pm logo

பலவித்துவான்களியற்றிய
சீட்டுக்கவித் திரட்டு


cITTukkavit tiraTTu (several authors)
In Tamil script, Unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
We thank Dr. Meenakshi Balaganesh, Bangalore, India for her assistance in the preparation of the
soft copy of this work for publication.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2023.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

பலவித்துவான்களியற்றிய
சீட்டுக்கவித் திரட்டு

Source:
பலவித்துவான்களியற்றிய
சீட்டுக்கவித் திரட்டு
இவை தமிழ்ப் பண்டிதர்
பு. அ. கோவிந்தராஜ நாயகர் அவர்களால் பார்வையிடப் பெற்று,
சென்னைப் புரசை, பு. அ. வேங்கடேச நாயகர் அவர்களது
“மாறன்” அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது,
ரெஜிஸ்தர் செய்தது, 1927.
இதன் விலை அணா 3
“மாறன்” தமிழ்நூற் பதிப்புக் கழகத்தின் வெளியீடு நெ-6.

----------------

கடவுள் துணை

முகவுரை.

பல வித்துவான்கள் யாடிய இச்சீட்டுக்கவித் திரட்டை முன்பு திருத்தணிகை சரவணப் பெருமாளையரவர்களால் வெகு சுத்தமாக அச்சிட்டு வெளிவந்திருந்தும் இடையில் பல பிழைகளுடனும் ஒன்றுக்கொன் றொவ்வாமலும் இருந்ததை ஒருவாறு பிழைகளைத் திருத்தியும், பதங்களைப் பிரித்தும், எந்தெந்த பிரபுக்களின் பேரில் பாடினார்களோ அப்பிரபுக்களின் நாமதேயங்களையும் அப்பாட்டுக்களின் தலைப்பில் அமைக்கப்பட்டிருப்பதாலும், இது தமிழ் பயிலும் மாணவர்களுக்கு மிகவும் உபயோகமா யிருக்குமென்று நம்புகிறேன்.

இப் புத்தகக்தை இவ்வண்ணம் திருத்தி அச்சிட்டு ரெஜிஸ்தர் செய்திருப்பதால் இவ்வாறு அச்சிடக் கூடாதென்றும் இதனால் தெரிவிக்கிறேன். அப்படி மீறி அச்சிடுவரேல் கனம் பொருந்திய கவர்ன்மெண்டு சட்டப்படி சகல நஷ்டத்திற்கு முள்ளாவார்களென்று அறிவிக்கிறேன்.

இப்புத்தகத்திற் காணும் வழுக்களை தெரிந்தவர்கள் எனக்குத் தெரிவித்தால் அவற்றை மறுபதிப்பில் திருத்தி அச்சிடுவதோடு என் அன்பார்ந்த வந்தனத்தைபும் அவர்களுக்குச் செலுத்தக் கடமைப் பட்டுள்ளேன்.


புரசைப்பாக்கம்,       இங்ஙனம்:
      பு. அ. வேங்கடேச நாயகர்.
-----------------------
உ.
கணபதி துணை

சீட்டுக்கவித் திரட்டு

அஷ்டாவதானி சரவணப்பெருமாள் கவிராயர் பாடியவை,
      இலட்சுமண மந்திரிமீது பாடியது.
மரபுரவி ராதவன் சோமசுந் தரகுரு
      மலர்ப்பதம் பா….. ராசன்
வண்டமிழ்ச் சரவணப் பெருமாள் கவிச்சக்ர
      வர்த்திதேர்ந் தெழுது நிருபம்
வளகாரை யம்பதியின் மேவுதுரை லக்ஷுமண
      மந்த்ரியெதிர் கொடுசாண்கபா
வாணாக் குபகாரி நீயாகை யாலெமது
      வல்லமையு மகிமையுங் கேள்
கருணீகர் நால்வர்க்கு நாற்கவிதை சொல்லவாய்
      கனவேலு மயிலு மென்னக்
காலிலொரு கவிதையுயர் தோளிலொரு கவிதையிரு
      கையிலொரு கவிதை யெழுதக்
கணக்கொரு புறஞ்சொல விலக்கொடு புறஞ்சொலக்
      காணாத திரைமறை விலே
கனசூது சதுரங்க மொடுகுதிரை படிசொலக்
      கன்னெல்லு முதுகி லெண்ணப்

பரிவுபெற் றப்புதுச் சேரியிற் சென்றினிய
      பண்பரிற் சினைய வாத்தி
பண்புள குமாரபா ரதிமதுர கவிவீர
      பத்ரகவி கொண்டாட வே
பாத்தியனா னந்தநா தன்சபையி லுஞ்செய்து
      பல்லக்கு வரிசை பெற்றேன்
பலகாவி யங்களுந் தெரிவே னளப்பரிய
      பஞ்ச லக்ஷணமு மறிவேன்
அரசரி லுயர்ந்ததுரை யாரெனிற் சேதுபதி
      யாகுமவன் மணிவா யிலில்
அகத்திய முனிக்குமதி கங்கற்ற போ்களா
      யாயிரங் கவிவாண ருண்
டவரிலொரு சிறுவன்யான் பாடவரி யானென்
      றகற்றிவிட் டார்க ளென்னை
ஆதலாற் பூமியிற் சஞ்சரித் தேனின்
      னகந்தனின் மகிழ்ந்தருள் வையே       1.
-------------------

முத்துக்கருப்பண்ண விலக்ஷணன்மீது பாடியது.

கல்விச் சமுத்திரங் கமலால யந்தமிழ்க்
      கடன்மடை திறந்த வெள்ளம்
கற்பனை பிறப்பிடங் கலைமக ளிருப்பிடங்
      கவிமாரி பொழியு மேகம்
சொல்விற் பனம்விளையு மதுரக் களஞ்சியந்
      தோன்றுகர்ப் பூர தீபம்
சுகிர்தகுண வவதானி சரவணப் பெருமாள்கை
      தொட்டெழுதி விட்ட சனது
வில்லுக் கருச்சுனன் சொல்லுக் கரிச்சந்த்ரன்
      வெற்றிக்கு விக்ர மார்க்கன்
வித்தைக் ககத்தியன் முத்துக் கருப்பண்ண
விலக்ஷண னெதிர்ந்து காண்க
மல்வெற்றி யாயென்று தாயென்று நீயென்று
      மாலென்று வேலென் றுகா
மாவென்று காவென்று நாவொன்று பாவொன்று
      வருகின்ற தருள் புரிகவே.       2
-----------------------------------

திருமலைராயன் பட்டினத்தவர்மீது பாடியது.

