pm logo

ப. சம்பந்த முதலியார் எழுதிய
"என் சுயசரிதை" (வாழ்க்கை வரலாறு)


en cuyacaritai (autobiography)
by campanta mutaliyAr
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

ப. சம்பந்த முதலியார் எழுதிய
"என் சுயசரிதை" (வாழ்க்கை வரலாறு))

Source.
என் சுயசரிதை
நாடகப் பேராசிரியர் பம்மல். சம்பந்த முதலியார்
அவர்களால் இயற்றப்பட்டது
காபிரைட்] 1963 [விலை 3.00
குறிப்பு:---இந் நூலையும் இதற்கு முன் நான் அச்சிட்ட 'நாடகத் தமிழ்' என்பதையும்
சென்னை சங்கீத நாடக சபையார் உதவி செய்த பொருளால் அச்சிட்டேன்;
அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வந்தனம் உரித்தாகுக.
      - ப. சம்பந்தம்
--------------
உள்ளடக்கம்

1. என் இளமை பருவ சரித்திரம்
2. என் தாய் தந்தையர்
3. ஏழை குடும்பம்
4. தெருப்பள்ளிக்கூடங்களில் படித்தது
5. நடு பருவம்
6. வக்கீலாக வேலை பார்த்தது
7. முதிர் பருவம்
8. 55 வயதுக்கு மேற்பட்ட சரித்திரம்
9. நான் கோயில் தர்மகர்த்தாவாக வேலைப்பார்த்தது
10. நான் எந்த கட்சியையும் சேராதது
11. தமிழ் நாடகத்திற்காக தான் உழைத்தது
12. நாடக சம்பந்தமான நூல்கள்
13. மத சம்பந்தமான நூல்கள்
14. மேற்சொன்ன நூல்களன்றி நான் அச்சிட்ட நூல்கள்
15. பேசும் படங்களில் நான் பங்கெடுத்துக் கொண்டது
16. இக்காலம் நாடகக் கலைக்காக உழைத்த சிறுதொண்டுகள்
17. மது விலக்குப் பிரசாரம் செய்தது
18. S. I. A. A.
19. கல்வித் துறைக்காக உழைத்தது
20. சென்னபுரி அன்னதான சமாஜத்தில்
21. கிழ வயது
22. தினசரி பட்டி
23. நான் வணங்கும் தெய்வத்தின் கருணையினால் பெற்ற மரியாதைகள்
24. எங்கள் இல்வாழ்க்கை
25. கடன் இல்லா வாழ்வே கண்ணிய வாழ்வாம்
26. குறித்த காலப்படி நடத்தல்
27. என் தாய் தந்தையர்கள் போதித்த நீதிகள்
---------------
இந்நூல் என் தந்தை தாயார்
ப. விஜயரங்க முதலியார், ப. மாணிக்கவேலு அம்பாள்
ஞாபகார்த்தமாக பதிப்பிக்கப்பட்டது.
---------------

"என் சுயசரிதை"
1. என் இளம் பருவ சரித்திரம்

“பம்மல் விஜயரங்க முதலியார் இரண்டாவது விவாகத்தின் நான்காவது குமாரன் திருஞான சம்பந்தம் 1873-ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் 1-ந்தேதிக்குச் சரியான ஆங்கீரச வருஷம் தை மாதம் 21ந்தேதி சனிக்கிழமை உத்திராட நட்சத்திரத்தில் ஜனனம் சென்னப்பட்டணத்தில்” என்று நான் தகப்பனார் விஜயரங்க முதலியார் எழுதி வைத்துவிட்டுப்போன குடும்ப புத்தகத்தில் அவர் கையெழுத்திலிருக்கிறது. நான் இப்போது இதை எழுதத் தொடங்கும்போது வசிக்கும் ஆச்சாரப்பன் வீதி 70-ஆம் நெம்பர் வீட்டில் முதற்கட்டில் வடகிழக்கு மூலையில் உள்ள அறையில் நான் பிறந்ததாக என் தாயார் எனக்கு சொன்னதாக ஞாபகமிருக்கிறது.

பூவுலகில் மனிதனாய் பிறக்கும் ஒவ்வொருவனைப்பற்றியும் இரண்டு விஷயங்கள் நிச்சயமாய் கூறலாம், அவன் ஒரு நாள் பிறந்திருக்கவேண்டும். அவன் ஒருநாள் இறக்க வேண்டுமென்பதாம், ஆயினும் இவ்விரண்டு விஷயங்களைப்பற்றியும் அவன் நேராகக் கூறுவதற்கில்லை. பிறந்ததைப்பற்றி மற்றவர்கள் கூறுவதைத்தான் நாம் ஒப்புக்கொள் வேண்டும். இறந்ததைப் பற்றியும். மற்றவர்கள் பின்கூறவேண்டுமல்லவா?
-------------

2. என் தாய் தந்தையர்

என் தகப்பனாரைப்பற்றி சில வார்த்தைகள் எழுத விரும்புகிறேன். மேற்குறித்த புத்தகத்தில் அவர் கையெழுத்திலிருக்கும் சில குறிப்புகளை இங்கு எடுத்து எழுதுகிறேன். அவர் பிறந்தது. 1830-ஆம் வருஷம் மார்ச் மாதம் 1-ந்தேதி ரோகிணி நட்சத்திரம் ஸ்ரீ கிருஷ்ணன் பிறந்த ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தபடியால் அவரது அம்மானுக்கு ஏதாவது கெடுதி நேரிடுமென்று பயந்திருந்தார்களாம், ஆயினும் அப்படி ஒன்றும் கெடுதி நேரிட வில்லையென்று என் தகப்பனார் கூறியது எனக்கு ஞாபகமிருக்கிறது. (சோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் கவனிப்பார்களாக)

1850ஆம் வருஷம் அவருக்கு முதல் விவாகமானது. அதன் மூலமாக ஒரு புத்திரனும் இரண்டு புத்திரிகளும் பெற்றார். பிறகு அந்த தாரம் தப்பிப்போகவே 1860ஆம் வருஷம் இரண்டாவது மனைவியாக மாணிக்கவேலு அம்மாள் என்னும் என் தாயாரை மணந்தார். இந்த விவாகத்தின் மூலமாக அவருக்கு நான்கு புத்திரர்களும் நான்கு புத்திரிகளும் பிறந்தார்கள். அந்த நான்கு புத்திரர்களில் கடைசி புத்திரன் நான். என் தகப்பனார் என் தாயாரை மணந்த சமயம் நேரிட்ட ஒரு சந்தர்ப்பம் சோதிடத்தில் நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கு சிறிது பலன் தரக்கூடிய விஷயமாயிருப்பதால் அதை இங்கு எடுத்தெழுதுகிறேன், இரண்டாம் தாரத்தைத் தேடியபொழுது எனது தகப்பனாருக்கு வயது முப்பதானபடியால் இரண்டாம் தாரம் சிறு பெண்ணாயில்லாமல் கொஞ்சம் வயதான பெண்ணா யிருக்கவேண்டுமென்று கோரினார். என் தாயாருக்கு அப்போது வயது இருபதாயிருந்தது. அன்றியும் கொஞ்சம் சிவப்பாயிருப்பார்கள். ஆகவே என் தாயாரையே மணக்க வேண்டுமென்று நிச்சயித்தனர். ஆனால் அக்கால வழக்கின்படி இருவருடைய ஜாதகத்தையும் எடுத்துக்கொண்டு பிரபல ஜோஸ்யர்களுக்குக் காட்டிய பொழுது அவர்கள் எல்லோரும் பெண் ஜாதகத்தின்படி வயிற்றுப் பொருத்தமுமில்லை, கழுத்துப் பொருத்தமுமில்லை என்று கூறினார்களாம். அதாவது குழந்தைகள் பிறக்கமாட்டார்கள், அமங்கலியாய் போய்விடுவாள் என்று அர்த்தம். அது எப்படியாயினும் ஆகுக. இந்தப் பெண்ணைத் தான் நான் மணம் புரிவேன் என்று என் தகப்பனார் ஒரே பிடிவாதமாய் என் தாயாரை மணம் புரிந்தார். ஜோஸ்யர்கள் கூறியதற்கு நேர்விரோதமாக என் தாயாருக்கு நான்கு பிள்ளைகளும் நான்கு பெண்களும் பிறந்தார்கள், வயிற்றுப் பொருத்தம் இல்லாமையின் பலன் இதுபோலும். இனி கழுத்துப் பொருத்தத்தைப்பற்றி கவனிக்குங்கால் என் தாயார் அமங்கலியாக ஆகாது என் தகப்பனாருக்கு 1890ஆம் வருஷம் சஷ்டி பூர்த்தியானபோது ஒரு மங்கலியத்திற்கு இரண்டு மங்கலியங்களாக பெற்றபிறகே சுமங்கலியாக இறந்தார்கள். யாராவது என் தகப்பனாரிடம் ஜாதகங்களைப்பற்றி பேச வந்தால் மேற்சொன்ன கதையை அவர் அவர்களுக்குப் பன்முறை கூறியதை நான் நேராகக் கேட்டிருக்கிறேன், (ஜோஸ்யத்திலும் ஜாதகத்திலும் எனக்கு கொஞ்சமும் நம்பிக்கை யில்லாதிருப்பதற்கு இது ஒரு முக்கிய காரணமாகும்.)

என் தகப்பனார் சிறு வயதில் மாபூஸ்கான்தேவடியிலிருந்த ஒரு தெருப் பள்ளிக்கூடத்தில் முதலில் படித்தனராம். அறபொழுது நடந்த ஒரு வேடிக்கையான சந்தர்ப்பத்தை அவர் எனக்குக் கூறியுள்ளார். அதை இங்கு எழுதுகிறேன். நான் இருக்கும் வீதியின் ஒரு புறத்திற்கு மாபூஸ்கான்தேவடி என்று பெயர். அது அக்காலம் தோட்டமாய் இருந்ததாம், அத் தோட்டத்திலிருந்த வீட்டிற்கு அந்த மாபூஸ்கான் என்பவர் எப்பொழுதாவது வருவதுண்டாம். ஒருமுறை அவர் பல்லக்கு பள்ளிக்கூடத்தருகில் வந்தபோது பள்ளிக்கூடத்துப் பிள்ளைகள் எல்லோரும் பெரும்கூச்சலிட மாபூஸ்கான் சாய்பு பல்லக்கை நிறுத்தி உபாத்தியாயரை அழைத்து பிள்ளைகள் ஏன் கூச்சலிடுகிறார்கள் என்று கேட்க, அவர் பயந்து “தாங்கள் வருவதைக் கேள்விப்பட்டு பிள்ளைகள் சந்தோஷத்தினால் கூடச்சலிடுகிறார்கள்” என்று பதில் சொல்ல சாயபு ஆனால் பிள்ளைகளுக்கு இன்று விடுமுறை கொடுத்து விடுங்கள்” என்று சொல்லிவிட்டுப் போனாராம். இவ்வாறு ஒருநாள் விடுமுறை கிடைக்கவே பிள்ளைகளெல்லாம் பிற்பாடு மாபூஸ்கான் சாயபு பல்லக்கு வரும்போதெல்லாம் பெரும் கூச்சலிட்டு விடுமுறை பெற்றார்களாம்.

பிறகு என் தகப்பனாரும் அவர் தம்பியும் (அவர் பெயர் சோமசுந்தர முதலியார்) ஆங்கிலம் கற்கவேண்டி அப்பொழுது தான் புதிதாய் ஏற்படுத்தப்பட்ட பச்சையப்பன் பாடசாலையில் சம்பளமில்லாமல் இலவசமாய் மாணவர்களாகப் போய் சேர்ந்தனர். அங்கு ஆங்கிலம் படித்துக்கொண்டிருந்தபோது கவர்ன்மெண்ட்ட உயர் தரக் கலாசாலை (Presidency high School) புரொபஸ்ராயிருந்த மிஸ்டர் பவல்துரை, தன் வழக்கம்போல் வருடத்திற்கு ஒருமுறை அங்கு வந்து பிள்ளைகளை பரிட்சை செய்து நன்றாய் தேறினவர்களை அங்கிருந்து தன் கலாசாலைக்கு மாணவர்களாக அழைத்துக்கொண்டு போகிற வழக்கப்படி, என் தந்தையாரையும் அவர் தம்பியையும் தன் உயர் தரப்பள்ளிக்கு அழைத்துச் சென்றனராம். அப்பாட சாலை அக்காலம் நுங்கம்பாக்கத்தில் தற்காலத்தில் ‘பழைய காலேஜ்’ (Old College) என்று சொல்லப்பட்ட இடத்தில் இருந்ததாம். பிறகு மாகாண காலேஜாக (Presidency College) மாற்றப்பட்டு திருவல்லிக்கேணியில் தற்காலமிருக்கும் பெரிய கட்டடத்தில் மாற்றப்பட்டது.
------------

3. ஏழை குடும்பம்

என் தகப்பனார் அந்த காலேஜில் அரைச் சம்பளத்தில் படித்ததாக சொல்லியிருக்கிறார். என் பாட்டனாராகிய ஏகாம்பர முதலியார் என்பவர் செல்வந்தரல்ல, ஒரு சாராயகடையில் குமாஸ்தாவாக சொல்ப சம்பளம் பெற்று, குடும்பத்தை சம்ரட்சணம் செய்துவந்தனராம். ஆயினும் தன் பிள்ளைகள் இருவரும் நன்றாய் படிக்கவேண்டுமென்று தீர்மானித்து கஷ்டப்பட்டு அரைச்சம்பளத்தில் அந்த காலேஜில் படிக்கச் செய்தராம். இந்த ஸ்திதியில்தான் என் தகப்பனார் கஷ்டப்பட்டுப் படித்ததற்கு உதாரணமாக அவர் எனக்கு கூறிய கதை ஒன்றை இங்கு எழுதுகிறேன். அச்சமயம் மத்தியான சாப்பாட்டிற்காக ஒரு பாத்திரத்தில் கூழ் எடுத்துக்கொண்டுபோய், அதற்கு வியஞ்சனமாக வெங்காயப் புரையை வைத்துக்கொண்டு சாப்பிட்டு வந்தனராம்.

சென்னை சர்வகலாசாலையின் நூறாம் ஆண்டு கொண்டாட்டத்தின் போது அச்சிட்ட ஒரு புஸ்தகத்தில் என் தகப்பனாரைப் பற்றி எழுதியிருப்பதை இங்கு மொழி பெயர்க்கிறேன். P. விஜயரங்க முதலியார் 1851 ஆம் வருஷம் பிரோபிஷன்ட், (Proficient) பரிட்சையில் இரண்டாவது வகுப்பில் தேறினார். அவ்வருஷம் ராபர்ட்சன் என்பருடைய ‘அமெரிக்கா சரித்திரம்’ என்னும் நூலை தமிழில் எழுதியதற்காக ஒரு பரிசைப் பெற்றார். மேற்கண்ட புரோபிஷன்ட் டிகிரி தற்காலத்தில் பி.ஏ. பட்டத்திற்கு சமானமாகும். அந்த பரிட்சையில் தேறுபவர்களுக்கு கலாசாலையார் தங்கள் செலவில் ஒரு பொன் மோதிரம் அக் காலம் அளித்துவந்தனர். அப்படி என் தகப்பனாருக்கு கொடுக்கப்பட்ட பொன் மோதிரம் சற்றேறக்குறைய தன் அறுபதாம் ஆண்டு வரையில் அவர் விரலில் அணிந்திருந்தார். அவர் தமிழில் எழுதிய அமெரிக்க சரித்திரம் பிறகு அச்சிடப்பட்டது.
அக்கலாசாலையில் படிக்கும்போது என் தகப்பனாரும் அவர் தம்பியாகிய சோமசுந்தர முதலியாரும் பெற்ற சில பரிசுப் புஸ்தகங்கள் அவர்கள் பெயருடன் என் வசம் இன்னும் இருக்கின்றன.

மேற்கண்ட பரிட்சையில் தேறின உடனே அவர் அக் கலாசாலையிலேயே சீக்கிரம் தமிழ் உபாத்தியாயராக நியமிக்கப்பட்டதாக என் தகப்பனார் எனக்குத் தெரிவித்திருக்கிறார். பிறகு அந்த ஸ்தானத்திலிருந்து மதுரை ஜில்லாவில் பள்ளிக்கூடங்களுக்கு டெபுடி இன்ஸ்பெக்டர் (Deputy Inspector of Schools) ஆக கவர்மெண்டாரால் நியமிக்கப்பட்டார். அங்கேயிருந்து பிறகு சென்னைக்கு மாற்றப்பட்டார். அக்காலம் ரூபாய் 250 சம்பளம். பிற்பாடு அசிஸ்டென்ட் இன்ஸ்பெக்டர் ஆப் ஸ்கூல்ஸ் (Assistant Inspector of Schools) ஆக உயர்த்தப்பட்டார். அதற்கு மாத சம்பளம் ரூபாய் 400. இவ் வேலையிலிருந்து தன் அறுபதாம் ஆண்டில் 1890ஆம் வருஷம் உபகார சம்பளம் (பென்ஷன்) வாங்கிக்கொண்டு விலகினார்.

என் தகப்பனார் தன் ஆயுள் பர்யந்தம் பெரும் உழைப்பாளி யாயிருந்தார் என்றே நான் சொல்லவேண்டும். அவர் சிறு வயதிலேயே ‘உபயுக்த கிரந்தகரண சபை’ என்பதின் ஒரு முக்கிய அங்கத்தினராக உழைத்தார். அதற்காக பல புத்தகங்களை தமிழில் எழுதி பதிப்பித்தார். இதன் பிறகு பாடசாலைகளுக்கு வேண்டிய புத்தகங்களை அச்சிடுவதற்கும் திராவிட பாஷையில் நூதன புத்தகங்கள் அச்சிடுவதற்கும் ஏற்படுத்தப்பட்ட School books and Vernacular Literature Society என்னும் சபையில் தன் ஆயுள் பர்யந்தம் அங்கத்தினராக இருந்தார். இச்சமயத்திலும் சில தமிழ் புத்தகங்களை அவர் வெளியிட்டார். அவற்றுள் பம்மல் விஜயரங்க முதலியாருடைய மூன்றாவது வகுப்பு வாசக புஸ்தகம் என்னும் நூலை அவர் எழுதி பதிப்பித்தது எனக்கு நன்றாய் ஞாபகமிருக்கிறது. சென்னையில் அக்காலம் பார்க் பேர் {Park Fair) வருஷா வருஷம் நடத்தப்பட்ட வேடிக்கையின் காரியதரிசியாக 1881-ஆம் வருஷம் முதல் 1886-ஆம் வருஷம் வரையில் அவர் இருந்தது எனக்கு ஞாபகமிருக்கிறது. சென்னையில் விஜய நகரம் மகாராஜா அவர்கள் அக்காலம் ஏற்படுத்திய ஐந்து பெண்கள் பாடசாலைகளுக்கு காரியதரிசியாயிருந்தார். சென்னை யூனிவர்சிடி செனெட்டில் (University Senate) மெம்பராக தன் ஆயுள் பர்யந்தம் இருந்தார். மேற்படி யூனிவர்சிடியாரால் ஏற்படுத்தப்பட்ட தமிழ் பரீட்சகர்களின் போர்ட்டுக்கு (Board of Examiners for Tamil) பல வருடங்களில் சில வருடங்கள் தலைவராகவும் இருந்தார். சுருக்கி சொல்லுமிடத்து அவர் அக்காலத்தில் சென்னையில் சேர்ந்திராத பொதுக் கூட்டமாவது கிளப் (Club) ஆவது இல்லையென்றே ஒருவாறு கூறலாம். பச்சையப்பன் கலாசாலையில் டிரஸ்டியாக (Trustee of the Patchiappans’ charities) தன் ஆயுட் பர்யந்தம் இருந்தார்.

இதுவரையில் அவரது லெளகீக வியவகாரங்களைப்பற்றி எழுதினேன். இனி அவரது வைதீக வியவகாரங்களைப்பற்றி சிறிது எழுதுகிறேன்.

1872-ஆம் வருஷம் மதுரை திருஞானசம்பந்தஸ்வாமிகள் மடத்தில் அவர் சிவதீட்சை பெற்றுக்கொண்டார் என்று நான் நினைக்கவேண்டியிருக்கிறது. அதன் பிறகு நான் உடனே பிறந்தபடியால் எனக்கு திருஞானசம்பந்தம் என்று அந்த மடத்து பண்டார சந்நதி அவர்கள் பெயரையே வைத்ததாக என் தகப்பனர் எனக்குக் கூறியிருக்கிருர். அவர் எழுதி வைத்த சிறு புத்தகத்தில் என் பெயர் திருஞானசம்பந்தம் என்றே எழுதியிருக்கிறது. (என் சிறுவயதில் P. T. (ப. தி.) சம்பந்தம் என்றே என் பெயர் எழுதப்பட்டது. பிறகு நான் புத்தி அறிந்தவுடன் நமக்கு ஞானம் எங்கிருந்து வந்ததென்று அப்பெயரை சம்பந்தம் என்றே குறுக்கிக் கொண்டேன்.)

மேற் சொன்னபடி அவர் சிவதீட்சை பெற்ற பிறகு தன் மரணகாலம் சமீபித்தபோது படுக்கையாய் படுத்த வரையில் அவர் தினம் சிவபூஜையை செய்துவந்தார். வெளியூர்களுக்குப் பிரயாணம் போனதும் அச்சிவபூஜைக்குரிய சாமான்களை தன்னுடன் எடுத்துச்செல்வார்.

அவர் மதுரையில் இருந்தபோது அங்குள்ள பிராம்மணர்களுக்கும், திருஞானசம்பந்த சுவாமிகள் மடத்து பண்டார சந்நதிக்கும். ஏதோ விவாதம் நடந்ததாகவும் என் தகப்பனுர் மடத்துகட்சிக்கு உதவி அதன் பொருட்டு கவர்மெண்டாருக்கு அனுப்பிய ஒரு பெடிஷன் (Petition) என்னிடம் பாதுகாத்து வைத்திருக்கிறேன். அக்காலத்திலேயே பிராம்மணர்கள், பிராம்மணர்கள் அல்லாதார் என்கிற கட்சி உண்டாயிற்று போலும். (நான் எந்த கட்சியையும் சேர்வதில்லை என்பதை இங்கு சுருக்கமாக தெரிவித்துக்கொள்கிறேன்).

அவர் சென்னைக்கு வந்த பிறகு பெரிய காஞ்சீபுரம் ஸ்ரீ ஏகாம்பரநாதர் ஆலயத்திற்கும், சென்னையில் பெத்து நாய்க்கன் பேட்டையிலிருக்கும் ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்திற்கும் சென்னையில் திருவட்டீஸ்வரன் பேட்டையிலிருக்கும் சிவாலயத்திற்கும் 10 ஆண்டுகளாக தர்மகர்த்துவாக இருந்தார்.

அவர் ஜீவித காலத்தில் வருஷா வருஷம் காஞ்சீபுரத்து சிவன் கோயில் பிரம்மோற்சவ காலத்தில் எங்களை அழைத்துக் கொண்டு போவார். இதை நான் இங்கு எழுதிய தன் முக்கிய காரணம் என்னவென்றால் இந்த வழக்கத்தினால் சிவாலயங்களையும் அவைகளின் சில்பங்களையும் பார்க்கவேண்டுமென்னும் ஆசை எனக்கு சிறுவயதிலேயே உண்டாயிற்று என்பதை குறிப்பதற்கேயாம் (இதைப்பற்றி பிறகு நான் எழுதவேண்டி வரும்)

என் தந்தையார் மிகவும் கண்டிப்பான மனுஷ்யர் என்று நான் கூறவேண்டும். இக்குணம் அவருக்கு வந்தது அவர் பள்ளிக்கூடத்து பரீட்சகராக (Inspector of schools) பல வருடங்கள் வேலை பார்த்ததினாலோ அல்லது அவரது தாய் தந்தையர்களின் போதனையினாலோ நான் சொல்வதற்கில்லை. இக்குணத்தை ஆங்கிலத்தில் Discipline என்று சொல்வார்கள். அதை தமிழில் மொழி பெயர்ப்பதானால் எல்லா விஷயங்களிலும் கண்டிதமாயிருக்கும் சுபாவம் என்று தான் சொல்லக்கூடும். இதற்கு ஒரு உதாரணமாக அவர் தாயார் (அதாவது என் பாட்டியார்) அவரது சகோதரரையும் அவரையும் கண்டித்ததை எனக்கு அவர் கூறியிருக்கிறார். ஒரு முறை இவர்களிருவரும் சிறுவர்களாய் இருந்தபோது ‘ஏதோ’ குழந்தைகள் சண்டையில் எதிர் வீட்டு சிறுவன் ஒருவனை இவர்கள் அடித்துவிட்டார்களாம். இதைக் கேள்விப்பட்ட என் பாட்டியார் இவர்களிருவரையும் இழுத்துக்கொண்டு போய் ‘எதிர்வீட்டு அடிபட்ட பையனுடைய தாயாரிடம் விட்டு அதற்காக ‘இவர்களிருவரையும் நீங்களே தக்கபடி தண்டியுங்கள்’ என்று விட்டார்களாம்.

என் தகப்பனாரைப் பெற்ற பாட்டனாரைப்பற்றி. எனக்கு ஒன்றும் நேராக தெரியாது. அவர் நான் பிறக்குமுன் காலமாகிவிட்டார். என் பாட்டியைப்பற்றி எனக்கு நன்றாய் தெரியும். அவர்கள் 1890-ஆம் வருஷம் சுமார் 86 வயதில் காலமானார்கள். அவர்களை நாங்கள் ஒருவரும் ஆயா என்று அழைக்கலாகாது என்று எங்களுக்கு ஆக்கினை! ஆயா என்னும் சொல் பரங்கிக்காரர்களால் தங்கள் வேலைக்காரிகளை கூப்பிடும் பதம், ஆதலால் அவர்களை “நாயினா-அம்மா” (தகப்பனாருக்குத் தாயார்) என்று சொல்லவேண்டும் என்று எங்களுக்கெல்லாம் உத்தரவிட்டார்கள்.

இனி என் தாயாரைப்பற்றி சில வார்த்தைகள் எழுத விரும்புகிறேன். அவர்கள் சிவப்பாயிருப்பார்கள், தமிழ் கொஞ்சம் படிக்கத் தெரியும், அவர்கள் எப்பொழுதும் மத சம்பந்தமான புஸ்தகங்களைத்தான் படிப்பார்கள், அல்லது மற்றவர்களை படிக்கச்சொல்லி கேட்பார்கள். தினம் காலையில் துளசி பூஜையும் மாலையில் விக்னேஸ்வரர் முதலிய தெய்வங்கள் பூஜையும் செய்யாமல் போஜனம் கொள்ளமாட்டார்கள். வெள்ளிக்கிழமை சாயங்காலத்தில் இவ்விரண்டு பூஜையையும் விசேஷமாக செய்வார்கள், அத்தினங்களில் பூஜை முடிந்தவுடன் எங்களுக்கெல்லாம் பூஜை செய்த புஷ்பங்களைக் கொடுப்பார்கள். நாங்கள் அவர்கள் பாதத்தை சேவித்து புஷ்பங்களை வாங்கிக்கொள்வோம். அவர்கள் தான் எனக்கு, எனது ஒன்பதாவது வயதிலோ பத்தாவது வயதிலோ, பூஜைசெய்ய கற்பித்தார்கள். அவர்கள் எனக்கு கற்பித்தமுறையில் தினந்தோறும் காலை மாலைகளில் சாதாரண பூஜையும் வெள்ளிக்கிழமைகளில் விசேஷ பூஜையும் அக்காலம் முதல் இக்காலம் வரை செய்து வருகிறேன், காலை மாலை பூஜை முடிந்தவுடன் என் மாதா பிதாக்களையே என் தெய்வங்களாகக்கொண்டு அவர்களுடைய படங்களுக்கு பூஜைசெய்து வருகிறேன்.

என் தாயார் (அவர்கள் பெயர் மாணிக்கவேலு அம்மாள்) மிகவும் இளகிய மனதுடையவர்கள், 1875 ஆம் வருஷம் தன் மூத்த குமாரி வாந்தி பேதியினால் இறந்தது முதல் நீர் வியாதியால் பிடிக்கப்பட்டார்கள். பிறகு 1885 ஆம் வருஷம் என் மற்றொரு தமக்கையாகிய பர்வதம்மாள் இறந்த போது உலகை வெறுத்தார்கள் என்றே சொல்ல வேண்டும். அது முதல் தினம் ‘கைவல்ய நவநீதம்’ முதலிய வேதாந்த புஸ்தகங்களை படிக்கச் சொல்லி, கேட்டுக் கொண்டிருப்பார்கள், கடைசி காலத்தில் அவர்கள் வைராக்கிய மனதுடையவர் களானார்கள் என்றே சொல்ல வேண்டும். அதைப் பற்றிய சிறுகதை ஒன்றை எழுதுகிறேன்.

1891 ஆம் வருஷ ஆரம்பத்தில் ஒரு நாள் காலையில் நாங்கள் எழுந்திருந்த போது எங்கள் வீட்டில் எங்கள் தாய் தந்தையர்களில்லாதிருப்பதைக் கண்டு என்னவென்று வேலைக்காரர்களை விசாரிக்க அவர்கள் எங்கள் தந்தை தாயார் இருவரும் அதிகாலையில் வண்டியிலேறி ஸ்மசானத்திற்குப் போயிருப்பதாக சொன்னார்கள். இது என்ன விந்தை என்று ஆச்சரியம் கொண்டவர்களாய் அவர்களிருவரும் திரும்பி வந்தவுடன் விசாரிக்க பின் வருமாறு எங்கள் தந்தையார் எங்களுக்கு தெரிவித்தார். “நேற்றிரவு உங்கள் தாயார் இனி தான் அதிக காலம் பூமியிலிருப்பதாக தோற்ற வில்லை. ஆகவே தன் ஆயுள் முடிந்தவுடன் தனக்கு சமாதி வைக்க வேண்டு மென்று தெரிவித்து, அதற்குத் தக்க இடம் ஈம பூமியில் ஏற்படுத்த வேண்டு மென்று கேட்டுக் கொண்டார்கள். உடனே புறப்பட்டுப் போனோம். அங்கு இடம் ஒன்றைக் காட்டினார்கள்", என்று சொன்னார். பிறது அன்றைத் தினமே முனிசிபாலிடியாருக்கு அவ்விடத்தை வாங்குவதாக ஏற்பாடு செய்துக் கொண்டார். இது நேர்ந்த காலத்தில் என் தாயாருக்கு உடம்பில் முக்கியமாக நீர் வியாதியைத் தவிர வேறெரு நோயுமில்லை. பிறகு அவ்வருஷமே அச்டோபர் மாதம் மரணமடைந்தார்கள். மரணத்திற்குக் காரணம் வாந்தி பேதி. அதற்கு ஒன்பது மாதங்களுக்கு முன்பாக வாந்தி பேதியில்தான் சாக வேண்டியிருக்கும் என்று அவர்கள் அறிந்து கொள்வதற்குக் காரணம் ஒன்றுமில்லை.

அவர்கள் மரணமடைந்தவுடன், அவர்கள் வேண்டுகோளின்படியே முன்பே வாங்கி வைத்திருந்த இடத்தில் சமாதியில் அவர்களது உடலை அடக்கம் செய்தோம். அங்கு ஒரு சமாதி கட்டப்பட்டது. இந்த சமாதிக்கு வருஷா வருஷம் அவர்கள் திதியன்று நான் பூஜை செய்து வருகிறேன்.

பிறகு 1895-ஆம் வருஷம் எங்கள எழும்பூர் பங்களாவில் காலமான என் தகப்பனாருக்கு தகனக்கிரியை ஆன பிறகு அவர்களுடைய அஸ்தியை சேமித்து இந்த சமாதியில் புதைத்திருக்கிறோம். இவர்கள் திதியன்றும் சமாதி பூஜை செய்து வருகிறேன் இன்றளவும்.

என் தாயாருடைய தகப்பனார் அடையாளம் பேடு அப்பாவு முதலியார் என்பவர். அடையாளம் பேடு என்பது சென்னைக்கு ஒன்பது மைல் தூரத்திலிருக்கும் ஒரு சிறு கிராமம். அவருக்கு அந்த கிராமத்திலும் அதற்கடுத்த கிராமமாகிய வானகரத்திலும் கொஞ்சம் நிலமுண்டு. அதை ஆட்களைக் கொண்டு பயிரிட்டு அவர் ஜீவித்து வந்தனராம். இங்கு அவரைப் பற்றி எனது மாமி அதாவது அப்பாவு முதலியாருடைய மருமகப் பெண் சொல்லிய ஒரு கதை எனக்கு ஞாபகம் வருகிறது. மூன்றாவது மைசூர் யுத்தத்தில் ஆங்கிலேயர் ஸ்ரீரங்கப் பட்டணத்தைப் பிடித்த சமயம் (1792 கி.பி.) அவர் ஆங்கிலேய சைனியத்துடன் சிப்பாய்களுக்கு உணவுப் பொருள்கள் சேகரித்துக் கொடுக்கும் வேலையில் போயிருந்தாராம். ஸ்ரீரங்கப் பட்டணம் முற்றுகையின் போது அகழியின் ஒரு மூலையில் பதுங்கியிருந்தாராம்; மேலே குண்டுகள் பாய்கிற சப்தத்தைக் கேட்டுத் தான் பிழைப்பது அரிது என்று நடுங்கிக் கொண்டிருந்தனராம். பிறகு ஸ்ரீரங்கப் பட்டணத்தில் சிப்பாய்கள் சூறையாடிய போது அவர்கள் கொண்டு வந்த பொருள்களை சரசமாக வாங்கிக் கொண்டு அவர்களுக்கு ரூபாயாக கொடுத்து வந்தனராம். இப்படி சேகரித்த பொருள்களை யெல்லாம் நாலைந்து பொதி மாடுகள் மீது போட்டுக் கொண்டு அடையாளம் பேட்டுக்குத் திரும்பி வந்தனராம். அவைகளை விற்று ரொக்கமாக்கி வானகரத்தில் ஒரு சத்திரம் கட்டி வைத்தனராம். அச்சத்திரம் இன்றும் இருக்கிறது.

