pm logo

ப. சம்பந்த முதலியார் எழுதிய
நான் கண்ட நாடகக் கலைஞர்கள்


nAn kaNTa kalainjarkaL
by campanta mutaliyAr
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

ப. சம்பந்த முதலியார் எழுதிய
"நான் கண்ட நாடகக் கலைஞர்கள்"

Source.
நான் கண்ட நாடகக் கலைஞர்கள்
நாடகப் பேராசிரியர், பத்மபூஷண்
ப. சம்பந்த முதலியார் அவர்களால் இயற்றப்பட்டது
முதற் பதிப்பு
காபிரைட்] 1964
விலை. ரூ. 8.00
குறிப்பு : இந்நால் சென்னை சங்கீத நாடக சங்கத்தாரின் பொருள் உதவியால்
அச்சிடப்பட்டது. அவர்களுக்கு என் மனமார்ந்த வந்தனம் உரித்தாகுக.
----------------

உள்ளடக்கம்
திரு. கோவிந்தசாமி ராவ் S. சத்தியமூர்த்தி
திரு. பஞ்சநாத ராவ் ஸ்ரீ T. ஸ்ரீனிவாச ராகவாச்சாரி
திரு. சுந்தர ராவ் வி. வெங்கடாசலையா
திரு. குப்பண்ண ராவ் ஸ்ரீமான் வி.ஸி கோபாலரத்தினம்
திரு.நாராயணசாமி பிள்ளை திரு. P. S. தாமோதர முதலியார்
திரு. சுப்பிராய ஆசாரி ஸ்ரீ. E. கிருஷ்ணய்யர் அவர்கள்
திரு. சுந்தர ஆசாரி ஸ்ரீ. கே. நாகரத்தினம் ஐயர்
திரு. கன்னையா B. ராமமூர்த்தி
திரு. கிட்டப்பா அவர்கள் திரு. C. பாலசுந்தர முதலியார்
ஸ்ரீமதி கே. பி. சுந்தராம்பாள் திரு. வேல் நாயர்
திரு. எம். சுந்தசாமி முதலியார் ஸ்ரீமான் அனந்த நாராயண ஐயர்
திரு. சங்கரதாஸ் சுவாமிகள் G. C. V. ஸ்ரீனிவாசாச்சாரியார்
திரு. சிவஷண்முகம் பிள்ளை ஸ்ரீ D. V. கிருஷ்ணமாச்சார்லு
திரு. கிருஷ்ணசாமி பாவலர் ஸ்ரீ T. ராகவாச்சார்லு
திரு. சந்தானகிருஷ்ண நாயுடு திரு. குப்பி வீரண்ணா
திரு. டி. கே. ஷண்முகம் ஸ்ரீ F. G. நடேசய்யர்
திரு. டி. கே. பகவதி திரு. N. சம்பந்த முதலியார்
திரு. சகஸ்ரநாமம் அவர்கள் ஸ்ரீ பாபநாசம் சிவன்
திரு. நவாப் ராஜமாணிக்கம் திரு. N. S. கிருஷ்ணன்
திரு. கே. ஆர். ராமசாமி திரு. தியாகராஜ பாகவதர்
திரு. T. R. ராமச்சந்திரன் திரு. T. S. பாலையா அவர்கள்
திரு. M. G. ராமச்சந்திரன் திரு. V. T. செல்லம்
திரு சிவாஜி கணேசன் திரு. சுவர்ணலிங்கம் அவர்கள்
திரு. புத்தனேரி ரா. சுப்ரமணியம் திரு. M. S. முத்துகிருஷ்ணன்
திருமதி. பாலாம்பாள் திரு. P. D. சம்பந்தம்
திருமதி. P. பாலாமணி அம்மாள் திரு. சாரங்கபாணி
ஸ்ரீமான் வி. வி. ஸ்ரீனிவாச ஐயங்கார் பிழை திருத்தம்

-------------
இந்நூல் என் தந்தை தாயர்களாகிய ப. விஜயரங்க முதலியார்,
ப. மாணிக்கவேலு அம்மாள் ஞாபகார்த்தமாக பதிக்கப்பட்டது
----------------

நான் கண்ட நாடக கலைஞர்கள்
1. திரு. கோவிந்தசாமி ராவ்

பழங்காலத்து தமிழ் நாடகங்கள் சீர்குலைந்து தெருக்கூத்துகளாய் மாறின. பிறகு, தமிழ் நாடகத்தை உத்தாரணம் செய்தவர்களுள் காலஞ்சென்ற கோவிந்தசாமி என்பவரை ஒரு முக்கியமானவராகக் கூறலாம்.

அவர் ஒரு மஹாராஷ்டிரர். இவரது முன்னோர் சிவாஜி மன்னரது தம்பி தஞ்சாவூரை ஆள ஆரம்பித்த காலத்தில் அவருடன் வந்த பரிவாரங்களில் ஒருவராம். அவர் மஹாராஷ்டிர பிரிவுகளில் பான்ஸ்லே பிரிவினர். தஞ்சாவூரில் தனது சிறுவயதில் ஆங்கிலம் கற்று பிரவேசப் பரீட்சையில் தேறினவராய் அக்காலத்தில் நமது நாட்டை ஆண்டுகொண்டிருந்த ஆங்கில கவர்ன்மெண்டில் உத்தியோகத்தில் சொல்ப சம்பளத்தில் குமாஸ்தாவாக அமர்ந்திருந்தார். இவரது வயது சுமார் 35 ஆன காலத்தில் பூணாவிலிருந்து ஒரு மஹாராஷ்டிர நாடக கம்பெனியார் தஞ்சாவூருக்கு வந்து மஹாராஷ்டிர பாஷையில் சில நாடகங்களை நடத்தினராம். இவைகளை ஒன்றும் விடாது பார்த்துக்கொண்டிருந்த கோவிந்தசாமி ராவ் தானும் அப்படிப்பட்ட நாடகக் கம்பெனி ஒன்று ஏற்படுத்தி அதில் முன்சொன்ன நாடகங்களைப் போல தாங்களும் நாடகங்களில் நடிக்கவேண்டுமென்று ஆசைகொண்ட நல்ல உருவமும், சங்கீதக் கலையும் வல்ல சில நண்பர்களை ஒருங்கு சேர்த்து மனமோகன நாடகக் கம்பெனி என்னும் பெயருடைய நாடகக் கம்பெனியைத் தஞ்சையில் ஏற்படுத்தினராம்.

இவருக்கு இங்கிலீஷ், மஹாராஷ்டிரம் என்னும் இரண்டு பாஷைகளுமன்றி தமிழ், தெலுங்கு, ஹிந்துஸ்தானி பாஷைகளிலும் நன்றாய்ப் பேசவரும் ஆயினும் மனமோகன நாடகக் கம்பெனியின் நாடகங்களை தமிழ் பாஷையிலேயே ஆடவேண்டுமென்று தீர்மானித்தார். இவருடன் சேர்ந்த மஹாராஷ்டிர வாலிபர்களும் தஞ்சாவூர் வாசிகள் ஆனபடியால் தமிழ் நன்றாய் பேசவரும், முதன் முதலில் தஞ்சாவூரில் பூனா சாங்கிலி கம்பெனியார் நடத்திய சில புராணக் கதைகளையே, தமிழில் தனது நடிகர்களுக்கு கற்பித்து அந்த நாடகங்களை தஞ்சாவூரில் ஒரு கொட்டகையில் ஆடி பெயர் பெற்றார். நல்ல பணமும் வசூலாயிற்று. அதன் பேரில் தனது கம்பெனியுடன் சென்னைக்கு வந்து, தான் தஞ்சாவூரில் ஆடிய நாடகங்களையும் ராமாயண பாரதக் கதைகளிலிருந்து எடுத்த சில நாடகங்களையும் ஆடினார்.

இவர் சென்னையில் ஆடியது செங்காங்கடையில் தற்காலம் இருக்கும் சினிமா கட்டிடத்தில் அச்சமயம் இருந்த ஒரு ஓட்டுக் கொட்டகையிலாம். நல்ல மாதிரியில் பழைய ஆபாசங்கள் ஏதுமின்றி இவர் தமிழ் நாடகங்களை நடத்துகிறார் எனும் பெயர் சீக்கிரம் பட்டணம் எங்கும் பரவலாயிற்று. ஜனங்களும் ஏராளமாக இவரது நாடகங்களைப் பார்க்கலாயினர். அக்காலம் முதலில் சனிக்கிழமைதோறும் ஆட ஆரம்பித்து பிறகு ஜனங்களின் நன்மதிப்பைப் பெறவே செவ்வாய்க்கிழமை வியாழக்கிழமைகளிலும் நாடகம் நடத்தினர். சனிக்கிழமை நாடகங்களுக்கு சில சமயங்களில் இரவு 8-30 மணிக்குமேல் டிக்கட்டுகள் கிடைக்காமலும் போவதுண்டு. ஏறக்குறைய இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை சென்னைக்கு வந்து இவ்வாறு தமிழ் நாடகங்களை நடத்திப் பெயர்பெற்றார். முன்சொன்னபடி இவர் செங்காங்கடை கொட்டகையிற் ஸ்திரீ சாகஸம் என்னும் ஓர் நாடகத்தை நடத்தியபோது எனது நாடகமேடை நினைவுகளில் கூறியபடி என் தகப்பனார் என்னை இதைப்பார்க்க அழைத்துக்கொண்டு போனார். அன்றியும் நாடகம் முடிந்ததும் கோவிந்தசாமிராவுக்கு என்னை அறிமுகப் படுத்தினார். அதுமுதல் கோவிந்தசாமி ராவ் ஆயுள் பரியந்தம் எனது நண்பராக இருந்தார். சென்னைக்கு வரும்போதெல்லாம் என்னைத் தவறாமல் பார்ப்பார். இதுவரை அவரைப்பற்றி நான் கூறியுள்ள பல விஷயங்களை அவர் வாயிலாகவே அறிந்தேன்.

அவர் பெரிய உருவமுடையவர். பரந்தமுகம், விசாலமான கண்களையுடையவர், கம்பீரமான குரலுடன் பேசும் சக்தி வாய்ந்தவர். சாதாரணமாக பூனா மஹாராஷ்டிரர்கள் அணியும் தோவத்தியையும் நீண்ட சட்டையையும் அதன் பேரில் ஒரு சால்வையும் அணிவது அவர் வழக்கம். தலையில் மஹாராஷ்டிரர்கள் அணியும் சரிகை முகப்புடைய அணியை அணிவார். தஞ்சாவூர் அரசர்களைப்போல் கல் மீசை வைத்திருந்தார். இவர் நடத்திய தமிழ் நாடகங்களுள் முக்கியமானவை :-- ராம்தாஸ் சரித்திரம், பாதுகா பட்டாபிஷேகம், திரௌபதி வஸ்திராபரஹணம், தாராசசாங்கம், கோபிசந்து, கர்ணவதம், அபிமன்யு, சிறுத்தொண்டர் முதலியன. இதில் வேடிக்கை யென்னவென்றால் இந்த நாடகங்களில் ஒன்றேனும் தமிழில் அக்காலத்தில் அச்சிலும் கிடையாது. ஓலை ஏட்டிலும் கிடையாது. பிறகு இவர் எப்படி அந்நாடகங்களை நடத்தினார் என்று நீங்கள் கேட்கலாம். அதற்குப் பதில் ஒரு புதிய நாடகத்தை எடுத்துக்கொண்டு எப்படி ஒத்திகை நடத்தினார் என்று நான் கூறுவதால் நீங்கள் அறிந்துகொள்வீர்கள். ஒரு புதிய நாடகத்தை அவர் ஆடவேண்டுமென்று தீர்மானித்தால் அக்கதையை ராமாயணத்திலிருந்தோ, பாரதத்திலிருந்தோ மற்ற எவ்விடத்திலிருத்தோ அதைப் படித்துவிட்டு தனது நடிகர்களை எல்லாம் தனது எதிரில் உட்காரவைத்துக் கொண்டு அக்கதையை விரிவாக அவர்களுக்குத் தெரிவிப்பார். பிறகு தனக்குத் தகுந்த ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு மற்றவர்களுக்கு அவரவர்களுடைய சரீர சாரீரங்களுக்கு ஏற்றபடி பகிர்ந்து கொடுப்பார். அதன்பின் நடக்க வேண்டிய ஒவ்வொரு காட்சியின் சாராம்சங்களை விரிவாகக்கூறி அதில் வரும் ஒவ்வொரு பாத்திரமும் பேசவேண்டிய விஷயங்களைப் பற்றியும் நடக்கவேண்டிய சந்தர்ப்பங்களைப்பற்றியும் தன்னால் இயன்ற அளவு விவரமாய் எடுத்துரைப்பார். பிறகு இரண்டாம், மூன்றாம் ஒத்திகைகளில் எல்லா பாத்திரங்களையும் அவர்கள் பாகத்தின்படி வசனத்தைப் பேசச் சொல்வார். அவர்கள் பேசும்போது ஏதாவது திருத்தவேண்டிய விஷயங்கள் இருந்தால் திருத்துவார். அதன் பிறகு கடைசி ஒத்திகைகளில் அவர்கள் பாடவேண்டிய பாட்டுகளை மஹாராஷ்டிரம், தெலுங்கு, தமிழ் நூல்களிலிருந்து எடுத்து அவர்களுக்குக் கற்பிப்பார். அவ்வளவுதான்.

இனி அவர் சாதாரணமாக தமிழ் நாடகங்களை நடத்தியதைப் பற்றி கொஞ்சம் கூறுகிறேன். நாடகமானது ஒன்பது மணிக்கு ஆரம்பமாகும் என்று பிரசுரித்தபோதிலும் அரைமணி முக்கால் மணி பொறுத்துத்தான் துவக்கமாகும். அந்த துவக்கமும் திரைக்குப் பின்னால் தான். முதலில் கோவிந்தசாமிராவ் தனது இஷ்டதேவதையாகிய ஸ்ரீராமர், சாமுண்டீஸ்வரி இவர்கள் ஸ்தோத்திரத்தைப் பாடுவார். பிறகு டிராப் படுதாவுக்கு முன் வந்து நிற்க விதூஷகன் வந்து அவருடன் பேசுவான். இவ்விருவர்களுடைய சம்பாஷணையினால் இன்ன நாடகத்தின் கதை என்று சபையோருக்கு விளங்கும். இதெல்லாம் ஆன பிறகு தான் சரியான நாடகம் ஆரம்பமாகும். நாடகம் முடிவதற்கு சுமார் 5 மணி நேரமாகும். இதில் இன்னொரு வேடிக்கை யென்ன வென்றால் ஒரே நாடகத்தை இரண்டு முறை ஒருவர் பார்ப்பதினால் சங்கீதப் பாட்டுகள் ஒரே மாதிரி இருந்த போதிலும் நடிகர்கள் பேசும் வசனம் எவ்வளவோ மாறி வரும். இதற்குக் காரணம் முன்பே கூறியுள்ளேன். இவரது நாடகங்களில் விதூஷகன் வேடம் பூணும் பஞ்சநாதராவ் சற்றேறக் குறைய எல்லாக் காட்சி களிலும் தோன்றி சமயோசிதமாய் விகடவார்த்தைகளை நாடக பாத்திரங்களுடன் பேசுவான். நாடகம் முடிந்தவுடன் மகிஷாசுர மர்த்தினி திரைவிடப்படும். அதற்கும் மேடையின் மேல் நிற்கும் எல்லா நடிகர்களுக்கும் திரி ஒன்று ஏற்றப்பட்ட ஒரு கலியாண பூசணிக்காய் சுற்றி உடைப்பது வழக்கம்.

இனி கோவிந்தசாமிராவ் அவர்கள் நடித்த பாத்திரங்களைப் பற்றி கொஞ்சம் கருதுவோம், எனக்கு ஞாபகம் இருக்கும் வரையில் பாதுகாபட்டாபிஷேகத்தில் இவர் பரதனாக நடித்ததும் கோபிசந்தில் கோபிசந்தாக நடித்ததும் ராம்தாஸில் நவாப்பாக நடித்ததும் தான் ஜனங்களின் மனதைக் கவர்ந்தன என்பேன். இந்த முக்கிய பாத்திரங்களில் இவர் சோக பாகத்தை நடிக்கும் போதெல்லாம் சபையில் நாடகத்தைப் பார்க்க வந்திருக்கும் பெரும்பாலோர் கண்ணீர் விட்டு அழுவதை நான் பார்த்திருக்கிறேன். அவ்வளவு உருக்கமாக நடிப்பார். ராம்தாஸில் நவாப்பாக ஐதராபாத்தில் ஒருமுறை இவர் நடித்ததற்காக அதைப் பார்த்த பல மகம்மதிய தனவான்கள் இவருக்குப் பொற்பதக்கம் அளித்து கீன்காப் சால்வை முதலிய மரியாதைகள் செய்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். தாராசசாங்கத்தில் இவர் பிரகஸ்பதியாக நடித்தது சாதாரண ஜனங்களின் மனதைக் கவராவிட்டாலும் என் மனதைக் கவர்ந்தது. ஏறக்குறைய எல்லா நாடகங்களிலும் மந்திரி, பிரதானி முதலிய சில்லரை பாத்திரங்களையும் சமயோசிதமாக இவர் தரிப்பது வழக்கம். அவைகளிலும் மிகவும் பொருத்தமாக நடிப்பார்.

இவர் மனமோஹன நாடக சபையில் நடிப்புக் கலையில் தேர்ச்சி பெறச் செய்த இவரது மாணவர்களுள் முக்கியமானவர்கள் கோனேரிராவ், வீராசாமிராவ் என்னும் அயன் ராஜ பார்ட்டு நடிகர்களும் சுந்தரராவ், குப்பண்ணராவ் எனும் அயன் ஸ்திரீ பார்ட் நடிகர்களுமாம். இவர்களெல்லாம் கொஞ்ச காலத்திற்குப் பிறகு மனமோஹன நாடகக் கம்பெனியை விட்டுப் பிரிந்து தாங்கள் ஏற்படுத்திய சொந்த நாடக கம்பெனிகளில் பெரும்பாலும் நடிக்க ஆரம்பித்தனர். இதுவே கோவிந்தசாமிராவின் நாடகக் கம்பெனி கலைந்து போனதற்கு முக்கிய காரணம். தனது கம்பெனி கலைந்த பிறகு சுந்தர ராவ் முதலியோருடைய கம்பெனிகளில் தான் சூத்திரதாரனாக இருந்து சில வருடங்கள் நடத்தி வந்தார். கடைசியாக பாலாமணி நாடகக் கம்பெனியில் சூத்திரதாரனாக ஊதியம் பெற்று தமிழ் நாடகத்திற்காக உழைத்தனர். ஆகவே ஆயுள் பர்யந்தம் தமிழ் நாடகத்திற்காகவே உழைத்தனர். என்று ஒருவாறு கூறலாம்.
-----------------

2. திரு. பஞ்சநாத ராவ்

இவர் கோவிந்தசாமிராவ் கம்பெனியில் ஆதி முதல் கடைசி வரையில் விதூஷகனாக நடித்தவர். அதில் நல்ல பெயர் பெற்றவர். கதை ஆரம்பமாகு முன் படுதாவுக்கு முன்பாக இவர் தலையில் வேப்பிலையை கட்டிக் கொண்டுவந்து அக்காலத்திய மராட்டிய கம்பெனிகளின் வழக்கப்படி கூத்தாடி விட்டு எதிரிலிருக்கும் சூத்திரனுடன் வேடிக்கையாய் பேசுவார். இவர் சமயோசிதமாய் வேடிக்கையாய் பேசுவதில் மிகவும் நிபுணர், அதற்கு ஒரு உதாரணம் மாத்திரம் இங்கு எழுதுகிறேன். ஒரு சனிக்கிழமை நாடகம் 9 மணிக்கு ஆரம்பம் என்று பிரசுரம் செய்திருந்த போதிலும் பத்து மணி வரையில் கோவிந்தசாமிராவ் வரவில்லை. அதற்கு மேல் அவர் வந்த போது ஜனங்கள் கொஞ்சம் கலகம் செய்ய, பஞ்சநாதராவ் தன் கையால் அவர்களை அமர்த்தி விட்டு கோவிந்தசாமிராவ் அவர்களுடன் பேசியதை இங்கு எழுதுகிறேன். "இப்படி வாருங்களையா, நீங்கள் தானே இந்த நாடக சூத்திரதாரர் 9 மணிக்கு ஆரம்பம் என்று பிரசுரம் செய்து விட்டு 10 மணிக்கு மேலாகவா ஆரம்பம் செய்வது? இது. சென்னைப்பட்டணம் தெரியுமா? தஞ்சாவூர் நாட்டுப்புறமல்ல, அங்கு நடப்பது போல் இங்கு நடக்கலாகாது, இப்படி நீங்கள் காலதாமதம் செய்ய ஆரம்பித்தால் உங்கள் கம்பெனியின் பாயை, சுருட்டிக் கொண்டு தஞ்சாவூர் போய் சேரவேண்டியது தான், கபர்தார்!" என்றார். இதைக் கேட்டவுடன் வந்திருந்த ஜனங்கள் நகைத்து விட்டார்கள். அவர்கள் கோபமும் தணிந்தது, நாடகமும் சரியாக நடிக்கப்பட்டது.
-----------

3. திரு. சுந்தர ராவ்

இவர் மேற்சொன்ன கோவிந்தசாமி ராவ் கம்பெனியில் முக்கிய ஸ்திரீ பாத்திரமாக நடித்தவர். ஆயினும் நான் பார்த்த போது ஸ்திரீ வேஷத்திற்கு தகுந்த உருவமில்லை. மிகவும் பெருத்த உடம்பையுடையவர். அதிலும் கறுப்பு, ஆயினும் சங்கீதம் மாத்திரம் நன்ருய் கற்றவர். இவருடைய பாட்டை கேட்பதற்கே ஜனங்கள் நாடகத்திற்கு வருவார்கள். இவர் சாவேரி ராகம் பாடுவதில் மிக்க கீர்த்தி பெற்றிருந்தார். எந்த நாடகத்தில் என்ன பாட்டைப் பாடினலும் சாவேரி, சாவேரி என்று ஜனங்கள் கத்துவார்கள். அதற்காக ஒவ்வொரு நாடகத்திலும் சாவேரி பாடித்தான் ஆக வேண்டும். இவரது நடிப்புக் கலையைப் பற்றி நான் அதிக மாகக் கூறுவதற்கில்லை. இவர் தாகை ஒரு நாடகக் கம்பெனியைப் பிறகு ஏற்படுத்தினர்.
------------

4. திரு. குப்பண்ண ராவ்

இவர் கோவிந்தசாமி ராவ் கம்பெனியில் இரண்டாவது ஸ்திரீ வேடம் தரித்தவர். மேற் சொன்ன சுந்தர ராவுக்கு நேர் விரோதமான குணங்களை உடையவர். உடல் சிறுத்தவர், சிவப்பு மேனி யுடையவர், சங்கீதமே பாடத் தெரியாதவர், ஆயினும் நடிப்புக் கலையில் மாத்திரம் நிபுணர். இவர் தாரா சசாங்கம் என்னும் நாடகத்தில் தாரையாகவும் ஸ்திரீ சாகசம் என்னும் நாடகத்தில் ராஜ குமாரியாகவும் நன்றாய் நடித்ததை நான் நேரில் பார்த்திருக்கிறேன். இவர் என்னுடைய லீலாவதி சுலோசனa நாடகத்தில் லீலாவதியாக மிகவும் நன்றாய் நடித்தார். அவர் அச் சமயம் நூதனமாக ஒரு விஷயத்தை நடித்ததைப் பற்றி எனது நாடக மேடை நினைவுகளில் எடுத்துக்காட்டியிருக்கிறேன். இவர் பல வருடங்களுக்குப் பின் அதே லீலாவதி வேடத்தை பாலாமணி கம்பெனியில் நடித்ததைப் பார்த்திருக்கிறேன். அப்போது சுமார் 45 வயதிற்கு மேற்பட்டவராயிருந்த போதிலும் கொஞ்சமும் தளராமல் இளவயதில் நடித்தபடியே அப்போதும் நன்றாய் நடித்தார். இது ஒரு மெச்சத்தக்க விஷயம்.
-----------

