pm logo

வள்ளிநாயகி சிற்றிலக்கியக் களஞ்சியம்,
கம்பபாதசேகரன் இ. சங்கரன் தொகுப்பு


vaLLinAyaki ciRRilakkiyak kalampakam
edited by kampapAtacekaran I. Sankaran
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to kambapadasekaran Sankaran for providing a scanned PDF of this work.
We thank Dr. Meenakshi Balaganesh, Bangalore, India for her assistance in the preparation of this work
for publication.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2023.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

வள்ளிநாயகி சிற்றிலக்கியக் களஞ்சியம்
தொகுப்பு: கம்பபாதசேகரன் இ. சங்கரன்

Source:
கிடைத்தற்கரிய தமிழ் நூல்களை பதிப்பிக்கும் பணியில்
முருகக் கடவுளின் புயவரை படர்ந்த குறவர் குலக்கொடி
வள்ளிநாயகி சிற்றிலக்கியக் களஞ்சியம்
பதிப்பித்தோன்: கம்பபாதசேகரன் இ. சங்கரன்,
ஆதீன சமய பரப்புனர், நெல்லை-6.
கம்பன் திருநாள் மலர்
கோவை சிரவை ஆதீனம் தவத்திரு. குமரகுருபர அடிகளின் அருட்துணையால்
வள்ளி திருக்கலியாண நாளில் வள்ளியூரில் வெளியிட்டோர்:
கம்பன் இலக்கியப் பண்ணை
2-97H, ஆனந்தவல்லி அம்மன் கோயில் தெரு, ஆரல்வாய்மொழி - வடக்கூர்,
குமரி மாவட்டம் - 629 301.
வள்ளுவம் 2053 ம் ளு மீனமதி 5 உ கைநக்கத்திரம் (19-03-2022)
---------------
ஓம்

வள்ளிநாயகி சிற்றிலக்கியக் களஞ்சியம்
1. திருவாமாத்தூர் வண்ணச்சரபம் தண்டபாணி அடிகள் அருளிய
வள்ளித்தாய் பதிகம்

(ஓலைச்சுவடியிலிருந்து படி எடுக்கப்பட்ட மூலவடிவம்)

காப்பு - வெண்பா
நீலவள்ளித் தாயே நினைப்பா ருடன்துணைப்போம்
வேலணிதோட் கந்தன்மகிழ் மெல்லியலே - ஞாலமிக
ஏசக்க ருங்கல்லி டைக்கிணறு வெட்டிநொந்தேன்
ஆசற்ற நீரூற்று அருள்.

அறுசீர் விருத்தம்
குறக்குலத்தில் வளர்ந்தாலும் நின்னதுநல்
      அருட்கருணை குறிக்கும் காலை
அறப்பெரிதாம் எனக்கருதும் தமியேனைத்
      திருவுளத்தில் அயத்தாய் கொல்லோ
சிறப்பனைத்தும் தருங்குமர பெருமானைத்
      தினைப்புனத்துச் சேர்ந்த பேதாய்
மறப்பரும்பல் விளையாடல் அடியவர்பால்
      தினம்புரியும் வள்ளித் தாயே!       1

ஒருகனவில் எனதுமன வெளியின்மலைக்
      குறத்தியென உணர்த்து கின்ற
பெருமைநலம் குன்றாதென் கிணற்றிடை
      நன்னீரூற்றுப் பிறக்கச் செய்வாய்
இருகுவளைக் கண்மயில்போல் தினைப்புனத்தின்
      பான்மிசைவீற்று இருந்த நங்காய்
மருமலியும் கூதளப்பூ மாலைபுனை
      வேய்முளைத்தோள் வள்ளித் தாயே!       2

குன்றிமணி வடமுமெழில் கூடையுங்கைப்
      பிரம்பும் மயில் குலத்தின் தூவி
ஒன்றியசிற் றிடையும்நடை ஒயிலும்மற
      வாதமனம் உடைய லாமோ
வென்றிவில்வேட் டுவர்தவமே வேலுடையான்
      உயிர்க்குயிரே விளங்கும் தில்லை
மன்றின்நடிப் பார்க்கினிய மருமகளே
      எனையீன்ற வள்ளித் தாயே!       3

நின்னதுரைப் படிநடப்பான் நெடுவேற்கைக்
      குகனெனநீள் நிலத்தோர் சொல்லல்
என்னபொய்யோ நிசமோமெய் எனிலவன்பொய்
      பகர்வதுநீ இயற்றல் அன்றோ
பன்னகத்தின் நடித்தபிரான் விழிமணியோர்
      இரண்டுளொன்றே பதுமத் தண்பூ
மன்னன்மறை தமிழாக்க வரும்நாளில்
      உடன்பிறந்த வள்ளித் தாயே!       4

யாப்பியற்சீர் வழுவாமுத் தமிழாலும்
      துதிகூறும் எனைநின் கேள்வன்
மூப்பிசைந்த இறுமாப்பால் பொய்யுரைத்தும்
      துயர்ப்படுதல் முறைதான் கொல்லோ
தோப்பினுள் ஓர் கணியான சுந்தரவேள்
      கிம்புரியால் துவைத்துத் தெள்ளு
மாப்பிசைந்த கைப்பிடிப்பான் வணங்கவிளம்
      நகைகாட்டும் வள்ளித் தாயே!       5

ஞானவிளக்கு உடனதன்பேர் ஒளியாய
      சித்திகளும் நாடும் என்னை
ஈனமுறக் கற்கிணறு வெட்டவிட்ட
      குகன்புனற்பேறு என்றீ வானோ
பானலங்கண் கோகிலமே பசியமர
      கதத்துஅமையும் பாவை போல்வாய்
வாகனத்துஇந் திரன்புதல்வி மனம்நோவக்
      களிகூரும் வள்ளித் தாயே!       6

யானொருவன் தன்னிமித்தம் பொய்பலபே
      சிடத்துணிவுற்று இருக்கும் செவ்வேள்
ஏனொருகற் கிணறமையென்று இசைத்தானோ
      அந்தவிதம் இயன்பொண் ணாதோ
கானொருங்காள் பவன்மனைபால் அருந்தியதால்
      குறிபகரும் கனிவாய்க் கொம்பே
மானொருகாட் டினுட்பயந்த மதலையாய்க்கு
      றிச்சியில்போம் வள்ளித் தாயே!      7

தெம்பெனைச்சூழ் தரஅருண கிரிநீயென்று
      உரைத்தகுகன் திறற்கற் கூபத்து
அம்பெளிது ஊறுமென்றோர் பொய்யுரைத்து,
      இத் துயர்ப்படுத்தல் அறந்தான் கொல்லோ
கொம்பெனக்காண் டருகுறுப்பூங் கோதாய்,ஐந்
      தொழிலினரும் குனிந்து போற்ற
வம்பெழுநாண் மலர்ப்பொகுட்டில் வளர்மாமி
      மகிழுமெழில் வள்ளித் தாயே!       8

ஆயைவடி வேலாக்கிப் புனைந்துமலை
      தொறும்நடிக்கும் அருள்சால் சேந்தன்
தீயைநிகர் திருமேனிக் கவின்கருதும்
      எனையுலகம் சிரிக்க லாமோ
வேயையிகழ் மெல்லியதோட் டொயிலாரும்
      குறக்கோதாய் வினையாற் சூழும்
மாறையுமாய் அதுகடந்த மெய்யருளு
      மானசிறு வள்ளித் தாயே       9

சங்கரமா முனிவனுக்குள் மாமியருள் புரிந்த
      தெண்ணித் தமிய னேனுக்கு
இங்ககிலம் இகழாமல் புகழும்நலம்
      சிறிதளித்தால் ஏற்றம் கண்டாய்
கொங்கவிழிகற் பகநாட்டுக் குமரிமனம்
      மெலியஅயிற் குகன்தோள் சேர்வாய்
மங்களகல் யாணசவுந் தரரூபம்
      மருவுகுற வள்ளித் தாயே       10

தில்லைமன்றில் வானவரும் முனிவோரும்
      தொழநடிப்பார் திருக்கட் சேயை
வல்லைநிகர் முலைத்துணையான் மயக்குமுழு
      நீலநிற வள்ளித் தாயை
நெல்லைநகர்க் கவுமாரன் கற்கிணற்றில்
      நீர்பெறுவான் நிகழ்த்தும் பாடற்
சொல்லைநனிக் கருதுமவர் எல்லோருக்கும்
      சிறிதேனும் துயரு றாதே.       11
(முற்றிற்று)
--------------

2. திருவாமாத்தூர் வண்ணச்சரபம் தண்டபாணி அடிகள் அருளிய
வள்ளியம்மை பஞ்சகம்

(சந்தி பிரிக்கப்பட்டது)

காப்பு - கழித்தாழிசை
மன்னும் ஏனல் வனத்துறை வள்ளி மேல்
பன்னு செந்தமிழ்ப் பஞ்சகம் பாடுவேன்
மின்னும் வேலை விளங்கு எழில் தோகையோடு
உன்னுகின்றனன் ஊறு ஒழித்து உய்யவே

நூல் - கலிநிலைத்துறை
பொன்னாடர் தரு மங்கை மயல் கொண்டு நோவப் பொருப்பாளும் வேள்
உன் ஆசை கொடு வந்து உனைத் தெண்டன் இடும் வண்மை உளதாம் எனில்
கன்னாது எனைத் தொண்டருடன் வைத்திடச் சொல்லல் கடன் அல்லவோ
தென்னாடு புகழ் வேள்வி மலை தர வந்த சிறு கன்னியே! 1

நின் தாள் விருப்புற்று உனக்கான பல பாடல் நிதம் ஓதுவேன்
குன்றாத பேரரசை கொடு வாடிடக் காணல் கோது அல்லவோ
மன்றாடுவார் தந்த மகனான குகனுக்கு வல மேவி வாழ்
என் தாய் எனத் தெண்டன் இடுவார் தம் உயிர் போலும் எழில் வள்ளியே 2

இதழ் ஆயிரங் கொண்ட மலர் துன்று கையோடு என் எதிர் வந்து எனைப்
பதறாது களிகூர வைக்கின்ற நாள் என்று பகராய் கொலோ
மதவேளும் மனம் நாளும் எழில் ஒன்று குமரேசன் மயல் விஞ்சியே
நிதம் நாடி உருகத் தழைக்கின்ற முழு நீல நிற வள்ளியே! 3

வஞ்சித்து வாழும் பிணக்குற்ற தீயோர் புன் மத மிஞ்சலால்
அஞ்சித் தவிக்கின்ற தமியேனும் மகிழ்கூர அருள் செய்வையோ
தஞ்சிற் சிறத்துள்ள முனைவேல் அணிந்தாடும் நங்கோனுடண்
கொஞ்சிக் குலுங்கக் குலுங்கச் சிரிக்கின்ற குறவள்ளியே! 4

நிகரின்றி உயர்கின்ற கவுமார நெறி கொண்டு நிற்பார்தமைச்
சகம் எங்கும் நின் மைந்தர் என்று ஓதிடுந் தன்மை தவறாகுமோ
ககம் என்று வடிவால் கொடு அரி கொன்றுளார் வேணு கழலாளனாம்
புகழ் துன்று முருகேசன் உயிர் போலும் உயர்வான புனவள்ளியே! 5

நூற் பயன்
வன வேடர் தொழு மன்னன் மனை கொங்கை அமுதுண்டு வளர்வள்ளியைக்
கன வேணு வன மேவும் ஒரு தொண்டன் நுவல்கின்ற கவிஐந்துமே
மன வேலையிடை மன்னு கலமாகிடப் பெற்ற வாழ்வாரைச்
சின வேலன் அருள் மைந்தர் என ஓதும் மயல் அற்ற சிவலோகமே
(முற்றும்)
--------------------

3. வண்ணச் சரபம் தண்டபாணி அடிகளின் மருகர்
கோபாலசமுத்திரம் ச. சண்முகதாச பிள்ளை இயற்றிய
வள்ளி அம்மன் பதிகம்

(சந்தி பிரிக்கப்பட்டது)
காப்பு
செந்தில் நகர்ச் சேவலவன் திண்மைப் புயக்கிரியில்
புந்தி ஆனந்தமுறப் பொற்பு எழுதுஞ் - சுந்தரஞ்சேர்
கொங்கைக் குறமகள்பாக் கூறுதற்கு நீலநிற
மங்கை பெற்ற முக்கணன் காவல்.

நூல்
மயிலே குகன் புணர் மாதரசே! திகழ் வாருதியில்
துயில் ஓர் அரி வலக் கண்ணினில் தோன்றிய சுந்தரியே!
அயிலார் வசி விழிச் சிற்பரையே! எனை ஆண்டருள்வாய்
குயிலே! அருட்கடலே! செந்தின் மேவுங் குற வள்ளியே 1

மறையுஞ் சகல புராணங்களும் புகழ் மாமணியே!
பிறையினைப் போல் மிளிருங் கவினார் முகப் பெண் அனமே!
பொறை நிகருந் தன மானார் புயங்கள் புணர் விரகங்
குறை முற்றுந் தீர்த்தருள்வாய் செந்தின் மேவுங் குற வள்ளியே! 2

சே விடை ஏறிய கங்காதரன் பெற்ற சேந்தருடன்
நீ விளையாடிடும் போது உரைத்து என் மிடி நீக்கல் என்றோ?
பா விளம்பும் புலவோர் இமையோர் துதி பண்ணு மினே!
கூவிளந் தெங்கு வளர் செந்தின் மேவுல் குற வள்ளியே! 3

சீலம் பொலிந்த அருள்மாரி பெய்யுந் தினம் உளதோ?
ஆலம் பொசித்து அருள்வார்க்கு உபதேசமெய் அன்று உரைத்த
வேல் அம்புயப் பெருமான் நினைக் கானக மேல் துதிக்கும்
கோலம் பொருந்து அரசே! செந்தின் மேவுங் குற வள்ளியே 4

தோமறு சீர்க் களபச் சாந்து பூண் முலைத் தோகையர் தங்
காம வெள்ளத்து அமிழ்ந்து இன்புற்றிடது எனைக் காத்தருள்வாய்
தாமரையாசனத்தோன் அழக் குட்டிய சண்முகர் சேர் கோமளமே!
எழிலார் செந்தின் மேவுங் குற வள்ளியே! 5

மின்னலை அன்ன பொய்யாகிய வாழ்வை விரும்பும் யான்
உன் இருதாட் கமலந் துதித்து எத்தினம் உய்குவனோ
பன்னிருதோட் குகர் சிந்தைக்கு இசைந்திட்ட பாகு அனையாய்
கொன்னிமையோர் நகர் நேர் செந்தின் மேவுங் குற வள்ளியே! 6

வாரணி கொங்கை மின்னே! அன்பர்க் காய மாவாசை தனைப்
பூரணை ஆக்கிய அந்நாளில் பிறங்கப் புரிந்தருளுங்
காரணி தன் மருமகளே சற்றுந் தன் கண்களினால்
கூர் அணையும்படி பார் செந்தின் மேவுங் குற வள்ளியே! 7

இன்று ஓர் சிறிது இரங்காய் ஆகில் எந்நாள் இரங்குவையே
நன்று ஓங்கும் வில்லினைப் போலுந் திகழ் நுதல் நாயகியே!
பொன் தோடு அணி குழைச் செல்வியே! எங்கும் புரந்த குணக்
குன்றே! இரத்தினமே! செந்தின் மேவுங் குறவள்ளியே! 8

துய்ய மறைப் பொருளே! தொண்டர் உள்ளந் தொறு நிலவுஞ்
செய்யவளே! சிவப்பாந் துவர் வாயுள்ள தீங் கனியே!
உய்ய நின்றாள் அன்றி ஓர் பொருள் வேறுளதோ உறுகண்
கொய்யல் வேண்டும் பெருமைச் செந்தின் மேவுங் குறவள்ளியே! 9

வேதச் சிகாமணியா முருகோனொடு மிக்க புகழ்ப்
பாதச் சரோருகங் கிண்கிண் என்று ஒலிடப் பாலன் முடி
மீதுச் சித்தத்துடன் வாழ்வுறச் சூட்டுதல் வேண்டும் அன்பர்
கோதச்சந் தீர்த்தருள்வாய் செந்தின் மேவுங் குற வள்ளியே! 10