என் தாயாரைப் பெற்ற பாட்டனரும். என் தகப்பனாரைப் பெற்ற பாட்டனாரும் நான் பிறக்கு முன்பே காலகதி அடைந்து விட்டனராம்.

என் தகப்பனார் எங்களை மிகவும் கண்டிப்பான முறையில் வளர்த்து வந்ததற்கு சில உதாரணங்களைக் கூறுகிறேன். தினம் காலை மாலைகளில் இத்தனை மணி நேரம் படிக்க வேண்டுமென்று எங்களுக்குக் கட்டளை. அதன்படி, நாங்கள் படித்து விட்டோமானால் மற்ற வேளைகளெல்லாம் நாங்கள் இஷ்டப்படி விளையாடலாம். விடுமுறை தினங்களில் கட்டாயமாய் விளையாட வேண்டும். அதற்காக எங்களுக்கெல்லாம் கோலி பம்பரம் முதலிய விளையாட்டுக் கருவிகளை தானே வாங்கிக் கொடுப்பதுமன்றி தன் வயதையும் பாராமல் எங்களுடன் எங்கள் விளையாட்டுக்களில் கலந்துக் கொள்வார்.

இன்னொரு உதாரணத்தை இங்கு எழுதுகிறேன். நான் பி. ஏ. படித்துக் கொண்டிருந்த போது என் பால்ய சிநேகிதரான வி. வி. ஸ்ரீனிவாச ஐயங்கார் (இவரைப் பற்றி பிறகு நான் அதிகமாக எழுத வேண்டி வரும்.) என்னை அடிக்கடி பார்க்க வருவார். அச்சமயங்களில் நான் மேல் மாடியில் படித்துக் கொண்டிருந்தால் அவரை கீழேயே நிறுத்தி “சம்பந்தம் படித்துக் கொண்டிருக்கிறான். 4-மணி வரையில் அவன் படிக்கவேண்டிய காலம்” என்று சொல்லி, அது வரையில் அவருடன் பேசிக் கொண்டிருந்து, நான்கு அடித்தவுடன் அவரை மெத்தைக்கு அழைத்து வந்து என்னிடம் விட்டு நாங்கள் பேசுவதற்கு தடையாயிருக்கலாகாதென்று கீழே போய் விடுவார்!

நாங்கள் வாலிபத்தை அடைந்த பிறகு தோளுக்கு மிஞ்சினால் தோழன் என்னும் மொழிப் படியே எங்களை பாவித்து வந்தார் என்றே நான் கூறவேண்டும்.

இனி என் சொந்த கதையை எழுத ஆரம்பிக்கிறேன். ஒவ்வொருவனும் தான் சிறு குழந்தையாய் இருந்த போது! முதல் முதல் என்ன சம்பவம் அவன் ஞாபகத்தில் தங்கியிருக்கிறது என்று ஆராய்ந்து பார்ப்பது ஒரு வேடிக்கையாய் இருக்கும். எனது மூன்றவது வயதில் நேரிட்ட இரண்டு விஷயங்கள் எனக்கு இப்போது ஞாபகமிருக்கின்றன.

ஒரு சிறிய கிருஷ்ணன் விக்கிரஹத்தை வைத்துக் கொண்டு எங்கள் வீட்டின் குறட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது என் தாயார் “தெருவில் விளையாடக் கூடாது. வீட்டிற்குள் விளையாடு” என்று என்னை உள்ளே அழைத்துக் கொண்டு போனது; என் தமக்கை மீனாம்பாள் என்பவர்கள் மரித்த போது என் தாயார் அவர்கள் பக்கலில் படுத்துக் கொண்டு கண்ணீர் விட்டதும் அவர்களுடைய உடலை பல்லக்கில் எடுத்துக் கொண்டு போனதுமாம். மேற் குறித்த சம்பவங்களும் நடந்தது நான் இப்போது இருக்கும் எங்கள் பிதுரார்ஜித வீடாகிய ஆச்சாரப்பன் வீதி 70-ஆம் நெம்பர் வீட்டிலாகும்.

1876-ஆம் வருஷம் எங்கள் தாயார் இந்த வீட்டிலிருந்தால் எந்நேரமும் தன் மடிந்த குமாரத்தியின் ஞாபகம் வருகிறதென கூற என் தகப்பனார் தன் குடும்பத்துடன் இதே வீதியில் எங்கள் பங்காளியாகிய கட்டைக்கார ஆறுமுக முதலியாரின் சந்ததியாரின் வீடாகிய 54 வது கதவிலக்கமுள்ள பெரிய வீட்டில் குடி புகுந்தார். இந்த வீட்டில் நான் அது முதல் முதல் 1893 ஆம் வருஷம் வரையில் வசித்து வந்தேன்.

எனது அட்சராப்பியாசம் 1877-ஆம் வருஷம் இங்கிருக்கும்போது நடந்தது. என்னை முதல் முதல் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பியது நன்றாய் ஞாபகமிருக்கிறது. அன்று காலையில் என் தாயார் என்னைக் குளிப்பாட்டியது; என் தகப்பனார் மடியில் உட்கார்ந்து நான் தெலுங்கு அட்சரங்கள் பயின்றது, தெருப்பள்ளிக்கூடத்து உபாத்தியாயர் என்னை தன் திண்ணை பள்ளிக்கூடத்திற்கு அழைத்துக்கொண்டுபோனது, எல்லாம் மிகவும் நன்றாய் நேற்று நடந்தது போல் என் மனதில் படிந்திருக்கிறது. அச்சமயம் எனக்கு அணிவித்த பட்டு சொக்காய், நிஜார், கோணல் டொப்பி முதலியவைகளை, எனக்கு படம் எழுதும் சக்தியிருக்குமானால் அப்படியே வரைந்து காட்டுவேன்; இதில் வேடிக்கையென்னவென்றால் நேற்று தினசரி பத்திரிகையில் நான் படித்த விஷயங்களைப்பற்றி சொல்வ தென்றால் எனக்கு ஞாபகமறதியாய் இருக்கிறது! சுமார் 84 வருடங்களுக்கு முன் நடந்த மேற்கண்ட விஷயங்களைப்போன்ற பல விஷயங்கள் நன்றாய் ஞாபகமிருக்கின்றன.

எனக்கு ஞாபகமிருக்கும் வரையில் என்னுடைய ஐந்தாம் வயதின் ஆரம்பத்தில் எனக்கு மேற்கண்டபடி அட்சராப்பி யாசம் செய்வித்தார்கள். அது முதல் 1879-ஆம் வருஷம் வரையில் மூன்று தெருப்பள்ளிக்கூடங்களில் நான் படித்தேன்.
---------------

4. தெருப்பள்ளிக்கூடங்களில் படித்தது

முதல் பள்ளிக்கூடம் இப்போது நானிருக்கும் வீட்டிற்கு 100 அடி தூரத்திற்குள் ஒரு வீட்டில் நடை திண்ணையி லிருந்தது. அதில் என்னுடன் பத்து பதினைந்து பிள்ளைகள் தான் படித்தார்கள் என்று நினைக்கிறேன். அதன் ஒரே உபாத்தியாயர் மிகவும் வயது சென்றவர். அவர் நரைத்த முகம் எனக்கு வெறுப்பைத் தந்தது. அவரிடம் தான் என் அண்ணன்மார்களெல்லாம் அட்சராப்பியாசம் ஆரம்பித்தார்களாம். எனது அண்ணனாகிய ஏகாம்பர முதலியாரைப்பற்றி அவர் விஷயமாக ஒரு கதை சொல்லக் கேட்டிருக்கிறேன். அவர் படித்தபோது சமுத்திரமானது புரண்டு பட்டணத்தையெல்லாம் அழிக்கப் போகிறது என்று ஒரு பெரிய வதந்தி பிறந்ததாம். அதைக் கேட்ட என் தமயனார் என் தாயாரிடம் ஓடிப்போய் “சமுத்திரம் பொங்கிவந்தால் எங்கள் உபாத்தியாயரைக்கூட அடித்துக் கொண்டு போகுமா?” என்று கேட்டாராம். இக்கதையை என் தாயார் பன்முறை வேடிக்கையாகக் கூறக்கேட்டிருக்கிறேன். இத்தெரு பள்ளிக்கூடம் சில மாதங்களுள் எடுபட்டது. அதன் பேரில் எங்கள் தகப்பனார் எங்கள் தெருவாகிய ஆச்சாரப்பன் தெருவிலேயே உடையவர் கோவிலுக்கு எதிரிலிருக்கும் மற்றொரு தெருப் பள்ளிக்கூடத்திற்கு என்னை அனுப்பினார். இப் பள்ளிக்கூடத்திற்கு சாத்தாணி வாத்தியார் பள்ளிக்கூடம் என்று பெயர். உபாத்தியாயர் சாத்தாணி ஜாதியார். அவரிடம் நான் தெலுங்கு பாஷை கற்றேன். இந்த வாத்தியார் சுமுகம் உடையவர். அவரிடம் பயமில்லை எனக்கு. நான் டெபடி, இன்ஸ்பெக்டர் ஆப் ஸ்கூல்ஸ் (Deputy Inspector of Schools) பிள்ளையாதல்பற்றி எனக்கு உபாத்தியாயர் பென்சுக்குப் பக்கக்தில் ஒரு சிறிய பென்சு கொடுக்கப்பட்டது. மற்ற பிள்ளைகளெல்லாம் தரையில் உட்காருவார்கள். இந்த சிறிய பென்சில் உட்கார்ந்து சில சமயங்களில் தூக்கம் மேலிட, உபாத்தியாயர் துடை மீது படுத்து அப்படியே தூங்கிவிடுவேன் உபாத்தியாயர் கோபியாது நான் விழித்தவுடன் என்னை வீட்டுக்கு அனுப்பிவிடுவார். சுமார் 6-மாதங்கள் இங்கு படித்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். பிறகு என் தகப்பனார் நான் தமிழ் படிக்க வேண்டுமென்று கருதி வேறொரு பள்ளிக் கூடத்திற்கு அனுப்பினார். நான் மூன்றாவதாக சேர்ந்த தெருப் பள்ளிக்கூடத்திற்கு நரசிம்மலு வாத்தியாயர் பள்ளிக் கூடம் என்று பெயர். இந்தப் பள்ளிக்கூடம் ஆச்சாரப்பன் வீதியிலிருக்கும் ஒரு சந்தாகிய பாலகிருஷ்ணன் சந்தில் இருந்தது. இந்த வாத்தியார் கண்டிப்பான மனுஷ்யர். ஆயினும் நல்ல சுபாவமுடையவர், இங்கு நான் 1879-ஆம் வருஷம் படித்தேன் இங்குதான் நான் ஆங்கிலம் படிக்க ஆரம்பித்தது.

1880-ஆம் வருஷம் என்னை சென்னை பிராட்வே (Broadway) யிலிருந்த ஹிந்து புரொபரைடரி (Hindi Proprietary School) என்னும் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பினார் எங்கள் தந்தையார். இது தெருப் பள்ளிக்கூடமல்ல, பணக்கார பிள்ளைகள் அக்காலம் படித்த பள்ளிக்கூடம், அதற்கேற்ப இங்கு பள்ளிக்கூடத்து சம்பளம் மற்ற பள்ளிக்கூடங்களிலிருப்பதைவிட அதிகம்! அச்சமயம் எனக்கு 7 வயது. இங்கு நடந்த பல விஷயங்கள் நன்நய் ஞாபகமிருக்கின்றன.

இங்கு இருந்த ஏழு வகுப்புகளின் உபாத்தியாயர்கள் பெயர்கள் இன்னும் ஞாபகமிருக்கின்றன. இப்பள்ளிக்கூடத்தில் படித்தபோது என்னுடன் படித்த இரண்டு நண்பர்கள் ஞாபகமிருக்கிறது. ஒருவர் மணலி சரவண முதலியார், பிறகு இவருக்கு ராவ்பகதூர் பட்டம் அளிக்கப்பட்டது; இவர் சில வருடங்களுக்குமுன் காலமானார். மற்றொருவர் பாலசுந்தரம் செட்டியார். இவர் ஒரு பாங்கில் பொக்கிஷதாராகி 1940-ஆம் வருஷம் காலமானார். இங்கு சம்பவித்த மற்றொரு விஷயம் என் மனதில் நன்றாய் படிந்திருக்கிறது. ஒருமுறை இரண்டு வெள்ளைக்காரர்கள் சிறுவர்களாகிய எங்களுக்கு பஞ்ச் அண்டு ஜூடி (Punchi and judy)பொம்மலாட்டம் காட்டுவதாக இசைந்தனர். நாங்கள் எல்லோரும் டிக்கட்டுகள் வாங்கிக் கொண்டு ஆவடன் அதைப்பார்க்க காத்திருந்தோம், அது ஆரம்பமானவுடன் இந்த இரண்டு வெள்ளைக்காரர்களும் குடித்துவிட்டு சண்டையிட்டு வெளிவந்தனர். பிறகு ஒருவன் அக்குடி வெறியில் மெத்தைக்குப் போகும் வழியில் முட்டிக் கொண்டு சுத்தம் பெருக மூர்ச்சையானான். அதைப் பார்க்கவும் சிறுவர்களாகிய நாங்கள் பயந்தோம். குடி வெறியினால் இது நேர்ந்தது என்று ஒரு பெரியவர் சொல்ல குடியைப் பற்றி திகிலடைந்தேன். இது நான் பிறகு மதுவிலக்கு சங்கத்தை சேர ஒரு காரணமாயிருந்ததெனலாம்.

மூன்றாவது ஞாபகமிருக்கும் சமாச்சாரமும் ஒரு முக்கியமானதே. இப்பள்ளியின் வருடாந்திரக் கொண்டாட்டத்திற்கு எங்களையெல்லாம் பச்சையப்பன் சபா மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். அச்சமயம் என் மூத்த அண்ணன் ஏகாம்பர முதலியாருடைய சிநேகிதரான W. ராமஸ்வாமையா என்பவர் ஒரு ரெசிடேஷன் (Recitation) ஒப்புவித்தார். ஜனங்கள் அதை கரகோஷத்துடன் ஏற்றனர். அது ஷேக்ஸ்பியர் மகா நாடகக் கவி ஆங்கிலத்தில் எழுதிய ஜூலியர்ஸ் சீசர் என்னும் நாடகத்தில் ஆன்டொனி (Antony) என்பவரின் சொற் பொழிவு என்று பிறகு கண்டுணர்ந்தேன். அம்மாதிரி நானும் சொற்பொழிவு செய்யவேண்டுமென்று எனக்கு ஆசை பிறந்தது. பிறகு நான் படித்துக்கொண்டிருந்த ஆங்கில புத்தகத்திலிருந்த இரண்டு மூன்று சிறு செய்யுட்களை குருட்டுப் பாடம் செய்து உரக்க ஒப்பித்துக்கொண்டிருந்தேன். இதைக் கேட்ட என் தமயனார் ஏகாம்பா முதலியார் “இது என்னடா’ என்று வினவ என் விருப்பத்தைத் தெரிவித்தேன், அதன்பேரில் ரெசிடேஷன் என்றால் உரக்க ஒப்புவித்தல் மாத்திரமல்ல. சரியான பாவத்துடன் அதை ஒப்பிக்கவேண்டும் என்று கற்பித்தார். இதுதான் பிறகு தான் ரெசிடேஷன் செய்ய நன்றாய் கற்று முடிவில் நடிக்கக் கற்றுக்கொண்டதற்கு அடிபீடமாகும்.

1881ஆம் வருஷம் முடிவில் இப்பள்ளிக்கூடம் எடுபட்டுப் போயது. இதனால் என் வகுப்பில் நான் முதலாவதாக இருந்ததற்காக எனக்கு சேரவேண்டிய பரிசு கிடைக்காமற் போயது.

1882-ஆம் வருஷ முடிவில் என்னை என் தகப்பனார் பச்சையப்பன் கல்லூரியின் கிளைப் பள்ளிக்கூடமாகிய அப்பள்ளிக்கூடத்தின் கீழ்பாகத்தில் வைக்கப்பட்டிருந்த கோவிந்த நாயுடு பிரைமெரி (Primary) பள்ளிக்கூடத்தில் சேர்ப்பித்தார். என்னை அழைத்துக்கொண்டுபோய் அதன் பிரதம உபாத்தியாயர் A. நரசிம்மாச்சாரியிடம் விட்டு இவன் இரண்டாம் வகுப்பில் போன வருடம் படித்தான். வகுப்பில் முதலாவதாக இருந்ததாகக் கேள்விப்பட்டேன். இவனை விசாரித்து எந்த வகுப்பில் சேர்த்துக்கொள்ள முடியுமோ அப்படியே செய்யுங்கள் என்று சொல்லிவிட்டுப் போய் விட்டார். நரசிம்மாச்சாரியார் ஒன்றாவது வகுப்பு ஆங்கில புத்தகத்தில் ஒரு சிறு பாடத்தை படிக்கச் சொல்லி அதற்கு அர்த்தமும் சொல்லச் சொன்னார். அதன்படியே செய்தேன். பிறகு கணக்கில் பரிட்சிக்க ஒரு கணக்கு கொடுத்தார். அதைப்போடத் தெரியாது விழித்தேன் அதன் பேரில் என் தகப்பனாருக்கு ஒரு நிரூபம் எழுதினார். அதில் ‘பிள்ளையாண்டான் சரியாக இங்கிலீஷ் படிக்கிறான். ஆனால் கணக்கில் சரியாக இல்லை. ஆகவே என் இஷ்டப்படி செய்வதனால் இவளை இந்த வருஷம் இரண்டாவது வகும்பிலேயே படிக்கச் செய்வேன். இல்லை இவனை மூன்றாவது வகுப்பில் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று உங்கள் விருப்பமானால் அப்படியே செய்கிறேன்’ என்று எழுதியிருந்தரராம், இக்கடிதத்தை மத்தியானம் நான் வீட்டிற்குப் போய் என் தகப்பனாரிடம் கொடுத்தபோது, இதை எனக்கு அவர் தெரிவித்து இரண்டாம் வகுப்பிலேயே என்னை சேரும்படி கட்டளையிட்டார். என் மனதில் அப்போது ஒரு துக்கமுமில்லாமல் அப்படியே சேர்ந்தேன். பிறகு சில தினங்கள் பொறுத்து ஒரு நாள் என் பழைய் உபாத்தியாயர் முனுசாமி நாயுடு எங்கள் வகுப்புக்கு வந்து என்னைப்பார்த்து “என்னடா சம்பந்தம் உன்னுடன் படித்தவர்களெல்லாம் மூன்றாவது வகுப்பில் சேர்ந்திருக்கிறார்கள். நீ மாத்திரம் என்ன இரண்டாம் வகுப்பில் சேர்ந்திருக்கிறாய்” என்றார். இதைக் கேட்டதும் எனக்கு வருத்தம் உண்டாகி அழுதுவிட்டேன், இதை இவ்வளவு விவரமாக எழுதுவதற்குக் காரணத்தை என் நண்பர்களுக்குத் தெரிவிக்கிறேன், இரண்டு மூன்று வருடங்கள் பொறுத்து நான் அப்போது மிடில் ஸ்கூல் (Middle School) பரிட்சை யெனும் கவர்ன்மெண்ட் பரிட்சைக்குப் போனபோது என் பழைய நண்பர்கள் எல்லாம் பெயில் (Fail) ஆனார்கள், நான் தேறினேன். இதை டம்பமாக எடுத்துக்கூறவில்லை. இரண்டாம் வகுப்பில் இரண்டு வருஷம் படித்ததின் பயனாக என் படிப்பின் அஸ்திவாரம் நன்றாய் உறுதியாய் நான் மேலே படிப்பதற்கு அனுகூலமாய் இருந்தது. இல்லாவிட்டால் என் மூளையின் வளர்ச்சிக்குத் தக்கபடி படிக்காது. அதை தாங்க சக்தியில்லாதபடி வருடா வருடம் படிக்க நேரிட்டு பரிட்சையில் தேறியிருக்கமாட்டேன் என்று உறுதியாக நம்புகிறேன். தற்காலம் யாராவது சிறுவர்கள் தங்களுக்கு வகுப்பில் பிரமோஷன் ஆகவில்லை யென்று என்னிடம் வந்து முறையிட்டுக்கொண்டால் எனக்கு நேரிட்ட சம்பவத்தைக் கூறி அவர்களுக்கு உண்மையில் ஆறுதல் கூறி அனுப்புகிறேன் இப்பொழுதும்!

நான் இப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது கல்வியின் மீது எனக்கு உற்சாகம் உண்டாகச்செய்த இரண்டு சந்தர்ப்பங்களைக் குறிக்கிறேன். முதலாவது என் வகுப்பில் உபாத்தியாயராக இருந்த சுப்பிரமணிய ஐயர் எங்கன் வீட்டிற்கு வந்து என் தகப்பனாருடன் பேசிக்கொண்டிருந்த போது “சம்பந்தம் M. A. ரங்கநாத முதலியாரைப்போல் படித்து முன்னுக்கு வருவான்” என்று அவர் என் தந்தையிடம் சொன்னார். இதைக் கேட்ட போது எனக்கு கர்வம் பிறக்க வில்லை. வாஸ்தவமாய் பயம் பிறந்தது. அக்காலத்தில் M. A. ரங்கநாத முதலியார் என்பவர் தமிழர்களுள் மிகவும் நன்றாய் படித்தவர் என்று பெயர் பெற்றவர். அவரைப்போல் நாம் எங்கு படிக்கப்போகிறோமென்கிற பயம். ஆகவே எப்படியாவது கஷ்டப்பட்டு நன்றாய் படிக்கவேண்டுமென்று ஊக்கம் பிறந்தது. இரண்டாவது இக்கலாசாலையின் வருடாந்திரக் கொண்டாட்டத்தில் பச்சையப்ப முதலியார் ஹாலில் மெட்ரிக்குலேஷன் பரிட்சையில் முதலாவதாக தேறிய ஒரு பிள்ளையான்டான் பொற்பதக்கம் (Gold medal) பெற்றதைப் பார்த்தேன். அச்சமயம் நாமும் இப்பொற்பதக்கம் பெறவேண்டுமென்னும் ஆசை பிறந்தது எனக்கு. (தெய்வத்தின் கருணையினால் 1889ஆம் வருஷம் அந்த ஆசை நிறைவேறி பொற்பதக்கம் பெற்றேன்.)

இப்பள்ளியைச் சேர்ந்ததினால் பெற்ற பெரும் பலன் என்னவென்றால் நான் இப்பள்ளியைச் சேர்ந்தவுடன் தானும் இங்கு படிக்கச் சேர்ந்த ஸ்ரீமான் வி. வி. ஸ்ரீனிவாச ஐயங்காருடைய நட்பே.! இவர் என்னைவிட கொஞ்சம் மூத்தவர். ஆயினும் இங்கு இரண்டாம் வகுப்பிலும் மூன்றாம் வகுப்பிலும் என்னுடன் படித்தவர். அவர் ஓர் இடத்தில் எழுதியபடி நாங்கள் இருவரும் முதன்முறை சந்தித்தபோதே நண்பர்களானோம். (தெய்வகடாட்சத்தினால்) அன்று பிறந்த நட்பு செழித்தோங்கி இருவரும் உயிர் சினேகிதர்களானோம், இச்சம்பவம் நேரிட்டு 72 வருடங்கள் சிநேகிதர்களாய் இருந்தோம்.

1884-ஆம் வருஷம் நாங்களிருவரும் இப் பள்ளிக்கூடத்திலிருந்து நான்காம் வகுப்பையுடைய செங்கல்வராய நாயக்கர் பள்ளிக்கு அனுப்பப்பட்டோம். அதிலிருந்து 1885-ஆம் வருஷம் இரண்டு பெயரும் அக்காலத்து மிடில்ஸ்கூல் பரிட்சையில் தேறி 1886-ஆம் வருஷம் பச்சையப்பன் காலேஜைப் போய் சேர்ந்தோம். பிறகு 1887-ஆம் ஆண்டு இரண்டு பெயரும் அக்காலத்து மெட்ரிக்குலேஷன் பரிட்சையில் தேறினோம். இதன் பேரில் நான் கவர்ன்மெண்ட் காலேஜாகிய பிரசிடென்சி காலேஜைப் போய் சேர்ந்தேன். எனது நண்பர் பச்சையப்பன் காலேஜிலேயே படித்து வந்தார். இப்படி நான்கு வருடங்கள் நாங்கள் பிரிக்கப்பட்ட போதிலும் எங்கள் சிநேகிதம் மாறவில்லை. இரண்டு பெயரும் ஒரே வருஷம் பி.ஏ. பரிட்சையில் தேறி மறுபடியும் லா (Law) காலேஜில் ஒன்றாய் படிக்க ஆரம்பித்தோம், பி எல். பரிட்சையில் இருவரும் ஒரே வருஷம் தேறினோம். அதன் பேரில் எனது நண்பர் “ஜேம்ஸ் ஷார்ட்” என்பவரிடம் அப்ரென்டிசாக (Apprentice) அமர்ந்தார், நான் ஸ்ரீமான் சுந்தரம் சாஸ்தியாரிடம் முதலிலும் அவர் அகாலமடைந்த போது அவர் குமாரராகிய குமாரசாமி சாஸ்திரியிடமும் வித்யார்த்தி (Apprentice) ஆனேன். இப்படி இருந்தும் கோர்ட்டில் ஒன்றாய் வேலை கற்றுவந்தோம். மத்தியான சிற்றுண்டியும் ஒன்றாய் புசிப்போம்! இரண்டு பெயரும் 1898-ஆம் வருஷம் வக்கீல்களாக என்ரோல் செய்யப்பட்டோம். 1891-ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட சுகுண விலாச சபைக்கு இரண்டு பெயரும் சாயங்காலங்களில் போய் காலங்கழிப்போம். பிறகு 1924 இல் நான் ஸ்மால்காஸ் கோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டேன். அதே வருஷம் எனது நண்பர் ஹைகோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 1928-ஆம் வருஷம் நான் 55 வது வயதில் விலக வேண்டி வந்தது. அதே வருஷம் அவரும் ஹைகோர்ட் பதவியிலிருந்து விலகினார்! மேற்கூறியபடி நாங்களிருவரும் ஏறக்குறைய சமமாக உயிர் வாழ்ந்ததை பரம் பொருள் எங்களுக்கு : அளித்த பேரருளாகக் கொள்கிறேன். பிறகு 1954-ஆம் வருஷம் எனது துரதிஷ்டத்தால் என்னை விட்டு வைகுண்டம் அடைந்தார்.

இனி 1882-ஆம் வருடத்தின் என் பழைய கதைத் தொடர்ச்சியை எடுத்துக் கொள்கிறேன். கோவிந்தப்ப நாயக்கர் பள்ளியில் படித்தபோது நடந்த செய்திகளில் தற்காலம் எனக்கு முக்கியமாக ஞாபகமிருப்பது அங்குள்ள உபாத்தியாயர்களுக்கெல்லாம் பிள்ளைகள் நிக் நேம் (Nick Naine) நிந்தைப் பெயர் வைத்ததேயாம். தமிழ் வாத்தியாருக்கு மாங்காய் வாத்தியார் என்று பெயர். மற்றொருவருக்கு பழஞ்சால்வை என்று பெயர். ஹெட்மாஸ்டருக்கு (Head master) நெட்டைக் கால் என்று பெயர். மற்றவர்களுக்கு மிப்படியே. இதில் வேடிக்கை யென்னவென்றால் அவர்களின் நிஜமான பெயர் எனக்குத் தெரியவே தெரியாது! மூன்றாவது வகுப்பில் படித்த போது முதலாவதாக இருந்ததற்காக எனக்குப் பரிசு கிடைத்தது. அன்றியும் ரெசிடேஷன் (Recitation) ஒப்பு வித்த தற்காக வைஸ்ராய் (Visroy) பரிசு கிடைத்தது. இது முதல் ஒவ்வொரு வருஷமும் மெட்ரிக்குலேஷன் வகுப்பு வரையில் வருடா வருடம் பரிசு கிடைத்தது.

பிறகு 1883, 84 வருடங்களில் பி. டி செங்கல்வராய நாயக்கர் பள்ளியில் நான்காவது கீழ் வகுப்பு, நான்காவது மேல் வகுப்பு (lower fourth, upper fourth) வகுப்புக்களில் படித்தேன். நான்காவது கீழ் வகுப்பில் படித்தபோது நடந்த ஒரு விந்தையான சம்பவத்தை எனது நண்பர்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். அக்காலம் இவ்வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு அப்பர் செகண்டரி பரிட்சை என்று ஒரு பரிட்சை இருந்தது. அப்பரிட்சை நெருங்கியபோது தினம் நான் காலையில் பள்ளிக்கு போகுமுன் பிள்ளையாரண்டை பூஜை செய்யும் போது இப்பரிட்சையில் முதல் வகுப்பில் நான் மூன்றாவதாகத் தேற வேண்டுமென்று பிரார்த்தித்து வந்தேன் கெஜட்டில் தேறினவர்களின் பெயர் அச்சிட்டபோது அப்படியே. முதல் வகுப்பில் மூன்றாவதாக என் பெயர் இருந்தது! இதை நான் ஏதோ பெருமையாகவோ டம்பமாகவோ எழுதவில்லை, எழுதியதற்குக் காரணம் கூறுகிறேன். நான் வகுப்புக்களில் நன்றாய் படித்து வருகிறேன் என்று நினைத்து பரிட்சையில் எல்லோரையும் விட முதலாவதாக இருக்க வேண்டுமென்று கோருவது சகஜமாயிருக்கலாம், மூன்றாவதாக இருக்கவேண்டுமென்று ஏன் கோர வேண்டும்? இதற்குக் காரணம் இன்றளவும் எனக்குத் தெரியாது! ஆயினும் நான் அப்படி கோரிப் பிரார்த்தித்தது என்னவோ வாஸ்தவம். என் பிரார்த்தனை நிறைவேறியதும் வாஸ்தவம். இது ஒரு அற்ப விஷயமானாலும், இதனால் தெய்வத்தைப் பிரார்த்திப்பது பயனானது என்று உறுதியாய் எனது மனதில் உதித்தது. இச்சந்தர்ப்பத்தில் டெனிசன் மகாகவி ஆங்கிலத்தில் எழுதிய ஒரு வரி ஞாபகம் வருகிறது. அதாவது :-- “உலகம் கனவு காண்கிறதை விட் பிரார்த்தனையினால் உலகில் பல விஷயங்கள் (சரியாக) நடந்து வருகின்றன” என்பதாம். 1885-ஆம் வருஷம் இப்பள்ளியின் வருடாந்திர விழாவில் அலெக்ஸாண்டரும் கள்வனும் என்னும் ஆங்கில சிறு நாடகத்தில் கள்வனாக ரெசிடேஷன் ஒப்புவித்த பரிசு பெற்றேன்.

1886-ஆம் வருஷம் பச்சையப்பன் கல்லூரிக்கு மாற்றப் பட்டேன். இங்கு இரண்டு வருடங்கள் படித்து மெட்ரிகுலேஷன் பரிட்சையில் முதல் வகுப்பில் தேறினேன். எங்கள் பள்ளிக் கூடத்திலிருந்து பரிட்சைக்குப் போன பிள்ளைகளுள் முதலாவதாக இருந்தபடியால் (நான் சிறு வயதில் கோரியபடி) எனக்கு ஜெயராமச் செட்டியார் பொற்பதக்கம் (Jayarama chetty's Gold ineclal) கிடைத்தது. அன்றியும் ஆங்கிலத்திலும் தமிழிலும் முதலாவதாக இருந்தபடியால் இரண்டு பரிசுகளும் பெற்றேன். அன்றியும் லவ்ரி (Lovery) பரிசும் கிடைத்தது. இப்பரிட்சையில் தேறினவுடன் பச்சைப்பன் கல்லூரியை விட்டு பிரசிடென்சி காலேஜ் (Presidency college) என்னும் கவர்ன்மெண்ட் காலேஜைப் போய் சேர்ந்தேன். இப்படி நான் கல்லூரியைவிட்டு வேறொரு கல்லூரிக்குச் சென்றதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. என் தகப்பனார் இக்கல்லூரியிலிருந்து தான் பிரோபிஷெண்ட் (Proficient) பரிட்சையில் தேறினார். எனது மூத்த சகோதர்களும் இக்கல்லூரியில் படித்தவர்கள். எனது சிறு வயது முதல் எப்போது நாமும் இந்த கல்லூரியைப் போய் சேர்வோம் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது என் பழைய நண்பராகிய வி. வி ஸ்ரீனிவாச ஐயங்காரை விட்டுப் பிரிந்து இக்கல்லூரியைச் சேர்ந்தேன். இப்படி நான் என் பழைய பள்ளியை விட்டுப் பிரிந்ததற்காக எனது நண்பர் என்னை ‘பச்சையப்பன் கலாசாலைக்கு துரோகி’ என்று எப்போதும் அழைப்பார். இக்கலாசாலையில் 1888-1889 வருடங்களில் எப். ஏ. (F. A.) வகுப்பில் படித்து பரிட்சையில் முதல் வகுப்பில் தேறினேன். இப்பள்ளியைச் சேர்ந்தது என்னுடைய அதிர்ஷ்டங்களில் ஒரு முக்கியமான அம்சம் என்று கூற வேண்டும். முதலில் இங்கு சேர்ந்தபடியால் எனக்கு பல புதிய நண்பர்கள் கிடைத்தனர். அவர்களைப்பற்றி சற்று விவரமாய் எழுத விரும்புகிறேன். இவ்வாறு புதிதாய் கிடைத்த நண்பர்களுள் முதலாவதாக அ. ஸ்ரீனிவாச பாய் என்பவரைச் சொல்ல வேண்டும். இவர் எனக்குக் கிடைத்த ஆப்தர்களுள் ஒருவர் என்று நான் கூற வேண்டும். இவரும் நானும் சுமார் 8 வருடம் இக்கல்லூரியிலும் லாகாலேஜிலும் (law college) ஒன்றாய் படித்தோம். பிறகு இவர் வக்கீலாகி மங்களுருக்குப் போனார். இவர் எனது துரதிர்ஷ்ட வசத்தால் தனது 76-வது வயதில் பரலோகம் சென்றார். இவருடைய மூத்த மகன் பிரதம மந்திரி பண்டிட நேரு அவர்களின் அந்தரங்க காரியதரிசியாக (Private Secretary) இருக்கிறார் என்று சந்தோஷத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு கிடைத்த எனது இரண்டாவது நண்பர் மேற்சொன்ன ஸ்ரீனிவாச பாயின் அண்ணன் அ. வாமன் பாய் என்பவர். இவர் 1888-ஆம் வருஷம் எங்கள் வகுப்பிற்கு மேல் வகுப்பில் படித்திருந்தார். ஆயினும் ஸ்ரீனிவாச பாாயின் மூலமாக எனக்கு சிநேகிதமானார் மிகுந்த பத்திசாலி. மனிதர்களுடைய குணங்களை அறிவதிலும் புத்தகங்களின் சாரங்களை கிரகிப்பதிலும் வெகு நிபுணர். இவர் பல வருடங்களுக்கு முன் காலமானார்.

