ஔவையாரின் “விநாயகர் அகவல்”
த. ச. மீனாட்சிசுந்தரம் பிள்ளை உரையுடன்
vinAyakar akaval of auvaiyAr
with minATcicuntaram piLLai urai
In Tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2023.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
ஔவையாரின் “விநாயகர் அகவல்”
த. ச. மீனாட்சிசுந்தரம் பிள்ளை உரையுடன்
Source:
விநாயகர் அகவல்.
(மூலமும் உரையும்.)
திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனத்து 21-வது குருமகா சந்நிதானம்
ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணியதேசிக சுவாமிகள் கட்டளையிட்டருளியபடி
அவ்வாதீன வித்வான் த. ச. மீனாட்சிசுந்தரம்பிள்ளையால் பரிசோதித்து
எழுதப்பட்ட பதவுரையுடன் அச்சிடப்பெற்றது.
ஸ்ரீ வெங்கடேஸ்வர் பிரஸ், கும்பகோணம்
விநாயகசதுர்த்தி - கர ௵ ஆவணி ௴ 20 ௳
1951.
------------------
ஒளவையார் அருளிச்செய்த
விநாயகர் அகவல் (பதவுரையுடன் )
கணபதி துணை.
சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகி லாடையும்
வன்ன மருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் 5
வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமு மங்குச் பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீலமேனியும்
நான்ற வாயு நாலிரு புயமும்
மூன்று கண்ணு மும்மதச் சுவடும் 10
இரண்டு செவியு மிலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதங் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புத நின்ற கற்பகக் களிறே!
முப்பழ நுகரு மூடிக வாகன! 15
இப்பொழு தென்னை யாட்கொள வேண்டித்
தாயா யெனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்க மறுத்துத்
திருந்திய முதலைந் தெழுத்துந் தெளிவாப்
பொருந்தவே வந்தென் னுளந்தனிற் புகுந்து 20
குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திரமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தாற் கொடுவினை களைந்தே
உவட்டா வுபதேசம் புகட்டியென் செவியில் 25
தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி
ஐம்புலன் றன்னை யடக்கு முபாயம்
இன்புறு கருணையி னினிதெனக் கருளிக்
கருவிக ளொடுங்குங் கருத்தினை யறிவித்
திருவினை தன்னை யறுத்திருள் கடிந்து 30
தலமொரு நான்குந் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்க மறுத்தே
ஒன்பது வாயி லொருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை யடைப்பதுங் காட்டி
ஆறா தாரத் தங்குச நிலையும் 35
பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
இடைபிங் கலையி னெழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமுங் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பி னாவி லுணர்த்திக் 40
குண்டலி யதனிற் கூடிய வசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட வுரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலா லெழுப்புங் கருத்தறி வித்தே
அமுத நிலையு மாதித்த னியக்கமும் 45
குமுத சகாயன் குணத்தையுங் கூறி
இடைச்சக் கரத்தி னீரெட்டு நிலையும்
உடற்சக் கரத்தி னுறுப்பையுங் காட்டிச்
சண்முக தூலமுஞ் சதுர்முக சூக்கமும்
எண்முக மாக வினிதெனக் கருளிப் 50
புரியட்ட காயம் புலப்பட வெனக்குத்
தெரியெட்டு நிலையுந் தெரிசனப் படுத்திக்
கருத்தினிற் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி யினிதெனக் கருளி
என்னை யறிவித் தெனக்கருள் செய்து 55
முன்னை வீனையின் முதலைக் களைந்து
வாக்கு மனமு மில்லா மனோலயம்
தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்
திருள்வெளி யிரண்டுக் கொன்றிட மென்ன
அருடரு மானந்தத் தழுத்தியென் செவியில் 60
எல்லை யில்லா வானந்த மளித்து
அல்லல் களைந்தே யருள்வழி காட்டிச்
சத்தத்தி னுள்ளே சதாசிவங் காட்டிச்
சித்தத்தி னுள்ளே சிவலிங்கங் காட்டி
அணுவிற்கணுவா யப்பாலுக் கப்பாலாய்க் 65
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமு நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தி னரும்பொரு டன்னை
நெஞ்சக் கருத்தி னிலையறி வித்துத் 71
தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே.
