pm logo

நா. பிச்சுமணி எழுதிய செந்தூரகவல்,
வேங்கடேச அகவல் & முப்பத்து (அரும்பத உரையுடன்)


centUrakaval, vengkatEca akaval &
muppattu by N. Pitchumani
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2023.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

நா. பிச்சுமணி எழுதிய செந்தூரகவல்,
வேங்கடேச அகவல் & முப்பத்து (அரும்பத உரையுடன்)

Source:
1. செந்தூரகவல் 2. வேங்கடேச அகவல்
3. முப்பத்து (கோமதி அம்மன் பேரில் விருத்தங்கள்)
ஆசிரியர் :- திரு. நா. பிச்சுமணி
தமிழாசான், தென்னிந்திய கல்விக்கழக உயர்தரக் கல்லூரி
(South Indian Education Society's High School Matunga, Bombay 19.)
எஸ். விசுவநாதன், சென்னை
1950
விலை அணா 0-8-0
"அன்பு" வெளியீடு அலர்‘க'
Printed by S. Viswanathan at the Central Art Press, Acton, Lodge, Chetpet Madras.
------------------------

முன்னுரை

South Indian Education Society's High School
Brahmanwada Road, Matunga, Bombay 19
6-2-1950.

நமது பள்ளியில் உயர் தமிழ்ப் போதனாசிரியராக இருக்கும் திரு. நா.பிச்சுமணி அய்யர் அவர்களால் இயற்றப்பட்ட செந்தூர் அகவல், வெங்கடேசப் பெருமாள் அகவல், கோமதி அம்மன் பேரில் முப்பத்து ஆகிய நூல்களைப் பார்வையிடும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. இந்நூல் மூன்றும் மும்மணி களாக விளங்குகின்றன.

ஸ்ரீ பிச்சுமணி அய்யர் ஓர் தமிழ்ப் பித்தர். தமது வாழ் நாளில் நேர்ந்த இன்னல்களையும் பொருட்படுத்தாது தமிழமுத வாரிதியில் மிதந்து செல்பவர். வெறும் தமிழுடன் நின்றுவிடா மல் தமிழ்த் தெய்வமாக விளங்கும் முருகக் கடவுளிடத்திலும் அதிக பற்றுள்ளவர். இந்த நூல்கள் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி எழுதப்பட்டவைகளாகும்.

"யாமோதிய கல்வியு மெய்யறிவுந்
தாமே பெற வேலவர் தந்ததனாற்
பூமேன் மயல்போயற மெய்ப்புணர்வீர்
நாமே னடவீர் நடவீரினியே "

எனும் கொள்கை அடிப்படையாக அமைந்திருக்கும் இப்பாடல் களுக்கு, பொதுமக்களிடையே அன்பும், ஆதரவும் தானாகவே ஏற்படும் என்பதற்குக் கிஞ்சித்தேனும் ஐயமில்லை.

இதுபோலவே இனியும், தமிழுக்கும் மக்களுக்கும் தொண்டு செய்யும் திறமையையும் ஊக்கத்தையும் ஸ்ரீமான் பிச்சுமணி அய்யர் அவர்களுக்கு எல்லாம்வல்ல இறைவன் அளிப்பாராக.

பி. வி. பரமேசுவரன்
தலைமை ஆசிரியர்
-------------------

DAULAT VILLA,
Vincent Road, Matunga, Bombay 19.
8th February, 1950.

Sriman T. N. Pichumony Iyer is the senior Tamil Pandit of the South Indian Education Society's High School and has been serving in the school for the last 15 years. I am connected with the management of the school since 1933. During all these years I have known Mr. Iyer as a great Tamil Scholar. He has taken a great deal of interest in inculcating a taste for Tamil among South Indians in Bombay and he has been an active figure in the organising of the Tamil Sangham in Bombay. He has had his share of calamities in life, but he has found time and inclination to write Tamil Poems on various themes mainly on religion and philosophy, all in such tender sweet and understandable Tamil, He has already completed over 5000 lines, but is publishing a small part-about 800 lines. Tamil is read in every South Indian home throughout the world and this publication is bound to find a ready response.

I am happy that the publication of these poems has been undertaken by my good old friend Mr. and Mrs Bharat K. S. Iyer who are themselves great patrons o learning.

K. S. RAMACHANDRA IYER,
President, South Indian Association,
South Indian Welfare Society High School.
--------------------


செந்திலாண்டவன் திருவடி துணை
சென்னை.
வரகவி-திருஅ-சுப்ரமண்ய பாரதி இயற்றியது.

கலிவெண்பா.
சீரார்ந்த செந்திற் சினகரத்தில் மேவியருள்
பேரார்ந்த கந்தனருட்பேறுதவும் - ஏரார்ந்த
செந்தமிழின் இன்பம் செறிந்த செந்தூரகவல்
தந்ததன்றிச் சேடாசலத் தினிது-வந்து குடி
கொண்டருளும் ஈசர்க்குக்கோதில் அகவலொன்றும்
விண்டுமகிழ்ந்தின் ப வீடருளும்-கெண்டையங்கண்
கோமதியம்மன் பேரில் கோதில் முப்பத்தென்னும்
தேமதுரத்தோத்திரமும் செய்து வந்தான்-நேமநெறி
தவறாத் தமிழறிஞன் சாந்தகுணசீலன்
சிவநேயச்செல்வச் சிறப்பில்-உவக்கும்
மாண்பினன் பிச்சுமணிய னெனும் பேரோன்
ஏண்பிறவி எய்தியதற் கேய்ந்ததாம்-காண்பரிய
தூயபயன் கண்டான் தொல்லை வினைகடந்தான்
ஆயபுகழ் கொண்டான் ஆய்ந்து நலந் - தோயுமிவை
- எல்லோருமோதி இதமுறவே யச்சிட்டு
வல்லவரும் வாழ்த்தும் வளமுற்றார்- அல்லலிலாத்
தாம்பத்ய நேசத்தரத்தினிமை யொன்றே
மேம்பத்ய மென்னும் விதிகண்டு-பூம்புவியில்
வாழுங் காமாட்சியும் வள்ளல் பரதனும்
ஊழையுங்காண்பரினிஉப்பக்கம்-வாழிபெற
விண்ணவர்கள் போற்றிசெய
வீரவடிவேலெடுத்த அண்ணலின் தண்கருணையால்.

சென்னை - பெரம்பூர் 15-3-50.
--------------------

திருவாளர்.திரு.நா. பிச்சுமணி அய்யர் அவர்கள் இயற்றியுள்ள பாடல்கள் யாவும் உயர்ந்த முறையில் அமைந் துள்ளன. அவைகளின் தமிழ் நடையும், ஆழ்ந்த கருத்தும், நுண்ணிய பொருளும் அவருடைய புலமைக்கு எடுத்துக் காட்டாகும். இவரது நூல்களைத் தமிழறிஞரும் தமிழகமும் போற்றிக் களிப்பதாக!
* * *

நேரிசை வெண்பா.

விற்பனர்க்கு நல்ல விருந்தாகிப் பற்பலவாங்
கற்பனைத்தேன் வாசம் கமழ்கிற தே-நற்புவியில்
காண்போர்கள் ஏத்தும் கவிமணியாம் பிச்சுமணி
மாண்போ டளித்த மலர்.

எம். எஸ். சுந்தரேச அய்யர்,
தமிழாசிரியர், தென்னிந்திய உயர்தரப் பள்ளி, மாதுங்கா.
8-2-1950.
---------------

22-1-46 மாலை 6 மணிக்கு நண்பர் ஒருவரைச் சந்தித் தலும், அவர், 'ஏது முகவாட்டத்துடன் தோன்றுகிறீர்?' என உசாவ, அதற்குப்பதிலாக, 'கவி உள்ளத்தையும், பா அமைக்கும் திறனையும், உலகத்திற்கு எழுத்தா லுதவ வேண்டும் என்னும் அவாவையும், மனவலியையும், அளித்த கடவுள், அதற்கேற்ற உடல்வலியையும் கரவலியையும் அளித்தான் இல்லையே, என்பதை எண்ண எண்ண ஏங்கு கின்றேன் ; கலியுகவரதனாம் கந்தன் மெய்வலியளிப்பாரா?' என்று நவின்று, முருகனை மன்னிய மனத்துடன் எழுதிய அகவல், 'செந்தூரகவல்' என்று இசைத்த இப்பா.
------------------
பாரத நாட்டின் தென்கோடியான திருநெல்வேலி ஜில்லா வில், திருநெல்வேலியிலிருந்து முப்பத்துமூன்று மைலுக்கப்பால் தென்கிழக்குதிசையில் கடற்கரை யடுத்துள்ளது திருச்செந்தூர் எனும் முருகனுக்கு கந்ததலம்.இவ் வூர், தலம், தீர்த்தம், க்ஷேத்ரம் இம் மூன்று மகிமையையும் கொண்டுள்ளது. ஆலய முகப்பில் உள்ள ஸ்கந்தவிலாஸ மண்டபம், நாழிக்கூபம், மணல்மேடு, கொலுமண்டபம், மௌனச்சாமியார் மடம் இவை முக்கியமாகக் குறிப்பிடத்தக்க கண்ணெழிலும், மனம்கவரும் திறனும் உடை சிதம்பர தீக்ஷிதர்களைப்போன்று, செந்திலாண்டவன் தொண்டிற்கென்றே தோன்றியுள்ள முருகனடிமைகள் 'முக் காணியர்' என்று ஒருவகை அந்தணர். அவர்கள் பண்பும், தமிழ் - இசை அறிவும் சொல்லுக்கடங்காதது. கன்னிமுதல் இம யம் ஈறாகவுள்ள எத்திறத்தாரையும் செந்திலாண்டவன் சேவை யில் ஈடுபடச்செய்வதில் இவர்கள் வெகு சமர்த்தர்.
-------------

1. "செந்தூரகவல்"

ஆர்கலிவிடுத்து அந்தரத்துய்த்து
அகலிடமொளிசெய் ஆதவப் பெரியோன்
ஆடகமெனவொளிர்ந்தழகு செய்கரையில்,
அரித்ர சூர்ண அம்பொலி மணனிறை
மேட்டிடத்தண்மையில், மெத்தவும் பாங்குடன் 5

அமைந்த ஆலயத் தருவரதனென,
கருமபலனைக் கண்முன் பயக்கும்
கலியுகப்பெருமான் கந்தனெனப் புகழ்
செந்தில்நாதா! (நின்) சேவடி பணிவோர்க்
கின்னலுமுண்டோ ! இசையுடன் மேவு 10
வெல்வேற்கையா ! வெற்றி சூடி !

நாழிக்கூபம், கோயிலுள்ளமைந்த அபிஷேகக்கூபம், இவற்றின் பெருமை.

