pm logo

சி.என். அண்ணாதுரை எழுதிய
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் - பாகம் 1


tampikku aNNAvin kaTitangkaL
by C.N. aNNaturai
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2023.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

சி.என். அண்ணாதுரை எழுதிய
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் - பாகம் 1

Source:
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
அறிஞர் அண்ணா
பாரி நிலையம், சென்னை
---------------

தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்

1- இலவுகாத்த கிளி!
2. படமும் பாடமும் (1), (2), (3), (4)
3. எல்லோரும் இந்நாட்டு மன்னர் - (1) - (5)
4. அறுவடையும் - அணிவகுப்பும் (1) - (4)
5. சூடும் சுவையும் (1) - (5)

-------------------

1. இலவுகாத்த கிளி!

அமைச்சர் ந.ந. இராமசாமி -
வன்னியர் குலம் -
ஜாதி முறை -
புதுச்சேரி பொம்மைகள்

தம்பி!

மருத்துவர்களிலே பலவகை உண்டல்லவா - நோயின் மூலம் கண்டறியாமல், மருந்து கொடுத்துவிடுபவர்கள் - மருந்து பலனளிக்காமற்போனால், அதனை உண்டவன் பத்தியம் தவறிவிட்டான் என்று பழிபோடுபவர்கள் - மருந்து அபூர்வமானதுதான், ஆயிரம்போர் இதிலே குணம் கண்டனர், ஆனால், உன் "கிரஹம்' சரியாக இல்லை, அதனாலே பலன் ஏற்படவில்லை என்று கூறி கையை விரிப்பவர்கள்; இப்படிப் பல வகையினர் உண்டல்லவா! ஆனால், எந்த மருத்துவரும், தன் மருந்துண்டவனுக்கு நோய் தீராதது தெரிந்தும், அதனை மறைத்துவிட்டு, தன் மருந்து அபூர்வமானது, கைகண்டது, உண்டோரனைவரும் பலன் கண்டனர் என்று கூறிக்கொண்டி ருக்கமாட்டார். ஆனால், ஒரு மருத்துவர் தன் மருந்துதான் கைகண்டது, அதனையேதான் அனைவரும் உட்கொள்ள வேண்டும் என்று அங்காடியில் நின்று கூவுகிறார்; அவருடைய மருந்தை உட்கொண்டவரோ மனையில் இருந்து கொண்டு, ஐயோ! மார்வலி தாளமுடியவில்லையே! மயக்கம் வேறு மேலிடுகிறதே! குலையில் ஏதோ குத்துவதுபோலிருக்கிறதே! -- என்று கதறுகிறார்.

மருத்துவர் அளித்த மருந்து, நோயைத் தீர்க்கவில்லை என்பதைக் கூறிக் குமுறுவதுடன், மருத்துவர் தந்தது மருந்தே அல்ல, அவரை மருத்துவராகக் கொண்டதே பெருந்தவறு, தீங்கிழைத்துவிட்டது என்று கூறிக் கைபிசைந்து கொள்கிறார்; அட பாவமே! மிகமிக நம்பிக்கையுடன், மருந்து உட்கொண் டாயே, பலனே இல்லையா? என்று பச்சாதாபத்துடன் கேட்பவரிடம், "ஆமய்யா ஆம்! நம்பினேன், ஏமாற்றம் கண்டேன்; மருத்துவர் கேட்ட தொகையை முகங்கோணாமற் கொடுத்தேன், ஆனால் நோய் போகவில்லை, நொந்துகிடக்கிறேன், மனம் வெந்துகிடக்கிறது' என்று கூறுகிறார்.

அதேபோது, வேறோர் புறத்திலே மருந்தளித்த மருத்துவர் மார்தட்டுகிறார், மன்றத்தில் கூறுகிறார்.

நல்ல மருந்து
நலிவு தீர்க்கும் மருந்து
நான் கண்ட மாமருந்து
நமது பிணி எலாம் ஒழித்திடும் ஒரே மருந்து!

என்று புகழ்ப்பண்ணே பாடுகிறார்.

மருந்து பலனளிக்கவில்லை என்பதைக் கூறிக் குமுறும் நோயாளியின் குரலில், வேதனை ததும்புகிறது! நான் கண்டறிந்த மருந்து கைகண்டது என்று பெருமை பேசும் மருத்துவரின் குரலிலேயோ, பெருமிதம் பொங்குகிறது!

எங்கு நடைபெறுகிறது இத்தகைய நிகழ்ச்சி என்று கேட்கிறாயா தம்பி! எங்கு நடைபெறும்? எதையும் எளிதாக நம்பிடும் நல்லவர்கள் ஏராளமாக உள்ள தமிழகத்தில் தவிர!

அண்ணா! உனக்கு ஏதோ உடல் நலமில்லையாமே, அதனாலே உள்ளம் உறுத்தி, மருத்துவ முறைகள் குறித்து எழுதத் தலைப்பட்டனையோ என்று கேட்கத் தோன்றும். தம்பி, நான் குறிப்பிடுவது உடற்கூறு பற்றிய மருத்துவம் அல்ல; சமூகத்திலே நெளியும் நோய் நீக்குவதற்கான மருத்துவர்கள் பற்றிக் குறிப்பிடுகிறேன்; அதிலே ஏற்பட்டுள்ள வேதனை தரும் நிலைமையை விளக்க, எடுத்துக்காட்டாக, மருத்துவர் கதை சொன்னேன்.

இனி, நோயாளி கதறுவதைக் கேள், தம்பி!

அன்றைக்குச் சுமை தாங்கிய வன்னியன் இன்றைக்கும் சுமைதாங்கிதான்.

அன்று கழனியிலே கஷ்டப்பட்ட வன்னியன் இன்று அதிகமாகக் கஷ்டப்படுகிறான்.

அன்று குமாஸ்தாவாக இருந்த வன்னியன் இன்றும் குமாஸ்தாவாகவே காட்சியளிக்கிறான்.

குலையில் குத்தல் - கண்களில் எரிச்சல் - மண்டையில் குடைச்சல் - என்று நோயாளி கூறித் தவிப்பதுபோலில்லையா, இந்தப் பேச்சு.

மருந்து உட்கொள்ளுவதற்கு முன்பு இருந்ததைவிட, நோய், அதிக வேதனை தருவதாகிவிட்டது என்றல்லவா நோயாளி கூறுவது கேட்கிறது.

நோயாளி யார்? வன்னிய சமூகம்!

மருந்து என்ன? இரண்டு அமைச்சர்களைப் பெற்றது.

மருந்து சாப்பிட்ட பலன் என்ன? நோய் அதிகமாகி விட்டது என்று அவதிக்கு ஆளான வன்னியத் தோழர் கூறுகிறார்.

வன்னிய சமூகத்தின் உரிமை இதழாகத் திகழ்ந்துவரும் "உழைப்பாளி'யில், வன்னியன் அன்றுபட்ட அவதி இன்று குறையக் காணோம் என்று வன்னிய குலத்தவர் ஒருவரே மனம் நொந்து எழுதுகிறார்.

மருத்துவரோ, கூசாமல், குன்றாமல், அச்சம் காட்டாமல், பச்சாதாபப்படாமல், மறுப்பார்களோ, கேள்வி கேட்பார்களோ என்று கவலைப்படாமல், தமது மருந்தினைக் கூவிக் கூவி விற்கிறார்.

"வரப்போகும் பொதுத் தேர்தலில் மக்கள் ஒன்று பட்டு, காங்கிரஸ் வெற்றிபெறப் பாடுபடவேண்டும். அதன் மூலம் பிற்பட்ட மக்கள் பல நன்மைகளை அடையமுடியும். இதர கட்சிகளின் பிரசாரங்களுக்குச் செவி சாய்க்கக் கூடாது!''

அமைச்சர் S.S. இராமசாமிப் படையாச்சியாரின் பேச்சு, தெற்கே, அவர் வரவேற்கப்பட்ட ஓரிடத்தில் திருவாய் மலர்ந்தருளியது!

காங்கிரஸ்தான், பிற்பட்ட மக்களின் பிணிபோக்கும் மாமருந்து என்று, அம்மருந்தினை வன்னிய மக்கள் உட்கொள்ளச் செய்த அரசியல் மருத்துவர், கூறுகிறார், தம்பி! மருத்துவர் இப்படிப் பேசுகிறார், நோயாளி மனம் நொந்து பேசியதை (முழுவதும் அல்ல) நான் முதலிலே, எடுத்துக் காட்டினேன்.

மருத்துவர்களிலே, இப்படிப்பட்ட மனதிடமும், உண்மையை மறைத்திடும் திறமும், அநேகருக்கு ஏற்பட முடியாது! புடம்போட்டதில் தவறோ, அரைவையில் பதம் இல்லையோ, காய்ச்சியதிலே தரம் குறைந்ததோ, ஒரு குண்டு மணி "வீரம்' அதிகமோ, பூரம் போதுமான அளவு சேர்க்கவில்லையோ என்று தமது மருந்து முறையிலே ஏற்பட்டுவிட்ட குறை ஏதேனும் இருக்கக்கூடும் என்றுதான் எந்த மருத்துவரும் எண்ணுவாரே தவிர, சுமைதாங்கி சுமைதாங்கி யாகவே இருந்து கஷ்டத்தைச் சுமக்கிறோமே! என்று வேதனையுடன், வன்னியர் நிலை குறித்து, வன்னியரின் உரிமைக்காகப் பாடுபடும், "உழைப்பாளி'யில் ஒரு வன்னியர் எழுதி, உண்மையை வெட்ட வெளிச்சமாக்கியும், அதனை மறைத்து விட்டு, அல்லது அலட்சியப்படுத்திவிட்டு, வன்னியர் போன்ற பிற்பட்ட வகுப்பாருக்குள்ள பிணிபோக்கும் மாமருந்து காங்கிரஸ் ஒன்றுதான் என்று அரசியலில் மருத்துவராக உள்ள இராமசாமி மந்திரியார் கூறுவதுபோல, எந்த மருத்துவரும் கூறத் துணிய மாட்டார்கள்!

மாணிக்கவேலரும் இராமசாமிப் படையாச்சியாரும் மந்திரிகள்!!

தம்பி! இவர்கள், மந்திரிகளாக மட்டுமல்ல, மந்திரி சபைகளை அமைக்கும் உரிமையும் வலிமையும் பெறவேண்டு மென்பதிலே, நான் மிகுந்த அக்கறை கொண்டவன்; ஆனால் எந்த நோக்கத்துக்காக இவர்களை, வன்னிய சமூகம், தலைவர்களாகக் கொண்டதோ, அந்த நோக்கத்தை நிறைவேற்றி வைப்பதற்கான, முழு அதிகாரமும் வசதியும் பெற்ற நிலையில், மந்திரிகளாகத் திகழவேண்டும் என்று ஆசைப்பட்டவன்.

எனக்கு, மாணிக்கவேலரிடம் தொடர்பு அதிகம் ஏற்பட்ட தில்லை; ஆனால் S.S. இராமசாமி அவர்களிடம், தோழமை அளவுக்குச் செல்லக்கூடும் என்று நான் ஆசைகொள்ளும் தன்மையில், எனக்குத் தொடர்பு இருந்தது.

அவர், தமக்குக் கிடைத்த வலிவையும் வாய்ப்பையும், வகுப்பு மூலம் கிடைத்த ஆதரவையும் அடிப்படையாகக் கொண்டு நாட்டிலே, பதவிப்பாசம் விட்டுப்பணியாற்றி, பிற்பட்ட வகுப்பினரின் நம்பிக்கைக்கும் பிரியத்துக்கும் உரிய பெருந்தலைவ ராக உருவெடுக்கவேண்டும் என்ற நம்பிக்கையும், ஆவலும் கொண்டிருந்தேன்; ஆனால் ஆசையுடன் காய் கனியட்டும் என்று நாம் இருக்கும் நேரத்தில், அணில் கொத்தித்தின்று விடுவதுபோல, பிற்பட்ட வகுப்பினரின் பெருந்தலைவராக வளர்ந்திருக்கவேண்டியவர், மந்திரியானார்; அந்தப் பதவியில் சிக்கிக்கொண்டதும், வகுப்புக்குக் கட்டுபடவேண்டிய அவசியம் அவருக்கு இல்லாமற் போனதுடன், வன்னிய சமூகப் பாதுகாப்புக்கும் உரிமைக்கும் அமைத்த உழைப்பாளிக் கட்சியை, அவரே, கூசாமல் குமுறாமல், வெட்டிப் புதைத்துவிட்டார்!

அவர் பேசுகிறார், பிற்பட்ட மக்களுக்குப் பிணிபோக்கும் மாமருந்து, காங்கிரஸ் ஒன்றுதான் என்று!

அவரால் ஊட்டப்பட்ட மருந்து, நோயைத் தீர்க்கவில்லை, என்பதை நொந்த உள்ளத்துடன் "உழைப்பாளி' எடுத்துக் காட்டுகிறது.

வன்னியர் இருவர் அமைச்சர்களாகி விட்டனரே என்று பொறாமை கொண்ட, பிற வகுப்பு ஏட்டிலே, யாரோ வழிப் போக்கன் எழுதுவதல்ல; இந்த இருவர் அமைச்சர் கோலம் பூண்டது கண்டு குதூகலம் கொண்ட வன்னிய சமூகத்தின் ஏட்டில், ஒரு வன்னியர் எழுதுவது என்பதை, ஏனோதானோ என்ற போக்கினருக்கும், இவர்கள் இப்படித்தான் இல்லாததும் பொல்லாததும் பேசுவர் என்று நமது கழகம்பற்றி அலட்சியம் காட்டுவோருக்கும் எடுத்துக் கூறு, தம்பி!

முன்பு இருமி ஈளைகட்டிக் கிடந்தது, என் மருந்து உட்கொண்ட பிறகு, வாலிப முறுக்கு வந்துவிட்டது.

உருகிக் கருகி இருந்தவன், இன்று என் மருந்தின் பலனால், இரும்பையொத்த வலிவும், பொன்னையொத்த பொலிவும் பெற்றுத் திகழ்கிறான்.

எடுத்தடி வைத்தால் மேல் மூச்சு வாங்கும் நிலையில் இருந்தவன், நான் தந்த மாமருந்தை உட்கொண்டதால், புலியை வேட்டையாடிக் கொல்லும் வீரம் பெற்று விளங்குகிறான், என்றெல்லாம், விவரம், விளக்கம் அளித்துவிட்டு, மருத்துவர் தம்மிடம் உள்ள மருந்து அபூர்வமான சக்தி வாய்ந்தது என்று சொன்னாலாவது, பரவாயில்லை பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நிலை, நான் அமைச்சராவதற்கு முன்பு, இத்துணை அலங் கோலமாக இருந்தது - நான் பதவியில் அமர்ந்த பிறகு, இந்த அளவுக்கு நிலைமை வளர்ந்திருக்கிறது என்று எடுத்துக்காட்ட முடிந்ததா? முடியுமா?

பிற்படுத்தப்பட்ட மக்கள் நான் அமைச்சராவதற்கு முன்பு கல்வித்துறையிலே, இத்துணை மோசமான நிலையில் இருந்தனர், நான் அமைச்சரான பிறகு, அவர்களின் நிலைமை இந்த அளவுக்கு உயர்ந்துவிட்டது! என்று காட்டினாரா? காட்டவில்லை! காட்டுவதற்கு ஒன்றும் இல்லை!

பிற்பட்ட மக்களுக்குச் சமூகத்தில தரப்பட்டுள்ள இடம், அநீதி நிரம்பியதாக இருந்தது, நான் அமைச்சராகா முன்பு; இப்போது அவர்களின் நிலைமை உயர்ந்திருக்கிறது என்று கூற முடிகிறதா? அதுவுமில்லை! ஆனால், பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் காங்கிரஸ்தான் இரட்சகன் என்பதற்கு, அவர் காட்டும் ஆதாரம் என்ன?

வேறென்ன ஆதாரம் காட்டவேண்டும், என்னைப் பாருங்கள்! என்றுதான் அவரால் கூற முடியும்!

ஆனால், பிற்பட்ட வகுப்பினரின் பிரச்சினைக்குப் பரிகாரம் காணவும், அவர்களை முன்னேறச் செய்யவும் அதிகாரமோ, சட்டபூர்வமான வாய்ப்போ பெறாமல், அமைச்சராகமட்டும் இருப்பதனால், பிற்பட்ட வகுப்பு மக்களுக்கு, என்ன பலன்? என்று கேட்டால் என்ன பதிலளிப்பார்?

ஆனால் யார் கேட்பார்கள்? கேட்பவர்களை, தேசத் துரோகி - காங்கிரஸ் விரோதி - என்று கூறினால், வாயடைத்துப் போகிறார்கள்; அதற்கா நமக்கு வழி தெரியாது! என்றெண்ணி மகிழ்கிறார்கள், இந்தத் தலைவர்கள்.

ஆனால், அமைச்சர்கள் இருவர் நம் வகுப்பினர் என்பதிலே இயற்கையாக எழக்கூடிய, எழவேண்டிய மகிழ்ச்சியால், அந்த வகுப்பு இளைஞர்கள் அனைவரும், மயங்கிக் கிடந்துவிட வில்லை; உண்மை அவர்கள் உள்ளத்தை உறுத்தத்தான் செய்கிறது; ஓரோர் சமயம், அவர்களால் தம் மனக்குமுறலை வெளியே கொட்டிக் காட்டாமலுமிருக்க முடியவில்லை. அதனாலேதான்,

"நாம் அன்று எந்த இலட்சியத்துக்காக பொதுக்கூட்டங்கள் போட்டு, ஊர்வலங்கள் நடத்தி, மாநாடுகள் கூட்டி, முரசு முழங்கினோமோ, அந்தக் கோரிக்கைகள் இன்று வரை கண்டோமில்லை''

என்று, 1-7-56-ல் "உழைப்பாளி' எழுதுகிறது.

"வன்னியர் முன்னேற்றத்திற்காகத்தான் மந்திரிப்பதவி வகித்து வருகிறேன் என்று மார்நிமிர்ந்து கூறும் நம் இன மந்திரியைக் கேட்கிறோம், நீங்கள் பதவியேற்று ஆண்டுகள் சில உருண்டோடியதே இதுவரை சாதித்தது என்ன?'' என்று "உழைப்பாளி' உரிமையுடன் இடித்துக் கேட்கிறது.

கைகண்ட மருந்து என்று வேறோரிடத்தில், அங்காடியில் கூவிக் கூவி விற்கிறார் அமைச்சர்.

ஊர்சுற்றிவருவதில் பயனொன்றும் இல்லை என்றும், இம்மாதிரி சூழ்நிலையை வளரவிடுவது நம் சமூகத்திற்கே ஆபத்து, என்றும் "இலவு காத்த கிளிபோல்' ஆகிவிட்டோம் என்றும், கோபம், சோகம், திகைப்பு, கண்டனம் எனும் எல்லாவற்றையும் கொட்டிக்காட்டுகிறது, "உழைப்பாளி'!

தம்பி! அரசியலில் இப்படிப்பட்ட மருத்துவர்கள் இடம் பெற்றுவிட்டதால், பிணி குறையாததுடன், பிணி போக்கிக் கொள்ளும் முறையையும் மறந்துபோய், உழைப்பாளிகள் நோயாளிகளாகி நொந்துகிடக்க நேரிட்டுவிடுகிறது. நோய் தீர்க்கும் மருத்துவன் யார்? பிணிபோக்கும் மாமருந்து யாது? என்பதைக் கண்டறிந்து பலன் காணுமுன்பு, நோய் என்ன? ஏன் ஏற்பட்டது? என்பதல்லவா தெரிய வேண்டும்.

ஏழ்மை, அறியாமை என்பவைகள், சமூகம் முழுவதிலும் கப்பிக்கொண்டிருக்கும் பிணி.

உழைப்பின பலன் உலுத்தருக்குப் போய்ச் சேரும் விதமாக அமைந்துவிட்டிருக்கும் அக்ரமத் திட்டம்; மனதில் குருட்டறிவும் இருட்டு நிலையும் மூட்டப்பட்டுவிட்டதால் ஏற்பட்டுவிட்ட கேடு, ஏழ்மைக்கும் அறியாமைக்கும் காரணம்.

ஏழ்மை, அறியாமை எனும் பிணிபோக்கப்பட வேண்டும் என்று பொதுவாகப் பேசி, பொதுவான பரிகாரம் தேடாமல், பொதுவான மருத்துவ முறையை நாடாமல், பிற்படுத்தப்பட்ட மக்களின் பிரச்சினை என்று, தனியாகக் கோடிட்டுக் குறிப்பிடப்பட்டு வருகிறதே, அதன் உட்பொருள் என்ன?

அதனை அறிந்துகொள்ள, தம்பி, பிற்பட்ட வகுப்புப் பிரச்சினையையே ஆராய வேண்டும்.

பிற்படுத்தப்பட்ட மக்கள் என்ற பேச்ச - ஐரோப்பிய நாடுகளிலே அதிகம் அடிபடுவதில்லை.

மலை ஜாதி மக்கள் - நாடற்றவர்கள் - என்று சில சமயம் பேசப்படுவதுண்டு. ஆனால், பிற்படுத்தப்பட்ட மக்கள் என்ற பேச்சுக்கு அங்கெல்லாம் உள்ள சமூக அமைப்பு இடமளிப்ப தில்லை. அப்படிப்பட்ட ஒரு நிலைமை அங்கெல்லாம் இல்லை.

"இந்தியா'வில்தான், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று சமூகத்தில் ஒரு பிரிவு காணப்படுகிறது; இந்தப் பிரிவும் மிகப் பெரிது.

தாழ்த்தப்பட்டோர், ஆதிவாசிகள், மலைஜாதியினர், நாடோடிக் கூட்டத்தார், என்போர்களைச் சேர்த்தல்ல பிற்படுத்தப்பட்ட வகுப்பார் என்று பேசுவது; இவர்களையும நீக்கிவிட்டுப் பார்த்திடும் போதே, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தொகை, மிகப் பெரிதாகக் காணப்படுகிறது.

இதனைக் கவனிக்கும்போது, இங்குள்ள சமூக அமைப்பின் அவலட்சணம் விளக்கமாகத் தெரியும் - வேதனையும் பிறக்கும்.

சமூகத்தில் மிகப் பெரும் அளவு மக்கள், பிற்படுத்தப்பட்டவர்கள்.

பிற்படுத்தப்பட்டவர்கள் என்றால், கல்வி, தொழில், சமூக அந்தஸ்து, பொருளாதாரம், அரசியலிலும் அலுவலகங்களிலும் இடம், எனும் இவைகளிலெல்லாம் பிற்படுத்தப்பட்டு, தாழ்நிலை தரப்பட்டு, கவனிப்பாரற்று, ஓரவஞ்சனையாக நடத்தப்பட்டு, ஒடுக்கப்பட்டு உழல்பவர்கள் என்பது பொருள்.

உழைக்கவும் அதன் உறுபயனைப் பிறருக்குக் கொட்டி ஏமாறவும், உழைக்கவும் அதன் காரணமாகவே தாழ்நிலையில் தள்ளிவைக்கப்படவும், உழைக்கவும் அதனாலே, கல்வித் துறையில் முன்னேற உத்தியோகத் துறையிலே இடம்பெற, அரசியலில் அந்தஸ்து பெற இயலாமல், உழைத்துக் கிடப்பதற்காகவே படைக்கப்பட்டவர்கள் போன்றதோர் நிலை பெற்று நொந்து கிடப்பவர்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்.

உடலில் திடமுண்டு, உழைப்பில் தரம் உண்டு, உள்ளத்தில் திண்மை உண்டு, ஆனால் சமூக அமைப்பிலேயோ, இவர்களுக்கு, நாலாந்தர, ஐந்தாந்தர இடமும் தரப்படுவதில்லை.

உழைப்பின் பலனாகக் கிடைக்கும் "விளைவுகள்' அவ்வளவும், மேலும் மேலும் இவர்களைப் பிற்படுத்தப்பட்ட நிலைக்கு இறக்கிவிடத்தான் செய்கிறதே தவிர உழைத்தனர், உயர்ந்தனர் என்று பேசத்தக்க நீதியான நிலை ஏற்படச் சமூக அமைப்பு இடம் தரவில்லை.

நல்ல உழைப்பாளி! - என்று பேசும்போது, பாராட்டு கிறார்கள் என்று பொருள் அல்ல, எஜமானர்கள் தம் ஊழியர்களின் "சேவை' கண்டு மகிழ்கிறார்கள் - தட்டிக் கொடுக்கிறார்கள் என்றுதான் பொருள்.

இந்த வேதனையை, தலைமுறை தலைமுறையாக பல நூற்றாண்டுகளாக அனுபவித்துக்கொண்டு இருப்பவர்கள், இன்று பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று அழைக்கப்படுபவர்கள்.

அவர்களிடம் உள்ள தொழில் திறமை - கைவண்ணம் - அவர்கட்கு, சமூகத்தில் உரிய இடத்தைப் பெற்றுத் தருவதில்லை, "ஜாதி முறை' தான், அவர்களுக்கு இன்னதுதான் இடம் என்று நிர்ணயிக்கிறது.

அரசிளங்குமரியின் அழகுக்கு அழகு தரும் அற்புதமான நவரத்ன மாலை செய்தளிக்கவல்ல தொழில் திறமை இருக்கலாம் - ஆனால் அந்தத் திறமையை அளவுகோலாகக் கொண்டோ, அந்தத் தொழிலால் சமூகம் பெறக்கூடிய பயனை அளவுகோலாகக் கொண்டோ, அந்தத் தொழிலில் ஈடுபட்டவனுக்கோ - அந்த வகுப்புக்கோ இடம் அளிக்கப் படுவதில்லை - அந்த வகுப்புக்கு உரிய இடம் இது என்று ஜாதி முறை குறிப்பிட்டு, சமூகச் சம்பிரதாயமும், அதற்கு அரணாக அமைந்த சட்டமும் எந்த இடத்தைத் தருகிறதோ, அதுதான், அந்த வகுப்பினருக்குக் கிடைக்கிறது.

கடினமான உழைப்பினைத் தந்து, சமூகம் நிலைக்கவும், வளரவும், நேர்த்தி பெறவும் தேவைப்படுகிற தொழில்கள் செய்து 798 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் தொகுதி ஒன்று 799 வரும் உழைப்பாளர்கள், பிற்படுத்தப்பட்ட நிலைக்கு வைக்கப் பட்டு, இந்தச் சூதான திட்டத்தைக் கண்டறிந்ததிலும், நிலைநாட்டினதிலும், பாதுகாப்பதிலும் மட்டும் தலைமுறை தலைமுறையாகத் திறமையைக் காட்டி வந்தவர்கள், முற்போக்கு வகுப்பினராகவும் இருந்துவரும், மோசமானதோர் சமூக அமைப்பு இங்கு இருப்பதுபோல, வேறு எங்கும் இருந்திட அனுமதித்ததில்லை.

ஆனால், இங்கு அத்தகைய அக்ரமமான, அநீதி நெளியும் அமைப்பு நீண்டகாலமாக இருந்து வருவதற்குக் காரணம், ஜாதி முறையில் ஆழ்ந்த நம்பிக்கை அனைவருக்கும் புகுத்தப் பட்டிருப்பதாகும்.

அந்த நம்பிக்கை ஆழப் பதிந்ததற்குக் காரணம், இந்த ஜாதி முறை என்பது, சுகபோகியாவதற்கு வழிகாண விரும்பிய சூதுக்காரன், எதற்கும் தலையாட்டும் போக்கினர் மீது சுமத்திய சூழ்ச்சித் திட்டம் என்ற தெளிவு, நெடுங்காலமாக ஏற்படாததாகும்.

ஜாதி முறை என்பது கடவுளின் ஏற்பாடு என்று மக்களிடம் பேசப்பட்டு, ஒப்புக்கொள்ளப்பட்டதால், இந்தத் தெளிவு ஏற்படவில்லை.

கடவுள் எனும் புனிதம், எத்தகைய அக்ரமமான காரியத்துக்குப் பயன்படுத்தப்பட்டது என்பதை எண்ணும்போது, எவருக்கும் மன அதிர்ச்சி ஏற்படாமலிருக்க முடியாது.

கடவுள் எனும் புனிதத்தைப் பயன்படுத்தி இந்தச் சூழ்ச்சிக் காரியம் நடைபெற்றுக் கொண்டு வந்ததால், இந்தச் சூழ்ச்சித் திட்டத்தை எதிர்ப்போர் கடவுட் கொள்கைக்கு எதிரிகள் என்று கூறி, அழித்திட, சூழ்ச்சிக்காரர்களுக்கு எளிதாக முடிந்தது.

நமக்கேன் இந்தப் பகை என்ற அச்சம் காரணமாகப் பலரும், இந்த அக்ரமத்தினைக் கண்டிக்காமலிருந்து விட்டனர்.

பல பொருள் உணர்ந்தோரே, இதனைக் கண்டிக்காத காரணத்தால், இது மெத்தச் சரியான, தேவையான, தூய்மையான திட்டம் போலும் என்ற எண்ணம் வெகுவாகப் பரவிற்று.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினரேகூட இந்த மனமயக்கத் துக்கு ஆளாயினர் - தமக்குச் சமூகத்தில் அளிக்கப்பட்டிருக்கும் இடம் அநியாயமானது என்ற உணர்வு பெறவும் முடியாமலிருந்தது.

மேலும் அவர்கள், தமக்குள் ஒருவருக்கொருவர் தரம் பார்த்துக்கொள்ளவும், உயர்வு தாழ்வு பேசிக்கொள்ளவும் தலைப்பட்டு, மொத்தத்தில் இழைக்கப்பட்டுள்ள அநீதியை எதிர்த்திட ஆர்வம் காட்டாமல், தமக்குள் "மேல் கீழ்' பேசிக் கிடக்கவும், ஏசி மோதவும் தலைப்பட்டனர்.

மக்களாட்சியின் மாண்பினை உணர்ந்தவர்களும், மேனாடுகளில் உள்ள சமூக அமைப்பு கூடுமான வரையில் நீதி நிலவ வழி செய்கிறது என்ற உண்மையைத் தெரிந்தவர்களும், இங்கு அரசியல் நடவடிக்கைகளிலே ஈடுபட்டபோதுதான், வகுப்பு நீதி, வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்ற முறைகளைப் பற்றிப் பேசலாயினர்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு விழிப்புணர்ச்சி ஏற்படலாயிற்று.

அதன் பயனாக, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தத்தமது வகுப்பின் சக்தியைத் திரட்டவும் அந்தச் சக்தியை அரசியலுக்குக் கருவியாக்கிக் கொள்ளவும், முற்பட்டனர்.

சென்ற தேர்தலின்போது, இந்தக் "கருவி' மிக நன்றாகப் பயன்பட்டது.

ஜஸ்டிஸ் கட்சி, மொத்தமாக பார்ப்பனர் - பார்ப்பன ரல்லாதார் என்று சமூக அமைப்புத் திட்டத்தைக் கவனித்து, அதற்கேற்றபடி, தன் அரசியல் முறைகளை அமைத்தது.

வகுப்பு நீதி - வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்ற திட்டங்கள் அமுலுக்கு வருவதற்கான சூழ்நிலையை ஜஸ்டிஸ் கட்சி உருவாக்கிற்று. அதுவும் போதுமானதல்ல என்பது மெள்ள மெள்ள, ஆனால் நிச்சயமாக உணரப்பட்டு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் குறித்த திட்டம் உருவாக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.

ஜஸ்டிஸ் கட்சிக்கு, இந்தத் திட்டத்தை உருவாக்கி, அமுலாக்குவதற்கான வாய்ப்புத் தரப்படவில்லை. இதற் கிடையில், காங்கிரஸ், சர்க்காரை நடத்தும் கட்சியாகி விட்டது.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரச்சினையை, காங்கிரஸ் கட்சி கவனிக்க மறுத்தது.

கவனிக்க வேண்டிய அவசியம் இல்லாத அளவுக்குக் காங்கிரசின் செல்வாக்கு, நிகரற்றதாக அப்போது இருந்தது.

அத்தகைய செல்வாக்கு காங்கிரக்கு இருந்ததற்குக் காரணம், நாட்டு மக்களிடம், பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார்; பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்பன போன்றவைகளெல்லாம், அற்பமான பிரச்சினைகள் - யாரோ சிலருடைய பதவி ஆசையைப் பூர்த்தி செய்யும் காரியம், மக்களுக்கு அது அல்ல உயிர்ப் பிரச்சினை; உயிர்ப்பிரச்சினை, வெள்ளைக்கார ஆட்சியை விரட்டிவிட்டுச் சுயராஜ்யம் பெறுவதுதான், என்று எடுத்துக் கூறப்பட்டது.

நாடு, அடிமைப்பட்டிருப்பதை உணர்ந்து, அந்த இழி நிலையைப் போக்கித் தீரவேண்டும் என்ற "தேசிய' உணர்வு பெற்ற மக்கள், இந்த வாதத்தை ஏற்றுக்கொண்டார்கள்.

வகுப்புப் பிரச்சினைகளைக் கவனிப்பது சிறுமைத்தனம், "சிரழிவு, தேசத் துரோகம், என்று கருதினர். எனவே , காங்கிரஸ், அந்தப் பிரச்சினையை, "குப்பைக் கூடை'க்கு அனுப்பிவிட்டு, தன்னிகரற்ற செல்வாக்குடன், கொலுவிருக்க முடிந்தது. இந்தச் செல்வாக்கு நிலைத்திருக்க முடியாதது, சிதையலாயிற்று சென்ற தேர்தலில். இதற்குச் சான்று கூறுவது போன்ற சம்பவங்கள் பல நடைபெற்றன.

பிற்பட்ட வகுப்பினரின் நம்பிகையைப் பெற்ற தலைவர்கள் பலர், காங்கிரசை முறியடித்தனர்; காங்கிரஸ் கட்சி சார்பிலேயே நின்று வெற்றிபெற்ற சிலரும், பிற்படுத்தப்பட்ட வகுப்பின் செல்வாக்கைத் துணைகொண்டே வெற்றிபெற முடிந்தது.

பிற்பட்ட வகுப்பனரிடையே ஏற்பட்ட இந்த அரசியல் எழுச்சியைக் கண்ட பிறகுதான், காங்கிரஸ் கட்சி, அருவருப்புடன் பேசி அலட்சியப்படுத்திவிடத்தக்க பிரச்சினை அல்ல இது என்பதை அறிந்தனர்; அறிந்தவர்கள், பிற்பட்ட வகுப்பு மக்களை முன்னேற்றடையச் செய்ய என்ன வழி என்று நல்லெண்ணத்துடன் திட்டம் வகுக்கவில்லை; மாறாக, பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கான பணியாற்றுவதாகக் கூறி, அவர்களின் நம்பிக்கையைப் பெற்று, சட்டசபைக்குள் நுழைந்துள்ள வகுப்புத் தலைவர்களை எப்படி வலைபோட்டுப் பிடிப்பது என்ற தந்திரத் திட்டம் வகுத்தனர்.

வழக்கபடி, இத்தகைய தந்திரத்தில் ஆச்சாரியார் வழி காட்டினார்; மாணிக்கவேலர் கிடைத்தார்.

காமராஜர், அதே திட்டத்தைப் பின்பற்றினார், ந.ந. இராமசாமி கிடைத்தார்.

அமைச்சர் அவைக்கு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் இருவர் கிடைத்தனர்.

அப்படிக் கூறுவதைவிட, பிற்படுத்தப்பட்ட வகுப்பின் பேரால், இருவர் அமைச்சர்களாயினர் என்பதுதான் பொருந்தும்.

இவர்கள் அமைச்சர்களாக்கப்பட்டதும், பிற்படுத்தப்பட்ட வகுப்புப் பிரச்சினை தீர்ந்துவிட்டதா என்பதே இப்போதுள்ள பிரச்சினை; பிற்படுத்தப்பட்ட வகுப்பு இளைஞர்கள் தீவிரமாக எண்ணிப் பார்க்கவேண்டிய பிரச்சினை.

இதைப்பற்றி எண்ணுவதற்குத் துணைபுரிவதற்காக, ஒரு உண்மையை அவர்கட்கு எடுத்துக் காட்டவேண்டி வருகிறது.

குறிப்பிடப்பட்ட, இரு அமைச்சர்களும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் முன்னேற்றத்தைக் கவனித்துக்கொள்வதற்காக அழைக்கப்பட்டவர்கள் அல்ல. மாணிக்கவேலர் வரி வசூலிக்கவும், எஸ். எஸ். இராமசாமி "ஸ்தல ஸ்தாபன'ங்களை ஆளவும் அழைக்கப்பட்டனர்; பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு முன்னேற்றம் அளிக்கும் வசதி, வாய்ப்பு, உரிமை ஏதும் அவர்களிடம் தரப்படவில்லை.

எனவே, இருவரும், பிற்படுத்தப்பட்ட மக்களின் திரண்டெழுந்த சக்தி காரணமாக, அமைச்சர்களாக முடிந்ததே தவிர, பிற்படுத்தப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்கான வழி வகுக்கும் பொறுப்பைப் பெறவில்லை.

எனவே, இவர்கள் இருவரும் அமைச்சர்களான காரணத்தால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பிரச்சினை தீர்க்கப்பட்டுவிடவில்லை.

அதற்கான வழியேகூட ஒரு வகையில் அடைபட்டுப் போய்விட்டது என்று கூறலாம்.

இந்த இருவரும், அமைச்சர்களாகாமல் வகுப்புத் தலைவர் களாக இருந்துவந்த போதாவது, பிற்பட்ட வகுப்பினருக்கு உற்ற குறைகளை எடுத்துக்கூறவும், கிளர்ச்சி நடத்தவும், சர்க்காரை வற்புறுத்தவும் வழி இருந்தது.

இவர்களே அமைச்சர்களாகிவிட்டதால், அந்த வழியும் அடைபட்டுப் போய்விட்டது!

இவர்களும் "தேசியம்'' பேச ஆரம்பித்துவிட்டனர்!

உழைப்பாளர் கட்சியும், பொதுநலக் கட்சியும், கலைக்கப் பட்டுவிட்டது - எல்லாம் காங்கிரசில் கரைக்கப்பட்டுவிட்டது என்று, இரு தலைவர்களும் கூறும் அளவுக்கு அந்தத் "தேசியம்' முற்றிவிட்டது.

அந்தத் "தேசியம்' பேசும் போக்கில்தான், அமைச்சர் S.S. இராமசாமி, பிற்படுத்தப்பட்ட மக்களின் இரட்சகன், காங்கிரஸ்தான்! பொதுத் தேர்தல் வருகிறது, பிற்படுத்தப்பட்ட மக்களே! காங்கிரசை ஆதரியுங்கள் என்று பேசி இருக்கிறார்.

அமைச்சர் இவ்விதம் பிரதாபம் பேசுகிறார், ஆனால் வன்னிய குலத்தவர் காங்கிரசின் சேவை குறித்தும், அமைச்சர் போன்றார் குறித்தும், என்ன கருதுகின்றனர்?

எல்லாம் பேச்சளவிலேதான்; செயலளவில் ஒன்றும் பலனில்லை. இதைக் கண்டு நம்மால் போற்றிப் பாராட்டி அனுப்பிய தலைவர்கள், அவர்களின் சுயநலத்திற்காக அவர்கள் கைக்கொண்ட முறையைப் பின்பற்றும் நம்மையும் எங்களோடு நாங்கள் சேர்ந்துள்ள கட்சியில் சேருங்கள் என்று நமக்கு வேறு புத்தி கற்பிப்பதுடன், தனக்கு ஒரு கண் போனதால் மற்றவர்களுக்கும் கண் போகட்டும் என்பதுபோல் உபதேசம் செய்ய முற்பட்டதைத் தவிர நாம் கண்ட பலன் யாது என்பதை மனவேதனையுடன் கேட்கின்றோம்.''

"உழைப்பாளி'யில், பட்டம்மாள் என்றோர் அம்மையார் இது போல எழுதுகிறார்.

வகுப்பின் பெயர்கூறிக்கொண்டு சட்டசபை சென்ற "தலைவர்கள்' தங்கள் சுயநலத்தைத்தான் கவனித்துக் கொண்டார்கள் - என்று மனவேதனையுடன் அந்த அம்மையார் கூறவேண்டிய நிலைமை இருக்கிறது.

"மக்களின் ஓட்டைப்பெற்றுச் சட்டசபைக்குச் சென்று பச்சோந்தியைப்போல் நிறத்தை (லேபிலை) மாற்றிக்கொண்டு'' என்றும் "என் பதவிக்கு ஆபத்து வரும், என் வருவாய் போய் விடும்' என்றெல்லாம் சாக்குப் போக்கு சொல்லியது தவிர நாம் கண்ட பலன் என்ன? - என்றும் கேட்டுள்ளார்.

சுயநலம் - பச்சோந்திக் குணம் - பதவிப் பாசம் - என்பவைகளுடன், புதுச்சேரி பொம்மைகள் போல சட்ட சபையில் கொலுவிருக்கிறார்கள் என்றும் கேலி செய்திருக்கிறார்.

இந்த நற்சான்று கிடைக்கிறது மருத்துவருக்கு - ஆனால், அவரோ என் மருந்து கைகண்டது - என்று கூவிக் கூவி விற்கிறார் - பிற்பட்ட வகுப்பினர் அனைவருமே இதை உட்கொள்ளலாம் என்று "சிபாரிசு' செய்கிறார்!

தம்பி! சாதித்தது என்ன? என்ற தலைப்பில் இரா. வீரசம்பு என்பார், "உழைப்பாளி' 1-7-56 இதழில் தந்துள்ள கட்டுரையில் உள்ள காரசாரமான பகுதியை வேறோர் இடத்தில் அடிகள் வெளியிட்டிருக்கிறார் - படித்துப் பார்.

நம் வகுப்பு மந்திரியை நம் வகுப்புத் தோழனே இப்படிச் சந்தி சிரிக்கச் செய்யலாமா என்று வேண்டுமானால், கட்டுரையாளர் மீதோ இதழாளர் மீதோ பெரிய இடம் கோபித்துக் கொள்ளுமே தவிர, இதிலே குறிப்பிட்டுள்ள எந்த விஷயத்தை, ஆதாரம், புள்ளி விவரம் காட்டி, மறுக்க முடியும்?

உண்மையிலேயே, இலவுகாத்த கிளிபோல்தான் ஆகிவிட்டது. ஐயமில்லை! ஆகவேதான், பிற்பட்ட வகுப்பு இளைஞர்கள் மீண்டும் மீண்டும், ஏமாற்றத்துக்கு ஆளாகாம லிருக்கத்தக்க முறையைக் கண்டறிய வேண்டும்.

வகுப்புத் தலைவர்கள், வகுப்பு நலன் குறித்துப் பேசுவது கேட்டுப் பூரிப்படைந்து, அவர்கள் தங்கள் வாக்குறுதிகளை மறந்து, கட்சி மாறும்போது திகைப்படைந்து, அவர்கள் உயர் பதவி பெற்றது கண்டு உள்ளூர மகிழ்ந்து, அந்த உயர்வு, வகுப்பு முன்னேற்றத்துக்கு வழிகோலாதது கண்டு மனம் உடைந்து போவதுதானா, இளைஞர் கடமை!!

பிற்பட்ட வகுப்பினரின் முன்னேற்றம், அதிலே ஒருவரிருவர் உயர் பதவியில் அமருவதால் ஏற்பட்டுவிடாது என்று அவர்கள் அறிந்துகொண்ட உண்மையை, இனமக்கள் அறியும்படி செய்யவேண்டிய கடமை அந்த இளைஞர்களுக்கு இல்லையா? திறம் இல்லையா?

பிற்பட்ட வகுப்பினரின் முன்னேற்றத்துக்கான தனியானதோர் திட்டம் காணவும், அதற்கான பண வசதியைப் பெறவும், சட்ட பூர்வமான திட்டம் தீட்ட, பிற்பட்ட வகுப்புத் தலைவர்கள் ஒன்றுகூடிட வேண்டாமா? காங்கிரசுக்குள் சென்று "குடித்தனம்' நடத்த ஆரம்பித்துவிட்டால், இந்தக் காரியம் செய்யும் ஆற்றலை எப்படி அவர்கள் இழக்காமலிருக்க முடியும்!

விதை நெல்லை வேகவைத்துத் தின்றுவிட்டால், வயலில் தூவ நெல் எங்கிருந்து பெறுவது? அம்பை ஒடித்து மாடோட்டும் தார் குச்சியாக்கிவிட்டால், வில் வைத்துக் கொண்டு என்ன சாதிக்க முடியும்?

பிற்பட்ட வகுப்பினரின் நிலைமை சகல துறைகளிலும் முன்னேற்றம் அடைவதற்கான சட்டபூர்வமான திட்டத்தைப் போராடிப் பெறவேண்டிய தலைவர்கள், வகுப்பு முன்னேற்றம் தானாக வருகிறபோது வரட்டும், முதலில் எங்கள் முன்னேற்றத்துக்கு வகை செய்து தாருங்கள் என்று ஆளும் கட்சியிடம் கொஞ்சவும், கெஞ்சவும் முற்பட்டபோது, வகுப்பு இளைஞர்கள் மட்டும் சிறிதளவு விழிப்புணர்ச்சியுடன் இருந்திருந்தால், தம்பி, இலவுகாத்த கிளியானோமே! பச்சோந்தி களாகிவிட்டார்களே! புதுச்சேரிப் பொம்மைகளாக இருக்கிறார்களே! என்றெல்லாம் கூறித் துக்கிக்கவேண்டிய சூழ்நிலையே ஏற்பட்டிராது.

இப்போது மனம் குமுறிப் பேசினாலும் எழுதினாலும், அமைச்சர்களாகிவிட்ட குலப் பெரியவர்கள், எங்களுக்கு உங்கள் ஆதரவு தர முடியாது என்றால்கூட நாங்கள் அச்சம் கொள்ளமாட்டோம்; ஏனெனில், எங்களுக்கு வேலை செய்ய காங்கிரஸ் கட்சியே காத்துக் கிடக்கிறது என்றல்லவா சொல்லுவார்கள்!!

எனவே, பிற்பட்ட வகுப்பிலே உள்ள இளைஞர்கள், அந்தப் பிரச்சினையை நன்கு ஆராய்ந்தறிந்து, தலைவர்களின் தந்திரத்துக்கும், ஆசை வார்த்தைக்கும், வகுப்பின் பெயர் கூறி ஊட்டும் மயக்கத்துக்கும் மக்கள் பலியாகாமற் பார்த்துக் கொள்ள வேண்டும். இதில் இளைஞர்கள் வெற்றி பெற முடியாது போனால், நீண்டகாலத்துக்கு, பிற்பட்ட வகுப்பின் பெயர் கூறிக்கொண்டு தலைவர்கள் ஆவர்; மந்திரிகளாவர்; கட்டுரையாளர் கூறுவதுபோல, இனமக்கள் என்றும்போல் சுமைதாங்கிகளாகவே இருப்பர்; மந்திரிகளானவர்கள், பச்சோந்திகளாயினும், பளபளப்புடன் பவனி வருவர். பலன் பெறுவர். புதுச்சேரிப் பொம்மைகள் என்று கேலி பேசினாலும், கவலைப்படமாட்டார்கள்; இனமக்களின் நிலைமையோ "இலவு காத்த கிளி'யாகத்தான் இருக்கும்.

பலன் எந்த அளவுக்கு ஏற்படும் என்பது பற்றியும், நமக்குக் கிடைத்திடக் கூடிய வசதி எத்தகையதாக இருக்கும் என்பது குறித்தும், கவலையற்று, நாம், தம்பி, இந்தத் தேர்தலின்போது, இந்த உண்மைகளை ஊரறியச் செய்ய வேண்டும்.

பிற்பட்ட வகுப்பினர் பிரச்சினைக்குப் பரிகாரம் என்ன என்ற உண்மையை எடுத்துரைத்து, பிற்பட்ட வகுப்பினருக்கு உரிமையும் நல்வாழ்வும் பெற்றுத் தருவதாக வாக்களித்தவர்கள் போக்கு எப்படி மாறிவிட்டது என்பதை எடுத்து விளக்கி, அடுத்த சட்டசபையிலேனும், பிற்பட்ட வகுப்பினரின் உரிமைக்காக, நலனுக்காக, பாதுகாப்புக்காக, ஆளும் கட்சியின் புன்னகைக்கு மயங்காமல், கோபம் கண்டு அஞ்சாமல், வாதாடக்கூடிய, போராடக்கூடிய, தூய்மையும் ஆற்றலும் கொண்ட பிற்பட்ட வகுப்பு இளைஞர்கள் ஒரு சிலராவது இருந்தால்தான், பிற்பட்ட வகுப்பைப் பிடித்துக்கொண்டுள்ள பிணி நீங்கும் மாமருந்தே யொழிய பிற்பட்ட வகுப்பின் பிணி தீர்க்கும் மாமருந்து காங்கிரஸ் ஒன்றுதான் என்று வாணிபம் நடாத்துவோரால் நிச்சயமாக முடியாது; முடியவே முடியாது.

பிற்படுத்தப்பட்ட வகுப்பில், ஆற்றல் மிக்கவர்கள், தியாகிகள், வீரர்கள் இருக்கிறார்கள்.

நாடு ஆளும் தகுதியும் திறமையும் அவர்களிடம் இருக்கிறது; நிரம்ப இருக்கிறது.

ஆனால் அவர்கள் காங்கிரஸ் கூடாரத்தில் குடிபுகுந்து விட்டால், இனம் குறித்துப் பேசவும், இனமுன்னேற்றத்துக்கான திட்டம் தேடவும் முடியாது, அனுமதி கிடையாது! எனவேதான்,

பச்சோந்திகளாய்

புதுச்சேரிப் பொம்மைகளாய் இருக்கவேண்டி நேரிட்டுவிடுகிறது.

எனவேதான், தம்பி, கொடி கட்டி ஆளும் கட்சியில் கோடீஸ்வரர்களும், கோலெடுத்துத் தாக்க வருவோரும் இருப்பது தெரிந்தும், ஒடுக்கப்பட்டோர் நசுக்கப்பட்டோர் ஒதுக்கி வைக்கப்பட்டோர் சார்பில் பேசும் ஜனநாயகக் கடமையை நாம் மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன், தேர்தலில் ஈடுபடத் திட்டமிட்டிருக்கிறோம் - வெற்றி பெற்று விடுதலைத் திட்டம் பிரகடனம் செய்துவிடப் போகிறார்களோ இந்த சூரப்புலிகள் என்று வீராவேசமாகக் கேட்கின்றனர் வெந்த மனதினர் தமது நொந்துபோன நிலையினை நாடு கண்டறியலாகாதே என்ற எண்ணத்தால் - கேட்கட்டும் தம்பி, அதனால் என்ன!

நமது கடமையை நாம் செய்வோம், மக்களுக்கு, உண்மையான உழைப்பாளர்கள், உறுதி படைத்த வாதாடுவோர், குறுக்குவழி செல்லாதவர்கள் தேவை என்றால் நம்மை ஆதரிக்கட்டும்! இலவுகாத்த கிளியானோம் என்று இன்று மனவேதனைப்படுகிறார்களே இந்த உண்மைகளை எல்லாம் எடுத்துச் சொல்லிக் கேட்போம். உண்மையை மக்கள் உணரும்படி செய்வதற்கேற்ற ஆற்றல் வெற்றி பெற்றால் வெற்றி கிடைத்தே தீரும்; இல்லையென்றாலும், நஷ்டம் நமக்கல்ல, நாட்டுக்கு என்று மன அமைதிகொள்ளவும் நமக்குத் தெரியும். இனி என்ன கவலை! தம்பி! இலவுகாத்த கிளி போன்ற நிலைமையில், வன்னியர் மட்டுமல்ல, பொதுவாகப் பிற்பட்ட வகுப்பு மக்கள் அனைவருமே அதே நிலையில்தான் இருக்கிறார்கள். அவர்களிடமெல்லாம், உண்மைகளை எடுத்துரைக்கும் பணியினைத் தொடர்ந்து செய்துகொண்டு வருவோம்; பெரியார் அடிக்கடி சொல்லுவார் கவனமிருக்கிறதா, தம்பி, ஊதுகிற சங்கை ஊதுவோம், விடிகிறபோது விடியட்டும் என்று. அதைவிடச் சற்று அதிகமான நம்பிக்கை கொள்ளக்கூடிய விதமான அறிகுறிகள், நம்பிக்கை தரும் நிலைமைகள் நாட்டில் தென்படத்தான் செய்கின்றன; எனவே, நமது பணி, ஆர்வமும் எழுச்சியும் கொண்டதாகவே அமைந்திருக்கிறது.

அன்பன்

12-8-1956
-----------------------

2. படமும் பாடமும் (1)

தேர்தலின் முடிவும் விளைவும் -
வசவாளர்கள் -
காமராஜரின் வெற்றி

தம்பி!

நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்கிறோம்! எத்தனை எத்தனை நாட்களாகிவிட்டன, நாம் உரையாடி!!

என்ன இருந்தாலும் இப்படியா ஒரே அடியாகவா வாய்மூடிக் கிடப்பது?

மறந்தே விட்டீர் என்றல்லவா எண்ணிக் கொண்டேன்!

இப்போதாவது இப்படி ஒரு கடமை இருப்பது நினைவிற்கு வந்ததே!!

இவ்விதமும், இதற்கு மேலும் பலப்பல கூறிட எண்ணுகிறாய் - நானறிகிறேன் - ஆனால் அடுத்த கணமே, உனக்கு ஒரு புன்னகை மலர்ந்திடுகிறது, நான் காண்கிறேன்! பாவம், நமது அண்ணன்மீது தவறு இல்லை, அந்த அளவுக்குக் கடுமையாக உழைக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது - அந்தக் காரியத்தைச் செம்மையாகச் செய்துதீர வேண்டுமல்லவா, அதனாலேதான், கிழமைதோறும் நம்மிடம் பேசி மகிழும் வாய்ப்பையும் இழந்து, நின்றிட நேரிட்டது என்று தம்பி உன் மனமே எடுத்துக் கூறுகிறது, முகம் மலருகிறது! ஆனால் உண்மையில், அது சமாதானமல்ல - இத்தனை கிழமைகளாக, இந்தக் காரணம் காட்டி, சந்திக்காமலிருப்பது, முறையே அல்ல! வேலை, ஆயிரம் இருக்கட்டும்! உழைப்பு கடுமையாகத்தான் ஏற்படட்டும்! அதற்காக அன்புடன் உரையாடும் வாய்ப்பைக் கூடவா ஒதுக்கித் தள்ளிவிடுவது! அஃது எங்ஙனம் சரியாகும்! சரியல்ல! முறையல்ல! நான் ஒப்புக்கொள்ளவே மாட்டேன்!!

அவ்விதமானால், அண்ணா! நீ, என்னதான் சமாதானம் கூறப்போகிறாய்? நாம் இத்தனை கிழமைகளாகச் சந்திக்காத தற்குக் காரணம் என்ன காட்டப்போகிறாய்? என்று கேட்கிறாயா தம்பி! கேள்!!

தம்பி! நாம், இத்தனை கிழமைகளாகச் சந்திக்காததற்குக் காரணமல்லவா, கேட்கிறாய்! நாம் சந்திக்காதிருந்தால்தானே, காரணம் காட்டவேண்டும்! நான் எங்கே, உன்னைக் காணாமல் இருந்தேன்! ஒவ்வொருநாளும் நான் உன்னைப் பார்த்துப் பார்த்துப் பூரித்துக்கிடந்தேனே! ஒவ்வொரு புன்னகையிலும் பெருமூச்சிலும், வியர்வைத் துளியிலும் வீர முழக்கத்திலும் வாழ்த்தொலியிலும், வரவேற்பு உரையிலும், நான், உன்னைத்தானே கண்டேன்!! நான் எப்போது உன்னைக் காணாமலிருந்தேன், காணாததற்குக் காரணம் காட்ட!,

எண்ணங்களை எழுதிக்காட்ட இயலவில்லையே தவிர நான் எந்தக் கணமும் உன்னைக் குறித்து எண்ணாமலிருந்த தில்லையே! வேறு என்னதான் இருக்கிறது, எனக்கு எண்ணி எண்ணிப் பெருமைப்பட, பூரிப்படைய!! எப்போதும், உன் நினைப்புத்தான்! எந்த இடத்திலும், உன்னைத்தான் கண்டேன்!!

காடு கரம்புகளிலே சுற்றிய போதும், கழனி வெளிகளில் நடந்த நேரத்திலும், ஏரிக்கரைகளில் நடந்தபோதும், உளைகளைத் தாண்டிச் சென்ற சமயத்திலும், பட்டி தொட்டிகளிலேயும் சாலை சோலைகளிலேயும் உலாவிய போதும், பாட்டியிடமும் பெரியவரிடமும், துள்ளி விளையாடும் பிள்ளைப் பருவத்தினரிடமும், அரும்பு மீசை வாலிபரிடமும் நான் உற்சாகத்தைக் கண்ட போதும், உன்னைத்தானே சந்தித்தேன்! எனவேதான், நீண்ட நாட்களாக நாம் சந்தித்தோமில்லை என்ற பேச்சே எழவில்லை; ஆகவே அதற்குக் காரணம் தேடிடவும் தேவை ஏற்படவில்லை! நாம், சில பல நாட்களாக, சந்திப்பதையும் உரையாடி மகிழ்வதையும், வழக்கமான முறையிலே அல்ல, புதியதோர் முறையிலே நடத்திக் கொண்டிருந்தோம். அந்தக் கட்டம் முடிவுற்றது. இனி நமது பழைய முறை துவக்கப்படுகிறது!!

அப்பப்பா! இந்த இரு திங்களுக்கு மேலாக, நாம் எத்துணை கடுமையாக உழைத்திட வேண்டி நேரிட்டது; என்னென்ன விதமான தொல்லைகளையும் துயரங்களையும், இன்னல்களையும் எதிர்ப்புகளையும் காணவேண்டி வந்தது; புதியதோர் பொறுப்பை ஏற்றுக்கொண்டோம். அதனைத் திறம்பட நடாத்திக் காட்டியாக வேண்டுமே என்ற கடமை உணர்ச்சி, நம்மை எல்லாம் கடுமையாக உழைக்கச் செய்தது; எரிதழலில் தள்ளிவிட்டோம், இனி இதுகள் சாம்பலாகிப் போகும் காணீர்! என்று கருதினர்; தழல் பெரிது, கொடிது! எனினும், கழகம், குப்பை கூளமல்ல, குச்சிமிலாரல்ல, சாம்பலாகிப்போக! புடம்போட்டு எடுக்கப்பட்ட தங்கம் என்பார்களே அதுபோல, வெந்தழலில் கிடந்தது; தழல் அணைந்தது, தங்கம் கருகுமா? கழகம் இன்று தணலிலிட்ட தங்கமாகி நிற்கிறது. ஆனால் தம்பி, இந்த அரும் நிலைமையை அடைவதற்கு முன்பு, தணலில் தள்ளப்பட்டுக்கிடந்த நாட்களிலே எத்துணை எத்துணை தவிப்பு! இவ்வளவையும், நம்மால் தாங்கிக்கொள்ள முடிந்ததே என்பதை, இப்போது எண்ணிக்கொள்ளும்போது, களத்திலே பெற்ற "வடு' மீது காதலியின் கூந்தலிலே செருகப்பட்டுள்ள முல்லை பட்டால் என்னவிதமான களிப்பு ஏற்படுமோ அதுபோலல்லவா இருக்கிறது.

நான் தம்பி, நமது கழகத்தின் வலிவுபற்றியும், தாங்கிக் கொள்ளும் சக்திகுறித்தும், எப்போதுமே நம்பிக்கையற்று இருந்ததில்லை. எனினும் தேர்தலில் நாம் ஈடுபடுகிறோம் என்ற நிலை உருவானதும், பீறிட்டுக் கிளம்பிய பேய்க்காற்றைக் கண்டபோது சிறிதளவு நானே கலங்கிப்போனேன், கழகம் தாங்கிக்கொள்ளுமா என்பது குறித்து!! கரடி, கால்களைப் பிடித்து இறுக்கிட, மலைப்பாம்பு மரத்திலே சுற்றிக்கிடந்த நிலையில் வாய்திறந்து கழுத்தருகே அசைந்தாட, கரும்புலி மேலே பாய, தொலைவிலிருந்து செந்நாய்கள் சீறிட, புதரருகே நின்றபடி நரிக்கூட்டம் இரத்தம் குடித்திடச் சமயம் பார்த்திருக்க, கழுகுகள் மேலே வட்டமிட்டபடி இருக்க, வளைந்த வாளைக் கரத்திலே ஏந்திய ஓர் வீரன் இந்நிலையினின்றும், தன்னை விடுவித்துக் கொள்ளப் போரிடும் காட்சியை மனக் கண்ணாலே பார் தம்பி! அது போலல்லவா, தேர்தல்களத்திலே நமது நிலைமையிருந்தது! எப்படிச் சமாளித்தோம்!! எங்ஙனம் தாங்கிக்கொள்ள முடிந்தது!! எங்கிருந்து பெற்றோம், இத்துணை பயங்கர எதிர்ப்புகளையும் எதிர்த்து நிற்கும் ஆற்றலை! எனக்கு வியப்புதான்! அதனாலேதான், இந்தத் தேர்தலில், நமக்கு வேதனை தரும் தோல்விகள் பல ஏற்பட்டபோதிலும், கழகத்தைப்பற்றிய நமது மதிப்பு உயர்ந்திருக்கிறது; கலக்கமடையவோ, மனம் உடைந்திடும் நிலைபெறவோ தேவையில்லை என்று கூறிட முடிகிறது.

மண்ணைக் கவ்வினார்கள்!
டிபாசிட் இழந்தார்கள்!
படுதோல்வி அடைந்தார்கள்!
பத்திலோர் பாகம்தான் கிடைத்தது!

என்று கொட்டை எழுத்துக்களில் நம்மைக் குறித்து, எழுதுகிறார்கள். பார்க்கிறோம் - ஆனால் பதைக்கவில்லை - பீதி அடையவில்லை - ஏன்?

ஏன்? என்பதற்கு, மாற்றார்கள் விடைகாண முயலு கிறார்கள். முடியவில்லை!!

தம்பி! உன் ஆற்றலையும், தாங்கிக்கொள்ளும் சக்தியையும் அவர்களால் கணக்கெடுக்கத் தெரியவில்லை, எனவேதான், அவர்கள், பல இடங்களிலே இந்தப் பயல்கள் படுதோல்வி அடைந்தும், மண்ணைக் கவ்வியும், துளிகூட துக்கம் துளைத் திடும் நிலைபெறாமல், எப்போதும்போல "எக்காள'மிட்டபடி இருக்கிறார்களே - ஏன்? ஏன்? என்று கேட்டுக் கேட்டுக் கலக்க மடைகிறார்கள்.

வேதனை தரும் தோல்விகள்
வெட்கப்படத்தக்க தோல்விகள்
எரிச்சலூட்டும் ஏமாற்றங்கள்
நம்பி மோசம்போன இடங்கள்

இப்படிப் பலப்பல கண்டோம்! இவைகளை. கேசெய்வதற்காக, கேவலப்படுத்துவதற்காக, இழித்தும் பழித்தும் பேசுவதற்காக மற்றவர்கள் கூவிக் கூவிக் காட்டுகிறார்கள்! அவர்கள் எந்த நோக்கத்துடன், அவ்விதம் செய்வதாயினும் பரவாயில்லை, விடாமல் அவர்கள் அவ்விதம் குத்திக்குத்திக் காட்டவேண்டுமென்று நான் பணிவன்புடன் வேண்டி வேண்டிக் கேட்டுக்கொள்ளுவேன்!! தம்பி! உன் அரிய உழைப்புக்குப் பிறகும், அற்புதமான ஆற்றலுக்குப் பிறகும், உயரிய பணிக்குப் பிறகும், தூய தொண்டுக்குப் பிறகும், நாம் பல இடங்களில்,

டிபாசிட் இழந்தோம்
படுதோல்வி அடைந்தோம்

என்ற உண்மையை நாம், எக்காரணம் கொண்டும் மறந்திடக் கூடாது! நமது நெஞ்சிலே பாய்ச்சப்படும் இந்த உண்மை, வேதனையையும் வெட்கத்தையும் தருகிறது என்பதற்காக, நாம் இதனை வீசுவோர்மீது சினம்கொள்வது கூடாது - நான் சீலம் போதிக்கிறேன் என்று கேலிபேசாதே, தம்பி! அவர்கள் இந்தக் கணைகளை நம்மீது ஏவியபடி இருந்தால்தான், நாம், நமது நிலைமையைத் திருத்திக்கொண்டாக வேண்டும் என்ற உள்ளத் தெளிவினைப் பெறமுடியும்!

எவ்வளவு பாடுபட்டோம், எத்துணை உழைப்பை அளித்தோம், மக்களிடம் எவ்வளவு கனிவுரை கூறி, ஆதரவு கேட்டோம், எனினும்,

பல இடங்களில் படுதோல்வி அடைந்தோம்.
பல இடங்களில் டிபாசிட் இழந்தோம்.

என்பதை மறவாதிருப்பதுதான், இனி இத்தகைய வேதனை தரும் தோல்விகளும், எரிச்சலூட்டும் ஏமாற்றங்களும் நம்மைத் தாக்காது இருக்க, நாம் என்ன முறையில் நடந்துகொள்ள வேண்டும், நமது முறைகளில் எதனை எவ்விதம் திருத்திக்கொள்ள வேண்டும், மக்களின் பேராதரவைப் பெறுவதற்காக மேலும் எம்முறையிலே பணியாற்ற வேண்டும் என்பனவற்றினை ஆய்ந்தறிந்து செயலில் ஈடுபடவைக்கும். இந்தப் பேருதவியைத்தான் நம்மைத் தூற்றுவோர் புரிகிறார்கள்! முன்னமோர் முறை, வாழ்க வசவாளர்கள்! என்று நான் எழுதியது நினைவிலே இருக்கிறதல்லவா! பொருளும் புரியுமே இப்போது.

கோபக்கனலை உமிழ்ந்திடும் குணாளர்களே! தூற்றலைத் தொண்டாக்கிக்கொண்ட தூயவர்களே! இழிமொழி பொழிந்து இன்பம் காணும் பெரியீர்! தூற்றுங்கள்! தூற்றுங்கள்! தூ! தூ! என்று நாள் தவறாமல் நாக்கு வரண்டிடு மட்டும் தூற்றிக் கொண்டே இருங்கள். கைகொட்டிச் சிரியுங்கள்! கெக்கசெய்யுங்கள்!

டிபாசிட்டு இழந்தனர்
படுதோல்வி அடைந்தனர்

என்பதைப் பன்னிப் பன்னிக் கூறுங்கள் - பதைக்கப் பதைக்கப் பேசுங்கள்!! ஆமாம், அன்பர்காள்! இந்தக் காரியத்தில் அகில முழுவதும் ஆசானாகத்தக்க அளவுக்கு ஆற்றலைப் பெற்று விளங்கிடும் அரசர்க்கரசர்காள்! அயர்ந்துபோகாமல் இந்த நாராசத்தை எடுத்தெடுத்து வீசுங்கள்! அப்போதுதான், எமக்கு,

சூடும்
சுறுசுறுப்பும்
சூழ்நிலை விளக்கமும்
செயல்படு முறையும்
தரமும் திறமும்
வழியும் வகையும்

நிரம்ப நிரம்பக் கிடைக்கும் - கிடைக்கப் பெற்றால்தான், இன்றைய பதினைந்து, நாளை ஐம்பதாகும் அறுபதாகும். வேதனை தரும் தோல்விகள் மிரண்டோடும். செந்தேனென இனிக்கும் வெற்றிச் செய்திகள் விருந்தாகக் கிடைக்கும். எனவே, ஏசலை ஏவிப் பூசலை எதிர்பார்க்கும் இணையற்ற வீரர்காள்! நித்த நித்தம் தூற்றுங்கள், நிரம்ப நிரம்ப ஏசுங்கள். எம்மிலே செயலற்றுக் கிடப்பவனும் துடித்தெழுந்து செயலாற்றும் செம்மலாக உதவுங்கள்.

