pm logo

சுத்தானந்த பாரதியார் எழுதிய
குண்டலகேசி அகவல்


kuNTAlakEci akaval by
yOki cuttAnanta pAratiyAr
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

சுத்தானந்த பாரதியார் எழுதிய
குண்டலகேசி அகவல்

Source:
"குண்டலகேசி அகவல்"
அடிகள் சுத்தானந்த பாரதியார்
செந்தமிழ்ச் சிலம்பு - 20
சித்திரபங்குனி மீ 1943
21 APR 1943
MADRAS

குண்டலகேசி அகவல் [*]
( சுத்தானந்த பாரதியார்)


[*] இந்நூல் விரைவில் திருத்தமாக அன்பு நிலையத்திலிருந்து வெளிவரும். ]

தமிழில் ஐம்பெருங்காப்பியம் இருப்பதாகப் பெருமை கொள்கிறோம். அவற்றுள் சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணி மேகலை ஆகிய மூன்றே உருப்படியாக உள்ளன. வளையாபதி, குண்டலகேசி ஆகிய இரண்டும் மறைந்தன. அவற்றினின்று சில செய்யுட்களே அங்குமிங்கும் நமக்குக் கிடைத்துள்ளன. வளையாபதியிலிருந்து 100 பாட்டுக் கிடைத்துள்ளன. குண்டல கேசி விருத்தங்களில் பத்தொன்பதே கிடைத்துள்ளன.

குண்டலகேசி சூளாமணிபோன்ற இனிய மாகவி. அதை வீரசோழியம் "அகல கவி" என்னும். அது பௌத்த சமயச் சார்பானது. அறம் பொருள் இன்பம் வீடு ஆகிய நாற்பொருளை யும் விளக்குவது. நீலகேசியில் இக் காவியக் குறிப்புகள் உள் ளன. அவற்றால் ஒருவாறு கதையை ஊகிக்க முடிகிறது. நீண்டகாலம் இதன் காப்புச்செய்யுளே நமக்கு மிச்சமிருந்தது. அண்மையில் புலவர் ஆராய்ச்சியால் பதினெட்டுச் செய்யுட்கள் கிடைத்தன.

அவற்றுள் இரண்டை இங்கே தருகிறேன். காவியத்தின் சுவையைப் பாருங்கள்.

முன்றான், பெருமைக்கண் நின்றான் ; முடிவெய்து காறு
நன்றே நினைந்தான்; குணமே மொழிந்தான்; தனக்கென்று
ஒன்றேனு மில்லான் ; பிறர்க்கே உறுதிக் குழந்தான்;
அன்றே இறைவன்; அவன்றாள் சரணங்க ளன்றே.

இறைவன் என வணங்கத்தக்கவன் பெருமைகளையும் தன்மை களையும் இச் செய்யுள் விளக்குகிறது. இறுதிமட்டும் நலமே புரிதல், நலமே நினைத்தல், எல்லாருக்கும் இனிதாகும் நற்குணங் களையே மொழிதல், தனக்கென்று எதுவும் இல்லாமை, அகப் புறப்பற்றின்மை, பிறர் நலத்திற்கே பாடுபடுதல், ஆகியவையே இறைவன் அருட்பெருமையாகும். அப் பெருமை சான்ற முதல் வனைச் சரண்புகுந்து வணங்கும் மாந்தர் அறநெறி நின்று அரு ளோங்கி நலம்பெறுவார்கள். இது காப்புச் செய்யுள்.

பாளையாந் தன்மை செத்தும், பாலனாந் தன்மை செத்தும்,
காளையார் தன்மை செத்தும், காமுறும் இளமை செத்தும்
மீளுமிவ் வியல்பும் இன்னே மேல்வரு மூப்பு மாகி,
நாளுநாம் சாகின் றேமால் நமக்குநாம் அழாத தேனோ?