ஆழி யடுத்த நாழிக் கூபத்
தெள்ளிய தண்மைத் தீம்புனல் மடுவின்
புண்ணியத் தன்மை பறைதலாமோ !
பாதலத்தமைந்த பிலவழியேகி, 15

ஆலய நாப்பண் சீலத்தமைந்த
திருமணக்கோலன் திருமருகன்றன்
அபிஷேகத்திற் கருமையின் வாய்ந்த
பூம்புனற் கேணி புனித மடுவரை,
ஒப்பெறி ஓட்டத் தொண்மையினியைந்து 20

மாலவன் மருகன் முருகனை நினைந்து,
நெஞ்சங் கனிய நேர்ந்தே இறைஞ்சி,
குறை தவிர்க்கழலே உரமென நம்பி,
தஞ்சம் பிரிதிலை வஞ்சமிலுளத்துக்
கெஞ்சியே நின்று, விஞ்சிய பலத்தின், 25

வஞ்சத்தொடு மறம் விஞ்சிய சூரரை,
க்ரௌஞ்ச வரையைக் கிளர்த்த வேலின்,
மாய்த்த மாபெரு மஹிபனே சரணம் ;

“இன்றும் நிகழும் அதிசயம்“

என்றே ஏத்தும் ஏந்திய கரத்தின்
கோரிய வரங்கள் கோதினல்கும் 30

தண்ணளிக் கடலின் தன்மையின் கரியாய்
வட்டத்தியைந்த வண்ண அகழியின்
விடுத்த வாசகம் வேதாகமங்கள்
கூறும் வகையின் குறைவிலா தமைந்த
ஆலய அகட்டின் அழகுற அமைந்த 35

அன்ன னீராடும் அகழி நீர்மிசை
விளங்குறு மதிசயம் விளம்பலு மாமோ !
கனிவுறு சிந்தையின் கமலச் செல்வியின்,

"புஷ்கரணியில் நீராடல் ”

மருகன் பாதம் மன்னியே ஓர்ந்து
புனிதவாவி புட்கரணியிடை 40

தூயநீராடித் தூயுடை புனைந்து,
திருநீறணிந்து திருப்புகழ் சாற்றி,
கள்ளமிலுளத்துக் கழிபெருநலன்கள்
கருணையின் பூத்த கண்ணன் கந்தன்
இணை யிலழகன் இளையகுமரன் 45

சேவடி அகத்துச் செவ்விதாக் கொண்டு
எண்ணும் வரங்கள் ஈாத்தெழமுடுகி
கண்ணெழி லாலயக் குபேர வாசல்

“கந்த விலாஸம்." குடாரவாசலில் குருபரன் தியானம்.''

கந்த விலாஸக் கண்ணிய மன்றத்து
அங்கணீர் பெருக அங்கம் புளகிட 50

வெம்புலனொடுங்கி வெம்மை தீர்ந்திட
அம்மையே! அப்பா ! அலகிலா அளியின்
தலைவா ! தெண்ணீர் தலமிசை தாங்கிய
செக்கர் மேனி செஞ்சடையானின்
குமரர் ! குகனே ! பரனே ! ககனத்து 55

இரும் புள் மயிலின் ஏறி வருவாய்!
(என்) அகமெனம் பீடத்தமர்ந்து மேவி,
உணர்வெனும் பாசத்துள்ளம் பிணித்து,
ஐம்புலனெனு மென் அடங்கா விலங்கை
(உன்) அருளெனுந்திறத்தின் அடக்கியே உய்த்து, 60

பிணிமூப்பு இறப்பெனும் பீடைகடிந்து,
இருள்மயக்கெனு மிறு பேய்முறித்து,
காமமாதி கடும்பிணி மாய்த்து,
ஆணவமுதலா அரும்பகை செகுத்து,
பொய்முதல் இன்னா பயனில வெருட்டி, 65

கசடாம் களை தனைக் கருணையின் களைந்து,
நலம்பிறழாத நேர்மையே ஆறா,
மனக்கரியோம்பும் மீயறம் அரணா,
தன்னலமறுத்த தகைமை யரணியா,
நின்பால் வைத்த நெஞ்சமே பயனா, 70

தாழ்வொடு வாழ்வும் துன்பமுமின்பமும்,
பாங்குற நோக்கப் பரிவே சாந்தியாக்
கொண்டு வாழ்க்கை கோடாது நல்கி,
அறமும் பொருளும், அறவழிப்பற்றும்,
உரமு மூக்கமும், உடல் நலவளமும், 75

ஆயுளு மாண்மையும், அறிவொடு கலையும்,
செழியவருளின் செழுமையின் அளிப்பாய்!
வடிவேல் முருகா ! வாராய்! வாராய்!
என்றே இசைத்து ஏத்தி ஏத்தி,
அகமமகாரம் அறவே யொழிய, 80

உள்ளிடைசென்று உம்பரைக்காத்த
மாநிதி முன்னிலை மூலத்தானம்

மூலஸ்தான மஹிமை, அருள், தோத்திரம், கந்தலீலை வரலாறு.

மேவிநின்றால் மேவுமே பேரருள் !
கோநவநீதம் கனலிடை யணுகின்,
ளகுமாறுபோல் திளைக்கு நெஞ்சம், 85

பரவசமேற்றுப் பரிவு கசிந்து,
காதலாகிக் கண்ணீர் மல்கிட,
உடலஞ்சிலிர்க்கும், உற்றபவத்தின்,
சிந்தனையாவும் சிதைந்து மாயும்,
கழிவிரக்கம் கடிதினில் தோய்ந்து, 90

முந்துறு புலம்பலின் மூழ்கி மாழ்கும்,
அருட்பெருஞ்சோதி! அண்ணாமலையா !
அம்பலவாணன் அரும் பெரும் குமரா !
நடனானந்தன் நிகரில் மதலாய்!
பந்தயப்பழத்தின் முந்திய வேட்கை, 95

'' பழணியாண்டவன் வரலாறு, பந்தயப்பழம், முருகன்செயல்''

மிகுதியும் உந்த, மருவியே மயிலின்,
மீது மூலோகம் முடுகியே மன்னி,
தா, தா' பலமெனத்தாதனை வினவ,
"அண்ணன் அகட்டு அவிக்ன கர்த்தன்,
கரிமுகன், கதித்தே, கண்ணுறு கடவுளர், 100

“கரிமுகன்-செயல் "

அன்னை தந்தையை அடிபணிந்தேத்தி,
மூதறிவோடு மூவலம் வந்தே,

“கரிமுகன் வெற்றியும், கட்டுரையும்''

பலம்பெற்றேகினன்; பாரினைப் படைத்துக்,
காத்தழி தொழிலுடை கண்ணுதல் மூர்த்தி !
உமையொருபாக ! உம்மை நீத்தே, 105

உம்பர் பாதலம் உரைதரு உலகம்,
பிறிதொன்றுண்டோ? புகலீர் ! கோவே!
அகண்டமும் நீயே ! அண்டத்துறையும்,
சராசரம் நீயே ! உயிருடல் நீயே !
தோய்ந்த அறிவின் தேரினர் மற்றும் 110

நின்னிற் பிரிந்து நிற்குமோர் பொருளும்
காண்பரோ ! கூறாய்! கொன்றை சூடி !
எனவே சாற்றி ஏகினன் பலமொடு,"

கந்தன் துயர்; அம்மை சமாதானம்

என்றே இசைத்த எம்பிரான் மாற்றம்,
செவிக் கொள, வாடிச் சாய்ந்த வமயம், 115

அன்பொடு அம்மை அணைத்து வாரி,
''செல்வா ! செம்மனம் சிறுகலாமோ !

பழனிக் குன்றமருள் செய்க ! பஞ்சாமிருதனே! எனல்

"ஒரு பழம் கிட்டாது உருகு மனத்தாய்!
எண்ணிகல் பலங்கள் இனிமைக் கியைவில்
தீங்கனி குழுமும் திகழ் கமழ் நெய்யொடு 120

தேனோடு பாலும் தகு வெல்லமொடு
தகையுற வாக்கிய திகழ் பஞ்சாம்ருத
இன்னமுதம்கொடு இனிமையின் குழுமும்
பக்த கோடிகள் பரவுவர் உனையே !
செக்கர் நிறத்த செவ்வேலனையே 125

உன்றனுக்கு இயைந்த உரம் பெறுமு
திய பழனிக் குன்றம் அழகுற மேவி,

பழனி ஆண்டவன் ! கற்பகத்தரு !

பாலப் பருவப் பால்மணம் மாறா
செய்ய வடிவும், செய்ய மனத்து
யாவுந் துறந்த யதியென நிற்கும் 130

கோவணாண்டியாம் கொள் தவவடிவும்,
கொண்டே இலங்கிக் கோடி கோடியாய்
கரவா அன்பின் கமழும் பக்தர்
கோரியவெல்லாம் கற்பகத்தருபோல்
கனிந்து நல்கியே, காத்தருள் தேவாய், 135

விளக்க முறுவாய்! வாழி! வாழியே !"
என்றே அன்னையர் ஏற்றதோர் மாற்றம்.
பண்புடன் பகரப் பெருமகிழ் கொண்டாய்!
யானுமுன்றன் ஏழைச் சேயே !
என்னைப் படைத்த ஈ சனீயலையோ? 140
காப்பதுன் கடன், கா காணாய்! கோவே !

அறுமுகன் அவதார மஹிமை

இமையோர் முறையிட இயை தருவுளத்து
வருவான்! ஒருவன்! உறுதுயர் தீர்ப்பான்!
அச்சமொழிமின் ! அச்சமொழிமின் !
என்றே அபயம் அளித்த எம்பிரான், 145

இன்பவல்லியாம் இமவான் மகளின்,
அற்புதத் தவமும் ஆர்வமும் அன்பும்,
உலையாப்பற்றின் உறுதியும் கண்டு,
அருளுடன் மருவி அம்மையை ஆண்டு,
மதனையெரித்து மறமொழித்திட்டே, 150

சோதிப் பொறியின் செழுங்கனலுகுத்து,
சீற்றமிகுந்த சீயமெனவே
நிற்கும் வேளை, நிலைத்த அன்பின்
உலகம் புரக்கும் உமையாள் அம்மை,
உறுகவலுடனே அருகனை யணுக, 155

ஞானப் பொறியின் ஞயமது மேவி
சரவணப் பொய்கையில் சனனமெடுத்து,
கார்த்திகைக் கன்னியர் கருத்துடன் வளர்த்த,
அறுமுகத்தவனே ! அருளுருவே ! உன்
அடைக்கலம் புகுந்தேன் ! ஆதரம் நீயே ! 160

(1) தேவர் சிறைமீட்டல், (2) பிரமன் செருக்ககற்றல்
(3) வள்ளியைக் கொள்ளல், (4) கீரன் பிணி நீக்கியருளல் இனையன.

(1) வல்லோர் அரக்கர் வரபலத் திமிரின்
செறிமதத் துணுக்கின் ஈழல் தலையினராய்,
உம்பர் குலத்தை ஊருடன் வெருட்டி,
வஞ்சினங் கொண்டு வெஞ்சிறை யடைத்து,
வாட்டுதல் கண்டு, விரைந்தே பொருது, 165

சூரன் முதலாச் சிறு நெறி வயத்த
நிருதரை மாய்த்து நீடிசை கொண்டு
இமையோர் தம்மை இருஞ்சிறை மீட்டி, 170

தந்தை பணிந்த தக்கவோர் கடனை,
தகவுடன் தீர்த்துத் தேவர்தம் துயரைத்
துணித்த தேவா! அணித்து நின்றே
அரற்று மேழையின் அருந்துயரோட்டும்
கடன் உனதலவோ? கரவா துரையாய்!

பிரமன் செருக்கொழித்தல், 'சுவாமிநாதன்' ஆதல்.

வேத நாயகன், வாணி நாயகன்,
பிரபஞ்ச நாயகன், பிரமன் ஓர்நாள், 175

பிரணவப் பிழம்பின் பொருளறியாது
ஓங்காரத்தின், ஒண்மை தேரா
தயங்கும் வேளை திமிரம் வெருட்டி,
அகங் கரித்தெதிர்ந்த அயன் அடக்கமுற,
சிறைக் கோட்டத்துள் திறமுடனடைத்து, 180

படைத்தல் தேவின் படர் செருக்கறுத்து,
விரிஞ்சன் பெருந்தொழில் விரைவினேந்தி,
வையகப் படைப்பை ஐயமில்லாக்கி,
வெற்றிவீரனாய் நிற்றிய போது,
கண்ணுதற் கடவுள் கமைவரு அன்பின், 185

விழைந்து வினவ வேதப் பொருளை,
விளக்க முறவே வகைபெறச் சாற்றிய,
சுவாமி நாதா ! சுந்தர வடிவே !
வன்னெஞ்சனெனை வகையுட டன் சுற்றிய,
விடவரவனைய கொடும்பிணி அறுத்தல், 190
தண்டபாணியுன் தகுகடனலையோ !

