pm logo

ப. சம்பந்த முதலியார் எழுதிய
"சிறுத்தொண்டர்" (தமிழ் நாடகம்)


ciRuttoNTar (play in Tamil)
by campanta mutaliyAr
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

ப. சம்பந்த முதலியார் எழுதிய
"சிறுத்தொண்டர்" (தமிழ் நாடகம்)

Source.
சிறுத்தொண்டர்
இந்த தமிழ் நாடகம்
ராவ்பஹதர் ப. சம்பந்த முதலியார், பி.ஏ., பி.எல். அவர்களால் இயற்றப்பட்டது.
மூன்றாம் பதிப்பு
சென்னை "ஜூபிடர்” அச்சுக்கூடத்தில்
காபி ரைட்டு 1934 அச்சிடப்பட்டது
விலை 1.00
-------------
SIRUTHONDAR
A TAMIL DRAMA
BY RAO BAHADUR P. SAMBANDAM, B.A., B.L.
THIRD EDITION, PRINTED BY THE JUPITER PRESS
16, SEMBUDOSS STREET, O.T. Madras
All Rights Reserved] 1934 [Price per Copy 100
The Jupiter Press, Madras,
----------------
Inscribed to the Beloved Memory of my Parents P. Vijiaranga Mudaliar and
P. Manickavelu Ammal and my Friend C. Rangavadivelu.
---------------
முகவுரை.

இந்த நாடகத்தையாவது அல்லது நான் எழுதி யுள்ள மற்றெந்த நாடகத்தையாவது ஆடவிரும்புவோர், முன்னதாக எனக்குச் சேரவேண்டிய கட்டணம் (Royalty) துகையைச் செலுத்தியே, பிறகு ஆட் வேண்டும். இல்லாவிட்டால் தற்காலத்திய காபிரைட் சட்டப்பிரகாரம் போலீஸ் கோர்ட்டில் தண்டனைக்குள்ளாவார்கள்.

70, ஆச்சாரப்பன் வீதி, சென்னை ப. சம்பந்தம்
---------------------
சிறுத்தொண்டர்
நாடக பாத்திரங்கள்


பரமசிவம் -- ஜகதீஸ்வரன்
பார்வதி -- ஐகன்மாயை
சிறுத்தொண்டர் -- பரஞ்சோதியார் எனும் சிவ பக்தர்
திருவெண்காட்டு நங்கை -- சிறுத்தொண்டர் மனைவி
சீராளன் -- சிறுத்தொண்டர் புதல்வன்
சந்தனநங்கை -- சிறுத்தொண்டர் வீட்டு வேலைக் காரி
கச்சேஸ்வரையர் -- ஒரு பிராம்மணன்
தேரையர் --ஒரு வைத்தியர்
பசுபதி, நீலகண்டன் -- பிராம்மணப் பிள்ளைகள்
நந்திதேவர், பூதகணங்கள் முதலியோர்.
கதை நிகழிடம்:- கைலாசத்திலும், திருச்செங்காட்டங் குடியிலும்.
-----------

சிறுத்தொண்டர் : முற்கூறு

இடம் - கைலாசத்தில் ஓர் அந்தரங்கமான இடம்,
பரமசிவமும் பார்வதியும் வீற்றிருக்கின்றனர்.
பரமசிவம் தனது சிரத்தினின்றும் ஒரு மலரை எடுத்து பார்வதிக்குச் சூட்டுகின்றனர்.

பா. : பாக்கியம்!- நாதா, சில தினங்களாக நான் தங்களை ஒரு விஷயம் கேட்கவேண்டுமென்று பன்முறை பிரயதனப் பட்டேன். ஆயினும் அடியாள் கேட்பது அடுக்குமோ என்னவோ, என்னும் பீதியினால், வாளா யிருந்துவிட் டேன் கேளாது. நான் கேட்பது தவறாயின் தாம் கருணை கூர்ந்து மன்னிக்கவேண்டும். அன்றேல், அடியாள் அறி யும்படி விடை தந்தருள வேண்டும்.

ப. : பார்வதி, உனது மனத்தில் உதித்த சங்கையை முன்பே உளம் கொண்டோம். ஆயினும் நீ அதை நம்மிடம் கேட்டு அறிந்துகொள்ள வேண்டுமென்றே, பொறுத் திருந்தோம். பாவாய், இது தக்க சமயம் கேள்.

பா. : பாக்கியம்! நாதா, தமது திருச்சடையில் சூடும்படி யான மலர்கள், முன்பைவிட, அதிக அழகாயும், வாசனை பொருந்தியவைகளாயு மிருக்கின்றன சில தினங்களாக
இந்த புதுமைக்குக் காரணம் யாதோ, அடியாள் அறிய விரும்புகிறேன்.

ப. : பார்வதி, நீ கேட்டது நமக்கு மஹத் சந்தோஷ மாச்சுது. நாமும் இதைஉனக்குத் தெரிவிக்க சமயம் நாடிக்கொண்டிருந்தோம். இதற்குக் காரணம், நமது பூ மண்டலத்தில் இப்பொழுது பரிபக்குவ திசையை யடைந்திருக்கும், நமது பரம பக்தனொருவனுடைய பேரன்பே!

பா. : மிகவும் சந்தோஷம்! - நாதா, அப்படிப்பட்ட பரம பக்த சிரோமணியின் பெயர் என்னவென்று கேட்கலாமோ நான்?

ப. : அவனது இயற் பெயர் பரஞ்சோதியான்; காரணப் பெய ராகச் சிறுத்தொண்டன் எனும் பெயர் பெற்று விளங்கு கிறான் இப்பொழுது.

பா. : என்ன ஆச்சரியம் ! நாதா, தங்கள் திருவாக்கால் புகழத் தக்க அன்பனுக்கு சிறுத்தொண்டன் எனும் பெயர்தான் வாய்க்கவேண்டுமோ? - ஆயினும் தேவரீருடைய திருவுள்ளத்தை உணர்ந்தார் யார்!

ப. : பெண்ணே, அதற் கொரு காரணம் உண்டு. எப்படிப் பட்ட அரிய பெரிய தொண்டு புரிபவனாயினும், மனத்தில் அடக்கம் என்பது முக்கியமாக இருக்கவேண்டு மாத லால், சிறுத்தொண்டன் என வழங்கலாயிற்று.

பா. : நாதா, அப்படிப்பட்ட பக்தனுடைய வரலாற்றினை கேட்டு என்னைக் களிப்புறச் செய்ய வேண்டுகிறேன்.

ப. : அவன், திருச்செங்காட்டங்குடியில், ஆ மாதய குலத் துதித்து, சகல கலை வல்லவனாகி, அந் நாட்டை யாளா நின்ற சோழ மன்னவனிடம் மந்திரியாகி, வாதாபி எனும் வட நகர்மீது தண்டெடுத்துச் சென்று, வெற்றிகொண்டு, அளவற்ற நிதியைத் தன் அரசனுக்குப் பகுதியாகக் கொணர்ந்து சமர்பிக்க, அரசன் மனமகிழ்ந்து நீ வேண் டிய வரந்தனைக் கேளென இயம்ப, பரமசிவத்திற்குப் பாரினில் பணி செய்யும் தொழிலே இனி எனக்குத் தொழிலாக வேண்டுமென்று அன்பன் கேட்க, அங்ஙன மே ஆகுக என்று அறைந்தான் அம் மன்னவனும்.அந் நாள் முதல், அரச னளித்த திரண்ட நிதியைக்கொண்டு, நமது அடியார்க்கு அடிசில் அளிக்கும் தொண்டினையே பெரும் தொண்டாகப் பூண்டு, அவர்கள் வேண்டுவன இல்லை யென்னாது வழங்கி, நமது பூசனையை இயற்றி, வருகின்றான் பூ மண்டலத்தில். நாள்தோறும் அடியார்க்கு வேண்டிய உணவை முன்னளித்தே பின்பு தா னுண்ணவேணும், என்னும் விரதம் பூண்டிருக்கிறான்.

நாதா, போஜனத்தில் வேண்டுவன இல்லை யென்னாது வழங்குதல் மிகவும் கடினமன்றோ?

ஆம், உண்மையே. அப்படிப்பட்ட அரிய தொண்டினைத் தான் சிரமேற் பூண்டு, தவறாது நடந்து வருகிறான். அப் படிப்பட்ட பக்தன் ஆர்ந்த அன்போடு நமக் கியற்றும் பூசனையின் மலர்களே, நமது சிரத்தில்,நீ அதிசயிக்கும் படி அத்தனை அழகோடும் அரும் வாசனையோடும் விளங்குகின்றன.

பா. : நாதா, மிகவும் சந்தோஷம். இப்படிப்பட்ட சந்தோஷம். இப்படிப்பட்ட அருமை யான தொண்டினைப் புரியும் பரமபக்தன் வேண்டுவதை சீக்கிரத்தில் அவனுக்கு அளித்து அவன் மனத்தினைத் திர்ப்தி செய்யலாகாதோ தாம்?

ப: அதுதான் கஷ்டமா யிருக்கிறது, தினந்தோறும் நமது பூசனையை முடித்து எழுகையில்,ஏதாவது நம்மை வேண் டினனாயின், அதை அவனுக்கு எளிதில் அளித்திடலாம். உனது விருப்பத்தின்படியே ; இந்த பக்தனோ, நம்மை ஒன்றும் கேட்கிறா னில்லை. நம்மிடமிருந்து விடைபெறும் பொழுதெல்லாம், எல்லாம் உமது பேரருள், என்று கூறிவிட்டு விடை பெறுகிறான். இவனுக்கு நாம் என்ன செய்வது? ஒரு யுக்தி சொல் பார்ப்போம்.

பா. : நாதா! என்னைப் பரீட்சிக்கிறீர் போலும். தாங்கள் அறி யாதது அடியாள் என்ன சொல்லப் போகிறேன் அந்த பக்தனுக்கும் மனைவி மக்களுண்டோ?

ப. : உண்டு. வெண்காட்டு நங்கை என்னும் உத்தம படி சொற் றவறாத பத்தினியும், சீராளன் என்னும் ஐந்து வயதுடைப் பாலனும் உண்டு.

பா. : ஆனால், நாதா,அவனுக்கு அளிப்பதற்கு வேறு என்ன இருக்கிறது?

ப. : அவன் வேண்டியபடி, நமது பேரருள்! அதை அளிப்ப தற்குச் சரியான மார்க்கம் அவனது அன்பின் திறத்தை அகிலமெல்லாம் அறியச் செய்வதேயாம். (எழுந்திருந்து) நீ என்ன சொல்லுகிறாய்?

பா. : நாதா, தமது திருவுள்ளத்திற்குக் குறுக்குண்டோ? தமது திருவுளக் குறிப்பை யறிந்தேன். அப் பரம பக்த னுடைய பரிபக்குவத்தைப் பரீட்சிக்கத் தாங்கள் பூலோ கம் போகத் தீர்மானித்திருக்கிறீர் போலும் -- நானும் உடன்வர ஆக்கினை யுண்டோ?
.
ப. : பாவாய், நாம் பயிரவ வேடம் பூண்டு போக யோசித் திருக்கிறோம். அதற்கு நீ பக்கலில் இருப்பது ஒவ்வாது.

பா. : தங்கள் சித்தம்! - ஆயின், இப்பொழுதே தங்களை நான் ஒன்று வேண்டிக் கொள்ளுகிறேன். தாங்கள் பக்தனு டைய மனத்தைப் பரீட்சிக்கையில், அதிக ரௌத்திரமா யிருக்கலாகாது. தேவரீர் திருவுள மறியாத விஷய மன்று. ஆயினும் கூறுகிறேன், க்ஷமித்தருளவேண்டும். சகல பிராணிகளுக்கும் தாம் தந்தை யென்பதை மறவாதீர்; அவர்களுக்கெல்லாம் நான் தாயானதுபற்றி, தாம் என்ன செய்த போதிலும், கருணை கூரும்படியாகக் கையிரந்து வேண்டுகிறேன்.

ப. : பார்வதி, அப்படியே ஆகட்டும் - ஆயினும், பாவாய், என் ன நீயே இவ்வாறு பேசுகிறாய்? வருத்துவது யார்? வருத் தடுப்பவது யார்? - நீயே ஜகத் மாயை! அது உன்னையும் பீடிக்கிறதோ? ஞானக் கண்ணைத் திறந்து நோக்குவாய்- இவைகளெல்லாம் உலக ரட்சணார்த்தம் நாம் புரியும் லீலா வினோதங்களே!