5. திரு.நாராயணசாமி பிள்ளை

இவர் சுப்பிராயாசாரி கம்பெனியில் அரிச்சந்திரா நாடகத்தில் மயானத் தோட்டியாக நடித்தவர். அந்த கம்பெனி பிரிந்த பிறகு தானாக ஒரு நாடக கம்பெனியை ஏற்படுத்தி முக்கிய பாத்திரங்களை நடித்து வந்தார். இவரது சங்கீதம் அவ்வளவு உயர் தரம் அல்ல. ஆயினும் நடிப்பதில் கெட்டிக்காரர். இவர் நடித்ததைப் பன்முறை பார்த்திருக்கிறேன்; ஒரு முறை தன் கம்பெனியை அழைத்துக் கொண்டு இலங்கைக்குப் போய் பல நாடகங்கள் நடித்தார். இவர் தமிழ் நாடகத்திற்கு முக்கியமாக செய்த தொண்டு, அச் சமயம் இலங்கையில் பிரபலமாயிருந்த கண்டிராஜன் கதையை நாடகமாக எழுதச் சொல்லி மிகவும் நன்றாய் நடித்ததேயாம். அந்த நாடகத்திற்காக கண்டி அரசர்கள் முதலியோர் அக் கதை நிகழ்ந்த காலத்தில் எந்தெந்த உடையை தரித்தார்களோ அதே மாதிரியாக கொஞ்சமும் மாறுபாடில்லாமல் நடிகர்களை உடைகள் தரிக்கச் செய்து நடத்தியதேயாம். இது தான் முதல் முதல் காலத்திற்கேற்ற கோலம் நடிகர்கள் பூண்டது என்று ஒருவாறு நான் கூறக்கூடும் இதன் பிறகுதான் மற்ற நாடக சபைகள் (சுகுண விலாச சபையார் உட்பட) இந் நல் வழக்கத்தைத் தொடர ஆரம்பித்தது என்று கூறலாம்.
--------------

6. திரு. சுப்பிராய ஆசாரி

ஒரு நாள் நான் தெரு திண்ணையில் நின்றுகொண்டு என் நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கையில் ஒரு கிழவனார் கையில் தடியுடன் நடந்துபோனார். என் நண்பர் இவர்தான் சுப்பிராய ஆசாரி என்று சுட்டிக் காட்டினார். அப்போது நான் இவர் தானா அரிச்சந்திரனாக நடிப்பவர்? என்று ஆச்சரியத்துடன் சொன்னேன். பிறகு கொஞ்ச காலம் பொறுத்து இவர் நடிப்பதைப் பார்க்க வேண்டுமென்று என் வீட்டருகில் அக் காலத்திலிருந்த ஓர் வெளியில் மூங்கிலால் போட்டிருந்த நாடகக் கொட்டகைக்குப் போனேன். அன்று சுப்பிராய ஆசாரி மயான காண்டத்தில் அரிச்சந்திரனாக நடித்ததைப் பார்த்த போது நான் அன்று பார்த்த கிழவனரா என்று ஆச்சரியப் பட்டேன். மிகவும் முடுக்காயும் நடுவயதுடையவராயும் அச் சமயம் தோன்றினார். அப்போதுதான் மாறுவேடம் பூணுவதின் மகிமையைக் கண்டேன். இவர் நன்றாகப் பாடினார். ஆயினும் மயானத்தில் தோட்டியாக இருந்த இவர் தலையில் ஒரு சரிகை பேட்டணிந்த குட்டையையும் தோளில் விலையுயர்ந்த பனாரஸ் சால்வையும் மாட்டிக் கொண்டு கையில் ஒரு வெள்ளித்தடியும் பிடித்துக் கொண்டிருந்தார். இது அக் காலத்திய ஓர் வழக்கம் என்பதற்கு சந்தேகமில்லை. இருந்தாலும் தவறு தவறுதான். இவர் அரிச்சந்திரன் வேடம் தவிர வேறு பாத்திரங்களில் நடித்ததாக எனக்குத் தெரியவில்லை. இவர் பெங்களூர் அப்பாவு பிள்ளையை தன் குருவாகக் கொண்டவர்.
---------

7. திரு. சுந்தர ஆசாரி

இவர் மேற் சொன்ன சுப்பிராய ஆசாரி கம்பெனியில் சத்தியகீர்த்தியாக (அரிச்சந்திரன் மந்திரி) பல வருடங்கள் நடித்தவர், நன்றாகப் பாடுவார். நடிப்புக் கலையிலும் தேர்ச்சியுடையவர், சுப்பிராய ஆசாரி கம்பெனி கலைந்த பிறகு இவர் சொந்தமாக ஒரு நாடக கம்பெனியை நடத்தினார், ஒரு முறை சென்னையில் நாடகக் கொட்டகை அகப்படாது பச்சையப்பன் கலாசாலைக்கு எதிரிலுள்ள மைதானத்தில் ஒரு கூடாரத்தை அடித்து அதில் சில நாடகங்களை நடத்தினார். அவற்றுள் ஒன்றாகிய சாரங்கதரன் நாடகத்தை நான் நேரில் பார்த்தது ஞாபக மிருக்கிறது, அச் சமயம் கதா நாயகனாகிய சுந்தராசாரியும் கதா நாயகியாகிய அப்பாவு பத்தரும் மிகவும் நன்றாய் நடித்த போதிலும் என் மனதை கவர்ந்த நடிகன் விதூஷகன் வேடம் பூண்ட கோபாலன் என்னும் ஓர் பிராமண சிறுவனே. இந்த நாடகத்தைப் பார்த்த பிறகுதான் நான் இந் நாடகத்தை கொஞ்சம் கதையை மாற்றி எழுதினேன்.
------------

8. திரு. கன்னையா

இவர் ஆதியில் சுப்பிராயாசாரி கம்பெனியில் தோட்டிச்சியாக வேடம் பூண்டு நல்ல பெயர் எடுத்தவர். பிறகு சுப்பிராயாசாரி கம்பெனி பிரிந்த பின் தானாக ஒரு நாடக கம்பெனியை ஆரம்பித்தார். இவர் வைஷ்ணவர்களுள் சாத்தாணி பிரிவைச் சேர்ந்தவர். மிகவும் சிறந்த பக்திமான். ஆகவே தனது கம்பெனியில் முக்கியமாக வைஷ்ணவ நாடகங்களையே நடத்தினார். அவ்வாறு நடத்தி பொருள் சேர்த்தபின் இராமாயண நாடகம், கிருஷ்ண லீலா நாடகம் என்னும் நாடகங்களை வெகு விமரிசனையாக நடத்திப் பெயர் பெற்றார். இதன் பிறகு தசாவதாரம் என்னும் ஓர் நாடகம் நடத்தி மிகவும் புகழ்பெற்றார்.

அந்ததசாவதாரம் நாடகத்திற்காக தான் சேர்த்த பொருள்களை எல்லாம் செலவழித்து காட்சிகளையும் நடிகர்களுடைய ஆடை ஆபரணங்களையும் பார்ப்பவர்களெல்லாம் பிரமிக்கும்படி செய்தார். இதன் பலனாக அந்த தசாவதாரம் நாடகம் நூற்றுக் கணக்கான தடவையாக சென்னையில் பீபில்ஸ் பார்க் வடமேற்கிலிருந்த கொட்டகையில் நடத்தப்பட்டது. காட்சிகள் முதலியன வெல்லாம் மிகவும் நன்றாகவும் பார்ப்பவர்களுடைய கண்களை கவருவனவாகவும் இருக்க வேண்டுமென்பது இவரது ஒரே கோரிக்கை. அவற்றிற்காக எவ்வளவு பொருள் செலவானாலும் அதை கவனிப்பதில்லை. அன்றியும் குறித்த காலப்படி நாடகங்கள் ஆரம்பிப்பதில் மிகவும் ஈடுபட்டவர், நடிகர்களையும் பாத்திரங்களுக்குத் தகுந்தபடி தேர்ந்தெடுப்பதில் மிகவும் நிபுணர். இப்படிப்பட்ட பல காரணங்களால் இவர் கையில் பொருள் அதிகமாய் சேர்ந்தது. இப் பெரும் பொருளை எல்லாம் செலவழித்து இதன் பிறகு பகவத் கீதை என்னும் நாடகத்தை புதிய முறையில் எழுதச் சொல்லி நடத்த ஆரம்பித்தார், இந் நாடகத்திற்காக லட்ச ரூபாய்க்கு மேல் செலவழித்தார் என்று நான் சொல்வதானால் மிகையாகாது. இந் நாடகமானது பீபில்ஸ் பார்க் கொட்டகை யில் 1008 தடவை ஆடப்பட்ட தென்று எனக்கு அதில் கிருஷ்ண வேஷதாரியாக நடித்தவர் நேரில் சொல்லியிருக்கிறார். இம் மாதிரியாக ஐரோப்பா முதலிய கண்டங்களிலும் ஒரே நாடகம் 1008 தடவைக்கு மேல் நடத்தப்பட்டதாக நான் கேட்டதும் இல்லை. அப் பெருமை காலஞ் சென்ற கன்னையா அவர்கட்குத்தான் உரித்தாயது. முதலில் தினம் ஒரு முறை ஆட ஆரம்பித்து வரவர டிக்கட்டுகள் இல்லாமல் ஜனங்கள் காத்திருக்கிறார்கள் என்று அறிந்தவராய் சில தினங்களில் அவர்கள் சௌகர்யத்திற்காக இரண்டு முறையும் நடத்தி வந்தார். சென்னையில் இந் நாடகத்தைப் பாராத நாடகாபிமானி ஒருவரும் இல்லை என்றே கூற வேண்டும். இதைப் பார்க்க வேண்டுமென்று ஜனங்கள் மதுரை, திருநெல்வேலி முதலிய இடங்களிலிருந்தும் வந்தார்கள் என்பதை நான் அறிவேன், பலர் இதை மூன்று நான்கு முறை திருப்பி திருப்பிப் பார்க்க விரும்பி அப்படியே செய்தனர் என்பதையும் நான் அறிவேன். பகவத்கீதைக்கு அப்புறம் இவர் ஒரு பெரிய நாடகத்தையும் நடத்தியதாக எனக்கு ஞாபகமில்லை.

இவர் மிகச் சிறந்த விஷ்ணு பக்தர். தன்னை ஆண்டாள் குமாரன் என்று வேடிக்கையாய் கூறிக் கொள்வது வழக்கம். ஸ்ரீவில்லிபுத்தூரில் கோயில் கொண்டிருக்கும் கொடுத்த நாச்சியாருக்குப் பதினாயிரத்திற்கு மேற்பட்ட ஒரு பொன் குடத்தை தானமாகக் கொடுத்தார்.

இவர் மனம் போல் மாங்கல்யம் என்னும் தூய்மையான மனதுடையவர். இதற்கு ஒரு உதாரணத்தை மாத்திரம் இங்கு எழுதுகிறேன். ஒரு முறை யார் நாடகமாடுவது ஒரு கொட்டகையில் என்று இவரது கம்பெனிக்கும் ஆரிய கான சபா என்னும் மற்றொரு நாடக கம்பெனிக்கும் ஒரு வியாஜ்யம் சென்னை ஸிடி ஸிவில் கோர்ட்டில் நடத்தப்பட்டது. அதன் ஜட்ஜாயிருந்தவர் இதை நான் தீர்மானிப்பதைவிட நாடகங்களில் ஈடுபட்டிருக்கும் சம்பந்த முதலியாரை மத்யஸ்தராய் ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்று சொல்லி இருதரத்தாரையும் அதற்கிணங்கும்படி செய்து இந்த வியாஜ்யத்தை என்னிடம் அனுப்பினார். இருதரத்தாரும் ஒப்புக் கொண்டார்கள். நான் இரு தரத்தாரையும் நன்றாய் விசாரித்து கன்னையா அவர்களுக்கு விரோதமாக ஆரிய கான சபையார் பட்சம் தீர்மானம் செய்தேன். அப்படியே டிக்ரியும் ஆய்விட்டது. இப்படியிருந்தும் சில மாதங்களுக்குப் பின்பு தான் கொடையாளி கர்ணன் என்னும் நாடகத்திற்கு ஒத்திகை செய்து கொண்டிருப்பதைக் கேள்விப்பட்டு, தான் நேரில் வந்து பார்த்து எனக்காக வென்று பொன் முலாம் பூசிய கவசகுண்டலங்கள் முதலிய ஆபரணங்களை செய்து கொடுத்ததுமன்றி அந் நாடகத்திற்கு வேண்டிய இரண்டு மூன்று குதிரைகள் பூட்டிய ரதங்களை தன் செல்வில் செய்து நன்கொடையாக சுகுண விலாச சபைக்கு கொடுத்தார். கடைசி ஒத்திகையில் தான் அருகிலிருந்து ரதங்களை நடத்தும் விஷயங்களை எங்களுக்குக் கற்பித்தார். திருவள்ளுவர் வாக்கின்படி இவர் செய்யாமற் செய்த உதவிக்கு நான் என்ன கைம்மாறு செய்யக் கூடும். இப்போது எழுதுகிறேனே அதுதான் நான் செய்யக் கூடிய கைம்மாறு ஆகும். இவரது ஆன்மா ஆண்டாளின் திருவடியின் கீழ் என்றும் நிலைத்திருக்குமாக.
-------------

9. . திரு. கிட்டப்பா அவர்கள்

இவரது பெயர் கிருஷ்ணசாமி என்றிருந்தும் எல்லோரும் இவரை கிட்டப்பா என்றே அழைப்பார்கள். மேற்சொன்ன கன்னையா கம்பெனியில் இவர் சிறு வயதிலேயே சேர்ந்து நடித்து வந்தார். கன்னையா அவர்களால் இவர் நடிப்புக் கலையைக் கற்றார். பிறகு பெரியவனான பிறகு இவரே அக்கம்பெனியில் முக்கிய பாத்திரங்களை நடித்து வந்தார். இவரது சங்கீதம், மிகவும் சிலாகிக்கத் தக்கது. கந்தர்வகானம் என்றே இதை சிலர் கூறக் கேட்டிருக்கிறேன். பாடுவதில் மூன்று ஸ்தாயிகள் வரை எட்டுவார். அப்படியிருந்தும் ஒரு அபஸ்வரமாவது கேட்கப்படாது. இவரும் ஸ்ரீமதி சுந்தராம் பாளும் ஒரு நாடகத்தில் நடிக்கிறார்கள் என்று பிரசுரம் செய்யப்பட்டால் நாடக தினத்திற்கு மூன்று நான்கு நாட்களுக்கு முன்பாகவே டிக்கட்டுகள் ஆகிவிடும், ஒரு முறை பீபில்ஸ் பார்க் கொட்டகையில் சுகுண விலாச சபையார் லீலாவதி சுலோசனா நாடகத்தை ஒரு தர்ம பண்டுக்காக நடத்திய போது நான் ஸ்ரீதத்தனாக வேஷம் தரித்துக் கொண்டிருக்கையில், தான் அதுவரையில் நாடகங்களில் தரித்த விலையுயர்ந்த ரத்னங்கள் இழைத்த நகைகளையும் பொன் நகைகளையும் எடுத்துக் கொண்டு வந்து "நீங்கள் இவைகளில் என்ன வேண்டுமென்றாலும் அணியுங்கள்” என்று அன்புடன் கேட்டார். அதற்கு நான் “நீ கேட்டதே போதும் எனக்கு, மிகவும் சந்தோஷம் நான் இன்று நடிக்கும் நாடகத்தில் சன்யாசி வேடம் பூண வேண்டியவனாயிருக்கிறேன், பிறகு வேண்டுமானால் கேட்டனுப்புகிறேன்” என்று நான் பதில் சொன்னது ஞாபகமிருக்கிறது. இப்படிப்பட்ட நற்குணவானாயிருந்த போதிலும் தன் உடல் நலத்தை பாதுகாக்காதபடியால், இளவயதிலேயே இவர் பரலோகம் சென்றார். இதை நான் இங்கு எழுதுவது இவரது குற்றத்தைக் கூறும் பொருட்டன்று. நடிகர்கள் முக்கியமாக தங்கள் உடல் நலத்தை ஜாக்கிரதையாய் பாதுகாக்கவேண்டுமென்றுதான்.
--------------

10. ஸ்ரீமதி கே. பி. சுந்தராம்பாள்

இப் பெண்மணி சிறுவயதிலேயே நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார்கள், பெரியவர்களானவுடன் முக்கிய பாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார்கள். பன்முறை கிட்டப்பா அவர்களுடன் கதா நாயகியாக நடித்து பெரும்பெயர் பெற்றார்கள். நடிப்பதில் மிகவும் திறமை யுடையவர்கள். ஆயினும் இவருடைய பெயர் தமிழ் நாடெங்கும் பரவச் செய்தது இவர்களுடைய அபாரமான சங்கீதக் கலையே. நல்ல ராக தாள ஞானமுடையவர். நான் கண்ட அளவில் இவர்களுடைய சங்கீதத்தில் ஈடு ஜோடு இல்லாத பெருமை இவர்கள் பக்க வாத்தியங்கள் இல்லாமலே மிகவும் இனிமையாகப் பாடும் திறமே யாம், அநேக சங்கீத வித்வான்கள் பக்க வாத்தியத்தோடு பாடுவது ஒரு மாதிரியாக இருக்கும். பக்க வாத்தியம் இல்லாமல் பாடுவது வேறு ஒரு மாதிரியாய் இருக்கும். இவரது பாட்டில் அப்படியில்லை. பக்க வாத்தியங்கள் இல்லாமல் பாடினாலும் மிகவும் காதுக்கு இனிமையாயிருக்கும். இது ஒரு அரிய குணம். காலஞ் சென்ற கிட்டப்பா அவர்கள் ஆடவர்களுள் சங்கீதத்தில் எப்படி பெயர் பெற்றரோ அப்படியே பெண்டிருக்குள் இவர்கள் பெயர் பெற்றனர். இவர்கள் எப்போதும் ஸ்திரீ வேடம் தான் தரிப்பது வழக்கம். ஒரு முறை வடக்கிலிருந்து வந்த பேசும்படம் பிடிக்கும் முதலாளியின் வேண்டுகோளிற் கிணங்கி நந்தனாராக—ஆண் வேடம் தரிக்க இசைந்தார்கள். அப்படம் சரியாக சோபிக்கவில்லை. இதற்கு ஒரு முக்கிய காரணம் ஒரு பெண்மணி ஆண் வேடம் தரித்து கழனிகளில் வேலை செய்யும் ஆதி திராவிடன் வேடம் தரிப்பது மிகவும் அசாத்தியமான காரியம். இதற்கு மேல் நான் சொல்வதற்கில்லை இவர்களும் இனி ஆண் வேடம் தரிப்பது இல்லை என்று தீர்மானித்தார்கள் என்று நினைக்கிறேன். நந்தனாருக்குப் பின் மணிமேகலை என்னும் பேசும் படத்தில் கதா நாயகியாக நடித்தார்கள். இது யாது காரணத்தாலோ முதலில் காட்டிய போது ஜனங்களுக்குத் திருப்தியாயில்லை. அதன் பேரில் அந்த படம் எடுத்தவர் ஹிந்து பத்திரிகை ஆசிரியராக இருந்த காலஞ்சென்ற எனது நண்பர் ஸ்ரீமான் ஸ்ரீனிவாசன் அவர்களிடம் போய் கேட்க, அவர் பிலிம் முதலாளியை என்னிடம் அனுப்பினார். அதன் பேரில் அம்முதலாளி அந்த படத்தை சீர்திருத்தி நன்றாக செய்து கொடுக்க வேண்டுமென்று என்னை கேட்க, நான் அதற்கிசைந்து கோயமுத்தூருக்குப் போய் பல விஷயங்களில் அதை மாற்றி என்னால் இயன்ற அளவு திருத்திக் கொடுத்தேன். அதன் பேரில் அப்படம் நன்றாய் ஓடியது என்று அறிந்தேன். அச்சமயம் ஏறக்குறைய மூன்று மாதம் இவர்களுடன் பழகலானேன். அப்போது அவர்களுடைய ஓர் சிறந்த நற்குணத்தைக் கண்டு மகிழ்ந்தேன். அதாவது சுந்தராம்பாள் கிட்டப்பாவுடன் பன்முறை கதா நாயகியாக நடித்ததைக் கருதி மேற்படி கிட்டப்பா அகாலமரண மடைந்த உடனே இவர்கள் அதுமுதல் கைம்பெண் வேடத்தை எப்பொழுதும் தரித்ததாகும். பேசும் படங்களில் நடிக்கும் காலம் தவிர மற்ற காலங்களில் எல்லாம் வெள்ளை உடையே (வெண் பட்டாடையே) தரித்து ஆபரணங்கள் ஒன்றும் போடாமல் வாழ்ந்து வந்தனர். இப்போதும் அப்படியே இருக்கின்றனர். இது மிகவும் மெச்சத் தக்க குணமாம். 1957-வது ஆண்டில் சுதந்திர போராட்ட நூற்றாண்டு விழாவில் நாடகத் தமிழுக்காக எனக்கும் ஓர் சிறந்த பொற் பதக்கமும் வெள்ளி வேலைப் பாடமைந்த தட்டையும் சென்னை ராஜாஜி ஹாலில் கூட்டிய ஓர் பெரும் கூட்டத்தில் அளித்த போது இசைத் தமிழில் பெருமை பெற்றதற்காக ஸ்ரீமதி கே. பி. சுந்தராம்பாளுக்கும் அதே மாதிரி பொற் பதக்கமும், வெள்ளித் தட்டையும் அளித்தனர். இவர்கள் இன்னும் ஜீவந்தராய் இருப்பது இசை அபிமானி களுடைய பெரும் பாக்கியமாம். இவர்கள் இவ்வருடம் தேசீய பாதுகாப்பு நிதிக்காக ஒரு பெரும் தொகையை நன்கொடை கொடுத்ததை நான் சந்தோஷமாய் எழுத வேண்டியவனாயிருக்கிறேன். இவர்கள் தற்காலம் வசிக்கும் திருப்பாண்டிக் கொடுமுடி என்னும் ஊரிலிருக்கும் சிவபெருமானது அருளால் பல்லாண்டு வாழ்ந்து தமிழ் நாடகக்கலையை இன்னும் முன்னேறச் செய்வார்களாக!
-------------

11. திரு. எம். சுந்தசாமி முதலியார்

இவர் முதன் முதல் சுகுண விலாச சபையில் நடித்தவர். மனோகரன் நாடகத்தில் வசந்த சேனை வேடம் தரித்தார். இவர் பிற்பாடு பல நாடக சபைகளைச் சேர்ந்து மற்றவர்கள் எழுதிய நவீனங்களில் சிலவற்றை நாடக ரூபமாக எழுதிக் கொடுத்தார். இவ்வாறு அவரால் எழுதப்பட்டவை இராஜாம்பாள், இராஜேந்திரா, சந்திரகாந்தா, மோகனசுந்தரம், ஆனந்த கிருஷ்ணன், மேனகை முதலியவை. சுகுண விலாச சபையில் மனோகரா நாடகத்தில் நான் மனோகரனாக முதல் முதல் நடித்த போது இவரை வசந்த சேனை வேடத்தில் நடிக்க கற்பித்தேன். நான் சொன்னதை யெல்லாம் மிகவும் ஆவலுடன் கேட்டு அப்படியே நடித்தார். அன்றியும் சுகுண விலாச சபை நடத்திய எனது பல நாடகங்களை அநேக பால சபைகளுக்குக் கற்பித்தார். சிறு பிள்ளைகளை நடிக்கச் செய்வதில் மிகவும் நிபுணர் என்று பெயர் பெற்றதால் அநேக பால சபைகள் இவரை நாடினார்கள், அன்றியும் வேல் நாயர் கம்பெனி, பாலாமணி கம்பெனி, பாலாம்பாள் கம்பெனி முதலிய பெரிய கம்பெனிகளும் இவரது உதவியை நாடியது எனக்குத் தெரியும். தன் ஆயுளையெல்லாம் நாடகக்கலைக்கு அர்ப்பணம் செய்தவர்களுள் இவர் ஒரு முக்கிய மானவர். இவருடைய மகனாகிய எம். கே. ராதா என்னும் நடிகனை பல வேடங்களில் நன்றாய் நடிக்கச் செய்தவர் இவரே யாவார்.
---------------

