ஆனந்த சாகரஸ்தவம்
(இன்பமாகடல்) விளக்கவுரையுடன்
தமிழாக்கம் : கோவை கு. நடேச கவுண்டர்
inpamAkaTal (AnantacAkasrastavam),
Tamil translation by kOvai natEca kauNTar
In Tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Dr. Muthu Kumaraswamy and Siddhar Gnana Patasalai of civakkudil, Coimbatore for providing a scanned PDF of this work.
We thank Dr. Meenakshi Balaganesh, Bangalore, India for her assistance in the preparation of this work.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2023.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
ஆனந்த சாகரஸ்தவம் (இன்பமாகடல்) விளக்கவுரையுடன்
தமிழாக்கம் : கோவை கவியரசு வித்வான் கு. நடேச கவுண்டர்
Source:
ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் அருளிச் செய்த
ஆனந்த சாகரஸ்தவம் (இன்பமாகடல்) விளக்கவுரையுடன்
தமிழாக்கம் : கோவை கவியரசு வித்வான் கு. நடேச கவுண்டர்
வெளியீடு : ஸ்ரீ சித்தர் ஞானபாடசாலை, சிவக்குடில்,
கோவைப்புதூர் - 641 042.
--------------------------------------------------
நூலின் பெயர் : ஆனந்த சாகரஸ்தவம் [இன்பமாகடல்]
ஆசிரியர் ©: ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர்
தமிழாக்கம் : கு. நடேச கவுண்டர்
வெளியீடு © : ஸ்ரீ சித்தர் ஞானபாடசாலை, சிவக்குடில், கோவைப்புதூர்-641 042.
முதற் பதிப்பு ; 1970 ; இரண்டாம் பதிப்பு - 2004
பக்கம் : 148 ; மொழி -தமிழ்
நூலின் விலை : ரூ.30/
அச்சிட்டோர் : தி நேஷனல் பிரிண்டர்ஸ், 427, அம்பேத்கார் சாலை, வட்டம் -27, நெய்வேலி -3.
---------------
இன்பமாகடல் :முன்னுரை
பரம்பொருள், தன்னியல்பில் நிற்கின்ற பொழுது சிவம் என்றும் உயிர்களுக்கு அருள வருகின்ற தடத்த நிலையில் சக்தி என்றும் சொல்லப்படும். பரம்பொருளையடையச் சாதனை புரிவோர் சிவமும் சக்தியுமாக இரண்டையும் சேர்த்தே வழிபடுவர். அம்மையப்பர் வழிபாடு நம் நாட்டில் மிகத் தொன்மையானது. 'ஆதிபகவன் முதற்றே யுலகு' என்னும் குறளடிக்கு, ஆதியோடு கூடிய பகவன் முதற்றே உலகு எனச் சாத்திரம் அறிந்தவர் பொருள் கொள்ளுவர். "பெண்ணுரு ஒருதிறன் ஆகின்று, அவ்வுருத் தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்” (புறநானூறு கடவுள் வாழ்த்து) என்று சிவம் சத்தியோடு கூடிய நிலையையும் சக்தி சிவத்தில் ஒடுங்கிச் சித்பரமாகிய சிவம் தன்னியல்பில் நிற்கும் நிலையையும் சான்றோர் காட்டினர்.
சித்பரம், உயிர்களுக்கு சக்தி வடிவில்தான் அருள்செய்கின்றது. சிவத்திற்கு இருவகைச் சத்திகள் உண்டு. ஒன்று பிரிவிலா அருட்சக்தி. மற்றொன்று பரிக்கிரக சத்தி. அல்லது வேண்டும்போது பயன் படுத்திக்கொள்ளும் சத்தி. இரண்டும் சிவத்தினுடைய சத்திகளே. பரசிவத்தோடு பிரிவிலாசத்தியே பராசக்தி, அதுவே உலகுயிர்களுக்கு அருள வருகின்ற நிலையில் ஆதிசத்தி முதலிய பெயர்களைப் பெறுகின்றது. குணம்குறியற்ற பரம் பொருள் உயிர்களுக்கு எந்த வடிவில் வந்தாலும் அந்த வடிவமும் சத்தி வடிவமேயாகும். சிவத்தின் மாகேசுர வடிவங்கள் அனைத்தும் சத்தி வடிவங்களே. - சித்பரம் பொருளே பரை, ஆதி, இச்சை, கிரியை, ஞான சக்திகளாய் மட்டுமின்றி, அநந்த சக்திகளாயும் விளங்குகிறது.
ஒன்றாய் அரும்ப்பிப் பலவாய் விரிந்து இவ்வுல கெங்குமாய் நின்றாள்' என, அபிராம பட்டர், பராசக்தியாகிய ஒன்றே, ஒரே சத்தியாய் அரும்பு விட்டுப் பற்பல சத்திகளாய் விரிந்து இவ்வுலகெங்குமாய் வியாபித்துள்ளாள் என்று கூறுகிறார். அவளே அனைத்துமாக வுள்ளாள் என்றதால் இப்பிரபஞ்சத்தில் நிலைத்திணை இயங்கு திணை அனைத்தும் சத்தி வடிவமே என்பது சாக்த மதம். எவ்வித இயக்கமும் சத்தியின் வடிவமே. உலகன்னை எனும் பொழுது உலகத்தை ஈன்ற அன்னை என்பதோடு உலகமெலாமாகிய அன்னை என்றும் பொருள் படும்.
சிவமும் சத்தியும் பிரிவிலாச் சம்பந்தமுடையன. எனினும், உலகுயிர் இயக்கம் சத்தியையே கர்த்தாவாகக் கொண்டுள்ளது. எனவே, விரைவிலும் எளிதிலும் சித்தியை விரும்புபவர்கள் சத்தியை, பெண் வடிவில் உபாசித்தலை மேற்கொள்கின்றனர். சித்பரம் பொருள் ஆணுமன்று, பெண்ணுமன்று; ஆயினும் அதன் சத்தியம் சத்தைத் தாயாக உபாசிப்பதில், அன்னையாக வழிபடுவதில் பேரின்பமும் மன அமைதியும் விளைகின்றது என்பதில் ஐயமில்லை. இதுவே இயல்பானதாகவும் இயற்கையான தாகவும் பொருத்தமானதாகவும் உள்ளது.
குழந்தை அன்னையைத்தான் முதலில் அறிகிறது; தனக்கு இன்னது வேண்டும் என்ற அறிவு குழந்தைக்குத் தோன்று முன்னரே அன்னை உடலாலும் உணர்வாலும் குழந்தையின் தேவையை அறிந்து ஊட்டுகின்றாள். பராசத்தியாகிய அன்னையும் அத்தகையவளே. பத்தனுடைய தகுதி தகுதியின்மையை ஆராயாது அவனை எப்படியும ஈடேற்ற வேண்டும் என்னும் அக்கறையும் கருணையும் உலகமெலாம் ஈன்ற அன்னைக்குத்தான் உண்டு; அது அவளால் தான் இயலும். எனவேதான், அன்னையின் புகழ் பாடும் இலலிதா ஸஹஸ்ர நாம தோத்திரம் அம்மையை 'மாதா' என்ற சிறப்பான பெயருடன் போற்றித் தொடங்குகிறது; 'மாதா' எனத் தொடங்கி, மீண்டும் 457 ஆவது திருநாமமாக 'மாதா' எனக் கூறுகிறது.
இத்தாவர சங்கமத்தில் எத்தனையோ பிறவிகள் எடுத்து இளைத்த உயிர்களுக்கு ஒவ்வொரு பிறவியிலும் ஒருதாய் இருந்திருக்கக் கூடும். பிள்ளையாய்ப் பிறந்த உயிரின் துன்பத்தைப் போக்க முயன்றிருத்தலும் கூடும். துன்பங்களில் எல்லாம் கொடுந்துன்பமான பிறவித் துயரைப் போக்க உலகனைத்தும் ஈன்று காக்கும் அன்னையாம் பராசத்தியால் தான் முடியும். பிற பெண்கள் சத்தி வடிவமாயினும் அவ்வப் பிறப்பில்தான் தாயாவர். உலகன்னையோ அனைத்துப் பிறப்பிலும் தாயாகிக் காக்கும் பொறுப்புடையாள். அவளே பிற தாயரைக் காட்டிலும் மேம்பட்டவள்; துதித்தற் குரியவள்; அவளே பிற தாயருக்குப் பிள்ளையைப் பெற்றுப் பேணும் சக்தியை ஈந்தவள். எனவேதான், முதல் நாமம் 'மாதா' எனத் தொடங்கியது. அவளே தாய்; அவளே என் உயிர்த் துணை, அவளே துதித்தற்கு உரியவள் என்பதனை அறிந்து கொண்டேன் என அபிராமி பட்டரும், "துணையும் தொழுந் தெய்வமும் பெற்றதாயும் சுருதிகளின் பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும் பனிமலர்ப்பூங் கணையும் கருப்புச் சிலையும் மென்பாசாங் குசமும்கையில் அணையும் திரிபுர சுந்தரியாவது அறிந்தனமே," என்று கூறினார்.
மீண்டும் 457 - வது நாமமாக 'மாதா' எனக் கூறியது, அம்பாளே அனைத்து உலகத்திற்கும் பிறப்பிடமாக 'ஜநநி'யாக இருப்பதால் என்க. இது கூறியது கூறல் அன்று.
சிவசத்தியை, மீனாட்சியம்மையாகக் கண்டு வழிபட்டு உய்ந்த பெருமகனார், நீலகண்ட தீக்ஷிதர். மஹாகவியாகிய நீலகண்ட தீக்ஷிதர் வடமொழியில் அருளிச்செய்த பிரபந்தம் 'ஆனந்த சாகரஸ்தவம்' என்னும் இந்நூல்.
இன்பமாகடல்' என்னும் இப்பிரபந்தம் வடமொழியில் உள்ள ஆனந்த சாகரஸ்தவம் என்னும் பிரபந்தத்தின் தமிழாக்கம் ஆகும். ஆனந்த சாகரஸ்தவம்' என்னும் இவ்வரிய வடமொழி நூலைத் தமிழில் 'இன்பமாகடல்' எனும் பெயரில் மொழிபெயர்த்துத் தமிழன்பர்களுக்கு அளித்தவர் கோவை - கவியரசு வித்துவான் கு. நடேசகவுண்டர் அவர்கள். தமிழ், வடமொழி ஆகிய இருமொழிப்புலமையும் சிவனடிமைத் திறமும் வாய்ந்த இவருடைய பாடல்கள் ஆழமும் அழகும் தெளிவும் கொண்டு மிடுக்குடன் பயிலுந்தோறும் இன்பம் அளிக்கின்றன.
இந்நூலில் இலக்கியச் சுவையும் பத்திச் சுவையும் தம்முள் ஒன்றுக்கொன்று சுவை கூட்டி ஒளிர்கின்றன. பத்திப் பெருக்கினால் பொங்கி வழியும் கற்பனைகளும் சொற் சாதுரியமும் நயம்பட - உரைக்கும் விண்ணப்பங்களும் சிலேடை இரட்டுற மொழிதல் தற்குறிப்பேற்றம் முதலிய அணிகளும் இந்நூலைப் பயில்வோர் உள்ளத்தைப் பிணித்து மீனாட்சியம்மையின் திருவடி இன்பத்தில் திளைக்கச் செய்கின்றன.
இவ்வரிய நூலுக்கு ஒரு அரிய உரையும் அமைந்துள்ளது. இவ்வுரை தீக்ஷிதேந்திரரின் பத்தி நிலையை நன்கு புலப்படுத்துவதோடு, சைவத் திருமுறைகள், சித்தாந்த சாத்திரங்கள் மற்றும் ஏனைய நூல்களில் அமைந்துள்ள ஒத்த கருத்துக்களை எடுத்துக்காட்டி பத்தி உணர்வுக்கு இன்பம் அளிக்கின்றது.
பத்தி உணர்வு நிலம், காலம், மொழி, சமயம் முதலிய வரம்புகளைக் கடந்தது என்னும் உண்மை இவ்வுரை விளக்கத்தால் பெறப்படும்.
இதன் மூலநூல் ஆசிரியர் மஹாகவி நீலகண்ட தீக்ஷிதர், பரம சாம்பவரும் வடமொழியில் நூற்றிருபத்து நான்கு அரும் பனுவல்கள் அருளிச் செய்தவரும் ஆகிய அப்பைய தீக்ஷிதேந்திரர் அவர்களுடைய பேரனார்; தீக்ஷிதேந்திரர் அவர்களின் பேரனுக்கிரகத்துக்குப் பாத்திரமாயிருந்தவர். சிவலீலார்ணவம், நீலகண்ட விஜயம் முதலிய அரிய நூல்களை அருளிச் செய்த பெரியார்.
‘ஆனந்த சாகரஸ்தவம்' தோன்றிய வரலாறு அற்புதமானது….
நீலகண்ட தீக்ஷிதர் மதுரையிலிருந்து அரசாண்ட திருமலை நாயக்கரின் அமைச்சர்களில் ஒருவராகப் பணியாற்றி வந்தார். மதுரைப் புதுமண்டபம் தீக்ஷிதரின் மேற்பார்வையில் எடுக்கப்பட்டது. அதனை அமைத்தவர் சிற்பக் கலையில் மிக வல்லுநரான சுந்தரமூர்த்தி ஆச்சாரி என்பவர்.
மதுரைப் புதுமண்டபத்தில் நிறுவியுள்ள அழகிய சிற்பங்களில் திருமலை நாயக்கரின் பட்டத்து அரசியின் சிலை செய்து முடித்தபின் அதன் தொடையில் ஒரு சில்லு எழுந்து, அச்சிலையின் வடிவுக்கு ஒரு பழுது உண்டாக்கியது. சிற்பியார், தாம் அரும்பாடு பட்டுச் சிறந்த கல்லில் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் அமைத்த உருவத்தில் ஒரு பெருங்குறை நேர்ந்துவிட்டதே என்று பெரிதும் கவன்றார். பிறிதோர் உருவச் சிலை செய்து கொண்டு, பழுதுபட்டதைக் கழித்து விடலாம் என்றாலோ வேலையை முடிப்பதற்குக் குறிப்பிட்ட நாள் கடந்து விடுமே எனக் கருதி திகைத்திருந்தார் ஆச்சாரியார்.
ஆச்சாரியாரின் கவலையை உணர்ந்த நீலகண்ட தீக்ஷிதர் அந்த உருவம் அப்படித்தான் இருக்கும். கவலை கொள்ளற்க, உரிய இடத்தில் நிறுவிடுக என்று தேற்றினார். சிலையும் நிறுவப்பட்டது.
புது மண்டபப் பணிகளைக் கண்டு பாராட்டிக் கொண்டே வந்த மன்னர் திருமலை நாயக்கர் தம் தேவியின் உருவச் சிலையின் தொடையில் ஒரு சில்லு எழுந்திருக்கிறதைக் கண்டு அக்குறையுடன் அதனை நிறுவியதேன் எனச் சிற்பியை வினவினார். நடந்ததைச் சிற்பி மன்னரிடம் கூறினார்.
அந்த உருவத்துக்குரிய அரசியின் தொடையில் இயற்கையாகவே ஒரு மச்சம் உண்டு. அதற்கேற்பவே உருவச் சிலையிலும் ஒரு சில்லு எழுந்திருந்தது. அது சிற்பியின் தெய்வீகக் கலைத் திறத்தால் நிகழ்ந்த அற்புதச் செயலாகும். எனினும், நாயக்கரின் மனத்தில் ஒரு விபரீத உணர்ச்சி எழுந்தது. ‘பிறர் யாரும் அறிந்திராததும் யாமே அறிந்திருந்ததுமாகிய, அரசியின் தொடையில் உள்ள மச்சத்தின் செய்தி தீக்ஷிதருக்கு எப்படித் தெரிந்தது? கள்ளத்தனமாக அதனைக் கண்டிருக்க வேண்டும். தகாத செயலைச் செய்த அக்கண்களைக் களைந்தெறிய வேண்டும்' என்று கருதினார், மன்னர்.
அக்கருத்தினை நிறைவேற்றுவதற்காக, மறுநாட் காலையில், தீக்ஷிதரைச் சிறைப்படுத்திக் கொணருமாறு காவலரை ஏவினார். மன்னரின் படை தீக்ஷிதரின் மாளிகையைச் சூழ்ந்தது.
அவ்வேளையில் தீக்ஷிதர் வழக்கம் போலத் தேவியைப் பூசை செய்து கொண்டிருந்தார். தெய்விகத் தன்மையால் அரசரது கருத்தை அறிந்த தீக்ஷிதர் இது விதியின் செயல் என மதித்து, 'மன்னர் செய்விக்கக் கருதியதை நாமே செய்து கொள்வோம்' என்று தேவிக்கு ஆரத்தி எடுத்த கற்பூரச் சுடரால் அச்செயலைச் செய்து முடித்தார்.
நிகழ்ந்ததை அறிந்த மன்னர், நல்லுணர்வு தலை எடுப்பவே, நம் கருத்தை நாம் சொல்லாமலே அறிந்த தெய்விகத்தன்மையாளரும், மாசு சிறிதும் இல்லாதவரும் ஆகிய அந்தணப் பெரியாருக்கு நம் தீய சிந்தனையால் இத்தகைய கேடு நேரிட்டதே எனக் கழிவிரக்கம் கொண்டார். தீக்ஷிதரைக் கண்டு பணிந்து மன்னிக்க வேண்டினார். தீக்ஷிதர், இது தெய்வத்தின் செயல்; உம்பால் ஒரு குற்றமும் இல்லை என அரசரைத் தேற்றினார்.
அரசர், தீக்ஷிதரது வாழ்க்கைக்கு வேண்டிய அளவு பொன்னும் பூமியும் அளித்து அவரைத் தம் விருப்பப்படி வாழ விடுத்தார்.
பின்னர், தீக்ஷிதர் தம் வழிபடும் தெய்வம் ஆகிய மதுரை மீனாட்சியம்மனை, இத்தோத்திரத்தால் உருகியேத்தி வழிபட்டு மீண்டும் கண்களைப் பெற்று நீண்ட காலம் வாழ்ந்திருந்தார்.
செவிவழிக் கூறப்படும் இச்செய்தியின் உண்மை நிலை எவ்வாறு இருப்பினும், பத்திச்சுவை பெருக்கெடுத்துப் பாய்கின்ற இந்நூலை அன்பொடு பாராயணம் செய்பவர்கள், தேவியின் அருளால் இம்மையில் எல்லா நலன்களையும் எய்தி நீடு வாழ்ந்திருந்து, மறுமையில் துறக்க இன்பம் துய்த்து, இறுதியில் மீண்டு வாராத முத்தி இன்பம் எய்துவர் என்பது திண்ணமே.
இந்நூலின் மூலம் மட்டும் முதற் பதிப்பு சாதாரண ஆண்டு - 1970ல், கோவை - காந்திபுரம், ‘பத்மாலய நிதி 'யின், அதிபரும் சிவபூசா துரந்தரருமாகிய சைவத்திருவாளர் கே. சென்னியப்ப கவுண்டர் அவர்களால் வெளியிடப்பட்டது.
ஸ்ரீ சித்தர் பணியில்,
சிவக்குடில் அன்பர்கள்
-----------------------------------------------
உ
சிவமயம்
இந்நூல் மொழிபெயர்ப்பாசிரியர் மாணாக்கரும், கோவை சபர்பர்ன் உயர்நிலைப்பள்ளித் தலைமைத் தமிழாசிரியருமாகிய மதுரகவி வித்துவான் திரு. க. கி. இராமசாமி ஐயர் அவர்கள் இயற்றிய சாத்துக்கவி
(ஆசிரியப்பா)
ஆலவாய் அமர்ந்த அண்ணலார் தம்மிடப்
பாலதாய் ஓங்கும் பசுங்கரு ணைக்கடல்;
ஆர்த்த பிறவியில் ஆழா தடியரை
ஈர்தாட் கொள்ளும் ஈடில் சுகக்கடல்,
தன்னடைந் தோர்வினைத் துன்னுவெப் பொழித்துத்
தன்னையே அவர்க்குத் தருநன் னயக்கடல்;
நாத்திகப் பாறையைப் பேர்த்தழித் தன்பர்
சீர்த்திகழ் சிந்தையில் தேங்குஞ் செழுங்கடல்;
பிறவிப் பெருங்கடல் நீந்துவார் மூழ்கி மறவி
அறியராய் நினையும் வண்கடல்;
கொள்ள மாளா இன்பவெள் ளந்தான்
என்றுங் குறைபடா தொன்றும் நளிர்கடல்;
ஆழமும் நீளமும் அகலமும் பரப்பும்
ஆர்க்கும் அறியொணா அமுதத் தண்கடல்;
செந்தமிழ் வடநூற் செழுங்கவி வாணராம்
ஆந்தண் முகிற்குழாம் அருந்தும் அருங்கடல்;
முகக்கணா லன்றி முழுத்தமா தவத்தோர்
அகக்கணாற் பார்க்கும் ஆனந்த வார்கடல்;
பத்திஞா னங்களால் சித்திப்ப தாமெம்
அத்தன் அருளெனும் ஆசில் புகழ்க்கடல்;
அங்கயற் கண்ணியென் றற்புதப் பெயர்கொண்
டிங்கெழுந் தருளும் இன்ப மாகடல்;
அதனுட் படிந்து திளைத்தார் அநேகர்
அங்கவர் தம்முள் ஈங்கிதன் பாங்கறிந்
துலகோர் உய்ய அலகில்பே ரருளே
யண்டமா சைவர் நீண்டமா தவத்தர்
மாட்சிசேர் தெய்வக் காட்சியர்; வையத்
தாட்சியர் காணாச் சேட்சியர்; பூட்சியர்;
மேலோர் போற்றும் நீல கண்ட
தீட்சிதர் என்பார் திகழ்வட மொழியில்
அருளுமா னந்த சாகரஸ் தவமெனும்
அரியநூ லதனை அருந்தமி ழாக்கம்
செய்துப கரித்தார் யாரெனிற் சாற்றுதும்;
தமிழும் சைவமும் தழிழைத்தினி தோங்க
நம்மனோர் செய்த நற்றவப் பயனால்
கொங்குக் கணிசெய் கோவைமா நகரில்
வந்தவ தரித்த வண்டமிழ்ப் புலவர்;
மாதாரு பாகர் மலரடிக் கன்பர்;
கோதில் லாத குணப்பெருங் குன்றர்;
தீதறு வாக்கும் சிறந்தநன் மனமும்
ஓதரும் அன்பர்க் கொருப்படு செயலர்;
புனிதன் புகழே வனையும் பொலிவினர்;
களிக்கும் சிவன் புகழ்க் களிக்கும் செவியினர்;
கனவினும் அடியார்க் கடிமைசெய் கருத்தர்;
பிறர்பொருள் விழையாப் பெருவளச் சால்பினர்;
யானென தென்னும் இருவகைச் செருக்கும்
முற்றக் கடியும் கொற்றத் திருவினர்;
அருந்தமிழ் நூல்பல அளிக்கும் கொடையர்;
அன்பர்செய் பிழைகள் அரனரு ளாக்கொளும்
தெளிவும் உறுதியும் சிறக்கும் பாங்கினர்;
புவியர செல்லாம் போற்றுந் தீந்தமிழ்க்
கவியர சான நடேச கவுண்டர்;
இன்னநன் னூலின் மன்னிய சிறப்பெலாம்
உன்னிமற் றிதனை உலகுக் களிக்க
உறுபொருள் நல்கிய உத்தமச் செல்வர்
சென்னி யப்பனார் வாழ்கெனச்
சென்னி யப்பனைச் சிந்தை செய் வோமே.
இன்பமாகடல்
(ஆனந்த சாகரஸ்தவம்)
ஓம் பராசக்த்யை நம::
பாயிரம்
விநாயக வணக்கம்
இன்ப மாகட லெய்தித் திளைக்கலாம்
துன்ப வெம்மை தொலைந்து களிக்கலாம்
அன்பர் சிந்தை யமர்ந்தருண் மும்மதத்
தென்பொன் யானை முகவனை யேத்தவே. (1)
அம்மையப்பர்
நூல்வாய்ப் பயின்றேமோ நோன்புபல
முயன்றேமோ நுவலும் பூசை
சாலவாய் மலர் தூவிச் செய்தேமோ
நெஞ்சேதந் தனய ரோடும்
ஆலவா யடிகளுமங் கயற்கண்ணி
யம்மையுமெம் மகத்தெந் நாளும்
கோலவாய் மணிக்கோயில் என்றுகுடி
கொண்டிருந்து குலவு வாரே. (2)
ஆளுடைய பிள்ளையார்
சூழியக் கொண்டையும் வெண்டிரு நீரு துதைநுதலும்
வாழி யுமைமுலைப் பாலுண்ட வாயு மலர்க்கண்களும்
ஏழிசைப் பாடலுக் கொற்றுபொற் றாள் மெடுத்தகையும்
காழியர் கோன்கழற் போதுமெப் போதுமென் கண்ணுளவே. (3)
முதல்நூல் ஆசிரியர் வணக்கம்
முந்துனது சவுந்தரிய லகரியினைச்
செந்தமிழால் மொழிந்த வீரை
அந்தணனுக் கமுதாக்கி யளித்தவருட்
செயலறிந்திவ் வடியேன்றானும்
இந்தஇன்ப மாகடலைத் தமிழாக்கித்
திருவடிக்கண் இடத் துணிந்தேன்
வந்துதிருக் காட்சியமு தொருதடவை
யேனும் அம்மே வழங்குவாயே. (4)
தானந்த மில்லாத சொக்கேசர்
பக்கமமர் தாயைப் பொங்கும்
ஆனந்த சாகரத்தின் எழுமமுதை
அங்கயற்கண் அருட்பூங் கொம்பை
ஊனந்தம் இன்றியகம் நெகவெழுந்த
இன்பது ஒழுகிற் றென்ன
ஆனந்த சாகரத்தோத் திரம்புகன்ற
நீலகண்டர் அருட்டாள் போற்றி. (5)
பொழிப்புரை: தான், என்றைக்கும் அழியாத சொக்கநாதனது பக்கத்தில் விரும்பி வீற்றிருப் பவளாகிய உலக அன்னையும் பொங்கி எழும் இன்பமாகிய பெரிய கடலில் எழுந்த அமுதமும் ஆகிய மீனாட்சி அம்மையாகிய அருட்பூங்கொம்பு போன்ற தேவியை, ஊனும் முடிவின்றி உள்ளே உருகும்படி ஊறிய இன்பத்தேன் பெருகியது போல அன்புச்சுவை செறிந்த ஆனந்த சாகரம் என்னும் தோத்திரப் பாடல்களை அருளிச் செய்த நீலகண்ட தீட்சிதருடைய அருள்மயமாகிய திருவடிகளைப் போற்றுவாம்.
மாலகன்ற பெரியருள மலர்நெகிழச்
சுரந்தவின்ப வாரி தன்னைப்
பாலகன்றன் மேற்கறுத்த காலனுயிர்
படச்சிவந்த பதத்தி னாளைச்
சேலகன்ற விழியாளைப் பரவியின்ப
மாகடல்நூல் செய்த சீர்சால்
நீலகண்ட தீட்சிதனை நினைந்துபுகழ்ந்
திறைஞ்சிஅருள் நிறைந்து வாழ்வாம் (6)
2. அறியாமை நீங்கிய பெரியார்களுடைய மனமாகிய மலர் மலரும்படி, அம்மனத்தினுள் பொங்கிய இன்ப வெள்ளம் ஆகியவளும், பாலகனாகிய மார்க்கண்டன் மேல் சினந்து வந்த யமனது உயிர் நீங்கும்படி கோபித்த திருவடியை உடையவளும் ஆகிய மீனாட்சியம்மையைப் புகழ்ந்து இன்பமாகடல் என்ற நூலினை அருளிச் செய்த, புகழ்மிக்க நீலகண்ட தீட்சிதர் என்னும் பெரியாரை நினைந்து புகழ்ந்து வணங்கி அருள் நிறையப்பெற்று வாழ்வோம்.
மால் - மயக்கம்; அறியாமை; வாரி - வெள்ளம்; கறுத்தல், சிவத்தல் என்பன சினத்தை உணர்த்தும் சொற்கள்.
"உரையையும் அறிவையும் உயிரையும் உணர்வையும்
உன்பாத கஞ்ச - மலர்மீதே
உரவொடு புனைதர நினைதரும் அடியரொ
டொன்றாக என்று - பெறுவேனோ”
(திருப்புகழ் - கரையற வருகுதல்)
அவையடக்கம்
ஆல வாயம ரங்கயற் கண்ணியாம்
ஆனந் தப்பெருஞ் சாகரந் தோய்திரு
நீலகண்ட மகாகவி பாடிய
நிகரில் பாவினைச் செந்தமி ழாக்கினேன்
சேலி னேர்விழி யாளவள் பங்கன்பால்
சித்தம் வைத்தமெய்ப் பத்தர் உவப்பவே
மாலி னோங்கு மனத்தர் மதிக்கிலென்
வையி லென்பொருட் டாகவை யேனரோ (7)
(மேற்கண்ட ஏழு பாடல்களும் இந்நூலின் மொழிபெயர்ப்பு ஆசிரியரால் இயற்றிச் சேர்க்கப் பெற்றவை)
---------------------------------------------
உ
சிவமயம்
திருச்சிற்றம்பலம்
மீனாட்சியம்மை துணை
நூல்
அறுசீர்க் கழிநெடில் ஆசிரிய விருத்தங்கள்
கருணைக்கு வணக்கம்
விண்ணப்பம் செய்துகொளச் செவ்விபெறா
துளமடிந்து வேசற் றேனை
எண்ணற்ற புவனங்கள் ஈன்றதாய்
திருக்கருணை எனும்காற் றாலே
கண்ணுற்ற கடைப்பார்வை அலையீர்த்து
முன்நிறுத்திக் காட்டிற் றச்சோ.
உண்ணெக்கக் கடைக்கணெழும் ஒளியினையான்
எப்பொழுதும் உன்னு வேனே. (1)
'இன்பமாகடல்' என்றது. இங்கே - மீனாட்சி அம்மையையும் அவளைப் புகழும் தோத்திரத்தையும் குறிக்கும். கடவுளை இன்பமாகடல் என்று பெரியோர் பலரும் கூறுவர்.
"நீரின்ப வெள்ளத்துள் நீந்திக்
குளிக்கின்ற நெஞ்சம் கொண்டீர்
பாரின்ப வெள்ளம் கொளப்பரி
மேல்வந்த பாண்டியனார்
ஓரின்ப வெள்ளத் துருக்கொண்டு
தொண்டரை உள்ளம் கொண்டார்
பேரின்ப வெள்ளத்துட் பெய்கழலே
சென்று பேணுமினே"
"அறவே பெற்றார் நின்னன்பர்
அந்தமின்றி அகநெகவும்
புறமே கிடந்து புலைநாயேன்
புலம்பு கின்றேன் உடையானே
பெறவே வேண்டும் மெய்யன்பு
பேரா ஒழியாப் பிரிவில்லா
மறவா நினையா அளவிலா
மாளா இன்ப மாகடலே” (மாணிக்கவாசகர்)
பொ - ரை: விண்ணப்பம் செய்து கொள்ளுவதற்கு ஏற்ற சமயம் கிடைக்காமையால், மனஞ் சோம்பிச் சோகமுற்று இருந்தேன், எண்ண அளவில்லாத புவனங்களை எல்லாம் ஈன்ற கருணைத் தாயாகிய மீனாட்சியம்மையின் கண்கள் ஆகிய கடலில் எழுந்த கருணையாகிய காற்றினாலே கிளம்பிய கடைக்கண் பார்வைாகிய அலையானது இழுத்துக்கொண்டு வந்து, அவளது திருமுன் நிறுத்தி, என்னை அவளுக்குக் காட்டிற்று. அச்சோ! மனம் உருகி, அந்தக் கடைக்கண்ணில் எழுந்த கருணை ஒளியை எப்போதும் தியானிப்பேன்.
செவ்வி - தன்பால் குறை பிறர் சொல்லிக் கொள்வதற்கு ஏற்றவாறு அகமும் முகமும் மலர்ந்திருக்கும் சமயம். அச்சோ என்பது வியப்பு இடைச்சொல். உள்நெக்கு அ. கடைக்கண் எழும் ஒளி எனப்பிரித்துக் கொள்க.
-------------------
விண்ணப்பிப்பதற்கு மன்னிப்பு வேண்டல்
திருவுள்ளம் தெரியாத தெதனையான்
தெரிவிப்பேன் தேவி மற்று
மருவுள்ளத் துயர் சொல்லிக் கொள்ளாவிட்
டாற் சிறிதும் மாறா தன்றோ
திருவுள்ளம் இரங்கி அடி யேன்முறைக்குன்
திருச்செவியைச் சிறிது சாய்க்க
பெருவெள்ளப் பொருநைந்தித் துறைவன்மல
யத்துவசன் பெற்ற செல்வீ . (2)
பொ - ரை: உன் திருவுள்ளத்துக்குத் தெரியாத எச்செய்தியை யான் தெரிவிக்க முடியும்? தேவியே! உற்ற மனத் துயரை யாரிடமேனும் சொல்லிக் கொள்ளாவிட்டால், அது சிறிதளவாவது ஆறாது அல்லவா? ஆதலால், உன் திருவுள்ளம் இரங்கி, அடியேன் கூறும் முறைகளைச் சற்றே உன் திருச்செவி சாய்த்துக் கேட்டு அருள்க. பெரிய வெள்ளம் பாயும் பொருநை நதிக்கு இறைவனாகிய மலயத்துவச பாண்டியனது பாக்கியம் ஆகிய மகளே!
சொல்லாமலே குறையை அறிவாள் தேவி என்பது குறிப்பு.
-------------------
உன்னையன்றி உறுதுணை இல்லேன்.
ஓயாது முகத்தறைந்து கரைந்தரற்றி
னாலும்உளம் உருகு வோர்யார்?
ஓ,யாது பயன் பிறர்தம் உருக்கத்தால்
உலகமுழு தீன்ற செல்வத் தாயாகி
உயிர்க்கிரங்கும் தயையினளாய்ச்
சுதந்திரையாய்த் தயங்கும் உன்முன்
சேயானேன் குறைசிறிது விண்ணப்பம்
செய்துகொளத் தெளிந்துற் றேனே. (3)
பொ-ரை: ஓய்வு இல்லாமல் முகத்திலடித்துக் கொண்டு மனம் உருகிப் புலம்பினாலும் என்பால் மனம் உருகுவோர் பிறர் யார் உளர்? அங்ஙனம் உருகினாலும் அவர்தம் உருக்கத்தால் யாது பயன்? உலகம் அனைத்தையும் ஈன்ற செல்வத் தாயாகி, தயையும் உடையவளாய், சுதந்திரமும் உடையவளாய் விளங்கும் / உன் திருமுன்னர், உன் சேயரில் ஒருவனாகிய யான் என் குறைகளில் சிறிது விண்ணப்பித்துக் கொள்வது நலம் என்று நம்பிச் சொல்லிக் கொள்ள முன்வந்தேன்.
உலகிலே கருணையுடையோர் மிகவும் அரியர். அவருள்ளும் பிறரது கவலை களைய வல்லார் மிகமிக அரியர். வல்லவராய் இருப்பினும் பிறரால் தடைபட்டு நிற்பார் பலர். ஆதலால், கருணையும் ஆற்றலும் சுதந்திரமும் உள்ள ஜகன்மாதாவாகிய மீனாட்சியிடம் தான் நாம் குறை சொல்லிக் கொள்ளவேண்டும்.
-------------------
அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன்
கலமலக்கம் மனமுழந்து சொற்குழறிக்
கண்சுழலும் காலத் தென்றன்
நிலைமையினை எடுத்துரைக்க வல்லார்யார்?
சிவையே நற் செவ்வி நேர்ந்த
அலைவருமிப் பொழுதேயென் நிலைமையினை
அடிமலர்க்கீழ் அறையா நின்றேன்;
மலையரசன் தருகொடியே கேட்டருளி
என்கவலை மாற்று வாயே. (4)
பொ-ரை: உடலை விட்டு உயிர் நீங்கும் காலத்தில், மனம் பெரிய கலக்கம் அடையும்; கண் சுழலும். அக்காலத்து எம் நிலைமையை உன்பால் எடுத்துச் சொல்ல வல்லார் யார் உள்ளார்? சொல்லிக்கொள்ளச் செவ்வி வாய்த்து யானும் தெளிவாக இருக்கும் இப்பொழுதே என் நிலைமையை யான் திருவடிக்கீழ் விண்ணப்பிக்கின்றேன்; பர்வதராஜ குமாரியே! கேட்டருளி என் மனக்கவலையை மாற்றியருள்க.
கலமலக்கம் - மனக்குழப்பம்; சிவை - சிவனது மனைவி; செவ்வி - நல்ல சந்தர்ப்பம்; அலைவு அரும் - வருத்தம் ஒன்றும் இல்லாத.
மரண காலத்தில் படும் துன்ப நிலையில் இறைவனே அருள்வான் என்பது.
"புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி
அறிவழிந்திட்டு ஐம்மே லுந்தி
அலமந்த போதாக அஞ்சேல் என்றுஅருள்செய்வான்"
(திருஞானசம்பந்தர்)
இறக்கும்போது சிந்தை எதனைப் பாவிக்கின்றதோ அவ்வுருவம் அடுத்த பிறவியில் வாய்க்கும் என்று நூல்கள் கூறும். ஆயினும் மரணவேதனையால் உன்னை நினைக்க என்னால் முடியாது. அதனால் ‘அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்' என்று விண்ணப்பித்தார். அப்பர் சுவாமிகளும் இங்ஙனம் முன்னமே சொல்லிவைத்துக்கொள்கின்றார்.
"முருகார் நறுமலர் இண்டை தழுவி வண்டே முரலும்
பெருகா தடைசடைக் கற்றை யினாய் மேய்ந்திருந்த
இருகாற் குரம்பை இது நானுடையது. இது பிரிந்தால்
தருவாய் எனக்குன் திருவடிக் கீழொர் தலைமறைவே."
-------------------
பின்னை ஒருவரை யான் பின் செல்லேன்
பட்டிதொட்டி வாழ்மாக்கள் பட்டினம்வாழ்
நரைவியந்து பார்க்கு மாபோல்
மட்டறுபேர் அதிசயத்தால் வானவரை
மண்ணவர்கள் மதித்து வாழ்க.
திட்டமுற நின்றாளைச் சிக்கெனப்பற்
றியஎனது சிந்தை தாயே
எட்டனையும் விட்டகலா தெவர்வலிந்து
பிடித்து முயன் றீர்த்தா லும்மே. (5)
பொ-ரை; நாட்டுப்புறத்து ஏழை மக்கள் நகரத்து வாழும் நாகரிக மனிதரைக் கண்டு அதிசயப்படுவது போல, தேவர்களை இம்மாநிலம் வாழும் மனிதர்கள் மதித்து வாழ்க. உன் திருவடிகளை உறுதியாக இறுகப் பற்றிய என் சிந்தையானது, எவர் வலிந்து பிடித்து இழுத்தாலும் எள்ளளவும் விட்டுப் பிரியாது.
பட்டிதொட்டி என்பது சிறு கிராமங்களைக் குறிக்கும். எள் + தனையும் = எட்டனையும்; அரசன் தயவால் பெருஞ்செல்வம் பெற்றவர்கள், நகரத்து வாழும் சாமானியரது செல்வத்தை மதியார். அதுபோலப் பரமேசுவரியின் பத்திச் செல்வம் பெற்ற தொண்டர்கள் சிறுதேவர்களின் செல்வத்தை விரும்பி அவர்களின் பின் செல்லார் என்பது,
"கொங்குலா வரிவண்டின் னிசை பாடு நறுங்கொன்றைத்
தொங்கலான் அடியார்க்குச் சுவர்க்கங்கள் பொருளலவே"
(திருஞானசம்பந்தர்)
"சென்றுநாம் சிறுதெய்வம்சேர்வே மல்லோம்
சிவபெருமான் திருவடியே சேரப்பெற்றோம்" (அப்பர்)
"கொள்ளேன் புரந்தரன் மாலயன் வாழ்வு.....
உள்ளேன் பிற தெய்வம்" (மாணிக்கவாசகர்)
"கோலநீடிய நிதிபதி வாழ்க்கையும் குறியேன்
மேலை இந்திரன் வாழ்க்கையும் வெஃகேன்
மாலயன் பெறும்பதத்தையும் பொருளென மதியேன்
சால நின்பதத் தன்பையே வேண்டுவன் தமியேன்”
(கந்தபுராணம். இது முருகன் பால் வீரபாகுதேவர் வேண்டிய வரம்)
"பணியேன் ஒருவரை நின்பத்ம பாதம் பணிந்த பின்னே"
(அபிராமி அந்தாதி)
"இழிபயன்கள் தருவோர்கள் ஆயிரமாம்
இமையோரீண் டுள்ளார் அன்னார்
பொழிபயனை விழைந்தவரைக் கனவிலும்
பின்செல்லேன், போந்தே உன்றன்
உழிபயிலும் அரிபிரமர்க் குறலருமுன்
அடிமலர்க்கே உறுதொண் டாற்றக்
கழிநெடுநாள் விழைந்திருந்தேன் சிவசம்போ
இனியேனும் கருணை செய்யே" (சிவானந்தலஹரி 4)
A soul that loves God despises all that which is inferior to God
(Imitation of Christ)
-------------------
அடியேன் எனும் பெயர் அமைவதே சாலும்
எமை இரங்கி ஏன்றுகொள்க அலதுதரித்
தள்ளுகமற் றதனால் என்னே?
உமையவள் தன் அடியேம் என்றுரைத்தேயிவ்
வுலகினைவென் றுயர்வோம் மேலும்
திமிரவுரு வொடு சண்ட தண்டேந்தி
வருகால தூதர் சென்னி
தமையுடைக்க வல்லேமும் ஆவேமே
உலகமெலாம் தாங்கும் தாயே. (6)
பொ-ரை: எங்களை மனம் இரங்கி நீ ஏற்றுக் கொள்க அல்லது உதறித் தள்ளுக; அதனால் ஒன்றும் குறைவில்லை. 'உமையவளின் அடியவர்கள் யாம்' என்று சொல்லிக்கொண்டு இவ்வுலகினை வென்று மேன்மையடைவோம். அதுமட்டுமின்றி, இருள் உருவினராய்க் கொடிய தண்டம் ஏந்தி வரும் காலதூதருடைய மண்டையை உடைக்க வல்லவர்களும் ஆவோம். உலகம் முழுவதையும் காப்பாற்றுகின்ற அன்னையே!
திமிரம் - இருள்; சண்டம் - உக்கிரம்; கொடுமை. சென்னி - தலை.
தன் தொண்டன் எத்தனை பொல்லாங்கு புரிந்தாலும் உத்தமனனான பழைய எஜமானன் அவனை உதறித் தள்ள மாட்டான். உதறித் தள்ளினாலும் அத்தகைய எஜமானனை விட்டு நல்ல தொண்டனும் நகர மாட்டான்.
"படைக்கல மாகநின் நாமத் தெழுத்தஞ்சென் நாவிற் கொண்டேன்
இடைக்கலம் அல்லேன் எழுபிறப் புமுனக்கு ஆட்செய்கின்றேன்
துடைக்கினும் போகேன் தொழுது வணங்கித்தூ நீறணிந்துன்
அடைக்கலம் கண்டாய் அணிதில்லைச் சிற்றம்பலத் தரனே.
(அப்பர்)
"ஆறாத ஆனந்தத்து அடியார் செய்த அனாசாரம்
பொறுத்தருளி அவர்மேல் என்றும் சீறாத பெருமானைத்
திருமாற்பேற்றெஞ்
செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.”
(அப்பர்)
சிவனடியாருக்கு நமனும் தூதரும் அஞ்சுவர் என்பது,
வேலைமலி தண்கானல் வெண்காட்டான் திருவடிக்கீழ்
மாலைமலி தண்சாந்தால் வழிபடுநன் மறையவன்றன்
மேலடர்வெங் காலனுயிர் விண்டபினை நமன்தூதர்
ஆலமிடற் றானடியர் என்றடர அஞ்சுவரே.
(திருஞானசம்பந்தர்)
-------------------
வேதாந்த ஞானம் வேண்டாம் எனக்கு
மறையின் முடி வுரைகேட்டுச் சிந்தித்துத்
தெளிந்து நிட்டை மருவு வார் இத்
தறையின்மிசை மனிதர் எனச் சதுர்மறைகள்
சாற்றினுமத் தன்மை யாலே
நிறைதருமெய்ஞ் ஞானநெறி கைவந்து
பிறவியலை நீந்தி னோர்யார்?
கறையருபே ரன்பருளக் கமலமலர்
பசுந்தேனே கயற்கண் அம்மே. (7)
பொ-ரை: வேதாந்த மகாவாக்கியங்களைக் கேட்டுச் சிந்தித்துத் தெளிந்து நிட்டை கூடுவர் மனிதர் என நான்கு வேதங்களும் விளம்பினும், அங்ஙனம் கேட்டல் முதலிய கஷ்டமான நெறியில் நின்று ஞானம் பெற்றுப் பிறவிக் கடலினை நீந்தினவரெத்தனை பேர்? அது எனக்கு முடியாது. குற்றம் இல்லாத பேரன்பர்களின் மனத் தாமரையில் ஊறும் பசுந்தேனாகிய மீனாட்சியம்மையே.
மறையின் முடிவு உரை = தத்துவமசி முதலிய மஹாவாக்கியங்கள். கேட்டல் முதலியனை ஞானநெறியின் வழிகளாகும். பிறவி அலை - பிறவிக் கடல். கறை - குற்றம்.
நீந்தினோர் யார் ஏன்றதால் நீந்தினவர் இலர் என்று கொள்ளற்க. அந்நெறியின் அருமை கூறினர் என்று - கொள்க. ஞானநெறியே வீட்டுக்கு நேரான வாயில் என்பது வாய்மையே எனினும் அதனை விட, நல்லது எல்லார்க்கும் எளிதான இனிய சரணாகதி நெறியே என அந்நெறியைச் சிறப்பிப்பதே ஆசிரியரின் கருத்து. கருமம், பக்தி ஞானங்களைப் பற்றி இந்நூலில் தாழ்த்திக் கூறும் இடங்களில் எல்லாம் இதுவே கருத்தாகக் கொள்க.
இது முதல் 16 ஆம் செய்யுள் முடிய ஞானநெறியில் நிற்றல் தமக்கு இசையாது என ஆசிரியர் - கூறுகின்றார்.
--------------
வேதம் ஓதும் வேதனை வேண்டேன்
ஒருவேதம் தனக்குரிய சாகைகளெத்
தனை?சாகை ஒவ்வொன் றுஞ்சொல்
தரும் ஏதம் அறு முடிகள் எத்தனை எத்
தனை?அ ருத்தம் சற்றும் தேறாது
உருவேற ஓதுதற்கே வல்லமை எத்
தனைபேருக் குறுவ தாகும்
திருவேறு பிறவிகளெத் தனை வேண்டும்
சித்திபெறச் சேற்க ணாளே. (8)
பொ - ரை: ஒவ்வொரு வேதத்திற்கும் உள்ள சாகைகள் எத்தனையோ? ஒவ்வொரு சாகையிலும் உள்ள உபநிஷத்துக்கள் எத்தனை எத்தனையோ? சிறிதும் பொருள்தெரிந்து கொள்ளாமல் அத்யயனம் செய்வதற்கேனும் வல்லமை எத்தனை பேருக்கு உள்ளது? பொருள் தெரிந்து பயன்பெறுவதற்கு ஒரு சீவனுக்கு எத்தனை பிறவிகள் வேண்டும்?
சாகைகள் - வேதத்தின் கிளைகள். ஏதம் அறு முடிகள் - குற்றம் அற்ற வேத சிரசுகள், உபநிடதங்கள். திரு ஏறு பிறவிகள் - புண்ணியம் வாய்ந்த பிறப்புகள்
இருக்கு, யஜுர், சாமம், அதர்வணம் என வேதங்கள் நான்கு. வேதம் ஒவ்வொன்றிலும் பல சாகைகளும், சாகை ஒவ்வொன்றிலும் பல உபநிஷத்துக்களும் உள என்பர். அவற்றை முழுவதும் வெறும் பாட மாத்திரமாக ஒரே முறை ஓதவும் முடியாது. ஆகையால் வேதம் ஓதி முத்தி பெறுதலரிது என்பது கருத்து.
----------------
வேதக் கருத்தை ஓர்வது அரிது
ஒன்றனையொன் றொவ்வாத ஞாயங்கள்
ஆயிரம் அவ்வொவ்வொன் றுக்கும்
ஒன்றனையொன் றொவ்வாத பேருரைகள்
ஆயிரமற் றுளவால் அம்மே
வன்றிறல்சேர் நிகமமெனும் கற்பிழிந்து
சாறெடுக்க வல்லோன் யாவன்?
என்றுமுயர் இமயமெனும் சிமயவரை
ஈன்றுவளர் எழிற்பூங் கொம்பே. (9)
பொ - ரை: ஒன்றற்கொன்று கருத்து மாறுபட்ட நியாயங்கள் பல. அவை ஒவ்வொன்றுக்கும் ஒன்றனையொன்று ஒவ்வாத வியாக்கியானங்கள் பல உள்ளன. அம்மையே! வலிமை வாய்ந்த வேதம் எனும் கல்லைப் பிழிந்து சாறு எடுக்க வல்லவன் யாவன்? ஊழிதோறூழி ஓங்கும் இமயமலை - பெற்று வளர்த்த அழகிய பூங்கொம்பே.
ஞாயங்கள் - நியாய நூல்கள், நியாயங்கள் - வேதத்தின் சொற்பொருளை அறிவதற்கு வழி கூறும் மீமாம்சை எனும் நூல்கள். மீமாம்சை கற்றோருக்கே வேத வாக்கியங்களின் சரியான பொருள் விளங்கும் பேருரைகள் நியாய நூல்களுக்கு எழுதிய வியாக்கியானங்கள். நிகமம் - வேதம். சிமயவரை கொடுமுடிகளை உடைய மலை.
வேதத்தின் கருத்தை அறிவது கல்லைப் பிழிந்து சாறு எடுப்பது போல அரிய செயல் என்று கூறி இதனாலும் தமக்கு வேத வேதாந்த ஞானம் வேண்டாம், சரணாகதியே வேண்டும் என்கிறார், ஆசிரியர். வேதத்தின் கருத்தை அறிவது அரிது.:
"இருக்காதி சதுர்வேதம் இசைப்பது நின்பலபேதம்
ஒருக்காலும் ஒன்றுரைத்தது ஒன்றிசைப்ப அறியாதே"
(அருணைக் கலம்பகம் - 1)
----------------
கற்றுணர்ந்தாலும் மற்றையோர் கெடுப்பர்
எண்ணலறு பிறவியின் பின் எழுத்தறிவு
வாய்த்துப்பொருள் உணர்ச்சி தானும்
நண்ணியதால் ஒருசிறிதே என்றாலும்
அதனாலாம் நலந்தான் என்னே?
திண்ணமிது எனக்குத்தர்க்க வாதிகள்கற்
பனைசெய்து செலுத்தும் வெள்ளை
வண்ணவலைக் கருங்கடலில் அலையாமல்
தப்பவலார் யார் மாதாவே. (10)
பொ-ரை: கணக்கற்ற பிறவிகள் எடுத்தபின் ஒருவனுக்கு எழுத்தறிவு வாய்க்கும். அதன்பின் ஒருசிறிதே வேதத்தின் பொருள் உணர்ச்சியும் வாய்க்கும். அங்ஙனம் வாய்த்த பொருள் உணர்ச்சியினால் தான் என்ன பயன்? "நாம் சொல்லும் இதுதான் சரியானது” என்று குதர்க்க வாதிகள் கற்பனை செய்து செலுத்தும் அறியாமை மயமான கரிய கடலின் அலைகளிலிருந்து தப்பி உய்ய யாரால் முடியும்?
கு +தர்க்கம் = இழிந்த வாதம். வெள்ளை வண்ணம் - சிற்றறிவு மயமானது.
பல பிறவிகளில் உழந்த உழைப்பினால்தான் ஒருவனுக்கு எழுத்தறிவு உண்டாகும். பின் படிப்படியாக வேதத்தின் பொருளுணர்ச்சி ஏற்படும். அந்த உணர்ச்சிதானும் நிலைத்து இராதபடி குதர்க்க வாதிகள் அவனை அறியாமைக் கடலில் தள்ளி விடுவார்கள். அதனினின்று தப்புதல் அரிது என்றவாறாம்.
குதர்க்கவாதிகள் கூற்றிலிருந்தும் தப்புதல் அரிது என்பது,
"மிண்டிய மாயா வாதம் என்னும்
சண்ட மாருதம் சுழித்து அடித்தார்த்து
உலோகா யதனெனும் ஒண்டிறற் பாம்பின்
கலா பேதத்த கடுவிடம் எய்தி
அதிற்பெரு மாயை எனைப்பல சூழவும்
தப்பாமே தாம்பிடித்தது (திருவாசகம்)
-------------------------
சாத்திரப்பயிற்சி தருமோ பரகதி
இத்தகுசாத் திரப்பயிற்சி பிரமமெனச்
சத்தியென எவர்க்கும் பந்த
முத்திதரு பவளென்ன மாயைமயீ
மதனன்மத முடித்தோன் பாகத்து
உத்தமியாள் எனஏழெட் டுயர்மொழியைப்
பல்காலும் ஒலித்தற் கன்றி
வித்தகம்வே றுண்டு பண்ணும் விறலுடைத்தோ
மீனாட்சி விளம்பு வாயே. (11)
பொ - ரை: இத்தகைய சாத்திரப் பயிற்சியானது பிரமம், சத்தி, பந்தமும் வீடும் பாலிப்பவள் மாயாசொரூபிணி, மாரனை எரித்த வீரனின் பங்கினள் என்பன முதலிய ஏழெட்டு ஆரவாரமான சொற்களை ஒலிப்பதற்கு உதவுமே அல்லாமல் வேறு ஞானத்தை உண்டு பண்ணும் ஆற்றல் உடையதோ? மீனாட்சியே மொழிக.
இத்தகு - மேற்கூறிய இயல்பையுடைய. மதனன் - காமன். பந்த முத்தி - கட்டும் நீக்கமும். மதம் - செருக்கு. முடித்தோன் - அழித்தவன். வித்தகம் - ஞானம், திறமை. விறல் -ஆற்றல். குரவன் இன்றி வெறும் சாத்திரப் பயிற்சி உடையார், கேட்டவர் மயங்குதற்குரிய சில ஆரவாரமான சொற்களைப் பேச வல்லுநர் ஆவரேயன்றிப் பந்தம் நீங்கி வீடு பெறுதற்குரியவர் ஆகார் என்பது கருத்து.
"சாத்திரத்தை ஓதுநற்குச் சற்குருவின் றன்வசன
மாத்திரத்தே வாய்த்தநலம் வந்திடுமோ-ஆர்த்தகடல்
தண்ணீர் குடித்தவற்குத் தாகம் தணிந்திடுமோ
தெண்ணீர்மை யாய் இதனைச் செப்பு
(திருக்களிற்றுப்படியார்)
பத்தியிலார் கல்வி பயனற்றது என்பது,
"கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅ ரெனின். (திருக்குறள்)
பிரமம் சத்தி முதலிய சொற்களில் ஒன்றால் உணர்த்தப்படும் பொருள்தான் மெய்ப்பொருள் என வாதமிடத்தான் பயன்படும் என்றும் கொள்ளலாம்.
"காதிமோதி வாதாடு நூல்கற் றிடுவோரும்... காலன் ஊர்புக்கு அலைவாரே" (திருப்புகழ்) என்றார் அருணகிரிநாதரும்.
----------------
எது முன்னையது? அருளோ? ஞானமோ?
இவ்வண்ணம் படிப்படியாய் அபரோட்ச
ஞானமதை எய்தி னோர்க்கே
உய்வண்ணம் நீ அருள்வை; உன் அருளில்
லார் ஞானம் உறுமாறில்லை;
மெய்வண்ணம் கருதில்லிவை ஒன்றையொன்று
பற்றலென விளங்கு மானால்
எவ்வண்ணம் இரண்டினிலொன் றெய்துவது
முதன்முதலில் இமையச் செல்வீ . (12)
பொ - ரை:- மேற்கூறியவாறு எழுத்தறிவு பெற்று வேதம் ஓதிச் சாத்திரங்களின் துணையால் வேதத்தின் கருத்தை உணர்ந்து, படிப்படியாக மெய்யறிவைப் பெற்றவர்க்கே உன் திருவருள் வாய்க்கும்; அருள் இல்லார்க்கோ ஞானம் கிட்டாது. உண்மை கருதினால் இவை ஒன்றையொன்று பற்றுதல் என்னும் குற்றம் ஆகுமன்றோ? இவ்விரண்டில் ஒன்றை முதலில் எங்ஙனம் ஒருவர் பெறுவது? பர்வதகுமாரியே. படிப்படியாய் - வரிசைக் கிரமமாய். அபரோட்ச ஞானம் அனுபவ அறிவு; மெய்யறிவு. உய்வண்ணம் - கதிபெறும் வழி. ஒன்றையொன்று பற்றுதல் - அந்யோந்யாஸ்ரயம் எனும் குற்றம். அஃதாவது, நீந்தத் தெரியாதவன் கிணற்றில் இறங்கக் கூடாது. கிணற்றில் இறங்கித்தான் நீந்தப் பழக வேண்டும் என்பது போன்ற சிக்கல். அருளோ ஞானமோ இரண்டில் ஒன்று முதலில் பெற வேண்டும். உன் அருளையே முதலில் அருளுக என்பதாம்.
ஞானம் இல்லார்க்கு அருளில்லை என்பது,
"கல்லார் நெஞ்சில் நில்லா னீசன்" (சம்பந்தர்)
அருள் இன்றி ஞானம் உண்டாகாது என்பது,
"நிச்சலமான சிவபத்தியானது சிவானுக்கிரகத்தினாலே
உண்டாகத் தக்கது. மரத்திற்கு விதையும்
விதைக்கு மரமும் காரணம் ஆமாறு."
(சிவமகாபுராணம்-வாயுசங்கிதை)
அபரோட்ச ஞானம் = Internal perception. The consciousness of Atman, வெறும் சாத்திர அறிவு பரோட்சப ஞானம் conceptional knowledge எனப்படும்.
----------------
வாசனையின் மயக்கம் போமோ?
அம்மையிது கேட்டருள்க வேதத்தின்
இதயமதை அறிந்தோன் தானும்
உம்மையள விலகோடி பிறவிகளில்
பயின்றதளை உண்டு செய்தே
பொய்மைமிகு துவிதமயல் போக்கிஉயல்
எளிதாமோ பொருப்பின் செல்வீ
அம்மையுறு சிலநூறு பிறவிகளில்
அரிது முயன் றாலுமாதோ. (13)
பொ - ரை: அம்மையே, இதைக் கேட்டு அருள் செய்க. வேதத்தின் இருதயம் இதுதான் என்று அறிந்த ஒருவனும், முன்பு பல கோடி பிறவிகளில் பழகிய பாசபந்தத்தால் விளைந்த துவிதமாகிய மயக்கத்தை, பின்னர் வரும் சில நூறு பிறவிகளிலே, அரிய முயற்சி செய்தாலும் போக்கிக் கதி அடைவது எளிதாகுமோ? மலையரசன் செல்வியே.
அம்மை - முந்தியது, தாய்; பிந்தியது, வரும் பிறவிகள். உம்மை - முந்திய பிறவிகள். தளை - பந்தம். துவிதம் - சிவனும் சீவனும் வெவ்வேறு எனும் கொள்கை. பொருப்பு - மலை.
வேதத்தின் உட்கருத்தாவது சிவன் வேறு சீவன் வேறு என்றில்லாத அத்துவித அனுபவமே. அந்த உண்மையை அறிந்தாலும் ஒருவன் எளிதில் அனுபவம் பெற முடியாது. வாயில் அத்துவிதம் பேசினாலும் அனுபவம் துவிதமாகத்தான் இருக்கும். அதற்குக் காரணம் பலகோடி பிறவிகளில் பழகிய துவித பாவனையே -ஆகும். பலகோடி பிறவிகளிலே ஏற்பட்ட பழக்கத்தைச் சில நூறு பிறவிகளிலே செய்யும் முயற்சியால் நீக்க முடியாது என்பது கருத்து.
அத்துவிதமே மோட்ச நெறி என்பது-,
"யான்தான் எனும் சொல் இரண்டுகெட்டாலன்றி யாவர்க்கும்
தோன்றாது சத்தியம், தொல்லைப் பெரு நிலம்சூகரமாய்க்
கீன்றான் மருகன் முருகன் க்ருபாகரன் கேள்வியினால்
சான்றாரு மற்ற தனிவெளிக் கேவந்து சந்திப்பதே
(கந்தரலங்காரம்)
-----------------
வீடுபேறு மேவினார் இல்லையோ
முடிவிலா நெடுங்காலம் மடியாது
பலபிறப்பும் முயன்றோன் யாரோ
முடிவிலாம் பிறவியினில் பரகதிஎய்
துவனெனநூல் மொழியும் மாற்றம்
அடைகிலார் கதியாகும் எனவெளியாய்ச்
சொல்லாமல் பரியா யத்தின்
வடிவினாற் கூறுவதே அல்லாமல்
வேறாமோ மலையின் மாதே. (14)
பொ - ரை: எண்ணிலாத நெடுங்காலம் எண்ணிலாத மனிதப் பிறப்பில் சோம்பல் இல்லாமல் முயன்ற யாரோ ஒருவன்தான், கடைசிப் பிறவியில் மோட்சம் பெறுவான் என்று நூல்கள் சொல்லுங் கூற்றானது, மோட்சம் பெறுவார் ஒருவரும் இலர் என்று வெளிப்படையாகச் சொல்லாமல் பரியாயோக்தியாகக் கூறுவதே அல்லாமல் வேறு ஆகாது மலைமகளே.
மடியாது - சோம்பாமல். மாற்றம் - பேச்சு. பரியாய உக்தி ஒன்றை நேரே சொல்லாமல் மறைத்துப் பிறிதொரு வழியால் சொல்லுவது. உன்னைக் கொல்வேன் என்னாமல், உன் மனைவியின் தாலி அறுக்கச் செய்வேன் என்பதுபோல. இதனைப் பிறிதின் நவிற்சி என்பர்.
மேலே பல பாடல்களில் எழுத்தறிவு பெறுவது முதல் அபரோட்ச ஞானம் பெறுவது வரை வேத முதலிய சாத்திரங்கள் முத்தியடையும் வழியாகக் கூறியன எல்லாம் யாரும் முத்தி பெறமுடியாது என்பதையே வெளிப்படையாகக் கூறாமல் மறைத்துக் கூறியதாகும் என்பது கூறப்பட்டது.
இதனால்வேத நெறி முத்தி தராது என்று அன்பர்கள் கருதற்க. அதன் அருமைப்பாடும் சரணாகதியின் எளிமையும் வற்புறுத்துவதே ஆசிரியர் நோக்கம்:
---------------
உழைப்பு ஒன்றின்றியும் உறுமே மோட்சம்
ஒருசீவன் வீடுபெறின் உலகமெலாம்
அதுபெறும் என்றுரைப்பார் உள்ளார்,
பெருவீடு யாவருமே பெறுங்காலந்
தனில்யாமும் பெறலாம் என்றே
ஒருசாரார் கூறுவர்; அஃதுறுதியெனக்
கைக்கொண்டால் உழைப்பேயின்றி
ஒருபோதும் கவலையிலா துறங்கலாம்
வீணே ஏன் உழைத்தல் வேண்டும்? (15)
பொ - ரை: ஒரு சீவன் மோட்சம் பெற்றால் எல்லாருமே பெறலாம் என்பாரும் உளர். எல்லாச் சீவருக்குமே ஒருங்கே மோட்சம் கிடைக்கும் காலமும் உண்டு என்பாரும் உளர். இவர்கள் கொள்கையை நம்பி அவற்றின் வழியில் நின்றால் உழைப்பே இல்லாமல் கவலை சிறிதும் இன்றி இருக்கலாமே. வீணே ஏன் பாடுபடவேண்டும்?
உள்ளது சீவன் ஒன்றே என்பர் ஏக ஜீவ வாதிகள் அல்லது ஏகான்ம வாதிகள். அவ்வொரு சீவன் மோட்சம் உற்றால் எல்லாருமே மோட்சமுறுவர் என்பது அவர்கள் கொள்கை. நாநாஜீவவாதிகள் எனச் சிலருளர். அவர்கள் கொள்கைப்படி, சர்வ சங்கார காலத்திலே ஈசுவரன் எல்லாருக்குமே மோட்சம் அளிப்பான் என்பது. "மகாப் பிரளய காலத்தில் ஐம்பெரும் பூதமெல்லாம் மாயையில் ஒடுங்கும். ஆன்மாக்களின் வினைகளும் மாயையின் கருப்பத்தில் ஒடுங்கும். ஆன்மாக்கள் பிறப்பின்றி இளைப்பாறும்” என்ற உண்மையைத் திரிபாக உணர்ந்தார் கூற்று இது. இதற்கு முன்னர்க் கூறிய வேதசாத்திரங்களின் படி தொல்லையுறாமல், ஏகஜீவ வாதிகள், நாநாஜீவ வாதிகள், நாநாஜீவ வாதிகள் கூறுவதை நம்பி வாழ்ந்தால் கவலை இல்லை என்றார். எனினும் இதனை உறுதியாகக் கொள்ளக் கூடாது என்பது ஆசிரியர் கருத்தாகும்.
"நன்று அறிவாரில் கயவர் திருவுடையவர்
நெஞ்சத்து அவலம் இலர்" என்று வள்ளுவர் கூறியது போன்ற, புகழ்வது போன்ற பழித்தல் ஆகும் இது.
---------------
தாம்பல கற்றும் சோம்பர் ஆவர்பலர்
மறைபயின்று பூருவதந் திரம்பயின்று
சான்றோர்தம் மரபும் தேர்ந்து
திறமுறப் பற் பலர்க்குரைத்துத் திரவியங்கள்
மிகத்திரட்டும் திறத்தார் அந்தோ
உறைகுவர்சோம் பேறிகளாய்ப் பலபோகம்
நுகர்ந்திறுமாந் திருப்பர் கன்ம
நெறிஉழைக்க விழைகுவரோ வாய்ஞானம்
நிகழ்த்தவலால் நிகரில் சோதீ. (16)
பொ - ரை: வேதம் ஓதி, பூர்வ மீமாம்சை கற்று, சான்றோர்கள் ஒழுக்கும் அறிந்து, தாம் கற்றவற்றைப் பலருக்கும் சொல்லி, நிறையப் பொருளை ஈட்டுபவர்கள், ஐயோ, சோம்பேறிகளாய் வாழ்வர். பல வகையான சுகங்களையும் நுகர்ந்து செருக்கு உற்று இருப்பர். வாய்ஞானம் பேசுவதன்றிக் கன்ம வழியிலே உழைக்க விரும்புவரோ?
மறை வேதம். பூருவதந்திரம் - மீமாஞ்சை, நிகழ்த்தல் – பேசுதல்.
வேதம் முதலிய சாத்திரங்களில் நன்கு வல்லவராயினார், நன்மதிப்பும் செல்வமும் பெற்று ஐம்புல இன்பம் ஆரத் துய்க்கப் பெறுவர். அதனால் அவர்கள், வீடு பேற்றுக்கான ஞானம் பெறுதற்குரிய ஐம்புலன் அடக்கம், அவா இன்மை, துறவு முதலிய செயற்கு அரும் செயல்களைச் செய்ய விரும்பார். சொர்க்கம் பெறுதற்குரிய கன்ம நெறியிலும் முயலார். எனவே, "ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தாம் அடங்காப் பேதையர் ஆவர்." அவர் கல்வி கழுதை சுமந்த குங்குமம் போல்வதாகும். வெறுங்கல்வியால் வீடுபெற முடியாது என்பதே ஆசிரியர் கருத்து. கல்வி வேண்டாம் என்பதன்று.
“Mere reading of the scriptures is not enough, a person cannot understand the true significance of the scriptures if he is attached to the world.'' (Sri Ramakrishna) 7ஆவது செய்யுள் முதல் இச்செய்யுள் முடிய ஞான நெறியில் நிற்றல் தமக்கு இயலாது என ஆசிரியர் கூறினார்.
-----------
கன்மநெறி வேண்டாம்
அரிதின் முயன் றொருவன்மறை அறைகருமம்
பல புரிந்தும் அதனால் என்ன
பெரியசுகம் தனைநிறையப் பெறவல்லான்?
பாரதபூ மியினிற் பெற்றே
உரிமையுடன் நுகர்பவனே மறுமையினில்
உத்தரதிக் குற்று மீண்டும்
பெரியார்அவ மதித்தபல புன்புலஇன்
பத்தையன்றிப் பெறுவான் கொல்லோ? (17)
பொ - ரை: அருமையாக முயன்று ஒருவன் வேதம் விதித்த கருமங்கள் பலவற்றைப் புரிந்தாலும் அதனால் அவன் என்ன பெரிய இன்பத்தை நிறைய அனுபவிக்கப் போகின்றான்? பாரத பூமியில் மகளிர் கூட்டம் போன்ற சிற்றின்பங்களை அனுபவிக்கின்ற ஒருவனே அவற்றை இன்னும் சிறிதே மிகுதியாக, வடக்குத் திசையிற் போய் அனுபவிக்கின்றான். பெரியவர்கள் இகழ்ந்த புன்புல இன்பம் அன்றி வேறென்ன பெறுவான்?
அரிதின் - கஷ்டப்பட்டு. மறை அறை கருமம் - வேள்வி முதலிய காமிய கன்மங்கள். உத்தர திக்கு - வட திசை. பாரத கண்டத்தின் வடக்கே உள்ள மேரு மலையில் சுவர்க்கம் இருக்கின்றது என்பது புராணக் கொள்கை.
புன்புல இன்பம்-இழிந்த ஐம்புல போகங்கள்.
வேதத்தில் கூறிய ஞான நெறி தமக்கு உதவாது என்ற ஆசிரியர், இது முதல் 21 ஆவது செய்யுள் வரை கருமநெறியும் தமக்கு உதவாது எனக் கூறத் தொடங்கி முதலில் அதன் பயனையே தாழ்த்திக் கூறுகிறார். கருமத்தின் பயன் சுவர்க்க இன்பமே. வீடுபேறு விரும்பினார்க்குச் சுவர்க்க இன்பம் ஒரு பொருட்டன்று.
"கொங்குலாம் வரிவண் டின்னிசைபாடும் நறுங்கொன்றைத்
தொங்கலான் அடியார்க்குச் சுவர்க்கங்கள் பொருளலவே."
(சம்பந்தர்)
பெரியோர்கள் சுவர்க்கத்தை அவமதித்தனர் என்பது-,
"தீய அசுரர் பகையுண்டு செற்றம் ஆர்வம் மிகவுண்டு
நோயுண்டு அனங்கனார் உண்டு நோய்கட்கெல்லாந் தாயான
காயம் உண்டு கைதொழ வேண்டுநரு முண்டு கற்பத்தே
மாயும் தன்மை உண்டானால் வானோர்க் கென்னை வளமுண்டே"
(வைராக்கியதீபம்.13; உதாரணச் செய்யுள்)
பெரும்பொருள் செலவு செய்து அரிய முயற்சி பல செய்து சுவர்க்கத்தில் போய் நுகரும் இன்பங்களை, எளிதில் இவ்வுலகில்தானே நுகரலாம் அன்றோ என்பது கருத்து.
-----------
விடலும் தொடலும் கன்மத்தை விளைக்கும் துன்பம்
கன்மங்கள் கைவிட்டால் இழிபிறப்பும்
கடுநரகும் கலக்க நேரும்
கன்மங்கள் கைக்கொண்டால் கடும்பிறவிக்
கடல்வீழ்ந்து கரைகா ணேமால்
கன்மங்கள் தமைவிடுக என்றோதி
அம்மறையே கவனத் தோடு
கன்மங்கள் புரிந்திடுக எனவுமுரைப்
பதுவென்ன கருத்தால் அம்மா. (18)
பொ - ரை: கன்மங்களைச் செய்யாவிடில் இழிபிறப்பும் துன்பமான நரகமும் எய்த நேரும். கன்மங்களைச் செய்தாலோ துன்பமயமான பிறவிக்கடலில் விழுந்து கரைகாண மாட்டோம். கன்மங்களை விடுக என்றோதிய வேதமே அவற்றைச் சிரத்தையோடு செய்க எனவும் புகல்வது என்ன கருத்தாலோ தாயே.
கர்மத்தைப் பற்றி வேதம் கூறுவது எனக்கு மனக் குழப்பத்தையே விளைக்கின்றது என்றார்.
"செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்”
“மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்”
"இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு”
என்ற திருக்குறள்களும் ஈண்டு உன்னற்பாலன.
'படர்ந்தவெவ் வினைத்தொடர்பாற் பவத்தொடர்பப்
பவத்தொடர்பாற் படரா நிற்கும்
விடலரும்வெவ் வினைத்தொடர்பவ் வினைத்தொடர்பங்
கொழிபுண்டே வினையேற் கம்மா
இடர்பெரிதும் உடையேன்மற் றென்செய்கேன் என்செய்கேன்
அடலரவம் அரைக்கசைத்த அடிகேளோ அடிகேளோ"
என்றும் குமரகுருபரர் வாக்காலும் அறிக.
-------------
அவாவறு கன்மத்தால் தவாவினை தீருமோ?
"செய்வினையின் பயன்களிலே விழைவின்றிச்
செய்வதுவே செயல்கள் செய்தும்
செய்வினை இல் லாதிருக்கும் திறமெனவோ
துவதுசரி எனவே தேர்வேம்
செய்வினை தனமாகச் சேராதத்
தாலன்றிச் செகன்மா தாவே
செய்வினைமுன் செய்தவற்றின் பயன்தேடிச்
சேராமற் செயுமா றென்னே. (19)
பொ - ரை: செய்யும் கருமங்களில் பற்றில்லாமல் செய்வதுதான். கன்மங்கள் செய்தும் கன்மமில்லாமல் இருப்பதற்கு வழி என நூல்கள் சொல்லுவது அறிவோம். உலக அன்னையே! அதனால், புதிதாகக் கருமங்கள் சேரா. ஆனால், முன் செய்த கன்மங்களின் (பழைய வினைகளின்) பயன் நம்மைத் தேடிவந்து சேராமல் இருக்கும் வழி உண்டோ? இல்லை.