-------------
த. ச. மீனாட்சிசுந்தரம்பிள்ளையால் எழுதப்பட்ட பதவுரை
1 - 5: சீதம் - குளிர்ச்சி பொருந்திய. களபம் - கலவைச் சாந்து பூசிய. செந்தாமரை - செந்தாமரை மலர்போலும். பூ பாதம் - அழகிய திருவடிகளில் அணிந்த, சிலம்பு - சதங்கையென்னும் அணிகலம். பல இசை - பலவிதமான இசைப்பாட்டுகளைப்போல. பாட - ஒலிசெய்ய. பொன்- பொன்னாற் செய்யப்பட்ட, அரைஞாணும்-அரைஞாண் என்னும் ஆபரணமும். பூதுகில் ஆடையும் - பூவேலை செய்யப்பட்ட மெல்லிய ஆடையும். வன்னம் -- அழகிய, மருங்கில் -இடையிலே. வளர்ந்து — மேலும்மேலும் அதிகரித்து, அழகு எறிப்ப - அழகைவீச, பேழை வயிறும் - பெருமைபொருந்திய உதரமும். பெரும்பாரம் கோடும் - பெரிய வலிய சுமையையுடைய தந்தங்களும்,
6-10 : வேழமுகமும் - யானை முகமும், விளங்கு - பிரகாசிக்கின்ற, சிந்தூரமும் - சிந்தூரப்பொட்டும். அஞ்சு கரமும் - நான்கு திருக்கரங்களும் தும்பிக்கை ஒன்றும் ஆகிய ஐந்து கைகளும். அங்குச பாசமும் - யானையை ஓட்டும் தோட்டி என்னும் ஆயுதமும், கயிறும், நெஞ்சில்- மனத்தை. குடிகொண்ட- இருப்பிடமாகக்கொண்டு விளங்கிய, நீல மேனியும் - நீல நிறத்தையுடைய திருமேனியும், நான்றவாயும் - தொங்கினவாயும். நால் இருபுயமும் - எட்டுத்தோள்களும். மூன்று கண்ணும் - சூரியன் சந்திரன் அக்கினியாகிய மூன்று கண்களும், மும்மதம் சுவடும் - கன்ன மதம், கபோல மதம், கோச மதம் ஆகிய மூன்று மதங்கள் பொழிவதனாலுண்டாகிய தழும்பும். மும்மதத்தின் வகையாகிய ஒருமதமும் இரு மதங்களும் மும்மதம் என வழங்கப்படும்.
----
11 - 15: இரண்டு செவியும் - இரண்டு பெரிய காதுகளும். இலங்கு - விளங்குகின்ற. பொன் - பொன்னாற் செய்யப்பட்ட முடியும் - கிரீடமும், திரண்ட - முறுக்கி விட்ட, முப்புரிநூல் - மூன்று புரிகளோடுகூடிய பூணுநூலானது. திகழ் - விளங்கும். ஒளி மார்பும் - ஒளியை வீசுகின்ற திருமார்பும். சொல் - சொல்லப்படுகின்ற. பதம் - ஆறு ஆதாரங்களையும். கடந்த - தாண்டி அப்பால் உள்ள, துரிய - துரிய நிலையின்கண், மெய்ஞ்ஞான -உண்மை ஞானத்தோடு கூடிய, அற்புதம் நின்ற - ஆச்சரியப்படத்தக்க. கற்பகக் களிறே - கற்பகம் போன்று வரையாமல் அடியார்களுக்கு வேண்டும் வரங்களையளித்து வாழ்விக்கும் யானைமுகக் கடவுளே, கற்பக விநாயக மூர்த்தியே என்றபடி. முப்பழம் நுகரும் - வாழை, மா, பலா ஆகிய முப்பழங்களையும் நுங்குகின்ற. மூடிக வாகன - பெருச்சாளியாகிய ஊர்தியையுடையவரே.
----------
16 -20 : இப்பொழுது - இத்தருணத்து. என்னை - ஒன்றுக்கும் பற்றாத எளியேனையும். ஆட்கொள - அடிமை யாகக்கொண்டருள. வேண்டி - விரும்பி. எனக்கு தாயாய் தான் எழுந்தருளி - அன்பு மிகுதிகாட்டி ஆதரித்தலில் எனக்குத் தாய்போன்று கருணைகாட்டித் தானே எழுந்தருளிவந்து. மாயா - அழியாத (நீங்காத).பிறவி மயக்கம் - பிறப்பிறப்புக்களிற்பட்டுச் சுழலும் சுழற் சியை. அறுத்து - கெடுத்து, திருந்திய - செம்மையான. முதல் - முற்பட்ட மந்திரமாகிய ஐந்தெழுத்தும் - திருவைந்தெழுத்தையும். தெளிவாய் பொருந்த- ஐயந்திரிபு மயக்கம் இல்லாமல் பொருந்துமாறு. வந்து என் உளந்தனில் புகுந்து - யான் யாதொரு முயற்சியும் செய்யாமலிருக்கத்தானே வலியவந்து என்னுடைய மனத்திலே தியானப்பொருளாக எழுந்தருளி
---------
21 -25: குரு வடிவு ஆகி - ஆசாரியமூர்த்தமும் ஆக வெளிப் பட்டு வந்து. குவலயம் தன்னில் - இப்பூமியிலே. திருவடிவைத்து அடியேனுடைய புலைத் தலையிலே திருவடிமலர்களைச்சூட்டித் தீட்சைசெய்து. திரம் இது பொருள் என - நிலையுள்ள பொருள் இதுவே என்று. வாடா வகை - பிறப்பிறப்பிற்பட்டு யான் வருந்தாத வண்ணம். மகிழ்ந்து எனக்கு அருளி - மகிழ்வுடன் அடியேனுக்கு அருளைச்செய்து, கோடு ஆயுதத்தால் - தமது கொம்பாகிய ஆயுதத்தினாலே. கொடுவினை களைந்து - கொடுமையாகிய வினைகளையெல்லாம் அடியோடு அகழ்ந்து போக்கி. உவட்டாத - தெவிட்டாத. உபதேசம் - உபதேசப்பொருளை, என் செவியில் புகட்டி - எளியேனுடைய செவியிலே சிறக்கக்கொள்ளுமாறு உபதேசித்தருளி.