12. திரு. எம். கே. ராதா

இவர் எம். கந்தசாமி முதலியாருடைய பிள்ளை. சிறுவயதிலேயே கந்தசாமி முதலியாரால் நாடகக் கலையில் நன்றாய் பயில்விக்கப்பட்டவர். இவர் ஸ்ரீமான் S. S. வாசனுடைய ஜெமினி ஸ்டுடியோவைச் சேர்ந்தவர். அங்கு எடுக்கப்பட்ட அநேக பேசும் படங்களில் முக்கிய நடிகராக நடித்திருக்கிறார். அவர் நாடக மேடையில் நடித்த போது நான் பன்முறை பார்த்திருக்கிறேன். முக்கியமாக எனது கள்வர் தலைவன் நாடகத்தில் ஹேமாங்கதனாக நடித்தது மிகவும் நன்றாயிருந்தது, இவரும் மற்றவர்களைப் போலவே அந்நாடகத்தை சோக கரமாய் முடிக்காமல் சுபகரமாக முடித்து நடித்திருக்கிறார்.
---------

13. திரு. சங்கரதாஸ் சுவாமிகள்

இவர் சென்ற நூற்றாண்டின் இறுதியில் தமிழ் நாடகங்களை எழுதியவர். இவர் சிறு வயதிலேயே தமிழ் நூல்களை நன்றாய் கற்றபின் முதலில் அக்காலத்தில் நடத்தப்பட்ட கூத்துக்களில் வேடம் தரித்து நடித்தவர். அப்படி நடித்த முக்கிய பாத்திரங்கள் இரண்யகசிபு, சனீஸ்வரன், யமதர்மன் முதலியவைகளாம். இவர் கம்பீரமான உருவமும் பார்வையும் குரலும் பெற்றிருந்தமையால் அப்பாத்திரங்களை ஆடுவதில் மிக்கப் பெயர்பெற்றது சுலபமாயது. 1891-வது வருஷம் தமிழ் நாடகங்களை ஆடுவதைவிட்டு தமிழ் நாடகங்களை எழுதத் தொடங்கினார். அந்நாடகங்களின் வசனங்கள் மாத்திரமன்றி தக்க பாட்டுகளையும் தாமே எழுதி மற்றவர்களுக்குக் கற்பித்தனர். இவரது நாடகங்கள் முதல் முதலில் ராமுடு ஐயர் கலியாணராமய்யர் சபையில் ஆடப்பட்டன. இச்சபையில் நடிகராகவும் பிறகு ஆசிரியராகவும் விளங்கினர். அக்காலத்திலேயே இவர் சன்யாசம் பூண்டனர். அதன்பிறகு இவரை சங்கரதாஸ் சுவாமிகள் என்று அழைக்கத் தலைப்பட்டனர். சன்யாசம் பூண்டபிறகும் நாடகசபைகளில் வேலை பார்த்தார். வேல் நாயர் சபையிலிருந்தபோது எனது மனோஹரன் நாடகத்திற்கு இவர் தான் தக்க பாடல்கள் எழுதினார். பிறகு சமரசசன்மார்க்க நாடக சபையை சொந்தத்தில் தாமே ஏற்படுத்தி நடத்தினார். இவரால் பாடல்களுடன் எழுதப்பட்ட நாடகங்கள் கோவலன், வள்ளித் திருமணம், பவளக்கொடி, அல்லி அர்ஜுனா, சீமந்தினி, சதியனுசூயா, மணிமேகலை, லவகுசா, சாவித்திரி, சதிசுலோசனா பிரகலாதன், வீர அபிமன்யு, சிறுத்தொண்டர், பிரபுலிங்கலீலை, பார்வதி கல்யாணம் முதலியன. இவர் 1922-ஆம் வருஷம் பூதவுடலைவிட்டு நீங்கின பிறகு சென்னை நடிகர் சங்கத்தார் புதுவையில் இவருக்கு ஒரு மண்டபம் கட்டினர். அதில் வருஷாவருஷம் திரு. டி. கே. ஷண்முகம் அவர்கள் முயற்சியால் சுவாமிகளுக்கு பூஜை நடைபெற்று வருகிறது. மேற்குறித்த இவரது நாடகங்களில் வீர அபிமன்யு என்னும் நாடகத்தை ஒரே இரவில் எழுதி முடித்ததாக சொல்லப்படுகிறது.
--------------

14. திரு. சிவஷண்முகம் பிள்ளை

இவர் எழுதிய நாடகம் கண்டிராஜா, இது சிங்களத்தை ஆண்ட ஒரு அரசனைப்பற்றிய நாடகம். இவர் நாராயணசாமி பிள்ளை நடத்திய சம்பூர்ண இராமாயணத்திற்குத் தக்க பாடல்கள் இயற்றினார். இவர் 'சம்பூர்ண மகாபாரதம்' என்னும் நாடகத்தையும் எழுதியுள்ளார்.
----------

15. திரு. கிருஷ்ணசாமி பாவலர்

இவர் சிறு வயதில் என்னுடன் சுகுணவிலாச சபையில் நடித்தவர். என்னுடன் சாரங்கதராவில் சுமந்திரராகவும் மனோகராவில் ராஜப்பிரியனாகவும் நன்றாய் நடித்தது ஞாபகமிருக்கிறது. இவர் தமிழில் நல்ல தேர்ச்சி பெற்றவர், கவிகள் பாடுவதில் சிறந்த பெயர் எடுத்தவர். ஒருவிதத்தில் இவரை ஆசுகவி என்றே கூறலாம். அவ்வளவு விரைவாக விருத்தங்கள் கட்டுவார். தனது நாடகங்களுக்கு வேண்டிய பாட்டுகளைத் தானே கட்டியிருக்கிறார். பிறகு தானாக பால நாடகசபையை ஏற்படுத்தினார். அதற்காக அவர் எழுதிய நாடகங்கள் பதிபக்தி, பம்பாய் மெயில், பஞ்சாப்கேசரி, கதர்பக்தி முதலியவைகளாம்; இவர் இங்கிலாந்து மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் வெள்ளிவிழா (silver jubilee) நடந்தபோது தன்னுடைய பாலசபையினரை அழைத்துக்கொண்டு இங்கிலாந்துக்குப்போய் அச்சமயம் பல தமிழ் நாடகங்கள் நடத்தினார்.
-------------

16. திரு. சந்தானகிருஷ்ண நாயுடு

இவர் சிறுவயதில் நாடகமாடியதாகக் கேள்விப்படுகிறேன். இவர் முத்துசாமி கவிராயருடைய சிஷ்யர். ஆரியகான சபை என்னும் நாடக சபைக்கு இவர் சில நாடகங்களையும் அவற்றிற்குரிய பாட்டுகளையும் எழுதியதாகத் தெரிகிறது. ஆயினும் அவைகளில் ஒன்றும் அச்சிடப்பட்டதாகக் காணோம்.
-----------

17. திரு. டி. கே. ஷண்முகம்

திரு. டி. கே. ஷண்முகம் அவர்கள் தகப்பனாருக்கு, ஷண்முகம் அவர்கள் உட்பட நான்கு பிள்ளைகள். இந்த நான்கு பிள்ளைகளையும் அவர்களுடைய தகப்பனார் சிறு வயதிலேயே நாடகம் ஆடுவதில் சேர்ப்பித்தார். 1922-ல் ஷண்முகம் அவர்கள் தனது சிறு வயதிலேயே கிருஷ்ணசாமி பாவலருடைய பாலமனேகர சபாவில் மனோகரனாக நடித்தார். அதை நான் நேரில் பார்த்தபோது நாடகத்தின் முடிவில் ஷண்முகம் அவர்கள் நடித்ததைப்பற்றி சந்தோஷப்பட்டுப் பேசினேன். டி. கே. ஷண்முகம் அவர்கள் சிறுவயதில் பல பால நாடக சபைகளில் நடிகராயிருந்தார். பிறகு தன் சகோதரர்களுடன் 'ஷண்முகானந்த நாடகசபா' என்பதை ஸ்தாபித்து பல வருடங்களாக அதை விமரிசையாய் நடத்திவந்தனர். பிறகு ஏதோ காரணத்தால் அந்த சபை கலைக்கப்பட்டது; தற்காலம் வேறொரு பெயருடன் ஒரு நாடகசபையை ஏற்படுத்தி அதில் நடித்து வருகிறார். சென்னை ராஜதானியில் முக்கியமான பட்டணங்களில் பல வருடங்களாக நாடகங்கள் நடத்தி வருகிறார். சிங்கப்பூர், மலேயா முதலிய இடங்களுக்குப்போய் தன் குழுவுடன் பல தமிழ் நாடகங்களை நடத்தி மிகுந்த கீர்த்தியைப் பெற்றிருக்கிறார். இவர் நடித்த நாடகங்களில் முக்கியமானது 'ஒளவையார்'. இந்நாடகம் எழுதியது திரு. பி. எஸ். எத்திராஜ். அப்பாத்திரத்தை நடிப்பது மிகவும் கடினமாகும். இருந்தும் அப்பாத்திரத்தை நடிப்பதில் இவருக்கு சமானமில்லை யென்ற கீர்த்தியைப் பெற்றார். இவர் எனது நாடகங்களில் மனோகரன் நாடகத்தை பன்முறை பல இடங்களில் நடித்து நல்ல பெயர் பெற்றிருக்கிறார். அந்நாடகத்தை கொஞ்சமேனும் மாற்றாமல் அப்படியே ஆடிய சிலரில் இவர் முக்கியமானார். நான் நிர்மாணித்த மனோகரன் பாத்திரத்தின் குணாதிசயங்களை யெல்லாம் நன்குணர்ந்தவர். ஆகவே நூற்றுக்கணக்கான நடிகர்கள் மனோகரன் பாத்திரத்தை நடித்திருந்தபோதிலும் இவர் நடித்ததும் திரு. கே. ஆர். ராமசாமி நடித்ததும் தான் என் மனதிற்கு ஓரளவு உவகையைத் தந்தது. டி. கே. ஷண்முகம் அவர்கள் குழு தென்னிந்தியாவிலும் சிலோன் மலேயா முதலிய இடங்களிலும் நடித்தபோது பல நாடகங்களின் வரும்படியை பல தர்ம விஷயங்களுக்குக் கொடுத்திருக்கின்றனர். தற்காலம். இவர் தமிழ் நாடகத்திற்காக தனது உடல், பொருள், ஆவியெல்லாம் கொடுத்து அதை மிகவும் முன்னேறச் செய்திருக்கின்றனர் என்பதை ஒருவராலும் மறக்க முடியாது. இவருக்கு 1960-ஆம் ஆண்டில் சென்னை சங்கீத நாடக சங்கம் இவரது நடிப்புக்கலையை மெச்சி ஓர் பொற்பதக்கம் அளித்தனர். இவர் தேசிய பாதுகாப்பு நிதிக்கு பெரும் பொருளை தாராளமாக கொடுத்துள்ளார். அன்றியும் பல எளிய நடிகர்களுக்கு அவர்களுடைய கஷ்டகாலத்தில் பொரு ளுதவியும் செய்திருக்கிறார். இவர் இன்னும் பல்லாண்டு வாழ்ந்து அவ்வாறே செய்யவேண்டுமென்று கோருகிறேன்.
-------------

18. திரு. டி. கே. பகவதி

தமிழகத்தின் தலைசிறந்த நாடகக் கலைஞர்களான டி. கே. எஸ். சகோதரர்கள் நால்வரில் திரு. டி. கே. பகவதி நான்காவது சகோதரர். இவர் 11—2—1918-இல் பிறந்தார். இவர் தமது 7-வது வயதிலேயே மதுரைத் தத்துவமீன லோசனி வித்துவ பால சபாவில் நடிகராக சேர்க்கப் பெற்றார். 1925-இல் சகோதரர்களின் ஸ்ரீ பால ஷண்முகானந்த சபை துவக்கப் பெற்றதும், அதில் சில்லரை வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். சின்னஞ்சிறு வயதில் இவர் பெரும்பாலும் நகைச் சுவை யளிக்கும் 'பபூன்' வேடங்களிலேயே தோன்றினார். டி. கே, பகவதி தன் சகோதரர் திரு டி. கே முத்துசாமியிடமும் ஆசிரியர் திரு. எம். கந்தசாமி முதலியாரிடமும் நாடகப் பயிற்சி பெற்றார். இளமைப் பருவத்திலேயே ராஜாம்பாள், ராஜேந்திரன், சந்திரகாந்தா முதலிய நாவல் நாடகங்களில் இவர் கதா நாயனாக அருமையாக நடித்தும், பாடியும் பெருமை பெற்றிருக்கிறார்.

டி. கே. பகவதி கதாநாயக வேடங்களில் நடித்தபோது இவருக்கு நாயகியாக நடித்தவர் நடிப்புப் புலவர் திரு. கே. ஆர் ராமசாமி என்பது குறிப்பிடத்தக்கது. 1935-ஆம் ஆண்டு முதல் டி. கே. பகவதி பல்வேறு நாடகங்களில் பிரதம பாகத்தை ஏற்று நடிக்கத் தொடங்கினார். 1939-இல் 'சிவலீலா' நாடகத்தில் சிவபெருமானுடைய பல்வேறு வேடங்களில் நூற்றுக் கணக்கான நாடகங்களில் தொடர்ந்து நடித்து ரசிகர்களின் பேராதரவைப் பெற்றார். தமிழ் வரலாறு நாடகங்களில் கதா நாயனாக நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தபோது இவரது பெருமை மேலும் ஓங்கியது. இமயத்தில் நாம், இராஜ ராஜசோழன் முதலிய நாடகங்களில் சேரன் செங்குட்டுவன், இராஜராஜ சோழன் ஆகிய வேடங்கள் இவருடைய அபார நடிப்புத் திறமைக்குச் சான்றாக விளங்கின. ராஜராஜ சோழன் என்னும் நாடகம் அரு, ராமநாதன் அவர்கள் எழுதியது அமரர் கல்கியின் 'சிவகாமியின் சபதம்' நாடகத்தில் மகேந்திர பல்லவனாகத் தோன்றியது இவருக்குப் பன்மடங்கு சிறப்பைத் தேடித்தந்தது.

திரு. பகவதி நடிப்புத் துறையில் மட்டுமல்ல, நிர்வாகத் துறையிலும் சிறந்த ஆற்றல் பெற்றவர். 1950 முதல் டி. கே. எஸ். நாடக சபையின் நிர்வாக பொறுப்பு முழுவதும் இவரே ஏற்று நடத்தி வருகிறார். புது தில்லியில் பாரத அரசாங்கத்தாரால் அமைக்கப் பெறும் நேஷனல் தியேட்டர் அமைப்பு ஆலோசனை குழுவில் பகவதி ஓர் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ் நாடு சங்கீத நாடக சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம் முதலிய அமைப்புகளில் இவர் அங்கம் வகித்து வருகிறார்.

தமிழ் நாடு அரசாங்க நாடக ஒழுங்கு முறை சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள கமிட்டியில் உறுப்பினராகவும் இரண்டு ஆண்டுகள் பணியாற்றி வருகிறார். 1950 முதல் டி. கே, எஸ், நாடக சபை தயாரித்த 'இன்ஸ்பெக்டர், கள்வனின் காதலி, ரத்தபாசம், தமிழ் செல்வம், வாழ்வில் இன்பம், தேச பக்தர் சிதம்பரனார், சித்தர் மகள், இராஜ ராஜ சோழன், சிவகாமியின் சபதம், உயிர்ப்பலி, பாசத்தின் பரிசு முதலிய பல்வேறு நாடகங்களுக்கு இவர் தயாரிப்பாளராக இருந்து உதவி யிருக்கிறார். தேசீய பெருமை வாய்ந்த நாடகங்களான 'முதல் முழக்கம்', 'தேச பக்தர் சிதம்பரனார்' ஆகிய நாடகங்களில் பகவதி கட்ட பொம்மனாகவும், சிதம்பரனாராகவும் திறம் பெற நடித்து நாடக ரசிகர்களின் பேராதரவைப் பெற்றார்.

டி. கே. பகவதி நாடக உலகில் சிறந்த இடம் பெற்றிருப்பதோடு திரைப்படத் துறையிலும், பல படங்களில் முக்கிய பாகமேற்று நடித்திருக்கிறார். 1935-இல் சிறந்த படமென்று பொது மக்களால் பாராட்டப் பெற்ற 'மேனகாவில்' பகவதி கதா நாயகன் வராகசாமியாக நடித்தார். தொடர்ந்து பாலாமணி, குமாஸ்தாவின் பெண், பில்ஹணன், மனிதன், இன்ஸ்பெக்டர், ரத்தபாசம், சம்பூர்ண இராமாயணம், மகா வீர பீமன், குலமகள் ராதை முதலிய திரைப்படங்களில் முக்கிய பாகமேற்று நடித்திருக்கிறார்
------------

19. திரு. சகஸ்ரநாமம் அவர்கள்

இவர் பிறந்தது 1913-ஆம் வருடம், இவர் சிறு வயதில் சில நாடகக் கம்பெனிகளின் நாடகங்களைப் பார்த்து தானும் நாடகமாட வேண்டு மென்று விருப்பம் கொண்டார். சுமார் 14 வயதில் ஓர் நாடக கம்பெனியில் நடிக்க ஆரம்பித்தார். அப்படி சேர்ந்தவுடன் இவர் தந்தை அதை தடுத்துப் பார்த்தார். அதனாலும் கல்விமேல் மனம் செல்லாது நாடகமாடுவதிலேயே இவர் மனம் சென்றது. அதன் மீது இவர் தந்தை நாடகமாடுவதற்கே அனுமதி கொடுத்து விட்டார். முதலில் இவருக்கு உற்சாகமளித்தது திரு என். எஸ். கிருஷ்ணன் அவர்களின் நடிப்பாகும்.

இவர் அக்காலத்தில் அபிமன்யு சுந்தரி என்னும் நாடகத்தில் சூரியபகவானாக நடித்தார். அச்சமயம் அபிமன்யுவாக் நடித்தவர், தற்காலம் பிரசித்தி பெற்ற நடிகராகிய திரு T. K. ஷண்முகம் அவர்கள். பிறகு இவர் காலஞ்சென்ற திரு M. கந்தசாமி முதலியார் அவர்களால் பல நாடகப் பாத்திரங்கள் ஆடுவதில் பயிற்சி செய்யப்பட்டார். இதனால் கந்தசாமி முதலியார் அவர்களையே இவர் தனது நாடகக் குருவாகக் கொண்டனர். 1935-இல் டி. கே. எஸ் சபையாருடன் ‘மேனகை' என்னும் திரைப்படத்தில் முதல் முதல் நடித்தார். பிறகு பல நாடக சபைகளோடு சேர்ந்து நடித்து வந்தனர். பிறகு என். எஸ். கே. தயாரித்த படங்களிலும் ஜீபிடர் கம்பெனி யிலும் பணியாற்றி வந்தார். பிறகு ஏற்பட்ட மதுரை பால வினோத சபாவில் சில பாத்திரங்களைத் தொடர்ச்சியாக நடித்தார். பிறகு ஒற்றைவாடை தியேட்டரில் என். எஸ். கே நாடக சபை நடத்திய நாடகங்களில் பங்கெடுத்துக் கொண்டார். பிறகு 'நாம் இருவர்', 'ரத்த சோதனை' என்ற நாடகங்களில் நடித்தார். பைத்தியக்காரன் என்ற நாடகத்தை இவரே எழுதி அதில் முக்கிய பாத்திரமாக நடித்து பெரும் புகழ் பெற்றார். 1952-இல் இவர் தன் சொந்தமாக 'சேவாஸ்டேஜ்' என்னும் நாடக சபையை ஸ்தாபித்தார். 1956 முதல் பி. எஸ். ராமையா அவர்கள் எழுதிய பிரசிடெண்ட் பஞ்சாட்சரம், மல்லியம் மங்களம், தேரோட்டி மகன், போலீஸ்காரன் மகள், பூவிலங்கு முதலிய நாடகங்களில் பங்கெடுத்துக் கொண்டு நல்ல முறையில் நடித்தார். பாரதியார் எழுதிய பாஞ்சாலி சபதம் என்னும் நாடகத்தைப் பாட்டுகளாக நடத்திய போது அதில் பங்கெடுத்துக் கொண்டார். அன்றியும் தி. ஜானகி ராமன் எழுதிய நாலு வேலி நிலமும், வடிவேலு வாத்தியார் என்னும் நாடகமும், கோமல் சுவாமிநாதன் எழுதிய புதிய பாதை, தில்லை நாயகம் என்கிற நாடகங்களையும் இவர் நடத்தி வருகிறார். இதன் பிறகு இவர் சமீபத்தில் ஐரோப்பா கண்டத்தில் மாஸ்கோ, தாஷ்கண்ட், லெனின் கிராட், கிழக்கு பெர்லின் முதலிய ஊர்களுக்குப் போய் அங்குள்ள நாடகக் குழுவினரால் மரியாதை செய்யப்பட்டு அவர்களிடமிருந்து பல நாடக விஷயங்களைக் கற்றுக் கொண்டது மன்றி தமிழ் நாடகத்தின் பெருமையை அவர்களுக்குத் தெரிவித்து வந்துள்ளார்.
-----------

20. திரு. நவாப் ராஜமாணிக்கம்

இவர் ஒரு நல்ல நடிகர், சுவாமியின் கிருபையால் வயதாகிய போதிலும் இவர் இன்னும் நடித்துவருகிறார். இவர் தன் சொந்தமாக தேவிகான சபா என்னும் நாடக சபையை ஏற்படுத்தி புராண சம்பந்தமான பல நாடகங்களை நடத்தி வருகிறார். ஒருமுறை ராமாயணத்தில் அனுமார் இராவணனை சந்திக்கும் கட்டத்தில் மிகவும் நன்றாய் நடித்ததை நான் நேரில் பார்த்திருக்கிறேன். இவர் சிறந்த பக்திமான், ஐயப்பன் என்னும் சுவாமியை தன் குலதெய்வமாகக் கொண்டவர். ஐயப்பன் கதையை நாடகமாக பன்முறை நடத்தி நல்ல பொருளும் புகழும் பெற்றார். ஆயினும் சில வருடங்களுக்கு முன்பாக பெரும் காற்றுமழையால் இவர் ஆடிவந்த நாடகக் கொட்டகை சரிந்து விழுந்து திரைகள், உடைகள் முதலிய எல்லா சாமான்களும் அழிந்துவிட்டன. அச்சமயம் சென்னை அரசியலார் 5000 ரூபாயும் சங்கீத நாடகசபையார் 5000 ரூபாயும், மத்திய அரசியலார் 5000 ரூபாயும் கொடுத்து உதவி மறுபடியும் முன்போல் இவரது சபையை நடத்தும்படியாக உதவினார்கள், இவர் சுமார் 200 பிள்ளைகளுக்கு உணவு, ஆடை முதலியவை அளித்து ஆரம்பக் கல்வியையும் கற்பித்து நடிகர்களாகவும் தேர்ச்சி பெறச் செய்திருக்கிறார், பழைய நாடக சபைகளில் இவர் சபைதான் பல வருடங்களாக நீடித்த காலம் நல்லமுறையில் நாடகங்களை நடத்தி வருகிறது.
-------------

21. திரு. கே. ஆர். ராமசாமி

இவர் பால்யத்திலேயே பாலநாடக கம்பெனிகளில் சேர்ந்து பன்முறை நல்ல பெயர் பெற்றவர். அச்சமயங்களில் இவர் பெண் வேடம் தரித்ததாக அறிகிறேன். பிறகு பெரியவரான பிறகு தானாக ஒரு நாடகக் கம்பெனியை ஏற்படுத்தி அதில் பெரும்பாலும் முக்கிய ஆண் வேடங்களை நடித்துள்ளார். இவர் தமிழ்நாடு முழுவதும் நாடகக் கம்பெனியுடன் சுற்றி யிருக்கிறார். ஒருமுறை சென்னையில் வந்தபோது வால்டாக்ஸ் தியேட்டரில் ஏறக்குறைய மூன்று மாதம்வரை எனது மனோகரா நாடகத்தையும் ரத்னாவளி நாடகத்தையும் கோர்வையாக நடத்தியிருக்கிறார். இம்மாதிரியாக வேறெந்த நாடகக் கம்பெனியும் இடைவிடாது மாதக் கணக்காக நடத்தியதில்லை. அச்சமயங்களில் நான் இவர் நடித்ததை நேரில் பார்த்து புகழ்ந்திருக்கிறேன். முக்கியமாக இவர் மனேஹரன் பாத்திரத்தில் நடித்தது மிகவும் நன்றாக இருந்தது. அதை தினம் தினம் நடிப்பதென்றால் மிகவும் கடினமான வேலையாம். நான் இந்த மனோகரன் பாத்திரத்தை அநேகர் நடித்ததைப் பார்த்திருக்கிறேன், அவர்களுள் இவர் நடித்ததும் எனது மற்றொரு நண்பர் திரு. T. K. ஷண்முகம் அவர்கள் நடித்ததும் தான் எனக்கு மிகுந்த திருப்திகரமாயிருந்தது. அதற்கொரு முக்கியமான காரணம் அவர்கள் அவ்வேடம் தரித்தபோது பதினெட்டு வயதுடைய பால்யனாகத் தோன்றியதாம். மற்றொரு காரணம் இவர்கள் இருவரும் நான் எழுதியதில் ஒன்றையும் மாற்றாமல் அப்படியே நடித்ததாகும்.

