூவினாலும் புகையினாலும் பூசை செய்யும் முறை தமிழ் நாட்டிலிருந்து வடநாட்டிற்குப் பரவியது.

மதுரையிலும், காஞ்சியிலும் படித்துப் புகழ் பெற்ற பெளத்த பிக்ஷுக்கள் மக்கள் நாளந்தாவிலும், பாடலிபுரத்திலும், ஆசிரியர்களாகப் பணியாற்றினர்.

இவ்வாறு இணைப்புப் பெற்ற இந்தியப் பண்பாட்டில் இது உயர்ந்தது. இது தாழ்ந்தது என்பதில்லை. நாம் கலைச் செல்வங்களை வழங்கியுமிருக்கிறோம் உடன் பிறந்தாரர்களிடம் கலைச் செல்வத்தைப் பெற்றும் இருக்கிறோம்

தமிழ் உணர்வு தமிழ் பண்பாட்டு ஆர்வம் தமிழ் நாட்டுப் பற்று இவை தேசிய உணர்விற்கு முரண்பட்டன அல்ல. ஆனால் தமிழ் வெறி, தமிழர் மற்ற இனத்தாரினும் எல்லாவகையிலும் சிறந்தவர் Regional Chavinism என்ற கருத்து, தேசிய ஒற்றுமைக்கும் தமிழர் பயன்பாட்டிற்கும் நேர் முரணானது.
---------------------

8. தமிழும் விஞ்ஞானமும்

இன்று மனிதன் சூரியனைச் சுற்றிவரும் கிரகத்தைச் சிருஷ்டித்திருக்கிறான். அணுவைப் பிளந்து அதன் ஆற்றலைப் பயன்படுத்துகிறான். ஜீவ அணுக்களை உருவாக்கும் முயற்சியில் முன்னேறி வருகிறான். உலகம் தோன்றிய காலத்திலிருந்து பாலைவனமாகக் கிடந்த நிலங்களை வளம் கொழிக்கும் விளை நிலங்களாக மாற்றியிருக்கிறான். பூமியைக் குடைந்து அதனடியில் ஒளிந்துகிடக்கும் அபூர்வமான உலோகங்களை வெளிக்கொணர்ந்து பயன்படுத்துகிறான். கண்ணுக்குத் தெரியாத சிற்றுயிர்களின் வாழ்க்கையைத் துணைக் கருவிகளின் மூலம் அறிந்து அவற்றின் வாழ்க்கையை மாற்றும் சக்தி படைத்திருக்கிறான். தரையைக் கடலாக்குகிறான்; கடலைத் தரையாக்குகிறான். ஒரு திசையில் வரும் பேறாறுகளைத் தனக்கு வேண்டிய திசையில் திருப்புகிறான். வானவெளியில் பிறக்கும் கதிர்களைப் பூமியில் பயன்படுத்தி நோய்களைக் குணப்படுத்துகிறான். இருநூறு ஆண்டுகளுக்கு முன் நடக்க முடியாது எனக் கருதப்பட்ட பல ஆயிரம் அதிசயங்களை மனிதன் நிகழ்த்திக் காட்டுகிறான்.

இவை எவ்வாறு சாத்தியமாயின? புராதன மனிதன் இயற்கையின் பேராற்றலை. வெள்ளத்திலும் மின்னலிலும் எரிமலையிலும் கடல் கொந்தளிப்பிலும் தொத்து நோய்களிலும் சூறைக்காற்றிலும் கண்டான். இயற்கை ஆற்றல்களின் அழிக்கும் தன்மையைக் கண்டு நடுங்கினான். இயற்கை அளித்த கிழங்கையும், கனியையும் மீனையும் விலங்குகளையும் உண்டு இயற்கையாக அமைந்த குகைகளிலே வாழ்ந்தான்.

காட்டுத் தீயைக் கண்டான்; நடுநடுங்கினான். மனிதன் தோன்றி பல லட்சம் ஆண்டுகளுக்குப்பின் தீயைப் பயன்படுத்தக் கற்றுக் கொண்டான். முதன் முதலில் கண்டதை எல்லாம் அழிக்கும் தீயை மூன்று கற்களிடையே சிறைப்படுத்தி மாமிசத்தை சமைக்கக் கற்றுக் கொண்டான். மனிதன் இயற்கைச் சக்திகளில் ஒன்றைக் கட்டுப்படுத்தினான். முதலில் தனது செயல் மூலம் இயற்கையின் ஒரு சக்தியை வசமாக்கினான். அச் செயல் தீயின் இயல்பு குறித்துச் சிந்தனையைத் தோற்றுவித்தது. சிந்தனையின் மூலம் தீயைப் பயன்படுத்திப் பலவகை மண்களிலிருந்து உலோகங்களைப் பிரித்தெடுத்தான். இச்செயல் மேலும் சிந்தனையை வளர்த்தது. இதன் மூலம் உலோகங்களைப் பற்றி ஆராய்ந்தான். உலோகங்களின் தன்மைகளை, தன் வாழ்வுக்குப் பயன்படுத்தினான். இச் சிந்தனை முதலில் நடைமுறை உபயோகங்களுக்கு மட்டும் பயன்படும் கருவியாக இருந்தது. பின்னர் உலகின் இயற்கையை, தன்மையை, மாறுபாடுகளின் இயல்பை ஆராய்ந்து அறியும் விஞ்ஞானமாக மாறிற்று.

மேலே சுட்டிக் காட்டியது மனிதன் இயற்கையின் ஆற்றலை அறிந்து பயன்படுத்திய ஆயிரக்கணக்கான நிகழ்ச்சிகளில் ஒரு உதாரணம் மட்டுமே. செயலின் மூலம் சிந்தனை வளர்ந்து, சிந்தனையின் மூலம் மனிதன் மேலும் திறமையான முறையில் செயல் புரிந்து, இயற்கையின் பல்வேறு மாறுபாடுகளின் தன்மைகளை உணர்ந்து அவற்றை வகைப்படுத்தியிருக்கிறான். அவைதான் விஞ்ஞானத்தின் பல்வேறு கிளைகள்.

இக்கிளைகள் ஒவ்வொன்றும் மனித வாழ்க்கைக்குப் பயன்படுகின்றன. அவற்றைத் திறமையாகப் பயன்படுத்தத் தனித்தனியான விஞ்ஞானக் கிளைகள் உள்ளன. உதாரணமாக, பூமியைக் குடைந்து நமக்குத் தேவையான பெட்ரோலியம், நிலக்கரி, இரும்பு, தங்கம், ஈயம் முதலியவற்றை வெளிக் கொண்டுவருவதற்கு முன், அவை எங்கே காணப்படும் என்று தெரிய வேண்டும். அதைத் தெரிந்து கொள்ள இந்தக் கனியங்களும், அவற்றின் மூலப் பொருள்களும், எப்பொருள்களோடு சேர்ந்து கிடைக்கும் என்று தெரிய வேண்டும். முன்கூட்டி இந்த அறிவு நமக்கு இல்லாவிட்டால் கண்ட கண்ட இடங்களில் வீண் செலவு செய்து, பயன் காண முடியாது போகும்.

ஆகவே சுரங்கம் தோண்டி, பயனுள்ள பொருள்களைப் பெற, பொருள்களின் தன்மையை ஆராயும் ரசாயனம், அழுத்தத்தின் தன்மையை ஆராயும் பெளதீகம், பூமியின் உள்ளமைப்பை ஆராயம் தரையியல் (geology), பூமியினுள்ளிருக்கும் பொருள்களில் ஏற்படும் மாறுதல்களை ஆராயும் தரையியல் இரசாயனம் (geochemistry) ஆகிய விஞ்ஞானக் கிளைகள் அனைத்தின் உதவியும் தேவை, இவை வளர்ச்சியுற்றிராவிட்டால், ஆயிரம் இடங்களில் தோன்டித் தோல்வியுற்று, ஏதோ ஒன்றிரண்டு இடங்களில் தேடும் பொருள்களைக் காணலாம். ஆகவே விஞ்ஞானக் கொள்கை அல்லது சிந்தனை பயனுள்ள நடைமுறை தொழில்களை நடத்த அவசியம். தீயை அடுப்பினுள் கட்டுப்படுத்தியது முதல் பல்வேறு இயற்கைச் சக்திகளைக் கட்டுப்படுத்த, அவற்றின் இயல்புகளைக் கண்டறிந்து மனிதன் அவற்றைப் பயன்படுத்தி வருகிறான். அதன் விளைவே, இன்று பொருள் உற்பத்தியில் காணப்படும் இயந்திரங்களும், அவற்றை இயக்கும் சக்திகளும், இன்னும் நமது சுகவாழ்விற்கும், நாகரிக வாழ்க்கைக்கும் அவசியமான லட்சக்கணக்கான பொருள்களுமாயின.

விஞ்ஞான வளர்ச்சியின் விளைவுகள் யாவது?

1. நாகரிகத்திற்கு அவசியமான பொருள்கள் அனைத்தையும், செய்து கொள்ளும் வழிகளை, அது சமூகத்திற்கு அளித்துள்ளது. உதாரணங்கள்: புத்தகங்கள், உடை, கட்டிடங்கள். விவசாயக் கருவிகள், உற்பத்திக் கருவிகள் இவையாவும் விஞ்ஞான வளர்ச்சியின் பயன்களே.

2. இவ்வாறு நடைமுறைப் பயன்களை அளித்ததல்லாமல், உலகையும், பொருள்களையும், சக்திகளையும், உலகிற்கு அப்பாலுள்ள கோளங்களைப் பற்றியும் மனிதனது அறிவை விசாலப்படுத்தியுள்ளது.

3. இயற்கையை ஆராய மனிதனுக்கு ஒரு முறையை அது அளித்துள்ளது. மனிதன் இயற்கையின் இயக்கத்தை அறிய இயங்கியல் முறையே சிறந்தது. அம்முறையைப் பொருள் உலகத்தை அறியப் பயன்படுத்த வேண்டுமென்பதை விளக்குகிறது.

இப்பயன்களைத் தமிழ் மக்கள் அடைய வேண்டாமா? நம்மைச் சுற்றிலுமுள்ள இயற்கையை நாம் அறிந்து கொள்ள வேண்டாமா? நாம் பயன்படுத்தும் பொருள்கள் வேலை செய்யும் விதங்களை அறிந்து கொள்ள வேண்டாமா? ஸ்பூட்னிக்குகள் போன்ற செயற்கைக் கிரகங்கள் எப்படி உலகைச் சுற்றி வருகின்றன என்று தெரிந்து கொள்ள முடியுமா? வியாதிகள் வராமல் நம் உடலைப் போற்றி வளர்க்கும் வழிகளைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டாமா? இத்தனை அறிவையும் படைத்துக் தரும் மனிதனது மூளை வேலை செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டாமா? உலகையும் நம்மையும் தொடர்புபடுத்தும் அறிவு வாயில்களான ஐம்பொறிகளின் வேலை முறைகளைப் பற்றி நாம் அறிந்து கொள்ளாவிட்டால் நமக்கும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நம் முன்னோருக்கும் அறிவு நிலையில் வேறுபாடு என்ன?

இவற்றைப் பற்றி அறிந்து கொள்ளத் தமிழில் நூல்கள் உள்ளனவா? அத்தகைய நூல்களுக்கு அவசியம் இல்லையா? தற்பொழுது தமிழ் நாட்டில் ஏராளமான இளைஞர்கள் உயர் நிலைப்பள்ளிகளில் படித்து வெளியேறுகிறார்கள். கடந்த பத்து ஆண்டுகளில் உயர் நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை பத்து மடங்கு அதிகமாகியுள்ளது. இவர்களெல்லாம் தமிழில் விஞ்ஞான அறிவு பெற முடியும். முன்பைவிட இன்று நூல் நிலையங்கள் அதிகமாகியுள்ளன. அவை விஞ்ஞான நூல்களை வாங்கிக் கிளைகளுக்கு அளிக்கின்றன.

சமீபத்தில் வெளியான விஞ்ஞான நூல்கள் நன்றாக விலை போகின்றன. பாவ்லால் எழுதிய விஞ்ஞானக் கட்டுரைகளில் சில, ‘உடலும் உள்ளமும்’ என்ற தலைப்பில் தமிழில் வெளியிடப்பட்டது. ஆயிரம் பிரதிகளில் 750 பிரதிகள் ஆறுமாதத்திற்குள் விலை போயிற்று. அது போலவே உயிரைப் பற்றிய விஞ்ஞான விளக்கத்தை வெளியிடும் ஒபாரின் எழுதிய ‘உயிரின் தோற்றம்’ என்ற நூலின் தமிழாக்கம் நன்றாக விலை போயிற்று. டார்வின் தத்துவத்தைப் பற்றியும் அணுவைப் பற்றியும் எழுதிய நூல்களும் நன்றாக விலை ஆயின. கதைகளை விட விஞ்ஞான நூல்கள் விரைவில் விலையாகின்றன.

ஆனால் தமிழ்நாட்டு மக்களின் அறிவுத் தாகத்தைத் தணிக்கும் அளவுக்கு வேகமாக விஞ்ஞான நூல்கள் வெளியாகவில்லை. பத்திரிகைகளில் கட்டுரைகளும் வெளியாவதில்லை. பத்திரிகை ஆசிரியர்களும், எழுத்தாளர்களும் இந்தத் தேவையை உணராதது இதற்கு ஒரு முக்கிய காரணம்.

விஞ்ஞானக் கட்டுரைகளில் வெளியிடவென்றே வெளிவந்த கலைக் கதிர் இப்பொழுது கதைகளையும், வேறுபலவகைக் கட்டுரைகளையும் வெளியிடுகிறது. விஞ்ஞானக் கட்டுரைகள் போதுமான அளவு கிடைக்காதது இதற்குக் காரணமா அல்லது முழுதும் விஞ்ஞானக் கட்டுரைகள் அடங்கிய ஒரு மாத பத்திரிகை தமிழ் நாட்டுக்கு அவசியமில்லை என்பது நிர்வாகிகள் கருத்தா என்று எனக்குத் தெரியவில்லை. முன்னது காரணமாக இருந்தால் சிறிது முயன்றால் கட்டுரைகள் கிடைக்கும். இரண்டாவது காரணமாக இருந்தால் நிர்வாகிகள் தமிழ்நாட்டு மக்களின் அறிவுத் தரத்தைக் குறைவாக மதிப்பிடுகிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.

உண்மையில் தமிழ்நாட்டில், எளிய முறையில் மக்களுக்கு விஞ்ஞான உண்மைகளையும், கருத்துக்களையும் பரப்ப, பல்வேறு விதமான பத்திரிகைகள் வேண்டும். அவை ‘அணுச் சிதைவின் வரலாறு’, ‘மூலப்பொருள்கள் கண்டு பிடிக்கப்பட்டதன் கதை’,‘விஞ்ஞான அதிசயங்கள்’, ‘பயனுள்ள பொருள்களைத் தயாரிக்கும் முறைகள்’. ‘விஞ்ஞானிகளின் சரித்திரங்கள்’, ‘வியாதிகள்’, ‘உடல் கூறு அதிசயங்கள்’, ‘தரை இயல் விஞ்ஞானம்’, ‘வான இயல்’ போன்ற பல தலைப்புகளில் தொடர்ச்சியான கட்டுரைகள் தாங்கி வெளிவர வேண்டும். இலக்கியக் கலாச்சாரப் பத்திரிகைகளும், விஞ்ஞானத்துக்குச் சிறிது இடம் ஒதுக்க வேண்டும்.

சிறு வயதிலேயே விஞ்ஞான ஆர்வம் ஏற்படுத்த, அமெரிக்காவிலும், சோவியத் நாட்டிலும் பல புதிய நூல்கள் வெளியிடுகிறார்கள். முன்பு காக்காய், குரங்கு, நாய்க் கதைகளும், ‘ராஜா ராணி’க் கதைகளும், குழந்தைகளுக்காக அச்சிடப்படும். இப்பொழுது உயிர் நூல் உண்மைகளை ஆதாரமாகக் கொண்ட கதைகளும், விஞ்ஞானப் புதுமைகளை ஆதாரமாகக் கொண்ட அழகிய படங்கள் கொண்ட நூல்களும், சிறுவர்களுக்காக அச்சிடப்படுகின்றன. அத்தகைய நூல்கள் நமக்கும் தேவை. வருங்கால சந்ததியில் விஞ்ஞானிகள் தோன்ற வேண்டுமானால் சிறு வயதில் அவர்கள் மனத்தில் விஞ்ஞான ஆர்வம் தோன்ற வேண்டும். விஞ்ஞான கற்பனைக் கதைகள் இத்தகைய ஆர்வத்தைத் தோற்றுவிக்கும். தமிழில் விஞ்ஞானக் கற்பனைக்கதைகள் (Scientific Fantasies) மிகவும் அருமையாகவே உள்ளன. குழந்தைகளுக்கெனத் தனிநூல் நிலையங்கள் நிறுவப்படும் இக்காலத்தில், இத்தன்மையான நூல்கள் வெளிவருவது மிகவும் அவசியம்.

தொழிலாளிகள் தங்கள் திறமையை உயர்த்திக் கொள்ளவும், உழவர்கள் தங்கள் தொழிலைத் திறமையாகச் செய்யவும், தங்கள் தங்கள் தொழில்களின் விஞ்ஞான அடிப்படையைத் தெரிந்துக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு என்றே சிறு சிறு நூல்கள் நூற்றுக்கணக்கில் வெளிவர வேண்டும். முக்கியமாகக் களைகள், பூச்சி, புழுக்கள் உரமிடுதல் போன்றவற்றைப் பற்றி எளிய தமிழில் நூல்கள் வெளிவர வேண்டும்.

மேற்கூறிய பணியை யார் மேற்கொள்வது? தமிழ் நாட்டின் பண்பாட்டை உயர்த்துவதற்கு விஞ்ஞான அறிவைப் பரப்புவது மிகவும் அவசியம். தமிழ்நாட்டின் பண்பாட்டைப் பாதுகாப்பதும், வளர்ப்பதும் ஒவ்வொரு தமிழனுடைய கடமைதான். தமிழ் நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கும், சென்னை அரசாங்கத்துக்கும், இந்தக் கடமையை ஆற்றுவதில் முக்கிய பொறுப்பு உண்டு.

சென்னைப் பல்கலைக்கழகம் இப்பணியை எப்படி செய்து வருகிறது என்பதைக் குறித்துச் சில வார்த்தைகள், வருஷத்துக்கு ஒரு விஞ்ஞான நூலை மொழி பெயர்க்க அவர்கள் ரூ.1000 பரிசு கொடுக்கிறார்கள். சென்ற வருஷம் பெயர் தெரியாத ஆசிரியர் ஒருவரது நூலை மொழிபெயர்க்கச் செய்து ரூ.1000 பரிசும் ஒரு மொழி பெயர்ப்பாளருக்குப் போய் சேர்ந்து விட்டது. இப்பொழுது புத்தகம் வெளியிடத் தகுதியற்றது எனக்கருதி அதை வெளியிடவில்லையாம்.

முப்பது வருஷங்களுக்கு முன் ஜேம்ஸ் ஜீன்ஸ் எழுதிய வான் நூலைத் தமிழில் வெளியிட இவ்வருஷம் மொழி பெயர்ப்பாளருக்கு விளம்பரம் செய்திருக்கிறார்கள். இந்த நூலின் கருத்துக்கள் தவறு என்று நிரூபிக்கப்பட்டவை. விநாடிக்கு விநாடி விஞ்ஞானம் வளர்ந்து வருகிறது. வான வெளியைப் பற்றிய நம்முடைய பழைய கருத்துக்களை ‘வான் கதிர்’ ஆராய்ச்சிகளும், ஸ்பூட்னிக்குகளும், செயற்கைக் கிரகங்களும் புரட்சிகரமாக மாற்றிவிட்டன. ஜேம்ஸ் ஜீன்ஸின் கருத்துக்கள், பழங்கதையாகி விட்டதன் பின்னர் அதனை மொழிபெயர்க்கத் தோன்றியிருக்கிறது நமது பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு! நல்ல வேளை, இன்னும் இருபது வருஷங்கள் கழித்து இந்த நூலை மொழி பெயர்க்க வேண்டும் என்று சொல்லவில்லையே, என்று மகிழ்ச்சியடைய வேண்டியதுதான்.

இந்த பணிக்கு அவர்கள் இட்டுக் கொண்டிருக்கும் பெயர் (Promotion of Scientific Knowledge in regional language) பிராந்திய மொழிகளில் விஞ்ஞான அறிவைப் பரப்புதல் என்பது ஆகும். ஒரு நூல் தமிழன் கண்ணிலேயே படவில்லை; மற்றொன்று 25 வருஷங்களுக்கு முன் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். பிராந்திய மொழிகளில் விஞ்ஞான அறிவை நமது பல்கலைக் கழகம் பரப்பும் விதம் இதுதான்.

சென்னை அரசாங்கக் கல்வி இலாகாவில் வயதுவந்தவர் கல்விக்கென்று ஓர் இலாகா இருக்கிறது. புதிதாகப் படித்தவர்களுக்குச் சில நல்ல நூல்களையும் சில மோசமான நூல்களையும் இந்த இலாகா வெளியிட்டுள்ளது. தேசிய விஸ்தரிப்புத் திட்டத்துக்கென நூல்களுக்குப் பரிசளிக்க அது ஒரு திட்டம் வகுத்திருக்கிறது. அவை யாவும் விஸ்தரிப்புத் திட்டத்திற்கான பிரசாரமே. விஞ்ஞானம் வயது வந்தவர்களுக்கு அவசியமில்லை என்பது அந்த இலாகாவின் கருத்துப்போலும் அது எந்த விஞ்ஞான நூலை வெளியிட்டிருக்கிற தென்பது யாருக்கும் தெரியாது.

பல்கலைக் கழகங்களும், சென்னைக் கல்வி இலாகாவின் முதியோர் கல்விப் பிரிவும் உண்மையாகவே தமிழில் விஞ்ஞான அறிவைப் பரப்ப முயலவேண்டுமென ஒவ்வொரு தமிழனும் கோரவேண்டும். நூற்றுக்கணக்கான சிறு சிறு நூல்களை வெளிக்கொணர, விஞ்ஞானிகளது ஆதரவையும், விஞ்ஞான எழுத்தாளர்களின் ஆதரவையும் திரட்டப் பல்கலைக் கழகமும், கல்வி இலாகாவும் முயலவேண்டும். இப்பணியைச் செய்ய விஞ்ஞான நூல் பதிப்பகம் ஒன்றைப் பல்கலைக் கழகமும், சென்னை அரசாங்கமும் சேர்ந்து துவக்க வேண்டும். அதில் என்ன நூல்கள் அச்சிட வேண்டும் என்பதை நிர்ணயிக்க எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள், ஆசிரியர்கள், மனத்தத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவை அரசாங்கம் நிறுவவேண்டும்.

சமீபத்தில் தமிழ்நாட்டிலுள்ள ஒரு வைத்தியக் கல்லூரியின் பேராசிரியர்கள் சிலரைச் சந்தித்தேன். அவர்கள் எனது கல்லூரி நண்பர்கள் தமிழார்வம் உடையவர்கள். வைத்தியம் பற்றித் தமிழில் பத்தகம் எழுதியுள்ளார்கள். ஒவ்வொரு வியாதியைப் பற்றியும் சாதாரண மக்கள் புரிந்து கொண்டு தடுப்பு முறைகளைக் கையாளுவதற்குரிய அறிவைப் பரப்பும் வகையில் ஆண்டிற்கு ஐந்து நூல்கள் சுமார் 150 பக்கங்களில் வெளியிட ஆர்வம் கொண்டுள்ளார்கள். ஆனால் சர்க்கார் ஊழியர்களின் நடத்தை விதிகளின் படி அவர்கள் முன் அனுமதி பெறவேண்டும். எழுதிய புத்தகத்தின் மூலம் லாபம் பெறக்கூடாது. அவ்வாறே தங்களுக்கு லாபம் வேண்டாம் என்று சொல்லவும் அவர்கள் தயார். அனுமதி கேட்டாலேயே, தங்களுக்குரிய வேலைகளை விட்டு, வேறு வேலைகளில் நேரம் செலவழிக்கிறார்கள் என்று மேலதிகாரிகள் எண்ணுகிறார்களாம். இதனால் அவர்கள் அறிவும், திறமையும், தமிழ் நாட்டு மக்களுக்குப் பயன்பட வழியின்றிப் போகிறது.

இவ்விதிகள் தளர்த்தப்பட வேண்டும். கல்லூரி வேலைகளுக்குக் குந்தகம் இல்லாமல் தமிழில் விஞ்ஞான நூல்கள் எழுத விரும்பும் பேராசிரியர்கள், டாக்டர்கள், என்ஜீனியர்கள் முதலியோருக்குச் சர்க்கார் உற்சாகம் அளிக்க வேண்டும். நன்றாகப் படித்தவர்கள், விஞ்ஞானத்தில் உயரிய பட்டம் பெற்றவர்கள் எல்லாம் சர்க்கார் வேலைகளில்தான் இருக்கிறார்கள். அவர்கள் விஞ்ஞான நூல்கள் எழுதத் தடைகள் இருந்தால் அவற்றை அகற்றுவதுதானே தமிழ் மொழியில் அக்கறை கொண்ட சர்க்கார் செய்ய வேண்டிய காரியம்.

தமிழ் நாட்டுப் புத்தகம் வெளியிடுவோரும், தமிழ் மக்களின் அறிவுத் தாகத்தை மதித்து இந்தத் துறையில் சிறந்த நூல்களை வெளியிட்டு, தமிழுக்கும். தமிழகத்துக்கும் சேவை செய்வதோடு தங்களுக்கும் புகழ் தேடிக் கொள்வார்களாக.
--------------------

9. தமிழ் நாட்டில் தாய்வழிச் சமுதாயம்

பண்டைத் தமிழ் நூல்களில் பல அரசர் சிற்றரசர்களைப் பற்றிப் படிக்கிறோம். சிறப்புப் பெற்ற அவர்களெல்லாம் ஆண்கள். அவர்கள் தாய்முறை ஆண் வழியாகவே காணப்படுகிறது. தெய்வங்களில் ஏற்றமுடைய அனைத்தும் ஆண் வழியாகவே காண்ப்படுகின்றன. குறிஞ்சித் தெய்வமான சேயோன் (முருகன்), முல்லைத் தெய்வமான மாயோன் (திருமால்), நெய்தல் தெய்வமான வருணன், மருதத் தெய்வமான இந்திரன், ஆகிய அனைவரும் ஆண்பால் தெய்வங்களே. காவியங்களில் ஆண்களே தலைமை பெறுகிறார்கள். மணிமேகலை கதைத் தலைவியாக உருவாக்கப்பட்டிருப்பினும் அவளது ஆசிரியர் அறவணர் என்ற ஆண் என்பது சிந்தனைக்குரியது. சீவக சிந்தாமணி, பெருங்கதை ஆகிய காவியங்களில் ஆண் தலைமை பெறுவதும், பல பெண்கள் அவனுக்கு வாழ்க்கைப்பட்டு அவனது வெற்றிக்கு உதவுவதும் பெண்களுக்கு ஆணுக்குத் தாழ்ந்த ஸ்தானத்தைத் தான் காவியங்கள் அளிக்கின்றன என்பது தெளிவாகிறது. புறநானூற்றில் பெரும்பாலான செய்யுட்கள், ஆண்களின் வெற்றிச் சிறப்பையும், கொடைச் சிறப்பையும் போற்றுகின்றன. பெண் கவிகள் சிலர் பாடிய செய்யுட்கள் இத்தொகை நூலிற் காணப்பட்ட போதிலும், அவை ஆண்களுடைய வீரத்தையும், கொடையையும் பாராட்டுவனவாகவே உள்ளன. ஒன்றிரண்டு செய்யுட்கள் பெண்களுடைய துயரங்களைச் சித்தரித்த போதிலும் அவை ஆண்களைப் பிரிந்தபோது பெண்கள்படும் வேதனையாக இருக்கிறது.

இவை எல்லாவற்றையும் சான்றாகக் காட்டி தமிழ் நாட்டில் எப்பொழுதும் தந்தை வழிச் சமுதாயமே இருந்து வந்திருக்கிறதென்றும், ஆண் ஆதிக்கச் சமுதாயமே எப்பொழுதும் நிலை கொண்டிருந்தது என்றும் சில ஆராய்ச்சியாளர்கள் முடிவுக்கு வருகிறார்கள். அவர்கள் முடிவு சரிதானா? மேற்கூறிய சான்றுகளை மட்டும் தொகுத்து முடிவு கண்டால் அவர்கள் முடிவு சரியே. ஆனால் தாய்வழிச் சமூகம், இலக்கிய காலத்திற்கு முந்தியது. சரித்திர காலத்திற்கு முந்தியது. மிகவும் பழமையானது என்பதைக் கவனத்தில் கொண்டால் இலக்கியச் சான்றுகளிலிருந்து மட்டும் மேற்கண்ட முடிவுக்கு வருவது தவறாக முடியும். தற்போது இருக்கும் சமூகத்தில் ஆண் ஆதிக்கத்துக்கே சான்றுகள் அதிகமாக உள்ளன. சமீபகால முறைக்குச் சான்றுகள் அதிகம் அகப்படுவது இயற்கையே. பெண் ஆதிக்கச் சமுதாயம் மறைந்துவிட்டது. மறைந்துவிட்ட சமூக முறைகளைப் பற்றிய சான்றுகள் தேடிப் பிடித்தால்தான் அகப்படும். அதுவும் சிற்சில எச்சமிச்சங்களே கிடைக்கும். அவற்றிலிருந்து அச்சமுதாயத்தை நாம் புனரமைத்து வருணிக்க வேண்டும்.