பயன்
பண் முளரிப் பொன் வாழ் கோபால சமுத்திரத் தூர்ச்
சண்முகதாசச் சிறுவன் சாற்று தமிழ் - உண்மையுடன்
விண்டவர் மிகானந்த மேவுவதும் அல்லாமல்
சண்டனிடஞ் சேரன் நிசம்
(முற்றும்)
++++++++

4. செழுங் கவிச்செம்மல் தி.சு. ஆறுமுகனார் இயற்றிய
வள்ளிநாயகி கவசம்

காப்பு
வள்ளி கவசம் வழுத்த விநாயகன்
துள்ளி வருவான் துணை

தன் இச்சா சக்தி தகவடர் வள்ளிமேல்
என் இச்சையில் கவசமே பாட - முன்னிய என்
பால் அன்பு கொண்டு இவண் பாலிப்பான் தண்அருளை
வேலன் புனிதன் விழைந்து

நூல்
அம்மா தாயே அருங் குற வள்ளியே!
இம் மாநிலத்தில் எனக்கு உனை அல்லால்
வியனார் நற்றுணை வேறு எவர் உண்டே
அயனார் தங்காய்! அலைமகள் மகளே!
மாலவன் கண்ணார் மடப்பிடியே! என் 5
பால் அவம் நேரப் பார்த்திருப்பாயோ
தாயே மறந்தால் தனயன் என் செய்வேன்
நீயே விரைந்து என் நேரினில் வருக!
நான் அக்கரையாய் நயந்துனை அழைத்தேன்
கானக் குறத்தி கடிதினில் வருக! 10

அனை நீ யன்றோ அயர்ப்பதும் அழகோ
எனை நீ காக்க இனிதே வருக!
காக்கும் மரபு உன் கன மரபு அன்றோ
நோக்கும் எளியன் என் நோவற வருக!
மடி உனக்கு ஆமோ மாதா கொடிய 15
மிடிதனை ஒழிக்க மிளிர்ந்து நீ வருக!
வந்தெனைக் காவாய் வனிதா மணியே!
சிந்தனைக் குழப்பம் தீர்ந்திட வருக!
உச்சி தனையே உவந்து நீ காக்க
மெச்சி என் கூந்தல் மேலாய்க் காக்க 20

சிரந்தனை நீயே சிறப்புடன் காக்க
பிறை நுதல் தன்னைப் பேணி நீ காக்க
கரு விழி நம்மைக் கனிந்து நீ காக்க
இரு செவி தம்மை இனிதே காக்க
நாசியைத் தாயே நயந்து நீ காக்க 25
பேசிடும் நாவை பேணியே காக்க
செவ்விதழ் வாயொடு சேர்த்து நீ காக்க
அவ்வியம் இன்றி அண்ணங்கள் காக்க
ஈறுடன் முப்பத்து இரு பல் காக்க
வீறுடன் விளங்க வியன் குரல் காக்க 30

பேணியே நின்று என் பிடரியைக் காக்க
மாணிய கழுத்தினை மகிழ்வுடன் காக்க
மற்புயம் இரண்டும் மாண்புடன் காக்க
முற்படி நின்றே முன்கை காக்க
மணிக் கட்டினையே மாதா காக்க 35
அணிவிரல் பத்துடன் அடர் நகம் காக்க
தட மார்பினையுறு தனமுடன் காக்க
படர் முதுகினையே பரிவுடன் காக்க
என்புகள் யாவையும் இணைத்தே காக்க
அன்புடன் மூளையை அன்னையே காக்க 40

பெருவயிற்றினையே பேணி நீ காக்க
உறு மதன் உள்ளுறுப்பு உவந்தே காக்க
துடித்திடும் இதயம் துலக்கமாய்க் காக்க
நடித்தல் இன்றி என் நல்லிடை காக்க
உந்தியும் உரோமப் பந்தியும் காக்க 45
இந்திரியஞ் சார் இருகுறி காக்க
அக்குறி மேலாம் அல்குல் காக்க
அக்கரையாய் குதம் அனையே காக்க
பிட்டம் இரண்டும் பேணியே காக்க
ஒட்டிய பெருந்தொடை உவந்தே காக்க 50

முட்டி இரண்டினையும் முனைந்தே காக்க
நெட்டியற் கால்கள் நீயே காக்க
கணுக்கால் இரண்டுங் கனிந்தே காக்க
அணுகி வந்து அன்பாய் அடிகளைக் காக்க
கால் விரல் பத்தும் கடிதே காக்க 55
மேல்உறு நகங்கள் மிளிர்ந்திடக் காக்க
குதிக்கால் இரண்டுங் குறித்தே காக்க
கதிசேர் உள்ளடி கணக்காய் காக்க
உடல் நலக் கேட்டினுக்கு உறுநோய் பலவாம்
உறுநோய் யாவுமே ஒழிந்திடக் காக்க 60

தலைவலி காய்ச்சல் தடுமன் கண்வலி
தொலையா மாந்தம் தொடர்ந்திடும் இழுப்பு
கடு மார்பு வலி கட்டிய சளியும்
மடுவார் வயிற்றினில் மண்டிய நோய்கள்
தொடராது எனை நீ துணிந்தே காக்க 65
அடர் மலச் சிக்கல் அடங்காக் கழிச்சல்
குதிக் கொதிப்புடன் கூடு சர்க்கரை நோய்
கை கால் குடைச்சல் கண்டிடும் சுளுக்கு
மண்டிய மூத்திரக் கோளாறு இவையுடன்
புண் பொடி கட்டிகள் பிளவை போன்றவை 70

கண்படாது ஒழிந்திடக் கனிந்தே காக்க
புதிது புதிதாய் புறப்படும் நோய்கள்
எதுவாயினும் நீ இரங்கியே காக்க
உரகம் தேளுடன் ஒந்திகள் பூரான் 75
சிறகா வண்டுகள் சேர்ந்த பல்லுயிர்களின்
விடத்தால் அடியேன் வெம்பி விடாமல்
திடத் தோடுடன் நீ தினமுங் காக்க
பில்லி சூனியம் பேய்கள் பைசாசம்
துள்ளித் திரியும் துட்ட தேவதைகள் 80

இவற்றால் இடையூறு இன்றியே காக்க
வஞ்சனை ஏவல் வைப்பு இவை என்பால்
அஞ்சியே விலக அன்னையே காக்க
கெஞ்சினேன் உன்னைக் கிட்டியே காக்க
மந்திரம் யந்திரம் மாதா அறியேன் 85
தந்திர நிலைகள் தாயே தெரியேன்
உன் அன்புடனே உனை நான் துதிக்கும்
தெள்ளிய நிலையால் தேவியே காக்க
வேலவன் நெஞ்சில் விளங்கி நிற்பவளே
பாலகன் என்னைப் பரிவுடன் காக்க 90

மலைமகள் மெச்சும் மருமகளே காக்க
நிலைதனை ஓர்ந்து நினைந்து எனைக் காக்க
விழுந் தொந்தியனாம் விநாயகன் தன்னில்
கொழுந்தியே என்னைக் குணமுடன் காக்க
வேலவன் வலத்துறு வியனார் நங்காய் 95
காலனை விரட்டிக் கனிவுடன் காக்க
கந்தன் உளத்துறை காரிகையே நீ
உன்றன் சிறுவனை உவந்தே காக்க
பரண் மிசை நின்று பறவை ஓட்டிய நீ
அரண் என நின்று இடர் அனைத்தும் ஓட்டுக 100

வஞ்சகப் பேயர் வயப்படாது என்னை
கூட இருந்தே குடியைக் கெடுக்கும்
கூடார்பால் எனைக் கொடாது காக்க
கொள்ளை அடித்து எனைக் குலைந்திட விழையும்
சள்ளையர் வெந்து சாம்பலாய்ப் போக 105
நல்லவர் போன்று நடித்து எனை வாட்டுவார்
நில்லாது ஒழிந்து நீறாய்ப் போக
வம்புகள் செய்தே வல் வழக்காடும்
கும்பலும் ஒழிந்து கோப்பு அழித்திடுக
இடையூறு என்றும் எனக்கு இவண் புரியும் 110

மடையரை வாட்டி மகன் எனைக் காக்க
சண்டியர் எனவே தருக்கித் திரியும்
வண்டரை வாட்டி வதைத்து ஒழித்திடுக
சூழ இருந்தே சூழ்ச்சி செய்வோரை
பாழ்படுத்திடுக பாலனைக் காக்க 115
சற்றே மாந்தல் சங்கினை அறுக்கும்
எத்தரை உடனே எரித்து அழித்திடுக
ஏறி விழுந்தே இருப்பதைச் சுருட்டும்
மீறிய தீயரை மிதித்து அழித்திடுக
சாடைகள் பேசிச் சளம்புரிவாரை 120

நீடு அயிலாலே நீ அழித்திடுக
சொல்லியுந் திருந்தாத் துர்க்குணர் தம்மை
எல்லையில் ஓய்ச்சி எரித்து அழித்திடுக
வாயிலிற் கூடி வம்புகள் பேசும்
பேயரைச் சின்னா பின்னம் ஆக்குக 125
கெடுப்பதே தொழிலாய்க் கிளர்ந்து எழுவாரை
கடுப்புடன் வாட்டிக் கனல் எரித்திடுக
எளியாரை வாட்டும் வலியாரை வாட்டுக
பழிபல கூட்டும் பாவியை நீற்றுக
வெட்டியாய்த் திரிவார் வேதனை ஊட்டுவார் 130

எத்தித் திரிவார் இருப்பதைச் சுருட்டுவார்
கத்தித் திரிவார் கண்டதைச் சுருட்டுவார்
அத்தனை பேரையும் அயிலால் குத்துக
நெஞ்சம் புண் பட நீட்டூரம் பேசும்
வஞ்சரை உடனே மாட்டுக வேலால் 135
மாட்டுக மாட்டுக மயங்கிட மாட்டுக
வாட்டுக வாட்டுக வாடிட வாட்டுக
கட்டி உருட்டுவர் கைகால் முறிபட
வெட்டி உருட்டும் வியன் மிகு வேலால்
பகைவர் யாவரையும் பதறிட வாட்டித் 140

தகை அணங்கே நீ தனயனைக் காக்க
காக்கக் காக்க கடும்பகல் தன்னில்
காக்கக் காக்க கங்குல் முழுவதும்
அந்தியில் சந்தியில் அன்புடன் காக்க
ஏமம் சாமம் இனிதே காக்க 145
வீட்டிலுள் காக்க வெளியிலுங் காக்க
வீதியில் வாகனம் மீதிலும் காக்க
வண்டியில் மோதா வகையினில் காக்க
குண்டெறி குழப்பங்கள் கொடுமையில் காக்க
வாரத்தின் ஏழு நாளினும் காக்க 150

ஆறிரு மாதம் அனைத்தினுங் காக்க
கோடையில் பனியில் குளிரிலுங் காக்க
கடும்புயல் கனமழை தம்மிலும் காக்க
வெள்ளம் இடியில் மின்னலில் காக்க
கள்ளச் சிறுநரி கரிஅரி புலிகள் 155
கரடி மற்றாய காட்டு விலங்குகள்
நாய் முதலாய் நாட்டு விலங்குகள்
நூல் வகைத் தோற்றம் ஏழ் வகைப் பிறவி
எண்பத்து நாலு இலட்சங்கள் யோனி
உயிர் வகையாலும் ஊறு நேராமல் 160

அயர்வற நின்று எனை அன்னையே காக்க
சரணம் சரணம் தாயே சரணம்
அரணம் நீயே அன்னையே காக்க
காத்தருள் என்றே கழலினை பணிந்தேன்
பார்த்தருள் கண்ணால் பார்த்தருள் அம்மா 165
வாழி! வாழி! வள்ளித் தாயே!
கோழியும் வாழி! கூர் அயில் வாழி!
வேலவன் வாழி! வியன் அருள் வாழி!
மாலவன் மகள் நீ வாழியோ வாழி! 169
(முற்றும்)
---------------

5. திருப்போரூர் டி. கோபால் நாயகர் பதிப்பித்த (கி.பி. 1914)
வள்ளியம்மன் ஆயாலோட்டும் குறவஞ்சி

(சந்தி பிரிக்கப்பட்டது)
காப்பு - வெண்பா
கார் உலவும் பூவுலகைக் கனிக்காய் வலம் வந்த
சீர் உலவும் போரூன் தேவி எனத் - தார் புனைந்த
மங்கை வள்ளி நாயகியின் மா துரத்தை பாடுதற்குத்
துங்க ஐங்கரன் தாள் துணை

குறம்
தினதெந்தினா தினதெந்தினா தினதெத்தினா தினனா
      தென்னாதி னாதினனா தினதெந்தினா தினனா

சித்தர்கள் வாழ்மலை அருகில் சிறந்த நல்லவனத்தில்
      தேவி வள்ளிமான் வயிற்றில் திருவுருவாய் அமைந்தாள் (தின)
மான் வயிற்றில் வந்துதித்த வஞ்சிகுற வள்ளி
      வான் அமிர்தம் வேண்டி அவள் வாய் விட்டழுகலுமே (தின)

நம்பிராஜன் சேனைகளும் நல்ல மைந்தர் தாமும்
      நாடி அந்த வனந்தனிலே ஓடிவந்தார் அவர்கள் (தின)
வன வேட்டையாடி அவர் வருகின்ற போது
      வள்ளி பசியால் மெலிந்து துள்ளி அமுதாளே (தின)

அழுகுரல் கேட்ட வேடர் ஆச்சரியங் கொண்டு
      அதி துரிதமாக வள்ளி அருகில் வந்து நின்று (தின)
மான் வயிற்றில் வந்துதித்த வஞ்சிதனைக் கண்டு
      மறவன் அவன் மனைவியவள் வாரியெடுத்து அணைத்தாள் (தின)

வாரியெடுத்தும் அவள் மடி மீதி அமர்த்தி
      வண்ண முகந்தான் துடைத்துக் கண்ணை முத்தமிட்டு (தின)
வார் காது மூக்குருவி வடிவுகளுஞ் செய்து
      வாழ்த்தி வள்ளி என்று சொல்லிப் பேருமிட்டார் அப்போ (தின)

ஒய்யார நெற்றியிலே சுட்டிகளுங் கட்டி
      ஓசையுள்ள தண்டை கொலுசு பாதத்தில் அணிந்து (தின)
தளராமல் பசி யாற்றித் தையல் வள்ளி தன்னை
      தாம் இருக்குங் குடிசைக்குள்ளே கொண்டு சென்றார் அங்கே (தின)

வர்ணப் பொன் தொட்டிலியே மாதரசை வளர்த்தி
      வகை வகையாய்த் தாலாட்டி மகிழ்ந்திடுந்தார் அப்போ (தின)
மணி குலுங்குந் தொட்டிலிலே மான் ஈன்ற மகளும்
      மாய நித்திரை செய்து பின்பு தூய கண் விழித்தாள் (தின)

வாரியெடுத்துக் குறத்தி மடி மீதில் வளர்த்தி
      வால் துடைத்து முத்தமிட்டு வள்ளியரைக் கொஞ்சி (தின)
நாள் ஒரு மேனியுமாய் நலமுடனே வள்ளி
      நாயகியும் வேலவர்க்கு மீறி வளர்ந்தாளே (தின)

ஓராண்டு ஈராண்டு மூவாண்டு சென்று
      உயர்ந்த நல்ல சந்திரன் போல் ஓங்கி வளர்ந்தாளே (தின)
ஐந்திராண்டு வயது தன்னில் கொஞ்சி விளையாடி
      ஆறிரண்டு வயதுதனில் குறக்கூடை ஏந்தி (தின)

கொஞ்சி கொஞ்சிக் குறி உரைத்துக் கோதை வளர்நாளில்
      கொம்பனையாள் வள்ளியரைத் தினைப் புனத்துக்கு அனுப்ப (தின)
ஏழு பேர் அண்ணமார்கள் இவள் அருகில் வந்து
      இளங்கொடியாள் வள்ளியரைத் தினைப் புனத்துக்கு அழைக்க (தின)

