சி.என். அண்ணாதுரை எழுதிய
வெள்ளை மாளிகையில்
veLLai mAlikaiyil
by C.N. aNNaturai
In Tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2023.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
சி.என். அண்ணாதுரை எழுதிய
வெள்ளை மாளிகையில் (நாவல் / புதினம்)
Source:
வெள்ளை மாளிகையில்
டாக்டர் சி.என். அண்ணாதுரை
பரதன் பதிப்பகம்
86, திருக்கச்சி நம்பி தெரு, காஞ்சிபுரம் -3
மலிவுப் பதிப்பு, முதல் பதிப்பு 1970
விலை ரூ. ஒன்று
அல்லி அச்சகம், காஞ்சிபுரம்-3
-----------
நூலைப் பற்றி
டாக்டர் அமரர் அண்ணா அவர்கள், 'காஞ்சி' இதழில் தொடர்ச்சியாக எழுதி வந்த கற்பனை ஓவியம்தான் இந்த வெள்ளை மாளிகையில்.
வெள்ளை மாளிகை என்ற சொற்றொடரைக் கேட்டதுமே, அது அமெரிக்க நாட்டு ஜனாதிபதியின் மாளிகை என்பதை அனைவரும் அறிவர்,
இதுவரையில் அந்த வெள்ளை மாளிகை, கருப்பு இனத்தவரான நீக்ரோவரை, தன்னுள், அதன் தலைவராக ஏற்றுக் கொள்ளவில்லை.
டாக்டர் அண்ணா அவர்களது கற்பனை கண்ணில், ஒரு நீக்ரோவர், ஜனாதிபதி யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு விடுகிறார்.
எவ்வளவு உயர்ந்த பதவியிலிருந்தா லும், கருப்பர் இனம், அதற்கு இழைக்கப் படும் கொடுமைகளிலிருந்து தப்ப முடிய வில்லை என்பதை, அந்தப் பதவி நமக்கு எடுத்துக் காட்டுகிறது.
நிகழ்ச்சிகள் கற்பனையேயானாலும், இன்றைய வரையில் நிலைமைகள் அப்படியேதான் இருக்கின்றன என்பதை அறிய முடியும்.
கருப்பு இனத்தவரைப் பற்றி அறிஞர் அவர்கள் கண்ட பல்வேறு நூல்களிலிருந்து பிழிந்தெடுத்துத் தயாரிக்கப்பட்ட தேனடைதான் இந்நூல்.
படிப்பதற்கு மட்டுமல்ல -சிந்திக்கவும் வேண்டும் - படிப்பினை பெறவேண்டும் என்பதற்காகவே இதனை மலிவு விலையில் வெளியிட முன்வந்துள்ளோம்.
வரவேற்கப்படுவதன் அளவை, அமரர் அவர்களது கருத்துக்கள் பரவுவதற்கு ஒரு அளவுகோல் என்றே மதிப்பிடுகிறாம்.
ஆங்கில எழுத்தாளர் இர்விங் வாலஸ் எழுதியுள்ள மனிதன்' என்ற நூலிலிருந்து பிறந்ததுதான் இதுவென்று அறிஞர் அண்ணா அவர்களே குறிப்பிட்டுள்ளார்கள்.
இனி, அந்த ஜனாதிபதியின் பரிதாபத்தில் பங்கேற்க நீங்கள் உள்ளே போகலாம்.
-பதிப்பகத்தார்.
----------------
வெள்ளை மாளிகையில்
வெள்ளை மாளிகை சென்றிடலாம் வருகின்றாயா? ஆமாம்! அமெரிக்க அரசு அதிபர் கொலுவிருக்கும் அழகு மணிமாடம்தான். அங்கா? நாமா? என்று மலைக்காதே! நாம் யார்? மனிதரில்லையா!! மனிதருக்காக அமைவதுதானே மாடம் கூடம் மணிமண்டபம் மாளிகை என்பவை யாவும்; மாளிகையின் நிறமும் பெயரும் எதுவாக இருந்தால் என்ன - வெள்ளை - சிவப்பு - பச்சை - நீலம் - இவை பல்வேறு வகையான வண்ணங்கள், வேறென்ன? அமெரிக்க அதிபர் வீற்றிருக்கும் மாளிகைக்கு 'வெள்ளை மாளிகை' என்று பெயர் இருப்பதாலேயே, மாநிறக்காரர் நுழையக்கூடாதா என்ன!
மேலும், நான் வெள்ளை மாளிகைக்கு வரச்சொல்லுவது, அதனை மனக்கண்ணால் காண்பதற்காகத்தான். நாம் மாநிறம்! ஆனால், நான் உன்னைக் காண அழைக்கும் வெள்ளை மாளிகையில் ஒரு கருப்பு மனிதர் அரசோச்சுகிறார். எனக்குள்ள ஆசை அந்த வெள்ளை மாளிகையைக் காண்பதிலே கூட அவ்வளவு இல்லை; அங்கு ஒரு கருப்பு மனிதர் ஆட்சி செய்வதைக் காண்பதிலேதான்.
வெள்ளை மாளிகையில் ஓர் கருப்பு மனிதர்! - என்று நான் கூறுகிறேன், ஆனால், தம்பி! அந்த ஏட்டுக்கு உள்ள தலைப்பு அது அல்ல; மனிதன் என்பதே தலைப்பு.
நிறம், வடிவம், நாடு, மதம், மொழி, நிலை, எப்படி எப்படி இருந்திடினும், மனிதன் மனிதன் தானே! அந்த உயர்ந்த பண்பினை உணர்த்த வேண்டும் என்பதற்காகவே நூலாசிரியர் தமது ஏட்டுக்கு மனிதன் என்ற தலைப்பிட்டுள்ளார். அந்த 'மனிதனை'க் காண்பதற்காகவே, உன்னை வெள்ளை மாளிகைக்கு அழைக்கிறேன்; அங்கு யாராரோ இருந்தனர்; ஆனால், மனிதன் கொலுவிருக்கும் மாளிகையாக இருந்திடும் நிலையை இந்த 'ஏடு' மூலமே காணமுடியும். கண்டேன், களிப்புற்றேன்; எண்ண எண்ண இனித்திடும் கருத்துண்டேன்; அந்தச் சுவையை நான், தம்பி! உன்னுடனன்றி வேறு எவருடன் கலந்துண்பதிலே மகிழ்ச்சி பெற்றிடுவேன். அதனால் உன்னிடம் கூறுகிறேன்; மேலும் உன்னிடம் கூறுவதென்பது உயர் கருத்துகளின் பெட்டகம் போன்ற மனம் படைத்த இலட்சியவாதியிடம் கூறுவதென்றல்லவா பொருள் படுகிறது; அதனால் கூறுகிறேன்.
இப்போது அந்த வெள்ளை மாளிகையில் அமர்ந்து அரசோச்சுபவர் லிண்டன் ஜான்சன்; அறிவாய். அவர் சென்ற திங்கள் பெருமிதத்துடன் பேருரையாற்றி இருக்கிறார், உலகிலேயே நமது நாடுதான் செல்வம் மிகுதியாக உள்ள நாடு என்று; பழக்கப்பட்ட 'பாஷை' விரும்புவோருக்காகச் சொல்லுகிறேன். 'குபேரபுரி'.
அந்தக் 'குபேரபுரி'யின் அதிபராகக் கொலுவிருக்கும் ஜான்சன், இப்போது உள்ளது போன்ற வளம் - செல்வப் பெருக்கம் - இதற்கு முன்பு எப்போதும் இருந்ததில்லை - அந்தச் செல்வம் மேலும் மேலும் வளருகிறது, "நமது நாட்டு மக்களின் வாழ்க்கையைப் பூந்தோட்டமாக்கிடத்தக்க அளவு மட்டுமல்ல, உலகம் முழுவதிலுமே, மணம் வீசும் வாழ்வு மலரச் செய்திடத் தக்க அளவுக்கு" என்று பூரிப்புடன் பேசியிருக்கிறார்.
இப்போதே, தம்பி! அந்த அமெரிக்கப் பணம் நடமாடாத நாடு இல்லை என்று கூறலாம்; அந்த நாட்டை நாடாத தலைவர்கள் இல்லை என்று சொல்லலாம். யாரோ ஒரு கணக்குச் சொன்னார்கள், இந்தியாவிலே மக்கள் சாப்பிடும் உணவில் எட்டுக் கவளத்தில் ஒன்று அமெரிக்கா கொடுப்பது என்று. எனவே, ஜான்சன், அமெரிக்காவின் அளவுகடந்த செல்வம் இந்த அவனி முழுவதும் ஆனந்த வாழ்வு மலரச் செய்ய உதவிடும் என்று கூறிக் கொள்ள உரிமை பெற்றிருக்கிறார். அமெரிக்காவை எதிர்பார்த்துத்தானா நம் வாழ்க்கை அமைய வேண்டும் என்று எண்ணிப் பார்க்க வேண்டிய கடமை, கையேந்துபவர்களுக்கு இருக்கிறது. அது ஒரு தனிப் பிரச்சினை. இப்போது ஜான்சன் கூறியிருப்பதிலே நாம் கவனித்துப் பார்க்க வேண்டிய பகுதி அமெரிக்காவில் இன்றுள்ள செல்வ மிகுதி. அது மறுக்க முடியாத உண்மை. பணத்திலே புரளுகிறார்கள் என்று கதைகளிலே எழுதுகிறார்களே, அது மெய்யான நிலைமையாக இருக்கிறது அமெரிக்காவில்.
ஒரு கணக்குக் காட்டுகிறேன். பார்த்துத் தெரிந்து கொள்ளேன், நிலைமையை.
இன்று அமெரிக்காவில் உள்ள மோட்டார் கார்களின் எண்ணிக்கை 690 இலட்சம்! டெலிபோன்கள் 890 இலட்சம்! டெலிவிஷன் செட்டுகள் 600 இலட்சம்! உல்லாசப் படகுகள் 70 இலட்சம்!
அமெரிக்க மக்கள் ஆண்டொன்றுக்கு இப்போது செலவிடும் பணம் இருக்கிறதே, வாழ்க்கை நடத்த, உல்லாசம் பெற, எவ்வளவு தொகை தெரியுமா, தம்பி! எச்சரிக்கையாக இரு. மயக்கம் வந்துவிடப் போகிறது, அவர்கள் செலவிடும் பணம் ரூபாய் 1985500000000! இவ்வளவு ரூபாய்கள் செலவிடுகிறார்கள் ஒரே வருடத்தில். பணத்திலே புரள்கிறார்கள் என்று ஏன் சொல்லக்கூடாது!
தம்பி! ஓய்வு நாட்கள் உள்ளனவே. இயற்கை அழகு காண, செயற்கைச் சேட்டைகளைச் சுவைக்க, மலையுச்சி ஏற, கடலிலே குடைந்தாட, இவ்விதமான இன்பப் பொழுதுபோக்கு, இதற்கு மட்டும் இந்த ஆண்டு அமெரிக்க மக்கள் செலவிடும் தொகை 14,250 கோடி ரூபாயாம்! கேட்டனையா! செயற்கை நீச்சல் குளங்கள் மட்டும் சென்ற ஆண்டு புதிதாக 50,000 அமைத்திருக்கிறார்களாமே!
பணம் இந்த அளவு புரளும்போது, என்னென்ன சாமான்கள்தான் அவர்கள் வாங்கமாட்டார்கள்! இங்கு நமக்கிருக்கிற தரித்திர நிலை, மகன் சட்டை தைத்தால் தகப்பன் மேல் வேட்டியை ஒட்டுப்போட்டுப் போட்டுக் கொள்ளும் நிலையையும், மகளுக்குச் சேலை வாங்கினால் தாய் சாயம் போனதைத் துவைத்துக் கட்டிக் கொள்ள வேண்டிய நிலையையும் மூட்டிவிடுகிறது. அங்கே பணம் படுத்துகிறபாடு, என்ன வாங்கலாம், எவ்வளவு வாங்கலாம் என்ற மன அரிப்பைத் தருகிறது. பண்டங்களை விற்பனை செய்பவர்கள், தத்தமது சரக்குகளை வாங்கும்படி மக்களைத் தூண்டிட விளம்பரம் செய்கிறார்கள். அந்த விளம்பரச் செலவுக்காக மட்டும் வணிகர்கள் செலவிடும் தொகை, ஒரு ஆண்டுக்கு 6850 கோடி ரூபாயாம்.
இதைப் போல முன்பு ஒருமுறை பணம் புரண்டது. உச்சிக்குச் சென்று உருண்டு கீழே விழுவதுபோல, அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஒரு பெரிய சரிவு ஏற்பட்டது; அது 1929-ல் என்று எச்சரிக்கை தந்துள்ளனர் சிலர். ஆனால், பல பொருளாதார நிபுணர்கள் அவ்விதமான பயத்துக்குத் துளியும் ஆதாரம் இல்லை என்று அறிவித்திருக்கிறார்கள். இதுபற்றிக் கருத்து வேற்றுமை இருப்பினும், இன்றைய செல்வப் பெருக்கம் பற்றி மட்டும் யாரும் மறுப்புத் தெரிவிக்கவில்லை.
அத்தகையை அமெரிக்க நாட்டின் ஆட்சி பீடம் அமைந்துள்ள இடம் வெள்ளை மாளிகை!
ஆட்சிப் பீடம் உள்ள இடத்துக்குத்தான் வெள்ளை மாளிகை என்று பெயர் இருக்கிறது. ஆனால், அந்த ஆட்சியிலே உள்ளவர்கள் அனைவரின் நிறமும் வெள்ளையல்ல; கருநிறம் கொண்டவர்கள் இருக்கிறார்கள்; நீக்ரோ மக்கள்.
நிறம் கருப்பு, இனம் நீக்ரோ, பூர்வீகம் ஆப்பிரிக்கா கண்டம்; ஆனால், அவர்கள் அமெரிக்கர்கள்; சட்டம் சொல்லுகிறது; ஆபிரகாம் லிங்கன் அவர்களும் அமெரிக்கர்களே என்று வார்த்தைகளை வீசி மட்டுமல்ல ஒரு பெரிய பயங்கரமான உள்நாட்டுப் போர் நடாத்தியே கூறிட வேண்டி நேரிட்டது. "சரி" என்றனர்; உதடு அசைந்தது தம்பி! உதடு! உள்ளம் இருக்கிறதே அதிலே புற்றரவு புகுந்து கொண்டுதான் இருக்கிறது, சாகவில்லை; சாகடிக்கவும் முடியவில்லை. அதனைச் சாகடிக்கத் துணிந்து கிளம்பிய கென்னடியைக் கொடியோர் கொன்று விட்டனர், பதறப் பதற; பக்கம் இருந்த அவர் துணைவியார் ஜாக்குலீன் துடிக்கத் துடிக்க.
இறவாப் புகழ் பெற்றுவிட்ட கென்னடி இதே வெள்ளை மாளிகையிலேதான் தங்கி ஆட்சி நடாத்தி வந்தார். அந்த வெள்ளை மாளிகையில் ஒரு கருப்பு மனிதரை - நீக்ரோவை - அதிபராக அமரச் செய்து பார்க்கிறார் 'மனிதன்' எனும் ஏடு எழுதியுள்ள இர்வின் வாலாஸ் என்பவர். அந்தப் புத்தகத்தைப் படித்ததிலிருந்து எனக்கு ஒரே ஆவல், உன்னிடம் கூற வேண்டும் என்று. ஆனால், அந்த ஏட்டிலே கூறப்பட்டுள்ள கருத்தின் முழுப் பொருளைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால், 'கருப்பு மனிதர்கள்', வெள்ளை மாளிகை உள்ள நாட்டில் எப்படி நடத்தப்பட்டு வந்தார்கள், எப்படி நடத்தப்பட்டு வருகிறார்கள் என்பது பற்றி தெரிந்து கொண்டாக வேண்டும். 'நீக்ரோ'க்களின் பிரச்சினையின் வேதனை நிரம்பிய உண்மைகளை உணர்ந்தால் மட்டுமே, இர்விங் வாலஸ் தீட்டியுள்ள காவியம் போன்ற ஏட்டின் கருத்து பயனளிக்கும், பொருள் விளங்கும். வெள்ளைப் புலி என்பது விளங்க வேண்டுமானால், புலியைப் பற்றியும் வெள்ளை நிறம் பற்றியும் புரிந்திருக்க வேண்டுமல்லவா? தில்லைத் தீட்சிதர் தீண்டாமை ஒழிப்பு மாநாட்டுக்குத் தலைமை வகிக்கிறார் என்று பிரான்சு நாட்டிலே உள்ளவரிடம் சொன்னால் முழுப் பொருள் விளங்குமா? தீண்டாமைக் கொடுமையின் கேடுகளையும், தில்லை தீட்சிதர் என்ற முறையின் தன்மையையும், காலவேகம் இந்த இரண்டு நிலைமைகளையும் மாற்றி விட்டிருப்பதனையும் அறிந்தவர்கள் மட்டுமே தில்லைத் தீட்சிதர் தீண்டாமை ஒழிப்பு மாநாட்டுக்குத் தலைமை வகித்தார் என்ற வாசகத்தின் முழுப் பொருளையும் உணர முடியும். அது போலத்தான் 'மனிதன்' எனும் அந்த ஏட்டிலே உள்ளவற்றினை முழு அளவில் உணர வேண்டுமானால், அந்த ஏட்டிலே இல்லாத வேறு பல ஏடுகளிலே உள்ள பல உண்மைகளையும் நிலைமைகளையும் கூறியாக வேண்டும். ஆகவே, தம்பி! இந்த ஏடு என்னை உன்னிடம் வேறு பல ஏடுகளைப் பற்றிய நினைவுகளையும் கூறிடச் செய்கிறது.
ஒரு நல்ல உயிருள்ள ஏட்டுக்கு இதுவே சிறந்த இலக்கணம் என்று கூடக் கூறலாம்.
'டாம் மாமாவின் விடுதி' என்று ஒரு ஏடு, நீக்ரோ பிரச்சினையை உருக்கத்துடன் எடுத்துக் கூறுவது. அது 'அந்த நாட்களில்' புரட்சி ஏடு! இன்றுள்ள அமெரிக்க நீக்ரோக்கள், 'டாம் மாமா' என்றால் சண்டைக்கு வருவார்கள்! அந்த ஏட்டின் கருத்து நீக்ரோக்களுக்கு விடுதலை வாங்கித் தராது; அது அடிமை வாழ்க்கைக்கு ஒரு அலங்கார மெருகேற்றும் தந்திரத் திட்டம் என்று கூறுகிறார்கள்.
எந்த அளவுக்கு மனம் வெதும்பிக் கிடக்கிறது; ஆத்திரம் பீறிட்டுக் கிளம்பி விட்டிருக்கிறது என்றால், வெள்ளையர் எங்களைச் சம உரிமையுடன் நடத்தவே மாட்டார்கள்; எனவே, எமக்கென்று அமெரிக்காவில் ஒரு தனி நாடு அமைத்துக் கொடுத்திடுக! என்று கேட்கின்ற அளவுக்கு சென்றிருக்கிறது. இன்னும் சிலர், நாங்கள் அமெரிக்காவில் இருக்கிறோம், ஆனால், அமெரிக்கர் அல்ல, அமெரிக்கர் ஆகவும் முடியாது; தேவையுமில்லை; நாங்கள் நீக்ரோக்கள்; எங்கள் தாயகம் ஆப்பிரிக்கா; நாங்கள் அங்குச் சென்று, 'எங்கள் இரத்தத்தின் இரத்தமாக உள்ள நீக்ரோ இனத்தாருடன் சேர்ந்து வாழ்ந்து கொள்கிறோம். இதற்கு ஏற்பாடு செய்து கொடுத்தால் போதும்' என்று கேட்கத் தலைப்பட்டு விட்டனர்.
இத்தகைய நிலைமை இருந்திடுவது உணரப்பட்டால்தான், வெள்ளை மாளிகையில் கருப்பு மனிதர் என்பதன் பொருள் விளங்கும்.
அமெரிக்க அரசு, நீக்ரோக்களில் தகுதி மிகுந்த சிலருக்கு உயர் பதவி கொடுத்திருக்கிறது. கீர்த்தி மிக்க வழக்கறிஞர்கள், கை தேர்ந்த மருத்துவர்கள், வளமான வாழ்க்கை நடாத்தும் வணிகர்கள் நீக்ரோக்களில் இருக்கிறார்கள். அதுபோலவே அரசாங்க அலுவலிலும் திறமை மிக்க அதிகாரிகளாகச் சில நீக்ரோக்கள் இருக்கிறார்கள்.
சென்ற திங்கள் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஜான்சன், அமைச்சரவையிலேயே ஒரு நீக்ரோவுக்கு இடம் கொடுத்திருக்கிறார்.
இந்தச் சம்பவங்கள் உலகத்தாருக்கு, பாராட்டுதலுக்குரியதாக, வாழ்த்தி வரவேற்கத்தக்கதாகத் தென்படுவதற்குக் காரணம், இவை கோபுரக் கலசங்கள் போலப் பளபளப்பாகத் தெரிபவை; உலகின் கண்களுக்குச் சரியான அளவிலே தெரியாமல் உள்ள, அமெரிக்கக் கருப்பர்களின் பொதுவான வாழ்க்கையிலே ஏற்றப்பட்டிருக்கும் இழிவுகள், சிறுமைகள், கொடுமைகள், இன்னல்கள் மலைபோல உள்ளன.
இத்தகைய நிலையிலே உள்ள கருப்பர்களிலே சிலர், டாக்டர்களாவதும், வழக்கறிஞராவதும், அரசாங்க அதிகாரிகளாவதும், அமைச்சர் அவையிலே இடம் பெறுவதும், நடைபெறக் கூடாதன நடந்து விட்டன என்ற பட்டியலைச் சேர்ந்தவை; மலடி வயிற்று மகன்! புதையல் எடுத்த தனம்!
அமைச்சர் அவையிலே இடம் பெற்றுவிடுவதே 'அதிசயம்' 'அதிர்ச்சிதரத்தக்க மாறுதல்' என்று கருதப்படுகிறது என்றால், ஒரு 'கருப்பு மனிதர்' வெள்ளை மாளிகையில், ஆட்சித் தலைவராகவே அமருவது என்றால், வெள்ளை வெறியர்களின் மனம் எரிமலையாகி வெடித்து ஆத்திரக் குழம்பினை அல்லவா கக்கிடச் செய்திடும்.
துணிந்து, ஆனால் தூயநோக்கத்தோடு, நூலாசிரியர் கருப்பு மனிதரை வெள்ளை மாளிகையில் அதிபராக அமரும்படி தம் கற்பனைக்குக் கட்டளையிட்டாரே தவிர, அவருக்கே கூட, அதிக தூரம் கற்பனையை ஓடவிடக் கூடாது, நம்பவே முடியாதது இது என்று படித்திடுவோர் கருதிவிடத்தக்க விதமாகக் கதை அமைந்து விடக்கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டு, வெள்ளை மாளிகையில் ஆட்சி அதிபராக அமரும்படி, அமெரிக்க மக்கள், நிறவெறியற்று, நிறபேதம் பார்க்காமல் ஒரு கருப்பரை, குடிஅரசுத் தலைவராகத் தேர்ந்தெடுத்தார்கள் என்று எழுதவில்லை; எதிர்பாராத சில நிகழ்ச்சிகளால், ஒரு கருப்பர், வெள்ளை மாளிகையில் குடியரசுத் தலைவராக அமர வேண்டிய நிலை ஏற்பட்டது என்ற அளவிலேயே தமது கற்பனையை நிறுத்திக் கொண்டார்.
கற்பனை வளம் குறைவாக உள்ளவர்கள், ஒரு கருப்பர் வெள்ளை மாளிகையில் அதிபராக அமர்ந்தது போன்ற கனவு கண்டார்; அந்தக் கனவில்... என்று எழுதியிருந்திருப்பார்கள். இர்விங் வாலஸ் நல்ல கற்பனைச் செறிவு இருப்பதால், நடந்திருக்கக் கூடும் என்று அனைவரும் ஒப்புக்கொள்ளத்தக்க விதமான ஒரு நிகழ்ச்சிச் சூழ்நிலையைக் காட்டி, வெள்ளை மாளிகையில் கருப்பு மனிதரை இருந்திடச் செய்திருக்கிறார்.
தம்பி! அமெரிக்காவிலேயே இருக்கிறார்கள், ஆனால் அவர்கள் நிறம் கருப்பு என்பதால், அவர்களை ஓட்டல்களில் - படக்காட்சிக் கொட்டகைகளில் - கல்விக்கூடங்களில் - மருத்துவமனைகளில் - பிரித்து வைக்கிறார்கள்; இத்தனைக்கும் இப்படிச் செய்யக்கூடாது என்று சட்டம் இருக்கிறது. நீக்ரோக்களுக்குக் கல்விக்கூடங்களில் வெள்ளையருடன் சேர்ந்து படிக்கச் சட்டம் உரிமை அளிக்கிறது; ஆனால் நிறவெறி தடுக்கிறது; போலீஸ் துணையுடன் மட்டுமே கருப்பு மாணவர்கள் அந்தக் கல்விக்கூடங்கள் செல்ல முடிகிறது. அங்குத் தரப்படும் பாடமோ "அனைவரும் சமம்" என்பது. எத்தனை போலித்தனமான நடவடிக்கை! எத்தனை காலமாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது! தலைமுறை தலைமுறையாக இந்தக் கொடுமையை அனுபவித்துக் கொண்டு வரும் நீக்ரோ மக்கள், வெள்ளையரிடம் எப்படித்தான் 'நட்புறவு' காட்ட முடியும்! பெரும்பாலும் முடிவதில்லை; காட்டப்படும் 'நட்புறவில்' பெருமளவு 'நடிப்பாக'வே இருந்து வருகிறது, வேறு எப்படி இருக்க முடியும்?
அன்புரை, அறிவுரை, விளக்கவுரை எல்லாம் ஏடுகளிலே நிரப்பித் தந்துள்ளனர்; இப்போதும் தந்தபடி உள்ளனர்.
அமெரிக்காவில் 'நீக்ரோக்கள்' பற்றி 'முற்போக்காளர்' கூடத் தமது கருத்தினைக் கூறும்போது, அங்கு உள்ள நிறவெறியர்களின் ஆத்திரத்தை அதிக அளவில் கிளறிவிடாத முறையிலே பக்குவமாகவே கூற வேண்டி நேரிட்டது. அதற்கே 'புருவத்தை நெறிப்போரும்' 'புண்படப் பேசுவோரும்' 'தாக்க வருவோரும்' கிளம்புவர்.
'நீக்ரோக்கள்' மனித இனத்திலே தாழ்ந்தவர்கள்; அமெரிக்கர்களை விட 'மட்டம்'; அது இயற்கைச் சட்டம், இறைவன் திட்டம் என்று பேசிடுவோர் அறிவாலயங்களென்று கூறப்படும் பல்கலைக் கழகங்களிலே பேராசிரியர்களாக இருந்திடும் நிலை.
'நீக்ரோக்கள்' அமெரிக்கரின் 'உடைமைகள்'. எனவே அவர்களுக்கு மனித உரிமைகள் தரப்பட்டிருக்கின்றனவா என்று பார்க்க வேண்டியது அல்ல நமது கடமை, சொத்து உரிமைச் சட்டத்தின்படி நடவடிக்கை இருக்கிறதா என்று பார்க்க வேண்டியதே நமது கடமை என்று பேசிடும் சட்ட நிபுணர்களைத் தாங்கிக் கொண்ட நாடு அமெரிக்கா.
"என் உடைமை! இதனை நான் எதுவும் செய்வேன். கூடத்திலும் வைத்திருப்பேன், குப்பை மேட்டிலும் வீசுவேன், இரவல் கொடுப்பேன் அல்லது இன்னொரு பொருளுக்கு ஈடாக மாற்றிக் கொள்வேன், அல்லது உடைத்தெறிவேன்; என் விருப்பப்படி செய்வேன்; இது என் உடைமை!" என்று வீடு, காடு, மாடு, வண்டி, குதிரை, ஆடு போன்ற உடைமைகள் குறித்துப் பேசும்போது, ஒருவருக்கும் அந்தப் பேச்சு அக்ரமமானது என்று தோன்றுவதில்லையல்லவா? அமெரிக்காவில் - இன்று அல்ல, முன்பு - நீக்ரோக்கள் உயிருள்ள ஜீவன்கள் அல்ல, உரிமைபெற்ற மாந்தர் என்று அல்ல, வெறும் உடைமைகள் என்றே கருதப்பட்டு வந்தது.
கர்த்தரின் சம்மதம் இந்த ஏற்பாட்டுக்கு உண்டு என்று உபதேசம் செய்தவர்களும், இது நாம் இயற்றியுள்ள சட்டம் என்று வாதாடி வெற்றி பெற்றவர்களும் இருந்து வந்தது கூட வியப்பல்ல; ஆமாம், நாம் 'ஐயா'வின் 'உடைமை'தான், என்ன செய்யவும் அவருக்கு உரிமை உண்டு என்று நம்பிக் கிடந்திடும் நிலையில் நீக்ரோக்களும் இருந்தனர்! திடுக்கிடச் செய்திடும் வியப்பு இஃதன்றோ?
தம்பி! அமெரிக்காவில் அந்த நாட்களிலே இருந்து வந்த முறை பற்றியும், நிலைமை பற்றியும் வெளிவந்துள்ள பல ஏடுகளிலே ஒன்று 'டிரம்' (முரசு) என்ற பெயர் கொண்டது. இதிலே அப்பன், மகன், அவன் மகன் என்று மூன்று தலைமுறையினரின் வாழ்வு விளக்கப்பட்டிருக்கிறது. வாழ்வா அது? இரத்தக் கண்ணீர் விட வேண்டும் அந்த வேதனையை உணரும்போது.
'டிரம்' என்பவன், ஆப்பிரிக்க நீக்ரோ - இளைஞன் - கட்டுடல்! அங்கு அவன் ஒரு அரசாளும் உரிமை பெற்ற மரபினன் கூட. அவனை அடிமை வியாபாரிகள் பிடித்திழுத்துக் கொண்டுபோய் விற்றுவிடுகிறார்கள்; அமெரிக்கப் பண்ணையாருக்கு!
அமெரிக்காவில் பருத்தி கரும்புப் பண்ணைகள் அமைத்து பொருள் குவித்தனர் - அங்குப் பாய்ச்சப்பட்டது தண்ணீர் மட்டுமல்ல - நீக்ரோக்களின் இரத்தமும் கண்ணீரும் கூடத்தான். அப்படி ஒரு பண்ணையில் 'டிரம்' பாடுபட்ட சோகக் கதை தானே இது என்று எண்ணுகிறாயா தம்பி! அதுதான் இல்லை. இந்த 'டிரம்' வேலை செய்தது, விந்தையான வேறோர் பண்ணையில்! உற்பத்திப் பண்ணையில்! விளங்கவில்லையா? விளங்காது சுலபத்தில், விளங்கினாலோ வேதனை உணர்ச்சி அடங்க நெடு நேரம் பிடிக்கும்.
ஆப்பிரிக்காவிலிருந்து நீக்ரோக்களை வேட்டையாடிப் பிடித்துக் கொண்டு வந்து அமெரிக்காவில் விற்றுப் பொருள் குவித்து வந்தனர் கொடியவர்கள் - கொடியவர்கள் என்று இப்போது கூறிவிடுகிறோம் - அப்போது அவர்கள் வியாபாரிகள்! கடலிலே வலைவீசி மீன் பிடித்து விற்பதில்லையா, பறவைகளைப் பிடித்து விற்பதில்லை, மான்களையும் காட்டுப் பன்றிகளையும் வேட்டையாடிக் கொன்று அந்த இறைச்சியை விற்பதில்லையா, அதுபோலத்தான் அடிமை வாணிபம் அனுமதிக்கப்பட்டு வந்தது. எனவே, அதிலே ஈடுபட்டவர்களைக் கொடியவர் என்று அந்த நாட்களிலே கூறுவதில்லை.
விலை கொடுத்து வாங்கிய அடிமை உழைத்து உழைத்து ஓடாகி, உருக்குலைந்து, நோயால் தாக்குண்டு இறந்து போய்விட்டால், பண்ணையார் மறுபடியும் சந்தைக்குச் சென்று வேறு அடிமைகளை விலைக்கு வாங்கிக் கொள்வார். நாளாகவாக இந்த அடிமைகளை ஆப்பிரிக்காவிலே இருந்து கொண்டுவந்து விற்பதற்கு ஆகும் செலவு அதிகமாகிக் கொண்டு வந்தது; புதிதாக அடிமைகளை வாங்க அதிகப்பணம் செலவிட வேண்டி வந்தது. அடிமைகள் உழைத்து உருக்குலைந்து போவதால், நாளாகவாக அவர்களின் வேலைத்திறன் குறையலாயிற்று. தலைமுறைக்குத் தலைமுறை தேய்ந்து கொண்டு வந்தனர். அந்தப் பழைய கட்டுடல், தாக்குப் பிடிக்கும் வலிவு குறைந்து கொண்டே வந்தது.
அதிகச் செலவு, வலுவிழந்த நிலை ஆகிய இரண்டையும் கண்ட ஒரு வெள்ளை பண்ணை முதலாளி, புதுத்திட்டம் வகுத்தான். ஆப்பிரிக்காவிலிருந்து புதிது புதிதாக, தொகை தொகையாக நீக்ரோக்களைப் பிடித்துக் கொண்டு வருவதை விட அமெரிக்காவிலே இடம்பெற்றுவிட்ட நீக்ரோக்களைக் கொண்டே, உற்பத்தியைப் பெருக்கிக் கொண்டால் என்ன? அமெரிக்காவிலுள்ள நீக்ரோக்களிடையே 'பிறப்பு' அதிகமானால், புதிய புதிய அடிமைகள் கிடைப்பார்களல்லவா என்று எண்ணினான். அதன் விளைவாகத்தான் அந்த ஆசாமி, 'நீக்ரோ உற்பத்திப் பண்ணை' அமைத்தான்.