இத்தகைய எச்சமிச்சமான சான்றுகள் இன்று அகப்படுகின்றனவா? என்றாவது தமிழ்நாட்டில் பெண் ஆதிக்கச் சமுதாயம் இருந்ததா? இருந்திருத்தால் எந்தச் சமூக அடிப்படையின்மீது மேற்கோப்பாக அது இயங்கிற்று என்பதையும் நாம் அறிந்து கொள்ள முயலுவோம்.

மனிதன் தனது உணவை வேட்டையாடிப் பெற்றான் என்பது சமூக நூல் ஆராய்ச்சியாளர் முடிவு. வேட்டையாடி உணவு பெற்ற மனிதரை ‘வில்லேறுழவர்’ என்று பண்டை நூல்கள் அழைக்கின்றன. அக்காலத்தில் வேட்டைத் தொழிலில் சிறந்தவர்களுக்கு ஏற்றம் இருந்தது. காரணம் சமூகத்திற்குத் தேவையான உணவை அவர்களே தேடி அளித்தார்கள். உலோகங்கள் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் மனிதன் வேலை செய்தான். வேல், வேட்டைக் கருவி ஆயிற்று. வேலைக் குறி பார்த்துத் திறமையாக எறிபவன் சிறப்பாக வேலன் என்று அழைக்கப்பட்டான். உணவு தேடுவதில் அவனுக்கிருந்த முக்கியப் பங்கு குறித்து அவன் சிறப்புப் பெற்றான். வேலன் சக்தி மிகுந்தவன் என்று கருதப்பட்டான். அவனை வேடர்கள் போற்றினார்கள். தங்கள் வாழ்க்கையில் தோன்றும் சங்கடங்களைப் போக்க அவனை நாடினார்கள். மற்றவரைவிட அவன் அறிவு மிகுந்தவன் என்று நம்பினர். வர வர இவனுக்குச் செல்வாக்கு மிகுந்தது. நாட்பட அவன் தெய்வமானான். வேடர்கள் உணவு தேட வேறு வழி தேடிக்கொண்டபோதும் வேலனை மறக்கவில்லை. உணவு தந்த வேலன் உணவு தராதபோதும் செழிப்பின் சின்னமாகிவிட்டான். அவனை அவர்கள் கற்பனையில் தங்களைவிட சக்தி மிகுந்தனவாகக் கருதித் தெய்வமாக வழி பட்டனர்.

மனிதன் வேட்டையாடி உணவு தேடிய காலத்தில் ஆண்களே வேட்டைத் தொழில் செய்தனர். அவர்களே சமுதாயத்தில் ஆதிக்கம் வகித்தனர். அதனால் பெண்கள் குகைகளிலும், குடிசைகளிலும் தங்கினர். அவர்கள் செடி, கொடிகளைக் கண்டனர். அவற்றின் இனப்பெருக்கத்தை அனுபவத்தில் கண்டனர். இயற்கையைப் பின்பற்றித் தாங்களும் கொட்டைகளைப் பூமியில் விதைத்தனர். விதைகளை நிலத்தில் ஊன்றினர். கிழங்குகளை நிலத்தை அகழ்ந்து புதைத்து மூடினர். அவை வளர்ச்சியுற்றுப் பலனளித்தன. இவ்வாறு பண்டைப் பயிர்த் தொழில் தோன்றிற்று. பயிர்த் தொழிலிலிருந்து, வேட்டைத் தொழிலிருந்து கிடைப்பதை விட அதிகமாக உணவு கிடைத்தது. முதலில் பெண்களே பயிர்த்தொழிலில் ஈடுபட்டனர். அவர்களே பயிர்த் தொழிலை கண்டுபிடித்தனர். பயிர்த் தொழில் செய்ய ஆள்பலம் வேண்டும். அதற்குரிய மக்களை ஈன்றதும், அவர்களுக்குப் பயிர்த்தொழிலைக் கற்றுக் கொடுத்ததும் பெண்களே. ஆண்கள் வேட்டைக்காக நெடுந்தூரம் சுற்றி அலைவார்கள். சில நாட்களுக்கு ஒருமுறையே குடில்களுக்குத் திரும்புவார்கள். ஆகவே பயிர்த் தொழிலின் தொடக்கக் காலத்தில் ஆண்களுக்கு அதில் அதிகப்பங்கு இருந்ததில்லை. குடும்ப வளர்ப்பிலும், அதிகப்பங்கு இருந்ததில்லை. பெண்களே புராதனப் பண்பாட்டை உருவாக்குவதில் முக்கியப் பங்கு பெற்றனர். வேட்டை முக்கியத் தொழிலாக இருந்தது மாறி பயிர்த் தொழில் முக்கியத் தொழிலாயிற்று. பயிர்த் தொழிலில் பங்கு பெற்ற பெண்களும் ஆண்களை விட உயர்வு பெற்றனர். தொல்குடிகளைப் பற்றி ஆராய்ந்த அறிஞர் அனைவரும் ஒருமுகமாக ஒப்புக் கொள்ளும் உண்மை இது.

இந்நிலையில் மனிதனது கருத்துக்களும் மாறின. பெண் ஆதிக்கச் சமுதாயம் தோன்றி வளரும் சரித்திர முற்காலத்தில் பெண் தெய்வங்கள் தோன்றின. பயிர்த் தொழில் செழிப்பைக் கொடுத்தது. ஆகவே செழிப்பைக் குறிக்கும் தெய்வங்கள் பல நாடுகளிலும், பெண் தெய்வங்களாகவே இருக்கின்றன. சீதேவி, கிரேக்க தெய்வங்களான சைபீல்டெடோனா, டெல்பி முதலியவை பெண் தெய்வங்களே, செழிப்பை வேண்டி நடத்தப்படும் விரதங்களிலும், விழாக்களிலும், இன்றும் ஆண்களுக்குப் பங்கில்லை. உதாரணமாக பாவை நோன்பை நோக்குவோம். பாவைகள் பலவகைப்படும்; அல்லிப்பாவை, கொல்லிப்பாவை, தெற்றிப் பாவை, மணற்பாவை, வண்டற்பாவை முதலியன. நாடுவளம் கொழிக்க இவற்றைப் பெண்கள் பூசை செய்வார்கள். மழைவளம் சுரக்கவும், ஆற்று நீர் நிலத்தை விதையேற்கும் பருவமாக்கவும், முளை வளரவும், பயிர்வளம் பல்கவும் பாவையை வாழ்த்துகிறார்கள். ‘திருப்பாவை’ இப்பாவை நோன்பை வருணிக்கிறது. இந்நோன்பிலே ஆண்களுக்கு இடமில்லை. பாவையை வணங்கி விழா கோண்டாடினால் வளம் கரக்கும். பெண்மக்களுக்கு இன்பமும் சுரக்கும் என்று திருப்பாவை கூறுகிறது. பாவைக்கு நோன்பு செய்தால் கண்ணன் பரப்பு மாக பறை தருவான் அருள் தருவான் என்றும் ‘திருப்பாவை’கூறுகிறது. இதிலே கூர்ந்து நோக்க வேண்டியது. கண்ணனுக்குப் பூசை இல்லை, விழாவும் இல்லை. பாவைக்குத்தான் பூசை, பாவை மணலாலும் வண்டலாலும் கிழங்கினாலும் செய்யப்பட்டது. பாவை நிலத்திற்கு அடையாளம், நிலமோ பெண்; பெண்ணே செழிப்பைத் தருபவள். அவனை வணங்கினால் வளம் அருளுவாள். இங்கே கண்ணன் பார்த்து நிற்பவனே அவனுக்கு முக்கியத்துவம் இல்லை. ஆண்டாளுடைய காலத்துக்கு முன் தமிழ் நாட்டுப் பெண்கள் பாவை நோன்பு கொண்டாடியிருக்க வேண்டும். அப்பொழுது கண்ணனுக்கு அதில் சற்றும் இடமிருந்திராது என்பது நிச்சயம். பாவைநோன்பு, பாவைக்கு மட்டுமே, அதில் பங்கு பெறுபவர் பெண்கள் மட்டுமே, ஆண்டாள் காலத்தில், மிகப் புராதன காலத்தில் நடந்த விழா வொன்றின் மிச்சங்கள் பாவை நோன்பில் எஞ்சிக் காணப்பட்டன.

பண்டைத் தமிழ் நூல்களில் பெண் தெய்வம் ஒன்றின் பெயர் காணப்படுகிறது. அவள் பலவாறு அழைக்கப்படுகிறாள். ‘முதியோள்’ என்பது அவளது பெயர்களுள் ஒன்று. எல்லோரிலும் பெரியவள் என்று அதன் பொருள். அதே பொருளில் அவள் ‘பழையோள்’ என்றும் அழைக்கப்பட்டுள்ளாள். இவள் யாரால் வணங்கப்பட்டாள்? அதற்கு அவளுடைய மற்றொரு பெயர் பதிலளிக்கிறது. பரிபாடல் பதிகத்தில் அவள் ‘காடுகள்’ என்று அழைக்கப்படுகிறாள். ‘காடு கிழாள்’ என்ற மறு பெயரும் அவளுக்கு உண்டு. குறிஞ்சி நில மக்கள், வேட்டைத் தொழிலிலிருந்து புராதனப் பயிர்த் தொழிலுக்குத் திரும்பிய காலத்தில் புன்புலப்பயிர் செய்யத் தொடங்கினார்கள். அக்காலத்தில் பெண்கள் ஆதிக்கம் பெறத் தொடங்கினார்கள். ஆகவே காட்டில் பெண்கள் பயிர் செய்யத் தொடங்கிய காலத்தில் காடு கிழாளும் தோன்றினாள்.

அதற்கு முன்பே. சேயோன் (வேலன்) கடவுளாகி விட்டானல்லவா? அவனுடையச் சிறப்பு ஆண் ஆதிக்கத்தையல்லவா குறிக்கிறது? பெண் ஆதிக்கச் சமுதாயம் அவனுக்கும் ஓர் இடம் கொடுக்க வேண்டும். ஆகவே அவனைக் காடு கிழாளின் மகனாக ஏற்றுக் கொண்டது. அவன் வீரன் ஆகவே அவளையும் வீரமங்கையாக்கியது. வீரத் தொழிலில் வெற்றி பெறுவோருக்கு அவள் கொற்றவை ஆனாள். அவனும் கொற்றவைச் சிறுவன் ஆனான். பிற்காலத்தில் வேட்டைத் தொழிலை விட்டு, ஆண்கள் ஏர் உழவின் மூலம், பயிர்த் தொழிலில் முக்கிய பங்கு பெறத் தொடங்கியபின், மறுபடியும் வேலன் தாய்க் கடவுட் சேய் ஆகிவிட்டான். பெண்ணாதிக்கச் சமுதாயத்தில் தாய்வழி உறவு பெருமையாகச் சொல்லப்படுகிறது. ஆணாதிக்கச் சமுதாயத்தில், தந்தை வழி உறவு பெருமையாகச் சொல்லப்படுகிறது.

சிலப்பதிகாரத்தில் கொற்றவை வழிபாட்டு முறை சொல்லப்படுகிறது. கொற்றவை கோயில் ஐயைக் கோட்டம் என அழைக்கப்படுகிறது. ஐயைக்கு விழாச் செய்ய வேண்டுமென நாள் குறித்துச் சொல்லுபவள். அவள் தெய்வவெறி கொண்டு ஆடுபவள். ‘பழங் கடனுற்ற முழங்குவாய்ச் சாலினி’ என்று அவள் வருணிக்கப்படுகிறாள். ஐயைக்குப் படிவமில்லை. ஒரு குமரிப் பெண்ணைக் கோலம் புனைந்து ஐயை என்று பெயரிட்டுக் கலைமான் மீது ஏற்றி வணங்குகிறார்கள்.


இட்டுத் தலையெண்ணும்
      எயின ரல்லது
சுட்டுத் தலை போகா
      தொல்குடிக் குமரியை
சிறு வெள்ளாவின்
      குருளை நாண் சுற்றி,
குறு நெறிக் கூந்தல்
      நெடு முடி கட்டி,
இளை சூழ் படப்பை
      இழுக்கிய வேனத்து,
வெண்கோடு
      பறித்து மற்றது
முளை வெண்
      திங்க ளென்னச் சாத்தி
மறங் கொள் வயப்புலி
      வாய்பிளந்து பெற்ற
மாலை வெண் பற்றாலி
      நிரை பூட்டி
வளியும், புள்ளியும்
      மயங்கு வான் புறத்து
உரிவை மேகலை
      உடீ இப்பரிவோடு
கருவில் வாங்கும்
      கையத்துக் கொடுத்து
... ... ... ... ... ...

பறையும், குழலும் சூறைச் சின்னமும், முழங்கவும் மணியிரட்டவும் தெய்வமென எழுந்தருளுவித்து வேடர்கள் (எயினர்) வணங்குகின்றனர். பூசைக்குரிய சந்தனத்தையும், மலரையும், சாம்பிராணியையும் எயிற்றியர் (பெண்கள்) ஏந்தி வருகிறார்கள். தெய்வமும், பெண் தெய்வம் பூசனை முழுவதும் பெண்களின் உரிமை. இது பழங்காலப் பெண்ணாதிக்கத்தின் எச்சம், சிலப்பதிகார காலம் ஆணாதிக்கமும் தந்தை வழி முறையும் நன்றாக வளர்ச்சி பெற்றிருந்த காலம், அக்காலத்திலும் தொன்மையின் எச்சம் இவ்வழிபாட்டில் காணப்படுகிறது. ⁠பிற்காலத்தில் ஆணாதிக்கச் சமுதாய அடிப்படையில் தோன்றிய கடவுளர்களும், இத்தெய்வங்களின் உறவினர்களாக்கப்படுகின்றனர். இத்தெய்வத்தின் செயல்களெனப் புராணங்கள் வருணிக்கும் நிகழ்ச்சிகள், ஐயை மீது ஏற்றிக் கூறப்படுகின்றன. உதாரணமாக சிவனது தன்மைகள் சில ஐயை மீது ஏற்றிக் கூறப்பட்டுள்ளது.

'மதியின் வெண் தோடு சூடுஞ் சென்னி நுதல் கிழித்து விழித்த
இமையா நூட்டத்து பவள வாய்ச்சி,
தவள வாய் நகைச்சி நஞ்சுண்டு கறுத்த கண்டி......'

கண்ணனது செயல் இவள் மீதேற்றிக் கூறப்படுகிறது.

'மருதின் நடந்து நின்
மாமன் செய் வஞ்சம்
உருளும் சகடம்
உதைத் தருள் செய்குவாய்.

⁠எப்படியாயினும் இப்பெண் தெய்வத்தின் கணவன் எவன் என்று கூறப்படவில்லை. இவளே குமரி, இவளே செழிப்பின் செல்வி, இவளது வழிபாட்டை நடத்தும் உரிமையுடையவர்கள் பெண்களே, ஆண்கள் எட்ட நின்று அருள் பெறுவதற்கே உரியவர்கள், பெண்ணாதிக்கச் சமுதாயத்தின் எஞ்சிய மரபென்று இதனை ஐயமறக் கொள்ளலாம். ⁠இனி தந்திரம் என்றழைக்கப்படும் சித்தர் தத்துவத்திலிருந்து பெண்ணாதிக்கச் சமுதாயத்தின் எச்சங்களைச் சுருக்கமாகக் காணலாம். சித்தர்கள் சக்தி உபாசகர்கள். பட்டினத்தாரையும், இராமலிங்கரையும் தற்காலத்தார் சித்தர்களாக்கிவிட்டனர். உண்மையான சித்தர்கள் தந்திரத்தில் நம்பிக்கையுடையவர்கள். தந்திரம் தொன்மையான மந்திரவாதம் அதன் அடிப்படை சக்தி. இச்சக்தி பெண்மைதான்.அவர்கள் பெண் பிறப்புறுப்பை(அல்குல்) இரண்டு விதமான அடையாளங்களில் ஒப்பிடுவர். ஒன்று தாமரை, மற்றொன்று முக்கோணம். பெண்மையின் ஆற்றலை அடைந்தால் பிரபஞ்சத்தை அடக்கி ஆளலாம் என்பது அவர்கள் தத்துவம். இதற்காகப் பெண்மை ஆற்றலையடைய அவர்கள் யோக முறைகளை ஏற்படுத்தினார்கள். இதற்கு ஒரு புராதன விஞ்ஞான விளக்கமும் கொடுக்கிறார்கள். முதுகுத் தண்டிலுள்ள சுழுமுனை என்னும் நரம்பில் சட்சக்கர பேதம் என்று படிப்படியாக உயரும் நிலையில் 7 தாமரைகள் இருப்பதாகவும் யோகத்தின் மூலம் மனம் ஒவ்வோரு படியாக ஏறிக் கடைசியில் சகல சக்திகளையும் அடையும் என்பதும் அவர்கள் தத்துவம். இவையனைத்தும் பெண்மையின் சக்தியைப் பெறும் முயற்சியே. ஆண்கள் பெண்களின் சக்தியை ஏன் பெற வேண்டும்? பெண்கள் உயர்வானவர்கள் என்று மதிக்கப்பட்ட காலத்தில்தான் அத்தகைய எண்ணம் தோன்ற முடியும். பெண்ணாதிக்கத்திற்கு அடிப்படையான சமுதாய அமைப்பு பின்னரும், சக்தி வழிபாட்டிலும், தந்திர முறைகளிலும் சித்தர் தத்துவங்களிலும், எச்சங்களாகக் காணப்படுகின்றன. இவையனைத் தையும் 'வாமாசாரம்' என்ற சொல்லால் இந்தியத் தத்துவ நூலார் அழைக்கிறார்கள், வாமம் என்றால் பெண், ஆசாரம் என்றால் ஒழுக்கம். பெண்ணொழுக்கத்தைக் கடைப்பிடித்து பெண்மையின் சக்தியைப் பெறுவதே இம்முறைகளின் நோக்கம். இம்முறைகளின் மூலவேர் பெண்ணாதிக்கச் சமுதாயத்திலிருந்தது என்பதில் ஐயமில்லை. ⁠இனி இன்று நிலவி வரும் அம்மன் வணக்கத்திலிருந்து சில சான்றுகள் காணலாம். ஆண்டு தோறும் நவராத்திரி உற்சவம் நடைபெறுகிறதல்லவா? ஒவ்வொரு ஊரிலும் பெண் தெய்வங்களுக்குத் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. இத்தெய்வங்களுக்கு ஆகம முறைப்படி பூசனையில்லை. தந்திரீக முறைகள் சிலவும் தொன்முறை வழக்கங்களும் இப்பூசனைகளில் இடம்பெறுகின்றன. அம்மனுக்கு முன் முக்கோணம் அல்லது தாமரை வடிவத்தில் யந்திரங்கள் கோலமாகப் போடப்படுகின்றன. இவை எதனைக் குறிக்கின்றன என்று முன்னரே கண்டோம். அவற்றின்மீது பூரண கும்பம் வைத்து, நெல் நிரப்பி, மஞ்சளும், தேங்காயும் வைக்கிறார்கள். அல்குல் இனவிருத்திக்கு அடையாளம். அதனோடு தொடர்பு கொள்ளும், நெல்லும் மஞ்சளும், தென்னையும் பல பயிர்வகைகளுக்கு அடையாளங்கள். பயிர்களெல்லாம் ஒன்று நூறாகப் பெருக வேண்டும் என்பது இச்செய்கையில் மறைந்திருக்கும் பொருள். அம்மனுக்குக் குங்குமம் அர்ச்சனை செய்கிறார்கள். தந்திர நூல்களில் குங்குமம் மாதவிடாய் இரத்தத்தைக் குறிக்கும்.

முதன் முதலில் பூப்பெய்தியதிலிருந்து, மாதவிடாய் நிற்கும் காலம் வரை, பெண் செழிப்பின் சின்னம். அதற்கு முன்னும் பின்னும் அவள் கருவுயிர்த்து, இனச்செழிப்புக்குக் காரணமாவதில்லை. ஆகவே மாதவிடாய் உதிரம் மாயசக்தி உடையது. செழிப்புக்கு அறிகுறி என்ற கருத்துப் புராதன மக்களுக்கு ஏற்பட்டது. இன்னும் நாகரிகமடையாத தொல்குடி மக்களுக்கு இந்த நம்பிக்கை உள்ளது. மாதவிடாய் பருவத்திலுள்ள பெண்களை விதை முளைக்கும் வயலைச் சுற்றி வரச் செய்தால் விதை வளர்ந்து நல்ல பயன்தரும் என்று அவர்கள் நம்புகிறார்கள். இதற்கு அடிப்படையான காரணம் மனிதனது பிறப்புக்கு ஆண் பெண் உறவு காரணமாவதுபோல உலகில் எல்லாம் தோன்றுவதற்கு உடலின் நிகழ்ச்சிகள் போன்ற வேறு பிரகிருதி நிகழ்ச்சிகள் காரணம் என்ற நம்பிக்கையும், பிரகிருதியின் செழிப்பை, பெண்ணின் செழிப்புச் சக்தி வளர்க்கும் என்ற நம்பிக்கையுமே. எல்லா அம்மன்களுக்கும் சிவன் கணவன் என்ற கதை இன்று வழங்கி வருகிறது. முத்தாரம்மன் கதை, குமரியம்மன் கதை போன்ற கதைகளில் இவ்வம்மன்மார் சிவனது மனைவிமாராக பேசப்படவில்லை. சிவனை எதிர்த்துப் போராடிய அசுரர்களுக்கு உதவியாகவும் கதை சொல்லுகிறது. இக்கதைகளைப் பற்றிய விரிவான ஆராய்ச்சி தாய் வழிச் சமுதாயம் பற்றிய புதிய கருத்துகளைக் கொடுக்கும். இக்கட்டுரை தமிழகத்தின் வரலாற்று முற்காலத்தை அறிய ஆதாரமாகும் சில சான்றுகளை மட்டுமே குறிப்பிட்டது. ஒவ்வொரு சான்றையும் விளக்கினால் அது ஒரு விரிந்த நூலாகிவிடும். அத்தகைய ஒரு நூல் முற்கால தமிழகத்தின் சமுதாய வளர்ச்சியை அறிய மிகவும் அவசியம். மார்க்சிய அறிவும், இலக்கிய அறிவும், சரித்திர அறிவும் அமையப் பெற்ற பலர் கூட்டுறவில் இத்தகைய நூல் தோன்றுமாக.[1]

---------
[ 1]. ஆதார நூல்கள்: புறநானூறு, சிலப்பதிகாரம், பரிபாடல், திருப்பாவை, சித்தர் பாடல்கள். நாடோடிப் பாடல்கள், ‘Lokayatha‘’ Debiprasad Chatopadyaya; Orgin of the Family and the state-Engeles; Art and Social life - Plekonov; Forgotten sons of India-Subborayan, Retired DSP; Science in History - Bernal. Matriarchy in India-Ehrenfels.
---------------------

10. தமிழ் இலக்கியத்தில் மோரியர்

அகநானூறிலும், புறநானூறிலும், மோரியரைப்பற்றி ஐந்து பாடல்களில் குறிப்புகள் காணப்படுகின்றன. இக்குறிப்புகளைக் கொண்டு பல்வேறு விவாதங்கள், ஆராய்ச்சியாளரிடையே நடைபெற்று வருகின்றன. அவ்வாராய்ச்சிக்குப் பொருளாக அமைந்துள்ள வினாக்கள் வருமாறு: தமிழிலக்கியங்கள் குறிப்பிடும் மோரியர் யாவர்? இவர்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு எவ்வகையில் அறிமுகமாயினர்? மோரியரைக் குறிப்பிடும் பாடல்கள் மோசியர் காலத்திலேயே தோன்றினவா? இக்குறிப்புகளைக் கொண்டு புறநானூற்று அகநானூற்றுக் காலங்களைக் கணிக்க முடியுமா? இவ்விவாதங்களுக்குப் பல தலைசிறந்த ஆராய்ச்சியாளர்கள் தங்கள் கருத்துக்களை வழங்கியுள்ளார்கள். அவர்களுள் சிலர், வையாபுரிப் பிள்ளை, டாக்டர் எஸ்.கே.சட்டர்ஜி, ஆர்.ஜே.மஜூம்தார், டாக்டர் டி.டி. கோலாம்பி, எஸ்.கிருஷ்ணசாமி அய்யங்கார் முதலியோர்.

மெளரியர் என்ற பெயரை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அந்தப் பரம்பரையின் ஸ்தாபகர் சந்திரகுப்தர். சந்திரகுப்தன், சாணக்கியன் ஆகிய இருவரது கதைகளை சுருக்கமாகவேனும் அறியாதவர் இல்லை. சந்திரகுப்த மெளரியனுடைய காலத்திலிருந்து தான் தொடர்ச்சியான சரித்திரம் தொடங்குகிறதென்று சரித்திர ஆராய்ச்சியாள்கள் கூறுகிறார்கள்.

தாழ்ந்த ஜாதிப் பெண்ணிடத்து அரசனுக்குப் பிறந்த மகன் சந்திரகுப்தனென்று சில புராணக் கதைகள் கூறுகின்றன. அவன் தாயின் பெயர் மூரா என்றும் அதனாலே அவனுக்கு அப்பெயர் அமைந்தது என்றும் சில மொழியாராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். வேறு சிலர் புத்தருடைய வம்சமான சாக்கிய வம்சத்தில் சந்திரகுப்தன் தோன்றியதாகக் கூறுவர். இவ்விரண்டில் எது உண்மையாயினும் சந்திரகுப்தன் முந்திய அரசபரம்பரையின் நேர்வாரிசு அல்ல, என்பது தெளிவு. அவன் நந்த மன்னர்களிடம் படைத்தலைவராக இருந்து அரசனது அதிருப்திக்குள்ளானான். இதுபோன்ற அதிருப்திக்குள்ளான விஷ்ணுகுப்தன் என்னும் சாணக்கியனோடு சேர்ந்து மன்னனை எதிர்த்து ஒர் மறைவான இயக்கத்தைத் தோற்றுவித்தான். இறுதியில் நந்தர் பரம்பரை வீழ்ந்தது. சந்திரகுப்தன் முதல் மெளரியனாக முடி சூடிக்கொண்டான் ⁠சுமார் கி.மு. 321ல் மெளரிய பரம்பரை தோன்றிற்று. சந்திர குப்தன் காலத்திலேயே வட இந்தியாவிலுள்ள பல்வேறு சிற்றரசர் களையும், வனத்தில் வாழும் உறவு முறைக் கூட்டத்தாரையும் வென்று அடிமைப்படுத்தி, மெளரிய சாம் ராஜ்யத்தை விஸ்தரித்தான். அவனுடைய காலத்திற்குப்பின் மெளரிய சக்கரவர்த்திகளில் பெயர் பெற்றவன் அசோகன். அசோகன் அறவாழ்க்கையை மேற்கொள்வதற்கு முன்னால் வட இந்தியாவில் தற்போது காஷ்மீரம் என்று வழங்கும் காம்போஜத்திலும், தெற்கே கலிங்கத்திலும் மெளரிய ஆட்சியைப் பரப்பினான். அவனுடைய ஆட்சிக்காலத்தைப்பற்றி சாசனங்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் அகப்படுகின்றன. மெளரிய பரம்பரையின் ஆட்சிக்காலம் கி.மு. 321லிருந்து கி.மு.156 வரை என்று ⁠இதே காலத்தில் தமிழ்நாட்டில் சேர, சோழ, பாண்டியர்களும், நூற்றுக்கணக்கான குறுநில மன்னர்களும் ஆட்சி புரிந்து வந்தார்கள். اஇந்தியாவிலேயே வலிமைமிக்க மெளரியர்களைப் பற்றி அவர்கள் அறிந்திருக்கக் காரணங்களுண்டு. தமிழ்நாட்டுத் துறைமுகங்களிலிருந்து வாணிபப் பொருள்கள் கலிங்கத்துக்கும், வட நாட்டு நகரங்களுக்கும் சென்றன. தமிழ் நாட்டு வணிகர்கள் சிறு சிறு கூட்டங்களாக வடநாட்டில் பல பகுதிகளிலும் குடியேறி வாணிபம் செய்து வந்தார்கள். தக்ஷசீலத்திலும், பாடலிபுத்திரத்திலுமுள்ள புத்தபிக்குகள் நாகார்ஜூன் கொண்டாவுக்கும், தென்பாடலிக்கும், காஞ்சீபுரத்திற்கும், கற்பதற்கும், கற்பிப்பதற்குமாக வந்து போய்க் கொண்டிருந்தார்கள். இதன் காரணமாக மெளரிய சாம்ராஜ்யத்தைப்பற்றித் தமிழ் மன்னர்களும் தமிழ்ப்புலவர்களும் அறிந்திருக்கக் கூடும் என்பது சரியானதோர் முடிவே. மெளரியர்களோடு, போர்கள் மூலமும் திருமணத்தொடர்பு மூலமும், வாணிபத் தொடர்பு மூலமும் உறவுகொண்டிருந்த கிரேக்கர்கள் அவர்களைத் தங்களுடைய மொழியில், மோரீஸ், என்று அழைத்தார்கள் வடமொழியில் மெளரிய' என்ற சொல் மோரியர் என்று திரிந்து வழங்கியது. பெளத்தமத அறநூல்களும் அசோகனது கல்வெட்டுக்களும், புத்த ஜாதகக் கதைகளும், ராஜதரங்கிணி, தாரநாதம் முதலிய புத்தமத வரலாறுகளும் பாலி மொழியிலேயே உள்ளன. கலிங்கத்திலும் தமிழ் நாட்டிலுமுள்ள அறக்கல்லூரிகளில் பாலி மொழியிலே புத்த தருமம் போதிக்கப்பட்டது. எனவே, தமிழ்நாட்டில் மெளரியர் என்ற சொல் மோரியர் என்று வழங்கப்பட்டது. ⁠புலவர்கள். தங்களுக்குப் பரிசில் அளிப்பவர்களை மிகையாகப் புகழ்வது வழக்கம். தமிழ்நாட்டில் மோரியர் ஆட்சிக்காலத்தில் மிகச்சிறிய நிலப்பரப்புள்ள பகுதிகளையே மன்னர்களும், குறுநிலமன்னர்களும் ஆண்டுவந்தனர். ஆயினும் புலவர்கள் அவர்களைப் புகழ்ந்து பாடும்போது கடல் சூழ்ந்த புவிக்கெல்லாம் 'தலைவன்' என்றே பாடுவார்கள். அவன் செய்யும் அறச்செயல்களை உலகத்திலேயே சிறந்த பேரரசனதஅறச்செயல்களுக்கு ஒப்பிடுவார்கள். பிற்காலத்து சாசனங்கள் கூட கொங்குநாட்டில் 200 சதுரமைல் பரப்புள்ள ஒரு சிறுபகுதி மன்னனைத் திரிபுவனச் சக்கரவர்த்தி என்று அழைக்கிறது. இதேபோல் கோப்பெருஞ்சிங்கன் என்னும் சிற்றரசனை சகல புவனச் சக்கரவர்த்தி என்று சாசனம் அழைக்கிறது. எனவே குறுநிலத்தை மோரியர் சாம்ராஜ்யத்தோடு ஒப்பிட்டும் குறுநிலமன்னனை மோரியச் சக்கரவர்த்திகளோடு ஒப்பிட்டும் கூறுவது புலவர்களது உயர்வு நவிற்சியுக்தியாகும். மேற்சொன்ன கருத்துக்களை மனதில்கொண்டு அகநானூறில், வரும் மோரியர் பற்றிய குறிப்புக்களை ஆராய்வோம்.