நல்லதென்று அண்ணருக்கு நாயகியாள் உரைத்து
      நடந்தாளே இடை குலுங்க நங்கையரும் அப்போ (தின)
காடு வெட்டி முள் பொறுக்கிக் கதித்து தினைப் புனத்தில்
      கன்னி வள்ளி ஆயாலோட்டக் கடுகி நடந்தாளே (தின)

மேடு வெட்டி முள் பொறுக்கி விரைத்த தினைப் புனத்தில்
      மெல்லி வள்ளி ஆயாலோட்ட மெல்ல நடந்தாளே (தின)
கொஞ்சித் தழைதான் ஒடித்துக் கொற்றவர்கள் வேடர்
      கொம்பனையாள் வள்ளியர்க்குப் பரணை கட்டி அமைத்தார் (தின)
அண்ணமார் அமைத்து வைத்த அழகுள்ள பரணியில்
      அம்மை வள்ளி நாயகியும் ஆயாலோட்டி இருந்தாள் (தின)

தேவாரம்
கள்ளராம் அசுரர் காலா கங்கை வேணியர்க்குப் பாலா
புள்ளி மாமயில் ஏறும் புனிதனே போரூரோனே
வள்ளி நாயகியாள் காத்த வளமை சேர்தினைப் புனத்தில்
தெள்ளு நற்குறத்தைப் பாடத் தேசிகா அருள் செய்வாயே

குறம்
பத்தினியாள் வள்ளியரும் பரணதிலே ஏறி
      பரமசிவன் தன் அருளாள் ஆயாலோட்டுகின்றாள் (தின)
சிவப்புக் கவண் அதனைச் செங்கையினால் எடுத்து
      தேவி வள்ளிநாயகியுஞ் சீக்கிரமாய் எறிந்தாள் (தின)
தங்கக் கவண் எடுத்துத் தையல் அந்த வள்ளி
      தந்தையைப் போல் வாய்திறந்து ஆயாலோட்டுகின்றாள் (தின)

ஆயக் கிளி நீலக்கிளி ஆலாலோ ஆலோ
      அச்சமுள்ள பச்சைக் கிளி ஆலாலோ ஆலோ (தின)
புது நீர்க் கிளிகளாம் ஆலாலோ ஆலோ
      தூது வர்ணப் பூச்சிகளாம் ஆலாலோ ஆலோ (தின)

வெள்ளை வர்ணக் கிளிகளா ஆலாலோ ஆலோ
      விருந்து மேயும் பூங்கிளிகாள் ஆலாலோ ஆலோ (தின)
பச்சை வர்ணப் பூங்கிளிகாள் ஆலாலோ ஆலோ
      பறந்து மேயும் பூங்கிளிகாள் ஆலாலோ ஆலோ (தின)

சிட்டு நல்ல குருவிகளா ஆலாலோ ஆலோ
      சிறு குருவி பெருங் குருவி ஆலாலோ ஆலோ (தின)
மயினாக் குருவிகளா, ஆலாலோ ஆலோ
      மஞ்சட் குருவிகளா ஆலாலோ ஆலோ (தின)

காக்காய் கழுகுகளா ஆலாலோ ஆலோ
காட்டில் வாழும் பட்சிகளா ஆலாலோ ஆலோ (தின)
கொக்குகளா கோழிகளா ஆலாலோ ஆலோ
கோகிலங்கள் அன்னங்களா ஆலாலோ ஆலோ(தின)

பட்சிகளா பறவைகளா ஆலாலோ ஆலோ
பறந்து மேயும் பூங்கிளிகாள் ஆலாலோ ஆலோ (தின)
அன்னங்களா மயிலினங்காள் ஆலாலோ ஆலோ
அழகுள்ள கோரங்களா ஆலாலோ ஆலோ (தின)
வள்ளினங்காள் குயிலினங்காள் ஆலாலோ ஆலோ
வனத்தில் மேயும் பட்சிகளா ஆலாலோ ஆலோ (தின)

சேர்ந்தும் அவள் ஆயாலோட்டிச் சிந்தை மிகக் களித்து
      தினைப் புனத்தில் தோழியுடன் தானிருக்கும் வேளை (தின)
ஆயாலோட்டும் வள்ளி குரல் அறிந்து வடிவேலர்
      அருமுனிவர் தமை அழைத்து ஆலோசனை கேட்டு (தின)

மயிலேறித் திருநீறிட்டு வடிவேலர் தாமும்
      மாது வள்ளி தினைப்புனத்தில் வந்து நின்றார் அங்கே (தின)
வள்ளியரைக் கண்டும் அப்போ வடிவேலர் மயங்கி
      மனம் இரங்கி வார்த்தை சொல்லி வடிவேலர் நின்றார் (தின)

புத்தகத்தை மாற்றடிக்கும் பொற்காலின் அழகும்
      பூஞ்சிலம்பு தண்டைகளும் பொற்பீலி அழகும் (தின)
குரும்பின் உழை காதழகும் கும்பதனத்தழகும்
      கோத்த முத்து சரம் அது போல் கொம்பனை பல்லழகும் (தின)

முடுக்கம்பூ இதழ் அழகும் முத்து நிகர் பல்லும்
      மொய் குழலின் திருமேனி அனிச்சம் பூ நிகர்க்கும் (தின)
அழகைக் கண்டு வேல் முருகர் ஆசை மிகக் கொண்டு
      அம்மை வள்ளி நாயகியை அழகு மணம் புரிந்தார் (தின)

மாலையிட்டு வடிவேலர் மன மகிழ்ந்து அப்போ
      மாது வள்ளியுடனாக வந்தார் திருத்தணிகை (தின)
வள்ளி குறம் பாடினவர் வடிவேலர் அருளால்
      மாறாமல் வையகத்தில் வாழி வாழி வாழி (தின)

வள்ளியம்மன் ஆயாலோட்டும் குறவஞ்சி முற்றும்
----------------

6. கலஹா, நெல்லம்பை எஸ். அழகிரிசாமி இயற்றிய
வள்ளியம்மன் கும்மி

(சந்தி பிரிக்கப்பட்டது)

1. வள்ளிக்கொடி தனிலே வள்ளியம்மன்
வந்து பிறந்தாளாம் அதைக் கண்டுமே
அந்த நம்பி மன்னனும் சிந்தை மகிழ்ந்தாராம் (கும்மி)
2. குறக்குலம் தனிலே வள்ளியம்மன் கூடி
வளர்ந்தாளாம் ஜாதி முறைப்படியே
தினை வனக் கொல்லைக் காவலும் செய்தாளாம் (கும்மி)

3. ஆலோலம் என்று சொல்லி வள்ளியம்மன்
அன்பாய் பாடுவாளாம் அங்கு அண்டி வருகின்ற
பச்சிகளை கவண் கல்லினால் ஜாவாளாம்
4. பரண் மீதினிலே வள்ளியம்மன் பச்சகிளிபோல
அங்கு பறந்து வருகின்ற பச்சிகளை
கவண் கல்லினால் ஜாவாளாம்

5. வேள்வி மலைச் சாரலிலே வள்ளி
தினைவனக் காவல் கொல்லையிலே
நாரதரும் அங்கு வந்தாராம் வள்ளி
நங்கை மின்னாளையும் கண்டாராம்
6. நாரதரைக் கண்டு வள்ளியம்மையும்
சரணம் என்று பணிந்தாளாம் மங்கலமே

சொல்லி நாரதரும் வாழ்த்தி விடைகளும் தந்தாராம்
7. இக்கானகம் தனிலே நீயும் தோழியும்மா
காவல் புரிந்திட காரணம் ஏனம்மா
எங்கள் ஜாதி முறைப்டி காவல் புரிகிறேன்
சந்தேகம் ஏதும் இல்லை ஐயா
8. கழுகாசலம் வாழும் கந்தனுக்கு
உன்னை கல்யாணம் செய்வோம் என்றார்
நீங்கள் சிந்தைக் கலங்காமல் வந்த வழி தேடி திரும்பியே
நீங்கள் போங்கள் என்றாளாம்

9. அந்த கந்தனுக்கும் எனக்கும்
நாரதரே கல்யாணம் செய்திடவே
காதம் வீசி ஒன்று கேதாரம்
பாடியே கட்டை அவிழ்த்தீரோ
10. அந்த கந்தனுக்கும் உனக்கும்
வள்ளியை கல்யாணம் செய்திடுவேன்
என்று சிந்தை கலங்காமல் வந்த வழி தேடி
திரும்பி விட்டாராம்

11. செந்தூர் வடிவேல் கந்தனே
என்றுமே சேவித்து அடி பணிந்தாரும்
மங்களம் என்றுமே சொல்லியே கந்தனும்
வாழ்த்தி விடைகளும் தந்தாராம்
12. மாவனம் தனிலே தினை வனக் காவல்
கொல்லையிலே கண்டு வந்தேன்
ஒரு பூங்கொடியாளை நீங்கள்
சென்று பறித்திட வேணுமையா

13. வேள்விமலை அந்த சாரலிலே
வள்ளி தினை வனக் காவல் கொல்லையிலே
கண்டு வந்தேன் ஒரு பூங்குயிலே
தாங்கள் சென்று பறித்திட வேணுமையா
14. நம்பி மன்னன் மகளை சண்முகம் நாடியே
வந்தாராம் ஒரு வேடனே போல ரூபம்
எடுத்து மானைத் தேடியே வாராராம்

15. அடி வள்ளிக் கொடி மானே என்னுடைய
மான் இங்கு வந்ததடி வந்தது மெய்யானால்
தந்திடடி என்று வார்த்தைகள் சொன்னாராம்
16. மானைத் தேடியே வந்தவரே மதி கெட்டு நீயும்
போனீரோ மான் எங்கு சென்றதோ
நீர் இங்கு தேடுறீர் மதி கெட்டு நீயும் போனீரோ

17. எந்தன் மானைத் தராவிடில் நானும்
போதில்லை வள்ளிக் கொடி மானே
அந்த மாரன் செய்யும் வாதனையால்
மயக்கம் ஏறுதடி தேனே
18. மானைத் தேடியே வந்தவரே மதி கெட்டு
நீயும் போனீரோ எங்கள் அண்ணன் வரும் வேளையாச்சு
அடா பாவி அனும்பு வார்த்தைகள் பேசாதடா

19. அடி வள்ளிக் கொடி மானே செந்தேனே
எந்தன் மான் மான் இங்கு வந்தது
என்று வார்த்தைகள் சொன்னாராம்
20. தினை வனக் காவல் கொள்ளையிலே
இங்கும் சேடியும் நானும் இருக்கையிலே
மானைத் தேடியே வந்த வேடா இப்போ
மதி கெட்டும் நீயும் போனிடடா

21. மானைத் தேடியே வந்தவரே
வள்ளியம்மையைக் கண்டு மயங்கினீரோ
உங்கள் சம்பவம் பலியாது போங்கள் என்று
வள்ளி சந்தோச மாகவே சொன்னாளாம்
22. அடி செட்டி மகன் நானே சிங்கார பொட்டி
மகன் நானே அடி கங்கண வளையல்
இங்கிதமாகவே மங்கையே
நான் உனக்கு தருவேனே

23. அடி வளையல் வாங்கலையோ அம்மா
வளையல் வாங்கலையோ சிகப்பு சந்தன
பொட்டு வளையல் சேராத பெண்கள்
சேர்ந்திடும் வளையல்
24. அவரு நெத்தியில் இட்ட பொட்டுகள்
மின்ன நிலத்தை குனிந்து பார்ப்பாராம்
நேரா நிமிர்ந்து வள்ளியே

வளையல் என்றுமே சொல்லுவாராம்
25. அடிகளுக்கும் தனில் அழகுடனே
அமர்ந்து செந்தேனே உனக்கு
குணமுடனே வளையல் இடவே வந்தேனே நானே
26. அய்யா செட்டியாரே வாரும் வளையல்
என்ன விலை கூறும் அந்த மோகன
முத்து மாலைகளுமே இருக்குதா கூறும்

27. அடி படர் கொடியே தினைவனத்தில்
அமர்ந்திடும் தேனே உனக்கு மணமாலை சூட
அழகுடனே வளையல் இடுவேனே
28. மல்லிகைபூ மலர்களும் மலர்ந்திருகையிலே
உன்னை மணக்க வந்த மாப்பிளையும்
அருகே நிற்கையிலே

29. அடி அரும்பு உதிர்ந்த மலரைப் போல்
நினைத்திடாதடி அந்த ஆண்டவனார்
மகனும் மாலை சூட்டி டுவாரடி
30. அடி மங்கள வளையல் வள்ளியே
இங்கிதமாய் தருவேன் உன் குணத்துக்கு
ஒரு வளையல் கூடவே தருவேன்

31. அடி வள்ளிக் கொடி மானே என்னுடனே
அமர்ந்திடும் தேனே உன் கரத்தை தந்தால்
அழகுடனே வளையல் அள்ளிடுவேன்
32. செட்டியாரே வாரும் உங்களுடை மட்டி தனம்
பாரும் சேகரமாக அமர்ந்திருந்தால்
உலகம் சிரிக்காதோ கூறும்

33. வளையல் வேண்டாம் எழுந்திருடா
வளையல் விக்கிற செட்டி உன் சிந்தை மிக
கெட்டி அண்ணன்மார் அறிந்தால்
பலிகள் வரும் எழுந்திருடா மட்டி

34. கிழவனைப் போல் வாரா கந்தன்
தள்ளாடி கீழே விழுவாராம்
கைக் கோலை ஊன்றி பரண் எதிரே
தள்ளாடியே போராராம்

35. தாத்தா இப்படி வாருங்களே
வந்த சங்கதி என்னவோ கூறுங்களே
மெல்ல மெல்ல தடுமாறாமல்
பரண் மீதிலே குந்துங்களே
36. காசிக்கு போய் தீர்த்தமாடி வந்தேன் அடி
நான் இப்போ குமரி தீர்த்தம்
ஆடி எண்ணி வந்தேனடி வள்ளி

37. தாத்தா இப்படி வாருங்களே ஒரு சங்கதி
சொல்லுவேன் கேளுங்களே தாடி நரைத்தும்
கிழவனாகியும் தீர்த்தம் ஆட போனிங்களோ
38. காதை அடைக்கிது நாவும் வறளுது பசி
தாங்களும் ஆகுதடி பாலும் பழமும் தந்தாலே
கொஞ்சம் பசி தாங்களும் தீருமடி

39. தேனும் தினை மாவும் நான் தருவேன்
அதை தின்றால் பசி ஆறுமையா திரட்டி
வள்ளியும் உருட்டி மாவையும்
கைதனில் தந்தாளாம்
40. விக்கிக் கொண்டது என்று சொல்லியே
கந்தன் மிரட்டி முனியே முளித்தாராம்
குளக்கரைக்கே ஜலம் பருகிட தாத்தாவை
மெல்ல இழுத்தாளாம்

41. ஜலம் அருந்திடும் பாவனை போல
தாவி இழுத்து விட்டாராம் பழிகாரி நீயும்
கரத்தை அன்பாய் நீட்டடி என்றுமே
சொன்னாராம்
42. தாத்தா என்றே வள்ளியம்மை
கரத்தை அன்பாய் நீட்டிடவே
அதை தாவி பிடித்து ஜலத்திலே
அழுத்தி விட்டாராம்

43. அண்ணன் வருவதையும் வள்ளியம்மை
கண்ணாலே கண்டாளாம் அவள்
ஜலக்கிரீடை செய்வது போல்
சாடையாய் வந்தானாம்
44. தங்கையே தலத்தில் இல்லா வேங்கை மரம்
முளைத்து அம்மா அதை சந்தேகம் கொள்ளாமல்
இப்போ வெட்டுங்கள் என்றாளாம்

45. தங்கையே உனக்கு விளையாட தகுந்த நிழல் இதுவே
நம் கந்தசாமி பூசை போட நல்ல இடம் இதுவே
46. அந்த முருகனுமே கணபதியே
கணபதியை நினைந்து விட்டாராம்
அது மும்மதமும் பொழித்து யானை வருகுது நேரே