இவர் நமது நாட்டைவிட்டு சிங்கப்பூர், மலேயா முதலிய இடங்களுக்குப்போய் அங்கு தமிழ் நாடகங்களின் பெருமையையும் அருமையையும் பரவச் செய்துள்ளார். ஒருமுறை அவ்வூர்களில் ஒன்றில் சாயங்கால நாடகமாக மனோகராவை ஐந்து மணிமுதல் 8-மணி வரையில் ஆடி முடித்தபோது அதைப் பார்க்க அண்டை அயலிலுள்ள ஆயிரக்கணக்கான ஜனங்கள் வந்திருக்கின்றனர் என்று அறிந்து அவர்களைத் திருப்தி செய்வதற்காக அன்றிரவே 9-மணிக்குமேல் 12-மணிவரையில் நாடகத்தை நடத்தியதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன், இவர் சென்னை சட்டசபையில் ஓர் அங்கத்தினராக சில வருடங்கள் இருந்தார் என்பது போற்றத்தக்கது. இன்னும் பல்லாண்டு வாழ்ந்து நமது நாட்டிற்கும் தமிழ் நாட்டிற்கும் ஈசன் கருணை யால் சேவை செய்வாராக.
-----------

22. திரு. T. R. ராமச்சந்திரன்

சென்னை மாவட்டத்தில் ஒரு சிற்றூரில் ஒரு குடியானவர் இருந்தார், அவருக்கு ஒரு பிள்ளை. அப்பிள்ளையின் பெயர் ராமச்சந்திரன், அந்த பிள்ளையை ஐந்து வயதானவுடன் ஒரு பள்ளிக்கூடத்திற்கு அனுப்பினார். அவன் சரியாக பள்ளிக் கூடத்திற்குப் போவதுமில்லை. சரியாக படிப்பதுமில்லை. அவன் விளையாட்டிலும் வினோதத்திலுமே காலங்கழித்தால் படிப்பு எப்படி வரும்? தகப்பனார் அவனைக் கண்டித்துப் பார்த்தார், திட்டிப்பார்த்தார்; 'அடித்தும் பார்த்தார்' எதிலும் பயனில்லை. ஒருநாள் அப்பிள்ளை, தகப்பனாரிடம் போய் "என்னை ஏன் அப்பா அடிக்கிறீர்கள், எனக்கென்னமோ படிப்பு வராது, நான் பால நாடகக் கம்பெனி ஒன்றில் போய் சேரப் பிரியப்படுகிறேன்” என்றான், தகப்பனார் என்ன செய்வார்! “உன் பாடு நான் சொல்லவேண்டியது சொல்லியாயிற்று. உன் தலைவிதியின்படி நடக்கட்டும்” என மொழிந்து அவன் இஷ்டப்படியே விட்டார். பிள்ளை சில நாடகக் கம்பெனிகளில் சேர்ந்து சில பாகங்களை நடிக்க ஆரம்பித்து பல கஷ்டங்களை அனுபவித்தான். ஆயினும் தெய்வாதீனத்தால் அவனுக்கு ஒரு நல்ல நாள் பிறந்தது, அதை இனி எழுதுகிறேன். சென்னையில் ஒரு பிரபல பேசும் பட தயாரிப்பாளரான A. V. M. செட்டியார் என்னிடம் வந்து 'சபாபதி' என்னும் எனது நாடகத்தை பேசும் படமாக மாற்ற ஏற்பாடு செய்தார். அவர் கேட்டபடி உத்தரவு கொடுத்த பிறகு அவரிடம் "இந்த படத்திற்கு சபாபதி முதலியாருக்கும் வேலைக்கார சபாபதிக்கும் இரண்டு தகுந்த நடிகர்களை ஏற்பாடு செய்து கொள்ளுங்கள். மற்றவர்கள் எப்படி இருந்தாலும் பெரிதல்ல, இரண்டு சபாபதிகளும் நன்றாய் நடித்தால் பிறகு படம் நன்றாய் ஓடும்” என்று சொன்னேன். அந்த செட்டியார் அவர்கள் தான் ஒருநாள் அந்த இரண்டு பாத்திரங்களுக்கும் தக்க நடிகர்களை பரீக்ஷித்துப் பார்த்து வரும்போது ஒருநாள் ராமச்சந்திரனை சந்தித்தார். அந்நாள் தான் ராமச்சந்திரனுக்கு நற்காலம் பிறந்தநாள். இவன் தான் சபாபதி முதலியாருக்கு தக்க நடிகன் என்று அவனை எனக்குக் காண்பித்தார், நானும் அவனைப் பரிசோதித்துப் பார்த்து எனக்கும் அப்படிதான் தோன்றுகிறது என்று உத்தரவு கொடுத்தேன். அதன் மீது ராமச்சந்திரன் சபாபதி முதலியாராக அப்படத்தில் நடித்து நல்ல பெயர்பெற்றான். கொஞ்ச நாளைக்கு முன்பாக பேசும்படம் இன்னதென்று தெரியாதிருந்த ராமச்சந்திரன் ஒரு நட்சத்திரமாக மாறினான், இது தான் ராமச்சந்திரன் கதை. இதன்பிறகு பல பேசும் படங்களில் நடித்து வருகிறான். இன்னும் சில வருடங்களில் பேசும்படரங்கமாகிய ஆகாயத்தில் பெரிய நட்சத்திரமாக மாறுவான் என்று நினைக்கிறேன்.
-------------

23. திரு. M. G. ராமச்சந்திரன்

இவர் பால்யத்திலேயே கிருஷ்ணசாமி பாவலர் பாய்ஸ் கம்பெனியில் சேர்ந்து நடித்தார். பாவலரால் நன்கு தேர்ச்சியடையப் பெற்றார். ஒரு சமயம் நான் ஒரு தமிழ் நாடகக் கம்பெனி கூட்டத்தில் தலைமை வகித்த போது இவர் அடியில் வருமாறு பேசினார், “நான் கிருஷ்ணசாமி பாவலருடைய சிஷ்யன். கிருஷ்ணசாமி பாவலர் கந்தசாமி முதலியாருடைய சிஷ்யர் கந்தசாமி முதலியார் பம்மல் சம்பந்த முதலியாருடைய சிஷ்யர். ஆகவே அவர் என் உபாத்தியாயருக்கு உபாத்தியாயருக்கு உபாத்தியாயர்” என்று வேடிக்கையாய் சொன்னார். இவர் கிருஷ்ணசாமி பாவலர் சபையில் ஆடியதை நான் பார்த்ததில்லை. பிறகு பெரியவரான பிறகு பல பேசும் பட கம்பெனிகளில் இவர் நடித்ததை நான் பார்த்திருக்கிறேன். இவர் பலவிதமான வேஷங்களில் நடித்து சபையோரை சந்தோஷப்படுத்தி யிருக்கிறார். இவர் பிரபலமான பேசும் படங்களில் ஒரு முதன்மை பெற்றவர் என்று நான் கட்டாயமாய் கூற வேண்டும். இதற்கு ஒரு ஆதாரம் கூறுகிறேன் இவரை எங்களிருவருக்கும் சிநேகிதரான திரு. K. சுப்பிரமணியம் என்னிடம் ஒரு நாள் அழைத்துக் கொண்டு வந்து அறிமுகப் படுத்தினார், அப்போது நான் "நீங்கள் தற்காலம் எந்த பேசும்படத்தில் நடிக்கிறீர்கள்?" என்று ராமச்சந்திரனைக் கேட்ட போது அருகிலிருந்த சுப்பிரமணியம் சிரித்துக் கொண்டே “அவரை அப்படி கேட்காதீர்கள், நீங்கள் எந்த பேசும்படத்தில் நடிக்க வில்லை என்று கேளுங்கள், ஏனென்றால் அவர் முக்கிய பாத்திரமாக நடிக்காத பேசும்படமே தற்காலம் இல்லை" என்று வேடிக்கையாய் சொன்னார்கள்.

இவருடைய ஒரு முக்கியமான போற்றத்தக்க நற்குணம் என்ன வென்றால் இவர் மேற் சொன்னபடி அநேக பேசும் படங்களில் நடித்துப் பெற்ற பொருளை ஏறக்குறைய எல்லா தர்ம விஷயங்களிலேயே விநியோகித்து வருகிறார் என்பதாம். ஏழைகளாய் போன வயோதிக நடிகர்கள் யார் வந்து இவர் உதவியை நாடிய போதிலும் அவர்களுக்கு உதவி செய்வதற்கு மறுப்பதில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இவருக்கு மதுரையில் ஒரு முறை பேசும்பட அபிமானிகள் பதினாயிரம் ரூபாய் பெறும்படியான தங்கவாள் ஒன்றை வெகுமதியாகக் கொடுத்தார்கள், இவர் தேசிய பாதுகாப்பு நிதிக்கு சுமார் 75000 ரூபாய் கொடுத்ததாகக் கேள்விப்பட்டு சந்தோஷப்பட்டேன். இவர் இன்னும் பல்லாண்டு வாழ்ந்து பல பேசும் படங்களிலும் நாடகங்களிலும் நடித்து தமிழ் நாடகத்தை முன்னுக்குக் கொண்டு வருவது மன்றி வறிஞர்களான நடிகர்களுக்கு உதவி செய்து புண்ணியம் பெறுவாராக என்று ஈசன் அருளைப், பிரார்த்திக்கின்றேன், சென்னை நகராண்மைக் கழகத்தார் எனக்கு வெள்ளிப் பேழையை அளித்தபோது அன்று என்னை ஊர்வலமாகக் கொண்டு போனதற்கு எல்லா செலவுகளையும் இவர் ஒருவரே மேற்கொண்டார் என்று கேள்விப் பட்டேன். அவ்வாறாயின் ஈசன் தான் இவருக்குக் கைம்மாறு செய்யவேண்டும் நான் செய்வதற்கில்லை.
-------------

24. திரு சிவாஜி கணேசன்

இவர் சிறுவயதில் T. K. S. பிரதர்ஸ் கம்பெனியில் நடித்தவர். T. K. S. பிரதர்ஸ்களால் நாடகத் தொழிலில் தேர்ச்சியடையப் பெற்றார். பிறகு பெரியவனான போது சில முக்கிய பாத்திரங்கள் கொடுத்தார்கள். அவைகளில் ஒன்று சிவாஜி நாடகத்தில் கதாநாயகன் பாத்திரம். அந்த நாடகம் பல நாட்கள் நடந்தபடியால் கணேசன் அவர்கள் பெயர் பரவலாயிற்று. இதனால் இவருக்கு 'சிவாஜி' கணேசன் என்னும் பட்டப் பெயரும் அளிக்கப்பட்டது. இதற்குப் பிறகு சில கம்பெனிகளில் சேர்ந்து முக்கிய பாத்திரங்களை எடுத்துக்கொண்டு நடத்திவருகிறார். கொஞ்சகாலத்திற்கு முன்பாக தேசாபிமானியாகிய கட்டபொம்மு என்னும் வீரருடைய சரித்திரத்தை நாடகமாக நடத்தி மிகுந்த கியாதி பெற்றார். என்னுடைய மனோகராவில் அதைப் பேசும்படமாக மாற்றியபோது அப்பட முதலாளிகள் மனோகரன் பாத்திரத்தை சிவாஜி கணேசனுக்குக் கொடுக்கலாமா? என்று என்னைக்கேட்டார்கள். அப்படியே செய்யுங்கள், அதை அவர் நன்றாய் நடித்து உங்களுக்குப் பணத்தை அதிகமாய் சேர்ப்பார் என்று சொன்னேன். ஆயினும் அப்படத்தில் நான் எழுதிய பாகங்களை மாற்றாதபடி இவர் நடித்ததெல்லாம் நன்றாய் இருந்தது, மாற்றிய பாகங்கள் அவைகள் பொருத்தமா யில்லாதபடியால் அவர் நடித்தது நானும் விரும்பவில்லை. பார்த்த அநேக ஜனங்களும் அவ்வாறே கூறினர். இதற்கு சிவாஜி கணேசன் உத்தரவாதமல்ல. கதையின் போக்கை மாற்றியவர்கள் தான் உத்தரவாதம். இதன் பிறகு இவர் அநேக பேசும் படங்களில் நடித்துவருகிறார், அன்றியும் ஒருமுறை எகிப்து தேசத்திற்குப்போய் நடிப்பில் சிறந்தவர் என புகழப் பெற்று பரிசுகள் பெற்றவர். மேலும் அமெரிக்காவுக்குப்போய் தமிழ் பேசும் படங்களின் பெருமையை பரவச்செய்த பெருமை இவருடையதாகும்.

இவர் கம்பீரமான தோற்றமும் குரலுமுடையவர். ஆகவே வீர ரசத்தில் நடிப்பதில் இவருக்கு தற்காலம் இணையில்லை என்று சொல்லலாம். இன்னும் இவர் பல்லாண்டு வாழ்ந்து தேசாபிமான நாடகங்களில் நடித்து தமிழ் நாடகத்தின் பெயரை ஈசன் கருணையால் முன்னுக்குக் கொண்டுவருவாராக.
-------------

25. திரு. புத்தனேரி ரா. சுப்ரமணியம்

இவர் திருநெல்வேலியில் பிறந்தவர், உயர் வேளாள ஜாதியைச் சேர்ந்தவர். இவர் தன் சிறு வயது முதல் T. K. S. சகோதரர்களோடு ஒத்துழைத்து வருகிறார். ராமாயணத்தில் ராமலட்சுமணர் சகோதரர்கள் நால்வரோடு ராமருக்கு மிகவும் அன்யோன்ய சிநேகிதரான குகனையும் சேர்த்து ஐவரையும் ஒரே சகோதரர்களாக பாவிக்க வேண்டுமென்று ஒரு கவி கூறியுள்ளார். அதுபோலவே இவர் T.K.S. நான்கு சகோதரர்களோடு மிகவும் அன்யோன்யமாய் பல வருடங்களாக தமிழ் நாடகத்தின் பலவித தொண்டுகளுக்காக உழைத்து வருகிற படியால் இவரை T. K. S. சகோதரர் நால்வரோடு ஐந்தாவது சகோதரராக கருதினால் தவறாகாது. இவர் சிறு வயது முதல், தமிழ் நன்றாய்க் கற்று நல்ல பாண்டித்யம் அடைந்து கவிதைகள் பாடும் வழக்க முடையவரானார். T. K. S. சகோதரர்கள் நாடக சபையை சேர்ந்து அவர்கள் சபைக்கு அநேக நாடகங்களுக்கு வெகு அழ கான பாட்டுகளை எழுதியுள்ளார். மேலும் அச்சபையார் நடத்திய நல்ல நாடகங்களில் ஒன்றுகிய 'சிவகாமியின் சபதம்' என்னும் கதையை நாடகரூபமாக எழுதிக் கொடுத்திருக்கிறார். அன்றியும் சில சமயங்களில் அச்சபையில் நடித்துமிருக்கிறார், இவர் இயற்றமிழுக்காக சேவை செய்து செந்தமிழ் செல்வி முதலிய பத்திரிகைளுக்குப் பல கட்டுரைகள் எழுதியிருக்கிறார். சில தொடர் கதைகளும் எழுதியிருக்கிறார். ஆகவே இவரை இயற்றமிழ், இசைத் தமிழ், நாடகத்தமிழ் மூன்றிற்கும் சேவை செய்துவரும் ஒரு முத்தமிழ்வித்தகர் என்று ஒருவாறு கூறுவது மிகையாகாது. எனது எண்பதாவது வயதில் தமிழ் நாட்டு நடிகர் கள் செய்த பெரிய மரியாதையில் இவர் பெரும் பங்கு எடுத்துக் கொண்டவர். பல சமயங்களில் என்னைப் புகழ்ந்து பல கவிதைகள் பாடியுள்ளார். திருவள்ளுவர் ஒருவருடைய குணத்தையும் குற்றத்தையும் கருதவேண்டுமென்று கூறியுள்ளார். அதன்படியே இவருடைய ஒரு குற்றத்தை நான் இங்கு எழுதுகிறேன். அதாவது என்னைப்பற்றி அதிகமாய் புகழ்ந்திருப்பதேயாம். இவருக்கு சுமார் 41 வயதாகிறது. இவர் இன்னும் 40 வயதிற்கு மேல் முத்தமிழுக்கும் உழைத்து தமிழ் அன்னையின் பேரருளைப் பெறுவாராக.
-----------

26. திருமதி. பாலாம்பாள்

இந்த அம்மாளும் ஒரு நாடகக் கம்பெனியை முற்காலத்தில் நடத்தினார்கள். இதில் ஒரு விசேஷம் என்னவென்றால் பாலாம்பாள் ஸ்திரீயாய் இருந்தபோதிலும் எனது 'மனோகரன்' நாடகத்தில் மனோகரனாக நடித்தார். காலஞ்சென்ற கந்தசாமி முதலியார் இவர்களுக்கு மனோகரனாக நடிக்கக் கற்பித்ததாக நான் அறிந்தேன். இந்த ஒரு கம்பெனி எனது மனோகரன் நாடகத்தை அறுபத்தொன்பது முறை நடத்தியதாக கந்தசாமி முதலியார் எனக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். இன்னும் இரண்டு மூன்று பெண்மணிகள் எனது மனோகரன் நாடகத்தில் மனோகரனாக நடித்ததைப் பார்த்திருக்கிறேன். ஆயினும் பாலாம்பாள் நடித்ததுதான் எனக்குக் கொஞ்சம் திருப்திகரமாயிருந்தது. இந்த கம்பெனியும் கொஞ்சம் வருடங்கள் தான் இருந்து கலைந்து போய்விட்டது.
------------------

27. திருமதி. P. பாலாமணி அம்மாள்

இவர்கள் கணிகை குலத்தவர்கள், சிறு வயதிலேயே தன் ஜாதித் தொழிலுடன் நாடகமாடுவதற்கு ஆரம்பித்தார்கள். இவர்கள். கம்பெனியில் எல்லோரும் ஸ்திரீகளே, இவர்களுடைய அக்காள் முக்கிய ஆண் வேடங்களும் பாலாமணி முக்கிய ஸ்திரீ வேடங்களும் தரித்து நடிப்பார்கள். இவர்கள் ஆடிய முக்கிய நாடகங்கள் டம்பாச்சாரி விலாசம், தாராச்சாங்கம், குலேபகாவலி முதலியவைகளாம். கொஞ்ச காலம் கந்தசாமி முதலியார் இவர்கள் கம்பெனியில் நாடகமாட கற்பிக்கும் உபாத்தியாயராக சேர்ந்தார். அச்சமயம் எனது லீலாவதி சுலோசனா முதலிய நாடகங்களை பாலாமணி ஆடி வந்தார். கொஞ்சகாலம் கோவிந்தசாமி ராவ் அவர்களும் இக்கம்பெனியில் சூத்திர தாராக சேர்ந்திருந்தார். என் அனுமதியின் மீது சென்னையில் ஒருமுறை பாலாமணி லீலாவதி சலோசனாவில் நடித்தபோது என்னை நேரில் வந்து அழைக்க நான் போய் பார்த்தது ஞாபகமிருக்கிறது. நாடகம் சுமாராய் தான் இருந்தது. ஆயினும் பாலாமணி சுலோசனாவாகவும் அந்த அம்மாளில் மூன்றில் ஒரு பங்கு இல்லாத ஒரு பெண் சுலோசனாவின் அக்காளாகிய லீலாவதியாக நடித்தது எனக்குப் பிடிக்கவில்லை. இந்த நாடகத்திற்கும் இவர்கள் நடித்த ராமாயண நாடகத்திற்கும் சித்தாந்த சரபம் முத்துசாமி கவிராயர் நல்ல பாட்டுகளை எழுதிக்கொடுத்தார். சில வருடங்கட்குப் பின் இந்த கம்பெனி கலைந்துவிட்டது. மிகவும் பொருள் தீட்டிய பாலாமணியும் வறுமையில் அகப்பட்டுக் கஷ்டப் பட்டார்கள் எனக் கேள்விப்பட்டேன்.
-------------

28. ஸ்ரீமான் வி. வி. ஸ்ரீனிவாச ஐயங்கார்

'இவராவது நாடகத்தில் நடித்ததாவது' என்று இதை வாசிக்கும் எனது நூறு நண்பர்களில் 99 பேர் ஆச்சரியப்படுவார்கள். ஆயினும் இவர் சுகுணவிலாச சபையில் இரண்டொருமுறை நடித்திருக்கிறார். அவர் முதன்முதல் நடித்தது எனது சமூக நாடகமாகிய 'பொன் விலங்கு’ என்பதில் தான் நான் ராமச்சந்திரன் வேடம் பூண்டபோது எனது மைத்துனனுகிய வேடம் தரிக்கும்படி செய்தேன். அதில் இவரை தேர்ச்சி பெறச் செய்வது எனக்கு மிக்க கடினமான காரியமாயிருந்தது. சிறந்த கல்விமானுகிய இவருக்கு ஞாபகசக்தி மாத்திரம் கொஞ்சம் குறைவு. அதற்காக பன்முறை இவரை ஒத்திகையில் கஷ்டத்துக்குள்ளாக்கினேன். நாடக தினத்தில் சுமாராய்தான் நடித்தார். ஆயினும் இவருக்காக வலதுபுறம் சைட் படுதா அருகில் ஒரு புராம்டரும் இடதுபுற சைட் படுதா அருகில் மற்றொரு புராம்டரும் ஏற்பாடு செய்தேன். நடிகருக்கு இருக்கவேண்டிய முக்கிய குணமாகிய தன்னை மறந்து தான் மேற்கொண்ட பாத்திரமாக நினைத்திருக்க வேண்டிய குணம் இவரிடம் மிகவும் குறைவு. ஆயினும் ஒரு விதத்தில் சபை நடத்திய நாடகங்களுக்கு நடிப்புக் கலையிலும் சங்கீதக் கலையிலும் தன் ஆயுள் உள்ளவரை மிகவும் உதவி புரிந்துவந்தார். என் வழக்கம் ஒரு நாடகத்தின் கடைசி ஒத்திகைகளில் இவரை அழைத்து உட்காரச் செய்து நடிகர் களுக்கு அவர்கள் குற்றங்களை எடுத்துக்காட்டி உற்சாகப்படுத் தும்படி வேண்டுவது. இப்படி செய்யும்போது இவருடைய criticism எனக்கு மிகவும் உபயோகப்பட்டது. இவர் criticism கொடுப்பதில் நிபுணர். இவருடைய வழக்கம் என்னவென்றால் எந்த நடிகரும் எவ்வளவு நன்றாய் நடித்தாலும் 'இதைவிட நீ மிகவும் நன்றாய் நடிக்கக்கூடும்; முயற்சி செய்து நடி’ என்று உற்சாகப் படுத்துவதாகும் என் பாகத்தில் நான் எவ்வளவு நன்றாய் நடித்தாலும் "ஜஷ்டை! சம்பந்தம் நீ இதைவிட நன்றாய் நடிக்கக்கூடும். சோம்பேறியாய் இராதே. இன்னும் முயன்று பார்” என்று சொல்வார்! அவருடைய மனதுகுக் சரியாய் திருப்திகரம் ஆகும்வரையில் நான் மாறி மாறி நடித்துக் காட்டவேண்டும். இதற்கு ஒரு உதாரணம் கொடுக்கிறேன். ஷேக்ஸ்பியர் எழுதிய உலகெங்கும் புகழ்பெற்ற ஹாம்லெட் (Hamlet) என்னும் நாடகத்தின் மொழி பெயர்ப்பாகிய அமலாதித்யன் என்னும் என் தமிழ் நாடகத்தில் ஒரு காட்சியில் "வெளிச்சம், வெளிச்சம்" என்னும் ஒரு வரியை ஒத்திகையில் நடத்தியபோது இவரையும் இவரைப்போல் நல்ல critic ஆகிய எனது நண்பர் வாமன்பை (Vaman Bai) அவர்களையும் ஹாலில் உட்காரச்செய்து பார்க்கசெய்தபோது அதில் மேடையில் இருக்கும் ஒவ்வொருவருடை முக பாவமும் இப்படி இப்படி இருக்க வேண்டுமென்று மேற்சொன்ன இருவர்களையும் கவனிக்கச் செய்தேன். இதை 11 முறை நடித்துக் காட்டிய பிறகுதான் ஸ்ரீனிவாச ஐயங்காரும் வாமன்பையும் ஒப்புக்கொண்டார்கள்.