தம்பி! இந்தத் தேர்தலில் நாம் வேதனைப்படத்தக்க தோல்விகளைப் பெற்றோமே, அவை, நம்மை கவலைக் கடலிலே ஆழ்த்திவிட்டிருக்கும், கரை காணாமலும், உயிர்த்தெழ இயலாமலும் நாம் அதிலே அமிழ்ந்து போயிருப்போம். நமக்கென்றே தமிழகத்தில் தனிச்சிறப்புடன் அரசோச்சி வருகின்ற வசவாளர்கள் மட்டும் கிளம்பி, வெந்த புண்ணிலே வேல் பாய்ச்சாதிருந்தால்! அவர்தம் இழிமொழிதான், நம்மை, சோகக்கடலிலே ஆழ்ந்துபோவதினின்றும் தப்பவைக்கிறது - அந்தோ! அயராது உழைத்த எமக்கு, அருள்தொண்டாற்றும் எமக்கு, தூயதோர் பணியிலே ஈடுபட்டுள்ள எமக்கு, தாய்த் திருநாட்டின்மீது பூட்டப்பட்டுள்ள தளைகளை நொறுக்கி எறிந்து, தன்னரசு காணவேண்டுமென்று தளராது உழைக்கும் எமக்கு, மக்கள் தம் ஆதரவு இன்னின்ன இடத்திலே இன்னமும் கிடைக்கவில்லையே, தோல்வியன்றோ துரத்தி வந்து தாக்கிற்று, நமது விளக்கமும் வேண்டுகோளும் தெளிவாக இல்லையோ, நமது பணியின் மாண்பு மேலும் பண்பு பெறவேண்டுமோ, மக்களை அணுகி அளவளாவுவதிலே நாம் எடுத்துக்கொண்ட முயற்சி போதாதோ, காரணம் யாதோ? நம்மைச் சிலபல இடங்களிலே வெற்றிபெற ஒட்டாது செய்துவிட்டனரே. நம்மைக் கெடுத்தாலும் தடுத்தாலும் பரவாயில்லை, அங்ஙனம் செய்வதன் மூலம், நாம் எந்த இலட்சியத்தைப் பரப்புகிறோமோ, அந்த இலட்சியத்துக்கு இழிவும் இன்னலும் ஏற்பட்டுவிடுமோ, இனி அதுபோன்றதோர் காரியத்துக்கு ஒரு இடையூறு நேரிடாதிருக்க, நாம் வெற்றிக்கானும் வகையில் நமது முறைகளைத் திருத்தி அமைக்கவேண்டும், ஆற்றலைப் பெருக்கிக்கொள்ள வேண்டும், கூட்டுச் சக்தியைத் தேடிப்பெறவேண்டும். மக்களிடம் உள்ள தொடர்பு மேலும் கனிவுள்ளதாகிட வழிகோலவேண்டும் - என்ற இன்னோரன்ன பிற எண்ணங்களை நாம் பெறவும், பெறுவதன் மூலம் எதிர்கால வெற்றிகளுக்கான அச்சாரம் காணவும், இழிவினைப் பழியினை, இல்லாததை இட்டுக் கட்டியதை, எரிச்சலை, குமுறலை, காய்ச்சலை, கசப்பை, பொல்லாங்கை பொச்சரிப்பை, நச்சு நினைப்புகளை, நாசக்கருத்துகளை, வாரி வாரி வீசிடும் உத்தமர்களல்லவா உதவுகிறார்கள்! வாழ்த்திடத் தவறலாமா!! அதனால்தான், தம்பி, மீண்டும் அவர்களை எண்ணி, நெஞ்சு நிறைந்த மகிழ்ச்சியுடன்.

வாழ்க வசவாளர்!
என்று வாழ்த்துகிறேன்! சோகம் கப்பிக்கொண்ட நம் உள்ளத்துக்கெல்லாம், சுறுசுறுப்பும் விறுவிறுப்பும் சுரந்திடச் செய்யும் சுடுசொல் வீசி, நம்மை எழச் செய்கிறார்கள்!! எழுந்து நின்று, துக்கத்திரையை நீக்கியபடி, சூழ்நிலையை மீண்டும் பார்க்கிறோம். ஆங்காங்கு தாரகைகள் மின்னிடத்தான் செய்கின்றன! வெற்றிக் கதிரொளியும் தெரியத்தான் செய்கின்றது! பெருமைப்படவும் பேசிப்பேசி மகிழவும் தக்க சீரிய வெற்றிகள் சிற்சில கிடைத்துத்தான் இருக்கின்றன! பாலைவனம் என்றெண்ணிப் பதைக்கிறோம். நீரோடைகள் நிரம்பித்தான் உள்ளன!! வேதனைப்படத்தக்க தோல்விகளை நாம் கண்டு கவலைப்படத்தான் செய்கிறோம்; ஆனால் அதே போது, உற்றுப் பார்க்கும்போது, கைகளைப் பிசைந்துகொண்டும், கண்களைக் கசக்கிக்கொண்டும், முணுமுணுத்துக்கொண்டும், சபித்துக் கொண்டும் நிற்கும் அன்பழிக்கும் அருங் குணத்தார்களைக் காண்கிறோம். காரணம் என்ன என்று கேட்கிறோம், அவர்கள்

ஆயாசப்படத்தக்க
அச்சப்படத்தக்க
ஐயோ! அம்மா! என்று அரற்றிடத்தக்க!!
அவனா! அவனா! அவனா! என்று கொதித்துக் கூவிடத் தக்க வெற்றிகளையும் பெற்றிருக்கிறோம்!! என்பது புரிகிறது!!

அந்த வெற்றிகளால் நாம் அடக்கமுடியாத நம்பிக்கைப் போதை கொள்ளாது தடுத்திட, வேதனை தரும் தோல்விகளும், அவைதமைக் குறித்து வீசப்படும் வெந்தழலினும் கொடிய வசைமொழிகளும் பயன்படுகின்றன; அதுபோன்ற, நாம் அடைந்த தோல்விகள் நம்மைத் துளைத்துத் துளைத்துச் செயலற்றவர்களாக்கிடும்போது, பெற்ற ஒருசில வெற்றிகள் பளிச்சிட்டுக் காட்டி, நம்மை, பாதையை மறவாதீர்! பணிபுரியத்தவறாதீர்! சோகக் கடலில் ஆழ்ந்திடாதீர்! சொல்லம்பு கண்டு நிலைகுலையாதீர்! வெற்றி இதோ காணீர்! வேதனையைத் துடைத்துக்கொண்டு, புதிய வேகத்துடன் பணியாற்றி, மேலும் பலப்பல வெற்றிகள், வேதனையைத் துடைத்திடத்தக்க வெற்றிகளைப் பெறவாரீர்! என்று அழைத்திடக் காண்கிறோம் - தன்னடக்கமும் பெறுகிறோம், தன்னம்பிக்கையையும் மீட்டுக்கொள்கிறோம். தம்பி! இதுதான், இன்று நமது நிலைமை!! சிந்தித்துப் பார், சிறிதளவு உன்னிப்பாக - பிறகு, மீண்டும் ஒரு முறை படித்ததைத் திரும்பப் படித்துப் பார். படமும் தெரியும் பாடமும் கிடைக்கும்!!

"நூறு இடங்களுக்குமேல் தேர்தலில் போட்டியிட்ட "இதுகள்' கேவலம் பதினைந்து இடங்களிலேதான் வெற்றிபெற முடிந்தது'' என்று பேசுகிறார்களல்லவா, தம்பி, அவர்களை, நான் மூன்று வகையினராகக் காண்கிறேன்.

1. அதனையும் செய்ய இயலாதார்.

2. அதைக் கண்டே அச்சம்கொண்டார்.

3. அது நமக்குப் போதுமே என்று அங்கலாய்ப்போர்! அண்ணா! இப்படி ஏன் சுற்றிவளைத்துப் பேசுகிறாய், சுருக்கமாக இன்னின்ன கட்சிகள் என்றுதான் கூறிவிடேன் என்று கேட்கிறாய், தம்பி தெரிகிறது, நீயேதான் அந்த வேலையைச் செய்து விடேன்!

காங்கிரஸ் கட்சி, நம்மைவிட அதிகமான இடங்களிலே தேர்தலில் ஈடுபட்டது, பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது, முறையும் நெறியும், பிறகு கவனிப்போம் - வெற்றிபெற்றிருக்கிறது - எனினும், மிகமிகக் குறைந்த அளவு இடங்களையே பெற முடிந்த, நம்மிடம் அந்தப் பெரிய கட்சி அலட்சியமாகவா நடந்துகொண்டது!! ஊர் உலகம் அறியுமே, நம்மை வீழ்த்த, காந்தியாரின் கண்ணீரைப் பன்னீராக்கிக் குளித்து மகிழ்ந்திடும் அந்தக் கட்சி, எவ்வளவு உழைத்தது, உழன்றது, ஊரை அடித்து உலையில் போடுபவனுடைய கரத்தைப் பிடித்துக்கொண்டு, இது கையல்ல... ... என்று என்னென்ன சொல்லி, கெஞ்சிக் கூத்தாடிற்று, எவ்வளவு எவ்வளவு கொட்டிற்று என்பதனை எல்லாம் அறியாதார் யார்?

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு போதுமல்லவா, பதம் பார்க்க! இதோ, பார்!!

சாத்தூர் தொகுதியில் தேர்தலுக்கு நின்றார் முதலமைச்சராக இருக்கும் காமராஜர்! அந்த முலாம் கலையாதிருக்கும் நிலையுடன்!!

காமராஜருக்கு, பெரியாரின் பேராதரவு எனும் புதிய கவசமும் கிடைத்தது!

ஆச்சாரியாரை வீழ்த்தியவர் என்ற "விருது' வேறு அவருக்கு ஏற்கனவே இருக்கிறது.

தேர்தல் காரியத்திலே "அசகாயச் சூரர்' என்று புகழ் சூட்டப்பட்டவர்.

களத்திலே ஈடுபடுமுன்பே உழைப்பாளர் கட்சியை ஒழித்துக் கட்டியதன் மூலம், ஒரு பலமான எதிரியைப் பக்குவமாகத் தன் முகாமுக்கு இழுத்துக் கொண்டவர்.

இவ்வளவு ஆற்றலுள்ளவர் - காமராஜர் - தேர்தலுக்கு நின்ற இடமோ, சொந்தத் தொகுதி!

எதிர்த்து நின்றாரே ஜெயராம ரெட்டியார், அவரை, தம்பி உனக்குத் தெரியுமா? ஊராரைக் கேட்டுப் பார், தெரியுமா என்று.

ஜெயராம ரெட்டியாரின் அறிவாற்றல், தேசத் தொண்டு, தகுதி திறமை, நேர்மை நாணயம் ஆகியவைபற்றி, இந்துவோ மித்திரனோ, தினமணியோ, கல்கியோ, விகடனோ வேறு இதழ்களோ எழுதிப் படித்ததுண்டா - நீயோ, நாடோ? இல்லை!

அவருடைய படங்களைப் பத்திரிகைகள் வெளி யிட்டனவோ? இல்லை!

அவர்தான், ஊரறிந்த, உலகறிந்த, முதலமைச்சராகவும் பெரியாரின் பேரன்பராகவும் கொலுவீற்றிருக்கிற காமராஜருக்குப் போட்டி!!

டிபாசிட் கிடைக்கலாமா? இப்படிப்பட்ட, அசகாயச் சூரரை எதிர்க்கிறவருக்கு!!

தலைமுறை தலைமுறையாகத் தமிழர்கள், காமராஜரைப் பூஜை செய்யவேண்டும் என்று, பூஜாமுறைகளே புரட்டு என்று ஐம்பதாண்டுகளாகப் போதித்துவரும் பெரியாரே பேசுகிறார். அப்படிப்பட்ட, தமிழரின் பாதுகாவலர் தேர்தலுக்கு நிற்கும் போது, யார், எவர் என்று ஊரார் ஆவலுடன் கேட்டுக்கேட்டு விவரம் கிடைக்கப் பெறாமல் திண்டாடும் நிலையில், ஒருவர் போட்டியிடுகிறார். அவரை வீழ்த்திய விருதுநகரார், பெற்ற அதிக "ஓட்டுகள் எத்தனை? தம்பி! சாத்தூரில், காமராஜர் போட்டியிட்டாரே, நமக்குத்தான் காமராஜரை கவிழ்ப்பதுதான் வேலை என்ற அரசியல் இரகசியத்தை பெரியார் தமது முழு ஆற்றலையும் கொண்டு கண்டுபிடித்து, உலகம் உய்யட்டும் என்ற உயர்ந்த நோக்குடன் இந்த உண்மையை நாளைக்குப் பத்து கூட்டங்கள் மூலம் எடுத்துரைத்து வந்தாரே,- அவருடைய அபூர்வ கண்டுபிடிப்பு உண்மை என்றால், நாம் சாத்தூர் சென்று, காமராஜருக்கு ஓட்டுப்போடாதீர்கள் என்று பேசியிருக்க வேண்டுமல்லவா?

நானோ, ஆசைத்தம்பியோ, அன்பழகனோ, சம்பத்தோ, கருணாநிதியோ, கண்ணதாசனோ, சிற்றரசோ, சண்முகமோ, சத்தியவாணியோ, நடராசனோ, யாராவது சாத்தூர் சென்றோமா? சென்று ரெட்டியார் நல்லவரோ கெட்டவரோ ஒருபுறம் அது கிடக்கட்டும்,

சங்கரலிங்கனாரைச் சாகடித்தவருக்கு
சென்னைக்குத் தமிழ்நாடு என்ற பெயர் வைக்காதவருக்கு
தேவிகுளம் பீர்மேடு பறிகொடுத்தவருக்கு
ஓட்டுப் போடாதீர்கள்!

என்று பேசி இருக்கக் கூடாதா? நமது பிரச்சாரம் அங்கும் மும்முரமாகி இருந்தால், காமராஜரின் வெற்றிக்கு ஆபத்து ஏற்பட்டிருக்காதா? நெஞ்சில் கை வைத்து சொல்லச் சொல்லுங்கள் - நெஞ்சில் நேர்மைக்கு இடம் தருபவர்களை!! அரசியல் நாகரிகம், நம்மை சாத்தூர் பக்கம் போகவிடாமல் தடுத்தது! ஆனால் அவர்? ஆழம் தெரியாமல் காலை விடுகிறார்கள் - அகப்பட்டுக் கொண்டு விழிக்கப் போகிறார்கள் என்று அரசியல் பேசுகிறாரே அந்தக் காமராஜர், 100க்கு 15 என்ற கேலிக்கு இலக்காகி உள்ள நாம், தேர்தலில் ஈடுபட்டபோது,

வராத இடம் உண்டா?
வரிந்து கட்டாத நாள் உண்டா?
பம்பரம் போல் சுழன்றாடவில்லையா?

இப்போது மூன்று வகையினர் குறிப்பிட்டிருக்கிறேனே, அதிலே இரண்டாவது வகை யார் என்று யோசித்துப் பாரேன்! புரிகிறது!! அதுபோன்றே மற்ற இரண்டு குறித்தும், சிந்தித்துப் பார், படமும் தெரியும் பாடமும் கிடைக்கும்.

அண்ணன்,
31-3-57
-------------------

படமும் பாடமும்(2)

தேர்தலில் தி.மு.க. பெற்ற வெற்றியும் விளக்கமும் -
காங்கிரசும் கம்யூனிஸ்டும்.

தம்பி!

"கண்ணே! காதற்கனியே! இன்னும் ஓர் திங்களில் நான் வந்து சேருகிறேன். தென்றலும் திங்களும், தேன்மொழியாளே! உன்னைத்தான் வாட்டுகின்றன என்று எண்ணாதே; என்னை அவை இரண்டும் ஈட்டி எனக் குத்துகின்றன. எனினும், என் அன்பே! உனக்கு, முத்துமாலையும் தங்கவளைகளும், உன் அழகுக்குத் தக்கதான அணிபணி பலவும் பூட்டி அழகுகண்டு பெருமைப்படத்தானே, நான் இங்கு அல்லும் பகலும், கொல்லும் நினைப்பினையும் ஒருபுறம் நிறுத்தி வைத்தபடி, பாடுபல பட்டவண்ணம் இருக்கிறேன். பால் வண்ண நிலவே! விரைவில் வருகிறேன்! நான் உனக்குக் கொண்டுவர இருக்கும் அணிகளை அணிந்துகொண்டு, அன்னமென நீ நடந்து செல்ல, ஆரணங்குகள் பலரும் உன்னைக் கண்டு, பெற்றாள் பெருமைக்குரிய மணாளனை! அதனால் அழகு மயிலாள் ஆனந்தவாழ்வு பெற்றாள்! என்று புகழ்ந்துரைக்கக் கேட்டு, அன்று உன்னை, முதன் முதலாக முந்திரிச் சோலையிலே அந்திசாயும் வேளையிலே தொட்டிழுத்து முத்தமிட்டேனே துணிவுடன். நீயும், துரையே! இதென்ன துடுக்குத்தனம் என்று கொதித்துக் கூறுவதுபோலத் துவக்கி, மறுகணமே, புன்னகையுடன் என் மார்பகத்தில் சாய்ந்தனையே, அன்று கண்ட இன்பத்துக்கு இணையான இன்பம் பெறுவேன்! அதற்கே, இந்தப் பிரிவு! அஞ்சாதே! நெஞ்சில் உறைபவளே! வழிமேலே விழிவைத்துக் காத்துக்கிடக்கிறாயே, வஞ்சி! உனைவிட்டுச் சென்றவன், அப்படி என்னதான் கொண்டு வந்து உன்முன் குவித்திடப் போகிறானோ! என்று மகளிர் சிலர் எள்ளி நகையாடிப் பேசுவதாகக் குறித்திருக்கிறாய். கேலி பேசிய அந்தப் பாதி மதியினர், அகலக் கண் திறந்து, ஆச்சரியம் கொள்ளத்தக்க விதத்தில், நான் உனக்கு, ஆடை அணி கொண்டுவந்து தருகிறேன். தந்து, உன்னிடமிருந்து பெறவேண்டியதைப் பெறுகிறேன்!!

பொருள் தேடச் சென்ற தலைவன், பிரிவாற்றாமைப் பெருந்துயரில் சிக்குண்ட தலைவிக்கு இதுபோலன்றோ மடல் எழுதுவான். ஏந்திழையின் உள்ளத்திலே எத்தனை எத்தனையோ சுவைமிகு எண்ணங்கள் கூத்தாடும். பிறகோர் நாள், திரும்பிய தலைவன் தலைவிக்கு எண்ணற்ற முத்தங்களைத் தந்துவிட்டு, தத்தை மொழியாளே! உனக்கென நான் ஏதேதோ தேடிப் பெற்றுவர வேண்டுமென்றுதான் படாதபாடு பட்டேன்; எனினும் உன் அழகுக்கு ஏற்ற அணிபணி கொண்டுவந்தே னில்லை; முயன்று பார்த்தேன், முடியவில்லை! செல்வம் குவிந்திடும் செய்தொழிலால் என்று எண்ணினேன்; ஆனால் ஏய்ப்பவன் இழுத்த பக்கமே செல்வம் செல்கிறது; உழைப்பவனை உதாசீனம் செய்கிறது என்ற உண்மையைத்தான் கண்டேன்; உனக்கு ஏமாற்றம் தருகிறேனே என்று எண்ணும்போது, துக்கம் துளைக்கிறது, வெட்கம் வேலாகக் குத்துகிறது; என் செய்வேன்! என்னால், உனக்கென்று கொண்டுவர முடிந்தது இது ஒன்றுதான்'', என்று கூறியபடி, அவளிடம் ஒரு கைவளையோ, காலுக்குத் தண்டையோ, கூந்தலிற் செருகிக்கொள்ள ஒரு திருகோ, கழுத்திலே பூட்டிக்கொள்ள ஒரு மாலையோ, மட்டும் கொடுத்திடுகிறான் என்றால், அவன் இதய ராணி, "செச்சே! இதுதானா! இவ்வளவுதானா! உமது ஆற்றல் இதற்குத்தானா பயன்பட்டது! இந்த இலட்சணத்துக்கா, ஈராறு மாதங்கள் உழைக்கிறேன், உழைக்கிறேன் - கொண்டுவந்து குவிக்கிறேன் குவிக்கிறேன் என்றெல்லாம் கூறிக்கூறி என்னை ஏய்த்து வந்தீர்! எங்கோ வெளியூர் சென்றிருக்கிறார் மணவாளர், எனக்காகக் கரியும் பரியும் கட்டித் தங்கமும் கல்லிழைத்த நகைகளும் கொண்டு வரப்போகிறார் என்றெல்லாம் கூவிக் கிடந்தாயே, விவரமறியாதவளே! உன் கணவன் கொண்டு வந்தது இதுதானா! என்று என் தோழிகள் கேலி பேசுவரே என்றெல்லாமா, பேசுவாள்! "அன்பே! திரும்பி வந்து உமது அன்பைப் பொழிந்தீரே, அது போதும் எனக்கு! உமது புன்னகையை எனக்களித்துவிட்டீர், அதனினும் மேலான அணியும் பணியும் அவனியில் உண்டா? இந்த நகைகூட, எனக்கு நீர் கொண்டு வந்திராவிட்டாலும், நான் வருத்தப்பட்டிருக்க மாட்டேன்! எனக்கு ஏதேதோ அணிபணிகள் பெற்றுத் தரவேண்டும் என்பதற்காக அல்லவா, கண்காணா நாடு சென்று கடினமான உழைப்பிலே ஈடுபட்டீர், எவ்வளவு அன்பு, உமக்கு என்னிடம் என்று எண்ணும்போதே, என் உடல் புளகாங்கிதமாகிவிடுகிறது - என்றல்லவா கூறுவாள்.

அதுபோலத்தான் தம்பி! நூறு இடங்களுக்குமேல் தேர்தலில் போட்டியிட்ட நாம், 15 இடங்களை மட்டுமே பெறமுடிந்தது என்று துக்கத்துடனும் வெட்கத்துடனும் எடுத்துக் கூறும்போது, நாட்டிலுள்ள நல்லோர், ஆயாசப்பட வேண்டாம்! கிடைத்தது குறைந்த அளவு என்றால் என்ன! உங்கள் முயற்சியின் தரத்தையும் திறத்தையும் கண்டு நாங்கள் மகிழ்கிறோம்! பெற்ற வெற்றி, பெற்றிருக்க வேண்டிய வெற்றியைக் கவனப்படுத்துவதாக அமைகிறது, கவலைப்படவோ, கலக்கமடையவோ அல்ல! என்று கூறி, நம்மை ஊக்குவிக்கிறார்கள், உற்சாகப்படுத்துகிறார்கள்! நமக்கு அதிலும் குறிப்பாக எனக்கு, இவ்வளவு குறைந்த அளவு மட்டுமே கிடைத்ததே என்ற எண்ணம் ஒவ்வொரு கணமும் நெஞ்சைக் குடைகிறது - என்றாலும், இந்த வெற்றியை எங்ஙனம் காதலன் கடும் உழைப்புக்குப் பிறகு, கொண்டு வந்து கொடுத்திடும் கைவளையையோ, காதணியையோ, அன்பின் காணிக்கை என்ற முறையில், காதலி பெற்று அகமகிழ்ந்து பூரிப்படைவாளோ, அதுபோலவே நாம் பதினைந்தே இடங்களிலே மட்டுமே பெற்ற வெற்றியை, நல்லோர், பெருமைக்குரியதாகக் குறிப்பிட்டு, நம்மைப் பாராட்டுகிறார்கள்.

மலையைக் கெல்லி எலியைப் பிடித்தனர்! என்று நம்மைப் பற்றிக் கேவலமாகப் பேசுவோர் இருக்கத்தான் செய்கிறார்கள். - நாடு என்றால், நல்லதும் கெட்டதும், நொந்ததும் வெந்ததும், பலபட இருக்கத்தானே செய்யும். நல்லோர் கூறுவது, மலையைக் கெல்லி எலியைப் பிடித்தார்கள் என்பதல்ல; மலையைக் கெல்ல முடிந்ததே, கிடைத்தது எலிதானே என்று கவலைப்படத் தேவை யில்லை; மலையைக் கெல்லும் ஆற்றலையும் கெல்ல முடியும் என்ற நம்பிக்கையையும் பெற்றீர்களல்லவா, அது சாதாரணமானதல்ல; பெற்ற வெற்றி, இனிப் பெறவேண்டிய வெற்றிக்கு அச்சாரம் என்று கொள்ளுங்கள்; முறை புரிந்துவிட்டது, இனி அடுத்த முயற்சி பலன் அதிகம் பெற்றுத் தரும் என்று கூறி வாழ்த்துகிறார்கள்.

மலையைக் கெல்லினோம் - எலிதானே கிடைத்தது என்று நானேகூடச் சிறிதளவு சோகமாகக் கூறும்போது, அந்த நல்லவர்கள், "இதற்கேன் கவலைப்படுகிறாய்! என்றுமே உன்னைப் பற்றியும் உன் முயற்சிகளைப்பற்றியும் குறைத்து மதிப்பிட்டுக் கொண்டு, இழிமொழியைக் கக்கிக்கக்கி தமது நெஞ்சிலே உள்ள பாரத்தைக் குறைத்துக் கொள்ளுபவர்கள்தானே, இப்போதும் மலையைக் கெல்லினார்கள் எலி பிடித்தார்கள் என்று ஏளனம் செய்கிறார்கள் - சொல்லட்டுமே, அதனால் என்ன, மலையைக் கெல்லினார்கள், எலியைப் பிடித்தார்கள் என்று அவர்கள் சொன்னால், வலையை வீசினார்கள் பாசியைப் பெற்றார்கள், குப்பையைக் கிளறினார்கள் குண்டூசியைக் கண்டெடுத்தார்கள் என்று ஏதாவது திருப்பிச் சொல்லிவிட்டுப் போயேன். என்று கூடச் சொல்லித் தருகிறார்கள். நான்தான் தம்பி! பதில் கூறிக் காலத்தை வீணாக்கிக் கொள்வதில்லையே!! அதனால், மலையைக் கெல்லி எலி பிடித்தார்கள்; மண்ணைக் கவ்வினார்கள், செம்மையாக உதைபட்டார்கள் என்றெல்லாம் சிலர் பேசுவது கேட்டுப், பதில் அளித்திடாமல், அவர்கள் அவ்விதமாகப் பேசுவதை, நாம், நமது கழகத்துக்கு எந்த வகையிலே பயன் படுத்திக்கொள்வது என்ற ஆராய்ச்சியிலே ஈடுபடுகிறேன். அது பலன் அளிக்கிறது; நிச்சயமாகவே!!

நாடு, நாம் பெற்ற இடங்கள் பதினைந்து என்றபோதிலும் அது குறித்துத்தான் பேசுகிறது - ஏன் இவ்வளவு குறைவாகப் பெற்றார்கள் என்று ஒரு சாராரும் - இவ்வளவுதானா பெற முடிந்தது என்று மற்றோர் சாராரும் - இவ்வளவுகூட எப்படிக் கிடைத்தது என்று வேறோர் சாராரும் - இவ்விதம் பல்வேறு வகையாக - நாடு பேசுகிறது!! இதன் பொருள் என்ன? நாட்டவரின் விழி, நம்மீது இருந்த வண்ணம் இருக்கிறது என்பதல்லவா பொருள்!

அந்த "நிலை'யை அடைவதென்பது, சாமான்யமானது அல்ல என்பதை அரசியல் தெளிவு படைத்தவர் அனைவரும் அறிவர். அந்த "நிலை'யைப் பெற முடிந்தது நமது கழகத்துக்கு, நாட்டு மக்கள் கூர்ந்து நோக்கி, மதிப்பிட்டுப் பார்க்கத்தக்க கட்டம் வந்திருக்கிறது என்பதனால்தான், நாட்டிலே உள்ள நல்லவர்கள், பதினைந்து இடங்களிலே நாம் பெற்ற வெற்றியை, காதலன் தன் காதலிக்குத் தந்த பரிசுப் பொருள் போன்றது என்ற முறையில் மகிழ்ந்து கொண்டாடி, வரவேற்பளித்து வாழ்த்துகிறார்கள்.

வாட்போரில் ஈடுபட்ட இரு வீரர்களில், வென்றான் ஒருவன், வீழ்ந்தான் மற்றவன் என்றால், வீர மரபு அறிந்தவனாக வென்றவன் இருந்தால், வீழ்ந்தவனைக் கேலி செய்யமாட்டான்; வீழ்ந்துவிட்டான் இம்முறை எனினும், அவன் நல்ல திறமை பெற்றிருக்கிறான், மிகமிகக் கஷ்டப்பட்ட பிறகே அவனை வீழ்த்த முடிந்தது, வீச்சு முறை நேர்த்தியாக இருக்கிறது, மேலும் சிலகாலம் பயிற்சி இருந்தால், நம்மை நிச்சயம் வீழ்த்தியிருப்பான் என்று எண்ணிக்கொள்வான். இடி இடியெனச் சிரித்து, "ஏடா மூடா, என்னிடமா போரிடத் துணிந்தாய்! என் வாள் வீச்சுக்கு முன்பு நீ எம்மாத்திரம்? பிழைத்தோடிப்போ! இனி, உன் கரத்தால் கத்தியைத் தொடாதே!' - என்று கடுமொழியைச் செருக்குடன் வென்றவன் பேசுகிறான் என்றால், அவன் வீரமரபு அறியாதவன் என்றே விவேகிகள் கூறுவர். தம்பி! வென்றவன் நம்மைப் பார்த்து வீழ்ந்தவனே! என்று கேலி பேசிடக்கூட இல்லை! ஆனால், "வென்றவனுடன் இருந்தோம்' என்பதை பெறுவதற்கரிய விருது என்று எண்ணிக் கொள்பவர்கள், நம்மை கேலி பேசுகின்றனர், வீழ்ந்தாயா! வீழ்ந்தாயா! செம்மையாக விழுந்ததா அடி!! ஹை, ஹை! ஹி!, ஹி!, ஹா, ஹா! என்று கூவுகிறார்கள் - அதனை வீரமுழக்கம் என்று வேறு எண்ணிக்கொள்கிறார்கள்.

வீரர் இருவர் குறித்த எடுத்துக்காட்டினைத் தொடர்ந்து கற்பனை செய்து பார், தம்பி! வென்றவன், வீழ்ந்தவனுடைய வீச்சுத் திறமையை வியந்துகொண்டிருக்கும் வேளையில், வேறோர் ஆசாமி அங்கு வந்து, கெக்கலி செய்தபடி "வீழ்ந்தாயா, வீழ்ந்தாயா! வேண்டும்! வேண்டும்! தலை வேறு உடல் வேறு ஆகியிருக்க வேண்டும், ஏதோ தப்பித்துக்கொண்டாய்! வாட்போர் ஒரு கேடா உனக்கு!'' என்று கேலி பேச, "ஐயா! யாரே நீவிர்' என்று வீழ்த்தப்பட்ட வீரன் கேட்கும்போது, "தெரியவில்லையா பயலே! நான்தான் உன்னை வீழ்த்திய வீரன், கைவாளுக்குத் தைலம் பூசியவன்! இப்போது தெரிந்துகொள் நீ, யாரால் தோற்கடிக்கப்பட்டாய் என்பதை'' என்று கூறினால், வென்றவன், வீழ்த்தப்பட்டவன் எனும் இரு வீரருமேயன்றோ. கைகொட்டிச் சிரித்தபடி, "பலே! பலே! வீரதீர கெம்பீரச் சிங்கமே! வாழ்க! வாழ்க!'' என்று கூறுவர்.

அது போலத்தான், 150 - இடங்களைப் பிடித்த காங்கிரஸ், 15 - இடங்களை மட்டுமே பெறமுடிந்த, நம்மிடம் வாள்வீச்சுத் திறமை வகையாக இருக்கிறதே என்றெண்ணி வியந்துகொண் டிருக்கும் வேளையில், காங்கிரசுக்குத் தேர்தல் களத்திலே வாளுக்குத் தைலம் பூசிக்கொடுக்கும் திருப்பணியாற்றியவர்கள், வீழ்ந்தாயா! வீழ்ந்தாயா என்று நம்மை நோக்கி நையாண்டி செய்கிறார்கள். காங்கிரசும், இந்தக் "கேலிக்கூத்து' கண்டு கைகொட்டித்தான் சிரிக்கிறது! நாம் அதுகூடச் செய்வது, நேரக்கேடு என்று கருதி, 150 இடங்களைக் காங்கிரசினால் எப்படிப் பெறமுடிந்தது, நாம் ஏன் 15 - இடங்களை மட்டுமே பெற்றோம், நமது முறையிலே என்ன கோளாறு இருக்கிறது, என்பதைக் கண்டறிந்து, எதிர்காலத்துக்கான காரியத்தை உருவாக்குவதிலே ஈடுபடுகிறோம்.

150 இடங்களிலே வெற்றி பெற்ற காங்கிரசுக்கு, நிச்சயமாகத் தெரியும் பதினைந்தே இடங்களைப் பெற்ற நமது கழகம், எந்த அளவுக்குத் தேர்தல் களத்திலே திறமையைக் காட்ட முடிந்தது என்ற உண்மை; இடையே இருந்தவர்கள், யாதறிவர் பாபம்! அவர்கள் அறிந்ததெல்லாம், ஆத்திரம் தீரத் திட்டித் தீர்த்தோம்! ஆபாச அகராதியை ஒப்புவித்துக் காட்டினோம்! அதுவும் மற்றவர் செலவில்!! என்பதுதான் - வேறு என்ன! காங்கிரஸ் அபேட்சகர்களுக்கல்லவா தெரியும், பட்ட கஷ்டம், கொட்டிய பணம்; கால்கடுக்கச் சுற்றியவர்களுக்குத்தானே எரிச்சல் தெரியும் - கையும் மனமும் வலிக்க வலிக்கப் பணத்தைக் கரைத்தவர்களுக்குத்தானே அதன் கஷ்ட நஷ்டம் தெரியும் - இடையே இருந்தவர்களுக்கு என்ன! வாய்வலிக்க நம்மைத் திட்டினார்கள். அவ்வளவுதானே! இதில் என்ன கஷ்டம் அவர்களுக்கு! வழக்கமாகச் செய்துகொண்டு வருகிற காரியம் - அதுதவிர வேறு எந்தக் காரியத்திலும் அவர்களுக்கு நாட்டமே செல்ல முடியாத அளவுக்கு, அந்த ஒரு காரியத்தில் ஈடு எதிர்ப்பற்ற திறமை பெற்றல்லவா விளங்குகிறார்கள்!

காங்கிரஸ் கட்சி நாம் 15 - இடங்களில் மட்டும்தானே வெற்றி பெற்றோம் என்று கேவலமாகக் கருதவுமில்லை; அலட்சியமாக இருந்துவிடவுமில்லை, மாறாக ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்; தோல்வி ஏற்பட்ட காரணங்கள் குறித்து விளக்கம் கேட்கிறார்கள். தம்பி! காஞ்சிபுரம் தொகுதியில், காங்கிரஸ் தோற்றதன் காரணத்தைக் கண்டறிந்து, நிலைமையைச் சரிப்படுத்துவதற்காகவே அமைச்சர் ஒருவர் தமது அலாதியான அறிவாற்றலைச் செலவிட்டிருக்கிறார்!!

திராவிட முன்னேற்றக் கழகத்தை நாங்கள் குறைத்து மதிப்பிட்டுவிட்டோம், அதனால்தான் எங்களுக்கு இவ்வளவு தொல்லையும் தோல்வியும் வந்தன என்று கம்யூனிஸ்டு வட்டாரம் கருதுவதாகப் பத்திரிகைச் செய்தி ஒன்று பார்த்தேன்.

பிரஜா - சோμயலிஸ்டு கட்சியின் தலைவரும், என் நண்பருமான சின்னதுரை, திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டாக இருந்து தேர்தலில் ஒரு அணி ஏற்படுத்தாது போனதனால்தான், காங்கிரஸ் இத்தனை இடங்களைப் பிடித்துக் கொண்டது என்று கூறுகிறார்.

சோஷியலிஸ்டு வட்டாரத்திலும், இதுபோன்றே கருதப் படுவதாக அறிகிறேன்.

தேர்தல் களத்திலே ஈடுபட்ட ஒவ்வொரு கட்சியும் திராவிட முன்னேற்றக் கழகம் பெற்ற வெற்றி 15 இடங்களிலே தானே என்று அலட்சியம் காட்டவில்லை; ஆராய்கிறார்கள்; மேற்கொண்டு எடுத்துக்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்துப் பேசுகிறார்கள்; தைலம் தடவியவர்கள் மட்டும்தான், கேலி பேசுகிறார்கள், 15 இடங்கள்தானே என்கிறார்கள். புலியுடன் போரிட்டு, உடலெங்கும் புண்ணாகிக்கிடக்கும் வீரனை, பாராட்டுவர், கேலி பேசமாட்டார்கள். அஃதேபோல, இன்றளவு வரையில் "இந்தியாவிலே' ஏகசக்ராதிபத்யம் செய்வதற்கான கட்சி என்று புகழப்பட்டுவரும் காங்கிரசைத் துணிந்து எதிர்த்து நின்று, பதினைந்து இடங்களில் வெற்றி பெற்ற நமது கழகத்தைக் கேலி பேசுகின்றனர் - பேசுபவர்கள். எங்கள் ஆற்றலைக் காணீர்! நாங்கள் காங்கிரஸ் கட்சியை ஓட ஓட விரட்டி அடித்தோம், எல்லா இடங்களிலும் வெற்றிக்கொடி நாட்டினோம் என்று பட்டியல் காட்டுகிறார்களா என்றால், அதுதான் இல்லை! போகட்டும், பாவம், நம்மைக் கேசெய்வதன் மூலம், தமக்கோர் "தெம்பு'' தேடிக்கொள்கிறார்கள்.

தம்பி! பதினைந்து இடங்களிலே மட்டுமே வெற்றி பெற்றோம்; இது நமக்கு ஏமாற்றத்தைத் தரத்தான் செய்கிறது; எனக்கோ பெரியதோர் ஏமாற்றத்தைத் தருகிறது. போட்டியிட்ட இடங்களிலெல்லாம் வெற்றி பெற்றுவிடுவோம் என்று நான் எண்ணி ஏமாற்றம் அடையவில்லை. நான் குறைந்தது 30 இடங்கள் மட்டிலுமாவது கிடைக்கும் என்று கணக்கிட்டிருந் தேன். பதினைந்துதான் கிடைத்தது, இது எனக்கு வேதனை தரத்தான் செய்கிறது. இந்த வேதனை எனக்கு எப்போது குறைகிறது என்றாலோ, இதற்கும் வக்கற்றுப்போய், இரு கொடி ஏந்திகளாகி, அழையாமலே நுழைந்துகொண்டு, தேர்தல் முரசாகப் பயன்பட்டவர்கள், பதினைந்துதானா! பதினைந்தே பதினைந்துதானா என்று பரிகாசம் பேசுகிறார்களே, அப்போது தான் குறைகிறது! இப்படியும் சில விசித்திர சித்தர்கள் இருக்கிறார்களே என்பதைக் காணும்போது, எனக்கு வேதனை மறைகிறது, வேடிக்கையாக இருக்கிறது.

தம்பி! பத்து ஆண்டுகளாகத் தொடர்ந்து பதவியில் இருந்தும், பலபல கொடுமைகளை இழைத்தும், இந்த முறையும் நாட்டு மக்கள், காங்கிரசு கட்சியையே "ஆளவந்தார்'களாக்கி விட்டனர். மான்செஸ்டர் கார்டியன் பத்திரிகை, இது குறித்து வியந்து பாராட்டி எழுதுகிறது. கார்டியன் வியப்புடன் இதனைப் பாராட்டுவதற்குக் காரணம், ஜனநாயகத்திலே பண்பட்ட பிரிட்டன் போன்ற நாடுகளிலே, மக்கள் விழிப்புணர்ச்சியுடன் இருக்கிறார்கள். ஆளும் கட்சி, அறிவீனத்தாலோ, அகந்தையாலோ, அலட்சியத்தினாலோ, மக்கள் நலனுக்கு ஊறுநேரிடும் காரியம் செய்து விட்டால், மக்கள் சீறி எழுந்து ஆளும் பொறுப்பை மீண்டும் அந்தக் கட்சியிடம் தர மறுக்கிறார்கள். இங்கோ காங்கிரஸ் கட்சி ஆயிரத்தெட்டு தவறுகளைப் புரிந்தும், பொறுப்புமிக்க தலைவர்களும் பொறுப்புள்ள பத்திரிகைகளும் அத்தவறுகளைக் காட்டி இடித்துரைத்தும், ஓட்டுகளை மட்டும் காங்கிரசு கட்சியினால் தட்டிப் பறிக்க முடிகிறது! இதுதான், மான்செஸ்டர் கார்டியன் பத்திரிகைக்கு வியப்பாக இருக்கிறது. இது ஒரு புறம் இருக்கட்டும்; நான் கூறவந்தது தம்பி! இப்படி மக்களிடம் ஓட்டுகளைத் தட்டிப் பறிக்கும் "மகத்துவத்தை' இன்றும் குன்றாமல் பெற்றிருக்கும் ஒரு பலம் பொருந்திய கட்சியுடன் போட்டியிட்டு நாம் பதினைந்து இடங்களைப் பெற்றோம்; அதனை, காங்கிரஸ் கட்சியின் எதிர்ப்பு எனும் சூறாவளியில் சிக்கினால் புயலிற்பட்ட கலமாவோம் என்று அஞ்சி ஒதுங்கிக் கொண்டவர்களும், அடிபணிந்து அக்காரவடிசல் பெற்றவர்களும், கேலியாகப் பேசிக்கொண்டு போகட்டும்; தங்கள் இயலாமையை இதன் மூலம் காட்டிக் கொள்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சிக்கு இன்றளவும் பத்திரிகை பலம், பிறர் கண்டு வியந்திடத்தக்க அளவு இருந்திடக் காண்கிறோம்.

முதலாளிகள், தங்கள் இலாப வேட்டைக்கு வாய்ப்பும் வசதியும் பெற, காங்கிரசை ஆதரிக்கவேண்டும் என்ற தத்துவத்தைப் பொன்னெனப் போற்றி வருகிறார்கள்.

டாட்டா போன்றோரின் பணம் பெட்டிகள், காங்கிரசின் ஓட்டுப் பெட்டிகளுக்குத் துணையாக நிற்கின்றன.

இவ்வளவு "வல்லமை' படைத்த ஒரு கட்சியை, தோள் வலியும் வாள்வலிவும் படைத்த ஓர் தூர்த்தனை, தொலைவிலிருந்து "கவண்கல்' வீசியே வீழ்த்த முற்பட்ட அஞ்சா நெஞ்சனைப்போல், வசதியற்ற நிலையையும் மறந்து, நாம் எதிர்த்து நின்றோம். நமது கோபப்பார்வை போதும் இவர்களைச் சுட்டுச் சாம்பலாக்க என்று கொக்கரித்தனர்; கலங்கினோ மில்லை; தேர்தலில் ஈடுபடுவது ஜனநாயகக் கடமை, வெற்றி பெற்றே தீரவேண்டும் என்று ஒன்றும் இல்லை, கூடுமான வரையில், முடிந்த அளவு, பலமான எதிர்ப்பினை உருவாக்கிக் காட்டப்போகிறோம் என்று கூறிவிட்டு, களத்தில் இறங்கிக் கடமையைச் செய்தோம், 15 இடங்களில் வெற்றி கிடைத்தது. மற்றவர்கள் கண்டு புகழ்ந்திட, வியந்திடவேண்டிய சம்பவமே தவிர, கேலி பேசும் சம்பவமாகுமா இது!!

பதினைந்து இடங்கள்தான் பெற்றோம். ஆனால் மொத்தமாக நமக்கும் கிடைத்துள்ள ஓட்டுகள், சாமான்யமல்லவே! கட்சி என்ற முறையில், காங்கிரசுக்கு அடுத்தபடியாக சென்னை ராஜ்யத்தில் தி. மு. கழகமே "ஓட்டுகள்' பெற்றிருக்கிறது என்பதை வியந்தே, பல இதழ்கள் எழுதியுள்ளன.

கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற பழமொழி போலல்லவா இது இருக்கிறது, இடங்கள் அதிகம் கிடைக்காவிட்டாலும் ஓட்டுகள் ஏராளம் கிடைத்தன என்று "விண்ணாரம்' பேசுவது என்று சிலர் கூறக்கூடும்.

ஒரு ஜனநாயக நாட்டிலே இடங்கள் ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை எத்தனை கிடைத்தன என்பதை மட்டுமல்ல, ஓட்டுகளின் எண்ணிக்கையையும் கூர்ந்து பார்த்துத்தான், அரசியல் போக்கு, எப்படி உருவாகிறது என்பதைத் தெரிந்து கொள்வார்கள் - எதிலும் தெளிவு வேண்டும் என்ற கொள்கை கொண்டவர்கள். அந்த முறையிலே, தி. மு. கழகம் பெற்றிருக்கும் ஓட்டுகளின் எண்ணிக்கை, பலப்பல அரசியல் தலைவர்களை, மலைக்கச் செய்திருக்கிறது. அதனை மறைத்துச் சிலர் பேசுவர், உண்மையை நேருக்கு நேர் சந்திக்கக் கிலி கொள்பவர்கள், உள்ளதைக் காண மறுக்கிறார்கள்.
---------------

படமும் பாடமும்(3)

தி. மு. க. வெற்றியும் வடநாட்டுப் பத்திரிகைகளும் -
நாகநாடும் திராவிட நாடும்.

தம்பி!

தேர்தல் துவங்கிய நாள்தொட்டு, பத்திரிகைகளில் பல்வேறு விதமான படங்களைக் கண்டாய் அல்லவா? ஒவ்வொன்றும், நமது கழகத்தை மக்கள் துச்சமென்றெண்ணி ஒதுக்கித் தள்ளிவிடவேண்டும், நச்சுப் பூச்சி என்றெண்ணி நசுக்கி அழித்திடவேண்டும் என்ற நோக்கத்துடன் வெளியிடப்பட்டன. படங்களை வெளியிட்டவர்களின் எண்ணம் கெட்டது என்பது மட்டுமல்ல, நான் உன்னைக் கவனிக்கச் சொல்வது, அவர்களுக்கே உள்ளபடி, நமது கழகத்திடம் அத்துணை வெறுப்பு; வெறுப்புக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறாய்? நம்மைப்பற்றிச் சரியாகப் புரிந்துகொள்ளாதது அல்லது புரிந்துகொள்ளவேண்டுமென்ற எண்ணமே கொள்ளாமல், ஏனோதானோ என்ற போக்குடன் எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற முறையில் இருந்து வந்தது.

ஏழைக் குடும்பத்து ஏந்திழை, தன் கணவனுக்கு வந்துற்ற நோய் தீர்க்க மருந்துபெற, செலவுக்குப் பணம் கிடைக்காமல், தன் காதணியைக்கொண்டு சென்று, அங்காடியில் விற்றிட முயலும் காட்சியைக் கண்டதுண்டா? சோகம் கப்பியமுகம் - நீர் ததும்பும் கண்கள் - தைலமற்ற கூந்தல் - அழுக்கேறிய ஆடை - தட்டுத்தடுமாறும் பேச்சு - தள்ளாடும் நடை! இந்நிலையில் இருந்திடும் அம்மை, காதணியை விற்றிட முனையும்போது, அங்காடி ஐயன், ஐயோ! பாவம்! என்று இரக்கம் காட்டுவதில்லை. - பொருள் களவாடப்பட்டதோ? என்றே ஐயப்படுகிறான். அச்சமூட்டும் கேள்விகளால் தாக்குகிறான். கண் கசிந்து காரிகை நின்றாலோ, "நீலி வேடமிட்டு, என்னை ஏய்க்காதே! கள்ளி! காதணியை எங்கு களவாடினாய்?'' என்று கேட்டு கண்டபடி ஏசுகிறான். போலீசுக்குத் தகவல் கொடுத்திடும் போக்கினனும் உண்டு. காரணம் என்ன? அந்த அம்மையின் கோலம்!! கண்ணகியின் காற்சிலம்பு விற்ற கோவலனையே, கோலம் கண்ட மன்னன், கெடுமதியாளன் சொல்லை நம்பி, கள்ளனென்று கூசாது கூறி, கொலையும் செய்திட கட்டளை பிறப்பித்தனனே!!

அஃதேபோல, நமது கழகத்தின் கொள்கைகளை எடுத்துக் கூறி, ஆதரவு திரட்ட முனைந்திடும் நாம், எளியோர். நாற்பதாண்டு அனுபவம் - நாலாறு இலட்ச பணபலம் - ஏழெட்டு கிராமச்சொத்து - எனும் "மகிமை'கள் இல்லை; சாமான்யர்கள், பெரிதும் இளைஞர்கள்! அணிமணியினை ஓர் ஏழை விற்றிட முற்படும்போது, ஐயம் கொண்டு, அதட்டி மிரட்டிக் கொடுமை செய்யும் உலக வழக்குக்கு ஒப்ப, நல்ல மதிப்புள்ள கொள்கைகளை, நாம் எடுத்துக்காட்டுகிறோம், அதுகண்டு அலட்சியப்படுத்துகிறார்கள் - அச்சமூட்டுகிறார்கள் - கண்டிக்கிறார்கள்.

மாளிகைவாசிகள் அல்லது மடாலயவாசிகள் மதியற்றது பேசிடினும், உட்பொருள் ஏதேனும் இருந்திடக்கூடும், அதனை அறிந்திடும் "பரிபக்குவம்' நமக்கு ஏற்படவில்லை என்றெண்ணி, பயபக்தி காட்டுவோர் நிரம்பிய சமூகமல்லவா! அதே பழக்கமல்லவா!! அதனால், நாம் எடுத்துக்காட்டும், கொள்கைகளில் சிறப்பும் சீலமும், நமது போக்கில் பெறுப்பும் இருப்பதாக, நம்புவது பெரும்பாலோருக்குக் கடினமாக இருக்கிறது. இதன் காரணமாகவே, நம்மைப் புரிந்துகொள்ள மறுத்து வந்திருக்கிறார்கள்; புரிந்து கொள்ளாததால் அலட்சியமாகப் பேசி ஏச முற்பட்டனர்.

அந்தப் போக்கின் விளைவுதான் நம்மைக் குறித்து, இதழ்கள் வெளியிட்ட பலப்பல கேலிப் படங்கள்!! அவைகளை எல்லாம் கண்ட உனக்கு, இந்த இதழில் ஒரு படம் காணும் வாய்ப்பு! இதழின் மேலட்டையில்!! பார்த்திருப்பாய், மேலால் படிப்பதற்கு முன்பு, மீண்டுமோர் முறை பார்; படத்தை!

அடிபட்ட மாடுகளை மருத்துவ விடுதிக்குத் தூக்கிச் செல்கிறார்கள்! தோல்வி ஏற்பட்ட இடங்களில், காங்கிரசைத் திருத்த, மருந்தூட்ட புதிய வலிவு ஊட்ட முற்பட்டிருக்கிறார் களே, தலைவர்கள். அதனை விளக்கிடும் படம்.

பல்வேறு இடங்களிலே, காங்கிரஸ் தோற்றிருக்கிறது. காங்கிரசுக்கு இருப்பதுபோன்ற

உலகப் புகழ்பெற்ற தலைவர்
பிரம்மாண்டமான பத்திரிகை பலம்
பெரியதோர் பணபலம்
அளவற்ற அதிகார பலம்

வேறு எந்தக் கட்சிக்கும் கிடையாது என்பதை எவரும் ஒப்புக் கொள்வர். எனினும், பல மாநிலங்களிலே, காங்கிரஸ் கட்சியினர் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். மாடுகள் அடிபட்டு கட்டித்தூக்கி வரப்படும் காட்சி, இதனைக் காட்டத்தான்! ஆனால் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டதேயொழிய, மருந்தூட்டி மீண்டும் வலிவுபெறச் செய்யமுடியும், அதற்கான வசதி இருக்கிறது என்பதைக் காட்டவே, "மாடுகளுக்கு மருத்துவ விடுதி' இருப்பதாகப் படம் காட்டுகிறது!!

தம்பி! இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வந்துற்ற நிலையை எடுத்துக்காட்டும் இந்தப் படம், நமது இதழில் காண்கிறாயே தவிர, இதனை முதலில் வெளியிட்டது நாமல்ல.

அசாம் ட்ரைப்யூன் எனும் ஆங்கில நாளிதழில் நான் கண்ட படம்; அசாம் மாநிலத்தில் கௌஹத்தி நகரிலிருந்து வெளியிடப்படும் இதழ்; காங்கிரஸ் கட்சி இந்தத் தேர்தலில் பலத்த தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதை, காங்கிரஸ் ஏட்டினாலேயே, அடியோடு மறைத்திட இயலவில்லை. மருத்துவ விடுதிக்கு அடிபட்ட மாடுகள் தூக்கிச் செல்லப்படுவதுபோல், படம் வெளியிட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

கேரளத்தில், கம்யூனிஸ்டு கட்சி அமைச்சர் அவை அமைக்கும் அளவுக்கு வெற்றிபெற்றிருக்கிறது; பார்க்கலாமே இவர்கள் என்னதான் சாதித்துவிடுகிறார்கள் என்று வீம்பு பேசுகிறார்களே தவிர, காங்கிரஸ் மேலிடத்துக்கு உள்ளத்தைப் பிடித்துக் குலுக்குவது போன்ற நிலைமைதான், இதனால் ஏற்பட்டிருக்கிறது. தேர்தலுக்குமுன்பு, இம்முறை கேரளத்தில் கம்யூனிஸ்டு கட்சி தலைதூக்காது, அதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டோம் என்று வீரம் பேசினர் - இப்போது, கம்யூனிஸ்டு கட்சி வெற்றிபெற்றுவிட்டால் என்ன! என்ன சாதித்துவிட முடியும்! கட்டு திட்டத்துக்கு அடங்கி, பெட்டிப் பாம்பாகி, நாங்கள் சொல்லுகிறபடி ஆடித் தீரவேண்டும். இல்லையானால் அமைச்சர்களுக்குச் சீட்டுக் கொடுத்து விடுவோம் என்று வீம்பு பேசுகின்றனர். ஏமாற்றமும் கிலியும் இவ்விதம் பேசச் செய்கிறது என்பதை எவரும் எளிதில் அறிய முடிகிறது!!

நேரு பண்டிதரை, ஆசியாவைக் கம்யூனிஸ்டு அபாயத்தி லிருந்து காப்பாற்றவல்ல "புருஷோத்தமர்' என்று கொண்டாடி வரவேற்கும் அமெரிக்கா, "நேருவின் இந்தியாவில்,' ஒரு மாநிலம் - அது அளவிலே எப்படி இருப்பினும் சரி - கம்யூனிஸ்டு அமைச்சர்களின் ஆட்சியில் வந்துவிட்டது என்ற செய்தி கேட்டு, பாராட்டவா செய்யும்!! நேருவின் இந்தியா' - நேருவின் பிடியிலிருந்து பிய்த்துக் கொள்கிறது என்ற பேருண்மையைக் கேரளம் எடுத்துக் காட்டுகிறது!!

அகில இந்தியாவையும், உலகின் பல்வேறு நாடுகளையும், சிந்தனையில் ஆழ்த்திவிட்ட அளவு வெற்றிபெற்று, அமைச்சர் அவை அமைக்கும் நிலையைப் பெற்றிருக்கும் கம்யூனிஸ்டு கட்சியின் வெற்றியையே, கேலிக்குரியதாகப் பேசும் போக்கில், காங்கிரஸ் தலைவர்கள் இருக்கும்போது, தம்பி! 15 இடங்களை மட்டுமே பெற முடிந்த நம்மை ஒரு பொருட்டாகவா மதிப்பார்கள்!! மமதை நிரம்பியவர்களாகப் பேசுகிறார்கள்!

அந்தப் போக்கு தவறு, தீது பயப்பது என்பதைக் காட்டவே அடிப்பட்ட மாடுகளை மருத்துவ விடுதிக்கு எடுத்துச் செல்வதாகப் படம் போட்டுக் காட்டி, அசாம் டிரைப்யூன் அறிவூட்டுகிறது.

காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு, கேரளத்தில் சிதைக்கப்பட்டிருப்பது, பண பலத்தால் அல்ல, கொள்கை பலத்தால். காங்கிரஸ் கட்சி பிற்போக்குக் கொள்கையின் இருப்பிடமாகவும், முதலாளித்துவத்தின் பாசறையாகவும், சர்வாதிகாரம் நெளியும் இடமாகவும் இருக்கிறது, என்பதை உணர்ந்த மக்கள், முற்போக்கும், ஜனநாயகமும், சமதர்மமும் வேண்டும் என்ற தம்முடைய "வேட்கை'யை கம்யூனிஸ்டு கட்சியின் வெற்றிமூலம் எடுத்துக் காட்டுகின்றனர். இது காண முற்போக்கு எண்ணங் கொண்ட எவருக்கும் மகிழ்ச்சியும் பெருமையுமாகவே இருக்கும்.

ஆனால், காங்கிரசின் செல்வாக்கை ஒரிசாவில் சிதைத்தவர்கள், காங்கிரஸ்காரர் எவ்வளவோ தீவிரவாதிகள் என்று சொல்லத்தக்க அளவுக்குப் பிற்போக்குவாதிகளாக உள்ள கண தந்தர பரீஷத் எனும் ஜரிகைக் குல்லாய்க்காரர்கள்!!

மராட்டியப் பகுதியிலேயோ, பல்வேறு கட்சிகளிலும் உள்ள மொழி அரசு கொள்கை கொண்டவர்கள் ஒன்றுகூடிய "சமிதி' காங்கிரசை அந்தப் பகுதியில் முறியடித்திருக்கிறது.

அசாமில், தனிநாடு கேட்போர் செல்வாக்குப் பெற்று விளங்கும் மலைநாடு, காங்கிரசை வீழ்த்தியிருக்கிறது.

இங்கு, காங்கிரசை எதிர்த்து நின்ற நாம், பொச்சரிப்புக் காரர் தவிர, பிறர் கண்டு பாராட்டத்தக்க வகையில் வெற்றி பெற்றிருக்கிறோம்.

இந்தக் "குறிகள்' காலப்போக்கைக் காட்டுவதாகும் என்று கருத்துத் தெளிவுள்ளோர் எண்ணுகின்றனர். அலாதியாகத் தெரியும் என்பதற்காகவே, எதிலும் காட்டுப்போக்கு காட்டுபவர்கள் மட்டும், பூ! பூ! இதெல்லாம் ஒரு வெற்றியா!! இதுகளெல்லாம் ஒரு கட்சியா!! என்று பேசுகின்றனர்.

தம்பி! தேர்தலின்போது, நமது கழகத்தை இழித்தும் பழித்தும் பெரியாரின் படை பேசியபோது, மனம் குமுறிய பலர் என்னிடம் கூறினர் - என்னிடம் கூறுவானேன் ஐயா! என் செவிக்கேதான் அந்தச் சங்கீதம் நித்த நித்தம் கேட்கிறதே என்று சொன்னேன்; இப்படி வரைமுறையின்றி வாய்க்கு வந்தபடி பேசுகிறார்களே, இதை அனுமதித்துக்கொண்டே போவதா என்று கேட்டனர்; நாம் அனுமதிப்பதாவது தடுப்பதாவது, இந்த இழிமொழிகளைத் தாங்கிக்கொள்வதற்கான நெஞ்சு உரத்தை நாம் பெறவேண்டும் என்று பதிலளித்து அனுப்பினேன். பிறகு நானே யோசித்தேன் - ஏன் அவ்விதமாகப் பேசுகிறார்கள் என்று. எனக்கு, தம்பி! பேசுபவர்களின் நிலை புரிந்தது - புரிந்ததால் எனக்கு அவர்களிடம் இருந்த "கொஞ்சநஞ்சம்' கோபம்கூடக் குறைந்தது. அனுதாபம் ஏற்பட்டது. அவர்கள் எடுத்துக் கொண்டுள்ள வேலையும், தமக்கென்று மேற்கொண்டுவிட்ட போக்கும், வேறு விதத்தில், முறையில், பேசவைக்கவில்லை - முடியவில்லை.

புலிவேடம் போட்டுக்கொண்டு பரத நாட்டியம் ஆடமுடியுமா? கற்பனை செய்து பாரேன்!!

புலிவேடம் போட்டு ஆடுவது என்றால், அதற்கான விதத்தில் தாவியும் பாய்ந்தும், பதுங்கியும் உலுக்கியும், "ஜகா' வாங்கியுந்தான் ஆடவேண்டும் - ஆடமுடியுமே தவிர, பரத நாட்டிய பாணியிலா ஆடிக்காட்ட முடியும்!!

அதுபோலத்தான், தம்முடைய கொள்கைகளுக்கு ஆதரவு திரட்டுவது என்ற வேலையை விட்டுவிட்டு, அல்லது மூட்டை கட்டி ஒரு புறம் வைத்துவிட்டு, யார் பேரிலோ எதற்காகவோ ஏற்பட்டுவிட்ட ஆத்திரத்தைக் கொட்டித் தீர்த்துக்கொள்வதற் காக, வேறு யாருக்கோ "அடி ஆளாக'ப் போகத் துணிந்துவிட்ட பிறகு, அதற்குத் தகுந்த "பாஷை' தானே இருக்கும் - வேண்டும் - பிறக்கும் - மணக்கும்!

எத்தனை எத்தனை ஏற்புடைய கொள்கைகளை, எவ்வளவு எழிலுடன் எடுத்துக் கூறிவந்தவர், இன்று இப்படிப்பட்ட "பாஷை'யில் பேசவேண்டி நேரிட்டுவிட்டது என்று எண்ணியபோது, உண்மையிலேயே நான் அனுதாபப்பட்டேன்.

அந் நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள், இப்போது அதே முறையில் பேசுகிறார்கள் - தமக்கென வேறு புரட்சிகளைக் கண்டுபிடித்து செயல்படுகிறவரையில், இதே "பாஷை'தான் இருக்கும்.

பொதுவாகவே, அரசியல் நிலைமைகளுக்கான ஆய்வுரைகளையும், தீர்ப்புகளையும், அவ்விடமிருந்து எதிர்பார்த்தால், எரிச்சலும் ஏமாற்றமும்தான் கிடைக்கும். அல்லிப் பூவில் மல்லிகை மணம் கிடைக்காது.

ஆனால், அரசியற் குறிகளைக் கண்டு காலத்தைக் கணிப்போர், காங்கிரசுக்குப் பல்வேறு பகுதிகளிலே ஏற்பட்டிருக்கும். "சரிவு சிதைவுகளை' சுட்டிக்காட்டுகிறார்கள்.

இதழின் மேலட்டையில் உள்ள படம், இந்த நோக்கத்தை விளக்குவதாக இருக்கிறது.

தம்பி! தேர்தலென்பதே ஒரு பித்தலாட்டம் - அதில் ஈடுபடுபவர்கள் அனைவருமே அயோக்கியர்கள் - ஓட்டர்கள் எல்லோருமே அப்பாவிகள் - என்ற "அருமை'யான தத்துவத்தை யும் கண்டறிந்து கூறிக்கொண்டு, அந்தத் தேர்தலில், ஓட்டு கேட்பதற்காக யார் பின்னோடும் சென்றால், மனதுக்கு இலாபகரமான சந்தோஷம் கிடைக்கும் என்று இருந்தவர்களின், பேச்சும் போக்கும் தொல்லை நிரம்பிய வாழ்க்கையில் தவிக்கும் மக்களுக்கு, ஒருபொழுது போக்காகிவிட்டது. எனவே, அது குறித்து நாமும் அதிகமாகக் கவனிப்பதற்கில்லை!!

நாம் பெற்ற வெற்றிகள், கம்யூனிஸ்டு கட்சி கேரளத்தில் பெற்றுள்ள மகத்தான வெற்றி, கணதந்திர பரீஷத் ஒரிசாவில் பெற்ற கவலையூட்டும் வெற்றி, மராட்டிய மண்டலத்திலே சமிதி பெற்றுள்ள வசீகரமிக்க வெற்றி, அசாமில் மலைநாடு பெற்றுள்ள குறிப்பிடத்தக்க வெற்றி - இவைகளுக்கான காரணங்களைச் சிலர் உள்ளபடி கண்டறிந்தாகவேண்டுமென்று முயலுகின்றனர்.

அந்தச் சிரமம் நமக்கேன் என்று கருதும் போக்கினர் - காட்டுத் தீ - கடுவிஷம் - என்று சுடுசொல் கூறிவிடுவதன் மூலம், தமது வேலை முடிந்துவிட்டதாகக் கருதுகின்றனர்.

பீகார் மாநிலத்திலிருந்து வெளிவரும், இந்தியன் நேஷன் ஆங்கில இதழ், இது குறித்து வழங்கியுள்ள ஆய்வுரை சுவையும் பயனும் உள்ளதாக இருந்திடக் கண்டேன். கேரளத்தில் கம்யூனிஸ்டு கட்சி பெற்ற வெற்றிபற்றியே அந்த இதழ் ஆய்வுரை அளித்திருக்கிறது - என்றாலும், பொதுவான அரசியல் விளக்க மும், தத்துவவிளக்கமும் அதிலே இருந்திடக் காண்கிறேன்.

ஆரிய - திராவிடப் பிரச்சினை என்பது அபத்தம் என்பாரும்,

ஆரிய - திராவிடப் பிரச்சினை ஆபத்தானது என்பாரும்,

ஆரிய - திராவிடப் பிரச்சினை என்பது, புதை குழியைத் தோண்டிப் பார்த்திடும் போக்கு என்பாரும் உண்டல்லவா?

காங்கிரசு கட்சி மட்டுமல்ல, வெற்றிபெற்ற கம்யூனிஸ்டு கட்சியே கூட, ஆரிய... திராவிடப் பிரச்சினையை, கேவலமானது கேடு பயப்பது என்று சில வேளைகளிலும், இல்லாதது இட்டுக் கட்டியது என்று சில நேரங்களிலும், பேசிடக் கேட்கிறோம்.

நமது கம்யூனிஸ்டு நண்பர்கள், திடுக்கிட்டுப் போவர் என்று எண்ணுகிறேன், "இந்தியன் நேஷன்' இதழ் தரும் ஆய்வுரையைக் கண்டால்.

தம்பி! இதழ் "பாட்னா' விலிருந்து வெளியிடப்படுகிறது. காஞ்சிபுரத்துக் காகிதமல்ல!!

கம்யூனிஸ்டு கட்சி கேரளத்தில் வெற்றி பெற்றதற்குக் காரணம் கேரளத்தில் உள்ள திராவிட உணர்ச்சிதான் என்று அந்த இதழ் எழுதுகிறது.

Kerala is a small reorganised State in the South

கேரளம், தெற்கே உள்ள புதிதாக உருவாக்கப்பட்ட அரசு.

The basis of her culture is Dravidian

அதன் அடிப்படை திராவிடப் பண்பாடு.

இந்த எழுத்துக்களைப் படிக்கும்போதே, மற்றவர்களுக்கு ஏற்படுவதைவிடக் கம்யூனிஸ்டுகளுக்கு எரிச்சல் இருக்கும் - திராவிடமாவது ஆரியமாவது என்று முணுமுணுப்பர். ஆனால் "இந்தியன் நேஷன்', பண்பாடுகளுக்குத் தக்கபடிதான் அரசியல் மாற்றங்கள் இதுபோது ஏற்பட்டுள்ளன என்பதை எடுத்து விளக்குகிறது.

In our analysis there are historical reasons for the growing Communist influence in the non - Brahminical belt of Inida.

பார்ப்பனரல்லாதார் வாழும் இந்தியப் பகுதிகளிலே கம்யூனிஸ்டு செல்வாக்கு வளர்ச்சி அடைந்து வருவதற்கு சரித்திர பூர்வமான காரணங்கள் இருப்பதை ஆராய்ந்தறிகிறோம்.