இங்கு என் பாக்கிய வசத்தால் எனக்கு கிடைத்த சிநேகிதர் களுள் ராமராய நிம்கார், பார்த்தசாரதி ராயநிம்கார் என்னும் இரண்டு சகோதரர்கள். இருவரும் தெலுங்கு பாஷையில் மிகுந்த நிபுணர்கள். இவர்கள் காளஹஸ்தி சமஸ்தானத்தைச் சேர்ந்தவர்கள், பிற்காலத்தில் மூத்தவராகிய ராமராய நிம்கார் பானகல் ராஜ பட்டம் பெற்றார். இவர் என்னை விட சுமார் 10 வருடம் மூத்தவர். இவர் காலமாகி விட்டார். பார்த்தசாரதி ராய நிம்கார் தற்காலம் பானகல் ராஜாவாகி ஜீவ்ய திசையில் இருக்கிறார்.

மற்றெருவர் வே. பா. ராமேசம். இவர் பிற்காலம் வைகோர்ட் ஜட்ஜாகி சர் பட்டம் பெற்றார். இவர் 1958 வது வருடம் மரணமடைந்தார். இவர் அபாரமான ஞாபக சத்தி உடையவர். நாங்கள் பரிட்சைக்குப் போனபோது இன்ன மார்க்ஸ் (marks) வாங்கினோம் என்று மறவாது சொல்வார்.

என் புதிய சிநேகிதர்களுள் மற்றெருவர் சிங்காரவேலு முதலியார். இவர் கணிதத்தில் மிகுந்த கெட்டிக்காரர். பிற் காலத்தில் சில காலம் பச்சையப்பன் கல்லூரியில் பிரதம உபாத்தியாயராக இருந்தார். இவர் நடுவயதிலேயே இறந்து போனார் என்று நான் சொல்ல வேண்டும்.

மற்ற சிநேகிதர்களுள் ஜெகதீச ஐயர், மண்டயம் திரு நாராயணாச்சாரி மிஸ்டர் பிண்டோ முதலியவர்களை குறிக்க வேண்டும். இவர்களுள் கடைசியாகக் குறித்த பின்டோ என்பவர் மாத்திரம் மங்களூரில் உயிர் வாழ்ந்து வருகிறார்.

பிரசிடென்சி காலேஜில் நான் சேர்ந்ததினால் அடைத்த முக்கியமான லாபம் என்னவென்றால் அதுவரையில் இல்லாதபடி புதிதாய் பலஜாதி வகுப்பினர்களுடன் கலந்து அவர்களின் நட்பைப் பெற்று என் புத்தி விசாலமானதெனக் கூற வேண்டும்.
இங்கு சற்று நிதானித்து அக்காலத்து எப். ஏ. பரிட்சையில் நாங்கள் படிக்க வேண்டுய பாடங்களைப்பற்றி சற்று எழுத விரும்புகிறேன். முதலில் தற்காலத்து எஸ். எஸ். எல். சி. [S. S. L. C.) பரிட்சைதான் பழைய மெட்ரிகுலேஷன் எனலாம். இரண்டாவது இண்டர் மீடியட் பழைய எப். ஏ. பரிட்சையாகும். அக்காலத்தில் எப். ஏ. பரிட்சைக்கு போகும் ஒவ்வொரு பிள்ளையும் கட்டாயமாய் தேற வேண்டிய பிரிவுகள் ஆங்கிலம், தமிழ், தர்க்கம், உடற்கூறு சாஸ்திரம், சரித்திரம், கணித சாஸ்திரம், இவைகள் ஒவ்வொன்றிலும் பிரத்யேகமாக வாங்க வேண்டிய மார்க்குகள் வாங்காவிட்டால் தேற முடியாது. இந்த வகுப்பில் டிரிக்னாமெட்ரி என்னும் கணித நூல் வந்து சேர்ந்தது. வாஸ்தவமாய் இது என் மூளையில் ஏறவேயில்லை. இன்றைக்கும் சைன் தீடா, கோசைன் தீடா என்றால் என்ன என்று யாராவது என்னைக் கேட்டால் பதில் சொல்லத் தெரியாது. இப்படி இருக்கும்போது எப். ஏ. வகுப்பில் பள்ளிக் கூடத்து வருடாந்திர பரிட்சையில் நான் கணக்கில் கடைசி பிள்ளையாக நின்றது ஆச்சரியமில்லை. இந்த பரிட்சையில் கணக்கில் எங்கள் வகுப்புப் பிள்ளைகள் மார்க்குகளை யெல்லாம் சக்கரவர்த்தி ஐயங்கார் என்னும் கணித புரொபசர், புரோபசராகிய பூண்டி ரங்க நாத முதலியாரிடம் கொண்டு போய் கொடுத்து விட்டார். அவர் தன் வகுப்பில் நாங்கள் எல்லோரும் சேர்ந்த பொழுது ஒரு தினம் பிள்ளைகளுடைய மார்க்குகளை யெல்லாம் படித்துக் கொண்டு வந்தார். நன்றாக மார்க்கு வாங்கின ஜகதீசன், திருநாராயணாச்சாரி, சிங்காரவேலு முதலிய பிள்கைளுடைய மார்க்குகளை படித்தபோது மிகவும் நல்லது (Very good) என்று சொல்லிக் கொண்டு வந்தார். எனக்கு அப்போதே தெரியும் எனக்கு என்ன வரப்போகிறதென்று! அவர் படித்த பட்டியில் கடைசி பெயர் என்னுடையது. நூற்றிற்கு 23 மார்க்கோ என்னவோ வாங்கினேன். (இதுவும் யூக் லிட் பேபர் போலும்), “சம்பந்தம் 23 மார்க்” என்று படித்து விட்டு “சம்பந்தம்! உன் சிறு வயதில் நன்றாய் படித்துக் கொண்டிருந்தாயே” என்று தான் சொன்னார். உடனே வகுப்பில் என்னையுமறியாதபடி கண்ணீர் விட்டு அழுது விட்டேன்.

அன்று சாயங்காலம் வீட்டிற்குப் போனவுடன் இது உதவாது இப்படியிருந்தால் நான் எப். எ. (F.A) பரிட்சையில் தேறவே முடியாது. இதற்கென்ன செய்வது என்று யோசித்த டிக்னாமெட்ரி புஸ்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு அதிலிருந்த புக்வர்க் (Book work) என்னும் பாகத்தையெல்லாம் ‘ஈயடித்தான் ரைடர்’ மாதிரி காபி பண்ண ஆரம்பித்தேன் தினம் இப்படியே செய்து எனக்கு ஞாபகமிருக்கிறபடி வருடத்தின் பரிட்சைக்கு போகுமுன் பதினோறு முறை காபி செய்தேன்! இதன் பயனாக நான் எழுதி வந்ததொன்றுக்கும் அர்த்தம் தெரியாவிட்டாலும் அப்புஸ்தகத்தில் எந்த புக்வர்க் கேட்ட போதிலும் குருட்டுப் பாடமாக தப்பில்லாமல் ஒப்பித்து விடுவேன். ஆல்ஜீப்ராவிலும் புக்வர்க் எதையும் ஒப்பித்துவிடும் சக்தி பெற்றேன். டிசம்பர் மாதம் சர்வகாலசாலை எப். ஏ. பரிட்சைக்கு நான் போன போது இப்பரிட்சையில் புக்வர்க் எல்லாம் எழுதிவிட்டு என் பதில் பேப்பரை சீக்கிரம் கொடுத்து விட்டு எழுந்திருந்து வந்து விட்டேன். தெய்வாதீனத்தால் பரிட்சைக்கு வேண்டிய மார்க்கு கிடைத்தது. பி. ஏ. வகுப்பிற்கு போனபிறகு தான் ஒவ்வொரு பிள்ளையும் தனக்கு இஷ்டமான ஆப்ஷனல் சப்ஜக்ட் (optional subject) எடுத்துக் கொள்ளலாம். இது அக்காலத்திலிருந்த பெருங்குறையாகும், வைத்தியனாகவோ வக்கீலாகவே ஆகவேண்டுமென்று விரும்பும் ஒரு பிள்ளை எதற்காக எப். ஏ. வகுப்பில் ஜியாமெட்ரி, ஆல் ஜீப்ரா, டிக்னாமெட்ரி முதலிய கணித புஸ்தகங்களை படிக்க வேண்டும். நான் காலேஜ் வகுப்பிற்கு வந்தவுடன் வக்கீல் பரிட்சைக்குப் போய் தேறி வக்கீலாக வேண்டிமென்று ஏறக் குறைய தீர்மானித்தேன். அப்படியிருக்க மேற்கண்ட கணித புஸ்தகங்களை யெல்லாம் படித்ததின் பயன் எனக்கென்ன? என் மூளைக்கு சிரமம் கொடுத்ததேயொழிய அவைகளால் ஒரு பயனுமடையவில்லை என்றே நான் கூறவேண்டும். தற்காலத்துப் பிள்ளைகள் எங்களைவிட மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என்று சொல்லவேண்டும்.

ஒரு சிறு வேடிக்கையான விஷயத்தை இங்கு எழுதுகிறேன். மேற்கண்ட கணித புஸ்தகங்களுடன் நான் படித்துப் போராடும் போது பன்முறை இப்பரிட்சையில் நான் தேறினால் அப்புத்தகங்களை யெல்லாம் ஒரு கட்டாகக்கட்டி சமுத்திரத்தில் எறிந்துவிடவேண்டுமென்று தீர்மானித்தேன். பிறகு தேறினவுடன் அப்புத்தகங்களின்மீது பச்சாதாபப்பட்டு எங்கள் காலேஜில் படித்துவந்த ஒரு ஏழைப் பிள்ளைக்குக் கொடுத்து விட்டேன். எப். ஏ. பரிட்சையில் திரு. நாராயணாச்சாரி, ஜகதீச ஐயர், வே. பா. ராமேசம், சிங்காரவேலு, நான் ஆகிய ஐந்து பெயரும் முதல் வகுப்பில் தேறினோம்.

எப். ஏ. வகுப்பில் தேறினவுடன் என் தலைமீதிருந்த பெரும் பாரம் நீங்கினவனாய் பி. ஏ. பரிட்சைக்கு என்ன ஆப்ஷனல் சப்ஜெக்ட் எடுத்துக்கொள்வது என்று ஆலோசிக்கலானேன். அச்சமயம் டாக்டர் போரன் என்பவர் பையாலஜி (Biology) பேராசிரியராக இருந்தார். எங்கள் காலேஜில், அவர் என்னை சந்தித்தபோது நான் தனக்குப் பிரியமான உடற்கூறு சாஸ்திரத்தில் பிரசிடென்ஸியில் முதலாவதாக இருந்ததற்காக என்னை சிலாகித்து “நீ பையாலஜி எடுத்துக் கொண்டு என் வகுப்பில் வந்து சேர்” என்று கூறினார். நானும் இசைந்தேன். முதல் நாள் அவர் வகுப்பில் என்னை பக்கலில் உட்காரவைத்துக்கொண்டு ஒரு தவளையைக் கொன்று டிஸ்செலக்ட் செய்து காண்பித்தார்; என் மனம் அதைக்கண்டு தாளவில்லை! உடனே நான் இந்த படிப்பிற்கும் நமக்கும் பொருத்தமில்லை என்று தீர்மானித்து என் தகப்பனாரிடமிருந்து உத்தரவு பெற்று காலேஜ் பிரின்ஸ்பாலாகிய மிஸ்டர் ஸ்டூவர்ட்டிடம்போய் என் சப்ஜெக்ட்டை பையாலஜியிலிருந்து சரித்திரத்திற்கு மாற்றிக்கொண்டு பிறகுதான் சரியாகத் தூங்கினேன். சரித்திரமானது நான் எப்பொழுதும் பிரியப்பட்ட நூல். சிறு வயது முதல் என் ஞாபகசக்தி கொஞ்சம் நன்றாய் இருந்தபடியால் சரித்திரத்தில் எந்த பரிட்சையிலும் முதலாவதாக வந்து நல்ல மார்க்கு வாங்கினேன்.

பரிட்சையில் தேறுவோமோ என்னவோ என்று பயமின்றி நான் படித்தது பி. ஏ. வகுப்பில்தான், பி. ஏ. வகுப்பில் அக்காலம் பரிட்சைக்குப் போகுமுன் மாணவர்கள் இரண்டு வருடம் படிக்கவேண்டியிருந்தது. முதல் வருஷம் முடிந்தவுடன் நடக்கும் பரிட்சையில் இங்கிலீஷில் எந்த பிள்ளை முதலாவதாக தேறுகிறானோ அவனுக்கு ஒரு ஸ்காலர்ஷிப் உண்டு. அதற்கு தாம்சன்ஸ் ஸ்காலர்ஷிப் என்று பெயர். இது ஒருவருடத்திற்கு மாதம் 10 ரூபாயாம். இதை எப்படியாவது பெறவேண்டுமென்று தீர்மானித்தேன். ஆகவே என் காலத்தையெல்லாம் இங்கிலீஷ் டெக்ஸ்ட் (Text) புத்தகங்களை படிப்பதிலேயே செலவழித்தேன். 1889-ஆம் வருஷம் அக்டோபர் மாதத்தில் பரிட்சை வந்தது. அதில் நான் நன்றாய் பதில் எழுதியபோதிலும் எனக்கு அந்த ஸ்காலர்ஷிப் பெறுவோமோ என்று சந்தேகமாயிருந்தது. நமக்கு மேல் கெட்டிக்காரர்களான பல பிள்ளைகள் இருக்கிறார்கள். ஆகவே அது நமக்குக் கிடைப்பது அரிது என்று அந்த ஆசையை விட்டேன். 1890-ஆம் வருஷம் எங்கள் வகுப்புப் பிள்ளைகளெல்லாம் நான்காவது வகுப்பாகிய சீனியர் பி. ஏ. கிளாசுக்கு மாற்றப்பட்டோம். ஒரு நாள். என்னுடைய சிநேகிதர்களாகிய ஜகதீசஜயர், திருநாராயணாச்சாரி முதலியோருடன் சாயங்காலம் வகுப்பு களெல்லாம் விட்டபிறகு கிரிக்கெட் (Cricket) ஆடும் மைதானத்தில் பேசிக்கொண்டிருந்த சமயம், தனக்கு தேக அசௌக்கியமாயிருந்தபடியால் இங்கிலீஷ் பரிட்சைக்கு வராதிருந்த திருமலை ஐயங்கார் எனும் பிராம்மண பிள்ளை வந்து சேர்ந்தார். வந்தவுடன் ஜகதீச ஐயரைப் பார்த்து “ஜகதீசன் இவ்வருஷத்து தாம்சன்ஸ் ஸ்காலர்ஷிப் உனக்குத்தானே கிடைத்தது?” என்று கேட்க ஜகதீச ஐயர் “இல்லையடா” என்று வெறுப்புடன் பதில் உரைத்தார். உடனே திருமலை ஐயங்கார் “ஆனால் அது திருநாராணாச்சாரியாருக்குத்தான் கிடைத்திருக்கும்” என்று அவரைப் பார்த்துச் சொன்னார். உடனே ஜகதீசன் “அவனுக்கு கிடைத்தாலும் பரவாயில்லையே ‘திஸ் சாப் கெட்ஸ் இட்’ (This chap gets it) இந்த பையன் பெறுகிறான்” என்று என்னை நோக்கிக் கூறினார். அப்பாழுதுதான் எனக்குத் தெரிய வந்தது அதை நான் பெற்றதாக!

ஜகதீச ஐயர் என்னை விட ஆங்கிலத்தில் பயிற்சி பெற்றவர் என்று நான் ஒப்புக்கொள்ள வேண்டும். நாங்களிருவரும் 1891-ஆவது வருஷம் பி.ஏ. பரிட்சைக்குப் போனபோது முதல் வகுப்பில் நாங்கள் இருவர்தான் தேறினோம். அவர் முதலாவதாக இருந்தார். நான் இரண்டாவதாக இருந்தேன். ஆகவே அப்படி யிருக்கும்போது தனக்கு தாம்சன்ஸ் ஸ்காலர்ஷிப் கிடைக்கவில்லை என்று வருந்தியது தவறே அல்ல. ஆயினும் தனக்குக் கிடைக்காவிட்டாலும் போகிறது. மற்றொரு பிராம்மணப் பிள்ளையாகிய திரு நாராயணாச்சாரிக்காவது கிடைக்கலாகாதா, சம்பந்தத்திற்குக் கிடைத்ததே என்று கூறியது தவறென்று நினைக்கிறேன். மேற்கண்ட சம்பாஷனை நடந்தவுடன் நான் காலேஜ் டைரக்டரிடம் போய் எனக்குத்தான் ஸ்காலர்ப் கிடைக்கிறது என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு அன்றிரவு இதை என் தகப்பனாருக்குத் தெரிவித்தேன். அவர் என் தாயாரிடம் தெரிவித்தார். எனக்கிருந்த சந்தோஷத்தை விட அவர்களிருவரும் அதிக சந்தோஷப்பட்டனர் என்று நான் கூறவேண்டியதில்லை. கொஞ்ச நாள் பொறுத்து. இந்த ஸ்காலர்ஷிப் பணத்திற்காக முதல் செக் பெற்றதை என் தாயாரிடம் கொடுத்த போது அவர்கள் சந்தோஷப்பட்டதும் அவர்கள் அன்றிரவு இதைப்பற்றி என் தகப்பனாரிடம் கூறிய வார்த்தைகள் இன்னும் எனக்கு நன்குய் ஞாபகமிருக்கின்றன. என் பெற்றோர்களுக்கு இந்த சிறு சந்தோஷத்தையாவது கொடுத்தோமே. ஈசன் கருணையினால் என்று இதைப்பற்றி எழுதும் போதும் சந்தோஷப்படுகிறேன்.

1391-ஆம் வருஷம் என் ஆயுளில் இரண்டு முக்கியமான சம்பவங்கள் நேர்ந்தன. ஒன்று மிகவும் துக்க்கரமானது. மற்றொன்று மிகவும் சந்தோஷமானது. ஜகதீசன் ஜீவராசிகளுக்கு துக்கத்தையும் சுகத்தையும் ஏன் இவ்வாறு கலந்து கலந்து அனுப்புகிறார். இதற்கு விடையளிக்க என்னால் முடியாது; அதற்கு விடை. அவருக்குத்தான் தெரியும் போலும்;

முதலில் துக்ககரமானதைப்பற்றி எழுதுகிறேன். இவ் வருஷம் செப்டம்பர் மாதம் 10-ந்தேதி என் தெய்வத்தின் ஒரு கூறான என் தாயார் திடீரென்று வாந்திபேதி கண்டு சிவலோகப் பிராப்தி அடைந்தார்கள். இது பகற்காலத்தில் வானம் களங்கமில்லாமலிருக்கும்போது இடி விழுந்தது போல் என்னை மகத்தான துயரத்தில் ஆழ்த்தியது. இனி நமக்கு இவ்வுலகில் சந்தோஷமே கிடையாதென்று நினைத்தேன். ஆயினும் சற்றேறக்குறைய மூன்று மாதத்திற்குள் அவர்கள் இறந்ததே நலம் என்று சந்தோஷப்பட்டேன். இதற்குக் காரணம் அந்த மூன்று மாதத்தின் பிறகு என் கடைசி தங்கை தனது 16-வது வயதிற்குள் தன் புருஷனை இழந்து விதவையானதேயாம். இது நேர்ந்தபோது அக்கோர சம்பவத்தைக் காணாது என் தாயார் இறந்ததே நலமென்று உறுதியாய் நம்பினேன். என் தாயார் உலகில் ஒரு பெண்மணி அனுபவிக்கவேண்டிய சுகங்களையெல்லாம் அனுபவித்தே இறந்தார்கள் என்று நான் கூறவேண்டும். தனது எட்டு குழந்தைகளுக்கும் விவாகமாகி (எனக்கு 1890-ம் வருஷம் விவாகமானது) பேரன் பேத்திகளெடுத்து தன் கணவனுக்கு சஷ்டிபூர்த்தியாகி சுமங்கலியாய் ஒரு மாங்கல்யத்திற்கு இரண்டு மாங்கல்யங்களாகப்பெற்று சிவ சாயுக்தமடைந்தது வருந்தத்தக்க விஷயமல்ல என்று என் மனதைத் தேற்றிக் கொண்டேன். அவர்களுடைய உடல் அவர்கள் கோரிக்கையின்படியே சமாதியில் வைக்கப்பட்டது.

இரண்டாவது சம்பவம் என் ஆயுளுள் நேரிட்டவைகளுள் மிகவும் சந்தோஷகரமானது. இவ் வருஷம் கோடைக்கால விடுமுறையில் காலஞ்சென்ற ஆந்திர நாடக பிதா மகன் என்று கௌரவப் பெயர் பெற்ற வெ. கிருஷ்ணமாச்சார்லு என்பவர் பல்லாரியிலிருந்து சென்னைக்கு வந்து தான் ஏற்படுத்திய சரச வினோத சபை அங்கத்தினருடன் தெலுங்கு நாடகமாட அதற்கு ஓர் இரவு நான் என் தகப்பனாருடன் போய் பார்க்கும்படி நேரிட்டதேயாம். இதுதான் பிற்காலம் நான் தமிழ் நாடகங்கள் எழுதுவதற்கும், தமிழ் நாடகங்களில் நடிப்பு தற்கும் அங்குரார்ப்பணமாயிருந்த சம்பவம். இதைப்பற்றி விவரமெல்லாம் அறிய விரும்புவோர் எனது “நாடக மேடை நினைவுகள்” என்னும் புஸ்தகத்தில் கண்டு கொள்ளும்படி வேண்டுகிறேன், பி.ஏ. சரித்திர பரிட்சையில் நேரிட்ட இன்னெரு விஷயத்தை இங்கு எழுதுகிறேன். நான் பிரசி டென்ஸி காலேஜிலிருந்தும், வி. வி. ஸ்ரீனிவாச ஐயங்கார் பச்சையப்பன் காலேஜிலிருந்தும் போனோம். இப்பரிட்சைக்கு. இருவரும் செனெட் அவுஸில் பரிட்சைக்காக தினம் சந்தித்து பத்தியான போஜன காலத்தில் ஒன்றாய் உட்கார்ந்து பேசுவது வழக்கம். பரிட்சையில் ஒருநாள் மத்தியானம் பேசிக் கொண் டிருந்தபோது எனது நண்பர் “சம்பந்தம், நான் சரித்திரத்தில் ஸ்பெஷல் சப்ஜெக்ட் புஸ்தகத்தை நன்கு படிக்கவில்லை. சாயங்கால பரிட்சை பேபரில் என்ன கேட்கப் போகிறார்கள் சொல் பார்ப்போம்” என்று சொன்னார். நான் யோசித்து “இந்த யுத்தத்தைப் பற்றி கேள்வி வரலாம் என்று நினைக்கிறேன்” என்று சொல்லி அதன் விவரங்களை சொல்லி வைத்தேன். உடனே பரிட்சை மணி அடிக்க இருவரும் ஹாலுக்குப் போய் உட்கார்ந்தோம். இருவர்களுடைய பெயர்களும் 3 எனும் ஆங்கில எழுத்தில் ஆரம்பமாகிறபடியால் எங்கள் நாற்காலிகள் சற்று அருகாமையிலிருந்தன. பரிட்சைக்காகிதம் (Examination paper) எங்களுக்குக் கொடுக்கப் பட்டவுடன் அதில் நான் ‘ஜோஸ்யம்’ சொன்ன கேள்வியே கேட்டிருந்தது! இதைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டேன். வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்காரும் ஆச்சரியப்பட்டு புன்முறுவலுடன் என்னைப் பார்த்தது எனக்கு நன்றாய் ஞாபகமிருக்கிறது.

1892-ஆம் வருஷம் பிரசிடென்சி காலேஜில் இன்னொரு வருஷம் படித்தேன். ஆங்கிலம் தமிழ் பரிட்சைகளில் முதல் வகுப்பில் தேறினதுபோல் சரித்திரம் (History) பிரிவிலும் முதல் வகுப்பில் தேற வேண்டுமென்று நான் ஆசைப்பட்டதே இதற்குக் காரணம் தெய்வத்தின் கருணையினால் என் கோரிக்கையின்படியே முதல் வகுப்பில் தேறினேன். அன்றியும் இப் பரிட்சையில் முதல் வகுப்பில் தேறினவன் நான் ஒருவன்தான் மாகாண முழுவதிலும். இதைப்பற்றி சில விவரங்கள் எழுத இச்சைப்படுகிறேன். நான் பிரசிடென்சி காலேஜில் படித்த போது சரித்திரத்தில் முதலாவதாக தேறினதற்காக கார்டன் பரிசும், தமிழில் முதலாவதாக தேறியதற்காக போர்டீலியன் பரிசும் பெற்றேன். அன்றியும் தமிழ் வியாசப் பரிட்சையில் முதலாவதாக இருந்ததற்காக நார்டன் கோல்ட் மெடல் (Norten gold medal) பெற்றேன். பிறகு பவர் வர்னாகுலர் பரிசும் பெற்றேன். இப்பரிசு ஹாமர்டன் என்னும் அமெரிக்க ஆசிரியர் எழுதிய ஒரு புத்தகத்தில் சில பாகங்களை மொழி பெயர்த்ததற்காகக் கொடுக்கப்பட்டது. மேற்கண்ட மூன்று பரிசுகளின் மொத்த தொகை எனக்கு ஞாபகமிருக்கிற வரையில் சுமார் ரூபாய் 144 ஆயிற்று. இதற்காக கொடுக்கப்பட்ட செக்கை என் தகப்பனாரிடம் கொடுத்து சந்தோஷப்பட்டேன். அவரும் சந்தோஷப்பட்டார்.

1893-ஆம் வருஷம் நான் பி.ஏ. பட்டம் பெற்றபோது சென்னை சர்வ கலாசாலையாரால் சரித்திரத்தில் முதலாவதாக தேறின தற்காக நார்த்விக் (Northwick) பரிசு கொடுக்கப்பட்டது.
-------------

5. நடு பருவம்

பி.ஏ. தேறினவுடன், நான் லாயராக வேண்டுமென்று தீர்மானித்து லா வகுப்பைச் சேர்ந்தேன். லாகாலேஜில் படித்தபோது பெரும்பாலும் எங்கள் தகப்பனார் புதிதாய் கட்டிய எங்கள் எழும்பூர் பங்களாவிலிருந்து காலேஜிக்கு சைகிளிலில் போய்க்கொண்டிருந்தேன். இந்த லாகாலேஜில் நான் சேர்ந்தவுடன் நான்கைந்து வருடங்களாக என்னை விட்டுப்பிரிந்த என் உயிர் நண்பராகிய வி. வி. ஸ்ரீனிவாச ஐயங்கார் தானும் பி.ஏ. பரிட்சையில் தேறினவராய் என்னுடன் சேர்ந்தார். அவர் அப்படி சேர்ந்தவுடன் எங்கள் பழைய ஏற்பாட்டின்படி எப்பொழுதும் வகுப்பில் நாங்களிருவரும் ஒன்றாய் உட்கார்ந்து பேசிக் கொண்டு காலங்கழிப்போம். இதற்கு ஒத்தாசையாக நான் முன்பு கூறிய வாமன்பாய், ஸ்ரீனிவாச பாட் என்னும் இரண்டு. மங்களூர் நண்பர்களும் கே. ஆர். சீதாராம ஐயரும் சேர்ந்தார்கள். எந்த வகுப்பிலும் நாங்கள் பஞ்சபாண்டவர் களைப்போல் எந்நேரமும் உட்கார்ந்து பேசிகொண்டிருப்போம், வாஸ்தவமாய் சொல்லுமிடத்து.

நான் லாகாலேஜில் படித்துக் கொண்டிருந்தபோது 1895-ஆம் வருஷம் என் ஆயுளில் மற்றொரு துக்ககரமான சம்பவம் நேர்ந்தது. அதாவது அவ்வருஷம் மே மாதம் 26-ந் தேதி என் தந்தை சிவலோகப்பிராப்தி ஆனார். உண்மையைக் கூறுமிடத்து அவரது மரணம் என் தாயாரின் மரணத்தைப் போல் அவ்வளவு துக்க சாகரத்தில் ஆழ்த்தவில்லை. இதற்கு முக்கிய காரணம் அவர் மரணத்திற்கு 6 மாதம் முன்பாகவே ஓர் கொடிய வியாதியால் அவர் கஷ்டப்பட்டபோது இனி இதனின்றும் அவர் பிழைப்பது அரிது என்று வைத்தியர்கள் எங்களுக்கு தெரிவித்ததேயாம். அக்காலம் முதல் கொஞ்சம் கொஞ்சம் இனி வரப்போகிற துக்ககரமான சம்பவத்திற்கு நமது மனதை திடப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முயன்று வந்தேன். ஆயினும் சிலகாலம் பொறுத்தே என் மனதைத் தேற்றிக்கொள்ள சக்தி பெற்றேன். அவைகளையெல்லாம் பற்றி இதைப் படிக்கும் எனது நண்பர்களுக்கு எழுதுவானேன்? இச் சந்தர்ப்பத்தில் ஒரு ஆங்கில கவி எழுதிய இரண்டு அடிகள் ஞாபகம் வருகிறது. அதன் மொழி பெயர்ப்பை எழுதுகிறேன். “சிரித்தையேல் உலகெல்லாம் சிரித்திடும் உன்னுடன், அழுதையேல் நீதான் தனியாக அழவேண்டும்” அன்று முதல் ஒரு தீர்மானம் செய்து கொண்டேன். அது என் சந்தோஷத்தை உலகுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும். என்னுள்ளே என் துயரத்தை அடக்கிக்கொள்ள வேண்டும் என்பதாம்.

என் தந்தையின் தேக அசௌக்கியத்தின் காரணத்தினாலோ அல்லது அப்பொழுது சுகுணவிலாச சபைக்காக தமிழ் நாடகங்களை எழுதி அவைகளில் நடித்த காரணத்தினாலோ நான் லா புஸ்தகங்களை சரியாகப் படிக்கவில்லை. இவ்வருஷம் முதல் லா பரிட்சைக்கு (First Examination in Law) போனபோது நான் தேறுவேனோ என்னவோ என்று சந்தேகப் பட்டேன். ஆயினும் தெய்வாதீனத்தால் அதில் தேறினேன்.

1896-ஆம் வருஷம் கடைசியில் டிசம்பர் மாதம் பரிட்சையில் நாலும் ஸ்ரீனிவாச ஐயங்காரும் தேறினோம். அந்த பரிட்சைக்காக நாங்களிருவரும் ஒன்றாய் படித்தோம் எங்கள் லா புஸ்தகங்களை.

1897-ஆம் வருஷம் லா பரிட்சையில் தேறி நாங்களிருவரும் ஹைகோர்ட்டில் அப்ரென்டிசராக சேர்ந்தோம். ஸ்ரீனிவாச ஐயங்கார் ஜேம்ஸ் ஷார்ட்ஸ் (James Sharts) என்பவரிடம் அப்பியாசகராகச் சேர்ந்தார். நான் ஸ்மாஸ்கோர்ட் ஜட்ஜாயிருந்து பெயர் பெற்ற ரங்கநாத சாஸ்திரியாரின் குமாரரான சுந்தரம் சாஸ்திரியாரிடம் அப்பியாசகனாகச் சேர்ந்தேன். என் தமையனாராகிய, அச்சமயம் ஹைகோர்ட் வக்கீலாக நடவடிக்கை நடத்திக்கொண்டிருந்த ஐயாசாமி முதலியாரின் அபிப்ராயப்படி என் துர் அதிர்ஷ்டத்தினால் சுந்தரம் சாஸ்திரியார் 4 மாதத்திற்குள்ளாக தேகவியோகமாக அவரது குமாரர் பிறகு ஹைகோர்ட் ஜட்ஜாகிய குமாரசாமி சாஸ்திரியாரிடம் அப்பியாசகனாக அமர்ந்தேன். 1897-ஆம் வருஷம் முழுவதும் ஏறக்குறைய ஸ்ரீனிவாச ஐயங்காரும் நானும் வெவ்வேறு உபாத்தியாயர்களிடம் கோர்ட்டில் நிர்வகிக்கவேண்டிய விஷயங்களைக் கற்க வேண்டியவர்களாய் இருந்தபோதிலும் இருவரும் ஒன்றாய் சேர்ந்து கோர்ட்டுக்களைச் சுற்றி, பேசிக் கொண்டு வேடிக்கையாய் காலங்கழிப்போம். ஒவ்வொரு நாட்களில் ஏதாவது பிரிய வேண்டி யிருந்தபோதிலும் மத்தியானம் சிற்றுண்டி சாப்பிடுவதற்காக ஒருங்கு சேர்வோம். சாயங்காலங்களில் இருவரும் சுகுணவிலாச சபைக்கு ஓடிப் போவோம்!

