கமலை ஞானப்பிரகாசர் எழுதிய
திருவாரூர்ப் பள்ளு
tiruvArUrp paLLu
by kamalai njAnap pirakAcar
In Tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
We thank Dr.Meenakshi Balaganesh, Bangalore, India for her assistance in the preparation of this work for publication.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2023.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
கமலை ஞானப்பிரகாசர் எழுதிய
திருவாரூர்ப் பள்ளு
Source:
திருவாரூர்ப் பள்ளு
கமலை ஞானப்பிரகாசர்
பதிப்பாசிரியர் : திரு.சோமசுந்தர தேசிகர்
rights reserved) (விலை தனிப்பிரதி அணா 4
(ஒன்பது பிரதி ரூ. 2.
The B. N, Press, Mount Road, Madras.
~~~~~~~~~~~~~~~~~~~~~
கமலை ஞானப்பிரகாசர் திருவாரூர்ப் பள்ளு
முகவுரை
~~~~~~~
கருணாகரன்செய் திருப்பணியைக்
கருதிநலமாய்க் கண்டுசெய்த
பொருளானாலத் தொன்றுடையான்
பூமியானைப் போலாரோ
திருவாரூரில் வன்மீகத்
தியாகராசப் பள்ளுகந்தும்
மகுவார்பணிய வரங்கேற்றி
வைத்தார்சோழ மண்டலமே.
என்பது சோழமண்டலசதகத்திற் கண்ட எண்பத்தெட்டாவது செய்யுள். இச்செய்யுளிலே காணும் தியாகராசப் பள்ளு, தியாகப்பள்ளு என்றும் தியாகேசர் பள்ளேசல் என்றும் பெயர் பெறும். பள்ளு 'பள்ளிசை' யெனவும் பட்பிரபந்தம்' எனவும் பிற்காலத்திலே வழங்கலாயின. பள்ளு தொண்ணூற்றாறு தமிழ்ப் பிரபந்த வகையில் ஒன்றாகும் என்ப. மிகப் பழைய நூலாகக் கருதப்படும் பன்னிருபாட்டியலிலே.
புரவலற் கூறி யவன்வா ழியவென்
றகல்வயற் றொழிலை யொருமை யுணர்ந்தனள்
எனவரு மீரைந் துழத்திப் பாட்டே.
என்றொரு சூத்திர யாப்பு காணப்படுகிறது. அதனிற் கண்டவாறு பத்துப் பாக்கள் கொண்டதே உழத்திப்பாட்டாகல் வேண்டும். இதுபொழுது ஈண்டு ஆராயப்படும் பள்ளின் வகை அச்சூத்திரத்தின் பாற்படுவதன்று.
வீரமாமுனிவரென்ற ஐரோப்பியத் தமிழ்ப் புலவர் இயற்றிய சதுரகராதியில் பள்ளின் வகை கூறப்பட்டுளது. அதற்குரிய ஆதாரம் இதுவெனத் திட்டமாகக் கூறுவதற் கில்லை. நாமறிந்தவரையிற் பள்ளுப் பிரபந்த வகையில் முற்படக் காணப்படுவது திருவாரூர்ப் பள்ளே. இதனில் கடவுள் வாழ்த்துக்குப் பின்னர் பள்ளன் பள்ளிகள் வரவு, ஆற்று வரவு, மீனினந்திரிதல், குயில் கூவுதல், மழை பெய்து ஆறு பெருகுதல், பண்ணைக்காரன் வாவு, ஏர் விதை கணக்கு, பள்ளிகளின் சச்சரவால் பள்ளன் தொழுவிலிருத்தல், மூத்தப்பள்ளி பள்ளனை மீட்டல், உழவு, பயிரேற்றுகை கண்டுமுதல், பள்ளிகள் ஏசல், உறவு, வாழ்த்து இவைகள் உட்பொருளாகக் காணப்படுகின்றன. இதனையடுத்து அடியொற்றித் தோன்றியதாகப் புலப்படும் குருகூர்ப் பள்ளிலே மேற்கூறியவைகளோடு நாட்டின் பெருமை பள்ளனுக்கு இளைய பள்ளி மருந்திடுகை, மருந்தின் குணம், நடவு முதலியவைகள் விரித்துக் கூறப்பட்டுள்ளன. இவற்றின் பின்னே உண்டான பள்ளுப் பிரபந்தங்களில் கவிகளின் மனப்பாங்கிற்கேற்ப பலவகையிலும் அவைவிரித்துக் கூறப்பட்டுள்ளன.
பள்ளு நாடகமாக நடிக்கப்பட்டுவந்தது. அது நாடகமாக நடிக்கப்படுங்கால் நாடகத்திற்கு அங்கங்களாகவுள்ள கட்டியக்காரன் வரவு, நூல் கொண்டார் பெருமை முதலாயினவெல்லாம் சேர்க்கப்பட்டு நடிக்கப்பட்டு வந்தன. அவ்வாறே இந்தத் திருவாரூர்ப் பள்ளும் நாடகமாக நடிக்கப் பட்டதாகும். ஆண்டுதோறும் ஆவணித்திங்களில் பவித்திரோற்சவம் என்றொரு திருவிழா நடைபெற்றுவந்தது. அத்திருவிழாக் காலத்தில் சாரங்கதரன், திரிபுரன், பாணாசுரன், மன்மதன், மநுநீதிகண்ட சோழன் இவர்களது சரித்திரங்களும், பரவை கல்லியாணம், குறவஞ்சி, பள்ளுகளும் நாடகமாக ஆடப்பட்டு வந்தன. நடித்தற்கேற்ப மூல நூல்களில் வேண்டுவன கூட்டியும் குறைத்தும் யாக்கப்பட்டு நடிக்கப்பட்டன. அவ்வாறே இந்தத் திருவாரூர்ப் பள்ளிலும் காப்புச் செய்யுளுக்குப்பின்
அரியசதா சிவமொரு ஆண்டை யாக
அருளுமீ சுரன்றன்னைப் பள்ள னாக
இருசத்தி தன்னையுமே பள்ளீ ராக
யிசைந்தநந்தி கணக்கனா யியம்பிப் பின்னு
மருள்சத்தியினை யிருதோழி யாகச் செய்து
மால்தனை யுழவு தொழிற்கே யிசைத்து
பிரமனையுந் தாளமதைக் கையிலேந்தப்
பெருஞானப் பள்ளென்னும் ப்ரபந்தஞ் சொல்வார்.
என்றும்
மலைமகள்சேர் காவிரிசூழ் சோழ நாட்டில்
மகிழ்கமலைத் தியாகேச னருளி னாலே
அலைமோதி மணிமுத்தா நதியில் வெள்ளம்
ஆர்ப்பரித்துக் கரைபு ரண்டு வாரவே
நிலைபெறுநாம் பயிரேற உழவு செய்ய
நிச்சயித்துப் பள்ளர்களை யழைக்கப் பின்னும்
தலைமையுள் காரியங்கள் பலவும் பார்க்கச்
சபையில்கட் டியக்காரன் றோன்றி னானே
என்றும்
பல்லவி
ஐயனே யுன்னையன்றி வேறுண்டே
அனுபல்லவி
வையம் புகழு மாரூர் வசந்தத்தியா கேசரே
சரணம்
மண்டலத்திலும்மைப் போலே
மகராஜ ருண்டோ மேலே
யெண்டிசையு நீயான தாலே
இரட்சிப் பதுவு முன்றன் பாலே(ஐயனே)
என்பதும் போன்ற செய்யுட்கள் இடைமடுக்கப்பட்டு சற்றேறக் குறைய முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் வரை ஆடப்பட்டு வந்தன. இவ்வாறு பெருமைபொருந்திய இந்த நூலையியற்றிய ஆசிரியர் கமலை ஞானப்பிரகாசர் என்ற பெரியார் ஆவர். பதினாறாம் நூற்றாண்டின் இடைக் காலத்திற் றிகழ்ந்தவர். இவர் திருவாரூரிலே பிறந்து வளர்ந்து உரிய காலத்தே கல்வி கற்றுப் பெரியோரோய் வாழ்ந்தவர். தருமை ஞானசம்பந்தர், மாசிலாமணிச் சம்பந்தர் முதலாயினாரது ஆசிரியர். பல நூல்களியற்றியவர். இவரது சரித்திர விரிவு பதினாறாம் நூற்றாண்டுத் தமிழ்ப் புலவர் வரலாற்றிற் கூறப்பட்டுளதாகலின் ஆண்டுக் காண்க.