நாடகத்தில் இருக்கவேண்டிய சங்கீதத்தைப் பற்றியும் இவரது உதவியை நாடியிருக்கிறேன், ஸ்ரீனிவாச ஐயங்காருக்கு சங்கீத ஞானம் மிகவும் குறைவு. பைரவி ராகத்திற்கும் சஹானா ராகத்திற்கும் வித்தியாசத்தைக்கூற இவர் அறியார். அப்படி இருந்தும் நாடகத்தில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சரியான பாவத்தில் பாடல்கள் அமைந்திருக்கிறதா என்பதில் இவர் புத்திகூர்மையுள்ளவர். இதற்கு ஒரு உதாரணமாக எனது புத்தா அவதாரம் என்னும் நாடகத்தில் சங்கீதத்தைப் பற்றி இவர் உதவி செய்ததை கூறுவேன். அந்த நாடகத்திலேயே நாலைந்து பாட்டுகள் ஏற்படுத்தியிருந்தேன். இவருடைய criticism என்பதை நான் நாடியபோது ஒவ்வொரு பாட்டையும் பலவித ராகங்களில் என்னைப் பாடும்படி தொந்தரவு செய்து, அவர் மனதிற்கு திருப்தியாகிரவரையில் என்னை விடமாட்டார்.

இவர் ஆங்கிலத்தில் பதினொன்று ஓரங்க நாடகங்களை எங்கள் தசரா வருடாந்திர கொண்டாட்டங்களுக்கு எழுதிக் கொடுத்தார். அவைகளில் பத்தை நான் தமிழில் மொழி பெயர்த்து அச்சிட்டிருக்கிறேன். அன்றியும் தமிழ் நாடகமாக 'கீதோதயம்' என்பதை எழுதி அச்சிட்டிருக்கிறார், அது ஒருமுறைதான் எங்கள் சபையில் நடத்தப்பட்டது. அதன் நுட்பங்கள் சம்ஸ்கிருத பாஷையை நன்றாய் அறிந்தவர் களுக்குத்தான் தெரியும். ஆகவே அது பிரபலமாக போகாத தது ஆச்சரியமன்று. மேற்சொன்ன விதங்களில் ஐயங்கார் அவர்கள் சுகுணவிலாச சபைக்கு புரிந்த உதவிகளை விட மிகவும் பெரிய உதவிகளை செய்தது. அவர் எங்கள சபைக்கு 20 ஆண்டுகளுக்கு மேல் சபை காரியங்களை எனது தமையனார் ப. ஆறுமுக முதலியாருடன் காரியதரிசியாயிருந்து உழைத்ததேயாம்.அக்காலத்தை சடையின் பொற்காலம் எனக்கூறி இவர் விர்த்தாந்தத்தை முடிக்கிறேன்.
----------------

29. ஸ்ரீ S. சத்தியமூர்த்தி

இவரை அறியாத அரசியல் கட்சிக்காரர்கள் இந்தியாவிலேயே இல்லை எனச் சொல்லலாம். ஆயினும் இவர் நடிப்புக் கலையிலும் தேர்ச்சிப் பெற்றவர் என்பது பலருக்குத் தெரியாமலிருக்கலாம். ஆகவே இவரைப்பற்றி நான் இங்கு சற்று விவரமாய் எழுத விரும்புகிறேன். இவர் காலேஜ் படித்தவுடன் எங்கள் சுகுணவிலாச சபையில் அங்கத்தினராக சேர்ந்தார். அவரே எனக்கு பன் முறை கூறியபடி நான் தான் அவருக்கு முதல் சிநேகிதனாயிருந்தேன். புதிய மெம்பர்கள் யாராவது சேர்ந்தால் உங்களுக்கு நாடகமாடுவதில் விருப்பமிருக்கிறதா? என்று கேட்பது என் வழக்கம். அதன்படியே இவரை நான் கேட்டபோது 'ஆம்' என ஒப்புக் கொண்டார். அதன் பிறகு முதலில் தமிழில் சிறு பாத்திரங்களை கொடுத்துப் பழக்கி வந்தேன். முதலில் மிகவும் கூச்சமுள்ளவராயிருந்தபோதிலும் சீக்கிரம் அக்கூச்சம்போய் உற்சாகத்துடன் கற்றுவந்தார். பிறகு வரவர பெரிய பாத்திரங்களை கொடுக்கலானேன். இவரை ஒரு தைர்யமுள்ள நடிகர் என்றே கூறவேண்டும். இவர் சேர்ந்த சமயம் சம்ஸ்கிருத பிரிவு ஒன்று எங்கள் சபையில் ஆரம்பிக்கப்பட்டது. இவர் சம்ஸ்கிருத்தில் மிகுந்த ஆர்வமுடையவர். எங்கள் சபை போட்ட ஒவ்வொரு சம்ஸ்கிருத நாடகத்திலும் பாகம் எடுத்துக்கொண்டு வந்தார். இவர் முக்கியமாக நடித்த சம்ஸ்கிருத பாத்திரங்கள் மிருச்சகடி என்னும் நாடகத்தில் கதா நாயகனுடைய நண்பனாகிய வேடம் ஒன்று. இரண்டாவதாக வேணி சம்ஹாரத்தில் அஸ்வத்தாமனாக நடித்ததாகும். இவர் இரண்டொரு வருஷம் சம்ஸ்கிருத கண்டக்டராக இருந்தார். நான் சுமார் 25 வருஷம் தமிழ் கண்டக்டராக உழைத்த பிறகு அதனின்றும் விலகியபோது எனக்குப் பிறகு தமிழ் கண்டக்டராக நியமிக்கப்பட்ட பலருள் இவரும் ஒருவர். அச்சமயம் ஒரு முறை என்னிடம் வந்து "நான் மனோகரனாக நடிக்க வேண்டுமென்று விரும்புகிறேன்” என்று கூற, "அப்படியே செய்யுங்கள் அதற்கென்ன தடை" என்று சொன்னேன். இதைப்பற்றி கொஞ்சம் விவரிக்க வேண்டியவனாயிருக்கிறேன். அக்காலத்தில் நான் முக்கியமாய் நடித்த கதா நாயகர்களின் பாகத்தை மற்றவர்கள் நடிப்பதில் எனக்கு விருப்பமில்லையென்று பலர் எண்ணியது எனக்குத் தெரியும், அந்த எண்ணப்படியே இவரும் மனோகரன் வேடத்தை தான் நடிக்க விரும்பினால் நான் என்ன பதில் சொல்கிறேன் என்று கேட்க இச்சைப்பட்டவராய் கேட்டனர் போலும். பிறகு பல ஒத்திகைகளில்தான் நடித்துவந்தார்: அவைகளை என்னை பார்க்கும்படி கேட்கவில்லை. கேட்காதிருக்கும்போது நாமேன் தலை நுழைத்துக் கொள்ளவேண்டுமென்று நானும் சும்மாயிருந்துவிட்டேன். ஒருநாள் இவர் ஒத்திகையை முடித்துவிட்டு திடீரென்று என்னிடம் வந்து "மிஸ்டர் சம்பந்தம் நான் மனோகரனாக நடிப்பது சரியாயில்லை என்று மற்ற நடிகர்கள் கூறுகிறர்கள். ஆகவே அதனின்றும் தான் விலகிக் கொள்கிறேன். நீங்களே அப்பாத்திரத்தை எடுத்துக்கொண்டு நாடக தினத்தில் நடியுங்கள்" என்று சொல்ல நான் கொஞ்சம் ஆச்சரியப்பட்டவனாய் "யார் உனக்கு அப்படி சொன்னது? நான் உன்னை மனோகரனாக நன்றாய் நடிக்கும்படி செய்கிறேன் பார் நீ பயப்படாதே" என்று தட்டிக் கொடுத்து அன்று முதல் நாலைந்து ஒத்திகைகளில் இவரை நன்றாய்த் தேற்றுவித்தேன், அப்போது இவர் மிகவும் சந்தோஷப்பட்டார், பல நடிகர்கள் ஆச்சரியப்பட்டனர். "ஆயினும் சம்பந்தம் இவ்வளவு நீங்கள் செய்தது பெரிதல்ல. நாடக தினம் மேடையின்மீது பக்கப் படுதாவில் நின்றுக் கொண்டு என்னை உற்சாகப் படுத்திக் கொண்டு வந்தால் தான் நான் நன்றாய் நடிக்க முடியும்" என்று வற்புறுத்தினார். அதற்கும் நான் இசைந்து அப்படியே செய்தேன் நாடக தினத்தில் அப் பாத்திரத்தை சற்றேறக்குறைய நடித்தார் என்றே நான் சொல்ல வேண்டும். அது முதல் இவர் எனக்கு ஆப்த நண்பராக மாறினார். இது நடந்த சில மாதங்களுக்கெல்லாம் காங்கிரஸ் சபை பண்டுக்காக அல்லது ஏதோ ஒரு தர்ம பண்டிற்காக (எனக்கு நன்றாய் ஞாபகமில்லை) தான் மனோகரா நாடகத்தில் கதாநாயகனாக நடிக்க ஏற்பாடு செய்தார். அது எனக்குத் தெரியாது. அச்சமயம் நான் சென்னையை விட்டு வெளியூர் போயிருந்தேன். நான் திரும்பி வந்துபோது எப்படியிருந்தது என்று நாடகத்தைப்பற்றி என் நண்பர்களை விசாரித்தபோது அவர்கள் ஆரம்பத்தில் நன்றாய் தானிருந்தது, மனோகரன் சங்கிலியறுக்கும் காட்சியில் (இதுதான் நாடகத்தின் ஒரு முக்கியமான காட்சி) ஏதோ தடைப்பட்டு கத்தியும் கையுமாய் நின்று விட்டார் திரைவிடப்பட்டது" என்று கூறினார்கள். அதற்கப்புறம் சத்தியமூர்த்தி அவர்கள் எந்த தமிழ் நாடகத் திலும் நடித்ததாக எனக்கு ஞாபகமில்லை.

எனது நண்பர் சுகுண விலாச சபையைப்பற்றி ஏளனமான பேச ஒருவருக்கும் இடம் கொடுக்கமாட்டார். அந்த சபை தனக்கு தமிழில் நன்றாக சொற்பொழிவு செய்ய கற்பித்தது என்று பன்முறை கூறியதுண்டு. என்னிடமும் அவ்வாறே கூறியுள்ளார். இவர் நடுவயதிலேயே கால கதியடைந்தது காங்கிரஸ் கட்சிக்காரர்களுக்கு மாத்திரமல்ல, எங்கள் சபைக்கும் பெரிய துரதிர்ஷ்டமாகும்.
-------------

30. ஸ்ரீ T. ஸ்ரீனிவாச ராகவாச்சாரி

இவர் சிறு வயதிலேயே எங்கள் சபையில் சேர்ந்து சில நாடகங்களில் சிறு பாத்திரங்களில் நடித்தவர், இவர் பெரியவரான பிறகு உடல் கொஞ்சம் பெருத்துப் போகவே, பிற்காலத்தில் இவருக்கு நான் ஆண் வேடமே கொடுத்து வந்தேன். இவர் நன்றாய் நடிக்கவும் நடிப்பார், பாடவும் பாடுவார். இவரது பாட்டனார் தியாகராஜ ஸ்வாமிகளுடைய முக்கிய சிஷ்யராக இருந்தவராம். இவர் எங்கள் சபையில் எடுத்துக் கொண்ட முக்கிய பாத்திரங்கள் நந்தனாரில் நந்தன், காலவரிஷியில் சித்திர சேனன், வாணீபுர வணிகனில், ஷாம்லால் முதலியவைகளாம். இவைகளிலெல்லாம் இவர் முக்கிய கியாதி பெற்றது நந்தனார் வேடத்தில் தான் அதிலுள்ள பாட்டுகளை பெல்லாம் மிகவும் உருக்கமாக பாடி சபையோரை எப்போதும் சந்தோஷிக்கச் செய்வார். இவர் கடைசி காலத்தில் தன் வீட்டில் பூஜை அறையில் ஸ்தோத்திரங்கள் பாடிக்கொண்டிருக்கும்போது திடீரென மரணமடைந்தார். இவரது அகால மரணம் எங்கள் சபையோரையெல்லாம் மிகவும் வருந்தச் செய்தது.
------------

31. வி. வெங்கடாசலையா

இவர் ஒரு தெலுங்கு பிராமணர். ஆயினும் தமிழில் எழுதவும் படிக்கவும் நன்றாய் கற்றவர். மேற்சொன்ன ஓரியண்டல் டிராமடிக் சொசைட்டியில் முதலில் பல வருடங்கள் நடித்தவர். இவர் சில்லரை பாத்திரங்கள் ஆடுவதில் சமர்த்தர் என்று பெயர் பெற்றார். ஆயினும் தோட்டி முதல் தொண்டமான் வரையில் ஆடுவதில் நிபுணர். ஆயினும் நாடக வேஷம் தரிப்பதிலும் மற்றவர்களுக்குப் போடுவதிலும் இவருக்கு இணையில்லை என்றே நான் கூறவேண்டும். ஓ, டி. சொசைட்டி கலைந்த பிறகு சுகுண விலாச சபையைச் சேர்ந்தார், சேர்ந்து ஆயுள் பர்யந்தம் எங்களுக்கெல்லாம் வேஷம் போடுவதில் சந்தோஷமாய் கழித்தார் என்றே நான் சொல்ல வேண்டும். இவர் உயிருடன் இருந்த வரையில் இவரே எனக்கு வேஷம் போடவேண்டுமென்று பிடிவாதம் பிடிப்பேன், இவர் எங்கள் சபைக்காக நந்தனார் சரித்திரத்தை தெலுங்கில் எழுதிக்கொடுத்தார். அன்றியும் பாரிஜாத அபகரணம், ராணி சம்யுக்தா முதலிய நாடகங்களை எழுதியதுமன்றி தக்கபடி நடிகர்களை தேற்றுவித்து தானும் நடித்து தெலுங்கு பிரிவில் நல்ல பெயர் பெற்றார். மேலும் மாலியர் என்னும் பிரெஞ்சு தேசத்து ஹாஸ்ய நாடகக்கவி எழுதிய ஓர் நாடகத்தை தெலுங்கில் மொழி பெயர்த்து வெகு விமரிசையாய் நடத்தினார். அந்நாடகத்தின் பெயர் 'விதிலோக வயித்தியுடு' என்பதாம். இவர் ஒரு முறை உத்தர ராம சரித்திரத்தில் ஒரே இரவில் பதினோறு வேடங்கள் தரித்தது எனக்கு ஞாபகமிருக்கிறது. அன்றியும் புதிய சமூக நாடகத்திற்கு எங்கள் சபையார் பொற் பதக்கம் அளிக்க முன்வந்தபோது தெலுங்கில் 'உபய பிரஷ்டம்' என்னும் நாடகத்தை எழுதி பொற்பதக்கம் பரிசு பெற்றார். இவரது அகால மரணம் எங்கள் சபை செய்த துரதிர்ஷ்டமாகும்.
-------------

32. ஸ்ரீமான் வி.ஸி கோபாலரத்தினம்

இவர் ஹைகோர்ட் வக்கீலான பிறகு எங்கள் சபையில் அங்கத்தினராக சேர்ந்தவர். அதற்கு முன்னமேயே மாகாண கலாசாலையில் வாசித்தபோது எனது இரண்டு மூன்று நாடகங்களில் நடித்துள்ளார். எங்கள் சபையில் சேர்ந்த பிறகு அனேக தமிழ் நாடகங்களில் நடித்து பெயர் பெற்றார். இவர் எனது மனோகரா, லீலாவதி, சுலோசனா முதலிய நாடகங்களில் நடித் துள்ளார். இவர் மைசூர் குப்பி கம்பெனியார் கன்னட பாஷையில் தடத்திய 'ராஜபக்தி' என்னும் நாடகத்தை அப்படியே வெகு அழகாக தமிழில் மொழி பெயர்த்து அதில் தானே முக்கிய ஆண் வேடம் பூண்டு பன்முறை நடத்தியிருக்கிறார். மேலும் இவரது மாமனாராகிய வி. வி. ஸ்ரீனிவாச ஐயங்கார் எழுதிய நான் மொழி பெயர்த்த இரண்டு மூன்று நாடகங்களில் சில காட்சிகளை சேர்த்து எழுதி எங்கள் சபையில் நடித்திருக் கிறார். அவற்றுள் முக்கியமானது சுல்தான் பேட் சப் அசிஸ் டென்ட் மாஜிஸ்டிரேட் என்பதாம். இவர் எங்கள் சுகுண விலாச சபையில் உபதலைவராக பல வருடங்கள் இருந்து அதன் காரியங்களை நடத்தி சில மாதங்களுக்கு முன்பாக காலகதியடைந்தது எங்கள் சபையின் துர்பாக்கியங்களில் ஒன்றாகும். இவர் சென்னை சங்கீத நாடக சபையாரால் நடிப்புக்கலைக்காக ஒரு பொற்பதக்கம் கொடுக்கப்பெற்றார்.
--------------

33. திரு. P. S. தாமோதர முதலியார்

இவர் எனது ஆருயிர் நண்பர் C. ரங்கவடிவேலுவின் மைத்துனர், முதலில் M. P. T. அசோசிஷேனில் நடித்தவர்.

பிறகு எங்கள் சபையை சேர்ந்தார். இவர் நடிக்கும் திறத்திற்கு தக்கபடி சில பாத்திரங்களை இவருக்கு கொடுத்து வந்தேன். அவைகளில் முக்கியமானவை அமலாதித்யன் நாடகத்தில் லீலா தரனும், விரும்பிய விதமே நாடகத்தில் ஜகந்நாதனுமாம். இவரது முக்கியமான குணம் ஒன்று என்னவென்றால் தான் நடிக்கும் பாகத்தில் நான் சொல்லிக் கொடுத்த நடிப்பு தனக்கு சரியாக வராவிட்டால் “வாத்தியார், வாத்தியார்! இன்னொரு தரம் சொல்லுங்கள், இன்னொருதரம் சொல்லுங்கள்" என்று வற்புறுத்துவார், நான் சொல்லிக் கொடுத்தது சரியாக வரும் வரையில் என்னை விடமாட்டார். இவர் சுமார் 15 வருடங்களுக்கு முன்பாக பூரண சன்யாசம் வாங்கிக் கொண்டு அந்த ஆஸ்ரமத்தின் முறைப்படி இன்றும் ஈஸ்வரன் கிருபையால் வாழ்ந்து வருகிறார். இவரது வயது தற்காலம் 89 ஆகும்.
-------------

34. ஸ்ரீ. E. கிருஷ்ணய்யர் அவர்கள்

இவர் திருநெல்வேலியில் ஒரு சிற்றூரில் பிறந்தவர். அங்கு ஆரம்பக் கல்விகளையெல்லாம் கற்று பிறகு சென்னைக்கு வந்து பி.ஏ.பி.எல், பட்டத்தைப் பெற்று ஹைகோர்ட் வக்கீலானார், அச்சமயத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்து அதன் கோட்பாடுகளைப் பற்றியவராய் அரசியலாரை எதிர்த்ததற்காக இரண்டு முறை சிறைவாசப் பெருமைப் பெற்றார். அச்சமயத்தில் ஒருமுறை ஒரு குற்றத்திற்காக முக்கிய மாகாண மாஜிஸ்டிரேட்டு முன்பாகக் கொண்டு போய் நிறுத்தப்பட்ட போது 'உனக்கு என்ன வேலை' என்று அவர் கேட்டதற்கு "என் மனதின் இச்சைப்படி கலைஞன் வேலை, ஆயினும் கட்டாயப்படி ஹைகோர்ட் வக்கீலாயிருக்கிறேன்” என்று பதில் உரைத்தாராம். அதன் படியே சில வருடங்கள் வக்கீலாக வேலை பார்த்த போதிலும் அவர் மனமானது நாடக நாட்டிய கலை மீதே சென்றது என்று கூறவேண்டும். இளவயதிலேயே இவருக்கு சங்கீதத்தில் பிரியமிருந்ததாம். ஆகவே சென்னையில் சுகுண விலாச சபையில் 1923-இல் அங்கத்தினரானார். அதில் ஒன்றிரண்டு சில்லரை வேடங்களை முதலில் தரித்த பிறகு மாள விகாக்னி மித்ரத்தில் இவருக்கு மாளவிகை என்னும் அயன் ஸ்திரீ பார்ட் கொடுக்கப்பட்டது. அதற்காக கின்சின் நாட்டியம் முதலிய சிறு கலைகளை கற்று அதில் நடித்தார். அதைக் கண்ட பலர் அதை மெச்சிப் பேசினார்கள், அதன் மூலமாக நாட்டியக் கலையை நன்றாய் கற்கவேண்டு மென்று இவருக்கு புத்தி பிறந்து அதை கற்க ஆரம்பித்தார். ஒரு சமயம் இவர் அக்கலையை பயின்ற போது இவரை பார்த்த நாட்டியக்கலை வித்வான்களில் சிறந்தவராகிய நடேசஐயர் அவர்கள் இவரைக் கொஞ்சம் மெச்சி இவருக்கு அக்கலையிலுள்ள ஆர்வத்தையும் அதற்கு தகுந்தபடியான அங்க அமைப்பையும் கண்டு இவரை தன் சிஷ்யர்களுள் ஒருவராக்கிக் கொண்டு பரத நாட்டியக் கலையை களங்கமறக் கற்பித்தார் அதில் தேர்ச்சி அடைந்த பிறகு சுகுண விலாச சபையிலும் செக்ரடேரியட் பார்ட்டியிலும் இன்னும் சென்னை மாகாணத்திலிருந்த சில நாடக சபைகளிலும் நாட்டியமாடி நல்ல பெயர் பெற்றார். இவரது ஒரு முக்கியமான மெச்சத் தக்க குணம் என்ன வென்றால் நாட்டியம் ஆட ஆரம்பிக்குமுன் அதைக் குறித்து அதன் பெருமையை பத்து பதினைந்து நிமிடங்கள் பேசிவிட்டு பிறகு தான் அக் கலையை ஆட ஆரம்பிப்பார். இப்படி பல இடங்களில் பிரசாரம் செய்து குலஸ்திரீகளும் இதைக் கற்கலாம் என்று ஒரு கோட்பாட்டைப் பரவச் செய்தார். உலகெங்கும் புகழ் பெற்ற நாட்டியக் கலை நிபுணராகிய ராம் கோபால் என்பவரை பரத நாட்டியம் கற்கும்படி செய்தார். ஒருமுறை வட இந்தியாவிற்கு போயிருந்த போது ரவீந்திர நாத் தாகூர் என்பவர் இவரது நாட்டியக்கலையை பார்த்து புகழ்ந்ததாக கேள்விப்படுகிறேன்.