------------
26 30 : தெவிட்டாத - தேக்கெடுக்காத, ஞானத் தெளிவையும் காட்டி - ஞானத்தின் பிழிவையும் அனுபவத்திலே காணச்செய்து. ஐம்புலன் தன்னை - மெய், வாய், கண், மூக்குச், செவி யென்னும் பஞ்சேந்திரியங்களையும் விஷயங்களில் செல்லாதபடி. அடக்கும் உபாயம் - தடை செய்யும் உபாயத்தையும். இன்பம் உறு கருணையின் - இன்பத்தை அடைவதற்கு ஏதுவாகிய கருணையோடு. இனிது எனக்கு அருளி - இனிமையாக எனக்குத்தெரிவித்து. கருவிகள் - தத்துவங்கள். ஒடுங்கும் - லயித்தலைச்செய்யும். கருத்தினை அறிவித்து - கருத்தையும் தெளிவுபடுத்தி. இருவினை தன்னை அறுத்து நல்வினை தீவினை எனப்படும் தொடரையும் வெட்டிவிட்டு. இருள் கடிந்து - ஆணவமாகிய இருண் மலத்தையும் வலிகெடச் செய்து.
------------
31 - 35 : தலம் ஒரு நான்கும் தந்து எனக்கு அருளி- சாலோக சாமீப, சாரூப, சாயுச்சியம் என்னும் ஒப்பற்ற நான்கு தலங்களையும் முறையாக எனக்குத் தந்து. மலம் ஒரு மூன்றின் மயக்கம் அறுத்து - ஆணவம், கன்மம் மாயை என்னும் மும்மலங்களால் உளவாகும் மயக்கைப் போக்கி. ஒன்பது வாயில் - ஒன்பது வாசல்களையும். ஒரு மந்திரத்தால் - ஒப்பற்ற உபதேச மந்திரப்பொருளாகிய தாழ்க் கோலைக்கொண்டு. ஐம்புலக் கதவை - ஐந்து புலங்களாகிய கதவுகளை. அடைப்பதும் காட்டி- மூடுவதையும் அறிவித்து. ஆறு ஆதாரத்து - மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி ஆஞ்ஞை என்னும் ஆறு ஆதாரங்களின் மேலாகவுள்ள, அங்குச நிலையும் - அப்பால் உயர்ந்த நிலையையும்.
36 40 : பேறா நிறுத்தி - அடையும் முழுப் பயனாக நிலை பெறச் செய்து. இதனையே -
"ஆறாறையு நீத்ததன் மேனிலையைப்
பேறாவடியேன் பெறுமாறுளதோ" -
-- என்றார் அருணகிரிநாதரும்.
பேச்சுரை அறுத்து - மோன நிலையிலிருத்தி.
பேச்சு உரை அறுத்து என்பது:-
"குறியைக்குறியாதுகுறித்தறியும்
நெறியைத் தனிவேலைநிகழ்த்திடலும்
செறிவுற்றுலகோடுரை சிந்தையுமற்
றறிவற் றறியாமையு மற்றதுவே' எனவும்,
"......... .......... நினதன் பருளால்
ஆசாநிகளந்துகளாயினபின்
பேசாவ நுபூதி பிறந்ததுவே" எனவும்,
"....... ..... ....
சும்மாவிரு சொல்லற வென்றலுமே
அம்மா பொருளொன்று மறிந்திலனே'' எனவும்,
ஸ்ரீ அருணகிரிநாதர் கந்தரநுபூதியிற்கூறியவைகள் இங்கு சிந்திக்கற் பாலன. இனி, இதன் விரிவெல்லாம் குரு வருளால் சித்தாந்தச் செந்நெறி பற்றிச் சிந்தித்துணர்க் சித்தாந்த நூல்களான திருவுந்தியார் திருக்களிற்றுப் படியார் முதலிய அனுபவ நூல்களையும் ஆராய்ந்து
தெளிக.
