”ஒட்டுமாஞ்செடி”
சி.என். அண்ணாதுரை சொற்பொழிவுகள்
oTTu mAnjceTi (speeches)
by C.N. aNNAturai
In Tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2023.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
”ஒட்டுமாஞ்செடிi ”
சி.என். அண்ணாதுரை சொற்பொழிவுகள்
Source:
ஒட்டுமாஞ்செடி
அறிஞர் அண்ணா அவர்களின் சொற்பொழிவு
மதி மன்றம் சென்னை - 1
முதற் பதிப்பு அக்டோபர் 53
விலை அணா 6
கே. என். பிரஸ், 130, சைனா பஜார் ரோட், சென்னை --1
-------------
அன்புள்ள தோழர்களே!
பல நாட்களுக்குப் பின்னர் கூடியிருக்கிறோம். இக் கூட்டம் நமது நோக்கத்தைத் தெரிவிக்கக் கூடிய கூட்ட மாகும், மழையோ பலமாகப் பெய்கிறது; வந்திருக்கும் கூட்டமோ ஏராளம்; பேச இருப்போரும் பலர். பல மாவட்டங்களிலிருந்தும் வந்துள்ள தோழர்கள், இயக்கத்தின் முக்கிய பணியிலே ஈடுபட்டுள்ளவர்கள், அவர்கள் யாவரும் பேச இருக்கிறார்கள். மழை பலமாகப் பெய்து கொண்டிருக்கிறது; பலர் பேச வேண்டும், சற்று சங்கடமான நிலை தான். அடாத மழை பெய்கிறது; அளவற்ற கூட்டம். தாய்மார்களும் தவிக்கின்றனர். மழையால் நின்று கொண்டே யிருக்கின்றீர்கள்; சங்கடம் தான். ஆனாலும் சமாளிக்கிறீர்கள். இது போன்ற நிலை தான் நாட்டிலே- சில காலம் கழகத்தின் வேலைகள் செயிற்றுக் கிடந்து, சங்கடமான நிலை ஏற்பட்டது; சரி செய்தோம். திராவிட முன்னேற்ற கழகம் தோன்றியது. புதிய அமைப்பு ஏற்பட்டு விட்டது. திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பேரால், ஏன் ஏற்பட்டது, எதற்காக ஏற்படுத்தப் பட்டது என்பதை விளக்கும் கூட்டமே இது.
நானா காரணம்?
நான் தான் காரணம் இந்த நிலைக்கு - ஏற்பாட்டிற்கு - என்று கூறுவர் சிலர். நான் பேசுகிறேன் இப்போது; நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்; பலத்த மழை கொட்டிக் கொண்டிருக்கிறது. இப்போது; நனைகிறீர்கள். இதற்கு நானா பொறுப்பாளி நானா மழையை வரவேற்கிறேன்; வருவித்தேன். இல்லை மழை வரவும், அதனால் சங்கட நிலை ஏற்படவும் இன்று, இப்போது நான் எப்படிப் பொறுப்பாளியல்லவோ, அப்படிதான், கழகத்தில் ஏற்பட்ட மந்த நிலைக்கும் நான் பொறுப்பாளியல்ல.. மழைக்கு நான் பொறுப்பாளியல்ல வென்றாலும், என்ன ஏசுவர் கூட்டத்திற்கு வந்துள்ள மக்கள், தாய்மார்கள் ? "என்னப்பா அந்த அண்ணாதுரை கூட்டத்திற்குப் போனேன், ஒரே மழை, நன்றாக நனைந்து விட்டேன். நீர் சொட்டக் சொட்டக் கேட்டுக் கொண்டிருந்தேன் " என்று தான் பேசுவர்.
கூறியது குற்றமா?
நான் என்ன செய்துவிட்டேன், தலைவர் தவறினார் கொள்கையினின்றும், பகுத்தறிவுப் பாதையினின்றும் தவறு என்று மனதார நம்பினேன் ; தெரிவித்தது குற்றமா? கூத்து என்று கருதினேன் ; கருதியது குற்றமா? கருத்தைத் தெரிவித்தேன் காரணத்தோடு ; வேதனையை வெளிப் படுத்தினேன்; வெளிப்படுத்தியது குற்றமா? கொள்கையைக் கூறுவதும் குற்றமா? கூறுங்கள் தோழர்களே!
நான் மட்டுமல்ல; என் போன்ற பல தோழர்கள் பல தாய்மார்கள், பல கழகங்கள், பாட்டாளி மக்கள், தொழிலாளி தோழர்கள், பட்டி தொட்டி எங்கும் உள்ளோர் கூறி னர், கூடாது இந்த ஏற்பாடு, திருமணம் என்ற பேச்சை விட்டு விடுங்கள், என்று.
பெரியார் திருமணம் என்ற செய்தி கேட்டதும் அழுதவன் நான், ஆயாசம் கொண்டவன் நான், அது மட்டுமல்ல, ஒதுங்கி விடுகிறேன் என்று எண்ணத்தை, கருத்தைத் தெரிவித்தவன் நான். பேதம், பிளவு, மனத்தாங்கல், மோதுதல் கூடாது, நல்ல தன்று, என்று கருதும் போக்கு, மனப்பண்பு படைத்தவன் நான். எனவே என வரையில் பெருந்தன்மையாகக் கட்சிப்பணியிலிருந்து விலகுவது நல்லது என்று முடிவு கட்டியிருந்தேன்.
என் போன்ற பல தோழர்கள் பெரியாரை, பெரியார் போக்கை, அவர் திருமண ஏற்பாட்டை ஏற்கவில்லை என்பதுமல்ல, கண்டித்தனர்; கதறினர்; வேண்டாம் என்று வேதனை நிறைந்த உள்ளத்தோடு.
நான் மனதார தீமை என்று கருதிய ஒன்றை, நல்லதல்ல என்று தெரிந்த ஒன்றை, பகுத்தறிவுக்குப் புரம்பானது என்று பாமரரும் ஒப்பும் ஒன்றைத் தெரிவித்தது குற்றமா?
மனப்புண் ஆறவில்லை!
பெரியார் சமாதானம் சொல்லி விட்டார், என் சொந்த விஷயம் ; எதிர்ப்போர், சுயநலமிகள்; சதிக்கூட்டத்தினர். என்று. மனப் புண் ஆறவில்லை மக்களுக்கு அப்படிப் பட்ட தலைவருடன் கலந்து பணியாற்ற மாட்டோம் என்று கூறினர். செவி சாய்க்க வில்லை, தலைவர் விலகுவார் என எதிர்ப்பார்த்தனர்; விலகவுமில்லை தலைவர். அவரோடு சேர்ந்து பணிபுரிய முடியாத நிலையிலுள்ள மிகப் பெரும்பான்மையினர், கழக முக்கியஸ்தர்கள், கூடிப் பேசினர்; ஒரு முடிவு செய்தனர்; அந்த முடிவு தான் ''திராவிட முன்னேற்றக் கழகத்" தோற்றம்
போட்டிக் கழகமல்ல!
திராவிட முன்னேற்றக்கழகம் தோன்றி விட்டது; திராவிட கழகத்திற்குப் போட்டியாக அல்ல, அதே கொள்கைப்பாதையில் தான், திராவிடர் கழகத்தின் அடிப்படைக் கொள்கைகளின் மீதே தான், திராவிட முன்னேற்றக் கழகம் அமைக்கப் பட்டுள்ளது அடிப்படைக் கொள்கைகளில், கருத்துக்களில் மாறுதல், மோதுதல் எதுவும் கிடையாது. சமுதாயத் துறையிலே சீர்திருத்தம், பொருளாதாரத் துறையிலே சமதர்மக் குறிக்கோள், அரசியலில் வடநாட்டு ஏகாதிபத்தியத்தினின்றும் விடுதலை, ஆகிய கொள்கைகள் தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்பாடுகளாகும்.
வேலை செய்ய மனம் ஒப்பவில்லை
கொள்கைக்கே புறம்பாக, ஜனநாயகத்திற்கே. அப்பாற்பட்டுத் தமது போக்கிலேயே சென்று கொண்டிருக்கிறார், பெரியார். அவர் தலைமையில் வேலை செய்ய மனம் ஒப்பவில்லை. செயலாற்றும் வகை கிடையாது என்ற நிலை ஏற்பட்டு விட்டது. அவர் வகுத்த பாதையிலிருந்து அவரே தவறி விட்டார்; தடுமாறி விட்டார். தவறு என்று எடுத்துக் காட்டினோம்; நாம் மட்டுமா? நாட்டு மக்கள் அனைவரும். இயக்கம் பெரிது; இயக்கத்தின் கொள்கைகள் மிக மிகப் பெரிது. கொள்கையை விட்டுக்கொடுக்க மாட்டோம்; கொள்கைக்கு இழுக்கு வர விடமாட்டோம்; தவறு செய்தது தலைவரேயானாலும் கண்டித்திடத் தயங்கோமம் என்ற குரல், நாடெங்கும் கேட்டது தலைவர் தம் வழியே செல்கிறார்; தவறை உணராது; சரியென்று சாதித்துக்கொண்டு, திராவிடர் கழகம் மூன்று மாத காலமாகச் செயலற்றுக் கிடந்தது.
