pm logo

கோவை கு. நடேச கவுண்டர் இயற்றிய
திருவேரகம் சுவாமிநாதன் பிள்ளைத்தமிழ்


tiruvErakam cuvAminAtan piLLaittamiz
by kOvai ku. naTEcak kauNTar
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to the Swamimalai Devastham, Kovai and GuhaSri for providing a scanned PDF of this work.
We thank Dr. Meenakshi Balaganesh, Bangalore, India for her assistance in the preparation of the soft copy of this work for publication.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2023.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.

Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

கோவைக் கவியரசு கு. நடேச கவுண்டர் இயற்றிய
திருவேரகம் சுவாமிநாதன் பிள்ளைத்தமிழ்

Source:
திருவேரகம் ஸ்ரீசுவாமிநாதன் பிள்ளைத்தமிழ்
விரிவுரை
சுவாமிமலை ஸ்ரீசுவாமிநாத சுவாமி தேவஸ்தான வெளியீடு
நிர்வாக தர்மகர்த்தர்: ஸ்ரீ S. இராமா அமிர்த உடையார் அவர்கள்
உ -- சிவமயம் -- திருச்சிற்றம்பலம்
கோவைக் கவியரசு கு. நடேச கவுண்டர் இயற்றிய
திருவேரகம் சுவாமிநாதன் பிள்ளைத்தமிழ்
உரையாசிரியர்: குக ஸ்ரீ
சென்னை அறநிலையப் பாதுகாப்பு இலாகா ஆணையாளர்:
உயர்திரு A. உத்தண்ட ராமன், B.A.B.L., I.A.S. அவர்கள் முன்னுரையுடன்
ஸ்ரீசுவாமிமலை தேவஸ்தான வெளியீடு
விளம்பி, மார்கழித் திங்கள்) 1958
(விலை ரூ.1
குமரன் அச்சகம், 28, திருப்பள்ளி வீதி , சென்னை - 1
-------------------------------------------
      உ
முருக சரவணபவ சண்முக குக
சென்னை அறநிலையப் பாதுகாப்பு இலாகா ஆணையாளர்
உயர்திரு. A. உத்தண்ட ராமன், B.A.B.L., I.A.S. அவர்கள் சிறப்புரை


"ஈசருடன் ஞானமொழி பேசுமுகம் ஒன்றே"
"ஏரக வெற்பெனும் அற்புதமிக்க சுவாமி மலைப்பதி"
      - அருணகிரிநாதர்.

'ஆறெழுத் தடக்கிய அருமறைக் கேள்வி
நாஇயல் மருங்கின் நவிலப் பாடி
விரைஉறு நறுமலர் ஏந்திப் பெரிதுவந்து
ஏரகத் துறைதலும் உரியன்.'
      - நக்கீரர்

'சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும்
ஏரகமும் நீங்கா இறைவன்கை வேலன்றே.'
      - சிலப்பதிகாரம்.

'நமதுசக்தி அறுமுகவனும் யாமும் பேதகமல்லம்'.
'தன் திருச் செவியை நல்கச் சண்முகன் குடிலை என்னும்
ஒன்றொரு பதத்தி னுண்மை உரைத்தனன் உரைத்தல் கேளா
நன்றருள் புரிந்தா னென்ப ஞானநா யகனா மண்ணல்.'
      - கந்தபுராணம்


தனக்குத் தானே மகனாகிய தத்துவன்
தனக்குத் தானே ஒரு தாவரும் குருவுமாய்த்
தனக்குத் தானே அருள் தத்துவம் கேட்டலும்
தனக்குத்தான் நிகரினான் தழங்கிநின் றாடினான்.'
      - தணிகைப் புராணம்.

பொன்னங் கடுக்கைப் புரிசடையோன் போற்றிசைப்ப
முன்னம் பிரமம் மொழிந்தோனே.'
      - கந்தர் கலிவெண்பா.

ஓமெனும் எழுத்திற் பிரமம் பேசிய
நான்மறை விதியை நடுங்கு சிறை வைத்தும்
படைப்பு முதல் வான் முதற் கூடித்
தாதையு மிரப்பத் தளையது விடுத்தோய்.'
      - கல்லாடம்.

வரைத்தடம்புரை மழவிடை யெம்பிரான்
      மனமகிழ்ந்திட வாக்கால்
இரைத்த பல்கலைப் பரப்பெல்லாம் திரட்டிமற்
      றிதுபொரு ளெனமேனாள்
உரைத்த தேசிகா!'
      - பகழிக் கூத்தர்.

முருகப் பெருமானுடைய படைவீடுகள் ஆறனுள் திருவேரகம் என்ற சுவாமிமலை, கும்பகோணத்தருகே காவிரியின் வடகரையில் உள்ளது. இங்குக் கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் மூர்த்தி சுவாமிநாதன்.

பழனி ஆலயத்தின் ஆதரவில் சென்னை, கிடங்குத் தெரு - ஸ்ரீபாலசுப்ரமண்யம் கம்பெனியார் ஆண்டுதோறும் முருகன் புகழ்நூல் ஒன்று வெளியிட்டு, அதன் வருமான மனைத்தையும் மீண்டும் இறைபணிக்கே பயன்படச் செய்து வருகின்றனர். சென்ற ஆண்டு முருகன் பிள்ளைத்தமிழ்த் திரட்டு ஒன்று புலவர் குகஸ்ரீ ரசபதியவர்கள் துணைகொண்டு தொகுத்து வெளியிட்டனர். அதுபோது சுவாமிமலைக்கு நல்லதோர் பிள்ளைத்தமிழ் கிடைக்கவில்லை. இக்குறையைப் பூர்த்தி செய்யவே இந்நூலாசிரியரைக் குகஸ்ரீ ரசபதியவர்கள் அணுகினார்கள். பலகவிகள் பாடியும் பல வடமொழி நூல்களை மொழி பெயர்த்தும் புகழ்பெற்ற இந்நூலாசிரியர் கவியரசு கு. நடேச கவுண்டரவர்கள், முன்னாளிரவு கூத்தப்பெருமான் அருளை நாடி ஓர் பாடல் எழுதி வைத்து உறங்கி மறுநாள் விழித்ததும், குகஸ்ரீ ரசபதியவர்கள் எழுதியனுப்பிய திருமுகம் கிடைக்கப் பெற்றனர். இரத்தினசபாபதி என்ற பெயர் தாங்கிய புலவர் குகஸ்ரீ ரசபதி மூலம், இறைவன் திருவருள் இந்நூலுக்குத் துணை செய்ததென்றே கருத வேண்டுமன்றோ!
.
இவ்வாசிரியர் நூலறிவும் மதிநுட்பமும் சமய அறிவும் இறையருளும் நிரம்பப் பெற்றவர். பழநியாண்டவர் மயில்விடு தூது, எட்டிகுடி பிள்ளைத்தமிழ், மங்கையர்க்கரசி பிள்ளைத்தமிழ் முதலிய பல கவிகளைப் பாடிய பெரும்புலவர். இவரது கற்பனைத் திறனைப் பல பாடல்களில் காணலாம். இதற்கு உரை எழுதிய குகஸ்ரீ ரசபதியவர்களும் சிறந்த முருக பக்தர். நுண்ணறிவும் நூலாராய்ச்சியும் படைத்த குணசீலர்.

பிள்ளைத்தமிழ் என்பது தமிழுக்கே உரிய தனிச்சிறப்புடைய பிரபந்தம். தான் வழிபடு கடவுளைக் குழந்தையாகப் பாவித்து, பிள்ளைப் பருவங்களைப் பத்துப் பருவங்களாகப் பிரித்து, அவ்வப் பருவங்களுக்கேற்ற செயல்களைக் குறித்த பாடல்கள் பிள்ளைத்தமிழ் எனப்படும். தமிழ் என்றால் தமிழ்ப் பாடல்களைக் குறிக்கும். 'நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன்' என்று சுந்தரர் கூறியமையும் தனிப் பாடல்களை, சம்பந்தரே ''திருநெறிய தமிழ்", "ஆரா அருந்தமிழ்', 'உருவாரும் ஒண்டமிழ்', 'சந்தமார்ந்தழகாய தண்டமிழ்', "பண்பொலி செந்தமிழ்" எனப் பலப்படக் குறிப்பிட்டுள்ளமையும், 'என்னை நன்றாக இறைவன் படைத்தனன், தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே' என்று திருமூலர் கூறியமையும் காண்க.

'சாற்றரிய காப்புச்செங் கீரைதால் சப்பாணி, மாற்றரிய முத்தமே வாரானை - போற்றரிய; அம்புலியே சிற்றிலே ஆய்ந்த சிறுபறையே, பம்புசிறு தேரோடு பத்து' எனும் பிள்ளைக்கவி, குழந்தையின் பத்துப் பருவங்களைக் கொண்டது.

இந்நூலாசிரியரின் இறையன்பும் அருளனுபவமும் பல பாடல்களில் காண்கிறோம். சமரச நெறியில் சமய உண்மைகளையும் புராண வரலாறுகளையும் அமைத்திருப்பதும் ஓர் சிறப்பியல்பாகும். அதில் விரவிவரும் சந்தப்பாக்களும் அழகுற அமைந்துள்ளன. ஒவ்வொரு பாடலும் படிக்குந்தோறும் அறிஞர் கருத்தைக் கவர்வனவாகவே உள்ளன. சில பாடல்களை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன்.

காப்பு: குழந்தையின் 3-ம் மாதம் வரை காப்புப்பருவம். விநாயகர் காப்புச் செய்யுளில் நம்பியாண்டார் நம்பி மூலம் திருமுறைகளை வெளிப்படுத்திய பொல்லாப் பிள்ளையாரைப் போற்றியுள்ளது பொருத்தமே. காப்புக்கடவுள் திருமாலுக்கே முதற்செய்யுள் அமைக்கப் பெற்றுள்ளது. வள்ளியம்மை மொழியினும் அருணகிரிநாதர் திருப்புகழே முருகனுக்கு இனியதென்று பாராட்டிய நயம் போற்றத் தக்கது.

செங்கீரை: 5-ம் மாதம் செங்கீரைப் பருவம்: 'குழலினிது யாழினிது என்ப தம் மக்கள் மழலைச்சொல் கேளாதவர்' என்பது குறள். இது, குழந்தையின் பொருள் தெரியாத ஓசை எழும் பருவம். இதில், 'ஒரு மொழியுரைப்பையேல் ஓதியுணராத ஞானம் ஒரு நொடியினில் எய்தி யுயர்கதி பெறுவம்' எனவும், 'சிவஞான போதமுரை யநுபூதி கைவர' எனவும், அஞ்சேல் எனும் சொல் விளம்பியருள் வேறு துணை ஏதுமறியோம்' எனவும் வரும் பகுதிகள் படித்தின்புறத் தக்கன.
தாலம்: 7-ம் மாதத்தில் குழந்தையைத் தாலாட்டித் துயிலுறச் செய்யும் வகையில் அமைந்த தாலப் பருவப் பாடல்களில்,

"பெரிய பொருளிஃதென்றுணரான் பிள்ளை
எனவே எள்ளிய அப் பிரமன்"
பட்ட நிலையும்,
''அரனார்க் கருமா மறைப்பொருளை யருளும்
குழந்தைக் குருநாதன்"
பெருமையும், குறுமுனிக்குத் தமிழால் பிரமநிலை உபதேசித்த பெருங்கருணையும் பேசப்படுகின்றன.

சப்பாணி: 9-ம் மாதம் கையோடு கை சேர்த்துக் கொட்டும் சப்பாணிப் பருவத்தில், ‘மறைமுடிபு காட்டும் திருப்புகழ்க்குத் தாளம் இடல்போல் சப்பாணி கொட்டியருளே' என்னும் பகுதி, இப்புலவர்க்கு அருணகிரிநாதர் பாலுள்ள ஈடுபாட்டினைக் காட்டுகிறது.

‘சந்திப்போ தனைய செம் மேனிமுரு கைய’
என்ற பகுதி,
'ஞால மேலுறு மிரவொடு பகலுக்கு நடுவாய்,
மாலை யானதொன் றழிவின்றி வாழ்தரு குமாரனொக் கும்"
என்ற பாட்டினை நினைப்பூட்டுகின்றது.

‘சன்மார்க்க சித்திசேர் தொண்டர்குல தெய்வமே' என்னும் போது, 'வாயாரத் தன்னடியே பாடும் தொண்ட ரினத்தகத்தான்' என்ற அப்பர் திருவாக்கு நினைற்கு வருகிறது.
முத்தம்: 11-ம் மாதத்தில் குழந்தையிடம் முத்தம் தா' எனக் கேட்கும் பருவத்தில், "மமகார மற்றவர்கள் கருவூலம் ஒத்த குக" என்ற பகுதியும், கவிராஜ பண்டிதர் கதையை யமைத்துப் பாடியுள்ள 5-வது பாடலும் நன்கமைந்துள்ளன.

வாரானை: ஓராண்டில் தளர் நடையிட்டு வரும் குழந்தையை 'வா'வென்றழைக்கும் வாரானைப் பருவத்தில்,
"கனவுதனி லேனும் ஒரு காலின் வருக"
"சராசரமெ லாமுருவி யேகிய சொரூபநிலை
தன்னைஎவ் வாறுணர்குவோம்"
என்ற பகுதிகள் சுவையுள்ளவை.
"நானார் என் உள்ளமிது தானார் முளைத்தசில
ஞானங்களார்"
என்ற பகுதி திருவாசகக் கருத்தைக் கொண்டுள்ளது.

அம்புலி: 15-ம் மாதம் அம்புலியைக் குழந்தையோடு விளையாட அழைக்கும் பருவப் பாடல்கள், பிள்ளைத்தமிழ்ப் பிரபந்தத்தில் தனிச் சிறப்புடையவை.
'இடக்கண் ணமர்ந்து உமையுமானாய்
சோமனென் பெயரினாற் கண்ணுதற் கடவுளானாய்
உலகை வலம் வந்து சண்முகன் தானுமானாய்
தண்ணமுது புலவர்க் களித்தோம்பும் இயல்பினால்
தண்டமிழர் வேந்துமானாய்'
என்ற பாடலும்,
"வெள்ளம் பயிலும் கங்கைந்தி
மேவி வெள்ளாளனுமாகி"
என்ற பகுதியும்,
மதியாலழிந்தவரையும், முருகனால் உயர்ந்தவரையும் குறிப்பிட்டுள்ள 9-வது பாடலும் சிறந்த பகுதிகள்.

சிற்றில்: சிறுமியர் கட்டி விளையாடும் சிறு வீடுகளைச் சிதைத்தல், ஆண் குழந்தைகளுக்கு ஓர் விளையாட்டு. 'சிற்றில் சிதையேல்' என்று அச்சிறுமியர் வேண்டுவதாய் அமைந்த சிற்றிற் பருவப் பாடல்களில்,

சிவபெருமான் உமாதேவியார் கண்ணன் வள்ளியம்மை முதலியோரைப் பற்றிய புராண வரலாறுகள், அழகுற அமைத்துப் பாடப் பெற்றுள்ளன. பத்தாவது பாடலில், 'உந்தை புத்தூர் வருபாவை ஒருத்தி மணத்தை ஒரு கால்முன், ஒழித்த பவத்தால் இருகாலும் உறுத்த ஆரூர் வீதி எல்லாம், முந்தையிருளில் நடந்தலைந்த முறைமை யறியாய்' என்ற பகுதி சுவை மிக்கது.
சிறுபறை: முருகனைச் சிறுபறை முழக்கியருளும்படி அழைக்கும் பாடல்களில் சித்தாந்தக் கருத்துக்கள் நிறைந்துள்ளன.

சிறுதேர்: சிறுதேர் உருட்டும்படி முருகனை வேண்டிப் பாடிய சிறுதேர் பருவப் பாடல்களில் பல, தாயுமான சுவாமிகள் நடையில் அமைந்துள்ளன.
இந்நூலில் உள்ள பாடல்கள் இனிய எளிய நடையில் யாவரும் படித்து இன்புறும் வகையில் அமைந்திருப்பதால், முருகனடியார்கள் அனைவரும், சிறுவர் பெரியோர் ஆண் பெண் என்ற பாகுபாடின்றி ஓதியுணர்ந்து, சுவாமிநாதப் பெருமான்றிருவருளைப் பெற்று இம்மை இன்பம், மறுமை இன்பம், பேரின்பமெல்லாம் பெற்றுய்வார்களாக.
''ஆறுமுகத்தெம் அண்ணலே போற்றி
ஈறில் தமிழுரை இறைவா போற்றி".
'துய்யதா மறைகளாலுந் துதித்திட வரியதான
செய்யசே வடிகள் வாழ்க சேவலும் மயிலும் வாழ்க
வெய்யசூர் மார்புகீண்ட வேற்படை வாழ்க அன்னான்
பொய்யில்சீர் அடியார் வாழ்க வாழ்க இப் புவனியெல்லாம்.
      அ. உத்தண்டராமன்,
      25- 3-58.
-------------------------------


சிவமயம்
கோவை, சிவக்கவிமணி, C.K. சுப்பிரமணிய முதலியாரவர்கள், BA.
வழங்கிய வாழ்த்துரை

      -------
கவியரசு, சைவத்திருவாளர் வித்வான் கு. நடேச கவுண்டர் இயற்றிய சுவாமிநாதன் பிள்ளைத்தமிழ் நூலைப் பார்த்துப் படித்து மகிழ்ந்தேன். இவர்கள் இதற்குமுன் மங்கையர்க்கரசியம்மை பிள்ளைத்தமிழ், எட்டிகுடி முருகன் பிள்ளைத்தமிழ் முதலிய பல நூல்கள் இயற்றியிருக்கின்றனர். வடமொழியிலிருந்து மொழிபெயர்ப்பு நூல்களும் பல இயற்றியுள்ளார். சிவபூசா துரந்தரர். முந்து நூல்கள் பயின்ற கல்வி மேம்பாடுடையவர். இவை எல்லாவற்றினும் மேலாய்ச் சிவன்பால் அன்பு மிக்குடையவர்.
பல கற்பனைத் திறங்களும் சந்த விகற்பங்களும் இந்நூலில் விளங்குகின்றன. அன்பின் மேம்பாடு பற்றியும் குமரநாயகன் கருணைத் திறங்களும் அழகாக விரிக்கப்பட்டுள்ளன. இந்நூல் நின்று நிலவுக. இவ்வாசிரியர் எல்லா நலங்களையும் பெற்று இனிது வாழ்க. சிவனருள் சிறக்க.
சேக்கிழார் நிலயம்
கோயமுத்தூர் (Sd.) C. K. Subramanian.
31- 10 - 57
------------------

கோவை, கணபதி, வித்துவான் க. கி. குமாரசிவம் அவர்கள் கூறிய
சாற்றுக்கவிகள்


அறுசீர் விருத்தங்கள்

1. சைவந் தழைக்கத் தமிழ்தழைக்கச்
      சதுர்மா மறைக ளவைதழைக்க
வையந் தழைக்க அறந்தழைக்க
      வரையிற் றழைத்த பசுங்கொடிதன்
தெய்வந் தழைக்குந் திருமுலைப்பால்
      தெவிட்ட வுண்டு தழைத்தவன்றாள்
தைவந் தொளிர்நற் சிந்தையொடு
      தழைக்கும் புலமைப் பெருக்குடையான்.

2. வேத மணக்குங் கலைமணக்கும்
      விரும்பு நால்வர் கவிமணக்கும்
காத மணக்குங் கடம்பணிவேள்
      கருணை மணக்கும் உயர்ந்தசிவ
போத மணக்கும் சுவைதாமே
      புகுந்து மணக்கும் இன்கவிகள்
பாதந் தொறுஞ்சொல் தோறுமெனப்
      பரவுங் கீர்த்தி மிகவுடையான்.

3. உயருந் திருநீற் றொளிநுதலும்
      உருத்தி ராக்க மணிமார்பும்
மயர்வில் கேள்வி மலிசெவியும்
      வள்ளல் திருப்பேர் சொலப்பொடிக்கும்
வியர்வு மன்பு பொழிவிழியும்
      விளங்கு நடேசன் என்றதிருப்
பெயரும் நினைக்க நினைக்கஎன்னுட்
      பெருகும் உவகைக் கடல்மாதோ.

4. பிள்ளை இவனென் றிகழ்ந்தகிழப்
      பிரமன் றன்னைக் குட்டியந்தாள்
தள்ளிச் சிறையில் அடைத்தபிரான்
      சாமி மலைவாழ் குகனடிக்கே
கொள்ளைச் சுவைச்செந் தமிழாலே
      கூர்த்த புலமை நலங்கனியப்
பிள்ளைத் தமிழ்மா லிகைபுனைந்தான்
      பெருக வாழும் நடேசனரோ.

5. வருந்தா தினிதே வருங்கவிதை
      மழையஃ தென்பர் கவிஞரெலாம்
விருந்தா மென்பர் கமகரெலாம்
      வெல்லற் கரிய பிறவிக்கு
மருந்தா மென்பர் அடியரெலாம்
      மற்றும் பலர்பற் பலபுகழ்வார்
பெருந்தேன் ஆர்ந்து களித்திடலால்
      பேசகில்லேன் எளியேனே.

6. செப்பற் கரிய சிறப்பின தாய்த்
      திகழும் இந்த நூலுக்கோர்
ஒப்பற் றொளிரும் உரைவகுத்தே
      உயர்ந்தார் இரச பதிஎன்பார்
மெய்ப்பத் தருக்கே வாய்த்தவராம்
      விவேகா நந்தம் பிள்ளைமுயன்(று)
எப்பத் தருமே எளிதிலுற
      இனிதில் ஊக்கி உதவினரே.

கோவை       இங்ஙனம்:
4-4- ‘58.      (Sd.) க.கி. குமாரசிவம்
---------------------

சுவாமிநாதன் துணை
நூன்முகம்

இறைவன் திருவருள், நியதிதர எங்கும் நிழலிடுகின்றது. நிழல் நிலயங்களை, கோயில்கள் என்று குறிப்பிடுவர்.

அழகும் மணமும், அறிவும் செறிவும், இன்பமுமாகிய முழுமுதல் இறைமை, முருகனாகி எங்கும் முறுவலிக்கின்றது. அப்பெருமான் அருட்கொடை வழங்கும் ஆறு படை வீடுகளுள், நலம் பெருக்கும் சுவாமிமலை நான்காவது படைவீடு.

அடைமொழியொடு தெய்வப் பெயரை அறிவிப்பர் உலகர். அங்ஙனின்றி, சுவாமி என்று சொன்னாலே போதும். அப்பெயர் திருவேரகனையே தெரிவிக்கும். சுவாமிப் பெயர்க்குரிய வேறு மூர்த்தங்களும் உளவெனில், நலம் சிறந்த அம்மூர்த்திகட்கெல்லாம் நாதர் இவர் என்று, பொருட்பெயர்க் குறிப்பொடு புகல்கின்றார் மேலோர். அப்பெயர், அருள் முதலாளியெனும் பொருளை அளிக்கிறது.

ஒரு சமயம், தொடர்பு படுத்திய திருவருள் துணையால், திருவேரகத்திற்குச் சென்றேன். சுவாமி நாதனைச் சேவித்தேன். பயனாக ஏதேனும் பணிசெய் என்று, அவ்வமயம் உறுத்தி எழுந்தது உள்ளுணர்வு. பொங்கி விளைந்தது புளகிதம். அருள்க அத்தா! என்று, ஆவலித்து வேண்டினேன்.

அன்று மாலை அந்த ஆலயத்தில், சரணகமலாலயம் எனும் வியன்மிகு திருப்புகழ் விரிவுரையாற்றினேன். அன்பொடு சிரவணித்த அன்பர்களின் ஆசி பெற்றேன். அதே சமயம், சுவாமிமலை வடமொழித் தலபுராணம் ஒன்றை, அந்தணர்குல திலகர் ஒருவர் அளித்தார். ஏரக எம்மான் திருவருளை, எண்ணி மகிழ்ந்தது என்மனம்.

அதன்பின் சென்னையை யடைந்தேன். பிள்ளைத்தமிழ்த் திரட்டு ஒன்றைத் தொகுக்குமாறு, அறநிலையப் பாதுகாப்பு இலாகா ஆணையிட்டது. அருமைப் படைவீடுகள் நான்கிற்கும் பிள்ளைத்தமிழ்கள் அகப்பட்டன. சுவாமிமலைக்கும் பழமுதிர் சோலைக்கும் அகப்படவில்லை. வருந்தியது மனம்.

அதையுணர்ந்த அறிஞர், இன்று கோவை அறநிலையப் பாதுகாப்பு இலாகா அஸிஸ்டெண்ட் கமிஷனராயிருக்கும் உயர்திரு T. H. விவேகாநந்தம் பிள்ளை, B.A.L.T. அவர்கள், கோவைக் கவியரசு நடேச கவுண்டர் அவர்கட்கு எழுதிப் பாருங்கள் என்று, உவகை காட்டி எளியேனை ஊக்கினார்கள். சென்ற இடமெல்லாம் சிறந்த செயலாற்றும் அவர்கள் கட்டளைப்படி, நானும் எழுதினேன்; அவர்க்குத் தாமும் எழுதினார்.

கவிஞர் அவர்கள், விரைந்து இப்பிள்ளைத்தமிழை இயற்றி அனுப்பினார்கள்; இதற்குள் பத்துப் பிள்ளைத் தமிழ்த் திரட்டு வெளிவந்து விட்டது.

சுவாமிமலைப் பிள்ளைத்தமிழை, முற்றும் நோக்கினேன்; உள்ளம் அள்ளும் நடையில், அது உவகையளித்தது. இதை யாத்த கவிஞர் பெருமானை, உலகம் ஏத்தும் போற்றும் இயற்கை இது. பலர் விரும்பியபடி, இயலும் அளவு இதற்கு உரையெனும் பெயரால், ஏதோ சிறிது முயன்றேன். உரையிற் கொள்ளத் தக்கவை யுளவெனில், அது திருவருள் உதவுதல்; தள்ளத் தக்கவை யுளவெனில், மும்மல வயத்தின் முறைமறதியென்று, இன்ப அன்பர்கள் எண்ண வேண்டுகிறேன். இவ்வுரையை நோக்கும் அறிஞர்கள், இருக்கும் குறைகளை எடுத்துக் காட்டுவர். அடுத்த பதிப்பில் திருத்தியமைப்பம் என்னும் நம்பிக்கை என்னில் உளது.

சென்னை அறநிலயப் பாதுகாப்பு இலாகா ஆணையாளர் உயர்திரு A. உத்தண்டராமன் பிள்ளை, B.A.B.L, I.A.S. அவர்கள், அப்பருடைய உழவாரப் படையை உள்ளம் கொள்ளும் உணர்வினர். சமய சாத்திர நூற்களிலும், திருமுறைகளிலும் நல்ல தேர்ச்சியர். மனமொழிமெய்களில் திருப்பணி வளர்ப்பவர். அவர்கள் இந்நூலைப் பாராட்டியதுடன், உரை குறித்து உரைத்தவை யனைத்தும், எளிய எற்குச் செய்த ஆசியென்று ஏற்றேன்.

கோவை சிவக்கவிமணி உயர் திரு C. K. சுப்ரமண்ய முதலியார் அவர்கள், இப்பிரதி மூலமாயிருந்த காலத்திலேயே படித்து மகிழ்ந்து, அப்போதே இதற்கு வாழ்த்துரை வழங்கினர். நூலாசிரியரின் மாணவரான கோவை கணபதி, வித்துவான் க. கி. குமாரசிவம் அவர்களது சாற்றுக் கவிகளும், இதனில் இடம் பெற்றன. இன்னோர்க்கு என் வணக்கம் என்றும் உரியது.

சுவாமிமலை தேவஸ்தான நிர்வாகிகள், இந்நூலை சென்னையில் அச்சிட்டு அனுப்பும் பொறுப்பை, சென்னை கிடங்குத்தெரு ஸ்ரீபாலசுப்ரமண்யம் கம்பெனியாரிடம் ஒப்படைத்தனர். அக்கம்பெனி நிர்வாகிகள், பல தலங்களில் ஏற்றி வைத்த விளக்குகள், ஒளிமயம் தெய்வம் என்பதை உணர்த்திக் கொண்டே யிருத்தலை அறிவம். பலமுகமான பணியாளர் அவர்கள், திருத்தணிகையில் டிசம்பர் 31-ஆம் தேதியன்று நடத்தி வரும் மாகேச பூசை, என்றும் எவரும் மறக்க முடியாதவை. இத்துணைச் சிறந்த அவர்கள், கட்டளைப்படி காகித, அச்சகப் பொறுப்பேற்று, உருவாக்கி இந்நூலை உதவினர். வாயார மனமார அவர்களை வாழ்த்துகிறேன்.

இந்நூலை, அன்புமுகம் காட்டிப் பெரும் பொருள் செலவில் வெளியிட்ட ஸ்ரீசுவாமிமலை தேவஸ்தான நிர்வாகிகட்கு, திசைநோக்கி என் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். காலத்தில் அழகுற அச்சிற் பதித்த குமரன் அச்சக அதிபர்க்கும், என் நன்றி உரியது.

கண்ணளிக்கும் பொய்கை ஒளிர்
      கண்ணளிக்கும் ஆனைமுகர்
எண்ணளிக்கும் ஏரகத்தின்
      எந்தை பெருமானே!
விண்ணளிக்கும் நின்னடியே
      வேண்டுகின்ற சேயாமென்
பண்ணளிக்கும் இன்மொழியைப்
      பார்த்திரக்கம் கொள்ளாயோ?

என்று வேண்டும் எளியேன் உள்ளிருந்து உரையை நிறைவேற்றிய திருவருள், இப்பிள்ளைத்தமிழ் வெளிவரக் காரணமான யாவர்க்கும், சகல செல்வ யோகமிக்க பெருவாழ்வு பிறங்க அருள்வதாக என்று பிரார்த்திக்கிறேன்.
முருகா! முருகா!! முருகா!!!

'அங்கணார் சிகாவளத்தில் ஏறுகின்ற ஆண்டவா
மங்கை பாக னார்க்கு வேத வாக்குமூலம் சொன்னவா
எங்குலம் தழைக்க வந்த ஏரகச் சுரேசனே
சங்கையுற் றடுத்த என்றனைப் புணர்ந்து கொள்வையே.

நாத ஒண்சி லம்பலம்ப நாடகம் புரிந்திடும்
பாத பங்க யங்களைப் பணிந்து மிந்த நாளையோ
ஏதுமின்றி மாய்வனோ ஏரகச் சுரேசனே
தாதையென்றடுத்த என்றனைப்புணர்ந்து கொள்வையே.

பூமி யந்தரத்தினும் பொருந்து மேன்மை பூக்கவே
யாமி யக்கை லாய நாதற் கோமுரைத்த ஐயநீள்
ஏமு றுந்த வத்த ரேத்தும் ஏரகச் சுரேசனே
சாமியென் றடுத்த என் றனைப்பு ணர்ந்து கொள்வையே'.
      - பாம்பனடிகள்

வணக்கம்.
வாழ்க திருவருள்.
வாய்மை யின்பம் உலகில் வளர்வதாக!
திருவேரகப் பெருமான் திருவடிகட்கே
அடைக்கலம்!
ஓம்
97, சஞ்ஜீவிராயன் )       இங்ஙனம் :
கோயில் வீதி,       அன்பன்
பழைய வண்ணை,       குகஸ்ரீ ரசபதி
சென்னை - 21.
----------------------------------------------------

தெய்வமே துணை

திருவேரகம் சுவாமிநாதன் பிள்ளைத்தமிழ்

இது, திருவேரகம் முருகனைப் பற்றிய பிள்ளைத்தமிழ் என விரியும்; இரண்டனுருபும் பயனும் உடன் தொக்க தொகை. முருகன் பிள்ளைத்தமிழ் எனும் தொடரில், நிலைமொழி உயர்திணைப் பெயராதலின், அதன் ஈற்றுமெய் திரியாமல் இயல்பாய் நின்றது.

‘பொதுப்பெயர் உயர்திணைப் பெயர்களின் ஈற்றுமெய்
வலிவரின் இயல்பாம்’
என்பது இதற்கு விதி.

திருவேரகம் என்பது, சோழநாட்டில் தனிப்பெரும் குமரன் எழுந்தருளிய தலங்களுள் ஒன்று; நலஞ்சிறந்த படைகளுள் நான்காவது பதி; தஞ்சை மாவட்டக் கும்பகோணம் தாலுக்காவைச் சார்ந்தது.

‘காவேரி நேர்வடக்கி லேவாவி பூமணத்த
காவார் சுவாமி வெற்பின் முருகோனே'
என்று அருணை முனிவர் பாடிய முப்பத்தெட்டு திருப்புகழ்களைக் கொண்டது; கயிலைச் சிகரம் ஒன்றைச் செய்குன்றாக் கண்டது.

குமரன் குருவாக எழுந்தருளியிருத்தலின் குருமலையென்றும், பூதேவி நெல்லியெனும் இனிய தலத்தருவாக இருத்தலின் நெல்லிமலையென்றும், மிக அழகிய இடமாதலின் சுந்தராசலம் என்றும், மற்றும் பல பெயர் கொண்டு மதித்தற்கு உரியது.

பிரபவ முதலிய அறுபது ஆண்டின் அதிதேவதைகள், இங்குள கட்டுமலைக் கோயிலின் அறுபது படிகளாக அமைந்துளர் என்று, இத்தல ஆக்கத்தைக் குடந்தைப் புராணம் குறிப்பிடுகின்றது.

திரு - அருள்; ஏர் - எழுச்சி; அகம் - நிலயம் என ஆதலின், கம்பீரமாகத் திருவருள் காட்சிப்படும் தலம் இது என்று கருதுகின்றார் மேலோர்.

பிள்ளைத்தமிழ் என்பது, தூய தமிழில் உள்ள தொண்ணூற்றாறு பிரபந்தங்களுள் ஒன்று. தனிப்பெரும் தலைவன் ஒருவனைப் பாலனாகப் பாவித்துப் பாடுவது இதனில் உள்ள செய்தி.
ஆண்பால் பிள்ளைத்தமிழ், பெண்பால் பிள்ளைத்தமிழ் என இது இருவகை. பிள்ளையென்பது, ஆணிற்கும் பெண்ணிற்கும் பொதுவான பெயர்.
காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வாரானை, அம்புலி, சிறுபறை, சிற்றில், சிறுதேர் எனும் பத்துப் பருவங்களைக் கூறுவது ஆண்பால் பிள்ளைத்தமிழ்.
'சாற்றிய காப்புச்செங் கீரைதால் சப்பாணி
மாற்றிய முத்தமே வாரானை - போற்றரிய
அம்புலியே ஆய்ந்த சிறுபறையே சிற்றிலே
பம்புசிறு தேரோடு பத்து'

எனவரும் வெண்பாப் பாட்டியலில் இதற்கு விதியுளது. (இப்பத்தின் இறுதி மூன்றை நீக்கி, அதற்குப் பதிலாகக் கழங்கு, அம்மானை, ஊசல் என்பவைகளை இணைத்துப் பாடுவது பெண்பால் பிள்ளைத்தமிழ்).
------------------------------

காப்பு


1. பூமேவு கற்பகப் பொழினிழலி லமர்கின்ற
      [1]புலவர்குழு மகிழநன்பால்[2]
புணரியை மதித்தமுது தருபசிய[3] முகிலும்
      புகழ்ந்துபா ராட்டஞானப்
பாமேவு திருமுறைக ளெனுமமுத மொண்டமிழ்ப்
      பண்ணவர்க ளுண்மகிழஇப்
பார்மீது திருநாரை யூர்நம்பி தருமாறு
      பண்ணுபக[4] வற்றுதிப்பாம்;
தேமேவு கொன்றைமண நாறுசுர [5]நதிநீர்த்
      [6]திளைத்தாடு காலையுடனே
சேர்ந்துதன் [7]வெண்கோடு கழுவித் துதிக்கைமேற்
      சென்றுமத் தகமமர்ந்து
தாமேவு டன்பிறப் பின்பமரு மாடல்புரி
      தம்பியைச் [8]செம்பொருளைமுன்
தந்தையுள் குளிரமொழி சாமிமலை முருகனைச்
      சாற்றுபைந் தமிழ்தழையவே.

[1]. புலவர் குழு - தேவர்கள் கூட்டம். [2]. பால் புணரியை மதித்து - பால்கடலைக் கடைந்து.
[3]. பசிய முகிலும் - (தெய்வக்) கார்மேகத் திருமாலும். [4]. பகவன் - பொல்லாப் பிள்ளையாரை.
[5]. சுரநதி - தேவகங்கை. [6]. திளைத்து ஆடு காலை - மூழ்கி விளையாடும் பொழுது.
[7]. வெண்கோடு - வெண்ணிறத் தந்தம். [8]. செம்பொருளை - சிறந்த பிரணவப் பொருளை.

(பொழிப்புரை) தேன் பொருந்திய (மாபெரும்) கொன்றை மணம் கமழும் தெய்வ கங்கையாற்று (வித்தக) நீரில் மூழ்கி விளையாடும் பொழுது, (சிறக்க) உடன் தொடர்ந்து சென்று, தனது களங்கமற்ற தந்தங்களைக் கழுவி, (எடுப்பான) துதிக்கை மேல் ஏறிச் சென்று (அன்பொடு) மத்தகத்தின் மேல் அமர்ந்து,

தாமேயான உடன்பிறப்பின் (அருமை) இன்பத்தை அனுபவிக்கும் திருவிளையாடலை விரும்பிச் செய்கின்ற தம்பியும்,

(பிரணவ) மெய்ப்பொருளை உள்ளம் குளிரத் தந்தைக்கு உபதேசித்தவருமான சுவாமிமலை முருகனைப் பாடும் வளமான (இப்பிள்ளைத்) தமிழ் தழைத்து வளர்வதாக என்று ,

நிறை மலர்க் கற்பகச் சோலை நிழலில் (தகவொடு) விரும்பித் தங்கிய அறிவு மிக்க அமரர் கூட்டம் ஆநந்திக்கும்படி,

கனந்தங்கிய பாற்கடலைக் கடைந்து அமுதம் உதவிய (தெய்வ) நீலமேகரான திருமாலும், (அருமை அருமை என்று பலபடப்) புகழ்ந்து பாராட்டுமாறு, அருள் ஞானப் பாக்களாக அமைந்த (அரிய தெய்வத் திருமுறைகள் எனும் அமுதத்தை,

(புனித) ஒளிமிகு தமிழ்ப் புலவர்கள் உள்ளம் பெரிதும் உவகையடைய, இந்நிலவுலகில் திருநாரையூர் நம்பியாண்டார் நம்பிகள் (எடுத்துக்) கொடுக்கும்படிச் செய்த, (தூய) பொல்லாப் பிள்ளையாரைத் துதிப்பம், (எ - று).

ஆரம்பிக்கும் நூல் என்றும் - மணம் கமழ்ந்து இருக்க எண்ணி, 'பூ' எனத் துவக்கித் ‘தழையவே' என முடித்தார். முதலும் முடிவுமான எழுத்துக்களை இயைக்க, பூவே என ஆதலை உணர்ந்தார் உள்ளம் உவகை பெறும்.

ஐந்தெழுத்தை நினைவுறுத்தும் ஐந்து இதழ்க் கொன்றை, மாபெரும் தெய்வ மணமுடையது: உயர்ந்த தேனும் உடையது; கண்ணுதல் முடிமேல் கங்கை; அங்குள கொன்றையின் தொடர்பால், நன்மணம் கமழ்கிறது கங்கை நதி .

வித்தக அக்கங்கையில் மூழ்கி விளையாடுகிறார் கணபதி. மூத்த பிள்ளையாரான அவரைத் தொடர்ந்து சென்ற முருகன், கணபதியின் தந்தங்களை நீரால் கழுவுகிறான். எடுப்பான துதிக்கைமேல் தாவி ஏறுகிறான். அரிய மத்தகத்தின் மேல் அமர்கிறான்.

அண்ணாமேல் தம்பி என்று, கண்டவர் களிக்கப் புனித விளையாடல் புரிகிறான்; இது இளம்பிள்ளை விளையாட்டுப்போல் இருக்கின்றதாயினும், உயர்ந்த தந்தைக்கும் செய்த உபதேசத்தால், உயர்ந்தோருள் முருகன் உயர்ந்தோன் என்று உணர்த்தியபடி.

என்றும் பசுமை காட்டலின், 'பைந்தமிழ்' என்றார். 'முருகனைச் சாற்று பைந்தமிழ் தழையவே - பகவற் றுதிப்பாம்' என முடிக்க.

முருகன் - இளம்பரிபூரணன்; தமிழும் பைந்தமிழ்; அத்தமிழ் இனிய பசுமை தழைப்பது இயற்கை. தளிரும் இலையுமான பசுமை, அரும்பை, மணம் கமழ் மலரை, துவர்க்கும் பிஞ்சை, புளிக்கும் காயை, சுவைமிகு கனியைத் தழைக்க அளிக்கும்; அது போல் இப்பிள்ளைத்தமிழ், பல்வகைப் பயனையும் அளிக்கும் என்பது குறிப்பு.

கற்பகம் - சங்கற்பித்ததைத் தரும் சால்புடையது; வடசொல். அதன் நிழல் சுகம் கண்டவர் அமரர் இறவாமை கருதிய அந்த இமையவர் நினைவு நிறைவேற, முகுந்தர் ஓய்வின்றி முயன்றார். பாற்கடலைக் கடைந்தார். உருவான அமுதை எடுத்து உதவினார். பயனான அதனைப் பருகிய வானவர், பலகாலம் வாழ்ந்தனர்.
உணவிற்குத் தக்கபடி உணர்வு அமையும். அமுத உணவால், வானவரிடம் வளரும் காமாதிகள் வளர்ந்தன. அசுரப் போட்டியும் அதிகரித்தது. அதனால் வேதனை எய்தி விழித்தனராதலின், இமையவர் ஆயினர் விண்ணவர். அருங்கடலமுதம் அருந்திய அமரர் கதி இது.
திருமுறை அமுதம் துய்த்தவர் சிவமாவர். அதனில் உள்ள ஒவ்வொரு பாசுரத்திலும், பொங்கித் ததும்பி அருள் ஞானம் பூரிக்கின்றது.
பாலையைக் குளிர் பூஞ்சோலையாக்கி, தவிரா நோய் தவிர்த்து, இறந்தாரை எழுப்பி, என்பைப் பெண்ணாக்கி, கல்லிற்கும் தோணிக்கும், காட்டானைக்குங்கூட உணர்வளித்த பெருமை, உயர்ந்த திருமுறைகட்கு உண்டு.
அதை அனுபவித்தவர்கள், இதயத்தால் இறவார். அவர்களை அறிவிக்கும் அளவுகோல் இது. அன்னவரே உள்ளொன்று புறமொன்று ஆகாத உத்தமர்கள்.
அத்தெய்வத் திருமுறைகள், மாபெரும் சிதம்பரத்தில் மறைந்திருந்தன. கனிந்த அன்பொடு தன்னை வழிபட்ட நம்பியாண்டார் நம்பிக்கு, அவைகளைப் பொல்லாப் பிள்ளையார் காட்டிக் கொடுத்தார். அதன் பின் இன்பநம்பிகள், அவைகளை எடுத்தார். மற்றவர்க்குக் கொடுத்தார் என்பது, இதனில் உள்ள வரலாறு.
பண்ணவர்கள் - சமய குரவர்கள் எனக் கொண்டு, தம் பதிகங்கள் பிறர்க்குப் பயன் தரு காலம் வந்ததென்று அவர்கள் திருவுளம் பெருமகிழ் வெய்தியது எனவுமாம்.
அதுகண்ட மாபெரும் அமரர் மகிழ்ந்தனர். அரும்பாடுபட்டு யானளித்த அமுதத்தால் யாது பயன்? இறவாமை பிறவாமை செய்யும் இதுவல்லவா அமுதம் என்று, புனிதத் திருமால் புகழ்ந்து துதித்தார் என்றபடி.
விண்ணின் வாழ் புலவர் மகிழக் கடலமிழ்து அளித்த திருமாலும் வியப்ப, மண்ணின் வாழ் புலவர் மகிழப் பண்ணமுது திரட்டி யளித்தவர் நம்பியாண்டார் நம்பிகள். விநாயகர் அருளைப் பெறுமுன் அமுதுபெற விரும்பி முயன்று, நஞ்சு கண்டு அஞ்சினர் தேவர்கள். அத்தகைய இடையூறு ஒன்றும் இன்றியே திருமுறை அமுதை, விநாயகர் அருளால், நம்பிகள் மூலம் மண்ணகப் புலவர் பெற்றனர் என்று மகிழ்ந்தபடி.
-----------------------

1. காப்புப் பருவம்

குழந்தை பிறந்த இரண்டாம் திங்களில், பாலர் இவரைத் திருமால் முதலியோர் பாதுகாக்க என்று பாடும் பருவம் இது.
"மங்கலம் பொலியும் செங்கண் மாலே, சங்கு சக்கரம் தரித்தலானும், காவற் கடவுள் ஆதலானும், பூவினள் புணர்தலானுமுற் கூறிக், கங்கையும் பிறையும் கடுக்கையும் புனையுமை, பங்கனென் றிறைவனைப் பகர்ந்து; முறையே, முழுதுலகீன்ற பழுதறும் இமயப், பருப்பதச் செல்வியை விருப்புறவுரைத்து; நாமகள் கொழுநன், மாமுகில் ஊர்தி, ஒற்றைக் கொம்பன், வெற்றி வேலன், எழுவர் மங்கையர், இந்திரை, வாணி, உருத்திரர், அருக்கர், மருத்துவர், வசுக்கள், பூப்புனை ஊர்தியின் பொலிவோர் அனைவரும், காப்ப தாகக் காப்புக் கூறல் '' என்பது இதன் மரபு.
கலகலத்த மாநுடப் பிறப்பேல், காப்புத் தேவை. இறவாப் பிறவா ஏரகத் திறைவற்கு, எவர் காப்பும் வேண்டா; மற்று இதற்கு விதியென் எனில், காப்புத் தெய்வங்கள், கந்தப் பரமனைக் கனிந்து பாடும் இப்பிள்ளைத்தமிழைக் காப்பதாக என்று வேண்டுவதே கருத்து. ஊன்றி நோக்கின், இதுதான் உள்ளுறை. இன்றேல், மாநுடம் பாடும் மரபாய்விடும் என்று மதிக்கின்றார் மேலோர். பாவனையிலும் பழுது படுவது ஆகா. ஆதலின், கருணையொடு அறவோர் காட்டும் நெறியே கருதத் தகுவது.


திருமால்
2. [1]ஏர்மருவு பைந்தினைக் காவல்புரி மான்மகளின்
      இலவுவாய் மொழியமுதினுக்
[2]கேக்கற்று நிற்கின்ற இயல்பினும், பத்தியினில்
      எப்போது [3]மொப்போதரும்
சீர்மருவு மருணகிரி வாய்மலர்ந் தருள்புதிய
      தெய்வத் தமிழ்ச்சந்தமார்
[4]செம்பாவை மிகவிழைந் துளமுருகு குருமலைச்
      செவ்வேளை யினிதுகாக்க;
தேர்மருவு செம்[5]பருதி [6]ஒளிமட்கு [7]குருமணி
      திரைக்கைக ளாலளிக்கும்
[8]தீம்பாலி னுததிதரு [9]செல்வத் திருப்பாவை
      [10]சேர்த்தியிற் கீர்த்தியின்மிகும்
பார்மருவு புதுவையிற் [11]பட்டர் பிரான்தவப்
      பயனு யுதித்தகோதை[12]
பாடியரு ளுந்திருப் பாவையால் மகிழ்கின்ற
      பதுமமலர் பசிய முகிலே.

[1]. ஏர் - அழகு . [2]. ஏக்கற்று - ஏங்கி. [3]. ஒப்பு ஓதரும் - ஒப்பு சொல்ல முடியாத.
[4]. செம்பாவை - சிறந்த திருப்புகழ்ப் பாடல்களை. [5]. பருதி - சூரியன்.
[6]. ஒளி மட்கு - ஒளிமழுங்கச் செய்யும். [7]. குருமணி - சிறந்த ரத்தினம்.
[8]. தீம்பாலின் உத்தி - இன்பப் பாற்கடல். [9]. செல்வத் திருப்பாவை - திருமகள்.
[10]. சேர்த்தியின் - கூட்டுறவினும். [11]. பட்டர்பிரான் - பெரியாழ்வார். [12]. கோதை - ஆண்டாள்.

(பொ-ரை.) (ஒற்றை ஆழித்) தேர்மேல் வரும் செந்நிறக் கிரணச் சூரியனது ஒளி மழுங்கச் செய்யும் சிறந்த (பளபளப்புடைய) சிந்தாமணியை அலைகளாகிய கைகளால்
அளிக்கும் இனிய பாற்கடல் தந்த செல்வியான திருமகளின் சேர்க்கையைக் காட்டிலும்,
புகழ்மிக்க நிலவுலகில் உள்ள வில்லிபுத்தூரில், (பெருந்தகுதியுடைய) பெரியாழ்வாரது (உயர்) தவப்பயனாய் உதயமான ஸ்ரீ ஆண்டாள் திருவாய் மலர்ந்த திருப்பாவையால் (திருவுளம்) மகிழ்கின்ற கமலமலர் அவயத்தரான கார்மேகத் திருமால்,
அழகு பொருந்திய பசுமைத் தினைப்புனத்தைப் பாதுகாத்திருந்த (வளம் சிறந்த) மான் மகளான வள்ளியம்மையின் கொவ்வை வாய்ச்சொல் அமுதைச் சுவைத்தற்கு ஏங்கி நிற்கின்ற இயல்பைக் காட்டிலும்,
அன்பால் எக்காலத்தும் ஒப்பு சொல்ல இயலாத சிறப்புடைய திருவருணகிரி நாதர் திருவாய் மலர்ந்தருளிய புதிய தெய்வச் சந்தம் நிறைந்த சிறந்த திருப்புகழ்ப் பாடல்களை, மிக விரும்பித் திருவுளம் உருகும் சுவாமிமலைச் செவ்வேளை(ப் பாடும் பிள்ளைத்தமிழை,) இனிது காத்தருள்க . (எ - று).
பசிய முகில், செவ்வேளை இனிது காக்க என்று முடிக்க.
பாற்கடல் உதவிய பாவை உறவால் இனிது விளைந்த இன்பத்தினும், ஆண்டாள் திருப்பாவையால் திருமால் அதிக மகிழ்ச்சியடைகின்றார்; மாமனார் செய்தி இது.
மான் தந்த மகளான வள்ளியாரது மொழி அமுதிற்கு ஏங்கி நிற்கும் முருகன், அதைவிட இனித்ததென அருணகிரி திருப்புகழில் ஆர்வம் கொண்டுளன் என, அருமை மருகர் செய்தியை அறிவித்தபடி.
திருப்பாவை இரண்டுள் முதலது, நீரில் பிறந்த திருமகள்; அடுத்தது, நிலமகள் அம்ச ஆண்டாள் பாடிய பிரபந்தம்.
அறுமுகன் மேல் வைத்த அன்பால், அவர் சார்பினரான திருமால் முதலிய தேவர் பிரபாவங்களையும், திருப்புகழில் குறிப்பிடுவர் அருணையர்; அதனால் அவரை, 'பத்தியினில் ஒப்போதரும்' என்றார்.
உயர் குருவாயிருந்து முருகன் உபதேசித்த தலமாதலின், சுவாமிமலை ‘குருமலை' எனப்பெறும்.
திரை - அலை; திரைதலை யுடையது எனக் காரணக் குறி; திரைதல் - மடங்குதல். உத்தி - நீர் தங்கும் இடம் எனும் பொருளில் கடலைக் குறித்தது. அருந்தமிழ் நாட்டை ஆண்டவள் அல்லி. அதுபோல் பாண்டி நாட்டின் ஒரு பகுதியை ஆண்டவள் மல்லி. மல்லிக்கு இரு மக்கள். அவர்களுள் ஒருவன் பெயர் வில்லி. வில்லி புதுக்கிய ஊர் வில்லிபுத்தூர் எனப் பெறும். அது இங்கு ‘பார் மேவு புதுவை' எனப்பெற்றது.
பட்டர்பிரான் என்பதில், பட்டர் அந்தணர் எனும் பொருட்டு. கோதை - புனித மாலை போன்றவள் எனும் பொருளில் ஆண்டாளிற்கு அமைந்த ஒரு பெயர். பதும மலர்ப் பசிய முகில் - கமலக்காடு பூத்த கார்மேகம் போல வரும் திருமால். திருமாலுக்குக் கடல் கவுத்துவ மணியொடு திருமகளை அளித்தது; மருகனுக்கும் மாமனுக்கும் இதனில் உள்ள குண ஒற்றுமை காண்க. (க)
-----------------

சிவபெருமான் - அம்பலக்கூத்தன்

3. தாமரைத் தவிசிலமர் மாமறைக் [1]குரிசில்தழை
      யாலிடத் துயில்கரிய [2]மேகமிப் புவனமொரு
தானழித் திடுமுனைய சூலம்[3]வைத் தவனுமிவர்
      சேமமுற் றிடவொருகை மேவுடுக் கையரபய
மேவுபொற் கையினரெரி சேர்தடக் கையர்கருணை
      சேருமற் புதநடன மாடுபொற் கழல்பணிவம்;
[4]பூமனைச் சிறையிலிடு கோபன்முத் தொழிலுமொரு
      தானடத் திடு[5]சதுரன் வேதமெய்ப் பொருள்[6]சருவ
பூரணப் பிரமமுமை யாள்தவச் சிறுவனுயர்
      [7]ஏமசற் குருவின் முறை வாழ்வுறச் சிவனைமுனம்
ஓதுவித் தவனெடிய சோலைசுற் றிலகுதிரு
      வேரகக் குமரன்மகிழ் காவலுக் கருள்கெனவே.

[1]. குரிசில் - பிரமன். 2. மேகம் - திருமால். 3. வைத்தவன் - ஏந்திய உருத்திரன்.
[4]. பூமனை - பிரமனை. 5. சதுரன் - மேம்பாடுடையவன்.
[6]. சருவ பூரணப் பிரமம் - எங்கும் நிறை பெரிய பொருள். [7]. ஏமம் - இன்பம்; காவலுமாம்.

(பொ-ரை.) மலராகிய மாளிகையில் வாழும் சிறந்த பிரமனைச் சிறையிலிட்ட கோபக்காரனும், (படைப்பு காப்பு அழிப்பு எனும்) முத்தொழிலையும் தானே தனி நடத்தும் மேலோனும், வேதத்தில் சொல்லப் பெற்ற மெய்ப்பொருளும், எங்கும் நிறை பெரிய பொருளும், உமையின் பெருந்தவப் பிள்ளையும், உயர்ந்த இன்ப ஞான குருசந்தானம் வாழச் சிவபிரானை முன் ஒரு சமயத்து (ஓம்பொருளை உணர்ந்து) ஓதும்படிச் செய்தவனுமான ;
(வானளாவிய) வியனார் சோலைகள் சூழ்ந்து விளங்கும் திரு ஏரகக் குமரன் இன்புறும் (இப்பிள்ளைத் தமிழ்க்) காப்பிற்கு அருள்க என்று,
தாமரையாகிய அணையில் தங்கிப் பெருமித வேதம் ஓதும் பெருந்தகையான பிரமனும், தழைத்த ஆலிலையில் அறிதுயில் கொள்ளும் நீலமேகரான திருமாலும், இவ் வுலகைத் தானே தனியிருந்து அழிக்கும் முனையுடைய (உயர்ந்த) சூலம் ஏந்திய உருத்திரனும் ஆன இம்மூவர்க்கும் நலம் தோன்ற (அருள), ஒரு கரத்தில் மேவிய உடுக்கையுடையவரும், அபயமாகப் பொருந்திய (மற்றொரு ) அழகிய திருக்கரத்தை யுடையவரும், கனல் மழு ஏந்திய (வேறோர்) உயர் திருக்கரத்தை யுடையவரும் ஆன சிவ பிரானது அருள் பொருந்தும் அற்புத நடம்செய் பொன்னான திருவடிகளைப் (புந்தியில் வைத்துப்) போற்றுவம், (எ - று).
கோபன், சதுரன், பிரமம், சிறுவன், ஓதுவித்தவன் (ஆன) குமரன் (பிள்ளைத் தமிழ்க்) காவலுக்கு அருள்கென, பொற்கழல் பணிவம் என முடிக்க.
ஓயாது நாலு வாயாலும் ஓதிப் பயன் என்? ஓம் பொருள் உணர்ந்திலன்; இந்நிலையில் யானே பெரியனென இறுமாந்தான் பிரமன்; அவனைத் தெய்வக்குமரன் திருத்த நினைத்து, ஆர்வம் கொண்டு அருகில் அழைத்தான். முனைப்பொடு வந்த அவன் முகம் நோக்கி,
ஏது புரிவாய் என்ன, யான் படைப்பேன் என்ன,
வருமோ வேதம் என்ன, வருமென்ன,
வியன் இருக்கு விளம்பென்ன, ஆதியினில்
குடிலை யெடுத்து அறைகுதலும், அதன் பொருளை
ஓதியபின் ஓதெனவே ஓதினான் உமைபாலன்'
மன்னு குடிலைப் பொருளை அறியாமல் மயங்குதலும், கொன்னுடைய நரசிங்கக் குட்டி தலை குட்டி உதைத்து, இன்னலுறச் சிறையிட்டு, தெளிவு பிறந்த பின் அக்கமலனை விடுவித்த காதை காந்தத்தில் உளது.
கோபன் - மறக்கருணையன். பிரமன் சிறையிருந்த நாளில், தன் தந்தைபோல், அகில உலகையும் ஆக்கி அளித்து அழிக்கும் தொழில் அத்தனையும் தானே நடத்தின னாதலின், ‘சதுரன்' என்றார். சதுரப்பாடு - பிறிதொருவர்க்கு அமையாத மேம்பாடு.
சமயவாதிகள் சொல்லும் பொருளனைத்தும் பொய்; 'எக்கலைக்கும் பூதங்கள் எவற்றினுக்கும் பிரமனுக்கும் ஈசனென்னத், தக்க முதல் பரப்பிரம்மம் சதாசிவோம் என்று ஒருகால் வேதம் சாற்றும்; முக்கனல் சூழ் வேள்வியில் சுப்ரமண்யோம் எனவும் முக்கால் கூறும்' என்று வேதம் கூறுவதே மெய்.
அதனாற்றான், குமரனை 'வேத மெய்ப்பொருள்' என்றார். எங்கும் நிறை பெரிய பொருளை, 'சருவ பூரணப் பிரமம்' என்றார். உ-ம் - அ = உமா என ஆதலின், அத்தேவி பிரணவ வடிவப் பெருமாட்டி.
அம்பிகை இமயத்தில் தவம் செய்து பெற்ற பிள்ளையாதலின், 'உமையாள் தவச் சிறுவன்' என்றார்.
அறிவும் அறியாமையும் கலந்தது ஆன்மா. துன்பம் கலவா இன்பமும், அறியாமை கலவாத அறிவும், உள்ளிருள் ஒழிக்கும் ஒளியும் உதயமானால், உய்தியையடையும் உயிர். அம் மூன்றுமானது குருசந்தானம். அதை ' ஏமசற் குருவின் முறை' என்றார்.
உயர்ந்த கல்லால் நிழலில் நால்வர்க்கு ஒளிநெறி காட்டிய தந்தைக்கும் ஒண்பொருள் உரைத்த சிறிய பெருந்தகை, அச்சந்தானத்தின் தலைவராக சிவத்தையாக்கினன் என்பார், ‘சிவனை முனம் ஓதுவித்தவன்' என்றார். திரு - அருள்; ஏர் - எழுச்சி; அகம் - உள்ளம் என ஆதலின், அருளெழும் உள்ளம் பிண்ட திருவேரகம்; 'நெடிய சோலை சுற்று இலகு திருவேரகம்' அண்ட திருவேரகம் எனலையும் இங்குக் குறித்தபடி.
குமரன் - என்றும் பதினாறாக இருப்பவன்; ஆறிரண்டு அனுபவ ஆன்மத் தலைவியை ஆர்வம் கொண்டு தழுவுவோன்; மரணம் தவிர்ப்பவன் முதலிய பொருளமைதி கொண்ட புனிதத் திருப்பெயர் இது.
காவல் என்பது, காப்புப் பருவப் பொருள் குறிப்புக்களைக் காக்க எனும் பொருளது. முருகனைக் காக்க எனப் பொருள் கோடல் முறைவழு என்க. மக்கள் மேல் பாடும் பிள்ளைத்தமிழ்க்கு அது மரபாகலாம். இது, தற்பர முருகன் பிள்ளைத்தமிழ் என்பது நினைவில் இருப்பது நலம்.
சிவபெருமான் என்பதில், பெருமான் என்பது பெருமையிற் சிறந்தோன் எனும் பொருட்டு. அம்பலத்தில் ஆடுவானைக் கூத்தன் என்றார். அம்பலம் - வெறு வெளியான பேரம்பலம்; இதய வெளியான சிற்றம்பலமுமாம்.
சுவாதிட்டான கமலத்தில் இருந்து சுருதி ஓதும் நான்முகனை, ‘தாமரைத் தவிசிலமர் மாமறைக் குரிசில்' என்றார். குரிசில் - மேதை; ஆண்பால் சிறப்புப் பெயர்.
பரம உடுக்கை ஒலியால் படைப்பு; கருணை அபய கரத்தால் காப்பு; அனல் மழுக் கரத்தால் அழிப்பு: ஊன்றிய திருவடியால் மறைப்பு; எடுத்த திருவடியால் அருள்வு. இங்ஙனம் ஐந்தொழில் ஆடலால் ஐந்தொழிலினரைத் தோற்றுவித்து, அவர்களைக் கருவியாகக் கொண்டு செயல் செய்வான் திருவடிகளை வணங்கும் முன்னைய பகுதி, அருமையிலும் அருமை.
தவிசு - அணை; வடசொல். பக்குவத்திற்குத் தக்க பொருள் பயத்தலின், மாபெரும் வேதங்கள் மறைகள் எனப் பெறும். மா எனும் அடை, அவைகளின் அருமையை அறிவிக்கின்றது.
பச்சை ஆல் இலை என்பார், 'தழை ஆல்' என்றார். துயில் - அறிதுயில் எனப்பெறும். அகில சராசரமும் திருமாலின் அகட்டில் உள. கண்ணும் கருத்துமாக அவைகளைக் கருதி யிருத்தலை, ‘அறிதுயில்' என்று அறிவிப்பது மரபு. கரிய மேகம் என்றது, நிறத்தையும் திருமாலின் அருளையும் நினைவூட்டிய நிலை.
முச்சத்தி உருவாய் அகில சராசரத்தையும் அழிப்பது ஆதலின், இப்புவனம் ஒரு தானழித்திடு முனைய குலம்' என்றார்.
அபயம் - பயமகற்றுவது; வடசொல். ‘அற்புத நடனம் ஆடும்' எனும் பகுதியை, உணர்வார் உள்ளம் குதித்து மகிழ்ந்து கூத்தாடும். (உ)
------------------------------

சிவகாமசுந்தரி

4. [1]ஐந்தொழி னடாத்துதிறல் சிவபரம் பொருள்பெற
      அளிக்கவென் றேயருளினால்
[2]ஆதி[3]யிச் சை[4]கிரியை யாகியுடல் [5]தனுகரணம்[6]
      ஆதியவெ லாமுதவியே
சிந்தையி னுணர்ந்திடற் கரிய[7]இறை திருநடம்
      சிற்றுயிர்கள் காணொணாத
சிறுமைகண் டவையுயத் தான்கண்டு கருணைபுரி
      சிவகாமி யடிகணினைவாம்;
[8]முந்தைமறை யோதுசுப் பிரமணிய மாகியரன்
      [9]முளரிவிழி வழியுதித்தே
முக்கண ருவக்கவுப தேசமிரு செவிகுளிர
      மொழியுங் குமாரகுருவைக்
[10]கொந்தவிழ் [11] நறுங்கா விரிக்கும் [12] புனற்கா
      விரிக்குவட பாற்குவலயம்[13]
[14]குலவமரர் பணிபுரிய அருள் செயுங் குருமலைக்
      குகனைப் புரக்கவெனவே.

[1]. ஐந்தொழில் - பஞ்ச கிருத்தியம். [2]. ஆதி - ஆதி சத்தி. [3]. இச்சை - இச்சா சத்தி.
[4]. கிரியை - கிரியா சத்தி. [5]. தனு - உடல். [6]. கரணம் - (மனம் புத்தி சித்தம் அகங்காரம்) எனும் அந்தக்கரணம்.
[7]. இறை - சிவபிரான். [8]. முந்தை - முதன்மையான. [9]. முளரி விழி - நெருப்புக் கண்.
[10]. கொந்தவிழ் - கொத்தாக மலர்ந்த. [11]. நறும் கா விரிக்கும் - மணமுள சோலைகளைப் பெருக வைக்கும்.
[12]. புனல் காவிரிக்கு - நீர்நிறை காவிரி நதிக்கு. [13]. குவ லயம் - நிலவுலம் ; ஆகுபெயர்.
[14]. குல அமரர் - சிறந்த தேவர்கள்.