விழைவு - பற்று. செயல்கள் செய்தும் செய்வினை இல்லாதிருக்கும் திறம் என்பது கர்மண்யகர்ம விதி எனப்படும். நூதனம் - புதுமை.
பற்றின்றிக் கருமங்கள் பந்தப்படுத்தா என்பர். அதனால், புதிய கன்மங்கள் (ஆகாமிய கன்மங்கள்) தோன்றா. பழவினையின் பயன் (பிராரப்தம், சஞ்சித கன்மங்களின் பயன்) வந்தே தீரும்.
--------------
என்றைக்கு வினைத் தொல்லை இல்லையாவது?
முன்னை இயற் றியவினையின் மூடைகள்ஆ
யிரக்கணக்கின் மொய்த்த வாலோ!
அன்னவற்றுள் இப்பிறப்பில் பயன்தரவே
முளைத்தவற்றின் அளவை யாதோ?
இன்னுமுளைப் பதற்குளவும் எத்தனையோ?
யாரறிவார்? இமைக்கு நேரம்
பன்னரிய ஊழிஎனக் கினிநெடுநாள்
பொறுக்கிலேன் பதைக்கின் றேனே. (20)
பொ - ரை: முற்பிறவிகளில் ஈட்டிய வினைகளின் மூட்டைகள் ஆயிரக்கணக்கில் உள்ளன. அவற்றுள் இப்பிறப்பில் பயன் கொடுக்கத் தொடங்கினவை (பிராரத்த கர்மம்) எத்தனையோ? இன்னும் முளைப்பதற்காக உள்ளவை (சஞ்சித கர்மம்) எத்தனையோ? யாருக்குத் தெரியும்? இமைக்கும் நேரத்தை ஒரு ஊழியாகக் கருதும் அடியேன் வினைத் துன்பத்தை நெடுநாள் அனுபவித்துப் பொறுக்கமாட்டாதவனாக இருக்கிறேன். நெருப்பில் விழுந்த புழுப் போலப் பதைக்கின்றேன்.
மூடை-மூட்டை, பொதி. முளைத்தவை-தொடங்கினவை, ஆரம்பித்தவை. பன்ன அரிய - சொல்லுதற்கு இயலாத ஊழி - கற்ப காலம்.
உலகம் தோன்றிய நாள் தொடங்கி இதுவரை ஒருவன் செய்து ஈட்டி வைத்துள்ள வினைகளுக்கு அளவே இல்லை. அவற்றுள் இப்பிறப்பில் பயன்தரத் தொடங்கிய வினையின் அளவு ஒருவருக்கும் தெரியாது. என்றால் இனிப் பயன் தருவதற்காகச் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் சஞ்சித வினையின் அளவோ நினைப்பதற்கும் முடியாத அளவின. வினைப்பயன் அனுபவித்தல்லது தீரா. அனுபவிக்கும்போதே மீண்டும் வினை (ஆகாமியம்) விளைகிறது. எனவே எப்போது எல்லாவினைகளின் பயனையும் அனுபவித்துத் தீர்ப்பது? வினை ஒழிந்தால் அன்றிப் பிறவி ஒழியாதே. நான் பிறப்பின் ஒவ்வொரு கணத்தையும் ஊழிக்காலமாக எண்ணி வருந்துகின்றேன். எப்போது வினைகளை ஒழித்து முத்தி பெறுவது? என்றவாறு.
------------
துயரம் இனிப் பொறுக்கமாட்டேன்.
படமுடியா தரைக்கணமும் இனிப்பிறவித்
துயரெனவே பதைப்பான் றன்னை
நடஇனிநீ சாங்கியமே முதலான
நெறியில்என நவிறல் தாயே
சடரஅனல் சுடுவதனால் தளர்வானைக்
கங்கைமணல் தமையெண் ணில்தான்
இடுவம்உண வெனக்கூறும் இரக்கம்இலாக்
கொடுமொழியாம் இமையப் பொன்னே. (21)
பொ - ரை: பொறுக்க என்னால் அரைக்கணமும் முடியாது. இனி, இந்தப் பிறவித் துன்பம் எனப் பதைக்கின்றவனாகிய என்னை, 'நீ இனிச் சாங்கியம் முதலிய சாத்திர வழியில் ஒழுகுவாயாக' எனக் கட்டளையிடுதல் எத்தகையது எனில் வயிற்றுத் தீச் சுடுவதனால் தளரும் ஒருவனைப் பார்த்து, நீ இந்தக் கங்கைநதியின் மணலை எல்லாம் எண்ணிக் கணக்கிட்ட பின்தான் உனக்குச் சோறு போடுவோம் என்று இரக்கமில்லாமல் சொல்லுவதற்கு ஒப்பாகும். இமையமலையில் தோன்றிய பொன்னே.
சாங்கியம்-கபிலமுனிவர் இயற்றிய ஒருசாத்திரம். நவிறல் - சொல்லுதல். சடரவனல் - ஜடராக்னி, வயிற்றுப்பசி. பசியால் வருந்துபவனுக்கு உடனே உணவு இட்டுப் பசியாற்றிப் பின்னர் வேலை வாங்குவது தான் கருணையுடையார் செயல். அது போலப் பிறவித் துன்பம் பொறுக்காமல் வாடும் ஒருவனுக்குத் திருவருள் வழங்கித் துன்பம் நீக்கிப் பின்னர் பணி கொள்வதே தேவிக்கு முறை என்றவாறு.
17 ஆவது செய்யுள் முதல் இச்செய்யுள் முடியக் கன்மநெறி ஒழுகுதல் தமக்கு முடியாது என்பதை விளக்கினார் ஆசிரியர்.
-----------
பத்தி என்பதற்கு அர்த்தமில்லை
பத்தியெனப் படுவதியாது? அது அன்பின்
ஒருவகையே, பன்னுங் காலை
எத்திறத்தார் பாலுமஃதில்லாமை
இல்லையத்தால் ஏதி லாபம்
முத்திறலோ கத்துயிர்க்கு உயிராம்உன்
பாற்பத்தி முளையார் உண்டோ?
தத்தமுயிர்க் கன்புசெயார் ஒருவரேனும்
எங்குளரித் தரணி மேலே. (22)
பொ-ரை: பத்தி என்று சொல்லப்படுவது யாது? எனில், அது அன்பின் ஒரு விதமே. எத்திறத்தாரிடத்தும் அன்பு இல்லாமை இல்லை. ஆகையினால், பத்தி என்பதை ஏற்றுக் கொள்வதால் பயன் என்ன? மூன்று உலகத்திலும் வாழும் உயிருக்கெல்லாம் உள்ளுயிராகிய உன்பால் பத்தி ஏற்படாதவர் உளரோ? தத்தம் உயிர்மேல் அன்பு செய்யாதவர் எங்கு இருக்கின்றனர்?
பத்தி அன்பின் ஒரு வகை - ரதி பாவம். தரணி - உலகம். பிறர் பலரிடத்தும் இல்லாதது ஒருவன்பால் இருப்பின் அது சிறப்புடைய பொருளாகும். எல்லாரிடத்தும் உள்ளதொன்றினை ஒருவன் உடையான் என்பதனால் அவனுக்கு ஒரு தனிப் பெருமையும் இல்லை. அதனால், பக்தி உடைமையால், ஒரு தனிச் சிறப்பு ஒருவனுக்கில்லை. ஏனெனில், பத்தி என்பது, எல்லாரிடமும் இருப்பதால். பத்தி எல்லாரிடமும் இருக்கிறதோ எனில், ஆம். பத்தி என்பது அன்பு அல்லது காதல் என்பதுதானே. தேவி எல்லா உயிருக்கும் உயிராக உள்ளவள். ஆதலால், அவள்பால் அன்பில்லாதவர் இல்லை. தன்னுயிருக்கு அன்பிலாதவர் யாருமில்லை, ஆதலால் எல்லாரும் பத்தி உடையவர்களே என்பது மேற்கோள். தம்முயிர்க்கு அன்புடையமையால் என்பது ஏது. மூவுலகத்தும் உள்ளோர் போல என்பது உதாரணம். தம்முயிர்மேல் அன்பு இல்லாதவர்கள் பத்தி இல்லாதவர்கள் என்று ஏதுக்கூறி அதற்கு உதாரணங் காட்ட முடியாமை உணர்க. ஏனெனில், தம்முயிர்மேல் அன்பு இல்லாதவர்கள் யாரும் இல்லை. எனவே, எல்லாரும் பத்தி உடையவர்கள் என்பதற்கு உடன்பாட்டில் மட்டும் உதாரணங் கூறமுடிகிறது. எதிர்மறையில் உதாரணங் கூற முடிவதில்லை. ஆகையால், இது கேவல அந்வயி எதுவாகும் என்க.
பக்தி அல்லது அன்பு எனப்படுவது ஒவ்வோர் உயிரின் பாலும் காணப்படுவதாலும் அவ்வுயிர்கள் மோட்சம். அடையாமையாமலும் பக்தியுடைமை மோட்சத்திற்கு ஏதுவாகாது என்று இதனால் நியாயம் கூறப்பட்டது.
--------------
பொதுப் பெயர் போதும் சிறப்புப் பெயர் எதற்கு?
உலகமுழு வதற்குமுயிர் நீஎன்னத்
தெளிந்துன்பால் உறவு பூணற்கு
இலகியபேர் பத்தி எனில் என்கருத்தே
சித்தித்த தெங்கள் தாயே
கலகமிலா ஞானமெனும் பொதுப்பெயரே
போதும் எது கருதி வீணே
விலகிஒரு பத்திஎனும் சிறப்புப்பேர்
விளம்புவது மீன நோக்கீ. (23)
பொ-ரை: உலகம் முழுவதற்கும் உயிர் நீயேதான் நன்கு உணர்ந்து நம்பி உன்பால் காதலாகிக் கசிந்து உள் உருகுவதுதான் பக்தி (தத்தம் உயிர்மேல் வைக்கும் அன்பு பக்தி ஆகாது) எனில், அப்போதும் என் கொள்கையே உறுதி பெற்றதாயிற்று. எம் அன்னையே, அதற்கு ஞானம் என்ற பொதுப் பெயரே போதும். பக்தி என்ற சிறப்புப் பெயர் கூறுவது எதற்கு? அப்பெயர் மிகையாம்.
தெளிதல் - நன்கு உணர்தல், நம்புதல், உறவு - அன்பு, காதல். கலகம் இலா ஞானம் - அவிரோத ஞானம். பொதுப்பெயர் - விசேஷியம். சிறப்புப் பெயர் விசேஷணம்.
முந்திய பாட்டில், பக்தி என்பதற்குக் கூறிய இலக்கணத்தை மறுத்துப் பிறிது இலக்கணம் கூறுவார் கருத்தை உடன்பட்டு மறுக்கின்றார், இப்பாட்டில். மறுப்புக் கூறுவார் கருத்தாவது: தத்தம் உயிர்மேல் வைத்திருக்கும் அன்பு, பத்தி ஆகாது. மற்று, பத்தி என்பது யாதோ என்னின் உலகம் அனைத்திற்கும் உயிராக (அந்தர்யாமியாக) உள்ளவள் மீனாட்சியே எனத் தெளிந்து அவள் பால் அன்பு பூணுவதே பத்தி என்பதாம்.
உடன் பட்டு மறுத்தல் - அப்படியே வைத்துக் கொண்டாலும் என் கட்சியே வலியுறும். எங்ஙனமெனில், மீனாட்சியே விஸ்வாந்தர்யாமி என்று தற்போதம் விட்டு அவள் திருவருளில் அடங்கி நிற்பதுதானே கூறப்பட்டதாகும் அங்ஙனம் அவளை உணர்தலுக்கு ஞானம் (மெய்யுணர்தல்) என்ற பொதுப் பெயரே போதும். ஞானம் பெற்றுப் பின்னர் பத்தி செய்வது என்று மற்றொரு பெயராகிய விசேடணம் தேவை இல்லை என்பதாம்.
விசேஷியம் - பொதுப்பெயர். அடைமொழியை ஏற்ற பெயர். விசேடணம் - சிறப்புப் பெயர். ஒரு பெயருக்கு அடைமொழியாக வந்து அதன் பொதுமையை நீக்கும் பெயர். ஈண்டு தேவியை சர்வாந்தர்யாமி என உணர்தலுக்கு ஞானம் என்ற பெயர் விசேஷியம் என்ற பொதுப் பெயராகும். அதற்கு மேலும், அவள்பால் அன்பு செய்தல் என்பது, உணர்தலுக்கு அடைமொழியாகி விசேடணம் பெயராகும்.
--------------
துவித பத்தி துயருக்கு மூலம் எனல்
தன்னிலும் வேறாவதுமெய்ப் பொருளென்று
தெளிந்து பரம்தான் நாம் கீழென்று
உன்னியுறு குரவரிடம் போல்மதித்தே
ஒழுகுவது பத்தி என்றால்
என்னறிவுக் கிதுவெறுத்து விடத்தக்க
முடிபாகும் துவிதம் என்னும்
துன்னுமயல் தன்னின்மிகு பவபந்த
மூலமெது சொல்லு தாயே. (24)
பொ-ரை: பக்தியாவது, மெய்ப்பொருளானது தன்னிலும் (சீவனினும்) வேறானது என்று நிச்சயித்து, அது பரம்பொருள், நாம் அதன் கீழாயினோம் என்று எண்ணி, பெரிய குரவர்களிடம் மதிப்புவைத்து ஒழுகுவது போல ஒழுகுவதே பத்தி என்றால், தாயே, அது, என் அறிவுக்கு இசையவில்லை. வெறுத்துத் தள்ளத் தக்க கொள்கை ஆகும். சீவனும் சிவனும் வேறுவேறு என்னும் துவிதக் கொள்கையாகிய பெரிய அஞ்ஞானத்தை விடப் பிறவித் தளைக்கு வேறு காரணம் எது சொல்லுக.
தன்னிலும் - சீவனிலும். மெய்ப்பொருள் - பிரமம், சிவம். தெளிதல் - துணிதல், நம்புதல். பரம் - உயர்வான பொருள். நாம் - சீவான்மா. உன்னி - நினைந்து. குரவர் -தந்தை தாய் தமையன் - அரசன் ஆசான் ஆகியவர்கள். முடிபு - கொள்கை. துவிதம் -சிவனும் சீவனும் (வெவ்வேறாக) இரண்டு தனிப்பொருள் என்னும் கொள்கை. மயல்-அஞ்ஞானம், அறியாமை. பவபந்த மூலம் - பிறவித் தளைக்குக் காரணம்.
பக்திக்குப் பிறிதொரு சாரார் கூறும் இலக்கணத்தை ஆசிரியர் கூறி மறுக்கின்றார், இச்செய்யுளில், அவர்கள் கூறும் பக்தி பேதவாதமாகும். அதுவே துவிதம் எனவும் படும். வேதாந்த சித்தாந்தங்களுக்கு முற்றிலும் மாறுபடுவது. துவித உணர்வே அறியாமை ஆகும். அதுவே பிறவிக்கும் காரணமாகும். அக்கொள்கை எனக்கு அறவே பிடிக்கவில்லை என்கின்றார்.
--------------
சேவையும் தியானமும் பத்தி என்பதற்கு மறுப்பு
சேவைபுரி வதுபத்தி யாகுமெனில்
அதுகரும நெறிச்சேர் வாகும்
சேவைபுரி வதுதன்னை உடையானை
உவப்பிக்கச் சிந்தித் தன்றோ
தேவை இடை யறவின்றிச் சிந்தித்தல்
பத்தியெனில் சிரவ ணாதி
மேவியமூன் றாவதது வாமெனமுன்
னர்த்தானே விளம்பிற் றாலோ. (25)
பொ-ரை: சேவை செய்வதுவே பத்தி ஆகும் என்றால் அதுவும் பொருந்தாது. சேவை செய்தலாவது சேவிக்கப்பட்டாரின் மன மகிழ்ச்சியைப் பெறுவதற்காகச் செய்யும் செயல்கள் தாமே? அது, கருமநெறியில் சேருவதேதான் ஆகும். தெய்வத்தை இடைவிடாது சிந்தித்தலே பக்தி எனில் அது சிரவணம், கீர்த்தனம் என்ற இரண்டிற்கும் பின் நிற்பது ஒன்றுதானே. அதைப் பற்றி முன்னமே ஆராய்ந்து கூறினோம்.
சேவை - பணி செய்தல். தன்னை உடையான் - எஜமானன். உவப்பித்தல் - மகிழச் செய்தல். தெ - தெய்வம். சிரவணம் - கேட்டல், கீர்த்தனம் - புகழ்தல். சிந்தித்தல் - நினைத்தல்.
பணிவிடை செய்தலாவது எஜமானன் விருப்பம் அறிந்து தொண்டு செய்தல். அதன் பயன் அவன் தயவால் தாம் விரும்பும் காமியங்களைப் பெறுதல். ஆதலால், அது தன்மமே ஆகும். சிந்தித்தல் என்பது சிரவணம், மனனம், நிதித்தியாசனம் என்னும் ஞான மார்க்கத்தில் மூன்றாவதாக உள்ளது. ஆகையால், அது ஞானமார்க்கமே ஆகும். பக்தி என்பது பொருந்தாது.
-------------
மணிகர்ணிகையில் மாய விரும்பல்
அடியேனுக் கீண்டே நீ அளித்திடுவாய்
முத்தியது எனினும் ஆக்கை
முடிவுமணி கருணிகையில் பெறுமாறு
வேண்டுகின்றேன் முடியாச் செல்வர்
தடையேதும் இல்லாமல் அடியார்பால்
தயைபுரிதல் தமக்குச் சால்பாம்
அடியார்க்கும் சால்புதம் பணிகள்வழு
வாதாற்றல் ஆகுந் தாயே. (26)
பொ-ரை: தாயே, நின் அடியவனாகிய எனக்கு நீ இங்கேயே முத்தியை அளிப்பாய் எனினும், என் உடம்பு மணிகர்ணிகையில் - முடிவு பெற வேண்டும் என்று உன்பால் வரம் வேண்டுகின்றேன். அழிவில்லாத செல்வர்கள் தடையில்லாமல் தம் அடியவர்கள் பால் கருணை காட்டுதல் அவருக்குப் பெருமையே. அதுபோல் அடியார்களுக்கும் பெருமையாவது, தமது பணிகளைத் தவறாமல் செய்து முடிப்பதே ஆகும்.
ஆக்கை - உடம்பு. முடிவு - சாவு. மணிகருணிகை - காசியில் கங்கையாற்றிலுள்ள ஒரு துறை.
இவ்வாசிரியர் காசியில் காலமாவதற்கு ஆசைப்பட்டார் என்பது இதனால் தெரிகின்றது. காசியில் காலமானவர் முத்தி பெறுவர் என்பர். மீனாட்சியம்மை ஈண்டே முத்தி தரும் கருணை உடையவள்தான். அவள் கருணைக்குத் தடை இல்லை. எனினும், வேலை செய்தே கூலி பெறுவதைத் தன் மதிப்பாகக் கருதும் பணியாள் போலக் காசிக்குச் சென்று காலம் முடிந்து முத்தி பெறுதல் - தமக்கு விருப்பம் என்று விண்ணப்பித்தார் ஆசிரியர்.
------------
வாரணாசியில் மாய்வனோ அடியேன்
புண்ணியம்பண் ணியபேர்க்கே வாரணா
சியினிலுயிர் போகும் பேறு
நண்ணிடும் அண்மையில் பாவம் மிக்காருக்
கெண்ணருநாள் நடந்தே வாய்க்கும்
திண்ணமெனப் புராணங்கள் செப்புவதால்
காசியினில் தேகம் வீழ்த்தும்
எண்ணமதை வற்புறுத்தி வரமிரக்கும்
முயற்சியும்விட் டிருக்கின் றேனே. (27)
பொ-ரை: புண்ணியம் மிகுதியாகச் செய்துள்ளவர்களுக்கே காசியில் சென்று வாழ்ந்தாலும் விரைவில் தேகம் நீங்கும் பேறு வாய்க்கும். பெரும்பாவிகளுக்கு நீண்ட காலம் கடந்தே அது வாய்க்கும். இது நிச்சயம். இவ்வாறு புராணங்கள் புகல்வதால், காசியில் உடல் விட நான் விரும்புவதையும் வற்புறுத்திக் கூறி உன்பால் வரம் வேண்டும் முயற்சியையும் கைவிட்டு இருக்கின்றேன்.
வாரணாசி - காசி நகரம். அண்மை -சமீப காலம்.
மேலே கூறிய படி, வேதம் முதலிய சாத்திரங்களைக் கற்று, ஞானம் கர்மம் பத்தி ஆகிய நெறிகளில் ஒழுகவோ, சாங்கியம் முதலிய சாத்திர நெறிகளில் ஒழுகவோ எனக்கு முடியாது. அந்நெறிகளில் நில்லாரும் காசியில் காயத்தை நீத்தால் முத்தி பெறலாம் என்று புராணங்கள் கூறுவதால் அங்கே சென்று உயிர் விடுவதில் எனக்கு ஆசை உண்டு. ஆனாலும் காசியில் போய் வாழ்ந்தாலும் புண்ணியம் உடையவர்களுக்கே அங்கே உயிர் விடும் பேறு விரைவில் கைகூடும். என் போன்ற பாவிகளுக்கு அது நெடுநாள் ஆகும். ஆகையால், அந்த ஆசையைக் கூறி உன்பால் வற்புறுத்தி வரம் பெற முயன்றிலேன் என்று கூறி, இனி நான் முத்தி பெறுவதற்கு உன்பால் சரணாகதி அடைவதைத் தவிர வேறு வழி இல்லை என்பார். அடுத்த செய்யுளில் சரணாகதியே தமக்கு அரணாம் கதியெனச் சொல்லுகின்றார்.
--------------
மனத் தெளிவு எங்ஙனம் வாய்க்குந் தாயே
உள்ள(ம்)மத மாற்சரியமா தியபகைவர்
சூழப்பட் டுழலா நிற்கும்
பொள்ளல் உடல் நரைதிரையுற் றெண்ணறுநோய்
பொருந்திமிக வருந்தா நிற்கும்
எள்ளிவர் கடன்காரர் போலமனை
யாள்மக்கள் இல்லத் தானார்
தெள்ளுமன அமைதி அந்தோசேருவதெவ்
வாறெனக்குச் செகன்மா தாவே. (28)
பொ-ரை: இருதயமானது செருக்கு மாற்சரியம் முதலிய அகப்பவைர்களின் நடுவே அகப்பட்டுக் கலங்கா நின்றது. ஓட்டைமயமான உடலோ நரைதிரை வந்து, கணக்கு அற்ற நோய்கள் பொருந்தி வருந்தும் நிலையில் இருக்கின்றது. வீட்டிலோ மனையாளும் மக்களும் இகழ்ந்து வருகின்ற கடன்காரர்கள் போல இருக்கின்றனர். ஐயோ இந்நிலையில் மனம் தெளிந்து அமைதி வருவது எனக்கு எப்படி? உலக அன்னையே!
மதம் - செருக்கு. மாற்சரியம் - பொறாமை. மதம், மாற்சரியம் முதலிய ஆறு உட்பகை (ஷட்வர்க்கம்) எனப்படும். பொள்ளல் - துவாரம். எள்ளுதல் - இகழ்தல்
மன அமைதியுடன் இறந்தவர்கள் நற்கதி பெறுவர். எனக்கு இப்போதே மன அமைதி இல்லையே. அப்போது எங்கிருந்து அமைதி வரும் என்று குறித்தார் ஆசிரியர். உள்ளத்தின் உறுதியும் உடலின் உறுதியும் - இல்லாதொழிந்தமை கூறப்பட்டது. ஒருவன் ஈட்டி வைத்துள்ள பொருளிலே தான் மனைவி மக்களுக்கு முக்கிய நோக்கம் ஆதலால் அவர்கள் கடன் கொடுத்தவர் போல்வர்.
------------
அரைகுறை ஞானம் அவதிக்கு ஏது
சாரமிகப் பொதிந்ததிந்தச் சமுசாரம்
எனமதித்துச் சார்ந்தின் பாரும்
பேர்கள் புவனத்தும் பேறாளராய்
வாழ்ந்து பிறங்கா நின்றார்;
சீரின்மலி பரமேசீ சிறிதேஞா
னம்படைத்துச் சென்மச் சேற்றில்
கோரமிகு துயரெந்த எந்தவிதம்
உற்றந்தோ குழைகின் றேனே. (29)
பொ-ரை: இந்தப் பிறவி இன்பம் மிகப் பொருந்தியது என மதித்து விரும்பி அடைந்து இன்பம் நுகருபவர்கள் திருவுடையார்களாக. (அதிருஷ்டசாலிகளாக), மூவுலகத்திலும் எத்தனையேர் பேர் விளங்குகிறார்கள். சிறப்பின் மேம்படு பரமேசுவரியே! அரைகுறை (ஆபாச ஞானம் படைத்து, நாள் இந்தப் பிறவியாகிய சேற்றில் எந்தெந்த விதமாகத் துன்பம் உற்றுச் சோர்வு அடைகின்றேன்! சொல்லுதற்கு எளிதன்று.
சாரம் - இன்பம். சமுசாரம் - பிறப்பு. திரிபுவனம் - மூவுலகம். பேறாளர் - திருவாளர்கள், தன்யர்கள். பிறங்குதல் - விளங்குதல். கோரம் - கொடுமை.
குடிப்பிறப்பு, கல்வி, செல்வம், அதிகாரம் முதலியவற்றுள் சிலவும் பலவும் உடையவராகி, இளைஞருமாகி உள்ளவர்கள் தங்கள் வசதியான பிறப்பை மதித்து இவ்வுலக போகங்களில் மூழ்கி 'வாழ்க்கை உலக இன்பங்களில் மூழ்கி வாழ்வதற்கே' என்று கூறிக் களித்துக் கவலை இல்லாமல் திரிபவர்களே பலராகியுள்ளார். யானோ சிறிதே நல்லறிவு பெற்றதனால், (பூரண ஞானம் பெறாமையால்) பலவகையாலும் உலகத்தில் துன்பமே படுகின்றேன் என்றார்.
"நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத் தவல மிலர்" என்ற திருக்குறளுக்கு விளக்கமாக உள்ளது இப்பாட்டு.
------------
துன்பத்தின் ஏதுவைச் சொல்லவும் அறியேன்
யாதுபிறப் பென்பதுஇது வந்தவிதம்
எதுநீதான் எத்துன் புற்றாய்
யாதுநின தியல்பென்று வினவில்விடை
ஒன்றற்கும் இயம்பும் ஆற்றல்
யாதுமிலேன் யாயே, யானென்றாலும்
எத்தனையும் பொறுக்க ஒண்ணா
யாதனையா தோவுறுகின் றேன்இதனை
உனையன்றி யாரே தேர்வார். (30)
பொ-ரை: பிறப்பென்பது யாது? இது எங்ஙனம் வந்தது? நீ என்ன துன்பம் எய்தினை? நினது இயல்பு என்ன? என்று வினவினை யெனில் இவ்வினாக்களில் ஒன்றற்கும் விடை கூறும் திறமை சிறிதேனும் இலேன், தாயே. என்றாலும் சிறிதும் பொறுக்க முடியாத துன்பம் எதனையோ அனுபவிக்கின்றேன். இதனை உன்னை அன்றி யார் அறிவார்?
இயல்பு - சொரூபம். யாய் - தாய். யாதனை – துன்பம்.
குழந்தை, நோயால் வாதனைப் படுவது ஒன்றே அன்றி, நோய் என்பது யாது? அதன் காரணம் என்ன? படும் வேதனை என்ன? என்பன முதலிய கேள்விகளுக்கு விடை கூறும் ஆற்றல் உடையது அன்று. வைத்தியன்தான் அவற்றை எல்லாம் அறிந்து நோயை நீக்கிக் காப்பாற்ற வேண்டும். அதுபோலத்தான் பிறப்பிற் பட்டவருக்குத் தேவியும் கிருபை செய்யவேண்டும். பவரோகத்திற்கு வைத்தியம் செய்ய வல்லவள் அவளே.
------------
அளியன் இருக்கும் எளியநிலை
இவ்வண்ணம் இருக்குமியான் இப்பொழுதைக்
கெனக்கேற்ற திதுவென் றோரேன்
இவ்வண்ணம் இதை முடிப்ப தெனவறியேன்,
கருவியிது எனவும் தேறேன்
அவ்வண்ணம் நிலைநாட்டப் பிரமாணம்
அதுகாட்டும் ஆற்றல் இல்லேன்
உய்வண்ணம் என்செய்வேன் உலகினுக்கோர்
சான்றாகி யுறையுந் தாயே. (31)
பொ-ரை: இவ்வாறு கலங்கிய நிலையில் இருக்கும் அளியேன், இப்போது யான் செயத் தக்கது இது என்பதை அறியேன். செயத்தக்கதை முடிக்க வழியும் அறியேன். அதற்குச் சான்று காட்டவும் திறமை இல்லேன். கதி அடைவதற்கு என்ன செய்வேன்? உலகுக்குச் சாட்சியாக உயிர் தோறும் உறைகின்ற அன்னையே.
ஏற்றது- தகுதியானது, ஆன்றோர் ஆசாரம். இவ்வண்ணம் இதை முடிப்பது என்பது உபாயத்தைக் குறிக்கும். பிரமாணம் - சான்று: நூற்சான்றும் ஆன்றோர் மரபும். சான்று - சாட்சி. அளியேன் - இரங்கத் தக்க நிலையில் இருப்பவன்.
கலங்கிய நிலையில் இருக்கின்ற யான், என் கவலையை நீங்கிக் கொள்ளுவதற்குச் செய்ய வேண்டிய காரியமும் அதை நிறைவேற்றிக் கொள்வதற்கு வேண்டிய உபாயமும், இதுதான் செய்யவேண்டியது, இப்படித் தான் செய்ய வேண்டியது என்பதற்கு ஆதாரமும் அறியேன் என்று கூறித் தமது செயல் அற்ற நிலைமையை ஆசிரியர் தெரிவித்தார். சரணாகதியின் அங்கங்கள் ஆறனுள் மூன்றாகிய கார்ப்பண்யம் இப்பாடலில் கூறப்பட்டது. கார்ப்பண்யம் - எளிமை. அதாவது, இரங்கத் தக்க நிலைமை. "தெரிய அரிய பரஞ்சோதி செய்வதொன்றும் அறியேனே” (திருவாசம்) என்பதும் அது.
என் நிலைமையை நான் சொல்லாமலே நீயே நன்கு அறிவாய் என்பதை உணர்த்த "உலகினுக்குச் சான்றாகி உறையும் தாயே" என்றார்.
"என்பொனே இமையோர்தொழு பைங்கழல்
நன்பொனே நலந்தீங்கு அறிவொன்றிலேன்
செம்பொனே திருவீழி மிழலையுள்
அன்பனே அடியேனைக் குறிக்கொளே" (அப்பர்).
என்றருளியதும் கார்ப்பண்ணிய நிலையே.
இந்நிலையினருக்கே ஆண்டவன் வழிகாட்டுவான் என்பது,
"He that is humble, ever shall have God to his guide' என்று பிறராலும் கூறப்பட்டது.
-----------
எனக்கினியது அறியேன் உனக்கே அடைக்கலம்
எனக்கினிய தறியேனான் அதை அடையும்
வழியறியேன் எளியேன் அந்தோ!
எனக்குவிதி விலக்கறிந்து நடப்பதற்கும்
இயலாதே, என்செய் கேனோ?
எனக்கினிய தயைத்தாயே! எவ்வுலகும்
தருந்தாயே! எழில்மீ னாட்சி!
எனக்கினியார் இனியார்? மற் றுன்சரணே
சரணாக எய்தி னேனே. (32)
பொ-ரை: எனக்கு நலம் தருவதை நான் அறியேன் அதை அடைவதற்கு வழியும் அறியேன். ஏழையேன். ஐயோ! எனக்கு விதி விலக்கு அறிந்து ஒழுகவும் முடியாதே. என்ன செய்வேன்? அழகிய மீன் போலும் கண்ணாளே! இனி எனக்கு நன்மை செய்வார் உன்னையன்றி வேறு யாருளார்? உன் திருவடிகளையே தஞ்சமாக அடைந்தேன்.
இனியது - நன்மை தருவது. விதி - செயத் தக்கது. விலக்கு - செய்யத் தகாதது. இனியார் - இனி யார்? என்க. சரண் இரண்டில் முதலாவது, திருவடி. இரண்டாவது புகலிடம். தம்முடைய கார்ப்பண்ணியத்தைக் கூறித் தேவியின் திருவடிகளில் ஆசிரியர் தஞ்சம் அடைகின்றார். இது சரணாகதி எனப்படும். ஒருவருக்கு அவரினும் ஆண்டவனே அவர்பால் இனியான், அன்புடையவன் என்பது,
"என்னிலாரும் எனக்கினி யாரில்லை
என்னிலும் இனியான்ஒரு வன்னுளன்
என்னிலே உயிர்ப்பாய்ப் புறம்போந்துபுக்
கென்னுளே நிற்கும் இன்னம்பர்ஈசனே" (அப்பர்)
எனக்கு இனியது அறியேன் என்பது,
"என்பொனே இமையோர் தொழுபைங்கழல்
நன்பொனே நலந்தீங்கறி வொன்றிலேன்
செம்பொனே திருவீழி மிழலையில்
அன்பனே அடியேனைக் குறிக்கொளே." (அப்பர்)
-------------
படித்த கல்வியின் பயன் உனை அடைதல்
வேதங்கள் ஒருசிறிதும் ஆகமங்கள்
ஒருசிறிதும் விரிந்த பன்னூற்
பேதங்கள் ஒரு சிறிதும் உபதேச
நெறிசிறிதும் பயிலப் பெற்றேன்
ஏதங்கள் அறச்சகல உயிர்களுக்கும்
இரங்கி அருள் ஈவாள் நீ, உன்
பாதங்கள் புகலடைதல் வேண்டுமெனும்
மதி இவற்றின் பயனால் பெற்றேன். (33)
பொ-ரை: வேதங்களில் ஒரு - சிறிதும் ஆகமங்களில் ஒரு சிறிதும் விரிந்த பற்பல சாத்திரங்களில் ஒருசிறிதும் உபதேச நெறி சிறிதும் பலநூற் பேதங்கள் - பலவேறு வகைப்பட்ட சாத்திரங்கள். தன் இரங்கத் தக்க நிலையை அறிந்த கிருபணன் (கார்ப்பண்ணியம் உடையவன்) தான் புகல் புகுதற்குத் தக்காரை அறிந்து சரண் புகுதல் வேண்டும். பசித்தவன் வள்ளலான செல்வனை அடைந்தால் உய்வான். தானே பசித்து வருந்தும் பிச்சைக்காரனை அடைந்தால் என்ன பயன்? அதுபோலப் பிறவியால் வருந்துபவன் பிறவியிலாத் தெய்வத்தைச் சரண் புகுந்தால் பிறவிநோய் நீங்கப் பெறுவான். செத்துப் பிறக்கின்ற சிறுதெய்வங்களைச் சேர்ந்தால் பயன் இல்லை. நீயே பிறவித் துன்பத்தில் இருந்து காப்பாற்றுபவள் என்று அறிந்து உன்னையே சிக்கெனப் பிடித்தேன் என்றார். நான் கற்ற கல்வி சிறிதேயாயினும் அது இந்தப் புத்தியைத் தந்தது என்றார். இது சரணாகதியின் அங்கங்களில் 'கோப்த்ருத்வ வரணம்' (இரட்சிக்க வல்லாரைத் தேர்ந்து கொளல்) எனப்படும். கல்வியின் பயனாய உருத்திரன் என்றார், சம்பந்தர்.
----------------
இரண்டாமவனாக என்னை ஆள்க
பிரமம்இனை யதுயானும் இனையனெப்
பிரமத்தைப் பெறுமா றின்னது
உரமுடன் ஆகமமதிவ்வா றோதுமென
உணராதார் உன்னால் முன்ஆள்
தரமுடையார் மீனாட்சி தளர்ந்தார்க்குச்
சரணாமுன் தன்மை ஒன்றே
திரமுடன் ஓர்ந் தறிந்தவர்கள் இரண்டாவ
தாம்தரத்தர் தெரிவித் தேனே. (34)
பொ-ரை: பிரமம் என்பது இத்தன்மையது, நான் இத்தன்மையேன், பிரமத்தைப் பெறும் வழி இது, ஆகமம் இங்ஙனம் கூறுகின்றது எனச் சிறிதும் உணராதவர்களே உன்னால் முதலாமவராக ஆட்கொளத் தக்கவர்கள். மீனாட்சி! அடைந்தவருக்கே ஆதரவாகும் உனது தன்மை ஒன்றை மட்டும் உறுதியாக அறிந்தவர்கள் இரண்டாமவராக ஆட்கொள்ளத் தக்கவர்கள் என்பதை விண்ணப்பித்துக் கொண்டேன்.