கோழிப்பண்ணை, ஆட்டுப் பண்ணை, மாட்டுப் பண்ணை நடத்துபவர்கள் தரமான ஜோடிகளை இணைத்து, உற்பத்தியின் அளவையும் தரத்தையும் பெருக்குகிறார்கள் அல்லவா, அதுபோல கட்டுடல் படைத்த தரமான நீக்ரோ இளைஞர்களைப் பருத்திக் காடுகளிலே வேலை செய்யச் சொல்லிக் கசக்கிப் பிழிவதை விட, அவர்களுக்கு ஊட்டம் கொடுத்து வளர்த்து, வலிவும் பொலிவும் மிகுதியாகும்படி செய்து, அவர்களை நீக்ரோ பெண்களுடன் உறவு கொள்ளச் செய்து, உற்பத்தியைப் பெருக்குவது என்று திட்டமிட்டான். இதிலே அந்த ஆசாமி தன் திறமை முழுவதையும் செலவிட்டு, நல்ல தரமான நீக்ரோக்களைத் தனது பண்ணையில் உற்பத்தி செய்து, விற்பனை செய்து வந்தான்.
நீக்ரோ பெண்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு உடல் பாழாகும்படியான கடினமான வேலை கொடுக்காமல் வலுவளிக்கும் உணவு அளித்துத் தனிவிடுதிகளில் இருந்திடச் செய்து - அது போன்றே கட்டுடல் படைத்த நீக்ரோ வாலிபர்களைத் தேர்ந்தெடுத்து அந்த விடுதிகளில் விருந்தினராக இருந்திடச் செய்வது, உறவு பெற்றவள் கருவுற்றதும், அவனை வேறு விடுதிக்குச் சென்றிட உத்தரவிட்டு விடுவது, வேறு விடுதி அந்தச் சமயம் இல்லையென்றால், ஆடவர் பகுதியில், தக்க சமயம் வருகிற வரையில் இருந்திடச் சொல்வது, கருவுற்றவளுக்கு வலிவு குன்றாதிருக்கத்தக்க உணவளித்து வருவது குழந்தை பிறந்ததும், சிறிது காலம் தாயுடன் இருந்திடச் செய்துவிட்டு, பிறகு குழந்தைகள் வளர்ப்பு இடத்திற்கு எடுத்துச் சென்று வளரச் செய்வது! இப்படி ஒரு பண்ணையே நடத்தினான் அந்தப் பாதகன்.
கணவன் - மனைவி என்ற உரிமைத் தொடர்போ, தாய் - மகன் என்ற பாசத் தொடர்போ ஏற்படவிடுவதில்லை; ஆண் - பெண் - குழந்தை என்ற ஒரு 'தொடர்' ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தப் பண்ணையில் தயாரிக்கப்பட்ட 'அடிமை' என்றால் கிராக்கி அதிகம்; பேசிக் கொள்கிறார்கள் அல்லவா புங்கனூர்ப் பசு, பழைய கோட்டைக் காளை, மூரா எருமை என்று 'ரகம்' பற்றி, அதுபோல இந்தப் பண்ணைக்கு ஒரு பெயர்!!
இந்தப் பண்ணையில் வந்து சேருகிறான் தம்பி! 'முரசு' என்ற நீக்ரோ வாலிபன்! அடிமைச் சந்தைக்கு 'ஆட்களை'ப் பெற்றுக் கொடுக்கும் வேலைக்காக.
அவன் பட்டபாடு அவன் மகன், பேரன் ஆகியோர் கண்ட அவதிகள் அந்த நூலிலே விளக்கப்பட்டிருக்கிறது. நான் முழுவதும் கூறப்போவதில்லை; நீக்ரோக்கள் விஷயமாக என்னென்ன வகையான ஈனத்தனமான கொடுமைகள் இழைக்கப்பட்டன என்பதனை எடுத்துக் காட்ட மட்டுமே 'டிரம்' பற்றிய ஏட்டினைக் குறிப்பிட்டுக் காட்டினேன். அத்தகைய நீக்ரோ ஒருவன், அமெரிக்கக் குடி அரசுத் தலைவராக அமர்ந்து அரசோச்சுவது என்றால், அதிர்ச்சி அளிக்கத்தக்க அதிசயமல்லவா!! 'மனிதன்' எனும் ஏடு அந்த அதிசயத்தை அல்ல, குடியரசுத் தலைவரான கருநிறத்தான் என்னென்ன அல்லலுக்கும் ஆபத்துகளுக்கும், இன்னலுக்கும் இழிவுகளுக்கும், சூது சூழ்ச்சிக்கும் ஆளானான் என்பதைப் படம் பிடித்துக் காட்டுகிறது.
பொறுத்தார் பூமியாள்வார்; கல்வி எவரையும் உயர்த்தும்; காலம் மெள்ள மெள்ள, ஆனால் உறுதியாக மாறித் தீரும் என்ற அறிவுரைகள் அளிக்கப்படுகின்றன. தாழ்ந்த இனம் அல்லது தாழ்த்தப்பட்ட இனம், தத்தளிக்கும் சமூகம் என்ற நிலை இருப்பினும், அதிலேயும் நல்முத்துக்கள் தோன்றிடின் மதிப்பளித்தே தீருவர் என்று பேசி மகிழ்வர், தீவிரமான மாறுதலைத் திட்டமிட்டு ஏற்படுத்தத் துணிவற்றவர்கள்; மனமற்றவர்கள்; வழி அறியாதவர்கள், தமது வாதத்தை வலிவுள்ளதாக்கிட உழைப்பால் உயர்ந்த உத்தமர்களின் கதைகளை ஆதாரமாகக் கூறுவர். அவ்விதமான 'மணிகள்' நீக்ரோ சமுதாயத்தில் தோன்றாமலில்லை; உயர் பதவிகளிலே அமர்ந்து நற்பெயர் ஈட்டாமலில்லை. ஆனால், அவர்கள் வகித்த பதவி தந்திடும் மயக்கத்தில் தம்மை மறந்து அத்தகைய 'கருப்பர்களை'ப் பாராட்டினார்களேயன்றி, கருப்பர் இனத்தை அல்ல! கருப்பரிலும் இத்தகையவர்கள் உள்ளனரே என்று வியந்து பேசினர். கருப்பரிலா இப்படிப்பட்டவன் தோன்ற முடிந்தது என்றும், இந்த நிபுணன் நீக்ரோ இனமா? உண்மையாகவா? விசித்திரமாக இருக்கிறதே என்றும் பேசுவதை வாடிக்கையாக்கிக் கொண்டனர்.
வெள்ளை நிற வெறியர் இதுபோலக் கருதினர் என்றால், நீக்ரோக்களில் புரட்சி எண்ணம் கொண்டவர்கள் தம் இனத்திலே ஒரு சிலர் இவ்விதமான "உயர் இடம் பெறுவது, இனத்தின் விடுதலைக்கோ மேம்பாட்டினுக்கோ பயன்படவில்லை; அதற்கு மாறாக, மேலும் அந்த இனத்தை அழுத்தி வைக்கவே பயன்படுகிறது; பலர் கோடாரிக்காம்புகளாக்கப் படுகின்றனர்; அவர்களை உலகுக்குக் காட்டி நீக்ரோ இனம் ஒரு குறையுமின்றி வாழுகிறது என்று உலகுக்குக் கூறி உண்மை நிலைமையை மறைத்து விடுகின்றனர்; கழுத்துப் புண்ணை மறைத்திட (மாட்டின் கழுத்தில்) கட்டப்படும் வெண்கலமணி போன்றவர் இவர்! என்று கருதினர்; கூறிவந்தனர்.
புக்கர் டி. வாஷிங்டன் கல்வித் துறையில் பணியாற்றிய வித்தகர்; நீக்ரோ; சோர்ந்த உள்ளம் கொண்டவர்களுக்குப் புக்கர் டி. வாஷிங்டன் வரலாற்றை எடுத்துரைத்து, தன்னம்பிக்கையுடன் பணியாற்றி வந்தால், தகுதிகளைத் தேடிப் பெற்றால், மேம்பாடு அடைய முடியும், சமூகத்தில் உயர்ந்த மதிப்புப் பெற்றிட முடியும் என்று எடுத்துக்காட்டாத அறிவாளர் இல்லை என்று கூறலாம். அவ்விதம் 'எடுத்துக் காட்டு'க்குப் பயன்பட்டவர் புக்கர் டி. வாஷிங்டன்; கருநிறத்தவர்.
பள்ளிக்கூடங்களில் பாடப்புத்தகமாக்கப்பட்டிருக்கிறது புக்கர் டி. வாஷிங்டன் வாழ்க்கை வரலாறு.
எபினேசர் பேசெட் ஜொனாதன் ரைட், ஜெபர்சன் லாங், பிளான்ச் ப்ரூஸ், ராப்ர்ட் வீவர், பிரடரிக் மாரோ, ரால்ப் ப்ன்ச், ஆண்ட்ரூ ஹாட்சர், கார்ல் ரோவன் இப்படிப் பட்டியல் இருக்கிறது, பல்வேறு துறைகளிலே வித்தகர்களாக விளங்கிய நீக்ரோக்களைப் பற்றி. எனினும் இந்த நிலைமை, உழைத்தால் உயரலாம், தகுதியைத் தேடிப் பெற்றுக் கொள்ளலாம் என்ற பாடங்களைப் போதிக்கப் பயன்பட்டனவேயன்றி, நீக்ரோ சமுதாயத்தைப் பிறவி காரணமாகவே, நிறம் காரணமாகவே வெறுத்தொதுக்கியும் இழித்தும் பழித்தும் இன்னல் விளைவித்தும் வந்த வெள்ளை வெறியரின் போக்கை மாற்றிடப் பயன்படவில்லை.
இந்தச் சூழ்நிலையில் வெள்ளை மாளிகைக்கு ஒரு கருநிறத் தலைவர்! என்கிறபோதுதான், வியப்புடன் கூடிய வெடவெடப்பு எடுக்கிறது நிறவெறியர்களுக்கு.
எந்த ஆண்டு இந்த அதிசய நிகழ்ச்சி நேரிட்டது என்று நூலாசிரியர் குறிப்பிடவில்லை; அமெரிக்காவில் இன்றுள்ள மனப்போக்கைக் கொண்டு இதற்கான ஒரு 'நாள்' முன்கூட்டிக் குறிப்பிடுவது இயலாது என்பதால் போலும்.
கென்னடி, அதற்குப் பிறகு லிண்டன் ஜான்சன் ஆகியோர் காட்டும் உறுதி கலந்த போக்கைக் கவனிக்கும் போது, எல்லாத் துறைகளிலும் நீக்ரோக்கள் சம உரிமை பெற்றுவிடுவது வெகு விரைவில் என்று எண்ணிடத் தோன்றுகிறது. ஆனால் வெறியர்கள் இன்றும் நடாத்தி வரும் கொடுமைகளைப் பார்க்கும்போது எத்தனைத் தலைமுறைகள் பிடிக்குமோ நீக்ரோக்கள் மனித உரிமை பெற்றிட என்று திகைத்திடத் தோன்றுகிறது.
என்றோ ஓர் நாள், வெள்ளை மாளிகையில், ஆட்சித் தலைவராக ஒரு கருநிறத்தவர் நுழைந்தால், நிலைமைகள் என்னென்ன வடிவமெடுக்கக் கூடும், எந்தெந்த புற்றிலிருந்து என்னென்ன அரவு கிளம்பி வந்து தீண்டக்கூடும் என்பது பற்றி, 'கற்பனையாக', ஆனால், எல்லையற்ற பெருவெளியிலே பறந்திடாமல், ஆசிரியர் கதையொன்றைத் தீட்டித் தந்திருக்கிறார்.
அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தமது பதவிக் காலத்தில் இறந்துபடுவாரானால், உடனடியாகத் துணைத் தலைவர் தலைவராக்கப்படுவார். இது அங்கு மரபு. அந்த மரபின்படிதான், கென்னடியைக் கொடியோன் சுட்டுக் கொன்றதும், அப்போது துணைத் தலைவராக இருந்து வந்த லிண்டன் ஜான்சன் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கென்னடி இருந்திருந்தால் எவ்வளவு நாட்கள் குடியரசுத் தலைவராக இருந்திருப்பாரோ, அந்த நாள் வரையில் துணைத் தலைவராக இருந்த ஜான்சன் தலைவராகப் பணியாற்றினார்.
பிறகு புதிய தேர்தல் வந்தது. அதிலே ஈடுபட்டு, ஜான்சன் தேர்ந்தெடுக்கப்பட்டு இப்போது குடியரசுத் தலைவராக இருந்து வருகிறார்.
குடியரசுத் தலைவர் இறந்துபடும்போது, இடைக்காலத் தலைவராக, துணைத் தலைவர் நியமிக்கப்படுகிற மரபின்படி, பலர் தலைவராகப் பணியாற்றியுள்ளனர்.
அவனி புகழ் நிலைபெற்ற ஆபிரகாம் லிங்கன் ஒரு கொடியவனால், நாடக அரங்கமொன்றில் சுட்டுக் கொல்லப்பட்டதனை, தம்பி! அறிந்திருப்பாய். அப்போதும், துணைத் தலைவர், தலைவராக்கப்பட்டார்.
ஆரிசன், டைலர், கார்பீல்டு, மக்ஸ்லீ, ஆர்டின்சு, ரூசிவெல்ட், இப்படிப் பலர், தலைவர் பதவியில் இருந்தபடியே உயிர் நீத்தனர். அப்போதெல்லாம், துணைத் தலைவர்களே தலைவர்களாயினர்.
இந்த 'மரபை'ச் சற்று விரிவுபடுத்தி, அதன் அடிப்படையிலேதான், தமது கற்பனையை அமைத்திருக்கிறார் இர்விங் வாலாஸ்.
தலைவர் இறந்துபட்டால், துணைத் தலைவர், துணைத் தலைவரும் இறந்துபட்டால்? பாராளுமன்றத் தலைவர்! அவரும் இறந்துபட்டால்? பாராளுமன்ற மேலவைத் தலைவர்! இப்படி ஒரு மரபு பற்றி ஆசிரியர் குறிப்பிட்டுக் கொண்டு, தமது 'கற்பனையை'க் கட்டியிருக்கிறார்.
மேலவைத் தலைவர், குடியரசுத் தலைவராகும் நிலை எப்போது ஏற்படுமென்றால், எதிர்பாராத வகையில் தமது பதவிக் காலத்தின்போதே, ஒரே சமயத்தில், குடியரசுத் தலைவர், துணைத் தலைவர், பாராளுமன்றத் தலைவர் ஆகிய மூவரும் இறந்துபட்டிருக்க வேண்டும்.
அவ்விதமான ஒரு சூழ்நிலையை நம்பத்தகாத முறையில் அல்ல, இருக்கக்கூடும் என்று எவரும் கூறிடத்தக்க விதத்தில், 'மனிதன்' என்ற ஏடு உருவாக்கிக் காட்டுகிறது.
திடீரென்று அமெரிக்கக் குடியரசின் துணைத் தலைவர் இறந்துபடுகிறார். குடியரசுத் தலைவர், நண்பர் இறந்ததால் ஏற்பட்ட துக்கத்தைத் துடைத்துக் கொள்ளவும் நேரமின்றி, ஐரோப்பாவில், பிரான்சு நாட்டில் ஓர் ஊரில் சோவியத் அதிபரைச் சந்தித்து ஆப்பிரிக்கப் பிரச்சினை பற்றிப் பேசவேண்டி ஏற்பட்டு விடுகிறது. அந்த மாநாட்டுக்குச் சென்றிருக்கிறார். அமெரிக்கத் தலைநகரில், மற்ற அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் இருக்கின்றனர். அவர்களுடன், மாநாட்டு இடைவேளையில், 'தொலைபேசி' மூலம் பேசுகிறார், குடியரசுத் தலைவர் - சோவியத் அதிபரின் போக்குபற்றி, தான் மேற்கொள்ள இருக்கும் ராஜதந்திரம் பற்றி, கேட்டு, வியப்படைவதும், தமது கருத்துக்களைக் கூறுவதும் மேலும் விளக்கம் கேட்பதுமாக - அமைச்சர்களும் உயர் அதிகாரிகளும் இருக்கையில், 'தொலைபேசி' நின்றுவிடுகிறது; ஏதோ இயந்திரக் கோளாறு. பதை பதைக்கிறார்கள், பாதியிலே பேச்சு நின்றுவிட்டதே என்று. நிமிடங்கள் ஆண்டுகள் போல நகருகின்றன. பிரான்சிலே, குடி அரசுத் தலைவர்; வாஷிங்டனிலே அவருடைய பேச்சைக் கேட்க ஆவலுடன் காத்திருக்கும் ஆட்சிக்குழுவின் பல்வேறு தரமுள்ள அதிகாரிகள்.
"அய்யோ" என்று அவர்கள் அலறும்படியான செய்தி வருகிறது தொலைபேசி மூலம். நம்ப முடியவில்லை; அதிர்ச்சி, குழப்பம், கலக்கம்.
தொலைபேசி தெரிவிக்கிறது, குடியரசுத் தலைவர் திடீரென்று இறந்துவிட்டார். மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, மாளிகையின் மேற்பகுதி இடிந்து விழுந்துவிட்டது. அந்த இடத்திலேயே குடியரசுத் தலைவர் மாண்டுபோனார்!
தம்பி! எப்படி இருக்கும் இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டால். கதை என்பதால் உருக்கம் அந்த அளவுக்கு வராது; எனினும், எப்படி இருந்திருக்கக் கூடும் என்பதனை நாம் உணர்ந்து கொள்ளும் விதமாக அல்லவா, தாஷ்கண்டில் லால்பகதூர் மறைந்த செய்தி தாக்கிவிட்டது.
வாஷிங்டனில், குடியரசுத் தலைவர் நடாத்தும் மாநாட்டின் தகவல் அறிந்துகொள்ளத் தொலைபேசி பக்கத்தில் திரள்கிறார்கள் அதிகாரிகள், அமைச்சர்கள், அவர்களுக்குக் கிடைப்பதோ, குடியரசுத் தலைவர் இறந்துபட்டார் என்பது.
துணைத் தலைவரோ ஏற்கனவே மறைந்து போனார்! தலைவரோ, பிரான்சிலே பிணமாகிக் கிடக்கிறார். எத்தனை சோகத்தைத் தாங்கிக் கொள்ள முடியும்! தத்தளித்தனர். அந்தத் தத்தளிப்புக்கு இடையிலேயே 'மரபு' குறிப்பிடுகிறபடி பாராளுமன்றத் தலைவர், குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்க வேண்டுமே. அவருடைய முதல் அலுவலே, அந்தோ! முன்னாள் குடியரசுத் தலைவரின் உடலை வரவேற்று, உரிய முறையில் அடக்கம் செய்து, அனுதாபம் தெரிவிப்பதாக அமைகிறது. என்ன செய்வது! அவர் போன்ற ஒரு தலைவரை மறுபடியும் எங்கிருந்து பெற முடியும்? பத்து நிமிடங்களுக்கு முன்பு எவ்வளவு உற்சாகமாகப் பேசினார், 'தொலைபேசி' மூலம். வேடிக்கை மூட்டுகிற முறையிலே கூடப் பேசினாரே! இப்போது!! என்று எண்ண எண்ண அவர்கள் மனம் சுக்குநூறாகிறது. ஆயினும் அரசு நடைபெற்றாக வேண்டுமே, எனவே, துக்கம் உள்ளத்தைப் பிய்த்துக் கொண்டிருக்கும் நிலையிலும், "சேதி அனுப்புக!" உடனடியாக! பாராளுமன்றத் தலைவரை, குடியரசுத் தலைவராக்கும் சட்ட ஒழுங்கு நடைபெற்றாக வேண்டுமே! கூப்பிடுக அவரை!" என்றார் ஓர் அமைச்சர். "அவர் இங்கு எங்கே இருக்கிறார்? அவருமல்லவா, மாநாட்டில் கலந்து கொள்ள, குடியரசுத் தலைவருடன் சென்றிருக்கிறார்" என்று விவரமளிக்கிறார் வேறொருவர். மீண்டும் பரபரப்பு, பதைப்பு! விபத்து நடந்தபோது 'அவர்' எங்கே இருந்தார்? அவருக்கு எதுவும் நேரிடவில்லையே! என்ற பதைப்புப் பேச்சு. தொலைபேசி வேலை செய்கிறது. அடிபட்டவர்களில் அவரும் ஒருவர். ஆனால், உயிர் போகவில்லை. மருத்துவமனையில் கிடத்தப் பட்டிருக்கிறார் என்ற செய்தி கிடைக்கிறது. இவ்வளவு கேடுகளுக்கிடையில் இந்த ஒரு நல்ல செய்தியாவது கிடைத்ததே! அவருக்கு ஒன்றும் இல்லை! மருத்துவமனையில் இருக்கிறார். காயம்; அவ்வளவுதான் என்று ஒருவருக்கொருவர் கூறிக்கொண்டு தைரியத்தைத் தருவித்துக் கொண்டிருக்கும்போதே அவர்கள் அனைவரையும் அடித்துக் கீழே தள்ளிவிடத்தக்க தாக்குதலை நடத்திற்று தொலைபேசி; "அவரும் இறந்து விட்டார். மருத்துவமனையில்" என்ற செய்தியைத் தெரிவித்து.
ஒரு அடி விழுந்ததும் மற்றொன்று; அதைத் தொடர்ந்து இன்னொன்று விழுவது போல, கொடுமையான செய்திகள் கிடைத்தன. அவர்கள் திகைத்தனர், தேம்பினர், தத்தளித்தனர். இப்படியா ஒரு சங்கிலித் தொடர்போல இழப்புகள்! எப்படித்தான் ஒரு நாடு 'இவ்வளவை'த் தாங்கிக் கொள்ளும்? தலைவர், துணைத்தலைவர், பாராளுமன்றத் தலைவர் மூவருமல்லவா மறைந்தனர்! இனி, இனி...? என்று கண்ணீர் பொழிந்த நிலையினர் குமுறினர்; "இனி, குடியரசுத் தலைவராக வேண்டியவர், பாராளுமன்ற மேலவைத் தலைவர்!" என்றார் ஒருவர்; அவர் யார் என்பது பற்றிய நினைப்புமற்ற நிலையில் சோகத்துடன் 'ஆம்' என்றனர் மற்றையோர். அந்த மேலவைத் தலைவர்தான் தம்பி டக்ளஸ் டில்மன் எனும் ஒரு நீக்ரோ!!
எப்படிப்பட்ட சூழ்நிலையைத் தீட்டி, ஒரு நீக்ரோவைக் குடியரசுத் தலைவர் ஆக்கிக் காட்டியுள்ளார் ஆசிரியர் பார்த்தனையா!!
தகுதியற்ற ஒருவர் தலைமைப் பதவியைச் சூழ்ச்சித் திறத்தால் பிடித்துக் கொண்டு விட்டால், பிறகு தகுதி மிக்கவர்களும், அச்சத்தால் தாக்கப்பட்டு, அடிபணிந்து கிடக்கின்றனர், காண்கின்றோம்.
டக்ளஸ் டில்மன், காட்டிலே திரிந்து கொண்டிருந்த ஒரு தற்குறி அல்ல, நாட்டு ஆட்சி மன்றத்தில் ஒன்றான செனட் சபையின் தலைவர். தகுதி காரணமாக அந்த நிலை பெற்றார். வழக்கறிஞர். போதுமான அளவு வசதி பெற்றவர்; புகழ் ஈட்டிக் கொண்டவர். பதவிப் பசி கொண்டவரல்ல. எதிர்பாராத அழைப்பு! எட்டி எட்டிப் பார்த்தாலும் தொட்டுப் பார்த்திட முடியாத ஒரு பதவியில் அவர் 'நிலைமை'யால் இழுத்துச் சென்று அமர்த்தப்பட வேண்டி ஏற்படுகிறது.
டக்ளஸ் டில்மன் - செனட் தலைவர்! அப்படியென்றால்? மரபு கூறுகிறது. அவர்தான் குடியரசுத் தலைவர் வேலை பார்க்க வேண்டும் என்று. குடியரசுத் தலைவராகவா? ஒரு நீக்ரோவா?
செனட் சபையின் தலைவர் டக்ளஸ் டில்மன்!
ஆமாம்! அவர் ஒரு நீக்ரோ! கருநிறத்தான்! கனவானாக இருக்கலாம், கற்றறிவாளனாக இருக்கலாம்! வழக்கறிஞராக இருக்கலாம்! ஆனால், அவர் ஒரு நீக்ரோ!!
மரபு இருக்கிறதே, தலைவர், துணைத் தலைவர், பாராளுமன்றத் தலைவர் ஆகியோர் இறந்துபடின், செனட் சபைத் தலைவரே குடியரசுத் தலைவராக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்று.
மரபு அது! ஆமாம்! ஆனால் டக்ளஸ் டில்மன், ஒரு நீக்ரோ! ஒரு நீக்ரோவா, அமெரிக்கக் குடியரசுத் தலைவராவது! எந்த அமெரிக்காவில் அடிமையாகக் கொண்டு வரப்பட்டு விற்கப்பட்டானோ அந்த நீக்ரோவின் வழி வழி வந்தவன், அந்த இனத்தவன், அவன் படித்தவனாக இருக்கட்டும், பண்புள்ளவனாக இருக்கட்டும், மரபு ஆயிரம் கூறட்டும், அந்த நீக்ரோ, அமெரிக்கக் குடியரசின் தலைவனாகப் பதவி ஏற்பதா! அதை அனுமதிக்கலாமா! வெள்ளை இனத்தவர் ஏற்றுக் கொள்வார்களா! யார் உங்கள் குடியரசுத் தலைவர் என்று உலகினர் கேட்கும்போது, எப்படி மனம் ஒப்பி ஒரு நீக்ரோ கனவான் எமது தலைவராக இருக்கிறார் என்று கூறமுடியும். மாநாடு நடத்தச் சென்ற குடியரசுத் தலைவரைச் சாகடித்ததே, மண்டபம் இடிந்து விழுந்து; அது அவரை மட்டும் அல்லவே, நமது இனத்தின் மானத்தையே அல்லவா நொறுக்கிவிட்டிருக்கிறது. வெள்ளை மாளிகையில் ஒரு கருப்பர்!! காது குடைகிறதே; கேட்கும்போதே; இரத்தம் கொதிக்கிறதே கோபத்தால்; கண்கள் இருளடைகின்றனவே அதிர்ச்சி தரும் மயக்கத்தால்! டக்ளஸ் டில்மன், அமெரிக்கக் குடியரசுக்குத் தலைவரா!! ஆமாம்! மரபு கட்டளையிடுகிறதே! எப்படி அந்த மரபை மீற முடியும்? ஆனால், எப்படி ஒரு கருப்பரைத் தலைவராகக் கொள்ள முடியும்? எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்?
சவுக்கடிப்பட்ட இனம்! கட்டி வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட இனத்தினன். நமது வேட்டை நாய்கள் இவன் இனத்தவனை முன்பு துரத்தித் துரத்திக் கடித்திட, கடிபட்டவன் கதறிக் கதறித் துடித்திட, வெள்ளைச் சீமாட்டிகள் காட்சியினைக் கண்டுகண்டு கைகொட்டிச் சிரித்தனர் முன்பு! அந்த இனத்தைச் சேர்ந்த ஒருவன் - நீக்ரோ - ஆட்சித் தலைவனா! நமக்கா!!
இப்போது நீக்ரோ அடிமை அல்ல! சந்தைச் சதுக்கத்திலே அவனைக் கட்டி வைத்து அடிக்க, சட்டம் இடம் கொடுப்பதில்லை. இப்போது அவன் அங்காடிப் பொருள் அல்ல; ஆபிரகாம் லிங்கன், அடிமை முறையை ஒழித்ததால்! ஆனால், இப்போதும் நீக்ரோ தானே! அடிமை அல்ல! ஆனால் கருநிறம்! மட்டம்! தாழ்வு! அந்த இனத்தவனல்லவா, டக்ளஸ் டில்மன்.
இப்போதும், வெள்ளை இனத்தின் உயர்விலும் தனித்தன்மையிலும் நம்பிக்கைக் கொண்டவர்கள், கருப்பர்களைப் பள்ளிகளில், விடுதிகளில், படக்காட்சிக் கொட்டகைகளில் சேர்க்க மாட்டார்களே! ஒதுக்கித்தானே வைத்திருக்கிறார்கள்? ஓரத்தில்தானே இன்றும் தள்ளப்பட்டுக் கிடக்கிறான்; உழைக்கிறான் என்பதால் வேலை தருகிறோம்; வேலை செய்வதால் நாம் நடமாடும் இடத்தில் அவனும் நடமாடுகிறான்! ஆனால் நாமும் அவனும் ஒன்றா! ஒப்புக்கொண்டு விட்டோ மா? இல்லையே! வேட்டையாடிப் பிடிப்பது, சங்கிலிகளால் பிணைப்பது, சந்தையிலே நிறுத்தி வைத்து விற்பது, சவுக்காலடிப்பது, இவை இல்லை! கூடாது என்கிறது சட்டம்; அதனால். ஆனால் வெள்ளை வெள்ளைதான், கருப்பு கருப்புதானே! வெள்ளை ஆளும் இனம்! கருப்பு, அடிமை இனம்தானே! உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்து ஆகிவிடுமா! நீக்ரோ, படிப்பால், பணத்தால், பட்டத்தால், வெள்ளையனாகி விடுவானா? அமெரிக்காவில் பிறந்தான், வளர்ந்தான் என்பதாலேயே அவன் அமெரிக்கனாகி விடுவானா! அமெரிக்கன் என்று மக்கள் தொகைக் கணக்குக்காகக் கூறினாலும் நீக்ரோ வெள்ளையன் ஆகிவிடுவானா! அமெரிக்கா, எவருடைய நாடு? வெள்ளையர் நாடு! வெள்ளையர் நாட்டுக்கு ஒரு கருப்பர் தலைவராவதா!!
தம்பி! நிறவெறி கொண்டவர்களிலே, சற்று ஆத்திரத்தை அடக்கிக் கொள்ளத் தெரிந்தவர்களே இவ்விதமெல்லாம் தான் பேசியிருந்திருக்க முடியும்! டக்ளஸ் டில்மன் எனும் நீக்ரோ, வெள்ளை மாளிகையில் அமர்ந்து குடியரசுத் தலைவராகப் போகிறார்; மரபு அவ்விதம் அமைந்திருக்கிறது என்று குறிப்பிட்டபோது.
டக்ளஸ் டில்மன்! குடியரசுத் தலைவர்; அமெரிக்காவுக்கு.
வெள்ளை மாளிகையின் கூடத்திலே குழுமியிருந்த அமைச்சர்கள், உயர்நிலை அதிகாரிகள், தமக்கு, 'அதிபராக'ப் போகும் டக்ளஸ் டில்மனைப் பார்க்கிறார்கள்; சிறிது தொலைவில் நிற்கிறார் டக்ளஸ்! அவர்களின் கண்களிலே பொறி பறக்கிறது. டில்மன்? திகைத்துப் போயிருப்பார்! வேறு எப்படி நிலை இருந்திருக்க முடியும்.
மரபின்படி, உயர்நீதிமன்றத் தலைவர் வருகிறார், பதவிப் பிரமாணம் செய்துவைக்க!
பைபிள்! ஆம்! வெள்ளையருக்கு ஒன்று, கருநிறத்தவருக்கு வேறு ஒன்றா இருக்கிறது! இல்லையே! இரு நிறத்தவருக்கும் ஒரே பைபிள்!
கட்டினவனே காத்திடுவான்
அமைத்தவனே பாதுகாப்பான்
அவன் துணையின்றிப் பாதுகாவலன்
எதையும் பாதுகாத்திட முடியாது
என்ற கருத்து கொண்ட மணிமொழியுள்ள பகுதியைத் தேர்ந்தெடுத்து, அதனையே தமது 'பிரார்த்தனை'யாகப் படிக்கிறார் டில்மன்!
பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படுகிறது.
அமெரிக்க நாட்டுக்கு அமைந்துள்ள அரசியல் சட்ட திட்டத்தையும் ஒழுங்கையும் காப்பாற்றியும் அதற்குக் கட்டுப்பட்டும் நான் ஆட்சி நடத்தி வருவேன் என்று உறுதிமொழி கூறுகிறார் டில்மன்.
"அமெரிக்கக் குடியரசுத் தலைவரே, வாழ்க! கர்த்தர் தங்களை - அமெரிக்கக் குடியரசுத் தலைவரை - அமெரிக்கக் குடியரசுத் தலைவராக அமரும் முதல் நீக்ரோவைக் காத்திடுவாராக!" - என்று உயர் நீதிபதி கூறுகிறார். சூழ நிற்கிறார்கள் வெள்ளை இனத்தவர்! அவர்கள் அனைவரும் எந்தக் குடியரசுத் தலைவரின் ஆணைக்குக் கட்டுப்பட்டு நடந்து தீரவேண்டுமோ, அந்தக் குடியரசுத் தலைவர் நிற்கிறார்; ஒருவரை ஒருவர் பார்க்கிறார்கள் - ஓராயிரம் வகையான எண்ணங்கள் குமுறி எழுகின்றன! வெள்ளை மாளிகையில் ஒரு 'கருப்பர்' அதிபராகிறார்!
வெள்ளை மாளிகையில் அமர்ந்து அரசோச்ச ஒரு 'கருப்பர்' அதிபரானது பற்றி படித்ததும் உனக்கோ எனக்கோ, ஒரு மகிழ்ச்சி துள்ளிடுமேயன்றி அச்சம் எழாதல்லவா? நிறம் எதுவாக இருந்தால் என்ன, தகுதியும் திறமையும் இருந்திட வேண்டும், அஃதன்றோ முக்கியம், இந்த நாட்களிலா நிறம் என்ன என்று பத்தாம்பசலிப் பேச்சுப் பேசுவார்கள்! என்று கூறுவோம். என்ன ஆகுமோ, ஏது ஆகுமோ என்ற எண்ணம் கிடையாது, மன உளைச்சல் ஏற்படாது, மருட்சி கொண்டிட மாட்டோம்.