வெளிப்படையாகக் கூறுமிடத்தில் முதல் வருஷமெல்லாம் கோர்ட்டுகளைச் சுற்றி வேடிக்கைப் பார்ப்பதிலேயே கழித்தேன். 1898-ஆம் வருஷம் ஆரம்பத்தில் ‘நாம் வக்கீலாக கோர்ட் ரிகார்ட்களில் பதிப்பிக்கபட்டு என்ரோல் (enrol) ஆகி வக்கீல் தொழிலைச் செய்ய ஆரம்பிக்கவேண்டுமே’ என்று பயந்தவனாய் 6 மாதம் ஜேம்ஸ் ஷார்ட் ஆபீஸில் வி. வி. ஸ்ரீனிவாச ஐயங்காருடன் ஒத்துழைத்து கோர்ட் நடவடிக்கைகளை நடத்தும் விதங்களையெல்லாம் சற்றேறக்குறைய முழுவதும் கற்றுக் கொண்டேன். குமாரசாமி சாஸ்திரியார் அவர்களிடம் வித்தியார்த்தியாய் இருந்தபோதிலும் அவாது ஆபீஸில் நான் அதிகமாக ஒன்றும் கற்றவனன்று. இது அவர் தப்பிதம் அல்ல. என் தப்பிதம் தான் என்று நான் ஒப்புக்கொள்ள வேண்டும். 1898-ஆம் வருஷம் ஜூலை மாதம் நான் ஹை கோர்டு வக்கீலாக என்ரோல் (enrol} செய்யப்பட்டேன்.
-------------

6. வக்கீலாக வேலை பார்த்தது

என் தமையனார் ஐயாசாமி முதலியார் இதற்கு முன்பாகவே ஐகோர்ட் வக்கீலாக இருந்தார். ஆகவே அவரது அறையிலேயே நான் வக்கீலாக அமர்ந்தேன். குமாஸ்தா, வேலையாள் முதலிய சௌகர்யங்களுக்கெல்லாம் நான் கஷ்டப் படாதபடி ஆயிற்று.

நான் என்ரோல் (enrol) ஆன தினமே அவருக்கு பதிலாக ஒரு வியாஜ்யத்தை நடத்தினேன். சென்னையில் ஸ்மால்காஸ் கோர்ட்டில் நான் முதல்முதல் ஒரு வியாஜ்யத்தில் பீஸ் பெற்றது, அக் கோர்ட்டில் ரிஜிஸ்டிரர் முன்பாக. ஜேம்ஸ் ஷார்ட்டிற்காக ஒரு சிறு வியாஜ்யத்தை நடத்தி வெற்றி பெற்றேன்.

அதுமுதல் சின்ன கோர்ட்டிலேயே பெரும்பாலும் வக்கில் வேலை பார்த்து வந்தேன். சில சமயங்களில் சிடி சிவில் கோர்ட். (City Civil Court) டுக்கும் போவேன். சீக்கிரம் போலீஸ் கோர்ட்டுக்கும் போக ஆரம்பித்தேன். ஐகோர்ட்டில் கார்த்திகை பிறைபோல் தோன்றுவேன்! இதைப்பற்றி சற்று விவரமாய் எழுத விரும்புகிறேன். முதல் இரண்டு வருஷம் என் வக்கீல் வரும்படி சராசரியாக மாதத்திற்கு 50 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை இருந்தது. பிறகு உயர்ந்து கொண்டு போய் சுமார் 1000 ரூபாய் சம்பாதித்தேன். இருந்தபோதிலும் நான் வக்கீலாக பெரும் பதவியையாவது ஊதியத்தையாவது பெறவில்லை என்று ஒப்புக்கொள்ளவேண்டும். இதற்கு முக்கிய காரணம் வக்கீல் உத்தியோகத்தில் என் மனம் பலமாக ஈடுபாடாததேயாம். பெரிய வக்கீல் என்று பெயர் எடுத்து ஏராளமாக பணம் சம்பாதிக்க வேண்டுமென்று நான் விரும்ப வில்லை. வெளிப்படையாகக் கூறுமிடத்து என் மன உற்சாக மெல்லாம் தமிழ் நாடகங்களில் நடித்தும், தமிழ் நாடகங்களை எழுதியும் பெரிய பெயர் எடுக்கவேண்டுமென்றே இருந்தது! இதன் பொருட்டு என் ஓய்வு காலத்தையெல்லாம் லா புஸ்தகங் களையும் லா ரிபோர்ட்களையும் படிப்பதில் செலவிடாது சுகுண விலாச சபைக்காக உழைப்பதிலேயே செலவழித்தேன். இதற்காக நான் எப்பொழுதும் வருத்தப்பட்டவனன்று. இப் பொழுதும் வருத்தப்படவில்லை; சந்தோஷமே படுகிறேன். நான் கொஞ்சம் பிரபல நடிகனும் நாடக ஆசிரியனுமான பிறகு ஒரு நாள் ஆந்திர நாடகப் பிதா மகனான பல்லாரி V. கிருஷ்ணமாச்சார்லு அவர்கள் தன்னுடைய அனுபவத்தை எனக்குத் தெரிவித்து “நீ சிறந்த வக்கீலாக வேண்டுமென்றால் நாடகத்தைத் தூரத்தில் விட்டுவிட வேண்டும்” என்று போதித்தது எனக்கு ஞாபகமிருக்கிறது. அவரது போதனையை நான் ஒப்புக்கொள்ள வில்லை என்று எழுதவேண்டியது அநாவசியம்’

நான் வக்கீலாக பணம் சம்பாதிக்கும் போது, என் இல் வாழ்க்கை சுகமாய் நடத்தவும், என் நாடகங்களை அச்சிட வேண்டியதற்கும் போதுமான பொருள் கிடைத்தால் போதும் என்று உழைத்துவந்தேன். மேற்சொன்ன காரணங்கள் பற்றியே கூடுமான வரையில் எனது வக்கீல் வேலையையெல்லாம் சுகமாய்க் காலம் கழிக்கக் கூடிய ஸ்மால்காஸ் கோர்ட்டில் பெரும்பாலும் சிடிசிவில் கோர்ட்டில் சில பாகமும் போலீஸ் கோர்ட்டில் சில பாகமும் வைத்துக்கொண்டேன். எப்பொழுதாவது கஷ்டப்பட்டு உழைக்கவேண்டிய பெரிய வியாஜ்யங்கள் வந்தால் அவைகளை மெல்ல, எனக்கு அவகாசமில்லை’ என்று தட்டிவிடுவேன்.

இக்காரணம் பற்றியே கட்சிக்காரர்கள் என்னிடம் வருவதென்றால் காலை 9½ மணிக்குள் வரவேண்டும் என்றும் சாயங் காலங்களில் 5 மணிக்குமேல் ஒருவரும் வரக்கூடாது என்றும் ஒரு நிபந்தனை செய்து கொண்டேன்.
இந்த நிபந்தனையினின்றும் சுமார் 25 வருடங்கள் நான் வக்கீலாக வேலை பார்த்த காலமெல்லாம் மாறவில்லை. ராத்திரியில் யாராவது என் வீட்டிற்கு வந்து ‘அர்ஜென்ட் வியாஜ்யம்’ என்று என்னை தொந்தரவு செய்பவர்களுக்கெல்லாம் ஒரு பதில், ஏற்பாடு செய்து கொண்டேன். அதாவது “உங்கள் வியாஜ்யம் இன்றிரவு ஏதாவது நடக்கப் போகிறதா? இல்லையே!நாளைக் காலை 11 மணிக்குத்தானே. கேஸ் (case) ஆகவே தயவுசெய்து நாளை காலை வீட்டிற்கு வந்துவிடுங்கள்” என்று பதில் சொல்லி அனுப்பிவிடுவேன். இந்த வழக்கத்தை அறிந்த என் மாமூலாக வரும் கட்சிக்காரர்கள் என்னை சாயங்காலங்களில் தொந்தரவு செய்வதில்லை. மற்றவர்களிடமும் “இந்த வக்கீல் சாயங்காலத்திற்குமேல் கோர்ட் வியாஜ்யங்களைப் பார்க்கமாட்டார்-- பீஸ் (Fees) கொடுத்த போதிலும் நாளை காலை கொண்டு வா என்று அனுப்பிவிடுவார். ஆகை பால் அவரை 5 மணிக்குமேல் போய் பார்ப்பதில் பிரயோகன மில்லை”, என்று தடுத்துவிடுவார்கள்.

இந்த கோட்பாட்டினால் எனக்கு ஒரு பெரிய நன்மை கிடைத்தது. சாதாரணமாக ஹைகோர்ட் வக்கீல்கள் நாற்பது ஐம்பது வயதாவதற்குள் நீர் வியாதி, குன்ம நோய் முதலிய ஏதாவது வியாதிக்கு உள்ளாகின்றனர் என்பது எல்லோரும் அறிந்த விஷயமே. இதற்கு முக்கிய காரணம் அவர்கள் காலக்கிரமப்படி போஜனம் கொள்ளாததும், தக்கபடி சாயங் காலங்களில் வியாயாமம் (exercise) எடுத்துக் கொள்ளாததுமாம் என்று வைத்தியர்கள் கூறியிருக்கின்றார். எத்தனை சிறந்த வக்கீல்கள் சுமார் 50 வயதிற்குள் வியாதிக்கு ஆளாகி மடிந்திருக்கின்றனர்! தேகத்தில் சிறு வயது முதல் தக்க பலமில்லாத நான் இப்ப ஏதாவது வியாதிக்கு ஆளாகாமல், தடுத்தது காலக்கிரமப்படி போஜனங் கொண்டதும் சாயங் காலங்களில் ஏதாவது வியாகாமமும் எடுத்துக்கொண்டு தக்கபடி ஓய்வையும் எடுத்துக்கொண்டு ஓய்வு காலங்களில் மனத்திற்கு உற்சாகத்தையும் சந்தோஷத்தையும் அளிக்கத்தக்க மனதிற்கினிய தொழில் (Hobby), ஒன்றை ஏற்படுத்திக் கொண்டு நடந்துவந்ததே, இதுவரையில் ஈஸ்வரன் கிருபையில் என் தேக நலத்தை காப்பாற்றிக்கொண்டு வரச் செய்தது என்று உறுதியாக நம்புகிறேன்.

நான் வக்கீலாக நடவடிக்கை நடத்திய காலத்தில் எனக்கே மற்றொரு நிபந்தனை ஏற்படுத்திக் கொண்டேன். அதாவது கட்சிக்காரர்கள் என்னிடம் வந்தால் அவர்கள் வியாஜ்யம் பொய்யானது, தப்பானது; நியாயமல்ல என்று என் புத்திக்குப் பட்டால் அவர்கள் வியாஜ்யத்தை எடுத்துக்கொள்ளக் கூடாதென்பதாம். இதனால், என்னிடம் வந்த பல வியாஜ்யங்களை ஒதுக்கியிருக்கிறேன். இருந்தும் இதனால் நான் ஒரு நன்மை பெறாமல் போகவில்லை. அதாவது “சம்பந்தம் சாதாரணமாக தப்பான கேசுகளை எடுத்துக்கொள்ளமாட்டான்” என்னும் பெயர் பெற்றேன் என்று நினைக்கிறேன். என்னிடம் வரும் கட்சிக்காரர்களுக்கெல்லாம் ஆரம்பத்தில் ஒரு கதை சொல்வேன். “ஐயா, வைத்தியனிடம் போய் உங்களுக்கு ஒரு வியாதி இருக்க அதை மறைத்து வேறொன்றைக் கூறினால் அந்த வைத்தியன் உங்கள் உண்மையான வியாதியைக் குணப்படுத்த முடியுமா? அதுபோல வக்கீலாகிய என்னிடம் உண்மையைக் கூறுங்கள். பிறகு உங்கள் வியாஜ்யத்திற்குப் பரிஹாரம் தேடுகிறேன்” என்று சொல்வேன்.

இப்படி சொல்வதினால் சில கட்சிக்காரர்கள் என்னை விட்டு அகன்றபோதிலும் நான் எடுத்துக்கொண்ட வியாஜ்யங்களில் பெரும்பாலும் வெற்றி பெற்றதனால் கோர்ட்டு ஜட்ஜிகளுக்கு என்னிடம் ஒரு மதிப்பு உண்டாயிற்றென்றே சொல்ல வேண்டும். சில சமயங்களில் நான் உண்மையை அறியாத சில தப்பான வியாஜ்யங்களை நடத்திக்கொண்டு வருகையில் இடையில் இது பொய் கேஸ் என்று கண்டறிந்தால் கோர்ட்டில் நடவடிக்கையை நடத்திவிட்டு முடிவில் சம்அப் (Sumap) செய்ய வேண்டி வரும்போது நான் வேறொன்றும் சொல்லாமல் “இந்த வியாஜ்யத்தில் கோர்ட்டார் காலத்தை இன்னும் எடுத்துக்கொள்ள எனக்கிஷ்டமில்லை” என்று முடித்திருக்கிறேன். இப்படி செய்ததினால் ஜட்ஜ்கள் இதர கேசுகளில் நான் வற்புறுத்தி பேசினால் அவைகளில் ஏதோ உண்மை இருக்கவேண்டுமென்று என்னைப் பொறுமையுடன் கேட்டிருக்கின்றனர். இதைப்பற்றி சில கோர்ட்டு வக்கீல்கள் நான் செய்தது தவறு “நிஜமோ தப்போ கடைசிவரையில் மன்றாடித்தான் தீரவேண்டியது வக்கீல் கடமை” என்று என்னிடம் கூறியிருக்கின்றனர். ஹைகோர்ட்டில் ஒரிஜினல் வியாஜ்யம் ஒன்றை ஆனரபில் ஜஸ்டிஸ் பாடம் முன்பாக நான் ஒருமுறை நடத்திய போது பிரதிவாதிக்காக வக்காலத்து வாங்கிக்கொண்ட நான் வாதியையும், வாதி சாட்சிகளையும் இரண்டு நாள் குறுக்கு கேள்விகள் (Cross Examination) கேட்டேன். அது முடிந்தவுடன் பிரதிவாதிக்காக சாட்சிகள் ஒருவரையும் நான் கூப்பிடவில்லை. அன்றியும் சம்அப் (Sumup) செய்ய வேண்டி வந்த போது “வாதியின் சாட்சிகளை கிராஸ் (Cross) பண்ணவேண்டியதை என் கடமைப்படி செய்தேன். சம்ஆப் செய்யவேண்டியது என் இச்சையில் இருக்கிறது. அதை செய்து கோர்ட்டார் அவர்களுடைய காலத்தை வியாஜ்யத்தில் வீணாக போக்குவ தற்கு எனக்கிஷ்டமில்லை” என்று கூறி உட்கார்ந்தேன். பாடம் துரை நான் செய்தது சரியானது என்று ஒப்புக்கொண்டு ஏதோ புகழ்ந்தனர். கட்சிக்காரர்கள் சொல்வதை பொறுமையுடன் கேட்டு இந்த வியாஜ்யத்தை ஜெயிப்பது கஷ்டம் என்று எனக்குத் தோன்றினால் கட்சிக்காரர்களிடம் உண்மையைக் கூறி “ஏன் எனக்கு பீஸ் கொடுக்கிறீர்கள் ? இந்த பணத்தை ஏதாவது தர்மம் செய்யுங்கள்” என்று சொல்லியனுப்பி இருக்கிறேன் பல தடவைகளில்.

இப்படி செய்ததால் கட்சிக்காரர்களுடைய நட்பைப்பெற்று எனக்கு ஸ்மால்காஸ் கோர்ட்டில் முக்கியமாக அதிக கேசுகள் வந்தன. இதுதான் பிறகு மேல் அதிகாரிகள் என்னை ஸ்மால் காஸ் கோர்ட் ஜட்ஜாக நியமித்ததற்கு அஸ்திவாரமாக இருந்ததென நம்புகிறேன்.

குறுக்கு கேள்விகள் கேட்பதில் கொஞ்சம் வல்லவன் என்ற பெயர் பெற்றபடியால் எனக்கு சென்னையிலும், வெளியிலும் கிரிமினல் வியாஜ்யங்கள் கிடைத்தன. இந்த அனுபவம் பிறகு சிலகாலம் சீப் பிரசிடென்ஸி மாஜிஸ்டிரேட்டாக நியமிக்கப்பட்டபோது எனக்கு உபயோகமாயிருந்தது.

நான் முக்கியமாக வியாஜ்யம் நடத்திய சில ஜட்ஜ்களைப் பற்றிக் கொஞ்சம் எழுத விரும்புகிறேன். நான் வக்கீலாக வேலை செய்ய ஆரம்பித்தபோது ஸ்மால்காஸ் கோர்ட்டில் இரண்டாவது ஜட்ஜாக இருந்தவர் டி. ரொஸொரியோ (D. Rozorio) என்பவர் அவர் மிகுந்த பொறுமையான சுபாவமுடையவர். அவர் தினம் சரியாக பதினோறு மணிக்கு நிமிஷம் தவறாமல் கோர்ட்டுக்கு வந்து உட்காருவரர். அன்றியும் வியாஜ்யங்களை சீக்கிரம் தீர்மானிப்பார். இந்த இரண்டு குணங்களையும் நான் அவரிடமிருந்து கற்றுக் கொண்டேன். பிறகு அதே கோர்ட்டில் அதே நாற்காலியில் ஸ்மால்காஸ் கோர்ட் ஜட்ஜாக நான் சில வருஷம் நடவடிக்கை நடத்திய போது இவ்விரண்டும் எனக்கு மிகவும் பயனளித்தன. ஆனால் அவருடைய பொறுமையை நான் கற்றுக் கொள்ளவில்லை!

ஸ்மால்காஸ் கோர்ட்டில் என்காலத்தில் மற்றொரு ஜட்ஜாக இருந்தவர் மண்டயம் O.பார்த்தசாரதி ஐயங்கார் அவரிடம் நான் கற்றது வியாஜ்யத்தில் முடிவில் சம்அப் (Sum.up) செய்யும்போது முக்கியமான அம்சங்களை எவ்வளவு சுருக்கமாய் சொல்கிறோமோ அவ்வளவு நல்லது என்பது. இவருடன் காஸ்மாபாலிடன் கிளப்பில் சனிக்கிழமைகளில் சீட்டாடுவேன். அச்சமயம் கோர்ட்டில் நடக்கும் பல வேடிக்கைகளைப்பற்றிய கதைகளை மேஜையைச் சுற்றி உட்கார்ந்திருக்கும் எங்களுக்கெல்லாம் சொல்லி சிரிப்புண்டாக்குவார். அவற்றுள் ஒன்றை இங்கு எழுதுகிறேன். ஒருநாள் “சம்பந்தம், நான் கோர்ட்டுக்கு வரும்போது மிகவும் தலைகுனிந்தபடி வருகிறேனே அதற்குக் காரணம் தெரியுமா?” என்று கேட்டார். “வணக்கமாய் வருவது நல்லது என்று நீங்கள் அப்படி செய்கிறீர்கள்” என்று பதில் சொன்னேன். அதற்கவர் “அது. ஒருபுறமிருக்கட்டும். நான் முதல் முதல் கோர்ட்டில் என் ஆசனத்தில் உட்கார வரும்போது தலை நிமிர்ந்து கொண்டு வத்தேன். அப்போது பங்கா இழுக்கும் கோர்ட்டுக்கு பின்புறமிருக்கும் வேலையாள் வேகமாய் பங்காவை இழுத்துவிட்டான். உடனே என் தலை குட்டை பங்காவினால் தாக்கப்பட்டு எகிரிப் போய் விழுந்தது. அது முதல் நான் வரும்போதெல்லாம் மிகவும் தலை குனிந்து கொண்டுவர ஆரம்பித்தேன்” என்று பதில் சொன்னார். இது நடந்தபோது ஹைகோர்ட்டில் இப்போதிருப்பது போல் மின்சார பங்கா (electric fan) கிடையாது.

இதன்பிறகு இந்த கோர்ட்டில் ஜட்ஜாக நியமிக்கப்பட்டவர் சர் வி. சி. தேசிகாச்சாரியார். சாதாரணமாக இவர் கோர்ட்டில் எனக்கு அதிக கேசுகள் கிடைக்கும். இதற்குக் காரணம் நான் அவரது நன்மதிப்பைப் பெற்றதே என்று நினைக்கிறேன். இவர் ஒரு சிநேகிதரிடம் ஆங்கிலத்தில் சொன்னதாக அந்த சிநேகிதர் எனக்கு தெரிவித்ததை தமிழில் மொழி பெயர்த்து எழுதுகிறேன். “தங்கள் கட்சிக்காரர்களின் ஊழல்களை மறைத்து கோர்ட்டார் கண்ணில் மண்ணைப் போட்டு வியாஜ்யங்களை ஜெயிக்க விரும்பாத வக்கீல்கள் இரண்டு பெயர்கள்தான். ஒருவர் பி. எம். சிவஞான முதலியார், மற்றொருவர் சம்பந்த முதலியார்” என்றனராம்.

சிவில், வியாஜ்யங்களில் பீஸ் (Fees) விஷயத்தில் கோர்ட்டார் சட்டப்படி, ஒவ்வொரு வியாஜ்யத்திற்கும் என்ன பீஸ் உண்டோ அதற்குக் குறைவாக வாங்குவதில்லை என்று தீர்மானித்து அதன்படியே நடந்துவந்தேன்.

எனது ஆருயிர் நண்பரான சி. ரங்கவடிவேலு முதலியார் தானும் பி. எல். பரிட்சையில் தேறினவுடன் அவரை எனது ஜூனியர் (Junior) ஆக வைத்துக்கொண்டு கோர்ட் வேலையைப் பார்த்துவந்தேன். அவர் 1923-ஆம் வருஷம் எனது துரதிர்ஷ்டத்தால் காலவியோகமாக வக்கீல் வேலையில் முன்பே குறைந்திருந்த ஆர்வம் மிகவும் குன்றியது. ஆகவே ஸ்ரீமான் சர் சி. பி. ராமசாமி ஐயர் அவர்கள் 1924-ஆம் ஆண்டு என்னை அழைத்து ஸ்மால்காஸ் கோர்ட் ஜட்ஜ் வேலையை ஒப்புக் கொள்கிறாயா என்று கேட்டபோது உடனே ஒப்புக்கொண்டேன், இதனுடன் என் நடுப்பருவ அனுபவங்களை முடித்துக் கொள்கிறேன்.
-------------

7. முதிர் பருவம்

நான் எனது 51-வது வயதில் ஸ்மால்காஸ் கோர்ட் ஜட்ஜாக நியமிக்கப்பட்டேன். எனக்கு 55 வயதானவுடன் அவ் வயதிற்குமேல் கவர்ன்மெண்ட் உத்தியோகத்திலிருந்து விலக வேண்டும் என்னும் நியமனப்படி அவ் வேலையிலிருந்து! விலகினேன். இதனிடையே சில மாதங்கள் சீப் பிரசிடென்சி மாஜிஸ்டிரேட்டாக வேலை பார்த்தேன். மேற்கண்டபடி ஜட்ஜாக இருந்தகாலத்தின் சில வியவகாரங்களை இங்கு எழுதுகிறேன்.

நான் ஜட்ஜாக முதல் நாள் உட்கார்ந்தபோது வக்கீல்களின் தரப்பாக காலஞ்சென்ற ஸ்ரீமான் சேஷாச்சாரியார் அவர்கள் என்னை வரவேற்று சில வார்த்தைகள் பேசியபோது அதற்கு நான் பதில் சொன்னபோது “நான் ஜட்ஜ் வேலை நடத்துங்கால் மனிதர் எவருக்கும் பயப்படாது தெய்வம் ஒன்றிற்கே பயந்து நடப்பேன்” என்று உரைத்தது ஞாபகமிருக்கிறது. அதன்படி தினம் நான் கோர்ட்டிற்குப் போய் என் நாற்காலியில் உட்காரு முன் நியாயப்படி விசாரித்து தீர்மானம் கொடுக்க எனக்கு புத்தியையும் மன உறுதியையும் கொடுக்கும்படியாக ஈசனைத் தொழுத பிறகே உட்காருவேன். சாதாரணமாக 25 வருடங்களுக்கு மேல் ஸ்மால்காஸ் கோர்ட்டில் வக்கீலாக வியவஹாரங்கள் நடத்திய படியால் இக்கோர்ட்டில் ஜட்ஜ் வேலை பார்ப்பது எனக்கு சுலபமாக இருந்தது.

ஸ்மால்காஸ் கோர்ட் வியாஜ்யங்களைப் பற்றி சில விஷயங்கள் எழுத விரும்புகிறேன். என் தமயனார் 1894-ஆம் வருஷம் வக்கீலாக வியவஹாரம் நடத்திய போது இந்த சின்ன கோர்ட்டில் மாத்திரம் 32 ஆயிரம் வியாஜ்யங்களுக்குக் குறையாமலிருந்தன! அது குறைந்து கொண்டே வந்து. நான் 1898-ஆம் வருஷம் வக்கீலானபோது சுமார் 25 ஆயிரம் கேசுகள் வருடத்திற்குத் தீர்மானிக்கப்பட்டன. நான் ஜட்ஜான போது சுமார் 20 ஆயிரம் கேசுகள் இருந்தன வருடம் ஒன்றிற்கு, தற்காலம் 5 அல்லது 6 ஆயிரம் கேசுகளுக்கு மேல் இல்லை.

ஜட்ஜான ஒரு வாரத்திற்கெல்லாம் கேசுக்களை, சீக்கிரம் முடிக்கும் வழியைக் கற்றுக் கொண்டேன். இதற்கு இரண்டு மூன்று குணங்கள் அநுகுணமாய் இருந்தன. அதாவது அக் காலத்தில் சாதாரணமாக மாறுபாடிகள் கேசுகள் தான் அதிக மாயிருந்தன. வக்கீலாயிருந்த போது ஏறக்குறைய எல்லா மாறுபாடிகளும் என்னிடம் தங்கள் வியாஜ்யங்களை ஒப்புவிப் பார்கள். இதனால் அவர்கள் கணக்கு ஊழல்களெல்லாம் நன்றாய்த் தெரியும். ஆகவே அவர்களுடைய வியாஜ்யங்கள் நான் ஜட்ஜாக இருக்கும் போது என் முன் வந்தால் அவர்கள் கணக்குகளின் மர்மங்களையெல்லாம் அறிந்திருந்தபடியால், அவர்கள் பொய் சொல்லி என்னை ஏமாற்றுவது அசாத்தியமாயிருந்தது. இதைக் கண்ட மாறுபாடிகள் தங்கள் வியாஜ்யங்கள் என் கோர்ட்டுக்கு முன்பு வராதபடி செய்ய முயன்றனர். இதையறிந்த அக்கால சீப் - ஜட்ஜாக இருந்த திவான் பகதூர் C. R. திருவேங்கடாச்சாரியார் இதைத் தடுத்து வந்தனர். மாறுபாடிகள் என் கோர்ட்டுக்கு முன்பாக வருவதற்கே அஞ்சுவார்கள் என்றே சொல்ல வேண்டும். அவர்கள் கோர்ட்டுக்கு வெளியில் என்னை எப்போதாவது சந்தித்தால் “என்னாங்க சாமி, வக்கீலாக எங்ககிட்டே பீஸ் (Fees) வாங்கி சாப்பிட்டுட்டு இப்போ எங்க வாயிலே மண்ணை போடுகிறீர்களே” என்று கேட்பார்கள். இரண்டாவது, வக்கீல்கள் தங்கள் - வியாஜ்யங்களைத் தள்ளி வைக்க வேண்டுமென்று அடிக்கடி கேட்காம லிருக்க ஒரு யுத்தி செய்தேன். வியாஜ்யத்திற்கு வாய்தா போட வேண்டுமென்று கேட்கும் வக்கீல்களை யெல்லாம் மறு வாய்தாக்கள் எதிர்ப்பட்சத்திற்கு தினம் படி (Day fees) கொடுக்க வேண்டுமென்று உத்தரவிடுவேன். இதனால் இரண்டு நன்மைகள் உண்டாயின. ஒன்று கட்டாயமாக வாயிதா வேண்டியவர்கள் தான் இதற்கு உடன்பட்டு கேட் பார்கள், இரண்டாவது இதனால் வக்கீல்களுக்கு மாத வரும் படி அதிகமாகியது. நான் கோர்ட்டை விட்டு விலகியபின் எனது சிநேகிதர்களான பல வக்கீல்கள் என்னை சந்திக்கும் போது “உங்களுடன் எங்களுக்கு டேகாஸ்ட் வரும்படி அற்றுப் போச்சுது” என்று முறையிட்டிருக்கின்றனர்.

மேற்கண்ட மார்க்கங்களின் மூலமாக வியாஜ்யங்களைத் துரிதமாகத் தீர்மானிக்கும் வழிகண்டபின் தினம் என் கோர்ட் வியாஜ்யங்களை முடித்துவிட்டு முதல் கோர்ட்டிலிருந்து வியாஜ்யங்களை அனுப்பும்படி சீப் ஜட்ஜிக்கு வேண்டுகோள் அனுப்புவேன். ஒரு சமயம் முதல் ஜட்ஜும் மூன்றாவது ஜட்ஜும் ஏதோ அவசர நிமித்தமாய் கோர்ட்டுக்கு வராமவிருந்தபோது மூன்று கோர்ட் கேசுகளையும் நான் கவனித்தது ஞாபகமிருக்கிறது

சாதாரணமாக 4 மணிக்குள் கோர்ட் வேலையை முடித்துக் கொண்டு சபைக்குப் போய் விடுவேன். சாயங்காலம் ஐந்து மணியானவுடன் எந்த வியாஜ்யமானாலும் நடத்தாது வாயிதா போட்டுவிடுவேன். ஐந்து மணிக்குமேல் கோர்ட் நடப்பது தவறு என்பது என் அபிப்பிராயம். நான் வக்கீலாக இருந்தபோது ஐந்து மணிக்கு மேல் வியாஜ்யங்களை நடத்துவதை ஆட்சேபித்திருக்கிறேன். 1926-ஆம் வருஷம் நான் ஜட்ஜாக இருந்தபோது நடந்த ஒரு சம்பவத்தை இங்கு எழுதுகிறேன். முன்னாள் இரவு மரித்த என் மனைவியின் தேகத்தை இடுகாட்டிற்குக் கொண்டு போய் சம்ஸ்காரம் செய்தவுடன் வீட்டிற்கு வந்து ஸ்நானம் செய்துவிட்டு பூஜையை வழக்கம் போல் முடித்துவிட்டு உணவு கொண்டு கோர்ட்டுக்கு வழக்கம் போல் போனேன். அப்பொழுது. சுமார் 11 மணியிருக்கும். இதற்குள் எனக்கு துக்ககரமான சம்பவத்தைக் கேள்விப்பட்டு முதல் ஜட்ஜாக இருந்த ஸ்ரீமான் திருவேங்கடாச்சாரியார் நான் அன்று கோர்ட்டுக்கு வரமாட்டேனென்று என் கோர்ட் வியாஜ்யங்களை யெல்லாம் வாய்தa போடுவதற்காக தன் கோர்ட்டுக்கு மாற்றிக்கொண்டார். நான் கோர்ட்டுக்கு வந்ததாகக் கேள்விப்பட்டவுடனே என் அறைக்கு வந்து துக்கம் விசாரித்துவிட்டு “மிஸ்டர் சம்பந்தம் இன்றைக்கு ஏன் கோர்ட்டுக்கு வந்தாய்” என்று கொஞ்சம் வெறுப்புடன் கேட்டார். அதற்கு நான் “என்னை மன்னிக்க வேண்டும். என் மனைவி நோயாயிருந்தபோது என்னால் இயன்ற அளவு சிகிச்சை செய்து பார்த்தேன். இறந்த பின் துக்கப்பட்டு என்ன பயன். என் மனதைத் தேற்றிக் கொண்டேன். என்னுடைய துக்கம் என்னுடனிருக்க வேண்டும். என்னால் மற்றவர்களுக்குக் கஷ்டம் கொடுப்பதில் என்ன பலன்? இன்றைக்கு என் கோர்ட்டில் வாதிப் பிரதிவாதிகளும் சாட்சிகளும் சேர்த்து சுமார் 100 பெயர்களிருக்கலாம். இத்தனை பெயர்களும் மற்றொரு நாள் வரும்படியான கஷ்டத்திற்கு நான் அவர்களை உள்ளாக்கக் கூடாதென்று தீர்மானித்து வந்தேன் இங்கு; அன்றியும் கோர்ட்டுக்கு வந்து வேலை பார்த்தால் என் துக்கத்தைக் கொஞ்சம்மறந்திருப்பேன்” என்று சொல்லி அவரை என் கோர்ட் வியாஜ்யங்களையெல்லாம் என் கோர்ட்டுக்கே அனுப்பிவிடும்படி கேட்டுக்கொண்டேன். இச் சந்தர்ப்பங்களில் நான் சீப் ஜட்ஜாக சிலகாலம் ஆக்ட் செய்தபோது நடந்த ஒரு வியவஹாரத்தை இங்கு எழுதுகிறேன். ஒரு நாள் ஐந்தடித்தவுடன் கீழே ஸ்மால்காஸ் கோர்ட் ஆபீசுக்குள் நுழைந்து ஐந்து மணிக்குமேல் வேலை செய்து கொண்டிருந்த குமஸ்தாக்களையெல்லாம் அழைத்து “கவர்மெண்டார் உங்களுக்கெல்லாம் ஐந்து மணி வரையில் வேலை செய்ய சம்பளம் கொடுக்கிறார்களே யொழிய வேறில்லை. ஆகவே நீங்கள் ஐந்தடித்தவுடன் கட்டுக்களைக் கட்டிவிட்டு வீட்டிற்குப் போங்கள். மறு நாள் சரியாக பத்தரை மணிக்கு வந்து விடுங்கள்” என்று சொல்லி எல்லோரையும் வீட்டிற்கனுப்பினேன்.