"வள்ளியைக் கொள்ளல்"

ஈனத்தொழிலின் உயிர் செகுத்துண்ணும்,
வேடர்குலத்து வளர்தவச் செல்வி,
பரண் மீதிருந்து புள்தனை வெருட்டி,
பயிர் காத்தலிலும் பரிவின்மிக்கு, 195

திமிரம் இருட்டு, அஞ்ஞானம். படைத்தல், காத்தல் அழித்தல் -
பிரமன், விஷ்ணு, ருத்ரன் இம் முத்தேவர்தொழில்.
விரிஞ்சன் - பிரமன்.

பாலனுனையே பல்லரு மொழியால்,
முன்னிப் பரவி மருவவே கருதி,
நோக்கம் பிறழா நெஞ்சினளாகி
உறுநோன்பினளாய் உற்றவோர் தகைமை.
உன்பால் வைத்த உந்தவா மெச்சி, 200

வள்ளண்மையொடவ் வள்ளியை நச்சினாய்!
உன்கழலேதுணை உரம் வேறிலையென,
உன்னி வாழும் என்பால் ஒருதுளி
உன்னருள் மேவும் உறுநாள் என்றோ?
அபயவரதா ! அறவாக்ஷி கொளும், 205

லக்ஷிய வடிவேல் லக்ஷியத்துடனே
ஏந்தெழில் கையா ! ஏத்துனர் பவங்கள்,
வெருட்டு நற்சீலா ! வீரசிகாமணி!

“கீரன் பிணி நீக்கியருளல்

சிவனுடன் பொருத செந்தமிழ்க் கவிஞன்,
பெருந்திறப் புலவன் கீரனென் பெயரோன் 210

வீறாப்பொழிந்தோன் தீராக் குஷ்ட
இழிபெரு பிணியை உன் இணையில்லருளின்,
மாழ்க வைத்தாய் உன் மாக்ஷிமை என்னே ! !

“வேண்டுகோள் '

ஏழைநெஞ்சத்து எழுபல பிணியும்,
மிடியும்,மடமும், உடலுறு நலிவும், 215

மாழ்கடித்தலுன் மாக்கடனலையோ !
அப்பா! ஐயா ! சுப்பிரமணியா !
ஒளிர்வேற்கையா ! அருண்முகத்தோனே !
கந்தா! குகனே ! செந்திலாண்டவனே !
உன்பத மல்லால் உறுகதியில்லை 220

காப்பதுன் கடன் கருணாநிதியே !

"பலச்ருதி"

என்றே போற்றிடில் எழிலொடு பொருளும்,
நிறைவும் நேர்மையும் நலமுறு நோக்கமும்,
இசையொடு இல்லற இணையில் மாண்பும்,
னையன பலவும் இயைந்திலங்கும்மே ! 225

மருகன், முருகன், அருகன் மகனாம்,
செந்தில் நாதனைச் சேவித்திடுவோம்,
நலம் பெறு வகையின் நாடொறும் நாமே!
கடற்கரையடுத்துக் குணதிசை நோக்கி,
குறுநகை செய்தே உறுமணக்கோல 230

வள்ளித் தாயொடு தேவஸேனையார்,
விரும்பி மருவும் வீரப்ரதாபன்,
செந்திலாதிபன் செய்ய புகழை,
குக்குடக் கொடியோன் கூர்வடிவேலன்,
காவடிலோலன் கண்ணருள் புகழை, 235

பராவருஞ்செயலோர், பரிவொடுங் கேட்போர்,
முருகா ! முருகா ! முருகா ! என்றே,
ஒருக்கணமேனும் ஒதிநிற்போர்,
யாவரே யாயினும் அன்னவர் நலங்கள்,
நாளும் மல்கி, நீடருள் கூடி, 240

இம்மை மறுமை, ஈரிடத்தும்மே,
அரம்பையினமென அணி அணியாகக்
குலநலன் பெருகிக் கூடுநற் பெயரும்,
ஆண்டகையருளும் அளவி கந்துடனாய்,
மாவளஞ் சுரந்து மங்கா இசையொடு, 245

வாழ்வ ரென்பதற்கு ஐயமிலையே !!
சுபம்!! சுபம்!! சுபம் !!!

'திருப்புகழ் பாடும் ஸ்கந்த விலாஸ மன்ற மஹிமை”

கந்தவிலாஸக் கமைவரு எழிலின்,
விதந்தானென்னே ! விதந்தோதுவமே!
நாப்பண்பீடம் நேர்மையின் இயைந்து,
ஒற்றைப் பளிங்க ஒண்கலாலாகி,
ஓவியக் கலைஞர் ஓர்ந்தே வரைந்த, 250

பதினெண் புராணப் பல்பெருங்காதைக்
கேற்ற படத்திரள் ஏற்ற நிறத்த
நாற்புடை மருங்கும் நால் வசந்தாங்கும்,
தூண்கள் பாலும் துங்கம் பெருகவே,
சிற்ப வல்லோர் சீராய்ப் பொறித்த, 255

சித்திரப் பதுமையின் சிறப்புதானென்னே !
அருண்முகப் பெம்மான் ஆறுமுகன்முன் ;
தக்ஷிண பாரிசத் தமைந்த பீடத்
தமர்ந்து, நாதன் 'திருப்புகழ்' கானம்,
பண்ணுக் குரித்த பல்லிசைக் கருவி, 260

ஒருங்கு கூடி ஒப்பிலா நாதம்,
பண்பாய் எழுப்ப, பக்தியினடியார்,
அருணகிரியார் அருள்வாக்காய,
அம்ருத கீதம் ஆர்வமோடிசைத்து,
தன்னை மறந்தே தனிப் பரம்பொருளின், 265

பரவசத்தராய், பேரருள் விழைந்து,
பாடுங்காலை, பல்கோடி உயிர்,
உருகித் தவிக்கும் உரியவோரன்பின்,
கருத்தொருமிப்பர் பரமன் மாட்டே!
அணிபீடஞ்சூழ் அகன்ற மண்டபம், 270

சதுர அம்பலச் சீரிடஞ்செறிந்த,
மாப்பெருந்தொகையின் மாந்தர் குழுமம்,
கானப் போனகம் கண்ணினருந்தி,
கனிபேர் உவகையின் கனிந்த உள்ளப்
பதுமையாம் நயனம் பனிநீர் பெருக்க, 275

பரமானந்தப் பரவையில மிழ்ந்து,
அணுவளவாயினும் அசையாச் சிலையின்,
தோற்றமுடைத்தாய்த் திகழும் காக்ஷி
கண்டே களித்துக் கடைத்தேறுவதால்
சொல்லுக் கடங்குதல் சாலவும் அரிதே ! 280

சுபம் ! சுபம் !! சுபம் !!!
------------

16 - 30: ஆர்கலி - கடல்;. அந்தரம் - ஆகாயம் ; அரித்ரம் - மஞ்சள்; 'கருமபலன்' - 'செய்தீவினையிருக்க தெய்வத்தை நொந்தக்கால் என்று எய்தவருமோ இருநிதியம் - வையத்து - அறும்பாவம் அறிந்து அன்று இடார்க்கு இன்று வெறும்பானை பொங்குமோ மேல்'- என்ற செய்யுள்குறிக்க. 'பாதலத்தமைந்த பிலவழி'- நாழிக் கூபத்திற்கும் ஆலயத்தினுள்ளிருக்கும் கூபத்திற்கும் ஒன்றரைபர்லாங்குதூரம் உள்ளது. அதற்குப் பாதலத்துள்ள பிலமே வழியாகும். மறம் - பலம்; வரை - மலை ;

31 - 45: கோது - குற்றம். தண்ணளி - குளிர்ச்சி பொருந்திய கிருபை. 'செந்தண்மை பூண்டு ஒழுகலான் - (குறள்), செம் மனத்தான், தண்ணளியான் - (நளவெண்பா) ஒப்பிடுக, வண்ணம் - அழகு; கரி -சாக்ஷி; அண்ணனீராடும் அகழி; அண்ணலாகிய முருகனுக்கு அபிஷேக நீர்க்கென
அமைந்த கோயிற்கிணறு. புட்கரணி யென்பது நாழிக்கூபத்தையடுத் துள்ளது; பக்தர் தூய நீராடும் சுத்த நீருடையது.

46 -60: கள்ளமில் உள்ளம் - 'திரிகரணசுத்தி'. 'உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவுகலவாமை வேண்டும். இராமலிங்க சுவாமிகள். 'புலன்' - ஐந்து:- சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம். 'பொறி' - ஐந்து:-மெய், வாய், கண், மூக்கு, செவி. செக்கர் - செவ்வானம்.. ககனம் -ஆகாசம். புள் -பக்ஷி.

61 - 75: 'அகமெனும் பீடத்தமர்ந்து.... 'உணர்ச்சி யச்சாக, உசாவண்டியாக, புணர்ச்சிப் புலனைந்தும்பூட்டி, ஊர்கின்றபாகன் உணர்வுடையனாகுமேல் பேர்கின்றதாகும் பிறப்பு', என்பதனோடும், 'உடம்பெனும் மனையகத்துள் உள்ளமே தகளியாக, மடம்படும் உணர்நெய் அட்டி, உயிரெனுந்திரிமயக்கி, இடம்படும் ஞானத்தீயால் எரிகொள இருந்து நோக்கிற் கடம்பமர்காளை தாதை கழலடிகாணலாமே', என்னும் அப்பர் வாக்கோடும் ஒப்பிடுக.

76- 90: 'துன்பமும் இன்பமும் பாங்குற நோக்கம்'-'பரிவும் இடுக் கணும் பாங்குற நீங்குமின்' - இளங்கோவடிகள் கூற்றைக் கவ னிக்க. கோடாது - பிறழாமல்; 'உரம், ஊக்கம், ஆண்மையும். அளிப்பாய்'- 'விசையுறு பந்தினைப்போல் உள்ளம் வேண்டிய படிசெலும் உரம்கேட்டேன்' - பாரதியார். அகமமகாரம் - நான், எனது என்னும் அகப்பற்று,புறப்பற்று.

91 - 105: அகட்டுத்தே - பெருவயிற்றுக்கடவுள். விநாயகர்; அவிக்ன கர்த்தன் - துன்பங்களை வெருட்டும் தலைவன். விக்னேசுவரன். கரிமுகன் யானைமுகன். கண்ணுறு கடவுளர் -பிரத்யக்ஷதெய் வங்கள்:- அன்னை, தந்தை, ஆசான், முதலியோர். பலம் - பழம். உம்பர், பாதலம், உரைதரு உலகம் - விண், பாதலம், இம் மண்ணுலகம்.

106 -120: ‘அண்டமும் நீயே.... 'முண்டகமலரோன் மாயோன் புரந்தரன் முதல் மற்றேனை அண்டரும் தன்குற்றேவல் அடிமை யாக்கிக்கொண்ட அம்மான்'-திருவிளையாடற் புராணச் செய்யுள்.
தீங்கனி குழுமம் .........' - பழணியாண்டவனுக்கு, பஞ் சாம்ருதம்' உகந்தது என்பது தேற்றம். குழுமும் - கூடும்.

121-135: மாற்றம் - சொல். கரவா அன்பு -மெய்யன்பு. அந்தரங்க பக்தி, யதி - துறவி. செய்ய - அழகான.