தாயைப் பற்றியும் தன்னைப் பற்றியும் சிறிதும் தெரியாச் சேயே தாயின் அருளைப் பெறுவதற்கு முதல் உரிமை உடையதாகும். ஓரளவு அறிவு அறிந்த குழந்தையைத் தாய் இரண்டாவதாகவே கவனிப்பாள். அதுபோல, ஒன்றும் தெரியாத தீனர்களே சரணாகதி தருமத்தில் அஞ்சலென்று அளிக்கப்படுவதற்கு முதலாம் தரத்தர் (தகுதி உடையர்) ஆவர். சிறிது அறிந்தவர் இரண்டாம் தரத்தவர் ஆவர் எனவும் தேவியின் இரட்சக குணத்தை மாத்திரம் அறிந்த தாம் இரண்டாவதாக அளிக்கப்படத் தக்கவர் என்பதனைச் சாதுரியமாக ஆசிரியர் விண்ணப்பித்தார்.
--------------
அடியன்பால் உரிமையின் அளவில் ஆள்க
அன்னைநீ என்னையுன தடிமைஎனும்
உரிமைஎந்த அளவிற் கொண்டாய்
அன்னஅள வாகவே அடியேனும் பணிசெய்ய
ஆற்றல் சேர்வேன் அன்றிப்
பின்னர்அடி யேன்செய்யத் தக்கதுள
தோஎங்கள் பிரானே என்னை
இன்னவிதம் பணிகொள்க என்றேவும்
அடியவனெங் கேனுமுண்டோ ? (35)
பொ-ரை: தாயே! என்னை உன் அடியவன் என்னும் உரிமையை எந்த அளவில் வைத்திருக்கின்றனையோ அந்த அளவுக்குப் பணி செய்யத்தான் என்னால் இயலும். அதற்கு மேல் யான் என்ன செய்ய வல்லேன்? எங்கள் எஜமானே நீ இப்படி வேலை கொள்க என்று எஜமானனை ஏவும் அடிமை எங்கேனும் இருக்கின்றானா
அன்ன அளவு -அந்த அளவுக்குத் தக்கபடி. ஆற்றல் - திறமை. பிரான் - எஜமானன்.
ஒரு வேலையாளின் மேல் எஜமானனுக்கு உள்ள அபிமானத்துக்கு ஏற்பவே அவனை அவன் பணி கொள்ளுவான். என்னை இன்ன பணிக்கு மட்டும் பயன்படுத்திக்கொள் என்று எஜமானனுக்குக் கட்டளை இடும் பணியாள் எங்குமில்லை. ஆதலால், எனது வேலை செய்யும் ஆற்றலும் என் மேல் நீ வைத்த அருள் உரிமையின் அளவாகவே இருக்கும். இப்பணிசெய்ய என்னை நீ பணி என்று யான் வேண்டேன். இட்ட பணி செயத் தயாராக இருக்கின்றேன் என்றார்.
"தன்கடன் அடியேனையுந் தாங்குதல்
என் கடன் பணி செய்து கிடப்பதே"
என்று அப்பர் அருளியதும் இக்கருத்தைக் கொண்டதே -ஆகும்.
------------
அறிவிளைவே ஆசாரத்தளவு
இழுக்கமெலாம் கைவிடுவேன் ஒழுக்கநெறி
தனிற்செல்வேன் எனினும் நித்த
ஒழுக்கம் ஒருவன்றனது வல்லமையின்
அளவென்றே உரைப்பர் அன்றோ
சழக்கறுவல் லமைஒருவன் புத்திவலி
அளவினதே சடமாந் தேகப்
பழக்கவலி அளவினதன் றென்பதையுன்
பாற்பகர்ந்தேன் பரமன் தேவீ. (36)
பொ-ரை: விலக்கிய கன்மங்களை விட்டொழிவேன் விதித்த ஒழுக்கங்களை மேற்கொள்வேன். எனினும் நித்திய ஒழுக்கம் ஒருவனுடைய ஆற்றலின் அளவுக்கு ஏற்பவே இருக்கும் என்பார்கள் அல்லவா? பொய்மை இல்லாத அவ்வல்லமை ஒருவனது. புத்தியின் வலிமையைப் பொறுத்ததுதானே? சடமாகிய உடம்பின் பழக்கத்தால் வரும் வலிமையைப் பொறுத்தது அல்லவே, பரமேசுவரியே!
இழுக்கம் - விலக்கிய ஒழுக்கம். நித்த ஒழுக்கம் - அன்றாடம் செய்ய வேண்டிய ஆசாரம். சழக்கு - பொய்.
பரமேசுவரியே! உன் தயவை நான் பெறுவதற்கு வழி என்ன வென்றால் நீ கூறிய விதி விலக்குகளை அனுசரித்து நடப்பதே. விலக்கை ஒழித்து விடலாம். விதியை அனுசரிக்கும்போது அவனவன் தன் ஆற்றலுக்கு ஏற்றபடிதானே காரியங்களைச் செய்ய முடியும்? ஆற்றலென்பது, புத்தியைப் பின்பற்றியதோ, உடம்பைப் பின்பற்றியதோ எனில், புத்தியைப் பின்பற்றியதே. உடம்பில் எல்லாக் காரியங்ளையும் செய்யும் வலிமை இருந்தாலும் புத்தியின் சக்திக்கு ஏற்பத்தான் உடம்பின் வலிமை தொழிற்படும், என்றார். ‘புத்திமான் பலவான்' என்பதும் நினைக்கத் தக்கது. ஆகையால், என் சிறிய ஆற்றலுக்கு ஏற்ப எளிய வழியிலே எனக்கு முத்தி அருளுக என்பது கருத்து.
குமரகுருபரரும்,
"சத்திநி பாதம்நின் சந்நிதிப்பட்ட
இத்திறத் தெளிதினில் எய்தியது எமக்கே - அதனால்
சரியையில் தாழ்க்கலை கிரியையில் பணிக்கலை
யோகத் துய்க்கலை பாகமும் நோக்கலை
நாளை இன்றென ஒருவேளையும் நவிற்றலை
ஈண்டெனக் கருளுதி இறை
பூண்டுகொண் டிருப்பன் நின்பொன்னடித் துணையே"
(பண்டாரமும்மணிக்கோவை 29) என வேண்டினார்.
------------
ஆன்ம நிட்சேபத்தின் அங்கம் ஐந்தும் இலேன்
தனைத்தானே தாங்ககிலா துன்பாலே
சுமத்திவிட்ட தனிச்சோம் பேறி
பினைச்சரணா கதிக்குரிய உறுப்பிலெத
னைச்சுமக்கப் பிரியங் கொள்வான்
அனைத்துறுப்பும் நிரம்புபிர பத்தியினை
அகிலமெங்குங் காண லாகும்
எனைப்பொறுத்த வரையுனையே நம்புவதே
பிரபத்தி என்றா யிற்றே. (37)
பொ-ரை: தன்னையே தனக்குப் பாரமாக நினைக்கும் முழுச்சோம்பேறி ஒருவன், சரணாகதிக்கு உரிய அங்கங்கள் ஐந்தனுள் வேறு எதனைத்தான் மேற்கொள்ள விரும்புவான்? ஐந்து அங்கங்களும் நிரம்பிய பிரபத்தியை உலகத்தில் எங்கும் காணலாகும். என்னைப் பொறுத்த வரையில் உன்னை நம்புதல் என்னும் ஒன்றே எல்லா உறுப்புக்களும் நிறைந்த பிரபத்தி ஆகும்.
பிரபத்தி, சரணாகதி, ஆன்ம நிட்சேபம் என்பன ஒரு பொருட்சொற்கள். உறுப்பு, அங்கம் என்பனவும் ஒரு பொருட் சொற்களே.
சரணாகதி நெறிக்கு அங்கங்கள் ஐந்து ஆவன
1. அனு கூலஸ்ய சங்கல்பம் - வழிபடு கடவுளின் (எஜமானனின்) கருத்துக்கு
இசைந்தபடியே ஒழுகுதல்.
2. ப்ரதிகூலஸ்ய வர்ஜனம் - அவருக்கு ஒவ்வாதவற்றைத் தவிர்த்தல். அஃதாவது, கடவுள் அருளிய நெறிகளுக்கு மாறான நெறிகளில் செல்லாமை.
3. ரக்ஷிஷ்யதீதி விஸ்வாஸ - கடவுள் நம்மைக் காப்பார் என்ற உறுதியான நம்பிக்கை
4. கோப்த்ருவ வரணம் - நீயே என்னைக் காத்தற்கு உரியவன் என்று சிக்கெனப்
பிடிப்பது. பிறர் ஒருவரைப் பின் செல்லாமை.
4. கார்ப்பண்ணியம் - தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ள முடியாத தன் எளிமையை வெளிப்படையாக உணர்த்துவது.
இவ்வைந்துடன் கூடிய பிரபத்தியே சரணாகதி என ஆறாவதாகவும் வைத்துக் கூறப்படும். 'தனைத்தானே தாங்ககிலாது உன்பாலே சுமத்தியிட்ட தனிச் சோம்பேறி' என்பதனால் தமது கார்ப்பண்ணியத்தை ஆசிரியர் உணர்த்தினார். இந்நூலின் 30, 31 ஆவது செய்யுள்களிலும் கார்ப்பண்ணியம் கூறப்பட்டுள்ளமை காண்க.
"என்னை அப்பா அஞ்சல் என்பார் இன்றிநின் றெய்த்தலைந்தேன்
மின்னை ஓப்பாய் விட்டிடுதி கண்டாய்' (திருவாசகம்)
"எனக்கேற நின்வழி யல்லாமல் யானென தென்னும்வழி
தனக்கேறி ஐவர்தடையிற் பட்டேன் தடை தீர்ப்பதற்கோ
கனக்கேன் உனை அன்றிக் காணேன் முழுதும் உங்கையிற் பிள்ளை
உனக்கே அடைக்கலம் கண்டாய் குற்றாலத் துறைபவனே"
(திருக்குற்றாலத்தந்தாதி)
"கருவுற்ற நாள் முதலாக நின்பாதமே காண்பதற்கே
உருகிற்றென் உள்ளமும் நானும் கிடந்தலந்து எய்த்தொழிந்தேன்
திருவொற்றியூரா திருவாலவாயா திருவாருரா
ஒருபற்றிலாமையும் கண்டிரங்காய் கச்சியேகம்பனே” (அப்பர்)
முதலியவையும் கார்ப்பண்ணியம் கூறுதல் காண்க. உனையே நம்புவதே பிரபத்தி என்றது, ஆத்மார்ப்பணத்துக்குரிய ஏனைய அங்கங்களையும் அனுசரிப்பது எளியரிலும் எளியனாகிய என்னால் முடியாது. ஆதலால், உன்னை நம்புதல் என்ற ஒன்றனையே எல்லா அங்கங்களுடன் கூடிய ஆத்மசமர்ப்பணமாகக் கொள்க என்றார்.
"சிவனெனு நாமம் தனக்கே உரிய செம்மேனி எம்மான்
அவனெனை ஆட்கொண்டளித்திடுமாகில் அவன்றனையான்
பவனெனும் நாமம் பிடித்துத் திரிந்து பன்னாள் அழைத்தால்
இவன் எனைப் பன்னாள் அழைப் பொழியான் என்று எதிர்ப்படுமே"
(அப்பர்)
"தன் கடன் அடியேனையும் தாங்குதல்" (அப்பர்)
ஆகியனவும் காண்க.
-------------
என்மேல் குற்றம் யாரும் சொல்லார்
காண்பதுவும் உயிர்ப்பதுவும் உள்நின்று
நீதூண்டக் கடையேன் பாலாம்
மாண்பரிய தீயவினை நிகழ்ந்தாலும்
பிழை என தாய்மருவு மோதான்
ஊண்பரிந்து தாய் ஊட்ட உண்டசிறு
குழந்தையின்பால் மீதூண் குற்றம்
காண்பவர்யார் இவ்வுலகிற் கடம்பவன்
பவனமமர் கயற்கண் ணாளே. (38)
பொ-ரை: காண்பதுவும் மூச்சுவிடுவதும் கூட நீ தூண்டவே என்னிடத்தில் நிகழும். பெருமை இல்லாத தீய வினைகளென்பால் நிகழ்ந்தாலும் குற்றம் என்பால் உண்டாகாது. அன்போடு தாய் ஊட்ட உணவு உண்ட குழந்தைமேல் அதிகம் உண்டு விட்டது இக்குழந்தை எனக் குற்றம் சாட்டுவார் இவ்வுலகத்தில் யாருமில்லை, கடம்பவனமே கோயிலாக வாழும் கயற்கண் அம்மையே.
உயிர்ப்பதுவும் சுவாசம் விடுவதுவும். மாண்பு - பெருமை. மருவுமோ -பொருந்துமோ ஊண் - உணவு. மீதூண் - அளவுக்கு மீறித் தின்ற பிழை. கடம்பவனம் – மதுரை மாநகர். தேவியாகமங்களில் கூறப்படும் கடம்பாடவியும் ஆகும். பவனம் திருக்கோயில்.
கார்ப்பண்ணியன் ஒருவன் முழுமுதற் பொருளின் செயல் அன்றித் தனக்கென ஒரு செயலும் இல்லாமையை நன்கு உணர்ந்திருப்பான். தான் ஒன்றனைக் காண்பது, மூச்சு விடுவது முதலிய செயல்களையும், தன் உயிர்க்கு உயிராக உள்ள முழுமுதற் பொருளின் செயல் என்றே அறிவான். "அவனன்றி ஓரணுவும் அசையாது'' என்பது அவன் தன் அனுபவத்திற் கண்டறிந்த உண்மை . ஞான நூல்களும் அவ்வாறு கூறுகின்றன.
"எல்லா உயிர்க்கும் உயிரருணேசர் இவரசையின்
அல்லாது அணுவும் அசையாது என்ப தறிந்தனமே
வில்லாடன் மாரன் இருப்பவும் யோகம் விளைத்த அந்நாள்
புல்லாதிருந்தன எல்லா உயிருந்தம் போகத்தையே" (அருணைக்கலம்பகம் 1)
என்ற பாட்டும் - நினைதற்குரியது.
"ஐயா மரப்பாவை ஆடுவதும் சூத்தரிதன்
கைவாசி யோபாவை கற்றதுவோ வெய்யவினை
என்னிச்சையோ அருணையீசா படைத்தளிக்கு
உன்னிச்சை யன்றோ உரை" (அருணகிரி அந்தாதி).
எல்லாம் சிவன் செயல் என்று உணர்ந்தவன் “யான் செய்தேன் பிறர் செய்தார், என்னதுயான் என்னுங்கோணை" இல்லாதிருப்பான். ஆதலால், அவன்பால் விருப்பு வெறுப்பு நிகழாது. அதனால், ஆகாமிய வினை ஏறாது. "இருள்சேர் இருவினையும் சேரா. ஆன்ம நிட்சேப நெறியின் பயன் ஆகிய இதனால், வினைப் பிறவி சாராது. மெய்த் தொண்டர் செல்லும் வழியிது.
"What wrong have I done mother? Do I do anything? It is thou mother, who doest everything. I am the machine and You are its operator.” (Sri Ramakrishna)
"The Love has the power to derive pleasure from mistakes, discards and incapacity. A mother's love overflows at the false steps of the child whom she is teaching to walk (Tagore's Wreck. Chapter 10)
------------
உனை அடைந்தார்பால் ஊழ் வலி காட்டுமோ?
மதிவலிகொண் டுயர்வீடு பெறமுயல்வார்
பாற்றனது வலிமை காட்டி
விதியிடையூற் றினைவிளைக்கும்; வியப்பிதில்
எள்ளளவுமிலை, மீளா ஆளாய்க்
கதிபெறுதற் குபாயமும்நீ எனப்பிடித்தார்க்
கபாயம்விதி காட்டு மானால்
அதிகமுறு சிறப்புனக்கிங் கென்னவுள
தங்கயற்கண் அருட்பூங் கொம்பே. (39)
பொ-ரை: தங்கள் அறிவின் வலிமையையே துணையாகக் கொண்டு (ஞான நெறியாலே) முத்திபெற முயல்பவர்கள் பால் விதியானது தன் வலிமை காட்டி இடையூற்றினை விளைக்கும். இதில் வியப்பு எள்ளளவும் இல்லை. உனக்கே மீளாத அடிமையாகி முத்தியும் நீயே முத்தி பெறுவதற்கு உபாயமும் நீயே எனத் துணிந்து உன் தாளை இறுகப் பற்றியவர்பாலும் விதியானது இடையூற்றினை விளைக்குமானால் ஏனைய உபாயங்களிலும் மேம்பட்ட சிறப்பு உனக்கு இங்கே என்னதான் இருக்கின்றதாகும்? அங்கயற்கண்ணி என்ற பெயரையுடைய கருணை பூத்த கற்பகக் கொம்பே.
மதி - அறிவு, புத்தி. மீளா ஆள் - தன்னை வாங்கின விலையைத் திருப்பிக் கொடுத்து விடுதலை பெறமுடியாத, விடுதலையை விரும்பாத அடிமை. உபாயம் - வழி, உபாயமும் உபேயமும் தேவியே. அபாயம்-இடையூறு.
ஞானநெறியைச் சாதனமாகக் கொண்டவருக்கு விதி இடையூற்றை விளைக்கும். சரணாகதி நெறியில் தேவியையே சாதனமாகக் கொண்டவர்பால் விதி தலை காட்டாது. இதனால் ஞான நெறியினும் சரணாகதி நெறி சிறந்தது என்பது கூறப்பட்டது.
"சிவாய நமவென்று சிந்தித் திருப்பார்க்கு
அபாயம் ஒருநாளும் இல்லை - உபாயம்
இதுவே மதியாகும் அல்லாத எல்லாம்
விதியே மதியாய் விடும்"
என்ற ஒளயைாரின் அரும் பெறல் வாக்கு நினைக்கற்பாற்று.
"ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றி
தாழா துஞற்று பவர்”
என்ற திருவள்ளுவர் புகழ்ந்தது இவ்வாறு ஆன்ம நிட்சேபம் செய்தவர்களையே.
ஊழினை ஒழிக்க உனக்கு இயலாதோ?
அடுத்துவரு தொண்டர்தமை அலைக்கவரும்
உடலூழை அயலாக் கன்றேல்
கெடுத்துவிடு இனிப்பொறுக்க கில்லேம்
வினைகேதம் கிழமாம் தேகம்
எடுத்துழலும், மானிடரும் உடலியைந்த
விடத்தினைவே றிடத்திற் சேர்ப்பர்
கெடுத்தொழிக்கவும் வல்லர் கிரியரசன்
செல்வியருள் கிளர்கண் ணாளே. (40)
பொ-ரை: உன்பால் சரண்புகுந்த தொண்டர்களை வருத்த எண்ணி வருகின்ற பிராரப்த வினையை அவரிடத்தினின்று நீக்கிப் பிறிதோரிடத்து வை. அல்லது அதனை அழித்து ஒழித்து விடு. இனியும் பிராரப்த வினை விளைக்கும் துன்பங்களைப் பொறுக்க மாட்டோம். கிழமாகி அழியும் உடல் எடுத்துத் திரியும் மனிதர்களில் சிலரும் கூட, ஒருவர் உடலில் வந்து சேர்ந்த விடத்தை எடுத்து வேரிடத்தில் சேர்க்கின்றனர். அதனை முற்றிலும் அழித்து விடவும் வல்லுநராய் இருக்கின்றனர்! (விடமுண்ட கண்டன் பால் பங்கினளாகிய உனக்கு இது அரிதோ?) மலையரசன் மகளே. கருணை பெருகும் கயற்கண்ணியே.
அடுத்து வருதல் - ஆன்மார்ப்பணம் செய்தல். அலைத்தல் - துன்புறுத்தல். உடல் ஊழ் - பிராரப்த வினை. ஊழ்வினைக்கேதம் - ஊழ் வினையானது உண்டாக்கும் துன்பம்.
எல்லாம் சிவன் செயல் என்றிருக்கும் மெய்த்தொண்டர்பால் பயன்தர வரும் இருவினைகளில் நல்வினையானது அவரை வழிபடும் நன்மக்கள்பால் சேர்ந்து இன்பத்தைத் தரும். தீவினையானது அவர்களை இகழும் கீழ்மக்கள்பால் சேர்ந்து துன்பத்தைத் தரும் அல்லது நெருப்பில் பட்ட பஞ்சுபோல அழியும்.
"மருப்பை ஒரு கைக்கொண்டு நாரையூர் மன்னும்
பொருப்பை அடிபோற்றிப் பணிந்தால் - நெருப்பை
அருந்த எண்ணு கின்ற எறும்பு அன்றோ அவரை
வருந்த எண்ணுகின்ற மலம்" (நம்பியாண்டார் நம்பிகள்)
என்ற திருவாக்கை நினைக.
------------
உன்னைப் பற்றின் ஊழ்வினை ஒழியும்
எண்ணரிய பிறவியினும் இயைந்தநம
துறவினால் இறைவீ உன்சீர்த்
தண்ணமுதைச் செவிமடுத்துத் தாடலையால்
வணங்கிஉளந் தனிற்சிந் தித்துப்
பண்ணியஎன் பழவினையைப் பாற்றுதியென்
றடிமலரைப் பற்றி னேனேல்
திண்ணமவை விட்டொழியும் தீயபுலன்
மற்றெனது சொல்வா ராவே. (41)
பொ-ரை: தேவியே, எண்ணுக்கு அடங்காத பல பிறவிகளிலும் உனக்கும் எனக்கும் உள்ள ஆண்டான் அடிமை என்ற உரிமை நட்பால், 'என் பழவினைகளை நீக்குவாயாக' என்று நான் பிடிவாதமாக வேண்டினால் அத்தீவினைகள் தாமாகவே என்னை விட்டு ஒழியும். அதற்காக யான் செய்ய வேண்டியது யாதெனில், உன் புகழ் அமுதைச் செவிமடுத்தலும் திருவடியைத் தலையாரக் கும்பிடுதலும், உள்ளத்தில் தியானித்தலும் ஆகும். ஆனால், திருத்தொண்டின் நெறி ஒழுகுதற்கு, எனது தீய ஐம்புலன்கள் என் சொல் வழி வாரா.
நமது உறவு – ‘என்று நீ அன்று நான் நின்னடிமை அல்லவோ' என்ற பழைய நட்புரிமை. தாடலை - தாள்தலை. பாற்றுதல் - நீக்குதல்.
நெடுநாள் ஒருவரொடு பழகினால், அதனால் ஒரு நட்பு உண்டாகும். அந்நட்புக் காரணமாக ஏற்படும் தயவுதான் கண்ணோட்டம் (தாட்சண்யம்) எனப்படும். பெரியோர்கள் பால் தாட்சண்யம் தவறாமல் இருக்கும். ஆதலால், வேண்டிக் கொண்டால் தேவி என் பிறவியை நீக்குவாள். அவ்வேண்டுகோளை முறைப்படி செய்ய எனது புலன்கள் இசைந்து வரவில்லை என்கிறார், ஆசிரியர்.
புலன்களை அடக்குவதற்கும் நீயேதான் அருள் செய்ய வேண்டும் என்பதே குறிப்பாகும்.
"மாறி நின்று என்னை மயக்கிடும் வஞ்சப்
புலனைந்தின் வழியடைத்து அமுதே
ஊறிநின்று என்னுள் எழுபரஞ்சோதி
உள்ளவா காணவந் தருளாய்" (திருவாசகம்)
என்ற திருவாக்கும் நினைக.
என்னுள்ளத்தே எழுந்து நிற்கும் மேலான சோதி இறைவனே! அங்கே இருந்து கொண்டு ஒன்று அடங்கினால் மற்றொன்றாகக் கிளம்பி மாறிமாறி இடைவிடாமல் நின்று என்னை மயக்குகிறவையாகிய வஞ்சமுடைய அஞ்சு புலன்கள் வரும் வழியை நீ அடைத்து, அமுதமே ஊறி நின்ற உன்னை யான் உள்ளபடி கண்டு உணர நீ என் முன் வந்து அருள்க.
"ஒல்லையாறி உள்ளம் ஒன்றிக் கள்ளம் ஒழிந்து வெய்ய
சொல்லையாறித் தூய்மை செய்து காமவினை அகற்றி
நல்லவாறே உன்றனாமம் நாவில் நவின்றேத்த
வல்லவாறே வந்து நல்காய் வலிவலம் மேயவனே"
தாயும் நீயே தந்தைநீயே சங்கரனே அடியேன்
ஆயும்நின்பால் அன்புசெய்வான் ஆதரிக்கின்றது உள்ளம்
ஆயமாய காயம் தன்னுள் ஐவர் நின்று ஒன்றல் ஓட்டார்
மாயமே என்று அஞ்சுகின்றேன் வலிவலம் மேயவனே" (சம்பந்தர்)
------------------
தன்வயத்தாய் உனக்கென்ன ஊழ்வினையுடன்
உய்யக்கொள் வோமிவனை எனவுனக்குக்
கருணை உண்டேல் உயக்கொள் அம்மே
வெய்யஇரு வினையினை விசாரிப்ப
தெற்றுக்கோ விரிந்த ஞாலம்
வெய்யவும்மாற் றவும்வல்ல சுதந்திரைநீ
வினைக்கேற்பச் செய்வேன் என்றால்
ஐய! இந்த வஞ்சனைச்சொல் யாரிடத்தில்
அங்கயற்கண் அருட்பூங் கொம்பே. (42)
பொ-ரை: இவனைக் காப்பாற்ற வேண்டும் என்ற கருணை என்மேல் உனக்கு இருந்தால் காப்பாற்றுக. கொடியனவாகிய இருவினைகளை ஆராய்வது எதற்காக? விரிந்த உலகம் அனைத்தையும் படைக்கவும் துடைக்கவும் வல்ல சுதந்திரை நீ. நீ வினையை அனுசரித்துதான் செய்ய வேண்டும் என்றால் இந்த வஞ்சகப் பேச்சை யாரிடத்தில் சொல்லுகின்றாய்? உய்யக்கொள்வோம் - காப்பாற்றுவோம். வெய்ய - கொடிய. வினைக்கு ஏற்பத்தான் தெய்வம் அருள் செய்யும் என்பது இயற்கையாகிய பொதுநீதி. ஆனால் தேவி விரும்பினால் வினையை அனுசரிக்காமலே அவள் அருள் செய்யவும் முடியும். அவள் சுதந்திரமுடையவள். ஆதலால் ஏன் இவ்வாறு செய்தனை எனக் கேட்பார் இலர். "வல்லான் வகுத்ததே வாய்க்கால்” என்பது பழமொழி. மகாபாதகஞ் செய்தவனை உய்யக் கொண்ட திருவிளையாடல் செய்த மகாதேவ தம்பதிகளுக்கு, வினைக்கு ஏற்ப அடியார்களை ஆட்கொள்ள வேண்டும் என்ற நியதி உண்டோ?
"ஆட்பாலவருக்கு அருளும் வண்ணமும் ஆதிமாண்பும்
கேட்பான் புகில் அளவில்லை' (சம்பந்தர்)
"நரியைக் குதிரைசெய்வானும்
நாகரைத் தேவுசெய் வானும்
விரதங்கொண் டாடவல் லானும்
விச்சின்றி நாறுசெய் வானும்
-ஆரூர் அமர்ந்த அம்மானே” (அப்பர்)
"அரனடிக் கன்பர் செய்யும் பாவமும் அறமதாகும்
பரனடிக் கன்பிலாதவர் புண்ணியம் பாவமாகும்
வரமுடைத் தக்கன் செய்த மாவேள்வி தீமையாகி
நரரினிற் பாலன் செய்த பாதகம் நன்மை யாய்த்தே"
(சிவஞானசித்தியார்)
Nanda: Can God violate law?
Sri Ramakrishna : What do you mean? He is Lord of all. I He can do everything. He who has made the law can also change it. (Gospel of Ramakrishna. Page 800)
-------------
எம்குல தெய்வம் நீயே என இசைத்தல்
முன்னரே தனதான்ம சமர்ப்பணம்செய்
அப்பைய முனிவ ரன்தான்
அன்னையே தன்குலமும் பரிகாரமும்
உன்தாட்கே அர்ப்பித் திட்டான்
அன்னதால் வழியடியேன் குலதாசன்
ஆனேனை அகற்ற நீயார்?
என்னருமைக் குலதெய்வம் உனைப்பரவா
தொழிவதற்கிங் கெளியேன் யாரே. (43)
பொ-ரை: எனக்கு முன்னரே, தம் ஆன்மாவை உன்பால் அர்ப்பணம் செய்த அப்பைய தீக்ஷிதர் என்ற முனிவரர், தாமே தம் குலத்தையும் ஏனைய பரிகரங்களையும், தாயே! உன் திருவடிகட்கு அர்ப்பணம் - செய்துவிட்டார். ஆதலால், (அவருக்குப் பேரனாகிய) - நானும் உனக்கு வழிவழி அடியேன். குலதாசன் ஆகிய என்னை வேண்டாம் என்று விலக்க நீ யார்? என் அருமைக் குலதெய்வமாகிய உனக்குத் தொண்டு செய்யாதொழிய நான்தான் யார்?
ஆன்மார்ப்பணம், ஆன்மநிக்ஷேபம், சரணாகதி என்பன ஒருபொருட் சொற்கள். அப்பைய தீக்ஷிதர் என்ற பரமசாம்பவர், இந்நூலாசிரியராகிய நீலகண்ட தீக்ஷிதருக்குப் பெரிய பாட்டனார். அவர் 'உன்மத்த பஞ்சாசத்' என்ற மறு பெயருடைய ‘ஆன்மார்ப்பண ஸ்துதி' என்ற நூலை அருளிச் செய்தார். அதில் தம் குலம் முழுவதையும் சிவபெருமானிடத்தில் அர்ப்பித்தார். அச்சுலோகத்தின் மொழிபெயர்ப்பு:
"இன்றேஎன் ஆவிதனை உடலுடைமை
பரிகரமற் றுளவற் றோடும்
நன்றே அர்ப்பிக்கின்றேன், மலைமடந்தை
தனை இடங்கொள் நாத நாயேன்
நின்தூய நிலைதெளியேன் கருமங்கள்
செய யோக நிலையில் நிற்க
ஒன்றேனும் வலனல்லேன், துணையிலேன்.
சரணுனக்கே உறுகின் றேனே" (ஆன்மார்ப்பணஸ்துதி- 15)
பரிகரம் - சுற்றத்தார், சந்ததிகள். குலதாசன் - குலமுறையால் அடியவன்.
உன் பாட்டன் எழுதிக் கொடுத்த ஆள் ஓலை இது என்று காட்டி, 'வித்தகம் பேச வேண்டா பணிசெய வேண்டும்' என்று கூறி நம்பியாரூரரைச் சிவபெருமான் தடுத்தாட்கொண்டதும் "அத்தா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே'' எனவும், “மீளா அடிமை உனக்கே ஆளாய்ப் பிறரை வேண்டாதே'' எனவும் “விற்றுக் கொள்வீர் ஒற்றியல்லேன்" எனவும் நம்பியாரூரர் அருளிச் செய்ததும் ஈண்டு நினைக்கத் தக்கன.
--------------
ஏனை வானோரெனை ஏன்றுகொள்வரோ
பேதமையாற் பிறதேவர் தமைச்சரண்யான்
புகுந்தாலும் பிறதே வர்தம்
தாதனெனக் கொள்வாரோ தாயேமன்
னவன்பசுத்தான் தப்பி யேகி
ஏதலரில் நுழைந்தாலும் இதுவெமக்கென்
றுரிமைகொள்ள யார்தான் வல்லார்
போதலரும் பொழில்புடைசூழ் தருமதுரைத்
தருமதுரை பொற்பார் தேவி. (44)
பொ-ரை: அறியாமையால் பிறர்தேவர்பால் யான் அடைக்கலம் புகுந்தாலும் அவர்கள் தம் அடியான் என்று என்னை ஏற்றுக் கொள்வாரோ? தாயே! அரசனுடைய பசு தப்பிப்போய் அன்னியர் வீட்டிலே நுழைந்தாலும் இது நமக்காயிற்று என்று உரிமை கொள்ள யார் வல்லராவர்? பூ விரியும் சோலை புடை சூழ்ந்த மதுரை மன்னராகிய சுந்தரேசரது தேவியே.
தாதன் - அடியான். ஏதலர் - அன்னியர். போது - மலரும் பருவத்து அரும்பு. பொழில் புடைசூழ் தரு மதுரை சோலை சுற்றிலும் சூழ்ந்த மதுரை. தருமதுரை செங்கோல் வேந்தன்.
அரண்மனைப் பசு அயல் வீட்டில் புகுந்தால் தமக்கென்று யாரும் கட்டி வைத்துக்கொள்ள மாட்டார். அதுபோலுனது குலதாசனாகிய நான் பிற தேவரைச் சரண் புகுந்தாலும் அவர்கள் என்னை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது. இதனாலன்றோ "இவரலா தில்லையோ பிரானார்” என்று ஒவ்வொரு திருப்பாட்டிலும் ஈற்றில்வைத்துத் திருப்பாச் சிலாச்சிராமப் பதிகத்தில் நம்பியாரூரர் அருளிச் செய்தார்.
----------------
பாரம் அம்மையின் பதத்தே வைமின்
யான்எனதாம் பெருஞ்சுமையைத் தலைமேற்கொண்
டிரும்பிறவிக் கடலின் வீழ்ந்தே
ஏன்அழுந்திக் கெடுகின்றீர் அறிவிலிகாள்
பாரம்எல்லாம் எந்தாய் பாதத்
தேனரவிந் தந்தன்னில்வைத் தொருசிறிதும்
கவலையின்றிச் சிறிய குட்டை
தானிதுஎன் றெளிதாகச் சமுசார
சாகரத்தைத் தாண்டு மின்னே . (45)
பொ - ரை: யான் எனது என்கின்றதாகிய பெரியசுமையை உங்கள் தலையின் மேலே சுமந்து கொண்டு பிறவிப் பெருங்கடலில் விழுந்து ஏன் அழுந்தித் துன்புறுகின்றீர்கள்? மூடர்களே! எல்லாப் பாரத்தையும் மீனாக்ஷித் தாயின் தேன் பொருந்திய திருவடிக் கமலங்களில் வைத்துவிட்டு, இது ஒரு சிறிய குட்டைதான் என்று எளிதாகச் சமுசாரக் கடலை இப்போதே தாண்டுங்கள்.
யான் எனது - அகங்கார மமகாரங்கள். இருமை +பிறவி + கடல் = பெரிய பிறவிக் கடல் அரவிந்தம் - தாமரை. சமுசார சாகரம் -ஜனன மரணக் கடல்.
யான் எனது என்று அபிமானித்தல்தான் மனிதன் தாங்கும் பாரம். எல்லாம் நடத்துவிக்கும் திருவருளை மறந்துவிட்டு இந்த அகங்கார மமகார மயக்கில் மனிதன் இம்மையில் வருந்திப் பின் நரகிலும் பலவகைப் பிறப்பிலும் வீழ்ந்து வருந்துகின்றான். இம்மயக்கம் நீங்கியவன் வீடு பெறுவான்.
"யானெனது என்னும் செருக்கறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்" (திருக்குறள்)
அடியார்களின் பாரத்தை இறைவன் தாங்குகின்றான் என்பது,
"வீரம் பூண்பர் விசயனொடு ஆயதொர்
தாரம் பூண்பர், தமக்கன்பு பட்டவர்
பாரம் பூண்பர்நற் பைங்கண் மிளிர்அரவு
ஆரம் பூண்பர் அரநெறி யாரே" (அப்பர்)
யான் எனது என்ற செருக்கை அறுப்பதற்கு எளிய வழி, பாரத்தை எல்லாம் பரமேசுவரியின் பாதத்தே வைப்பதுதான். இது சரணாகதி அங்கத்தில் பரநியாசம் எனப்படும்.
"அன்றே என்றான் ஆவியும் உடலும் உடைமை எல்லாமும்
குன்றே அனையாய் எனையாட் கொண்ட போதே கொண்டிலையோ
இன்றோர் இடையூ றெனக் குண்டோ எண்டோள் முக்கண் எம்மானே
நன்றே செய்வாய் பிழைசெய்வாய் நானோ இதற்கு நாயகமே"
(திருவாசகம்)
என்பதும் பரநியாசமே.
"The two characteristics of Prema are, first, forgetfulness of the external world, and second, forgetfulness of one's own body.” (Sri Ramakrishna)
------------
எல்லாக் கவலையும் இன்றே ஒழித்தேன்
தங்குமுயிர் இவ்வுடலை விடுவ தெங்கே
அதன்பின் அதுசார்வ தெங்கே
பொங்குசினத் தாலுயிரை ஒறுப்பவனார்?
அதைஎனைநாட் பொறுத்தல் வேண்டும்?
எங்கண்அதை நீக்குவது?என் றெண்ணரும்பல்
எண்ணமெல்லாம் எந்தாய் உன்றன்
பங்கயமெல் லடிமீதே பைப்பயவைத்
தேன்எனக்கோர் பாரமும் இன்றே. (46)
பொ-ரை: இவ்வுடலில் துச்சிலிருக்கும் உயிரானது இதனை விட்டு நீங்குவது (சாவது) எவ்விடத்தில்? அதன் பின் அவ்வுயிர் போவது எங்கே? சினத்தால் உயிரைத் தண்டிப்பவன் யார்? அத்தண்டனையை எத்தனை நாட்களுக்குப் பொறுத்திருக்க வேண்டும்? அதனை நீங்குவது எப்படி? என்றெல்லாம் எழுகின்ற அளவற்ற எண்ணம் எல்லாவற்றையும், எங்கள் தாயே, மெல்ல மெல்ல உனது மெல்லிய திருவடித் தாமரை மீது வைத்து விட்டேன். இனி, எனக்கு ஒரு சுமையும் இல்லை.