கழகம் கொள்கையில் வழுவாது
திராவிடர் கழகம் எதற்காகப் பாடுபட்டதோ, எவரு டைய நனமைக்காக, எந்த சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக உழைத்ததோ, அதே மக்களுக்காக, ஏழை எளியவர்களை ஏழ்மையிலிருந்து விடுவிக்க, தாழ்ந்த மக்களை உயர்ந்தோராக்க, வாழ வழியற்ற மக்களுக்கு வாழ்க்கைப் பாதை வகுத்துக் கொடுக்க, இல்லாமையை இல்லாத தாக்க, கொடுமையை ஒழித்துக் கட்ட "எல்லோரும் ஓர் குலம்" என்ற ஏற்பாட்டை வகுக்க, ஏற்படுத்தப்பட்டதோ, அதே கொள்கை வழி நின்று, குறிக்கோளைப் புறக்கணிக்காது பாடுபட்டு வரும் திராவிட முன்னேற்றக் கழகம்
கொள்கைக்காகவே விலகினோம்
கொள்கை பிடிக்காமலோ, கோணல் புத்தி படைத்தோ, அல்ல நாங்கள் விலகியது, வெளியேறியது; கொள்கை வேண்டும், அதுவும் நல்ல முறையில் நடத்தப் படவேண்டும்; நாடும் மக்களும் நலம் பெறும் முறையில் கொள்கைக்குக் குந்தகம் விளைவிக்கும் காரியத்திற்குப் பக்கபலமாக இருந்து, பணியாற்ற முடியாது; என்ற நிர்ப் பந்த நிலையிலே தான் விலகினோம், விலக நேரிட்டது. பெருந்தன்மை வேண்டும் என்ற ஒரே காரணத்தினால் தான் மோது தலைத் தவிர்த்து, கழகத்தைக் கைப்பற்றும் பணியை விடுத்து விலகினோம், அதுமட்டுமல்லாமல், தலைவர் எல்லோர் மீதும் நம்பிக்கையில்லை, நம்ப முடியாது, என்று வேறு கூறியிருக்கிறார். சேம்பேறிகள், செயலாற்ற முடியாத சிறுவர் கூட்டம்; உழைக்கத் தெரியாதவர்கள், என்று குற்றம் சாட்டியிருக்கிறார் ! யாரைப் பார்த்து உழைத்து உழைத்துக் கட்சியைக் கழகத்தை உருவாக்கிய உண்மைத் தொண்டர்களை, நிரவாக உறுப்பினர்களை, தம் வாழ்வையும் பாழப்படுத்திக் கொண்ட இளைஞர்களைப் பார்த்து!
திறத்தைக் காட்டுவோம்!
ஒரு குடும்பத் தலைவன் சதா தன் மக்களில் சிலரைப் பார்த்து, ''நீ சோம்பேறி, வேலைக்கு லாயக்கற்றவன் வீணன், என்று தூற்றிக் கொண்டே இருந்தால், மகன் நிலை
என்னவாகும்? உண்மையிலேயே உழைக்கும் மகன் உள்ளம் உடைந்துதானே போவான்.
சற்று விவேகமும் ரோஷமும் படைத்த மைந்தன் வீட்டை விட்டு வெளியேறி, தொழில் புரிந்து தன நிலையைப் பலப் படுத்தி, தகப்பனைக் கூப்பிட்டுப் ''பார் அப்பா ! வீணன், வேலைக்கு லாயக்கற்றவன், சோமபேறி, என்று கூறினீரே, பாரும் எனது திறத்தை, செயலாற்ற விடவில்லை நீர். சதா எல்லாவற்றையும் தூக்கிப் போட்டுக் கொண்டு எங் களை எரிச்சலோடு ஏசினீர். பாரும் எமது வேலையை, வேலையின் திறத்தை, வெற்றியை'' என்று தானே கூறுவான்? காட்டுவான!
அது போலவே தான் நாமும் நம்மை மதியாத இகழ்ந்த, தூற்றின, துச்சமென மதித்த, தலைவரின் தலைமையை விட்டு வெளியேறித் தனிக் குடித்தனம், தனி முகாம், தனிக்கட்சி, திராவிட முனனேற்றக் கழகம் அமைத்திருக்கிறோம். நாம் உழைத்து உருவாக்குவோம் இந்தக கழகத்தை.
சுவீகாரப் பிள்ளை
நான் தான் அவரோடு பலத்த கருத்து வேற்றுமை கொண்டேன் என்றும், அவரைப் பிடிக்கவேயில்லை என்றும் பேசுவது தவறு, உண்மைக்குப் புறம்பானது. எனக்கு அவரோடு தொடர்பு ஏற்பட்டது 1935-ம் ஆண்டில். நான் அப்போது பி. எ. ஹானர்ஸ் பரிட்சை எழுதியிருந்தேன. பரிட்சை முடிவு தெரியாத நேரம் அது. அப்போது கோவைக்கடுத்த திருப்பூரில் ஓர் வாலிபர் மாநாடு நடந் தது. அங்குதான் பெரியாரும் நானும் முதன் முதலில் சந்தித்தது. அவரிடம் எனக்குப் பற்றும் பாசமும் ஏற்பட்டது. அவரது சீர்திருத்தக் கருத்துக்கள். எனக்குப் பெரிதும் பிடித்தான். பெரியார் என்னைப்பார்த்து "என்ன செய்கிறாய்'' என்று கேட்டார். 'படிக்கிறேன், பரிட்சை எழுதி யிருக்கிறேன்' என்றேன். உத்தியோகம் பார்க்கப்போகிறாயா?' என்றார். "இல்லை உத்தியோகம் பார்க்க விருப்பமில்லை, பொது வாழ்க்கையில் ஈடுபட விருப்பம் ' என்று பதிலளித்தேன். அன்று முதல் அவர் எனது தலைவர் ஆனார். நான் அவருக்குச் சுவீகாரப் புத்திரனாகி விட்டேன். பொது வாழ்வில் அன்றிலிருந்து இன்றுவரை சுவீகாரப் பிள்ளை தான் நான் அவரது குடும்பத்தாருக்கு ! இன்றும் கூட அந்தத் தொடர்பு விடவில்லை எனக்கும் அவருக்கும். ஏன்? அவருடைய அண்ணார் பிள்ளை சம்பத் என்னுடைய சுவீகாரப் பிள்ளை. இப்போது 14 வருடங்கள் அவரோடு பழகினேன். 14 வருடங்களாகப் பொது வாழ்வில் இருக்கின்றேன்.
நான் அறிந்த ஒரே தலைவர், ஒரே கட்சி!
இத்தனை ஆண்டுகளிலும் நான் அறிந்த தலைவர், தெரிந்த தலைவர், பார்த்த தலைவர் இவர் ஒருவர்தான். வேறு தலைவரின் தலைமையில் நான் வேலை செய்ததும் கிடையாது, செய்யவும் மனம் வந்ததில்லை, வராது. அதே காரணத்தினால் தான், இன்றுகூட, திராவிட முன்னேற்றக் கழகத்திற்குக் கூடத் தலைவரை ஏற்படுத்தவில்லை; அவசியம் என்று கருதவில்லை. இருதய பூர்வமான தலைவர், இருதயத்திலே குடியேறிய தலைவர், நமக்கெல்லாம் அப்பொழுது நல்வழி காட்டிய பெரியார் அமர்ந்த பீடத்தை தலைவர் பதவியை, நாற்காலியை காலியாகவே வைத்திருக்கிறோம். அந்த பீடத்திலே, நாற்காலியிலே வேறு ஆட்களை அமர்த்தவோ, அல்லது நாங்களே, அல்லது நானே
அமரவோ விரும்பவில்லை.
பகையுணர்ச்சி நமக்குக் கிடையாது
நான் மிக - மிகத் தெளிவாகக் கூறிவிடுகிறேன். திராவிட முன்னேற்றக் கழகம் எந்த விதத்திலும் திராவிடக் கழகத்திற்கு எதிரானதல்ல, எதிர்நோக்கம் கொண்டது மல்ல. கொள்கை ஒன்றே, கோட்பாடும் ஒன்றே. அங்கிருந்தவரில் பெரும்பாலோர் தான் இங்கு இருக்கின்றனர். குடும்பத்தலைவரின் போக்கு பிடிக்காத காரணத்தால், மக்கள் வேறு மனையில் வசிக்கும் பண்பினைப்போல, தன்மையைப் போல. புகையுணர்ச்சி சற்றும் கிடையாது நமக்கு.