எவ்வன மனோன்மணி பதப்பணிகொள் சேதுபதி
      யிறைவன்மணி வாசன் மணிவாய்
இலகுமணி சைவமணி சோமசுந் தரகுருவெ
      னையன்மகிழ் சிந்தா மணி
செவ்வசன மொழிதமிழ்ச் சரவணப் பெருமாள்
      சிரோமணி யனுப்பு மோலை
செய்யதிரு மலைராயன் பட்டினத் தவரெலாஞ்
      சிரசுமேற் கொண்டு காண்க
இவ்வூரில் வந்துதிரு மலைராய னைப்போற்றி
      யிலகுகவி காள மேகம்
எமகண்ட மொருதினுசு பாடினா னாமுமிங்
      கீரெட்டு வகை பாடுவோம்
ஒவ்விதை யறிந்துகன தனவரிசை யுதவினா
      லுமதுகுடி வாழி வாழி
உதவா திருப்பிரெனி லுமதுபட் டினமின்ன
      மொருமிக்க மண் மாரியே.       3
      -------------------

மகமதுதம்பி சாகிபுமீது பாடியது.

அவ்வொன்று மவதானி தமிழொன்று வெகுமானி
      யறிவொன்று சேதுபதி பால்
அணியொன்று வெகுமானி சோமசுந் தரகுருவி
      னருளொன்று மடிமை வெள்ளைக்
கவ்வொன்று மலைநாவ னதியொன்று கோத்திரன்
      கனியொன்று குவளை மார்பன்
கதியொன்று சரவணப் பெருமாள் கவீசுரன்
      கையொன்று மெழுது மோலை
தெவ்வென்று சமர்வென்ற திகழ்மகம் மதுதம்பி
      தீரனெதிர் கொண்டு காண்க
செழுஞ்சென்ன பட்டின மதிற்கேகு வோம்வழிச்
      செலவுக்கு வேண்டு மதனால்
உவ்வொன்று யவ்வொன்று லவ்வொன்று டவ்வொன்று
      சவ்வொன்று மவ்வொன்று வவ்
வொன்றுரவ் வொன்றுரவ் வொன்றுகவ் வொன்றுனவ்
      வொன்றுவர விடல் வேண்டுமே.       4
-------------------------

சிங்கபூபன்மீது பாடியது.

பைங்குவளை மார்பனெடு வையைவள னாடனுயா்
      பார்த்திவர்கள் புகழ்ந லூரன்
பாக்யநதி குலதிலகன் யோக்யபரன் மேழிப்
      பதாகையான் பூமி பாலன்
மங்கலக் கவிராசன் வித்வஜன சேகரன்
      மணத்தமிழ்ச் சம்ப்ர தாயன்
வஜ்ரதே கன்பத்ம நாபன்வே லாயுத
      மகாமந்த்ரி குரு புத்திரன்
துங்கமிகு சேதுபதி மகிழுநே சன்சோம
      சுந்தர சுவாமி தாசன்
சோடச வவதான சரவணப் பெருமாள்
      சுயம்ப்ரகா சன்கை யோலை
பொங்கிவளர் செல்வச் செழுஞ்சென்ன பட்டினப்
      பொன்னகர்த் தெளிய சிங்க
பூபவெதிர் வந்துகண் டுன்சபையி லவதான
      புனிதமறி வுற வேண்டுமே.       5
      --------------------

விருதரசுபட்ட பொம்மேந்த்ரதுரைமீது பாடியது

நாவலவ ருக்குளொரு, நடுநாய கம்புவியில்
      ராஜரா ஜர்க்கு மகுடம்
நதிகுலவ ரோதயஞ் சகலகலை ஞாபகமெ
      நாளும்வித் யாடம் பரம்
பூவில்விலை மதியாத மாணிக்க மவதான
      புனிதமாற் றோங்கு தங்கம்
புகழுமனு விஜ்ஞான நாற்கவி விலாசமெய்ப்
      புத்தமு தடைத்த கும்பம்
மாவள மிகுங்கொலுச் சேதுபதி வாசலில்
      வயங்குகர்ப் பூர தீபம்
வளர்தமிழ்ச் சோமசுந் தரகுரு பதத்தின்மா
      மலரருச் சனைசெ யன்பன்
மேவுபுகழ் சரவணப் பெருமாள் ….பாலைஜய
      வீரபாண் டியவு தார
விருதரசு பட்டபொம் மேந்த்ரதுரை யெதிர்கொண்டு
      வெகுவரிசை வரவிடுக வே.       6
      -------------------------

வரகுணராம செந்தொட்டிமீது பாடியது.

வார்பெறுங் கலசமுலை யார்மதன் சேதுபதி
      வாசற்ப்ர சண்ட வாக்கி
வடிதமிழ்க் கும்பன் சுவாமிநா தன்றுணைவன்
      வளர்நெல்லை யப்பன் மைந்தன்
பார்பெறுங் குணஞான சோமசுந் தரகுரு
      பதாம்புயம் பரவு தாசன்
பைந்தமி ழிலக்கண விலக்கியக் கடலுண்டு
      பாரெலாம் பொழியு மேகம்
கார்பெறுங் கையனுயர் சரவணப் பெருமாள்
      கனிந்தெழுது கின்ற வோலை
கதிகொணவ கிரியில்வாழ் குணராம செந்தொட்டி
      காளையெதிர் கொண்டு காண்க
சீர்பெறுப ணொன்றக்ஷ ரங்கோடி பொன்பெறச்
      செய்துனைத் தேடி வந்தோம்
திண்புய மதிற்புனைந் தென்றனை யனுப்பிடிற்
      செகமெலாங் கொண் டாடுமே. 7
---------------------------

முறாபாதர் மகாராஜா அவர்கள் மீது பாடியது.