இடைபிங்கலையின் - இடகலை பிங்கலைகளின். எழுத்து அறிவித்து - இலக்கணத்தை அறியுமாறு செய்து. கடை யில் - இறுதியிலே. சுழுமுனை - சுழுமுனை நாடியோடு தொடர்புடைய. கபாலமும் காட்டி- சிதாகாயத்தையும் அறிவித்து. மூன்று மண்டலத்தின் - அக்கினி மண்டலம், சூரிய மண்டலம், சந்திர மண்டலம் ஆகிய மூன்று மண்டலங்களிலும். முட்டிய தூணின் பொருந்த நிறுத்தப்பட்ட தூணைப்போன்று. நான்று எழு பாம்பின் - தூங்கி எழுகின்ற பாம்பின். நாவில் உணர்த்தி அந்தக் குண்டலி சுழுமுனை வாயிலை விட்டு விலகச்செய்து என்ற படி. "சொல்லிலும் பாசச்சுடர்ப்பாம்பு நீங்கிடும்" என்றமையுங் காண்க. குண்டலிசத்தியை அடையின் அச் சத்தியின் உபகாரத்தால் மூலாதாரத்தினின்றும் ஆறா தாரமும் கடந்து மதியமுதமுண்டு அசைவற் பேரொளி தரிசனம் கண்டு உய்யலாம். அகண்டாகார அன்னையாகிய பராசத்தியை அடையின் சுத்தாத்து விதநிலைபெற்றுய்யலாம் என்க.
'...கண்ணக னிலத்துநா னுள்ளபொழு தேயருட்
ககனவட் டத்தினின்று
காலூன்றி நின்றுபொழி யானந்த முகிலொடு
கலந்துமதி யவசமுறவே
பண்ணுவது நன்மையிந் நிலைபதியு மட்டுமே
பதியா யிருந்ததேகப்
பவுரிகுலை யாமலே கவுரிகுண் டலியாயி
பண்ணவிதனருளினாலே
விண்ணிலவு மதியமுத மொழியாது பொழியவே
வேண்டுவே னுமதடிமை நான்...
எனவும்,
"மருமலர்ச் சோலைசெறி நன்னீழல் மலையாதி
மன்னுமுனி வர்க்கேவலாய்
மந்த்ரமா லிகைசொலும் இயமநிய மாதியா
மார்க்கத்தில் நின்றுகொண்டு
கருமருவு காயத்தை நிர்மலம தாகவே
கமலாச னாதிசேர்த்துக்
காலைப் பிடித்தனலை யம்மைக்குண் டலியடிக்
கலைமதியி னூடு தாக்கி
உருகிவரு மமிர்தத்தை யுண்டுண் டுறங்காமல்
உணர்வான விழியை நாடி
ஒன்றோ டிரண்டெனாச் சமரச செரூபசுக
முற்றிடவென் மனதின் வண்ணம்
திருவருண் முடிக்கவித் தேகமொடு காண்பனோ.....
எனவும் யாண்டும் ஸ்ரீ தாயுமானவ சுவாமிகள் அருளுகின்றமை கருதத்தக்கது.
"மூலநிலத்திலதோமுகமாய்முகிழ்த்துவிழியின்பொடு துயிலும், மூரிப்பாம்பைக் காலனலை மூட்டியெழுப்பி நிலமாறும், சீலமொடும்போய்த் தரிசித்துச் செழுமா மதியின் அமுதக்கடறேக்கி''
என்பது திருப்போரூர்ச்சந்நிதி முறை.
மனிதப்பிறப்பை எடுத்ததனால் அடையவேண்டிய முக்கியமாகிய பிரயோசனம் திருவருளை அனுபவித்தல். அது கிட்டாதவழி அத்திருவருளை அடைவதற்கு ஏதுவாகிய யோகத்தினை அடைதல். அடயோகம் முதலியன தீமையை விளைக்கும். ஆகலின், சிவராச யோகமே சாலச் சிறந்ததென்க.
இங்குக் கூறப்படும் சிவராச யோகம் எல்லாவற்றி னும் மேலானது. ஏனை அடயோகம் நிலையற்றது. சிவராச யோகம் யோக உறுப்புக்கள் எட்டுடன் கூடியது. அதனால் அட்டாங்கயோகம் எனப்படும் அது. இயமம், நியமம், ஆதனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம்,
தாரணை, தியானம், சமாதி என்னும் எட்டுறுப்புக்களுடன் விளங்கு வதனால் அதனை அட்டாங்க யோகம் என்பர். இராச யோகத்திற் பிறந்த அரசர்களுக்கு யானை முதலிய சதுரங்கங்கள் உள. சிவராச யோகிகளுக்கு மனம் முதலிய துரங்கங்கள் உள. அரசர்கட்கு மூன்றுலகங்களிலும் ஆணை செல்லும். யோகிகட்கு மூன்று மண்டலங்களிலும் செல்லும் அரசர்க்குச் சந்திரவட்டக்குடை. யோகிகட்குச் சந்திரமண்டலமே குடை. அரசர்க்கு வாத்தியம் எக் காள முதலியன. யோகிகட்குப் பத்துவித நாதங்கள். அவை:- சிணி நாதம், சிணிசிணீ நாதம், கண்ட நாதம், சங்க நாதம், வீணா நாதம், தாள நாதம், முரளி நாதம், பேரீ நாதம், மிருதங்க நாதம், மேகி நாதம் என்பன. மூன்று மண்டலங்களாவன :-1. அக்கினி மண்டலம் - மூலம் முதல் நாபி வரை. 2.சூரிய மண்டலம் - நாபி முதல் கண்டம் வரை. 3. சந்திரமண்டலம் கண்ட முதல் புருவம் வரையுள்ள பாகம். பத்து நாதங்களையும்:-
மணி கடல் யானை வார்குழல் மேகம்
அணிவண்டு தும்பி வளைபேரி கையாழ்
தணிந்தெழு நாதங்கள் தாமிவை பத்தும்
பணிந்தவர்க் கல்லது பார்க்கவொண்ணாதே"
எனவும்,
'திடமறி யோகிக்கல் லாற்றெரி யாதே"
எனவும்,
திருமூலநாயனார் தமது திருமந்திரத்தில் அருளிச்செய்தார்.
