pm logo

ப. சம்பந்த முதலியார் எழுதிய
தீபாவளி வரிசை (நாடகம்)


tIpAvaLi varisai (play)
by campanta mutaliyAr
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

ப. சம்பந்த முதலியார் எழுதிய
தீபாவளி வரிசை (நாடகம்)

Source:
தீபாவளி வரிசை
ஓர் தமிழ் நாடகம்
நாடகப்பேராசிரியர்
ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார், பி.ஏ., பி.எல்.,
அவர்களால் இயற்றப்பட்டது.
காபிரைட்) முதற்பதிப்பு 1947
PRINTED AT THE 'RATNA VILASAM' PRESS.
37. ERULAPPAN ST., SOWCARPET,, MADRAS.
------
INSCRIBED TO THE BELOVED MEMORY OF MY PARENTS
P. VIJIARANGA MUDALIAR AND P. MANICKAvelu amMAL AND
MY FRIEND C. RANGAVADIVELU
-----------------

தீபாவளி வரிசை

நாடக பாத்திரங்கள்

சண்முக முதலியார் --கதாநாயகன்.
பர்வதம்மாள் -- சண்முக முதலியார் மனைவி.
சோமசுந்தரம், பாலசுந்தரம் , முருகேசன் -- சண்முக முதலியார் பிள்ளைகள்
விஜயலட்சுமி -- சண்முக முதலியாரின் பெண்.
திருமெஞ்ஞான முதலியார் -- சண்முக முதலியாரின் மைத்துனன்.
தங்கவேலு பிள்ளை -- திருமெஞ்ஞான முதலியாருடைய குமாஸ்தா.

கதை நிகழ் இடம்- வானகரத்தில் ஓர் வீடு.
காலம் - தற்காலம்.
------------------

தீபாவளி வரிசை -முதல் அங்கம்
முதல் காட்சி

இடம்:- சுண்ணாம்பு கூட அடிக்கப் படாத, கொஞ்சம் இடிந்த வீட்டில் ஓர் அறை, அறையின் தெற்கு நோக்கிய தெருப்பக்கத் தாழ்வாரத்தின்புறம் ஓர் ஜன்னலிருக்கிறது. கீழ்ப்பக்கத்து நடையை நோக்கின ஜன்னல் கொஞ்சம் திறந்திருக்கிறது. வடக்கு புறம், வாயில் பக்கமாக ஓர் கதவு திறந்திருக்கிறது. அறைக்குள் மேற்குபுறம் ஒரு பழய கட்டிலின் மீது சண்முக முதலியார் படுத்திருக்கிறார். கீழே கோரைப் பாய்களின் மீது, சோமசுந்தரம், பாலசுந்தரம்,முருகேசன், படுத்துக்கொண் டிருக்கின்றனர். கட்டிலின் பக்கத்தில் நின்றுகொண்டு பர்வதம்மாள் சண்முக முதலியாருக்குக் கஞ்சி கொடுத்துக் கொண்டிருக்கிறாள். விஜயலட்சுமி தன் தாயார் பக்கத்திலிருந்து கொண்டு, அவளுக்கு ஒத்தாசை செய்துகொண்டிருக் கிறாள். வெளியில் பலமாக மழை பெய்கிறது.

காலம்-இரவு சுமார் 9 மணி.

ச. : மழை பலக்கிறாற் போலிருக்கிறது - தீபாவளி மூட்ட மல்லவா!

ப. : நல்ல தீபாவளி மூட்டந்தான்! இப்பொழுது பெய் கிறது கொஞ்சம் ஆடி மாதம் பெய்திருக்கலாகாதா?

ச . : இப்பொழுதாவது கொஞ்சம் பெய்கிறதே, அதற்காக சந்தோஷப்படு.- சோமு, தெருப்பக்கம் ஜன்னலை சாத்துப்பா -- கொஞ்சம் திறந்திருந்தாலும் ரொம்ப குளிர்ந்த காற்று அடிக்கிறது, அந்தப் பக்கமிருந்து.
(சோமு எழுந்திருந்து அந்த ஜன்னலை சாற்றுகிறான். தெருக்கதவை தட்டுகிற சப்தம்.)

ப. : சோமு, யாரோ கதவை தட்டுகிறார்கள் பாரப்பா. (சோமு அறைக்கு வெளியே போகிறான்.) வெளியில் வானம் குமுறுகிறது, மின்னுகிறது; மழை அதிகமாய் ப்பலக்கிறது.)

சோமு திரும்பி வருகிறன்

சோ. : யாரோ வழிப்போக்கன் போலிருக்கிறது. மழை நிற்கிற வரையில் திண்ணையில் இருந்து போகலாமா என்று கேட்கிறார் -

ச. : இருந்து போகச் சொல்லப்பா -

ப. : யார் பார்த்தாயா? முன்பு ஒருவன் வந்தானே திருடன் - அவனைப் போலிருக்கப் போகிறான்.

சோ. : இல்லை அம்மா. யோக்கியனாகத் தானிருக்கிறது. சொக்கா யெல்லாம் போட்டுக் கொண்டிருக்கிறார். (போகிறான்)

ச. : பர்வதம்! நீ மற்ற விஷயங்களிலெல்லாம் புத்திசாலி தான், இதில் மாத்திரம் உனக்கு புத்தி கொஞ்சம் குறைவு. ஒருவன் திருடனாயிருந்தால், மற்றவர்களை யெல்லாம் திருடர்கள் என்று தூஷிக்கலாமா?

சோமு திரும்பி வருகிறன்

சோ. : திண்ணையிலே படுத்துக்கொள்ளச் சொன்னேன்.
(தான் படுத்துக் கொள்கிறான்)

வி. : நாயினா,அன்றைக்கி பேய்ஞ்சபோது திண்ணையெல் லாம் ஒழுகிச்சே! -யாரோ பாவம்!- இந்த மழை யிலேதான் நனையணும்!

ச. : லட்சுமி சொல்வது வாஸ்தவம்தான். - சோமு, கொஞ்சம் எழுந்து போய், அந்த மனுஷனை - அவரை நடையிலெ படுத்துக்கலாம் என்று சொல்.

சோ. : எத்தனைதரம் எழுந்திருக்கிறது!- (எழுந்திருக்கிறான்)

ச. : சோமு, கோபிச்சிக்காதே அப்பா, மற்றவர்களுக்கு யாரா இருந்தாலும் நம்மாலான உதவி செய்ய வேண்டியது நமது கடமை -

ப. : சோமு, அப்புறம் - நடையிலே வாசல் பக்கம் கதவே தாப்பாள் போட்டுடு. (சோமு போகிறான்).

ச. : என்ன சந்தேகப் பிராணி!

ப. : ஆமாம், எனக்கிருந்த ஒரு காசு மாலையும் களவு போச்சே - உங்களுக்கு என்ன ? அதிருந்தா இப்போ - நமக்கு எவ்வளவு உபயோகமா யிருக்கும்?

வி. : நாயினா - பாயி ஒண்ணு கொடுக்கட்டுமா, படுத்து கிறதுக்கு?

ச. : அப்படி சொல்லம்மா!- பர்வதம், உன் பெண்ணுக் கிருக்கிற புத்தி உனக்கில்லையே!


ப. : இவ ஒருத்தி!- அந்த கிழிஞ்ச பாயிதான் ஒண்ணு இருக்குது அத்தெ கொடு நீ போகாதே - உன் தம்பிகிட்ட கொடுத்து கொடுக்கச் சொல்லு.

வி. : அப்படியே அம்மா: (பர்வதம்மாள் கஞ்சி கொடுத்த பாத்திரத்தை எடுத்துக்கொண்டு வெளியே போகிறாள்) (நடையில் பாய் பரப்புகிற சப்தம்; பிறகு நடைக் கதவு சாத்தப்படுகிற சப்தம்; வெளியில் மழை கொஞ் சம் குறைகிறது).

ச. : யார் அது? - அழுகிற சப்தம்?- பாலு, யார் அது?

ப. : முருகேசம்.

ச. : ஏன் அழுகிறான்?

ப: அவன் கண்ணுகுட்டி பூட்டுது இண்ணு அழரான்!