பனகசய னத்தன்ப்ர சித்தன்மகி மைச்சேது
      பதிமகிழ் தமிழ்ப்ர சங்கன்
பைந்தமி ழகத்தியன் சோமசுந் தரகுரு
      பதாம்புயம் பரவு முறவோன்
பாரகா வியமதொடு லக்ஷாதி லக்ஷப்ர
      பந்தமொரு நாழிகையி லே
பாடியெவ ருக்குமரி தானவவ தானம்
      பகுக்குமுயர் சம்ப்ர தாயன்
தனகனக வாஹன வினோதசர் வஜ்ஞான
      சாம்ப்ராச்ய சார்வ பூமன்
சத்புத்ர சன்மார்க்க சத்ப்ரபல சத்சுகிர்த
      சத்சிநே கப்ர தாபன்
சகலகுண சம்பன சிரோரத்ன முக்யபுனி
      தப்ரதா னச்சி ரேஷ்டன்
சரவணப் பெருமாள் களிச்சாப மெனுஞான
      ஜனகனெழு துங்கா கிதம்
குனிவில்மக தத்தர்வட கத்தர்நிட தத்தர்குட
      கத்தர்முனை மக்கர் மச்சர்
கொச்சிதர் குலத்தர்குளு வத்தர்துளு வத்தர்குகு
      தத்தர்மிது லைக்கு ளரசர்
கொங்கணர் கவுந்தியர் தெலுங்கரொடு டங்கணர்
      குலிங்கரடல் சிந்து மகிபர்
கொங்கர்சில வங்கர்பல கங்கர்செறி யங்கரணி
      கொண்டுநிலை நின்று பணியக்
கனதைபெறும் அசரது நபாபு பாலாசா
      கருணையா யுதவு மினிய
கனியுமுமு தத்துலு முறாபாதர் மஹாராஜ
      காவல னெதிர்ந்து காண்க
கடலெலாஞ் சூழ்ந்திடு புவிச்சக்ர வர்த்திநீ
      கவிச்சக்ர வர்த்தி யாமே
கண்டாய்சொ லவதான முறைபார்க்கி லுன்புகழ்
      கதிக்குமுல குளமட்டு மே.       8
~~~~~~~~~~~~~~~

முத்தளகுசாமிபூபதிமீது பாடியது.

வண்ணப்ர பந்தத்து முத்தமிழ்ப் பாமும்
      மதத்தைக் ௧ரத் தொழுக்கி
வறப்பினும் வளந்தரு பொருப்பொப் பெனச்சித்ர
      வாய்விட் டதட்டி வேட்டு
மதுரகவ ளத்தைத் திரட்டித் திரட்டிச்செவ்
      வாய்மடுத் துண்டு கோட்டு
வப்பெழுத் தாணிகொண் டூற்றெழு கல்விக்கடல்
      வயங்கு ப்ரளயத்தின் மூழ்கி
அண்ணவரு வெவ்வினைச் கெர்ப்பத்கை யெற்றிநா
      லடிகொண்ட பண்ண டத்தி
அழகிய நனூற்பணிக் கச்சமிட் டெக்களித்
      தாக்ரமித் துக்ர முற்றி
அஷ்டாவ தானமெனு முன்மத்த மேறியறி
      யாமைநிக ளந்த றித் தே
ஆருந்து திக்கைபெற் றுக்கட் கடைப்பொறி
      யனற்பிறக் கச்சி னத்தே
பண்ணா செனத்திறை கொடாமன வுலுத்தப்
      பசாசரை வளைந்து கொண்டே
பழமொழி யிருப்புலக் கைப்படையி னாற்சிதறு
      பஞ்சுபஞ் சாவ டித்துப்
பரகுரு வெனும்பாக னடிமலர் சுமந்தவன்
      பணிமலர்த் தோட்டி நுனியாற்
பரிவுடன் வணங்கிடுஞ் சரவணப் பெருமாள்
      பருஉக்களி றனுப்பு மோலை
தண்ணமிர்த வாரியுயர் செல்லையம் பதியரசு
      சங்கநிதி சேது பதிவா
சன்மார்க்கன் மகன்மகன் றலைமுறைக ளாகப்ர
      தானியாம் யூகி மந்த்ரி
தந்த்ரமுத் தளகுமரு மகனான முத்தளகு
      சாமியெதிர் கொண்டு காண்க
சார்வான தூதொன்று பாடிவந் தனமுனது
      தயவுகூர்ந் தருள்புரி வையே.       9
      ~~~~~~~~~~~~~~~~

இரவணப்பபூபதிமீது பாடியது.

தொடையெலாந் திரிபுசொற் பொருளெலாங் கற்பனையெ
      துகையெலா மாலை மாற்று
சொல்லெலா மதுரம்வெண் பாவெலாங் கதைகலித்
      துறையெலா மேக பாதம்
தூதெலாஞ் சந்தமஞ் சரியெலாங் கெளடமா
      சுகளெலாந் தனிநி ரோஷ்டம்
சுயமெலா நிமிஷமெய்க் கணமெலாங் கணம்வணத்
      துறையெலா நாக பந்தம்
அடையெலாஞ் சிவசரிதை சிந்தெலா நீதிகொச்
      சகமெலா மடி மடக்கவ்
வடியெலா மெமகமுயர் பதமெலாங் கட்டுநா
      டகமெலா நவசித் திரம்
அசையெலா மிருபொருள்கொ னூலெலாம் வேதம
      க்ஷரமெலாம் பிர்ம லகிதம்
அளவெலாந் தாரகநிறை முடிவெலாம் பொருளா
      வமைத்தெலாம் பாடு கவிஞன்
பெடையெலாஞ் சேரனப் புடையெலாஞ் செறிவயற்
      பெருநெலார் தேவை முல்லைப்
பிணையெலாஞ் சேதுபதி புகழெலாம் போற்றிவரு
      பெட்பெலாந் திகழ்சி லாக்யன்
பெறுநலான் சோமசந் தரகுரு பதத்தைப்
      பிறப்பெலாம் போற்று மடிமை
பேச்செலா மமுதமொழி யாகசொலுஞ் சரவணப்
      பெருமாள் விடுங் காகிதம்
படையெலாங் கொண்டுபொரு பகையெலாம் வென்றுநற்
      பண்பெலா மறியு நிபுணன்
பாரெலாம் போற்றவரு ரவணப்ப பூபனெதிர்
      பண்பெலாங் கொண்டு காண்க
பலனெலாம் பெலனெலா நலனெலாங் கலமெலாம்
      பரியெலாம் கரியெலாம் பொற்
பணியெலா மணியெலாந் துகிலெலா நெல்லெலாம்
      ……… ………… வேண்டுமே.       10
      ~~~~~~~~~~~~~~~~~~~

சிவகங்கை பட்டினத்தார் மீது பாடியது.

தண்ணமுத சாகரங் கவிதாப்ர சங்கந்
      தமிழ்க்கடலை யுண்ட மேகம்
சற்குண ……….. ………….. …வெண்
      டாமரை மடந்தை வாரம்
வண்ணப்ர பந்தத்து மும்மதக் குஞ்சர
      மணந்தவஷ் டாவ தானம்
வாசாம கோசரங் கல்விப்ர வாசந்தெய்
      வச்செயல் வரப்ர சாதம்
கண்ணிலவு முல்லையணி சேதுபதி …….
      சன….. …….. ……
கற்றவர்கள் கொண்டாடு சரவணப் பெருமாள்
      கவிச்சக்ர வர்த்தி யோலை
பண்ணுலவு சிவகங்கை யம்பதிப் பேட்டையிற்
      பலரெதிர் நடந்து காண்க
பரிவுறு புராதன மிவூரென்று வந்தனம்
      படைதிரள வர விடுகவே.       11
      ~~~~~~~~~~~~

ஆதிகேரள மகாராஜன்மீது பாடியது.

மாதுபதி தாதுபதி யாதுபதி சேதுபதி
      வாசற் கவிப்ர சங்கன்
மங்களா கரபுஞ்ச நாற்கவிக ணிறைகும்ப
      மதுரப்ர பந்த மேகம்
வடிதமிழ்க் குஞ்சரங் கவிராச சிங்கமது
      ராகமவ தான சரபம்
வண்ணக் களஞ்சியஞ் சிந்துச் சமுத்திர
      மணக்குந் தமிழ்ப் பொக்கிஷம்
சோதிப்ர காசஞ் சிலாக்யசற் பாத்திரஞ்
      சுகிர்தசற் சைவ துல்யம்
சுகாதிக சுஜாதிக சுதாகர சுயாகம
      சுபாகசத் புருஷ ரத்னம்
சுதந்தர சுமங்கல சுரஞ்சித சுமந்திர
      சுயம்ப்ரகா சப்ர தாபம்
சுபத்திர சுலக்ஷண சுகற்புத சுசற்சன
      சுகப்ரபல ரத்நா கரம்
காதல்செய் சிவஜ்ஞான விற்பன தடாகஞ்ச
      கலகலைஞ் ஞான பீடம்
கல்விப்ர வாகம்வித் யாடம்ப ரந்தமிழ்க்
      கடன்மடை திறந்த வெள்ளம்
கனசபா பூஷணஞ் சோமசுந் தரகுரு