................வென்வேல்
விண்ணுறு நெடுங்குடைக் குடைத்தேர் மோரியர்மோரியர்
திண்கதிர் திகிரி திரிதரக் குறைத்த
உலக விடைகழி மறைவாய் நிலஇய மலர்வாய்
, மண்டிலத்தன்ன நாடும் பலர்புற விதிர்ந்த அறத்துறை யன்னே
(புறநானூறு 175 ஆதனுங்கனை ஆதிரையானார் பாடியது) (புலவர் தன்னை ஆதரிக்கும் குறுநில மன்னனைப் புகழ்ந்து பாடுகிறார். உனது அறத்துறை மோரியரது ஆட்சியின் கீழுள்ள பரந்த நிலப்பரப்பில் நிலைபெற்ற அறத்துறை போன்றது.)
விண் பொரு நெடுங்குடை இயல்தேர் மோரியர் பொன் புனை திகிரி திரிதரக் குறைந்த அறை

(அகநானூறு 69)
(வானத்தளவு உயர்ந்த நெடியகுடையையும், விரைந்து செல்லும் தேர்ப்படையையும் உடைய மோரியர்களது ஆணைச்சக்கரத்தால் குறைப்பட்ட இடங்கள்)
வம்ப மோரியர் புனைத்தேர் நேமிஉருளிய குறைத்த விலங்கு வெள் அறிவிய வரை

(அகநானூறு 251)
(புதியவர்களான மோரியரது அணி செய்யப்பட்ட தேர்களின் சக்கரங்கள் உருண்டதால் பள்ளம் விழுந்து நீர் அருவியாகப்பாயும் இடங்கள்)
மோரியர் தென்றிசை மாதிர முன்னிய வரவிற்கு, விண்ணுற ஒங்கியபனி இருங்குறை ஒண்கதிர்த் திகிரி உருளியர் குறைந்த அறை

(அகநானூறு 281)
(மோரியர் தென்திசை நோக்கி வரும்பொழுது வானளாவ வளர்ந்த பனி மூடிய குன்றங்கள் மீது தேர்ச்சக்கரங்கள் பதிந்து குன்றங்கள் தேய்ந்து தாழ்ந்தன.)
மேலே காட்டிய மேற்கோள்களைக் குறித்து வையாபுரிப்பிள்ளை அவர்கள் கருத்து வருமாறு: மோரியர் என்பது மெளரியர்களைக் குறித்ததாகலாம். ஆனால் மேலே குறிப்பிட்ட செய்யுள்கள் மோரியரது ஆட்சிக் காலத்திலேயே எழுதப்பட்டிருக்க வேண்டுமென்று அவசியமல்ல. தான் புகழ நினைக்கும் தலைவனது பெருமையை பழங்காலப் புராணத் தலைவர்களது பெருமையோடு ஒப்பிடுவதும் உண்டு. மகாபாரதத்தில் போரிட்ட இருதரப்புப் படையினருக்கும், பெருஞ்சோற்றுதியன் என்னும் சேரமன்னன் விருந்தளித்தான், என்று புறநானூற்றுச் செய்யுள் ஒன்று கூறுகிறது. இது வரலாற்று உண்மையாக இருக்க முடியாது. பாரதக் கதையோடு தமது மன்னனைத் தொடர்பு படுத்துவதாகப் புனைந்து கூறப்பட்ட செய்தியே அது. அது போலவே மோரியரைப் பற்றிய பழஞ் செய்யுள்களிலும், புலவர்கள் தங்களது மன்னர்களைப் பெருமைப்படுத்துவதற்காக, முற்காலத்தில் வாழ்ந்த மோரியர்களோடு அவர்களை ஒப்பிட்டுப் பேசியிருக்கிறார்கள். உண்மையில் புறநானூறு செய்யுள்களில் பழமையானவை எழுதப்பட்ட காலம், கி.பி.முதல் நூற்றாண்டே. எனவே மோரியரைப் பற்றிய குறிப்புகளெல்லாம் பழைய சங்கச் செய்யுள்கள் எழுதப்பட்ட காலத்துக்கு இரண்டு, மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தவை. இதுவே பிள்ளையவர்களது கருத்தாகும். டி.டி. கோஸாம்பி அவர்கள் 'புராதன இந்திய சரித்திர அறிமுகம் என்ற நூலில் மோரியர் பற்றிய இலக்கியச் சான்றுகள் பற்றி தமது கருத்தை வெளியிட்டுள்ளார். மோரியர் காலத்தில் தமிழிலக்கியம் வளர்ச்சியடைந்திருந்தது என்பதை ஒப்புக்கொள்ள முடியாது. மோரியர் காலத்தில் தமிழ் நாட்டில் புதிய கற்கால நாகரிகம் நிலவியிருந்தது. எழுத்தும், இலக்கியமும் தோன்ற வில்லை. இக்கருத்தைத் தாம் மாற்றிக் கொள்வதற்கு ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. என்று அவர் கூறுகிறார். பாரதீய வித்தியா பவனம் வெளியிட்டிருக்கும், 'புராதன இந்திய சரித்திரம்' என்னும் நூலில் வம்ப மோரியர் என்ற சொற்றொடருக்கு upstart mauryas என்ற பொருள் கொடுத்து மோரியர் காலத்திலேயே தமிழ் நாட்டுப் புலவர்கள். மெளரிய சாம்ராஜ்யத்தைப் பற்றியும், மெளரியர்களைப் பற்றியும் அறிந்திருந்தார்கள் என்று கூறுகிறார். இதன் மூலம் மெளரியப் பரம்பரை ஆட்சிக் காலத்தில், மொழியும் இலக்கியமும் தமிழ் நாட்டில் வளர்ச்சியுற்றிருந்ததை இவ்வரலாற்று ஆசிரியர் ஒப்புக்கொள்கிறார். ஆனால் மோரியர்களைப் பற்றிய குறிப்புகளுள்ள, பாடல்களைக் கொண்டு தமிழ் நாட்டின் வரலாற்றைத் தெளிவாக அறிவதற்கு அந்நூலில் முயற்சி எதுவும் செய்யப்படவில்லை. ⁠இக் கருத்துகளைப் பற்றி என்னுடைய கருத்து என்ன என்பதைச் சுருக்கமாகக் கூறுகிறேன். முதன் முதலில் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை அவர்களது கருத்தை எடுத்துக் கொள்வோம். அவர்கள் சொல்வது போல பாரத ராமாயணத் தலைவர்களுக்குச் சமமாகப் பாட்டுடைத் தலைவனைப் புகழ்ந்து கூறுவது தமிழ்ப் புலவர்களது மரபுதான். ஆனால் மோரியர்களைப் பற்றி வரும் குறிப்புக்களில் அவர்கள் பழங்காலத்து மன்னர்கள் என்ற கருத்து காணப்படவில்லை. புறநானூற்றுப் பாடலில் ஆதனுங்கனது அறத்துறை மோரியர் ஆட்சி நிலைபெற்று விளங்குகின்ற இடங்களில் நிலைபெற்ற அறத்துறை போன்றது என்று சொல்லப்படுகிறது. ஆதனுங்கன் காலமும், மோரியர் காலமும், நிகழ் காலத்தில் பேசப்படுகின்றன. எனவே இது மோரியர் காலத்தையே குறிக்கிறதென்பது வெளிப்படை. இதே செய்யுள் தேர்ப்படை மிகுதியுடைய மோரியரது வெற்றிச் சிறப்பைக் கூறுகிறது. எக்காலத்திலோ நடைபெற்ற போர்களில் கிடைத்த வெற்றிகளைப் பெறுமையாகச் சொல்லிக் கொள்ள வேண்டுவது இல்லை. இவ்வெற்றிகளெல்லாம் சமீப காலத்தில் கிடைத்த வெற்றிகளையே குறிக்கின்றன. மேலும் மோரியர் பரம்பரை அழிந்த பிற்பாடு கலிங்கத்தில் காரவேலர் போன்ற பேரரசர்களும் வட இந்தியாவில் கங்கர் பரம்பரையும் தோன்றிவிட்டன. பிள்ளை அவர்கள் கூறுவதுபோல கி.பி. முதல் நூற்றாண்டில் இப்பாடல்கள் எழுதப்பட்டிருந்தால் அக்காலத்தில் மெளரிய சாம்ராஜ்யம் மறைந்து இந்தியாவின் வடமேற்குப் பகுதி கிரேக்கர்களின் ஆட்சியிலும் வடகீழ்ப்பகுதி இரண்டு, மூன்று சக்கரவர்த்திகளின் கீழும் சென்று விட்டன.

ஆகவே முன்னூறு வருஷங்களுக்கு முன் அழிந்து விட்ட பரம்பரையைக் குறித்து புலவர் நிகழ் காலத்தில் கூறியிருக்க மாட்டார். தவிரவும், வம்பமோரியர் என்ற சொற்றொடர் புதியவர்களான மோரியர் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. வம்ப மாகள், வம்பலர், என்ற சொற்கள் ஊருக்கோ நாட்டுக்கோ புதியவர்கள் என்ற பொருளில் பண்டைப் புலவர்களால் கையாளப்பட்டது. வம்பன் என்பதற்குத் தற்காலத்தில் இருக்கும் பொருளை அகநானூறு, புறநானூற்றில் வரும் இடங்களில் கொள்ளக் கூடாது. வம்பர் என்பது தற்காலத்திலுள்ள பொருளைத்தான் ‘இந்தியாவில் புராதன சரித்திரம்’ என்ற நூலில் ஆசிரியர் upstarts என்று விளக்கம் கொடுத்தார். புதியவர் என்றால் செய்யுள் எழுதப்பட்ட காலத்தில் அல்லது அதற்குச் சற்று முன்பாவது அவர்கள் தமிழ் நாட்டினருக்கு அறிமுகமானவர்களாக இருக்க வேண்டும். இவர்கள் தென்திசை நோக்கிப் படையெடுத்து வந்தார்களென்பது அகநானூறு, 281ம் செய்யுள்ளால் விளங்கும். இதுவும் ஒரு சமீப கால நிகழ்ச்சியையே குறிப்பிடுகிறது. இவையனைத்தையும், ஒன்று சேர்த்துப் பார்க்கும்பொழுது, மோரியர் காலத்திலேயே இங்கு மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் பாடல்கள் எழுந்தன என்று உறுதியாகக் கருதலாம். இச்சான்றுகளைக் கொண்டு சுமார் கி.மு.321க்கும் கி.மு.156-க்கும் இடையில் மேற்கோள் காட்டப்பட்ட பாடல்கள் தோன்றியிருக்கக்கூடும் என்று முடிவு செய்யலாம். இன்னும் கூர்ந்து நோக்கினால் புறநானூற்றுப் பாடல்களிலிருந்து வேறொரு வழியாலும் அப்பாடலின் காலத்தைக் கொண்டு நிர்ணயிக்கலாம்.

ஆணைச் சக்கரத்தையும், தர்மச் சக்கரத்தையும் ஒன்றாக்கி தர்மமே ஆணைக்கு அடிப்படையாக இருத்தல் வேண்டுமென்று அசோகன் பறை சாற்றினான். அவனுக்கு முன்பிருந்த சந்திரகுப்தனும், சாணக்கியனும் ராஜா ரீதியில் தண்டத்தையே முதன்மைப்படுத்தினார்கள். ‘ஆக்ஞா’ சக்கரத்தையும், தர்மச் சக்கரத்தையும் ஒன்றாக இணைக்க முற்பட்டவன் அசோகன். அவன் தனது கலிங்கப்போருக்கு முன்தண்டத்தையே நம்பியிருந்தான். கலிங்கப் போருக்குப் பின் அவன் புத்த தர்மத்தை மேற்கொண்டு தர்மச்சக்கரமே ஆக்ஞா சக்கரம் என்று பாறைகளிலும் கற்களிலும் எழுதி வைத்தான். இப்பாடலிலும் மோரியர் திகிரி என்பது மோரியர் ஆணைச் சக்கரத்தைக் குறிக்கிறது. கதிர்த்திகிரி என்பது அவர்கள் ஆட்சியின் சிறப்பைக் குறிக்கிறது. அவர்கள் நாட்டு அறத்துறை போன்றது. ஆதனுங்கனது அறத்துறை இங்கே அவர்கள் ஆணைச்சக்கரம் பரவிய இடங்களில் தர்மச்சக்கரம் பரவியிருந்தது என்ற கருத்தை கவிஞர் சுட்டிக் காட்டுகிறார். அப்படியாயின் இக்கருத்து அசோகன் காலத்தில் கலிங்கப் போருக்குப் பின் அவனுக்குத் தோன்றிய கருத்தாகும். அசோகனது முதல் பிரகடனம் கி.மு. 259 அசோகனது மரணம் கி.மு. 237. இக்காலத்தில் புத்தமதக் கொள்கைகள் இந்தியா முழுவதும் பரவின. எனவே இக்காலத்திலேயே மோரியர் பற்றிய இச்செய்யுள்கள் தோன்றியிருக்கலாம்.

புறநானூற்றில் சில செய்யுள்கள் கி.பி. முதல் நூற்றாண்டைச் சார்ந்தனவாக இருக்க வேண்டும். எனவே வையாபுரிப்பிள்ளை அவர்கள் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. அடுத்து டி.டி. கோஸாம்பியின் கருத்துகளை ஆராய்வோம். கோஸாம்பி, மெளரியர் காலத்தைக் தமிழ் நாட்டில் புதுக் கற்கால நாகரிகம் நிலவிய காலம் என்று கூறுகிறார். அப்படியானால் தமிழ் நாட்டில் உழவுத்தொழில் முன்னேறியிருக்கவில்லை. நாடும் நகரமும் தோன்றியிருக்கவில்லை. உலோகங்கள் உபயோகத்திற்கு வரவில்லை. எழுத்தும் இலக்கியமும் தோன்றவில்லை. வாணிபம் சிறிதளவும் தோன்றவில்லை என்பதே இதன் பொருள். அவருடைய ஆதாரம் எல்லாம் வையாபுரிப் பிள்ளையின் தமிழிலக்கிய வரலாறு ஒன்றுதான். அவருடைய கருத்துக்களை நாம் முன்னரே பரிசீலித்தோம். பிள்ளையவர்களின் கருத்துக்களின் அடிப்படையிலேதான் இம்முடிவுக்கு கோஸாம்பி வருகிறார். அக்காலத்திலிருந்த தமிழ் நாட்டின் பண்பாட்டு நிலையை அறிந்து கொள்ள சான்றுகள் அகப்படவில்லையென்று அவர் கூறுகிறார்.

கி.மு.வில் தமிழ் நாட்டின் வரலாற்றை அறிந்துகொள்ள வலுவான சான்றுகள் இல்லையென்பது உண்மைதான். ஆனால் இருக்கிற சான்றுகளைப் புறக்கணித்துவிட்டு முடிவுக்கு வருவதும் தவறாகும். டாக்டர் கோலாம்பியின் சரித்திரக் கண்ணோட்டமும் கொள்கையும் எனக்கு உடன்பாடுதான். ஆனால் தமிழ் நாட்டைப் பொறுத்தவரை கிடைக்கும் அளவு சான்றுகளைக் சேகரித்துத் தமது திறமையையும் அறிவையும், கண்ணோட்டத்தையும் பயன்படுத்தி பண்டைத் தமிழ் நாட்டின் சமூக வளர்ச்சியைப் பற்றி ஒரு சிறு குறிப்பாவது அவர் எழுத வேண்டுமென்று நான் ஆசைப்படுகிறேன்.

மோரியர் காலத்தில் தமிழ் மக்கள் கற்காலத்தை விட்டு முன்னேறியிருந்தார்கள் என்பதைக் காட்டக் கீழ்வரும் சான்றுகள் உதவும்.

1. மேலே காணப்பட்ட அகநானூறு, புறநானூறு செய்யுட்கள்.

2. ஆனைமலையிலும், பிற இடங்களிலும் கிடைக்கும் பிராமி எழுத்துச் சாசனங்கள். இவை கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.

3. கிரேக்கர் எழுதிய நூல்களில் தொண்டி, முசிறி போன்ற தமிழ் நாட்டுத் துறைமுகங்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. வாணிபம், கற்கால மனிதர்களின் சிருஷ்டி அல்ல. உயர்ந்த நாகரிகமுடைய மக்கள் அதனைத் தோற்றுவிக்க முடியும்.

4. சந்திர குப்தன் காலத்திலிருந்த மெகஸ்தனீஸ் எழுதிய இந்தியாவைப் பற்றிய நூல்களிலிருந்து பாண்டிய அரசைப் பற்றி அறிகிறோம். கற்கால மனிதர்களின் குழுக்களுக்கு அரசனும், ஆட்சியமைப்பும் இருந்திருக்க முடியாது. ‘வேதங்களின் தமிழ் சொற்கள்’ என்ற ஆராய்ச்சிக் கட்டுரையில் வேதங்களின் தமிழ் மூலத்திலிருந்து, தோன்றிய சொற்கள் நூற்றுக்கணக்கானவை உள்ளன என்று டாக்டர் கமில் சுவலபில் அவர்கள் நிரூபித்துள்ளார்கள். மோரியர் காலத்திற்கும், வேத காலம் 2000 ஆண்டுகள் முற்பட்டது. புதிய கற்கால மனிதர்கள் வளர்ச்சியுற்ற ஒரு மொழியைப் பேசியிருக்க முடியாது. எழுதியிருக்கவும் முடியாது. தமிழ்ச் சொற்கள் வேதத்தில் உள்ளன என்றால் வேதகாலத்திலேயே தமிழர்கள் கற்காலத்தைக் கடந்த நாகரிகத்தை உடையவர்களாக இருந்திருக்க வேண்டும். அதற்கு 2000 ஆண்டுகளுக்குப்பின் அவர்கள் சமூக முன்னேற்றப் பாதையில் வளர்ச்சியுற்றிருப்பார்களே தவிர பின்னோக்கிச் சென்றிருக்க முடியாது.

மேற்கூறிய சான்றுகளால் மோரியர் காலத்தில் தமிழ் நாட்டு மக்கள் பழைய கற்கால மனிதர்கள் அல்ல என்பது தெளிவு. கிடைக்கிற ஆதாரங்களிலிருந்து சிறு இன முறைக்குழுக்கள் ஒன்று சேர்ந்து முடியரசுகள் வளர்ச்சியடைகிற ஆரம்ப நிலவுடைமைக் கட்டத்தில் நமது நாகரிகம் இருந்தது என்று கூறலாம். சமீபத்தில் அகப்பட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பாண்டிய நாணயங்களும் அயல் நாட்டு நாணயங்களும் தென் தமிழ் நாட்டில் அகப்படுவதால் ஆரம்ப வியாபாரம் அக்காலத்திலேயே தோன்றியிருந்தது என்பதைக் காட்டுகிறது. தமிழ் நாட்டின் பண்டைக்கால வரலாற்றை அறிந்து கொள்வதற்கு மறைந்தும், புதைந்தும் கிடக்கும் ஆதாரங்களை வெளிகொணர வேண்டியது தொல் பொருள் ஆராய்ச்சித் துறையினர் கடமையாகும்.
----------------

11. சிலப்பதிகாரம் பற்றி இளங்கோ

சிலப்பதிகாரம் பற்றிப் பல திறனாய்வுக் கட்டுரைகள் வந்துள்ளன. நூல்கள் பலவும் எழுதப்பட்டுள்ளன. அவற்றுள் பெரும்பாலானவை காவியத்தின் நோக்கைக் குறிப்பிடுகின்றன.

‘அரைசியல் பிழைத் தோர்க்கு
      அறங் கூற்றாவதூஉம்
உரைசால் பத்தினிக்
      குயர்ந்தோர் ஏத்தலும்,
ஊழ்வினை உறுத்து
      வந்நூட்டும் என்பதூஉம்
சூழ்வினைச் சிலம்பு
      காரணமாகச்
சிலப்பதிகாரம் என்னும் பெயரால்
      நாட்டுதும் யாமோர்
பாட்டுடைச் செய்யுள்’

என்ற பதிகச் செய்யுளின் பகுதியைக் காவியத்தின் நோக்கமாகச் சில திறனாய்வாளர் கொள்கின்றனர்.

அரசியல் பிழைத்தோர்க்கு அறங் கூற்றாவது பாண்டியன் நெடுஞ்செழியன் அழிவையும், கொடுங்கோல் அரசன் தலை நகரான மதுரையின் அழிவையும் குறிப்பிடுகிறது. உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்துதல் வஞ்சிக் காண்டத்தில் விவரிக்கப்படுகிறது. ஊழ்வினை உறுத்து வந்தூட்டும் என்பது கண்ணகி, கோவலன் பழம் பிறப்பை மதுராபதி அறிவிப்பதைக் குறிக்கிறது.

இவை யாவும் கதையின் நீதி நோக்கங்கள் என்பது உண்மையே, ஆனால் இம்மூன்று நோக்கங்களும் காவியத்தின் பொது நோக்கு என்று சுருக்கிக் கூறிவிட முடியாது. இவ்வடிகள் பதிகத்துள் காணப்படுகின்றன. பதிகம் பாடியவர் இளங்கோவடிகளல்ல. சாத்தனார் என்று சிலர் கூறுவர். ஆனால் பதிகத்தில், 'அவனுழை யிருந்த தண்டமிழ்ச் சாத்தான் யானறிகுவன் அது பட்ட தென்றுறைப்பேன்' என்னும் அடிகள் சாத்தனார் இளங்கோவடிகளுக்குக் கண்ணகிக் கதையைக் கூறினாரென்று கூறுகின்றன. சாத்தனார் தண்டமிழ்ச் சாத்தான் எனச் சிறப்பிக்கப்படுகிறார். அவர் தன்னைத்தான் இவ்வாறு சிறப்பித்துக்கொண்டார் என்பது பொருத்தமுடையதல்ல. எனவே பதிகம் பாடியவர் சாத்தனார் அல்ல என்பது தெளிவு. பதிகத்தின் இறுதி அடிகளில், 'இவ்வாறைந்தும், உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் உரைசாலடிகள் அருள மதுரைக் கூலகிரணிகன் சாத்தன் கேட்டனன் இது, பால்வகை தெரிந்த பதிகத்தின் மரபென் 'அடிகள்' என்று இளங்கோ அழைக்கப்படுவதிலிருந்தும் 'சாத்தன் கேட்டனன் என்று சொல்லப்படுவதிலிருந்தும், இவ்விருவரும் பதிகம் பாடியவர்களல்லர், என்ற முடிவுக்கு நாம் வரலாம். எனவே, பதிகம் பாடிய யாரோ ஒரு புலவர் மேற்கூறிய மூன்று கருத்துக்களுமே காவியத்தின் நடுநாயகக் கருத்துக்கள் என்று கருதினார் என்ற முடிவுக்குத் தான் நாம் வர முடியும். இக் கருத்துக்களையே சிலப்பதிகார ஆசிரியரின் கருத்துக்கள் என்று கூறுவர். சான்றுகள் எதுவுமின்றியே அவ்வாறு கூறுகின்றனர். காவிய ஆசிரியரின் நோக்கமென்ன? இம்மூன்று கருத்துக்களை மட்டும் தான் வலியுறுத்த விரும்பி இக்காவியத்தைப் பாடினரா? என்ற வினாக்களுக்கு நாம் விடைகாண முயலுவோம். நூலின் முடிவில் நூற்கட்டுரை என்ற பகுதியில் பதினெட்டு அடிகளில் நூலின் குறிக்கோள் விளக்கப்படுகிறது. அவ்வடிகள் முழுவதையும் கீழே தருவோம். 89 நூற்கட்டுரை, குமரி வேங்கடங் குண குட கடலா மண்டினி மருங்கிற் றண்டமிழ் வரைப்பிற் செந்தமிழ், கொடுந்தமிழ் என்றிரு பகுதியின் ஐந்தினை மருங்கின் அறம் பொருளின்பம் மக்கள் தேவரென விரு சாரார்க்கும் (5) ஒத்த மரபின் ஒழுக் கொடு புணர எழுத்தொடு புணர்ந்த சொல்லகத் தெழுபொருளை இழுக்கா யாப்பின் அகனும், புறனும் அவற்று வழிப்படு உஞ் செவ்வி சிறந் தோங்கிய பாடலும் எழாலும் பண்ணும் பாணியும் (10) அரங்கு விலக்கே ஆடப் பெற்றனைத்தும் ஒருங்குடன் தழிஇ உடம்படக் கிடந்த வரியுங் குரவையுஞ் சேதமு மென்றிவை, தெரியுறு வகையாற், செந்தமிழியற்கையில் ஆடி நின் நிழலில் நீடிருங்குன்றம் (15) காட்டு வார்போற் கருத்து வெளிப்படுத்து மணிமேகலை மேல் உரைபொருள் முற்றிய சிலப் பதிகாரம் முற்றும். முதலிரண்டிகளில் தமிழகத்தின் எல்லை கூறப்படுகிறது. அரசியல் பிரிவுகளாக மூன்று முடிமன்னர்கள் ஆண்ட மூன்று மண்டலங்களாகத் தமிழகம் பிரிந்திருந்த போதிலும் தமிழ் நாட்டுப் பண்பாட்டு முறையில் ஒன்றே என்பது ஆசிரியர் கருத்து. மூன்று முதல் ஆறடிகளில் தமிழகத்தின் பண்பாட்டின் இயல்பை விளக்கிக் கூறுகிறார். வழக்கு வேறுபாட்டால் இருவகையாக இருந்த தமிழ் மொழி வழங்கிய பகுதிகளை, செந்தமிழ் கொடுந்தமிழ் என்றிரு பகுதி என்று கூறுகிறார். இவ்விரு பகுதிகளிலும் மக்கள் வாழ்க்கை ஐந்து வகைப்பட்டது. மக்கள் குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் என்ற ஐவகை நிலங்களில் வாழ்ந்தார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கை 90 வசதிகளை வெவ்வேறு வழிகளில் தங்கள் தொழில்கள் மூலம் பெற்றார்கள். குறிஞ்சி நில மக்கள் நாகரிகத்தின் தொடக்க காலக் கட்டத்தில் இருந்தார்கள் ஆண்கள் வேட்டையாடினார்கள். பெண்கள் அவரை, சாமை, தினை முதலியன பயிர் செய்தார்கள். வேட்டையாடும் தொழிலால் நாடோடியாகத் திரிந்த மக்களினம் நிலை கொள்ளப் பெண்கள் உழைப்பு காரணமாயிற்று. ஆரம்ப நாகரிகம் பெண்கள் வளர்த்த நாகரிகமே. அதையடுத்த நிலங்களில் அதற்கடுத்தக் கட்டத்திலுள்ள முல்லை நாகரிகம் தோன்றி நிலை கொண்டிருந்தது. ஆடுமாடுகளைப் பழக்கி 'ஆப்பயன் மூலம் வாழ்க்கை நடத்திய ஆயர் அங்கு வாழ்ந்து ஒரு புதிய நாகரிகத்தை உருவாக்கினார்கள். ஆற்றோரங்களில் உழவுப் பயன் மூலம் தலைச்சிறந்த நாகரிகம் தலையெடுத்தது. அது வளர்ச்சியுறவே தேவைக்கு எஞ்சிய தானியங்கள் கிடைத்தன. நிலவுடமைச் சமுதாயம் தோன்றிற்று. அதனோடு வர்க்கப் பிரிவினையும் தோன்றி நில உடைமையாளர் அரசியல் ஆதிக்கம் பெற்றனர். குறிஞ்சி நிலத்தாரையும், முல்லை நிலத்தாரையும், போராலும், உறவு முறையாலும் தங்கள் வசப்படுத்தினார்கள். மூவேந்தர் முடியரசுகள் நிலைப் பெற்றன. அரசு நிலைப்பெற்ற பின்னர் வாணிபம் தலை தூக்கியது. கடல் வழியாக வேற்று நாடுகளோடு வாணிபத் தொடர்பு பெருகிற்று. பல்வேறு தொழில் செய்தவர்களிடையே இருந்த முக்கியமாகக் கடற்கரையில் வாழ்ந்த பரதவர், உமணர் போன்ற சாதியினரிடமிருந்து வணிகர் வர்க்கம் தோன்றிற்று. வணிகர் பெரும் பொருளீட்டினர். அரசர்குடிக்குச் சமமான செல்வாக்குப் பெற்றது. சிலப்பதிகாரக் காலத்தில் அரசர் ஆதிக்கம் ஓங்கி நின்றது. மூன்று மண்டலங்கள் தனித்து அரசியல் பகுதிகளாகப் பிரிந்தன. குறிஞ்சி நில மக்களும், முல்லை நில மக்களும், பாலை நில மக்களும், நெய்தல் நில மக்களும் தனித்தனியான பண்பாடுகளை பின்பற்றி வந்தனர். நிலவுடைமையாளர் ஆதிக்கத்திலிருந்தனர். நிலவுடைமைச் சமுதாயத்தின் பண்பாடு மற்றைப் பண்பாடுகளைக் இணைக்க முயன்றது. கலையிலும், இலக்கியத்திலும் நிலவுடைமையாளர்களது செல்வாக்கு ஓங்கியிருந்தது. - - 9] இந்திலையில் செல்வாக்குப் பெற்று வந்த பெருங்குடி வணிகர்கள் நிலவுடைமை ஆதிக்கத்தால் தங்கள் வாணிபத்தைக் கட்டுக் கடங்கி பற்றி நடத்த வேண்டியதாக இருந்தது. மூன்று அரசியல் பிரிவுகள் அவர்களுக்கு விலங்காக இருந்தன. உள் நாட்டிலும் அரசன் தங்கள் அரசியல் செல்வாக்குக்கு உட்பட்டு தங்கள் வாணிபத்துக்கு உதவி செய்ய வேண்டுமென்று அவர்களது தேவையும் விருப்பமுமாக இருந்தது. இவ்விருப்பத்தையும் தேவையையும் நிறைவேற்றிக்கொள்ள அவர்கள் தமிழ்நாட்டிலுள்ள மக்களைத் தங்கள் கோரிக்கைகளுக்கு ஆதரவாகத் திரட்ட முயன்றார்கள். இதனை நிறைவேற்றப் பல்வேறு வகையில் முயன்றார்கள். தமிழ் நாடு முழுவதிலும் சைன, பெளத்த மதங்களைப் பரப்பி இதனைச் சாதிக்க முயன்றார்கள். இலக்கியத்தின் மூலமும் அவர்களது கருத்தைப் பரப்ப முயன்றார்கள்.