136- 150: 'மதனையெரித்து ........ ........ நல்லோன் எறிசிலையோ, நன்னுதால், ஒண்கருப்பு வில்லோன் மலரோவிருப்பு. (சிவப் பிரகாச சுவாமிகள்). இமவான்மகள் . பார்வதி.

151 - 165: சீயம் - சிங்கம். 'முருகன் அவதாரம், ஈசன்முகத்தினின்றும் ஆறு அனற்பொறிகள் இணையற்ற சோதியுடன், 'காமமாதி அறு வகைக்கொடும் பவங்களைத் தொலைக்குமாறு போலவும், 'அயன், அரி, அரன், கணேசன், ஸதாசிவன், உமாமகேசன்' என்ற மூர்த் திகள் யாவும் தாமே என்று நவில்வனபோலும் பறந்து, யாவரும் தாங்க இயலா நிற்கையில், கங்கையில் சரவணப் பொய்கையில் சென்று தவழ்ந்தது' - என்று புராணம் அறையும். முருகனுக்கு, காங்கேயன், சரவணபவன் என்னும் நாமங்கள் உள.

166 - 180: 'அரற்றும் ஏழை..... 'பாடினேன், ஆடினேன், ஆடி நாடி விரும்பியே கூவினேன், உலறினேன், அலறினேன், மெய் சிவிர்த்து இருகைகூப்பி, விண்மாரி என எனிருகண்மாரி பெய் யவே வேசற்றயர்ந்தேன்' - தாயுமானார் வாக்கு.

181 - 195 : 'வன்னெஞ்சன் எனை......... - 'இரும்பு நேர்நெஞ்சக்கள் துரும்பனேன் என்னினும், கைவிடுதல் நீதியோ' - .........வன்... தாயுமானவர்.

196 - 210 : நச்சினாய் -விரும்பினாய்.

211 - 225: வீறாப்பு - செருக்கு, கீரன்: நக்கீரர் - செந்தமிழ்ப் புலவர். திருமுருகாற்றுப்படை' பாடியவர். தமிழ்ப்புலமைக்கும் வீரத் துக்கும் லக்ஷிய புருடர்.

226 - 240: அரம்பை - வாழை 'வாழையடி வாழையென வந்ததிருக் கூட்ட மரபு' - இராமலிங்க சுவாமிகள்.

251 - 265: நாப்பண் - நடு. ஓவியம் - சித்திரம். 'திருப்புகழ்' - அருணகிரியார் அருள் இசைப்பா. போனகம் - உணவு. பரவை- கடல்.
---------------

2.அவனன்றி ஓர் அணுவும் அசையாது ( அல்லது )
வேங்கடேச அகவல்'

1-3-1946 அன்று ஓர் அன்பர், 'ஏதாவது ஒரு நல்ல விஷயத்தைப் பற்றித் தாங்கள் ஆசுகவியாகப் பாடிக் கொண்டு போகவும், நான் அஃதினை எழுதிக்கொண்டு செல்லவுமாக ஆவலுறுகிறேன்' என நவில, அங்ஙனம் ஆசுகவிபாடுவது அசாத்தியமெனவும் என் சிற்றறிவிற்குப் பெரும் துணிபு எனவும் தெரிந்துங்கூட, எல்லாம் வல்லோன் அருள் இருப்பின், அவன் அவ்வாறு பாடவும் வல்லமை தருவான் என்னும் உறுதி பொங்க, அன்னணமே,

'அவனன்றி ஓரணுவும் அசையாது' என்னும் முது மொழியைக் கருத்திற்கொண்டு, பரந்தாமனும் ரக்ஷகர்த்தனு மாய உதயநேரி 'ஸ்ரீ வேங்கடாஜலபதி'யை முன்னிலைப் படுத்தி, அவனருளை விழைந்து பாடியது ஈதாகும்:-

'உதயநேரி' என்னும் திவ்யதலம் திருநெல்வேலி ஜில்லாவில் திருநெல்வேலிக்கு ஆறுமைலுக்கு அப்பால் குணபால் 'தென் திருப்பதி' எனும் மறுபெயருடைய அழகிய க்ஷேத்ரம்' வடவேங் கடம்'மருவி ஏழுமலையான் பதம்பணிய ஆற்றல் அற்றோர்க்கு அதே பலனையளிக்கும் பெருமையுடையது. இறைவன் வேங்க 'டேசன்' என்னும் நாமம்பூண்டு திருக்கோவில் கொண்டெழுந் தருளியிருக்கும் திருக்கோயிலையுடைய இச் சிறுதலம். தூயதா மிரவருணி ஆற்றின் வடகரையில் உளது. எண்ணிற்கிளை வாய்ந்த 'பெத்தவரையன்' எனும் இல்லத்தார்க்கு இணையற்ற வழிபடு கடவுள் இவ்வரதனான வெங்கடாசலபதி. சிற்றூராயினும் நீர்வளம் நிலவளம் மலிந்தஊர் உதயநேரி.

‘அவனன்றி ஓரணுவும் அசையாது' அல்லது ‘ஸ்ரீ வேங்கடேச அகவல்'

ஈசா ! ஈசா ! இதுவுமுன் செயலோ?
அடைக்கலமெனப்புகு அடியன் மெய்சோர,
ஆபதம் நிலைக்கவே அழகெலாம் மாய்ந்து,
வெம்மையும் வறுமையும் வெம்மையின் பறிக்க,
யாக்கையுருக்கெட, ஏற்றமாம் விழைவுகள் 5

எற்றிமோதும் அலைவாய்ப்பட்ட
துரும்பெனச் சிதைவுற, தீயனமேவி,
விருப்பொடு வெறுப்பும் வகையொன்றிலவாய்,
வாய்த்த பிணிகள் வலியவேயுற்று,
மென்மை சிதைய, மேதகு நலங்கள் 10

மாழ்கிக்குறுக, மாண்புடனியற்றும்
மாக்கருமங்கள் மாண்டிடச் செய்த,
(நின்) தண்ணளியின்மை தகுமோ ! தகுமோ !
சகமனைத்தினையும் சமைத்திடுவோனும்,
கணக்கிலுயிரினம் காத்திடுவோனும், 15

கன்ம வினைப்பயன் கடி தினி லாய்ந்து
தூக்கிலெடையென தராதரமோர்ந்து
தகுபலனளிக்கும் தாதை நீயலையோ!
கருப்பையுயிரொடு கல்லினுட்டேரை,
முதலா வுயிர்க்கும் முன்னிய அருளின், 20

புல்லுணவளிக்கும் புனத்துழாய் அண்ணல்,
வேங்கடவெற்பின் வேங்கடேசன்,
எனையாளீசன் எம் மனத்துய்வான்,
யாண்டும் ஒம்புவன் எனு மெணந்தூண்ட,
ஆருயிர்க்கவனே அருந்துணையென்ன, 25

அவனருள் மேவும் அகத்தினனாகி,
அல்லும் பகலும் அகலாதணுகி,
அகன்ற பொற்கழல் அகந்தனிற் சூடி,
அண்ணலே! அரியே! ஆதிமூலமே!
அரனையுங்காத்த அருந்திற உருவே ! 30

திருவினைத் தாங்கும் திகழகல் மார்பா!
கௌஸ்து பதரனே ! காரியை நீரோய் !
ஆபதம் தவிர்த்தே ஆள்பெரும் கோவே!
உதய நேரியாம் உயர்புகழ்தலத்து,
நன்னீர் வளஞ்சூழ் நானில நாப்பண், 35

தூயமக்கள் வாழ் துங்கபுரத்தில்,
வண்ணஞ்சிறிய வகையுறச் சமைந்த,
சின்னஞ் செழிய சீர்வளர் ஆலயத்
தெழில் செய்கோவே! என்றன் கற்பகமே!
அளவிலன்பின் அலர்மேல் மங்கை, 40

உவகையின் மருவும் உம்பர் தாரகமே !
புத்தேளிர் தம் பொறுத்த லாற்றாக்
கடும்பிணி யகற்றிய கண்ணனீயலையோ !
என்றே நாளும் ஏற்றி ஏற்றி
உருகும் என்னை உன்னருளரணுள் 45

உய்ய வைப்பதும் உன்கடனலையோ !
வேங்கடனெனவே வகைபெறு நாமம்

சூடியபெம்மா ! வடசால் குன்றின்
உச்சித்தலத்து, உவகையுடனே
திருவெழுச்சி கொளும் திருவின் கொழுநன் 50

வடவேங்கடத்தான், வாழ் நற்புரத்தான்
ஏழுமலையான், எண்டிசை யோரும்
ஏத்து நற்பெயரான் ! எண்ணரு மக்கள்
ஏற்றி ஏற்றிப் பெற்றிடு வரங்கள்
சூடிடு மளியாம் செம்மலர்க் கையான், 55

ஆர்வ மோடேந்திய அபய அஸ்தன்,
வேங்கட நாதனின் விளம்பருவம்சமாய்,
தன்றிசை வதிந்து தென்னவனாண்ட
நெல்விளைநாட்டின் நாப்பண்ணிடத்து,
நன்னீரேரிகள் நாற்புடை சூழ்ந்த 60

தன்னகரில்லாத் தூய தொழிலாம்
வேளாண் தொழிலின் வண்புகழ் கொண்ட
கரவாநெஞ்சின் கைதவமறியாப்
பெருநலத்துரித்த பேதைய ரேழை
வாழ் சின்னஞ்சிறியவோர் செறிதவச் சிற்றூர் 65

உதயநேரியாம் உறுபெயர் கொண்ட
நேர்புகழ் நோன்பின் நெறிவளர் நலத்தைக்
காக்குந் தேவாம் கரியமாலோன்,
கருங்கடல் துயில்வோன், கருணையம்பதி,
தென்வேங்கடனெனத் தீம்புகழ் இசைப்ப, 70

எம்மனமாள்வான், எங்குல விளக்காய்,
இருளகற்றிடுவோன், அருள் சுரந்திடுவோன்,
பெத்தவரையன் பெருங்குலங்காப்போன்,
விண்ணவர் கோமான் விரைந்தே யென்னைக்
காவா தொழியான் ! கருணைக்கடலோன் ! 75

குடமுனி கனிந்து கொள்தவமேவிய
செந்நிற வெற்பாம் செம்மையின் வாய்ந்த,
பெர்திய மலையின் பேரிடத்துதித்து,
கடுகிமுடுகிக் கண்ணகன்றோடி,
கருத்தொடு வளங்கள் காழ்மிகப் பரப்பும், 80

பொன்னிற வடிவாம் பேர்மிகவாறு,
தாமிர்வர்ணியின், தகுவடகரையின்,
காவினம் சூழ்ந்த பாவலர் புகழும்,
பண்ணிய பயிரின் புண்ணியம் மேவும்,
பண்டைத்தலமாம் பாலா மடையின், 85

அண்மையின் வாய்ந்த அழகிய சிற்றூர்,
மெய்ம்மையினாண்ட மேவரு தேவா !
மெய்யன்பர் குழாம் மெத்தவு மேத்தும்
மென்மலர்ச் செல்வி மருவு மணாளா!
மாதவனே ! மிக மேதினி புரக்கும் 90

பூபரனே ! சுரர் ஊறு வெருட்டிய
வெற்றியின் வாய்ந்த சக்கரக் கரத்தோய்!
உன்னி உன்னி மன்னு நின் பதங்கள்
மனமிசைசூடிக் கணமும் விடாத
நாரண நாமம் நாத்தோலாது 100