To be precise, the Communist party is showing better results in the non-Aryan belt.

குறிப்பாகக் கூறுவதானால், கம்யூனிஸ்ட்டு கட்சிக்கு ஆரியமல்லாத பகுதிகளிலேதான் நல்ல பலன்கள் கிடைத்து வருகின்றன!

There is marked influence of Communist in Southern States and in Bengal, which may be taken as non-Aryan Belt

தென்னரசுகளிலும், வங்காளத்திலும், கம்யூனிஸ்டுக்கு சிறப்பான செல்வாக்கு இருக்கிறது - இந்த இடங்களை ஆரியரல்லாதாரின் வட்டாரங்கள் என்று குறிப்பிடலாம்.

செச்சேச்சே! இதென்ன இந்தக் கழகத்தார், பாட்னாவிலுள்ளவர் களைக்கூடவா கெடுத்துவிட்டார்கள். பார்ப்பனர் - அல்லாதார்! ஆரியர் - திராவிடர்! ஆரிய பூமி, திராவிடத்தரணி என்ற பைத்தியக்காரத்தனமான பேச்சு, பாட்னாவில் கூடவா எழுவது!- என்று கை பிசைந்துகொண்டும், கண்களைக் கசக்கிக் கொண்டும், சிலர் கூவக்கூடும். "இந்தியன் நேஷன்' கேரளம் திராவிடப் பண்பாடு மிகுந்த இடம், அங்கு கம்யூனிஸ்டு கட்சி வெற்றி பெற்றதற்குக் காரணம் அதுதான் என்று கூறிவிட்டு, அதற்கான விளக்கம் தராமலில்லை. ஆரிய கலாச்சாரம், திராவிடப் பண்பாடு என்பவையின் அடிப்படை பற்றிய விளக்கம் அளிக்கிறது.

The Aryan mind which may be Characterised as the Brahminical mind may be sharp but it is rigid. It is burdened with rites and taboos. It may be metaphysical but it is not emotional and as such it is not very receptive.

ஆரிய மனப்பான்மையை பிராமண மனப்பான்மை என்று கூறலாம். அந்த மனப்போக்கு கூர்மை நிரம்பியதாக இருக்கலாம்; ஆனால், அது வளர்ச்சிபெற மறுக்கும், ஆழ்ந்துவிட்ட நிலையில் உள்ளது. தடை விதிகளையும் சடங்குகளையும் சுமந்துகொண்டிருப்பது. வேதாந்தப் போக்கினதாக இருக்கலாம்; ஆனால், எழுச்சிக்கு இடமளிப்பதில்லை; எனவே புதிய கருத்துக்களை வரவேற்று ஏற்றுக்கொள்ளும் வளம் ஆரிய மனப்பான்மைக்கு இல்லை.

The non-Aryan mind is definitely emotional

ஆரியரல்லாதார் மனப்பான்மை நிச்சயமாக எழுச்சிமிக்கது.

It is receptive to New ideas

புதிய கருத்துக்களை வரவேற்று ஏற்றுக்கொள்ளும் மனவளம் கொண்டது.

Thus the anti-Congress temper in the South and in Bengal has found expression in the support to the Communist party.

எனவே, தெற்கிலும் வங்கத்திலும் கிளம்பிய காங்கிரஸ் எதிர்ப்புணர்ச்சி, கம்யூனிஸ்டு கட்சியை ஆதரிப்பது என்ற வடிவமெடுத்தது.

But in the Aryan Belt the opposition pattern is different.

ஆனால் ஆரிய வட்டாரத்தில், காங்கிரஸ் எதிர்ப்புணர்ச்சியின் வடிவம் வேறு வகையானதாக இருக்கிறது.

The Janata party and the Jharkand party represent the anti-Congress mood in Bihar, but they are not wedded to evolutionary experiments.

பீகாரில் உள்ள ஜனதாகட்சி, ஜார்கண்டு கட்சி, காங்கிரஸ் எதிர்ப்புணர்ச்சியின் வடிவங்களாக உள்ளன; ஆனால் இவை புரட்சிகரமான திட்டங்களைக் கொள்ள மறுப்பவை.

The Ganatantra Parishad is strong in Orissa as an opposition party; the Jana Sangh and independents have some strength in the Punjab, Rajasthan, Uttar Pradesh which are strongly Aryan Belts.

ஒரிசாவில், பலம் வாய்ந்த எதிர்க் கட்சியாக கணதந்தர பரீஷத் உள்ளது! ஜனசங்கமும் சுயேச்சைகளும் பஞ்சாப், ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம் ஆகிய இடங்களில் சிறிது வலிவு பெற்றுள்ளனர் - இந்த இடங்க ளெல்லாம் ஆரிய வட்டாரங்கள்.

The Dravidian mind is a daring mind with expressions and rich varieties.

திராவிட மனப்பான்மை, அஞ்சாதது! புத்தம் புது முறைகளைக் கையாண்டிடத் துடிப்பது. தம்பி! ஆரிய திராவிடப்பிரச்சினையைப் பேசிடும் நாம், வீணர்கள் என்று விளம்பி வந்தனரே, இப்போது அவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள்? ஆரியர் - திராவிடர் என்று நாம் தனி ஆட்களைக் குறித்து, வெறுக்கவோ, விரட்டி அடிக்கவோ, பேசும் போக்கினரல்ல, முறைகளைத்தான் எடுத்துக் கூறி வருகிறோம்.
---------------

படமும் பாடமும்(4)

மராட்டிய மண்டல எழுச்சியும் வெற்றியும் -
தேர்தலில் தி. மு. கவும் காங்கிரசும் பெற்ற வாக்குநிலை

தம்பி!

தமிழகத்தின் தனிச்சிறப்பினை, இலக்கியமும், வெட்டுண்டும் சிதறுண்டும் கிடக்கும் நிலையில் மட்டுமே கிடைத்திடும் வரலாறும் காட்டும்போது, எனக்கு மன எழுச்சி உண்டாவது போலவே, எவருக்கும் உண்டாகத்தானே செய்யும். நாட்டுச் சிறப்புப்பற்றி அறிந்திடும்போது, அனைவரும் அகமகிழத்தான் செய்வர் - அந்த உணர்ச்சி, "கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பாக' அமைகிறது.

பொல்லாத புலவர்கள், ஏனோ இவ்வளவு அழகுபட, உள்ளத்தில் உவகை பொங்கிடத்தக்க வகையில், நந்தம் நாடு பற்றிப் பாடினரோ என்று திகைத்துக் கேட்டிட வேண்டி நேரிடுகிறது, இன்று நம் கண்முன் நெளியும் நிலைமைகளுடன், புலவர்கள் பாக்கள் மூலம் காட்டிடும் தமிழக நிலைமைகளை ஒப்பிட்டுப் பார்த்திடும்போது.

தமிழக வரலாறு, நம் தாயக வரலாறு என்ற முறையில் என் உள்ளத்தில் உவகையை உண்டாக்குவது இயற்கைதான் - ஆனால் அதற்கு அடுத்தபடியாக என் மனதுக்கு எழுச்சியைத் தரத்தக்கதாக, மராட்டிய மண்டல வரலாறு அமைகிறது. என் னென்ன வீரக் காதைகள்! எத்துணை எத்துணை தியாகங்கள்! ஏரோட்டியவன் எதிரியை விரட்டிட வாளேந்தியதும், தலைவாரிப் பூச்சூடி மகிழத்தக்க பருவத்தினள் குதிரை ஏறி மாற்றானைப் போரிட்டு விரட்டியதும், கீர்த்திக் கணவாயில் குருதி கொட்டியேனும் நாட்டை மீட்டிடக் கிளம்பிடும் ஆற்றல் படையினரின் அஞ்சா நெஞ்சமும், காணக்காண நெஞ்சு நெக்குருகும்.

மராட்டிய மண்டலம், அன்று அரசு பெற்று, அணியெனத் திகழ்ந்தது; இன்று அரசு இழந்து அல்லல்படுகிறது; எனினும், அந்த மக்கள் நாட்டுப்பற்றை இழந்தாரில்லை; தம் பண்டைப் பெருமையை மறந்தனரில்லை; மறவாதது மட்டுமல்ல, பெருமையை மீட்டிட முடியும் என்று உறுதிபூண்டு, இதுபோது பணியாற்றி வருகின்றனர்.

இந்த மாபெரும் எழுச்சியின் ஒரு சிறு கூறுதான் சம்யுக்த மராட்டிய சமிதி எனும் முயற்சி; இந்த முயற்சி, நம்பிக்கை தருவதாக அமைந்துவிட்டது! மராட்டிய மண்டலத்திலே, காங்கிரஸ் மேலிடம் இழைத்த அநீதியை எதிர்த்து, கொடுமைக்கு ஆளானார்கள் அனைவரும் ஒன்றுகூடி, காங்கிரசுக்குத் தக்க பாடம் கற்பிக்க வேண்டும் என்பதற்காகவே அமைந்தனர் புதிய முகாம் - சம்யுக்த மராட்டிய சமிதி வெவ்வேறு கட்சிகளை நடாத்திக்கொண்டு வருபவர்கள் - தத்தமக்கென்று தனிக்கொடியும் படையும் கொண்டுள்ளோர் - இந்த ஒரு நோக்கத்துக்காக, தமது ஆற்றலை தனித்தனியே செலவிட்டால் சிதறுண்டு போகும் என்பதற்காக ஒரு தனி முகாம் அமைத்து கூட்டுவலிவு காட்டிக் காங்கிரசை எதிர்த்தனர் - 135 இடங்களில் 100 இடங்களில் வாகை சூடினர்.

இங்கு, அது போன்ற முயற்சி வெற்றிபெறவில்லை!

உள்ளதை மறைத்திடாமல் பேசுவது என்றால், இங்கு காங்கிரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் போட்டி எத்துணை கடுமையோ, அதனினும் கடுமையாக, காங்கிரசுக்கு எதிர்ப்புக் கட்சிகளாக உள்ளவைகளுக்குள் இருந்து வந்தன!

காங்கிரஸ் வெற்றி பெற்றால்கூடப் பரவாயில்லை, இந்தக் கழகம் வெற்றிபெறக் கூடாது - என்பதை மேடையிலேயே பேசிடச் சிலர் கூசவில்லை.

எது எந்த நாசமாகப் போனாலும் பரவாயில்லை, பார்ப்பானோ பாதகனோ, மொண்டியோ முடமோ, கூனோ குருடோ, ஊர்க்குடி கெடுப்பவனோ ஊமையோ, கழுகோ வௌவாலோ, காட்டானோ காவாலியோ, எவன் வெற்றி பெற்றாலும் பரவாயில்லை, இந்தக் கண்ணீர்த்துளிகள், மட்டும் வெற்றி பெறக்கூடாது - அதைக் காண நேரிடுமானால் எமக்கு உள்ளவை கண்களல்ல, புண்கள்!! - என்று பேசிடும் அளவுக்கு அநாகரீக அரசியல் படமெடுத்தாடிற்றே!!

மராட்டியத்திலே, உரிமைக்காக அனைவரும் ஒன்றுபட்டு நின்று காங்கிரசை எதிர்த்துப் போராடினர் - எனவே 135-ல் 100 இடங்கள் வெற்றிபெற முடிந்தது. இங்கு, நிலைமை வேறு; மராட்டியம் போல, இங்கு, காங்கிரசை எதிர்த்து நிற்கும் கட்சிகள், ஒன்றை ஒன்று ஒழித்துக் கட்டவேண்டும் என்ற எண்ணம் கொள்ளாது, ஒன்றுக்கொன்று துணை நிற்கவேண்டும் என்ற திட்டத்தை அமுலாக்கி, கூட்டுச் சக்தியைக் காட்டி இருந்தால், காங்கிரசுக்கு இத்தனை "அமோகமான' வெற்றி கிடைத்திருக்காது.

மொத்தத்தில், சென்னை மாநிலத்திலே, காங்கிரசுக் கட்சிக்கு ஆதரவாகத் தரப்பட்ட ஓட்டுகளைவிட, காங்கிரசுக் கட்சிக்கு எதிராகத் தரப்பட்ட ஓட்டுகளின் எண்ணிக்கையே அதிகம்.

தொகுதிகளைத் தனித்தனியே பார்க்கும்போது, பதறப் பதற, எதிர்க்கட்சிகள் "பங்குச் சண்டை' போட்டுக் கொண்டதால் மட்டுமே, காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருப்பதைக் காணலாம்!

எதிர்க் கட்சிகளுக்குள் ஒரு உடன்பாடு, ஒத்துழைப்புத் திட்டம் இருந்திருக்குமானால், காங்கிரசுக்குச் சரிவு, சரிக்கட்ட முடியாத அளவுக்கு ஏற்பட்டிருந்திருக்கும்.

எதிர்க்கட்சிகள், ஒன்றை ஒன்று மதிக்க மறுத்ததும், உடன்பாடு குறித்து உரையாடி முடிவுகாணத் தகுந்த முறை, தக்க சமயத்தில் ஏற்படாமற் போனதும், காங்கிரசுக்கு "அமோக' வெற்றி தேடிக்கொள்ள வழி தந்தது.

மக்கள் பேரில் குற்றம் கூறுவதற்கில்லை.

காங்கிரஸ் எதேச்சதிகாரத்தை நாங்கள் வெறுக்கிறோம், எதிர்க்கிறோம், மீண்டும் அந்த எதேச்சதிகாரத்தை அனுமதிக்க விரும்போம் என்று மக்கள், தமது "தீர்ப்பை' தெளிவுடன், துணிவுடன், அச்சம் தயை தாட்சணியத்துக்குக் கட்டுப்படாமல் அளித்துள்ளனர்; மக்கள் பேரில் குறை இல்லை - குற்றமத்தனையும் மக்களை நடத்திச் செல்வதாகக் கூறப்படும், தலைவர்களிடமே இருந்திருக்கிறது.

தம்பி! திருவையாறு தொகுதியில் காங்கிரஸ் கட்சியை ஆதரித்துக் கிடைத்த "ஓட்டுகள்' 19,722; காங்கிரஸ் கட்சியை எதிர்த்து மக்கள் போட்டுள்ள ஓட்டுகள் 26,138 - என்றாலும் வெற்றி பெற்றவர், காங்கிரஸ் அபேட்சகராக நின்ற சுவாமிநாத மேற்கொண்டார் என்பவர்! இந்த விசித்திரத்துக்குக் காரணம் என்ன? காங்கிரசை எதிர்த்து திருவையாறு தொகுதி மக்கள் 26,138 - ஓட்டுகள் அளித்தனர் - ஆனால், அவை மொத்தமாக ஒருவருக்கு போய்ச் சேரவில்லை, ஆளுக்குக் கொஞ்சமாகப் பலர் பிய்த்து எடுத்துக் கொண்டு விட்டனர்.

பட்சிராஜன் - 8,270
சுயம்பிரகாசம் - 8,077
இராதாகிருஷ்ணன் - 4,648
இராமலிங்கம் - 4,096
திருவேங்கிடத்தான் ஐயங்கார் - 1,047

இப்படி, காங்கிரசுக்கு எதிர்ப்பான ஓட்டுகள் சிதறிப் போயுள்ளன! இவர்கள் அனைவரும் தோற்றனர் - மொத்தமாக 19,722 - ஓட்டுகளைத் திரட்டிக் கொள்ள முடிந்த மேற் கொண்டார் எனும் காங்கிரசுக் கட்சியார் வெற்றி பெற்றார்!

திருவையாறு தொகுதியிலே காங்கிரசு வெற்றிபெற்றது என்று விழாக் கொண்டாடி, காங்கிரசின் செல்வாக்கினைப் பாரீர் என்று சிந்து பாடுவர்! ஆனால், தொகுதி மக்களிலேயோ, 26,138 - பேர் காங்கிரசு கூடாது, ஆகாது என்று கருதுகிறார்கள். 19,722 வாக்காளர் மட்டுமே, காங்கிரஸ் கட்சி வேண்டும் என்று தீர்ப்புக் கூறினர்.

26,138 - மக்கள், காங்கிரஸ் கட்சி கூடாது, ஆகாது என்று தீர்ப்பளித்தும், பலன் கிடைக்காமற் போனதற்குக் காரணம் என்ன?

ஆளுக்கு ஒரு துண்டு எடுத்துக் கொள்வோம் என்று கூறி பத்து ரூபா நோட்டை, ஐந்து பாகமாகக் கிழித்து, ஆளுக்கு ஒரு துண்டு எடுத்துக் கொண்டால் எப்படியோ, அப்படி ஆகிவிட்டது இந்தச் சம்பவம்.

காங்கிரசு கூடாது, ஆகாது என்பதைக் குறித்திடும் தீர்ப்புச் சீட்டுகளை - "ஓட்டுகளை' - மக்கள் மொத்தமாக ஒருவரிடம் அளித்திருந்தால், காங்கிரஸ் அபேட்சகர் வெற்றி பெற்றிருக்க முடியாது - திருவையாறு, காங்கிரஸ் கோட்டை என்று பேசிப் பெருமைப்பட முடியாது! ஆனால் காங்கிரசு கூடாது என்பதைக் குறித்திடும் தீர்ப்புச் சீட்டுகளில் 8,270 - நமது கழகத் தோழர் பட்சிராஜனிடமும், 8,077 - சீட்டுகளை, காங்கிரஸ் சீர்திருத்தக் குழுவினருடன் கூடிக்கொண்ட சுயம்பிரகாசம் அவர்களிடமும் என்று இம்முறையில் ஐந்து தோழர்களிடம், ஆளுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக, 26,138 - ஓட்டுகளைப் பிரித்துப் பிரித்துக் கொடுத்து விட்டனர் - பத்து ரூபாய் நோட்டு கிழித்துக் கொடுக்கப்பட்டது - துண்டுகளாக்கப்பட்டன - பலன் இல்லாமற் போய்விட்டது.

திருவையாறு தொகுதியில் 26,138 - மக்கள் காங்கிரசை எதிர்த்து ஓட்டு அளித்தும், காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று விட்டதன் மர்மம், இதுதானே!

காங்கிரசை எதிர்த்து ஓட் அளிக்க வேண்டுமென்று முடிவு செய்த அந்த 26,138 - வாக்காளர்களும், தத்தமது அறிவு, ஆராய்ச்சி, தொடர்பு, தோழமை, தெளிவு ஆகியவற்றுக்குத் தக்கபடி, காங்கிரசை வீழ்த்தக் கூடியவர் இவராகத்தான் இருக்க வேண்டும், இவருக்கு ஆதரவு அளித்தால்தான் காங்கிரஸ் கட்சியை முறியடிக்க முடியும், என்று முடிவு செய்து, அதற்குத் தக்கபடி ஓட்டுக்களைத் தந்தனர். இவ்வளவு "அபேட்சகர்கள்' காங்கிரசை எதிர்க்கும்போது, காங்கிரசை எதிர்த்தொழிக்க எண்ணும் வாக்காளர்கள், குழப்பமடைவதும், அதன் பயனாக "ஓட்டுகள்' சிதறுவதும்தானே நடக்கும்.

காங்கிரசை எதிர்த்த அத்தனை அபேட்சகர்களும், காங்கிரஸ்கட்சி கூடாது, ஆகாது, அதற்கு ஓட்டளிக்கக் கூடாது என்று முடிவு செய்து கொண்டுள்ள வாக்காளர்களைச் சந்தித்தபோது, காங்கிரஸ்கட்சியை வீழ்த்தும் ஆற்றல், காங்கிரஸ் கட்சியினால் ஏற்பட்டுவிட்ட கேடுபாடுகளைப் போக்கும் வலிவு எனக்கு உண்டு, எனக்குத்தான் உண்டு, காங்கிரசை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டு உங்களிடம் ஓட்டு கேட்க வருகிறார்களே மற்றவர்கள், அவர்களுக்கு அந்த ஆற்றலும் கிடையாது, வெற்றி பெறும் வாய்ப்பும் இல்லை; எனக்கு ஓட்டு அளித்தால் மட்டுமே காங்கிரசை வீழ்த்த முடியும்! என்று பேசியிருப்பர். வாக்காளர்கள் இதுபோல நாலாபக்கமும் பிடித்து இழுக்கப்பட்டதால், முடிவு நைந்துபோய்விட்டது.

"காங்கிரஸ் கட்சி கூடாது என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால், காங்கிரசை வீழ்த்த, கழகத்தானால் முடியாது, நம்ம சுயம்பிரகாசம்தான் அதற்குச் சரியானவர் என்று 8,077 - வாக்காளர்க்குத் தோன்றியிருக்கிறது; இல்லை, இல்லை, என்ன இருந்தாலும், திராவிட பார்லிமெண்டரி கட்சி என்று சட்ட சபையில் இருக்கும்போது கூறிக்கொண்ட அதே சுயம்பிரகாசம் அவர்கள், இப்போது இழுத்தவன் பின்னோடு போகிற போக்கில், காங்கிரஸ் சீர்திருத்தக் கட்சியிலே சேருகிறாரே, இப்படிப்பட்டவர் ஆதரித்துப் பலனுமில்லை, ஆதரிப்பது நிச்சயமுமல்ல, நாம் நமது கழகத்துப் பட்சிராஜனைத்தான் ஆதரிக்க வேண்டும் என்று 8,270 வாக்காளர்களுக்குத் தோன்றியிருக்கிறது; இத்தனை தொல்லை எதற்கு, ஐயங்கார் ஸ்வாமிகளை ஆதரித்துவிட்டுப் போவோம், அவர்தான் காங்கிரசை ஒழித்துக் கட்டக் கூடியவர் என்ற எண்ணம் 1,047 - வாக்காளர்களுக்குத் தோன்றியிருக்கிறது; காங்கிரஸ் சர்வாதி காரத்தை முறியடிக்க, மற்றவர்களை ஆதரித்தால் பயன் இல்லை; சம்மட்டி கொண்டு அடிக்க வேண்டும்; சரியான ஆசாமி இதற்கு, கம்யூனிஸ்டுதான், ஆகவே, அவருக்குத்தான் ஓட்டு அளிக்க வேண்டும் என்ற எண்ணம் 4,096 - வாக்காளர்களுக்குத் தோன்றியிருக்கிறது!

மொத்தத்திலோ 26,138 - வாக்காளர்களுக்கு, காங்கிரசை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணம்.

இதேபோலப் பல தொகுதிகளிலும், நிலைமை ஏற்பட்டு விட்டது; மொத்தத்தில் காங்கிரசை எதிர்த்து வாக்காளர்கள் தீர்ப்பு அளித்திருக்கின்றனர்; ஆனால் தீர்ப்புச் சீட்டுகளை, பல்வேறு பெட்டிகளிலே பிரித்துப் பிரித்துப் போடவேண்டிய நிலைமை - மக்களால்கூட அல்ல - தலைவர்களால் ஏற்பட்டு விட்டது.

அதனால்தான் தம்பி! மக்கள் பேரில் குறை கூறுவதற்கில்லை, குற்றம் "தலைவர்கள்' பேரில்தான் என்று கூறினேன்.

நமது இராஜேந்திரன் தொகுதி தேனீயைப் பாரேன். நாடகமாடி நாடாளலாமா என்ற தத்துவம் கக்கினார்களே சிலர், இரண்டிலும் திறமையற்றவர்கள், அவர்கள் எதிர்பார்க்கவில்லை, சென்னையில் பல ஆண்டுகளாக "வாசம்' செய்து கொண்டுள்ள அந்த இளைஞன், தேனீ தொகுதியில் பெற்றிருக்கும் செல்வாக்கின் அளவை. 31,404 வாக்குகளல்லவா, கிடைத் திருக்கிறது, "மணிமகுடத்துக்கு!!' காங்கிரசுக்குத்தான் வெற்றி ஆனால் வெற்றி பெற்றவருக்கு, "விருது' என்ன தெரியுமோ! இராஜேந்திரனைத் தோற்கடித்த தேனீ தியாகராஜன்!! பார்த்தாயா, தம்பியின் சமர்த்தை! தியாகராஜனுக்கு, பத்ம பூஷணம் பட்டம்போல், இப்போது இராஜேந்திரன் பெயர் பயன்படுகிறது!! இதேபோலச் சென்னையில், கூட்ட விளம்பரச் சுவரொட்டி கண்டேன் - கேலிக்காக நானாக இட்டுக் கட்டிக்கொண்டு கூறினேன் என்று காங்கிரசார் யாராவது எண்ணிக் கொள்ளப் போகிறார்கள். 38,185 வாக்குகள் பெற்றார் தியாகராஜன்; காங்கிரஸ் வெற்றி பெற்றது; தேனீ தேசியக் கோட்டை என்று பெருமைப்படட்டும் - வேண்டாமென்று கூற, நாம் யார்.

ஆனால், தேனீ தொகுதி மக்களின் தீர்ப்பு என்ன?

காங்கிரஸ் அபேட்சகருக்கு வெற்றி கிட்டிற்றே தவிர 46,712 மக்கள், காங்கிரஸ் கட்சி கூடாது, ஆகாது, என்றல்லவா தீர்ப்பளித்துள்ளனர். 38,185 வெற்றிபெற்றது! 46,712 தோல்வியுற்றது! காரணம், தெரிகிறதல்லவா?

31,404 வாக்காளர்கள் காங்கிரஸ் கூடாது, ஆகாது, என்ற தம்முடைய தீர்ப்பினை, இராஜேந்திரன் மூலமாக, நாட்டுக்கு அறிவித்தார்கள்; 15,308 வாக்காளர்கள், காங்கிரஸ் கூடாது என்ற தீர்ப்பை, சீர்திருத்தக் கமிட்டி சார்பில் போட்டியிட்ட அருணாசலம் என்பவர் மூலம், நாட்டுக்கு அறிவித்தனர்; மொத்தத்தில் காங்கிரஸ் கூடாது என்று தீர்ப்பளித்தவர் தொகை 46,712!! நோட்டு கிழிக்கப்பட்டுப் போய்விட்டது! ஓட்டுச் சிதறிவிட்டது! காங்கிரஸ் வெற்றியைத் தட்டிப் பறித்துக்கொண்டது.

தேனீ, காங்கிரசுக்கா ஆதரவு காட்டியிருக்கிறது? இல்லையே!!

பல்வேறு தொகுதிகளிலே, காங்கிரசுக்கு இதே முறையிலே தான் வெற்றியைத் தட்டிப் பறித்துக்கொள்ள முடிந்திருக்கிறது!

கொடைக்கானல் தொகுதியில், கழகத் தோழர் குருசாமிக்குக் கிடைத்த 17,452 வாக்குகளுடன், காங்கிரசை எதிர்த்த சுயேச்சை ஞானவரம் என்பவருக்குக் கிடைத்த 6,365 - வாக்குகளையும் கூட்டி, வெற்றி கிட்டியது என்ற நிலை பெற்ற காங்கிரஸ் அபேட்சகர் அளகிரிசாமியார் பெற்ற 21,107 வாக்குகளுடன் ஒப்பிட்டுப் பார். தவறு, மக்கள்மீது அல்ல என்ற பாடம் கிடைக்கும்!

அரியலூரில், தம்பி, 31,048 வாக்காளர்களை, 11,744 வாக்காளர்கள் தோற்கடித்திருக்கிறார்களே, தெரியுமா!!

காங்கிரஸ் கூடாது என்று 31,048 வாக்காளர்கள் தீர்ப்பளித்தனர், ஆனால், கழகத் தோழர் நாராயணனிடம் 10,404 ஓட்டுகள் மட்டுமே தந்தனர்; 6,992 வாக்குகளை அப்துல்காதர் என்பவரிடமும், தனராஜ் என்பவரிடம் 4,797 வாக்குகளும், மாணிக்கம் என்பவரிடம் 3,069 வாக்குகளும், 2,640 வாக்குகளை அரசன் என்பவரிடமும், 2,154 வாக்குகளை தங்கவேலு என்பவரிடமும் தந்துள்ளனர்; கொடுத்தவரையில் கொடுங்கள் என்று 992 வாக்குகளை வடிவேலு என்பவர் பெற்றிருக்கிறார்.

இத்தனை பேரும், காங்கிரசை எதிர்த்து நின்றவர்கள்.

இவர்களில் ஒவ்வொருவருக்கும் ஓட்டு அளித்தபோது, வாக்காளர் எண்ணிக்கொண்டது, காங்கிரசை வீழ்த்த நமது "ஓட்டு' பயன்படுகிறது என்பதுதான்! ஆனால் நடைபெற்றதோ, வாக்காளர்களில் மிகப் பெரும்பாலோர் விரும்பாதது, எதிர்பாராதது; 11,744 வாக்குகள் மட்டுமே பெற்று, காங்கிரஸ் அபேட்சகர் இராமலிங்கப் படையாச்சி என்பவர் வெற்றிக்கொடி நாட்டினார் - மூலைக்கு ஒருவராக நின்றுகொண்டு, முழக்கமிட்டவர்களில் யாருக்கு வாக்களித்தால் காங்கிரசை ஒழித்துக்கட்டலாம் என்பதில் மக்கள் குழப்பமடைந்தனர்; ஓட்டுகள் பிளவுபட்டன; காங்கிரஸ் பிழைத்துக்கொண்டது!

அரியலூரில் காங்கிரஸ் அபேட்சகர் வெற்றி பெற்றார், ஆனால் அந்தத் தொகுதியில் காங்கிரசுக்குச் செல்வாக்கு என்று கூறிட முடியாது, எதிர்ப்பாளர்கள் 31,048 ஆதரவாளரின் தொகை 11,744 மட்டுமே!

தங்கவேலுவோ, வடிவேலுவோ, அரசனோ அப்துல் காதரோ, நாமேன் வீணாக ஓட்டுகளைப் பிரியச் செய்வது, கழகத்துக்குத்தான் கைகொடுப்போமே என்று மட்டும் எண்ணியிருந்திருப்பின், நிலைமை எப்படி இருந்திருக்கும் என்று பாரேன், தம்பி! 10,404 வாக்குகளல்லவா பெற்றிருக்கிறார், நாராயணன் எனும் நமது கழகத்தோழர்! வெற்றி எக்காளமிட முடிகிறது காங்கிரசால்; பெற்ற வாக்குகளோ, 11,744!!

பாபநாசம் தொகுதியிலும் இதே நிலைமை - காங்கிரசுக்கு ஆதரவாகக் கிடைத்த வாக்குகள் 38,971 - காங்கிரசை எதிர்த்து அளிக்கப்பட்ட வாக்குகள் 50,761!! ஆனால், இந்த ஓட்டுகள் ஐந்து பெட்டிகளில் பிரிந்து பிரிந்து விழுந்தன.

மதுராந்தகம் தொகுதியில் 57,619 வாக்குகளை, காங்கிரஸ் எதிர்ப்பாளர்கள் மூவர், பங்குபோட்டுக் கொண்டு தோற்றனர்; 24,402 வாக்குகளைத் திரட்டி காங்கிரஸ் அபேட்சகர் வெற்றி தேடிக்கொள்ள முடிந்தது.

ஆலங்குடித் தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரசுக்கு 28,447 ஓட்டுகள் - காங்கிரசைத் தோற்கடிக்க 36,686 வாக்காளர்கள் திரண்டனர். ஆனால் நமது கழகத்தோழர் சுப்பையா 18,444 வாக்காளர்களையும், பாலகிருஷ்ணன் எனும் சுயேச்சையாளர் 18,242 வாக்காளர்களையும் தத்தமது முகாமுக்கு அழைத்துச் சென்றனர்; தோல்வி தாக்கிற்று.

சூலூர் தொகுதியில்; காங்கிரசை வீழ்த்த வேண்டும் என்ற கடமை உணர்ச்சியில் 22,777 வாக்காளர்கள் இருந்திருக்கின்றனர் - மூவர் பங்கு போட்டுக் கொண்டதால், 18,328 வாக்குகள் பெற்ற காங்கிரஸ் காரிகை வெற்றி பெற்றார்.

கந்தர்வகோட்டைத் தொகுதியில் காங்கிரஸ் அபேட்சகர் வெற்றிபெறமுடிந்தது - ஆனால் தொகுதி எத்தகைய கோட்டை என்பதைப் புள்ளிவிவரத்தைப் பார்த்தபிறகு, காங்கிரஸ் நண்பர்களையே சொல்லச் சொல், தம்பி.

இராமச்சந்திரதுரை 9,839
தங்கமுத்து நாட்டார் 8,553
மாரிமுத்து உடையார் 1,638
தர்மராஜ மேற்கொண்டார் 1,115
இரங்கசாமி உடையார் 1,051

ஆக மொத்தத்தில் 22,196 வாக்குகள், காங்கிரசுக்கு எதிர்ப்பாக அளிக்கப்பட்டன! வெற்றிபெற்ற காங்கிரஸ் அபேட்சகர் கிருஷ்ணசாமி கோபாலருக்கு 18,928 வாக்குகள் மட்டுமே தரப்பட்டன!!

தர்ம பிரபுக்கள்! இப்படி இருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு, ஓட்டுக்களை ஆளுக்குக் கொஞ்சமாகப் பங்கு போட்டுக் கொண்டிராவிட்டால், வெற்றியாவது நமக்குக் கிட்டுவதாவது என்று உள்ளூர, கும்மிடிபூண்டி தொகுதியில் வெற்றி தேடிக்கொண்ட கமலாம்புஜம் அம்மையார் எண்ணாமலிருக்க முடியுமா? என்பதை, அந்தத் தொகுதியில் ஏற்பட்ட நிலைமையை ஆராய்ந்து பார்ப்பவர் நிச்சயம் அறிந்து கொள்வர்.
-----------------

எல்லோரும் இந்நாட்டு மன்னர்


எல்லோரும் இந்நாட்டு மன்னர் (1)

தம்பி!

குழல்மொழி, கயல்விழி, துடியிடை, புன்னகை பூத்திடும் பொன்னவிர் மேனியாள், ஏழிசைவல்லி, ஆடலழகி எனும் அணங்குகள், தத்தமது திறனத்தனையையும் தங்கு தடையின்றித், தரக்குறைவின்றிக், காட்டிப் பார்த்தனர் - காவலன், கடுகடுத்த முகத்தோனானானேயன்றிக் கலகலப்புப் பெற்றானில்லை.

மாற்றார்கள் களத்தில் போட்டோடிச் சென்று, மாமல்லர் களால் எடுத்துவரப்பட்ட, குருதிதோய்ந்த கொடிகள், உடைந்து கிடந்த யானைத் தந்தங்கள், வாட்பிடிகள், வேற்கம்புகள் இவையெல்லாம் கொண்டுவந்து எதிரே குவித்துக் காட்டினர், கோமான், வீரச்செயல் பற்றிய நினைவுபெற்று, மகிழ்ச்சிப் பெறுவான் என்று எண்ணி; மாமன்னனோ, அப்பொருட் குவியலைக் கண்டு புன்னகையும் செய்தானில்லை.

கன்னியரின் கடைக்கண் ஊட்டிடாத சுவையைக் கனிவகையா தந்திடும்! எனவே, பழவகைகளைக் கொணர்ந்ததும், பட்டத்தரசன், எட்டிப்போ! என்று கட்டளையிட்டான் பணியாட்களை நோக்கி.

மன்னன் மனமகிழ வேண்டும் - அவையினர் ஏதேதோ எண்ணினர்; தெளிவு பிறந்திடவில்லை.

தொகுதி மூன்று 103 "யானறிவேன், அவருக்குக் களிப்பூட்டும் வகை'' என்றால் கவிதை வல்லானொருவன்.

"ஐயா புலவரே! எதுகை மோனையைக் காட்டியா, மன்னனை மகிழ்விக்க முயல்கிறீர். வானவில்லென வளைந்து நின்றாள், வடிவழகி; மன்னன் ஏறெடுத்தும் பார்த்திட மறுத்தான். கரம் இரண்டன்றி வேறோர் துணை தேடிடாது, வேங்கையுடன் போரிட்டுக், கழுத்தை நெறித்தானே, வேங்கையை - வெற்றி வேலன் பெற்றெடுத்த வீரமைந்தன் - அதன் பற்களைக் கொட்டிக் காட்டினோம் - சுற்றுமுற்றும் பார்த்தானேயன்றி, மன்னன், அதனை உற்றும் பார்த்ததுண்டா? இந்நிலையில் உள்ளான் ஊராள்வோன்; நீவிர் ஏடு தூக்கிக் காட்டிடின் வேந்தன் கொண்டுள்ள கசப்பெலாம் கரைந்தோடிப் போகும், களிப்பு மலரும் என்று கருதுவது, எத்துணைப் பேதைமை!'' என்று எடுத்துரைத்தனர், அவை அமர்ந்த முதியோர்.

"ஐயன்மீர்! அருங்கவிதைத் திறன்காட்டி அல்ல, மகிழ்ச்சி யூட்ட விரும்புவது. என் கவிதையும், அரசர்க்குச் சிரிப்பூட்ட அல்ல; அவனிக்கு அறிவூட்ட! அதனையும் அறிமின்! யான் நினைப்பது முற்றிலும் வேறு!'' என்றான் புலவன்.

"வாதிட்டுப் பொழுதினை ஓட்டிடுவதைக் காட்டிலும் அவர் வகுத்திடும் முறையேனும், மன்னனின் சோகத்தை நீக்கிவிடுகிறதா என்பதைக் கண்டிடுவதே சாலச் சிறந்தது'' என்றனர் ஆன்றோர்.

புலவர் எழுந்தார்; பணியாளிடம், ஏதோ, மெல்லிய குரலில் கூறினார்; அமர்ந்தார்! அரசனை விளித்தார்.

"கோமானே! எட்டுத் தளபதிகளைக் கீழே வீழ்த்தி, பதினாறு வேற்படை வீரரின் பற்களைத் தட்டிப்பறித்து, பழம் பெரும் போர்க்கலை ஆசானின் இடுப்பிலே, ஈராண்டும் தீராத வலி ஏற்படத்தக்கதான உதை கொடுத்து, கரிப்படைத் தலைவனின் கண்ணைக் கலங்கிடச் செய்த, வீராதி வீரன், குரலெடுத்துப் படை நடுங்கிட வைத்திட வல்லோனாம் வெஞ்சமர்ச் சூரன், தங்களைக் காண வருகிறான் - கட்டளைக்குக் காத்திருக்கிறான் - அனுமதி அருள்வீரா?'' - என்று கேட்டார். மன்னன், "ஈதென்ன விந்தை! இத்துணை வீரச் செயல் புரிந்தோனை, யான் ஏன் இதுவரை, காணவில்லை'' என்று எண்ணிப் புலவரை நோக்கி, "தளபதிகள் எண்மர், வேற்படை யாளர் பதினாறுபேர், மற்றும் கரிப்படைக் காவலன், ஆகியோரைத் தாக்கியவனா - யார் அவன்? எங்குள்ளான்? கொண்டுவந்து நிறுத்தும், அவனை, நம்முன் - தாமதமின்றி!'' என்று முழக்கமிட்டான்.

பவனிக்கான இசைமுழக்கம் எழும்பிற்று.

பராக்குக் கூறுவார் பதின்மர் வந்து நின்றனர்.

பந்தல் அமைத்ததுபோன்ற பட்டுப் போர்வையைப் பலர் முறைப்படி ஏந்திவந்தனர்.

மன்னர் எதிர்ப்புறம் அந்தப் பந்தற் போர்வை வந்தடைந் ததும், "இனிக் காணீர், தளபதியின் பல் உடைத்து, வீரனின் விலாவை நொறுக்கி, கரிப்படையானை வீழ்த்திய, மாவீரனை!' - என்று கூறிக், குறி காட்டினான் புலவன்; போர்வையை நீக்கினர்; கோவேறு கழுதை ஒன்று, நின்றது, மன்னன் எதிரில்; மன்னன், இடிஇடியெனச் சிரித்து, "ஏடா! வீராதி வீரா! நீதானோ, புலவர் போற்றிய மாவீரன்! எட்டி உதைத்து இத்தனையையும் செய்ததன்றோ, நம் பாடி வீட்டுக்குக் கொட்டிலில் கிடந்திடும் இக் கோவேறு கழுதை! பலே! பலே! எறி ஈட்டிக்கும், கொடுவாளுக்கும் அஞ்சாது போரிடும் என் தளபதிகள், இதனிடம் படாதபாடு பட்டனர்; பல் உடைபட்டனர்; ஆம்! புலவரே! ஆம்!'' - என்று கூறிக் கூறிச் சிரித்தான் கோமான்; அவையினர் அனைவருமே, புலவர் செய்தளித்த நகைச்சுவை நிகழ்ச்சியைக் கண்டு களித்தனர்.

ஆடலும் பாடலும், அருங்கவிச் சுவையும், வீரமும் வெற்றிப் பொருட்களும் பெற்றளிக்க முடியாத பெருஞ் சிரிப்பை, கோவேறு கழுதை அளித்திட முடிந்தது.

***

முடி ஆட்சியிலே, மூதறிஞர்களாகவும், வெற்றி வீரர் களாகவும் விளங்கிய மன்னர்கள் இருந்தனர் - கொலைபாதகத் துக்கு அஞ்சாத கொடியவர்களும் கோலேந்திகளாகி இருந்தனர் - மடமை மிக்கவர்களும், மன்னன் மகனானதால் மன்னனாயினர்!

கொடுமை புரிந்தவர்கள் கோல் முறிக்கப்பட்டது.

மடமை கொண்டோரின் அரசு, மதியிலிகளின் மந்தகாசக் கூடமாகவும், நத்திப் பிழைப்போரின் புகலிடமாகவுமாகி, மக்களால் எள்ளி நகையாடப்பட்டது!

இந்நிலைக்கு முடி அரசு சரிந்ததும், முறை மாற்றியாக வேண்டும் - ஒருவனிடம் அதிகாரமத்தனையையும் ஒப்படைத்து விட்டு, அவன் அறிவாற்றலுள்ளவனானால், அவதிக்கு ஆளாகாமல் இருக்கவும், கொடியவனானால், அஞ்சி அஞ்சிக் கிடக்கவும், மதியற்றவனானால் கேலிப் பொருளாகி இருக்கவுமான, நிலைமையைத் தாங்கித் தாங்கிப் பார்த்து, இனி அது ஆகாது என்ற முடிவுக்கு வந்த பிறகே, பேரறிவாளர் பலர் எண்ணிப் பார்த்து, எடுத்தியம்பியது மக்களாட்சி முறை என்பது.

முடி ஆட்சிக் காலத்திலே, மன்னனிடம் மக்கள் அச்சத்துடன் அடங்கிக் கிடக்க நேரிட்டது; கொடுமை செய்யும் போது குமுறிச் சாக நேரிட்டது; மடமைக்காரனாக இருக்கும்போது வெட்கப்பட்டுக் கிடக்கவேண்டி நேரிட்டது; எனினும், மன்னன் சரியில்லை, எனவே, அவனை நீக்குவோம், வேறு தகுதியுள்ளவனை ஆட்சிப் பீடம் அமர்த்துவோம் என்று கூறிடும், ஆற்றலும் உரிமையும், மக்களிடம் இல்லை.

பெய்யெனப் பெய்யும் மழை வளமளிக்கிறது; பேய்மழை நாட்டை அழிக்கிறது. பூங்காற்று இனிமை பயக்கிறது; சூறைக் காற்று ஊர் அழிக்கிறது.

ஆனால், இயற்கையின் செயலைக் கட்டுப்படுத்த இயலாமல் மாமழை போற்றியும், பேய்மழை கண்டு துயருற்றும், பூங்காற்றுப் பெற்று இன்புற்றும், அழிவூட்டும் காற்றால் அவதியுற்றும், நாம் யாது செய்யவல்லோம்; இயற்கையை நாம் எங்ஙனம் கட்டுப்படுத்த இயலும்! - என்று எண்ணிக் கிடந்திடும் போக்கினர் போன்றே, மக்கள் முறை தவறும் மன்னன், முறை அறியா மன்னன் என்போர் ஆட்சி நடாத்தி, அவதியை மூட்டிய காலத்திலும், இயற்கை சிற்சில வேளைகளில் கொடுமையை ஏவுவதுபோல, ஆண்டவன் எக்காரணம் குறித்தோ நமக்குக் கேடு சூழ்ந்திடக் கொடுமையாளனைக் கோலேந்தியாக்கினான்; மடமை மிக்கவனை மன்னனாக்கி மகிழ்கிறான்! நாம் எங்ஙனம், இதனைத் தடுத்திட, முடியும்! எங்ஙனம் மாற்ற இயலும்! நமக்கு ஏது அந்த ஆற்றல்! - என்று எண்ணிக் கிடந்தனர் நீண்ட காலம்.

கண்ணீர் முழுதும் வற்றிய பிறகு, கனல் பிறந்தது கண் களில்; தொல்லையின் எல்லைவரை துரத்தப்பட்ட பிறகு, துணிவு பிறந்தது நெஞ்சத்தில்; பிறகே, முடி ஆட்சி முறை, திட்ட வட்டமாக, இன்ன குணமுள்ளதாக இருக்கும், இன்ன பலன் தரும் என்று அறுதியிட்டுக் கூற இயலாததாகவும், மாற்றி அமைக்க முடியாததாகவும் இருப்பதனால், அதனை நம்பி மக்கள் தமது வாழ்க்கையை ஒப்படைப்பது கூடாத காரியம் - எனவே மக்கள், கண்டறியத்தக்கதும், தேவைப்பட்டபோது மாற்றி அமைக்கத்தக்கதுமான ஓர் ஆட்சிமுறை வேண்டும்; நோக்கம் குறித்து அமைத்திடவும், எதிர்பார்த்த நலன் பெற்றளிக்க இயலாது போயின், மாற்றிவிடவும் தக்கதான ஆட்சி முறை இருத்தல் வேண்டும், என்ற முடிவுக்கு மக்கள் வந்தனர் - குடியரசு கண்டனர்.

தம்பி! குடிஅரசு கண்டனர், என்று மிகச் சுருக்கமாகக் கூறிவிட்டேன் - ஆனால், மிக நீண்ட, பயங்கரப் பயணம் நடாத்தியே, மக்கள் குடிஅரசு கண்டனர்.

***

முடி அரசு, கேடு பயப்பினும், மக்கள் தாங்கிக் கொள்ள வேண்டுமேயன்றி, மாற்றிவிட இயலாது.

குடிஅரசு, கேடு தந்திடின், மாற்றி அமைத்திடும் உரிமை மக்களுக்குக் கிடைக்கிறது.

முடிஅரசு, கோணல் வழி சென்றிடினும், கண்டித்துப் பேச, மக்களுக்கு உரிமை கிடையாது - உயிரைப்பற்றிய கவலை இருக்கும்வரை!!

குடிஅரசு, தவறு செய்வதாகத் தோன்றும்போதே, மக்கள் எடுத்துரைக்கலாம், கண்டிக்கலாம், எதிர்க்கக் கூடச் செய்யலாம்.

முடி அரசுக்கும், குடிஅரசுக்கும் இடையே உள்ளது இந்த வித்தியாசம். பல நூற்றாண்டுகள் சிந்தனையாளர்களும் வீரத் தியாகிகளும், அரும்பாடுபட்டு ஈட்டிய முறை, குடிஅரசு.

முடி அரசுக் காலத்தில், மன்னனை மகிழ்விக்கவேண்டியது தமது கடமை என்று கிடந்தனர் மக்கள்.

அந்த மகிழ்ச்சி, கதை காட்டினேனே, அதுபோல் கோவேறு கழுதையின் வீரம்பற்றி, நகைச்சுவையுடன் எடுத்துக் கூறிக் களிப்பூட்டும் வகையினதாகத்தான் இருக்கும் என்பதல்ல பொருள் - மதியிலி மன்னனாக இருக்கும்போது இது போதும்! மமதையாளன் மன்னனானாலோ, அவன் மனம், குடி மகனொருவன் பெற்றெடுத்த செல்வத்தின் கற்பைச் சூறையாடு வதிலேதான் மகிழ்ச்சி பெறும் என்றால், அதுதான் நடக்கும்; மானமுள்ளோருக்குப் புகலிடம், சிறைக்கோட்டம், வெட்டுப் பாறை, அல்லது மரக்கிளை!

முடி அரசுக் காலத்து முறை, மக்கள் மன்னனுக்கு மகிழ்ச்சி யூட்டிப் பிழைத்துக் கிடப்பது.

குடிஅரசுக் காலத்திலோ, மக்களுக்கு மகிழ்ச்சியூட்டி, ஆள வந்தார்கள், இடம்பெற்றிருப்பர்.

பசிப்பிணி போக்கி, வளம் உண்டாக்கி, நல்வாழ்வு அளித்து, மக்களை மகிழவைக்கும், குடிஅரசுகளும் உண்டு. ஒரே நாளில் அமைச்சர் என்பது ஊர் உலா வந்தார், உமக்காக!! என்றுரைத்தும், உமக்காக இன்னின்ன திட்டங்கள் தீட்டப் பட்டுள்ளன என்று ஏடு காட்டியும், பசிகண்டு பதறாதீர்! பாலாறு தயாராகிறது, பாரீர்! என்று புள்ளி விபரம் வீசுவதுமான, வேடிக்கை காட்டியும் பொழுதை ஓட்டிடுவோர்! நடாத்தும் குடிஅரசும் உளது.

கேடளிக்கும் முடி அரசு மாற, முடி தரித்தோன் மாய்ந் திடல் வேண்டும்; ஆனால் கேடளிக்கும் குடிஅரசை மாற்ற, மக்களுக்கு உரிமை இருக்கிறது

அறிந்து, ஆற்றலுடன் அந்த உரிமையைப் பயன்படுத்த வேண்டும்; பயன்படுத்துவர் என்ற நம்பிக்கையினால்தான், குடிஅரசு முறையே வகுக்கப்பட்டது; பல நாடுகளிலே, இந்த நம்பிக்கை வீணாகிப்போகவுமில்லை.

***

தம்பி! ஒரு நாட்டை ஆள்வது என்பது எல்லோராலும் முடிகிற காரியமா. . .? அதற்கேற்ற அறிவாற்றல் அனைவருக்கும் ஏற்பட்டுவிடுமா? ஆண்டவன் யாரோ சிலருக்கு மட்டுமே, அத்தகைய தகுதியை அருள்கிறான். மன்னர்கள், மகேசனின் அருள் பெற்றோர்! அவனுடைய பிரதிநிதிகள்! என்று கூறப்பட்டதுபோய், எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்று கூறிடத்தக்க காலம் இன்று பிறந்துவிட்டிருக்கிறது; என்றாலும் குடிஅரசு ஏற்பட்டான பிறகு, எதிர்பார்த்ததனைத்தும் கிடைத்து விட்டது என்று எவரும் கூறிவிடுவதற்கில்லை.

இது குடி அரசுக்காலம் என்று குதூகலத்துடன் கூறிக் கொள்பவர்களை நோக்கிக் கேலி செய்து கொண்டல்லவா, ஸ்பெயின் நாட்டுப் பிராங்கோவும், போர்ச்சுகல் நாட்டு சலாசரும் உள்ளனர்! எகிப்து நாட்டு நாசரும், பிரான்சின் தெகோலூம், இந்தோனேசிய நாட்டு டாக்டர் சுகர்ணோவும், மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள் எனினும், சர்வாதி காரிகள் எனும் நிலையில்தானே உள்ளனர். பக்கத்து நாடான பாகிஸ்தானில், பட்டாளத்துத் தலைவர்தானே, ஆட்சி நடத்துகிறார்!

இன்றைய உலகில், முடி மன்னர்களும் உள்ளனர், பிடியை பிரபுக்களிடம் விட்டுவிட்டு இருக்கும் முடி தாங்கிகளும் உள்ளனர்.

குடிஅரசுத் தலைவர்களும் உள்ளனர்; குடிமக்களை நல்லபடி நடத்திச்செல்ல நான் எல்லா அதிகாரத்தையும் ஏற்றுக் கொண்டிருக்கிறேன் என்றுரைக்கும் சர்வாதிகாரிகளும் உள்ளனர். பாராளுமன்ற முறை மூலமே, குடிஅரசு முறையிலே பக்குவம் ஏற்படுத்த முடியும்; அந்தப் பாராளுமன்ற முறைக்கு அடிப்படையாகத் தேவைப்படுவது, அரசியல் கட்சிகள் - அந்த முறைதான் இங்கு உள்ளது என்று கூறும் நாடுகள் உள்ளன; சோவியத்தோ, அரசியல் கட்சிகள் ஒன்றோடொன்று மோதிக் கொள்வது, நேரக்கேடு, வீணாட்டம்; அத்தகைய கட்சிகள், பணம் படைத்தோரின் உடைமைகளாகி விடுகின்றன; எனவே மக்களாட்சி என்பது வெறும் கேலிக் கூத்தாகிவிடுகிறது! எனவே இங்கு ஒரே கட்சிதான் உண்டு, அது மக்கள் கட்சி! ஒரே தேர்தல்தான் - அந்தக் கட்சி மட்டுமே ஈடுபடும் தேர்தல் - இதுதான் உண்மையான மக்களாட்சி! மற்றது போலி! புரட்டு! - பகட்டு!- என்று செப்புகிறது.

இது ஆட்சி முறையிலே ஒருவகை என்று கூறத்தக்கதே யன்றிப், பாராளுமன்ற ஆட்சிமுறை ஆகாது என்று கூறிடும், அரசியல் தத்துவவாதிகள் நிரம்ப உள்ளனர்.

முடி ஆட்சி, ஒரு அருள் பெற்ற குடும்பத்துக்கு மட்டுமே, ஆட்சி நடாத்தும் தகுதி, வழி வழி கிடைத்திடும் என்ற நிலையை நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

குடிஅரசு முறையோ, கொல்லன் மகனாயினும், உழவனாயினும், சிறுகடை நடாத்துவோனாயினும், செருப்புத் தைப்போனாயினும் - ஆட்சி நடத்திடும் ஆற்றலைப் பெற்றிட இயலும் என்ற நம்பிக்கையையும், அந்த உரிமை அவனுக்கு உண்டு என்ற நிலையையும், ஏற்படுத்தித் தருகிறது.

***

எல்லோரும் இந்நாட்டு மன்னர் - என்பதிலே, மன்னர், என்ற வார்த்தை, ஆட்சி, நடாத்தும் உரிமையைக் குறிக்க மட்டுமே பயன்படுதல் வேண்டுமேயன்றி, மன்னன்போல், "அருள் பெற்றேன், அமுல் நடத்துவேன், எது செயினும் முறையே என்று எவரும் இருத்தல்வேண்டும்' என்ற மனப்போக்கை, மண்டைக் கனத்தைக் குறித்திடப் பயன்படுத்தப்படுமானால், குடிஅரசு முறை, கொடுமைகளை மட்டும் மூட்டுவதாக அல்ல, மடைமைப் படுகுழியில் மக்களைத் தள்ளிடும் மாபெரும் சதியாகிப் போகும்.

***

இந்த நிலையில், இன்று நடைபெறும் அரசு முறை ஆகிவிட்டது என்றுதானோ என்னவோ, குடிஅரசுத் தலைவர் பாபு இராஜேந்திர பிரசாத், மனம் வெதும்பியது போலவும், கேட்போர் மனம் புண்படும் முறையிலும், சில கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார். பத்ரிநாத் போய்வந்தவர், பாபம் போக மார்க்கம் ஏதேனும் கூறுவார் என்று பலரும் எதிர்பார்த்திருப்பர் - ஆனால் பாபுவோ, இன்றுள்ள ஆட்சி முறை பற்றி, கேலியும் கண்டனமும், வியப்பும் வேதனையும் நெளியும் விதமான கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்.

***

சட்டமன்றங்களில் அமர்ந்து, சட்டமியற்றுவோருக்கு, அதற்குத் தேவையான அறிவாற்றல் இல்லை; அவர்களுக்கு உள்ள ஒரே தகுதி, அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் என்பதுதான். அப்படித் தேர்ந்தெடுத்த மக்கள் யார் எனில் இவர்களைப் போலவே அறிவாற்றலற்றவர்கள் - என்ற கருத்துப்படப் பேசிவிட்டார்.

குருடும் குருடும் குருடாட்டம் ஆடுவதுபோல என்பார்களே, அதுபோல, இன்று ஆட்சிமுறை இருப்பதாக, அவர் கருதுகிறார். ]

இவ்விதமான கருத்துக் கொண்டுள்ள இவரே, குடிஅரசுத் தலைவராக, இன்று அமர்ந்திருப்பது, கேலிக்குரிய, கண்டிக்கத் தக்க, தரம் கெட்ட ஒரு அரசியல் முறையின் மூலமாகத்தான் என்பதை அவர் மறந்துவிட்டிருக்க முடியாது. சிலராகிலும் இதைச் சுட்டிக்காட்டுவார்களே என்பதைத் தெரிந்திருந்தும் தான், குடிஅரசுத் தலைவர் அவ்விதம் பேசியிருக்கிறார். பேசியதோடு நிற்கவில்லை, சட்டமன்றங்கள் செல்வதற்குச் சில தகுதிகள் இருத்தல் வேண்டும்; சில தகுதிகளைக் குறிப்பிட்டு, அத்தகுதிகள் உள்ளவர்கள் மட்டுமே, சட்டமன்றங்கள் செல்லலாம் என்று முறை ஏற்படுத்துவது மிக நல்லது என்றும் எடுத்துக்காட்டி இருக்கிறார்.
--------------------
எல்லோரும் இந்நாட்டு மன்னர் (2)

தம்பி!

"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்,
மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்''

என்ற செய்யுளை, வேறு எதற்காக இல்லையென்றாலும், செந்தமிழின் செம்மை கருதியேனும், இன்றும் பள்ளிகளில் பிள்ளைகள் படிக்கின்றார்கள் அல்லவா!

அந்த உழவனைச் சற்றுக் காண்போமா? கழகத் தோழர்கள், எடுத்தளிக்கும் படப்பிடிப்பு அல்ல; காங்கிரஸ் ஆட்சி அமைத்த குழுவினர் தருவது.

1956-57ஆம்ஆண்டு, உழவுத் தொழிலில் ஈடுபட்டிருப்போர் நிலை குறித்து, ஆய்ந்தறிந்து ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதற்கு முன்பும் இதுபோன்றதோர் அறிக்கை வெளியிடப் பட்டது.

வேறு எந்தச் செயலிலே காட்டத் தவறினாலும் காங்கிரஸ் துரைத்தனம், பல்வேறு குழுக்கள் அமைப்பது அறிக்கைகள் வெளியிடுவது, ஆய்வுரைகளைத் தருவது எனும் செயலிலே மட்டும், மிக மிகச் சுறுசுறுப்புக் காட்டுகிறது. காங்கிரசார் ஆளவந்தார்களான பிறகு, வெளியிடப்பட்ட அறிக்கைகளைக் குன்றெனக் குவித்துக் காட்டலாம் - அளவில் குன்று! பலன்? குடிஅரசுத் துணைத் தலைவர், டாக்டர் இராதாகிருஷ்ணன், சின்னாட்களுக்கு முன்னம், "ஆய்வுக் குழுக்கள் அமைப்பிலே, அறிக்கைகள் வெளியிடுவதிலே, எனக்குத் துளியும் நம்பிக்கை யில்லை, நானே, பல ஆண்டுகளுக்கு முன்பு. பல்கலைக் கழகம் குறித்து ஆய்ந்தறிந்து அறிக்கை வெளியிட்டிருக்கிறேன்; தொகுதி மூன்று 121 பலன் ஏதும் விளையவில்லை!!'' - என்று மெத்த வேதனையுடன் பேசினார்.

ஆளவந்தார்கள், குழுக்களை அமைக்கிறார்கள்; குழுக்கள் உலாவருகின்றன; உரையாடல்கள் உற்சாகத்துடன் நடைபெறு கின்றன; அறிக்கைகள் ஆர்வத்துடன் தயாரித்து வெளியிடு கிறார்கள்; அந்த அறிக்கைகளோ குவிகின்றன; செயல்பட வேண்டிய துரைத்தனமோ, துயில்கொண்டு விடுகிறது.

அறிக்கையின் மூலம் விளைவு, விரும்பத்தக்க முறையில் கிடைப்பதில்லை என்றாலும், கூர்ந்து பார்க்கக் கூடியவர்களுக்கு, நாட்டு நிலைமையையும், நாடாள்வோரின் திறனற்ற போக்கையும் எடுத்துக்காட்ட இவை பயன்படுகின்றன. அத்தகைய அறிக்கை களிலே ஒன்றுதான் 1956-57ஆம் ஆண்டு வெளிவந்தது; உழவர் பெருங்குடிமக்கள், இந்த உத்தமர்கள் ஆட்சியில் இராமராஜ்யம் என்பதே கிராம ராஜ்யம்தான் என்று தமக்குத் தாமே புகழாரம் சூட்டிக் கொள்வோர் ஆட்சியில், எத்தகைய நிலைமையிலே உள்ளனர் என்பதை, இந்த அறிக்கை காட்டுகிறது.

***

3600 சிற்றூர்களிலே நிலைமைகளைக் கண்டறிந்து அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது.

உழவுத் தொழிலில் உள்ளவர்கள் எவர் என்பதற்கு, ஆய்வுக் குழுவினர் ஒரு இலக்கணம் வகுத்துக் கொண்டு அறிக்கைத் தயாரித்துள்ளனர். அந்த இலக்கணத்தின்படி, வருவாயின் பெரும் பகுதி, உழவுத் தொழிலில் கிடைக்கும் கூலியாக எவருக்கு அமைந்து இருக்கிறதோ, அவர்களே, உழவர் என்பதாகும்.

அந்த முறையில் நடத்தப்பட்ட ஆய்வு, என்ன உண்மை களைத் தந்திருக்கிறது?

உழவர்களின் நிலைமை, நாளுக்குநாள் தேய்ந்து கொண்டு வருகிறது.

நிலமற்ற உழவர்களின் தொகை அதிகமாகி விட்டிருக்கிறது.

உழவுத் தொழிலில் உள்ளவர்களின் கூலி, குறைக்கப் பட்டுப்போயிருக்கிறது.

முன்பு 109 புதிய காசுகள், கூலியாகப் பெற்றுவந்த உழவர் களுக்கு, இப்போது 96 புதிய காசுகள் மட்டுமே கிடைக்கின்றன.

உழவுத் தொழிலிலே ஈடுபட்ட பெண்களுக்கு, முன்பு 68 புதிய காசுகள் கிடைத்தன. காங்கிரசாட்சியின் சிறப்பின் விளைவாக (!) இப்போது அந்தக் கூலி குறைந்து, 59 புதிய காசுகள் பெறுகின்றனர் - தாய்மார்கள்.

சிறார்களோ, முன்பு பெற்றது 70 புதிய காசுகள்; இப்போது 53!

கொட்டுங்கடி! கும்மி கொட்டுங்கடி!
கோலேந்தும் காங்கிரஸ் புகழைப்பாடி!

என்று, "மாதர் பகுதி' கும்மி கொட்டுகிறது, ஓட்டு வாங்க!! ஆனால் அறிக்கையைப் பார்த்தாலோ, காங்கிரசாட்சியிலே ஏர்பிடித்தோன் திண்டாட்டம் வளருவது தெரிகிறது.

1951ஆம் ஆண்டு அறிக்கைப்படி, உழவர் குடும்பத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு 447-ரூபாய் வருவாயாம், 1957ஆம் ஆண்டில் கணக்கெடுக்கும்போது, 437 ரூபாய் வருவாய்தான் கிடைக் கிறதாம்!!

கோழி கூவாமுன்பு எழுந்திருந்து சென்ற, கோட்டான் கூவும்வரை பாடுபடும் உழவன், வருவாய் குறைந்து விட்டிருக் கிறது. துணிச்சலுடன், அமைச்சர்கள், அவனுடைய குடிசைக்குப் பக்கத்திலேயே, கொடிமரம் நடுகிறார்கள்; கும்மி கொட்டிட, கொட்டி முழக்கிட, படை வருகிறது; பத்திரிகைகளோ, இந்த வளர்ச்சியை எடுத்துக்காட்டப் பத்தி பத்தியாகச் செய்திகளை வெளியிடுகின்றன.

நம்மவர்கள் வருகிறார்கள் நாடாள! நல்லவர்கள் வருகிறார்கள் பாடுபட! இனி நமது வருவாய் வளரும், வாட்டம் குறையும் என்று எண்ணினர், உழுது கிடப்போர்! வருவாய் குறைந்து விட்டிருக்கிறது; வாய்வீச்சு மிகுந்து விட்டிருக்கிறது!

உழவர்களின் வருவாய் குறைந்திருப்பது மட்டுமல்ல, வேதனையூட்டும் உண்மை; அவர்களின் வாழ்க்கைச் செலவு அதிகமாகி விட்டிருக்கிறது.

முன்பு ஆண்டு ஒன்றுக்கு, 461 ரூபாய் இருந்தால், குடும்பம் ஏதோ இழுத்துப் பறித்துக் கொண்ட நிலையில் நடந்து வந்தது; இப்போது, குடும்பச் செலவு, ஆண்டொன்றுக்கு, 618-ரூபாய் பிடிக்கிறதாம்.

***

தம்பி! கணக்குத் தயாரித்தது, நம் கழகமல்ல காங்கிரசாட்சி அமைத்த ஆய்வுக்குழு! கவனமிருக்கட்டும் கவனப்படுத்திவை!

உழவர்களுக்குக் கடன் பளுவும் ஏறிவிட்டிருக்கிறது.

இந்த இலட்சணத்தில் ஆட்சியை நடத்திக் கொண்டு, பாரதிக்கு விழாக் கொண்டாடும்போது,

உழவுக்கும் தொழிலுக்கும்
வந்தனை செய்வோம்

என்று பாடிவிட்டால், பசித்த வயிறுக்குப் பாலும் பழமுமா கிடைத்துவிடும்! பாவிகளே! உங்களை நம்பி நாசமானோமே!! - என்று கொதித்தெழுந்து கேட்கத் தோன்றுகிறது, மாடென உழைத்து ஓடென ஆகிவிட்டிருக்கும் உழவர்களுக்கு. ஆனால், எப்படிக் கேட்பார்கள்? பேசவருகிற அமைச்சருடன்தான் பராக்குக் கூறுவோர், பல்லிளிப்போர், பர்மிட் கேட்போர், பட்டுப் பட்டாடைகள், பவுன் துப்பட்டாக்கள், பஸ் ரூட்டுகள், இப்படி ஒரு படையே வருகிறதே! எப்படி மனதிலுள்ளதை எடுத்துக் கூற, உழவர்களுக்குத் தைரியம் ஏற்படும்?

அதோ அமைச்சரின் கால் தூசு தன் மேலே பட்டாலே போதும், அதைக்காட்டியே, அங்காடியிலே, செல்வாக்குப் பெறலாம் என்று எண்ணிக் கொள்பவர் போல நிற்கிறாரே, திருவாளர் சமயமறிந்தான் பிள்ளை, அவருக்குக் கண்ணுக்கு எட்டிய தூரம் வரையிலே, கழனி; காடு என்கிறார் வயலை! கடாமாடுகள் என்கிறார், அதை உழுதுகிடப்பவர்களை! "கனம்' என்கிறார், அமைச்சரை! இருளை ஓட்டும் அவர் காதிலுள்ள வைரக்கடுக்கன்! உடலிலே தங்கம், உள்ளத்திலே, இரும்பு!! அவரிடம் அண்டிப் பிழைக்கிறான், உழவன்; அவன் அமைச்சர் பொய்யுரைக்கிறார் என்று, எப்படிக் கூற முடியும்?

"காங்கிரசாட்சியிலே ஆதிதிராவிடர் வீடுகளிலே வெள்ளிப் பாத்திரங்கள் காணப்படும் அளவுக்கு வளம் கொழிக்கின்றது.'

என்று வாய் கூசாமல் கனம் கக்கன் பேசுகிறார்.

ஐயா! தகரக் குவளையைப் பார்த்துவிட்டு இப்படிப் பேசலாமா? என்று கேட்கத் தோன்றுகிறது. ஆனால், அமைச்சரைச் சுற்றி நிற்கும் கனதனவான்கள், சற்றுத் தொலைவில், கெட்டித்த துப்பாக்கிகளுடன் தயாராக நின்று கொண்டிருக்கும் போலீஸ் படையினர், இவர்களைக் கண்ட பிறகு, ஏழை எப்படிப் பேச முடியும்?