ச. : அதற்காகவா? முருகேசம், நீ நல்ல புத்திசாலியாச் சுதே!- வருத்தப்படாதே! நான் என்ன செய்வது? நம்முடைய பண்ணையாட்களுக்கு தீபாவளிக்கு நாம் துணிமணி கொடுக்க வேண்டுமே வழக்கப்படி - வேறொன்று மில்லையே யென்று உன் கன்றுக் குட்டியை விற்கவேண்டிய தாயிற்று. (பர்வதம் சோமு, விஜயலட்சுமி வருகிறார்கள்) முருகேசம், துக்கப்படாதே! ஸ்வாமியைக் குறித்து பிரார்த்தனை பண்ணு, அவர் உனக்கு வேறு கன்றுக்குட்டி ஏதாவது கொடுப்பார்-

மு. : உம் - உம்!- எனக்கு என் கண்ணு கண்ணுகுட்டி தான் வோணும். (அழுகிறான்)

ச. : அப்பனே!- அப்பா!- முருகையா! .- கண்ணு. - நான் சொல்வதைக் கேள் அதன் பேரில் நீ அவ்வளவு ஆசையா யிருக்கிறாய் என்று தெரியாமற் போச்சு! அதை விற்றாயதே கடைசி வீட்டிலிருக்கும் இடையனுக்கு - அவன் திருப்பிக் கொடுப்பானா?- நான் சொல்லுகிறபடி கேள் - ஸ்வாமியை வேறு என்னமாவது கொடுக்கும்படி கேள்.

மு. : வேறே என்ன கேட்டாலும் கொடுப்பாரா? -என்னா கேட்டாலும்?

ச. : அப்பா, ஜகதீசன் மனம் வைத்தால் எதையும் கொடுக்கும் சக்தி உண்டு --

மு. : ஆனா. நானு வேறே கேட்டு பாக்கரேன்- (மொ மொண என்கிறான்)

ப : என்னாடா கேக்கரெ சாமியே?

மு. : சொல்லட்டுமா?

ப. : சொல்லு பாக்கலாம்.

மு. : சாமி - நாளை ராத்திரி நான் சுட, டபாசு, புருசு, மத்தாப்பு, சுருசுருவத்தி, பூவத்தி எல்லாம் ஓணும் கொடுங்க இண்னு கேட்டேன் -ஏ ஏ! மறந்து பூட்டேனே. சக்கரபாணம்கூட வோணும்!(சண்முக முதலியார் தவிர மற்றவர்களெல்லாம் சிரிக்கிறார்கள்).

ப. : ஏன் நாயினா இவங்கல்லா சிரிக்கராங்க? சாமி கிட்ட இதெல்லாம் வாங்கி தர துட்டு இருக்காதோ? (மறுபடியும் அவர்கள் எல்லாம் சிரிக்கிறார்கள்)

ச. : பர்வதம்! நீயும் என்ன சிரிக்கிறாய்?

ப. : இல்லேண்ணா! அவன் பேராசையெ பாருங்க! நானு நாளெ ராத்திரிக்கி தோசெ சுட கல்லில்லையே மூக்காலெ அழுதுகினு இருக்கிரேன், இவனுக்கு டபாசு ஓணுமாம்,புருசு ஓணுமாம்! சக்கர பாணம் ஓணுமாம்!

ச. : ஏன்? - நம்முடைய வீட்டில் தோசைக்கல் இல்லையா?

ப. : அத்தெ, நம்ப புண்யவதி விஜயலட்சுமி ஒடைச்சி விட்டா மத்தியானம்.

வி. : ஏம்மா! நீங்கதான் பாத்துகினு இருந்தைங்களே! அது ரொம்ப தேஞ்சிபோயிருந்துது இண்ணைங்களே அத்தெ கரிபோக நான் தொலக்கும்போது - அது ரெண்டா போச்சுது! நான் என்னாம்மா செய்யறது?

ப. : உன் பேர்லே தப்பு சொல்லலே கண்ணு! ஒண் ணுக்கு மேலே ஒண்ணா, துர் அதிர்ஷ்டம் எல்லாம் ஒண்ணாவருதே இண்ணு கவலைப் பட்டேன்.- நம்ப ஊர் கருமான்கிட்ட போயீ இரும்பிலே தோசெக் கல் லிருக்குதா இண்ணு கேட்டா, அவன் ஒண்ணு தானிருக்குது, அது ஒண்ணரை ரூபாய் வெலே இண் ணான், முக்கால் ரூபாய் வரைக்கும் கேட்டுப் பாத்தேன், கொடுக்க மாட்டேன் இண்ணான்! நான் தீபா வளிக்கு பண்ணக்காரருக்கு தோசெ எங்கே கொடுக் கிறது! நம்பொ என்னா சாப்பிடரது?

ச. : என் அப்பா! முருகையா! சோமு, நான் கதர் தோவத்தி வாங்கிவரச் சொன்னேனே, வாங்கி வந்தாயா அப்பா?

சோ. : இல்லே நாயினா - அந்த துணிக் கடெக்காரன் அஞ்சி ரூபாய்க்கி,ரெண்டு கதர் தொவத்திதான் கொடுக்க முடியும் இண்ரா-- வேணுமிண்ணா நாலுமில் தொவத்தி கொடுக்கரேன் இண்ரான்!

ச. : முருகையா ! 18- வருஷத்துக்கு முன்னே, நான் மில் தாவத்தி வாங்குகிறதுமில்லை வாங்கிக் கொடுக்கிறது மில்லை என்று நான் பிரமாணம் செய்ததை இப்பொழுது மாற்றச் சொல்கிறாயா அப்பா?- அப் பனே! என்னைப் பரிசோதிக்கிறாயா? அல்லது
நான் செய்த பூர்வ பாபத்தின் பலனோ? நான் செய்த பிரமாணத்தினின்றும் மாறமாட்டேன்!- உன் கருணை யின்படி செய்யப்பா!

ப. : எல்லாம் கருணையின்படி செய்தாச்சு!- எல்லாத்தை யும் தொடச்சி விட்டு இக்கதிக்கு கொண்டுவந்து விட்டதே!

ச. : பர்வதம்! பர்வதம் ! - தெய்வத்தை இகழாதே, அவர் - மனம் வைத்தால் இந்த க்ஷணம் நம்மை இக்கஷ்டங்களினின்றும் மாற்றுவார்! (வெளியில் மழை ஓய்கி றது) பர்வதம், நம்முடைய வீட்டிலே இன்னும் விற் கக்கூடியது ஏதாவது இருக்கிறதா பாரேன்! - வருகிற வருஷம் எல்லாம் சரியாகப் போய்விடும் என்று எனக்குள் தோன்றுகிறது.

ப. : வர்ர வருஷத்துக்கு அப்புறம் பார்த்துக்கொள்ளலாம், இப்போ இந்த வருஷத்து தீபாவளிக்கு என்னா செய்யரது?

ச. : என் உடம்பு சரியா யிருந்தால் நான் எழுந்திருந்து தேடிப்பார்ப்பேன்! - பர்வதம், உன்னை வேண்டிக் கொள்ளுகிறேன் ; அந்த நாலு பேருக்கும் கதர் துணி மாத்திரமாவது இந்த வருஷம் கொடுத்தாக வேணும், வேறொன்றும் கொடுக்காமற் போனால் போகிறது; இன்னும் 5-ரூபாய் பொறுமானது ஒன்றுமில்லையா நம்முடைய வீட்டில்?

ப. : உம்!உம்!- என் தாலிதானிருக்கிறது!

ச. : முருகா! முருகா! முருகா!குங்கிலயக் கலய நாயனா புத்தி எனக்கு நீ கொடுக்க வில்லையே! நான் என் செய்வேன்! என் செய்வேன்!அழுகிறார். நடையில் பாயைச் சுருட்டுகிற சப்தம்) பர்வதம்!- அதென்ன சப்தம்?
.
ப. : எங்கே? -எனக்கொன்றும் கேட்க வில்லையே.

ச. : சோமு, - நடைப் பக்கம் ஏதோ சப்தம் கேட்கிறது... எழுந்து பாரப்பா.
ப. : எல்லாம் தூங்கி விட்டார்கள் (வெளியில் தெருவின் வெளிக்கதவை திறக்கிற சப்தம்) யாரோ வந்தாரே அவர், மழை நிண்ணு பூட்டுத்திண்ணு, போராப்போல இருக்குது. நான் பார்த்துட்டு வர்ரேன் (வெளியே போய் தெருக்கதவை சாத்திக்கொண்டு பாயுங் கையு மாய் உள்ளே வருகிறான்.) அந்தமட்டும் இந்தப் பாயெ தூக்கிகினு போகமெபோனாரே!