நாளும் பகர்ந்து நல்லருள் சுரக்கும்
நற்கதி நீயென நிதமும் நினைந்து
விழையும் கருத்து வேறிலதாக
எழுமுணர்ச்சியுடை ஏழையன்றன்னைக்
காப்பதுன் கடன், காணாய்! காணாய்! 105

அருள் உனதன்றி அணுவும் அசையாது,
ஆட்டுவிக்கு னல்லாடகன் நீயே !
ஆண்டியாயிரக்கும் அடிய னேன்றன்னை,
அணுவளவாகிலும் (நின்) அளிவயத்துய்த்து,
நெறியனாக்குதல் நேர்மையே யன்றோ ! 110

பற்றினேனுன்பதம் புகலிடமறியேன்,
பரமவைகுந்தா! பார்த்தனுக்குதவிய
பாண்டவர் ப்ரேமையரம் பாசப்பிணிப்பின்
மறஞ் செகுத்தவோர் மண்டல நிதியே!
கோவென்றலறிய கஜந்தனைக் காத்தாய்! 115

வல்லெயிற்றரக்கன் வன்னெஞ்சுடையான்
இரணியன் பயந்த இளந்தவமதலை
பால்மணம் மாறாப் புண்ணியச் சேயன்
பால ப்ரஹலா தனைப் பரிவுடன் புரந்தாய்!
மாற்றாந்தாயின் மாற்றம் பொறாது 120

மன்னிய பேர்தவ முன்னவன் துருவனை
மன்னு மாதவ முனிவரர் போற்றும்
மேலிடத் துய்த்து மாப்புகழளித்தாய்!
ஆவும் மாவும் ஆடும் பாம்பும்
மற்றுயிருள்ளவும் மல்குயிரில்லவும் 125

உன்னருள் வலியின் உய்யவிலையோ !
கரந்து நின்றே காவா தொழியின்
கருணாநிதியெனும் அரும். பெயரெதற்கோ?
உள்ளங்கனிந்தே உருகித் தவிக்கும்
புன்மொழியாலழை பேதைக்கிரங்கி
பரிவு காட்டுதல் பரம ! நின் கடனே ! 131

-------
16 -30: தூக்கு - தராசு. 'கருப்பை உயிர்....... கல்லினுள் சிறுதேரைக்கும், கருப்பை அண்டத்து உயிர்க்கும் புல்லுணவு அளித்துக்காக்கும் புனத்துழாய்க்கண்ணி அண்ணல்' - குசேலோ பாக்கியானம்.

'ஆருயிர்க்கவனே அருந்துணை.. ........ 'எம்மான் இடம் ராகம் மலரடிக்கு ஆட்படும் வாழ்வு அரிதே'-திருவரங்கத்தந்தாதி.

'அகன்ற பொற்கழல் ......... 'உன்புக்கிலங்கு சீரல்லால் புக்கிலன்கான் புண்ணியனே'-'பெருமாள் திருமொழி'. 'ஆதி மூலமே' -'வேழம் முதலேஎன அழைப்ப என்என்றான் எங்கட்கு இறை' - நளவெண்பா.

31 - 45: 'அரனையும்காத்த........ பத்மாசுரன் வெருட்ட அரன் ஓடோடிநின்ற காலத்து, மோகினிரூப மெடுத்து அரக்கனைத் தடுத்து சிவனை வைகுண்டபதிகாத்தது. புத்தேளீர், உம்பர், இமையோர் - தேவர்.

'வேங்க்டனெனவே அபய அஸ்தன்' - 'காதலிற்றுச்' - ' சார்ந்தவர்க்கும், காமியத்தைச் சார்ந்தவர்க்கும், வேதனைக்கூற் றைத்தவிர்க்கும் வேங்கடமே - திருவேங்கடமாலை. அழகிய மணவாளதாஸர்.

46 - 65: கரவா நெஞ்சின் ............... 'கோடலிலாவுள்ளத்துக் கோதிலடியவரும் வேடருமங்கை வரைவெல் வேங்கடமே' -- திருவேங்கடமாலை

66 -80: காவாதொழியான்... ..........'ஒல்லும் நின்மைந்தர்க் காவாது ஒழிவனே ஒழியான் உண்மை' - குசேலோபாக்யானம், 'குடமுனிகனிந்து.. பாரதபூமி சமநிலைபெறவே
கண்ணுதற்கடவுள் கட்டளையின் தென்றிசைமேவி பொதிகை மலையில் தவமிருந்து, பரமன் அருளியபடியே திருமணக்கோலம் கண்டுகளித்தவன், குடமுனி, குறுமுனி, என நவிலப்படும் அகத்தியன். முருகனருளின் 'தமிழ்' பரப்பி இலக்கணம் யாத் தோன். 'பாலாமடை' என்பது உதயநேரியின் வெகு அண்மை யிலுள்ளது. நெல்வேலி நகர்புரந்த தென்பாண்டி மன்னனுக்கு மடைப்பெருக்குப்போல் பால் சுரந்ததலம்.

86 -100 : 'சக்கரக்கரம்' - சங்கு, சக்கரம், கதை, வில் இவை விஷ்ணு பூண்பவை.

மெய்யன்பர்குழாம் ........ ஆடகன் நீயே''உள்ளுவார் உள்ளத்தாய், உலகமேத்தும் காரகத்தாய், கார்வானத்துள்வாய், கள்வா, பேராவென்னெஞ்சினுள்ளாய், பெருமான் உன்திரு வடியே பேணினேனே'திவ்யப்ரபந்தம் - திருநெடுந்தாண்டகம்.

101 - 115: 'நாரணநாமம் நாத்தோலாது' -'குலந்தரும், செல்வம் தந் திடும், அடியார் படுதுயராயின எல்லாம் நிலந்தரம் செய்யும்,நீள் விசும்பருளும், அருளொடு பெருநிலம் அளிக்கும் பலந்தரும் மற்றுந்தந்திடும், பெற்றதாயினும் ஆயினசெய்யும், நலந்தருஞ் சொல்லை நான் கண்டுகொண்டேன், நாராயணா என்னும் நாமம் '- திவ்யப்ரபந்தம். திருமங்கையாழ்வார்.
சேர்வானத்தவர்க்கும்,

'அருள் உனதன்றி ........... வையம்முற்றும் ஏனத்து உருவாய் இடந்தபிரான், ஞானப்பிரானையல்லால், இருங்கற்பகம் அல்லாதவர்க்கும், மற்று எல்லாயவர்க் கும், இல்லை நான்கண்ட நல்லதுவே' - திவ்யப்ரபந்தம், திருவிருத் தம். நம்மாழ்வார்.

116 -131: *பாசப்பிணிப்பின்'-தான் தூதுசெல்வதற்குமுன் பாண்ட வருடன் அளவளாவியகாலத்து, பாரத்ப்போரைத்தவிர்க்க சகா தேவனிடம் வழிஉசாவ, ஐவரில் இளைஞன், அவ்வழிகளில் ஒன் றாக கண்ணனை பாசத்தால் கட்டிவிடவேண்டும் என்று கழற, சகாதேவனின் மெய்யறிவைச் சோதிக்கத் திருவுளங்கூர்ந்த கண் ணன், பல ரூபங்கள்காட்ட, இறைவன் மூலவடிவம்கண்டு சகா தேவன் தன் பக்தியென்னும் பாசத்தால் கண்ணன் கழலினைப் பிணித்தான்' - எனும் வரலாறு ஈண்டு அறியத்தகும்.

'துருவனை ........மேலிடத்துய்த்து' ............ உலகுக் கெல்லாம் சிகாமணி யென்ன சேணிற்சேயுயர் பதத்திற்சென்று, புகா விளங்கினன் அவ்வேந்தன் புகழ்ளவர் புகலற்பாலார்'- பாகவதம், செவ்வைச்சூடுவார். 'துருவன் பதம்பெற்றது'.
----------------

கோமதி அம்மன் பேரில் முப்பத்து (விருத்தங்கள்)
1. கழிவிரக்கப்பத்து, 2. இனியவைபத்து & 3. கோமதி அம்மன் தோத்திரப்பத்து


முன்னுரை

'திருப்புடைமருதூர்' எனும் சிறு மூதுர் திருநெல்வேலி ஜில்லாவில் அம்பைத்தலத்தை யடுத்து (அம்பாசமுத்திரம்) கடனை (கருணை) நதி தாமிரவர்ணியோடு கலக்கு மிடத்தில், புடார் ஜூனேசுவரர் எனும் நாறும்பூநாதரும் கோமதி அம்மையும் திருக்கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் பேராலயத்தை யுடைய, நாற்புறமும் நீர்நிலங்களாற் சூழப்பெற்ற, இருமொழியும் நான்மறையும் கலையொடு குணமும் ஒருகால் பூரணவளத்துடன் மிளிர்ந்த ஊராகும். என்மூத்தோர் வாழ்ந்தஊர். என் உள்ளம் அவாவும்ஊர். இவ்வூர் தலமஹிமையைப்பற்றி தனியாக ஆயிரத்து நூற்றுப்பதினொன்று வரிகள் பாடியுள்ளேன்.

இம் முப்பது விருத்தங்களும் அதிதேவதையாகிய கோமதி அம்மன்பேரில் பாடப்பெற்றது. என் ஒரே பெண்ணின் மண வினையின் நிமித்தம் என்னூர்போந்து, அவ்விழா இடையூறின்றி இனிது முடியவேண்டுமென்று அம்பாளுக்கு முறைப்படி அர்ச் சனை முதலிய வழிபாடு நடத்தி வேண்டிநின்றகாலத்து, அம்மை யின் அருளால் அடைந்த அருந்தமிழ் அறிவினைக்கொண்டு அவ் அதிதேவதையை அகமகிழ்ந்து ஏத்தி அகலா அருள் அடைய வேண்டும் என்னும் அவா அரணியாக, அன்னையின் திருமுன் னிலையிலேயே பாடியது.

காமதேனுவுக்கு இணையாக நல்லோர் நல்முறையில் கோரும் வரங்களை அருளுடன் நல்குவதால் 'கோமதி' என்னும் திருநாமம் பூண்ட என் அம்மையைநாடி பில்லி சூனியம் முதலிய தீராக் குறையுடையோர் பல்லோர் நாடோறும்வந்து தத்தம் குறைதீரப் பெற்று அகல்வது இன்றும் கண்கண்டகாக்ஷி.

எனவே அம்மையின் பாதத்தைப்பற்றும் அவா உந்த சிறு போழ்தில் பாடிய இவ் விருத்தங்கள், மொழி, பொருள், யாத்தற் குறைகள் பலவுடன் இருத்தல்கூடும். அவற்றினை மேலோர் ஒதுக்கி ஏழையேற்கு ஆசிகூறி, அம்மையின் அருளையும் பெறுவாரென்பது எளியன் துணிபு.

அவையடக்கம்

எண்ணெழுத்தறிவோடு பல்கலைகள் பயின்றுணர்
      கண்ணனைய திறமை இல்லேன்
பண்ணுவமெனத் துணிந்து பாவினங்கள் கோற்பதுவெண்
      தண்மதியைப் பற்றுதலின் நேர்
திண்ணமுடன் பின்னை இதுயாத்தவொரு துணிபுடையேன்
      கண்ணியர்தம் அருளை நாடி
எண்ணுமருஹைமவதி கௌரிதனின் புகழ் பரவ
      துன்னுமிக ஆவல் உந்த
விம்மு மனத்தாபங்களை உற்ற முறையீடுகளை
அம்மையிடம் பனுவல் தேர்ந்தேன்
புண்மனத்தின் வெம்பிணிகள் அன்னை தனைப் புகழமுதால்
      அகலுமென விழைந்து நின்றேன்
பண்ணதனில் சொற்குறைகள் பொருட் பிழைகள் இனைய பல
தோன்றிடினும் தகைமை சான்றோர்
தண்மையொடு கண்ணருளி அகதியேன் உண்மை நிலை
      நண்ணிடவே ஆசி கூறீர்.