47. ஆனை வருகுது தாத்தா ஆனை வருகுது தாத்தா
என்னை ஆதரிப்பீர் என்று
உம்மை அடி பணிந்தேன் தாத்தா
48. அடி கொன்றும் அடி யானை வள்ளியே தள்ளி
நீ போடி என்னை கல்யாணம் செய்து கொண்டால்
காப்பாற்று வேண்டி அடி

49. அந்த முருகன் மீது சத்தியமாய்
திருமணம் முடிப்போம் அந்த முரட்டு யானை
திரும்பிடாமல் விரட்டி விடுங்களே
50. ஒய்யாரமாய் மயிலின் மீது அமர்ந்து
விட்டாரா கந்தன் கண்டுமே தான்
வள்ளியம்மை சரணம் என்றாளாம்
51. அந்த தேவர் எல்லாம் மலர் மாரி பொழிந்து
விட்டாராம் இப்போ சிறுவன் நந்த
அழகிரி சாமி பாடி விட்டாராம்
(முற்றும்)
--------------

7. தணிகை மணி முனைவர் வ.சு. செங்கல்வராய பிள்ளை இயற்றிய
வள்ளி கல்யாணக் கும்மி

(சந்தி பிரிக்கப்பட்டது)

வள்ளி அழகினைக் கேட்டாண்டி - அவள்
மையல் வலையிலே வீழ்ந்தாண்டி
கள்ள வேடத்தைப் புனைந்தாண்டி - வேடக்
கன்னியை உன்னியே நொந்தாண்டி 1
நாடுந் தணிகையை விட்டாண்டி - நல்ல
நாளாம் இதென்றே நடந்தாண்டி
காடும் புனமுங் கடந்தாண்டி - வள்ளிக்
காதல் இழுக்க விரைந்தாண்டி 2

வள்ளி மலைக்குஅவன் வந்தாண்டி - எங்கள்
வள்ளியை நாடியே வந்தாண்டி
மெள்ளவே வேடனாய் நின்றாண்டி - நல்ல
வேடிக்கைப் பேச்சுக்கள் சொன்னாண்டி 3
வளை விற்குஞ் செட்டியாய் வந்தாண்டி - வள்ளி
வரி வளைக் கையையும் தொட்டாண்டி
இளைத்தவன் போலவே நின்றாண்டி - வள்ளி
ஏன் எனக் கேட்பாள் என்றிருந்தாண்டி 4

பேசொரு பேச்சென இரந்தாண்டி - அவள்
பேச்சுக்கு வாயூறி நின்றாண்டி
கூசுதல் இல்லாது பார்த்தாண்டி - கண்ணாற்
கோலத்தை மொண்டு குடித்தாண்டி 5
வேடர் தலைவனைக் கண்டாண்டி - உயர்
வேங்கை மரமதாய் நின்றண்டி.
ஆடல் பலபல செய்தாண்டி - வள்ளி
அன்பினைச் சோதிக்க வந்தாண்டி 6

தோன்றிய நம்பி முன் சென்றாண்டி - நல்ல
தொண்டு கிழவனாய் நின்றாண்டி
ஊன்றிய கோலொடு சென்றாண்டி - சுபம்
ஓதியே நீறும் அளித்தாண்டி 7
குமரியில் ஆடவே வந்தேன் நான்
கோலக் குறவர் தலைவனே என்றாண்டி
அமருவன் வேடிச்சி காவலனாய் - ஐய
அவளொடும் என்றுமே என்றாண்டி 8

தேனும் தினைமாவும் தின்றாண்டி - வள்ளி
திருக்கையில் வாங்கியே தின்றாண்டி
மீனும் மருள்கின்ற கண்ணாளே - ஐயோ
விக்கல் எடுக்குதே என்றாண்டி 9
தாகத்தைத் தாங்கேனே என்றாண்டி - கண்ணே!
தாராய் சுனைத் தண்ணீர் - என்றாண்டி
மோகத்தை உள்ளுக்குள் வைத்தாண்டி - மெல்ல
மோசத்தைச் செய்ய நினைத்தாண்டி 10

சுனை நீரை உண்டு சுகித்தாண்டி - ஆஹா
சுதினம் ஈதென்றே சொன்னாண்டி
உனை நீயே ஒப்பாய் என்றுரைத்தாண்டி
உள்ளதைக் கேள் என்றுரைத்தாண்டி 11
தாகத்தைத் தீர்த்த தயாநிதி நீ - என்றன்
தாபமோ சொல்லுக் கடங்காதென்
மோகத்தைத் தீர்த்தருள் என்றாண்டி - முழு
மோசக் கிழவனாய் வந்தாண்டி 12

சூதினைக் கண்டதும் ஓடினனே - வள்ளி
சுப்ரமண்யா துணை என்றனளே
மாதினை வந்து மடக்கும் ஐயா! - எங்கள்
வாரண ராஜரே என்றழைத்தார் 13
ஆனையைக் கண்டு நடுநடுங்கி - அவள்
ஐயன் கிழவனை வந்தணைத்தாள்
மானை யடைந்து மகிழ்ந்தாண்டி - எங்கள்
மால் மருகன் தணிகேசனுமே 14

தணிகை மலையை அடைந்தாண்டி - வள்ளித்
தாயுடன் அங்கே தரித்தாண்டி
பணிய வினையொழித் தருள்வாண்டி - பாடிப்
பரவுவார்க்கு இன்பம் அளிப்பாண்டி 15
மந்திரம் ஆவதும் அவன்தாண்டி - நல்ல
மா மருந்தாவதும் அவன்தாண்டி
தந்திரம் ஆவதும் அவன்தாண்டி - சுத்த
சத்தியம் ஆவதும் அவன்தாண்டி 16

நானெனும் ஆணவம் விட்டார்க்கே - அவன்
நாளும் பணியிடை செய்வாண்டி
கானெனுஞ் கூந்தல் படைத்த வள்ளி காலிற்
காதலாய் வீழ்ந்து பணிந்தாண்டி 17
தன்னை மறந்து நீ பத்தி செயின் - உன்னைத்
தாவி யணைக்க வருவாண்டி
அன்னையும் அத்தனும் ஆவாண்டி - உன்றன்
ஆசை எலாம் பூர்த்தி செய்வாண்டி 18

ஓங்கிய வானத்துத் தேவரெலாம் - நாளும்
ஓலமிட்டாலுமே வாராண்டி
காங்கேயா சுத்தா என உருகில் - உன்றன்
காட்சிக்கு எளியனாய் நிற்பாண்டி 19
திருப்புகழ்ச் சாமியை ஆண்டாடி - அவர்
செய் தவங் கண்டு மகிழ்ந்தாண்டி
விருப்புடன் பாடும் அடியவர்க்கே - அவர்
வேண்டும் வரங்களைத் தருவாண்டி 20
முற்றும்
-----------------------

8. தணிகைமணி முனைவர் வ.சு. செங்கல்வராய பிள்ளை இயற்றிய
வள்ளி - கிழவர் வாக்கு வாதம்

(சந்தி பிரிக்கப்பட்டது)
கிழவர்: செந்திருவு நாணுமெழிற் சித்திர நிறக் கிளியே!
எந்தனுரை சிந்தை கொளச் சற்றிசைதி நீ
வள்ளி : அறிவு நிறை பெரியர் உரை ஆக்க மொழி ஆதலினால்
சிறிதளவு மில்லை தடை செப்பி யருள்வீர் 1

கிழவர் : தேய் மதியன் சேயவனைத் தோயு மனப் பித்தம் இது
செம்மையல மெய்ம்மை இது தேன் மொழியளே!
வள்ளி : தேய் மதியம் நாதர் முடி சேர்ந்த கதை நீர் உணரில்
செம்மை நெறி என் நெறி என்றே உணர்விரே 2

கிழவர்: குலமிலியாய்த் திக்கற்று நின்ற சிவன் ஈன்றவனைக்
கொழுநன் என நாடுவது பழுது பமுதே
வள்ளி : குலங் கடந்த குமர வடிவேலவனைக் கூடுதலால்
மலங் கடந்து மாட்சியுறும் ஆட்சி பெறுவேன் 3

கிழவர்: வீடு சுடுகாடு குணம் ஒன்றுமிலி தன் மகனை
நாடுதலின் என்ன சுகம்? நங்கை உனக்கே
வள்ளி : வெய்ய வினை சுட்ட இடம் மோட்ச இடம் முக்குணமும்
நையு நிலை ஞான நிலை நன்குணர்விரே 4

கிழவர்: மாமனவன் தலை துணித்தான் மைந்தன்இவன் என்றுணர்ந்துஉன்
மாலகற்றிச் சாந்தி பெறு மங்கை யரசீ!
வள்ளி: மாமனுக்குத் தண்ட முறை ஞானம் வரச் செய்ம் முதலின்
மைந்தனுக்கு என் சிந்தை செலல் என்ன தவமோ 5

கிழவர்: தேவர் பலர் தாமிருக்க மானிடனின் மைந்தனையே
நீ விரும்பி நிற்றல் ஒரு நியாயம் இலையே
வள்ளி: மானிடத்தில் வைத்து மலை மானிடத்தில் வைத்தவர் சேய்
மானிடத்தில் வந்த எனை விட்டு அகல்வரோ? 6

கிழவர்: பாதியுடல் போன ஒரு மாது தரு சேயினுக்கோ
நீ திகைத்துக் காதலுறல் நீதி மயிலே!
வள்ளி: சத்தி சிவம் ஒத்து வரு சத்தி வடிவேலரிடம்
புத்தி செலல் என்னுடைய பூர்வ புண்ணியம் 7

கிழவர்: பெருவயிற்றுப் பிள்ளை தனக்கு அண்ணன் எனக் கொண்டவன் தன்
உருவதனை எண்ணி மனம் ஓய்வது என்னையோ?
வள்ளி: பெருவயிறன் பெருவரத்தன் எண்ணியதைக் கூட்டு வித்துத்
தருவன் அவன் தன்னுடைய தயவு முக்கியம் 8

கிழவர்: மாமாய மாலவனை மாமன் எனக் கொண்டவனை
நீ மாது நேடி நிற்றல் நீதி யல்லவே
வள்ளி: மால் தருவன் மாயன் என்றால் வரை எறிந்தான் குரை கழற்கே
மால் தருதி ஐய என அவரை வேண்டுவேன் 9

கிழவர்: காற்றில் அகப்பட்டு மடு வாயிலுறு கான்முளையைக்
காதலுறல் நீதியல கான மயிலே!
வள்ளி: காற்று முதலாக வரு பூத உயிரானவர் தங்
காதல் பெறல் மாதவம் என்றே அறிதிரே 10

கிழவர்: தீயில் அகப்பட்டு நதி தன்னில் அலையுண்ட ஒரு
சேயிடை விருப்பமுறல் தீயது ஐயகோ!
வள்ளி: தீயும் உடல் தீய வரு செந்நிறத்துச் சேயில் மனம்
பாய வரு பாக்கியமே பாக்கியமதாம் 11

கிழவர்: கௌரி எனுந் தாயிருக்க வேற்றுமுலை உண்டவன் தன்
சௌரியத்தை நீ புகழ்தல் தக்கது அல்லவே!
வள்ளி: பத்தியொடு போற்றுபவர் யாவருக்குந்தான் குழந்தை
ஒத்து வருவார் அவருக்கு ஒப்பும் உளரோ 12

கிழவர்: குருவினுக்கு மிஞ்சி வரு சீடன் எனப் பேர் படைத்த
குமரனை நீ நாடுவது கொடிது கொடிதே
வள்ளி: குருவிலாத தேசிகருங் குருவெனவே போற்ற நின்ற
குருமணியைக் கூடிடுதல் என்ன புண்ணியம் 13

கிழவர்: குன்றம் அலைந்தே திரிந்துங் கோழி பிடித்தே திரியுங்
குளவனை நீ உளம் வரித்தல் பிழை பிழையதே
வள்ளி: குன்றம் வினை குன்றம் என்றுங் கோழி சிவஞான நிலை
என்றும் உண்மை நாம் உணரில் ஏது பிழையே? 14

கிழவர்: முன்னம் ஒரு மாங்கனிக்கா வெம்பி உளம் நொந்தவனை
உன்னி மனம் நீ வருந்தல் உசிதம்அல்லவே
வள்ளி: காயறியாக் கனியாம் அக்கனி பெற நான் கண்ணி நிற்றல்
தாயறியாக் கருவாவார் தாம் அறிவரே 15

கிழவர்: ஏதேது யான் சொலினும் கொக்கறுத்த வேடனுரு
ஏந்திழையே நீ விழைதல் என்ன விந்தையோ!
வள்ளி: சூது ஏதும் இல்லை ஐய! வேடர் மகள் வேடனையே
சூழும் இதன் உண்மைதனை நீர் உணர்விரே 16

வள்ளி கிழவர் வாக்கு வாதம் முற்றும்
--------------

9. சிறுமணவூர் முனிசாமி முதலியார் இயற்றிய (கி.பி. 1905)
9. வள்ளியம்மை அலங்காரச் சிந்து

(சந்தி பிரிக்கப்பட்டது)
காப்பு - நேரிசை வெண்பா
கொடியிடையாள் வள்ளி கொடிய தவம் இருந்து
வடிவேலன் தனை மணந்த அற்புதத்தைப் - படிமிசையான்
அலங்காரமாய்ப் பாட என் நாவில்
விலகாமல் குடியிருக்க எண்.

நூல்
தெம்மாங்கு
ஒன்பது ரத்தினமும் உருக்கி விட்ட பதுமையைப் போல்
அன்ன நடை வள்ளியம்மை அருந்தபசு புரிந்திட்டாளே (நன்னா)

அலங்காரம் – ஐயா
ஆடை நீக்கி அழகு நீக்கி அணிந்த பணிகள் முழுதும் நீக்கி
வாடை நீக்கி வரிசை நீக்கி வனத்தை நோக்கி மனது தாக்கி
ஐயா - ஊசி முனையில் காலை நீட்டி வாசி முனையில் மனதை பூட்டி
சுழியின் முனையில் விழியை ஓட்டி சுருதி மொழியை மழையாய் வாட்டி
ஐயா - வருக வருக வடிவேல் வருக
வருக முருகன் அருகில் வருக (நன்னா)

தெம்மாங்கு
இப்படியாய் வள்ளியம்மை இருக்குந் தவக் கொடுமை
முப்புரமும் மூவர்களும் முழித்தல்லவா மிரண்டு விட்டார் (நன்னா)

அலங்காரம் - ஐயா
இந்திரன் உலகம் செந்தணல் பரக்க இமையோர் ஆதிகள் சமயந் துரக்க
சந்திர சடையன் சிந்தையும் துடிக்க சதுரமுகனும் மனது கலங்க ஐயா
வாட்டம் உற்றதைக் கேட்டு முருகர் ஓட்டமாக காட்டின் வழியே
தாட்டி மயிலை நாட்டமாகவே கூட்டுந் தவத்தின் பேட்டி அடுத்து
அடியே - கொஞ்சம் வயது கொடிய தவத்தில்
கெஞ்சி வருந்த விபரம் ஏது (நன்னா)

தெம்மாங்கு
இன்ன மணம் புரியலியோ இளவயதாய்க் காணுதடி
என்ன குறை நேர்ந்தது என்று இப்பேர்ப்பட்ட தவம் இருக்கிறாய் (நன்னா)
அலங்காரம் அடியே
சின்ன வயது சித்தர வடிவு கொஞ்சம் வயது குழந்தை பார்வை
இந்த வயதில் என்ன வருத்தம் இப்பேர்ப்பட்ட தவத்தில் பொருத்தம்
அடியே
வாயைத் திறந்து வருத்தம் கூறு வரத்தை வாங்கியிடத்திற் சேரு
சேயை ஈன்று சுகமாய் வாழு சாரத் தொல்லையை கடந்து ஏறு
அடியே - எடு உன் கரத்தே பிடி நீ வரத்தே
விடு உன் தவத்தே நட உன்னிடத்தே (நன்னா)

தெம்மாங்கு
ஒன்றுக் குறைவும் இல்லை ஒரு வரமும் வேண்டவில்லை
என்னை மணம் புரிவீர் என்றே இத்தனை நாள் தவம் இருந்தேன் (நன்னா)
அலங்காரம் ஐயா
ஊரும் வேண்டாம் பதியும் வேண்டாம் ஒருவர் உறவும் பகையும் வேண்டாம்
பொன்னும் வேண்டாம் பொருளும் வேண்டாம் புகழும் வேண்டாம்
(இகழும் வேண்டாம் ஐயா