தமிழ் நாடு ஒரே நாடு என்ற கருத்து அவர்களது நலன்களுக்கு ஒத்திருந்தது போலவே மூன்று மண்டலங்களிலுமுள்ள தமிழ் மக்களுடைய நலன்களுக்கும் ஒத்திருந்தது. மக்களது பொருளாதார வாழ்வுக்கு அது ஒரு முன்னேற்றப் பாதையைக் கட்டிற்று. ஆகவே மக்களை ஒரே கருத்தின் அடிப்படையிலும், பண்பாட்டின் அடிப்படையிலும் ‘ஒரே தமிழ்நாடு’ என்ற கருத்தைப் பரப்பினர். ஐவகை நிலங்களின் தனித்தனியான பண்பாட்டு அம்சங்களையும், தங்களது பண்பாட்டின் தலைமையில் இணைக்க முயன்றனர். நிலவுடைமைச் சமுதாயம் ஈன்ற நாகரிகத்தின் சிறப்பான அம்சங்களைப் பாதுகாத்து முன்னேற்றமான பல அம்சங்களை அதனோடு இணைத்தனர். நிலவுடைமை வர்க்கத்தை எதிர்க்க இம் முயற்சிகளனைத்தையும், இணைக்க முயன்றனர். மக்களை இவ்வாறு ஒற்றுமைப் படுத்தியதோடல்லாமல், அவர்கள் வணங்கும் தேவர்களை ஒருவருக்கொருவர் உருவாக்கினர். மக்களுக்கும், தேவருக்கும் பொதுவான ஒரு நீதியை உருவாக்க முயன்றனர்.

‘ஐந்திணை மருங்கின் அறம் பொருளின்பம்
மக்கள் தேவ ரென விருசார்க்கும்
ஒத்த மரபின் ஒழுக்கொடு; புணர

ஐந்திணை மக்களுக்கும் வேறு வேறான ஒழுக்கத்தை, யாவருக்கும் ஒத்த மரபான ஒழுக்கமாக உயர்த்த நடந்த முயற்சியைச் சிலப்பதிகாரம் வரவேற்றுப் போற்றுகிறது. இந்த ஒற்றுமை இயக்கத்துக்கு காவிய முறையில் வாழ்த்துக் கூறுகிறது. ஐவகை நிலங்களிலுமுள்ள கலையை ஒன்றுபடுத்த முயலுகிறது.
ஐவகை நிலங்களில் முளைத்தெழுந்த ஆடல் பாடல்களை ஒன்றுபடுத்தும் முயற்சிக்கு அவர்கள் ஆக்கமளித்தனர். தமிழ் நாடு முழுவதற்கும் ஒரே கலையை, பல்வேறு வேறுபாடுகளையும் உள்ளடக்கி, உருவாக்கும் முயற்சியை வரவேற்றனர்.

வரலாற்றில் மிகச் சிறந்த, ஒரு கால கட்டத்தின் கண்ணாடியாக வாழ்க்கையின் பிரதிபலிப்பாக வாழ்க்கையை முன்னேற்றமான முறையில் மாற்ற முயலும் முயற்சிகளின் கலையுருவமாகச் சிலப்பதிகாரம் திகழ்கிறது. இப்படித்தான் காவியம் அமைந்திருக்கிறது என்று இளங்கோவடிகள் கூறுகிறார்.

ஐந்திணை மக்களது வாழ்க்கையிலிருந்து ஒழுக்கம் தோன்றுகிறது. அதனை அகம் புறம் என்று பிரித்து இலக்கியம் அமைக்கிறது. இவ்வொழுக்கத்தின் வழிப்பட்டதே ஆடல், பாடல் பாணி, அரங்கு விலக்கு வரி குரவை என்ற கலைகளனைத்தும், இவையனைத்தையும் தான் பண்பாடு என்று கூறுகிறோம். தமிழ் நாட்டின் பண்பாட்டை மலையைக் கண்ணாடியில் காண்பது போல இக்காவியம் காட்டுகிறது. மணிமேகலை என்ற காவியம் இதே பண்பாட்டைத் தொடர்ந்து விளங்குகிறது. இக்காவியத்தின் நோக்கம் பற்றி இளங்கோவடிகளின் கருத்து இதுதான்.

‘ஆடி நன்நிழலின் நீடிருங் குன்றம்
காட்டுவார் போற் கருத்து வெளிப் படுத்து
மணி மேகலை மேல் உரைப் பொருள்
முற்றிய சிலப் பதிகாரம் முற்றும்.’

இப்பொது நோக்கம் நிறைவேறக் காவியத் தலைவி கண்ணகி கருவியாகிறாள். புகார் காண்டத்தில் பெருங்குடி வணிகரின் செல்வச் சிறப்புக் கூறப்படுகிறது.
செல்வம்,

‘உரை சால் சிறப்பின் அரசு விழை திருவிற்
பரதர் மலிந்த பயங்கெழு மாநகர்
முழுங்கு கடல் ஞாலமுழுவதும் வரினும்
வழங்கத் தவா அவளத்த தாகி
அரும் பொருள் தரூஉம் விருந்திற்றே எம்
ஒருங்கு தொக் கன்ன உடைப்பெரும் பண்டம்,
கலத்தினுங் காலினுந் தருவனரீட்டக்
குலத்திற்குன்றாக் கொழுங் கொடிச் செல்வர்.’

வணிகர் ஈட்டிய செல்வத்திலிருந்து தான் நாட்டில் அறனும் இன்பமும் நிலைக்கின்றன. நாட்டில் அறம் பொருள் இன்பம் என்ற மூவகைப்பட்ட வாழ்க்கைக்கும், வணிகர் முயற்சியே அடிப்படையானது. ஆகவே அவர்கள் மக்களுள் தலைமை பெற்றனர்.

கண்ணகி, பிறந்த நகரை விட்டு கணவனோடு மதுரை செல்லும் வழியில் மருத நிலவாழ்க்கை வருணிக்கப் படுகிறது. பாலை நிலத்தில் எயினர் குடியில் கண்ணகி தங்கி அவர்களது தெய்வ வழிபாட்டைக் கண்டு சொல்லுகிறாள். மதுரையையடுத்த ஆயர் சேரியில் மாதரி கண்ணகிக்கு அடைக்கலம் அளிக்கிறாள். இவ்வாறு பலவகைப்பட்ட மக்களது வாழ்க்கையோடும், கண்ணகியின் வாழ்க்கைத் தொடர்பு படுத்தப்படுகிறது. அவர்களது வாழ்க்கையும், கலையும் அறிமுகப் படுத்தப்படுகின்றன. கடைசியில் மதுரையில் உண்மையை நிலைநாட்ட வேண்டி வழக்குரைத்து, சிலம்பை உடைத்துத் தன் கூற்றை நிரூபிக்கிறாள். நாடு தாண்டி நாடு வந்து வாணிபம் செய்யும் உரிமையை மறுத்த பாண்டியனது தலைநகரைத் தீக்கிரையாக்குகிறாள். அப்பொழுது அந்தகர மக்கள் நகரத்தைத் தீக்கிரையாக்குவது கொடுமை என்று கூறவில்லை. இது அறச் செயல் என்றே கூறுகிறார்கள்.

‘வரு விருந் தோம்பி
மனையற முட்டாப்
பெருமனைக் கிழத்தியர்
பெரு மகிழ் வெய்தி

இலங்கு பூண் மார்பிற்
கணவனை இழந்து
சிலம்பின் வென்ற
சேயிழை நங்கை
கொங் கைப் பூசல்
கொடிதோ வன்றெனப்
பொங்கேரி வானவன்
தொழுதனர் ஏத்தினர்.’

தாங்கள் துன்பமுறும்பொழுது, கண்ணகியின் கொள்கை,நியாயம் என்பதை உணர்ந்து அவர்கள் நகரம் பற்றி எரிவதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறார்கள்: அக்கினிக் கடவுளை வணங்குகிறார்கள்.

அறத்திற்காகப் போராடி உயிர் நீத்த கண்ணகியை சேர நாட்டின் குறவர்கள் போற்றுகிறார்கள். அவர்களது வாழ்க்கையும், பண்பாடும் காவியத்தோடு தொடர்புபடுத்தப்படுகிறது. வீரபத்தினிக்குக் கோவில் கட்டி வழிபட்ட சேரன் செங்குட்டுவனது வெற்றி வஞ்சிக் காண்டத்தில் கூறப்படுகிறது. இவ்வாறு அக்காலத்திய தமிழ் நாட்டு வாழ்க்கையின் கண்ணாடியாகச் சிலப்பதிகாரம் விளங்குகிறது.

பதிகத்தில் கூறிய மூன்று நோக்கங்களும், இப்பொது நோக்கத்துக்கு உட்பட்டவையே. அவற்றை மட்டும் காவியத்தின் நோக்கமாகக் கொள்வது காவியத்தின் முழுமையான நோக்கத்தைக் காண்பதாகாது. காவியத்தின் முழுமையான நோக்கம் தமிழகத்தின் வாழ்க்கை முழுவதையும், சித்திரமாகத் தீட்டிக் காட்டுவதே ஆகும். சிலப்பதிகாரத்தைப் பற்றி இளங்கோவடிகள் கருத்து இதுவே.
------------------

12. இராமலிங்கரின் மனிதநேயம்

இராமலிங்க அடிகளாரைப் பாரதி தமிழ்நாட்டின் சமூகச் சீர்திருத்த இயக்கத்தின் தந்தை என்று அழைக்கிறார்.

ஆனால், சைவப் பெரியார்கள் அவரைச் சைவ சித்தாந்தி எனச் சித்திரித்துக் காட்டுகின்றனர். ஆறுமுக நாவலர் போன்ற சித்தாந்திகள் நாக்கில் நரம்பின்றி இராமலிங்க அடிகளாரைப் பற்றித் திட்டியதும் அவரது அருட் பாவை மருட்பா வென்றதும் இன்று அவர்களுக்கு மறந்து போய் விட்டது. இன்று வள்ளலார் விழாக்கள் சைவ சமயவாதிகளாலேயே, சைவ சமயத் தத்துவச் சார்போடு கொண்டாடப்படுகிறது.

⁠பாரதி சமூகச் சீர்த்திருத்தவாதி, சமரச ஞானி, மனிதாபிமானி என்று வள்ளலாரைப் போற்றினார். இவையனைத்தையும் மறைத்து சைவசித்தாந்த சிறைக்குள் அடிகளாரை அடைத்துப் பூட்டிவிடச் சிலர் முயலுகிறார்கள்.

⁠இராமலிங்கரின் உண்மை வரலாறு நமக்குத் தெரியாது. அவரது வாழ்நாளிலேயே பல அற்புதங்களை நிகழ்த்தியதாக அவரது சீடர்கள் எழுதி வைத்துவிட்டார்கள். அவரது பாடல்களிலிருந்தும், நம்பத் தகுந்த ஆதாரங்களிலிருந்தும் அவர் இளமையில் தமிழறிவு மிக்கவராயிருந்தாரென்று தெரிகிறது. அவரது பாடல்கள் ஆறு திருமுறைகளாகக் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் முதல் ஐந்து அவரது சைவ சமயப் பற்றைக் காட்டுகின்றன. அவை பிற மதங்களின் மீது அவருக்கிருந்த குரோதத்தையும் காட்டுகின்றன. ஆனால் மனித வாழ்க்கையைக் கூர்ந்து கவனித்த அடிகளார் மனிதரது துன்ப துயரங்களை உணர்ந்து மனமுருகி அவற்றைப் போக்க எண்ணினார். முக்கியமாகத் தாது வருஷப் பஞ்சம் அவர் உள்ளத்தை விசாலமாக்கியது. சாவும், துன்பமும் அவரை மனிதாபிமானியாக்கியது. இந்நிலையை ஆறாம் திருமுறை சித்தரிக்கிறது.

உலகில் மனிதனுக்கு வரும் துன்பங்களை எதிர்த்து நிற்க மனிதர் ஒன்றுபட வேண்டுமென இராமலிங்கர் விரும்பினார். அதை விட்டு சமயக் காழ்ப்புகளிலும், சாதி வேறுபாடுகளிலும் உழலும் மனிதர்களைப் பார்த்து அவர் மனம் இரங்கினார். எல்லா உயிர்களையும் நேசிக்கக் கற்று கொள்ளுதலே தலைமையான அறமெனப் போதித்தார். இரக்கம் செயலில் தோன்ற வேண்டுமென உபதேசித்தார்! இதனையே ‘சுத்த சமரச சன்மார்க்க நெறி’யெனப் பெயரிட்டழைத்தார். சாதி, சமயம், மொழி வேறுபாடு, தேச வேறுபாடு ஆகிய பிரிவினை யாவும் கடந்த மனித நேசத்தை நிலை நிறுத்த மனிதர் அனைவரையும், அறை கூவி அழைத்தார். இதற்கென ஒரு நிறுவனமும் அமைத்தார். அதற்குச் சுத்த சமரச சன்மார்க்க சபை என்று பெயரிட்டார்.

கடவுள் நம்பிக்கையுடையவராதலால் தமது புதிய நெறியைக் கடவுள் கட்டளையால் தோன்றியதெனக் கருதினார். மனித குலத்தைப் பிளவுபடுத்தும் சாதி, சமயங்களை அவருக்கு முன்னர் சித்தர்கள் கடுமையாகக் கண்டித்தார்கள். அவர்களுடைய பாடல்களில் ஈடுபட்ட வள்ளலாரும், அவர்கள் வழியிலே முன்னேறி, மனிதன் சுக நிலை அடைய வழிகாட்டுகிறார்.

‘பேருற்ற உலகிலுறு
சமய மத நெறி யெலாம்
பேய் பிடிப்புற்ற பிச்சுப்
பிள்ளை விளையாட் டென
உணர்ந்திடாது மிக்க பல
போருற்றிறந்து வீண்
போயினார் இன்றும் வீண்
போகாதபடி விரைந்தே
புனித முறு சுத்த சன்மார்க்க
நெறி காட்டி

பொழிளினை உணர்த்தி யெல்லாம்
ஒருற்ற சுக நிலை
அடைந்திடப் புரிதி நீ.’
⁠★⁠★⁠★
‘பன்னெறிச் சமயங்கள்
மதங்கள் என்றிடுமோர்
பவ நெறி இதுவரை
பரவிய தனால்
சென் னெறி யறிந்திலர்
இறந் திறந்துல கோர்
செறி யிருளடைந்தனர்
ஆதலின் இனி நீ
புன்னெறி தவிர்த் தொரு
பொது நெறி எனும் வான்
புத்த முதருள் கின்ற
சுத்த சன்மார்க்க
தன் னெறி செலுத்துக
வென்ற என்னாசே
தனி நடராஜ வென்
சற்குரு மணியே!’

இப்பாடல்கள் எழுந்த காலம் எது? சைவ மடங்கள், நாவலர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை முதலிய சைவ சமயப் பிரசாரகர்கள் மூலம் மதப் பிடிப்பை ஏற்படுத்தித் தத்துவ ஆதிக்கத்தை நிலைநிறுத்தி வந்த காலம். கம்ப ராமாயணத்தை வைணவ சமயச் சார்புடையது என்று படிக்கக் கூடாதென்று கட்டளை பிறப்பித்த காலம். தமிழை வளர்ப்பதாகத் தம்பட்டமடித்துக் கொண்டு, மதப் பூசல்களை விசிறி விட்டகாலம். இப்பூசல்களால் பிரிந்து மோதிக் கொண்டிருந்த மக்கட் பிரிவினரின் மீது நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்தை சைவ மடங்களும் வைணவ மடங்களும் ஏற்படுத்திக் கொள்ள முற்பட்ட காலம்.

இக்காலத்தில் சமரசத்தையும், ஒற்றுமையையும் மடத்தலைவர்கள் விரும்பவில்லை.

அப்பொழுதுதான் சைவ சித்தாந்தியான வள்ளலார் மனிதாபிமானத்தினால் உந்தப்பட்டு சமரசவாதியனார். சாதி, சமய பிரிவுகளால் பிரிந்து போரிட்ட மனிதரை மனித நேயத்தால் ஒன்றுபட அழைத்தார். சிவனை வழிபடும் சைவ மதத் தலைவர்கள், சிவனை வழிபட உலகினர் அனைவரையும் ஒன்றுபட அழைத்த இராமலிங்கரை வெறுத்தனர். மதச் சழக்குகளைச் சாடி மக்களை ஒன்று பட அழைத்த அடிகளாரை, தயை தாட்சண்ணியமின்றித் தாக்க நாவலர் போன்ற சைவப் பெருந்தலைகளை ஏவி விட்டனர்.

சைவ மதத் தலைவர்கள் சிதம்பரத்தில் நடராஜனை வழிபடலாமென்றார்கள். நடராஜ நடனத்துக்கு எவருக்கும் விளங்காத முறையில் சித்தாந்த விளக்கம் கொடுக்க முனைந்தார்கள். அவரை வழிபடுவதே கன்ம மலங்களை ஒழித்து இன்ப நெறி கானும் வழியென்று போதித்தார்கள்.

ஆனால் கடவுள் வழிபாட்டில் மடத் தலைவர் வழியில் இராமலிங்கர் செல்லவில்லை. பேதமின்றி மனிதர் மீது அன்பு செய்கின்றவர்கள் உள்ளமே நடராஜர் ஆடுகின்ற அரங்கம் என்று பாடுகிறார். ‘மனிதனே நடமாடும் கோயில்’ என்ற விவேகானந்தரின் பேச்சோடு இராமலிங்கரின் இப்பாடலை ஒப்பிடலாம்.

‘எத்துணையும் பேத முறாது
எவ்வுயிரும் தம் முயிர் போல் எண்ணியுள்ளே,
ஒத்துரிமை யுரியவராய் உவக்
கின்றார் யாவர் அவருளந்தான்
சித்துருவாய் எம் பெருமான் நடம்
புரியுமிட மென நான் தெரிந்தேன் அந்த
வித்தகர் தம் அடிக் கேவல்
புரித்திட வென் சிந்தை மிக விழைந்த தாலோ’

நாயன்மார்கள், சிவனடியார்கள் என்ற சாதியைச் சார்ந்தவராயினும் அவரடிக்கு ஏவல் பூண்டு ஒழுக விழைந்தார்கள்.
‘ஆவுரித்துத் தின்று ழலும் புலையரேனும்
கங்கை வார் சடைக் கரந்தார்கள் பாராகில்
அவர் கண்டீர் யாம் வணங்கும் அடிகளாரே’

⁠ஆனால் சிவனடியார் என்ற சமய முத்திரை அவருக்கு இருத்தல் வேண்டும். இதுபோன்ற கருத்துடைய பிள்ளைப் பெருமாளையங்கார் பாடல் ஒன்றுள்ளது. அரவணைக் கிடந்தானுடைப் அன்பருக்குத் தாம் அடிமையெனக் கவிஞர் தம்மை யழைத்துக் கொள்கிறார். இவை யிரண்டிலும் சமயத்தில் சாதி மறைவதைக் காண்கிறோம். ஆனால் சமயப் பிரிவினை வலுப்படுத்துவதையும் காண்கிறோம்.

⁠இராமலிங்கரின் மேற்கண்ட பாடலைப் பார்த்தால் மனித நேயத்தை அவர் போற்றுகிறார் என்பது புலனாகும். எவ்வித பேதமும் பாராட்டாமல் உயிர்களைத் தம்முயிர் போல் நேசித்து தம்மோடு சமமான உரிமையளித்து மகிழ்ச்சியடைபவர்களது உள்ளமே நடராஜன் நிருத்தமாகும், அரங்கம் என்று அடிகளார் கூறுகிறார். மேலும் அவர்களை ‘வித்தகர்’ சிறந்தவர் என்று போற்றுகிறார். அவர்கள் அடிபணிந்து அவர்கள் வழியில் தாமும் செல்ல விழைவதாகக் கூறுகிறார். இப்பாட்டில் அவ்வித்தகருக்கு சமய முத்திரை இல்லை. அவர் கடவுள் வழிபாட்டுக் கொள்கையுடையவராக இருத்தல் அவசியமில்லை. மனிதர் எல்லோரையும், செல்வம் பற்றியோ, உயர்வு தாழ்வு பாராட்டாமல் நேசிப்பவர்கள் எல்லோருக்கும் சம உரிமைகள் அளிக்க உடன்படுவார்கள். இத்தகைய மனித உறவில் பெருமகிழ்ச்சி யடைவார்கள். அவர்கள் உள்ளத்தில் அறிவுருவமாய் நடராஜப் பெருமான் நடனம் புரிகிறான் எனப் பாடுகிறார். அடிகளாரது மனித நேயத்தின் உச்ச நிலையை இப்பாடல் காட்டுகிறது.

⁠இவ்வாறு மனித நேய முடையவர்கள் பிறருக்கு இடர் நேர்ந்த போது, அவர்களுடைய உணர்வோடு ஒன்றி எவ்வாறு அவற்றை உணர்வார்கள் என்பதைத் தம்மையே உதாரணமாகக் கொண்டு இராமலிங்கர் சில பாடல்களில் கூறுகிறார்.

‘எளியவரை வலி யாரடித்த போதையோ,
      என் மனம் கலங்கிய கலக்கம்
தெளிய நானுரைக்க வல்லவனல் லேன்
      திருவுள மறிபுமே எந்தாய்!
களியரைக் கொண்டு பயந்தவென் பயந்தான்
      கடலினும் பெரியது கண்டாய்
அளியர் பாற் கொடியர் செய்த வெங்கொடுமை
      அறிந்த வெனன்டுக்கா மாறறிவார்?’

⁠எளியாரை வலியார் வாட்டும் கொடுமையைக் கண்டு இராமலிங்கரது மனம் கலங்கியது. செல்வச் செருக்கினால் பிறரைக் கொடுமைப் படுத்தும் செயல்களைக் கண்டு அவர் பயந்தார், இரக்கப் படத் தக்கவர்களைக் கொடியவர் படுத்தும் பாட்டைக் கண்டு அவர் உள்ளம் நடுங்கினார். இவ்வாறு எளியவரைச் செல்வர் அடக்கியாளும் கொடுமைகளைக் கண்டு அடிகளார் மனம் நொந்தார்.

⁠கொடுமைகளைக் கண்டு மனம் நைந்த இராமலிங்கர் போரில் ஆயிரக் கணக்கான மக்களைச் சாகடிக்கும் பெருங் கொடுமையைச் சகிப்பாரோ? அவ்வாட்சியாரை ஆதரிப்பாரா? போர் வெறி கொண்டு மக்களைக் கொலை புரிந்த செய்தியைக் கேட்கும் பொழுதெல்லாம் அவர் உள்ளம் நடுங்கியது.

‘மறை முடி வயங்கும் ஒரு தணித்தகைமை
      வள்ளலே உலகரசாள் வோர்
உறையுறுவார் கொண்டு ஒருவரை யொருவர்
      உயிரறச் செய்தனர் எனவே
தறையுச் சிறியேன் கேட்ட போதெல்லாம்
      தளர்ந்து நடுங்கி நின்றயர்ந்தேன்
இறையுமிவ் வுலகில் கொலை யெனில் எந்தாய்
      என்னுள் நடுங்கி வதியல்பே’

⁠மனிதருக்குத் துன்பமும் சாவும் நேரும் பொழுதெல்லாம் உள்ளம் கரைவதோடு நின்று விடாமல் துன்பத்தைத் துடைக்க தமக்கு வலிமையளிக்க வேண்டுமென இறைவனை வேண்டுகிறார்.

‘உண்ணாடி உயிர் களுறும் துயர் தவிர்த்தல் வேண்டும்:
அச்சா நான் வேண்டுதல் கேட்டரள் புரிதல் வேண்டும்’
ஆநந்த நிலைகளெல்லா மறிந்தடைதல் வேண்டும்
எனையடுத்தார் நமக் கெல்லாம் இன்புதரல் வேண்டும்
இச் சாதி சமய விகற் பங்களெல்லாம் தவிர்த்தே எவ்வுலகுஞ்
சன்மார்க்கப் பொதுவடைதல் வேண்டும்.

⁠தமக்கென்று எதுவும் வேண்டாமல், மனிதருக் கெல்லாம் இன்பம் அருள வேண்டுமென தாம் வழிபடு கடவுளை அடிகளார் வேண்டுகிறார்.