(பொ - ரை.) (சிறந்த) முதன்மை வேதங்கள் சிறப்பித்துரைக்கும் சுப்பிரமண்யமாய், அரனாருடைய (உயர்தரு நெற்றியில் உள்ள) நெருப்புக்கண் வழி உதயம் செய்து, முக்கண் முதல்வர் உவகைபெற (ஓம்பொருள்) உபதேசத்தை (அவர்) இருசெவி குளிர மொழிந்த குமார குருமூர்த்தியை ;
கொத்துக்களாக மலர்ந்த மணமுள சோலைகளை மலர வைக்கும் நீர் நிறைந்த காவிரி யாற்றின் வடபுறத்தில், மண்ணவரும் சிறந்த விண்ணவரும் (தம் தம்மால் இயன்ற திருப்பணி செய்ய, (அவர்கட்கு) அருள்பாலிக்கும் குருமலை (யெனும் சுவாமிமலையில் எழுந்தருளிய) குகனை (ப் பாடிய இப்பிள்ளைத்தமிழ் நூலைக்) காத்தருள்க என்று,
(படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும்) ஐந்தொழிலைச் செய்கின்ற ஆற்றலைச் சிவபரனுக்கு அருளவேண்டும் எனும் பேரிரக்கத்தால், ஆதி சத்தி, இச்சா சத்தி, கிரியா சத்தி முதலிய திருமேனிகளைத் (தான்) தாங்கி; உடலையும், (மனம் புத்தி சித்தம் அகங்காரம் ஆன) அந்தக் கரணம் முதலிய யாவும் அளித்தும்;
உள்ளம் கொண்டு உணர இயலாத இறைவனது திருக்கூத்தை (கிஞ்ஜிக்ஞர் எனும் ) சிற்றுயிர்கள் காண முடியாத சிறுமையை நோக்கி, அவ்வுயிர்கள் உய்திபெற (அத் திருக்கூத்தைத் தான் கண்டு (காட்டுகின்ற) கருணை பாலிக்கும் சிவகாமியார் (தெய்வத்) திருவடிகளைத் தியானிப்பம், (எ - று).
வேதத்தினும் முந்திய நூற்கள் இல்லை யாதலின், ‘முந்தை மறை' என்றார். பிரம ஞானம் உள்ள பிரா மணர்க்கும் வேதங்கட்கும் அநுபவ தெய்வ மாதலின், 'சுப்ரமண்யம்’ என்றார். குஹன் எனும் பெயர் போல், சுப்ரமண்ய நாமமும் குமரர்க்கே உரியது என்று
கோஷிக்கிறது வேதம்; அப்பெயரில் உள்ள பிரம சப்தம், மறை, வேள்வி, பெரிது எனும் பொருள் தரும்; ஆகலின், வேதபதி, வேள்விபதி, பெரியபதி எனும் பொருளுடையது அத் திருநாமம் என்று அறிஞர் அறிவிக்கும் செய்தியை அறியாதார் இல்லை.
ஸு - ஆநந்தம்; ப்ரஹ்ம - பெரிய பொருள்; (ந்யம்) ண்யம் - அதினின்று ஒளிர்வது எனப் பொருள் காண்பது மரபு. எனவே பேரொளியாய் மிளிர்வதான அநுபவ சொருபமே சுப்ரமண்யம் என உணர்கின்றார் மேலோர்.
“துப்புரவு நாடுயிரே! சுப்பிரமண்யத்தின் மேல், எப்பிரமம் உள்ளது இயம்பு" என்பர் பாம்பனடிகள்.
''எந்தை பிரானுக்கங்கு இருமூன்று வட்டமாய்
தந்தை தன் முன்னே சண்முகம் தோன்றலால்
கந்தன் சுவாமி கலந்தங் கிருத்தலால்
மைந்தன் இவனென்ன மாட்டிக் கொளீரே"
என்று திருமந்திரம் கூறுமாறு, 'முளரி விழி வழி உதித்த ' நுட்பம் ஊன்றி என்றும் உணரத் தகும்.
"சிவனார் மனம்குளிர உபதேச மந்திரம் இரு
செவிமீதி லும்பகர்செய் குருநாதா''
என்று கூறும் திருப்புகழின்படி, " இரு செவி குளிர மொழியும் குமாரகுரு" என்றார்.
படைப்பாதி நடத்தும் பரன் ஆற்றலை, ‘திறல் பரம்' எனத் தெளிவு படுத்தினார். " ஆக்கி யளித்துத் துடைக்கும், தொழில் அத்தனை வைத்தும் எள்ளத்தனை யேனும், தாக்கற நிற்கும் சமர்த்தன்" என்றார் தாயுமானார் .
ஐந்தொழில் இயற்றும் ஆற்றலை இறைவற்கு உதவ, இறைவி ஆதி முதலிய சத்திகளாக அமைகிறாள். பஞ்ச கிருத்திய பரம நுட்பத்தை, சிற்றறிவுடைய சீவர்கள் உணரார். இந்த ஏழைமை கண்டு இரக்கங் கொண்ட எம்பிராட்டி, அக்கூத்தின் குறிப்பைத் தான் பார்த்த கண் வாங்காது பார்த்து, ஆன்ம வர்க்கங்கட்கு அந்த அருளைச் சிறிது சிறிதாக அருள்பவள் ஆதலின், ‘தான் கண்டு கருணைபுரி சிவகாமி' என்றார்.
'மதுவிரி கோதை மடவரற் கம்ம
புதுவிருந் துண்ண வுண்ண
அற்புதம் விளைக்கும் நின் ஆநந்தக் கூத்தே"
என்ற குமரகுருபரர் குறிப்பும் இங்கு எண்ணத்தகும்.
சிவத்தை அவர்போலும் காமித்தார் இல்லை யாதலின், தேவி சிவகாமி எனும் பெயர் பெற்றார். குகனைப் புரக்க எனவே, சிவகாமி அடிகள் நினைவாம் என முடிக்க. நினைதல் - தியானித்தல். சுப்ரமண்யம் முதல் நிலை; குமார குரு அடுத்த நிலை; இதய குகன் முடிந்த நிலை என்க. குவலயம் குலவு அமரர் என்பது, பூசுரர் எனவும் பொருள் தரும். (ங)
----------------------

விநாயகர்

5. முன்னேரில்[1] மகதியாழ் [2]முனிகொண்டு வந்தகனி[3]
      முக்கணரை வலம்வந்துதான்
முழுதும் கவர்ந்தகுறை தீருமா றம்முனிவன்
      முன்கண்டு வந்தமலைவாழ்
தன்னே ரிலாத [4]திரு மாதுளங் கனியினிய
      தம்பியை வலிந்தணையுமா
தந்தருள இருதந்த மொழுகுமத மூன்றினெடு
      சார்களிற் றைத்துதிப்பாம்;
[5]கன்னேரு மெனையனையர் மனமும் கரைந்துகக்
      கருணைபுரி விரதவேளைக்
கனகமலை வளரு[6]மர கதவல்லி [7]கனியருட்
      கற்பகக் கனியையினிய
[8]மின்னேரு மிடை [9]யமர குஞ்சரி தடங்கொங்கை
      வெற்பில்விளை யாடுகளிறை
மேதக்க புலவர்புகழ் சாமிமலை மேவுதமிழ்
      [10]விரகனைக் காக்கவென்றே.

[1]. நேர் இல் - ஒப்பில்லாத. [2]. முனி - நாரத முனிவர். [3]. கனி - மாங்கனியை.
[4]. திருமாது உளம் கனி - அழகிய மாது உள்ளம் கனிந்து. [5]. கன்னேரும் - கல் ஒத்த.
[6]. மரகதவல்லி - உமாதேவி. [7]. கனி - கனிவு. [8]. மின்னேரும் - மின் போலும்.
[9]. அமர குஞ்சரி - தேவயானை. [10]. விரகனை - வேட்கையனை.

(பொ-ரை.) கல் ஒத்த என் போன்றவரது மனமும் கரைந்துருக, பரம அருளைப் பாலிப்பதையே விரதமாகக் கொண்ட செவ்வேளும், பொன்மலையில் வளர்ந்த பசும் கொடியான பார்வதியார் (திருவுளம்) கனிவுபெறச் செய்யும் கற்பக அருள் கனியும்,
இனிய மின்னல் ஒத்த இடையுடைய தேவயானையாரின் மாபெருங் கொங்கையான மலையில் விளையாடுகின்ற மதயானையும்,
மேலான (பெரும்) தகுதியுடைய புலவர்கள் புகழும் சுவாமி மலையில் எழுந்தருளிய தமிழ் வேட்கைத் தற்பரனுமான கந்தனை (ப் பாடிய இப்பிள்ளைத்தமிழைக்) காத்தருள்க என்று,
தமக்கு முன் எவரும் சமம் சொல்ல இயலாத மகதியாழ் நாரத முனிவர் கொணர்ந்த மாங்கனியை,
முக்கண் சிவத்தை வலம் வந்து தான் முழுதும் அபகரித்த குறை தீரும்படி,
அந்நாரத மனிவர் (தான்) முன் தரிசித்து வந்த மலையில் வாழும் தனக்கு ஒப்பிலாத அழகிய மாது, (கண்டு) உள்ளம் கனிந்து, (தன்) இன்பத் தம்பியை வலிந்து தழுவும்படித் தருவதன் பொருட்டு,
இரு தந்தங்களும், ஒழுகும் மும்மதமும் கொண்டு, முழு யானை உருவாகத் தோன்றிய கணபதியைத் துதிப்பம், (எ - று.)
விரத வேளை, கற்பகக் கனியை, களிறை, விரகனைக் காக்க என்றே களிற்றைத் துதிப்பம் என முடிக்க.
மாதுளங்கனி என்றது, வள்ளியம்மையை. கருணை மதம் இரண்டுடைய கணபதி, வள்ளியாரை முருகனொடு சேர்ப்பிக்க முழு யானையுருவாகக் கதித்த செய்தியைக் காந்தத்திற் காண்க.
மரகத வல்லி கனி - பச்சைக் கொடியில் பழுத்த பழம். குறிஞ்சி நிலத்தது யானை யாதலின், 'கொங்கை வெற்பில் விளையாடு களிறு' என்றார்.
மாதவ நாரதர், முன்னொரு சமயம் ஒரு மாங்கனி கொண்டு வந்தார். அதைத் தம்பி அடையாதபடி, தாமே கவர்ந்தார் கணபதி. அதனால் விளைந்த கவலையை விலக்க, அந் நாரதர் கண்டு வந்த கனியான வள்ளியம்மை, தானே வந்து முருகனைத் தழுவ, ஆன செயல் அத்தனையும் செய்தார் அந்த ஆனைமுகர் என்ற அருமையே அருமை. திருமாது உளம் கனி இனிய தம்பி எனப் பிரிவு செய்து பொருள் கொளப் பெற்றது.
-------------------

வீரபத்திரர்

6. விதிவழியி னுழலுயிர்கன் கதியடைய விமலனருள்
      வேதவிதி மாறிமேற்கொள்
வேள்வியினில் [1]விதியை[2]விதி மாலினுக் கேயவி[3]
      [4]விதிப்பனென் றேமுனைந்த[5]
விதியின்வழி கெடுமதிகொள் [6]சிறுவிதியை [7]அவ்வரி
      [8]விதிர்ப்பத் [9]தடிந்துமேவு
[10]விபுதரனை வோர்மெய்யு மொவ்வோர் [11]வடுக்கொள
      விதித்த[12]வீரனை நினைகுவாம்;
பதியுமவன் வழியொழுகு பசுவுமவை பிணிநெடும்
      பாசமும் பொய்யென்றுதான்
பரமமெனு மவநெறி பிடித்துக் கொடுந்தொழில்
      பயின்றசூர் படநெடியவேல்
முதியவுத தியுமலற மலைபிளவு படவெறியு
      முருகனைக் குருகிரியில்வாழ்
முதல்வனைக் கவுமாரி புதல்வனைப் புனிதவறு
      முகவனைக் காக்கவெனவே.

[1]. விதியை - பிரமனை. [2]. விதி மாலினுக்கே - பெற்ற திருமாலுக்கே. [3]. அவி - அவிர்பாகம்.
[4]. விதிப்பன் - (புது)விதி செய்து தருவன். [5]. முனைந்த - கர்வம் கொண்டு எழுந்த.
[6]. சிறுவிதியை - தக்கனை. [7]. அவ்வரி - அத் திருமால். [8]. விதிர்ப்ப - நடுங்க.
[9]. தடிந்து - வெட்டி. [10]. விபுதர் - தேவர்கள். [11]. வடுக்கொள - தழும்படைய.
[12]. வீரனை - வீரபத்திரரை.

(பொ - ரை.) முதல்வனும், அவன் (வகுத்த) வழியில் வாழும் ஆன்மாக்களும், அந்த உயிர்களைப் பிணித்த பாசப் பெருந்தொகுதியும் பொய் என்று புகன்று;
தானே பிரமம் எனும் வீணான வழியை மேற்கொண்டு, (வானவரை வருத்தும்) குரூரமான செயலை மேற்கொண்ட (அநியாயச்) சூரபதுமன் (ஆட்சி) அடங்க, பெருங்கடலும் அலற, (அவுணர் தலைவனை மறைத்துக் காத்த மாயா) மலை பிளவுபட முதன்மை வேலை வீசிய முருகனை;
சுவாமி மலையில் வாழும் முதல்வனை, கவுரநிற உமை மைந்தனை - மைந்தனை, புனிதமான ஆறுமுகப் பெருமானைப் பாடிய இப்பிள்ளைத்தமிழைக்) காத்தருள்க என்று,
கர்ம நெறியில் உழலும் ஆன்ம :கோடிகள் கதியடையும்படி, விமல சிவம் அருளிய வேதக் கட்டளை மறுதலையாக;
மேற்கொண்ட வேள்வியில், பிரமனைப் பெற்ற பிதாவான திருமாலிற்கே அவிர்ப்பாகத்தை அளிப்பன் என்றே முனைப்புக் கொண்டு முயன்று, விதிபோன வழி கெடுமதி கொண்ட தக்கனை, அத்திருமால் நடுநடுங்க வெட்டி;
(அவ்வேள்வியை) விரும்பி வந்திருந்த வானவர் அனைவருடைய மேனியும் ஒவ்வொரு தழும்பு பெற, நியதி செய்த வீரபத்திரரை நினைவம், (எ - று).
ஆவியென ஒன்றிலை, அருந்தளையும் மித்தை;
      அண்ணல் உருவங்கள் தொறும் அம்கட இனத்துள்
மேவிய வியோமம் எனமேவி, அழிவின்முன்
      விண்ணென இருப்பன்; வினை புண்ணிய முயன்றால்,
ஈவதவை என்ன பலன்? மித்தை; அதனால் நீ
      இன்ன அறம், இன்னமறம் என்ன உளம் முன்னேல்
தேவரை வருத்துதி; மகத்திறை நுமக்குத்
      தெவ்வன், அவனைச் சிறைசெய்! செய்தியிது செய்தி!"
என அசுரகுரு அருளிய நெறியை, அநுட்டானத்தில் கொண்டவன் அவுணர் தலைவன். ஆதலின்,
'பதியும், அவன்வழி ஒழுகு பசுவும், அவை பிணி நெடும் பாசமும் பொய் என்று, தான் பரமம் எனும் அவநெறி பிடித்துக் கொடும் தொழில் பயின்ற சூர்' என்றார்.
ஆணவச் சூரின் ஆட்சியை யழித்ததை, ‘பட' எனலிற் பெறவைத்தார். தென்கடலின் நடுவது சூரபதுமன் தலைநகரம். வீரமகேந்திரம் எனும் அப்பதிக்கு அரணான கடல் அலறவும், முதுகு காட்டி ஓடிய சூரனை மறைத்துச் சென்ற மாயாமலை பிளவுபடவும் ஏவிய பெருவேலை, ‘நெடியவேல்' என்றார். ஆணவக் கொட்டத்தை அடக்கி, அருவினைக் கடலை அலறச் செய்து, பெரிய மாயையைப் பிளந்த வியாபக ஞானவேல் என்பது குறிப்பு.
குரு வாழும் கிரியைக் ‘குருகிரி' என்றார். அகில சராசரங்கட்கும் ஆதியானை, ‘முதல்வன்' என்றார். கண்ணிற்குக் குளிர்ச்சி தரும் நிறக் கவுரி பாலன் என்பார். ‘கவுமாரி புதல்வன்' என்றார்.
ஏறுமயில் ஏறி விளையாடு முகம்; ஈசருடன் ஞான மொழி பேசு முகம்; கூறும் அடியார்கள் வினை தீர்த்த முகம்; குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம்; மாறு படு சூரனை வதைத்த முகம்; வள்ளியை மணம் புணர வந்த முகம் - எனும் களங்கம் அற்ற அறுமுகக் கடவுளை, ‘புனித அறுமுகவன்' என்று கூறிப் புளகிதமடைகிறார்.
ஒன்பது பிரமாக்களின் ஒருவனான தட்சன், ‘சிறு விதி' என்று பெயர் பெற்றான். அரி - (பகைவரை ) அழிப்பவன் எனும் பொருளில் திருமாலைக் குறித்தது.
விதிவழி மதி எனும் பழமொழி, ‘விதியின் வழி கெடுமதிகொள் சிறுவிதி' என்ற பகுதியில் வெளியாகின்றது,
விபுதர் - சிறந்த அறிவுடைய தேவர்கள்; அவர்கள் அறிவுப்பெருக்கம், எவ்வளவு அநர்த்தம் செய்தது?
"சாடிய வேள்வி சரிந்திடத் தேவர்கள்
ஓடிய வாபாடி உந்தீபற
உருத்திர நாதனுக் குந்தீபற.
வெய்யவன் அங்கி விழுங்கத் திரட்டிய
கையைத் தறித்தானென் றுந்தீபற
கலங்கிற்று வேள்வியென் றுந்தீபற.
உண்ணப் புகுந்த பகன் ஒளித்து ஓடாமே
கண்ணைப் பறித்தவாறு உந்தீபற
கருக்கெட நாமெல்லாம் உந்தீபற.
நாமகள் நாசி சிரம்பிர மன்படச்
சோமன் முகம்நெரித் துந்தீபற
தொல்லை வினைகெட உந்தீபற.
சூரிய னார்தொண்டை வாயினிற் பற்களை
வாரி நெரித்தவா றுந்தீபற
மயங்கிற்று வேள்வியென் றுந்தீபற
தக்கனார் அன்றே தலையிழந் தார்தக்கன்
மக்களைச் சூழநின் றுந்தீபற
மடிந்தது வேள்வியென் றுந்தீபற
ஆட்டின் தலையை விதிக்குத் தலையாகக்
கூட்டிய வாபாடி உந்தீபற
கொங்கை குலுங்கநின் றுந்தீபற."
என வரும் திருவாசகப் பகுதிகள்,
‘விபுதர் அனைவோர் மெய்யும் ஒவ்வோர் வடுக்கொள,
விதித்த வீரனை நினைகுவாம்'
எனும் வரியில் நினைவுகொள் நிற்கின்றன.

வீரபத்திரர் வீரம் கந்தபுராணத்திலும், தட்சயாகப் பரணியிலும் விரிவாக அறியுமாறு விளங்குகின்றன. (ரு)
--------------------

பயிரவர்

7. [1]ஆக்குந் தொழிலா னகங்காரம் அடைந்த
[2]மலரோ னுயர்முடிகள்
அஞ்சில் ஒன்றை ஏனையவை அஞ்சி
யலறக் கிள்ளியதில்
[3]காக்குந் தொழிலோ னுதலுதிரம் கக்க
ஏற்று நிறையாமை
கண்டு நகைத்த வடுகனிரு கழற்ற
மரைகள் கைதொழுவாம்;
[4]வாக்கு முதல்வி [5]மகிழ்நனரு மறையின்
கொழுந்தின் பொருளறியா
மையினுற் குட்டி யருஞ்சிறையில் வைத்த
மலர்க்கை முருகோனைத்
[6]தேக்கு மகிழ்ச்சி கொளக்குருவாய்ச் சிவனார்க்
கருளும் சிறியபெருந்
தேவர் பெருமான் சாமிமலைச் செவ்வேள்
பெருமான் றனைக்காக்க.

[1]. ஆக்கும் தொழிலால் - படைப்புத் தொழிலால். [2]. மலரோன் - பிரமன். [3]. காக்கும் தொழிலோன் - திருமால். [4]. வாக்கு முதல்வி - கலைமகள். [5]. மகிழ்நன் - கணவனான பிரமன். [6]. தேக்கும் - நிறையும்.

(பொ-ரை.) வாக்கின் தலைவியான கலைமகள் மகிழும் கணவன் அரிய வேதக் கொழுந்தான ஓம்பொருளை அறியாமையால், (அவன் சிரத்திற் கொட்டென்று) குட்டிக் கடுஞ்சிறையில் அடைத்த (எடுப்பான) மலர்க்கரத்து இளம்பூரணனும்;
குதூகலமான மகிழ்ச்சி கொள்ளும்படிக் குருவான கோலம் கொண்டு, சிவனார்க்கு உபதேசித்த சிறிய பெரிய தேவர் பெருமானும் ஆன சுவாமிமலைச் செவ்வேள் பெருமானைப் பாடிய பிள்ளைத் தமிழைக்) காப்பதாக என்று;
படைக்கும் தொழிலால் இறுமாந்த கமல ஆசனன் ஆன பிரமனது உயர்ந்த தலைகள் ஐந்துள் ஒன்றை, மற்றைய (அருமைத்) தலைகள் நான்கும் அஞ்சி அலறும்படிக் கிள்ளி; அப்பிரம கபாலத்தில் காக்கும் தொழில்செய் திருமாலின் நெற்றி குருதியைக் கக்க, (அதை) ஏற்றும் (கபாலம்) நிறையாமை கண்டு, (இவ்வளவுதானா இவர் நிலை என்று) நகைத்த வடுகக் கடவுளின் (வீரக் கழலணி) திருவடித் தாமரைகளைக் குவித்த கைகளால் கும்பிடுவம், (எ - று).
வாக்கு முதல்வியின் மகிழ்நனா யிருந்தும், ஓரெழுத்தின் பொருளை உரைக்க அறிந்திலன். அகில உலகையும் ஆக்குமவன் யான் என்று வேறு அகங்கரித்தான் அயன். பெரியோன் ஆன அவனைக் குட்டிச் சிறையிட்டு, சிவத்திற்குபதேசித்த அது சிறிய தெய்வம். பெரிதும் ஊன்றி உணர்வார்க்கு அதுவே பெரிய தெய்வம் என்ற அருமை, என்றும் ஊன்றி எண்ணத் தகும்.
படைப்பான் சிரத்தில் திருமால் குருதி நிரம்பாமை கண்டு, அண்ட சராசரம் அதிரப் பயிரவர் வாய்திறந்து நகைத்த வரலாற்றைக் காந்தத்திற் காண்க. அவ்விருவரும் பிறவாநெறி செய்த பெருஞ்செயல் இது என்றும் அப்புராணம் பேசும்.
பயிரவர் - கண்ணுதல் ஆலயக் காப்பாளர்; அறநெறி பிறழ்ந்தாரைத் தண்டித்து ஆள்பவர்; சதாசிவத்தை வந்திக்கும் சிந்தனையர்.
"செயிரவச் சூழ்ச்சிசெய் சீயச் சோரியை
அயிர வத்தனை வரம் அருளும் ஐயனை
கயிரவப் பழனம் சூழ் காழி மாநகர்
வயிரவ மூர்த்தியை வணக்கம் செய்குவாம் "
என்ற காழிப் புராணம் இங்குக் கருதத் தகும்.
பிரம கபாலத்தில், கொப்புளித்த திருமாலின் குருதியையேற்று, அவ்விருவர் அகந்தையையும் பயிரவர் அகற்றினர் என்பது, இதனில் உள்ள குறிப்பு.
வாக்கின் முதல்வியை, வாக்ரூபி என்பது வடவர் மரபு. வேத முதலாதலின், பிரணவம் மறையின் கொழுந்து எனப் பெற்றது. சிறிய பெருமான், பெரிய பெருமான், தேவர் பெருமான் என இயைத்து நோக்கின் இன்பம் விளையும். (சு)
--------------------------

திருநந்தி தேவர்

[8]. ஓராலி [1]னிரு நீழல் முன்னுளி [2]நால்வருக்
      குற்றபே ரையமறுமா
[3]றொளிநெறி யுளத்திலெழு மொண்கருணை யானன்
      குரைத்த[4]குரு முதல்வனருளும்
சீராக மப்பெரும் பொருளான சிவஞான
      போதநெறி மேதினியின்மேல்
திகழவருள் புரிகுரவர்[5] முதல்வனெம தருணந்தி
      திருவடிகள் வழிபடுகுவாம்;
பாராதி பூதங்க ளொன்றுமறி யாத்தனிப்
      பரவீட்டில் உரையுணர்வறப்
பாடுதிரு வருணகிரி வாழவருள் பரமகுரு
      பரனைப் பசும்பொன்மணிகள்
தாராள மாகஎறி[6] காவிரியின் வடகரைச்
      சகலவள மொடுகுலாவும்
சாமிமலை மேவுசிவ காமிமகிழ் பாலனைத்
      தளராது காக்குமாறே.

[1]. இரு நீழல் - சிறந்த நிழல். [2]. நால்வர் - சநகர், சநந்தனர், சநாதனர், சநற்குமாரர். [3]. ஒளி நெறி - சந் மார்க்கம். [4]. குரு முதல்வன் - தட்சிணா மூர்த்தி. [5]. குரவர் - சந்தான ஆசாரியர்கள். [6]. எறி - வீசுகிற.

(பொ-ரை.) மண் முதலாக உள்ள மாபெரும் பூதங்கள் ஒன்றும் தோன்றாதபடிச் செய்யும் தனித்த பரமுத்தியில் (உணர்வு பதிந்து; பலகாலம் உலகில் பயின்றிருந்த) நினைவும் மொழியும் நீங்க(த் திருப்புகழ்) பாடியபடியே இருந்த சிறந்த அருணகிரியார் வாழுமாறு அருளிய நலம் சிறந்த குருநாதனை;
பசுமையான பொன்னையும் மணியையும் அதிகமாக வாரி வீசும் காவிரியின் வடகரையில், சகல வளத்தொடு விளங்கும் சுவாமிமலையில் எழுந்தருளிய சிவகாமியின்புறும் பாலப் பருவப் பரனை (ப் பாடிய பிள்ளைத்தமிழ் நூல்,) தளர்விலாது (தழைக்கக்) காப்பதாக எனச் சங்கற்பித்து,
ஒப்பற்ற கல்லாலின் சிறந்த நிழலில் (எழுந்தருளியிருந்து), முன் ஒரு காலத்தில் (சநகர், சநந்தனர், சநாதனர், சநற்குமாரர் எனும்) நால்வர்க்கு விளைந்த ஐயம் பெரிதும் அகலுமாறு, ஒளிநெறி(யான சன்மார்க்கத்தைத்) திருவுளம்பற்றிய சிறந்த கருணையால், நலமுற உபதேசித்த குரு முதல்வரான தட்சிணாமூர்த்தி திருவாய் மலர்ந்தருளிய சிறந்த ஆகமப் பொருளான சிவஞான போதவழி நிலவுலகில் விளங்க , அருள் பாலித்த சந்தான குரவருள் தலைவரான எமது அருளார்ந்த திருநந்திதேவர் திருவடிகளை, வாழ்த்தி மகிழ்ந்து வழிபடுவம், (எ - று).
பல் சந்தப் பாக்களால் தன்னைப் பாடிய அருணையரை, 'உரை உணர்வு அறப் பரவீட்டில் வாழ அருள் பரம குருபரன்' என இயைத்துப் பொருள் கொள்ளப் பெற்றது.
"ஒரு பூதரும் அறியாத் தனி வீட்டில் உரை உணர்வு அற்று இரு" என்பது, கந்தர் அலங்காரம். உணர்வு என்பது, பாச பசு ஞானங்கள் எனினுமாம்.
"நின்ற சிவம் ஒன்று; அதனைத் தேர்தல் ஞானம்; நிகழ் போதம் தேர்ந்ததனைத் தெளியலாம்": இது சிவஞான போதம் என்பதன் செம்பொருள்.
தட்சிணா மூர்த்தி சிவஞான போதத்தை அருள் நந்தி தேவர்க்கு அறிவிக்க, அவர் சனற் குமாரர்க்கும், அவர் சத்தியஞான தரிசினிக்கும், அவர் பரஞ்சோதிக்கும், அவர் மெய்கண்ட தேவர்க்கும், அவர் அருணந்தி சிவத்திற்கும், மறைஞான சம்பந்தர்க்கும், அவர் உமாபதி சிவத்திற்கும், அவர் அருணமச்சிவாயர்க்கும் உபதேசித்த வரன் முறையுன்னி,

      'சிவஞான போதநெறி மேதினியின் மேல்
      திகழ அருள் புரிகுரவர் முதல்வன், எமது
      அருள் நந்தி திருவடிகள் வழிபடுகுவாம்"
என்றார்.
      "தேவர்பிரான் வளர்கயிலைக் காவல் பூண்ட
      திருநந்தி யவர்கணத்தோர் செல்வர் பாரில்
      பாவிய சத்தியஞான தரிசனிகள் அடிசேர்
      பரஞ்சோதி மாமுனிகள் பதியாய் வெண்ணெய்
      மேவியசீர் மெய்கண்ட திறலார் மாறா
      விரவுபுகழ் அருணந்தி விறலார் செல்வத்
      தாவிலருள் மறைஞான சம்பந்தர் இவரிச்
      சந்தானத் தெமையாளும் தன்மை யோரே"
எனும் சிவப்பிரகாசம், சந்தான குரவர்களை நினைவூட்டல் அறிக.
உரையும் உணர்வும் அறுதற்கு உதவ வந்த சிவஞான போதம், இன்று மேடைத் தர்க்கத்திற்கு இடமாகிக் கோடையிடி யிட்டுக் குமுறுகிறது.
      "ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
      பேதையிற் பேதையார் இல்''
என்பது பொது மறை.
அந்தப் பாவப் பெயர்க்கு ஆளாகாமல், அதை உள்ளங் கொண்டு ஓதுவோம்; உணர வேண்டும் அவற்றை உணர்வோம். அந்நிலையில்,
      "அறிவும் அறியாமையும் கடந்த
      அறிவு திருமேனியை" அறிவோம்.
அதன் பின் செய்தி யாது? இதை அறிவிப்பாரும் உளரேயோ என்று அலறுகிறது நமது மனம். முருகா! முருகா!! முருகா!!!
இப்பாட்டில் ஒன்று முதல் பல எண்கள் தோன்றலின், இது எண்ணலங்காரம் எனப்பெறும். (8)
---------------
திருவாறெழுத்து

9. இருமூன்றெய் தியஇயல்பு பிறழாது முத்தீ
      யெனுஞ்செல்வ [1]மோம்பு மியல்பார்
இருவரைச் சுட்டுபல் வேறுகுடி யாரகவை[2]
      இருபத்து நான்கிரட்டி
அருநான்கு மறைநெறி பயின்றபே [3]ரந்தணர்கள்
      அரியநறு மலர்கள்தூவி
அன்போடு தொழுவுகந் தேரகத் தமர்கின்ற
      ஆறுமுக னைக்காக்கவே;
பெருமூன்று துயருமடி யாரையணு காவகை
      பேணும் பெருங்காவலாய்ப்
பிறவியலை [4]வாரிக்கொர் [5]புணையாகி நவில்தொறும்
      பேரின்ப அமுதருள்வதாய்
[6]உருமூன்று மாகியவை யல்லாத திருமுருகன்
      உயர்திருப் பெயருமாகி
உய்யஅடி யேனுக்கும் ஐயனெங் குருசாது
      வோது திரு வாறெழுத்தே.

[1]. ஓம்பும் - வளர்க்கும். [2]. அகவை - வயது. [3]. அந்தணர்கள் - பிரமசாரிகள். [4]. வாரி - கடல் [5]. புணை - தெப்பம். [6]. உருமூன்று - அருவம், உருவம், அருவுருவம்.

(பொ-ரை.) (தன்னால் வருவன, நண்பரால் வருவன, தேவதைகளால் வருவன ஆன) முப்பெருந் துன்பங்கள் அடியவர் எவரையும் அணுகாதபடிச் சிறக்கக் காக்கும் பெருங்காவல் செய்வதாய்;
(அளவிலாத் துன்ப) அலைகளையுடைய பிறவிக்கடலில் அகப்பட்டவர்க்கு, (கரையேற்றும் மகத்தான ஒரு) மரக்கலமாய்;
(உணர்ந்து நெகிழ்ந்து) உருவேற்றுந் தோறும் (அரிய) பேரின்ப அமுதை அருள்வதாய்;
(அருவம், உருவம், அருவுருவம் எனும்) மூன்று திருமேனிகளாகி, அவைகட்கு அப்பாலும் ஆன திருமுருகனுடைய உயர்ந்த (தெய்வத் திருநாமமும் ஆகி,
உய்தி பெறுமாறு (எளிமையுள) அடியேற்கும் ஐயனான எமது குருநாதர் சாது ஸ்வாமிகள் உபதேசித்த திரு ஆறு எழுத்தானது;
(ஓதல், ஓதுவித்தல் வேட்டல், வேட்பித்தல்; ஈதல், ஏற்றல் எனும்) ஆறு தொழில்களாக அமைந்த இயற்கையிலிருந்து ஒரு சிறிதும் தவறாமல்,
(ஆகவநீயம், காருக பத்தியம், தட்சிணாக்கினி யாகிய) மூன்று வேள்வித் தீ எனும் (இனிய) செல்வத்தை வளர்க்கும் இயற்கையர்;
(தாய் தந்தை யெனும்) இரு கால்வழிகளைச் சுட்டிய பல்வேறு கோத்திரங்களையுடையவர்கள்;
நாற்பத்து எட்டு ஆண்டுகள் அருமையான நான்கு வேத நெறியை (பிரமசரியத்தில் இருந்து) பழகிய சிறந்த அந்தணர்கள்,
அருமையான மணம் கமழ் மலர்களால் அர்ச்சித்து அன்பொடு வணங்க,
திருவுளம் மகிழ்ந்து திருவேரகத்தில் அமைதியொடு எழுந்தருளியிருக்கின்ற ஆறுமுகனை (ப்பாடிய இப்பிள்ளைத் தமிழைக்) காப்பதாக, (எ - று).
மூன்று துயர் - ஆதியாத்மிகம், ஆதி தெய்விகம், ஆதி பௌதிகம் எனவும் பெறும்.
மாறி மாறி வரும் அலைகளை யுடையது மாபெருங் கடல்; அது போல், இடையறாது அலை மோதல் விளைவிப்பது பாழும் பிறவிக்கடல். ஆதலின், பிறவி யலைவாரி ' என்றார்.
உரு மூன்று - சகளம், நிஷ்களம், சகள நிஷ்களம் எனப் பெறும்.
''அருவம் ஒரு நான்காகி, உருவம் ஒரு நான்காகி,
அறை யிரண்டும்
மருவியுள உருவருவம் ஒன்றாகி, முத்திறமும்
வழுத்த ஒண்ணாப்
பெருவெளிக்கும் அப்பாலாய் உள்ள பொருள்
ஈதெனவே, பெரிதும் சேயோன்
ஒருவனையே புகழ்ந்த அருள்"
என்பர் பாம்பன் அடிகள்.
சாதுஸ்வாமிகள் - பழநியில் திருப்பணி பல நடத்திய முதன்மைப் பெருமுனிவர். பேறான அவரிடம் பெற்ற பேற்றை எண்ணி நெகிழ்ந்து,
'ஐயன் எம் குரு சாது' என அருமையுடன் ஓதினார். இங்ஙனம் உரியவர்களைத் தம் காப்பியத்தில் குறித்தல் மாபெரும் கவிஞர் மரபு.
'இருமூன் றெய்திய இயல்பினின் வழா அது
இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி
அறுநான் கிரட்டி இளமை நல்லியாண்டு
ஆறினில் கழிப்பிய அறன் நவில் கொள்கை
மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து
இருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல
உச்சிக் கூப்பிய கையினர் ; தற்புகழ்ந்து
ஆறெழுத் தடக்கிய அருமறைக் கேள்வி
நாவியல் மருங்கில் நவிலப் பாடி
விரையுறு நறுமலர் ஏந்திப் பெரிதுவந்து.
… … … … …
ஏரகத் துறை தலும் உரியன்''
எனும் திருவேரகத் திருமுருகாற்றுப்படை முழுதும், இப்பாடலின் முற்பகுதியில் இணைந்திருப்பதை அறிக.
"முன்னோர் மொழியும்
பொன்னேபோல் போற்றுவம்.''
எனும் புனித நடை. (அ)
---------------------
திருநீறு

10. எங்கள் பெருமான் சம்பந்தன் எண்ணா யிரவர் சமணர்கழு
      ஏற[1]வாது செயுங்காலை இயம்பும் [2]பதிகச் சிறப்பினதாய்
[3]அங்க ணாவுக் கரசர்நீ றணியா வூர்[4]கா டாகுமென
      அறைந்த பெருமைத் தாய்நீறில் லாதநெற்றி பாழென்னத்
தங்கு புகழ்சே ரவ்வைசொலுந் தகைமைத் தாய்நான் [5]மறையின்முடி
      தாழ்வில் [6]மிருதி புராணங்கள் சாற்றும் பெருமை பலவுடைத்தாய்ச்
செங்கண் [7]ஏற்றர் திருமேனித் திகழும் பூச்சாந் திருநீறு
      திருவே ரகத்துக் குமரனுதல் சேர்ந்து காக்கப் பரவுதுமே.

[1]. வாது - சமய வாதம். [2]. பதிகம் - திருநீற்றுப் பதிகம். [3]. அங்கண் - குளிர்ந்த அருள் நோக்கு. [4]. காடு - சுடுகாடு. [5]. மறையின் முடி - உபநிடதம். [6]. மிருதி - ஸ்மிருதிகள். [7]. ஏற்றர் - ரிஷப வாகனர்.

(பொ-ரை.) பெருமையிற் சிறந்த எங்கள் திருஞான சம்பந்தர், எண்ணாயிரம் சமணர் கழுவேற (புனித) சமயவாதம் புரிந்தபொழுது அருளிய திருப்பதிகத்தில் சொல்லப்பெறும் தெய்வீகச்) சிறப்பையுடையதாய்;
அருளார் நோக்கினரான திருநாவுக்கரசர், திருநீறு அணியாதவர் (வாழும்) ஊர் சுடுகாடாம் என்று பறையறைந்தாற்போல் அறிவித்த பெருமை யுடையதாய்;
நீறில்லாத நெற்றிபாழ் என்று, என்றுமுள்ள புகழ் படைத்த ஒளவையார் அருளும் தகுதியுடையதாய்;
நான்கு வேதங்களின் முடிவான உபநிடதங்களும், குறை ஒன்றும் இல்லாத ஸ்மிருதிகளும், புராணங்களும் புகலும் பெருமை பல பெற்றதாய்;
செம்மை நோக்குடைய விடையேறும் பெருமானார் திருமேனியின் விளங்கும் பூசுதலான திருநீறு,
திருவேரகத்தில் எழுந்தருளிய குமரப் பெருமானின் நெற்றியில் இருந்து (இப்பிள்ளைத்தமிழைக்) காப்பதாக, (எ - று).
திருஞான சம்பந்தர் அடியார்களுடன் திருமடத்தில் இருந்தார். நள்ளிரவில் அருகர்கள், அவர் மடத்தைக் குரூர மனம் கொண்டு கொளுத்தினர். அதுகண்ட அடியவர்கள் அஞ்சினர். உடனே காழிப் பெருமான்,
      "செய்யனே திருவாலவாய் மேவிய
      ஐயனே அஞ்சல் என்றருள் செய்யெனை;
      பொய்யராம் அமணர் கொளு வும்சுடர்
      பையவே சென்று பாண்டியர்க் காகவே"
என்று பதிகம் ஒன்றைப் பாடினர். பற்றியெரிந்த கனல் வெப்பு, கூன் பாண்டியரைச் சுரநோயாகச் சூழ்ந்தது. சுரம் தவிர்ப்பார் சமயம் மெய்ச்சமயம் என்று வாது எழுந்தது.
சமணர்கள் குண்டிகை நீர் தெளித்து, மன்னர் மேனியை மயில் பீலியால் வருடினர். மேலும் பொரிந்து கரிந்தது மன்னர் மேனி. திருஞான சம்பந்தர்,
      "மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
      தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
      சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
      செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயான் திருநீறே”
என்று பதிகம் பாடித் தடவிய நீற்றால், சுரநோய் தவிர்ந்தது; கூனும் நிமிர்ந்தது; நின்ற சீர் நெடுமாறர் எனும் தீட்சா நாமமும் பெற்றார் மன்னர் எனும் வரலாறு, இங்கு எண்ணப்பெறும்.

அப்பதிகம், திருநீற்றுப் பதிகம் என்றே சிறப்பிக்கப் பெற்றது. மந்திர மயமான பஸ்ம ஜாபால உபநிடதம் கூறும் பூதி மகிமை முழுவதும், அரிய இப்பதிகத்தில் இருத்தலை அறியலாம். அதனுடன்,
      "திருவெண்ணீ றணியாத திருவி லூரும்
      அவை யெல்லாம் ஊரல்ல அடவி காடே"
எனும் திருநாவுக்கரசர் திருத்தாண்டகமும்,
      ''நீறில்லா நெற்றிபாழ், நெய்யில்லா உண்டிபாழ்"
எனும் ஒளவையார் அருள் மொழியும், இப்பாட்டில் அறிவிக்கப் பெற்றன.
நீறு - நீற்றி யெடுத்தது; வினைகளை நீறாக்குவது. இதனால் இது, வடமொழியில் பஸ்மம் எனப்பெறும்.
      "நீறு புனைவார் வினையை நீறு செய்த லாலே
      வீறு தனி நாமமது நீறென விளங்கும்
      சீறுநர கத்துயிர் செலாவகை மருந்தாக்
      கூறுடைய தேவிகையில் முன்னிறை கொடுத்தான்"
      "கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை
      மங்காமல் பூசி மகிழ்வீரே யாமாகில்,
      தங்கா இருவினை சாரும் சிவகதி;
      சிங்கார மான திருவடி சேர்வரே"
என்பன கொண்டு, திருநீற்றுப் பெருமை தெரிந்து கொள்ளத் தகும்.
பூசப் படுதலின் 'பூச்சாம் திருநீறு' என்றார்.
'எங்கள் பெருமான் சம்பந்தர்' என்பது, அவர் பால் வைத்த ஆர்வத்தை அறிவிக்கும். பெருமான் - பரமாசாரியர் எனும் குறிப்பு. அவர் திருவடிகளைச் சார்பவர், சார்ந்தவண்ணம் பேறு பெறுவர். ஆதலின், அவர் சம்பந்த அருமை கருதி, 'எங்கள்' என்ற அடை கொடுத்தார்.
அருளுக்கு இருப்பிடம் ஆனவர் ஆதலின், ' அங்கண் நாவுக்கரசர்' என்றார்.
அன்பர் இடத்தில் அருள் நோக்கும், வன்பரிடத்துக் கடுநோக்கும் கொண்டதாகலின், விடையைச் 'செங்கண் ஏறு' என்றார். செங்கண் - சிவந்த கண்; செம்மைக் கண் என அது இருபொருள் படுதலை யறிக.
-----------------------------

உருத்திராக்கம்

11. மன்னுயிர்கள் துன்னுமல மாயைகரு மங்கள்புரி
      [1]வலியினாற் பிறவி நோயின்
[2]மாழ்குபெரு வாதைகண் டருளினுற் [3]பவநோய்
      வயித்தியன் தரு[4]பற்ப மீது
என்னுமொளி நீறுமந்திரவா[5] றெழுத்தோ
      டியைந்த மணியா கியெங்கள்
இறைவனருள் விழியின்வந் தடியர்திரு மேனிபுனை
      எழிலக்க மணி[6] புரக்க
மின்னுமணி மகுடஇமை யோர்படு [7]மிடுக்கணுறு
      [8]மிடியெலாம் பொடி யாகவே
[9]விமலநுதல் வழிவந்து சரவணம் வளர்ந்தம்மை
      [10]விழியின்மணி யான முருகைப்
பன்னுமறை பரவுசுப் பிரமணியை யோகப்
      பதியிலமர் ஞான மணியைப்
பழனியிலை வாய்பரங் குன்றுபழ முதிர்சோலை
      பலமலையி லமர் மணியையே

[1]. வலி - வலிமை. [2]. மாழ்கும் - வருத்தும். [3]. பவ நோய் - பிறவி நோய்.
[4]. பற்பம் -பஸ்பம். [5]. ஆறு எழுத்து - சடக்கரம். [6]. அக்கமணி - உருத்திராக்கம்.
[7]. இடுக்கண் - துன்பம். [8]. மிடி - வறுமை. [9]. விமலன் - சிவன்.
[10]. விழியின் மணி - கண்மணி.

(பொ - ரை.) பளபளக்கும் நவமணி (பதித்த) மகுடம் அணிந்த வானவர் (இடுங்கிய கண்ணராம்படி) அனுபவித்த துன்பமாம் வறுமையெலாம் துகளாக;
களங்கம் இல்லாத (சிவனார்) நெற்றிக் கண்வழி உதித்து, (வாழ்விக்கும்) சரவணப் பொய்கையில் வளர்ந்து, உமாதேவியின் கண்மணியான கோமளக் கொழுந்தை;
சிறப்பாகச் சொல்லப் பெறும் (வாய்மை) வேதங்கள் வழிபடுகின்ற சுப்ரமணியை;
திருவேரகப் பதியில் அமர்ந்த ஞான மாணிக்கத்தை; பழநிமலை, திருச்சீரலைவாய், திருப்பரங்குன்று, பழமுதிர் சோலை, பல குன்றுகள் தோறும் வீற்றிருக்கும் தெய்வமணியை(ப் பாடிய இப்பிள்ளைத்தமிழைக்) காத்தருள்வதாக என்று,
நிலைபேறுடைய ஆன்மாக்கள் (தம்மில்) பொருந்திய ஆணவமலம், மாயாமலம், கன்மமலம் (எனும் மூன்றும் ) வலிந்து செயலாற்றலால் ;
பிறவி நோயில் பேதுறுகின்ற வேதனையை அறிந்து, (தமது இயல்பான) பேரருளால் பவரோக வயித்திய பரன் அருளிய பஸ்மம் இது என்று சொல்லப் பெறும் ஒளிமயமான திருநீறு;
(மாபெரும்) ஆறு எழுத்து மந்திரம் எனும் அவ்விரண்டுடன் பொருந்திய மணியாகி; எங்கள் இறைவன் அருளிய (வித்தக) அருள் நோக்கிலிருந்து வெளிப்பட்டு, அடியவர் திருமேனியில் அணியப் பெறும் கவினுடைய திருவுருத்திராக்கம் காப்பதாக, (எ - று.)
மன்னும் துன்னும் எனும் அடைகள், ஆன்மாக்களும் ஆணவமும் அநாதி நித்தியம் எனலை அறிவிக்கின்றன. பிறவி நோயின் மாழ்குபெரு வாதையை,

"ஆயுத ரந்தனில் ஏயும் பொழுதோர்
ஐம்பே ரிடராகும்
அகிலத் துறுசிறு குழவிப் பருவத்
தறியா மையினிடராம்
ஏயகு மாரத்(து) இடர் காமத்தால்;
எழில்மனை சுதரெனவே
ஏயும் பொழுதும் இடர்;பிணி யாலிடர்;
இலதாம் மிடிவந்தால்
காயும் பசியால் இடர்;பின் நரைதிரை
கானுறு போதுமிடர்;
காலனு தித்திடு போதுறும் இடரைக்
கடவுள் நீயறிவாய்
மேய இடர்க்கடல் மூழ்குமெ னைச்சுக
வேலையில் நீவைப்பாய்
வேதகி ரிப்பவ ரோக வயித்திய
வேணிமுடிக் கனியே"
எனப் போரூர் அடிகள் புகல்வதாலும் அறியலாம்.
''கருதும் அடியார் பவக்கடலைக் கடத்தும்''
மணி மந்திர ஒளடதங்களை, ஊன்றி இப்பாடல் உணர்த்துவதறிக.
மணி - உருத்திராக்கம்; மருந்து - பஸ்மம் எனும் திருநீறு. மந்திரம் - சடக்கரம். விமல உருத்திரர் விழியிலிருந்து வெளிப்பட்டதாகலின், உருத்திராட்சம் எனப் பெற்றது. விழியினின்று உதித்த மணி, தன் போல் அவ்விழியில் உதயமான சுப்பிரமணியைக் காக்க என்பது கருத்து. (11)
--------------------

தமிழ்த் தெய்வம்

[12]. உலகினெ டுதித்ததென் றைக்கு[1]நில வுவதொழுங்(கு)
      உற்ற[2]வியல் பினையுடைத்தாய்
ஓதுதற் கெளிதாகி நல்லநா கரிகர்பயில்
      உயர்வுடைத்தாய் உலகில்வாழ்
பலவகைய மாந்தர்க்கு முரிய[3]பொது மறையைப்
      படைத்தசீர்த் தாகிமுக்கண்
[4]பகவ[5]னெடு மால்சத்தி கணபதி குமாரவேள்
      [6]பண்ணவர்கள் பிறரு[7]நச்சக்
குலவுகவி மாலைபல மணமுடைய தாய்முதலை
      [8]கொண்டமத லையையழைத்தல்
கொடியவிட மமுதுசெயல் முதலரிய செயல்செய்புகழ்
      கொண்டதாம் செந்தமிழ்த்[9]தே(வு)
இலகுதமி ழால்[10]வைத பேருக்கு மருள்வனடி
      யிணைபாடி யடியர்வாழ
இனியதமிழ் அருள்கருணை முருகனுயர் குருமலையி
      னுறுகுமர னைக்காக்கவே.

[1]. நிலவுவது - விளங்குவது. [2]. இயல்பு - இயற்கை. [3]. பொதுமறை - திருக்குறள்.
[4]. பகவன் - சிவபிரான். [5]. நெடுமால் - உலகளந்த திருமால். [6]. பண்ண வர்கள் - தேவர்கள்.
[7]. நச்ச - விரும்ப. [8]. கொண்ட - விழுங்கிய. [9]. தேவு - தெய்வம்.
[10]. வைத - நிந்தித்த.

(பொ - ரை.) உலகம் உதித்த பொழுது அதனுடன் உதித்ததாய்; எந்நாளும் (இளமை பெற) விளங்குவதாய்;
(ஐந்திலக்கண) ஒழுங்கு அமைந்த இயல்பை யுடையதாய்;
ஓதுதலுக்கு எளிதாகி, உயர்ந்த நாகரிகம் உடைய ஆன்றோர் பயிலும் உயர்வுடையதாய்;
உலகத்தில் வாழ்கின்ற பலவகை மக்களுக்கும் உரிமையுடைய பொதுமறை எனும் திருக்குறள் நூலைத் தோற்றுவித்த சிறப்புடையதாய்;
(மதி பரிதி அக்கினி யெனும்) முக்கண் முதல்வன், உலகளந்த திருமால், பராசக்தி, கணபதி, முத்தி விருப்பளிக்கும் குமர முதல்வன், வானோர் முதலிய மற்றைய யாவரும் வேட்கை கொள்ள, விளங்குகிற பல (தெய்வக்) கவிமாலைகளின் மணம் கமழ்வதாய்;
முதலையுண்ட பாலனை அழைத்தல், பயங்கர விடத்தைப் பருகல் முதலிய செய்தற்கு அரிய செயல்களைச் செய்து புகழ் பெற்றதான செந்தமிழ்த் தெய்வம்,
என்றும் விளங்கும் (இனிய) தமிழால், வைதார்க்கும் வாழ்வளிக்கும் பரனது திருவடிகளைப் பாடி, அடியவர்கள் வாழ்வுபெற, இனிய தமிழை உதவிய கருணையுடைய இளம் பூரணனும்,
உயர்ந்த சுவாமி மலையில் எழுந்தருளியவனுமான குமரனைப் பாடிய இப்பிள்ளைத்தமிழைக்) காப்பதாக, (எ - று.)
உதித்தது, நிலவுவது, இயல்பது, எளியது, உயர்ந்தது, சீர்த்தது, மணமுடையது ஆகிப் புகழ் கொண்ட செந்தமிழ்த் தே, காக்கவே என முடிக்க.
"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய "முதன்மை மொழி; "என்றுமுள தென்தமிழ்"; "தெய்வம் பேணும் தமிழ்" என்பவைகளை, இப்பாட்டின் முதலடி கொண்டு அறியலாம்.
பிறமொழிபோல் உச்சரிப்புக் கடுமை யிலாதது ஆதலின், 'ஓதற் கெளிதாகி' என்றார்.
யபெயக்கண்டு நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்'
எனும் குறளில், நாகரிகர் நலமுணரலாம். நலம் சிறந்த இவர்கள் தான் நல்லவர்கள் ஆதலின், 'நல்ல நாகரிகர்' என்றார். அவர்கள் பயிலும் உயர்வுடைய தமிழை, ஊன்றி உணர்பவர் உத்தமர் ஆவர்.
பொதுமறை என்பது, திருவள்ளுவர் அருளிய திருக்குறள் நூலின் பல பெயர்களுள் ஒன்று.
தமிழின் பெருமையை,

"தமரநீர்ப் புவனம் முழுதொருங் கீன்றாள்
தடாதகா தேவியென் றொருபேர்
தரிக்கவந் ததுவும், தனிமுதல் ஒருநீ
சவுந்தர மாறனா னதுவும்,
குமரவேள் வழுதி உக்கிர னெனப்பேர்
கொண்டதும், தண்தமிழ் மதுரம்
கூட்டுண எழுந்த வேட்கையா லெனிலிக்
கொழிதமிழ்ப் பெருமையார் அறிவார்''

என்று மதுரைக் கலம்பகத்தில் ஸ்ரீகுமரகுருபர ஸ்வாமிகள் கூறுவதாலும் அறியலாம்.

"உரைப்பார் உரையுகந் துள்க வல்லார் தங்கள் உச்சியாய்
அரைக்கா டரவா! ஆதியும் அந்தமும் ஆயினாய்
புரைக்காடு சோலைப் புக்கொளியூர் அவிநாசியே
கரைக்கான் முதலையைப் பிள்ளைதரச் சொல்லு காலனையே''

எனும் திருப்பதிகம் பாடி, சுந்தர மூர்த்திகள் முதலையுண்ட பாலனை உயிர்ப்பித்த அருமை தமிழின் பெருமை.
கொடியவிடம் அமுது செய்ததை,

"துஞ்சிருள் காலை மாலை தொடர்ச்சியை மறந்திராதே
அஞ்செழுத் தோதி நாளும் அரனடிக் கன்பதாகும்
வஞ்சனைப் பால்சோ றாக்கி வழக்கிலா அமணர் தந்த
நஞ்சமு தாக்குவித்தார் நனிபள்ளி அடிகளாரே"
என வரும் அப்பர் திருநேரிசையும் அறிவிக்கின்றது.
வைதார்க்கும் அருளியதைச் சுந்தரர் தேவாரத்தாலும்,
"வைதாரையும் அங்கு வாழ வைப்போன்''
எனும் கந்தரலங்காரத்தாலும் அறிக. (12)
காப்புப் பருவம் நிறைவெய்தியது.
----------------------------------------------

2. செங்கீரைப் பருவம்

இது, குழந்தை பிறந்த ஐந்தாம் திங்களில் நிகழ்வது. ங்ங, ங்ங என்று குழவி மகிழ்வொடு கூறக் கேட்டு, தாய்மார் இன்பம் கொள்ளும் பருவம் இது. இவ்வொலி, மழலையினும் இனியது. மழலை ஒருவகையில் பொருள் கொளற்கு உரியது. ங்ங எனும் இதுவோ, வெறும் ஒலி மாத்திரமா யிருக்கும். தொடையமைதியிலாதவற்றைச் செந்தொடை யெனல் போல், சொல்லிற்கு உரிய தன்மையிலாதவற்றை, மேதகு செங்கீரை யென்பர் மேலோர். கீர் - சொல்; இது 'ஒரு நிருத்த விசேடம்' என்பர் பெரியவாச்சான் பிள்ளை.
மற்று, செங்கீரை - அழகிய கிளி; இப்பொருளில் கீர எனும் வடசொல், கீரையெனத் திரிந்தது. ஒரு காலைப் பதித்து, ஒரு காலைத் தூக்கி, இருபுறத்தும் தலையசைத்துச் சாய்ந்து ஆடும் கிளிபோல், தவழும்போது ஒரு முழந்தாளையூன்றி, ஒரு முழந்தாளை மடித்துத் தூக்கி, இரு தோளிலும் மாறிமாறித் தலை ஒன்றும்படிப் பலதரம் சாய்ந்தாடும் குழந்தைப் பருவம் என்பதும் ஒருவகை.
செவ்விய கீரைத்தண்டு காற்றில் அசைந்து ஆடுதல் போல், ஆடும் பருவம் என்பாரும் உளர்.
-------------

13. ஐவகை யெனும்பூத மாதியை வகுத்ததனுள்
      [1]அசரசர பேதமான
யாவையும் வகுத்து[2]மறை யாதியும் வகுத்தனைஎம்
      ஐயமற் றவையோதவோ
கைவரு கலைத்திறன் எமக்கிலை வருந்தியே
      கற்பினும் கடனீரினைக்
காதலிற் பருகினீர் வேட்கைதணி யாதவர்
      கணக்காகி நின்றதன்றோ
உய்வகை எமக்கருள் ஒருமொழி உரைப்பையேல்
      [3]ஓதியுண ராதஞானம்
ஒருநொடியி லெய்தியுயர் கதிபெறுவ மாதலால்
      உள்ளுருகி வேண்டுகின்றேம்
தெய்வமறை முடிவான [4]அநுபூதி யுறவினிதோர்
      செங்கீரை யாடியருளே
திருமருவு குருமலையி லமரினிய தமிழ்முருக
      செங்கீரை யாடியருளே.

[1]. அசரம் - நிலைத்திணை; சரம் - இயங்கு திணை. [2]. மறை - வேதம். [3]. ஓதி உணராத ஞானம் - சிவஞானம். [4]. அநுபூதி - உடனாதல்; அநு - உடன்; பூதி - ஆதல்.
-----------------------------
(பொ - ரை.) (மண் நீர் தீ காற்று வான் ஆகிய) ஐந்து வகை என்று அறிவிக்கப் பெறும் பூதங்கள் முதலியவைகளைப் படைத்து,
அவைகளினிடத்திலிருந்து நிலைத்திணை, இயங்கு திணையென வேறுபட்டிருக்கும் பலவற்றையும் படைத்து,
(அவைகளுடன்) வேதம் முதலிய அருள் நூற்களையும் (வழியுணர்ந்து வாழும்படி) வகையாக உதவினை;
எமது ஐயம் தீர்ந்து அந்த அருள் நூற்களை ஓதவோ, கைவந்த கலையாற்றல் எம்மனோர்க்கு இல்லை;
(ஒருவாறு) வருந்திக் கற்றாலும், கடல் நீரை (பட படத்த) ஆர்வத்தொடு பருகி, (அதனால்) தண்ணீர்த் தாகம் தணியாதவர் கணக்காய் இருந்தது அல்லவோ;
உய்யும் வகையை எமக்கு உதவ ஒரு மொழி உபதேசம் செய்வையேல், (உயர் நூல்களை) ஓதி உணராத பேரறிவை ஒரு நொடியில் எய்தி உயர்ந்த கதி பெறுவோம்; ஆதலால், உள்ளம் உருகி (உன்னை) வேண்டுகிறோம்;
தெய்வ(த் தன்மை வாய்ந்த) வேத முடிவான அநுபூதி கைவல்யமாக, இனிமையொடு ஒப்பற்ற செங்கீரையாடியருள்;
(எண்வகைத்) திரு (இனிது) மருவிய குருமலையெனும் திருவேரகத்தில் எழுந்தருளிய இன்பத் தமிழ் முருகா! செங்கீரை யாடியருள், (எ - று).
நிமித்த காரண நின்மலன், காலம் சிற்சத்திகளைத் துணைக் காரணங்களாக முன் வைத்து, முதற்காரணமான மாயையினின்றும் காரியப் படுத்தலால்,
'ஐவகை யெனும் பூதம் ஆதியை வகுத்து'
என்றார்.
அசைவிக்க அசையும் அசேதன உலகம்; அறிவிக்க அறியும் அறிவுலகம். இதனை,
"அசர சர பேதமான யாவையும் வகுத்து"
என்றார்.
கலை நுட்பம் விளங்கினாலன்றி அருள் நூற்களை உணர வழியில்லை. எதிர்மறை உடன்பாடு என இரு முனையுடைய கலைகளின் ஒருபுறம் சாரில் இருள்; மறுபுறம் சாரில் அறிவு. ஒளிமயமான அறிவுப்பகுதியைத் தெளிவு பெறக் கொள்வதே திறம். ஆதலின்,
"கைவரு கலைத் திறம் எமக்கிலை '' என்றார்.
தாகத்தைக் கடல் நீர் தணிப்பதில்லை; அதுபோல், வருந்திக் கற்றாலும் அமைதி வாய்ப்பதில்லை. நீ செங்கீரை யாடினால், அதைத் தரிசிக்கும் எமக்கு, சிறந்த, அனுபூதி சித்திக்கும் என்றபடி.
ஓதியுணர் ஞானம் பசு பாச ஞானங்கள்; ஓதியுணராத ஞானம் அருள் ஞானம். அச்சிவஞானமே அருள் கதியை அளிக்கும். தெய்வமறை முடிவு - உபநிடதம். அதில் விளைவது அநுபூதி என்க.
செம்மையுடைய கீர் செங்கீர் என்றாயது; கீர் - மொழி. அமுத மொழியில் அநுபூதி விளையும்; 'ஒரு மொழி உரைப்பையேல் உயர்கதி பெறுவம்' என்று, குதித்த உவகையொடு குறித்தபடி.
" ஐவகை யெனும்பூத மாதியை வகுத்ததனுள்
அசரசர பேத மான
யாவையும் வகுத்து, நல் அறிவையும் வகுத்து, மறை
யாதி நூலையும் வகுத்து,
சைவ முதலாம் அளவில் சமயமும் வகுத்து, மேல்
சமயம் கடந்த மோன
சமரசம் வகுத்த நீ, உன்னை நான் அணுகவும்
தண்ணருள் வகுக்க விலையோ
....... ............... .................... ................
தெய்வமறை முடிவான பிரணவ சொரூபியே!”
எனும் தாயுமானாரை அடி ஒற்றியது இது. (13)
-----------------

14. [1]அவஞான நெறிகணவ [2]நவமாக அறைகின்ற
      அறிஞர்மலி கலியுலகிலே
அவர்கள் மொழி [3]தவறுநெறி எமதுளத் தேறுமோ
      [4]அரியேறு புலதின்னுமோ
தவஞான நெறி[5] பயில கிற்றிலே மாயினும்
      [6]சால்பிலா நெறியி னுழையேம்
சரியைகிரி யாதியிக ழேமுனடி யாரடியர்
      [7]சார்பை யொரு காலுமிகழேம்
உவமான மில்லாத பரதெய்வமே மறைகள்
      ஓதும் பரப்பிரமமே உயராக
மத்தின் முடி வாகமெய் கண்டமுனி[8]
      உலகுய்ய வாய்மலர்ந்த
சிவஞான போதமுறை யநுபூதி கைவரவொர்
      செங்கீரை யாடியருளே
திருமருவு குருமலையி லமரினிய தமிழ்முருக
      செங்கீரை யாடியருளே .

[1]. அவஞான நெறிகள் - பயனிலாத வீணான அழிவு வழிகள். [2]. நவ நவமாக - புதிது புதிதாக. [3]. தவறு நெறி – பிழையான வழிகள். [4]. அரியேறு - ஆண்மையுடைய சிங்கம். [5]. பயில கிற்றிலேம் - பழகும் ஆற்றலிலம். [6]. சால்பு நிறை பண்பு. [7]. சார்பை - சாரும் தொடர்பை. [8]. முனி - மெய்கண்ட தேவ நாயனார்.
------------------------------------
(பொ - ரை.) நேர்மையில்லாத அறிவு நெறிகளைப் (புதிது) புதிதாகப் புகல்கின்ற புத்திசாலிகள் நிறைந்த கலி(புருடன் ஆட்சி செய்யும் இவ்) உலகில், பிழைப்பட்ட அவர்கள் சொல்லும் வழிகள் எமது உள்ளத்தில் புகுமோ?
ஆண்மைச் சிங்கம் (பொல்லாத பசியுறினும்) புல் தின்பதுண்டோ ?
தவஞான வழியில் பழகும் ஆற்றல் இலம்; ஆயினும், தகுதியிலாத (புது) வழியிற் புகமாட்டோம்;
சரியை கிரியை முதலிய (வித்தக ) வழிகளை வெறுக்க மாட்டோம்;
உனது அடியார்க்கு அடியாரது சார்பை ஒருபொழுதும் இகழ மாட்டோம்;
(எந்த) உவமைக்கும் அதீதமான மேலான தெய்வமே; வேதங்கள் (படித்துத்) துதிக்கின்ற பரப்பிரம்ம சொருபமே!
உயர்ந்த ஆகமத்தின் முடிவாக மெய்கண்டார் எனும் சிரேட்டர், உலகுய்யத் திருவாய் மலர்ந்தருளிய சிவஞான போதம் சொல்லும் அனுபூதி கைவல்யமாக, ஒப்பற்ற செங்கீரை யாடியருள்!
(எண்வகைத்) திருவும் எய்தி யிருக்கும் சுவாமி மலையில் எழுந்தருளிய இன்பத் தமிழ் முருகா! செங்கீரை யாடி யருள்! (எ - று).
அவஞான நெறி - தவஞானத்திற்கு மாறான வீண் வழி. தவஞானத்தால் வருவது சிவஞானம். நெறி - சமயம். புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது எனும் பழமொழியை, 'அரியேறு புல்லுண்ணுமோ' என்று குறிப்பிட்டார். அறிஞர் என்பது, பிற குறிப்பு.
"நோக்கினும் நுழைகிலை, நுவலு கின்றதோர்
வாக்கினும் அமைகிலை, மதிப்ப ஒண்கிலை,
நீக்கரும் நிலைமையில் நிற்றி, எந்தைநீ
ஆக்கிய மாயமீ தறிகி லேமரோ''
எனப் பெறும் நிலையது தெய்வம்; ஆதலின், உவமித்தற்கரிய அதைப் பரப்ரமம் என்றார். பரப்ரமம் -- மேலான பெரிய பொருள். சிவஞானத்தைத் தெளிவு பெறக் கற்பிக்கும் நூல் சிவஞான போதம். அதன் அநுட்டானத்தில் விளைவது அனுபூதி. குருமலை - கவாமிமலை.
(14)
---------------

15. [1]புடவியணி மணிகளணி கரைகுலவு [2]புடவையாம்
      [3]பொங்கோத முழுதருந்தும்
[4]பொதியமுனி புனித[5]சத தளமுளரி குடிகொளும்
      [6]போதன்முப் புரமுமெரியத்
[7]தடவரையொர் [8]கொடுமர மெனக்கொண்ட [9]தாணுஇவர்
      தா[10]முவப்பப் பிரணவத்
தனிமறையி னரியபொருள் செவிகுளிர வுரைசெய்குரு
      சாமிநா தக்குழந்தாய்
[11]மடமகளிர் நெடியமனை [12]சுடுபொன்மணி சுவை[13]யடிசில்
      [14]மலரமளி முத[15]லவாவி
மலர்தலைய உலகிலலை மனதுகுவி வுற[16]வுரையில்
      மவுனநிலை யினிதுபெறவே
திடமுனிவர் [17]மறையின்மொழி கொடு[18]பரவு குமரவொரு
      செங்கீரை யாடியருளே
திருமருவு குருமலையி லமரினிய தமிழ்முருக
      செங்கீரை யாடியருளே.