பா. : ஆம் ! - நாதா,-அறிந்தேன் !- மன்னியும் - அடியாள் எப்பொழுது -

ப. : பக்தனுக்குக் காட்சி கொடுக்கும்பொழுது.

பா. : அடியாள் பாக்கியம்!

ப. : நந்தி!

நந்தி தேவர் வருகிறார்

ந. : அடியேன்!

ப. : நந்தி, பூமண்டலத்தில்,நாளைத்தினம் சூரியன் உதிக்கு முன், நீ, நமது கணங்களில் வேண்டியவரை உன்னுடன் அழைத்துச் சென்று, திருச்செங்காட்டங் குடியில், மேலண்டை வீதியில் உள்ள புது மண்டபத்தில், வயோ திக அடியான் வேஷத்துடன் தங்கி, அன்றைத்தினம் சாயங்காலம் வரையில், அவ்வூரில் சிறுத்தொன்டன் தவிர, சிவ வேடம் தரித்த ஒருவன் பாக்கியின்றி, எல் லோருக்கும் பெரும் விருந் தளித்து திர்ப்தி செய்விக்க வேண்டும். அச்சிறுத் தொண்டன் வீட்டிற்கு ஒருவனாவது உணவிற்குப் போகாதிருக்கும்படி செய்யவேணடும்.

ந. : சித்தம்!

காட்சி மறைகிறது.
------------------

முதல் அங்கம் : முதற் காட்சி

இடம் - திருச்செங்காட்டங்குடிக் கடுத்த ஒரு வெளி.
பூதகணத்தில் சிலர் வருகின்றனர்.

மு. பூ. : நாம் எல்லோரும் வந்து விட்டோமா?- மற்ற கணங்கள் எங்கே?

மற்றவர்களை யெல்லாம் அழைத்துக்கொண்டு நந்தி தேவர் முன்பே போய்விட்டார். நான் சீக்கிரம் போகவேண்டும். நீங்கள் பின்னால் வாருங்கள் என்று கூறிச் சென்றார்.

மு. பூ. : அதுதான் திருச்செங்காட்டங்குடி போலும் - பூலோகத் திற்கு வந்து சேர்ந்து விட்டோமே,இனி நாம் உரு மாற்ற வேண்டியதுதான் போலும்,

நா-பூ. : ஆம் - நீர் என்னவாக மாறவேண்டும்?

மு. பூ. : நான், பரிசாரக னாகவேண்டுமென்று ஆக்கினை.

நா-பூ. : அம்மட்டும் அதிர்ஷ்டசாலி - நீரோ?
.
இ-பூ. : நான், பதர் பேணி.

நா-பூ. : தாமோ?

இ-பூ. : நான் சோமாசு.

நா-பூ, : தாங்கள்?

ஐ-பூ. : பாதுமை பாயசம்.

நா-பூ. : நீர் என்ன?

ஆ. பூ. : நான், சர்க்கரை பொங்கல்.

நா- பூ. : எல்லாம் அதிஷ்டசாலிகள் - ஐயா, தாம் என்ன ஒரு வாறாய் நிற்கிறீர்? ஒருபுறமாக ?-தாம் என்ன?

ஏ-பூ. : அதை யேன் கேட்கிறீர்? - நமக்கெல்லாம் நேரமாகவில் லையா? நந்திதேவர் நாம் கால தாமதம் செய்தால் கோபித் துக் கொள்ளமாட்டாரோ?

நா -பூ : இன்னும் கால மிருக்கிறது - அவசரப்பட வேண்டியதில்லை. தாம் என்னவாக மாறவேண்டுமென்று உத்தரவா யிருக் கிறது சொல்லுமே?

ஏ - பூ. : [ஒரு புறமாக] நான்கு பெயர் முன்னாக நம்மை இழுத்து விடாதீர் ஐயா, உமக்கு வேண்டுமென்றால் ரகசியமாய்ச் சொல்லுகிறேன்.

மு-பூ. : இதில் ரகசிய மென்ன ஐயா? அவர் கொழுக்கட்டையாக வேண்டுமென்று உத்தரவா யிருக்கிறது.

மற்றவர். ஓஹோ!
[நகைக்கின்றனர்]

மு. பூ. : இதில் நகைப்பென்ன ஐயா? ஏதாக மாறினால் என்ன? எல்லாம் நம் பெருமான் கட்டளைப்படி நடக்கவேண்டியதுதானே?

மூ - பூ. : இல்லை, அந்த பட்சணம் அவருக்கு வந்து சேர்ந்ததே என்பதுதான்,

ஏ-பூ. : அதிருக்கட்டும் எங்களை யெல்லாம் கேட்டுக்கொண்டு வந் தீரே -- உமது சமாசாரம் என்ன சொல்லும்.

நா-பூ. : நானும் ஒரு பதார்த்தம் தான் - நேர மாகிறது, புறப்படு வோம், நாம் சீக்கிரம் உருமாற வேண்டும். பிறகு நந்தி தேவர் கோபிப்பார்.

ஏ. பூ. : ஐயா, அதெல்லா மிருக்கட்டும். கொஞ்சம் சொல்லிவிடும்.- இதிலென்ன ஐயா வெட்கம்?-- இல்லை, நீங்கள் சொல்லா விட்டால் பிறகு நாங்கள் அறிந்துகொள்ள மாட்டோமா? நீராக இப்பொழுதே சொல்லிவிடுமே-

நா-பூ. : நான் -- நான் --

ஏ-பூ. : சொல்லுமையா, சங்கோச மென்ன?

நா-பூ. : கொத்தவரைக்காய் வற்றல்.

மற்றவர். ஆஹாஹா ! [நகைக்கின்றனர்]
ஏ-பூ. : அதற்காகத்தானா இவ்வளவு சங்கோசப்பட்டீர்!

மு - பூ. : இராதா பிறகு? வெறும் கொத்தவரைக் காயாவது இருக்க லாகாதா? அதிலும் வற்றலாக வேண்டுமா?

மு - பூ. : அதை யேனையா கோரினீர் எல்லாவற்றையும் விட்டு? ஒரு
ஹல்வா, பூரி, வடை,சுகியனாகக் கோரலாகாதா?

நா-பூ. : அதுதா னையா கொஞ்சம் வருத்தமா யிருக்கிறது.- நானாகக் கோரவில்லை. நந்திதேவர் மற்றவர்களை யெல்லாம் கேட்டதுபோல் என்னையும் கேட்டபொழுது, கோராமல், நீங்கள் நீங்கள் சொல்லுமே சொல்லுமே என்றேன், அவர் உடனே, ஆனால் நீர் கொத்தவரைக்காய் வற்றலாகும், என்றார். அப்புறம் என்ன செய்வது? பரலோகத்திற் குப் போயும், வாய் கொழுப்பு சீலையால் வடிந்த கதை யாயிற்று.

மூ - பூ. : அப்படி யொன்று மிராது. உம்மைப் பார்த்தவுடன் நந்திதேவருக்கு கொத்தவரைக்காய் வற்றல் ஞாபகத்தில் வந்திருக்கும். பரமசிவம் ஒரு பதார்த்தமாவது குறை வாக இருக்கலாகாது என்று கட்டளையிட் டிருக்கிறாராமே, ஆகவே ஒன்றும் குறையாகாதென்று இவ்வாறு கட்டளையிட் டிருப்பார்.

நா - பூ. : இல்லை இல்லை! இப்பொழுது ஞாபகம் வந்தது ! பூர்வ வினை இன்னும் விடவில்லை போலும். நான் போன ஜன்மத்தில் பூமியி லிருந்தபொழுது இந்த கொத்தவரைக் காய் வற்றலின் மீது அதிக பிரியம் வைத்திருந்தேன்.- அதன் பலன் இன்னும் என்னை விடவில்லை போலும்.

இ-பூ. : ஆம், ஆம், எங்கிருந்தபோதிலும் ஊழ்வினை அனுபவித்தே தீரவேண்டு மல்லவா? நேரமாயது வாருங்கள் போவோம்.

[போகிறார்கள்].
காட்சி முடிகிறது.
----------------

இரண்டாம் காட்சி

இடம் - நாயனார் வீட்டில் ஒரு கூடம்.

சிறுத்தொண்டர் சிவபூசை முடித்துக்கொண் டிருக்கிறார்.
திருவெண்காட்டுநங்கை விசிறியவண்ணம் நிற்கிறாள்.

சி . : (பாடுகிறார்.]
திருச்சிற்றம்பலம்.

நறை கொண்ட மலர்தூவி, விரையளிப்ப நாடோறு
முறைகொண்டு நின்றடியார், முட்டாமே பணிசெய்யச்
சிறைகொண்ட வண்டரையுஞ், செங்காட்டங் குடியதனுட்
கறைகொண்ட கண்டத்தான், கணபதீச்சுரத்தானே.

எம்பெருமானே! எல்லாம் உமது பேரருள்!-
.
(பூசை முடிந்ததும், அர்ச்சனை செய்த புஷ்பங்களி னின்றும் மூன்றை எடுத்து, ஒன்றைத் தன் தலையில் சூடி, ஒன்றைத் தன் மனைவியினிடம் கொடுக்கிறார்.)

சி. : (மற்றொரு புஷ்பத்தை அவளிடம் கொடுக்க எடுத்து] இதைச் சீராளனிடம் கொடு,
(அது தவறி கீழே விழுகிறது] என்ன இது? தவறுகிறது! எம்பெருமான் திருவுள மெப்படியோ?

தி. : [அப் புஷ்பத்தைக் கையி லெடுத்து] நாதா! தமக்கு ஒரு கெடுதியும் வாராம லிருக்குமாக!
சி. : எல்லாம் எம்பெருமான் அருள்!

தி. : நமது மைந்தனுக்கும் ஒரு தீங்கு நேரிடா திருக்குமாக!- நாதா! என் இடது கண்ணும் இடது தோளும் துடிக்கின் றனவே!

சி. : ஆகவே, ஒன்றும் அஞ்சவேண்டியதில்லை. அப்படி. ஏதாவது நேரிட்டபோதிலும் எம்பெருமானது திருவரு ளால் எல்லாம் நன்மையாகவே முடியும். இதற்கெல்லாம் நாம் பயந்திடுவானேன்? எம்பெருமானது பாதமலர் நமது ஹிருதய மலரிலிருந்து நம்மைக் காத்திட வீற்றிருக்க!-- யாராவது அதிதிகள் வந்தார்களோ நான் பூசை செய்துகொண்டிருந்தபொழுது?

தி. : ஒருவரும் வந்திலர்.

சி. : என்ன காரணம்? உடன் அமு துண்ண, காலை முதல் தேடியும், உண்ணாத சிவனடியார் ஒருவரும் என் கண்ணிற் பட்டிலர்! - யாரைக் கேட்டபோதிலும் மேலண்டை வீதியில் புது மண்டபத்தில் போஜனம் கொண்டாயது என்கிறார்கள். பெண்ணே, நான் மறுபடியும் நமது திரு வீதிகளிற் சென்று பசித்திருக்கும் சிவனடியார்கள் யாரா வது கிடைப்பாரோ எனத் தேடி வருகிறேன். நீ சீக்கிரம் உணவெல்லாம் சித்தம் செய்துவை; நடுப் பகலாயது.

தி. : ஆம்,நாதா,சீக்கிரம் யாராவது சிவனடியாரை அழைத்து வாரும் போஜனம் கொள்ள, தாமும் மிகவும் பசித்திருக்கிறீர்.

சி. : பரமசிவம்! (போகிறார்.

சந்தன நங்கை உள்ளிருந்து வருகிறாள்.

ச. : அம்மா, போஜனம் எல்லாம் சித்தமாய்விட்டது.

தி. : சரிதான்.

ச. : அம்மா, என்ன முகம் வாடி யிருக்கிறீர்?

தி. : ஒன்றும் விசேஷ மில்லை

ச. : இல்லை, ஏதோ விசேஷ மிருக்கவேண்டும். இல்லாவிடின் என்று மில்லா முகவாட்டம் இன்று உமக்கு உண்டாவா னேன்? நமது குழந்தை பிறந்த பிறகு இவ்வாறு நீர் வாடியிருந்ததை நான் ஒருநாளும் கண்டிலேன்.

தி. : அவனைப்பற்றிதான் சற்று மனம் கலங்குகிறேன்

ச. : ஏன் அப்படி? கண்மணி சவுக்கியமாகத்தானே பள்ளிக் குப் போயிருக்கிறான்?