காட்சி முடிகிறது.
-------------------

இரண்டாம் காட்சி

காலம் - சாயங்காலம்
அதே இடம்

காலம்- இரண்டு மணி- படுக்கையின் மீது சண்முக முத லியார் படுத்துக் கொண்டிருக்கிறார். பர்வதம் அருகில் நின்று விசிறிக் கொண்டிருக்கிறாள்.

ச. : முருகா! - முருகா ! இன்றைய பொழுதை நான் எப் படிக் கழிக்கப் போகிறேன்! (பெருமூச்சு விடுகிறார்)

ப. : அத்தான்! வருத்தப் படாதீர்கள். உங்கள் முருகன் எல்லாம் சரிப்படுத்தி விடுவார்!

ச. : உம்! அவருக்கு எப்பொழுது மன மிரங்குமோ!- உம்.. சோமு எங்கே?

ப. : அவனெ -கடைக்கு அனுப்பி யிருக்கறேன்.

ச. : கடைக்கா?--என்னத்திற்கு?

ப. : நாலு கதர் வேஷ்டிகள் வேண்டு மிண்ணைங்களே, அதெ வாங்கிவர.

ச. : ஏது பணம் -நாலு வேஷ்டிக்கு ?

ப. : என் மீது கோபித்துக் கொள்ளாதீங்க, நான் வாஸ்த வத்தெ சொல்லிவிடரேன். நா இண்ணைக்கி நம்ப ஊட்ல மூலே முடுக்கெ யெல்லாம் தேடிப் பாத்தேன் - அப்போ - நம்பதிருடன் தூக்கிகினு பூட்டா னிண்ணு நனைச்சோமே - அந்த உண்டி ஆப்பிட் டுது - அத்தெ -ஒடச்சி-

ச. : ஐயோ! அது திருத்தணிகை பிரார்த்தனை யுண்டி யாச்சுதே !

ப. : ஆமாம்! காலமே, திருவிளையாடல் புராணத்திலே நஙக நேத்து குங்கிலியக் கலய நாயனார் இண்ணு சொன்னைங்களே - அவர் கதையே படிச்சேன். அப் புறம் இந்த உண்டி ஆப்புடவே-சாமிதான் இத்தெ நமெக்கு மறுபடியுங் கொடுத்தார் இண்ணு செனைச்சிங்க வருத்தப் படரைங்களே - அந்த வருத்தத்தெ மாத்த வேண்டியது எப்படியாவது என் கடமெ, இண்ணு நினைச்சி - அந்த உண்டியிலே எவ்வளவு இருக்குது இண்ணு ஒடச்சி பாத்தேன்.-

ச. : உம்?

ப. : அதிலே சரியா - அஞ்சி ரூபா - முக்காலணா இருந்துது. இது ஒரு சகுனம் இண்ணு நெனைச்சிக்கினு, அந்த அஞ்சி ரூபாயையும் சோமுகிட்ட கொடுத்து, மொத்த பத்து ரூபாய்க்கி, அந்த நாலு கதர் வேட்டியையும் வாங்கிவரச் சொல்லி அனுப்பினேன் - மீதி முக்கா லணாவுக்கு வேறே ஒரு உண்டியும் வாங்கிவரச் சொன்னேன்.

ச. : முருகா! உனக்கென்று வைத்த பணத்தை நாங்கள் இப்படியா செலவழிக்க வேண்டும்?

ப. : நீங்க அதுக்காக வருத்தப் படாதைங்க - அவர் துட்டெ நம்ப என்னமான தப்பான வழியிலே செல் வழிச்சமா என்ன? தீபாவளியண்ணு, இந்த ஊரு ஜனங்க சந்தோஷப்படத்தானே செலவழிக்கிறோம் - அதுக்காக, அவர் நம்பமேலே கொவிச்சிக்க மாட்டாரு - சந்தோஷப் படுவாரு!

ச. : முருகா! உன் கருணை! பர்வதம், நீ சொல்லுவது வாஸ்தவம்தான்! உனக்கிருக்கும் புத்தி எனக்கில்லையே இவ்விஷயத்தில் -

சோமு ஒரு உண்டியை மாத்திரம் கொண்டுவருகிறன்

ப. : சோமு ! எங்கே வேஷ்டிகள்?

சோ. : அந்த கடெக்காரன் கிட்டபோய் கேட்டா, கொஞ்ச நாழிக்கு முன்னே யாரோ ஒரு பெரிய மனுஷர் வந்து அந்த நாலு வேஷ்டியையும் வாங்கிகினு பூட் டாரு இண்ணு சொன்னான். அவன்கிட்ட மீதி இருந்த தெல்லா, மில் துணிங்கதான் - உங்களே கேட்டுட்டு - அதிலே நாலு வாங்கிவரலாமா இண்ணு உங்களெ கேட்டுட்டு -- போவ வந்தேன்.

ச. : வேண்டவே வேண்டாம்!- முருகா!நீ மனமிரங்கினாய்! என்று பார்த்தேனே! இன்னும் இந்த சோதனையா? நீ எனக்கின்று கதர் தோவத்திகள் கொடுத்தால் அந்த ஏழைகளுக்கு கொடுக்கிறேன் இல்லாவிட்டால் இப்படியே பட்டினி கிடக்கிறேன்.-

முருகேசம், அறைக்குள் நாடி வருகிறன்

மு. : நாயினா! நாயினா! என்கண்ணு கண்ணுக்குட்டி! வந்தூட்டுது வந்தூட்டுது!

சோ. : என்னாடா! பயித்தியக்காரா!

மு.: நானா பைத்தியக்காரெ! நீதான்! அதோ பாரு அந்த எடையன் வாசல்லே கொண்டாந்திருக்கான்!(கன்று குட்டி கத்தும் சப்தம் கேட்கிறது)

ச. : என்ன இது ?- சோமு - அந்த இடையனை இப்படி கூப்பிடு. சோமு முருகேசனுடன் வெளியே போகி றான்) என்ன விந்தையாயிருக்கிறது!

சோமு, முருகேசன், இடையன்,வருகிறார்கள்.

ச. : ஏனப்பா, கன்றுக்குட்டியைக் கொண்டுவந்து விட்டா யாமே? - வேண்டாமா என்ன?

இ. : இல்லீங்க எசமா!- கொஞ்ச நாழிக்கு மின்னே, யாரோ ஒரு பெரிய மனுஷரு, ரெண்டு மோடா வண்டியிலே - வந்தாரு - வந்து -- இந்த கண்ணு குட்டியெ, வித்தூடராயாப்பா இண்ணு கேட்டா - நல்லவெலே வந்தா வித்தூடரேண்ணே!- என்னா வெலேண்ணு கேட்டாரு - நானுபத்து ரூபாவுண்னு சொன்னேன் உடனே பத்து ரூபா எடுத்து கொடுத்து விட்டாரு! கொடுத்துட்டு - என்ன சொன்னாருண்ணா - இந்தா- ஒனக்கு மேலே அரெரூபாதர்ரேன் - இத்தெகொண்டு போயி, கடைசி ஊட்டிலே,சண்முகமுதலியாரிருக்க ராரே அவர் கடைசி புள்ளெ. முருகேசன், இருக்கான்,

அந்த புள்ளாண்டாங்கிட்ட கொடுத்தூடு - நானு சீக்கி ரம் அங்கே வர்ரேன், நீ உடனே போண்ணு சொல்லி எங் கையிலே அரை ரூபா எடுத்து வைச்சாரு!இது வும் நம்ப
நம்ப அதிஷ்டமுண்ணு சொல்லி சொல்லி கண்ணுகுட் டியே ஓட்டிகினு வந்தூட்டெனுங்க! கோவிச்சிகா திங்க!

ச. : நான் ஏனப்பா உன் பேரில் கோவிச்சிக்கணும்?- யார் அவர்? இப்படி செய்தவர்? இங்கே வருகிறேன் என்றாரா ?- வருகிறாரா இப்பொழுது?