      கடாக்ஷவீ க்ஷணவிலாசன்
கங்கைகுல திலகனாஞ் சரவணப் பெருமாள்
      கவிச்சக்ர வர்த்தி யோலை
ஆதிகே ரளராம வண்மைமக ராஜனே
      ழடியெதிர் நடந்து காண்க
அசரது நபாபுசரி பேட்டிபெற் றோமியா
      மறியாத தேச மில்லை
அரியதென் றிசைவந்த தேதெனிற் பொதிகையி
      லகத்திய னிருக்கி றானாம்
அவனையுங் கண்டுனது மகிமையுங் கண்டுநா
      மறியலா மென வந்ததே.       12
      ~~~~~~~~~~~~~~~~~

முத்திருளப்ப சேதுபதிமீது பாடியது.

மாறாமல் வாய்வேலு மயிலுமென வேசொல்ல
      வாசகங் கைக ளெழுத
வருகணக் கொருபுறம் தீரமற் றொருபுறம்
      வரைந்திடு மிலக்க மாற
வளைதிரைக் குட்சிறிது கல்லணி வகுக்கின்ற
      வன்கணக் கினிது பகர
மருவுசொக் கட்டானும் விளையாட மறைவாக
      வைத்தசது ரங்க மாடக்
கூறாக வெட்டெழுத் தாணியெழு தும்படிக்
      குங்கவிதை பகர விதிலோர்
கூரெழுத் தாணிசது ரங்கமுது குப்புறங்
      குதிரையடி வெண்பா வரக்
கூறுபுல வோர்சபையி லஷ்டாவ தானமுல
      கோர்புகழ வே நடத்தக்
கோடிலாச் சதுரங்க மாடவ்ய லூரிருக்
      குஞ்சூது மாட வொருபோர்
ஏறாகி வண்ணப்ர பந்தமெட் டுப்பேர்க்
      கெழுத்தெழுத் தாவு ரைக்க
இவ்வாறு நற்புறக் கவிதாப்ர சங்கம
      திசைக்கும்ப்ர சண்ட வாக்கி
இலக்கண விலக்கியக் கடலைமுழு துங்குடித்
      தேப்பமிடு காள மேகம்
இனியகவி யவதானி சரவணப் பெருமாள்கை
      யெழுதுமொப் பத்தி னோலை
சேறாடு குங்குக் கொங்கையார் மடலெழுது
      திவ்யரவ ணிக மோகன்
சேதுபதி வாசற்ப்ர தானிமுத் திருளப்ப
      சிங்கவே றெதிர்ந்து காண்க
சித்தபரி பூரண கடாக்ஷவீ க்ஷணகுக
      தியாகபர னீயாகை யாற்
செந்தமிழ்க் காதற்பர பந்தமொன் றுன்மீது
      செய்துவந் தனம கிழ்ந்தே.       13
      ~~~~~~~~~~~

இராமனாதேந்திர சர்ப்பன்னன்மீது பாடியது.

நானூறு வண்ணமற் றைன்னூறு மஞ்சரி
      நடத்துமறு நூறு தூது
நாலாயி ரம்பரணி யையாயி ரங்கோவை
      நாடகம் பதினா யிரம்
நாற்பத்து நாலாயி ரத்துநா னூறுபத
      நாலுலக்ஷம் ……. ……..
நாற்பந்தி ரண்டுலக்ஷந் தாழிசைக ளொரு
      நாழிகை தனிற் பாடுவோன்
தேனூறு மதுரச் செழுந்தமிழ்க் கெல்லையாய்ச்
      சித்தாந்த வேதாந் தரஞ்
சிதவுசித சிரேஷ்டசக லாகம புராதன
      சிலாக்யசௌ சன்னி யாதிகன்
திடசித்த சற்குண சற்சன வரபரநா
      திபசமபர தாய துல்யன
செய்யநவ கண்டமூ தண்டவே தண்டவித்
      தியாடம் பரப்ர சண்டன்
வானூர் பெரும்புகழ தலவிதல சுதலநித
      லங்களில் வயங்கு முசிதன
மைக்கட் கடற்பொற் புவிக்குட் பரசித்தத்
      தவககொற் றவர்க் குரியவன்
மகராச ராசருந் திறைதருந் சேதுபதி
      வாசற் கவிபர சிங்கன்
வண்டமி ழிலக்கணச் சோமசுந் தரகுரு
      சுவாமி யடிமைக்கு மடிமை
பானூறு மெனமொழிச் சரவணப் பெருமாள்ப்ர
      பலகவிஞ னெழுது மோலை
பாவைதென் றேவைரா மீசனருள் பெறுபரா
      பரராம நாத முனிவன்
பாதமற வாதவன ராமனா தேந்த்ரசர்ப்
      பன்னனெதிர் கொண்டு காண்க
பனிமதிச் சடிலன்மே லினியபண விடுதூது
      பாடிவந் தனம கிழ்ந்தே.       14
      ~~~~~~~~~~~~

சொக்கலிங்கபூபதிமீது பாடியது.

அட்டதிசை பணிசெயுஞ் சேதுபதி மணிவாச
      லஷ்டாவ தான சிங்கம்
அருந்தமிழ்ச் சோமசுந் தரகுரு சுவாமியடி
      மைக்குமடி மைக்கு மடிமை
அசரது நபாபுவை வரச்சொல்லிக் காகிதமோ
      ராளவச மனுப்பி வைத்தோன்
ஆயிரத் தெட்டடி வரச்சொல்லித் தனதுதள
      வாய்முதலி யார்க்கு விட்டோன்
எட்டடி வரச்சொல்லித் தஞ்சையர சற்கிலகு
      துள்ளுசீட் டுக்கொடுத் தோன்
ஏழடி வரச்சொல்லி மலைராச னுக்கோலை
      யெழுதிவுத் தரவு செய்வதான
இனியபா ளையகார ருக்கெலா மொப்பமிட்
      டெழுதுநிரு பங்கொ டுத்தோன்
இக்கரையு மல்லாம லக்கரையில் யாழ்ப்பாண
      மெல்லாங் கிளரக்கு விட்டோன்

கொட்டமிடு லோபரைப் புத்திவர வன்கவிக்
      கொறடாவி னாலடிப் போன்
கூறியகவிக் கர்த்த மறியார்க டலையிலே
      குட்டிப் பயன் சொல்லுவோன்
குற்றஞ்சொல் வோர்களைச் சோழன்மக ளைப்போல
      குத்திச் சினந் தவிர்ப்போன்
கோளர்களை வரைவுக் கவிதைக் கயிற்றூடு
      கோத்துத் தோரணங்கட்டு வோன்
கட்டிமா ணிக்கமுயர் சரவணப் பெருமாள்
      கவிச்சக்கர வர்த்தி யோலை
கனபாவை நகர்மேவு சொக்கலிங்கக் கொடைக்
      கர்ணனெதிர் கொண்டு காண்க
கணபதி தருந்திரு முகத்தைமுன் சொன்னபடி,
      கண்டரங் கேற்றி யன்பாய்க்
கனகமும் பவளமுந் தரளமுங் கோமே
      தகங்களுந் தந்தருள் வையே.       15
      ~~~~~~~~~~~~~~~~~

விசயரகுநாத தொண்டைமான்மீது பாடியது.

நிதிபெறு கல்விப்ர தானந் தெளிந்திடு
      நிதானஞா னப்ர காசம்
நித்திய சுமங்களக் கவிதாப்ர சங்கமன்
      னேயசுந் தரவி லாசம்
வேதாந்த சாகரஞ் சித்ராவ தானதமிழ்
      மேகஞ் சபா ரஞ்சிதம்
வித்வசன சேகரஞ் சேதுபதி வாசலில்
      விளங்குநவ ரத்ந தீபம்
சீதரன் சோமசுந் தரகுரு சுவாமியிரு
      திருவடி துதிக்கு மடிமை
சீர்பெறுஞ் சரவணப் பெருமாள் கவீசுவரச்
      செயசிங்க மெழுது மோலை
மாதவன் விசயரகு நாதத்துரைத் தொண்ட
      மானெதிர் நடந்து காண்க
வரிசைபெறு தூதொன்று பாடி வந்தன முனது
      மனமகிழ்ந் தருள் புரிவையே.       16
      ~~~~~~~~~~~~~

சிங்கநகர் குமாரவேற்பூபன்மீது பாடியது

மகபதி நராதிபதி நீதிபதி சேதுபதி
      வாசற்ப்ர சண்ட வாக்கி
வடிதமிழ்ச் சோமசுந் தரகுரு சுவாமியடி
      மைக்குமடி மைக்கு மடிமை
மயில்வா கனக்கடவு ளருளினா லுபயசா
      மாவிருது கொண்ட துல்பன்
மலையாள ராசனருள் தந்தபல் லக்குவெகு
      மதிபெற்ற சார்வ பூபன்
யுகமெலா மகிமைபெறு தஞ்சைமக ராசனையொ
      ரேழடி யழைத்த நிபுணன்