தி. : எனது நாதன் குறிப்பிட்ட மொழிகளால் அவனுக்கு சீக் கிரத்தில் ஏதோ ஒரு தீங்கு நேரிடுமென அஞ்சுகிறது என் மனம்.

ச. : என்ன அம்மா இது? இனி வரப்போகிறது இவ்வுலகில் அவர் ஒருவருக்கு மாத்திரம் தெரியுமோ? இதை யெல்லாம் நம்பாதீர் அம்மணி, அது அந்த ஈசன் ஒருவனுக்குத் தான் தெரியு மென்கிறார்களே?

தி. : ஆம், உண்மையே. ஆயினும் களங்க மற்ற மனமுடைய எனது நாதன் மனத்திற்படுவது எப்படியும் நேர்ந்தே தீரும்.

ராகம் - குறிஞ்சி.தாளம்-ஆதி.
கண்ணிகள்.

ஈசனாரே அந்த திரிகால வுணர்ச்சியை
      ஏற்றவர் என்றிடினும்
மாசிலாதமன மஹனீயர் தமக்கது
      மன்னி விளங்கிடுமே.
ஒருவினை தன்னாலே வரும் அந்த இடாது
      ஒதுங்கிடும் என்றனரே --
திருவுளச் செயலென்றே சிந்தையிற் கொண்டு நாம்
      தேர்ந்திடுதல் நன்றே.-

-- ஆயினும் அது சுபமாகவே முடியும் முடிவில், என்றும் கூறியுள்ளார். ஆகவே அவர் உரைத்தபடி யாது மீசன் செயலென் நம்பி நான் பொறுத்திருப்பதே தகுதியாம்.
[வெளியில் கதவை தட்டுகிற சப்தம்]
சந்தனம், யாரோ கதவைத் தட்டுகிறார்கள் - யார் என்று பார்த்துவா?- எனது நாதனா யிருக்குமா?
(சந்தனம் போகிறாள்]
அவர் இதற்குள்ளாக அடியாரைக் கண்டு அமு துண்ண அழைத்து வந்தாரோ?

சந்தன நங்கை திரும்பி வருகிறாள்.

ச. : அம்மா, யாரோ ஒரு சிவனடியார் வந்திருக்கிறார்.

தி. : அப்படியா! உடனே உள்ளே வரச்சொல்.

(சந்தனம் போகிறாள்]
ஐயோ! நமது நாதன் கொஞ்சம் பொறுத்திருந்தால், சிவனடியாரை வெளியிற் சென்று நேடவேண்டிய கஷ்ட மிராதே அவருக்கு --

சந்தன நங்கை பயிரவர் கோலங் கொண்ட சிவபிரானை அழைத்து வருகிறாள்.

தி. : எம் பெருமானே! எழுந்தருள வேண்டும்.
(பாதத்தில் நமஸ்கரிக்கிறாள்]

ராகம் காவடிச்சிந்து. தாளம் - சாப்பு.
கண்ணிகள்.

ஆலத்தை யுண்டவ னாதியோர் மகிழும்
      ஆதியே, பரஞ்சோதியே, ஒரு நீதியே இந்த
தாலம் போற்றுந் தவக் கோலங் கொண்ட வொரு
      தாசனே, சிவ நேசனே --
ஆணவமாதி மும்மலங்கள் நீத்தொளிர்
      ஐயனே, தனி மெய்யனே, அருள் துய்யனே
காணு மெங்கள் உளம் தோண வுவகை வந்த
      காட்சியே, நிறைமாட்சியே.

ப. : நங்காய், இது தானோ சிறுத்தொண்டரது இல்லம்?

தி. : ஆம், ஸ்வாமி.

ப. : வீட்டில் இருக்கின்றாரோ சிறுத்தொண்டர்?

தி. : ஸ்வாமி, மன்னித்தருளவேண்டும். தன்னுடைய நியமனப்படி சிவனடியாருடன் அமுதுண்ண வேண்டுமென்று, இன்றைத்தினம் இதுவரையில் ஒருவரையும் காணாராய், திருவீதிகளிற் போய்த் தேடிப் பார்க்கச் சென்றார் என் நாதர். பரமசிவத்தினருளால் எம்பெ எம்பெருமான் எழுந்தருளப் பெற்றீர் எம்முடைய சிற்றில்லத்திற்கு. தாங்கள் இங்கே சற்று வீற்றிருக்கவேண்டும், நாதர் அதி விரைவில் வந்து விடுவா ரென்று நம்புகிறேன். தங்களைப் பார்த்தால் மிகவும் பசித்திருப்பதுபோல் காண்கிறது. ஆகவே அவர் வந்தவுடன் அவர் நிவேதனம் செய்யும் உணவை உண்டு, எங்களுக்கு இன்னருள் பாலிக்க வேண்டுகிறேன்.

ப. : மிகவும் சந்தோஷம், நாம் ஒருவாறு பசித்திருக்கிறோம் என்பது உண்மையே. அப் பசியை யாற்றவே நாம் வெகு தூரத்திலிருந்து வந்தது, உனது நாதனுடைய பெயரைக் கேள்விப்பட்டு. ஆயினும் உலக வழக்கின்படி நாம் நடப்பது தர்மமாதலின், புருஷ னில்லாத வீட்டில் நாம் தங்கி யிருப்பது நியாயமன்று. ஆகவே நாம் இவ் வூர் கணபதீச்சுர மெனும் ஆலயத்திலிருக்கும் ஆத்தி மரத் தடியில் வீற்றிருப்போம், உனது நாதன் வந்தவுடன் அறிவிப்பாய் நாம் வந்த செய்தி.

தி. : திருவுளப்படி; ஆயினும் எனது நாதர் வந்தவுடன் தாங் கள் இன்னாரென அவரிடம் அறிவிக்கும் பொருட்டு, தங்க ளுடைய நாமதேயம் ஊர் முதலியவற்றை அருள் புரிய வேண்டும்.

ப. : நமக்குப் பெயரே கிடையாது. ஆயினும் ஏனையோர் நம்மை அவரவர் தம் இச்சைப்படி அழைப்பர், அவற்று ளெல்லாம் நாம் உவந்த பெயர், அடியார்க் கடியான் என்பதே. நமக்கு ஊரொன்றல்ல, எல்லாம் ஒன்றுதான். ஆயினும் நாம் தங்கி யிருப்பது உத்தர தேசமென்று கூறு. அன்றியும் நாம் மிகவும் பசித்திருப்பதாகவும் கூறு.

தி. : அங்ஙனமே.
[நமஸ்கரிக்கிறாள்; பரமசிவம் போகிறார்.)
அந்தோ! எனது நாதர் கொஞ்சம் பொறுத்திருப்பாரா யின் இவ் வதிதியைக் கண்டிருப்பாரே.இவ் வேளையில் வெயிலில் போய் வேறொருவரைத் தேடவேண்டிய அவசிய மிராதே!

ச. : அம்மா, நான் போய் எஜமானனை அழைத்து வரவா, இவ் வாறு ஓர் அதிதி வந்திருக்கிறார் எனக் கூறி
(வெளியில் கதவைத் தட்டுகிற சப்தம்.)

தி. : வேண்டாம்! அதோ என் நாதர் வந்துவிட்டார்.
[கதவைத் திறக்கிறாள்.]
சிறுத்தொண்டர் வருகிறார்.

சி. : என்ன நமது துர்ப்பாக்கியம்! எங்கு தேடியும் உண்ணா திருக்கும் சிவனடியார் ஒருவரும் காணப்படவில்லை. யாரைக் கேட்டபோதிலும், மேலண்டை வீதியில் புது மண்டபத்தில் வயிறு நிறம்பப் புசித்தாயிற்று, என்கிறார் கள். இன்று சிவனடியாரைப் பூசித்து, உணவிட்டு, அவர்கள் உச்சிஷ்டத்தைப் புசிக்கும் புண்ணியம் நமக்குக் கிட்டாது போலும்!

தி. : நாதா, அவ்வாறு தாங்கள் கவலைப்படவேண்டாம். இப் பொழுதுதான் சற்று முன்பாக பயிரவ வேடங்கொண்ட ஒரு சிவனடியார் நமது வீட்டிற்கு வந்திருந்தார்.

சி. : அப்படியா! எங்கே அவர்? எங்கே அவர்?

தி.: சற்றுமுன்பாகத்தான் வெளியிற் சென்றார். தாங்கள் வரும்பொழுது எதிரிற் பார்க்கவில்லையோ?

சி. : இல்லையே; என் கண்ணிற்கு ஒருவரும் புலப்படவில்லையே, என்ன துரதிர்ஷ்டசாலி நான்!

தி. : சந்தனம்,உடனே வீதியிற் போய்ப்பார். அதிக தூரம் போயிருக்கமாட்டார்.
(சந்தனம் போகிறாள்.)

சி. : பெண்ணே, வந்தவரை ஏன் கைவிட்டாய்?

தி. : நாதா, என்மீது தவறில்லை. நான் எவ்வளவோ வேண்டிப் பார்த்தேன். என் நாதர் அதிதியைத்தான் நாடிப்போ யிருக்கிறார், விரைவில் வந்துவிடுவார், தாங்கள் இங்கு சற்று தங்கியிருக்க வேண்டுமென்று பிரார்த்தித்தேன். அவர் ஒரே பிடிவாதமாய் புருஷனில்லா கிருஹத்தில் தாம் தனித்துத் தங்கியிருப்பது உலக வழக்கத்திற்கு விருத்தமாகு மெனக் கூறி, நம்முடைய கணபதீச்சுரத் தாலயத்திலுள்ள ஆத்தி மரத் தடியில் தங்கியிருப்பதா கச் சென்றார்.

சந்தன நங்கை வருகிறாள்.

ச. : அம்மா, அவர் எங்கேயோ காணோம் - வீதியிலிருப்பவர் களையும் வினவினேன். அவர்கள் எல்லோரும் அப்படிப் பட்டவரைக் காணவில்லை யென்கிறார்கள். அந்த மஹான் ஒருவர் கண்ணுக்கும் புலப்படாமற் போயிருக்கவேண்டும் கணபதீச்சுரத் தாலயத்திற்கு, என்று நினைக்கிறேன்.

சி. : ஆஹா! அப்படிப்பட்ட உத்தமரான மஹான் யாரோ?

தி. : நான், தங்களுக் கறிவிக்கவேண்டி யாரென்று வினவினதற்கு, தான் சாதாரணமா யிருப்பது உத்தரதேச மென்றும், தன்னை அடியார்க் கடியான் என்று பிறர் பெயரிட்டழைப்ப தாகவும் கூறினார்.

சி. : அப்படிப்பட்ட அடியாரை நான் அதிக விரைவிற் காண வேண்டும்.

தி. : அன்றியும் தான் மிகவும் பசித்திருப்பதாகவும் கூறினார்.

சி.: அப்படியா? அதை யேன் முன்பே எனக்குக் கூறவில்லை? அந்தோ! என்ன பசித்திருக்கிறாரோ அவர். இதோ விரைந்துபோய் அவரை அழைத்து வருகிறேன்.நீ போஜனமிட எல்லாம் சித்தம் செய்துவை.
[விரைந்து போகிறார்.)

தி. : என் நாதர் சீக்கிரம் அதிதியை அழைத்துக்கொண்டு வருவாராக! அவர் எனக்கு கூறாவிட்டாலும் அவர் மிகவும் பசித்திருப்பது எனக்கு நன்றாய்த் தெரிகிறது.

ச. : என்ன அம்மணி, உமது நாதன் பசித்திருக்கிறதைப் பற்றி கவலைப்படுகிறீரே யொழிய, நீர் பசியால் களைத் திருப்பது உமக்குத் தெரியவில்லை போலும்?

தி.: என் கவலை எனக்குச் சிறிதுமில்லை. என் நாதர் உண்டு பசியாறினால் நான் பசி தீர்ந்தவளே.- அ திருக்கட்டும், கண்மணி சீராளன் பள்ளியிலிருந்து ஏன் இன்னும் வரவில்லை?

ச. : இதோ சீக்கிரம் வந்துவிடுவான் அம்மணி. இன்னும் கால மாகவில்லை.

ராகம் -- யதுகுலகாம்போதி. தாளம் - திரிபுடை
கண்ணிகள்.

கண்மணிக் கொப்பா யொளிர் கவின்பெறு சீராளனை
எண்ணும்போதெல்லா மெந்த னிதயம் பயங்கொள்ளுதே
கணபதீச்சுரத்தமர் காளகண்டனே திருக்
கருணையே என்போனே காப்பாற்றவேணும் எந்தாய்.