இ. : இத்தெ சொல்லிட்டு, இந்த ஊர்லே கருமான் கடெ இருக்குதாமே,எங்கே இண்ணு கேட்டாரு, நானு அதோ சுப்பிரமணி அய்யரு கோவிலு பின் பக்கம் இருக்குதுண்ணு காம்பிச்சேன் அங்கே போயிருக்காரு - ரெண்டு மோடாவண்டியிலே.

தங்கவேலுபிள்ளை வருகிறான்.

த. : ஏனையா, சண்முக முதலியார், இன்னிக்கி எங்க எச மானுக்கு கண்டிப்பா காகிதம் எழுதணும்; அந்த நாலு மாச கொடக்கூலி குடுக்கப்போறைங்களா இல்லையா ? இல்லாபோனா, வீட்டே காலிபண்ணணும் மறு மாசம்.

ச. : ஐயா, வருகிறமாசம். கார்த்திகை மாசமாச்சுதே- எப்படி காலிபண்ணுகிறது?

த. : அதெல்லாம் எனக்குத் தெரியாது - இல்லாபோனா வாரண்டு கொண்டு வருவேன்!

ச. : முருகா! முருகா! முருகா!- (வெளியில் மோட்டார் சப்தம்) தங்கவேலுபிள்ளை ஜன்னல் வழியாகப் பார்க்கிறான்)

த. : அதோ! என் எசமான் வண்டி!

ச.: யார் உன் எசமான்?

த. : டெபிடி கமிஷ்னர் ஆப் போலீஸ் ! (வெளியே வேகமாய்ப் போகிறான்).

சண்முக முதலியார் தவிர, மற்றெல்லோரும் சன்னல் வழியாகப் பார்க்கிறார்கள்.

சோ.: நாயினா ! நம்ப ஊட்டுக்கு எதிரிலேதான் வந்துருக்குது ரெண்டு பெரிய மோடார் வண்டிங்க!

ப. : தட்டு தட்டாக சாமான்களெ எறக்கராங்க!

பா. பக்கத்து வண்டியிலே இருந்து மூட்டைங்களெ எறக்கராங்க!

மு. : நாயினா! நாயினா ! கூடைங்கள்ளே டபாசு பொட்லங்க வருது! டபாசு பொட்லங்க வருது! சுருசுருந்து வத் திங்க! மத்தாப்புங்க! பூ வத்திங்க! புருசுங்கொ!
வி. : யாரோ ஒருத்தர், வெள்ளித் தட்லே என்னமோ எடுத்துகினு வர்ராரு!

ப. : அண்ணாத்தே! அண்ணாத்தே ! (கூவிக் கொண்டு வெளியே போகிறாள்).

ச. : இதெல்லாம் என்ன!- நான் என்ன கனவு காண்கி றெனா? முருகா! இதெல்லாம் என்ன?உன் திருவிளை யாட்டோ?

(திருமெஞ்ஞான முதலியார், ஒரு வெள்ளித் தட்டில் கதர் சரிகை வேஷ்டிகள் இரண்டு, சரிகை புடவையொன்று, காசுமாலை யொன்று, வெள்ளி சந்தண கிண்ணம், வெள்ளி பன்னீர் சொம்பு, பாக்கு, வெற்றிலை,பழம்,மஞ்சள்,குங்குமம் எல்லாம் வைத்துக் கொண்டு, உள்ளே வருகிறார்)

பர்வதம் பின்னால் வருகிறாள்

தி. : அத்தான்! அத்தான்! என்னை மன்னிக்கவேண்டும்! (தாம்பாளத்தை கட்டிலருகிலிருக்கும் ஒரு பென்சின் மீது வைத்துவிட்டு, நமஸ்கரிக்கிறார்)

ச. : திருமெஞ்ஞானம்!

தி. : ஆம், நான்தான் அத்தான்.

மு. : (சன்னலண்டையிருந்து) நாயினா நாயினா! சக்கர பாணங்கூட வருது! வருது!

ச. : அப்பா! நீ வந்தது சந்தோஷம்! இதல்லாம் என்ன? எனக்கு ஒன்றும் விளங்கவில்லை.

தி. : தீபாவளி வரிசை ! - பதினெட்டு வருஷத்துக்கு முன்பாக வைக்காமற் போனதை இப்பொழுது செய்கிறேன்! உங்கள் இச்சைப்படியே, உங்களுக்கு கதர் வேஷடிகள் கொண்டுவந்திருக்கிறேன்!

ச. : முருகா! முருகா!

தி. : அத்தான், என்னை மன்னித்து எப்படியாவது இதை நீங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும்.

ச. : அப்படியே அப்பா- சந்தோஷமாக ஏற்றுக்கொள்ளு கிறேன் - உன்மீது ஒன்றும் குற்றமில்லை. நான் ஏதோ பூர்வ ஜன்மத்தில் செய்த பாபத்திற்காக முருகன் என்னை தண்டித்தார் இதுவரையில்.

தி. : உங்கள் தப்பு என்று நான் ஒப்புக்கொள்ளமாட்டேன். - எனக்கு இப்பொழுதுதான் புத்தி வந்தது! - தங்க வேலு!
(கூப்பிடுகிறார்)
(தங்கவேலு 'ஏன்' என்று சொல்லிக்கொண்டு வருகிறான்)

தி. : மற்ற தட்டுகளை யெல்லாம் கொண்டுவந்து வை.

(தங்கபிள்ளை அப்படி செய்கிறான்)

ச. : நீயா டெபுடு கமிஷனர் ஆப் போலீஸ்-?

தி. : ஆமாம், அது கெடக்கட்டும் - உங்கள் குழந்தைகளை இன்னின்னாரென்று எனக்குத் தெரிவிக்கவில்லையே?

ப. : நான் சொல்லுகிறேன் -- இவன் தான் பெரிய பிள்ளை சோமு.- இவன் இரண்டாவது பிள்ளை - பாலசுந்தரம்.

மு. : நானு மூணாவது புள்ளெ-- முருகேசம்.

ப. : இவள்தான் என் பெண் எல்லோரையும்விட மூத்தவள் விஜயலட்சுமி.

மு. : இவரு யாரம்மா?

ப. : இவர் தானடா,உங்க மாமா--எங்க அண்ணாத்தெ

ச. : அப்பேன், இதென்ன இது ?- இத்தனை தட்டுகள்?

தி. : ஆமாம் அத்தான், பதினெட்டு வருஷம் வைக்காம சகளை யெல்லாம் சேர்த்து வைத்தேன்.

ப. : இதென்ன பொட்லம்? (வெள்ளித் தட்டிலிருந்து எடுக்கிறாள்)

தி. : பிரித்துப் பார் தெரியும்.

ப. : (பிரித்துப் பார்த்து) காசு மாலை!

தி. : ஆமாம் பர்வதம் - முதல் தீபாவளி வரிசையில் நகை வைக்க வேண்டாமா? அது இது.

தங்கவேலு பிள்ளை ஒரு இரும்பு தோசைத் தட்டை கொண்டு வந்து வைக்கிறான்.

ப. : இதென்னா அண்ணாத்தெ! தோசை சுடுகிற கல்லெ கூடமா வரிசை வைப்பாங்க?

தி. : ஆமாம் தீபாவளிக்கு வேண்டியதை யெல்லாம் வைக்கலாம் உங்கள் வீட்டிலிருப்பதுதான் உடைந்து அடடா !- இனி ஒளிப்பதில் பயனில்லை - அத்தான்- என்னை மன்னிக்க வேண்டும். நேற்றி ராத்திரி இந்த நடையில் படுத்துக் கொண்டிருந்தவன் நான் தான்!

ச. : நீயா!

சோ.: அப்போ - பார்த்தவுடணே நானு சந்தேகப்பட்டேன்!

ச. : நாங்கள் பேசிக்கொண்டிருந்ததை யெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தாயா?

தி, : ஆமாம் அத்தான் - என்னை மன்னிக்கவேண்டும்; நான் என்ன செய்வது? எனக்குத் தூக்கம் வரவில்லை. நீங்கள் பர்வதம் என்று கூப்பிட்டவுடனே உங்கள் குரலை கண்டு பிடித்துவிட்டேன். அப்புறம் நீங்கள் பேசுவதை யெல்லாம் கேட்டேன்.- எனக்கு புத்தி வந்தது.

ச. : முருகா! முருகா!

மு. : அப்படியானா- ஏன் ஓலே பாணம் கொண்டாரலெ?