ஒறுத்தல் - தண்டித்தல், பொறுத்தல் - தாங்கிக் கொள்ளுதல், சகித்தல்.
பிறவித் துன்பத்தில் உழலுகின்றவனும் மறுமையில் நம்பிக்கை உள்ளவனும் ஆகிய ஒவ்வொருவனுக்கும் இச்செய்யுளில் கூறிய ஐயங்கள் தோன்றலும் கவலையுண்டாதலும் இயல்பே. தேவியினிடத்துப் பரநியாசம் செய்தவனை இக்கவலைகள் விட்டு நீங்கும். அவன் துயரற்றிருப்பதற்கு உதாரணம் பின் வரும் அப்பர் திருவாக்கால் அறிக.
"வெம்பவரு கிற்பதன்று கூற்றம் நம்மேல்
வெய்ய வினைப்பகையும் பைய நையும்
எம்பரிவு தீர்ந்தோம் இடுக்கண் இல்லோம்
எங்கெழிலென் ஞாயிறு எளியோம் அல்லோம்
அம்பவளச் செஞ்சடைமேல் ஆறுசூடி
அனலாடி ஆனஞ்சும் ஆட்டுகந்த
செம்பவள வண்ணர்செங் குன்றவண்ணர்
செவ்வான வண்ணரென் சிந்தையாரே"
"எண்ணமெல்லாம் அடிமீதே வைத்தேன், எனக்கு ஓர்பாரம் இன்றே" என்றதனால் ஆளாகும் எண்ணம் அன்றித் தமக்கு வேறு எண்ணம் இல்லை என்றாயிற்று.
"ஒன்றே நினைந்திருந்தேன் ஒன்றே துணிந்தொழிந்தேன்
ஒன்றே என் உள்ளத்தின் உள்ளடைத்தேன்-ஒன்றேகாண்
கங்கையான் திங்கட் கதிர்முடியான் பொங்கொளிசேர்
அங்கையாற் காளா மது." (அற்புதத் திருவந்தாதி)
என்றது காண்க.
---------------
அன்னைக்கென் விடயத்தே அதிக யோசனை
ஒருகால்தன் இருகாலில் வீழ்ந்தடைந்தேன்
வசமான உலக மாதா
அருஞானந் தரலாமோ? அஃதின்றி
எடுத்திங் களிக்க லாமோ
வருமாயா வினைவாயில் மண்ணிடுவே
மோஅதன்றன் வழியுய்ப் பேமோ
சரியான திவனுக்கு யாதெனவே
ஆராயத் தலைப்பட் டாளே. (47)
பொ-ரை: ஒருதடவையே தன் இரண்டு திருவடிகளில் வீழ்ந்து சரண் புகுந்தவனாகிய எனக்கு வசமானவளாகிய உலக மாதாவாகிய மீனாட்சி, எப்படியாவது என்னைக் காப்பாற்ற வேண்டும் என்றே உள்ளம் வைத்திருக்கின்றாள் ஆனால், தாமதிப்பது என்னெனில், அருமையானதாகிய ஞானத்தை இவனுக்குத் தரலாமோ? அஃதின்றியே பிறவிக் கடலிலிருந்து எடுத்து வீடுபேறு அளிக்கலாமோ? இவனை நலிய எண்ணி வருகின்ற வினையின் வாயில் மண்ணைப் போடலாமோ? அல்லது வினையை அனுசரித்து இவனை நடத்துவோமோ? எது இவனுக்கு தக்கது என்று ஆராயத் தொடங்கினாள்.
வாயில் மண்ணிடுதல் - ஆசையை வீணாக்கல். உய்த்தல் - செலுத்துதல். தலைப்படுதல் – தொடங்குதல்.
மீனாட்சியம்மை, பெருங் கருணைப் பிராட்டியாய் இருந்தும் இன்னும் எனக்கு அருள் புரியாதது ஏனென்றால் அது என் குறையே. என்னைப் புறக்கணிக்கவில்லை. எங்ஙனம் ஆட்கொள்வது என ஆராய்கின்றாள் என்றார். அவளைச் சரண் அடைதல் வீணாகப் போகாது என்றதாம். எத்தனை தாழ்ந்தவனாயினும் மனதார ஒருதடவை ஒருவன் தேவியைச் சரண் புகுந்தால் அதுவே ஏதுவாக அவனது வசமாகும் அளவுக்குக் கருணையுடையவள் அவள். அவளது செளலப்பியத்தைச் சங்கராச்சாரியர் பின் வருமாறு கூறுகின்றார்.
'பவானியே உன் அடியனாகிய என்மேல் கருணைப் பார்வை வைப்பாயாக' என்று விண்ணப்பிக்க விரும்பி ஒருவன், "பவாநித்வம்" என்று தொடங்கிய மாத்திரத்தில், (பவாநித்வம் என்ற சொல்லுக்கு பவாநியின் சொரூபம் என்ற பொருளும் தோன்றும் ஆதலால்) அரி, பிரமன் இந்திரன் முதலிய தேவர்கள் தம்முடி மணி ஒளிவிளக்கால் நீராஜனம் செய்கின்ற திருவடிகளையுடைய உனது சாயுச்சிய பதவியை அவனுக்கு அளிக்கின்றாய் (சௌந்தர்யலகரி 22)
"முருகா எனவோர் தரமோ தடியார் முடிமேல் இருதாள் புனைவோனே'' (திருப்புகழ்) சிவபெருமானுக்கு 'ஆசுதோஷ:' (எளிதில் மகிழ்பவன்) என்ற பெயருண்மையும் "தன்னை ஒழிந்த சகல பதார்த்தங்களும் தன் சங்கல்பத்தைப் பற்றி நிற்க உளவாம்படி இருக்க, சர்வேச்வரன், தன் பக்கல் ஆசாலேசம் (சிறிது விருப்பம்) உடையார் சங்கல்பத்தைப் பற்றித் தான் உளனாய் இருப்பன்'' (திருவாய் மொழி -1- 10 - 1 வியாக்கியானம்)
"தீர்ந்த அன்பாய அன்பருக்கு அவரினும் அன்ப போற்றி" (திருவாசகம்), "அடியார்க்கெளியன் சிற்றம்பலவன்'' என்பன முதலிய சான்றோர் வாக்குகள் ஈண்டு நினையத் தக்கன.
"தொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி” (திருவாசகம்)
என்பது உன்னைத் தொழாநின்ற அப்போதே துன்பத்தைத் துடைப்பவனே என்று பொருள் தரல் - காண்க.:
"எம்பிரான் என்றதே கொண்டு என்னுளே புகுந்து நின்றிங்கு
எம்பிரான் ஆட்டிட ஆடி என்னுளே உழிதருவேனை
எம்பிரான் என்னைப் பின்னைத் தன்னுளே கரக்குமென்றால்
எம்பிரான் என்னின் அல்லால் என்செய்கேன் ஏழையேனே"
(அப்பர்)
என்ற திருப்பாட்டு எம்பிரான்' என்று ஒரே தடவை அழைத்தார்க்கும் இறைவன் அருளும் திறம் கூறியவாறு காண்க.
---------------
பரநியாசமே பரமஞானம்
என்னாவி தன்னையருண் மீனாட்சி
அம்மையடி இணைக்கே வைத்தேன்
பன்னாளும் சடவசட ஆராய்ச்சி
செய்தவதன் பயனும் ஈதாம்
முன்னான நிலமுதலாம் தத்துவகோ
தனைத்திறமை முடிபும் ஈதாம்
பன்னூறும் ஆகமத்தின் பயனான
சிவஞானம் பலித்த தாமே. (48)
பொ-ரை: என் ஆன்மாவை அருளுடைய மீனாட்சியம்மையின் இணையடிகளுக்கே அர்ப்பித்தேன். பலகாலமாக அறிவிலாத பொருள் இது, அறிவுடைய பொருள் இது என ஆராய்ச்சி செய்ததன் பயனும் இதுவேதான். முதன்மையான பூமி முதலாம் சிவம் ஈறாகிய தத்துவங்களை ஆராய்ந்து கண்ட திறமையான முடிபும் இதுதான். பலநூறு ஆகமங்களை ஓதியதன் பயனாகப் பெற்ற சிவஞானம் பலித்துவிட்டது.
ஆவி-ஆன்மா. ஆவியை அம்மையின் திருவடிக் கீழ் வைத்தல், ஆன்மார்ப்பணம் எனப்படும். - பரநியாசமும் அதுவே. சடம் - அறிவில்லாதது. அசடம் - அறிவுடையது. சடவசடவாராய்ச்சி - சேதனாசேதன விவேகம் எனப்படும். தத்துவங்கள் நிலம் முதல் சிவம் ஈறாக முப்பத்தாறாம். இது சிவாகமங்கள் கூறுவது. தத்துவ ஆராய்ச்சியின் பயன் சிவஞானம் பெறுதல்.
தேவியின் திருவடிகளில் பரநியாசம் செய்தலே சகல விதமான நூலாராய்ச்சியின் பயனும் முடிபும் முத்திக்குவழியுமாம் என்று இதனால் கூறியதாயிற்று.
"கற்றதனா லாயபய னென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅ ரெனின்." (திருக்குறள்)
இஃதில்லாதார், "மந்திபோல் திரிந்து ஆரியத்தொடு செந்தமிழ்ப்பயன் அறிகிலா அந்தகர்கள்” ஆவர்.
'நன்றே வருகினும் தீதே விளைகினும் நானறிவது
ஒன்றேனும் இல்லை உனக்கேபரம் எனக்குள்ள தெல்லாம்
அன்றே உனதென்று அளித்து விட்டேன் அழியாத குணக்
குன்றே அருட்கடலே இமவான் பெற்ற கோமளமே”
(அபிராமி அந்தாதி 96)
---------------
அரிய அரணத் தமர்ந்தது என் உயிர் எனல்
ஆவரணம் ஆறாறின் நடுவமர்நின்
அரவிந்த அடிக்கண் வைத்தேன்
ஆவிஎனதனை, என்னை மண்விண்பா
தாளத்தார் யாவ ராலும்
தேவிஒளிந் திருந்தேனும் பார்க்கவும்தான்
கூடுமோ சினந்த கூற்றைக்
கோவமொடு பாலனுக்காக் குமைத்தபர
னொடுகூடற் குளிர்பூங் கொம்பே. (49)
பொ-ரை: முப்பத்தாறு மதில்களின் நடுவில் வீற்றிருக்கும் - உன் திருவடித் தாமரையில் என் உயிரைப் பதித்து வைத்திருக்கின்றான். ஆகையால், மண்விண் பாதாளம் என்னும் மூன்றுலகிலும் வாழ்வார் யாராலும் என்னை ஒளிந்திருந்தேனும் காண முடியுமோ? கோபத்தோடு வந்த கூற்றுவனைப் பாலனாகிய மார்க்கண்டனுக்காகக் கொன்ற பரமனொடு மதுரையில் வாழும் பூங்கொம்பே.
ஆவரணம் - மதில்கள். ஆவி எனதனை - என்னுடைய ஆன்மாவை. கோவம் - சினம். கூடல் – மதுரை.
மண் முதலாகச் சிவம் ஈறாக உள்ள தத்துவங்கள் முப்பத்தாறு. அவை ஒன்றற்கொன்று நுண்ணிதாக உள்ளன. இறுதியில் உள்ள சிவதத்துவம் ஏனைய அனைத்தினும் நுண்ணியது. அச்சிவத்தின் நடுவில் அமர்ந்திருக்கும் பராசக்தியே மீனாட்சி தேவி. அதனை 'உடையாள் உன்றன் நடுவிருக்கும் உடையாள் நடுவுள் நீயிருத்தி' என மணிவாசகனாரும் கூறியுள்ளார். இத்தன்மை கருதியே முப்பத்தாறு மதில்களின் நடுவிலே அம்மை அமர்ந்திருப்பதாகக் கூறப்பட்டது. அங்கே இருக்கும் தேவியின் திருவடியில் அடைக்கலமாக வைக்கப்பட்ட ஆன்மாவைக் காண விரும்பினால் முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து தேவியைத் தரிசித்து, அதன் பின்னர் அன்றோ அவள் திருவடியில் உள்ள ஆன்மாவைக் காணவேண்டும்? அது மனிதர், தேவர், நாகர் ஆகிய யாவராலும் முடியாது என்பதாகும். முப்பத்தாறு மதில்கள் சூழ்ந்த ஒரு அரண்மனையிலே அந்தப்புரத்தில் இருக்கும் அரசமாதேவியின் காலில் இருக்கும் ஒன்றை ஒருவர் ஒளிந்திருந்தும் காண முடியாத தன்மை இப்பாட்டில் தொனிக்கின்றது. தேவியின் திருவடியில் அர்ப்பணம் செய்யப்பட்ட ஆன்மாவுக்கு யாராலும் எத்தகைய துன்பமும் ஏற்படாது என்பதும் பெறப்படும்.
46 - ஆம் செய்யுளின் குறிப்பிற் காட்டிய "வெம்ப வருகிற்ப தன்று வெங்கூற்றம்" என்ற அப்பர் தேவாரம் ஈண்டும் நினைக்கற்பாற்று.
---------------
பிரபத்தியிற் சிறந்ததோ பரமுத்தி?
எம்பந்த வல்வினைநோய் ஈடழித்தி
பரமசுகம் அளித்தி இத்தில்
நம்பிக்கைக் குறைவில்லை என்றாலும்
நன்றாயே இன்றே உன்றாள்
அம்பொற்செங் கமலத்தில் அடியேன்றன்
பரமெல்லாம் ஆக்கி வாழும்
சம்பத்திற் சீரியதோ தனிவீடென்
றுரைப்பதனிற் சார்தல் தானே. (50)
பொ-ரை: எங்களுடைய வலிய வினைகளாகிய நோயை முழுவதும் கெடுப்பாய், மேலான இன்பம் கொடுப்பாய், இதில் சிறிதும் ஐயம் இல்லை. எனினும் என்தாயே, இன்றைக்கே உன் திருவடிச் செந்தாமரையில் அடியேனுடைய பாரம் எல்லாம் வைத்து விட்டுக் கவலை சிறிதும் இன்றி வாழ்கின்ற செல்வத்தினும் சிறந்ததோ இனிச் சென்றடைய இருக்கின்ற தனித்த வீடுபேறு என்று சொல்லப்படுவதைச் சேர்ந்து வாழ்வது?
பந்தம் - தளை, கட்டு. சம்பத்து - செல்வம் நன்றாய் - நல்லதாய், சன்றதாய்.
உடல் நீங்கிய பின் அடைய இருக்கும் பரமுத்தியினும் இவ்வுடலோடிருந்தே செய்யும் பிரபத்தியே கைகண்ட இன்பம் ஆகும். ஆதலால் இதனை விட்டு அதனை வேண்டுவது கையில் இருக்கின்ற முயலை விட்டு ககனத்தில் பறக்கும் காக்கைப் பின் போவது போலாகும் என்பது. இதனை,
"கூடும் அன்பினிற் கும்பிட லேஅன்றி
வீடும் வேண்டா விறலின் விளங்கினார்"
(பெரிய புராணம்)
ஆனபய பத்திவழி பாடுபெறு முத்தியது
வாகநினை பத்தசன வாரக்காரனும்"
(திருவேளைக்கார வகுப்பு)
“The Gnanis seek the fruit of liberation and the bakthas love of God, love without any motive behind.” (Sri Ramakrishna).
Prasada says the mind seek the Black beauty, Do as Thou doest wish, who wants Nirvana" (Sri Ramakrishna)
என்பன ஆதியாகிய சான்றோர் வாக்குகளால் அறிக.
------------
நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே
இப்பொள்ளல் ஆக்கையினைக் காசியிலே
விழச்செய்க இழிசண் டாளர்
குப்பத்தில் விழச்செய்க பொன்னுலகேற்
றுக, குறைவில் வீடு சேர்க்க
தப்புற்ற கீழ்க்கதியில் தள்ளுகஇன்
னேஅருள்க பின்னே காக்க
எப்படிச் செய் தாலெனக்கென்? உடைமைதனை
ஆள்உரிமை உடையார் மேற்றே. (51)
பொ-ரை: இந்தத் துவாரமயமான உடம்பினைக் காசிமாநகரிலே விழும்படி (சாகும்படி)ச் செய்க; அல்லது இழிந்த சண்டாளர்கள் இருக்கும் சேரியிலே விழச் செய்க. என் உயிரினைச் சுவர்க்க லோகத்திலே ஏற்றுக, அல்லது, தீயதான நரகத்திலே தள்ளுக. இன்றைக்கே எனக்கு அருள் செய்க; அல்லது, நெடுநாட் கழித்து - அருள் செய்க. எப்படிச் செய்தாலும் எனக்கென்ன? கவலையில்லை. உடைமையினைத் தம் விருப்பம் போலப் பயன்படுத்தும் உரிமை அதனை உடையவருக்கே உரியதாம்.
பொள்ளல் - துவாரம். ஆக்கை - உடம்பு. இன்னே - இப்பொழுதே. உடைமை - சொத்து உடையார் - சொந்தக்காரர்.
உடல் பொருள் ஆவி என்ற மூன்றனையும் தேவியின் திருவடியில் சமர்ப்பித்த பின் பிரபந்நர்கள் அவற்றைப் பற்றித் தாம் சிறிதும் கவலைப்படாமல்,
"தன்கடன் அடியேனையும் தாங்குதல்
என்கடன் பணி செய்து கிடப்பதே" (அப்பர்)
என்றபடி தற்சுதந்தரத்தை அறவே விட்டுத் திருவருளின் வயத்தராய் நிற்பர். பிரபந்நர் ஆகிய அடியார்கள் தேவியின் உடைமையாவர். அவர்களை எப்படி ஆட்கொள்ளுவது என்பது அவள் விருப்பமே.
"நன்றே செய்வாய் பிழைசெய்வாய்
நானோ இதற்கு நாயகமே" (திருவாசகம்)
"கண்ணார் நுதலோய் நின்பாதம் கண்டேன் கண்கள் களிகூர
எண்ணா திரவும் பகலும் நான் அவையே எண்ணும் அதுவல்லால்
மண்மேல்யாக்கை விடுமாறும் வந்துன் கழற்கே புகுமாறும்
அண்ணா எண்ணக்கடவேனோ அடிமை சால அழகுடைத்தே"
(திருவாசகம்)
"Ours is not to question why,
Ours is to do and die"
"Thou givest and wilt give me to follow Thee wittingly, doing what Thou wilt' (St. Augustine)
"For the servant is not above the Lord, neither is the disciple above his master" (Imitation of Christ).
---------------
வீடு வேண்டா விறல்
உன்புகழ்கேட் பதற்கிடையூ றுளதாகில்
சகியேன்நான் உன்பொற் பாதம்
நன்குவழி படலொழியேன், இதற்கிடையூ
றிலதாகில் நல்கு மோட்சம்
அன்புமிகு தாயே இன் பாயபய
பத்திவழி பாடின் றாகில்
துன்பமிகும் அவ்வீடு பேறெனக்கு
வேண்டாவே துகளில் சோதி. (52)
பொ-ரை: உன் புகழைக் கேட்பதற்குத் தடை இருக்குமானால் நான் பொறுக்கமாட்டேன். உன் பொன்னார் திருவடிகளை நன்றாக வழிபடுவதைக் கைவிடமாட்டேன். இதற்கு இடையூறு ஒன்றும் இல்லாதிருக்குமானால் எனக்கு மோட்சத்தைக் கொடு. அன்பு மிக்க தாயே! இன்பமயமான பயபத்தியோடு நின் வழிபாடு செய்யும் பேறு இல்லையானால் துன்ப மிக்க அந்த மோட்சம் எனக்கு வேண்டவே வேண்டாம். குற்றம் அற்ற சோதியே!
நல்கு-அருள், கொடு, இன்றாகில் இல்லையானால்.
வீடு பேற்றினும் சிறந்தது தேவி வழிபாடு என்பது இதனாற் கூறப்பட்டது. 50, 51 ஆம் செய்யுட்களின் குறிப்பிற் காட்டிய உதாரணங்களை ஈண்டும் கருதுக.
"கண்டு எந்தை என்று இறைஞ்சிக் கைப்பணியான்
செய்யே னேல் அண்டம் பெரினும் அதுவேண்டேன் - துண்டம் சேர்
விண்ணாளும் திங்களாய் மிக்குலகம் ஏழினுக்கும்
கண்ணாளா ஈதென் கருத்து"
(காரைக்கால் அம்மையார்)
"மறந்தாலும் இனியிங்கு வாரேன் என்றகல் பவர்போல்
சிறந்தார நடம்பயிலும் திருவாளன் திருவடிகண்டு
இறந்தார்கள் பிறவாத இதிலென்ன பயன்வந்து
பிறந்தாலும் இறவாத பேரின்பு பெறலாமால்"
(கோயிற் புராணம்)
இறைவனை அன்பினால் வழிபடுதலால் விளையும் இன்பச் சுவை நுகர்ந்தவர்கள், வேறு எந்த இன்பத்தையும் புறக்கணிப்பர். தமக்கு உள்ள அன்பு போதாதென்று அதனையே மேலும் மேலும் பெற ஆண்டவனை வேண்டுவர். அது,
"இமையவர் தொழுதெழு இன்னம்பர் மேவிய
உமையொரு கூறுடையீரே
உமையொரு கூறுடையீர் உமையுணர்பவர்
அமைகில ராகிலர் அன்பே "
என்ற சம்பந்தர் வாக்காலும் அறிக.
"But the root of all is devotion, and liberation is its maid. What is gained by liberation? Water mingles with water. I love to eat sugar. But it is not good to become sugar" (Rama Prasad).
---------------
எந்தாய் திருவுரு இன்பமா கடலாம்
மணிமுடியே முதலாக மலரடியின்
வரையுலக மாதா வுன்பேர்
அணிகெழுமிப் புவனமங் களமான
திருவுருவின் அங்கம் அங்கம்
எணியெணிமேல் எழுமின்பக் கடலலையின்
வரிசையிலே யூச லாடிக்
கணிதமிடேன் கழிந்தநாள் தமையூழி
கணமாகக் களிக்கின் றேனே. (53)
பொ-ரை உலகமாதாவே! மணிமுடி முதலாக மலரடியின் இரேகை ஈறாக, உம் பேரழகு பொருந்தி எல்லா உலகங்களுக்கும் மங்களம் அளிக்கின்ற திருவுருவத்தின் ஒவ்வொரு உறுப்பையும் தியானித்துத் தியானித்து, அதனால் பொங்கி எழுகின்ற இன்பமாகடலின் அலைகளின் வரிசையாகின்ற ஊசலிலே ஆடி, கழிந்த நாட்களைக் கணக்குப் பாராமலே, ஊழி காலமும் ஒருகணமாகும் படி காலத்தைக் கழித்துக் களிக்கின்றேன்.
முடி - கிரீடம், ஒளிகெழுமி - பிரகாசம் பொருந்தி. எணி எணி - எண்ணி, எண்ணி. கணிதம் இடேன் - கணக்குத் தெரியாமல்.
ஆனந்தசாகரம் (இன்பமாகடல்) என்ற இந்நூலின் பெயர்க்காரணம் இச்செய்யுளால் தெரிய வருகிறது. மீனாட்சி அம்மையே! இன்பமா கடல். அவளைத் தியானித்தலே இன்பமா கடலில் திளைத்தல். அவளது உச்சி முதல் உள்ளங்கால் வரை ஒவ்வொரு அவயவங்களையும் ''உள்ளக் கிழியில் உருவெழுதி உணர்தலே இன்பமான கடல் அலையிலே ஊசலாடுதல். இங்ஙனம் உணருங்கால் கழியும் காலம் ஊழியாயினுமது ஒரு கணம் ஆக அன்பர்களுக்குக் கழியும். எவ்வுலகத்திலும் அடையத் தக்க பேறு இதனினும் வேறில்லை.
"ஏறதேறும் இடைமரு தீசனார்
கூறுவார் வினைதீர்க்கும் குழகனார்
ஆறு செஞ்சடை வைத்த அழகனார்
ஊறிஊறி உருகும் என்னுள்ளமே." (அப்பர்)
நீரின்ப வெள்ளத்துள் நீந்திக் குளிக்கின்ற நெஞ்சங் கொண்டீர்
பாரின்ப வெள்ளம் கொளப்பரிமேல் வந்த பாண்டியனார்
ஓரின்ப வெள்ளத்து உருக்கொண்டு தொண்டரை உள்ளங் கொண்டார்
பேரின்ப வெள்ளத்துப் பெய்கழலே சென்று பேணுமினே” (திருவாசகம்)
(இதன் பொருள்: இன்ப வெள்ளத்தில் நீந்திக் குளித்துத் திளைக்க வேண்டும் என்ற அவாவு டையவர்களே! இவ்வுலகத்துள்ள எல்லா உயிர்களும் இன்பக் கடலினை அணு குமாறு குதிரையின்மேல் வந்த சோமசுந்தர பாண்டியனாரும், தியானமாகிய இன்பக் கடலில் (எழுந்த அமுதமாகிய) திருவுருவம் கொண்டு தோன்றித் தொண்டர்தம் உள்ளத்தைத் தம்வசம் செய்துகொண்டவரும் ஆகிய இறைவரது நம்மை ஆனந்த வெள்ளத்து அழுத்துகின்ற சேவடிகளைச் சென்று தொழுமின்)
"துன்பமின்றித் துயரின்றி என்றும் நீர்
இன்பம் வேண்டில் இராப்பகல் ஏத்துமின்
என்பொன் ஈசன் இறைவன் என்றுள்குவார்க்கு
அன்பனாயிடும் ஆனைக்கா அண்ணலே” (அப்பர்)
முதலிய திருவாக்குகள் இன்பமா கடலின் இயல்பை விரித்தல் காண்க.
-------------
திருவடி நினைந்தே சிவகதி பெறுவேன்
கல்லினும்வல் லியவான கனவேத
முடியுலவும் கார ணத்தால்
எல்லினும்செந் நிறமுடைத்தாய் அமுதகட
லினைக்கடைந் தேஎடுத்த தான
மெல்லியநல் வெண்ணெயினும் மிகவிளகி
விளங்குமுன்றன் விரைப்பொற் பாதம்
எல்லியினும் பகலினுமுள் எண்ணி எண்ணி
களிக்கின்றேன் எழில்மீ னாட்சி. (54)
பொ-ரை: கல்லினும் வலிமையுடைய கன வேதங்களின் சிரசுகளில் உலாவுகின்ற காரணத்தால் சூரியனிலும் சிவந்ததுவாகி, அமுதகடலைக் கடைந்து எடுத்த மெல்லிய நல்ல வெண்ணெயிலும் இளகி விளங்கும் உன் நறுமணம் பொருந்திய திருவடி மலரை இரவும் பகலும் இடைவிடாமல் நினைந்து நினைந்து மகிழ்கின்றேன், அழகிய மீனாட்சியம்மையே.
வல்லிய - கெட்டியானவை. வேதமுடி - உபநிஷதம். எல்லி - இரவு.
தேவியின் திருவடிகளில் தம் ஆன்மாவை அர்ப்பணம் செய்தவர்கள் அகப்புறப் பற்றுக்கள் அனைத்தையும் துறந்தவராதலால். வேறு சிந்தை இல்லாமல், அவளுடைய திருவடித் தியானத்தில் மூழ்கிக் களித்திருப்பர்.
"பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்
நினைப்ப வர்மனம் கோயிலாக் கொண்டவன்
அனைத்தும் வேடமாம் அம்பலக் கூத்தனைத்
பதினைத்த னைப்பொழுதும்மறந் துய்வனோ" (அப்பர்)
உபநிடத வாக்கியங்களின் பொருள் உணர்ந்து கொள்ளுவதற்கு அரிதாக இருப்பதால் கல்லினும் வல்லிய எனப்பட்டன. உபநிடதங்களில் கூறப்படும் பிரமப் பொருளாய் இருப்பது தேவியின் திருவடிகளே. ஆதலால், அவற்றில் உலாவுவனவாகக் கூறப்பட்டன. திருவடிகள் மிகச் செம்மையாய் இருப்பதற்குக் காரணமும் மொழிந்த தாயிற்று. "ஓங்கார பஞ்சர சுகீம் உபநிஷத் வனகேளீகள கண்டீம்'' என்று நவரத்ன மாலிகையும் அம்பிகையை உபநிஷதமாகிய காட்டில் விளையாடும் மயிலாகக் கூறுகிறது. தேவியின் திருவடிகள் சிவந்ததற்குக் காரணம் வேதத்திற் பயில்வதால் என்பது.
"அழகுக் கொருவரும் ஒவ்வாத வல்லி அருமறைகள்
பழகிச் சிவந்த பதாம் புயத்தாள்” - (அபிராமி அந்தாதி 71) என்பதாலும் அறிக.
------------------
பாதஞ் சுமந்து பவக்கடல் கடப்பேன்
குருத்துவமிக் கவரென்ன மூவுலகும்
கொண்டாடும் குருக்கள் தாமும்
குருத்துவம்தாம் கூடுவதற்குக் கொண்டாடும்
குருத்துவம்தான் குலவுன் பாதம்
அருத்தியொடு சிரத்தினிலே தரித்தடியேம்
பிறப்பிறப்பாம் அலைநீர் வேலை
வருத்தமறத் தாண்டுகிற்பேம் மதுரையமர்
மகரவிழி மலர்ப்பூங் கொம்பே. (55)
பொ-ரை: மதிப்பு மிக்கவர்கள் என்ற காரணத்தால் மூவுலகத்தவரும் கொண்டாடத் தக்க பெரியோர்களும், தமக்குப் பெருமை வந்து கூடுவதன் பொருட்டு வழிபடும் கனம் பொருந்திய உன் திருவடிகளை, விருப்புடன் தலைமேல் தாங்கிக் கொண்டு, உன் அடியரேம் சமுசாரமாகிய அலைகடலைச் சிரமமில்லாது தாண்ட வல்லவர்கள் ஆகி இருக்கின்றோம். மதுரையில் வீற்றிருக்கும் மீனாட்சி என்ற திருநாமம் உடைய அழகிய மலர்க்கொம்பே.
குருத்துவம் என்பது ஆசிரியத் தன்மை, கௌரவம், பெருமை முதலிய பல பொருள் தரும் ஒரு சொல். அருத்தி - ஆர்வம், சிரம் - தலை. வேலை - கடல். மகரவிழி - மீனாட்சி.
குருத்துவம் மிக்கவர்கள் என்று ஈண்டு கூறப்பட்டவர்கள் அகத்தியர், மார்க்கண்டர், துர்வாசர், வசிட்டர் முதலியோர். அவர்கள் எல்லாம் தேவி உபாசகர்களில் சிறந்தவர்கள், ஆசிரியர்கள். இத்தொடரில் குருத்துவம் என்பது ஆசிரியத் தன்மை, பெருமை எனப் பொருள்படும். குருக்கள் - ஆசிரியர் முதலிய பெரியோர். இப்பெரியோர்கள் எல்லாம் மேலும் மேலும் ஆசிரியத் தன்மை கூடத் தேவியை வழிபடுகின்றனர். தேவியின் அருளால் மூவுலகத்தவராலும் தொழப்படுகின்றனர்.
"வாழ்த்துவதும் வானவர்கள் தாம்வாழ்வான் மனநின்பால்
தாழ்த்துவதும் தாமுயர்ந்து தம்மையெல்லாம் தொழவேண்டிச்
சூழ்த்துமது கரமுரலும் தாரோயை நாயடியேன்
பாழ்த்தபிறப் பறுத்திடுவான் யானுமுன்னைப் பரவுவனே."
"முழுத்தழல் மேனித் தவளப் பொடியன் கனகக் குன்றத்து
எழிற்பெருஞ் சோதியை எங்கள் பிரானை இகழ்திர் கண்டீர்
தொழப்படும் தேவர் தொழப்படு வானைத் தொழுத பின்னைத்
தொழப்படும் தேவர்தம் மால்தொழு விக்கும் தன்தொண்டரையே." (அப்பர்)
"ஆலந்துறை தொழுமின்,
சாதிம்மிகு வானோர்தொழு தம்மை பெறலாமே” (சம்பந்தர்)
‘குருத்துவம் தான்குலவுன் பாதம்' ஏனையவர்போல் பிறரால் உபதேசிக்கப்படாமல், தானே சர்வாதி குருவாக, செயற்கை அறிவு பெற்றதாக இன்றி இயல்பாகவே, 'வாலறிவு' உடையதாக உள்ள உன் திருவடிகள் என்றதாம். இயல்பாகவே பாசங்களின் நீங்கி விளங்கிய அறிவுடைமை கடவுளுக்குரிய எட்டுக்குணங்களில் ஒன்றாகும். இத்தொடரில் குருத்துவம் என்பதற்குச் சிலேடையால் 'கனம்' (பளு) என்றும் பொருளாகும். பளுவுடையவை அனைத்தினும் பளுவுடைய உன் திருவடிகளைச் சுமந்து கொண்டு அது புணையாகப் பிறவிக்கடல் நீந்துவோம் என்பது விரோத அணியாகும். கடலில் நீந்துவோர் கனம் இல்லாத பொருளைப் புணையாகப் பற்றிக் கொண்டு அதன் மீது தாம் இருப்பர். இது அதற்கு மாறாகக் கனத்த பொருளைப் புணையாகத் தலைமீது சுமந்து நீந்துதல் வியப்பாகும்.
குருத்துவம் மிக்க திருவடிகளைச் சுமந்து கொண்டு கடலில் நீந்தும் தம் ஆற்றலைப் பற்றி இந்நூலாசிரியர் கூற்றினை, கல்லையே புணையாகக் கொண்டு நீலநிறப் பெருங்கடலும் ஏழு பிறவிக்கடலும் நீந்திய திருநாவுக்கரசர் கூற்றாகிய, பின் வரும் திருப்பாட்டினொடு ஒப்புக் கண்டு மகிழ்க.
"பெருவிரல் இறைதா னூன்றப் பிறையெயிறு இலங்க அங்காந்து
அருவரை அனைய தோளான் அரக்கனன்று அலறி வீழ்ந்தான்
இருவரும் ஒருவனாய உருவம் அங்குடைய வள்ளல்
திருவடி சுமந்து கொண்டு காண்க நான்திரியு மாறே.”
(அப்பர்)
----------------
எந்தாய் அடியே எமனை உதைத்தது
நெற்றிவிழி யால்மதனை நீறாக்கல்
இருவருக்கும் பொதுவே யான
வெற்றியதிற் பாதிக்கே உரியவுன்றன்
பதிமுழுதும் விரும்பிற் கொள்க
எற்றி யமன்றனை யுதைத்த வெற்றியிடத்
தாளே ஈட்டினதன் றோபின்
முற்றுமுனக் கேயுரித்தாம் புரமெரித்தாற்கு
இயைபுளதோ மொழிவாய் தாயே. (56)
பொ-ரை: தாயே! நெற்றிக்கண்ணால் காமனை எரித்த செயல் உனக்கும் உன் பாகத்தனாகிய உன் பதிக்கும் பொதுவானது. அதனால், அவ்வெற்றியில் பாதிக்கே உரிய அவன் விரும்பினால் முழுவதுமே கொள்க. காலை எற்றி உதைத்த வெற்றியைத் தேடியது இடது திருவடியே. அது உனக்கே முழுதும் உரியது. அதில் புராரிக்கு என்ன தொடர்பு உள்ளது? சொல்லுக.
நீறு ஆக்கல் - சாம்பல் ஆக்கியது. பதி - கணவன். புரம் எரித்தான் -சிவன்.
ஓருடம் பில் வலப்பாகம் ஆணும் இடப்பாகம் பெண்ணுமாய் சிவனும் சத்தியும் பொருந்தியிருக்கின்றனர். அத்திருவுரு அர்த்தனாரீச்சுவரன் (மங்கைபங்கன்) எனப்படும். அவ்வுருவில் நெற்றிக் கண் ஒன்று நடுவில் இருவருக்கும் பொதுவாக இருப்பதால், அக்கண்ணால் வந்த வெற்றி இருவருக்கும் பொதுவே. ஆயினும் காமதகனன் என்னும் பெயர் சிவனுக்கே உரித்தாகி, மன்மதனை எரித்த வெற்றி சிவனுக்கே ஆய் விட்டது. யமனை உதைத்தது, இடத்தாளேயாதலால், அது சத்திக்கே முழுதும் உரியது. ஆயினும் காலகாலன் என்ற பெயர் சிவனுக்கே வழங்குகிறது. இது என்ன நியாயம் என்றவாறு தன்னால் விளைந்த புகழையும் தன் கணவனுக்கே உரியதாக்குதல் கற்புடைய மாதர் கடன்.