உசிதனச ரதுநபா பிருகையாற் றருவரிசை
      யொருகையால் வாங்கு கவிஞன்
உற்றசிவ கங்கையிற் கவுரிவல் லவராச
      னுதவுவள நாடுபெற் றோன்
உயரிலங் கைப்பூமி ராசசமு கத்தினிலு
      மொருகோடி வரிசை கொண்டோன்
ககனமூ தண்டவே தண்டபிர் மாண்டமுங்
      கவிபுகழ் படைத்த வுரவோன்
காசிமுத லாகரா மேசுர வரைக்குங்
      கவித்துவச நாட்டு விஜயன்
கற்றுச் சொலிக்கும்வரு ஸ்தானா பதிக்குமிரு
      கனகதண் டிகைகொடுத் தோன்
கவிமதக் குஞ்சரஞ் சரவணப் பெருமாள்
      கவிச்சக்ர வர்த்தி யோலை
புகழ்மேவு சிங்கநகர் வளருங் குமாரவேற்
      பூபனெதிர் கொண்டு காண்க
பொரவரா வேங்கைகை பாராத தாதுசெம்
      புக்குளமை யாத சாமி
புவியிலிரு ளாவேம மேய்ந்துவள ராமாடு
      பொங்கிவே காத காணம்
பூண்டொடி படாவத்த மறுபடா வுடலேழு
      பொதிதந்து நீவாழி யே.       17
      ~~~~~~~~~~~~

யாழ்ப்பாணம் வயித்தியலிங்கேந்திரன்மீது பாடியது.

செயராம நாதனே தெய்வந் தனுக்கோடி
      தீர்த்தமே தீர்த்த மெங்கள்
சேதுபதி யேராஜ வெனவணங் கார்களைச்
      சீறிவா யைக்கி ழித்துச்
செள்ளையை நுறக்கிவளர் பல்லையு முடைத்துச்
      செழுங்குட ரையும் பிடுங்கிச்
சிரசையு மறுத்துக்ர முகவிருது பெறுவிஜய
      சிங்கடா கைப்ர சண்டன்
நயமதுர மறியாத முழுமடையர் செவியென்னு
      நல்ல பாம்புப் புற்றிலே
நளினத் திருந்தமிழ்ச் செந்தேன் குழம்பையொரு
      நாளுங் கவிழ்த்திடா தோன்
நாவலந் தீவிலுள நாடெலாம் புகழ்பெறு
      நராதிபர் வணங்கு துல்யன்
நாவலா குழாம்பல துதிக்குமஷ் டாவதா
      னப்ரபல சார்வ பூபன்
இயலா யிரங்கோடி பிரபந்த முழுதுமொ
      ரிமைப்பொழு தினிற்பாடு வோன்
இலக்கண சமுத்திரஞ் சோமசுந் தரகுரு
      வெனையனடி மைக்கு மடிமை
ஏகசக் ராதிபதி சரவணப் பெருமாள்
      கவீசுவரன் செங்கை யோலை
இந்த்ரதரு யாழ்ப்பாண மேவிய வயித்தியலிங்
      கேந்த்ரனெதிர் கொண்டு காண்க
வயமான கையிலே மூக்குள்ள தொன்றுதிரு
      மாயன் பிறப்பி லொன்று
வாற்புதமோர் கொம்புந் தலைப்புறமோர் கொம்புமுள
      வாகனந் தன்னி லொன்று
வலியார் புரங்களைச் சுடுகின்ற பொருளொன்று
      வாரமது தன்னி லொன்று
வரவுடன் வெளுத்தசந் திரனொன்று நீயின்று
      வரிசைதந் தருள் புரிவையே.       18
      ~~~~~~~~~~~~~

சுங்கப்பிராமணர்கள்மீது பாடியது.

அவதானி சரவணப் பெருமாள் கவீசுர
      னச்சென்ன பட்டின முதல்
ஆய்ராம நாதபுரம் வரையுமுள சுங்கப்
      பிராமணர்க் கெலாம் விணப்பம்
நவமுள துருக்கர்க் கெலாஞ்சலா முதலிமார்
      நாய்க்கவே ளாளர்க் கெலாம்
நன்மைமேன் மேலுமுண் டாகவுங் கம்மாளர்
      நட்டுவர்க ளோச்சர் குயவர்
எவரெவரை யுந்நினைத் திருந்தநன் மையினாலே
      குறையில்லை வள்ளுவர் களுக்
கெல்லாஞ் சொலும்படி யெமதுசா மான்பலவு
      மிங்கிருந் தெமது வீட்டுக்
குவசையொடி முன்னே யனுப்பினோம் பல்லக்கு
      நாமும் பினேவருகி றோம்
ஊடேத டுக்கிலற் பாயசுத டாமல்விட்
      டோர்க் கெலாந் தீர்க்காயசே.       19
      ~~~~~~~~~~~~~~~~~

மேற்படி சரவணப்பெருமாள் கவிராயர் குமாரர்
அருணாசலக்கவிராயர் பாடியவை.

கவுரிவல்லவ ராஜசிங்கன்மீது பாடியது.


சக்ரவாளத் தகடு முகடுபட படெனப்ர
      சங்கத் தெழுந்த சிம்மம்
தத்வல க்ஷணவித்வ லக்ஷண சுலக்ஷண
      விசக்ஷண சபா ரஞ்சிதம்
சத்யலோ கததுமத லத்தும்வித லத்து நித
      லத்தும்ப்ர சித்த துல்யம்
சற்குணா லயமினிமை பெறுசுவைக் கல்வியமு
      தத்தலங் கார கும்பம்
உக்ரகாப டின்யதிட தடவிகட கடமடை
      யுடைத்தெழு தமிழ்க் குஞ்சரம்
உசிதத் துகந்தசித் தாந்தவே தாந்தவுர
      ராமவயி ராக்ய சித்தம்
உபயபர் வதவட வரைக்கப் புறத்துமுல
      வப்புகழ் நடத்து வீரம்
உரககண பணமகுட புவனசக் ரேசுர
      வுதாரநதி குலசி ரேஷ்டம்
கைக்கடா சலகோடி தருசேது பதிராஜ
      கர்த்தன்வா சற்ப்ர சங்கம்
கற்றறி யிலக்கணச் சோமசுந் தரகுரு
      கடாக்ஷகன காபி ஷேகம்
கருதுவிரு தவதானி சரவணப் பெருமாள்
      கவீசுரன் பெற்ற ரத்நம்
கமலைநா மகள்வளர் நிதானியரு ணாசலக்
      கவிசரப மெழுது மோலை
திக்கெலாந் திறைகொண்ட கவுரிவல் லவராஜ
      சிங்கமெதிர் கொண்டு காண்க
சீறாத நாகமற காலிலாத தும்பிவெந்
      திடமுடை படா வாரணம
தீககுண வலாதகரி பங்கபட்டாக கயஞ்
      செலத்திலோ டாத களிறு
திருகாத தந்திமுனை வளையாத வேழஞ்
      சிறப்பொடு கொடுத் தருள்வையே.       20
      ~~~~~~~~~~

மலையாண்டியப்பைய நரேந்திரன்மீது பாடியது.

தடககட லிடப்புவி புரக்குமகுடத் தரச
      ரிற்பெரிய சேது பதிவா
சலிற்கன மகத்துவ மிகுத்திடு சிதத்துவ
      சனப்ரபல சற்சன பரன்
தருப்பத மடக்கடிக லித்துறை விருத்தம
      தனப்பரணி கொச்சக முதல்
தமிழ்க்கடன் மடைப்புன றிறக்கும தெனக்கனி
      சருக்கரை பொரப் பகருவோன்
வடக்கொடு குடக்கொடு கிழக்கொடு திசைப்புற
      மணத்திடு புகழ் பரதாபன
மடத்தொடி கொடித்துடி யிடைக்குட முலைச்சியர்
      மடற்கிடு தொடைக் குவளையான்
வடித்திடு மிலக்கண விலக்கிய வகைக்கொரு
      மலைக்குறு முனிக்கு நிகர்வான்
மனுக்களை தழைத்திடு மகிழ்ச்சியரு ணாசல
      மகத்வகவி ராஜ னோலை
கடற்கரை யுடைத்திட விடப்பணி சடைத்தலை
      கடுப்பொடு மடிக்க விருநாற்
கடக்கய முடற்பட படக்கவி ணடர்த்திடு
      கடிப்புயல் குடற் கிழிபடக்
கடைக்கன லடற்சிகை கதித்தெழ வியற்புவி
      கடைக்கடை கிடக்கு மலையும்
கடுப்பொடு பொடிப்பட வடுத்தவெ ளிடைக்கதிர்
      கடக்குற நடக்க மருவார்
நடப்படை திடுக்கிட வடிக்கிடு கிடுத்துட
      னடுக்கிட வடர்க்கு முனைமா
நடத்துதுரை கனிவாடி மலையாண்டி யப்பைய