சின்ன கோர்ட் பெய்லிப்கள் (Bailife) சாதாரணமாக லஞ்சம் வாங்குகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த விஷயமே இதைத் தடுக்க ஒரு சிறிது நான் முயன்றேன் என்று சொல்ல வேண்டும். ஒருமுறை ஒரு வக்கீல் ஒரு பெய்லிப் லஞ்சம் வாங்கிக்கொண்டு பிரதிவாதியைப் பிடிக்காமலிருக்கிறான் என்று என்னிடம் வந்து முறையிட்டார். நான் மத்தியான போஜனத்திற்காக 2 மணிக்கு என் அறைக்குப் போனவுடன் அந்த பெய்லிப்பை அழைத்து அந்த பிரதிவாதியை சாயங்காலத்திற்குள் பிடித்துக்கொண்டு வரவேண்டுமென்று கண்டிப்பாய் கூறினேன். இதன் பலனாக நான் 3 மணிக்கு கோர்ட்டுக்குப் போகுமுன் அந்த கட்சிக்காரனைப் பிடித்துக்கொண்டு வந்து விட்டான். இம்மாதிரியாக நான் கொஞ்சம் கண்டிப்பாயிருந்ததினால் என் காலத்தில் பெய்லிப்கள் லஞ்சம் வாங்குவதே நின்றுவிட்டது என்று நான் சொல்லவில்லை. ஆயினும் மேல் அதிகாரிகள் கவனித்தால் இவ்வழக்கம் மிகவும் குறையும் என்பது என் அபிப்பிராயம்.

இவ்வாறு நான் கண்டிப்பாய் இருந்தபடியால் வக்கில்கள் பெரும்பாலர்களுடைய அன்பினைப் பெற்றேன் என்று நினைக்கிறேன். நான் எனது 55-வது வயதில் இவ்வேலையினின்றும் விலகியபோது அவர்கள் எனக்கு ஒரு தேநீர் விருந்து கொடுத்தனர். அன்றியும் கோர்ட் சிப்பந்திகளும் பிரத்யேகமாக வேறொரு தேநீர் விருந்து கொடுத்தனர்.

இதற்கிடையில் சில மாதங்கள் சீப் பிரசிடென்சி மாஜிஸ்டிரேட்டாக வேலை பார்க்கும்படி நேரிட்டது. அக்காலமெல்லாம் கோர்ட் வேலையெல்லாம் மத்யானத்திற்குள் முடித்துக்கொண்டு என் கோர்ட் வீடுபோய் சேர்வேன், ஒரு நாளாவது சாயங்காலத்தில் கோர்ட் வேலை பார்த்ததாக எனக்கு ஞாபகமில்லை. அதுசமயம் இப்போதிருப்பதுபோல், அத்தனை ஆனரெரி மாஜிஸ்டிரேட்டு கோர்ட்டுக்கள் கிடையாது. தற்காலம் இந்த ஆனரெரி கோர்ட்டுக்கள் பல ஏற்படுத்தப்பட்டும் ஐந்து ஸ்டைபென்டியரி (Stipendiary) கோர்ட்டுகளுக்கு என்ன வேலையிருக்கிறதென ஆச்சரியப்படுகிறேன்.

சுமார் 4 வருஷங்கள் நான் ஜட்ஜாயிருந்தபோது ஒரே ஒரு வியாஜ்யத்தில்தான் என் தீர்மானம் ஐகோர்ட்டாரால் மாற்றப்பட்டது என்று எழுத விரும்புகிறேன்.

மேற்கண்டபடி சிவில் கோர்ட்டிலும் கிரிமினல் கோர்ட்டிலும் நான் நியாயாதிபதியாக இருந்திருக்கிறேன். இவ்விரண்டில் சிவில் கோர்ட் ஐட்ஜாயிருந்ததுதான் என் மனதிற்குப் பிடித்தது. ஏனென்றால் ஸ்மால்காஸ் கோர்ட் வியாஜ்யத்தில் என்னையுமறியாதபடி தவறாகத் தீர்மானித்தாலும் வியாஜ்யத்தில் தோற்றக் கட்சிக்காரனுக்கு சொல்ப நஷ்டத்துடன் போகிறது. மாஜிஸ்டிரேட்டாக நான் தவறாக ஒருவனை தண்டித்தால் அவனுடைய வாழ்க்கையே அழிந்தாலும் அழியுமல்லவா?
-----------------

8. 55 வயதுக்கு மேற்பட்ட சரித்திரம்

1928-ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் முதல் தேதி முதல் நான் கவர்ன்மெண்ட் வேலையிலிருந்து விலக வேண்டி வரும் என்று முன்பே அறிந்திருந்தபடியால் அதற்காக அது முதல் என் வாழ்நாட்களை எப்படி கழிப்பது என்று ஒரு தினசரிப் பட்டி ஏற்படுத்திக்கொண்டேன். அதை எழுது முன் எனது நண்பர்களில் பலர் நீ ஏன் மறுபடியும் வக்கீலாக பழகலாகாது என்று என்னைக் கேட்டிருக்கின்றனர். அன்றியும் ஜனவரி மாதம் 31-ந்தேதி என் கோர்ட் வேலையை முடித்தவுடன் ஸ்மால்காஸ் கோர்ட் வக்கீல்கள் ஒன்றுகூடி காலஞ்சென்ற எனது நண்பர் பி. எம். சிவஞான முதலியார் மூலமாக என் பிரிவைப்பற்றி ஏதோ உபசார வார்த்தைகளை கூறிய பிறகு “நீங்கள் மறுபடியும் ஹைகோர்ட்’ வக்கீலாக வந்து கலந்து கொண்டால் எங்களுக்குத் திருப்திகரமாயிருக்கும்” என்று கூறியபோது “அப்படி செய்ய எனக்கு இஷ்டமில்லை, நீங்கள் கேட்பதை மறுப்பதற்காக மன்னிக்க வேண்டும்” என்று கூறினேன். அதற்கு முக்கிய காரணம் ஒருமுறை ஜட்ஜாயிருந்த பிறகு மறுபடியும் வக்கீலாக போவது சரியல்ல என்று நான் தீர்மானித்ததேயாம். மறு நாள் ஒரு தினசரி ஆங்கில பத்திரிகையின் ரிபோர்டர் (Reporter) என்னிடம் வந்து “இனி உங்கள் காலத்தை எப்படிக் கழிக்கப் போகிறீர்கள்” என்று கேட்டபோது, “ஈஸ்வரன் எனக்கு இனி அருளும் ஆயுட்காலத்தையெல்லாம் தமிழ் நாடகத்திற்காகவும் தமிழ் பாஷைக்காகவும் தொண்டு செய்யத் தீர்பானித்திருக்கிறேன்” என்று பதில் கூறினேன். அன்று முதல் இந்நாள் வரை அந்த இரண்டு தொண்டுகளையும் என்னாலியன்ற அளவு செய்து வருகிறேன் என்பதை இதை வாசிக்கும் எனது நண்பர்கள் அறிவார்கள் என்று நினைக்கிறேன். பிறகு வக்கீலாகப் புகவேண்டுமென்று என்னை வற்புறுத்திய என் பல பந்துக்களுக்கும் சிநேகிதர்களுக்கும் நான் கூறின பதிலை இங்கு எழுதுகிறேன். அவர்கள் என்னிடம் வந்து “நீங்கள் ஏன் மறுபடியும் வக்கீலாக சேரலாகாது?” என்று கேட்டதற்கு நான் “ஏன் மறுபடியும் வக்கீலாகும்படி கேட்கிறீர்கள்?” என்று நான் வினவினேன். அதற்கு அவர்கள் “இல்லை நீங்கள் 7 வருஷம் கவர்ன்மெண்ட் உத்தியோகத்தில் இல்லாதபடியால் உங்களுக்கு பென்ஷன் (Pension) கூட ஒன்றும் கிடையாதே. ஆகையால் மற்றவர்கள் செய்வதுபோல் நீங்கள் மறுபடியும் சுலபமாக ஆட்வகேட் (Advocate) ஆகி வேலை பார்த்து பணம் சம்பாதித்து சுகமாய் வாழலாமே என்று கேட்கிறோம்” என்றார்கள். அதற்கு நான் “மறுபடியும் இந்த வேலை பார்த்து கஷ்டப்பட்டு பணம் சம்பாதித்து அடையவேண்டு மென்கிற சுகத்தை அந்த கஷ்டமெல்லாம் இல்லாமல் இப்போது அநுபவித்துக் கொண்டிருக்கிறேனே. அதையேன் தடுக்கிறீர்கள்” என்று பதில் சொன்னேன்.

சிலர் உங்களுக்காக இல்லாவிட்டாலும் உங்கள் குழந்தைகளின் பொருட்டு நீங்கள் அப்படி செய்யலாகாதா? என்று கேட்டதற்கு அடியிற் கண்டபடி பதில் உரைத்தேன்:- “ஈசன் கருணையினால் எனக்கிருப்பது ஒரு ஆண் பிள்ளையும் இரண்டு பெண்களும். அப்பிள்ளைக்கு நான் சம்பாதித்து வைத்த பொருளே போதுமானது. என் இரண்டு குமாரத்திகளையும் தக்க இடத்தில் விவாகம் செய்து கொடுத்து விட்டேன். அவர்கள் தங்கள் புருஷன் வீட்டில் பரமேஸ்வரன் கருணை யினால் சுகமாக வாழ்கிறார்கள். இப்படியிருக்க எதற்காக நான் மறுபடியும் கோர்ட் வியாஜ்ய வேலையில் கஷ்டப்பட வேண்டும்”. என்று சொல்லி “என் இச்சைப்படி, தமிழுக்காக உழைப்பதை தடுக்காதீர்கள்” என்று கேட்டுக் கொண்டேன்.
-------------

9. நான் கோயில் தர்மகர்த்தாவாக வேலைப்பார்த்தது

தெய்வ பக்தி என்பது என்னுடன் பிறந்திருக்க வேண்டு மென்று நினைக்கிறேன். என் தாய் தந்தையர் எனக்கு சம்பந்தம் என்று பெயரிட்ட காரணத்தை முன்பே எழுதியிருக் கிறேன். தினம் பூஜை செய்யும் அவர்கள் என்னை சிறு வயது முதல் பக்தி மார்க்கத்தில் செலுத்தினார்கள் என்பதற்கு சந்தேகமில்லை. நான் சுமார் 2 வயது குழந்தையாய் இருந்தபோது என் தகப்பனார் சிவபூஜை செய்த புஷ்பங்களை கெடுத்து அவரது பாதக்குரடு ஒன்றை எடுத்து அதன் பேரில் என் தகப்பனார் செய்வதுபோல பூஜை செய்ததாக என் தாயார் எனக்குப் பிறகு கூறியிருக்கிறார்கள். இது எனக்கு ஞாபகமில்லை. ஆயினும் இது நேர்ந்திருக்க வேண்டுமென்று நம்புகிறேன். என் தாயார் பொய் சொல்லவேண்டிய காரண மில்லை.

எனக்கு ஞாபக சக்தி உ.தித்த காலமுதல், சாதாரணமாக என் விளையாட்டெல்லாம் பெரும்பாலும் பிள்ளையார், மீனாட்சி அம்மன், வெங்கடேசப் பெருமாள் இவர்களுடைய செப்பு அல்லது மர விக்ரஹங்களை வைத்து அவைகளுக்கு அலங் காரம் செய்து, உற்சவம் செய்வதேயாம். சனிக்கிழமை வந்தால், முன்னாள் வெள்ளிக்கிழமை என் தாயார் விசேஷ பூஜை செய்த புஷ்பங்களை வைத்துக்கொண்டு நான் என் நேர் மூத்தவராகிய ஆறுமுகத்துடன் சாமி தூக்கி விளையாடுவோம்.

அன்றியும் என் தகப்பனார் சென்னையில் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கும் பெரிய காஞ்சீபுரம் கோயிலுக்கும் தர்ம கர்த்தாவாயிருந்தபடியால் அக்கோயில்களின் உற்சவங் களுக்கு என்னையும் என் தமயனையும் அடிக்கடி அழைத்துக் கொண்டு போன படியால் கோயில்களின் உற்சவங்களைப் பார்ப்பதில் எனக்கு மிகுந்த சந்தோஷம் ஏற்பட்டது.

மேலும் எங்கள் கல்வி பயிற்சிக்கு இன்றியமையாததாக எண்ணி எங்கள் தகப்பனார் எங்கள் பள்ளிக்கூடத்து. கோடை விடுமுறை தோறும் எங்களை வெளியூர்களுக்கு அனுப்புவார். அச்சமயங்களில் ஆங்காங்குள்ள கோயில்களைப் பார்ப்பதே எனக்குப் பெரிய ஆனந்தமாயிருந்தது. எனது 10 அல்லது 11 வயதில் நான் பார்த்த காஞ்சீபுரம், தஞ்சாவூர், மதுரை முதலிய இடங்களிலுள்ள பெரிய கோயில்களின் அழகிய, உருவங்கள் அப்படியே என் மனதில் பதிந்திருக்கின்றன. அக் கோயில்களையெல்லாம் ஒரு முறை பிறகு நான் பார்த்திருக்கிறேன் ஆயினும் அவைகளை முதன் முதல் நான் பார்த்த போது எனக்குண்டான சந்தோஷம் பிறகு கிடைக்கவில்லை. என்னுடைய 21-வது வயதில் (எனக்கு ஞாபகமிருக்கிறபடி) என் தகப்பனார் எனக்கு சிவதீட்சை செய்துவைத்தார் எங்கள் குருக்களாகிய திருவாலங்காடு குருக்களைக் கொண்டு.

என் தமயனார் ப. ஐயாசாமி முதலியார் சில வருடங்கள் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தர்மகர்த்தாவாக நியமிக்கப்பட்டு வேலை பார்த்து வந்தார். அவர் 1900-வது வருஷம் டிஸ்டிரிக் முன்சீப்பாக நியமிக்கப்பட்ட போது நான் அக்கோயில் தர்மகர்த்தாவாக நியமிக்கப்பட்டேன். அது முதல் 1934-ஆம் வருஷம்வரையில் அவ்வேலை பார்த்துவந்தேன். இந்த 24 வருஷங்களும் என்னுடன் வேலை பார்த்து வந்த தர்மகர்த்தாக்களுடனாவது ஓவர்சியர்களுடனாவது கோயில் சிப்பந்திகளுடனாவது சச்சரவு வியாஜ்யமின்றி நடந்தேறிய தென்று சந்தோஷத்துடன் இங்கு எழுதுகிறேன்.

என் காலத்தில் நேர்ந்த சில சீர்த்திருத்தங்களைப்பற்றி எழுத விரும்புகிறேன். அதற்கு முன்பாக உற்சவப் பத்திரிகையில் கண்டபடி, மணிப்பிரகாரம் உற்சவங்கள் நடந்தேறுவதில்லை. உற்சவங்களையெல்லாம் லக்னப்படியும் பத்திரிகைகளில் கண்ட மணிப்பிரகாரம் நடத்தும்படி ஏற்பாடு செய்தேன், தர்மகர்த்தாக்கள் கோயில் பணத்தை நேராக வாங்கவும் கூடாது நேராக செலவழிக்கவும் கூடாது என்று ஏற்பாடு செய்தேன். எல்லா தேவஸ்தான வரும்படியும் முன்பு பாங்கில் கட்டப்பட்டு செலவெல்லாம் செக்குமூலமாகச் செய்யப்பட வேண்டுமென்று ஏற்படுத்தினேன். இவ்விரண்டு ஏற்பாடுகளையும் இங்கு எழுதியது. ஏதோ தற்புகழ்ச்சியாகவல்ல. இவைகளை மற்ற கோயில் தர்மகர்த்தாக்கள் பின்பற்றி நடந்தால் தேவஸ்தானங்களைப்பற்றி மற்றவர்கள் குறைகூற அதிக இடமிராதென்று தெரிவித்துக்கொள்வதற்கே எழுதுகிறேன்.

என்காலத்தில் கோயிலுக்கு கோபுரமில்லாக் குறை நிவர்த்தியாயது. அதை முடித்துவைத்த பெருமை திருவல்லிக்கேணியிலிருந்த கோபுரம் செட்டியார் என்று பெயர்பெற்ற இரண்டு சகோதர்களுக்கு உரித்தாம். (அவர்கள் பெயர் எனக்கு ஞாபகமில்லை.) அவர்களுக்கு என்னால் இயன்ற அளவு உதவி செய்தேன். அன்றியும் என் காலத்தில் திருமயிலை கோயில் குளமானது கருங்கல்லால் அமைக்கப்பட்டது. அதற்கு முன்பு இரண்டு சிறு படித்துறைகள் தவிர மற்ற பாகமெல்லாம் துருக்கல்லாய் இருந்தது. இதைப்பற்றிய சில வியவஹாரத்தை எழுத விரும்புகிறேன்.
இப்பெரிய வேலையை ஆரம்பித்தபோது கோயிலில் இதற்காக ஒரு சன்யாசி சேமித்து வைத்த 5000 ரூபாய் தானிருந்தது. இதை முடிக்க வேண்டுமென்று நான் ஆரம்பித்த போது மைலாப்பூர் வாசிக்களில் பலர் இப்பெரிய வேலைக்கு குறைந்தபட்சம் ஒரு லட்சமாவது பிடிக்குமே, இவரால் என்ன முடியப்போகிறது என்று கூறினார்கள். “சுவாமி யிருக்கிறார்” என்று அவர் மீது பாரத்தை சுமத்தி இவ்வேலையை ஆரம்பித்தேன். இதற்காகப் பணம் சேர்ப்பதற்கு பல உபாயங்கள் தேடினேன். பல செல்வவந்தர்களிடம் யாசித்தேன். தம்பிடி காலணா உண்டியில் மாத்திரம் சுமார் 8000 ரூபாய்கள் சேர்த்தேன். எதிலும் போதுமான வரும்படி வரவில்லை. ஒருநாள் பரமசிவத்தின் கருணையினால் எனக்கு ஒரு யோசனை தோன்றியது. அதன் படி படியின் செலவின் பொருட்டு 108 ரூபாய் கொடுப்பவர்களுக்கு அவர்கள் பெயரால் ஒரு கல்வெட்டு படித்துறையில் போடப்படும் என்று பிரசுரம் செய்தேன். உடனே விரைவில் குளத்தை முற்றிலும் கருங்கல்லாய் ஆக்கவேண்டிய பணம் வந்து சேர்ந்துவிட்டது!

ஒருமுறை கவர்னர் ஒருவர் அமெரிக்காவிலிருந்து சில துரைசானிகளும் துரைகளும் வந்திருப்பதாகவும் அவர்கள் மயிலை கபாலீஸ்வரர் கோயிலைப் பார்க்க விரும்புவதாகவும் சொல்லி அனுப்பினார். அதற்கு நான் அவர்கள் கோயிலுக்குள் துவஜஸ்தம்பம் வரையில் பார்க்கலாமென்றும் அன்றியும் கோயிலுக்குள் நுழையும் முன் அவர்கள் தங்கள் பூட்ஸ்களைக் களைந்துவிட்டுத்தான் வரக்கூடும் என்று பதில் சொல்லி அனுப்பினேன், என்னிட... ம் கடிதம் கொண்டு வந்த ஐரோப்பியர் இரண்டாவது நிபந்தனைக்கு அவர்கள் உடன்படுவது கஷ்டம் என்று தெரிவித்தார். அதற்கு நான் அப்படி செய்யா விட்டால் அவர்கள் கோயிலுக்குள் வரக் கூடாது என்று மறுத்தேன். பிறகு அமெரிக்க சீமான்களும் சீமாட்டிகளும் தங்கள் பாதரட்சைகளைக் களைந்துவிட்டே கோயிலுக்குள் வந்தனர்.

இன்னொருமுறை பிரம்மோற்சவத்தின்போது ஐந்தாம் நாள் ரிஷபவாகன உற்சவத்தைப் பார்க்க மாடவீதியில் ஒரு வீட்டின் மெத்தையின் பேரில் கவர்னரும், அவரது மனைவியும் சில சிநேகிதர்களுடன் வந்திருந்தனர். ஸ்வாமி அவ்வீட்டிற்கு எதிரில் வந்தபோது ஸ்வாமியை வாகனத்துடன் அவர்கள் இருந்தபுறம் திருப்பிக் காட்டவேண்டும் என்று அந்த வீட்டின் சொந்தக்காரர் கேட்டார். அப்படி செய்யமுடியாது அவர்கள் சுவாமியை நேரில் தரிசனம் செய்ய வேண்டுமென்றால் கீழே இறங்கிவந்து நேராக தரிசனம் செய்யட்டும் என்று பதில் உரைத்தேன்.

இவ்விரண்டு விஷயங்களையும் நான் எழுதியது நான் இவ்வாறு செய்துவிட்டேன் என்று ஜம்பமாக சொல்லுவதற் கல்ல. நாம் நம்முடைய மதத்தையும் ஒழுக்கத்தையும் நாமே தாழ்த்திக்கொள்ளலாகாது என்று எனது நண்பர்களுக்குத் தெரிவிக்கும் பொருட்டே.

மற்றொருதரம் சென்னை முனிசிபல் சேர்மன் (Municipal chairman) ஆக இருந்த ஒரு ஆங்கிலேயர் இரண்டு குதிரைகள் பூட்டிய வண்டியில் பிராடிஸ் ரோடு வழியாக அடையாறு கிளப்புக்குப் போய்கொண்டிருந்தபொழுது எதிரில் பஞ்ச மூர்த்திகள் வர பெரும்கும்பலாய் இருந்தபடியால் தான் போவதற்கு இடைஞ்சலாய் இருக்கிறதென்று சொல்லி ஸ்வாமிகளை ஒருபுறம் ஒதுக்கும்படி கேட்டனுப்பினார். அதற்கு நான் மனிதனுக்காக தெய்வத்தை ஒதுங்கச்செய்வது ஒழுங்கல்ல, தெய்வத்திற்காக மனிதன் தான் ஒதுங்கிப் போகவேண்டும் என்று சொல்லி அனுப்பினேன். அதன்பேரில் இந்த அதனப்பிரசங்கி பதில் யார் சொன்னது என்று விசாரிக்க, அருகிலிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் என் பெயரைச் சொல்லி அவர் பிடிவாதக்காரர் என்று சொன்னாராம். அதன் மேல் அந்த ஐரோப்பியர் தன் வண்டியை பக்கத்து வீதி வழியாக சுற்றிக்கொண்டு சென்றனராம். நம்மிடத்தில் தவறில்லாத போது நாம் ஒருவருக்கும் பயப்படவேண்டியதில்லை என்பது என் அபிப்பிராயம்.

1924-ஆம் வருஷம் எனக்கு சிறிய கோர்ட் ஜட்ஜ் வேலை யானபோது ‘உன் கோர்ட்டிலேயே ஏதாவது கோயில் வியவ ஹாரங்கள் தீர்ப்புக்கு வரலாம். ஆகவே நீ கோயில் தர்மகர்த்தா வேலையை விட்டு விலகிக்கொள்வது நியாயம்’ என்று சர் சி. பி. ராமஸ்வாமி ஐயர் அவர்கள் சொன்னதின்பேரில் அரை மனதுடன் மயிலை கபாலீஸ்வரர் கோயில் தர்மகர்த்தா வேலையினுன்றும் விலகினேன்.
----------------

10. நான் எந்த கட்சியையும் சேராதது

சென்னையில் பல கட்சிகள் உண்டு என்பதை எல்லோரும் அறிந்த விஷயமே. முக்கியமாக காட்கிரஸ் கட்சி, ஜஸ்டிஸ் கட்சி என்று இரண்டு பெரிய கட்சிகளைப் பற்றி அறியாதோர். கிடையாதல்லவா? இவைகளைப்பற்றிய என் விர்த்தாந்தங்களை இங்கு எழுத விரும்புகிறேன்.. நான் காலேஜில் படித்தபோது காங்கிரஸ் கூட்டம் சென்னையில் கூடிய போது ஒரு வாலண்டியராக இருந்தேன். இது நேர்ந்தது 1894-ஆம் வருஷம். அதற்குமுன் சென்னையில் காங்கிரஸ் கூடிய போது அதன் வேடிக்கையைப் பார்க்க என் தகப்பனார் என்னை அழைத்துக்கொண்டுபோனது ஞாபகமிருக்கிறது. 1894--ஆம் ஆண்டிற்குப்பின் ஒருமுறை சென்னையில் காங்கிரஸ் மகாசபை கூடியபோது நான் ஒரு வரவேற்பு அங்கத்தினனாக இருந்தேன். இவ்வளவதான் இதில் நான் சம்பந்தப்பட்டது.

இனி ஜஸ்டிஸ் கட்சியைப்பற்றி எழுதுகிறேன். காலஞ் சென்ற சர். பிட்டி தியாகராஜ செட்டியார் இக்கட்சியை ஆரம்பிக்கு முன், எங்கள் குடும்பத்து சம்பந்தியாகிய திவான்பகதூர் ப. ராஜரத்தின முதலியார் ஒருநாள் சாயங்காலம் என்னைக் கூப்பிட்டனுப்பினார். நான் அவர் வீட்டிற்குப் போனபோது அவரும் காலஞ்சென்ற எல். டி. ஸ்வாமிக்கண்ணு அவர்களும் பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் காங்கிரஸ்கட்சி பிராம்மணர்களுடைய அபிவிருத்தியையே கவனித்து வருகிறது. நாம் எல்லோரும் பிராம்மணர்கள் அல்லாதாரை உயர்த்தும் பொருட்டு ஒரு கட்சியை ஏற்படுத்தவேண்டும். அதில் நீ ஒரு முக்கிய பங்கு எடுத்துக்கொள்ளவேண்டும் என்று கேட்டனர். அதற்கு நான் “இவ்விஷயங்களிலெல்லாம் நான் தலையிட்டுக் கொள்ள எனக்கு இஷ்டமில்லை. என் வக்கீல் வேலையும் சுகுணவிலாச சபையுடைய வேலையுமே எனக்குப் போதுமானதாய் இருக்கிறது. மற்ற விஷயங்களில் புகுவதற்கு எனக்கு விருப்பமில்லை. அவகாசமுமில்லை” என்று மறுத்தேன். பிறகு ஜஸ்டிஸ் கட்சியை பிட்டி தியாகராஜ செட்டியார் ஸ்தாபித்த போது அதில் சேரும்படியாக என்னை பன்முறை கேட்டிருக்கின்றனர். அன்றியும் அக்கட்சியில் முக்கியஸ்தராயிருந்த பானகல் ராஜாவும் அதில் சேரும்படி கேட்டனர். இந்த பானகல் ராஜா அவர்கள் என்னுடன் 4 வருடம் பிரசிடென்சி காலேஜில் படித்த என் அத்யந்த சிநேகிதர் என்று நான் முன்பே கூறியுள்ளேன். இவர்களிருவருக்கும் நான் அக்கட்சியைச் சேராததற்கு கூறிய நியாயத்தை இங்கு சுருக்கமாக எழுதுகிறேன், “நம்முடைய தேசம் முன்னேறவேண்டுமென் றால் இக்கட்சிகளெல்லாம் ஒழிந்து ஐக்கியப்பட்டாலொழிய, இக்கட்சிகள் எல்லாம் இருக்கும் வரையில் நம்முடைய நாடு அடிமை நாடாகத்தான் இருக்கும். ஆகவே நான் எந்தக் கட்சியிலும் சேரப் பிரியப்படவில்லை. அன்றியும் என் வாழ்நாட்களை தமிழ் கலையை அதிலும் நாடகக் கலையை அபிவிருத்தி செய்வதில் கழிக்கவேண்டுமென்பதே என் பேராசையாயிருக்கிறது. ஆகவே அரசாங்க விஷயங்களிலும் கட்சி பேதங்களிலும் கைவிட்டுக்கொள் வேனாயின் என்னால் தமிழ்க் கலைக்கு சரியாகத் தொண்டு செய்ய முடியாது” என்பதேயாம். இக்காரணம் பற்றியே முனிசிபல் கார்ப்பரேஷன் கவுன்சிலராகவாவது இருங்கள். அதற்காக நீங்கள் ஒன்றும் கஷ்டப்பட வேண்டியதில்லை. நாங்கள் எல்லாம் முயற்சிசெய்து உங்களை கார்ப்பொரேஷன் மெம்பராக செய்விக்கிறோம் என்று என்னை பல நண்பர்கள் கேட்டும் அதற்கு நான் இங்கவில்லை. இதை ஏதோ பெருமையாக இங்கு எழுதியவனன்று. தமிழ் ஆசிரியனாக பெயர் எடுக்க வேண்டுமென்று ஒருவன் முற்படுவானாயின் அவன் வேறு விஷயங்களில் தலை நுழைத்துக்கொள்ளாது, தமிழ்க்கலைக்கே உழைத்தாலொழிய அவன் எண்ணம் நிறை வேறாது என்பது என் உறுதியான அபிப்ராயம்.

பிராம்மணர்கள், பிராம்மணர்கள் அல்லாதார்கள் எனும் இரண்டு கட்சி பேதங்களைப்பற்றி என் அபிப்ராயம் என்ன வென்றால் ஒரு கட்சி உயர்ந்தும் ஒரு கட்சி தாழ்ந்தும் இருந்தால் இந்த பேதத்தை நிவர்த்திப்பதற்கு இரண்டு மார்க்கங்கள் உள. ஒன்று உயர்ந்த கட்சியை தாழ்ந்த கட்சியார் தங்கள் நிலைக்கு இழுத்துக்கொள்ளல். இரண்டாவது மார்க்கம் தாழ்ந்த கட்சிக்காரர்கள் தங்களை உயர்த்திக்கொள்வது. இதில் சரியான மார்க்கம் என்னவென்று இதை வாசிக்கும் எனது நண்பர்களே தீர்மானித்துக்கொள்ளலாம். இந்த கட்சி பேதங்களெல்லாம் நீங்கி நமது தேசம் ஐக்கியப்பதற்கு தற்காலம் உள்ள ஜாதி பேதங்களெல்லாம் அறவே ஒழிய வேண்டும்! முதலியார், நாயுடு, பிள்ளை என்கிற பிரிவுகளும் நீங்கவேண்டும். தீண்டாமை என்பது இருந்த இடம் தெரியாதபடி மறையவேண்டும். அப்பொழுதுதான் நமது நாடு தலையெடுக்கும் என்று என் மனதில் கொஞ்சமேனும் சந்தேகமில்லை. இக்கொள்கை பற்றியே நான் என் பெயரின் பின்பாக ‘முதலியார்’ என்று எப்பொழுதும் கையெழுத்துப் போடுவதில்லை.
---------------

11. தமிழ் நாடகத்திற்காக தான் உழைத்தது

1891 முதல் 1936 வரையில் நான் தமிழ் நாடகங்களை எழுதி அவைகளில் நடித்து உழைத்து வந்த சரிதையை “நாடகமேடை நினைவுகள்” என்னும் புஸ்தகத்தில் மிகவும் விவரமாக எழுதி அச்சிட்டுள்ளேன். ஆகவே அவைகளைப் பற்றி மறுபடியும் இங்கு எழுதுவேனாயின் கூறியது கூறல் என்னும் குற்றத்திற்கு உள்ளாவேன் என்று அஞ்சி இங்கு எழுதாது விடுத்தேன். அவைகளைப் பற்றி பல விஷயங்களை அறிய விரும்புபவர்கள் அந்நூலில் கண்டுக் கொள்ள வேண்டுகிறேன். ஆயினும் அந்நாடகங்களின் பெயர்களை மாத்திரம் இங்கு என் சுயசாதனையை எழுதுங்கால் குறிப்பிட வேண்டியது அவசியமாகும். அந்நாடகங்கள் அடியில் வருமாறு:- புஷ்பவல்லி, சுந்தரி, லீலாவதி, சுலோசனா, கள்வர் தலைவன், யயாதி, மனோகரா, சாரங்கதரா, இரண்டு நண்பர்கள், முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும், ரத்னாவளி, சத்குஜித், நற்குல தெய்வம், காலவரிஷி, மார்க்கண்டேயர், காதலர் கண்கள், விரும்பிய விதமே, பேயல்ல பெண்மணியே, அமலாதித்யன், வாணிபுர வணிகன், சபாபதி 1ம் பாகம், சிம்ஹௗ நாதன், வேதாள உலகம், பொன்விலங்கு, மகபதி, சிறுத்தொண்டர், ரஜபுத்ர வீரன், விஜயரங்கம், கண்டு பிடித்தல், கோனேரி அரசகுமாரன், சந்தையிற் கூட்டம், ஊர்வசியின் சாபம், புத்த அவதாரம், அரிச்சந்திரன், வள்ளிமணம், பொங்கல் பண்டிகை அல்லது சபாபதி 2ம் பாகம், சந்திரஹரி, ஓர் ஒத்திகை அல்லது சபாபதி 3ம் பாகம், தாசிப் பெண், சுபத்ரா அர்ஜுன், கொடையாளிக் கர்ணன், மனைவியால் மீண்டவன், சகதேவன் சூழ்ச்சி, சர்ஜன் ஜெனரல் விதித்த மருந்து, விச்சுவின் மனைவி, இடைச்சுவர் இருபுறமும், என்ன நேர்ந்திடினும், சகுந்தலை, விக்கிரமோர்வசி, மாளவிகாக்னி மித்ரம், விபரீதமான முடிவு, சுல்தான் பேட்டை மாஜிஸ்டிரேட், உண்மையான சகோதரன், சபாபதி 4ம் பாகம், காளப்பன் கள்ளத்தனம், பிராம்மணனும் சூத்திரனும், உத்தம பத்தினி, குறமகள், வைகுண்ட வைத்தியர், சதி.சுலோசனா ஆம்.