இனி, புண்ணிய பாவங்களாகிய இரண்டு ஏற்ற மரங்கள் உள்ளன. எழுவகைத்தோற்றமாகிய ஏழுகிணறுகள்உள. அவற்றைப்பற்றிச் சுவாசமாகிய நீர் உள்ளது. பிங்கலை என்னும் சூரிய கலையாதிய மூத்தவன் நிச்சுவாசம் பண்ணாமல் உச்சுவாசம் பண்ண, இளையவன் ஆகிய இட கலை என்னும் சந்திரகலை அச்சுவாசம் ஆகிய நீர்போதற் குரிய வழியிலே செல்லாதபடி மாறுதல் செய்ய அதாவது தானும் நிச்சுவாசம் பண்ணாமல் உச்சுவாசமேபண்ண, ஒவ்வொருநாளும் விடும் சுவாசமாகிய (21,600) நீரும் சுழுமுனை வழியிற் சென்று கும்பகம் ஆகிய பாத்தியிற் செல்லாமல் பாழாய் வெளியெங்கும் சென்று போயிற்று. இது தலைவன் ஒருவனது விசாரணை யில்லாமையால் கூத்தி வளர்த்துவிட்ட கோழி போலாயிற்று.
" ஏற்றம் இரண்டுள ஏழு கிணறுள
மூத்தான் இறைக்க இளையான் மடைமாறப்
பாத்தியிற் பாயாமல் பாழெங்கும் பாய்ந்தது
கூத்தி வளர்த்த கோழிப்புள் ஆமே"
என்பது. திரு மந்திரம். உச்சவாசம், நிச்சுவாசம், இரண்டையும் அடக்கி, சுழுமுனா மார்க்கத்திலே பிராண வாயுவை நிறுத்தி, பொறிகளின் வழி மனத்தைச் வொட்டாமல் திருப்பி, ஒரு குறிப்பிலே நிறுத்தி, ஆறு ஆதாரங்களின் அந்தர் மாதிருகாக் கிரமத்தை யறிந்து, அவ்வவ் ஆதாரங்களின் அதி தேவதைகளை தியானித்தல் வேண்டும். அவ் ஆறாதாரங்களினும் அசபாசத்தி சிவான்மிகை யாய் நிற்கும் முறைமையைப் பார்த்து, மூலாதாரம் தொடங்கி விநாயகர் முதலிய தேவதைகளைப் பொருந்தி, அபிமுகம் பண்ணிக்கொண்டு, ஆறாதாரத்துக்கும் மேலாகிய பிரமரந்திரம் அளவும் அசபையுடன் சென்றணைதல் வேண்டும். அந்தப் பிரமரந்திரத்திலே, கீழ்நோக்கிய படியே யுள்ள ஆயிரம் இதழுள்ள தாமரை முகையை அலரச்செய்து, அத் தாமரைப்பூவின் கேசர நுனியிலே உள்ள சந்திர மண்டலத்தை ஆகுஞ்சனம் செய்தலினாலே மூலாக்கினியை அக்கினி பீஜாக்ஷர உச்சாரணத்தினாலே எழுப்பி, நாடி சக்கரத்தைப் பேதித்து, அவ் அக்கினியி னாலே சந்திர மண்டலத்தை இளகப்பண்ணி, அந்த அமிர்தத்தை எல்லா நாடிகளின் வழியாகவும் நிரப்பி, அவ்விடத்துண்டாகிய, சுகோதயத்தில் அந்தமயமான ஞானாமிர்த அவஸ்தையை அடைந்து நின்று, சோம சூரியாக்கினிப் பிரகாசங்கள் எல்லாம் தன்னிடத்து நட் சத்திர ஒளிகள்போல அடங்கி நிற்க, ஸ்வயம் பரப் பிர காசமாய் உள்ள பூரணப் பிரகாசத்தைப் பாவித்திருத் தலே சிவராசயோகமாம். இருதய புண்டரீகமே சிற்சபை. அப்புண்டரீகத்திலே தான் இறைவன் நடிக்கின்றான். நாம் ஏதேனும் ஒரு விஷயத்தை மறந்துவிட்டு நினைவுக்குக் கொண்டு வரும்போது மேலே நோக்குகிறோம். நாம் நினையாமலே அச் செய்கை நிகழ்கின்றது. "பாலாடை மேலே பரவு தல்போல ஒரு விஷயத்தை அறிய பிரமரந்தி ரத்தை நோக்கியே அறிதல் வேண்டும்." பிரமரந்திரத் திலே யுள்ள ஆயிர இதழ்த்தாமரையே ஆயிரக்கால் மண்டபம். சிற்சபையில் நடிக்கும் நடராசப் பெருமான் ஆயிரக்கால் மண்டபத்துக்கு எழுந்தருளித் திருமஞ்சனங் கொண்டு, பின்பு கனகசபைக்கு எழுந்தருளுங் காட்சி தான் தரிசனம் எனப்படும்.