இவர் சுகுண விலாச சபையில் என்னுடன் நான் வத்ச ராஜனாக நடித்த போது அவ்வரசனது மூத்த மனைவியாகிய வாசவதத்தை பாகத்தில் மிகவும் நன்றாய் நடித்தது எனக்கு ஞாபக மிருக்கிறது அன்றியும் சினிமாவிலும் இவர் நடித்துள்ளார். இவர் ஒரு முறை சென்னையில் கீசகவதம் அல்லது விராடபர்வம் என்னும் பாரதக் கதையை பேசும் படமாக எடுத்தபோது அதில் பேடியாயிருந்த அர்ஜுனன் பாத்திரத்தை மேற்பூண்டு மிகவும் நன்றாய் நடித்து புகழ் பெற்றிருக்கிறார். அந்த படத்தில் முக்கிய ஸ்திரீ வேடம் பூண்டு நடித்த இரண்டு நடிகைகளை விட இவர் உருவமும் நடையுடை பாவனைகளும் அதிக நன்றாயிருந்தன வென்று பலர் கூறக் கேட்டிருக்கிறேன். தற்காலம் இவர் கோரியபடியே சென்னை சங்கீத நாடக சங்கத்தில் காரியதரிசியாக நியமிக்கப்பட்டு அதன் வேலைக்காக உழைத்து வருகிறார். சுவாமி இன்னும் அவரை அந்த வேலையிலேயே தமிழ் நாடக நாட்டியக் கலைகளுக்கு பல வருடங்கள் உழைக்கும் படியாக பரம் பொருள் அருள்வாராக.
-----------

35.ஸ்ரீ. கே. நாகரத்தினம் ஐயர்

எனது ஆருயிர் நண்பர் C. ரங்கவடிவேலு காலகதி யடைந்த பிறகு இவரை என்னுடன் முக்கிய பாகங்கள் நடிப்பதற்காக தேர்ந்தெடுத்தேன். இவர் சங்கீதம் மிகவும் நன்றாயிருந்தது. முகக்களையும் நன்றாயிருந்தது. இதில் ஒரு வேடிக்கை யென்ன வென்றால் அது வரையில் ஆண் வேடம் தரிப்பதற்கே விரும்பினவர் நான் இவரிடம் "உனக்கு ஆண் வேடம் சரியாயில்லையப்பா ஸ்திரீ வேடம் தான் சரியாயிருக்கும்" என்று அவர் எண்ணத்தை மாற்றினேன். இவர் என்னுடன் 1923-வது வருட முதல் அவர் கால பரியந்தம் நடித்து வந்தார். ஏறக்குறைய ரங்க வடிவேலு எடுத்துக் கொண்ட முக்கிய பாத்திரங்களை யெல்லாம் நடித்தார். ஆயினும் வள்ளி வேடத்திலும், அபலா வேடத்திலும், (அமலாதித்யனில்) ரங்க வடிவேலுவைப் பார்க்கிலும் கொஞ்சம் நன்றாகவே நடித்தார் என்று நான் சொல்ல வேண்டும். இவர் கடைசி காலத்தில் மதுரையில் உத்தியோகத்தில் மாறியபோது நான் அங்கு சென்று நான்கைந்து முறை மதுரை நாடக சபையில் இவருடன் நடித்துள்ளேன்.
----------------

36. B. ராமமூர்த்தி

இவர் ஆதியில் ஓரியண்டல் டிராமடிக் சொசைட்டியில் பல நாடகங்களில் ஸ்திரீ வேஷதாரியாக நடித்தவர், ஒருமுறை அந்த சொசைட்டியார் சந்திரஹாசன் என்னும் நாடகத்தை நடத்திய போது இவர் விஷயை வேடம் தரித்ததைப் பார்த்திருக்கிறேன். அப்போதே இவருக்கு உடல் ஸ்தூலமாயிருந்தது. பிறகு அந்த சொசைடி பிரிந்தபின் சுகுண விலாச சபையைச் சேர்ந்தார். எங்கள் சபையில் தெலுங்கு பாஷையில் பல முக்கிய நாடகங்களில் கதா நாயகனாக நடித்து வந்தார். அன்றியும் இவரே வரூதினி என்னும் தெலுங்கு நாடகத்தை எழுதி அதில் கதா நாயகனாக நடித்தார். தமிழிலும் இரண்டொரு முறை எங்கள் சபையில் நடித்திருக்கிறார். நாங்கள் மூன்றாம் முறை கொழும்புக்குப் போய் ஆடின பிறகு இவருக்கு கண்வரிஷி வேடம் கொடுத்திருந்தேன். அதில் இவர் நடித்த போது இவருக்கு நேரிட்ட ஒரு கஷ்டத்தை எழுத வேண்டிய வனாயிருக்கிறேன், புருஷ வேஷம் தரித்து நடித்த போதிலும் இவருக்கு அடிக்கடி ஸ்திரீகளுக்குரிய அங்க விண்யாசம் தானாக வந்து விடும். அன்றியும் ஆண்வேடத்தில் நடிக்கும் போது ஒருவிதமாக நடப்பார். பாட்டு பாடும் போது கொஞ்சம் மூக்காலும் சங்கீதம் வந்து விடும்! இக் காரணங்களால் இவர் கண்வராக நடித்த போது நாடகம் பார்க்க வந்திருந்த ஜனங்கள் இவரை 'ஹிஸ்' பண்ணினார்கள், அதற்கு பிறகு இவர் நாடகமாடுவதை விட்டு விட்டார்.
------------

37. திரு. C. பாலசுந்தர முதலியார்

இவர் பல வருடங்களாக சுகுண விலாச சபையிலும் இவர் உத்தியோகத்திலிருந்த செக்ரடேரியட்ட நாடக சபையிலும் அநேக முறை நடித்தவர். வேடம் பூணுவதிலும் மற்றவர்களுக்குப் போடுவதிலும் இவர் நல்ல சமர்த்தர். இதில் முன்னே சொன்ன வெங்கடாசலையா அவர்களுக்கு இரண்டாவதாக கூறலாம். இவர் பன்முறை மனோகரா நாடகத்தில் வசந்தனாக நன்றாய் நடித்தவர். நடுவயதிலேயே 1939 வது வருஷம் காலகதி யடைந்தார்.
-------------

38. திரு. வேல் நாயர்

இவர் மலையாள தேசத்தைச் சேர்ந்தவர். மலையாளியாயிருந்தும் தமிழ் நன்றாய் திருத்தமாய் பேசுவார். அன்றியும் சம்ஸ்கிருதமும் படித்தவர் நல்ல நடிகர். தமிழில்தான் நடிப்பார். அப்படி நடிக்கும்போது ஆங்காங்கு சில சம்ஸ்கிருத பதங்களையும் உபயோகிப்பார். இவர் தன் நாடகக் கம்பெனியூடன் தமிழ் நாடெங்கும் பன்முறை சுற்றி வந்திருக்கிறார், அக் காலத்தில் முக்கிய நாடகங்களுடன் நான் எழுதிய மனோகரா, கள்வர் தலைவன் முதலிய நாடகங்களை பன்முறை நடத்தி யிருக்கிறார், சற்றேறக்குறைய வாரத்தில் ஒருமுறையாவது எனது நாடகங்களில் நடித்திருக்கிறார். இவரைப் போல் எனது நாடகங்களை அநேக முறை நடத்திய நாடகக் கம்பெனிகளே கிடையாது எனக் கூறலாம். இதனால் இவருக்கு வருவாய் அதிகமாகக் கிடைத்தது. எனக்கும் ராயல்டி அதிகமாய் கிடைத்தது. இவர் தன் கம்பெனியை வெகு விமரிசையாய் நடத்தி வந்தார். மற்ற கம்பெனிகளில் சாதாரணமாய் நடிகர்களுக்கு சம்பளம் சரியாகக் கொடுப்பதில்லை என்னும் கஷ்டம் இவருடைய கம்பெனியில் கிடையவே கிடையாது. சில காலம் காலஞ்சென்ற M. கந்தசாமி முதலியார் இவரது கம்பெனியாருக்கு உபாத்தியாயராய் இருந்து நடிப்புக் கலையை கற்பித்ததை நான் அறிவேன், இவர் நடிகர்களை சரியாக நடத்தி வந்தபடியால் அவர்கள் இவர் கம்பெனியை விட்டு அகலாது பல வருடங்கள் உழைத்து வந்தார்கள்.

ஒரு முறை மன்னார்குடியில் சப் ஜட்ஜாயிருந்த எனது நண்பர் ஸ்ரீமான் பார்த்தசாரதி அய்யங்கார் நாடகத் தொழிலாளிகளையும் அமெச்சூர் (Amateur) நடிகர்களையும் ஒருங்கு சேர்த்து ஒரு நாடகம் நடிக்கவேண்டுமென்று, தொழிலாளிகளுள் வேல் நாயர், அனந்த நாராயண ஐயர், நடராஜ பிள்ளை முதலியாருடன் தானும், நானும் இன்னும் சில அமெச்சூர் நடிகர்களும் நள சரித்திரத்தை நாடகமாட வேண்டுமென்று தீர்மானித்தார், நானும் தமிழ் நாடகத்தை உயர்த்துவதற்கு இது ஒரு நல்ல காரணமாகும் என்று அதற்கு உடன்பட்டேன். நாடக தினத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே மன்னார்குடிக்குப் போனேன். வேல் நாயர் நளனாகவும் அனந்த நாராயண ஐயர் தமயந்தியாகவும். நடிக்கும் படி ஏற்படுத்தினேன். ஸ்ரீமான் பார்த்தசாரதி அய்யங்கார் வாஹீகன் ஆக நடிக்க உடன்பட்டார். நான் ஏதோ ஒரு சில்லரை பாத்திரத்தை எடுத்துக் கொண்டேன். முதல் ஒத்திகை நடத்தியபோது ஒரு காட்சியில் நளனும் தமயந்தியும் சேர்ந்து நடிக்க வேண்டியதை நடிக்கச் சொன்னேன். அவர்கள் அக்காலத்தில் வழக்கப்படி ஒருவாறு நடித்தனர். உடனே அதை நிறுத்தி இப்படி நடித்தால் நன்றாயிராதா என்று நான் நடித்துக் காட்டினேன். உடனே வேல் நாயரும் அனந்த நாராயண அய்யரும் என் அருகில் வந்து மற்ற பாகங்களையெல்லாம் நாளைகாலை உங்கள் வீட்டிற்கு வந்து நடிக்கிறோம் என்று என் காதில் மெல்ல ஓதினார்கள். பிறகு மற்ற நடிகர்களின் பாகத்தை சொல்லிக் கொடுத்து விட்டு வீட்டிற்குப் போனேன். வேல் நாயரும் அனந்த நாராயண அய்யரும் வந்து "ஆதி முதல் அந்தம் வரை எங்களுக்கு நடித்துக் காட்டுங்கள்" என்று கேட்க, அதற்கிணங்கி அப்படியே செய்தேன், பிறகு நாடகதினம் நான் சொல்லிக் கொடுத்தபடியே நன்றாய் நடித்தார்கள். நாடகதினத்தில் நல்ல வசூல் ஆயிற்று. செலவுபோக மிகுந்த தொகையை அங்கிருந்த ஒரு தர்ம கைங்கர்யத்திற்காக பார்த்தசாரதி அய்யங்கார் கொடுத்துவிட்டார். மேற்குறித்தபடி பார்த்தசாரதி அய்யங்கார் நாடகத் தொழிலாளிகளையும் அமெச்சூர் நடிகர்களையும் ஒன்றும் பேதமில்லாமல் கூடி நடிக்கச் செய்தது தமிழ் நாடகத்தின் பதவியை முன்னேற்றம் அடையச் செய்தது. என்று நான் கட்டாயமாய் கூற வேண்டும்.

வேல் நாயர் தன் உடல் நலத்தை சரியாக பார்த்து வந்தமையால் பல்லாண்டு வாழ்த்து ஒருவருடத்திற்கு முன்பு தான் காலமானார்.
---------------

39. ஸ்ரீமான் அனந்த நாராயண ஐயர்

இவர் பிராம்மணர். இவரும் இவரது சகோதரர்களும் இன்னும் சில பிராம்மணர்களும் சேர்ந்து ஆரியகான சபா என்னும் ஒரு சபையை ஏற்படுத்தினார்கள். முக்கியமாக புராண கதைகளையே நாடகமாக ஆடினார்கள். அனந்த நாராயண ஐயர் கொஞ்சம் குள்ளமானவர். கொஞ்சம் ஸ்தூலமாகவும் இருப்பார். ஆயினும் ஸ்திரீ வேடங்களில் நடிப்பதில் கீர்த்தி பெற்றார். நான் பன்முறை இவர்கள் ஆடியதைப் பார்த்திருக்கிறேன். இவரிடத்தில் ஒரு சிறிய குறை என்னவென்றால் பேசும்போது சில சந்தர்ப்பங்களில் உபன்யாசம் செய்வதுபோல் தாராளமாக பேசிவிடுவார். உதாரணமாக வள்ளி நாடகத்தில் வள்ளியாக நடித்தபோது மலைவளம், நீர் வளம், நிலவளம் இவைகளைப் பற்றி உபன்யாசம் செய்வதுபோல் 5 நிமிஷம் பேசினார். பிறகு ஒரு முறை அவரை நான் சந்தித்தபோது இது அவ்வளவு உசிதமல்ல என்று எடுத்துக்காட்ட அதை ஒப்புக்கொண்டு அவ் வழக்கத்தை விட்டு விட்டார்.
------------

40. G. C. V. ஸ்ரீனிவாசாச்சாரியார்

இவர் 1891-வது ஆண்டுக்கு முன்பு சென்னையில் வெள்ளைக்காரர்கள் மெட்ராஸ் டிரமாடிக் சொசைடியை ஏற்படுத்தியதுபோல் இந்தியர்கள் ஒன்று ஏற்படுத்தவேண்டு மென்று மெட்ராஸ் ஓரியண்டல் டிராமடிக் சொசைடி ஒன்று ஏற்படுத்தினார். அதில் ஆதியில் சாகுந்தலம் முதலிய சம்ஸ்கிருத நாடகங்களையே நடத்தி வந்தார். அக் காலத்தில் வேறெங்கும் நாடகரங்கம் இல்லாதபடியால் சென்னை கோட்டைக்குள் ஆங்கிலேயர்கள் கட்டிய 'Bijou' என்னும் அரங்கத்தில் நடத்தினார். அரிச்சந்திரன் நாடகத்தையும் எழுதி அங்கு நடத்தினார். இவைகளை மிகவும் ஒழுங்காய் நடத்தியபடியால் பல ஆங்கிலேயர்கள் வந்து பார்ப்பதுண்டாம். 1891-வது வருஷத்திற்குப் பின் சுகுண விலாச சபை தமிழ் நாடகங்களை நடத்தியதைப் பார்த்து இவர் தன்னுடைய சபையில் தமிழ் நாடகம் ஒன்றை நடத்தத் தீர்மானித்து 'சந்திர ஹாசன்' என்னும் கதையை நாடகமாக எழுதச் சொல்லி அதை ஒரு முறை விக்டோரியா பப்ளிக் ஹாலில் நடத்தினார். இந் நாடகங்களில் எல்லாம் தானே முக்கிய பாத்திரமாக நடித்து வந்தார். இவர் நடித்ததை சில முறைகள் நான் பார்த்திருக்கிறேன். ஆயினும் இவர் நடிப்பு எனக்கு அவ்வளவு திருப்திகர மாயில்லை, நான் பார்த்த சமயத்தில் இவருக்கு 55 வயதிற்கு மேல் ஆகவே முகத்தில் நரை திரை அதிகமாயிருந்தது. ஆயினும் மற்றவர்களுக்கு நடிப்புக் கலையை கற்பிப்பதில் இவர் கெட்டிக்காரர் நான் இவர் கடைசி முறை நடித்ததைப் பார்த்திருக்கிறேன். உத்தர ராம சரித்திரத்தில் ஸ்ரீ ராமராக நடித்தபோது, தலையில் கிரீடம் இல்லாமல் நடித்த சமயம் என்னுடன் பக்கத்தில் உட்கார்ந்து நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த என் ஆப்த நண்பர் வி, வி. ஸ்ரீனிவாச அய்யங்கார் “தலை மொட்டை ராமனாம் தள்ளாத கிழவனாம்” என்னும் முதல் அடியை எடுத்துக் கொடுத்து மற்ற மூன்று அடிகளையும் பூர்த்தி செய்யும்படி என்னைக் கேட்டார். நானும் அப்படியே செய்தேன். ஆயினும் அவ்விருத்தத்தை இங்கு எழுதுவதற்கில்லை. இவர் அதற்கப்புறம் பல வருடங்கள் உயிர் வாழ்ந்தார். இவரை எங்கள் சபையில் ஒரு கௌரவ அங்கத்தினராக இவர் நாடக கலைக்கு செய்த தொண்டின் பொருட்டு நியமித்து கௌரவப் படுத்தினோம்.
-------------

41. ஸ்ரீ D. V. கிருஷ்ணமாச்சார்லு

இவர் முழுப்பெயர் ஆந்திர நாடக பிதா மகன் தருமவரம் வெங்கட கிருஷ்ணமாச்சார்லு. இவர் பல்லாரியை சார்ந்தவர். இவருக்கு ஆந்திர தேசத்தார் ஆந்திர நாடக பிதா மகன் என்று பட்டப் பெயர் கொடுத்தது மிகவும் பொருத்தமானது. இவரால் தான் அதற்கு முன்பாக சென்சு நாடகம் வீதி நாட்கங்களாய் இருந்த தெலுங்கு நாடகமானது ஒழுங்கு செய்யப்பட்டு மேடை மீதில் தக்க திரைகளுடனும் நடிகர்கள் ஏற்ற உடையுடனும் ஒழுங்காக ஆக்கப்பட்டு முன்னேற்றமடைந்தது. இவர் பல்லாரியில் வக்கீலாக வேலைபார்த்து பொருள் சம்பாதித்தார். அதைக் கொண்டு பல்லாரி சரச வினோதினி சபா என்னும் ஓர் நாடக சபையை ஸ்தாபித்தார். அதில் அங்கத்தினராக சேர்ந்தவர்களெல்லாம் நல்ல கல்விமான்கள் ஊதியத்திற்காக நாடகமாடாது வினோதத்திற்காகவும் பாஷையை அபிவிருத்தி செய்வதற்காகவும் உழைத்தவர்கள். இவர் தெலுங்கில் மிகவும் பெயர் பெற்ற கல்விமான்; அன்றியும் சங்கீதமும் கற்றவர். இவர். தான் ஏற்படுத்திய சபைக்காக சுமார் 18 மேற்பட்ட தெலுங்கு நாடகங்களை எழுதி அச்சிட்டுள்ளார். அவைகளில் முக்கியமானவை சாவித்திரி சத்தியவான், சாரங்கதரா, சிரகாரி, பாதுகா பட்டாபிஷேகம், பிரஹல்லாதா, பாஞ்சாலி சுயம்வரம், பிரமேளா முதலியனவாம். இந்நூல்களையெல்லாம் தெலுங்கு பண்டிதர்கள் மிகவும் பாராட்டியிருக்கின்றனர். ஏறக்குறைய எல்லா நாடகங்களிலும் தானே முக்கிய பாத்திரமாக நடித்துள்ளார். அந் நாடகங்களுக்கு பாட்டுக்கள், பத்யங்கள், தண்டகங்கள் முதலியவைகளை தானே எழுதியுள்ளார். அன்றியும் நாடகப் பாத்திரங்களை தக்கபடி நடிக்கும்படி, தானே கற்பிப்பார்.

இவரை நான் முதல் முதல் சந்தித்தது ஒரு வேடிக்கையான சந்தர்ப்பமாகும், சென்னையில் நாங்கள் ஆச்சாரப்பன் வீதி 54-வது நெம்பர் வீட்டில் வசித்துக் கொண்டிருந்தபோது ஒருநாள் என் தகப்பருடைய சிநேகிதர் வேதாந்த முதலியார் என்பவர் ஒரு கிழவனாருடன் எங்கள் வீட்டிற்கு வந்தார். அந்த கிழவனாருக்கு அப்போது ஐம்பது வயதிற்கு மேலிருக்கும். முகம் திரைத்து நரைத்திருந்தது. கன்னங்கள் குவிந்திருந்தன, கிழவர் சரிகை அங்கவஸ்திரங்களையும் சொக்காயையும் அணிந்திருந்தார். நரைத்த மயிரையுடைய தலைக்கு ஒரு விலையுயர்ந்த வெள்ளி சரிகை குல்லாயை அணிந்திருந்தார். வேதாந்த முதலியார் கேட்ட கேள்விக்கு தகப்பனார் மேல் மாடியிலிருக்கிறார் போங்கள் என்று சொல்லி அனுப்பிவிட்டு இதென்ன வேஷக்காரன் போலிருக்கிறாரே! என்று கொஞ்சம் மனதிற்குள் சிரித்துக் கொண்டேன். கொஞ்ச நேரத்திற் கெல்லாம் என்னையும் என் தமையனாராகிய ஆறுமுக முதலியாரையும் மேல் மாடிக்கு அழைத்து “இவர் இன்று விக்டோரியா பப்ளிக் ஹாலில் தெலுங்கு நாடகம் ஒன்று நடத்த போகிறாராம் வருகிறீர்களா. என்னுடன்" என்று என் தகப்பனார் கேட்க, நாங்கள் இருவரும் குதூகலத்துடன் ஒப்புக் கொண்டோம். அன்றிரவு ஜனங்கள் நிறைந்திருந்த விக்டோரியா பப்ளிக் ஹாலில் ஒரு புறம் கண்கொட்டாது நடந்த நாடகத்தை பார்த்துக் கொண்டிருந்தேன் நாடகம் மிகவும் நன்றாயிருந்தது. என் மனதில் ஒரு பெரும் கிளர்ச்சியையுண்டு பண்ணியது. இனி இதைப்பற்றிய மற்ற விஷயங்களை அறிய விரும்புவோர் தயவு செய்து எனது நாடக மேடை நினைவுகள் என்னும் நூலின் முதல் பாகத்தில் நான் விவரமாய் எழுதியிருப்பதைப் படித்துக் கொள்வார்களாக.

அன்றிரவே பல்லாரி சபையைப் போல் ஓர் நாடக சடையை தமிழில் ஏற்படுத்தி அதில் நான் நடிக்க வேண்டுமென்று பேரவாக் கொண்டேன். இது தான் எங்கள் சுகுண விலாச சபை ஏற்படுத்தப் பட்டதற்கு முக்கிய காரணம்.

இதன் பிறகு இரண்டு மூன்று வருடங்களுக்கொரு முறை கிருஷ்ணமாச்சார்லு அவர்கள் தான் ஏற்படுத்திய சபையை சென்னைக்கு அழைத்துக் கொண்டு வந்து அநேக நாடகங்களை நடத்தியுள்ளார்.

இவர் வயோதிகராயிருந்தபோதிலும் குரல் மாத்திரம் கொஞ்சமும் தளர்ச்சியடையவில்லை. வசனங்களை மிகவும் கம்பீரமாய் பேசுவார். பாட்டுக்களை ஒரு கஷ்டமும் இல்லாதது போல் மிகவும் தெளிவாக சுலபமாகப் பாடுவார். அது முதல் நான் அவருக்குத் தெரிந்தவனாகி அவர் சென்னைக்கு வந்த போதெல்லாம் அவருடன் நாடக சம்பந்தமான அநேக விஷயங்களைப் பற்றி பேசியிருக்கிறேன். அவர் சாரங்கதரா நாடகத்தைத் தெலுங்கில் எழுதியது போல் நானும் அக் கதையை தமிழில் எழுதி நடித்திருக்கிறேன் என்பதை அறிந்தவராய் நான் நடித்தபோது ஒருமுறை அதை பார்க்க வந்தார், "கதையை சம்பந்த முதலியார் கொஞ்சம் மாற்றியிருக்கிறார், அதை நான் ஒப்பவில்லை. ஆயினும் அவர் தான் மாற்றியபடி நடித்தது நன்றாயிருந்தது. சில பாகங்கள் முக்கியமாக புறா விடும் காட்சி நான் எழுதியதைவிட மிகவும் நன்றாயிருந்தது" என்று மறு நாள் எங்கள் இருவருக்கும் தெரிந்த ஒரு கோமுட்டி செட்டியாரிடம் கூறியதை அவர் எனக்குத் தெரிவித்தார்.