      நரேந்திர னெதிர்ந்து காண்க
நயப்பரி மதக்கரி சரப்பணி விரற்பணி
      நவக்கொலுசு ரத்ந முருகு
நகைக்கிடு சிவப்புவயி ரப்பொடி பதக்கமு
      நமக்கிவை கொடுத் தருள்வையே.       21
      ~~~~~~~~~~~~~~~~

கும்பனென்னுங் கவிராயர் மழவரங்கன் என்னும் பிரபுவின்மீது பாடியது.

கொஞ்சுகவி யானையை வசைக்கவி யெயிற்றினாற்
      குகவியு யிரான் மருட்டும்
குடிலகவி ராஜசிங் கங்களைப் பங்கம்செய்
      கும்பசர பத்தி னோலை
செஞ்சிவிஜ யாபுரிக் கோட்டைக் கபாடம்
      திறக்கும் களிற்று வேந்தன்
திறல்கொண்ட லட்சுமண ரங்கமழ வேந்த்ரதுரை
      ஜெயசெளர்ய னினிது காண்க
வஞ்சியர்க ளிதயமும் கொஞ்சுபுர வியின்மனமும்
      வல்லகவி ராஜர் மனமும்
மகிமைபெறு மூர்த்திக்கு மறிவரிது நின்சமுகம்
      வருமுனே யறிசதுர நீ
பஞ்சகலி காலப் பயங்கர றொண்டைமான்
      பதியிலவ மான மாக்கிப்
பஞ்சலட் சணமெனுங் கசைகொண் டடித்துப்
      படிக்கனை முடுக்கி னோமே.       22
(*இவர் இக்கவியில் படிக்காசுப்புலவரை வசைக்கூறினர்)
      ~~~~~~~~~~~~~~~~~~~~~

படிக்காசுப்புலவர் பாடியவை.

*மழவரங்கன் என்னும் பிரபுவின்மீது பாடியது.
கொல்லத் தமிழ்க்கவி செலுத்திவாய் வீணபெற்ற
      கும்பனெனு மொரு தந்தியை
கொத்தியுண் டுமிழண்ட பேரண்ட மென்னவரு
      கூர்படிக் காச னோலை
வல்லச் சிவந்தெழும் பல்லவன் றன்கருணை
      மாரிபோ லேவ ழங்கும்
வாழ்வைக் கெடுக்கவரு தென்குடந் தைப்பதிக்
      கொள்ளிவாய்ப்பேய்க ளல்ல
புல்லத் துரைத்தன ரெனுபனி யிடையிலே
      புகுபரிதி நிக ரென்னவே
புகழ்கொண்ட லட்சுமண ரங்கமழ வேந்த்ரதுரை
      பூபனெதிர் கொண்டு காண்க
………. …………….. ………………. ……………..
      ……….. …………. …………..
என்பேரி லபசார முண் டுனைத் துதிசெய்ய
      எனைவர வழைத் திடுவையே.       23
     
*படிக்காசுப்புலவர் தன்னை வசைகூறிய கும்பனென்னுங் கவிராயனை தான் வசைகூறிப் பாடியது.
      ~~~~~~~~~~~~~~~~~

வாந்தைக்குடி மகாஜனத்தலைவர்மீது பாடியது.

தூளிபட வேவந்த கவிவாணர் கவியெலாஞ்
      சூறையிடு கவிரா க்ஷசன்
துஷ்டநிஷ் டூரகவி சுப்ரதீ பக்கவி
      துறைக்கெலாந் துள்ளு சேட்டு
வாளைகுதி பாய்கின்ற வாந்தைகுடி மேவிய
      மகாஜனத் தலைவ ருக்கு
மட்டுலவு சோலைக் களந்தைப் படிக்காசு
      வரவிட்ட விஞ்ஞா பனம்
காளமே கம்போல வசைபாட யாமுமிக்
      காசினியி லவதரித் தோம்
காளாககர் தோழனமேற் கவிதையும் மேலுமுள
      கவிதையு மறந்த திலையா
ஆளனு மிருக்கவே செய் தகரு மங்களுக்
      கழிவு தேடுதலாகு மோ
ஆகாத காரியம் போகாது வீணிலே
      யபகீர்த்தி நிலை நிற்குமே.       24
      ~~~~~~~~~~~

இரகுராத சேதுபதிமீது பாடியது.

விருதுகவி ராஜன் கவிச்சக்ர வர்த்திவாய்
      வீண்பேசு வார்கண் மிண்டன்
விஞ்ஞையர்கள் தம்பிரான் களந்தைப் படிக்காசு
      விவரமுட னெழுது மோலை
பொருதுபிர பந்தமதி லதிகவிரல் சேகரன்
      புகழ்செய்தவ வாய்கு மாரன்
பூச்சக்ர மன்னாபணி ரகுநாத சேதுபதி
      பூரித் தெழுந்து காண்க
பரிதிமதி யுள்ளளவு நிற்கும்ப்ர பந்தகவி
      பாடிநின் கீர்த்தி கேட்டுப்
பஞ்சலட் சணதமிழ்க் காணிக்கை யுங்கொண்டு
      பரிவாக வுனை நாடியே
இருபதின் காதவழி கடலேறி வந்தன
      னிருந்தமிழ்க் கொள்ள வேண்டி
இந்நேர மேநம்மை யிருகாத வழியளவு
      மெதிர்காண வரல் வேண்டுமே.       25
      ~~~~~~~~~~~~~~~~~

சீகாழி-அருணாசலக் கவிராயர் பாடியவை.

தென்குளத்தூர் முத்துத்தானப்பர்மீது பாடியது.
எத்திசையு மேபரவு அருணா சலமுனி
      யெதிர்த்தபா வலர் குடாரி
இராமா யணக்கவிதை நாடகஞ் செய்தவ
      னிலக்கண முணர்ந்த புலவன்
காழியரு ணாசலக் கவிராயன்
      முகில்வர விடுக்கு மோலை
முந்துபுகழ் தென்குளத் தூர்முத்து தானப்பன்
      முகமலர்ந் தினிது காண்க
வித்துவ சனங்களுக் காதார மாகியவர்
      வேண்டிய வெலா மக்கணம்
விரகுட னளித்தனை யெனக்கேட்டு நாமுமுனை
      மேவினோங் கவியெழுதி னோம்
உத்தம சிகாமணி நீயாத லாலிவிட
      மூற்றுபெரு மழைதொடரு முன்
ஓராயி ரங்கரும்பது வேண்டு நீமன
      துகந்துவர விடல் வேண்டுமே.       26
      ~~~~~~~~~~~~~~~~~

தேப்பெருமாள் வணிகாதிபன்மீது பாடியது.

கணிகொண்ட பஞ்சல க்ஷணமிரா மாயணக்
      கடலையு முணர்ந்த புலவன்
கவிராஜர் புகழ்கின்ற காழியரு ணாசலக்
      கவிராய னெழுது மோலை
மணிகொண்ட மார்பன்லிங் கப்பமகி பாலனுண்
      மகிழ்ந்தசுதன் வணிகா திபன்
வருசீர் படைத்ததேப் பெருமா ணரேந்திரன்
      மனமுவந் தினிது காண்க
அணிகொண்ட த்யாகேசர் வண்ணமுரை செய்தது
      மதற்கு வெகுமதி செய்ததும்
அதினமக் குபகார நீசெய்த தும்புவியி
      லறியாத பேரு முளரோ
பணிகொண்ட ராமகீர்த் தனையுமப் படியே
      பரிந்துநீ கேட்க வேண்டும்
பாரிலோ ராயிரம் பிறைகண்டு நீமகிழ்
      படைத்துவாழ்ந் திடுக வினிதே.       27
      ~~~~~~~~~~~~~

மணலி முத்துக்கிருஷ்ணன் மீது பாடியது.

சித்திதரு கிறவல்லி புத்திதரு கிறவல்லி
      ……….. வணங்கும் வல்லி
தில்லைநா யகவல்லி சிவகாம வல்லியிரு
      திருவிழிக் கருணை யாலே
சத்தியவா சகனென்று பூமண்ட லாதிபா்கள்
      தாமெங் கணும் துதிக்கும்
சகலபா ஷாநிபுண மணலிமுத் துக்கிருஷ்ண
      சதுரநீ வாழி கண்டாய்
நத்துமலர் குவளைநான் மதியம்நீ செஞ்சாலி
      நான்கருலி மழை மேகம்நீ
நளினம்நான் பருதிநீ பிள்ளைநான் அன்னைநீ
      நான் கவிஞன் வழுதி நீகாண்
சுத்தமுள ராமாயணந் தன்னைக் கொண்டுனது
      சுகமுமது பெற வருகிறேன்
சொற்பொரு ளறிந்தளவு சொல்லுவேன் கேட்கவே
      துணையாக வேணும் நீயே.       28
~~~~~~~~~~~~~~~~