[1]. புடவி - பூமி; ஆகு பெயராய் நிலமகளை உணர்த்தியது. [2]. புடவை - சேலை. [3]. பொங்கோதம் - கடல். [4]. பொதிய முனி - அகத்தியர். [5]. சத்தள முளரி - நூறி தழ்க் கமலம். [6]. போதன் - பிரமன். [7]. தடவரை - மேருமலை. [8]. கொடுமரம் - வில். [9]. தாணு - சிவன். [10]. உவப்ப - மகிழ . [11]. மடமகளிர் - இளம் பெண்கள். [12]. சுடுபொன் - மாற்றுயர்ந்த பொன். [13]. அடிசில் - சமைத்த உணவு. [14]. மலரமளி - பஞ்ச சயனம். [15]. அவாவி - விரும்பி. 1[6]. உரையில் - பேச்சற்ற. [17]. மறையின் - வேதாகமத்தின். [18]. பரவும் - வழிபடும்.

(பொ-ரை.) புவிமகள் தரிக்கும் நவமணி பதித்த கரையொடு விளங்கும் புடவையான கடல் முழுதையும் பருகிய பொதியமலை அகத்திய முனிவர்;
புனிதமான நூறிதழ்த் தாமரையில் (பிரியமொடு) எழுந்தருளியிருக்கும் பிரம தேவர்;
(எழுந்து உலவும்) முப்புரமும் எரிந்து சாம்பராக, பெரிய
மேருமலையை ஒரு வில்லாக வளைத்த சிவபெருமான் (ஆகிய) இவர்கள் பெருமகிழ்வு பெற;
பிரணவமாகிய ஒப்பற்ற அதிரகஸ்ய நுண்பொருளை, (அவர்கள் தம்) திருச்செவி குளிர உபதேசித்த குருசாமிநாதக் குழந்தையே!
இளம் பெண்கள், மாபெரும் மாளிகை, மாற்றுயர்ந்த பொன், நவரத்தினம், அறுசுவை உணவு, பரப்பிய மலர்ப் பஞ்ச சயனம் முதலியவைகளை (வீணாகப் பெரிதும்) விரும்பி;
இடமகன்ற (இவ்) உலகில் அலைமோதி அவதிப்படும் மனம் குவிய, பேச்சற்ற மவுன நிலையை (எளியேன்) பெறுமாறு,
(எதற்கும் சலனம் இன்றித்) திட வைராக்யரான தியான சிரேட்டர்கள், ஆகம முறைப்படி அர்ச்சிக்கும் அருமைக் குமரப் பெருமானே;
(எண்வகைத் திருவும் மருவியிருக்கும் சுவாமிமலையில் அமர்ந்த இன்பத்தமிழ் முருகா! (நீ) செங்கீரையாடியருள், (எ - று).
குழந்தாய்! குமர! முருக! மனது குவிவுற, மவுனநிலையினிது பெற, செங்கீரை யாடியருள் என்றபடி.
புடைசூழ்தலின், பெண்கள் அணியும் சேலை புடவையெனப் பெற்றது. ஆற்று நீர், மழை நீர், ஊற்று நீர் சேர்ந்து பெருகலின், கடல் 'பொங்கோதம்' எனப்பெறும். முள்கள் நாளத்தில் இருத்தலின், தாமரை முளரியெனப் பெயர் பெறும். போதில் இருப்பவன் போதன்; போது - கமலம்; மற்று, தெளிந்தவன் எனினுமாம். போதம் - தெளிவு; புத்தியிலுயர்ந்தோன் எனலும் உண்டு.
நில நடுவில் நின்று உயர்ந்து, வேர்களால் நிலம் தாங்கும் பெரியமலை யாதலின், மேருவைத் 'தடவரை' என்றார். வளைத்தால் வளைவது கருதி, வில் 'கொடு மரம்' எனப் பெறும். தாணு - அசையாச் சிவம் எனும் பொருட்டு.
அந்தரங்கத்தில் அறிவிப்பது பற்றி, பிரணவத்தைத் 'தனி மறை' என்றார். அகத்தியர்க்கும் பிரமற்கும் அமலர்க்கும் குருவானோன் ஆதலின், சுவாமி நாதன் என்றார்.
மண் வேட்கை, பொன்னாசை, மகளிர் காமம் ஆதிய வற்றால், உயிர்கட்கு என்றும் மனோ சலனம் இருக்கும். நீ செங்கீரையாடினால், மனச் சேட்டை தீர்க்கும் மவுன நிலை கைவரும் என்றபடி. (15)
--------------

16. பொங்[1]கமுத வுததிநுகர் பைங்குதலை [2]மதலையருள்
      புனிதவுப தேசநெறியாற்
புனித[3]அத் துவிதநெறி கைவந்த மேன்மையாற்
      போர்க்களத் தர்ச்சுனற்குத்
தங்குபல பேரண்ட வடிவாய நிலையினைத்
      தரிசனம் செய்யவருளித்
தஞ்சமென அஞ்சே லெனப்புகன் றருள்புரி
      தடங்கண்மால் மருக[4]மாயா
வெங்கள் மிதிற்[5]புலப் பகைநடு இருந்தஞ்சு
      வேமையஞ் சேலெனுஞ்சொல்
விளம்பியருள் புரிதல்முறை யாகும்நீ [6]பாணிக்கில்
      வேறுதுணை யேதுமறியோம்
திங்கண்முடி யார்[7]சருவ மங்களை தருங்குமர
      செங்கீரை யாடியருளே
திருமருவு குருமலையி லமரினிய தமிழ்முருக
      செங்கீரை யாடியருளே.

[1]. அமுத உத்தி - பாற் கடல். [2]. மதலை - உபமன்ய முனிவர். [3]. அத்துவிதம் - இரண்டற்ற நிலை. [4]. மாயா வெங்களம் - மாயையின் போர்க்களமான
பூவுலகம். [5]. புலப்பகை - ஐம்புலப் பகைவர்கள். [6]. பாணிக்கில் - தாமதித்தால். [7]. சருவ மங்களை - உமாதேவி.
----------------------------------------
(பொ-ரை.) பொங்கி வந்த பாற்கடலைப் பருகி, பசுமை மழலை பகரும் இளஞ்சிறாரான உபமன்யு முனிவர் வழங்கிய புனித உபதேச வழியாலும்;
தூய அத்துவித மார்க்கம் சித்தித்த சிறப்பாலும், யுத்த பூமியில் அர்ச்சுனனுக்கு எங்கும் வியாபகமாய்ப், பல பெரிய அண்ட வடிவான (கம்பீர) தன் சொருபத்தைத் தரிசிக்கக் காட்டி;
(அது கண்ட அர்ச்சுனன்) அடைக்கலம் என, அஞ்சாதே என்று கூறி அருள் பாலித்த பரந்த நோக்குடைய பரந்தாமன் மருகா!
மாயையின் (பொல்லாக்) கொடிய போர்க்களம் எனும் இப்பூவுலகில், (ஐம்) புலப் பகையின் நடுவில் அகப்பட்டு அஞ்சுகின்ற எம்மை, அஞ்சேல் எனும் மொழியை அருளல் (நின்) அருள் முறைக்குத் தகுதியாகும்; நீ தாமதம் செய்தால், வேறு துணை எதுவும் இருப்பதாக அறிந்திலம்;
சந்திர மௌலீசரும், நிறை மங்கலையான நிமலையும் அருளிய குமரா! செங்கீரை யாடியருள்! எண்வகைத் திருவும் மருவிய சுவாமிமலையில் அமர்ந்த தமிழ் முருகா! செங்கீரை யாடியருள், (எ - று).
வசிட்டர் சகோதரியை வியாக்ர பாதர் மணந்தார். மண வாழ்க்கையில் பிறந்த மைந்தர் பெயர் உபமந்யு. தமயனார் இல்லத்திற்குத் தங்கை, மகவொடு சென்றாள். அங்கே காமதேனுவின் பாலை மைந்தர் அருந்தினர். பல நாள் அங்கிருந்தபின், தாயுடன் மைந்தர் தந்தையிடம் வந்தார்.
இங்கே தேனுவின் பால் இல்லை. பால் வேண்டிப் பாலர் அழுதார். வேறு பால் தந்தும் அருந்தவில்லை மைந்தர். விறுவிறுத்துச் சினந்த வியாக்ரபாதர், ஈர்த்துச் சென்று பிள்ளையை இறைவரிடம் விட்டு, எப்படியாயினும் போ என்று திரும்பினர். அப்போதும் பிள்ளை அழுதது.
அது பொறுக்கலாற்றாத அமலர், அரிய பால்கடலையே அழைத்து, பருகென்று பாலர்க்குப் பாலித்தார். பாற்கடல் பருகி வளர்ந்த பாலர் உபமந்யு, தலை சிறந்த அடியவராய், புனித சிவத்தைப் பூசித்திருந்தார்.
மாபெரும் வழிபாட்டிற்கு ஒருநாள் மலர் பறிக்கச் சென்றார். ஆற்றில் பல மலர்கள் அடித்து வரக் கண்டார். அதை எம்மான் பூசைக்கு உதவும் என்று எடுத்தார்.
அவருடைய மாணவர்கள், அதையறிந்தனர். அடிகளே! இவை, கண்ணபிரான் சிவத்தை வழிபட்டுக் கழித்த மலர்; நின்மாலியம் என்றனர்.
தீட்சையிலான் வழிபாடு ஆதலின், இவை நின்மாலியம் ஆகா என்றார் முனிவர்.
இங்கு இவர் வாய் மலர்ந்த செய்தி, கண்ணன் திருச்செவிக்கு எட்டியது. உடனே விரைந்து வந்து, வித்தக உபமந்யுவின் திருவடியில் வீழ்ந்து, கண்ண பிரான் தீட்சை பெற்ற செய்தி சிவபுராணங்களில் செம்மாந்துளது. அதன்பின் அச்சுதர், சுத்தாத்துவிதம் சித்தித்துச் சிறந்த சிவபக்தராயினர்.
அப்பெருமான், பாரதப் போரில் கம்பீர விசுவ உருவம் காட்டி, புனித கீதை போதித்து, அர்ச்சுனன் அச்சம் தவிர்த்த செய்தியைப் பரக்க உரைக்கிறது பாரதம்.
முருகா! மதிக்கு அடைக்கலம் தந்த சடைமுடியரும், என்றும் அமங்கலம் கண்டறியாத இறைவியாரும் அருளிய குமரா! பொல்லாத மாயையின் போர்க் களமான பூவுலகில், ஐம்புலப் பகைஞர் நடுவில் அகப்பட்ட எங்களை, அஞ்சேல் என்று அருள் செய்! உனையன்றித் துணையில்லை. அன்று உன் பரம்பரை செய்த செயலை, இன்று நீ செய்தருள் என்று வேண்டியபடி. (16)
------------

17. பலாவினிய மாநெடு விளா[1]விரைய வாரமகில்
      [2]பாவுநிழல் சேரசோகம்
; [3]பராரைமுதிர் [4]சேகணி மராகுரவ நீடுவளர்
      [5]பைம்புனங் காவ[[6]]லோவா
[7]நிலாநுதலி வேல்விழியி னாள்[8]குறமி னாள்திருமுன்
      நின்றே கரங்குவித்தே
நினதடிய னான்உயவொ ரேவல்கொள வேணுமென
      நின்றே மயங்கு[9]விடலாய்
[10]கலாதர னரா[11]சுரரு லோகநதி [12]நீளிறகு
      [13]கனகிநறு மதலை[14]]மத்தம்
கலாவிய சடாடவியர் காதன்மத லாய்உமை
      [15]கணுக்கினிய சுப்ரமணியே
[16]சிலாநிரை குலாவிய [17]பராசல குகாவினிதொர்
      செங்கீரை யாடியருளே
திருமருவு குருமலையி லமரினிய தமிழ்முருக
      செங்கீரை யாடியருளே.

[1]. விரைய ஆரம் - மணமுடைய சந்தன மரம். [2]. பாவும் - பரவிய. [3]. பராரை - பருத்த அடிப்பாகம். [4]. சேகணி - செம்மையுடைய வேங்கை. [5]. பைம்புனம் - பசிய தினைப்புனம். [6]. ஓவா - நீங்காத. [7]. நிலா நுதலி - எட்டாம் பிறைபோன்ற நெற்றி யுடையவள். [8]. குறமினாள் - குறவர்குல மின்கொடியான வள்ளியம்மை. [9]. விடலாய் - காளையே. [10]. கலாதரன் - பல கலைகளை 0யுடைய சந்திரன். [11]. சுரருலோக நதி - தேவகங்கை. [12]. நீளிறகு - நெடிய கொக்கிறகு. [13]. கனகி நறு மதலை - பொன்னிறமான ஊமத்தை. [14]. மத்தம் - ஊமத்த மலர். [15]. கணுக்கு - கண்கட்கு. [16]. சிலா - கற்கள். [17]. பராசலம் - திருப்பரங்கிரி.
--------------------------------
(பொ-ரை.) பலா, இனிப்புடைய மா, நீண்ட விளா, மணம் வீசுகிற சந்தனம், அகில், பரவிய நிழல் நிறை அசோகு, பருத்த அரையையுடைய முதிர்ந்து சிவந்த வேங்கை, மரா, குரா (முதலிய) மரங்கள் வளர்ந்து உயர்ந்த பசிய தினைப்புனக் காவலை விட்டு அகலாத பிறை நுதலினாள், வேல் விழியினாள் ஆன குறவர்குல மின்கொடியான வள்ளியம்மையின் திருமுன், (எளிமை வெளிப்பட) நின்று மயங்கும் காளையே!;
கலைகளையுடைய திங்கள், பாம்பு, தேவகங்கை, நீண்ட (கொக்கின்) இறகு, பொன்னிறமான ஊமத்தை, மணம் கமழும் கொன்றைமலர், ஊமத்தமலர் (முதலியன) கலந்து தங்கிய காடுபோல் அடர்ந்த சடையினரான சிவனாரது அன்பிற்கு உரிய மைந்தனே!
உமாதேவியின் கண்கட்கு இனிய சுப்ரமணியா! வரிசைப்பட்ட கற்கள் (விரிவாக அடுக்கி வைத்தது போல்) விளங்குகின்ற திருப்பரங்குன்றக் குகா! இனிதாக ஒரு செங்கீரையாடியருள்! எண்வகைத் திருவும் இனிதிருக்கும் சுவாமி மலையில் அமர்ந்த இன்பத்தமிழ் முருகா! செங்கீரையாடியருள், (எ - று).
விடலாய்! மதலாய்! சுப்ரமணியே! குகா! இனிய தமிழ் முருகா! செங்கீரை யாடியருள் என முடிக்க.
பாவுதல் - பரவுதல். தம்பதிகள் கலப்பில் சோகம் தவிர்ப்பது; தணந்தார்க்குச் சோகம் தருவது ஆதலின், குறித்த ஒரு மரம் அசோகம் எனும் பெயர் பெற்றது.
வேங்கை மலர்ந்த காலத்தை, வேடுவர்கள் இது திருமண காலம் என்று அறிவர்; இப்படி அவர்கட்குக் கணிதர் போல் அமைதலின், அது கணி எனும் பெயர் பெற்றது. காவல் நீங்காக் கானவர் மகளைக் கண்டு, மாபெரும் விரகம் கொண்ட காளையென்பார், விடலாய்' என்று விளித்தார்.
      'கலாவிய சடாடவியர் காதன் மதலாய்!
      உமை கணுக்கினிய சுப்ரமணியே!
என்பதும், இதய குகையில் இருப்பானை, திருப்பரங்கிரி மலைமேல் இருக்கும் 'குகா' என்பதும், சிந்திக்கும் தோறும் சித்தம் மகிழும் பகுதிகள். (17)
------------

18. [1]பட்டிமை யுந்துய ரஞ்செய் [2]கொடும்படி றும்[3]பட ராமேநீள்
      பத்திமை யும்பணி வுந்தயை யும்பயில் பத்தர்ம னக்கோவில்
[4]சட்டம ரும்பத மிட்டொளிர் கிண்கிணி தண்டையும் வெண்டயமும்
      [5]சஞ்சரி கம்புரை யுங்[6]குரல் கொண்ட சதங்கையு நன்காட
[7]மட்டறு பேரொளி விட்டில் [8]குடைமணி வடமும சைந்தாட
      மார்பணி வனவள பவளமொ டு[9]தரள வடமும சைந்தாட
[10]அட்டமி மதிநுதல் நிலவொளி வீசிட ஆடுக செங்கீரை
      ஆரண ஒண்பொரு ளேரக மாமுரு காடுக செங்கீரை.

[1]. பட்டிமையும் - வஞ்சகமும். [2]. கொடும் படிறும் - கொடிய பொய் ஒழுக்கமும். [3]. படராமே - (என்னில்) பட ராதபடி. [4]. சட்டமரும் பதம் - நன்கு அமைந்த திருவடிகளில். [5]. சஞ்சரிகம் புரையும் - வண்டு போன்றிருக்கும். [6]. குரல் - ஒலி. [7]. மட்டறு - அளவற்ற. [8]. உடை மணி - மணியுடை என மாற்றுக. [9]. தரள வடமும் - முத்து மாலையும். [10]. அட்டமி மதிநுதல் - எட்டாம் பிறை போன்ற நெற்றி.
---------------------------------
(பொ - ரை.) வஞ்சகமும், துன்பமும், கொடிய பொய் ஒழுக்கமும் பரவி வந்து பற்றாதபடி, பேரன்பும் விநயமும் தயையும் பயின்றுள்ள (உத்தம) அன்பர் தம் உள்ளக் கோயிலில், விரைந்து வந்து தங்கும் (அருமைத்) திருவடிகளில் அணிந்து ஒளி பரப்புகின்ற கிண்கிணியும், தண்டையும், வெண்டயமும், வண்டு போன்று ஒலிக்கும் ஒலிகொண்ட சதங்கையும் நலக்க ஒலித்தசைய;
அளவற்ற பேரொளி பளிச்சிடும் மணிகளை உள்ளிட்ட அரைவடமும் அசைந்தாட;
திருமார்பில் அணியும் அழகு வளமான பவள ஆரத்தொடு, முத்துமாலையும் அசைந்தாட;
எட்டாம் பிறை போன்ற நெற்றி, (சிறந்த) நிலவொளி பரப்பச் செங்கீரை யாடியருள்!
வேத நுண் பொருளான திருவேரக! முதன்மையான முருகா! செங்கீரை யாடியருள், (எ - று).
பட்டிமையும் துயரும் படராமே, நன்காட, அசைந்தாட, நிலவொளி வீசிட, செங்கீரை யாடியருள் என முடிக்க.
திருவடியணிகள் அசைய, அரைவடம் ஆட, திருமார்பின் வடமும் அசைந்தாட, நுதல் நிலவொளி வீசிட ஆடுக என, பாதாதி கேசம் பார்த்துப் பாடியபடி. சட்டென்று என்பது, விரைவுப் பொருட்டு.
கிண்கிணி - கிண்கிண் என்று ஒலிப்பது. தண்டை - தண்டு போன்ற வடிவினை யுடையது. சதங்கை - சதங் சதங்கென்று ஒலிப்பது பற்றிப் போந்த பெயர். சட்ட அமரும் பதம் எனப் பிரித்து, நன்கு பொருந்திய திருவடி எனப் பொருள் கோடலுமாம். (18) --------------------

19. பொங்கோ தந்[1]துயில் கின்றே னும்புவ னந்தா னன்றீனும்
      பொன்று தின்கம லஞ்சே[2] ரெண்கண னுங்[3]காவின் கோவும்
[4]எங்கோ வெந்துயரந்தீ ரென்றுபு லம்பா நின்றோத
      [5]இந்தா வென்றுகொடுஞ்[6]சூர் கொன்ற[7] இருஞ்சீர் கொண்டோனே
[8]கொங்கோ டொன்றிய[9] வண்கா விண்பயில்[10] செங்கோ டுந்தேவர்
      [11]கும்பார் வஞ்செய்[12] பரங்கோ டுங்குடி கொண்டா ளுஞ்சேயே
[13]செங்கோ வென்பெயர் தங்கேர் பொங்கிறை செங்கோ செங்கீரை
      தென்பா லொண்[14]குரு வின்கோ நின்றவ செங்கோ செங்கீரை

[1]. துயில்கின்றோனும் - துயிலும் திருமாலும். [2]. எண்கணனும் - எட்டுக் கண்களையுடைய பிரமனும். [3]. காவின் கோவும் - கற்பக நாட்டு அதிபனான இந்திரனும். [4]. எங்கோ - எம்பெருமா! [5]. இந்தா - இங்கே வா. [6]. சூர் - சூரபதுமனை. [7]. இருஞ்சீர் - பெரும் சிறப்பு. [8]. கொங்கோடு - (செம்மைத்) தேனுடன். [9]. வண்கா - வளமான சோலைகள். [10]. செங்கோடு - திருச்செங்கோடு எனும் திருப்பதி. [11]. கும்பு - கூட்டம். [12]. பரங்கோடும் - திருப்பரங்குன்றமும். [13]. செம் கோ - செம்மையையுடைய தலைவன்; சிவந்த வேள். [14]. குருவின் கோ - குருமலை; சுவாமி மலை.
--------------------------------
(பொ-ரை.) ஊற்றுப் பெருக்கான பாற்கடலில் (அறிதுயில் என) உறங்குகின்ற திருமாலும், அந்நாள் முதல், (பயனாக) உலகைப் படைத்து வரும் பொன்னிறமான மகரந்தங்களையுடைய தாமரையில் தங்கிய எட்டுக்கண் பிரமனும், கற்பக நாட்டு அதிபனான இந்திரனும்,
எம்பெருமானே! (அவுணரால் விளையும்) தீய துன்பங்களைத் தீரும் என்று விம்மி விம்மியழுது விண்ணப்பிக்க;
இங்கே வாருங்கள் என்று (அவர்கட்கு ஆறுதல் கூறி அணைத்து,) கொடிய சூரபதுமனையடக்கிய பெரும் புகழ் கொண்ட பெருமானே!
செழுமைத் தேன் (சிறந்து) பொருந்திய வளமான சோலைகள் விண்ணளாவிய திருச்செங்கோட்டிலும், அமரர்கள் கூட்டம் ஆர்வம் காட்டும் திருப்பரங் குன்றிலும், இனிது எழுந்தருளி (சீவர்களை) ஆட்கொள்ளும் சேயே!;
செவ்வேள் எனும் திருப்பெயர் கொண்ட அழகு மிகுந்த அதிபா! செங்கீரை யாடியருள்!;
தென் திசையில் ஒளியுடைய சுவாமி மலையில் எழுந்தருளிய தெய்வமே! செங்கீரையாடியருள், (எ - று).
சீர் கொண்டோனே! சேயே! பொங்கிறையே! குருவின் கோ நின்றவா! செங்கோ செங்கீரை என முடிக்க. (19)
----------------

20. இந்திர நீல மெனுஞ்சிறு[1] குஞ்சி யிருந்திருள்[2] மஞ்சாட
      இலகிய திருநுதல் நவமணி யிழையணி யொளிக ளெழுந்தாட
வெந்தவெ ணீறணி ஒளியா டத்[3]திரு விழியரு ணின்றாட
      விலையறி வரியக னங்குழை காதொளி விலகி யசைந்தாட
செந்துகிர் வாய்பொலி புன்னகை[4] மென்னனை சிறிது மலர்ந்தாடத்
      திங்கள் முகங்கதி ரெங்கணும் வீசச்[5] செவிலியர் கொண்டாட
அந்தமு மாதியு மாயப ரம்பொரு ளாடுக செங்கீரை
      அருள்மலை குருமலை யமர்சிவ தேசிக னாடுக செங்கீரை.

[1]. குஞ்சி - குடுமி. [2]. மஞ்சாட - அழகு அசைய; மேக அசைவு தோன்ற. [3]. திருவிழி யருள் - உருத்ராட்சம்; பேரருளுமாம். [4]. மெல் நனை - மெல்லிய அரும்பு. [5]. செவி
லியர் - வளர்ப்புத் தாயர்.
---------------------------
(பொ - ரை.) இளங்குடுமி, இந்திர நீலமணி எனும் படியிருந்து (அரிய) கருநிற அழகு அசைய;
பிரகாசிக்கிற அழகிய நெற்றியில் நவமணி பதித்த அணிகலனின் (அதிகரித்த) ஒளி வந்து வந்து அசைய;
நீற்றிய வெண்ணிறத் திருநீற்று அழகிய ஒளியசைய; திருவுருத்திராக்கம் அருமை பெற இருந்து அசைய; விலை காண முடியாத கனந்தங்கிய வியன்குழை, திருச்செவியில் (அருமை) ஒளிமின்னி ஆடி அசைய;
சிவந்த பவளம் போன்ற திருவாயிற் பொலிந்த புன்னகை செய்யும் மென்மை அரும்பு போன்ற பற்கள், (அருமையாகச்) சிறிது மலர்ந்து அசைய;
திங்கள் போன்ற திருமுகத் தெய்வ ஒளித்தொகுதி, (பயனாம்படி) எங்கும் பளபளக்க; வளர்ப்புத் தாயார் வாழ்த்துப்பாட;
முதலும் முடிவுமான பரம்பொருளே ! செங்கீரையாடியருள்; அருள் மலையே! சுவாமி மலையில் அமர்ந்த சிவகுருவே! செங்கீரையாடியருள், (எ - று).
சிறுகுஞ்சி யாட, நுதலணி யாட, நீற்றணி யாட, திருவிழி யருளாட, குழை யாட, புன்னகை யாட, முக ஒளி வீச, செவிலியர் கொண்டாட, பரம்பொருளே! அருள் மலையே! குரு மலையே! சிவதேசிகனே! செங்கீரை யாடியருள் என முடிக்க,
திருவிழியருள் - அழகிய கண்ணருள் எனினுமாம். இந்திர நீலம் - ஏழு மேகத்துள் ஒன்று; கருமணியுமாம்.
இது பேரிருள் பரப்பும் கருநிறமாதலின், குஞ்சிக்கு உவமை கூறினார். விலகியசைந்தாடல் - விட்டு விட்டுப் பிரகாசித்தல் எனினும் ஒக்கும். (20)
--------------

21. [1]தேமருவு [2]மந்தார மாகிய [3]பொலந்தாரு
      சேர்[4]பொழி லிருந்[5]தேசிலாத்
[6]தேமொழிய ரின்பாரு தேவரை [7]நலிந்தேபஃ
      [8]றீமைசெய் கொடுஞ்சூரபன்
மாமலர் நெடுஞ்[9]சூத மாயெதி ரசைந்தாட
[10]வாரிதியி லன்றேவிய
[11]வாகையயில் வன்றேக [12]மீரஇரு துண்டாகி
மாமயிலு டன்சேவலாய்
[13]நாமுற வருங்காலை வாகனம் [14]விசும்பார்ப
தாகைஎன நின்றாடவே
ஞானவிழி யின்பார்வை யாலருள் புரிந்தேகொள்
[15]நாத[16]முக மைந்தாகினர்
ஆமுருக [17]மஞ்சாரு மாறுமுக இன்பாக
ஆடியருள் செங்கீரையே
ஆதியுமை யின்பால ஏரகமு றுஞ்சாமி
      ஆடியருள் செங்கீரையே.

[1]. தே மருவு - தேன் பொருந்திய. [2]. மந்தாரம் - தேவ ஐந்தருவுள் ஒன்று. [3]. பொலம் தாரு - அழகிய விருட்சம். [4]. பொழில் - சோலை. [5]. ஏசிலா - குறை கூறுதல் இல்லாத. [6]. தேமொழியர் - தேவ மாதர்கள் [7]. நலிந்தே - வருத்தி. [8]. பஃறீமை - பல தீமை. [9]. சூதமாய் - மாமரமாகி. [10]. வாரிதியில் - கடலில். [11]. வாகை அயில் - வெற்றிவேல். [12]. ஈர - இரண்டாகப் பிளக்க. [13]. நாமுற - அச்சம் உண்டாக.[14]. விசும்பார் பதாகை - விண்ணளாவிய வெற்றிக் கொடி. [15]. நாத நாதனே. [16]. முகம் ஐந்தாகினார் - ஐம்முகச் சிவனார். [17]. மஞ்சாரும் - அழகுடைய; மேகம் போன்ற எனினுமாம்.
-----------------------------
(பொ-ரை.) தேன் நிறைந்த மந்தாரமான பொன்னிறத் தருப்பொருந்திய (இன்பச்) சோலையில் இருந்து, பழிப்பில்லாத தேன்போல் இனிக்கும் மொழியினரான தேவ மாதர்களின் இன்பம் கண்ட வானவரை(ப் பலபட ) வருத்தி, செய்யொணாத பல தீங்குகளைச் செய்த பயங்கர சூரபதுமன் (கடலில்) அளவிலாத மலர்களையுடைய பெரிய மாமர உருவாய், (ஆகாத) எதிர்ப்பு முகமாய் அசைந்து ஆட
(அது கண்டு) கடலில் அன்று செலுத்திய வெற்றி வேல், (அச் சூரன்) உரம் மிகும் உடலைப் பிளக்க; (அவ்வுடல், பெருமயிலும் சேவலுமாய் இரு பிரிவுபட்டு (எவர்க்கும்) அச்சம் பிறக்க (எதிர்ப்பு முகமாகி) வருபொழுது, (அவ்விரண்டும்) ஊர்தியும், விண்ணளாவிய வெற்றிக் கொடியும் என இருந்து அசையும்படி, ஞானக்கண் நோக்கால் (நல்ல) அருள் பாலித்து ஏற்ற நாதா!; ஐம்முகச் சதாசிவம் ஆன முருகா!
அழகமைந்த ஆறுமுகா! இன்பத்தொடு செங்கீரை ஆடியருள்! முதல்வியான உமை மைந்தா! திருவேரகத்தில் எழுந்தருளிய சுவாமீ! செங்கீரை யாடியருள், (எ - று).
புரிந்த புண்ணியத்தால், ஐந்தரு நிழலில் இன்பம் கண்ட இமையவரை, எண்ணிலாத் தீமை செய்தான்; மாபெரும் கடல் நடுவில் மாமரமானான்; பேரருள் வேலால் பிளப்புண்டான்; அதன்பின், சூரன் மயிலும் சேவலுமாக வந்தான்; அவனை ஊர்தியும் கொடியுமாக் கொண்டு உம்பரைக் காத்தவன் உமைகுமரன் என்றபடி. ஐம்முகச் சிவமே அறுமுகச் சிவம் என்பது இதனில் உள்ள அருமை. (21)
--------------

22. இவனல தொருமுழு முதலிலை யெனவணர் இன யோன் [1]வயவாகு
      [2]இணைபிரி வரு[3]நவ வயவர்க ளொடுமியல் விளையாடல் [4]செயேல்வை
[5]தவமகனுடல்குழை வுறுமென நினைசிவை தழுவியென் மதலாய் நீ
      [6]தழைபசி யறமுலை நுகருதி எனஅவள் தரவமு துணுபோதே
உவமையி லரனவ னணுகிமுருகவென ஒண்செங் கைநீள
      உடன்அனை மடிநின் றோடித் தாவி யுவந்தே சென்றேறிச்
சிவனகன் மார்பிடை நடமிடு [7]பதயுக செங்கோ செங்கீரை
      திருமகள் மருமக குருமலை வளர்குக செங்கோ செங்கீரை.

[1]. வயவாகு - வீரவாகு தேவர். [2]. இணை பிரிவரு - இணைபிரியாத. [3]. நவ வயவர்கள் - நவ வீரர்கள். [4]. செய் ஏல்வை - செய் பொழுது. [5]. தவமகன் - (தான்) தவம் செய்து வந்த தநயன். [6]. தழை பசி - மிக்க பசி. [7]. பதயுக - இரு திருவடிகளை யுடையவனே.
-----------------------------
(பொ - ரை.) இப் பெருமானை யன்றி, ஒப்பற்ற முழுமுதலான வேறு தெய்வம் இல்லை என்று உணர்ந்த, இளையவரான வெற்றியிற் சிறந்த வீரவாகு (முதலிய) இணை பிரியாத நவவீரர்களுடன் (சேர்ந்து,) இயல்பாக விளையாடிக் கொண்டிருந்த பொழுது;
தவ மைந்தன் திருமேனி தளருமே எனத் திருவுளம் கொண்ட உமையம்மையார் தழுவிக் கொண்டு;
என் மகனே! பழுத்த பசியகலப் பால் பருகு என்று அத்தேவி திருமுலைப் பால் அருத்த, (அந்த) அருளமுதம் அருந்தும் பொழுது, உவமை கடந்த இன்ப சிவம், முருகா என்று கூப்பிட்டபடி (தமது நெடும்) திருக்கரத்தை நீட்ட;
உடனே அன்னையின் மடியிலிருந்து எழுந்து ஓடி, தாவிச் சென்று உவகையுடன் ஏறி, சிவனாரது பரந்த திருமார்பில் ஆடுகின்ற இரு திருவடிகளையுடைய எம்பெருமானே! செங்கீரை யாடிருள்! திருமகள் மருகா! சுவாமி மலையில் எழுந்தருளிய குகேசா! செங்கீரையாடியருள் (எ - று).
"எந்தக் கடவுளும் எங்கோள் போழ், கந்தக் கடவுளை மிஞ்சாதே"; "நக் கடுக்கை கொள் நக்கர் பக்கம் நடக்குமா, உக்கிரக் குகனுக்கு மிக்க திருக்குமோ" எனும் பாம்பனடிகள் அலங்கல் திரட்டை, நினைவூட்டு கின்றது இப்பாட்டில் உள்ள முதல் அடி. தாயூட்ட உண்டு, தந்தை திருமார்பில் தாவியாடி, குரு மலையில் வளரும் குகன் என்றமையின்பளிக்கின்ற தல்லவா. (22)
--------------

23. கங்கா நதிப்புன லெழுந்தாட அங்கணொரு
      கலைமதி யலைந்தாடவே
கமழ்நறுங் கொன்றையந் [1]தொங்கலா டச்சடை
      கலைந்துவான் [2]கலவியாடப்
[3]பொங்கா தவன்[4]சோம [5]னங்கியெனும் விழிகளிற்
      பொழிகருணை வெள்ளமாடப்
புன்முறுவ னிலவாட எண்டிசையு மசைவுறப்
      [6]புயமாட அங்கைமேவு
[7]மங்காத எரியினே [8]டரிணமா டப்புனையும்
      [9]வரியரவ மாடநன்கு
மறைமிழற் றுஞ்சிலம் படியடியி லுறும்[10]பசு
      மாரனு நெளிந்தாடவே
செங்குர லெடுத்து[11]மன்றாடியவ ரருள்குமர
      செங்கீரை யாடியருளே
திருமருவு குருமலையி லமர்சாமி நாதனே
      செங்கீரை யாடியருளே.

[1]. தொங்கல் - மாலை. [2]. கலவி - கலந்து. [3]. பொங்கு ஆதவன் - ஒளிமிக்க சூரியன். [4]. சோமன் - சந்திரன். [5]. அங்கி - அக்கினி. [6]. புயம் - எட்டுத் திருத்தோள்கள். [7]. மங்காத எரி - அணையாத மழு. [8]. அரிணம் - மான். [9]. வரி யரவம் - புள்ளிகளையுடைய பாம்பணி. [10]. அபசுமாரன் - முயலகன். [11]. மன்று - சித்சபை.
---------------------------------
(பொ-ரை.) கங்கா நதி நீர் எழுந்து அசைய; அங்குள்ள ஒப்பற்ற கலைகளையுடைய மதி, அலைகளையுடைய (அக்) கங்கை மேல் அசைந்தாட; மணம்கமழ் அழகிய கொன்றை மாலை யசைந்தாட; (ஆடுதலால் கட்டுக்கோப்பான) சடை, கலைந்து வானில் கலந்து ஆட; ஒளி மிக்க சூரியன் சந்திரன் அக்கினி எனும் (புனித ) கண்களிலிருந்து பொழிகின்ற அருள் வெள்ளம் (பொங்கி) ஆட; புன்னகையிலிருந்து புனித ஒளி வீசி விளங்க; எட்டுத் திசைகளில் திருத்தோள்கள் எட்டும் அசைந்தாட; அழகிய திருக்கரத்தில் உள்ள மங்காத ஒளியுடைய மழுவுடன் மானும் ஆட; (அணிகலமாக) அணிந்த புள்ளிகளையுடைய அரவமாகிய ஆபரணங்கள் படமெடுத்து ஆட, நலமுற வேத மந்திர நாதம் எழுப்பும் சிலம்பணிந்த திருவடிக் கீழ் கிடக்கும் முயலகனும் நெளிந்தாட;
செம்மைத் திருவடி ஒன்றைத் தூக்கி, அம்பலத்தில் ஆடிய பெருமான் அருளிய குமரா! செங்கீரை யாடியருள்! எண்வகைத் திருவும் மருவி யிருக்கும் சுவாமி மலையில் அமர்ந்த சுவாமிநாதா! செங்கீரை ஆடியருள், (எ - று)
கண்ணுதல் பெருமான் நிருத்த அசைவில் கங்கையாடும்; மதியும் கொன்றையும் சடையும் மலர்ந்தாடும்; முதன்மைத் திருக்கண்களிலிருந்து அருள் வெள்ளம் பெருகி அசைந்தாடும்; புன்னகை நிலவாடும்; திசையசையப் புயமாடும்; மானும் மழுவும் பாம்பணியும் மகிழ்ந்தாடும்; அடிக்கீழ் முயலகனும் நெளிந்து ஆடுமாறு, மன்றில் ஆடுவான் அருள் குமரா! நீயும் செங்கீரை யாடியருள் என்று, பயன்தரு கேசாதி பாதம் பாடும் இப்பாட்டை, எண்ணு தோறும் திருநிருத்தம் எதிர் நிகழ்வது போல் இருக்கிறதே! (சிவ சிவ சிவ சிவ!)
"கூற்றிருக்கும் அடலாழிக் குரிசின் முத லோரிறைஞ்சக்
      கொழுந்தேன் பில்கி
ஊற்றிருக்கும் தில்லைவனத் தசும்பிருக்கும் பசும்பொன்
      மன்றத் தொருதாள் ஊன்றி
வண்டுபா டச்சுடர் மகுடமா டப்பிறைத்
துண்டமா டப்புலித் தோலுமா டப்பகிர்
அண்டமா டக்குலைந்(து) அகிலமா டக்கருங்
கொண்டலோ டும்குழல் கோதையோ டும்கறைக்
கண்டனா டும்திறம் காண்மினோ காண்மினோ''
எனும் சிதம்பரச் செய்யுட் கோவையை, இப்பாடல் சிந்திக்கத் தூண்டுகிறது அல்லவா! (22)
செங்கீரைப் பருவம் நிறைவெய்தியது
-------------------

3. தாலப் பருவம்


தாயர் சேயைத் தொட்டிலிற் கிடத்தி, உள் தாடையில் நாவசைத்துப் பாடப் பெறும் பருவம் இது. (தாலம் - தாலு; நாக்கு). தாலோ தாலேலோ என்பது அனுகரணம். இது, தாலாட்டிப் பாடுவதால் போந்த பெயர்.

24. செந்தா மரையான் மகனாகித் திறல்சேர் தக்கன் சிறுமதியால்
      செந்தீ வேள்வித் [1]தகர்தின்ற தேவர் பாவம் [2]தகருறவே
வந்தாண் டமரில் அமரருக்கு [3]வயன மாயா [4]வடுவுறுத்தி
      மற்றுந் தீரா மையினலே மாயை வயிற்றில் வருசூரன்
[5]நந்தா [6]தொறுக்க வரமருளி நலிவித் தசுரன் முன்னாளில்
      நாடி வேண்டுந் தவப்பயனை நல்கி யவனுங் கதியுறவே
தந்தார் குமரா இனிச்சிறிது தாலோ தாலோ தாலேலோ
      தமிழ்நா யகனே குருமலைவாழ் சாமி நாதா தாலேலோ.

[1]. தகர் - ஆடு. [2]. தகர் உற - சிதைய. [3]. வயனம் - வகை. [4]. வடு - தழும்பு. [5]. நந்தாது - பின் வாங்காமல். [6]. ஒறுக்க - தண்டிக்க. வெண்தாமரையாள் கணவனான பிரமன், செந்தாமரையான் மகன் என்பது முதலடியில் உள்ள குறிப்பு.
----------------------------------
(பொ-ரை.) சிவந்த தாமரையில் சேர்ந்திருக்கும் (மாபெரும்) நான்முகன் மகனாகி; ஆற்றல் பொருந்திய தட்சனுடைய அற்ப அறிவால் (வளர்த்த) சிவந்த வேள்வித் தீயில் பொசுக்கிய) ஆட்டின் வபையைத் தின்ற அமரர் தீமை, அடியொடு அழிய எழுந்தருளி;
அவ்வேள்விக்களத்தில் (நிகழ்த்திய) போரில், வானவர்க்கு ஆக்கையில் (என்றும்) மறையாதபடி (ஊழ்த்த) தழும்பை உண்டாக்கி; (அப்பாவம்) மேலும் அழியாமையால், மாயை வயிற்றில் உதித்த (மாபெரும்) சூரபதுமன், பின் வாங்காமல் மென்மேலும் வருத்துமாறு வரம் கொடுத்து, (நலமிலாத வானவரை) நலியச் செய்து;
(அசுரனான அச்) சூரபதுமன், முன் பிறப்பில் சிந்தித்துப் பரிவொடு செய்த தவப்பயனைப் பாலித்து, அவனும் கதியடைய அருளிய நிறைதரு குமரா!
இனி சிறிது தாலோ தாலோ தாலேலோ; (மாபெரும்) தமிழ் மன்னவனே! சுவாமி மலையில் எழுந்தருளிய சுவாமிநாதா! தாலேலோ, (எ - று).
சிறு விதி எனும் பெயர்க்குத் தக்க சிறுமதியன் தக்கன். மாதேவரை மறுத்து அவன் செய்த மாபெரும் வேள்வியில், ஆட்டின் வபையை அவாவிய அமரர் பாவத்திற்கு அளவில்லை. அங்கு வீரபத்திரர் உருவில் வந்தாய்; வானவரை மோதி வடுவுண்டாக்கினை.
அவ்வளவில் அவர் பாவம் கரையாமை கருதி, மாயை மகன் மூலம், அவர்களை மேலும் வருத்தினை. அதன் வழி வந்த கழியா அவர் பாவத்தைக் கழித்தாய். மயிலாக வேண்டும்; சேவலாக வேண்டும் என்று முன்பிறப்பில் செய்த தவம் எண்ணி, அச்சூரனுக்கும் அருள் பாலித்தாய்; தாலாட்டுச் செய் என்று வேண்டும் எம் எண்ணத்தையும், நிறைவேற்றியருள் என்றபடி.
வளர்ந்து பெருகும் கந்தபுராண இவ்வரலாற்றை, சொற்சுருக்கம் பொருட் பெருக்கமாகக் காட்டுகின்ற கவியிது. (24)
--------------

25. [1]ஒருவா ராகி [2]யொருவரா முருவார் சிவனும் சாத்தியும்வே
      றுற்றே [3]யுஞற்று மாதவத்தா லுடையா னுதற்கண் முளைத்தெழுந்த
[4]பெருவான் சோதி உருவாகிப் பெருகுங் கங்கை [5]யுய்ப்ப [6]வழி
      பிரசக் கமலச் சரவணத்திற் பிள்ளை யிருமூன் றாய்வளரக்
[7]கருவா ராமே பெற்றவுமை கண்டு திரட்டக் கந்தனெனக்
      கவினு முருகா திசைமுகனைக் கலங்கச் சிறையிட் டுலகமெலாம்
தருவாய் அளிப்பாய் துடைப்பாயாம் சதுரா தாலோ தாலேலோ
      தமிழ்நா யகனே குருமலைவாழ் சாமி நாதா தாலேலோ.

[1]. ஒருவாராகி - பிரியாதவர்களாகி. [2]. ஒருவராம் உருவார் - ஒரே திருமேனியரான. [3]. உஞற்றும் - செய்த. [4]. பெருவான் சோதி - பெரிய ஞான ஒளி. [5]. உய்ப்ப - செலுத்த. [6]. வழி பிரசம் - பெருகி வழியும் தேன். [7]. கரு ஆராமே - கருக் கொள்ளாமலேயே.
------------------------------------
(பொ-ரை.) என்றும் பிரியாதவராய், ஒன்றேயான திருமேனியையுடைய சிவனும் சிவையும், வேறு வேறு திருமேனியுடன் விளங்கி, (கயிலையிலும் இமயத்தும்) செய்த கடுந்தவத்தால், (எவரையும் எவற்றையும் அடிமையும் உடைமையுமாக) உடையான் ஆன உமாபதியின் (உயர்ந்த) நெற்றிக் கண்ணில் உதயம் செய்து, வெளிப்பட்ட பெரிய ஞான ஒளித் திருமேனி தாங்கி;
(சிறந்து) பெருகும் கங்கை, (தன் அலைகளாகிய கைகளால்) செலுத்திச் சேர்க்க;
தேன் (பெருகி) வழியும் தாமரைகளை உடைய (புனித) சரவணப் பொய்கையில், (வாய்த்த) ஆறு பிள்ளைகளாகி வளர;
கருவில் தாங்கிப் பெறாது பெற்ற உமாதேவியார் கண்டு ஒன்று சேர்க்க, (முதன்மைக்) கந்தன் என விளங் கிய முருகா!
(கமல) நான்முகனைக் கலங்கச் சிறையில் அடைத்து, அகில உலகையும் ஆக்குவாய், காப்பாய், அழிப்பாயாம்; (இவ்வளவும் அநாயாசமாக இயற்றிய) மேம்பாடு உடைய மேலோனே!; தாலோ தாலேலோ; (மாபெரும்) தமிழ் மன்னா ! சுவாமி மலையில் வாழும் சுவாமி நாதா! தாலேலோ, (எ - று).
ஞானக் கண்ணில் இருந்து ஞான ஜோதியாகி, பேறுதரும் ஆறு பிள்ளைகளாகி, கந்தனெனக் கவினும் ஒரு திருமேனியாகி, முதன்மையான முருகா! ஆக்கல் காத்தல் அழித்தல் என்னும் சிறக்க இத்துணையும் செய்த சதுரா! நாயகா! சாமீ! தாலாடி யருள் என்று, விநயமொடு கொஞ்சிக் கெஞ்சி வேண்டியபடி. அறுமுகன் அவதாரமும், இளமையில் ஆடிய ஆடலும் அறிவித்த செய்தி இது. (25)
-----------

26. வீணை [1]முனிசெய் வேள்வியிடை வெகுண்டே
      யெழுந்தபெருந் [2]தகர்தான்
விண்ணோர் மண்ணோர் யாவருக்கும் விளைத்த
      துயர்கண் டருளாலே
[3]ஏணை [4]வயவா குவையேவி இழுத்தே
      வருவித் ததையேறி
எல்லா வுலகும் செலநடத்தி எமக்கோ
      [5]ரூர்தி எனக் கொண்டாய்
[6]கோணை யமரர் உனையறியார் கொதித்தே
எதிர்த்த காலையவர்
குறும்பை யடக்கி [7]யுலகுபொதி கோதி
லுருவம் காட்டியவா
[8]சாணை யணுகாச் [9]சவிமணியே தாலோ
தாலோ தாலேலோ
தமிழ்நா யகனே குருமலைவாழ் சாமி
      நாதா தாலேலோ.

[1]. முனி - நாரதர். [2]. தகர் - ஆடு. [3]. ஏணை - பெருமை; வலிமையுமாம். [4]. வயவாகு - வீரவாகு. [5]. ஊர்தி - வாகனம். [6]. கோணை - மாறுபாடு. [7]. உலகு பொதி கோதில் உருவம் - விஸ்வ ரூபம். [8]. சாணை - சாணைக்கல். [9]. சவி - ஒளி.
-----------------------------------
(பொ - ரை.) மகதியாழ் முனிவரான நாரதர் செய்த வேள்வியில் (மந்திரப் பிழையால் பிறந்து) சினந்து எழுந்த கம்பீரமான ஆட்டுக்கடா, விண்ணில் உள்ள தேவர்கள், மண்ணில் உள்ள மாநுடர், (பாதலர் முதலிய) யாவர்க்கும் (பயங்கரமாக) விளைவித்த துன்பத்தைப் பார்த்து;
(இயற்கைப்) பேரருளால், (தூய) வலிமைமிக்க வீரவாகுவைத் தூண்டி, (அதைச் செம்மாந்து) இழுத்து வரும்படிச் செய்து, அதன் மேல் அமர்ந்து, செல்லுமாறு உலகெங் கும் செலுத்தி, (இது) எமக்கு ஒரு வாகனம் என்று ஏற்றனை!
மாறுபட்ட மனமும் செயலுமான வானவர், (அருமையான) உன்னை அறிந்து கொள்ளாதவராய், எழுந்த கோபத்தால் எதிர்த்த பொழுது, அவர்களுடைய குறும்புத் தனத்தை அடக்கி, உலகெலாம் ஆன களங்கமற்ற விசுவ உருவைக் காட்டியவனே!
சாணை தீட்டி யறியாத மாபெரும் ஒளியுடைய மாணிக்கமே! தாலோ தாலோ தாலேலோ! மாபெரும் தமிழ் மன்னா! குருமலையில் வாழும் குருநாதா! தாலேலோ, (எ - று).
ஆரவாரித்த ஆடு அகில உலகையும் அழித்தது; அதை அடக்கி, அழிந்த உலகைப் பழையபடி ஆக்கினன் அத்தன். மாபெரும் அந்த அருமையை மறந்தவராய், எதிர்த்த வானோர் கோணையறிவு கொண்டவர்தான். அவர்கள் குறும்பை அடக்கிய அமலன், தன்னை யறியுமாறு, பேரருளால் தன் பெரிய வடிவு காட்டிய பெருமையே பெருமை. (26)
-------------------

27. [1]பெரிய பொருளிஃ தென்றுணரான் பிள்ளை எனவே எள்ளியஅப்
      பிரமன் [2]திக்கு வாய்குருதி பெருகக் [3]கக்கு வாயாக்கி
அரிய சிறையில் வைத்து[4]வின வால நீழ லறமுரைத்த
      அரனர்க் கருமா[5]மறைப்பொருளை யருளும் குழந்தைக் குருநாதா
உரிய தவஞ்செய் குறுமுனிக்கு முயர்செந் தமிழாற் [6]பிரமநிலை
      உபதேசித்த பெருங்கருணை யுருவா! எமது வினைக்குன்றம்
சரியச் சிதைக்கு [7]மழகளிறே தாலோ தாலோ தாலேலோ
      தமிழ்நாயகனே குருமலைவாழ் சாமிநாதா தாலேலோ.

[1]. பெரிய பொருள் - பிரமம். [2]. திக்குவாய் - தத்திப் பேசும் வாய். [3]. கக்குவாய் - (உதிரம்) கக்கிய வாய். [4]. வினவு - (பிரணவப் பொருளை) வினவிய. [5]. மறைப் பொருளை - வேதப் பொருளை. [6]. பிரமநிலை - பிரமா நுபூதி நிலையை. [7]. மழகளிறே - யானைக் கன்றே.
-----------------------------------
(பொ-ரை.) பிரமம் (எனும் பெரிய பொருள்,) இந்த இளந் திருமேனி என்று உணராதவனாய், (இளம்) பிள்ளை என்றே இகழ்ந்த அப்பிரமனது குளறுவாய் குருதி பெருக,
(அதைக்) கக்குவாயாகக் குத்தி, (அவனைக்) கடுஞ்சிறையில் அடைத்து,
(சாந்த அனுபவம்) வினவிய (சனகாதியர்க்குக்) கல்லால் நிழலில் சிவதருமம் போதித்த சிவபெருமாற்கு, அருமையான உயர்ந்த பிரணவப் பொருளை உபதேசிக்கும் குழந்தை உருவான குருநாதா!
(தனக்கே) உரிய தவம் செய்த அகத்தியர்க்கும், உயர்ந்த செம்மைத் தமிழால், பிரமாநுபவத்தை உபதேசித்தருளிய பெருங் கருணைத் திருமேனிப் பெருமானே!;
எமது வினையாகிய மலை சரிந்து போம்படிச் சிதைக்கின்ற யானைக்கன்றே!; தாலோ தாலோ தாலேலோ; மாபெரும் தமிழ் மன்னா! குருமலையில் வாழும் சுவாமிநாதா! தாலேலோ -, (எ - று).
பிரணவப் பொருள் வினவியபோது, பிரமன் ஒன்று கிடக்க ஒன்றை உளறினன்; அதனால் அவன் வாயைத் திக்குவாய் என்றார். அவன் வாய்களைக் கக்குவாயாக்கியது மறக்கருணை. குறுமுனிக்கு உபதேசித்தது அறக்கருணை; இவ்வரலாற்றைச் சிவ புராணங்கள் சிறக்க உரைக்கும். மதயானை, குன்றம் சரியச் சிதைக்கும். பெரும் குன்று போல் வினைகள் பெருகியுள. இந்த மழகளிறு, சால்பற்ற வினையாம் குன்றைச் சரிந்து போகச் செய்யும் என்றபடி. (2[7])
---------------

28. சிரித்தே புரத்தை எரித்தபிரான் தேவர் துயரந் தீர்க்கவொரு
      சிறுவ னுகி எழுந்த திறந்[1]தேறாத் திறல்சேர் வெஞ்சூரன்
[2]மரித்தே ஒழியா துலகியலை மதித்துத் தேவர் சிறைவிடுத்து
      வாழ்க வெனநல் லறிவுரையை வழங்கி வருக எனவருளால்
[3]கரித்தேர் [4]பரிக்கா லாள் மிகுத்த [5]கன்னிப் புரிசை மகேந்திரத்திற்
      கடிதிற் செல்ல [6]வயவாகுக் காளை தனையுய்த் தனைநீதி
தரித்தே வாழார் வேர்தறித்தாய் தாலோ தாலோ தாலேலோ
      தமிழ்நா யகனே குருமலைவாழ் சாமி நாதா தாலேலோ.

[1]. தேறா - தெளிவு பெற உணராத. [2]. மரித்தே ஒழியாது - செத்துப் போகாதபடி. [3]. கரி - யானை. [4]. பரி - குதிரை. [5]. கன்னிப் புரிசை - அழியாத மதில். [6]. வயவாகுக் காளை - காளை போன்ற மிடுக்குடைய வீரவாகு.
------------------------------
(பொ-ரை.) சிரித்து முப்புரத்தை எரித்த சிவபிரான், தேவர்களினுடைய துன்பம் துடைக்க ஒப்பற்ற மகவாகி எழுந்தருளிய திறத்தை, அறியாத ஆற்றலுடைய பயங்கர சூர பதுமனே! (நீ) இறந்து ஒழியாதபடி,
மாபெரும் உலக இயல்பை மதித்து, சிறந்த வானோரைச் சிறையிலிருந்து விடுவித்து, (வாழ்நாள் பெருகி) வாழ்வாயாக என, உயர்ந்த உபதேசங்களை உரைத்துவா என்று;
(அந்த) அருள் ஆதரவுடன், யானை தேர் குதிரை காலாள் படை மிகுத்த (மாபெரும்) கன்னி மதில் சூழ்ந்த மகேந்திர பட்டணத்திற்கு விரைந்து செல்ல (அருமைக்) காளையான வீரவாகுவை அனுப்பினை;
(அந்த) நீதியை, (மனத்திற்) கொண்டு வாழ அறியாத அசுரர்களை, அடியொடு கெடுத்த ஐயா! தாலோ தாலோ தாலேலோ!
மாபெரும் தமிழ் மன்னா! சுவாமி மலையில் வாழும் சுவாமி நாதா! தாலேலோ, (எ - று).
சிரித்து முப்புரத்தை எரித்த சிவனார் குமரனுக்கு, பெரிய ஒரு மகேந்திரத்தை எரித்தல் பிரமாதமல்ல, விண்ணவரை விடுதலை செய்! எவரும் இன்புற்று இருக்க வேண்டும்; இது உலக இயல்; வாய்மையான இதை மதித்தவர் வாழ்வர் என்று சொல்! என்று, புனித தூது போக்கினை; வளரும் அந்த நியதியை, மறுத்தாரை மாய்த்தாய் என்பது மறக்க முடியாத போதம்: இது என்றுமுள்ள தெய்வ இயல். சால்பிலா உலகிற்கு, இது ஒரு சமிக்ஞை. (28)
--------------

29. செய்ய கமல [1]உந்தியிடைத் திசைமா முகனைச் [2]செனிப்பித்துச்
      செகங்கள் படைப்பித் தவையளித்துத் தீய வரக்கர் குலமுழுதும்
[3]நைய வழித்துத் தேவர்குல நல்வாழ் வுறவே நல்கிவிரி
      [4]நரலைத் [5]தரங்கக் கட்டிலின் மேல் ஞாயி றனைய குருமணிசேர்
[6]பைய தலையா யிரநாகப் பாயன் மிசை[7]செம் பாவை[8]பத
      பன்மம் வருட மறைகள் புகழ் பாட[9]வுகத்தின் கடைநாளில்
[10]வைய நுகர்ந்து துயில்பெருமான் மருகா தாலோ தாலேலோ
      வடிவே லரசே சாமிமலை வாழ்வே தாலோ தாலேலோ.

[1]. உந்தி - தொப்புள். [2]. செனிப்பித்து - தோற்று வித்து. [3]. நைய - அடியொடு தேய. [4]. நரலை – ஒலி; [5]. தரங்கம் - அலைகளையுடைய கடல்; ஆகுபெயர். [6]. பைய - படங்களை யுடைய. [7]. செம்பாவை - திருமகள். [8]. பத பன்மம் - திருவடித் தாமரை. [9]. உகத்தின் கடை நாளில் - யுக இறுதி தினத்தில். [10]. வையம் - பூமியை.
---------------------------------
(பொ-ரை.) சிவந்த உந்திக் கமலத்தின் வழி, (தொன்மை) நான்முகனைத் தோற்றுவித்து;
(அவன் மூலம் பரவிய) உலகங்களைப் படைத்து; (காணப் பெற்ற) அவ்வுலகங்களைக் காப்பாற்றி; கொடிய அரக்கர் குலம் முழுதும் நையுமாறு கொன்று;
வானவர் குலத்திற்கு வளரும் வாழ்வை வாய்ப்பாக்கி; பரவிய ஒலியுள பாற்கடலிற் (காணும் ) அலைகளாகிய தொட்டிலின் மேல், பெரும் சூரியன் போல் பிரகாசிக்கும் சிறந்த மாணிக்கங்கள் சேர்ந்த படங்களையுடைய ஆயிரம் தலைப் பாம்பான ஆதிசேடன் ஆகிய அணையில்,
செம்மையுடைய பாவையான திருமகள் பாதகமலம் வருட, (புனித ) வேதங்கள் புகழ் பாட, யுக இறுதி நாளன்று (அகில) உலகையும் உண்டு அறிதுயில் அமரும் (மகிமை நிறைந்த) மாதவன் மருகா! தாலோ தாலேலோ!
வடிவேல் மன்னா! (வளரும்) சுவாமி மலை வாழ்வே! தாலோ தாலேலோ - (எ - று). செய்ய கமலம் - செங்கமலம். திசைமா முகன் - நான்கு திசை நோக்கிய நான்கு முகங்களை யுடையவன். தீய அரக்கர் - தீமையே செய்யும் அரக்குப் போன்ற நிறமுடைய கூட்டத்தார். நாகம் - நகத்தில் வாழ்வது; நகம் - மலையும் மரமுமாம். பாவை - பதுமை போன்றவள்; கண்மணிப் பாவை போன்றவள் எனினுமாம். வையம் - பூமி; எப்பொருளும் வைக்கும் இடம் எனக் காரணக்குறி. செனிப்பித்து, படைத்து, அளித்து, அழித்து, நல்கி, நுகர்ந்து துயில் பெருமான் மருகா என இயைக்க. (29)
----------------

30. பொங்கு [1]தழலோன் தன்கரங்கள் பொறுக்க கில்லா கி நிறை
      புனிதப் [2]பாகீ ரதியுய்ப்பப் போற்று மவள்கைத் தலமீதும்
சங்க [3]முரலும் சரவணத்திற் றண்டா மரைப்பூந் தொட்டிலிலும்
      தாய்மா ரறுவர் மடிமேலும் சகதாம் பிகைமென் மார்மேலும்
[4]திங்கண் முடியார் தோள் மேலும் திருக்கண் வளரும் சிவக்கொழுந்தே
      திருநான் மறையின் பொருளாகித் திகழும் சிவசுப்பிரமணியே
அங்க ணரசே சாமிமலை [5]அவிர்செம் மணியே தாலேலோ
      அடியார் பவநோ யகற்றுமருள் அமிர்தே தாலோ தாலேலோ.

[1]. தழலோன் - அக்கினி. [2]. பாகீரதி - கங்கை. [3]. முரலும் - ஒலிக்கும். [4]. திங்கள் பிறைச்சந்திரன். [2]. அவிர் - பிரகாசிக்கும்.
--------------------------
(பொ - ரை.) கடு வெம்மை மிகுந்த கனல் கடவுள், தன் (அரிய) கைகளால் தாங்க ஆற்றாதவனாய், (சிறந்த) புனிதம் நிறைந்த கங்கையில் சேர்க்க, (அலைகளால்) வணங்கி ஏற்ற அவள் கைமேலும்;
சங்குகள் ஒலிக்கும் சரவணப் பொய்கையில் உள்ள குளிர்ந்த தாமரையாகிய அழகிய தொட்டிலிலும், (கார்த்திகை மாதர்களான) ஆறு தாயர் மடிமேலும், உலக அன்னையான உமையின் மென்மை மார் மேலும்;
பிறையணி சடைமுடிச் சிவனார் தொன்மைத் தோள் மேலும் திருக்கண் வளரும் சிவக்கொழுந்தே! புனித நால்வேதப் பொருளாகிச் சிறந்து விளங்கும் சிவ சுப்ரமண்யா! அருள் நோக்குடைய அரசே! (மாபெரும்) ஸ்வாமிமலையில் பிரகாசிக்கும் செம்மை மாணிக்கமே! தாலேலோ; அடியார்களுடைய (தீராப்) பிறவி நோய் தீர்க்கும் அருளமுதே; தாலோ தாலேலோ, (எ - று).
சரவணம் - நாணற் புற்கள் நிறைந்த நற்பொய்கை. கைத்தல மீதும், தொட்டிலிலும், மடி மேலும், மார் மேலும், தோள் மேலும், கண்வளரும் சிவக்கொழுந்தே! சிவசுப்ரமணியே! அரசே ! மணியே! அமிர்தே தாலேலோ என இயைக்க. சிவக்கொழுந்து - சிவசூனு. பொல்லாதவன் சூரபதுமன்; அவன் தொல்லை பொறுக்க முடியவில்லையே; அருளாயோ அமலா என்று அலறியழுதனர் அமரர். அது கேட்டதும், தோன்றா அதோ முகமும் தோன்ற, ஆறுமுகம் ஆயினன் அம்மான். விமல சிவ வீரியம், ஆறு நெற்றிக் கண்களிலிருந்து, குபீர் குபீர் என்று வெளிப்பட்டன.
ஆறுகனல் பொறிகளான அவைகள், விரிந்து உலகெலாம் வியாபித்தன.
அதுகண்டு அஞ்சி, ஓடி விண்ணோர் ஒளிய முயன்றனர். எங்குச் சென்றாலும், அங்கங்கு இருந்தது அந்த அனல். ஏக்கம் எய்தினர். சங்கரன் திருமுன் சரணடைந்தனர். சூரனைச் சாய்க்க,
      ''ஒரு மைந்தனை எந்தாய் தந்தருள்
      என் றுனை வந்தனை செய்ய,
      வீடுறு வெம்மை கொள் அங்கி யளித்தாய்
      எங்ஙனம் உய்வது யாம்?''
என்று பெருங்குரலிட்டுப் பிரார்த்திக்க, அது கேட்டுப் பெருமான் பெருமித ஒருமுகம் ஆயினன். அதனுடன், அஞ்ச வேண்டா என்றும் அருளினன். மேலும் வியாபகமான கனலை விளித்தான்; எங்குமான கனல், ஆறு பொறிகளாகி எதிர் வந்தன.
ஏ அக்கினீ! வாயு தேவா! நீங்கள் இருவரும், சிறந்த இப்பொறிகளைக் கொண்டு சென்று, வித்தகக் கங்கையில் விடுவீர்களாக என்று விளம்பினன். அதனுடன், அவைகளைச் சுமந்து செல்லும் ஆற்றலையும் அருளினன்.
அங்ஙனம் அருளியும், கனல் பொறிகளைத் தாங்கிச் சென்ற கனற் கடவுள், அச்சத்தால் அதிர்ந்தவனாதலின், பொறுக்கலாற்றாது, அவைகளை விமல கங்கையில் விட்ட செய்தியை, அழகாக முதலடி அறிவிக்கின்றது அல்லவா! (30)
--------------

31. பொருளொன் றனையுங் காணுமே புதைத்துத்
      தன்னைப் புதைக்கறியாப்
புறத்த விருளை [1]வெளுப்பாக்கும் பொல்லா
      இருளா ணவத்தினிடைத்
[2]தெருளென் பதுசற் றெனுமின்றிச் செத்துக்
      கிடந்த ஆருயிரைச்
சேரு[3]மாயே யங்களினால் சிறிதே
      விழிப்பித் தவை[4] முனைந்தே
[5]இருமை வினைக ளியற்றியுறு மின்ப
      துன்பநுகர்ந்து சலித்(து)
[6]இயக்கு மாசை யறுகாலை இனிய
      சாந்தத் துயிலுறுமா(று)
அருளி னலே வீட்டுய்க்கு மன்னுய்
      தாலோ தாலேலோ
அடியார்க் கெளியாய் சாமிமலை யரசே
      தாலோ தாலேலோ.