இனி, வண்ணான் ஆகிய ஆன்மா ஆனவன், தோய்க்கும் கல்லாகிய அந்தக் கரணங்களின் மேல் உள்ள, இந்திரி யங்களாகிய கண்மாய்களின் வழியாகவும், ஐம்புலன்களாகிய மோட்டைகளின் வழியாகவும் செல்லாமல் உச்சு வாச, நிச்சுவாசங்களாகியகரையை யடைத்து, விண்ணாறு ஆகிய சுழுமுனை வழியாகப் பிராண வாயுவைத் தேக்கி, சந்திர மண்டலத்தை மூலாக்கினியால் இளகப்பண்ணி ஒழுகும் அமுதத்தைக் குளமாகிய உடம்பிலே தேக்கி நிறைவித்து, மேல் நோக்கிப் பரஞ்சோதியை தியானிக்க அழுக்காகிய ஆணவமலம் நீங்கும். பரஞ்சோதி உண்டாம். இதனை,
"வண்ணான் ஒலிக்கும் சதுரப் பலகைமேல்
கண்ணாறு மோழை படாமற் கரைகட்டி
விண்ணாற்றைத் தேக்கிக் குளத்தை நிரப்பிட்டு
அண்ணாந்து பார்க்க அழுக்கற்ற வாறே".
என்னும் திருமந்திரத்தால் அறியலாம்.
"தம்பிரானார் திருவுளத்து அடைத்த ஆன்மாக்கள், கருவி கரணாதிகளில் உள்ள ஆரவாரங்களைத் திருவருட் டுணையானே ஒட்டி, வெற்றியுடனே திருவடிசேரச் செல்லுங்காலத்து அனவரதமும் பரமானந்த நிருத்தம் பண்ணியருளுகின்ற தம்பிரானார் திருவடிக்குச் சிலம்பும் ஓசையும் ஆன பரவிந்து பரநாதம் அடியார் பிறவித்துயர் கெடும்படி ஆரவாரிக்கும். இந்தப் பரநாத வழியே சென்று பரமானந்த நிருத்தம் பண்ணும் தம்பிரானைத் தொழல் வேண்டும்." இதனை
திருச்சிலம் போசை யொலிவழி யேசென்று
நிருத்தனைக் கும்பிடென் றுந்தீபற
நேர்பட அங்கேநின் றுந்தீபற"
என்பது எங்கள் மெய்கண்ட சாத்திரம்.
இந்த நிலையிலேதான் "யோகப்புரவி மேற்கொண்டார்- புரவித்திரளாய் யோகப்பொலிவின் அசைவிற் போதும்'' எனச் சேக்கிழார் பெருமான் சேரமான் பெருமாளைக் கூறினார். பெருமிழலைக் குறும்ப நாயனாரும் இச்சிவயோகத்தையே அனுட்டித்தார். இதனைச் சேரமான் பெருமாள் நாயனார் சரித்திரத்தால் தெளிவாக உணரலாம்.
------
41 45 : குண்டலி அதனில் குண்டலி சத்தியினிடத்து. கூடிய அசபை -- பொருந்திய அசபா மந்திரமாகிய. விண்டு எழுமந்திரம் மேலோங்கி எழுதற்குரிய இரகசியத்தை, (விண்டு மலை) வெளிப்பட உரைத்து வெளிப்பட உபதேசித்து.