இனி, இந்நூலின்றிறனாக முன்னர்க் காட்டிய அரிய சதாசிவ.....சொல்வார்' என்ற செய்யுள் இனிது விளக்கும். இச்செய்யுள் 'ஞானப்பிரகாச மான்மியத்திலுள்ள 73-வது செய்யுளாகும். இந்நூலை யரங்கேற்றி வைத்தவர் நன்னிலந் தாலூக்காவிலுள்ள 'நாலொத்தொன்று' என் ற ஊரிலே யிருந்த பூமிநாதர் என்ற செல்வர். வரை நூலிலே 29, 4064, 70-ல் புகழ்ந்துள்ளார். இந்நூல் மேலே கூறியாங்கு ருத்திரகணிகையரைக் கொண்டு நாடகமாக நடிக்கப்பட்டு வந்தது. இது வெறும் நாடகமாக மாத்திரமன்றி பரதநாட்டியமுஞ் சேர்த்து நடிக்கப்பட்டது. இப்பள்ளைக் கோயிலில் ஆடி முடிந்தவுடன், ஆடியவர்கள் ஆசிரியரான ஞானப்பிரகாசாது இல்லஞ் சென்று வாழ்த்துப் பாடித் தாம்பூலம் பெற்று, கோயிலதிகாரி வீடு சென்று திரும்புவர். இவ்வாறு பலவகையிலுஞ் சிறந்த இந்த நூல் இதுவரையில் அச்சேறாமலே யிருந்தது. சென்ற ஆண்டில் திரு உலகநாத பிள்ளையவர்கள் தஞ்சையில் சரசுவதி மாலிலுள்ள பிரதிகளைப் பார்த்துப் பிரதியெடுத்துத் 'தமிழ்ப் பொழி’லில் வெளியிட்டார். அது அத்துணைத் திருத்தமுடையதன்று. பல பிரதிகளைப் பார்த்துத் திருத்தமாக இதுபோது இதனை வெளியிட்டுள்ளேன். பின்னும் பல பிழைகள் இருத்தலுங் கூடும். குற்றம் நீக்கிக் குறைபெய்து கொள்ளுதல் கற்றறிந்த மாந்தர் கடனாம்.
இலக்கண விளக்க ஆசிரியர் பரம்பரை
திரு.சோமசுந்தர தேசிகன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
திருவாரூர்ப் பள்ளு
காப்பு
சீர்பரவு மாரூர்த் தியாகர்க்குச் செந்தமிழால்
பார்புகழும் பள்ளேசல் பாடவே - வார்மருவுங்
கொங்கையுமை யாள்பவனுங் குஞ்சரனும் வேலவனும்
கங்கைசர சோதியுமே[1] காப்பு 1
---------------
(பிரதி பேதம்) 1. சரசுதியுங்.
------------------
வாதாவி விநாயகர்
பூமாதொரு மாதவ முநி[2] துறை
நீராடிய வாவியி னறைகமழ்
பூகாடவி மேவிய[3] பொழில்களும் எழில்வீறப்
பாமாதிசை வீறிய புகழ்பயில்
ஆரூரர்தி யாகர்த மனமகிழ்
பாவானபள் ளேசலி னிசைவகை பலகூற
ஏமாசல மாகிய புயமிசை
யாகாச மளாவிய பணமணி
யேகாசம தாமென வணிதரு மியலாளன்
மாமால்மரு கேசன்முன் வருமொரு
போர்மாமத வாரண முகமுள
வாதாவி விநாயக னிருபத மறவேனே. 2
--------
(பிரதி பேதம்) 2. மினி. 3. தாவிய
-----------
முருகக் கடவுள்
மேவு மைகண்டப்[1] பெருமாள் புகழ்
வீதி விடங்கப் பெருமாள் திரை
வேலை விடம்புத் தமுதாமென விரும்பிய
பெருமாள்
தேவர கண்டப் பெருமாள் கறை
தாவிய கண்டப் பெருமாள் மிசை
சீர்பெற வுகந்த பள்ளே சலி னிசைபாட
வாவி நிறம்பொற்[2] கலாப ம
யூர மெனுஞ்சொற் பரிமீ தினில்
வானவர் தம்பொற் பதிகாவல் செய் வடிவேலன்
ஆவ லுடன்கைத் தழையே கொடு
வேடுவர்மங் கைக்குயர்கா முக
னாறு முகன்பொற் பதநா வினில் நவில்வேனே 3
----------
(பி - ம்) 1. மகண்ட, 2. பெற்ற, 3. மறவேனே.
--------------
கமலாலய அம்மை
சனகா திகள்[4] சேவடி யிணைதொழ
வடதாருவி னீழலி லருமறை
தனையோதிய தேசிக ரிமையவர் தமையாள்வார்
அனமேனமுன் னாடு த லரியவர்
அருளாளர் தியாகர்தம் மனமகிழ்
அடைவானபள் ளேசலி னிசைவகை நசைகூர
இனகோடியை நேர்தரு மெழிலினள்
திரிசூலி மனோன்மணி திரிபுரை
யிமயாசல மேலிய வுமையவ ளெமையாள்வாள்
கனகாசல மாகிய முலையினள்
அருமாதவ மாகிய நிலையினள்
கமலாலய நாயகி யிருபத மறவேனே. 4
--------
(பி - ம்) 4. சனகாதியர்.
----------------------
இன்னிசைக் கலிப்பா
தாளுஞ் சிலம்புந் தடவரையுங்[1] கிண்கிணியுந்
தோளுஞ் செவ்வந்தித் தோடுமற வாதருளீர்
மூளுங் கருணை முகத்தா லடியவரை
யாளும் பெருமாள்தென் னாரூர்ப் பெருமாளே. 5
---------
(பி - ம்) [1. தடவரவக்
----------------------------------
வன்மீகப்பள்ளி சீரங்கப்பள்ளிகளுடன்
வன்மீகநாதப் பள்ளன் வரவு-சிந்து
போரங்க மானகலை மாரன்கை மேவுசிலை
போலுந் திருநுதலில் வேர் வரும்ப
கூரங்க வேல்விழிகள் நேரங்க மானதொரு
குற்றிடைக்கொடி துவண்டு குலைந்தலைய
தாரங்க மானகுழல் காரங்க மானவண்டு
தந்தனதன னாவென்று[2] தமிழ்பாட
வாரங்க மானகொங்கை சீரங்கப் பள்ளியுடன்
வன்மீக நாதப் பள்ளன் தோன்றினானே. 6
----------
(பி - ம்) 2. தந்தனா தனனாவென்று
-----------
கச்சைகட்டிச் சுள்ளினோடு கள்ளுமிகப் பருகிக்
களித்தேப்ப மிட்டுவீறிக்[3] கண்கள் சிவப்பு
மெச்சுமிள நகை செய்து மீசைதனை முறுக்கி
வெண்ணீறு தனைமுக மீதி லணிந்து
பச்சைமணித் தொண்டுகட்டிப் பவளத்தாழ் வடங்[4]கட்டிப்
பருக்கச்செந் திரிக்கத்[5] தொப் பாரமுங் கட்டி
வச்சிரமணிக் கொட்டுமணித் தோளின்மிசை கொண்ட[6]
வன்மீக நாதப்பள்ளன் றோன்றினானே 7
----------
(பி - ம்) 3. வெறி 4. தாவடங். 5. சேந்திருக்க. 65. தோன்ற,
6. இப்பா குருகூர்ப் பள்ளு 6-ல் சிறிது வேறுபாடுடன் காணப் படுகிறது.
-----------------------------
வன்மீகப் பள்ளத்தி
பைங்கமலத் திருமுகம் வெயர்வெழ[1]
பாதமலர் பரிபுர மொலியெழ[2]
படை வேல்விழிக் கடைபோர்செய
மகரக்[3] குழையசைய
அங்கைமலர்ச் சரிவளை யசைதர
அணிமுறுவற் சிறுநகை யொளிதர
அளகாடவி நெகிழ்வுறவே
யளியின மிசைபாடக்[4]
கங்கைதனைச் சடையணி பெருமாள்
காலனைக்கா லாலடர்த்திடு பெருமாள்
கணைவேளுடல் பொடிபடவே[5] செய்த
கண்ணுதற்பெருமாள்
தென்கமலைப்[6] பதியுறை பெருமாள்
தேவர கண்டப்பெரு மாள்தம்
திருநாமம்பாடியாடும்
பள்ளத்தி தோன்றினாளே[7] 8
--------------------
(பி - ம்) 1. வெயர்வுற. 2. சரிவளை யசைதர. 3. மலரங். 4. அளி மகிழின்னிசை பாட.
5. வெரி செய். 6. செங்கமலை. 7. பள்ளத்திகள் தோன்றினாரே.
-----------------------------------
குஞ்சரமேய் துணைமுலை யசையக்
கோவைமணித் திரள்பல புரளக்
கோலநுதற் சிந்துர மழகுறக் கொடியிடை துவள
அஞ்சனமைக் கயல்விழி யயல்பொர[1]
அமுதமொழிக் குமுத மலர்ந்திட
அணியுமணிப் பணிபல வசைவுறவளிக்குழல் நெகிழக்
கஞ்சமலர் கொடியிடைப்[2] பெருமாள்
காயாமலர் வண்ணப் பெருமாள்
காவேரியின் நடுவிணைமிசை கண்டுயில் பெருமாள்
செஞ்சிலைவேள் தனையருள் செய்த
திருவரங்கப் பெருமாள் பெருமைத்
திருநாமம்[3] பாடியாடும் பள்ளிநானே[4] 9
------------
(பி - ம்) 1. மேயகயல் விழி புரள, 2 கொடிபடர். 3. நாமங்கள்.
4. பள்ளத்திகள் தோன்றினாரே.