[1]. வெளுப்பாக்கும் - தோற்கடிக்கும். [2]. தெருள் - தெளிவு. [3]. மாயேயங்கள் - மாயையின் கூட்டங்கள் [4]. முனைந்து - முற்பட்டு. [5]. இருமை வினை - நல்வினை, தீவினை. [6]. இயக்கும் - இயங்கச் செய்யும்.
------------------------------------
(பொ-ரை.) ஒரு பொருளையும் உணராதபடி மறைத்து, தன்னை மறைக்க அறியாத புற இருளை நாணச் செய்யும் பொல்லாத ஆணவ இருள் நடுவில்,
தெளிவு என்பது ஒரு சிறிதும் இல்லாமல், உணர்விழந்து இருந்த உயிரை, இடை வந்த மாயா மலக்கூட்டுறவால் சிறிது கண்விழிக்கச் செய்து;
(விழித்த) அவ்வுயிர்கள், முனைப்புடன் (வீணான) இரு வினைகளை விளைவித்து, (அதனால் வரும்) இன்ப துன்பங்களை அனுபவித்து, (அந்த அனுபவங்களால்) சலிப்படைந்து,
(அநியாய விவகாரங்களில்) இயங்க வைக்கும் ஆசையென்பது அற்ற பொழுது, (அந்த ஆன்மாக்கள்) இன்ப அமைதி நித்திரை எய்தும்படி, (தன் இயற்கைப்) பேரருளால் (சிறந்த வீடு பேற்றில் செலுத்தும் தாயே ஆன தயாபரா! தாலோ தாலேலோ; (எண்ணும்) அன்பர்க்கு எளியவனே! (மாபெரும்) சுவாமிமலை மன்னா! தாலோ தாலேலோ, (எ - று).
புற இருளினும் கொடியது அக இருள். அதனில் உறங்கி உணர்விழந்திருந்த உயிரை, மாயையாலான உடல் கரணம் முதலியன உதவி, சிறிது விழிக்கச் செய்தான் சிவகுமரன். அந்நிலையிலும், முனைப்புடன் உயிர்கள் பாவ புண்ணியங்களைப் பண்ணின. அதன் பயனான துன்ப இன்பங்களில் துடித்தன. பட்டதெல்லாம் போதும் என்று பதைத்தன. ஆசையே இவைகட்கு மூலம் என்று அறிந்தன. நீடித்த எந்த அவாவையும் நீங்கின. அக்காலம் நோக்கி, சாந்த நித்திரை சார முத்தியில் உய்த்த முதல்வனை, இயற்கைத் தாயானான்; எண்ணும் அன்பர் முன் எளிது வருபவன் என்றார்; அப்பிரபு, ஸ்வாமிமலையில் உளன் என்பது குறிப்பு. (31)
------------------

32. [1]பொலந்தருவி னீழலி னமர்ந்திடு [2]புரந்தரன்
      [3]புலோமசை யுடன் [4]கரந்தே
புவிமீதி லுயர் [5]வேணு வடிவா யிருந்தரன்
      பொன்னடிகள் பூசிக்குநாள்
நிலந்தனில் [6]வறங்கூர அவன்வைத்த பூஞ்சோலை
      நீரின்றி வாடல் கண்டே
நீராழி யுண்ட [7]குறு முனி[8]குண்டி கைக்கணுறு
      நீ[9]ரைங் கரன்கவிழ்ப்பச்
[10]சலந்தர முழங்குமுயர் [11]சைய [12]முற் பவி[13]பொன்னி
      [14]]தவிராது பாய்ந்து தாய்போற்
[15]சாலியுயர் [16]கழைவாழை [17]பூகமுத லியபயிர்
      தழைக்கவருள் புனனாடனே
தலந்தனி லுயர்ந்தவள மிகுமேர கக்குமர
      தாலேலே தாலேலவே
சைவநா யகசருவ தெய்வநா யகமுருக
      தாலேல தாலேல.

[1]. பொலந்தரு - கற்பக விருட்சம். [2]. புரந்தரன் - இந்திரன். [3]. புலோமசை - இந்திராணி. [4]. கரந்தே - ஒளித்து. [5]. வேணு - மூங்கில். [6]. வறங்கூர - பஞ்சம் மிகுதியாக. [7]. குறுமுனி - அகத்தியர். [8]. குண்டிகை - கமண்டலம். [9]. ஐங்கரன் - கணபதி. [10]. சலந்தரம் - மேகம். [11]. சையம் - சையமலை. [12]. உற்பவி - தோன்றிய. [13]. பொன்னி - காவிரி. [14]. தவிராது - தடைபடாது. [15]. சாலி - நெற்பயிர். [16]. கழை - கரும்பு. [17]. பூகம் - கமுக மரம்.
--------------------------------
(பொ - ரை.) பொன்னிறக் கற்பக நிழலில் போகியாயிருக்கும் இந்திரன், (உத்தமியான) இந்திராணியுடன் ஒளிந்து; காசினியில் (உள்ள காழிப்பதியில்) வளர்ந்த மூங்கில் வடிவாயிருந்து; வரதன் திருவடிகளை வழிபட்டுக் கொண்டிருந்த நாளில்; நிலவுலகில் பஞ்சம் மிகுந்து நிகழ, அந்த இந்திரன் வைத்த நந்தவனம், (வாழ்விக்கும்) நீரின்றி வாடுவதை அறிந்து,
கடலைப் பருகிய அகத்தியருடைய கமண்டலத்தில் இருந்த நீரை, ஐங்கரக் கணபதி கவிழ்த்துவிட, மேகங்கள் (மேலிட்டு) ஆரவாரிக்கும் வானளாவிய கவேர மலையில் இருந்து பெருகிய காவிரிநதி, (பரவி என்றும்) தடைபடாது பாய்ந்து, நெற்பயிர்கள், உயர்ந்த கரும்புகள், வாழைகள், கமுகுகள் முதலிய பயிர்கள் தழைக்குமாறு தாய்போல் அருளிய நீர் நாடனே! உலகில் உயர்ந்த வளம் மிகுந்த திருவேரகக் குமரா! தாலேல தாலேலவே - சிவ சம்பந்திகள் தலைவா; வளர்ந்த எத்தேவர்க்கும் வாழ வழி காட்டுவோனே; முருகா; தாலேலே தாலேல, (எ - று).
அசுரர் தலைவன் ஆக்ரமிப்பிற்கு அஞ்சிய இந்திரன், ஓடிச் சீகாழியில் ஒளித்தான். உயர்ந்த மூங்கில் உருவம் கொண்டு, புனித சிவத்தைப் பூசித்தான்.
அவுணர்க்கு மேகங்கள் அஞ்சி, எங்கும் மழை பெய்யாது இருந்தன. காயும் வெய்யில் கடுமை காட்டியது. செடியும் கொடியும் தருக்களும் யாவும், காய்ந்து தீய்ந்து கரிந்தன. இந்திரன் வைத்த நந்தவனம், நிழலின்றி மொட்டையாகி நின்றது. விளைந்த விக்கிநம் விலக, முதல்வர் விநாயகர் முன்னின்றார். காகம் ஆயினர். கடுந்தவ அகத்தியரது கமண்டலத்தைக் கவிழ்த்தார். தவசக்தி, மந்திரசக்தி, தெய்வசக்தி யாவுமான அந்நீர், பேரிரைச்சலிட்டு எங்கும் பெருகியது. வற்றாத அவ்வள நதியால், சோழ நாடு வாழ்ந்தது. இந்திர நந்தவனம் செழித்தது. அருமை மலர் பறித்து ஆராதித்து, பெறுதற்கரிய பேற்றை இந்திரன் பெற்றான் என்பது, இதனில் உள்ள வரலாறு. (32)
---------------

33. [1]பதுமமென் மலர்வாய் குவிவுறு மதன்வாய்
      பயி[2]லளி [3]பொழில்போமே
பறவைக ளுயிர்நேர் துணையொடு மெதிர்பார்
      [4]பறழ்தமை யுறலாமே
பொதுவற உலகாள் [5]கதிரவன் விரைவார்
      புரவிகள் [6]குடபாலே
பொழில்குல விய[7]நீள் வரைபுக இருள்மேல்
      பொதிவுறு விதமோராய்
[8]விதுமுக மடவார் [9]விரைமலர் கொடுமா
      லையைஎதிர் கொளலானார்
விதிமறை முறையா குதிநிறை வுறவே
      தியருன கழ[10]லோர்வார்
சதுர்மறை முடிவா கியமுழு முதலே
      தாலோ தாலேலோ
சரவண பவனே குருமலை முருகா
      தாலோ தாலேலோ.

[1]. பதுமம் - தாமரை. [2]. அளி - வண்டு . [3]. பொழில் - சோலை. [4]. பறழ்தமை - குஞ்சுகளை. [5]. கதிரவன் - சூரியன். [6]. குடபால் - மேற்குத் திசை. [7]. நீள்வரை - அஸ்தமன பர்வதம். [8]. விது - சந்திரன். [9]. விரை - மணம். [10]. ஓர்வார் - தியானிப்பார்.
-----------------------------------
(பொ-ரை.) மென்மைக் கமல மலர்கள் வாய் குவியும்; அதனிடத்திற் பயின்று இருந்த வண்டுகள், (இனி) பூஞ்சோலைகட்குப் போய் விடுமே; ஆண் பறவைகள், (தம்) உயிரான துணையொடும் (தம்மை) எதிர்பார்க்கும் (அருமைக்) குஞ்சுகளை அணுகும் காலம் ஆயதே; பொதுக் கடிந்து (தானே தனித்து) உலகை ஆளும் சூரியனது (குறு குறுத்த) விரைவு மிக்க தேர்க்குதிரைகள், மேற்குத் திசையில் மேவிய சோலைகள் நிறைந்த பெரிய அஸ்தமன பர்வதத்தை அடைய, (கடும்) இருள் மேல் கால் பரப்பும் விதத்தைக் கண்டிலை;
மதிமுக மாதர் , மணம் கமழும் மலர்களைக் கைக் கொண்டு, மாலைப்பொழுதை வரவேற்கலாயினர்; வேத விதிப்படி வகை முறையாக வளர்த்த (நியதியான) வேள்வி ஆகுதி நிறைவு பெற, அந்தணர்கள் உனது திருவடிகளைத் தியானிக்கத் தொடங்கினர். நான்கு வேத முடிவான முழுமுதல் தெய்வமே! தாலோ தாலேலோ; சரவண பவா! ஸ்வாமி மலை முருகா! தாலோ தாலேலோ, (எ - று).
மாலைக் காலம் வந்ததே! முதலே! முருகா! நீயும் அறிதுயில் கொள் என்று வேண்டியபடி.
கமலவண்டுகள், பூஞ்சோலையுள் தங்கப் புறப்படும். அழகிய பறவைகள், குஞ்சுகளையணுகும். சூரியன் தேர், மேற்கு மலையில் சென்று மறையும். எங்கும் இருள் எழும். கூந்தலில் சூட்ட புதுமலர் கைக்கொள்ளும் பூவையர், மாலையை எதிர் நோக்கியிருப்பர். வேள்வியை நிறைத்த வேதியர்கள், திருவடித் தியானத்தில் ஈடுபடுவர் என்னும் இது, மாலைக்கால வர்ணனை. (33)
---------------

34. தவராசர் பெற்ற[1]ன னிதியே தாலோ தாலேலோ
      தனைநேரு முத்தமிழ் [2]விரகா தாலோ தாலேலோ
[3]பவசா கரத்துறு [4]புணையே தாலோ தாலேலோ
      பழமா மறைபயில் பொருளே தாலோ தாலேலோ
உவமான மற்றவிர் ஒளியே தாலோ தாலேலோ
      உமையாள் தவத்துறு குமரா தாலோ தாலேலோ
சிவனர் [5]பழிச்சிய குருவே தாலோ தாலேலோ
      திருவே ரகப்பதி முருகா தாலோ தாலேலோ.
-
[1]. நல் நிதியே - பேரருட் செல்வமே. [2]. விரகா - வேட்கை யுடையவனே. [3]. பவ சாகரம் - பிறவிக் கடல். [4]. புணையே - மரக்கலமே. [5]. பழிச்சிய - துதித்த.
------------------------------------
(பொ-ரை.) மாபெரும் தவம் செய்த மன்னர்கள், (அநுபவத்தில்) பெற்ற அருள் செல்வமே! தாலோ தாலேலோ;
தனக்குத் தானே சமமான (இயல் இசை நாடகம் எனும் வித்தக) முத்தமிழில் விருப்பம் உடையவனே! தாலோ தாலேலோ;
(வேதனை தரும்) பிறவிக் கடலில் (வீழ்ந்தாரை, மாபெரும் கரையேற்ற) வரும் மரக்கலமே! தாலோ தாலேலோ;
அநாதி நித்தியமான மேதகு வேதத்தில் உள்ள மெய்ப் பொருளே! தாலோ தாலேலோ;
உவமை (கூற இயலாது, உயர்ந்த பேரொளிப் பிழம்பே! தாலோ தாலேலோ; உமாதேவியின் தவத்தில் உதித்த குமரா! தாலோ தாலேலோ;
சிவபிரான் சிறக்கத் துதித்த குருநாதா! தாலோ தாலேலோ;
திருவேரகத் தலத்தில் (முதன்மை பெற எழுந்தருளியுள்ள) முருகா! தாலோ தாலேலோ, (எ - று).
தவராஜர் - தவத்தையாளும் முனிவர்கள். தாவி உணர்வு மேல் நோக்கச் செய்வது, தவம் எனப்பெறும்; தாவு - பகுதி; தவம் வேறு, தபஸ் வேறு என உணர்க.
அழியாப் பேரின்ப அருட்செல்வமாதலின், 'நன்னிதி' என்றார். அகப்பொருள் புறப்பொருள் நூற்கள், முருகற்கே முதன்மை கூறலின், 'முத்தமிழ் விரகா' என்றார். வென்றது எப்படையாயினும், அதை வேல் என்றும்; வென்றவன் எவனே யாயினும், அவனை முருகன் என்றும்; கோவை நூற்களின் தலைவன் குமரன் என்றும் கூறுவது உணர்க. சுப்ரமண்ய பரத்துவத்தை, இதனிலிருந்து எவ்வளவு விரிப்பதற்கும் இடம் உண்டல்லவா? (34)
தாலப் பருவம் நிறைவெய்தியது.
-----------------

[4]. சப்பாணிப் பருவம்

குழந்தை, கையுடன் கைசேர்த்துக் கொட்டும் பருவம். சப் எனும் ஒலியெழப் பாணியைத் தட்டுவதால், இது சப்பாணிப் பருவம் எனப்பெறும். பாணி - கை. ஒன்பதாம் திங்களில் இது ஓதப்பெறும். ‘ஒன்பதாம் திங்களில் உயர்சப்பாணியும்' என்பது பிங்கலந்தை.

35. எண்ணிலா மறைகள்பல ஆகம புராணங்கள்
      இதிகாச வகைகள் மேவும்
இருடிக வியற்றுபல சாத்திர விதங்களும்
      இயம்பரிய பெரிய பொருளைத்
[1]தெண்ணிலா முடியர்நாற் றிசையினும் கைகாட்டு
      செப்புதற் கரிய முடிபைத்
தெரியமிக இனிதான சந்தத் தமிழ்க்கவிகள்
      செப்பிய திறற்பாவலன்
மண்ணில் வாழ் பவருய்ய வருமருண கிரிநாத
      வள்ளல்பா மாலை கேட்டு
மாறா[2]து வட்டெழு களிப்பினுற் றாளமிடு
      வகைபோற் களங்கமிலவாம்
தண்ணிலா மதியமிரு மூன்றுதித் தனையமுக
      சப்பாணி கொட்டியருளே
தாமமிகு சாமிமலை வாழுமுரு கையனே
      சப்பாணி கொட்டியருளே.

[1].தென்நிலா - தெளிந்த நிலவு. [2]. உவட்டெழு - பொங்கி எழும்.
--------------------------------
(பொ - ரை.) எண்ணில்லாத வேதங்களும், பல ஆகமங்களும், (பதினெட்டுப்) புராணங்களும், (பாரத ராமாயண) இதிகாசங்களும், பலவிதமான நூல்களும், விரும்பத்தக்க முனிவர்கள் இயற்றிய பலவிதமான சாத்திரங்களும் பேசிக் காட்ட இயலாத பிரமத்தை;
தெளிந்த நிலவைத் திருமுடியில் அணிந்த சிவபிரான், (சின்முத்திரை வகையில்) நான்கு திசைகளிலும் கைக்குறிப்பால் காட்டுவதன்றி, (முந்தி) வாயால் சொல்ல முடியாத முடிபை;
எவரும் தெரிந்து கொள்ள, மிக இனியதான சந்தத் தமிழ்ப்பாக்களாகப் பாடிய திறமையுடைய பாவலராய், உலகில்வாழ் மக்கள் உய்தியடைய அவதரித்த அருணகிரிநாத வள்ளலாரது (சிறந்த) பாமாலையைச் சிரவணித்து,
மாறுபடாது பெருகி யெழும் மகிழ்வினால் கைத்தாளம் இட்ட கணக்குப் போல், களங்கம் இல்லாத குளிர்ந்து விளங்குகின்ற ஆறு சந்திரர் உதயம் செய்தது போன்ற திருமுகங்களை யுடையவனே! சப்பாணி கொட்டியருள்! ஒளி மிகுந்த சுவாமி மலை முருகையா ! சப்பாணி கொட்டி யருள், (எ - று).
''ஐயா! அருணகிரி அப்பா! உனைப்போல
மெய்யாக ஓர்சொல் விளம்பினர்யார் - வையகத்தோர்
சாற்றரிதென் றேசற்றார்; தன்னனையாய்! முக்கண் எந்தை
நாற்றிசைக்கும் கைகாட்டினான் "
எனும் தாயுமானார் பாடலை அடி ஒற்றியது இது. ([3][5])
---------------

36. முந்திப்போம் பிறவிபல வற்றிலுனை நினையாமல்
      மோசம்போ யினதறிந்து
முழுதுமினி யுனதடிமை வழியொழுகு வோமென்று
      [1]முன்னிமுயல் தொண்டர் தம்மைப்
பந்திப்போ மென[2]வுன்னி ஆர்த்தெழுந் துறுகின்ற
      பழவினைக ளாம்பறவைகள்
பக்கமணு காதுள் பயந்துதிசை திசையிற்
      பறந்துபல மற்றலைந்து
சிந்திப்போம் படிதுரத் திடுகின்ற செயலெனச்
      செல்கதிக் குறுதுணையெதும்
[3]தேராது திரிகின்ற [4]பாராரை இங்குநீர்
      சேர்கென் றழைத்தல்போலச்
[5]சந்திப்போ தனையசெம் மேனிமுரு கையவொரு
      சப்பாணி கொட்டியருளே
தாரகசொ ரூபதிரு வேரக குமாரவொரு
      சப்பாணி கொட்டியருளே.

[1]. முன்னி - உணர்ந்து. [2]. உன்னி - ஊன்றி எண்ணி. [3]. தேராது மல். [4]. பாராரை; உலகரை; குருடர்களை எனலுமாம். [5]. சந்திப் போது - மாலைக் காலம்.
-----------------------------
(பொ-ரை.) கழிந்துபோன பல பிறவிகளில் உன்னைக் கருதாமல் பழுதுபட்டுப் போயினதை அறிந்து, இனி (வாழ்நாள் முழுதும் உனது அடிமைத் திருப்பணி வழியில் இயங்குவம் என்று உணர்ந்து முயல்கிற தொண்டர்களை, இறுகப் பற்றுவோம் என்று நினைத்து, ஆரவாரித்து வருகிற பழைய கன்ம வினைகளான பறவைகள், (எம்) பக்கம் அணுகாமல், அகத்தில் அச்சம் அதிகரித்து, பல திசைகளிலும் பறந்து, ஆற்றல் குன்றி அலைந்து, சிதறிப் போம்படித் துரத்தும் செயல்போல்;
செல்லும் வீடு பேற்றிற்கு உற்ற துணை எதையும் சிந்திக்காமல், அலைமோதுகின்ற குருடர்களான உலகரை, இங்கே நீங்கள் வாருங்கள் என்று அழைத்தல்போல்;
மாலைக்காலம் போன்ற சிவந்த திருமேனியுடைய முருகைய! ஒப்பற்ற சப்பாணி கொட்டியருள்; பிரணவ மேனிப் பெருமானே! திருவேரகக் குமரா! ஒப்பற்ற சப்பாணி கொட்டியருள், (எ - று).

"அந்திப்போ தழகுறவே நடித்தருளும்
வழித்துணைவர் அருளும் கோவை
வந்திப்போர் நினைத்தபடி மயிலேறி
அயிலெடுத்து வரும்செவ் வேளைச்
சந்திப்போம்; மலர்சொரிவோம்; புகழ்ந்திடுவோம்;
அவன்கமலத் தாளும் தோளும்
சிந்திப்போம்; ஆதலினால், நமதுபழ
வினைக ளெல்லாம் சிந்திப் போமே''
எனும் விரிஞ்சைப் புராண முருகன் துதி எதுகை நயம், தூய இப்பாட்டில் தொனிப்பது அறிக. (36)
--------------

37. [1]இயங்குவன [2]நிற்பனவு மாய்அறி வுடைய அஃ
      தில்லாத என இரண்டாய்
இவ்வுலகி [3]லுண்மைகண் டும் அறிவி லாதவைகள்
      [4]இயமான னலஅறிவினால்
[5]வயங்குவது வேயுயிரஃ துடலொடு கலந்துவினை
      [6]வாஞ்சையாற் செய்யும் [7]உயிரில்
வழியுட லியங்காது மண்ணெனவும் அவ்வுயிர்தன்
      வயமற்ற தாதல்கண்டும்
[8]சுயங்கிரியை செய்கின்ற [9]வாலறிவ னுண்மையைத்
      [10]தோமற வுணர்ந்து பணியாத்
[11]துன்மதியர் புன்மைகண் டச்சோ எனச்சொலித்
      தோன்றுசில [12]முறுவல் பூப்பத்
[13]தயங்குகை புடைத்தலொப் பாகமுரு கையவொரு
      சப்பாணி கொட்டியருளே
தாரகசொ ரூபதிரு வேரகக மாரவொரு
      சப்பாணி கொட்டி யருளே.
-
[1]. இயங்குவன - சரம். [2]. நிற்பன - அசரம். [3]. உண்மை - உள்ளதாம் தன்மை. [4]. இயமானன் அல - ஆன்மா அல்ல. [5]. வயங்குவது - பிரகாசிப்பது. [6]. வாஞ்சையால் - ஆசையால். [7]. உயிரில் வழி - உயிரில்லாத பொழுது. [8]. சுயங்கிரியை - சுதந்தர செயல். [9]. வாலறிவன் - பரிசுத்த அறிவினனான பரமன். [10]. தோமற - குற்றமில்லாதபடி. [11]. துன்மதியர் - அற்ப அறிவினர். [12]. முறுவல் - புன்னகை. [13]. தயங்கு கை - பிரகாசத் திருக்கரம்.
--------------------------------
(பொ-ரை.) இயங்கு திணையும் நிலைத் திணையும் என ஆகி, அறிவுடையன அறிவிலாதன எனவுள இரு வகையாகி, இப்பாரில் உள்ள (இந்த இரு) தன்மைகளைப் பார்த்தும்;
அறிவிலாதவைகள் ஆன்மாக்கள் அல்ல; அறிவினால் விளங்குவதே ஆன்மா. அந்த ஆன்மா, உடலுடன் கலந்து, ஆசைப் பெருக்கால் செயல் செய்யும்; உயிரில்லாத போது, உடல் இயங்காது மண்ணாங்கட்டியாகும் எனவும்; அந்த ஆன்மாவோ , (கவின் மிகு) சுதந்தரம் அற்றது எனலைக் கண்டிருந்தும்,
(செய்விப்பார் இன்றிச்) சுதந்தரமாகச் செயலாற்றும் தூய அறிவினன் ஆன இறைவனது உண்மை சொருபத்தை, (ஊன்றிக்) குற்றமற உணர்ந்து,
வணங்கி வழிபடாத துர்ப்புத்தியரது அற்பத் தன்மையை அறிந்து, அச்சோ என்றுரைத்து, (அக் குறிப்புப்) புலனாகச் சிறிது புன்னகை மலர, திருக்கரம் கொட்டல் போல், முருகையா! (நீ) ஒப்பற்ற சப்பாணி கொட்டியருள்!
பிரணவ மேனிப் பிரானே; திருவேரகக் குமரா ! ஒப்பற்ற சப்பாணி கொட்டியருள், (எ - று).
அறிவுடையவைகளைச் சேதனம் எனவும், அறிவு இல்லாதவைகளை அசேதனம் எனவும் அறிவிப்பர்.
இந்த இரண்டுமானது இவ்வுலகம். கண்ணால் இவைகளைக் காண்கிறார். இயங்கு திணை நிலையிது; நிலைத்திணை நிலையின்ன என்று, கனிவொடு கூறும் நூற்களைக் கற்கின்றார். இது குறித்து, கேண்மை ஞானிகள் கூறுவதும் கேட்கின்றார். கற்றும் கேட்டும் என்ன பயன்?
இவைகளைத் தோற்றுவித்துத் தொழிற்படுத்துவானை உணராத துன்மதியாளரைக் கண்டு, கைதட்டி நகைப்பார் போல், முருகா! நீ சப்பாணி கொட்டியருள் எனும் செய்தி, நினைவில் என்றும் நிற்குமாயின், உய்யுமே இந்த உலகம்! (37)
---------------

38. [1]பன்மார்க்க நூலெலாம் பகர்கின்ற பொருள்களும்
      பயனுமப் பயனை யடையப்
பயில்கின்ற சாதனைக ளும்படித் [2]தோர்ந்தவைகள்
      பயனற்ற வெனவறிந்து
[3]நன்மார்க்கம் யாவையும் தம்மகத் தேகொண்டு
      நவிலு[4]மெந் நெறியு[5]மிகலா
நான்மறைக ளாகம விதங்கள்புகல் [6]முப்பொருளை
      [7]நவையின்றி [8]ஓர்ந்து பாவத்
துன்மார்க்க நீங்கியற நெறிநின்று புண்ணியத்
      தொலையிலாச் செல்வ [9]மீட்டித்
தூயதொண் டின்னிலைமை கைவந் திரண்டற்ற
      [10]சுத்தஅத் துவிதநிலைகொள்
[11]சன்மார்க்க சித்திசேர் தொண்டர்குல தெய்வமே
      சப்பாணி கொட்டியருளே
தாரகசொ ரூபதிரு வேரக குமாரனே
      சப்பாணி கொட்டியருளே .

[1]. பன்மார்க்கம் - பல சமயங்கள். [2]. ஓர்ந்தவைகள் - அறிந்தவைகள். [3]. நன்மார்க்கம் - நல் வழிகள். [4]. எந் நெறியும் - எவ் வழிகளும். [5]. இகலா - பகைக்காமல். -[6]. முப்பொருளை - பதி, பசு, பாசங்களை. [7]. நவை - குற்றம். [8]. ஓர்ந்து - உணர்ந்து. [9]. ஈட்டி - சம்பாதித்து. [10]. சுத்த அத்துவிதம் - சத்தாத்வைதம். [11]. சன்மார்க்க சித்தி - ஞான சித்தி.
-----------------------------
(பொ-ரை.) பல சமய நூற்கள் அனைத்தும் சொல்கின்ற பொருள்களையும், (பரவிய அவைகளால் விளையும் ) பயன்களையும், அப்பயனை அடைய (ப் பல காலம்) பயின்ற சாதனைகளையும் படித்து உணர்ந்து, அவ்வழிகள் ஒரு பயனும் தாராதவை எனலை (அனுபவத்தில்) அறிந்து;
தகுதியுடைய வழிகள் அனைத்தையும் தம் சிந்தையில் தாங்கி, பகரும் எந்தச் சமயத்தையும் பகைக்காத நால் வேதங்களும், பல ஆகமங்களும் படிக்கும் (கடவுள், உயிர், உலகம் எனும்) முப்பொருள் நிச்சயத்தை (ஊன்றிக்) குறைவற உணர்ந்து, பாவம் விளைவிக்கும் வீண் வழிகளை (அடி யோடு) விட்டுவிட்டு;
(களித்து) அறநெறியில் காலூன்றி நின்று, பொன்றாததான புனித புண்ணியப் பொருளைச் சிறக்கப் பெருக்கிச் சேகரித்து, அகத்தாலும் புறத்தாலும்) பயனான தூய தொண்டு செய்நிலையிற் பழகி, (அதன் மூலம்) இரண்டற்று (உயர்ந்த) சுத்தாத்வைத நிலையில் ஒன்றித்து, ஞானநெறி சித்தித்த தொண்டர்குல தெய்வமே! சப்பாணி கொட்டியருள்!
பிரணவ வடிவப் பிரானே! திருவேரகத் தெய்வமே! சப்பாணி கொட்டியருள், (எ - று).
சன்மார்க்கத்தையும், தொண்டர் பெருமையையும் இதில் ஓதியவாறு உணர்க. சமயம் பல; அவைகள் கூறும் சாதனைகளும் பல. அனுபவத்தில் எல்லாம் சபலம்; நன்னெறி தழுவி, எம்மதத்தையும் பகைக்காமல், திரிபதார்த்த நிச்சயத்தில் தேர்ந்து, பாவமற்ற புண்ணியங்களிலேயே பயின்று, பயனான தூய பணிகளைச் செய்து, சுத்தாத்வைத சொருபம் உணர்ந்து, ஞான சித்தி கைவந்தோர் தொண்டர் எனப் பெறுவர். அவர்கள் அநுபவிக்கும் தெய்வம் சுவாமிநாதன் என்றபடி.
அத்வைத முதலெழுத்தான அகரத்திற்கு, அன்மை இன்மை உண்மை என முப்பொருள் கூறுவர் சமய வாதிகள். இன்மை கூறுவர் மாயா வாதிகள். உண்மை கூறுவர் துவைதிகள்; அன்மை கூறுவர் சுத்தாத்வைதிகள் விரிவைச் சிவஞான போதத்திற் காண்க.
(38)
--------------

39. செஞ்சுடர்ப் 1பருதிசத கோடியொளி கூடினும்
      சிறியமின் மினியின் [2]மாழ்கத்
திகழொளி விரிக்கும் வேல் [3]சிந்துமத [4]சிந்தூர
      திலக[5]கய முகதாரகன்
விஞ்சுசுடர் வீசுதிரு மாலி[6]னட லாழிபூண்
      வியன்மார்பு பொடி செய்தவேல்
வீரவா குவினைமுத லானவரை வஞ்சித்த
      வெற்பினை இடித்த வடிவேல்
[7]துஞ்சுசிறை யின்கணுறு மிந்திர குமாரனெடு
      [8]சுரர்கள்பத முறு [9]தளையெலாம்
துகளாக நொடியினி லராவுமர மானவேல்
      தொண்டர்தமை நலிய நினையும்
[10]சஞ்சிதக் கடல்பருகும் வேல்விளங் குங்கைகொடு
      சப்பாணி கொட்டியருளே
தாரகசொ ரூபதிரு வேரக குமாரனே
      சப்பாணி கொட்டியருளே.

1. பருதிசத கோடி - நூறு கோடி சூரியர். [2]. மாழ்க - மழுங்க. [3]. சிந்துமதம் - மதம் சிந்தும். [4]. சிந்தூர தில கம் - சிந்தூரத் திலகம் அணிந்த. [5]. கயமுகன் - யானைமுகன். [6]. அடல் ஆழி - ஆற்றல் காட்டும் சக்கரம். [7]. துஞ்சுதல் - ஒடுங்குதல். [8]. சுரர்கள் - தேவர்கள். [9]. தளை - விலங்கு. [10]. சஞ்சிதக் கடல் - பெருக்கமான பழைய வினைகள்.
-------------------------------
(பொ-ரை.) செந்நிற ஒளிக்கற்றையுடைய நூறு கோடி சூரியர்களின் ஒளி ஒன்று சேரினும், (அவை) ஒரு சிறிய மின்மினிபோல் ஒளி குன்ற, விளங்கும் ஒளி பரப்பும் வேல்;
(சிலிர்த்து) மதம் சிந்தி, செந்நிறத் திலகமணி யானைமுக தாருகனது, பேரொளி பரப்பும் திருமாலின் அழிவு செய்யும் சக்கரத்தை அணிகலனாக் கொண்ட அகன்ற மார்பைத் துகளாக்கிய (ஆற்றலையுடைய) வேல்;
வீரவாகுவை, (பிற துணைவரை, இலட்சம் வீரரை, பூதகணங்கள் முதலானவரை வஞ்சித்து மயக்கிய (கிரவுஞ்ச) மலையைப் பொடிப்படுத்திய வேல்;
இடுங்கிய சிறையில் அகப்பட்டு இருந்த இந்திர குமாரனான சயந்தனுடன், விண்ணவர் கால்களில் இருந்த விலங்குகளை யெல்லாம் ஒரு நொடியில் பொடியாக அராவிய அரமான வேல்;
அடியவர்களை வருத்த எண்ணும் (விரிந்த) சஞ்சித வினைகளாகிய கடலை விழுங்கும் வேல் விளங்கிய திருக்கரம் கொண்டு, சப்பாணி கொட்டியருள்; பிரணவ உருவப் பிரானே; திருவேரகக் குமரா! சப்பாணி கொட்டியருள் (எ - று).
      "சுடர்ப் பருதி ஒளிப்ப, நில
      வொழுக்கு மதி ஒளிப்ப, அலை
      அடக்கு தழல் ஒளிப்ப, ஒளிர்
      ஒளிப் பிரபை வீசும்."
      "பனைக்கை முக படக்கரட மதத்தவள கசக்கடவுள்
      பதத்திடுநி களத்துமுளை தெறிக்க அரமாகும்,"
எனும் வேல் வகுப்பு, இங்கு எண்ணத் தகும். வேல் பெருமை விளங்க வைத்த பாடல் இது. பாழும் கயமுகன், வைகுந்தத்தைப் பற்ற நினைத்தான். படை எடுத்தான்; எதிர்த்தானைத் திருமால் எதிர்த்தார்; இறுதியில் ஆழியை ஏவினார். விறு விறுத்த அது, அவன் கழுத்தில் விழுந்தது. படபடத்த ஆழியை, கையால் பற்றினன். ஆக்ரமித்த அதன் உக்கிரத்தை அடக்கினன். என் மார்பிற்குச் சக்கர மாலை; ஹி ஹி ஹி! என்று பாதகத் தாரகன் பல்லிளித்தான். சிவபெருமான் சங்கராபரணர்; நானோ சக்கராபரணன்; திருமால் சக்கரபாணி; நான் சக்ரகளத்தன். ஹ ஹ் ஹா ஹா! என்று அட்டகாசம் செய்து இருந்தான். மலை போன்ற அவன் மார்பில் சக்கரம், ஆபரணமாக என்றும் அப்படியே இருந்தது. காலம் வந்தது. பொல்லா அவன் மார்பை வேல் பொடித்தது. வீரவாகு முதலினோரை மயக்கிய கிரவுஞ்ச மலையை, தவிடு பொடியாக இடித்தது. சிறந்த வானோரை, (சூரன் வைத்த) வீணான சிறையிலிருந்து விடுத்தது. இத்தகைய வரலாறுகள் இப்பாட்டில் இருப்பதை அறிக. (39)
---------------

40. அங்கிங்கெ னாதபடி எங்குங் கலந்தணுவு ளணுவாய்
      மலைக்கு மலையாய்
அமரும் பரப்பிரம மானவுனை 1சிலவர்வட
      ஆரியர் தெய்வமெனவும்
சங்கங்[2] குலாவி[3]நெடி யோன்குன்று [4]குமரியிடை
      தனில்வளர்ந் தோங்கிஎன்றும்
தன்னிளமை குன்றாத தென்றமிழர் போற்றுந்
      தனித்தெய்வ மென்றுமறையா(று)
அங்கங்க ளோடுபொலி [5]ஆரியந் தான்நமக்
      கரியபெரு மொழியதென்றும்
அழியாம லுலகினிற் பயில்கின்ற தமிழேநம்
      அன்னையென வும்வாதிடும்
[6]சங்குலங் கண்டந்த மடமையை யிழித்தல்போற்
      சப்பாணி கொட்டியருளே
சகலருக் குந்தெய்வ மானகுரு மலைமுருக
      சப்பாணி கொட்டியருளே.

[1]. சிலவர் - சிலர். [2]. குலாவி - விளங்கி. [3]. நெடி யோன் குன்று - திருவேங்கட மலை. [4]. குமரி - கன்யா குமரி. [5]. ஆரியந்தான் - வடமொழி தான். [6]. சங்குலம் - ஆரவாரச் சண்டை.
-----------------------------
(பொ-ரை.) அங்குளது இங்குளது என்று சொல்லாதபடி (விரிந்து) எங்கும் வியாபகமாகி, அணுவிற்குள் அணுவாய், மலைகட்கு மேல் பெரிய மலையாய் அமர்ந்திருக் கும் மேலான பெரிய பொருளான உன்னை,
சிலர் வடநாட்டார் வழிபடு தெய்வம் என்றும், பாஞ்சசன்யம் ஏந்திய நெடுமைத் திருமாலின் குன்றான திருவேங்கடத்திற்கும், கன்யாகுமரிக்கும் இடைப்பட்ட நிலத்தில் வளர்ந்து உயர்ந்து, என்றும் தனது இளமையழகு குன்றாத தென்மொழித் தமிழர் வழிபடும் ஒப்பற்ற தெய்வம் என்றும்;
நால் வேதங்கள், (அதன்) ஆறு அங்கங்களொடு விளங்குகின்ற வடமொழியே நமக்கு அருமையான மொழியென்றும்;
அழியாமல் (வழங்கும் மொழியாகி,) உலகில் பேசப் பெறுகிற தமிழ்மொழியே நம் தாய்மொழியென்றும், வாதம் புரிகிற ஆரவார கலகத்தை அறிந்து;
அந்த அறியாமையை இழிவுபடுத்துவது போல், (அதற்கு அறிகுறியாக நீ) சப்பாணி கொட்டியருள்; எல்லோர்க்கும் தெய்வமான சுவாமிமலை முருகா! (நீ) சப்பாணி கொட்டியருள், (எ - று)
'அனோரணியாம் மகதோமக தாம்'' என்பது சுருதிச் செய்தி.
''அணுவுள் அவனும் அவனுள் அணுவும், கணுவற நின்ற கலப்பு' என்பது சாத்திரம். ''அண்டங்கள் எல்லாம் அணுவாக, அணுக்களெல்லாம் அண்டங்களாகப்
பெரிதாய்ச் சிறிதாயினானும்" என்பது பரஞ்சோதியார் திருவிளையாடல்.
"அங்கிங் கெனாதபடி எங்கும் பிரகாசமாய்" என்றார் தாயுமானார். ஊன்றி இவைகளை, முதலடியில் ஓரத்தகும்.
மொழிப் போரும், மொழிவழி நிகழும் சமயப் போரும், அறியாமையால் அமைபவை. எம்மொழியும் இறைமொழி; எச்சமயமும் இறை சமயம்; எவ்வழி பாடும் இறைவழி பாடே. அதையறியாது வீண் வாதில் விழலர் அநியாய மடமையை அருவருத்தபடி. (40)
---------------

41. [1]அம்புய மாளிகை வாழ்பிர மாமணி நாவக லாதவளாம்
      அலகில கலைமக ளேதமி ழுலகி னருந்தவ நினைவாலே
[2]இம்பரில் வந்தன ளென்றெவ ரும்புக ழும்படி இணைகாணா
      இன்றமிழ் நன்கவி தந்தரு ளவ்வை எனும்பெரு மூதாட்டி
[3]உம்பல் முகன்றன தின்னரு ளாலர னுறைகயி லையினுறுவாள்
      உண்ண [4]வெணாவலின் விளைசுடு கனிகளுதிர்த்திடு மாறேறிக்
[5]கொம்பு குலுக்கிய செங்கைக ளாலே கொட்டுக சப்பாணி
      குருமலை மருவிய சரவண பவனே கொட்டுக சப்பாணி.

[1]. அம்புயம் - தாமரை. [2]. இம்பரில் - இவ்வுலகில். [3]. உம்பல் முகன் - கஜமுக கணபதி. [4]. வெணாவலின் - வெண் நாவல் மரத்தின். [5]. கொம்பு - கிளை.
-------------------------------
(பொ-ரை.) தாமரையாகிய மாளிகையில் தங்கிய நான்முகனது அழகிய நாவை விட்டு அகலாதவளான, அளவிலாத (சால்புடைய) கலைகளின் அன்னை சரஸ்வதியே, தமிழகத்தின் சிறந்த தவ சிந்தனையால், (அரிய) இவ்வுலகில் வந்து அவதரித்தாள் என்று (புனிதர்) எவரும் புகழ்ந்து போற்றும் அளவு, இணையில்லாத இனிய நலம் சிலந்த (பயனான) தமிழ்ப் பாக்களைப் பாடியருளிய பேரறிவினளும்;
யானைமுக கணபதியின் அருளால் இனிய திருக்கயிலாயம் சேர்ந்தவளும் ஆன ஒளவையார் உண்ண;
வெண்ணிற நாவல்மரத்தில் விளைந்த சுட்டபழம் உதிர்க்கும்படி ஏறி, (அம்மரக்) கிளைகளைக் குலுக்கிய செவ்விய திருக் கைகளால், சப்பாணி கொட்டியருள்;
சுவாமி மலையில் எழுந்தருளிய சரவணபவனே ! (நீ) சப்பாணி கொட்டியருள், (எ - று).
தமிழகம் செய்த தவம், ஒளவையின் வருகை. பயனான நூல் பல செய்த அப்பாட்டி, விமல கணபதியை வழிபட்டுப் பாடிய நூல் *விநாயகர் அகவல். அது கேட்டு மகிழ்ந்த ஆனைமுக கணபதி, வித்தகத் துதிக்கையால் அவரைத் தூக்கிக் கைலாயத்தில் விட்டார்.
(*விநாயகர் அகவல் ரஸபதி விரிவுரை, சென்னை பந்தர் தெரு 54-ல் கிடைக்கும்.)
அத்தகைய ஒளவை ஒரு சமயம், வரும் வழியில் இருந்த ஒரு நாவல் சோலையைக் கண்டார். பசி நேரம் அவர் பசிகண்ட அறுமுகப் பெருமான், இளம் சிறுவராய் மரமேறி யிருந்தார்.
தம்பீ! பழம் சில பறித்துப் போடு என்றார் பாட்டியார். சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா என்றார் சுப்ரமண்யப் பெருமான். பழங்களில் சுடுகை, சுடாமை இப்படியும் உண்டோ என்று வியந்த பாட்டி, சுடாத பழமே போடு பார்ப்பம் என, உவந்த சிறுவர் கிளைகளை உலுக்க, உதிர்ந்த பழங்களில் மண் ஒட்டியமையால், அம்மண்ணை வாயாலூதினர் ஒளவையார்.
என்ன பாட்டீ! சுடுகிறதோ என, நயமான அவ்வுரை கேட்டு நாணிய பாட்டிக்குக் குமரன் தன் நற்சேவை தந்தனன் என்பது, இதனில் உள்ள வரலாறு.
கிளைகளை உதிர்த்த செங்கரங்களால் சப்பாணி கொட்டியருள்; ஒளவை பயனடைந்தவாறு, அடியேற்கும் ஏதாயினும் பயன் விளையும் என்பது குறிப்பு. (41)
-------------

42. எப் [1]பாடை கற்றவரு மெத்தேய முற்றவரு
      மெக்கோல மிட்ட வருமே
[2]இச்சா வழிச்சுழல லற்றே தவத்தின் வழி
      நிற்பார்த மக்கருள்பவா
[3]மைப்பான லொத்தொளிர் [4]மிடற்றார் களிக்குமரு
      மைப் [5]போதனைக்குருபரா
வற்றாமு ழுக்கருணை வைத்தா ளுமைக்குவிழி
      யைப்போலு நற்புதல்வனே
[6]கைப்போத கத்தமையர் [7]பிற்பா டுதித்தவொளிர்
      கட்டாணி முத்து முருகா
கைக்காழி [8]நத்து கதை விற்கூ [9]ரசிப்படை
      [10]தரித்தா ருவக்கு மருகா
[11]தப்பேது மற்றவ ருளக்கோயி லுற்றகுக
      சப்பாணி கொட்டியருளே
தற்போத மற்றவர் [12]வழுத்தேர கக்குமா
      சப்பாணி கொட்டியருளே.

[1]. பாடை - பாஷை. [2]. இச்சா - இச்சை. [3]. மைப் பானல் - நீலமலர். [4]. மிடற்றார் - கண்டத்தர். [5]. போதனை - ஞானம் போதிக்கும். [6]. கைப்போதகம் - (பத்து வயது ஆனைக் கன்று போல் காட்சியாகும்) கணபதி. ''போதகஸ்து தச வார்ஷஹ' என்பது நிகண்டு. [7]. பிற் பாடு - பின். [8]. நத்து - பாஞ்ச சன்யம். [9]. அசி - வாள். [10]. தரித்தார் - தாங்கிய திருமால். [11]. தற்போதம் - தன் முனைப்பு. [12]. வழுத்து - துதிக்கும்.
--------------------------------
(பொ - ரை.) எம்மொழியைக் கற்றவரும், எந்நாட்டில் இருப்பவரும், எக்கோலம் கொண்டவரும் இச்சை வழிச் சுழல்வது இல்லாமல், (நிலைத்துத்) தவவழியில் நிற்பாரேல், (அவர்கட்குப் பயனான) அருளைப் பாலிப்பவனே!
நீலோற்பல மலர்போல் கருமையொளி பெற்ற கண்டத்தை யுடைய (மாபெரும்) சிவனார் மகிழும்படி அருமை ஞானபோதனை செய்த ஆசாரியனே! வளம் என்றும் வற் றாத முழுமையான கருணை (யைத் திருவுளத்திற்) வைத்து ஆளும் உமைக்குக் கண் போன்ற நலம் சிறந்த மகனே!
துதிக்கையை யுடைய யானைக்கன்றான தமயனார் கணபதிக்குப் பின் உதயமான, ஒளி விளங்கும் முத்துப்போல் உயர்ந்த முருகா!
சக்கரம், சங்கு, கோதண்டம், வாள், தண்டு (எனும் ஐந்து) ஆயுதம் தாங்கிய (மாபெரும்) திருமால் மருகா!
ஒரு குற்றமும் இல்லாதவர் உள்ளமான ஆலயத்தில் குடியிருக்கும் குகா! சப்பாணி கொட்டியருள்!
முனைப்பு ஒன்றும் இல்லாத முனிவர் (குறிப்பொடு) துதிக்கும் திருவேரகக் குமரா! சப்பாணி கொட்டியருள், (எ - று).
அருள்பவா! குருபரா! புதல்வனே! முருகா! மருகா! குகா! குமரா! சப்பாணி கொட்டியருள் என்று முடிக்க.
தற்போதம் அற்றவர், தப்பேதும் அற்றவர், இச்சையைப் பெருக்கி இழிவடையார்; அவர்கள் எம்மொழியராயினும், எந்நாட்டவராயினும், எக்கோலத்தராயினும், அவர் தம் உயர்ந்த அருந்தவம் ஒன்றே கண்டு அருள்பவன் ஏரகன் எனும் செய்தியை, எண்ணுந் தோறும் இன்பம் விளையும். (42)
----------------

43. [1]புத்தேளிர் துய்க்குமமு திற் [2]றீவி யச்சுவை[3]பு
      துக்கேர்கொள் முத்தமிழும்வாழ்
[4]பொற்கூட லிற்[5]குடவ யிற்பூம ணத்த[6]கிரி
      யிற்[7]சோலை யத்திரியிலே
முத்தீனு நத்துகரை யிற்சோலை யிற்றவழ்மு
      ழக்கார் [8]கடற்பதியிலே
[9]முட்டாது பற்பல முழுக்காடல் பெற்றபழ
      னிப்பேர்ப டைத்தமலைமேல்
[10]கைத்தான முற்றமலை மைக்[11]கார் முழக்கு[12]பல
      வெற்பேது முற்றவரசே
கற்பான் மிகுத்தவுமை கைத்தாம ரைக்குள்வளர்
      கட்டாணி முத்துமுருகா.
சத்தான புத்தியடி யற்கேய ளித்ததுரை
சப்பாணி கொட்டியருளே
தற்போத மற்றவர் வழுத்தேர கக்குமர
      சப்பாணி கொட்டியருளே.

[1]. புத்தேளிர் துய்க்கும் - தேவர்கள் உண்ணும். [2]. தீவியச் சுவை - இனிமையான சுவை. [3]. புதுக்கு - புதுக்கிய. [4]. பொற்கூடலில் - மதுரையில். [5]. குடவயின் - மேற்கில் உள்ள. [6]. கிரியில் - பரங்கிரியில். [7]. சோலையத் திரியிலே - பழமுதிர் சோலைமலையில். [8]. கடற்பாதியில் - திருச்செந்தூரில். [9]. முட்டாது - தடைப்படாது. [10]. கைத்தானம் உற்றமலை - யானை. [11]. கார் - மேகங்கள். [12]. பல வெற்பு - பல மலைகளில்.
-------------------------------------
(பொ-ரை.) அமரர் பருகும் அமுதினும் இனிய சுவையைப் புதுக்கும் (முதன்மை) அழகு கொண்ட முத தமிழும் வாழ்கிற (பழைய) அழகிய மதுரைப்பதியின் மேற்குத் திக்கில் (உள்ள,) மலர் மணம் கமழும் திருப்பரங்குன்றில்; பழமுதிர் சோலை மலையில்;
முத்துக்களை யீனும் சங்குகள், கரையிலும் சோலையிலும் தவழ்ந்து முழக்கம் செய்யும் கடற்கரை ஓரத்தலமான திருச்செந்தூரில்;
ஓயாது பலப்பல அபிஷேகங் கொண்ட (மாபெரும்) பழனி எனும் பெயர் அமைந்த மலைமேல்;
துதிக்கையையுடைய மலை போன்ற தோற்றமுள்ள யானைகளும், (முதிர்ந்த) கரு மேகங்களும் முழக்கம் செய்யும் எந்த மலையினும், எழுந்தருளிய அரசே!
கற்பில் உயர்ந்த உமாதேவியின் திருக்கைகளாகிய கமலத்துள் வளரும் முதன்மை முத்தான முருகா!
சத்தான அறிவை அடியேனுக்கு அளித்த துரையே! சப்பாணி கொட்டியருள்!
தன் முனைப்பு இல்லாத தவத்தினர் துதிக்கும் திருவேரகத் தெய்வமே! சப்பாணி கொட்டியருள், (எ - று).
அமுதினும் இனித்த அருந்தமிழ் வாழும் மதுரையின் மேற்பால் மணம் கமழ் பரங்கிரி; பக்கச் சார்பார் பழமுதிர் சோலை; தெய்வக் கடற்கரைத் திருச்செந்தில்; பற்பல முழுக்காடல் பெற்ற பழனி; பல மலைகள் எனும் பதிகளில் அமர்ந்த பரமா! கற்பால் மிகுத்த உமை கை வளர் முருகா! சத்தான புத்தி யடியற்கே அளித்த துரையே! தற்போதம் அற்றவர் வழுத்து ஏரகக் குமரா எனும் பகுதிகள், எவர் உள்ளத்தையும் அள்ளும்.
மூலாதாரத் தலம் பரங்கிரி; சுவாதிட்டானத் தலம் செந்தில்; மணிபூரகத் தலம் பழநி; அநாகதத் தலம் திருவேரகம்; சுவாதிட்டானத் தலம் குன்று தோறாடல்; ஆக்ஞைத் தலம் பழமுதிர் சோலை; இந்த ஆறு படை வீட்டு வளம் இதனில் அறிவித்தது ஓர்க.
-------------

44. [1]குப்பாச மொத்தவுட லிற்பேய்க ளொத்த[2]பொறி
      கட்கேவ லெப்பொழுதுமே
[3]கொட்பாயி யற்றியலை [4]யிப்பாச பத்தனை
      யருட்பார்வை வைத்தருளியே
தப்பாது பத்திநெறி யிற்சேர விட்டகரு
      ணைச்[5]சாது சற்குரவனூர்
[6]தற்காவ லுக்கிதுசெ பிப்பாயெ னப்பகரெ
      ழுத்தாறு ணர்த்துபொருளே
கைப்பாசம் வைத்தய மனைக்காலு தைத்தசிவ
      னுக்காவல் வைத்தமுருகா
கற்பூர மொத்த[7]முறு வற்பார்வ திக்கினிய
      கட்டாணி முத்துமுருகா
[8]தப்பான செப்புபிர மற்சாடு பொற்கை கொடு
      சப்பாணி கொட்டியருளே
தற்போத மற்றவர்வ ழுத்தேர கக்குமர
      சப்பாணி கொட்டியருளே.

[1]. குப்பாசம் - சட்டை. [2]. பொறிகட்கு - ஐம்பொறிகட்கு. [3]. கொட்பு - சுழற்சி, [4]. இப்பாச பத்தனை - இப்பாசத்தில் பற்று வைத்த என்னை. [5]. சாது. சற்குரவனார் - பழநியி லிருந்த பரமயோகி. [6]. தற்காவல் - தற்காப்பு. [7]. குறுமுறுவல் - புன்னகை. [8]. தப்பான செப்பு - தவறு பட்ட உரை கூறும்.
-----------------------------
(பொ - ரை.) சட்டை போன்ற (இந்தப் பரு) உடலில், பேய்கள் போன்ற (மெய் வாய் கண் நாசி செவிகளான) ஐம்பொறிகட்கு உரிய ஏவலை எப்பொழுதும் (சுழன்று) சுழன்று செய்து, அலைமோதும் இக்கட்டால் (என்றும்) கட்டுண்ட எளியன் மேல், (பயனான) அருள் நோக்கம் பாலித்து;
அருள்நிறை சாது ஸ்வாமியான ஞானாசாரியர், (உயர்ந்த தற்காப்பிற்கு இதை உருவேற்றுக! என அருளிய சடாட்சரத்தால் உணர்த்தப்படும் மெய்ப் பொருளே!
கையில் பாசம் கொண்ட இயமனைக் காலால் உதைத்த (முதன்மைச்) சிவனார் மோகம் கொள்ள நின்ற முருகா!
கற்பூரம் போல் (வெளுத்த பற்களால்) இளநகை புரியும் (பர்வத மன்னன் மகளான) பார்வதிக்கு, இனிய முதன்மையான இளஞ்சேயே!
தவறான மொழியுரைத்த பிரமனைக் குட்டியுதைத்த பொன்னான திருக்கரம் கொண்டு , சப்பாணி கொட்டியருள்!
தன் முனைப்பில்லாத தவத்தர் வழுத்தும் திருவேரகப் பெருமா! சப்பாணி கொட்டியருள், (எ - று).
குப்பாசம் போன்றது உடல். அதனிலிருந்த பொறிகளுக்கு அடிமையாயினார் பலர்; பாசபத்தர் என்பது இவர்கட்குப் பலித்த பெயர். தளையாற் கட்டுண்டவர் என்பது, இதன் பொருள். இவர்களை, காலம் பார்த்துக் காலன் பாசத்தால் கட்டுவன்;
அங்ஙனம் ஆகாமல், புண்ணியமிக்க புனிதநெறியை மேற்கொண்டால், வாழ்விக்கும் குரு, அவர்கள் முன் வருவர். அன்பு நெறியில் அணைப்பர்; தற்காப்பிற்கு இது தகுவது என்று உயர்ந்த ஆறு எழுத்தை உதவுவர்; அந்நிலையில், உலக பாசம் ஒழியும்; அதன் பின்னும் தவறினால், குட்டித் திருத்தித் தெய்வம் குணப்படுத்தும் என்பது குறிப்பு. (44)
''குப்பாச வாழ்க்கையிற் கூத்தாடும் ஐவரிற் கொட்படைந்த
இப்பாச நெஞ்சனை யீடேற்றுவாய்''
என்ற கந்தரலங்காரத்தை இங்குக் கருதலாம்.
பாசபத்தியை விடு; பகவத் பக்தியிலீடுபடு; ஆறெழுத்து தற்காப்பு; கொள் இதை என்று கொடுத்த சாது ஸ்வாமிகளை. இங்கு நினைவு கொண்டது நன்றி நலம் என்க.

      சப்பாணிப் பருவம் நிறைவெய்தியது
---------------

[5]. முத்தப் பருவம்.

பிள்ளைப் பெருமானை, முத்தம் கொடுக்க வருக என்று பரிவொடு அழைக்கும் இப்பருவம், பதினோராம் திங்களிற் பாடப் பெறும். 'பத்தினொ டொன்றின் முத்தம் கூறலும்' என்பது பிங்கலந்தை.
-------------
45. கரு[1]வேய் [2]தசைப்பையெனு மொருபேர் படைத்த[3]பல
      கசுமால முற்றசிறை மேய்
கடிவாய் படைத்தபுழு நிரை[4]மேய வெப்பமெழு
      கனல்போ [5]லனற்ற அயர்வாய்ப்
பெருவே தனைப்படுவ தினிமே லிலைப்புவியில்
      பிணிநோய் மிடித்துயர் படாய்
[6]பெருவேத னெற்றிஎழு தவனாணை விட்டதுபல்
      பெரியோர் தமக்கு ளுறவாய்
[7]மருவே செறித்தமலர் புனல்தூய் எமைத்தினமும்
      வழிபா டு[8]ஞற்றி மகிழ்வாய்
[9]வழுவேது மற்றினிய கவிபாடு முத்தியையு
      மறவா தளிப்ப மெனவே
திருவே மிகுத்தொரு மொழிகூறி முத்திரைசெய்
      திறமாக முத்த மருளே
திருவே ரகக்குமர குருசாமி நாதகுளிர்
      திருவாயின் முத்த மருளே.

[1].ஏய் - தங்கிய. [2]. தசை - புலால் மயமான. [3]. பல கசுமாலம் - பல அருவருப்பான பொருள்கள். [4]. மேய - தின்ன. [5]. அனற்ற - கொளுத்த. [6]. பெருவேதன் - பிரமன். [7]. மரு - மணம். [8]. உஞற்றி - செய்து. [9]. வழு - குற்றம்.
------------------------------
(பொ-ரை.) கரு தங்கிய புலால் பை எனும் ஒரு பெயர் கொண்ட பல அசுத்தப் பொருள்கள் தங்கிய சிறையில் மேய்ந்து; கடிக்கும் வாய் கொண்ட புழுக்கூட்டம், (தெரிந்து உன்னைத்) தின்ன, வெப்பம் (மென்மேல்) எழும் நெருப்பைப் போல் (உதராக்கினி) வெதுப்ப, (அவைகளால் பெரிதும்) அயற்சியை யடைந்து, (நீ) பெரிய வேதனையை அடைவது இனிமேல் இல்லை;
பிணிக்கும் நோயாம் வறுமையால் (இனி) வருந்த மாட்டாய்; வேதன் எனும் பெரியோன், (உன்) தலையில் எழுதிய கட்டளை எழுத்தும் (கைவிட்டு) விட்டது;
(இனி உயர்ந்த) பல பெரியோர்களிடத்தில் உறவு பூண்டு, மணமே நிறைந்த மலரும் புனலும் இட்டு, எம்மை நாள்தோறும் வழிபாடு செய்து மகிழ்ந்திரு;
எக்குற்றமும் அற்று, பாடல்களால் (எம்மைப்) பாடு; (அருமை) முத்தியையும் மறவாது அளிப்பம் என்று, அருள் மிகுத்த ஒருமொழி யுரைத்து, முத்திரை வைத்த அடையாளமாக (ஒரு) முத்தம் கொடுத்தருள்; திருவேரகக் குமரா! குருசாமி நாதா! குளிர்ந்த திருவாயால் ஒரு முத்தம் உதவியருள், (எ - று).
நெற்றி - தலை; இனம் பற்றி நெற்றியெனப் பெற்றது. குருசாமியான நாதா என விரிக்க. ஒரு மொழி - தகராலய ரகசிய உபதேசம். முத்திரை வைத்ததற்கு அடையாளம் முத்தம் எனும் குறிப்பு, அருமையினும் அருமை. முத்தியையும் எனும் உம்மை உயர்வு சிறப்பு; இம்மை மறுமையையும் உதவும் என்பது தொனி. (45)
--------------

46. அலை[1]வா ரிதிக்கண்வரு மமுதான சொற்கவிகள்
      [2]அணியே நிறைத்தணிகுவான்
[3]அயன்[4]மால் விழிக்கரிய பெருமா [5]னழற்கிரியி
      னுருவா [6]மணிப்பதியினான்
சலியாத [7]பத்தருண கிரிநாத னுற்றபிணி
      [8]சலராசி யொத்த துயர்போய்த்
தவராச ருக்குளொரு முதலாக ஒப்பரிய
      தனிஞானம் வைத்தருள் செய்தாய்
கலைமான் [9]வரிப்புலி [10]கிரிடியானை யுற்றனகொல்
      [11]கனிவாய் உரைத்தி யெனவே
கவண்வீசு முத்தநகை [12]மறமாதி னுக்குமொழி
      [13]கனிவாய் மணிச் சிகரநீள்
மலைராச னுக்குமகள் மகனான சுப்பிர
      மணிய மாசின் முத்தமருளே
வளர்1[4]பூக முத்துதிரும் வளவேர கக்குமர
      மலர்வாயின் முத்த மருளே.