இக்கூட்டத்தின் இடையே மழை பொழிந்து சற்று சங்கடத்தைத் தருவது போல, இடை இடையே சிறுசிறு தூறல்கள் தூறலாம், நமமிடையே அது வார்த்தை வடிவிலே வரலாம்; விசாரப் படாதீர்கள். அதுவும் அந்தப் பக்கமிருந்துதான் வரலாம். இப்பக்கமிருந்து நிச்சயம் உண்டாகாது.
மோதுதல் வீண் வேலை
பெரியார் தான் எங்களை மறந்தார். உதாசீனம் செய்தார், உதாவாக்கரைகள் என்று கூறினார், மனம் நோகும்படி பேசினார், எழுதினார், நடந்தார், நடந்துகொண்டிருக்கிறார். நாம் அவரோடு மேலும் மேலும் போராடவோ மோதவோ போவதில்லை. விவேகமில்லை என்று கருதுவதால், வீண் வேலை என்று நினைப்பதால்.
எனக்கு விளைவு தெரியாதா?
அவர் போக்கைக் கண்டித்ததால் என்ன திடீர் லாபம் ஏற்பட்டு விட்டது. எனக்கோ, அல்லது என்னோடு நிற்கும் நண்பர்களுக்கோ? ஒன்றுமில்லை எனக்குத் தெரியாதா? யார் என்ன கூறுவர் என்பது. எனக்குத் தெரியும். பெரியாரைக் கண்டிப்பதால் சிலர் ஏசுவர், சிலர் தூற்றுவர் பற்பல விதமாக. நேற்றுவரை அறிஞன் என்று போற்றப் பட்டானே இன்று எனன அறிந்தான் இவன்? என்று கேலி செய்யும் கூட்டம் கிளம்பும் என்பது தெரியும். நான் எழுதிய சினிமாக் கதையைப் பற்பல விதமாகப் புகழ்ந்தவர்களும், என்னப்பா, அதிலே இருக்கிறது? என்று நையாண்டி செய்வர் என்பதும் தெரியும். நேற்றுவரை எனது கம்பரசத்தை இனிப்பாகக் கருதியிருந்தோர். இன்று பழைய கரடியாகக் கருதுவோராகக் கிளம்புவர் என்பதும் அறிவேன். நான் ரேடியோவில், ஆங்கிலத்தில், பாரதியார் பற்றிப் பல நாள் முன்னரே பேசியிருக்கிறேன். ''மக்கள் கவி பாரதி' என்ற தலைப்பிலே: ஆங்கிலத்திலே அப்போது போற்றினர். ''ஆகா எங்கள் அண்ணாவைப் பார். உண்மைப் பாரதியாரைப் படம் பிடித்துக் காட்டுகிறான்'' என்று போற்றினர். இன்றோ, "பார்பார் ! பயல் பாரதி விழாவிலே கலந்துகொண்டு காங்கிரசுக்கு நல்ல பிள்ளையாகிறான" என்று தூற்றுவர் என்றும் தெரியும். தெரிந்தும் கடமையுணர்ச்சி, மனிதப் பண்பு ஆகியவை என்னைப் பெரியார் திருமணத்தைத் தகாதது என்று கூறிட வைத்தன.
எனக்கு எதிலே குறை ஏற்பட்டது?
எனது பீடத்தைக் காலி செய்து விட்டு வந்து விட்டேன் அங்கிருந்து நானாகவே. நான் விரும்பினால், விரும்பி யிருந்தால், அங்கேயே இருந்திருக்கலாம், எல்லாவகை விருந்துகளோடும். என் நிலை என்ன அங்கே சாமான்ய மானதா? எளிதில் கிடைக்கக் கூடியதா? இல்லையே அவர் அங்கே கடவுள் நிலையில் இருக்கிறாரென்றால், நான் தானே அர்ச்சகன்! அவர் தம்பிரான் என்றால், நான் தானே கட்டளைத் தம்பிரான்! அவர் தலைவர், நான் தளபதி ! என்று தான போற்றப்பட்டேன். புகழப்பட்டேன். இன்று அவரது " வாழ்க்கைத் துணை நலம்'' ஆன மணியம்மையும் கூட எனக்குத்தான் மற்ற எவரையும் விட அதிக மரியாதை, வரவேற்பு காட்டியிருக்கிறார். பெரியார் எழுதுவதாகக் கூறின டிரஸ்கலும் என் பெயர் தானே முதலில் இருந்திருக்கும்! நான் என்ன இவ்வளவு விருதையும் புகழையும் கெடுத்துக்கொள்ள பித்தனா? வரட்டு ஜம்பம் பேசி, கழகத்தில் புகழ் வாழ்வைக் கெடுத்துக்கொள்ள நான் என்ன வெறியனா? அல்லது இதை விட்டு வேறு வேலை தேட குமாரசாமி ராஜாவிடம் ஏதாவது அப்ளிக்கேஷன் போட உருக்கிறேனா? அதுவும் இல்லையே! எனக்கு என்ன லாபம் ஏற்படும் என்று அவரைக் கண்டிக்க வேண்டும்? கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் !
பெரியாரோடு மாறுபட்ட கருத்துக்கொண்டவன் என்று கூறப்படுகிறது. சிற்சில விஷயங்களிலே நான் மாறுபட்ட கருத்துக் கொண்டிருந்தாலும், நெடுநாட்களாகவே சில கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தாலும். அவைகளைப்பற்றி நான் கவலைப்படவில்லை. முடிந்த அளவு ஒத்துழைத்தே வந்திருக்கிறேன். முடியாத காலத்தில் மிக மிகக் கண்ணியமாக ஒதுங்கியே இருந்திருக்கிறேன். பெரியார் காலம்வரை அவர் வழிப்படியே நடக்கும் கழகம் பிறகு பார்த்துக்கொள்வோம், என்ற போக்கைக் கொண்டிருந்தவன்.
கண்டித்தவரில் முன்னோடும் பிள்ளை குருசாமியே!
சில தோழர்கள் இந்தத் திருமண விஷயத்தைக் கேட்டபோதே பெரிதும் ஆத்திரமும் ஆவேசமும் கொண்டனர் ; துடிதுடித்தனர். உடனே அப்படிச் செய்ய வேண்டும், இப்படிச் செய்ய வேண்டும் என்று ஆவல் கொண்டனர். இதில் முக்கிய பங்கு கொண்டு முதல்வராய்த் திகழ்ந்தவர் தோழர் எஸ். குருசாமி அவர்கள் தான். அவர் கூறினார் என்னிடம் என்ன அண்ணா நாம் சும்மா இருக்கக் கூடாது. உடனே ஒரு கண்டனக் கூட்டம் சென்னையில் போட்டே தீர்க்க வேண்டும் கூட்டம் போடுங்கள். நானே தலைமை வகித்து நடத்துகிறேன் என்று வீர முழக்கமிட்டார்.
இதனைத் தடுத்து நிறுத்தியது. நான் தான். அவ்விதம் ஆத்திரப்பட வேண்டாம், வேண்டுகோள விடுப்போம்; விளைவைப் பொறுத்திருந்து பார்ப்போம் என்று சமாதானப் படுத்தினேன்.
ஈரோடு மாநாடே காட்டும்!