-------------------
வெண்பா
விரவு சிலைமதவேள் வெங்கால னென்னு
மிரவுமொரு முப்பதுக மென்னும் – பரவுங்க[1]
கறைக்கண்ட னேகமலைக் கண்ணுதலே யென்னும்
பிறைக்கண்ட னேருமொரு[2]பெண். 10
-----------
(பி - ம்) 1. பரவு 2. னேரு நுதற்.
------------
பொன்பரப்பிய திருவீ தியிலே
கணைபரப்பிய சிலைவேள் நிலைதரு[3]
புகழ்பரப்பிய கமலா லயமெனும் புரியுறைபெருமாள்
அன்பருக்கெளி தாகிய பெருமாள்
அருமைப் பெருமாள் கலைமானுறை
யனங்கைப் பெருமாள் மலைமானுறை யாகப்பெருமாள்
தென்புறத்திளந் தென்றலிழைத் திடுந்
திருச்சாளர[4] வரிசைப்பெரு மாள்
சிங்காதன மழகியபெருமாள் தியாகப்பெருமாள்
வன்மீகப் பெருமாள்[5] வீதி
விடங்கப்பெரு மாள்தன் பெருமைத்
திருநாமம் பாடியாடும் பள்ளி நானே 11
--------
(பி - ம்) 3. தரும், 4. திருச்சாலக, 5. மின் பரப்பிய சடைமுடிப் பெருமாள்,
--------------------------------
அண்டர்மனைக் கொடியிடைமட விய
ரளையற்றளை[1] யப்படுதிரு மால்[2]
அழகியமெய்க் குழையைக் குழைப்பித்திடு பெருமாள்
மண்டலமுண் டெழுகடலுண் டெழு ழு
வரையுண்டெழு புவனமுமுண் டொரு
வடபத்திர மிசைதுயில் வடிவுடைத் திருமால்
கண்டக[3] வெஞ் சமர்பொருநிரு தனை
யொருபதுசிர மிருபதுகர மற்
கரதூடணர் முடிதூளெழ
பொரு[4] கணை தொடு திருமால்
தெண்டிரைவெண் சங்குமுழங்கிட[5]
திருக்காவிரி வளர்ந்திடவளந் தரு[6]
திருவரங்கப் பெருமாள் பெருமை[7]
பாடியாடும் பள்ளி நானே. 12
----------
(பி-ம்) 1. தயிர்ப்படு. 2. அண்டர் மனைக்கொடியிடை மட விய - ரளையத் தயிர்ப்படு மழகிய மெய்க்கலை பிடித்தழுதிடு திருமால் - மண்டல முண்டெழுவரை யுண்டெழுபுவன முண் டாரு வடபத்திர மிசைத்துயில் மதலையின் வடிவுள திருமால்.
3. கண்டகர. 4. வொரு.5. முழங்கிய. 6. வளைந்திடவளர்ந் தருள்.
7. திருமால் திருநாமம்.
------------------------------
கட்டளைக் கலிப்பா
காலமு மந்தி படைபொருதல் பாரீர்
காத லறிந்து களபமுலை சேரீர்
சீல மறிந் து பணிவிடைசெய் யேனோ
சேவடி வந்து தினமும்வரு டேனோ
ஓலிடு வண்டு குமுறுகுழ லாரே
யோசை முழங்கு குயிலின்மொழி யாரே
வேலை யடர்ந்த கலகவிழி யாரே
வீதி விடங்கர் கமலையனை யாரே. 13
அன்பர்க் கெளிதாகிய பெருமாள்
திருவந்திக் காப்பழகிய பெருமாள்
ஆடுதண்டினிற் றோட சைந்திட
வசைந்தாடும் பெருமாள்
பைம்பொற் றோடழகிய பெருமாள்
செவ்வந்தித் தோடணி[1] பெருமாள்
பாலொத்திடு மொழியாளுறை யும்பாகப் பெருமாள்
கம்பிக் காதழகிய பெருமாள்
கனக வசந்தப் பெருமாளுயர்
கங்காளப் பெருமாள் தேவரகண்டப் பெருமாள்
செம்பொற் சிங்காதனப் பெருமாள் [2]
தியாக வினோதப் பெருமாள் தம்[3]
பெருமைத் திருநாமம் பாடியாடும் பள்ளி நானே [4] 14
------------------
(பி-ம்) 1. தொடையணி. 2. அழகிய பெருமாள். 3. தன். 4. நாமே.
-------------------------------
முண்டக நாபிதனில் நான்முக வண்டிருந்து
மூலமறை மொழிதன்னை முழங்க வைத்தோன்
அண்டர் மகிழ்ந்திடவே மோகினியாகி முன்ன
மாரமுதம் பகுந்தளித்த வன்புடையோன்
வண்டென வேயுகந்து வாவியில் வண்கழுவில்
மாயமுட னுறைந்த மாயவனார்
தெண்டிரை வாவிசூழும் சீரங்க ராசனார்தம்
திருநாமம் பாடியாடும் பள்ளிநானே. 15
கடவுட்பராவல் - விருத்தம்
குயிலுக்கு நீணிலா[1] வெயிலுக்கு மாரவேள்
கொடுமைக்கு வாட லாமோ
மயிலொத்த[2] சாயலாள் மயலுற்றி டாமலே
மருமத்தி லாளொ ணாதோ
சயிலுற்ற நாதரே[3] யரவுற்ற பாதரே[4]
தமிழ்விட்ட தூத னாரே.
கயிலைத்தி யாகரே கனகத்தி யாகரே
கமலைத்தி யாக னாரே. 16
-----------
(பி - ம்) 1. நன்னிலா. 2. மயிலுற்ற. 3. பாகரே. 4. நாதரே.
------------------------
ஆற்றுவரவு
கனத்த மேகக் குலங்கள் கூடிக்
கலங்கி வேலை விலங்கியே[1]
கருகி[2] நீரைக் பருகி வானத்
தருகினேறிப் பெருகியே
வனத்து மிகுத்த குடகிற் பொழிந்து
வழிந்து கரையி லழுந்தியே[3]
வரகு டன்பயில் தேக்கு மாரமும்
நூக்கி யேகரை தாக்கியே
இனத்திற் குறவர் புனத்தி லிதணு
மெடுத்த குடிலு மிதக்கவே
இரைந்து குமுறி விரைந்து மருவி
யிருவிக் குருவி வெருவவே[4]
அனத்தை நேர்தருங் குறத்தி காதலி
லழுந்து வேள்பதம்[5] வழுத்தியே
அலருங் குறிஞ்சி மலரு மருவி
யதிர்ந்து பாலை யெதிர்ந்ததே. 17
-----
(பி - ம்) 1. விலங்கவே. 2.கருகிய. 3.லெழுந்துமேல். 4. வெருவியே. 5. பொற்பதம்.
-----------------------
கலித்துறை
கழையேறு செஞ்சொ லுமைபாகர் வாழுங் கமலைவெற்பில்
மழையேறு தண்டலை யேபுனமே வண்ட[1] லாடிடமே
உழையே வெறுங்கவ ணேயித ணேமெய் யுறவன்றியே
பிழையேது செய்தன ரோவென்று2 மாதர் பிரிந்தனரே. 18
-----------
(பி - ம்) 1. வண்டல்க இவ்வாறாயின் எழுத்துக்கூடுகிறது. 2. வின்று.
-------------
தேடிப் பாலைநிலத்திற் புகுந்து
திரள்வெட்[3] பாலை குரவுடன்
திரட்டிப் பிடுங்கி யிலுப்பைக் குலங்கள்
சேரச் சுழியில்[4] வாரியே
ஓடிப் பறந்து பருந்துங் கிளியுங்[5]
கழுகுஞ் சுழியில்[6] முழுகவே
உலக மெங்கு நிலைக லங்கி[7]
யுறுதி கொண்டு நிறுவியே
சூடித் திகழுங் கமலைத் தியாகர்
துங்கர் கங்கை பெருமைபோல்
சூழத் திரியுங் கேழற் றிரளை
தொடர்ந்த[8] ஞாளி யடங்கவே
நாடிப் பரவு மயிடன் சிரத்தில்
நடித்த கன்னியை வழுத்தியே
நல்ல வளமை முல்லை நிலத்தில்
நடுங்க வேகரை புரண்டதே. 19
---------
(பி - ம்) 3. திரண்டுவெட். 4. சேர்ச்சுழித்திரையில், 5. புறவும்.
6. முகந்து 7. கலங்கி. 8. துரந்து.
------------------------------
வெண்பா
தெண்ணீர் புனைகமலைச் சிற்பரமாம் வெற்பிலெதிர்[1]
வெண்ணீறு தந்தும் விடைதந்தும் - வண்ணக்
கரங்குவித்தா ரந்தோகைக் கார்மயிலன் னாரின்
றிரங்குவித்தா ரந்தோ[2] வெமை. 20
--------
(பி - ம்) 1. சிற்பரமர் வேற்பதனல். 2.ரென்னோ. இது சில பிரதிகளிற் காணப்படவில்லை.