எனக்கு மாலை சூட்ட வேண்டும் இன்ப சுகத்தைக் காட்ட வேண்டும்
உனக்கு மனைவியாக வேண்டும் உலகம் புகழ வாழ வேண்டும்
ஐயா - கருத்தை உரைத்தேன் வருத்தம் விடுத்தேன்
பொருத்தம் பிடித்தேன் மாலை முடித்தேன் (நன்னா)
தவம் இருந்து எனை அழைத்து தாலி கட்டச் சொல்லுகிறாய்
மகள் உறவாய் நேர்ந்து போச்சே மாலையிடவுங் கூடுமோடி (நன்னா)
அலங்காரம் அடியே
இந்திரன் மகள் என் மனைவியாச்சே உந்தன் குலமோ குறவராச்சே
எந்த விதத்தில் புரியும் பேச்சு உலகஞ் சிரிக்கும் இந்த பேச்சு அடியே
ஏனோ மனதில் வருத்தமுற்றாய் இன்றோர் பிறவி எடுக்கப் போறாய்
மானின் வயிற்றில் பிறக்கப் போறாய் மனதின் கவலை முடிக்க போறாய்
அடியே - கொஞ்ச நாளே குறையைத்தாளே
வஞ்சிக் கொடியே வருத்தம் சகியேன் (நன்னா)

தெம்மாங்கு
இப்பிறப்பில் மணம் புரிய ஏலாது என்று சொல்லி விட்டு
அற்புத மயில் மேலேறி ஆண்டவனுந் தணிகை சேர்ந்தார் (நன்னா)
அப்போ
கந்தன் உரைத்த மொழியை அறிந்து கன்னி விசனக் கடலில் விழுந்து
இந்த ஜெனனம் எடுத்தும் பழுது இருந்த தவமும் ஒழிந்தது என்று
அப்போ
புரண்டு அழுதாள் புத்தியை மறத்தாள் உருண்டு அழுதாள் ஓங்கி விழுந்தாள்
இருந்து அழுதாள் ஏங்கி விழுந்தாள் என்னுடை உயிரும் வேண்டாம்என்றாள்
அப்போ – மோதி அடித்தாள் முகத்தை இடித்தாள்
ஆவி விடுத்தாள் அண்டம் அடுத்தாள் (நன்னா)

தெம்மாங்கு
இங்கே நடந்தது எல்லாம் எம்பெருமாள் தான் அறிந்து
மங்கையுடன் இருவருமாய் மான் உருவம் எடுத்திட்டாரே (நன்னா)
அலங்காரம் ஐயா
கன்னி வருத்த முடிக்க வேண்டி கந்தன் மனதைத் திருத்த வேண்டு
தன்னுட வைகுந்தம் அதனைத் தாண்டி தைரிய லட்சுமி மனத தூண்டி
ஐயா மானைப் போல வடிவம் எடுத்து மாறா வனத்தை ஊறாய் அடுத்து
மதனும் ரதியும் போல தொடுத்துனிதழு மதன கலவி எடுத்து
ஐயா - உள்ள மகிழ்ந்தார் உறவாயிருந்தார்
வள்ளிக் கொடியில் மகளை ஈன்றார்

தெம்மாங்கு
வேட்டைத் தொழிடைய வேடுவர்கள் அப்பொழுது
காட்டு வழி வருகையிலே கண்டாரே குழந்தை தன்னை (நன்னா)
அலங்காரம் ஐயா
வாரி எடுத்து வாயோடு அணைத்தார் உச்சியை முகந்து
உடம்போடு அணைத்தார்
கனியைப் போல கடித்து பார்த்தார் கன்னியைப் பொன்னிட ஒளியோம்.
(என்றார் ஐயோ
வேட்டையாட மறந்து போயிட்டார் வீட்டைத் தேடி திரும்பி போயிட்டார்
கோடை புகுந்து மனைவி அழைத்தார் குழந்தை எடுத்துக் கையிலே கொடுத்தார்
பார்த்து
தங்கம் என்றார் தரளம் என்றார்
சிங்கம் என்றார் சித்திரம் என்றார் (நன்னா)

தெம்மாங்கு
பிறவி எடுத்த முதல் பெரு மலடி வேடுவச்சி
திருவுருவை வாங்கினதே திரண்டுதையா மார்பு இரண்டும் (நன்னா)
அலங்காரம் ஐயா
அன்னம் என்றார் அமிர்தம் என்றார் அமரர் உலகம் ரதியே என்றார்
பொன்னே என்றார் பொருளே என்றார் போதாது இந்த பேர்கள் என்றார்
ஐயா
தெள்ளு வனத்தில் திருவைப் போல தேசு மயங்கும் கிளியைப் போல
வள்ளிக் கொடியில் இருந்ததாலே வள்ளி என்று அழைக்க மேலே
ஐயா - அணிகள் அளித்தார் பாதுகாத்தார்
அயினியது அளித்தார் ஏந்தி வளர்த்தாள் (நன்னா)

தெம்மாங்கு - வள்ளி
நித்தம் ஒரு நிறமாய் நேரிழையாள் தான் வளர்ந்து
புத்தி அறிந்தவுடன் புனங் காக்க வந்திட்டாளே ஐயா
உத்தம தாதியர் அருகில் இருக்க உயர்ந்த பரணை மீதின் சிறக்க
சித்திர கவுண் கையிலே இருக்க சிங்கார வள்ளியும் வாயைத் திறக்க ஐயா
ஆலோ ஆலோ அன்னக் கிளியே அருக வாங்க வர்ணக் கிளியே
காலப் பயிரை கெடுக்காதீங்கோ கானகம் இருக்கு போய் பிளைங்க
ஐயா - காட்டுப் பறவை ஓட்ட நினைப்பாள்
தீட்டி கவுண்டை மாட்டி அடிப்பாள் (நன்னா)

விருத்தம்
தன்னிட உயிர் போங்காக்குந் தாதிமாருடனே வள்ளி
உன்னிதப் பரணை மீது உயர்வாய் இருக்கும் போது
தென்பொதி மலையைத் தாண்டி திருட்டு நாரதனும் அங்கே
கன்னியின் உருவைப் போல கைப்பட எழுதலுற்றான்

தெம்மாங்கு
பொதிகை மலை கடந்த பின் புறணி நாரதனும்
விதி துலைதது போகாமலே வந்து நின்றான் புனத்தருகே. (நன்னா)
அலங்காரம் ஐயா
அற்புதக் கிளியோ அனங்கள் ரதியோ அமரர்பதியோ குமரர் பதியோ
அழகில் இவளைப் போல உலகில் அறியேன் அறியேனை ஐயோ சிவனே
ஐயா
சமரபுரியில் வேலன் வடிவும் சரியே சரியே இவளின் வடிவும்
பிரமன் எப்படி அமைத்திட்டானோ படத்தில் எப்படி எழுதுவேனோ
வள்ளியை உத்துப் பார்த்தான் உறுதி பிடித்தான்
படத்தை எடுத்தான் பதியத் தொடுத்தான் (நன்னா)

தெம்மாங்கு
மேகம் போல் கூந்தலிட்டு, மின்னலைப் போல் சுட்டியிட்டு
சோக வர்ணக் கிளிகளைப் போல் சுந்திரமாய் பின்னல் போட்டான்
அலங்காரம் ஐயா
சந்திரன் போல வதனம் எழுதி சகல வசிய திலர்தம் எழுதி
மந்திரம் போல செவிகள் எழுதி மயிலைப் போலே விழிகள் எழுதி
ஐயா
குமிழி போல நாசிகள் எழுதி கூவிளம் போலத் திலதம் எழுதி
குமிழி போல தனத்தை எழுதி சித்தசன் காமரசத்தை எழுதி
ஐயா - ரவிக்கை இறுக்க தனங்கள் நெருங்க
கரும்புக் கணையில் அரும்பு சொரிய (நன்னா)

தெம்மாங்கு
ஆலை போல வயிறு எழுதி அரவம் எனப் படம் எழுதி
சேலை அதில் சேர்த்து எழுதி சித்திரம் போல் சரிகை கோர்த்தான் (நன்னா)
அலங்காரம் ஐயா
கரும்பைப் போலக் கரங்கள் எழுதி கரத்தில் வளையல் பொருந்த எழுதி
விரல்கள் தோறு மோதிரம் எழுதி வெண்டயம் போலக் கண்கள் எழுதி
ஐயா
வாழைப் போல துடைகள் எழுதி வச்சிரம் போல கணைக்கால் எழுதி
புத்தகம் போல பாதம் எழுதி பூவைப் போலே விரல்கள் எழுதி
ஐயா - தண்டை எழுதி கொலுசை எழுதி
கொண்டை நிறைய மலரை எழுதி (நன்னா)

தெம்மாங்கு
பொன் ஆபரணம் எல்லாம் பூட்டி எழுதி விட்டு
மன்மதனும் பின்னிடவே மதனத் தேமல் கலந்து பாட்டான் (நன்னா)
அலங்காரம் ஐயா
வள்ளி படத்தை எழுதிப் பிடித்தான் வானவர் பெண்களை நினைந்து சிரித்தான்
பார்த்து பார்த்து மனது துடிப்பான் படத்தை எடுத்து ஓடி வருவான்
ஐயா
காடு கடந்து செடிகள் கடந்து கானக விலங்கு மலைகள் கடந்து
வேர்த்து வேர்த்து ஓடி வந்தான் விடியு முன்னமே தணிகை சேர்ந்தான்
ஐயா- படத்தை கொடுத்தான் பாதத்தில் விழுந்தான்
காட்டி காட்டி காலைப் பிடித்தான் (நன்னா)

தெம்மாங்கு
பன்னிரண்டு கையாலும் படம் ஏந்தி வேல் முருகர்
தன்னை மறந்தல்லவா தரையுடனே மூர்ச்சையானார் (நன்னா)
ஐயா
மோகம் பெருகி மூர்ச்சையானார் முழித்து விழித்து படத்தைப் பார்ப்பார்
அழைத்து அழைத்து சலித்து நிற்பார் ஐயோ என்னடி கோபம் என்பார்
அடியே
வாயை திறந்து வார்த்தை கூறடி வருத்தம் இருந்தால் அதுவும் கால்லடி
கோபம் பொருந்து முகத்தைப் பாரடி கோடி சரணம் தயவு செய்யடி
அடியே - இடையூறு என்னடி எடுத்துப் போடடி
தடை இது என்னடி தகுதியல்லடி (நன்னா)

தெய்வானை சொல் தெம்மாங்கு
திருட்டு முனி நாரதனே தேசத்துக் குண்டிணியே
ஒரு கம்பத்திலில் இரண்டானையை ஒட்ட வைக்க வந்தாயோடா
அலங்காரம் அடடா
இல்லாத வார்த்தைகள் முடியாப் போடுகிறாய்
எங்கையோ இருந்து படத்தைக் கொணர்ந்தாய்

தெம்மாங்கு
கோபம் பெருகி வள்ளி கூப்பிட்டாள் அண்ணர்களை
ஆபத்து ஏதோ என்று ஆவலுடனே ஓடி வாரார் (நன்னா)

அலங்காரம் ஐயா
வேடர் வருகும் வேகம் பார்த்தார் வருகு முன்னமே விசி போட்டார்
ஓடி எழுந்து வேங்கை மரமாய் ஓங்கி வளர்ந்து, தழைத்து நின்றார்
ஐயா
ஏழு பேரும் துடர்ந்து வந்தார் எங்களை ஏதுக்கு அழைத்தாய் என்றார்
வேங்கை மரத்தின் சொகுசைக் கண்டார் வாளை உருவி ஏந்திக் கொண்டார்
அப்போ
அண்ணா அண்ணா மொழியை கேளுமே அருகில் இருந்தால் நிழலைத் தரும்
வெட்ட வேண்டாம் பொறுங்கள் அண்ணா வேறே ஒருவர் காண அண்ணா
எவனே ஒருவன் வளையல் வித்தான் ஏடாகோடமாய் பேசி போட்டான்
உங்களை அவனும் பார்த்து போட்டான் ஓடி எங்கையே மறைந்து போட்டான் அண்ணா
காட நடுங்க காரியம் பாருங்க
அருகில் இருங்க அழைத்தார் வாங்க (நன்னா)

தெம்மாங்கு
தங்கைக்கு உறுதி சொல்லி தனி வழியே வேடர் எல்லாம்
சிங்கம் போலே ஏழு பேரும் சென்று விட்டார் கானகத்தில் (நன்னா)

அலங்காரம் ஐயா
வேங்கை மரமாய் இருந்த வேலர் வேறே உருவம் எடுக்க நினைத்து
தாடி சடையும் தளர்ந்த வடிவும் தாங்கி நடக்க கையிலே கோலும்
ஐயா
விழுந்து விழுந்து எழுந்து நடப்பார் வேடரை அழைத்து வழியைக் கேட்பார்
பழுத்த பழமாய் உருவு காட்டவார் பாதை தெரியவில்லை என்று அழுவார்
ஐயா - வேடர் பார்த்தார் விசனப்பட்டார்
கூட அழைத்து கூட்டி வந்தார் (நன்னா)

தெம்மாங்கு
தளர்ந்த வயதுடைய தம்பிரானைக் கண்டவுடன்
இளம் வயது வள்ளியர்க்கு ஏற்ற துணையாகும் என்றார் (நன்னா)
அலங்காரம் ஐயா
ஐயா ஐயா பெரியவரே ஆறு சுனைகள் அதிகம் உண்டே
இப்பேர்ப்பட்ட கானகத்தில் எங்கே போரீர் தனியா நீரே
ஐயா
வார்த்தை இவர்க்கு கொடுத்துக் கொண்டே
வழியில் மெல்ல நடத்திக் கொண்டே
வள்ளி இருக்கும் புனத்தை கண்டே
வைத்தார் காவல் பரணை அண்டே
ஐயா
ஏழு பேர்க்குத் தங்கை ஐயா ஏற்ற துணைகள் இல்லை ஐயா
உன்னிட உயிர் போல் காறும் ஐயா ஒரு குறைவுமே செய்யாள் ஐயா
ஐயா -போய்வாரம் பொழுது நேரம்
ஏது வேளை வருவம் நாளை (நன்னா)

தெம்மாங்கு
தாடிசடை நிறைந்த தள்ளாக் கிழவனுக்கு
வேடிக்கையை காட்டி காட்டி வேளை தோறும் பசியைத் தீர்ப்பாள்
அலங்காரம் ஐயா
வலையை வீசி கிளிகள் பிடிப்பாள் வந்து கிழவன் முன்னே விடுவாள்
தடியை இழுப்பாள் தாடி பிடிப்பாள் தழுவி அணைத்து முத்தமிடுவாள்
ஐயா
புலிகள் வருது பாரும் என்பாள் போய் பிடிப்போ வாரும் என்பாள்
தடியைப் பிடுங்கி ஓடிப் போவாள் தரையில் விழுந்தால் எடுத்து விடுவாள்
ஐயா
மேலே விழுவாள் மெல்லெனக் கடிப்பாள்
கோல் அம்பும் அறிவாள் குறிகிப்படுவாள் (நன்னா)

தெம்மாங்கு
உண்மைக் கிழவன் என்று உயிர் போலக் காக்கையிலே
தண்ணீர் வேணும் என்று சொல்லி தவிக்கிறானே ஆண்டிக் கிழவன்
அலங்காரம் ஐயா
மாவு கொடுத்தா திங்க மாட்டான் மார்படைக்குது என்று விழுவான்
வாயை குளறி தண்ணீர் என்பான் வள்ளியே உயிரு போகுது என்பான்
அடியே
பாவி ஏண்டி கொல்லுறாய் என்பான் பரணை மீது சாகுறேன் என்பாள்
கூவி அழைத்து தண்ணீர் என்றான் குறுகிப் படுத்து மூர்ச்சையானான்
ஐயா - பேச்சியற்றான் பிசகலற்றான்
மூச்சியற்றான் மோடி செய்தான் (நன்னா)