சொக்கநாதப் புலவர் மகிபாலன் மங்கைநகராதிபன் மீது பாடியது.

எண்படா தெதிரிட்ட பாவலர்க் கிடியேறு
      நாவலோர் கனக மேரு
இந்திரன் பணிசுந்த ரேசரருள் சேர்சொக்க
      நாதனின் றெழுது மோலை
திண்படா மதியொத்த முகபடாந் தொடுகின்ற
      திரிகடா சலேசன் முத்துத்
திருவுடைய மகிபாலன் மங்கைநக ராதிபன்
      சிந்தையொ டெழுந்து காண்க
கண்படா வத்திரங் கொம்புகொள் ளாதகலை
      கழிபடாக் கோடி நஞ்சு
காணாத நாகமுட் டையாத வுடைபண்டு
      கட்டுப் படாக்க லிங்கம்
பண்படாக் கோசிக நெய்படா வாடைபறை
      கொட்டாத தானை முதுகு
பட்டிடாத் தூசொன்று மட்டிலா விலையிற்
      பரிந்துவர விடல் வேண்டுமே.       29
      ~~~~~~~~~~~~~~~~~

காளமேகப் புலவர் பாடியது.

தூதஞ்சு நாழிகையி லாறுநா ழிகைதனிற்
      சொற்சந்த மாலை சொல்லத்
துகளிலா வந்தாதி யேழுநா ழிகைதனிற்
      றொகைபட விரித் துரைக்கப்
பாதஞ்செய் மடல்கோவை பத்துநா ழிகைதனிற்
      பரணியொரு நாண் முழுதுமே
பாரகா வியமெலா மோரிரு தினத்திலே
      பகரக் கொடிக் கட்டினேன்
சீதஞ் செயுந்திங்கண் மரபினா னீடுபுகழ்
      செய்யதிரு மலைராயன் முன்
சீறுமா றென்றுமிக தாறுமா றுகள்சொற்
      றிருட்டுக் கவிப் புலவரைக்
காதங் கறுத்துச் சவுக்கிட் டடித்துக்
      கதுப்பிற் புடைத்து வெற்றிக்
கல்லணையி னொடுகொடிய கடிவாள மிட்டேறு
      கவிகாள மேக நானே.       30
      ~~~~~~~~~~~~~~~~~~~~