----------
வாடுகின்றாள் நின்மாலை வாங்கக் கிளியொன்று
தேடுகின்றா ளாரூர்த் தியாகரே - நாடி
அனங்கனம்பு சொரியவந் தனலைமொண்டு வீசவெம்பி
மனதுநொந்து கலையிழந்த மான். 21
புரண்டு முல்லை நிலத்கிற் புகுந்து
பொதுவர் மனையிற் கதுவியே
புதிய நெய்யும் பழைய தயிரும்
பொருந்து பாலு மருந்தியே
கரந்தை யணியும் பரந்த சடையர்
கமலைத் தியாகர் விடையைப்போல்
கள்ள மேகொடு வெள்ள மேவிய
கான வாரண மோடவே
துரந்து பயிலு முழையு முயலு
மெழுந்து திரையி லழுந்தவே[3]
தோன்றிக் குருந்துந் தான்றிப் படவுஞ்[4]
சுழியி னிடையி லுழலவே
பருந்தி ராசன் பொருந்து முபய
பதங்கள் கருதி வணங்கியே
பரிந்து[5] துளவுஞ் செருந்தி மீதினில்
பாய்ந்து[6] மருதங் கலந்ததே. 22
---------------
(பி - ம்) 3. லழுந்தவே 4. யடகுஞ் . 5. பரிந்த 6. பரிந்து
------------------------------------
கலிப்பா
ஆர்வமிகுந் தன்பெடையை யணிசிறகா லருங்குளிர்க்குப்
போர்வைசெய்து குடம்பைதனிற் புள்ளுறங்குங் கார்காலம்
சேர்வைதரும் புகழாரூர்த் தியாகர்வள நாட்டிலன்பர்
கார்வரவில் வரவுபொய்க்கக் கலிகால மானதே. 23
கலந்து மருத நிலத்திற் புகுந்து
கமுகச் சமுகங் குலையவே
கருதியேபல சுருதி மேவிய
கரும்பிற் சுரும்பர் திரும்பவே[1]
அலர்ந்த கமலத் தடங்க ளுழக்கி
யணிவ ரால்கள் பணியவே
யடுத்த வாழையி னெடுத்த தாறுக
ளாறு நேர்மது வீறவே
பலந்த ரும்பல வருக்கை நெருக்கிப்
பற்றி மாங்கனி யெற்றியே
பயிலு மாதளை தனைவி டாமலே
பவளக் கொம்பெனத் துவளவே
இலங்கு குலிசப் புரந்த ரனையு
மிணங்கு தாளை வணங்கியே
யிஞ்சி மஞ்சள் வஞ்சி யஞ்சிட
டங்கொள் நெய்த லடைந்ததே. 24
---------------
(பி-ம்) 1. கரும்புள் கரும்பிற் றிரும்பவே.
------------------------
கலிப்பா
செங்கைக் குறிமறைத்த செஞ்சந்த னத்தையெங்கள்
கொங்கைக் குறியைக் குறியாது செய்தனரோ[1]
மங்கைக் கொருபாகம் வாழ்வாக வேயளித்த
கங்கைச் சடையாரே கமலைவள நாடாரே[2]. 25
------------
(பி - ம்) 1. செய்ததன்றோ 2. கடையர் கமலைவள் நாடோ
-----------
அடைந்து நெய்த லிடங்க ளோடி
யளவர் மனையி லளவியே
அலையில் வாரும் வலையில் மீனை
நிலையில் வாரிக் குலவியே
உடைந்து திரையில் விடைந்து பணில
முதறு மணிகள் சிதறவே
உயர்ந்த தாழையும் விரிந்த[3] ஞாழலு
மொருமு கம்படப் படியவே
படிந்த திமிலும் பலசம் பானும்
பாரச் சோங்கு மிதக்கவே
பாய்ந்து மகரம் வாய்ந்து மாயப்
படகைக் குழிய[4] முடுகியே
வடிந்த தரளப் பவளத் தாலும்
வருணன் பதத்திற் சாத்தியே
மணிமுத்தாறு பெருகி வார[5]
வதிசயம் பாரும்[6] பள்ளீரே. 26
---------
(பி - ம்) 3. இழிந்த வாய்ந்து. 4. படுவர் படகைக் கிழிய. 5. வருகிற, 6. வளமை பாரடி.
-------------------------
வெண்பா
*பெருங்கடனஞ் சுண்ட பிரான்கமலை சூழும்
கருங்கடலே நெய்தற் கழியே – நெருங்குமுதல்[1]
புன்னாக மேதிரையே போனவர்தேர்[2] மீண்டக்கா
லென்னாக மேகரையே னே[3]. 27
-------
*இச்செய்யுள் 28 - ன்பின் சில பிரதிகளிற் காணப்படுகின்றது.
(பி - ம்) 1. நெருங்கு நிழல். 2. போனவர். 3. யேணான்.
-----------------------------
வாளை திருக்கை சுறவு தொழுத்தை
வஞ்சி ரஞ்சிறு பஞ்சிரம்[1]
மடவை யுல்ல மயிரை கெளிறு
மகரங் குரவை மலங்குமீன்[2]
தேளி யுளுவை சன்ன மயறு[3]
திமிதி மிங்கலம் புரவிமீன்[4]
சீளி கைத்தலை யானை மீனோடு
தெள்ளிறா லொடு வெள்ளிறால்
நாளும் புதிய கடலில் மீனும்
நாட்டில்[5] மீனுங் கூட்டமாய்
நளிகொள் தாலக் கனியை மோதி
நறிய தாழை முறியவே
ஆளை விலக்கிக் கலக்கிக் களித்திட்
டலையக் குலைய முழுகியே[6]
யழுந்து தடத்தி லெழுந்து பாயு
மதிசயம் பாரும் பள்ளீரே. 28
----------
(பி - ம்) 1. வஞ்சனம் சிறும மஞ்சனம். 2. மலங்கு மீன். 3. மயறு சன்னை.
4. பல புரவி மீன். 5. நாட்டு. 6. முடுகியே.
------------------------------
குயில் கூவுதல்
புவிமீதிலே திங்கள் மும்மாரியும் பெய்து
பொங்குகலி தீரவே கூவாய் குயிலே
சிவகாரி யந்தனக் ககிதங்கள் செய்யுமவர்
தீநரகில் வீழவே கூவாய் குயிலே
தவமேவு[1] தானமும் பரிகலமு மாரூரர்
சன்னிதியுந் தழைக்கவே கூவாய் குயிலே
நவமாகத் தென்னாலைப் பூமியான் மகபூசை
நடத்துநெறி தழைக்கவே கூவாய் குயிலே . 29
-----------
(பி - ம்) 1. தவமெழு.
-----------
ஊற்றமுள்ள முனியென முன்னாள் வகுத்தவன்
உள்ள தலையும் போகவே[2] கூவாய் குயிலே
நேற்றியற3 மடவாரைக் கூட்டுறவு செய்யுமவர்
நீடூழி வாழவே கூவாய் குயிலே
காற்றுள்ள போதிலே தூற்றுபவர்க்குத் தானாக
கைப்பொரு ளுண்டாகவே கூவாய் குயிலே
சாற்றுமட லூரவே யாரூரர் வளநாட்டில்
தடம்பணைகள் விளங்கவே கூவாய் குயிலே. 30
-------
(பி - ம்) 2. ஒற்றமுள்ள ஏற்றமுள்ள போகக். 3. நேற்றியூரும்.
-------------
ஊரூர்கள் தோறுஞ்செவ்வி மழை[4] பொழிந்தே
யொருகோடி தேரைவாய்கள் ஒலி வீறவே[5]
சீரூரு மணிமுத்தாறு நீர்பாய்ந்தே[6]
சினந்தாவியே[7] யெழுந்துகரை மோதவே
வேரூரும் கோரை கொண்ட கழனியெல்லாம்
வெண்கார்கள் பாய்ந்துபுனல் மீளாமலே
ஆரூரர் பண்ணைபார்க்கு[8] மாண்டவர்தம்மை
யணைகோல நாமழைக்க வாரும் பள்ளிரே. 31
------------------
4. செவிமழைகள். 5. ஒலி வீறவே. 6. பரந்தே. 7. திரை தாவியே. 8. பண்ணைதொறும்.
------------------------------------
பண்ணைத் தலைவன் வரவு
வீக்கிய வெறும்பழுதை வாகுபுரி யழகும்
வெந்தவீட்டுக்[1] கரிக்கட்டை மேனியழகும்
தூக்கணான் குருவிக்கூட்டுத்[2] தொப்பாரங் கட்டழகும்
தூக்கிவைத்த வளைந்ததடிக் காலி னழகும்
யீக்கடியுண் டிழையுண்ட கண்ணி னழகும்[3]
மிட்டவெத் தாப்புமிறு மாப்பி னழகும்
பாக்கிலைதின் றறியாத வாயினழகு
பண்ணைக்கார னாரும் வந்து தோன்றி னாரே. 32
---------------
(பி - ம்) 1. வீட்டில். 2. கூட்டில், 3. போட்ட ஈத்தாப்பு மிறுமாப்பு மேற்றவழகும்.