மனிதன் ஒவ்வொரு பருவத்திலும் செத்து முதிர்ந்து, ஒவ்வொரு நாளும் சாகிறான். உடலின் நிலையாமை அவ்வாறிருப்பதால், பிறர் சாகும்போது அழுவதினும்,நாமே தினஞ் சாவதைக் கண்டு வருந்தி முத்திமார்க்கத்தை அடைவது நலம்.

இக் கருத்துக்களையே பொருளாகக் கொண்ட இக் கவியிற் பொதிந்த கதையை அகவலாகச் சுருக்கிச் சொல்லுகிறேன். குண்டலகேசி என்னும் பெயரால் சில தொடர்பான கதைவரிக ளாவது விளங்கவேண்டும். அந்தப் பெயர் காலச் சுழலில் மறைந்து போகக் கூடாது என்பதே இம் முயற்சியின் கருத்து.

குண்டலகேசி

1.
கனிவார் முகமுங், கருணை விழியும்,
அருளார் மனமும், அன்புச் சொல்லும்,
பிறர்க்கே வாழும் பெருந்தகை வாழ்வும்,
அறமார் பணியும், அணிந்த பகவன்,
மாசறு காட்சி மன்னன்,
சேவடிக் கமலஞ் சிந்தைசெய் வோமே!

2.
அவனருட் பெருமை அறியச் சொல்லும்,
பழந்தமிழ்ப் புலவர் பாடிய குண்டல
கேசி யென்னும் தேசுறு மாகதை,
ஐம்பெருங் காப்பிய மதனுளே ஒன்றாம்.       10
ஆயினும்,
பெயரள வினிலே உயிர்வைத் துள்ளது.
சூளா மணிபோற் சொறசுவை மிக்கதாம்
அகலக் காவியம்' அதிற்பத் தொன்பதே
பாட்டு நமக்குப் பாக்கி யுள்ளது.
கவிதை போயினும் கதையினை யேனும்
தமிழர் அறியச் சாற்றிடு வேனே.

3.
சீர்த்தி யோங்குந் திருநக ரதிலே,
கல்வியும் வாணிபச் செல்வமுஞ் செழித்து
வாழ்ந்தான் இசைபெறு வாணிக மணியே.       20
அன்னவன் பெற்ற மின்னிடை யன்னம்,
மதிவளர் முகத்தாள், மலர்தரு விழியாள்,
அமுதம் பொழியுங் குமுத வாயாள்,
புயலும் புகையும் போலச் சுருண்ட
கூந்த லழகி, குண்டல கேசி
என்னும் [$]பத்திரை, பதுமினி
சித்திரத் தெழுதொணாத் திருவுடை மாதே...
---
[$] பத்திரை என்பதே அவள் இயற்பெயர்.

4.
பருவ மடைந்த திருமா தொருநாள்,
கொஞ்சுங் கிளிபோற் கூவுங் குயில்போல்,
தோகை மயில்போல் தோழிய ருடனே       30
மாடத் தின்மேல் ஆடித் திரிந்தாள்.

5.
அத்ததி தெருவில் அரசன் காவலர்,
திருட னொருவனைச் சிறைப்பிடித் தேகினர் ;
பார்த்தாள் பெண்மணி பதைப தைத்தாள்;
எழிலார் வாலிபன், இளந்திரு வுடையான்,
என்மனம் விரும்பு மன்மதன் இவனே ;
இவனோ கள்வன்...இவனென் காதலன்!"
என்று திகைத்து நின்றா ளாங்கே!
காளன் என்னும் காளையக் கள்வன்
அரசருக் கினிய அமைச்சன் புதல்வன்.       40
பெளத்த சமயம் புகுந்தும் பயின்றும்,
அடங்கா மனத்தால் அறம்பி ழைத்தான்
சிறையிட் டிவனைச் சிரம்வாங் கிடவே
வேந்தன் பணித்தான்வினைப்பய னென்னே!
கோவின் காவலர் கொண்டுசென் றாரே.