***

அஞ்சி அஞ்சிச் சாவார்
இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே

என்றல்லவா, பாரதியார் பாடினார்.

அச்சம் பிடித்தாட்டும் நிலையில் உள்ள ஏழை உழவர்களை, போலீஸ் படை சூழ நின்றிடப், பூமான்கள், உடனிருந்த அதிகாரிகள் ஆரத்தி எடுத்திட, உலாவந்து, அமைச்சர்கள் காணும்போது, கிலி அதிகமாகுமேயன்றி வேறென்ன ஏற்பட முடியும்.

அதை அறிந்து, அகமிக மகிழ்ந்துதான், அமைச்சர்கள், அமுலில் இருந்துகொண்டே ஓட்டு வேட்டை ஆடவேண்டும். பஞ்சை பராரிகளிடம் பயமூட்டியே ஓட்டுகளைப் பறித்துக் கொள்ள முடியும், என்று நம்பிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த முறைகேடான போக்கைத்தான், மலைபோலக் காங்கிரஸ் ஆட்சி நம்பிக் கொண்டிருக்கிறது.

குடிஅரசு முறை, மக்களிடம் "ஓட்டு' வாங்கி நடத்தப் படுவது.

ஆனால் அதிகார அமுலைக் கண்டால், இயல்பாகவே அச்சப்படும் மக்கள் பெரும் அளவுக்கு இருக்கும் இந்த நாட்டில், அமைச்சர்களாகப் பதவியில் இருந்துகொண்டே பவனி வந்து தேர்தல் நடத்துவது, எப்படி நியாயமாகும்?

செய்தவைகளை எடுத்துக்காட்டி, மக்களுடைய ஆதரவை மீண்டும் பெற முடியும் என்ற நம்பிக்கை இவர்களுக்கு இருக்கு மானால், தேர்தலுக்கு ஒரு ஆறு திங்களுக்கு முன்பாகவேனும், பதவியைவிட்டு விலகிநின்று, காங்கிரஸ்காரர்களாக மட்டும் கிராமப்புறம் சென்று, ஒட்டுக் கேட்க வேண்டும்.

அப்படிக் கேட்டுப் பெரும் அளவு ஓட்டு இவர்கள் பெற்று விடுவார்களானால், தம்பி! அதுதான், அறவழி நடாத்திடும் அரசியல் என்று கூறத்தக்கதாகும்.

அஃதன்றி, அமைச்சர்களாகக் கொலுவிருந்த வண்ணமே, "ஓட்டு' வேட்டையிலும் ஈடுபடுவார்களானால், குடிஅரசு முறையைக் கோணல் வழியில் பயன்படுத்தி, ஆதிக்கம் தேடிக் கொள்கிறார்கள் என்றுதான், அறிவாளர் எவரும் கூறுவர்.

***

கட்சிக் கண்ணோட்டத்துடன் அல்ல, இதனை நான் கூறுவது.

விதி, பழைமைப் பிடி, ஜாதி எனும் பல கொடுமையான பிடிப்புகளிலிருந்தே இன்றும் விடுபட முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கும் பாமர மக்களிடம், அதிகாரம் தரும் அச்சத் தையும் ஏவிவிட்டு ஓட்டு வாங்குவது, அறமல்ல; அரசியலை வெறும் சூதாட்டம் ஆக்குவதே யாகும், என்ற பொதுநெறி பற்றி எடுத்துரைக்கிறேன்; கட்சி வளர்ச்சிக்காக அல்ல.

***

"மன்னன் எதையும் செய்யலாம்' என்பது தவறு, தீது, கொடுமை, என்பதால்தான், முடி அரசு முறையை மாற்றிக், குடிஅரசு முறையைத் தேடினர்; குடிஅரசிலோ, மந்திரிகள் எதையும் செய்ய வல்லவர்கள் என்பதை உணர்ந்து, உள்ளத்தில் கிலி குடிகொண்ட நிலையில் இருக்கும் மக்களிடம், மந்திரிகளாக இருந்துகொண்டே ஓட்டுக் கேட்பது, முடி அரசு முறையின் கேடு பாட்டைவிட மோசமான நிலைமையையன்றோ ஏற்படுத்திவிடும்.

எனவேதான், குடிஅரசு முறை, இந்த நாட்டைப் பொறுத்த வரையில், உண்மைnயான மக்களாட்சி அமைய வழிகோல வேண்டுமானால், பொதுத் தேர்தலுக்கு ஆறு திங்களுக்கு முன்னா லாவது, காங்கிரஸ் மந்திரிகள் பதவியை விட்டு விலகிச், சொந்த அறிவாற்றலை காட்டிக், கட்சி சாதித்தவைகளை எடுத்துக் கூறி, "ஓட்டு' கேட்க வேண்டும்.

***

"முன்பு இருந்ததைவிடக் காங்கிரசுக்கு இப்போது வலிவு அதிகமாகி இருக்கிறது' என்று முதலமைச்சர் காமராஜர் பேசி வருகிறார்.

அவர் கூறுவதிலே அவருக்கே நம்பிக்கை இருக்குமானால், தேர்தலுக்கு ஆறு திங்களுக்கு முன்பு, பதவியை விட்டு விலகி, வெறும் காமராஜராக, கர்மவீரர் காமராஜராவோ, பச்சைத் தமிழர் காமராஜராகவோ, கிராமம் கிராமமாகச் சென்று, போட்ட பாதைகள், வெட்டிய வாய்க்கால்கள், தோண்டிய கிணறுகள், திறந்த பள்ளிக்கூடங்கள், ஏற்றிய விளக்குகள் - இவைகளுக்காக வாங்கிய வரித்தொகை - இந்தக் கணக்கைக் காட்டி, "ஓட்டு' வாங்கிவிடட்டும், பார்க்கலாம்!!

தம்பி! இந்த ஏற்பாடு, இன்றுள்ள நிலையில், குடிஅரசு முறையைக் கூடத் தூய்மைப்படுத்த மிக மிகத் தேவை.

எல்லா அரசியல் கட்சிகளுமே, இதனை நாட்டு மக்கள் முன் ஒரு உடனடிப் பிரச்சினையாக வைத்து, மக்களின் வலிவைத் திரட்டிக் காட்டிக், காங்கிரஸ் கட்சியை இந்த ஏற்பாட்டுக்கு இணங்கும்படி, வலியுறுத்தவேண்டும்.

ஏதோ ஓரளவுக்காகிலும், குடிஅரசு முறை பலன் தர வேண்டும் என்று விரும்பினால், இந்த ஏற்பாடு, நடைமுறைக்கு வந்தே ஆக வேண்டும்.

பாபு இராஜேந்திர பிரசாத், சட்டம் இயற்றச் செல்வோர் களுக்குத் தகுதிகள் இருத்தல் வேண்டும் என்று கூறினார் - அதுபோலவே, அல்லது அதனைவிட மிகமிக அவசியமாகவும், அவசரமாகவும், இன்று தேவைப்படுவது, மக்களை மிரட்டி "ஓட்டு' வாங்கும் முறையை ஒழித்துக் கட்டுவது.

தேர்தலில் ஈடுபட்டு, மக்களின் ஆதரவைக் கேட்டுப் பெறச் செல்வோர், அமைச்சர்கள் என்ற "அந்தஸ்து' பலத்தைக் காட்டுவது, அவர்களுக்கு பதவியை விட்டுவிட்டால், மக்களின் நல்லாதரவைப் பெறத்தக்க வேறு தகுதிகள் இல்லை என்பதையே, உலகுக்கே எடுத்துக்காட்டும், தரக்குறைவான காரியமாகிப் போகும்.

***

கட்சி மகத்தான காரியங்களைச் சாதித்து விட்டது என்பதற்காக அல்ல, அமைச்சர்களாக இருக்கிறார்களே என்பதற்காகவே, நெஞ்சின் குமுறலை அடக்கிக் கொண்டு கிடக்கிறோம், என்று பேசாதவர்கள் இல்லை.

குடிஅரசு முறையிலே செய்யப்படவேண்டிய திருத்தங்கள் குறித்து, பாபு இராஜேந்திரர் போன்றாரெல்லாம், அக்கரை காட்டிப் பேசுவதால், தம்பி! உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டிய பிரச்சினையை எடுத்துரைத்தேன் - என் வார்த்தையைக் கேட்டு விட்டு, அமைச்சர்களுக்கு, "ரோஷம்' பொத்துக் கொண்டு வந்துவிடும். "அடே! அறிவிலி! எமக்கு இருக்கும் செல்வாக்கு, அமைச்சர்களாக இருப்பதனால் மட்டும் என்றா வாய்த் துடுக்காகக் கூறுகிறாய்? எம்மை நாடு அறியும் - நன்கு அறியும்!! எமது அறிவாற்றல், வீரதீரம், தியாகம், யாவும், அறியாத வீடு உண்டா? கேவலம், அமைச்சர் பதவியைக் காட்டியா, நாங்கள் "ஓட்டு' வாங்கவேண்டும்? அங்ஙனமா, எண்ணிக் கொண்டாய்? இதோ பார், பதவி பழஞ் செருப்பு - வீசி எறிந்து விட்டு, மக்களை அணுகி, எமது சொந்தத் தகுதி, திறமை, சாதித்தவை இவைகளைக் காட்டியே ஓட்டுக் கேட்டுப் பெறுகிறோம்!! - என்று கூறி விடுவார்கள். என்ற நம்பிக்கையுடன் இதைக் கூறவில்லை. நாடு அறியட்டும், இவர்கள் நிலைமையை-மக்கள் திரண்டெழுந்து வலியுறுத்தட்டும் - பொய்க்கால் இல்லாமல், பூச்சு, பூணாரம் இல்லாமல், வந்து ஓட்டுக் கேளுங்கள் - அதுதான் முறை - எல்லோரும் இந்நாட்டு மன்னர் - என்று தத்துவம் பேசுகிறீர்கள் - ஆனால் அமைச்சர்களாக இருந்துகொண்டு, ஓட்டுக் கேட்க நீவிர் வருகிறபோது, நாங்கள், கைகட்டி வாய் பொத்தி நிற்க வேண்டி இருக்கிறது - நீவிர் கல்லைக் கனி என்று கூறினாலும், சுடு சொல்லை எம்மீது வீசினாலும், மறுத்திட மார்க்கமின்றிக் கிடக்க வேண்டி நேரிடுகிறது - எப்பக்கம் திரும்பினாலும், உமக்கு, பதவி தரும் பலம் தெரிகிறது - திகில் பிறக்கிறது - ஓட்டுகளைத் தட்டிப் பறித்துக் கொள்கிறீர்கள் - இது குடிஅரசு முறை அல்ல - தடி அரசு முறையாகிப் போகிறது. ஆகவே, எங்கள் தயவை நாடி வருகிற போதாகிலும், தடி தூக்கிக் கோலம் கலைத்து விட்டு வாருங்கள் - காட்டவேண்டிய கணக்கைக் காட்டுங்கள் - நாங்கள் கேட்கவேண்டியவைகளைக் கேட்கிறோம் - அதுதான் முறை - என்று மக்கள் கூறவேண்டும் என்பதற்காகவே, இதனை எழுதுகிறேன்.
-----------------

எல்லோரும் இந்நாட்டு மன்னர் (3)

தம்பி!

மன்னர்கள் பலர் உளர்; சிலரைக் காணலாம்!! காணு முன்பு இதனை எண்ணிப்பார்; முடி அரசு முறை தீது, ஆகாது, தேவையற்றது என்று கூறுவது, மிகச் சுவையுள்ள, மிக எளிதிலே எவரும் ஒப்புக் கொள்ளத்தக்க அரசியல் தத்துவம் என்பது நிலைத்து நின்றான பிறகும், மன்னர்களைக் காண்பது என்றால், ஓர் ஆவல், பரபரப்பு உணர்ச்சி, உன்போன்றார் உள்ளங்களில் கூட ஏற்பட்டுவிடுகிறதே, அது ஏன்? புரிகிறதா? மன்னர்கள் மமதையாளர்களாகிவிடக்கூடும், மக்களை மந்தை என்றெண்ணி நடத்திடக்கூடும் - அதுபோல் நடைபெற்ற நிகழ்ச்சிகள் பல உள! மக்கள் தமது குடிசைகளில் உள்ள தட்டுமுட்டுச் சாமான்களை விற்றாகிலும், மன்னன் மனையாட்டியின் கருத்துக்கேற்ற மரகதமணிமாலை - வாங்கப் பணம் செலுத்தவேண்டும் என்று கூறிய முடி அரசுகள் இருந்திருக்கின்றன. எனக்கு மட்டும் அவன் கிடைத்துவிட்டால், இரு கரங்கள் போதும், வாள் வேண்டாம், வேல் வேண்டாம், கழுத்தை நெறித்தே காதகனைக் கொன்று போடுவேன்; கற்பழிக்கப்பட்ட கன்னியரின் கண்ணீரை எண்ணிக் கொண்டால் போதும், இந்த என் கரங்கள், இரும்பினும் வலிவுடையனவாகும் - என்று புரட்சிப்பொறி பறந்திடப் பேசிய வீரர்களை, முச்சந்தியிலே தூக்குமரம் நாட்டி, அதிலே பிணமாக்கித் தொங்கவிட்ட மன்னர்களும் இருந்திருக்கிறார்கள். எனினும், இன்றும், இவ்வளவு சுவையுடன் "ஜனநாயகம்' பேசும் இந்த நாட்களிலேயும், எங்கிருந்தாகிலும், யாரேனும் மன்னன் வருகிறார் என்றால், பார்க்கவேண்டும் என்று மக்களுக்கு ஆவல் பொங்குகிறது.

தலைவர்கள், நடிகர்கள், வெற்றி வீரர்கள், ஆகியோரைக் காணவும் மக்களுக்கு ஆவல் எழத்தான் செய்கிறது; ஆனால், அந்த ஆவல் அவர்கள் தத்தமது துறைகளில், பாராட்டத்தக்க திறம் காட்டி, மக்களின் மனதை ஈர்த்த பிறகே, ஏற்படுகிறது.

ஆனால், மன்னர்களைக் காண வேண்டும் என்ற ஆவலோ, அவன் மன்னன் என்பதற்காகவே ஏற்பட்டுவிடுகிறது - தரம், திறம், வெற்றி, எதுவும் அவ்வளவாகத் தேவைப்படுவதில்லை.

இந்த நிலை, பழமையை விட்டுவிடத் துணிவு இல்லாத இந்நாட்டிலே மட்டும் என்பதற்கில்லை; புரட்சி பூத்திட்ட சோவியத் நாட்டிலேயே, இப்போது, மன்னர்கள் ஒருவர்பின் ஒருவராகப் "பவனி' வருகிறார்கள்; மக்கள் கண்டு மகிழ்கிறார்கள்.

என்ன எண்ணிக் கொண்டு, ஜார் மன்னனை ஒழித்துக் கட்டிய புரட்சிப் பரம்பரையினர், இந்த மன்னர்களைப் பார்க்கி றார்களோ? அப்படி அங்கு செல்லும் மன்னர்களும், சோவியத் மக்களைக் கண்டு புன்னகை புரிகிறார்களே, அதற்குத்தான் என்ன பொருளோ? யாரறிவர்!!

"மைசூர் மகாராஜா'' அமெரிக்கா சென்று, காட்டு மிருகங்களைப்பற்றியும், கடவுள் கொள்கைபற்றியும், பல்கலைக் கழகங்களில் பேருரையாற்றிவிட்டு, வருகிறார்.

"மகாராஜா'வை அமெரிக்க மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள். ஆனால் தங்கள் நாட்டுக்கு ஒரு "ராஜா' வேண்டுமென்று அவர்கள் விரும்பவுமில்லை; முன்பு இங்கிலாந்து நாட்டு அரசன் ஆணைக்கு உட்பட்டு இருந்த நிலைமையைப் புரட்சி நடாத்திப் போரிட்டு ஒழித்துக் கட்டியவர்கள் அமெரிக்கர்கள்.

அமெரிக்காவில், வரவேற்பு வைபவங்களைப் பெற்று, மகாராஜா! என்று மக்களால் புகழாரம் சூட்டப்பட்டு, மகிழ்ந்திடும் மன்னர், இங்கு திரும்பி வந்ததும், "ராஜ்யம்' பறிபோன நிலைதான் அவரை வரவேற்கிறது!

நேபாள நாட்டு மன்னர், காஷ்மீர் நாட்டு மன்னர், இவர்கள் தத்தமது நாடுகளிலே, இன்று, இந்தியப் பேரரசின் துணை தரும் வலிவின் காரணத்தால்தான், அரசாள முடிகிறது - ஆனால் அவர்கள் "பவனி' வரும் சோவியத் போன்ற புத்தம் புதுமுறை கண்ட நாடுகளிலே, அவர்கள், புரட்சித் தலைவர்களுடன் குலவ முடிகிறது. குடிஅரசுத் தலைவருடன் கொலுவிருக்க முடிகிறது, மக்களாட்சி மட்டுமே மாண்பளிக்கும் என்ற கருத்தை நடைமுறைக்குக் கொண்டுவந்த, நாட்டுத் தலைவர்கள், இந்த மன்னர்களுடன் உரையாடி, உலக சமாதானம் குறித்தும், நேசத் தொடர்புகொள்வதுபற்றியும், பேசி அறிக்கை வெளியிடு கிறார்கள். விந்தையாக இருக்கிறதல்லவா?

ஆப்கன் நாட்டு மன்னரும், மன்னர் பரூக்கை விரட்டி, அரசுத் தலைவராகிவிட்ட நாசரும், எழில்மிகு எகிப்தில் விருந்துண்டு மகிழ்கிறார்கள், உலகு சீர்பெற வழி காண்போம் என்று செப்புகிறார்கள்.

மைசூர், திருவனந்தபுரம், கொச்சி, புதுக்கோட்டை, போபால், ஜெய்ப்பூர், ஜோத்பூர், பவநகர், நவநகர், பாடியாலா, - இப்படியுள்ள ஐநூறுக்கு மேற்பட்ட இராஜ்ஜியங்களை அரசாண்டு வந்தவர்களை, இந்தியப் பேரரசு வீட்டுக்கு அனுப்பிவிட்டது - எனினும் இப்போது, "பிரிட்டிஷ் மகாராணி இங்கு வருகிறார்கள்' என்பதற்காக, என்னென்ன வகையான விருந்து வைபவங்கள் ஏற்பாடு செய்வது என்பது பற்றித் துரைத்தனமே சுறுசுறுப்பாகி விட்டிருக்கிறது.

மாலை போடலாம் - ஒன்றே ஒன்று!

விருந்து வைக்கலாம் - ஆங்கில முறை உணவு!

உடனிருந்து உபசாரங்களைக் கவனித்துக் கொள்ள, இலட்சுமி மேனன் எனும் துணை அமைச்சரே, கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்.

மகாராணி, புலிவேட்டை காண்பாராம்! மகாராணியின் மணாளன், புலியைச் சுடுவாராம்!

இருவரும் சென்று, காதற்சின்னமாம் கவின்மிகு "தாஜ்மகாலை'க் காண்பாராம் - நிலவொளியில்!!

தம்பி! பிரிட்டிஷ் மகாராணியின் வரவேற்பு வைபவத்துக்காக, அமைச்சர்கள் வண்டுபோலச் சுறுசுறுப்பாகப் பணியாற்று கிறார்கள் - அதிகாரிகள் பம்பரமாகச் சுழன்று வேலை செய்து கொண்டுள்ளனர்.

இது "குடிஅரசு' கொடிகட்டி வெற்றி முழக்கமிடும் காலம்! - இப்போது, உலகில் மிகப்பெரிய ஏகாதிபத்தியத்தை அமைத்து, பல நாடுகளை அடிமைகொண்ட, பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் மகாராணியாருக்குக், குடிஅரசு முறையை மேற்கொண்டுவிட்ட இந்தியாவில், இத்துணை சிறப்புடனும், பகட்டுடனும் வரவேற்புகள்!! பொருள் உண்டா, இதற்கு? குடிஅரசு முறையிலே, மக்களுக்கு ஐயப்பாடே ஏற்பட்டுவிடுமோ என்று கூடச் சிலர் அச்சப்படுவர் - முடிதரித்தோர் முன், குடியாட்சித் தலைவர்கள், முகமன்கூறி நின்றிடும் "அடக்க உணர்ச்சி'யைக் காணும்போது.

அஃதேபோல, முடிதரித்தோர், குடியாட்சித் தலைவர்களுடன் கைகுலுக்கி, கனிவு காட்டி, அவர்தம் அறிவாற்றலைப் பாராட்டிப் பேசும்போது, குடியாட்சித் தலைவர்களில், மிக மிக உறுதி படைத்தவர்களுக்கேகூட, ஒரு கணம், உச்சி குளிரத்தான் செய்யும்.

குடியாட்சி முறையை மேற்கொள்ளுங்கள், என்று முடி தரித்தோருக்கு இவர்கள் யோசனை கூறுவதில்லை. முடி அரசுதான் சாலச் சிறந்தது என்று குடியாட்சித் தலைவர்களுக்கு, மன்னர்களும் அறிவுரை கூறுவதில்லை; இருவரும் ஒருவருக் கொருவர் "அன்புரை' கூறிக்கொள்கின்றனர்; அவனியோர்க்கு வாழும் வழி கூறுகின்றனர்.

முடிதரித்தோருக்கு உள்ள பகட்டு கண்டு, குடியாட்சித் தலைவர்கட்கு, நெஞ்சில் சபலம் தட்டுகிறதோ என்னவோ, யார் கண்டார்கள்? அதுபோலவே, குடியாட்சித் தலைவரானால், மக்களின் பேரன்பு கிடைக்கிறது என்பது கண்டு, முடிதரித்தோர் மனம், குடியாட்சி முறையை நாடுமோ, என்னவோ!

ஆனால், மக்கள் இன்றும், மன்னர்களைக் காண்பதிலே, மட்டற்ற ஆர்வம் காட்டுகிறார்கள்.

ஈரான் நாட்டு மன்னருக்கு, சின்னாட்களுக்கு முன்பு ஒரு ஆண் மகவு பிறந்தது! ஆண் குழந்தை ஈன்றெடுக்காத ஒரே காரணத்துக்காகவே, ஈரான் மன்னர், தன் இதயத்தில் இடம் பெற்ற பேரழகி சுரையா மகாராணியை விலக்கி வைத்து விட்டார்; வேறோர் மங்கையை மண முடித்துவிட்டார்; அவள் பெற்றெடுத்தாள் ஆண் மகவு! ஈரான் நாடு விழாக்கோலம் பூண்டது! மன்னனுக்கு மகன் பிறந்தான் - நாட்டுக்கு இளவரசன் பிறந்தான் - என்று குதூகலம், நாடு முழுவதும்.

ஈரான் நாட்டு மன்னர், "இளவரசனை'க் கண்டுவிட்டுத் திரும்புகையில், அவருடைய மோட்டாரைச் சூழ்ந்து கொண்டு, ஆயிரக்கணக்கான மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்த காட்சி படமெடுக்கப்பட்டு, குடியாட்சி பரவப் பாடுபடும் நாளிதழ் களில், முதல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இன்றளவும், பிடிதளரவில்லை; முறை அதிகமாக மாறி விடவில்லை; எல்லா அதிகாரமும் தமது கரத்திலேயே வைத்துக் கொண்டு இருக்கிறார் அபிசீனியா நாட்டு மாமன்னர், ஹெயிலி செலாசி! சென்ற கிழமை, அவர் அரசாளத் தொடங்கி, முப்பதாண்டுகள் ஆயின என்பதைக் காட்டிட ஒரு விழா நடைபெற்றது - கோலாகலமாக!

பிரான்சு நாட்டிலே, மன்னனை விரட்டிய நாளை, இன்றும் விழாவாக்கிக் கொண்டாடுகிறார்கள்.

ரμய நாட்டிலே, இந்த நவம்பரில், ஜார் மன்னன் ஆட்சி ஒழிக்கப்பட்ட புரட்சி, விழா நாளாக்கப்பட்டுக் கொண்டாட்டம் நடக்கிறது.

அபிசீனியா நாட்டிலே, மாமன்னர் முடி தரித்து முப்பது ஆண்டுகள் ஆகின்றன என்பதால், மகிழ்ச்சியுற்று விழாக் கொண்டாடுகிறார்கள்.

பேரறிவாளன் என்று போற்றப்படும் சாலமன் எனும் மன்னனுக்கும், பேரழகி ஷீபா எனும் அரசிக்கும் பிறந்த மைந்தனுடைய வழி வழி வந்தவர், அபிசீனியா மாமன்னர், என்கிறார்கள்.

இவரும், இன்றுள்ள குடியாட்சித் தலைவர்களுக்கு, நல்லாட்சி நடத்த வேண்டும் என்பது குறித்தும், உலகப் போர் மூண்டிடாமல், அறநெறியுடன் நடந்துகொள்ளவேண்டும் என்பது பற்றியும், அறிவுரைகள் கூறுகிறார்.

இவ்விதமானதோர் விந்தையான நிலைமை இன்று இருந்து வருகிறது.

குடியாட்சி முறையை முடியாட்சி முறையுடன் இணைத்துக் கொண்டுள்ள நாடு பிரிட்டன்.

முடியுடையோன் தலையை வெட்டினர் பிரிட்டனில், முன்போர் முறை.

மற்றோர் மன்னனை நாடு கடத்தினர்! மிகப் பழம் காலத்திலேயே, மன்னனை மாளிகைக்குள்ளே, மடக்கி அடக்கி, அவனிடம் "உரிமைச் சாசனம்' எழுதி வாங்கினர் - இதே பிரிட்டனில்.

இதே பிரிட்டனில், மகாராணிக்குக் குழந்தை பிறக்கப் போகிறது என்று அறிவிக்கப்பட்டதும், கொட்டும் பனியைப் பொருட்படுத்தாமல், அரண்மனைக்கு எதிரே, பெருந்திரளாக மக்கள் கூடி நின்றனர் - சேதி கேட்டு மகிழ்ந்திட!

அப்படிப்பட்ட விந்தை முறைகள் நிறைந்த பிரிட்டனை ஆண்ட ஓர் மன்னனைத்தான், நாடகப் பேராசிரியர், நானிலம் போற்றிய பகுத்தறிவாளர், பேரறிஞர் பெர்னாட்ஷா "ஆப்பின் கார்ட்' எனும் நாடக நூலொன்றிலே, படைத்துக் காட்டுகிறார். ஆமாம் தம்பி! உண்மையாக இருந்த மன்னன் அல்ல; சமதர்ம குடிஅரசு, பகுத்தறிவு எனும், பல தூய கருத்துக்களைக் கருவூலமாக்கித் தந்த பேரறிஞர், "பெர்னாட்ஷா'வின் கற்பனையில் தோன்றிய மன்னன்! காண்போம் வா!

***

மன்னன் அரண்மனை பெரியது! கவர்ச்சிகரமானது! மன்னனுடைய நிலைமைக்கு ஏற்றதாகத்தானே அவன் இருப்பிடம் இருத்தல் வேண்டும். நமது நாட்டிலே தம்பி! கோயில் என்றே பெயர் தந்தனர், மன்னன் மனைக்கு!

நுழைவு வாயிலைக் கடந்துவிட்டோம் - முன்புறக் கூடம்! இங்கு உள்ள உதிகாரிகளிடம் அனுமதி பெற்றுக் கொண்டுதான் உள்ளே போக முடியும். அவர்கள் இருவரும், மன்னனுக்கு வந்த கடிதங்களைப் படித்துக் கொண்டும், இடையிடையே பேசிக் கொண்டுமிருக்கிறார்கள். என்ன செய்வது, தம்பி! கனைத்தாலும், கண் சிமிட்டினாலும், இவர்கள், தங்கள் வேலை முடிந்தா லொழிய, அல்லது என்ன காரணத்தினாலோ நம்மிடம் அக்கரை ஏற்பட்டாலொழிய, உள்ளே செல்ல அனுமதி அளிக்க மாட்டார்கள். எவ்வளவு நேரமாகும் என்று கேட்கிறாய் - பார்வையால்! என் பெருமூச்சு கூறுவது புரியவில்லையா - எவ்வளவு நேரமாகுமோ எனக்கே தெரியாது.

இதுதான் அண்ணா! முடிஅரசு முறையிலே உள்ள கொடுமை - என்று கூறுவாய்.

குடியாட்சி முறையிலே மட்டும் என்னவாம்! கண்டவர்கள், கண்ட கண்ட நேரத்திலெல்லாம், அமைச்சர் பெருமானைக் காணச் சென்றுவிட முடியுமா? "நந்திபூஜை' அங்கு இல்லையா?

இராஜகோபாலாச்சாரியார் அமைச்சராக வந்த உடன், குடியாட்சி முறையின் அருமை பெருமையை உயர்த்தும் நோக்குடன், தன்னை எவரும் எந்த நேரத்திலும் வந்து பார்க்கலாம் என்று கூறினார். ஒரே கொண்டாட்டம் மக்களுக்கு! காங்கிரஸ் வட்டாரத்திலே பெரு மகிழ்ச்சி! ஆனால், என்ன நடந்தது; தெரியுமோ? தம்பி! அணி அணியாகக் காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும், வந்து பார்த்தபடி இருந்தனர் - வேறு வேலை பார்க்கவே நேரம் கிடைக்கவில்லை. கூப்பிய கரத்தை, மடக்கமுடியவில்லை! சிரித்த முகம் - மாறக்கூட நேரம் கிடைக்கவில்லை. கடைசியில் இது ஆகாது என்று உணர்ந்து, ஆச்சாரியார், முதலில் செய்திருந்த ஏற்பாட்டைக் கைவிட்டுவிட்டார்.

குடியாட்சியிலேயே இது என்றால், முடியாட்சியிலே, கட்டுக் காவல், தடை, இவை அதிகமாகத்தானே இருந்திடும்!

அதிகாரிகள் நமது பக்கம் திரும்பிப் பார்ப்பதாக இல்லை - தம்பி! அடுத்து, காண்போம், மன்னனை.

அண்ணன்,
13-11-1960
--------------------

எல்லோரும் இந்நாட்டு மன்னர் (4)

1
தம்பி!

மன்னனைக் காணப் பலர் வரக்கூடும்; இளவரசர்கள், தளபதி, வணிகர் கோமான்கள், கலைவல்லோர், மார்க்கத் தலைவர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள், இப்படிப் பலர். இவர்கள் ஒவ்வொருவருக்கும், மன்னனைக் காண்பது, அவருடன் உரையாடுவது என்பதிலே, ஒவ்வொரு முறை இருக்கும். கொலு மண்டபம், கோட்டை வெளி, விழாமன்றம், களியாட்டக் கூடம், காணாற்றுப் பக்கம் எனும் பல்வேறு அரங்கங்களில், மன்னனுடன் செல்வோர் அல்லது வந்து காண்போர், என்ன முறையில் வரவேற்கப்படுவர், எங்கு இடம் பெறுவர் என்பதற் கெல்லாம், கட்டுத்திட்டம் உண்டு; அது துளியும் கெடாதபடி பார்த்துக்கொள்வார்கள்; கெடவிடின், மன்னன், தன் நிலை அறியாது தடுமாறினான் என்று கேலி பேசுவர், கண்டிக்கக்கூடச் செய்வர்.

இங்கு வர இருக்கும் பிரிட்டிஷ் பேரரசிக்கு மணாளனாக இருப்பவர், வேறோர் நாட்டு அரச குடும்பத்தவர் எனினும், அரசர் அல்ல! பேரரசியுடன் அவர் செல்கிறார், பல நாடுகளுக்கு; பேரரசிக்குக் காட்டப்படும் சில தனிச்சிறப்புகள் இவருக்குக் கிடையாது; பெற இயலாது; கேட்கவும் மாட்டார். நாட்டுக்கு மட்டுமல்ல, நாயகனுக்கும், அவர் பேரரசி!

பேரரசியின் பாராளுமன்றத் துவக்க உரை நிகழ்ந்தபோது, பேரரசியின் தங்கை, அவையில் அரச குடும்பத்தினருக்கு என்றுள்ள இருக்கையில் காணப்படவில்லை. காரணம் என்ன என்று இதழ்கள் விளக்கின. ஒரு இதழ், உண்மையான காரணம், அவர் மட்டும்தான், அரச குடும்பத்தினர் இருக்கையில் அமரலாமேயொழிய, பக்கத்தில் கணவன் அமர முடியாது! ஏனெனில், அவர் அரச குடும்பத்தவர் அல்ல; தனக்கு ஒரு இடம், மணாளனுக்கு மற்றோர் இடம் என்று இருப்பதை விரும்பாத தாலேயே, அரச குமாரி பாராளுமன்ற விழாவில் கலந்து கொள்ளவில்லை, என்று எழுதிற்று. இது இந்த ஆண்டு!

இங்கு வர இருக்கிறாரே எலிசபத் பேரரசி, அவர் புவேட்டை காணப்போகிறார்? காண மட்டுமே! புலிவேட்டை ஆடப்போவதோ பேரரசியின் கணவர்.

தம்பி! பேரரசி, புலிவேட்டை ஆடுவது கூடாது! தரக் குறைவான செயல்! அவர் கணவர், வேட்டை ஆடலாம், அவருக்கு உள்ள நிலையின் அளவு அது! ஏன் இந்த வித்தியாசம் என்று வியப்பாக இருக்கிறதா? இதிலென்ன, தம்பி! வியப்பு? உண்மையாக நீ வியப்புறவேண்டியது எதை அறிந்து தெரியுமா? பேரரசியின் கணவன் பேரரசன் அல்ல; பேரரசனின் மனைவி பேரரசி ஆகலாம்!!

இத்தகைய சில தனிச் சிறப்புகள், இன்றும், அரசர்களுக்கு உள்ளன; மக்களும், இந்தச் சிறப்புகளைத் தருவதிலே தயக்கம் காட்டுவதில்லை; மன்னன் உலா, விழாபோல் இருக்கலாம் என்கின்றனர் மக்கள்; விழாவில் களிப்புப் பெறுகின்றனர்! மன்னன், கண்ணைக் கவரும் வனப்பு அளித்திடும் அணிமணி பூண்டிடலாம், மக்கள் அதனை அனுமதிக்கின்றனர்! கண்டு அகமகிழ்கின்றனர்; ஆனால் மன்னன், ஆட்சிப் பொறுப்பு அத்தனையும் வேண்டுமென்று கேட்டாலோ மறுக்கின்றனர்; உமக்கு எது நல்லது என்பது எமக்கன்றோ தெரியும் என்று மன்னன் பேசிடின், அதனை மமதை என்கின்றனர் மக்கள்!!

பிடி யாராரிடமோ உள்ளது, முடிமட்டும் நம் தலையில்! அரசன் என்று விருது இருக்கிறது, ஆட்சியோ நம் விருப்பப்படி இல்லை! அரண்மனை இருக்கிறது பெரிதாக; ஆனால் அது சிங்காரச் சிறைக்கூடம் போலாக்கப்படுகிறது! இந்நிலையில், அரசர்க்கான உடையும் முடியும் வெறும் சுமையாகிறது. பொன்னால் சமைக்கப்பட்டு நவமணிகள் இழைக்கப்பட்ட, "சிம்மாசனம்' எந்தச் சமயத்திலும் கடித்திடத் தயாராக இருக்கும் "சர்ப்பாசனம்' போலாகிறது! இந்த நிலையில், மன்னன் என்று இருப்பதைவிடக் குடிமகனாக இருப்பது மேல்! மன்னன் குடிமகனை, எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம் என்ற முறை முறிந்து போய்விட்டது. குடிமகன், இன்று மன்னனை, எப்படி எப்படிக் காணவேண்டும் என்று எண்ணுகிறானோ, அதுபோல் ஆக்கிவிட முடிகிறது. இந்நிலையில், குடிமகனாக இருப்பது கோலேந்தியாக இருப்பதைக் காட்டிலும், எத்துணையோ மடங்கு மேலானது, என்று எண்ணிக்கிடந்திடும், மன்னர்களும் உளர்.

இவ்விதமான எண்ணம்கொண்ட மன்னனைத்தான் தம்பி! நாம் காணப் புறப்பட்டோம்.

அதோ பார்! ஏறு நடை! எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசக் கூடியவர் என்பதை எடுத்துக் காட்டிடும் பார்வை, கண்டவர் தன் நிலை உயர்ந்தது என்பதை அறிய வேண்டும் என்ற நோக்குடன், உடை அலங்காரம். ஆதிக்கக்காரருக்கு அடி பணிபவன் நான் அல்ல; நான் புரட்சி நோக்குடையவன் என்பதை எடுத்துக்காட்டும், சிகப்பு அங்கி. இவர் ஓர் அமைச்சர்! புதிதாக அமைச்சரானவர்!

அமைச்சரானேன், என்றார் இவர்.

அமைச்சர் ஆக்கினேன் என்பார், முதலமைச்சர்.

இவர், வணிகக் கோட்டத் துறைக்குத் தலைமை ஏற்றிருக்கும் அமைச்சர். பேரறிஞர் பெர்னாட்ஷா இந்த அமைச்சருக்கு போனார்ஜிஸ் என்று பெயரிட்டிருக்கிறார்.

தம்பி! நான், நமது வசதிக்காக, இந்த அமைச்சரை, புயலார் என்று அழைக்கிறேன். இந்த அமைச்சர், தமது அறிவாற்றலால், புரட்சிப் போக்கினால், முடி அரசு முறையையே வீழ்த்தத்தக்க புயல் கிளப்பு விடுவதாக எண்ணுபவர்; எனவே இவருக்குப் புயலார் எனும் பெயர் ஒருவகையிலே பொருத்தமானதுங்கூட.

அமைச்சர் அவையில் இடம் பெறுமுன், இவர், பொறி பறக்கப் பேசியும், புதுப்புதுத் திட்டங்களைத் தீட்டியும், ஆட்சி முறையிலே மதமதப்பு ஏற்பட்டு விட்டது என்று கடிந்துரைத்தும், மன்னராட்சி முறை உள்ளமட்டும் மக்களாட்சி மலராது என்று விளக்கியும், முடிதரிப்போரே இருத்தல் ஆகாது, முழுக்க முழுக்க குடிஅரசு ஏற்பட்டாக வேண்டும் என்று முழக்கமிட்டும், "பெரிய புள்ளி' ஆனவர்;"புயலார்'' ஆனவர்!

அவருக்கு அமைச்சர் அவையில் இடம் தரப்பட்டது.

புதிய அமைச்சர் மன்னனைக் காண வருகிறார்.

மன்னனைக் காண வந்திருக்கிறேன் - என்று புயலார் கூறிடும் போது, அச்சொல் கேட்டதும் அலுவலர்கள் அஞ்சி நடுநடுங்கி, ஐயனே! அமருவீர்! இதோ அரைநொடியில் அரசனை அழைத்து வருகிறோம் - என்று கூறிவிட்டு ஓடோடிச் சென்று, அரசனை அழைத்து வருவர், என்று எண்ணிக் கொண்டிருக்கக் கூடும். ஏனெனில், மன்னர்களைப் பேட்டிக் காணச் செல்வது பேதைமை என்றும், மக்களின் தலைவர்களை மன்னர்கள் காத்திருக்கச் செய்வது கொடுமை என்றும், அந்த முறையை வாழவிடுவது மடைமை என்றும், சந்தைத் திடலில், அவர், எத்தனையோ முறை முழக்கமிட்டிருப்பார். அப்படிப் பட்டவர், அமைச்சர் என்ற நிலையைப் பெற்று மன்னனைக் காண வந்திருக்கிறார் - மதியிலிகள், அவரை ஊர் என்ன? பேர் என்ன? உற்ற குறை யாது? என்று கேட்கிறார்கள்? - அவ்விதம் கேட்டுக் கேட்டுப் பழக்கப்பட்டதால்!! புயலார் கோபம் கொள்ளா மலிருந்திருக்க முடியுமா?

கேட்பதென்ன! வந்தது மன்னனைக் காண - காணச் செல்வோம்!! - என்று எண்ணிக் கொண்டார் போலிருக்கிறது, உள்ளே நுழைந்தார், மன்னனுக்கு அனுப்பப் படும் மடல்களைக் கவனிக்கும் அலுவலர் இருவர் கண்டனர்; அவர்களில் ஒருவன், வந்தவர் யார் எனக் கண்டுகொண்டான். அவர் போக்கும் நோக்கும் தெரிந்தவன் என்ற முறையில் பேசினான்.

"வருக! அமைச்சரே! வருக! தாங்கள் அமைச்சரான தற்காகத் தங்களை நான் வாழ்த்துகிறேன். . . இல்லை, இல்லை தங்களைப் பெற்றதற்காக அமைச்சர் அவையை வாழ்த்துகிறேன்!''

பொல்லாதவன் இந்த இளைஞன். முடி அரசனோ, குடி அரசுக் கொள்கையுடையோனோ, எவனாயினும், புகழ்மொழி கேட்டால் மயங்கிப் போவர், என்ற உண்மையை உணர்ந்து, புயலாரிடமே, அந்த வித்தையை காட்டுகிறான். மன்னர்களா கிலும், பலருடைய புகழுரையைக் கேட்டுக் கேட்டுச் சலித்துப் போயிருப்பர்! எனவே அவர்கள், தம்மைப் புகழ்பவர்களின் எண்ணிக்கை வளர வளர, ஓரளவு சலிப்புணர்ச்சிகூடக் கொள்ளக்கூடும். புயலார் போன்றவர்கள் அவ்விதம் அல்லவே! அங்காடியிலும், ஆற்றோரத் திடலிலும், முச்சந்தியிலும், மன்றங்களிலும், பாராட்டுரைகளைப் பெற்றிருப்பர். இது அரண்மனை! எந்த அரண்மனையைச் சுட்டிக் காட்டி, ஆணவம் குடிகொண்ட இடம்! அக்கிரமம் கொலு இருக்கும் இடம்! என்றெல்லாம் கண்டித்துப் பேசி இருக்கிறானோ, அதே அரண்மனை, அங்கு அவன் நுழைகிறான், மன்னனைக் காண, அமைச்சர் என்ற நிலை பெற்று! அந்த இடத்தில், தன்னைப் புகழ்கிறார்கள் என்றால், உச்சி குளிர்ந்திடத்தானே செய்யும்.

மன்னர்! என்று இளைஞர்களில் ஒருவன் அறிவிக்கிறான்.

உட்கார்ந்திருக்கும் புயலார், இருக்கையில் இருந்தபடியே, கதவுப்பக்கம் திரும்பிப் பார்க்கிறார் - எழுந்திருக்கவில்லை.

மன்னன் வருகிறார் என்ற உடன், எழுந்து நின்றால், செ! தன்மானத்தை, இழந்துவிடும் செயலாகி விடாதா! ஓ! பயல், நம்மைக் கண்டதும் மரியாதை காட்டுகிறான் என்று மன்னன் எண்ணிக் கொண்டு விடுவானே! நாடு, நமது கட்டளைக்காகக் காத்துக்கிடக்கிறது; நமது அறிவாற்றலால் இந்த அரசையே ஆட்டிப் படைக்கிறது - அப்படிப்பட்ட நாம், கேவலம் ஒரு முடிதாங்கியைக் கண்டு எழுந்து நிற்பதா? கூடாது. கூடவே கூடாது. நாம் உட்கார்ந்தபடி இருந்தால்தான் நமது நிலையின் உயர்வு தெரியும், தரம் புரியும், குடிஅரசுக் கோட்பாட்டுக்கு ஏற்றம் ஏற்படும், என்றெல்லாம் புயலார் எண்ணிக்கொண்டிருந்திருக்கக்கூடும்.

நாற்பத்தைந்து வயதிருக்கும் மன்னனுக்கு; நல்ல உயரம்; அறிவாளி என்பதைக் காட்டிடும் தோற்றம். கனிவுடன், கரங்களை நீட்டியபடி, புயலாரை நோக்கி வருகிறார்.

மன்:- என் சிறிய அரண்மனைக்கு வந்திருக்கிறீர் - நல் வரவேற்பு.

புயலாரே! அமருங்களேன்!! (மன்னன், அமைச்சருக்குத் தர வேண்டிய உரிய மதிப்பைத் தரவேண்டி, வரவேற்பு கூறுகிறான். மன்னனைக் காண வருபவர்கள், மன்னனைக் கண்டதும் எழுந்து நிற்பது வாடிக்கை யாக இருந்துவரும் மரியாதை முறை; அங்ஙனம் நிற்பவரை, அமருக! என்று அன்புடன் மன்னன் கூறுவதும் மரியாதை முறைகளிலே ஒன்று.

மன்னன், தனக்கென்று இருந்துவரும் மரியாதை முறைப்படி, அமைச்சரை வரவேற்றபடி, அமருக! என்று கூறினார். அமைச்சர் தான், வழக்கமான மரியாதை முறையைக் கையாள்வது தன் நிலைமையைக் குறைத்துவிடும், தாழ்வு மனப் பான்மையைக் காட்டும் என்று கருதி, எழுந்திருக்கவே இல்லையே, அதைக் கவனித்துவிட்டதாகக் கூட, மன்னன் காட்டிக் கொள்ளவில்லை. வழக்கமான மரியாதை முறை இருப்பதுபோலவே கருதிக்கொண்டு, அமருக! என்கிறார்.)

அமை: நான் அமர்ந்துகொண்டுதான் இருக்கிறேன்.

மன்: உண்மை, புயலாரே! நான் அதைக் கவனிக்கவில்லை. மன்னித்துக்கொள்க! அமருக! என்று கூறிவிட்டேன்!! பழக்கம் அப்படி!

(தம்பி! மன்னன், எப்படிப்பட்டவன் என்பதை எடுத்துக் காட்ட இந்த ஒரு பேச்சுப்போதும் என்று கூறலாம்.)

தேவையற்ற திமிர் என்றுதான், தெளிவுள்ள எவரும் கூறுவர், சாதாரண, வழக்கமான, மரியாதையை காட்டக்கூட மறுத்திட்ட, அமைச்சரின் போக்கை.

ஆனால், அதைக் கண்டும், காணாதது போலிருந்து விட்டது மன்னனுடைய பெருந்தன்மையை மட்டுமல்ல, அவனுக்கு உள்ள "எடைபோடும்' திறமையையும் நன்கு காட்டுகிறது.

ஆணவம் தலைக்கேறிவிட்ட நிலை இவனுக்கு; எனவே தான், கஷ்டமோ நஷ்டமோ தராத, மிக மிகச் சாதாரணமான மரியாதை முறையைக்கூடக் கைக்கொள்ளாதிருக்கிறான். இத்தனை முடுக்கும், முறிவுக்குத்தான் வழி அமைக்கும்!

இவன், கொந்தளிக்கும் உள்ளம் கொண்டவனேயொழிய, நின்று நிதானித்து, காரியமாற்றி, நீங்காப் புகழ் பெறும் வாய்ப்பினைத் தேடிக்கொள்பவனல்ல. எனவே இவன், நாம், கவனிக்கத்தக்க பகைவன் அல்ல! என்றுதான், மன்னன் எண்ணிக் கொண்டிருப்பான்.

அமருக! என்று கூறினேன், அட அறிவிலி! மன்னர்கள் அங்ஙனம் கூறுவது முறை! அதற்குப் பிறகு அமருவதே, பழக்கமாக இருந்து வருகிறது! என்று, மன்னன் கடிந்துரைக்க வில்லை. மாறாக, "மன்னித்தருள்க, பழக்கத்தால் அங்ஙனம் கூறிவிட்டேன்' என்று பேசினான்.

இங்கு அனேகர் வருகின்றனர், புயலாரே! அவர்கள் நான் நின்றுகொண்டிருக்கும்போது அமர்ந்து கொண்டிருக்க மாட்டார்கள் - அது பண்பு அல்ல என்பதால்! அவர்கள் நின்று கொண்டிருக்க, நான் அமருவதும், பண்பு அல்ல! எனவேதான், நான், அமருக! என்று கூறுவது வழக்கம். இங்கு எப்போதும் போலத்தான், முறை தெரிந்தவர்கள், மரியாதை அறிந்தவர்கள், பண்பு புரிந்தவர்கள் வந்திருக்கிறார்கள் என்று எண்ணிக் கொண்டு வந்தேன். அவ்விதம் நான் எண்ணிக்கொண்ட தால்தான், வந்தவர் நின்றுகொண்டுதானே இருப்பார் என்ற நினைப்பில், அமருக! என்றேன். பண்புடன் நடந்துகொள் வோருக்கு, நான் காட்டும் மரியாதை அது. தேவையில்லை என்பதை அறியாது போனேன் - அமருக! என்று கூறியதற்காக மன்னித்திடுக! - என்றன்றோ, கூறுகிறான் கொற்றவன்!!)

இதற்குள், அலுவலர், ஓர் நாற்காலியை, புயலாருக்குப் பக்கத்தில் போடுகிறார் - மன்னன் காட்டிய குறி கண்டு.

பண்பற்று நீ நடந்து கொண்டாலும், நான் அங்ஙனம் நடந்து கொள்ளமாட்டேன், என்று இடித்துரைப்பதுபோல, மன்னன், புயலாரைப் பார்த்து,

"என்னை உட்கார அனுமதிக்கிறீர்களா?'' - என்று கேட்கிறார்.

மன்னன் பாடம் புகட்டக் கையாண்ட நேர்த்தியான இந்த முறை, அமைச்சர் புயலாருக்கு, புரிந்ததாகத் தெரியவில்லை. அவருக்கு இருந்த எண்ணமெல்லாம், ஒருவன் மன்னன் என்பதற்காக, நான் ஒரு தனி மரியாதையும் காட்டி, என்னைத் தாழ்த்திக் கொள்ளமாட்டேன் என்பதுதான். எனவே அமைச்சர்,

"அட உட்கார் ஐயா! உட்கார்! உன் வீட்டில்தானே நீ இருக்கிறாய்.

எனக்கு இந்தச் சம்பிரதாய உபசார முறைகள் கட்டோடு பிடிக்காது.''
என்றுதான் பேச முடிகிறது.

மன்னனைக் காணச் சென்றேன்! நானென்ன, மற்ற மற்றவர்களைப் போல நோஞ்சானா!! பல்லிளிக்கும் பேர் வழியா! மன்னன் அவன் என்றால், நான் மக்களின் தலைவன்! மன்னர் களின் மணி முடியைப் பறித்தெடுத்துப் பந்தாடக்கூட உரிமையும் வலிமையும் பெற்றவன். வந்தான் மன்னன், அவனிடம் கூலி வாங்கிக்கொண்டு கிடக்கும் பயல்கள், மன்னர்! மன்னர்! என்று பயபக்தியுடன் கூடினர். அந்தச் சொல்லைக் கேட்ட உடனே, நான் நடுநடுங்கிப்போவேன், கூப்பிய கரத்துடன் நிற்பேன் என்று எண்ணிக் கொண்டார்கள் போலிருக்கிறது. நானா, என்னைவிட ஒருவன் மேலானவன் என்பதை ஏற்றுக்கொள்வேன். என் வீரதீரம் எத்தகையது! அறிவாற்றல் எத்துணைச் சிறப்பானது! நான் மக்கள் தலைவன்! இவன் மன்னன்! இவனைக் கண்டு நான் எழுந்திருக்கவில்லை, உட்கார்ந்தபடியேதான் இருந்தேன். மன்னன் திருதிருவென்று விழித்தான். கோபம் கொண்டு ஏதாகிலும் கேட்பான், செம்மையாகக் கொடுக்கலாம் என்று இருந்தேன். கோழை, வாயைத் திறந்தானில்லை. குழைந்து குழைந்து பேசினான் - என்று பொறிபறக்கப் பேசிடுவார், நமது மாசற்ற தலைவர் என்று புகழ் பாடிடும் கூட்டத்தினர் முன்பு புயலார். அவ்வளவே! வேறு உருவான, சுவையான, பயன்தரும் விளைவு எதுவும் ஏற்படாது, பண்பு மறந்த அந்தச் செயலால், மன்னன் "எடைபோட்டு' இதனை அறிந்து கொண்டான்.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, தாங்கள் தேர்தலில் ஈடுபட்டீர்களே, அப்போதிருந்தே நான் தங்கள் அரசியல் வாழ்க்கையைக் கவனித்து வந்திருக்கிறேன். இப்போது தங்களைக் காணும் வாய்ப்பு கிடைத்தது எனக்குப் பெருமகிழ்ச்சி தருகிறது.

காரணமற்ற மண்டைக்கனம் காட்டும் இந்த அமைச்சன், இரண்டொரு புகழுரைகளைப் பெற்றாலே, புத்தி தடுமாறி நிற்பான் என்பதைப் புரிந்துகொண்டு மட்டும், மன்னன் இதுபோலப் பேசினார் என்று கொள்வதற்கில்லை.
-----------------

எல்லோரும் இந்நாட்டு மன்னர் (5)

1
தம்பி!

நினைவிலிருக்கிறதல்லவா, குடிஅரசுக் கோட்பாட்டினை ஏற்றுக் கொண்ட மன்னன் - முடிஅரசு முறையின் மூலத்தைக் கிள்ளி எறியத் தேவையில்லை. அதனை ஓர் சின்னமாக, அணியாக வைத்துக் கொண்டு, மக்களாட்சியை நடாத்திச் செல்ல இயலும் என்ற நம்பிக்கையுடன் நாடாளும் பொறுப்பினை ஏற்றுக் கொண்ட அமைச்சர்கள், அவர்களில் ஒருவனை, மன்னன் தித்திப்புப் பேச்சுமூலமே, தீர்த்துக் கட்டிவிட முனைந்த கட்டம்! எதிர்த்துப் பேசச்சென்று, இளித்துவிட்டுத் திரும்பிய அவன் போக்கு - இதனைக் கண்டோம்.

மன்னன் முடிதரித்த - சிரம் கொண்டோன் மட்டுமல்ல; மனதிலே திடம், பேச்சிலே திறம், நடவடிக்கையிலே உறுதி, இவையெல்லாம் கொண்டவன். எனின், அவன் ஏன், மன்னனாக இரேன் என்று கூறினான் என்றன்றோ கேட்கிறாய்! அது, அவன் கையாண்ட முறை! மன்னனைப் பொம்மையாக்கி வைத்துக் கொண்ட பிறகும், மனக்கொதிப்புத் தீராமல், அடியோடு ஒழித்துக் கட்டிவிட்டு, பீடத்தை வெற்றிடமாக்கி விட்டால் மட்டுமே, எல்லோரும் இந்நாட்டு மன்னராகத் திகழ முடியும் என்று எண்ணிக் கனல்கக்கும் கண்ணினராய், தீச்சொல் உமிழும் வாயினராய், கொலுவிருக்கும் அமைச்சர்களுக்குத் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று எண்ணினான், மன்னன், அதற்காகவே, மன்னன், நான் அரசபீடத்தில் அமர்ந்திருக்க விரும்பவில்லை - விலகிக் கொள்கிறேன் - என்றுரைத்தான்.

இவன் மதிமிகு மன்னன்! இவனுக்கெனத் துறையில்லை, அலுவல் இல்லை, அதிகாரம் இல்லை! முத்திரை மோதிரம் இருக்கிறது. நமது விருப்பத்தைச் சட்டமாக்கி அதிலே தன் பெயரை, ஆணையினைப் பொறித்திட! இவ்வளவே அவன் பணி! எனினும் இவன், இதுபோதும் என்று எண்ணுபவனாக இல்லை. கலைமான்களையும், கலாபங்களையும், கிள்ளை மொழியையும் கிண்கிணி ஒலியையும், வண்ணத் தாமரையினையும், வட்டில் மோகினிகளையும், கண்டும் கொண்டும், காலமெல்லாம் களிநடம் புரியட்டும் - பணம் பாழாகும் ஓரளவு - எனினும், மக்களை ஆட்டிப்படைத்திடும் வாய்ப்பினை அதிகார மூலம் பெற விழைவு கொள்ளாதிருந்தால் போதும், என்று எண்ணினர் - அங்ஙனம் எண்ணியே, அரண்மனையில் அரசோச்ச அனுமதித்தனர். இம்மன்னனோ, அரண்மனையோடு தன் அரசோச்சுதல் இருந்து விடுவதில் மனநிறைவு கொண்டா னில்லை. அரசாளவேண்டும், அரசன் என்ற நிலை உண்மை என்றால். இல்லையேல், அரசாள அரசன் என்ற நிலையையே வேண்டாமென்று விட்டொழித்து விடுதல் வேண்டும் - என்று எண்ணினான். அவனைத்தான் பெர்னாட்ஷா, படம் பிடித்துக் காட்டுகிறார், தமது நாடகப் பெருநூலில். புயலார் என்று கூறத்தக்க போக்குடைய, புதிய அமைச்சரை, மன்னன், புன்னகை பூத்த முகத்தினனாக மட்டுமல்ல, அசட்டுச் சிரிப்புக்காரனாகவே, நொடியில் மாற்றி அனுப்பிய காட்சியினைக் கண்டாய். இனி அமைச்சர் அவை காணலாம்.

முதலமைச்சர், ப்ரோடியஸ் எனும் பெயருடையார், காட்சி மூலம், அவர் போக்கு விளங்கிடும் - அதற்கேற்பப், பொருத்தமான, வசதியான பெயரைத் தேடிச் சூட்டிவிடு, தம்பி! அவருடைய தலைமையிலே அவை கூடுகிறது.

முடி தரித்த மன்னன் பிடியிலே சிக்கிக் கிடந்தது நாடு! அவன் இட்டது சட்டம்! என்ற நிலை இருந்தது. மக்கள், வாயில்லாப் பூச்சிகளாக்கப்பட்டுக் கிடந்தனர். நம் போன்றாரின் உள்ளத்திலே ஓராயிரம் உன்னதமான எண்ணம் எழும் - பயனென்ன? - யாவும் மக்கி மண்ணாகிப் போகும் - அவைதமை மதித்திடான் மன்னன்! கலை அறியான் - எனினும், அவனே கலைக்கூடக் காவலன்! பொருள் ஈட்டும் வழி அறியான் - எனினும் பிறர் திரட்டியதைக் கொண்டு வந்து கொட்டச் சொல்வான், பெருநிதிக்கு உடையோன் ஆவான்! வாளேந்தான் - எனினும், அவனே படைகளுக்கெல்லாம் தலைவன் எனும் விருதுடையோன் என்பர்! இந்நிலையில் இருந்த முடி அரசு முறையினை எதிர்த்துப் போரிட்டுப் போரிட்டுக், குடிஅரசுக் கோட்பாட்டினை மெள்ள மெள்ள வெற்றிபெறச் செய்து, கொற்றவன் கொலுவிருக்கட்டும், ஆனால் அரசு நடாத்த, ஆற்றலுள்ளோர் அமைச்சர்களாகட்டும் - அந்த ஆற்றலை அளந்திடும் கோலாக, மக்கள் அளித்திடும் ஆதரவு அமையட்டும் - அந்த ஆதரவு பெறும் முறையாக, தேர்தல் முறை ஏற்படட்டும் என்றெல்லாம், திட்டம் தீட்டி, நடைமுறையாக்கி, மன்னனை இன்று, அரண்மனைவாழ் அலங்காரன் என்ற அளவுக்குக் கொண்டு வந்து நிறுத்திவிட்டோம்; உண்மையில் அரசாள்வது நாம் - என்று எண்ணி எண்ணி மகிழ்ந்து கிடப்போர், அமைச்சர்கள். முதலமைச்சரோ, அத்தகைய மகிழ்ச்சியால் மயக்கமுற்று உண்மை நிலைமையை அடியோடு மறந்துவிட்டவரல்ல - மன்னன், எப்படிப்பட்டவன் என்பதை உணர்ந்திருக்கிறார்.

சென்ற தேர்தலிலே, நாம் மற்ற எல்லாக் கட்சிகளையும் அழித்தொழித்து, இந்த மூன்றாண்டுகளாக அதிகாரத்தில் அமர்ந்திருக்கிறோம். ஆனால், இந்த மூன்று ஆண்டுகளும், உள்ளபடி, நாட்டை ஆள்வது, இந்த மன்னன்தான் என்பதை உணர்கிறீர்களா. . .? - என்று கேட்கிறார், முதலமைச்சர்!

***

முடி அரசு, நிலை குலையாமல் இருந்த நாட்களில், அரசன், சிலரை அமைச்சர் ஆக்குவான் ஆற்றல் அறிந்தேதான் என்பதல்ல - எவ்வகையாலோ, மன்னன் மனதில் இடம் பெற்றவனானால் போதும்! மன்னன் மகிழ மலர் கொடுத்திருக்கலாம் - காட்டு மல்லிகையோ, வீட்டு ரோஜாவோ, ஏதோ ஒரு மென் மலர்!!

அமைச்சர்கள் இருப்பர் - அரசாள அல்ல - அரசன் ஆட்சி நடத்துவான், இவர்கள் எடுபிடிகளாவர், இளித்துக் கிடப்பர்.

முடி அரசு முறையின் கேடு முறிக்கப்பட்டான பிறகு மன்னன் இருப்பான் - ஆனால், அரசாள்வோனாக அல்ல - முடி தரித்துக் கொலுவிருக்க! அமைச்சர்கள் இருப்பர் - முடி இராது சிரத்தில் - ஆட்சியின் பிடியோ, அவர்தம் கரம் இருக்கும்.

ஷா, குடிஅரசுக் காலத்துக் கொற்றவனைத்தான் காட்டுகிறார். எனினும், அவன் எங்ஙனமோ, மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட அமைச்சர்களின் தலைவன், அச்சத்துடன் ஆயாசத்துடன் உணரத்தக்க விதத்தில், வெறும் சின்னமாக இருந்து விடாமல், ஆட்சியை நடத்துபவனாக இருந்து வருகிறான். இதனைத்தான், முதலமைச்சர், மற்ற அமைச்சர் களுக்குக் கூறுகிறார். கூறுகிறார் என்று சொல்வதற்கில்லை - இந்த நிலையை உணர்ந்திருக்கிறீர்களா என்று கேட்கிறார்!

ஒரு அமைச்சர், இந்த அளவு உணர்வு பெறாததால், எனக்கு அப்படிப் புலப்படவில்லை. . .

என்று கூறிடத் தொடங்கும்போதே, முதலமைச்சருக்கு இருப்புக் கொள்ளவில்லை.

இதை உணர்ந்து கொள்ள உம்மால் முடியாவிட்டால், விலகி விடுமய்யா! நிலைமையை உணர்ந்துகொள்ளக் கூடியவர் களுக்கு இடம் கொடும்! இல்லையானால், என் வேலையை ஏற்றுக் கொண்டு கட்சியை நடத்திச் செல்லும் என்று பேசுகிறார்.

அமைச்சராயிற்றே! வேறு பல அமைச்சர்கள் முன்னிலையில், முதலமைச்சர் பேசிவிட்டார் என்பதால், கோபம் எழுமல்லவா. எனவே, அந்த அமைச்சர், சற்று முடுக்காக - ஆனால், ஆழ்ந்த அறிவின் துணையுடன் அல்ல - பேசுகிறார்:

முதலமைச்சர் ஐயா நீர்! முழுமுதற் கடவுள் அல்ல! மன்னன் என்ன செய்ய இயலும் என்கிறீர்? நாம் எதை எப்படிச் செய் என்று புத்திமதி கூறுகிறோமோ, அதைத்தான் செய்ய முடியும். அதிகாரம் அனைத்தும் நம்மிடம் இருக்கும்போது, அந்த மன்னன் எப்படி நாடாள இயலும்? சொல்கிறீரே!!

***

தம்பி! இந்த அமைச்சர் கேட்பதுபோலத்தான், பெரும் பாலானவர்களுக்குக் கேட்கத் தோன்றும். ஏனெனில், ஒப்புக் கொள்ளப்பட்ட ஏற்பாட்டின்படி, அமைச்சர்களிடமே எல்லா அதிகாரங்களும் - மன்னன் தானாக ஏதும் செய்ய இயலாது எனினும், இந்த மன்னன், ஒரு முதலமைச்சர் அச்சம் கொள்ளத் தக்க முறையில் அமுல் நடத்துகிறான்! எப்படி?

மன்னனும் அமைச்சர்களும் பேசிடும் கட்டத்தின்போது இது விளக்கப்பட்டிருக்கிறது - நாடக நூலில். தம்பி! நான் குறிப்புகள் மட்டுமே தருகிறேன்.

குடிஅரசுக் கோட்பாடும், கேடு களையப்பட்ட முடி அரசு முறையும் இணைந்ததோர் அமைப்பினைக் குடிக்கோனாட்சி முறை என்று கூறுவர்.

குடிக்கோனாட்சி முறையிலே, அமைச்சர்களே அனைத்துக்கும் பொறுப்பாளர்; மக்களே, ஆட்சி மன்றத் தினரைத் தேர்ந்தேடுப்பர்.

அமைச்சர்கள் ஆட்சிமன்ற மூலம் சட்டங்கள் இயற்றுவர், திட்டங்கள் தீட்டுவர் - நாடு அவைதமை ஏற்கும்.

இந்த முழு உரிமை அமைச்சர்களுக்கு - எனினும், ஏதேனும் ஓர் சட்டமோ திட்டமோ செயலோ முறையோ, மக்களுக்கு ஊறு விளைவிக்கும் என்று ஏற்படின், மன்னன், அதனைத் தன் மறுப்பு மூலம் தடுத்து நிறுத்தலாம்.

நாட்டை நடத்திச் செல்ல அமைச்சர்கள் - அவர்கள் நடத்திச் செல்வதிலே, மன்னன் குறுக்கிடவோ, அலுவலிலே பங்கு பெறவோ கூடாது - ஆயினும், நடத்திச் செல்லப்படுவதை, மக்கள் சார்பில், நாட்டின் சார்பிலே, கூர்ந்து கவனித்த வண்ணம் இருந்து, பேராபத்துக்கு நாட்டை இழுத்துச் செல்லும் நிலை ஏற்பட்டுவிடும் என்று தோன்றினால், தடுத்து நிறுத்திட மன்னனுக்கு அதிகாரம் உண்டு.

மன்னர்கள் இந்தத் தடுத்து நிறுத்தும் அதிகாரத்தைப் பயன்படுத்துவதில்லை - அநேகமாக.

தேவைப்படுவதில்லை, ஆகவேதான், பயன்படுத்து வதில்லை என்று கூறுவார் உளர்.

தெரிவதில்லை, ஆகவே பயன்படுத்துவதில்லை என்றுரைப் பாரும் உளர். பயன்படுத்தத் தொடங்கினால், பிறகு இந்த அதிகாரமும் பறிக்கப்பட்டுப் போய்விடும் என்று அச்சம் - எனவே எந்த மன்னனும், தன்னுடையது என்று குறிக்கப்பட்ட, தடுத்து நிறுத்தும் உரிமையைப் பயன்படுத்துவதில்லை என்றும், கூறுவர் வேறு சிலர்.

***

தம்பி! இந்த மன்னன், இந்த "அதிகாரத்தை'ப் பயன்படுத்தி, அமைச்சர்களின் உரிமையைப் பாழாக்கினானில்லை,

இவன் செய்ததெல்லாம், சான்றோர் கூடிடும் இடங்களில், அல்லது மக்கள் மன்றங்களில் பேசும் வாய்ப்புப் பெறும்போது, மன்னனுக்கு உள்ள இந்த அதிகாரத்தைப் பற்றி விளக்கம் தந்து வருவது வாடிக்கை.

மக்களுக்கு நன்மை பயக்கும் என்ற நோக்குடன் குடிஅரசு முறை அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த முறையின்படி, நாடாளும் பொறுப்பினை ஏற்றுள்ளோர் அமைச்சர்கள். அவர்கள் வழிதவறி நடப்பின், அல்லது முறைகேடான செயலில் ஈடுபடின், தீதுதரும் சட்ட திட்டத்தைப் புகுத்திடின், தடுத்து நிறுத்த, மன்னருக்கு அதிகாரம் உண்டு. எனவே, அமைச்சர்களின் ஆட்சியிலே என்ன கெடுதல் ஏற்பட்டுவிடுமோ என்று மக்கள் கலக்கமடையத் தேவையில்லை - மன்னன் இருக்கிறார், தடுத்து நிறுத்திடும் வல்லவராக!