தெம்மாங்கு
பாவி கிழவனாலே பழிகள் வந்து நேருது என்று
தாவியே புனங்கள் எல்லாம் தண்ணீர் தேடி அலைந்திட்டாரே (நன்னா)
அலங்காரம் ஐயா
வனங்கள் முழுதும் அலைந்தேன் ஐயா வஞ்சிக் காலும் சோர்ந்தேன் ஐயா
புனங்கள் எல்லாம் திரிந்தேன் ஐயா பொட்டு ஜலமும் கிடட்டாது ஐயா
ஐயா
சுனையிலே ஜலங்கிடைக்கும் ஐயா சொல்லும் வார்த்தை கேளுமையா
பத்திரமாக வாருமையா பழியில்லாமல் காப்பேன் ஐயா
என்று - ஏந்தி அணைத்தாள் இறுகப் பிடித்தாள்
சாய்ந்து நடந்தாள் சுனையை அடுத்தாள் (நன்னா)

தெம்மாங்கு
வள்ளி ஜலத்தைக் கண்டு வாருமையா சுனையில் என்றாள்
அடி தள்ளி விட நினைக்குறாயோ தந்திரங்கள் அறிவன் போடி (நன்னா)
அலங்காரம் ஐயா
வள்ளியைக் கரையில் நிறுத்தி போட்டான்
வரட்டுக் கிழவன் சுனையில் நுழைந்தான்
கள்ளங் கபடும் மனதில் நினைத்தான்
கணபதி தன்னை வேண்டிக் கொண்டான்
அடயா
அண்ணா அண்ணா கணபதியே அடியேனுக்கு ஒரு உதவி செய்யே
வெள்ளை யானை போல் துரத்தி வாயே வள்ளியை என்னுடன் அரகில் சேர
அடடா உனக்கு
வயிறு நிறைய கடலை சுண்டல் வாழை குலையும் தேங்காய் இளநீர்
பயறு உருண்டை தயிரு மோரு பாலும் பழமும் அவலுங் கடலை
ஐயா உனக்கு
பாங்காய்த் தருவேன் பசியைத் தீர்ப்பேன்
தாங்க வரியே ஓங்கித் துரத்தே (நன்னா)

தெம்மாங்கு
தம்பி நினைத்தவுடன் தாமிசங்கள் செய்யாமலே
கும்பமத யானை போல கூச்சலிட்டு ஓடி வாரான் (நன்னா)
ஐயா
கண்டு அலறி கூச்சலிட்டாள் கையை விரித்து ஓடி வந்தாள்
பண்டாரம் எந்தனை பாரும் என்றன் பறந்து மேல் விழுந்து பிடித்தாள்
அடடா
ஐயா ஐயா அபயம் ஐயா அடியாள் எந்தனைக் காருமையா
கையுங் காலும் துடிக்குதையா காட்டானை மிரட்டுதையா
ஐயா
வெள்ளையானை துரத்ததையா விட்டுவிட்டு நீ போகாதையா
பெண்ணின் முகத்தை பாருமையா பழிகள் உனக்கு நேருமையா
என்று - கட்டிப் பிடித்தாள் கண்ணீர் விட்டாள்
கிட்டி பிடித்தாள் கிலேசப் பட்டாள் (நன்னா)

தெம்மாங்கு
கட்டிப் பிடித்தவுடன் கணபதிக்கு சைகை பண்ணி
சித்திர மயில் மேலேறி சிங்காரமாய்த் தோன்றினாரே (நன்னா)

அலங்காரம் ஐயா
ஆறுமுகமும் பன்னிருகரமும் அழகு வேலும் அணிந்த நீரும்
பார மயிலும் பருத்த வடிவும் பாத சிலம்பின் ஓசை ஒளியும்
உன்னிட குலத்து தொழிலே காட்டுறாய்
ஒருவர் குடியை இரண்டாய் பிரிக்குறாய்
அடடா - குண்டுணி உனக்கு இதுவே தொழிலா
கூட்டி கொடுக்க வெட்கம் இல்லையா
தாடியும் சடையும் உனக்கு ஏதடா
தாடையில் போடுவேன் வெளியே நடடா
அடடா - உனக்கு நரைத்தும் போச்சே நாளுமாச்சே
திருட்டுப் பேச்சே குடியாயப் போச்சே (நன்னா)

நாரதன் சொல் தெம்மாங்கு
ஒன்றும் அறியேன் அம்மா ஒரு குடியிங் கெடுக்கவில்லை
சென்று வந்த வழிகளிலே கண்டதை நான் சொன்னேன் அம்மா (நன்னா)
அம்மா
பொதிகை முதலாய் மலைகள் எல்லாம் பார்த்து பார்த்து தவத்தில் இருக்க
பதினாலுலகம் தேடித் தேடி பாதை வழியாய் வந்தேனம்மா
அங்கே
சித்திரச் சாலையும் சந்தனச் சோலையும் பத்தரை மாத்து படிகத் துறையும்
அன்னக் கிளிகள் அமர்ந்த புனமும் ஆரும் அறியா பூங்காவனமும்
ஐயா வழியில் பார்த்தே வந்து உரைத்தே
பழியைத் தீர்த்தே பாதம் பிடித்தே (நன்னா)

தெம்மாங்கு
வேடனைப் போல் வடிவெடுத்து வேல் முருகர் ஏது செய்தார்
ஜாடை சொல்லி நாரதனை தந்திரமாய் அழைத்து கொண்டார் (நன்னா)

அலங்காரம் ஐயா
குண்டுணி நாரதன் முன்னால் நடக்க குமர வேடன் பின்னால் நடக்க
கண்ட வனத்தை திரும்பி பார்க்க கந்தர் மனது
வள்ளியை நோக்க ஐயா
வள்ளி வள்ளி என்று அழைத்துக் கொண்டு வழிகள்
வழிகள் தோறும் பார்த்துக் கொண்டு
நளின வனத்தை தேடிக் கொண்டு
நடக்க மனமும் சகித்துக் கொண்டு
ஐயா - புனத்தைக் கண்டார் பெண்ணே என்றார்
வனத்தைக் கண்டார் வள்ளி என்றார் (நன்னா)

சுப்பிரமணியர் சொல் தெம்மாங்கு
வஞ்சி இளங்கொடியே வளரும் மூன்றாம் பிறையே
கொஞ்சும் இளங்கிளியே கொல்லுதடி காம பாணம் (நன்னா)

அடியே
காம ரதியே கனகக் கொடியே காய்க்கும் வடிவே பூக்கும் வயதே
தேமல் ஒளியே திருவின் உருவே தெய்வ லோக வருணக் கிளியே
அடியே உன்னை
வனத்தில் விட்ட பாவிகள் ஆரு வஞ்சனை செய்த தெய்வமுங் கூறு
இந்த வயதில் ஒண்டியாய் இருக்க எப்படி உனக்கு மனம் வந்தது
அடியே
காமம் மீறுதே கவலையாகுதே காமன் கணைகள் மார்பில் தைக்குதே
தேமல் முலைகள் என்னை பார்க்குதே திருவு முன்னிட முகத்தில் நிற்குதே
அடியே
அஞ்சன விழியே அமிர்த மொழியே கொஞ்சுங் கிளியே கோர்த்த மல்லியே
சஞ்சலம் ஒழிய சைகை சொல்லடி சலுதி பரணை ஏறி வாரேண்டி
அடியே - தாமதம் என்னடி தயவு செய்யடி
காமனை வெல்லடி கட்டிச் சேரடி (நன்னா)
ஆறுடைய கற்பழிய அநியாயம் செய்தனையோ
தாறுமாறாய் என்னை இப்போ தனி வழியில் ஏசுறாளே (நன்னா)

அலங்காரம் ஐயா
ஐயோ ஐயோ ஆதி சிவமே அட்ட புவனம் உண்ட பொருளே
கைகள் ஈராறுடைய முருகா காலகாலன் ஈன்ற பாலா
ஐயா
மருதை வீரா மாடன் முனியா விரதம் இருக்கும் வீட்டுக் காளி
தொட்டிய சின்னா துறைய கருப்பா துஷ்டன் எவனோ துள்ளி விழுறான்
ஐயா
இந்த விதியும் நொந்து போச்சா என்னுடைய விரதம் அழிந்து போச்சோ
கற்பு அழிய காலமாச்சா காக்குந் தெய்வம் விலகிப் போச்சா
ஐயா
கன்னி தவத்தில் என்ன குறைவு
என்னைப் பழிக்கப் பார்க்குறீர் (நன்னா)

தெம்மாங்கு
மாது வருத்தமுற்று மார்பு உருளத்தான் அழவே
வேதனைகள் நேர்ந்து என்று வேறே ஒரு வடிவெடுத்தார் (நன்னா)
ஐயா
வளையல் சுமையைத் தோளிலிட்டார் வள்ளி பரணுக்கு அருகில் வந்தார்
வளையல் விற்கிற செட்டியை போல வளையல் வளையல் வளையல் என்றார்
ஐயா
வளையல் என்ற மொழியைக் கேட்டாள் வள்ளியும் பரணை இறங்கி போட்டார்
அருகில் அழைக்க தாதியை விட்டாள் அடுத்தவுடனே விலையை கேட்டாள்
ஐயா - தேனுந் தினையும் தருவும் என்றாள்
காணும் வளையலிடுவும் என்றாள் (நன்னா)

தெம்மாங்கு

தேனுந் தினை மாவும் தின்ன பசியில்லையடி
மானே என் போகம் தீர மருவிருந்தா போதுமோடி (நன்னா)
அலங்காரம் - அடியே
ஒன்பது ரத்தினம் இழைத்து வளையல் உந்தனுக்கு ஏந்த சந்திர வளையல்
முத்து வளையல் மோகன வளையல் மூன்று லோகமும் மதிக்கும் வளையல்
அடியே
இந்திர வளையல் மந்திர வளையல் இமையோர் ஆதியர் மதிக்கும் வளையல்
செந்தில் முருகன் செய்த வளையல் சிவகாமி மருமகளின் வளையல்
அடியே - விலையைக் குறித்து விசனம் வேண்டாம்
வளையல் குறித்து வருந்தம் வேண்டாம் (நன்னா)

தெம்மாங்கு
பிச்சைக்கு வந்த பையல் பெண்டாள அழைத்தது போல்
கொச்சை மொழி உரைக்க வந்தாய் கொடுத்திடுவாய் எமனுக்கு உயிர்
அலங்காரம் ஐயா
அருகில் அண்ணமார் காவலிருக்குறார் ஐயோ உன்னிட உயிரைப் பறிப்பார்
பெண்டு பிள்ளைகள் இருந்து தானால் போயி பார்த்து பிழைத்து போடா
ஐயோ இந்த வயதில் இறக்க நாளா ஏனோ தனியே மாண்டு போறாய்
வந்த வழியே நடந்து கூடு வனத்தை விட்டு நீ அப்புறம் ஓடு
அடடா - பிறந்த மனையை போயி சேரு
பிறவி இருந்த போயி பாரு (நன்னா)
வேலரை
முருகர் அழகை பார்த்து பார்த்து மோகக் கடலில் வள்ளி வேர்த்து
ஆறுமுகமே அமர்ந்த பொருளே அடியாள் எந்தனை சோதித்தாயே
ஐயா என்று மயங்கி ஏக்கமிட்டாள்
நின்று மயங்கி நிலையை மறந்தாள்

தெம்மாங்கு
இதுதான் சமயம் என்று எடுத்தணைத்து வேல் முருகர்
ஆவல் எல்லாந் தீர்த்துக் கொண்டு அன்னமே நான் போரேன் என்றார்
அலங்காரம்
ஆறுமுகத்தின் வடிவைக் கண்டாள் ஆனந்தமா ஏங்கி நின்றாள்
வேறே நினைவு மறந்து போய்ட்டாள் விரக மூர்ச்சை யாகி நின்றாள்
ஐயா
எனக்கா இத்தனை வடிவு கொண்டீர் ஏழை மனதை சோதித்தீர்கள்
கொண்ட கருத்தை முடித்துக் கொண்டீர் கூசாமலே போரேன் என்றீர்
ஐயா ஞாயமல்லவே நடுவுமல்லவே
மாய மந்திரஞ் செய்திட்டீரே (நன்னா)

தெம்மாங்கு
சத்தியமாய் நாளை இங்கு சரச மாட வருவேன் என்று
சுத்திருக்குங் கானகத்தில் சென்றார் முருகர் வேடர் முன்னே
அலங்காரம்
பஞ்சாங்கத்தை கையில் எடுத்தார் பார்ப்பானைப் போல் வடிவெடுத்தார்
அஞ்சாமலே வேடர் எதிரே ஐயர் போல வருகிறாரே
அடடா
வனத்தில் இங்கே ஆரும் பிள்ளாய் வருகுங் கெதியை கேளும் பிள்ளாய்
ஏழு பேர்க்கும் இளைய மாது இருப்பது உண்டா வள்ளி என்று
அடடா
கந்தன் என்கிற கன்னக்காரன் கன்னி சிறையை எடுக்க வருவான்
நாளை பொழுது பாதி இரவில் நடக்க போர சேதி உரைத்தேன்
அடடா குகையிலிடுங்க கதவை போடுங்க
ஏழு பேருமா காத்திருக்க (நன்னா)

தெம்மாங்கு
திருட்டு பஞ்சாங்கமதை தீரடுடன் சொல்ல விட்டு
சிறை எடுக்குங் கள்ளனைப் போல் சுப்பிரமணியர் வடிவெடுத்தார்
அலங்காரம்
ஐயர் உரைத்த கட்டளை போலே அழகு வள்ளியை குகையிலிட்டார்
ஏழு பேருமாய் கத்தி உருவியே மாறாமலே காத்திருந்தார்
அப்போ
திருடனைப் போல் வடிவெடுத்தார் திருட்டுக் கந்தனும் நெருங்கிக் கொண்டார்
திருநீறு எடுத்து ஓதிப் போட்டார் தேவி வள்ளியை தூக்கி கொண்டார்
அப்போ
குகையை விட்டு கடந்து வந்தார் கூச்சலிட்டு இவர் மூர்ச்சை தெளிந்தார்
தெரித்து வழியில் மடக்கிக் கொண்டார் திருடன் என்று வெட்ட வந்தார்
அப்போ
பஞ்சாட்சரத்தை ஓதி விட்டார் படுக்க மூர்ச்சை யாக்கி விட்டார்
அஞ்சி வள்ளியுங் காலில் விழுந்தாள் அண்ணமார்களை எழுப்பும் என்றாள்
அப்போ
மூர்ச்சை தெளிய மொழிகள் உரைத்தார்
வாழ்த்தி எழுப்பி வரத்தைக் கொடுத்தார் (நன்னா)

தெம்மாங்கு
கைகட்டி வாய் புதைத்து கந்தருடன் ஏது சொல்வார்
மெய்யை அறியாமலே வேதனைகள் நினைத்தோம் ஐயா (நன்னா)
ஐயா
வள்ளியைக் கேட்டா தரவ மாட்டாமா வனத்தில் இப்படி வரவு வேணுமா
எங்களை சோதிக்க நேரம் ஆகுமா ஏனோ இத்தனை கோலமாகுமா
ஐயா
ஏது குறைகள் செய்த போதும் எல்லாம் பொறுத்து ஆறுதலை தாரும்
சூதும் வாதும் அறிய மாட்டார் சோதனைக்கு எதிராக மாட்டார்
ஐயா அபயம் என்றார் அஞ்சி நின்றார்
விபரம் என்றார் வேண்டிக் கொண்டார்

தெம்மாங்கு
வள்ளியுடன் அண்ணனுக்கு வாழ்த்தி வரங் கொடுத்து
புள்ளி மயில் ஏறி அல்லோ போய் அமர்ந்தார் தணிகை மலை (நன்னா)

அலங்காரம்
வேலும் வாழி மயிலும் வாழி வனத்து வேடகுறத்தி வாழி?
இந்திரன் ஈன்ற தெய்வானை எந்த நாளும் சுகமாய் வாழி?
ஆறு முகத்து கடவுள் வாழி அண்டரண்டம் ஏழும் வாழி?
பாடி படித்து பதம் உரைத்தோர் பலத்த முடியாய் பெருத்து வாழி?
ஐயா மண்னும் வாழி? விண்ணும் வாழி
மதியும் வாழி ரவியும் வாழி? (நன்னா)
வள்ளி அலங்காரம் முற்றும்.
------------------

10. திருவாரூர், திருநெய்ப்பேர் வி.பி.கே. இராமையா நாயனார்
இயற்றிய (கி.பி. 1933) "வள்ளி தெய்வானை சக்களத்திப் போராட்டம்"

(சந்தி பிரிக்கப்பட்டது)
காப்பு - விருத்தம்
புள்ளி மாமயில் மீது ஏறும் பூபதி ஞான வேலன்
வள்ளி தெய்வானைஏசல் மன மகிழ்ந்து அன்போடு ஒதத்
தெள்ளிய தமிழ் நூல் ஏந்துந் தேவியின் கடாக்ஷத்து அன்பை
அள்ளி என் கரத்தால் உன்ன ஐங்கரர அருள் செய் நன்றே.