6.
காத லாலே கலங்கிய, நங்கை,
உடல்வெளுத்தாள், உள்ளஞ் சோர்ந்தாள்,
துவலமாட்டாத நோய்கொண் டயர்ந்தாள்.
கண்ணைக் கவர்ந்த கள்வனைத் தவிர
வேறு நினைப்பெலாம் வீணென மறந்தாள்.       50
காதலன் விடுதலை காண வேண்டிப்
போதி நாதனைப் பூசனை செய்தாள்.
பெற்றார் திருமணம் பேசும் போதெலாம்,
"மனத்திற் கிசைந்த மணாளன் ஒருவனே,
அவனை யன்றி யெவனையும் பாரேன் "
என்றுதன் உள்ளம் நன்றெடுத் துரைத்தாள்.

7.
மந்திரி முயன்றான் ; மாசறு தந்தையும்,
அரசனை வேண்டினான் ; ஆண்டவன் கருணையால்,
காளன் விடுதலை கண்டான்...கண்டு
கன்னி மகிழ்ந்தாள்.. கடிமணம் புரிந்தாள்.       60
செல்வம் பெருகிய செட்டி மகிழ்ந்தே,
எனதிளஞ் செல்வர் இனிதுவாழ் கென்றே
இல்லந் தந்தான் செல்வந் தந்தான்.
கவலை யற்றுக் காதலர் நாளும்
புதுப்புது போகம் புசித்தனர் ஆங்கே.
உலகை மறந்தார், உடலுக் கினிய
சுகமே சுகமெனச் சொக்கிப் போனார்.
இருவரும் அன்பால் ஒருவரே யானார்.
கணப்பொழு தேனும் இணைபிரி யாமல்,
கரையிலாக் காமக் கடலிற் குளித்தார்.       70

8.
துய்த்துக் காமந் துடைப்போ மென்னல்,
அனலை நெய்யால் அணைப்பது போலாம்.
நினைவறப் புணர்ந்ததை நீக்குவோ மென்பார்,
புனலாற் புனலின் போக்கணைப் பவரே.
வேல்விழி தாக்கத் தோல்வியற் றிணங்கிக்
காமத் தீயில் வேமிம் மாந்தர்,
எத்தனை போகம் துய்த்து மென்னே...!
அவர் நுக ரின்பம் அரைநொடி யின்பமே;
நில்லா யாக்கை நிகரவே யதன்பால்,
ஊறுங் காமமும் வேறுபா டுறுமே...       80
மாந்தர் ஆசை மண்டல மதனில்,
விருப்பும் வெறுப்பும், விழைவுஞ் சோர்வும
இனிப்புங் கசப்பும், எரிப்புங் குளிரும்,
அலைகளைப் போலே ஆடிப் புரளும்.
இன்று நே சித்தவர் இன்னொரு நாளே,
கொடும்பகை கொதிக்குங் கூற்றா வாரே...

9.
கேசியுங் காளனு நேசித் திருந்த
வாழ்விற் கலக்கம் வந்ததும் விந்தையோ?
கூடலே யுவந்து நீடிய காதல்,
கூடல் சுருங்கி ஊடல் பெருகவே,       90
ஊடலி னுடே உரைகள் வளரவே,
உரைக ளுடனே குறைகள் கூறவே,
பேச்சுத் தடிக்கவே, பெண்ணணங் கொருநாள்,
"ஒழுக்க மென்னும் உயர்நல முடைய,
செல்வன் அருமைச் செல்வி யானே.
நீயோ ஒழுக்க நிலைகெட் டலைந்து,
கடுஞ்சிறை வருந்திய கள்வனென் றாளே.
நானுன் கணவன் நீயென் மனைவி
என்னையா கள்வன் என்றனை ... பெண்ணே
பாதகீ உன்னைப் பழிவாங் குகிறேன்.       100
என்றுட் சினத்தால் எரிமனக் காளன்,
போலிச் சிரிப்பாற் பொழுதைப் போக்கிக்
காலம் பார்த்துக் கண்விழித் தானே.