இம்முறையில் பேசிக்கொண்டிருந்தார் இந்த மன்னர்.

இந்தக் கருத்துப்படி இதழ்கள் எழுதிய வண்ணம் இருந்தன - அந்த இதழ்களில் மன்னனுக்குத் தொடர்பு உண்டு!!

அமைச்சர் அவையின் மதிப்பு, இதன் காரணமாகக் குறையும் அல்லவா?

இவர்களைக் கண்காணிக்க ஒரு மேலோன் இருக்கிறான்.

இவர்கள் ஏதேனும், தெரிந்தோ, தெரியாமலோ, தவறுகள் செய்துவிடக்கூடும் என்பதால், அந்த மேலோனிடம், இறுதி அதிகாரத்தை - தடுத்திடும் உரிமையை - ஒப்படைத்திருக்கிறார்கள்.

ஆகவே, அந்த மேலோன்தான், உண்மையில், மக்களின் பாதுகாவலன்!

தம்பி! இந்தக் கருத்துக்களைத்தான், காவலன், பேச்சுக் கிளப்பியபடி இருந்தது.

அமைச்சர்கள், தவறு செய்யக் கூடியவர்கள் - தவறு செய்கிறோம் என்று தெரியாமலேகூட தவறுகளைச் செய்து விடக்கூடியவர்கள் - எனவேதான், ஒரு மேலோன், இருக்கிறான், தடுத்து நிறுத்த! அந்த மேலோன், எது நாட்டுக்கு, மக்களுக்கு, தீது பயக்கும், நன்மை பயக்கும், என்பதை அறிந்திடும் ஆற்றல் படைத்தவன் - தடுத்து நிறுத்திடும் தகுதி படைத்தவன்.

குடிஅரசு முறையையும் நடத்திக்கொண்டு, இந்தக் கோட்பாட்டையும் ஏற்றுக்கொண்டு இருப்பது, முரண்பாடாக மட்டுமல்ல, சிறிதளவு தரக்குறைவாகவேகூடத் தோன்றும்.

மமதை, மந்தமதி, அக்கரையற்றப் போக்கு, இவைகள் காரணமாக, தன்னிச்சையாக நடக்கும் மன்னன், நாடு கேடுறக் கூடிய காரியமாற்றுவான் - எனவே கட்டுப்படுத்த வேண்டும், மட்டுப்படுத்த வேண்டும் - என்று ஆர்த்தெழுந்து பலர் பேசிப் பேசி, கிளர்ச்சி பல நடாத்திக், கொடுமைகளை ஏற்றுக் கொண்டு, இறுதியில் பெற்றது, எல்லோரும் இந்நாட்டு மன்னர் - எனும் குடிஅரசுக் கோட்பாடு!

எனினும் அமைச்சர்களையும், கண்காணித்துவர, தவறாகச் சென்றால், தடுத்து நிறுத்திட ஒரு மேலோன் உண்டு! - அந்த மேலோனாக ஒரு மன்னன் இருந்துவருவான் என்பது, முடி அரசுக் காலத்திலே தரப்பட்டிருந்ததைவிட, வலிவான அதிகாரம் என்று, முதலமைச்சர் கருதினார்.

எனவே, மன்னன், இனி அந்த "உரிமை'யைப் பற்றி, எங்கும் பேசக் கூடாது, என்று உறுதிமொழி தந்தாக வேண்டும் - என்பது முதலமைச்சரின் திட்டம். அந்தத் திட்டத்துக்கு மன்னன் ஒப்பம் அளித்தாக வேண்டும் என்று வலியுறுத்தவே, அமைச்சர் அவை கூடிற்று, அரண்மனையில் ஓர் பகுதியில்.

***

அமைச்சர் அவையில் என்னென்ன போக்கினர், நோக்கினர், உளர், என்பதை பெர்னாட்ஷா எடுத்துக் காட்டு வதைப் படிக்கும்போது, நகைச்சுவைக்காக இருக்குமோ, என்று எண்ணத் தோன்றும். ஆனால் அதுதான் உண்மையான நிலைமை, எந்த அமைச்சர் அவையிலும் என்பது, தம்பி! எண்ணிப் பார்த்திடும் எவருக்கும் புரியும்.

ஐவர் கொண்ட அமைச்சர் அவை! இதில் இடம் பெற்ற ஒவ்வொருவரும் ஒவ்வொரு இயல்பினர்! அம்மட்டோ! ஒருவரைக் குறித்து ஒருவர் கொண்டுள்ள கருத்துக்களோ, வேடிக்கை வேடிக்கையானவை! தமக்கன்றி மற்றவர்களுக்குத் தகுதியும் திறமையும், இல்லை, அமைச்சராக இருக்க - என்பது ஒவ்வொருவருக்கும் உள்ள எண்ணம்.

உற்றார் உறவினருக்கு, வரம்பு மீறிப் பதவிகள் கொடுப்பவர் என்று ஒருவரைப் பற்றி மற்றவர், புகார் கூறிக் கொள்வர்.

நம்மால் மட்டுமே இந்த அமைச்சர் அவை செயல்படுகிறது. அமைச்சர் அவை ஏற்படத்தக்க விதமான வளர்ச்சி கட்சிக்கு ஏற்பட்டது, என்று ஒவ்வொரு அமைச்சருக்கும், உள்ளூர எண்ணம்.

முதல் அமைச்சருக்கோ, அமைச்சர்கள் அனைவருமே, இடம் பிடித்துக் கொண்டவர்கள், என்ற எண்ணம்!!

இதனை விளக்கிடும் பான்மையிலே, அமைச்சர்களின் பேச்சினை அழகுற, அமைத்தளிக்கிறார், ஷா. கருத்து வேற்றுமைகளை எடுத்துக் கூறிக் கொள்வதிலே, கட்டுக்கு அடங்கும் தன்மையும் கைவிடப்பட்டு விடுவதுண்டு, முதலமைச்சர், மன்னனை எண்ணிக் கொள்கிறார்.

***

தம்பி! நாடகத்திற்கு ஷா சூட்டியுள்ள பெயர் ஆப்பிள் கார்ட் (Apple Cart) என்பது; தமிழில் இதற்கொப்பான பெயரிட வேண்டுமெனின், நெல்லிக்காய் மூட்டை எனலாம்.

மூட்டைக்குள் இருப்பதால், உருண்டோடி விடவில்லை; அவிழ்த்துவிட்டால், திக்காலொன்றாக உருண்டோடிவிடும்!

தீர்த்துக்கட்டிவிட வேண்டும் முடி அரசு முறையை! சின்னமும் கூடாது! முழுக்க முழுக்கக் குடிஅரசு மலர வேண்டும்! - என்று முழக்கமிட்டு அமைச்சரான புயலார் - ஒருவர்! இன்னொருவர், பெரிய முதல் போட்டு நடத்தப்படும் தொழிற் சாலை முதலாளியின் கையாள்! இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சீர்கேடு!

இந்தச் சீர்கேடுகளை அறிந்து, தக்கபடி பயன்படுத்திக் கொண்டு, தன் தலைமையைக் காப்பாற்றிக்கொண்டுள்ள முதலமைச்சர்.

மன்னன் இதனை நன்கு அறிவானே - இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்வானே என்ற கவலை, முதலமைச்சருக்கு.

மன்னர்களுக்கு மதி ஏது! என்று எண்ணுபவர் - அதிகாரம் ஏது! என்று நினைப்பவர் - ஏது செய்ய இயலும்!! என்று பேசுபவர் - எதற்காக இப்படி ஒரு பதுமை என்று ஏளனம் பேசுபவர் - இப்படித்தான் அமைச்சர்கள் உளர்!

முதலமைச்சரோ, இந்த மன்னன் மதிமிக்கவன், வாய்ப்பினை நழுவவிடாது காரியம் செய்பவன் என்று உணர்ந்திருக்கிறார்.

மனதிலே திடமும் தெளிவும் கொண்டவன் மன்னன். தெளிவற்ற பத்துப் பேர்களைக்கூட, தெளிவும் திடமும் கொண்ட ஒருவன் வீழ்த்திட முடியும். மன்னன் அப்படிப் பட்டவன். நீங்கள் ஒருவருக்கொருவர் மாறுபாடுகளைக் குறித்துக் கூச்சலெழுப்பிப் பிளவுபட்டு நிற்பீரேல், மன்னன் பாடுதான் கொண்டாட்டம் என்பதனை முதலமைச்சர் எடுத்துக் காட்டுகிறார்.

தபால்துறை, எதனையும் இயக்குவிக்கும் வலிவுத் துறை, எனும் இரண்டினையும், மாதர்களிடம் ஒப்படைத்திருக்கிறார், பெர்னாட்ஷா, நாடகத்தில்!!

இந்த இருவரும், அமைச்சர் அவை கூடிடும்போது, உடனிருந்திருக்க வேண்டும் - எனினும் ஷா தீட்டிய நாடகத்தில், இந்த இரு பெருமாட்டிகளும் அமைச்சர் அவைக்கு மன்னர் வரும்போதுதான், அவருடன் வருவதாகக் காட்டியிருக்கிறார்!

அமைச்சர் அவை நடைபெற்றுக் கொண்டிருக்கும் கூடத்துக்கு, மன்னன், இந்த இரு மாதர்களும் இருபுறம் இருக்கும் நிலையிலேதான், வந்து நுழைகிறார்.

மன்னன், பேச்சாற்றல் மிக்கவன் என்பதை, தம்பி! முன்பே கண்டிருக்கிறாய் - ஆனால் அவனுடைய முழு ஆற்றல் இங்குதான் காண வேண்டும்.

என்னை வந்து காணும் உரிமையை, அமைச்சர் குழுவினரே! ஒரு சேர நீவிர் இன்று பயன்படுத்தி, எனக்குக் களிப்பூட்டிடும், காரணம் யாதோ! நாம் அதைக் கேட்டு இன்புறலாமோ!

என்று பேச்சைத் துவக்குகிறார் மன்னர்.

முதலமைச்சர், சுற்றி வளைத்துப் பேசாமல், அமைச்சர் அவையின் முடிவை எடுத்துக் கூறுகிறார்.

அதைத் தொடர்ந்து, சுவைமிக்க உரையாடல்கள் நடை பெறுகின்றன.

எமது ஆட்சியிலே, மக்கள், வாழ்வில் வளம் பெற்று மகிழ் கிறார்கள் என்றனர் அமைச்சர்கள்.

வாழ்வில் வளமா? யாருக்கு? மக்களுக்கா! இல்லையே! தொழில் அதிபர்கள் அல்லவா கொழுக்கிறார்கள்! என்றெல்லாம் சுட்டிக்காட்டி கேலி செய்கிறார் மன்னர்.

கடைசியில், இனி கட்டுக்கு அடங்கி நடந்து கொள்வதாக, இறுதி உறுதிமொழிச் சீட்டிலே மன்னன் கையொப்பமிட வேண்டும் - அதனைப் பெறாமல் அமைச்சர் அவை கலையப் போவதில்லை என்று முதலமைச்சர் அறிவிக்கிறார். அரசன், உறுதிமொழிகள் யாவை என உசாவுகிறான்.
-------------------

4. அறுவடையும் - அணிவகுப்பும் (1)

தேர்தலின் முடிவுகள்-
காஞ்சீபுரம் தேர்தல்.

தம்பி!

அறுவடை முடிந்து, கட்டுகளைத் தலைமீது வைத்துக் கொண்டு, ஒற்றையடிப் பாதையிலே, ஒயிலாக நடந்துசெல்லும் காட்சி காணக்காணக் களிப்பூட்டுகிறதல்லவா. காண்போர்க்கு மட்டுமல்ல, கனமான கட்டுகளைச் சுமந்து செல்பவர்களுக்குங் கூடக் களிப்புத்தான். பாரம் தெரியாது, பாதையின் இடர்ப்பாடு பற்றிக் கவலை எழாது. வேலை முடிந்தது. பலனை எடுத்துச் செல்கிறோம் என்ற எண்ணம் செந்தேனாகும். வேறு வேலை களிலே, இத்தனை கனமானதை எப்படித் தூக்கிச் செல்வது என்ற எண்ணம் எழக்கூடும்; அறுவடை செய்து எடுத்துச் செல்லும் கட்டுகளின் கனம் தூக்கக்கூடியதுதானா என்ற எண்ணமே எழாது. பாடுபட்டோம், பலன் கண்டோம். உழுது பயிரிட்டோம். அறுவடையை எடுத்துச் செல்கிறோம் என்ற நினைப்பு, பாரத்தை கவனிக்க விடாது. அதிலும் வயலையும், அதிலே உழைத்திடு வோரையும், விதையையும் அதனின்றும் கிளம்பிய முளையையும் பக்கத்து வயலுடையார் பழித்துப் பேசக்கேட்டு, மனம் பதறிய நிலையும் இருந்திருப்பின், அறுவடை கணிசமான அளவும், தரமான வகையும் கொண்டதாக இருந்திடின், கட்டுகளைச் சுமந்து செல்வோர் கண்கள், முன்பு பழித்துப் பேசினோர் எங்கே என்றல்லவா தேடும்! ஆகாது என்றனையே! ஐயயே என்றனையே! வீண்பாடு என்றனையே! விளையாது என்றனையே! விழலுக்கு நீர் இறைக்கும் வீணன் என்று ஏசினையே! பதரப்பா, விதையல்ல என்று பரிகாசம் பேசினையே! பாரப்பா, கட்டுகளை! பாடுதந்த பலன்களை! அவ்வளவும் மணியப்பா! ஆள்தூக்க ஒண்ணாத கனமப்பா! என்றெல்லாம், பழித்தவர்களைக் கண்டு கூறலாமா என்று தோன்றுமல்லவா!! கூறும் உரிமையும் ஏற்படுகிறதல்லவா!!

புல் பூண்டு முளைக்காது, புறம்போக்கு, நந்தம் பாழ் என்று கூறினர், முப்போகம் விளைந்திடும் கழனி உடையோர்கள் எனத் தம்மைக் கருதினவர். பாழ்வெளியேயானாலும், பாடுபட்டால் பலன் உண்டு; பாழ்வெளியும் ஈதல்ல, பாங்கான வயலேதான்; பலகாலும் வளம்காண முயலாது விட்டதனால், பாழ்வெளி போல் தோற்றம் கொண்டதிது என்றுகூறி, கிளறிச் சமனாக்கி, கீழ்மண்ணை மேலாக்கி, வளமூட்ட எருவிட்டு, வகையாக நீர்பாய்ச்சி, வயல் உயிர்பெறச் செய்ததனால், வளமாகப் பயிர் ஏறி, அறுவடைக்கு வழி கண்டார். அவரெல்லாம் கட்டுகளைத் தலைமீது கனம்கூடக் கவனியாமல், கொண்டு செல்லும் போதினிலே, குறைகூறியோர் போக்கை எண்ணிச் சிரித்திடாரோ!

ஆனால், அறுவடையைச் சுமந்து செல்பவர்கள், சிரித்திடக் காணோம்! கலகலப்பான பேச்சுமில்லை!! கவலைக் கோடுகள் முகத்தில் காணப்படுகின்றன. உழைத்த அலுப்போ? அதுமட்டும் தான் என்று கூறுவதற்கு இல்லை. வேறு ஏதோ ஓர் எண்ணம், மனதிலே குடைகிறது. கடமையைச் செய்கிறார்கள், கட்டுகளைச் சுமந்து செல்கிறார்கள்; குறுநகை இல்லை, குதூகலம் இல்லை; ஏன்?

காரணம் தெரிந்துகொள்ளவேண்டுமா, தம்பி! அதோ, பார்த்தனையா, புங்கமரம்! அதன் நிழலிலே? யாரோ, படுத்துக் கிடக்கிறார்கள். வா! அருகே சென்று பார்ப்போம்!

கரத்திலே அரிவாள்! காலிலே வெட்டு! இரத்தம் கசிந்து இருக்கிறது! கட்டுப்போட்டுக்கொண்டிருக்கிறான்!

விவரம் தெரிகிறதல்லவா? அவனும் அறுவடையில் ஈடுபட்டான், ஆனால் அரிவாள் வெட்டு காலிலே வீழ்ந்தது. மேலால் வேலையில் மும்முரமாக ஈடுபட முடியவில்லை! கீழே கிடத்தப்பட்டிருக்கிறான்.

ஏன், காலிலே வெட்டு விழுந்தது? அறுவடை வேலை அறியானோ? என்றுதானே கேட்கத் தோன்றுகிறது? தம்பி! அதற்கான பதில் தெரிய, அவனுடைய மற்றொரு காலை உற்றுப் பார்! பச்சிலைக்கட்டுத் தெரிகிறதா? கேள், விவரத்தை! பலரும் அறுவடையில் ஈடுபட்டதுபோலத்தான் இவனும் ஈடுபட்டான். வேலை செய்துகொண்டிருக்கும் வேளையில் விஷப்பூச்சி ஒன்று அவன் காலைக் கடித்தது; துடித்தான்; நிலைகுலைந்தது; அரிவாள் வெட்டு காலில் விழுந்தது; மேலால், வேலையில் வெற்றியுடன் ஈடுபட இயலவில்லை. எனவேதான், மற்றவர்போல், அவன் கட்டு எடுத்துக்கொண்டு செல்லவில்லை; புங்க மரத்தடியிலே இருக்கிறான்.

ஆனால், தம்பி! கட்டு எடுத்துச் செல்பவர்கள் முகத்தில் களிப்பு இல்லை; காலில் வெட்டுப்பட்டுக்கிடப்பவன் களிப்புடன் இருக்கிறான்!!

இந்த விசித்திரத்துக்குக் காரணம் புரிகிறதா?

தம்பி! கட்டுக் கலம் காணும்; பட்டபாட்டுக்கேற்ற பலன் கிட்டும் என்ற நிலை இருந்திடினும்; ஈட்டிய வெற்றியினை எடுத்துச் செல்பவர்கள், வேலையிலே ஈடுபட்டு வெட்டுப் பெற்றுக்கிடப்பவனைக் காண்கிறார்கள்; கலக்கமும் கவலையும் குடைகிறது.

வெட்டுப்பெற்றுக் கிடப்பவனோ, வேலையை முடித்துக் கொண்டு வீடு திரும்புவோர், வெற்றியை எடுத்துச் சென்றிடும் காட்சியைக் காண்கிறான்; எனவே அவன் மகிழ்ச்சிக் கொள்கிறான். உடன் பணியாற்றியோர் வெற்றியை எடுத்துச் செல்கிறார்கள்; பழித்தோர் வெட்கிடும் விதமாக பலனை எடுத்துச் செல்கிறார்கள்; அறுவடை வேலை அரிய வெற்றியாக அமைந்துவிட்டது; விளையாது என்றார்கள். அறுவடை கிடைத்தது! அதோ கொண்டு செல்கிறார்கள்!! - என்று எண்ணுகிறான்; எண்ணிடும்போதே, காலில் வீழ்ந்த அரிவாள் வெட்டு, அதற்குக் காரணமாக அமைந்த நச்சுப்பூச்சி எனும் எதனையும் மறந்துவிடுகிறான். வலி தெரியவில்லை. வருத்தம் எழவில்லை. வேலை முடிந்தது, வீடு திரும்புகிறார்கள். வெற்றியுடன் என்று எண்ணிப் பெருமகிழ்வு பெறுகிறான். எமது வயலையும் உழவு முறையும் வேலைத் திறனையும் கேவலப் படுத்திப் பேசினரே சிலர், அவர் காணட்டும் அறுவடையை எடுத்துச்செல்லும் அணிவகுப்பை என்று அறைகூவி அழைப்பது போலிருக்கிறது அவன் பார்வை, புன்னகை!

யாவர்க்கும் முன்னதாக அறுத்தெடுத்துக் கட்டு ஆக்கித் தலைமீது வைத்து வழி நடந்து காட்டவல்ல தோழன், காலில் வெட்டப்பட்டுக் காரியத்தை முடிக்காமல் இருந்திடும் இந்நிலையைக் காணக் கூடவில்லை, கண் கசிவு நிற்கவில்லை. வேலை ஓடவில்லை, வெற்றிக் களிப்பு இல்லை, வேதனை வேலாகி வாட்டி வதைக்குது. ஐயோ! வீடு நாம் செல்கிறோம் வெற்றிக் கட்டுடனே, உடனிருந்தவன் எங்கே என ஊரார் கேட்டிடின், உரைத்திடுவது எதனை நாம்? உள்ளம் பதைத் திடுதே, வெட்டு அவன் காலில், வேலை முடியவில்லை, கட்டுக் கொண்டுவர இயலவில்லை அவனாலே; களத்துமேட்டருகே இருக்கின்றான் களைப்புடனே என்றன்றோ கூறவேண்டும், எப்படிக் கூறுவது? எண்ணும்போதே எனக்கு வெற்றிக் கட்டுகள் யாவும் வீண் என்று தோன்றிடுதே; அவனும் கட்டெடுத்து அணிவகுப்பிலே நடந்தால், அறுவடை விழாவாகும், அக மகிழ்வுக்கு எல்லையில்லை; இன்று அந்த நிலை இல்லை, என் செய்வோம், ஏங்குகிறோம் என்றெண்ணி நடக்கின்றார், அறுவடையில் வெற்றிபெற்றார். அதனாலேதான் அவர்க்கு மகிழ்ச்சி துளியும் இல்லை. மரத்தடிக் கிடப்போனோ மகிழ்ச்சி யினால் துள்ளுகிறான்; அணிவகுத்து செல்வது பார், அறுவடை யினை எடுத்து; அவர் எந்தன் உடன்பிறந்தார், அவருடன் நானுந்தான், இந்த வயலுக்கு உரியவன்! ஆம்! அவர் கொண்டு செல்லும் அந்த அறுவடை, எமது உடைமை!! கட்டு எந்தன் தலைமீது இல்லை, கவலை இல்லை. கொண்டுசெல்லும் கட்டெல்லாம், என் கட்டு! என்று கூறும் உரிமை எனக்கும் உண்டு! என்று கூறிக் களிப்புடன் இருக்கின்றான், புங்க மரத்தடியில்.

என்ன தம்பி, யோசனை? எந்த இடத்து வயலைப்பற்றி அண்ணன் இப்படி ஒரு படப்பிடிப்புக் காட்டுகிறான் என்று தானே யோசிக்கிறாய்.

பல ஆண்டுகளுக்கு முன்பு, நான் இப்படி ஒரு காட்சியைப் பார்த்திருக்கிறேன். நான் இப்போது எடுத்துக் காட்டியுள்ளபடி யான எண்ணம், அவர்கள் கொண்டிருந்தனரோ இல்லையோ, நானறியேன், ஆனால், அந்தக் காட்சியைக் கண்டபோது என் மனதிலே இப்படியெல்லாம் தோன்றிற்று. அது பல ஆண்டுகளுக்கு முன்பு!

பத்து நாட்களுக்கு முன்பு, பல ஆண்டுகளுக்கு முன்பு நான் கண்ட காட்சி என் மனதிலே கிளறிய எண்ணங்களை, மறுபடியும் நான் கொள்ளத்தக்க நிகழ்ச்சியைச் சந்தித்தேன். அந்த நிகழ்ச்சிதான் என் தோல்வியும். நமது தோழர்களிலே ஐம்பது பேர் பெற்ற வெற்றியும்.

எனக்கு களிப்பு, வெற்றி அணிவகுப்புக் கண்டு.

வெற்றி அணிவகுப்புக்கோ என் நிலைகண்டு வேதனை.

அவர்கள் எனக்குக் களிப்பூட்டினர். நானோ அவர்களுக்கு கண் கசியும் நிலையைத்தான் தந்தேன்.

என் செய்வது தம்பி! நான் என் தம்பிகளிடமிருந்து பெறுவது அதிகம்; நான் அவர்களுக்குக் கொடுப்பது குறைவு! அதிலும் இம்முறை, நான் பெருமைப்படத்தக்க பெரு வெற்றி களைப் பெற்றுக் காட்டி, ஐம்பதின்மர் என்னை மகிழ்வித் தார்கள்; அரசியல் வட்டாரங்கள் பலவற்றையும் நான் பெருமிதம் நிரம்பிய பார்வையுடன் கண்டிட வழிசெய்து கொடுத்தனர்; ஆனால் நானோ, அவர்களும் எண்ணற்ற மற்றவர்களும், கண் கலங்கும் நிலையைத்தான் பெற்றுக் கொடுத்தேன். அதை எண்ணும்போதுதான், நான் வருத்தப்படுகிறேன், வெற்றி பெறவில்லை என்பதனால் அல்ல!! எல்லாக் கிளைகளிலும் மலர் குலுங்கத்தான்வேண்டும் என்பதில்லை, பூத்திருந்தால் போதும். எல்லோருமே வெற்றிபெற்றே தீரவேண்டும் என்பதில்லை. சிலருக்குத் தோல்லி ஏற்படக்கூடும். எதிர்பார்க்கவேண்டியது தான். ஆனால், என்முன் தாம் ஈட்டிய வெற்றிகளைக் கொண்டு வந்து காட்டிடும் எனதரும் தோழர்களுக்கு, நான் எதனையும் தர இயலாது போயினும்; என் தோல்வியின்மூலம் வேதனையை யாவது ஏற்படுத்தித் தராமல் இருந்திடக்கூடாதா என்று எண்ணுகிறேன்.

இதனை எழுதிக்கொண்டிருக்கும்போது, கீழே செங்கற் பட்டுத் தொகுதியிலே வெற்றிபெற்ற நமது கழகத் தோழர் விசுவநாதன் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். கவலை நிரம்பிய நிலையில்! வெற்றிபெற்ற இளைஞர்; பணபலம் மிகுந்த ஒருவருடன் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்; ஆயினும் விசாரத் துடன்தான் இருக்கிறார். என்னைக் கண்டதும், என்ன பேசுவது என்று புரியவில்லை; நான் பேசவைத்தேன்; அந்தப் பகுதி ஓட்டுகள் எப்படி, இந்தப் பகுதியில் வாய்ப்பு எப்படி என்று கிளறிக் கிளறிப் பேசவைத்தேன். மகிழ்ந்து உரையாட அவரால் முடியவில்லை. அவருக்கு உள்ள சங்கடத்தைக் கண்ட பிறகு தான், இதனை எழுத வந்தேன்.

தம்பி! இந்த நிலை, கடந்த ஒரு கிழமையாக இருக்கிறது. இனியும் இதுபோல் இருக்கக்கூடாது என்பதற்காகவே இதனை எழுதுகிறேன். அறுவடை வெற்றியுடன் முடிவுற்றதை எண்ணி அகமகிழ்ச்சி கொள்ளவேண்டிய நேரத்தில், அண்ணன் தோற்றுபோனானே என்பதனையே எண்ணி எண்ணி ஏங்கிக் கிடப்பது சரியல்ல, முறையல்ல, தேவையில்லை, எனக்குப் பிடித்தமானதுமல்ல.

நச்சுப்பூச்சி தீண்டியதனால் நிலைகுலைந்து, அரிவாள் காலிலே வீழ்ந்து வெட்டு ஏற்பட்டுவிட்டதால், அறுவடையே கெட்டுவிட்டது என்றா பொருள்!

பெற்ற வெற்றிகளை எண்ணிப் பெருமிதம்கொண்டு, மாற்றார் கண்டு கலங்கிடும் விதமான வீரப் புன்னகையுடன் ஏறுநடைபோட்டு, அரிமா நோக்குடன் இருந்திடவேண்டிய வேளையில், என் தோல்வியையும், அதுபோன்றே அதிர்ச்சி தரத்தக்க வேறு பல தோல்விகளையும் எண்ணி ஏங்கிக் கிடப்பது நல்லதுமல்ல, என்னை மகிழச் செய்யும் வழியும் அதுவல்ல.

நான் எங்கு இருந்துவிட்டு வருகிறேன் தெரியுமா, தம்பி! அதைச் சொல்கிறேன். பிறகேனும் என் மனப் போக்கின் முழுத் தன்மையை அறிந்துகொண்டு, அமைதிபெறும் முயற்சியில் ஈடுபடவேண்டுகிறேன்.

அரசியல் உலகு, அற்புதங்கள், உற்பாதங்கள், அதிர்ச்சிகள், ஆக மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள், எக்களிப்புக்கள் எரிச்சலூட்டும் சம்பவங்கள், வெற்றிகள் தோல்விகள் யாவும் நிரம்பிய இடம்.

எல்லாத் துறைகளும் அவ்விதம்தான், என்பாய். ஒரு மாறுபாடு உண்டு. மற்ற எந்தத் துறையினையும்விட அரசியல் துறையிலே எதிர்பாராத நிகழ்ச்சிகள், ஏமாற்றங்கள், எரிச்சல்கள் நிரம்ப ஏற்படும்; விசித்திரமான உலகு.

விசித்திரமானது அரசியல் உலகு என்பதற்கு வேறெந்த எடுத்துக்காட்டும் வேண்டாம். நான் இப்போது எங்கு சென்று விட்டு வந்திருக்கிறேன் என்பதைக் கூறுகிறேன், கேளேன், அது போதும்.

பெங்களூர், நகரில் ஜெய்நகர் என்ற பகுதியில், ஜெய விலாஸ் என்ற இல்லத்தில் தங்கியிருந்துவிட்டு வருகிறேன்!! வேடிக்கை அல்ல, தம்பி! விசித்திரம், ஆனால் உண்மை!

தோல்வி கிடைத்ததும் நான் சென்று தங்கியிருந்த இடம் ஜெயவிலாஸ் - ஜெய்நகர்!! போதுமா விசித்திரம்.

என்ன செய்துகொண்டிருந்தேன்? பலரும் வந்திருந்து எனக்கு ஆறுதல் கூற, அதைக்கேட்டுத் துயரத்தைத் துடைத்துக் கொண்டு மன அமைதி பெற்றுக்கொண்டிருந்தேன்போலும் என்று எண்ணுகிறாய். அதுதான் இல்லை!! பலருக்கும் ஆறுதல் கூறிக்கொண்டிருந்தேன். வெற்றிபெற்று, வீடுகூட செல்லாமல் என்னோடு வந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் தருமலிங்கம் மகிழ்ச்சியாக இருக்கும்படி செய்வதிலும், என்னைப்போலவே காலில் வெட்டுப்பட்டுக் கிடக்கும் திருவண்ணாமலைத் தோழர் ப. உ. சண்முகத்துக்கும், வேலூர் சாரதிக்கும் ஆறுதல் கூறுவதிலும் ஈடுபட்டிருந்தேன். அவர்களுக்கு ஆறுதல் எதற்காகக் கூறினேன்? அவர்கள் தமது தோல்வியைப்பற்றித் துக்கம் துளைத்த நிலையில் இருந்ததால் என்கிறாயா? அதுதான் இல்லை! என்பொருட்டு அவர்கள் கொண்டிருந்த வேதனையைத் துடைத்து ஆறுதல் அளித்துக்கொண்டிருந்தேன்.

பல ஆண்டுகளாகவே எனக்கு, பேசாமலே பல கூறும் பேருருவாக அமைந்திருக்கும் சிற்பக்கலைச் சிறப்புக்கு ஈடற்ற எடுத்துக்காட்டாக விளங்கிடும் கோமடீஸ்வரர் சிலையினைக் காணவேண்டும் என்ற ஆவல் உண்டு. அந்த இடத்துக்கு அருகே கூடச் சென்றிருப்பேன்; காண வாய்ப்பும் ஓய்வும் கிடைத்த தில்லை. அழகிய சிறு குன்றின்மீது அமைந்திருக்கும் பேசாப் பேருருவை இம்முறைதான், கண்குளிரக் காண முடிந்தது.

பெங்களூர் நகரிலிருந்து நூறுகல் தொலைவில் உள்ள சீரூர் சிரவணபெலகோலா என்பது. அங்குதான், வெளிநாட்டு விற்பன்னர்களும் கண்டு வியந்திடும் அந்தச் சிற்பம் இருக்கிறது, குன்றின்மீது. அறுபது அடி உயரம் அந்தப் பேருரு! பிறந்த மேனி! திறவாக் கண்கள், எனினும் கனிவு வழிகிறது! நின்ற நிலை! காண்போரை நின்ற நிலையினராக்கிவிடும் கவர்ச்சி!!

அந்தப் பேருருவுக்குப் பின்னணியாக, நீலநிற வானம்!

தன்னை மறந்த நிலையில் பிறந்த மேனியாய் நிற்கும் அந்தப் பேருரு, மனதினை ஓரிடத்தில் பதியவைத்து, மற்ற எதனையும் எண்ணிடமுடியாத நிலைபெற்று இருக்கும், காட்சி கண்டாரே கருத்தறிவார்; கண்டதனை விளக்கிட இயலாது; உண்மை.

காலடியில், புற்றுகள்! செடி கொடிகள்! செடி கொடிகள் கோமடீஸ்வரரின் காலிலும் கரத்திலும் மார்பிலும் படருகின்றன! அசையா நிலை! உணரா நிலை! மனம் ஓரிடத்திலே முழுக்க முழுக்க ஒன்றிவிட்டதனால், செடி கொடி படருவதுபற்றிய உணர்ச்சியே எழவில்லை. செடி கொடிகள் மட்டும் அல்ல, தம்பி! சீறிடும் பாம்புகள்! உடலைச் சுற்றிக்கொண்டுள்ளன! உணர்வு இல்லை! கனிவும் கவர்ச்சியும் மிக்கதோர் நிலையில் பேருரு!!

இவ்வளவையும், இதற்கு மேலாகவும், கல்லுரு காட்டி நிற்கிறது. கண்டு கருத்துப் பெறாதார், நடமாடும் கல்லுரு என்றே கூறலாம்.

உற்று உற்றுப் பார்த்தேன், அப்பேருருவினை! நெருங்கி நின்று பார்த்தேன்! தொலைவிலிருந்து பார்த்தேன். பார்க்கப் பார்க்க மேலும் பார்த்துக்கொண்டிருக்கும் எண்ணம் எழுகிறது.

உறுதி ஒன்றில் இலயித்துவிட்டால் வேறு எந்த உணர்வும் தீண்டமுடியாத நிலை பெறும் இயல்பு, பேருரு காட்டிடும் அரும்பெரும் பாடம். ஆமாம், தம்பி! தேர்தலிலே தோல்வி என்றால், நெஞ்சிலே துக்கம் துளைக்கிறது என்கிறோமே, பாம்பு சுருட்டிக்கொள்கிறது உடலில், மனம் ஒன்றினிலே இலயித்துப் போனதால், அரவம் தீண்டுவதுபற்றி உணர்வே இல்லை; கண்ட நான், எண்ணிக்கொண்டேன், அந்த உறுதிவேண்டும் ஒன்றின் மனதைப் பதியவைத்துவிட்டால், வேறு உணர்வுகள் நம்மைத் தீண்டிடும் வலிவற்றுப்போகும்நிலை ஏற்பட வேண்டும் என்று விரும்பினேன்.

எனக்காக மட்டுமல்ல, தம்பி! உனக்கும் அந்த நிலை, உறுதி, இருந்திட வேண்டும் என்று விரும்பினேன். அந்த எண்ணத்துடன்தான் சிரவணபெலகோலாவை விட்டுத் திரும்பினேன்.
-----------------

அறுவடையும் - அணிவகுப்பும் (2)
ரிச்சர்டும் ஜெரூசல ஊர்வலமும் -
ஐம்பதின்மர் சட்டமன்ற நுழைவு -
இந்தித் திணிப்பு.

தம்பி!

எதிர்ப்புக்கண்டு அஞ்சவில்லை, ஏளனம் கேட்டு எரிச்சல் கொள்ளவில்லை, ஆபத்துக்களைத் துரும்பென மதித்தோம். உயிரைத் துச்சமென்று கருதினோம். வெட்டுப்பட்டோம். குத்துப் பட்டோம். குருதி கொட்டினோம். உறுப்புக்கள் இழந்தோம். உடனிருந்தோர் கொல்லப்பட்டது கண்டோம். இரத்தச் சேற்றினில் புரண்டோம். பிணத்தின்மீது உருண்டோம். சிறகடித்து வரும் பெரும் பறவைகள், பிணமாகிக் கீழே வீழ்ந்து பட்ட நமது தோழர்களின் உடலைக் கொத்திடக் கண்டோம். கண்ணீர் கொப்புளித்தது. சொல்லொணாத கஷ்டங்களைக் கண்டோம். மனம் உடைய இடந்தரவில்லை. போரிட்டோம், போரிட்டோம், புனிதப் போரில் நமக்கே இறுதி வெற்றி என்ற நம்பிக்கையுடன் போரிட்டோம், பலன் இல்லை என்று ஒரு சமயம் தோன்றும். பயம் மற்றோர் சமயம் நெஞ்சைத் துளைக்கும், பெருமூச்செறிவோம், எனினும் முன்வைத்த காலை பின்வைக்க மாட்டோம் என்று சூளுரைத்துப் போர் புரிந்தோம். பொழுது புலர்ந்தது, பட்டபாடு வீண்போகவில்லை, எடுத்த காரியம் முடித்தோம் என்ற எண்ணம் வெற்றிக் களிப்பூட்டுகிறது. எந்த நோக்கத்துக்காகப் புனிதப்போர் நடாத்தினோமோ, மாடு மனை மறந்து, மக்கள் சுற்றம் துறந்து, வாழ்க்கை இன்பம் இழந்து, கட்டாந்தரையையும், காடுமேடுகளையும் இருப்பிடமாகக் கொண்டு போரில் ஈடுபட்டு நின்றோமோ, அந்த நோக்கம் ஈடேறுகிறது, புனிதத் திருநகர் செல்கிறோம், உத்தமர் திருவடி பட்டதால் உயர்வுபெற்ற திருநகர் செல்கிறோம். அருளாளர் மலரடி பட்டதால் மகிமைபெற்ற மாநகர் செல்கிறோம், இம்மைக்கும் மறுமைக்கும் எவ்வழி நல்வழி காட்டிடுமோ அவ்வழி கண்டுரைத்தவர் கோயிலூர் செல்கிறோம், எந்த நகர்பற்றி எண்ணி எண்ணி ஏங்கிக் கிடந்தோமோ, அந்தப் புனிதபுரி செல்கிறோம். எமது புனிதபுரி எமக்கே சொந்தம், எமக்கு அது இறைவன் இல்லம், கருணைக் கோட்டம், இறவாப் புகழ்பெறு கோயில். ஆங்கு நாங்கள் செல்வது எமது உரிமை. அந்த உரிமையினை எவர் தடுத்திடினும், மடிய நேரிடினும் சரியே, உரிமைப்பெறப் போரிடுவோம், உரிமையை இழந்தார்கள் உதவாக்கரைகள் என்று உலகம் இகழத்தக்க இழிநிலையுடன் உழன்றிடமாட்டோம். கழுகு எமது உடலைக் கொத்தட்டும், கவலையில்லை; "புனிதபுரி எமது' எனும் முழக்கமிட்டபடியே வெட்டுண்டு வீழ்வோம் என்றெல்லாம் சூளுரைத்து, எந்த நோக்கத்துக்காகச் சமர் நடாத்தினோமோ, அந்த நோக்கம் ஈடேறுகிறது. புனிதபுரி சென்றிடும் உரிமை நம்முடையதாகிறது. இதோ புனிதபுரி செல்கிறோம்! - என்று எண்ணியபடி அந்த அணிவகுப்பு, பெருமிதத்துடன், களிநடமிடுவதுபோல் ஜெருசலம் எனும் புனிதபுரிக்குள் செல்கிறது.

நுழைவு வாயிலுக்கு வெளியே நிற்கிறான், உரிமை பெற்றோம் என்ற "எக்களிப்புடனும், புனிதபுரியைக் காணச் செல்கிறோம்' என்ற பெருமைமிகு உணர்ச்சியுடனும் உள்ளே நுழையும் அணிவகுப்பினைக் கண்டபடி, கண்ணீர் துளிர்க்கும் நிலையுடன், இஃதன்றோ வெற்றி, இவரன்றோ வீரர், இது வன்றோ புனிதப்போர் என்றெல்லாம் எண்ணியபடி, விம்மிடும் நெஞ்சுடன் நிற்கிறான், அணிவகுப்பை நடத்திச்சென்றவன்.

அணிவகுப்பு புனிதபுரிக்குள் நுழைகிறது.

அணிவகுப்பினை நடத்திவந்தோன் அதனைக்கண்டு அகமிக மகிழ்கிறான்.

புனிதப்போரிலே வெற்றிக் கட்டம் - உரிமை தரப்படுகிறது, கடும் போரிட்டு உரிமையினைப்பெற வீரர் குழாம், புனித நகருக்குள் செல்கிறது; காண்கிறான் காணவேண்டுமென்று நெடுங்காலம் எண்ணிய காட்சியை; வெற்றி வீரர்கள் செல்கிறார்கள் வீரநடையுடன், புனிதபுரிக்குள் என்பதை எண்ணுகிறான்; உடல் புல்லரிக்கிறது; களத்திலே ஏற்பட்ட கஷ்டமத்தனையும் பழத்தை மூடிக்கொண்டிருக்கும் தோல் என்று எண்ணிடத் தோன்றுகிறது; உலகு அறியட்டும், உறுதியுடன் உரிமைப்போர் நடாத்துபவர் வெற்றிபெற்றே தீருவார்கள் என்ற உண்மையை என்று மெள்ளக் கூறிக்கொள்கிறான்; அணிவகுப்பு புனிதபுரிக்குள் செல்கிறது, அதனைக்கண்டு களிப்புடன் நுழைவு வாயிலில் அணிவகுப்பினை நடத்திவந்தவன் நிற்கிறான் - ஆனால் அவன் உள்ளே செல்லவில்லை!!

புனிதபுரியாம் ஜெருசலம் நகருக்குள், அணிவகுத்து செல்லலாம் - அந்த உரிமை அவர்கட்கு உண்டு - என்று மாற்றார் கூறினர் - ஆனால் ஒரே ஒரு நிபந்தனை, அணிவகுப்புத்தான் செல்லலாம், அதனை நடத்திச் செல்பவன், ஜெருசலம் நகருக்குள் செல்லக்கூடாது - என்று கூறிவிட்டனர்.

எனவே, அணிவகுப்பு புனிதபுரிக்கு உள்ளே சென்றது; அதனை நடத்திச்சென்ற ரிச்சர்டு, ஜெருசலம் நகர நுழை வாயிலில் நின்றுகொண்டிருந்தான்.

புனிதப்போர், ஜெருசலம் நகருக்காக, பல ஆண்டுகள் நடைபெற்றது. இஸ்லாமியருக்கும் கிருஸ்தவர்களுக்கும் நடைபெற்ற அந்தப் போருக்கு, வேறு பல காரணங்களும் இடையிடையே வந்து இணைந்துகொண்டன; பல வீரக்காதை களைத் தன்னகத்தேகொண்டதாக அந்தப் புனிதப்போர் வடிவெடுத்தது. அரசுகள் பல இதிலே ஈடுபட்டன. அழிவுபற்றிய கவலையின்றி அஞ்சா நெஞ்சினர் அணி அணியாக, அலை அலையாகக் கிளம்பினர்; உலகமே கிடுகிடுக்கத்தக்க பயங்கரச் சண்டைகள் நடைபெற்றன; முடிகள் உருண்டன, நகர்கள் நாசமாயின, பிணமலை எங்கெங்கும்; அப்படிப்பட்டதோர் புனிதப்போரில், இஸ்லாமியர்களைத் தலைமை வகித்து நடத்திச்சென்ற இணையில்லா வீரனாகச் சாலடீன் எனும் மாமன்னன் விளங்கினான்; கிருஸ்தவர் தரப்பில் கிளர்ந்தெழுந்து வீரப் போரிட்ட மாபெருந் தலைவன் என உலகு புகழ் நிலைபெற்றான் இங்கிலாந்து நாடு ஆண்ட, ரிச்சர்டு என்பான்! அரிமா நெஞ்சு அவனுக்கு என்று சிறப்புப் பெயரிட்டு அழைத்திடத்தக்க முறையில் ஆற்றல் மிக்கோனாக விளங்கினான் ரிச்சர்டு.

புனிதப்போரிலே ஒரு கட்டம்தான், ஜெருசலம் நகருக்குள் கிருஸ்தவர்கள் செல்லலாம் என்று சாலடீன் அனுமதி அளித்து, போர் நிறுத்த ஏற்பாட்டுக்கு இசைவு அளித்தது.

அந்தப் போர் நிறுத்தக் கட்டத்தின்போதுதான், உரிமை கிடைத்தது என்ற உவகையுடன், புனிதபுரிக்கு உள்ளே, கிருஸ்தவர் களின் அணிவகுப்பு பெருமிதத்துடன் நுழைந்தது.

ஆனால், அந்த அணிவகுப்பை நடத்திச்சென்ற ரிச்சர்டு, ஜெருசலம் நகருக்குள் செல்லவில்லை.

போர் நிறுத்த ஏற்பாட்டுக்கும், ஜெருசலம் நகருக்குள் கிருஸ்தவர்களின் அணிவகுப்பு நுழைவதற்கும் இசைவு அளித்த சாலடீன் ஒரு நிபந்தனை விதித்திருந்தான் - அந்த நிபந்தனைதான், அணிவகுப்பு மட்டும்தான் ஜெருசலம் நகருக்குள் நுழையலாமே தவிர, அதனை நடத்திவந்த ரிச்சர்டு, புனிதபுரிக்குள்ளே நுழையக் கூடாது என்பதாகும்.

எனவேதான், அணிவகுப்பு ஜெருசலம் நகருக்குள்ளே நுழைந்தது; நகர நுழைவு வாயிலுக்கு வெளியே நின்று கொண்டிருந்தான், ரிச்சர்டு!

உள்ளே நுழைந்தவர்களுக்கு, நுழைவு வாயிலில் ரிச்சர்டு நிறுத்தப்பட்டுவிட்டானே என்ற கவலைதான்; வெளியே நிறுத்தப்பட்டுவிட்டவனுக்கோ, புனிதபுரிக்கு உள்ளே நுழையும் உரிமை அணிவகுப்புக்கு கிடைத்துவிட்டது என்ற களிப்பு.

தம்பி! தோற்றுக் கிடக்கும் நேரத்திலேதான் இவனைத் தாக்கி மகிழ்ச்சி பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற சிறுமதி படைத்தவர்கள், இதனைக்கூடத் திரித்துக்கூறி, "பார்! பார்! இவன் தன்னை ரிச்சர்டு எனும் மாவீரனுக்கு இணையாக்கிக் கொள்கிறான்!!' என்று பேசக்கூடும்.

என்னை ரிச்சர்டு நிலைக்கு நான் உயர்த்திக்கொள்ள இதனை எழுதவில்லை; இதனைப் படித்துவிட்டு, மாற்றார்களும் தங்களை சாலடீனுடன் ஒப்பிட்டுக்கொண்டுவிட வேண்டாம்.

அணிவகுப்பு உள்ளே நுழையும் உரிமைபெற்ற நேரத்தில், அதனை நடத்திச்சென்றவன் மட்டும், உள்ளே நுழையக்கூடாது என்று தடுத்து நிறுத்தப்பட்டால், அந்த நிகழ்ச்சி எத்தகைய உள்ள நெகிழ்ச்சியைத் தருமோ, அப்படிப்பட்ட உள்ள நெகிழ்ச்சி, நம்மில் ஐம்பதின்மர் சட்டமன்றம் சென்று அமர்ந்திடும் வேளையில், என்போன்றோர் உடன் செல்ல முடியாமல், வெளியே நிறுத்திவிடப்பட்டிருப்பதால் ஏற்பட்டிருக்கிறது என்பதை எடுத்துக்காட்ட மட்டுமே, இதனை எழுதினேன்.

உள்ளத்துக்கு நெகிழ்ச்சியை மட்டுமல்ல, புதியதோர் உறுதியையும் தரத்தக்க, இத்தகைய நிகழ்ச்சிகளை நாம் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதனைக் கூறவும், இதனை இங்குக் குறிப்பிடுகிறேன்.

இதோ நாம் நுழைகிறோம் புனிதபுரிக்குள்! ஆனால் நம்முடன் வந்திருக்கவேண்டியவர்களில் பலர் வரவில்லையே என்ற ஏக்கம், செயலற்ற நிலைக்கு அல்ல, செயலை விறுவிறுப்பு மிக்கது ஆக்கிக்கொள்ளப் பயன்படவேண்டும்.

அவர்களும் வந்திருந்தால். . . அவர்களும் உடன் இருந்தால் . . . என்ற எண்ணம் எழாமலிருக்காது; நமக்குள் உள்ள குடும்பப் பாசம் அத்தகையது; நமது பொலிவுக்கும் வலிவுக்கும் அஃதே அடிப்படை; எனினும் அந்த எண்ணம், "நாம் மட்டும் வந்து என்ன பலன்?' என்ற முறையில் வடிவெடுக்க இடம் தரக்கூடாது. நாம் வந்திருக்கிறோம், அவர்கள் வரவில்லை; அவர்களும் வந்திருந் தால் எத்தகைய முறையிலே பணி செம்மையாக இருந் திருக்குமோ, என்ற கவலை எவருக்கும் எழாதபடியான தரத்திலும், அளவிலும், நம்முடைய பணி அமையவேண்டும் என்ற உறுதியுடன், ஒவ்வொருவரும் தத்தமது ஆற்றல் அவ்வளவையும் பயன்படுத்திக் கூட்டுச்சக்தியாக்கிப் பணியினைச் சிறப்புடையதாக்கவேண்டும்.

நடத்திச்செல்பவனை இழந்தும் ஒரு அணிவகுப்பு பணிபுரிய இயலும் - தமக்குள்ளாகவே நடத்திச்செல்பவரைப் பெறமுடியும்!

ஆனால், அணிவகுப்பு இன்றி, நடத்திச்செல்பவன் மட்டும் தட்டுத் தடுமாறி உள்ளே நுழைகிறான் என்று வைத்துக்கொள் தம்பி! எப்படி இருக்கும் அந்தக் காட்சி? கண்றாவியாக இருக்கும்!!

நடத்திச்செல்பவனை இழந்த அணிவகுப்பைக் காண்போர், ஆச்சரியப்படுவர்!

அணிவகுப்பினை இழந்த நடத்திச்செல்பவனைக் காண்போர், கேலி செய்வர்!!

நடத்திச்செல்பவனற்று ஒரு அணிவகுப்பு இருந்துவிடாது நடத்திச்செல்பவர் ஒருவரைக் கண்டுபிடித்துவிடும்.

அணிவகுப்பினை இழந்த தலைவன், மாயமந்திர வேலைகளால் உடனே மற்றோர் அணிவகுப்பை உண்டாக்கிக் கொள்ளமுடியாது.

எனவேதான், தம்பி! அணிவகுப்பு அடையும் வெற்றிதான் மிக முக்கியமே தவிர, நடத்திச் செல்பவன் ஈட்டிடும் வெற்றி அவ்வளவு அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல; கோபுரம்தான் முக்கியம், கலசம் அல்ல! கலசமும் இருந்திருந்தால் அழகாகத்தான் இருக்கும்; ஆனால் கோபுரமின்றிக் கலசம் இருந்தால் கேலிக்கூத்தாக அல்லவா இருக்கும். அதுபோலத் தான், என் போலச் சிலர்' உள்ளே வரமுடியாமற்போனது?

இதனை நான், வெறும் மன ஆறுதல் அளிக்கக் கூறுகிறேன் என்று எண்ணிக்கொள்ளாதே. தம்பி! இதற்கு ஊடே இருக்கும் தத்துவத்தை, விளக்கமாக்குவதற்காகவே கூறுகிறேன்.

காங்கிரசுக் கட்சியினர் கோபுரத்தைத் தகர்க்கத் திட்ட மிட்டனர்; தம்மிடம் கிடைத்த அழிவுக் கணைகளை ஏவினர்; அவர்கள் கண்ட பலன், கலசம் பிய்த்தெளியப்பட்டதுதான்; கோபுரம் அல்ல!

ஐம்பது கழகத் தோழர்கள் சட்டமன்றத்தில்! அணிவகுப்பு உள்ளே நுழைந்துவிட்டது! வெளியே நிறுத்தி வைக்கப்பட்டு விட்ட என்போன்றார்களைக் காணும்போது, மாற்றார்களுக்கு ஒரு கணம் சிரிப்புப் பொங்குவது இயற்கை; பல இலட்சம் செலவிட்டு அவர்கள் இந்தப் பலனைக்கூடவா சுவைக்கக் கூடாது! - ஆனால் மறுகணமோ, ஐம்பதுபேர்! ஐம்பதுபேர்! நாலில் ஒரு பகுதி!! என்ற எண்ணம் கொட்டுகிறது; துடியாய்த் துடிக்கிறார்கள்.

இந்த ஐம்பதின்மருடன் பாராளுமன்றத்துக்கு எழுவரையும் சேர்த்து வெற்றிபெறச் செய்த நமது கழகத் தோழர்கள், ஆதரவாளர்கள், ஜனநாயகம் புதுப் பொருள் பெற்றாகவேண்டும் என்பதற்காக நமக்குத் துணை நின்றவர்கள் ஆகிய அனை வருக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன்.

வெற்றி ஈட்டித்தர இயலாதுபோயினும், மற்ற இடங் களிலும் வெற்றி பெற்றாகவேண்டும் என்பதற்காக அரும்பாடு பட்டனர் நமது தோழர்கள், அவர்களுக்கும் என் நன்றி.

சொல்லப்போனால், வெற்றிபெற்றிருக்கிற இடத்திலே பணியாற்றிய நமது கழகத்தோழர்களும், ஆதரவாளர்களும், நண்பர்களும், வெற்றிக் களிப்புப்பெற்று, பட்ட கஷ்டம் அத்தனையும் பறந்துபோன நிலையில், ஏறு நடைபோட்டு எக்களிப்புடன் இருக்க முடிகிறது. - அரைத் தெடுத்த சந்தனத்தை மார்பில் அணிந்துகொண்டதுபோன்ற மகிழ்ச்சி இருக்கும்போது, அரைத்தபோது தோன்றிய வலி மறந்தேபோய்விடுகிறது அல்லவா! அதுபோல!! கொஞ்சுகிறாள் பார். கொலுப்பொம்மை யைப்போலக் குழந்தையை தூக்கி வைத்துக்கொண்டு! இன்று. அன்று? அடேயப்பா? என்ன அலறல்! எவ்வளவு அழுகை! வேண்டாமே! வேண்டவே வேண்டாமே! குழந்தையே வேண்டாமே!! என்றெல்லாம் கூச்சலிட்டாள்! இன்று ராஜாவாம் ரோஜாவாம்! கொஞ்சுகிறாள் குழந்தையிடம்! - என்று பொக்கைவாய் மூதாட்டி கேலிபேசுவது உண்டல்லவா, குலக்கொடியைப் பெற்றெடுத்த கோமளத்தைப் பார்த்து. அதுபோல, வெற்றிபெற்ற இடத்திலே, மனதுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி, மாற்றார்களைப் பார்க்கிறபோது ஏற்படும் பெருமித உணர்ச்சி போதும், எத்துணை கஷ்டநஷ்டத்தையும் ஈடு செய்துவிடும். எனவே, வெற்றிபெற்ற இடங்களில் பணியாற்றினவர் களுக்குக்கூட அதிகமாகப் பாராட்டும், நன்றியறிதலும் கூறத் தேவையில்லை.

பாடுபட்டும் பலன் காணாததால் மனம் உடைந்து, மாற்றார் முன் எப்படி நடப்பது என்று வேதனையுடன் இருக்கிறார்களே. தோற்றுப்போன இடங்களிலே பணியாற்றிய வர்கள் - அவர்களுக்குத்தான் ஆறுதல் கலந்த நன்றியறிதலை அதிகமான அளவு கூறவேண்டும். அவர்கள் பணியாற்றியபோது என்னென்ன இன்ப நினைவுகள் அவர்கள் மனதிலே அலை மோதினவோ! எத்தனை இரவுகள் இன்பக் காட்சிகளைக் கனவாகக் கண்டனரோ! எத்தனை எத்தனை பேர்களிடம் வெற்றி நிச்சயம்! வெற்றி உறுதி!! என்றெல்லாம் பேசிப்பேசி மகிழ்ந்தனரோ! - பரிதாபம் - அத்துணையும் மண்ணாகி, அவர்கள் மனம் எரிமலையாகி, கண்கள், குளமாகி, பேச்சு பெருமூச்சாகி, நடை தளர்ந்து உள்ளனர்; கதிர்விடும் அளவு வளர்ந்த பயிர் திடீரென காய்ந்துபோகக் கண்ட உழவன் மனம் என்ன பாடுபடுமோ? அதுபோல இருக்கும் அவர்கள் மனம். அவர்களுக்குத்தான் தம்பி! நாம் அனைவரும் அதிகமான அளவிலே ஆறுதலும் நன்றியறிதலும் அளிக்க வேண்டும். வெற்றி கிடைத்திருந்தால் வேதனை தானாகப் போய்விட்டிருக்கும். இவர்களுக்கோ, பாடுபட்ட அலுப்புடன் பலன் காணா வேதனையும் சேர்ந்து வாட்டுகிறது; வதைபடுகிறார்கள்.

வெற்றி கிடைத்த இடத்திலுள்ளவர்கள், வேலையில் மும்முரமாக ஈடுபட்டபோது, குடும்பத்திலே, குதூகலமாகப் பேசி மகிழ்வதை இழந்தனர். என்றாலும், இப்போது, பேசிப் பேசி மகிழலாம். கணக்குப் போட்டுக் காட்டிக் காட்டிக் தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் தொகுதி நான்கு 313 களிப்படையலாம்; என் பேச்சு எப்படி என்று கூறி எக்களிப்புக் கொள்ளலாம்; எனக்கு அப்போதே தெரியும் என்று ஆரூடம் அறிந்தவர்போலப் பேசிச் சிரிக்கலாம்!! ஆனால் தோற்றுப்போன இடத்தில் பணியாற்றியவர்களின் நிலை? வேலை செய்தபோதும் வேதனை, இப்போது அதனைவிட அதிக வேதனை! முன்பு வேலை மிகுதியால் வேளா வேளைக்குச் சரியாகச் சாப்பிடுவதில்லை, தூக்கம் இல்லை, ஓய்வு இல்லை, நிம்மதி இல்லை; இப்போது, வேலை பலன் தராததாலே ஏற்பட்ட வேதனையால், பசியில்லை, தூக்கமில்லை, மன நிம்மதி இல்லை, எவரிடமும் உரையாட விருப்பம் எழவில்லை; காரணமின்றிக் கோபம் வருகிறது; கண்டவர்மீது சந்தேகம் கிளம்புகிறது. எதிலும் ஓர் அருவருப்பு ஏற்படுகிறது; தன்னம்பிக்கைகூடக் குறைகிறது.

பாடு பலவும் பட்டுவிட்டு, இந்த நிலையையும் தாங்கிக் கொள்வது என்றால், உள்ளபடி கடினமல்லவா? எனவே, அவர்களே, நமது ஆறுதலையும் நன்றியறிதலையும் பெறும் முதல் உரிமை, முழு உரிமை பெற்றவர்கள்.

வேலை முறையிலே தவறுகள் இருக்கலாம், போட்ட கணக்குகள் பொய்த்துப் போயிருக்கலாம், நம்பினவர்கள் மோசம் செய்திருக்கலாம், நயவஞ்சகம் இதுவென அறிந்துகொள்ளும் திறமை குறைவாக இருந்திருக்கலாம் - ஆனால் பணியாற்றிய வர்கள் எடுத்துக்கொண்ட முயற்சி, பட்ட கஷ்டம், கொண்ட ஆசை, ஏற்படுத்திக்கொண்ட நம்பிக்கை இவைகளை எவர் மறக்க முடியும். எப்படிக் குறைத்து மதிப்பிட முடியும்!

எத்துணையோ தொல்லைகளைத் தாங்கிக்கொண்டனர்.

வசதிக் குறைவுகளுக்கு இடையே உழன்றனர்.

பகை கக்கினர் பலர்; பொருட்படுத்தவில்லை.

பொய் வழக்குகள் தொடுத்தனர்; பொல்லாங்கு மூட்டினர்; காலிகளை ஏவிவிட்டனர்; கத்தி காட்டி மிரட்டினர்; வழிமடக்கி அடித்தனர்; வேலையைப் பறித்தனர்; வீட்டில் கலகம் மூட்டினர்; அம்மம்மா! ஒன்றல்ல இரண்டல்ல, அவர்களைக் கொட்டிய கொடுமைகள், அத்தனையையும் தாங்கிக்கொண்டு, ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு, அனைவரிடமும் பணிவாக நடந்து, பணி யாற்றினர் - கழகம் வெற்றிபெறவேண்டும் என்ற ஒரே நோக்கத் துக்காக, எந்தப் பழியையும் இழியையும் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும் என்ற உறுதியுடன், தியாக உணர்வுடன்.

அதிலும், தம்பி! காஞ்சீபுரம் தொகுதியிலே, வேளைக்கு ஒரு சேதி வெடித்துவரும்; அந்த ஊர் தலைவர் அவர்களை வண்டியிலே ஏற்றிவிட்டாராம்! இந்த ஊர் மணியக்காரரை இரவு 12 மணிக்கு இலுப்பைத் தோப்பிலே சந்தித்து 200 ரூபாய் கொடுத்துவிட்டார்களாம்! இவருக்கு அவர் கடன் கொடுத்திருக் கிறாராம், ஆகவே, அங்கு கட்டுப்பட்டுப் போய்விட்டாராம்! - என்றெல்லாம் திகில் தரும் செய்திகள் வரும். கேட்ட எவருக்கும் "கை ஓடாது கால் ஓடாது'. மனம் பதை பதைக்கும்; கிளம்பிய சேதிகள் உண்மைதான் என்பதைக் காட்டும் குறிகள் தெரியும்! என் செய்வர், நமக்காகப் பணியாற்றுவோர்! முதலில் தங்களைத் திகிலிலிருந்து விடுவித்துக்கொள்ளவேண்டும், பிறகு பணி! தொடர்ந்து! சோர்வை மறைத்துக்கொண்டு!!

"தானிய வியாபாரிகளெல்லாம், கிளம்பிவிட்டார்கள் கிராமம் கிராமமாக!'' - என்பார் ஒருவர்.

"தானிய வியாபாரிகள் கிளம்பினால் என்ன?'' என்று கேட்பார் இன்னொருவர்.

ஒவ்வொரு கிராமத்திலும் அவர்களுக்குக் கொடுக்கல் வாங்கல் தொடர்பு இருக்கிறதே. அவர்கள் பேச்சுக்குப் பலர் கட்டுப்படுவார்களே! - என்று விளக்கம் அளிப்பார், இன்னொருவர்.

எனக்கு இதெல்லாம் தோன்றாது. நாம் என்ன கெடுதல் செய்தோம் இவர்களுக்கு? மனதாலும் கெடுதலை எண்ணிய தில்லையே. ஏன் இவர்கள் நம்மை எதிர்த்து வேலை செய்கிறார்கள்! நாம் ஏதாவது இவர்கள் மனம் புண்படும்படி, வெறுப்புக்கொள்ளும்படி நடந்துகொண்டோமா? கிடையாதே! அப்படியிருக்கும்போது, நம்மிடம் இவர்கள் பகை காட்டு வானேன்? புரியவில்லையே! என்று எண்ணிப் பெருமூச் செறிவேன். தானிய வியாபாரிகள் மட்டுமல்ல. ஒவ்வொரு நாள் ஒவ்வொரு வகையான வியாபாரிகளைப்பற்றி, இப்படிச் செய்தி வரும். காரணம் எனக்கு இன்னமும் புரியவில்லை.எதற்காக, இவர்கள் என்மீது இவ்விதமாகப் பகை காட்டினார்கள் என்பதற்கு, என்னை வீழ்த்தி, அவர்கள் அடையப்போகும் பலன்தான் என்ன என்றும் எனக்குப் புரியவில்லை.

தம்பி! கிரேக்க நாட்டிலே ஒரு "முறை' இருந்தது - "முறை' என்றுகூட அதைக் கூறுவதற்கில்லை, - ஒரு "நடவடிக்கை' என்று மட்டுமே கூறலாம். ஆங்கிலத்திலே, அதனை Ostracism - ஆஸ்ட்ரசிசம் என்பார்கள்.
-------------------
அறுவடையும் - அணிவகுப்பும் (3)

தொகுதிகளும் உறுப்பினர்களும் -
அணிவகுப்பின் வெற்றி.

தம்பி!

தொகுதிகளிலே நல்ல தொடர்பினை, தேர்ந்தெடுக்கப் பட்ட உறுப்பினர்கள் மட்டுமே கொண்டிருக்கவேண்டும் என்று இருந்துவிடாமல், அந்தத் தொகுதியிலே உள்ள கழகத் தோழர் களின் குழு ஒன்று, அத்தகைய தொடர்பினை வைத்துக் கொண்டிருக்கவேண்டும் என்று சென்றகிழமை குறிப்பிட்டிருந்தேன். இது, ஏன் அவ்விதமான தொடர்பு கழகத் தோழர்கள் ஏற்படுத்திக்கொள்ளவில்லை என்று கேட்கவும், கடிந்துரைக்கவும் எழுதப்பட்டது அல்ல. இனி அவ்விதமான முறையிலே பணி இருக்கவேண்டும் என்பதனை எடுத்துக்காட்டுவதற்காகக் கூறினேன்.

தொகுதியின் நிலைமைகளை, நெருங்கிய, இடைவிடாத தொடர்புமூலம் நன்கு தெரிந்து வைத்துக்கொள்ளும் குழு அமைந்து, நல்ல முறையிலே வேலை செய்து வந்தால், நாளா வட்டத்தில், இந்தக் குழு அந்தத் தொகுதிக்கு ஏற்ற வேட்பாளர் எவர் என்பதை எடுத்துரைக்கும் தகுதியும் பெற்றுவிடும். அந்தத் தகுதி, மெள்ளமெள்ள உரிமையாகவும் வடிவமெடுக்கக்கூடும்.

இன்று நமது கழக அமைப்பு, சிற்றூர்க் கிளை, வட்டக் கழகம், மாவட்டக் கழகம் என்று, நிர்வாக அமைப்புகளை அடிப்படையாகக்கொண்டு இருந்து வருகிறது. இதனைக் கூடத்திருத்தி, தொகுதிகளை நமது "வட்டமாக'க் கொள்ள லாமோ என்றுகூட எண்ணம் பிறக்கிறது.

அடித்தளமாகச் சிற்றூர்க் கிளைகளும், ஒரு தொகுதியிலே எத்தனை சிற்றூர் பேரூர்க் கிளைகள் உள்ளனவோ அவை இணைக்கப்பட்டு "தொகுதி' அல்லது வட்டம் அல்லது கோட்டம் என்ற முறையிலே, அமைக்கலாமா என்பதுபற்றி, எண்ணிப் பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இதிலே எழக்கூடிய நல்லவைகளைப்பற்றி மட்டுமேயல்லாமல், கெடுதல்கள் எவை யேனும் உண்டாகக்கூடும் என்று தோன்றினால் எடுத்துரைக்கத் தயங்கவேண்டாம் - கடித வாயிலாக. ஏனெனில், நான் இதுபற்றி எந்த ஒரு முடிவான கருத்துக்கும் வந்துவிடவில்லை; யோசிக்கத் தொடங்கியுள்ளேன்.

காங்கிரசல்லாதார் வெற்றிபெற்ற இடங்களை வேண்டு மென்றே புறக்கணித்து, பாழ்நிலை ஏற்படுத்தி, அதன்மூலம் கெட்டபெயரைக் காங்கிரசல்லாதாருக்கு ஏற்படுத்தி வைத்து அதனைப் பயன்படுத்தி அடுத்த தேர்தலிலே காங்கிரசு கட்சிக்கு வெற்றிதேடிக்கொள்வது என்பது "தரக்குறைவான' முறை; மக்களாட்சி முறையைப் பாழ்படச் செய்யும் சூது; மக்கள் இன்னமும் பாமரத் தன்மையிலேயே இருக்கிறார்கள், அவர்களை மிரட்டவும் மயக்கவும் முடியும் என்ற எண்ணம்கொண்டவர்களின் சூழ்ச்சித் திட்டம்.