தூத்துக்குடி மாநாட்டைக் கண்டவர்கள், ஈரோடு மாநாட்டையும் காணத்தானே நேர்ந்தது. தூத்துக்குடி மாநாடு முடிந்ததும் என்ன பேச்சு நடந்தது, நாட்டிலே சிலரிடமாவது? தூத்துக்குடி மாநாட்டுக்கு அண்ணாதுரை வரவில்லை, ஒழிந்தான் இதோடு. கழகத்தை விட்டு மட்டு மல்ல, பொதுவாழ்க்கையே அவனுக்கு இனிக் கிடையாது. அஸ்தமித்து விட்டது பொது வாழ்வு என்று எக்காளமிட் டனர். அது மட்டுமா? தனியாக அவன் வந்தால் அவன் வாழ்க்கையே முடிந்து விடும், என்ற நிலைதான் என்று கூட பேசப்பட்டதாம். அப்படிப்பட்ட நிலை வெகு விரை விலே மாறி எனக்காகப் பெரியாராலேயே, பெரியாரின் ஊரிலேயே, ஈரோடு நகரத்திலேயே, மாபெரும் மாநாடு எனது தலைமையில் நடத்தப்பட்டது. அடையும் ஆறுதல் நேரத்திலே இந்த வரவேற்புப் பாத்திரம் அவர் கண்களில் படாமலா போகும் ! அப்படி அவரால் அன்பாக நடத்தப் பட்டு வந்த நான் இல்லை ! திரும்பிப் பார்த்தால் சம்பத்து இல்லை ! குமபகோணம் போனால் வரவேற்கக் குடந்தை தோழர் கே. கே. நீலமேகம் இல்லை ! திருச்சியிலே பராங்குசமுமில்லை ! மதுரையிலே முத்து இல்லை ! விருதுநகர் ஆசைத்தம்பி, தூத்துக்குடி நீதிமாணிக்கம், கே வி. கே. சாமி முதலானோர் காணோம். நம் பக்கம் கோவில்பட்ட வள்ளி முத்து, பெத்தாம்பாளையம் பழனிச்சாமி, சென்னையிலே நடராஜன், கோவிந்தசாமி முதலிய யாருமே நமமை விட்டு ஏகினர்; என்ன உழைப்பு உறுதி படைத்தோர்கள் / இவர்கள் இல்லையே என்ற ஏக்கம் பெரியாருக்கு வராமலா போகும்! வந்தே தீரும்! அப்போது அவர் மகிழ்ச்சி அடைவாரா? அவர் வேண்டுமானால் நடிக்கலாம், மகிழ்ச்சியோடு இருப்பதாகக் காட்டிக் கொள்ளலாம் பிறர் முன். பலர் என்னைக் கூறுவர் நான் மிக நன்றாக நடிக்கிறேன் என்று. இதெல்லாம் நான் ஐயாவிடம், பெரியாரிடம் கற்ற பாடத்திலே ஒரு சிறு பகுதி. ஐயா மிக மிக நன்றாக நடிப்பார் மகிழ்ச்சியோடு இருப்பது போல. உண்மையில் மகிழ்ச்சி இருக்காது, இருக்க முடியாது, மனித உள்ளம் படைத்த எவராலும் இயலாது.
சோம்பேறி தனத்தின் விளைவா?
திராவிட முன்னேற்றக் கழகத்தில் பணியாற்றத் தொடங்கி யிருக்கிறோம். நான் மிகவும் சோம்பேறி, பெரியார் போல் உழைக்க முடியாது என்று கூறுகிறார்கள். நான் ஒப்புக் கொள்ளுகிறேன். பெரியார் போல உழைக்க முடியாது. என்று ஏன்? அவருக்கு உழைக்க சக்தி, போது மான வசதியிருக்கின்றன. அவ்வளவு வசதியும், சக்தியும் பெற்றவனல்ல நான் என்பது மட்டுமல்ல. பெரியார் போல உழைப்பதே தவறு, கூடாது, தேவையற்றது என்ற கருத்துடையவன் நான் ; அது ஜனநாயகத்திற்கு ஏற்றதல்ல ; முரண்பட்டது என்ற கருத்தும் கொண்டவன். ஒரே மனிதர் தானே எல்லாப் பொறுப்பையும் வகிப்பது தவறு. பிறருக்கும் சந்தர்ப்பம், வசதியளிக்க வேண்டியது கடமை என்ற போக்கை கொண்டவன். சோம்பேறி என்று கூறுவது தான் எனக்கும் பொருந்துமா? என்று பாருங்கள். எட்டு ஆண்டுகளாக நான் ஒரு வார இதழ் 'திராவிடநாடு' நடத்தி வருகிறேன். காஞ்சியிலிருந்து இதனை நான் ஒருவனே நடத்தி வருகிறேன். இது சோம்பேறித்தனத்தின் விளைவா? என்று கேட்கிறேன். இந்த பத்திரிகை யிலே ஒரிரு பக்கங்களைத் தவிர, மற்றவை யாவும் என்னாலேயே எழுதப்படுபவை. இதுவும் சோம்பேறித்தனத்தின் விளைவா? மாலை மணி சென்னையிலும், திராவிடநாடு, காஞ்சியிலும் நடக்கின்றன. மாலை மணி தினசரிப் பத்திரிகை. இரண்டுக்கும் நான் ஆசிரியர் வேலை பார்க்கிறேன். சோம்பேறித்தனத்தின் விளைவா?
இடையிலே பல பகுத்தறிவுப் பிரசார நாடகங்கள் எழுதி யிருக்கிறேன். சோம்பேறித்தனத்தின் விளைவா? சில நாடகங்களில் நானே வேஷம் போட்டு நடித்திருக்கிறேன். சோம்பேறித்தனத்தின் விளைவா? இரண்டு சினிமா கதைகள் எழுதியிருக்கிறேன், சோம்பேறித்தனத்தின் விளைவா? பத்துப் பதினைந்து புத்தகங்கள் வேறு வெளி வந்திருக்கின்றன; சோம்பேறித் தனம் தான் காரணமா? இதனிடையே பல முறை பல பிரசாரக் கூட்டங்களுக்கும் போயிருக்கிறேன், சோம்பேறித்தனத்தின விளைவா? இல்லை யென்பது தானே பதில் எதற்காக இதனைக் கூறுகிறேன், சோம்பேறி என்று எண்ண வேண்டாம், காரிய மாற்றும் திறன் உண்டு. சக்தி இருக்கிறது; என்பதைக் காட்டத்தான். வேலை செய்யும் திறமையும், ஆற்றலும், ஆர்வமும் நிச்சயம் உண்டு. சமீபத்தில் தோழர் குருசாமி அவர்கள், இளைஞர் - முதியோர் பற்றி ஆராய்ச்சி நடத்தி கிழவர்கள் திறமையைப் பற்றி பெரிதும் எழுதியிருக்கிறார்கள். நான் என்ன துள்ளி விளையாடும் பள்ளிப் பருவத்துப் பாலகனா? அல்லவே, நாற்பது வயதை அடைந்தவன் தான். இளைஞனின் துடிதுடிப்பும், கிழவரின் பொறுமையும் காரியமாற்றும் கருத்தும் ஒருங்கே கொண்ட வயது தான். நாற்பதைக் கடந்தவன் ஐம்பதுக்கு உட்பட்ட வன், அதாவது இந்த பத்து ஆண்டைத்தான, இளமைக்கும், முதுமைக்கும் இடையேயுள்ள காலம் என்று கூறுவர். பெரியார் தமது சுயமரியாதைக் கோட்பாட்டை இந்தப் பத்து ஆண்டுகளில் தான் ; அதாவது நாற்பதுக்கும் ஐம்பதுக்கும் இடையே தான, அமைத்தார். என்னாலும் செய்ய முடியும், முறைப்படி அவசியத்திற்கேற்ற வகையில்.