சிவபெருமான் இடது காலால் யமனை உதைத்தான் என்பது,
"மதத்தான் மிக்கான் மற்றிவன் மைந்தன் உயிர்வாங்கப்
பதைத்தான் என்னா உன்னி வெகுண்டான் பதிமூன்றும்
சிதைத்தான் வாமச் சேவடி தன்னாற் சிறிதுந்தி
உதைத்தான்; கூற்றன் விண்முகில் போல்மண்ணுற வீழ்ந்தான்”
(கந்தபுராணம் 11.5.253)
--------------
எங்ஙனமாயினும் ஏற்க என் நெஞ்சினை
மென்மையதென் றாலென்றன் நெஞ்சத்தை
மாதாவுன் மென்பூந் தாட்கே
துன்னுதொடு தோலாகத் தொடுகமற்று
வல்லிதெனில் துன்னா ரூரைப்
புன்னகையால் எரித்த பிரான் பொற்கைமலர்
பற்றுதிரு மணத்தின் போது
கன்மிதிக்கும் விதிக்குபயோ கப்படுத்திக்
கொள்ளுகவங் கயற்கண் ணாளே. (57)
பொ -ரை: தாயே! மெல்லியது என்று கருதினால் என்நெஞ்சத்தை உன். மெல்லிய திருவடிக்குப் பாதுகை ஆக்கிக் தொடுக. வலியதாகக் கருதினால், பகைவரின் முப்புரங்களைக் குறுநகையால் எரித்த பிரான் உன்னைப் பாணிக்கிரகணம் செய்யும் திருமண விழாவில் கல்மிதிக்கும் சடங்குக்குப் பயன் படுத்திக் கொள்க, அங்கயற்கண் அம்மே!
தேவியின் திருவடியின் ஸ்பரிசம் தம் நெஞ்சில் படவேண்டும் என்று விரும்பிய ஆசிரியர் தம் விருப்பத்தை விண்ணப்பிக்கும் சாதுரியவுரை இதிற் காண்க.
ஆண்டுதொறும் மீனாட்சிக்குத் திருக்கல்யாண உற்சவம் திருக்கோயிலில் நடைபெறுகிறது. அப்போது அம்மி மிதித்தல் என்ற சடங்கு நடைபெறும். அச்சடங்கில் மணமகளின் இடது பாதத்தைத் தன்கையாற் பற்றிக் கல் மீது வைப்பது வழக்கம்.
----------------
பதுமரேகையாய்ப் பதிக என் நெஞ்சம்
கொழுமைஅழ கொழுகொளியாற் குலவுமுன
தேகவடியைக் கூடி நன்கு
கழுமிஎன திதயபது மம்பதிந்து
காண்பதனாற் கயற்கண் ணாளே வல்ல
செழுமை மிகு புவனம் இரு நூற்றிருபா
னான்கினிலும் செங்கோல் ஓச்சும்
விழுமியசீர்ச் செல்வத்தை விளக்குமறி
குறிவரையாய் விளங்குந் தாயே. (58)
பொ-ரை: மினுமினுப்பும் அழகும் பெருகின்ற ஒளியும் விளங்கும் உன் அகவடியை என் நெஞ்சமானது கூடி அழுந்திப் பதிந்து காட்சியளிப்பது, மீனாட்சியே, வளம் மிக்க இருநூற்றிருபத்து நான்கு புவனங்களுக்கும் நீ அரசியாக இருந்து செங்கோல் ஓச்சுகின்ற மேலான சிறப்புப் பொருந்திய ராஜ்யலட்சுமிகரத்த விளக்கும் இரேகையாகத் தோன்றும், அன்னையே.
அகவடி - உள்ளங்கால். கழுமி - இறுகப்பதிந்து, அழுந்தப் பதிந்து. இதய பதுமம் -நெஞ்சத் தாமரை.
இதுவும் மேற்கூறிய படி சாதுரிய விண்ணப்பமாகும். இதயம் தாமரை வடிவினது. அது தேவியின் திருவடியிலே அழுந்திப் பதிந்து விட்டதால், அங்குள்ள பதுமரேகை போலக் காணப்படுகின்றது. பாதத்தில் பதுமரேகை பொருந்தியவர்கள் சாம்ராஜ்ய லட்சுமியை உடையவர்களாய் வாழ்வார்கள் என்பது சாமுத்திரிகாலட்சணம். புவனங்கள் இருநூற்றிருபத்துநான்கு எனச் சிவாகமங்கள் கூறுகின்றன. படைப்பு முழுவதும் இவற்றுள் அடங்கும். தம் நெஞ்சு தேவியின் திருவடியில் பதிந்திருப்பதால் தான் அவளுக்குப் பெருஞ்செல்வம் வாய்ந்திருப்பதாகக் கூறி அதனைப் பிரிந்தால் அவளுக்கு விளையக்கூடிய நஷ்டத்தை நினைவுபடுத்தி அச்சுறுத்தித் தம் விருப்பத்தை ஆசிரியர் நிறைவேற்றிக் கொள்ள முயலும் சாதுரியம் சுவைக்கத் தக்கது.
--------------
சிக்கெனப் பிடித்தேன் அம்மே சினவேல்
இதனின்மிகு மென்மையதெவ் வுலகினின்யா
தொன்றுமிலை எனவுன் பாத
பதுமமலர் அருமையினைப் பாராமல்
வலிந்திறுகப் பற்றி னேனே
மதுரையமர் இறைவிபிற விக்கடலின்
மூழ்காமை மனவச் சத்தால்
செதுமதிப்பிள் ளைமைமதியால் செய்தபிழை
பொறுத்தினருள் செய்க தாயே. (59)
பொ-ரை: இதனினும் மிக்க மென்மை உடையதாக, எவ்வுலகிலும் எப்பொருளும் இல்லை என்று உன் திருவடித் தாமரைமலரின் அருமையை நினையாமல் வலிது இறுகப் பிடித்திருக்கின்றேனே! மதுரை மாநகரில் வாழும் பரமேசுவரியே! பிறவிக் கடலில் நான் மூழ்கி விடாமல் இருப்பதற்காக, அச்சத்தால், பிள்ளைமைப் புத்தியால் செய்த இப்பிழையைப் பொறுத்து இனிய அருள் புரிக!
செதுமதி - குருட்டறிவு, பேதமை.
தேவியின் திருவடிகள் மிக மென்மையானவை. அனிச்சப்பூ, வாகைப்பூ, அன்னத்தின் தூவி முதலிய மெல்லிய பொருள்கள் எல்லாம் அவள் திருவடிக்கு நெருஞ்சிப் பழம் போன்றவை. அந்த மென்மையை எண்ணாமல் யான் வலிந்து பற்றினேன். அதற்குக் காரணம் பிறவிக் கடலில் மூழ்கிவிடுவேமோ என்ற பயமே. பிள்ளைமை அறிவால் செய்த இப்பிழையை மன்னித்தருள வேண்டும் என்றவாறு.
--------------
என் வன்சொல்லால் இனையுமோ நின்பாதம்
ஊடல் உணர்த் தப்பரம சிவன்பணியும் நாம்
போதில்உடு பதியி ரேகைக்
கோடுறுத்தும் என்றஞ்சி மெதுவாகத்
தொடுவதுபூக் கொண்டு தூவின்
வாடுறுங்கொல் எனவானோர் அஞ்சுவது
உன்பதம் என்நா வன்ப தங்கள்
கூடுவதால் வருந்தாதோ வருந்தாது
மலையரசன் குலப்பூங் கொம்பே. (60)
பொ-ரை: ஊடலை நீக்குவதற்காக பரமசிவன் பணிகின்றபோது, தன் தலையில் இருக்கும் பிள்ளைமதியின் நுனி முள்ளெனக் குத்திவிடுமோ என அஞ்சி மெள்ளத் தொடப்படுவதும் அஞ்சலித்துத்தூவும் மலர்கள் படுவதனால் வாடுமோ என வானோரால் அஞ்சப்படுவதுவும் ஆகிய நின் திருப்பாதம் அடியேன் உடைய நாவில் பாடும் துதியில் உள்ள வன்பதங்கள் (கடுஞ்சொற்கள்) படுவதால் வாடாதோ? பொன்மலையரசன் குலத்துத் தோன்றிய பூங்கொம்பே! வாடாது.
ஊடல் - காதலன் காதலி - இருவர்க்குள் அன்பினால் நிகழும் சிறு கலகம். உடுபதி -சந்திரன். கோடு - நுனி, பதம் - திருவடி பதங்கள் - சொற்கள் அருந்தாது - தங்கம் இது திருவடியின் மென்மையைக் கூறுவது.
--------------
எவ்விழியால் உன் எழிற்பதம் காண்பேன்
செய்யாத அழகினவாய்த் திப்பியமாய்
அறிவிக்கும் சேய ஆகிப்
பொய்யாமல் மங்களமாய் யாவைக்கும்
மேலாம்உன் பொற்றாட் பூவை
மையார்ந்த மனத்தடியேன் பால் எழுந்த
கருணையினால் வந்து காட்டின்
ஐயோநான் எவ்விழியால் கண்டு மனம்
குளிர்வேன்அங் கயற்கண் அம்மே. (61)
பொ-ரை: இயற்கை அழகுடையனவாய்த் தெய்வமணம் கமழ்வனவாய், அறிவுக்கும் எட்டாத தூரத்தில் உள்ளனவாய், அழியாத மங்களமாய் எல்லாப் பொருள்களினும் சிறந்தனவாகிய நின் திருவடித் தாமரைகளை, அங்கயற்கண் அம்மையே! நீ எழுந்தருளி வந்து எனக்குக் காட்டினால், மயக்கம் நிறைந்த மனத்தவன் ஆகிய அடியேன், ஐயோ, எந்தக் கண்ணினால், கண்டு உள்ளம் குளிர்வேன்.
செய்யாத அழகு - கை புனைந்து இயற்றாக் கவின்பெறு வனப்பு. சேய - சேய்மையில் உள்ளவை. பூ - தாமரை
இப்பாட்டுக்குரிய சுலோகத்தைப் பாடும்போது தீக்ஷிதர் புறவிழியை இழந்த நிலையில் இருந்தார் என்றும் பின்னர் தேவியின் அருளால் விழியைப் பெற்றார் என்றும் கூறுப.
-------------
நீ ஆனால்தான் நின்னைக் காண வல்லேம்
திப்பியநேத் திரங்களும் அத் தேவர்கள் காண்
பவையே செவ்விதிற்காண் கிற்ப
செவ்விதின்மற் றுன்னாலே மட்டுமுணர்
வுறுமுனது சிறந்த கோலம்
எவ்விழியாற் காண்குறுவோம் மீனாட்சி
எளியேமும் நீயே ஆகும்
அவ்விழியால் அல்லாமல் நினைக்கண்டு
களிக்கும்வகை அறிந்தி லோமே. (62)
பொ - ரை: திவ்விய நேத்திரங்களும் தேவர்கள் காண்பதற்கு உரியவற்றையே காண வல்லுந ஆகும். உள்ளபடி, உன்னாலே மட்டும் உணர்வுறக் கூடிய உனது சிறந்த உருவத்தை, எந்தக் கண்ணால் காண வல்லேம்? மீனாட்சியே! எளியேமும் நீயே ஆகும் அந்த வழியால் (நினது சாரூபத்தால்) அல்லாமல் உனைக் கண்டு களிக்கும் விதம் வேறு அறியாமல் இருக்கின்றோம்.
திவ்விய நேத்திரம் - தெய்வத்தன்மை உள்ள கண்கள். காண்கிற்ப - காண வல்லமையுடையன. கோலம் - வடிவம், அழகு. காண்குறுவேம் - காணத் தக்கவர் ஆவோம். நீயே ஆதல் - நினது உருவம் உடையவர் ஆதல்.
திவ்விய நேத்திரத்தால் தேவர்கள் காணக்கூடிய பொருளைத்தான் காணலாம். அம்பிகையைத் தேவர்களின் கண்ணால் பார்த்தற்கு இயலாது. அவளை அவள்தான் உள்ளவாறு காண முடியும். ஆதலால், அவளது கண் நமக்கு இருந்தால் தான் காணலாம். அவளது கண் நமக்கு வேண்டுமானால் அவளது சாரூபத்தைப் பெறவேண்டும் என்பது கருத்து.
தேவியின் வடிவினைத் தேவர்களால் காண முடியாது என்பது,
"ஆதி சுந்தரி வடிவினை அயன் முதற் புலவோர்
ஏது, கண்டளவு இடுவது தமை இகழ் இமையோர்
மாதர் இங்கு இவள் மகிழ்நரொடு உறைகுவம் எனினே
பேதை கொங்கைகள் பெறுகுவம் எனமறு குவரால்”
என்ற சௌந்தரியலகரியிற் காண்க.
---------------
ஞானியரில் சிலர் உன் நகமாய்ப் பொருந்தினர்
எல்லையிலாப் பெருங்காலச் சுழற்சியிலுன்
திருவடியை எய்தி னோர்கள்
அல்லை நிகர் ஆணவமா சற்றவர்கள்
சுகர்முதலாம் அறிவர் தாமே
தொல்லைஇலாப் பேரின்பம் தோய்பேறு
பெற்றவராம் சுத்தான் மாக்கள்
மல்லொளிசேர் நின்பதத்தில் நகவடிவாய்
வாழ்வரென மதிக்கின் றோமே. (63)
பொ-ரை: கணக்கற்ற பெருங்காலச் சுழற்சியிலே, உனது திருவடியை வந்து அடைந்தவர்களும் இருள் போன்ற ஆணவ அழுக்கு நீங்கியவர்களும் ஆன சுகர் முதலிய ஞானிகளே துன்பம் கலவாத பேரின்பம் தோயும் பேறு பெற்றவர்களாகி, சுத்தான்மாக்களாய்ப் பேரொளி வீசும் நின் திருவடியில் நக வடிவம் பெற்று வாழ்கின்றார்கள் என நினைக்கின்றோம்.
அல் - இருள். மாசு - மலம். அறிவர் - ஞானியர். தொல்லை துன்பம். மல் ஒளி - வளமான ஒளி தேவியின் திருவடி நகங்களை முத்தி பெற்ற சுத்தான்மாக்கள் எனத் தற்குறிப்பு ஏற்றத்தால் புகழ்கின்றார். ஞானத்தின் பயன் மலமாசு நீங்குதல், முத்த ஆன்மாக்களுக்கு வாழுமிடம் தேவியின் திருவடி என்பது குறிப்பு
-------------------
பிறையே நகமாய்ப் பிறங்கும் தாயே
சிறுகுழவிப் பருவமுதல் அபிமானத்
தொடுவளர்த்த சிறப்பை நோக்கி
உறும்உறுதி மறவாத மிருகாங்கன்
உற்றகடன் ஒழிப்பான் எண்ணிக்
குறியபல பிளவாகத் தனைத்தானே
வகிர்ந்துகிரென் குறியும் கூட்டி
நறுமலர்உன் சேவடிக்கண் நல்கினன்என்
றெண்ணுகின்றேன் நகத்தின் செல்வி. (64)
பொ-ரை: மலையின் மகளே! சிறுபிள்ளைப் பருவத்திலிருந்து பற்று வைத்து, அவனை நீ வளர்த்த அன்பினை எண்ணிப் பார்த்து, நன்றி மறவாத சந்திரன், உனக்குத் தான் பட்ட செய்ந்நன்றிக் கடனைத் தீர்க்க விரும்பித் தன்னைத் தானே பலபிளவுகளாகப் பிளந்து, அவற்றுக்கு நகம் என்ற பெயரையும் வைத்து, மணமலர் போலும் உன் சிவந்த திருவடிக்கண் சமர்ப்பித்தான் என நினைக்கின்றேன்.
குழவி - குழந்தை. சிறப்பு - அன்பு. உறுதி - நன்றி. மிருகாங்கன் - சந்திரன். உகிர் -நகம். குறி - பெயர். நகம் - மலை.
தேவியின் கால் நகங்கள் சந்திரன் போல் உள்ளன என்பதைத் தற்குறிப்பேற்றத்தால் கூறகின்றனர். தேவியின் முடிமேல் முதல்நாட்பிறை தங்கியுள்ளது. அதனால் தான், அது கலை வளர்ந்து சந்திரனாகிறது. அதனால் தேவி சந்திரனை வளர்த்தவள் எனப்பட்டாள்.
-------------
நாத்திகப் பாறையை நகர்த்துவ தெப்படி?
நாத்திகமாம் பெரும்பாறை வழியடைத்துக்
கிடப்பதனால் நன்மைக் கான
ஆத்திகமாம் சுருதிசொலும் பொருளொன்றும்
அகத்தெனக்குள் அணுக வில்லை
மாத்தடையாம் இப்பாறை தனைப்புரட்ட
மாதேவி மலர்த்தாள் தோய்ந்த
தீர்த்தம் எனைத் தளவெளியேன் உட்பாய
வேண்டுமோ தெரிகி லேனே. (65)
பொ-ரை: நாத்திகம் என்கின்ற பெரிய - பாறையானது வழியை அடைத்துக்கொண்டு கிடப்பதனால், நன்மை பெறுவதற்கு வேண்டிய ஆத்திகம் கூறும் சுருதிப் பொருள் என் மனத்தகத்து நுழையவே இல்லை. பெரிய தடையாக உள்ள இந்தப் பாறைதனை வழிவிட்டுப் புரட்டுவதற்கு, மகாதேவியின் திருவடி கழுவிய தீர்த்தத்தை எத்தனை அளவு நான் பருக வேண்டுமோ தெரியவில்லை.
நாத்திகம் - நல்லதன் நலனும் தீய தன் தீதும் சுவர்க்க நரகங்களும் கடவுளும் இல்லையென்று கூறி வேத நெறியை நிந்திக்கும் கொள்கை. வேதம் கூறுவது ஆத்திக நெறி. நாத்திக நெறியால் தீமையும் ஆத்திக நெறியால் நன்மையும் விளையும். பரதேவதையினை வழிபட்ட புண்ணியம் உடையவர்க்கே நாத்திக புத்தி நீங்கும். வேதநெறிப் பொருள் மனத்துள் புகும்.
-------------
அந்தகன் வரும்போது அஞ்சல் என்றருளே
ஆராத பெருங்காதல் அம்பாநின்
சேயேனை அணுகிச் சூழ்ந்து
பேரார வாரம்எம தூதர்புரி
வேளையினில் பிள்ளாய் அஞ்சேல்
வாராநின் றேனிஃதோ என்றுசொலு
மொழியும் உன்றன் மலர்த்தாள் சேர்மஞ்
சீரார வாரமுமென் செவிகுளிரக்
கேட்பேனோ சிவனார் தேவீ . (66)
பொ-ரை: அமையாத பெருவிருப்பம் வைத்த தாயே! நின் குழந்தையாகிய என்னை நெருங்கிச் சூழ்ந்து கொண்டு பெரிய ஆரவாரத்தை யமதூதர் செய்கின்ற வேளையில், 'மகனே, அஞ்சாதே, இதோ வருகின்றேன் என்று சொல்லும் உன் மொழியையும், உன் திருவடி மலரில் அணிந்த சிலம்பின் ஒலியையும் என் செவிகுளிரக் கேட்பேனோ, சிவனார் தேவியே!
காதல் - பெருவிருப்பம், மஞ்சீரம் – சிலம்பு.
பரதேவதையாகிய தாய் தன் சேயராகிய அடியார்கள் பால் பெருவிருப்பு வைத்திருக்கின்றவள். தன் சேய்க்கு ஆபத்து வருங்கால், அவன் அழையாமலே ஓடிச் சென்று காப்பது, அவள் இயல்பு. யமதூதர் வந்து சூழ்ந்தபோது வந்து தம்மைக் காக்க வேண்டும் என்று இஷ்ட தெய்வத்தை வேண்டிக் கொள்வது பக்தர்கள் மரபு.
"அங்கத்தை மண்ணுக் காக்கி ஆர்வத்தை உள்ளே வைத்துப்
பங்கத்தைப் போக மாற்றி பாவித்தேன் பரமா நின்னைச்
சங்கொத்த மேனிச் செல்வா சாதல்நாள் நாயேனுன்னை
எங்குற்றாய் என்ற போதால் இங்குற்றேன் என்கண்டாயே”.
(அப்பர்)
"மங்கை அழுது விழவே யமபடர்கள் நின்று சருவ
மலமே ஒழுக உயிர் மங்கு பொழுது
கடிதே மயிலின்மிசை - வருவாயே" (திருப்புகழ்)
"யமதூதர் சுடுவெட்டு பிளவென் றதட்டி
எனைவெஞ் சினத்தோ டொறுக்கென்று வந்தால்
நமதன்ப அஞ்சேல் எனச்சத்தி யேந்தி
நவிரத்தின் மிசைசெந்தி லாய்வந்து காவே"
(திருச்செந்தூர் சுப்பிரமணிய புஜங்கம்)
------------
மாதா எனையுன் மடிமேல் வைக்க
மலரவன்மால் அரன் முதலாம் மக்களெலாம்
உன்மடிமேல் வளரும் பேறு
பலர்முறையே பெற்றார்கள் அப்பேற்றை
என்றெனக்குப் பாலிப் பாயோ
நலமறியாக் கடைக்குழந்தை மேலேதான்
மிகவாஞ்சை நற்றாய்க் கென்றே
உலகமெலாம் இயம்புகின்றார் புவனமெலாம்
உயிர்த்தவளே ஒளிர்மீ னாட்சி. (67)
பொ-ரை: பிரமா விட்டுணு உருத்திரன் முதலாகிய உன் மக்கள் பலரும் எல்லாரும் முறையே உன் மடிமேல் வளரும் பாக்கியத்தைப் பெற்றார்கள். அந்தப் பாக்கியத்தை எனக்கும் அருளுவாயோ? நன்மை அறியாத (மந்த புத்தியை உடைய) கடைசிக் குழந்தை மேலேதான் ஈன்ற தாய்க்கு வாஞ்சை அதிகமாக இருக்கும் என்று உலகத்தவர் எல்லாரும் சொல்லுகின்றனர். ஜகன்மாதாவே! ஒளிரும் - மீனாட்சியே!
மும்மூர்த்திகளும் பரமேச்வரியின் புதல்வர்களே. - "மூவருக்கும் ஒருதாவரப் பொருள் என்மூலமே தழையும் - ஞாலமே" என்றார், கவிராச பண்டிதர். அம்பாளுக்குத் 'திரியம்பகா' என்று ஒரு பெயர் உண்டு. அதன் பொருள் மூன்று கண் உடையவள் என்பதாகும். அதற்கே, மும்மூர்த்திகளின் தாய் என்றும் அறிஞர் பொருள் கூறுவர். "தகப்பனுக்குத் தலைமகன், தாய்க்குக் கைக்குழந்தை" என உலகத்தில் வழங்குவதுண்டு.
காசியிலே உயிர் விடுவாரை, அம்பாள், தன் மடிமேல் கிடத்தி வைத்திருக்க, விச்வேச்வரன் பிரணவ உபதேசம் செய்வான். இது இதன் அடுத்த செய்யுளிலும் காணலாம். அங்ஙனம் அம்பாளின் மடியில் கிடந்த பேறு பெற்றோரும் மும்மூர்த்திகளினும் பலர் என்றவாறு. இதனால் அம்பாளின் பரத்துவமும் அவள் ஆதியந்தம் அற்றவள் என்பதைக் கூறியதோடு அவளது மடியின் சிறப்பும் கூறினார்.
--------------
உன்மடிமேல் தலைவைத்து உயிர் விடுவேனோ
தப்பலிலாத் தயையுடைய தாயேயுன்
மடிமேலென் தலையை வைத்தே
எய்ப்பறமெல் உத்தரியத் தால்இளங்கால்
வரவீச இறைவன் மேலாம்
மெய்ப்பொருள்மந் திரம்செவியில் கருணையினால்
விளம்பஉயிர் விடும்நற் பேற்றை
இப்பிறவி தன்னில்மணி கருணிகையிற்
பெறுவேனோ இமையச் செல்வி. (68)
பொ-ரை: தவறாத கருணையை உடைய தாயே! உன் மடிமேல் என் தலையை எடுத்து நீ வைத்துக் கொண்டு, என் களைப்பு நீங்கும்படி உன் முன்றானையால் இளங்காற்று வரும்படி நீ வீச, விச்வேச்வரன் பிரணவ மந்திரத்தை என் செவியில் உபதேசிக்க உயிர் விடும் நல்ல பேற்றினை மணிகருணிகைத் தலத்தில் பெறுவேனோ, இமயமலையின் மகளே!
எய்ப்பு - களைப்பு. உத்தரியம் - மேலாடை. இளங்கால் இளங்கன்று. மணிகர்ணிகை என்பது காசியில் கங்கையின் ஒருதுறை.
காசியில் உயிர்விட வேண்டும் என்பது நீலகண்ட தீக்ஷிதரின் பெருவிருப்பம். 67 ஆம் பாட்டின் குறிப்புப் பார்க்க.
-------------
அகிலமும் தாங்குவது அன்னைதன் மடியே.
மணிக்காஞ்சி வடம் ஆர்ந்து மாதங்க
நூலாடை வனைந்துள் ளாடை
அணிக்காந்தி புறமெறிப்ப அமைந்ததாய்
அரன்மஞ்சத் தணிய தாகிக்
கணித்தோத அரியபல புவனமெல்லாம்
தாங்கியுரு கவின தாமுன்
பணித்தாம படநிகரும் நிதம்பமம்ப
என் உளத்தே பாவிப் பேனே. (69)
பொ-ரை: மணிமேகலையின் வடங்களால் கட்டப்பட்டு, பொன்னூல் ஆடை சூழ்ந்து உள்ளாடையின் ஒளி வெளியே வீசுவதாய், சிவபெருமானது மஞ்சத்துக்கு அழகு தருவதாகி, எண்ணிலாத அரிய பல உலகங்கள் எல்லாவற்றுக்கும் ஆதாரமாய் உள்ளதும், பாம்பின் ஒளிபொருந்திய படம் போல்வதும் ஆகிய உன் திருவரைப் பிரதேசத்தைத் தாயே என் உள்ளத்தே தியானிக்கின்றேன்.
காஞ்சி - மேகலை, ஒட்டியாணம், வடம் - கயிறு. மா தங்கம் - சிறந்த பொன். மஞ்சம் - கட்டில். கணித்தல் - எண்ணுதல், கணக்கிடுதல். கவினது - அழகு தருவது. அம்பா - தாய், பாவித்தல் - தியானித்தல்.
உள்ளாடை, அதன்மேல் சேலை, சேலையின் மேல் காஞ்சி அணிவது பண்டைக் காலத்து மகளிர் மரபு.
-----------
புவனம் காக்கும் பொன்மதில் பட்டிகை
ஈரேழு புவனமெல்லாம் இதனகத்தே
இருந்தனமற் றிதனை ஓம்பல்
நேரேஎண் ணியதால் பொன் மதில்வளைய
நிருமித்தாய் எனஎன் நெஞ்சம்
ஆராய்ந்து துணிகின்ற தங்கயற்கண்
அம்மேநின் அரைமேல் ஆர்த்த
ஏரேயும் மணிபதித்த பொன்னாலாம்
பட்டிகைசூழ்ந் திலங்கள் தானே. (70)
பொ-ரை: பதினான்கு புவனங்களும் இந்த இடுப்பின் அகத்தே இருக்கின்றன. ஆதலால் இந்த இடுப்பைப் பாதுகாத்தல் வேண்டும் என்று முறைப்படி நினைத்ததால் இடுப்பிற்கு பொன்மதில் எடுப்பினை, என் மனது ஆராய்ந்து துணிகின்றது, அங்கயற்கண் அம்மையே, நின் இடுப்பின் மேல் பூண்டுள்ளதும் அழகிய மணிகள் பதித்துப் பொன்னாற் செய்யப்பட்டதும் ஆன பட்டிகை வளைந்து விளங்குவது.
இது என்று சுட்டியது, திருவரையை. ஓம்பல் -தீங்கு வாராமல் காத்தல், நிருமித்தல் -ஏற்படுத்துதல், அமைத்தல். ஏர்-அழகு.
அம்மையின் திருவரை எல்லாப் புவனங்களையும் தன் அகத்தே வைத்துத் தாங்குவது. அப்புவனங்களுக்கு ஆபத்து வாராமல் மதில் இட வேண்டியது கடமை. ஆதலால், உதர பட்டிகை என்ற பெயரால் திருவரையைச் சுற்றி அம்மை பொன்மதிலை நிருமித்திருக்கின்றாள் போலும் என்று தற்குறிப்பேற்றம் செய்து இச்செய்யுள் கூறுகின்றது.
-----------
முத்தர் இனமே முத்துமாலை
அலைபிறவிக் கடல்கடந்த முத்தவினம்
தாமும்பால் அருந்தும் ஆசை
தலையெடுத்துன் தனதடத்தை அகலாமல்
புரண்டலைப, தாயே வெம்மை
நிலையெடுத்த பிறவியெனும் பெருஞ்சுரத்தின்
வாயுலர்ந்தேம் நிமல ஞான
முலையடுத்த தீம்பாலை விரும்புவது
வியப்பாமோ முதல்வன் தேவி. (71)
பொ-ரை: அலைகின்ற பிறவியாகிய கடலினைக் கடந்து கரையேறிய முத்த இனமும், உன் பாலை அருந்த வேண்டும் என்ற ஆசை தூண்டுவதால் உன் திருமுலைத் தடத்தை விட்டு நீங்காமல் புரண்டு அலைகின்றன. தாயே! வெப்பநிலைமை மிக்குள்ள பிறப்பு என்னும் சுரத்தினால் வாய் உலர்ந்துள்ள அடியேங்கள், மலம் நீங்கக் காரணமான ஞான மயமான உன் திருமுலைப் பாலினை விரும்புவது வியப்பாகுமோ, பரமசிவ பத்தினியே!
'அலைபிறவிக் கடல் கடந்த முத்தவினம்' என்பது இரட்டுற மொழிதல். கடல்கள் தந்த முத்தவினம் - கடல்கள் ஈன்ற முத்துக்களின் கூட்டம். கடல் கடந்த முத்த இனம் - பிறவியாகிய கடலினைத் தாண்டி முத்தியங்கரை சேர்ந்த முத்தர்களின் கூட்டம். ஆசை தலை எடுத்தல் - ஆசை கிளர்தல், தன தடம் - திருமுலையகிய தடாகம், திருமுலைப் பரப்பு. கடலினைக் கடந்து கரையேறிய முத்தும் தடாகத்தில் புரளுகின்றன என்று பிறிதொரு பொருளும் தொனிக்கின்றது. சுரம் - காய்ச்சல், பாலை நிலம். சுரநோயால் வருந்துபவரும் பாலையில் நீர் வேட்கை கொண்டவரும் பாலை விரும்புதல் வியப்பன்று.
முத்திக்குச் சாதனமாகிய திருமுலைப் பாலை. அதன் அருமை கருதி, முத்தி சித்தித்தவர்களும் விரும்புவர் என்றால், முத்தி விரும்புவோரகிய என் போன்றவர்கள் பிறவி வெம்மை நீங்குவதன் பொருட்டு விரும்புதல் வியப்பாமோ. தேவியின் திருமுலைப் பால் ஞான மயமானது என்பதை;
"தருணமங்கலை உனதுசிந்தை தழைத்த பாலமுதூறினால்
அருணகொங்கையில் அதுபெருங்கவி அலைநெடுங் கடலாகுமே
வருண நன்குறு கவுணியன் சிறுமதலையம் புயல் பருகியே
பொருணயம்பெறு கவிதை என்றொரு புனிதமாரி பொழிந்ததே"
என்ற சௌந்தரியலகரிப் பாடலால் அறிக.
"உள்ளத் துறுபிணி யேற்கு மருந்துக்கென் றுன்னைவந்து
மெள்ளத் தொழவும் திருமுலைப் பால்மெல் விரனுதியால்
தெள்ளித் துளியள வாயினும் தொட்டுத் தெறித்திலையுன்
பிள்ளைக்குங் கிள்ளைக்கும் பால்கொடுத் தாலென் பெரியம்மையே"
(பெரியநாயகியம்மை கலித்துறை)
-------------
முலைப்பாற் றுளியே முத்தநிரையாம்
கெட்டுப்போய் நெடுநாட்பின் மீண்டுவந்து
கிடைத்தான் இம்மகவென் றென்னை
மட்டிலாக் கருணைத்தாய் மீனாட்சி
கண்டுமன மகிழ்ந்தன் பாலே
சொட்டுபால் துளிபெருகி வழிந்தோடும்
தொடர்தானோ துங்கக் கொங்கை
இட்டநீள் வெண்முத்த மாலையெனக்
கண்குளிர இலங்கிற் றம்மா. (72)
பொ-ரை: இவனை இழந்தே விட்டோம் என்னுமாறு நெடுநாள் வரை எண்ணியிருந்த போது, யான் மீண்டு வந்ததால், ‘கிடைத்தான் இக்குழந்தை' என்று என்னைக் கண்டு, அளவு இல்லாத கருணைத் தாயாகிய மீனாட்சி மகிழ்ந்து அன்பாலே சுரந்து சொட்டும் பாலின் துளிகள் பெருகி வழிந்தோடும் தொடர்ச்சிதானோ? என்னும்படி அவளது உயர்ந்த கொங்கைகளின் மீது அணியப் பெற்ற முத்துமாலை, கண்டார்கள் குளிரும்படி விளங்குகின்றது, அம்ம!
கெட்டுப் போதல் - காணாமற் போதல், நெறி தவறிப் போதல். மீண்டு வருதல் - திரும்பி வருதல், நன்னெறிச் சேரல். மட்டு - அளவு
நெடுநாட் பிரிந்திருந்த மகவைக் கண்டால் தாய் மிக மகிழ்ந்து பால் சுரப்பாள். கர்ணனைத் தன் மகவென அறிந்த குந்திக்குப் பால் சுரந்த வரலாறு நினைக. மீனாட்சியம்மை அணிந்திருந்த முத்து மாலையை முலைப்பால் துளியாகக் கற்பித்துப் பால் துளிப்பதற்குத் தக்க ஏதுவுங் கூறினார். இது தற்குறிப்பேற்ற அணி.
---------------
கைக்கரும்பின் அடிக்கணு மனம் ஆகுக.
அரும்புபெரும் புவனமுறும் ஆருயிர்தம்
மனமயமாய் அமைந்த துகைக்
கரும்புருவ நெடுஞ்சிலையென் றுரைப்பது
கட்டுரையேல் கயற்கண் அம்மே
விரும்புவதில் வடியேன் அவ் வில்லினடி
என்மனமாய் விளங்க வேண்டும்
பொரும் புரிநாண் ஏற்றுகின்ற பொழுதினிலுன்
அடிக்கொழுந்து பொருந்த லாமே. (73)
பொ-ரை: தோன்றிய இப்பெரிய உலகத்தில் வாழும் அரிய உயிர்களின் மனோமயமாய் அமைந்ததாகும், உன் கையில் உள்ள கரும்பு வடிவமான வில் என்று சான்றோர்கள் கூறுகின்றனர். அது மெய்யானால் மீனாட்சித் தாயே! அடியேன் விரும்புவது ஒன்று உண்டு. அந்த வில்லின் அடிப்பாகமாக என் மனம் அமைய வேண்டும் ஏனெனில் போர்க்கு உரிய நாண் ஏற்றுகின்ற போது உன் சேவடிக் கொழுந்து அதன்மேற் பொருந்தும் அன்றே?
கட்டுரை - உண்மையான சொல்.
தேவியின் கையில் உள்ள அக்கரும்பு வில் சர்வ ஜீவர்களின் மனங்களின் மயமானது. அதன் அடிப்பாகமாக ஒருவரது மனம் அமைந்தால், வில்லில் நாண் ஏற்றுவதற்காக அடிப்பாகத்தைக் காலால் மிதிக்கின்றபோது காலின் பரிசம் அந்த மனத்துக்குக் கிடைக்கும் என்பது. அந்தப் பேறு வேண்டும் ஆசிரியர், தமக்கு உயர்ந்த இடம் வேண்டாம், தாழ்ந்த இடமே போதும் என்று பணிவுடைமை தோன்றக் கூறிய சாதுரியம் போற்றத் தக்கது. பந்தியில் இருந்து விருந்து உண்பவன், தனக்குத் தயிர் கடைசியில் வார்த்தால் போதும் என்பது போல்வது.
----------
சினப்பினும் கொடிய தெண்டம் புரிகிலை
வெறுப்பனவே மிகப்பலவும் விளைத்திடுவோர்
தம்மீது வெகுண்டன் னோரை
ஒறுப்பனெனச் சினந்து எழுந்திம் மலர்க்கணையால்
எய்வனென ஓச்சா நின்றாய்
பொறுப்பரிய நின் சினத்தால் புதல்வருக்குத்
தாயே நீ புரியித் தண்டம்
ஒறுப்புவகை தமில் மிகவும் கொடிதென்றால்
நின்கருணை உரைக்கற் பாற்றோ. (74)
பொ-ரை: வெறுக்கும்படியான குற்றங்கள் மிகப் பலவற்றைச் செய்வோர் மேல் சினங் கொண்டு அவர்களைத் தண்டிப்பேன் எனச் சினந்தெழுந்து, இந்த மலர்க்கணையால் உங்களை எய்வேன் என்று சொல்லி ஓச்சிக் கொண்டு நின்றனை! பொறுப்பதற்கு முடியாத நின் சினத்தினால் தாயே! நீ செய்கின்ற இந்தத் தண்டனையே நின் தண்டனை வகைகளில் மிகவும் கொடியது என்றால் உனது கருணை எம்மால் சொல்லுந் தரமோ?
வெகுண்டு - கோபித்து. ஒறுப்பன் - தண்டிப்பன். ஓச்சுதல் - ஓங்குதல். ஒறுப்பு வகை - தண்டனை விதங்கள்.