கதைதானே!- என்று கூறிடுவர், பழமைப் பிடிப்பினர் கூட, உண்மையில் இதுபோல எங்கே நடைபெறப் போகிறது என்ற நம்பிக்கை கலந்த தைரியத்துடன்.
டில்மன் எனும் நீக்ரோ, அமெரிக்கக் குடியரசுத் தலைவரானார் என்ற செய்தி அறிவிக்கப்பட்டதும், அமெரிக்க மக்களிடம் என்னென்ன விதமான உணர்ச்சிகள் கொந்தளித்துக் கிளம்பியிருந்திருக்கும் என்பது பற்றி யூகித்தறிந்து கொள்ள முடிகிறதல்லவா!
முட்டாள்! முரடன்! ஏய்! கருப்புப்பயலே! கண் மண் தெரியவில்லையா! எச்சில்பட்ட கோப்பையை எடுத்துக் கொண்டு போய்க் கழுவிவரக்கூட மறந்து விட்டாயா, மடையா!
அவன் ஏன் இனி எச்சில் கோப்பையைக் கழுவப் போகிறான் அன்பே! அவனை இனி கருப்பா என்று கூடக் கூப்பிடக்கூடாது! டில்மன் யார் தெரியுமா! குடியரசுத் தலைவர் யார் தெரியுமா, கருப்புதான்! கருப்பன் ஆள்கிறான், வெள்ளையர் நாட்டை!! என்று பேசுவாள்... காலம் மாறிவிட்டது, கண்ணாளா! கருப்பு வெளுப்பாகி விட்டது!
இந்தப் பயல்களுக்கு மண்டைக்கனம் ஏறிவிட்டுத்தான் இருக்கும், புரிகிறது... ஆனால் கருப்பு வெளுப்பு ஆகிவிடாது, ஆகிவிட மாட்டார்கள்.
வெள்ளை மாளிகைக்குள்ளேயே நுழைந்தாகிவிட்டதே, இன்னும் என்ன விபரீதம் நேரிட வேண்டும், இது போதாதா...!
என்னமோ சட்டமாம்! மரபாம்! இப்படி ஒரு இழிவைச் சுமத்திவிட்டார்கள். கருப்பு நிறத்தான் குடியரசுத் தலைவராகக் கூடாது என்றல்லவா சட்டம் இருக்க வேண்டும். ஏமாளித்தனமான ஒரு சட்டத்தை வைத்துக் கொண்டு இப்படிப்பட்ட ஒரு இழிவைச் சுமத்தி விட்டார்கள்.
கேட்பார் எவரும் இல்லையா, அமெரிக்காவிலே அறிவாளர்களே இல்லையா...
தம்பி, நிறவெறி பிடித்தவர்கள் இல்லங்களிலே இது போன்ற அளவு அல்ல, இதைவிட மோசமான முறையிலும் அளவிலும் பேச்சு எழாமலிருந்திருக்க முடியுமா? மாளிகைக்காரர்கள், வெள்ளையர்; அங்கு தோட்டக்காரன், வண்டி ஓட்டி, சமையற்காரன், பணியாள் நீக்ரோக்கள்! அடிமைகள் என்ற நிலை இல்லை, ஆனால் கூலிக்காரர்களாக, குற்றேவல் புரிபவர்களாக உள்ளனர். கூப்பிட்ட குரலுக்கு ஓடிவர வேண்டும், இடப்பட்ட வேலையைச் செய்திட வேண்டும், ஏன் என்ற கேள்வியை எழுப்பக்கூடாது. இது அவர்கள் நிலைமை! அவர்களிலே ஒருவர் அமெரிக்க அதிபர்! விந்தை என்பர் மற்றையோர், விபரீதம் என்று தானே கூவுவர் கொதிப்படைந்த வெள்ளையர்.
'டிரம்' என்பானுடையதை பற்றிக் குறிப்பிட்டிருந்தேனே தம்பி! அந்த அடிமையை ஒரு உற்பத்திப் பண்ணைக்காரனல்லவா விலை கொடுத்து வாங்கி 'தரமான' நீக்ரோக்களை உற்பத்தி செய்து வந்தான் என்று சொன்னேன், அந்த வெள்ளை முதலாளிக்கு ஒரு வெள்ளை மாது 'தொடர்பு' - அந்த வெள்ளை மாது 'டிரம்' என்ற நீக்ரோவுக்குத் தன் உடலை ஒப்படைத்தாள், அவன் கேட்டதால் அல்ல, அவள் விரும்பியதால்! கருவுற்றாள். இது தெரிந்த வெள்ளை முதலாளி 'டிரம்' என்பானை அடித்துக் கொன்று போட்டான்; அவளை விரட்டி விட்டான். அவள் வேறு ஊர் சென்று ஒரு காமக் களியாட்டக் கூடம் நடத்தி வந்தாள். அங்கு வேலைக்காரனானான், அவள் பெற்றெடுத்த 'டிரம்சன்'.
தாயிடம் மகன் பணியாள்! தாய் அறிவாள் அந்தப் பணியாள் தன் மகன் என்பதை. அவன் அறியான், எஜமானி தன் தாய் என்பதை.
மகன் என்ற பாசம், அன்பு, துளியாவது அந்த வெள்ளை மாதுக்கு இருந்ததோ? இருந்தால், அவனைக் கடுமையாக மட்டுமல்ல, கேவலமான முறையிலும் வேலை செய்யச் சொல்லிக் கட்டளையிட்டிருப்பாளா! மாடாக உழைத்து வந்தான்! நாய்போல நடத்தப்பட்டான்; பெற்றவளால். ஏன்? அவள் ஒரு வெள்ளைமாது; இவனோ கருநிறத்தான்; நீக்ரோ! தன் களியாட்டக் கூடத்தில் வேலை பார்த்து வந்த ஒரு நீக்ரோ கிழவியின் மகனே, 'டிரம்சன்' என்று சொல்லி வைத்தாள்.
கடைசிக் கட்டத்தில், மரணப்படுக்கையில் இருந்தபோது, உண்மையைக் கூறினாளாம்; 'அம்மா!' என்று ஒரு தடவை கூப்பிடும் 'உரிமை'யை வழங்கினாளாம்.
இந்த நிலையில் தள்ளப்பட்டிருந்த நீக்ரோ இனத்தவரில் ஒருவன் அமெரிக்க அதிபதி ஆகிவிட்டதால், நிற வெறியர் அதிர்ச்சி அடைந்திடாமலிருக்க முடியுமா!
டில்மன், பத்திரிகைகளைப் புரட்டிப் பார்க்கிறான். கண்டனம்! குமுறல்! மிரட்டல்! எரிச்சல்! ஏளனம்; எச்சரிக்கை! இவைகளே மிகுதியாகக் காணப்பட்டன! படித்த டில்மன் மனம் என்னபாடு பட்டிருக்கும்! கர்த்தரே! என்னைக் கருப்பனாகவும் படைத்து, அதிபதியும் ஆக்கி, இத்தனைக் கண்டனமும் என் தலையில் விழவைக்க வேண்டுமா! என்று மனம் உருகித் துதித்திடாமல் இருந்திருக்க முடியுமா?
இனத்தின் மீது வீசப்பட்ட இழிவு பெருமளவு தன் மீது விழாதபடி, ஒரு தகுதியை உழைத்துப் பெற்றுக் கொண்டு, நிம்மதியாக வாழ்ந்து வந்தான்; எதிர்பாராத முறையில், அதிபதி ஆக்கப்பட்டதால், வெள்ளை இனத்தவரின் வெறுப்பை அல்லவா பெற்றிட வேண்டியதாயிற்று. முள்முடி!
முற்போக்குக் கருத்தினைப் பரப்பிடும் ஓரிரு ஏடுகள், நிறபேதம் பார்க்கக் கூடாது, தகுதி திறமை பற்றி மட்டுமே பார்க்க வேண்டும், டில்மன் நீக்ரோவாக இருந்தால் என்ன, அமெரிக்கன், வழக்கறிஞர் துறையில் பெயர் பெற்றவன், நல்ல இயல்பினன், ஆகவே அவனுடைய ஆட்சி சிறப்பாகவே அமையும்; அனைவரும் ஆதரவு அளித்திட வேண்டும் என்று எழுதியிருந்த அந்தப் பாலைவன மலர் எழிலாக இருந்தது கருதி டில்மன் மகிழ்ச்சியுற்றான்; ஆனால் மறுகணமே அத்தகைய இதழ்கள், அமெரிக்க மக்களிடம் மிகுந்த செல்வாக்குப் பெற்றவை அல்ல என்ற உண்மை உள்ளத்தைத் தாக்கிற்று. செல்வாக்குப் படைத்த பத்திரிகைகளோ? நெருப்பையும் நாராசத்தையும் வார்த்தைகளாக்கி எழுதின! உண்மை அமெரிக்கா இதில்தான் தெரிந்தது - இதை எதிர்த்து நின்று வெற்றி பெற வேண்டும்; எதிர்ப்பதாக அறிவிக்காமலே இந்த நிலை டில்மன் பெற்றான்.
டில்மன் குடியரசுத் தலைவரானது சட்டப்படி மரபின்படி என்பதால், ஒப்புக்கொள்ள வேண்டிய நிலையில் இருந்தவர்கள் கூட, எந்தச் சிறிய தவறு செய்தாலும் போதும், தன் மீது பாய்ந்து தாக்கித் தீர்த்துக் கட்டிவிடுவார்கள் என்பது புரிந்தது. நடுக்கம் பிறந்தது.
தவறுகள் செய்திடும் தலைவர்களைக் கூடத் தாங்கிக் கொள்வார்கள், ஆனால் ஒரு நீக்ரோ! தலைவன் ஆகி, அவன் தவறுகளையும் செய்தால், எப்படி தாங்கிக் கொள்வார்கள்! எரிமலை வெடிக்கும்.
எரிமலை குமுறிற்று! வெள்ளை இனத்தின் உரிமை மறுக்கப் பட முடியாத ஒன்று என்பதிலே அழுத்தமான நம்பிக்கையும் நிறவெறியும் கொண்ட இதழாசிரியன் ஒருவன், கச்சையை வரிந்து கட்டிக் கொண்டு நின்றான், இந்தக் கருநிறத்தானை வெள்ளை மாளிகையிலிருந்து விரட்டி அடித்தே தீருவேன் என்று!
சட்டம், மரபு, முறை என்று எதை எதையோ கருதிக் கொண்டுதானே இந்தக் கருநிறத்தானை கொலு மண்டபத்தில் அமரச் செய்தீர்கள்; அந்தச் சட்டமே தவறு! அதிலே ஓட்டை இருக்கிறது! அந்த நியமனமே செல்லாது; சட்ட நிபுணர் கூறுகிறார்; டில்மன் குடியரசுத் தலைவராக அமர்த்தப்பட்டிருக்கிறார்; ஆகிவிடவில்லை; மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. குடியரசுத் தலைவரை மக்கள் தேர்ந்தெடுக்கும் வரையில் டில்மன் வேலை பார்க்கலாம்; அவ்வளவுதான்; ஆகவே உடனடியாகக் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு ஏற்பாடு செய்திட வேண்டும்; அது முடிந்ததும், இவனை வெளியேற்ற வேண்டும்; என்று அவன் வாதிடலானான். அரசு அமர்த்தியிருந்த சட்ட நிபுணன் அதற்கு ஆதரவான சட்ட நுணுக்கங்களை விவரிக்கலானான். அந்த விவாதத்தை கேட்டுக் கொண்டிருந்த பேரதிகாரிகள், டில்மனுக்கு அடுத்தபடியில் இருந்தவர்கள், அந்த இதழாசிரியன் கூறிய ஏற்பாட்டுக்கு இணங்க மறுத்தனர்; நிறவெறி கூடாது. நியாயம் அல்ல என்பதால் அல்ல. வெள்ளை மாளிகையில் ஒரு கருப்பர் ஆட்சி செய்தால் என்ன என்பதால் அல்ல; வழக்காடப் போதுமான ஆதாரம் இல்லை என்பதால்!!
ஏமாற்றமும் எரிச்சலும் அடைந்த அந்த இதழாசிரியன் தன் பேனாமுனையினாலேயே டில்மனைக் குத்திக் கொடுமை செய்து, அவனே மிரண்டோடும்படிச் செய்திடத் திட்டமிட்டான். தொடர்ந்து தொல்லைகளை உருவாக்கியபடி இருந்தான். ஆனால் டில்மன் கலங்கவில்லை. வெள்ளையர் என்னைவிட எந்த வகையில் மேலானவர், கருநிறம் எந்த வகையில் தாழ்வானது என்றெல்லாம் வாதாடவுமில்லை, வம்புகள் பேசவுமில்லை. ஒரேவித உறுதியைத்தான் தெரிவித்தான், நான் சட்டப்படி குடியரசுத் தலைவராக அமர்ந்திருக்கிறேன்; என் கடமையைச் செய்து வருவேன்; நான் எந்த இனம், என்ன நிறம் என்பது பற்றிய விவாதம் பொருளற்றது; நான் அமெரிக்கக் குடியரசுத் தலைவன்! இது டில்மன் கொண்ட உறுதி; கூறிய உறுதி என்றுகூடச் சொல்வதற்கில்லை.
தம்பி! நாட்டிலே ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களைத் தாழ்த்தப்பட்டவர்கள் என்று ஆக்கிவைத்துவிட்டால், பிறகு ஓர் நாள் அவர்களிலே ஒருவன், எக்காரணம் பற்றியோ, 'உயர் பதவி'யில் அமர்ந்துவிட்டால், தம்மை உயர்வகுப்பு என்று எண்ணிக் கொள்பவர்கள், அவனுக்குக் கீழே வேலை செய்பவர்களாக இருப்பினும், அவன் நமக்குக் கட்டுப்பட்டு, அடங்கி ஒடுங்கி, விருப்பம் அறிந்து நடந்து கொள்ளத்தான் வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். டில்மன், குடியரசுத் தலைவராக இருக்கட்டும்; சுவையைப் பெறட்டும். வெள்ளை மாளிகையில் உலவட்டும்! ஆனால், எமது விருப்பம் அறிந்து நடந்து கொண்டு வர வேண்டும்; சுய சிந்தனை, தனி நடவடிக்கை, புதிய போக்கு துளி தலை தூக்கினாலும், தூக்கி வெளியே எறிந்து விடுவோம் என்றுதான் அமைச்சர் நிலையினர் கருதிக் கொண்டனர். டில்மன் உயர் மண்டபத்தில் அமரட்டும், அதன் தகத் தகாயத்தைக் கண்டு களிக்கட்டும், ஆனால் தன் இச்சையைக் கட்டுப்படுத்திக் கொண்டு, நம் குறிப்பறிந்து நடந்து கொள்ள வேண்டும்... மீறினால்...
டில்மன் அலங்கரிக்கப்பட்ட ஒரு அடிமையாக இருந்து வர வேண்டும் என்று விரும்பினார்கள்; குறிப்பும் காட்டினார்கள்.
வெள்ளை மாளிகையிலே நுழைந்த கருநிறத்தான், தன் உண்மையான 'எஜமானர்கள்' யார் என்பதை அறிந்து அதற்கு ஏற்றபடி நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்தனர்.
அவர்களின் எண்ணத்தின்படி நடந்துகொண்டால், குடியரசுத் தலைவர் என்ற நிலையையே கேலிக்கூத்து ஆக்குவதாகிவிடும்.
அவர்களின் எண்ணத்துக்கு மாறாக நடந்தால், பதவி பறிபோய்விடும்!
பதவி பறிக்கப்பட்டு விடுவது கூட அல்ல பயமளிக்கத்தக்கது; ஒரு கருநிறத்தவனால், அத்தனை உயரிய பதவியைச் சரியான முறையிலே நடத்திச் செல்ல முடியவில்லை! என்ற பழி சுமத்தப்படும்; இனத்துக்கே இழிவு ஏற்படும்.
ஆக தலையாட்டியாகவும் இருக்கக்கூடாது, தன்னிச்சையாகவும் நடந்து கொள்ளக்கூடாது. அப்படியானால் எந்த முறையில் நடந்து கொள்ள வேண்டும்?
டில்மனுக்கு மிகவும் வேண்டியவர் கீர்த்தி வாய்ந்த ஒரு வழக்கறிஞர்; வெள்ளையர் இனம்; ஆனால் நிறவெறி அற்றவர். அவருடன் டில்மன் பேசுகிற ஒரு சந்தர்ப்பம் வருகிறது. அப்போது இந்தப் பிரச்சினை எழுகிறது. டில்மன் அந்தப் பேச்சின்போது வெளியிட்ட ஒரு கருத்து, தம்பி! படிக்கும்போது, கண்கலங்க வைக்கிறது. நண்பருக்கு உற்சாகமூட்ட, உறுதி பெற்றிட வைக்க, அந்த வெள்ளை இன வழக்கறிஞர் கூறுகிறார், "டில்மன்! ஏன் கலக்கம்? உன் நிறம் கருப்பாக இருந்தால் என்ன! நீ ஒரு மனிதன்!" என்று கூறுகிறார், மனித மேம்பாடு என்பது இனம், மதம், நிறம் ஆகியவைகளுக்கு அப்பாற்பட்டது என்ற அருங்கருத்தினை விளக்கிடும் முறையில். அப்போது டில்மன் வருத்தம் தோய்ந்த முறையில் "நண்பரே! என் நிறம் கருப்பு எனினும் நான் மனிதன்! அந்த உணர்வைப் பெற வேண்டும் என்கிறீரே... எப்படி முடியும்... கருப்பர் மனிதரல்லவே..." என்று கூறுகிறார். வெள்ளை மாளிகையில் அதிபர்! அதிலே ஐயமில்லை!! ஆனால் கருப்பர், மனிதரா? இல்லையா!! - டில்மன் கூறுவது அமெரிக்காவில் அனுமதிக்கப்பட்டுக்கிடந்த மனப்போக்கை அப்படியே எடுத்துக் காட்டுவதாக இருக்கிறது. மனதை உருகச் செய்திடும் நிலை; ஆனால் உண்மை! அமெரிக்க நிறவெறியர், கருப்பரை மனிதர் என்று ஒப்புக் கொள்வதில்லை; அவர்கள் அடிமைகள் அல்ல என்று சட்டம் வந்த பிறகும்! அந்த சட்டம் வருவதற்கு முன்பு, நீதிமன்றங்கள் தீர்ப்பே அளித்திருக்கின்றன, நீக்ரோக்கள் மனிதர் அல்ல; வெறும் உடமைகள் என்பதாக.
1781-ம் ஆண்டு, ஒரு வழக்கு நடைபெற்றது. மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து ஜமய்க்காவுக்கு 400 நீக்ரோக்கள் அடிமைகளாக விற்பதற்காகக் கப்பலில் கொண்டு செல்லப்பட்டார்கள். வழியிலே பலருக்கு நோய் கண்டு விட்டது. கப்பல் தலைவன் நோயால் பாதிக்கப்பட்ட நீக்ரோக்களில் 132 பேர்களை (உயிரோடு) கடலிலே எறிந்துவிட்டு, மற்றவர்களைக் கொண்டு போய்ச் சேர்த்ததுடன் கடலிலே எறியப்பட்ட 132 நீக்ரோக்களின் மார்க்கட் மதிப்புக்கு ஏற்ற பணத்தை இன்ஷியூரன்ஸ் கம்பெனிதான் கட்டித் தீர வேண்டும் என்று வழக்குத் தொடுத்தான். அதற்கு அவன் கூறிய வாதம் தம்பி! இப்போது நமது மக்களுக்குக் காட்டுமிராண்டிப் பேச்சாகப்படும்; கொண்டு செல்லும் சரக்கிலே கெட்டுப்போன பகுதிகளை அப்புறப்படுத்தி விடுவதன் மூலமே மற்ற சரக்கைக் கெடாதபடி பாதுகாத்திட முடியும் என்ற நிலையில் சரக்கிலே ஒரு பகுதியை அப்புறப்படுத்த நேரிட்டால் அதற்கான மதிப்புள்ள பணத்தை இன்ஷியூரன்ஸ் கம்பெனி தர வேண்டும் என்ற 'விதி'யைக் காட்டினான் வாதமாக! உயிரோடு தூக்கி எறிகிறான் நூற்றுக்கு மேற்பட்ட நீக்ரோக்களை, பதறப்பதற; ஈவு இரக்கமின்றி; வழக்குமன்றத்திலே அவன் படுகொலை செய்தான் என்று அல்ல, சரக்கை இழந்ததற்கு அவனுக்கு நஷ்ட ஈடு தர வேண்டுமென்று வழக்கு! கேட்டனையா, தம்பி! இந்த விபரீதத்தை. கேளேன் முழுவதையும், அட கொலைகாரா! நூறு பேர்களைப் படுகொலை செய்த பாதகனா நீ! உன்னைச் சித்திரவதை அல்லவா செய்ய வேண்டும், உன்னைப் போன்ற மனிதர்கள், கடவுளின் குழந்தைகள், அவர்களைக் கடலிலே தூக்கி எறிந்த காதகனே! உன்னை வெட்டித் துண்டுகளாக்கிக் கழுகுக்கு விருந்தளிக்க வேண்டும் என்றெல்லாம் நீதிபதி சீறிக் கூறினாரா? அதுதான் இல்லை!! கேட்கக் கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆயினும் என்ன செய்வது? ஆடுமாடுகள், குதிரைகள் கொண்டு செல்லப்படும் போது நோய் வந்துவிட்டால், நோயுற்றவைகளை அப்புறப்படுத்தி மற்றவற்றைக் காத்திடுவது போன்ற முறைப்படிதான் கப்பல் தலைவன் நடந்து கொண்டான். ஆகவே அவனுக்குக் கம்பெனி நஷ்ட ஈடு தரத்தான் வேண்டும் என்று தீர்ப்பளித்தார். நீக்ரோ மனிதன் அல்ல! சரக்கு!! பொருள்!! உடைமை! நீதிமன்றத் தீர்ப்பு!
டில்மன், கருப்பர், மனிதர் அல்லவே என்று கூறியபோது, இந்த வழக்கு அவருடைய மனக்கண் முன் நிழலுருவமாகத் தெரிந்திருக்கும் போலும்!
அரசியல் தத்துவத்துக்கே வித்து அளித்த அரிஸ்டாடில், அடிமை எனும் சொல்லுக்குப் பொருள் அளிக்கும்போது உயிருள்ள கருவி, அடிமை என்றார்.
டில்மன் ஒரு கருவி! யாருடைய கருவி? யாருக்குப் பயன்பட வேண்டிய கருவி? என்பதே பிரச்சினை என்று ஆகிவிட்டது. டில்மனைச் சூழ இருந்து வந்த அரசு அவையினர், வெள்ளையரின் விருப்பத்தை அறிந்து, அதற்குத் தக்கபடி பயன்பட்டுத் தீர வேண்டிய கருவி என்று உறுதியாக எண்ணிக் கொண்டார்கள். ஆனால் தங்கள் இனத்தவர் ஒருவர் அமெரிக்கக் குடியரசுத் தலைவரானார் என்ற உடன், மகிழ்ச்சியால் துள்ளினது மட்டுமல்ல, நீக்ரோ மக்கள் மனதிலே புதியதோர் நம்பிக்கை மலர்ந்தது. இனி நமது இன்னல் தீரும், இழிவு துடைக்கப்படும்; நிலை உயரும், வாழ்வு தழைக்கும்; வெள்ளை மாளிகையிலே நமது இனத்தவர்; இனி நம்மைக் கப்பிக் கொண்டுள்ள இருளை ஓட்டி வாழ்விலே புத்தொளி கண்டிட வழி பிறந்திடும் என்று திடமாக நம்பினர். அவர்களின் கண்களிலே எத்தனை ஒளி பூத்திருக்கும்! முகத்திலே எத்தகைய ஒளி மலர்ந்திருக்கும்! பேச்சிலே என்னவிதமான இன்பம் கலந்திருக்கும் என்பது பற்றி எண்ணிடும் போது இனிதாக விளங்குகிறதல்லவா, தம்பி!
நாசரின் கரத்தை நமது அப்துல்காதர், சென்னை மேயர் என்ற முறையில், குலுக்கி வரவேற்ற செய்தியை இதழில் படித்தபோது, எனக்குத் தம்பி நானே நாசரின் கரங்களைப் பிடித்துக் குலுக்கியது போன்ற ஒரு மகிழ்ச்சி உணர்ச்சி பிறந்தது.
நாம் நகராட்சி மன்றத்தில் அரசோச்ச வாய்ப்புப் பெற்றது, நடைபெறவே முடியாத, அதிர்ச்சி தரத்தக்க, தலைகீழ் மாற்றமான நிகழ்ச்சியல்ல, மிகச் சாதாரணமான ஒரு அரசியல் நிகழ்ச்சி. அதற்கே நமக்கு அகமகிழ்ச்சி எத்துணை ஏற்பட்டது! டில்மன் அமெரிக்கக் குடியரசுத் தலைவரானது என்பது சாதாரணம் அல்ல; அடிமைப்படுத்தப்பட்ட இனம், இழிவாக நடத்தப்பட்டு வரும் இனம், நீக்ரோ இனம்; அதிலே ஒருவர் எஜமானர்கள் என்ற நிலையில் உள்ள வெள்ளையர்களும் அடங்கி நடந்தாக வேண்டிய 'அதிபர்' நிலை பெறுவது என்றால், மகிழ்ச்சி, கொந்தளிப்பாக அல்லவா இருக்கும்!
டில்மன் குடியரசுத் தலைவராகிவிட்டதால், ஒரே வரியில், தங்கள் இழிவுகளைப் போக்கிவிட முடியும் என்று நம்பினர், கருநிறத்தவர்.
டில்மன் இதனை அறியாமலிருந்திருக்க முடியாது.
கதிர் குலுங்குவது காணும் உழவன் மனம் மகிழ்ச்சியால் துள்ளுவதுபோலத் தன் இனத்தவர் இருப்பார்கள் என்பதை உணர்ந்தார்; புன்னகை பூத்ததா? இல்லை! பெருமூச்சு!
அப்பா! அப்பா எனதருமை அப்பா! என் வாழ்த்துக்கள்! பாராட்டுதல்கள்! இங்கு ஒரே கொண்டாட்டம்! கோலாகலம்! எல்லோரும் என்னை வாழ்த்துகிறார்கள்! வந்து வந்து பார்க்கிறார்கள், புகழ்ந்து புகழ்ந்து பேசுகிறார்கள், நமது இனத்தவர் ஒரே ஆனந்தத் தாண்டவ மாடுகிறார்கள்! பல்கலைக் கழகமே விழாக்கோலம் பூண்டிருக்கிறது!
தொலைபேசி தந்திடும் இந்தத் தேன் துளிகள் செவியிலே பாய்கின்றன. டில்மன் கேட்கிறார்? இன்பமாகத்தான் இருக்கிறது; இனிப்பான பேச்சுதான்.
சரி! சரி! சந்தோஷம்!
அப்படியா ஓஹோ!
நல்லது! ஆமாம்! சரி, சரி.
இப்படிப் பதில் பேசுகிறார் டில்மன்.
மகிழ்ச்சிக் கொந்தளிப்புடன் பேசுபவன், டில்மன் மகன், கல்லூரி மாணவன்!!
இருக்குமல்லவா மகிழ்ச்சி, தந்தை, நாட்டை ஆளுந் தலைவராக அமர்ந்திருக்கிறார் என்பதால். எல்லோருக்கும் கிடைக்கக் கூடிய 'வாய்ப்பா' இது, வெள்ளை மாளிகையில் அதிபராக அமருவது! அதிலும் ஒரு நீக்ரோவுக்கு அந்த வாய்ப்பு!
மகன் பேச்சிலே களிப்பு, பெருமிதம் ததும்பிடுவது தெரிகிறது. என் மகன் மகிழ்கிறான்! பெருமிதம் கொண்டுள்ளான்! நேற்று வரையில் அவன் எத்தனையோ ஆயிரம் மாணவர்களிலே ஒருவன்; அதிலும் ஒரு நீக்ரோவின் மகன். கருப்பன்! இன்று? அவன் அமெரிக்கக் குடியரசுத் தலைவரின் மகன்! பெருமிதம் கொள்ளத்தானே செய்வான், தம்பி! அந்த மாணவன் பெற்ற மகிழ்ச்சியை மாய்த்திட விருப்பம் எழவில்லை.
அடிமை வேலைக்காகவே ஆண்டவனால் படைப்பிக்கப்பட்ட இனம் நீக்ரோக்கள் என்று நிறவெறியர்கள் எண்ணிக் கொண்டனர் என்ற போதிலும், உழைத்து உழைத்து அவர்கள் எல்லாத் துறைகளிலும் வெள்ளையருடன் சரிசமமாக நிற்க முடியும் என்பதை மெய்ப்பித்துக் கொண்டு வந்தனர்.
"மகனே! நீ ஒரு நீக்ரோ! பொருள் என்ன தெரியுமா? ஒவ்வொரு கட்டத்திலும் உனக்குத் திறமை இருக்கிறது என்பதை நிரூபித்துக் காட்டியபடி இருக்க வேண்டும். வெள்ளை இனத்தவருக்கு அந்த நிபந்தனை இல்லை! அவர்கள் தகுதியுடன் பிறந்திடும் இனத்தவர்! நாம் தகுதியைப் பெற வேண்டும், உழைப்பால், திறமையால், கல்வியால்".
ஒரு நீக்ரோ தன் மகனுக்கு இதுபோல அறிவுரை கூறினார் என்று ஒரு ஏடு தெரிவிக்கிறது. அந்த நிலையில் இருந்து வந்த இனத்திலே பிறந்த டக்ளஸ் டில்மன், எந்த அமெரிக்கனும் மதிக்கத்தக்க பதவியைப் பெற்றான் என்றால், அவனுடைய மகன் மட்டற்ற மகிழ்ச்சி அடையத்தானே செய்வான்.
ஜூலியன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான் - நீக்ரோக்களுக்காக மட்டும் என்று அமைந்த கல்லூரியில்!
டில்மன், கீர்த்திமிக்க வழக்கறிஞர், செல்வாக்கு பெற்ற செனட்டர், செனட் சபைக்கே தலைவர், என்றாலும் நீக்ரோவாயிற்றே! ஆகவே டில்மனுடைய மகன் நீக்ரோக்களுக்காக அமைந்திருந்த கல்லூரியில்தான் இடம்பெற முடிந்தது.
ஜூலியன்! ஜூலியன் நமது இனத்துக்கே பெருமை! காலமெல்லாம் நமது இனத்தின் மீது சுமத்தப்பட்டு வந்த இழிவும் பழியும் ஒரே நொடியில் துடைக்கப்பட்டு விட்டது!
நமது இனத்தின் தன்மானம் தரணியோரால் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது!
இனி எந்த வெள்ளைப் பயலாவது, கருப்பர் தாழ்ந்த இனம், மிருக இனம் என்று வாய்திறந்து கூறத் துணிவானா!
ஜூலியன்! உன்னோடு சேர்ந்து கல்லூரியில் ஒன்றாகப் படிக்கும் வாய்ப்புப் பெற்ற நாங்கள் பெரும்பேறு பெற்றவர்கள்! ஜூலியன்! அப்பா நமது இனத்தின் விடுதலைக்காக முழுமூச்சுடன் பாடுபடுவார் அல்லவா!
ஜூலியன்! நமது இனத்தவரை இன்னமும் இழிவாக நடத்தும் போக்கைக் கண்டவராயிற்றே உன் அப்பா! அவருடைய இரத்தம் கொதிக்குமல்லவா அதை நினைக்கும் போது.
ஒரே வரி! அவருடைய பேனாவிலிருந்து! நமது இனம், சபிக்கப்பட்ட இனம் அல்ல, ஆளும் இனம்! என்று புது நியதி பிறந்து விடாதா!
பட்ட கஷ்டத்தையெல்லாம் மறந்தே விடுவர் நமது இனமக்கள். நாம் பரவாயில்லை; அடிமை வாணிபம் ஆபிரகாம் லிங்கனால் அகற்றப்பட்ட பிறகு பிறந்த தலைமுறை. முன்பு? காட்டு மிருகங்களை வேட்டையாடுவது போல அல்லவா நமது இனத்தவரை நடத்தி வந்தனர் இந்தக் கொடியவர்கள்.
சவுக்காலடிப்பது, சதை பிய்ந்து போகும் வரையில்! குற்றுயிராக வெட்டவெளியில் போட்டு வைப்பது, மரத்திலே தொங்கவிடுவது சாகடித்து, கேட்கும்போதே, நெஞ்சம் வெடித்திடும்! எத்தனை எத்தனைக் கொடுமைகளைத் தாங்கிக் கொண்டனர் நமது இனத்தவர்!
இன்று எல்லாவற்றுக்கும் ஈடு செய்வது போல, செய்த கொடுமைகளுக்கெல்லாம் பரிகாரம் தேடுவது போல, மன்னிப்புக் கேட்டுக் கொள்வதுபோல, உன் அப்பாவின் காலடியில், குடியரசுத் தலைவர் பதவியைக் காணிக்கையாக வைத்திருக்கிறார்கள்!
வரலாற்றில் இடம் பெறுபவரின் மகன் நீ, ஜூலியன்! உன்னுடைய நண்பர்கள் என்பதைவிட எங்களுக்கு வேறு என்ன சிறப்பு வேண்டும்?
காரிருள் விலகிவிட்டது! கதிரவன் உதித்து விட்டான்!!