3.1. கழிவிரக்கப்பத்து


ஒப்பற்ற நாயகி குணநிதி அகிலாண்ட
பரிபூர்ண ஞானாம்பிகே
திக்கற்ற ஏழையேன் நெஞ்செனும் மடுவது
கலங்கித் தவிக்கலாமோ
பற்றற்ற புனிதனாய் நிஷ்காம்ய சித்தனாய்
பாவியேன் ஆவதெப்போ
முற்ற முற்றவே யிந்த லோகமா மாயத்தில்
      அழுந்தியே கிடக்கலாமோ

கட்டற்ற உள்ளத்தை அடக்கியே உண்மை நிலை
நிறுத்தவோ வன்மை இல்லை.
எற்றியே எற்றியே உந்து வீணாசைகள்
      பளிங்கத்தின் சாயை போல
சற்றேனும் உண்மையில வாகவே உண்மையாம்
      மோனநிலை அறிய வைப்பாய்
காருணீ சீர்மேவு புடைமருதூர் காத்தருள்
      அன்னை கோமதி அம்மையே.

2. பன்னூல்கள் கற்றாலும் நூல்களின் முடியதாம்
      உன்பாதம் விழைந் ேதனில்லை
தொன்னூல்கள் பல வேற்றும் புனிதையே உன் மஹிமை
சற்றேனும் அறிந்தேனில்லை
கன்னெஞ்சனாகியே கருமங்களாற்றினேன்
      பகுத்தறிவு உற்றேனில்லை
வன்னெஞ்சனேன் செய்கை நல்லது தீயதென
அறிந்தனவும் ஓர்ந்தேனில்லை.

புன்மையின் கொலைகளவு காமம் பொய்சூதுடன்
வஞ்சகம் தவிர்த்தேனில்லை
வன்மையின் பொய்மையும் மெய்யெனவே தோற்றுவபோல்
      செய்கைகள் ஒழித்தேனில்லை
கன்மமாம் இப்பிறவி பாபசக்ரத்தினுள்
உழல்கிறேன் உணவு தாராய்
காருணீ சீர்மேவு புடைமருதூர் காத்தருள்
      அன்னை கோமதி அம்மையே.

3. கபவாத பித்தமொடு சிலேஷ்மமது உற்றக்கால்
யமவாதை தவிர்த்தலுண்டோ
அபவாதம் பழிபாவம் பலபுரிந்திடுவோர்க்கு
      சிவபாதப் பேறுமுண்டோ
மிகவாத மெத்தனை அவனியிடை புரிந்தாலும்
      செல்லுலகில் வெல்வதுண்டோ
துர்வாத புன் புலால் புண்ணதை மறைத்திடினும்
      நாற்றமது மறைவதுண்டோ

ஒவ்வாத வஞ்சத்தால் வன்மையுடன் ஏய்த்திடினும்
      பரமனறியாததுண்டோ
செல்லாது செல்லாது செல்பவையெலாம் இங்கு
      துகளாகி வீழுமல்லால்
தோலாத திருமார்பன் தங்கை பாகன் அரனை
      ஒளித்து மொரு கருமமுண்டோ
காருணீ சீர்மேவு புடைமருதூர் காத்தருள்
      அன்னை கோமதி அம்மையே.

4. பெற்ற தாய் தந்தையரும் உற்றவரும் சுற்றவரும்
      பெண்டு புத்திரர்கள் தானும்
கற்றசாத்திரம் பலவும் தந்திரமும் மந்திரமும்
      சொல்வன்மை சாதுர்யமும்
உற்றதோர் உத்யோகம் பொன்வெள்ளி மணிகளோடு
      உற்றபேர் ஐசுவரியமும்
மற்றவோர் பெற்றமும் பசுவுடன் பைங்க திர்ப்
      புலன்களும் காண் வளங்களும்

பெற்ற பேரெனக்கருதி (இம்) மாயப்ரபஞ்சத்தில்
வாழ்கின்ற வாழ்க்கையெல்லாம்
சுற்றும் வெம்கானலின் அலைகண்டு நீர்மோதும்
      கடலென நீனைப்பதல்லால்
உற்றவோர் உண்மையென நம்பியே மோசத்தில்
      நெஞ்சமது புகவிடாதே
காருணீ சீர்மேவு புடைமருதூர் காத்தருள்
      அன்னை கோமதி அம்மையே.

5. துன்பம் வந்தெய்தவே ஓடோடியும் வந்து
      கோமதி காப்பாய் என்பர்
இன்பம் வந்தெய்தவே மெய்ம் மறந்தெள்ளளவு
      நியாய ஸத்கரும மோரார்
அன்பிலார் இன்முகமும் இன்சொலும் இன்றியே
அகந்தையில் மூழ்கி நிற்பார்
என்புருக யாக்கையும் மாழ்கவே பிணியேறி
      காலபாசம் தொடர்தர

தன்னுரையும் தோற்றமும் குழறியே மயங்கிடும்
வேளையும் பற்று நீங்காத்
தன் தனயன் தன்பெண்டிர் தன் செல்வம் என்றெண்ணும்
      பொய்த்தளை சிறிதும் நீங்கார்
தென்தேயத் தலைவனே நேர்வந்தழைக்கினும்
      சிவநாம உறுதி தேடார்
காருணீ சீர்மேவு புடைமருதூர் காத்தருள்
      அன்னை கோமதி அம்மையே.

6. எண்ணரிய குற்றங்கள் எத்தனை செய்தேனோ
      இத்தகைய பிறவியேற்க
பண்ணரிய பூசனைகள் பண்ணுவோர்க்
      கிடையூறு இச்சகம் பல சொற்றேனோ
விண்ணறியும் என்பதனை மறந்துமே திரிகரணம்
      பாழ்படவே பவம் செய்தேனோ,
அன்னெறியில் ஐம்பொறிகள் ஐம்புலன்கள் அவிந்திடவே
அடங்காது செலவிட்டேனோ,

அதிகார மமதையினர்க் கிச்சைகள் பலசொல்லி
இடித்துண்கை பெரிதாயினேன்,
கதிபார்க்கில் வால்குழைய வயிறுவளர் சுணங்கனின்
பெருமையின் அதிகமில்லாப்,
பழிகாரப் பேதையேன் சுய அறிவும் கயவாழ்வும்
நல்லுணர்வும் பெறவே அருளாய்,
காருணீ சீர்மேவு புடைமருதூர் காத்தருள்,
      அன்னை கோமதி அம்மையே!

7. எண்ணாத எண்ணங்கள் பல்கோடி மல்கியே
      புண்ணான நெஞ்சின் ஆனேன்;
நண்ணாத சுற்றமும், எண்ணாத பல்லுறவும்
      நம்பியே மோசம் போனேன் ;
கண்ணாரக்கண்டுமே தீமையென உணர்ந்துமே
      பரிவுடனே வாரிஉண்டேன்;
விண்ணாக புவனத்தில் விரைமலர்கள் பல்கோடி,
      தூய்மையை திகழ்விக்கவும்;

கொண்ணாத இன்னமுதுப் பேர்நாமத் திருமுறைகள்
எத்தனை எத்தனை காண்கினும்;
வீணாக நாளழிய நல்வகைகள் ஒன்றேனும்
      காண்கிலேன் துன்பமொழிய;
ஒண்ணாத ஐயமும் திரிபொடு மயக்கமும்
      கோபதாபமு மொழியவே;
காருணி சீர்மேவு புடைமருதூர் காத்தருள்
      அன்னை காமதி அம்மையே!

8. நானெனது என்னுமே அகப்பற்று புறப்பற்று,
      கிஞ்சித்தும் அகலவில்லை;
தானிலாவிடிலேயோகோபுரம் வீழுமென,
      சிறுபொம்மை கருதுமாறாய்;
நானிலாவிடிலேயோ குடும்பமொடு ப்ரபஞ்சமும்,
நலிவுறுமென நினைத்திடும்;
வீணிலாம் தற்பெருமை ஒடுங்கிலேன் பணிவுபெற,
      இன்னல் விளை நாவடக்கிலேன் ;

பானிலா மதியதின் தேய்பிறையும் வளர்நிலையும்
      மாறி மாறி நிகழ்வபோல்;
உண்ணிலா இன்பங்கள் துன்பங்கள் பல்கோடி,
      நிலையிலா உள்ள மீர்த்துக்
கண்ணிலான் அங்காடி வீதிவழி செல்வபோல்'
      திக்கு முக்காடும் வேளை;
காருணீ சீர்மேவு புடைமருதூர் காத்தருள்,
      அன்னை கோமதி அம்மையே !

9. இனியவர்கள் என்சொலினும் இன்சொலாக்கொள்ளாது,
      கடியவர்தம் கனிமொழி மடுத்துமே ;
பனிமொழியர் மெல்லியர் தம் தேன்பொழியும் சொற்களை,
      மெய்யமுதெனக் கொண்டுமே;
நனியின்பமென வொளிரும் அரங்கமதில் அரசாளும்,
      பொய்ந்நிலை சுகமுற்றுமே,
கனியிலவு காக்குமோர் அஞ்சிறையின் பைஞ்சுகமாய்
      மனமொசிய தாபம் கொண்டேன்;

நினையும் சுகம் பலவினுக்கும் ஊன்று கோலாவதெல்லாம்,
      தன மொழிந்தில்லையென்று ;
நனவினொடு கனவிலுமே தனந்தேடும் அரணியது,
      வெந்திறலின் பிடருந்தவே ;
மனமாய பிணிதோய உடல்தேய செயல் ஓய,
      உன் பாதம் கருதலில்லேன்;
காருணீ சீர்மேவு புடைமருதூர் காத்தருள்,
      அன்னை கோமதி அம்மயே !

10. பிணிமூத்து மெய்சோர ஆவியது உள்ளென்றோ,
      வெளியென்றோ கலங்கும் வேளை ;
அணிமுத்து பொன்மாலை மார்பினரும் மக்களும்,
      காக்க இயலாத வேளை ;
பன்முத்து பவழங்கள் பொக்கிஷங்கள் உயர்நிலைகள்,
      யாவும் கைவிட்ட வேளை ;
மனமொத்த செய்கைகளும் சொற்களும் விழைவுகளும்
      பயனிய வென்றான வேளை ;

இனமொத்த பண்பினர் இனியவராய் நிகழ்ந்தவர்,
      நட்பெலாம் பொய்க்கும் வேளை ;
உளையேத்து நாளெலாம் விழலிலிடு நீரதாய்,
      பயனறுத்திறுதி வேளை ;
நாயொத்துழல்வேனை சுடுமணலில் காய் சேயை,
      கண்குளிரக் கண்டு தவுவாய்;
காருணீ சீர்மேவு புடைமருதூர் காத்தருள்,
      அன்னை கோமதி அம்மையே!
----------------

3.2. இனியவைபத்து

1.ஒப்பரிய நின்நாமம் செப்பலின் இன்னமுதம்
      ஆய்தலின் பிறிதுமுண்டோ
எப்பிறவி எடுத்தாலும் நின்னடிக் கென்மனம்
      பற்றலின் பயன் வேறிலை
தப்பரிது பவவினைகள் தொடர்பினின் என்னவே
      கருமங்கள் ஆய்ந்து செய்வோம்
தப்பிலான் பரமன்மேல் பழிகூறி நொந்தக்கால்
      பிறவி பயனுளதாகுமோ

ஒப்பிலாத்தூயவெண் பாலதின் நீரதைப்
      பிரிக்குமா வன்னமேபோல்
ஒப்பியறை வேதநூல் சாத்திரம் பயின்றதன்
      ஸாரத்தின் உண்ணுகர்வார்.
தப்பாமல் ஓர்ந்துதம் பங்கயமாம் வாழ்விடை
பற்றுநீர் பற்றலாக்கார்
காருணீ சீர்மேவு புடைமருதூர் காத்தருள்
      அன்னை கோமதி அம்மையே.