எந்த நலம் கெட்டு விட்டது
மற்றொரு காரணம் கூறப்படுகிறது. அதாவது நான் சுய நலத்துக்காகவே இந்த எற்பாட்டை எதிர்க்கிறேன் என்று. எனக்குத் திராவிடர் கழகத்திலே இருந்த போது எந்த நலன் கெட்டுவிட்டது? ஒன்றும் கெடவில்லையே ! நாடகம் எழுதாதே என்று தடுத்தாரா தலைவர். இல்லையே! சினிமாவுக்குக் கதை எழுதாதே என்று கண்டித்தார் பெரியார், என்றாவது? கிடையாதே ! சுமாலமாயிருந்தாது எனக்கு அங்கு இருப்பதால் என்ன கெட்டு விட்டது? ஒன்றும் கெடவில்லையே ! சிற்சில சமயம் தலைவர் போக்குப் பிடிக்காது இருந்திருக்கலாம், அவர் கருத்துகள் எனக்குப் பொருத்த மற்றதாகத் தோன்றிருக்கலாம். அப்போதெல்லாம் கூட முடிந்தவரை ஒத்துழைக்கத்தான் செய்தேன், சிற்சில சமயம் நாசுக்காக பெருந்தன்மையாக ஒதுங்கியுமிருந்தேன். அரசியல் துறவரம் பூண்டுமிருந்தேன் சில காலம். இன்று காரணமின்றி தூற்றப்படுகிறேன் ; கவலை யில்லை; நேற்று நம்மைப் புகழந்தவர் தானே, அவர் ! இன்று கூட என் மனக் கண் முன்னே ஒரு காட்சி ஓடி வந்து நிற்கிறது. ஈரோட்டிலே விடுதலை காரியாலயத்தில் நான் வேலை பார்த்ததுக் கொண்டிருந்த காலம் அது; அப்போது விடுதலையில் சென்னை கார்ப்பரேஷன் பற்றி ஒரு தலையங்கம் தீட்டினேன். "ரிப்பன் மண்டபத்து மகான்கள்" என்பது அதன் தலைப்பு. அன்று மாலை நான் ரோட்டில் பெரியாரின் மூன்றடுக்கு மாளிகையில், கடைசி மாடியில் உலவிக் கொண்டிருந்த நேரத்தில் பெரியார் மூன்று மாடிகளையும் கஷ்டத்துடன் படியேறி, கடந்து வந்து, என் முதுகைத் தட்டி "அண்ணா துரை ! உன் தலையங்கம ரொம்ப நன்றாயிருந்தது. எனக்கு மிகவும் சந்தோஷம்" என்று வெகுவாகப் பாராட்டினார். இதைக் கேட்ட நான் 'இதற்காக ஏன் இவ்வளவு கஷ்டப் பட்டு மாடி ஏறி வரவேண்டும்? நான் சாப்பிடக் கீழே வரும்போது சிரமமின்றிக் கூறியிருக்கலாமே இதனை என்று தெரிவித்தேன். அதற்குப் பெரியார், என மனதில் நல்லெண்ணம் தோன்றியது. சந்தோஷப்பட்டேன். அதை உடனே கூறிவிட வேண்டுமென்று நினைத்தேன். ஏனென்றால் நான் பிறறைப் புகழ்ந்து பேசிப் பழக்கப்பட்டவனல்ல, ஆகவே உடனே சொல்லி விட வேண்டுமென்று வந்து சொல்லி விட்டேன் என்று சொன்னார். இந்த ஒரு சம்பவம் போதுமே எனக்கு ஆயுள் பூராவும். அவரிடம் திட்டு வாங்கினாலும் பரவாயில்லையே. புகழ்ந்த பிறகு தானே திட்டுகிறார். முதலிலிருந்து கடைசிவரை திட்டு வாங்கிச் கொண்டு, இன்னும் இருந்து கொண்டிருக்கிறார்களே, அதை விட நான் மேல். லாப நஷ்ட கணக்குப் போட்டுப் பார்த்தேன். அவர் புகழ்ந்தது அதிகம், இகழ்ந்தது கொஞ்சம். எனவேதான அவர் திட்டுவதைப் பற்றிக் கவலைப்படவில்லை. நான் அவரிடம் வெளிப்படையாக கொஞ்சம் அதிருப்தி தெரிவித்தது கோவை மாநாட்டில் தான். நான் கேட்டேன் திருவண்ணாமலையில் ஆச்சாரியாரைச் சந்தித்துப் பேசிய இரகசியம் என்ன? கூறுங்கள் வெளிப்படையாக என்று கேட்டேன். இதைக்கூட நான் கேட்க முதலில் விரும்பவில்லை. ஆனால் நாட்டு நிகழச்சிகள் என்னைக் கேட்கும்படி வைத்து விட்டன. என்னைக் கண்ட பலர், "ஏனப்பா முன் ஆச்சாரியார் வந்த போது கறுப்புக் கொடி பிடித்தீர். ஜெயிலுக்கும் போனீர்கள். இப்பொழுது என்ன உங்கள் தலைவர் இகசியமாக சந்திக்கிறார் திருவண்ணாமலையில்", என்று கெலி செய்தனர். நையாண்டி செய்தனர். நகைப்புக்கு இடமாக இருந்தது நிலைமை. இந்த நிலைமை தெளிவுபட, அதற்குப் பின் நான் அவரைச் சந்தித்தது அந்த மாநாட்டில் தான். திருவண்ணாமலையில் என்ன இரகசியம் பேசினீர்கள் என்று கேட்டேன். அதோடு நிற்கவில்லை, நடந்ததைச் சொல்வது, நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் கெடுதி என்று தோன்றினால், சொல்லத் தேவையில்லை, சொல்ல வேண்டாம் என்றும் அன்று, அங்கு, தெரிவித்திருக்கிறேன. சொல்லும்படி வற்புறுத்த வில்லை என்றும் கூறினேன்.
அறை கூவல் விடுத்துப் பார்க்கட்டும்
கோவையிலே பெரியார் பின்னர், தான் ஏதோ தீவிர திட்டத்தில் இறங்கப் போவதாகவும் தன்னைத்தானே முதல் பலியாக்கிக் கொள்ளப் போவதாகவும் தெரிவித்தார். இதைக் கேட்ட நான் பயந்தே போனேன். என் அவர் பலியாக வேண்டும், கூடாதே, எனறு நினைத்தேன். ஆனால் சமீபத்தில் பெரியார் திருச்சியில் பேசிய போக்கை பார்த்தவுடன. எனக்கு அன்று இருந்த பயம் நீங்கிவிட்டது. பெரியார் கூறியிருக்கிறார் திருச்சியில், நான் இன்னும் 10 ஆண்டுகளாவது வாழவிரும்புகிறேன். அதற்காகத்தான் நான் திருமணம் என்கின்ற பேரால் ஒரு ஏற்பாடு, எனது வாழ்க்கைக்குத் துணை ஏற்படுத்திக் கொண்டேன் என்று பேசினார். அவர் நன்றாக வாழட்டும்! சீனக் கிழவரைப் போல, பர்மிய நாட்டு வயோதிகரைப் போல். துருக்கி நாட்டு பெரியாரைப் போல் வாழட்டும் இன்னும் காந்தியார் வாழ விரும்பியபடி 125 வயது வரையில் வாழட் டும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும் பணியைக கண்களால் காணட்டும். அவர் கொள்கை, திட்டம், நம்மால் நல்ல முறையில் நிறைவேற்றப்படுகிறதைக கண்டு களிக்கட்டும் ! தவறு இருந்தால் திருத்தட்டும் ! போகும் பாதை தவறு என்றால் சுட்டிக் காட்டட்டும் / ஆனால் வேலை செய்வதைத் தடுக்க வேண்டாம், பகை உணர்ச்சியை வளர்க்க வேண்டாம், திராவிட கழகத்துக்கும் - திராவிட முன்னேற்ற கழகத்துக்கு மிடையே ! நீங்கள் எப்படி வேலை செய்கிறீர்கள் என்று ஒரு challenge அறைகூவல் விடுத்து விட்டு அவர் தம் வழி நடந்து கொண்டு போகட்டும்!
சமதர்மப் பூங்கா
திராவிடர் கழகமாகட்டும், திராவிட முன்னேற்ற கழக மாகட்டும். படை வரிசை வேறு வேறு என்றாலும் கொள்கை ஒன்றுதான், கோட்பாடு ஒன்றுதான் ; திட்டமும் வேறு வேறு அல்ல, என்ற நிலை இருந்தே தீரும். படை வரிசை இரண்டு பட்டு விட்டது என்று எக்காள மிடும் வைதீகபுரிக்கும், வடநாட்டு ஏகாதிபத்தியத்துக்கும் சம்மட்டியாக விளங்க வேண்டும் இரு கழகங்களும். இரு திக்குகளிலுமிருந்தும் வடநாட்டு ஏகாதிபத்தியத்தை ஒழித்து வைதீகக் காட்டை அழித்து சமதர்மப் பூங்காவாகத் திராவிடத்தைச் செழிக்கச் செய்தல் வேண்டும்.
அதிலே எந்த கழகம் பூங்கா அமைத்தாலும் அதில் பூக்கும் புஷ்பங்கள், காய்கள் கனிகள் திராவிடத்தின் எழுச்சியை, மலர்ச்சியை, மகிழ்ச்சியைத்தான் குறிக்கும். இரு பூங்காவும் தேவை. ஒன்றோடொன்று பகைக்கத் தேவையில்லை. அவசியமுமில்லை. எது புஷ்பித்தாலும் மாலையாகப் போவது திராவிடத்துக்குத்தான் என்ற நல் லெண்ணம் வேண்டும். அதை விட்டு நள்ளிரவிலே பூங்காவின் வேலி தாண்டி பாத்தியை அழிக்கும் வேலிதாண்டிகள் வளரக் கூடாது.
கொள்கையைப் பரப்புவதே பணி
இப்போது மழை வந்தது. சிறிது நேரம் சங்கடமாகத் தான் இருந்தது. இப்போது மழை நின்றிருக்கிறது. மழை பெய்ததற்கு முன்பு இருந்த வெப்பமமாறி குளிர்ந்த காற்று வீசுகிறது. மெல்லிய மேகம் பரவி அழகளிக்கிறது. மழை பெய்து நின்று கறுத்த வானம் வெளுத்திருப்பது போல இன்று புதுக் கழகம் அமைத்து முன்னேற்ற வேகத்துடன் மோதுதல் இன்றிப் பணியாற்றப் புறப்பட்டு விட்டன.