தி. : முருகேசம், இப்படி வர் - நான் கொண்டு வந்திருக் கிறேனப்பா- நீ வேண்டியதைய ஓலபாணம்கூட.

மு. : எங்கே? காணமெ?

தி. : ஓ - தங்கவேலு - அந்த ஓலை பாணத்தை இரண்டா வது கார் பெட்டியில் வைத்திருக்கிறது, கால்பட்டு மிதி படாமலிருக்கும்படி - அதைக் கொண்டுவா சீக்கிரம்.

(தங்கவேலு பிள்ளை வெளியே போகிறான்)

மு.: நாயினா! நம்பொ கோயில்லே இருக்கிற சாமி.- நல்ல சாமி நாயினா! காலமே போயி நானு இதல்லாம் ஓணும் இண்ணு கேட்டேன்? அப்படியே கொடுத் தாரு. சாயங்காலம் போயி அவரே கும்பிடரென்.

ச.: அப்படியே செய்யப்பா! ஆயினும் இப்பொழுது உங்கள் மாமாவைக் கும்பிடு. உனக்கு இதெல்லாம் கொண்டுவந்து கொடுத்தாரே.

மு. : ஆமாமாம் (திருமெஞ்ஞான முதலியாரைக் கும்பிடு கிறான்; அவர் அவளைக் கட்டியணைத்து முத்தமிடுகிறார்; தங்கவேலு பிள்ளை ஒரு கையால் கூடையில் ஓலை பாணத்தையும், மற்றொரு கையால் தேன்குழல் அச் சையும் கொண்டுவந்து வைக்கிறார்).

ப. : தேன்குழல் அச்சுகூடவா வரிசை?

தி. : ஆமாம் - எனக்கு தேன்குழல் ரொம்ப இஷ்டம் என்று உனக்கு தெரியுமே. நாளை காலை நான் அதில்லாமல் தீபாவளி எப்படி கொண்டாடுவது? ஓ! அதை சொல்ல மறந்தேன். நான் இந்த வருஷம் தீபாவ ளியை உங்கள் வீட்டில் தான் கொண்டாடப் போகி றேன்.

ச.ப. : மிகவும் சந்தோஷம்.

ப : ஆனால், உங்க குழந்தை - அங்கே தனியாகவா இருப்பான்?

தி. : குழந்தையா! அவனுக்கு பத்தொன்பது வயதாகிறது. அவன் பி.ஏ., பஸ்ட்கிளாசில்
பஸ்ட்கிளாசில் பாஸ் பண்ணிவிட்டு, எம்.ஏ. பரீட்சைக்கு படிக்கிறான்.(விஜயலட்சுமி மெல்ல வெளியே போகிறாள்). அவன் இந்த வருஷம் தான் ஹாஸ்டல் (Hostel) சிநேகிதர்களுடன் தீபாவளி கொண்டாட வேண்டுமென்று, ஹாஸ்டலில் இருக் கிறான்.

மு. : ஆமாம் மாமா! இங்கே தான் இருந்தூடுங்க - நாளெ காலமெ நம்ப, டபாஸ் சுடலாம்.

தி. : அப்படியே செய்யலாம். பயப்படாத! நீ வந்து.

ப. : சரிதான்! அவனோடெ பேச்சி கொடுத்துகினு இருந்தா- பொழுது விடிஞ்சிவிடும் - பசங்கள், எல்லாம் வாங்க- மாமா கொண்டு வந்திருக்கிற முட்டாயெ சாப் பிடலாம் வாங்க, அண்ணாத்தெ,நீங்க கொண்டாந்த முட்டாயெ உங்களுக்கே கொடுக்கரேன்; எல்லாம் கை கழுவிகினு வாங்க! (போகிறாள்); சண்முக முதலியார், தங்கவேலு பிள்ளை தவிர மற்றவர்கள் வெளியே போகிறார்கள்.)

த.: சண்முக முதலியார், உங்களே வேண்டிக்ரேன். நானு கொடக்கூலி ஒசத்தி கேட்டதெ
சொல்லாதிங்க.

ச. : இல்லயப்பா! பயப்படாதே.

த. : எசமாங் கிட்ட உங்களுக்கு ரொம்ப நமஸ்காரம் ஸ்வாமி உங்களை இந்த நோயிலிருந்து காப்பாத்தணும்.
(போகிறான்)

ச. : முருகா!- முருகா!- முருகா!- கருணை மழை பெயகிறாயெ அப்பா!

காட்சி முடிகிறது.
கைதொழுகிறார்.)
---------------------

மூன்றாம் காட்சி

இடம் - அதேயிடம் மறுநாட் காலை -- சண்முக முதலியார் முன்புபோல கட்டிலின் மீது படுத்துக்கொண் டிருக்கிறார் கதர் வஸ்திரம் அணிந்துக்கொண் டிருக்கிறார்.


ச. : முருகா! உன்பேரருளை நான் என்னென்று போற்று வேன்! இவ்வளவு சந்தோஷத்துடன் நான் தீபாவளி ஸ்நானம் செய்வேன் என்று கனவிலும் நினைக்க வில்லை.

பர்வதம் புதிய கதர் புடவையெல்லாம் அணிந்து கொண்டு காசு மாலையையும் அணிந்தவளாய் வருகிறாள்.

ப. : அத்தான் - நான் சேவித்துக் கொள்ரேன்.
(விழுந்து நமஸ்கரிக்கிறாள்)


ச.: முருகர் உனக்கு எப்பொழுதும் இன்னருள் பாலிப்பாராக?- என் அருகில் வா - இதேது புடவை? கதர் புடவையா இது?

ப. : ஆமாம், நீங்கள் வேண்டுமென்றால் தொட்டுப் பாருங் கள் (தன் முந்தானையை காட்டுகிறாள்) நேத்து வரிசை கொண்டாந்தாரே அண்ணாத்தெ அது.

ச. : (அதைத் தொட்டுப் பார்த்து) கதர் தான்? பட்டைப் போலிருக்கிறதே? கதரில் இவ்வளவு நாசுக்காக நெய் வார்கள் என்று நினைக்கவில்லை - எவ்வளவு சரிகை! -நிரம்ப விலையாயிருக்கும் போலிருக்கிறதே!

ப. : ஆமாம்- அண்ணாத்தையெ கேட்டேன் வெலெ சொல்லமாட்டேன் இண்ணாரு -- முன்தாணி முனையிலே வேலெ போட்டிருந்தது- 150 ரூபாயின்ணு!

ச.: இதெல்லாம் எவ்வளவு செலவாயிருக்கும் அவனுக்கு!

ப. : அத்தெபத்தி பேச்செடுத்தா - அண்ணாத்தெ கோவிச் சிகராரு! உனக்கென்னா இதெல்லாம்பத்தி? இதெல் லாம் சேர்த்தால் என் ஒரு மாச சம்பளம்கூட ஆவாது
நீ கவலெ படாதே இண்ராரு.

ச. : ஓ! டெபுடி கமிஷனர் ஆப் போலீஸ் - ஆய் விட்டா னோ!- எங்கே உன் அண்ணாத்தை? பசங்கள் எல்லாம் எங்கே?

ப. : பலஹாரம் எல்லாம் ஆவரத்துக்கு கொஞ்ச நாழி ஆவு மிண்ணு சொன்னேன்-வெளையாடிகினு இருக்கராங்க.
(சன்னல் பக்கம் பெருங் கூச்சல்)

ச.: என்ன கூச்சல் அது?

ப. : (சன்னலைத் திறந்து பார்க்கிறாள்) - வெளியில் " மாமா தோத்து பூட்டாங்க! தோத்து புட்டாங்க! கை வைக்க னும் '" என்று கூச்சலும் நகைப்பும்)- இதென்ன கூத்து! (நகைக்கிறாள்)

ச. : பர்வதம் - என்ன நகைக்கிறாய்?

ப. : எனக்கு சிரிப்பு வருது!
(வாயைக் கையால் மூடிக்கொள்கிறாள்)

ச.: ஏன்?

ப. . : அண்ணத்தெ, கொழந்தைகளோடெ- கோலிகுண்டாடாரார்ரு

ச. : கோலிகுண்டாடுகிறானா? - திருமெஞ்ஞானமா?