10.
உட்பகை கொண்ட வுறவெத் தனைநாள்!
உதட்டு நேயமும், உட்சின முறுவலும்,
புழுவுளே துளைத்த பழமெனப் போமே.
காளன் ஒருநாள் "கனியிளம் பாவாய்,
செல்வச் சீமான் செல்விநீ யின்றுன்
அணிமணி வரிசையாய் அணிந்து மற்றோர்
அரம்பைபோல் என்னுடன் அழகாய் வா, வா,'       110
என்றனன் ஆங்கே சென்றனள் பேதை...
காளனும் சரிகை கட்டித் தன்னை
மாரவேள் போலவள் மதித்திட நின்றான்.
குண்டல கேசியிள கோமள வனப்பைக்
கண்டு கள்ளக் கனிநகை பூத்து.
"கண்ணே, அழகுக் கரும்பே, உத்தமப்
பெண்ணே, எனது பெருமட மானே,
துயர்ச்சிறை நீங்கித் தூக்கு மேடையைத்
தப்பினேன் போதி யப்பன் அருளால்...
ஆதலால் இன்றே அவனை வணங்கிப்       120
படையல் வைக்கப் பருவதச் சிகரம்
ஏறிச் செல்வோம்; என்னுடன் வா"வெனக்
கூட்டிச் சென்றான், குலமகள் சென்றாள்.

11.
மலைமுடி மேலே, மணாளர் சென்றதும்,
சிலைபோற் சற்றே சிந்தனை செய்து,
காதலன் முகத்திற் கடுமை காட்டி,
"கள்ளீ நீயெனைக் கள்வன் என்றாய்...;
ஆம்யான் கள்வன்; அழகுச் செருக்கீ...
மண்டைக் கருவங் கொண்ட பேதையே,
கள்வன் இன்றுனைக் கொள்ளை யடித்துக்       130
கொல்லப் போகிறான் கொடுமனக் கசடீ!
என்றான்.
தீப்பொரி பறக்குஞ் சினக்கண் உருட்டி
நிற்குங் கணவனைப் பொற்கொடி பார்த்தான்
சற்றே கலங்கிச் சங்கடப் பட்டாள்;
பிறகுதன் னுள்ளே பேசிக் கொண்டே,
"கணவனைப் பணிதலே கற்பிற் கழகாம்.
தேவரீர் செய்க திருவளம்...ஆனால்
என்னைக் கொல்லுமுன், இன்னிய கணவரே,
தம்மை மூன்று தடவை சுற்றி       140
வணங்கி நிற்கும் வாந்தா வேண்டும்"
என்றலுங் கள்வன் இணங்கினான்; அந்தக்
கள்ளியும் வலம்வரக் காட்டி அவனைத்
தந்திர மாகத் தள்ளினாள்.அந்தோ!
"புத்தா சரணம்... போதி நாதா...
வஞ்சனை செய்ய வந்தேன்; என்னை,
வஞ்ச நினைவே வதைத்தது. செய்த
தீவினை யுண்டது தீப்பயன்! என்னை
மன்னித் துனது மலாடி சேர்ப்பாய்''
என்று காளன் இறைவனை நினைந்தே       150
இருட்கண வாயில் உருண்டு விழுந்தான்...
வெருவுறு பாழின் இருள்படர்ந் ததுவே!