தேவியின் கையில் உள்ள மலர்க்கணை வருணனையின் மூலமாக அவளது கருணை மிகுதியாகக் கூறியது. கடுமையான தண்டனை பெறுதற்கு உரியார் மேலும், மலர்க்கணையைக் காட்டி ஓச்சி அச்சுறுத்லையே செய்வாய் என்றால் தேவியின் கருணை இருந்தவாறு என்னே !
"எச்சில் மயங் கிட உனக்கீது இட்டாரைக் காட்டு என்று
கைசிறிய தொருமாறு கொண்டு ஓச்சினார் சிவபாத இருதயர்"
(திருஞானசம்பந்தர் புராணம்)
திண்ணனார், "பெருபுலிப் பார்வைப் பேழ்வாய், முழையெனப் பொற்கை நீட்டப் பரிவுடைத் தாதைகண்டு பைந்தழை கைக்கொண்டோச்ச" (கண்ணப்ப நாயனார். புராணம்) என்ற கருணைச் செய்திகளை இங்கு நினைவில் கொள்க.
"தஞ்சம் பிறிதில்லை ஈதல்வதென்றுன் தவநெறிக்கே
நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன் ஒற்றை நீள் சிலையும்
அஞ்சம்பும் இக்கு அலராக நின்றாய் அறியாரெனினும்
பஞ்சஞ்சு மெல்லடியர் அடியார் பெற்ற பாலரையே
(அபிராமி அந்தாதி 59).
-------------
இம்மை வேண்டின் அம்மையை நினைக
மங்கலையங் கயற்கண்ணி ஐம்புலவின்
பங்கள்நுகர் மனத்தால் நின்கை
அங்குசபா சங்கள் தமைச் சிந்தனை செய்
துலகினைத்தம் பனஞ்செய் கிற்பார்
தங்கருத்தின் படிவசியம் செய்யவல்லார்
சாபமொடு சரஞ்சிந் திப்பார்
பொங்கலைநீள் கடலுலகம் புரந்தளிக்கும்
பெருஞ்செல்வம் பொருந்து வாரே. (75)
பொ-ரை: தன்பனம்-அசைவற நிறுத்தல்; சாபம் - வில்: சரம் அம்பு அம்மை கையில் கரும்பு வில்லையும் மலரம்புகளையும் ஏந்தியுள்ளாள் மீனாட்சியம்மையைக் கையில் பாசாங்குசங்களைத் தரித்தவளாகவும் கருப்பு வில்லும் மலரம்புகளையும் ஏந்தியவளாகவும் தியானிப்பவர்கள் உலகினைத் தம் வயப்படுத்தும் வல்லமையும் காத்தளிக்கும் பெருஞ்செல்வமும் வந்தடையப் பெறுவர்.
-----------
திருக்கைமலர் தியானிப்பதன் பயன்
திருந்தியமெய் யுணர்ந்தசில திருவாளர்
கடம்பவனச் செல்வி நின்கை
பொருந்திய பாசாங்குசங்கள் தமைநினைந்து
நசைவெறுப்பப் போக்கி வாழ்வார்
கரும்புருவச் சிலைமலர்மென் கணையுனசெங்
கரத்தனஉட் கருது கின்ற
அருந்தவத்தோர் தம்முளத்தை விடயாந்த
கூபம் விழா தகற்று வாரே. (76)
பொ-ரை: செம்மையான ஞானச் செல்வர் சிலர், கடம்பவனச் செல்வியே! நின் திருக்கைகளில் பொருந்திய பாசத்தையும், அங்குசத்தையும் தியானித்து விருப்பு வெறுப்பு அற்றவர்களாகி வாழ்வர். கரும்பு வடிவமான வில்லையும் மலர் அம்புகளையும் தியானிக்க அருந்தவச் செல்வர்கள், தம் மனத்தை, ஐம்புல இன்பதுன்பங்களாகிய இருட் கிணற்றில் வீழாமல் நீங்கிக் காப்பாற்றுவார்கள்.
திருந்திய மெய் - திரு நின்ற செம்மை. நசை - விருப்பு. கரும்பு உருவச் சிலை - கரும்பு வடிவமான வில். விடய அந்த கூபம் - ஐம்புலன்களாகிய இருண்ட கிணறு.
தேவியின் வலக்கையில் அங்குசமும் இடக்கையில் பாசமுமிருக்கின்றன. அவற்றைத் தியானித்தால், பிறவிக்குக் காரணமாகிய விருப்பு வெறுப்புக்கள் நீங்கும்.
"கண்ணில் ஆணவவெங் கரிபிணித்து அடக்கிக்
கரிசினேற்கு இருகையும் ஆக்கும் அண்ணலைத்
தணிகைவளர் ஆபற்சகாயனை"
எனத் தணிகைப் புராணத்தில் வரும் பாட்டு விநாயகர் திருக்கரத்துள்ள பாசாங்குசங்களுக்குப் பயன் கூறியது காண்க.
தேவியின் இடது கையில் உள்ள கரும்பு வில்லையும் மலர்க்கணைகளையும் தியானித்தால் விஷயங்கள் (சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்கின்ற ஐம்புலன்கள்) ஆகிய பாழ்ங்கிணற்றில் தம் மனம் வீழாமல் காப்பாற்ற வல்லவர் ஆவர்.
உலகம் மிக விசித்திரமானது. ஐம்பொறிகளுக்கும் இன்பம் தரும் பொருள்கள் நிறைந்தது. அவற்றைக் கண்டு மகிழ்வதோடு அமையாது உலகத்தைப் படைத்த தெய்வத்தைக் காண முயல்வது அறிஞர் கடமை. You must be seeking God. But almost everyone is satisfied Simply by: seeing garden. Only one or two look for its owner. People enjoy the beauty of the world; they do not seek its owner. (Sri Ramakrishna)
---------------
சந்திர முகத்தே தங்கும் என்மனனே
இந்தவுல கத்துயிர்கள் பந்தவுடல்
விட்டுவெளி ஏறுங் காலை
முந்தமனம் சந்திரனை முன்னுகின்ற
தெனமறைகள் மொழிவ மாதோ
செந்தமிழ்மா நகரிறைவீ என்மனமிப்
போதேநின் முகமாம் சீத
சந்திரனைச் சென்றுதிட மாயடைந்து
மீளாமே தங்கிற் றாலோ. (77)
பொ-ரை: இந்த உலகத்துப் பிறந்த உயிர்கள் தம்மைப் பிணித்திருந்த உடம்பினை விட்டு நீங்கினால் முதலில் மனம் சந்திரனை அடைகிறது. பின் வேறு இடங்களை அடைகிறது என வேதங்கள் கூறுகின்றன. மதுரை மாநகரத்தின் அரசியே! என் மனமோ, இவ்வுடலுடன் கூடி இருக்கும்போது உன் திருமுகம் ஆகிய குளிர்ந்த சந்திரனைச் சென்று அடைந்து, அதை விட்டு நீங்காமல் உறுதியாகத் தங்கிற்று.
பந்தம் - கட்டு, தளை. முன்னுதல் – அடைதல்.
உடலைவிட்டு நீங்கும் உயிர்களில் புண்ணியம் மிகச் செய்த உயிர்கள் அர்ச்சாதி மார்க்கத்திலும் அஃதிலாத உயிர்கள் தூமாதி மார்க்கத்திலும் செல்லும் எனவும் தூமாதி மார்க்கத்தில் செல்லும் உயிர் முதலில் சந்திரனை அடைந்து, பின்னர் பல இடங்களில் திரிந்து மீண்டும் உலகத்தில் பிறவி எடுக்கின்றது என்று வைதீக நால்கள் கூறுகின்றன. புண்ணியம் மிகச் செய்யாதவன் ஆகிய என் மனமோ இப்போதே உன் முகமாகிய சந்திரனையே அடைந்து, பிரிந்து வேறு இடங்களுக்குப் போகாமல் இருக்கின்றது என்று சாதுரியமாகக் கூறினார். இடைவிடாது தேவியின் திருமுகத்தைச் தாம் தியானிக்கின்றதைக் கூறியவாறு.
---------------
பல்லின் வெண்மை பகர வல்லார் யார்?
வித்தைமய மாகிய உன் பல்வரிசை
வெண்மைஒளி மேன்மை தன்னை
இத்தகைய தெனவியம்ப வல்லவரார்?
தாயேமற் றிதன்பால் தோன்றும்
சுத்தைநறுஞ் சொன்மகளும் வெண்ணிறத்தாள்
அவள்வழியே கவிகட் கெல்லாம்
மெத்தவரும் பெரும்புகழும் அதனின்மிகு
வெண்ணிறமாய் விளங்கு மாதோ. (78)
பொ-ரை: வித்யா மயமாகிய உனது பல்வரிசையின் வெண்மை ஒளியின் சிறப்பினை இப்படிப்பட்டது எனச் சொல்ல வல்லவர் யார்? தாயே! இந்தப் பல் வரிசையிலே பிறந்தவள் ஆகிய தூய நல்ல சரஸ்வதியும் வெண்ணிறம் உடையவள். அவள் மூலமாகக் கவி வல்லவர்களுக்கெல்லாம் மிக விளையும் பெரிய புகழும் அதனினும் மிக்க வெண்ணிறமாய் விளங்கும்.
வித்தை - கல்வி, சுத்தை - தூயவள். சொல்மகள் - கலைமகள்
தேவியின் பல் வரிசை வித்யா மயமானது. வித்தையிலிருந்து தோன்றியவள் கலைமகள். கல்வியினாலே கவிஞர்களுக்குப் புகழ் உண்டாகும். தேவியின் தந்த பந்தியும் சரஸ்வதியின் புகழும் வெண்ணிறம்.
------------
அது சிவந்ததும் என் அகத்து இயைபாலே
தன்னியல்பின் வெண்ணிறமே தழைத்தஉன்றன்
தந்தபந்தி தாயே மற்றும்
பொன்னிறமாய்ப் பழுத்துவெடித் துதிர்ந்தமா
துளவிதைபோல் பொலியும் ஏது
என்னுடைய இராசதமே ஏறிமிகச்
சிவந்தமனம் இயைவ தாலே
என்ன நினைக் கின்றனன்பொன் னன்னசடைச்
சிவன்மனையாய் இலங்குந் தேவீ. (79)
பொ-ரை: தன் இயல்பாலே பொன் நிறமே தழைத்து விளங்கும் உன் பல் வரிசையானது, தாயே! வெண்ணிறமாகவே இராமல், பொன் நிறமாகப் பழுத்து வெடித்த மாதுளம்பழத்தினின்று உதிர்ந்த விதை போலச் சிவந்தும் விளங்குவதற்குக் காரணம் என்ன? என்றால், இராசத குணமே மிகுந்து ஏறிச் சிவந்து இருக்கின்ற என் மனமானது, அப்பல் வரிசையை இடைவிடாது தியானிக்கின்றதனால், அந்த மனச்சிவப்பின் கூட்டுறவால் தான் என நினைக்கின்றேன். பொன் போன்ற நிறமுடைய சடைமுடிச் சிவனாரின் மனைவியாய் விளங்கும் தேவியே!
தந்த பந்தி - பல் வரிசை
பல்வரிசையானது இயல்பாக வெண்ணிறம் உடையது. தாம்பூலம் தரிப்பதனால சற்றே சிவந்தும் இருக்கும். அத்தன்மைக்கு மாதுளம் பழவிதை உவமையாகப் பொருந்திற்று. குணங்கள் மூன்று வகை. சத்துவம், இராசதம், தாமதம் என அவை முறையே வெண்மை, செம்மை, கருமை நிறத்தன என நூல்கள் கூறும். இராசத குணம் ஏறிய மனம் அவா மிக்கதாகும். சிவந்த நிறமான இராசத குணம் ஏறிய தம்முடைய மனம் இடைவிடாது தேவியின் பற்களைத் தியானிப்பதால் அதன் செந்நிறம் தேவியின் பல்லில் பிரதிபலிக்கிறது என்று திறம்படத் தற்குறிப்பேற்றம் செய்தார், ஆசிரியர்.
--------------
முப்புரம் எரிப்பாய் முறுவலால் அம்மே
அம்பாவுன் புன்சிரிப்பில் செம்பாதி
புரமூன்றும் அழித்த தென்றால்
வம்போமற் றொருபாதி தானுமந்த
வல்லமையை வாய்ந்த தென்றால்
எம்பாவ பந்தவினை எடுத்துவரு
காரணசூக் குமதூ லத்தாம்
வெம்பாவப் புரவலியை அம்முறுவல்
ஒளி நினைந்து வெல்லு வோமே. (80)
பொ-ரை: தாயே! உனது புன் முறுவலின் சரிபாதியே முப்புரங்களையும் அழித்தது என்று புராணங்கள் கூறும். அப்படியானால் மற்றொரு பாதியும் அந்த ஆற்றல் பொருந்தியது என்றால் அதில் தவறில்லையே. அந்த மற்றொரு பாதிப் புன்முறுவலின் ஒளியைத் தியானித்து, எங்களது பாவத்தின் சம்பந்தமான வினைகளால் யாங்கள் எடுத்து வந்திருக்கின்ற முப்புரங்களாகிய காரண தேகம் சூக்கும தேகம் தூலதேகம் என்கின்ற முப்புரங்களின் வலிமையை யாங்கள் வெல்லுவோம்.
அம்பாள் - தாய். சிரிப்பு - குமிண் சிரிப்பு, புன்முறுவல். செம்பாதி - சரிபாதி. வம்பு - புதுமை, ஆச்சரியம். புரம் - ஊர், உடம்பு. முறுவல் - புன்னகை.
சிவபெருமாள் திரிபுரசங்காரம் செய்த வரலாறு புராணப் பிரசித்தமானது. அர்த்த நாரீசுர வடிவத்தில் இருக்கும் சரிபாதியான சிவனுடைய முறுவல் திரிபுரத்தை எரித்தது என்றால், மறுபாதியாகிய சத்தியின் முறுவலும் அவ்வாற்றல் உடையதே என்பது தேற்றம். ஆதலால் சத்தியின் புன்முறுவலைத் தியானித்தால் மற்றொரு வகையான முப்புரங்களை அழிக்கும் ஆற்றல் வரும். அந்த முப்புரங்களாவன, காரண, சூக்கும, தூல தேகங்கள்.
"அப்பணி செஞ்சடை ஆதி புராணன்
முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள்
முப்புர மாவது மும்மல காரியம்
அப்புரம் எய்தமை யாரறி வாரே” (திருமந்திரம்)
என்ற திருமூலர் கருத்து ஈண்டு நினைக்கற் பாற்று.
--------------
அகத்திருள் துரத்தும் அம்மை புன்னகையே
உண்ணெக்கி யான்படும்பா டுணர்ந்துகரு
ணையினாலே உருகிப் பாயும்
வெண்ணெய்க்கொப் பாகுமது ராபுரிவாழ்
மீனாட்சி மீளா ஆளாய்
அண்ணிக்க உளநினைவார் அகத்திருளைத்
துரத்து நலம் அனைத்தும் ஈயும்
தண்ணொளிநின் முத்தனைய புன்முறுவல்
பேறெனக்குத் தருக தாயே. (81)
பொ-ரை: தாயே! மீனாட்சி! யான் படுகின்ற பாடுகளை உணர்ந்து உள்நெகிழ்ந்து, உருகி வழிகின்ற வெண்ணெய்க்கு ஒப்பானதும், மீளாத அடிமையாகி, சுவைமிக உள்ளத்தில் நினைக்கின்றவர்களின் அகத்து இருளை ஓட்டுவதாகவும் நன்மை எல்லாம் ஈவதாகவும் குளிர்ந்த ஒளியுடைய முத்தினை ஒத்ததாகவும் உள்ள நின் புன்முறுவலானது எனக்கு நலம் தருவதாகுக.
அண்ணித்தல் - சுவையால் நாவூறுதல்.
எளியார் படும் துயரை உணர்ந்தால் கருணையாளர்க்கு இரக்கம் தோன்றி, அருள் புரிவதற்கு அடையாளமாகப் புன்முறுவலும் தோன்றும். உள் நெகிழ்ச்சியாலும் நிறத்தாலும் வெண்ணெய் போல்வதாகும் புன்சிரிப்பு. நினைப்பவர் தம் உள்ளத்தில், அம்மையின் புன்சிரிப்பு, ஒளி வீசி அறியாமையை நீக்கும்.
-------------
உன் தாம்பூலம் உமிழ்க என்வாயில்
திருமுகத்தா மரையியற்கைத் திப்பியகந்
தத்தினொடு சேர்ந்து வாசம்
பெருகியகற் பூரமணம் கமழ்கின்ற
தாம்பூலப் பெருகும் சாற்றை
அருமைமிகும் ஆகமங்கள் அனைத்துமுரை
ஞானத்தின் சாரந் தன்னைக்
கருணையினால் என்வாயாங் காளாஞ்சி
தனிலுமிழ்க கயற்கண் ணாளே. (82)
பொ-ரை: திருமுகமாகிய தாமரையினுடைய இயற்கை மணத்தினொடு சேர்ந்து வாசனை மலிந்த கற்பூரமணம் கமழ்கின்ற தாம்பூலத்தின் பெருகிய சாற்றினை அருமை மிகுந்த ஆகமங்கள் எல்லாம் புகழும் ஞானத்தின் சாரத்தினைக் கருணையினாலே என் வாயில் நீ உமிழ வேண்டும், மீனாட்சியே!
திப்பிய கந்தம் - தெய்வீக வாசனை. தேவியின் திருவாயில் உள்ள தாம்பூலத்தின் சாறு ஆகம் சாரமாயுள்ளது என அறிக. காளாஞ்சி - தாம்பூலப் படிக்கம்.
தேவியின் தாம்பூலச் சாறு ஆகம சார மயமானது என்பர். அச்சாற்றினை உண்டு ஒரு மூகன் மகாகவியாகிப் பஞ்சசதி பாடியதும், திருவானைக்காக்கோவில் மடையன் உண்டு காளமேகக் கவியானதும் இதற்குச் சான்று.
-----------
விடிவெள்ளி உன்றன் விளங்கு மூக்குத்தி
பன்னெடுநாள் முயன்றுவசம் பண்ணியபுண்
ணியமுனிவர் பழுதில் நெஞ்சில்
மன்னியொளி தருமுனது மணமலிசண்
பகமுகுளம் மானும் மூக்கில்
துன்னிஒளிர் மணியைமிகும் அஞ்ஞான
திமிரமினித் தொலையும் என்றே
பன்னும்அறி குறியாயுற் பவித்தவிடி
வெள்ளியெனப் பகர லாமே. (83)
பொ-ரை: பலநெடுங்காலமாக முயன்று (நெஞ்சினைத் தம் வயப்படுத்திய புண்ணிய முனிவர்களுடைய நெஞ்சினில் நிலைபெற்று ஒளிவீசுகின்ற உனது, மணம் மிகுந்த சண்பகத்தின் மொக்குப் போன்ற மூக்கில் பொருந்தி ஒளி வீசுகின்ற மூக்குத்தி மணியை, அஞ்ஞானமாகிய இருள் இனி நீங்கும் என்று தெரிவிக்கின்ற அறிகுறியாய் உற்பவிக்கின்ற விடிவெள்ளி என்று சொல்லலாம்.
முகுளம் - மலரும் பருவத்து அரும்பு. திமிரம் - இருட்டு. உற்பவித்த - உதித்த. விடிவெள்ளி - சுக்கிர நட்சத்திரம். இராக்காலத்தின் இறுதியில் குமரி இருட்டாயிருக்கும். பின் வெள்ளிமீன் உதிக்கும். வெள்ளிமீன் உதிப்பது விரைவில் இருள் நீங்கும் என்பதற்கு நிமித்தமாகும். பலகாலம் தவம் செய்தவர்களுக்கே மனம் வசப்படும். தியானம் நிலைக்கும். மீனாட்சியின் திருநாசியைத் தியானிக்கும்போது அதில் அணிந்த மூக்குத்தி மணியின் ஒளி ஒருவர் நெஞ்சில் உதிக்குமானால் அது, அந்நெஞ்சின் இருள் இனி விரைவில் நீங்கும் என்பற்கு அறிகுறியாகும். திருநாசியைத் தியானிப்போரின் அஞ்ஞானம் நீங்கும் என்பது கருத்து.
-----------
பிரணவம் உள்வாய்ப் பிறங்கும் தாயே.
தாம்பூலம் உள்ளடக்கித் தடித்திலங்கும்
கவுளின்மிசைத் தாடங் கத்தின்
ஆம்பூர்ண ஒளிமுத்தின் நிழலென்ற
பெயராலுன் ஆம்பற் செவ்வாய்
மேம்பூர்ண மாகியிரண் பற்றபரம்
பொருளெழுத்தை வெளிவி டாமல்
ஓம்பாநிற் கின்றது நான் மாடமலி
கூடல் நகர் உறைமீ னாட்சி. (84)
பொ-ரை: பெரிய நான்கு மாடங்களமைந்த கூடல் நகரில் வாழும் மீனாட்சியே! தாம்பூலம் உள்ளே அடங்கி இருப்பதால் உப்பி விளங்கும் உன் கன்னத்தின் மேலே, காதோலையில் உள்ள பிரகாசம் மிகுந்த, முத்தின் ஒளி படுவதால் ஏற்படும் நிழலானது, மேம்பட்டதும் பூரணமாய்த் தனக்கு இணை இல்லாததுமான பரம்பொருளை உணர்த்தும் எழுத்தாகிய பிரணவத்தை வெளிவிடாமல் ஆம்பல் பூப்போலும் உன் வாய் அடக்கி வைத்திருப்பது போல இருக்கின்றது.
தடித்திருத்தல் - உப்பியிருத்தல். கவுள் - கன்னம். தாடங்கம் - காதோலை. நிழல் - பிரதிபிம்பம், சாயல். ஆம்பல் - செவ்வாம்பற்பூ. பரம் பொருள் எழுத்து - ஓங்காரம். ஓம்புதல் - பாதுகாத்தல்.
வாய் நிறையத் தாம்பூலம் இருப்பதால் மீனாட்சியின் கன்னங்கள் உப்பி இருக்கின்றன. அந்தப் பிரதேசத்தில் காதோலை முத்தின் ஒளிபட்டு அதன் நிழல் பிரதிபிம்பிக்கின்றது. அதன் தோற்றம் மீனாட்சி தன் வாயின் உள்ளே பிரணவத்தை அடக்கி வைத்திருப்பதால், அது கண்ணாடி போன்ற கன்னத்தின் வழியே தெரிவது போலக் காட்சியளிக்கின்றது. காதும் ஓலையும் கன்னத்தில் பிரதிபிம்பப்பிப்பது, ஓங்கார வடிவமா யிருக்கின்றது என்பதாம்.
-------------
கருண அளவினைக் கடந்தில விழியே
தருணமதி அணியழகர் மனைக்கிழத்தி
மீனாட்சித் தாயே, உன்றன்
அருணவரி விழி, யளவில் செல்வமனக்
களிப்பளிக்க வல்ல தேனும்
பொருணலமிக் குயர்வானம் புரக்கும் அர
செளிதாகப் பொருத்து மேனும்
கருணவள வினைக்கடக்க மாட்டாமை
அதிசயமே கருணைத் தாயே. (85)
பொ-ரை: இளம்பிறையைச் சூட்டியுள்ள சோமசுந்தரருடைய இல்லக் கிழத்தியாகிய மீனாட்சியம்மையே! உன்னுடைய செவ்வரி படர்ந்த கண்கள் அளவற்ற செல்வக் களிப்பினை எனக்கு அளிக்கும் ஆற்றல் உடையவை, ஆனாலும் பொருள் வளம் மிகுந்த வானுலக ஆட்சியை எளிதில் கூட்டுவிக்கும், ஆனாலும் கருண அளவினைக் கடக்க மாட்டாமை வியப்பாக இருக்கிறது.
தருணமதி - பிறை, அழகர் - சொக்கர், சுந்தரர். அருணம் - செந்நிறம். வல்லது - திறமையுடையது. "கருண அளவினைக் கடக்க மாட்டாமை" என்பது இரட்டுற மொழிதலால் காதின் எல்லையைத் தாண்ட முடியாமை எனவும் கர்ண மகாராசனது கொடையின் அளவினை மீற முடியாமை எனவும் பொருள் கொள்ளப்படும்.
மீனாட்சியம்மையின் கடைக்கண் அருள் இம்மையில் எல்லாச் செல்வங்களையும் தரும். மறுமையில் தேவேந்திர பதவியும் தரும் என்று அதன் வள்ளன்மை கூறப்பட்டது. அக்கண்கள் காதின் வரை நீண்டுள்ளன. அவ்வியல்பைக் கருண எல்லையைக் கடவாதன எனக் கூறினார். அச்சொற்றொடர் கர்ணனுடைய கொடையை மீறாதன என மற்றொரு பொருளும் தோற்றுவித்தல் ஒரு நயமாகும்.
தேவியின் கடைக்கண்களின் வள்ளன்மையை,
"தனந்தரும் கல்விதரும் ஒருநாளும் தளர்வறியா
மனம் தரும் தெய்வ வடிவுந்தரும் நெஞ்சில் வஞ்சமில்லா
இனந்தரும் நல்லன எல்லாந்தரும் அன்பர் என்பவர்க்கே
கனந்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே" (அபிராமி அந்தாதி 69)
எனக்கூறியது காண்க.
--------------
கண்ணொளி நிலவொரு கணம் பாய்ச்சம்மே
திண்மைமிகு கற்குவியல் சேர்ந்தெவரும்
நுழைவரிதாம் செறிவிற் றாகும்
வண்மையவிர் உபநிடத விபிநமிசைப்
பொழிவதனால் வாழ்வார் யாரே?
எண்ணரிய பிறவியினும் எய்துதுயர்
வெங்கோடைக் கிடைந்த என்மேல்
கண்ணொளியா கியநிலவை ஒருகணந்தான்
தூவாயோ கயற்கண் ணாளே. (86)
பொ-ரை: மிகக் கெட்டியான கல்லின் குவியல் உடையதாகி, யாரும் நுழைய முடியாத செறிவினையுடைய அடர்த்தியின் வளமிகுந்த உபநிடதம் ஆகிய காட்டின் மேலே பொழிவதனால் நன்மை அடைவார் யார்? கணக்கற்ற பிறவி என்கின்ற வெப்பமான கோடையால் வருந்திய என்மேல் உன் கண் ஒளியாகிய நிலாவை ஒருகணப் போதாவது தூவமாட்டாயோ, மீனாட்சி!
செறிவிற்று - நெருக்கமானது, அடர்த்தியானது. உபநிடதம் - வேதாந்தம். விபினம் - காடு. கோடை - வேனிற்காலம்
மீனாட்சியின் கடைக்கண் ஒளியானது. தான் பட்ட இடத்தின் வெப்பத்தை நீக்கிக் குளிர்விப்பது. அக்கண்ணொளி எப்போதும் உபநிடதங்களின் மேலே பாய்ந்து கொண்டிருக்கின்றது. (அதாவது, உபநிடதங்கள் மீனாட்சியின் திருவருளை விளக்குகின்றன என்பது கருத்து) உபநிடதங்கள் நன்கு கற்றார்க்கே அன்றி மற்றார்க்குச் சிறிதும் விளங்காத கடினமான சொற்பொருள் மயமானவை. ஆதலால், கற்குவியல் செறிந்த காடு போன்றவையாகும். அவற்றின் மீது தேவியின் கண்ணிலவு பாய்வதில் பயனில்லை. அது காட்டில் எரித்த நிலாப் போலாம். ஆனால் வெப்பத்தால் வருந்துவோர் மேல் நிலா ஒளி பட்டால் அவர்கள் இன்பம் எய்துவர். பிறவி வெப்பத்தால் வருந்தும் என்மேல் ஒரு கணமாவது நின் கண்ணொளி பாய்ச்சி இன்புறுத்துக என வேண்டுகிறார் ஆசிரியர்
---------------
கடைக்கண் அன்றோ காத்தளிப்பதுவே
புரமெரித்தான் விழியாலே பொடிந்தமதன்
மீண்டுமெழப் புரிந்த துன்றன்
விரவுபெருங் கருணைவிழி யெனவிளம்பல்
புகழாமோ மீன நோக்கி
சரவசர முழுதாக்கிச் சதுர்விதமாம்
பயனளிக்கும் தகைய கண்செய்
அரியசெய லிதுவென்னிற் குறைவுறக்கூ
றிய குற்றம் ஆகுந் தாயே. (87)
பொ-ரை: முப்புரங்களையும் எரித்தவனாகிய சிவபெருமானின் கண்ணினால் சாம்பலாகிய காமன் மீண்டும் உருவம் பெற்று உயிர் பெற்று எழும்படி செய்தது உனது கருணை மயமான கண் என்று கூறுவது புகழ்ச்சி மொழியாக ஆகுமோ? இயங்குவ நிற்பவான யாவற்றையும் படைத்து, அவற்றிற்கு அறம் பொருள் இன்பம் வீடு ஆகிய நான்கு பேற்றையும் வழங்கும் பெருமையுடைய கண் செய்த அரிய செயல் இது என்றால், கண்ணின் பெருமையைக் குன்றக் கூறிய குற்றம் ஆகும், தாயே!
பொடிதல் - சாம்பராதல். சரம் - இயங்குவன. அசரம் - நிற்பன. சதுர்விதம் - நான்கு விதம்.
மங்கைபாகர் வடிவிலே வலப்பாதியிலே உள்ள சிவன் விழி காமனை எரித்தது. இடப்பாதியிலே உள்ள சத்தியின் விழி அவனை எழுப்பியது. வியப்பு. ஒரே உருவம் "ஸ்மராபத்தி ஸம்பத்தி ஹேது,” ஆக இருந்தது. எல்லா உயிர்களையும் படைத்துக் காத்து எல்லா நன்மைகளையும் அவற்றுக்கு அளித்து வழங்கும் இணையிலா ஆற்றல் படைத்த தேவியின் திருக்கண் காமன் என்ற ஒருவனது உடல் வெந்த சாம்பலை மீண்டும் உடலாக்கி அவனுக்கு உயிர் அளித்தது என்று கூறுவது மலையைத் தூக்குபவனை மண்ணாங் கட்டியைத் தூக்குபவன் எனப் புகழ்ந்தது போலாகும்.
பொடிந்த மதனை அம்மை விழி எழுப்பிற்று என்பது.
"ககனமும் வானும் புவனமும் காணவிற் காமன் அங்கம்
தகனமுன் செய்த தவப்பெரு மாற்குத் தடக்கையும்செம்
முகனும்முந் நான்கிரு முன்றெனத் தோன்றிய மூதறிவின்
மகனுமுண் டாயதன்றோ வல்லீ நீசெய்த வல்லபமே”
என்ற அபிராமி அந்தாதி (66)யாலும் அறிக
-------------
சோமன் படைத்தது என்று சொல்லுவதன் பொருள்
சோமன்உள வாக்குமிந்தச் சகத்தையென
மறைமொழிந்த சொல்லுக் கந்தச்
சோமலதை தனைக்குறித்த தெனச்சான்றோர்
கொள்ளார்கள் தூநீர்க் கூடற்
சோமவழ கன்றனிடப் பாகமமர்
உன்விழியாய்த் துலங்குந் தண்ணார்
சோமனுல களிக்கின்ற செய்தியையே
அத்தொடர்ச்சொல் சொல்லுந் தாயே. (88)
பொ-ரை: சோமன் இந்த உலகத்தை உண்டாக்குவான் என வேதம் சொல்லிற்று. அதில் சோமன் என்ற சொல் சோமக்கொடியைக் குறிக்கும் என்று அறிவிலார் கூறுவர். சான்றோர் அப்படிக் கூறார். மற்றுப் பொருள்தான் யாதோ என்னில், சோமசுந்தரனுடைய இடப்பாகத்தில் அமர்ந்துள்ள உனது கண்ணாகிய சந்திரன் உலகைப் படைக்கின்றது என்ற உண்மையையே அந்த வேத வாக்கியம் குறிக்கும்.
சோமன் - சோமலதை, சந்திரன். சகம் - உலகம். மறை - வேதம். லதை - கொடி. கூடல் - மதுரை. சோம அழகன் - சோமசுந்தரப் பெருமான்.
வேள்விகளில் பருகுவதற்குச் சாறு பிழிந்தெடுக்கப் படுகின்ற ஒருவகைக் கொடிக்குச் சோமலதை என்று பெயர். அதனைப் புகழுமிடத்துச் சோமன் உலகத்தை உண்டாக்கும் என்று வேதம் கூறிற்று. அச்சொற்றொடர்க்குச் சாதுரியமாகப் பொருள் கூறித் தேவியின் கண்ணைச் சிறப்பித்தார், ஆசிரியர்.
-------------
கடைக்கண் அருளால் கடற்தனம் பிறப்பே
வளமலிந்த கண்ணகன்மா நிலமுழுதும்
ஊசிமுனை வளரும் மேரு
தளரும் அணு என மதிக்கும் தானசவுண்
டத்தின் நின தடங்கண் அம்மே
கிளரும் நின தருட்பார்வை கிடைத்தவடி
யேமுமிகு கேதம் ஆர்ந்த
வளரும்அலை மிகுபிறவிக் கடலைஒரு
சிறுகுழியா மதிக்கின் றோமே. (89)
பொ-ரை: செழிப்பு மிகுந்ததும் இடம் அகன்றதுமாகிய இவ்வுலகத்தை, ஒரு ஊசியின் முனை அளவினதாகவும் மேரு மலையை ஒரு அணு அளவினதாகவும் சிறிதாய் உன் கண்கள் மதிப்பிடும். எப்போது என்றால், தானவீர சமயத்தில். அம்மா அக்கண்களின் அருள் நோக்கம் கிடைக்கப் பெற்றதனால் யாங்களும் கூட, மிகத் துன்பம் நிறைந்ததும் அலை (ச்சல்) மயமானதுமான பிறவிப் பெருங்கடலினைப் பெரிதாக மதியாமல் ஒருசிறு குழியாக மதிக்கின்றோம்.
கண் அகல் - இடம் அகன்ற, விசாலமான. மேரு - மேருமலை. தான சவுண்டம் -ஈகைவீரம், கொடைமடம். தடங்கண் - பெரிய கண். கேதம் - துன்பம்.
"போந்த உதாரனுக்குப் பொன் துரும்பு'' என்பர். மீனாட்சியின் உதார குணமிக்க கண்களுக்குத் தான விஷயத்திலே மாநிலமுழுதும் ஊசி முனையாகும். மகாமேருவும் அணுவாகும். இவ்வாறு அம்மையின் தான சவுண்டம் சிறப்பித்துக் கூறப்பட்டது. மிகப்பெரியவற்றை மிகச் சிறியனவாக மதிக்கும் கண்ணொடு பழகியதால் மிகப் பெரிய பிறவிக் கடலினை ஆவின் குளப்படி நீராக மதிக்கின்றோம் என்றவாறு. ஆவின் குளப்படி நீர் - பசுவின் குளம்பு பதிந்த இடத்தில் தங்கிய நீர். -------------
விழியில் முந்நிறம் மேவிய காரணம்
கலைமாதுக் குறைவிடமா இருப்பதனால்
கற்பூர வெண்மைத் தாகி
அலைமாதின் கூட்டுறவால் கல்லாரத்
தாதனைய செம்மைத் தாகி
நிலையாகச் சரணடைந்தார் மனமாசு
துடைத்தசித நிறத்த தாகி
மலைமாதே மீனாட்சி நினது தடம்
மலர்விழிதான் வயங்கும் மாதோ. (90)
பொ-ரை: சரசுவதிக்கு வாழும் இடமாக இருப்பதனால் கற்பூரம் போல வெண்மை நிறத்ததாகவும், இலக்குமியின் கூட்டுறவால் செங்கழுநீர்ப்பூவின் மகரந்தம் போலச் செந்நிறத்ததாகவும் உறுதியாக அடைக்கலம் புகுந்தவரது மனத்தின் கறையைத் துடைப்பதனால் கருநிறத்ததாகவும் ஆகி, உனது பெரிய மலர்க்கண்கள் விளங்கும் பார்வதியே, மீனாட்சி!
கலைமாது - சரசுவதி. அலைமாது - கடலில் பிறந்தவளாகிய திருமகள். கல்லாரம் - செங்கழுநீர். தாது - மகரந்தம். அசிதம் கறுப்பு.
நீண்டதாய் அகன்றதாய் வெண்மை செம்மை கருமை என்ற மூன்று நிறங்களையும் உடையதாய் இருப்பது கண்ணுக்கு இலக்கணம் ஆகக் கூறப்படும். அந்த இலக்கணம் தோன்றப் புகழ்ந்திருத்தல் காண்க. "ஈசர்க்கு யான் வைத்த அன்பின் அகன்று'' என்ற திருக்கோவையார்ச் செய்யுளில் கண் இலக்கணம் காண்க. தன்னைச் சரண் புக்க தொண்டர் உளக்கறையை மீனாட்சி தன் அருட்பார்வையால் நீக்குகின்றாள். அதனால், அந்தக் கறை அவள் விழியில் ஒட்டிக்கொண்டிருப்பதாகக் கூறும் முகத்தால் அவள் விழியினது கருமை மிகுதியைக் கூறினார். -------------
கருணைவெள்ளம் நின்கடைக்கண் அம்மே
வடிகாதி னொடுகாதும் உனதுதிரு
மலர்க்கண்ணின் மையி னாலே
நெடிதாக வரைகோடு பெருங்கருணை
நீத்தத்தின் கரையின் ஓரம்
படிவான பாசியின்நீள் வரிசைஎனத்
தோன்றிடுமால் பழுதொன் றில்லா
அடியார்கள் மிடிதீரக் கொடிமாடக்
கூடலமர் அருட்பூங் கொம்பே. (91)
பொ-ரை: வடிந்த செவியினுடன் போர் செய்யும் உன்னது மலர் போன்ற கண்ணில் தீற்றி இருக்கும் மையினால் நீளமாக வரைந்த கோடானது, பெரிய கருணையாகிய ஆற்றின் வெள்ளத்தில் படிந்துள்ள பாசியின் வரிசை போலத் தோன்றும். குற்றம் அற்ற அடியார்களின் வறுமை நீங்குவதற்காகக் கொடிகள் கட்டிய நான்மாடக் கூடல் நகரில் வீற்றிருக்கும் அருட்பூங் கொம்பாகிய அங்கயற்கண்ணியே!