உணர்ச்சி கொந்தளிக்கும் பருவத்தினரல்லவா கல்லூரி மாணவர்கள்? வரலாற்று நிகழ்ச்சிகளையும், மக்கள் மனதிலே தோன்றிய எழுச்சிகளையும், உரிமைப்போர் நிகழ்ச்சிகளையும், விடுதலை வீரர்களின் கதைகளையும், சமத்துவம், சகோதரத்துவம் போன்ற இலட்சியங்களின் வரலாறுகளையும் படித்துப் படித்து, ஆர்வம் ததும்பும் உள்ளத்தினரல்லவா? ஆகவே, தம்பி! ஒரு நீக்ரோ, இனவெறி பிடித்தலையும் அமெரிக்காவில், குடியரசுத் தலைவரான சேதி கேட்டதும், துள்ளிக் குதித்துத்தான் இருப்பர்! ஜூலியனிடம் மகிழ்ச்சியுடன் எழுச்சியுடன் ஏதேதோ பேசித்தான் இருப்பர். நண்பர்களின் பேச்சு தேனாக இனித்திருக்கும் அந்த மாணவனுக்கு. அந்த மகிழ்ச்சிப் பெருக்குடன் தான் ஜூலியன் தன் தந்தையிடம் பேசினான் தொலைபேசி மூலம்.
என் தந்தை வெள்ளை மாளிகையில்!
என் தந்தை அமெரிக்கக் குடியரசுத் தலைவர்!
இந்த எண்ணம், அந்த இளைஞன் உள்ளத்தில், ஓராயிரம் நம்பிக்கைகளை ஏற்படுத்தித்தானே இருக்கும்?
நீக்ரோக்களில், கூலிகளாக, வேலைக்காரர்களாக, பாட்டாளிகளாக, அலுவலகங்களிலே பணியாற்றுபவர்களாக இருந்தவர்களால், படிப்படியாக முன்னேறினால் போதும், மனித உரிமைகளை மெள்ள மெள்ளப் பெற்றால் போதும் என்ற விதமாக மட்டுமே நினைத்திட முடிந்தது. மாணவர்களின் மனதில், இந்தப் போக்கா இடம் பெற்றிருக்கும்! மாணவர்கள் ஒரு சமூகத்தின் ஈட்டி முனைகள்! எழுச்சிப் பிழம்புகள்! நம்மாலே ஆகுமா என்ற இழுப்புப் பேச்சும், என்ன செய்வது என்ற ஏக்கப் பேச்சும், உள்ளத்திலே இருந்திட மறுத்திடும் பருவம்! எந்த இன்னலை ஏற்றுக் கொண்டாகிலும் இழிவுகளைத் துடைத்தாக வேண்டும் என்ற உறுதி குடிகொண்ட உள்ளம் அவர்களுக்கு. ஆகவே கல்லூரிகள், விடுதலைக்கு இளைஞர்களைத் தயாரிக்கும் பாசறைகளாகத்தானே இருக்க முடியும்! எத்தனையோ கொடுங்கோலர்கள் வீழ்த்தப்பட்ட வரலாறுகளைப் படித்தது வீண் போகுமா! எத்தனையோ வல்லமையுடன் அமைக்கப்பட்ட பேரரசுகள், மக்களின் ஒரு பிரிவினரைத் தாழ்வாகவும் மிருகத்தனமாகவும் நடத்திய காரணத்தால், சமூகத்தில் வெடிப்புகள் தோன்றி, புரட்சிகள் புயலெனக் கிளம்பி, அதன் வேகத்தாலே அழிக்கப்பட்டுப் போயின என்ற வரலாற்று உண்மைகள் இதயத்தில் பதிந்துள்ளனவே; அத்தகையவர்கள் அடிமைத்தளைகள் தன்னாலே விலகிடா, உடைத்தெறியப்பட வேண்டும் என்ற உண்மையினைப் பெறாமலா இருந்திருப்பர்.
பெரியவர்கள், பொறாமை என்றும் பொறுப்புணர்ச்சி என்றும், சட்டம் என்றும் ஒழுங்கு என்றும், மெள்ள மெள்ள என்றும் படிப்படியாக என்றும் பேசுவது கேட்டுக் கேட்டுக் காது புளித்துப் போய்விட்டது. விடுதலைக்கான முயற்சியில், விளைவு பற்றிக் கவலைப் படாமல், ஆபத்து குறித்துப் பொருட்படுத்தாமல், உடனடியாக ஈடுபட்டாக வேண்டும்! நீண்ட நெடுங்காலமாக பொறுத்தாகிவிட்டது! இனியும் பொறுத்துக் கொள்வது முடியாது, கூடாது! மனிதத் தன்மை மாய்க்கப்படுகிறது! உரிமைகள் உண்டு என்ற உணர்ச்சியே நசுக்கப்பட்டு வருகிறது. எனவே, இப்போதே வீறிட்டுக் கிளம்ப வேண்டும், விடுதலைப்போர் தொடங்க வேண்டும். பலாத்காரமான முறையானாலும் சரி, புரட்சியே நடத்தித் தீர வேண்டும் என்றாலும் சரி, அச்சம் கொண்டிடலாகாது! அடிமையாக அஞ்சி அஞ்சி அடிபணிந்துக் கிடப்பதைக் காட்டிலும் விடுதலைக்காகப் போராடி குண்டடிபட்டு, மார்பிலிருந்து குபுகுபுவெனப் பீறிட்டுக் கொண்டு வரும் இரத்தத்தைப் பார்த்தபடி களத்தில் வீழ்ந்துபடுவதே, வீரம்! - என்ற விதமான எண்ணம் அமெரிக்க நீக்ரோக்களில் இளமைத் துடிப்பு உள்ளவர்களிடம் தோன்றிவிட்டது என்பதை எடுத்துக் காட்டுவதுபோல, பல புரட்சிகரமான நடவடிக்கைகள் அமெரிக்காவில் அவ்வப்போது நடைபெற்று வந்தன. அவைகளை அமெரிக்க வெள்ளை அரசு அழித்துவிட்டன என்றாலும், ஒவ்வொரு நடவடிக்கையும் நீக்ரோக்களை இன்னமும் தாழ்வாக நடத்திக் கொடுமைப்படுத்திக் கொண்டு வருவது நடைபெறக் கூடியதல்ல என்ற எச்சரிக்கையாகவே அமைந்தது.
தம்பி! நான் முன்பு குறிப்பிட்டிருந்தேனே 'டிரம்' என்ற கதை, அது கொடுமைக்கு இரையான நீக்ரோ பற்றியது. ஆனால் வெள்ளை நிற வெறியரை எதிர்த்து நின்று, கொல்லப்பட்ட நீக்ரோக்களின் வீரக்காதைகள் நிரம்ப உள்ளன. அந்த வீரக் காவியங்கள் அனைத்திலும், இறுதியில், புரட்சி மூட்டிய நீக்ரோ சுட்டுப் பொசுக்கப்பட்டானென்றோ, வெட்டி வீழ்த்தப்பட்டானென்றோதான் இருக்கும். விடுதலை பெற்றார்கள் என்ற முடிவு இருப்பதில்லை! ஆனால் உயிர் அல்ல முக்கியம், உரிமையே உயிரினும் மேலானது என்ற தத்துவத்தை அவர்கள் ஒவ்வொருவரும் தமது இரத்தத்தால் எழுதிவிட்டுப் போயிருக்கிறார்கள்.
கொடுமைகள் குவிக்கப்படும்போது, அதனால், தத்தளிப்பவர்களிடமிருந்து கிளம்பும் சோகம், பெரும் புயலை எழுப்பிவிடும் என்பதனைக் கொடுமைப்படுத்துவோர் உணருவதில்லை. வீழ்த்திவிட்டோம், வீழ்ந்து விட்டது! என்று எண்ணிக்கொண்டு விடுகிறார்கள்! ஆனால் வீழ்த்தப்படுபவர்கள், எண்ணற்றவர்களை எழுப்பிவிட்டுத்தான் போகிறார்கள்! தனி மனிதர்களாக இருப்பவர்கள், தமது உயிரைத் தியாகம் செய்வதன் மூலம் ஒரு அணிவகுப்பைப் பெற்றளித்து விடுகிறார்கள். இன்னமுமா இறுமாப்பு! இன்னமுமா எதிர்ப்பு! இவ்வளவு பேர் தூக்கிலே தொங்கிய பிறகுமா, புரட்சி செய்யும் நினைப்பு! என்று வியப்புடன் கேட்பர், கொடுங்கோலர்; ஆனால் கொடுமையை எதிர்த்துச் சிந்தப்படும் ஒவ்வொரு துளி இரத்தமும் கொடுமையை எதிர்த்திடும் உறுதியை ஓராயிரம் புதியவர்களுக்கு ஊட்டி விடுகிறது.
ஒட்டி உலர்ந்துபோன உருவம்! உழைத்திட இலாயக்கில்லை என்று எஜமானனால் எக்கேடோ கெட்டுப்போ என்று ஓட்டிவிடப்பட்டு விட்டவன் அவன், தன் போன்ற ஓர் அடிமையிடமிருந்து ஒரு குவளை சாராயம் பெற்றுக் கொண்டு போகிறான்! குதிரைகளுக்குத் தரும் மட்டரகமான சாராயத்தை, வெள்ளை முதலாளி பார்த்து விடுகிறான். கருப்பு அடிமை பதுங்குகிறான். பளார் பளார்! என்று சவுக்கடி விழுகிறது! துடிக்கிறான்! தடுமாறிக் கீழே விழுகிறான்! சவுக்கடி ஓயவில்லை! சவுக்காலடிப்பவன், குதிரை மீது! சவுக்கடிபடுபவன், தரையில்!!
பார்க்கிறார்கள் பலர்; பதறுகிறார்கள், ஆனால் வாய் திறந்து ஒரு வார்த்தை, ஐயோ! பாவம்! விட்டுவிடுங்கள்! என்று கூறவில்லை. ஏன்? அடிப்பவன் எஜமானன்! வெள்ளை இனம்! துடிப்பவன், அடிமை; நீக்ரோ! பார்ப்பவர்களும் அடிமைகள்; நீக்ரோக்கள், ஐயோ! பாவம்! என்று சொன்னாலோ, போதும் நிறுத்துங்கள் என்று கூறினாலோ, அதே சவுக்கடி விழும் இவர்களுக்கு; இன்னும் வேகமாக. அடி தாளமாட்டாமல் ஓடினாலோ, வேட்டை நாய்களை அவிழ்த்துவிடுவார் எஜமானர்!! எனவே அவர்கள் பார்க்கிறார்கள், தங்கள் இனத்தவன் ஒருவன் தள்ளாடும் வயதினன், சவுக்கடி படுவதை! எஜமானன் அடிப்பதுடன் விடவில்லை குப்புறக் கீழே விழுந்தவன் மீது குதிரையை ஏற்றுகிறான்! குற்றுயிராகிறான் அடிமை! கோபம் தீருகிறது எஜமானனுக்கு, மாளிகை செல்கிறான்! இரண்டு நாட்களில் அந்தக் கருப்பு அடிமை இறந்து போகிறான். மற்ற அடிமைகள் அவனை அடக்கம் செய்கிறார்கள். பிரார்த்தனை செய்யப்படுகிறது!! சட்டம்? அடிமையை என்ன செய்யவும் உரிமை பெற்றவன் எஜமானன்! பயல் செத்துவிட்டான்!! என்று கூறுகிறது. அந்த அடிமை செய்த பல குற்றங்களிலே, சவுக்கடியைத் தாங்கிக்கொள்ள முடியாமல் செத்ததும் ஒன்று என்பதுபோல! இதைக் கண்ட ஒரு கட்டுடல் கொண்ட நீக்ரோ இளைஞன், ஆயிரம் நீக்ரோக்களை இரகசியமாகத் திரட்டிக் கொண்டு, அந்த ஊரையே அழித்து, வெள்ளையர்களைக் கொன்று குவித்து, விடுதலை பெறத் திட்டமிடுகிறான். இந்தப் புரட்சி 1800-ம் ஆண்டு, அமெரிக்காவில் நடைபெற்றதை, 'கருப்பு இடி' என்ற ஏடு எடுத்துக் காட்டுகிறது.
ஆயுதம் இல்லை, புரட்சி நடத்திட! பயிற்சி கிடையாது, போர்முறையில்! அடக்கிடப் பலமான பட்டாளம் வெள்ளை அரசிடம் இருப்பதும் தெரியும். பிடிபட்டு விட்டால் தீர்த்துக் கட்டிவிடுவார்கள் என்பதும் புரிகிறது. ஆனாலும் எத்தனைக் காலத்திற்குத்தான் பொறுத்துக் கொண்டிருப்பது! கண் எதிரே சவுக்காலடித்துச் சித்திரவதை செய்கிறான் பார்த்துக் கொண்டுதானே இருக்க முடிகிறது! செத்தானே அந்தக் கிழவன், புரட்சியா செய்தான்? இல்லையே! அடங்கி ஒடுங்கிக் கிடந்தான்! சவுக்கடி விழ விழத் துடித்தான்; எதிர்த்தானா? இல்லையே? ஏன் என்று கேட்டானா இல்லையே! வாய் திறக்கவே இல்லை! கண்ணீர் வடித்தான்! முடிவு? புதைத்துவிட்டார்கள்! புரட்சி செய்து பிடிபட்டால் சாக வேண்டும்! சரி! புரட்சி செய்யாதிருந்தால் மட்டும் வாழ்கிறோமா! இது ஒரு வாழ்வா! எந்த நேரத்திலும் சவுக்கடி விழலாம். எந்தச் சமயத்திலும் குதிரையை விட்டு மிதிப்பார்கள். குற்றுயிராக்குவார்கள். பிறகு கர்த்தரிடம் சேர்ப்பிப்பார்கள்!! ஜெபம் நடத்துவார்கள்! இது ஒரு வாழ்வா! இதைவிட எதிர்ப்போம், வெற்றி பெற்றால் விடுதலை! இல்லையானால் வீரமரணம்!
இவ்விதம் கூறுகிறான் 'கருப்பு இடி' என்ற காவியத் தலைவன் கேபிரியல்; சரி என்று இசைகின்றனர் ஆயிரம் அடிமைகள். ஊரை வளைத்துப் பிடித்துக் கொள்ள திட்டம் வகுக்கிறான். திட்டம் வெற்றி பெறவில்லை. பெருமழை, அவன் திட்டத்தை நாசமாக்கி விடுகிறது. பிடிபடுகின்றனர் பலர். கேபிரியலும் வேறு சில சில தளபதிகளும் தப்பி ஓடுகின்றனர், காட்டுப்புறம். படை வருகிறது! வெள்ளையரின் இதழ்கள் 'கருப்பு அபாயம்' பற்றிப் பொறி பறக்க எழுதுகின்றன. கேபிரியல் பிடிபடுகிறான். பிடிபடுகிறான் என்று கூடச் சொல்வதற்கில்லை! தானே தன்னை ஒப்படைக்கிறான்! சரண் அடையவில்லை. அந்தச் சம்பவமும் கேபிரியலின் வீரத்தை விளக்குவதாகவே அமைகிறது. கேபிரியல் தப்பிச் செல்வதற்காக ஒரு படகு தயாராகிறது. ஆனால் கடைசி நேரத்தில், அவனுக்குத் துணை செய்ய முன் வந்தவன் பிடிபடுகிறான். போலீஸ் அவனை வளைத்துப் பிடித்துக் கொண்டு எங்கே கேபிரியல்? என்று கேட்கிறார்கள்; அவன் தனக்கு ஏதும் தெரியாது என்று மறுக்கிறான்; கொடுமைப் படுத்துகிறார்கள் போலீஸ் படையினர்; தனக்காகத் தன் நண்பன் இம்சைக்கு ஆளாவது கண்டு தாங்காத கேபிரியல், போலீசிடம் நிற்கிறான், 'இதோ நான் தான் கேபிரியல், விடுங்கள் அவனை! என்னைக் கைது செய்து கொள்ளுங்கள்" என்று கூறுகிறான்.
தம்பி! 'கருப்பு இடி' என்ற அந்த நூலிலே கூறப்பட்டிருப்பது அவ்வளவும் கற்பனை அல்ல, வரலாற்று நிகழ்ச்சி. வடிவம், கதையாக்கப்பட்டிருக்கிறது; அதற்கேற்ற சம்பவக் கோவைகள், உரையாடல்கள் தரப்பட்டுள்ளன; ஆனால் ஒரு நீக்ரோ புரட்சி ஏற்பட்டதும், கேபிரியல் போன்ற நீக்ரோ தலைவர்கள் பிடிபட்டுக் கொல்லப்பட்டதும் உண்மைச் சம்பவங்கள்.
கடைசிக் கட்டம் உண்மையிலேயே கல் மனதையும் கரைத்து விடும்.
கேபிரியல் தூக்கிலே தொங்குகிறான். கலங்காமல் தாள் பணிய மறுத்து.
அந்தப் புரட்சியில் அவனுடன் துணிந்து ஈடுபட்டு ஆபத்துக்களை துச்சமென்று கருதிப் பணியாற்றிய அவனுடைய காதலி - நீக்ரோ பெண்மணி - வெள்ளை வெறியரிடம் சிக்கி அடிமையாக விற்கப்படுகிறாள்.
இதைக் காணுகிறான், கதையின் துவக்கத்தில் சவுக்கடி கொடுக்கப்பட்டு ஒரு நீக்ரோ இறந்தானே, அதைப் பார்த்த, மற்றோர் நீக்ரோ!
அந்த நீக்ரோவும் கேபிரியலின் புரட்சியிலே ஈடுபட்டவன் தான்; இடையிலே அச்சம் அவனைப் பிடித்தாட்டிற்று; அவன் தான் புரட்சித் தலைவர்களைக் காட்டிக் கொடுத்து விட்டான்.
'கருப்பு இடி'யில் கூறப்பட்டுள்ளது போன்ற புரட்சிகள் பலப்பல அவ்வப்போது வெடித்துக் கிளம்பியபடி இருந்தன.
தம்பி! இதுபற்றி இங்குக் குறிப்பிடுவதற்குக் காரணம் நீக்ரோக்கள் தங்கள் விடுதலைக்காக நடத்திடும் கிளர்ச்சியை அமெரிக்க வெள்ளை அரசு ஒழித்துக் கட்டுவதற்குக் கையாண்ட ஒரு முறை, அந்தக் கிளர்ச்சியை, 'அன்னியர்கள்' அமெரிக்காவுக்கு எதிராகத் தூண்டிவிட்டிருக்கிறார்கள் என்ற பழி சுமத்தி, அமெரிக்க மக்களின் ஆத்திர உணர்ச்சியைத் தட்டி எழுப்புவது என்பதைக் குறிப்பிடத்தான்.
இந்தி மொழி ஆதிக்கம் தங்கள் எதிர்காலத்தை நாசமாக்கும் என்று உணர்ந்து கொதித்து எழுந்த மாணவர்களை, நாம் தூண்டி விட்டு கலகம் விளைவித்தோம் என்று முதலமைச்சர் பக்தவத்சலம் கூறினாரல்லவா! இதே முறையைக் கையாண்டனர் முன்பு அமெரிக்காவில்.
'கருப்பு இடி' என்ற நூலிலே, புரட்சித் தலைவன் கேபிரியல் தான் தான் புரட்சி நடத்தியவன் என்று சொன்ன பிறகும் விசாரணை நடத்திய நீதிபதிகள் விடவில்லை.
உனக்கு எப்படி இவ்வளவு திட்டமிடத் தெரிந்தது! நீயோ அடிமை! உனக்கு எங்கிருந்து இத்தனைத் துணிவு பிறந்தது. உண்மையைச் சொல். புரட்சியைத் தூண்டி விட்டவர் யார்? சொல்லிவிடு! உன் மீது குற்றம் இல்லை. நீ பாவம், யாரோ ஆட்டுவித்தபடி ஆடிவிட்டாய். சூத்ரதாரிகளைக் கூறிவிடு. தப்பித்துக் கொள்ளலாம்.
என்றெல்லாம் கேட்கிறார்கள்.
ஒருவரும் தூண்டிவிடவுமில்லை, துணைக்கு வரவுமில்லை; திட்டமிடவுமில்லை. நானே தான் திட்டமிட்டேன். அன்று மட்டும் பெருமழை வாராதிருந்திருப்பின் என் திட்டம் வெற்றியும் பெற்றிருக்கும்.
என்று கேபிரியல் சொல்லுகிறான், நம்பிக்கை ஏற்படவில்லை! நீதிபதிகளுக்கு; ஏனென்றால் (1800) அன்றைக்கு அமெரிக்காவில், கிளர்ச்சிகளை, புரட்சிகளை மூட்டி விடுபவர்கள் பிரெஞ்சுக்காரர்கள் என்ற எண்ணம் பலமாக இருந்து வந்தது. பிரெஞ்சுப் புரட்சியின் போது மலர்ந்த கருத்துக்கள் சமத்துவம் என்பது! நீக்ரோக்கள் சமத்துவம் அல்லவா கேட்கிறார்கள்! அவர்களுக்கு எப்படித் தெரியும் சமத்துவம் என்பது; பிரெஞ்சுக் நாட்டு புரட்சிக்காரர்கள் தூண்டிவிட்டதால் தெரிந்தது! ஆகவே நீக்ரோ கேபிரியல் நடந்திய புரட்சி பிரெஞ்சுக்காரர் மூட்டிவிட்டது! இது அமெரிக்கா நிறவெறியர் வாதம்.
காக்கை கருப்பு நிறம்
கந்தசாமி நிறம் கருப்பு,
ஆகவே
கந்தசாமி காக்கை!
இப்படி ஒரு வாதம்! அந்த நாள் அமெரிக்காவில்தானே என்று கேட்கின்றாயா தம்பி. ஏன், இந்த நாள் பக்தவத்சலனார் வேறுவிதமாக வாதம் செய்கிறார்.
இந்தி ஒழிக என்கிறது தி.மு.க.
மாணவர்கள் இந்தி ஒழிக என்கிறார்கள்
ஆகவே
மாணவர்கள், தி.மு.க.
இப்படித்தானே வாதாடுகிறார்! ஆகவே பக்தவத்சலனாரின் வாதம் புதிது அல்ல! நெடுங்காலமாக இருந்து வருகிற வாதம்! ஆதிக்கம் அழிந்துபடுமோ என்ற அச்சம் பீடிக்கும் நிலையிலுள்ளவர்கள் வழக்கமாகக் கூறிடும் வாதம்!
தூக்குக் கயிற்றைக் கழுத்திலே மாட்டுவதற்கு ஒரு விநாடிக்கு முன்பு கூடக் கேட்கிறார்கள் கேபிரியலை, 'ஏதாவது சொல்லிக் கொள்ள விரும்புகிறாயா?' என்று.
'நானே, ஏதும் இல்லை, கயிறு பேசும்!' என்கிறான் கேபிரியல்!
டக்ளஸ் டில்மன் குடியரசுத் தலைவரான நாட்களில் நீக்ரோக்களுக்குச் சமத்துவம் கிடைத்திடச் செய்வதற்குப் புரட்சியே சரியான வழி என்ற கருத்துடன் 'டர்னரைட்' என்ற ஒரு இயக்கம் இருந்து வருகிறது.
இந்த இயக்கம், கம்யூனிஸ்டுகளால் நடத்தப்பட்டு வருகிறது; அமெரிக்காவை அழிக்கவே, நீக்ரோக்களின் விடுதலை என்று பெயர் கூறிக்கொண்டு இந்த பயங்கர இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது என்று அமெரிக்க அரசு கூறிவந்தது. ஒரு நீக்ரோவே குடியரசுத் தலைவர் ஆகிவிட்டதால், இந்த பயங்கர இயக்கம் மேலும் துணிவு பெற்று ஆட்டம் ஆடுமோ என்ற அச்சம் கொண்ட வெள்ளைநிற ஆதிக்கக்காரர்கள் இந்த பயங்கர இயக்கம் கம்யூனிஸ்டுகளின் கைப்பாவை, ஆகவே அதனைத் தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.
டர்னரைட் இயக்கம் கம்யூனிஸ்டு இயக்கம் அல்ல; நிறவெறியை நிலைநாட்ட விரும்பும் வெள்ளையர் சுமத்தும் பழி அது; ஆகவே டில்மன் அந்த இயக்கத்துக்குத் தடை ஏதும் போடக் கூடாது என்று நீக்ரோ மக்கள் வலியுறுத்துகிறார்கள்.
டில்மன் யார் பக்கம் சேர்வார்? தன் இன மக்கள் பக்கமா? வெள்ளையர் பக்கமா? என்ற கேள்வி எழும் போது டில்மன் உறுதியாகத் தெரிவிக்கிறார். அந்த இயக்கம் உண்மையிலேயே பயங்கர நடவடிக்கையில் ஈடுபடுகிறது, கம்யூனிஸ்டுகளால் நடத்தப்படுகிறது என்று மெய்ப்பிக்கப் பட்டாலொழிய அதனைத் தடை செய்யப் போவதில்லை; நமது சட்டம் இடந்தராது. நான் அந்த இயக்கம், கருப்பருக்காகவா, வெள்ளையருக்காகவா என்று பார்க்கப் போவதில்லை; அது அமெரிக்காவின் நன்மைக்கா, அமெரிக்காவைக் கெடுக்கவா, எதற்குப் பயன்படுகிறது என்பது பற்றித்தான் பார்க்கப் போகிறேன் என்று கூறுகிறார். அவரைச் சூழ இருந்த வெள்ளைப் பேரதிகாரிகளுக்கு அடக்கமுடியாத கோபம். ஒரு நீக்ரோவைக் கொண்டு நீக்ரோ விடுதலை இயக்கத்தைத் தடை செய்துவிடலாம், அதற்கு டில்மன் குடியரசுத் தலைவராகி இருப்பது பொன்னான சந்தர்ப்பம் என்று அந்த ராஜ தந்திரிகள் கருதித் திட்டமிட்டனர். டில்மன் ராஜதந்திரம் படிக்கவில்லை; ஆனால் இதயம் இருந்தது. அதிலே நீதிக்கும் நேர்மைக்கும் இடம் இருந்தது. பொறுப்புணர்ச்சி போதுமான அளவு இருந்தது. எந்தச் செயலும் அமெரிக்க நாட்டுக்கென அமைந்துள்ள சட்ட திட்டத்திற்கு உட்பட்டதாக, அதன் ஒழுங்கைக் குலைத்திடாததாக இருக்கும்படித்தான் அமைய வேண்டும், மேலும் விருப்பு வெறுப்புகளுக்கு இடமளிக்கக் கூடாது என்று உறுதி கொண்டிருந்தார்.
மகன் ஜூலியன் வந்து பார்த்து மகிழ்ச்சி பொங்கப் பொங்கப் பேசும்போது கூட, டில்மன் இந்த நோக்கத்தை உறுதியாகத் தெரிவிக்கத் தவறவில்லை.
அற்புதம் நடந்துவிட்டது, அப்பா! அற்புதம்! வெள்ளை மாளிகையில் தாங்கள் வீற்றிருக்கும் வாய்ப்புக் கிடைத்ததை நாங்கள் ஒரு அற்புதம் என்றே கருதுகிறோம். அப்பா! நமது இனத்தவரும், அவர்களுக்காகப் பணியாற்ற ஏற்பட்ட அமைப்புகளும் ஒரு நூற்றாண்டுக் காலத்தில் சாதிக்க முடியாததை, தாங்கள் ஒரு நொடியில் சாதிக்கும் வாய்ப்பு அப்பா! இது! நமது இனத்தவர் எவ்வளவோ பேர் மடிந்தனர், உரிமை கேட்டு; அல்லற்பட்டனர்; அவதிப்பட்டனர். இப்போது வெள்ளையர்களுக்கு ஆணை பிறப்பிக்க முடியும் தாங்கள்...
ஆர்வமும் நம்பிக்கையும், கொந்தளிக்கும் விதமான ஜூலியன் பேச்சு, தன் தகப்பனார் பதவிக்கு வந்திருப்பது நீக்ரோ இனத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள பழியினை ஒரே வரியால் துடைத்திடத்தான் என்ற நம்பிக்கை. டில்மன் அமைதியாகத்தான் பேசுகிறார்.
நான் யாரையும் எதையும் செய்யச் சொல்லி வற்புறுத்துவதாக இல்லை. நான் அமெரிக்கக் குடியரசுத் தலைவன், நீக்ரோ மக்களின் குடியரசுத் தலைவன் அல்ல!
தம்பி! டில்மன் தான் அவ்விதம் சொன்னாரே தவிர, அவர் அந்த உயர் பதவி வகிப்பது கண்டு சகித்திட முடியாத நிறவெறியர்கள், டில்மன் கருப்பரின் தலைவர். அமெரிக்கக் குடியரசுத் தலைவர் அல்ல, அதற்கு ஏற்ற தகுதியும் திறமையும் இல்லை; ஒழுக்கம் இல்லை; உயர் பண்பு இல்லை; கேட்பதற்கே கூசும் பல குறைபாடு கொண்டவர், குடியன், கூத்திக்கள்ளன்! - என்றெல்லாம் பழி சுமத்தினர்; வெட்ட வெளியில் மட்டுமல்ல, அரச அவையிலேயே கண்டனத் தீர்மானம் கொண்டு வந்தனர்!
அதிலே அவர்கள் குறிப்பிட்ட பல குற்றச்சாட்டுகளிலே முக்கியமானவை இரண்டு; ஒன்று கம்யூனிஸ்டுகளால் தூண்டி விடப்பட்ட டர்னரைட் என்ற பயங்கர இயக்கத்தில், டில்மனுடைய மகன் ஜூலியன் ஒரு உறுப்பினன் என்பது; மற்றொன்று உயர் நிலையிலுள்ள ஒரு மாதை டில்மன் கற்பழிக்க முயன்றார் என்பது.
திடுக்கிடத் தக்க குற்றச்சாட்டுகள் அல்லவா? எப்படி இந்தத் தாக்குதலைத் தாங்கிக் கொள்ள முடியும்? தாங்கிக் கொண்டார்!
உலகிலேயே கடைந்தெடுத்த பொய்யர்கள் இந்த வெள்ளையர்கள் என்று குற்றம் சாட்டுகிறேன்.
உலகிலேயே இவர்களை மிஞ்சிடும் குடிகாரர்கள் இல்லை என்று குற்றம் சாட்டுகிறேன்!
மிக மோசமான சூதாடிகள் இந்த வெள்ளையர் என்று குற்றம் சாட்டுகிறேன்.
கொடிய கொலைகாரர்கள் இந்த வெள்ளையர்கள்!
சாந்தியை - சமாதானத்தைக் குலைத்தவர்கள் இந்த வெள்ளையர்.
காமவெறி பிடித்தலையும் கயவர்கள், இந்த வெள்ளையர்!
மோசடிகள் பல செய்திட்ட பேர்வழிகள் இந்த வெள்ளையர்!
ஆகவே நீதிமன்றத்தினரே! இந்த வெள்ளையர்கள் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கக் கேட்டுக் கொள்கிறேன்.
"வெள்ளையர்கள் குற்றவாளிகளே! தூக்கு தண்டனை விதிக்கிறேன் இவர்களுக்கு."
என்ன அண்ணா! டக்ளஸ் டில்மன் மீது தொடுக்கப்பட்ட கண்டன வழக்கு பற்றிய விவரம் தருவதாகக் கூறி விட்டு, இது ஏதோ புதிதாக, அதிர்ச்சி தரத்தக்கதாக ஒரு வழக்கு பற்றி குறிப்பிடுகிறாயே என்றுதானே தம்பி! வியப்படைகிறாய். விளக்கம் தருகிறேன்.
வெள்ளையர் குற்றம் பல புரிந்தவர்கள்; 'பஞ்சமாபாதகம்' புரிந்தவர்கள் என்பதாகக் குற்றம் சாட்டப்படுகிறது; வெள்ளையர் பஞ்சமா பாதகம் செய்தவர்களே என்பது மெய்ப்பிக்கப்படுகிறது; நீதிமன்றத் தலைவர், வெள்ளையருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கிறார் நாடகத்தில்.
அமெரிக்காவில், 'வழக்கு' என்றோர் நாடகம்; வெள்ளையரின் கொடுமைகளைக் கண்டிக்கும் நோக்கத்துடன், நியூயார்க் நகரிலேயே கூட இந்த நாடகம், ஒரு முறை அல்ல; இருமுறை நடத்தப்பட்டதாம்.
நாடகம் தீட்டி நடித்துக் காட்டும் பொறுப்பை மேற்கொண்டவர்கள், நீக்ரோக்களின் விடுதலை இயக்கத்தின் பல வடிவங்களில் ஒன்று என்று கூறத்தக்க 'கருப்பு முஸ்லீம்' எனும் அமைப்பினர். அந்த அமைப்பினர், நீக்ரோக்கள் தங்கள் உரிமைகளுக்காக வெள்ளையரிடம் கெஞ்சிக் கூத்தாடிக் கிடக்கத் தேவையில்லை; அது கேவலம்; தமக்குள் ஒரு எழுச்சியுடன் கூடிய ஒற்றுமையை ஏற்படுத்திக்கொண்டு, "கருப்பு இனத்தவர்! ஆம்! கருப்பு! அதனால் என்ன? கேவலம் என்ன அதிலே! என்று அடித்துப் பேச வேண்டும், நிமிர்ந்து நிற்க வேண்டும்; கிருத்துவ மார்க்கத்தை விட்டுவிட வேண்டும்; முஸ்லீம்களாகி விட வேண்டும்; தனி உரிமை, தனி நாடு, தனி அரசு கேட்டுப் பெற வேண்டும் என்ற புரட்சியை நடாத்திக் காட்டிடும் இயக்கம்.
அந்த இயக்கம், மேற்கொண்டுள்ள பிரசார முறையிலே ஒன்று நாடகம்; அந்த நாடகங்களிலே ஒன்றுதான் நான் மேலே குறிப்பிட்ட 'வழக்கு'.
டக்ளஸ் டில்மன் மீது பொச்சரிப்பு காரணமாக வெள்ளை அதிகாரிகள் வழக்குத் தொடுத்தது பற்றிக் குறிப்பிட்டபோது, கருப்பு இனத்தவர், மக்கள் மன்றத்திலே வெள்ளையர் மீது தொடுத்துள்ள 'வழக்கு' பற்றி நாடகம் நடத்தப்படுவது நினைவிற்கு வந்தது.
"நான் இல்லை அங்கே! இருந்திருந்தால்!" என்று கூறுவார் நமது முதலமைச்சர் பக்தவத்சலனார்.