⁠மனிதருக்கு இழைக்கப்படும் கொடுமைகள் ஒழிவதற்கு கொடுமைக்குக் காரணமாக இருக்கும் ஆட்சி ஒழிய வேண்டும். மனிதரெல்லோரும் அன்பால் ஒன்றுபட்டு வாழ்வதற்கு ஆதாரமாக அமையும் ஒரு அருள் ஆட்சி வேண்டும் என்று வள்ளலார் விரும்புகிறார். கொடுமை புரிவோர் ஆட்சி பீடத்தில் இருந்த காலத்தில் இதனைப் பாடுகிறார். மனிதருக்கு நல்லவை புரியும் நல்லவர் ஆட்சி வரட்டும் என்று அழைக்கிறார். இது உலக முழுவதிலுமிருந்த பலாத்கார அரசாங்க அமைப்பைக் குறிப்பதாகும். அவையாவும் உலகமெங்கும் மனிதருக்கு நலம் புரியும் ஆட்சி மலர வேண்டும்.

'கருணை யில்லா ஆட்சி கடுகி ஒழிக!
அழிள்நயந்த நன்மார்க்கர் ஆள்க - தெருள் நயந்த
நல்லோர் நினைத்த நலம் பெறுக நன்று நினைத்து
எல்லோரும் வாழ்க இசைந்து

⁠இது ஒர் கனவு. எளியவர் துயரம் கண்டு உருகிய தலைசிறந்த கவிஞர்களெல்லோரும் இத்தகைய கனவுகள் கண்டனர். அக்கனவுகள் கவிதை வடிவம் பெற்றன. அக்கவிதைகள் துயரப்படும் எளிய மக்களுக்குப் போராடும் உற்சாகத்தையளித்தன.

⁠ஆயினும் அவர்கள் நினைத்ததெல்லாம் பெற நன்மார்க்கர் ஆட்சி தோன்ற வேண்டும் என்றும் அவ்வாட்சியில் மக்கள் இசைந்து எல்லோரும் இன்புற்று வாழ்வர்கள் என்றும் இராமலிங்கர் நம்பினார். ⁠பாரதி, மனிதன் வருங்காலத்தில் இன்ப நிலை பெறுவான் என்று கூறுமிடத்தில் எல்லாம் இன்ப நிலையை அமர நிலையென்றே கூறுகிறார். இராமலிங்கரும் மனிதர் வானவர் ஆவார்கள் என்று நம்பினார்.

‘மலங் கழித்து உலகவர் வானவாரயினர்
வலம் பெறு சுத்த சன்மார்க்கம் சிறந்தது.
பலம் பெரு மனிதர்கள் பண்புளராயினர்
என்னுளத்து அருட் பெருஞ் சோதியார் எய்தவே.

அண்டமும் அகிலமும் அருளர சாட்சியைக்
கொண்டன ஓங்கின குறை யெலாத் தீர்ந்தன.
பண்டங்கள் பலித்தன பரிந்தென் னுள்ளத்தில்
எண்டரும் அருட் பெருஞ் சோதியர் எய்தவே.

மதித்த சமய வழக் கெல்லா மாய்ந்தது.
வருணாச் சிரமம் எனும் மயக்கமும் சாய்ந்தது
கொதித்த லோகாசாரக் கொதிப் பெலாம் ஒழிந்தது.
கொலையும், களவும் மற்றைப் புலையும் அழிந்தது.

⁠இத்தகைய உலகம் தோன்ற வேண்டுமென இராமலிங்கர் கனவு காண்கிறார்.

⁠சாதி சமய சண்டைகள் மலிந்திருந்த காலத்தில் இராமலிங்கர் அவற்றை எதிர்த்துச் சாடி சமரசத்தைப் போதித்தார். ஏழை எளியவருக்கு இழைக்கப்படும் அநீதிகளைக் கண்டு மனம் குமுறி அவற்றை நீக்கத் தமக்கு வலிமையளிக்க நடராஜனை வேண்டினார். பாரதியின் ‘வல்லமை தாராயோ?’ என்ற வேண்டுகோள் இக்கருத்தினடியாகப் பிறந்த தென்றே தோன்றுகிறது. போர் ஒழிந்து அமைதி நிலவ வேண்டுமென வள்ளலார் விரும்பினார். மக்கள் துயர் தீர்ந்து இன்பமுற்றுவாழ வேண்டும் என்று விரும்பினார், உலகம் வாழத் தம்மை அர்ப்பணித்துக் கொள்ளும் நல்லவர்களின் உள்ளமே கோயில் என்றும், அவர்கள் வழியைப் பின்பற்றுவதே சன்மார்க்கம் என்றும் நமக்குப் போதித்தார், இதனைக் கண்டு பாரதியார் இராமலிங்கத்தைத் தமது ஆசானாக ஏற்றுக் கொண்டார். கருத்துக்களில் மட்டுமின்றி பாட்டு உருவங்களில் கூட பாரதி இராமலிங்கரைப் பின்பற்றினார். இன்றும் மனிதாபிமானத்துக்கும் சமூகச் சீர்த்திருத்தத்திற்கும் இராமலிங்கர் வழிகாட்டியாகத் திகழ்கிறார். சமாதானம், சுதந்திரம், சோஷலிசம் என்னும் கோஷங்களை முழங்கிக்கொண்டு புத்துலகை நோக்கி முன்னேறும் முற்போக்கு மனித குலத்திற்கு இராமலிங்கரது திருமுறைப் பாடல்கள் பல்லாண்டு கூறுகின்றன.
-------------------

13. காற்று – ஷெல்லியும் பாரதியும்

ஒட் (ode) என்பது ஆங்கிலக் கவிதை உருவங்களில் ஒன்று. கடல், காற்று, வானம்பாடி, நைட்டிங்கேல், (பறவை) முதலியவற்றை முன்னிலையாகப் புகழ்ந்து, தமது உணர்ச்சிகளையும், சிந்தனைகளையும் வெளியிடுவதற்கு இவ்வுருவத்தை ஆங்கிலக் கவிஞர்கள் கையாண்டுள்ளார்கள்.

ஷெல்லியின் ‘மேல் காற்றிற்கு’ (To the westwind) கீட்வின் ‘நைட்டிங்கேலுக்கு’ என்ற முன்னிலைப் பனுவல்கள் ஆங்கில இலக்கியத்தின் அழகுமிக்க படைப்புகள்.

இச்சிறு கட்டுரையில் ஷெல்லியின் ‘மேல் காற்றை’யும், பாரதியின் ‘காற்று’ என்ற கவிதையையும் ஒப்பு நோக்கி இருவரும் ஒரே பொருளைக் கவிதைப் பொருளாகக் கையாண்டிருக்கும் முறையைக் கவனிப்போம். ஷெல்லி 1792 முதல் 1822 வரை வாழ்ந்தவன். இங்கிலாந்தில் முதலாளி வர்க்கம் வளர்ச்சி பெற்ற காலத்தில் பாடியவன், வளர்ச்சி பெறும் காலத்தில் முதலாளித்துவம் நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்துப் போராடக் கையாண்ட தத்துவங்களிலும், கோஷங்களிலும் நெஞ்சைப் பறி கொடுத்தவன். சுதந்திரம், சமத்துவம், சகோரத்துவம் என்ற உயர்ந்த லட்சியங்களில் நம்பிக்கை கொண்டவன். நிலப்பிரபுத்துவம் மக்களின் ஆன்மாக்களை அழுத்தி வதைக்கிறது என்று எண்ணி அதன் விடுதலைக்காகப் போராட எண்ணியவன். சுதந்திரம் என்ற அருவமான லட்சியத்தை வழிபட்டவன். இம்மூன்று கொள்கைகளின் அடிப்படையில் உலகத்தைப் படைக்க ஆர்வம் கொண்டவன். இவ்வாறான இளமைச் சிந்தனைகளில் கவிதைச் சிறகுகளால் பறந்து கண்ட புதிய கற்பனை உலகை நனவாக்கப் பேராசை கண்டவன்.

ஆனால் கற்பனை மட்டும் லட்சியத்தை அடைய உதவுவது இல்லை. முதலாளித்துவ சித்தாந்தங்களின் போலித்தன்மையை அவன் எளிதில் உணர்ந்தான். இனிய சொற்களுக்குப் பின்னே மறைந்திருக்கும் வஞ்சகத்தை ஷெல்லியின் கூர்மையான அறிவு அறிந்து கொண்டது. மனிதர்களை லாப வெறிக்கு அடிமையாக்குவதற்குப் புதிய அடிமைத் தளைகளை அவர்கள் தங்களது சித்தாந்தங்கள் மூலம் உருவாக்கி வருவதை ஷெல்லி கண்டான். கோஷங்களுக்கும் செயல்களுக்கும் இடையே இருந்த முரண்பாட்டை ஷெல்லி உணர்ந்தான்.

⁠அவன் கனவுகளின் ஒளி மழுங்கியது. அவனது கற்பனைச் சிறகுகள் ஒடிந்தன. வெள்ளம் போல் பாய்ந்த உணர்ச்சி வெள்ளம் வற்றி வறண்டது. அவனது உள்ளத்தில் எழுதி அழகு பார்த்து வந்த புதிய உலகம் என்னும் கோலச் சித்திரம் வர்ணம் இழந்து அலங்கோலமாக மாறிற்று. அவனது இதயம் வெடித்து ரத்தம் பீறிட்டது. சோகம் அவனை ஆட்கொண்டது. இச்சோகம் தனி மனிதனின் சோகமல்ல. சமுதாய சோகத்தின் பிம்பமே அது. அவனது ஆகாயக் கோட்டைகள் சரிந்ததினால் ஏமாற்றமும் துன்பமும் அவன் மனதை வாட்டின. இம் மனநிலையில் அவன் இத்தாலிக்குச் சென்றான். ஆர்னோ என்னும் சிற்றூரில் தங்கினான். அங்கு அவனுடைய ஒரே மகன் இறந்து போனான். புத்திர சோகம் மேலிட்டது. கனவுகள் கலைந்ததால் ஏற்பட்ட சோகமும், சொந்த இழப்பால் தோன்றிய சோகமும் இணைந்து ஷெல்லியின் உள்ளத்தை நிரப்பிற்று. கவிதை ஊற்று தூர்ந்து விட்டது.

⁠இந்நிலையில் மேல் காற்று அடிக்க ஆரம்பித்தது. இலையுதிர் காலத்தில் உதிர்ந்த இலைகளை இது சிதற அடித்தது. வெறியாட்டக்காரனது மந்திர சக்தியின் முன்பு விழுந்தடித்து ஓடும் பிசாசுகளைப் போல அவை ஓடின. இறகு கொண்ட விதைகளைத் தாங்கிச் சென்று ஈரமான தரையின்மேல் காற்று விட்டுவிட்டது. அவை முளைத்தன. இவ்வாறு இயற்கையின் அழிவு சக்தியாகவும், ஆக்க சக்தியாகவும் மேற் காற்று செயல்படுவதை ஷெல்லி கண்டான்.

"Wild spirit which art
moving every where
Destroyer and preserver
hear oh here!"

⁠பூமியில் மட்டுமின்றி வானத்திலும் மேல்காற்று தனது அழிவு ஆற்றலைப் புலப்படுத்தியது. வானத்தில் காணப்படும் மேகங்களை, கடலிலும் வானத்திலும் இருந்து உதிர்ந்த இலைகளாகக் கவிஞன் கூறுகிறான். அவற்றை பூமியின் இலைகளைச் சிதறிப்படிது போலவே மேல் காற்று அலைக்கழிக்கிறது. கள்வெறியோடு, தெய்வ வெறியாடும் தேவராட்டியின் கூந்தலைப் போல அவை பறந்து பரட்டையாகத் தோன்றுகின்றன. சாகின்ற ஆண்டின் சமரகீதமாக மேல் காற்று சங்கம் ஊதுகின்றது. இருளினின்றும், ஈரத்தை உறிஞ்சி மேகமாக்கி மழை பொழியவும் மின்னல் வெட்டவும் மேல் காற்று செயல் புரிகின்றது. இச்செயல்களில் மேல் காற்றின் அழிக்கும் சக்தியைக் கவிஞன் உணர்கிறான்.

⁠இவ்வாறே கவிஞன் மாறி மாறி பல காட்சிகளை நம் கண் முன் கொணர்ந்து காற்றின் அழிவுச் சக்தியையும், உணர்வில் பதிய வைக்கிறான்.

⁠ஆனால் காற்றின் முழு வலிமையையும் கண்ணால் கண்டுவிடமுடியாது என்று எண்ணிய கவிஞன் தானே இலையாகி, மேகமாகி, கடலாகி, காற்றாகி, ஆற்றாக அனுபவிக்க ஆசைப்படுகிறான். இவ்வாறு உலகின் துன்பங்களிலிருந்து விடுபட்டு காற்றின் மீது ஏறித் திரிய ஆசைப்படும் கவிஞன், காற்றின் வலிமையால் தனது உள்ளத்தில் வலுவேற வேண்டும் என்று விரும்புகிறான்.

⁠இளமையில் காற்றைப் போலவே ஷெல்லி எவருக்கும் அடங்காத தன்மை பெற்றிருந்தான். அதனைப் போலவே தனது கவிதைக்கு ஆற்றல் உண்டு என நம்பியிருந்தான். தன் பாட்டினால் இவ்வையத்தை மாற்றி விடலாம் என்று கனவு கண்டான். இக் கனவுகள் கலைந்த பின் தோன்றிய ஏமாற்றம், வாழ்க்கையின் மீது அவனுக்குச் சலிப்பைத் தோற்றுவித்தது. தனது வலிமையின்மையை நினைக்க அவனுக்குச் சோர்வு தோன்றியது.

⁠இந்நிலையில் காற்றின் வலிமையை அவன் காண்கிறான். தன் வலிமையின்மையையும், சோர்வையும், சலிப்பையும், நம்பிக்கை யின்மையையும் போக்கித் தனது சொற்களில் வலிமை பெய்யுமாறு காற்றை வேண்டிக்கொள்கிறான். இலைகளைத் துளிர்க்கச் செய்யும் காற்று தனது உள்ளத்தையும் புதுப்பிக்க வேண்டும். உதிர்ந்து விட்ட இலைகளை உலகெங்கும் பரப்பும் காற்று தனது வலுவிழந்த சிந்தனைகளை உலகெங்கும் பரப்ப வேண்டும். இலைகள் மண்ணோடு சேர்ந்து புதிய செடிகளுக்கு உரமாவது போல தனது சிந்தனைகளைப் புதிய உலகம் தோன்ற வழிகோல வேண்டும். தனது குரலைக் காற்று தனது வீணையாக மீட்டி, உலகெங்கும் அதன் நாதம் பரவச் செய்ய வேண்டும். தற்போது நீறு பூத்த அனல் போன்று செயல் வலிமை குன்றிக் கிடக்கும் தனது சிந்தனைகளைக் காற்று சுவாலை விட்டெரியச் செய்து, மாந்தர் மனங்களில் இருளை ஒட்டி ஒளிவீசச் செய்ய வேண்டும்.

"Scatter as from an
unextinguished hearth
Ashes and sparks, my words
among man kind"

⁠இச்சிந்தனைகள் அவனுடைய சோர்வைப் போக்குகின்றன. இருண்ட பனிக்காலம் என்றும் நீடித்து விடாது. அது மறைந்து வசந்த காலம் தோன்றத்தானே செய்யும்? கவிஞனுக்கு நம்பிக்கை பிறக்கிறது. தனது குறிக்கோள் நிறைவேறும் என்ற உற்சாகம் தோன்றுகிறது. புதிய உலகத்தைப் பற்றிய கனவுச் சித்திரங்கள் மறுபடி அவன் உள்ளத்தில் எழுகின்றன.

".................of wind,
If winter comes can spring
be far behind?'

என்ற கேள்வியோடு பாட்டை முடிக்கிறான் ஷெல்லி.

⁠ஷெல்லியின் கவிதைகளில் பாரதிக்கு ஈடுபாடு அதிகம். தன்னை அவன் பெருமையாக ‘ஷெல்லிதாசன்’ என்று பெயரிட்டு அழைத்துக் கொண்டதுண்டு. ஷெல்லியின் சமூக உணர்வும், மனிதாபிமானமும், புரட்சி மனப்பான்மையும், பாரதியின் உள்ளத்தைக் கவர்ந்தன. ஷெல்லியின் சொல்லாட்சியும், உவமைச் சிறப்பும், உள்ளத்தை அள்ளும் கவிதாவேகமும், சிந்தனைச் சிறப்பும், தூய்மையான உணர்ச்சிகளும், பாரதிக்கு ஷெல்லியின் மீது பெருமதிப்பை உண்டாக்கின.

⁠இந்திய நாட்டின் சூழ்நிலையில், தேசிய எழுச்சி தோற்றுவாய்க் கட்டத்தில் சிறு ஊற்றாகத் தோன்றிய காலத்தில் அதன் வளர்ச்சியைத் தீர்க்கதரிசனமாகக் கண்ட பாரதி, ஷெல்லியின் ‘சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம்’ என்ற கோஷங்கள், வளர்ச்சிக்கேற்ற கோஷங்கள் என உணர்ந்தான்.

⁠பாரதியின் வாழ்க்கை நிலையும், சுதந்திர இயக்கத்தின் ஆரம்பகால வேதனைகளும், பாரதியின் மனத்தில் வேதனையை உண்டாக்கின. ஆயினும் அவன் மக்கள் உணர்வோடு ஒன்றி நின்றதால் ஷெல்லியைப் போலச் சோர்வடையவில்லை. ‘என் நெஞ்சில் ரத்தம் பீறிடுகிறது.’ என்று எழுதவுமில்லை.

⁠ஷெல்லியின் ‘மேல் காற்று’ என்ற கவிதைதான் பாரதியின் ‘காற்று’ என்னும் வசன கவிதைக்குக் கருவாக இருந்தது என்பதில் ஐயமில்லை. அவற்றில் காணப்படும் கருத்து ஒற்றுமை இதனை வலியுறுத்தும்.

⁠ஆனால் பாரதியின் ஆழ்ந்த மனிதாபிமானமும் தன்னம்பிக்கையும், கொள்கைப் பற்றும் ஷெல்லியின் கவிதையில் அவ்வளவு முனைப்பாகக் காணப்படவில்லை.

⁠இனி ‘காற்று’ என்னும் வசன கவிதையின் சிந்தனைப் போக்கைச் சுருக்கமாக அறிந்து கொண்டு பாரதிக்கும் ஷெல்லிக்கும் உள்ள ஒற்றுமையையும், வேற்றுமையையும் ஆராய்வோம். அவற்றின் அடிப்படையில் பாரதியின் தனித்தன்மை எது எனக் காண முயலுவோம்.

⁠பாரதி கதை சொல்லத் தொடங்குகிறான். வீட்டு மேடையின் ஒரு பந்தலில் இரு கையிறுகள். கந்தன் வள்ளியம்மை என்பவை அவற்றின் பெயர்கள். இவை ஒன்றையொன்று நெருங்கித் தழுவிக் கொள்ளு கின்றன. காற்று நிற்கிறது. அசைவு நிற்கிறது. கவிஞன் முன் சோதி ரூபமாக வாயு தேவன் தோன்றுகிறான். கவிஞனுடைய கேள்விகளுக்கு விடை கூறுகிறான்.

⁠‘நான் விழிக்கச் செய்கிறேன்’, அசையச் செய்கிறேன் நான் சக்தி குமாரன்.

⁠இக்கதையில் பாரதி காற்றின் ஆக்க சக்தியைப் புகழ்கிறான். ஆக்க சக்தியைக் காதலாக உருவம் கொடுக்கிறான். ஆக்க சக்தியின் சிறப்பான அம்சம் காதல். அது படைப்பின் அடிப்படை, ஷெல்லி விதை முளைப்பது காற்றின் ஆக்க சக்தியென்றான். பாரதி காற்றின் காதலில், காற்றின் ஆக்க சக்தியைப் புலப்படுத்துகிறான்.

⁠ஷெல்லியும் கடலின் அடியில் காற்றுப் புகுந்து அழிவு செய்வதைக் கூறுகிறான். பாரதி இதனையும் ஒரு காட்சியாக மாற்றிக் கூறுகிறான்.

நடு கடல், தனி கப்பல்
வானமே, சினந்து வருவது போன்ற புயல்காற்று,
அலைகள் சாரி வீசுகின்றன, நீர்த்துளி படுகின்றன.
அவை மோதி வெடிக்கின்றன. சூறையாடுகின்றன,
கப்பல் நிர்த்தனஞ் செய்கிறது;
மின் வேகத்தில் ஏற்றப்படுகின்றது.
பாறையில் மோதிவிட்டது.

ஹதம்!

⁠இரு நூறு உயிர்கள் அழிந்தன!! கப்பல் விபத்திலிருந்து யுக முடிவிற்கு அழைத்துச் செல்கிறான் பாரதி,

‘ஊழி முடிவும் இப்படித்தான் இருக்கும்
உலகம் ஒரே நீராகி விடும். தீ நீர்
சக்தி காற்றாகி விடுவாள்,
சிவன் வெளியிலே யிருப்பான்.’

⁠இவ்விரண்டு கதைகள் கூறி பாரதி ஷெல்லியின் முடிவுக்கே வருகிறான்.

‘காற்றே யுக முடிவு செய்கின்றான்,
காற்றே காக்கின்றான்,’

ஷெல்லியின் சொற்கள் இவை:

"Destroyer and Preserver
hear of hear'

⁠இந்நடு நாயகச் சிந்தனையிலிருந்து கிளைகளாகப் பிரிந்து தன்னுடைய தத்துவம் முழுவதையும் உதாரணங்கள் மூலம் பாரதி வெளிப்படுத்துகிறான்.

⁠பாரதிசாக்தேயன், சக்தி அவன் அதிதேவதை, புராதனக் கிரேக்கர்களின் இயற்கை வணக்கம் அவனுடைய மதத்தில் ஒரே அம்சம். இதனால் பெருங்கடலைக் கலக்கும் காற்றின் வலிமையையும் மேகங்களை மோத விடும் காற்றின் ஆற்றலையும் பாரதி கண்டு வியப்புற்று காற்றினை வணங்குகிறான்.

‘காற்றுக்குக் காதில்லை.
அவன் செவிடன்.
காதுடையவன் இப்படி இறைச்சலிடுவானா?
காதுடையவன் மேகங்களை ஒன்றொடொன்றுமோதவிட்டு,
இடி இடிக்கச் சொல்லி வேடிக்கைப் பார்ப்பானா?
காதுடையவன் கடலைக் கலக்கி விளையாடுவானா?
காற்றை, ஒலியை, வலிமையை வணங்குகிறோம்.’

⁠பாலைவனத்தில், ஒட்டகைக் கூட்டங்களும், மனிதர்களும், புழுக்கள் போல் காற்றின் வலிமையால் மணலில் புதையுண்டு சாகின்றனர்.

‘அவன் செயல்கள் கொடியன’

என்று காற்றின் அழிக்கும் ஆற்றலைப் பற்றி தன் கருத்தைப் பாரதி கூறுகிறான்.

⁠இனி புராணக் கதைகளில் வரும் காற்றின் பரம்பரையைக் கூறுகிறான்.

‘வீமனும் அனுமானும் காற்றின் மக்கள் என்று புராணங்கள் கூறும்.
உயிருடையன வெல்லாம் காற்றின் மக்களே என்பது வேதம்’

⁠காற்றே உயிர் என்ற சித்தர் கருத்தை இங்கு பாரதி வலியுறுத்துகிறான்.

⁠இவ்வளவும் படர்க்கையாகக் கவிக் கூற்றாகக் கூறி அந்தக் கவிஞன் இனி முன்னிலையாகக் காற்றினிடம் பேச்சு தொடங்குகிறான். இது ஷெல்லியின் ‘ஒட்’ என்ற முன்னிலைப்பனுவலை ஒத்திருக்கிறது. ஷெல்லி காற்றின் ஆற்றலின் முன் செயலற்றிருக்கிறான். அது விரும்பினால் தான் அதன் மீது பறக்க முடியும். அதன் கருணையால் தான் அவனது சிந்தனைத் தீப்பொறிகள் உலக மக்களிடையே பரவி சுவாலை விட்டு எரிய முடியும். ஆனால் பாரதி காற்றிற்குக் கட்டளை இடுகிறான். காற்றிற்கு வணக்கமும் செலுத்துகிறான். வேத ரிஷிகளின் வணக்க முறையையும், தற்கால விஞ்ஞானிகளின் இயற்கையை வெல்லும் தன்னம்பிக்கையையும், பாரதி இணைக்க முயலுகிறான்.

‘காற்றே வா!
எமது உயிர் நெருப்பை நீடித்து
நல்லொளித் தருமாறு நன்றாக வீசு,
பேய் போல வீசி அதனை அவித்து விடாதே!
மெதுவாக நல்ல நயத்துடன் வீசிக் கொண்டிரு.
உனக்குப் பாட்டுக்கள் பாடுகிறோம்.
உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்.
உன்னை வழி படுகிறோம்’

⁠காற்று உலகிலுள்ள அழுக்கைப் போக்குகின்றான். அது போல உள்ளத்திலுள்ள அழுக்கையும் சுத்தம் செய்கிறான். அவன் வரும் இடத்தை மாந்தர் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

⁠காற்று நொய்ந்தவற்றை அழித்து விடுவான். வலிமையுள்ள வற்றை மேலும் வலுப்படுத்துவான். அவனைப் பயன்படுத்த மனிதப் படைப்புகள் வலிமையாக இருக்கவேண்டும்.

‘ஆதலால் மானிடரே வாருங்கள்
வீடுகளைத் திண்மையுறக் கட்டுவோம்
கதவுகளை வலிமையுறச் செய்வோம்
உடலை உறுதி கொள்ளப் பழகுவோம்.
உயிரை வலிமையுற நிறுத்து வோம்

உள்ளத்தை உறுதி செய்வோம்
இங்ஙனம் செய்தால் காற்று
நமக்குத் தோழனாக வருவான்.’

⁠இவ்வாறு காற்றைத் தோழமை கொள்ளும் வழியைப் பாரதி நமக்கு உபதேசிக்கிறான்.

⁠காற்று மழையைக் கொண்டு வருகிறான். தமிழன் நனைகிறான். தங்க நல்ல வீடு இல்லை.

‘நனைவதால் ஜுரம் உண்டாகிறது. நாள்தோறும் சிலர் இறந்துபோகிறார்கள். மிஞ்சியிருக்கும் மூடர் விதிவசம் என்கிறார்கள்.’
⁠நோய் வருவது விதியினால் என்று சொல்லும் சாத்திரங்களைப் பாரதி பாடுகிறான்.

‘உண்மையான சாத்திரங்களை வளர்க்காமல் இருப்பன வற்றையும் மறந்துவிட்டுத் தமிழ்நாட்டுப் பார்ப்பார்ப் பொய்க் கவிதைகளை மூடரிடம் காட்டி வயிறு வளர்க்கிறார்கள்.’
⁠அசைவனைத்தும் காற்றின் செயல். வையகத்தின் உயிர் காற்று. அதனைப் பாரதி போற்றுகிறான். மீண்டும் வேத ரிஷிகளின் பாணியில் பாரதி காற்றை வணங்குகிறான்.

‘காற்றின் செயல்களை யெல்லாம் பரவுகின்றோம்.
உயிரை வணங்கு கின்றோம்.
உயிர் வாழ்க!’

⁠உயிர் மாயையல்ல. உயிர் உண்மை அதனை வாழ்த்துகிறான் பாரதி, பாரதி கவிதைகளின் ஜீவநாதம் இது. ஷெல்லியில் இது தெளிவாக ஒலிக்கவில்லை.

‘புலவர்களே காலையில் எழுந்தவுடன்
உயிர்களை யெல்லாம் போற்று வோம்.’

⁠இவ்வாறு முத்தாய்ப்பு வைக்கிறான் பாரதி. ⁠இரு கவிஞர்களின் ஒற்றுமைகளையும் மேலே கண்டோம். உயிர் மீது பாரதி கொண்டிருந்த பெரும் பற்று ஷெல்லியின் கவிதையில் இல்லை. இப்பற்றுதான் பாரதியை மனித வர்க்கத்தின் வருங்காலத்தில் நம்பிக்கை கொள்ளச் செய்தது. காற்றை அடக்கியாளும் மனோவலிமையை அவனுக்கு அளித்தது. ஷெல்லியோ தனது காய்ந்த உள்ளம் தளிர்க்க காற்றைத் துணை செய்யக் கோருகின்றான். பாரதியோ,

‘தென்னையின் காற்று சலசல
வென்றிடச் செய்து வரும் காற்றே!
உன்னைக் குதிரை கொண்டு ஏறித்தரியும் வீர்
உள்ளம் படைத்து விட்டோம்.’