அந்தோ! என் கண்மணியைப் பற்றி நான் நினைக்கும் பொழுதெல்லாம் என் நெஞ்சம் என்று மில்லாதபடி பய மடைகிறதே! கணபதீசா! எல்லாம் உம தருள், அவனை நீர்தான் காப்பாற்றவேண்டும் என்ன இடுக்கண் வந்த போதிலும் - அன்றியும் எனக்கொரு யோசனை தோற்று கிறது.-- சந்தனம், விரைந்து சென்று பள்ளியினின்றும் உபாத்தியாயரிடமிருந்தும் உத்தரவு பெற்று என் கண்மணி சீராளனை விரைவில் அழைத்து வா.

ச. : அப்படியே, அம்மணி.
[போகிறாள்.]

தி. : இந்த பயிரவ வேடங்கொண்ட அதிதியைக் கண்ட பொழுது எனக்கு எம்பெருமானைக் கண்டதுபோலவே தோற்றியது. என் னுளமெல்லாம் குளிர்ந்தது, ஆகவே இவர் யாரோ பெரிய மஹானுபாவரா யிருக்கவேண்டும். எனது நாதர் அவரை அழைத்து வந்து உணவிட்ட பிறகு, நமது சீராளனை அவர் பாதத்தில் பணியச் செய்து, அவரது இன்னருளைப் பெறும்படிச் செய்யவேண்டும். அதனால், அவனுக்கு ஏதாவது தீங்கு நேரிட்டாலும் அது பரிதியின் முன் பனியைப்போல் பறந்தோடிப்போம்.

[அதிதி பூசனைக்குரிய சாமக்கிரியைகளை யெல்லாம் கொண்டு வந்து வைக்கிறாள்; வெளியிற் கதவைத் தட்டுகிற சப்தம்.]

அதோ, என் நாதர் அதிதியை அழைத்து வந்து விட்டார்!
(போய்க் கதவைத் திறக்க)

சிறுத்தொண்டர் வாடிய முகத்துடன் வந்து ஆசனத்தில் உட்காருகிறார்.

சி. : பரமசிவம்! பரமசிவம்!

தி. : நாதா,- தாங்கள் பேசா திருக்கும்பொழுது முதலில் அடியாள் பேசுவதற்காக மன்னிக்க வேண்டும். - என்ன நேர்ந்தது தாங்கள் இவ்வாறு வாடிய முகத்துடன் திரும்பி வர? அதிதி எங்கே? அவரைத் தாங்கள் பார்க்க வில்லையோ?

சி. : பார்த்தேன்.

தி. : பிறகு, அவரை ஏன் தாங்கள் அழைத்து வரவில்லை? தம்மையே காண வந்ததாகவும் கூறினார், பசித்திருப்ப தாகவும் கூறினாறே? போஜனத்திற்கு வரமாட்டேன் என்றேதாவது சொன்னாரோ?

சி. : இல்லை-- வருவதாகத்தான் சொன்னார்.-

தி. : பிறகு - ஏன் தம்முடன் வரவில்லை? நாதா, நான் அவ்வாறு கூறுவதற்காக அடியாளை மன்னிக்கவேண்டும். தாங்கள் பேதையாகிய என்னிடமிருந்து ஏதோ சொல் வதற்கு இஷ்டமில்லாததுபோல் மறைப்பதாகக் காண் கிறது. நான் அம் மஹானிடம் வார்த்தை யாடியதில் ஏதாவது தவறிழைத்தேனோ?

சி. : அப்படி யொன்று மில்லை.

தி. : ஆனால் நாதா, தங்களை வற்புறுத்துவதற்காக மன்னிக்க வேண்டும்.- தங்கள் மனத்தில் ஏதோ குடிகொண்டிருக் கிறது. அதை இன்னதென்று அடியாளிடம் அருள்
புரியவேண்டும்.

சி. : உன்னிடம் கூறி என்ன பயன்?

ராகம் - தேசிக தோடி. தாளம் - ரூபகம்.

கண்ணிகள்.

பேதமை தன்னை மாதராரது
      பூஷணமாய்ப் பேசிடினும்
பேதையா னுமை காதலராகப்
      பெற்றவொரு பாக்கியத்தால்
மாதுமை பங்கன் அருள் நோக்கமே
      மங்கை என்னை மாண்புறச் செய்யும்
ஆதலால் தம் துயர் நீக்கி
      ஆகு மென்று எண்ணலானேன்.

நாதா, நான் பெண் பேதையாயினும், எப்பொழுது பரம பக்தராகிய தமக்கு நான் பத்தினியாக வாய்த்தேனோ, அக் காரணம்பற்றி பரமசிவத்தின் இன்னருளால் அப் பத் னிக் குரியு கடமையை நிறைவேற்ற எனக்கு சக்தி யுண் டாகுமென்று எண்ணுகிறேன். ஆகவே அங்கு நடந்த விருத்தாந்தத்தையும், தமது மனக்கவலைக்குக் காரணத் தையும் சற்றே விளங்க உரைக்க வேண்டும்.

சி. : யாதும் எம்பெருமான் பாரம்! பெண்ணே, நடந்ததைக் கூறுகிறேன் கேள். நா னிங்கிருந்து விரைந் தோடி அவர் பாதத்தில் பணிந்து, அவர் இங்கு வந்தபொழுது நான் இவ்விடம் இல்லாத குறையை க்ஷமித்தருள வேண்டு மென்று பிரார்த்தித்து, பிறகு போஜனத்திற் கெழுந் தருள வேண்டுமென்று வேண்ட, உம்மால் நமக்கு போஜ னமிட
முடியுமோ என்று கேட்டார். அதற்கு நான், ஸ்வாமி எம்பெருமான் அருளால் முடியுமென நினைக் கிறேன், என்றேன். பிறகு, தாம் ஆறு திங்களுக் கொரு தரமே போஜனம் கொள்வதாயும்,அப்படி யுண்பதும் சாதாரண உணவல்லவென்றும் தெரிவித்தார். அதற்கு, திருவுளத்திற் கிசைந்த உணவையே கொடுத்து பூசிப் பதாகக் கூறி, அது எத்தன்மையான உணவோ உறைக்க வேண்டுமென வேண்ட, அவர் உண்பது சர்வ லட்சணமு மமைந்த ஐந்து வயதுடைய - பசுவெனக் கூறினார்.

தி. : இதற்குத் தாம் கவலைப்படுவா னேன்? நம்மிடம் அம் மாதிரியான எத்தனைப் பசுக்கள் இருக்கின்றன ?

சி. : பெண்ணே, அவசரப்படாதே அவர் உணவிற் காகிய பசு சாதாரணப் பசு அல்லவாம் - நரப் பசுவாம்.

தி. : நரப் பசுவா1

சி. : ஆம் - அதுவும் தாய் தந்தையர்க்கு ஏக புத்திரனா யிருக்க வேண்டு மென்றார்.-

தி. : அந்தோ! ஏராளமான பொருள் கொடுத்து வாங்குவதா யினும் ஏக புத்திரனை யாராவது கொடுப்பார்களா - பலி யாக?

சி. : அப்படிக் கொடுத்தாலும் நமக்குப் பயன் படாது -- அப்படிக் கொடுக்கும் தாய்தந்தையர்கள் மனமுவந்து கொடுக்கவேண்டு மென்றார் -

தி.: மன முவந்து!

சி. : அன்றியும்

தி. : அன்றியும் - என்ன?

சி. : அத் தனயனைத்-தாய் பிடிக்க தந்தை யறுக்க தமக்குப் பாகவேண்டு மென்றார் - பரமசிவம்!- பரமசிவம்!- பரமசிவம்!-

சந்தனநங்கை சீராளனை அழைத்துக்கொண்டு வருகிறாள்.

சீரா. : [ஓடிவந்து தன் தாயாரின் பாதத்தில் நமஸ்கரித்து] அம்மா, நமஸ்காரம்.

தி. : [வாரி எடுத்துக் கட்டி முத்தமிட்டு, கணவ நாதா!-

சீரா. : (பாதத்தில் நமஸ்கரித்து] அண்ணா, நமஸ்காரம்.

சி. : [காத்தை அவன் தலைமீது வைத்து] பரமசிவம் உனக்கு இன்னருள் பாலிப்பாராக!--

தி. : சந்தனம்,-- குழந்தையை உள்ளே கொண்டுபோய் திரு மஞ்சனம் ஆட்டி அழைத்துவா விரைவினில்.

சீரா. : எங்கே அம்மா அதிதி? யாரோ பெரியவர் வந்தாராமே, அவரை நான் பார்க்கவேண்டும்.

தி. : அவர் சீக்கிரம் வருவாரடா கண்மணி, நீ குளித்து வா விரைவினில்.

சீரா. : அப்படியே அம்மா.

சந்தனாங்கை அவனை அழைத்துச் செல்கிறாள்.]

தி. : நாதா, இனி நமக்கு மனக்கவலை ஏன்? அந்த அதிதி விரும்பிய உணவை பரமசிவம் நமக்கருளி யிருக்கின்றார். அவர் நமக்களித்தது, அவரது அடியார்களின் பசியை யாற்றுதற் கன்றி, வே றெதற்கு பிரயோஜனப்படப் போகிறது? ஆகவே எல்லாம் அவரது கருணை! அதைப் பெறக் கருதி, அந்த அடியார்க்கு அதை அளித்து மகிழ் வோம்.

சி. : [அவளைக் கட்டியணைத்து]
நங்காய்! நீயே பதிவிரதை! "கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி" என ஆன் றோர் கூறியது உன்னைப் போன்ற உத்தமிகளைக் குறித் த்தேயாம். இப்படிப்பட்ட நற்குணவதியை நான் மனைவி யாகப் பெற்றது பரமசிவத்தின் பேரருளாம்!

தி. : நாதா, அதிதி பசித்திருக்கிறாரே, அவர் கேட்டபடி அமு தளிப்பதாக வாக்களித்து - இனி அவரை அழைத்து வரலாமே-

சி. : பெண்ணே, அவருக்கு அப்படியே அமு தளிப்பதாக முன்னமே கூறி வந்தேன். அவ்வார்த்தையை உன்னிடம் உரைப்பேனாயின், உனக்கு மனமில்லா திருப்பினும்,
எங்கு என் வார்த்தைக்குக் குறுக்கு சொல்லக்கூடா தென்று, அதற்காக உடன்படப் போகிறாயோ, என எண்ணி இவ்வாறு நடந்தேன்.இது உன்னைப் பரீட்சித் தபடி யன்று. அச் சிவனடியார், தாய் தந்தையர் இரு வரும் மன முவந்து அளிக்க வேண்டுமென்று கூறியபடி யால், இங்ஙனம் உனது உள்ளத்தை அறியவேண்டி வந் தது.- இனி நாம் தாமதிக்க லாகாது. அடியார் அறப் பசித்திருக்கிறார். - அழை நமது மைந்தனை.

தி. : கண்ணே !சீராளா!

சீரா.: (உள்ளிருந்து) இதோ வருகிறேன் அம்மா!

தி. : நாதா!- இவ் வுலகத்தின் மாயையானது என் கண்களை மறைக்கிறது.

[கண்ணைத் துடைத்துக் கொள்கிறாள்,]

வி. : [தன் கண்ணைத் துடைத்துக்கொண்டு) என்னையும் பீடிக்கப் பார்க்கிறது. ஆயினும் அதற்கு நாம் இடங் கொடுக்கலாகாது நமது மைந்தன் இந்த வயதிலேயே நற்கதி யடைந்து, பரமசிவத்தின் பாதாரவிந்தங்களிடம் போய்ச் சேர்கிறா னென் உறுதியாய் நம்பி, மனத்தை திர்ப்தி செய் து கொள்ளவேண்டும். அப் பரமசிவத்தின் பே ரருளால் அதிதிகளுக்கு வேண்டிய உணவை அளித்திடும் நாம் மேற்கொண்ட விரதத்தை குறைவின்றி நடந்தேறச் செய் மகிழவேண்டும் - உலக மாயைக்கு இடங் கிறோமென கொடாதே.

தி. : அப் பரமசிவத்தின் அருள்தான் நம்மைத் தாங்கவேண்டும்!

சி. : அப்படியே ஆகும், அஞ்சாதே.- பரமசிவம்! பரமசிவம்! தி. பரமசிவம்!

சீராளன் ஓடி வருகிறான்.
பின்னால் சந்தன நங்கை வருகிறாள்.