இனி 1936-ஆம் வருடத்திற்குப் பிறகு நான் எழுதிய நாடகங்களைப் பற்றி சில விவரங்களைத் தெரிவிக்கிறேன்.

நல்ல தங்காள்: இது ஒரு பழைய கதையை நாடகமாக என்னால் எழுதப்பட்டது. இதை 1936 ஆம் வருஷம் அச்சிட்டேன்.

ஏமாந்த இரண்டு திருடர்கள்: இது ஒரு சிறந்த ஹாஸ்ய நாடிகையாம். இதை 1937-ஆம் வருஷம் அச்சிட்டேன். எங்கள் சபையில் ஆடப்பட்டிருக்கிறது. சபாபதி 5ஆம் பாகம் அல்லது மாறுவேட விருந்து :- இதை 1937-ஆம் வருஷம் அச்சிட்டேன்.

சோம்பேறி சகுனம் பார்த்தது: இதுவும் ஒரு ஹாஸ்ய நாடிகையாம். இதை 1937-ஆம் வருஷம் அச்சிட்டேன்.
ஸ்திரீ ராஜ்யம்:-- இதுவும் ஒரு சிறு ஹாஸ்ய நாடிகையாம். இதை 1938-ஆம் வருஷம் அச்சிட்டேன். மாண்டவர் மீண்டது. ஆஸ்தானபுர நாடக சபை சங்கீதப் பயித்தியம் இம் மூன்றையும் மூன்று நகைச்சுவை நாடகங்கள் என்கிற பெயருடன் 1940- ஆண்டு அச்சிட்டேன். இவைகள் எங்கள் சடை தசரா கொண்டாட்டங்களுக்காக எழுதப்பட்டன. மாண்டவர் கண்டது பன்முறை ஆடப்பட்டிருக்கின்றது. மூன்றாவது சில முறை ஆடப்பட்டிருக்கிறது. இவைகள் நான் எழுதிய ஹாஸ்ய நாடகங்களில் முக்கியமானவை என்று நினைக்கிறேன்.

இருவர்களும் திருடர்களே, கான நாதனும் அவளது அமைச்சர்களும், பாடலீபுரத்து பாடகர்கள், புத்திசாலி பிள்ளை மாண்டான், விருப்பும் வெறுப்பும், ஆலவீரன், நான் பிறந்த ஊர், ஜமீன்தார் வரவு, பெண்புத்திக் கூர்மை, இவைகள் ஒன்றாக ஒன்பது குட்டி நாடகங்கள் என்ற பெயருடன் என்னால் 1941-ஆம் வருஷம் அச்சிடப்பட்டன. முதல் எட்டும் பெரும்பாலும் ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்க்கப்பட்டவை. இவைகளை எழுதி அச்சிட்டதற்கு முக்கிய காரணம் இவைகள் பள்ளிக்கூடத்து மாணவர்கள் Recitation ஒப்புவிக்க உயயோகக்கூடும் என்று. இவைகள் சிலமுறை பள்ளிக் கூடங்களில் ஆடப்பட்டிருக்கின்றன. பெண் புத்திக் கூர்மை என்பது திருச்சிராப்பள்ளி ரேடியோவுக்காக எழுதியது.

இந்தியனும் ஹிட்லரும்:-- இதை முதலில் ஆங்கிலத்தில் எழுதினேன். சென்னையிலுள்ள ஒரு பிரபலமான ஒரு சங்கத் தார் தாங்கள் ஆடுவதற்காக ஆங்கிலத்தில் எழுதித் தரவேண்டு மென்று என்னைக் கேட்டபோது எழுதி முடித்தேன். அதை யுத்த கஷ்ட நிவாரண பண்டுக்காக ஆடத் தீர்மானித்து நாடகப் பாத்திரங்களையும் பகிர்ந்து கொடுத்தனர் என் ஞாபகப்படி சில வருடங்களுக்கு முன்பாக. பிறகு திடீரென்று இப் பிரயத்தனத்தை விட்டு விட்டு என் கையேட்டுப் பிரதியை திருப்பி அனுப்பிவிட்டனர். இப்படி திருப்பிவிட்டதற்குக் காரணம் இன்றளவும் நான் அறிகிலேன். பிறகு கஷ்டப் பட்டு எழுதியது வீண் போகாதபடி இதைத் தமிழில் மொழி பெயர்த்து 1947-ஆம் வருஷம் இதை அச்சிட்டேன். சாபாபதி ஜமீன்தார்:-- இது ஒரு ஹாஸ்ய நாடக மென்று நான் கூறாமலே தெரியும். இதைப் பேசும் படக் காட்சிக்காகவே எழுதி அச்சிட்டேன். 1948-ஆம் வருஷம். மேடை நாடகமாட பெரும்பாலும் கூடும். அவ்வாறு ஆடப்பட்டுமிருக்கிறது.

மனை ஆட்சி:-- இது எனது நண்பர் ஸ்ரீமான் வி. வி. ஸ்ரீனிவாச ஐயங்கார் எழுதிய Domestication of Damoo என்னும் ஆங்கில நாடகத்தின் தமிழ் அமைப்பு. இது ரேடியோ நாடகமாக ஆடப்பட்டிருக்கிறது.

சதி சக்தி:-- இது ஒரு பிரஹசனம் அல்லது ஜாஸ்ய நாடிகையாம். இது ரேடியோவுக்காக எழுதப்பட்டது.

தீயின் சிறு திவலை:-- இதை என் வயோதிகத்தில் எழுதிய ஒரு முக்கியமான நாடகமாக கொள்கிறேன். இதை 1939-ஆம் வருஷம் ஒரு பேசும் படக் கம்பெனிக்காக எழுதிமுடித்தேன். இப்பிரயத்தனம் முடிவு பெறாமல் போகவே பிறகு 1947-ஆம் ஆண்டு இதை அச்சிட்டேன். இதை இத்தனை வருடம் நான் அச்சிடாமலிருந்ததற்குக் காரணம் இது வரையில் ஆங்கில ராஜ்யத்தில் அடங்கியிருந்த நமது தேசம் நமது சுயராஜ்யத்திற்கு வந்ததேயாம். 1947-ஆம் வருஷம் ஆகஸ்டு மாதம் 15ந் தேதி வரையில் எங்கு இந்நூல் முன்பிருந்த துரைத்தனத்தாரால் தங்களுக்கு விரோதமாக அச்சிடப்பட்டதென்று எண்ணுகிறார்களோ என்று சிறிது அச்சப்பட்டேன். பிறகு 1947 -ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 ந்தேதி அந்த அச்சம் அறவே நீங்கவே இதை அச்சிட்டேன். இது நாடக மேடைக்கும் பேசும் படக் காட்சிக்கும் உபயோகப்படும் என்பது என் துணிவு.

தீபாவளி வரிசை:--- இது சில வருடங்களுக்கு முன்பு எழுதியது. எந்த வருடம் என்று எனக்கு சரியாக ஞாபக மில்லை. இதை 1947-ஆம் வருஷம் அச்சிட்டேன்.

கலையோ காதலோ:-- இதை நான் நாடகமாக எழுத ஆரம்பித்தது 1935-ஆம் வருஷம். அச்சமயம் நான் பம்பாய்க்கு ஓர் பேசும்படக் காட்சிக்காக போயிருந்தேன். பிறகு இதை பேசும்படமாக மாற்றினால் நன்றாய் இருக்குமென தீர்மானித்து அதற்கு தக்கபடி மாற்றினேன். இதை எழுதும் போது என் மனத்திற்கு பூரண திருப்தியில்லா விட்டால் மேலே போவதில்லை என்னும் தீர்மானப்படி பன்முறை தடை பட்டது. இதை நான் முதிர் வயதில் எழுதிய சிறந்த நாடகங்களில் ஒன்றாக மதிக்கின்றேன். இதை யாராவது பேசும் படமாக மாற்றினால் அதை பார்க்க வேண்டுமென்ற ஆசை எனக்கிருக்கிறது. ஈசன் திருவுள்ளம் எப்படியோ! இவையன்றி சபாபதி துணுக்குகள் என்னும் சிறு காட்சிகளை சேர்த்து அச்சிட்டுள்ளேன்.

சென்ற பத்து பதினைந்து வருடங்களாக நான் எழுதிய நாடகங்களெல்லாம் பேசும் பட ரீதியாக இருக்கின்றன என்பதற்கு தடையில்லை. அதற்கு முக்கிய காரணம் ஏறக்குறைய அவைகள் எல்லாம் திரை நாடகங்களாக உபயோகப்பட வேண்டுமென்று எழுதினதேயாம். ஆங்கிலத்தில் எழுதிய நாடகங்கள் (1) முன்பே கூறியபடி ஹரிச்சந்திரா நாடகம் முதலில் ஆங்கிலத்தில் எழுதினதாம். (2) அந்த சிறுவர்கள் சபைக்கு நான் தமிழில் எழுதிய, யயாதியை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் கொடுத்தேன். (3) சபாபதி 4ம் பாகம் இது முதல் உலக யுத்தத்திற்காக பொருள் சேர்க்க கமிட்டியார் இச்சைப்படி சேப்பாக்கம் மைதானத்தில் ஆடுவதற்காக பெரும்பாலும் ஆங்கிலத்தில் எழுதியதாம். (4) முன்பே நான் கூறித்தபடி இந்தியனும் ஹிட்லரும் என்னும் நாடகத்தை ஆங்கிலத்தில் முதலில் எழுதினேன். பிறகு தமிழில் மொழி பெயர்த்தேன். (5) சபாபதி துவிபாஷி இது பெரும்பாலும் ஆங்கிலத்திலும் சிறிது தமிழிலும் எழுதப்பட்டது.
-------------

12. நாடக சம்பந்தமான நூல்கள்

கீத மஞ்சரி :--- நான் எழுதிய நாடகங்களுக்கு நானும் எனது நண்பர்களும் ஆதியில் எழுதிய சில பாட்டுக்கள் அடங்கியது. இம் முதற் பதிப்பு முற்றிலும் செலவாய் விட்ட போதிலும் இதை இரண்டாவது முறை அச்சிடுவதில்லை என்று தீர்மானித்தேன். இதற்கு முக்கிய காரணம் எனது நாடகங்கள் ஆடும் நடிகர்கள் தாங்கள் ஆடும் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு மெட்டுகளையுடைய பாட்டுகளை பாட விரும்புவதேயாம்.

நாடகத்தமிழ் :--- இது நான் மிகவும் சிரமப்பட்டு ஆராய்ச்சி செய்து வெளியிட்ட நூலாம். இதற்காக சென்னை சர்வகலாசாலையார் எனக்கு ரூபாய் 2250 கொடுத்தார்கள். இதை 1933-ஆம் வருஷம் அச்சிட்டேன்.

நாடக மேடை நினைவுகள்:-- ஆறு பாகம் எழுதியது 1927-36 இவைகளை 1932, 1933, 1935, 1936, 1937 வருடங்களில் அச்சிட்டேன்.

நாடக மேடையில் தேர்ச்சி பெறுவதெப்படி:--- நடிகர்களுக்கு உபயோகப்படும்படி. இதை 1936-ஆம் வருஷம் அச்சிட்டேன்.
தமிழ் பேசும் படம்:-- இதை 1937-ஆம் வருஷம் அச்சிட் டேன்.

பேசும் பட அனுபவங்கள்:-- இதை 1938-ஆம் வருஷம் அச்சிட்டேன்.

கதைகள் வியாசங்கள் முதலியன:-- (1) தீட்சிதர் கதைகள் (2) ஹாஸ்ய வியாசங்கள் (3) சிறு கதைகள் (4) ஹாஸ்யக் கதைகள் (5) கதம்பம் இக் கதைகள் எல்லாம் பெரும்பாலும் சுதேசமித்திரன், ஆனந்த விகடன் முதலிய பத்திரிகைக்களுக்காக எழுதியவைகளாம்.
--------------

13. மத சம்பந்தமான நூல்கள்

சிவாலயங்கள் இந்தியாவிலும் அப்பாலும்:-- சிறு வயது முதல் ‘சிவாலய பயித்தியம்’ எனக்குண்டு. ஏறக்குறைய 4000 சிவாலயங்களைப் பற்றி பல ஆண்டுகளாக தொடுத்து 1945-ஆம் வருடம் முதல் 4 பாகங்களை அச்சிட்டேன். 5 ஆம் பாகம் 1948-ஆம் வருஷம் அச்சிடப்பட்டது.

சிவாலய சிற்பங்கள்:-- இதை 1946-ஆம் வருஷம் அச்சிட் டேன். இதை அச்சிடுவதில் தமிழ் மொழிக்காக எப்பொழுதும் உதவி செய்து வரும் ஸ்ரீலஸ்ரீ காசி அருணா நந்தித் தம்பிரான் ஸ்வாமிகள், திருப்பனன் தாள் ஆதினம் பண்டார சந்நிதி அவர்கள் ரூபாய் 500 பொருளுதவி செய்தார்கள். இந்நன்றியை நான் என்றும் மறக்க முடியாது.

சுப்பிரமணியர் ஆலயங்கள்:-- இந்நூலை சிவாலயங்களி னின்றும் வேறாக அச்சிட்டதற்குக் காரணம் இந்நூல் முகவு ரையில் எழுதியுள்ளேன். இம் மூன்றையும் படங்களுடன் அச்சிடாதது பெருங்குறையாம். இக்குறை என் ஆயுள் முடியு முன் இறைவன் அருள் நிறைவேற்றி வைக்குமாக.
-------------

14. மேற்சொன்ன நூல்களன்றி நான் அச்சிட்ட நூல்கள்ர்

1. காலக் குறிப்புகள்:-- நான் சிறு எழுத்தாள்னாக வேண்டுமென்று தீர்மானித்த பிறகு எனக்கு உபயோகப்படும் படியான பல காலக் குறிப்புகளை குறித்து வந்தேன். அவைகள் மற்ற நூலாசிரியர்களுக்கும் உபயோகப்படும் என்று நினைத்து 1947-ஆம் வருஷம் அச்சிட்டேன்.
2. சாதாரண உணவுப் பொருளின் குணங்கள்:-- மேற் கண்டபடியே என் சொந்த உபயோகத்திற்காக சிறு வயது முதல் உணவுப் பொருள்களின் குணங்களை குறித்து வந்தேன். தாயுமானவர் “வாடித்திரிந்து நான் கற்றதும் கேட்டது அவலமாய் போதல் நன்றோ” என்று கூறியபடி இவைகள் மற்றவர்களுக்கு உபயோகப்படக் கூடும் என்று எண்ணி இதை 1948-ஆம் வருஷம் அச்சிட்டேன்.

நான் ஒரு எழுத்தாளனாகி 1942-ஆம் வருஷம் வரையில் என் புஸ்தகங்களை அச்சிடுவதில் ஒரு கஷ்டமுமில்லை என்றே கூறவேண்டும். அதற்கப்புறம் நான் பல கஷ்டங்களை அனுபவிக்க நேர்ந்தது. அவைகள் பெரும்பாலும் இரண்டாவது உலக யுத்தத்தினால் நேர்ந்தவையென்றே சொல்லலாம். அவைகளில் சிலவற்றை இங்கு தெரிவிக்கிறேன். முதலாவது 1942-ஆம் வருஷம் பட்டணத்தைவிட்டு மைசூருக்கு குடும்பத்துடன் ஓடிப்போக வேண்டிவந்தபடியால் அதுவரையில் வருஷா வருஷம் சில புஸ்தகங்களையாவது அச்சிடும் பழக்கம் தடைப்பட்டது. இரண்டாவது அதுவரையில் என் புத்தகங்களை அச்சிட்டுக்கொண்டிருந்த டௌடன் கம்பெனியை வாங்கின பியர்லெஸ் பிரஸ் என்னும் அச்சுக்கூடம் எடுபட்டுப்போக, பிறகு என் நூல்களை பல அச்சுக்கூடங்களுக்குப்போய், வேண்டி அச்சிடவேண்டியதாயிற்று. மூன்றாவது என் நூல்களை அச்சிட காகிதம் கிடைக்காமற் போனது. காகித கண்டிரோலர் அவர்களுக்கு எனக்கு காகிதம் வேண்டுமென்று மனு கொடுத்தால் “நீ அச்சிடும் புஸ்தகங்கள் பெரும்பாலும் நாடகங்கள் தானே. அவைகளை காகித நெருக்கடி சமயத்தில் அச்சிடவேண்டிய நிமித்தமில்லை” என்று காகித கோட்டா கொடுக்க மறுத்துவிட்டார். கறுப்பு மார்க்கெட்டில் அதிகவிலை கொடுத்து காகிதம் வாங்கவேண்டியதாயிற்று. நான்காவது தொழிலாளிகளின் ஸ்டிரைக்கினால் இரண்டு மூன்று மாதங்களில் அச்சிடும் புஸ்தகங்கள் 6 மாதத்திற்கு மேல் காலம் பிடித்தது. அச்சிட்டு வெளி வர. ஐந்தாவது அச்சுக் கூலியும் அதிகப்பட்டுவிட்டது. முன்பெல்லாம் சராசரி ஒரு பாரத்திற்கு 4 ரூபாய் கொடுத்தது போக தற்காலம் ஏறக்குறைய அதற்கு 4 மடங்கு கொடுக்க வேண்டியவனாய் இருக்கிறேன். காகிதத்தின் விலையும் அதிகப் பட்டதென்று நான் எழுதவேண்டியதில்லை. இதன் பயனாக என் நூல்களின் விலையை அதிகப்படுத்த வேண்டியதாயிற்று.

மேற்கண்ட கஷ்டங்களையெல்லாம்விட நான் தற்காலம் அநுபவிக்கும் பெருங்கஷ்டமென்ன வென்றால் என் கண் பார்வை மட்டிட்டு வருவதேயாம். இது என் வயதின் கொடுமையாம் எனக்கு நாற்பதாய் வயதில் மனிதர்களுக்கு வரும் சாலேஸ்வரம் வரவேயில்லை. நான் அச்சிடும் புஸ்தகங்களின் Proof பிழை திருத்தங்களை சரியாக கவனிக்க அசத்தனாய் இருக்கிறேன். சென்ற சில வருடங்களாக வெளிவரும் என் நூல்களில் பல அச்சுப் பிழைகள் குடி கொண்டிருக்கின்றன என்பதற்கு சந்தேகமில்லை.
-----------------

15. பேசும் படங்களில் நான் பங்கெடுத்துக் கொண்டது

1931-ஆம் வருடம்தான் என் முதிர் வயதில் பேசும் படங்களில் பங்கெடுத்துக்கொள்ள ஆரம்பித்தேன். நான் கல்கத்தாவுக்குப் போய் நான் எழுதிய ‘சதி சுலோசனா’ என்னும் நாடகத்தை பேசும் படமாக தயாரித்தது. பிறகு 1936-ஆம் வருடம் பம்பாய்க்குப்போய் என் ‘மனோகரா’ என்னும் பேசும் படத்தில் புருஷோத்தமனாக நடித்தது. இதற்கிடையில் ஏழு வருடம் பேசும் படத்தின் சென்சார் போர்டில் ஒரு அங்கத்தினனாக கவர்ன்மெண்டாரால் ஏற்படுத்தப்பட்டு வேலை பார்த்தது முதலிய விஷயங்களைப்பற்றி என்னுடைய ‘பேசும் பட அனுபவங்கள்’ என்னும் சிறிய புத்தகத்தில் விரிவாக எழுதியிருக்கிறேன். ஆகவே இங்கு, அவைகளைப் பற்றி எழுதுவது அவசியமில்லை என்று விடுத்தேன். அவ்விஷயங்களைப்பற்றி அறிய விரும்பும் என் நண்பர்கள் அந்நூலைப் படித்து தெரிந்து கொள்வார்களாக. இதுவரையில் அடியிற் கண்ட எனது நாடகங்கள் திரைப்படங்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. (1) காலவரிஷி (2) ரத்னாவளி (3) மனோகரா ( இரண்டு முறை) (4) லீலாவதி சுலோசனா (5) வேதாள உலகம் (5) சதிசுலோசனா (7) சந்திரஹரி (8) சபாபதி (9) பொங்கல் பண்டிகை (10) ராமலிங்க சுவாமிகள் (இது அச்சிடப்படாத நாடகம்).

புத்தகங்களை எழுதி அச்சிட்டது போக நான் எழுத்தாளனாக செய்த சில காரியங்களை இனி எழுதுகிறேன். சென்ற சுமார் 20 வருடங்களாக ஹிந்து (Hindu) பத்திரிகைக்கு ஆங்கிலத்திலும், சுதேசமித்திரன், ஆனந்தவிகடன் முதலிய தமிழ் பத்திரிகைகளுக்கு தமிழிலும் சிறுசிறு வியாசங்கள் எழுதியனுப்பியிருக்கிறேன். இதன்மூலமாக எனக்கு வருவாயும் உண்டு.

பேசும் படங்களுக்கு சில நாடகங்களை எழுதியிருக்கிறேன். இவைகளன்றி பேசும் படங்களுக்கென்றே இதுவரையில் நான் எழுதிய நாடகங்கள் இரண்டாம். ஒன்று ‘இராமலிங்க சுவாமிகள்’ இதை எழுதி பேசும் படமாக்கக் கொடுத்ததில் நான் ஒரு பெருந்தவறிழைத்தேன். அத்தவறை மற்றவர் இழைக்காதபடி அதை இங்கு தெரிவிக்கிறேன். அதை என்னிடம் ஒப்பந்தம் செய்து கொண்டவர்கள் அவசரமாக வேண்டுமென்று கேட்க விரைவில் எழுதி முடித்தேன். உடனே அவர்கள் வந்து என்னை கேட்க, நான் அதற்கு ஒரு நகல் வைத்துக்கொள்ளாமலே அவர்களிடம் கொடுத்து விட்டேன். பிறகு அது பேசும் படமாக ஆடப்பட்டபின் நான் எழுதியதைக் கேட்க, அதை அவர்கள் எங்கோ தொலைத்துவிட்டதாகக் கூறினர்! நான் என்ன செய்வது? நான் இதை மிகவும் சிரமப்பட்டு எழுதிய நாடகம். மறுபடியும் நான் அதை எழுதுவது எனக்கு இவ்வயதில் சாத்தியமில்லாமற்போயிற்று. ஒரு எழுத்தாளன் தான் எழுதிய கதை ஏதாவது ஒன்றை நகல் வைத்துக்கொள்ளாமல் மற்றவர்களிடம் கொடுத்துவிடுவது தவறென்பதை இதைப் படிக்கும் மற்றவர்களுக்கு வணக்கத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இதன்பின் ‘விஸ்வாமித்திரர்’ எனும் நாடகத்தை எழுதி எனது நண்பர் ஜகந்நாதம் என்பவருக்கு கொடுத்திருக்கிறேன். அதற்காக நான் பெற்ற ஊதியம் ரூபாய் 3000-ஆம். இது பேசும் படமாக ஆடப்பட்டது.

சென்னையில் ரேடியோ வந்தபிறகு அதில் பன்முறை ஆங்கிலத்திலும் தமிழிலும் பேசியிருக்கிறேன். ரேடியோவுக் கென்றே இரண்டொரு நாடகங்களை எழுதியிருக்கிறேன். அவைகள் ரேடியோவில் ஆடப்பட்டிருக்கின்றன. அவைகளில் ஒன்றாகிய பெண்புத்திக் கூர்மை என்பதை அச்சிட்டிருக் கிறேன்.

இதை வாசிக்கும் தாங்களும் எழுத்தாளர்களாக வேண்டு மென்று விரும்பும் எனது இளைய நண்பர்களுக்கு ஒரு விண்ணப்பம். நீங்கள் ஏதாவது எழுதினால் அதை உபயோகிக்க யாராவது விரும்பினால், அதற்காக, எவ்வளவு சிறியதாயிருந்த போதிலும் ஏதாவது ராயல்டி, ஆனரேரியம் பெறாது கொடுக்காதீர்கள். இதில் தவறில்லை. இது தான் சரியான மார்க்கம். மேநாட்டு எழுத்தாளர்கள் இக்கோட்பாட்டை தவறாது கைப்பற்றி நடக்கின்றனர் என்பது ஞாபகமிருக்கட்டும். நான் எனது நாடகங்களை ஒன்றையும் ராயல்டி கொடுக்காமல் ஆடுவதற்கு உத்தரவு கொடுப்பதில்லை என்பது எல்லோரும் அறிந்த விஷயமே.

தினசரி பத்திரிகை, மாதாந்திர பத்திரிகை முதலியவற்றின் சொந்தக்காரர்களுக்கு ஒரு விண்ணப்பம். நீங்கள் சிறு எழுத்தாளர்கள் எழுதி அனுப்புவதை அச்சிட்டால் அவர்களுக்கு ஏதாவது சிறிதாவது ராயல்டி அல்லது ஆனரேரியம் கொடுக்க மறந்து போகாதீர்கள். நமது பாஷையை அபிவிருத்தி செய்ய வேண்டுமென்று கோரினால் இவ்வாறு செய்வது உங்கள் கடமையாகும்.
-------------

16. இக்காலம் நாடகக் கலைக்காக உழைத்த சிறுதொண்டுகள்

1938-ஆம் வருஷ முதல் நாடகமாடுவதை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைத்துக் கொண்டே வந்தேன் என்று சொல்ல வேண்டும். இதற்கு முக்கிய காரணம் எனக்கு விருத்தாப்பியம் மேலிட்டதேயாம். ஆகவே இது முதல் நாடகக் கலைக்காக உழைத்ததைப் பற்றி எழுதுகிறேன்.

1939-ஆம் வருஷம் உலக இரண்டாம் யுத்தம் ஆரம்பித்த பிறகு நாடகக்கலையே இத்தமிழ் நாட்டில் உறங்கிவிட்டது எனலாம் 1942-ஆம் வருஷம் சென்னையிலிருந்து ஆயிரக் கணக்கான ஜனங்கள் வெளியூருக்குக் குடியேறின போது நானும் மைசூரில் போய் வசித்து வந்தேன். இக்காலத்தில் நாடகமேடை மறுபடியும் தலையெடுப்பது அசாத்தியம் என்று ஏங்கியிருந்தேன்.

இவ்வருஷம் நான் மைசூரிலிருந்து திரும்பி வந்த போது கொஞ்சம் தைரியம் கொண்டேன். இவ்வாண்டில் ஆகஸ்டு மாதம் மதுரையில் தமிழ் மகா நாடு கூடிய பொழுது என்னை மூன்றாவது தினமாகிய நாடகத் தமிழ் மகா நாட்டிற்கு தலைவனாக இருக்க வேண்டுமென்று அழைத்தனர். அதற்கு நான் குதூகலத்துடன் உட்பட்டு மதுரைக்குப் போனேன். அன்று மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு எதிரில் உள்ள புது மண்டபத்தில் நாடகத்தமிழைப் பற்றி ஒருசிறு சொற்பொழிவு செய்தேன். இச்சயம் பல வருடங்களாக பாராதிருந்த என் மதுரை நண்பர்களைக் கண்டு சந்தோஷித்தேன்.

மறு வருடமாகிய 1943-ஆம் ஆண்டில் ஈரோட்டில் நாடகத் தமிழ் மகாநாடு கூடியபோது அதற்கு நாடகத்தமிழ் கொடியை ஏற்றி வைக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.
அம் மகா நாட்டில் கனம் ஷண்முகம் செட்டியார் அவர்கள் அக்கிராசனம் வகித்தார். அன்றியும் இம் மகாநாட்டில் எனக்கு ‘நாடகப் பேராசிரியர்’ என்னும் பட்டம் அளிக்கப் பட்டது தெய்வத்தின் கருணையால், அன்றியும் ஈரோடு முனிசிபாலிடியார் எனக்கு ஒரு வந்தனேபசாரப் பத்திரமும் அளித்தனர். இச்சபையில் பேச வேண்டி வந்த போது “எனக்கு கவர்ன்மெண்ட்டார் அளித்த இரண்டு பட்டங்களை விட நாடக அபிமானிகள் எனக்களித்த பட்டத்தையே நான் மேலாக கருதுகிறேன்” என்று சொன்னேன். இச்சமயம் ஈரோட்டுக்கருகிலுள்ள பவானி என்னும் க்ஷேத்திரத்திற்கு என்னை என் புதிய நண்பர்கள் அழைத்துச் சென்றனர். அங்குள்ள நாடக சபையின் வருடாந்திர கொண்டாட்டத்திற்கு என்னை தலைமை வகிக்கச் செய்தனர். அச்சமயம் நாடகக் கலையின் உயர்வைப்பற்றி பேசினேன்.

1944-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொண்டை மண்டலம் துளுவ வேளாளர் பள்ளிக் கூட நிதிக்காக ‘சபாபதி’ என்னும் நாடகத்தை ஆடினபோது நானும் அதில் ஒரு வேஷம் தரிக்க வேண்டுமென்று எனது நண்பர்கள் கேட்க, அதற்கிசைந்து ஒரு காட்சியில் சபாபதி முதலியாராக நடித்தேன். அப் பொழுது எனக்கு வயது 71. இதைக் குறித்து அப்பள்ளியின் டிரஸ்டிகள் கூட்டத்தில் எனக்கும் எனது நண்பர் டாக்டர் குருசாமி முதலியாருக்கும் நடந்த வேடிக்கையான சம்பாஷணையை இங்கு எழுத விரும்புகிறேன். டைரக்டர்கள். நானும் இந்நாடகத்தில் நடித்தால் அதன் மூலமாக பொருள் அதிகமாக கிடைக்கும் என்று என்னை வற்புறுத்தியபோது “சபாபதி முதலியார் என்னும் நாடக பாத்திரம் சுமார் 17 வயது பிள்ளை யாச்சுதே, எனக்கு 71 வயதாகிறதே அதை நான் எப்படி நடிப்பது?” என்று ஆட்சேபிக்க, டாக்டர் குருசாமி முதலியார் “அதில் தவறொன்றும். இல்லை, 71 என்னும் எண்ணை திருப்பினால் 17 ஆகிறது” என்று வேடிக்கையாய் பதில் உரைத்தார்! ஆயினும் அவ்வயதில் நான் சபாபதி முதலியாராக நடித்தது எனக்கு திருப்தியாய் இல்லை. ஆயினும் நாடகத்திற்கு வசூல் மாத்திரம் 2000 ரூபாய்க்கு மேல் வந்தது. இது தான் சந்தோஷம்.

1941-ஆம் வருஷம் அண்ணாமலை சர்வகலாசாலையார் என்னை நாடகக் கலையைப்பற்றி மூன்று சொற்பொழிவுகள் செய்யும்படி கேட்டனர் அதற்கிணங்கி இவ்வருஷம் ஆகஸ்டு மாதம் அண்ணாமலை நகருக்குப் போய் நாடகக் கலையைப்பற்றி சொற்பொழிவுகள் செய்தேன்.

1945-ஆம் வருஷம் சென்னையில் ஸ்தாபிக்கப்பட்ட இந்து மது விலக்கு சங்கத்தின் பொன் விழாவில் வினோத வேஷப் போட்டியில் வேஷம் தரித்து வெள்ளிப் பதக்கம் பரிசு பெற்றேன். அன்றியும் இவ்வருஷம் மார்ச் மாதத்தில் 31-ந் தேதியிலும் ஏப்ரல் 1-ந்தேதியிலும் தஞ்சை மா நகரில் நடந்த இரண்டாவது நாடகத் தமிழ் மகாநாட்டில் தலைமை வகித்து தலைவர் உரையாக தமிழ் நாடகத்தைப்பற்றி சொற்பொழிவு செய்தேன். இவ்வருஷம் சவுத் இண்டியன் ஆத்லெடிக் அசோசியேஷன் கொண்டாட்டத்தில் வினோத வேஷம் போட்டியில் வேஷம் தரித்து பரிசு பெற்றேன். இவ்வருஷம் சுகுண விலாச சபையின் தசரா கொண்டாட்டத்தில் ‘மருமகன்’ என்னும் தமிழ் பிரஹசனத்தில் மருமகனுடைய குமாஸ்தா. வேஷம் தரித்தேன். மேலும் இச்சமயம் நடந்த ஹிந்தி நாடகத்தில் பெய்லிப் (Bailiff) ஆகவும் போலீஸ் இன்ஸ்பெக்டராகவும் வேஷம் பூண்டேன். மேற்கண்ட பல சிறு வேஷங்கள் தரித்து நான் நடித்தது. அவைகளில் பெயர் எடுக்கவேண்டுமென்றல்ல. நாடகக் கலையின் சம்பந்தத்தை முதிர் வயதிலும் விட்டுப் பிரிய மனமில்லாமையே ஆகும்,

இவ்வருஷம் ரேடியோ நாடகங்களில் நான்கு முறை பாகம் எடுத்துக்கொண்டேன். அந்நான்கு நாடகங்களும் நான் எழுதிய “சங்கீதப் பயித்தியம், ரஜபுத்ர வீரன், மாண்டவர் மீண்டது, இடைச்சுவர் இருபுறமும்” என்பவைகளாம். இவைகளில் நான் நடித்தது எனக்கு ஒரு கஷ்டமும் தரவில்லை. வேஷம் போடாமலே பேசவேண்டிவந்தமையால், ஆயினும் மற்ற நடிகர்களுக்கெல்லாம் ஒத்திகை செய்யவேண்டியவனாய் இருந்தேன். இவ்வருஷத்திற்கு முன்பாக ஊர்வசியின் சாபம், லீலாவதி சுலோசனா, சபாபதி முதலிய ரேடியோ நாடகங்களில் நடித்தேன். இவ்வருஷத்திலும் இதற்கு முன்பாகவும் நாடக விஷயங்களைப்பற்றி பன்முறை ரேடியோ மூலமாக பேசி யிருக்கிறேன்.