நூல்
அக்கனுலாயபனுவா என்ற மெட்டு
இராகம்: தேசிக தோடு தாளம்: ஆதி

தெய்: ஆரடி திருட்டு சிறுக்கி எந்தன்
ஆசை நாயகன் பின்
கூசாமல் வந்தவள் (ஆரடி)
ஏறடி நீ வெளியே இனி
இங்கு நின்றால் மான
பங்கம் செய்வேன் அடி (ஆரா)

வள்ளி: தாறுமாறாகவே பேசி - மிக்க
தாண்டிக் குதித்திட
வேண்டாங் கைவீசி (தாறு)
கூறுவேன் கேளாய் அங்கே என்னை
குமரன் மணந்து
கூட்டி வந்தார் இங்கே (தாறு)

தெய்: என்ன சொன்னாயடி சேதி இலை
எச்சில் பொறுக்குமோர் ஈன் குற ஜாதி
உன்னை மணந்தார் என்றாய் நல்ல
ஒழுங்கிது சுணை மழுங்கினலண்டி (ஆரா)

வள்ளி: ஜாதியை இழுத்து இகழ்ச்சி பேசத்
தகுமோ இப்படி அடியே புலைச்சி
ஓதிடுவாய் இனி நான் எங்கே
உன்னை மதிப்பது சின்ன புத்திக்காரி (தாறு)

தெய்: அடி சின்ன ஜாதி குற சிறுக்கி எங்கே
செப்ப வந்தாய் எதிரிப்படி முறுக்கி
முன்னே நில்லாதே போடி உந்தன்
மூக்கு முலை அறுத்து ஆக்கினை செய்டுவேன் (ஆரடி)

வள்ளி: மெத்தப் படிக்காதே ராங்கி இங்கே
வேலவனை விட்டுவிடடி பாங்கி
அழைத்து ஏகுகிறேன் இன்று
நாரி என் தாய் தந்தையார் வீடு சேர்கிறேன் (தாறு)

தெய்: நல்ல முகூர்த்தம் அறிந்து முந்தி
நான் அல்லோ கிழக்கு முகமாயிருந்து
வல்லவனை மணந்தேன் இன்று
வந்து நீ விடு என்றால் வாயை கிழப்பேண்டி (ஆரடி)

வள்ளி: கொட்டு முழக்குகளோடு தாலி
கட்டிக் கொண்டனையோ நீ கெட்ட கேடு
மட்டி சிறுக்கி போடி ஒப்பன்
வலியை கட்டி கொடுத்தாண்டி நாடி (தாறு)

தெய்: பட்டி உன் நாவை அறுப்பேன் இங்கே
பாரடிலண்டி உன் பல்லினை உடைப்பேன்
கெட்டித்தனம் பேசுறாய் குடி
கேடி உன் ஜாதியின் வாடிக்கை அறிவேன் (ஆரடி)

வள்ளி: வாடிக்கை என்னடி கண்டாய் மிக்க
வாய் மதமாய் வித்தியாசம் நீ விண்டாய்
வேடிக்கையாய் பேசாதே நீங்கள்
மேலான ஜாதியோ மேட்டிமை ஏண்டி (தாறு)

தெய்: மேலான ஜாதி நான் அல்லவா வெட்ட
வெளியாய் உன் குலத் தொழிலைச் சொல்லவா
கோடி உன் இனத்தார் தெருவில்
கெஞ்சி நின்று கூழுங் கஞ்சி வாங்குவரே (ஆரடி)

வள்ளி: சூரபத்மனால் உன் தந்தை பட்ட
துயரை எடுத்து சொல்லவோ விந்தை
கூறு கெட்டே ஒழித்தான் தண்ணீர்
குடிக்க கிட்டாது அந்நாளிலே அலைந்தான் (தாறு)

தெய்: காட்டுப் பூனை தின்னுஞ் ஜாதி ஊரார்
கண்டு சிரிக்கிறார் உங்களின் சேதி
மேட்டிமை தானும் உண்டோ கடை
வீதிகளில் வந்து பாரடி சங்கதி (ஆரடி)

வள்ளி: தாருகனால் பட்ட பாடு இந்த
தாரணியே சொல்லுந்தான் கெட்ட கேடு
வீரியம் பேசாதடி உங்கள்
விண்ணவர்கள் அன்று மீன் சுமந்தார்களடி (தாறு)

காவடிச் சிந்து வர்ண மெட்டு
(பொன்னுலற சென்னிளேம் மெட்டு)
தெய்: மீன் சுமந்தார் என்று இகழ்ந்து தான் புகன்ற சங்கை கெட்ட
வேடக் குறகுட்டி சொல்லேன் தேரடி - தொழில்
கூடை முறங் கட்டுகின்றீர் பாரடி - ஜனம்
மெத்தவுற்றிடும் உற்சவங்களில் நத்தி மெள்ளவுங் கத்திரிகோலினால்
வெட்டுவீர் கழுத்து மணி நின்றுமே - காவலர்
கட்டி உதைப்பார் உங்களைக் கண்டுமே

வள்ளி: கட்டி உதைப்பார்கள் என்றே கெட்டித்தனமாய் உரைத்த
காரிகை உன் தந்தை சேதி கேளடி - அதை
கூறிடவும் வெட்கக்கேடு அந்நாளடி - அந்த
கன்னி அகலிகை தன்னைக் களவில் உன்னி
மருவிட நண்ணி முனிவரால்
கண்கள் ஆயிரம் பெற்றுதுவோ பலம் - கேட்போர்
காரி உமிழ்கின்றார் ஐயோ கேவலம்

தெய்: காரி உமிழ்கின்றார் என்றே கூற வந்த நாரி நீ ஓர்
கானகத்தின் மானின் குட்டி யாமடி - உந்தன்
மான வெட்கந்தானும் இங்கு போமடி - சந்தைக்
கடைகள் தன்னிலுங் களவு செய்குவீர் உடைகளும் பணி பலவும் திருடுவீர்
கண்டு கொண்டு உதைக்கும் போது அஞ்சியே - பல்லை
காட்டுவீர்கள் மெத்த மெத்தக் கெஞ்சியே

வள்ளி: பல்லைக் காட்டுவீர்கள் என்று சொல்லிக் காட்ட வந்தாய் இன்று
பாவையே நீ கேளடி ஓர் வாக்கியம் - உங்கள்
தேவர்கள் தான் மட்டும் என்ன யோக்கியம் - முன்னே
பார் அலைந்ததுஞ் சீர் முலைந்ததும் ஊர் இழந்துமே சூரரால் உதை
பட்டு வெட்கங் கெட்டு ஓடவில்லையா - சொல்வாய்
முட்டு யானைக் குட்டி நீயும் இல்லையா

தெய்: ஆனைக்குட்டி என்றுரைத்த மானங் கெட்ட பைங்குறத்தி
அற்ப ஜாதி உங்களைப் போல் ஆரடி - எதிர்
செப்ப நீதி உண்டோ இங்கே தேரடி - சற்றும்
அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு அது வைச்சிலாத் தடிச் சிறுக்கி நீ
யானதினால் இங்கு வந்தாய் தேடியே - எந்தன்
ஆளனைத் துரத்திக் கொண்டு நாடியே

வள்ளி: ஆளனைத் துரத்திக் கொண்டு நான் இங்ஙனம் வந்தேன் என்ற
அறிவு கெட்ட சக்களத்தி போடிபோ - அடி
வரிசையற்ற சக்கிலிச்சி நாடிக் கேள் - எந்தன்
அண்ணன்மார்களின் முன்னஞ் சண்முகன் என்னை மாமணம் கொண்டு வந்தனர்
அப்படி இருக்க என்னை எள்ளுறாய் - ஏண்டி
தப்பிலிச் சிறுக்கி வீணாய் துள்ளுறாய்

தெய்: தப்பிலிச் சிறுக்கி என்று இப்படி நீ செப்புதற்கு
தந்தாரு உந்தனுக்கு இத்தைரியம் - அந்த
கந்தனாலே வந்ததோ இவ்வீரியம் - சரி
தான் அறிந்தனன் விளக்கு மாறிதோ நான் எடுத்து பிடித்துமே அடி
தட்டுவாணியின் கெருவம் போக்குறேன் - உன்னைத்
தொட்டுக் கொள்ளக் கூடாது என்றே பார்க்கிறேன்

வள்ளி: தொட்டுக் கொள்ள கூடாது என்று சட்டம் இங்கே பேச வந்த
கெட்டிக்காரி உண்மைதான் நீ கூறுவது - என்னைத்
தொட்டவனை எப்படி நீ சேர்வது - நல்ல
சொரணை உடையவளாகில் முருகனை தருணம் வெளியிலே தள்ளி விடுவது
சுத்த வீரத் தன்மையாகும் பாரடி - வீட்டில்
வைத்துக் கொள்ளலாமோ பதில் கூறடி

தெய்: வீட்டில் வைத்துக் கொள்வதற்கும் ஓட்டி விடுகின்றதற்கும்
வேசி நீயோ சொல்கிறவள் ஞாயமே - இங்கே
வெல்லுமோடி உந்தன் சம்ப்ரதாயமே - ஒரு
விலைமடந்தையை மருவினார் எனக் குவலயந்தனில் பிரிய நாதனை
விட்டுவிடுவாரே யாருங் கூறடி - வெட்கம்
கெட்டு நீ இன்றோட வைப்பேன் பாரடி
வள்ளி: ஓட வைப்பேன் பாரடி என்று ஆடம்பரமாய் உரை
உலக்கை போலக் கை என்னடி நீட்டுறாய் - எங்கே
விளக்குமாறு எடுத்துக் காட்டுகிறாய் - பயந்து
ஓடி விடுவேன் என்று எண்ணிடாதடி வேடர் குலத் திறந்தன்னைப் பாரடி
ஒண்டொடி உனக்கு இனியான் காட்டுறேன் - புத்தி
இன்று ராமையன் கவியால் ஊட்டுறேன்
சரசக்கார மாமா என்ற மெட்டு - பின் வேறு

தெய்: அடியே சிறுக்கி ஏது - இங்கே
ஆரிடத்தில் இவ் வாது- சற்றும்
அஞ்சிடாமலே மிஞ்சி பேசுறாய்
நெஞ்சிலே உப்பு வைத்துச் சுடுகுவேன் (அ)

வள்ளி: நிறுத்தடி சும்மா ஏண்டி - நின்று
நீ குதிக்குறாய் தாண்டி - எந்தன்
நெஞ்சில் நீ உப்பு வைத்துச் சுட்டிடில்
வஞ்சி யான் உன்னை லேசில் விடுவேனோ (நி)

தெய்: நல்லதடி உன் சமர்த்தை - இப்பேர்
நான் அறிகிறேன் பரத்தை - எந்த
நாச்சியாளுட வீட்டில் வந்து நீ
பேச்சதிகம் படித்துமே நிற்கிறாய் (அ)

வள்ளி: படபடப்பாய்க் கை ஓங்கி - கொண்டை
பற்ற வாராய் என்ன ராங்கி – வந்து
பாரடி இங்கு ராமையன் தமிழ்
படித்து இடித்து அடித்தே ஓட்டுவேன் (நி)

தெய்: ஓட்டுவது எங்கடி அடித்தே - இதோ
உனது கொண்டையைப் பிடித்தேன் - இங்கே
உந்தன் சலுவைக்காரனைக் கூப்பிடு
வந்து பார்க்கட்டும் வேடிக்கை தெரியும் (அ)

விஷயம்: கொண்டை பிடித்துச் சண்டை - யிடுங்
கூச்சல் கேட்டுவ ரண்டை - திருக்
கோழியங் கொடி வேல் கரம் பிடி
கோமளக் குக வேள் வந்து நின்று
நடக்குஞ் சங்கதி கண்டார் - மனம்
நாணி வெட்கமுங் கொண்டார்

தெய்வானையிடம் சுப்பிரமணியர் சமாதானம் கூறுதல்
சுப்: பொறு பொறு மட மானே - எந்தன்
பொற்கொடி தெய்வ யானை - சண்டை
போட்டுக் கொள்வது நீட்டல்ல சொன்னேன்
கேட்டிடு வள்ளி கொண்டைய விட்டிடு (பொ)

தெய்: போதும் போதும் இச் சிலாக்யம் - எட்டிப்
போம் அறிடுவேன் யோக்யம் - ஒன்றும்
பூவை என்னிட மாக வந்தினி
மேல் புகன்றிட வேண்டியதே இல்லை (போ)

சுப்: கோபத்தை விடு மாதே - நான்
கூறு மொழிதள் ளாதே - குறக்
கும்பு வந்திடில் வன்பு வந்திடும்
துன்புற வழி வைத்து விடாதே (கோ)
நகைக்குமே என்னை உலகம் இது
நாரதர் செய்த கலகம் - எந்தன்
நாயகி தெரி வாயடி இனி
ஞாயம் அல்லவே வள்ளியை விட்டாலும் (ந)

தெய்: ஞாயம் அல்லவே என்று - ரொம்ப
நாணய மாக நின்று – இங்கே
நவில வந்தீரே புவியிற் கேவலம்
இவளை எப்படித் தொட்டுக் கொள்ளத் தகும்
சாற்றுதல் சரி யாமா இவள்
சட்டி பானை தொட லாமா (போ)

சுப்: தொடத் தகாது என்றாலும் - என்ன
செய்வது இனிசொல் மேலும் - எந்தன்
தோகையே வள்ளி மாதை விட்டிடில்
சாகுவேனுடன் சரணஞ் செய்குறேன்
கருணை வையடி மாதே - வீணாய்
கலகத்தை விளைக் காதே (பொ)

வள்ளியிடம் சமாதானங் கூறுதல்
சுப்: தித்திக்குஞ் செழுந் தேனே - எந்தன்
தேவியே வள்ளி மானே - சொன்னேன்
தெரிந்து கொள் இதை மாமன் இந்திரன்
அறிந்திடில் பெருந்துன்பம் விளைந்திடும்
அவளைச் சென்று வணங்கு - சற்று
கவனிப்பாய் இதே ஒழுங்கு

வள்ளி: நல்ல ஒழுங்குதான் இத் தினமே - கண்டேன்
உமது தப்பிலித் தனமே - முன்னே
ஓகோ நீர் சொன்ன வார்த்தை நம்பியே
ஆகினேன் மதி மோசம் இப்படி
செய்குவீர் என்றே அறியேன் உந்தன்
திருட்டுப் புத்தியை தெரியேன்

சுப்: உன் ஜாதிக் குணங் காட்டாதே - நான்
சாற்றுவதைக் கேள் மாதே- அவள்
தான் பெரும்பணக் காரன் மகளடி
வீண் பிலுக்குகள் ஒன்றுஞ் சொல்லாதடி
கூறினேன் கண்டு தேறு- வீட்டில்
ஏறிக் கொண்டு பின் பாரு
யாருங் - கண்டிடில் இகழ்ந்து உரைப்பார் – மிக்க
கை கொட்டி நின்று சிரிப்பார் - உந்தன்
காலில் விழச் சொன் னாலும் - வீழ்கிறேன்
கேலிக் கிடம் வை யாதே தள்ளிநீ
கண்டறி சொல்லும் பான்மை - உனக்
குண்டு பின்னாலே மேன்மை
விஷயம் என்று புத்தி இவ்விதம் எடுத்து - குகன்
புகல வள்ளியும் அடுத்து - தெய்வ
பூவை குஞ்சரி சேவடி தனி
லே வணங்கினள் கண்டு மென்மேலும்
வாழ்த்தினாள் அந்த மாது - மெத்த
மன மகிழ்ந்தே அப்போது
அறுமுகன் கண்டு களித்து - ராமை
யன் தமிழ்க்கு அருள் அளித்து - இந்த
அணங்கு எனுந் தெய்வ யானை வள்ளியும்
வணங்கி வந்துஇரு பாலும் உற்றிட
ஆனந்தக் கடல் ஆழ்ந்தார் - பரமானந்தமுடன் வாழ்ந்தார்
(முற்றும்)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

11. திருவாமாத்தூர் வண்ணச்சரபம் தண்டபாணி அடிகள் அருளிய
தெய்வானைத் தாயார் பதிகம்

(ஓலைச்சுவடியிலிருந்து படி எடுக்கப்பட்ட மூலவடிவம்)

காப்பு - வெண்பா
தெய்வானைத் தாயாரே செந்தமிழால் சந்ததமும்
வைவார்க்கும் இன்பம் வழங்குஞ்சேய் - மெய்வாஞ்சை
கொண்டுமகிழ் பொன்னேயென் கூபநடுநீர் ஊற்றொன்று
உண்டுபண்ண வேண்டும் உவந்து.