வெள்ளையர் - கருப்பர் மோதுதல் அதன் காரணமாக இரத்தக் களறி சதா நடைபெற்றுக் கொண்டிருக்கும் நாடு அமெரிக்கா! இருந்தும் அங்கே வெள்ளையனைத் தூக்குத் தண்டனை பெறச் செய்கிறார்கள், நாடகத்தில். இங்கு மிகச் சாதாரணமான, துளியும் பலாத்கார வாடை அற்ற, பிரச்சார நாடகமாடினாலும் என்ன நடக்கிறது! 'உதயசூரியன்' என்ற நாடகத்தில் தம்பி கருணாநிதி எந்த விதமான 'பலாத்கார'ப் பிரச்சாரத்தையும் சேர்க்கவில்லை! ஆனால் 'உதயசூரியன்' என்று பெயர்! பக்தவத்சலனாரின் அரசாங்கம், ஆடாதே! என்று உத்தரவிட்டது; 'உதயசூரியன்' நாடகம் நின்றுவிட்டது.
அமெரிக்காவில், வெள்ளையர் பஞ்சமாபாதகம் செய்ததாகவும், உலகமன்றத்தின் முன்பு அவர்கள் இழுத்து வந்து நிறுத்தி வைக்கப்படுவதாகவும், வழக்கு நடைபெறுவதாகவும், தூக்குத் தண்டனை தரப்படுவதாகவும், கருப்பருக்கான ஒரு அமைப்பு, 'நாடகமாட' இடம் கிடைத்திருக்கிறது; நியூயார்க் நகரில்; போன நூற்றாண்டிலா? இல்லை! தம்பி! இப்போது, சில ஆண்டுகளுக்கு முன்பு!
ஆனால், ஒருபுறம் இந்த அளவு 'உரிமை' உணர்ச்சி மதிக்கப்பட்டு வருகிறதென்றாலும், மற்றோர் புறத்தில் நீக்ரோக்களை ஒதுக்கி வைத்து, கேவலப்படுத்தும் கொடுமையும் நெளிந்து கொண்டிருக்கிறது. அந்தச் சூழ்நிலை கப்பிக் கொண்டிருக்கும் இடத்திலல்லவா, டக்ளஸ் டில்மன் குடியரசுத் தலைவரானார்? அவர்மீது நிறவெறியர் பாய்ந்திடாதிருப்பார்களா! அதன் விளைவுதான் டில்மன் மீது தொடுக்கப்பட்ட கண்டன வழக்கு.
குடியரசுத் தலைவர் பதவிக்குத் தகுதியானவர் அல்ல.
குடிகாரர்! கூத்திக்கள்ளன்!
மனப்பிராந்தி நோயால் தாக்கப்பட்டவன்!
வெள்ளைப் பெண்மணியைக் கற்பழிக்க முயற்சித்த காதகன்.
இவ்விதமான குற்றச்சாட்டுகள்! ஆதாரங்கள்! சாட்சிகள்! வாதங்கள்! இதழ்களிலே கண்டனக் கணைகள்! இவ்வளவும், நிறம் கருப்பு என்பதால்.
டில்மன் நாணயமானவர் என்பதிலே இதற்கு முன்பு எவருக்கும் எள்ளளவு சந்தேகமும் எழுந்ததில்லை.
டில்மன் நீக்ரோக்களின் விடுதலைக்காகப் பொறி பறக்கப் பேசிடும் போக்கினரும் அல்ல; புரட்சி இயக்கத் தொடர்பும் கொண்டவர் அல்ல; பொறுத்துக் கொள்ளும் பயிற்சி பெற்றவர்; பொறுப்பினை நன்கு உணர்ந்தவர்.
நீக்ரோக்களிலே, சிறிதளவு செல்வம் செல்வாக்கு கிடைத்து விட்டால், வெளிச்சம் போட்டுக் கொண்டு திரிபவர்கள் சிலர் இருந்தனர்; இவர் அவ்விதமான போக்கினரும் அல்ல.
தம்பி! நிறம் கருப்பு என்றால் என்ன என்று நாம் இங்கு எளிதாகப் பேசிவிடலாம்; கருப்பில் அழகியடி! என்று சிந்து பாடிடலாம்; ஆனால் அமெரிக்காவிலே உள்ளவர்களுக்குத் தான் தெரியும் 'கருப்பு' என்னென்ன கொடுமைகளை, இழிவுகளைத் தாங்கிக் கொள்ள செய்கிறது என்கிற விபரம்.
அமெரிக்க நீக்ரோக்கள் எல்லோருமே கருப்பு நிறம் அல்ல! அவர்களிலே பலர், மாநிறம், வெள்ளை நிறம் கூட, ஆனால் இனம் நீக்ரோ. நீக்ரோ இரத்தம் கலந்திருக்கிறது என்று தெரிந்தால் போதும், அமெரிக்க சமூகத்திலே இடம் கிடையாது! ஒதுக்கிடம்! ஓரம்! குப்பைமேடு!!
இந்தக் கொடுமையிலிருந்து தப்பித்துக் கொள்ள எண்ணுவர் சிறிது வெள்ளை நிறமாகப் பிறந்துவிடும் நீக்ரோக்கள். யாருக்கும் தெரியாமல், பிறந்த இடத்தை விட்டு நெடுந்தொலைவு சென்று, வெள்ளையருடன் வெள்ளையராக வசித்துவர விரும்புவராம். அவ்வளவு துடிப்பு, பாவம் அவர்களுக்கு. கர்த்தர்! தமது கருணையால் நம்மை கருப்பு நிறத்துடன் படைப்பிக்கவில்லை; நமது நிறமோ வெள்ளை! நாம் வெள்ளையர் வாழும் பகுதியில் சென்று இருந்து விடலாம்; யாவரும் கண்டுபிடிக்க மாட்டார்கள்; கருப்பு நிறத்தவர் மீது வீசப்படும் இழிவிலிருந்து, கொடுமையிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைப்பார்களாம்.
அவ்விதமான எண்ணம் கொண்டு, ஒருவருக்கும் தெரிவிக்காமல், பல ஆண்டுகளுக்கு முன்பே, வீட்டை விட்டு ஓடிவிட்டாள், டில்மன் பெற்றெடுத்த பெண்!
எங்கே இருக்கிறாள், எப்படி இருக்கிறாள் என்பதே தெரியாது; தொடர்பு அடியோடு அற்றுப்போய்விட்டது. ஆனால், எங்கோ வெள்ளையருடன் வெள்ளை மாதாக இருந்து கொண்டிருக்கிறாள்.
அந்தத் துக்கம் டில்மன் மனதைப் பிய்த்துக் கொண்டிருக்கிறது; அதையும் பொறுத்துக் கொள்கிறார்.
மனைவி, காலமாகி விட்டாள்; மகளோ தலை மறைவு; மகனோ கல்லூரியில் உலவுகிறான், அப்பா ஒரு நொடியில் நீக்ரோக்களின் இழிவுகளைத் துடைத்து விடுவார் என்ற நம்பிக்கையுடன்; சூழ இருக்கும் வெள்ளை அதிகாரிகளோ, "தலையாட்டிக் கொண்டிருப்பதனால் தர்பாரில் இடம்! தன்னிச்சையாக நடந்து கொள்ள முனைந்தால் தூக்கி எறியப்படுவாய்!" என்று எச்சரிக்கிறார்கள்; பார்வையால், விஷமத்தனம் கலந்த புன்னகையால்.
இவ்வளவும் புரிகிறது; ஆனால் எதையும் வெளியே வெளிப்படையாகப் பேசுவதற்கும் இல்லை.
சிக்கலான பிரச்சனைகள், அய்யப்பாடுகள், மனக் குழப்பங்கள், மனக் குமுறல்கள் ஏற்படும்போது, எது முறை? எதனை எவ்விதம் செய்திடலாம்? என்பது பற்றிக் கலந்து பேசிடவும், தக்க கருத்து பெற்றிடவும், தன்னலமற்று, அறிவுத் தெளிவுடன் யோசனை கூறிடத்தக்கவர்களைப் பெற்றிடவும், முடியாது போய்விடும்போது, பொறுப்புக்களை மேற்கொண்டு விட்டுள்ளவர்களின் தவிப்பும் தத்தளிப்பும் எவ்விதம் இருக்கும் என்பதனை விளக்கிட முடியாது. அத்தகைய அல்லலால் தாக்குண்டவர்கள் பற்றி எழுதப்பட்டுள்ள ஏடுகளிலிருந்து அது பற்றித் தெரிந்து கொள்ளலாம்; ஓரளவு; முழு அளவு அல்ல.
தெளிவும் துணிவும் பொறுப்பும் பொறுமையும் மிகுதியாக இருக்க வேண்டும்.
தன் சொந்தக் கருத்தைத் திணிக்க வேண்டும் என்ற நினைப்பு எழலாகாது.
பிரச்சினையை எந்தவிதமான விருப்பு வெறுப்புகளுடனும் பிணைத்து விடலாகாது.
தவறான கருத்தைத் தந்திரமாகப் புகுத்தும் முயற்சியை மேற்கொள்ளக் கூடாது.
என் யோசனைதான்! என் திட்டம் தான்! என்ற எக்களிப்பைக் கொட்டிக் காட்டக் கூடாது.
கேட்பவர், கருத்தற்றவர்; அறிவுப் பஞ்சத்தால் நம்மை வந்து நாடுகிறார் என்ற தப்புக் கணக்குப் போடக்கூடாது.
பிரச்சினையை அணுகும்போது, தனது நிலையை அளவுகோலாக்கிக் கொள்ளாமல், பொறுப்பினை மேற்கொண்டுள்ளவரின் நிலையினை அளவுகோலாகக் கொள்ள வேண்டும்.
கேட்பவர் மனம் மகிழவேண்டும் என்பதற்காகத் தித்திப்பு கூட்டக்கூடாது; பிரச்சினையை விட்டு விடட்டும் என்பதற்காகக் கசப்பினையும் கலக்கக் கூடாது.
இவ்வளவு இலக்கணமும் பொருந்தியுள்ளவர்கள் கிடைத்தால் மட்டுமே, பொறுப்பினை மேற்கொள்பவர்கள், மனதிலே எழும் அய்யப்பாடுகளை நீக்கிக் கொள்ள, சிக்கல்களைப் போக்கிக் கொள்ள, வழி காண்பர். டில்மன், மனதிலே என்னென்ன அய்யப்பாடுகள் எழுந்திருக்கக் கூடும் என்பது பற்றி ஒரு பட்டியல் தயாரித்துப் பார்த்தால், தம்பி! தலை சுற்றும்; அவ்வளவு இருக்கத்தான் செய்யும். யாரிடம் கலந்து பேசுவார்? அவர் நிறமோ கருப்பு! இருக்கும் இடமோ வெள்ளை மாளிகை! சூழ உள்ளவர்களோ வெள்ளை ஆதிக்கப் பாதுகாவலர்! மக்களோ இரு பிரிவு; நிறத்தால், இனத்தால்; ஒன்றை ஒன்று பகைத்துக் கொண்டு. இவர் மனதிலே எழும் அய்யப்பாட்டிலே முக்கியமானதோ, நிறம் பற்றிய நினைப்பு அற்று, நீதியாக நேர்மையாக, அரசியல் சட்ட திட்டம் ஒழுங்கு முறை கெடாத வகையில் ஆட்சியை எப்படி நடத்திச் செல்ல முடியும் என்பது பற்றி. இதற்கு யாரிடம் யோசனை கேட்பார்! நீக்ரோ தலைவர்களிடம் கேட்க முனைந்தாலே புருவத்தை நெறிப்பர், பகை கக்குவர்; இனம் இனத்தோடு என்று பழி சுமத்துவர் வெள்ளையர்.
அவர்கள் எதையோ கூறிக்கொள்ளட்டும் என்று எண்ணி நீக்ரோ தலைவர்களுடன் கலந்து பேசினால், அவர்கள் எந்த விதமான யோசனை கூறுவார்கள்? பெரும்பாலான நீக்ரோ தலைவர்கள்; 'படமுடியாதினித் துயரம்! பட்டதெல்லாம் போதும்' என்ற மனப்போக்கினராகி விட்டனர், வெள்ளையரின் நிறவெறி அவர்களின் உள்ளத்தில் வெந்தழலை மூட்டிவிட்டது. அவர்கள் நிதானமாக நடந்துகொள்ளச் சொல்லவே மாட்டார்கள்!!
வெள்ளை இனத்தவரிடம் கலந்து பேசினால்? நீக்ரோ மக்களின் 'சாபம்' தன்னாலே வந்துசேரும். வெள்ளையரின் எடுபிடி என்பார்கள்! இனத்தைக் காட்டிக் கொடுக்கும் கயவன் என்பார்கள்! கூசாமல் பழி சுமத்துவார்கள்.
இரு நிறத்தினரையும் கேட்காமல், இருந்திடின்? இதயம் சுக்கு நூறாகிறது, சிக்கல் நிறைந்த பிரச்சினைகளால்.
தம்பி "கை கூப்பியும் கண்ணீர் பொழிந்தும் கர்த்தரின் அருளைப் பெறப் பாசுரம் பாடியும், அடிமை நான் ஐயனே! கருணை காட்டுவீர்! அறியாமைப் பிடியில் உள்ளேன். தெரியாமல் பிழை செய்தேன், பொறுத்தருளுவீர்! நான் உமது அடிமை, உமது உடமை!" என்று கெஞ்சிடும் நிலையில் நீக்ரோக்கள் இல்லை. ரொட்டித் துண்டுகளை வீசினால் விழுந்தடித்துக் கொண்டு ஓடி பொறுக்கி எடுத்துக் கொள்ளும் இழிநிலைமை விரும்பிடும் போக்கில் இல்லை. அவர்களின் கண்கள் பொழிய வேண்டிய அளவு கண்ணீரைப் பொழிந்துவிட்டன; வறண்டு விட்டன; இப்போது அங்கிருந்து கிளம்புவது நீர் அல்ல; நெருப்பு; கோபப் பொறிகள்! கொடுமைகளைத் தாங்கித் தாங்கி அவர்களின் உள்ளம் எரிமலையாகி விட்டது! அவர்கள் இச்சகம் பேசவோ, பச்சைச் சிரிப்பு சிரித்துக் காட்டி 'பணம்' கேட்கவோ தயாரில் இல்லை. அவர்களை நிமிர்ந்து நிற்கச் செய்து விட்டனர், பலப்பல தலைவர்கள்; பல்வேறு வகையான தலைவர்கள், தொடர்ந்து எழுச்சியும் விழிப்புணர்ச்சியும், புரட்சிப் போக்கும் ஊட்டப்பட்டு வரப்பட்டதால், அவர்களை அடக்கி வைப்பதும் முடியாததாகி விட்டது. "ஆராரோ" பாடி தூங்கவைக்கவும் முடியாததாகிவிட்டது; பகட்டு, போலி, பளபளப்பு, பசை இவைகளைக் காட்டி மயங்க வைக்கவும் முடியாததாகி விட்டது. அவர்கள் உரிமையைக் கேட்கின்றனர்; உரத்த குரலில்; நிமிர்ந்து நின்று; நீதியின் பேரால் மட்டுமல்ல, எங்களாலும் எல்லாம் முடியும் என்ற வலிவு காட்டி.
இந்த நிலையினை மிக வேகமானதாக்கிடுவதிலே முனைந்து வேலை செய்த அமைப்புக்களிலே ஒன்றுதான் தம்பி! நான் முதலிலே குறிப்பிட்டுக் காட்டினேனே, கருப்பு முஸ்லீம் என்ற இயக்கம்.
சட்டம், ஒழுங்கு, நீதி, நேர்மை, உலகம் போக்கு, உயர் தத்துவங்கள் ஆகியவைகளை விளக்கிக் காட்டியவர்களின் குரலைக் கேட்டு, மதிப்பளிக்காத நிறவெறியர்கள் எலிஜா முகமது என்பவர் துவக்கி நடத்தி வந்த கருப்பு முஸ்லீம் இயக்கத்தவரின் இடியோசை கேட்டு மிரண்டிடலாயினர். டக்ளஸ் டில்மன் காலத்திலே அல்ல தம்பி; டக்ளஸ் கதை; நான் குறிப்பிடும் கருப்பு முஸ்லீம் நடைமுறை நிகழ்ச்சி.
'கருப்பு முஸ்லீம்' இயக்கம் வெள்ளை நிறவெறியர் மனதிலே பீதியை மூட்டியது போலவே நிக்ரோக்கள் மனதிலே என்றும் இல்லாத ஒரு துணிவை ஊட்டி விட்டது. எலிஜா முகமது துவக்கிய இயக்கம், எண்ணற்ற நீக்ரோக்களை, வெள்ளையரின் ஆதிக்கத்தை எதிர்த்து நிற்கும் வீரம் பெறச் செய்தது; அவர்கள் ஒரு தனி வாழ்க்கை முறையே அமைத்துக் கொள்ளலாயினர். தனிப் பள்ளிக்கூடங்கள்; அங்காடிகள், தொழிலிடங்கள்; பணிமனைகள்! ஓட்டும் வேண்டாம் உறவும் வேண்டாம் இந்த வெள்ளையருடன்! என்று துணிந்து கூறினர். புதியதோர் தன்னம்பிக்கையும் பெற்றனர்.
கிருத்துவ மார்க்கம் இந்தப் பிரச்சினையைத் தீர்த்து வைக்கத் தவறி விட்டது. அமெரிக்க சர்க்கார் தவறிவிட்டது. எனவே, அந்த மார்க்கமும் உமக்கு வேண்டாம். அந்த அரசிடம் பிடிப்பும் வேண்டாம். நீதி வேண்டும்; விடுதலை வேண்டும்; சமத்துவம் வேண்டும்! இவற்றை ஒருவரும் தரமாட்டார்கள். நாமாகத்தான் பெற்றுக் கொள்ள வேண்டும். எப்படி? நாம் தனி! தனி இனம்! எனவே தனி அரசு வேண்டும்! தனி நாடு வேண்டும் என்று கூறிவிட வேண்டும். வெள்ளையருடன் ஒரே அரசில் வாழ்வது ஓநாய்களுக்கு மத்தியில் ஆடுகள் இருப்பதைப் போன்றதே! நாம் யார்க்கும் குடியல்லோம்!
எலிஜாவின் இந்தப் பேச்சு, தத்துவமாகிவிட்டது; இயக்கம் மார்க்கமாகிவிட்டது. நீக்ரோக்களுக்கு என்றுமில்லாத அளவு 'தெம்பு' பிறந்துவிட்டது. முஸ்லீம் மார்க்கத்தினை மேற்கொண்டு விட்டதாக இலட்சக் கணக்கானவர்கள் அறிவித்து விட்டனர்.
தம்பி! இதழ்களில் பார்த்திருப்பாய். சென்ற திங்கள் உலகப் புகழ் பெற்றிடும் வெற்றி ஈட்டினான் க்ளே என்ற நீக்ரோ குத்துச் சண்டை மாவீரன்! அவன், தன்னை 'முஸ்லீம்' என்றுதான் அறிவித்திருக்கிறான்.
ஏன் கருப்பாகப் பிறந்தோம் என்று ஏங்கிக் கிடந்தவர்கள் எழுந்து நின்று, ஆமாம்! கருப்பு! அதனால் என்ன? கருப்பு, சிறப்பு! என்று முழக்கம் எழுப்புகிறார்கள் எலிஜா துவக்கிய இயக்கம் காரணமாக.
இப்படி! இப்படி எல்லோரும் வாருங்கள்! வெள்ளை நிறத்தார்களைப் பற்றிப் பேசப் போகிறேன்.
பேசு! பேசு சகோதரா! பேசு!
ஒன்று கேட்கிறேன், சொல்லுங்கள் பார்ப்போம். நல்லது செய்த ஒரு வெள்ளையனைப் பார்த்ததுண்டா, நீங்கள்?
இல்லை! இல்லை!
போகட்டும், உங்கள் பேரில் பூட்டப்பட்டுள்ள பொருளாதாரத் தளைகள் பற்றித் தெரியுமா, உங்களுக்கு, சொல்லுகிறேன். காலையிலே எழுந்திருக்கிறீர்கள், படுக்கையை விட்டு; எலிகளும் கரப்பான் பூச்சிகளும் ஓடுகின்றன உங்கள் படுக்கையிலிருந்து. நான் சொல்வது சரிதானே?
உண்மைதான்! உண்மைதான்!
ஓடிப்போய் உங்கள் குழந்தையைப் பார்க்கிறீர்கள்; குழந்தையின் காதுகளை எலிகடித்துத் தின்று விட்டதா என்று பார்ப்பதற்காக! உண்மைதானே! சரிதானே நான் சொல்லுவது?
உண்மை! உண்மை!
கூரையிலிருந்து சுண்ணாம்பு அடை மேலே விழுகிறது. ஓட்டைச் சட்டியிலே தண்ணீர்! அதைக் கொண்டு முகத்தைக் கழுவிக் கொள்கிறீர்கள். அப்படித்தானே?
ஆமாம் ஐயா! ஆமாம்! அப்படித்தான்.
தூக்கத்தைக் கழுவி விட்டுவிட்டு, கந்தல் ஆடையை உடுத்திக் கொள்ளுகிறீர்கள்; கடனுக்கு வாங்கியது; கடனைக் கட்டி தீர்க்கவில்லை இன்னும்; உண்மைதானே?
ஆமாம்! சொல்லு ஐயா! சொல்லு! கொல்ல வேண்டும் வெள்ளையர்களை.
பிறகு, அதற்குப் பிறகு, செல்லுகிறீர்கள்... வெள்ளை எஜமானனிடம் வேலை செய்ய... அயிசன் பர்க்! அவன் பெயர் என்று வவத்துக் கொள்ளுங்கள்; வெள்ளை எஜமானன்.
ஆமாம்! வெள்ளை எஜமானனிடம் வேலை செய்கிறோம்.
எட்டு மணி நேரம் வேலை! வாரம் ஐந்து நாள்! மொத்தம் 44 டாலர் கூலி பெறுகிறீர்கள்.
ஆமாம்! 44 டாலர்!
வியர்வை சிந்தச் சிந்த நீங்கள் உழைத்து இந்த 44 டாலர் சம்பாதிக்கிறீர்களே இதைப் பார்த்துக் கொண்டிருக்கிறானே அயிசன் பர்க், அவன் 440 டாலர் சம்பாதிக்கிறான், நான் சொல்வது சரியா? தவறா?
முழுக்க முழுக்கச் சரி! உண்மை! அப்படிச் சொல்லு, அதை எல்லாம் சொல்லு.
கவலைப்படாதே சகோதரா! கவலைப்படாதே! அப்பட்டமான உண்மையைத்தான் சொல்வேன். எல்லோருக்கும் விளங்கும்படி, உள்ளதை உள்ளபடி சொல்லுவேன். நாளெல்லாம் உழைக்கிறீர்கள், பிறகு இங்கே வருகிறீர்கள் - வந்து துணி வாங்குகிறீர்கள்; யாரிடம்? கோசன் பர்க்கிடம்!
ஆமாம்!
அயிசன் பர்க்கிடம் வேலை செய்து வாங்கிய கூலியிலே ஒரு பகுதியைத் துணிக்காக கோசன் பர்க்கிடம் கொடுக்கிறீர்கள். பிறகு? நகை நட்டு வாங்குகிறீர்கள், கோல்ட் பர்கிடம்!
ஆமாம்... அப்படித்தான்...
வீட்டு வாடகை கட்டுகிறீர்கள்... பைன் பர்க்கிடம். ஆமாம் ஐயா! ஆமாம்!
கடன் வாங்குகிறீர்கள், கம்பெனியிடம்! கம்பெனி நடத்துவது யார்? வீன் பர்க்!
அப்படிச் சொல்லு! அதைச் சொல்லு!
ஆனால்; உங்களுக்கு எது தெரியவில்லை என்றால், நான் சொல்லிக்கொண்டு வந்தேனே அயிசன் பர்க், கோசன் பர்க், பைன் பர்க், கோல்ட் பர்க், வீன் பர்க் இவர்கள் எல்லாம் அண்ணன் தம்பிகள்! ஒரே இனம்!! உழைக்கிறீர்கள்; கிடைப்பதை இந்தக் கும்பல் பறித்துக் கொள்கிறது. இதுதான், நான் சொன்ன பொருளாதாரத் தளைகள், புரிகிறதா!!
ஒரே சிரிப்பொலி! ஆரவாரம்!
தம்பி! நீக்ரோக்கள் குடி இருக்கும் பகுதி ஒன்று, நியூயார்க் நகரில்; ஹார்லாம் எனும் பெயர், அந்த குப்பை மேட்டுக்கு; அங்கு தெருக் கோடியில் அடிக்கடி நடைபெறும் கூட்டம் பற்றியது நான் குறிப்பிட்டுக் காட்டியது. லோமாக்ஸ் என்பவர், கருப்பு முஸ்லீம்கள் பற்றிய விவரம் அளித்து எழுதியுள்ள ஏட்டில், இந்த நிகழ்ச்சி படமாக்கப்பட்டிருக்கிறது.
இந்த விதமான பிரசாரம் நீக்ரோ மக்களிடம் என்ன விதமான மனப்பான்மையைக் கிள்ளிவிட்டிருக்கும்! அந்த மனநிலையில் உள்ள நீக்ரோக்களை, ஒரு நீக்ரோ குடியரசுத் தலைவரான பிறகும் அடக்கி வைத்திட முடியுமா! அத்தனைக் கொடிய இனத் துரோகம் செய்திட யாருக்காகிலும் துணிவு பிறந்திடுமா!
ஆனால் வற்புறுத்துகிறார்கள் டில்மனை டர்னரைட் இயக்கத்தைத் தடை செய்யும் சட்டம் பிறப்பிக்கும்படி.
இந்த டர்னரைட் இயக்கந்தான், தங்களுக்காக உண்மையாகப் பாடுபட்டு வருகிறது; அதன்மீது வேண்டுமென்றே வெள்ளையர்கள் பழி சுமத்தி ஒழித்துக் கட்டப் பார்க்கிறார்கள் என்று நீக்ரோக்கள் எண்ணிக் கொண்டுள்ளனர்.
ஆனால் டில்மனைச் சூழ உள்ள வெள்ளைப் பேரதிகாரிகளோ, டர்னரைட் இயக்கம் கம்யூனிஸ்டு இயக்கம், பலாத்கார இயக்கம் என்று வாதாடுகிறார்கள். ஒரு நீக்ரோ குடியரசுத் தலைவராகி விட்டதால் அந்த இயக்கம் தலை துள்ளி ஆடுகிறது. ஒரு நீக்ரோ, நீக்ரோ இயக்கத்திற்குத் தடை விதிக்க மாட்டார் என்ற தவறான நம்பிக்கையால்; ஆகவே தாங்கள், தங்கள் நிறத்தை மறந்து, அமெரிக்க நாட்டுக் குடியரசுத் தலைவர் என்பதை நினைவிலே கொண்டு, அமெரிக்காவில் பயங்கரத்தையும் பலாத்காரத்தையும் மூட்டிவிட்டுப் பாழ்படுத்தும் டர்னரைட் இயக்கத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள்.
நீக்ரோ தலைவர்களோ டர்னரைட் இயக்கத்தைத் தடை செய்தால், இனத்துரோகி என்ற இழிவை ஏற்றுக் கொள்ள வேண்டிவரும் என்று எச்சரிக்கிறார்கள். டில்மன் மிரட்டல் எச்சரிக்கை இவைகளைப் பொருட்படுத்தவில்லை. எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும், தீர யோசித்து நியாயமானதுதான், அரசியல் சட்ட திட்டத்துக்கும் ஒழுங்குக்கும் ஏற்றதுதான் என்று தெளிவாக மெய்ப்பிக்கப்பட்டால்தான் தடை விதிக்க முடியும் என்ற கருத்துடன் இருந்தார்.
பலாத்கார இயக்கம் என்பதற்கும்
கம்யூனிஸ்டு தொடர்பு உள்ள இயக்கம் என்பதற்கும் ஆதாரம் வேண்டும்! பிறகுதான் தடை விதிக்க முடியும் என்று அறிவிக்கிறார்; ஆத்திரம் பீறிட்டுக் கொண்டு வருகிறது வெள்ளைப் பேரதிகாரிகளுக்கு.
நமது யோசனையை மீறுகிறான்!
நம்மை மதிக்க மறுக்கிறான்!
கருப்பருக்காக பரிவு காட்டுகிறான்!
உண்மையிலேயே ஆட்சி செய்ய நினைக்கிறான்!
வெள்ளை மாளிகையில் இருக்கிறோம் என்று இறுமாப்புக் கொள்கிறான்.
மாளிகையின் பெயர் வெள்ளை மாளிகை! இவன் நிறம் கருப்பு! அதையே மறந்து விட்டான்.
இவ்விதம் வெள்ளைப் பேரதிகாரிகள் எண்ணி இருந்திருப்பர், எரிச்சலாகத்தான் இருந்திருக்கும்.
நீக்ரோக்களின் உரிமைக் கிளர்ச்சியை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெற்றிகரமாக நடத்திச் சென்ற நீக்ரோ தலைவர் மார்ட்டின் லூதர் கிங் என்பார், ஒரு முறை, அமெரிக்கக் குடியரசுத் தலைவராக இருந்து மறைந்த மாவீரன், அவனிபுகழ் கென்னடியிடம் தொலைபேசி மூலம் கேட்டாராம், "குடியரசுத் தலைவர் அவர்களே! நிறபேதம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதிலே அக்கறை காட்டும் தாங்கள் வீற்றிருக்கும் மாளிகையின் பெயரே வெள்ளை மாளிகை என்று இருக்கிறதே! பொருத்தமாக இல்லையே" என்று; கென்னடி, "அது நெடுநாட்களாக இருந்து வரும் பெயர்; வேறு பொருள் கொள்ளத் தேவையில்லை" என்று பதிலளித்தாராம்.
ஆனால் நிறவெறியர்கள், அவ்விதம் கருதுவதில்லை. வெள்ளை மாளிகை! என்ற பெயர் பொருத்தம் பார்த்து, பொருள் அறிந்து வைக்கப்பட்டதாகவே கருதுகின்றனர், அதற்கேற்றபடியே நடந்து கொள்கின்றனர்.
அந்த இயல்பினர், டில்மன் தன்னிச்சையாக நடக்கத் தலைப்படுவது அறிந்து, இனியும் விட்டுவைக்கக் கூடாது; தீர்த்துக் கட்டிவிட வேண்டியதுதான் என்று முடிவு செய்தனர். அவர்களின் முடிவைத் துரிதப்படுத்துவது போல மற்றோர் சம்பவம் நடைபெற்றது. 'டர்னரைட் இயக்கம்' பற்றிய தகவல்களை விசாரித்தறிந்து 'அறிக்கை' அளிக்கும்படி ஒருவரை, டில்மன் நியமித்தார்.
நாங்கள் சொல்லுகிறோம்; எங்கள் வார்த்ததயை நம்பாமல் விசாரணைக் கமிட்டி நியமிக்கிறாரா! அவ்வளவுக்கு வளர்ந்துவிட்டாரா! என்று கோபம் கொப்பளித்தது வெள்ளைப் பேரதிகாரிகளுக்கு.
'டர்னரைட் இயக்கம்' பற்றிய விசாரணை நடத்தும்படி நியமிக்கப்பட்டவர் யார் என்பது தெரிந்ததும் அந்தப் பேரதிகாரிகளின் ஆத்திரம் மேலும் சீறிக் கொண்டு எழுந்தது.
ஆதிக்கம் செலுத்தும் போக்கு ஒவ்வோர் நாட்டில் ஒவ்வோர் விதமான வடிவம் கொள்ளுகிறது; கருவியைத் தேடிப் பெற்றுக் கொள்கிறது. வடிவமும் கருவியும் வகையிலே பலவாக இருப்பினும் நோக்கம் மட்டும் ஒன்றுதான்! எளியோர் தமை வலியோர் சிலர் வதை புரிவதுதான்! வலியோராகச் சிலர் இருப்பதற்குக் காரணம் பலப்பல; கட்டத்துக்குக் கட்டம், நாட்டுக்கு நாடு இக்காரணம் வேறு வேறாக இருந்திடும்.
இனம், மதம், மொழி, நிறம், பணம் என்பவை ஒவ்வொன்றும் ஒவ்வோர் காலத்தில், ஒவ்வோர் நாட்டில், ஆதிக்கக் கருவியாகப் பயன்பட்டு வருவதைக் காண்கிறோம். இந்த ஆதிக்கத்தின் எந்த வடிவத்தை ஆராய்ந்திடினும், ஒரு பொதுவான பாடம் கிடைத்திடும். அதற்காகவே 'நிறம்' காரணமாகப் புகுத்தப்பட்டுள்ள ஆதிக்கத்தைக் குறித்துச் சிறிதளவு விரிவாகவே விளக்கிக் கொண்டு வருகிறேன். நிறம் என்பது கருவியாக அமைந்திருப்பது போல, இனம், மதம், பணம் என்பவைகளிலே ஏதேனும் ஒன்று கருவியாக அமைந்திடினும், கொடுமையின் அளவு குறைவானதாக இருந்திடாது. எனவேதான், எங்கோ அமெரிக்காவில் கப்பிக் கொண்டுள்ள நிறவெறி பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்வது வேறுவிதமான கருவியின் துணையுடன் இருந்து வரும் ஆதிக்கம் பற்றி எண்ணிடவும், பாடம் பெற்றிடவும் வழி காட்டும் என்ற எண்ணத்துடன் இத்தனை விரிவாக எழுதிக் கொண்டிருக்கிறேன். பிரச்சினை எங்கோ நெடுந் தொலைவில் இருப்பது என்றோ, நமக்குச் சம்பந்தமில்லாதது என்றோ எண்ணிக் கொண்டு, பெற வேண்டிய பாடத்தினை இழந்துவிடக் கூடாது.