இவ் வருஷம் சென்னையிலுள்ள ரோடெரி கிளப்பார் இந்திய ‘நாடக மேடை'என்னும் விஷயத்தைப்பற்றி பேசும் படி கேட்க, அதற்கிசைந்து அவர்கள் பெரும்பாலோர் ஆங்கிலமே தெரிந்திருந்தபடியால் ஆங்கிலத்தில் சொற்பொழிவு செய்யும்படி நேர்ந்தது. இவ்வருஷம் டிசம்பர் மாதம் நான் இரண்டு முறை சினிமா தணிக்கை சங்கத்தில் ஒருவனாக கவர்ன்மெண்ட்டாரால் நியமிக்கப்பட்டேன்.

1946 --ஆம் வருஷம் ஜனவரி பிப்ரவரி மாதங்களில் “மனைவியால் மீண்டவன், சிக்ஹௗ நாதன்” எனும் நாடகங்களில் முறையே பாகம் எடுத்துக் கொண்டேன். இவ்வருஷம் ஏப்ரம் மாதம் சென்னையில் ஒற்றவாடை நாடகசாலையில் நடந்த தமிழ் எழுத்தாளர் மகா நாட்டில் தமிழ் பத்திரிகை காட்சியை திறந்துவைத்தேன். அன்றியும் இவ்வருஷம் சுகுண விலாச சபையார் தசரா கொண்டாட்டத்தில் கபிர்தாஸ் என்னும் நாடகத்தில் ராம்சிங் வேஷம் தரித்தேன்.

1947-ஆம் வருஷம் சவுத் இண்டியன் ஆத்லெடிக் அசோசியேஷன் கொண்டாட்டத்தின் வேஷப் போட்டியில் பரிசு பெற்றேன். இவ்வருஷம் எனக்கு 75-வது வருடப் பிறப்பு நாளை சுகுண விலாச சபையார் கொண்டாடி எனக்கு ஒரு வந்தனோபசார பத்திரிகை அளித்தனர். இதை எனது பால்ய நண்பராகிய வி, வி. ஸ்ரீனிவாச ஐயங்கார் அவர்கள் கரத்தினின்றும் பெரும் பாக்கியம் பெற்றேன் கடவுள் கிருபையால். அச்சமயம் சபையார் நடத்திய காலவரிஷி என்னும் எனது நாடகத்தில் சுபத்திரையின் வேலையாளாக நடித்தேன்.

இவ்வருஷம் வெலிங்டன் சினிமா சாலையில் வினோத வரியை (Entertainment tax) கவர்ன்மெண்ட்டார் உயர்த்திய தற்காக ஆட்சேபனை செய்வதற்காக கூடிய கூட்டத்தில் தலைமை வகித்து முக்கியமாக நாடகங்களுக்கு வரியை போடலாகாது என்று பேசினேன். இவ்வருஷம் ஏப்ரல் மாதம் விக்டோரியா பப்ளிக் ஹாலில் ஆந்திரர்கள் காலஞ்சென்ற ஸ்ரீமான் ராகவாச்சார்லு அவர்களின் உருவப்படத்தைத்திறந்து வைத்தபோது என்னையும் அவரது நட்புத் திறமையைப்பற்றி பேசவேண்டுமென்று கேட்டபோது அவ்வாறே செய்து என் காலஞ்சென்ற நண்பருக்கு நான் செலுத்தவேண்டிய கடனை சிறிதளவு செய்தேன். ஏப்ரல் மாதம் சுகுண விலாச சபையார் தெலுங்கில் நடத்திய துரௌபதி மான சம்ரட்சணம் எனும் நாடகத்தில் பிராதிகாரி என்னும் சிறு வேஷம் பூண்டேன். இச்சபையின் இவ்வருஷத்திய தசரா கொண்டாட்டத்தில் சகுந்தலை நாடகத்தில் கொத்தவாலாக நடித்தேன். தெலுங்கு பாஷையில், இவ்வருட கடைசியில் எங்கள் சபையார் நடத்திய ‘நந்தனார்’ எனும் தமிழ் நாடகத்தில் என் பழைய வேடமாகிய கோமுட்டி செட்டியாராக நடித்தேன், இவ்வருஷம் சவுத் இண்டியன் ஆத்லடிக் அசோசியேஷன் நடத்திய வருடாந்திர கொண்டாட்டத்தில் ஹாஸ்ய பாட்டுப் போட்டியில் ஒரு பரிசு பெற்றேன். இப்பாட்டு தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மூன்றும் கலந்ததாகும். இதே பாட்டைப் பாடி பல வருடங் களுக்குமுன் சுகுண விலாச சபையார் எற்படுத்திய வினோத வேஷப் பார்ட்டியில் அமெரிக்காவிலிருந்து அதை காண வந்த லிவர் பிரதர்ஸ் கொடுத்த இரண்டு பரிசுகளில் ஒன்றை பெற்றது எனக்கு ஞாபகமிருக்கிறது. 1949-ஆம் வருஷம் பச்சையப்பன் கல்லூரியில் நூற்றாண்டு கொண்டாட்டத்தில் ஒரு நாள் நடத்திய சபாபதி நாடகத்தின் நான்காம் பாகத்தில் வேலைக்கார சபாபதியாக நடித்தேன்.

20-2---1949-இல் புரொக்ரெசிவ் யூனியன் பள்ளி மாணவர்கள் எனது மனோகரன் நாடகத்தை ஸென்மேரிஸ் ஹாலில் ஆடியபோது தலைமை வகித்து சிறுவர்கள் ஆடிய நாடகத்தைத் தக்கபடி புகழ்ந்துரைத்தேன்.

13--3--49 விக்டோரியா பப்ளிக் ஹாலில் இன்று ‘தோட்டக்காரன்’ எனும் ஓர் சமூக நாடகத்தில் செட்டியாராக நடித்தேன். நடித்தது எனக்கு திருப்தியாயிருந்தது. விக்டோரியா பப்ளிக் ஹாலில் இதற்கு முன்பாக 10 வருடங்களுக்கு முன் நடித்தது.

24-4-49, அன்று விக்டோரியா பப்ளிக் ஹாலில் சுகுண விலாச சபையார் எனது நாடகமாகிய ‘சந்திரஹரி'யை நடத்தினார்கள். அப்பொழுது அதில் நடித்த முக்கிய நடிகர்களின் வேண்டுகோளின்படி மூன்றாவது காட்சியில் சந்திரஹரி அரசன் தர்பாரில் ஓர் சேவகனாக நடித்தேன்.

14-8-49-இல் சென்னை சிவனடியார் திருக்கூட்டம் முதலிய ஹிந்துமத சம்பந்தமானவைகளுக்காக ராயபுரம் நாடக சபையார்கள் விக்டோரியா பப்ளிக் ஹாலில் ‘நந்தன் சாம்பன்’ என்னும் தமிழ் நாடகத்தை நடத்தியபோது தலைமை வகித்தேன்.

இவ்வருஷம் செப்டம்பர் மாதம் சென்னை தமிழ் வளர்ச்சிக் கழகத்தார் சிறந்த நாடகங்களுக்கு பரிசு அளிப்பதற்காக ஏற்படுத்திய நாடகப் போட்டியில் அவர்களுக்கு அனுப்பப்பட்ட 13 நாடகங்களை பரிசோதித்து சிறந்த நாடகத்தை தேர்ந்தெடுப்பதற்காக என்னை பரிசோதகனாக ஏற்படுத்திய காரியத்தை செப்டம்பர் 20-ந்தேதிக்குள் முடித்தேன்.

1949-டிசம்பர் 30-ந்தேதி சென்னபுரி ஆந்திர மகாசபை நடத்திய ‘நாடக கலா பரிஷ'த்தில் இரண்டாம் நாள் விக்டோரியா பப்ளிக் ஹாலில் 9 மணிக்கு அவர்கள் கேட்டுக் கொண்ட படியால் தலைமை வகித்து ‘ஒரு நாடகத்தை எப்படி நடத்துவது’ என்றும் விஷயத்தைப்பற்றி பேசினேன்.

2950 பிப்ரவரி 25 சாயங்காலம் 5-30 மணிக்கு மதுரை தியாகராயர் கல்லூரியில் மாணவர் சங்கக் கூட்டத்தில் தமிழில் பிரசங்கம் செய்தேன். அங்கு நடந்த வேஷப் போட்டியில் ஜட்ஜாக இருந்து பரிசு வழங்கினேன். தியாகராயர் வேண்டு கோளின்படி.

1950- பிப்ரவரி 25 காலை மாலை மதுரை cultur leagle இல் ‘தமிழ் நாடகம் முற்காலத்திலும் தற்காலத்திலும்’ என்பதைப் பற்றி 45 நிமிடம் பிரசங்கம் செய்தேன். பிறகு உடனே ரெக்ரியேஷன் கிளப்புக்குப் போய் அவர்கள் நாடகப் பிரிவைக் குறித்து சிறு சொற்பொழிவு செய்தேன். 1950 மார்ச் 4ந் தேதி திருவிடந்தைக்கு மது விலக்கு சங்கத்தாருடன் போயிருந்த போது ‘வத்சலாஹரம்’ ன்னும் தெருக் கூத்து நடந்தது. இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரையில் அதைப் பார்த்து ஸ்ரீமான் அப்பாதுரை பிள்ளை அவர்கள் ஏற்படுத்திய வெள்ளிக் கோப்பையை அதில் மிகவும் நன்றாய் நடித்த நடிகனுக்கு கொடுக்கும்படி கேட்டனர். அதில் இரண்டு மூன்று பெயர் நன்றாக நடித்த படியால் பொதுவில் அவர்கள் கம்பெனிக்கு (அச்சிறு பாக்கம் கம்பெனிக்கு) அளித்தேன். 1950 ஏப்ரல் தொண்டை மண்டலப் பள்ளியில் காலஞ் சென்ற மனோன்மணியம் நாடக ஆசிரியராகிய திரு. சுந்தரம் பிள்ளை அவர்களுடைய உருவப் படத்தை சேது பிள்ளை அவர்கள் தலைமையில் திரு. சிவஞான கிராமணியார் திறந்து வைத்த போது சுந்தரம் பிள்ளை அவர்களைப் பற்றி ஒரு சிற்சொற்பொழிவு செய்தேன். 11-7--1958 சென்னை தமிழ் நாடகக் கழகத்தினர் சார்பாக சட்டசபை பிரதம மந்திரியாகிய கனம் குமாரசாமி ராஜா அவர்களிடம் நாடகங்களுக்கு வினோத வரியை (Entaintment tax) எடுத்து விடவேண்டு மென்று ஒரு தூது கோஷ்டி சென்ற போது நாம் அவர்களுள் ஒருவனாக சென்று கோட்டையில் அமைச்சரைக் கண்டு அரைமணி சாவகாசம் அதைப் பற்றிய காரணங்களையும் நியாயங்களையும் எடுத்துப் பேசினேன்.

31---12--1950 இல் மேற்கண்ட சங்கத்தார் சினிமா கமிட்டியில் சென்னைக்கு வந்து ஸ்ரீமதி சாந்தா ஆப்தே அவர்களுக்குக் கொடுத்த தேநீர் பார்ட்டியில் நாடகக் கலையானது இந்திய தேசம் முழுவதையும் ஒன்று படுத்தக் கூடிய காரணங்களில் ஒரு முக்கியமானது என்பதைப் பற்றி பேசினேன். 1950 அக்டோபர் 18ந் தேதி சுகுண விலாச சபையின் தசரா கொண்டாட்டத்தில் ‘சபாபதி நான்காம் பாகம்’ போட்டபோது வேலைக்கார சபாபதியாக நடித்தேன். மேற்படி வருஷம் 20, 30 தேதிகளில் நந்த விஷயம் எனும் சிறுமிகள் பள்ளியின் இரண்டாம் வருடக் கொண்டாட்டத்தில் தலைவனாக இருந்து சில வார்த்தைகள் பேசினேன்.

1950 நவம்பர் 10 நாடகக் கழகத்தார் காலஞ்சென்ற ஜார்ஜ் பெர்னாட்ஷா அவர்கள் மரணத்திற்காக அனுதாபக் கூட்டம் கூடிய போது நான் அவரைப் பற்றிப் பேசினேன்.

1950 நவம்பர் 22 ஹிந்து மதுவிலக்கு சங்கத்தில் இன்று நடிப்புக்கலை போட்டி நடந்த போது அதில் நான் பங்கெடுத்துக் கொண்டு ‘அமலாதித்யனும் அபலையும்’ என்னும் காட்சியில் நடித்து ஈசன் கருணையினால் பரிசு பெற்றேன்.

1951 பிப்ரவரி மாதம் ஒரு நாள் புதிதாய் ஸ்தாபிக்கப்பட்ட ஓர் தமிழ் ஆமெசூர் நாடக சபையின் முதல் நாடகத்திற்கு என்னை தலைமை வகிக்கும்படி கேட்டார்கள். அவர்கள் வேண்டுகோளை மறுக்க மனமில்லாதவனாய் ஒப்புக்கொண்டு நாடகத்தைப் பார்க்கப் போயிருந்தேன். நடிகர்கள் என்னவோ சுமாராக நன்றாய் நடித்தனர் என்றே நான் கூற வேண்டும். ஆயினும் நாடகம் எழுதப்பட்டது மாத்திரம் என் மனதிற்கு அதிருப்தியைத் தந்தது. ஒரு உதாரணத்தை இங்கு எழுது கிறேன். ஒரு முக்கிய நாடக பாத்திரம் தன் சகோதரர் மரித்ததாக செய்தி வருகிறது. அதைக் கேட்டவுடன் அந்த நடிகர் உடனே ‘கொலு கோவில் ‘ சங்கீதம் அப்யசிக்கிறார்! இதில் விந்தை என்னவென்றால் இவர்தான் அன்று நடந்த நாடகத்தை எழுதினவராம். இதைக் கேட்டவுடன் கொஞ்சம் நேரம் இருந்து விட்டு ஏதோ ஒரு சாக்கை சொல்லிவிட்டு வீட்டிற்கு திரும்பி விட்டேன். இந்த நாடகத்திலிருந்து போய் இக்காலங்களில் எழுதப்படும் நாடகங்களின் சில காட்சிகள் நான்கு ஐந்து வரி சம்பாஷணைகளையுடையனவாயிருக்கின்றன. இதற்கு முக்கிய காரணம் சினிமாக்களில் நடிக்கப்படும் நாடகங்கள் போலும், நாடக மேடை நாடகங்கள் விருத்தியடைய வேண்டுமென்றால் இம்முறையானது முற்றிலும் மாற்றப்பட வேண்டுமென்பது என் அபிப்ராயம்.

1957 மார்ச் 15 சென்னை நாடகக் கழகத்தார் வினோத வரியை (Entertainment tax) இரண்டு வருடங்கள் நாடக சபைகளுக்கு நீக்கிய கனம் கோபால் ரெட்டி அவர்களுக்கு தேநீர் விருந்து ஒன்று மெய்யப்பச் செட்டியார் செய்து அதில் என்னை தலைமை வகிக்கும்படி கேட்க, ஒப்புக் கொண்டு அக் கூட்டத்தில் கனம் கோபால் ரெட்டியாருக்கு வந்தனம் அளித்த போது தமிழ் நாடகத்திற்கு அவர் செய்த இந்த உபகாரத்திற்காக வந்தனம் தெரிவித்தேன்.

இவ்வருடம் ஏப்ரல் மாதம் 15ந் தேதி வினோதமாக நாடகம் ஆடும் ஒரு சபையின் வருடாந்திர கொண்டாட்டத்தில் ஆடிய ‘அந்தமான் கைதி’ என்னும் நாடகத்திற்கு தலைமை வகிக்க இசைந்து சாயங்காலம் 6 மணிக்குப் போனேன். 9 மணி வரையில் சிறு நாடக சாலையில் கஷ்டத்துடன் 3 மணி சாவகாசம் இருந்து நாடகத்தைக் கண்ணுற்றேன். நாடகம் மிகவும் நன்றாய் ஆடப்பட்டது. நாடகத்தின் முடிவில் நடிகர்களை புகழ்ந்து பேசி அவர்களை உற்சாகப்படுத்தினேன். இவ்வருஷம் ஏப்ரல் மாதம் 29ந் தேதி மியூசியம் நாடக சாலையில் ஸ்டான்டர்ட் ஆயில் கம்பெனி ரெக்ரியேஷன் கிளப்பார் ராணி என்னும் ஓர் சமூக நாடகத்தை நடத்தினார்கள். அதன் அரங்கேற்றுதலுக்கு என்னை தலைமை வகிக்கும்படி கேட்க, நான் இசைந்து முதலிருந்து கடைசிவரை இருந்து நாடகத்தைப் பார்த்து சந்தோஷப்பட்டேன். கதையை ஆங்கிலத்தில் எழுதியவர் ஒருவர். அதற்கு தமிழில் தக்கபடி வசனங்கள் அமைத்தவர் மற்றொருவர். பாட்டுக்களை எழுதியவர் ஒருவர். இச்சமூக நாடகம் மிகவும் நன்றாயிருந்தது. நாடக முடிவில் பல வார்த்தைகள் பேசினேன். நாடக கலைக்கு ஊழியம் செய்ய பல புதிய இளைஞர்கள் முன் வந்திருக்கிறார்கள் என்று அவ்வளவு உறுதியாக நம்பும்படியாக சிறந்த முறையில் நாடகத்தை நடத்தினார்கள்.

1951 ஆகஸ்டு செப்டம்பர் மாதங்களில் சென்னை தமிழ் வளர்ச்சி கழகத்தார் தாங்கள் ஏற்படுத்திய நாடக புஸ்தக போட்டியில் அனுப்பப்பட்ட புஸ்தகங்களை அனுப்பி அவைகளில் சிறந்தவற்றை பரிசுக்காக தேர்ந்தெடுக்க என்னை ஓர் ஜட்ஜாக இருக்கும்படி கேட்க அதற்கிணங்கி அனுப்பப்பட்ட சுமார் 29 நாடகங்களை என் கஷ்டத்தையும் பாராமல் பரிசோதித்துப் பார்த்து என் அபிப்பிராயத்தை அவர்களுக்கு தெரிவித்தேன்.

7-10-51-இல் லட்சுமி நாடக சபையாரால் மைலாப்பூரில் ‘அரசிளங்குமரி’ என்னும் தமிழ் நாடகம் நடத்தப்பட்டது. அதற்கு நான் தலைமை வகிக்க முன்பே ஒப்புக்கொண்டபடியால் அன்றைத்தினம் என் தேக அசௌக்கியம் குன்றியிருந்த் போதிலும் 9 மணி வரையில் பார்த்து கடைசியில் அவர்களுக்கு உற்சாக மூட்ட சில வார்த்தைகள் பேசி வீட்டிற்கு திரும்பி னேன். உடனே ஜ்வரத்தால் பீடிக்கப்பட்டு ஏறக்குறைய பத்து பதினைந்து தினங்கள் கஷ்டப்பட்டேன்.
----------------

17. மது விலக்குப் பிரசாரம் செய்தது

எனது நாடக மேடை நினைவுகள் என்னும் புஸ்தகத்தில் 1895-ஆம் வருஷம் நான் பெங்களுருக்குப் போயிருந்தபோது ஒருமுறை அரை அவுன்ஸ் பிராந்தி சாப்பிட்டு அதனால் பெருங் கஷ்டம் அநுபவித்த விஷயத்தை எழுதியிருக்கிறேன். பட்ட ணம் திரும்பி வந்தவுடன் மதுவிலக்குச் சங்கம் ஒன்றை சேர வேண்டுமென்று தீர்மானித்தேன். ஆயினும் நானாக காசு சம்பாதித்தாலொழிய எந்த சங்கத்தையும் சேரக்கூடாதென தீர்மானித்தவனாய் 1898-ஆம் வருஷம் நான் வக்கீலாகி பணம் சம்பாதித்த பிறகுதான் சென்னையில் ஸ்தாபிக்கப்பட்ட H.G.T.L. என்னும் மது விலக்கு சங்கத்தில் ஒரு அங்கத்தினனாக சேர்ந்தேன். இச்சங்கத்தின் இரண்டு முக்கிய கோட்பாடுகள் ஒன்று ஆயுள் பர்யந்தம் எந்தவிதமான மதுவையும் தீண்டலாகாதென்பது. இரண்டு அங்கத்தினர் எல்லாம் சகோதரர் மனப்பான்மையோடு வாழவேண்டும் என்பவைகளாம். அதுமுதல் இந்த 64 வருடங்களாக அச்சங்கத்திற்கு முக்கியமாக புதன்கிழமைகளில்போய் உழைத்து வருகிறேன். இச்சங்கத்தின் சார்பாக மூன்று மாதத்திற்கு ஒருமுறை அருகிலுள்ள ஏதாவது ஒரு ஊருக்குப்போய் மதுபானம் செய்வதினால் உண்டான தீமையைப்பற்றி பிரசாரம் செய்து வருகிறோம். சில வருடங்களுக்கு முன் ஆங்கில அரசாங்கத்தார் சென்னை ராஜதானி முழுவதும் மதுவிலக்கு பிரசாரம் செய்யவேண்டுமென்று ஒரு கமிட்டியை ஏற்படுத்தியபோது என்னை அக்கமிட்டி தலைவனாக ஏற்படுத்தினார்கள். இதன் மூலமாக பழைய சென்னை ராஜதானியில் பல ஜில்லாக்களுக்குப்போய் நான் மதுவிலக்கு பிரசாரத்தின் வேலை சரியாக நடக்கிறதா என்று பார்த்து வந்தேன்.
------------------

18. S. I. A. A.

சவுத் இண்டியன் ஆத்லெடிக் அசோசியேஷன் என்னும் அச்சபையானது சென்னையில் கிரிக்கெட் (Cricket), டென்னிஸ் (Tennis) கால் பந்து (Foot ball) முதலிய விளையாட்டுகளைக் அபிவிருத்தி செய்வதற்காகவும் வருடந்தோறும் டிசம்பர் மாதம் பீபில்ஸ் பார்க் (People's Park) வேடிக்கை விநோதங்களை நடத்தவும் ரேக்ளா முதலிய பந்தயங்களை நடத்தவும் 1903-ஆம் வருஷம் சென்னை வாசிகள் சிலரால் எற்படுத்தப்பட்டது. அதில் நான் ஒருவனாய் இருந்தேன். அதுமுதல் பல வருடங்கள் கமிட்டி அங்கத்தினனாகவும் சில வருடங்கள் உபதலைவனாகவும் இருந்து அதன் காரியங்களைப் பார்த்துவந்தேன். தேகப் பயிற்சிக்கும் வியாயாமத்திற்கும் ஏற்படுத்தப்பட்ட இச்சபையின் தொடர்பை விடலாகாதென்றும், இப்போது என் முதிர் வயதிலும் அங்கத்தினனாக இருக்கிறேன்.
----------------

19. கல்வித் துறைக்காக உழைத்தது

சென்னை பல்கலை கழகத்தில் (University) நான் தமிழ் பாஷையின் சார்பாக ஒரு செனெட் அங்கத்தினனாக பிரிட்டிஷ் ராஜாங்கத்தாரால் நியமிக்கப்பட்டு சில வருடங்கள் உழைத்து வந்தேன். அன்றியும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தில் ஒரு அங்கத்தினனாக காலஞ்சென்ற ராஜா சர். அண்ணாமலை செட்டியாரால் நியமிக்கப்பட்டு சில வருடங்கள் அதன் வேலையில் கலந்து கொண்டேன். அண்ணாமலை நகரில் பன்முறை நாடகங்களைப்பற்றி சொற்பொழிவு செய்தேன்.

மேலும் ‘சென்னை ஸ்கூல் புக் லிட்ரெச்சர் சொசைடி’ என்னும் சங்கத்தில் ஒரு கமிட்டி அங்கத்தினாக பல் வருடங்களாக தமிழ் அபிவிருத்திக்காக உழைத்து வருகிறேன். இச் சபையானது நான் பிறப்பதற்கு முன்பாக என் தகப்பனார் முதலிய பல சென்னை வாசிகளால் ஏற்படுத்தப்பட்டதாம்.
-------------

20. சென்னபுரி அன்னதான சமாஜத்தில்பங்கெடுத்துக் கொண்டது

இந்த தர்ம சமாஜத்தில் பல வருடங்களாக கமிட்டி அங்கத்தினனாக உழைத்துவந்தேன். இந்த சமாஜத்துக்கு ரூபாய் 1000 கொடுத்து என் தகப்பனார் தாயார் திதிகளில் ஏழைகளுக்கு உணவு கொடுக்கும்படியாக ஏற்பாடு செய்தேன்.
---------

21. கிழ வயது

ஹிந்துக்களாகிய நம்முள் ஒருவனுக்கு சஷ்டிபூர்த்தி ஆனவுடன் அதாவது 60 ஆண்டு முடிந்தவுடன் கிழவன் என எண்ணப்படுகிறான். பைபிள் என்னும் கிறிஸ்தவ சிறந்த மத நூலில் ஒருவனுக்கு கிழ வயது. 70 ஆண்டில் ஆரம்பிக்கிறது என்று குறிக்கப்பட்டிருக்கிறது.

என் வரைக்கும் என்னுடைய 75-வது ஆண்டில்தான் நான் கிழவனாக என்னை மதிக்கலானேன். அதற்கு முக்கிய காரணம் அதுவரையில் என் கண்பார்வை நன்றாய் இருந்தது கொஞ்சம் கொஞ்சமாக குறையலானதுதான். முதலில் இதை நான் அதிகமாக கவனிக்கவில்லை. ஒருநாள் சினிமா சென்சாராக நான் ஒரு படத்தைப் பரர்க்கவேண்டி வந்தபோது கொஞ்சம் கஷ்டப்பட்டேன். உடனே நான் ஒரு கண் வைத்தியரிடம் காட்டியபோது அவர் “இதொன்றுமில்லை, சினிமா படங்களை நீ பல வருடங்களாக சென்சாராக வேலை பார்த்ததினால் உனது கண் அதிர்ச்சி அடைந்து பலஹீனப்பட்டிருக்கின்றது” என்று சொல்லி ஒரு மூக்குக் கண்ணாடியை உபயோகிக்கும்படி சொன்னார். சாதாரணமாக 40-ஆம் ஆண்டில் கண்கள் பலஹீனப்பட்டு ‘சாலேஸ்வரம்’ என்னும் கண் நோய் வருவது வழக்கம். சாலேஸ்வரம் என்னும் பதமே ‘சாலீஸ்’ என்னும் ஹிந்துஸ்தானி பதத்திலிருந்து வந்ததாம். சாலீஸ் என்றால் 40 என்று அர்த்தம். எனக்கு இந்த சாலேஸ்வரம் வரவே இல்லை. அப்படியிருக்க எனது 75-வது வயதில் இக் கஷ்டம் ஆரம்பித்தபோது பல வைத்தியர்களுக்கு காண்பித்து வினவினேன். அவர்களுள் சில ஆங்கில வைத்தியர்கள் (Allopathic) உன் கண் பார்வை மட்டமாகி வருவதற்குக் காரணம் சிறுவயது முதல் சிறு எழுத்துக்களில் அச்சிடப்பட்ட புஸ்தகங்களை எந்நேரமும் படித்துக் கொண்டிருந்தபடியால்தான் என்று கூறினர். மற்றும் சிலர் ‘நீ சினிமா சென்சாராக இருந்து படங்களை அடிக்கடி பார்க்க வேண்டியபடியால் இந் நோய் வந்திருக்கவேண்டும்’ என்றார்கள். ஒரு ஆயுற்வேத வைத்தியருக்கு என் கண்களை காட்டி வினவியபோது அவர் என்னை “நீ வாரத்திற்கு இருமுறை அப்யங்கான ஸ்நானம் (எண்ணெய் தேய்த்து குளித்தல்) செய்து வருகிறாயா"? என்று கேட்டார். அவருக்கு உரைத்த உண்மையை இங்கு எழுதுகிறேன் “1926-ஆம் ஆண்டில் என் மனைவி தேக வியோகமானாள். உடனே வந்த தீபாவளிமுதல் நான் அப்யங்க ஸ்நானத்தை விட்டுவிட்டேன்” என்று கூற, அவர் “அதனால் தான் மூளை சூட்டினால் உன் கண் கெட்டு போயிருக்கிறது என்று கூறினார்” அதன் பிறகு கண் வைத்தியர்களிடம் பன்முறை காட்டிய போது “இது கேடராக்ட் (Cataract) என்னும் வியாதி இது முற்றினால் ஒழிய ஆபரேஷன் (Operation) செய்யக்கூடாது” என்று கூறிக்கொண்டு வந்தனர். கடைசியாக கண் ஆஸ்பத்திரியில் மிகப் பிரபல வைத்தியரிடம் காட்டி கேட்டபோது அவர் கூறிய பதிலை அப்படியே எழுதுகிறேன். “மிஸ்டர் சம்பந்தம், உன் கண் பார்வை முற்றிலும் போய் நீ அந்தனாக போகமாட்டாய். கவலைப் படவேண்டாம்” என்று சொன்னாரேயொழிய ஆபரேஷன் செய்யக்கூடும் என்று சொல்லவேயில்லை. உனக்கோ வயதாகி விட்டது இனி ஆபரேஷன் செய்வதில் பிரயோசனமில்லை என்று சொல்வதற்கு பதிலாக மேற்கண்டபடி சொன்னார் என்று தான் அர்த்தம் செய்துகொண்டேன். இதைக் கேட்டவுடன் நான் தமிழுக்கும் தமிழ் நாடகங்களுக்கும் எப்படி பணி செய்வது என்று மிகவும் வருத்தப்பட்டேன் என்றே கூறவேண்டும்.