ப. : ஆமாம்! அதோ பாருங்க! (சிரிக்கிறாள்). தொப்பை யைப் போட்டுக்கொண்டு!
என்ன! (சரேலென்று படுக்கையில் எழுந்து எழுந்து உட் கார்ந்து சன்னல் வழியாகப் பார்க்கிறார்). என்ன வேடிக்கை இது! (நகைக்கிறார்) - பர்வதம்! பர்வதம்! நான் என்னமாக எழுந்து உட்கார்ந்தேன்?

ப. : ஆமாமிண்ணா! எப்படி நீங்களாக எழுந்தைங்க?

(வெளியில் கடியாரம் 8 மணி அடிக்கிறது)

ச. : பர்வதம் ! என்னை அப்படியே பிடித்துக்கொள்!


(பர்வதம் அப்படியே செய்கிறாள்).

ப. : அண்ணாத்தெ ! அண்ணாத்தே! ஓடிவாங்க! ஓடி வாங்க! அத்தான் தானா எழுந்து உக்காந்தாரு!

(திருமெஞ்ஞானம் சோமு, பாலசுந்தரம், முருகேசன் உள்ளே ஓடி வருகிறார்கள்.)

தி. : தானா எழுந்து உட்கார்ந்தாரா!

ப. : ஆமாம்! அப்புறம் என்னெ பிடிச்சுக்கொள்ளச் சொன்னாரு -- அப்படியே புடிச்சிகிறேன்.

தி. : நிரம்ப சந்தோஷம்!- அம்மா, நான் சொல்ரபடி கேள். அவரை மெல்ல அப்படியே படுக்க வைப்போம். (இருவருமாக படுக்க வைக்கிறார்கள்.) அத்தான்! நான் சொல்வதைக் கேளுங்கள் ? இது பாரிச வாயு வல்ல - இதைப்பற்றி நான் படித்திருக்கிறேன். இது முதுகு தண்டை சேர்ந்த நரம்பின் வியாதி. இனி சீக்கிரமாகக் குணமாகி விடும். ஆயினும் நீங்கள் மறுபடியும் எழுந்து உட்காரப் பார்க்காதீர்கள் இப் பொழுது. இப்பொழுது என்னமணி - எட்டு? நாளை காலை எட்டு மணிக்கு சரியாக
சரியாக எழுந்து உட்கார வேண்டுமென்று தீர்மானித்து எழுந்து உட்காருங்கள்; அதுவரையில் வேண்டாம். இன்று சாயங்காலம் நான் படட்ணம் போய், என் சிநேகிதர் ஒருவர் சிறந்த வைத்தியர் இருக்கிறார் - சடகோப முதலியார், என்று அவரை அழைத்துக்கொண்டு வந்து காண்பிக்கிறேன் - அவர் எல்லாம் சொஸ்தப்படுத்தி விடுவார்.

ச. : முருகா! முருகா!

தி. : அத்தான்!- நாங்கள் எல்லாம் தீபாவளிக்கு புது துணி உடுத்திக் கொண்டோமே, உங்களை நாங்கள் சேவித் துக்கொள்ள வேண்டாமா? நான் முன்பு சேவித்துக் கொள்ளுகிறேன். (அப்படியே செய்கிறார்)

ச. : திருமெஞ்ஞானம் - நீ என்னத்திற்கப்பா -

தி. : நான் புதுசாக இப்பொழுதுதான் கதர் உடுத்திக் கொண்டிருக்கிறேன்! இதற்காகவாவது உங்களை சேவித்துக்கொள்ள வேண்டாமா? உங்களால் தானே எனக்கு இந்த நல்ல புத்தி வந்தது. எப்பொழுதும் இந்த புத்தி இருக்கவேண்டுமென்று ஆசீர்வாதம் பண்ணுங்கள்.

ச. : அப்பா! என்னால் ஒன்றுமில்லை. உனக்கு இந்த புத்தியைக் கொடுத்த முருகவேள் உனக்கு தீர்க்காயு சையும் சகல ஐஸ்வர்யங்களையும் கொடுப்பாராக!

சோ. : அப்பா, நாங்களும் நமஸ்கரிக்கிறோம். (மூவரும் நமஸ் கரிக்கிறார்கள்; அவர்கள் தலையில் கையை வைத்து ஆசீர்வதிக்கிறார்) விஜயலட்சுமி எங்கே? அவள் ஸ்நானம் பண்ணியாச்சுதா?

ப. : ஆச்சி! அடுப்பண்டை அவுங்க மாமாவுக்காக தேன்குழல்சுட்டுக் கொண்டிருக்கிறாள் அவள் -

தி. : நான் சொல்லிவிடுகிறேன். அத்தான், என்மீது கோபித்து கொள்ளக்கூடாது. நான் உங்கள் அனுமதியில்லாமல் ஒன்று செய்துவிட்டேன். அவளுக்கும் ஒரு நல்ல சரிகை போட்ட கதர் புடைவை பார்த்தேன் அகப்படவில்லை சரியானதாக அதன்பேரில் பட்டு சரிகைப் புடவை ஒன்று வாங்கிக்கொண்டு வந்தேன். அதை உங்கள் உத்தரவில்லாமல் கட்டிக்கொள்ள மாட்டேன் என்றாள் - பெரிதல்ல அம்மா நான் உங்கள் அப்பாவிடம் சொல்கிறேன் - அதுவும் எல்லாம் நம்மு டைய நாட்டில் உண்டான பொருள்களாலாயது- அவர் கோபித்துக்கொள்ளமாட்டார்,என்று சொல்லி, உடுத்திக்கொள்ளச் சொன்னேன்-என்னை மன்னிக்க வேண்டும்.

ச.: அதில் தவறொன்று மில்லை அப்பா, சின்ன பிள்ளைகள் - அவர்கள் இஷ்டத்தையும் நாம் கவனிக்க வேண்டுமல்லவா? அதுவும் பெண்பிள்ளைகள் - நாம் ஒரே பிடிவாதமா யிருக்கலாமா? எனக்கும் கொஞ்சம் புத்தி வந்தது - (முருகேசன் வெளியே போகிறான்)

விஜயலட்சுமி ஒரு தாம்பாளத்தில் தேன்குழலை எடுத்துக்கொண்டு வருகிறாள்.

ச. : யார் அது?

ப. : அந்த சரிகைப் புடவையின் டாலிலே உங்களுக்கு கண் கூசுகிறாற்போ லிருக்கிறது!- விஜயலட்சுமி! உங்க நாயினாவே சேவிச்சிக்கோ அம்மா!

(விஜயலட்சுமி சேவித்துக் கொள்கிறாள்)

தி. : சீக்கிரம் கலியாணமாக வேண்டும் என்று ஆசீர்வாதம் பண்ணுங்கள் - அத்தான்.

ச. : அது முருகன் திருவுளம்!

தி. : பாருங்களேன் அப்படியே நடக்கப் போகிறது - அவர் கருணையினாலே.

(முருகேசன் உள்ளே வருகிறான்)

மு. : நாயினா நம்ப பண்ணையாளுங்க வந்திருக்கராங்க.

ச.: ஆ! இந்த சந்தோஷத்தில் அவர்களை மறந்தேன்.

தி. : அத்தான், நீங்கள் கவலைப் படாதீர்கள்! அவர்களுக்கெல்லாம் கொடுக்க மட்ட தினுசில் நான்கு கதர் வேஷ்டிகள் வாங்கிக்கொண்டு வந்திருக்கிறேன்.
ச. : முருகா! முருகா! உன் கருணையை என்னென்று புகழ்வேன்!

தி. : சோமு, அந்த மூட்டையைக் காண்டுவா அப்பா இப்படி.

ச. : வேண்டாம்,மெஞ்ஞானம், அவைகளை நீயே கொடுத்து விடு - பண்ணையாட்களுக்கு - உன் கையாலேயே.

தி. : நீங்கள் கொடுக்கச் சொன்னீர்கள் என்று சொல்லி கொடுக்கிறேன்.

ச. : அப்படியே செய் அப்பா. (திருமெஞ்ஞான முதலியா ரும் சோமுவும் வெளியே போகின்றனர்).

ப. : அது பெரிய மூட்டையா யிருக்குது. அதுலெ நம்ப பண்ணெக்காரு பெண்சாதிங்க கட்டிக்கிற பொடவெங் களே கொண்டுவந்திருக்கிறாற் போலிருக்கிறது.