-----------------------------
இரவு தனையோ விகல்வேள் தனையோ
சருவுகுயிலோசை தனையோ - மருவாமல்
போனாரை யோபரமர் பூங்கமலை நன்னாட்டில்
யானாரை யோநோவதி ன்று. 33
பொற்கடக முன்கையேந்திக் கடக மேந்திப்
பொன்னெழுத்துச் சேலைகட்டிப் பூங்குழல் கட்டித்
தற்கமான வெற்றிவிழிக் கஞ்சன மிட்டுச்
சந்தனத்தைத் தனத்திலிட்டுத் தளப்பமிட்டு
நற்கமலை யாடரவக் கிண்கிணிக் காலன்
நங்கைபங்கன் தென்கமலை நாடு தன்னில்
வற்கமான பண்ணைபார்க்கு மாண்டவர் தம்மை
மகிழ்வுடனே கண்டுதொழ வாரும் பள்ளீரே. 34
கறுத்தமெய் யழகரே கும்பிடுகிறேன்- கொழுக்
கட்டைமூக் கழகரே கும்பிடுகிறேன்
சொறித்தலை யழகரே கும்பிடுகிறேன்- கூறுஞ்
சோனிவயிற் றழகரே கும்பிடுகிறேன்
பறித்தகண் ணழகரே கும்பிடுகிறேன் - ஊசிப்
பாசிப்பல் லழகரே கும்பிடுகிறேன்
அறுத்தகா தழகரே கும்பிடுகிறேன் - பண்ணை
யாண்டவரே யாண்டவரே கும்பிடுகிறேன். 35
வெண்பா
கமலையுமென் கன்மனமுங் காதலித்து வாழும்
அமலர்திரு முன்போ யனங்காள் - சமரமதன்
துன்றுமிருந் தேன்பகழி தூற்றுமெனுமாருயிர்கொண்
டென் று மிருந்தே னெனும். 36
கோட்டை கட்டும் பலவிதை வர்க்கமுங்
கொண்ட கொட்டுக் கொழுவின் வகையும்
பூட்டு நெட்டை நுகமுங் கயிறும்
பொன்னின் மேழிக் கலப்பை வகையும்
தீட்டு மெய்ப்புகழ் வீதி விடங்கத்
தியாகர் பண்ணைவயலி லுழுத
மாட்டு வர்க்கமு முள்ள படிதன்னை
வந்து சொல்லடா வன்மீகப் பள்ளா. 37
இளவி தைகார் பசான விதையி
லெலியருந்தியது தொண்ணூறு கோட்டை
வளவி லிட்ட பட்டடையில் பட்டி
மாடு தின்ற தெழுநூறு கோட்டை
யளவு வாசி யறுநூறு கோட்டை
யந்து தின்றதோ ரைஞ்ஞூறு கோட்டை
களவு போனது நானூறு கோட்டை
கண்ட கோட்டை முந்நூறே யாண்டே. 38
பலவ கைநின்ற மாட்டில் உருத்திரர்[1]
பத்து மாடு பதினொரு மாடு
கலக மாகிய காலனைச் சாடக்
கலங்கி[2] யோடுங் கடா வொன்றுங் காணேன்
உலக மெங்கு முழுத விடத்தி
லுறங்கி நின்ற[3] தொருபெருங் காளை
நிலவ ணிந்தவ ராரூர்த்தி யாகர்க்கு
நின்ற குண்டை யொருகுண்டை யாண்டே 39
--------
(பி-ம்) 1. உருத்திரன். 2. கடுகி 3. உறங்குகின்ற.
-----------
புகழ்படைத்த தியாகர்க்குத் தென்னாலைப்
பூமி யான்செய் திருப்பணி தன்னில்
முகவ ணைக்கல்லுப் பூட்டு மிடத்தில்
முறிந்து போன நுகமொரு கோடி
அகலி டத்தை[4] முழுது முழுத
வருங்க லப்பை யனந்த மதுதனில்
இகல் படைத்த [5]பலபத் திரன்கையி
லிருக்குங் கலப்பை யொன்றுண் டாண்டே. 40
---------
(பி-ம்) 4 அகலிடத்து 5. பலபத்திரனிடத்தில்.
---------------------------------------
நாரி பங்கர் கமலையஞ் சாரலில்
நயந்து நண்பு வியந்துற வாகியே
காரி லங்கிய சந்தனச் சோலையில்
கலவி நீங்குங் கயல்விழி மாதரார்[1]
சோரு மாடை தலைமாறிச் சூழ்ந்ததும்
தொலைந்த நாண நினைந்தே யலைந்ததும்[2]
வாரி யங்[3] கையிற் கூந்தல் முடித்தது
மனத்தி லொன்று மறக்க வொணாததே[4] 41
-------
(பி - ம்) 1. மாதரீர். 2. நினைந்தே நகைத்ததும். 3. வாரியே. 4. மறக்கவொணாதே.
--------------------------
பள்ளி முறைப்பாடு
மெள்ள வேசென்று சீரங்கப் பள்ளியை
வேட்டு நானூறு கோட்டை யளித்தான்
பள்ள ராமுற வின்முறை யார்க்குப்
பண்ணை மாட்டிலே பாதி கொடுத்தான்
சுள்ளி னோடுறு கள்ளு மருந்திடத்
தொண்ணூறு மாட்டையு மெண்ணி யவித்தான்
கள்ளமே செய்யும் பள்ளனைக் காவலிற்
கட்டிடீர் பண்ணைக் காரனா ராண்டே. 42
கலிப்பா
சேண்மருவும் நான்முகனுஞ் செங்கண்மா லுந்தேடிக்
காண்பதரிதாய் நின்றோன் கமலைவள நாடனையீர்
நாண்முகமுஞ் சேண்முகமு நன்னிலா வீசுமிள
வாணகையு மென்று மறவேன் மறவேனே. 43
சீரங்கப் பள்ளி முறையீடு
கொடுமை யே[னின் றுனைக்]கண் டழுகைக்கே
குறைகள்[1] செய்து சிறையி லிருந்தாய்
தொடர வாதுசெய்[2] வன்மீகப் பள்ளத்தி
சொன்ன வாறது சூது[3] முடித்தாள்
அடிமை தன்னை யறியாம லேபண்ணை
யாண்டை தானு மவள்வார்த்தை கேட்டார்
விடவ ரா[4]வரங் கேசர் விதித்த
விதியை யாரும் விலக்கவொண் ணாதே. 44
------------
(பி - ம்) 1. கொடுமைகள். 2. வந்து செய். 3. சூளு. 4.விடவரவிற் றுயிலரங்கேசர்.
-----------------------------------
ஆலில் நின்றிடும் வீரன் றனக்கிட்ட
வாட்டி றைச்சியு மாக்கிய சுள்ளு
மூலி யென்பதுங் கொண்டு வடித்தபின்
மொந்தையிற் கொண்டு வந்த மதுவும்
பாலில் வெந்து படைத்த வடிசிலும்
பானை தன்னொடும் பாவிக்க வேண்டிக்
காலி ரண்டுந் தொழுவி லிருக்கவே
கையி ரண்டுந் தொழும் பள்ளீரே. 45
தொழுத போதி லிழுக்குள்ள தாகுமோ
சொன்ன வார்த்தையி லென்ன மறுத்தேன்
பழுது தானொரு கோடி செய்தாலும்
பாரி யானவள் பாராட்ட லாமோ
உழுத எருங் கலப்பை விதைவகை
யுள்ள வாறெல்லா முத்தாரஞ் சொல்வேன்
அழுதி டாமனீ வன்மீகப் பள்ளத்தி
யாண்டைக்கே சொல்லி மீண்டுகொள் வாயே. 46
மேய சீரங்கப் பள்ளி யிடத்தில்
வெறுப்பினா லன்று விண்ணப்பஞ் செய்தேன்
ஆயி ரம்பிழை செய்யினு மெங்களை
யாண்டையே[1] யன்றி யாரே பொறுப்பார்
பாயு மாடும் விதையுந்[2] தந்து
பண்ணை சேரப் பயிர்செய்து தாரோம்
நாய டியேன் பிணையாக வன்மீக
நாதப் பள்ளனை[3] விட்டிடு மாண்டே. 47
--------------
(பி - ம்) 1. ஆண்டை. 2. மாட்டு வகையும். 3. வன்மீகப் பள்ளனை.
----------
உரையெடுத்த சதுர்வேத நாதனார்
ஓவி லந்தரி[4] மேவிய பாகனார்
கரைய டுத்த வளர்முத் துதிர்ந்திடுங்[5]
கழனி சூழுங் கமலைநன் னாட்டினிற்
றிரையெடுத்த திருப்பாற் கடலிலே
செய்ய பத்மத் திருக்கோயில் வாழ்வீர்
வரையெடுத்த புதுமணச் சோலையில்
வந்து நீர்நின்ற மாயமென் மாயமோ. 48
-----------
(பி - ம்) 4. ஓவியந்தனை. 5. வளமுத்தி தந்திடுங்.