[1]. வாரிதி - கடல். [2]. அணியே - அழகாக . [3]. அயன் - பிரமன். [4]. மால் - திருமால். [5]. அழற்கிரியின் - நெருப்பு மலையின். [6]. அணிப் பதியினான் - அண்ணாமலையில் உதித் தவன். [7]. பத்து அருணகிரி - அன்புடைய அருணகிரி. [8]. சலராசி - நீர் நிறை கடல். [9]. வரிப்புலி - (உடலில் பல) வரிகளை யுடைய புலி. [10]. கிரிடி - பன்றி. [11]. கனி வாய் - கொவ்வைக் கனிபோன்ற வாயால். [12]. மறமாதினுக்கு - வள்ளிக்கு. [13]. கனிவாய் - கனிந்து பேசுவாய். [14]. பூகம் - கமுக மரம்.
------------------------------------
(பொ-ரை.) அலைகளையுடைய பாற்கடலில் எழுந்த அமுதுபோல், இனிப்பதான சொற்களையுடைய பாக்களால் ஆன அழகிய மாலைகளை நிறைவு செய்து அணிபவரும்; பிரமன், திருமால் (எனும் இருவர்) கண்கட்கும் காட்சி யாகாத பெருமையிற் சிறந்த சிவபிரானது செந்தழல் மலை யுருவமான அழகிய திரு அண்ணாமலையில் இருந்த வருமான;
சலிப்படையாத அன்புடைய அருணகிரிநாதர் எய்திய நோயால் விளைந்த தொல்லைக் கடல் போன்ற துயரம் தொலைந்து,
தவ வேந்தர்கட்குள் ஒரு தனிமுதல்வராம்படி, ஒப்பு சொல்ல முடியாத சிவஞான தீட்சையைச் செய்தனை;
கலைமான், (உடலில்) வரிகளையுடைய (பொல்லாத) புலி, காட்டுப் பன்றி, யானை (எவையேனும்) வந்தனவோ? கொவ்வைக் கனிபோலும் திருவாயால் கூறியருள் என்று, (பறவைகளைக்) கவணில் (கல்வைத்து) எறியும் முத்துப் போன்ற பல்வரிசையுடைய வீரமகளான வள்ளியம்மையிடம் பெருங்கனிவுடன் பேசுபனே!
நவமணிகளையுடைய சிகரங்கள் உயர்ந்த இமயமலை மன்னனுக்கு மகளான பார்வதியார் பாலனான சுப்ரமண்யா! (உன்) களங்கமில்லாத முத்தம் தந்தருள்; வளர்ந்த கமுக மரங்கள் முத்துக்களைச் சிந்தும் வளத்தையுடைய திருவேரகத் தெய்வமே! மலர்போன்ற (நின்) திருவாயின் முத்தம் தந்தருள், (எ - று).
அலைகளை எறிதல்; சங்கு, இப்பி, நவமணி முதலியவைகளை வாரி வருதல் முதலியவைகளால், கடல் வாரிதியெனப் பெறும். வாரிதிக்கண் என்பது ஏழனுருபு. அயன் - அஜன்; வடசொல்; அ - திருமால்; ஜன் - உதித்தவன்; திருமால் புதல்வன் எனும் பொருட்டு. மால் - வேட்கை; பெருமை; இரண்டையும் தருபவராதலின், திருமகள் கணவர் மால் எனப் பெறுவர். பத்தருணகிரி எனுமிடத்து, பத்து - பக்தி; "பத்துடை அடியவர்க் கெளியவன்'' என்றார் பிறரும். சலராசி - நீர்க்கூட்டம் எனும் பொருளில், கடலைக் குறித்தது.
தனிஞானம் - (விஷயாதி சேட்டைகளிலிருந்து) தனிக்க வைக்கும் ஞானம் எனினுமாம்.
மறமாதினுக்கு என்பதில், ஏழனுருபு நான்கனுருபாய் மயங்கியது. மலைராசனுக்கு மகள் மகன் என்பதில், பர்வதராஜனது பேரன் எனத் தொனித்தலறிக. கனிவாய் உரைத்தி யெனவே கனிவாய் என்பது, கருதத் தக்க கவிநலம். (46)
-------------

47. [1]தமசான [2]வுட்பகையை [3]முதலோ டறுத்தளவில்
      தவமா நிதித்திரளினார்
சனகாதி யர்க்[4]கலையில் சலராசி யொத்த[5]சம
      நிலைதா னளித்தருளினர்
எமராச னச்சிறிய [6]மறைவாண னைத்தடிய
      வருநா ளெடுத்த அடியால்
இடிபோ லுதைத்துருள விடுசீர் படைத்தடியர்
      இனமே களிக்க வருவார்
இமவானியற்றுதவ நிறைவா லவற்குமகள்
      எனவே யுதித்த பரையாள்
இருநாழி நெற்கொடற நிலையாயி யற்றுமுமை
      இனிதே சுவைத்த கனியாம்
[7]மமகார மற்றவர்கள் கருவூல மொத்தகுக
      மணிவாயின் முத்தமருளே
வளர்பூக முத்துதிரும் வளவேர கக்குமர
      மலர்வாயின் முத்தமருளே.

[1]. தமசு - இருள். [2]. உட்பகை - அகப்பகை. [3]. முதல் - வேர். [4]. அலை இல் சல ராசி - அலையில்லாத கடல். [5]. சமநிலை - சமாதி நிலை. [6]. மறைவாணனை - மார்க்கண்டேயரை. [7]. மமகாரம் - (எல்லாம்) என துடைமை என்னும் மமதை.
---------------------------------
(பொ-ரை.) ஆணவ இருளான அகப்பகையை வேருடன் அறுத்து, அளவில்லாத பேறான தவச்செல்வப் பெருக்கினராம் சனகாதி முனிவர்க்கு, அலையிலாத கடல் போன்ற சமாதி நிலையை அருளியவரும்;
இளம் சிறுவரான அந்தணர் மார்க்கண்டேயரை இயமன் தண்டிக்க வந்த தினத்தில், தூக்கிய திருவடியால் பேரிடி போல் ஒலியெழ உதைத்து, (அந்த அந்தகனை) உருள விட்ட சிறப்பெய்தி, அடியார் கூட்டம் இன்புற அருளியவரும்;
இமயமலை மன்னன் செய்த நிறைதவத்தால், அவனுக்கு மகள் என உதித்த பரையும், இருநாழி நெல் கொண்டு (முப்பத்திரண்டு ) அறங்களை நிலையாகச் செய்தவருமான உமாதேவியார், இனிது சுவைத்த கனியான, மமகாரம் அற்ற மாதவர்களின் பொக்கிஷம் போன்ற குகா! (உன்) அழகிய (முதன்மைத்) திருவாயால் முத்தம் தந்தருள்;
(வானளாவி) வளர்ந்த கமுக மரங்கள் முத்துக்களைச் சிந்தும் வளமுடைய திருவேரகக் குமரா! மலர்போன்ற திருவாயின் முத்தம் தந்தருள், (எ - று).
அநுக்ரக சிவத்தை முதலடியிலும், நிக்ரக சிவத்தை அடுத்த அடியிலும் அறிவித்தார். தவத்தால் உதித்து, அறத்தை வளர்த்த தேவியை அடுத்து நினைவூட்டினார்.
சிவமும் தேவியும் சுவைத்த கனியாம் மணிவாயால், முத்தமருள் எனக் கூட்டுக. (4[7])
--------------

48. கல்லா னிழற்குள்[1]மலை வில்லான் மறைத்தெளிவு
      கையா லுரைத்த பெருமான்
கைகேயி சொற்றபடி [2]வைதேகி பிற்றொடர
      [3]மொய்கான முற்ற [4]பெருமாள்
[5]எல்லோ [6]னியக்கமற [7]மெய்வா னுயர்த்த[8]மலை
      கையா லடர்த்த [9]முனிவோன்
[10]எய்யாது மெய்ப்பொருள்சொல் செவ்வாயி னிற்சிறிய
      மெல்லா மகிழ்ச்சி யுறவே
[11]வல்லா முலைக்[12]குறவி வில்லா நுதற்கும்[13]வரி
      மையார் விழிக்கு மயலாய்
வல்வேடு ருக்கொடுசெல் கள்வா மலைக்குமகள்
      மைவாள் விழிக்கு மணியே
மல்லார் புயத்தமுரு கையா இனிக்குமரு
      மைவாயின் முத்த மருளே
வளர்பூக முத்துதிரும் வளவேர கக்குமர
      மலர்வாயின் முத்த மருளே.


[1]. மலை வில்லான் - மலை வில்லினன் எனினுமாம். [2]. வைதேகி - ஜானகி. [3]. மொய்கானம் - அடர்ந்த தண்டக ஆரண்யம். [4]. பெருமாள் - திருமால். [5]. எல்லோன் - சூரியன். [6]. இயக்கமற - சஞ்சரிப்பு இல்லையாக. [7]. மெய் - (தன்) உடலை. [8]. மலை - விந்தகிரியை. [9]. முனிவோன் - அகத்தியன். [10]. எய்யாது - வருந்தாதபடி. [11]. வல் - சூதாடுகருவி போன்ற. [12]. குறவி - குறவர்குல வள்ளி. [13]. வரி - கருவரி செவ்வரி படர்ந்த.
-----------------------------------
(பொ-ரை.) கல்லால் விருட்சத்தின் நிழலில் மலைவு இல்லாதவனாய், (புனித) மறைகளின் தெளிந்த பொருளை, (பேறான) சின்முத்திரைக் கரத்தால் கூறிய பெருமானும்;
கைகேசி உரைத்தபடி ஜனகி பின்தொடர்ந்து வர, அடர்ந்த தண்டக ஆரண்யம் எய்திய ராமனான திருமாலும்;
சூரியன் இயக்கம் இல்லாது போக, தன் உருவை வானளாவ உயர்த்திய விந்த மலையைத் திருக்கரத்தால் அடர்த்து அடக்கிய அகத்திய முனிவனும் முதலினோர் வருந்தா வண்ணம்;
மெய்ப்பொருள் (விளக்கம்) சொன்ன (கொவ்வைச்) செவ்வாயால், எளியேம் அனைவரும் மகிழ்ச்சி எய்த;
சூதாடு கருவி போன்ற குயங்களை யுடைய குறவர்குல வள்ளியம்மையின் வில் போல் வளைந்த புருவத்திற்கும், கருவரி செவ்வரி படர்ந்த மை தீட்டிய கண்கட்கும் மயலாகி, வலிமையுடைய வேடுவன் உருவம் கொண்டு சென்ற திருடா!
இமயமலைக்கு மகளான பார்வதியாரின் கருமை ஒளி படர்ந்த கண்ணிற்கு மணி போல் காட்சியானவனே! வளம் நிறைந்த தோளுடைய முருகையா! இனிக்கும் (உன் முதன்மை) அருமைத் திருவாயால், முத்தம் தந்தருள்;
(வானளாவி) வளர்ந்த கமுகுகள், முத்துக்களை உதிர்க்கும் வளநிறை திருவேரகக் குமரா! மலர் போன்ற திருவாயின் முத்தந் தந்தருள், (எ - று).
கள்வா! மணியே! ஐயா! குமரா! பெருமான், பெருமாள், முனிவோன், எய்யாது மெய்ப்பொருள் சொல் செவ்வாயின், அருமை வாயின், மலர் வாயின் முத்தமருள் என்று கூட்டுக.
மலைவில்லான் - மேரு மலை வில்லினன் எனினுமாம். கைகேயி - கேகயன் மகள்; வடமொழி தத்திதாந்த நாமம். வைதேகி - விதேக ராஜன் மகள். எல் - அல்லின் எதிர் மறைப் பெயர்.
முலைக்குறவி மைவிழிக்கு மயலானான்; மலைக்கு மகள் மைவாள் விழிக்கு மணியானான் என்பதன் நயம். (48)
--------------------

49. மணிவா சகனர் உய[1]வா ரியனாய் வருவார்
      மெச்சுங் குருநாதா
[2]வடபா டையிலே யியல்[3]பா வினையே வளமார்
      நற்செந் தமிழாலே
அணிபா வலன்[4]வீ ரையர்கோன் [5]மகளாய் அணிகா
      சிச்செம் பதிபோயே
அவனார் சுவைசேர் உணவே அடுவாள் இடுவாள்
      கைச்செஞ் சிறுசேயே
[6]கணிபா வலனே தியவா றுடனே [7]கடுவாய்
      [8]பைக்கஞ் சுகியான
[9]கனபா யலொடே தொடர்வார் மருகா கனதோ
      கைப்பைம் [10]பரியூர்வாய்
பணிவார் விழையா வையுமே அருள்வாய் பரமா
      முத்தந் தருவாயே
[11]பகவா திருவே ரகம்வாழ் குமரா பனிவாய்
      முத்தத் தருவாயே.

[1]. ஆரியனாய் - குருவாய்; குதிரைச் சேவகனாய் எனினுமாம். [2]. வடபாடை - வடமொழி. [3]. பா - ஆநந்த லகரி, சௌந்தர்ய லகரி. [4]. வீரையர்கோன் - கவிராச பண்டிதர். [5]. மகளாய் - அன்ன பூரணியாய்; இவர் விரிவான வரலாறு, அமிர்தவசனி தெய்வீக இதழில் எமது விரிவான கட்டுரையாக வெளிவந்துளது; அதில் வரலாறு அறிக. [6]. கணி பாவலன் - மதிப்புள்ள திருமழிசையாழ்வார்; ஆழ்வார் சீடரான கணிகண்ணன் எனும் பாகவதருமாம். [7]. கடுவாய் - விஷவாய். [8]. பை கஞ்சுகி - ஆயிரம் தலையாதிசேடன். [9]. கனபாயல் - பெரிய படுக்கை. [10]. பரி - மயில். [11]. பகவா - ஆறுபண்புள அத்தா.
----------------------------------------
(பொ-ரை.) மாணிக்க வாசகர் உய்தியடைய, குதிரைவீரராய் வந்த சிவனார் (குதூகலித்துப்) பாராட்டும் குருநாதா!
வடமொழியில் அமைந்த (லகரிப்) பாடல்களை, வளம் நிறைந்த சிறந்த செந்தமிழால் (பாடிச்) சூட்டிய வீரைமா நகர்த் தலைவரான கவிராஜ பண்டிதர் திருமகளாகி, சிறந்த காசிப்பதி சென்று, அப்புலவர் உண்ணும் நிறைசுவை உணவை, சமைத்துப் பரிமாறிய அன்னபூரணி திருக்கரத்தில் (ஏற்கும்) செந்நிறமான இளமதலாய்!
மதிக்கத் தக்க பாவலரான திருமழிசையாழ்வார் கேட்டுக் கொண்டபடி, அவருடன், விஷவாயுடைய படமெடுக்கும் ஆயிரம் தலைப்பாம்பான ஆதிசேடனாம் பெரிய படுக்கையுடனே தொடர்ந்த (மாபெரும்) திருமால் மருகா!
பெரிய தோகையை யுடைய பச்சை மயிலைச் (சிறக்க ஏறிச்) செலுத்துபவனே / பணிவுடன் வழிபடுமவர் விரும்பும் அனைத்தையும் அருளும் பரமா ! முத்தம் தந்தருள்;
(திரு, ஐஸ்வர்யம், வீர்யம், புகழ், ஞானம், வைராக்யம் எனும்) ஆறு குணங்கள் அமைந்தவனே! திருவேரகத்தில் எழுந்தருளிய குமரா! குளிர்ந்த (உன்) திருவாய் முத்தம் கொடுத்தருள், (எ - று).
எனக்கு இளமை நேர அருளும் என்றான் அரசன். என்னால் முடியாது என்றார் கணிகண்ண பாகவதர். உமது குருநாதரான திருமழிசையாரிடம் இது குறித்து விண்ணப்பியும் என்றான், மீட்டும் அவ்வேந்தன். நர கவனம், நரகவனம்; மானுடம் பாடார் எங்கள் ஆழ்வார் என்றார் பாகவதர். எனக்கு உதவா உங்கட்கு, என் நாட்டில் இடம் இல்லை என்றான் அரசன்.
அதைப் பாகவதர், ஆழ்வாரிடம் அறிவித்தார். அப்படியா என்று அப்போதே புறப்பட்ட ஆழ்வார், தான் வழிபடு தெய்வமான பெருமாளிடம் சென்று,
"கணிகண்ணன் போகின்றான், காமருபூங் கச்சி
மணிவண்ணா! நீயிங்கி ராதே - துணிவுடைய
செந்நாப் புலவனியான் செல்கின்றேன்; நீயுமுன்றன்
பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள்''
என்று பாடினார்.
அது கேட்ட பெருமாள், பாம்புப் பாயலைச் சுருட்டிக் கக்கத்தில் வைத்து, புனித ஆழ்வாருடன் புறப்பட்டார்.
அதையறிந்து வருந்தினன் அரசன். வந்து வணங்கிப் பலபடி வேண்டினன்; அதன்பின் ஆழ்வார் திருவுளம் இரங்கி,
"கணிகண்ணன் போக்கொழிந்தான்; காமருபூங் கச்சி
மணிவண்ணா! நீயிங் கிருக்க - துணிவுடைய
செந்நாப் புலவனியான் செல வொழிந்தேன்; நீயுமுன்றன்
பைந்நாகப் பாய்படுத்துக் கொள்'' என்றார்.
அப்படியே என்று, அவர் குறித்த இடத்தில் பெருமாள் கோயில் கொண்டார் எனும் வரலாறு பிரசித்தம். (49)
--------------

50. செஞ்சொற் றிறமார் பலகலையிற் செலுநுண்
      புலமை [1]முதுக்குறைவும்
செவிச்செல் வமுநன் குடைப்பெரியோர் சிந்தைக்
      கினிக்கும் பழமறையும்
[2]விஞ்சு திருப்பாற் கடலில்விளை விண்ணோ
      ரமுதுங் கொல்லிமலை
விளைபூந் தேனு [3]மனக்கினியாள் [4]மிழற்று
      மிசையுங் கலந்துசுவை
கொஞ்சு தமிழும் மணம்வீசக் குறையாக்
      கருணை மலர்காமக்
கொடியா முமையாள் எடுத்தருத்தக் கொஞ்சிக்
      கொஞ்சிக் குடித்தசுவை
[5]மொஞ்சி மணக்கும் திருவாயான் முத்தந்
      தருக முத்தமே
மூவா முதலே சாமிமலை முருகா
      தருக முத்தமே.
-
[1]. முதுக்குறைவு - பேரறிவு. [2]. விஞ்சு - பெருகிய. [3]. மனக்கு இனியாள் - கலைமகள். [4]. மிழற்றும் - இசைக்கும். [5]. மொஞ்சி - தாய் முலைப்பால்.
---------------------------------
(பொ-ரை.) செம்மைச் சொற்களின் திறமை அமைந்த பல கலைகளில் செல்லும் நுட்பமான புலமைப் பேரறிவும்;
செவிச் செல்வமும் சிறக்கப் பெற்ற சான்றோர் உள்ளத்திற்கு இன்பம் தரும் அநாதி நித்தியமான வேதங்களும்;
பெருகிய திருப்பாற் கடலில் விளைந்த தேவாமுதமும், கொல்லி மலையில் விளைந்த தேனும், மனத்திற்கு இனிமை தரும் இன்பக் கலைமகள் இசைக்கும் (வீணை) இசையும், மாபெரும் சுவை கலந்து கொஞ்சுகின்ற தமிழும் மணம் பரப்ப;
குறையாது பொங்கும் கருணை மலர்ந்த காமவல்லியான உமாதேவி, (உவந்து வாரி) எடுத்து உண்பிக்க; கொஞ்சிக் கொஞ்சிப் பருகிய சுவையுடைய பால் மணம் கமழும் திரு வாயால், முத்தம் தருக; (ஒரே ஒரு) முத்தந்தான்!
இளமை முதலாளியே! சுவாமிமலை முருக! முத்தம் தந்தருள், (எ - று).
மறையும் அமுதும் தேனும் இசையும் கலந்து, கொஞ்சு தமிழும் மணம் வீச, தாய்ப்பால் மணம் கமழும் திருவாயால், முதலே! முருகா! முத்தந் தந்தருள் என்று முடிக்க.
"செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாம் தலை'
என்ற பொதுமறையை எண்ணி, " செவிச்செல்வமும் நன்குடைப் பெரியோர்'' என்றார்.
" செவ்விய மதுரம் சேர்ந்தநற் பொருளிற்
சீரிய கூரிய தீஞ்சொல் வவ்விய கவிஞர்''
எனக் கம்பர், பெரியோர் பெருமை பேசுவதறிக. சிந்தைக்கு. இனிக்கும் பழமறை; மனக்கு இனியாள் கலைமகள் எனும் பகுதியை எண்ணவே இதயம் நெகிழ்கிறதே! (50)
--------------

51. [1]புடவி சுற்றும் கடல்குடித்தும் [2]புயல் படுக்கும் [3]கிரியைவான்
      பொரலொழித்தும் புலனடக்கும் புனிதர் சுற்றம் பொலியவே
வடதிசைப்[4]பொன் கிரியிடைச்சங் கரனிருக்கும் படி[5]கடாம்
      வரைமிகுக்கும் பொதியவெற்பின் [6]குவடிருக்கும் புகழினான்
அடல[7]ரக்கன் றனையிசைப்பந் தயமடக்கும் திறலினன்
      [8]அரவணைக்கண் துயிலரிக்கன் றரனுருத்தந் திடுகையான்
[9]குடமுனிக்குந் தமிழுரைக்குங் குரவன் முத்தந் தருகவே
      குருமலைக்கண் குடியிருக்கும் குமரன் முத்தந் தருகவே.

[1]. புடவி - நிலவுலகை. [2]. புயல் படுக்கும் - மேகங்கள் தவழும். [3]. கிரியை - விந்த மலையை. [4]. பொன் கிரி - கயிலை மலை, [5]. கடாம் வரை - மதநீர் பெருக்கும் மலைகள் போன்ற யானைகள். [6]. குவடு - சிகரம். [7]. அரக்கன் - இராவணன். [8]. அரவணைக்கண் - சேஷ சயனத்தில். [9]. குடமுனி - அகத்தியர்.
------------------------------
(பொ-ரை.) உலகைச் சூழ்ந்திருக்கும் (பரிய) கடலைப் பருகியும்;
மேகங்கள் தவழும் விந்தமலை, வானை மோதி வளர் தலை ஒழித்தும்;
புலனை யடக்கும் புனிதர் கூட்டம் பொலிவு பெற, வடதிசையில் உள்ள பொன்னிறக் கயிலையில், வரத சிவம் இனிது எழுந்தருளியிருப்பதுபோல்,
மதநீர் பெருக்கும் மலைபோன்ற யானைகள் பெரிதிருக்கும் பொதிய மலையின் சிகரத்தில் வீற்றிருக்கும் புகழையுடையவரும்;
வலிமிக்க இராவணனை இசை(ப் போட்டிப்) பந்தயத்தில் அடக்கிய ஆற்றலையுடையவரும்;
அரவணையில் துயிலும் திருமாலுக்கு, அன்றொரு நாள் சிவனுருவம் தந்தவரும் ஆன குடமுனியெனும் அகத்தியர்க்கும், (அருமைத் தமிழை உபதேசித்த ஆசாரியா! முத்தம் தந்தருள்; சுவாமி மலையில் எழுந்தருளியிருக்கும் குமரா! முத்தம் தந்தருள், (எ - று).
புகழினான், திறலினான், தந்திடுகையான் ஆன குடமுனிக்கும் தமிழுரைத்த குரவன் எனக் கூட்டுக. அகடித கடனா சாமர்த்தியர் அகத்தியர் என்பது குறிப்பு, கயிலையில் சங்கரர்; பொதிகையில் ஐந்தாம் சங்கரராக அகத்தியர் எனும் அருமை எண்ணத் தக்கது. மாலுக்குச் சிவனுருத் தந்தது, குற்றாலப் பதியில் என்று புராணம் கூறும்.
இசையில் இராவணனை வென்று, பழந்தமிழ் நாட்டைப் பாதிப்பது கூடாது என்று அவனிடம் வாக்குப் பெற்ற வளத்தால், அரக்கர்க்குத் தப்பி, பேறு பெற்று தமிழ் நாடு பிழைத்தது.
திருமாலை இலிங்கமாக்கிய திறம், பாவனாத்துவிதப் பயன். கடல் குடித்ததும், விந்தத்தை அடக்கியதும் தவசக்தியால் ஆன தகுதி. வட நாட்டையும் தமிழ் நாட்டையும் சமம் செய்த செய்தி, பரமன் திருவாக்குப்படி பலித்த பயன். இப்படி அருமைத் திருப்பணி செய்த அகத்தியர்க்கு, அருந்தமிழ் அருளினன் முருகன் என்பது, சால்புடையார்க்குக் காட்டும் ஒரு சமிக்ஞை. (51)
------------

52. மைக்கடல் மிக்க வெறுப்பொ டெடுத்தெறி யப்படு முத்[1]துவவேம்
      மத்த கயத்தை வதைத்துயர் [2]கொப்பி லகப்படு முத்துவவேம்
[3]இக்கை ஒடித்தது [4]கட்கு விருத்திய முந்துகளைக் [5]கவரேம்
      இப்பி வயிற்றை அறுத்தத னுட்படு முத்தினை யிச்சை செயேம்
[6]கைக்கிரி யற்பின் வளர்த்த [7]மடப்பிடி துய்த்த சுவைக்[8]கழியே
      கட்டழ குற்ற குறக்கிளி நச்சிய கற்பக நற்கனியே
முக்கணர் மெச்சிய சொற்சொல் மலர்ப்பொலி முத்த மளித்தருளே
      முத்தர்கள் நச்சிய சற்குரு வெற்பவொர் முத்த மளித்தருளே.

[1]. உவவேம் - விரும்பேம். [2]. கொப்பு - யானைத் தந்தம். [3]. இக்கு - கரும்பு. [4]. கட்குள் - கணுவிற்குள். [5]. கவரேம் - வலிந்து கைப்படுத்த மாட்டேம். [6]. கைக்கிரி - ஐராவதம். [7]. மடப்பிடி - தேவயானை. [8]. கழி - கரும்பு.
-----------------------------
(பொ - ரை.) நீலக்கடல், மிகுந்த வெறுப்புடன் (அலைகளாகிய கைகளால் எடுத்து வீச, (விதிர்த்துக் கரையில்) விழும் முத்துக்களை விரும்ப மாட்டோம்;
மதநிறை யானையை(ச் சித்திர) வதை செய்து, உயர்ந்த தந்தத்தில் உருவான முத்துக்களை உகக்க மாட்டோம்;
கரும்பை முறித்து, அக்கரும்பு (தன்) கணுவிற்குள் கொண்டிருந்த முத்துக்களைக் கவர மாட்டோம்; இப்பியின் வயிற்றைக் கிழித்து, அதனுள் இருத்திய முத்துக்களை இச்சிக்க மாட்டோம்;
துதிக்கையும், மலை போன்ற தோற்றமும் கொண்ட ஐராவத யானை, (வாழும்) அன்பொடு வளர்த்த தேவயானையார், கனிவொடு அனுபவித்த சுவையுடைய கரும்பே!
கட்டழகுடைய குறவர் குலக்கிளியான வள்ளியார் விரும்பிய பழுத்த கற்பகப் பழமே!
முக்கண் சிவனார் மெச்சிய ஒரு மொழி உரைத்த திருவாய் மலரில், பொலிந்த (புனித) முத்தம் அருள்;
சீவன் முத்தர்கள் விரும்பிய சுவாமி மலையானே! ஒரு முத்தம் கொடுத்தருள், (எ - று).
கடல்படு முத்து, தந்தியின் முத்து, கரும்பின் கணுமுத்து, இப்பியிற் படு முத்துக்கள் அனைத்தும் முத்தாமோ?
இடப்புறத் தேவி சுவைத்த கரும்பே! வலப்புறத் தேவி இச்சித்த பழமே! அவைகள் உன் முத்தத்திற்கு இணையாமா? உன் முத்தமே வேண்டுவம்; உதவியருள் என்றபடி.
யானை துய்த்த கரும்பு; கிளி விரும்பிய கனி எனும் பகுதி, என்றும் மறத்தற்கு இயல்வதில்லை. (52)
-------------

53. திருநான் மறையா கமமா தியநூல் செப்பும் பொருளோனே
      திசைமா முகனா தியதே வர்கள்சே விக்கும் கழலோனே
உருகா நினைவார் வினைவே ரறவே வெட்டுந் தொழிலோனே
      ஒருகால் முருகா எனுமா றுவலார் பக்கம் பிரியானே
பெருமா னுனையே தொழுசீரடியார் [1]பெட்பின் படியீவாய்
      பெரியோர் மனமா சறுமா றொரு[2]கீர் செப்புந் திருவாயால்
முருகா திருமால் மருகா கனிவாய் முத்தந் தாராயோ
      முருகார் பொழில்சூழ் திருவே ரகனே முத்தந் தாராயே.

1. பெட்பு - விருப்பு. [2]. கீர் - மொழி.
---------------------------------------------
(பொ-ரை.) சிறந்த நான்கு வேதங்களும், ஆகமங்களும், (மற்ற) அருள்நூற்களும் உரைக்கும் பொருளாயுள்ளவனே!
நான்முகன் முதலிய வானோர், (தினந்தோறும்) சேவிக்கும் திருவடிகளை யுடையவனே!
(உள்ளம்) உருகி உணர்பவருடைய வினைகளை, வேரற வெட்டும் (உயர்ந்த) தொழிலையுடையவனே!
ஒரு தரம் முருகா எனும் வழிமுறை வல்லவர் தம் இடத்திற் பிரியாமல் இருப்பவனே!
பெருமையிற் சிறந்த உன்னையே வணங்குகிற வியனார் அடியார் விருப்பின்படியே, (தகவொடு எதையும்) தருபவனே;
அறிவால் உயர்ந்தோர் உள்ளக் களங்கம் அறும்படி, ஒரு மொழி உரைக்கும் திருவாயால், முருகா! திருமால் மருகா! (கொவ்வைக்) கனிவாய் முத்தம் தாராயோ?
அழகு நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருவேரகத் தெய்வமே! (ஒரு) முத்தம் தந்தருளாயே, (எ - று).
முழுதுமான நூற்கள் ஓதும் முதலாளியே என்பார், ‘பொருளோனே' என்றார்.
வினைக் காட்டை வேரறுக்கும் தொழிலாளியே என்பார், 'தொழிலோனே' என்றார்.
பசு ஞானிகளாகிய பண்ணவர், பரிபூரண ஞானம் கருதிப் பாதசேவை செய்கின்றார் ஆதலின், ‘சேவிக்கும் கழலோனே' என்றார்.
நாசியில் மகரம்; கண்டத்தில் ரகரம்; இதயத்தில் ககரம் ஒலிக்குமேல், அவ்வொலி முருகா என்று பெருகி வரும்; அதனை உணர்ந்து ஓதுவோர் வழிமுறையறிந்து வாழ்பவராதலின், அவர்களை 'வலார்' என்றார்.
பொருளோனே! கழலோனே! தொழிலோனே! பிரியானே! ஈபவனே! தேரும் எதனிலும் முதன்மை பெறும் உன் திருவாயால், ஒரு முத்தம் தாராயோ எனும் அருமையை, ஊன்றி உணர உவகை பெருகும். (53)
-------------

54. [1]ஆலநிழல் மேவுமர னார்விழிக ளாறின்வரு
      மாதிநடு வற்றபொருளே
[2]ஆரணமு மாகமமு மோதுமறி வோரறிவின்
      ஆகுமள வற்ற [3]தெருளே.
நீலமுகில் [4]மானுநிற மாலுமன தாரவிழை
      நீடுபுக ழுற்றமருகா
நீடு[5]கழை வேளுமிக நாணஎழில் மீறுவடி
      வாமுதுமை யற்ற[6]குழகா
[7]கோலமுதி ராதுலகெ லாமுதவு தாய்கிரி[8]
      குமாரியருள் பெற்றபுதல்வா
[9]கோமளக லாபமயில் போல[10]விதண் மேவுகுற
      மாதுதழு வுற்ற[11]புயனே
[12]மூலனிக ரானமுனி வோர்பரவு பாதமுதல்
      வாபவள முத்தமருளே
மூவுலகு ளார்கள்பணி சாமிமலை வாழ்முருக
      வேள்[13]முறுவன் முத்தமருளே.

[1]. ஆல நிழல் - கல்லால மரத்தின் நிழலில்; [2]. ஆரணமும் - வேதங்களும்; [3]. தெருளே - தெளிவே. [4]. மானும் - போன்றிருக்கும். [5]. கழை - கரும்பு. [6]. குழகா - இளையோனே. [7]. கோலம் - திருமேனி. [8]. கிரிகுமாரி - பர்வத ராஜ குமாரி. [9]. கோமள கலாபம் - அழகிய தோகை. [10]. இதண் - பரண். [11]. புயனே - தோளனே. [12]. மூலன் - திருமூலர். [13]. முறுவல் - புன்னகை.
(பொ-ரை.) கல்லால் நிழலில் விரும்பி எழுந்தருளிய தட்சிணாமூர்த்தியின், ஆறு நெற்றிக்கண்களிலிருந்து அவதரித்த, முதலும் இடையும் (முடிவும்) இல்லாத மெய்ப் பொருளே!
(வேத) சாகைகளையும், ஆகமங்களையும் ஓதும் அறிவுடையோர் அறிவில், அமையும் அளவுபடாத தெளிந்த சாரமான தெய்வமே!
நீலமேகம் போன்ற (திருமேனி) நிறமுடைய திருமாலும், நெஞ்சாரக் காதலிக்கும் நெடும் புகழ் கொண்ட மருகா!
பெரிய கரும்புவில் காமனும் பெரிது நாண, (வாய்த்த) பேரழகின் வடிவனே! வயோதிகம் காணாத (மேதகு) இளந்திரு மேனியனே!
முதுமை காணாத் திருமேனியளாய், உலகெலாம் பெற்ற மலைமகளின் (பயனான) அருள் பெற்ற பாலா!
அழகிய தோகையை யுடைய மயில்போல, பரணில் இருந்த குறமகளான வள்ளியம்மை தழுவும் (உயர்ந்த தோள்களை யுடையவனே! திருமூலர்க்கு ஒப்பான (மோன) முனிவர்கள் தினமும் வழிபடு திருவடிகளையுடைய முதல்வனே! பவளவாய் முத்தம் அருள்;
மூவுலகில் உள்ளவர் (யாவரும்) பணியும் சுவாமிமலையில் வாழ்கிற முருகவேளே! (முதன்மைப்) புன்னகை மலரும் திருவாயின் முத்தம் தந்தருள், (எ - று).
ஆதி நடு எனவே, அந்தமும் கடந்தவர் எனல் உரையில் கொள்ளப் பெற்றது.
"அறிவார் அறிவில் பிரிவின்றி நின்ற பிரான்” ஆதலின்,
"அறிவோர் அறிவாகு தெருளே"
எனப் பெற்றது.
மாமனார் மனதார விரும்பும் மருகன் என்பது,
"அன்புடைய மாமனும் மாமியும் நீ"
எனும் திருவாசகத்தை நினைவு பெறச் செய்கிறது.
காமனைக் 'கழை வேள்' எனவும், கந்தனை ‘முருக வேள்' எனவும் வேறுபடுத்திய விதமோர்க.
"சராசரங்கள் ஈன்றும் தாழாக் கொங்கையற் கண் மலர்க் கூந்தல் குமரி" ஆதலின், உமா தேவியைத் 'தாய்....... குமரி' என்றார். குமரியீன்ற குமரனை, 'குமாரி அருள் பெற்ற புதல்வா' என்று குறிப்பிட்டார்.
'குமரன், கிரிராச குமாரி மகன்' என்பது கந்தர் அநுபூதி.
பாத முதல்வா என்பதில், பாதனே, முதல்வனே எனினுமாம். (54)
      முத்தப் பருவம் நிறைவெய்தியது
----------------

[6]. வருகைப் பருவம்

தளர் நடையிடும் குழந்தையை, வா வா என்று பரிவொடு அழைக்கும் பருவம் இது, பன்னிரண்டாம் திங்களில் நிகழ்வது. ஆண்டு வரையின் யீண்டு வருகென்றலும்' என்பது பிங்கலந்தை. இது வாரானைப் பருவம் என்றும் வழங்கும்.

55. [1]வலாரிமணி போலவளர் [2]குஞ்சியொளி [3]விஞ்சநிறை
      மதிமுக [4]நிலாவெறிப்ப
மலர்பதும விழியு[5]ததி எழுகருணை யலைவீச
      மணி[6]முறுவல் வாயரும்பப்
பலாயிரர்கள் சூரியர்த மொளிதிரண் டனையவொளி
      பயில்மேனி வெயில்விளங்கப்
[7]பராவுசுரர் நரர்முனிவர் பாவமலை தவிடுபொடி
      படவடரும் வேல்கை[8]மிளிரக்
கலாபநிரை நீல்விழி குலாவு[9]சிகி [10]செந்துகிர்க்
      கான்மயிற் புரவியேறிக்
கனவுதனி லேனுமொரு காலின்வரு மோவெனக்
      கருதியக நெகிழுமெளியேம்
[11]சுலாவுதுயர் போக விரை வாக மறை யோதுசிவ
      சுப்ரமண் யாவருகவே
சுராதிபதி மாலயனு மாலொடு [12]சலாமிடு
      சுவாமிமலை வேள்வருகவே

[1]. வலாரி மணி - இந்திர நீலமணி. [2]. குஞ்சி - குடுமி. [3]. விஞ்ச - மிகுதிப்பட. [4]. நிலா - சந்திரிகை. [5]. உத்தி - கடல். [6]. முறுவல் - புன்னகை. [7]. பராவு சுரர் - வழி படும் வானோர். [8]. மிளிர - பிரகாசிக்க. [9]. சிகி - மயில். [10]. செந்துகிர்க் கால் - சிவந்த பவள நிறமான கால்கள்.
[11]. சுலாவு - சுற்றிச் சுழற்றும். [12]. சலாம் - வணக்கம்; திசைச்சொல்
------------------------------------
(பொ-ரை.) இந்திர நீலமணி போல் வளர்ந்த குடுமி, கருமையொளி மிக்குக் கவின; நிறைமதி போல் திருமுகம் நிலவு வீச; கமல மலர் போன்ற கண்களில், கடல் போல் எழுந்த கருணை அலை வீச; திருவாயில் அழகிய புன்னகை அரும்ப; பல ஆயிரம் பரிதிகளின் ஒளி திரண்டாற் போல், பயின்ற ஒளித் திருமேனி பகல் செய்ய;
வழிபடுகின்ற வானவர், மனிதர்கள், முனிவர்கள் (முதலினோரது) பாவமாகிய மலை தவிடு பொடியாக மோதும் (பயனான) ஞானவேல், திருக்கரத்தில் பளபளக்க;
வரிசையான தோகையும், நீல விழியும், விளங்குகிற உச்சிக் கொண்டையும், சிவந்த பவளக் கால்களும் கொண்ட (அழகிய) மயிலாகிய புரவிமேல் அமர்ந்து; கனவிலேனும் ஒரு சமயம் வந்து காட்சியாக நேருமோ என்று கருதி, இதயம் நெகிழும் எளியோங்களது சுற்றி மொய்க்கும் துயர் தொலைய, வேதங்கள் துதிக்கும் சிவ சுப்ரமண்யா! விரைவாக வருக;
தேவர் தலைவனான இந்திரனும், திருமாலும், பிரமனும், பேரன்புடன் வணங்கும் சுவாமிமலைச் செவ்வேளே! வருக, (எ - று).
'எறிப்ப, அரும்ப, விளங்க, மிளிர, புரவி ஏறி வருமோ என நெகிழும் எளியேம் துயர் போக வருகவே' என முடிக்க.
"இந்திர நீலம் போல் இருண்ட குஞ்சியும்
சுந்தர வதனமும் தோளு மேயல
முந்தியென் உயிரை அம் முறுவல் உண்டதே"
என்ற கம்பராமாயணக் கருத்தை முதலடியிற் காண்க.
"உததிமிசை கடவுமர கதவருண குலதுரக
உபலளித கனகரத சதகோடி சூரியர்கள்
உதயமென யுகமுடிவி னிருளகல ஒரு சோதி வீசுவது''
எனவரும் சீர்பாத வகுப்புச் செய்தியையும், வேல் வகுப்புச் செய்தியையும் இப்பாட்டின் இடையில் நினைவூட்டினார்.
"செனித்த சீவருள் மனத்தின் மாவொளி
மினுக்கும் வேலவா''
எனும் பாம்பனடிகள் பாடலும், இம்முதற் பாட்டில் எண்ண வரும். புனித வேகம் கருதி, மயிலைப் புரவி யென்றார். "ஆடும் பரி" என்பது கந்தர் அநுபூதி.
கனவுதனி லேனும் ஒரு காலின் வருமோ எனக் கருதியக நெகிழும் எளியேன்' எனும் அடியை ஓதும்போது, கல் மனமும் கரைகிறது; கண்ணீர் பெருகி வருகிறது. (55)
-------------------

56. [1]முராரிபிர மாதமுள டாதவலி பேசியடி
      முடிதேட லுற்று முயல்வாய்
முனாள்[2]புவி யிடாவிண்மிசை போய்முடிகி லாதயர்
      வுறாமுழுமு தால்சிவசிவா
பராபர எனஉருகி யேபரவு காலையவர்
      பணிவுக் கிரங்கி யருள்வார்
பராவுகுரு நாதஎளி யோமுனது [3]படியின்மெய்ப்
      படிவமெப் படியறிகுவோம்
சராசர மெலாமுருவி யேகியசொ ரூபநிலை
      தன்னையெவ் வாறுணர்குவோம்
தயாமிகு குமாரனெனு மோர்பெயரி னலுரிய
      [4]தாயினிலை மேயழைத்தோம்
சுராதிபதி மாலயனு மாலொடு சலாமிடு
      சுவாமிமலை வேள்வருகவே.

[1]. முராரி - திருமால். [2]. புவி யிடா - பூமியைப் யிளந்து. [3]. படி இல் மெய்ப் படிவம் - ஒப்பிலாத் திருவுருவம். [4]. தாயினிலை மேய் - செவிலியின் தன்மையை ஏறிட்டுக் கொண்டு.
------------------------------------
(பொ-ரை.) திருமாலும் நான்முகனும் தம்முள் (ஒருவர்க்கொருவர்) தகுதியற்ற வன்மையைத் தருக்கியுரைத்து, திருவடியையும் திருமுடியையும் தேடத் தொடங்கி, முன்னொரு காலத்தில் பூமியை முயன்று பிளந்து, (பரவிய) விண்ணில் பறந்து சென்று, (பெருகிய தம்) எண்ணம் நிறைவேறப் பெறாமல் அயர்ந்து,
முழு முதலே! சிவ சிவா! பராபரா என்று (வீரிட்டு) விளித்து, (உள்ளம்) உருகித் துதித்த பொழுது, அவர்களுடைய (அப்போதைய) விநயத்திற்கு (த் திருவுளம்) இரங்கி அருளிய சிவனார் வழிபட்ட குருநாதா!
(மிக மிக எளியோங்கள், உனது ஒப்பிலாத மெய்ப்பொருளாம் திருமேனியை (த் தகவு பெற) எப்படித் தரிசிப்போம்?
உலகம் முழுதும் ஊடுருவிச் சென்ற சொரூப நிலையை, (ஊன்றி) எவ்வழியில் உணர்வோம்?
[9]-ஆம் வரி - தாயினிலை மேயழைத்தோம் என்பதன்பின்,
'துராலுடல வாவினை யறுத்தவ, பிடித்தசிவ
சுப்ரமண்யா வருகவே' என்பதைச் சேர்க்கவும்.
தயை மிக்க குமரன் எனும் ஒப்பற்ற திருப்பெயரால், உரிமை பூண்ட தாயின் தன்மையைப் பாவனையால் தழுவி, கூவி உன்னைக் கூப்பிடுகிறோம்;
இமையவர் தலைவனான இந்திரனும், திருமாலும், பிரமனும், பேரன்புடன் சலாம் இடும் சுவாமி மலைச் செவ்வேளே! (வாழ்விக்கும் சேவைதர) வந்தருள், (எ - று).
முரன் என்பவன் ஒரு அசுரன்; அவனை அழித்தமை கருதி, திருமால் முராரி எனப் பெயர் பெறுவர். பிரமனும் திருமாலும் தம்தம் தகுதியறியாமல் தாமே பிரமமெனத் தருக்கின ராதலின், ‘தம்முள் அடாத வலி பேசி' என்றார். படைப்பானும் காப்பானும் பட்டபாடு அதுவெனில், எம்மைப் போல்வார்கள் கதியென்? உனது சொரூப தடத்தம் உணர வல்லேமோ?
குமர சடக்கரத்தால் கூவியழைத்தோம். வா வா முருகா! தயா சாகரமே! வா என்று, அன்பின் பெருக்கம் தோன்ற அவாவி அழைத்தபடி.
தாயர் ஐவகையர்; அவர்களில் ஒருத்தி செவிலித்தாய். இனிய அவளாகத் தன்னை யெண்ணுதல் பாவனை. பாவனாத்துவிதத்திற்கு எப்போதும் பயனுண்டு. அதனாற்றான், ‘தாயினிலை மேயழைத்தோம்'; (நீ) வருக என்றபடி. (5[6])
------------------

57. நானார்என் னுள்ளமிது தானார் முளைத்தசில
      ஞானங்க ளாரென்னையும்
நானென் றுணர்த்தியவர் யார்உம்பர் தம்பிரான்
      ஞாலத்தின் மேலருளினல்
தானாக வந்துதயை செய்திலா னெனிலென்று
      தம்மையுணர் பெரியர்சாற்றும்
தவறில் மொழி கேட்டுமழை விழைபயிரை யொப்பவுன்
      தரிசனம் பெறவிழைந்தேம்
மானார் கரத்தபெரு மானுர் தவத்தின்[1]மரு
      மானாகி வருமெமானே
[2]மலையா சலத்திலமர் குறுமா முனிக்குமரு
      மறையோது வித்தகுருவே
[3]சூனாற லற்றடியர் [4]வானாள வைக்குமுயர்
      சுப்ரமண் யாவருகவே
சுராதிபதி மாலயனு மாலொடு சலாமிடு
      சுவாமிமலை [5]வேள்வருகவே.

[1]. மருமான் - புதல்வன். [2]. மலையாசலம் - பொதிகை மலை. [3]. சூல் நாறல் அற்று - கருப்ப வாசனை தோன்றுதல் இல்லாதபடி. [4]. வான் - வீடு பேறு. [5]. வேள் - (முத்தி மங்கையில்) மோகம் மூட்டுமவன்.
-------------------------------------
(பொ - ரை.) தேவாதி தேவன், உலகில் (தன்) இயற்கைப் பேரருளால் தானாக வந்து தயை காட்டிலனெனில்,
நான் எத்தகையவனாக இருப்பேனோ? என் உள்ளமான இது, எத்தகையதாக இருக்குமோ? (இடையிடை) உதித்த என் அறிவு, என்னவாயிருக்குமோ? (அறிவும் அறியாமையும் கலந்தவன் நான் என்று) என்னையும் உணர்த்துமவர் யாவரோ? என்று, தம்மை உணர்ந்த மாபெரும் ஞான மாணிக்கவாசகர் அருளிய தவறிலாத மணி மொழியான திருவாசகத்தைச் சிரவணித்து, மழையை விரும்பும் பயிர்போல, உன் பேறான தரிசனத்தைப் பெற விரும்பினோம்;
மான் தங்கிய திருக்கரத்துச் சிவபிரான் தவப்புதல்வனாக வந்த எம்மானே!
பொதிகை மலையில் அமர்ந்த அகத்தியர்க்கு, அருமை மறையை உபதேசித்த ஆசாரியனே!
கருவாசனையற்ற அடியவரை, முத்தியுலகை ஆளச் செய்யும் முதன்மைச் சுப்ரமண்யனே! வருக;
தேவேந்திரனும், திருமாலும், பிரமனும், அன்பொடு சலாம் இடும் (சிறந்த சுவாமிமலைச் செவ்வேளே! வந்தருள், (எ - று).
      "நானார் என் உள்ளமார் ஞானங்களார்
      என்னை யாரறிவார்;
      வானோர் பிரான் என்னை யாண்டிலனேல்"
எனும் திருவாசகத்தைப் பாடியவர் ஸ்ரீமாணிக்கவாசகர்; 'பெரியர் சாற்றும் தவறில் மொழி' என்பதில் அதைப் பெறவைத்தார்.
நானார், தானார், ஞானங்களார் என்பதில் உள்ள ஆர் - வழுவமைதி. மறை - மறை பொருளான மந்திரோபதேசம்.
வான் நோக்கும் பயிர்போல், உன் அருள் நோக்கை அவாவினேம் எனும் பகுதி, நீடித்த இதய தாபத்தை நினைவூட்டுகின்றது.
'மானார் கரத்த பெருமானார் தவத்தின் மருமானாகி வரும் எமானே' எனும் பிராசம், ஓதுவார் உள்ளத்தை உருக்கிவிடும்.
எம்மானே, குருவே, சுப்ரமண்யா, வேளே வருகவே என முடிக்க. (5[7])
----------------

58. [1]நறாவிரி குராற்று விளாவெட்சி [2]யுருள்மரா
      நாடிமுடி மேலணியவா
நறியசிந் தூர[3]நுத லணியவா மைகுவளை
      நயனமிட வாசெவியிலே
சுறாவின்வடி வார்குழைகள் சொருகவா தோளின்மேற்
      சுடர்முத்து மாலையிடவா
தூயகே யூரந்தொ டுக்கவா கைவிரற்
      றுளிரின்மோ திரமணியவா
[4]மறாமலரை நாணணிய வாதூய மடியுடீஇ
      மணியரைக் கச்சணியவா
மறையினடி நடுமுடியி லிலகுபத மலர்கட்கு
      மணிநூ புரங்களிடவா
[5]துறாதுவினை மாதர்கள் தொடாதுபுனை வேனருகு
      சுப்ரமண் யாவருகவே
சுராதிபதி மாலயனு மாலொடு சலாமிடு
      சுவாமிமலை வேள்வருகவே.

[1]. நறா - தேன். [2]. உருள் மரா - உருளை போலும் மரா மலர்: இது கடம்பெனவும் பெயர் பெறும்; "உருள் பூந் தண்தார் புரளும் மார்பினன்" என்பது திருமுருகாற்றுப்படை. [3]. நுதல் - நெற்றி. [4]. மறாமல் - மறுக்காமல். [5]. துறாது - நெருக்காமல்.
--------------------------
(பொ-ரை.) தேன் பெருகிய குராமலரும், மணம் கமழும் விளா மலரும், வெட்சி மலரும், உருண்டை யுருவான கடப்ப மலரும் விரும்பி, (அருமைத்) திருமேனியில் அணிய வா! வாசனைத் திலகத்தை, நெற்றியில் (பொட்டாக) வைக்க வா! குவளை போலும் கண்ணில் மை எழுத வா;
செவிகளில், சுறாமீன் உருவாய்த் தொங்கும் மகர குழைகளை அணிய வா ; திருத்தோள் மேல், ஒளியுள முத்து மாலை அணிய வா; தூயதான கேயூரம் தோளில் தொடுக்க வா!
துளிர் போன்ற (அழகிய) திருக்கை விரல்களில், (அழகிய) மோதிரம் அணிய வா; மறுக்காமல், அரைஞாண் அணிய வா;
தூய மடியுடுத்து, கச்சையை அரையில் கட்ட வா; வேதத்தின் அடி நடு முடியில் விளங்குகின்ற திருவடிக் கமலங்கட்கு, இரத்தினங்களை யுள்ளிட்ட நூபுரங்கள் அணிந்து கொள்ள வா;
நெருக்காமலும், பணிப் பெண்கள் தொடாமலும், (நானே) கோலம் செய்கிறேன்; சுப்ரமண்யா! அருகே வா;
இந்திரனும், திருமாலும், அயனும், அன்பொடு சலாம் இடும் (சிறந்த) சுவாமிமலைச் செவ்வேளே! வருக, (எ - று).
முடி, நுதல், கண், செவி, தோள், மார்பு, விரல், அரை, திருவடியென கேசாதிபாத கோலம் செய்வேன்; விரைந்து வா என்று விண்ணப்பித்தபடி.
குரு மூர்த்தமான போது குராவும் குவளையும்; ஆன்மப் பசுக்களை அகப்படுத்தும் போது வெட்சி; போக வடிவன் ஆனபோது உருள்மரா மலர்களைச் சுப்ரமண்யம் சூடும் என்பது சுருதி முறை.
தாயாகத் தன்னைப் பாவித்த நிலையில், அன்பொடு விளித்த அழைப்பு இது. (58)
-------------

59. [1]என்னவா வாலுனை எடுக்க[2]வா வுறுபோதில்
      எட்டாது விலகுவாயேல்
என்னைவா விப்பிடிப் பதுபோல அருகிலே
      [3]ஏனவாய் வருதியையா
[4]உன்னவா விக்குள்வரு வாயென்ன [5]உன்னுவார்க்
      குன்னுதோ றோடிஅகல்வாய்
உன்னா திகழ்ந்தபேர் முன்னின்று வலியவாழ்
      வுறுவிக்கு மியல்புடையவா
[6]முன்னவா யாதுகோ ழியையோது வாயினால்
      முட்டையினை யோதேனெனும்
முதுதமிழ்ப் புலவன்வா யாற்பாடல் பெறுசெய்தி
      மொழிவதா லுந்தெரிந்தேன்
[7]சொன்னவா செய்தபெரு மான்மருக னானவா
      சுப்ரமண் யாவருகவே
சுராதிபதி மாலயனு மாலொடு சலாமிடு
      சுவாமிமலை வேள்வருகவே.

[1]. என் அவாவால் - என் பேராசையால். [2]. வாவுறு - தாவும். [3]. ஏன் அவாய் வருதி - ஏன் விரும்பி நீயே வருகிறாய். [4]. உன்ன ஆவிக்குள் வருவாய் - நினைதொறும் உயிர்க்குள் விளங்குகிறாய். [5]. உன்னுவார்க்கு - உணர்பவர்க்கு; ''உணர்ந்தார்க்கு உணர்வரியோன்' என்பது, இங்கு உணர்த்தப் பெற்றது. [6]. முன்ன ஆயாது - பதிந்து நினைந்து பாராமல். [7]. சொன்னவா செய்த பெருமான் - (திருமழிசையாழ்வார்) சொன்ன வண்ணம் செய்த (காஞ்சி புரப்) பெருமாள்.
----------------------------------------
(பொ-ரை.) என் வேட்கையால், உன்னை (வாரி) எடுக்கத் தாவி வரும்போது, (வீணே) எட்டாது விலகிச் செல்வையேல், என்னைத் தாவிப் பிடிப்பது போல, (மற்றொரு சமயம்,) ஐயனே! ஏன் விரும்பி வருகிறாய்!
எண்ணு தோறும் உயிருள் வருவாய் என்று சுட்டி உணர்பவர்க்கு, (அவர்கள்) உணரும் போதெல்லாம் ஓடி மறைகிறாய்;
எண்ணாமல் இகழ்ந்தவர் எதிர் நின்று, (அவர்களை ) வற்புறுத்தி வாழும்படி வழி செய்யும் இயல்பையுடையவனே !
ஆய்ந்து சிந்தனை செய்யாமல், கோழியைப் பாடும் வாயால் முட்டையைப் பாடமாட்டேன் எனும் பழந்தமிழ்ப் பாவலர் (பொய்யா மொழியார்) வாயாலேயே (வலிந்து) பாடல் பெற்ற செய்தியை , (யாவரும்) கூறுவதாலும் (தெளிவாகத்) தெரிந்து கொண்டேன்; (காஞ்சியில் கோயில் கொண்ட) சொன்ன வண்ணம் செய்த பெருமாள் மருகனானவனே ! சுப்ரமண்யா வருக; இந்திரனும் மாலும் அயனும் அன்பொடு சலாம் போடும் (சிறந்த) சுவாமி மலைவேளே! வருக, (எ - று).
தாய் பிடிக்கத் தாவுபோது, சேய் ஓடும்; விட்ட போது, விரும்பி வந்து பற்றும். அதே செய்தி ஆண்டவன் செய்தி என்பதை, பரிவொடு காட்டும் பாடல் இது.
எண்ணுவார்க்குச் சேய்மையன்; இகழ்ந்தார்க்கு அணுக்கன் நீ. நன்றாயிருக்கிறது நாடகம்.
பாடுவார் பலர் இருக்க, பாட மறுத்த பாவலரை, நான் முருகன்; என் மேல் பாடு என்றாய். கோழியைப் பாடிய வாயால், குஞ்சைப் பாட மாட்டேன் என்று அவர் கூறினார். வேடுவனாகி, மாபெரும் காட்டு வழியில், அவரை வழி மறித்தாய். அருமை வேல் காட்டி அவரை அச்சுறுத்தி, பாடு என் மேல் என்று படபடத்தாய்.
பேதலித்த பாவலர் உன் பேர் கேட்க, என் பேர் முட்டையென்று இறுமாந்து கூறினை.
'பொன் போலும் கள்ளிப் பொறிபரக்கும் கானலிலே
என்பேதை செல்லற்கு இயைந்தனளே - மின் போலும்
மானவேல் முட்டைக்கு மாறாய தெவ்வர்போம்
கானே வேல் முள்தைக்கும் காடு'
என்று பாடினார் கவிஞர்.
ஓய்! கள்ளிப் பொறி பரக்கும் கானலில், கான வேல் முள் எப்படி ஐயா காலில் தைத்தது? அப்பாலைவனத்தில், அதுவும் சாம்பராகிப் போகாதோ? நான் பாடுகிறேன் கேளும்!
'விழுந்த துளி அந்தாத்தே வேமென்றும், வீழின்
எழுந்து சுடர்சுடுமென் றேங்கிச் - செழுங்கொண்டல்
பொய்யாத கானகத்துப் பெய்வளையும் சென்றளே
பொய்யா மொழிப்புலவர் போல்'
என்று பாடிய உன் ஆடலே ஆடல். இப்படியே அருங்கவிவாணர் பலரை, வலிந்து ஆண்டாய் என்று, வாய் மலர்கின்றார் பலர்.
அன்பர் திருமழிசை ஆழ்வார் சொன்னபடி, அரவணையைச் சுருட்டி அக்குளில் வைத்தார். மறுபடியும் அந்த ஆழ்வார் அறிவித்தபடி, தக்க ஒரு இடத்தில் பாய் விரித்துப் படுத்தார் அந்தப் பரந்தாமர். அதனால் காஞ்சிப்பதியில் இருக்கும் அவரை, சொன்ன வண்ணம் செய்த பெருமாள் என்று சொல்கின்றார் அறிஞர்கள். உன் மாமனைப்போல் நீயும், சொன்ன வண்ணம் செய்! அதுதான் அழகு. வா! முருகா வா! என்று விநயம் காட்டி வேண்டியபடி. (59)
------------

60. அன்னவா கனனவ முக[1]நாலு முகமா
      அறைந்தவா அமரர் துன்பம்
அகல[1]வா வியினில் மகவானவா [3]உடுமகளிர்
      அறுவர்முலை யமுதுண்டவா
மின்னவா வியசடையர் குருவான வா[4]வசுரர்
      வேரைத் தடிந்தவா வல்
வேடர் மகள் மால் கொண்ட லைந்தவா சொல்லுவார்
      மீதிலருள் குறையாதவா
முன்னவா யாவைக்கு முடிவான வாசித்தி
      முத்திக்கு முதலானவா
முருகவா வாவென்று மொழிகுழற வோதுவார்
      முன்னர்வா ராமைதகவா
[5]சொன்னவா றானநீர்ப் பொன்னிபாய் வளநாட
      சுப்ரமண் யாவருகவே
சுராதிபதி மாலயனு மாலொடு சலாமிடு
      சுவாமிமலை வேள்வருகவே.

[1]. நாலு முகமா - தொங்கு முகமாக. [2]. வாவியினில் - (சரவணப்) பொய்கையில். [3]. உடுமகளிர் - கார்த்திகை மாதர். [4]. அசுரர் வேரை - அவுணர் சமூகத்தை. [5]. சொன்ன ஆறு ஆன - நினைத்தபடி செயலை விளைவிக்கிற; அல்லது பொன் கொழிக்கும் ஆறான எனினுமாம்; சொன்னம் - பொன்.
--------------------------------------
(பொ-ரை.) அன்னத்தை ஊர்தியாக வுடைய பிரம னது நான்கு முகங்களும், (அவமானத்தால்) கவிழ்ந்த முகங்களாம்படி அறைந்தவனே!
தேவர்களது (தீராத்) துயர் தீர, (சிறந்த சரவணப்) பொய்கையில் சேயானவனே! கார்த்திகைப் பாவையர் அறுவர் முலைப்பால் பருகியவனே!
மின் வண்ணச் சடையுடைய சிவனார்தம் குருவானவனே! அசுரர் குல வேரை அழித்தவனே!
வலியுடைய மறவர் மகளான வள்ளியாரிடம், தீராக்காதல் கொண்டு திரிந்த நுட்பத்தை (க்குறிப்பொடு) கூறுவார் மேல் அருள் குறையாதவனே!
(எவர்க்கும் எவைக்கும்) முதலானவனே! எப்பொருட்கும் முடிவானவனே! சித்திக்கும் முத்திக்கும் வித்தானவனே! முருகா! வா! வா என்று மொழி குழற ஓதுவார் முன் வாராதிருப்பது தகுதியா?
சொன்னபடி செயலாற்றும் காவிரி பாயும் வளமுடைய சோழநாடனே! சுப்ரமண்யா வருக!
இந்திரனும், திருமாலும், பிரமனும், அன்பொடு கும்பிடும் சுவாமி மலைச் செவ்வேள்! வருக, (எ - று).
அறைந்ததும் தடிந்ததும் மறக் கருணை; மற்றவை அறக்கருணை. ஆடல் பல காட்டி வள்ளியம்மையை மணந்த செய்தி, "திருத்தித் திருத்தி வந்து சிந்தையிடம் கொண்ட" தெய்வத் திறம். திருமண தத்துவம் பல; விரிக்கிற் பெருகும்; அவைகளைக் கேண்மை மேலோரிடம் கேட்டுணர்க.
முத்திக்கு முதல் என்பதில், முதல் - வித்தெனப் பொருள் கொள்ளப் பெற்றது; 'முத்திக்கொரு வித்துக் குருபரா" என்பது திருப்புகழ். "ஓதுவார் முன்னர் வாராமை தகவா?'' என்று குறிப்பிடும் பகுதி கோடி பெறும்.
அறைந்தவா, மகவு ஆனவா, அமுது உண்டவா, தடிந்தவா, அருள் குறையாதவா, முதல் ஆனவா, வாராமை தகவா , சுப்ரமண்ய ! வேள் வருக என முடிக்க. (60)
----------------

61. [1]மிடலேமி குத்தறிவை யடுமாண வக்கொடிய
      விடநோய் கற்று[2]மவு டதமுமாய்
விடியா[3]வு கக்கடையி னிருள்போல [4]கக்கண்மறை
      விரிமாயை யைப்பருகு [5]பரிதியாய்
[6]அடலேமி குத்தசுற வெனவேயி டுக்கண்மலி
      யலைமாப வக்கடலின் [7]மிதவையாய்
அநியாய மிக்கநெறி வழிவாய்க றித்தலைசெய்
      புலவேடர் கிட்டரிய [8]அரணமாய்
தடையாகி முத்திநெறி யிடையேம றித்தவினை
      மலைதூ ளெழத்[9]தடியு மிடியுமாய்த்
தனியேந டக்குமறு மையிலே வழுத்தியவர்
      தமைநீள் வழித்தொடரு துணையுமாய்
திடமான பத்தர்வழி வழியேதி ரட்டுமிரு
      நிதியான [10]பத்மபதன் வருகவே
[11]சிவசாமி கற்புமிகு சிவகாமி பெற்றுமகிழ்
      திருவேர கக்குமரன் வருகவே.

[1]. மிடல் - மிடுக்கு; ஆற்றல். [2]. அவுடதம் - மருந்து. [3]. உகக்கடை - யுக இறுதி. [4]. அகக் கண் - உள்ளக் கண். [5]. பரிதி - சூரியன். [6]. அடல் - கொல்லும் குணம். [7]. மிதவை - படகு. [8]. அரணம் - மதில். [9]. தடி - மின்னல். [10]. பத்மபதன் - திருவடித் தாமரையான். [11]. சிவசாமி - சிவபிரான்.
----------------------------------------
(பொ - ரை.) மிடுக்கு மிகுத்து, அறிவை யழிக்கும் ஆணவமாகிய கொடிய (மாபெரும்) விட நோயை அகற்றும் மருந்தாகி;
விடியாத யுக இறுதியில் (விளையும்) இருள்போல், மனக்கண்ணை மறைக்கும் விரிந்த மாயா இருளை விழுங்கும் பரிதியாகி,
கொல்லும் குணம் மிகுந்த சுறா மீன் (நிறைந்தது) எனும்படி, அவதி நிறைந்த அலைகளையுடைய மாபெரும் பிறவிக்கடலில் (விழுந்தாரைக் கரையேற்றும்) மரக்கலமாய்; அநியாயம் மிகுந்த மார்க்கத்தின் வழியிடை மடக்கும் ஐம்புல வேடர் அணுக முடியாத காப்பிடமாய்;
முத்தி நெறியிடையில் தடையாகி, மறியல் செய்யும் வினைகளாகிய மலை பொடியாக, இடியும் மின்னலுமாகி;
(பருவுடல் அகன்று,) தனி வழி நடக்கும் மறுமையில் துதி செய்தவர்களை, நெடும் தூரம் வரை தொடரும் துணையுமாகி;
உறுதியான அன்பர்கள் வழி வழி சேகரிக்கும் பெருஞ் செல்வமான தாமரை போன்ற திருவடிகளை யுடையவனே!
சிவசாமி இடத்தில், கற்பு மிக்க சிவகாமி பெற்று மகிழ்ந்த திருவேரகக் குமரா ! வருக, (எ - று).
அவுட தமுமாய், பரிதியாய், மிதவையாய், இடியுமாய், துணையுமாய், இருநிதியான பத்மபதன் என்று திருவடிச் சிறப்புரைத்த பாட்டிது.
வழுத்தியவர் தமை, அவர் தனியே நடக்கும் மறுமையிலே வழித்தொடரு துணையும் ஆய் என இயைக்க.
"தனித்து வழி நடக்கும் என திடத்தும் ஒரு வலத்தும்
இருபுறத்தும் அருகடுத்து இரவுபகல் துணையாகும்"
என்ற வேல் வகுப்பும் இங்குக் கருதத்தகும்.
ஆணவம் விடமானால், அது தவிர்க்கும் அவுடதம்: மாயை யிருளானால், படர்ந்த அவ்விருள் தவிர்க்கும் பரிதி; பிறவி கடலாயின், அதினின்று கரையேற்று தோணி; ஐம்புலன்கள் வேடராயின், அவர்கள் அணுகாத காப்பிடம்; முத்தி நெறியில் தடை விளைய, மலைபோல் எழுந்த வினைகள் மறிக்குமேல், அதைத் தவிர்க்கும் இடி; மறுமையில் தனித்து வழி நடக்கும் காலத்தில், உற்ற துணை என்று வகையாகப் பாடிய திருவடி வகுப்பு இது. (61)
----------------

62. தழல்சேர் [1]நுதற்கணவர் [2]தழையா னிழற்கண்முயல்
      தவமேயு ருக்கொடுறு புதல்வனே
[3]சதுர்மா மறைத்தருவி னுயர்சா [4]கையிற்கனியின்
      உறுசா றெனத்தவர்சொல் முதல்வனே
[5]மழவாய் மணிச்சரவ ணமென்[6]வாவி யிற்[7]பதும
      மலரேணை யிற்றுயில்கொள் சிறுவனே
மடிமேலி ருத்தியறு மடவார் [8]அருத்தியொடு
      தருபால் சுவைத்தமணி யிதழனே
எழுதாம றைப்பொருளை யினிதான புத்தமிழ்தம்
      எனவே தமிழ்க்கவிசொல் விரகனே
[9]இகலேது மற்றகுற ளினைமீறு மெய்ப்பொருளை
      எழுதோலை [10]யெற்றுநதி [11]யெதிரவே
அழகாக விட்டகவு ணியர்நாத [12]விப்பிரர்கள்
      அணியான சுப்ரமணி வருகவே
அடியாரு ளத்தைநிகர் திருவேர கத்திலமர்
      அருண்ஞான சத்திதரன் வருகவே.