இந்த "முறை' வளருவது, ஆட்சியில் இடம் பிடித்துக் கொள்ளும் எந்த ஒரு கட்சியும், தன் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ள வழி செய்து, மக்களாட்சியின் மாண்பினை மாய்த்து விடும். இந்த ஆபத்தான முறையை எதிர்த்து செயலற்றதாக்கி விடவேண்டும்.

ஆளுங்கட்சி வெற்றிபெறாத தொகுதிகளிலே, எந்த முன்னேற்றமும் ஏற்படாது என்று கூறுவது அறியாமையும் அகந்தையும் மட்டுமல்ல, அரசியல் அறமுமாகாது; சட்டமும் அதனைஅனுமதிக்காது. எனவே, ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டுவிடும் கட்சியினர் வெளிப்படையாக அவ்விதம் பேச மாட்டார்கள். சட்டசபையில் பேசும்போதோ, கட்சிக்கு அப்பாற் பட்டவர்கள்போலவும் மக்களுடைய நலன்களுக்காகவே வந்துதித்துள்ளவர்கள்போலவும் பேசுவர். செயலோ முற்றிலும் அருவருக்கத்தக்கதாக இருக்கும்.

"ஏரி மராமத்து வேலை ஏழாண்டுகளாகச் செய்யப் படவில்லை; இந்த ஆண்டாவது அதனை மேற்கொள்ள வேண்டும்.''

என்று சட்டசபையிலே கழகத் தோழரோ, காங்கிரசல்லாதவர் எவரேனுமோ கூறும்போது, அமைச்சர்கள் ஆத்திரப்பட்டு,

"எங்களைத் தோற்கடித்த தொகுதி அது; அங்கு ஏரிமராமத்து வேலை செய்ய முடியாது''

என்று பேசமாட்டார்கள். பேசக்கூடாது. பேசினால் மக்களாட்சியின் மாண்பு அறிந்தோர் அனைவரும் கண்டிப்பார்கள். எனவே, அமைச்சர்கள் அவ்விதம் பேசாமல்,

"கனம் அங்கத்தினர் தமது தொகுதியிடம் அக்கரை காட்டுவது பாராட்டத்தக்கதுதான், என்றாலும், ஏரி மராமத்து வேலை என்ற பிரச்சினையில் உள்ள சகல தகவல்களையும் படித்துத் தெரிந்துகொண்டு, இங்கு அதுபற்றிப் பேசியிருந்தால் பொருத்தமாகவும் இருந்திருக்கும், தக்க பலனும் ஏற்படும்.''

என்று கூறுவார். தம்பி! புரிகிறதல்லவா? இந்த உறுப்பினர் விவரம் தெரியாமல் பேசுகிறார், படிக்காமல் எதையோ வாய்க்குவந்ததைப் பேசுகிறார் என்று அமைச்சர் கேசெய்கிற ôர். ஏன்? அந்த உறுப்பினரைத் தேர்ந்தெடுத்தவர்கள், செச்சே! விவரமறியாத, பொருத்தமாகப் பேசத்தெரியாத ஒருவரை அல்லவா, நாம் தேர்ந்தெடுத்து அனுப்பிவிட்டோம். அதனால்தான், நமது தொகுதி சீர்படவில்லை என்று எண்ணிக்கொள்ளவேண்டுமாம்! எரிச்சல் கொள்ளவேண்டுமாம்!! ஏளனம் செய்யவேண்டும், எதிர்க்கவேண்டும், இனி "ஓட்டுப் போடக்கூடாது' என்று தீர்மானிக்கவேண்டுமாம்! இதற்காகவே இப்படி, "இடுப்பொடிக்கும் பேச்சுப்' பேசுவதை வாடிக்கையாக்கிக் கொள்கிறார்கள்.

அதிலும், ஆளுங்கட்சியிலே எண்ணிக்கை மிக அதிகமாக இருந்துவிட்டால் அமைச்சர் இதுபோன்ற "இடுப்பொடிக்கும்' பேச்சுப் பேசியதும், ஆளுங்கட்சியினர் ஆரவாரம் செய்வர்;

கேலிச் சிரிப்பொலி செய்வர்! செச்சே! நாம் தேர்ந்தெடுத்து அனுப்பிய உறுப்பினருக்கு, சட்டசபையிலே மரியாதை கிடையாது; கேலிப்பொருளாக இருக்கிறார்! - என்று எண்ணி, அந்தத் தொகுதி மக்கள், தமது உறுப்பினர் குறித்துத் தாழ்வான கருத்தைக் கொள்ளவேண்டும் என்பதற்காகச் செய்யப்படும், "மட்டரகமான' முயற்சி இது. இதனை, மக்களாட்சியின் மாண்பினைப் போற்றுபவர்களும், அறநெறியில் பற்றுக்கொண்டவர்களும் மேற்கொள்ள மாட்டார்கள்; எதைச் செய்தாவது அரசியல் ஆதிக்கத்தைப் பெறவேண்டும், எந்த முறைகளைக் கையாண்டாகிலும் பெற்றதை இழந்துவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்ற போக்கினர், இம்முறைகளைக் கையாள்வர்.

தொகுதி மக்களுக்கு உறுப்பினரிடம் பற்றுக் குறைவு ஏற்பட்டுவிடுவதுகூட இருக்கட்டும்,

என்ன சொன்னாலும் கவனிக்க மறுக்கிறார்கள்.

எதைக் கூறினாலும் ஏற்றுக் கொள்வதில்லை.

எத்தனைமுறை கேட்டாலும் நன்மை கிடைப்பதில்லை.

என்ற நிலையைக் காணும்போது, உறுப்பினருக்கே, மனம் உடைந்து போகிறது. சட்டசபையிலே நாம் இருப்பதனால் என்ன பலன்? என்ற சந்தேகம் அவருக்கே ஏற்பட்டுவிடுகிறது. எதையும் செய்யமுடியாமல், எதற்காகச் சட்டசபையிலே இருப்பது? என்று எண்ணுகிறார். சலிப்பு உணர்ச்சி மேலோங்கிவிடுகிறது.

இதற்கு இடையிலே, அமைச்சர்கள் அந்தத் தொகுதிகளிலே "உலா' வருவார்கள்; தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் களை உடனழைத்துக்கொண்டு அல்ல; அவரால் தோற்கடிக்கப் பட்ட காங்கிரஸ் கட்சிக்காரருடன்!!

காங்கிரஸ் ஆட்சியின் அருமை பெருமைகளை அமைச்சர் பேசுவார்.

தொகுதியின் சீர்கேடான நிலைமைகளையும், இதனைப் போக்கமுடியாமல் சட்டசபையில் வெட்டியாக உட்கார்ந்து விட்டு வரும் உறுப்பினரைக் கண்டித்தும், காங்கிரஸ் "பிரமுகர்கள்' பேசுவார்கள்.

அடுத்தமுறை எப்படியும் காங்கிரசுக்கு வெற்றி தேடிக் கொடுத்து, தொகுதியின் சீர்கேடுகளைப் போக்கிக்கொண்டு, சகலவிதமான நன்மைகளையும் பெற்றுக்கொள்ள இப்போதே உறுதி எடுத்துக்கொள்ளவேண்டும் என்று, ஊரின் "பெரிய புள்ளி' பேசுவார். அமைச்சர் புன்னகை புரிவார்.

தம்பி! இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் மக்களுக்கு என்ன எண்ணம் ஏற்படும்? காங்கிரசுக்கு "ஓட்டுப்' போடாததால்தான் நமது தொகுதியிலே நன்மை கிடைக்கவில்லை; அதனாலேதான், காங்கிரசு அமைச்சர்கள் நமது தொகுதியைக் கவனிக்கவில்லை; நாம் தவறு செய்துவிட்டோம்; அடுத்தமுறை காங்கிரசுக்கு "ஓட்டுப்' போட்டால்தான், தொகுதி நிலைமை சீர்படும் என்ற முடிவுதானே.

இந்த முறையை மெத்தத் திறமையுடன், கழகம் வெற்றி பெற்ற தொகுதிகளில், காங்கிரஸ் தலைவர்கள் கையாண்டனர்.

ஏரி, மராமத்து வேலைபற்றி நம்ம எம். எல். ஏ. பேசினாராமே. . . . .

ஓ! பேசினாரே! "கொல்'லென்று சிரித்தார்களே அவர் பேச்சைக் கேட்டு. . . . .

ஏன்? ஏன்? ஏன் சிரித்தார்கள்? சிரிக்காமல் என்ன செய்வார்கள்? ஏதாவது விவரம் தெரிந்து பேசினால்தானே!!

அப்படியா. . . ஆசாமி மோசம்தானா. . . .?

ஆருடக்காரனைப் போய்க்கேள்! அன்று காங்கிரசுக்கு ஓட்டுப்போட்டிருந்தால், இப்படியா நிலைமை இருந்திருக்கும்! ஏரி மராமத்து வேலைக்கு ஏழு ஆயிரம் இருந்தால் போதும். வருஷம் இரண்டு ஆகிறது, இந்த ஆள் சட்டசபைக்குப் போய்! இந்த ஒரு காரியத்தைச் செய்ய முடியவில்லை. எப்படி முடியும்! சாமர்த்தியம் வேண்டாமா? மந்திரிகளை மனம்போன போக்கிலே திட்டிவிட்டு, ஏரி மராமத்து வேலையைக் கவனிக்கச் சொன்னால் அவருக்குத் தான் எப்படி மனம் வரும்? ஏரியாவது குளமாவது என்று இருந்துவிட்டார்! நாம்தானே கஷ்டப்படுகிறோம்.

இப்படி ஊரிலே "பேச்சு' கிளம்பும்; கிளப்பி விடப்படும்!! உறுப்பினர்மீது அருவருப்பு வளராமல் இருக்குமா?

எந்தக் கட்சிக்கு மக்கள் வாக்களித்திருந்தால், ஆளுங்கட்சி எதுவரினும், கட்சிப் பாகுபாடு பார்க்காமல் எல்லாத் தொகுதி களுக்கும் நல்லவைகளைச் செய்தாகவேண்டும்; அதுதான் சட்டம், அதுதான் அறநெறி என்ற அடிப்படையை எல்லா மக்களுமா அறிந்திருக்கிறார்கள்? எடுத்துக் கூறும்போது, எல்லோருக்குமா புரிந்துவிடுகிறது? புரிந்துகொள்பவர்கள்கூட, ஆமாம்! நமது உறுப்பினர் என்ன செய்வார்? அவர், அவருடைய கடமையைச் செம்மையாகத்தான் செய்திருக்கிறார்; காங்கிரஸ் மந்திரிகள்தான் வேண்டுமென்றே, வஞ்சனை செய்கிறார்கள்; இப்படிப்பட்ட வஞ்சகம் செய்யும் கட்சியை இனி ஒருமுறை ஆட்சியிலே அமரவிடக்கூடாது? அமர்ந்தால், ஜனநாயகத்துக்கே ஆபத்து ஏற்படும் என்ற தெளிவான முடிவுக்கு எங்கே வரமுடிகிறது!

நமக்கு எதற்காகத் தத்துவ விசாரம். நமக்கு நல்லது வேண்டும். காங்கிரசுக்கு "ஓட்டு'ப் போட்டால்தான் நல்லது கிடைக்கும் என்று அமைச்சர்களே கூறிவிடுகிறார்கள். அவர்களிடம் போய், இது சரியா, முறையா, அறமா, நெறியா என்றெல்லாம் விவாதம் நடத்தவா முடியும்! நமது காரியத்தைச் சாதித்துக்கொள்ள வழிதேடவேண்டுமே தவிர, அரசியல் தத்துவம்பற்றிப் பேசிக்கொண்டிருப்பது, வீண் வேலை. ஆகவே காங்கிரசுக்கே "ஓட்டு'களைப் போட்டு விடுவோம்

என்றுதான், வாழ்க்கைத் தொல்லையிலே ஈடுபட்ட பெரும் பாலோர் எண்ணுவார்கள்.

இந்த மனப்பான்மையிலே நம்பிக்கை வைத்துத்தான், காங்கிரசுக் கட்சியினர், சென்ற முறை, கழகம் வெற்றிபெற்றத் தொகுதிகளிலே பேசும்போது, மிக உறுதியாகக் கூறிவந்தார்கள்.

அடுத்தமுறை இங்கு கழகம் வெற்றி பெறாது. என்று திட்டமிட்டு வேலையும் செய்தார்கள்; மிகப் பெரும் அளவு வெற்றியும் பெற்றார்கள். இப்போது கழகம் வெற்றிபெற்றுள்ள 50-இடங்களிலும், மறுபடியும் கழகம் வெற்றிபெற விடமாட்டோம் என்று, இப்போதே பேசுகிறார்கள்.

அக்ரமம், என்கிறாய்! அரசியல் சூழ்ச்சி என்று கண்டிக்கிறாய்! அதனால் என்ன, தம்பி! அதற்காக, ஆதிக்க வெறி பிடித்தவர்கள், அச்சமோ கூச்சமோ அடையப்போவதில்லை!

அப்படியானால், அண்ணா! இந்த ஆபத்திலிருந்து விடுபட, இந்த அநீதியை ஒழித்துக்கட்ட, வழியே கிடையாதா? இப்படியே ஒரு அக்ரமத்தை வளரவிடலாமா? என்றெல்லாம் கேட்கிறாய். தம்பி! வழி இல்லாமற் போகவில்லை. சென்ற முறையே அதனைக் குறிப்பாக நமது தோழர்களிடம் கூறி இருக்கிறேன்; ஆனால் திட்டமிட்டுச் செயலில் ஈடுபடவில்லை சென்றமுறை.

இம்முறையும் அதுபோல இருந்துவிடப்போவதில்லை.

தொகுதியில் நெருங்கிய தொடர்பினை நமது உறுப்பினர்கள் வைத்துக்கொள்ளவேண்டும்.

அவருக்குத் துணையாகவும், வழிகாட்டவும், இந்தத் தொடர்பினை ஒரு குழு கவனித்துக்கொள்ளவேண்டும்.

தொகுதிக்குத் தேவையானவைகளைக் குறித்துச் சட்டமன்றத்திலே எடுத்துரைக்கவேண்டும். எடுத்துரைத்ததுபற்றித் தொகுதியில் அவ்வப்பொழுது உறுப்பினர்களும், குழுவும் விளக்கியபடி இருக்கவேண்டும்.

முறைப்படி எடுத்துக் கூறியும், காங்கிரசு அரசு தொகுதியின் குறைபாடுகளை நீக்கத் தவறினால், அதனைத் தொகுதி மக்களிடம் எடுத்துக் காட்டவேண்டும்.

அதற்குப் பிறகும் காங்கிரஸ் அரசு வேண்டுமென்றே தொகுதியைப் புறக்கணித்து, கேடு செய்திட முனைகிறது என்றால், தொகுதியின் உறுப்பினரும், குழுவும், தொகுதியின் குறைபாடுகளை நீக்க, நேரடி நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். இந்த நேரடி நடவடிக்கை என்பது, அமைதி கெடாதவிதமாகவும், சட்டத்துக்குக் கேடு ஏற்படாத முறையிலும் அமைதல்வேண்டும். சம்பந்தப்பட்ட அலுவல கங்கள், அலுவலாளர்கள் முன்பு, மறியல் செய்தேனும், தொகுதியின் குறைபாடுகள் நீங்கிட வழிகாணவேண்டும். அந்தக் காரியத்துக்குப் பொறுப்பாளர், அமைச்சர் இல்லம் அல்லது அலுவலகம் எனும் இடங்களும், "மறியல்' செய்வதற் கான இடங்களாகிவிடவேண்டும்.

தொகுதியின் நன்மைக்காக வாதாட மட்டுமல்ல, கிளர்ச்சியில் ஈடுபட, அதற்காகத் தடியடிபட, சிறை புக, கஷ்ட நஷ்டம் ஏற்க, உறுப்பினர்கள் துணிகிறார்கள் என்ற நிலைமை, இனி ஏற்பட்டாகவேண்டும்.

இந்த முறையின் மூலமாகத்தான், தரக்குறைவான வழிகளால் அரசியல் ஆதிக்கத்தை இழந்துவிடாமல் இருக்கும் போக்கை முறியடித்து, மக்களாட்சி முறையின் மாண்பினைப் பாதுகாத்திட இயலும்.

நமக்காக, நமது உறுப்பினர் சட்டசபையிலே வாதாடுகிறார் என்று மட்டும், இல்லங்களில் பேச்சு எழுவது போதாது; நமக்காக நமது உறுப்பினர், ஆட்சியாளர்களை எதிர்த்துக் கிளர்ச்சி செய்து, சிறையில் தள்ளப்பட்டு, வாடிக்கொண்டிருக்கிறார் என்று, உள்ளம் நெகிழ இல்லந்தோறும் பேசிடும் நிலை எழவேண்டும். கழகத்தவர்கள், இனி இதற்குத் தம்மைத் தயாராக்கிக்கொள்ளவேண்டும்.

சென்றமுறை, நான் நேர்மையான அரசியல் முறையில் ஆட்சிக் கட்சியினருக்கு நம்பிக்கை இருக்கும் என்று எண்ணி, "தண்டலம் முறை'யைக் கடைப்பிடித்துப் பார்த்தேன்; பலன் ஏற்படவில்லை.
------------------

அறுவடையும் - அணிவகுப்பும் (4)

வீடு கட்டிய கதை -
தி. மு. க. பற்றி அமைச்சர் கருத்துரைகள் -
முன்னும் பின்னும்.

தம்பி!

வானவெளியிலே! "வாயுவேக மனோவேகத்திலே' பயணம் செய்யும் ஏற்பாடு உருவாகிக்கொண்டு வருகிறது என்பதுபற்றி, மெத்த ஆர்வத்தோடு, விளக்கமாக, விவரம் அறிந்த ஒருவர் எடுத்துக் கூறுகிறார் என்று வைத்துக்கொள் - இதனைக் கேட்டு, இதனால் விளையக் கூடிய நன்மைகள் யாவை என்பன பற்றி விவரம் கேட்டறியவும், இது எப்படி நடைபெற முடிகிறது என்று விளக்கம் கேட்டுத் தெளிவுபெறவும் சிலருக்குத் தோன்றும். சிலர் வியப்பிலே மூழ்கி விவரம் விளக்கம் கேட்காமலேயே இருந்துவிடுவர்;சிலர் இதனைப் புரிந்துகொள்ளாமலேயே, என்னமோ சொன்னார்கள் கேட்டோம்; எத்தனையோ பேர் எதை எதையோ சொன்னார்கள் கேட்டோம்; அதுபோல இது ஒன்று என்று இருந்துவிடுவர்; மேற்கொண்டு விவரம் விளக்கம் கேட்டறிந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணம்கூடத் தோன்றாது; வேறு சிலர், வியப்புக்குரியது இதுமட்டும் அல்ல; இதனைவிட வியப்புமிக்கது உண்டு என்று கூறித் தமக்குத் தெரிந்த தகவல்களைக் கூறுவர்; இன்னும் சிலர் இது வியப்புக் குரியதே அல்ல, மிக அற்பமானது என்று கூறிவிடுவர்.

எது கூறினும், எது நேரிடினும், பலர் பலவிதமான போக்கிலே, தமது கருத்தினைக் கூறுவர்; அவரவர்களின் நினைப்பு, நிலை, தரம், தன்மை ஆகியவைகளைப் பொறுத்து, போக்கு அமையும்.

ஒரு சிலர், அலாதியான போக்குடன் இருப்பர். எதனைக் குறித்தும் அக்கரையற்றும், எவரைக் குறித்தும் அலட்சியமாகவும் தமது போக்கு இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டிக் கொள்வதிலே இச்சையும், துடிப்பும் அவர்களுக்கு மிகுதியாக இருக்கும்.

வானவெளிப் பயணம்பற்றிப் பலர் பல்வேறுவிதமான கருத்துக் கூறுவர்; இவர்களோ, அலட்சியப் போக்குடன்,

"வானவெளியில் சுற்றிவிட்டு வரத்தானே ஏற்பாடு செய்கிறார்கள்; அங்கேயே இருந்துவிடுவதற்கு அல்லவே!''

என்று கேட்டு, வானவெளி சுற்றிவர ஏற்பாடு செய்தது மிகப்பெரிய அதிசயம் அல்ல என்று, விவரம் தெரியாதவர்கள் எண்ணிச் சிரித்திடச் செய்வார்கள்.

வானவெளிப் பயணம்பற்றித் தகவல்களைத் திரட்டி வந்து ஆர்வத்தோடு கூறிக்கொண்டிருந்தவருக்கு, எரிச்சல் ஏற்படும். அதைக் கண்டு, அலட்சியப் போக்கிலே பேசியவர், மகிழ்ச்சி கொள்வார்.

இப்படிப்பட்டவர்களை, தம்பி! பார்த்திருக்கலாம்; எங்கும் இருக்கிறார்கள்; எதற்கும் இந்தப் போக்கிலே பேசுவார்கள்.

சந்திரமண்டலம் செல்கிறார்கள் என்று கூறிப் பாரேன், சூரியமண்டலம் போகவில்லையே! என்று கேட்டு, கூறியவரின் ஆர்வத்தைக் கேலிக்குரியதாக்குவார்கள். வியப்புக்குரியவைகள்பற்றியே இவர்கள் போக்கு இவ்விதம் இருக்குமென்றால், சாதாரண நிகழ்ச்சிகள் குறித்து இவர்கள் கொள்ளும் நினைப்புப்பற்றியும், வெளியிடும் கருத்துப்பற்றியும் அதிகம் விளக்கவேண்டுமா!

எதைக்கண்டும், கொண்டும் எவரும் மகிழ்ச்சி அடையவோ பெருமைப்படவோ விடமாட்டார்கள். பிறர் மகிழ்ச்சியும் பெருமையும் அடையமுடியாமல் போவதிலேதான், இவர் களுக்கு மகிழ்ச்சி, பெருமை!

நல்ல பாலிலே விழுகிறதே ஈ, இரண்டு சொட்டுகளாவது குடித்து மகிழ்கிறதா இல்லை! செத்து மிதக்கிறது!! பால் கெட்டுச் சாக்கடையில் ஊற்றப்படுகிறது. இதனால் ஈக்கு என்ன இலாபம்!

பால் சாப்பிட எண்ணியவன் சாப்பிடவில்லை அல்லவா? அதுதான்!

இந்த மனப்போக்கிலுள்ளவர்கள், தமக்கென்று ஒருவித மான பலனும் கிடைக்காவிட்டாலும், மற்றவர்கள் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறபோது, பாலில் விழும் ஈபோலாகி, அந்த மகிழ்ச்சியை மாய்க்கவும், பெருமையைக் குலைக்கவும் முற்படுவர்.

திருமணம், புதுமனை புகுவிழாப்போன்ற நிகழ்ச்சிகளிலே, மகிழ்ச்சி பெறுவோர் பலர் இருப்பர்; அந்த இடங்களிலே, இப்படிப்பட்டவர்கள் சிலர் இருந்துகொண்டு, மற்றவர்களுக்கு எரிச்சலூட்டித் தமக்கு மகிழ்ச்சி தேடிக்கொள்வர்.

குட்டநோய் கொண்ட ஒருவர், அவர்பால் அனுதாபம் காட்டுபவரிடமே இதுபோல நடந்துகொண்டது, எனக்குத் தெரியும்.

உங்களைப்போன்ற நல்லவர்களுக்கா இதுபோன்ற கொடிய நோய் வருவது, என்னமோ போங்கள், பார்க்கும்போதே வயிறு பகீர் என்கிறது; துவக்கத்திலேயே கவனித்திருக்க வேண்டும்; தக்க மருந்து எடுத்துக்கொண்டிருக்கவேண்டும்; அப்போது கவனிக்காமல் விட்டுவிட்டீர்கள்; இப்போது இந்த அளவுக்கு வளர்ந்துவிட்டது - என்றெல்லாம் நண்பர், பரிவுடன் பேசி, நோய்கொண்டவருக்கு ஆறுதலளிக்க முற்பட்டார்.

உடல் மட்டுமல்ல, உள்ளமே நோய்கொண்டவராகிப் போயிருந்த அந்த ஆசாமி, இவ்வளவு பரிவுடன் ஆறுதலளித்த வருக்கு நன்றி கூறவில்லை. மாறாக, ஆறுதல் கூறியவரை உற்றுப் பார்த்துக்கொண்டு,

"என் விஷயம் இருக்கட்டும். உனக்கு, நெற்றியிலே என்னமோபோல இருக்கிறதப்பா. சும்மா, "தேமல், படை' என்று இருந்துவிடாதே.''

என்று பேசி, ஆறுதல் பேசியவர் அச்சப்படும்படி செய்து விட்டார்.

இந்தப் போக்குடையோர், ஒருவன் புதுவீடு கட்டி, அதிலே குடிபோவதுபற்றி, என்னென்ன பேசுவார்கள் என்பதை எண்ணிப்பார், தம்பி! வேடிக்கை வேடிக்கையாக இருக்கும்; இப்படிப்பட்டவர்களின் மனப்போக்கு எத்தகையது என்பது விளங்கும்.

***

வீடு கட்டிவிட்டானாம் வீடு. ஊரிலே உலகிலே யாருமே கட்டாத விதமான வீடு! பெரிய அரண்மனை கட்டிவிட்டதாக நினைப்பு!

தஞ்சாவூர் அரண்மனையே கலனாகிப் போய்விட்டதாம். இவன் கட்டிவிட்ட வீடு காலமெல்லாம் நிலைத்தா இருக்கப்போகிறது?

அட! என்ன இதைப்போய் இவ்வளவு பிரதாபப்படுத்திப் பேசிக்கொண்டிருக்கிறீர்கள், வேறு வேலையில்லாமல். என்னமோ, ஒரு வீடு கட்டிவிட்டான், வாயைக் கட்டி வயிற்றைக் கட்டிப் பணம் சேர்த்து. . . . .

அவ்வளவுதான் உனக்குத் தெரியுமா! அட, பைத்தியக் காரா! சேட்டிடம் வாங்கியிருப்பது, ஐந்து ஆயிரம்! தெரியுமா! பாங்கியிலேகூடப் பத்தோ எட்டோ. . . . '

கடன் வாங்கித்தானா இந்தப் பகட்டு. . . . .

வீட்டிலே ஒரு நகை கிடையாது, எல்லாம் விற்றுத் தீர்த்து விட்டான். . . . . .

கிடக்கட்டும், கையிலே உள்ள பணம், நகைவிற்ற பணம், இதனைக்கொண்டு வீடுகட்டிவிட்டால் பரவாயில்லை, கடன் வேறு பட்டிருக்கிறானே. . . . . . அதை எப்படித் தீர்க்கப் போகிறான்?

அது கிடக்கட்டும். . . . கடன்பட்டு ஏன் இவ்வளவு பெரிய வீடு கட்டவேண்டும். . . . . ஊர் மெச்சிக்கொள்ளவா?

பெரிய புள்ளி என்று எண்ணிக்கொள்வார்கள் - கடன் கொடுத்தவனும் திருப்பித்தரச் சொல்லித் தொல்லை தர மாட்டான் - புதிதாகக் கடன் கேட்டாலும், வீட்டைப் பார்த்து மலைத்துப்போய், தட்டாமல் தயங்காமல் கொடுப்பான் என்ற நப்பாசை காரணமாகத்தான், இவ்வளவு பெரிய வீடு கட்டிக் கொண்டான். . . . .

எல்லோருமே பெரிய வீடு, பெரிய வீடு என்று பேசிக் கொண்டு இருக்கிறீர்களே, என்ன பெரிய வீடு இது. . . .?

அட, அவன் நிலைக்கு அது பெரிய வீடுதானே. . . .

முன்பு அவன் புறாக்கூண்டுபோன்ற வீட்டில்தானே இருந்துவந்தான். . . . இது பெரிது அல்லவா!

பார்வைக்குத்தான் பெரிது. . . . . அதிலே போட்டுக் கட்டப் பட்டிருக்கும் சாமான்கள் மட்டம், தெரியுமா? தேக்கு மரமா, கதவு, பலகணி எல்லாம்? மாம்பலகை. . . கள்ளி இப்படிப் பட்டவை. . .

ஆமாமாம்! சுவரிலே வெடிப்பு இருக்கிறது. . . . .

சுண்ணாம்பு அரைத்த இலட்சணம் அப்படி. . . . . வேகாத செங்கல்லை வைத்துச் சுவரை எழுப்பிவிட்டால், வெடிப்பு இருக்காதா. . . . .

ஆனால், ஊரார் பார்க்கிறபோது, கண்ணுக்கப் பெரிய வீடு தெரிகிறதல்லவா. . . . . உடனே ஆசாமி வளமாக இருக்கிறான் என்று எண்ணிக்கொள்கிறார்கள். . . .

உள்ளே புகுந்து பார்ப்பவர்களுக்குத்தானே உண்மை தெரியும். . . .

கொஞ்ச நாள் போகட்டுமே. . . . . தானாக எல்லா விஷயமும் வெளியே வந்துவிடும், பாரேன். கடன் கொடுத்தவர்கள் வரிசையாக வந்து நிற்பார்கள். . . . வீடு, மூலைக்கு மூலை ஒழுகும், வெடிக்கும். . . . . கலனாகிப் போகும் . . . .

பழுது பார்க்கக்கூடப் பணம் கிடைக்காமல் பயல் திண்டாடப்போகிறான். . . . .

இப்போது புதுவீடு கட்டிவிட்டோம். . . . . பெரிய வீடு கட்டிவிட்டோம் என்று பூரித்துக்கொண்டிருக்கிறான். . . . .

ஊராரும் அவன் கட்டியுள்ள வீட்டைப் பார்த்து, அவனைப் பெரிய புள்ளி என்று எண்ணிக்கொள்கிறார்கள். . . . மரியாதை காட்டுகிறார்கள். . . . .

ஆனால் ஒரு விஷயம் நாமே ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்; கடன்பட்டானோ, கைப்பொருளைச் செலவிட் டானோ, தரமான சாமானோ மட்டமானவையோ, எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும், இவன் இப்படி ஒரு வீடு கட்டுவான் என்று மட்டும் யாரும் எதிர்பார்த்ததில்லை. நாமே நினைத்ததில்லை.

அது உண்மைதான்; வீடு கட்டப்போகிறான் என்று செய்தி வந்தபோதுகூட நம்பவில்லை. . . . .

நம்பவில்லையா. . . அட, கேலியே செய்தோம். இவனாவது பெரிய வீடு கட்டுவதாவது என்று. . .

இருக்கிற வீடே பறிபோகப்போகிறது என்றுகூடத்தான் சொன்னோம். . . . . நம்மை எல்லாம் ஏமாற்றிவிட்டான். . . . நம்முடைய பேச்சையெல்லாம் பொய்யாக்கிவிட்டான். . . .

இது உண்மைதான். . . . அதை எண்ணிக்கொண்டால் நமக்கே வெட்கமாகத்தான் இருக்கிறது.

கேட்பானல்லவா, என்ன ஐயா! என்னை அவ்வளவு கேபேசினீர்களே. . . . எதுவும் என்னால் ஆகாது என்று ஏசினீர்களே . . . . . இப்போது பார்க்கிறீர்களே பெரிய வீடு. . . . . என்ன சொல்கிறீர்கள் என்று கேட்பானல்லவா. . . . .?

இவனை நம்பி எவன் பணம் கொடுப்பான் என்றுகூடத் தான் பேசியிருக்கிறேன். . . . .

பணத்தைக் கொடுத்து ஏமாந்து போகாதீர்கள் என்று நான் எச்சரிக்கை செய்தேன். . . .

பணத்தைக் கொடுக்காதபடி நான் சில இடங்களைத் தடுத்தும் இருக்கிறேன். . . .

அப்படி எல்லாம் இருந்தும், பணமும் கிடைத்தது, வீட்டையும் பெரிதாகக் கட்டிக்கொண்டான் என்பதை எண்ணும்போதுதான், வெட்கமும் கோபமும் பீறிட்டுக்கொண்டு வருகிறது.

எனக்கும் அப்படித்தான். ஆனால், நாமும், அவனைப் பார்த்து பெரிய வீடு கட்டிவிட்டாய், பரவாயில்லை என்று சொன்னால் பயலுக்குச் சந்தோஷம் அல்லவா ஏற்படும்.

ஆமாமாம்! துள்ளுவான்!

"போடா, மகா பெரிய வீடு கட்டிவிட்டாய் வீடு' என்று தான் நாம் சொல்லவேண்டும்.

ஏன், இன்னும்கூடச் சொல்லலாமே, அடா அப்பா! வீடு கட்டிவிட்டால் மட்டும் போதது; பட்ட கடனைத் தீர்க்க வேண்டும் என்று சொல்லலாம். . . .

ஆமாய்யா. . . அதுதான் சரி. . . அதுவும், பத்துப்பேர் எதிரில் சொல்லவேண்டும்.

வீடு நன்றாக அமைந்திருக்கிறது என்று சில பைத்தியங்கள் பேசும்; இவன் பல் இளித்தபடி நிற்பான்; அந்தச் சமயமாகப் பார்த்து இதைச் சொல்லவேண்டும்.

பயல் திருதிருவென்று விழிப்பான். பாராட்ட வந்தவர் களும் செச்சே! இவ்வளவுதானா விஷயம், கடன் பட்டுத்தான் கட்டினானா இந்த வீட்டை என்று பேசிக்கொள்வார்கள்.

"பழைய கடனுக்குப் புதிய வீடு ஏலம் போடப்பட்டது என்று பத்திரிகைத் தலைப்புப் பார்த்தேன், நீ பார்த்தாயோ' என்று, நான் கேட்கப்போகிறேன், அந்தப் பயல், சந்தனம் கொடுத்து, வெற்றிலைப் பாக்கு எடுத்துக்கொள்ளுங்கள் என்று எனக்கு உபசாரம் செய்வானல்லவா, அப்போது!!

***

சரி அண்ணா! புதுமனை புகுவிழாபற்றியும், பிறர் மகிழ்ச்சி கண்டு பொறாதார் போக்குப்பற்றியும், இப்போது எதற்காக இவ்வளவு கூறுகிறாய்; அறுவடையும் அணிவகுப்பும் கண்டு, அதன் பொருள்பற்றி விளக்கம் அறியும் வேளையில் என்று கேட்கிறாய்; தம்பி! காரணமாகத்தான் இதனைக் கூறுகிறேன்; பிறர் வாழக்கண்டு மனம்பொறாத போக்கினரின் பேச்சிப் போலவே, நமது கழகம்பெற்றுள்ள வெற்றிகண்டு, காங்கிரஸ் வட்டாரத்தினர் மனம் வெதும்பி, நாம் நமது வெற்றியால் ஏற்படும் மகிழ்ச்சியைச் சுவைக்க முடியாதபடி செய்துவிட, என்ன செய்யலாம், என்ன சொல்லலாம் என்று துடியாய்த் துடித்துக் கிடக்கிறார்களே, அந்தப் போக்கு எப்படிப்பட்டது என்பதை விளக்குவதற்காகத்தான், இதனைச் சிறிதளவு விவரமாக்கினேன்.

திராவிட முன்னேற்றக் கழகம், 34 இலட்சம் மக்களின் நல்லெண்ணத்தைப்பெறும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒடுக்கிவிட்டோம், பிளந்துவிட்டோம், செயலற்றதாக்கிவிட்டோம், எனவே தேர்தலிலே ஈடுபடக்கூட அதற்குப் போதுமான வலிவு கிடையாது. தேர்தல் வேலையின் பாரமே கழகத்தை மேலும் முறித்துவிடும், தகர்த்துவிடும் என்று அவர்கள் நம்பிக் கிடந்தனர்.

அதனாலேதான், கழகம் வெற்றிபெற்றது கண்டு, அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதிர்ச்சி காரணமாக அலறுகிறார்கள். அலறுவதுடன், நான் துவக்கத்திலே காட்டியுள்ளபடி, நாம் பெறக்கூடிய மகிழ்ச்சியையாவது, எரிச்சலூட்டும் பேச்சுப் பேசி மாய்க்கலாம் என்று முனைகிறார்கள்.

பணபலம், பத்திரிகை பலம், பதவி பலம், ஆதிக்கக்காரர் பலம் ஆகியவைகளை நிரம்பப்பெற்று, அவைகளைத் தக்க விதத்தில் தருணமறிந்து பயன்படுத்தினால் மட்டுமே தேர்தலில் வெற்றிபெற முடியும். அத்தகைய "பலம்' கழகத்திடம் ஏது? எங்கிருந்து கிடைக்கும்? ஆகவே தேர்தலிலே வெற்றி கிட்டப் போவதில்லை என்று காங்கிரசின் பெருந்தலைவர்கள் நம்பினார்கள்; மற்றவர்களை நம்பும்படி செய்தார்கள்.

இந்தத் தேர்தலிலே தி. மு. க. எப்படி. . . .? என்று "அகில இந்திய' காங்கிரசுத் தலைவர்கள் கேட்டபோதெல்லாம் இங்குள்ள காங்கிரஸ் தலைவர்கள் குறும்புப் புன்னகையுடன்.

"தி. மு. கழகமா? அது தேர்தல் வரையிலே இருந்தால் தானே. . . . . அதற்குள்ளாகவே தி. மு. க. தீர்ந்துவிடுமே! அங்கு இப்போது ஒரே குழப்பம், குளறுபடி, குத்து, வெட்டு. . . . .''

என்று மகிழ்ச்சி பொங்கப் பொங்கக் கூறிவந்தனர்.

"கட்சிக்கு உள்ளே பூசல்கள் எழுவது எங்கும் உண்டல்லவா?''

என்று கேட்டவர்களுக்குக்கூட, இவர்கள்.

இந்தக் கழகத்திலே ஏற்பட்டுவிட்ட குழப்பம் சாதாரணமானதல்ல. கழகத்தின் தூண்களே சாய்கின்றன! தூண்கள் சாய்ந்த பிறகு, கட்டிடம் நிலைக்குமா?

என்று கூறிக் கைகொட்டிச் சிரித்தனர்,

குழப்பம் செய்கிறவர்கள் உள்ளபடி, கழகத்திலே மிக வலிவு உள்ளவர்களா?

என்று கேட்ட கேள்விக்கு இவர்கள்,

ஆமாம்! உள்ளபடி கழகத்துக்கு ஓரளவு வலிவு, செல்வாக்கு, வளர்ச்சி இருப்பதே இவர்களாலேதான். இவர்கள் இல்லை என்றால் கழகமே கலகலத்துப் போகும். இவர்கள் இப்போது, கழகப் போக்குச் சரியில்லை, கொள்கை நியாயமில்லை, திட்டம் தவறானது, தீதானது என்று வெளிப் படையாகப் பேசவும், கழகப் போக்கை எதிர்க்கவும் முற்பட்டு விட்டார்கள்.

என்று இங்குள்ள காங்கிரஸ் தலைவர்கள் விளக்கம் அளித்தனர். அதுகேட்டு, "அகில இந்திய' காங்கிரசுத் தலைவர்கள் அகமகிழ்ந்ததுடன் இருந்துவிட்டனர்; எண்ணிப் பார்க்கவில்லை; ஆய்ந்து பார்க்கவில்லை. ஆய்ந்து பார்த்திருப்பார்களானால்,

ஒரு இடத்திலே மிக முக்கியமானவர்கள், தூண்கள், வலிவும் வளர்ச்சியும் தருகிறவர்கள் இருப்பார்களானால், அவர்கள், அந்த இடம் கெட்டுவிட்டது என்று கூறுவதிலே பொருள் இல்லை; கெட்டுவிட்டது என்று கூறி அவர்கள் அந்த இடத்தைவிட்டு வெளியேறத் தேவையில்லை; யாரார் இடத்தைக் கெடுத்துவிடுகிறார்களோ அவர்களை இந்தத் தூண்போன்றவர்கள் விரட்டியிருக்கவேண்டும்; அது முடியவில்லை என்பதிலிருந்து, இவர்கள் தூண்களும் அல்ல; தூய்மையாளரும் அல்ல; வல்லமை மிக்கோரும் அல்ல; வளர்ச்சிக்குப் பொறுப்பாளியும் அல்ல; என்பதனைப் புரிந்து கொண்டிருக்க முடியும்.

ஆனால், அகில இந்திய நிலையினருக்கு, தமது "தளபதிகளிடம்' அவ்வளவு நம்பிக்கை! முதுகைத் தட்டிக்கொடுத்தனர்!

முதல் மந்திரிகள், மந்திரிகள் என்ற நிலையினர் கூறும் போது, எப்படி நம்பிக்கை ஏற்படாமலிருக்கும்.

அவர்களின் பேச்சுக்குப் பொருளும் வலிவும் ஏற்றிவைக்கும் விதமாக, "ஏடுகள்' கழகத்திலே தலைதூக்கிய "எதிர்ப்பாளர் களை'த் தமது "செல்லப்பிள்ளைகள்' ஆக்கிக்கொண்டு, அவர் களின் பேச்சிலே பேரறிவையும், போக்கிலே பெருந்தன்மை யையும், கனைப்பிலே இடிமுழக்கத்தையும், கண் வீச்சிலே மின்னலையும் கண்டனர்!! பத்தி பத்தியாக "புகழ்' கொட்டினர்; அவசர அவசரமாக ஆரூடம் கணித்தனர். இதனை நம்பி, அகில இந்தியத் தலைவர்கள் மெத்தவும் ஏமாந்துபோயினர்!

தம்பி! நமது கழகத்துக்குள்ளே ஏற்பட்ட கலாம், காங்கிரசுப் பெரும் தலைவர்களுக்கு, இனிக் கழகம் தலை தூக்காது என்ற எண்ணத்தை ஏற்படுத்தியதிலே ஆச்சரியமில்லை. ஏனெனில், நம்மிலேயே பலருக்கு அந்தப் பீதி இருந்தது.

என்னைப் பொறுத்தமட்டில் எதிர்ப்பாளர்களாகி, நம்மை விட்டுச் சென்றுவிட்டார்களே, அவர்களின் அளவிடற்கரிய ஆற்றலால், நாம் அழிக்கப்பட்டுப் போய்விடுவோம்; அவர்கள் தமது கோபப் பார்வையாலேயே நம்மைச் சுட்டுச் சாம்பலாக்கி விடுவார்கள் என்ற கவலை எழுந்ததே இல்லை; எனக்கிருந்தது எல்லாம், மன உளைச்சல். பாசப்பிணைப்பினாலே ஏற்பட்ட உணர்ச்சிகள் என் கண்களைக் குளமாக்கின, கருத்தைக் குழப்பின, செயலற்றவனாகிவிட்டேன்.

நல்ல வேளையாக, எனக்கிருந்த அந்த மன உளைச்சலைப் போக்கும் விதமாக, விலகியவர்கள் தாங்கள் எவ்வளவு பெருந் தலைவர்கள் என்பதை மட்டுமல்ல, நான் எவ்வளவு அற்பன், இலாயக்கற்றவன் என்பதுபற்றிய தமது எண்ணங்களைப் பேச்சாலும், எழுத்தாலும் எடுத்துச் சொல்லி ஏசி ஏசி, என் மனதிலே அலைமோதிக்கொண்டிருந்த பாச உணர்ச்சி அவ்வளவையும் உலர்ந்துபோகச் செய்தனர். அதனால், நான், வறண்ட கண்ணினனானேன், குழப்பம் நீங்கப்பட்ட மனதின னானேன், செயலற்ற நிலை நீங்கிக் கடமையைச் செய்வோனானேன்!
------------------

சூடும் சுவையும் (1)

இராஜ்ய சபையின் பேச்சிற்குப் பிறர் கருத்து
பிரிவினைபற்றிய குழப்பம்

தம்பி!

வகை வகையான வண்ண மலர்கள் மணம் பரப்பும் பொழில்; பூங்காற்று வருடி இன்பம் வழங்கும் வேளை. புள்ளினம் இசை அளிக்கிறது. அதனினும் சுவைமிகு பாகுமொழி செவியில் விழுகிறது. பார்க்கிறான். இதற்குமுன் பார்த்தறியா வனப்புமிகு பாவையை! அமருக! என்கிறாள் அணங்கு, விழியால் விருந்திட்டு. அஃது ஓர் பளிங்கு மண்டபம். அவன் ஓர் இளைஞன் - போர் வீரன்.

தங்கள் தீரத்தை மெச்சாதார் இல்லை - இங்கு. . .

உறுதி தளராத உள்ளம் என்று உரைத்திடக் கேட்டு உவகைகொண்டேன் - பலர் உரைத்தனர்.

சீறி எழும் படைகளைச் சின்னாபின்னமாக்கத்தக்க போர்த்திறன் உண்டு, எனினும், காலமறிந்து காரியமாற்ற வேண்டும் என்று தாங்கள் நடந்துகொண்ட போக்கினைக் கண்டு, வியந்து பாராட்டாதார் இல்லை.

எதற்கும் அஞ்சமாட்டார் - ஆனால், என் மகனே! என்று பெற்றவள் உருக்கமுடன் பேசும்போது, நிலைகுலையத்தான் செய்யும் என்று கூறினர், சிலர்! தங்கள் தரமும் திறமும் அறியாதார்! பகைவர் வீசிடும் வாளுக்கு எவ்விதம் அஞ்சாது இருப்பீரோ, அதுபோன்ற உமது தாயின் தழதழத்த குரல் கேட்டும், கண்ணீர் கண்டும் தளராது நின்றீரோ, அதனை என்ன கூறிப் பாராட்டுவது.

மங்கை பேசுகிறாள் - இளைஞன் இன்பத்தில் மிதக்கிறான்.

வேறோர் புறத்திலே, அவன் வாழ்ந்திட அமைந்ததோர் மாளிகையில், வேலைப்பாடு மிகுந்த இருக்கைகளை வரிசைப் படுத்துவதிலும், மற்றப் பல ஆடம்பரக் கோலங்களை அமைப் பதிலும், எடுபிடிகள் மும்முரமாக இருந்தனர்.

பொன்னிழை மின்னிடும்அங்கி, வைரமணிகள் பதித்த வாளுறை! அவனுக்கு.

கருமுகில் நிறம் கொண்டதும், மின்னல் வேகத்தில் பாயத் தக்கதுமான புரவி - அவனுக்கு.

பன்னீர் பெய்கிறார்கள் அவன் குளித்திட. செயற்கை ஓடையில்!

பழச்சாறு நிரப்பிய கோப்பைகளை ஏந்திச் செல்கிறார்கள். பக்குவமறிந்த பணிப் பெண்கள் - அவன் குற்றேவல் கேட்டு நடந்திடும் குமரிகள்!!

பல ஆயிரம் வராகன்கள் பேழையில்! அவ்விதமான பேழைகள் பலப்பல!

அன்பரே! ஆருயிர் நண்பரே! - என்று அழைக்கிறார், இளவரசர்.

இவரில்லாவிட்டால் உமக்கு ஏது இந்த வெற்றி? என்று கேட்டுக் கெக்கலி செய்கிறாள் இளவரசி!!

ஓவியர் இரவு பகலென்று பாராமல் வேலை செய்கிறார் - நமது நண்பரின் வடிவத்தைத் தீட்டி, தமது கலைக்கூடத்தை அழகுபடுத்த என்கிறார் இளவரசர். சிலை அல்லவோ, சமைக்க வேண்டும் இவருக்கு! ஓவியம் போதாதே!! - என்கிறாள் இளவரசி.

இவர்க்கு ஏற்ற எழிலோவியம் உண்டு, இங்கு, அறிவாயோ? என்று கேட்கிறான் இளவரசன்; மின்னலிடையாள்!! - தெரியுமே முன்பே என்று குறுநகையுடன் கூறுகிறாள் இளவரசி.

இவ்வளவு விரைவில், இத்துணை எளிதாக, வெற்றி கிடைக்கும் என்று நான் எண்ணினதே இல்லை.

கோட்டை வலியுள்ளதல்லவோ!

படைக்கலன்களும் நிரம்ப, அவர்களிடம்!

முற்றுகை நீண்டுகொண்டே போகும் என்ற கலக்கம் எமக்கெல்லாம். . .

நேரடித் தாக்குதலில், நாம் சிக்கிக்கொண்டிருந்தால், நிரம்ப அழிவு நேரிட்டிருக்கும். . .

நல்ல வேளையாக எதிர்பாராத வகையிலே உதவி கிடைத்தது.

சாதாரண உதவியா!! கோட்டையைத் தாக்கித் தகர்த்திட வேண்டிய அவசியமே எழவில்லையே. . .

தட்டினோம்! திறக்கப்பட்டது!

கொட்டினோம் வெற்றி முரசு!

படையின் தளபதிகள் பேசி மகிழ்கிறார்கள் இதுபோல.

பன்னீர் தெளிக்கிறாள் பாவை, இங்கிதமறிந்த முறையில் அன்றோர் நாள், அடவி வழி நுழைந்து மாற்றாரைத் தாக்கப் புரவிமீது சென்றபோது, சேற்றாற்றிலே பாய்ந்ததால், சட்டை எல்லாம் சேறு மயமாகிவிட்டது - அந்த நினைவு வந்தது வீரனுக்கு. பலநாள் அந்தச் சேறுபட்ட சட்டையைப் பார்த்துப் பார்த்து அவன் பூரித்ததுண்டு - வெற்றி விருது என்று மகிழ்ந்ததுண்டு.

அன்று சேறு இன்று பன்னீர்!!

அன்று மாற்றாரைத் தாக்கச் சென்றபோது, சேறு, இன்று?

"நமது மண்டலத்துக்கு மகத்தான சேவை செய்த மணிமுடிக்கு மருதூர் மிட்டாவைப் பரிசாகத் தருகிறோம்''

என்று மன்னர் அவையிலே அறிவித்து, அதைத் தொடர்ந்து வரவேற்பு விழா நடத்துகிறார் - விழாவிலே ஒரு பகுதிதான் - பன்னீர் தெளித்து, பாவை பளிங்கு மண்டபம் அழைத்துச் சென்று பாடலாலும் ஆடலாலும் சுவையூட்டுவது.

காட்டாற்றுச் சேறு முன்பு! கட்டழகி தெளித்திடும் பன்னீர் இப்போது!!

பன்னீர் தெளித்திடும்போது அவனுக்குக் காட்டாற்றுச் சேறு நினைவிற்கு வருகிறது.

களிப்பு உலருகிறது - கண்களில் நீர் துளிர்க்கிறது.

காட்டாற்றுச் சேறு!! - என்று அவன் முன்பு, பலரிடம் காட்டிக் காட்டிக் களிப்படைந்தான். கட்டழகி பன்னீர் தெளிக்கிறாள் - எவரேனும் கண்டுவிடுவரோ என்று எண்ணிக் கலங்குவதுபோல இருக்கிறது அவன் பார்வை.

***

இரக்கமற்றவர்கள் பிடரியைப் பிடித்துத் தள்ளுகிறார்கள், வைக்கோற்புல் பரப்பப்பட்டிருந்த கட்டாந்தரையில் - உடலெங்கும் புண் அவனுக்கு - உடை கந்தல் - கீழே வீழ்கிறான் - புல்லில் மறைந்திருந்த பாம்பு சீறுகிறது - பாய்ந்து செல்கிறது - கைகொட்டிச் சிரிக்கிறார்கள் கொடியவர்கள்.

ஒருபுறம் நச்சரவம் - மற்றோர்புறம் அதனினும் கொடியவர்கள்.

வாட்போரில் வல்லவனாம் - வாகை பல சூடியவனாம்! வீரக் கழல் அணிந்தவனாம்!! ஏடா! நீதானே அது! கொட்டிலில் புகுந்துள்ள நீயோ, கொற்றம் ஆண்டவன்!! கொலு மண்ட பத்திலே கோலமயிலாள் ஆட, குயிலால் பாட, மிக்க கெம்பீர மாக வீற்றிருப்பாயாமே! கேள்விப்பட்டதுண்டு! இன்று? உனக்கேற்ற இடம்! நாட்டியமாட நாகம்!!

வெற்றி அல்லது வீரமரணம் என்று முழக்கமிடுவானாம். . .

இப்போது என்ன கூறி முழக்கமிடுவான்! கூவு. கூர்வாளை நம்பிக்கெட்டவனே! உரக்கக் கூவு!. . .வேழப் படையை முன்னே அனுப்பு! வேற்படையைப் பின்னோடு அனுப்பு! வெற்றிமுரசு எடுத்துச் செல்க!! - என்றெல்லாம் கூவு!!

கற்கோட்டையைத் துளைத்திட எவராலும் முடியாது என்று எண்ணிக்கொண்டான், ஏமாளி.

திறந்துவிட ஆள் இருக்கும்போது எந்த முட்டாள் கோட்டையைத் துளைத்திட நேரத்தைச் செலவிடுவான்?

தட்டினோம்! திறக்கப்பட்டது!!

வெட்டி வீழ்த்துவோம் என்று வீராப்புப் பேசிக்கொண்டிருந்தான்.

விழா நடத்துவோமா, வீழ்ந்தவனுக்கு. . . . ஆமாம், நடத்த வேண்டும். . . ஆடை எப்படி இருக்கவேண்டும். . .

இவன் நம்பிக் கிடந்த வேழப்படை சிதறி ஓடியபோது, கீழே வீழ்ந்துவிட்ட முகபடாம், இவனுக்கு ஆடை. . . ஒடிந்த தந்தங்களைத் தலையிலே வைத்துக் கட்டிடலாம் - முடி! மணி மகுடம்!!

குதிரைக்குப் போடுவானே "கொள்ளு' அது ஒரு வேளை; யானைக்குப் போடுவானே "தழை' அது ஒருவேளை - இப்படி மாறிமாறி, விருந்து.

உடலெங்கும் வடு; உலராத நிலையில். உள்ளமோ உலைக் கூடம்போல. நாடாண்டவன், மாற்றானிடம் பணியாதவன், போர்த்திறமை மிக்கவன். கூடஇருந்து குழி பறிப்போர் இருக்கக் கூடும் என்று துளியும் எதிர்பார்த்தவன் அல்ல. வெஞ்சமரில் வீழ்ந்தானில்லை; வஞ்சகத்தால் வீழ்த்தப்பட்டான்!! வாட்டி வதைக்கிறார்கள்!! பொன்னிறமேனி புழுதி படிந்து கிடக்கிறது. காலிலும் கரங்களிலும் தளைகள் பூட்டப்பட்டிருக்கின்றன. சிறைக்கூடக் காவலை மேற்கொண்ட சிற்றறிவுள்ள கொடியவர்கள், அவன் உண்ண வேகாச் சோற்றினை மண்பாண்டத்திலிட்டு, நாற்றமடிக்கும் சேற்று நீரை மண்குவளையில் ஊற்றி, எதிரே வைக்கிறார்கள். ஒரு கணம் கண்களை மூடுகிறான். என்னென்ன எண்ணுகிறானோ!! அரண்மனையில் அவன் நடத்திய விருந்துகளை எண்ணிக்கொள்கிறானோ? இல்லை! இல்லை! கோட்டையைத் தாக்கித் தகர்த்திடவில்லை! தட்டி னார்கள்! திறக்கப்பட்டது!! சமர் செய்து வீழ்த்தினார்களில்லை, சதிசெய்து சாய்த்தனர்!! புல்லில் மறைந்திருந்த பாம்புபோல, புல்லன் இருந்து காட்டிக்கொடுத்துவிட்டான்; கோட்டை பிடிபட்டது; கொற்றம் அழிந்தது. - இதனைத்தான் எண்ணிக் கலக்கமடைகிறான். உடலிலே உள்ள வடு ஒவ்வொன்றும் ஒவ்வோர் வீரச் செயலுக்குச் சான்று! அதனை எண்ணிக் கொள் கிறான், கண்களிலே களிப்பொளி!!

கட்டழகி பன்னீர் தெளித்திடும்போது, கலக்கம் அடை கிறான் ஒருவன், பளிங்கு மண்டபத்தில்.

காதகர் கடுமொழி வீசிடும்போது, உடலிலே உள்ள புகழ்க் குறி கண்டு பூரிக்கிறான், வஞ்சகத்தால் வளைக்கப்பட்டு, சிறையில் தள்ளப்பட்டுக் கிடக்கும் கொற்றவன்.

கொற்றவன் கொடுமை கண்டும் பெருமிதம் குன்றாது இருக்கக் காரணம், அவன் நெறி தவறாததால் - வீரம் குன்றாததால்.

கோலமயிலாள் கடை இடை காட்டிப் பன்னீர் தெளித்த போதும், களிப்படையாது, பளிங்கு மண்டபத்து வீரன் கலக்கம் கொண்டிடக் காரணம், அவன் காட்டிக்கொடுத்த கயவன். அந்த நினைப்பு அவன் நெஞ்சினைச் சுட்டெரிக்கிறது - அதனால்,

***

என்ன அண்ணா, இது. நெடுந்தொலைவு போய்வந்திருக் கிறாய், நீண்ட நாட்களுக்குப் பிறகு மடல் தீட்டுகிறாய் - சென்ற இடத்துச் சிறப்புகள், செய்த காரியத்தின் அளவு, தரம், கண்ட நண்பர்கள், கூறிய விஷயங்கள், தென்பட்ட குறிகள், இவைபற்றி யெல்லாம் நிரம்பக் கூறப் போகிறாய், கேட்டுச் சுவையும் பயனும் பெறலாம் என்று ஆவலுடன் இருக்கிற எம்மிடம், பளிங்கு மண்டபம், பன்னீர் தெளிக்கும் பாவை, சிறைக்கூடம், சீறி வரும் நாகம், கொடியவர் கொற்றவனைப் படுத்திடும் பாடு, இவை பற்றியெல்லாம் கூறத் தொடங்கிவிட்டாய்; தில்லி பற்றிய செய்தி களைக் கூறவேண்டிய வேளையில் - என்றுதானே கேட்கிறாய் - அவசரப்படாதே, தம்பி! தில்லி போகவேண்டுமென்றால், உடனேவா! நெடுந்தொலைவு அல்லவா? போகலாம்! இப்போது இந்த இருவரை மீண்டும், மனக்கண்முன் கொண்டு வா.

சிறையில் அடைபட்ட சித்தம் கலங்கா மன்னன்.

காட்டிக் கொடுத்ததால் கட்டழகி தெளித்திடும் பன்னீரைப் பரிசுபெற்ற கயவன்.

இந்த இருவர், இரு வெவ்வேறு நிலைமைகளை விளக்கும் நோக்குடன்தான், உன் முன் காட்டப்பட்டுள்ளனர்.

இந்த இருவரில், எவருடன் உறவாட, உரிமை கொண்டாட, உடனிருக்க, இசைவு தருவாய்!

கேட்கவாவேண்டும். காட்டிக் கொடுப்போனிடம் கூடிக் குலாவிடும் கெடுமதி எப்படி உனக்கு ஏற்பட முடியும்!! காட்டாற்றுச் சேறு, கட்டழகி வீசிடும் பன்னீரிலும் மாண் புடையது என்பதனை உணர்ந்த மரபினனல்லவா, நீ!

இதோ, இன்னும் இருவர், இவர்களையும் பார், தம்பி! பயனற்ற வேலை என்று நினைத்துவிடாதே - வெறும் படம் அல்ல, பாடம் புகட்டும் படம், மறவாதே.

***

மதிமிகு பெரியீர்! மாண்புடைய நண்பரீர்! குறிப்பறிந்து நடந்திடும் குணாளரே! வருக! வாழ்க!! உமது புகழ் புவி எங்கும் பரவிடத்தக்கதான, பாமாலை தொடுத்திடுவோம்.

என் நாடு! என் இனம்! என் பித்து நீக்கிய பெம்மானே, வருக! வாழ்க!!

நம்பி வந்தவர்க்குக் கை கொடுக்கும் நல்லறிவாளரே, வருக! வாழ்க!!

நாட்டுப்பற்று என்பது போதை, அதனை நாம் உட்கொள்ளல் தீது என்று உணர்ந்து, சொல்லால் அல்ல செயலால் விளக்கிய வித்தகரே, வாழ்க! வருக!!

வலுத்தவனிடம் மற்றவன் எதிர்த்து நிற்பது அழிவுக்கு வழிகோலும், அஃது ஆகாது! பணிவது, இணைவது, பாங்கான முறை! பாரிலே, பங்கரங்களை ஒழித்திடும் முறை இதுவே! - என்று கூறிச் சிற்றரசாகக் கிடந்தோர் இடத்தைப், பேரரசிடம் ஒப்படைத்துச் சிறப்பான சேவை செய்த செம்மலே வருக!!

தங்கள் பேச்சிலே, அறிவு மணம் கமழ்கிறது.

தங்கள் போக்கிலே, இராஜ தந்திரம் மிளிர்கிறது.

தங்கள் பார்வையிலே வேதாந்தம் சொட்டுகிறது. வேறோர் நாட்டுக்காரர் என்று இருப்பினும், எமது நாட்டினை இருப்பிட மாகக்கொண்டவரே, வருக! வாழ்க!!

எந்நாடுதான் எனக்கு ஏற்புடைய நாடாகும் என்ற தத்துவம் பொடிபடத் தாக்கிய மாவீரனே, வாழ்க! எந்த நாட்டிலே, இன்பம் கிடைக்குமோ, வளம் நிரம்பக் காணப்படுமோ, அந்நாடே எந்நாடு!! என்ற அரிய அரசியல் தத்துவத்தை அவனிக்கே அளித்த ஆசானே! வருக!!

***

தம்பி! இந்த நிலையில் அரச அவையிலே புகழாரம் சூட்டப்பட்டுக் காணப்படுகிறான் ஒருவன். இதோ மற்றொருவன். அவனைச் சூழ்ந்துகொண்டு, கூவுகிறார்கள், கொக்கரிக்கிறார்கள்; விளையாட்டுச் சிறுவர்கள் கற்களை வீசுகிறார்கள். முரட்டுப் பெரியவர்கள், காலைத் தட்டிக் கீழே உருட்டுகிறார்கள். கடுமொழி வீசுகிறார்கள், கண்டவர்கள்.

***

பிடி! அடி உதை! வெட்டு! குத்து! கொல்லு! காரித் துப்புங்கள் முகத்தில்! காதைப் பிடித்துத் திருகுங்கள்! கண்ணைத் தோண்டிப் போடுங்கள்! கையை ஒடித்து விரட்டுங்கள்!

***

இவ்விதமான இழிமொழிகளைக் கேட்டுக்கொண்டு இருக்கிறான் இவன்.

முன்னவன், நாட்டைக் காட்டிக்கொடுத்துப் புகழாரம் சுமக்கிறான்.

இரண்டாமவன், நாட்டுக்காக உழைத்ததற்காக இழி மொழியைப் பரிசாகப் பெறுகிறான்.

இந்த இருவரில், நாம் போற்றத்தக்கவர், புல்லர்களின் பொல்லாங்கு மொழிக்குப் பயந்துகொண்டு, நாட்டுக்கு உழைப்பதை விட்டுவிட மறுக்கும் மாண்புடைய வீரனல்லவா?

சரி, அண்ணா! இப்போது எதற்காக, இந்த விஷயமெல் லாம்? என்றுதானே கேட்கிறாய், தம்பி நான் தில்லிக்குப் பயண மானபோது, இவைபோன்ற எத்தனையோ காட்சிகளை மனக் கண்ணால் கண்டேன். என்னென்னவோ வகையான எண்ணங்கள். அவைகளிலே ஒரு சிலவற்றைத்தான் மீண்டும் நினைவிற்குக் கொண்டுவர முடிகிறது.

எங்களை ஏற்றிச்சென்ற விமானம், எத்தனை எத்தனையோ விதமான மேகக் குவியல்களைத் தொட்டும் தொடாமலும், சென்றுகொண்டிருந்தது. என் மனதிலே பல்வேறு விதமான எண்ணங்கள், அலை அலையாகக் கிளம்பின. இரவு பன்னிரண்டு விமானம் தில்லி நோக்கிப் பறக்கிறது - என் மனமோ உன்னைப் பிரிய மறுக்கிறது.

கண்களை மூடியபடி, ஆனால் உறங்காமல், என் பக்கத்தில், தருமலிங்கம் உட்கார்ந்திருந்தார். அவர் முகத்திலே ஓர் விதமான களை - வெற்றிக்களை என்றே கருதுகிறேன் - தெரிந்தது. காரணத் தோடுதான். என்ன காரணம் தெரியுமோ? நான் தில்லிக்குச் செல்லும் நிலை ஏற்பட்டது இருக்கிறதே, அது தோழர் தரும லிங்கத்தின் வெற்றிகளிலே ஒன்று. இதமாகப் பேசிப்பேசி என்னை "இராஜ்யசபை' செல்வதற்கு இசையும்படி செய்வதிலே அவர் வெற்றி பெற்றார். பார்! முடியாது முடியாது என்று சொன்னவரை, அழைத்துக்கொண்டு போகிறோம், தில்லிக்கு என்ற எண்ணம்போலும் அவருக்கு. அந்தக் களைதான் முகத்தில்!

என்னை அவர் தில்லிக்கு அழைத்துச் செல்வதிலே வெற்றி கண்டுவிட்டார் எனினும், என் மனதிலே, ஐயப்பாடு இருந்தது. செல்வதால் பயன் உண்டா? செய்யத்தக்கனவற்றுக்கு வாய்ப்புக் கிடைக்குமோ? அல்லது அங்குபோய்ச் செயலற்றுக் கிடக்க வேண்டிவருமோ என்ற எண்ணம் மனதைக் குடைந்தபடி இருந்தது.

பேசினான் எதை எதையோ.

முதல் தடவை என்பதால் சும்மா விட்டார்கள்.

பேசிவிட்டு ஓடிவந்துவிட்டான்.

பேச்சுக்குப் பலத்த எதிர்ப்பு.

எல்லோரும் எதிர்த்தனர்; தாக்கினர்.

பேச்சுக்குப் பலன் கிடைக்கவில்லை.

திராவிடநாடு பிரிவினையைப் பிய்த்து எறிந்துவிட்டனர்.

என்றெல்லாம், பலரும் பேசிவருவதையும் எழுதி வருவதையும் பார்த்த பிறகுதான், தம்பி! தருமலிங்கம் என்னைத் தில்லிக்கு அழைத்துக்கொண்டு போனது பயனற்றுப் போக வில்லை, சுவை கிடைக்காமலும் போகவில்லை என்று உணர்ந்து, மகிழ்ச்சியுற்றேன்.

தில்லிக்குச் சென்று பேசச் சந்தர்ப்பம் கிடைக்காது திரும்ப நேரிட்டால், மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்பது கிடக்கட்டும், என் மனமே மெத்த வேதனைக்காளாகும்.

பேச வாய்ப்புகிடைத்து, பேசியான பிறகு, அந்தப் பேச்சு கவனிப்பாரற்று, பத்தோடு பதினொன்று ஆக்கப்பட்டு, என்ன பேசினான்? என்று ஒருவர் கேட்க, ஏதோ பேசினான்? என்று அலட்சியமான பதில் கிடைத்து, அந்தப் பேச்சுப்பற்றி, ஒரு விதமான பரபரப்பு எதிரொலி இல்லாமற்போனால், எனக்கு மிகுந்த ஏமாற்றமும், திகைப்பும் ஏற்பட்டுவிடும். என் இயல்புதான் உனக்கு நன்றாகத் தெரியுமே, தம்பி! அங்கு செல்லும் என்னை இங்கிருந்து வாழ்த்தும் நல்லவர்களோ,

பாரேன் தில்லிக்குப் போனதும்.

சிந்துவார் உண்டா அங்கே.

கும்பலிலே கோவிந்தா ஆகவேண்டியதுதான்.

தில்லியில்போய் இங்கு பேசுவதுபோலப் பேசிக்கொண் டிருக்க முடியுமா?