வடிகாது - தொங்குகின்ற காது. காதுதல் - மோதுதல். நீத்தம் - ஆறு. மிடி - வறுமை, துன்பம்.
கண் இமையில் தீட்டிய மையின் வருணனை இது. மீனாட்சியின் கண் கருணை வெள்ளம் பெருகும் ஆறு. மையில் எழுதிய கோடு அவ்வாற்றின் கரையிற் படிந்த பாசி. இவ்வாறு தற்குறிப்பேற்றம் செய்யப்பட்டன.
------------
கருணை ஒன்றையே அடியேன் நம்பினேன்
பேருலக முழுவதையும் உண்டாக்கும்
காத்தளிக்கும் பெயர்த்து நீக்கும்
நீருடைமை யாலுன்றன் கடைக்கண்கள்
ஓரியல்பில் நில்லா வாகும்
யாருலகில் அன்னவற்றை நம்புபவர்
அம்பிகையே அவற்றை ஏவிச்
சீருறுவிக் கின்ற வுன்றன் திருவுள்ளக்
கருணையையே தேறு வேனே. (92)
பொ-ரை: பெரிய உலகங்கள் எல்லாவற்றையும் - படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் வெவ்வேறு இயல்புகளை உடைமையால் உன் கடைக்கண்கள் ஓரியல்பிலே நில்லாதவையாகும். அவற்றை யான் நம்பமாட்டேன். அம்பிகையே! அவற்றை ஏவி எல்லாச் சிறப்புக்களையும் அடியார்களுக்குச் சேர்ப்பிக்கின்ற உன்றன் திருவுள்ளக் கருணை ஒன்றினையே நான் நம்புகின்றேன்
பெயர்த்து - நிலைமையை மாற்றி. நீர் - தன்மை, இயல்பு. தேறுதல் – நம்புதல்.
தேவியின் கண்கள் கருணை நிறைந்தவை. கருணையால் முத்தொழிலும் செய்பவை. முத்தொழில்களில் படைத்தல் ரசோகுணத்தாலும் காத்தல் சத்துவ குணத்தாலும் அழித்தல் தமோ குணத்தாலும் நிகழ்பவை. அவ்வத் தொழில்களைச் செய்யும்போது அவ்வக் குணங்களைக் கண்கள் பொருந்துவதால் அவை ஓரியல்புடையனவல்ல. ஸ்திரமான குணம் அற்றவை என்று குறித்தவாறு. ஸ்திரபுத்தி இல்லாதவர்களை நம்பினவர் மோசம் போவார். ஆதலால் கடைக்கண்களை யார் நம்புவர்?
தேவியின் முத்தொழிலும் கருணை காரணமாக நிகழ்பவை. உள்ளத்தில் உள்ளதே கண்களில் வெளிப்படும். ஆதலால், தேவியின் கண்களிலே குடியிருக்கும் கருணையையே நம்புகின்றேன் என்றார். இது தேவியின் கண்களின் கருணைப் பெருக்கையும் முத்தொழில் செய்யும் வல்லமையையும் கூறியவாறு. தேவியே உலகங்களைப் படைத்துக் காப்பவள் என்பது,
"பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்
காத்தவளே பின்கரப்பவளே" (அபிராமி அந்தாதி 13)
------------
சிவனார் கருணையே தேவியின் வடிவம்
சம்புவின்றன் களங்கமறு பெருங்கருணை
தானேயோர் பாக மாகும்
நம்புபிற குணங்களெல்லாம் திரண்டேமற்
றொருபாகம் நண்ணும் என்னும்
செம்பொருளின் நுண்மையினை நின்வடிவம்
செம்பாதி தெரிசித் தின்றே
அம்பிகையே அறிந்து கொண்டேன்
அணியால வாயமருங் கயற்கண் ணாளே. (93)
பொ-ரை: சிவனாரது குற்றமற்ற பெருங்கருணையே ஒருபாகமாகவும் விரும்பப்படுகின்ற ஏனைய நற்குணங்கள் எல்லாம் மற்றொரு பாகமாகவும் ஆகி அவரது திருவுருவம் அமைந்திருக்கின்றது என்னும் மெய்ப்பொருளின் சூக்குமத்தை, உனது பாகமாகிய (இடது பாகமாகிய) சரிபாதியைத் தரிசித்து இன்றைய தினமே நான் அறிந்து கொண்டேன். அம்பிகையே! அழகிய திருவாலவாயிலில் அமர்ந்துள்ள அங்கயற் கண்ணியே!
சம்பு - சிவபெருமாள், இன்பம் எல்லாம் பிறக்கும் இடமாக உள்ளவன். களங்கம் - குற்றம். நம்புதல் - விரும்புதல். செம்பொருள் - மெய்ப்பொருள். நுண்மை - சூக்குமம். நுட்பம்.
சிவபெருமான் அனந்த கல்யாண குணங்களையுடைய நல்லான். அவனது நற்குணங்களே அவனுக்கு உருவமாக அமைந்துள்ளன. அவற்றுள் கருணை என்னும் ஒரு குணமே அவனது வடிவத்தில் இடப்பாகமாகச் சரிபாதியாய் தேவியின் வடிவாக அமைந்துள்ளது. மற்றைய குணங்கள் அனைத்தும் திரண்டே வலப்பாதியாக ஆண் வடிவத்தோடு அமைந்துள்ளன. இவ்வுண்மையை இன்றுதான் தெரிந்து கொண்டேன். தேவியைத் தரிசித்ததால் என்றார். சிவனாரது திருவருளேதான், பெண் வடிவாய்த் தேவி உருவத்தில் அமைந்துள்ளது என்ற நுட்பத்தைக் கூறியவாறு. இது,
"குலமலைக் கன்னியென் றருள்குடி யிருக்கும்
விதிநிறை தவறா வொருபங் குடைமையும்"
(கல்லாடம் 61, வரி 20-21) என்றதும் அறிக.
சிவனுடைய அருளே சத்தி என்பது,
"அருளது சத்தியாகும் அரன்றனக்கு அருளையின்றித்
தெருள்சிவ மில்லை; அந்தச் சிவமின்றிச் சத்தியில்லை"
(சிவஞான சித்தியார்)
"நீலமுண்ட மிடற்றினன் நேர்ந்ததோர்
கோலமுண்ட குணத்தால் நிறைந்ததோர்
பாலுமுண்டு பழனன் பால் என்னிடை
மாலுமுண் டிறை என்றான் மனத்துளே" (அப்பர்)
---------------
தேவர் கண் பார்வையே திலகமாயிற்று
அன்னேயுன் கொடிப் புருவ மசைந்து தமக்
கிடுகின்ற ஆணை தேர்ந்து
முன்னேதாம் முடிப்பதற்குக் காத்திருக்கும்
அமரர்குழாம் மொய்த்த பார்வை
வின்னேரப் புருவநடு மேவியொளிர்
தரல் அங்கு விரும்பித் தீட்டும்
தன்னேரில் மணங்கமழும் கத்தூரிப்
பொட்டாகத் தயங்கு மாதோ. (94)
பொ-ரை: தாயே! உனக்கு நீண்ட புருவம் அசைந்து. இடுகின்ற கட்டளைகளை அறிந்து செய்வதற்காகக் காத்திருக்கின்ற தேவர் கூட்டத்தின் பார்வை எல்லாம் திரண்டு ஒன்றாகி உன் இரு புருவங்களின் நடுவே பொருந்தி விளங்குவதால், அதுவே, நீ விரும்பி இட்ட கஸ்தூரிப் பொட்டுப் போல விளங்குகின்றது.
கொடி - நீண்ட. ஆணை - கட்டளை. தேர்ந்து - அறிந்து. வில் நேர் அப்புருவம் -வில்லுக்கு ஒப்பான புருவம்.
தேவி குறித்த பணியை அவள் கூறாமல் இங்கிதம் அறிந்து பணி செய்யத் தேவர்கள் அவளுடைய கண் அசைவை நோக்கிக் காத்துள்ளனர். ஒளி மிக்க அப்பார்வை புருவ நடுவை விட்டுப் பெயராது நிற்றலின், நீங்காத அப்பார்வை ஒளி பொட்டுப் போல விளங்கிற்று.
அம்பிகை புருவ அசைவின் குறிப்பை அறிந்து தேவர்கள் இங்கிதமாகப் பணிபுரிவதை,
"ஆதிமுண்டகன் மால்சிவ னண்டர்ம கேசனந்த சதாசிவ னைந்துபேர்
மேதகுந்தொழில் போலவ னைந்தருள் வீறுமங்கத னூறலு முண்டென
யாதுமின்றியு மேனியொ டெங்கணு மாயைதந்தது ஞானமி ரங்குமோர்
நீதியுந்திரு வேபுரு வங்கொடுநீ சொலிங்கித வேவல் புரிந்ததே."
எனும் சௌந்தரியகரி (24)ப் பாடலாலும் அறிக.
------------
மதியமுதம்மே முகமதியம்மே
தண்ணிலவு பொழிமதியம் எண்ணிலவை
உறுசாரத் தளிகள் சேர்த்துப்
பண்ணியநின் முகமதியம், பாண்டியனார்
தவப்புதல்வீ, பயில் களங்கம்
உண்ணிலவி யவையைனைத்தும் ஒன்றாகிக்
கூந்தலென ஒருபேர் உற்றே,
அண்மையுற முகமதிற்பின் அமைந்தன என்
றெண்ணுகின்றேன் அரனார் தேவி. (95)
பொ-ரை: பாண்டியராஜ புத்திரியே! பரமேசுவரன் தேவியே! குளிர்ந்த நிலாவினை வீசும் பலசந்திரர்களின் அமுதத் துளிகளைச் சேர்த்துப் பண்ணியது போல நின் திருமுகம் விளங்கும். அம்மதியங்களின் உள்ளேயிருந்த களங்கம் எல்லாம் - ஒன்றாகத் திரண்டு, முகத்தின் பின் கூந்தல் என்ற பெயரால் பொருந்தி உள்ளன என நினைக்கின்றேன்.
நிலவை உறு சாரத் தளிகள் - நிலவில் உள்ள அமுதத் துளிகள். முகமதியம் - முகமாகிய நிலவு.
தண்மை நோக்காலும் உயிர்ப்பயிர்களைத் தழைக்கச் செய்வதாலும் அம்மையின் முகம் எண்ணற்ற சந்திரர்களில் உள்ள அமுதத்துளிகளைத் திரட்டிப் பண்ணியது போல உள்ளது என்றும், அவள் கூந்தலின் கருமை, அம்மதியங்களில் உள்ள கருமை யெல்லா வற்றையும் திரட்டிக் கூந்தல் என ஒரு பெயர் சூட்டி அமைத்தது போல உள்ளது எனவும் தற்குறிப்பேற்றம் கூறினார்.
----------------
தவளப் பிறையோ குவளை இதழோ
களங்கமறு பளிங்கினொளி யியல்பான
தண்மதியின் கலைமீ னாட்சி
துளங்கொளியிந் திரநீலக் குவியலன
நின்கூந்தல் துன்ன லாலே
வளங்கெழுமு கருமையதாயிக் கருங்குவளை
இதழ்போல வயங்கு மாலோ
உளங்கெழுமு குணமறைய உறுமினத்தின்
குணமேமிக் கொளிருந் தானே. (96)
பொ-ரை: களங்கம் இல்லாத பளிங்கு போல வெண்மையான பிறையானது, மீனாட்சி, அசையும் ஒளியுள்ள நீலமணிபோல் உள்ள உன் கூந்தலின் நீல ஒளி தன்மேற் படிதலால், வளமான கருமையாய்க் கருங்குவளை இதழ் போல் விளங்கும். உள்ளே பொருந்திய இயற்கைக் குணம் மறைய, சேர்ந்த இனத்தின் குணமே ஒருவருக்கு மேலோங்கி நிற்கும்.
தவளம் - வெண்மை. இந்திர நீலம் - நீலமணி.
துன்னலாலே - படிதலினால். கெழுமு - பொருந்திய.
பளிங்கு போன்ற வெண்மை நிறமுடைய பிறை கருங்கூந்தலினோடு கூடிய நெருக்கத்தால், அதாவது சடையில் சூடப்பெற்று இருப்பதால், கருங்குவளை இதழ் போலக் கருநிறத்ததாக உள்ளதாகக் கூறி, இனத்தின் குணமே மேலோங்கி நிற்கும் என உலக வழக்கும் ஏதுவாக எடுத்துக் கூறப்பட்டது.
நிலத்தின் இயல்பால் நீர் தன் தன்மை திரிவது போல, ஒருவற்கு இயற்கைக் குணம் மறைய இனத்தின் குணமே மேலோங்கி நிற்கும் என்பது,
"நிலத்தின் இயல்பால் நீர்திரிந்தற்றாகும் மாந்தர்க்
கினத்தியல்ப தாகும் அறிவு"
(452) என்னும் திருக்குறளாலும் பெறப்பட்டது.
---------------
எம்மணியாலே ஈயற்றினர் முடியே
வளரொளிச்சிந் தாமணியும் கவுத்துவமும்
திரிபுவனேச் வரியே யுன்றன்
கிளரொளிமா ளிகை முன்றிற் கிடப்பவைமற்
றெம்மணிதான் கிடைக்கப் பெற்றுன்
அளவறுபே ரொளிமகுடம் அமைத்தனரென்
றுரைப்பதனுக் காற்ற லில்லார்
தளர்வறு பேரறிவுமிகு தேவகுரு
முதலாமெத் தகையோ ரும்மே (97)
பொ-ரை: வளரும் ஒளியுள்ள சிந்தாமணியும் கவுத்துவமணியும், திரிபுவனேசுவரியே! உன் ஒளி கிளரும் மாளிகையின் முன்றிலிலே கிடப்பவையாகும். அதனாலே, எந்த மணிகளைக் கொண்டு உன் கிரீடம் அமைத்தனர் என்று சொல்லுவதற்குக் குறையாத பேரறிவு மிக்க வியாழ பகவான் முதலிய அறிவாளரும் ஆற்றல் இல்லாதவர் ஆவர்.
பேரொளியாலும் பெருவிலையாலும் உயர்ந்த சிந்தாமணியும் கவுத்துவமணியும் முறையே இந்திரனுக்கும் திருமாலுக்கும் உரியன. இவரனைய தேவர்கள் அம்மையின் திருமாளிகை முன்றிலிலே வீழ்ந்து சேவித்துக் கிடக்கையினாலே, இவர்கள் அணிந்துள்ள விலை மிக்க மணிகள், சிதறிக் குப்பைகளாகக் கிடக்கின்றன.
வியாழன், தேவ குரு. அறிவில் மிக்கான். அவராலும் அறிய முடியாத மணிகள் அம்மையின் மகுடத்தில் இருப்பது எனப்பட்டது.
-----------
மறவாதாரே பிறவாதார்
உதிக்கின்ற சூரியர்கள் சதகோடி
நிகராம் செவ் வொளியின் மிக்கு
மதிக்கின்ற நிறைமதிபத் தாயிரம்போல்
தண்மையுறு வளமு மேவி
விதிக்கின்ற சிங்காரச் சுவைவெள்ள
மயமாகி விளங்குன் மேனி
கதிக்கென்று வருங்கடைசிப் பிறப்பினரே
நினைக்கின்றார் கயற்கண் ணாளே. (98)
பொ-ரை: பாலசூரியர்கள் நூறு கோடிக்கு ஒப்பான செவ்வொளி மிகுந்து, மதிக்கப்படுகின்ற பூரண சந்திரர்கள் பத்தாயிரத்தினைப் போன்ற குளிர்ச்சியின் வளமும் பொருந்தி நூல்களில் சொல்லப்படும் சிங்காரச் சுவை வெள்ளத்தின் மயமாகி விளங்கும் உன் திருமேனியை, மோட்சம் அடைவதற்கென்றே கடைசிப் பிறப்பாகப் பிறந்த ஞானிகளே தியானிக்கின்றனர், மீனாட்சி!
உன்மேனி கதி - சாரூப கதி
அம்மையை மறந்த நாள், இறந்த நாள், மீண்டும் பிறக்கக் காரணமான நாள். அம்மையை மறவாமையே மீண்டும் பிறவாமைக்கு ஏதுவெனக் கூறியதாயிற்று.
------------
செம்பொருள் தரிசனம் சிறியேற் கருளே
மிகப்புதிய குங்குமத்தா லானஅங்க
ராகவொளி மேவி அங்கம்
தகப்பெரிய விலைமணிய பணிகளணி
பெறவணிந்து தாம்பூ லந்தான்
உகப்புடனுட் கொண்டதிரு வாய்மலரை
யுடைத்தாகிப் பிறைமேற் சூடி
மகத்துவமார் செம்பொருளொன் றென்முன்னே
வல்விரைவின் வருக தில்லே. (99)
பொ-ரை: மிகவும் புதியக் குங்குமக் கலவை பூசப்பெற்று, மேனியெல்லாம் பொருத்தமான அருவிலை மாணிக்க அணிகலன்கள் அணியப் பெற்று, தாம்பூலம் உள்ளே பொருந்திய திருவாய் மலருடன் தலைமேற் பிறையைச் சூடிய மெய்ப்பொருள் ஒன்று என் எதிரிலே வர எப்போது பெறுவேனோ?
அங்கம் - மேனி. அங்கராகம் - மேனி மேல் அம்மையின் அழகிய திருக்கோலம் காணும் விழைவு உணர்த்தப்பட்டது.
-------------
அன்னே உன்னை யன்றி ஒன்றில்லை
இயங்குவதிற் பனவாகி எவ்வுலகத்
திருப்பனவும் இயம்பிற் பாதி
வயங்குவபெண் உருவாகி மறுபாதி
ஆணுருவம் வாய்ந்த வாகும்
தயங்குமிந்த நிலையுணர்த்த ஓருருவில்
ஈரணி நீ தரித்தாய் அம்மே
நயங்குலவி மித்தகவாற் பெற்றேன்நீ
அனைத்துமெனும் ஞானந் தானே. (100)
பொ -ரை: சராசரமாகி எல்லாவுலகத்திலும் இருப்பன எல்லாம், சரிபாதி பெண்ணாகவும் மறுபாதி ஆணாகவும் உருவம் பெற்று விளங்குகின்றன. இந்த உண்மையை உலகத்தார் உணருமாறு உணர்த்தவே நீ ஒருவத்தில் ஆணும் பெண்ணும் ஆகிய இரண்டு வடிவங்களைப் பொருந்தியிருக்கின்றாய், தாயே! மேலான இந்தத் தன்மையாலே நீயேதான் எல்லாப் பொருள்களும் ஆயினை என்னும் அறிவை யான் அடையப் பெற்றேன்.
இயங்குவன - சரம். நிற்பன - அசரம்
உருவம் உடையன அனைத்தும் சத்தியின் வடிவமே என்றவாறு.
------------
அரன் உன்னாலே அடைந்தனன் புகழே
தோற்றியுல கொரு மூன்றும் காத்தளித்துத்
துடைப்பவளும் தோகாய் நீயே
போற்றுமகேச் சுரனிதனை அறிவானோ
அறிகிலனோ பொருப்பின் செல்வீ
வேற்றுமையின் றுன்னோடு விரவுதலால்
அவ்வரனை வியன்ஞா லத்தின்
ஆற்றன்மிகு கருத்தனெனெச் சுருதிகளும்
மிகப்புகழ்ந்தே அறைவ மாதோ. (101)
பொ-ரை: மூன்று உலகத்தினையும் படைத்துக் காத்து அழிப்பவளும் நீயேதான். மகேசுவரன் இதனை அறிவானோ? மாட்டானோ? மலைமகளே! வேறுபாடில்லாமல், அவன் உன்னோடு விரவி இருத்தலினாலே, அவனையே இவ்வுலகங்களின் கருத்தா என்று வேதங்களும் புகழ்ந்து கூறுகின்றன.
உன்னுடைய பெருமையினைச் சிவன் மேலேற்றி வேதம் புகழ்கின்றது என்பது கருத்து
சத்தியுடன் கூடியே சிவம் எத்தொழிலையும் செயவல்லதென்பது.
"சிவமெனும் பொருளும் ஆதி சத்தியொடு சேரின்
எத்தொழிலும் வல்லதாம்
இவள் பிரிந்திடின் இயங்தற்கும் அரிதரிதெ னாமறை
இரைக்குமால்
நவபெரும் புவனம் எவ்வகைத்தொழில் நடத்தி யாவரும்
வழுத்துதாள்
அவனியின்கண் ஒருதவமிலார் பணியலாவதோ பரவலாவதோ
எனச் சவுந்தரியலகரியும் (1) கூறிற்று.
--------------
தேவியை யன்றிச் சிவன் எங்கு உள்ளான்
உள்ளபொருள் நீயேஓர் எல்லையிலா
ஆனந்த உருவும் நீயே
எள்ளளறு படைப்பளிப்புத் துடைப்புலகங்
களுக்கெல்லாம் இயற்று வோய்நீ
கொள்ளுகிலை பிறருதவி எஞ்ஞான்றும்
எனிற்சிவனாம் பெயரைக் கொண்டான்
விள்ளவினி எங்குளன்மற் றவன்பாதி
நீயெனுஞ்சொல் வீண்பேச் சன்றோ. (102)
பொ-ரை: சத்தாக உள்ள பொருளும் நீயே! ஆனந்த வடிவமாக உள்ளவளும் நீயே! படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் முச்செயல்களையும் உலகுக்குக்கெல்லாம் நடத்துபவளும் நீயே! இத்தொழில்களில் எதற்கும் நீ பிறர் யாருடைய உதவியையும் தேடுவது இல்லை. இவ்வாறானால் சிவன் என்னும் பெயரை உடையவன் ஒருவன் எங்கே இருக்கின்றானோ? அவனுடைய பாதியாக நீ இருக்கின்றாய் என்பது வெறும் பேச்சு அல்லவா?
உள்ள பொருள் - சத்து. விள்ள - தனியே பிரித்துச் சொல்ல.
தேவியை அன்றிச் சிவன் தனித்தில்லை என்பதைச் சவுந்தரியலகரி (23),
"ஆதிசங்கரர் பாதியு டம்பினி தாளுமம்பிகை பாதியும் விஞ்சுமோ
நீதியன்றென நாயகர் பங்கையும் நீகவர்ந்தனையா லவரெங்குளார்?
எனக் கூறிற்று.
------------
அன்னையுன் வீடே அடியேம் ஆடிடம்
அந்தகனை அழித்தபிரான் அரண்மனையில்
நுழைந்தந்தப் புரத்தில் பானு
வந்தறியான் கால்நுழையான் இவ்வியல்பிற்
றிதுவெனத்தான் வல்லார் யாரோ
இந்தவியல் பினதெனினும் எம்மனைய
பாலரெலாம் இட்டம் போலத்
தந்தம்மனை யெனவுரிமை கொண்டு நட
மாடுகின்றார் சகன்மா தாவே. (103)
பொ-ரை: இயமனை வென்ற சிவனுடைய மாளிகையின் உட்புறத்தில் சூரியன் நுழைந்தறியான். காற்றுப் புகான். அது எப்படி இருக்கும் என்று சொல்ல வல்லாரும் இல்லை. அந்த இடத்திலே என்னைப் போன்ற இளஞ்சிறுவர்கள் தங்கள் வீடே இதுவென உரிமையொடு நடமாடப் பெறுகின்றனர், தாயே!
அந்தகன் - யமன். பானு - சூரியன். கால் - வாயு. எந்த இடத்தில் நுழையும் ஆற்றலும் அதிகாரமும் உடையவர் இம்மூவர். இட்டம் - இஷ்டம், விருப்பம்.
ஞானம் ஆடவனைப் போன்றது. பக்தி பெண்ணைப் போன்றது. அறிவுக்கு ஆண்டவனது ஓலக்க மண்டபத்தளவே நுழைய முடியும். ஆனால், அன்போ அவனது அந்தப்புரத்தும் செல்ல உரிமையுடையது. மகளிரைப் போலவே குழந்தைகளுக்கும் அந்தப்புரத்தில் நுழையத் தடை இல்லை. (இராமகிருஷ்ணர்)
-----------
பேசாத நாளெல்லாம் பிறவாநாளே
அம்மாநின் திருக்கோயி லில்லாத
நாட்டினில்யான் அமரவேண்டா
எம்மோய்நின் மெய்ம்மையினை உணர்த்தாத
கலையெதுவும் எனக்கு வேண்டா,
விம்மார்வத் தாலுனது தாள்பரவாக்
கிளையெனக்கு மேவ வேண்டா;
இம்மாய வுலகிலுனை நினையாத
நாளொன்றும் ஈய வேண்டா. (104)
பொ-ரை: அன்னையே! நின் கோயில் இல்லாத நாட்டிலே நான் குடியிருக்க வேண்டா, எங்கள் தாயே! உன் சொரூபத்தினை உணர்த்தாத சாத்திரம் எதுவும் எனக்கு வேண்டா. பெருகும் காதலால் உன் திருவடியை வழிபடாத சுற்றத்தார் - யாரும் எனக்குப் பொருந்த வேண்டா. இப்பொய்யுலகிலே உன்னை நினையாத நாள் - ஒன்றும் எனக்குக் கொடுக்க வேண்டா.
நாள்தோறும் அன்னையிடம் விண்ணப்பம் செய்து கொள்ளத் தக்க பாடல்.
----------
இன்னையென் றுனைநான் எங்ஙனம் இயம்புகேன்
என் அனைநீ என்ன இயல்பினை அன்ன
இயல்பினையே; இதுவே யுன்றன்
மன்னுமியல் பலதிதனை யனையையென
வழுத்துதற்கு வல்லார் யாரே?
என்னையின யேனெனவும் அறியாத
பெருமூடன் எவ்வா றுன்னை
இன்னையென வாழ்த்துகிற்பேன் சாற்றுகிற்பேன்
வெள்கினேன் இமவான் செல்வீ (105)
பொ-ரை: என் தாயே! நீ என்ன சொரூபத்தினை உடையையோ அந்தச் சொரூபத்தை உடையவளே! இதுதான் உனது இயல்பு. இங்ஙனம் அல்லாமல் உனது நிலையான தன்மை இதுவென்று வரையறுத்து வகுக்க வல்லவர் யார்? என்னைத் தானும் இத்தன்மையன் என்று அறியாத பெருமூடனாகிய நான் எப்படி உன்னை இன்ன தன்மையினள் என்று அறிந்து சொல்லி வாழ்த்துவேன்?! பேசுவேன்! என்னுடைய மாட்டாமையை அறிந்து நாணுகின்றேன். இமவானின் செல்வ மகளே! என் அனை - என் அன்னை மன்னும் இயல்பு - நிலையான இயல்பு. இனையேன் - இத்தகைய இயல்புடையேன்.
-----------
உன்னருள் தேறி உன்னைப் புகழ்ந்தேனே.
யானுனது புகழ்மாலை ஒன்றுபுனைந்
தேன்உனதாட் கேற்றி னேனென்
றானசெருக் கென்னுள்ளத் தணுவளவும்
இல்லேன்அங் கயற்கண் அம்மே!
ஈனமலி எனதுமதிக் குறைவெனக்கே
தெரியவரும எனினு முன்றன்
தீனர்களை ஆதரிக்கும் திறத்தினையே
துணையாகச் சேர்ந்தேன் தேவீ! (106)
பொ-ரை: யான் உனது புகழ்மாலை. ஒன்றினைப் புனைந்து உன் திருவடிக்குச் சாத்தினேன் என்ற கருவம் அணுவளவும் என் மனத்திலே இல்லை. அங்கயற்கண் அம்மையே! குற்றம் மிகுந்த என் புத்திக் குறைவு எனக்கே தெரியும். ஆனாலும், எளியவர்களை ஆதரிக்கும் உனது இயல்பினை அறிந்து அதனையே துணையாகக் கொண்டு உன் திருவடியைச் சரண் அடைந்தேன், தேவியே! -------------
இரவுபகல் இல்லாத இடத்துவை தாயே
பகலிரவு நாளயனம் முதலான
காலத்தின் பகுப்பொன் றின்றிப்
பகலவன்சந் திரன்மறைந்து படுபொழுதில்
ஆனந்த படிவ மாகி
இகலுறுமெவ் விதமான பேதமுமில்
லாதகற்றுன் எழிலார் பாதம்
அகமலரில் வைத்தடியேன் ஆனந்தம்
திளைப்பேனோ அருட்சேற் கண்ணீ (107)
பொ-ரை: பகலும் இரவும் நாளும் அயனமும் முதலான காலத்தின் பாகுபாடுகள் ஒன்றும் இல்லாமல் சூரியனும் சந்திரனும் மறைந்துள்ள ஒரு வேளையிலே, ஆனந்தமாய் வடிவாகி, பேதம் ஒன்றும் இல்லாதபடி நீக்கி அத்துவித ஆனந்தம் அளிப்பதாகிய உன் அழகிய பாதங்களை என் உள்ளக் கமலத்தில் வைத்து அடியேனும் ஆனந்தத்தை அனுபவிப்பேனோ? அருள் நிறைந்த மீனலோசனி அம்மையே!
அயனம் - சூரியசந்திர கதி. இவற்றொடு ஏனைய காலப் பகுப்புக்களும் கொள்ளுக. இரவு, தத்துவங்களின் தொழிற்பாடு இன்றி ஆணவமலத்தோடு மட்டும் கூடியிருக்கும் ஆன்மாவின் கேவலநிலை. பகல், ஆன்மா தத்துவங்களோடு கூடி விடயங்களை நுகரும் சகல நிலை. பகல் இரவான சகல கேவலங்கள் அற்ற சுத்த நிலையில்தான் ஆனந்த மயமான அத்துவித ஆனந்தத்தைப் பெறலாம். இனி, பகல் என்றது நினைப்பும் இரவு என்றது மறப்பும் ஆம். இதனை, "போக்கும் வரவும் நினைப்பும் மறப்பும் பகலும் இரவும் கடந்து உலவா இன்பம் மருவுவித்து என்றனர்" (கந்தர் கலிவெண்பா - கண்ணி 29) எங்கும் நீக்கமற நின்ற பரம்பொருளின் வியாபக நிலையை உணர்ந்து, பிற உணர்வுகள் ஏதுமின்றி தன்னையும் மறந்து நிற்றலே சிவயோகம். இந்த நிலையையே காலப்பகுப்பு அற்ற பொழுது என்றார். இதுவே துரியநிலை. இந்நிலையில் எல்லையில் இன்பவெள்ளத்தில் திளைத்தல் சிவபோகம். இதுவே துரியாதீதம் எனப்படும். இந்த ஒப்பற்ற நிலையை,
"இரவுபக வில்லா இன்பவெளியூடே
விரவி விரவிநின் றுந்தீ பறி" (திருவுந்தியார் 20),
"இராப்பகல் அற்ற இடத்தே இருந்து
பராக்கற ஆனந்தத் தேறல் பருகார்” (திருமந்திரம் 331),
"போக்கும் வரவும் இரவும் பகலும் புறம்புமுள்ளும்
வாக்கும் வடிவும் இல்லாத தொன்று வந்துவந்து
தாக்கும் மநோலயம் தானே தருமெனைத் தன்வசத்தே
ஆக்கும் அறுமுகவா சொல்லொணாதிந்த ஆநந்தமே"
(கந்தரலங்காரம் 73)
"இராப்பக லற்ற இடத்தே யிருக்கை யெளிதல்லவே"
(கந்தரலங்காரம் 74)
முதலிய ஆன்றோர் வாக்குகளாலும் அறியலாம்.
--------------
சந்திரசேகரி தன்னொளி நினைவாம்
நிறைஞான சதுர்த்தி யாகியுரு வாகி
நிகழ்சொல்லின் மயமாகி அன்னவடிவாகிப்
பிறையுற்ற முடிசூடு சகமீன்ற தாயின்
பிரகாச வடிவத்தை மறவாமல் நினைவாம் (108)
பொ-ரை: குறைவற்ற ஞான சதுரப்பாடு உடையவளாகி, உருவமும் உடையவளாகி, வழங்கப்படும் எல்லாச் சொற்களின் வடிவியாகி, ஹம்ச வடிவியாகிப், பிறை பொருந்திய திருமுடியினளாகிய ஜகன்மாதாவின் திருவுருவத்தை மறவாமல் எப்போதும் தியானிப்போமாக!
மஹாகவி நீலகண்ட தீக்ஷிதர் அருளிச் செய்த
'ஆனந்த சாகரஸ்தவம்' என்னும் வடமொழிப் பனுவலினைத்
தமிழிற் பெயர்த்துக் கோவை, கவியரசு கு. நடேசகவுண்டர் செய்த
'இன்பமா கடல்' இனிது நிறைவேறிற்று.
திருஞானசம்பந்தன் சேவடி வாழ்க!
As is a man's meditation, so is feeling of love; As a man's feeling of love, so is his gain; and faith is the root of all. (Sri Ramakrishna)
_______________
சிவத்தொண்டில் ஸ்ரீ சித்தர் ஞானபாடசாலை
தவத்திரு சர்வோத்தம சச்சிதானந்த நாதேசுவர சுவாமிகளை ஆளாக் கொண்ட மகாயோகியாகிய வியோமரூப சிவசித்தர் பெருமான் ஒருவரின் அருளாணையின் வண்ணம் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் கோவைப்புதூரில் ''சிவக்குடில்'' அமைக்கப்பட்டது. தவத்திரு சர்வோத்தம் சச்சிதானந்த நாதேசுவர சுவாமிகளின் தவக்குடிலாக இருந்த சிவக்குடிலின் பணிகள், அன்பர்களின் பெருக்கத்திற்கேற்பப் பலநிலைகளிலும் விரிவடைந்தது. சுவாமிகளின் ஆன்ம நாயகராகிய அருள்மிகு ஞானாம்பிகை உடனமர் ஞானமூர்த்தி சந்நிதியில் நாள்தோறும் காலையும், மாலையும் நடைபெறும் ஆன்மார்த்த வழிபாட்டில், பரார்த்த பூசைபோல் அன்பர்கள் திரளாகப் பங்குகொண்டு பயன்பெறுகிறார்கள்.
மாதந்தோறும் முழுநிலவின்போது கூட்டுவிளக்கு வழிபாடு, ஆடித்திங்கள் முழு நிலவன்று ஸ்ரீ சித்தர் பெருமான் குருபூசை, கந்தர்சஷ்டி விழா, நவராத்திரி, கிருத்திகை, சதுர்த்தி, நால்வர் குருபூசைகள், மாதந்தோறும் 23-ஆம் நாள் குருநாதரின் கயிலைத் தரிசன நாளாகியன பத்தி சிரத்தையுடன் கொண்டாடப்படுகின்றன. திருநெறிய தமிழைக் கூட்டாக ஓதும் பயிற்சியும், புண்ணியமும் அன்பர்கள் பெறுகிறார்கள். 'சைவத்தின்மேற் சமயம் வேறில்லை, அதிற்சார் சிவமாம் தெய்வத்தின்மேல் தெய்வம் இல்லை' என்ற உறுதிப்பாடு சாத்திர தோத்திர வழிபாட்டின் வழி ஊட்டப்படுகின்றது. ஸ்ரீ சித்தர் ஞானபாடசாலையில் ஞாயிற்றுக்கிழமைகளில் மெய்கண்ட சாத்திர வகுப்புகள் நடைபெறுகின்றன. ஆண்டுதோறும் மேத்திங்களில் பத்து நாட்கள் சிவஞான வேள்வி நடத்தப்படுகின்றது. சிவநெறி விளக்கமான நூல்கள் சிவக்குடில் வாயிலாக வெளியிடப்படுகின்றன. அன்பர்கள் சுவாமிகளிடம் சமய, விசேட தீக்கை பெற்றுச் சிவக் குடும்பத்தினராக சிவநெறியில் வாழ்ந்து வருகிறார்கள்.
ஸ்ரீ சித்தர் ஞான பீடம் டிரஸ்ட் (பதிவு செய்யப்பட்டது) 'குருகுலம்' என்னும் தொடக்கப்பள்ளி, மற்றும் உயர்நிலைப் பள்ளிகளை நடத்தி வருகிறது. இதில் 400க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். இவர்களின் கல்வியோடு தனிப்பட்ட ஒழுக்கமும், பண்பாடும் பேணப்படுகின்றது. சமஸ்கிருத அறிவு பெற மாலை நேர வகுப்புகள் நடத்தப்படுகின்றன. விரைவில் மருத்துவமனையும், முதியோர் இல்லமும் அமைக்கப்பட உள்ளன.
---------------------------------------------------------