2. வெறும்பானை பொங்காது ஒச்சுவெந்தழலிடையே
      பிராணமய அன்னமின்றி
உறுமனமே அகலாக தன்னுணர்வு அனலாக
      ஆத்மனே அரணியாக
வெறும் யாக்கை அடுதொழிலின் சாலையாய் விளங்கவே
      இந்தனம் கலை நலமுமாய்
உறுகருமம் எனும்பொருள் சமைதலை நோக்கியே
      நடுநிலையெனு மகப்பையால்

திரிகரண சுத்தியாம் பிடிகொண்டு ஏந்தியே
      உறுதியுடன் மகிழ்ந்து உண்பார்க்
கறுமிடர்கள், பவமொழியும், பேதிக்கும் நெஞ்சமும்
      ஸ்வானுபவ ஒளியின் தெளியும்,
செறியுபந்தங்களும் பளிங்கத்தில் உறுகின்ற
      ப்ரதிமைபோல் தோன்றி யொழியும்,
காருணீ சீர்மேவு புடைமருதூர் காத்தருள்
      அன்னை கோமதி அம்மையே.

3. சகமேழு மழுந்தியே வெம்கடல்கள் பொங்கிடவே
      வடவாமுகாக்கினிதனின்
மிகவெழுஞ் சவாலையதின் நாப்பண்ணிருப்பினும்
      நின்பதத்துணையிருப்பின்
கதிர் எழுங்கணப்பொழுதில் மஞ்சுவொடு துளிர்
      மறைந்திடும் பான்மை போலே பனியும்
உறத்தழுவு துயரினங்கள் மனமெனும் பஞ்சரத்தின்
      இருக்கைவிட்டோடும் மீளா

அனல் மெழுகுருக்குதலின் அனையவே உன்னருளின்
      தாபமது மனனைவாட்ட
மிகத்தொழுது உனைவேண்டி மென்மலரின் பதம் நாடி
என்மனம் விரையுங்காலை
அழுமதலை யெனையாண்டு உன்னடிக்காளாக்கிப்
      பிறவி நோய்தீர்த்து வைப்பாய்
காருணீ சீர்மேவு புடைமருதூர் காத்தருள்
      அன்னை கோமதி அம்மையே.

4. மனமான பேய்தன்னை ஆள்திறமை கொண்டிடத்
      திடமான நோக்கு வேண்டும்.
சினமான கொள்ளியப் பைசாசம் அகமுற்று
      அனல்கொளுத்திடும் வேளையில்
கனமான நின்நாமம் சதமுறைகள் ஓதிடத்
      தண்ணமுது எரி அவிக்க
இனமானம் பொறுமையுற அகம்வீய உறுமாக
      நிணக் கொதிப்படங்கு மம்மா

பெறுமான தவயோக எண்சித்திகள் யாவும்
      ஒடுங்கு மனமின்றியில்லை
எண்மானம் எண்ணிலா எண்ணங்கள் பல்வேறு
      சொற்செய்கை தவிர்த்திட்டுமே
தன்மானம் தன்கருமம் தன்வீடுகாத்துமே
      தன்னிலையறிய யருள்வாய்
காருணீ சீர்மேவு புடைமருதூர் காத்தருள்
      அன்னை கோமதி அம்மையே.

5. வறுமையெனும் கடும்பிணியின் பரிபவமும் தாபமும்,
      என்புருக உயிர் வீய்க்கவும்;
உரிமையெனும் மனம்விற்று இரத்தலொடு நிழலெனவே,
      பின்சென்று இதம் பேசியே;
தருமெனினும் வல்நிதிகள் அவ்விழிவின் சாராத,
      பெருந்தகைமை பெறுதல் வேண்டும்;
கருமியரைக் கர்ணரெனக் கொலுபவரைத்தர்மரெனத்
      தருக்குறு குறைகுடத்தரை;

அருநெறியரென வேற்றி அரிய மனச்சான்றுதனை,
      கொன்று உய்யாமை வேண்டும்;
செறுமெனினும் துதிநாவின் கோடாமையோடு நல்,
      இன்மொழியின் உறுதி வேண்டும்;
உறுவலியர் எளியரெனும் பேதமில் ஒப்புரவின்,
      தன்னல மறுத்தல் வேண்டும்;
காருணீ சீர்மேவு புடைமருதூர் காத்தருள்,
      அன்னை கோமதி அம்மையே !

6. கலநிதி புலங்கள்மிக ஆவினம் முதலான,
      எண்ணிதிகள் உ உறவு வேண்டாம்;
பவநிதி புரக்குமிக பந்தங்கள் சுற்றமும்,
      உயர்நிலையின் பெருமை வேண்டாம்;
பெருநிதியெனும் இவுளிமீதேறி வழியீறி,
      அன்னெறி அளாவிமிக்க;
பழிநிதிகுவித்திடவே கண்செவிகள் அவியதயை,
      மாய்போலிப் பேறு வேண்டாம்;

இருநிதி குலப்பெருமை குணநீத்து உய்யுமொரு,
      உய்வகை உபாயம் வேண்டாம்;
இழிவதியும் பொய்குறளை புறங்கூறல் இம்மூன்றும்
      வளந்தரினும் ஒம்பல் வேண்டாம்;
என்வரினும் சான்றாண்மை குன்றாமையோடுநல்,
      நடுநிலைய மனமும் தாராய்;
காருணீ சீர்மேவு புடைமருதூர் காத்தருள்,
      அன்னை கோமதி அம்மையே !

7. பரிவொடு இடுக்கணும் பாங்குறவே நீக்கிடும்,
      பகுத்தறிவு உறுதிவேண்டும்;
அரிஅரன் அயனாதி தேவர்கள் பாலன்பு,
      எக்காலும் தொடரவேண்டும்;
அரிந்துயிரை ஊன் உண்டு ஊன்பெருக்காது மிக,
      இழிபுலால் தவிர்க்க வேண்டும்;
செறியறங்கள் பலவற்றுள் செய்நன்றி கொல்லாமை,
      வெம்பகையின் ஒன்றலாரும்

கருத்தழிய கசடுபட உறுஇதம் புரிந்துமே,
      அன்பொடு அளாவ வேண்டுய்;
பொய்க்கரி புகன்றுமே மாசற்ற உள்ளமதின்,
      கடுஞ்சாபம் தவிர்த்தல் வேண்டும்;
பொருண்மொழிகள் நீங்காது அறவோரவைக் களம்,
      அகலாது வைக வேண்டும்;
காருணீ சீர்மேவு புடைமருதூர் காத்தருள்,
      அன்னை கோமதி அம்மையே!

8. குணமிலர் கூட்டுறவு கனவிலும் விழையாது,
      மிகுசேய்மை விலகவேண்டும்;
தணலெனவே அஞ்சியே பிறமாதர் முகநோக்கி,
      இச்சித்திடாமை வேண்டும்;
தணல்முன்பு பலர் சான்றாய்க் கைப்பிடித்திட்டவோர்,
      மடமங்கைதன்னை மருவி;
இனமான இல்வாழ்வு இருநயன மொப்ப நெறி,
      நின்றுவறம் கூட்டவேண்டும்;

பிணமாகத் தோல்வற்றிச் சாயினும் பரதனத்தை,
      லோஷ்டமெனக் கொள்ளல் வேண்டும்;
கனமான இன்னல் மிகப்பல கூடிமாய்ந்திடினும்,
      வெகுளி வெம்பனுவல் கொள்ளாத்;
தனமான இன்சொலும் அணிபொறையும்,
      இன்முகமும் உரமாகக் கொள்ளல்வேண்டும்;
காருணீ சீர்மேவு புடைமருதூர் காத்தருள்,
      அன்னை கோமதி அன்னையே!

9. வறுமையிலும் கோடாது செம்மனப் பான்மையொடு
      தொல்லறம் காக்கவேண்டும்;
அருமையாம் நட்புகுத்து அல்லார் தம் கொழு நட்பு,
      என்றும் கோடாமை வேண்டும்;
அரும்பாடுடன் முன்னோர்வைத்த வொருவொண் பொருளின்
      உறுதிகோறாமை வேண்டும்;
உறுநெஞ்சு பொய்க்காது வஞ்சம் தவிர்த்துமே,
      நல்லமதி கொள்ளவேண்டும்;

இருமுதியர் ஐங்குரவர் தெய்வமென்றுன்னியே,
      புலனுறவே போற்றவேண்டும்;
அருங்கலைகள் கற்றிடினும் தருக்கின்றி யாவர்க்கும்,
      பனிமொழியும் அன்பும் வேண்டும்;
கருந்தனக்கல்வியதைப் பெற்றாலும் போதாது,
      யாவர்க்கு முதவல் வேண்டும்;
காருணீ சீர்மேவு புடைமருதூர் காத்தருள்
      அன்னை கோமதி அன்னையே !

10. உற்றவர்க்கெலா மெனியனாகியே பெற்றதனம்,
      கல்வியொடு பண்பு மூட்டி ;
பற்று நூல் பலவற்றின் நுட்பமதைக் கற்றலே,
      மிக்க அடிப்படையதாக ;
உற்றறியும் நுண்ணுணர்வு சுவர்களும் ஆகவே,
      புன்மையெனும் சுண்ணம் தேய்த்து ;
செற்றுமறம் உற்ற அறப் பல சுமைகள் கற்களாய்ப்,
      பண்புற விமானமேற்றி ;

பற்றுடனே பற்றிலனாய் உற்றதவப் பயனென்னும்,
      உறுதி உடைகம்பனாட்டி ;
பெற்றவறம் பொருளின்பம் வீடுபெறவகுத்த வழி,
      எனநான்கு பொருள்கள் கூட்டி ;
இகபரமென்னீரிடமும் இசையுடைய வீட்டிடையே,
      இன்னருளின் வாழவேண்டும்?
காருணீ சீர்மேவு புடைமருதூர் காத்தருள்.
      அன்னை கோமதி அம்மையே !
----------------

3.3. தோத்திரப்பத்து

1. பகலவனின் கதிபோல வனுதினமும் எழுவதும்
      பசனக்கலங்களோர்ந்து
அகடு நிறை பொருளனைத்தும் ஆக்குவதும் உண்ணுவதும்
      உறங்குவதும் மாய வொன்றே
பகடெனவே நுக பந்த மனமேந்தி விழி பிதுங்க
      பவமூட்டை சுமந்து நிற்கும்
அகதியெனை எடுத்தாண்டு நின்னருளின் ரஸமூட்டி
      கோதினெறி யுய்த்திடாயோ

ஜகமுழுதும் அனையென்று தொழுதேத்தும் பாவையே
      இமயவன் மகிழ் செல்வியே
மிகும் பிணிகள் மெய் வீழ்த்த மனமொசிய உள் கலங்க
      ஆதரம் அற்ற இந்நாள்
செகுவலமை தரு முனது பதங்கள் துணை மிகவுறவே
      செங்கமல நயனத்தாள்வாய்
காருணீ சீர்மேவு புடைமருதூர் காத்தருள்
      அன்னை கோமதி அம்மையே !