பிறகு நாங்களிருவரும் அன்யோன்ய சிநேகிதர்களான பிறகு ஒருமுறை என்னிடம் அவர் கூறியதை இங்கு எழுதுகிறேன், “மிஸ்டர் சம்பந்தம், நீங்கள் வக்கீலாக பேரெடுக்க வேண்டுமென்றிருந்தால் நாடகமாடுவதை விட்டு விட வேண்டும்" என்றார். ஆயினும் அவர் எனக்குக் கூறிய புத்தி மதியை என் மனதில் நான் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏதோ வக்கீலாகவும் ஜட்ஜாகவும் பெயர் பெற்றேன். நாடகமாடுவதிலும் கொஞ்சம் பெயர் பெற்றேன் என்றே கூறவேண்டும்.
--------------

42. ஸ்ரீ T. ராகவாச்சார்லு

இவரை நான் முதல் முதல் பார்த்தது ஒரு விபரீதமான சம்பவம். பல்லாரி சுமனோகர சபா என்னும் நாடக சபா விக்டோரியா பப்ளிக் ஹாலில் (Fall of Vijayanagar) விஜய நகர் சாம்ராஜ்ய வீழ்ச்சி என்னும் நாடகத்தை நடத்தப் போவதாக பிரசுரிக்கப்பட்டிருந்தது. அது எப்படி யிருக்கிறது என்று நான் பார்க்கப் போயிருந்தேன். 9 மணிக்கு நாடகம் ஆரம்பமானபோது நான் உட்பட ஹாலில் முழுவதிலும் ஏழு பெயர்கள் தான் உட்கார்ந்திருந்தோம்! இருந்தும் சபையோர் நாடகத்தை சரியாகவே ஆதியோடந்தமாய் நடத்தினர். அதில் கதா நாயகன் வேடம்பூண்டார் ஸ்ரீராகவாச்சார்லு, இது என்ன இது தெலுங்கு நாடகத்திற்கு சாதாரணமாக ஜனங்கள் அதிகமாய் வருவார்களே என்று நான் விஜாரித்த போது உண்மை வெளியாகியது. இதற்கு கொஞ்ச காலத்திற்கு முன்பாக ஸ்ரீ கிருஷ்ணமாச்சார்லு அவர்களின் சரச வினோதனி சபா நாடகங்கள் நடத்தியபோது திரளான ஜனங்கள் வந்திருந்தார்களே, இதற்கு மாத்திரம் ஏன் வர வில்லை என்று வினவியபோது இந்த சுமனோகர சபையோருக்கும் கிருஷ்ணமாச்சார்லு சபையோருக்கும் ஏதோ மனஸ்தாபம் இருந்ததாம். அதன் பேரில் சென்னையில் உள்ள தெலுங்கர்கள் அநேகர், முக்கியமாக கோமுட்டிகள் இந்த சபை நாடகத்தை பார்க்கக் கூடாது இதை பாய்காட் (BoyCott) செய்ய வேண்டுமென்று தீர்மானித்து எல்லோரும் கட்டுப்பாடாய் நின்று விட்டார்களாம். இந்த உண்மையை அறிந்தபின் சுமனோகர சபா நடிகர்களிடம் போய் நீங்கள் இதற்காக வருத்தப்பட வேண்டியதில்லை, நாடகம் நன்றாயிருந்தது. முக்கியமாக ராகவாச்சார்லு நடித்தது மிகவும் நன்றாயிருந்தது. ஆகவே உங்கள் தைர்யத்தை கைவிடாதீர்கள்.. உங்கள் நாடக சபையின் ஏற்பாட்டின்படி நாடகங்களை நடத்துங்கள் என்று சொல்லி முக்கியமாக ராகவாச்சார்லுவை உற்சாகப்படுத்தினேன். நான் சொன்ன ஜோஸ்யத்தின்படி அதே விக்டோரியா பப்ளிக் ஹாலில் அதே நாடகத்தில் ராகவாச்சார்லு நடித்தபோது பெரும் திரளான ஜனங்கள் வந்து குவிந்ததை நான் பார்த்திருக்கிறேன்.

ராகவாச்சார்லு அவர்கள் மிகச் சிறந்த நடிகர், நடிப்புக் கலையில் மிகவும் தேர்ந்தவர். ஆனால் சங்கீதத்தில் என்னை போலத்தான். தெலுங்கில் பத்யங்கள் மாத்திரம் நன்றாய் பாடுவார். வேறொன்றும் பாட மாட்டார். கீதங்கள் பாடி நான் கேட்டதில்லை. பிறகு பன்முறை ராகவாச்சார்லு சென்னையில் நடித்திருக்கிறார். அவர் நடித்த முக்கிய பாத்திரங்கள் பாதுகா பட்டாபிஷேகத்தில் தசரதன், விஜய நகர வீழ்ச்சியில் ருஷ்டம், ஹிரண்யகசிபு, கடோத்கஜன் முதலியவைகளாம், அவர் பலவிதமான வேடங்களை பூண்டிருக் கின்றனர். எந்த வேஷத்தை கொடுத்தாலும் ஏற்றுக் கொண்டு நன்றாய் நடிப்பார். இது ராஜபார்ட் இது சேவகன் பார்ட் என்கிற வித்தியாசம் இவருக்குக் கிடையாது. எந்த வேடம் பூண்டாலும் அந்த நாடகக் கதையை நன்றாய் படித்து எவ்வாறு நடித்தால் சபையின் மனதைக் கவர முடியும் என்று யோசித்து அதற்குத் தக்கவாறு கஷ்டமெடுத்துக் கொண்டு நடிப்பார். இவர் எங்கள் சுகுண விலாச சபையில் அங்கத்தினராக சேர்ந்து ஆங்கிலத்திலும் தெலுங்கிலும் நடித்திருக்கிறார். எங்கள் சபை பட்டணத்தை விட்டு வெளியில் போய் வேறு ஊர்களில் தெலுங்கு நாடகங்கள் நடத்தியபோதெல்லாம் இவரை அழைத்துக் கொண்டு போவோம். எங்கள் சபையின் தெலுங்கு பிரிவை முன்னுக்குக் கொண்டு வந்தவர்களுள் இவர் முக்கியமானவர் இவர் தமிழ் நாடகங்களிலும் இரண்டொரு முறை நடித்துள்ளார். அதில் ஒன்றைபற்றிய விசேஷ சம்பவத்தை நான் கூறக் கடமைப்பட்டிருக்கிறேன். ஒரு வருடம் 'ரஜபுத்ர வீரன்' என்னும் எனது தமிழ் நாடகத்தை நடத்தினோம், அதற்காக எங்கள் சபை தலைவராயிருந்த T. V. சேஷகிரி ஐயர் அவர்கள் தனது சகாக்களாகிய சில ஹைகோர்ட் ஆங்கில ஜட்ஜுகளையும் வரும்படி கேட்டிருந்தது எனக்குத் தெரியும். ஆகவே அந் நாடகம் மிகவும் நன்றாய் இருக்க வேண்டுமென்று கஷ்டப்பட்டு ஒத்திகை முதலானவைகளை செய்து வைத்தேன், நாடக தினம் வந்தது. அத்தினம் 6 மணிக்கு நாடக ஆரம்பம். 3 மணிக்கு ரஜபுத்ர வீரனுக்கு எதிரியாயிருந்த ஒரு மகம்மதிய அரசன் பாத்திரத்தை எடுத்துக் கொண்டவர் தனக்கு மிகவும் காயலாயிருக்கிற தென்றும் சாயங்காலம் நடிக்க முடியாதென்றும் சொல்லியனுப்பினார்! அதைக் கேட்டு நான் பிரமித்து திகைத்துக் கொண்டிருக்கையில், தெய்வாதீனத்தால் ஏதோ வேலையாக அத்தினம் பட்டணத்திற்கு வந்திருந்த எனது நண்பர் ராகவாச்சார்லு என்னை பார்க்க விக்டோரியா பப்ளிக் ஹாலுக்கு வந்தார். சுருக்கி சொல்லுமிடத்து எனக்கு நேரிட்ட கஷ்டத்தை அவரிடம் தெரிவித்த போது உடனே "சம்பந்தம் ஒன்றும் பயப்பட வேண்டாம். அந்த நவாப்பின் பாத்திரத்தை நான் எடுத்துக் கொள்கிறேன்" என்று சொல்லி அப் பாத்திரத்தின் வசனங்களை நான் தமிழில் சொல்ல அவர் தெலுங்கில் எழுதிக்கொண்டு, ஒரு அறைக்குள் போய் உட்கார்ந்து கொண்டு 4 மணிக்கு என்னிடம் வந்து என் பாகத்தை ஒப்புவிக்கிறேன், சரியாக இருக்கிறதா என்று பாருங்கள் என்று குருட்டு பாடமாக என் எதிரில் நடித்துக்காட்டினார் என் உள்ளம் பூரித்தது. நாடகத்தில் அவர் நன்றாய் நடித்ததுமன்றி தானாக ஒரு முக்கியமான நடிப்பை நானும் சபையில் வந்த எல்லோரும் ஆச்சரியப் படும்படியாக நடித்தார். அது கீழ் வருமாறு நான் வேடம்பூண்ட ரஜபுத்ரவீரன் மகமத்திய சைனியங்களால் கொல்லப்பட்டபோது இந்த சுத்த வீரனை மிக்க கௌரவமாக தகனம் செய்யவேண்டு மென்று கூறி ஈட்டிகளாலும் கத்திகளாலும் ஒரு பாடையைக் கட்டச் சொல்லி அதில் என்னை வளர்த்தி மகம்மதிய வீரர்களை கொண்டே எடுக்கச் செய்தார். அச் சமயம் என்னை தூக்கிய போது தான் மேலே அணிந்திருந்த மிகுந்த விலை யுயர்ந்த சரிகை சால்வை யொன்றை என் உடல்மீது தன் கையால் போர்த்திவிட்டு என் சவத்திற்கு பின்பாக தலை குனிந்த வண்ணம் நடந்து வந்தார். இது அவ்வளவும் அவர் நூதனமாக செய்த நடிப்பாகும். அவர் கரமானது சால்வையை போர்த்தியபோது என் உடலின் மேல்பட உடல் முழுவதும் புளகாங்கிதமானேன்! "காலத்தினாற் செய்த உதவி சிறிது எனினும் ஞாலத்தினும் மாணப் பெரிது" என்ற தெய்வப் புலமை திருவள்ளுவர் வாக்கின்படி இவர் எனக்கு செய்த உதவிக்கும் மரியாதைக்கும் நான் என்ன கைம்மாறு செய்யக் கூடும்? நண்பன் என்றால் அப்படி இருக்க வேண்டும்! நடிகன் என்றால் இப்படி இருக்க வேண்டும்! இன்னும் ஒரு சிறு கதையைக் கூறி இவரைப் பற்றி நான் எழுதியதை முடிக்கிறேன், ஒரு முறை பல வருடங்களுக்கு முன்பாக ரேடியோவில் ஏதோ பேசப் போயிருந்தபோது என் பேச்சு வருவதற்கு கொஞ்சம் கால தாமதமாக நான் பக்கத் தறையில் உட்கார்ந்திருந்தேன். அச்சமயம் ரேடியோ உத்தியோகஸ்தர் "மிஸ்டர் சம்பந்தம், கொஞ்சம் பொறுங்கள், சீக்கிரம் உங்களை உள்ளே அழைத்துக் கொண்டு போகிறேன்" என்று சொல்லி விட்டுப் போனார். இதைக் கேட்டதும் என் எதிரில் உட்கார்ந்திருந்த ஒரு சீமான் "நீங்களா சம்பந்தம்?" என்று என்னை கேட்க நான் 'ஆம்' என்று சொல்லி எதற்காக கேட்கின்றீர் என்று நான் வினவியபோது "நான் ஆந்திர தேசத்தார், பல்லாரியில் ராகவாச்சார்லு அவர்கள் உங்களைப் பற்றி மிகவும் புகழ்ந்து பேசியிருக்கிறார். அதுமுதல் உங்களை பார்க்க வேண்டுமென்று ஆவல் கொண்டிருந்தேன். இன்று என் எண்ணம் நிறைவேறிற்று." என்று ஆங்கிலத்தில் சொன்னார். அவர் என்ன சொன்னார் என்று நான் கேட்டபோது பின்வருமாறு கூறினார். இதை நான் இங்கு டம்பமாக எழுதவில்லை. ராகவாச்சார்லு அவர்கள் என்னைப் பற்றி கூறிய புகழுக்கு நான் அருகனோ இல்லையோ நான் சொல்வதற்கில்லை. அவர் வார்த்தைகளை இங்கு எழுதியதற்கு முக்கிய காரணம் காலஞ் சென்ற ராகவாச்சார்லு அவர்கள் என் மீது கொண்ட பிரியத்தை மற்றவர்கள் அறியும் பொருட்டேயாம். இக்கூற்று அவர் என் அருகிலிருந்த ஆந்திர தேசத்தவர்க்கு சொல்லியதாகும். "நீங்கள் நாடகத்துறையில் மிகவும் அருமையானதை கேட்க வேண்டுமென்றிருந்தால் மிஸ்டர் சம்பந்தம் நடிப்பதை கேளுங்கள். அவர் கிழக்கிலும் மேற்கிலும் நடிக்கும் சிறந்த நடிகர்களுடைய நடிப்புத் திறமையெல்லாம் நன்றாய் உருவாக்கி உங்களை கேட்கச் செய்வார்" என்பதாம்.

நடிகர்களுள் ஒருவருக்கொருவர் மிகவும் பொறாமை கொண்டவர்களாய் இருப்பார்கள் என்பது ஒரு சாதாரண பேச்சாகும். இருந்தும் பொறாமை என்பது சிறிதும் இல்லாது என்னைப் பற்றி எனது காலஞ் சென்ற நண்பர் புகழ்ந்ததற்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன், எனது கண்களில் நீர் ததும்ப இதை இப்போது எழுதுகிறேனே இது தான்!
--------------

43. திரு. குப்பி வீரண்ணா

இவர் மைசூரைச் சேர்ந்தவர். இவர் அங்கு பல வருடங்களுக்கு முன் குப்பி நாடகக் கம்பெனி என்று ஒன்றை ஏற்படுத்தி பல வருடங்கள் நன்றாய் நடித்து தியாதி பெற்றிருக்கிறார். இன்னும் இந்நாடகக் கம்பெனி ஆடிவருவதாக கேள்விப்படுகிறேன்.

வீரண்ணா அவர்கள் ஹாஸ்ய பாகங்கள் நடிப்பதில் மிகவும் கெட்டிக்காரர். இவரது சதாரம் நாடகத்தில் திருடன் வேடம் எப்போதும் ஹால் முழுவதும் ஜனங்கள் நிறையச் செய்யும். இவர் நடிப்புத் திறனுக்காக சங்கீத நாடக சபையார் பொற்பதக்கம் அளிக்கப் பெற்றவர்.

இவரது நாடக சபையில் முக்கியமாக நான் குறிக்க வேண்டிய விசேஷம் ஒன்று உளது. அதாவது ஏறக்குறைய எல்லா நாடகங்களிலும் முக்கியமான ஆண்வேடமும் ஸ்திரீ வேடமும் தம்பதிகள் இருவர் எடுத்துக்கொண்டு நடிப்பதேயாம். இந்த வழக்கம் தற்காலத்திய நாடக சபைகளில் பெருகி வந்தால் அச்சபைகளைப் பற்றிய சிலர் கூறும்படியான தூஷணத்திற்கு இடமிராது. இவர்கள் இருவரும் நல்ல நடிகர்கள். கொஞ்ச காலத்திற்கு முன்பாக அயன்ராஜபார்ட் நாயுடு அவர்கள் ஏதோ வியாதியால் பீடிக்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகப் பட்டார். அங்கு மரிக்கவே அவரது உடல் அவருடைய வீட்டிற்கு கொண்டுவரப்பட்டதாம். அதைப் பார்த்தவுடன் மேற்சொன்ன அவரது மனைவி இருதயம் உடைந்தவராய் தானும் மரித்தார்களாம். அப்படி இருக்கவேண்டும் ஸ்திரீ புருஷர்களுடைய கற்பு நிலை! இவர்கள் இருவரும் நடித்த முக்கிய நாடகங்கள் ராஜ பக்தி, கோகர்ண லிங்கம், இவ்விரண்டையும் நான் நேரில் பார்த்திருக்கிறேன். இவ்விரண்டு நாடகங்களிலும் நடிப்பதில் இத்தம்பதிகளுக்கு சமானமவர்கள் ஒருவரும் இல்லை என்றே நான் கூறவேண்டும்.
-------------

44. ஸ்ரீ F. G. நடேசய்யர்

இவர் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் வாழ்ந்தவர். சுகுண விலாச சபை 1912-வது வருஷம் திருச்சிக்கு போய் சில நாடகங்கள் ஆடின போது அவைகளைப் பார்த்துத்தானும் அப்படிப்பட்ட சபை ஒன்று சேர்க்க தீர்மானித்து அவ் வருஷமே ஆரம்பித்தனர். இவர் ஒரு நல்ல நடிகர், சங்கீதம் மாத்திரம் என்னை போலத்தான். அவர் தான் ஏற்படுத்திய சபையைக் கொண்டு எனது சில முக்கிய நாடகங்களை ஆடியுள்ளார். ஆங்கிலத்திலும் நாடகங்கள் ஆடியுள்ளார், ஷேக்ஸ் பியருடைய ஹாம்லெட் நாடகத்திலும் ஷெரிடன் எழுதிய பிஷாரோ என்னும் நாடகத்திலும் முக்கிய பாத்திரங்களை நடித்து பெயர் பெற்றார். எங்கள் சபையிலும் என்னுடன் சேர்ந்து இரண்டு நண்பர்கள் என்னும் நாடகத்தில் சுகுமாரன் வேடம் பூண்டு நன்றாய் நடித்தது ஞாபகமிருக்கிறது, இவர் திருச்சியில் பன்முறை மனோகரனாக நடித்திருக்கிறார். அதன் மீதுள்ள ஆர்வத்தினால் திருச்சி உறையூரில் தான் குடியிருந்த வீட்டிற்கு மனோகர விலாஸ் என்றே பெயர் வைத்தார். இவருக்கு சென்னை சங்கீத நாடக சபையார் இவர் நடிப்புக் கலைக்கு இரண்டொரு வருடங்களுக்கு முன் பரிசு கொடுத்தனர் இவர் சென்ற வருடம் காலகதி யடைந்தபோது தென்னிந்திய நாடகம் ஒரு நல்ல நடிகரையும் நான் எனது ஒரு நல்ல நண்பனையும் இழந்தோம்.
------------

45. திரு. N. சம்பந்த முதலியார்

அவர்கள் இவர் நான் கண்ட நடிகர்களுக்குள் மிகச் சிறந்தவர்களுள் ஒருவர். இவர் சென்னை ஸ்பென்ஸர் அண்ட் கோவில் முக்கிய உத்தியோகஸ்தர்களில் ஒருவராய் இருந்தவர் இவர் நடுவயது வரையில் நாடகமே ஆடாதிருந்தவர். பிறகு நான் சுகுண விலாச சபையில் நடித்ததை பன்முறை பார்த்து தானும் நாடகமாட வேண்டுமென்று இச்சைகொண்டதாக என்னிடம் நேராகக் கூறியுள்ளார். அதன் பேரில் அவரிருந்த கம்பெனியில் பல தக்க சிறுவர்களை சேர்ந்து ஓர் நாடகக் குழுவை ஏற்படுத்தினார். இதில் அந்த கம்பெனியிலிருந்தவர்களை தவிர மற்றவர்களை சேர்ப்பதில்லை, இவர் எனது பெரிய நாடகங்களை யெல்லாம் தான் நடத்த வேண்டுமென்று தீர்மானித்து அவைகளில் நான் நடித்த முக்கிய பாகங்களையே தானும் நடித்து வந்தார் பம்மல் சம்பந்த முதலியார் நாடகங்களைத் தவிர மற்றவர்கள் நாடகங்களில் நடிப்பதில்லை என்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்ததாக பலருக்குக் கூறியது எனக்குத் தெரியும். சுகுண விலாச சபையில் நான் நடிக்கும் போதெல்லாம் மிகவும் கூர்மையாக கவனித்து என்னைப் போலவே நடித்து வந்தார் என்று நான் கூறவேண்டும், அன்றியும் நாடகம் ஆரம்பிப்பதில் சரியாக மணிப்பிரகாரம் ஆரம்பிக்க வேண்டுமென்று தீர்மானித்து அப்படியே நடந்து வந்தார். இவர் மற்ற நடிகர்களுக்கு ஒத்திகை நடத்தும்போது என்னைப் போலவே மிகவும் கண்டிப்பாய் நடத்தி வந்தார் என்று எனக்குத் தெரியும். முக்கியமான ஒத்திகைகளுக்கெல் லாம் என்னை வரவழைத்து நேரில் நடத்தியிருக்கிறார். இவர் நடித்த எனது முக்கியமான நாடகங்கள் மனோகரா, லீலாவதி சுலோசனா, காலவரிஷி, சபாபதி, புத்த அவதாரம் முதலியவைகளாம். மேற்கண்ட நாடகங்களில் சில காட்சிகள் ஜோடிப்பதில் எங்கள் சபையைவிட அதிக விமரிசையாய் ஜோடித்து நடத்தி வந்தார். இவரது நாடகங்களைப் பார்க்க தனது ஆபீஸ் ஆங்கில உத்தியோகஸ்தர்களையெல்லாம் எப்போதும் இவர் வரவழைப்பது வழக்கமாகும். இவர் தனது 60வது வயதானவுடன் உபகாரசம்பளம் பெற்று பல வருடங்கள் வாழ்ந்திருந்து இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பாகதான் காலகதியடைந்தார். அச்சமயம் எனது சிறந்த நண்பர்களுள் ஒருவராகிய இவரை எனக்கு முன்பாக மரித்ததைப் பற்றி நான் மிகவும் வருத்தப்பட்டேன். இவரைப் போல் இன்னும் சிறந்த நடிகர்கள் இருப்பார்களாயின் தமிழ் நாடகமானது இப்போது இருப்பதைவிட இன்னும் கியாதி பெற்றிருக்கும் என்று நான் உறுதியாய் கூறுவேன்.
-------------

46. ஸ்ரீ பாபநாசம் சிவன்

இவரை நான் முதல் முதல் கோயமுத்தூருக்குப் போயிருந்தபோது அங்கு சந்தித்தேன். மணிமேகலை பேசும் படத்தை தயாரித்தவர் என்னை அதில் சில சீர்திருத்தங்கள் செய்ய கேட்டதுபோல் பாபநாசம் சிவன் அவர்களை பல புதிய பாட்டுகள் எழுதும்படி வரவழைத்தார். அங்கு நான் தங்கியிருந்தபோது இவருடன் பேசிக்கொண்டிருக்கையில் "நான் உங்களுடைய சில நாடகங்களில் பல வருடங்களுக்குமுன் நடித்திருக்கிறேன், முக்கியமாக மார்க்கண்டேயர் நாடகத்தில் நான் மார்க்கண்டேயனாக நடித்ததை பலர் புகழ்ந்திருக்கின்றனர்" என்றார். இவரை நான் கோயமுத்தூரில் பார்த்த சமயத்திலேயே இவர் வயோதிகராகத் தோற்றப்பட்டார். ஆயினும் தான் கட்டிய பாட்டுக்களை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதில் தளரா ஊக்கமுடையவராய் இருந்தார் என்பதை நான் அறிவேன், ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் "ஒரே ராகத்தில் ஒரு நாடகத்திற்கு பல ரசங்களுக்கேற்றபடி நான் கட்டிக் கொடுக்கமுடியும். அதன் சூட்சுமம் என்னவென்றால் மெட்டுக்களை பாவத்திற்கு தக்கபடி மாற்றவேண்டும்” என்றார். எனக்குத் தெரிந்தபடி இவர் சென்ற நாற்பது ஐம்பது வருடங்களாக அநேக தமிழ் நாடகங்களுக்கும் தமிழ் பேசும் படங்களுக்கும் மிகவும் இனிய பாட்டுகளை எழுதிக் கொடுத்திருக்கிறார் என்பது தமிழ் நாடக அபிமானிகள் அனைவரும் அறிந்த விஷயமே. இத்திறமைக்காக சென்ற வருடம் சங்கீத நாடக சங்கத்தார் இவருக்குப் பரிசு அளித்தது, இதை படிக்கும் நண்பர்களுக்கு தெரிந்திருக்கலாம். ஈசன் கருணையால் இன்னும் பல்லாண்டு அதன் தொண்டினை செய்து நாடகத்தின் இசைப் பகுதியை மேம்படுத்துவாராக!
-------------