அசபாமந்திரம்: என்பது ஒரெழுத்து ஒருமொழி, அது சகல மந்திரங்கட்கும் ஆதாரமாய் முதல்வனைக் குறித்து நிற்பது. அதுவரிவடிவில் காட்டத்தக்கதன்று. உபதேசக் கிரமத்தாலறிய வேண்டுவது. சித்தாந்தச்செந்நெறியா ளரையடுத்து விதிப்படி அறிக. இதனைத் திருமூலநாயனார்-
"போற்றுகின்றேன் புகழ்ந்து புகல் ஞானத்தைத்
தேற்றுகின்றேன் சிந்தை நாயகன் சேவடி
சாற்றுகின்றே னறையோசிவ யோகத்தை
ஏற்றுகின்றேனெம்பிரானோ ரெழுத்தே"
எனவும்,
"பொன்னான மந்திரம் புகலவு மொண்ணாது
பொன்னான மந்திரம் பொறிகிஞ் சுகத்தா கும்
பொன்னான மந்திரம் புகையுண்டு பூரிக்கிற்
பொன்னாகும் வல்லார்க் குடம்பு பொற்பாதமே"
எனவும், மந்திரமாலையில் அருளிச் செய்தமை காண்க.
மூலாதாரத்தின் - மூலாதாரத்தினிடத்திலே. மூண்டு எழுகனலை - அதிகரித்து சுவாலித்தெழுகின்ற மூலாக் கினியை. காலால் எழுப்பும் கருத்து அறிவித்து - பிராணவாயுவினாலே சுழுமுனைநாடி வழியாக எழுப்பும் கருத்தையும் தெரிவித்து. அமுத நிலையும் - சுழுமுனை நாடியின் நிலையையும். ஆதித்தன் - சூரியகலையானது இயக்கமும் - நடைபெறும் விதத்தையும்.
46 -- 50 : குமுதசகாயன் - சந்திரகலையின். குணத்தையும் கூறி - தன்மையையும் நன்கு வெளிப்படையாகச்சொல்லி. இடைச்சக்கரத்தின் - இடையிலுள்ள (அஃதாவது நாபித் தானமாகிய மணிபூரக முதலாகவுள்ள) ஈரெட்டு நிலை பதினாறு கலைகளின் நிலைகளையும். உடல் சக்கரத் உடம்பிலுள்ள சக்கரங்களின். உறுப்பையும் காட்டி-உறுப்புக்களையும் தெரிவித்து. இடைச்சக்கர மாவது நாபி, இருதயம், கண்டம். புருவமத்தி, நெற்றி நடு, நெற்றி மேல்பாகம், உச்சி, உச்சியின் பின், முதலி யன. இதன்மேல் உள்ளது நிராதாரம்: அது நாதாந்தத் தின் மேலுள்ள சத்திகலைமுதல் உன்மனை வரையுமுள்ள பகுதிகள். சத்திவரை தூல, சூக்குமகலைகள். அதன்மேல் உள்ளன அதிசூக்குமகலை, மகாசூக்குமகலைகள். களின் வடிவம், நிறம், நொடிக்காலம், உபாசனாக்கிரமம், மந்திரோச்சாரணக்கிரமம், தியானம் முதலியவைகளைக் குருவருளாற்பெற்றுச் சாதனை செய்க. சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும் அறுவகைப்பட்ட தூலங்களும், நால்வகைப்பட்ட சூக்குமங்களும் ஆகிய பத்துக்கலைகளும், எண்முகம் ஆக தியான மூலமாக. இனிது எனக்கு அருளி இன்பநிலை எனக்குண்டாக்கும்படி அனுக்கிரகம் பண்ணி,
51 -55 : புரி அட்டகாயம் புலப்பட எனக்கு - பூதம் - 5, தன் மாத்திரை -5, ஞானேந்திரியம்-5 கன்மேந்திரியம்-5, அந்தக் கரணம் -3, குணம்-1, அதற்குக் காரணம் ஆகிய பிரகிருதி - 1, கலாதி-5, ஆக எட்டுக்கொத்துகளுடன் கூடிய பர சரீரம் (அதாவது அதிசூக்கும தேகம்) புலப்படும்படியாக அடியேனுக்கு (இதுமிருகேந்திரத்திற்கண் டது) (தன்மாத்திரை 5, அந்தக்கரணம் - 3 ஆக எட்டும் சூக்குமதேகம் என்று காலோத்தரம் கூறுகிறது.]
"அத்தனமைத்த வுடலிரு கூறினில்
சுத்தம தாகிய சூக்குமம் சொல்லுங்கால்
சத்த பரிச வுரூப ரசகந்தம்
புத்திமா னாங்காரம் புரியட்ட காயமே"
-- திருமந்திரம்.
தெரி எட்டு நிலையும் தெரிசனப்படுத்தி - ஆராய்ந்த ஆறு ஆதாரங்களும், நிராதாரமும், மீதானமும் ஆகிய எட்டு நிலைகளையும் அறியச்செய்து. கருத்தினில் கபாலவாயில் காட்டி-மனத்தைக் கபாலவாயிலிலே பொருந்தப்பண்ணி, (கபாலவாயில் - பிரமரந்திரம். அது ஆயிர விதழ்க் கமலம்.) இருத்தி - அந்தச் சமாதிநிலையிலிருத்தி. முத்தி இனிது எனக்கு அருளி - - வீடுபேற்றை இனிமையாக ஒன்றுக்கும் பற்றாத நாயினேனுக்கும் அருளிச்செய்து. என்னை அறிவித்து - ஆன்மாவாகிய என் நிலைமை அறியச் செய்து. எனக்கு அருள்செய்து - எனக்குக் கிருபை பண்ணி.