அது எப்பேற்பட்ட இடம்? எவ்வளவு பெரியவர்களெல்லாம் அங்கே இருக்கிறார்கள்! ஜாம்பவான்கள் இருக்கிற இடம். அந்த இடத்தைப் பார்த்ததும், பேச்சா வரும்! குளறிவிடுவான் பாருங்கள். இங்கே மேடைக்கு மேடை கத்துகிறானே, திராவிடநாடு திராவிடநாடு என்று எங்கே, தில்லியிலேபோய்ப் பேசச்சொல்லு, பார்ப்போம்! கப்சிப்! வாயைத் திறக்கமுடியாது. சுற்றிவரலாம். சுகம் அனுபவிக்க லாம். கடைவீதிபோய்ச் சாமான் வாங்கலாம் - வேறே என்ன செய்யமுடியும்!

தில்லியிலேபோய்ப் பேசினால்கூட இந்தப் பேச்சை யார் கவனிக்கப்போகிறார்கள். கிணற்றிலே கல்விழுந்த மாதிரிதான். ஒருவரும் பொருட்படுத்தமாட்டார்கள்.

***

தம்பி! இப்படி எல்லாம், பரந்த அனுபவம் காரணமாகவும், சொந்த அனுபவம் காரணமாகவும், என்பால் உள்ள நிரம்பிய அன்பு காரணமாகவும், பலர் நல்லுரை கூறித்தானே அனுப்பி வைத்தார்கள்! அதுபோல ஆகிவிட்டிருந்தால், இந்நேரம், நாநர்த்தனம் நாராசமேடையிலே நள்ளிரவு வரையிலும் நடந்திருக்குமே.

ஆனால், தம்பி! என் மனம் சோர்வு சலிப்பு அடையாத விதமாக நிலைமைகள் வடிவமெடுத்துள்ளன.

இராஜ்யசபையிலே நான் பேசிய பேச்சு இன்று, அன்று எழும்பிய ஓசை என்ற அளவில் இல்லை. கடந்த ஒரு திங்களாக மாற்றுக்கட்சிப் பேச்சாளர்களுக்கு அது சுவைமிகு தீனியாகி வருகிறது.

கிருஸ்துமஸ் தீவில் அமெரிக்கா அழிவுக் கருவியை பரீட்சை பார்த்ததையும், ஜபருல்லாகான் - கிருஷ்ணமேனன் காஷ்மீர் குறித்து நடாத்திய ஐ. நா. சபை விவாதத்தையும் மொரார்ஜிதேசாயின், புதிய வரிகளின் விளைவுகளைப்பற்றியும் T. T. கிருஷ்ணமாச்சாரியார் துறவறத்தைத் துறப்பதுபற்றியும் பேசிக்கொண்டிருக்கவேண்டிய நேரத்தில், ஒவ்வொரு நாளும் மாற்றுக் கட்சிகளின் மேடையில், கேட்கப்படும் ஒரே பிரச்சினை. இராஜ்ய சபையிலே பேசியபோது. . . என்பதுதான் இன்னும் ஓயவில்லை. ஓய்ந்துவிட்டால், எனக்கே மனநிம்மதி இருக்காது.

ஏசிக்கொண்டிருப்பவர்கள், தங்கள் மன எரிச்சலைப் போக்கிக்கொள்ள இதுதான் வழி என்று நினைக்கிறார்கள். அப்படிதான் தோன்றும். இயல்பு அது. சொறி பிடித்தவனுக்கு எப்படி கீறிக்கொள்ளக் கீறிக்கொள்ள, நிம்மதியாக இருப்பது போலத் தெரிந்து, பிறகு எரிச்சல் அதிகமாகுமோ, அதுபோலத் தான் அதிலும் பொச்சரிப்புக்கொண்ட மனமாகிவிட்டால், அடே அப்பா, குரங்குப் புண் கதைதான்.

விடாமல் தாக்கவேண்டும், ஒவ்வொரு நாளும் தாக்க வேண்டும், தடித்த வார்த்தைகளை உமிழவேண்டும், எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசவேண்டும், எல்லாம் எனக்குத் தெரியும் என்ற "போஸ்' கொடுத்துப் பேசவேண்டும், என்ற முறையில் "இராஜ்யசபை'ப் பேச்சைப்பற்றி - இவர்கள் இங்கு பேசப்பேச, பொதுமக்கள் மனநிலை என்ன ஆகிறது தெரியுமா, தம்பி! ஒரு நாள் அவன் பேசினான், எல்லோரும் கூடிக்கொண்டு ஓயாமல் அதுபற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்களே, காரணம் என்ன? அந்த ஒருநாள் பேச்சு, இவ்வளவு பேர்களையும், உலுக்கி விட்டிருக்கிறதுபோலும், குலுக்கிவிட்டிருக்கிறதுபோலும். இல்லையென்றால், இதற்காக இவர்கள் இவ்வளவு "மல்லு' கட்டிக்கொண்டு மாரடிப்பானேன் என்றுதான் பொதுமக்கள் கருதுகிறார்கள்.

அதிலும், இன்று எரிச்சலால் இழிமொழி பேசும் பேர்வழிகள், இந்தத் திருத்தொண்டினை இப்போதுதான் முதல் முறையாகச் செய்கிறார்கள் என்றாலாவது, கேட்பவர்களுக்குத் திகைப்பு ஏற்படும் - இதென்ன எல்லோரும் எதிர்த்துப் பேசுகிறார்களே என்று.

இது இவர்கள் நமக்குப் படைக்கும் நித்திய நைவேத்தியம்! - எனவே இப்போது ஏசிப் பேசுகிறவர்கள், இப்போது இதை வைத்துக்கொண்டு ஏசுகிறார்கள் - வழக்கமான வேலை - செய்து தீரவேண்டிய வேலை!! என்று எண்ணுகிறார்கள்.

அணுகுண்டு வெடித்தார்களாம் என்று முதல்தடவை கேள்விப்பட்டபோது, உலகில் பலநாள், அதுபற்றியேதானே பேசிக்கொண்டிருந்தார்கள் - அவரவர்களின் மனப்பக்குவம், விருப்பு வெறுப்பு ஆகியவற்றுக்கு ஏற்ற முறையில்.

உலகைச் சுற்றும் செயற்கை கோள் கிளம்பிற்று - எல்லோரும் அதுபற்றியே விடாமல் பேசலாயினர்.

நாய்க்குட்டியை வானவெளிக்கு அனுப்பினர் - எல்லோரும் அதுபற்றியே பேசலாயினர்.

மனிதர்களே வானவெளிப் பயணம் செய்தனர் - எங்கும் எவரும் அதுபற்றியே பேசலாயினர்.

ஆதரித்தோ எதிர்த்தோ, விளங்கிக்கொண்டோ விளங்கிக் கொள்ளாமலோ, இவைபற்றியே அனைவரும் பேசினர் அல்லவா. அதுபோல, மே முதல்நாள் இராஜ்யசபையில் நான் பேசிய பேச்சு, அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சி தரத்தக்க, அலசிப் பார்க்கத்தக்க, தாக்கித் தீர்க்கத்தக்க, விளக்கிக் காட்டத் தக்க பிரச்சினையாக்கப்பட்டுவிட்டிருக்கிறதே, இதனைவிடச் சான்று வேறு வேண்டுமா, நாம் கேட்கும் "திராவிடநாடு' கொள்கையின் பெருமையினை விளக்க. நன்றி கூறிக் கொள்கிறேன், மாற்றார்களின் மகத்தான தொண்டு தரும் பயனுக்காக. நான், உள்ளபடி, இவ்வளவு "கவனிப்பு' என் பேச்சுக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. புதிய அரசியல் தத்துவப் பிரசவ வேதனையைக்கூட மறந்துவிட்டு, என் பேச்சிலே உள்ள எழுத்துக்கள், புள்ளிகள், வளைவுகள் ஆகியவற்றை ஆராய்ந்து அதன்மூலம் கிடைத்த "கண்டுபிடிப்பு' காணீர் என்று, மக்களிடம் காட்டுவோரும்; எஃகுத் தொழிற் சாலை சேலத்தில் எப்போது துவக்கப்படும் என்ற பேச்சு, தமது இலாகா என்றாலும், அதனைக்கூட இரண்டாவது வரிசைக்கு விட்டுவிட்டு, என் பேச்சுப்பற்றிய தமது ஆழ்ந்த கருத்துரையை அள்ளித்தந்து, எம்மால் எளிதாக முடியக்கூடியது இது, எஃகுத் தொழிற்கூடம் அல்ல, என்பதனை கூறாமற் கூறுவோரும், புதுவரி எதிர்ப்பு, விலைவாசிக் குறைப்புப் போன்றவைகளைக் கவனிக்காதது ஏன் என்று மக்கள் தம்மைப் பார்த்துக் கேட்காதபடி பாதுகாப்புத் தேடிக்கொள்ளச் சிறந்தவழி, என் பேச்சுப்பற்றி ஏசிப்பேசுவதுதான் என்ற யூகமுடன் பேசிக் கிடப்போரும், ஆமாம் தம்பி! இப்படிப்பட்ட வகையினர் அடைந்துள்ள அதிர்ச்சியைக் காணும்போதுதான், பரவா யில்லை, இராஜ்ய சபை சென்று பேசியது, நல்ல பலனைக் கொடுத்திருக்கிறது - பிரச்சினைக்குச் சூடும் ஏறுகிறது சுவையும் கூடுகிறது என்ற எண்ணம் உறுதிப்பட்டது.
--------------

சூடும் சுவையும் (2)

தில்லியில் மாற்றார் காட்டிய அன்பு -
திராவிட நாடு பற்றி மாற்றார்.

தம்பி! விமானம் சென்றுகொண்டிருந்தபோது, எனக்கு ஒரு எண்ணம், நாட்டுப் பிரிவினை கேட்பவன் என்ற காரணம் காட்டி, என்னைத் தில்லியில் வெறுப்புடன் அனைவரும் நடத்து வார்களோ என்னவோ என்று. கனல் கக்கும் பார்வை, கடுகடுப் பான பேச்சு, ஆணவம் நெளியும் போக்கு இவைகளால் என்னைத் தாக்குவார்கள் என்று எண்ணிக்கொண்டு, அத்தகைய நிலைக்கு உட்பட என்னை நான் தயாராக்கிக்கொண்டேன்.

தில்லி மக்கள் சபையில் ஐந்நூற்றுக்கு மேற்பட்டவர் உள்ளனர். நமது கழகத்தவர், எழுவர்.

தில்லி இராஜ்யசபையில் இருநூற்று அறுபதுக்கு மேற்பட்டவர் உறுப்பினர் - கழகத்துக்காக நான் ஒருவன்.

எதையேனும் நான் அந்த அவையில் கொண்டு சென்றால், ஆதரிக்கிறேன் என்றுகூற, துணைத்தோழர், கழகத்தவர் இல்லை. மிகப்பெரிய எண்ணிக்கை வலிவுள்ள கட்சி அரணளிக்க அமர்ந்துகொண்டு, ஆணவம் கக்கும் "மாவீரர்கள்' விரல்விட்டு எண்ணத்தக்க எண்ணிக்கையுள்ள முகாமில் இருக்க நேரிட்டால், எத்துணை வீரமும் நெஞ்சுரமும் காட்டுவர் என்பது எனக்குத் தெரியும் - நெருங்கிப்பழகி அவர்களின் இயல்பினை மிக நன்றாக அறிந்திருக்கிறேன்.

"நாங்களென்ன விவரமறியாதவர்களா, வம்பிலே போய் மாட்டிக்கொள்ள. குறைவான எண்ணிக்கையுள்ளதாக ஒரு கட்சி இருக்கும்போது, பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியிலே ஒரு கட்சி நிற்கும்போது, எப்புறமிருந்தும் ஏசலும் தூற்றலும், தாக்குதலும் கிளம்பிவந்து மேலே வீழ்கிறபோது, நாங்கள் ஏன், அந்த இடர்ப்பாடுமிக்க இடத்தில் இருக்கப்போகிறோம் என்று பேசுவார்கள் - புத்திசாலிகள் அவர்கள் - கீழே வீழ்ந்த பழத்தைப் பொறுக்கி எடுத்து, மண்ணை நீக்கி வாயில்போட்டுக் குதப்பிச் சுவைபெறுபவர்கள் - அல்லது, வளையில் பதுங்கிக்கொண் டிருந்துவிட்டு, ஆள் அரவம் இல்லா வேளை பார்த்து வெளியே வந்து, முற்றிய கதிரைக் கடித்துத் தின்னும் காட்டெலிகள் - புரிகிறது.''

தம்பி! நமது கழகத்திலே இன்று இடம்பெற்றுப் பணியாற்றுவது, பெருங்காற்றடித்து மரங்கள் வேருடன் கீழே வீழும் வேளையில், இருட்டாகிப் போனதன் காரணமாகத் தொலைவிலே காணப்படுவது கற்குவியலா காட்டு எருமையா என்று சரியாகத் தெரியாத நிலையில், பேய்க்காற்றடிப்பதால் கிளம்பிடும் ஓசை, காற்றொலியா அல்லது காட்டுமிருகத்தின் உறுமலா என்று விளங்காத நிலையில், தனியனாக ஒருவன், மூலிகை தேடிச்செல்வதற்கு ஒப்பாகும்.

இன்று காங்கிரஸ் கட்சியில் இடம்பெற்று, இன்பம் பெற்று இறுமாந்து கிடப்பவர்களில் நூற்றுக்குத் தொண்ணூறு பேர் களுக்குமேல், அக்கட்சி, கடும்போரினை முடித்துக்கொண்டு காடு கடந்து நாடு ஆளும் நிலைபெற்ற பிறகு, வந்து புகுந்தவர்கள். புகுந்த இடத்துக்கு உள்ள வனப்பும் வலிவும் கண்டதால் ஏற்பட்ட உணர்ச்சி, அவர்களின் கூனினை நிமிர்த்திற்று, குளறலைக் கர்ஜனையாக்கிற்று! வீரம் பேசுகிறார்கள்!!

காங்கிரஸ் கட்சி காடுமேடு சுற்றிக் கருக்கலில் சிக்கி, கண்டவர்களால் தாக்கப்பட்டு வடுபல கொண்டதாக இருந்த நாட்களிலே, இவர்கள், வெந்ததைத் தின்று வாயில் வந்ததைப் பேசிக்கொண்டிருந்தவர்கள்.

நடக்கிற காரியமா இதெல்லாம்.

பைத்தியக்காரத்தனமான போக்கு.

சுட்டால் சுருண்டு கீழே வீழ்வார்கள்,

பிணமாக. தடி தூக்கினால், தலைதெறிக்க ஓடுவார்கள்.

வெள்ளைக்காரன் விட்டுவிட்டுப் போவதற்கா, இவ்வளவு கோட்டைகளைக் கட்டிக் கொடிமரத்தை நாட்டி, கொலுமண்டபம் அமைத்துக்கொண்டிருக்கிறான்!

அவனவனுக்குத் தகுந்த வேலையைச் செய்து கொண்டு வயிற்றைக் கழுவிக்கொண்டு, காலத்தைக் கடத்துவதை விட்டுவிட்டு, வந்தேமாதரமாம் சுய ராஜ்யமாம், வறட்டுக் கூச்சல் போட்டுக் கெட்டுத் தொலைகிறார்கள்.

எத்தனை நாளைக்கு இந்தக் கூச்சல்? வெள்ளைக் காரன், போனால் போகட்டும் என்று சும்மா இருக்கிற வரையில். முறைத்துப் பார்த்தானானால், இதுகள் பயத்தால் வெடவெடத்துப் போய்விடுமே.

இவ்விதமாகவெல்லாம் திண்ணைப்பேச்சு நடத்திக்கொண் டிருந்தவர்களெல்லாம், காங்கிரஸ் நாடாளும் கட்சியான உடனே அதிலே நுழைந்துகொண்டு, திலகருக்குத் தோழர்களாக இருந்தவர்கள்போலவும், சபர்மதி ஆசிரமத்துக்கு அடித்தளம் நாட்டியவர்கள்போலவும், லாலா லஜபதிராய் பாஞ்சாலத்தில் துப்பாக்கியை எதிர்த்து நின்றபோது பக்கத்தில் இருந்து அவருக்குத் தைரியம் கூறியவர்கள்போலவும், சிதம்பரனார் செக்கிழுத்தபோது சிறையிலே இக்கொடுமையை எதிர்த்துப் புரட்சி நடாத்தி அந்தமான் துரத்தப்பட்டவர்கள்போலவும், கொடி காத்த குமரனுக்கு வீரத்தை ஊட்டிய ஆசான்கள் போலவும், தில்லையாடி வள்ளியம்மைக்குத் "தேசபக்தி' பாடத்தைக் கற்றுக்கொடுத்தவர்கள்போலவும், அல்லவா தேசியம் - காந்தியம் - பாரதியம் பேசுகிறார்கள். பேசுவதுகூட அல்ல தம்பி! காங்கிரசின் போக்கைக் கண்டிப்பவர்களைக் கண்டால், அடே அப்பா, இவர்களுக்குக் கொப்பளிக்கும் கோபமும், பீறிட்டு எழும் வீராவேசமும், பொங்கிடும் நாராசமும் கண்டால், கைகொட்டிச் சிரிக்கத்தான் தோன்றுகிறது. எவனோ கஷ்டப்பட்டுக் கடும்போரிட்டு, ஆபத்துகளில் சிக்கி, அடவியில் உலவிக் கிடந்த புலியை அடித்துக்கொன்ற பிறகு, எப்படியோ, அந்த புலித்தோலின்மீது அமர்ந்துகொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டு, அதன் காரணமாகவே ஊரை மிரட்டு கிறானே போலிச் சாது, அதுபோலல்லவா இருக்கிறது இன்று, காங்கிரசில் புகுந்துகொண்டு வீராவேசம் பேசும் பெரும் பாலோரின் போக்கு.

நமது நிலை! தம்பி முற்றிலும் மாறானது. ஆட்சி மன்றங் களில் எண்ணிக்கை பலம் எனும் அரணைத் துணைகொண்டு நாம் இல்லை. நமது கழகம், நாடாளும் நிலையில் உள்ளது அல்ல. காடு மேல் என்று கூறத்தக்க விதமான போக்குடையோர் பலர் தாக்கிடும் நிலையில் உள்ளது. நம் கழகம் ஐந்நூறு பேர்களுக்கு இடையிலே ஏழு! இருநூற்று அறுபது பேர்களுக்கு இடையிலே ஒருவன்! - என்ற எண்ணிக்கை நிலையை மட்டுமல்ல, நான் குறிப்பிடுவது. பலருக்கு, இந்த நிலை ஒன்று போதும், பேச்சடைத்துப்போகும், கண்களிலே மிரட்சி ஏற்படும், கைகால் நடுக்குறும். எண்ணிக்கை நிலையுடன் வேறொன்றும் இருக்கிறது. காங்கிரசிலே உண்மையான தொண்டாற்றியவர்கள் இன்று அங்கு அதிகம் இல்லை. உண்மையாக விடுதலைக் கிளர்ச்சியில் ஈடுபட்டு, எதிர்ப்புகளைத் தாங்கியவர்களுக்கு, வேறோர் விடுதலைக் கிளர்ச்சியில் ஈடுபடுவோரிடம், தம்மையும் அறியாமல், மதிப்பு ஏற்படும். இன்று காங்கிரசில் உள்ளவர் களிலே பெரும்பாலோருக்கு, விடுதலைக் கிளர்ச்சியில் பங்கேற்ற அனுபவம் கிடையாது - ஆகவே அவர்களுக்கு நாம் நடாத்தும் விடுதலைக் கிளர்ச்சியினை மதிப்பிடத் தெரியவில்லை. தெரியாத தால், திக்குக்கு ஒருவர் கிளம்பித் தீப்பொறி கிளப்புகிறார்கள்.

இந்தத் திங்கள் நான் வேதாரண்யம் சென்றிருந்தேன் - காங்கிரஸ்காரர்கள் நினைவிலே வைத்துக்கொண்டிருக்கிறார் களோ இல்லையோ, நானறியேன் - எனக்கு அங்குச் சென்றதும், மறைந்த சர்தார் வேதரத்தினம் அவர்களின் நினைவு வந்தது. சட்டசபையிலே நான், காங்கிரஸ் ஆட்சியின் போக்கைக் கண்டித்துப் பேசும்போது, அவருடைய முகம் அகநிலையைக் காட்டும் - கண்டிருக்கிறேன் - புதிதாகக் காங்கிரசில் சேர்ந்து கொண்டிருப்பவர்களின் முகத்தையும் நான் கவனித்திருக்கிறேன்.

பழைய, தொண்டாற்றிய, துயர் அனுபவித்த காங்கிரஸ் காரர்களின் முகத்திலே, கோபத்தைவிட, ஒருவிதமான திகைப்புத் தான் அதிகம் காணப்படும்; பேச்சில் வெறுப்பை விட உருக்கம் தான் அதிகம் தெரியும்; போக்கிலே ஆணவத்தைவிட அணைத்துச் செல்லவேண்டுமே என்ற கவலைதான் அதிகம் இருந்திடும்.

காரணம் இருக்கிறது, இதற்கு. இவர்கள், கட்டிக் காத்தவர்கள் காங்கிரஸ் கட்சியை, கடும் போரிட்டவர்கள் வெள்ளையரை எதிர்த்து, தழும்புகள் பெற்றவர்கள் விடுதலைக் கிளர்ச்சியின்போது; தன்னலம் மறந்தவர்கள் தொண்டாற்று கையில்; இன்னல் பல கண்டு இறுதியில் வெற்றி ஈட்டியவர்கள்; எனவே அவர்களுக்கு, தமது வெற்றிச் சின்னமான காங்கிரஸ் ஆட்சி கண்டிக்கப்படும்போது, திகைப்பு ஏற்படுகிறது எப்படிப் பட்ட மகத்தான அமைப்பு காங்கிரஸ்; எப்படிப்பட்ட தியாகி களும் தீரர்களும் இந்தக் காங்கிரசுக்காகத் தொண்டாற்றி இருக்கிறார்கள்; அதனை எல்லாம் மறந்து இன்று காங்கிர சாட்சியைக் கண்டிக்கிறார்களே, எதிர்க்கிறார்களே, என்ன காலம் இது! ஈதென்ன போக்கு! உச்சிமேல் வைத்துப் போற்றிவந்தோம் காங்கிரசை; இன்று அதனை உலுத்தர்களுக்கு வாழ்வளிக்கும் கூடம் என்று கூறுகிறார்களே; ஏன் இன்று இவ்வளவு எதிர்ப்பு காங்கிரசுக்கு ஏற்பட்டுவிட்டது என்று எண்ணித் திகைக்கிறார்கள்; வேண்டாமப்பா, காங்கிரசை நீ அறியமாட்டாய், அது வீரக்காப்பியம், தியாகப் பரம்பரை கிளர்ச்சிக் கூடம், விடுதலைப் பேரணி, அதனைத் தாக்காதே தகர்த்திடாதே என்று உருக்கத் துடன் பேசுகின்றனர்; பெற்றவர்களுக்கே தெரியும் அந்தப் பிள்ளையின் அருமை என்பார்களே அதுபோல.

வந்து நுழைந்துகொண்டதுகள் உள்ளனவே, இதுகளுக்கு அந்தப் பழைய வரலாறே தெரியாது, சரியாக! காடுசுற்றிக் கடும் போரிட்ட கட்டம் புரியாது. எனவே, திகைப்பும் உருக்கமும் எழாது; கோபம்தான் கிளம்பும், ஏன், தெரியுமோ, தம்பி! மலைபோல நம்பிக்கொண்டிருக்கிறோம் காங்கிரஸ் கட்சியை; மக்களைக் கட்டுப்படுத்தி வைத்திடத் தக்கதோர் கருவியாக இது கிடைத்திருக்கிறது; இதனை ஏணியாகக்கொண்டு உயர ஏறி உறியில் உள்ளதை வழித்தெடுத்துத் தின்ன முடிகிறது. இதனைப் போய் இந்தப் "பாவிகள்' கெடுக்கப் பார்க்கிறார்களே; என்ற எண்ணம் தோன்றுகிறது; எரிச்சல் பிறக்கிறது. கோபம் பொங்கு கிறது, கடுமொழி உமிழ்கிறார்கள்.

இன்று, ஆட்சிமன்றங்கள் பலவற்றிலும், காங்கிரஸ் கட்சியின் சார்பிலே வெற்றிபெற்று அமர்ந்திருப்பவர்களிலே பெரும்பாலோர், நான் குறிப்பிடும், இரண்டாவது வகையினர்! எரிச்சல்கொள்வோர். காங்கிரஸ் கவிழ்ந்துவிட்டால், தங்கள் "காலம் முடிந்துவிடும்' என்ற அச்சம் அவர்களை ஆட்டிப் படைக்கிறது; அதனால் ஆத்திரம் பீறிட்டுக்கொண்டு வருகிறது.

தம்பி! குதிரைமீது செல்பவனையும் காண்கிறாய்; பொய்க்கால் குதிரை ஆட்டக்காரனையும் காண்கிறாய். உண்மையான குதிரை அத்தனை ஆட்டமா ஆடுகிறது; அத்தனைவிதமாகவா தாவுகிறது, தாண்டுகிறது, வளைகிறது, நெளிகிறது, சுற்றுகிறது, சுழல்கிறது; இல்லையல்லவா?

இன்று காங்கிரசிலே பொய்க்கால் குதிரைகள்தான் அதிக அளவில்!! அதற்கேற்றபடியான "ஆட்டம்' காண்கிறோம்.

இந்தப் "புகுந்துகொண்டதுகள்' கக்கும் பகைதான் இன்று மிகப்பெரிய புகைச்சலைக் கிளப்பிவிட்டிருக்கிறது.

இந்நிலையில், நான் தில்லி சென்றதால், வெறுப்புடன் நடத்தப்படுவேன், அல்லது பேச வாய்ப்புப்பெற இயலாநிலை ஏற்பட்டுவிடும் என்றுதான் எண்ணிக்கொண்டேன்.

தில்லி, பாராளுமன்றத்தில் நான் கண்ட சூழ்நிலை, நான் எதிர்பார்த்தபடி இல்லை. பலரும், பரிவுடன் நடந்துகொண்டனர்.

"வாய்யா, வா, வா! தெரியுமா சமாசாரம் - ஹைதராபாத் திலே, ஒனக்குக் கொண்டாந்த மாலையை எல்லாம் ஒங்க ஆளுங்க என் கழுத்திலே போட்டாங்க - நீ வரலேன்னு சொன்னதும். ஆமாய்யா, நெறைய மாலைங்க. . . உங்க ஆளுங்க . . . .'' என்று முன்னாள் அமைச்சர் மாணிக்கவேலர் கூறினார் குழைவுடன். முன்னாள் அமைச்சர் அவினாசியார், ரொம்பச் சந்தோஷம் எனக்கு என்றார். முன்னாள் அமைச்சர் மாதவ மேனன், என்னா அண்ணாதுரை, தெரியலையா என்னை என்று கேட்டு மகிழ்ந்தார். அமைச்சர் சுப்பிரமணியம், இங்கு மேடைப் பேச்சின்போது, கட்சிக்காரர் மகிழ அடித்துப்பேசும் வக்கீலாகிறார்; அங்கு என்னிடம் மெத்த அன்பாகத்தான் பேசினார். பழகினார். யார் அவன் பிரிவினை கேட்கிறவன்? அவன் "மூஞ்சியைப் பார்க்கவேண்டுமே' என்று பண்டித நேரு கேட்டார் என்று இங்கு பேசினாராம் - பத்திரிகையில் பார்த்தேன்; என்னால் நம்பமுடியவில்லை, அங்கு என்னிடம் அத்துணை பரிவுடன் பழகுபவர் இவரேதானா என்று! என்னைப்பற்றி ஏளனமாகவும் இழிவாகவும் பேசினால்தான், தன் கட்சியில் "சபாஷ்' பட்டம் கிடைக்கிறது என்பதால் அவ்விதம் பேசுகிறார் போலும். பேசி ஆசையைத் தீர்த்துக்கொள்ளட்டும். நான் ஏளனம் இழிமொழிக் கேட்டுத் துவண்டுவிடுபவனல்ல; அதிலும் பேசுபவர்கள் ஏன் அவ்விதம் பேசுகிறார்கள் என்பது நன்றாகப் புரிகிறபோது, எனக்கு வருத்தமோ கோபமோகூட எழாது.

"இவ்வளவு நேரம் இடி இடித்ததல்லவா! இதோ இப்போது மழை பெய்கிறது''

என்று, தலையைத் துவட்டிக்கொண்டே கூறினாராம் சாக்ரடீஸ். நடந்தது என்ன தெரியுமா, தம்பி! ஒரு குடம் தண்ணீரை வேண்டுமென்றே சாக்ரடீசின் தலையில் கொட்டினாள். யார் அந்தத் தூர்த்தை? என்று கோபத்துடன் கேட்டுவிடாதே; உலகம் மெச்சும் வித்தகராம் சாக்ரடீசின் தலையிலே வேண்டுமென்றே போக்கிரித்தனமாகத் தண்ணீரைக் கொட்டியவர் வேறு யாரும் அல்ல; அவருடைய மனைவி! ஆமாம்! அவ்வளவு நல்ல மாது!!

வழக்கப்படி, நண்பருடன் சாக்ரடீஸ், வீட்டு வாயிற்படி அருகே நின்று பேசிக்கொண்டிருந்தார். பல பொருள்பற்றி, ஆழ்ந்த கருத்துக்களை எளிய இனிய முறையிலே விளக்கியபடி. அவர் பேச்சைக்கேட்டு, நண்பர் சொக்கிப்போனார். உள்ளே ஒரே கூச்சல், குளறல், அலறல்! சாக்ரடீசின் மனைவி, இப்படி வேலைவெட்டி இல்லாமல் பொழுதை ஓட்டிக்கொண்டு, கண்டவனிடம் கண்டதைப் பேசிக்கொண்டு கிடக்கிறாரே. செ, இவரும் ஒரு மனிதரா! இவரைக் கட்டித்தொலைத்தார்களே என் தலையில் - என்றெல்லாம், அர்ச்சனை செய்கிறார், உள்ளே இருந்தபடி உரத்த குரலில்,

நண்பன் இதுகேட்டுத் திகைக்கிறான்.

சாக்ரடீசுக்கும் பேச்சுக் காதில் விழுகிறது. நண்பன் திகைப்பது புரிகிறது. ஆனால் ஒரு துளியும் பரபரப்பு அடைய வில்லை, கோபம் எழவில்லை, பேச்சின் போக்குக்கூட மாற வில்லை. மனைவியின் தூற்றலைப் பொருட்படுத்தாமல் பேசிக் கொண்டே இருக்கிறார் - உரத்த குரலில் - இடி இடிப்பது போல.

எவ்வளவு திட்டினாலும் பொருட்படுத்தவில்லையே என்ற ஆத்திரம், அம்மைக்கு. குடம் நிறையத் தண்ணீர் எடுத்து, உள்ளே இருந்து சரேலென வெளியே வந்து, சாக்ரடீசின் தலையிலே கொட்டிவிட்டுச் சென்றாள், தன் ஆத்திரத்தைக் காட்ட. நண்பன் திடுக்கிட்டுப் போனான். அப்போதுதான் சாக்ரடீஸ் சொன்னார்,

இவ்வளவு நேரம் இடி இடித்தது; இப்போது மழை பெய்கிறது.

என்று, சாக்ரடீசுக்கு வந்து வாய்த்தவள் அப்படி. அதற்காக, அவர் தமது அறிவுப் பிரசாரப் பணியை நிறுத்திவிட்டு, அம்மையை நல்வழிப்படுத்தும் காரியத்தைக் கவனித்துவிட்டுப் பிறகு மற்றக் காரியம் என்று இருந்துவிட்டாரா? அல்லது நாடே கொண் டாடும் நிலை நமக்கு; நம்மை இவ்விதமாக நடத்துபவளை நையப் புடைத்திடவேண்டாமா என்று கோபப்பட்டாரா? இல்லை!

"நம்மிடம் உலகு எதிர்பார்ப்பது அறிவுப்பணி; அதனை நாம் நடத்திச்செல்வோம்.''

என்று இருந்துவந்தார்.

நாடும் உலகும் அவருடைய நற்பணிக்கு மதிப்பளித்ததே யன்றி, அவருடைய துணைவியாக வந்துற்றவளின் பேச்சைக் கேட்டு அவரை மதிப்பிடவில்லை.

பொதுப்பணியாற்றிடுவோருக்கு இந்த மனப்பக்குவம் ஏற்படவேண்டும். அதனை நான் மிக முக்கியமானதாகக் கருதுகிறேன். நாம் தேடிப் பெற்றுக்கொள்ளவேண்டிய, பழுது படாமல் பார்த்துக்கொள்ளவேண்டிய, கருவூலம் இது.

வள்ளுவர், கடுமொழி பேசுவோரை மட்டுமல்ல, கேடு செய்பவர்களைக்கூடப் பொறுத்துக்கொள்ளவேண்டும் என்றார்; சகித்துக்கொள்வது மட்டுமல்ல, அவர்களே வெட்கித் தலை குனியும்படி நாம் நடந்துகொள்ளவேண்டும் என்கிறார்.

இன்னா செய்தாரை ஒருத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.

என்பது திருக்குறள். நான் கூடுமானவரையில், அந்நன்னெறியிற் செல்ல முயல்கிறேன்.

தமது கட்சிக்காரர் கைதட்டி மகிழவேண்டும் என்பதற்காக என்னைப்பற்றி இழிவாக அமைச்சர் சுப்ரமணியம் போன்றார் பேசினால், எனக்கு வாய்ப்புக் கிடைக்கும்போது, அவர்களிடம் காணக் கிடைக்கும் சிறப்பு இயல்புகளைப் பாராட்ட நான் தவறமாட்டேன். பகை உணர்ச்சியை வருவித்துக்கொண்டு, பண்பு இழந்துவிட நான் ஒருப்படமாட்டேன். அமைச்சர் சுப்ரமணியம், தமது கட்சிக்காரர் மனமகிழ, தரக்குறைவுமிக்க பேச்சுப் பேசியதால், நான் கோபமுற்று, அவர் அன்று, நான் இராஜ்ய சபைக்குள்ளே நுழைந்தபோது, முன்வரிசையில் உட்கார்ந் திருந்தவர் எழுந்துவந்து கைகுலுக்கி வரவேற்று, "பண்பு' காட்டினாரே, அதனை மறந்துவிட முடியுமா!

அவரால் அப்படியும் நடந்துகொள்ள முடிகிறது; இப்படியும் பேசவருகிறது என்றுதான் எண்ணிக்கொள்கிறேன்.

அதுமட்டுமல்ல! அப்படிப் பண்புடன் நடந்துகொள் பவரைக் கட்சி நிலைமை, இப்படியும் பேசவைக்கிறது என்று எண்ணிக் கழிவிரக்கப்படுகிறேன். அவருடைய கட்சிக்காரர் களிடையே அவர் இன்று ஓர் "சந்தேகத்துக்குரியவர்!' அவருடைய பத்தினித்தனம் சந்தேகிக்கப்படுகிறது. காமராஜரை விட்டு நெடுந்தூரம் பிரிந்து சென்றுவிட்டார், - தில்லிக்கும் சென்னைக்கும் இடையே உள்ள தொலைவை மட்டும் நான் குறிப்பிடவில்லை; நேருவுக்கு மிக நெருங்கியவராகிவிட்டார்!

தில்லியில் பெறவேண்டியவைகளை இனிக் காமராஜர், சுப்ரமணியத்தின் தயவால்தான் பெறவேண்டும் என்ற நிலை, இன்று.

இது, காமராஜருக்குச் சுவையூட்டும் நிலை அல்ல.

தில்லியில் இருந்துகொண்டு, தமிழக அரசியலில் தமக்குள்ள இடத்தையும் இழந்துவிடக்கூடாது என்ற எண்ணத் தால் உந்தப்பட்டு, அமைச்சர் சுப்ரமணியம், காமராஜருக்கு எதிர்ப்புக்குழு உருவாக ஊக்கமூட்டினார் என்று வதந்தி பலமாக இருக்கிறது.

அங்கே இருந்துகொண்டு என்ன செய்ய முடியும்? என்று காமராசர் ஆதவாளர்களும்

அங்கே போய்விட்டால் என்ன? அவருக்காக இங்கு நாங்கள் இருக்கிறோம்

என்று சுப்பிரமணியத்தின் ஆதரவாளர்களும், மிகத் தாராள மாகப் பேசிக்கொள்கிறார்களாம்.

கருத்து வேற்றுமைகள் எழுந்தன; பேசப்பட்டன; ஆனால் பிளவு இல்லை - என்று சுப்ரமணியம் கூறுகிறார்.

இந்த அளவு கூறும் துணிச்சல் இவருக்கு ஏற்பட்டதற்குக் காரணமே, தில்லியில் பெரிய வேலை கிடைத்ததுதானே!! - என்று காமராசர் ஆதரவாளர் பேசிக்கொள்கின்றனர்.

இந்த "வாடை' வீசும் நேரத்தில், இங்கு வந்த அமைச்சர் சுப்ரமணியம் என்னைத் தாக்கிப் பேசுவதன்மூலம், தனது அறிவாற்றலை, வீரதீரத்தை மட்டுமல்ல, தமது (கட்சி) பத்தினித்தனத்தை மெய்ப்பித்துக்காட்ட ஒரு வாய்ப்புத் தேடிக் கொண்டார்போலும்.

"அண்ணாதுரைக்குத் தைரியம் கிடையாது'' என்று அமைச்சர் கூறினாராம்.

"அதனால்தான் பேசிவிட்டு ஓடிவந்துவிட்டான்'' என்று செப்பினாராம்.

"இரயிலில் போனால் என்ன ஆகுமோ என்று பயந்துகொண்டு விமானம் ஏறிச்சென்றுவிட்டான்''

என்று தெரிவித்தாராம். பரிதாபம், இந்தப் பேச்சுக்கூட புதிய பாணி அல்ல! பழைய கஞ்சி. ஏற்கனவே இங்கு கூவி விற்கப்பட்டுக் குப்பைக்குச் சென்றுவிட்டது.

நான் பயந்தவன் - கோழை - என்று கூறிய அமைச்சர் சுப்ரமணியம், அவ்விதம் கூறத்தக்க அளவு, தமது வீரதீரத்தைக் காட்டினவர் அல்லவே நாட்டவருக்கு என்று கூற நினைக்கிறாய், தம்பி! உனக்கு அவராற்றிய வீரதீரச் செயல் தெரியாது; அவருடைய அஞ்சாநெஞ்சம் உனக்குப் புரியவில்லை. படை பலவரினும், தடைபல நேரிடினும், மன்னன், முன்வைத்த காலைப் பின்வைக்கமாட்டார்; வீரம் கொப்பளிக்கும்.

ஒருமுறை அவர் அயர்ந்து தூங்கும் வேளையில், கூரிய வாட்கள் அவர் உடலில் நாலாபக்கமும் பாய்ந்தன. அவரிடமோ, வாள் இல்லை. அஞ்சினாரா? தூ! தூ! அவரா? அஞ்சுபவரா? ஓங்கி அறைந்தார், இரு கரங் களாலும். அவருடைய கையிலே அறைபட்டு, வாள் கொண்டு குத்துவதுபோன்றவிதமாக அவரை வெகு பாடுபடுத்திக்கொண்டிருந்த கொசுக்கள் பல செத்தன? உள்ளங்கையிலே, வெற்றியின் சின்னங்களைக் கண்டார்!

இப்படிப்பட்ட "வீரம்' அவர் நடத்திக்காட்டாமலா இருந் திருப்பார்! இருக்கும், தம்பி! நமக்குத் தெரியவில்லையே தவிர, அவர், ஏதேதோ வீரதீரச் செயல்களைச் செய்திருக்கிறார், அதனால்தான் நான் பயந்துகொண்டு ஓடிவந்துவிட்டேன் என்று கூறுகிறார். வீரர்களுக்குப் பயங்காளிகளைக் கண்டால் பிடிக்காதல்லவா?

உப்புச் சத்தியாக்கிரக காலத்தில், எல்லோரும் கடலோரத்தில் உப்புக் காய்ச்சிட, இவர் தமது வீரதீரத்தை உலகு உணரவேண்டும் என்பதற்காக, அலைகளுக்குப் பயந்தோர் கரையில் கிடக்கட்டும், நான் அஞ்சாநெஞ்சன்! கடல் நடுவே சென்று, கொண்டுவருவேன் உப்பு என்று உள்ளே இறங்கிச் சென்று திரும்பி வந்தவராக இருக்கக் கூடும். யார் கண்டார்கள்! இப்படி ஏதாவது வீரச்செயல் செய்திருந்திராவிட்டால், எனக்குத் தைரியம் இல்லை என்பதைக் கண்டுபிடித்துக் கூறிக் கேலி பேசிட மனம் வந்திருக்காதல்லவா?

எல்லோரும் மகாத்மாவின் தலைமை காரணமாகக் காங்கிரஸ் இயக்கம் வீரதீரமாகப் போராடியதால் சுயராஜ்யம் கிடைத்தது என்று எண்ணிக்கொள்கிறோம். உண்மை அதுவாக இருக்காது போலத் தோன்றுகிறது! ஒருவருக்கும் கூறாமல், ஒருநாள், இவர் போயிருக்கிறார் இலண்டன் பட்டினம் - எவர்? - அஞ்சா நெஞ்சர் அமைச்சர் சுப்பிரமணியம்! சென்று, சர்ச்சில் வீட்டுக் கதவைத் தட்டி இருக்கிறார் பலமாக.
------------------

சூடும் சுவையும் (3)

திராவிடநாடு பிரச்சினை - அரசினர் போக்கு - தி. மு. க.மீது கணை

தம்பி!

சூடும் சுவையும் நிரம்பிய திராவிடநாடு பிரச்சினை குறித்துக் காங்கிரஸ் வட்டாரத்திலே கவனிப்பவர்கள், பல வகையினர்; ஒவ்வொரு வகையினர் ஒவ்வொரு முனையிலிருந்து பிரச்சினையைக் கவனிக்கிறார்கள் என்பதனைச் சென்றகிழமை எடுத்துக் காட்டியிருந்தேனே, நினைவிலிருக்கிறதல்லவா? ஒரே அடியாக அவர்கள் அனைவரும் நமது பிரச்சினைக்கு ஆதரவு தர முன்வரக் காணோமே என்று நான் கவலைப்படவுமில்லை, கலக்கமடையவுமில்லை. ஆர அமர யோசிக்காமல், உணர்ச்சி யால் மட்டும் உந்தப்பட்டு நம்முடன் உறவாடிவிட்டு, செச்சே! இப்போதல்லவா புரிகிறது, இது பொருளற்ற பிரச்சினை என்பது என்று கூறி ஓடிவிடுபவர்களைவிடப், பிரச்சினை புரிகிறவரையில் தயக்கம் காட்டுபவர்கள், தெளிவு ஏற்படுகிறவரையில் கேள்வி கேட்பவர்கள், விளக்கம் கிடைக்கிறவரையில் இசைவுதர மறுப்பவர்கள், ஆயிரம்மடங்கு மேல். குரலை உயர்த்தி உயர்த்திப் பேசினவர்கள், இன்னும் என்ன இவர்களிடம் பேச்சு! இரண்டில் ஒன்று பார்த்துவிடவேண்டியதுதான்! - என்று பரணி பாடினவர்கள், கொள்கையிலே உண்மையான பிடிப்பு இல்லாததால், எத்துணை வேகமாக வெளியேறிவிட்டார்கள் என்பதைத்தான் பார்த்துவிட்டாயே! ஆகவே, தயக்கம் காட்டுபவர்கள் மேல், தகதகவென ஆடிவிட்டு ஓடிவிடுபவர் களைவிட!! எனவே, காங்கிரஸ் வட்டாரத்திலே, நமது பிரச்சினைக்கு உடனடி ஆதரவு கிடைக்கவில்லையே என்பது எனக்குக் கலக்கத்தைத் தரவில்லை.

"நைடதம்'' எழுதிய அதிவீரராமபாண்டியனுடைய அண்ணியார், நூலின் தரம் எப்படி என்று கேட்கப்பட்டபோது சொன்னார்களாம், வேட்டை நாய் வீடு திரும்புவதுபோல இருக்கிறது என்று. வேட்டைக்குக் கிளம்பும்போது, வேகம் மிகுதியாக இருக்கும்; வெற்றி கிட்டினும் கிட்டாமற்போயினும், அலுத்து, களைத்து, சோர்ந்து வீடு திரும்பும் அல்லவா? அதுபோல, "நைடதம்'' எனும் நூல் முற்பகுதி மிக வேகமாக இருக்கிறது. பிற்பகுதியில் வேகம் இல்லை, மந்தமாக இருக்கிறது என்பதைக் கூறவே வேட்டை நாய் உவமையினைப் புலமைமிக்க அம்மையார் கூறினார்.

விடுதலை இயக்கத்தில் ஈடுபடுவோர்களும், தம்பி! தங்களிடம் உள்ள, திரட்டிக் காட்டக்கூடிய வேகம் அவ்வள வையும், துவக்கத்திலேயே கொட்டிக் காட்டிவிட்டு, நின்று நிதானமாக, நீண்ட காலம் நெருக்கடிகளை ஏற்று, தொண்டாற்ற வேண்டிய நிலைமை ஏற்படுகிறபோது, வேகம் குன்றிப்போய், சோர்வு தட்டிப்போகும் நிலை அடைவார்களானால், அவர் களால் விடுதலை இயக்கத்துக்குப் பலன் இல்லை. ஆர்வம் மெள்ள மெள்ள வரலாம், தவறில்லை; தயக்கம் இருக்கலாம், தவறில்லை; வேகம் குறைவாக இருக்கலாம், தவறில்லை; ஆனால், தொண்டாற்றும் திறம் நீடித்து இருக்கவேண்டும், வெற்றி ஈட்டிடும்வரையில் தொண்டாற்றவேண்டும்; பொறுப்புணர்ச்சி இருக்கவேண்டும்.

காகிதக் கப்பல், நொடியிலே தயாராகிவிடுகிறது. கொளுத்தி வைக்கும் "மத்தாப்பு' பளிச்சிட்டுக் காட்டுகிறது. விடுதலை இயக்கத்தில் தொண்டாற்ற, வேகம் வெடித்துக் கொண்டு வருவதுமட்டும் போதாது, காட்டுத்தீ போலன்றி, வீட்டு விளக்கு நிதானமாக, சீராக ஒளிவிட்டு இருளை அகற்றுவது போல, தொண்டு புரிதல்வேண்டும்.

ஓட்டப் பந்தயக்காரர்களிலே சிலர், துவக்கத்திலேயே குடல் தெரிக்க ஓட ஆரம்பித்து, பாதிப் பந்தயத்தின்போது, அதுவரை, வலிவை இழக்காமல் அதேபோது ஒரே அடியாகப் பின்தங்கிவிடாமல், ஒரு சீராக ஓடி வருபவர் வேகத்தை அதிக மாக்கிக்கொள்ளக் கண்டு, அந்த வேகத்துடன் போட்டியிடத் தக்க நிலையின்றி, களைத்துப்போவதனைக் கண்டிருக்கலாம்; விடுதலை இயக்கத்திலும், துவக்கத்திலே மிகுதியான வேகம் காட்டுவது இடையிலே கெடுதலை ஏற்படுத்துவதைக் கண்டிக் கிறோம். எனவே, காங்கிரசிலே உள்ளவர்கள், வேகமாக நம்முடன் வந்து சேர்ந்துவிடவில்லையே என்ற வருத்தம் எனக்கு எழவில்லை. அவர்கள் அனைவரும் சிந்திக்கிறார்கள் நமது பிரச்சினையைப்பற்றி, அது எனக்கு, இப்போதைக்குப் போதுமானதாகத் தெரிகிறது.

ஏசட்டும்.
எதிர்க்கட்டும்.
பழி பேசட்டும்.
பகை கொட்டட்டும்.
ஆர்ப்பரிக்கட்டும்.

எதை வேண்டுமானாலும் அவர்கள் செய்யட்டும், பரவாயில்லை; அவைகளிலிருந்து தப்பிப் பிழைத்தால்தான் விடுதலை இயக்கம் என்பதற்கே மாண்பு ஏற்படும்; ஏளனமும் எதிர்ப்பும் அழிந்து விடுமானால், உண்மையான விடுதலை உணர்வு உண்டாக வில்லை என்று பொருள். எனவே, நமது விடுதலை உணர்வுக்கு எத்துணை வலிவு இருக்கிறது என்பதே, அதனிடம் காணப்படும், தாங்கிக்கொள்ளும் சக்தியின் தரத்தைப் பொறுத்திருக்கிறது. எனவேதான், காங்கிரஸ் வட்டாரத்தினர் நம்மைத் தாக்கும் போது எனக்கு எரிச்சல் ஏற்படுவதில்லை; அதுமட்டும் அல்ல; அவர்கள் நம்மைத் தாக்கத் தாக்கத்தான், நமது பிரச்சினையை அவர்கள் மிகக் கூர்மையாகக் கவனித்திருக்கிறார்கள், நமது பிச்சினை அவர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது என்பது புரிகிறது; அதிலே ஒரு மகிழ்ச்சியும் பிறக்கிறது.

காங்கிரசார்களிலே ஒரு சாரார்,

ஒரே அடியாகப் பிரிந்துபோய்விடுகிறோம் என்று கூறக்கூடாது. கோபம் கிளம்பும், எதிர்ப்பு ஏற்படும். ஆகவே, மெள்ள மெள்ளப் பக்குவமாக, "எங்களுக்கு அதிகாரம் அதிகம்வேண்டும், சலுகைகள் தரப்பட வேண்டும், பொருளாதார வளர்ச்சிக்கு வழி செய்தளிக்க வேண்டும்.'' என்று பேசிக் காரியத்தைச் சாதித்துக்கொள்ள வேண்டும். ஒரே அடியாகப் பிரிந்துபோகவேண்டும் என்று கூறி வடநாட்டாரின் கோபத்துக்கு ஆளாகிவிடக்கூடாது; பல காரியங்கள் கெட்டுவிடும். என்று சொல்கிறார்கள்.

பல ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் தலைவர்களிலே தகுதிமிக்க ஒருவர், என்னிடமேகூட இப்படிக் கூறினார்.

காலமறிந்து காரியமாற்றவேண்டும் என்பது இவர்தம் கொள்கை.

இன்று மத்திய சர்க்காரிடம் குவிந்துகிடக்கும் அதிகாரத் தையும், வடநாட்டுத் தலைவர்களிடம் உள்ள செல்வாக்கினையும் கண்டு, திகைத்துப்போய்க் கிடைக்கும் நிலையில், இவ்வளவு வல்லமையுள்ள வடநாட்டுத் தலைவர்களுடன் முட்டி மோதிக் கொள்வது ஆபத்தாக முடியுமே, என்ற அச்சம் இவர்களை இவ்விதம் நினைத்திட வைக்கிறது.

அடிமைப்படுத்தப்பட்டிருக்கிறோம் என்பதனை மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுவது, அச்சம் பிடித்தாட்டும் நிலை, மனதில் உள்ளதை எடுத்துக்கூறக்கூட அச்சம்! இது மெள்ள மெள்ள, மிக நல்லவர்களைக்கூட, உள்ளொன்றுவைத்துப் புறமொன்று பேசவைக்கிறது. கீழ்மட்டத்தில் இப்போக்குக் காணப்பட்டால், நயவஞ்சகம் என்று கூறிவிடுகிறோம்; மேல் மட்டத்திலே இப்போக்கு இருக்கும்போது, அவ்விதம் கூறாமல், இராஜதந்திரம் என்று கூறிவிடுகிறோம்.

ஒரு நாள், சென்னை சட்டசபையிலே, இரும்புத் தொழிற்சாலை இங்கு அமைக்கப்படவேண்டும் என்பதற்காக வாதாடினேன். அமைச்சர்கள் வழக்கம்போல் மறுத்துப் பேசினர்; காங்கிரஸ் உறுப்பினர்கள், கட்சிப் பற்றுக் காரணமாக என்னைக் கண்டித்தனர்.

கவைக்குதவாப் பேச்சு.
கண்மூடித்தனம்.
கருத்தற்ற போக்கு.
இப்படிப் பல அர்ச்சனைகள்!!

பிற்பகல்; நண்பர் சிலருடன் ஒரு அமைச்சரைக் காணச் சென்றேன், அலுவலகத்தில், பொதுப் பிரச்சினை சம்பந்தமாக - அவரை ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்படி - அழைத்திட சிறிதளவு தயக்கம் எனக்கு; காலையிலே, சட்டசபையிலே, மிகக் கண்டிப்பாக, அமைச்சர்களுக்குப் பிடிக்காத விஷயமாகப் பேசினோமே, அமைச்சர் அதற்காகக் கோபமாக இருப்பாரோ என்னவோ என்ற எண்ணம் எனக்கு. ஆனால் அமைச்சர் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும். நிலையை நான் காணவில்லை, மாறாக, மலர்ந்தமுகத்துடன் வரவேற்றார்; வரவேற்றதுடன், காலையிலே, அவர் என்னைக் மறுத்துப்பேச நேரிட்டதற்காக வருந்தினார்.

நீங்கள் பேசுகிறீர்கள் தாராளமாக; உரிமையுடன். எங்களுக்கு அந்த நிலை இல்லை. ஆனால் எங்கள் உள்ளத்திலே, அந்த எண்ணமெல்லாம் இல்லை என்று எண்ணிக்கொள்ளாதீர்கள். எங்களுக்கு எல்லாம் தெரிந்து தான் இருக்கிறது. ஆனால் நாங்கள் உங்களைப்போலவே பேசுவதற்கு இல்லை. எங்கள் நிலை அப்படி. என்று கூறினார்.

திராவிட முன்னேற்றக் கழகம் வலிவுடன் இருப்பதுதான் நல்லது. அப்போதுதான் தமது குரலுக்கு டில்லியில் ஓரளவு மதிப்பு ஏற்படும் என்பது இவர்களின் உள்நோக்கம்.

தி. மு. கழகம் இந்த முறையில் எதிர்ப்புக் காட்டியபடி இருக்கவேண்டும். நாம், வடநாடு - தென்னாடு என்ற பேதம் கூடாது என்று பேசியபடி, ஒத்துழைப்புத் தந்து கூடிக் குலவி, கூடுமானவரையில், நமது நாட்டுக்குத் தேவையான சலுகை களைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பது, இவர்களின் திட்டம்.

கிட்டத்தட்ட இவர்களின் போக்கு, வெள்ளையர் காலத்திலே இங்கு ஜஸ்டிஸ் கட்சியினர் கொண்டிருந்த போக்குப் போன்றது. காங்கிரஸ் இயக்கம் வெள்ளை ஏகாதிபத்தியத்தை மிகப் பலமாகத் தாக்கியும், மறியல், சட்டமறுப்பு, வரிகொடா இயக்கம்போன்ற கிளர்ச்சிகளை நடத்தியும் வந்தபோது, இவ்விதம் எதிர்ப்பது பலன் தராது, எதிர்க்க எதிர்க்க வெள்ளையர் களுக்கு நம்மீது வெறுப்புத்தான் வளரும், வெறுப்பு வளர்ந்தால், நாட்டைச் சீராக்கும் முயற்சியே செய்யமாட்டார்கள். எக்கேடோ கெட்டுப்போகட்டும் நமக்கென்ன, சுரண்டின வரையில் இலாபம் என்ற போக்கிலே இருந்து விடுவார்கள்; எனவே நாம் பிரிட்டிஷாருடன் ஒத்துழைத்து, அரசாங்க நிர்வாகத்திலே பங்கேற்று, பக்குவமாக நடந்து, படிப்படியாக அதிகாரத்தைப் பெற்று, வலிவும் பொலிவும்பெற்று, சுயராஜ்யத்துக்குத் தகுதி உள்ளவர்களாகிவிடவேண்டும் என்று கூறினர். பலர் இதே நோக்குடன் நடந்துகொண்டனர்.

அன்று ஜஸ்டிஸ் கட்சி மேற்கொண்ட முறைபோன்ற தாகவே, இன்று தமிழகக் காங்கிரசார் மேற்கொண்டுள்ள போக்குக் காணப்படுகிறது.

குலாம்கள்
அடிமைகள்
பதவிப் பித்தர்கள்
தாசர்கள் பூட்ஸ் துடைப்பவர்கள்
வால் பிடிப்பவர்கள்

என்றெல்லாம், அந்த நாட்களில் ஒத்துழைத்து உரிமைபெற வேண்டும் என்று கூறிய ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களைக் கண்டித்தனர், காங்கிரஸ் தலைவர்கள்.

அதேபோல, இன்று அதேவிதமான போக்குடன் நடந்து கொள்ளும் தமிழகக் காங்கிரசாரை, திராவிட விடுதலை இயக்கத்தினர் கண்டிக்கவேண்டும் என்பதற்காக இதனைக் கூறவில்லை. காங்கிரசிலே ஒருவகையினருடைய போக்கு எவ்விதம் இருக்கிறது என்பதை விளக்கவே இதனைக் கூறினேன்.

ஒத்துழைத்து உரிமைபெறவேண்டும் - உறவாடி உயர்வு பெறவேண்டும் - பக்குவமாகப்பேசி காரியமாற்றிடவேண்டும் - என்ற போக்குடைய காங்கிரஸ் நண்பர் ஒருவர், முதலிலே,

துணிவைப் பாராட்டுகிறேன்
வெளிப்படையாகப் பேசவேண்டியதுதான்

என்றெல்லாம் பாராட்டினார். ஆனால் அவர் சென்ற கிழமை என்னிடம் வந்து, மிகக் கவலையுடன்

என்ன இருந்தாலும் இராஜ்யசபையிலே நீங்கள் இவ்வளவு பச்சையாக, திராவிடநாடு பற்றிப் பேசியிருக்கக் கூடாது. . . .

என்று சொன்னது கேட்டு நான் திடுக்கிட்டுப் போகவில்லை, காரணம் எனக்குப் புரிந்ததால். அவரே மேற்கொண்டு விளக்கம் அளித்தார்.

தென்னாடு புறக்கணிக்கப்பட்டிருக்கிறது என்று புகார் கிளப்பினாலே, அங்கு கொதிப்படைந்து, வடக்கு - தெற்கு என்று பேதம் காட்டிப் பேசுவது அற்பத்தனம், அக்ரமம். இதை அனுமதிக்கமாட்டோம் என்று ஆர்ப்பரிப்பார்கள்.

மத்திய சர்க்காருக்கு அதிகாரம் மிக அதிகம் இராஜ்ய சர்க்கார், கேவலம், நகராட்சிபோல ஆக்கப்பட் டிருக்கிறது. எங்கள் மந்திரிகள் எதற்கும் டில்லிக்குக் காவடி தூக்கிக்கொண்டு வரவேண்டி இருக்கிறது. இந்த நிலை மாறவேண்டும்; இராஜ்யங்களுக்கு அதிக அதிகாரம் அளிக்கப்படவேண்டும் என்று வாதாடினாலே, வடக்கே உள்ளவர்களுக்கு ஆத்திரம் பிறக்கும், ஆஹா! நேரு சர்க்காரையா குறை கூறுகிறாய் என்று பதிலடி கொடுப்பார்கள்.

இந்தி மொழியைத் திணிக்காதீர்கள், தாய்மொழி அழிந்துவிடும். மொழி ஆதிக்கம் நல்லது அல்ல, தென்னகம் அதனை எதிர்த்தே தீரும். இந்தி ஏகாதி பத்தியத்தை சகித்துக்கொள்ளமாட்டார்கள், எமது மக்கள் என்று பேசினால்போதும், தீமிதித்தவர்போலாகி வட நாட்டுத் தலைவர்கள் பகை கக்குவர்.

அப்படிப்பட்ட இடத்துக்குப் போய், நீ ஒரே அடியாக. நான் திராவிடன் - எங்கள் நாடு திராவிடநாடு - எங்கள் பண்பாடு தனியானது - நாங்கள் தனியாக வாழ்ந்திட விரும்புகிறோம் - தனிநாடு தேவை - தனி அரசு தேவை என்று பேசிவிட்டாய். இது கேட்டு அவர்கள் எப்படிச் சும்மா இருக்க முடியும்? ஆத்திரம் அவர்களுக்கு; "இவ்வளவு பெரிய எண்ணிக்கை பலத்துடன் நாம் இருக்கிறோம்; ஈடு எதிர்ப்பற்ற நிலையிலே அரசோச்சு கிறோம்; நம் எதிரில், இந்தத் தி. மு. கழகத்தான் வந்து நின்றுகொண்டு, துளியும் அச்சமின்றி, நமது அதிகாரத் தைத் துச்சமென்று எண்ணிக்கொண்டு, இதுவரையில் இங்கு ஒருவரும் பேசாததைத் துணிச்சலாகப் பேசுகிறான்; நாமென்ன மரக்கட்டைகளா? நம்மை வம்புக்கு இழுப்பது போல, அறைகூவி அழைப்பதுபோல, ஒரு ஆள் வந்து பேசுவதா? அதை நாம் அனுமதிப்பதா? ஜின்னாவுக்குப் பிறகு - நாட்டுப் பிரிவினைபற்றி, தில்லியில் அரச அவையிலே பேச்சுக் கிளப்பப்பட்டிருக்கிறதே! இதை எப்படி நாம் பொறுத்துக்கொள்ள முடியும்? விடக் கூடாது. அனுமதிக்கக்கூடாது. அழித்துவிடவேண்டும்' என்றெல்லாம்தானே அவர்களுக்குத் தோன்றும். கோபம் கொதிக்காதா? அந்தக் கோபத்தின் காரணமாக, அவர்கள் எதையும் செய்யலாமே. அதிகாரம் அவர்களிடம் அவ்வளவு இருக்கிறதே, நாடு அவர்களிடம். படை அவர்கள் சொல் கேட்க. இவைகளைப்பற்றி எண்ணிப் பார்க்காமல், நீ பேசிவிட்டு வந்துவிட்டாய். பார் இப்போது அதனால் ஏற்படும் விளைவுகளை. உனக்கும் உன் கழகத்துக்கும்தானே கெடுதல் இதனால். நடமாடவிட மாட்டார்களே இனிமேல். பக்குவமாகப் பேசிவிட்டு வந்திருந்தாலாவது, "பொருளாதார வளர்ச்சிவேண்டும், மேலும் சிறிது அதிகாரம்வேண்டும், மொழி உரிமை வேண்டும்' என்று வற்புறுத்திக்கொண்டு வரலாம்; இப்போது இழுத்துக்கொண்டுபோய்ச் சிறையிலே தள்ளி விடுவார்கள்போலிருக்கிறதே; கழகமே தடைசெய்யப் படுமாமே! இந்த விபரீதம் ஏற்படக் காரணம் உன்னுடைய பேச்சுத்தானே! அப்படியா பேசுவது, ஒரே அடியாக. திராவிடன், திராவிடநாடு, தனிநாடு என்றெல்லாம் ரொம்ப ஆசைப்பட்டுவிட்டாய். ஆர்வத்தை அடக்கிக் கொள்ளத் தெரியவில்லை.

இவ்விதமாக அந்த நண்பர் பேசிவிட்டு, மேஜைமீது ஒரு நாளிதழை வீசி எறிந்தார்.

தி. மு. க. மீது நடவடிக்கை எடுப்பது உறுதி!

தமிழக அமைச்சருக்கு டில்லி அவசர அழைப்பு

மதுரை, ஜூன் 1

திராவிடநாடு பிரிவினையை வலியுறுத்திக்கொண்டு வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின்மீது நடவடிக்கை எடுப்பது முடிவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.

தமிழக முதல் அமைச்சர் திரு. கே. காமராசர் நாளை புதுடில்லியில் நடைபெறும் தேசிய ஒருமைப்பாடு மாநாட்டில் கலந்துகொள்கிறார். திராவிட முன்னேற்றக் கழகத்தின்மீது எந்தவித நடவடிக்கை எடுப்பது என்பதைபற்றி அம்மாநாட்டில் வெளியிடுவார். பிரிவினையை வலியுறுத்தும் திராவிட முன்னேற்றக் கழகத்தின்மீது நடவடிக்கை எடுக்கப்போவது உறுதியாகிவிட்டது.



காங்கிரஸ் நண்பர், நாளிதழில் காணப்பட்ட செய்தியால், பதறிப்போய்ப் பேசினார். எல்லா இதழ்களுமே, இதுபோலச் செய்திகளை வெளியிட்டிருந்தன. ஊரெங்கும் இதே பேச்சுத் தான். இவ்வளவு கூறுவானேன், தம்பி! நானே, சென்றகிழமை அரசியல் இருந்த நிலைமைகளைக் கண்டபோது, இந்த கிழமை உனக்கு மடல் தீட்ட இயலுமா என்பதுபற்றி ஐயப்பாடு கொண்டிருந்தேன்.

மங்களம் பாடப்போகிறார்கள், தெரியுமா!

மாட்டிக்கொண்டார்கள் பயல்கள், வசமாக!

கண்மண் தெரியாமல் ஆடினார்களே, இனி, கப்சிப் வாயைத் திறக்கக்கூடாது, தெரியுமா. . . .

ஒழிந்துபோகட்டுமய்யா, ஊரிலே ஒரே அமளி இதுகளால். . . . .

நம்மை யார் என்ன செய்ய முடியும் என்று மண்டைக் கர்வம், இதுகளுக்கு. சட்டம் எத்தனை நாளைக்குத்தான் சகித்துக் கொள்ளும், இப்போது, கொட்டப்போகிறது; பயல்கள் இனிப் பெட்டிப் பாம்புதான்.

கழகத்தைத் தடை செய்துவிடத்தான் போகிறார்கள்.

பிரிவினைப் பேச்சுப் பேசினால், பிடித்துப்போடு வார்கள் சிறையில், ஐந்து வருஷம் ஆறு வருஷம்.

நாட்டைப் பிரிக்கச் சொல்வது இராஜத் துவேஷக் குற்றம் இனி; தெரியுமா? இராஜத்துவேஷக் குற்றத்துக்கு என்ன தண்டனை தெரியுமா? நாடு கடத்தலாம்! ஆயுள் தண்டனை தரலாம்! சுட்டுக் கொல்லலாம், பலாத்காரம் தலைதூக்கினால். முடிந்ததா இதுகளோட கதை ஒழியட்டும்!

அவன் கெட்டிக்காரன்யா, இப்படி வரப்போவது தெரிந்துதான். சாமர்த்தியமாக இதுகளைவிட்டுப் போயேவிட்டான். . .

பிரிவினைகூடாது என்று பேசவும் ஆரம்பிச்சாச்சி. . .

தம்பி! ஊரார் உரையாடல் இவைபோல; தெரியுமே உனக்கு.

கணக்கே போட ஆரம்பித்தார்கள், அவசரக்காரர்கள் - எவ்வளவு பேர் பிடிபடுவார்கள் என்பதுபற்றி.

கழகத் தோழர்களுக்குள் பேச்சே இது குறித்துத்தான் - நமக்கு எப்போது அழைப்பு வரும் என்பது பற்றி, ஆர்வத்துடன்.

நாடு பிரியும் பேச்சு இவர்கள் பேசினால், மற்றவர்களுக்கு என்னவாம்? இவர்கள் மக்களிடம் பேசட்டுமே, நாடு பிரியக் கூடாது என்று. அதை விட்டுவிட்டு, நாட்டுப் பிரிவினைபற்றிய பேச்சேகூடாதே - சட்டவிரோதம் - தடை போடுவோம் - என்றா மிரட்டுவது? இதுதான் சுயராஜ்யமா? இதுதான் பேச்சு உரிமையா?

நாட்டுப் பிரிவினைபற்றி தி. மு. கழகம் பேசப்பேச அதைக் கேட்டு, மக்கள் மனம் கெட்டுப்போகிறதாம், பிரிவினை மனப் பான்மை வளருகிறதாம், பிளவு சக்தி வளருகிறதாம்; அதனால் தான் பிரிவினைப்பற்றிப் பேசக்கூடாது, அதற்காக ஒரு கழகம் இருக்கக்கூடாது என்று தடைசெய்யப் போகிறார்கள்; சட்டம் போடப் போகிறார்கள்.
---------------

சூடும் சுவையும் (4)

சி. பி.யைப் பழிவாங்கியது -
ஏக இந்தியா வாதம் -
திராவிடம் பிரிதல்

தம்பி!