இச்சமயம் ஏதோ என் மனதில் விரக்தி தோன்றினவனாய் சந்யாசம் மேற்கொள்ளத் தீர்மானித்தேன். அதற்காக என் உயிர் நண்பரும் குருவுமான. வி. வி. ஸ்ரீனிவாச ஐயங்காருடன் கலந்து பேச அவர் “அப்படியே செய்யலாம், உண்மையில் சந்யாசம் என்பது பெண்ணாசை, பொன் ஆசை, மண் ஆசை மூன்றையும் விட்டு வாழ்வதாகும் மேல் வேஷங்களில் ஒன்றுமில்லை” என்று சொல்லி முதற்படியாக ‘குடசர சந்யாசம்’ என்பதை எடுத்துக்கொள்ளும்படி சொன்னார். அதற்குரிய நிபந்தனைகளையும் எனக்குப் போதித்தார். அவர் கட்டளைப்படி என் சொத்துக்களை எல்லாம் என் குமாரனான வரதராஜனிடம் ஒப்புவித்துவிட்டு வீட்டின் மேல்மாடி அறையில் வசிக்க ஆரம்பித்தேன். இது நடந்தது 1950-ஆம் வருஷம் பிப்ரவரி முதல் தேதியாகும். மேற்சொன்ன மூன்று பற்றுகளையும் நான் வழித்தபோதிலும் தமிழ் பாஷையிலுள்ள அதிலும் தமிழ் நாடகத்திலுள்ள பற்றை மாத்திரம் விட என்னால் முடியவில்லை. இதைப்பற்றி யோசித்து இது உலக பற்றை சார்ந்ததல்ல. தமிழ் பாஷைக்கு தமிழனாய் பிறந்த நான் செய்யவேண்டிய கடமையாகும் என்று என் மனதைத் தேற்றிக்கொண்டேன். திருநாவுக்கரசு சுவாமிகள் “என் கடன் பணி செய்து கிடப்ப தாகும்” என்று கூறியிருப்பது ஞாபகத்திற்கு வந்தது. ஆகவே தமிழில் நான் எழுதுவதை நிறுத்தலாகாது என்று தீர்மானித்தேன். ஆயினும் கண் பார்வையில்லாத நான் இதை எப்படி செய்வது? என்று முன் சொன்னபடி பெருங் கலக்கமுற்றேன். தினம் நான் இரவில் தூங்கப் போகுமுன் தான் வணங்கும் தெய்வங்களைத் துதித்துவிட்டு தூங்குவது என்வழக்கம். அப்படி செய்யும் போது “இதற்கு நீங்கள் தான் ஒருவழிகாட்ட வேண்டும்” என்று கேட்டுவந்தேன். சிலதாள் கழித்து ஒரு நாள் காலை நான் விழித்தவுடன் என் புத்தியில் ஹோமர் (Homer) என்றும் கிரேக்க ஆசிரியர் பிறவிக் குருடர் எப்படி பெருங் காவியங்களை எழுதினார் ? மில்டன் (Milton) என்னும் பெயர் பெற்ற ஆங்கில நூலாசிரியர் தன் கண் பார்வை முற்றிலும் இழந்தபின் ‘Paradise lost’ என்னும் கிரந்தத்தை எப்படி எழுதினார்? அந்தகக் கவி வீரராகவ முதலியார் ராமாயண கீர்த்தனையை எப்படி எழுதினார்? அவர்கள் செய்தபடி நாம் என் செய்யலாகாது? என்னும் எண்ணம் உதிக்க, உடனே எனக்கு வழிகாட்டியத் தெய்வங்களை துதித்துவிட்டு அவர்கள் செய்தவாறே நாமும் செய்வோம் என்று தீர்மானித்தேன். அன்றைத் தினம் போஜனத்திற்கு மேல் என் பேத்திகளுள் ஒருத்தியை அழைத்து நான் எழுதவேண்டுமென்று உத்தேசித்திருந்த ஒரு சிறு கட்டுரையை கொஞ்சம் கொஞ்சமாக சொல்லி அவளை எழுதிவரச் சொன்னேன். இப்படி செய்வது ஆரம்பத்தில் எனக்கு மிகவும் கஷ்டமாய்த்தான் இருந்தது. ஆயினும் பத்துப் பதினைந்து நாட்கள் கழித்தவுடன் சகஜமாய்போய் சுல்பமாகிவிட்டது. அதுமுதல் இதுவரைக்கும் நான் எழுதி அச்சிட்டு வந்த நாடகங்கள், கதைகள் முதலியனவெல்லாம். இவ்வாறு தான் வெளியிடப்பட்டன. அச்சிட வேண்டிய புஸ்தகங்களின் ப்ரூப்கள் (Proof) வந்தால் அவளை படிக்கச் சொல்லி திருத்திக்கொண்டு வந்தேன். ஆயினும் இப்படி செய்வதில் பல எழுத்துப் பிழைகள் திருத்தப்படாமல் புஸ்தகங்களில் இருக்கின்றன என்பதற்கு ஐயமில்லை. என் கண் பார்வை மிகவும் குறைந்துபோய் என் பேரன் பேத்திகளுக்குச் சொல்லி அச்சிட்ட புஸ்தகங்கள்:- இல்லறமும் துறவறமும் (1952) சபாபதி முதலியாரும் பேசும் படமும் (1954) நான் குற்றவாளி (1954) நீண்ட ஆயுளும் தேக ஆரோக்கியமும் (1955) தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை 2 பாகங்கள் (1957) பலவகைப் பூங்கொத்து {1958).
------------

22. தினசரி பட்டி

1928-வது வருடம் நான் நீதிபதி வேலையினின்றும். விலகின பிறகு அநேக நண்பர்கள் “உங்கள் நாட்களை எப்படி கழிக்கிறீர்கள்” என்று கேட்டிருக்கின்றனர். இது ஒரு முக்கியமான கேள்வியாம். அநேக உத்யோகஸ்தர்கள் பென்ஷன் (Pension) வாங்கிக்கொண்ட பிறகு தங்கள் காலத்தை எப்படி கழிப்பது என்று திகைத்திருக்கின்றனர். காலத்தை சரியாக கழிக்கத் தெரியாமல் வீட்டிலேயே மூன்று வேளை சாப்பிட்டு விட்டு மூச்சு விட்டுக்கொண்டிருந்தால் அது ஒருவன் உடல் நலத்திற்குக் கெடுதியைத்தான் தரும். ஆகவே 1928-ஆம் வருஷம் முதல் இதுவரையில் என் காலத்தை எப்படி கழிக்கிறேன் என்பதைப் பற்றி விவரமாய் எழுதுதல் இதை வாசிக்கும் எனது சில நண்பர்களுக்காவது பிரயோசனப்படும் என்றெண்ணி இதைப்பற்றி கொஞ்சம் விவரமாய் எழுதுகிறேன். காலையில் ஆறுக்கு எழுந்திருப்பேன் (நான் பரிட்சை களுக்குப் போயிருந்த காலத்தில்கூட முன்பாக எழுந்ததில்லை) விழித்தவுடன் நான் வணங்கும் தெய்வங்களை தொழுதுவிட்டு அரை மணி நேரம் உலாவுவதிலும் வியாயாமம் எடுத்துக் கொள்வதிலும் காலம் கழியும், நான் எடுத்துக்கொள்ளும் வியாயாமத்தைப்பற்றி அறிய விரும்பும் நண்பர்கள் எனது ‘நீண்ட ஆயுளும் தேக ஆரோக்கியமும்’ என்னும் நூலில் நான் இதைப்பற்றி எழுதியதை படித்துக்கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். அவைகளையெல்லாம் பற்றி இங்கு எழுதுதல் என்றல் இச்சிறு நூல் மிகவும் பெரிதாகி விடும். அதில் எது தவறினாலும் ஒன்று மாத்திரம் தவறமாட்டேன். அதாவது ஐந்து நிமிஷம் எடுத்துக் கொள்ளும் பிராணாயாமமாம். இது மிகவும் முக்கியம் என்று நான் வற்புறுத்துகிறேன். இது முடிந்தவுடன் என் காலைக் கடன்களை எல்லாம் தீர்த்துக் கொண்டு என் காலை பிரார்த்தனையை முடிப்பேன். இதெல்லாம் முடிவதற்கு சுமார் 2 மணி நேரமாகும். பிறகு என் காலை சிற்றுண்டியை அருந்துவேன். ஏதாவது கொஞ்சம் பட்சணமும் ஒரு பழமும் நான் அருந்தும் சுக்கு காப்பியுமாம். சுக்கு காப்பி என்பது சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூன்றி னால் ஆனதாம், நான் காப்பி சாப்பிடுவதை விட்டு 50 வருடங்களுக்கு மேலாயது. இதன் பேரில் 9 மணி முதல் 11 மணி வரை நான் ஏதாவது எழுத வேண்டிய நாடகத்தையோ கதையையோ கட்டுரையையோ எழுதுவதில் காலங் கழிப்பேன். பிறகு என் நித்ய பூஜையை முடித்துக்கொண்டு உணவு கொள்வேன். இது எல்லாம் முடிவதற்கு ஏறக்குறைய ஒரு மணியாகும். ஒரு மன முதல் இரண்டு மணி வரையில் மெத்தையின் பேரில் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு முழு ஓய்வு எடுத்துக் கொள்வேன். பிறகு இரண்டு மணி முதல் 4 மணி வரையில் மறுபடியும் ஏதாவது எழுதுவதிலோ அதற்கு ஏதாவது படிக்க வேண்டியதிலோ என் காலத்தைப் போக்குவேன். நான்கு மணிக்கு மேல் ஏதாவது ஒரு சிறு பழமும் (முக்கியமாக பேரிச்சம் பழமும்) பாலும் அருந்துவேன் பிற்பாடு சுகுண விலாச சபைக்கோ, S.I.A.A-வுக்கோ, மது விலக்கு சங்கத்துக்கோ போய் அங்கு ஏழரை மணி வரையில் சீட்டாடுவதிலோ நண்பர்களுடன் பேசுவதிலோ காழங்கழிப்பேன் 8 மணிக்குள் வீடு திரும்பி விடுவேன். இரவு பூஜையை முடித்துக் கொண்டு 9 மணிக்குள் சாப்பிட்டு விட்டு உறங்கப் போவேன்.

மேற்சொன்ன தினசரி நடவடிக்கைகள் என் கண் பார்வை சுமாராய் இருந்த போது; பிறகு என் கண் பார்வை முற்றிலும் குறைந்த போது அந்த நடவடிக்கைகளில் சிலவற்றை மாற்றிக் கொள்ள வேண்டியதாயிற்று. (1) காலையில் 9 மணி முதல் 11 மணி வரையில் என் பேரன் ஒருவனை ஆங்கிலத்தில் படிக்கச் சொல்லி கேட்டு வருவேன் அல்லது அவனுக்கு ஆங்கில பாடம் கற்பிப்பேன். (2) 2 மணி முதல் 4 மணி வரையில் நான் காலையில் யோசித்திருந்த நாடகத்தையோ, கதையையோ, கட்டுரையையோ என் பேத்தி ஒருத்திக்குச் சொல்ல, அவளை எழுதிக் கொள்ளச் சொல்வேன். (3) சாயங்காலம் வெளியில் போகாதவனாய் வீட்டிலேயே 6 மணி வரையில் உலாவி வியாயாமம் எடுத்துக் கொள்வேன். (4) 6 மணி முதல் 7½ மணி வரை என் சிறிய பேரனை படிக்கச் சொல்லி தமிழ் பாடம் கற்பிப்பேன். புதன் கிழமைகளில் மாத்திரம் மது விலக்கு சங்கத்திற்கு ஒரு ரிக்ஷாவில் மற்றவர்கள் உதவியினால் ஏறிக்கொண்டு போய் வருவேன்.
---------------

23. நான் வணங்கும் தெய்வத்தின் கருணையினால் பெற்ற மரியாதைகள்

(1) என்னுடைய 81-ஆம் பிறந்த நாளில் சென்னையிலுள்ள ஏறக்குறைய எல்லா நடிகர்களும் நான் எதிர் பாராத படியான ஒரு பெரிய விழாவைக் கொண்டாடினர். (2) என்னுடைய 85 வயது பூர்த்தியானதும் சென்னை நகராண்மை கழகத்தார் எனக்கு பெரிய மரியாதையை செய்தார்கள். (3} சென்னை மாநில சங்கீத நாடக சபையார் பாராட்டு விழாக் கொண்டாடினர்.(4) இவ்வருடம் (1957) சென்னை அரசியலார் தாங்கள் நடத்திய நமது நாட்டின் நூறாவது விடுதலை விழாவை நடத்திய போது எனக்குப் பெரிய பரிசுகள் அளித்தனர். (5) நான் படித்த மாகாணக் கல்லூரி பாராட்டு விழா ஒன்றை நடத்தியது. (6) நான் படித்த பச்சையப்பன் கல்லூரி ஓர் பெரும் பாராட்டு விழாவை நடத்தியது. (7) சுகுண விலாச சபையார் ஓர் பெரும் கொண்டாட்டத்தை நடத்தி மரியாதை செய்தனர். இன்னும் மது விலக்கு சங்கம், கபாலீஸ்வரர் கோயில் அதிகாரிகள், சில நடிகர் சங்கங்கள் பிரத்யேகமாக மரியாதை செய்தார்கள். மேற் சொன்ன பல கூட்டங்களில் (சென்னையில் உள்ள பல நடிகர் சங்கங்கள் உபசாரப் பத்திரங்கள் வாசித்து மாலை மரியாதைகள் செய்தனர். இவ்வருடம் (1950) டில்லியில் உள்ள மத்திய அரசாங்கத்தார் குடியரசு தினத்தன்று {26--1-59) ‘பத்ம பூஷண்’ பட்டத்தை அன்புடன் வழங்கினர். அன்றியும் டில்லியிலுள் அரசாங்கத்து சங்கீத நாடக சங்கமானது நாடக நடிப்பிற்காக பரிசு வழங்கியது. சென்னை நாட்டிய சங்கமும் ஓர் விழாவில் அன்பளிப்பு அளித்தது. கபாலீஸ்வரர் தேவஸ்தானம் மறுபடியும் மரியாதை செய்தது. இன்னும் சுகுண விலாச சபையார், மதுவிலக்கு சங்கம் முதலிய குழுவினர் மரியாதை செய்துள்ளார்கள். சென்னை சங்கீத நாடக சபையும் ஓர் பாராட்டு விழா நடத்தியது. இவைகளை யெல்லாம் பற்றி என் சரிதையில் நானே விவரங்களை எழுதுவது மரபு அன்று என்று எழுதவில்லை. ஆயினும் எனக்கு மரியாதை செய்த ஒவ்வொரு சங்கத்திற்கும் அந்தந்த சங்கத்தின் அங்கத்தினருக்கும் என் நன்றியையும் வத்தனத்தையும் இந்த எழுத்தின் மூலமாக நான் தெரிவிப்பதன்றி நான் வேறு என்ன கைமாறு செய்யக்கூடும்? ஒரு வேளை மறு பிறப்பில் தான் செய்யக் கூடுமோ என்னவோ?

இவ்வருஷம் (1959) நான் முடித்த நூல்கள் ‘மன ஆரோக்கியமும் நீடித்த ஆயுளும்’ இந்த ‘என் சுய சரிதை’ யுமாம். மன ஆரோக்கியமும் நீடித்த ஆயுளும், என்னும் நூல் இன்னும் அச்சிடப்படவில்லை.

தன் சுயசரிதையை எழுதும் ஒருவன் - தான் பிறந்தது வளர்ந்தது படித்து, பெரியவனானது கலியாணம் செய்து கொண்டது, உத்தியோகம் செய்து பொருள் சேர்த்தது இப்படிப்பட்ட விஷயங்களைப்பற்றி மாத்திரம் எழுதிக்கொண்டு போவானானால் அச்சரித்திரம் யாருக்கு என்ன பயனைத்தரும். மேற்சொன்ன அவனது ஆயுளைப்பற்றி எழுதும் விஷயங்களோடு ஒவ்வொரு நிலையிலும் தான் இன்னின்ன நல்ல வழக்கங்களை கடைப்பிடித்து நடந்ததினால் தனக்குண்டான நன்மைகளைப்பற்றியும், தான் அப்போதைக்கப்போது ஏதாவது கெட்ட பழக்கங்களை யுடையவனாயிருந்தால் அவைகளின் பயனாக தான் அனுபவித்த கஷ்டங்களையும், நிஷ்டூரங்களையும் ஒன்றும் ஒளியாது எழுதிக்கொண்டு வருவானானால் அவன் சரித்திரமானது மற்றவர்களுக்கு முக்கியமாக இளைஞர்களுக்கு உபயோகப்படும் என்பது திண்ணம். அப்படி செய்யும் ஒவ்வொருவனும் தனக்கென்று மாத்திரம் வாழாமல் பிறர்களுக்கும் வாழ்ந்தவனாகிறான் என்பதற்கு சந்தேகமில்லை; ஆகவே நான் இதுவரையில் எழுதிய என் சரிதையில் எனது நன்னடக்கையால் அனுபவித்த நன்மையையும் கெட்ட நடத்தையால் அநுபவித்த கஷ்டங்களையும் ஆங்காங்கு கூறியிருக்கின்றேன் என்பதை இதை படித்த புத்தி கூர்மையுள்ளவர்கள் இலேசாக கண்டுபிடித்திருப்பார்கள் என்பதற்கு ஐயமில்லை. ஆகவே இனி இதுவரையில் எடுத்துக்கூறாத மற்ற விஷயங்களிலும் நான் மேற்சொன்ன கோட்பாட்டை கடைபிடித்த சில விஷயங்களை எடுத்து எழுத விரும்புகிறேன்.
------------

24. எங்கள் இல்வாழ்க்கை

இல்வாழ்க்கை நடத்துவதில் என் தகப்பனார் ஒரு நல்ல முறையை கடைப்பிடித்து வந்தவர். அவருக்கு நாங்கள் ஐந்து ஆண்பிள்ளைகள் பிறந்தோம் என்பதை முன்பே தெரிவித்திருக்கிறேன். ஒவ்வொரு பிள்ளையையும் கூடுமானவரையில் படிக்க வைத்து ஏறக்குறைய படிப்பு முடிந்தவுடன் கலியாணம் செய்வித்து பிறகு அவனை ஏதாவது ஒரு உத்தியோகத்தில் வைத்து உடனே அவனுக்கு ஒரு வீட்டை வாங்கிக் கொடுத்து பிரத்யேகமாக அவ்வீட்டில் குடும்பம் வைத்துவிடுவார். இவ்வாறு என் மூன்று தமையன்மார்களுக்கும் செய்தார். ஐயாசாமி என்கிற என் தமையன் ஒருவரை தன் முதிர்வயதில் காப்பதற்காக ஏற்படுத்திக்கொண்டார். அவருடைய அந்திய காலத்தில் என் படிப்பு முடியாது நான் வக்கீல் பரீட்சைக்கு படித்துக்கொண்டிருந்தபடியால் என்னை பிரத்யேக குடும்பஸ்தனாக வைக்கவில்லை. ஆயினும் அவருக்கு பிற்காலம் என் தமையனார் ஐயாசாமி முதலியாரும் நானும், நான் வக்கீலாக சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு ஒரு நாள் டிஸ்டிரிக்ட் முன்சீப்பாயிருந்த அவர் பட்டணத்துக்குவந்து என்னிடம் “சம்பந்தம் தகப்பனார் கட்டளையின்படி, நாமும் பிரித்துக்கொள்வோம். நம்முடைய குடும்ப சொத்தை” என்று சொன்னார்.அதற்கு நான் உடன் பட்டு அன்றைத்தினமே நீங்கள் இன்னின்ன சொத்துக்களை எடுத்துக்கொள்ளுங்கள். நான் இன்னின்ன சொத்துக்களை எடுத்துக்கொள்கிறேன் என்று சொல்லி அதன்படியே பிரித்துக்கொண்டோம் மறுநாளே ‘பாரீக்கத்து’ ஒன்று எழுதிரிஜிஸ்டர் செய்துகொண்டோம். நாங்கள் இவ்வாறு பிரித்துக்கொண்டது என் தமையன்மார்கள் மூன்று பேர்களுக்குங்கூட சில வருடங்களுக்கு பின்புதான் தெரிந்தது. இவ்வாறு செய்து கொண்டதினால் நாங்கள் அடைந்த பலன் என்னவென்னால் எங்களுக்கும் சகோதர சண்டை ஒன்றும் உண்டாகவில்லை.

ஒருகாசும் கோர்ட் செலவிற்காக செலவழிக்கவில்லை. இவ்விஷயத்தைப்பற்றி என் அருமைத் தந்தையார் பன்முறை கூறிய ஒரு பழமொழி இப்பொழுது ஞாபகமிருக்கிறது. அதாவது “இருபது குடுமிகள் ஒன்றாய் சேர்ந்து வாழும். இரண்டு கொண்டைகள் சேர்ந்து வாழமாட்டா” என்பதாகும். இந்த நன்மையை யோசித்து இதை வாசிக்கும் எனது நண்பர்கள் என் தகப்பனாருடைய கோட்பாட்டைக் கடைபிடித்து நடப்பார்களாக. ஐரோப்பியன் முதலியவர்கள் குடும்பங்களில் அண்ணன் தம்பிகள் சண்டை, ஓரவத்திகள் சண்டை, மாமி மருமகள் சண்டை என்பதே ஏறக்குறைய கிடையாது என்று கூறலாம். ஒரு ஐரோப்பியன் அவன் அரசகுமாரனாக யிருந்தபோதிலும் மணம் செய்து கொண்டவுடன் பிரத்யேக குடும்பஸ்தனாய் வாழவேண்டியதுதான். இக்கோட்பாட்டை கவனியாது என் சொந்த பந்துக்களில் பல குடும்பங்களில், ஒன்றாய் வாழ்ந்து கொஞ்சகாலத்திற்கெல்லாம் சண்டை சச்சரவு நேரிட்டு குடும்பங்கள் அழிந்துபோய் இருக்கின்றன என்று நான் பல உதாரணங்கள் கொடுக்க முடியும். இக்காரணம்பற்றியே இதை சற்று விவரமாய் எழுதினேன். அவிபக்த குடும்பமானது பூர்வகாலத்து நாகரீகத்திற்கு ஏற்றதாயிருந்தது. தற்காலத்திய நாகரீகத்திற்கு தனித்தனி குடும்ப வாழ்வே மிகவும் ஏற்றதானது என்பதற்குத் தடையில்லை.
--------------

25. கடன் இல்லா வாழ்வே கண்ணிய வாழ்வாம்

இதை நன்றாய் அறிந்திருந்த எனது தந்தையார் பல வருடங்கள் கடனின்றி வாழ்ந்துவந்தார். ஆயினும் எங்கள் எழும்பூர் பங்களாவைக்கட்ட ஆரம்பித்தபோது அது முடிவாவதற்கு தான் போட்ட திட்டத்திற்கு இரு மடங்கிற்குமேல் செலவாகிவிட்டது. ஆகவே அவர் கடன் வாங்கவேண்டிவந்தது. அவர் அந்திய காலத்தில் இக்கடன் சுமார் 8000 ரூபாய் ஆயிற்று. அதற்காக அவர் மாதம் மாதம் 40 ரூபாய் வட்டி கொடுக்கவேண்டியதாய் வந்தது. அவர் காலமானவுடன் அவர் சொற்படி என் அண்ணன் ஐயாசாமி முதலியாரும் நானும் அந்தக் கடனை முதலில் தீர்த்துவிடும்படி தீர்மானித்தோம். அதற்காக எங்கள் எழும்பூர் பங்களாவை குடிக்கூலிக்கு விட்டுவிட்டு இப்போது நானிருக்கும் வீட்டிற்கு வந்துவிட்டோம். அவர் கருமாந்திரமானபின் ஒரு மாதத்திற்கெல்லாம் எங்கள் மனைவிகளை அழைத்து எங்கள் குடும்ப நிலையை அவர்களுக்குத் தெரிவித்து அவர்கள் போட்டுக் கொண்டிருந்த நகைகளில் கட்டுக்கழித்திகளுக்கு இருக்கவேண்டிய முக்கியமான நகைகளை விட்டு மற்றவைகளை யெல்லாம் வாங்கிக்கொண்டோம். அன்றியும் நாங்கள் இருவரும் போட்டுக் கொண்டிருந்த ரவை கடுக்கன், பொன் அரைஞாண், பொன் கடிகாரங்கள், மோதிரங்களை கழட்டி இந்நகைகளை யெல்லாம் எங்கள் நம்பிக்கையுள்ள ஒரு சிநேகிதர் மூலமாக விற்றுவிட்டு கடனை முன்பு தீர்த்தோம். அச்சமயம் நம்மவர்களில் சிலர் என்ன இது தகப்பனார் இறந்த மூன்று மாதத்திற்குள்ளாக இப்படி குடும்ப நகைகளையெல்லாம் விற்றுவிடுகிறார்களே என்று இகழ்வார்களே என்று பயந்ததுண்டு. ஆயினும் என் பந்துக்களில் பலர் இப்படி செய்ததற்காக புகழ்ந்ததுண்டு. நாங்கள் மேற்சொன்னபடி உடனே கடனைத் தீர்த்திராவிட்டால் சில வருடங்களில் பெருந்தொகையாகி எங்கள் குடும்பத்தையே அழிந்திருக்கலாம். இதன்பின் நாங்கள் சம்பாதிக்க ஆரம்பித்த போது எங்கள் மனைவிமார்களுக்கு அவர்கள் கொடுத்த நகைகளுக்கு இரண்டுபங்கு அதிகமாக கடவுள் கிருபையால் செய்து போட்டோம் என்று சந்தோஷத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் பி. ஏ. வகுப்பில் படித்துக்கொண்டிருந்தபோது கம்ப ராமாயணத்தில் “கடன்கொண்டார் நெஞ்சம் போலும் கலங்கினான் இலங்கை வேந்தன்” என்னும் வரியை படித்த போது என் ஜன்மத்தில் ஒரு காசும் கடன் வாங்கக்கூடாது என்று தீர்மானித்துக்கொண்டேன். அதன்படி இன்றுவரையில் ஒருவரிடமிருந்தும் எந்த அவசரத்திலும் நான் கடன் வாங்கியவன் அன்று. இதை வாசிக்கும் எனது நண்பர்கள் அப்படியே நடப்பார்களாக.
-------------

26. குறித்த காலப்படி நடத்தல்

இவ்விஷயத்தில் என் அருமைத் தந்தையாரே எனக்கு முதல் போதகர். அவர் பள்ளிக்கூடங்களை விஜாரிப்பதற்காக போவதில் ஒருபோதும் காலம் தவறிப்போனதில்லை. என்று பலர் கூறக் கேட்டிருக்கிறேன். ஒரு உதாரணம் கொடுக்கின்றேன். ஒரு நாள் ஒரு உயர் தரப் பள்ளியை பரிட்சிப்பதற்காக காலை 11-மணிக்கு தானும் தனக்குமேற்பட்ட உத்தியோகரான மிஸ்டர் பவுலர் (Mr. Powler) உம் வருவதாக குறித் திருந்தார்களாம். அன்று மிக அதிக மழை பெய்ததாம். இருந்த போதிலும் 11-மணிக்கு முன்னதாகவே அவர் போய் சேர்ந்த போது பள்ளிக்கூடத்தில் கொஞ்சம் பிள்ளைகளும் கொஞ்சம் உபாத்தியாயர்களும் தான் வந்திருந்தார்களாம். பவுலர் துரையும் 1- மணி சாவகாசம் பொறுத்து வந்தாராம். வந்தவர் என் தகப்பனார் சரியாக வந்ததற்காக அவரை, மிகவும் சிலாகித்துப் பேசினாராம். இதை அப்பள்ளிக்கூடத்து உபாத்தியாயர் ஒருவரே பிறகு எனக்குத் தெரிவித்தார். சாதாரணமாக நம் தேசத்தவர்கள் இதை சரியாக கவனிப்பதே இல்லை. வெள்ளைக் காரர்கள் பெரும்பாலும் இதை மிகவும் கவனிப்பார்கள். இவ்விஷயத்தில் எனக்கு இரண்டாவது போதகாச்சாரியார் சின்ன கோர்ட் நீதிபதியாயிருந்த மிஸ்டர் ரோஜேரியோ (Mr. Rozario) அவர் கோர்ட்டுக்குச் சரியாக 11-மணி அடிக்கும்போது வந்து உட்காருவார். அவர் முன்பாக நான் 4 வருஷம் வக்கீலாக பழகினேன். அவர் ஒரு நாளும் இதில் தவறியதில்லை. இதைக் கடைப்பிடித்தே நானும் அதே கோர்ட்டில் பிறகு நீதிபதியாய் இருந்தகாலமெல்லாம் சரியாக 11-மணிக்கு வந்து வேலை ஆரம்பிப்பேன். இதைப்பற்றி என்னுடைய சிநேகிதர்களாகிய வக்கீல்கள் “கடிகாரம் தப்பினாலும் தப்பும் இவர் தப்பமாட்டார்” என்று கூறியதை நான் என்முறை கேட்டிருக்கிறேன். நம்மவர்கள் இந்தமுறை ஏன் பின்பற்றுவதில்லை என்று எனக்கு ஆச்சரியமாகவே யிருக்கிறது. நம்மவர்கள் கல்யாணங்களுக்கு லக்னம் வைத்தால் அதில் தவறுகிறார்களா. அல்லது ரெயிலுக்கு போவதென்றால் இரண்டு நிமிஷம் தவறிப்போகிறார்களா? இவ்விஷயத்தில் மேற்சொன்ன ரொஜோரியோ எனக்குக் கூறிய ஒரு வாக்கியம் ஞாபகம் வருகிறது. அதாவது “சம்பந்தம், காலக்கிரமப்படி வருவது எனக்குக் கஷ்டமாயில்லை. காலம் தவறி நடத்தல்தான் எனக்கு பெரும் கஷ்டமாயிருக்கிறது” என்பதாம். இதை வாசிக்கும் எனது இளைய நண்பர்களாவது வெள்ளையர்களைப் போல் தாங்களும் எவ்விஷயத்திலும் குறித்தகாலக் கிரமப்படி நடக்க கற்றுக்கொள்வார்களாக!
--------------

27. என் தாய் தந்தையர்கள் போதித்த நீதிகள்

(1) “கண்ணே பயப்படாதே,” இந்த இரண்டு பதங்கள்தான் என் தாயார் எனக்குக் கூறிய கடைசி வார்த்தைகள். அவைகளுக்கு நான் செய்யும் வியாக்கியானம் என்ன வென்றால் “என்ன இடுக்கண் நேர்ந்தபோதிலும் தைரியத்தைக் கைவிடாதே, தெய்வத்தை நம்பியிரு” என்பதாம். (2)எல்லோரையும் சந்தோஷிப்பித்து நீ சந்தோஷமாயிரு. (3) உண்மையே எப்பொழுதும் பேசு. அப்படி பேசுவதனால் யாருக்காவது மன வருத்தம் உண்டாகும் என்று தோன்றினால் மௌனமாயிருந்துவிடு (4) கடுகடுத்துப் பேசாதே. இனிமையாய்ப் பேசு. (5) உனக்கு யாராவது கெடுதி செய்தால் அதைப் பொறுத்துக்கொள். அவர்களுக்கு நீ நன்மை செய்யும்படி முயல். (5) கோபத்திற்த இடமே கொடாதே. கோபம்வந்தால் முற்றிலும் அடக்கிவிடு. (7) எந்நேரமும் நகை முகத்துடன் இரு. (8) செல்வம் வந்தால் செருக்கடையாதே. ஏழ்மை வந்தால் தளர்ச்சியடையாதே. (9) மனதினால் ஒருவருக்கும் நீங்கு நினையாதே. வாக்கினால் தீமை பேசாதே. செய்கையால் தீங்கு இழைக்காதே. (10) பேராசைப்படாதே கிடைத்தது போதும் என்று சந்தோஷத்துடன் இரு. (11) வரும்படிக்குமேல் செலவு செய்யாதே. உன்னால் இயன்ற அளவு தர்மம் செய் ஆடம்பரத்திற்காக ஒன்றும் செய்யாதே. (12) இன்றைக்கு செய்ய வேண்டிய ஒரு வேலையை இன்றைக்கே செய்து முடி. நாளைக்கென்று தள்ளிப்போடாதே. (13) புண்ணியம் செய் பாபம் செய்யாதே. (14) உன் காலம் வந்தபோது பயமின்றி உன்னைப் படைத்தவர்கள் பாதம் போய்சேர்.

முடிவில் என் ஆயுளைப் பற்றி நான் யோசித்து பார்க்குமிடத்து பல இடையூறுகளும் கஷ்டங்களும் இருந்த போதிலும் சந்தோஷகரமான விஷயங்களே மேலிட்டிருக்கின்றன என்பது என் தீர்மான அபிப்பராயம். இன்னும் என் இவ்வுலக வாழ்க்கை எத்தனை காலம் இருக்குமோ என்பதை சொல்ல என்னால் முடியாது. ஆயினும் தமிழுக்காகவும் முக்கியமாக தமிழ் நாடகத்திற்காகவும் உழைக்க எனக்கு ஈக்தியிருக்குமளவும் உயிருடன் இருக்க விரும்புகிறேன். அச் சக்தி குன்றிவிட்டால் என் தாய் தந்தையர்கள் பாதத்திடம் போய் சேரவிரும்புகிறேன். இச்சிறு நூலை முடிக்குமுன் எனது 81-ஆம் பிறந்த நாளில் சென்னையிலுள்ள நடிகர்களும் சீமான்களும் பெரிய மரியாதை செய்த போது நான் அவர்களுக்கு வந்தனம் வழங்கிய போது கூறிய வார்த்தைகளை எழுதுகிறேன். “நான் இன்னொரு பிறப்பை விரும்பவில்லை. ஈசன் திருவுளம் நான் மறுபடியும் இப்புவியில் பிறக்க வேண்டுமென்று இருந்தால் அவரை மூன்று வரங்கள் கேட்பேன். (1) அப்பிறப்பில் இப்பிறப்பில் எனக்கு தாய் தந்தைகளாய் இருந்தவர்களே அப்பிறப்பிலும் தாய் தந்தையர்களாய் இருக்கவேண்டும். 2) இப்பிறப்பில் என் நண்பர்களாய் இருந்தவர்களே எனக்கு நண்பர்களாய் இருக்க வேண்டும். (3) அப்பிறப்பிலும் நான் ஒரு தமிழ் நாடக ஆசிரியனாகவும் விநோதத்திற்காக தமிழ் நாடகங்களை நடிக்கும் நடிகனாகவும் இருக்க வேண்டும்.”

என் சுயசரிதை முற்றிற்று
-----------------

இவரது மற்ற நூல்கள்

லீலாவதி - சுலோசனே, சாரங்கதரன், மகபதி, காதலர் கண்கள்,
நற்குல தெய்வம் , மனோஹரன், ஊர்வசியின் சாபம் இடைச்சுவர் இருபுறமும்,
என்ன நேர்ந்திடினும், விஜயரங்கம், தாசிப்பெண் மெய்க்காதல், பொன்விலங்கு ,
சிம்ஹனநாதன், விரும்பிய விதமே, சிறுத்தொண்டர், காலவ ரிஷி, ரஜபுத்ரவீரன்,
உண்டையான சகோதரன், சதி— சுலோசனா, புஷ்பவல்லி, உத்தம பத்தினி, அமலாதித்யன், கள்வர் தவன்,
சபாபதி, பொங்கல் பண்டிகை அல்லது சபாபதி இரண்டாம் பாகம்,
ஓர் ஒத்திகை அல்லது சபாபதி மூன்றாம் பாகம், சபாபதி நான்காம் பாகம்,
பேயல்ல பெண்மணியே, புத்தா அவதாரம், விச்சுவின் மனைவி. வேதாள உலகம்,
மனைவியால் மீண்டவன், சந்திர ஹரி, சுபத்ரார்ஜூனா, கொடையாளி கர்ணன்,
சஹதேவன் சூழ்ச்சி, நோக்கத்தின் குறிப்பு, இரண்டு ஆத்மாக்கள், சர்ஜன் ஜெனரல் விதித்த மருந்து,
மாளவிகாக்னிமித்ரம், விபரீதமான முடிவு, சுல்தான் பேட்டை மாஜிஸ்டிரேட்,
காளப்பன் கள்ளத்தனம், முற்பகல், நாடக மேடை நினைவுகள், யாயாதி,
பிராமணனும் சூத்திரனும், வாணீபுர வணிகன், இரண்டு நண்பர்கள்,
சத்ருஜித், ஹரிச்சந்திரன், மார்க்கண்டேயர், ரத்னாவளி, மூன்று விநோத நடிகைகள்,
வைகுண்ட வைத்தியர், தீட்சிதர் கதைகள், ஹாஸ்யக் கதைகள்,
குறமகள், நல்லதங்காள், சிறுகதைகள், நடிப்புக் கலையில் தேர்ச்சிபெறுவதெப்படி?,
ஹாஸ்ய வியாசங்கள், பேசும் படக் காக்ஷி, விடுதிப் புஷ்பங்கள்,
பேசும்பட அனுபவங்கள், வள்ளிமணம், கதம்பம், மாண்டவர் மீண்டது,
ஆஸ்தானபுர நாடக சபை, சங்கீதப் பயித்தியம், ஒன்பது குட்டி நாடகங்கள்.
சபாபதி ஜமீன்தார், சிவாவியங்கள், சிவாலய சிற்பங்கள், சதிசக்தி,
மனை ஆட்சி, இந்தியனும் ஹிட்லரும், தீபாவளி வரிசை, காலக் குறிப்புகள்,
சுப்ரமன் ஆலயங்கள், தீயின் சிறு திவலை, கலையோ, காதலோ,
உணவுப் பொருள்கள், சபாபதிதுவிபாஷி, சபாபதி துணுக்குகள்,
இல்லறமும் துறவறமும், சபாபதி முதலியாரும் பேசும் படமும்,
நான் குற்றவாளி, நீண்ட ஆயுளும் தேக ஆரோக்யமும்,
தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை, பல வகை பூங்கொத்து,
நாடகத் தமிழ், யான் கண்ட புலவர்கள் முதலியன.
------------


This file was last updated on 22 Dec 2022
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gamail.com)