-------------
56 - 60 : முன்னை வினையின் முதலைக்களைந்து -அநாதிகாலந் தொட்டு இடையறாதுவரும் பிறப்பிறப்புக்கட்குக் காரணமாகிய வினைகளையெல்லாம் வேரோடு பறித்து. வாக்கும் மனமும் இல்லா -வாயாற் பேசுதலும் மனத்தால் நினைத்தலும் இல்லாத (செயலற்ற). மனோலயம் - மன நிலை ஒடுங்குமாறு, தேக்கி - நிறைவித்தும். சிந்தை தெளிவித்து - மனத்தைத் தெளிவித்தும். இருள்வெளி இரண்டுக்கு இடம் ஒன்று என்ன - அறியாமை அறிவு என்னும் இரண்டுக்கும் பிறப்பிடம் ஒன்றே என்று சொல்லும்படி. அருள் தரும் ஆனந்தத்து அழுத்தி - திருவருள்மிகுதியால் விளைகின்ற பரமானந்தக்கடலிலே மூழ்கச்செய்து. என்செவியில் - அடியேனுடைய காது களில்.
61 --65 : எல்லை இல்லா - அளவில்லாத. ஆனந்தம் அளித்து- இன்பத்தையூட்டி. அல்லல் களைந்து - பிறப்பிறப்புத் துன்பங்களை வேரோடு கெடுத்து. அருள் வழி காட்டி - திருவருள் மார்க்கத்தை அநுக்கிரகம் பண்ணி. சத்தத்தினுள்ளே சதாசிவம் காட்டி - ஆகாயத்திலே (புருவமத்தி யிலே) சதாசிவமூர்த்தியைத் தியானம் பண்ணு முறையையும் அருளி. சித்தத்தினுள்ளே சிவலிங்கம் காட்டி - மனத்திலே (இதயகமலத்திலே) சிவலிங்கமூர்த்தியைப் பூசிக்கு முறையையும் உபதேசித்து. அணுவுக்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய் - அணுக்களுக்குள் அணுக்களாயும் அண்டங்கள் எல்லாவற்றிற்கும் அப்பாலுமாய் உள்ளும்புறம்பும் நிறைந்து நிற்கும் நிலையை. இதனை.
"அண்டங்களெல்லாம் அணுவாக அணுக்களெல்லாம்
அண்டங்களாகப் பெரிதாய்ச் சிறிதாயினும்
அண்டங்களுள்ளும் புறம்புங் கரியாயினானும்
அண்டங்க ளின்றாள் துணையென்பர் அறிந்தநல்லோர்''
என்னும் திருவிளையாடற்புராணச்செய்யுளால் அறிக.
66 --72 : கணு முற்றிநின்ற கரும்பு உள்ளே காட்டி - கணுக்கள் முதிர்ந்து சுவை நிறைந்த கரும்பானது (முக்கட் கரும்பாகிய சிவபரம்பொருள்) இரண்டற அத்துவிதமாய் நிற்கும் நிலையையும் அறிவித்து. வேடமும் நீறும் விளங்க நிறுத்தி - திருவேடமும் திருவெண்ணீறும் பொலியும்படி நிலைபெறுத்தி, கூடும் மெய்த்தொண்டர்குழாத்துடன் கூட்டி - நிறைந்த உண்மை நாயன்மார்களுடைய கூட்டத்திலே அடியேனையும் கூட்டுவித்து, (பழவடியார்களுடன் கூட்டி என்றபடி) தொண்டரொடு கூட்டு கண்டாய். அடியேனுன் அடியார் நடுவுளிருக்கும் அருளைப்புரி யாய்' என்றாற்போலக்கொள்க. அஞ்சு அக்கரத்தின் அரும்பொருள் தன்னை - பஞ்சாக்கரத்தின் அரியபொருளை. நெஞ்சக்கருத்தின் நிலை அறிவித்து - மனத்தில் நிலையாகத் தெளிவு பெறச்செய்து. தத்துவ நிலையை தந்து - உண்மை நிலையாகிய சிவபோகத்தை நுகரச்செய்து. எனை ஆண்ட - என்னை அடிமையாகக்கொண்டு ஆட்கொண்டருளிய. வித்தக - மேம்பாட்டையுடையவரே. விநாயக- மேலான பொருள் யாதும் இல்லாது விளங்கும் தலைவரே. விரைகழல் ஏ - (உம்முடைய) மணம்பொருந்திய வீரக்கழலையணிந்த திருவடிகளே. சரண் - அடியேங் களுக்குப் புகலிடமாம். (எ-று.)
விநாயகரகவல் பதவுரையுடன் முற்றிற்று.
----------------------