சீரா. : (தன் தாயார் பாதத்தைக் கட்டி] அம்மா, இதோ குளித்து விட் டு வந்தேனம்மா, என்ன முகம் ஒருவாராய் இருக்கி றீர்? என்ன சும்மா இருக்கிறீர்!- என்ன அண்ணாவும் ஒருவாறாக இருக்கிறார்!
[அவரிடம் போய் அவர் பாதங் களைக் கட்டி]
அண்ணா, நீங்களும் ஏன் இப்படி இருக்கிறீர்கள்? என் மீது கோபமா? நான் என்ன தப்பிதம் செய்தேன்?பள் ளிக்கூடத்தில் உபாத்தியாயர்கூட நான் இன்று மிகவும் நன்றாய்ப் படித்ததாகச் சொன்னாரே!- நான் என்ன தப் பிதம் செய்தேன் அண்ணா?

சி. : பரமசிவம்! கண்ணே, நீ ஒரு தப்பிதமும் செய்யவில்லை.

சீரா. : அப்படியாயின் நான் பள்ளிக்கூடத்தி லிருந்து வந்தவுடனே வழக்கப்படி ஏன் எனக்கு நீங்கள் முத்தம் கொடுக்கவில்லை?

சி. : பரமசிவம்! எல்லாம் உமது அருள் !--கண்ணே, சீராளா, இப்படி வா.

சீரா. : அண்ணா, என்மீது நீங்கள் ஏதோ கோபம்கொண் டிருக்கிறீர்கள்.

சி. : உண்மையில் உன்மீது கோபமில்லை.

சீரா. : ஆனால்; எனக்கொரு முத்தம் தாரும்.

சி. : அப்பா, இனி உனக்கு நான் முத்தம் கொடுக்கலாகாது.

சீரா. : ஏன் அண்ணா ?

சி. : அப்பா, நமது இல்லத்திற்கு இன்று ஒரு அதிதிவந்திருக் கிறார்.-- அவர் விரும்பியபடி அவருக்கு உன்னை - உண் வாக வளிக்கத் தீர்மானித்திருக்கிறோம். ஆகவே - உன்னை நான் முத்தமிடுவேனாயின் - அது எச்சிலாகும்.

சீரா.: அவர் என்ன - என்னை - சாப்பிடவா போகிறார்?

சி. : ஆம்,கண்மணி.

சீரா. : அப்புறம் - நான் - எங்கே போவேன் அண்ணா? P

சி. : எம்பெருமானது பாதாரவிந்தந்தனைப்போய்ச் சேர்வாய்.

சீரா. : மிகவும் சந்தோஷம்!- அதற்காக ஒருவாறா யிருப்பா னேன்?
[தாயாரிடம் போய்] அம்மா! அதற்காகவா முகத்தை இவ்வாறு வைத்துக் கொண் டிருக்கிறீர்கள்! நீங்கள் தானே எனக்குச் சொன் னீர்கள், தினம் கோயிலுக்குப்போய் "ஸ்வாமி, என்னை யும் எனது தாய் தந்தையரையும், உமது பாதார விந்தத் தில் வைத்துக் காப்பாற்றும்" என்று பிரார்த்திக்கும்படி -- அதற்கேன் துக்கப்படுகிறீர்கள்?

ராகம் - யதுகுல காம்போதி. தாளம் - ஆதி.
கண்ணிகள்.

இவ்வளவு பருவத்தில் இறைவன் பதஞ் சேர்த்திட
ஒவ்வியதே சாலமென்றே, உளமிக நொந்தேனே.
கண்மணியே கற்பகமே, கனிரசமே செம்பாகே,
மண்ணில் உனைப்பிரிய, மனமது கொள்வேனோ.
மும்மலங்களை நீத்த, முனிவரே என்றேனும்
செம்மையாம் மக்களாசை திறமதாய் நீப்பரோ

கண்ணே! ஆயினும் - இத்தனை சீக்கிரத்தில் உன்னை அங் ஙனம் பரமசிவம் சேர்த்துக் கொள்வாரென எண்ணவில்லை நான்!

சீரா. : அதில் என்ன தப்பிதம்? அதற்காக நீங்கள் சந்தோஷ மல்லவோ படவேண்டும், அம்மணி அஞ்சாது அவர் பாதம் சேர்ப்பியும் விரைவில்.

தி. : கண்ணே! உன் குணத்தை நான் என்னென்று புகழ்வேன் கண்ணே! உன் திருமுகத்தைக் கண்டு என் கண்கள் மறுபடியும் எப்பொழுது குளிரும்! உன் மழலைச் சொற் களைக் கேட்டு, என் செவி எப்பொழுது இன்பமடையும் ! உன் திருமேனியைத் தீண்டி எப்பொழுது என் உடல் பரவச முறும்!

சீரா. : அது ஏன் அம்மா!- நீங்கள் என்ன, எப்பொழுதும் இவ் விடமேயா யிருக்கப் போகிறீர்கள்?- ஏன் அண்ணா நீங்களும் அம்மாவும் நான் போகுமிடம் வந்து சேரமாட் டீர்கள்?

சி. : கண்ணே! சீராளா! எம்பெருமான் அருள் இருக்குமா யின் அவர் பாதாரவிந்தத்திடம் நாங்களும் விரைவில் வந்து சேர்வோம் --- அஞ்சாதே.

சீரா. : நான் அஞ்சவில்லை அண்ணா, ஆனால் அம்மாளுக்குச் சொல்லுங்கள்.

சி. : நங்காய்! கேட்டனையோ சீராளன் நவின்றதை! இவனை நாம் நமது மைந்தனாகிய குழந்தை யெனக் கேவலமாய் மதிக்கலாகாது. நம்பெருமான் இவ்வுலக மாய்கையை வெல்லுதற்பொருட்டு நமக் களித்த பெரும்பேறாகக் கொள்ளல் வேண்டாம். இல்லாவிடின் இத்தனை ஞான மொழி இச் சிறுவன் வாயினின்றும் உதிக்குமா? இப் பாலன் உன் வயிற்றி லுதித்தது நீ செய்த பெருந் தவப் பயனே.

தி. : ஆம் நாதா! இப்பொழுது எனக்கு என்னையு மறியாதபடி பெரு மகிழ்ச்சி யுண்டா யிருக்கிறது.

சி. : ஆம், அதுதான் நலம். அப்படியே உன் மனத்தை நிறுத்திவை, உலகமாயைக் கிடம் கொடுக்காதே -- எங்கே பாத்திரங்கள் முதலியன?

ச. : என்ன அம்மா இது! பெற்ற குழந்தையை யாராவது-

சி. : சந்தனம்! நீ இங்கிருந்ததை கவனித்தே னில்லை. நீ ஒரு பக்கம் போயிரு-போ, குறுக்கே ஒரு வார்த்தையும் பேசாதே.

ச. : இதோ போகிறேன்! நான் கண்ணாற் கண்டு சகியேன்! [போகிறாள்]

தி. : நாதா ! இவ் வுலக மாயை மறுபடியும் என்னைப் பற்றும் போ லிருக்கிறதே.- நான் என்ன செய்வேன்?

சீரா. : பரமசிவத்தைக் குறித்து பிரார்த்தியும் அம்மா.

சி. : சத்யம்! சத்யம்! அதுவே மார்க்கம்! எம் பெருமான் திரு வடிகளில் நமது மனத்தை நிலைபெறச் செய்வோமாகில், இவ்வுலக LOT 60) L நம்மை என்ன செய்யும்? ஆகவே, அவர் திருவடிகளைப் பற்றறப் பற்றி,அவர் பே ரருளைப் பாடி, அவர் திருவுளத்தை முடிப்போம்!

சி. தி. : ராகம் - செஞ்சுருட்டி. தாளம்-கண்டசாப்பு.

பல்லவி.
திரிபுர தகனஞ் செய்த தீவண்ணர் இன்னருளால்
திகம்பரரின் இஷ்டமதைத் தீர்ப்போம்.

அநுபல்லவி.
கரியை யுரியாகக்கொண்ட கறைமிடற் றண்ணலது
கழலடியைப் பெற்றிடவே பார்ப்போம்.

சரணம்
சங்கர சாம்பசிவா சச்சி தானந்த வாவா
எங்களையே ஆட்கொள்ள ஈசா,
பொங்கரவ மதையணிந்து, போற்றினருக்கருள் சுரந்து
இங்தகிங்கொள் பக்தர் விசுவாஸா.-

[பாடிக்கொண்டே இரண்டு மணைகளையிட்டு அதில் உட்கார்ந்துகொண்டு, திருவெண்காட்டுநங்கை சீராளனை மடிமீதிருத்தி கைகால்களைப் பரி வுடன் பிடித்துக்கொள்ள, சிறுத்தொண்டர் கந்தரத்தைக் கொய்ய கையில் வாளை எடுக்கிறார்.)

காட்சி முடிகிறது
------------

மூன்றாம் காட்சி.

இடம் - ஓர் தெருத் திண்ணை. கச்சேஸ்வரையரும், தேரையரும் திண்ணைமீது உட்கார்ந்திருக்கிறார்கள்.

க. : ஏங்காணும் வயித்தியரே, இன்னம் எத்தனெ நாள்தான் இந்த பாழும் பத்யம்?

தே. : எத்தனே நாளா அந்த எண்ணெ சாப்டிண்டு வர்ரைக?

க. : இன்னைக்கி பன்னென்டாச்சு- போஜன ருசியெ கண்டு.

தே. : ஒருமண்டலம் சாப்டாத்தான் அந்த எண்ணெயிங் கொணம் தெரியும்.

க.: ஒரு மண்டலமா! ஒருமண்டல மின்னா, இன்னும் எத்தென நா ளிருக்கு?

தே. : இன்னம் இரவத்தெட்டு நாள்தா னிருக்கு.

க. : ஒழிஞ்சுது போங்க! அதுவரைக்கும் மொதல்லெ பொ ழச்சிருந்தா பாத்துக்கலாம். என்னாங்காணம்! போஜன மில்லாமே என்னா பொழைப்பையா அது? அத்தோடே பிராணனே விடலாம்?

தே. : பத்யம்தான் பண்ரைகளே?

க. : நன்னா பத்யம் பண்ணே போங்க! உப்பில்லாத பத்யம்! அத்தெவிட மண்ணாங்கட்டியே சாப்பிடலாம். அதிலாவது கொஞ்சம் உப்பு சாரம் உண்டு.

தே. : என்ன செய்யரது? வியாதி பலமா யிருக்கே - ரோகம் போவணுமோ அன்னோ -- உங்க கண்ணு எப்படி யிருக்கு?

க. : அப்படியேதா யிருக்கு முழு பொட்டையா!

தே. : கால் நடக்க முடியரதா?

க. : கால்தான் மடக்கவே முடியலியே !

தே. : உம் -- கொஞ்சம் கையெ காட்டும்.
(கைபார்க்கிறான்.)

க. : ஐயா, வயித்தியரே, நீங்க எந்த மருந்தானாலும் கொடுங்க, திண்ணு அழரேன், இந்த பத்யத்தெ மட்டும் கொஞ்சம் மாத்தி, கொஞ்சம் ரசமாவது சாப்ட உத்தரவு கொடுங்க.

தே.: அடடா! அது கூடவே கூடாது, அது ஏதாவது சாப் டா பத்தியம் முறிஞ்சிபோம். அப்புறம், பாரிச வாய்விலே அன்னோ வைச்சூடும்.- அந்த கையெ கொஞ்சங் காட்டுங்க

நீலகண்டனும், பசுபதியும் ஏப்பமிட்டுக்கொண்டு வருகிறார்கள்.

க. : யாரடா அப்பா அது, ஏப்பம்?

நீ. : நான்தா அண்ணா, நீலகண்டன்,

க. : கூட யாரு?

நீ. : கூட, பசுபதி வந்திருக்கா.

க. : ஏன்னா! போஜனம் ரொம்ப பலம்போலெ இருக்கே! ரொம்ப நாழியும் ஆனா போலெ இருக்கு - எங்கே,சிறுத் தொண்டர் ஆத்லே சாப்பாடோ?

நீ. : அவர் ஆத்துக்கு யாரண்ணா போனா இன்னைக்கி? மேலண் டே வீதியிலே புது மண்டபத்திலே இன்னைக்கு புது சமாராதனெ. என்ன போங்க! நான் ஜன்ம மெடுத்து இது வரையிலே இந்த மாதிரி சாப்டது மில்லெ, இனிமே சாப்டப்போரது மில்லெ இன்னு நெனைக்கிறேன். எத் தனைவித சாதங்கள், எத்தனைவித கூட்டமுதுகள், எத் தனைவித வறுவல்கள், எத்தனைவித பட்சணங்கள்!-

ராகம் - அபூர்வம். தாளம் - ஏகதாளம்.