----------------------------------------
மாட்டு வகை
முட்டிக்காலன் வெட்டுக்கிடாய் மொட்டைக் கறுப்பன்
மோழைக்காளை வீணைக்கொம்பன் யானைச் சொறியன்
மட்டைக் கொம்பன்[1] நெட்டைக்காலன் வட்டக்கரியன்[2]
மணிகட்டி வெள்ளைக்காளை[3] குள்ளச் சிவப்பன்
வெட்டுக்காலன் மொட்டைக்கண்ணன் மேகநிறத் தானே
வெட்டுவாலன்[4] தறிகொம்பன் வெள்ளைக் குளம்பன்
கொட்டைப்பாக்கன் கூழைவாலன் கூடு கொம்பன்
கொண்டபண்ணை மாட்டுவர்க்கம்[5] கூறினே னாண்டே. 49
-----------
(பி - ம்) 1. மட்டக் கொம்பன். 2.வட்டக் குறியன். 3. வெள்ளைக் காலன். 4. வெடி வாலன். 5. மாட்டின் வகை
------
வச்சிரமா ணிக்கத் தாலே படைவாளும்
வன்பவளக் கொம்பினாலே மேழிநுகமும்
மெச்சியதங்[6] கத்தினா லிழைத்த[7] கொழுவும்
மெல்லியவெண் பட்டு நூலால் விட்ட கயிறும்
பச்சைவெட்டுச் சந்தனத் தாலுயர்[8] காலும்
பதுமராகத் தாலிழைத்த உழவு கோலும்[9]
கச்சணிந்த கொங்கை பங்கன் தென்க மலைக்கே
கலப்பையா யிரங்கொண்டு கட்டினே னாண்டே. 50
------------
(பி - ம்) 6. உச்சித்தங். 7. வைத்த.
8. சந்தனத்தாலேற்கும் ஏர்க்காலும். 9.உழக்கோலும்.
--------------------------------
நெல்வர்க்கம்
அரிய நாயகங் குறுவை பொற்சாலி
யருச்சுன மென்னு மரியா[1] நுணங்கு
திருவ ரங்க னழகிய வாணன்
தில்லை நாயகன் சீரகச் சம்பா
இரண வாரிகர்ப் பூரம்பொற் பாளை
யிரங்க மீட்டான்[2] குறுவைக் கிளையான்[3]
சுருணை வாலன் கருவாலன் சம்பா[4]
சொரிகு ரும்பை விதைவகை யாண்டே. 51
-------------
(பி - ம்) 1. யருச்சுனன் தியாதா. 2.மாட்டான். 3.கிணையான். 4. செவ்வாலன்.
-------------------------------
விருத்தம்
மாயர் பாகனார் மாது பங்கனார்
மத்த மாடரா வைத்த வேணியார்
காயு மாரவேள் கணையை வென்றுளார்
கமலைதன் னில்வாழ் கனக வல்லியார்
சேய கூர்விழிக் கொப்பு வாளியே
செவிய ணிந்தது கொப்பு வாளியே
சாய லானதுங் கமலை போலுமே
தாங்கு கொங்கையுங் கமலை போலுமே. 52
இந்நேரம் பூசமென்றார் பஞ்சமி யென்றார்
யேற்றசோம வாரமென்றார் சோபன மென்றார்
நன்னேர மாகுமிந்த முகிழ்த்தந்[1] தன்னில்
நரையானும் வலமாக விரையச் சென்று
பொன்னேரைப் பூட்டிவயல் சேறு செய்தபின்
போதவெருத் தழைபோட்டுப் பரம்ப டித்துத்
தென்னேர்மொ ழிச்சிபங்கன் தென்க மலைக்குச்
செந்நெல்[2]விதை தெளித்துவிடச்[3] செல்லடாபள்ளா. 53
-------
(பி - ம்) 1. முகுர்த்தந். 2. சென்னல். 3. தெளித்திட.
----------
தெளியுஞ்செந் தமிழ்ச் சுந்தரற் காகத்
தெருவிற் றூது பரவைக்குச் சென்றோன்
களித ருஞ்சிறை வண்டிசை கொண்ட
கடுக்கை யண்ணல் கமலை வயலில்
மிளிர்த ரும்பனி நீரை விடுத்து
விளைவயல் தனில்வெங் காரைப் பாய்ச்சி
யொளிதரும் பொற்க லப்பையைப் பூட்டி
யுழுகைக் கேகொழு தச்சுதே[4 யாண்டே. 54
-------------
(பி - ம்) 4. தைத்த
--------
இன்றுனையே[5] கண்டழுகைக்கே பண்ணைக்காரன்
எங்களைத்தான் சிங்கி கொள்ளுகிறான்
சென்றபோது சேரிப்பள்ளிகள் உன்னழகைச்[6]
சேரவே கண்ணூறு[7] கொண்டதோ
அன்றிளையா ளிட்டமருந்தோ அவளிடத்
தாசை மோகந்தலைக் கொண்டதோ
மன்றினின்ற வீரன்குற்றமோ மயங்கினாய்
வன்மீக நாதப் பள்ளனே. 55
--------------
5. இன்றுணையைக். 6. உன்னழகு." 7. கண்ணீர்.
--------------------------------
தன் குழவி தன்னையும் பாராய் தன்னுடைய[1]
தாதை வர்க்கந் தன்னையும் பாராய்[2]
என் கொடிய முன்னை வினையோ கைபிடித்
தென்னைக் கொண்ட நேர வாசியோ
உன்கை பார்க்குமெங் களுக்கும் வேறொரு
தஞ்சமுன் னையன்றி வேறு[3] முண்டோ
வன்கமலை[4] நாத னருளா லெழுந்திராய்
வன்மீக நாதப் பள்ளனே. 56
------
(பி - ம்) 1. என்னுடைய தாதை. 2.காணாய்.3. பின்னையு. 4. செங்கமலக்.
---------
துங்கமலை நேர்விழியுந் தோளிணையு மொன்றாக
சங்கமலைப் பாலால் தழும்பறா தெந்நாளும்
பைங்கமலை வாவியிற் பணிலக்குழா முழங்குங்
தென்கமலை வாழ்வே தியாகப் பெருமாளே. 57
தெளித்தேன் விதையுநீரும் வடியப் போட்டேன்
சேரவே முளைத்தபின்பு நீருங் கட்டினேன்
அளித்தே னளிக்குலஞ்சூழ் தென்க மலையோர்
அறிவு போலே கிளைத்துச் செறிவாகியே
தளிர்த்தேறுஞ் செந்தமிழைக் கொண்ட வரசர்
தக்கபுகழ் போலே நாற்றுஞ் சமைந்ததிப்போ
களித்தே பறித்துமுடி நடுவ தெல்லாங்
காணவர வேண்டும்[5] பண்ணைக்கார னாருமாண்டே. 58
-------
(பி - ம்) 5. வரவேணும்.
--------------
சேலையழகா திருமார்பிற் செங்கழுநீர்[6]
மாலையழ காதே வரகண்டா – மாலையந்திக்[7]
காப்பழகா வென்று கணிந்துகனிந் தோதுதற்கு
நாப்பழகா வென்[8] செய்வே னான். 59
---------------
6. செவ்வந்தி 7. வேலையந்தி. 8. தென்.
------------------------------------------
மங்கை யாடக் கமலைச் சடிலர் மருவு மரவு மாடவே[1]
மார்பிற் செங்கழு நீரும் மணிப் பொற்றோடு மாடவாடவே
கங்கையாடத் திங்களாடக் கனகதண்டினி லாடுவார்
கமலைவாழு மமலர்மேவுங் கயலுலாவும் வயலுளே
செங்கையாட வளைகளாடத் திரளுந்தரள மாடவே
சேலையாட மாலையாடச் சேலைநேர்விழி யாடவே
கொங்கையாடக் குழைகளாடக் கொடியிடைதுவண்டாடவே
கொந்தளாடவி யாடவாடிக்[2] கூடி நடவாரும்[3] பள்ளீரே. 60
----------
(பி - ம்) 1. மங்கையாடக் குடிலச் சடில மருவுதரள மாடவே.
2. கொந்தளாடவி யாடவே.
3. நடவா.
-------------
தீத்தாளுடன் காத்தா ளுலகாள்
திருவாளுட னிருவா விளையாள்
சிவந்தாளுடன் வந்தான் குளுந்தாள்
சின்னாள் பெரியாள்
கூத்தாளுட னெழுவாள் விழியாள்[4]
குழைஞ்சாளுடன் குளுந்தாள் தொடர்ந்தாள்
குயிலாளுடன் மயிலாள் தையலாள்
குரவைகளிடவே
பூத்தாரணி சடைமுடி யசையப்
பூங்கமலத் தாளிணை வருந்தப்
புண்டரீகத் திருமுகம் வேர்வெழப்
பொற்குழை யசைய
நாத்தான்புகழ் நாவல னேவலின்
நள்ளிருளிற் றூதென வீதியில்
நடந்தோன் கமலாலயக் கழனியில்
நடவாரும்[5] பள்ளீரே. 61
------
(பி - ம்) 4. வழியாள். 5. நடவா.