கொள்கையைப் பரப்புவதே நமது முதல் பணி. பகைமை உணர்ச்சியை அடியோடு விட்டொழிக்க வேண்டும். நான் உண்மையிலேயே கூறுகிறேன், நமது எழுத்தாளர் எவரும் கடுமையான நடையில் தாக்குவதைக் குறைத்து விடவேண்டும் இதனால் நமக்கு லாபமில்லை. பொது வாழ்வில் ஈடுபட்டுள்ள அத்தனை பேருக்கும் நஷ்டந்தான். திராவிட கழகத்தை நாம் தாக்கி, முனனேற்றக் கழகத்தை அவர்கள் தாக்கி, அவர்கள் லாபத்துக்காகத்தான் வேலை செய்கிறார்கள் என்று நாம் கூற, இல்லை ! இல்லை! அவர்கள் தான் சுயநலமிகள், லாப வேட்டைக்காரர்கள் என்று அவர்கள் ஏச, மக்கள் இவர்களுக்கும் லாபம்தான், குறிக்கோள், அவர்களுக்கும் லாபம்தான் குறிக்கோள், என்று கருதும் நிலை ஏற்பட்டுவிடும். எனவே தான் கூறுகிறேன்.
நமமிடையே பகையுணர்ச்சி கூடாது. இதேசமயத்தில் கொள்கையை விட்டுக் கொடுக்கவும் கூடாது. பிரிவினை, பொருளாதார சீரழிவிலிருந்து மீட்சி, பழைமையிலிருந்து விடுதலை ஆகிய லட்சியங்களுக்காகவே உழைக்க வேண்டும்.
பாதை தவறிய தலைவரைப் புறக்கணித்தோம்
இவ்வளவு பேசுகிறாயே, பேதம் கூடாது, பிளவு கூடாது என்று ! ஏன் நீங்கள் அங்கிருந்தே பணியாற்றக் கூடாது? விலகுவானேன்? வேறு கட்சி அமைப்பானேன்? என்று கேட்கத் தோன்றும். கேள்வி சரிதான். பாதை தவறிய தலைவரைப் புறக்கணித்தோம். தவறை தவறுதான் என்று எடுத்துரைத்தோம். அவரோடிருந்து பணியாற்ற முடியாத நிலைமையிலிருக்கிறோம். எவரிடமும் நம்பிக்கையில்லை என்ற இழி சொல்லையும், உதவாக்கறைகள் என்ற பழியையும், தூற்றலையும், ஏசுதலையும் சுமக்கும் பெரும்பாரம், பெருஞ்சுமை ஏற்பட்டுவிட்டது. இவைகளைத் தாங்கிக்கொண்டு அவரோடு ஒத்து வேலை செய்வது முடியாத காரியம். ஆகவே, விலகினோம் பெருந்தன்மையோடு வேறு அமைப்பில் பணியாற்றுகிறோம், லட்சியத்தை நிறைவேற்ற.
பொறாமை கிடையாது
எந்த அளவுக்கு வேலையைக் குறைத்துக் கொள்ளலாமோ அந்த அளவுக்குக் குறைத்துக் கொள்ளப் பிரியப்படுபவன் நான். அதுவே எனது சுபாவம். அப்படிப்பட்ட நான் விலகி, வேறு கட்சியில் தொண்டாற்றத் தொடங்கியிருக்கிறேன். காரணம், எனது நண்பர்கள், கழகத்தில் முக்கியப் பங்குகொண்டு தொண்டாற்றும் பெரும்பாலோர் பொது வாழ்விலேயே சலிப்புறறு, பொது வாழ்வையே விட்டு விலகும் அளவுக்குச் சென்றனர்.
பெரியாரின் திருமண ஏற்பாட்டைக் கண்டித்து 250 கழகங்கள் தீர்மானங்கள் நிறைவேற்றின, வேலை செய்ய முடியாது அவரோடு என்று ! நிர்வாக அங்கத்தினர்களின் மிகப் பெரும்பான்மையோர் அவரோடு ஒத்துழைக்க முடியாது எனக் கூறிவிட்டனர். எல்லாப் பேச்சாளர்களும், எழுத்தாளர்களும் அவரோடு ஒத்துழையாமை செய்தனர். கழகப் பத்திரிகைகள் யாவும் அவரை ஆதரிக்கவில்லை.
பெரியாருக்கு வலது கை இடது கை என இருந்தவர் - பெரியாரின் முனனோடிகள், பின்னே சென்றவர்கள் - உறவினர்களிலும் உற்றாராக இருந்தவர்கள் - உழைத்தவர்கள், உள்ளப் பண்பு மிக்கவர்கள், உற்சாகமுள்ளவர்கள் உணர்ச்சி மிக்கவர்கள், ஊருக்குத் தெரிந்தவர்கள், இவர்கள் யாவரும் பிரிந்தனர் அவரை விட்டு ! அவரோடு ஒத்துழைக்கவில்லை. காரணம் அவர் திருமண விஷயந்தான. மணியமமையைப் பெரியார் திருமணம் செய்து கொண்ட விஷயம் திராவிட கழகம் இது வரை சொல்லிவந்த கொள்கைகளுக்கு விரோதமாய் இருக்கிறது. திராவிடர் தலைகளைக் குனிய வைக்கும்படி செய்திருக்கிறது என்பதைத் தவிர, இவ் விஷயத்தால் எனக்கோ மற்ற யாருக்கோ பொறாமை கிடையாது. நான் ஏன் இதில் பொறாமைப்பட வேண்டும்?
பெரியாரை மணந்துகொள்ள மனுப்போட்ட பெண்ணா நான், பொறாமைப்பட! சம்பத்துக்குப் பரிந்து பேச அவசியமில்லை!
பெரியாருக்குச் சொந்தமான குடும்பச் சொத்துக்கள் இத் திருமணத்தின் காரணமாக சம்பத்துக்கே வராமல் போயவிடும். சம்பத்துக்காக நான் பரிந்து பேசுகிறேன், பெரியார்மீது துவேஷப் பிரசாரம் செய்கிறேன் என்று கூறுகிறார்களாம். உங்களுக்கு நான் ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். பெரியார் சொத்து விபரம் அதன் ஏற்பாடு உங்களில் பலருக்குத் தெரியாது. எனவேதான், அவர்களால் பேச முடிகிறது இதுபோல. சட்ட நுணுக்கம் தெரியாதவனல்ல சம்பத்து ! சொத்து விஷயத்தில் ஆசை இருந்தால் சம்பத்து மணியமமையிடமே நயமாகப் பேசிப் பணம் வாங்கிக் கொள்ளத் தெரியாதா? சென்று பேச
முடியாத நிலையிலே இருக்கிறாரா அம்மையார் ? சமபத்தின் சின்னம்மாதானே, இப்போது அவரைச் சந்தோஷப்படுத்தி சலுகைகள் பெறத் தெரியாதவனா?
பின் என் குடும்பத்தை, வீட்டைவிட்டு வெளியேறினான். அப்போது அவன்தான் விடுதலையின் மானேஜர். பெரியாரின் திருமணச் செய்தி கேட்ட அன்று, 18, 20 வயதுள்ள சுலோச்சனா சென்னை, பெரியார் வீட்டிலிருந்து தனது ஒன்றரை வயதுக் குழந்தையோடு தன்னந் தனியாக வெளியேறி ஈரோடு சென்றார்கள். மணியம்மை உள்ளே புகுந்தார். மருமகள் வெளியேறுகிறார். தேவையா? பெரியாரின் திருமணத்தால், அவருடைய குடும்பத்தினரும், உறவினரும் தலை குனிந்தனர். திராவிட கழகத்தினர் சகலரும் தலை குனிந்து தேம்பி அழுதனர். இந்த வெட்கக் கேட்டைத் தாங்க முடியவில்லை. மாற்றார் மனமகிழும நிலை வந்தது. கல்கி போன்ற பத்திரிகைகள் கேலியும், கிண்டலும் செய்யுமளவுக்குச் சென்றனர். திராவிட கழகம் தன்னாலே அழிந்துவிடும் என்று கேலிச் சித்திரம் தீட்டுமளவுக்குக் கொண்டு போய் விட்டது. இந்த நிலை வேண்டாம் என்றுதான் இப்போது திராவிட முன்னேற்றக கழகம் தனியாய், பெரியார் வகுத்துச் சென்ற அதே பாதையில் தீவிரமாய்ச் சொல்ல முனைந்திருக்கிறது. இன்னும் அவருக்கும் எனக்கும் உள்ள பற்று, பாசம் அகலவில்லை; என்னை விடவில்லை; விட்டகுறை தொட்டகுறை போகவில்லை; நான கேட்கிறேன், தோழர்களே! எது முக்கியம் நமக்கு? லட்சியமா? பெரியாரா? லட்சியம் தேவை. பெரியாரல்ல என்ற முடிவு செய்தோம். பிரச்சனை முடிந்தது. இதோ நம் கண்முன் வடநாட்டு ஏகாதிபத்தியம் மக்களைப் பாழ்படுத்தும் பாசிசம், பதுங்கிப் பாய நினைக்கும் பழமை இவைகள் தான ஒழிய வேண்டும்.
மொழிப் பிரச்னைக்கு முடிவுகாண வேண்டாமா?