என்று பாரதி பெருமையோடு பேசுகிறான்.
----------------

14. நாட்டுக் கதைப் பாடல்கள் (ஓர் ஆராய்ச்சி)

ஒவ்வொரு மொழியிலும் எழுத்துத் தோன்றுவதற்கு முன்பு பாடல்களும், கதைகளும் தோன்றத் தொடங்கின. அவற்றில் சில கதை வடிவத்தில் பாடப்பட்டன. இவ்வாறுதான் கிரேக்கக் காவியங்கள் தோன்றின என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். பாரதம், இராமாயணம் என்ற காவியங்களில் முடிவான எழுத்து வடிவம் பெறுவதற்கு முன்பு இவ்வாறே பேச்சு வழக்கில் இருந்து வந்தன. சிறு சிறு குழுவினருடைய நாட்டுப் பாடல்களாக வழங்கி வந்த கதைகள், அக்குழுக்கள் ஒன்றுபட்டு பெரிய இனமாக மாறும்போது இணைப்புப் பெற்று காவிய ரூபம் பெறுகின்றன. சிலப்பதிகாரத்தில் காணப்படும் பல நிகழ்ச்சிகளும் பல உபகதைகளும் காவிய காலத்திற்கு முன்பு செவி வழியாக வழங்கி வந்தன.

நாட்டுப் பாடல்கள் முன்பிருப்பவர்கள் கேட்கப் பாடுவது. கேட்பவர்கள் மனதில், மகிழ்ச்சி, சோகம், பெருமை. பணிவு, பெருமிதம், ஆர்வம், வியப்பு, வெறுப்பு முதலிய உணர்ச்சிகளை எழுப்பும் நிகழ்ச்சிகளையோ, கதைகளையோ சொல்வது வழக்கமாக இருந்தது.

நாட்டுப் பாடல்கள் கிராமப்புற வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்புள்ளவை. கதைப் பாடல்கள் தவிர மற்றப் பாடல்கள் நாட்டுப்புற வாழ்க்கையின் அன்றாட சம்பவங்களையே பொருளாகக் கொண்டவை. இதனால்தான் வாழ்க்கையின் சாதாரண சம்பவங்களான, பிறப்பு, குழந்தைப் பருவ நிகழ்ச்சிகள், விளையாட்டுகள், காதல், பொருந்தா மணம், குடும்ப விவகாரங்கள், கிராமத் தொழில்கள், பஞ்சம், கிராம தேவதைகள் முதலியனவே நாட்டுப் பாடல்களின் பொருளாக அமைந்துள்ளன. ஆனால் இவற்றுள்ளும் சமூக அமைப்பின் தன்மையும், அதனால் தனி மனிதன் உணர்வில் ஏற்படும் சிந்தனைகளும் வெளியாகத்தான் செய்கின்றன.

சமூக வரலாறு

நமது கிராம வாழ்க்கையில் பன்னெடுங் காலமாக வேலைப் பிரிவுகள் முறைப்படுத்தப்பட்டு ஜாதிப் பிரிவினைக்குள் இறுக்கமாக அடைத்து வைக்கப்பட்டது. உற்பத்தி முறையும், கிராமப் பொருளாதாரத்திற்காகவே இருந்ததால், மத்திய அரசில் எவ்வித மாற்றங்கள் ஏற்பட்டாலும் கிராம சமுதாய வாழ்க்கை அதிகமாகப் பாதிக்கப்படவில்லை. இவ்வாறு கூறுவதால் கிராம சமுதாய அமைப்பு எல்லோருக்கும் சம வாய்ப்பு அளிக்கும் சோஷலிஸ சமுதாயமாக இருந்தது என்று நினைத்துவிடக் கூடாது. கிராம சமுதாயத்தில் உயர்வு தாழ்வுகள் அன்றுமிருந்தன. ஊர்க்கோவில்களுக்கு, ஊரிலுள்ள நிலத்தில் பெரும்பாகம் சொந்தமாயிருந்தது அக்கோவிலை நிர்வகித்த மகாசபையாரும், வாரியத்தாரும், பரிசனங்களும், உழைக்காமல் உண்டவர் ஆவார்கள். அவர்கள், மேல் வர்க்கத்தையும் மேல் சாதியையும் சேர்ந்தவர்கள். இவர்களுக்குச் சொந்தமான உரிமையுடைய நிலங்களும் இருந்தன. நிலங்களில் உழைக்கும் விவசாயிகளில் பெரும்பாலோருக்குச் சொந்த நிலம் இருக்கவில்லை. சிலருக்குக் கோவில் நிலங்கள் குத்தகையாகக் கிடைத்தன. இவர்களில் ஊர்வண்ணான், நாவிதன் முதலியவர்களும் தச்சன், கொல்லன் போன்ற கம்மாளர்களும் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள், அவர்களுக்கும், மான்ய நிலங்கள்தான் இருந்தன. உழைக்கும் மக்கள் கோவிலைச் சார்ந்து உழைக்காமல் உண்ணும் மக்களுக்குத் தம் உழைப்பினால் உணவளிக்க வேண்டும்.

வெள்ளையராட்சிக்குமுன் மத்திய அரசு நடப்பதற்கும், பல போர்கள் நடப்பதற்கும், அரசர்கள் கட்டும் கோவில்கள், மடங்கள், தண்ணீர் பந்தல்கள் முதலியவற்றிற்காகும் செலவையும் இக்கிராம அமைப்புத்தான் கொடுக்க வேண்டும். கிராம நிர்வாகம் மேல் வர்க்கத்தாருடைய கையிலிருந்தது. எனவே உழைக்கும் மக்களுக்கு அவர்கள் விளைக்கும் மகசூலில் ஒரு சிறிய பகுதியே ஊதியமாகக் கிடைக்கும். மற்றவை அவர்களிடமிருந்து பறிக்கப்படும். இவ்வமைப்பில் விவசாயிகள் கொடுமையாகச் சுரண்டப்பட்டனர்.

நெசவு முதலிய தொழில்களும் குடிசைத் தொழில்களாகவே நிகழ்ந்து வந்தன. அயலூர் வியாபாரிகள் தங்களுக்குள் போட்டியில்லாமல் இருப்பதற்காக வணிகர் குழுக்களை ஏற்படுத்தி அவற்றின் மூலம், மிகக் குறைந்த விலைக்குக் கைத்தொழிலினால் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை வாங்கினார்கள். இதனால் கைத்தொழிலாளிகளும் மிகுந்த ஏழ்மையில் உழன்றனர்.

ஏழ்மை நிலை பொறுமையின் எல்லையைத் தாண்டிய போது மக்கள் கிராம சமுதாய அமைப்பை எதிர்த்துப் போராடியுள்ளனர். இத்தகைய போராட்டங்களைப் பற்றி நாட்டுப் பாடல்களிலிருந்தும் கல்வெட்டுகளிலிருந்தும் அறிந்து கொள்கிறோம். இத்தகைய போராட்டங்கள் சிலவற்றைப் பற்றி இங்குக் குறிப்பிடுவோம்.

நாடார்களது சாதி வரலாற்றை ‘வலங்கையர் கதை’ என்ற நூல் கூறுகிறது. அச்சாதியினர் ஏழ்மையுற்று பஞ்சத்தால் வாடிய காலத்தில் காவிரி அணை கட்டக் கூலியில்லாமல் வேலை செய்யும்படி உத்திரவிடப்பட்டார்கள். அரசனுடைய ஆணைப்படி கூலியில்லாமல் வேலை செய்யும் முறைக்கு வெட்டி என்று பெயர் வழங்கப் பெற்று வந்தது. ‘வெட்டி’ முறையை எதிர்த்து ஏழு சகோதரர்கள் போராடினார்கள். அரசன் கரிகால் வளவன் ஆறு சகோதரர்களின் தலைகளைத் துண்டித்து விட்டான். ஏழாவது சகோதரனும் கூடை எடுத்து மண் சுமக்க மறுத்தான். அவன் சிறுவனானதால் அரசன் அவனை நாடுகடத்தி விட்டான். அவன் தென்பாண்டி நாட்டிற்கு வந்து பனை மரத்தைப் பராமரித்துப் பெருஞ் செல்வம் அடைந்தான். இது நாட்டுக் கதைப் பாடல் ஒன்றில் காணப்படும் ஒரு போராட்ட நினைவு.

பிற்காலத்தில் ஏழ்மையால் வருந்திய மக்கள் பற்பல விடங்களில் தங்களது உரிமைகளை நிலை நாட்டிக் கொள்ள இயலாமல், கோவிற் சுவற்களை இடித்தும் பாத்திரங்களைத் தீக்கிரையாக்கவும் சுரண்டல் முறைக்கும் எதிராகத் தங்களது எதிர்ப்பைக் காட்டியுள்ளார்கள். ஏனெனில் கோயில் மதிற்சுவர்களில்தான் அவர்களைத் துன்ப நிலையில் வைத்திருந்த நிலமான்ய முறையின் பிரமாணப் பத்திரங்கள் எழுதி வைக்கப்பட்டிருந்தன. கோயில் சாசனங்களின் முகவுரையில் பின்வரும் குறிப்புக் காணப்படுகிறது. ‘மூன்றாம் ராஜராஜ சோழனுடைய ஆட்சியில் ஐந்தாம் ஆண்டிலும் பரவிய கலகத்தில் ஊரில் உள்ளோருடைய நிலங்களின் மூல பத்திரங்கள் அழிந்து போயினமையால் நான்காம் ஆண்டு அளவில் உள்ள அனுபோக முறைப்படி நிர்ணயித்துப் புதிய பத்திரங்கள் வழங்க வேண்டி வந்ததென்று தஞ்சை ஜில்லா உடையாரூர் சாசனம் கூறுகிறது.’

அவனது ஐந்தாம் ஆண்டில் நடந்த கலகங்களால் பழைய கணக்குகள் அழிந்து போயினமையால் அனுபோகப் பற்றொழுகை ஒட்டி ஆதாரச் சீட்டுக்களைப் புதுப்பிக்க வேண்டியிருந்தது என்னும் செய்தி தலைச் செங்காடு மூன்றாம் ராஜராஜனது பத்தொன்பதாம் ஆண்டு கல்வெட்டொன்று கூறுகிறது. இவ்வாறு நடந்த கலகங்களை ஜாதிக் கலகங்கள் என்று காட்ட வரலாற்று ஆசிரியர்கள் முயன்றுள்ளார்கள். இக்கலகங்கள் இடங்கை, வலங்கை ஜாதியினரிடையே நடைபெற்றதென்று கூறுகிறார்கள். நிலத் தொடர்புடைய ஜாதியர்கள் வலங்கைப் பிரிவினர் என்றும், கொல்லர், தச்சர், தட்டார் முதலிய தொழிலாளர்களும், வாணியர், கொத்தர், சுண்ணாம்புக்காரன், வலையன் அளவர் முதலியோர் இடங்கைப் பிரிவினர் என்றும் பல கல்வெட்டுகள் கூறுகின்றன. கிராமத்திலுள்ள மேல் வர்க்கத்தார், இவ்விரு ஜாதியினரையும், தங்கள் ஆதிக்கத்தில் வைத்திருந்தார்கள். தங்களுடைய கொடுமைகளால் ஏதாவது ஒரு வகைப் பிரிவினர் தங்களுக்கு எதிராகப் போராட முன்வந்தால், அடுத்த பிரிவினரைத் தங்களோடு சேர்த்துக் கொண்டு அவர்களை அடக்குவதே வழக்கமாயிருந்தது. பெரும்பாலும் இவர்கள் இடங்கைப் பிரிவினரோடு சேர்த்து கொண்டு வலங்கைப் பிரிவினரை எதிர்த்து வந்தார்கள். இடங்கைப் பிரிவினரில் மிகவும் ஏழ்மையில் உழன்றவர்கள் வலங்கைப் பிரிவினரது போராட்டங்களில் கலந்து கொண்டதுமுண்டு. அக்காலங்களில் இருவருக்கும் சில சலுகைகள் செய்து தங்களது ஆதிக்க அமைப்பு முறையை மேல் வர்க்கத்தார் காப்பாற்றிக் கொண்டனர்.

கோயில் சாசனங்களின் முகவுரையில், மேற்குறித்த உண்மைக்குச் சான்றாக ஒரு செய்தி காணப்படுகிறது. திருச்சிராப்பள்ளி, ஆடுதுறைக் கல்வெட்டு ஒன்று அச்செய்தியைத் தெரிவிக்கிறது. ‘அரசாங்கம் அதிகாரிகளின் உதவியுடன் வன்னியர்களும், வேளாளர், பிராமணர் முதலிய நிலச் சொந்தக்காரர்களும் சேர்ந்து இடங்கைப் பிரிவில் அடங்கிய 96 வகைச் சாதியினருக்கு இழைத்த அநீதிகளை இக்கல்வெட்டு கூறுகிறது. இதே போல இடங்கை வகுப்பார்; அக்காலத்தில் ஏற்க வேண்டி வந்த வரிச்சுமைகளைத் தெரிவிக்கும் கல்வெட்டுகள் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் கிடைத்துள்ளன. ஆவணியிலிருந்து கிடைத்துள்ள ஓர் கல்வெட்டு’ அரசன் ஆணைக் கிணங்கக் கூடிய பெரிய சபையாரின் முடிவைத் தெரிவிக்கிறது. நிகரிலாச் சோழ மண்டலத்து 78 நாடுகளும் ஜயங்கொண்ட சோழ மண்டலத்து 48000 பூமியும் உள்ளிட்ட நாடுகளில் சோழ வம்சம் தோன்றிய நாள் முதல் பசு, எருமை முதலியவைக்கு வரி விதிக்கப்பட்டதில்லை என்றும். அதனால் அதிகாரிகள் சோழ மூவேந்த வேளான் விதித்த இவ்வரிகளைக் கொடுக்க வேண்டியதில்லை என்று முடிவு கட்டினார்கள். அன்றியும் 18 விஷயங்களிலுமுள்ள நிலப்பகுதி வரி விகிதங்களையும் நிர்ணயித்து நிச்சயித்தார்கள். இக் கல்வெட்டுகளில் காணப்படும் செய்திகளால் ஒவ்வொரு சமயம், நிலச் சுரண்டல் முறையையும், வரிச்சுமைகளையும், அதிகாரிகளின் கொடுமைகளையும், இடங்கை வலங்கைப் பிரிவினரில் ஏழை எளிய மக்கள் எதிர்த்து நின்று வெற்றி பெற்றுள்ளார்கள் என்பதைக் காட்டுகிறது.

ஊரின் வாழ்க்கை முழுவதும், சோழ வம்சம் வீழ்ச்சியடைந்த காலம் வரை கோயில்களைச் சார்ந்தும், உழவுத் தொழிலைச் சார்ந்தும், சிறு தொழில்களைச் சார்ந்துமே இருந்தன. கோயில் நிர்வாகத்திலிருந்தவர்கள், ஊரிலுள்ள எல்லாப் பகுதி மக்களின் வாழ்க்கையையும் கட்டுப்படுத்தும் வல்லமை பெற்றிருந்தார்கள். இவ்வல்லமைக்குக் காரணம் கோயில் நிலங்களின் மீது அவர்களுக்கிருந்த ஆதிக்கமே. நிலவுடைமைக்காரர்களைத் தவிர மற்றவர்கள் கோவிலுக்குச் சொந்தமான மான்ய நிலங்களைப் பயிரிட்டே வாழ்க்கை நடத்தினர். சிற் சில சமயங்களில் இம்மான்ய நிலங்களை அதிகாரிகளின் உதவியோடு பெரிய நிலச் சொந்தக்காரர்கள் கைப்பற்றிக் கொள்ள முயன்றனர். நிலத்தை இழந்தவர்கள் தங்களுடைய எதிர்ப்பை உயிர்த் தியாகம் செய்து காட்டிக் கொண்டனர். இதற்குச் சான்றாகப் பல கல்வெட்டுகள் தஞ்சாவூர் ஜில்லா, புஞ்சை என்ற ஊரில் கிடைத்த கல்வெட்டு ஒன்று சில நிலங்கள் கோயிலுக்கே உரியன என்று நிரூபிப்பதற்காகச் சில கோயில் வேலைக்காரர்கள் தீக்குளித்து உயிரைத் தியாகம் செய்து கொண்டனர் என்று கூறுகிறது.

தங்கள் உரிமைகளை நிலை நாட்ட கோபுரத்தின் மீதேறிக் கீழே விழுந்து உயிர் நீத்த செய்திகளும் கோயில் சாசனங்களிலிருந்து தெரிய வருகிறது. கோயில் காரியங்கள் நடைபெறாமல் போனால் கோயில் வேலைக்காரர்களுக்கு ஊதியம் கிடைக்காது, அவ்வாறு கோயில் காரியங்களை நடத்தாமல் நிர்வாகிகள் வருமானத்தைத் தாங்களே சுவீகரித்துக் கொண்டபோது வேலைக்காரர்களது உரிமைகளை நிலைநாட்ட கோபுரத்தின் மேலேறி கீழே விழுந்து அப்பாவு அய்யங்கார் என்பவர் உயிர் நீத்த செய்தியை இரண்டு கோயிற் சாசனங்கள் கூறுகின்றன.

இவ்வாறு கிராம நில அமைப்பு முறையை எதிர்த்துச் சிற்சில போராட்டங்கள் கடந்த ஆயிர வருஷ காலமாக நடை பெற்றிருந்த போதிலும், அயல்நாட்டு வியாபாரிகளின் வருகைக்கு முன்பு கிராம சமுதாய முறை பெரிய மாறுதல் எதுவுமின்றி நிலைத்திருந்தது. போர்த்துகீசியர் டச்சுக்காரர் வருகைக்குப் பின் கடற்கரைப் பகுதியிலுள்ள சமுதாய அமைப்பு மாறத் தொடங்கிற்று. வெளி நாட்டு வியாபாரத்திற்காகத் துணி, மீன், தானியங்கள் முதலியவற்றை ஏற்றுமதி செய்யும் வியாபாரத்தில் அவர்கள் ஈடுபட்டனர். கடற்படை வலிமையால் கீழ்க் கடற்கரைத் துறைமுகங்களை ஐரோப்பியர்கள் பிடித்துக் கொண்டனர். இலங்கை, இந்தோனேஷ்யா முதலிய நாடுகள் அவர்கள் கைவசப்பட்டிருந்ததால் கடல் வியாபாரத்தில் அவர்களுடைய ஆதிக்கம் ஓங்கியிருந்தது. மதுரை நாயக்கர்களது அரசு உள் நாட்டில் அரசியல் ஆதிக்கம் பெறுவது கடினமாக இருந்தது. ஆனால் கடற்கரைப் பகுதிகளில் கிராம சமுதாய வாழ்க்கை அழிந்து போயிற்று. கிராமங்களை விட்டு மக்கள் துறைமுகங்களுக்குக் குடியேறினர். ஆனால் உள்நாட்டில் குறிப்பிடத்தக்க சமூக மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை.

அயல் நாட்டினர் வியாபாரப் போட்டியில் ஆங்கிலேயர் வெற்றி பெற்றனர். ஆங்கில நாட்டில் தொழில் வளர்ச்சி மிகுதிப்பட்டதால் பல பொருள்களை இந்நாட்டுக்கு ஏற்றுமதி செய்ய முடிந்தது. அவர்களுடைய கப்பல் படை வலிமையும் அதிகரித்தது. தமிழ் நாட்டில் மத்திய, அரசு பலவீனப்பட்டது. ஆர்க்காட்டில், நவாபு பதவிக்குப் போட்டி ஏற்பட்டது. இதனைப் பயன்படுத்திக் கொண்டு ஆங்கிலேயர் நாடு பிடிக்கத் தொடங்கினர். பாளையக்காரர்கள் பலர் பல சமயங்களில் எதிர்த்து நின்றனர். ஆயினும், வளர்ந்து வரும் தொழில் வளமுள்ள நாட்டினர் ஆனதாலும், கப்பற்படை மிகுதியும் உடையவர்களாதலாலும், புதுமுறைப் போர்க் கருவிகள் உடையவர்களாதலாலும் ஆங்கிலேயர் வெற்றி பெற்றனர்.

அவர்களுடைய வியாபார முறைகளால் கிராம சமுதாயம் சீரழிந்தது. நிலச்சுவான்தாரி முறை அமுலாக்கப்பட்டது. பாளையக்காரர்கள் நிலச் சொந்தக்காரர்கள் ஆனார்கள். முன்பிருந்ததை விடக் கிராமப் பகுதி மக்கள் கடுமையாகச் சுரண்டப்பட்டனர். ஜாதிப் பிரிவினைகள் தூண்டி விடப்பட்டு மக்கள் பிரித்து வைக்கப்பட்டனர். ஆங்கில ஆட்சியில் மிகப் பெரிய சமுதாய மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. நிலப் பிரபுத்துவ முறை வலுப் பெற்றது. பெரிய தொழில்கள் முதன்முதலில் துவங்கின. இயந்திரத் தொழிலாளர் வர்க்கம், ஒரு புதிய சக்தியாக இந்திய சமுதாயத்தில் தோன்றிற்று. தொழில்கள் வளர ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்து நிற்க வேண்டிய தேசியத் தொழிலாளி வர்க்கமும் தோன்றிற்று. பெரு நிலச்சுவான்களைத் தவிர ஆங்கில ஆதிக்கத்துக்கு எதிராக எல்லா வர்க்கங்களும் ஒன்று சேரும் வாய்ப்பு ஏற்பட்டது. இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி தேசீய இயக்கம் வளர்ந்தது.

இந்த சமூகச் சரித்திரப் பின்னணியில் உழைப்பாளி மக்களது படைப்புக்களான நாட்டுப் பாடல்களையும், கதைகளையும், நாடகங்களையும், கூத்துக்களையும் நாம் நோக்க வேண்டும். நமது மக்களிடையே வழங்கிவரும் கதைப் பாடல்கள் எண்ணற்றவை. அவற்றை நான்கு விதமாகப் பிரிக்கலாம். 1. இதிகாசத் துணுக்குகள், 2. கிராம தேவதைகளின் கதைகள், 3. சமூகக் கதைகள், 4. வரலாற்றுக் கதைகள்.

இதிகாசங்கள் இராமாயணம், பாரதம் ஆகிய இரண்டில், பாரதக் கதையோடு தொடர்புடைய நிகழ்ச்சிகளைக் கருப் பொருளாகக் கொண்ட பல கதைப் பாடல்கள் இருக்கின்றன. இன்னும் கிராம மக்கள் இராமாயணத்தைவிட பாரதத்தையே அதிகமாக விரும்பிக் கேட்கிறார்கள். அதற்குக் காரணம் பஞ்சபாண்டவர்களில் அர்ஜூனனும், பீமனும் மக்களுக்குத் தம்மோடு உறவுடைய வீரர்களாகத் தோன்றுகிறார்கள். கண்ணன் உற்ற நண்பனாகவும், ஆபத்தில் உதவுபவனாகவும் மனிதப் பண்புகள் நிறைந்தவனாகவும் காணப்படுகிறான். கண்ணன் தனது சுயகாரியத்திற்காக எதனையும் செய்யவில்லை. தனது நண்பர்களுக்கு உதவவே கதையில் பங்கு பெறுகிறான். எனவே அவன் பாமர மக்களின் சிந்தனையைக் கவருகிறான்.

அல்லியரசாணி

பாரத கதா பாத்திரங்களைக் கொண்டு பாரதத்தில் காணப்படாத நிகழ்ச்சிகளைக் கதைகளாகப் பின்னிய நாட்டுப் பாடல்கள், அல்லியரசாணிமாலை, பவளக்கொடி மாலை, ஏணியேற்றம், பொன்னுருவி மசக்கை முதலியன. பாரதக் கதையின் கதாபாத்திரங்கள் தமிழ்நாட்டின் நிகழ்ச்சிகளில் பங்குகொள்ளுவதாக இக்கதைகள் கூறுகின்றன. பாண்டியனின் மகள், அல்லி, பெண்ணாதிக்கச் சமுதாயத்தின் தலைவியாக வாழ்கிறாள். அருச்சுனன் தலைமறைவு வாழ்க்கையின் போது மதுரைக்கு வருகிறான். அல்லி மீது காதல் கொள்ளுகிறான். அல்லி அவனைக் காணவே மறுக்கிறாள். அவனைச் சிறைப்படுத்துகிறாள். கண்ணனது உதவியால் அருச்சுனன் மணம் புரிந்து கொள்ளுகிறான். இக்கதையில் இரு சமுதாயங்களின் உறவு உருவகமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. இக்கதைக்கு ஆதாரமெல்லாம் பாரதத்தில் வரும் அர்ச்சுனன்-சித்திராங்கதை சந்திப்பு மாத்திரமே.

பவளக்கொடிமாலை

இக்கதையின் தொடர்ச்சியே பவளக்கொடி மாலை, அல்லியோடு சிறிது நாள் தங்கியிருந்து விட்டு அருச்சுனன் பாரதப் போர் நடத்தப்போய் விடுகிறான். போர் முடிந்து வெற்றி பெற்றுச் சில ஆண்டுகளுக்குப் பின், அல்லியிடமிருந்து, குழந்தை புலந்திரனைப் பார்க்க வர வேண்டுமென்று அவனுக்கு அழைப்பு வருகிறது. அவன் குழந்தையைக் காண மதுரைக்கு வருகிறான். குழந்தை பவளத்தேர் வேண்டுமென்று அழுகிறான். அருச்சுனன் பவளம் தேடி பவளக்கொடி காட்டிற்குச் செல்லுகிறான். பவளக் காட்டின் ராணி பவளக்கொடியைப் பார்க்கிறான். காதல் கொள்ளுகிறான் பல இடையூறுகளைச் சமாளித்துப் பவளம் பெற்று வருகிறான். பின் அவளையும் மணந்து கொள்ளுகிறான். இப்படி ருசிகரமாகக் கதை செல்லுகின்றது. இடையில் பவளக்கொடியோடு போராடி விஜயன் இறந்து போகிறான். தருமரும், கிருஷ்ணனும் தமிழ் நாட்டிற்கு வருகிறார்கள். பவளக் காட்டில் இறந்து கிடக்கும் விஜயனை உயிர்ப்பிக்கிறார்கள். கடைசியில் பவளக்கொடி விஜயனை மணந்து கொள்ளுகிறாள்.

பொன்னுருவி மசக்கை

மூன்றாவது கதை பொன்னுருவி மசக்கை. கருணனது மனைவிக்கும், கருணனுக்கும் நடக்கும் குடும்பச் சண்டையைப் பொருளாகக் கொண்டது. நிகழ்ச்சிகள் இந்திரப் பிரஸ்தத்திலும், தமிழ் நாட்டிலும் நடைபெறுகின்றன. கடைசியில் கருவங் கொண்ட மனைவியைக் கருணன் அடி உதையால் பணிய வைக்கிறான்.

ஏணி ஏற்றம்

நான்காவது கதை ஏணியேற்றம். இது அஞ்ஞாத வாச காலத்து நிகழ்ச்சியொன்றைப் பொருளாகக் கொண்டது. அர்ச்சுனன் மனைவி சுபத்திரை மீது துரியோதனன் இச்சை கொள்ளுகிறான். அவனுடைய தீய எண்ணத்தை அறிந்த சுபத்திரை மதுரையிலுள்ள தனது சகமனைவி அல்லியிடம் சரண்புகுகிறாள். அவள் மதுரை சென்றதையறிந்து துரியோதனன் அங்கு வருகிறான். அவனைத் தண்டிக்க வேண்டுமென்ற முடிவில் அல்லி அவனை வரவேற்று சுபத்திரையிடம் அனுப்பி வைப்பதாகச் சொல்லுகிறாள். காமத்தால் மதியிழந்த துரியோதனன் அவளது சூழ்ச்சியை உணராமல் அவள் சொற்படி நடக்கச் சம்மதிக்கிறான். அல்லி தமிழ்நாட்டுத் தச்சர்களின் திறமையைப் பயன்படுத்தி ஏணி எந்திரமொன்று செய்யச் சொல்லுகிறாள். அந்த ஏணி ஏறுமாறு துரியோதனை வேண்டுகிறாள். ஏணியின் கடைசிப் படியில் சுபத்திரையைப் போலப் பதுமையொன்று பொருத்தப்பட்டிருந்தது. துரியோதனன் ஏணியில் ஏறியதும் ஆணிகள் அவன்மீது பாய்ந்தன. பிரம்புகள் அவனை அடித்தன. இறங்க முடியாதபடி சில கம்பிகள் அவனைப் பிணைத்தன. அல்லி ஏணியை பாண்டியர்களிடம் செல்லுமாறு கட்டளையிட்டாள். அங்கே அவன் அவமதிக்கப்பட்டான். பின்பு அங்கிருந்து நாகலோகத்திற்கு ஏணியை அனுப்பினார்கள். ஆதிசேஷன் துரியோதனனை அவமதித்து, மேகராஜனிடம் அனுப்பினான். அங்கிருந்து பல உலகங்களைச் சுற்றிக் கடைசியில் கிருஷ்ணனிடம் ஏணி வந்து சேர்ந்தது. கண்ணன் அவனைப் போற்றுவதுபோல் தூற்றி ஏணியை ஐவரிடத்தில் அனுப்பி வைத்தான். ஐவர் அவனைக் கண்டபொழுது, பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் ஆகியோர் அவனைக் கொல்ல வேண்டுமென்று சொல்லுகிறார்கள். தருமர் அவனுடைய தவறுக்கு உரிய தண்டனையை நாட்டுப் பெண்களே கொடுத்து நிறைவேற்றி விட்டார்கள் என்று கூறிக் கதையின் நீதியை விளக்குகிறார்.