(வெண்டளையான் இயன்ற கொச்சக் கலிப்பா)
ஓதற் கரியதுயர் உற்றழலும்என் னை உன்பொற்
பாதக் கமலம்பர வப்பணிப்ப தென்றோ
வேதக் கடவுளைமுன் வெஞ்சிறையிட் டாண்டகுகன்
சீதக் கருணைமலி தெய்வானைத் தாயாரே! 1

தம்பொ னுயிரின் சதகோடி பங்குயர்வென்(று)
அம்பொன் விளைப்பார்க்(கு) அகம்மெலியா தாண்டருள்வாய்
பைம்பொன் மயில்உகைக்கும் பன்னிருதோள் சேந்தனுக்குச்
செம்பொன்நகர்க் கோனுதவும் தெய்வானைத் தாயாரே! 2

இந்திரனாம் உந் தையைச்சற்று ஏவிஅவன் கைப்படையால்
எந்திறற்கற் கூபத்தி னைஇளக்க லாகாதோ
மந்திர வேதன் மதனன் பிறவாநாட்
செந்திருமின் போலும்எழில் தெய்வானைத் தாயாரே! 3

வெங்கடன்கொண் டுள்ளம் மெலிவேன் வியன்கிணற்றின்
சங்கடம் தீர்ந் துய்யநல்ல தண்ணீர்ஊற்(று) ஈந்தருள்வாய்
அங்கடகம் கேயூரம் ஆயுதங்கள் ஆர்ந்ததிண்டோள்
செங்கடம்பற்(கு) இன்பம்நல்கும் தெய்வானைத் தாயாரே! 4

கானாறு நாணமுறக் கல்லகழ்ந்து கங்கைநத்தும்
நானார்வம் எய்தும்ஒரு நல்லநாளில் லைகொல்லோ
பானாறு வாய்க்குமரன் பன்னிருகா தும்பருகும்
தேனாம்மென் சொற்பயிலும் தெய்வானைத் தாயாரே! 5

அங்கண்நரன் நான்பகரும் ஆறெழுத்(து)அந் தாதியுன்னை
மங்களம்சேர் கங்கையென்கை வாய்மைஎன்னில் வந்தருள்வாய்
பங்கயக்கண் ணான்தவமே பானலங்கைப் பைந்தொடியாய்
திங்கள்முகக் கொம்பனைய தெய்வானைத் தாயாரே! 6

தத்திரமிக் கெய்தித் தடங்கற் கிணறமைத்தேன்
இத்திரத்துன்(பு) எய்தல்நன்றோ இன்புனலூற்று இன்றருள்வாய்
சத்திரக்கைச் சேந்தன் தனதியத்(து) உட்பொறிக்கும்
சித்திரமே போலும் எழில் தெய்வானைத் தாயாரே! 7

ஐந்து தொழில்தேவர்க்(கு) ஆதரமாய் அங்கமலத்து
இந்துறழும் கோலத்(து) இருந்தாள் எவளுரையாய்
மைந்துறுமாற் றிண்டோள் வலாரி மனையகத்தோர்
சிந்துரங்கொண்(டு) உய்த்தபுகழ்த் தெய்வானைத் தாயாரே! 8

பால்வாய்ந்த நீற்றணியார் பாகமுறும் பைந்தொடியாம்
வேல்வாய்ந்த தோட்குகன்சொல் மெய்ப்படுவது எந்நாளோ
கோல்வாய்ந்(து) அழுதுங் கொடுவிடமும் வாய்ந்துகொற்றச்
சேல்வாய்ந்(து)இ லகுமைக்கண் தெய்வானைத் தாயாரே! 9

புங்கமிகு சங்கரப்பேர்ப் புண்ணியனைப் போல்மகிழ்சீர்
இங்கடிமைக்(கு) ஈந்தால் இகபரமும் வாழாதோ
மங்களஞ்சேர் மேனை மகட்கோர் மருமகளே!
செங்கழுநீர்ப் பூமலர்கைத் தெய்வானைத் தாயாரே! 10

தேவர்பிரான் செய்தவமாம் தெய்வானைத் தாயாரைச்
சேவலங்கைச் சேய்க்கடிமை செய்யுந்தி ருப்புகழோன்
நாவலந்தீ வெங்கும்வல் கற்கிணற்றில் நன்னீர்
மேவநூவல் பாடல்கொள்வார் வேண்டுபயன் கைவருமே!
(முற்றிற்று)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

12. திருவாமாத்தூர் வண்ணச்சரபம் தண்டபாணி அடிகள் அருளிய
தெய்வானையம்மை பஞ்சகம்

(சந்தி பிரிக்கப்பட்டது)

காப்பு - வெண்பா
குஞ்சரி என்று ஓர் திருப்பேர் கொண்டு வளர் கோமாட்டி
பஞ்சகத்தைச் செந்தமிழால் பாடுதற்குக் - கஞ்சமலர்க்
கள்ளைப் பழித்த வண்டு கண்டு அருந்தும் கார் மதத்து
வெள்ளைக் கரி துணையாமே

நூல் - கட்டளைக் கலித்துறை
இந்திரன் பெற்ற மகளான நீ பெற்றெடுத்த என்பால்
வெந்திறல் கூற்றிற் கொடிதாய துன்ப மிடி வந்ததால்
தந்திரம் செய்து தளர்ந்தேன் கண்டாய் முதல் தாரகமாம்
மந்திரம் கற்ற முருகோன் இடம் பெற்ற வாரணமே 1

என் ஆணை நீ அன்று சொன்ன சொல் போல் இன்று எனக்கு அருளி
நன் நாகரீகத்தொடு வாழச் செய்தருள் நான்மறையும்
சொன்னானைக் குட்டிய கையான் விரும்பித் தொழ இரங்கி
அன்னான் மகிழ விளையாடிக் கூடும் அணங்கரசே 2

பூசனைச் செல்வம் அதனால் எண் சித்தும் பொருந்திடச் செய்து
ஈசனைப் போல் மகிழ்கூர வைத்தற்கு இரங்குவையோ
நேசனைத் தன் கடைக் கண்ணார நோக்கி நெடிய கையில்
வாசனைக் காவி மலர் ஏந்தி நின்ற மட அன்னமே 3

உன்றன் கணவற்கு ஒரு கோடி பாடல் உரைத்து அணிந்தும்
என்றன் கவலை ஒழிந்தது இன்றால் இனி என்ன செய்வேன்?
மின் தங்கு சிற்றிடைப் பேதாய் விண்ணூர்த் தெய்வ வேழம் எனும்
குன்றம் தரு மயில் போல் எழில் காட்டிய குஞ்சரமே 4

குன்றம் அனேகம் புரிந்தேனைத் தொண்டறில் கூட்டி முன்னோர்
சொற்ற பன்னூல் பயன் தந்தருள்வாய்! கொடும் சூர் உரத்தில்
கொற்று வை வேல் விடுத்து உம்பரைக் காத்த குமரனுக்கு
நற்றரு நீழல் மகவான் தருந் தெய்வ நாயகியே 5

நூற் பயன்
வஞ்சகம் இன்றித் தொழுவாருக்கு ஆனந்த வாரி நல்கும்
குஞ்சரியார்க்கு எழில் நெல்வேலிப் பாவலன் கூறி வைத்த
பஞ்சகந் தன்னைப் படிப்பார் எவரும் பழுது ஒழிந்த
நெஞ்சகம் பெற்று மகிழ்வார் சொன்னேன் இது நிச்சயமே
(முற்றும்)
--------------------

13. வண்ணச்சரபம் தண்டபாணி அடிகளின் மருமகனார்
கோபாலசமுத்திரம் ச. சண்முகதாச பிள்ளை இயற்றிய
தெய்வானை நாயகி பதிகம்

(சந்தி பிரிக்கப்பட்டது)

காப்பு - நேரிசை வெண்பா
சீத மலர்ப் பெம்மான் சிரத்தில் அழக் குட்டிய கை
நாதர் புணர் தெய்வானை நாயகிப் பெண் - மீது அழகார்
செந்தமிழைச் சொல்வதற்குச் சிட்டர் உளந்தோறும் வளர்
தந்தி முகத்தோன் துணையதாம்

நூல்
வானோரும் பாரதியு(ம்) மாமகளும் போற்றி செயு(ம்)
மானே! எனது மனக்கவலை தீர்த்தருள்வாய்
மீனேந்திர மயிலே! விண் தலக்கோன் அன்று ஈந்த
தேனே செயந்திபுரத் தெய்வானை நாயகியே 1

கார்மேகம் அன்ன குழல் கன்னிகையே! கற்கண்டே!
பார் மேல் எனக்கு உன்பதம் அணியக் கூடாதோ
சூர் மேல் அறுத்த அயில் தோளர் மருவுங குயிலே!
சீர் மேவு செந்தில் நகர்த் தெய்வானை நாயகியே 2

உன்னிடத்தில் வேலோன் உவந்து இட்டம் பண்ணுகையில்
என் இடரைப் பற்றி இசைத்து ஒழிக்கல் ஒன்ணாதோ
மன்னிய பூவுண்ட நெடுமால் இடக்கண் வந்தவளே
தென்னை மிகுந் செந்தில் நகர்த் தெய்வானை நாயகியே 3

பன்னிருகைச் செவ்வேன் பசுந்தமிழைக் கேட்டு மிடி
இன்னும் அகற்றாது இருந்தனர் நீ சொல்லி எனக்கு
அன்னவரோடுஞ் சிகியில் ஆரோகணித்து வந்து
இன்னருள் செய் செந்தில் நகர்த் தெய்வானை நாயகியே 4

நெஞ்ச மிகு ஆனந்தமுற நின் கருணையால் கடலில்
குஞ்சரியே நாயயேன் குளிக்கு(ம்) நாள் எந்நாளே
கஞ்ச நிகர் மென்கரத்தில் கங்கணங்கள் ஓல் புரியஞ்
செஞ்சுடரே! செந்தில் நகர்த் தெய்வானை நாயகியே 5

கல்விப் பெருங்கடலே! கண்மணியே! கிற்றுயிரைக்
கொல்வதற்ற மேலோர் குழுவில் எனைச் சேர்த்தருள்வாய்
மல் வினைக்குந் தோள் வேள் மனதுக்கு இசைந்தவளே
செல்வியே! செந்தில் நகர்த் தெய்வானை நாயகியே 6

கந்தப் பெருமான் கைக் கிள்ளை மேல் கிருபை
எந்தனுக்குத் தந்தால் இளப்பம் உண்டோ நீ சொலம்மா
சுந்தரியே! எவ்வுயிர்கள் தோறு(ம்) நிறைகின்றவளே
சிந்து அவிருஞ் செந்தில் நகர்த் தெய்வானை நாயகியே 7

தீவினை எல்லாத் தவிர்க்கருஞ் சிந்து தந்த புட்கரணி
மேவி நன்னீர் ஆடி வந்து உன் மென்தாளைப் போற்றாத
பாவியன் நான் உய்யும்படி கடைக்கண் பார்த்தருள்வாய்
தேவர் புகழ் செந்தில் நகர்த் தெய்வானை நாயகியே 8

பச்சை நிறம் பெண் கிளியே பாகு அனைய சொல்லினளே
கச்சை புனையும் கவினத் தன மாதர்
இச்சை சற்றும் இல்லாமல் எந்நாள் அளிப்பாயோ
செச்சை மலி செந்தில் நகர்த் தெய்வானை நாயகியே 9

திகழும் படை கொண்டு தென்திசையோன் வந்தால்
இகலி அற்றுங் கூர் வடிவேல் எய்ந்த குகனோடுஞ்
சிகி வாகனத்தில் தெரிசனை தந்தாள்வாய்
சிகரியுள்ள செந்தில் நகர்த் தெய்வானை நாயகியே 10
(முற்றும்)
(பிழைத்தது பொறுத்தல் பெரியவர் கடனே)
----------------

வள்ளி நாயகி சிற்றிலக்கியப் பட்டியல்

வள்ளிநாயகி பிள்ளைத்தமிழ் வண்ணச்சரபம் தண்டபாணி அடிகள்
வள்ளியம்மை பதிகம் (தணிகை) காஞ்சி இராமானுசம் பிள்ளை
வள்ளியம்மை பதிகம் மு. குழந்தை வேலு ஆசாரி
வள்ளியம்மை திருக்கலியாண பதிகம் ஆரூர் எம். இரத்தினசாமி
வள்ளி திருமண மாலை முத்துராமலிங்க சேதுபதி
வள்ளி தெய்வானை திருமணம் குழந்தை. ந. சபாபதி பிள்ளை
வள்ளி கலியாண விலாசம் அபிராமம் வீரபத்திரக் கவிராயர்
வள்ளியம்மை சுயம்வரம் மா. பேச்சிமுத்து பிள்ளை
வள்ளி சுயவர திருப்புகழ் காவடி சிந்து சு. துரைசாமி படையாட்சி
வள்ளியம்மை அம்மானை (முன்னூர்)அம்பிகாபதி சுப்பையர்
வள்ளியம்மை அட்டகம் (முன்னூர்)அம்பிகாபதி சுப்பையர்
வள்ளியம்மை கோலாட்டப் பாட்டு பழனி முத்தன் ஆசாரி
வள்ளி தெய்வானை ஏசல் சீ. இராமசுவாமி ஐயங்கார்
வள்ளி வேட்கை தூடி. உ.போ. முத்துராமலிங்கம் பிள்ளை
வள்ளி பரதம் கடிகை நமச்சிவாய புலவர்
வள்ளியம்மை நாடகம் குமரி. குமரப்பிள்ளை
வள்ளி நாடகம் சென்னை பல்கலைக்கழகப் பதிப்பு
வள்ளியம்மை கீர்த்தனம் புதுவை நடராச ஆசாரி
வள்ளி திருமணம் ரங்கநாத முதலியார்
வள்ளியம்மன் அம்மான் ஈழம் முருகு தயாநிதி
வள்ளியம்மன் சரித்திரம் இராசவடிவேல் தாசர்
வள்ளி அம்மானை பாலுசாமி நாயுடு
வள்ளி திருமணம் வெ. கோபாலய்யர்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இப்பதிப்பிற்கு நூல்கள் தந்து உதவியவர்கள்

திரு. பேரா. சதீஷ், உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை.
திரு. பேரா. வெ. சத்யநாராயணன், தஞ்சாவூர்-4.
திருமதி. மீனாட்சி பாலகணேஷ், பெங்களூர்-94.
திருமதி. சசிவல்லி - திரு. தணிகைநாயகன், சென்னை.
திரு. ஜெயக்குமார், ஸ்ரீ கணநாதர் நூலகம், திருச்சி.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

This file was last updated on 27 Jan 2023.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)