தற்போது நம்மால் வெறுத்து ஒதுக்கப்பட்ட இந்தி, டெல்லி அரசியல் நிர்ணய சபையிலே, அரசியல் திட்டத்திலே முக்கிய அங்கமாக ஏற்பட்டுவிட்டது. நிலைமை என்ன இப்போது? இந்தி கூடாது என்று கூறினோம். குற்றமெனறு கைது செய்தனர். இனி அரசியல் திட்டத்துக்கே விரோதி. நாட்டுக்கே துரோகி என்று குற்றஞ் சாட்டக்கூடும். அந்த நிலையிலே வடநாட்டு ஏகாதிபத்தியம் தன்னைத்தான் பலப்படுத்திக்கொரண்டு முன்னேறுகிறது. மூன்று மொழிகளை நாம் சுமக்க வேண்டிய பெரும் பாரம் நமக்கு ஏற்பட்டுவிட்டது. இந்தி நுழைவுக்குப் புதிய பலம், புதிய பாதுகாப்புத் தரப்பட்டுவிட்டது டெல்லி சர்க்காரால். இங்குள்ள மக்களின் நிலையை, நாட்டத்தை நாம் அறிவிக்க வேண்டும் அரசாங்கத்துக்கு.
அறிவுப் புரட்சிக்கு எதிர்ப் புரட்சி!
மற்றோர் புறம் பழமையும் வைதீகமும் காலட்சேபம், கதர்ப் பிரசங்கம் என்ற முறையிலே நாட்டிலே தமது பிடியை பலப் படுத்திக்கொள்ள வேலை செய்து வருகின்றன. சனிக்கிழமை 'ஹிந்து' பத்திரிகையை எடுத்துப் பாருங்கள் ! எத்தனையெத்தனை கதாப் பிரசங்கங்கள், காலட்சேபங்கள், பழமைக்குப் பக்கபலம் தேட, வைதீகத்தை வாழ வைக்க! அறிவுப் புரட்சிக்கு எதிர் புரட்சி செய்கின்றன சாமேத விளக்கம், அதர்வண விளக்கம், உபநிஷத்து உபான்யாசம், கீதாபதேசம் தேவார திருவாசக பாராயணங்கள், நாயனமார் ஆள்வார் புராணங்கள் இப்படிப் பழமை தனது பிடியைப் பலமாக இறுக்கிக்கொண்டு போகிறது. இந்த நாட்டுப் பாசீசம் இதற்குப் பக்கபலமாக நிற்கிறது. பழமையும் பாசீசமும் ஒன்றோடொன்று இணைந்து பகுத்தறிவுப் பாசறையைப் பாழபடுத்தித் தவிடு- பொடியாக்கத் திட்டமிடுகின்றன. நிலைமையை நன்கு பயன்படுத்தத் திட்டமிடுகின்றன. இந்த நிலையிலே நாம் பொறுப்புணர்ச்சியோடு இலட்சிய நோக்கோடு நடந்துகொள்ள வேண்டும். நாம் புரியும் பிரச்சாரம் பத்திரிகைகளிலே வராது, பழமைக்கு ஆதரவுதேடும் பணியில் அவைகள் முணைந்துள்ளன என்ற காரணத்தால். நம்மிடையிலே கலகம் என்றால் விளம்பரம் செய்வர் பத்தி பத்தியாக! நேற்று நடந்த நிர்வாகக் கமிட்டி உறுப்பினர் கூட்டத்தைப் பற்றி இந்து' பத்திரிகை வெளியிட்ட முறையைப் பாருங்கள். Split in Dravida Kazhagam திராவிடர் கழகத்திலே பிளவு என்று தலைப்புக்கொடுத்து சேதி போடுகிறது. நிர்வாக உறுப்பினர் கூட்டம் என்று சொன்னால் கமிட்டிக கூட்டம் போட என்று போட்டுக் காட்டுகிறது. பேதம், பிளவு அதிகமாக வழி வகுக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றியது என்ற சேதி போதும் என்றேன். போட்டதா அப்படியே? இல்லை! இது ஒரு சிறு சாம்பிள்' மாதிரி. நான் பெரியாரை குறை கூறினால் பத்தியாக ஆறுகாலம் தலைப்புடன் வரும். பெரியார் என்னை ஏசினால் பக்கம் பக்கமாக வரும். ஏன்? இருவரையும் பொது மக்கள் முன் அயோக்கியர்கள், சுய நலமிகள் என்று எண்ணும்படி செய்யத்தான். இதனால் யாருக்கு லாபம்? என்பது எங்களுக்குத் தெரியாதா? நாங்கள் என்ன, புராணங்கள் படிக்காதவர்களா? "குருக்ஷேத் திரம்" ஏற்பட்டால், கண்ணணுக்குத்தான் லாபம் என்பது எப்படி எங்களுக்குத் தெரியாமல் போய்விடும் ! மோதுதல் யாருக்குப் பயன்படும் என்பது தெரிந்து தான் செயலாற்றுகிறோம், தனியாக, தனி அமைப்பின்கீழ்.
ஓயமாட்டோம் உழைப்போம்!
பழமையும் பாசீசமும் முறியடிக்கப்படும் வரை ஓய மாட்டோம், உழைப்போம், உருவான பலனைக் காண்போம். அப்போது பெரியா 'பயல்கள் பரவாயில்லை' உருவான வேலை தான் செய்கிறார்கள் என்று உள்ளம் மகிழும் நிலை வரத்தான் போகிறது.
தூத்துக்குடி மாநாட்டுக்கு நான் போகவில்லை, ஒரு கேள்வித்தாள் சென்றது பெரியாருக்கு. "அண்ணா ஏன் வரவில்லை என்று.'' அதற்குப் பெரியார், ''முத்தன் ஏன் வரவில்லை, அப்புறம் எம். எஸ். சுப்புலட்சுமி ஏன் வரவில்லை, சுந்தராம்பாள் ஏன் வரவில்லை, என்று கேட்பீர்கள் போலிருக்கிறதே என்று அலட்சியமாகப் பதிலளித்தார்.
அதற்குப் பிறகு ஈரோடு மாநாட்டிலே "அண்ணா வந்திருக்கிறார், மகனிடம் பெட்டிச் சாவியைக் கொடுத்து விடுகிறேன்" என்று கூறும் நிலை வரத்தான் செய்தது. அவர் ''சாவியைக் கொடுத்தேன்'' என்று கூறினார். அந்தச் சாவி எந்தப் பூட்டுக்கும் பொருந்தாத சாவி, எனவே அது எந்தக் காரியத்துக்கும் உபயோகப் படவில்லை. ஆனாலும் தூத்துக்குடி மாறிரோடு வந்தது போல் இன்றுள்ள நிலை மாறத்தான போகிறது என்ற உறுதியோடு, உற்சாகத்தோடு பணி புரிவோம். நாட்டிலே ஆற்றி வந்த நல்லறிவுப் பிரச்சாரத்தைத் தொடர்ந்து நடத்துவோம் ! பாசிசப் பழப்மையையும் நாட்டைப் பாழ்படுத்தும் சக்திகளையு எதிர்த்துப் போராடுவோம். நாட்டிலே இன்று 144 ஏராளம். புத்தகங்கள் பறிமுதல் அச்சகங்களுக்கு ஜாமீன் தொகை ஓயவில்லை. குறையவில்லை. நேற்றுக்கூட நான் எழுதிய இலட்சிய வரலாறு' என்ற புத்தகத்தைப் பற்றிப் போலீஸார் அது என்ன? இது என்ன? என்று கேள்விமாரி பொழிந்தவண்ணம் இருந்தனர். வடநாட்டுப் பாசிச இயக்கத்தை ஒழிக்கப் பாடுபடும் திராவிட மக்களைப் பழமைப் பிடியினின்றும் விடுபட விரும்பும் பகுத்தறிவு வாதிகளை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று சர்க்கார் நினைத்துக கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு புத்தகமாகப் பறிமுதல் செய்துகொண்டே போகிறார்கள். அடக்கு முறையைப் வீசிக்கொண்டே இருக்கிறார்கள். இவ் விஷயமாக வெகு சீக்கிரத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் தக்கதொரு நடவடிக்கையிலே ஈடுபடப்போகிறது. சர்க்கார் காணத்தான் போகிறார்கள்! சர்க்கார் பறிமுதல் செய்த புத்தகம் பகிரங்கமாக விற்பனை செய்யப்படும் சைனா பஜாரில்!
இரண்யன் நாடகம் ஆடுக!