‘இவன் பெண்ணை அழிக்க வந்தான் பெண்களால்
சீர்குலைந்தான்
நெருப்புக்கு முன்னெதுவும் நில்லா விதம் போல
கற்புக் குறை சிறிதும் காசினியில் நேராது
கற்பே பெரு நெருப்பாம் கற்பே பெரும் புகழாம்
பெண்களிது செய்தார் பேருலகம் தன்னை வாழ்த்த
புருஷர் பழிதுடைக்க பூவையர்கள் செய்தார்கள்
கற்புடை நமது பெண்கள் பொற்புடனே செய்தஇது
போது மிவனை இன்னும் என்ன செய்யப்போகின்றீர்.’

என்று தருமர் கேட்கிறார்.

இவை அனைத்திலும், அல்லி ஏற்றம் பெறுகின்றாள். அல்லியைப் பற்றிய கதைகள், செவி வழியாகப் பல வழங்கியிருக்க வேண்டும். அவற்றிலிருந்து சிலவற்றைத் தொகுத்துப் பிற்காலப் பாடகர்கள், நாட்டுப் பாடல்களாக எழுதிவைத்திருக்க வேண்டும். இக்கதைகளில் மகா பாரத கதா பாத்திரங்கள் இடம் பெறுகின்றனர் என்றாலும், கதையின் கருத்துக்கள் பழந்தமிழ்நாட்டில் நிலவியவைதாம்.

இவற்றைப் போன்று பாரதத்தோடு தொடர்புடைய கதைகள் சில நாட்டுப்பாடல் வடிவத்தில் வழங்கி வருகின்றன. அவை இக்கதாபாத்திரங்களின் தன்மைகளில் எவற்றை மக்கள் விரும்புகின்றார்கள். எவற்றை வெறுக்கின்றார்கள் என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன. புராணக் கதா பாத்திரங்களைவிட தமிழ் நாட்டுக் கற்பனைக் கதா பாத்திரங்களுக்கே இப்பாடல்களில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த நான்கு கதைப் பாடல்களிலும், அல்லி ஒரு முக்கிய கதாபாத்திரமாகத் திகழ்கிறாள். புராணக் கதா பாத்திரங்களும் கதையில் உரிய இடம் பெறுகின்றன. ஆனால் புராணக் கதா பாத்திரங்கள் தமிழ் நாட்டுப் பண்பாட்டுக்கு ஏற்றபடி தன்மை மாறி உருவாக்கப்பட்டுள்ளன.
-----------------

15. சமூகக் கதைப் பாடல்கள்

சமூகக் கதைப் பாடல்கள் இன்னும் தமிழ்மக்களிடையே வழங்கி வருகின்றன. அவற்றில் குறிப்பிடத் தக்கவை முத்துப்பட்டன் வில்லுப்பாட்டு, சின்னத்தம்பி வில்லுப்பாட்டு, சின்ன நாடான் கதை, வெங்கல ராஜன் கதை, கள்ளழகர் கதை, நல்ல தங்காள் கதை, கெளதல மாடன் கதை முதலியவை. இவை யாவும் தமிழ்நாட்டு உழைப்பாளி மக்களையும், தமிழ்நாட்டுத் தலைவர்களையும் கதைத் தலைவர்களாகக் கொண்டவை. இக்கதைகளை விரிவாகக் கூறுவதற்கு இக்கட்டுரையில் இடமில்லை. ஆயினும் கதைகளின் கருப்பொருளை மட்டும் சுருக்கமாகக் கூறுவோம்.

முத்துப்பட்டன் கதை

முத்துப்பட்டன் பிராமணன். பொம்மக்கா, திம்மக்கா என்ற இரு சக்கிலியப் பெண்களை மணந்து கொள்வதற்காக குல உயர்வையும், சொத்து ககத்தையும் தியாகம் செய்தான். உழைப்பாளி மக்களைக் காப்பதற்காகவும் பொதி மாட்டு வியாபாரிகளுடைய வாணிபத்தைப் பாதுகாப்பதற்காகவும் கள்ளர்களை எதிர்த்துப் போராடி உயிர் விட்டவன். அவனுடைய மனைவிமார் இருவரும் உடன்கட்டையேறி உயிர் நீத்தார்கள்.

முத்துப்பட்டன் கதையில் வரும் சம்பவங்கள் சாதிப் பிரிவின் பொய்மையையும், மானிட உயர்வின் மேன்மையையும் போற்றிக் கூறுகிறது. உயர் குலத்தவன் ஒருவன் தனது சாதியினரின் கொடுமைகளை உணர்ந்து உழைப்பாளிகளுள் ஒருவனாக இணைந்து, அவர்கள் குலத்துப் பெண்களை மணம் புரிந்து கொண்டு, அவர்களுக்குத் தொண்டு செய்து வாழ்ந்ததை இக்கதை விவரிக்கிறது. இக்கதைத் தலைவன் மானிட உணர்வின் உருவமாகப் பிறருக்காக உயிர் விடும், தியாக மூர்த்தியாக உண்மைக் காதலின் பிரதிநிதியாகச் சித்திரிக்கப்பட்டுள்ளான். இக்கதை பரவியுள்ள தென்பாண்டி நாட்டில், மக்கள் இவ்வுயர்ந்த பண்புகளைப் போற்றி, முத்துப்பட்டனைத் தெய்வமாக்கி வழிபடுகிறார்கள்.

சின்னத்தம்பி என்ற சக்கிலியச் சிறுவன் மலைவிலங்குகளின் சல்லியத்தினால் வேளாண்மைக்கு இடையூறு நேர்ந்த பொழுது அவற்றைக் கொன்று விவசாயிகளுக்கு நன்மை செய்தான். அவன் புகழ்பெற்று உயர்வடைவதைக் கண்ட மேல் சாதிக்காரர்கள் புதையல் எடுப்பதற்காக அவனைப் பலி கொடுத்து விட்டார்கள்.

இத்தகை சாதியால் உயர்ந்தவர்கள், சாதியில் தாழ்ந்தவர்களை முன்னுக்கு வரவிடாமல் கொடுமைப்படுத்தி அழித்ததைக் கூறுகிறது. கொடுமையைக் கண்டித்தும், கொடுமைகளுக்கு உள்ளானவர்களைப் புகழ்ந்தும் பாடுகிறது இப்பாடல்.

நல்லதங்காள் கதை

நல்லதங்காள் கதை தமிழ்நாடு முழுவதும் பரவியுள்ள கதை. இக்கதைப் பாத்திரங்கள் சிற்சில பண்புகளுக்குப் பிரதிநிதிகளாக இன்றும் பேச்சு வழக்கில் இடம் பெற்றுள்ளார்கள். உதாரணமாக கொடுமைக்காரியான அண்ணியை ‘மூளியலங்காரி’ என்று அழைக்கிறார்கள். இக்கதையில் வரும் மூளியலங்காரி, தனது கணவனின் தங்கையைக் கொடுமைப்படுத்தி, அவள் தற்கொலை செய்து கொள்வதற்குக் காரணமாக இருந்தவள். தங்கையின் மீது அன்பாக இருக்கும் அண்ணனை இன்றும் இக்கதையில் வரும் அண்ணன் பெயரை வைத்தே நல்லண்ணன் என்று அழைப்பது வழக்கமாயிருக்கிறது. பஞ்சத்தால் தாய் வீட்டுக்கு வருகிறாள் நல்லதங்காள். தாய் தந்தையர் இல்லை. அண்ணன்தானிருக்கிறான். அவன் மிக நல்லவன். அவளையும், குழந்தைகளையும் பராமரிக்கிறான். அவன் வெளியில் சென்றிருக்கும் போது அவனுடைய மனைவி மூளியலங்காளி, குழந்தைகளையும், நல்லதங்காளையும் படாத பாடுபடுத்துகிறாள். அண்ணனும், தங்கையும், சிறுவயதில் வளர்த்த செடிகள் மரமாகிப் பழுத்திருக்கின்றன. பழங்களைப் பறிக்கக் கூடாதென்கிறாள் அண்ணி. தன்னுடைய உழைப்பினால் பயன்தரும் பழத்தைத் தொடக் கூடாது ன்று அண்ணி சொல்லுவதை எண்ணி நல்லதங்காள் வருந்துகிறாள். அவளுடைய மான உணர்ச்சியை மூளியலங்காரி புண்படுத்துகிறாள். இதனைத் தாங்க முடியாமல் அவள் குழந்தைகளைக் கிணற்றில் தள்ளி தானும் விழுந்து விடுகிறாள். உண்மையறிந்த நல்லண்ணன் தன் மனைவியைக் கொன்றுவிடுகிறான்.

இக்கதை சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கூத்தாக நடிக்கப்பட்டது. பெண்களுக்குப் பிறந்தகத்தில் சொத்துரிமையில்லாததால் வரும் அவதிகளை இக்கதை விவரிக்கிறது. உரிமையற்றவளாக அடிமையிலும் இழிவானவளாக, தான் பிறந்த வீட்டில் தானும் உழைத்து உருவாக்கிய நலன்களில் பங்கில்லாதவளாக உழலும் தமிழ்நாட்டுப் பெண்களின் பிரதிநிதி நல்லதங்காள். இச்சமூக அமைப்பு முறையில் பலியானவள் நல்லதங்காள்.

சின்ன நாடான் கதை

சின்ன நாடான் கதை, சொத்துரிமை சமுதாயத்தில் வாரிசு உரிமையைப் பாதுகாப்பதே முதன்மையானதென்று. அதைப் பாதுகாக்க மகனைக் கொல்லவும் தந்தை துணிவான் என்பதைப் புலப்படுத்துகிறது.

சின்ன நாடான் கதை உண்மையான நிகழ்ச்சி. ஐந்து சகோதரர்களில் ஒருவனுக்கு மட்டும் ஆண்பிள்ளை பிறந்தது. அவன்தான் சின்னநாடான் என்ற குமாரசுவாமி. ஐந்து சகோதரர்களும் பண்ணையார்கள். அவர்கள் அனைவருடைய சொத்துக்களும் இவனையே சேர வேண்டும். பதினாறு வயதில், இவனுக்கு இரண்டு வயதான தங்கள் சகோதரியின் மகளை மணம் செய்து வைத்தார்கள். சகோதரியின் புருஷனுக்கும் ஏராளமான நிலபுலன்கள் உண்டு. குமாரசுவாமி இளைஞனானான். ஐயம் குட்டி என்ற நாவித குல மங்கையைக் காதலித்தான். தைரியமாக அவளோடு கூடி வாழ்ந்தான். அவனது குழந்தை மனைவி பக்குவமடையவில்லை. அதுவரை அவரது தந்தையும், சிறிய தந்தைமாரும் இவ்விஷயம் தெரிந்தும் தெரியாதது போலிருந்து விட்டார்கள். குழந்தை மனைவி பெரியவளானவுடன், ஐயம் குட்டியைப் பிரிந்து வந்து மனைவியோடு வாழ அழைத்தார்கள். அவன் மறுத்து விட்டான். ஐயம்குட்டியே, தன் மனைவியென்றான். இதைப் பொறாது அவர்கள் பலமுறை அவனைத் தங்கள் வழிக்குத் திருப்ப முயன்றனர். முடியவில்லை. கடைசியில் வஞ்சகத்தால் அவனைக் கொன்றுவிட்டனர்.

சொத்துரிமை சமுதாயத்தில் வாரிசு உரிமையைப் பாதுகாப்பதே முதன்மையானது. அதற்காக மகனைக் கொல்லவும் தந்தை துணிந்தான். என்பதையே இக்கதை புலப்படுத்துகிறது.

கெளதலமாடன் கதை

மாதர் மீது ஆண்கள் கொள்ளும் இருவகை உணர்ச்சிகளைக் கெளதல மாடன் கதை சுட்டிக் காட்டுகிறது. இக்கதையில் சாதிக்கும், நல்லுணர்வு, தீய உணர்வுகளுக்கும் சம்பந்தமில்லை என்பது தெளிவாக்கப்படுகிறது.

கெளதல மாடன் ஒரு போக்கிரி. அவன் வாழ்ந்த ஊரிலேயே பூவாயி என்னும் சக்கிலியப் பெண்ணும் வசித்து வந்தாள். அவள் கறவை மாடுகள் வைத்து பால், மோர் முதலியன விற்று ஜீவனத்தை நடத்திவந்தாள். அவள் தாழ்ந்த குலத்தினளாதலால் உயர் சாதியினர் அவளிடம் பால், மோர் முதலியவற்றை வாங்க மாட்டாராதலால் பக்கத்தூரில் உள்ள ஒரு பட்டாணியன் வீட்டிற்குச் சென்று மோர் விற்று வந்தாள். பட்டாணியனும் அவளை ஒரு சகோதரியாகக் கருதி வந்தான். ஒரு நாள் மோர் கொடுத்துவிட்டுத் திரும்பும்போது கெளதல மாடன் அவளை வழிமறித்து சரச வார்த்தைகள் பேசினான். ஆனால் பூவாயி திரும்பி வருவதாகக் கூறி அந்தச் சமயத்தில் தன் கற்பைக் காப்பாற்றிக்கொண்டாள். மறுநாள் தன் பட்டாணிய சகோதரனிடம் முதல் நாள் நடந்ததைக் கூறி வருந்தினாள். பட்டாணியன் அவளோடு உடன் பிறந்தவனல்லன். ஆனால் உடன் பிறந்தவளைப் போன்று அவளை நினைத்திருந்ததனால் அவனது மானிட உணர்வு அவளைக் காப்பாற்றத் தூண்டியது. தான் அவளுக்கு, அவளது ஊர்வரை துணை வருவதாகக் கூறினான். அவளை முன்னே போகச் சொல்லி அவன் சற்றுத் தொலைவில் வந்து கொண்டிருந்தான். வழியில் கெளதல மாடன் பூவாயியை வழிமறித்து அவளை வலிந்து தழுவ முயன்றான். பின்னால் வந்து கொண்டிருந்த பட்டாணியன் அதைக் கண்டு, கெளதல மாடன் மேல் பாய்ந்தான். இருவரும் போராடி உயிர்நீத்தனர். தன்னைக் கெடுக்க வந்தவனுக்கும், தன்னைப் பாதுகாக்க வந்தவனுக்கும், உயிர் போக தானே காரணமானதை எண்ணி பட்டாணியன் இடுப்பிலுள்ள கத்தியை உருவி தன் வயிற்றில் குத்திக்கொண்டு இறந்தாள்.

இக்கதை சாதி உணர்வு, மத உணர்வு இவற்றிற்கெல்லாம் மேலாக மானிட உணர்வைப் போற்றுகிறது. அது இந்தச் சாதிக்குத்தான் சொந்தம் என்று இல்லை. ‘குலத்தளவாகுமாம் குணம்!’ என்ற பிற்போக்கான பழமொழியை இக்கதை பொய்யாக்குகிறது. மானிட உணர்வு சாதி கடந்தது. இங்கே பட்டாணியனிடம் அது இருக்கிறது. தன் உடலின்புத்துக்காகத் தன் வலிமையைப் பயன்படுத்துகிறான் கெளதல மாடன். அதற்குக் குறுக்கே வந்த பட்டாணியனை எதிர்த்து மூர்க்கமாகப் போராடி அவனைக் கொன்றான். பட்டாணியன் தனக்குத் தெரிந்த ஒரு பெண்ணின் மானத்தைக் காக்கப் போராடினான். அவனும் உயிர் நீத்தான். பட்டாணியனது வீரம் பிறருக்குப் பயன்பட முனைந்தது. மானிட உணர்வோடு கூடிய வீரம் கிராம மக்களால் போற்றப்படுகிறது.

வெங்கல ராசன் கதை

ஈழ நாட்டிலிருந்து கடல் மார்க்கமாக மலையாளத்திலுள்ள முட்டத்திற்கு வெங்கல ராசனும், அவனது இரு பெண்களும் வந்து சேர்ந்தனர். முட்டத்தில் புதிதாகக் கட்டிய கோட்டையினுள் வாழும் குடிமக்களுடன், அவர்களும் வாழ்ந்து வந்தனர். வெங்கல ராசனின் இரு பெண்களும் மிகவும் அழகானவர்கள். வந்திருப்பதோ புதிய இடம். ஆகையால் வெங்கல ராசன் அவர்களை வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்ல அனுமதிப்பதில்லை. பறக்கை என்பது முட்டத்திற்கு அருகிலுள்ள ஓர் ஊராகும். அங்கு தேர்த் திருவிழா நடைபெற்றது. வெங்கல ராசனின் பெண்களும் தேர்பார்க்க ஆசைப்பட்டுத் தகப்பனிடம் அனுமதி கேட்டார்கள். ஆனால் அவன் அனுமதி கொடுக்க மறுத்து விட்டான். தேர் பார்க்கும் ஆசையில் சகோதரிகள் இருவரும் தகப்பனுக்குத் தெரியாமல் பறக்கைக்குச் சென்று திருவிழா பார்த்தனர். அவ்விருவரது அழகையும் கண்ட மலையாள ராஜா அவர்களை அடைய ஆசைப்பட்டு இன்னாரென அறிந்து வைத்துக் கொண்டார். திரும்ப சகோதரிகள் வீடு வந்து சேர்ந்து விட்டனர். மகாராஜாவின் வேலையாள் வெங்கலராசனிடம் அவனது இரு பெண் மக்களையும் மகாராஜாவிடம் அனுப்பி வைக்க வேண்டும் என அரசர் உத்தரவிட்டதாகக் கூறினார். பின்பே தன் பெண்கள் பறக்கைக்குத் திருவிழா பார்க்கச் சென்றதையறிந்து கொண்டான்.

மலையாள ராஜாவினுடைய பரம்பரையில் ராஜ்யத்திற்கு வாரிசாகும் உரிமை அரசனது சகோதரியின் சந்ததிக்கே உரித்தாகும் என்பதால் அரசர்கள் மணம் செய்து கொள்ளுவதில்லை. அந்தப்புரத்தில் காதற் கிழத்திகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். காதற்கிழத்திகளுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கும் வாரிசு உரிமை கிடையாது. காதற்கிழத்திகள் அம்மச்சி என்று மதிப்புடன் அழைக்கப்பட்டனர்.

அரசனது பரம்பரை வழக்கத்தை அறிந்த வெங்கலராசன் தன் பெண்களை அரசனது அந்தப்புரக் காதலிகளாக்குவதற்கு விரும்பவில்லையாதலால் அரசனது விருப்பத்துக்கு உடன்பட முடியாதென மறுத்தான். இதனால் கோபம் கொண்ட அரசன் தனது படையை அனுப்பி வெங்கலராசனைப் பணியவைக்க நினைத்தான். படைகள் கோட்டைக்கு வெளியே நின்றுகொண்டிருந்தன. வெங்கல ராசனின் மூத்தமகள், தங்களால் ஒன்றுமறியாத குடிமக்களும் மற்றவரும் துன்பப்பட வேண்டாம் எனக் கருதி, துணிவு மிகுந்தவளாதலால் தன் தந்தையிடம் தன் தலையை வெட்டி கோட்டைக்கு வெளியே எறிந்து விட்டால் அரசன் மனம் மாறித் திரும்பிப் போய் விடுவான் எனக் கூறினாள். அதைக் கேட்ட வெங்கல ராசன் முதலில் பெற்ற பாசத்தால் மனம் கலங்கி மறுத்தானாயினும், மற்றவரின் நன்மையை உத்தேசித்து மகளின் தலையை வெட்டி கோட்டைக்கு வெளியே வீசியெறிந்தான். பெண்களை எதிர்பார்த்து வந்த அரசன் அதில் ஒருத்தியின் தலை துண்டிக்கப்பட்டு வெளியில் வந்து விழுந்தவுடன் மனம் கலங்கி, அத்தலையை ஒரு பல்லக்கில் வைத்து மரியாதையுடன் எடுத்துச் சென்று அடக்கம் செய்து வழிபட்டான்.

சமூகக் கதைகள் பற்றிய கருத்து

இரண்டு மாறுபட்ட சமுதாய அமைப்புகளில் வளர்ந்தவர்கள் தொடர்பு கொள்ளுவதால் ஏற்படும் முரண்பாடுகளை இக்கதை சுட்டிக் காட்டுகிறது. மணமுறை பற்றிய வெங்கல ராஜனின் கருத்தும், மலையாள ராஜனின் கருத்தும் மோதிக் கொள்ளுகின்றன. அதன் விளைவு பலவீனமான சமூகத்திற்கு அழிவைத் தருகிறது.

சமூகக் கதைகளில் பெரும்பாலானவை உண்மை நிகழ்ச்சிகளே. இந்நிகழ்ச்சிகளுக்குக் கற்பனையால் கலையுருவும் கொடுக்கப்பட்டுள்ளது. இவை யாவும் சோக முடிவுடையனவாக இருக்கின்றன. அதற்குக் காரணம் தமிழ் நாட்டின் கிராம சமுதாயத்தின் மாற்ற முடியாத ஜாதிப் பிரிவினைகளுக்குள் சமூக வாழ்க்கை ஒடுக்கி வைக்கப்பட்டிருந்ததுதான். இப்பிரிவினைகளை ஒழிக்கும் முயற்சி சிறிதளவு தலைதூக்கினாலும், அத்தகைய முயற்சிகள் முளையிலேயே கிள்ளியெறிப்பட்டன. தோல்வியுற்றாலும் அவை கலையில் இடம் பெற்று இன்னும் சமூக மாற்றத்தை விரும்புகின்ற இளைஞர்களுக்கு ஊக்கம் அளிப்பனவாக உள்ளன.

வரலாற்றுக் கதைகள்

வரலாற்றுக் கதைப் பாடல்கள் கிடைப்பது அரிதாக உள்ளன. ஆயினும் கிடைப்பனவற்றைக் கொண்டு பார்த்தால், சுமார் நானூறு வருஷ காலமாக பாமர மக்கள் சரித்திர நிகழ்ச்சிகளைப் பற்றிய தங்கள் கண்ணோட்டத்தைப் பாடல்கள் மூலம் வெளியிட்டுள்ளார்கள் என்று நிச்சயமாகச் சொல்லலாம். இவற்றுள் பல ஏட்டிலேயே மங்கிக் கிடக்கின்றன. இவற்றுள் மிகப் பழமையானது ‘பஞ்ச பாண்டவர்’ கதை அல்லது ‘ஐவர் ராஜாக்கள்’ கதையாகும்.

ஐவர் ராஜாக்கள் கதை

பாண்டியர் பேரரசு வலிமை குன்றி சிற்றரசுகளாகப் பிரிந்த காலத்தில் இஸ்லாமியப் படையெடுப்பைத் தடுத்து நிறுத்துவதற்காக விஜயநகரப் பேரரசு தமிழ் நாட்டைத் தனது ஆட்சிக்குள் கொணர முயன்றது. கம்பணன் தென் நாட்டில் படையெடுத்தான். தென்பாண்டி நாட்டில் பாண்டியர் வம்சத்தைச் சேர்ந்த ஐந்து அரசர்கள், நாயக்கரது மேலாதிக்கத்தை ஏற்க மறுத்தனர். வித்தவராயன் படை கொண்டு தெற்கே வந்தான். கயத்தாறில் பெரும்போர் நிகழ்ந்தது. தோற்றுப் பின்வாங்கிய பாண்டியர்கள் பணியாமல் போராடிக் கொண்டே இருந்தனர். வள்ளியூரில் நடந்த போரில் நான்கு பாண்டியர்கள் இறந்து போனார்கள். எல்லோரிலும் இளையவனான குலசேகர பாண்டியன் சிறைப்பட்டான். விசுவநாதனது மகளை அவனுக்கு மணம் செய்வித்து விட்டால் பாண்டியர் எதிர்ப்பு அடங்கும் என்று கன்னடிய மன்னன் எண்ணினான். ஆனால் அந்தத் திருமணம் நடக்கவில்லை. குலசேகரன், வைரம் தின்று இறந்து விட்டான். அவனையே மணப்பதென்று எண்ணியிருந்த கன்னட இளவரசி உடன்கட்டையேறினாள். இக்கதையே இருப்பதற்குள் மிகவும் பழமையானதாகத் தோன்றுகிறது. இக்கதையின் நிகழ்ச்சிகள் சுமார் 400 வருஷங்களுக்கு முன் நடைபெற்றவை. கதை நிகழ்ச்சிகளில் போர் நிகழ்ந்ததென்பது உண்மை. குலசேகர பாண்டியன், கன்னட இளவரசி இவர்களைக் குறித்த நிகழ்ச்சிகள் உண்மையா என்றறிய வழியில்லை. ஆனால் இது மக்களைக் கவர்ந்து விட்டதோர் கற்பனையாக இருக்கலாம்; திருமணத்தாலும் அடிமைத்தனத்தை வரவேற்கக் கூடாது என்ற உணர்ச்சியின் உருவமாக நாட்டுப் பாடல் குலசேகரனைச் சித்திரிக்கிறது. தமிழ் நாட்டு மரபின்படி கன்னட இளவரசி தனக்கு மணம் பேசிய மணமகன் இறந்ததும் வேறொருவரை மணம் செய்துகொள்ள விருப்பமில்லாமல் இறந்து விடுவதாகக் கதை சொல்லுகிறது. இக்கதை மனிதப் பண்பின் இரண்டு உயர்ந்த அம்சங்களை எடுத்துரைக்கிறது.

ராமப்பய்யன் கதை

திருமலை நாயக்கன், தன்னுடைய காலத்தில் தமிழகம் முழுவதையும் ஒரு குடைக்குக் கீழ் கொணரப் பல போர்களை நடத்தினான். அவனுடைய தளவாய் ராமய்யன் தென் பாண்டி நாடு முழுவதையும் வென்று அடிமைப்படுத்தினான். இராமநாதபுரம் சேதுபதிக்கும், ராமய்யனுக்கும் பல போர்கள் நடந்தன. இப்போரில் இலங்கையிலிருந்து வந்த டச்சுப் போர்க் கப்பல்கள் பங்கு கொண்டன. சடைக்கத் தேவனது மருமகன் வன்னியன் வீரத்தோடு போராடி மாண்டான். இறுதியில் சேதுபதி சிறைப்பட்டான். தண்டனையால் பகைமையை வளர்த்துக் கொள்ளுவதைவிட நட்புரிமையால் சேதுபதியை அணைத்துக் கொள்ள எண்ணி திருமலை நாயக்கன் அவனை விடுதலை செய்து கடற்கரை மண்டலத்தின் அதிபதியாக நியமித்து, ‘திருமலை சேதுபதி’ என்ற பட்டமும் அளித்து அவனோடு உறவு பூண்டான். இச் சேதுபதியே பிற்காலத்தில் மைசூர் மன்னன் மதுரையைப் பாதுகாக்கப் பெரும் படையோடு சென்று போராடினான். திருமலை நாயக்கனது பெருமையையும், ராமய்யனுடைய வீரத்தையும், சடைக்கனுடைய வீரத்தையும், நன்றியுணர்வையும் போற்றிப்பாடும் நாட்டுப்பாடல் ராமப்பய்யன் அம்மானை.

இரவிக்குட்டிப்பிள்ளை

இதுபோலவே ராமப்பய்யன் தெற்குக் கோடியில் திருவனந்தபுரம் மன்னர்களோடு, பல போர்கள் புரிந்திருக்கிறான். ஆரல்வாய் மொழிக் கோட்டையிலிருந்து அடிக்கடி வரும் படையெடுப்புகளைத் தடுக்கவும், நாஞ்சில் நாட்டைக் கைப்பற்றவும் செய்த முயற்சியே இது. இம்முயற்சியை நிறைவேற்ற ராமய்யன் பெருபடை கொண்டு ஆரல்வாய் மொழியை முற்றுகையிட்டான். மலையாள மன்னன் படை சிதறியோடியதும் இரவிக்குட்டி என்ற இளைஞன் படைகளைச் சேகரித்து பெரும் படையை எதிர்த்துப் போராடினான். அரசனை எதிர்த்து நின்ற எட்டு வீட்டுப் பிள்ளைமார் என்ற பிரபுத்துவத் தலைவர்கள் நாட்டைக் காட்டிக் கொடுக்க முன்வந்தார்கள். இரவிக்குட்டிப்பிள்ளைக்கு துணைப்படை அனுப்புவதாக வாக்களித்துவிட்டு நல்ல சமயத்தில் அவனைத் தனியே தவிக்கவிட்டனர். இரவிக் குட்டிப்பிள்ளை வீரமரணம் எய்தினான். அவனது இணையற்ற வீரத்தைப் போற்றும் தமிழ்நாட்டுப் பாடலும், மலையாள நாட்டுப் பாடலும் உள்ளன. இச்சம்பவங்கள் 1537லும், 1639லும் நடைபெற்றவை.