-----------------------
படித்த செந்தமிழ்க் கவிதைச் சுந்தரன்
பரவைக் கிரவில் நடக்கவே
பாதஞ் சிவக்கத் தூது நடந்த
பரமர் கமலை வயலுளே
முடித்த குழலுஞ் சரியக் குரவை
முழக்கி வயலி லுழக்கியே
மொண்டு மதுவை யுண்டு முடியைக்
(முடியக்) கடுகி நடுகைக்கே
வெடித்த கமல மடுத்த குவளை
விரவிக் குமுத மருவியே
மேவி யேயெதிர் தாவி யோரை
விரும்பிச் சுரும்பு திரும்பவே
அடித்த போது வகன்றி டாம
லகன்ற பூங்குழல் காட்டியே
அளிக்கு லம்பல களித்தெ ழுந்திடு
மதிசயம் பாரும் பள்ளீரே. 62
ஆலசுந்தரர் கமலை நாயக
ரடல்வேள் தன்னை யெரித்தவர்
சூல கங்கணர் பாணி சங்கரர்
துலங்கும் பண்ணை வயலுளே
நீல கொந்தள மேக பந்திகள்
நெடுகச் சரிய நடுகைக்கே
கோலக் கொண்டையர் பரவைக் காயிரம்
கொடுப்பர் பாரும்[1]பள்ளிரே. 63
-----------
(பி - ம்) 1. கோலக்கொண்டையப் பார்வைக்கெண்டைகள் கூடிப் பாய்வது பாரும்
----------------------------------
கந்த மருவும் கடுக்கைச் சடையர்
கமலை சூழும் பயிரெல்லாம்
தந்தை யணையுந் தனத்தைப்[1] போலக்
தளர்ச்சியே யன்றி வளர்ச்சியாய்
முந்து2 கருணை முனிவ ரிடத்தி[3]
லுருவம் போலக் கருவதாய்
விந்தை பயிலும் நாலைப் பூமியான்
விளங்கும் புகழ்போல் விளைந்ததே. 64
---------
(பி - ம்) 1. யனையதாதை. 2. உந்து. 3. முனிவர் நினைவு
----------------
தெண்டிரைநஞ் சுண்ட கண்டன் தேவர கண்டன்
தென்கமலை வாவி சூழு நங்க மலைக்கே
கொண்டகதிர் சொன்னவாளிட் டறுத்தேற்றினேன்
கூலிப்பண்ணை மரக்காலால் கோலி யளந்தேன்.
அண்டமுக உளவாக மேருகிரிபோ
லாயிரம்போர் விதைப்போராய்ச் சேருங் கட்டினேன்
கண்டபொலி தூற்றிமுதற் கண்டளக்கவே
கண்காணிக்க வேணும் பண்ணைக் காரனாராண்டே 65
வளவினுஞ் சற்றுமிராள் சுற்றித் திரிவாள்
வன்மீகப் பள்ளியென் வார்த்தையுங் கேளாள்
தளராமற் சோறுமிடாள் கறியுமிடாள்
தாய்க்கொளித்த சூலுமுண்டோ தஞ்சம் வேறுண்டோ
வளமாகக் கள்ளியவள்[1] பண்டமும்பாராள்
யாருடன் முறைப்படுவ னாண்டவ ரல்லால்
இளையாளைக் கொண்டவன்றே வன்பகையால்
இத்தனைநாளுஞ் சொல்லக்கூ சியிருந்தேனாண்டே. 66
--------
(பி - ம்) 1. அளவாய் களியாட்டமாய்
---------------------------------
மாயக்கள்ளி குள்ளியான[1] சீரங்கப்பள்ளி
வந்தவன்றே பள்ளன்மிகச் சிந்தைவேறானான்
காயப்போட்ட வயலுக்குத் தண்ணீரும் பாய்ச்சான்
கட்டுச்சூடு களப்பேறு[2] விட்டதுந் தாரான்
பாயிற்கிடை போலக்கள வரப்பிற்[3] கிடப்பான்
படிபோட்டா லவளுக்குப் பாய்ச்சி யளப்பான்
தாயத்தாரை வெல்வது முபாயத்தா லன்றோ[4]
தாறுமாறா யென்கொடுமை சாற்றினே னாண்டே[5]. 67
---------
(பி - ம்) 1. குள்ளியவள் 2. பேற்றில் 3. களவாகிக் 4. உபாயத்தாலேவோல்
5. சாற்றினோலைடே.
-------------------------
1. என்னையென்னை யாண்டை முன்னே சொன்ன தென்னடி;
உன்னையேசிய பள்ளனோடு பேசொண்ணாதடி.
2. ஏசினாலும் பேசினாலுஞ் சீரங்கப்பள்ளி உன்மே
லிருந்த மருந்தாசை பாரி லுள்ளதோ
பாரிலுள்ள மருந்தாசையினால் வன்மீகப் பள்ளி
பள்ளனையும் வசமாக்கிக் கொள்ளொணாதடி 68
3. வசமாக்க வுன்னைப்போல் மருந்தார் வல்லார்
மருந்திட்டான் வானவர்க்கு மாய னல்லோடி
மருந்திட்டான் மாயனென்றா யுங்க ளாண்டைபோல்
வஞ்சநரி பரியாக மாயஞ் செய்தானோ.
4. குற்றிடை யிடைச்சியர்கள் கூறை கவர்ந்தே
குருந்தேறினா னுங்கள் கொண்ட லல்லோடி
நற்றவர்த மங்கையரைத் தாரு வனத்தே
நாணழிவு செய்ததுங்கள் தாணு வல்லோடி
5. மாதினுரு வாகிவந்த சீதை தன்னையு
மாமியையுங் கொண்டா னுங்கள் மாய னல்லோடி
காதலுமை பங்கிருக்கக் கங்கை சடைமேல்
காணவைத்தா னுங்கள் கறைக்கண்ட னல்லோடி.
6. ஏறுபுகழ் தேர்விசைய னேறு தேரின்மே
லிருந்துபரி தூண்டினா னுன்னாண்டை யல்லோடி
மாறிலாத மாறனுக்குக் குதிரை யாளாய்
மதுரையிற் சென்றா னுங்கள்பதி யல்லோடி.
7. பாவல னொருவனுக்கு ஏவ லாளாகிப்
பாயுஞ்சுமந் தானுங்கள் தாணு மல்லோடி
தாவுபுகழ்ப் புலவர்க்கு மண்ணு மன்றியே
சாணாகஞ் சுமந்தா னுங்கள் தாணு வல்லோடி.
8. தாடகைதன் பெண்பழியைச் சற்று மெண்ணாமல்
தாண்டியாடல் செய்தானுங்களாண்டையல்லோடி
வாடிமுகம் நாணவொரு மங்கை யுடனே
வாதுசெய்தா னுங்களுடை நாத னல்லோடி.
9. அந்தகன்றன் மைந்தரிடத்தே ஐவ ரேவவே
அன்று தூது சென்றானுங்க ளாண்டை யல்லோடி
சுந்தரன் விடுத்தபோது அந்த யிரவிற்
றூதுசென்றா னுங்களிட சோதி யல்லோடி.
10. கூச்சமறப் பேச்சிமுலைப் பாலு முயிருங்
கொண்டவனு முங்கள்கருங் கொண்ட லல்லோடி
ஏச்சென்றால் வாச்சுதென்று வேட னுதவும்
எச்சில் தின்றானுங்களுடை யீச னல்லோடி.
11. வீடுதோறு மாய்ச்சியர்கள் காய்ச்சிய பாலும்
வெண்ணையுந் திருடினா னுங்கள் கண்ண னல்லோடி;
கூடுபுகழ் அமர்நீதி வீடு தனிலே
கோவணந் திருடினானுன் னாண்டை யல்லோடி
12. கற்றவரை வெற்றிசெயும் காம னார்தமைக்
காற்றிலேற வைத்தானுங்கள் கண்ண னல்லோடி
பெற்றகரி முகனுக் குற்ற பரியாகப்
பெருச்சாளி யளித்தா னுன்பிரா னல்லோடி.
13. படுக்கவோர் பாயு மின்றிப் பாம்புதனிலே
பள்ளிகொண்டா னுங்கள் கண்ண னல்லோடி;
உடுக்கவொரு துகிலுமின்றி யன்று புலியி
னுரியை யுடுத்தினா னுன்னீச னல்லோடி.
14. மட்டுப்படாத் துட்டத் தனஞ்செய் தசோதைதன்
மத்தடி பட்டானுங்கள் மத்த னல்லோடி;
பிட்டுக்கு மண்சுமந்து பாண்டியன் கையிற்
பிரம்படி பட்டா னுங்கள்பிரா னல்லோடி.
15. ஆட்டுக்காலுக் காசையாகி மேட்டுப் பன்றியா
யன்றுதேடிச் சென்றானுங்க ளாண்டை யல்லோடி;
மோட்டுப்பன்றி யாயன்று குட்டி தனக்கு
முலைகொடுத்தா னுங்கள் முத்த னல்லோடி.
16. ஆனிரையைக் காத்தளிக்கக் கோலுங் கையுமாய்
ஆயனா னானுங்கள் வள்ள லல்லோடி;
மாநிலத்தில் வேடனாகு மீன மின்றியே
வலையனு மானானுங்கள் மத்த னல்லோடி
17. கறுத்தன்று கறைக்கண்டன் காமனைக் கொல்லக்
கண்டிருந் தானுங்கள் விண்டு வல்லோடி;
சிறுத்தொண்டர் மகன்றன் னையறுத் துண்ணவே
சிந்தைமகிழ்ந் திட்டா னுங்கள்சிவ னல்லோடி.