[1]. நுதல் கணவர் - நெற்றிக் கண்ணர். [2]. தழை ஆல் - தழைத்த கல்லால். [3]. சதுர் - நான்கு. [4]. சாகை - கிளைகள்; உபநிடதங்கள். [5]. மழவாய் - இளஞ்சேயாய் [6]. வாவியில் - சரவணப் பொய்கையில். [7]. பதுமமலர் ஏணை - கமலப் பாயல். [8]. அருத்தி - அன்பு. [9]. இகல் - பகை. [10]. எற்றும் - மோதும். [11]. எதிர - எதிரேறிச் செல்ல. [12]. விப்பிரர்கள் - அந்தணர்கள்.
------------------------------
(பொ-ரை.) (ஞானக்) கனல் சேர்ந்த நெற்றிக் கண்ணரான சிவபிரான், தழைத்த கல்லால் நிழலில் செய்த தவமே உருவான புதல்வா!
மகத்தான நால்வேதத் தருவில் (உள்ள) உயர்ந்த கிளைகளில் உருவான கனியில் உள்ள சாறு என்று, முனிவோர் கூறும் முதன்மையாளா! இளங்குழந்தையாய், சரவண மெனும் பொய்கையில், கமல மலர் ஏணையில் துயிலும் இளம் சேயே!
(கார்த்திகை) மாதர் அறுவர் மடிமேல் வைத்து அன்பொடு ஊட்டிய பாலைச் சுவைத்த, அழகிய இதழ்களை யுடையவனே!
எழுதாக் கிளவியான வேதப் பொருள்களை, இனிய புதிய அமுது எனும்படி, தமிழ்ப்பாவால் (விளங்க) உரைக்கும் வேட்கையனே!
(எச்சமயத்துடனும்) பகை இல்லாத திருக்குறளை விஞ்சிய மெய்ப்பொருளை எழுதிய (தேவாரத் திருமுகப் பாசுர ) ஏடு, அலை மோதும் வையை நதியை எதிரேறிச் செல்லும்படி, அழகாக இட்ட கவுணியர் தலைவா! அந்தணர் திலகம் ஆன சுப்ரமண்யா! வருக;
அடியவர் திருவுளம் போல் அமைந்த திருவேரகத்தில் அமர்ந்த அருள் ஞான சத்திதரா! (விரைந்து) வந்தருள், (எ - று).
" ஓரும் வேதாந்தத்து உச்சியிற் பழுத்த
வாரா இன்ப அருங்கனி பிழிந்த சாரம்''
என்ற பண்டார மும்மணிக் கோவை, இங்கு படிக்கத் தகும்.
புதல்வனே, முதல்வனே, சிறுவனே, இதழனே, விரகனே, நாத, சுப்ரமணி, சக்திதரன் வருகவே என முடிக்க.
தவத்தில் உதித்த தநயன் என்பது, எவர் தவத்திலும் எளி வருவன் என்பதை நினைவுறுத்தியது.
உபநிடதங்களை, மறைத் தருவின் உயர் சாகைகள் என்றார். அதனில் கூறப் பெறும் சாரமான பரன் என்பார், 'சாகையிற் கனியின் உறு சாறு' என்றார்.
திருஞான சம்பந்தர் அபர சுப்ரமண்யம் ஆதலின், ‘கவுணியர் நாத' என்றார்.
      “வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
      வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
      ஆழ்க தீயதெல்லாம் அரன் நாமமே
சூழ்க வையகமும் துயர் தீர்கவே'' என்பது,
அவர் வையையில் இட்ட திருமுகப் பாசுரம். (62) ----------------

63. [1]தந்தி [2]மருப்பி லிழைசீப்புத்
      தலைமே லழுந்தச் [3]சிகைவாரேன்
[4]சலாகை யுறுத்த மையெழுதேன்
      [5]தாழச் செவியிற் குழைபுனையேன்
தொந்தி குழையத் [6]துகிலுடுக்கேன்
      சுடர்ப்[7]பட் டிகைகொண் டதையிறுக்கேன்
தொடிகள் மலர்க்கை [8]வடுக்கொளுமா
      துறுக்கேன் விரல்மோ திரமணியேன்
சிந்தித் தடியர் அகலமரில்
      சேர்த்து மலர்த்தா ளிணையுறுத்தச்
சிலம்பு தண்டை கிண்கிணிகள்
      செறிக்கேன் கவுண்மேற் கைநெறிக்கேன்
[9]மந்திப் பிடியாய்த் திருமேனி
      வருந்தத் தழுவேன் வருகவே
வரத விரதா குருமலைவாழ்
      வடிவே லரசே வருகவே.

[1]. தந்தி - யானை. [2]. மருப்பில் இழை - தந்தத்தால் செய்த. [3]. சிகை - குடுமி. [4]. சலாகை - (எழுது) கோல். [5]. தாழ - (அதிகம்) தொங்க. [6]. துகில் - உடை. [7]. பட் டிகை - அரைக் கசசை. [8]. வடு - தழும்பு. [9]. மந்திப்பிடி - குரங்குப்பிடி.
--------------------------------
(பொ-ரை.) யானைத் தந்தத்தால் இழைத்த சீப்புத் தலைமேல் அழுந்த, (வளரும்) குடுமியை வார மாட்டேன்; கோலுறுத்தும்படி, (கண்கட்கு) மை எழுத மாட்டேன்; தாழ்ந்து தொங்கும்படி, செவிகளில் குழைகளைத் தரிக்க மாட்டேன்;
தொப்பை குழையும்படி, உடையை இடையில் உடுத்த மாட்டேன்; அந்த உடைமேல், ஒளியுடைய கச்சையை இறுக்கிக் கட்ட மாட்டேன்;
மலர்க்கரம் வடுவடைய, தொடிகளை எடுத்துத் துறுக்க மாட்டேன்; (அழுந்துமாறு ) விரலில் மோதிரம் அணிய மாட்டேன்;
சிந்திக்கும் அடியர் உளக்கமலத்தில் சேரும் மலரடிகளை உறுத்தும்படி, சிலம்பு, தண்டை, கிண்கிணி முதலியவைகளைச் செறிக்க மாட்டேன்;
கன்னத்தின் மேல் (திருஷ்டி கழியுமென, அழுந்தக்) கைந்நெறிக்க மாட்டேன்; (தகவுடைய) திருமேனி வருந்த, குரங்குப் பிடியாய்த் தழுவ மாட்டேன்; வருக ஐயா!
வரம் வழங்குவதை விரதமாகக் கொண்டவனே! குரு மலையில் எழுந்தருளிய (மாபெரும்) வடிவேல் மன்னா! இங்கு எழுந்தருள், (எ - று).
வாரேன், புனையேன், உடுக்கேன், இறுக்கேன், துறுக்கேன், அணியேன், செறிக்கேன், நெறிக்கேன், வருந்தத் தழுவேன் வருக என முடிக்க.
‘சிந்திப்பார் சிந்தையுளான்'
என்பது தமிழ்மறை; அதை, 'சிந்தித் தடியர் அகமலரில் சேர்த்து மலர்த்தாள்' என்பதில் பெற வைத்தார்.
'மலர்மிசை ஏகினான் மாணடி'
என்பது பொதுமறை.
கேசாதி பாதங்கட்குச் செய்யும் கோலத்தில், திருமேனி வருந்த எதையும் செய்ய மாட்டேன்; தழுவு போதும் மர்க்கட நியாயம் ஏற்க மாட்டேன்: பயனாம்படி மென்மைப் பணி செய்வேன்.
வழிபடுவார்க்கு வரம் வழங்கும் விரத வள்ளல் உள்ளம் வாய்த்தவனே! சிறந்த நின்னைச் சேவிக்கும் வேட்கையேன்; என் ராஜா! என் முன் எழுந்தருள் என்று விநயம் கொண்டு வேண்டியபடி.
தாயைக் குட்டி அழுந்தத் தழுவும்; அப் பிடிப்பை 'மந்திப்பிடி'; மர்க்கட நியாயம் என்பர். (63)
-----------------

64. அன்பா லெடுக்க வருந்தோறு மப்பா லோடி யகல்வாயால்
      அன்னை யலனோ பால்சுரந்த தயலோர் மகவுக் களிப்பேனோ
முன்பார் வதிபோற் கறந்தளித்தே [1]முதுமை விலக்கி மகிழ்வேனோ
      [2]மொய்ம்பி லணைத்து [3]நொடிபயிற்றி முத்த மளித்தல் மறந்தனையே
[4]       வன்பா லுன்பொன் மலர்மேனி வருந்தத் தொடவு மாட்டேனுன்
மலர்த்தா ளிணையென் கண்மணிமேல் வைத்தே [5]புரக்கு மதியுடையேன்
தென்பாற் கயிலை மலையாகுந் திருவே ரகச்சேய் வருகவே
      செம்பொன் மலைப்பைங் கொடிபூத்த தெய்வ மலரே வருகவே.

[1]. முதுமை - மூப்பு. [2]. மொய்ம்பு - மார்பு. [3]. நொடி - திருஷ்டி கழிக்கும் நடை. [4]. வன்பால் - முரட்டுத் தனத்தால். [5]. புரக்கும் -- காக்கும்.
---------------------------------------
(பொ-ரை.) அன்பினால் எடுக்க வரும் எப்போதும், அப்பால் ஓடி அகல்கின்றாய்; (நான் உன் அன்புத்) தாய் அல்லவா? சுரந்த முலைப்பாலை, (உனையன்றி) வேறு ஒரு பிள்ளைக்கு ஊட்டுவனோ?
முன் ஒரு சமயம், (சிறந்த பார்வதியார் செய்தது போல், கறந்து ஊட்டி, (என்) முதுமை தவிர்ந்து களிப்பேனோ?
(அருமைத்) திருமார்பில் அணைத்து, (கண்ணேறு கழிப்பக் கன்னத்தில்) நொடித்து, முத்தம் தந்ததை மறந்தனையே!
கடுமை காட்டி, உன் பொன்னிறமான மலர்போலும் திருமேனி நோகத் தொடுதலும் செய்யேன்;
உன் மலர் போன்ற திருவடிகளை, என் கண்ணின் மணிமேல் வைத்துக் காக்கும் சிந்தனை கொண்டுளேன்;
தென் திசைக் கயிலை மலையான திருவேரகச் சேயே! வருக;
(சிவமான) செம்பொன் மலையில், (படர்ந்த தேவியான) பசுங்கொடியில் மலர்ந்த தெய்வ மலரே வருக, (எ - று)
'கச்சித் தாய் உச்சி மோந்து கண்ணோ டளிக்கும் திருத்தாளா" என்றார் பிறர். அவர்போல், 'மலர்த் தாளிணை, என் கண்மணிமேல் வைத்தே புரக்கும் மதியுடையேன்' என்றார். 'செம்பொன் மலைப் பைங்கொடி பூத்த தெய்வமலர் ஏரகன்' என்பதை, ஓதுநர் நாவில் நீர் ஊறும்.
திருநாகைக் காரோணத் திருப்பதிகத்தில் சுந்தரர், ‘திருமேனி வருந்தவே வளைக்கின்றேன்' என்றார். அடியேன், உன் ‘மலர் மேனி வருந்தத் தொடவும் மாட்டேன்' என்பதில், இத்தாயின் விநயம் வெளியாகின்றது அல்லவா?
அளிப்பேனோ, மகிழ்வேனோ, மறந்தனையே, தொடவும் மாட்டேன், புரக்கும் மதி யுடையேன், சேயே, மலரே வருகவே என முடிக்க. (64)

வருகைப் பருவம் நிறைவெய்தியது.
--------------

7. அம்புலிப் பருவம்

மகவுடன் விளையாட வரும்படி, மதியை அழைக்கும் பருவம் இது. அம்புலி - சந்திரன்; அழகு புல்லப் பெற்றதெனக் காரணம் பற்றிய பெயர். புல்லுதல் - பொருந்துதல். பதினெட்டாம் திங்களில் இப்பருவம் பாடப்பெறும்.
பிற பருவம் பாடுவது எளிது; அம்புலிப் பருவம் பாடுவது அவ்வளவு எளியதன்று. 'பிள்ளைக் கவிக்கு அம்புலி புலியாம்' என்பர் அறிஞர். அம்புலியை அழைக்கும் பொழுது, சாம பேத தான தண்ட வகையால், முறைப்படி அம்புலிக்கும் பாட்டுடைத் தலைவனுக்கும் ஒப்புக் கூறலும், வேற்றுமை கூறலும், விளையாட வந்தால் அம்புலிக்கு வரும் நன்மையை விவரித்து உரைப்பதும், வராவிடில் விளையும் துன்பம் இன்ன என்று விளக்கலும் மன்பெரும் கவிஞர் மரபு.

65. [1]பம்புபே ரொளிவீசு [2]பூதியுடன் [3]மேவலாற்
      பரமனு ரின்னருட்கண்
[4]பாங்காய் விளங்கலாற் [5]பானலொண் வாயினைப்
      [6]பரிவான் மலர்த்தி நாளும்
[7]உம்பரா [8]ரிம்பரொடு நுக [9]விசை கெழுமமுதம்
      [10]ஓவா துவந்தீவதால்
[11]ஒண்முத்த [12]மானமிசை யுலவலா லிறைவனடி
      யுற்றோர் [13]சிரோரத்னமாய்
எம்பிரான் சம்பந்த மூர்த்திபோ லிலகுமுன்
      எழில்கண் டழைக்கின்றனன்
எய்துதற் கரிய1[4]பே றிதுவெய்த நீமுனம்
      இழைத்தமா தவமெதுகொலோ
[15]வம்பறா வரிவண்டு [16]முரல்கடம் பணிசுப்ர
      மணியனே டாடவாவே
வளருமுத் தமிழ்குலவு குருமலைக் குமரனொடு
      மதியமே ஆடவாவே.

(சந்திரனுக்கும் திருஞான சம்பந்தர்க்கும் சிலடை.)
[1]. பம்பு - நிறைவு. [2]. பூதி - செல்வம்; விபூதி. [3]. மேவல் - வருதல். [4]. பாங்காய் - அழகாய். [5]. பானல் ஒள் வாய் - நீலோற்பல மலர்போல் ஒளி மிகுந்தவாய்; பால் மணம் கமழும் அழகிய வாய். [6]. பரிவு - அன்பு. [7]. உம்பரார் - வானவர். [8]. இம்பரொடு - இவ்வுலக ரொடு. [9]. இசை கெழு - புகழ் பொருந்திய. [10]. ஓவாது - இடையறாது. [11]. ஒள் - ஒளி. [12]. மானம் - விமானம். [13]. சிரோரத்னம் - தலையணி; சிறந்த தன்மை. [14]. பேறு - பாக்கியம். [15]. வம்பு - மணம். [16]. முரல் - ஒலிக்கும்.
----------------------------------
(பொ - ரை.) (பரந்து) நிறைந்த பேரொளி பரப்பும் செல்வத்துடன் படர்ந்து வருதலால்;
விமலனது இனிய அருட்கண் எனும் அருமை பெற்று விளங்குதலால்;
நீலோற்பல மலரின் அழகிய வாயை ஆர்வமுடன் மலரச் செய்து, எந்நாளும் விண்ணவரும் மண்ணவரும் பருக, புகழ் பெற்ற இனிய அமுதத்தை உவந்து இடையறாது உதவுதலால்;
ஒளியுடைய முத்து விமானத்தில் உலாவருதலால்;
தேவ தேவரான சிவபிரான் திருவடி தீண்டப் பெற்றதொடு, (அவரது) ஒப்பற்ற திருமுடிக்கு அலங்காரமாக அமைந்து;
      (வேறு ஒரு பொருள்)
பரவிய பேரொளி பரப்பும் (பூதியான) திருநீறணிந்து வருதலால்;
விமலனது, இனிய திருவருள் நோக்கம் பெற்று விளங்கலால்;
(பானல் ஒண்வாய் எனும்) பால் மணம் கமழும் ஒளியுடைய திருவாய் திறந்து, விண்ணும் மண்ணும் அனுபவிக்கத் தெய்வ இசைத் தமிழ்மறை யமுதம் (உவந்து) இடையறாது உதவலால்;
ஒளியுடைய பல்லக்கில் அமர்ந்து உலவுதலால்;
சிவனடியாரில் (தலைசிறந்த மாணிக்கம் போல்) சிறந்து விளங்கிய எமது சமய குரவரான திருஞான சம்பந்தர் போல் விளங்கும் உன் எழுச்சி நோக்கி அழைக்கின்றான்; பிறர் அடைதற்கரிய இப்பேற்றை அடைய, நீ முன்பிறவியில் செய்த தவம் எத்தகையதோ? மணம் உள்ள இடத்தை விட்டு அகலாத வரியுடல் வண்டுகள் ரீங்கரிக்கும் கடம்பமாலையணிந்த சுப்ரமண்யப் பெருமானுடன், விளையாட வா;
(நாள் தோறும்) வளர்ச்சியில் இருக்கும் (இயலிசை நாடகமாம் ) முத்தமிழ் வழங்கும் சுவாமிமலை நாதனொடு, சந்திரா ! நீ விளையாட வா, (எ - று).
நிலா நிலா வா வா! நில்லாமல் ஓடி வா! மலை மேலே ஏறி வா! குழந்தைக்கு மல்லிகைப்பூ கொண்டு வா என்று, தமது சேய் காண, மதியை அழைப்பர் தாய்மார்கள். அது கண்ட சேயும், வா வா என்று மழலை நடையில் மதியை அழைக்கும்.
அம்மரபை ஒட்டி, அமல முருகன் உன்னை அழைக்கின்றானே; வா! வா மதியே! நீ எங்கள் காழியர்கோன் போல் கவினுகிறாய்; அதனால் தான் அழைக்கிறான்; வா வா என்று, ஆவலொடு தாயர் மதியை அழைத்தபடி.
சந்திரன்: திருஞான சம்பந்தர்: -
(1) ஒளி வீசு பூதி: (1) ஒளி வீசு பூதி:
சிறந்த தண்ணொளிச் செல்வம். (வித்தக) ஒளி வீசும் விபூதி.
([2]) இன்னருட்கண் பாங்காய் விளங்கல்: ([2]) இன்னருட்கண் பாங்காய்
      விளங்கல் : -
சிவனார் இடக்கண்ணாக விளங்கல். திருவருள் நோக்கம் பெற்றிருத்தல்.
(3) பானல் ஒண் வாய் மலர்த்தல்: (3) பானல் ஒண் வாய் மலர்த்தல்:

குவளை மலர் மலர உதயமாதல். பால் மணம் கமழும் திருவாய் திறத்தல்.
(4) அமுதம் ஈதல்: சிறந்த அமுததாரை (4) அமுதம் ஈதல்: தேவார அமுதம்
யைக் கிரண வழி சிந்தல். பொழிதல்.
(5) முத்த மானமிசை உலவல்: (5) முத்த மானமிசை உலவல்:
வெள்ளி விமானத்தில் பவனி வரல். முத்துச் சிவிகையில் உலவுதல்.
(6) அடியுற்று ஓர் சிரோரத்னமாதல்: (6) அடியுற்றோர் சிரோரத்னமாதல்: -
திருவடியில் அடைக்கலமாகி, சிவனார் தகுதியுடைய அடியார்கட்குத்
திருமுடியில் அமர்தல். தலைவராதல்.

சந்திரனுக்கும் திருஞான சம்பந்தர்க்கும் சிலேடையான இது, சாம உபாயம் எனப் பெறும். ஊன்றி உணர்ந்து ஓதினால், இப்பாட்டின் அருமைச் சுவையை அனுபவிக்கலாம்; விரிப்பிற் பெருகும். (65)
------------

66. [1]மேற்பாற் பிறப்பினும் [2]கலைகுறைந் திழிவுறுவை
      வேண்டு[3]மொளி யின்றி[4]மறைவாய்
[5]மேதினியர் 6குறைமதிய னிவனென்று பேசுவார்
      மீண்டு[7]கீழ்ப் பாலுதிப்பாய்
[8]நாற்பா லிருப்பவரு மொண்[9]கலைச் செல்வனென
      நவிலுகினு முட்களங்கம்
நாடியுனை மதியாமல் [10]அல்லோ னெனக்கொள்வர்
      [11]நாரியர்கள் கண்டு[12]கரிய
மாற்பா லுளந்தோன்றி னனென்றி கழ்ந்துன்னை
      வைதுகாணவுமஞ்சுவார்
மாறிமா றிப்பிறந் தெய்துபய னிதுகொலே
      வந்தெமது கந்தனருளை
ஏற்பா யெனிற்பிறப் பின்றியின் பெய்தலாம்
      இங்ஙனே வாமதியமே
ஏரக நிலாவுசிவ சாமியொடு விளையாட
      இங்ஙனே வாமதியமே.

[1]. மேற்பால் - உயர்குலத்தில்; மேற்குத் திசையில், [2]. கலை - கல்வி; பதினாறு கலை. [3]. ஒளி - புகழ்; பிரகாசம். [4]. மறைவாய் - இறப்பாய்; அமாவாசையாவாய். [5]. மேதினியர் - உலகர். 6. குறை மதியன் - அறிவு குறைந்தவன்; தேய்பிறையானவன். [7]. கீழ்ப்பால் - கீழ்க்குலத்தில்; கிழக்குத் திசையில். [8]. நாற்பால் இருப்பவர் - நான்கு திசை மக்கள். [9]. கலைச் செல்வன் - கல்விச் செல்வன்; கலைகளாகிய செல்வம் உடையவன். [10]. அல்லோன் - தீயோன்; இரவரசன். [11]. நாரியர் - மாதர். [12]. கரிய மால் பால் - கரிய மயக்க மனம்; கரிய திருமாலிடத்தில்.
-------------------------------------
(இகழ்ச்சிப் பொருள்)
(பொ-ரை.) மேல் குலத்தில் பிறந்தாலும், (இனிய) கல்வி குறைந்து இழிவு அடைந்தனை;
விரும்பத் தக்க (இன்பப் ) புகழ் இல்லாமல் இறந்து படுவை ;
உலகோர் அறிவு குறைந்தவன் இவன் என்று (உன்னை ) இகழ்வர்; மறுபடியும் கீழ்க் குலத்தில் உதிப்பாய்;
நான்கு திசையில் உள்ளவர்கள், கல்விச் செல்வன் (இவன்) என்று (உன்னை) உரைத்தாலும், (உன்னிடம் உள்ள மாபெரும்) களங்கம் கண்டு மதிக்காமல், உன்னைத்
தீயவன் என்றே தீர்மானித்துளர்;
இருண்ட மயக்கம் கொண்ட உளத்தன் என்று இகழ்ந்து பேசி, உன்னைக் காணவும் கூசுவர் காரிகையர். (வளர்பிறை, தேய்பிறை, அமாவாசை, பெளர்ணமி என) மாறி மாறிப் பிறந்து, நீ எய்திய பயன் இது தானோ?
(இயல்புப் பொருள்)
மேல் திசையில் உதிப்பினும், (ஒவ்வொரு) கலையாகக் குறைந்து (குறைந்து) இழிவை எய்துவை;
விரும்பத் தக்க ஒளி குன்றி மறைந்து, அமாவாசை ஆய் விடுவை; உலகர் தேய்பிறையன் இவன் என்று, (உன்னை ) ஏளனமாக உரைப்பர்.
பின்னர் கிழக்குத் திசையில் உதிப்பாய் (ஆயினும்), நாற்றிசை மக்களும் தூய கலைச் செல்வன் என்று சிறக்கக் கூறினாலும், உன்னுள் களங்கம் உள்ளதை நோக்கி, உன்னை ஒரு பொருளாக மதியாமல், இரவரசன் என்று இயம்புவர்;
காரிகையர் உன்னைக் கண்டு, கரிய மாலின் உளத்தில் உதித்தவன் என்று அருவறுத்து, உன்னைக் காணவும் கண் கூசுவார்.
மாறி மாறிப் பிறந்து நீ யடைந்த பயன் இது தானோ?
(உடனே) வந்து, எம்முடைய (இன்பக்) கந்தன் திருவருளை ஏற்பாயாயின், பிறவித் துன்பம் இல்லாமல், (அரிய) பேரின்பத்தை அடையலாம்; வா சந்திரா!
திருவேரகத்தில் விளங்குகிற சிவசுவாமியுடன் விளையாட, இங்கே வா சந்திரா, (எ - று).
இகழ்ச்சிப் பொருளும் இயல்புப் பொருளுமான இப்பாடல், தான உபாயம் எனப் பெறும்.
ஒரு காலத்தில் அக்கினி முகத்திலும், மற்றொரு காலத்தில் அத்திரி முனிவர் கண்களிலும், வேறு ஒரு காலத்தில் பாற்கடலிலும் உதித்த சந்திரன், முதன் முதல் திருமால் உளத்தில் தோன்றினன் என்பர். அதை, ‘மால்பால் உளம் தோன்றினான்' என்றார்.
‘எங்கள் மாதவன் இதயமா மலர்வரும் உதயத்திங்கள் ' என்பது பாரதம். (6[5])
------------------

67. [1]அம்பிட்ட விழிமாத ரெருவிட வளர்ந்தவர்க்
      கனலாகி மெய்சுடுவைநீ
[2]அகிலமுஞ் சுடுநெற்றி விழியில்வந் தாலுமிவன்
      அகலாத [3]தண்ணளியினன்
[4]வம்பிட்டு நாடொறும் வளர்ந்த[5]முய லகனும்
      [6]மறுக்கமுற் றுழலுவாய்நீ
வலியமுய லகனைமல ரடியினில் மிதித்தாடு,
      [7]வள்ளலருள் வடிவிவன்காண்
[8]கும்பிட்டு மூடுபனி யானடுக் குறுவைநீ
      கொங்குநா டெங்குமிக்க
குளிர்பனிக் கொடுநோ யகற்றியருள் செய்தவக்
      [9]குரிசிலிவ னென்பதுணராய்
[10]செம்பிட்ட [11]இஞ்சிசூழ் ஏரகக் குமரனொடு
      திங்களே யாடவாவே
சிவனைநிகர் பொதியமுனி பரவுதமிழ் விரகனொடு
      திங்களே யாடவாவே.

[1]. அம்பு இட்ட - நீர் இரைத்த; அம்பு போன்ற. [2]. அகிலமும் - (உலக) முழுவதும். [3]. தண்ணளி - குளிர்ந்த அருள். [4]. வம்பிட்டு - பயனிலாது. [5]. முயலகனாய் - முயல் களங்கம் உடையவனாய். 6. மறுக்கமுற்று - மனக் கலக்கம் கொண்டு. [7]. வள்ளல் - சிவபிரான். [8]. கும் பிட்டு - மூச்சடங்கி. [9]. குரிசில் - திருஞான சம்பந்தர். [10]. செம்பிட்ட - செம்பினாலான. [11]. இஞ்சி - மதில்.
------------------------------------
(பொ-ரை.) கண்ணீர் சிந்திய காரிகையர், (வளரும் பழிமொழி எனும்) எருவிட வளர்ந்து, அத்தையலர்க்கே நெருப்பாகி உடலைத் தகிப்பை நீ; உலக முழுதும் எரிக்கும் (உமாபதியின்) நெற்றிக் கண்ணில் உதித்தாலும், இப்பெருமான் அகலாத குளிர்ந்த அருளை யுடையவன்;
வம்பாகி நாள்தோறும் வளர்ந்த முயல்களங்கன் எனும் பெயர் எய்தி, (என்றும்) மனம் வருந்தி உழலுவாய் நீ; வலிய முயலகனை மலரடியில் அழுத்தி, மிதித்து ஆடும் வள்ளலாம் சிவனாரது அருள் சொருபன் இவன்;
கூம்பிய மூடு பனியால் நீ நடுக்கம் அடைவை; கொங்கு நாடு முழுதும், மிகுந்த குளிர் பனியால் (உண் டான) கொடிய (நளிர்சுர) நோய் தீர்த்து , (பயனான) அருளைப் பாலித்த அத்திருஞான சம்பந்தரே இவன் என்பதை உணர்ந்திலை;
செம்பால் ஆன மதில் சூழ்ந்த திருவேரகக் குமரனோடு சந்திரா! விளையாட வா;
சிவபிரானை ஒத்த பொதிய மலை முனிவரான அகத்தியர் வழிபடும் தமிழ் வேட்கை முருகனொடு, சந்திரா! (நீ) விளையாட வா, (எ - று).
களவு நிலையில் ஒழுகி வரும் உளவு வெளிப்பட்டு, பழிமொழிகள் மெல்லப் பரவி வரும். அம்மொழிகளையே இங்கு , 'எரு' என்றார்.
"ஊரவர் கௌவை எருவாக, அன்னை சொல்,
நீராக நீளுமிந் நோய்"
எனும் திருக்குறள் இங்கு எண்ணத் தகும்.
தண்மையாய் வந்து நீ தணலாய்ச் சுடுகிறாய்; குமரன் கொதிப்பில் உதித்தும் குளிரச் செய்கிறான்.
தனி ஒருவன் நீ பனிக்குத் தாள மாட்டாய்; கொங்குநாடு முழுதுமான குளிர் சுரத்தைப் போக்கியவன் இவன்.
முயல் எனும் நோயை அகத்தில் உடையவன் நீ; அம்முயலகனை அடிக்கீழ் மிதித்த அமலன் மகன் இவன் என்று, மதியின் இழிவையும் முருகன் உயர்வையும் உணர்த்தியபடி. இது, பேத உபாயம் எனப்பெறும்.
மற்றும் மணமாகாத மகளிர், மதியை நோக்கி எரு இட்டுக் கும்பிடுவது இன்றும் உள்ள வழக்கம். அங்ஙனம் செய்தாரையும், மணமானபின், தலைவனைப் பிரிந்திருக்கும் போது தகிப்பது, மதிக்கே உள்ள மரபு. அந்நாளில் மாதர் பழி தூற்றலை, அகப்பொருள் நூல்களில் அறியலாம்.
"தாய்வாய் அடைந்து மிகுந்தலையை
மோதிமோதிச் சலித்தலறக்
காய்வாய் நிலவே! உடன் பிறந்தா
ளிருந்து வாழும் கடிமனையை
நீவா னெழுந்து வந் தழிப்பா
யென்றால், நிலையின்றித்
தேய்வாய்; நின்னோ டியல்பில்லா
என்னை என்ன செய்யாயே?''
எனும் பிரபுலிங்க லீலை, இங்கு எண்ணத் தகும். (67)
--------------

68. மண்மீதி [1]லிருவினை வயத்திற் பிறந்தவை
      வளர்த்துடல் விடுத்த பேர்கள்
மாசுறு மனத் [2]திரளி னாற்[3]களங் குற்றுநீ
      [4]மறுகல்மறை மொழி வாய்மையாம்
கண்மீது கண்பெற்ற செங்[5]கரும் பின்நடுக்
      கண்ணுற்ற கடவுண் மணியிக்
கந்தனை நினைந்தவர் 6பதங்கண்ட பேரும்
      களங்கங் களைந்[7]தொளிருவார்
விண்மீது தேசொடு விளங்கினும் [8]சடமயம்
      விடாதுதிரி வாயிவனருள்
மேவினே ரடியருஞ் [9]சித்துருவ ராய்முத்தி
      மேவுதல் அறிந்திலாயோ
[10]எண்மீறு மற்புத மிலங்குதிரு வேரகனொ
      [11]டிந்துவே யாடவாவே
[12]இகபரமு முயர்வீடு மருள்சாமி நாதனுடன்
      இந்துவே யாடவாவே.

[1]. இருவினை - (நல்வினை, தீவினையாகிய) இரு வினை கள். [2]. திரளினால் - திரட்சியால். [3]. களங்குற்று - மாசு அடைந்து. [4]. மறுகல் - வருந்துதல். [5]. கரும்பின் - கரும்பான சிவத்தின். 6. பதம் - திருவடி. [7]. ஒளிருவார் - பிரகாசிப்பர். [8]. சடம் - அறிவின்மை. [9]. சித்துருவர் - ஞான மேனியர். [10]. எண் - அளவு. [11]. இந்துவே - சந்திரா. [12]. இகபரம் - இம்மை மறுமை.
--------------------------------------
(பொ - ரை.) நிலவுலகில் இருவினை வசத்தால் பிறந்து, அவ்வினைகளையே (மேலும்) பெருக்கி, (அதன்பின்) இறந்தவர்களின் (தொன்மை) மன நினைவுகளின் தொகுதி யால் களங்கம் அடைந்து நீ வருந்தும் செய்தி, வேதம் கூறும் வாய்மையா யுளது;
கண் மேல் கண் பெற்ற செங்கரும்பான சிவத்தின் நடுக்கண்ணில் இருந்து உதித்த தெய்வமணியான இக்கந்தனைத் தியானிக்கும் அடியவரது திருவடி தரிசனம் செய்தவரும், களங்கம் இன்றிப் பிரகாசிப்பர்;
விண்மேல் ஒளியொடு விளங்கினாலும், (நீ) அறியாமை அகலாது அலை மோதுவாய்; இப்பெருமான் திருவருளைப் பெற்ற அடியார்க்கு அடியவரும், ஞான மேனியராய் முத்தியடைதலை அறிந்திலையோ?
அளவு மீறிய அற்புதம் விளங்கும் திருவேரகனொடு, சந்திரா! விளையாட வா;
இம்மை மறுமையும், உயர்ந்த முத்தியும் பாலிக்கும் சாமிநாதனுடன், சந்திரா! (நீ) விளையாட வா, (எ - று).
'வினைப்போகமே உறு தேகங்கண்டாய் , வினை தான் ஒழிந்தால்
தினைப்போ தளவும் நில்லாது"
என்பதற்கு ஏற்ப, இருவினை வயப்பட்டுப் பிறத்தலும், பிறந்தபின் ஆகாமியத்தைப் பெருக்கலும், இறுதியில் இறத்தலும் உயிர்கட்கு இயற்கை.
உலகில் சாமானியராய் இருந்து இறந்தவர்கள் சந்திர மண்டல வழியாக மறுமை யுலகிற்குச் செல்வர். இது வேதம் கூறும் செய்தி. அப்படிச் செல்லும் அவர்கள் சார்பால், சந்திர மண்டலம் அதிகக் களங்கம் அடையும் என்பர்.
தீயார் நோக்கும் நினைவுமான தொடர்பு அது. அறுமுகன் அடியவரைத் தரிசித்தவரும், இழிந்த கதியை யடைவது இல்லை.
சந்திரன் தேசொடு விளங்கினாலும், ஜடமயம் ஆகியுளன். ஜடம் - அறிவின்மை; ஜடம் என்பது, ஜலம் என்பதன் போலியாக வட மொழியிற் பயின்று வரும்.
முருகனது அடியவரும் சித் உருவர் ஆவர். (சித் - ஞானம்.)
"கண்டங் கரிய தாம் கண்மூன் றுடைய தாம்
அண்டத்தைப் போல அழகியதாம் - தொண்டர்
உடலுருகத் தித்திக்கும் ஓங்குபுகழ் ஒற்றிக்
கடலருகே நிற்கும் கரும்பு"
எனப் பெறும் சிவத்தின் நெற்றிக் கண்மணி இக்கந்தன்.
இவனை நினைவார் பாத தரிசனமே பாப விமோசனம் என்றபடி. இதுவும் பேத உபாயம் எனப்பெறும். (68)
------------------

69. கருணையா லைந்தொழி னடாத்துபெரு மானிடக்
      கண்ணமர்ந் துமையுமானாய்
கனவிடை[1]யிவர்ந்துவரு [2]சோமனென் பெயரினாற்
      கண்ணுதற் கடவுளானுய்
[3]தருணமுயர் [4]மேடத் திவர்ந்துலகை வலம்வந்து
      சண்முகன் தானுமானாய்
தண்ணமுது [5]புலவர்க் களித்தோம்பு மியல்பினாற்
      றண்டமிழர் வேந்துமானாய்
6தெருணல மிகுங்கணத் தலைவனுய் மிளிர்தலாற்
      றிருநந்தி யடிகளானாய்
திகழுமித் தன்மையா லுன்மீது தயைசெய்து
      தெய்வநா யகனழைத்தான்
அருணலம் பெறுமூ ழுனக்குவந் தெய்தலால்
      அம்புலீ யாடவாவே
[7]ஆரணந் தமிழிலகு மேரகம் பொலிமுருகொ
      டம்புலீ யாடவாவே.

[1]. இவர்ந்து - ஊர்ந்து. [2]. சோமன் - சந்திரன்; சிவன். [3]. தருணம் - பருவம். [4]. மேடம் - ஆடு; மேட ராசி. [5]. புலவர் - கற்றோர்; தேவர்கள். 6. தெருள் - தெளிவு. [7]. ஆரணம் - வேதம்.
-----------------------------------------
(பொ-ரை.) அருட்பெருக்கால் ஐந்தொழில் நடத்துகின்ற சிவபெருமான் இடக்கண்ணாக இருந்து (அருமை) உமாதேவியும் ஆயினை;
கனம் தங்கிய இடபத்தை ஊர்ந்து வரும் சோமன் எனும் பெயரால், கண்ணுதல் பெருமான் ஆயினை;
பருவத்தால் உயர்ந்த ஆட்டை ஊர்ந்து, சகத்தை வலம் வந்து சண்முகனும் ஆயினை;
தண்ணிய அமுதைப் புலவர்க்குத் தந்து, (இனிது) காக்கும் இயல்பினால், குளிர்ந்த மாபெரும்) தமிழர் மன்னனும் ஆயினை;
தெளிந்த நலம் மிகுந்த கணங்களின் தலைவனாய் விளங்கலின், திரு நந்திதேவர் ஆயினை;
விளங்கும் இத்தகைய தகுதிகளால், உன்மேல் தயை கொண்டு தெய்வநாயகன் அழைத்தான்;
நலம் சிறந்த அருள்பெறும் நல்லூழ் உனக்கு உவந்து எய்தியிருத்தலால், சந்திரா! விளையாட வா;
வேதத் தமிழ் விளங்கும் திருவேரகத்தில் எழுந்தருளியுள்ள முருகனொடு, சந்திரா! (நீ) விளையாட வா, (எ - று)
அநாதி காலந்தொட்டு ஆன்மா, ஆணவ இருளில் இருந்து அவதியடைகிறது. அதற்கு விடுதலை தர, அமலன் திருவுளம் எண்ணுகிறது. அது கருதியே, தன் இயற்கைப் பேரருளால், உலகைப் படைத்தல், காத்தல், ஒடுக்கல், மறைத்தல், அருளல் ஆதிய 'ஐந் தொழில் நடாத்து பெருமான்' ஆகிறார் சிவபிரான்.
அவர் தேவியான அம்பிகை, அமுத மயமாக உன் மண்டலத்துள் அமர்ந்துளள்; அதனால் அத்தேவிக்கு, சந்திர மண்டல மத்யகா என்றும் பெயருண்டு. சிவத்தின் இடது பாகத்தில் இருக்கின்றாள் அச்சிவை; இறைவன் இடது கண்ணானவன் நீ. பேஷ். இந்த இடப் பொருத்த நியாயங்களால், உன்னை உமை என்று உரைக்கலாம் அல்லவா? அதனாற்றான், 'உமையுமானாய்’ என்று உரைக்கின்றோம்.
ஸஹ + உம் = சோம என ஆகி, பாதித் திருமேனியிற் பரசிவையன் என்ற பொருளைத் தரும். உனக்கும் சோமன் என்ற பெயருளது. இப் பெயர்ப் பொருத்தத்தால், நீ சிவமானாய்.
மேலும் உபாசகர்க்கு, கனவில் கந்தன் சோமனாய்க் காட்சி வழங்குவன் எனும் குறிப்பும் இருக்கிறது.
இடப ஊர்தியன் இறைவன்; நீயும் இடபராசியன்; உன்னைச் சிவன் என்று சொல்ல, இதனாலும் இடம் உண்டு. அதனால், 'கண்ணுதல் கடவுளானாய்’ என்று கருதுகிறோம்.
அறுமுகப் பரமன் மேஷ வாகனன்; நீயும் மேஷ ராசி; இதனால் உன்னைச் சண்முகன் என்றும் சாற்றலாம்.
'சோற்றுச் செருக்கல்லவோ தமிழ் மூன்றும்
உரை செய்வித்ததே’
என்னுமாறு, தமிழ்ப் புலவர்கட்குத் தமிழ் மன்னர்கள் தாரளமாக உதவினர். புலவர்கள் எனும் பெயருடைய தேவர்கட்கு, கடல் கடைந்த காலத்தில் அருமை அமுதை அளித்தவன் நீ. உதவுதலான ஒப்புமையால், நீ தமிழர் மன்னன் என ஆயினை. சிவகணத் தலைவர் நந்தி தேவர் ; பிரகாசிக்கும் நட்சத்திர கணத் தலைவன் நீ. ஆதலின், உன்னைக் கணத் தலைவன் என்றும் உரைக்கலாம் அல்லவா?
உயர்ந்த இந்த ஒப்புமை கருதி, உன்னை உயர்ந்தோன் என்று உணர்ந்து, ஏரகப் பெருமான் அன்பொடு விளையாட அழைக்கின்றான்; வா ! மதியே வா என்றபடி. (69)
-----------------

70. [1]தேரா மாந்த ருன்னுடலின் திறமே கண்[2]டந் தணனென்பார்
      தேர்ந்தா ருள்ளங் [3]கள்ளனெனத் தெளிந்தார் அமரர் குழுவருந்தும்
ஆரா வமுதுன் பாலிருந்தால் அங்கங் குறைந்தே னலைகின்றாய்
      அன்றன் [4]றிரவுற் றலைவாயை அரசென் றுரைக்குங் குறிப்போராய்
சீரார் மறையோர் தெய்வதமாய்த் திகழ்பல் கலையின் செம்பொருளாய்த்
      தெவிட்டா வமுத மயமாகிச் சிவமே புரியுஞ் சேந்தனிடம்
வாராய் குறைபோய் வாழ்வுறலாம் வாவா ஆட மதியமே
      மகிமைச் சாமி நாதனிடம் வாவா ஆட மதியமே.

[1]. தேரா - தெளிவிலாத. [2]. அந்தணன் - பிராமணன்; குளிர்ச்சி யுடையவன். [3]. கள்ளன் - திருடன்; கரியோன். [4]. இரவு - பிச்சை; இராத்திரி.
--------------------------------------
(பொ - ரை.) தெளிவிலாத மக்கள் உன் மேனியின் (குளிர்ந்த) திறத்தைக் கண்டு, (உன்னை) அந்தணன் என்று உரைக்கின்றார். தெளிவுடையோர், உள்ளத்தால் கள்ளன் என்றே தீர்மானித்துளர்.
வானவர் கூட்டம் வாய் மடுக்கும் அளவிலாச் சுவையுடைய அமுது, (இனிது) உன்னிடத்தில் இருந்தால், அங்கம் குறைப்பட்டு ஏன் அலையப் போகிறாய்?
ஒவ்வொரு நாளும் இரவில் வந்து அலையும் உன்னை, அரசன் என்னும் (இகழ்ச்சிக்) குறிப்பை யறிந்திலை;
சிறப்பு நிறைந்த வேதியர் தெய்வமாய், விளங்கும் பல கலைகளின் விளக்கமான பொருளாய், தெவிட்டுதல் இல்லா மாபெரும் அமுத மயமாகி, சிறந்த மங்கலமே செய்யும் சேந்தன் இடத்தில் வா;
குறை தீர்ந்து (இன்ப) வாழ்வை எய்தலாம், சந்திரா! விளையாட வா!
மகிமை பலவுடைய சுவாமி நாதனுடன், சந்திரா! விளையாட வா, (எ - று). அந்தணன், கள்ளன், அரசன் என்பவை, சந்திரனுக்கு அமைந்த பெயர்கள்.
அம் தண் அன் எனப் பிரித்து, அழகிய குளிர்ந்த அருளை யுடையவன் என்பர் அறியாதார். நீ குளிர்ந்த கொல்லி.
அம் தணன் எனப் பிரித்து, அழகிய தீமயன் என்று உரைப்பதே அறிவுடைமை. அறிந்தவர் கள்ளன் என்பர்; கள்ளன் என்பது, கரியன் எனும் பொருளையும் தரும். காமக் கனலெழுப்பிக் கரிந்து போகச் செய்யும் உன்னை, கள்ளன் என்பதே அறிவுடைமை.
உன்பால் அமுதம் உளதென்பர்; அது மெய்யாமேல், கலைக்குறை எனும் பெயரால், உன் அங்கம் குறைவது ஏன்? இரவில் ஆட்சி நடத்தும் உன்னை, அரசன் என்பது இகழ்ச்சிக் குறிப்பு; மேலும், இரவுற்றலைதல் என்பது, பிச்சை எடுத்துத் திரிதல் என்னும் பொருளை யும் தரும்.
எனவே, பிட்சைக்காரப் பிரபு என்ற கேவலப் பொருளை, அரசு என்ற பெயர் அளிக்கிறதே!
பெயரால் அந்தணனான உன்னை, மெய்யந்தணர் போற்றும் மேலோன் அழைக்கின்றான்.
கள்ளனான உன்னை, கலைச் செல்வனான அமல மெய்யன் அழைக்கின்றான்.
ஆரா அமுதன் எனப் பொய்ப்பெயர் எய்திய போலியான உன்னை, தெவிட்டா அமுத மயமானான் அழைக்கின்றான்.
அமங்கலக் காமம் அளிக்கும் உன்னை, மெய்ம்மங்கலம் தரும் மேதை அழைக்கின்றான்.
இவன் மகிமைச் சாமிநாதன்; இவனிடம் வந்தால், உன்னில் இருக்கும் குறை ஒழியும். வளரும் வாழ்வும் வரும்; வா! மதியே வா என்று, பேதமும் தானமும் கூறிய பா இது. ([7]0)
-----------------

71. வெள்ளம் பயிலும் கங்கைவழி மேவி [1]வெள்ளா ளனுமாகி
      [2]வேளாண்மைக்குச் சலியாமல் விரும்பும் பயிர்கள் விளைவித்தும்
கள்ளம் பயிலுங் [3]கல்லாரக் கயவர் [4]வண்டர் காதலிப்பாய்க்
      [5]காசைப் புதைத்தே 6யாசைவழிக் கலந்து திரிவாய் [7]நல்லோர்கள்
எள்ளத் [8]தாரா இனத்தினொடு மியைந்தே [9]இரவுற் றியங்குகின்றாய்
      எவ்வா றுய்தி வெண்மதியே இனிநீ வாழ எண்ணுதியேல்
வள்ளல் திருவே ரகமுருகன் மருங்கு வாவா மதியமே
      மகிமைச் சாமி நாதனிடம் வாவா ஆட மதியமே.

[1]. வெள்ளாளன் - வேளாளன்; சந்திரன். [2]. வேளாண்மை - மன்மத வீரம்; உழவு தொழில். [3]. கல்லாரக் கயவர் - குளத்தில் வாழும் நீலோற்பலம்; கல்வி பயிலாத கீழ் மக்கள். [4]. வண்டர் - குற்றமுடையோர்; வண்டுகள். [5]. காசு - களங்கம்; பணம். 6. ஆசை - திசைகள்; அவா. [7]. நல்லோர்கள் - மகளிர்; சான்றோர். [8]. தாரா இனம் - ஈயாதார் கூட்டம்; நட்சத்திரக் கூட்டம். [9]. இரவு - இராத்திரி; பிட்சை.
(பொ - ரை.) (பெரிய) வெள்ளமாகப் பெருகி வரும் கங்கை வழி வந்து வேளாளனும் ஆகி;
(பேறான) உழவு தொழிலுக்குப் பின் வாங்காமல், விரும்பும் பயிர்களை விளையச் செய்தும்;
கள்ளத் தனத்தில் கைதேர்ந்திருக்கும் கல்வியில்லாத கீழ்களுடன், (வீணான) குற்றங்களை விரும்பிச் செய்வை;
(பாடு பட்டுத் தேடிய) பணத்தைப் புதைத்து வைத்து, பேராசை மயமாகி அலை மோதித் திரிவை;
(இனிய மேலோர்) இகழ, ஈயாதார் கூட்டத்தில் சேர்ந்து, (சால்பிலாத) பிச்சைப் பிரபுவைப்போல் (எங்கும்) சஞ்சரிக்கிறாய்;
வெண்மை மதியே! எந்த வழியில் நீ கடைத் தேறுவை?
இனியாயினும் நீ வாழ எண்ணுவையேல், வள்ளலான திருவேரக முருகன் பக்கத்தில் வா, சந்திரா வா! மகிமையுடைய சுவாமிநாதனிடம், வா, சந்திரா! விளையாட வா, (எ - று). கங்கை புத்திரர் வேளாளர்; பரவிய கங்கை கால் வழியில், பாரத வீரர் உதித்தனர். பாரதர் சந்திர பரம்பரை என்பதைப் பாரறியும். அதனுடன், சிவனார் அணியும் அக்கங்கை மேல், படகென உலவுகிறது பிஞ்சு மதி. இத்தகைய பல காரணங்களால், கங்கை வழியினர் வேளாளர். இதனால், சந்திரா! உனக்கு ‘வேளாளன்' என்றொரு பெயருண்டு. சந்திரோதயத்தால் பயிர்கள் விருத்தி பெறும் என்பர். அந்த வகையில், நீ உழவு தொழில் செய்து 'பயிர்களை விளைவிப்பவன்' என்பது பிழை. உண்மையில் செய்தி யாது? மன்மத வீரத்திற்கு, 'வேளாண்மை' என்று ஒரு பெயருண்டு. காமத்தைக் கனற்றி, படைப்பு எனும் பயிர்களை விளைவிக்கிறவன் நீ.
சந்திரோதயத்தில் நீலோற்பலம் மலர, மூசு வண்டுகள் மொய்க்கும் என்பர்.
கள் - தேன்; அம் - அழகு; பயிலும் - பயின்றிருக்கும்; கல்லாரக் கயவர் - குளத்தில் மலரும் குவளைகளும்; வண்டர் - வண்டுகளும்; காதலிப்பாய் - (உன் வருகையைக்) காதலித்து மலரச் செய்வை என்ற பொருளில், 'கள்ளம் பயிலும் கல்லாரக் கயவர் வண்டர் காதலிப்பாய்' என்று, உன் குற்றம் ஓராது உன்னைப் பாராட்டுவர் உலகர்; இது பயித்தியக்காரத் தனந்தான்.
கள்ளம் பயிலும் கல்லாரக் கயவர், வண்டர் காதலிப்பாய்' என்பது, திருட்டுப் புத்தியில் தேர்ந்திருக்கும் கல்வி வாசனையில்லாத கீழ் மக்களையும், குற்றவாளிகளையுமே நீ விரும்புபவன் என்பதைத் தெரிவிக்கிறதே!
கல்லார் - கல்வி மணம் காணாதவர். கயவர் - கயமைக் குணத்தார்; வண்டர் - குற்றவாளிகள்.
காசைப் புதைத்தே ஆசைவழி கலந்து திரிவார் பலருளர்; உன் செய்தியும் அதுதான். அவர்கள் போல் நீ (காசு எனப்பெறும்) களங்கத்தை மறைப்பவன்; (ஆசை எனப்பெறும்) திசைகள் முழுதும் அலைந்து திரிபவன் அல்லவா?
அம்புலிப் பருவம் இருபத்தேழ் விண்மீன் நடுவன் நீ என்பது உபசாரம். உலோபிகள் உறவுடன் பிச்சையெடுக்கும் பிரபுவைப்போல், இரவு முழுதும் காமச்சேற்றில் காலாழ்வை என்பதுதான் முழு உண்மை.
(தாரா இனம் - உலோபிகள் கூட்டம்; நட்சத்திரக் கூட்டம். இரவுற்று - பிட்சை எடுத்து; இரவில் வந்து.)
கடைத்தேறக் கருதினால், உயிர்களாம் பயிர்களை உருவாக்கி, குவளை மலர் சூடி, எக்குற்றமும் இன்றி, இச்சை என்பது இல்லாமல், புனித மேலோர் போற்றும் பிரபுவான வள்ளல் முருகனிடம் வா என்பது குறிப்பு.
இது, பேதமும் தானமும் பேசிய பாடல். (71)
-------------------

72. மெச்சிக் [1கலைய னெனச்சிலர்தாம் விளம்பல் கேட்டுச் [2]செருக்கலை பல்
      விண்ணே [3]ரெச்சிற் கலையனெனும் மெய்ம்மை யுணர்வாய் [4]பொங்கலையே
[5]நச்சிக் 6கலையும் காட்டினையும் நகரு நாடித் [7]திரிகலையோ
      நரலைக் கடலுண் [8]தமிழ்க்கலைய னணுகி யிருக்க நயந்ததுனை
[9]இச்சிக் கலையெ லாம் நீக்கி யீடேற் றிடுவோ மெனுமருளால்
      இதனைச் சிறிது முணர்கலையே இன்னும் பாணிக் கலைவிரைதி
வச்சைக் கலருக் கரியனொடு வாவா ஆட மதியமே
      மகிமைச் சாமி நாதனிடம் வாவா ஆட மதியமே.

¨[1. கலையன் - கலைகள் பயின்றவன்; கலைகளையுடையவன். [2]. செருக்கலை - கர்வம் கொள்ளாதே. [3]. எச்சிற் கலையன் - எச்சில் பட்ட கலைகளை யுடையவன்; எச்சில் இலைகளில் கிடைத்தவைகளை உண்பவன். [4]. பொங்கலையே - பொங்கி வழியாதே. [5]. நச்சி - விரும்பி. 6. க(ல்)லையும் மலைகளையும். [7]. திரிகலையோ - திரிபவன் அல்லவோ [8]. தமிழ்க் கலையன் - அகத்தியன். [9]. இச்சிக்கலை - இத்துணைச் சிக்கலான துன்பங்களை.
-----------------------------------------
(பொ-ரை.) சந்திரா! சிலர் (உன்னைக்) கலையன் என்று, சிறப்பித்துப் பேசுதலைக் கேட்டுச் செருக்கடையாதே; பல தேவர்களது எச்சில் கலையன் என்னும் (உண்மையை) நீயே உணர்வாய்; (ஆதலால்,) பொங்கி வழியாதே;
மலைகளையும், காடுகளையும், (பல) நகர்களையும் விரும்பி, (நீ அவைகளைத்) தேடித் திரிபவன் அல்லவா?
ஒலியுடைய கடலை உண்ட கும்ப முனியாகிய அகத்தியர் அண்மையில் இருக்க, (விமலன்) உன்னை விரும்பியது, (உனக்குள்ள) இத்துன்பங்களை யெல்லாம் நிவர்த்தித்து ஈடேற்றுவோம் எனும் பெருங்கருணையால் தான்;
(ஊன்றி) இதனைச் சிறிதும் உணர்ந்திலையே; இன்னும் தாமதம் செய்யாதே; விரைந்து வா!
உலோபிகளாகிய கீழ் மக்களுக்கு எட்டாத இறைவனொடு, மதியே வா! விளையாட வந்து விடு; மகிமைச் சுவாமிநாதனுடன், சந்திரா வா, விளையாட வா, (எ - று).
கலையன் - கலைகள் பயின்றவன்; சோடச கலைகளை யுடையவன்; இப்படி ஒரு பெயர் உடையவன் நீ. கலையன் என்பதன் உண்மைப் பொருள் என்ன தெரியுமா? தேவர்கள் உண்டு எச்சில் செய்யப்பட்ட கலைகளை யுடையவன்; மற்று, அவர்களது எச்சில் இலையிற் கிடப்பவைகளை உண்டு வாழ்பவன் என்பதுதான். நினைவிருக்கட்டும். மெய்ம்மைத் தமிழ்க் கலையர் அகத்தியர்; அண்மையில் இருந்து, முருகனை அவர் ஆராதிப்பவர். ஆதலின், கலைஞன் என்ற நிலை கருதி உன்னை அழைக்கவில்லை. உன் தொல்லையைத் தவிர்க்கலாம் எனும் அருளால்தான் அழைக்கின்றான். உன் நலம் கருதி, மதியே! நீ ஓடி வா என்றபடி. இது தானோபாயம் எனப் பெறும். (72)
--------------------

73. ¨[1]சுறவேறு கொடிவேந்த னின்னீழ லுற்றுடல்
      சுடப்பட்டு மாய்ந்தொழிந்தான்
[2]சுறவேறு கொடிவேந்த னெருவனிவ னீழலாற்
      [3]சுரமும்வெம் [4]பவமு நீத்தான்
உறவேறி யுனை[5]யுற்ற கண6மந் தரத்திலே
      உழல்வார்க ணிலையின்றியே
உள்ளுருகி யிவனையுறு வார்களிக பரசுகமும்
      உயர்வீடு முறுவர் கண்டாய்
பிறவேறு பாடுமெணி னீ[7]கரும் பொன்னுரைகள்
      பேசரு பசும்பொன்னிவன்
பேதமதி யாதுனை யழைத்தனன் கருணையாற்
      பேதைமதி யால்கல்வையோ
[8]அறவேறு யர்த்த [9]சுர ரடலேறு பெறுமகவொ
      டம்புலீ யாடவாவே
ஆரணந் தமிழிலகு மேரகம் பொலிமுருகொ
      டம்புலீ யாடவாவே.

[1]. சுறவு ஏறு கொடி வேந்தன் - மீனக்கொடி படைத்த மன்மதன். [2]. சுறவு ஏறு கொடி வேந்தன் - மீனக் கொடியுடைய கூன் பாண்டியர். [3]. சுரமும் - வெப்பு நோயும். [4]. பவமும் - பிறவி நோயும். [5]. உற்ற கணம் - அடைந்த மாத்திரத்தில்; அடைந்த நட்சத்திரங்கள். 6. அந்தரத்திலே - ஆதாரமிலா நிலத்தில்; வானத்தில். [7]. கரும் பொன் - இரும்பு. [8]. அற ஏறு - தரும விடை. [2]. சுரர் அடல் ஏறு - தேவர் சிங்கம் ஆகிய சிவபிரான்; ''சிவனே தேவர் சிங்கமே'' என்றார் பிறரும்.
-----------------------------------
(பொ-ரை.) மீனக்கொடி படைத்த மன்னன் ஆன மன்மதன், நினது நிழலில் இருந்த பாவத்தால், உடல் சுடப்பட்டு மாய்ந்து ஒழிந்து மறைந்தான்; (மற்றொரு) மீனக்கொடி படைத்த (கூன்பாண்டியர் எனும்) ஒரு மன்னர், இப்பெருமான் அருள் நிழலால், வெப்பு நோயும் பிறவி நோயும் விலக வாழ்ந்தார்:
உறவு மிக்கு உனையடைந்த நட்சத்திர மாதர்கள், நிலையிலாது வானத்தில் உழல்வாராயினர்;
உள்ளம் உருகி இப்பெருமானை யடைபவர்கள், இம்மை மறுமை இன்பத்தையும், (அருமையாக) உயர்ந்த வீடு பேற்றையும் அடைவர் காண்;
மற்ற வேறுபாடுகளையும் எண்ணினால், நீ (இரும்பென்னும்) கரும்பொன்; இப்பரமன், சொல்லால் சொல்லிக் காட்ட இயலாத பசும் பொன் ஆவன்;
(இப்) பேதத்தைப் பொருள் படுத்தாமல், அருளால் உன்னை அழைத்தான்; பேதைமைத் தன்மையான அறியாமையால், (அணுகாமல் நீ) அகல்வாயோ?
தரும விடையைக் கொடியாக உயர்த்திய தேவர் சிங்கமான சிவபிரான் பெற்ற பிள்ளையான முருகனுடன், சந்திரா! விளையாட வா;
வடமொழி மறையும் தமிழ்மொழி மறையும் விளங்குகின்ற திருவேரகத்தில், பொலிவோடு எழுந்தருளிய (விமல) முருகனுடன், சந்திரா! விளையாட வா, (எ - று)
உன் நிழலுற்றான் உடல் வெந்து ஒழிந்தான்; இவன் நிழல் பட்டவன் இன்பம் கண்டான். உனை அடைந்தவர், ஆதாரம் இன்றி அலைகின்றார். இவனை யடைந்தவர், மும்மையிலும் இன்பத்துள் முழுகுகின்றனர். இத்யாதி வேறுபாடு இருந்தும் உனையழைப்பது, அருளால் காண் எனும் அருமையே அருமை.
கண்ணுதல் கண்ணால் காமன் எரிந்த கதையை, மதிவட்டக் குடை நிழலில் மன்மதன் இருத்தலின் அவன் மேல் ஏற்றிக் கூறினார். கூன்பாண்டியர், திருஞானசம்பந்தர் அருளால் குணப்பட்டார். அவர் அபர சுப்ரமண்யராதலின், குமரன் மேலேற்றி அவர் பிரபாவம் குறித்தபடி.
மதிகண்ட காமிகள் மதி மாழ்கி, ஆதாரம் இன்றி அலைவர்; உரோகணி தவிர, மற்ற இருபத்தாறு மனைவியரை அவன் தவிக்க விட்டதே அதற்குச் சான்று.
சுறவேறு என்பதை ஏறு சுறா என மாற்றி, ஆண் மீன் என அறிக. சந்திர பரம்பரையர் பாண்டியர்: அதனால் அவர்களும் மீனக் கொடியினராயினர். (73)
---------------

74. கடல்[1]சுவற மலை[2]பொடிய வேல்விடுவ [3]னழலினெழு
      கைகள்[4]வெய் தாக[5] அடுவான்
கமலக்கண் ணா6ரிருவர் தம்மைவன் சிறையிடும்
      கண்ணைப் பறிப்ப னுன்னைக்
குடையெனக் கொள்மதனன் விழியினெதிர் வருவனே.
      [7]குழவியென இவனை மதியேல்
[8]குழகனழல் விழியினுறு சிறுபொறியி னுலகெலாங்
      [9]குதிரையனல் படுபஞ்சுகாண்
படவரவி னெடியகைப் [10]பிணிமுக மருந்தநெய்ப்
      படு [11]கவள நீயாகுவாய்
பசுமயிலு [12]நாய்க்குடையி தெனவுனைக் கொத்திப்
      பதைக்கப் பதைக்க அடுமே
அடமுனிவு கொளுமுனர கரசரண மெனவிரைந்
      தம்புலி யாடவாவே
ஆரணந் தமிழிலகு மோகம் பொலிமுருகொ
      டம்புலீ யாடவாவே.