தேசிங்குராஜன் கதை

நாயக்கர் ஆட்சிக் காலத்திற்குப் பின் முகலாயப் படையெடுப்பு நடந்த காலத்தில் அப்பேரரசை எதிர்த்து செஞ்சிக் கோட்டையின் சிற்றரசன் தேசிங்கு போராடினான். அவனுக்கு உதவி செய்தவன் செஞ்சி முஸ்லீம்களின் தலைவன் முகமதுகான். ஜாதியையும் மதத்தையும், மேலாகக் கருதாமல் நட்பையும், நாட்டுப் பற்றையுமே மேலெனக் கருதியவன் முகமதுகான். இவர்களது வரலாற்றுக் கால வாழ்வு பத்து மாதங்கள் தான். நீண்டநாள் அரசாண்ட மன்னர்களின் பெயர் மக்களின் மனத்தில் இடம் பெறாமல் போயின. ஆனால் பத்து மாதங்கள் ஆண்ட தேசிங்கின் பெயர் தெரியாதவர் தமிழ்நாட்டில் இல்லை. ஏன்? லட்சம் படை வீரர்களும், நானூறு பீரங்கிகளும் கொண்ட முகலாயர் படையை முன்னூறு குதிரைவீரர்களைக் கொண்டு எதிர்த்தான் தேசிங்கு. முகலாயப் படைத்தலைவன் சதகுத்துல்லாவைக் கொன்று விட்டான். தானும் உயிர்நீத்தான். பணியாது போராடிய தேசிங்கின் நண்பன் ஒரு முஸ்லீம். அவன் நண்பனுக்காகத் தன் மதத்தினரை எதிர்த்தான்; அவனும் உயிர் நீத்தான். முரட்டு வீரமாயினும் தேசிங்கின் அஞ்சாமைக்குத் தமிழகம் தலைவணங்குகிறது.

ஆங்கிலேயர் காலத்தில் வரலாற்றுப்பாடல்கள்

இதன் பின்னர் ஆங்கிலேயர் ஆதிக்கம் மறைமுகமாகவும், அதன் பின்னர் நேரிடையாகவும் வளரத் தொடங்குகிறது. இவ்வளர்ச்சி எதிர்ப்பின்றி நடைபெற்றுவிடவில்லை.

பூலுத்தேவர்கதை

வெவ்வேறு காலங்களில் எட்டயபுரத்தாரும், கட்டபொம்மன் முன்னோரும், சிவகிரி வன்னியரும், வடகரைச் சின்னணைஞ்சாத் தேவரும் நவாபையும், அவர்களது வசூல் குத்தகைதாரர்களான ஆங்கிலேயர்களையும் எதிர்த்து நின்றனர். ஆனால் அவர்களிடையேயிருந்த உட்பூசல்கள் காரணமாக எல்லோரும் ஒன்று சேரவில்லை. 1795ல் பூலுத்தேவர் முடிந்த அளவுக்குப் பாளையக்காரர்களை ஒன்று திரட்டி வரிகொடா இயக்கம் நடத்தினார். அவரை அடக்காமல் தென்பாண்டி மண்டலத்துப் பாளையங்களை அடக்க முடியாதென்று கண்ட ஆங்கிலேயர்கள் கர்னல் ஹீரான், மாபூஸ்கான், கம்மந்தான் கான்சாகிப் என்ற மூன்று தளபதிகளின் தலைமையில் பெரும்படையை அனுப்பி வைத்தார்கள்.

சிறிய படையோடு நெற்கட்டான்செவல் கோட்டையிலும், மலையரண்களிலும் புகுந்துகொண்டு சமயம் நேர்ந்தபோது விரைவாகப் பாய்ந்து பெரும் படையைத் தாக்கிய பூலுத்தேவரை அவர்களால் அடக்க முடியவில்லை. அவரது திண்மையும், வீரமும் மற்றப் பாளைக்காரர்களையும், மக்களையும் கவர்ந்தது. அவருக்கு ஆதரவு திரண்டது. அவர் ஆங்கிலேயரை எதிர்க்கும் அனைவரையும், ஓரணியில் இணைக்க முயன்றார். முடிவில் ஐதர் அலியோடு தொடர்புகொண்டு தென்னாடு முழுவதிலும் ஆங்கில எதிர்ப்புப் போரை விஸ்தரிக்க முயன்றார். ஆனால் எதிர்ப்பு அணியிலேயே பல பிளவுகள் ஏற்பட்டதால் இதனை அவரால் சாதிக்க முடியவில்லை. ஆனால் இம் முயற்சியால் உயிர்விட்ட பூலுத்தேவர் விடுதலை வேட்கைக்கும், வீரத் தியாகத்துக்கும் ஒளிவிளக்காக விளங்குகிறார்.

அவரது வரலாறு ஆங்கில ஆசிரியர்களது நூல்கள் வாயிலாகவே நமக்குக் கிடைக்கிறது. அவற்றில் அவரைக் கலகக்காரராகவும், கொள்ளைக்காரராகவுமே சித்திரிக்கிறார்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் அவரைப்பற்றிய தனி நாட்டுப்பாடல்களும், ஒரு ஒயில் பாட்டும், சிந்துப் பாடலும் வழங்கி வருகின்றன. அவை இன்னும் முழுமையாக அச்சாகவில்லை. சிற்சில பாடல்களே வெளியாகியுள்ளன. அவை சேகரித்து வெளியிடப்பட வேண்டும்.

கான்சாகிபுகதை

இப்போரில் ஆங்கிலப் படையின் தளபதி யூசப் கான் என்பவன். அவன் இந்துவாக இருந்து, ஒரு முஸ்லிம் வணிகனால் அபிமான புத்திரனாக வளர்க்கப்பட்டான். அவன் நவாபின் படையில் சிப்பாயாகச் சேர்ந்து தனது வீரத்தாலும், திறமையாலும் தளவாயாக உயர்ந்தான். பரங்கிமலையிலும், சதுரங்கப்பட்டணத்திலும் காலூன்றியிருந்த டச்சுக்காரர்களின் கோட்டைகளைப் பிடிக்க ஆங்கிலேயருக்குத் துணை செய்தான். அவனது போர்த் திறமையைக் கண்டு வியந்த ஆங்கிலேயர்கள் அவனைத் தங்கள் படையில் சேர்த்துக்கொண்டு கம்மந்தானாக (Commander) நியமித்தனர். தென்னாட்டை அடக்க அவனையே அனுப்பி வைத்தார்கள். பல ஆண்டுகள் முயன்று அவன் தென்னாட்டுப் பாளையங்களை அடக்கினான். முக்கியமாகப் பூலுத் தேவரது வலிமையை ஒடுக்கினான். பல கொடுமைகள் செய்து ஆங்கிலேயர் ஆட்சியைத் தென்னாட்டில் நிறுவினான். ஆனால் ஆங்கிலேயர் நவாபின் விருப்பப்படி அவனை நவாபின் படைக்கு அனுப்பிவிட முடிவு செய்தனர். இவ்வாறு அவனது செல்வாக்கைக் குறைத்துவிட அவர்கள் முயன்றனர். ஆனால் பாளையக்காரர்களின் வீரவுணர்வைக் கண்ட அவன் தென்னாட்டில் சுயேச்சை அரசை நிறுவ எண்ணி மதுரையில் முடிசூட்டிக் கொண்டான். நவாபும், ஆங்கிலேயரும் அவனை ஒழித்து விட எண்ணினர். அவன் ஏற்கனவே ஆங்கிலேயரின் கையாளாகத் தென்னாட்டின் பாளையக்காரர்களை விரோதித்துக் கொண்டிருந்தான். ஆகவே அவனுக்கு இருபுறமும் இடி தோன்றியது. ஏககாலத்தில் சிவகங்கையையும் ஆங்கிலேயரையும் எதிர்த்தான். சிவகங்கையின் மன்னன் ஆங்கிலேயர்களோடு சேர்த்துகொண்டான். அதன் பின்னர் நிகழ்ந்த போரில் கான்சாகிப் தோற்றான். சூழ்ச்சியால் அவன் சிறைப்பட்டுத் தூக்கிலிடப்பட்டான். கடைசிக் காலத்தில் ஆங்கிலேயனை எதிர்த்த கான்சாகிப், தனது முற்காலத்துச் செயல்களால் தென்னாட்டுப் பாளையக்காரர்களை ஒன்றுதிரட்டி ஆங்கிலேயருக்கு எதிரான முன்னணியை உருவாக்க முடியவில்லை. அவனது செயல்களின் விளைவால் அவன் அழிந்தான்.

அவனது வரலாறு ஆங்கிலேய ஆசிரியர்கள் எழுதிய வரலாற்று நூல்களில் குறிப்புகளாகக் காணப்படுகின்றன. S.C.ஹில், கால்டுவெல் ஆகியோர் எழுதிய நூல்களிலும் மதுரை, திருநெல்வேலி, கெஜட்டியர்களிலும் அவனது வரலாறு குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தமிழ் மக்கள் அவனைப் பற்றிக் கொண்டிருந்த கருத்து ‘கான்சாகிப் சண்டை’ என்ற நாட்டுப் பாடலில் வெளியாகிறது. இது போன்ற சில நாட்டுப் பாடல்கள் மதுரை மாவட்டத்தில் வழங்கி வருகின்றன. அவை அச்சாகவில்லை. அவையனைத்தும் சேகரித்து வெளியிடப்பட வேண்டும்.

கட்டபொம்மு

கான்சாகிபுவின் மரணம், திப்புவின் தோல்வி, ஆர்க்காட்டு நவாப்பின் வீழ்ச்சி இவற்றின் காரணமாக கிழக்கிந்திய கம்பெனி தென்னாட்டில் நேரடி ஆட்சியை மேற்கொண்டது. தமிழ்நாட்டுப் பாளையங்களின் சில ஆதிக்க உரிமையைக் கட்டுப்படுத்தி வரி வசூலிக்க நிலங்களை செட்டில்மெண்டு செய்தனர்.

இந்த செட்டில்மெண்டு மூலம் பணிந்துவிட்ட பாளையக்காரர்களுக்கு, தங்களிடம் பணியாத பாளையக்காரர்களின் நிலங்களைப் பிடுங்கி வழங்கினர். இவ்வாறுதான் பாஞ்சாலங் குறிச்சிப் பாளைய நிலங்கள் உள்ள அருங்குளம் சுப்பலபுரம் என்ற கிராமங்களை எட்டயபுரத்தாருக்கு வழங்கினார். கட்டபொம்மு ஆங்கிலேயரின் உரிமையை எதிர்த்தான். அவர்களுக்கு வரி செலுத்தவும் மறுத்தான். இதன் விளைவு என்ன என்று அவனுக்குத் தெரியும். தென்னாட்டில் சிவகெங்கை மருதுவைத் தவிர மற்ற எல்லாப் பாளையக்காரர்களும், ஆங்கிலேயரின் நவீனப்படை வலிமைக்கு அடி பணிந்து விட்டனர். மேற்கு வட்டகைப் பாளையக்காரர்களும் கிழக்கு வட்டகை நாயக்கர் பாளையங்களும், சேதுபதி முதலிய பெரிய பாளையக்காரர்களும், வெள்ளையர் ஆட்சிக்கு அடிபணிந்துவிட்டனர். ஆயினும் கட்டபொம்மு ஆங்கில ஆட்சியின் ஆணையை ஏற்க மறுத்தான். அவனை அடிமைப்படுத்த ஆங்கிலேயர்கள் பாஞ்சாலங்குறிச்சி மீது படையெடுத்தனர். மண் கோட்டையிலிருந்து வாளும், வில்லும் கொண்டு சிறிய படையோடு, பீரங்கியும், துப்பாக்கியும் கொண்ட பெரும் படையை எதிர்த்துப் போராடினான் கட்டபொம்மன், முதற் போரில் தளபதி காலினஸ் இறந்தான். கட்டபொம்மனது தளபதி வெள்ளையனும் இறந்தான். முற்றுகை உடைந்தது. வெள்ளையர் படை சிதறியது. 1799ல் மறுபடியும் பெரும் படையோடு மேஜர் பேனர் மேன் கோட்டையைத் தாக்கினான். கோட்டை பிடிபட்டது. ஆனால் வெள்ளையர் படைக்குப் பெருஞ் சேதம் ஏற்பட்டது. ஆயினும் வெள்ளையர் வென்றனர். கட்டபொம்மன் தூக்கலிடப்பட்டான். பாஞ்சாலங்குறிச்சி தடம் தெரியாமல் அழிக்கப்பட்டது. ஆனால் வீர கட்டபொம்மனது தியாகம் சுற்றிலுமுள்ள மக்கள் மனத்தில் வீர உணர்வை எழுப்பியது. மக்கள் படை திரண்டது. பாளையங்கோட்டைச் சிறையிலிருந்த ஊமைத்துரையும், அவனது உறவினரும் விடுதலைப் படையால் விடுவிக்கப்பட்டனர். ஏழு நாட்களில் கோட்டை மறுபடியும் கட்டப்பட்டது. வெள்ளையர் எதிர்ப்பு அணி சுற்றிலும் பரவியது. தூத்துக்குடி துறைமுகத்தை ஊமையன் படை கைப்பற்றியது. வெள்ளையர் கலங்கினர். பெரும் படையோடு வெள்ளையர் தளபதி பாஞ்சாலங்குறிச்சியை முற்றுகையிட்டு அதனைக் கைப்பற்றினான். ஊமையன் தப்பியோடிச் சிவகங்கைக்குச் சென்றான்.

மருது சகோதரர்கள்

சிவகங்கையில் ஆண்ட பெரிய மருது அரச வம்சத்தினன் அல்லன். வெள்ளையரை எதிர்த்து நின்ற சிவகங்கை மன்னன் முத்துவடுகநாதன் ஆட்சியை மருதுவிடம் ஒப்படைத்தான். அவனது விதவை வேலு நாச்சியார் அவனை மணந்து கொண்டாள். இவ்வாறு அவன் பாளையக்காரனானான். அரசியல் திறமை மிக்க தனது தம்பி சின்ன மருதுவின் துணையோடும், மக்கள் ஆதரவோடும் அவன் சுயேச்சையாக நாட்டைக் காத்து வந்தான். பலமுறை அவனை வெள்ளையர் பயமுறுத்தி வந்தனர். அவன் பணியவில்லை. வெள்ளையர்களை எதிர்த்து நிற்கும் பாளையங்களுக்கு அவன் உதவியளித்து வந்தான். அவனோடு சேர்ந்து போராடவே ஊமைத்துரை சிவகங்கை சென்றான். அவனைத் தங்களிடம் ஒப்படைத்து விடும்படி வெள்ளையர்கள் கேட்டார்கள். மருது உடன்படவில்லை. இதனையே சாக்காக வைத்துக்கொண்டு, தங்களை எதிர்த்து நிற்கும் கடைசிப் பாளையக்காரனான மருதுவை ஒழித்துவிட வெள்ளையர்கள் முடிவு செய்தார்கள். கர்னல் வெல்ஷ் என்ற தளபதி பெரும் படையோடு சிவகங்கையைத் தாக்கினான். பல போர்களுக்கு அப்புறமும் மருதுவை வெல்ல முடியவில்லை. மருது முத்து வடுகன் நேர் பரம்பரையைச் சேர்ந்தவனல்லன் என்றும், பரம்பரைப் பாளையக்காரர்களின் சாதியான தேவர் சாதியைச் சேர்ந்தவனல்லன் என்றும் கூறி முத்து வடுகனின் தாயாதி உறவினன் ஒருவனை பாளையக்காரனாக்கி தேவர் சாதியினரை மருதுவின் பக்கமிருந்து பிரித்தனர். இச் சூழ்ச்சிக்கு இரையான தேவர்கள் வெள்ளையருக்கு ஆதரவாகத் திரண்டனர். இவ்வாறு மருதுவின் அணியைப் பிளவு செய்து மருதுவைப் பலவீனப்படுத்தினர். கடைசியில் மருது பிடிபட்டான். சின்ன மருதுவும் ஊமையனும் பிடிபட்டனர். மூவரும் தூக்கிலிடப்பட்டனர். அவர்கள் குடும்பத்தினர் நாடு கடத்தப்பட்டனர். இவ்வாறு ஆங்கிலேயருக்கு எதிர்ப்பு ஓய்ந்தது.

வரலாற்றுப் பாடல்களைப் பற்றிய கருத்து

இவ்வரலாறு அனைத்தும் ஆங்கிலேயர் எழுதிய நூல்களில் காணப்படுகின்றன. ஆனால் இவ்வீரர்கள் பிடிவாதமும் மூர்க்க குணமும் உடைய கலகக்காரர்களாகவே அவர்களால் வருணிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களது மானிடப் பண்புகளும் வீரத்தன்மையும் அவர்கள் மக்கள் பால் பெற்றிருந்த நன்மதிப்பையும் அவர்கள் மறைத்துவிட்டார்கள்.

ஆனால் மக்களுடைய படைப்புகளான நாட்டுக் கதைப் பாடல்கள் இவ்வீரர்களின் சிறப்பான பண்புகளைப் போற்றிப் பாடுகின்றன. அவர்களது வீரச் செயல்களைப் பற்றிக் கூறி நாம் பெருமை கொள்ளச் செய்கின்றன. மருதுவைப் பற்றிய பாடல்களில் இரண்டு ‘ஒரியண்டல் மானுஸ்கிரிப்ட்ஸ்’ தொடரில் சென்னை அரசினரால் வெளியிடப்பட்டுள்ளன. கட்டபொம்மன் கதைப் பாடலை என்னுடைய ஆராய்ச்சியோடு நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தினர் வெளியிட்டுள்ளார்கள்: இன்னும் பல பாடல்கள் ஏட்டிலேயே புதைந்து கிடக்கின்றன. அவையாவும் திரட்டி வெளியிடப்படவேண்டும்.

தெய்வம் பற்றிய கதைப் பாடல்கள்

இனி கதைப் பாடல்களில் பாமர தெய்வங்களைப் பற்றிடி வில்லுப்பாடல்களும், அம்மானைகளும் அடங்கும், வில்லுப்பாட்டுகள் நெல்லை, குமரி மாவட்டங்களில் இன்னும் பாடப்படுகின்றன. அவற்றில் சொல்லப்படும் கதை பாமரர் வணங்கும் தெய்வங்களின் வரலாறுகளே. இவற்றை இருவகையாகப் பிரிக்கலாம்.

பெண் தெய்வங்களைப் பற்றிய கதைகள் பழமையானவை. மாடன் முதலிய தேவர்களைப்பற்றிய கதைகள் இடைக்காலத்தவை. திரு.கி.வா.ஜகந்நாதன் அவர்கள் ‘அலையோசை’ என்ற நாட்டுப்பாடல் திரட்டில் பாமரர் வணங்கும் தெய்வங்களின் அட்டவணையொன்று கொடுத்துள்ளார்கள். அவற்றுள் வேதக்கடவுளரை நீக்கிவிட்டால் 60 தெய்வங்கள் இருக்கின்றன. இத்தெய்வங்கள் மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபடுகின்றன.

தேவியரில் பெரும்பாலானவை மூர்க்க தேவதைகளே. பரட்டைத்தலை கொட்டை விழி, கோரப்பற்கள் முதலிய அசுர அம்சங்கள் எல்லாத் தேவதைகளுக்கும் பொதுவானவை. இவை பெண்ணாதிக்கச் சமுதாயத்தின் எச்சமாக நிற்கின்றன. இவற்றுள் முத்தாரம்மன், குமரி, செல்லி முதலிய தேவியர் தென்பாண்டி நாட்டில் பிரபலமானவை. இவை மணம் புரிந்துகொள்ளாத தேவியர், இவற்றை பயத்தோடு தான் மக்கள் வழிபட்டனர். இவை தமக்குக் கொடுக்க வேண்டியதைப் பக்தர்கள் தராவிட்டால் பெருந்துன்பம் விளைவிக்கக் கூடியவை என்று நம்பினார்கள். ‘யக்ஷி’ என்று சமண மதத்தவரது சாந்த தேவதை, பாமர மக்களின் இசக்கியாக மாறிவிட்டது. காளி, மாரி முதலியன வங்கத்திலிருந்தும், கர்நாடகத்திலிருந்தும் - பண்பாட்டுக் தொடர்பின் காரணமாக இங்குக் குடியேறியவை. சக்கம்மாள், ராஜ கம்பள நாயக்கர்களது தெய்வம். கொத்துபல்லாரியிலிருந்து அவர்கள் வருகிற காலத்தில் அதனையும் கூடவே கொண்டு வந்து விட்டார்கள்.

தேவியரில் பல வேதக் கடவுளரோடு இணைப்புப் பெற்று விட்டன. காளி தனியாகவே வணங்கப்பட்டது. அது சைவ சமயத்தில் பார்வதியோடு சேர்ந்து ஒரு அம்சமாகி விட்டது. பெரும்பாலும் பழமையான தேவதைகள் சிவனது மனைவிகளாக மாறிவிட்டன. ஆயினும் சிவன், விஷ்ணு கோயில்கள் இல்லாத சிறு சிறு கிராமங்களிலும் ஒரு தேவியின் கோயில் இருக்கும். இக்கோயிலுக்குச் சிறப்பான நாட்களில் கொடை கொடுப்பார்கள். நவராத்திரியின் போது திருவிழாவும் நடைபெறும். சிறு கோயில்களில் ஒரு நாள் மட்டுமே கொடை நடைபெறும்.

பாமர மக்கள் தேவி கோயில்களுக்கு வாசல் காவலர்கள் என்று மாடன் முதலிய தெய்வங்களை வணங்குகிறார்கள். ஆரம்பகாலத்தில் மாடன் முதலிய தெய்வங்களுக்கு உருவம் இல்லை. செங்கல்லால் கட்டப்பட்ட துண் ஒன்றுதான் அத்தெய்வத்தைக் குறிக்கும். மாடன் முதலிய தெய்வங்கள், போரிலோ, கலகத்திலோ, அல்லது சதிக்குள்ளாகியோ உயிர் விட்டவர்களது நினைவுச் சின்னங்களே. சின்னத்தம்பிக்கு, திருக்குறுங்குடி, பாப்பாங்குடி ஆகிய இடங்களில் கோயில்கள் இருக்கின்றன. அவை தனிக் கோயில்கள் அல்ல; பிற கோயில்களைச் சார்ந்தே இருக்கும், சுடலை மாடனுக்கு ஊர்தோறும் பல கோயில்கள் உண்டு. அவற்றில் உருவச் சிலைகள் இல்லை. சில தேய்வங்களுக்கு உருவச் சிலைகள் இருக்கின்றன. கருப்பசாமி, சங்கிலி பூதத்தான், முத்துப்பட்டன் ஆகிய தெய்வங்களுக்குச் சிலைகள் உள்ளன. இவை பிற்காலத்தில் ஏற்பட்டவை.

மாடன் போன்ற தெய்வங்கள் சில குடும்பங்களுக்குக் குலதெய்வமாக இருக்கும். ஒன்று தெய்வமாகக் கருதப்படுகிற அம்மனிதனது வழிவந்தவர்களுக்கு அவன் குலதெய்வமாக இருக்கலாம். அல்லது அவனைக் கொன்றவர்களுக்குக் குலதெய்வமாக இருக்கலாம்.

இவை யாவும் பயத்தினால் வணங்கப்படும் தெய்வங்களே. வேதக்கடவுளரில் சிவன், நாராயணன், முதலியோரைப் பாமர மக்கள் வணங்குவது உண்டு. எனினும் அவர்கள் வீர சைவர்களோ, வீர வைணவர்களோ அல்ல, லக்ஷ்மி, சரஸ்வதி முதலிய தேவியர்களை அவர்கள் வணங்குவது அபூர்வம். முருக வணக்கம் பழங்கால முதல் தமிழ்நாட்டில் நிலவி வந்தது. இன்று உருவமில்லாமல் வேலினை மட்டும் பாமர மக்கள் வணங்குகிறார்கள். அது ஆயுத வணக்கமாக இருக்கலாம்.

பெளத்த சமணச் சிறு தேவதைகளும் அம்மதங்கள் அழிந்த பின்னர், பாமரர் வணக்கத்திற்குரியனவையாயின. ஆனால் அவை உருமாறி, இந்துமத தெய்வங்களோடு ஒன்றி விட்டன. இவற்றுள் ஒன்று விநாயகர். இப்பெயர் புத்தருடைய பெயர்களுள் ஒன்று வேசாந்தர ஜாதகத்தில் புத்தர் யானைப் பிறவியெடுத்தார் என்ற கதை கூறப்பட்டுள்ளது. எனவே புத்தர் பீடங்களிலிருந்த சிலைகளை அகற்றிவிட்டு பிற்காலத்தார் யானைமுகக் கடவுளை வைத்து விட்டனர். அவை அரசமரத்தடியில் இருப்பதும் இக்கூற்றை மெய்பிக்கும் சான்று. ‘சாஸ்தா’ சிறு தெய்வங்களுக்குள் உயர்ந்தவராகக் கருதப்படுகிறார். இவர் சிவனுக்கும் மோகினி உருவத்திலிருந்த திருமாலுக்கும் பிறந்தவர். சாத்தன் என்ற பெயரும் புத்தர் பெயர்களுள் ஒன்று. பிற்காலத்தில் புத்தனும், இந்துத் தெய்வங்களுள் ஒன்றாகக் கலந்தபோது சாஸ்தாவுக்குப் பல ஊர்களில் கோயில்கள் தோன்றின. அவர் சாந்த தெய்வம்.

பாமரர் தெய்வங்கள் அதீத சக்தியுடையனவாவென்று அவர்களால் கருதப்படவில்லை. மனிதனை விடச் சிறிது அதிகமான சக்தியுடையவை. அவ்வளவுதான். அவை புராணங்களில் சொல்லுவது போல சத்திய லோகம், கைலாசம், வைகுண்டம் முதலியவற்றில் வாழ்வன அல்ல. இவ்வுலகிலேயே, கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருக்கும் இயற்கைச் சக்திகளைப் போன்றவையே. அவை மனிதர் உடலுள் நுழைந்து பேசும் என்றும் மக்கள் நம்பினார்கள். இதனால் வஞ்சகர்களால் ஏமாற்றவும் பட்டார்கள்.

சமூக நிகழ்ச்சிகள், அரசியல் நிகழ்ச்சிகள், புராணக் கதைகள் இவைபற்றி உழைக்கும் மக்களின் கருத்துக்களின் வரலாறு முழுவதையும் நாட்டுக் கதைப் பாடல் பற்றிய ஆராய்ச்சி நமக்குத் தெளிவாக்கும். ஆனால் இக்கதைப் பாடல்களைக் குறித்த ஆராய்ச்சி எதுவும் இதுவரை தமிழ் நாட்டில் தொடங்கவில்லை. இவற்றை ஆராயாமல் தமிழ் நாட்டு மக்களின் பண்பாட்டு வரலாற்றை ஆராய முடியாது. இக் கதைப்பாடல்கள் ஆயிரக் கணக்கில் கிடைக்கின்றன. இவற்றின் ஆராய்ச்சியின் மூலம் நமது நாட்டு மக்களின் பண்பாட்டு வரலாற்றை சுமார் கி.பி.1330 முதல் கி.பி.1801 வரை ஆராய முடியும். இம் முயற்சிகளை தமிழறிஞர்கள் மேற் கொள்ள வேண்டும். இப்பணி பொதுப் பணியாகையால், ஆராய்ச்சிக் கழகங்களும், தமிழ்நாடு அரசினரும் இதற்கு உதவ வேண்டும்.

இந்நாட்டுப் பாடல்களின் மூலம் நாம் அறிந்துகொள்வன வருமாறு:-

1. நாட்டுப்புற மக்கள், வரலாற்றை எவ்வாறு நோக்குகிறார்கள்? வரலாற்று வீரர்களைப் பற்றி அவர்களுடைய சிந்தனை என்ன?

2. சமூகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் அவர்கள் உயர்வாகக் கருதுவது எதனை? இழிவாகக் கருதுவது எதனை?

3. அவர்களுடைய நம்பிக்கைகள், துன்பங்கள் இன்பங்கள் இவை யாவை?

4. புராணங்களில் அவர்களுக்கு விருப்பமானவை எவை? அவற்றில் எத்தகைய மாறுதல்கள் அவர்கள் கருத்துக்களுக்கு உகந்தது?

5. அவர்கள் உருவாக்கியுள்ள பண்பாட்டையும், அதைச் சீரழிக்கும் முயற்சிக்கு அவர்கள் தெரிவிக்கும் எதிர்ப்பையும், இக்கதைகளில் நாம் காண்கிறோம்.

நம் நாட்டு மக்களின் பண்பாட்டு வரலாற்றை நாம் மதிப்பிட, நமது இலக்கியம், கலைகள் நாம் வளர்த்துள்ள பழக்க வழக்கங்கள் இவற்றோடு நாட்டுக் கதைப் பாடல்களையும் ஒரு பகுதியாகக் கொள்ள வேண்டும்.

தமிழர் வரலாறும் பண்பாடும்
பண்டைய வரலாற்றின் அரசியல், மொழி, கலை, இலக்கியம் முதலிய தமிழ்ப் பண்பாட்டினை இக்கட்டுரைத் தொகுப்பு புதிய பார்வையோடு ஆராயகிறது. தமிழர் வரலாற்றை வரைவதற்கு இந்நூல் ஒரு தூண்டுகோலாக அமையுமென்று நம்புகிறோம்.
----------------------


This file was last updated on 26 Nov 2022
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)