விந்தையான செய்தி இது என்று குறிப்பிட்டிருந்தேன், சென்ற கிழமை; கவனமிருக்குமே. ஏன் விந்தையான செய்தி என்கிறேன் என்றால், தம்பி! தேசிய ஒருமைப்பாடு உண்டாக்க திருவிதாங்கூர் மட்டுமே தனி நாடாகி, தனி அரசு நடாத்த முடியும் என்று முழக்கமிட்டு, ஏற்பாடுகளில் ஈடுபட்ட சி. பி. தானா, இந்தக் காரியத்துக்கு அமர்த்தப்படவேண்டும் என்று எவரும் எண்ணத்தான் செய்வார்கள். நிலைமைக்கு, அவரவர்கள் தத்தமது திறமைக்கு ஏற்ப விளக்கம், காரணம் காட்டுவார்கள்! நிரம்ப!! ஆனால், காங்கிரஸ் வட்டாரமேகூட, உள்ளபடி அதிர்ச்சி அடைந்திருக்கிறது, சி. பி. தலைமையில் குழு அமைக்கப் பட்டது கண்டு.

சி. பி. இராமசாமி ஐயர், கோபாலசாமி ஐயங்கார்போல, வெள்ளைக்காரன் இருந்த வரையில் அவனிடம் "சேவகம்' பார்த்துவிட்டு, சுயராஜ்யம் வந்ததும், அதிலே "சேவகம்' பார்க்க வந்தவரல்ல. எஜமானர்கள் மாறினாலும், ஊழியர் ஊழியரே என்ற தத்துவத்தைத் தடியாகக்கொண்டு மேலிடம் நடந்தவர் அல்ல, சி. பி.

வேண்டாம் இனிப் பதவி என்று கூறிவிட்டு, வேதாந்த விசாரணையில் ஈடுபட்டவர் அல்ல;

ஓய்வுபெற்றாலும், அவ்வப்பொழுது, நேருபிரானுக்குத் துதிபாடியபடி இருந்தால், ஏதாகிலும் கிடைக்கும் என்ற எண்ணத்துடன் "நாமாவளி' பாடிடும் போக்கினருமல்ல, சி. பி.

எனக்கு ஏன்; இன்னமும் ஏன்? என்று உரத்த குரலில் கேட்டுக்கொண்டே, மெல்லியக்குரலில், "என்ன இலாகா? என்ன அந்தஸ்து?' என்று கேட்கும் பசி நிறைந்தவரும் அல்ல, சி. பி.

மகன், தில்லியில் மந்திரியாக வீற்றிருப்பதைக் காண்பவர். விடுதலை இயக்கத்தில் துவக்க காலத்தில் ஈடுபட்டு, அன்னி பெசண்டு அம்மையாரின் அரசியல் அரவணைப்பிலே வளர்ந்து, நிர்வாகத் துறையில் நுழைந்து, நெரித்த புருவத்தையும், நேர்த்தி யான அறிவாற்றலையும் ஒருங்கே இணைத்து அரசோச்சியவர். காங்கிரசை நந்திப் பிழைத்தாகவேண்டிய நிலையில்லை. அவர் ஏன் அழைக்கப்பட்டார்?

இந்தப் பதினைந்து ஆண்டுகளாக உங்கள் தலைவர் களுக்குத் தெரியாததை சி. பி. தெரிந்து கூறி, உமது தலைவர் களால் இதுநாள் வரையில் சாதிக்கமுடியாதுபோன தேசிய ஒருமைப்பாட்டினை, சி. பி. சாதிக்கப்போகிறார் என்றா அவரிடம் இந்தக் காரியத்தை ஒப்படைத்தீர்கள்? என்று கேட்கும்போது, காங்கிரசாருக்கு வேதனையாகவும் வெட்கமாகவும்தான் இருக்கிறது.

தேசிய ஒருமைப்பாடு கிடைத்திடக் காலமெல்லாம் உங்கள் போக்கை வன்மையாகக் கண்டித்துக்கொண்டிருந்த சி. பி. தானா அகப்பட்டார்! அவர் பிரிட்டிஷ் ஆட்சி முறையிலே இணைந்து இருந்தவராயிற்றே - கோஷன் பிரபுவைத் தலைவராகக்கொண்ட எனது சர்க்கார் என்று தர்பார்மொழி பேசியவராயிற்றே - கிளர்ச்சிகளை ஒடுக்க மிகக் கண்டிப்பான அடக்குமுறையை அவிழ்த்துவிட்டவராயிற்றே, பொதுமக்கள் இயக்கத் தொடர் பற்று, பதவியிலே பலகாலம் ஈடுபட்டுக் கிடந்தவராயிற்றே, அவரா, இந்தக் காரியத்துக்கு ஏற்றவர்? என்று கேட்கும்போது, காங்கிரசாருக்கு வருத்தமாகத்தான் இருக்கும்.

உள்ளபடி சி. பி. என்னதான் எண்ணிக்கொள்வார். சதா கிளர்ச்சியிலேயே காலத்தைக் கடத்திவிட்ட காங்கிரசாருக்கு, பிரச்சினையை எப்படித் தீர்த்து வைப்பது என்று புரியவில்லை. முழக்கம் எழுப்பத் தெரியும், மூலை பாயத் தெரியும், சட்டம் மீறத் தெரியும். சத்யாக்கிரகம் தெரியும். இராஜதந்திரப் போக்குத் தெரியாதே! பதினைந்து ஆண்டுகளாக எதை எதையோ செய்து பார்த்தார்கள், தேசிய ஒருமைப்பாடு காண பலிக்கவில்லை; நாளுக்குநாள் பிரிவினை கேட்கும் கழகம் வளரக் கண்டனர், என்ன செய்வதென்று புரியவில்லை; திகைத்துப்போய், ஐயனே! அபயம்! இந்த ஆபத்திலிருந்து எம்மைக் காப்பாற்றி அருளவேண்டும்! - என்று அழைத்து அஞ்சலி செய்தனர் - ஆயிரத்தெட்டுத் தவறுகள் செய்தவர்கள் என்றாலும், கெஞ்சிக் கூத்தாடும்போது என்ன செய்வது? "சரி' என்று சம்மதம் கொடுத்தேன், பதினைந்து வருடம் அரசாண்ட பிறகு, இவர்களின் அரசு சாதிக்க முடியாமற்போனதை நான் சாதித்துக் கொடுக்க வேண்டி இருக்கிறது. எனக்கு ஆணவம் என்று ஆயிரம் தடவை ஆர்ப்பரித்தவர்கள், இந்தக் காங்கிரசார். வெள்ளையனுக்குக் குலாம் என்று ஏசினார்கள். பதவிப் பித்தம் என் தலைக்கு ஏறி விட்டது என்று பரிகாசம் செய்தார்கள். நாட்டுக்குத் துரோகி என்று தாக்கினார்கள். மக்களின் உரிமைக் குரலை அடக்கிடும் மாபாவி என்று சபித்தனர். அடக்குமுறையை அவிழ்த்து விட்டவன் - டயர் போன்றவன் - என்றெல்லாம் கண்டித்தார்கள். சுயராஜ்யத்துக்காகக் காங்கிரஸ் பாடுபட்டபோது சுகவாசம் அனுபவித்துக்கொண்டிருந்த துரோகி என்று தூற்றினர். மக்களின் மனதை அறிந்துகொள்ளத் தெரியாத மமதையாளன் என்றனர். பத்தாம்பசலி என்றனர். தியாகத்தின் மதிப்பு அறியாதவன், தேசப் பிதாவாம் மகாத்மாவையே மிரட்டியவன் என்றெல்லாம் ஏசினார்கள்! அப்படிப்பட்டவர்கள், சுயராஜ்யத்துக் காகப் பாடுபட்டுத் தியாகத் தழும்பேறிய பல காங்கிரஸ்காரர்கள் இருக்க, அவர்களையெல்லாம் விட்டுவிட்டுத் தேசிய ஒருமைப் பாடு எனும் சிக்கல்மிக்க காரியத்தைச் சாதிக்க, என்னைத் துணைக்கு அழைக்கிறார்கள். ஏகாதிபத்தியக் கொலுப் பொம்மை என்று என்னைக் கேலி பேசினார்கள், இன்று என்னிடம், தேசிய ஒருமைப்பாடு எனும் அடிப்படைத் துறை ஒப்படைக்கப் பட்டிருக்கிறது. இத்தனைக்கும் நான் காங்கிரஸ் ஆட்சியாளர் களை, இந்திரனே! சந்திரனே! என்று அர்ச்சிப்பதுமில்லை. என் சுயமரியாதையை இழக்கச் சம்மதித்ததும் இல்லை. இவர்களைப் பற்றி நான் கொண்டுள்ள கருத்தை, ஒளித்து வைத்ததுமில்லை; கண்டித்துப் பேசி இருக்கிறேன். என்றாலும், என்னைதான் அழைக்கிறார்கள். காலமெல்லாம் என்னைக் கண்டித்த வர்கள், கடைசியில் என்னைக் கைகூப்பி அழைக்கிறார்கள். பிரச்சினையைத் தீர்த்துவைக்கத் திறமைவேண்டாமா, தெளிவுவேண்டாமா, ஆராய்ச்சிவேண்டாமா, ஆற்றல் வேண்டாமா? இது என்ன, உப்புக் காய்ச்சுகிற வேலைபோல எளிதானதா? அல்லது துணியைக் கொளுத்துகிற காரியமா? இரட்டை, தக்ளியா? இதற்குத் தேவை, தெளிவு, துணிவு; இதனை அவர்கள் எங்கே பெற்றிருக்கிறார்கள்? என்னை இவர்கள் ஏசியதை எண்ணும்போது எரிச்சலாகத்தான் இருக்கிறது. என்றாலும், ஆண்டு பதினைந்தாகியும் இவர்களால் தீர்க்கப்பட முடியாத பிரச்சினையைத் தீர்க்கவல்லவன் நானே என்பதை உலகுக்கு இவர்களே அறிவிக்கிறார்களே, அது போதும், இவர்களுக்கு ஏற்றத் தண்டனை! தூற்றினவர்கள் துதிபாடகர் களாவது சாதாரண சம்பவமா? சகலரும் சிந்திக்கக்கூடியதா!! வரலாற்றிலே பொறிப்பார்களல்லவா, எந்தச் சி. பி. யைக் காங்சிரசார் மிகவும் கேவலமாகக் கண்டித்து வந்தார்களோ, அதே சி. பி.யை தேசிய ஒருமைப்பாட்டுக்கு வழிகாட்டச் சொல்லிக் கேட்கவேண்டி நேரிட்டது. தன்னை இழிமொழியால் ஏசின காங்கிரஸ்மீது பழிதீர்த்துக் கொள்வதுபோல, எந்தக் காங்கிரஸ் அவர்மீது பழி சுமத்திற்றோ, அதே காங்கிரசுக்குத் துணைபுரிய சி. பி. முன் வந்தது, வரலாற்றிலே பொறிக்கத்தக்க வியப்பான நிகழ்ச்சி என்றல்லவா, பிற்காலச் சந்ததி பேசும். அது போதும்! வஞ்சம் தீர்த்துக்கொண்டேன். நான் அன்றுபோலவே தான் இருக்கிறேன் - வளைவு, நெளிவு, குழைவு, கும்பிடு கிடையாது. எனினும், அவர்களாகவே அழைத்து வழிகாட்டச் சொல்கிறார்கள். வாழ்க்கையிலே நான் பெற்ற எல்லா வெற்றிகளைக் காட்டிலும், இதனை நான் மகத்தானதாகக் கருதுகிறேன் - இவ்விதமாக வெல்லாம் சி. பி. இராமசாமி ஐயர் நினைத்தால், தவறில்லையே! இவ்வளவு இடம்கொடுத்து விட்டார்களே காங்கிரஸ்சார். ஏன்?

இதனை எண்ணி எரிச்சல்கொள்கிறார்கள் காங்சிரசிலுள்ளோர்.

காங்கிரஸ், காடு சுற்றியபோது கண்ணெடுத்தும் பாராது இருந்தவர்களுக்கெல்லாம் மந்திரிப் பதவி கொடுத்தார்கள் நமது தலைவர்கள்; சகித்துக்கொண்டோம்; தேசிய ஒருமைப்பாடு எனும் அடிப்படைக் காரியத்தை, நமது தேசியத்தையும், அதற்காக உழைத்தவர்களையும் மிகத் துச்சமாக மதித்துப் பேசியவரிடம், எதிர்த்தவரிடம் ஒப்படைக்கிறார்களே, அதனை எப்படிச் சகித்துக்கொள்ளமுடியும் - என்று நினைத்து வருத்தப் படுகிறார்கள் காங்கிரஸ் தொண்டர்கள்.

சி. பி.யை இழுத்துப்போட்டது, நமக்கு இழிவாகாது; அலசிப் பார்த்தால் அது சி. பி.க்குத்தான் இழிவு. ஏனெனில், அவர் இந்திய அரசிலே திருவாங்கூர் சேரமுடியாது, தனி அரசு ஆகிவிட்டது என்று ஆணவத்துடன் அறிவித்தவர். அப்படிப் பட்டவரே, இப்போது இந்தியாவில் பிரிவினைகூடாது, அது பெரும் தீது என்று பேசி, அதன்படி காரியமாற்றப்போகிறார் என்றால், அவர் அல்லவா சரணடைந்தார் என்று பொருள்? பிரிவினை பேசினவரைக்கொண்டே, பிரிவினை உணர்ச்சியை ஒழிக்கச் சொல்கிறோம். மாபெரும் சாதனை அல்லவா அது. "ஐயா! சி. பி.! திருவிதாங்கூர் தனி அரசு ஆகிவிட்டது என்று பேசி, இந்திய தேசியத்துக்கு வேட்டு வைக்கப் பார்த்தீரே! இப்போது, பிரிவினைக் கொள்கையை ஒழித்துக்கட்டும் வேலையை, நீரே அல்லவா செய்யவேண்டி வந்தது! துளியாவது எதிர்பார்த்திருப்பீரா? வரலாறு என்ன எழுதிக்காட்டும்? எந்தச் சி. பி. திருவிதாங்கூர் பிரிந்து தனிநாடு ஆகிவிடும் என்று முழக்கமிட்டாரோ, அதே சி. பி. திராவிடம் தனிநாடு ஆகவேண்டும் என்று கேட்பவர்களிடம் மன்றாட, வாதாட நியமிக்கப்பட்டார். பிரிவினையை விட்டுவிடுக என்று கேட்டுக்கொண்டார். திருவிதாங்கூர் தனிநாடு ஆகப் பேராடிய வீரரை அப்போது முறியடித்தது மட்டுமல்ல, பல ஆண்டு களுக்கு பிறகு, அவரே பிரிவினைக் கொள்கையை அடக்கும் தளபதியாக நியமிக்கப்பட்டார். மகாராஜா சம்பளம் கொடுத்த போது, தனிநாடு கேட்கும் தளபதிவேலை பார்த்தார். நேரு அழைத்தபோது தேசிய ஒருமைப்பாட்டுக்கு வழி வகுக்கும் "உத்யோகம்' பார்த்தார். சி. பி.யைச் சரியான முறையிலே பழிவாங்கிவிட்டார் நேரு'

இப்படிக் காங்கிரசார் வாதாடித் தமக்கு ஏற்பட்டுள்ள எரிச்சலைப் போக்கிக்கொள்ளக் கூடும்.

இரு தரப்பிலே, எவர் வாதமாயினும், அது கேலிக் கூத்தாகவே, நடுநிலையாளர்கட்குத் தோன்றும்.

தம்பி! காங்கிரசுக்கோ அல்லது சி. பி.க்கோ, முன்பு கொண்டிருந்த போக்கு நினைவிற்கு வருமானால், இப்போது ஏற்பட்டுள்ள "கூட்டு', எவ்வளவு கேலிக்குரியது என்பது சுரீலெனப்படும்.

அவர்கள் கிடக்கட்டும், தம்பி! நீ தெரிந்துகொள், மறந்து போயிருப்பவர்களுக்கும் எடுத்துச் சொல்லு, தேசிய ஒருமைப் பாடு காணக் குழுத்தலைவர் ஆகியுள்ள சி. பி. முன்பு பூண்டிருந்த கோலத்தையும், முழக்கிய வீராவேசத்தையும் நாம் திராவிடம் தனிநாடாகத் திகழவேண்டும், தனி அரசு நடாத்தவேண்டும் என்கிறோம், இன்று தனி அரசு நடாத்தும் எத்தனையோ நாடுகளைவிடத் திராவிடம் அளவில் பெரிது, வளம் மிகுதியாகக் கொண்டது, மக்கட்தொகை எட்டுக் கோடிக்கு அதிகம்.

சி. பி. திருவிதாங்கூர் சமஸ்தானம் மட்டும் தனி நாடாக, தனி அரசாக இருக்கமுடியும், இருக்கவேண்டும், இருக்கப் போகிறது என்று அறிவித்தவர்! அறிவிப்பா? பிரகடனம்!! திருவிதாங்கூர் சமஸ்தானத்து மக்கட்தொகை எவ்வளவு? 65 இலட்சம்; வருவாய் எவ்வளவு 9 கோடி ரூபாய். இதற்குத் தனி அரசு உரிமை கேட்டவர், சி. பி.

நிலைமை அவருக்குத் துணைசெய்யவில்லை; எனவே, கடைசியில், திருவிதாங்கூர் இந்தியப் பேரரசிலே இணைந்தது. அது, வீராவேசமாகப் பேசியவர் காரியமாற்றமுடியாமல் தடுமாறிப்போனார் என்பதனை எடுத்துக் காட்டுகிறது. அவர் மனம் மாறியதையோ, திருவாங்கூர் தனிநாடாக வாழமுடியாது என்ற உண்மையை உணர்ந்துகொண்டு தமது போக்கை மாற்றிக் கொண்டதையோ, காட்டுவதாக இல்லை. ஏனெனில், திருவிதாங்கூர் தனிநாடு ஆகவேண்டும் என்பதற்காக அவர் சொன்ன காரணங்களை, காட்டிய ஆதாரங்களை, சொத்தை சோடை, சத்தற்றது, பொருளற்றது என்று அவர் பிறகு அறிவிக்க வில்லை. நிலைமை சாதகமாக இல்லை. எனவே போக்கை மாற்றிக் கொண்டார். நிலையான போக்கிலிருக்க, அவருக்கு வாய்ப்பும் இல்லை. ஏனெனில், திருவாங்கூருக்கு அவர் திவான் வேலை பார்க்கப் போனவர்.

அவருடைய போக்கு எக்காரணத்தாலோ மாறிவிட்டது - அதுபற்றி நமக்குக் கவலை இல்லை. நாம் கவனிக்கவேண்டியது, திருவாங்கூர் தனி அரசு நடாத்தமுடியும், நடாத்தவேண்டும் என்பதற்கு சி. பி. என்னென்ன கூறினார் என்பதனை, ஏனெனில், அந்தக் காரணங்களைக் காட்டிலும் பல மடங்கு பொருத்தமும், பொருளும், வலிவும், வரலாற்றுச் சிறப்பும்கொண்ட காரணங்கள் காட்டி, நாம் திராவிடம் கேட்கிறோம்.

தம்பி! இன்று தேசிய ஒருமைப்பாட்டுக்காக உழைக்க ஒத்துக்கொண்ட சி. பி. திவான் வேலைபார்த்தபோது, திருவாங்கூர் தனிநாடு ஆகவேண்டும் என்பதற்காகக் கூறிய வற்றையும், அப்போது நடைபெற்ற வாதங்களையும் தெரிந்து கொள்ளவேண்டும் என்று விரும்புகிறாய் - தெரிகிறது. சரி! வா! தம்பி! "பக்திவிலாசம்' செல்வோம்.

தம்பி! பக்திவிலாசம் என்பது திவான் கொலுவிருக்க, திருவிதாங்கூரிலே அமைந்துள்ள மாளிகை. மேனாட்டார் கேட்டு இன்புறும் ஆங்கிலப் புலமையுடன், பண்டிதர்கள் கேட்டுப் பரமானந்தம் அடையத்தக்க சமஸ்கிருத பாண்டித்யமும், சுயராஜ்யம் கேட்கும் "பாஷை'யிலே பயிற்சியும், ஏகாதிபத்திய முறைகளிலே நிபுணத்துவமும்கொண்டு, எதனையும் துருவி ஆராயத்தக்க கூர்த்த மதியும், அகன்ற அழகிய விழிகளும், கவ்வும் பார்வையும், கனிவு துணிவு எனும் இரண்டினையும் தேவைப் படும்போது எடுத்துக் காட்டவல்ல அதரமும்கொண்ட இராஜதந்திரி, இராஜ வம்சத்துக்கு இரட்சகராகவும் இரமணிய மான குணங்களால் உப்பிரிகைகளைச் சொக்கவைக்கக் கூடியவர் என்ற புகழாரம் சூட்டப்பெற்றவரும், கலை வல்லுநர்கள் வியந்து கூறிடும் நிலை பெற்றவருமான, திவான் சர். சி. பி. இராமசாமி ஐயர் அழைக்கிறார், "பக்திவிலாசம்' வருக! எமது திட்டம் பற்றிய விளக்கம் கூறுகிறோம் - என்று. சென்று பார்ப்போம்.

தில்லியிலே, தம்பி! திடீர் மாறுதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலம். இந்தியாவுக்குச் சுயராஜ்யம் தந்துவிட வெள்ளையர் காத்திருக்கும் வேளை, ஜனாப் ஜின்னாவின் ஒவ்வொரு அசைவுக்கும் பேச்சுக்கும், புன்னகைக்கும் பெரு மூச்சுக்கும், புருவ நெரிப்புக்கும் பொருள் என்ன என்று காந்தியார் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் ஆராய்ச்சி செய்திடும் வேளை.

சுயராஜ்யம் நிச்சயம் - ஆனால் இராஜ்யங்கள் இரண்டு - ஒன்று அல்ல, என்பது இலைமறை காயாக இருந்த வேளை.

சர். சி. பி. இந்தியா இந்தியாவாகவே இருக்கவேண்டும் - பாகிஸ்தான் ஏற்படக்கூடாது - இந்தியா துண்டாடப்படக் கூடாது - என்று அறிவித்துவிட்டு, அது நடைபெறப் போவதில்லை, பாகிஸ்தான் அமையப்போகிறது என்பதனையும் உணர்ந்துகொண்டுவிட்ட சமயம்.

பாகிஸ்தான் அமைகிறது என்ற உடனே, சர். சி. பி. பாகிஸ்தான் அமைப்பை எதிர்க்க அல்ல, "பக்திவிலாசம்' வரும்படி அனைவரையும் அழைப்பது.

இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்துவிடுவதால் மிச்சம் உள்ள இந்தியாவில் திருவிதாங்கூர் இணைய மறுக்கிறது என்று அறிவிக்க அழைக்கிறார். நானே பேசிக்கொண்டிருக்கிறேனே - இராஜதந்திரி பேசுகிறார் - திவான் திருவாய் மலர்ந்து அருளு கிறார், கேண்மின்!!

சீமாட்டிகளே! சீமான்களே! மதிப்புமிக்க பத்திரிகை நிருபர்களே! திருவிதாங்கூர் தேசபக்தர்களே!

வருக! திருவிதாங்கூர் தனிநாடாகி, தனி அரசு நடாத்த மகாராஜா முடிவு செய்துவிட்டார். அதனை விளக்கவே அழைத் துள்ளேன். ஆகஸ்ட் 15ஆம் தேதி பிரிட்டிஷ் ஆட்சி அகலுகிறது. சுயராஜ்யம் அளிக்கப்படுகிறது. பிரிட்டிஷ் ஆட்சி அகன்றதும், இதுவரை அந்த ஆட்சியிலே இணைந்திருந்த திருவிதாங்கூர் சமஸ்தானம், பூரண விடுதலை பெறுகிறது. தனிநாடு ஆகிறது தனி அரசு நடத்த இருக்கிறது.

சுதந்திர திருவிதாங்கூர், இந்தியாவுடன் நேசத்தொடர்பு கொண்டு, தனி அரசு மேற்கொண்டு, நடாத்திவரும், பொருளா தார, பண்பாட்டு அடிப்படையிலும் மற்றப் பல காரணங் களாலும் திருவிதாங்கூர், தனிநாடாகித் தனி அரசு நடாத்துவது தான் நடைமுறைக்கு ஏற்ற இலாபகரமான வழியாகும். இதற்கு எந்தவிதமான மறுப்பும் இருக்கக் காரணமில்லை; நியாயமில்லை. செல்வாக்குள்ள சில வட்டாரத்திலே இந்தத் திட்டம் வெறுக்கப் பட்டாலும், இந்தத் தனி அரசுத் திட்டம் உங்கள் மேலான ஆதரவைப்பெறத் தகுதி வாய்ந்தது என்பதை, திருவிதாங்கூர் மக்களுக்கு, உத்யோகம் வகிப்பவர்கள் உத்யோகப் பற்றற்றவர்கள் ஆகியோர் அனைவரும் நான் கூறுவதுடன், சுதந்திர திருவிதாங்கூர் இலட்சித்துக்காகப் பாடுபடும்படியாகவும், ஒத்துழைக்கும்படியாகவும், அன்புடன் அழைக்கிறேன்.

சந்தேகம் கொண்டவர்களுக்குத் தெளிவு அளித்து மனமாற்றம் ஏற்படுத்தும் பணியில் உத்யோகஸ்தர்கள் ஈடுபட வேண்டும். திருவிதாங்கூர் தனி அரசு நடத்துவது கூடாது என்ற கருத்துக்கொண்டவர்கள், பதவிகளை இராஜிநாமாச் செய்து விட்டு வெளியேறிவிடவேண்டும்.

திருவிதாங்கூர் மக்களின் அப்பழுக்கற்ற தேசபக்தியின் பேரால், திருவிதாங்கூரின் கீர்த்திமிக்க வரலாற்றுச் சிறப்பின் பேரால், ஒளிவிடும் திருவிதாங்கூர் பாரம்பரியம், பண்பாடு ஆகியவற்றின் பேரால், உங்களை நான் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன், சுதந்திர திருவாங்கூர் அமையும் பணியில் ஆர்வத் துடன் ஈடுபட முன் வாரீர்.

தனிநாடாகி, தனி அரசு நடத்தி, உரிமையும் பெருமையும் வேண்டுமா, அல்லது பிளவுபட்ட இந்தியாவிலே பிணைக்கப் பட்டு, அமிழ்ந்துபோய், இந்தியாவில் ஒரு எடுபிடியாக இருக்கப் போகிறீர்களா என்பதை, ஒருவருக்கொருவர் கலந்து பேசி முடிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.

எந்த நிலைமையையும் சமாளிக்கவும், தேவைப்படும் எந்த நடவடிக்கை எடுத்துக்கொள்ளவும், மகாராஜா உறுதி பூண்டு விட்டார்.

திருவிதாங்கூர் தனிநாடு ஆகத் தகுதி இல்லையா? தனிநாடு களாக உள்ளவற்றுடனோ, அல்லது பிரிட்டிஷ் இந்தியாவில் உள்ள மாகாணங்களுடனோ, ஜனத்தொகை, வருவாய், வளம் ஆகிய அம்சங்களில் திருவிதாங்கூர் எப்படி இருக்கிறது என்பதை ஒப்பிட்டுப் பார்த்து, முடிவுக்கு வாருங்கள். நேபாளம் சயாம் நார்வே, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுடன் திருவிதாங்கூரை ஒப்பிட்டுப் பாருங்கள். தனிநாடாக இருக்கும் தகுதி திருவிதாங்கூருக்கு இல்லையா, சொல்லுங்கள். இங்கு 65 இலட்சம் மக்கள் இருக்கிறார்கள்; ஆண்டு வருமானம் நமது அரசுக்கு ஒன்பது கோடி ரூபாய். அந்த நிலையில், தனி அரசு நடாத்த இயலும்.

திருவிதாங்கூர் விரும்புவது என்ன? பாரதப் பண்பாடு போன்றதுபோலவே காணப்படினும், திருவிதாங்கூருக்கு என்று அமைந்துள்ள பண்பாடு, தனித்தன்மை வாய்ந்தது தனியானது. அந்தப் பண்பாட்டின் வழியின்படி, இலட்சியங்களின்படி திருவிதாங்கூர் தனி அரசை நடத்திச்செல்ல உரிமைவேண்டும்.

மேலும் கூறுகிறேன், இந்தியா பிளவுபடுவதால் ஏற்படக் கூடிய வேதனைகளிலிருந்து, தென்னிந்தியாவைக் காப்பாற்றும் இரட்சகனாக திருவிதாங்கூர் விளங்கப்போகிறது.

திருவிதாங்கூர் எப்போதுமே, சர்வதேச அரங்கிலே ஒரு தனி அந்தஸ்துப்பெற்று வந்திருக்கிறது.

திருவிதாங்கூரை யாரும் வெற்றிகொண்டதில்லை. அதற்கு மாறாகக் கடற்படை வலிவுள்ள டச்சுக்காரரை கொளச்சல் போரிலே, திருவிதாங்கூர் தோற்கடித்து, ஐரோப்பிய நாட்டவரைத் தோற்கடித்த ஒரே இந்தியநாடு என்ற கீர்த்திபெற்றிருக்கிறது.

இவைகளை எண்ணிப்பாருங்கள் - வரலாறு, பாரம்பரியம், பண்பாடு ஆகியவற்றை நினைத்துப் பாருங்கள். இத்தகைய திருவிதாங்கூர், சுதந்திரம் அடையவேண்டும் என்ற இலட்சியத்தைப் போற்றாதார் இருக்கமுடியுமா!

முன்பு, சுதந்திரத்தைக் காத்துக்கொண்டிருக்கிறது திருவிதாங்கூர்.

தேவைப்பட்டால் எதிர்காலத்திலும், திருவிதாங்கூர் தன் சுதந்திரத்தைப் பாதுகாத்துக்கொள்ளும்.

நான் திருவாங்கூர்க்காரனாக இல்லையே என்று வருத்தப் படுகிறேன். எனினும், திருவிதாங்கூர் தனிநாடு ஆவதற்கான நிலைமை உருவாவதைக் காண அனைவரும் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

தம்பி! 1947ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 11ஆம் நாள் பக்தி விலாசத்தில், திவான் சி. பி. பேசியுள்ள ஆங்கில விளக்க உரையின் சுருக்கம் மேலே காணப்படுவது. எப்படி சி. பி.? கப்பலின் மேற் தட்டிலே கெம்பீரமாக நின்றுகொண்டு, பீரங்கி களை இன்னின்ன முறையிலே அமையுங்கள் என்று உத்தரவிட்டு, திருவிதாங்கூர் கப்பற்படைக்குத் தலைமை வகித்து நடத்திச் செல்லும் கடற்படைத் தளபதிபோலத் தெரிகிறாரல்லவா! அவர் இப்போது, நம்மை அழைத்துக் கேட்கப்போகிறாராம், திராவிடம் தனிநாடு ஆகவேண்டும் என்று கேட்கலாமா? சரியா? முறையா? என்று.

1947 ஜூன் மாதம் திருவிதாங்கூர் தனிநாடு ஆகவேண்டும் என வீர உரை!

1962 ஜூன் மாதத்தில் அவருக்குப் புதிய அலுவர்; - பிரிவினை கூடாது என்று உபதேசம் செய்ய!!

கூரிய கத்தியால் பழமும் நறுக்கலாம், கழுத்தையும் அறுக்கலாம்.

விளக்கொளிகொண்டு திருக்குறளும் படிக்கலாம் திருட்டுக் கணக்கும் எழுதலாம்.

அறிவைக்கொண்டு சிலர் எதையும் செய்யலாம் என்று நினைக்கிறார்கள் போலும்!!

தம்பி! திருவிதாங்கூரை விடுவிக்கும் வீரர், டச்சுக்காரரை கொளச்சல் யுத்தத்திலே திருவிதாங்கூர் தோற்கடித்ததை எடுத்துக் காட்டி, தோள் தட்டுங்கள்! முரசு கொட்டுங்கள்! துந்துபி முழங்குங்கள்! வாளை உருவுங்கள்! என்று முழக்கமிட்டார். இப்போது அவருக்கு இடப்பட்ட வேலை,

கங்கை கொண்டான்
கடாரம் வென்றான்
கலிங்கம் கொண்டான்

என்றெல்லாம் புகழாரம் சூட்டிக்கொண்டுள்ள நாம், கோரி யிடமும், கஜினியிடமும், தைமூரிடமும், செங்கிஸ்கானிடமும் தோற்ற வடவரிடம், பிணைக்கப்பட்டு இருப்பதுதான் பேரறிவு என்று எடுத்துக் கூற!

"பக்தி விலாச'த்தில் பரணி!

பண்டிதர் சகவாசத்தால், முகாரி பாடப்போகிறார் போலும், போகாதே! போகாதே! என் மக்களா! பொல்லாது பொல்லாது பிரிவினைதான்!! - என்று சுருதி தவறாமல் பாடுவார் போல இருக்கிறது. ஆண்டவனே! ஆண்டவனே! அறிவையும் கொடுத்து, அதனை எப்படியும் வளைத்துக்கொள்ளும் துணிவையும் கொடுத்தாயே! இது தகுமா என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா?

சர். சி. பி.யின் இந்தத் திட்டம்பற்றித் தெரிந்ததும், மகாத்மா பதறிப்போனார். மறுநாள் மாலையே வழக்கமாக நடாத்தும் வழி பாட்டுக் கூட்டத்தில், இதனைக் கண்டித்துப் பேசினார்.

கோடிக்கணக்கான மக்களால் கண்கண்ட கடவுள் எனக் கொண்டாடப்படும் மகாத்மாவே இந்தத் திட்டத்தைக் கண்டித்துவிட்டாரே, இனி எப்படி அதனை வலியுறுத்துவது என்று சி. பி. சஞ்சலமடைந்தாரா? அவரா! துளிகூட இல்லை உடனே ஒரு தந்தி கொடுத்தார் மகாத்மாவுக்கு!

எவரும், பல நூற்றாண்டுகளாகத் திருவிதாங்கூரை வெற்றிகொண்டதில்லை. சுதந்திர பாரம்பரியம் அதற்கு உண்டு. அதே சுதந்திரத்தைத் திருவிதாங்கூர் மீண்டும் பெற்று விளங்க முடியும்.

சுதந்திரத் திருவிதாங்கூரில் மக்களுக்கு உரிமை வழங்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது. வயதுவந்தவர்கள் அனைவருக்கும் "ஓட்டு உரிமை' வழங்கப்போகிறோம். திருவிதாங்கூரில் எண்ணற்ற பொதுமக்கள் சுதந்திரத்தை விரும்புகிறார்கள். இதனைத் தங்களுடைய அடுத்த வழிபாட்டுக் கூட்டத்தில் எடுத்துக் கூறவும்.

இப்படித் துணிவுடன் தந்தி அனுப்பினவர்தான் சர். சி. பி.

அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டிக்கு ஏகப்பட்ட சீற்றம். சர். சி. பி.யின் சுதந்திர திருவிதாங்கூர் திட்டத்தை வன்மையாகக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றிற்று.

ஆனால், அதேபோது, தவிர்க்கமுடியாத காரணங்களால், பாகிஸ்தான் பிரிவினைக்கு இணங்குவதாகவும் தீர்மானம் போடப்பட்டது.

மகாத்மாவின் கண்டனம், அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியின் சீற்றம் எனும் எதுவும் சி. பி.யின் உறுதியைக் குலைக்கவில்லை. தமது திட்டத்துக்கு ஆதரவு திரட்டும் வேலையில் வெகு மும்முரமாக ஈடுபட்டார். பல பிரமுகர்களைக் கொண்டு ஆதரவு அறிக்கைகள் வெளியிடச் செய்தார்.

தொன்றுதொட்டுச் சுதந்திர நாடாகவே திரு விதாங்கூர் இருந்துவந்திருக்கிறது. எதிர்காலத்திலும் அவ்விதமாகவே இருக்கவேண்டும். டச்சுக்காரர்போன்றவர் களாலேயே திருவாங்கூரைத் தோற்கடிக்க முடியவில்லை. வெள்ளைக்காரர்கள்கூடத் திருவாங்கூருடன் ஒப்பந்தம் செய்துகொண்டவர்தாம்.

திருவிதாங்கூரின் சுதந்திரத்தை எதிர்ப்பவர்கள் நாட்டுக்குத் துரோகிகள்.

ஏராளமான வளங்கள் உள்ள திருவிதாங்கூர் ஏன் சுதந்திரநாடாக இருக்கக்கூடாது?

என்று கத்தோலிக்க சமூகத்தின் செல்வாக்குள்ள தலைவ ரொருவர் அறிக்கை வெளியிட்டு, சர். சி. பி.யின் திட்டத்தை ஆதரித்தார்.
-------------

சூடும் சுவையும் (5)

உரிமை உணர்வு
அமைச்சரின் ஏக இந்தியா வாதம்
தி. மு. க. ஆதரவாளர்கள்

தம்பி!

எல்லோரும் ஓர் இனம்
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
கூடிவாழ்ந்தால் கோடி இன்பம்
வேற்றுமையில் ஒற்றுமை
பாரத சமுதாயம்
இமயம் முதல் குமரி வரை

சுவைமிக்க சொற்றொடர்கள் இவை என்பதனைப் பலரும் கூறக் கேட்டிருக்கிறோம். கேட்கும்போதே தித்திப்புக் காண்பர், நினைக்கும்போதே சொக்கிப்போவர் என்ற நம்பிக்கையுடனேயே இந்தச் சொற்றொடர்களைக் கூறுகின்றனர். நான் இவைகளைச் சொற்றொடர்கள் என்று கூறுகிறேன் - இவைகளைப் பேசுவோர் அவ்விதம் கூறுவதைக்கூட கண்டிப்பார்கள் "ஏ! அறிவிலி! இவை சொற்றொடர்களா? வெறும் பதங்களின், கூட்டா? எழுத்து களின் கோர்வையா? கேவலம் ஓசையா? அல்ல! அல்ல! இவை இலட்சியங்கள்! மறுக்கொணாத உண்மைகள்! மாண்பளிக்கும்தத்துவங்கள்! வாழ வைக்கும் வழிவகை! கருத்துக் கருவூலம்! இழக்கொணாத செல்வம்! ஏற்புடைய கொள்கை!! நாட்டுப் பற்றுமிக்கோர் அளித்துள்ள பேரொளி! வெறும் வார்த்தைகள் அல்ல'' என்று கோபம் கொந்தளிக்கும் நிலையில் செப்புகின்றனர் - அறைகின்றனர்! நம்பிக்கை, எழுச்சி, ஆர்வம் ஆகியவைமட்டும் அல்ல, அது மறுக்கப்பட்டுவிட்டால் என்னென்ன கேடுகள், ஆபத்துக்கள் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் அவர்களை அவ்விதம் பேசச் செய்கிறது. மலடி வயிற்று மகன்போலே, ஒரு புதையல் எடுத்த தனம்போலவே, அவர்கள் "ஏக இந்தியா' "பாரத சமுதாயம்' எனும் எண்ணத்தைக் கருதுகிறார்கள். எனவே தான், அந்த எண்ணம்பற்றித் தயக்கம்காட்டினால், ஐயப்பாடு கூறினால், மறுப்பு உரைத்தால் அவர்களுக்கு அடக்கமுடியாத ஆத்திரம் பிறக்கிறது; ஆர்ப்பரிப்புத் தன்னாலே கிளம்பிவிடுகிறது. மேலும், இந்த எண்ணம் ஏற்பாடு ஆகவிடமாட்டேன், ஏனெனில் அது எம்மைப் பொறுத்தவரையில் "ஆகாவழி' என்று துணிந்து கூறித் தொடர்ந்து வலியுறுத்தி, பேராதரவு திரட்டி, பெருங் கிளர்ச்சி நடாத்தி, ஜனாப் ஜின்னா முன்பு வெற்றிபெற்று "பாகிஸ்தான்' அமைத்துக்கொண்டார் அல்லவா? அந்த நினைவுவேறு வருகிறது. உடனே உள்ளம் உலைக்கூடமாகிறது, கனல் கக்குகிறார்கள்.

சுவைமிக்க எண்ணத்தையும், அதன்படி அமையும் ஏற்பாட்டினையும் மேற்கொண்டு, அனைவரும் மகிழ்ந்திடச் செய்து பாராட்டுதலைப் பெறுவதை விட்டுவிட்டுச், சுடுசொற் களால் அந்தச் சுவைமிகு இலட்சியத்தை மறுத்துப் பேசி, மற்றவர்களின் கோபத்தைக் கிளறி, பகையை எழுப்பிவிடுவது எற்றுக்கு? நாமும் நாலுபேருடன் சேர்ந்து, ஏகஇந்தியா, இமய முதல் குமரிவரை, பாரத சமுதாயம் என்று கூறிவிடலாமே, எதற்காக வீணாக விரோதச் சூழ்நிலையை உருவாக்குவது என்றுதான், எவருக்கும் முதலில் தோன்றும். இங்குமட்டும் அல்ல, எங்கும். இப்போதுமட்டுமல்ல, எப்போதும். ஏனெனில், சுவைக்க கருத்துகளிலே நாட்ட செல்வதும், சிக்கலற்ற நிலையை விரும்புவதும், உள்ளத்தைக்கொண்டு திருப்தி அடைவதும், கஷ்ட நஷ்டத்தை ஏற்றுக்கொள்ளத் துணிவற்றவர்கள் அனைவருக்கும் உள்ள இயல்பு.

வாயிற் போட்டதும், கரும்புத்துண்டு கற்கண்டு ஆகிவிடக் கூடாதா, மென்று, குதப்பிச் சாறு எடுக்கவேண்டி இருக்கிறதே எத்துணை சிரமமான வேலை என்று எண்ணுபவர்கள், இந்த வகையினர்.

பருத்தியாகக் காய்ப்பதற்குப் பதிலாகத் துணியாகவே கரத்துக்கு எட்டும் தூரத்தில் காய்த்திறுக்கக் கூடாதா, என்று நினைப்பவர்கள் இவ்வகையினர்.

ஆனார், எந்த விலையுயர்ந்த பொருளும் அவ்வளவு எளிதில் கிடைத்துவிடுவதில்லை - வெட்டி எடுத்தாக வேண்டும் தங்கத்தை - மூழ்கி எடுத்தாகவேண்டும் முத்துக் குவியலை - அரைத்து எடுத்தாகவேண்டும், நறுமணமிக்க சந்தனத்தை - உழுது, விதைத்து, நீர்பாய்ச்சிக் களை எடுத்து, அறுத்து எடுத்தாகவேண்டும் செந்நெல்லை.

உரிய, உயர்ந்த, பயன்மிகு கருத்துகளைப்பெறுவது, இவை களைவிடக் கடினமான செயல்.

உரிமை உணர்ச்சிபெறுவதும், உரிமைக்காகக் கிளர்ச்சி நடாத்துவதும், வெற்றிபெறுவதும், மிகக் கடினமான வேலை. பலருக்கு அதனால்தான், அப்படிப்பட்ட வேலைகளில் ஈடுபட மனமும் துணிவும் வருவதில்லை; எனவே அவர்கள் உள்ளதைக் கொண்டு திருப்தி அடைய முயலுகிறார்கள். கைக்கு எட்டும் ஏதேனும் ஓர் சுவைமிகு கருத்தினை மேற்கொண்டு விடுகின்றனர். சுவைமிகு கருத்தெனக்கொண்டது பிறிதோர் நாள் கசப் பளிப்பினும், பயன் தருவதாக இல்லாது காணப்படினும், வேறோர் கருத்தைத் தேடிப்பெறுவதைக் காட்டிலும், உள்ளது உவர்ப்பு எனினும், அதுவும் ஓர் சுவையே என்று கருதிக் கொள்ளத் தலைப்படுகின்றனர். இம்முறையிலேதான் இன்று பலரும், ஏக இந்தியா, பாரத சமுதாயம், இமயமுதல் குமரிவரை என்பவைகளைப் பற்றிக்கொண்டு இருக்கிறார்களேயன்றி, முழு திருப்தியுடன் அல்ல, மனதார நம்பியும் அல்ல.

இது போதும்.
இதுதான் உள்ளது.
இதைவிட வேறு ஏது?
வேறு தேடிட முடியுமா?
இதைவிடப் பயனுடையது பெறுவது கடினம்.
கடினமாகப் பாடுபட முடியுமா?
முடிந்திடினும் வெற்றி கிட்டும் என்பது என்ன உறுதி?

எனும் இவ்விதமான உரையாடல் நிரம்ப; ஏக இந்தியா எனும் ஏற்பாட்டினை ஏற்றுக்கொண்டுள்ளவர்களிடையே, நடைபெற்ற வண்ணம் இருக்கிறது.

பூரிப்புடன், பெருமிதத்துடன், நம்பிக்கையுடன், இந்த இலட்சியத்தை அவர்கள் மேற்கொண்டில்லை.

என்ன செய்யலாம், இவ்வளவுதான்! - என்ற மனக்குறையுடன்தான் உள்ளனர்.

பொருளற்று, முழுச் சுவையற்று, தக்க பயனற்று உளதே "ஏக இந்தியா' எனும் ஏற்பாடு என்று ஓரோர் வேளை தோன்றிடும் போதும், விளக்கில்லாவிடத்து விண்மீன் ஒளியின் துணை கொண்டு நடத்தல் போலவும், குளிர் நீக்கப் போர்வை யில்லாத போது கையதுகொண்டு மெய்யது போர்த்துக் கொள்ளல் போலவும், சுவையும் பயனும் மிக்கதான வேறோர் ஏற்பாட் டினைத் தேடிப்பெறும் துணிவு இல்லாதபோது, உள்ளது போதும் என்று திருப்தியை வரவழைத்துக் கொள்கின்றனர். மன வறட்சி வெளியே தெரிந்துவிடுமோ என்ற வெட்க உணர்ச்சியால் அலைக்கழிக்கப்பட்ட நிலையில், சுவையிருப்பதாகக் கற்பனை செய்துகொண்டு விடுகின்றனர். இல்லையெனில், தம்பி! அடிக்கடி "ஏக இந்தியாவில்.' எனக்கா உனக்கா? என்னுடையது உன்னுடையது? என் இயல்பு தெரியுமா, உன் வரலாறு தெரியாதா? என்னை வாடவிட்டு உனக்கு வாழ்வா, நீ வாழ நான் வதைபடுவதா? என் மக்களுக்கு வேலையில்லை உனக்கு இங்கு விருந்தா? - என்பனபோன்ற பேச்சுக்களும், கோபதாபங்களும், கொந்தளிப்புகளும், கிளர்ச்சிகளும், வெடித்துக்கொண்டு கிளம்புமா? எண்ணிப் பார்க்கச் சொல்லு, ஏகஇந்தியா பேசுவோர்களை. நான் இதனைக் கேட்டேன், தில்லியில் பேசும் வாய்ப்புக் கிட்டியபோது,

பம்பாய் எனக்கு என்று மராட்டியர் கிளர்ச்சி நடாத்தியபோது, ஏக இந்தியா எனும் இலட்சியத்தை அந்த அளவிலே மராட்டியர் மறுத்திடவில்லையா?

குஜராத் மாநில அமைப்புக்காக குஜராத்தியர் குமுறி எழுந்தனரே, அந்த அளவிலே அவர்கள் ஏகஇந்தியா எனும் ஏற்பாட்டை எதிர்த்தனர் என்று பொருளல்லவா?

இவ்விதம் நான் கேட்டது. கொதிப்பை உண்டாக்கியதை நான் உணருகிறேன். ஆனால் கேட்போர் மனம் குளிரப்பேச, கதாகாலட்சேபம் நடத்தவேண்டுமே. அதற்கா நான்?

கூடி வாழ்வோம் என்று சொன்னாலே, வடக்கே உள்ளவர் களின் மனம் எவ்வளவு குளிருகிறது என்பதையும் நான் பார்த்தேன். என் பேச்சிலே ஒரு கட்டத்தின்போது.

உங்கள் அனைவருடனும் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்று விரும்பத் தோன்றுகிறது.

என்று நான் குறிப்பிட்டேன் - கேட்டுக்கொண்டிருந்தவர்களின் முகம் மலர்ந்தது, ஆர்வம் காட்டினர். ஆனால் நான் கூறிய அடுத்த கருத்து அவர்களின் களிப்பினைக் கருக்கிவிட்டது.

விருப்பம் என்பது ஒன்று; இருக்கும் உண்மை நிலைமையோ முற்றிலும் வேறானது.

என்று நான் கூறினதும், செச்சே இவன் பாரதம் பேசவில்லை, திராவிடம் கேட்கிறான் என்று அவர்களுக்குப் புரிந்தது, களிப்பு உவர்த்தது.

தம்பி! நாம் திராவிடம் கேட்கிறோம், பாரதம் எனும் ஏற்பாடு, சுவையும் பயனும் தாராது என்று நம்பிக்கையுடன். நமது எண்ணங்களைத் தாராளமாக வெளியிடுகிறோம். நமது எண்ணம் ஈடேற நம்மால் இயன்ற அளவு முயற்சிகள் செய்கிறோம். எனவே நமது நெஞ்சிலே பாரம் இல்லை. குமுறலை வெளியே தெரியவிடாதபடி அடக்கி வைத்துக்கொண்டு இருக்கும் தொல்லை நமக்கு இல்லை. ஆனால் எண்ணற்றவர்கள், குமுறலை வெளியே கொட்டிக்காட்ட முடியாதநிலையில், மனதிலேயே அடக்கி வைத்துக்கொண்டு, மெத்த வேதனைப் படுகிறார்கள். அவ்விதமான நிலையினர், வடக்கே நிரம்ப இருக்கிறார்கள் - வடக்கு வாழ்கிறது. தெற்குத் தேய்கிறது என்பது அவர்களுக்குப் புரிகிறது, ஆனால் வெளியே சொல்ல முடியுமா?

வேலைப்பளு தாங்கமுடியவில்லை.

என்று மேலதிகாரி நண்பரிடம் கூறும்போது, மாடுபோல் உழைக்கும் "குமாஸ்தாவுக்கு' பொய்! பொய்! பச்சைப் பொய்! பதினொரு மணிக்கு வந்தார், படம் நிரம்பிய பத்திரிகை படித்தார், சாய்வு நாற்காலியில் படுத்தார், நாலுமணிக்கு எழுந்து, காப்பி! காப்பி! என்று கூச்சலிட்டார்!! இதுதான் அவருடைய வேலைப்பளு என்று கூறமுடிகிறதா? அதுதான் உண்மை! ஆனால் கூறமுடிகிறதா? பொய் பேசுபவரோ, மேலதிகாரி! உண்மையை உரைத்திட முடியாமல் திணறுபவனோ பாடுபடும் சிப்பந்தி!!

அதுபோல, வடநாட்டிலே பிழைக்கச் சென்றுள்ள ஏராள மானவர்கள், தாம் உணர்ந்ததை உரைத்திட முடியாமல் குமுறுகின்றனர். உண்மையைக் கூறினால் பிழைப்பிலே மண்விழுமே என்ற அச்சம். அவர்களென்ன, தம்பி! டி. டி. கிருஷ்ணமாச்சாரிகளா, பதவி தேடிவரும் என்று பிகுவுடன் இருந்திட!! இங்கே வாழ, தக்க வழியின்றி அங்கு சென்று வதைபட்டுக் கொண்டிருப்பவர்கள். அத்தகைய மனப்போக்கினர், வடக்கே எல்லாத்துறைகளிலும் உள்ளனர்; பட்டாளம் முதற்கொண்டு பாரம் தூக்கிப் பிழைக்கும் துறைவரையில், அவர்களுக்கு ஏகஇந்தியா என்பது சுமந்து தீரவேண்டிய ஒரு ஏற்பாடாகத்தான் இருக்கிறதே தவிர, சுவையும் பயனும் ஒரு பொருளுள்ள, ஏற்புடைய திட்டமாகத் தோன்றவில்லை.

இந்த மனப்போக்கைப் புரிந்துகொள்ள ஒரு நிகழ்ச்சி எனக்கு வாய்ப்பளித்தது.

தில்லியிலே, பல்வேறு துறைகளிலே பணியாற்றிடும் தமிழர்கள் ஓர் அமைப்பு ஏற்படுத்திச் செம்மையாக நடத்திக் கொண்டு வருகின்றனர், தமிழ்ச்சங்கம் என்ற பெயரில். அங்கு ஒருமாலை எங்களை அழைத்திருந்தனர் - பாராட்ட. வழக்கமான நிகழ்ச்சியாம்.

நான் மண்டபத்தில் நுழைந்தபோது, ஆரவாரத்துடன் வரவேற்றனர். ஏற்கனவே பலர் மேடைமீது அமர்ந்திருந்தனர். நான் சென்று உட்கார்ந்ததும், இரயில்வேத் துறையில் அமைச்சராக உள்ள சேலம் இராமசாமி அவர்கள் என்னைப் பார்த்து,

பாரப்பா! நீ வந்தபோதுதான் இவ்வளவு கரகோஷம் நாங்கள் வந்தபோதெல்லாம் இல்லை. உனக்குத்தான்

என்று கூறினார். உபசாரமொழி கூறியவருக்கு நன்றி கூறினேன். ஆனால் அவரோ என்னிடம் சொன்னதோடு விடவில்லை. அவர் பேசும்போது இதனைக் குறிப்பிட்டுப் பேசினார் - சற்றுச் சாமார்த்தியமாக!

"நாங்களெல்லாம் வந்தபோது, கைதட்டி வரவேற்க வில்லை. ஆனால் அண்ணாதுரை வந்தபோது மட்டும் ஏகப்பட்ட கைதட்டலோடு வரவேற்றீர்கள்'' என்று கூறினார்.

அதைக்கேட்டு மறுபடியும் மண்டபத்தி லிருந்தோர் கைதட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர். எனக்குச் சிறிதளவு சங்கடமாகத் தென்பட்டது. இதுபற்றி அமைச்சர் குறிப் பிடாமலே பேசியிருக்கலாமே என்று எண்ணிக்கொண்டேன். அவருடைய பேச்சின் துவக்கம், அவர் மிகப் பக்குவமாகப் பேசப் போகிறார் என்றே என்னை எண்ணிக்கொள்ள வைத்தது, ஏனெனில், சிறிதளவு கெம்பீரமாக அமைச்சர் இராமசாமி,

இங்கு அரசியல் பேசத் தேவையில்லை என்று தெரிவித் தார். ஆகவே, அவர் அரசியல் பற்றிப் பேசமாட்டார் என்று கருதிக்கொண்டிருந்தேன். என்னைப்பற்றி அவர் பேசவே எனக்கு ஐயம் எழுந்தது. அமைச்சர் அந்த அளவோடு நிறுத்திக்கொள்ள வில்லை. தில்லித் தமிழ்ச்சங்கத்தார் என்னை ஆர்வத்தோடு வரவேற்றார்கள் என்பதை, மகிழ்ச்சிதர, அல்லது உபசாரத்துக்காக அவர் கூறவில்லை என்பதை எடுத்துக்காட்டினார்; சாமர்த்திய மாக அதனை "பிரசார'த்துக்குத் திருப்பிக்கொண்டார்.

யாருக்கும் இல்லாமல் அண்ணாதுரைக்கு மட்டும் இவ்வளவு கைதட்டி வரவேற்புக் கொடுத்தீர்களே, ஏன் தெரியுமா? காரணம் இருக்கிறது. இப்படி வரவேற்புக் கொடுத்து அண்ணா! வாருங்கள்! எங்களை எல்லாம் பாருங்கள்! இந்தியாவைப் பிரிக்காதீர்கள்! எல்லோரும் ஒன்றாக வாழலாம். பிரிவினை வேண்டாம்! என்று அவருக்கு நீங்கள் இந்த வரவேற்பின் மூலம் தெரிவிக்கிறீர்கள்.

அமைச்சர் இவ்விதம் பேசக்கேட்டு நான் சற்று வியப்படைந்தேன். பரவாயில்லையே, நம்மைப் பாராட்டுவதுபோல ஆரம்பித்து, நமது கொள்கையைத் தாக்க, இந்த நிகழ்ச்சியைப் பயன்படுத்திக் கொள்கிறாரே, கெட்டிக்காரர்தான் என்று எண்ணிக் கொண்டேன்.

தம்பி! நாடு பிரிவினைகூடாது, இந்தியா ஒன்றாக இருக்க வேண்டும், அதற்காகவே வரவேற்றார்கள் என்று சாமர்த்தியமாக அமைச்சர் பேசிய உடன், அங்கு கூடியிருந்தோர், ஏகஇந்தியா வேண்டும், பிரிவினைகூடாது என்ற கருத்துடையவர்களாக இருப்பின், எத்துணை எழுச்சியுடன் கைதட்டி ஆரவாரம் செய்து, அமைச்சரின் கருத்தினை ஆதரித்திருக்கவேண்டும். அதனை எதிர்ப்பார்த்துத்தானே அமைச்சர் அவ்விதம் பேசினார். அங்கு கூடியுள்ளவர்கள் ஏகஇந்தியா வேண்டும் என்பதிலே திட நம்பிக்கையும் பிரிவினை விஷயத்திலே வெறுப்பும் கொண்ட வர்கள் என்பதை, அவர்களின் ஆரவாரத்தின் மூலம் நான் தெரிந்துகொண்டு, வெட்கப்பட்டு, செச்சே! பிரிவினைக்கு இவ்வளவு எதிர்ப்பு இருக்கும்போது நாம் ஏன் அதனைக் கூற வேண்டும் என்று உணர்ந்து வெட்கப்பட்டுத் திருந்திவிட வேண்டும், அல்லது குழம்பிப்போகவேண்டும் என்றுதானே அமைச்சர் எதிர்பார்த்து, அவ்விதம் பேசினார். ஆனால் நடந்தது என்ன தெரியுமோ, தம்பி! நானே திடுக்கிட்டுப் போனேன்.

ஏகஇந்தியா எனும் கருத்துக்கு ஆதரவு திரட்ட அமைச்சர் அவ்விதம் பேசியதும், ஒருவர் கைதட்டவேண்டுமே! அதுதான் இல்லை! குண்டூசி கீழே விழுந்தால்கூட சத்தம் கேட்கும் - அவ்வளவு அமைதி. அவ்வளவு "ஆதரவு' அமைச்சரின் பேச்சுக்கு. ஒரு அமைச்சர் சிரமப்பட்டுச் சாமர்த்தியமாகப் பேசி என்னை மடக்க எடுத்துக்கொண்ட முயற்சிக்காக, ஒரு நாலு பேராவது கைதட்டக்கூடாதா என்று எண்ணி நானே பரிதாபப்பட்டேன் என்றால், அமைச்சரின் போக்கு எப்படி இருந்திருக்கும் என்பதைத் தம்பி! எண்ணிப் பார்த்துக்கொள்ளேன்.

தம்பி! அமைச்சர் நையாண்டி பேசி, பிரிவினையைத் தாக்கியதை நாங்கள் ஒப்பவில்லை, விரும்பவில்லை, என்பதை அந்த அமைதி மிக விளக்கமாக எடுத்துக்காட்டிற்று. அதுவும் போதாது என்று கருதியோ என்னவோ, இரண்டொருவர் அரசியல் கூடாது! என்று உரத்த குரலில் கூறினர்.

துவக்கத்திலே அமைச்சர் சொன்னாரல்லவா அரசியல் பேசக்கூடாது என்று; அந்த உபதேசத்தை மக்கள் உபதேசி யாருக்கே உபதேசித்தனர். மேற்கொண்டு அமைச்சர், ஏகஇந்தியா பற்றியோ பிரிவினைபற்றியோ பேசவில்லை, அரசியலே பேசவில்லை, அதிகம் பேசவில்லை, இரண்டொரு விநாடிகளிலே அவர் பேச்சும் முற்றுப்பெற்றது.

இந்த நிகழ்ச்சி, வடக்கே உள்ள நமது மக்கள் ஏகஇந்தியா எனும் ஏற்பாட்டிலே சொக்கிப்போய்விடவில்லை, பிரிவினையை வெறுத்திடவில்லை என்பதை விளக்கமாக்கிற்று. ஆனால் அவர்கள் ஈடுபட்டிருக்கும் அலுவல், அவர்களை உள்ளத்தைத் திறந்து பேசவைக்கவில்லை.

ஒரு சிறிய நிகழ்ச்சியை வைத்துக்கொண்டு உன் அண்ணன் ஏதேதோ வலியப் பொருள் வரவழைத்துக் காட்டுகிறான் என்று கூறுவார்கள், நமது வழிக்கு வர மறுக்கும் நண்பர்கள். இது போதாது, வெளிப்படையாக, விளக்கமாக, வடக்கு - தெற்கு பற்றி உங்களைப்போலக் கண்டித்தும் குமுறியும் பேசுகிறார்களா, இங்கிருந்து வடக்கே போய் வாழ்கின்றவர்கள் என்றுகூடக் கேட்பார்கள். தம்பி! பேசுகிறார்கள் என்று நான் சொன்னால், ஆதாரம் என்ன? சான்று உண்டா? என்று குடைவார்கள். இருக்கிறது, தம்பி! பேச்சுக்கூட அல்ல, எழுத்தே இருக்கிறது, வடக்கே சென்று தங்கியுள்ள நம்மவர்களின் எண்ணத்தை எடுத்துக்காட்டும் விதமாக. இதோ, அது.

அன்புள்ள அக்கா, வணக்கம் பல. முன்பின் அறியாத நான் தங்களுக்குக் கடிதம் எழுத முற்பட்டதற்கு, சமீபத்தில் கல்கத்தாவிலிருந்து வெளிவரும் 'The Statesman' தினத்தாளில், திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பற்றிய அபத்தமான குற்றச்சாட்டே காரணமாகும்.

வடநாட்டில் வாழும் எங்களுக்கு வடவரது தொல்லைகள் பரிபூரணமாகத் தெரியும். தென்னாட்டில் வாழும் தமிழர்களுக்கு வடவர் தமிழர்மீது செலுத்தும் ஆதிக்கம் புரிய நியாயமில்லை.

என் வாழ்நாட்களில் பெரும் பகுதி வடநாட்டில்தான் கழித்திருக்கிறேன். கல்யாணமாகாது தந்தையுடன் இருந்த நாட்களில் டில்லி, கராச்சி, பம்பாய், நாகபுரி ஆகிய நகரங்களில் இருந்திருக்கிறேன். . . . .

இப்போதும் நான் மணமாகிய ஒன்பது ஆண்டுகளையும் வடக்கேயே கழித்து இருக்கிறேன். ஜரியா, கல்கத்தா, ராஞ்சி, தற்போது இருக்கும் ஜாகராகண்டு எல்லாம் வடநாடுதானே! சுதந்திர இந்தியாவில் நாங்கள் படும் அவஸ்தை சொல்லி மாளாது. என் கணவரும் ஒரு பெரிய பதவி வகிக்கும் ஆபிசர்தான்.

சர்க்கார் துறையிலும் இவர் வேலையில் இருந்தார். இப்போது தனியார் துறையில் இருக்கிறார். சர்க்கார் துறையில் தமிழர்கள் வடவரால் எவ்வளவு இழிவாக நடத்தப்படுகின்றனர் என்பதைச் சொல்லாமல் இருப்பதே மேல். தனியார் துறையில் அவ்வளவு துன்பங்கள் இல்லை. என்றாலும், சக ஊழியர்களான வடவர்கள் சமயம் வாய்த்த போதெல்லாம் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தத் தவறுவதில்லை. . . . . .

தென்னாட்டில் எப்படியோ தெரியாது, வடநாட்டில் வாழும் தமிழர்கள் வெளியில் பகிரங்கமாகக் கூறாவிட்டாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தை முழுமனதோடு ஆதரிக் கிறார்கள்; முன்னேற்றக் கழகம் 50 ஸ்தானங்களைப் பற்றியது முக்கியமாக எங்களுக்குச் சொல்லமுடியாத மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. வயிற்றுப் பிழைப்புக்காகத்தான் தமிழர்கள் இன்று வடக்கில் வாழ்கிறார்களேயன்றி, வடவர்மேல் உள்ள மோகத்தால் அல்ல அக்கா! குழந்தைகளுக்கு நாங்கள் இந்தி கற்பிப்பதற்குக் காரணம் அந்த மொழியின்மீதுள்ள மோகத்தால் அல்ல; வேறு வழியில்லாததனால்தான்.

***

தம்பி! வடக்கே இருக்கும் தமிழ்ப் பெண்மணி, இராணிக்கு அனுப்பியிருந்த கடிதத்திலே, சில பகுதிகள் மேலே வெளியிடப் பட்டவை. நன்றாகப் படித்தவர், அவரசப்பட்டு முடிவு எடுக்கும் இயல்பு இருக்கக் காரணமில்லை. . . பார்க்கிறாயல்லவா, மனக் குமுறல் இருக்கும் விதத்தை. இப்படி, எண்ணி எண்ணிக் குமுறிக் கிடப்பவர்கள் நிரம்ப அங்கு. கழகத்துக்கும் அவர்களுக்கும் ஒரு தொடர்பு இல்லை - கருத்து அந்த அளவு பரவிப் பதிந்து விட்டிருக்கிறது. கல்கத்தா ஆங்கில இதழில், கழகத்தைக் கண்டித்து எழுதப்பட்டது கண்டு மனம் குமுறி, இப்பெண்மணி உடனே, சுடச்சுட நான் ஒரு மறுப்புரை அந்த இதழுக்கு எழுதி அனுப்பவேண்டும் என்பதற்காக, இராணிக்குக் கடிதம் அனுப்பி னார்கள் என்றால், எவ்வளவு அக்கறையும் ஆதரவும் காட்டி யிருக்கிறார்கள் கழகத்திடம் என்பது புரிகிறதல்லவா? நான் தில்புற ப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு இக்கடிதம் கிடைத்தது. தில்லியில் ஏற்பட்டுப்போன அலுவல் காரணமாக நான் கல்கத்தா இதழுக்கு மறுப்பு எழுத முடியவில்லை. ஆனால், பார் தம்பி! கடமை உணர்ச்சியை; நான் எழுதத் தவறிவிட்டேன், ஆனால் ஒரு வாரத்துக்குப் பிறகு பார்க்கிறேன், அந்தப் பெண்மணியே, மறுப்பு எழுதி, ஆங்கில இதழிலே வெளிவந்தது. ஒருபுறம் எனக்கு வெட்கம், மற்றோர் புறம் மெத்த மகிழ்ச்சி, நெடுந்தொலைவிலே இருப்பினும் கொள்கைக்காக வாதாடும் அக்கறை இருப்பது கண்டு மகிழ்ச்சியுற்றேன்.

தம்பி! ஏக இந்தியா என்பது போலி, பொருளற்றது, சுவையற்றது, பயனும் இல்லை என்ற உணர்ச்சி உள்ளவர்கள் ஏராளம்; ஆனால் அதனை வெளியே எடுத்துக் கூறும் நிலை, எல்லோருக்கும் இல்லையே!! எத்தனையோவிதமான நிலைமைக் கோளாறுகள் - நெருக்கடிகள் - இடப்பாடுகள்.

திராவிடம் தனித்தன்மை வாய்ந்தது, தனி அரசு நடாத்த முடியும் நடாத்தவேண்டும் என்ற எண்ணம்கொண்டவர்கள், திராவிட முன்னேற்றக் கழத்திற்குள்ளே மட்டும்தான் இருக் கிறார்கள் என்று எண்ணிக்கொள்கிறார்கள், காங்கிரசார். மிகப் பெரிய தவறு.

அவ்விதமான நம்பிக்கையும் விருப்பமும் கொண்டவர்கள் தி. மு. கழகத்துக்கு வெளியேயும் இருக்கிறார்கள் - பலப்பலர். இந்த உண்மை, தி. மு. கழகத்துக்குப் புதிய உற்சாகத்தையும் வலிவையும் தந்துவருகிறது.

அண்ணன்,
24-6-1962
---------------------

This file was last updated on 29 Jan 2023
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)