[1]. சுவற - வற்ற. [2]. பொடிய - தூளாக. [3]. அழலி னெழு கைகள் - அக்கினி பகவானது ஏழு கைகள். [4]. வெய்தாக - விரைவாக. [5]. அடுவான் - வெட்டுவான். 6. இருவர் - பிரம விஷ்ணுக்கள். [7]. குழவி - இளஞ்சேய். [8]. குழகன் - சிவபிரான். [9]. குதிரையனல் - வடவா முகாக்கினி. [10]. பிணி முகம் - முருகன் வாகனமான யானை. [11]. கவளம் - ஒரு வாய் உணவு. [12]. நாய்க்குடை - காளான்; இது ஆம்பி எனப் பெறும்.
------------------------------------
(பொ - ரை.) கடல் நீர் வற்ற, மலை தூளாக வேல் ஏவுவான்; அக்கினி தேவனுடைய ஏழு கைகளை விறு விறுத்து வெட்டி வீழ்த்துவான்; கமலத்தில் இருந்த பிரமதேவரைக் கடும் சிறையில் அடைப்பான்; கமலம் போன்ற கண்ணுடைய திருமாலின் கண்ணைப் பறிப்பான்;
உன்னைக் குடையெனக் கொண்ட கருவேள், (இச் செவ்வேள்) கண் எதிரில் வருவானோ?
இவனைக் குழந்தை யென்று எண்ணாதே; (இந்த) இளம்பிரான் அழல் கண்ணிலிருந்து வெளியாகும் சிறு பொறியினால், உலகெலாம் வடவைத் தீயில் பட்ட பஞ்சு போல் பாழாகும்;
படத்தையுடைய பாம்பு போன்ற நீண்ட துதிக்கையுடைய பிணிமுகம் எனும் முருகனது ஊர்தியான) யானை உண்ண, நீ ஒரு கவள உணவு ஆவை;
(இவனது மற்றொரு ஊர்தியான) பச்சை மயிலும், இது நாய்க்குடையென்று, உன்னைக் கொத்திப் பதைத்துத் துடிக்கக் கொன்று விடும்;
(இப்படி உன்னைக்) கொல்லும் அளவு முனிவு கொள்ளுமுன், ஹரஹர அடைக்கலம் என்று சொல்லி, விரைந்து சந்திரா! விளையாட வந்திடு!
வடமொழி மறையும் தமிழ் மறையும் வாழ்கின்ற திருவேரகத்தில் எழுந்தருளிய முருகனுடன், சந்திரா! (நீ) விளையாட வா, (எ - று).
கடல் நீர் வற்ற வேல் விட்டது, உக்கிர குமார பாண்டியர் ஆன காலத்தில்.
சந்திரனை நாய்க்குடையென்று, இன்றும் இளைஞர் கூறி விளையாடும் இயல்பு காணலாம். அதனால் மதியை, நாய்க்குடை என்று அறிவித்தார்.
பெருங்கடலில் நான் பிறந்தவன் என்பை; அக்கடலை வேல் ஏவி வற்றச் செய்தவன் இவன்.
என்னில் வெப்பு உளதென்பை; வெப்பின் இடமான அக்கினி தேவனது, ஏழு கைகளையும் வெட்டி எறிந்தோன் இவன்.
மாதரைச் சிறைப்படுத்தும் ஆற்றல் உடையவன் என்பை; படைத்தானைச் சிறையிட்டு , காப்பானை மச்சாவதாரத்தில் கண்ணைப் பிடுங்கியவன் இவன்.
அகில உலகையும் ஆட்டிப் படைக்கும் காமனுக்குக் குடையானேன் என்பை; அக்கருவேள், இச் செவ்வேள் எதிர்வர அஞ்சுவன்.
பேசத் தெரியாத குழந்தை இவன் என்று இறுமாத்தல் செய்யாதே; இவன் உறுத்த கண்ணிலிருந்து உதயமாகும் ஒரு சிறு தீப்பொறியால், காசினி முழுதும் நாசமாகுமே.
இவன் ஏறிவரும் யானைக்கு நீ ஒரு கவள உணவு; இவன் மயிலோ உன்னை நாய்க் குடையாக எண்ணிக் கொத்திப் பதைக்கக் கொன்றுவிடும். வேண்டா. அவ்வளவிற்கு இடம் செய்யாதே! மரியாதையாக வந்துவிடு என்னும் இது, தண்டோபாயம் எனப் பெறும். (74)

      அம்புலிப் பருவம் நிறைவெய்தியது
---------------

8. சிற்றிற் பருவம்

சிறுவீடு கட்டி விளையாடும் சிறுபெண்கள், தாம் முயன்று கட்டிய சிற்றிலைச் சிதைக்குமாறு வரும் சிறு பருவச்சேயை, அங்ஙனம் செய்ய வேண்டா என்று வேண்டிக் கொள்ளும் பருவம் இது. சிறுமை + இல் - சிற்றில்; சிறுமையெனும் பண்புப் பெயர், ஈறு போய்த் தன்னொற்று இரட்டிற்று; இத்தொடர், சிற்றில் சிதைத்தல் எனும் பொருள் பயந்தது; சிறுபறை முதலியவற்றிலும் இங்ஙனமே கொள்க.
'சிறுபறை முழக்கலையும், சிற்றில் சிதைத்தலையும், சிறுதேர் உருட்டலையும், சிறுபறை சிற்றில் சிறுதேர் என்றார், பெயரொடு தொழிற்கு ஒற்றுமையான்' என வரும் இலக்கண விளக்கவுரை, இங்கு எண்ணத் தகும்.
'அம்புலியே ஆய்ந்த சிறுபறையே சிற்றிலே ' எனும் வெண்பாப் பாட்டியலிலும், சிறுபறை கொட்டுதல் முன்னும், சிற்றில் சிதைத்தலைப் பின்னுமாகக் குறிப்பிடப்பட் டுளது. இம் முறைக்குத் தக்கபடி இரண்டாம் ஆண்டில் சிறுபறை முழக்கலும், மூன்றாம் ஆண்டில் சிற்றில் சிதைத்தலும் உரைக்கப்படும் என உணர்க.
(இதற்கு மாறாக, சிற்றில் சிதைத்தலை முன்னும், சிறுபறை கொட்டலைப் பின்னுமாக வந்த வழக்காறும் உளது; "காப்பொடு செங்கீரை தால்சப் பாணி, யாப்புறு முத்தம் வருக என்றல் முதல், அம்புலி சிற்றில் சிறுபறை சிறு தேர், நம்பிய மற்றவை சுற்றத் தளவென, விளம்பினர் தெய்வ நலம்பெறு புலவர் ''
என்பது பன்னிரு பாட்டியல்; இங்ஙனம் கொள்ளும் இடத்து, சிற்றில் இரண்டாம் ஆண்டிலும், சிறுபறை மூன்றாம் ஆண்டிலும் நிகழும் என்க.)

75. [1]கணங்கொ ளசுரர் [2]கடிநகரின் [3]கன்னி
      மதிலோ அதைச்சூழ்ந்த
[4]கலிக்கு முதலை [5]மகரமராக் 6கஞலி
      யாழ்ந்த [7]பேரகழோ
வணங்கு மடியார் தலையிலயன் வகுத்த
      விதியோ இனியவர்பால்
வருத்தும் பிறவி தரும்பொருட்டு வளரா
      நின்ற வினைமலையோ
[8]பிணங்கி யவரைப் பிணிக்கவரும் பெரிய
      எருமைப் [9]பரியமனர்
[10]பிறங்கன் மார்போ பெருநரகக் குழியோ
      தேவர் சிறைக்கதவோ
மணங்கொள் கமலச் சேவடியால் மகளிர்
      சிற்றில் சிதையேலே
வரதா சாமி மலை முருகா மகளிர்
      சிற்றில் சிதையேலே.

[1]. கணம் - கூட்டம். [2]. கடி - காவல். [3]. கன்னி - அழியாத கட்டுக் கோப்பு. [4]. கலிக்கும் - மிடுக்குடன் ஆரவாரம் செய்யும். [5]. மகரம் - சுறா மீன். 6. கஞலி - நிறைந்து. [7]. பேரகழ் - பெரிய அகழி. [8]. பிணங்கி - மாறுபட்டு. [9]. பரி - ஊர்தியான கடா. [10]. பிறங்கல் - மலை.
----------------------------------------
(பொ - ரை.) பெருந்திரளாகச் சேரும் அவுணரது (பெருங்) காப்பமைந்த (மாபெரும்) நகரின் அழியா மதிலோ?
அம்மதிலைச் சூழ்ந்துள்ள மோதி ஆரவாரிக்கும் முதலைகளும், (சுழற்றியடிக்கும்) சுறா மீன்களும், (படர்ந்து வரும்) பாம்புகளும் நிறைந்து ஆழ்ந்த பெரிய அகழியோ?
வணக்கம் செய்யும் அடியவர் சிரத்தில் வேதன் எழுதிய விதி எழுத்தோ?
இனி அவர்கள் இடத்தில், தளரச் செய்யும் பிறவியைத் தரும் பொருட்டு, வளர்ந்து நின்ற (மாபெரும் ) கன்ம மலையோ?
மாறுபட்டு அந்த அடியவர்களை (க் கால பாசத்தால்) இறுக்கிக் கட்ட வரும் வளர்ந்த எருமை வாகனனான இயமனது மலை போல் உயர்ந்த மார்போ? பருமை நரகப் பள்ளமோ? (அவுணர் சினந்து,) வானோரை யடைத்து வைத்த சிறைக் கதவோ?
மணம் கமழ் கமலம் போன்ற திருவடியால், (எம்) சிறு வீட்டைச் சிதைத்திடாதே; வரம் வழங்கும் வள்ளால்! (முதன்மைச்) சுவாமிமலை முருகா! இளம் சிறுமிகள் (நாங்கள் எழுப்பிய) சிறு வீட்டைச் சிதைத்திடாதே, (எ - று)
அசுர மதியாயின், அகழி யாயின், விதிக்கும் பிரமன் விதியாயின், மாபெரும் வினை மலையாயின், மகத்தான இயமன் மார்பாயின், கோணை நரகக் குழியாயின், ககனரை யடைத்த சிறைக் கதவாயின், கடுஞ்சினம் மிக்கு உனது தாள்வலியைக் காட்டலாம்; இது உன் பக்தைகளான சிறுமியர் கட்டிய மண் வீடு ஐயா! இது சிறு வீடு; அழகிய இதனை அழித்திடாதே என்றபடி.
வாய்த்த ஆத்மீக வாழ்க்கை வளர வேண்டும்; பேறான அதன் மூலம் நாங்கள் அமைதி பெற வேண்டும்; ஆநந்தம் கொள்ள வேண்டும்; இப் பிறவியின் ஆயுள் இவ்வளவுதான் என்று, இடையில் குறுக்கிட வேண்டா; வீணான அழிவு வேண்டா; ஆக்கம் தா பிரபோ என்று அலறியபடி.
சிற்றில் பருவத்தில் இச்சிந்தனை வேண்டும்; அப்போதுதான் இப்பருவ அருமை தெரிதலுறும். (75)
---------------

76. [1]அனந்தா கமவே தங்களுமற் றரிய வேறு கலைக்[2]குழுவும்
      [3]அடிகேள் நின்சே வடிபயில அமைந்த வழியா மென்பர் அவை
தினந்தாம் பயின்று புலனடக்கித் தியானம் புரியும் யோகியர்மெய்ச்
      சிந்தை தானும் திருவடிக்குத் திருவா லயமாச் செப்புகின்றார்
மனந்தா னுருகி மலர் தூவி வாழ்த்து மடியார் பயிலுமிடம்
      மனமும் கையும் மணிநாவும் வள்ளல் விளையா[4]டரங் கென்பர்
சினந்தான் பெருக வழித்தடையோ சிறியேம் சிற்றில் சிதையேலே
      திருவே ரகம்வாழ் குருமணியே சிறியேம் சிற்றில் சிதையேலே.

[1]. அனந்த - அளவிலாத. [2]. குழ - கூட்டம். [3]. அடிகேள் - ஆதிமூலனே; விளியுருபு ஏற்ற பெயர். [4]. அரங்கு - சபை.
--------------------------------
(பொ - ரை.) அளவிலாத ஆகமங்களும், வேதங்களும், மற்றும் உள்ள அருமையான (தூய) கலைகளின் தொகுதிகளும்; பிரபோ! உனது திருவடிகளை எண்ண அமைந்த வழி என்பர்.
(பயனான) அந்நூற்களை நாள்தோறும் பயின்று, ஐம்புலச் சேட்டைகளை அடக்கி, (அத்திருவடிகளைத்) தியானிக்கும் (மேலான) யோகிகளின் மெய்யுள்ளம், (அத்) திருவடிகட்குத் திருக்கோயில் என்பர்.
மனம் உருகி, மலர்கொண்டு அர்ச்சித்து, (உன்னை) வாழ்த்தும் அடியார் வாழிடமும், (மதிமிகும் அவர் தம் ) மனமும், திருக்கரமும், (நலமிகும்) அழகிய நாவும், வள்ளலாம் நீ (இருந்து) விளையாடும் (இன்பச்) சபை என்று, (குறிப்பொடு மேலோர்) கூறுகின்றனர்;
வரும் வழியில், (எம் சிற்றில், உனக்குச்) சினம் வளரத் தடையாயுள்ளனவா? (அப்படி யில்லையே!) சிறியேம் (கையால் இழைத்த) சிறு வீட்டை, (உன் சிறந்த திருவடியால்) சிதைக்காதே!
திருவேரகத்தில் எழுந்தருளிய குருமணியே! (நீ) சிறுமியர் சிற்றிலைச் சிதைத்திடாதே, (எ - று).
அருள் நூற்கள் யாவும், உன் திருவடிக் கீழ் உள. அதனுடன், இன்ப அடியார் இடந்தோறும் இருக்கின்றாய்; அவர்கள் எண்ணும் மனத்தில், இறைஞ்சு கரத்தில், ஏத்தும் வாக்கில், விமலா ! நீ இருந்து விளையாடுகின்றாய்.
வித்தகச் சிறு வீடு கட்டி, நாங்கள் விளையாடுகின்றோம்; நாங்கள் பயனான உன் பக்தைகள். தாராளமான உன் வழிக்கு அவை தடையல்ல. ஆக்கம் அளிக்கும் திருவடிகளால், அழிவு செய்யாதே என்று வேண்டியபடி.
"அநந்தா வை வேதா''
என்பது சுருதி.
வேதம் பொது; ஆகமம் சிறப்பு. அவைகளின் உறுப்புகள் பிற அருள் நூற்கள். அந் நூற்கள், உன் திருவடிகளை நினைக்க வழிசெய்வன. அந்நூற்களைக் கற்றும் கேட்டும், விரக்தி மேற் கொண்டார் உள்ளமே உன் பெருங் கோயில். அடியார் இடம் நீ வாழும் இடம். அவர் அங்கங்கள் உன் விளையாட்டு அரங்கு என்னும் செய்தியை, எண்ணுநர் உளங்கள் இளகல் பெறும்.
"உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பே ஆலயமாம்
வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே''
எனும் சாத்திரமும்,
"வென்று ஒன்றும் அன்பர்
அங்கம் பொருந்தும் அழகோனே''
எனும் திருப்புகழும், இங்கு நினைவிற்கு வருகிறது அல்லவா?
வித்தக அடியவர் திருவுளத்தில், திருக்கரத்தில், திருநாவில் விமலன் இருந்து விளையாடுகின்றான் என்பது, சால்பு மிக்க ஒரு சமிக்ஞை. ஊன்றி இதனை உணர்பவரே உத்தமர்; ஆம். அவ்வளவுதான் அறிவிக்க முடியும்! ([7]6)
------------

77. [1]காலைப் பருதி பலகோடிக் [2]கதிர்போ லெழுந்த பேரொளியாற்
      கண்கள் கூகித் தலைகவிழ்ந்து கருத்தில் நினைந்தே யிருந்ததலால்
[3]கோலக் குமரா நின்வருகை குறித்துக் கண்டும் அவமதித்துக்
      கும்பி டாமல் இருந்தேமோ குறுகி நின்று நீமுறுவல்
[4]பாலிற் பொழியு நிலவொளியைப் பருகும் [5]பறவை யானேமால்
      பணிந்து சிறுசோ றன்பாகப் படைத்து விருந்து 6புரந்திடுவேம்
[7]ஆலைப் பாகே கற்கண்டே அடியேம் சிற்றி லழியேலே
      அணியே ரகம்வாழ் குருமணியே அடியேம் சிற்றி லழியேலே.

[1]. காலைப் பருதி - உதய சூரியன். [2]. கதிர் - ஒளிக் கற்றை. [3]. கோலம் (இயற்கையும்) செயற்கையுமான பேரழகு. [4]. பாலில் - பால் போல். [5]. பறவை - சந்திரமுகி எனும் பறவை. 6. புரந்திடுவேம் - ஏற்றுப் போற்றுவம். [7]. ஆலை - கரும்பாலை.
--------------------------------------------
(பொ-ரை.) உதய பரிதியின் பலவான ஒளிக்கற்றை போல் எழுந்த (உன் திருமேனியின்) கனத்த ஒளியால் கண்கள் கூசி, தலை குனிந்து, (எமது) உள்ளத்தில் (உன் திருவுருவை) நினைந்தே இருந்ததன்றி, அழகிய குமரா! (பயனான) உனது வருகையை ஊன்றிப் பார்த்தும் அவமதித்து (க் குவித்த கைகளால்) கும்பிடாமல் இருந்தேமா?
(நிமல நினை) அணுகி நின்று, நீ புன்னகை மூலம் பால்போல் பொழியும் நிலவொளியைப் பருகும் பறவை ஆயினேம்;
பணிவு காட்டி, சிறு சோற்றை அன்பாகச் சமைத்து, (கனிந்த) விருந்து ஏற்றலைக் காப்பாற்றுவோம்; (பயனான) ஆலையில் விளையும் பாகே! கற்கண்டே! அடியேங்கள் சிற்றிலை யழித்திடாதே;
அழகிய திருவேரகத்தில் எழுந்தருளிய குருமணியே! அடியேங்கள் சிற்றிலை யழித்திடாதே, (எ - று).
"உததிமிசை கடவுமர கதவருண குலதுரக
உபலளித கனகரத சதகோடி சூரியர்கள்
உதயமென யுகமுடிவின் இருளகல -
ஒரு சோதி வீசுவது''
உன் திருமேனி. அதனால் கண் மூடினோம்; அவமதித்தது அல்ல என்பது குறிப்பு.
சந்திர கிரண அமுதைப் பருகி, உயிர்வாழ் பறவை சந்திரமுகி என்ற பெயர் பெறும். கோலக்குமரா! இனிய நின்னை எண்ணுவோம்; குவித்த கைகளால் கும்பிடுவோம்; பயன் தரு புன்னகை ஒளியைப் பருகுவோம்; உன் அடியவரான விருந்தினரை உபசரிப்போம்; இவைகளைச் செய்து கொண்டிருக்கும் எங்கள் அருமைச் சிறு வீட்டை அழித்திடாதே என்று வேண்டியபடி.
பாகே! கற்கண்டே! குருமணியே எனும் விளி, கண்ணிற்கும் நாவிற்கும் கருத்திற்கும் பயன் தருவோன் எனும் குறிப்பு. (77)
--------------

78. களித்த அசுரர் களித்தடர்க்கக் கண்டும் [1]மண்டின் கணைவலிய
      கல்லாம் வில்லிற் றொடுத்தெய்யுங் [2]கணக்கையறியா தவர்முன்[3] பல்
இளித்து நின்றான் மகனென்னேம் இனிய கணவன் விடமுண்ண
      ஏகிப் [4]புலவன் மகளாய்ச்சோ [5]றினிதட் டிட்டாள் சேயென்னேம்
குளித்த 6மடவார் புடவைகொடு குருந்த மேறுங் [7]கோமாளிக்
      கூத்தன் மருகென் னேம்குறத்தி குற்றே வலனென் றினியுரையேம்
அளித்தண் கமலச் சேவடியா லரசே சிற்றி லழியேலே
      அணியே ரகம்வாழ் குருமணியே அடியேம் சிற்றி லழியேலே.

[1]. மண் தின் கணை - மண்ணுண்ட (திருமாலாகிய) பாணம். [2]. கணக்கை - வகையை. [3]. பல் இளித்து நின்றான் - சிரித்து நின்ற சிவன். [4]. புலவன் - கவிராஜ பண்டிதர். [5]. இனிது அட்டு இட்டாள் - இனிதாகப் பாகம் செய்து பரிமாறிய அன்னபூரணி. 6. மடவார் - கோபிகைகள். [7]. கோமாளிக் கூத்தன் – கண்ணன்.
--------------------------------
(பொ-ரை.) கள்வெறி கொண்ட அசுரர்கள் களி மிகுத்து மோதலைக் கண்டிருந்தும், மண்ணுலகை உண்ட (மாதவனாகிய) கணையை, வன்மை கொண்ட (மேரு) மலையாம் வில்லில் தொடுத்து விடும் வகையை அறியாமல், அந்த அசுரர்முன் சிரித்து நின்ற சிவனார் சிறுவன் என்று சொன்னோம் இல்லை;
இனிய கணவர் விடம் பருக, (அவரைப் பிரிந்து) சென்று, (வீரைக் கவிராஜர் எனுமொரு) புலவர் மகளாய், (காசி வரை அவரைத் தொடர்ந்து சென்று, சென்ற இட மெல்லாம் அவர்க்கு,) இனிது சோறு சமைத்துப் பரிமாறிய அன்னபூரணியின் மைந்தன் என்று அறிவித்தோம் இல்லை;
(பொய்கையில்) குளித்துக் கொண்டிருந்த கோபிகைகளின் சேலைகளைக் கவர்ந்து கொண்டு, குருந்த மரம் ஏறிக் குந்தியிருந்த கோமாளிக் கூத்தனான மாலின் மருகன் என்று (கூற ) வாய் திறந்தோம் இல்லை;
குறமகளான வள்ளியாரின் குற்றேவல் செய்பவன் என்று, இனிமேல் சொல்ல மாட்டோம்;
அருளுடைய குளிர்ந்த தாமரை போன்ற திருவடிகளால், அரசே! (எம்) சிறு வீட்டைச் சிதைத்திடாதே!

.
திருவேரகத்தில் வாழும் குருமணியே! அடியேங்கள் சிற்றிலை அழித்திடாதே, (எ - று)
மண்ணைத் தின்னும் கணையை, கல்லாகிய வில்லில் பூட்டி விடும் கணக்கு என்ன? அக்கணையைவிட அறியாது, பல்லிளித்தார் சிவனார் என்பது பரிதாபம். கணவர்க்குச் சமைத்திட்டால், அவர் கடுவுண்ண மாட்டாரே! அது செய்யாது, பாவலரைப் பின்பற்றி, அவர்க்குச் சமைத்துப் பரிமாறுவது என்ன தர்மம்? மங்கையர் பலர் நிர்வாணமாக, அவர்தம் சேலைகளைத் திருடி மரமேறிக் கொள்வது கோமாளித்தனம். தந்தையும் தாயும் அம்மானும் மோசம்; நீயும் குறத்தி குற்றேவலன்;
ஐயய்ய; அது எப்படி யாயினும் ஆக! அது பற்றி ஏதேனும் வாய் திறந்தேமா? எங்கள் மேல் ஏதேனும் தப்புளதா? சிறுமியர் நாங்கள் சிறுவீடு கட்டி, சிறு சோறு சமைத்து விளையாடுகிறோம்.
அதை அழிக்க நினைப்பது அநியாயம்; வேண்டாம். நீ எங்கள் ராஜா அல்லவா! எங்கள் குரு ஆயிற்றே! மாணிக்கமே ! எங்கள் சிறு வீட்டைச் சிதைக்காதே அப்பா! என்று, விநயம் காட்டி வேண்டியபடி.
      சொல்லுக் கினிய கழுக்குன்றரே!
      உமைச் சொல்ல என்றால்,
      அல்லல் பிழைப்புப் பிழைத்து விட்டீர்;
      முப்பு ராதியர்மேல்,
      வில்லைக் குனித்தெய்ய மாட்டாமல்,
      நீரந்த வேளையிலே
      பல்லைத் திறந்து விட்டீர் இதுவோ
      நும் படைத்தொழிலே.''
எனும் தனிப் பாடலை, முதலடி நினைவூட்டல் அறிக: இது பழிப் புகழ்ப்பணி.
சக்தி உபாசகர் கவிராச பண்டிதர். காசிக்குச் சென்று, அங்கு எழுந்தருளிய அன்ன பூரணியை, அவர் சேவிக்க அவாவினார். புனித ஒரு நாளன்று புறப்பட்டார்.
வழியிடைப் புலவர் பசியால் வருந்தாதபடி, அவர் மகள் போல் உருக்கொண்ட அம்பிகை, அங்கங்குப் பயனான உணவு சமைத்துப் பரிமாறினள் என்னும் வரலாறு இங்கு எண்ணத் தகும். (78)
---------------

79. [1]எம்மா யிழைக்கும் சிற்றிலெலா மெந்தை யழித்துக் கூத்தாட
      எள்ளத் தனையும் சினவாம லினிது தாள மிடுகின்றாள்
[2]தம்மா தரவா லிம்மடவார் தாமு மெமக்கத் தகையரெனத்
      தவறு யெண்ணிக் கொண்டனையாம் தண்ட மிடத்தா யரையழைப்போம்
சும்மா இருக்கும் படிஎவர்க்கும் சொல்ல வல்லாய் உனக்கதனைச்
      சொல்வா ரிலைநீ தகப்பனுக்குச் சுவாமி யென்ப துலகறியும்
அம்மா [3]குறும்பர் குலத்தரசே அடியேம் சிற்றி லழியேலே
      அணியே ரகம்வாழ் குருமணியே அடியேம் சிற்றி லழியேலே.

[1]. எம் ஆய் - எம் அன்னை. [2]. தம் ஆதரவால் - தமது இயற்கைப் பேரன்பால். [3]. குறும்பர் - குறும்பு செய்யும் சிறுவர்; மலைவாணராகிய குறவர்.
ரசபதி எழுதிய விரிவான இவ்வரலாற்றை, அமிர்தவசனி மாத இதழில் அறிக.
--------------------------------------------
(பொ-ரை.) எம்முடைய அன்னை இழைக்கும் சிற்றில் அனைத்தும், எமது அத்தரான சிவபிரான் அழித்து (அவள் முன்) கூத்தாட, (அதற்காக அவரை) எள்ளளவும் வெகுளாமல், (அவர் முன்) இன்பத்தொடு) தாளம் இடுகின்றாள்;
(அதுபோல்) இச்சிறுமியரும், தம் (ஆரா இயற்கைப்) பேரன்பால், எம் விஷயத்தில் (என் தாயின்) அதே தகுதியராகித் தாளம் போடுவர் என்று, (இன்று நீ) தவறாக எண்ணிக் கொண்டனை; (இந்த அட்டூழியம் செய்யும் உனக்குத் தண்டனை தர, நாங்கள் (எங்கள்) தாயரை அழைப்போம்;
சும்மா இருக்கும்படி எவர்க்கும் (நீ) சொல்ல வல்லவன்; உனக்கு அவ்வுபதேசத்தை உரைப்பார் இல்லை; நீ தகப்பனுக்குச் சாமி என்பதை உலகம் அறியும்.
அம்மா! குறும்பு செய்யும் (சிறுவர்) கூட்டத்து அரசே! அடியேங்கள் சிற்றிலை யழித்திடாதே;
திருவேரகத்தில் வாழும் குருமணியே! அடியேங்கள் சிற்றிலை அழித்திடாதே, (எ - று).
அம்மா சிற்றிலை இழைக்கலாம்; அப்பா அழிக்கலாம்; அழித்த பின் ஆட்டம் போடுவாரேல், தானும் தாளம் போடுகிறாள் அந்தத் தாய். காரணம் என்ன? அழிந்த சிற்றிலை, அம்மா மீட்டும் ஆக்கும் ஆற்றல் உடையவள்; எங்கள் வாழ்க்கைச் சிற்றிலை நீ அழித்தால், அதை மாற்றி அமைக்க எம்மால் ஆவதில்லை. சும்மா இரும் என்று ஊர்க்கு உபதேசம் செய்வை! அது உன்னளவில் அமையாதோ என்பது இகழ்ச்சிக் குறிப்பு.
குறும்பர் - மலைவாணரான குறவர் எனினுமாம்.
‘சுற்று நெடு நேமிச் சுவர்க்கிசைய எட்டுச்
      சுவர்க்கால் நிறுத்தி, மேருத்
தூணொன்று நடுநட்டு, வெளிமுகடு மூடி,யிரு
      சுடர்விளக் கிட்டு , முற்ற
எற்றுபுன லிற்கழுவு புவனப் பழங்கலம்
      எடுத்தடுக் கிப்புதுக்கூழ்
இன்னமுதம் சமைத்திட், டன்னைநீ பன்முறை
      இழைத்திட, அழித்தழித்தோர்
முற்றவெளி யில்திரியும் மத்தப் பெரும்பித்தன்
      முன்னின்று தொந்தம் இடவும்,
முனியாது வைகலும் எடுத்தடுக்கிப், பழைய
      மூதண்ட கூடம் மூடும்
சிற்றில்விளை யாடுமொரு பச்சிளம் பெண்பிள்ளை,
      செங்கீரை யாடியருளே!
தென்னற்கும் அம்பொன்மலை மன்னர்க்கும் ஒரு செல்வி
      செங்கீரை யாடியருளே''
எனும் மீனாட்சிப் பிள்ளைத் தமிழ், அழிவையும் ஆக்கத்தையும் அறிவிப்பதை ஓர்க. ([7]9)
----------

80. [1]அன்ன மேறப் படைத்தவன்பா லன்பாய் வாழ அறியாமல்
      அவனேர் தலையைக் களைந் [2]தைய மதிலே ஏற்றும் அருந்துவரை
[3]மன்னன் [4]பருப்பை மதியாமல் வருந்தக் குருதி வடிப்பித்[5]துன்
      மத்தனாகிச் சுடலையினில் 6வாழ்வான் மகன்நீ மடமகளிர்
பொன்னின் பொடியும் துகிர்க்கொடியும் பொல்லா மணியும் புனைசிற்றில்
      புகுந்தங் கவர்தந் திடுசோறு புசிக்கா தழித்தல் வியப்பன்றே
தின்னப் [7]பலகா ரம்பெறுக சிறியேஞ் சிற்றில் சிதையேலே
      திருவே ரகம்வாழ் குருமணியே சிறியேஞ் சிற்றில் சிதையேலே.

[1]. அன்னம் - சோறு; அன்னப் பறவை. [2]. ஐயம் - பிட்சை. [3]. மன்னன் - கண்ணன். [4]. பருப்பை - பருப்பினை; பெருமையை. [5]. உன்மத்தன் - பித்துப் பிடித்தோன். 6. வாழ்வான் - வாழும் சிவபிரான். [7]. பலகாரம் - சிற்றுண்டி.
--------------------------
(பொ-ரை.) அன்னத்தை மிகுதியாக இட்ட பிரமனிடத்து அன்பாய் வாழ அறியாமல், அவனுடைய (நான்கு தலைகளில்) ஒரு தலையைக் கிள்ளி, அத்தலையோட்டில் பிச்சை ஏற்றும்;
அரிய துவாரகையரசரான திருமாலின் பருமையைப் பொருட்படுத்தாமல், (அவர் திருமேனி) வருந்துமாறு குருதி வடியும்படிச் செய்து, பித்தனாகி, மயானத்தில் வாழ்வான் ஆகிய சிவன் மகன் நீ;
பொன் பொடியும், பவளக் கொடியும், துளை படாத மணிகளும் (ஆன இவைகளால்,) பொலிவு தோன்றச் சிறு பெண்கள் அமைத்த சிறு வீட்டிற் புகுந்து, அங்குள அவர்கள் (உவந்து) தரும் சோறு உண்ணாமல், (வீணாம்படி) அழித்தல் வியப்பல்ல.
(அப்பன் இயல்பு, மகன் பாலும் தப்பாது காணப் பெறுகிறது.) தின்பதற்கு (வேண்டுமேல்,) சிற்றுண்டிகளைப் பெற்றுக் கொள்; சிறுமியரான எங்கள் சிறு வீட்டைச் சிதைக்காதே;
திருவேரகத்தில் வாழும் குருமணியே! சிறியேம் சிறு வீட்டைச் சிதைக்காதே, (எ - று).
அன்னம் ஏறப் படைத்தவன் என்பதற்கு, மிகுதியான உணவு தயாரித்தவன் எனவும், ஏறுதற்கு அன்ன வாகனம் உடையவன் எனவும் இரு பொருள் தோன்றலை யறிக.
பருப்பு என்பது பருமை எனவும், (அன்னத்திற்குப் பின்) பருப்பு எனவும் பொருள்படும்.
அன்ன வாகனனொடு வாழலாம். அது செய்யாமல் அவர் தலையைக் களைந்தார். திருமால் வியாபகர்; மன்னரான அவர் பெருமையை மதித்திலர். பிரமன் மண்டை ஓட்டில், நெடுமால் குருதியை நிறைத்தார். அதையேந்தி, ஆவேசம் கொண்டு சுடலையில் ஆடுகிறார். அவர் மகன் தானே நீ!
தந்தை செய்தது பேரழிவு; சிறுவர் நீர் செய்வது சிற்றழிவு என்பது குறிப்பு. (80)
------------

81. [1]மலையின் மகட்கு மகனானாய் [2]வாரி மகட்கு மருகானாய்
      வலிய தந்தை யுலகழிப்பான் மாமன் [3]பேரா வைகுண்டன்
[4]சிலையைச் [5]சிறைகொய் 6கொடியோனும் சினவே டுவரும் பெண் கொடுத்தோர்
      செகத்தில் வலிமைச் சுற்றமுளாய் செம்மை நெறியிற் செல்லாயோ
மலியும் வலிமை வாய்த்தோர்கள் வகுத்த வழியே வாய்க்காலோ
      மகளி ரிடந் [7]தாளாண்மையினை மைந்தர் காட்டல் மாண்பாமோ
[8]அலகில் வளஞ்சேர் புனனாடா அடியேஞ் சிற்றி லழியேலே
      அணியே ரகம்வாழ் குருமணியே அடியேஞ் சிற்றி லழியேலே.

[1]. மலை - இமயமலை. [2]. வாரிமகள் - திருமகள். [3]. பேரா - அழியாத. [4]. சிலையை - மலையை. [5]. சிறை கொய் - இறகுகளை அறுத்த. 6. கொடியோன் - இந்திரன். [7]. தாளாண்மை - முயற்சி; திருவடி வீரம். [8]. அலகில் - அளவில்லாத.
---------------------------
(பொ - ரை.) மலை தந்த மகளான பார்வதிக்கு மைந்தனாயினை; கடல் தந்த செல்வியான திருமகட்கு மருகன் ஆயினை; வன்மையுடைய (உன்) தந்தையோ, சர்வ சம்மாரம் செய்பவன்; (வாழும் உன்) அம்மானோ, (என்றும்) அழியா வைகுண்டன்; மலைகளின் இறகுகளைப் பறித்த வச்சிரக் கொடியனான இந்திரனும், பெருங் கோபிகளான வேடுவர்களும், (உனக்குப்) பெண் கொடுத்தவர்கள்;
உலகில் உரம் படைத்த உறவினரை உடையவன் நீ; (ஆதலின்,) சிறந்த வழியைப் பின்பற்றிச் செல்லாயோ? வளரும் வலிமை வாய்த்தவர்கள், வகுத்த வழியே வாய்க் காலோ? இளம் சிறுமியரிடம், கால்களின் ஆண்மையைக் காட்டுவது, (சிறந்த) மைந்தர்க்குச் சிறப்பாமோ?;
அளவிலாத வளம் அமைந்த காவிரி பாயும் சோழவள நாடனே! அடியேங்கள் சிற்றிலை யழித்திடாதே;
திருவேரகத்தில் வாழும் குருமணியே! அடியேங்கள் சிற்றிலை யழித்திடாதே, (எ - று).
மலையின் மகள் தாய்; கடலின் மகள் மாமி. பாரை யழிப்பவன் பரமபிதா. அம்மான் உடல் பருத்தவன். முதல் மாமனார் கொடியவர். அடுத்த மாமனார் வேடுவர். உரம் மிக்க அடியவர் உறவினர். அதனால் நீ, சிறந்த நேர் வழியிற் செல்ல மாட்டாய். உத்தமர் வழி உனக்கு எப்படித் தோன்றும்? வல்லான் வகுத்ததே வாய்க்கால் ஆயது உன் வரலாறு.
கால் வலிமையைப் பெண்களிடம் காட்டுவது கௌரவமா? புனல் நாடா! குருமணியே! வேண்டுகிறோம் ; சிற்றிலைச் சிதைக்காதே என்று வேண்டியபடி.
மலை - மலைப்பை விளைவிப்பது எனும் காரணப் பொருட்டாய், இமயமலையை உணர்த்தியது.
வாரி மகள் - பாற்கடலில் எழுந்த அமுதொடு பிறந்த திருமகள். அளவிலா ஆற்றலை யுடைய அமலனாதலின், ‘வலிய தந்தை' என்றார்.
வைகுண்டன் - குண்டாகார மானவன்; வைகுந்த வாசன் எனும் இரு பொருளையும் பயந்தது.
படபடத்து மலைகள், ஒரு காலத்தில் வானில் பறந்தன; அவைகளின் இறகுகளை, இந்திரன் வச்சிராயுதத்தால் சேதித்தான்; அதை, 'சிலையைச் சிறைகொய் கொடியோன்’ எனலிற் பெற வைத்தார்.
வச்சிராயுதம் கையாயுதம்; அதுவே அவனது வெற்றிக் கொடி; அதனால், அவன் மலையின் இறகுகளைக் கொய் கொடியோன் எனப் பெற்றான். மற்று, கொடியோன் என்பது, பெருங் கொடுமையாளன் எனும் குறிப்புமாம்.
‘வல்லான் வகுத்ததே வாய்க்கால் எனும் பெரிய
வழக்கிற்கு இழுக்கும் உண்டோ '
எனும் தாயுமானாரை, ஐந்தாம் வரி நினைவூட்டல் அறிக.
தாளாண்மை எனுமிடத்து, இடையறா முயற்சியுடைமை பெண்களிடந்தானோ என்ற பொருள் கொள்க; மற்று, காரிகையரிடந்தான் கால்வலி காட்டுவதோ? வலியுடை ஆடவர்க்கு இது வழக்காமோ எனினுமாம். (81)
----------

82. வேத முதலாம் பதினான்கு வித்தை மணக்கும் சிவாகமத்தின்
      மெய்ம்மை மணக்கு மிருதிகளின் விதமு மணக்கும் [1]விபுதர்முடிப்
[2]போது மணக்கும் ஞானியர்மெய்ப் [3]போத மணக்கும் யோகியர்கள்
      [4]புந்தி மணக்கும் கிரியையர்கைப் பூவு மணக்கும் சரியையர்செய்
[5]கோதில் பணிகள் மணக்குமுளங் குழைந்து பாடுங் கவிஞர்சுவை
      குறையாச் செம்மை நாமணக்குங் குளிர்பூந் தண்டைத் திருத்தாளால்
மாதர் கொழிக்கு மண்மணக்க வரதா சிற்றி லழியேலே
      வளவே ரகத்தில் வாழ்சுப்ர மணியே சிற்றி லழியேலே.

[1]. விபுதர் - தேவர்கள். [2]. போது - மலர். [3]. போதம் - தெளிவு. [4]. புந்தி - உள்ளம். [5]. கோது இல் - குற்றம் இல்லாத.
-----------------------------
(பொ-ரை.) வேதம் முதலான பதினான்கு வித்தை மணக்கும்; (மேலான) சிவாகமங்களின் மெய்ம்மை மணக்கும்; ஸ்மிருதிகளின் தொகையும் மணக்கும்;
தேவர்களின் திருமுடி மலர் மணம் வீசும்; ஞானிகளின் மெய்ஞ்ஞானத் தெளிவு மணக்கும். (உயர்) யோகிகளின் உள்ளம் மணக்கும்; கிரியைப் பணியரது கைம்மலரும் மணக்கும்; சரியையாளர் செய்கிற குற்றம் இல்லாத பணிகள் மணக்கும்;
உள்ளம் நெகிழ்ந்து (உருகிப் பாடும் பாவலர் சுவை குறையாத செம்மை நா மணக்கும் குளிர்ந்த மென்மைத் தண்டையணிந்த திருவடிகளால், மாதர்கள் கொழிக்கும் மண்ணும் மணக்க, வரம் வழங்கும் பெருமானே! (எம்) சிறு வீட்டைச் சிதைக்காதே;
வளமுடைய திருவேரகத்தில் வாழும் சுப்ரமண்யா! (எம்) சிறு வீட்டைச் சிதைவு செய்யாதே, (எ - று).
வேதம் நான்கு; வேத அங்கம் ஆறு; மீமாம்சை தருக்கம், புராணம், தரும் நூல் ஆகிய உப அங்கங்கள் நான்கு. இவைகளைத் தொகை செய்து பதினான்கு வித்தை என்றார் பண்டையோர். ஸ்மிருதி - மிருதி யெனப் பெற்றது.
வித் - ஞானம்; அதன் சொரூபத்தை வித்தை என்றார். சிவாகமங்கள், முப்பொருள் நிச்சயம் சிறக்க உரைக்கும். ஆதலின், அவைகளின் மெய்ம்மை மணக்கும் என்றார்.
வித்தைகளிலும், ஆகமங்களிலும், ஸ்மிருதிகளிலும், முன் வந்து வணங்கும் வானோர் முடிகளிலும், ஞானிகளின் தெளிவிலும், உத்தம யோகிகளின் உள்ளத்தும், சரியை கிரியைர் சார்தரு தொண்டிலும், பாவலர் நாவிலும் விளையாடும் பாதத்தான் குமாரபரன். அவைகளின் மணம் கமழும் அவனது அருமைத் திருவடிகள் என்று அறிவித்தபடி.
மணக்கும் திருவடிகளால், நாங்கள் சிற்றில் இழைக்கக் கொழித்த மண்ணும் மணக்கச் சிதைக்க வேண்டுமா என்று விண்ணப்பித்தபடி. (82)
--------------

83. எங்கும் கண்கள் [1]கர[2]சரணம் எண்ணி லாத உளனென்றே
      இசைக்கு மறையின் முறையிருந்தா லெளியேம் பயனெங் ஙனமுறுவேம்
இங்கு முகங்க ளிருமூன்றாய் இரட்டி மலர்க்க ணீள்கரங்கள்
      எடுத்து வருமுன் பெருங்கருணைக் கேழை யடியேம் என்புரிவேம்
[3]பங்க மறுக்கும் பதமிரண்டே படைத்த கருணை யதிற்பெரிதாம்
      [4]பண்ணை மகளிர் செய்ததவப் [5]பயத்தாற் பலகால் படைத்திலையால்
அங்க ணரசே யானலும் அடியேம் சிற்றி லழியேலே
      அணியே ரகம்வாழ் குருமணியே அடியேம் சிற்றி லழியேலே.

[1]. கரம் - கைகள். [2]. சரணம் - அடைக்கலம் அளிக்கும் திருவடிகள். [3]. பங்கம் - பழுது. [4]. பண்ணை - மருதநிலம். [5]. பயத்தால் - பயனால்.
---------------------------------
(பொ-ரை.) எங்கும் திருக்கண்கள், திருக்கரங்கள், திருவடிகள் எண்ணிலாதன கொண்டுளன் என்றே இசைவுபட அருள் நூற்கள் உரைத்தபடி யிருந்தால், எளிய நாங்கள் எவ்விதம் பயனடைய இயலும்?
இவ்வுலகில் ஆறுமுகங்களாய், (அதற்கு) இரட்டிப்பான திருவிழிகளும், நீண்ட திருக்கரங்களும் கொண்டு வரும் உன் பெருங் கருணைக்கு, எளிமை அடிமைகளாகிய நாங்கள், யாது கைம்மாறு புரிவோம்?
சேறுபடும் குற்றங்களைச் சிதைக்கின்ற இரு திருவடிகளைக் கொண்டு வரும் அருள், (மேலுரைத்த) அதனினும் பெரிதாக எண்ணப் பெறும்;
மருதநில மாதர் செய்த மாபெரும் தவப்பயனால், (கண்களும் கைகளும் திருமுகங்களும் போலப்) பல திருவடிகளைப் படைத்திலை;
(நீ) அருள் நோக்குடைய அரசன் தான்; (நீ எதுவும் செய்யலாம்; அது உன் இயல்பு தான்;) ஆயினும், அடியேங்களது சிறு வீட்டை அழித்திடாதே;
திருவேரகத்தில் வாழும் குருமணியே! அடியேம் சிற்றிலை அழிக்காதே, (எ - று).
"எங்க ணும்பணி வதனங்கள் எங்கணும் விழிகள்
எங்க ணும்திருக் கேள்விகள்; எங்கணும் கரங்கள்
எங்க ணும்திருக் கழலடி; எங்கணும் வடிவம்
எங்க ணும்சிறந் தருள்செயும் அறுமுகத் திறைக்கே"
என்று வீரவாகு தேவர் சூரபதுமனுக்குச் சொல்லும் செய்தி, முதலிரண்டடிகளில் நினைவிற்கு வருகின்றன.
இந்த வியாபகம், அருள் ஞானிகட்கே அனுபவம். எம்மனோர்க்கும் வாழ்வாக, எல்லோர்க்கும் எளிமை தோன்ற, ஆறுமுகமும் பன்னிரு கண்ணும் கொண்டு, சேவை தரும் உன் கருணைக்கு வேறு கைம்மாறு இல்லை. சிறுமியராம் எம் பெருந்தவத்தால், பல திருவடியனாகாமல், இரு திருவடிகள் கொண்டனை.
அரசனா யிருந்தாலும் கேள்வி முறையில்லையா ? வேண்டுகிறோம். எம் சிற்றிலை யழிக்க வேண்டா என்று இறைஞ்சியபடி.
      ''முகம் ஆறினுக் கேற்ப,
      கையா றிரண்டு புரிந்தது போல்
      காலா றிரண்டு செய்யாமல்
      கருதி யிரண்டே செய்தனள்முன்
      கடையேம் செய்த நல்வினையால்;
      மெய்யா இரண்டா யிருந்தும் அவை
      விளைக்கும் குறும்பு பொறுக்கரிதால்"
எனும் திருவிடைக்கழி முருகன் பிள்ளைத்தமிழ், இங்கு நினைவிற்கு வருகிறது அல்லவா?
மறைகள் கூறியபடி எண்ணற்ற திருவடிகள் உனக்கு இருந்தால், எங்கள் சிற்றில்கள் ஒன்றேனும் தப்பிப் பிழைக்குமோ என்றவாறு. (83)
----------------

84. [1]உந்தை புத்தூர் வரு[2]பாவை ஒருத்தி மணத்தை [3]ஒருகால்முன்
     ஒழித்த [4]பவத்தால் இருகாலும் உறுத்த ஆரூர் வீதியெலாம்
முந்தை யிருளில் நடந்தலைந்த முறைமை யறியாய்ப் பலகாலும்
     முயன்று [5]பாவை பலர்க்குமணம் முடிக்கக் கருதும் வேளையிடை
வந்து சிதைத்தி யிப்பாவம் மலர்க்கால் சிவக்க எத்தனைகால்
     மகளிர் பால்நீ தூதாக வருந்தி நடக்கப் புரிந்திடுமோ
சிந்தை நினைந்து சிறியேம்செய் சிற்றில் சிதையேல் சிதையேலே
     திருவே ரகம்வாழ் முருகோனே சிற்றில் சிதையேல் சிதையேலே.

[1]. உந்தை - உம் தந்தையான சிவபிரான். [2]. பாவை (சடங்கவி சிவாசாரியார்) மகள். [3]. ஒருகால் - ஒரு சமயம். [4]. பவத்தால் - பாவத்தால். [5]. உறுத்த - (கல்லும் மண்ணும் பொத்தி) வருத்த. 6. பாவை பலர்க்கு மணம் - பொம்மைக் கலியாணம்.
------------------------------
(பொ-ரை.) உமது தந்தையான சிவபிரான், புத்தூரில் உதித்த (சடங்கவி சிவாசாரியாருடைய மகளான) ஒருத்தியின் மணத்தை முன் ஒரு சமயம் விலக்கிய பாவத் தால், (கல்லும் முள்ளும் ) இரு காலில் பொத்த, திருவாரூர் வீதி முழுதும், முதன்மையிருளில் நடந்து திரிந்த முறைமையை அறியாய்;
நாங்கள் பல தரம் முயன்று, பாவையர் பலர்க்குத் திருமணம் முடிக்கக் கருதும் சமயத்தில் வந்து, (எம் சிற்றிலைச்) சிதைக்கின்றாய்; இந்தப் பாவம், (சிறந்த உன்) திருவடி சிவக்க, எத்தனை தரம் பெண்களிடத்தில் நீ தூதாக வருந்தி நடக்கச் செய்யும் தெரியுமா ?
(இதைச்) சிந்தையில் எண்ணி, (நீ) சிறியேங்கள் அமைத்த சிற்றிலைச் சிதைக்காதே! சிதைக்காதே ஐயா!
திருவேரகத்தில் வாழும் முருகா! (எம்) சிறு வீட்டைச் சிதைக்காதே? சிதைத்திடாதே, (எ - று).
புத்தூரில் இருந்தாள் ஒரு புனிதை. மங்கையவளை சுந்தர மூர்த்திகள் மணக்கும் சமயம், மணமகனைத் தம் அடிமையென்று வாதிட்டு, அம் மணத்தைத் தடுத்தார் உன் தந்தை; அப்பாவத்தால், பரவை நாச்சியார் நம்பிகளிடம் கொண்ட ஊடல் தணிக்க, நள்ளிரவில் பலதரம் வருந்தி நடந்தார். இப்படி உன் தந்தை பட்டபாட்டை நீ உணர்ந்திலை.
நாங்கள் சிற்றில் கட்டிச் சிறுசோறு சமைத்து, பொம்மைக் கலியாணம் செய்து, குதூகலிக்க இருந்த நேரத்தில் குறுக்கிட்டாய். ஒரு மணம் தடுத்த பாவம் அதுவானால், பல மணத்தைத் தடுத்த பாவத்தால், நீ எத்தனை தரம் மாதர்பால் தூதுபோக நேருமோ?
இவைகளை யெல்லாம் எண்ணி , சிறியேங்கள் அமைத்த சிற்றிலைச் சிதைக்காதே என்று, விநயம் காட்டி விண்ணப்பித்தபடி.
உம் தந்தை - உமது தந்தை என்பதன் மரூஉ. முதலில் வந்த பாவை - சித்திரப் பாவை போன்றவள்; கண்மணிப் பாவை, கொல்லிப் பாவை போன்றவள் எனினுமாம். அவ்வளவு சிறந்த அழகியான அவள் மணத்தைத் தடுக்க, எப்படித்தான் துணிந்தாரோ அந்த இறைவர் என்பது கருத்து.
முந்தை இருள் - முதன்மையிருள்; அதாவது நள்ளிரவு. பாவை பலர்க்கு மணம் என்பதில், சிவாசாரியர் மகள் போல் சிறந்தவர்கள் எங்கள் மணமக்கள் என்று, அஃறிணையை உயர்திணையாக உவந்து உணர்ந்து உரைத்தபடி. -
'சிந்தை நினைந்து சிறியேம் செய் சிற்றில் - சிறுமியர் நாங்கள் சிந்தித்து அமைத்த சிறு வீடு எனினுமாம்.
சிற்றிற் பருவம் நிறைவெய்தியது
--------------

[9]. சிறுபறைப் பருவம்

இது, சிறுபறை கொட்டி விளையாடுதலைக் குறிக்கும் பருவம். இது பற்றிய குறிப்பு, சிற்றில் பருவத் தலைப்பில் உளது. அங்கு அதை அறிக.

85. அருமறைக ளுலகிலுள வாருயிர்ப் பக்குவ
     மனேகவித மாதலாலே
அவைபயிலு மாறுபல [1]பலநெறி [2]வகுத்தோது
     மந்நெறியி லொவ்வொன்றினைக்
குருமரபில் வருமறிஞர் விரிவாக நூல்பல
     [3]குயிற்றியுப தேசித்தனர்
[4]கோணைநெறி நேர்நெறிகள் பலவுமுடி வின்கணொரு
     கோதினெறி கூடிமுடியும்
ஒருமகிமை மிகுபெரிய நெறிசைவ நெறியதனை
     யுணருமுணர் வுடையர்சிலரே
உலகிலனை வருமிந்த உண்மைநெறி சென்றுய்க
     என்றுரைபரப்பு முறைபோல்
திருமறை முழக்கமிகு குருமலை யருட்குமர
     சிறுபறை முழக்கியருளே
சிவசமய அறுமுகவ குகபகவ வுமைசிறுவ
     சிறுபறை முழக்கியருளே .

[1]. பல நெறி - பல சமய வழிகள். [2]. வகுத்து - வகைப்படுத்தி. [3]. குயிற்றி - இயற்றி. [4]. கோணை - வளைவு.
--------------------------------
(பொ - ரை.) உலகில் உள்ள அருமை உயிர்களின் பக்குவம் பலவிதம்; ஆதலின், அவ்வுயிர்கள் பழகும்படி, அருமை மறைகள் (உயரிய) வழிகள் பலவற்றை வகுத்து உரைக்கின்றன;
குருமரபில் வரும் ஞானிகள், அவ்வழிகள் ஒவ்வொன்றும் விரிவாக விளங்குமாறு பல நூற்களை இயற்றி, (சிறக்க) உபதேசம் செய்தனர்;
சுற்றுவழி, நேர் வழிகள் பலவும், முடிவில் ஒரு குறையிலாத (முதன்மை ) வழியிற் சென்று முடியும்;
(அவ்வழிகளுள்,) ஒப்பற்ற மகிமை மிக்க பெரிய வழி, சைவ சித்தாந்த வழி;
அவ்வழியை உணரும் உணர்வினை யுடையவர்கள் ஒரு சிலரே;
உலகில் உள்ள ஒவ்வொருவரும், இந்த உள்பொருள் வழியிற் சென்று உய்தி பெறுக. என்று உரை விரிக்கும் முறைபோல், சிறந்த மறைகளின் முழக்கம் மிக்க சுவாமிமலையில் எழுந்தருளிய அருளையுடைய குமரா ! சிறுபறை முழக்கியருள்;
சிவசமய அறுமுகவா! குகா! பகவா! உமை மைந்தா! சிறுபறை முழக்கியருள், (எ - று).
"சைவம் சிவத்தொடு சம்பந்தம் என்றான்
சைவம் வளர்த்த சம்பந்த மூர்த்தி''
என்பவாகலின், சைவ சமயம் சிவசமயம் என்றாயது. மனனம் செய்ய வேண்டிய பாடல்களில் இது ஒன்று. விரித்தால் பெருகும்; ஊன்றி உணர்க.
உலோகாயதம், சௌத்திராந்திகம், யோகசாரம், மாத்யமிகம், வைபாடிகம், ஆருகதம் எனும் புறப்புறச் சமயம் ஆறும்;
தர்க்கம், மீமாஞ்சை, ஏகான்ம வாதம், சாங்கியம், யோகம், பாஞ்சராத்திரம் எனும் புறச்சமயம் ஆறும்;
பாசுபதம், மகாவிரதம், காளாமுகம், வாமம், வைரவம், ஐக்கியவாதம் எனும் அகப்புறச் சமயம் ஆறும்;
பாடாண வாத சைவம், சங்கிராந்த வாத சைவம், அவிகார வாத சைவம், பேதவாத சைவம், நிமித்த காரண பரிணாம வாத சைவம், சுத்த சைவம் எனும் அகச் சமயம் ஆறும்,
'பலநெறி வகுத்து ஓதும்'
என்பதில் பெறப்பட்டன. (85)
--------------

86. வருமுறை யுடற்குளுயிர் சுகதுக்க முறுமுறை
     மடிந்துமன் னுயிர்போமுறை
மற்றுமுட லுற்[1]றிடும் பைப்படா வகையொன்று
     மதியாமல் வாழு[2]மடவோர்
ஒருமுறையு மின்றி[3]மல முழுகியவ ராகமற்
     றுய்யுநெறி யுன்னுவோர்கள்
உணரஅருள் [4]புரிகமிவ ணுறுதிரெனு மொலியாக
     வுற்றடிவணங் கினோர்தம்
கருமுறை கடந்தின்ப முத்தியெனு மகளினைக்
     கடிமணம் புணர்காலையிற்
கடலென முழங்குமுழ வாகஎழு தாமறைகள்
     கண்டுகொண் டாடவாய்மைத்
திருமுறை முழக்கமிகு குருமலை யருட்குமர
     சிறுபறை முழக்கியருளே
சிவசமய அறுமுகவ குகபகவ வுமைசிறுவ
     சிறுபறை முழக்கியருளே.

[1]. இடும்பை - துன்பம். [2]. மடவோர் - அறியாமையர். [3]. மலம் - அழுக்கு. [4]. புரிகம் - செய்வோம்!
-----------------------------------
(பொ - ரை.) உடலிற்குள் உயிரானது வரும் முறையையும்; இன்ப துன்பம் அனுபவிக்கும் முறையையும்; பொருந்திய உயிர் (உடல் விட்டுப்) போகும் முறையையும்;
பின்னும் (பொல்லா) ஒரு உடலிற் புகுந்து (அவதித்) துன்பம் அடையாதபடி, (உய்திபெறும்) ஒரு வகையையும் சிந்திக்காமல் இருக்கும் அறிவிலிகள், ஒரு சாதனையும்
செய்யாமல் மும்மலத்தில் முழுகியவராகி இருப்ப;
உய்யும் வழியை (ஓயாது) உன்னுகின்றவர் உணருமாறு அருளை உதவுவம்; இங்கு வாருங்கள் எனும் ஒலியாக;
(அது கேட்டு) வந்து திருவடி வணங்கினவர்களுடைய பிறவி வருமுறையழிந்து, பேரின்ப முத்தி எனும் பெயருடைய திருமகளைத் திருமணம் கொள்ளும் பொழுது, கடலெனப் பெரிது ஒலிக்கும் முழவு ஒலியாக;
எழுதாக்கிளவியான வேதங்கள் (பயனான அது) கண்டு பாராட்ட , வாய்மையான (சைவத்) திருமுறைகளின் (வாழ்த்து) முழக்கம் மிக்க சுவாமிமலையில் எழுந்தருளிய அருளுடைய ஆசார்ய! சிறுபறை முழக்கியருள்! சைவ சமய ஆறுமுகா! குகா! பகவா! உமை மைந்தா! (நீ) சிறுபறை முழக்கியருள், (எ - று).
இவண் உறுதிரெனும் ஒலியாக, முழங்கும் முழவாக, மறைகள் கொண்டாட, 'திருமுறைகள் முழக்கம் மிகு குருமலை யருட் குமர' நீ சிறுபறை முழக்கியருள் எனக் கூட்டுக.
'ஒருமுறையும் இன்றி மலம் முழுகிய வராக' எனப் பிரித்து, வராகம் - பன்றிபோல்பவர் எனும் பொருள் தொனித்தலும் ஓர்க.
"சாதனம் இன்றி ஒன்றைச் சாதிப்பார்
உலகி லில்லை''
என்றபடி, உய்யும் நெறி உன்னுவோர் உணர அருள் புரிவம். இங்கு வாருங்கள் எனும் ஒலி, வைகரி உருவில் வரும். அதன்பின்,
"திருச்சிலம் போசை ஒலிவழி யேசென்று
நிருத்தனைக் கும்பிடென் றுந்தீ பற
நேர்பட அங்கே நின் றுந்தீ பற’
எனும் பேறான அனுபவம் பிறக்கும்.
அந்நிலையில், தீராத பிறவி தீரும்; அதன் பின் மாபெரும் முத்திமணம் எனும் அருமையை, ஊன்றி உணரின் உள்ளம் உருகும்.
பேரின்ப வல்லிக்கும், பக்குவம் எய்திய உயிரிளங் குமரனுக்கும் திருமணம் நிகழ் பொழுது, தசநாதம் தழைக்கும். அந்த அனுபவத்தை,
'முத்தி யெனும் மகளினைக் கடிமணம் புணர் காலையில்
கடலென முழங்கு முழவு'
என்றார்.
எலும்பைப் பெண்ணாக்கும்; பாம்புகோட் பட்டாரை எழுப்பும்; சுரம் தவிர்க்கும்; முயலகனோய் தீர்க்கும்; நீற்றறையைக் குளிர்விக்கும்; ஆலத்தை அமுதாக்கும்; கருங்கல்லைத் தெப்பமாக்கிக் கரையேற்றும்; கல்லைப் பெண்ணாக்கும்; முதலையுண்ட பாலனை உயிர்ப்பிக்கும்; இத்தகைய மெய்ம்மை பல காட்டிய திரு முறைகளை, 'வாய்மைத் திருமுறை' என்று வழுத் தியபடி. (86)
-------------

87. கருப்புகு பிறப்புறு [1]நயப்புறு [2]கயக்குழு
     எதிர்ப்படல் கழிந்து போயின்
கடிய[3]மல விருளின்மலி வினையின்மலை [4]யரணினைக்
     கவனமொடு காவல் புரிமின்
நெருப்புகு கடைக்கணரு விக்[5]கட மொழுக்கு6கவுள்
     நிலவுலவு சடைமு டியுநீள்
[7]நிகளமழி [8]துகளெழ வடர்த்துவரு தாமரை
     நிகர்த்ததிரு வடியு முடைய
[9]பொருப்புமு னடக்க[10]வுழி ஞைத்தொடை முடித்தியாம்
     [11]பொருமாறு வருகின் றனம்
புனல்[12]நொச்சி சூடினது பயனற்ற செயல்வலிய
     13]பொறிசத்தி பொடியு மெனல்போல்
திருப்புகழ் முழக்கமுகி லொத்தகுரு வெற்பிறைவ
     சிறுபறை முழக்கி யருளே
[14]சிவத்தரு வினைத்தழுவு பொற்கொடி, பழுத்தகனி
      சிறுபறை முழக்கி யருளே.