ச. : உனக்கெப்படி தெரியும்? நீ பிரித்துப் பார்த்தாயா என்ன ?

ப. : உம்! நான் பிரிப்பேனா-மூட்டைமுடிச்சு அவுந்திருந் துது -- அதுலே தெரிஞ்சுது.
(வெளியில் பண்ணைக்காரரின் பெருங்கூச்சல் பாலு வெளியே போகிறான்.)

ச. : என்ன கூச்சல் அது?
(பாலு வருகிறான்)

பா. : பண்ணெகாருங்கல்லா, தோவத்தியோடேகூட பொட வைங்களும் கெடைச்சிதெ இண்ணு, சந்தோஷத்துலெ கூச்சல் போடராங்க.

ச. : அப்பா! முருகையா!

(திருமெஞ்ஞான முதலியார் திரும்பி வருகிறார்)

ச. : மெஞ்ஞானம், நீ தீபாவளி வரிசையாக கொண்டுவந்த பொருள்களில், எனக்கு மிகவும் சந்தோஷத்தைத் தந்தது - நீ இப்பொழுது அந்த பண்ணையாட்களுக்
நீ குக் கொடுத்த துணிகளே அப்பா இன்றைத் தினத்தை நான் மிகவும் மனவருத்தத்துடன் கழிக்கப் போகிறேன் என்று எண்ணிக்கொண் டிருந்ததற்கு முருகன் கருணையினால், என்னை மிகவும் சந்தோஷ மாகக் கழிக்கச் செய்தாய்! உனக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன் அப்பா?

தி. : உங்களைவிட நான் அதிக சந்தோஷப் படும்படியாக நீங்கள் எனக்கு செய்யக்கூடிய கைம்மாறு ஒன்றிருக் கிறது?

ச. : சொல் அதை - இப்பொழுதே செய்கிறேன் நான் எந்த ஸ்திதியிலிருக்கிறேன் என்று உனக்கு தெரியும்.

தி. : அதை யெல்லாம் பற்றி நீங்கள் இனி யோசிக்க வேண்டாம் நீங்கள் கொடுக்கக்கூடியதைத் தான் கேட்கப்போகிறேன். நீங்கள் கொடுப்பதாக வாக்கு கொடுங்கள்.

ச. : நான் கொடுக்கக் கூடிய எதையும் கொடுக்கத் தடை யில்லை அப்பா.

தி. : ஆனால்,(சுத்திப் பார்த்து) உங்கள் பெண்ணை - என் பிள்ளைக்கு கன்யாதானமாகக் கொடுங்கள்! (விஜய லட்சுமி சரேலென்று தலைகுனிந்தவண்ணம் வெளியே போகிறாள்.)

மு. : அக்கா, எங்கே போகறெ?

ப. : அடெ! முருகேசம் கொஞ்சம் பேசாமலிரு.

ச.: முருகா! முருகா! என்னை சந்தோஷசாகரத்தில் மூழ்த்தாதே அப்பா ! மெஞ்ஞானம் - உன் இஷ்டப்படியே அப்பா.

ப- : ஓகோ! பெற்றவள் நானிருக்கரேன் - நீங்க ரெண்டு பேரும் தீர்மானம் பண்ணிக்ரைங்களே - இதென்ன!

தி. : தங்கச்சி -- உன் சம்மதி யில்லாமலா? -தானம்செய்வ தென்றால், புருஷனும் பெண்சாதியும் மனமு வந்து செய்வதுதான் தானம். உன் இஷ்டத்தையும் சொல்.

ப. : நான் என்ன சொல்வது? பழம் நழுவிப் பாலில் வீழ்ந் ததாம்! அதினின்றும் நழுவி வாயில் வீழ்ந்தால் நான் என்ன சொல்வது? அப்படியே செய்யுங்கள் அத்தான்.

ச. : ஆமாம், உன்னுடைய அபிப்பிராயத்தையும் தெரிந்து கொண்டுதானே, உன்னை நான் கலியாணம் செய்து கொண்டேன் - அதே மாதிரி விஜயலட்சுமி அபிப்ராயத்தையும் நாம் கேட்க வேண்டாமா?

ப. : அவள் அபிப்பிராயத்தெ நம்பொ கேட்கவேண்டி யதெ இல்லெ. அத்தான், நமக்கு இது
கிட்டாது இண்ணு நெனைச்சி இதுவரைக்கும் ஒரு ரகசியத்தெ உங்களிடம் சொல்லலெ நானு. கொஞ்ச நாளைக்கு முன்னெ, தமிழ்நாடு என்ற பத்திரிகையில், பி.ஏ., பரீட்சையில் மொதலாக தேறிய ஒரு பிள்ளையாண் டான் படம் போட்டிருந்தது அதைப் படித்துப் பார்த்து - இது யார் படமம்மா ? யாரோ திருமெஞ் ஞான முதலியார் பிள்ளை கனகசபை முதலியார், இண்ணு போட்டிருக்குதே இண்ணு, எனக்கு காண் பிச்சி கேட்டாள். திருமெஞ்சூானம் முதலியார் என்ற பேரைக் கேட்டவுடன், அது உன் பிள்ளையாயத்தா நிருக்க வேண்டுமென்று சந்தேகித்து, அதை வாங்கிப் படித்துப் பார்த்தேன். அதிலிருந்த விலாசத்தினால் உன் பிள்ளை தான் என்று அறிந்து அதை அவளுக்கு உன் மாமா பிள்ளையம்மா என்று தெரிவித்தேன். அப்புறம் இந்த விஷயத்தை மறந்து விட்டேன்.

இரண்டு தினங்களுக்கு முன்னே காணாமற்யோன என் சாவிக் கொத்தைத் தேடிப் பார்க்கும்போது அவள் பெட்டியில் அந்த படத்தை அவள் பத்திரப் படுத்திருப்பதைக் கண்டு அவளை மெல்ல ரகசிய மாய்க் கேட்டேன். அப்போது அவள் - அம்மா! நான் கலியாணம் செய்து கொள்வதானால் இவரைத் தான் கலியாணம் செய்துகொள்வேன் - என்று தன் மனதிலிருக்கும் ரகசியத்தை தெரிவித்தாள். அம்மா! நாம் இருக்கும் ஸ்திதியில் இநு நமக்குக் கிட்டாத பொருள் ஆச்சே! மறந்துவிடு- என்று எவ்வளவோ சொல்லி பார்த்தேன். அவள் ஒரே பிடிவாதமாக, இல்லாவிட்டால் நான் கன்னிகையாகவே இருக்கப் போகிறேன்- என்று சத்தியம் செய்தாள். இதை உங்களுக்குச் சொன்னால் - நீங்கள் மிகவும் கோபம் கொள்ளப் போரைங்க இண்ணு உங்களுக்குச் சொல் லாமலிருந்தேன்.

தி. : அடடா! என்ன ஆச்சரியம்! இவர்கள் இரண்டு பெய ரும் வைர்லெஸ்ஸ் டெலிகிராப் (Wireless Telegraph) பில் பேசிக்கொண்டார்களா என்ன! என் கதையை நான் கொஞ்சம் சொல்கிறேன் கேளுங்கள் - எனக்கு எங்கள் தகப்பனார், எங்கள் வீட்லே உங்கப்பா பி.ஏ. பாஸ் செய்ததும், கலியாணம் செய்து வைத்ததுபோல், கனகசபை, பி.ஏ., பாஸ் பண்ணினவுடன் அவனுக்கு கலியாணம் செய்து வைக்க வேண்டுமென்று எண்ணி, இதைப்பற்றி அவனிடம் பிரஸ்தாபம்பண்ண, அவன் இப்பொழுது தனக்கு கலியாணமே வேண்டாமென்று மறுத்து வந்தான். கொஞ்ச நாளைக்குமுன் ஒருநாள் என்னுடைய குடும்ப ஆல்பம் (Family Album) எடுத் துப் பார்த்துக் கொண்டிருந்தவன். அதில் உன் பட மிருப்பதைக் கண்டு, இது யார் படம் என்று என்னைக் கேட்டான். அதற்கு நான் உனது அத்தை - என் தங்கையுடையது சுமார் 20 - வருடங்களுக்கு முன் பிடித்த படம் என்று சொல்லி - ஏன் கேட்கிறாய் என்று கேட்டேன். அதற்கு அவன் - நிரம்ப அழகா யிருக்கிறார்கள், நான் அவர்களைப் பார்த்ததேயில்லை -- என்று சொன்னான்.