கூட்டுகறி, கோசும்பரி, டாங்கர்,
நேத்தி கூட்டு, சட்னி, தொகையல்
அசல் பச்சடி, பருப்பு, வத்தல்
அப்பளம், வடாம், ஊறுகாய், தொக்கு
உப்பு உறப்பு, நல்லெண்ணையுடன்
இட்லி, சாம்பார், பொரிச்ச குழம்பு
ரசம், மோருடன், வடை, தயிர்வடை
சொஜ்ஜிவடை, நல்லாமவடை
வெங்காயவடை, சுமசால்வடை
நெய்வடை, புளியோஹோரை,
உளுந்தோஹோரை
தத்தியோதனம், நல்லன்னமுடன்
தேங்காய் போளி, அதிரசம், அனரசம்
ஓமப்பொடி, காராபூந்தி,
பகோடா, கேசரிலாடு, ரவாலாடு,
சுகுன்ஜாலாடு, பிடாலாடு-அடாடாடா!

ப. : எத்தனைவித பச்சடிகள், எத்தனைவித ஹல்வாக்கள், எத் தனைவித தொகையல்கள், எத்தனைவித பாயசங்கள்! எத்தனைவித பழங்கள்!

ராகம் - அபூர்வம்.தாளம் - ஏகதாளம்.

வாழைப்பழம், செவ்
வாழைப்பழம், ரஸ்த்தாளிப்பழம், மலை
வாழைப்பழம், பச்சை வாழைப்பழம்
ராஜா வாழைப்பழம், பொன் தன்பழம்
பங்காளாப்பழம், பேயன்பழம்
கற்பூர வாழைப்பழம்
கமலாப்பழம், கிச்சிலிப்பழம்
அத்திப்பழம், அநாசிப்பழம்
களாப்பழம், பொம்மளி மாசு,நல்ல
மாதுளப்பழம், தீவு திராட்சைப்பழம்,
மாம்பழம், பலாப்பழம்,கொடி
திராட்சைப்பழம், ஜம்புநாவல்பழம்,
சீதாப்பழம், இலந்தம்பழம்
பேரீச்சம்பழம்,நல்ல நாவல்பழம்,
கொய்யாப்பழம், நாகம்பழம்
ஈசம்பழம், பாலைப்பழம்
பிரப்பம்பழம், விளாம்பழம் - அடாடாடா!

அண்ணா ஒரே வார்த்தையிலே சொல்லிப்பூட்ரேன், இந்த லோகத்திலே சாப்டரத்துக்கு எவ்வளவு உண்டோ, அவ்வளவும் இருந்துது - ஒவ்வொன்னும் தேவாமிர்தம்தான்!

க. : ஐயோ!

நீ. : அந்த பாழும் பிரம்மா, ஒரே வயத்தெ கொடுத்தானே அதுவும் அவ்வளவுண்டா! அதுதான் துக்கம்.

தே. : ஆ! எனக்கு நாழியாச்சு - அந்த மருந்து --

க. : ஓய்! இருங் காணும்! என் வாயிலேதான் மண்ணைத் போட்ரீரே, என் காதாலெயாவது இதை கேட்டு அனு பவிக்கிறேனே - அப்பா, நீலகண்டம், அங்கே பண்ணி யிருந்ததுலெ நல்ல வஸ்துக்களா ஒவ்வொன்னா, சொல் லிண்டு வாடா அப்பா

நீ. : அதென்னாண்ணா அப்படி கேக்கரைக? - பசுபதி சொன்ன மாதிரி, ஒவ்வொன்னும் தேவாமிர்தம்போ லிருந்ததே, அதுலே நல்லதென்ன கெட்டதென்னா?-

க. : ஆனா,அப்பா,நீ நல்லபிள்ளே- ஒவ்வொன்னா கொஞ்சம் சொல்லிகினு வா, கேக்கவாவது கேக்கரேன்.

நீ. : அது முடியா தண்ணா! நான் சாப்பிட்டதே மாத்திரம் சொல்ரதிண்ணாலும் இப்ப சாவகாச மில்லெ - ஒரு வடை தினுசுலெ மாத்திரம் - பரமாறினது எனக்குத் தெரி யாது,- நான் சாப்பிட்டது மாத்திரம், பதினெட்டு தினுசு போங்க!

க. : அடடா! த்சு, த்சு, த்சு ! - ஹூம் - தயிர் வடெ பண்ணாங் களோ அப்பா!

ப. : அந்த தயிர்வடை கிட்ட யாரண்ணா போனா?- நான் கணக்கு பாத்ததுலே, புது தினுசு மாத்திரம் பத்தொன்பது - ஒரு மிந்திரி பருப்பு வடை பண்ணி யிருந்தா பாருங்கோ --

க. : மிந்திரிபருப்பு வடெ போட்டாகளோ?-அட்டா!

ப. : மிந்திரி பருப்பும், பாதாமும், பாலைவிட்டு அறைச்சி, மிளகு காரம் சேர்த்து, பசு நெய்யிலே பண்ணியிருந்துது பாருங்கோ! எலையிலெ பரிமாறும்போதுகூட சுடச்சுட யிருந்துது - நெய் சொட்டிண் டிருந்தது!

க. : ஐயோ!-அப்பாடா!- த்சுத்சு த்சு!

தே. : தங்களுக்கன்னா, - நேக்கு நாழியாறது

க. : செத்தே இருமையா, உம்ம எழவெடுக்க!- கொஞ்சம் கேட்டாவது தொலைக்கிறனே!- அப்பா,அப்புறம்,-

நீ. : ஒரு சோமாசு பண்ணியிருந்தா பாருங்க! ஒவ்வொன்னும் இத்தனித்தனெ பெருசு! ரெண்டு பேர் சேந்தாத் தான் ஒரு சோமாசு சாப்பிடலாம்.

க. : உம்- நீ எத்தனே சாப்ட்டோயடப்பா?

நீ. : நான் மூனுதான் சாப்டேன் அண்ணா பசுபதி என்ன மாவோ அஞ்சி தீத்துட்டான்.
பசுபதி! கொடுத்துவைச்சவன்!- ஏண்டாப்பா, அதுலே பூரணம் எப்டிடாப்பா யிருந்தது?

ப. : அத்தையேன் கேக்கிறீர் அண்ணா! நெறைய்ய இருந்தது, ஒரு சீனா கற்கண்டு என்னா, பிஸ்தாக்கொட்டெ என்னா, சாரை பருப்பென்னா, கொட்டையில்லாத் திராட்சப்பழம் என்னா

க. : ஐயோ!-

நீ.: தேங்காய் துருவல் என்னா, கும்குமப்பூ என்னா, ஏலக்காய் என்னா, லவங்கம் என்னா!-

க. : அப்பாடா!

தே. : தங்களுக்கன்னா, நேக்கு நாழி

க. : இருமையா! அவா சொல்ரத்தையாவது கேட் டழுமே கொஞ்சம் - அப்புறம் - பாயசம் பண்ணாங்களோ அப்பா?

நீ. : ஒரு பாயாசமா? . நான் சாப்பிட்டது ஒரு மாத்திரம் - ஒரு ரவா பாயசம், சப்பரிசி பாயசம், பாதுமை பாயசம், பிரத மன் பாயசம், கீர் பாயசம் --

க. : அப்பாடா!-ஐயோ!

நீ. : இன்னம் மற்றதெல்லாம் ஞாபகம் வரலே அண்ணா

ப. : அண்ணா! உங்களுக்கு அந்த தேன்குழல் சமாசாரம் சொல்ல மறந்து போனேனே!

க. : எப்டி எப்டி! தேன்குழல்கூட போட்டாங்களோ? அட டா ! சொல்லு சொல்லு.-

தே. : நான் இன்னொரு சமயம் வர்ரேன்.-- இப்போ --

க. : ஐயா வயித்தியரே! இப்போ போனீரோ, உங்க மருந் துக்கு ஒரு காசுகூட கிடையாது! எனக்குக் கோபம் வரப் பண்ணாதீர்! - அப்புறம் - அந்த தேன்குழல் எப் படியிருந்ததோ?

ப. : என்னாண்ணா! அந்தமாதிரி தேன்குழல் உங்க ஜன்மத் திலே சாப்ட்டிருக்க மாட்டைக! ஒரு எலெ நிறைய ஒரே தேன்குழலா !

க. : ஐயோ!

ப. : அவ்வளவு பெரிசா யிருந்தும், அப்படி கையிலே நொறுக் கினா, மாவா பூடுமா!

க. : அப்பாடா !- உம்! - நீ எத்தனை தேன்குழல் சாப்பிட்டையோ ?

ப. : நான் பன்னெண்டுதான் சாப்ட்டேன் - நீலகண்டன் இது லெ மிஞ்சுட்டான் என்னெ- பதினாறு தீத்துட்டான்!

க. : ஐயோ !- அட்ட்டா !-ஹும் - அப்புறம் -

நீ.: அண்ணா, நேக்கு சாப்ட்ட கஷ்டம் கண்ணெ சொழட் டுது, பசுபதி கண்ணெ மூடி மூடி தெறக்கரா நாங்க இப்போ உத்தரவு பெத்துகிறோம்-நாளை நண்ணைக்கு வந்து

க. : ஏண்டாப்பா நாளை நண்ணைக்கி?

நீ. : அதுவரைக்கும் ஒரே தூக்கம் போடணும். அப்பத்தான் வயறு கொஞ்சம் ஐக்கும் - நாளெ நண்ணைக்கி வந்து கறிகள், பொரியல்கள், கூட்டமுதுகள், வருவல்கள், தொகையல்கள் இட்லிகள் -- டாங்கர்கள். - மூச்சு தணரது அண்ணா-

ப. : அப்பளங்கள், சாம்பார்கள், ரசங்கள், சித்ரான்னங்கள் ஹல்வாக்கள், பட்சணங்கள், பழங்கள் எனக்கும் - மூச்சு தெணருது அண்ணா!

க. : அப்பாடா! தெணராதா பின்னே, கேக்கரவன் எனக்கே மூச்சு தெணருதே, இத்தையெல்லாம் சாப்ட்டவா உங்களுக்கு எப்படி யிருக்கும்!- அப்பா, நீங்க போய்வாங்க - அப்புறம் சாவகாசமா, மத்தது எல்லாம் கேக்கரேன்! அப்பா நீலகண்டம், என்னெ கொஞ்சம் கையெ புடிச்சி ரக்கேன்?

நீ. : கெட்டிக்காரன்தான்!-- நான் எரங்க முடியலே, நீ வந்து எனக்கு ஒரு கொடுப்பே இண்ணு கை இண்ணு கேக்க வா யெடுத்தே நானு -

க. : ஐயா, வயித்தியரே, நீராவது, கொஞ்சம் புடிச்சி எரக் குங்களே, பாவம்!

தே. : இது ஒண்ணுதாம் பாக்கி.
(அவர்களைப் பிடித்து இறக்குகிறான்.)

நீ.ப. : அண்ணா, நாங்க வர்ரோம் -- நீங்க உடம்பெ ஜாக்கிரதையா பாத்துங்க.

க. : போய் வாங்கடப்பா!- மொள்ள போங்க! கீழே விழப் போரைக.
(பசுபதியும் நீலகண்டனும் தள்ளாடிக்கொண்டு போகிறார்கள்.]
இப்போ,சொல்லி அழுங்களேன் ஐயா, வயித்தியரே, உங்க மருந்தே.

தே. : வே றொன்னுமில்லெ, இந்த மிச்ச நாளுக்கு ஒரு விரோ சனம் கொடுக்கரேன், இப்ப சாப்பிட்ர மருந்தோடோ, அத்தெயும் சாப்பிட்டாதான் நல்லது.

க. : சரி! சரி! அது ஒண்ணுதாம் பாக்கியோ? - அட்டா! அவா, போய்விட்டாகளா பாருமையா சீக்கிரம்.

தே. : பூட்டாகளே!-- என்ன வேணும்?

க. : ஒண்ணு கேக்க மறந்துபோனேனே! - அந்த ஆத்துலெ மொளகா பச்சடி பண்ணி யிருந்தாகளோ இண்ணு கேக்க மறந்தேன். அவா ரொம்ப தூரம் போயிராவிட்டால், நீங்க கொஞ்சம் போய் கேட்டு வர்ரைகளா?