[1]. நயப்புறு - விருப்புடைய. [2]. கயக் குழு - கீழோர் கூட்டம். [3]. மல இருள் - ஆணவ இருள். [4]. அரண் - மதில். [5]. கடம் - மதநீர். 6. கவுள் - கன்னம். [7]. நிகளம் - விலங்கு. [8]. துகள் - பொடி. [9]. பொருப்பு - (மலை போன்ற) கணபதி யானை. [10]. உழிஞை-உழிஞை மாலை. [11]. பொருமாறு - மோதுமாறு. [12]. நொச்சி - நொச்சிப்பூ. [13]. பொறி - (மதில் காக்கும் ) யந் திரங்கள். [14]. சிவத்தரு - சிவக் கற்பகம்.
--------------------------------
(பொ-ரை.) கருவில் புகும் பிறவியைக் காதலிக்கின்ற கயவர்கள், எம் எதிர்ப்படாமல் விரைந்து சென்று விடுங்கள்;
கடுமையான மல இருளால் நிறைந்த கன்ம வினையான மலைக் கோட்டையை, கவனமாகக் காவல் செய்யுங்கள்;
கனல் பொறி சிந்தும் கடைக்கண்ணும், மத அருவி ஒழுக விடும் கன்னமும், நிலவு விளங்குகிற சடை முடியும், (பந்தம் எனும் ) நெடிய சங்கிலியை அறுத்த தூசு பறக்க, மோதி வரும் தாமரை போன்ற திருவடிகளையும் உடைய மலை போன்ற (தோற்றமுள கணபதி) யானை முன் செல்ல;
(கோட்டையைப் பிடிப்போர் சூடும்) உழிஞை மலர் மாலை சூடி, யாம் போரிடற்கு வருகிறோம்.
(நீங்கள் ) நீரில் மலரும் நொச்சிமலர் மாலையணிந்தால், அது பயனற்ற செயல்; வலியுடைய பொறிகளின் ஆற்றல் பொடியாய்ப் போம் என்று சொல்வதுபோல், திருப்புகழ் முழக்கம் மேக ஒலி போல் முழங்கும் சுவாமிமலைத் தெய்வமே! சிறுபறை முழக்கியருள்;
சிவக் கற்பகத்தைத் தழுவிய பொற்கொடியில் பயன் தரக் கனிந்த பழமானவனே! சிறுபறை முழக்கியருள், (எ - று).
நொச்சி - அரண் காப்போர் அணியும் மாலை. சிவத்தரு - சிவக் கற்பகம். கொடி - உமை. கனி - முருகன்.
மூலமல இருள்நிறை வினைமலை மதிலை, கவனமாகக் காவல் செய்யுங்கள்; உழிஞை மாலையை உவந்து தரித்தோம்; முதன்மை விநாயக யானை முன்வர, யாம் காயாபுரிக் கோட்டையைக் கவர வருகிறோம். அக் கோட்டையைக் காக்கக் கருதி, நொச்சி மாலை தரித்து எதிர்க்கும் உங்கள் எதிர்ப்பு அழிவது திண்ணம்.
மதிலின் மேல் யானைகள், குதிரைகள், கழுகுகள், பாம்புகள், விறுவிறுத்த பெரும் வீரர்கள் போல் நிறுத்தி, எதிர்க்க ஏவும் உங்கள் பொறிகளாகிய யந்திரங்கள் எல்லாம், எம் எதிர்ப்பின் முன் தவிடுபொடியாய்ப் போய்விடும் என அறிவிப்பனபோல், முதன்மைத் திருப்புகழ் முழக்கம் எழும் சுவாமிமலை என்று, புறப்பொருள் இலக்கணத்தைச் சூசனையாகப் புகன்றபடி
"செறியும் பிறவிக்கு நல்லவர்
செல்லன்மின்; தென்னன் நன்னாட்(டு)
இறைவன் கிளர்கின்ற காலம்
இக்காலம்; எக்காலத் துள்ளும்
அறிவொண் கதிர்வாள் உறைகழித்(து)
ஆநந்த மாக்கடவி,
எறியும் பிறப்பை எதிர்ந்தார்
புரள இருநிலத்தே"
எனும் திருவாசகத்தைத் தழுவிய பா இது.
கைம்மாறு கருதாத கருணை முகிலான குரு வெற்பு இறைவன் எனும் இறுதி யடியும் கருதத் தகுவது. (87)
-------------

88. ஒருவருணர் தற்கரிய பிரமசொரு பக்கடலின்
     [1]உறுமமுது ருக்கொடழியா
ஒளிமினல் பரப்பியடர் [2]பொறியர [3]வரப்பிவரம்
     எனு[4]முறைது ளித்துமயலாம்
[5]மருநில மதிற்பெருகு 6மசரத மிகுத்தபுனல்
     [7]வறளவழு வற்றவடியார்
மனவயலி [8]னற்புமுதல் நிறைபயன் விளைக்கஅவர்
     வழிவழிபு சிக்கஉயர்வான்
பெருநெறி [9]நிரைத்துமிகு துயர்வெயி லொழித்தறிவு
     பெருகுநன திப்புனலினல்
பிழைநெறி யிடித்[10]துரிய சமயமுல குக்குதவு
     பெரியபுக முற்றுலவிவாழ்
திருவருள் முகிற்குரலி னளிகுரு மலைக்குமர
     சிறுபறை முழக்கி யருளே
சிவசமய சற்குரவர் முதல்வசிவ சுப்ரமணி
     சிறுபறை முழக்கி யருளே.
-
[1]. உறும் அமுது - உள்ள அமுதம். [2]. பொறியரவு - ஐம்பொறிப் பாம்புகள். [3]. உரப்பி - அதட்டி. [4]. உறை - மழைத்துளி. [5]. மரு நிலம் - களர் நிலம். 6. மசரதம் - கானல் நீர். [7]. வறள - வற்ற. [8]. அற்பு - அன்பு. [9]. நிரைத்து - வரிசைப்பட வைத்து. [10]. உரிய சமயம் - தக்க பருவம்; வாய்மைச் சமயமுமாம்.
---------------------------
(பொ-ரை.) ஒருவராலும் உணர இயலாத பிரம சொரூபமாகிய கடலில் உள்ள அமுத வுருவம் கொண்டு, (என்றும்) அழியாத ஒளியாகிய மின்னலைப் பரப்பி, (அடர்ந்த ஐம்) பொறிகள் ஆகிய பாம்புகளை அதட்டி, வரம் எனும் மழை துளித்து, மயலாகிய களர் நிலத்தில் பெருகிய (பேய்த்தேர் எனும்) கானல் நீர் வறளச் செய்து;
மாசற்ற அடியவரது மனமாகிய வயலில், அன்பு முதலிய நிறைந்த (வித்தகப்) பயனை விளைக்க;
அவர்கள் (அவைகளை ஊன்றிய) கால்வழியராய் உண்ண, உயர்ந்த (ஞானமாகிய) பெரிய வழியில் (இன்ப) வரிசைப்பட இருந்து;
மிக்க துன்பமாகிய வெய்யிலை ஒழித்து, அறிவாகப் பெருகும் நலம் சிறந்த ஆற்று நீரால் தவறுபட்ட வழி களைத் தகர்த்து;
உரிய சமயத்தை உலகிற்கு உதவும் பெரிய புகழைப் பெற்று;
(எங்கும்) உலவி வாழ்கிற திருவருள் மேக முழக்கம் போல் கருணை பாலிக்கும் சுவாமிமலைக் குமரா ! சிறுபறை முழக்கியருள்;
சிவசமய ஞானாசார்யர் தலைவா! சிவ சுப்ரமண்யா! சிறுபறை முழக்கியருள், (எ - று)
கடலில் நீர் பருகிக் கறுத்து, இடித்து, மின்னி, பாம்பதட்டி, மழை துளித்து, வயலில் பயன் விளைய, வானில் நிரல் பட இருந்து, வெயில் மாற்றி, நதிப் புனலால் தக்க பருவத்தில் உதவிப் புகழ் கொள்ளும் மேகம். இதை அப்படியே சொருப அநுபவத்திற்கு உவமை யாக்கிய அருமையே அருமை.
திருவருள் முகில் குரல் போல் ஒலியெழ, சிறுபறை முழக்கியருள் எனக் கூட்டுக. (88)
--------------

89. [1]உகமுகமு யர்ந்துவளர் கயிலையில மர்ந்தொர்குறை
     யொருபொழுது மின்றிநிறைவாய்
[2]உமையனுதி னம்[3]படியு மமுதசர சின்கணெடி
     துலகமுய வந்தநதியே
[4]பகவதியெ னும்பெயரி னிலகுறுப சுங்கொடியி
     னழகுறம லர்ந்தமலரே
பழவினையெ னுங்கொடிய [5]தளைபொடியு றும்படிசெய்
     6பதவலிமி குந்தஅரமே
இகபரமு. நன்குதவு மிதுவெனவ றிந்துதவ
     முயல்பவர்[7]பொ திந்தநிதியே
இவைநல[8]பொ லங்களென அறி[9]மதுகை யின்றியுழல்
     எளியமுள நம்புகதியே
[10]செகதலம் விளங்கவுயர் குருமலையி னின்றகுக்
     சிறுபறைமுழங்க அருளே
சிவநெறிவி ளங்கவரு குருமுதல்வ செங்கை கொடு
     சிறுபறைமுழங்கவருளே.
-
[1]. உகம் உகம் - யுகந்தோறும். [2]. உமை - உமா தேவி. [3]. படியும் - நீராடும். [4]. பகவதி - பரமேஸ்வரி. [5]. தளை - பந்தம். 6. பதவலி - திருவடி ஆற்றல். [7]. பொதிந்த நிதி - சேம நிதி. [8]. பொலங்கள் - அழகுகள். [9]. மதுகை - ஆற்றல். [10]. செகதலம் - உலகம்.
----------------------------------
(பொ - ரை.) ஒவ்வொரு யுகந்தோறும் உயர்ந்து வளர்கிற கயிலையில் அமர்ந்து, ஒருபொழுதும் ஒரு குறையும் இல்லாமல் நிறைவு பெற்று; உமாதேவியார் நாள் தோறும் நீராடும் அமுத வாவியிலிருந்து பெரிய உலகம் உய்ய வந்த பெருநதியே!
பகவதி எனும் பெயரில் விளங்குகிற பச்சைக் கொடியில், (மாபெரும்) அழகுடன் மலர்ந்த மலரே!
பழைய (சஞ்சித) வினையெனும் கொடிய விலங்கு பொடியாய்ப் போம்படிச் செய்யும் (அருமைத்) திருவடி ஆற்றல் மிக்க அரமே!
இம்மையும் மறுமையும் நலக்க உதவும் இது என அறிந்து, உதவ முயலும் உத்தமர்கள் நிறைத்து வைத்த நிதியே!
இவை நல்ல பொலிவுடையவை என அறிகிற ஆற்றல் இல்லாமல் உழலும் எளிமையேம் உள்ளம், (கனிவொடு) விரும்புகிற கதியே!
உலகம் விளக்கம் பெற உயர்ந்த சுவாமி மலையில் எழுந்தருளிய குகா! சிறுபறை முழக்கியருள்!
சிவநெறி விளங்க எழுந்தருளும் பரமாசார்ய! செவ்விய (உன்) திருக்கரம் கொண்டு சிறுபறை ஒலிக்குமாறு அருள், (எ - று)
நதியே, மலரே, அரமே, நிதியே, கதியே, கோ, குரு, முதல்வா, சிறுபறை முழங்க அருள் எனக் கூட்டி முடிக்க.
யுகந்தோறும், வளர்ந்து கயிலை வாழ்வுதரும் என்பர்; அதை,
      "உகம் உகம் உயர்ந்து வளர் கயிலை " என்றார்.
      "ஊழிதோ றூழி முற்றும்
      உயர்பொன் நொடித்தான் மலை "
என்பது சுந்தரர் தேவாரம்.
உ- ம் --அ = உமா; இப் பெயர், பிரணவ வடிவப் பெருமாட்டியெனும் பொருள் பயந்தது.
மிகுத்த அரம் என்பதில், பதவலி கூர்மையும் வலிமையும் கொண்ட அரம் எனவும் பொருள் தரல் உணர்க.
பகவதி - பகவான் என்பதன் பெண்பால்; பகம் - ஆறு; திரு, ஐஸ்வர்யம், புகழ், வீர்யம், ஞானம், வைராக்யம் எனும் ஆறு குணங்கள் அமைந்தவன் என்பது குறிப்பு. (89)
-------------

90. [1]பொங்கு[2]கரு மணியொளித் [3]திரளனைய பிடர்மீது
      புரள்கின்ற [4]குஞ்சிமுகிலும்
புதுநில வெரிக்கின்ற முகமதியு நகையிதழ்ப்
      புனிதமுத் தும்பவளமும்
மங்கல மிகுங்[5]களச் சங்கமுங் கைகளாம்
      வண்மைமிகு கற்பதருவும்
மனவிருளை யும்பருகும் வேலெனும் 6பருதியும்
      மடநடை [7]யைராவதமுமோர்
[8]சிங்கலற மெய்யன்பர் சிந்தையி னினைந்தவை
      சிறக்கவருள் அருள்[9]மணியுமொண்
[10]சீராவும் வளர்[11]பரிச் சிகியுமடி மலர்மிசைத்
      திருமகளு மிலகுமுறையால்
திங்கணிற [12]வமுதுததி யொத்தகுரு வெற்பிறைவ
      சிறுபறை முழக்கியருளே
சிவநெறி விளங்கவரு குருமுதல்வ செங்கைகொடு
      சிறுபறை முழக்கியருளே.

[1]. பொங்கு - மிக்க. [2]. கருமணி - நீலமணி. [3]. திரள் அனைய - கூட்டம் போன்ற. [4]. குஞ்சி - குடுமி. [5]. களம் - கழுத்து. 6. பருதி - சூரியன். [7]. ஐராவதம் - தேவலோக வெள்ளை யானை. [8]. சிங்கல் அற - சிக்கலற; குறை இலாதபடி. [9]. மணி - நவமணி. [10]. சீரா - சிறந்த காமதேனு. [11]. பரிச்சிகி - குதிரையாகிய மயில். [12]. அமுது உத்தி - பாற்கடல்.
-----------------------------
(பொ-ரை) உயர்ந்த நீலமணிகளின் ஒளித்தொகுதி போல், பிடரிமேல் புரள்கிற குடுமியாகிய மேகமும்;
புது நிலவு பிரகாசிக்கும் (மாபெரும் ) திருமுகமாகிய மதியும்; நகையும் இதழுமான புனித முத்தும் பவளமும்; மங்கலம் மிக்க கழுத்தான சங்கும்; கரங்களாகிய ஈகை மிக்க கற்பகமும்;
அக இருளையும் நீக்கும் (பயனான) வேல் என்னும் பரிதியும், இளநடையான ஐராவத யானையும்;
ஒரு குறையும் இல்லாமல், மெய்யன்பர் உள்ளத்தில் சிந்தித்தவைகளைச் சிறக்கப் பாலிக்கும் அருளாகிய சிந்தாமணியும்;
(கனிந்த) ஒண்மையாம் சிறப்புடைய காமதேனுவும்; (தோகையை) விரிக்கும் மயிலாகிய குதிரையும்; திருவடியாகிய மலர்மேல் இருக்கும் திருவும் (முதன்மை பெற) விளங்க இருக்கும் முறைமையால்,
மதியின் நிறமான (வெண்மைப்) பாற்கடல் போன்ற சுவாமிமலை இறைவனே! சிறுபறை முழக்கியருள்!
சிவநெறி (எவ்வுயிர்க்கும்) விளங்க எழுந்தருளும் பரமாசார்ய! செவ்விய திருக்கரம் கொண்டு (நீ) சிறுபறை முழக்கியருள், (எ - று).
குஞ்சிமுகில், முகமதி, நகை முத்து, இதழ்ப்பவளம், களச்சங்கம், கைகளாம் கற்பதரு, வேல் எனும் பரிதி, நடை ஐராவதம், அருள்மணி, பரிச்சிகி என்பவை அனைத்தும் உருவகங்கள்.
சீரா - சிறப்புடைய காமதேனு; அது, உடைவாள் எனவும் பொருள் தரும். பரிச்சிகி - வடவாமுகாக்கினி; அழகிய மயிலுக்கும் அப் பெயர் உரியது.
முகில், மதி, முத்து, பவளம், (பாஞ்சசன்யச்) சங்கு, கற்பகம், சூரியன், ஐராவதம், நவமணி, காமதேனு, உச்சைச்வரப்பரி முதலியன, பேறான பாற்கடலில் பிறந்தவை; அருமைத் திருமகளும் அக்கடலிலேயே அவதரித்தவள்; அமுதம் கடைந்தபோது ஏக காலத்தில் எழுந்தவையிவை என்க.
கடலில் பிறந்த அவை யாவும், எம்பெருமான் திருமேனியிலிருத்தலின், பரம குமரனைப் பாற்கடல் போன்ற ‘குருவெற் பிறைவன்' என்று குறித்தபடி. (90)
--------------------

91. தந்தம முயற்சியினி [1]லொண்பொருள் திரட்டி[2]மா
      தவர்நுகர வமுது[[3]]கனிவாய்த்
தந்தவர்க் [[4]]கேவல்புரி யுந்திறத் தோர்நெறி
      தகுந்தகுந் தகுமென்னவும்
சொந்தமிவை யென்றுகைப் பொருள்பிடித் தொருபிடிச்
      சோறுமீ யாதலோபம்
[5]தோந்தோமி தகலரிய [6]நிரையத் திருத்திடும்
      [7]தொந்ததொந் தங்களெனவும்
[8]சந்தத [[9]]மவாமுதல் வாகவெழு [[10]மாறுபகை
      தமைமிதி [11]மிதித்தியெனவும்
தன்கடன் தாங்கல்தொண் டென்கடன் எனுங்கொள்கை
      [[12]]தரிதரித ரித்தியெனவும்
சிந்தையி லுணர்த்தமனி தர்க்குமுரு கப்பநின்
      சிறுபறை முழக்கியருளே
சிவசமய சற்குரவ குருமலை யருட்குமர
      சிறுபறை முழக்கியருளே

[1]. ஒண் பொருள் - புனித செல்வம். [2]. மாதவர் - சிறந்த தவசிகள். [[3]]. கனிவாய் நுகர அமுது தந்து எனக் கூட்டுக. [4]. ஏவல் - பணி. [5]. தோம் - குற்றம். 6. நிரயம் - நரகம். 7. தொந்த தொந்தங்கள் - பாதிக்கும் பந்தங்கள் [8]. சந்ததம் - எந்நாளும். [9]. அவா – ஆசை. [10]. ஆறு பகை - காம, குரோத, லோப, மோக, மத, மாற்சர்யங்கள். [11]. மிதித்தி - மிதித்து விடு. [12]. தரி - தாங்கு.
--------------------------------------
(பொ-ரை.) தம் தமது (புனித) முயற்சியால் சிறந்த பொருளைச் சேகரித்து, உயர்ந்த மேல்வர் உண்ணுமாறு உணவை உபசரித்து ஊட்டி, அப்பெரியோர்க்குப் பணிபுரியும் திறத்தவர் வழி, தகுதி தகுதி தகுதியானது எனவும்;
இச் செல்வம் (நமக்கே) சொந்தமானது என்று எண்ணி, (இருக்கும்) கைப்பொருளை இறுகப் பற்றி, ஒரு பிடி சோறும் ஈயாத லோபத்தனம் குற்றம், குற்றமாம்;
இந்த உலோபம், அகலாத நாகத்தில் அழுத்திவிடும் தொல்லை பந்தத் தொடர்புகள் எனவும்;
எந்நாளும் அவா முதலாக எழும் ஆறு பகைகளை (க் கால் கீழிட்டு) மிதி, மிதித்து விடு எனவும்;
(எம் பெருமான்) தன் கடன் (எம்மைத்) தாங்கல்; என் கடன் தொண்டு செய்து கிடப்பதே எனும் கொள்கையைத் தாங்கு, தாங்கு, (என்றும்) தாங்கியிரு எனவும், மனிதர்க்கு உள்ளத்தில் (இனிது) உணர்த்த முருகப்பா! நின் சிறுபறை முழக்கியருள்!
சிவசமய பரமாசார்ய! சுவாமிமலை அருள் குமர! சிறு பறை முழக்கியருள், (எ - று).
      "இரப்பவர்க்கு ஈய வைத்தார்
      ஈபவர்க்கு அருளும் வைத்தார்
      கரப்பவர் தங்கட் கெல்லாம்
      கடுநர கங்கள் வைத்தார்''
எனும் தமிழ் மறையும்,
      ''பகரும் ஞானி பகலுண் பலத்திற்கு
      நிகரில்லை யென்பது நிச்சயந் தானே''
எனும் மந்திரமும் இங்குக் கருதத் தகும்.
பறையின் தாள ஜதிகள் சிலவற்றை உணர்த்தும் வழியில், குறிப்பாக உயரிய கொள்கைகள் இங்குக் கூறப் பெற்றன. (91)
-----------------

92. [1]கடுக்கைத் தொடைவா [2]ழளிமுழங்கக் கங்கைத்
     [3]தடினித் [4]திரைமுழங்கக்
கண்ணிற் கருணைக் கடல்முழங்கக் கையிற்
     [5]கலைமான் மறிமுழங்க
உடுக்கை விரிக்கத் தகுநூற்பா உரைத்து
     முழங்கக் [6]கனல்முழங்க
[7]உபய பதத்தில் மறைமுழங்க உமையாள்
     கைக்[8]கொட் டொலிமுழங்கத்
தொடுக்கு மிசைக்கந் தருவர்[[9]]சுரர் சுருதி
     முனிவர் துதிமுழங்கத்
தூய முனிநா ரதன்யாழ்தும் புருவின்
     வீணைச் சுதிமுழங்க
[10]முடுக்கி யரனர் நடமுழங்க முழக்கி
     யருள்க சிறுபறையே
முடியா முதலே ரகமுருகா முழக்கி
     யருள்க சிறுபறையே.
-
[1]. கடுக்கைத் தொடை - கொன்றை மாலை. [2]. அளி - வண்டு. [3]. தடினி - நதி.
[4]. திரை - அலை. [5 .]கலைமான் மறி - மடங்கி நிமிர்ந்த கலைமான். [6]. கனல் - மழு.
[7]. உபய பதம் - இரு திருவடிகள். [8]. கொட்டு - தாளம். [[9]]. சுரர் - தேவர்கள். [10]. முடுக்கி - விரைந்து.
---------------------------------
(பொ - ரை.) (வளமான) கொன்றை மாலையில் வாழும் வண்டுகள் முரலவும்; (ஓவென்று) கங்கை நதியின் அலைகள் ஒலிக்கவும்;
கண்களிற் பெருகும் கருணைக் கடல் ஆரவாரிக்கவும், (ஒரு) கரத்தில் மடங்கி (அடங்கிய) மான் இரைக்கவும்; (மற்றோர் திருக்கரத்து) உடுக்கை, (உரை ) விரிக்கத் தக்க இலக்கணச் சூத்திரங்களை உரைத்து முழங்கவும்; (வேறோர் திருக்கரத்து) மழு, (திகு திகு என்று ) சத்திக்கவும்;
இரு திருவடிகளில் இருக்கும் (அருமை) - வேதங்கள் (ஆகிய சிலம்புகள்) அரற்றவும்; உமாதேவியின் திருக்கைத் தாள ஒலி, ஓசை யுண்டாக்கவும்; இசை தொடுக்கும் கந்தருவர்கள், தேவர்கள், மறை முனிவர்களின் துதிகள் கோஷிக்கவும்;
தூய நாரத முனிவரது (மகதி) யாழ், தும்புருவின் வீணைச் சுதி ஒலிக்கவும்;
சிவபிரான் விரைந்தாடும் திருக்கூத்து ஒலிக்கவும், சிறுபறை முழக்கியருள்;
இறவா முதலான திருவேரக முருகா! சிறுபறை முழக்கியருள், (எ - று).
முருகா ! நீ சிறுபறை முழக்கினால், முன் உரைத்தவை அத்தனையும் முழங்கும்; ஆதலின், நீ சிறுபறை முழக்கியருள் என்பது குறிப்பு.
முழங்க என்பவை அனைத்தும் வினையெச்ச அடுக்குகள். (92)
---------------

93. [1]மதியந் தவழ்மா ளிகைகடொறும் வருநல் விருந்து புறந்தருவார்
     மதுர முகம னுரைமுழங்க மகிழ்ந்து வாழ்த்து மொழிமுழங்கப்
பதியும் பசுபா சமுமுணர்ந்தோர் பகரு ஞானக் கலைமுழங்கப்
     பழுதி லடியார் சிவபூசை பயிலு மணிநா முழங்க என்றும்
புதிய தமிழின் துறைமுழங்கப் புலவர் புகழெங் கணுமுழங்கப்
     [2]பொன்றாத் தரும வளமுழங்கப் புனிதந் தருநின் துதிமுழங்க
முதிய மறையா கமமுழங்க முழக்கி யருள்க சிறுபறையே
     முடியா முதலே ரகமுருகா முழக்கி யருள்க சிறுபறையே.

[1]. மதியம் - சந்திரன்; அம் - பெயர் விகுதி. [2]. பொன்றா - கெடாத.
---------------------------------------
(பொ - ரை.) சந்திரன் தவழும் மாளிகைகள் தோறும், வருகின்ற சிறந்த விருந்தினரை (வருக என்று மகிழ்ந்து) வரவேற்பார்; மதுரமான உபசார மொழிகள் ஒலிக்க, (முதன்மை) வாழ்த்து ஒலி முழங்க;
பதியிலக்கணமும், பசு இலக்கணமும், பாச இலக்கணமும் உணர்ந்த பரம ஞானிகள் கூறும் (உயரிய) ஞான நூற்கள் ஒலிக்கவும்;
களங்கமற்ற அடியவர் சிவபூசையில் பயிலும் (உயரிய ) மணியின் நாக்கு ஒலிக்கவும்;
எந்நாளும் புதிய தமிழ் நூற்களின் (அகமும் புறமு மான) துறைகள் ஒலிக்கவும்; புலவர் புகழ் (உவந்து நாடு) முழுதும் ஒலிக்கவும்;
அழிவு இல்லாத அறவளம் ஒலிக்கவும்; (தூய) புனிதம் தருகின்ற நினது துதி முழங்கவும்; பழைய வேத ஆகமங்கள் ஒலிக்கவும், (நீ) சிறுபறை முழக்கியருள்;
முடிவு பெறாத முதலாளியான திருவேரக முருகா! (நீ) சிறுபறை முழக்கியருள், (எ - று).
உன் பறை முழக்கினால், மேலுரைத்த ஒன்பது ஒலியும் உலகில் எழும்; உயர்தரு வளமான ஒலிதோன்ற, முருகா! நீ சிறுபறை முழக்கியருள் என்றபடி.
"செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு''
என்பது பொதுமறை. (93)
-------------------

94. [1]தழங்கு [2]முழவ [3]மரங்கமெலாம் தரும முரசஞ் சாலையெலாம்
     தமிழி னினிமை சபைகளெலாம் சாந்த நிலைமை சிந்தையெலாம்
கழங்கு கழலம் மனைப்பண்கள் கனிவாய் மகளிர் [4]பண்ணையெலாம்
     களிக்கு மயிலி [5]னகவல் [6]மழைக் கலிப்பு மலர்ப்பூங் [7]காவிலெலாம்
விழுங்கு பூந்தேன் கனிவாழை வெடிப்பத் தேமா விளைந்தகனி
     வீழ விரியும் [8]புள்ளினொலி விளைந்த வயற்சூழ் தடங்களெலாம்
முழங்குஞ் சாமி மலை முருகா முழக்கி யருள்க சிறுபறையே
     முடியா முதலே வடிவேலா முழக்கி யருள்க சிறுபறையே.

[1]. தழங்கும் - ஒலிக்கும். [2. முழவம் - மத்தளம் எனும் பறை. [3. அரங்கம் - சபை. ¨
[4]. பண்ணை - மகளிர் விளையாடும் இடம் கூட்டம். [5]. அகவல் - அகவலிசை
[6]. மழைக் கலிப்பு - மேகங்களின் மொய்ப்பு. [7]. கா -சோலை. [8]. புள் - பறவை.
----------------------------
(பொ-ரை.) நடன சபையனைத்தினும் மத்தளமும்; அறச்சாலைதோறும் அறங்களும்; (இயன்ற) எந்தச் சபையினும் தமிழின் இனிமையும்; (அருமையான) எச்சிந்தையினும் நிலையான அமைதியும்; கொவ்வைக் கனிவாய்ச் சிறுமியர் விளையாடும் இடந்தோறும் கழங்கு, கழல், அம்மனைப் பண்களும்;
(புனித) மலர்ப்பூஞ் சோலைகள் தோறும் ஆநந்திக்கும் மயில்களின் அகவலும், முகில்களின் முழக்கமும்;
விளைவை யுடைய வயல் சூழ்ந்த தடாகந்தோறும், உண்ணும் மென்மைத் தேனை யுடைய வாழைக்கனிகளும், வெடிக்கும்படி முற்றிய தேமாங்கனிகளும் விழுதலால்,
(அஞ்சி எழுந்து) பறக்கும் பறவைகளின் ஆரவாரமும் (ஆகியயிவை யாவும்,) பெரிது ஒலிபெருக்கும் சுவாமிமலை முருகா / சிறுபறை முழக்கியருள்;
இறவாப் பெருநிதியே! வடிவேலுடையாய்! சிறு பறை முழக்கியருள், (எ - று).
திருவேரகத்தில் ஒலிக்கும் பலவகைய ஒலிகளை, ஒரு மிக்க இங்கு உரைத்தபடி. (94)

சிறுபறைப் பருவம் நிறைவெய்தியது
--------------

10. சிறுதேர்ப் பருவம்

சேயைச் சிறுதேர் உருட்டி விளையாடும்படி, தாய்மார் வேண்டும் பருவம் இது, நான்காம் ஆண்டிற் கூறப்பெறும். 'நான்காம் ஆண்டிற் சிறுதேர் உருட்டலும்' என்பது,
பிங்கலந்தை.

95. [1]அவமே புரிந்துயிரி னலமே கவர்ந்துவினை
      [2]யடவியி லொளிந்து திரியும்
அலையே மிகுந்த[3]புல னெனும்வேடர் தங்கள்வலி
      [4]யறவே தடிந்து துயர்நீள்
[5]பவமாய மென்றசிறை யிடுமாசை முதலான
      பகையாறும் வென்று [6]மழுகாப்
படைஞான வாள்பிடித் [7]துறுதியாம் வேலும்
      [8]பரித்து மதியாம் குடைக்கீழ்ப்
புவனேசு வரியுமொரு [9]புடைமேவ வுலகங்கள்
      போற்ற[10]மணி மன்று ளென்றும்
பொலி[11]ராஜ சேகரனி னருளாணை கொண்டறம்
      [12]பொன்றா தளிக்கு மேன்மைச்
சிவராஜ யோகர் சுடர் முடியான சேவடிய
      சிறுதே ருருட்டி யருளே
திருவே ரகத்திலரு உருவான சுப்ரமணி
      சிறுதே ருருட்டி யருளே

[1]. அவம் - பாவம். [2]. அடவி - காடு. [3]. புலன் - ஐம்புலன்.
[4]. அறவே - முழுதும். [5]. பவமாயம் - மாயாப் பிறவி. [6]. மழுகா - மழுங்காத.
[7]. உறுதி - வைராக்யம். [8]. பரித்து - தாங்கி. [9]. புடை - பக்கம்.
[10]. மணி மன்றுள் - இரத்தின சபையுள். [11]. ராஜ சேகரன் - மன்னர் மன்னன்.
[12]. பொன்றாது - கெடாதபடி.
------------------------------
(பொ - ரை.) தகுதி யல்லா ததையே செய்து, உயிர்களின் நலத்தைக் கவர்ந்து, கன்மங்களாகிய காடுகளில் ஒளிந்து திரியும் அலைச்சல் மிக்க புலன்கள் எனும் வேடர் களுடைய ஆற்றலை முழுதும் அழித்து;
துன்பம் பெருகும் மாயப் பிறவி என்ற சிறையில் அடைக்கும், ஆசை முதலான ஆறு பகைகளையும் வென்று;
கூர் மழுங்காத ஞானப் படையான வாள் ஏந்தி, வைராக்யமாகிய வேலும் தாங்கி, மதியாம் வெண் கொற்றக் குடைக்கீழ் இருந்து;
புவனேஸ்வரியும் ஒருபுறம் இருப்ப, உலகங்கள் யாவும் (உவந்து) துதிக்க;
இரத்தின சபையுள் என்றும் விளக்கத்துடன் எழுந்தருளியுள்ள மேதகு சக்ரவர்த்தியான சிவபிரானின் அருளாணையை மேற்கொண்டு;
சிவதருமத்தை (என்றும்) சிதையாமல் காக்கும் மேன்மையையுடைய சிவராஜ யோகிகளின் ஒளி மகுடமான திருவடிகளை யுடையவனே! சிறுதேர் உருட்டி யருள்;
திருவேரகத்தில் அருள்மேனி கொண்டு எழுந்தருளியுள்ள சுப்ரமண்யா! சிறுதேர் உருட்டியருள், (எ - று)
இராஜா - சந்திரன்; சேகரம் - அழகிய முடியணி எனவாதலின், இராஜ சேகரன் என்பது, உமாபதியை உணர்த்தியது.
சிவராஜ யோக சிற்றரசர்கள், முருகன் திருவடியாம் திருமுடி சூடி, அவனது மேலான ஆணையை மேற்கொண்டு, சீறும் ஆறு பகைகளைச் செற்று, ஞான வாளும் வைராக்ய வேலும் ஏந்தி, வேடர்களாம் புலக்கூட்டங்களை வென்று, வளரும் அறிவுக் குடைக்கீழ் அருளாணை நடத்தி வாழ்பவர்கள் எனும் அருமையே ஒரு தனியழகு.

"சிவமா துடனே அநுபோ கமதாய்
      சிவஞா னமுதே பசியாறித்
திகழ்வோ டிருவோர் ஒருரூ பமதாய்த்
      திகைலோ கமெலாம் அநுபோகி
இவனே யென்மால் அயனோ(டு) அமரோர்
      இளையோன் எனவே மறையோத
இறையோன் இடமாய் விளையாடுகவே
      இயல்வே லுடன்,மா அருள்வாயே"
"இருநோய் மலத்தைசிவ ஒளியால் மிரட்டிஎனை
      இனிதா அழைத்தெனது முடிமேலே
இணைதாள் அளித்துனது மயில்மேல் இருத்திஒளிர்
      இயல்வேல் அளித்துமகிழ் இருவோரும்
ஒருவா கெனக்கயிலை யிறையோன் அளித்தருளும்
      ஒளிர்வேத கற்பகநல் இளையோனே
ஒளிர்மா மறைத்தொகுதி சுரர்பார் துதித்தருள
      உபதேசி கப்பதமும் அருள்வாயே"
எனவரும் திருப்புகழ்ப் பாக்கள், இங்குக் கருதத் தகும்.
இப்படி வேண்டிப் பெற்ற பேறு, இம் முதல் பாட் டின் அனுபவம் என்க. (95)
----------------

96. ஆரா தரிக்க[1]விது நீங்குவதெ னத்துடித்
      [2]பக்குவத்தே
அஞ்சற்க வின்னுயிர்க் கழிவொன்று மில்லைதல்
      அறிவினை மயக்குபித்தந்
தாராத சிவசரித வமுதுமா கமமறைத்
      தண்பாலும் ஒண்பிரமமாந்
தண்ணறுங் கனியுமுட் கொள்கயாம் [3]பரிவினால்
      தரு[4]மருத் துப்பையினைச்
சீராக ஆய்ந்துவெண் [5]பொடியெடுத் துப்பூசு
      திரு[6]மணியை அணிகஅன்பால்
திரு[7]வா றெழுத்து மந்திரமோது பிணியது
      தீருமென் றருளியடியார்
தீராத பவநோ யகற்றுவைத் தியநாத
      சிறுதே ருருட்டியருளே
திருவேரகத்திலரு ளுருவான சுப்ரமணி
      சிறுதே ருருட்டியருளே.

[1]. இது - இப்பிறவிப் பிணி. [2]. பக்குவம் - பரிபாக காலம். [3]. பரிவினால் - அன்பொடு.
[4]. மருத்துப் பை - மருந்து வைத்திருக்கும் பை; விபூதிப்பை. [5]. பொடி - பஸ்மம்; திருநீறு.
[6]. மணி - ஜபமாலை. [7]. ஆறெழுத்து - சடக்கரம்.
---------------------------------
(பொ - ரை.) (பிறவி நோயான) இது, எவர் ஆதரவு காட்ட அகலுவது? என்று, மனம் பதைத்துச் சோர்வடைகிற பக்குவ காலத்தில்,
பயப்படாதே! இனிய உயிர்க்கு ஒரு அழிவும் இல்லை; நலம் சிறந்த அறிவை மயக்கும் பித்தம் விளைவியாத சிவசரித அமுதும், வேதாகமங்களாகிய (பயனான) தண்மைப் பாலும், ஒளியுடைய பிரமமாம் கனிந்த மணம் கமழும் கனியும், உட்கொள்க!
அன்பொடு யாம் அளிக்கும் மருந்துப் பையைச் சிறப்பாக ஆய்ந்து, (புனித) வெண்ணிறப் பஸ்மத்தை எடுத்துப் பூசு; (அருமையான) உருத்திராக்க மணியை அணிந்து கொள்!
அன்பொடு திரு ஆறு எழுத்து மந்திரத்தை உரு ஏற்று! (தீய) இப்பிறவி நோய் தீரும் என்று அருளி, அடியவரது தீராப் பிறவிநோய் தீர்க்கும் வைத்திய நாதா! (நீ) சிறுதேர் உருட்டியருள்!
திருவேரகத்தில் அருள் மேனியான சுப்ரமண்யா! சிறுதேர் உருட்டி யருள், (எ - று).
பிறவி நோயால் ஆன்மா, பேதுறுகின்றது. இந் நோய் தீர்க்கும் மருத்துவர், சுவாமி மலையில் இருக்கிறார். அவர் பெயர் பவரோக வைத்தியர். அவரை யடைந்தால், பரம அருளொடு அவர் பார்க்கிறார்.
அறியாமை யெனும் பித்தத்தால், இந்நோய் உன்னில் ஆட்சி நடத்துகின்றது.
பால் சோறும் பழவகையும் பத்திய உணவு. எமது மணி மந்திர ஒளடதம், பாழும் இந்நோயைப் பறந்தோடச் செய்யும்.
சிவ புராணமே சோறு; பயனான வேதாகம ஞானமே பால்; பிரமோபாசனையே கனி; இத்தகைய கேள்வி உணவில் கேண்மை வை! இவைகளை ஆய்!
பையில் உள்ள பஸ்மமாகிய திருநீற்றைப் பூசு! செபமணியைப் பூண்! உயரிய ஆறெழுத்தை ஓது! இந்த மணிமந்திர ஒளடதங்களாலும், மேற் சொன்ன பத்திய உணவாலும் தீராப்பிணி தீரும் என்று, குறிப்பாக அடியவர்க்குக் கூறியருளும் சுப்ரமண்ய! சிறுதேர் உருட்டியருள் ! தேர் செலுத்தி வந்து, உன் வாக்கால் எல்லவர்க்கும் இதைத் தெரிவி என்பது உள்ளுறை. (96)
-----------------

97. [1]பவ்வமுத வியவெண் [2]டுரங்க [3]விரதத்தனும்
      பதுமமிசை தன்போ லவே
பயில்கின்ற [4]ஓதிமத் தேரவனு மரவம்
      படப்பட ரிறக்கை கொட்டிக்
கவ்வியெழு [5]பறவையிர தத்தனும் தத்தமது
      [6]கடிநகர மொடிவில் படைகள்
கடியநடை யிடியமொழி எரியும்விழி யசுரர்வன்
      கைப்படா மற்பொ லியவும்
அவ்வவர் [7]மனேரதஞ் சிதையாம லினிதோடு
      மாறுதவி ராது பெறவும்
அங்கைதலை மிசைகொண்டு சங்கரி [8]சுதாமுருக
      அரகர வெனத்து தித்தே
[9]செவ்விபெற நிற்கின்ற திரு[10]முன்றி லிறைவனே
      சிறுதே ருருட்டி யருளே
திருவே ரகத்திலருளுருவான சுப்ரமணி
      சிறுதே ருருட்டி யருளே.

[1]. பவ்வம் - (பாற்) கடல். [2]. துரங்கம் - குதிரை. [3. இரதத்தன் - இந்திரன். ¨
[4]. ஓதிமத் தேரவன் - அன்ன வாகனப் பிரமன். [5]. பறவை - கருடன். [6]. கடி - காவல்.
[7]. மனோரதம் - மன விருப்பம். [8]. சுதா - மகனே. [9]. செவ்வி - அழகு.
[10. முன்றில் - திருமுற்றம்.
-----------------------
(பொ-ரை.) பாற்கடல் தந்த (உச்சைச்ரவஸ் எனும் ) வெண்மைக் குதிரைத் தேரினன் ஆகிய இந்திரனும்;
தாமரையில் தன்னைப் போலத் தங்கியிருக்கின்ற அன்னத் தேரினன் ஆகிய பிரமனும்;
பாம்பு அழிய படர்ந்த சிறகடித்து, (அப்பாம்பைக்) கவ்வியெழுந்து பறக்கும் கருடனாகிய தேர்மேல் வரும் திருமாலும்;
(பொன்னுலகு, சத்திய உலகு, வைகுந்தம் எனும்) தம்தம் காப்பமைந்த நகர்கள், முறியாத படைகள் (ஆதிய யாவும்),
கடுநடை, முழக்கும் இடி போன்ற மொழிகள், கனல் கக்கும் கண்கள் உடையவர்களான அசுரர்களது வலிய கரங்களில் அகப்படாமல், (என்றும்) பொலிவு பெற்று இருக்கவும்;
(சிறந்த) அவரவர் மன விருப்பம் சிதையாமல், நீடித்து இனிது நிற்கும் நிலை தவிர்தல் இன்றி நேரவும்;
அழகிய (தம்) கைகளைத் தலைமேல் குவித்து, மாதேவி மைந்தா! முருகா! அரஹர என்று துதித்து,
அழகிய பேறு அடைய (வந்து நிற்கும் திருமுற்றத்தினையுடைய தெய்வமே! சிறுதேர் உருட்டியருள்;
திருவேரகத்தில் அருள வடிவான சுப்ரமண்யா! சிறுதேர் உருட்டியருள், (எ - று).
இது, முருகன் செம்மைக் கோயில் திருமுற்றத்தின் சிறப்புரைத்தது. இந்திரனாதியர் தமக்கு அவுணரால் அலக்கண் வாராமைப் பொருட்டும், விரும்பியவை நிறைவேறி வரும் பொருட்டும், கோயில் வாயிலில் வந்து கும்பிட்டுத் துதிக்கின்றனர் என்பது குறிப்பு. (97)
---------------

98. [1]கன்றியுல கம்[2]புதைத் தெழுமிருட் [3]படலக்
      கடும்பகையை யோராயிரங்
கை[4]வாள்கொடுந்[5]துரந் [6]தடுதிறற் [7]கதிரெனும்
      கடவுளும் கடலினடுவண்
வன்றிறற் சூரபன் மாவரசி ருந்தநெடு
      மதில்மகேந் திரபுரியிலே
வன்சிறையி லவன்[8]மகன் கொண்டுவைத் தன்றுதனை
      வாட்டியவி தத்தையெண்ணி
இன்றுமத் தென்றிசையி னேகுகா [9]லுடல்பனித்
      தெழுமொளி மழுங்கிக்கரம்
எழிலாக வீசவும் கூசுவா னத்திசை
      யிருந்தரசு புரியசுரரைத்
[10]தென்றிசைக் கேயினுஞ் செலவுய்த்த சேவகா
      சிறுதே ருருட்டியருளே
திருவேரகத்திலருளுருவான சுப்ரமணி
      சிறுதே ருருட்டியருளே.

[1]. கன்றி - பகைத்து. [2]. புதைத்து - மூடி மறைத்து. [3] . படலம் - திரை.
[4]. வாள் - வாள்படை; ஒளி. [5]. துரந்து - விரட்டி. [6]. அடுதிறல் - அழிக்கும் ஆற்றல்.
[7]. கதிர் - சூரியன். [8]. மகன் - பானுகோபன். [9]. உடல் பனித்து - உடல் நடுங்கி.
[10]. தென் திசை - யமபுரம்.
----------------------------
(பொ-ரை.) உலகைப் பகைத்து மூடி எழும் இருள் படலமாம் கடுமைப் பகையை, ஓராயிரம் (கிரணங்களாகிய) கைவாள் கொண்டு விரட்டி யழிக்கும் ஆற்றல் உடைய பரிதி எனும் தேவனும்;
கடலின் நடுவில் வன்மையாற்றல் உடைய சூரபன்மன் அரசியல் நடத்திய நெடுமதில் சூழ்ந்த வீரமகேந்திர புரத்தில் உள்ள கொடும் சிறையில், அச்சூரபன்மன் மகன் பானுகோபன் இழுத்து வந்து அடைத்து, அந்நாளில் தன்னை வருத்திய விதத்தை நினைந்து;
இன்றும் அத் தென்திசையில் செல்லும் போது, உடல் நடுங்கி, எழும் (மாபெரும்) ஒளி மழுங்கி, கரங்கள் (ஆகிய கிரணங்களை) அழகாக வீசி நடக்கவும் கூசுவான்;
அத் தென்திசையில் இருந்து அரசாண்ட அசுரரை, தென்திசைக்கே மேலும் செல்லுமாறு செலுத்திய வீரச் செம்மலே ! சிறுதேர் உருட்டி யருள்!
திருவேரகத்தில் அருள் வடிவான சுப்ரமண்யா! சிறு தேர் உருட்டி யருள் (எ - று).
பாலனாய்த் தொட்டிலில் இருந்த பானுகோபன், பரிதி கிரணம் தன் மேல்பட, அச் செங்கதிரோனைச் சினந்து இழுத்து வந்து சிறையிட்டான்; அக்கொடுமையை எண்ணிய சூரியன், தட்சிணாயனத்தில் தென்திசையில் செல்ல அஞ்சி, மாபெரும் பனியுள் மறைந்து செல்கிறான் என்பது குறிப்பு.
அச்சுறுத்தினாரைத் தென் திசையில் தள்ளும் அத்தன் என்பதை நினைவுறுத்த, அவுணரை மென்மேலும் தென்திசையில் தள்ளித் தள்ளி இயமபுரம் சேர்த்தான் என்று அறிவித்தபடி.
"வளை கடல் கதற நிசிசரர் மடிய
மலையொடு பொருத முழுச்சே வகனே"
சேவகன் வகுப்பு.
"வென்றி வேல் முழுச்சேவகன்”
சித்து வகுப்பு.
“மயிலேறிய சேவகனே "
"திதிபுத் திரர் வீறடுசே வகனே"
கந்தரநுபூதி.
"வாரணம் கைப்பிடித்த சேவகப் பெருமாளே''
திருப்புகழ்.
''தேவதேவன் மெய்ச் சேவகன்''
திருவாசகம்.
“வைதிகத் தேர் ஏறிய ஏறு சேவகன்''
திருவிசைப்பா .
இப் பகுதிகள் தெய்வச் சேவகத்தைத் தெரிவிப்பது ஓர்க. (98)
------------

99. பல்வகைய மாயங்கள் பண்ணு[1]சூர் மகளிர்மலி
      [2]பாசாட விக்குமுடிவு
பண்ணிவன் சின[3]வுழுவை மத[வ]ழுவை முதலாய
      பல்[5]விருக வகைதுரத்திப்
[6]புல்வகைய தென்னும லாணவத் [7]தூறவை
      பொசுக்கிவேர் [8]கல்லிநீக்கிப்
புண்ணியப் புனல் பாய்ச்சி யர்ச்சனை வயற்கண்
      பொருந்துமன் பாழநட்டுச்
சொல்விதியி னில்லாத [9]பட்டிபுகு தாவகை
      துரத்தியைம் புலனடக்கும்
தூய்மையாம் வேலியிட் டோம்புசிவ மாம்பயிர்
      செழித்துவிளை போகநுகரும்
செல்வவே ளாளர்பணி செய்யவே ளரசனே
      சிறுதே ருருட்டியருளே
திருவேரகத்திலருள் உருவான சுப்ரமணி
      சிறுதே ருருட்டியருளே.

[1]. சூர் மகளிர் - அழகு காட்டிப் பின் அச்சுறுத்தும் வன தேவதைகள்.
[2]. பாசாடவி - பாசமாகிய அடவி; அடவி - அடர்ந்த காடு. [3]. உழுவை - புலி.
[4]. வழுவை - யானை. [5]. விருகம் - விலங்குகள். [6]. புல் - அல்பம்.
[7]. தாறு - புதர்கள். [8]. கல்லி - பெயர்த்து. [9]. பட்டி - ஆள்வார் இல்லாத மாடு.
--------------------------------
(பொ-ரை.) பல வகையான மாயங்களைப் பண்ணுகிற அச்சம் தரும் வனதேவதைகள் நிறைந்த பாசமாகிய (அடர்ந்த) காட்டிற்கு அழிவை விளைவித்து;
பொல்லாக் கோபமாகிய புலிகள், மதமாகிய யானைகள் முதலான விலங்குகள் பலவற்றை விரட்டி;
அற்பமானது (இது) என்று அசட்டை செய்யாமல், ஆணவமாகிய புதர்களை (அடியொடு) சுட்டு அழித்து, (இருந்த அதன்) வேரைக் கல்லி எறிந்து;
(பயன் தரும்) புண்ணியமாம் நீரைப் பாய்ச்சி; (வளரும்) அர்ச்சனை வயலில், விளையும் அன்பு விதையை ஆழ விதைத்து;
நியதி மொழிப்படி நில்லாமையாகிய ஆள்வார் இல்லாத மாடு புகுதாதபடி விரட்டி ஓட்டி;
ஐம்புலச் சேட்டையை அடக்கும் (வித்தக) ஒழுக்கமாம் வேலியிட்டு, பாதுகாக்கும் சிவமாகிய பயிர் செழித்து விளைந்த (சிவ) போகத்தை அனுபவிக்கும் செல்வராகிய வேளாளர் வணங்கும் செவ்வேள் எனும் அரசே! சிறு தேர் உருட்டி யருள்;
திருவேரகத்தில் அருள் சொரூபமான சுப்ரமண்யா! சிறுதேர் உருட்டியருள், (எ - று).
வித்தகத் தொண்டர்கள் வேளாளர்கள்; அவர்கள் தலைவன் பெருமான் என்று அறிவித்தபடி.
காடு கெடுத்து, விலங்கோட்டி, புதர் பொசுக்கி, வேர் அழித்து, நீர் பாய்ச்சி, வித்திட்டு, பட்டிமாடு மேயாமல் பாதுகாத்து, பயிர் விளையப் போகம் அனுபவிக்கும் வேளாளர் செயலை, தொண்டர்மேல் ஏற்றிக் கூறிய நுட்பத்தை ஊன்றி உணர்க; விரிக்கிற் பெருகும்.
      "அருச்சனை வயலில் அன்புவித் திட்டு
      தொண்ட உழவர் ஆரத் தந்த
      அண்டத் தரும்பெறல் மேகன் வாழ்க"
எனும் திருவாசகத்தை நினைவூட்டிய பா இது. (99)
-------------

100. தவந்[1]த வாதன முயன்றவை திருவடிச்
      சமர்ப்பித்துப் பெறுஞானத்
[2]தாவில் பேரொளி யால்மல மாயையாம்
      [3]தமசெலா மறநீக்கி
[4]நிவந்த வாதர வா[5]லகக் கோயிலி
      னின்றிரு வுருநாட்டி
நிமிட நேரமு மறப்பின்றி வழிபடு
      நேயமெய்த் தொண்டில்லேன்
சிவந்த வாய்மட மகளிர்மெய்ம் [6]முயக்கமும்
      செம்பொனும் பெருவீடும்
சிந்தை செய்துழல் பேதையேன் பணியையும்
      சிறியதென் றிகழாமல்
உவந்த பேரருட் குருமலை நாயகன்
      உருட்டுக சிறுதேரே
[7]உண்மை ஞானவின் புருமுரு கப்பிரான்
      உருட்டுக சிறுதேரே.

[1]. தவாதன - அழியாதன. [2]. தாஇல் - குற்றமிலாத. [3]. தமசு - இருள்.
[4. நிவந்த ஆதரவால் - உயர்ந்த காத லால். " [5]. அகக் கோயிலில் - மனக்கோயிலில்.
[6]. முயக்கம் - கூட்டம். [7]. உண்மை ஞான இன்பு - சச்சிதாநந்தம்,
---------------------------
(பொ-ரை.) தடைப்படாத தவத்தை முயன்று செய்து, (சார்ந்த) அத்தவப்பயனைத் திருவடிகளில் சமர்ப்பித்து;
(அதனால்) பெறுகிற ஞானமாகிய ஒழிவிலாத பேரொளியால், மல மாயைகளாகிய இருள் முழுதும் அடியொடு கெட அகற்றி;
உயர்ந்த காதலால் உள்ளக் கோயிலில் உன் திருவுருவை நிறுத்தி, ஒரு நிமிஷ நேரம் கூட மறவாமல் வழிபடும் அன்பு மெய்த்தொண்டு, (அணுவளவும்) இல்லாதவன் ஆயினேன்;
(கொவ்வைச்) செவ்வாய் இளம் பெண்களின் உடல் தொடர்பையும், மாற்றுயர்ந்த பொன்னையும், மாடமாளிகையையும், (சதா) சிந்தித்துத் திரியும் அறிவிலா என் பணியையும் சிறியது என்று இகழ்ந்து தள்ளாமல், உவந்து (ஏற்ற) பெருங்கருணை சொருபமான சுவாமிமலை நாயகா! சிறுதேர் உருட்டியருள்;
உண்மை அறிவு இன்ப உருவமான முருகப் பெருமானே ! சிறுதேர் உருட்டியருள், (எ - று).
தவம் செய்தால் சிவம் விளங்கும்; அங்ஙனம் இன்றி, அவமான மண் பெண் பொன் எனும் மூன்றையுமே ஆவலித்து உழல்வதால், அறிவிலாதவன் ஆயினன்; அப்படி யிருந்தும், என் சிறுபணியை ஏற்று உவந்தாய் என, விமல அருள் திறத்தை வியந்தபடி
"சரணகம லாலயத்தை அரைநிமிஷ நேரமட்டில்
தவமுறை தியானம் வைக்க அறியாத
சடன்'
எனும் திருப்புகழ் இங்கு எண்ணத் தகும். (100)
--------------

101. [1]அளியி னலறத் திறனெலாந் தெளிவுற அறைந்துமெய்ப் பொருள்கூறும்
      அரிய மாமறைப் பனுவலோ சிவனருள் ஆகம வகையோமுன்
தெளியு நுண்புலச் சங்கமே றியவர்செய் செந்தமிழ்த் தொகைதாமோ
      திருவ ணாமலைக் குருபர னருளிய திருப்புகழ்த் தேம்பாகோ
துளிது ளித்திட விழிப்புனல் சிதம்பர சாமியூ மைப்பாலன்
      துகளில் பாம்பனூர் முனிவரன் அருளிய துதிகளோ எளியேன்சொல்
ஒளிருந் [2]தோளணி யருட்குரு மலைக்குக னுருட்டுக சிறுதேரே
      உண்மை ஞானவின் புருமுரு கப்பிரான் உருட்டுக சிறுதேரே.

[1]. அளி - கருணை. [2]. தோளணி - வாகுவலயம்.
--------------------------
(பொ-ரை.) அருளால் அறத்தின் திறன் முழுதும் தெளிவாகத் தெரிவித்து, (குறிப்பாக) மெய்ப்பொருளைக் கூறும் அருமையான (பயன்) சிறந்த வேதப் பாடல்களோ? (அமல்) சிவனார் அருளிய (இருபத்தெட்டு எனும்) ஆகம வகைகளோ? முற்காலத்தில் தெளிந்த நுண்மாண் நுழைபுலம் உடையவராய்ச் சங்கம் அமர்ந்த பெரும்புலவர்கள் செய்த செந்தமிழாலான தொகை நூல்களோ?
திருவண்ணாமலையில் இருந்த குரவரான திருவருணகிரிநாதர் அருளிய தேம்பாகான திருப்புகழோ?
கண்ணீர்த் துளி கசிந்தொழுகத்( திருப்போருர்ச்) சிதம்பர ஸ்வாமிகள், ஊமைப் பிள்ளையாயிருந்த குமரகுருபர சுவாமிகள், குற்றம் இல்லாத பாம்பன் பதியரான குமரகுருதாச முனிவரர் (முதலினோர்) அருளிய துதிமொழிகளோ, எளிய என் சொற்கள் ? ஒளிவீசும் தோளணி (என்னும் வாகுவலயம்) அணிந்த அருள் சொருபமான சுவாமிமலைக் குகா! சிறுதேர் உருட்டி யருள்;
சச்சிதாநந்த சொருபமான முருகப் பெருமானே! சிறு தேர் உருட்டி யருள், (எ - று).
பனுவலோ, ஆகம வகையோ, தொகைதாமோ, தேம்பாகோ, துதிகளோ எளியேன் சொல் எனக் கூட்டுக.
'சங்க மேறியவர்' நக்கீரர், கபில பரணர் முதலினோர்.
'திருவணாமலைக் குருபரர் - அருணகிரிநாதர்; இவர். திருவருணைக் கோபுரத்து இளையனாரிடம் பேறான ஆறெழுத்தைப் பெற்றவர். குமரன் எழுந்தருளிய தலந்தோறும் சென்று, பயனான திருப்புகழ் பாடியவர். சமய வாதில் சம்பந்தாண்டனையும், வில்லியையும் வென்றவர்.
சிதம்பர சாமி'- இவர் மதுரையில் இருந்தவர்; இலக்கண வன்மையர். குமார தேவரிடம் பெருகிய ஞான உபதேசம் பெற்றவர். மதுரை மீனாட்சியார் அருளாணையை மேற்கொண்டு, திருப்போரூர் முருகன் கோயில் திருப்பணி செய்தவர். திருப்போரூர்ச் சந்நிதி முறை பாடியவர். இவருடைய ஒவ்வொரு பாடலும் உள்ளம் அள்ளும். சிறந்த நூற்கட்கு உரையும் செய்தவர் இவர்.
'ஊமைப் பாலன்' - குமர குருபரர்: இவர் திருச்செந்திலாண்டவன் திருவருளால் ஊமை நீங்கி, *கந்தர் கலிவெண்பாப் பாடியவர். மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ், குறம், இரட்டைமணி மாலை, மதுரைக் கலம்பகம், முத்துக் குமாரசுவாமிப் பிள்ளைத்தமிழ் முதலிய பல நூற்களைச் செய்தவர். காசியிலும் திருப்பனந்தாளிலும் திருமடம் கண்டவர். மொழிக்கும் சமயத்திற்கும் காசி மடம், குன்றின் மேல் இட்ட விளக்காய் நின்று, வாய்மை மக்களை என்றும் வளர்த்து வருகின்றது.
*அருமையான கந்தர் கலிவெண்பா ரசபதி விரிவுரை, அமிர்தவசனி மாத இதழ்க் காரியாலயம், சென்னை பந்தர் தெரு 54-ல் கிடைக்கும்.
பாம்பனூர் முனிவரர் - இவர், இராமேஸ்வரத்தைச் சார்ந்த பாம்பன் எனும் பதியில் பிறந்தவர்; இளமை முதல் கந்தனை வந்தித்த கவிஞர்; அத்யாச்சிரம அரும் துறவி. ஆறாயிரத்தறுநூற் றறுபத்தாறு பாடல்களால் முருகனை ஆராதித்தவர். அருணகிரி நாதரைத் தம் பாடல் பலவற்றில் பாடி மகிழ்ந்தவர். திருவான்மியூரில் கோயில் கொண்ட அடிகளின் முதன்மை மாணவர், திருவொற்றியூர் அப்பர் ஸ்வாமிகள் திருக்கோயிலில் திருப்பணியாற்றும் பலகலை வல்ல ஸ்ரீபாலசுந்தர ஸ்வாமிகள்; இவர் தன்னலமற்ற ஓர் தனிப்பெருந் துறவி. (101)
------------

102. [1]பரந்த நின்றிருப் பேரருட் கடலிடைப்
      பயில்கின்ற பனிப்பாறைப்
[2]பண்பு ளேமதில் மூழ்குவே மெழுகுவேம்
      பலவயிற் றிரிகிற்பேம்
வரந்த ராயென்பம் ஒன்றும் வேண் டிலமென்பம்
      வழுத்துதும் பழிப்பேமுன்
வழிவ ழித்தொண்டர் பணிபுரி வேமுனை
      வலிந்து[3]புன் பணிகொள்வேம்
[4]நிரந்த பேரருட் செல்வமெய் தினமென
      நெடுமொழி பலசொல்வேம்
[5]நிரப்புற் றேமென்பம் அவையெலா முவந்தெங்கள்
      நினைவெலாம் நிறைவேற்றும்
[6]உரந்த வாதசீர்க் குருமலை முருகவே
      ளுருட்டுக சிறுதேரே
உண்மை ஞானவின் புருமுரு கப்பிரா
      னுருட்டுக சிறுதேரே.

[1]. பரந்த - பரவிய. [2]. பண்பு - தன்மை . [3]. புன் பணி - அற்பமான வேலை.
[4]. நிரந்த - வரிசைப்பட வந்த. [5]. நிரப்பு - வறுமை. [6]. உரம் தவாத - வலி கெடாத.
-----------------------------
(பொ-ரை.) பரவிய நினது பெரிய திருவருட் கடலில், பயின்றுள பனிப்பாறையின் குணம் உடையேம்; (அதுபோல்,) அவ்வருட் கடலில் மூழ்குவேம்; (அதன்பின்) எழுவேம்; பல இடங்களில் திரிவேம்; வரம் தா என்று வாய் திறப்பேம்; ஒன்றும் விரும்பிலம் என்றும் கூறுவம்; புகழ்ந்து போற்றுவம்; (மற்றொரு சமயம் வெறுத்து) இகழ்வம்; வழி முறையாக வரும் உனது தொண்டர்கள் (இட்ட சிறந்த) திருப்பணிகளைச் செய்வேம்; உன்னை வலிந்து அல்பமான பணி செய்யும்படி ஏவுவம்;
வரிசைப்பட பேரருள் செல்வம் பெற்றனம் என்று, பெருமித மொழி பல புகல்வேம்; வறுமை யடைந்தேம் என்பம்; (சிறுபிள்ளைத்தனமான) அவைகள் யாவற்றையும் உவந்து, எங்கள் நினைவுகள் முழுதையும் நிறைவேற்றும் உரம் கெடாத சிறப்புடைய சுவாமிமலை முருகவேளே! சிறுதேர் உருட்டியருள்;
சச்சிதாநந்த சொரூப முருகப் பெருமா! சிறுதேர் உருட்டியருள், (எ - று).
பனிப்பாறையானது, கடல் நீரில் சிலபோது மூழ்கும்; சிலபோது மேலே மிதக்கும். கடலில் பல இடங்களிலும் திரியும். அதுபோல், அடியேம் பலப்பட உன் திருவருளில் உறைப்பேறித் திரிகின்றேம்; ஆயினும், பொறுத்து எம்மை ஆள்கின்றாய் என்பது கருத்து.
"பாடிமால் புகழும்" எனவரும் திருவாசகத்தில், "ஊடுவ துன்னோ டுகப்பது முன்னை உணர்த்துவ துனக்கெனக் குறுதி" எனும் பகுதி இங்கெண்ணத் தகும். (102) ------------

103. [1]அலகி லாமறை யாகமம் வாழ்வுற அவைவழி வழிவந்த
      அரிய பல்கலை வாழ்வுற அழிவிலா அறங்களெல் லாம்வாழ
பலவ ளங்களும் பொழிமழை வாழ்வுறப் பயிரெலாம் மிகவாழப்
      பழுதி லின்பமே மேவியா ருயிரெலாம் [2]பல்கியெங் கணும்வாழ
கலக நோய்[3]மிடி முதலிய தீயவை கடிந்து மானுட ரெல்லாம்
      கடவு ளன்புமன் னுயிர்த்தயை முதனலங் கலந்துசந் ததம்வாழ
உலகம் வாழ்வுறக் குருமலை வாழ்குக உருட்டுக சிறுதேரே
      உண்மை ஞானவின் புருமுரு கப்பிரான் உருட்டுக சிறுதேரே.

[1]. அலகிலா - அளவு இல்லாத. [2]. பல்கி - நிறைந்து. [3]. மிடி - வறுமை.
-----------------------------
(பொ-ரை.) அளவிலாதன ஆன வேத ஆகமங்கள் வாழ, அவைகளின் கால் வழியாக வாய்த்த அருமையான பலகலைகள் வாழ, அழிவில்லாத அறமனைத்தும் வாழ, வளங்கள் பலவும் வழங்கும் மழை வாழ, (வாழ்விக்கும்) பயிர் அனைத்தும் வளர்ந்து பெரிது வாழ;
பழுது இல்லாத இன்பம் எய்தி, அருமை உயிர்கள் அனைத்தும் வளம் நிறைந்து எங்கும் வாழ;
கலகங்கள், நோய்கள், வறுமைகள் முதலிய தீமை பயப்பவை யாவும் தீர்ந்து, மக்கள் அனைவரும் சிவபக்தி, நிறைந்த ஜீவகாருண்யம் முதலிய நலம் அனைத்தும் கலந்து எந்நாளும் வாழ, உலகம் (இப்படியே என்றும்) பெரிது வாழ்வடைய, சுவாமிமலை வாழும் குகா! சிறுதேர் உருட்டி யருள்;
சச்சிதானந்த சொரூப முருகபிரானே ! சிறுதேர் உருட்டியருள், (எ - று).
உன் சிறுதேர் எங்கும் உலா வந்தால், உலகம் முழுதும் வாழ்வு பெறும் என்றபடி. (103)
-----------------

104. செம்பொன் மா[1]மலை வில்லியார் [2]நுதல்விழித்
      தோன்றிய செழுஞ்சோதீ
சிவமென் கற்பகஞ் சுற்றிய [3]பசுங்கொடிச்
      செனித்ததே னிறைபூவே
நம்பு [4]தொண்டற்குத் தேர்நடத் தியதிரு
      [நா]ரணன் மருகோனே
நல்ல செந்தமிழ் [6]முனிவரன் வழிபடு
      ஞானசற் குருநாதா
எம்ப வப்பிணி யறாழித் தருள்புரி
      யிணையில்வைத் தியநாதா
[7]இபம கட்[8]குமான் மகட்குமெய்த் தவத்தினு
      லெய்திய மணவாளா
[9]உம்பன் மாமுக கற்பக [1]0சோதர
      வுருட்டுக சிறுதேரே
உண்மை ஞானவின் புருக்குரு மலைக்குக
      உருட்டுக சிறுதேரே.

[1]. மலைவில்லியார் - சிவனார். [2]. நுதல் - நெற்றி. [3]. பசும் கொடி - பார்வதி.
[4]. தொண்டற்கு - அர்ச்சுனனுக்கு [5]. நாரணன் - கண்ணன். [6]. முனிவரன் - அகத்தியர்.
[7]. இபமகட்கு - தேவயானைக்கு. [8]. மான் மகட்கு - வள்ளியார்க்கு.
[9]. உம்பல் - யானை. [10]. சோதர - தம்பியே.
------------------------------
(பொ-ரை.) செந்நிறமாய்ச் சிறந்த மேருமலையை வில்லாகக் கொண்ட சிவபிரான் நெற்றிக் கண்ணில் உதித்த (பிறங்கும்) செழுமைப் பேரொளியே!
சிவமெனும் கற்பகத் தருவைச் சுற்றிய (பார்வதி எனும்) பச்சிளங் கொடியில், மலர்ந்த தேன் நிறையும் மலரே!
நம்பிய தொண்டனான நரனுக்கு(ப் பாரதத்தில் பார்த்த சாரதியாய்த்) தேர் செலுத்திய திருநாரணன் மருமகனே!
நலம் அமைந்த செவ்விய தமிழ் முனிவரான அகத்தியர் வழிபடு மெய்ஞ்ஞானக் குருநாதா!
எமது பிறவி நோயை அடியோடு ஒழித்து அருள் பாலிக்கும் ஒப்பிலாத (நலம் சிறந்த) வயித்திய நாதனே!
யானை மகளான தேவயானைக்கும், மான் மகளான வள்ளியம்மைக்கும் மெய்ம்மைத் தவத்தால் கிடைத்த மணவாளா;
யானைமாமுக கற்பகமான கணபதி தம்பியே! சிறு தேர் உருட்டியருள்!
சச்சிதாநந்த சொரூப சுவாமிமலைக் குகா! சிறுதேர் உருட்டியருள், (எ - று).
உண்மை - சத்து; ஞானம் - சித்து; இன்பு - ஆநந்தம். இம் மூன்றுமான திருமேனியன் முருகன் என்பதை, எண்ணும் போது இன்பம் உதிக்கும்.
சோதியே! பூவே! மருகோனே! குருநாதா! வயித்திய நாதா! மணவாளா! சோதர என ஏழு பெயரிட்டு விளித்து, சிறுதேர் உருட்டியருள் என மங்கலமாக நிறைவெய்துகிறது இப் பிள்ளைத்தமிழ். (104)

திருவேரகத்து சுவாமிநாதன் பிள்ளைத்தமிழ் நிறைவு பெற்றது. திருவேரகப் பெருமான் திருவடிகட்கே அடைக்கலம்!
திருஞான சம்பந்தன் சேவடி வாழ்க
ஓம்
திருவேரகன் துதி

மின்னெறியும் மணியோக நிறைமவுலி யாறினும்
      விளங்குபிர காசமல்க
வீரமுள வாகுஅணி பளபளென மின்னியுயர்
      விண்மணெங் கும்பிறங்க
அன்னமென் னடைபயிலென் அன்னையிரு வருமினிய
      அன்புகெழு மொழிகள் பன்ன
அருணகிரி முனிகண்டு பூசித்த அடிகளில்
      அனந்தகிண் கிணிகள் அலற
வன்னமயில் மீதிவர்ந் தென்னெடிய குறைதீரும்
      வரம் நல்க நீவர,இனம்
வைகலோ வாரமோ மாதமோ வருடமோ
      வயதுமுடிவோ அறிகிலேன்
மின்னனந் தம்கோடி வென்னநடு வெளியிலெழு
      மெய்ஞ்ஞான ஆதிக்கமே
வீரமுள தேவர்தவ மேவுறுவர் தொழுத்திரு
      வேரகம் அமர்ந்த வேளே!
      - பாம்பனடிகள்
மகிமை தவழும் சுவாமிநாதன் மலரடிகட்கே அடைக்கலம்.
      ஓம்

----------------

This file was last updated on 30 Nov. 2022
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)