47. திரு. N. S. கிருஷ்ணன்

இவர் சிறு வயதிலேயே நாடகக் கம்பெனிகளில் நடிக்கும் நடிகர்களைப்போல் நடித்து அவர்களை ஏளனம் செய்து வந்தார். இந்த வழக்கம் முற்றி பெரியவனான பிறகு நல்ல ஹாஸ்ய நடிகரானார். அதன்பேரில் இவரும் இவருடன் சேர்ந்து நடிக்க ஆரம்பித்த ஸ்ரீமதி மதுரம் அம்மாளும் ஹாஸ்ய பாகங்களுக்காகவே அநேகம் பேசும் படங்களில் அழைக்கப் பட்டு வந்தனர். இவருக்கு மரியாதை செய்ய ஒரு பெரும் கூட்டம் கூடினபோது ஒருவர் இவர் அதுவரையில் 102 பேசும் படங்களில் நடித்ததாக கூறியது ஞாபகமிருக்கிறது. சாதாரணமாக ஏதாவது ஒரு பேசும் படம் நன்றாயிராவிட்டால் இவரையும் ஸ்ரீமதி மதுரத்தையும் அதில் ஹாஸ்ய பாகத்தில் நடிக்கும்படி செய்தால் சரியாக போய்விடும் என்று சிலர் வேடிக்கையாய் சொல்வார்கள், இவரும் ஏதாவது பேசும் படம் சுவஸ்தமாயில்லாவிட்டால் எங்கள் ஆஸ்பத்திரிக்கு வந்தால் சுவஸ்தப்படுத்திவிடுவோம் என்று வேடிக்கையாய் சொல்வார். இவர் விதி வசத்தால் அந்திய காலத்தில் பெரும் கஷ்டம் அநுபவிக்க நேரிட்ட போதிலும் நடிப்பதை மாத்திரம் விடவில்லை. கடைசியில் பாகவதரைப் போல் வேஷம் பூண்டு “கிந்தனார்" என்னும் ஹாஸ்யக் கதையை நடத்தி சபை யோரை நகைக்கச் செய்தார். இவரும் தியாகராஜ பாகவதரைப்போல் நடுவயதிலேயே காலமானார்.
------------

48. திரு. தியாகராஜ பாகவதர்

இவர் சிறு வயதில் நாடகக் கம்பெனிகளில் சேர்ந்திருந்ததாக எனக்குத் தெரியாது. இவர் பெரிய பாடகராகி பெயர் பெற்ற பிறகுதான் பேசும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். சங்கீதத்தில் மிகவும் புகழ்பெற்றவர். நல்ல கம்பீரமான குரலுடையவர். இவருடைய சங்கீதத்திற்காகவே பல படங்களில் முக்கிய பாத்திரங்கள் கொடுக்கப்பட்டன. ஆயினும் கொஞ்சம் குறைந்த வயதுடையவரா யிருந்தபடியால் திரோத்தாத பாத்திரங்களில் இவர் நடிப்பது அசாத்தியமாயிருந்தது. இவர் பாட்டுக்களை கேட்பதற்கே இவர் நடிக்கும் படங்களில் ஜனங்கள் குழுமி இருந்தனர். இவர் தன் கடைசி காலத்தில் துரதிர்ஷ்ட வசத்தால் பெரும் கஷ்டத்திற்குள்ளாயினார். அதன் பேரில் தெற்கே ஓர் சிவாலயத்திற்கு சென்று பணி செய்து வந்து காலத்தைக் கடத்தி அவ்விடமே காலமானார்.
-------------

49. திரு. T. S. பாலையா அவர்கள்

இவர் நாடக மேடையில் நடித்ததைப்பற்றி நான் எழுதுவதற்கு ஒன்றுமில்லை, பேசும் படங்களில் பன்முறை நடிக்திருக்கிறார். முக்கியமாக வில்லன் (Villain) பாகங்களில் இவர் நடிப்பது வழக்கம். வில்லன் என்றால் நற்குணமுடைய முக்கிய பாத்திரத்திற்கு கெடுதி செய்யும் பாத்திரம் என்று பொருள். இப்படி நடிப்பது சுலபமல்ல, இவைகளில் இவர் நன்றாய் நடித்ததற்காக சென்னை சங்கீத நாடகசபையாரால் வெகுமானம் பெற்றிருக்கிறார்.
-------------

50. திரு. V. T. செல்லம்

இவர் முழுப் பெயர் V. தணிகாசலம். இவர் கவர்ன்மெண்ட் ஆபீஸில் உயர்தர உத்தியோகத்தில் இருந்தவர். அங்கிருக்கும் போதே பூனாவில் ஒரு தமிழ் நாடகசபையை ஏற்படுத்தினார். அதில் தானே முக்கிய பாகங்களை எடுத்துக் கொண்டார். மற்றவர்களுக்குக் கற்பிப்பதிலும் நல்ல திறமை யுடையவர். என்னுடைய பல நாடகங்களை என் அனுமதி பெற்று நடத்தி வந்தார். ஆயினும் இவரை நான் முதலில் சந்தித்தது, பம்பாயில். அங்கு நான் மனோகரா பேசும் படத்தில் புருஷோத்தமராக நடிக்கப் போயிருந்தபோது முதலாளிகள் தாங்கள் முதலில் தேர்ந்தெடுத்த ஒருவர் மனோகரனாக நடிக்க சரியாயில்லை என்று சென்னை மாவட்டத்திற்கு வந்து பரிசோதித்து திரு. செல்லம் அவர்களை பொறுக்கி யெடுத்து பம்பாய்க்கு அழைத்து வந்தார்கள். நானும் செல்லத்துடன் கலந்து பேசி இவர் தகுந்தவர் என்றே கூறினேன். அதன்மீது மனோகராவில் என்னுடன் மனோகரனாக செல்லம் நடித்தார். நடிப்பு மிகவும் நன்றாயிருந்தது, ஆயினும் சங்கீதம் என்னைப் போலத்தான்.

இவர் பூனாவில் இருந்தபோது ஹிந்தி பாஷையிலும் பன்முறை நடித்ததாகக் கேள்விப்பட்டேன், இவருடைய முக்கியமான குணம் என்னவென்றால் நல்ல ஞாபகசக்தியே. பிறகு பல வருடங்கள் பொறுத்து இவரை நான் மறுபடியும் சந்தித்து பேசிய போது அவர் என் நாடகங்களில் மனோகராவிலும் அமலாதித்யனிலும் உள்ள பெரிய பாகங்களை அப்படியே ஒரு வார்த்தையும் தவறாது ஒப்புவித்தது ஞாபகமிருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பாக இவர் முழு சன்யாசம் வாங்கிக் கொண்டார். இன்னும் பல வருடம் இவர் அந்த ஆஸ்ரமத்தில் வசிக்க வேண்டுமென்று ஈஸ்வரனை பிரார்த்திக்கின்றேன்.
-----------

51. திரு. சுவர்ணலிங்கம் அவர்கள்

இவர் சிங்களத் தீவில் பிறந்து வளர்ந்தவர். சிறுவயதிலேயே நாடகமாட வேண்டுமென்று இச்சைகொண்டவர். ஆயினும் 1911-வது வருடம் சுகுணவிலாச சபை சிங்களத்திற்குப் போய் நாடகங்கள் ஆடியதை பார்த்தபின் அந்த இச்சை மேலிட்டவராய் 1913-வது வருடம் இலங்கை சுபோதவிலாச சபை என்னும் நாடகசபையை அங்கு ஸ்தாபித்ததில் மிக்க முயற்சிகள் எடுத்துக்கொண்டார். அதுமுதல் சுகுணவிலாச சபை இலங்கைக்குப் போனபோதெல்லாம் அவர்கள் ஆடிய நாடகங்களை மிகவும் கவனமாய் பார்த்து அவைகளில் தாமும் ஆட ஆரம்பித்தார். அப்படி இவர் ஆடிய நாடகங்களில் முக்கியமானவை மனோகரன், வேதாள உலகம், சிம்ஹௗ நாதன், விரும்பியவிதமே, தேரோட்டி மகன் முதலியவைகளாம். அவைகளில் எப்பொழுதும் முக்கிய பாத்திரங்களையே மேற்கொள்ளாது வெவ்வேறுவிதமான பல பாத்திரங்களை நடித்துள்ளார். அவ்வாறு இவர் நடித்த முக்கிய பாத்திரங்கள் தத்தன், ஈயாகாமன், சித்திரசேனன், அச்சுதன் என்பனவாம். இவரது நடிக்கும் திறமையின் ஒரு முக்கிய குணம் என்ன வென்றால் வெவ்வேறுவிதமான பலவித நாடக பாத்திரங்களை நடித்ததேயாம். அதற்கு உதாரணமாக மேற்சொன்ன பாத்திரங்களன்றி பரதன், கூனி, செம்படவன். விஸ்வாமித்திரர், வள்ளித்திருமணத்தில் கடைசி தம்பி, எல்லாள மகாராஜா, சந்திரஹரி முதலியவைகளையும் நடித்து நல்ல பெயர்பெற்றிருக்கிறார். இன்னும் 101 வயதுக்கிழவன், பிரதமர் சேன நாயகா, கள்ளிறக்குபவன், கதிர்காமர் முதலியவைகளையும் நடித்து நல்ல பெயர் பெற்றிருக்கிறார். இவ்வாறு பலவிதமான நாடகங்களில் நடித்து பெயர் பெறுவது ஓர் அருமையான குணமாம். இதுவுமன்றி தான் எந்த வேடம் பூண்டாலும் தானே மற்றொருவர் உதவியின்றி தக்கவாறு வேடம் பூணுவதில் மிகவும் நிபுணர்.

இவர் மனோகரனாக நடித்தபோது ஒருமுறை ஆங்கில போர் படைக்கல உத்தியோகஸ்தர் ஒருவர் வந்து அதை கடைசி வரை பார்த்திருந்து நாடக முடிவில் இவர் நடித்ததைப்பற்றி மேடையின் மீதேறி மிகவும் புகழ்ந்து பேசியிருக்கிறார். இப்போது வயதாகியும் இலங்கைத் தீவில் அநேக நாடகசபைகளில் நடித்து வருகிறார். இலங்கை நாடக அபிமானிகள் இவரது நடிப்பை புகழ்ந்து இவருக்கு கலையரசு, நாடககலாமணி என்ற பட்டப்பெயர்களை கொடுத்திருக்கின்றனர். சுருக்கிச் சொல்லு மிடத்து இலங்கையில் எங்கு தமிழ் நாடகம் நடந்தாலும் இவரது உதவியை நாடாதவர்கள் ஒருவருமில்லை, இவருக்கு பல சமயங்களில் நாடக அபிமானிகள் பொற்பதக்கம் முதலிய வைகளை அளித்து மரியாதை செய்திருக்கின்றனர். இவர் என்னைப்பற்றி யாருடன் பேசுவதாயிருந்தாலும் தன் குருநாதர் என்று சுட்டி பேசியிருக்கிறாராம். அப்பட்டபெயரை வகிக்க எனக்குத் திறமையுண்டோ இல்லையோ எனக்குத் தெரியாது, ஆயினும் இதை இங்கு எழுதியதன் காரணம் இவருக்கு என்மீதுள்ள அன்பேயாம் என்று நினைக்கிறேன், இவர் தற்காலத்தில் தன் முதிர்வயதிலும் பல நாடக சபைகளுக்கு போஷகராயிருந்து அவைகளை உற்சாகப்படுத்தி வருகிறார். ஒருமுறை சிங்களத்து நாடக அபிமானியாகிய ஒரு பெரியார் 'இந்தியாவில் தமிழ்நாட்டில் சம்பந்த முதலியார் எப்படி பெயர் எடுத்தாரோ அப்படியே இலங்கையில் சொர்ணலிங்கம் பெயர் பெற்றிருக்கிறார்" என்று கூறியதாக கேள்விப்பட்டிருக்கிறேன். இவர் இன்னும் பல்லாண்டு வாழ்ந்து தமிழ் நாடகத்தின் பெருமையை இலங்கைவாசிகள் நன்றாய் அறியும்படி விடா முயற்சிகொண்டு உழைக்கவேண்டுமென்று எல்லாம்வல்ல ஈசன் அருளைப் பிரார்த்திக்கின்றேன்.
------------

52. திரு. M. S. முத்துகிருஷ்ணன்

இவர் சென்னையில் பிறந்தவர், சிறுவயதிலேயே நாடக சபையில் சேர்ந்து பால பார்ட்டுகள் நடித்து கொஞ்சம் பெயரெடுத்து பிறகு பெரியவனான பிறகு தானே ஒரு நாடகக் கம்பெனியை ஏற்படுத்தி நடத்தினார். ஜெகன்னாத ஐயர் பாய்ஸ் கம்பெனியில் நடித்தவர்களுள் ஒருவர். இவர் பிறகு பெயர் பெற்ற பல நடிகர்களுக்கு சிறு வயதில் நடிப்புக் கலையை நன்றாக கற்பித்தவர். பிறகு பேசும்படம் தோன்றியபோது பல பேசும் படங்களில் நடித்துள்ளார். இவர் எனக்கு முக்கிய உதவி செய்தது என்னவென்றால் எனது பிராம்மணனும்---சூத்திரனும் நாடகத்தின் பெயரை மாற்றி அதை அப்படியே 33 நாட்கள் நடத்தினார். இதை நான் இங்கு குறிப்பதற்கு முக்கிய காரணம் நாடகத்தின் பெயர்களிலும் சூட்சுமம் இருக்கிறது என்று இதைப் படிப்பவர்களுக்கு அறிவிக்க வேண்டு மென்பதாம், நான் எழுதிய நாடகங்களுள் பிராம்மணனும் சூத்திரனும் என் அபிப்பிராயத்தில் ஒரு முக்கிய நாடகமாம், அப்படியிருந்தும் அப்பெயரை கேட்டவர்கள் பயந்து அதன் அருகில் போகாமல் விட்டனர். இருவர் உள்ளம் என்று பெயரை மாற்றியுடனே இது பிரகாசிக்க ஆரம்பித்தது. ஆங்கிலத்தில் "பெயரில் என்னயிருக்கிறது ரோஜாவுக்கு எப் பெயர் வைத்தாலும் அதன் மணம் குன்றாதல்லவா" என்று ஒரு பழமொழி உண்டு . இவர் நடித்த முக்கிய நாடகப் பாத்திரங்கள் ஜெயபாலன், கண்டிராஜன், மனோகரன், கோபாலன் B.A., கம்ஸன், கங்காதரன் முதலியவைகளாம். இவர் தன் உடல் நலத்தை ஜாக்கிரதையாக பார்த்துக்கொண்டு தற்போது வயதாகியும் நல்ல தேகஸ்திதியில் இருக்கிறார்.
-----------

53. திரு. P. D. சம்பந்தம்

இவரை நான் முதன் முதல் பார்த்தது ஜகன்னாத ஐயர் பாய்ஸ் கம்பெனியில். அது முதல் இவர் சாதாரணமாக ஹாஸ்ய பாகங்களையே ஆடி வந்தார். இவர் நடித்த முக்கிய பாகங்கள் ரத்னாவளியில் பப்பரவாயன், மனோகராவில் வசந்தன், சபாபதி நாடகங்களில் சாதாரணமாக வேலைக்கார சபாபதி முதலிய பாகங்களாம். பிறகு சினிமாவில் அனேக சில்லரை வேடங்கள் தரித்திருக்கிறார், இவருடைய முக்கியமான நற்குணம் என்னவென்றால் தன் உடல் நலத்தை எப்பொழுதும் ஜாக்கிரதையாக பார்த்துக் கொண்டிருப்பதேயாம். இப்பொழுது நடுவயதிற்கு மேற்பட்டவராயினும் இன்னும் சினிமாவில் அடிக்கடி நடித்து வருகிறார். நான் முக்கியமாக இவரைப் பற்றி எழுத வேண்டியது ஒன்றுளது. சுகுண விலாச சபை நாடகங்களை மிகவும் கவனமாய் பார்த்ததினாலேயோ அல்லது கந்தசாமி முதலியார் அவருக்கு கற்பித்ததினாலேயோ எனது நாடகங்களில் எல்லா பாகங்களை மற்றவர்களுக்கு கற்பிப்பதில் நிபுணராயிருக்கிறார். யாராவது எனது நாடகங்களை மேடையிலோ அல்லது பேசும்படத்திலோ ஏதாவது ஒன்றை எடுத்துக் கொண்டால் அதில் யார் யார் எப்படி நடிக்க வேண்டுமென்று அறியவேண்டுமாயின் P. D. சம்பந்தத்தை போய் கேட்டுக் கொள்ளுங்கள் என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். இவர் இன்னும் பல்லாண்டு திடகாத்திரனாய் வாழ்வாராக.
--------------

54. திரு. சாரங்கபாணி

இவரும் மேற்சொன்ன P. D, சம்பந்தத்தை போல் ஜகன்னாத ஐயர் பாய்ஸ் கம்பெனியில் சிறு வயதில் ஆடியவர். முதன் முதலில் அக்கம்பெனியில் காட்சிக்கும் காட்சிக்கும் இடைநேரம் ஏதாவது வந்தால் அச்சமயங்களில் 'மீன் பாட்டு' 'கத்திரிக்காய் கூடை கொண்டாடி' முதலிய பாட்டுகளை இவர் பாடி வந்தது நன்றாய் ஞாபகமிருக்கிறது. இவரிடத்திலிருந்த முக்கிய குணம் என்னவென்றால் தனக்கு ஹாஸ்ய பாகங்கள் தான் பொறுத்தமானவை மற்ற பெரிய பாகங்களை எடுத்துக் கொள்வதில்லை என்று தீர்மானித்தது. ஆதிமுதல் இதுவரையில் ஹாஸ்ய பாகங்களையே மேற்கொண்டு நடித்து வருவதாம். எனது 'சபாபதி முதல் பாகத்தில் தமிழ் வாத்தியாராக இவர் பன்முறை நடித்ததை நான் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். இவர் நடுவயத்திற்கு மேலாகியும் இன்னும் சினிமாவில் நடித்து வருகிறார். இவரிடம் நான் மெச்ச வேண்டிய குணம் என்ன வென்றால், பணம் சம்பாதித்த பல நடிகர்களைப் போல் பணத்தை விரயம் செய்து தேக நலத்தையும் கெடுத்துக் கொண்டு ஏழைகள் ஆனதைப் போலல்லாமல் தன் உடம்பையும் சம்பாதித்த பணத்தையும் வைத்தும் கொண்டு ஜாக்கிரதையாய் வாழ்ந்து வருவதேயாம். இவர் இன்னும் பல்லாண்டு மேடை நாடகங்களிலும் பேசும் படங்களிலும் நடித்து தமிழ் நாடக அன்னைக்கு தொண்டு செய்து வருவாராக.

இது வரையில் நான் எழுதியதை அச்சிட அனுப்பிய போது இதை படித்த சில நண்பர்கள் "இதென்ன சம்பந்தம் — உங்கள் சுகுண விலாச சபையின் மிகச் சிறந்த நடிகர்களான அ. கிருஷ்ணசாமி ஐயர், C. ரங்க வடிவேலு, S. பத்மநாபராவ் முதலிய மிகச்சிறந்த நடிகர்களைப் பற்றி என் ஒன்றும் எழுதாது விட்டீர்" என்று என்னை கேட்டனர். அதே கேள்வி இதைப் படிக்கும் பல நாடக அபிமானிகளுக்கும் மனதில் பட்டிருக்கலாம். இக்கேள்விக்கு நான் தக்க பதில் சொல்ல வேண்டியவனாய் கடமைப் பட்டிருக்கிறேன். இதற்கு முக்கிய காரணம் அம் மூவர்களைப் பற்றியும் இன்னும் சுகுண விலாச சபையில் என்னுடன் நடித்த சில நண்பர்களைப்பற்றியும் மதுரை டிரமாடிக் சங்கத்தில் என்னுடன் நடித்த சில நடிகர்களைப் பற்றியும் எழுதாதற்குக் காரணம் அவர்களையெல்லாம் பற்றி விவரமாய் "நாடக மேடை நினைவுகள்" என்னும் என் நூலில் எழுதியிருக்கிறேன். ஆகவே அதையெல்லாம் பெயர்த்து இந் நூலில் எழுதுவது அநாவசியம் என்று எழுதவில்லை, அவர்களையெல்லாம் பற்றி இதைப் படிக்கும் எனது நண்பர்கள் யாராவது அறிய வேண்டுமென்றால் அந்நூலில் நான் எழுதி யுள்ளதை படித்துக் கொள்ள வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன்.

இச்சிறு நூலை இத்துடன் முடிக்கின்றேன், ஈசன் கருணையால் தமிழ் நாடகம் வாழ்க. தமிழ் நடிகர்கள் வாழ்க.
--------------

பிழை திருத்தம்

இந்நூலின் 24 ஆவது பக்கத்தில் திரு. சிவாஜி கணேசன் டி. கே. எஸ். பிரதர்ஸ் நாடகக் கம்பெனியில் நடித்தவர் என்று குறிப்பிட்டிருப்பது தவறு. இவர் யதார்த்தம் திரு. டி. பி. பொன்னுசாமி பிள்ளையின் நாடகக் கம்பெனியில் தேர்ச்சி பெற்றவர். திரு. சி. என். அண்ணாதுரை அவர்களின் "சந்திர மோகன்" நாடகத்தில் "சிவாஜி" யாக சிறப்பாக நடித்ததால் இவருக்குப் பெரியார் ஈ. வெ. ரா. அவர்களால் 'சிவாஜி' என்னும் பட்டம் வழங்கப் பெற்றது.
----------------

ப. சம்பந்த முதலியார் மற்ற நூல்கள் :

லீலாவதி - சுலோசனை, சாரங்கதரன், மகபதி, காதலர் கண்கள்.
தற்கும் தெய்வம், மனோஹரன், ஊர்வசியின் சாபம், இடைச்சுவர் இருபுறமும்,
என்ன நேர்ந்திடினும், விஜயரங்கம், தாசிப்பெண், மெய்க்காதl,
பொன்விலங்கு, சிம்ஹளநாதன், விரும்பிய விதமே, சிறுத்தொண்டர்,
காலவரிஷி, ரஜபுத்ரவீரன், உண்மையான சகோதraன், சதி - சுலோசனா,
புஷ்பவல்லி, உத்தமபத்தினி, அமலாதித்யன், கள்வர் தலைவன்,
சபாபதி முதற்பாகம், பொங்கல் பண்டிகை அல்லது சபாபதி இரண்டாம் பாகம்,
ஓர் ஒத்திகை அல்லது சபாபதி மூன்றாம் பாகம், சபாபதி நான்காம் பாகம்,
பேயல்ல பெண்மணியே, புத்தா அவதாரம், விச்சுவின் மனைவி, வேதாள உலகம்,
மனைவியால் மீண்டவன், சந்திரஹரி, சுபத்ரார்ஜூனா, கொடையாளி கர்ணன்,
சஹதேவன் சூழ்ச்சி, நோக்கத்தின் குறிப்பு, இரண்டு ஆத்மாக்கள்,
சர்ஜன் ஜெனரல் விதித்த மருந்து, மாளவிகாக்னிமித்ரம், விபரீதமான முடிவு,
சுல்தான் பேட்டை மாஜிஸ்டிரேட், சகுந்தலை, காளப்பன் கள்ளத்தனம்,
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும், நாடகமேடை நினைவுகள், நாடகத்தமிழ், யயாதி, பிராமணனும் சூத்திரனும், வாணீபுர வணிகன்,
இரண்டு நண்பர்கள், சத்ருஜித், ஹரிச்சந்திரன், மார்க்கண்டேயர், ரத்னாவளி,
மூன்று விநோத நாடிகைகள், வைகுண்ட வைத்தியர். தீட்சிதர் கதைகள்,
ஹாஸ்யக் கதைகள், குறமகள், நல்லதங்காள், சிறுகதைகள்,
நடிப்புக் கலையில் தேர்ச்சி பெறுவதெப்படி? ஹாஸ்ய வியாசங்கள்,
தமிழ் பேசும் படக் காஷி, விடுதிப் புஷ்பங்கள், பேசும்பட அனுபவங்கள், வள்ளிமணம், கதம்பம், மாண்டவர் மீண்டது, ஆஸ்தானபுர நாடக சபை,
சங்கீதப் பயித்தியம், ஒன்பது குட்டி நாடகங்கள், சபாபதி ஜமீந்தார்,
சிவாலயங்கள் இந்தியாவிலும் அப்பாலும் சிவாலய சிற்பங்கள், சதிசக்தி.
மனை ஆட்சி, இந்தியனும் ஹிட்லரும், தீபாவளி வரிசை, காலக் குறிப்புக்கள்,
சுப்ரமண்ய ஆலயங்கள், தீயின் சிறு திவலை, கலையோ காதலோ,
உணவுப் பொருள்கள், சபாபதி துவிபாஷி, சபாபதி துணுக்குகள்,
இல்லறமும் துறவறமும், சபாபதி முதலியாரும் பேசும் படமும்,
நான் குற்றவாளி, நீண்ட ஆயுளும் தேக ஆரோக்யமும்,
தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை, பலவகைப் பூங்கொத்து,
என் சுயசரிதை முதலியன.
--------------


This file was last updated on 25 Dec. 2022
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)