12.
''தற்கொல் லியினை முற்கொன் றேன் '' என
ஒருநொடி நகைத்தாள்... மறுநொடி "அந்தோ
கணவனைக் கொன்ற கள்ளியா னேனே!
என்ன தீவினை யியற்றி முடித்தேன்!...
இந்த வினைப்பழி விடுமோ... தெய்வமே...
என்ன செய்வேன். எனது நாதரே.
நானும் உம்முடன் ஏனிக் கணத்தில்
விழுந்துசா காமல் கழுந்துபோ லிருக்கிறேன்?       160
என்று கண்ணீர் இறைத்து நின்றாள்...
பிறகிவ் வுலகிற் பிறந்த பயனை
அடைந்தே சாதல் அழகெனக் கொண்டாள்.
"பிறந்தவ ரெல்லாம் இறந்து வினையாற்
பிறந்து பிறந்துயிர் துறந்துமண் ணாவார்.
சுற்றும் உலகில், சூழும் இயற்கையில்,
கற்றும் கேட்டும் கண்டும் பெற்ற
பொருளிற் செல்வ போக மதனில்...
எதுவே நிலையாம்? எல்லாம் ஓட்டம்
இன்றுளார் நாளை யில்லையென் றாவார்...       170
குழந்தை யிறந்து குமரி யாகிக்
குமரி யிறந்து குலமக ளாகிக்
குலமகள் தாயாய்க் குலச்சுமை தாங்கித்
தாயும் பாட்டியாய்த் தளர்ந்து, தளர்ந்து
புதைகுழிக் கிரையாய்ப் போய்மண் ணாவதே
உடலின் கதையாம்...உயிரின் கதையோ.
மனத்தி லடைந்த மாசுக ளெல்லாம்,
பற்றாய்ப் பெருகிப் பந்த தொந்த
விகாரமாய் வளர்ந்து, வெவ்வினை பெருகி,
சித்தமும் புத்தியுஞ் சிதைந்து கெட்டு,       180
மோகங் கொண்டு, மூட மதியால்,
ஆவியும் விடுதலை யடைந்தி டாமல்,
மீண்டும் கருமம் வேண்டும் பலனை
அனுபவித் தனுபவித் தயர்வதை எண்ணின்,
ஆஆ... துன்பம்...ஆ ஆ. பிறவி!
வேதனை தப்பி விடுதலை பெறவே,
உடலையும் உலகையும் உள்ளே துறந்து,
அருளார் வாழ்வை அடைந்த சீலரே...
உயர்ந்த முத்தர், உற்றவர் வழியில்
செல்வேன் இந்தச் சென்மத் தொல்லையைக்       190

கொல்வேன்" என்று குண்டல கேசி
ஆரியாங் கனைகள் அருகனை வணங்கும்
தவமடஞ் சேர்ந்துபின் சத்துவ போதராம்,
புத்தர் சேவடி புகலெனப் புகுந்தாள்.
புத்த பிக்குணி, புனித விரதையாய்க்
கலக்க மற்ற மனதைக் காத்துப்
புலன்களை யடக்கிப் புத்தியை வென்று,
வாழ்வை யெல்லாம் வன்றவ மாக்கினாள்.
வெயிலுடன் மழையும் வெப்புடன் குளிரும்,
பசியும் விருந்தும், பழிப்பும் புகழும்,       200
சமமெனத் தாங்கித் தன்னூண் சுருக்கி
காற்றையே நோக்குங் கப்பலைப் போலே,
உயிரைச் சார்ந்த உடலைப் போலே,
சுத்த சித்தனாம் புத்த தேவனின்
அருளையே சார்ந்து மருளை விலக்கினாள்.
தீக்காய் வோர்புகைத் தீதை நோக்கார்;
நோயர் மருந்தின் கசப்பை நோக்கார்,
வன்றவம் புரிவோர் வருத்தமே நோக்கார்;
நல்ல தாகு நலமே நோக்கார்;
தீய தாகுந் தீமையே நோக்கார்.       210
கலந்தீ தற்ற பொலங்கொள் சமதை
காக்குந் தூயர் கனலுறத் தவஞ்செய்
சங்க மெய்திய நங்கை கேசி
வினையினி யென்றும் விளையா வாறே
ஆசா பாச மறுந்துக நோற்று,
மாசறு மனமும், தேசுறு ஞானமும்,
பெற்றாள்; புத்த பிரானையுங் காணப்
பெற்றாள் பிறப்பின் பெரும்பயன் யாவும்
பெற்றாள் இனிமேற் பிறவாப் பெருமையே....
பிறவாப் பெருமையிற் பெருமையு முளதோ.
..
குண்டலகேசி அகவல் முற்றும்.
------------------------

PM919: vaLaiyApati akaval by Suddhanantha Bharathi:
யோகி ஸ்ரீ சுத்தானந்த பாரதியார் எழுதிய வளையாபதி அகவல்

This file was last updated on 28 Jan 2023.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)