மதவெறி குறையவில்லை, ஜாதிப்பித்தம் போகவில்லை, குலச்சண்டை ஒழியவில்லை என்று பிறநாடுகள் குறித்து மிகக் கேவலமாகப் பேசும் வாடிக்கை பொதுவாக மேனாட்டினருக்கு உண்டு. மேனாட்டினரில் புரட்சிக் கருத்துக்களையும் புதுமுறை அரசியலையும் மேற்கொண்டவர்கள் அமெரிக்கர்கள். அமெரிக்காவுக்கு 'மே பிளவர்' என்ற கப்பலில் ஐரோப்பிய நாடுகளிலிருந்து, மதக் கொடுமை, அரசியல் ஆதிக்கக் கொடுமை ஆகியவற்றிலிருந்து விடுபட, கருத்துச் சுதந்திரம் பெற்றிட, மனிதத் தன்மையைப் போற்றிப் பேணிடக் கிளம்பியவர்கள், 'அமெரிக்கர்கள்', ஆன பிறகு, கொடுமையான ஒரு ஆதிக்கத்தை, நிறவெறியைக் கருவியாகக் கொண்டு புகுத்தி விட்டனர்; அதனை மிருகத்தனமாக இன்றும் நடத்திக் கொண்டு வருகின்றனர்.
இந்த இயல்பு, அமெரிக்கர் மட்டுமே பெற்றுள்ளது என்று எண்ணிக் கொள்ளக் கூடாது.
ஆதிக்கத்தை எதிர்த்து நின்று ஒழித்தவர்கள், கொடுமைகளைத் தாக்கித் தகர்த்தவர்கள், பிறகு தாமே ஆதிக்கம் செலுத்துவோராகவும், கொடுமையாளர்களாகவும் மாறி விடுகின்றனர். எப்போது? தங்கள் நிலை, வலுவாகி விட்டது என்ற துணிவு பிறந்ததும். இதற்கான சான்றுகள் வரலாற்றுச் சுவடிகளில் நிரம்ப உள்ளன. சுவடிகளைக்கூடப் புரட்டிக் கொண்டிருக்கத் தேவையில்லை. நம்மைச் சுற்றிலும்கூட அந்த நிலைமை இருந்திடக் காண்கிறோம்.
பேச்சுச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம், கூடிக் குறைகளை எடுத்துக் கூறும் சுதந்திரம், கிளர்ச்சிச் சுதந்திரம், என்று மேடை அதிரப் பேசியவர்கள், ஆர்வம் கொந்தளிக்கப் பேசியவர்கள், ஆர்வத்தை மற்றவர்களுக்கும் ஊட்டியவர்கள்தான், காங்கிரஸ் கட்சியினர். ஆனால், அவர்களின் இன்றைய போக்கு? எந்த ஆதிக்கத்தையும் கொடுமையையும் எழுச்சியுடன் எதிர்த்து நின்றனரோ, அதே விதமான ஆதிக்கத்தையும் கொடுமையையும் கூசாமல், தட்டுத்தடங்கல் இல்லாமல் செய்திடக் காண்கிறோமே? இந்த பதினெட்டு ஆண்டுகளில் அடக்குமுறையை எதிர்த்து நின்ற இந்த ஆற்றல் மிக்கோர், தடைச் சட்டங்களைத் தூளாக்கிய இந்தத் தீரர்கள், சிறைச்சாலை என்ன செய்யும் என்று சிந்து பாடிய இந்தச் சீலர்கள், வெள்ளையராட்சியிலே வீசப்பட்ட எந்த அடக்குமுறைக் கருவியை விட்டு விட்டார்கள்? அதே குண்டாந்தடி; புதிதாகப் பித்தளைப்பூண் போட்டிருக்கிறார்கள். அதே துப்பாக்கிச் சனியன்; மாணவர்களின் மார்பினைக்கூடப் பதம் பார்க்கிறது; அதே குண்டுகள்; முன்பு விரட்டுவதற்கு; இப்போது சாகடிப்பதற்கு; அதே சிறை, அதே 144; அதேவிதமான அவசரச் சட்டங்கள், ஆள்தூக்கிச் சட்டங்கள், ஊரடங்குச் சட்டங்கள்; உடமையைப் பறிக்கும் சட்டங்கள்; ஒன்றுகூட விட்டுவிடவில்லை; ஆங்கில ஏகாதிபத்தியம் தனது பாசறையில் வைத்திருந்த கருவிகள் அனைத்தையும் இன்று காங்கிரசார், பயன்படுத்துகின்றனர்; உரிமைக் குரலை அடக்கிட; கிளர்ச்சிகளை ஒழித்திட!! வெள்ளையர்கள் கொண்டிடாத அளவு துணிவுடன், நம்பிக்கையுடன்!! ஆயினும் இவர்களே தான் ஐம்பதாண்டுகளுக்கு மேலாக ஆர்ப்பரித்தனர், அடக்குமுறை ஒழிக! அநியாயச் சட்டங்கள் ஒழிக! என்று.
எனவேதான் தம்பி! உரிமைக்காகப் போராடுவது, ஒரு தொடர் கதையாக, முடிவுபெறாத நீண்ட நெடுங்கதையாக இருந்து வருகிறது. விழிப்புடன் இருந்து வந்தாலன்றி, எழுச்சியுடன் இருந்து வந்தாலன்றி ஆதிக்கம் ஓசைப்படாமல் மறுபடியும் இடம் பிடித்துக் கொண்டுவிடும்! கதிரவன் ஒளி நித்த நித்தம் தேவைப்படுகிறது அல்லவா, கப்பிக் கொண்டுள்ள இருளை நீக்கிட அது போல! உரிமை வாழ்வினைப் பெற்றிட மனிதகுலம் ஓய்வின்றி உழைத்தபடி இருந்தாக வேண்டி வருகிறது.
அமெரிக்காவில் குடியேறியவர்கள், கொடுங்கோலர்களின் வழிவழி வந்தவர்கள் அல்லர்; கொடுங்கோலை எதிர்த்து நின்றவர்கள். எனினும் அவர்கள் தங்களைக் கொடுங்கோலர்களிடமிருந்து விடுவித்துக் கொண்டான பிறகு, தாமே கொடுமைகளைப் புரியத் தொடங்கி விட்டனர்; அந்தக் கொடுமைகளை எதிர்த்து நிற்பவர்களை அழித்தொழிக்க, தமது வலிவினைப் பயன்படுத்தி வந்தனர். அந்தக் கொடுமையிலே ஒன்றுதான் நிறவெறி, இதனை எதிர்த்து நின்ற இயக்கங்கள் பலவற்றிலே ஒன்று டர்னரைட் இயக்கம். இந்த இயக்கம், பலாத்கார இயக்கமா, இரத்தவெறி கொண்டலையும் இயக்கமா என்பதனைக் கண்டறிய டக்ளஸ் டில்மன் நியமித்தவர், நிறவெறியை எதிர்த்து நின்ற மற்றோர் இயக்கத்தை நடத்திச் செல்பவர்.
பகைவனிடம் பஞ்சாங்கம் பார்ப்பது என்பார்களே அது போலல்லவா இருக்கிறது இது என்று எண்ணி, வெள்ளைப் பேரதிகாரிகள் ஆத்திரம் கொண்டனர்.
டக்ளஸ் டில்மன், அமெரிக்கக் குடியரசுத் தலைவராவதற்கு முன்பு வசித்து வந்த வீட்டிலே, குடி இருந்து வந்தார், ஒரு நண்பர். அவர் அமைதி, பொறுமை, பொறுப்புணர்ச்சி, சட்டம், ஒழுங்குமுறை ஆகியவைகளுக்கு உட்பட்டு, நீக்ரோக்களின் உரிமைக்காகவும் நல்வாழ்வுக்காகவும் பணியாற்றி வர ஒரு அமைப்பு கண்டார். ஆனால் அந்த அமைப்பு, ஆற்றலற்றது. பிரச்சினையின் அடிப்படையைக் கவனிக்க மறுப்பது, கைகூப்பியும் கண்ணீர் பொழிந்தும், கர்த்தரிடம் முறையிட்டும் கருணையைக் கேட்டுப் பெற்றும் காரியமாற்றிட எண்ணிடும் கிழட்டுத்தனம் கொண்டது; ஆகவே அந்த அமைப்பு போதாது என்ற எண்ணம் கொண்டவர்கள், அமைதியுடன் பணியாற்றி வந்த அமைப்பிலிருந்து விலகி, புரட்சிகரமான, புதிய அமைப்பை ஏற்படுத்திக் கொண்டனர். அந்த அமைப்பின் பெயர்தான், 'டர்னரைட் இயக்கம்' என்பது.
தீவிரம் நாடுவோர், புரட்சி முறை விரும்புவோர், புதிய விறுவிறுப்பு வேண்டுவோர், ஒவ்வோர் அமைப்பிலும் இருக்கத்தான் செய்வர். குருத்தோலைகள் பழுத்த ஓலைகளைக் கேலி செய்திட முனைவது விந்தை அல்ல; நடைமுறை. தம்பி! நான் குறிப்பிட்டேனே, வெள்ளையரைத் தூக்கிலிடுவதாக நாடகம் நடத்திடும் விதமான புரட்சி இயக்கம், கிருத்துவ மார்க்கத்தையே உதறித் தள்ளிவிட்டு, புதிய மார்க்கத்தை மேற்கொண்ட இயக்கம், கருப்பு முஸ்லீம் இயக்கம்.
வெள்ளையர் நடுநடுங்க, கருப்பர் தலை நிமிர்ந்து நின்றிடச் செய்த இயக்கம், அதுவே, பிறகு மந்தமானதாக - பிற்போக்குத் தனமானதாக - கிழட்டுத்தனம் மேலிட்டு விட்டதாகக் கருதப்பட்டு, புதியதோர் அமைப்பு, கருப்பு தேசிய இயக்கம் என்ற பெயருடன், கருப்பு முஸ்லீம் எனும் அமைப்பிலே சட்டாம் பிள்ளையாக இருந்துவந்த மால்கோம் என்பவரால் துவக்கப்பட்டது.
கருப்பு முஸ்லீம் அமைப்பின் கர்த்தாவான எலிஜா முகமது வெள்ளையரிடம் மூளையை அடகு வைத்து விட்டார் போராடும் இயல்பை இழந்துவிட்டார் என்று குற்றம் சாட்டிவிட்டு, புதிய அமைப்பைத் துவக்கிய மால்கோம், தனது இயக்கம், புரட்சிகரமானது என்பதனைக் காட்டிட வெள்ளை இனத்தவரை வெறுக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்! அதிலே பெரும் அளவு வெற்றியும் கண்டார்.
பண்பறிந்து ஒழுகுதல், பகைவனுக்கும் இரங்குதல், படிப்படியாக முன்னேறுதல், மனதை மாற்றுதல் என்பவைகள் கோழைகளின் முறைகள், இரத்தத்திற்கு இரத்தம்! கொடுமைக்குக் கொடுமை! பழிக்குப் பழி! என்பதே ஆற்றல்மிக்கோர் மேற்கொள்ள வேண்டிய முறை என்று எடுத்துக் கூறிய மால்கோம் எந்த அளவுக்கு வெறுப்பை ஒரு தத்துவமாக்கிக் கொண்டார் என்றால், தம்பி! ஒரு விமான விபத்தில் 120 வெள்ளையர் இறந்துபட்ட ஒரு நிகழ்ச்சியை, அல்லாவின் அருளால் கிடைத்த அகமகிழ்ச்சி தரும் ஓர் நற்செய்தி என்று அறிவித்திடும் அளவுக்கு!
இப்படி வெறுப்புணர்ச்சியை வளர்த்திடலாமா என்று கேட்டவர்களுக்கு மால்கோம், "தவறு என்ன! வெறுப்பை வெறுப்பதிலே தவறு என்ன! பல நூற்றாண்டுகளாக கொடுமைகளைச் செய்து குவித்துள்ள வெள்ளையர் மீது வெறுப்பு கொள்வது தர்மம் - நியாயம்!!" என்று வாதிட்டாராம்.
வெள்ளையர்கள் எல்லோரும் பேய்கள் என்று கண்டிக்கிறீரே, அப்படியானால் ஏசுநாதரும் பேய்தானா? என்று ஒருவர் கேட்டபோது, மால்கோம் தட்டாமல் தயங்காமல் பதிலளித்தாராம்; "ஏசுநாதர் வெள்ளையர் என்று யாரய்யா உமக்குச் சொன்னார்கள்? ஏசுநாதர் கருப்பர், வெள்ளையர் அல்ல" என்று.
உலகிலே அவ்வப்போது உலவிய புகழ்மிக்கார் அனைவருமே கருப்பர்; வெள்ளையர் அல்ல என்று வாதாடினார் மால்கோம்.
கருப்பர், மனித இனத்திலேயே மட்டம், கர்த்தர் வெள்ளை மனிதர்களுக்கு உழைத்திடுவதற்கென்றே படைத்தார் மனித உருவு கொண்ட இந்த மிருகங்களை - என்று பேசிய பாதிரிமார்கள் உண்டு! அந்த வெறியை அடக்கப் பிறந்த வெறி என்று கூறலாம் மால்கோம் போன்றோர் ஊட்டிவிட்ட வெறுப்புணர்ச்சி.
இந்த வெறுப்புணர்ச்சி, கட்டு திட்டம், வரைமுறை, சட்டம் ஒழுங்கு என்பவைகளை மதித்திடத்தக்க மனப்போக்கைத் துளியும் ஏற்படுத்தாதல்லவா? சுடு! இல்லையானால் சுடப்படுவாய்! கொல்லு! இல்லையானால், கொல்லப்படுவாய்! கொளுத்து! இல்லையானால் கொளுத்தப்பட்டு விடுவாய்! வெட்டு! இல்லையானால் வெட்டப்படுவாய்! தட்டு! திறக்க மாட்டார்கள்! உடை! தன்னாலே வழி திறந்து காணப்படும்! கேள்! கொடுக்க மாட்டார்கள்! பறித்துக் கொள், தடுத்திட இயலாது!! இந்தவிதமான பலாத்காரம் வெடித்துக் கிளம்பிற்று.
உரிமை, சமத்துவம் கேட்டுக் கேட்டு அலுத்துப் போய் விட்டது; வெள்ளையர் நாட்டில் கருப்பருக்கு உரிமையும் சமத்துவமும் கிடைத்திடாது; ஓநாய்களுக்கு மத்தியில் ஆடுகள் நிம்மதியாக வாழ்ந்திட முடியாது! ஆகவே அமெரிக்காவில் ஒரு பகுதியை, 'கருப்பர் நாடு' என்று ஆக்கி அமைத்திடுக!! அங்கு கருப்பர், தமது தேசியத்தை, தமது நெறியை அமைத்துக் கொள்வார்கள். அஃது இல்லையெனில், கருப்பர் - வெள்ளையர் பூசல் இருந்தபடியே இருக்கும்; புரட்சி பூத்தபடி இருக்கும்; இரத்தம் பீறிட்டுக் கிளம்பியபடிதான் இருக்கும்; என்று மால்கோம் போன்றோர் முழக்கமிட்டனர். இந்த முழக்கம் வெள்ளையரின் மனதிலே அச்சத்தை மூட்டி விட்டது! இது அழிக்கப்பட வேண்டிய ஆபத்து என்று அலறினர். அப்படிப் பட்ட ஆபத்து இந்த டர்னரைட் இயக்கம் என்று விவரம் விளக்கம் அளித்து, அதனைத் தடை செய்யும்படி பணித்தனர் வெள்ளைப் பேரதிகாரிகள்; குடியரசுத் தலைவராகி விட்ட அந்தக் கருப்பரோ, காரணம் கண்டறியாமல், குற்றங்கள் மெய்ப்பிக்கப் படாமல், தடை செய்ய முடியாது என்று கூறிவிட்டு, கருப்பரின் உரிமைக்காக ஒரு அமைப்பினை நடத்திக் கொண்டு வந்த தன் நண்பர் ஒருவரை, உண்மையைக் கண்டறிய நியமித்தார் என்றால், ஆத்திரம் பீறிட்டுக் கொண்டு கிளம்பாமலிருக்குமா! கொதித்தனர்! ஆனால் டில்மன் கலக்கம் கொள்ளவில்லை; மரியாதையாக, ஆனால் உறுதி தளராமல் பதிலளித்தார்.
தம்பி! டில்மன் காட்டிய அமைதி கலந்த உறுதி என் மனதை வெகுவாக ஈர்த்தது; பலன் தரத்தக்க, நீண்ட காலம் நிலைத்து நிற்கத்தக்க வெற்றியினை ஈட்டிட விரும்புவோர் எத்தகைய போக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதற்கான பாடம் பெற்றிடச் செய்கிறது டில்மன் காட்டிய உறுதி, கலங்காத தன்மை, வீண் வாதிடாமை, விளைவு பற்றி பீதி கொள்ளாமை, நேர்மை பிறழாமை ஆகிய இயல்புகள், எளிதாகப் பெற்றுவிடக் கூடிய இயல்புகளா அவை!!
வேறோர் ஏட்டிலே பார்த்தேன் தம்பி! டர்னர் என்ற கருப்பு இனத் தீரன் ஒருவனைப் பற்றிய விவரத்தை. இர்விங்வாலஸ் எழுதிய 'மனிதன்' என்ற ஏட்டில், 'டர்னரைட் இயக்கம்' என்று குறிப்பிட்டிருக்கிறார்; டர்னர் என்ற புரட்சிக்காரரை நினைவிலே கொண்டுதான் வாலஸ் கருப்பரின் விடுதலை இயக்கத்துக்கு டர்னரைட் இயக்கம் என்று பெயரிட்டார் போலும்.
நான் படித்த மற்றோர் ஏட்டில், நாட்டர்னர் என்ற புரட்சியாளன் பற்றிய குறிப்பு, நெஞ்சினை உருக்குவதாக அமைந்திருக்கிறது. அந்த ஏடு கதைப் புத்தகம் அல்ல; உண்மை நிகழ்ச்சிகளின் தொகுப்பு. கருப்பரின் விடுதலைக்காக ஆர்வத்துடன் பாடுபட்ட நாட்டர்னர் என்ற நீக்ரோ 31 வயதினன் தூக்கிலே தொங்கவிடப்பட்ட போது; 'கருப்பு வழிகாட்டி', 'ஞானாசிரியன்', 'அவதார புருஷன்' என்றெல்லாம் புகழாராம் சூட்டினர், நீக்ரோ இனத்தவர்; வெள்ளை நீதிபதிகளோ அவன் கழுத்திலே சுருக்குக் கயிற்றினை வீசினர்; குடி, சூது, பொய், வஞ்சகம் எனும் எந்த விதமான கெடுமதியும் அற்றவன் இந்த விடுதலை வீரன்.
இவன் மனதிலே கொழுந்துவிட்டு எரிந்து வந்தது ஒரே ஒரு ஆர்வம், நீக்ரோக்கள் விடுதலை பெற வேண்டும், நிறவெறி ஒழிய வேண்டும் என்பது.
நிறவெறி ஒழிய மறுத்தது; அது கண்டு வெகுண்டெழுந்த நாட்டர்னர் நிறவெறியை விட மறுக்கும் வெள்ளையர்களை ஒழிப்பது என்று துணிந்தான், 1831-ம் ஆண்டு ஆகஸ்ட்டுத் திங்கள் 21-ம் நாள், புரட்சியை நடத்தினான். அவனுக்குத் துணை நின்றவர்கள் ஆறே ஆறு பேர், துவக்கத்தில்; பிறகோ வெள்ளையர்கள் வெடவெடக்கும் அளவுக்கு வளர்ந்தது பலாத்காரம்! வெள்ளையர் வெட்டி வீழ்த்தப்பட்டனர்! பிடிபட்டான்; தூக்கிலிடப்பட்டான் டர்னர்!
டர்னர் கொல்லப்பட்டான்; ஆனால் அவன் நடத்திய பலாத்காரப் புரட்சியால் வெள்ளையர் மனதிலே மூண்டு விட்ட பீதி மடிய ஆண்டு பல ஆயினவாம். எந்த நேரத்தில் எந்தப் பக்கம் இருந்து, எந்தக் கருப்பன் கிளம்பி, குத்திக் கொல்லுவானோ, வெட்டி வீழ்த்துவானோ, சுட்டுப் பொசுக்குவானோ என்ற பீதி.
டர்னர் தூக்கிலே போடப்பட்டு ஆண்டு இருபது கழிந்த பிறகும் அந்தப் பகுதி வெள்ளையர்கள் மனதிலே அந்தப் பீதி இருந்து வந்ததாம்!
டர்னரைட் இயக்கம் என்ற உடன் வெள்ளையர்கள் மனதில் இந்த டர்னர் பற்றிய நினைவும், அதன் தொடர்பாக மருட்சியும் கிளம்பத்தானே செய்யும். எனவே டர்னரைட் இயக்கத்தைத் தடை செய்ய டில்மன் மறுத்ததும் வெள்ளைப் பேரதிகாரிகள், அழிவை அரசபீடத்தில் அமர்த்தி விட்டோம் என்ற அச்சம் கொண்டனர்.
என்ன இருந்தாலும் டில்மன், கருப்பு இனமல்லவா! வெள்ளைப் பேரதிகாரிகள் எத்தனை வற்புறுத்தினாலும், நிக்ரோ இனத்துக்குத் துரோகம் இழைத்திட, சொந்த இனத்தைக் காட்டிக் கொடுக்க மனம் வருமா! தனது இரத்தத்தின் இரத்தம்! சதையின் சதை! தனது இனம் அந்த நீக்ரோ இனம் தன்மானத்துடன் வாழ்ந்திட உழைத்து வரும் ஒரு இயக்கத்தை ஒழித்துக்கட்ட டில்மன் எப்படி ஒப்புவார். நிமிர்ந்து நின்று மறுத்துவிட்டார்! அது அல்லவா வீரம்! அவனல்லவா மனிதன்! பதவி கொடுத்து, பக்கம் நின்று பசப்பு காட்டி பணிய வைத்திடலாம் என்று எண்ணினர் போலும். டில்மன் பதவி கண்டு பல்லிளிப்பவன் அல்ல! அறிவு மிக்கோன்! ஆற்றல் மிக்கோன்! இனப்பற்று கொண்டோன்! ஆகவே தான், டர்னரைட் இயக்கத்துக்குத் தடைவிதிக்க மறுத்து விட்டான் என்று நீக்ரோ இனத்தவர் எண்ணிக் களிப்புற்றனர்.
டில்மன், நிறப்பற்று இனப்பற்று காரணமாக இந்த முடிவினை மேற்கொள்ளவில்லை. வீண் பழி சுமத்தி ஒரு அமைப்பை ஒடுக்குவது நியாயமாகாது, நேர்வழி அல்ல, சட்டம் தந்துள்ள அடிப்படை உரிமைகளை அழித்திடும் செயலினை மேற்கொள்ளலாகாது என்பதனால் அந்த முடிவினை மேற்கொண்டார். டில்மனுடைய இந்த நேர்மை உணர்ச்சியினை கருப்பர் - வெள்ளையர் எனும் இரு சாராருமே உணரவில்லை.
கருப்பர் உலகு களிப்பினையும் வெள்ளையர் உலகு வெறுப்புடன் கலந்த கோபத்தினையும் வெளிப்படுத்திக் கொண்டிருந்த போது டர்னரைட் இயக்கம் உள்ளபடி பலாத்காரத்தில் ஈடுபட்டிருக்கிறது என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துவிடுகின்றன. கிடைத்ததும் டில்மன், டர்னரைட் இயக்கத்தைத் தடை செய்திட முடிவு செய்து விடுகிறான்.
தக்க காரணமின்றி இயக்கத்தைத் தடை செய்ய முடியாது என்று கூறிய போது எப்படி வெள்ளை இனத்தவர் கொதிப்படைவார்களோ என்பது பற்றிக் கவலையற்று, மனச்சாட்சிக்கு மட்டுமே மதிப்பளித்து நடந்து கொண்டாரோ, அதேவிதமாகவே, அந்த இயக்கம் பலாத்காரச் செயல்களிலே ஈடுபட்டிருக்கிறது என்பது மெய்ப்பிக்கப்பட்டதும், அதனைத் தடை செய்தால், கருப்பு இனத்தவர் தன்னைத் தூற்றுவார்களே, வெறுப்பார்களே, எதிர்ப்பார்களே என்ற கவலையற்று, நேர்மையாக நடந்து கொள்ள முற்பட்டார். தம்பி! இதற்குத் தேவைப்படும் நெஞ்சு உரம் பொதுப்பணியினில் ஈடுபட்டுள்ளோர் அனைவரும் முயற்சி செய்து பெற்றுக் கொண்டாக வேண்டிய ஒன்றாகும்.
கடமையைச் செய்திடும்போது, இனப்பற்று, பந்த பாசம், அச்சம், தயை தாட்சணியம் என்பவைகளுக்குக் கட்டுப்படும் போக்கு தலை தூக்குமானால், அதனைத் தூக்கி எறிந்துவிடும் துணிவு பிறந்திட வேண்டும்.
எந்த நீக்ரோ இனத்தவர் போற்றிப் புகழ்கிறார்களோ, எமது ஈடு எதிர்ப்பற்ற தலைவன்! எமது இனத்தின் காவலன்! வெள்ளையரின் மிரட்டலுக்குப் பணிந்திடாத அஞ்சா நெஞ்சன்! என்றெல்லாம் புகழாரம் சூட்டுகிறார்களோ, அவர்கள் கண்ணீர் ததும்பிட நிற்பார்களே, இவ்வளவுதானா இவன் ஆற்றல்? என்று கேலி பேசுவார்களே; அடிபணிந்து விட்டாயா வெள்ளையருக்கு! பதவி மோகம் தலைக்கேறி விட்டதா! இனம் அழிந்தாலும் சரி, வெள்ளை மாளிகையில் கொலுவிருக்கும் நிலை இருந்தால் போதும் என்று தீர்மானித்து விட்டானா! காவலன் என்றும் நாவலன் என்றும், வழிகாட்டி என்றும் புது வாழ்வளித்தோன் என்றும் வாய்வலிக்கப் போற்றிக் கிடந்தோமே! கருப்பரின் போற்றுதல் கால் தூசு! வெள்ளையரின் நேசமே பெரிது என்று கருதிவிட்டானா! வெற்றி பெற்று விட்டார்களா வெள்ளை நிற வெறியர்! கருப்பனைக் கொண்டே கருப்பரை அழிக்கும் காரியத்தை நடத்திக் காட்டுகின்றனரா, காலமெல்லாம் நம்மைக் கொடுமை செய்துவரும் காதகர்கள்!
வெள்ளை மாளிகையிலே ஒரு கருப்பர்! அடிமை இனத்தவன் அமெரிக்கக் குடியரசுத் தலைவன் என்று கூறிக்கூறிப் பூரித்துக் கிடந்தோமே! இதற்குத்தானா! இவன் வெள்ளை மாளிகையில் அதிபர் வேலை பார்க்கச் சென்றது, தனது இனத்தை அழித்திடத்தானா! கேட்பார் இல்லை என்ற நிலை போய்விட்டது நமது இனத்தவனே அரசாள்கிறான் என்று பெருமிதம் கொண்டோமே! அடிமை இனம், எத்ற்கும் தகுதியற்ற கூட்டம், என்றெல்லாம் ஏசி வந்தீர்களே, வெள்ளை இனத்தவரே! பார்த்தீர்களா, வெள்ளை மாளிகையை! யார் அங்கே வீற்றிருக்கிறார் தெரிகிறதா? ஒரு கருப்பர்! ஒரு நீக்ரோ! எங்கள் இனமணி! இப்போதாவது புரிகிறதா நீக்ரோ இனத்தின் பெருமை! இனியாகிலும் உம்முடைய மனதிலிருந்து ஒழியுமா நிறத்திமிர்; இனப்பகை! என்றெல்லாம் எக்களிப்புடன் பேசி வந்து தன் இன மக்கள் - நீக்ரோ மக்கள் - டர்னரைட் இயக்கத்தைத் தடை செய்திட முனைவது கண்டால், பதறிப் போவார்களே, பயந்து விடுவார்களே, பாதகா! என்று அலறிக் கூவித் துடிப்பார்களே, இனத்துரோகி என்று ஏசுவார்களே என்றெல்லாம் எண்ணி டில்மன் மனக் குழப்பம் அடையவில்லை.
வெகுண்டு எழுபவர் எவராக இருப்பின் என்ன! அவர் நிறம் எதுவாக இருப்பின் என்ன! எனக்குக் கட்டளை பிறப்பிக்கக் கருப்பருக்கும் உரிமை இல்லை; வெள்ளையருக்கும் இல்லை. என் உள்ளம் எனக்குக் கட்டளை பிறப்பிக்கிறது; தூற்றுவோர் தூற்றட்டும்; நான் என் கடமையைச் செய்திடுவேன் என்று துணிந்து நின்றான்.
தம்பி! உள்ள உறுதியுடன் நேர்மை வழி நடந்திட டில்மன் முற்பட்ட போது ஏற்பட்ட இன்னலையும் இழிவையும் படிக்கும்போது, உள்ளபடி மனம் உருகிடும்! அத்தனை இழிவுகளைத் தாங்கிக் கொள்ள முடிந்ததே அந்த நேர்மையாளனால், நம்மால் முடியுமா, நமக்கு அத்தகைய உள்ள உரம் இருந்திடுமா என்று பொதுப் பணியினில் ஈடுபட்டுள்ளோர் ஒவ்வொருவரும் எண்ணிடுவர். அந்த விதமாக அமைந்திருக்கிறது, அந்தக் கட்டம்! இழிவும் இன்னலும் தாக்கிடும் கட்டம்.
அழுகல் முட்டைகள் வீசப்படுகின்றன! கற்கள் பறக்கின்றன! காட்டுக் கூச்சல் கிளம்புகிறது! பேசாதே! போ வெளியே! துரோகி! காட்டிக் கொடுக்கும் கயவனே! என்று மூலைக்கு மூலை கண்டன ஒலி! தாக்கிடத் துணிந்தோர், அருகே நெருங்குகிறார்கள்! என்னென்ன ஆபத்து வருமோ என்று எண்ணத்தக்க விதமான பரபரப்பு! போலீசும் படையினரும் வளையம் அமைத்து, உயிருக்கு ஆபத்து வராமல் பாதுகாக்க வேண்டி நேரிடுகிறது. போய்விடலாம்! நிலைமை மோசமாவதற்குள் இந்த இடத்தை விட்டுப் போய்விடலாம்! இந்தக் கும்பல் எதற்கும் அஞ்சாது! கொலைகாரக் கூட்டம்! வெறி தலைக்கேறிவிட்டிருக்கிறது! அமெரிக்கக் குடியரசுத் தலைவர், அடித்துக் கொல்லப்பட்டார் ஆத்திரமடைந்த கும்பலால் என்று ஏற்பட்டுவிடுமானால் அது நாட்டுக்கே பெரிய அவமானம்; துடைக்கப்பட முடியாத கறை! என்றெல்லாம் கூறுகிறார்கள். டில்மனை, பாதுகாப்பான இடத்திற்குப் போலீசார் அழைத்துச் செல்கின்றனர்.
டர்னரைட் இயக்கம், பயங்கர நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறது என்பது மெய்ப்பிக்கப்பட்டிருப்பதால், அந்த இயக்கத்தைத் தடை செய்யும் சட்டம் பிறப்பித்துள்ளேன் - என்று டில்மன் அறிவித்ததும் கேட்டு மகிழவும், அவரை வாழ்த்தவும் கூடியிருந்த பெருந்திரள், பகை கக்குகிறது, பாய்ந்து வருகிறது தாக்க! போலீஸ் மும்முரமாகிறது. விழா நடத்திட முனைந்த பிரமுகர்கள் பீதி கொள்கின்றனர். மகன் கண்களில் நீர் கொப்பளிக்க நிற்கிறான். டில்மன் போலீஸ் வளையத்திலே நிறுத்தப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.
தம்பி! இத்தனை அமளியும் நடப்பதே ஒருவர் மனதை மெத்தவும் வாட்டிவிடும்;
அதிலும் வரவேற்று வாழ்த்தி, விழா நடத்துகிறார்கள்; அந்த இடத்திலே அந்த நேரத்தில் அமளி! 'கல்லெறி!' காட்டுக் கூச்சல்! இழிமொழிகள்! பழிச் சொற்கள்! என்றால் மனவேதனை மேலும் எந்த அளவு ஏற்படும்.
அதிலும், எந்தத் தகப்பன் இத்தனைப் பெரிய ஏற்றம் பெற்றிருக்கிறான் என்பது கண்டு பெருமிதம் கொண்டிருக்கிறானோ அந்த மகன் எதிரில் இந்த அமளி நடக்கிறது.
தந்தை வரவேற்கப்படுவதைக் கண்டுகளித்த கண்களால், ஆத்திரமடைந்த கூட்டம் அவரை விரட்டி அடிப்பதைக் காண்கிறான் - டில்மனுடைய மகன் கல்லூரி மாணவன்!
தன் தந்தையுடைய வருகை காரணமாக விழாக்கோலம் எழக்கண்டு களிப்படைந்திருக்கிறான் - மகன் - அவன் எதிரில் கல்லெறி - தந்தைக்கு!
நீக்ரோ இனத்தின் பெருமையை உயர்த்திய தலைவன் என்று தன் தந்தையைச் சான்றோர் வாழ்த்திடக் கேட்டான் களிப்புடன் - மகன் - அதே காதுகைல் நாராசம் பாய்கிறது.