தே. : நான் போகவேண்டியதில்லை. அவா ஆத்துலெ மொளகா பச்சடி பண்ணி யிருந்தது தெரியு நேக்கு. ரொம்ப நன்னா யிருந்துது, அதுகூட

க. : ஓ! அப்படியா சாமாசாரம்!-ஓய்! வயித்தியரே, நீரும் விருந்து சாப்ட்டுட்டா வந்திருக்கைகள்?

தே. : ஆமாம்.

க. : ஆமாம் ! - நன்னா மூக்கு பிடிக்க நகத்திட்டு, இங்கே வந்து எனக்கு இந்தமாதிரி பத்யம் வைக்கிறீரோ! எனையா!

தே. : ஏ - நேர மாச்சு - அந்த- விரோசன மருந்துக்கு பத்து பொன் பிடிக்கும்.-

க. : ஐயா! ஒரே வார்த்தெயா சொல்ரேன் - இன்னும் க்ஷண நேரம் என் எதிரிலே நிண்ணு பேசினீரா, உம்ம மண்டை ஒடஞ்சி பூடும், எனக்கிருக்கிற வயித் தெரிச்சலுக்கு! வாயே தெறக்காதெ ஆத்துக்கு போய்ச் சேரும்!
(வயித்தியர் பயந்து போகிறார்.)

காட்சி முடிகிறது.
----------------

நான்காம் காட்சி.

இடம் - நாயனார் வீட்டின் கூடம்.

திருவெண்காட்டுநங்கை பாடிக்கொண்டிருக்கிறாள்.
அருகில் சந்தன நங்கை நின்றுகொண் டிருக்கிறாள்.

திருச்சிற்றம்பலம்.
மாற்றறியாத செழும்பசும் பொன்னே
      மாணிக்கமேசுடர் வண்ணக்கொழுந்தே
கூற்றறியாத பெருந்தவருள்ளக்
      கோயிலிருந்து குணப்பெருங் குன்றே
வேற்றறியாத சிற்றம்பலக் கனியே
      விச்சையில் வல்லவர் மெச்சும் விருந்தே
சாற்றறியாதவென் சாற்றுங் களித்தாய்
      தனிநடராஜாவென் சற்குருமணியே.

அந்தோ! அதிதியை அழைத்துக்கொண்டு இன்னும் என் என் நாதர் வரவில்லை? இருவரும் மிகவும் பசித் திருப்பார்களே இவ் வேளை! எப்படியாவது அவரை அழைத்துக்கொண்டு என் நாதர் சீக்கிரம் வருவராக! பரமேஸ்வரா! எங்ஙனமாவது அந்த அதிதி இன்னும் வேறு ஆட்சேபனை யொன்றும் சொல்லாமல் சீக்கிரம் வருவாராக! தாம் மனம் வைத்தால்தான் முடியும் எதுவும். --
[வெளியில் கதவைத் தட்டுகிற சப்தம்]
அதோ! ஈசன் கருணையினால் இருவரும் வந்துவிட்டார்க ளென்று நினைக்கிறேன்.

(எழுந்து போய் கதவைத் திறக்க]
பயிரவ வேடங்கொண்ட பரமசிவத்தை அழைத்துக்கொண்டு சிறுத்தொண்டர் வருகிறார்.
திருவெண்காட்டு நங்கை நமஸ்கரித் தெழுகிறாள்.


சி. : ஸ்வாமி, தாங்கள் இந்த ஆசனத்தில் எழுந்தருள வேண் டும். பெண்ணே, இன்றே நமது ஜன்மம் சபல மாயது. சிவனடியார் மிகவும் பசித்திருக்கிறார். அர்க்ய பாத்யாதிகளை விரைவில் கொண்டுவா.

(அவள் அங்ஙனமே செய்ய, இருவருமாக அதிதிக்கு உபசாரம் செய்கின்ற னர். இதற்குள் சந்தநங்கை ஒருபுறமாக ஒரு இலையைப் போடுகிறாள்.]

சி.தி : ராகம் -- சங்கராபரணம். தாளம் -- ஜம்பை.

பல்லவி.
எங்கள் குருபரனே
ஏரா ரொரு துய்யனே. (எங்)

அநுபல்லவி
பொங்குவார் சடையில்
திங்கள் கங்கை என்றும்
தங்கி மகிழும் சிவமே போலத்
தழைத்து ஒளிரும் தவமே- பரமே. (எங்)

சி. : ஸ்வாமி, நிரம்ப நாழிகை யாய்விட்டது; இதுவரையில் தாமதித்ததற்காக எங்களை
மன்னிக்கவேண்டும். இனி போஜனத்திற்கு எழுந்தருள வேண்டும்.

ப. : சிறுத்தொண்டரே, நாம் விரும்பியபடி எல்லாம் சித்தமா யிருக்கிறதா?

சி. : பெண்ணே,

தி. : ஸ்வாமி, திருவுளப்படி எல்லாம் சித்தமா யிருக்கிறது.

ப. : ஆயின் இனி படைக்கலாம்.
(ஆசனத்தில் வீற்றிருக்க, சிறுத்தொண்டர் விசிறுகிறார், திருவெண்காட்டு
நங்கை உணவைப் படைக்கிறாள்.]

ப. : மாதே, நாம் விரும்பினவெல்லாம் முறைப்படியே படைத் தாயதோ?

தி. : ஸ்வாமி, எல்லாம் ஆச்சுது.

ப.: எங்கே சிரக் கறியைக் காணேன்?

தி. : தலை யிறைச்சி திருவமுதுக் காகாதெனத் தவிர்த்திட் டேன்.

ப. : ஆஹாஹா! என்ன தவறிழைத்தாய்? அதுதான் நாம் மிகவும் உவந் துண்பது. அது இல்லாவிடின் நாம் புசியோம்.

தி. : ராகம் - சங்கராபரணம். தாளம் --- ரூபகம்.

பல்லவி.
அறியாமற் போனேனே - அந்தோ
ஆரும் தலையிறைச்சி ஆகுமென் றோர்ந்திலேன்! (அ )

அநுபல்லவி.
எந்த ஜெந்து வாயினும் ஏற்காதே அக்கறி
எக அதை யெறிந்தேன் ஏது நான் செய்குவேன்!(அ)

நாதா! நான் என் செய்வேன்! எந்தப்பிராணியை யுண்ணு மிடத்தும் தலை யிறைச்சி ஆகாதென்னும் முறைமைப் படி, அதை நீக்கினேன், இப்பொழுது நான் என் செய் வது? அதை யினி சமைப்பதற்கோ காலமில்லை!

சி. : பரமசிவம் ! பரமசிவம்!எம்பெருமானே! எல்லாவற்றிற் கும் வழி காட்டிய தாம் இதற்கும் வழி காட்டவேண்டும். ஏழையோம் என் செய்வோம்! அதிதியோ பசித்திருக் கிறார்.

ச. : அம்மா, இதற்காகத் தாங்கள் வருத்தப்பட வேண்டிய தில்லை, எஜமானனும் துக்கப்பட வேண்டியதில்லை. இப்படிப்பட்ட, உலகில் வே றெவரும் உண்ணாத உணவை உண்ண விரும்பிய அதிதி, அதையும் உண்பாரெனக் கருதி, அதை ஒருபுறமாய் சமைத்து வைத்திருக்கிறேன். இதே கொண்டு வருகிறேன்.


சி. : நங்காய்! என்னெ, நாயினும் கடையாகிய நம்மிடத்து நம்பெருமான் வைத்த பே ரருள்!

சந்தன நங்கை தலை இறைச்சியைக் கொண்டு வருகிறாள்.

ச. : அம்மா,இதோ. கொடுக்கிறாள்.]

தி. : ஸ்வாமி, தமது திருவுளப்படியே இதோ படைக்கிறேன்.

ப. : மஹத் சந்தோஷம்!

தி. : ஸ்வாமி, தாங்கள் இனி உண்ணலாமே?

ப. : என்ன சிறுத்தொண்டரே! நம்மைத் தனியாக உண்ணவா சொல்லுகிறீர்! அது எம்முடைய விரதத்திற்குக் குறை வாகும். நம்முடன் உண்ண சிவனடியார் எவரையேனும் விரைவில் அழைத்து வாரும் - சீக்கிரம்.

சி. : அந்தோ பரமசிவம்! இதென்ன சங்கடம்!- ஸ்வாமி! காலை முதல்தேடியும் அமுதுண்ண ஒரு சிவனடியாரையும் காணாதே கலங்கி யிருந்தேன். தாம் ஒருவர் கிடைத்ததே எனது பூர்வ ஜன்ம பூஜா பலனெனக் கருதினேன். சற்று முன்பாகத் தேடியபொழுது கண்படும் அடியார்க ளெல்லாம் பூரணமாகப் புசித்தாயிற்று,என்று விடை நவின்றனர். இனி எங்குசென்று வேறொரு சிவ னடியாரைக் கண்டு அழைத்து வருவது?

ப.: ஆனால் அப்படி நீர் செய்யும் வரையில், நாம் பசியுடன் தானிருக்கவேண்டும் உண்ணாது.

சி. : பரமசிவம்! பரமசிவம்!- ஸ்வாமி, எனக் கொரு யோசனை தோற்றுகிறது. அதைக் கூறுவதற்காக க்ஷமித்தருள வேண்டும். என்னைச் சிவ னடியான் என்று கூற அத்தனை யோக்கியதை என்னிடமில்லை. ஆயினும் இவ்வுலகில் விபூதி தரிப்பவரைப் பார்த்து நானும் இட்டு வருகிறேன். சிவனடியார்க் கடியனாய்த் தொண்டு செய்து வருகிறேன்.
ஆகவே அடியேனை ஒரு தொண்டனாக அங்கீகரித் தருளவேண்டும்.

ப. : அங்ஙனமே செய்வோம் பயப்படவேண்டாம்---மாதே, இவருக் கோர் இலையை இட்டு, அதில் நமது நமது இலையி லிருப்பதில் ஒரு கூறு படைப்பாய்.
[அங்ஙனமே செய்கிறாள்.)
(உண்ணச் சோற்றில் கையிட]

சி. : பரமசிவம்!

ப. : தொண்டரே! இதென்ன செய்கை! ஆறு திங்களுக் கோர் முறை அருந்துவோமாகிய யாம் அருந்துமளவும் தரியாமல், தினமும் சோ றுண்ணும் நீர் முன்னமே யுண் பது என்னை?

சி. : சுவாமி! வேறொரு காரணமுமில்லை தங்களை உண்பிக்க வேண்டி நான் உண்ணத் தொடங்கினேன், வே றொன் றில்லை.

ப. : சற்றே பொறும்.மாதே, இன்னொரு இலையைப் போடு.

தி. : [ஒரு புறமாக.) அந்தோ பரமேசா! அக்கதி எனக்கு வாய்க் காதிருக்கும்படி அருளவேண்டும்!

(அப்படியே இலையைப் போட்டு பரிமாறுகிறாள்.]

ப. : சிறுத்தொண்டரே, உமக்கு மகன் ஒருவ னிருக்கிறானா?

சி. : சுவாமி - ஒருவன் - இருந்தான் -

ப. : அவனை அழையும், நம்முடன் அருந்த.

சி. : ஸ்வாமி!- அவன் இப்பொழுது உமக்கு உதவமாட்டான்.

ப. : ஏன்?

சி. : அவன், இப்பொழுது இல்லை - எம்பெருமான் திருவடியி லிருக்கிறான்.

ப. : ஆஹாஹா! சிறுத்தொண்டரே, என்ன காரியம் செய் தீர்! மக னில்லா வீட்டிலா நம்மை அமுதுண்ண வழைத் தீர்! குழந்தையில்லா வீட்டில் குடியும் இருக்கலாகாதே, மகனில்லா வீட்டில் மற்றும் போஜன முண்பதோ நாம்? நாம் புறப்படுகிறோம், நாம் இனி ஒரு க்ஷணமும் தாமதியோம் இங்கு, உமது உணவும் வேண்டாம்! ஒன்றும் வேண்டாம்!

தி.சி. (எழுந்திருக்கும் அவரது காலைப்பற்றி]
ராகம் - ஸ்ரீரஞ்சனி. தாளம் - ஆதி.
கண்ணிகள்.