அந்தகக்கவி வீரராகவமுநலியார் சேலம் செழியன்மீது பாடியது.

ஏடா யிரங்கோடி வெழுதாம றன்மனத்
      தெழுதிப் படித்த விரகன்
இமசேது பரியந்த மெதிரிலா கவிவீர
      ராகவன் விடுக்கு மோலை
சேடாதி பன்சிர மசைத்திடும் புகழ்பெற்ற
      திரிபதகை குலசே கரன்
தென்பாலை சேலம் புரந்துதா கந்தீர்த்த
      செழியனெதிர் கொண்டு காண்க
பாடாத காதருவ மெரியாத கந்துகம்
      பற்றிச் சொலாத கோணம்
பறவாத கொக்கனற் பண்ணாத கோடைவெம்
      படையிற் றொடாத குந்தம்
சூடாத பாடலம் பூபாத மாவொடு
      தொடுத்து முடியாத சடிலம்
சொன்னசொற் சொல்லாத கிள்ளையொன் றெங்குந்
      துதிக்கவர விடல் வேண்டுமே.       31
      ~~~~~~~~~~~~~~~

மயிலை- அருணாசலக் கவிராயர் வேங்கடாசல வள்ளல் மீது பாடியது.

சிற்பரி நிரந்தரி துரந்தரி த்ரியம்பிகை
      ……… …………….. …………..
……………. ………… …………. பரிபூரணி
      திரு… ..ன்னி லணுகா……
………….. …………... ………. மாய்வந்த
      செல்விசிவ காம வல்லி
திருவடிக் கடிமைதிரு மயிலையரு ணாசலன்
      செங்கையா லெழுது மோலை
மற்புயா சைலனெழில் விற்பன விவேகனமட
      மா….மட லூரு மா….ன
வளர்கங்கை குலதிலகன் மதியூகி நிறைசெல்வ
      வளமைசெறி யாற்றூரி னான்
மருமலர்க் குவளையணி மார்பினான் றனைநம்பி
      வருபவர்க் கொரு சார்பினான்
மங்களா கரவிஜய வேங்கடா சலசுமுக
      வள்ளலெதிர் கொண்டு காண்க
சற்பனைக் காரர்துர்ப் போதனையி லென்றம்பி
      சாலவு மயங்கி நெஞ்சம்
சஞ்சலப் பட்டுளந் தடுமாறி வேறுமொரு
      சார்புமில் லாம லேங்கித்
தளர்வெய்தி வந்தவனை யஞ்சலஞ் சேலெனத்
      தயவுவைத் தன்று முதலாச்
சகலமுந் தந்தினிது செய்கின்ற செய்திகள்
      சமஸ்தமுங் கேட்டுகந் தோம்
சொப்பனத் திலுமுனை மறப்பதிலை யவனையொரு
      தொழிலில்வைத் தாளாக்கி முன்
தொந்தரையை நீக்கமிக வும்புனித னாக்கியுன்
      சொல்வழி நடப்ப தாக்கிச்
சோலியொன் றில்லாது கூழமுதொ டாகிலுஞ்
      சுகமே யிருக்க வைத்துத்
தொல்லுலகின் மாளாத செல்வமுந் தந்தெனது
      துதியுநீ பெறல் வேண்டுமே.       32
      ~~~~~~~~~~~~~~~~

சுப்பிரமணியக் கவிராயர் வீரபூபாலன் தனையன் வேங்கடரங்கன்மீது பாடியது.

மஞ்சரி கலம்பகங் கோவைநூ தனராக
      மாலைபத சந்த மாலை
மடலுலாப் பரணிபிள் ளைக்கவிதை முதலா
      வழுத்தும்ப்ர பந்த வாக்கி
மகுடமுடி மன்னர்சிர கரகம்பி தஞ்செயும்
      வசனவுசி தப்ர சங்கன்
வாதுபுரி விகடகவி மதகரிகு ழாங்கடமை
      வாய்வீ ரடக்கு சிங்கம்
சஞ்சரித முத்தமிழை யெங்குஞ் செலுத்திவரு
      தாஷ்டீக மான நிபுணன்
தண்டமி ழிலக்கண விலக்கியம தாம்பெரிய
      சலதிநிலை கண்ட வங்கம்
தணிகா சலக்குமரர் பாதமற வாதவன்
      சரசுவதி நடன சாலை
சரசகவி சோடசாவ தானிசுப் பிரமணியன்
      தான்மகிழ்ந் தனுப்பு மோலை
கஞ்சமலர் மாலைமுந் நூலிலகு திண்புயன்
      கருவேடு நகரா திபன்
கவிஞர்கற் பகமுத்த ராபதிப னாம்பிரக்
      கியாதிபழ மறை வேதியன்
காரைநிக ரானகொடை வீரபூ பாலனருள்
      காதல்சுத னான சுமுகன்
கங்கைநதி யாளன்வேங் கடரங்க மாலிது
      கருத்தினின் மகிழ்ந்து காண்க
விஞ்சுபுவி மீதிலுன் போலரஞ் சிதகுண
      விவகிவே றில்லை யென்றே
விரும்பிவெகு நாளாக வுனையடுத் தனனெனது
      வெறுமைநீங் கிடவு மினியோர்
வேளைதனி லென்றனவ றானமது தன்னையென்
      மீதிலன் பாக மகிழ்வாய்
வினவியிப் புவியிலுன் பேரிலக வின்னுமிகு
      மேன்மைசெய் திடல் வேண்டுமே.       33

சீட்டுக்கவி திரட்டு முற்றிற்று.
--------------------


This file was last updated on 12 Jan. 2023
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)