ப. : ஆமாம், அவன் கைக் குழந்தையா இருக்கும்போது தான் நான் கடைசியில் பார்த்தது.- இன்னும் என்ன சொன்னான்?

தி. : அச்சமயம் ஒன்றும் சொல்லவில்லை. பிறகு கொஞ்ச நாள் பொறுத்து அவனது விவாகத்தைப் பற்றி பிரஸ் தாபம் பண்ணினபோது - தன் அத்தையைப்போல் அவ்வளவு அழகான பெண் கிடைத்தால்தான்- தான் விவாகம் செய்துகொள்ளப் போவதாகத் தெரிவித்தான்.

ப. : அதுக்கு நீங்க என்னா சொன்னைங்க?

தி. : அப்போது நான் சொன்னதைச் சொல்கிறேன். அவ் வளவு அழகான பெண் உனக்கு கிடைக்கப் போகிற தில்லை, உன் அத்தை சிறு வயதில் முதலியார் குடும் பங்களில் இவ்வளவு அழகான பெண்ணெ கிடை யாது என்று பெயர் எடுத்தார்கள் அப்பா என்றேன். அதற்கவன் அப்படிப்பட்ட பெண் கிடைத்தால் கலியாணம் செய்துகொள்கிறேன், இல்லாவிட்டால் பிரம்மச்சாரியராகவே இருக்கப்போகிறேன்- என்றான். இவர்கள் இரண்டு பெயருக்கும் ஒரே மாதிரியான பதில் சொல்லும்படி யார் கற்பித்தது?

ச. : முருகன்!

தி. : அப்படித்தான் நானும் நினைக்கவேண்டியதா யிருக் கிறது அத்தான். ஆகவே அவன் சம்மதியைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை! நான் நடையில் அன்றிரவு படுக்க வந்தபோது எனக்குப் பாயைக் கொடுக்க வந்தாளே விஜயலட்சுமி - சோமுவிடம் அதைக் கொடுத்துவிட்டு போனபோது அவள் நீ தானோ, என்று பிரமித்தேன் ஒரு க்ஷணம்! பிறகு நீங்கள் பேசிய பேச்சினால் -- இன்னாரென்று கண்டு கொண்டேன்- உங்கள் குரல் வித்யாசத்தினால். விஜயலட்சுமி படம் ஒன்றிருந்தால் கொடுங்கள்- உடனே எடுத்துக் கொண்டுபோய்க் காட்டி அவன் வேண்டியபடியே கிடைத்தது தெய்வாதீனம் என்று சொல்லி, அவனைத் திருப்தி செய்து, தை மாசம் ஒரு நாளைக் குறித்துக்கொண்டு எழுதுகிறேன்.

ச.: அவள் படம் - இல்லையே அப்பா.

ப. : இருக்கிறது! இருக்கிறது! போன வருஷம் கலெக்டர் பெண்சாதி யம்மாள் நம்முடைய ஊருக்கு, பரிபாலன சபை ஏற்படுத்த வந்தபோது எல்லாப் பெண்களையும் ஒன்றாய் உட்காரவைத்து எடுத்தார். களே, அந்தப் படம் இருக்கிறது.

(வெளியே போகிறாள்; வீதியில் மோடார் ஹாரன் சப்தம்)
முருகேசன் வெளியே ஓடுகிறான்)

தி. : அத்தான், சரியான வேளைக்கு என் காரும் வந்தது.- நான் இன்று சாப்பாடானவுடன் புறப்பட்டுப் போகிறேன்.

(பர்வதம் ஒரு குரூப் (Group) படத்தை எடுத்துக் கொண்டு வருகிறாள்)

தி. : (அதை வாங்கிப் பார்த்து) பர்வதம் ! உன் பெண் உன்னை அப்படியே அச்சில் வார்த்தாற் போலிருக்கிறது!

ப. : சும்மா சொல்லாதீர்கள் - அவள் என்ன அழகாயிருக்கிறாள்!

தி. : அப்படியே இருக்கட்டும் - மிகவும் சந்தோஷம்.
(தெருவில் மோடர் ஹாரன்)

சோமு, அந்த மோடார் ஹாரனை அடிக்கத் தேவை யில்லை என்று சொல் என் டிரைவரிடம்.

சோ. : (சன்னல் வழியாகப் பார்த்து) அவன் அடிக்கவில்லை
-மாமா. நம்ப முருகேசன் வேலை.

ச. : எல்லாம் - முருகேசன் வேலைதான்!

காட்சி முடிகிறது.
நாடகம் முற்றிற்று.

---------------

இந்த நூலாசிரியரால் இயற்றப்பட்ட மற்ற நூல்கள்:

லீலாவதி - சுலோசனை, சாரங்கதரன், மகபதி, காதலர் கண்கள்,
நற்குல தெய்வம்,மனோஹரன், ஊர்வசியின் சாபம், இடைச்சுவர் இரு புறமும்,
என்ன நேர்ந்திடினும், விஜயரங்கம், கள்வர் தலைவன், தாசிப் பெண்,
மெய்க்காதல், பொன் விலங்குகள், சிம்ஹளகாதன், விரும்பிய விதமே,
சிறுத்தொண்டர், காலவரிஷி, ரஜபுத்ரவீரன்,உண்மையான சகோதரன்,
சதி - சுலோசனா, புஷ்பவல்லி,கீதமஞ்சரி, உத்தம பத்தினி, அமலாதித்யன்,
சபாபதி முதற்பாகம், பொங்கல் பண்டிகை அல்லது சபாபதி இரண்டாம் பாகம்,
ஓர் ஒத்திகை அல்லது சபாபதி மூன்றாம் பாகம், சபாபதி நான்காம் பாகம்,
பேயல்ல பெண்மணியே, புத்த அவதாரம், விச்சுவின் மனைவி
வேதாள உலகம், மனைவியால் மீண்டவன், சந்திரஹரி, சுபத்திரார்ஜுனா,
கொடையாளி கர்ணன், சஹதேவன் சூழ்ச்சி, நோக்கத்தின் குறிப்பு,
இரண்டு ஆத்மாக்கள், சர்ஜன் ஜெனரல் விதித்த மருந்து, மாளவிகாக்னிமித்ரம்,
விபரீதமான முடிவு, சுல்தான்பேட்டை சப் அஸிஸ்டென்ட் மாஜீஸ்டிரேட்,
சகுத்தலை காளப்பன் கள்ளத்தனம், விக்ரமோர்வசி,
முற்பகல் செய்யின் பிற் பகல் விளையும், நாடகமேடை நினைவுகள் - முதற்பாகம்,
இரண்டாம் பாகம், மூன்றாம்பாகம், நான்காம்பாகம், ஐந்தாம்பாகம், ஆறாம்பாகம்,
நாடகத் தமிழ், யயாதி, பிராம்மணனும் சூத்திரனும், வாணீபுர வணிகன்,
இரண்டு நண்பர்கள், சத்ருஜித், ஹரிச்சந்திரன்,மார்க்கண் டேயர், ரத்னாவளி,
கண்டு பிடித்தல், கோனேரி அரசகுமாரன்,சந்தை மிற் கூட்டம்,
வைகுண்ட வைத்தியர், தீட்சிதர் கதைகள், ஹாஸ்யக் கதைகள், குறமகள்,
நல்லதங்காள், சிறுகதைகள், நடிப்புக்கலையில் தேர்ச்சி பெறுவதெப்படி?
ஹாஸ்ய வியாசங்கள், தமிழ் பேசும் படக் காக்ஷி, விடுதிப்புஷ்பங்கள்,
பேசும்பட அனுபவங்கள், மள்ளி மணம், கதம்பப், மாண்டவர் மீண்டது,
ஆஸ்தானபுரம் நாடகச் சபை, சங்கீதப் பயித்தியம், ஒன்பது குட்டி நாடகங்கள்,
சபாபதி ஜமீன்தார, சிவால் யங்கள் இந்தியாவிலும் அப்பாலும்,
சிவாலய சிற்பங்கள், மனையாட்சி முதலியன .
-------------------


This file was last updated on 22 Dec. 2022
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)