திருப்புடைமருதூர் தல மகிமை

2. தென்குமரியெல்லையாம் தீம்புனல் யாறு பல
      தோன்று முயர் அசலமாகும்;
தேன்மொழியாம் தென் மொழியில் கால்விரிக்கும் விரையெனவே,
      முத்தேயம் மகிழச் செய்த ;
தன்னிகரில் குறுமுனிவன் தவம் புரிந்து சிவசக்தி,
      மணவழகு கண்டவெற்பாம்;
தனிவண்ணப் பல்பொருளின் விலைபுலமாம் தென்றல் உறை,
      பொதிய மலையகட்டில் தோன்றி;

கனிந்த முதிர் செழும் பொழில்கள் பல்தலங்கள் ஊடுருவி,
      அருமருந்தின் செந்நிறத்தாய்;
தனிப்பெயரின் தாம்பரவர்ணி யெனுமணங்கு மகிழ்ந்தணைக்கும்,
      தொண்டர் வாக்கமுதம் போற்றும்;
மன்னுதவச் செல்வர் பலர் ஹித்திபெறு மகிமை யுடை,
      பல்வளம் சூழ்தலத்தின்;
காருணீ சீர்மேவு புடைமருதூர் காத்தருள்,
      அன்னை கோமதி அம்மையே!

தலவரலாறுச் சுருக்கம்

3. கண்ணுமுனி முனிந்திடலும் மண்ணினரெலாமிகழ
      வெஞ்சாபம் தீரவோடி
விண்ணிமையர் தலைநெஞ்சம் வெம்பிடவே உமைபாகன்
      பதந்தன்னில் சரண் புகுந்துமே
கண்ணுதலும் அதுகண்டு சுரபியொடு பின்போந்து
      பராதப் பூமி தன்னின்
எண்ணு மருநெறி கடந்து புண்யமாகிடக் கையுறு
      தலமெல்லாம் போற்றி வாராய்

பண்ணிய முன் தவப்பயனால் தென்கோடி புனிதநதி
      அண்மை உயர் மருதத்தருக்கீழ்
புண்ணிய கருத்தமைந்த தொண்டர் தம் தொண்டனாய்
      ஸ்வயம்புவாய் நான் இருப்பேன்
எண்ணிய கருத்தின்படி உன்சாபம் தீருமென்
      றோது புடார்ஜுன வள்ளலின்
காருணீ சீர்மேவு புடைமருதூர் காத்தருள்
      அன்னை கோமதி அம்மையே.

தல புராணச் சுருக்கம்- தொடர்ச்சி
இந்திரன் சாபம் நீங்கியது.

4. கர்வித்த மேருவைச் செறுத்த வச்ராயுதத்தோன்,
      தருமூன்று மருதவடிக்கீழ்;
நிர்மித்த அரனுரையின் லிங்க வடிவாய்த்திகழும்,
      மூர்த்தியொரு மூன்று கண்டான்;
உறுவித்தகம் பெற்றான் மல்லிகாமத்யமொடு,
      புடார்ஜுனத்தல மெய்தியே ;
மலமற்று திருவுற்று கடனையொடு தாமிரநீர்,
      கலக்குமிடம் நீர்மூழ்கியே;

மனமொத்து எனையாண்ட நித்தனை நிமலனை,
      யேத்தியே உயர்வு பெற்றான்;
சிலையொத்து செயலற்று நிலையற்று நின்றேனை,
      பந்த அலைநீந்த அருளாய்;
வரையற்ற தவச்செல்வி வரையரையனருஞ்செல்வி
      சசிதரனையணைந்த செல்வி;
காருணீ சீர்மேவு புடைமருதூர் காத்தருள்,
      அன்னை கோமதி அம்மையே!

பண்டாரம் பக்தி மேம்பாடு

5. தொல்குலப் பணியேந்தி சுரும்பிரைந்து நறுக்தேனுண்
      அன்றலர் மலர் மாலையை;
செல்கலா முட்செறிந்த வம்புசெறி கொடுங்குடியர்,
      நடமாடு நெறிகடாவி;
கொள்கலா மின்னொளியும் பேரிடியும் பெருமழையும்
      உரமுடைய நெஞ்சை வாட்ட;
மீள்கலா மூதறிவின் தார்க்கூடை யேந்தியே,
      ஆற்றின் கரையணுகுங்காலை;

வற்கலையின் தோல்போர்த்த சடாமுடியன் கொன்றையன்,
      பக்த பரந்தாமன் ஈசன்;
சொல்கலையின் முடிவான ஜோதியன் அக்கணத்து,
      பக்த பண்டார னெதிரே;
மிக்கலைமோது பெருவெள்ளமது கரைபுரள,
      கடத்தலரிதாகச் செய்தான்;
காருணீ சீர்மேவு புடைமருதூர் காத்தருள்,
      அன்னை கோமதி அம்மையே!

பண்டாரத்துக்கு ஈசன் அருள்செயல்

6. வெள்ளமதைக் கண்டனன் விண்டனன் நெஞ்சமது,
      கொண்டபெருஞ் சோகத்தாலே;
தள்ளலாப் பெருவேக ஒழுக்குடைய யாறுதனில்,
      மேன்மேலும் நீர்பெகுகவே;
முள்ளெலாம் தாளேற கொடுமழையின் மெய்நடுங்க,
      சுமைதாளாத் துன்பத்தனாய்;
கள்ளமில் உளத்தினன் தஞ்சம் நீயென்றானைக்
      கைக்கூப்பி நிற்றலானான்;

வள்ளலே என்துயரம் காண்கிலையோ தொண்டனாய்,
      உன்ஸேவை மேற்கொண்டேனை;
தள்ளலழகாகுமோ பித்தனே யருளாயேல்,
      அத்தனே ஆவி தாங்கேன்;
என்னுமுரை கேட்டுமே செவிசாய்த்து இடர் தீர்த்தோன்
      நாயகியே காத்யாயனி;
காருணீ சீர்மேவு புடைமருதூர் காத்தருள்,
      அன்னை கோமதி அம்மையே!

7. மீன்மிக்க வொளிசெய்து போகுனரை அழைத்திடும்
      காக்கைப் பொன் தங்கமாமோ
சொல்மிக்க ஜாலங்கள் செய்திடினும் தந்திரம்
      கண்கட்டி வித்தையென்பார்
திறமிக்க யாக்கையின் பயிற்சியின் யோகநிலை
      பல பலவே காட்டினாலும்
தவமிக்கு உண்மையுணர் மெய்ம்மோன நிலையென்று
      புகல்பவர் யாருமில்லை

சுவைமிக்க பால்போன்று வெண்ணிறங் காட்டினும்
      மென் சுண்ணம்பாலதாமோ
ஒளிமிக்க கண்ணாடி துணைகொண்டு நோக்கினும்
      கூர்விழியின் பார்வையாமோ
தரமிக்க பல்வளங்கள் பெருகினும் போலியே
மெய்த்துணை உன்பதம் அலால்
காருணீ சீர்மேவு புடைமருதூர் காத்தருள்
      அன்னை கோமதி அம்மையே!

8. வல்லரக்கன் சம்பரனை மஹிஷவுருக் கொண்டவனை
      மாய்த்துலகு காத்த தேவி
செல்லரிக்கும் செயல் போலென் அரக்கர்தனை
      மாய்ப்பாய் தேவி மனமறுக்கும் கொடிய குண
தொல்லரக்கர் மதுகைடபன் முதலோர் கொடு பிணிகள்
      ஆற்றலார் துயர் துடைத்தாய்
கள்ளரக்கனெனும் வஞ்சமாமாயை யோட்டிமெய்
      ஒளியதனைக் காட்டாய் தேவி

அளிபுரக்கும் தேன் பன்னீர் பால் மஞ்சள் சாந்து
      விரைபொருளின பிஷேகித்து
பல்லிறக்கம் மேடுபல காடுமலை சுற்றி நறு
      மலர்தேடிக் கொணர்ந்திட்டு நல்
உள்ளுருக்கமின்றியே பூசனைகள் பற்பலவே
      புரிந்திடினும் பயன் யாது காண்?
காருணீ சீர்மேவு புடைமருதூர் காத்தருள்
      அன்னை கோமதி அம்மையே !

9. கலியுகத் தெய்வமென அண்டினோர்க் காதரவு கொடு
      உடன்காட்டும் செந்தூரனை
வலியுகுத்திடு சூரபது மன்முதல் கொடியரஞ்சும்
      வேலாயுதக்கையனை
தலமஹிமையுடைய படைவீடுகன் ஆறினும்
      திருக்கோயில் கொண்டவேளை
வலியுடைய மயில்மீது பறந்துமே மூவுலகு
      சுற்றியே கனிவிழைந்திட

கனவயிறன் பரம்பொருளாம் தாய் தந்தை மஹிமை உணர்ந்
      தேத்தியே கனிபற்றிட
சினமடங்க மதலையுறு கொண்டு வரைப் பழனியுறை
      பாலசுப்பிரமணியனை
வரமுருகன் பாமை வள்ளி நாயகனைப் பயந்திட்ட
      மாதேவி அன்பு வடிவே
காருணீ சீர்மேவு புடைமருதூர் காத்தருள்
      அன்னை கோமதி அம்மையே !

10. பன்னாக பூஷணன் கங்கையின் கர்வமதை
      அடக்கியே சிரம் பூண்டவன்
என்னாகுமோ வென்று ஏங்குபல் உயிர்காக்க
      ஆலகால விடமுண்டவன்
செந்தா மனத்துடனே தொண்டர்கள் பலகோடி
      வடமொடு தென்மொழியிரண்டிலும்
சொல் நாமத் திருமஹிமை தேவார முதலான
நூற்குழும முடி பொருந்துவான்

தொல்லாகமத்திடையே சமைத்த திருக்கோயிலில்
      திருவெழுச்சி கொண்டு நேர்வான்
மணமார்ந்த பூங்காவின் மத்திதனில் வைகுவான்
      நாறும் பூநாதன் பாவாய்
எந்நாளும் உன்னடிக்கே அடிமைசெய அர்ப்பித்து
      முப்பத்து பாட்டிசைத்தேன்
காருணீ சீர்மேவு புடைமருதூர் காத்தருள்
      அன்னை கோமதி அம்மையே !

நூற்பயன்.

ப்ரதி தினமும் புனித நீராடியே தேகமன
      சுத்தியோடு தல மமர்ன்து
வரிதியொடு திரிகரணத்தூய்மையொடு ஐம்புலன்கள்
      அடக்கமொடு முகமலர்ந்து
கரதலங்கள் கூப்பியுறு உள்விழிகள் நோக்கி மன்னும்
      அன்னையுரு மனத்திற்றாங்கி
கழிவிரக்கப்பத்துரைத்து இனியதாம் பத்தும்வேண்டி.
      தோத்திரங்கள் பத்தும் பாடி

செழியச்ருதி ஸ்ம்ருதிகளோடு வேதங்கள் புகழ்கின்ற
      ஸௌந்தரி சிவகாமியை
உள்நினைந்து ஊனுருக உயர்வேள்வி புரிகுவோர்க்
      குறுபிணிகள் ஏதுமில்லை
கன்மவினை தொடராது பவவினைகள் மாய்ந்திடவே
பேறு பல ஹித்தியாகும்
இகபரமிரண்டிடமும் பல் வளங்கள் சுரக்கவே
      மங்களமாய் வாழ்வார் அம்மா.

மங்களம்

மங்களம் நான்மறைக்கும் மனுநெறி வாழுனர்க்கும்
மங்களம் பக்தியொடு மனனம் செய் மாந்தர்க்கெல்லாம்
மங்களம் செந்தமிழுக்கும் மன்னுநூல் பலவற்றிற்கும்
மங்களம் நமையாள் பாவை தேவி கோமதிக்குமாமே.
----------------


This file was last updated on 23 Jan 2023.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)