18. வாவி தன்னில் மேவுமொருவன் கழுவின்மேல்
வண்டுருவங் கொண்டா னுங்கள் விண்டு வல்லோடி;
பூவிரியுந் தென்கமலைப் புற்றினிடத்தே செல்லாப்
புக்கிருந்தா னுங்களுடை நக்க னல்லோடி
19. வரமான மாவலிபால் வாம னாகியே
மண்ணிரந்தா னுங்கள் மாயனல்லோடி;
பிரமன் சிரந்தன்னைக் கரத்தி லேந்தியே
பிச்சை யிரந்தா னுங்கள்பித்த னல்லோடி
20. வைக்குமன்று தஞ்ச மான கஞ்சனாகிய
மாமனையுங் கொன்றவ னுன்மாய னல்லோடி;
தக்கனெனு மாமனைமுன் மிக்க வேள்வியில்
தலையறுத் தானுங்கள் தாணு வல்லோடி.
21. கொட்டஞ்செயுங் குரக்குத் துட்ட சேனைதனைக்
குறைவறப் படைத்தா னுன்னிறை யல்லோடி;
நெட்டலகை புடைசூழச் சுட்ட சுடலை
நின்றுநடஞ் செய்தானுங்கள் நித்த னல்லோடி.
22. ஒருக்காலே யுமைபங்கன் அருக்கன் பல்லை
யுதிர்த்தாற்போலுன்பல்லை யுதிர்ப் பேனடி;
தருக்காலே திருக்கேள்வன் தந்தி யின்றன்
தந்தத்தைத் தகர்த்தாற்போ லுனையானுந் தகர்ப்பேனடி.
23. கிள்ளைமொழிப் பாகனன்று வன்புலி வாயைக்
கிழித்தாற் போலுன் வாயைக் கிழிப்பேனடி;
பிள்ளையுரு வாகிமாயன் புள்ளின் வாய்தன்னைப்
பிளந்தாற் போலுன் வாயைப் பிளப்பேனடி.
24. பேசரிய வீசனன்று தக்கன் வயிற்றைப்
பீறினாற் போலுன் வயிற்றைப் பீறுவேனடி;
கேசவனன் றிரணியனைக் கூசும்படி யுகிராற்
கீறினாற் போலுன்வயிற்றைக் கீறுவேனடி.
25. தோற்பதன்றி வென்றியான் னரக்கி மூக்கினை
துணித்தாற் போலுன் மூக்கைத் துணிப்பேனடி;
ஆற்பாவ மானமாயன் சூரன் றங்கைமூக்
கரிந்தாற் போலுன் மூக்கை யரிவேனடி.
26. பாழ்படவே பாற்கரன்கண்ணை வேள்வியி லெங்கோன்
பறித்தாற் போலுன் கண்ணைக் கெடுப்பேனடி;
கேழ்பரவு கேசவன்முன் சுக்கிரன் கண்ணைக்
கெடுத்தாற் போலுன் கண்ணைக் கெடுப்பேனடி.
27. அன்றுமுய லகன்மீதி னின்று பரமன்
மிதித்தாற் போலுனை நானு மிதிப்பேனடி;
துன்றுமுடி கன்றமாய னன்று கரனைத்
துளைத்தாற் போலுனை யானுந் துளைப்பேனடி.
28. ஈசனன்று பாசமேறிக் காலனைக் காலால்
எற்றினாற்போலுன் மார்பி லெற்றுவேனடி;
ஓசைகொள் சகடுதன்னைக் கேசவன் முன்னா
ளெற்றினாற் போலுன் மார்பி லெற்றுவேனடி. 68
----------
ஆதார மானதிரு வாரூர ரேநீதி
வேதா கமங்கள் விரும்பியே - காதல்
விருதாது காமனையும் வென்றநீர் மாதர்க்
கொருதூது செல்லலா மோ. 69
கைத்த லங்கொள் திகிரி யெறிந்து
கதிர்ம றைத்தவன் கண்ண னல்லோடி;
பத்தர் சூழுங் கமலைப் பிரான்கைப்
பணியின் வாய்க்கதுவும் பற்றுமோடி.
2. வழிபயின்ற கல்லைப் பெண்ணாக
வகுத்தவ னெங்கள்[1] மாய னல்லோடி;
அழிதருமங் கத்தைப் பூம்பாவை
யாக்கினா னெங்க ளகண்ண லல்லோடி.
3. மாறுகொண்டொரு மீனமெனக் கடல்
வந்தடைந்தவன் மாய னல்லோடி;
கூறுமந்தப் பெருங்கடலு மெங்கள்
குறுமுனி வன் குடித்தா னல்லோடி.
4. செங்கண் மாலன்று வேழ மளித்த[2]
திருவருளைத் தெளிந்ததில்லை[3] யோடி;
வெங்கரா முண்ட மைந்தனைச் சுந்தரன்
மீட்ட மேன்மையுங் கேட்டிலை யோடி.
5. ஏங்குமானிரை காக்க வரையை
யெடுத்துமாரி தடுத்தா னெங்க ளாண்டை;
யோங்குமேரு நெடுங்கிரி யைக்கர
புண்டரிகத் திலங்கக் கொண்டா னென்னாண்டை.
6. இறுகு வச்சிர னாக்கிக்கொள் வேலை
யிடத்திலங்கையை யழித்தா னென்னாண்டை;
முறு வலற்ப மரும்பிமரு வலர்
முப்புரங்க ளெரித்தா னெங்களாண்டை.
7. ஈண்டுவெம் பாரதஞ் செய்து மைவர்க்குயி
ரீந்தா னென்னுடை யாண்டை;
தாண்டவஞ்செய்து சூலமுமேந்திச்
சர்வசங்காரஞ் செய்தா னென்னாண்டை.
8. முடிக வித்து விபீடணனுக் கன்று
மூதி லங்கை யளித்தா னென்னாண்டை
இடைதவிர்ந்த மறைவனந் தன்னில்
எலிக்கு மூவுல கீந்தா னென்னாண்டை.
9. கேசவனை யேசுவதேது சொல்லடி
கிட்டிப் பார்க்கிலவர்க் கிவரிட்ட ரல்லோடி;
ஈசனைநீ யேசுவதேது சொல்லடி
யிருவர்க்கு முறவன்றிப் பகையு முண்டோ.
10. அண்ணியெங்க ளண்ணனெங்கள் சங்கரனாற்கே
யடுத்த தங்கையை யன்று கொடுத்தானடி;
மண்டலமகிழ் தென்கமலைத் தேவரகண்டன்
மாலுக்கன்று செந்திருவைப் பாலித்தானடி.
11. வையமுண்ட வெங்களையன் வையம்பாகியே
மாதேவன் பற்றலரை வதைத்தானடி;
ஐயமின்றி யெங்களண்ண லுங்கள் மாலுக்கே
அக்காலத்திற் சக்கரமொன் றளித்தானடி.
12. ஈசனரு ளாகி யெங்கள் கேசவன் முன்னாள்
ஏற்ற வொரு பாகந்தன்னி லேற்றினானடி;
ஓசைமணித் தேரின்மிசை யீசனார் தம்மை
யோடி விடையாகி மாயன் தாங்கினானடி.
13. மறந்திடா யென்பிழையை யன்புகூரவே
வன்மமாக நீயெண்ணாதே வன்மீகப் பள்ளி
சிறந்துநா மிருவருங் கூடி யாடியே
சேர்ந்துவாழ வேணுங்காணுஞ் சீரங்கப்பள்ளி. 70
-----------
(பி - ம்) 1. ஞானசம்பந்தனல்லோடி. 2. மழைத்த. 3.தெளிந்திலை.
------------------------
நற்கவிதை கொண்டுபள்ளின் வர்க்க முரைத்த
ஞானப்ரகா சன்வாழி நற்புவி வாழி
விற்குலவுமா றன்மிகுமா னேந்து கையான்
வித்தியாதி பதிமுதலி மெய்ப்புகழ் வாழி
நற்கமலை நகர்வாழி சாமந்தன் வாழி
தானமும் பரிகலமும் தழைத்து வாழி
மற்குலவு திண்புயத்தான் மல்லைய பூபன்
வாழிபூமி யானெந்தா ளும்வாழி வாழியே. 71
ஆண்ட புகழ்க்கமலை யத்தரே போர்விசயன்
பூண்டசிலை தாக்கப் பொறுத்தீர் - ஈண்டு
வெறுப்பதுவே யானாலு மெய்யடியேன் புன்சொல்
பொறுப்பதுமக் கன்றோ புகழ். 72
திருவாரூர்ப் பள்ளு முற்றிற்று -
----------------------------------
சோமசுந்தர தேசிகர் எழுதியவை.
-- சைவ சிகாமணிகள் இருவர்
-- நரவாகனதத்த சரிதம்
-- தமிழ்ப் புலவர்கள் வரலாறு (16-ம் நூற்றாண்டு)
-- ஞானப்பிரகாசர்
-- பெரிபுளுஸ் (படங்களுடன்)
-- கால்டுவெல் இலக்கணம் முகவுரைப் பகுதி 0 4 0
This file was last updated on 21 Jan 2023.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)