'இலட்சியவரலாறு 6 அணா' 'இராவண காவியம் ரூ6' ஆரியமாயை 6 அணா' ஆசைத்தம்பி புத்தகம் நாலணா' என்று தொண்டர்கள் விலை கூறுவதைக் கேட்கத்தான் போகிறோம். இலட்சிய வரலாறு புத்தகம் இப்போது கிடைக்காது, எப்பொழுதோ விற்றுத் தீர்ந்துவிட்டதால் இலட்சிய வரலாறு'' என்று கூறப்படும். முகப்பிலே மட்டும் ''இலட்சிய வரலாறு'' என்று இருக்கலாம். உள்ளே காலி காகிதம் வைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் விற்பர் இலட்சியவரலாறு என்று கூறி, பறிமுதல் செய்யப்பட்ட புத்தகங்கள் அனைத்தும் இப்படித்தான விறகப்படப் போகின்றன. அப்போது இந்த சாக்கார், என்ன செய்யப் போகிறது, எப்படி நடவடிக்கை எடுக்கப்போகிறது, எப்படி விளையாடப் போகிறது. பொதுமக்களும், பார்க்கத் தான் போகிறார்கள். இதேபோல் நமது இயக்க நாடகங்கள் தடை செய்யப்படுகின்றன சர்க்காரால். தகாத செயல் தான் இதுவும். தடை செய்யப்பட்ட நாடகங்களில் முதலாவதான, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் இயற்றிய இரணியன் அல்லது இணையற்ற வீரன் என்பது.
திராவிட முன்னேற்றக் கழக முக்கியஸ்தர்களைக் கேட்டுக் கொள்ளுகிறேன். மன்றாடிக் கேட்கிறேன். அவர்களின் முக்கிய வேலை, முதல் வேலை இந்த நாடகத்தை ஆங்காங்கு பொதுமக்கள் முன் நடத்திக்காட்டும் திட்டம் வகுக்கும்படி. இதற்கு நீங்கள் தயாரா? எத்தனை பேர் கைதூக்கிக் காட்டுங்கள் (கூட்டத்தினர் பெரும்பாலோர் கைகளும் உயர்ந்திருந்தன) எல்லோரும் கை தூக்கி விட்டீர்களே! இத்தனை பேரும் சென்றால் சர்க்கார் சிறையிலே இடமிருக்காதே! நமக்கும் திராவிடர் கழகத்துக்கும் பிளவு இல்லை, ஆனால் போட்டி உண்டு. போட்டி உணர்ச்சி உண்டு. தீவிரத்திலே அதாவது ஆங்கிலத்தில் கூறப்படும் Sportsmanship போட்டி உணர்ச்சி காரியம், ஆற்றும் திறமையிலே வேண்டும். இது கண்ணியத்தின் பெயரால், நாகரீகத்தின் பெயரால், நல்லறிவின் அடிப்படையில் ஏற்பட வேண்டும்.
புதுக் கழகம் ஒட்டுமாஞ்செடி
பகை உணர்ச்சியை வளர்த்து எதிரிகளுக்கு இடம் கொடுத்து ஏமாளிகளாகத் தேவையில்லை! நான் முன்னர் குறிப்பிட்டபடி 'கல்கி' பத்திரிகை, என்ன தைரியமாக எவ்வளவு சந்தோஷமாகத் தீட்டியது காங்கிரசுக்கு எதிராக ஒரு கட்சியும் இல்லையென்று ! இந்துமகாசபைக்கு ஒரு வேலையும் இல்லை; கம்யூனிஸ்டுகள் கலகக்காரர்கள், சமதர்மிகள் வெற்றிபெறமாட்டார்கள், திராவிட கழகத்தினர் தன்னாலேயே அழிந்துவிடுவர் என்று ஆரூடம் கூறியது. இது ஆத்திரத்தின் மீது கட்டப்பட்ட ஆரூடம். ஆதையின் விளைவு அப்பனே ! இதை விட்டுவிடு. மரம் அழியவில்லை. அதிலிருந்து ஒட்டுமாஞ்செடி தோன்றியிருக்கிறது. இதை வெட்டி விட முடியாது. நான் திராவிடநாடு ஆரம்பித்த நேரத்திலே குடந்தையிலே ஒரு கூட்டத்தில் பேசினேன். அப்போது எனக்கு ஒரு கேள்வித்தாள் தரப்பட்டது. கேள்வி என்ன தெரியுமா? "குடியரசு '' இருக்க நீ ஏன் திராவிடநாடு ஆரம்பிக்கிறாய், என்று கேட்கப்பட்டது. நான் பதில் கூறினேன். குடியரசு, இருக்கிறது அதே கருத்தை எடுத்துக்கூற ஒரு ஒட்டுமாஞ்செடி முளைத்திருக்கிறது காஞ்சீபுரத்தில், அதே கொள்கைகளைப் பரப்ப.
திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு ஒட்டுமாஞ்செடி தான். மண்வளம் ஏராளம். அதே பூமி, நீர்பாய்ச்சி, பதப் படுத்த, பாத்தி கட்ட முன்னிற போர் பலர். ஒட்டுமாஞ் செடி பூத்துக் காய்த்து கனிகுலுங்கும் நாள் விரைவில் வந்தே தீரும்! இதனால் ஒட்டுமாஞ்செடி மாமரத்துக்கு விரோதமல்ல. திராவிட கழகத்துக்கு முரணானது அல்ல. ஒத்த கருத்துக்கொண்டதே, ஒட்டுமாஞ்செடி!
பெரியார் அளித்த பயிற்சி
நம்மிடம் பணம் இல்லை. இந்தப் பயல்களிடம் பணம் ஏது, கொஞ்ச நாட்களுக்குக் கூச்சல் போட்டு அடங்கி விடுவார்கள். பணம் இல்லாமல் என்ன செய்யமுடியும்?'' என்று பேசப்படுகிறதாம். அதே நேரத்தில் பணம் சம்பாதிக்கிறான், சினிமாவுக்குக் கதை எழுதுகிறான், நாடக மாடுகிறான் நல்ல பணம் சம்பாதிக்கிறான், என்று தூற்றப் படுகிறேன் நான்! இந்த இருவகைப் பேச்சுக்களையும் காணும்போழுது, நான் உண்மையிலேயே மகிழ்கிறேன். நமமிடம் பணம் இல்லை கட்சி நடத்த, ஆனாலும் வழி வகை இருக்கிறது, பணம் சம்பாதிக்க முடியும் என்ற நம்பிக்கை தோன்றுகிறது. நான் சம்பாதித்தது உண்மையோ, பொய்யோ அதுபற்றிக் கவலையினறி அதை அப்படியே ஏற்று, அந்த வழியைக் கடைப் பிடித்தேனும் பணம் சம பாதித்துக் கட்சி நடத்தலாம் என்ற தைரியம் பிறக்கிறது. பணம் என்பது ஒரு சாதனமே ஒழிய அது சகல காரியங் களுக்கும் அத்தியாவசியமான ஒன்றல்ல. இருந்தே தீர வேண்டும், எல்லா காரியங்களுக்கும் என்ற நிர்ப்பந்தம் தேவையில்லை. நமது உழைப்பின மூலம், உறுதியின் மூலம் எவ்வளவோ பணத்தேவையைத் தவிர்க்கலாம் குறைக்க முடியும்.
முக்கியமாக, முதல் வேலையாக எழுத்துரிமை, பேச்சுரிமை எதையும் அடக்கும் சர்க்கார் போக்கை எதிரத்து போரிட திராவிட முன்னேற்றக் கழகம் முண்ணணிப்படை வரிசை அமைக்கவேண்டும். அதில் பங்குகொள்ள சமதர் மத் தோழர்களை, வாருங்கள் என்று வரவேற்கிறேன, கம்யூனிஸ்டுகளை ஒத்துழையுங்கள் என்று கூப்பிடுகிறேன்.
பேச்சுரிமையைப் பறிக்காதே. புத்தகங்களைப் பறிமுதல் செய்யாதே என்று போரிடுவோம்! பெரியாரே! நீரளித்த பயிற்சி பக்குவம் பெற்ற நாங்கள் உம் வழியே சர்க்காரை எதிர்த்து சிறைச்சாலை செல்லத்தான் நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம், துவக்க நாளாகிய இனறே!
இன்றைய திராவிட முனனேற்றக் கழகத் துவக்க விழாவிலே இத்தனை பேரும் கூட்டமாகக்கூடி. மழையையும் பொருட்படுத்தாமல், நின்று பேராதரவு தந்த பெருமக்களே! உங்களுக்கு எனது நன்றி. துவக்க விழாவிலே நான உங்களுக்கு விடும் வேண்டுகோள். எழுத்துரிமை பேச்சுரிமை தூக்க வாரீர். என்ற போர்ப்பரணிதான். விரைவில் அந்த நாள் வந்தே தீரும். காத்திருங்கள் அழைப்பு விரைவில் வரும்.
-----xxxxx-----
This file was last updated on 28 Jan 2023.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)