கருணா நிதியே கடையேம்மீது
கருணை வைத்து கார்க்கவேணும்
ஒருமகனை உணவாய்ச் செய்தோம்
திருவுளமே சீரா யறியும்

ஸ்வாமி! அடியோமை ஆதரித்தல் வேண்டும் அன்பு கூர்ந்து இச் சமயம்! தமது திருவுள மறியாதது ஒன்று மில்லை யென எண்ணுகிறோம். எமது ஒரு மகனையே தங்களுக்கு உணவாக வளித் துள்ளோம். இனி எமக்கு வேறு மக் வில்லை,என் செய்வோம்!

ப. : இல்லை, இல்லை, உமது மகன் இருப்பதாகவே நாம் எண் ணுகிறோம். எங்கேயோ ஒளிந்திருக்கிறான். எப்படியா வது நீங்க ளிருவரும் அவனைத் தேடி அழைத்து வந்தா லொழிய நாம் உண்ணோம்! போய் அழைத்து வாருங்கள் விரைவில்.எனக்கு மிகவும் பசியா யிருக்கிறது!

சி. : [ஒரு புறமாய்ப்போய் நங்காய்! இனி நாம் என் செய்வது நாம் எந்த ஜன்மத்தில் என்ன பாப மிழைத்தோமோ, இக் கதி வாய்க்க! இவ்வளவு செய்தும், முடிவில் நமது அதிதி உண்ணாது ஏகும்படியான காலம் வாய்த்ததே!

தி. : நாதா, தர்மஸ்வரூபியாகிய தாம் எந்த ஜன்மத்திலும் எப் பாபமு மிழைத்திருக்கமாட்டீர்! அடியாளுடைய மே தம்மையும் சூழ்ந்ததுபோலு மிவ்வாறு! அநாதரட் சகா! ஆபத்பாந்தவா! என் பாபமானது எனது நாதரைப் பீடிக்கா வண்ணம் அவரது மனம் திர்ப்தியாகும் படியான மார்க்கத்தை தாம்தான் காட்டியருளவேண்டும். பெண் டிருக்கு நீர் விதித்த விதிப்படி, என் நாதரையே தெய்வ மாகக் கொண்டு, அவரது வார்த்தைக்குக் குறுக்காகக் கனவிலும் நினையாத பத்னி நான் என்பது உண்மையானால், இப்பொழுது என் நாதருக்கு நேர்ந்திருக்கும் துயரத்தை நீர் களைந் தருளவேண்டும் --

என்னிடபவமே வந்து என்னரும் நாதன் றன்னை
மன்னியே வருத்திடாதே வகையினை அருள் செய்வீரே
பன்னரும் பானே எந்தன் பதியினுக் குற்ற தீங்கை
உன்னியெ நீக்கி நாங்கள் உய்த்திடக் காண்பீர் தேவே

நாதா, நீர் எனக்கு எத்தனை முறை கூறி யிருக்கிறீர், என்ன இடுக்கண் உற்றபோதிலும் பரமசிவத்தின் பாதார விந்தத்தைப் போற்றினால் அது நீங்குமென, ஆகவே இக் கதியிலும், அதனைக் கைவிடாது அவரைப் பிரார்த்திப் போம்.- அவர் நம்மைக் கைவிடுவாரோ?

சி. : நங்காய், நீ கூறிய துண்மையே. அவரது இணையடியை விட வேறு துணையிலை நமக்கு !

தி. சி. : பரமேசா ! நீரே கதி யினி!
ராகம் --- நாதநாமக்கிரியை. தாளம் -- ரூபகம்.

காளகண்டா காலகாலா
காணோம் கதி தோணாம் சதி
காரும் எமைப் பாரும் துயர்
தீரும் அருள் தாரும்.
குற்றம் ஒன்றுஞ் செய்தறியோம்
கோவே அருள் தேவே மருள்
சற்று மில்லா சம்போசிவ
சங்கரனே அரனே

ப. : சிறுத்தொண்டரே! என்ன துக்கிக்கின்றீர் அங்கே?

சி. : ஸ்வாமி! அறப் பசித்திருக்கும் தமது பசியை ஆற்ற அசக்தனா யிருக்கின்றேனே பாவியேன் என்றே துக்கிக்கிறேன், வேறொன்று மில்லை.

ப.. : வெண்காட்டுநங்காய்! நீ என்ன துக்கிக்கின்றாய்?


தி. : ஸ்வாமி, வேறொன்று மில்லை. எம்முடைய மைந்தன் தேவரீரது குட்சியை யடைந்தாவது நற்கதி யடைவா னென், அவனைப் பலியாக்கினோம். அங்ஙனம் செய்தும் தேவரீரது குட்சியை யடைந்து நற்கதி பெறுவதற்குப் பாத்திர னாகாமற் போனானே, என்றே துக்கப்படுகிறேன்.

ப-: இது நீங்கள் துக்கப்படவேண்டிய காலமல்ல, என் கட்டளைப்படிச் செய்யுங்கள். விரைவில் அழையுங்கள் உங் கள் குமாரனை - வாசலருகிற் நின்று.

சி.: பெண்ணே அங்ஙனமே செய்வோம், அதிதியின் கட்டளை யை நிறைவேற்ற வேண்டியது நமது கடன்- பிறகு எல் லாம் எம்பெருமான் செயல்.

தி. : அங்ஙனமே செய்வோம் நாதா

தி. சி. : கண்ணே! சீராளா! சீரானா! சீராளா!
ராகம் -- ஆனந்த பைரவி. தாளம் - ஆதி.

சீராளா என் செல்வமே சீக்கிரம் ஒடிவாடா தீராயோ எங்கவலை பாராயோ எம் துயரை
சீராளா என் செல்வமே சீக்கிரம் ஓடிவாடா பார்புகழ் பைரவர் பசித்து வாடல் நன்றோ

சி. : சீராளா! உன் தாய் துக்கப்படுகிறா ளென்றாவது வாடா அப்பா!

தி. : சீராளா! உன் தந்தையின் துயர் நீக்கவாவது வாடா என் கண்ணே!

தி.சி.: அதிதி காத்திருக்கிறார் உன்னுடன் உண்ண, அவர் பொருட்டாவது வாடா, என் கண்ணே!
[இலைகளிலிருந்த பதார்த்தங்கள் மறைகின்றன.
சீராளன் ஓடி வருகிறான்.

சீரா. : வந்தேன், அம்மா! அண்ணா!

தி.சி. : [அவனைக் கட்டி யணைத்து] கண்ணே! கண்ணே!
(பரமசிவம் மறைகிறார்.)

சி. : கண்மணி! எம்பெருமான் திருவருளால் நமது அதிதி மனத்தைத் திர்ப்தி செய்ய மார்க்கம் உண்டாச்சுதே!

சீரா. : எங்கே அண்ணா அதிதி?

சி. : இதோ - என்ன ஆச்சரியம்! எங்கே போனார் அவர்?

தி. : நாதா, என்ன ஆச்சரியம்! நாம் இலைகளிற் படைத்த இறைச்சியையும் காணோம்!

தி.சி. : அந்தோ!எங்குற்றார் அதிதி? எங்குற்றார்?

சீரா. : அதோ,அண்ணா! அதோ பாரும், அம்மா!
(பரமசிவம் ரிஷபவாஹன் ரூடராய்த் தோற்றுகிறார். ஆகாயத்தில் புஷ்ப மாரி பெய்கிறது. சிறுத்தொண்டரும், பதனியும், சீராளனும், சந்தன நங்கை யும் பன்முறை நமஸ்கரித்துத் தொழுகின்றனர்.

தி.சி.ச.சீ. : கல்லார்க்குங் கற்றவர்க்கும் களிப்பருளுங் களிப்பே
      காணார்க்குங் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே
வல்லார்க்கும் மாற்றார்க்கும் வரமளிக்கும் வரமே
      மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே
      நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலம்கொடுக்கும் நலமே
எல்லார்க்கும் பொதுவில்நட மிடுகின்ற சிவமே
      என்னரசே யாம்புகலு மிசையுமணிந் தருளே.

ப. : தொண்டனே! நங்காய்! சீராளா! எழுந்திருங்கள்!உமக்கு நம்மிட முள்ள உண்மையான பக்தியை உலகவர்க்குத் தெரிவிக்கும் பொருட்டே, உம்மை இவ்வாறு நாம் பரீட் சித்தது! தொண்டனே! உன்னை இதுகாறும் சிறுத் தொண்டனென அறிந்துள்ளார் உலகவர்; இனி பெரிய சிறுத்தொண்டனென உலகமெங்கும் வழங்கும் பொருட்டு ஆசீர்வதிக்கிறோம். உனக்கும், உன் மனைவிக்கும், மைந்த னுக்கும், தாதிக்கும், எமது பதமளித்தோம்.

அனைவரும். எம்பெருமானே! எல்லாம் உமது பேரருள்!

காட்சி முடிகிறது.
நாடகம் முற்றியது.

-----------------

AUTHOR OF FOLLOWING PLAYS:
The Two Sisters, Galava, The Eye of Love, The Curse of Urvasi, The Merchant of Vanipura, Fate and Love, Simhalanatha, Push- pavalli, Amaladitya, Magapathi, Farces, The Ideal Wife, The Golden Fetters, True Love, The Bandit Chief, Bricks-Between, At Any Cost, The Fair Ghost, The Wedding of Valli, Brahmin vs. Non-Brahmin, Vijayarangam, As you like it, Ratnavali, Lord Buddha, The Tragedy of Silence, The Good Fairy, Geetha Manjari, The True Brother, Malavikagnimitra, Chandrahari, The Demon Land, Sabapathy Part 1, The Pongal Feast or Sabapathy Part II, A Rehearsal or Sabapathy Part III, Sabapathy Part IV, Blessed in a Wife, The Dancing Girl, Subadra-Arjuna, Karna the Save Prescrip- Giver, Sahadeva's Stratagem, The Surgeon General's tion, Vichu's Wife, Sakuntala, Vikramorvasi, The Point of View, The Two Selves, The Tragic Denouement, The Sub-Assistant Magistrate of Sultanpet, Harischandra, Blind Ambition, Mar- kandeya, Sarangadhara, Manobara, The Two Friends, The Knavery of Kalappa, As We Sow-So We Reap, Over Forty Years Before the Footlights Parts I & II, The Tamil Drama etc., in Tamil, and Harischandra, and Yayathi in English,

இந்நூலாசிரியரால் இயற்றப்பட்ட மற்றத் தமிழ் நூல்கள்:

லீலாவதி - சுலோசனை, சாரங்கதரன், மகபதி, காதலர் கண்கள், நற்குல் தெய்வம், மனோஹரன், ஊர்வசியின் சாபம், இடைச்சுவர் இருபுறமும், என்ன நேர்ந்திடினும், விஜயரங்கம், கள்வர் தலைவன், தாசிப்பெண், மெய்க்காதல், பொன் விலங்குகள், சிம்ஹளநாதன், விரும்பிய விதமே, உத்தம பத்தினி, காலவரிஷி,ரஜபுத்ரவீரன், உண்மையான தரன், ரத்னாவளி, புஷ்பவல்லி, கீதமஞ்சரி,பிரஹசனங்கள், அமலா தித்யன், சபாபதி முதற் பாகம், பொங்கல் பண்டிகை அல்லது சபாபதி இரண்டாம் பாகம், ஓர் ஒத்திகை அல்லது சபாபதி மூன்றாம் பாகம், சபாபதி நான்காம் பாகம், வள்ளிமணம், பேயல்ல பெண்மணியே, புத்த அவதாரம், விச்சுவின் மனைவி, வேதாள உலகம், மனைவியால் மீண்டவன், சந்திரஹரி, சுபத்திரார்ஜுனா, கொடையாளி கர்ணன், சஹதேவன் சூழ்ச்சி, நோக்கத்தின் குறிப்பு, இரண்டு ஆத்மாக்கள், சர்ஜன் ஜெனரல் விதித்த மருந்து, மாளவிகாக்னிமித்ரம், விபரீதமான முடிவு, சுல்தான்பேட்டை சப் அசிஸ்டென்ட் மாஜிஸ்டிரேட், சகுந் தலை, காளப்பன் கள்ளத்தனம், விக்ரமோர்வசி, முற்பகற் செய்யின் பிற்பகல் விளையும், நாடகமேடை நினைவுகள் முதற்பாகம், நாடக மேடை நினைவுகள் இரண்டாம் பாகம், நாடகத் தமிழ், பிராம்மணனும்- சூத்திரனும், வாணீபுர வணிகன், ஹரிச்சந்திரன், இரண்டு நண்பர்கள், சத்ருஜித், மார்க்கண்டேயர், யயாதி, முதலியன.
------------

This file was last updated on 25 Dec. 2022
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)