தந்தை விழாக்கூடம் நுழையும்போது எத்தனை மரியாதை, என்னவிதமான அணிவகுப்பு, பிரமுகர்கள் முகமன்; இவைகளைக் கண்டான். அதை இடத்தில், அல்லோலகல்லோலம்! விடாதே! பிடி, அடி! குத்து! கொல்லு! என்ற மிரட்டல்! மாலைகள் அணிவித்தார்கள் அந்த மணிமாடத்தில் தந்தைக்கு! கற்களை வீசுகிறார்கள் அதே இடத்தில். காண்கிறான், கண்ணீர் உகுக்கிறான். ஆனால் அடப் பாவிகளே ஆகுமா இந்த அக்கிரமம்! அவரையா இப்படி இழிவு செய்கிறீர்கள். நமது இனத் தலைவனையா தாக்கக் கிளம்புகிறீர்கள் என்று அந்த மகனால் கேட்க முடியவில்லை, ஏன் டர்னரைட் இயக்கத்தை - கருப்பரின் பாதுகாவலனாக உள்ள அமைப்பை - ஒரு கருப்பரே தடை செய்யும்போது, இதுவும் நடக்கும் இதற்கு மேலும் நடக்கும் என்று எண்ணுகிறான். தந்தைக்கு ஏற்பட்ட இழிவு கண்டு தத்தளிக்கிறான். ஆனால் அவர் டர்னரைட் இயக்கத்தைத் தடை செய்தது நியாயம் என்று அவன் உள்ளம் ஏற்றுக் கொள்ள மறுத்தது. அவன் கல் வீசவில்லை, கண்டனக்குரல் எழுப்பவில்லை; ஆனால் கல் வீசியவர்களும் கண்டனக் குரல் எழுப்பியவர்களும், என்ன கேள்வியை எழுப்பினார்களோ அதே கேள்வியைத்தான் அவனுடைய கண்ணீர் எழுப்பிற்று.
டர்னரைட் இயக்கத்திற்குத் தடை விதிப்பதாக, டில்மன் வெள்ளை மாளிகையில் இருந்தபடியே அறிவித்திருக்கலாம். அமளி செய்திடும் கூட்டம் அருகே நெருங்கியிருக்க முடியாது. அழுகல் முட்டைகள் வீசிடக் கும்பலுக்கு முடிந்திருக்காது.
ஆனால் டில்மன், தடைச்சட்டம் பற்றிய அறிவிப்பு அளித்தது, மகன் பயிலும் கல்லூரியில் நடைபெற்ற விழாவில்!
கல்லூரி விழாவில் ஒரு நீக்ரோ தலைவர் சொற்பொழிவாற்ற அழைக்கப்பட்டதே, இதற்கு முன்பு நடைபெற்றிராத ஒரு சிறப்பு நிகழ்ச்சி. அந்த விழாவிலே கலந்து கொண்டு, டில்மன் டர்னரைட் இயக்கத்தின் மீது தடைவிதித்திருப்பதாக அறிவித்ததும், விழாக் கூடம் அமளிக் களமாகிவிட்டது.
எந்த இடத்தில் இதற்கு எதிர்ப்பு வெடித்துக் கொண்டு கிளம்பக் கூடுமோ அந்த இடமாகப் பார்த்து, சட்டம் பற்றி அறிவிக்க வேண்டும் என்ற எண்ணம் போலும் டில்மனுக்கு.
அமளி கண்டு மகன் கண்ணீர் சிந்துகிறான். வெள்ளையர்? எப்படி இருக்க முடியும்? ஒரு கேலிப் புன்னகை காட்டி இருப்பர்! மகத்தான வெற்றி என்று எண்ணிக் கொண்டிருப்பர்! குறும்புப் பார்வையைச் செலுத்தி இருப்பர்.
கருப்பர் தலைவனை எதிர்த்துக் கருப்பர் கூட்டம் அமளி செய்கிறது. வெள்ளைப் போலீஸ் அந்தக் கருப்புத் தலைவன் உயிருக்கு ஆபத்து வராதபடி பாதுகாப்பளிக்கிறது. இந்த வேதனை தரும் காட்சியைக் காணவா நான் இந்தக் கல்லூரியில் இருக்க வேண்டும் என்று எண்ணி, டில்மனுடைய மகன் வேதனைப் படாமல் இருந்திருக்க முடியுமா?
நிறவெறி கொண்ட வெள்ளையர் என்ன பேசிக் கொண்டிருந்திருப்பர்!
புயல் வீசுகிறது! நிலைமை புரிந்திருக்கும்.
புயல் இப்போதுதான் ஆரம்பமாகி இருக்கிறது. போகப் போகத் தெரியும் அதனுடைய வேகம்.
கருப்பரின் அமைப்பை ஒரு கருப்பர் தலைவன் தடை செய்யும்போதே இத்தனை அமளி நடக்கிறதே, வெள்ளை இனத்தவர் தடைச் சட்டம் கொண்டு வந்திருந்தால், பயல்கள் தலையையே சீவிவிட்டிருப்பார்கள் போலிருக்கிறதே!
தலையைச் சீவுவார்களா! யார்? கருப்பரா? பீரங்கிகள் எதற்கு இருக்கின்றன, அகன்ற வாயுடன்; ஒரு வெள்ளை இனத்தவன் மீது இந்த அழுகல் முட்டை விழுந்திருந்தால், கருப்புக் கும்பலின் மீது குண்டுகள் பொழிந்திருக்காதா? சும்மா விடுமா படை?
நடைபெற்ற குழப்பம், அமளி டில்மன் மனதை வாட்டாமலிருந்திருக்க முடியாது. ஆனால் கடமையைச் செய்தோம்; புரிந்து கொள்ளாதவர்கள் பகை கக்குகிறார்கள், அதற்காகக் கடமையிலிருந்து தவறலாமா? கூடாது! என்றுதான் எண்ணியிருப்பான். புயல் அந்த அளவோடு நின்று விடவில்லை.
'கனா' நிகழ்ச்சி - ஒரு எச்சரிக்கை!
நாட்டைக் குட்டிச்சுவராக்கிவிட்ட நாசகாலன்!
பொருளாதாரத் துறையைப் பாழ்படுத்தினவன்!
மக்களைப் பட்டினி போட்டுச் சாகடித்த பேயன்!
எதிர்க்கட்சிகளை ஒழித்துக்கட்டிய வெறியன்!
ஆடம்பர வாழ்வு நடாத்திய எதேச்சாதிகாரி!
எல்லாம் தனக்குத் தெரியும் என்று உறுமிய அகம்பாவக்காரன்!
ஏன் என்று கேட்பவர்களைச் சிறையில் தள்ளி வாட்டி வதைத்த காதகன்!
ஆளத் தெரியாதவன்! அகப்பட்டதைச் சுருட்டுபவன்! ஆணவக்காரன்!
'இருப்பை'த் தொலைத்துவிட்டான், நாட்டைக் கடனாளியாக்கிவிட்டான்.
வீண் பெருமைக்காகப் பணத்தை விரயம் செய்தான்!
தொழில் கெட்டது, விவசாயம் பாழ்பட்டது, வகையற்ற ஆட்சி நடத்தியதால்!
இன்று கனா நாட்டிலே இவ்விதம் பேசிக்கொள்கிறார்கள், எழுதுகிறார்கள், நிக்ருமாவைப் பற்றி ஆட்சியை ராணுவம் கைப்பற்றிக் கொண்ட பிறகு ஒரு புரட்சி சர்க்கார் அமைத்தான பிறகு பதவியைப் பறிகொடுத்து விட்டு, வேறு நாட்டிலே 'தஞ்சம்' புக வேண்டிய நிலைக்கும் துரத்தப்பட்டுவிட்ட நிக்ருமாவைப் பற்றி மிக வன்மையாகக் கண்டிக்கிறார்கள்; அவன் ஆட்சியின் கேடுகள் பற்றி, கொடுமைகள் பற்றி அடுக்கடுக்காக எடுத்துரைக்கிறார்கள்.
மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்கின்றனர்.
பாட்டாளிகள் களிப்படைந்துள்ளனர்.
மாணவர்கள் மமதையாளன் தொலைந்தான் என்று எக்காளமிடுகின்றனர்.
அதிகாரிகள் கூட அகமகிழ்ச்சி கொண்டுள்ளனர், என்றெல்லாம் கூறப்படுகிறது.
இவற்றில் பெரும்பகுதி, புரட்சிச் சர்க்காரின் பிரச்சாரத் தாக்குதலாக இருக்கக்கூடும்; மிகைப்படுத்திக் கூறுவதாக இருக்கக்கூடும். ஆனால் இந்தக் கண்டனத்தில் துளியும் உண்மை இல்லை என்று ஒரேயடியாகக் கூறிவிட முடியாது.
நிக்ருமாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டபோது, 'ஐயோ' என்று சொன்னவர்களோ, எப்படி அந்த ஆட்சியைக் கவிழ்க்கலாம் என்று கேட்டவர்களோ அதிகம் பேர் இருந்தாகத் தெரியவில்லை.
அவருக்காக எமது உயிரையும் கொடுப்போம்! எமது பிணத்தின் மீது நடந்து சென்றுதான் அவர் அமர்ந்திருந்த அரியணையைத் தொட முடியும் உங்களால் என்று வீரம் பேசியவர்களையும் அதிகமாகக் காணோம்; தியாகம் புரிய முன் வந்தவர்களும் இல்லை.
ஆட்சி கவிழ்க்கப்படுகிறது! புதிய புரட்சி சர்க்கார் அமைக்கப்படுகிறது! கனா நாட்டு மக்கள், இது நடைபெற வேண்டியதுதான் என்ற முறையில் இருந்து விட்டிருக்கிறார்கள்.
பெரியதோர் உருவச்சிலை; கரத்தை உயர்த்திக் காட்டிய நிலையில்; விண்ணை நோக்கிய பார்வையுடன் அமைந்த சிலை; நிக்ருமாவின் சிலை; நிக்ருமாவே திறந்து வைத்த சிலை! அதைக் கீழே தள்ளி உடைத்துப் போட்டிருக்கிறார்கள்; தலை துண்டிக்கப்பட்டுப் போயுள்ள அந்தச் சிலை தரையிலே உருட்டப்பட்டுக் கிடக்கிறது; அதைச் சிறுவர்கள் சூழ நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்! நேற்று வரை நாட்டை ஆண்டு வந்தவன் சிலை நொறுக்கப்பட்டுக் கிடக்கிறது; ஆத்திரம், ஆவேசம், அழுகை எதுவும் காணோம்.
இது கூட அல்ல விசித்திரம். இந்த அளவு கண்டிக்கப்படும் நிக்ருமா ஆட்சியில் இருந்தபோது - கடைசி நாள் வரையில் - இதே மக்கள் பயபக்தி விசுவாசம் காட்டி வந்தனர்.
கண்கண்ட தெய்வம் என்று கொண்டாடினர்.
ஏழைகளை வாழ்விக்க வந்த எம்மான் என்றனர்.
நாட்டை உய்விக்க வந்த பெம்மான் என்றனர்.
அவர் ஆற்றலை அவனி அறியும் என்றனர்.
ஆங்கிலர்க்கு அவருடைய பெயரைக் கேட்டாலே நடுக்கம் என்றனர்.
அவர் கனா நாட்டை மட்டுமல்ல, அடிமைப்பட்ட நாடுகளை எல்லாம் விடுவிக்க வல்ல தீரர் என்றனர்.
அவர் ஒரு நாட்டுத் தலைவர் மட்டுமல்ல, எழுச்சி பெற்ற ஆப்பிரிக்க கண்டத்துக்கே வழி காட்டி என்றனர்.
கருப்பருக்குப் புதுவாழ்வு தந்திட அவதரித்தவர் என்றனர்.
தீரம் - தியாகம் - ஆற்றல் ததும்பும் புதிய வரலாறு படைத்திடும் பெரியோன் என்றனர்.
அவர் கரம் அசைத்தால் போதும், நாடு கட்டுக்கு அடங்கும்; அவர் சொல் கேட்டால் போதும், படைகள் எட்டுத் திக்கிலிருந்தும் கிளம்பும் என்றனர்.
தன்னலமற்றவர்; தாயகம் வாழ்ந்திடத் தன்னையே அர்பணித்துக் கொண்டவர் என்றனர்.
இவற்றிலே குறிப்பிடத்தக்க பகுதி, நிக்ருமா ஆட்சியிலே நடத்தி வைக்கப்பட்ட 'பிரச்சாரம்' என்று கூறப்படலாம்; ஆனால் மக்கள் காட்டியதாகக் கூறப்படும் கனிவு முழுவதுமே 'போலி'யாக இருந்திருக்க முடியாது.
போலி எந்த அளவு, உண்மை எந்த அளவு என்பது எதிர்கால வரலாற்றுத் துறையினர் கண்டறிய வேண்டிய ஒன்று! இன்று ஒன்று நன்றாகத் தெரிகிறது. புகழாரம் சூட்டப்பட்டு விட்டிருப்பதாலேயே, புனிதன் என்று விருது வழங்கப்பட்டு விட்டிருப்பதாலேயே கவிழ்க்கப்பட முடியாதவன்; காலமெல்லாம் நிலைத்திருக்கத் தக்கவன், என்று கூறிவிடுவதற்கில்லை. பெரு மரம் வீழ்த்தப்படக் கூடும் - புயலின் வேகத்தால்! எம்மான் என்றும், பெம்மான் என்றும் புகழப்பட்டவனே எத்தன் என்றும், பேயன் என்றும் கண்டிக்கப்படக்கூடும். உதடும் உள்ளமும் உறவு கொள்ளாமல், வெறும் ஓசை மட்டும் கிளம்பியபடி இருக்கக் கூடும்.
கனா நாட்டிலே நடைபெற்றுள்ள திடுக்கிடத்தக்க நிகழ்ச்சி, அந்த நாட்டுக்கு மட்டுமல்ல, எம்மை அசைத்திடவும் ஆகாது எவராலும் என்று இறுமாந்து கிடந்திடும் பெருந் தலைவர்கள் எக்காளம் கிளப்பிடும் எந்த நாட்டுக்கும், ஒரு பாடம், ஒரு எச்சரிக்கை, ஒரு அபாய அறிவிப்புத் தருவதாக அமைந்திருக்கிறது.
விடமாட்டேன்! புரட்சிக்காரரைப் பொசுக்கியே தீருவேன்! காலம் வரும்; வெகுவிரைவில், கனா நாட்டில் வெற்றி நடை போடுவேன் என்று வீரம் பேசுகிறார் நிக்ருமா! இன்றோ அவர் ஒரு முன்னாள் ஆக்கப்பட்டுப் போய்விட்டிருக்கிறார். மீண்டும் கனாவை அவர் கைப்பற்றிப் பீடம் ஏறி அமர்ந்து, 'வட்டியும் முதலுமாக'ப் புரட்சி நடத்தியவர்களைத் தீர்த்துக் கட்டிவிட்டு, பழையபடி அரசாளத் தொடங்கினாலும், இப்போது நடைபெற்று விட்ட நிகழ்ச்சி இருக்கிறதே, அது இதயத்தில் ஏற்படுத்தியுள்ள 'வடு' மறையவே மறையாது. இவ்வளவுதானா இவர்களின் வாழ்வு! உலகம் பேசுகிறதே, அந்த ஏளனம் மாறாது. மீண்டும் கனா நாட்டு அதிபராக அவர் வருவதும் நடைபெறக் கூடியதாக இப்போதைக்குத் தெரியவில்லை. ஆப்பிரிக்காவிலே பெரியதோர் போர் மூண்டெழும் என்றாலும் கவலையில்லை என்று துணிந்து வல்லரசுகள் அவருக்காக வரிந்து கட்டிக் கொண்டு படை திரட்டி வந்தாலொழிய.
ஆப்பிரிக்க நாடுகளிலே சில, 'இது அக்கிரமம்! நிக்ருமா வீரன், தீரன், தியாகி, அவரை விரட்டுவதா! இது அநீதி! அவருக்காக நாங்கள், எதையும் செய்திடத் தயார்!' என்று கூறிய போதிலும் - கனா நாட்டு அதிபர், தமது 'முடி'யை நிக்ருமாவின் காலடியில் வைத்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது - ஐக்கியக் குடியரசுத் தலைவர் நாசர் 'மேல்மட்ட'த்தவர்களுக்கு இது குறித்து 'மடல்' விடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது - ஆப்பிரிக்க நாடுகளிலே மிகப் பல, புதிய சர்க்காரை ஏற்றுக் கொண்டு விட்டன.
நிக்ருமா, தன்னை ராணுவப் புரட்சிக் குழுவினர் கவிழ்த்து விட்டனர் என்றும் அறிந்து கொள்ளாமல் 'ராஜோபசாரம்' பெறச் சீனா சென்றபோது, அந்த நாட்டிலுள்ள கனா தூதரகம், புதிய சர்க்காருக்குக் கட்டுப்பட்டுவிட்டதாகத் தெரிவித்து, நிக்ருமாவவ 'அதிபர்' என்ற முறையில் வரவேற்க இயலாது என்று அறிவித்து விட்டது.
சீனத் தலைவர்கள், 'கனா நாட்டு விடுதலை வீரனே! வருக! ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணி நிற்போனே! வருக! மேற்கத்திய நாடுகளின் அகம்பாவத்திற்கு அஞ்சாத தீரனே! வருக!' என்று வாழ்த்தி வரவேற்றுக் கொண்டிருந்த அதே நேரத்தில், சீனாவில் அமைந்துள்ள கனா தூதரகத்தினர், தமது அலுவலக நுழைவு வாயிலில் தொங்கவிடப்பட்டிருந்த அதிபர் நிக்ருமாவின் படத்தை அகற்றிக் கொண்டிருந்தனர், அவர் 'காலம்' முடிந்துவிட்டது என்பதற்கு அறிகுறியாக.
நடைபெற்றுவிட்ட நிகழ்ச்சி நிக்ருமாவுக்கு அடக்க முடியாத ஆத்திரத்தை மூட்டிவிட்டிருக்கும். அதனை அனைவரும் உணர்ந்து கொள்ள முடியும். ஆனால், மீண்டும் கனா அதிபர் ஆவேன் என்று முழக்கமிடுகிறாரே அதனை ஒப்புக் கொள்ளப் பல நாடுகள் தயாராக இல்லை.
புதிய கனா சர்க்காரை இந்தியப் பேரரசு ஏற்றுக் கொண்டு விட்டது.
நிக்ருமா ஆட்சியைக் கவிழ்க்க கனா நாட்டு ராணுவத் தலைவர்கள் இரகசிய நடவடிக்கையில் முனைந்திருக்கும் போது தான், உலகில் சமாதானம் மலரச் செய்திட, குறிப்பாக வியட்நாம் போர் பற்றிய பிரச்சினையைத் தீர்த்து வைக்கப் 'புனித யாத்திரை' மேற்கொண்டிருந்தார் நிக்ருமா.
புதுடில்லி விமான நிலையத்தில் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அவர்களுடன் உலகப் பிரச்சினைகள் பற்றிக் கலந்து பேசினார்; கனா நாட்டுக்கு 'வருகை' தரும்படி இந்திரா காந்தி அவர்களையும் அழைத்திருக்கிறார்.
இவர் இங்கு உலகப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும்போது, அங்கே இவரை 'ஒழித்துக் கட்ட' வேலை நடந்து கொண்டிருந்திருக்கிறது.
ராணுவத்தார், எத்தனை திறமையுடன் தமது 'புரட்சி'த் திட்டத்தை எவரும் கண்டறிய முடியாதபடி வகுத்துள்ளனர் என்பதைக் காணும்போது வியப்பாகவே இருக்கிறது.
துளியாவது, 'குறி' தெரிந்திருக்குமானால், வாடை அடித்திருக்குமானால், நிக்ருமா நீண்டதோர் பயணத்தை மேற்கொண்டிருந்திருக்க மாட்டார்; இரண்டில் ஒன்று பார்த்துவிடுவோம் என்று துணிந்திருக்கக்கூடும்; ராணுவப் புரட்சியாளர்கள் தோற்கடிக்கப்பட்டிருப்பின் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பர்; அவர்கள் வெற்றி பெற்றிருப்பின், சிலைக்கு நேரிட்ட கதி நிக்ருமாவுக்கே நேரிட்டிருக்கக் கூடும்.
துளியும் திட்டம் வெளியே தெரியாதவண்ணம் தீட்டியிருக்கிறார்கள் என்பது மட்டுமல்ல, காட்டிக் கொடுக்கும் எண்ணமும் துணிவும் கொண்டவர்கள் யாரும், ராணுவத்தின் எந்த மட்டத்திலும் இல்லை என்பதும் இதனால் விளக்கமாகிறது.
ஆகவே இந்தப் புரட்சி, யாரோ சில விரல்விட்டு எண்ணக்கூடிய 'வெறியர்' நடத்தியதாகத் தெரியவில்லை; நீண்ட நாட்களாக மக்கள் மனத்திலே இருந்து வந்த குமுறல், வெடித்துக் கிளம்பியதாகவே தெரிகிறது.
குமுறல் கிளம்பியபோதே, கவனித்திருப்பின் புரட்சி வெடித்துக் கிளம்பியிருந்திருக்காது.
குமுறலுக்கும் முன்பே கருத்துத் தெளிவுள்ள ஆட்சியாளர், குமுறலுக்கான குறிகள் தோன்றிடுவதைக் கண்டிடுவர்.
புன்னகை மடிந்து கவலைக்கோடுகள் மக்கள் முகத்தில் பதிந்து, கண்கள் ஒளி இழந்து, பெருமூச்சுக் கிளம்பிடும் போது, இனி அடக்கிக் கொள்ள முடியாத அளவுக்கு அல்லல் வளர்ந்து விட்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம், அக்கறையும் அறிவுத் தெளிவும் உள்ளவர்கள் ஆட்சி நடத்தினால்.
அறிவுத் தெளிவு ஆள்பவர்களுக்கு இருக்க வேண்டும் என்பது மட்டுமல்ல, குறிப்பினில் நிறுத்த வேண்டிய உண்மை; அல்லற்பட்ட மக்கள் தமது மனக்குறையை அச்சமின்றி, தாராளமாக, எடுத்துக் கூறிடும் உரிமை பெற்றிருக்க வேண்டும் என்பதே அடிப்படை உண்மை.
வெடி மருந்தினைக் கெட்டித்து வைத்துள்ள 'குழாய்' போல, மனம் இருந்திடச் செய்வார்களானால், ஓர் நாள் அது வெடித்திடத்தான் செய்யும்; விபரீதம் தான் விளையும்! தடுத்திட முடியாது.
ஆட்சியாளரின் போக்கு பற்றியும், நடவடிக்கை பற்றியும், சட்ட திட்டம் பற்றியும் கட்டுக் காவல் குறித்தும் மக்கள் மனத்திலே 'குறை' தோன்றிடுமானால், அதனை வெளியே எடுத்துரைக்க வாய்ப்பும் உரிமையும் இருந்திடுமானால், புரட்சி மூண்டிடாது, இரத்தக்களரி ஏற்படாது.
என்னை ஆள்பவர்கள் எப்படி ஆளவேண்டும் என்று எடுத்துரைக்கும் உரிமையும், திருந்திடவும், தடுத்து நிறுத்திடவும் உரிமையும் அதற்கு இடம் கொடாவிடின், ஆட்சி நடத்துவோரையும், தேவைப்பட்டால் ஆட்சி முறையையும் கூட மாற்றிடும் உரிமையும், புதிய ஆட்சி, புது ஆட்சி முறை அமைத்துக் கொள்ளும் உரிமையும் எனக்கு உண்டு; நான் அந்த உரிமையுடன் என் கடமையைச் செய்திடும் போது, அலட்சியப்படுத்தவோ, அச்ச மூட்டவோ, அடக்கி ஒடுக்கவோ அரசு முனையாது என்ற நிலையில் குடிமகன் இருக்கும் நாடுகளில், கனா நாட்டிலே நடைபெற்றது போன்ற நிகழ்ச்சி எழாது; தேவையுமில்லை.
ஆனால், கனா நாட்டுக்கு உண்மையிலேயே 'ரட்சகர் என்று வந்த நிக்ருமா இந்த உரிமையைத் தர மறுத்து விட்டார். கொடுங்கோலராகி விட்டார் என்று பலரும் மனம் குமுறும் விதமாக நடந்து கொள்ளலானார்.
இது நிக்ருமாவுக்கு உள்ள இயல்பு; மக்களின் வாழ்வு பற்றி அவருக்கு அக்கறை கிடையாது; தைமூர், செங்கிஸ்கான் போன்ற இரத்தவெறி கொண்டலையும் போக்கு அவருக்கு என்றும் கூறிவிடுவதற்கில்லை.
கனா நாட்டு விடுதலைக்காக அயராது உழைத்தவர்; இன்னல் இழப்புகளை ஏற்றுக்கொண்டவர்; தன் நாட்டு மக்களை வாழவைக்க வேண்டும் என்று ஆர்வம் ததும்பும் உள்ளத்தினர்.
தன்னல மறுப்புப்பற்றி அவருக்கு ஒருவரும் கற்றுத்தர வேண்டியதில்லை. அவர் விடுதலை வீரராக விளங்கியபோது அதனை அவர் மற்றவர்களுக்கு ஊட்டியவர்.
எனவே இயல்பிலேயே அவர் கெட்டவர், ஆகவே தான் கேடான பல செய்தார்; இன்று கவிழ்க்கப்பட்டும் போய்விட்டார் என்று கூறிவிடுவதற்கில்லை.
கனா நாட்டின் விடுதலையைப் பெற்றளித்தபோது நாடே விழாக்கோலம் பூண்ட போது, வீட்டுக்கு வீடு அவரை 'வழிபடும்' அளவுக்குப் பாசம் ததும்பி வழிந்தது.
அவர் அரசாள முன்வந்ததும், தங்கள் அல்லல் யாவும் அழிந்தொழிந்தது என்று நம்பினர்; களிப்புற்றனர்.
தெருவெல்லாம் ஆடலும் பாடலும்; அவர் அரசாளும் நாளை விழாவாக்கினர்.
நிக்ருமாவின் புகழ், பாடலாக்கப்பட்டது; பள்ளிப் பிள்ளைகளுக்கு அவர் வரலாறு பாடநூல்! எங்கும் அவர் ஓவியம், அவருடைய சிலை! அவர் பெயரால் புதுப்புது அமைப்புகள்!
கருப்பர்கள் ஆளத் தெரியாதவர்கள் என்று ஏளனம் பேசினரே வெள்ளயர், பார்க்கட்டும் இப்போது, எத்தனை பெரிய ஆற்றல் கொண்டவர் எமது நிக்ருமா என்பதை என்று மார்தட்டிக் கூறினர். இத்தனை இன்ப இசையுடன் துவங்கப்பட்ட ஆட்சிதான் அவருடையது. பிறகு ஏன் அருவருக்கத்தக்க, கண்டிக்கத்தக்க, புரட்சி செய்தேனும் போக்கத்தக்கது என்று கருதத்தக்க செயல்களை அவர் மேற்கொண்டார்? மக்களைக் கொடுமையில் உழலச் செய்யவேண்டும் என்றா? இருக்க முடியாதே! ஆனால், காரணம் என்ன, ஆட்சிகெட? அடிப்படைக் காரணம் ஒன்றே ஒன்றுதான்; எல்லாம் நானே! என்ற நினைப்புத்தான்.
இந்த நாட்டை விடுவித்த விடுதலை வீரன் நானே!
அடிமைகளாக இருந்த மக்களை ஆற்றல் பெறச் செய்தவன் நானே!
இந்த நாட்டை ஆளத் தகுதியும் திறமையும் படைத்தவன் நானே!
இந்த நாட்டை நடத்திச் செல்லும் உரிமை பெற்றவன் நானே!
இந்த மக்களுக்கு வளமான வாழ்வு அமைத்திட தக்கவன் நானே!
இந்த மக்களுக்கு எது நல்லது என்பதை அறியத் தக்கவன் நானே!
இப்படிப் பிறந்தது ஓர் நச்சுக் கருத்து.
விழாக்கோலம் கலைந்த நிலையில், மக்கள் ஆட்சி நிலையில், மக்கள் ஆட்சியின் பலன்பற்றிய கணக்குப் பார்த்திடும் போது போதுமான சுவை கிடைத்திடாததால், இப்படித்தானா? என்று கேட்டிட முன்வந்தனர். வந்தது கோபம் நிக்ருமாவுக்கு!
எப்படி ஆட்சி அமையவேண்டும் என்பதுபற்றி என்ன தெரியும் - உங்களுக்கு?
எதை எப்படிச் செய்திட வேண்டும் என்பதுபற்றி அறிந்திடும் திறமை ஏது - உங்களுக்கு?
அடிமைகளாகக் கிடந்தவர்களை விடுவித்து மனிதர்களாக்கினேன் - புதுவாழ்வு தந்தேன் - உங்களுக்கு!
என்னையா ஏன் என்று கேட்கத் துணிகிறீர்கள்!
என்னிடமா கேள்விகளை வீசுகிறீர்கள்!
என்னை யார் என்று தெரியவில்லையா?
என்னைப் புகழ்ந்தீர்கள், பாராட்டினீர்கள், பூசித்தீர்கள்.
என்னை வருந்தி வருந்தி அழைத்தீர்கள் அரசாள! இப்போது கணக்கா கேட்கிறீர்கள் கணக்கு!
நான் அறிவேன், உங்களுக்கு எது நல்லது என்பதனை.
எனக்குத் தெரியும் எதை எப்படிச் செய்யவேண்டும் என்று.
என் சொல்லை நம்ப மறுக்கிறீர்களா? என் சொல்லை மீறத் துணிகிறீர்களா?
நான் இல்லாவிட்டால் கனா ஏது? விடுதலை ஏது? ஆட்சி ஏது?
இவ்விதம் வளர்ந்தன விபரீத எண்ணங்கள்.
ஆட்சியிலே பல கோளாறுகள், திட்டங்களிலே பல தவறுகள், நிர்வாகத்திலே பல முறைகேடுகள்; இவற்றின் பயனாக மக்கள் மனத்திலே குமுறல்.
குமுறல்! ஆனால் அதனை வெளியே காட்டிக் கொள்ள வழி இல்லை! உரிமை இல்லை!
நாட்டுக்கு நானே தலைவன்! நான் ஒருவனே தலைவன்!
நாட்டை ஆள நான் வைத்திருக்கும் கட்சி ஒன்றுக்குத்தான் உரிமை! வேறு எந்தக் கட்சியும் என் நாட்டில், இருந்திட நான் அனுமதிக்கப் போவதில்லை.
நோய் பிடித்துக் கொண்டது நிக்ருமாவுக்கு; ஆணவத் தடிப்பு நோய்.
ஒரே கட்சி ஆட்சியை அமைத்துக் கொண்டார். எண்ண, எண்ணியதைப் பேச, எழுத, மக்களிடம் தமது கருத்துக்கு ஆதரவு திரட்ட எந்தக் கட்சிக்கும் உரிமை கிடையாது.
மக்கள், அதிபர் இடையே வேறு தொடர்பு தேவையில்லை என்று கருதிவிட்டார்; மக்களைக் கெடுக்க வேண்டும் என்ற நினைப்புடன் அல்ல, எது நல்லது என்று தெரிந்து கொள்ளும் அறிவுத் தெளிவு மக்களுக்குக் கிடையாது என்ற அழுத்தமான - ஆனால், தவறான - நம்பிக்கை காரணமாக.
முன்பு வெள்ளையர் ஆட்சி நடத்தினர் - அவர்களின் விருப்பத்தையே சட்டமாக்கிக் கொண்டு, எதிர்த்துப் பேசும் உரிமையைத் தர மறுத்து, மீறி எதிர்த்திடத் துணிந்தவர்களைச் சித்திரவதை செய்யவும் கூசாமல்.
அவர்களை விரட்டிய வீரன் நிக்ருமா!
அவர்களை விரட்டிய எனக்கு, 'இதுகள்' எம்மாத்திரம் என்று தனது நாட்டு மக்களைப் பற்றியே ஒரு துச்சமான எண்ணத்தை வளர்த்துக் கொண்டார்.
நாலுபேர் நாலு வழி காட்டுவார்கள், நாலுவிதமாகப் பேசுவார்கள், மக்களைப் பிளவுபடுத்துவார்கள், குழப்பம் உண்டாக்குவார்கள், நல்ல காரியம் நடைபெற விடாது முட்டுக்கட்டை போடுவார்கள், பதவிக்காக அலைவார்கள், போட்டிகளை மூட்டுவார்கள்; பொல்லாங்கு வளரும், பொதுமக்கள் பாழ்படுவர்! - இவ்விதம் நிக்ருமா வாதிடலானார், உரக்கக்கூட அல்ல; தமக்குள்.
இதுபோலத்தானே வெள்ளையர் வாதாடினர்; கருப்பருக்கு என்ன தெரியும்? காட்டுப் பூச்சிகள்; நாமல்லவா எல்லாவற்றையும் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தோம்? ஆட்சி பற்றி என்ன தெரியும் அவர்களுக்கு? அதற்குத் தேவையான அறிவுத் தெளிவும் ஆற்றலும் அவர்களுக்கு ஏது? அவர்களுக்குத் தேவை சோறு, வீடு, வேலை! இதை நாம் தந்து வருகிறோம்; போதவில்லை என்றால் மேலும் கொஞ்சம் கேட்டுப் பெற்றுக்கொள்ளட்டும்; அதை விட்டு விட்டு, உரிமை வேண்டும். ஆட்சியிலே பங்கு வேண்டும். ஆட்சி எம்முடையது ஆகவேண்டும். எங்கள் நாட்டை நாங்கள் ஆளவேண்டும் என்று கூவுகிறார்களே, எப்படி இந்தக் கூச்சலைச் சகித்துக் கொள்ள முடியும்? நாடாம் நாடு! இது நாடாகவா இருந்தது நாம் வந்தபோது? - இவர்கள் மனிதர்களாகவா இருந்தார்கள் நாம் நுழைந்தபோது? இப்போது உரிமை கேட்கிறார்கள், முன்பு இந்தக் காட்டிலே உலவிக் கொண்டு வேட்டையாடி வயிறு வளர்த்துக் கொண்டு கிடந்தவர்கள்!! பாருங்களேன் அக்கிரமத்தை! - என்றுதான் வெள்ளையர் பேசினர்.
நிக்ருமாவும் அதே 'முடுக்குடன்' பேசத் தொடங்கி விட்டார்; கருப்பர் வெள்ளையராகிவிட்டார்!!
கட்சிகள் கிடையாது என்று ஆகிவிட்டதும், ஆட்சியிலே நடப்பது பற்றி 'நல்லது... கெட்டது' அறிந்து கூறிடும் உரிமை போயிற்று.
சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டன - நிக்ருமாவின் விருப்பப்படி.
அவை நல்லவையா அல்லவா என்பதுபற்றி ஆராய்ந்திட வாய்ப்பு இல்லை. கண்ணீர் பொழியும் நிலையில் இப்படி ஒரு சட்டமா? என்று குமுறலாயினர்; குறையினை வெளியே எடுத்துக் கூறிட வழி இல்லை, மனத்திலே புகை கப்பிக் கொண்டது; நச்சுப் புகை.
'ஒரே கட்சி' ஆட்சி என்ற முறையிலிருந்து, அடுத்த கட்டம் செல்வது வேகமாகிவிட்டது. ஒரே கட்சிதான், ஆனால் அதிலேயும், நான் ஒருவன் தான், எதற்கும்; மற்றவர்கள் நான் சொல்வதைச் செய்திட, நான் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்ல அல்ல! - என்று இலக்கணம் புகுத்திவிட்டார் நிக்ருமா! இதுவும் எல்லாம் தனக்குத் தெரியும்; தனக்கு மட்டுமே தெரியும், என்ற நினைப்பு தடித்துவிட்டதால்.
அதற்கு அடுத்த கட்டம், உடனிருந்து பணியாற்றுவோரை ஊழியக்காரர் போல நடத்துவது, கருத்து மாறுபாடு காட்டினால் கடுமையான நடவடிக்கை எடுப்பது, பதவியிலிருந்து விரட்டுவது, சிறையிலே தள்ளுவது - இப்படிச் சர்வாதிகாரம் வளர்ந்திடலாயிற்று.
'மந்திரிகள்' என்ற நிலையில் இருந்த பலரை, ஆத்திரத்தில் நிக்ருமா அடித்துவிடுவாராம், மந்திரிசபைக் கூட்டத்திலேயே! இப்போது தெரிவிக்கிறார்கள்!!
விடுதலைப் போராட்டத்தின்போது உடனிருந்த பல உயிர்த் தோழர்களை, தியாகிகளை, தன் கருத்தினை மறுத்தனர் என்ற காரணத்துக்காக, கொல்வது, நாடு கடத்துவது, சாகும்வரை சிறையிலே அடைத்துவைப்பது, சொத்தினைப் பறிமுதல் செய்வது என்றெல்லாம் வளர்ந்து விட்டது ஆட்சியின் அலங்கோலம்.
ஜனநாயகத்தின் பேரால் சர்வாதிகாரம் நடத்துபவர்கள்கூட நீதி மன்றங்களுக்கு உரிய மதிப்பு அளிப்பதுண்டு. நிக்ருமா, என்னைவிட நீதியின் தன்மையை உணர்ந்தவர்களும் இருக்க முடியுமா என்ற ஆணவம் தலைக்கேறிய நிலையில், ஒரு சதி வழக்கில், நிக்ருமாவின் விருப்பத்தைக் கருதாமல், உயர்நீதிபதி, சிலரைக் குற்றமற்றவர்கள் என்று கூறித் தீர்ப்பளித்தபோது வெகுண்டெழுந்து, நிதிபதியை விரட்டி விட்டதுடன் நீதிமன்றத் தீர்ப்புகளை மாற்றவும், நீதிபதிகளை நீக்கவும், தண்டிக்கவும் தனக்கே அதிகாரம் உண்டு என்று சட்டம் இயற்றிக் கொண்டு விட்டார்.
ராணுவம் ஒன்று மட்டும் இருந்தது! தனி அமைப்பாக, தனித் தன்மையுடன், வல்லமையுடன்.
அரசியலைக் காலடி கொண்டு வந்தாயிற்று; பாராளுமன்றம் தலையாட்டிகளின் கூடமாகிவிட்டது, நீதிமன்றம் தன் பேனாமுனையின் தயவில் கொண்டு வரப்பட்டாகி விட்டது. மக்களை, உழைத்திடு! உறங்கிடு! ஊராள நான் இருக்கிறேன், அது பற்றிய கவலையை விடு! என்ற கட்டுக்குள் அடைத்தாகி விட்டது. ராணுவம் ஒன்று மட்டும் தானே தலை காட்டிக் கொண்டிருக்கிறது; அதையும் அடக்கிட முனைந்தார்! தனக்குப் பிடிக்காத ராணுவத் தளபதிகளை நீக்கினார்! தானே முதல் தளபதி என்பதை மரபு ஆக்கினார்! இனி? இனி! உலகைக் கவனிப்போம்! என்றுதான் உலா கிளம்பினார். இனியும் விட்டுவைக்கக் கூடாது என்று ராணுவம் புரட்சி நடத்தி, நிக்ருமாவை நீக்கிவிட்டது.
எங்கோ ஒரு நாட்டிலே நடைபெற்ற பயங்கர நிகழ்ச்சி என்ற அளவிலும் முறையிலும் இதனை நோக்கினால் முழுப் பயனும் கிடைக்காது.
'ஒரே கட்சி சர்வாதிகாரம்' என்னென்ன விபரீதங்களை ஏற்படுத்தும் என்ற பாடத்தையும்,
மக்களின் மனக் குமுறல் கவனிக்கப்படாவிட்டால் பயங்கரமான விளைவுகள் எதிர்பாராத நேரத்தில் வெடித்துக் கிளம்பிவிடக் கூடும் என்ற பாடத்தையும்,
எல்லாம் எனக்கு மட்டுமே தெரியும் என்ற இறுமாப்பினை, மன்னன் - சீமான் என்பவர் மட்டுமல்ல, அரசாள முனையும் எவரும் கொள்ளக்கூடாது, மக்கள் அந்த ஆணவத்தை நெடுங்காலத்துக்குத் தாங்கிக்கொள்ள மாட்டார்கள் என்ற பாடத்தையும்,
உள்நாட்டிலே மக்களை அடக்கி ஒடுக்கி வைத்து விட்டு, 'உலகப் புகழ்' தேடிச் செல்வது, ஆபத்தை விலைகொடுத்து வாங்குவதாக முடியும் என்ற பாடத்தையும் பெற்றிட வேண்டும் இந்த நிகழ்ச்சியின் மூலம்.
மாற்றத்தக்கது ஆட்சி, நீக்கத்தக்கவர்கள் ஆள வந்தோர், தீர்ப்பளிக்கத்தக்கவர்கள் மக்கள் என்ற இலக்கணத்தின் அடிப்படையில் அமைக்கப்படாத அரசுகள், அடித்தளம் அற்ற கட்டடங்களாகும். மக்களின் கோபம் எனும் சுடும் காற்று வீசும்போது சரிந்து விழுந்து போகும்.
மக்கள் தமது மனத்திலே பட்ட குறைகளை எடுத்துக் கூறும்போது, பொறுமையுடன் கேட்டுக் கொள்ளவும், பொறுப்புணர்ச்சியும் பரிகாரம் தேடித் தந்திடவும், கனிவுடன் விளக்கமளித்திடவும், முன்வந்திடும் ஆட்சி ஆலெனத் தழைத்திடும்.
இந்த நல்ல இயல்பு 'ஒரே கட்சி' என்ற அரசியல் அமைப்பிலே வளராது, வாழாது. அது போலவே ஒப்புக்கு ஜனநாயகத்தை வைத்துக்கொண்டு எதிர்க்கட்சிகளை அலட்சியப்படுத்திக் கொண்டிருக்கும் போலி ஜனநாயக அமைப்பிலேயும் வளராது, வாழ்ந்திடாது.
இப்போது - கவிழ்த்தான பிறகு - குறைகளைக் கொட்டிக் காட்டுகிறார்கள், கனா நாட்டு ஆட்சியிலே நிக்ருமாவால் ஏற்பட்டுவிட்ட குறைகளை.
நிக்ருமாவிடம் ஆட்சிப்பிடி இருந்தபோது, வாய் திறந்திட முடியவில்லை. இப்போது தடுத்திட அவர் இல்லை. ஆகவே, எத்தனை தொல்லைகளை இத்தனை ஆண்டுகளாகத் தாங்கிக் கொண்டோம் தெரியுமா என்று 'கதை கதை' யாகக் கூறுகிறார்கள்; கண்டனத்தைப் பொழிகிறார்கள்.
1958-ம் ஆண்டு கனா விடுதலை பெற்ற போது, இருந்த 'இருப்பு' 2,000 இலட்சம் பவுன்கள்! இப்போது கனா, கடனாளியாக இருக்கிறது. யாரால்? நிக்ருமாவினால். ஏன்? எவருடைய யோசனையையும் ஏற்க மறுத்து, தன்னிச்சையாகச் செயலாற்றி நாட்டுப் பொருளாதார யந்திரத்தையே பாழாக்கி விட்டதால். இப்படிப்பட்ட நிக்ருமாவின் ஆட்சி தொலையத்தானே வேண்டும்! - என்று கேட்கிறார்கள் விவரமறிந்தோர்; ஆம் என்கிறார்கள் உண்மை நிலைமையை உணர்ந்தோர்.
கனா நாட்டுக்கார இதழாசிரியர் ஒருவர் நிக்ருமாவின் ஆடம்பரச் செலவு பற்றிய ஒரு கணக்கு விவரம் கொடுக்கிறார், இப்போது!
பதினாறாவது நூற்றாண்டு 'சக்ரவர்த்தி' போல, கோலாகல வாழ்க்கையிலே மூழ்கிக் கிடந்தார் நாட்டிலே வறுமையைப் படர வைத்துவிட்டு என்று அவர் குற்றம் சாட்டுகிறார்.
ஆண்டொன்றுக்கு அதிபர் நிக்ருமாவுக்கு 54,400 பவுன் சம்பளமாம்! கனா குடியாட்சித் தலைவர் என்பதற்காக 12,000 பவுன்; கனா பிரதம மந்திரியாக இருந்த வகையில் பென்ஷன் 2,400 பவுன்; குடும்பப் பராமரிப்பு செலவுக்காக 6,000 பவுன், சுற்றுப்பயணத்துக்காக 34,000 பவுன்; மொத்தத்தில் 54,400 பவுன்!
சுற்றுப்பயணச் செலவான 34,000 பவுன், அவர் சுற்றுப்பயணம் செய்தாலும், செய்யாவிட்டாலும் தரப்பட்டாக வேண்டும்.
ஐந்து அரண்மனைகளாம் நிக்ருமாவுக்கு.
கனாவை வெளிநாட்டு ஆட்சியிலிருந்து விடுவித்தாரே தவிர, நிக்ருமா தமக்கு ஆலோசனை கூற வெளிநாட்டுக்காரர் பதினைந்து பேர்களை உடன் வைத்துக் கொண்டுதான் ஆட்சி நடத்திவந்தாராம்! உள்நாட்டுக்காரர்கள்? கனா நாட்டார்? பலர் திறமை மிக்கவர்கள், சுயமாகச் சிந்திக்கத் தெரிந்தவர்கள். தவறு நேரிட்டால் எடுத்துக் கூறிடும் துணிவு பெற்றவர்கள் - சிறையில்! ஆட்சிக்கு எதிராக நடக்கிறார்கள், சதி செய்கிறார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டு.
மக்களுடைய வாழ்க்கைத் தரம் நாளுக்கு நாள் தேய்ந்து கொண்டிருக்கிறது; நாட்டு வருமானம் போதுமான அளவு வளரவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது; இப்போது.
கனா நாட்டை இந்தச் சீர்குலைவில் வைத்துக் கொண்டு நிக்ருமா ஆப்பிரிக்காவின் மற்றைய நாடுகளுக்கு விடுதலையும் புதுவாழ்வும் காணத் துடித்தார்; இதற்காகப் பணியாற்றும் ஆப்பிரிக்க நாடுகள் ஒற்றுமைக் கழகம் நடத்த முனைந்த மாநாட்டுக்காக என்று கடனில் சிக்கிக் கிடந்த கனா நாட்டில் பலப்பல இலட்சம் பவுன் செலவிலே ஒரு அரண்மனை அமைத்தாராம்!
நாளாகவாக மேலும் பலப்பல குற்றச்சாட்டுகள் வெளியிடப்படக்கூடும்.
கனா நாட்டுப் பொருளாதாரம் கொக்கோ ஏற்றுமதியைத் தான் பெரிதும் நம்பிக்கொண்டிருக்கிறது. நிக்ருமா ஆட்சியில் கொக்கோ பயிரிடப்படும் இடம் அதிகமாக ஆக்கப்பட்டது; ஆனால், கொக்கோவுக்கு உலகச் சந்தையில் இருந்துவந்த விலை சரிந்து விட்டதால், கனா நாட்டுப் பொருளாதாரத்தில் சீர்குலைவு ஏற்பட்டுவிட்டது; கொக்கோ பயிரையே நம்பி வாழும் கனா மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுவிட்டனர்.
எதிர்க்கட்சிகள் அனுமதிக்கப்பட்டு, உயிரூட்டமுள்ள ஜனநாயகம் நடைபெற்றிருக்குமானால், இந்த குறைகள் ஒவ்வொன்றும் தலைகாட்டும் போதே, கண்டனம் பிறந்திருக்கும், எச்சரிக்கை கிளம்பியிருக்கும், பொதுமக்களின் எதிர்ப்பு தோன்றியிருக்கும், நிலைமையை அரசு உணர்ந்திருக்கும், கேடு தவிர்க்கப்பட்டிருந்திருக்கும்.
ஆனால், அதற்குத்தான் நிக்ருமா வழிவைக்கவில்லையே! ஒரே கட்சி அல்லவா!! ஆகவேதான் கலம் கவிழும்போதுதான் வெளியே எடுத்துக்கூற முடிந்திருக்கிறது நிலைமையை.
ஜனநாயகம், கேடு தடுக்கப்பட வழிகாட்டுகிறது. சர்வாதிகாரம், பயங்கரமான இரத்தக் களரிக்குத்தான் அழைத்துச் சென்றிடும்.
ஜனநாயகத்தில், தவறு செய்யும் ஆளவந்தார்கள் பதவி இழந்திடுவர்; சர்வாதிகாரத்தில் தவறு செய்யும் ஆளவந்தார், விரட்டப்படுவார், சுட்டுக் கொள்ளப்படுவார்.
எனவே, ஜனநாயக முறை ஆள்பவர்களுக்கும் நல்லது, ஆளப்படுபவர்களுக்கும் நல்லது.
ஆனால், புதிதாக விடுதலை பெற்றுள்ள ஆப்பிரிக்க நாடுகள் பலவுமே, ஒரு கட்சி ஆட்சி முறையைத் தான் மேற்கொண்டுள்ளன; அதன் விளைவாகவே, அடுத்தடுத்துப் பல புரட்சிகள், ஆட்சி கவிழ்க்கப்படும் அதிர்ச்சிகள், ஆளவந்தார்கள் அழிக்கப்படும் பயங்கரங்கள் நடந்தபடி உள்ளன. இவைகள், ஜனநாயக முறையினைப் பாழ்படுத்தி வருபவர்களுக்கும், 'போலி'யாக்கி வருபவர்களுக்கும், நிலைமை காரணமாக நினைப்பிலே ஆணவத்தைப் புகுத்திக்கொண்டுள்ளவர்களுக்கும் ஒரு பாடமாக இருக்கவேண்டும்.
திட்டம் காணீர்! அணை பாரீர்! ஆலைகளைப் பாரீர்! அலங்கார மாளிகைகளைப் பாரீர்! என்று கூறி மக்களை மயக்கிவிட முடியாது என்பதற்கும் கனா நிகழ்ச்சி ஒரு சான்றளிக்கிறது.
நிக்ருமா, தனக்கு ஒரு நிலையான புகழும், கனா நாட்டுக்கு வளமும் தரத்தக்கதான வோல்டா நீர்த்தேக்கத் திட்டத்தை அமைத்தளித்தார். பாசனம் மட்டுமின்றி, மின்சார உற்பத்திக்கும் ஏற்றது இந்தத் திட்டம். தொழில் நடத்தும் அமைப்புகளுக்கு (அன்னியருடைய அமைப்பு) வோல்ட்டா திட்டத்திலிருந்து மின்சாரம் விற்பதன் மூலம் நல்ல வருவாய் கிடைக்கவும் வழி கிடைக்கிறது.
என்றாலும், மற்றத் துறைகளிலே மூண்டுவிட்ட கேடுகளும், ஊழலும் ஊதாரிச் செலவும், எல்லாவற்றையும் விட அகம்பாவப் போக்கும் சர்வாதிகார முறையும், வோல்ட்டா திட்டம் பற்றி எழக்கூடிய மகிழ்ச்சியைக்கூட மங்கச் செய்து விடுகிறது.
அதுபோலவே, பிறநாட்டுத் தலைவர்களின் நேசம், தொடர்பு, தோழமை, அவர்கள் சூட்டிடும் புகழாரம் ஆகியவற்றினைக் கொண்டு, உள்ளே புரையோடிக் கொண்டிருக்கும் ஒரு ஆட்சியை நிலைநிறுத்த முடியாது என்பதற்கும் கனா ஒரு எடுத்துக்காட்டு.
சீனா எனது நண்பன், ரஷியா எனது தோழன், எகிப்து எனது நேசன் என்று பட்டியல் காட்டினார் நிக்ருமா! சொந்த நாட்டு மக்களின் கனிவைப் பெறமுடியாமல், பெறுவதற்கு ஏற்ற முறையில் ஆட்சி நடத்தாமல், பிற நாடுகளிலே 'நற்சான்று இதழ்' பெறுவதிலே என்ன பலன் கிடைத்திட முடியும்?
தனி மனிதர் ஒருவருடைய புகழ், அவருடைய ஆட்சியின் அலங்கோலத்தத மூடி மறைத்திட உதவாது என்பதற்கும் கனா நிகழ்ச்சி சான்றளிக்கிறது.
உலகப் புகழ் நிக்ருமாவுக்கு! அவருடைய ஆட்சியைக் கவிழ்த்து புது ஆட்சியை நடத்த முன் வந்திருப்பவர்களின் பெயர் இன்னும் பழக்கத்திற்கே வரவில்லை என்றாலும், அமெரிக்காவும், பிரிட்டனும், பிரான்சும், நிக்ருமா உலகப்புகழ் பெற்றவர் - ஆகவே அவர் இல்லாத ஆட்சியை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று கூறிவிடவில்லை; புதிய ஆட்சியைச் சட்ட சம்மதம் பெற்ற ஆட்சி என்று ஏற்றுக் கொண்டு விட்டுள்ளன.
பிரிட்டனுடைய போக்கே இதுதானே! அமெரிக்காவுடைய போக்கும் இதுதானே! என்றும் கண்டித்து விடுவதற்கும் இல்லை. இந்தியப் பேரரசும் புதிய கனா சர்க்காரை அதிகார பூர்வமான சர்க்கார் என்று ஏற்றுக்கொண்டாகி விட்டது.
எந்த நாட்டை விடுவித்தாரோ, எந்த நாட்டிலே பாதம் பட்டால் மண்ணும் மணம்பெறும் என்று கருதப்பட்டதோ, அந்தச் சொந்த நாட்டிலே இனி நிக்ருமா நுழைய வேண்டுமானால், பெரியதோர் படையின் துணை வேண்டும். அந்த நிலை 'ஒரே கட்சி' ஆட்சியின் விளைவு.
இதனை இன்னமும் உணராமல்,
செனிகால்
காம்பியா
மவுரிடானியா
மாலி
சியாரா லியோன்
லைபீரியா
அய்வரி கோஸ்ட்
டோகோ
நைஜர்
சாட்
காமிரூன்
காபன்
காங்கோ
ரூவாண்டா
டான்ஜானியா
கெனியா
மாலவி
ஜாம்பியா
மலாக்சி
ஆகிய ஆப்பிரிக்க நாடுகளில் 'ஒரே கட்சி' ஆட்சி முறையைப் புகுத்தி வைத்துள்ளனர்.
உகந்தாவில் 'சர்வாதிகாரம்' துவக்கப்பட்டு விட்டிருக்கிறது.
விடுதலை பெற்ற வேறு பல ஆப்பிரிக்க நாடுகளில் ஒப்புக்கு எதிர்க் கட்சிகள் உள்ளன, உண்மையில் சர்வாதிகாரம் நடந்து வருகிறது.
இந்த நிலை கண்டுதான் மிக்க மகிழ்ச்சி அடைந்து சீனத்து சோ-இன்-லாய் ஆப்பிரிக்காவுக்கு ஆர்வத்துடன் பலமுறை பயணம் மேற்கொண்டார்.
அவர் கரம்பட்ட இடங்களிலே ஒன்று கனா!!
விடுதலை பெற்ற நாடுகள் உண்மையான ஜனநாயகத்தை மேற்கொண்டாலொழிய வாழ்வில் வளம் இல்லை என்பதை உணர்ந்து கொள்வதற்கும், விடுதலைக்காகப் பாடுபட்டவர்கள் என்ற விருது ஒன்றே போதும் எத்தனை அலங்கோலமான ஆட்சியையும் நடத்திக் கொண்டிருக்கலாம் என்ற நினைப்பு எத்தனை விபரீதத்தை, ஆபத்தை மூட்டிவிடும் என்பதையும் கனா காட்டுகிறது.
முப்பத்து இரண்டு வயதுள்ள ஒரு மாது 'நீதிபதியாக' அமர்ந்து மக்கள் வழக்கு மன்றம் நடத்தி, கனா நாட்டு அதிபராக இருந்த நிக்ருமா செய்த குற்றங்களை விசாரித்து அவருக்கு மரண தண்டனை விதித்தாராம்!
வேடிக்கைக்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சி, ஆனால் நிக்ருமா சிக்கினால், புதிய சர்க்கார் என்ன நடவடிக்கையை மேற்கொள்ளும் என்பதனை விளக்கிட உதவுகிறது.
ஆனால், மரண தண்டனை கூட பரவாயில்லை என்று சொல்லலாம்; எந்த மக்கள் வாழ்த்தி வரவேற்றார்களோ அவர்களுடைய வெறுப்பினை, அரசியல் ஆணவம் கொண்டதால் பெற்று, ஆண்ட நாட்டிலிருந்து விரட்டப்பட்டு, ஆட்சி பறிக்கப்பட்டு, 'அன்றொரு நாள்' பற்றி எண்ணி ஏங்கி ஏங்கி மனம் சின்ன பின்னமாகிவிடும் கொடுமை, மரண தண்டனையைவிட மோசமானது.
நாட்டை விடுவித்தவர் என்ற காரணத்துக்காக மக்கள் பாசம் காட்டுகின்றனர்; அது மக்களின் நல்லியல்புக்கு எடுத்துக்காட்டு. ஆனால், பாசம் கொண்ட மக்களை, இனி இவர்களை என்ன செய்தாலும் எதிர்க்க மாட்டார்கள் என்று ஆட்சியிலுள்ளோன் எண்ணிக் கொள்வது ஏமாளித்தனம்.
நாட்டை விடுவித்த நமக்கு எதிராகவா ஒரு புரட்சி நடத்திட முடியும்; நம்மையா ஆட்சியிலிருந்து விரட்டிட முடியும் என்று நம்பிக் கிடந்தார் கனா அதிபர்.
அவர் 'ஒரு கட்சி' சர்வாதிகாரம் செய்திட முனையாமல் உண்மையான ஜனநாயக ஆட்சியை நடத்தியிருப்பின் இந்தக் 'கதி' ஏற்பட்டிருந்திருக்காது.
பாசம் கொண்ட மக்களை ஏதுமறியாதவர்கள், எதையும் செய்ய இயலாதவர்கள் என்று எண்ணிக் கொண்டு சர்வாதிகாரம் செய்தார் நிக்ருமா. படைத்தலைவர்களோ, படையைக் காட்டி அவருடைய ஆட்சியைக் கவிழ்த்துவிட்டனர். 'தன்வினை தன்னைச் சுடும்! ஓட்டப்பம் வீட்டைச் சுடும்!' என்ற பட்டினத்தடிகள் பற்றிய கதையின் நினைவுதான் பலருக்கும் வரும் - கனா அதிபரின் வீழ்ச்சி பற்றி அறியும்போது.
ஒரு நாட்டை விடுவித்த பெருமை நிக்ருமாவுக்கு, அது வரலாற்றுச் சிறப்புமிக்க புகழ், ஐயமில்லை. ஆனால் அந்தப் புகழேவா மக்களுக்கு வாழ்வு அளித்து விடும்? பசி! பசி! என்று துடிப்பவனிடம், பசி போக்கிக் கொள்ள வழி தந்திடாமல் தனித்தனி முக்கனி பிழிந்து வடித்து ஒன்றாகக் கட்டிச் சர்க்கரையும் கற்கண்டின் பொடியும் மிகத் தூவி என்ற பாடலை இனிமையாகப் பாடிக் காட்டினால் பதறுவான், போதும்! போதும்! பசி தீர்ந்துவிட்டது என்றா கூறுவான்! நிக்ருமா மட்டுமல்ல தமது நாட்டுக்கு விடுதலை பெற்றுத்தந்தவர் என்ற விருது பெற்றவர்களில் மிகப் பலர் இது போலவே நடந்து கொள்கிறார்கள்.
அதற்குக் காரணம், விடுதலை வீரன் என்ற விருது இவர் பெற எத்தனை எத்தனை மக்கள் தமது இன்னுயிரையும் ஈந்துள்ளனர், இன்னல் இழப்புகளைக் கண்டுள்ளனர் என்பதனை மறந்து விடுவதும், கணக்கெடுக்கத் தவறிவிட்டதுமேயாகும்.
விளக்கிலே காணப்படும் ஒளிக்கு, அதிலே ஊற்றப்பட்டுள்ள எண்ணெய்த்துளி ஒவ்வொன்றும் தன்னைத் தானே அர்ப்பணித்திருக்கிறது, திரியின் ஒவ்வொரு இழையும் தன்னைத் தானே தந்து விட்டிருக்கிறது, இவற்றின் மொத்த விலையே ஒளி!
ஒரு நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்டு வெற்றி பெற்றவர் என்ற 'விருது' ஒருவருக்கோ, ஒரு சிலருக்கோ கிடைப்பதற்காக அந்த நாட்டில் 'ஊர் பேர்' தெரியாத எண்ணறவர்கள் உழைத்து உருக்குலைந்து போயுள்ளனர். அவர்களின் தியாகத்தின் விளைவின் காரணமாகவே, நாடு விடுதலை பெற்றிட முடிந்தது என்ற உண்மையை உணர்ந்திடின், எத்தனை பெரிய விடுதலை வீரனுக்கும் ஓர் அடக்க உணர்ச்சி ஏற்படும். அந்த அடக்கம் அவனது ஆற்றலைப் பன்மடங்கு அதிகமாக்கிடும்; பெருமையைப் பன்மடங்கு உயர்த்திடும்.
ஆனால், இந்த இயல்பு பலருக்கு எளிதாக இருப்பதில்லை, உச்சி செல்லச் செல்ல ஒரு மனமயக்கம் ஏற்பட்டு விடுகிறது.
எல்லாம் நானே! எதற்கும் நானே! நான் மட்டுமே! என்ற எண்ணமே தலைக்கேறி விடுகிறது. அப்போது அவர்கள் தம்மையும் அறியாமல் 'கொடுங்கோலர்' ஆகிவிடுகின்றனர்.
அப்படிப்பட்ட கொடுங்கோன்மை ஏற்பட்டுவிடுமானால், விடுவிக்கப்பட்ட மக்கள் மீண்டும் அடிமைகளாகப்பட்டுப் போவர். ஒரு சுமை கீழே தள்ளப்பட்டுப் புதுச்சுமை தலைமீது ஏற்றப்பட்டுவிடும் நிலை! தலைவலி போய் திருகுவலி வந்தது என்பார்களே அந்த நிலை.
மக்கள் உரிமையும் நலனும் பெற்று வாழ்ந்திடவே விடுதலை பெறுகின்றனர்; அந்த நோக்கம் ஈடேற வேண்டுமானால், மக்கள் மனதில் தமது கருத்தினைக் கேட்டறிந்து கொண்டுதான் ஆட்சி நடத்தப்படுகிறது என்ற உணர்வு எழவேண்டும்; அந்த உணர்வு உண்மையான ஜனநாயகத்திலேதான் பெறமுடியும். அந்த உணர்வை அழித்திட்டார், ஆகவே அவருடைய முன்னாள் 'புகழ்' கூட அவருக்குத் துணை நிற்க முடியவில்லை.
அவராகிலும் உள்ளபடி விடுதலைக்காகப் பணியாற்றியவர், பெருமைக்கு உரியவர், மக்களிடம் மார்தட்டிக் கூறமுடியும் 'நான் உங்களுக்காகப் பாடுபட்டவன் அல்லவா?' என்று. இங்கு பார்க்கிறோமே, விடுதலைக்காகச் சிறு விரலையும் அசைக்காத பேர்வழிகள் எல்லாம்கூட, அந்த முகாமில் நுழைந்து இடம் பிடித்துக் கொண்டதாலேயே, எக்காளம் கிளப்பிடும் உரிமை தமக்குக் கிடைத்து விட்டிருப்பதாக நினைத்துக் கொள்வதை.
வியர்வை பொழியப் பாடுபட்டேன் என்று விலாப் புடைக்கத் தின்றவன், சாப்பிடும்போது ஏற்பட்ட அலுப்புக் காரணமாகச் சிந்திய வியர்வையைக் காட்டினால் "ஆமப்பா!" வியர்வை கொட்டக் கொட்டத்தான் பாடுபட்டிருக்கிறார் என்று ஏமாளியன்றி வேறு யார் ஒப்புக் கொள்வார்கள்? கடுமையான வேலை முடிந்து விழா நடந்து விருந்துண்ணும் போது பந்தியிலே இடம் பிடித்துக் கொண்டதுகளெல்லாம் இங்கே 'வீரதீரம்' பேசும்போது, உள்ளபடியே நெருப்பாற்றில் நீந்தி வெளி வந்த நிக்ருமா, பெருமை பேசிக் கொள்ளக் கூடாதா? உரிமை உண்டு, ஆனால் அதையே காரணமாகக் காட்டி, கொடுங்கோலாட்சி செய்திடின்? நாடு ஒப்புக் கொள்ளாது என்பதனைக் காட்டுகிறது கனா நிகழ்ச்சி.
வெள்ளை மாளிகையில் என்ற தலைப்பில் நான் தந்து வந்த தொடர் கட்டுரையையும் இந்தக்கிழமை நிறுத்தி வைத்து, கனா பற்றி எழுதியதற்குக் காரணம், இந்த நிக்ருமா தன் ஆற்றலால் கனா நாட்டை மட்டுமல்ல, கருப்பர் இனம் முழுவதையுமே விடுவிக்க வந்தவர் என்ற விருது பெற்றவர், என்றாலும் நிதானம் இழந்ததால், மக்களை மதிக்க மறுத்ததால் கவிழ்ந்து விட்டார் என்பது. ஆட்சி எவ்விதம் இருந்தால் மக்களின் நிலையான ஆதரவைப் பெற்றிடும் என்ற பொதுவான பாடத்தை, வெள்ளை மாளிகையில் என்ற தொடர் கட்டுரையுடன் இணைத்துப் படித்துக் கொள்வது பயனளிக்கும் என்பதால்.
அது மட்டுமின்றி, நான் எழுதிக் கொண்டு வந்த தொடர் கட்டுரையிலும் நிக்ருமா தொடர்பு கொள்கிறார். எங்ஙனம் என்பதை இனிக் காணலாம்.
கருப்பு நட்சத்திரம்
"நான் படித்த எல்லா இலக்கியங்களிலேயும் என் உள்ளத்தில் அதிக அளவு எழுச்சியூட்டியது மார்க்ஸ் கார்வியின் தத்துவம் பற்றிய இலக்கியமே" என்று ஆர்வத்துடன் கூறினார் கனா நாட்டு அதிபராக இருந்து அகற்றப்பட்ட நிக்ருமா, 1958-ல். நீக்ரோக்களின் உரிமைக்காகவும் நல்வாழ்வுக்காகவும் போராடியவர்களிலே மிகத் தீவிரவாதி இந்தக் கார்வி. இவர் பற்றிப் பெரு மதிப்புக் கொண்டவர் நிக்ருமா. அக்ராவில் 1958-ல் நடைபெற்ற அகில ஆப்பிரிக்க மக்கள் காங்கிரசில் பேசும் போது கார்வியைப் பெரிதும் பாராட்டிப் பேசியதுடன், கனா நாட்டுத் துரைத்தனம் அமைத்த வியாபாரக் கப்பல் அணிக்கு, நிக்ருமா, "கருப்பு நட்சத்திர அணி" என்று பெயருமிட்டார். எந்தக் கார்வியிடம் நிக்ருமா அத்தனை மதிப்பு வைத்திருந்தாரோ, அவர் பொறிபறக்க பேசினவர், புதுப்புதுத் திட்டம் தீட்டியவர் - துணிவுடன் போராடியவர், ஆனால் நிர்வாகத்தைத் திறம்பட நடத்திச் செல்லாமல் தோல்வி கண்டவர்.
பல ஆண்டுகள் கார்வியின் புகழ் நாடு பலவற்றினிலே பரவி நின்றது. கருப்பரின் கஷ்டமெல்லாம் இனித் தீர்ந்து போகும், விடுதலையும், புதுவாழ்வும் கிடைத்துவிடும் என்று எண்ணற்ற நீக்ரோக்கள் நம்பினர். மார்க்ஸ் கார்வி, நீக்ரோக்கள் அமெரிக்காவில் இருந்துகொண்டு அல்லலையும் இழிவையும் தாங்கிக் கொண்டிருப்பானேன், அவர்களுக்கென்று தாயகம் இருக்கிறது, ஆப்பிரிக்கா! அங்கு சென்று உரிமையுடன் வாழ்ந்திடலாம்! எழுக! என்னுடன் வருக! ஆப்பிரிக்கா சென்றிடுவோம், அங்கு நமது அரசு கண்டிடுவோம்! என்று அழைத்தார். எழுச்சி ததும்பிற்று. மேற்கிந்தியப் பகுதியில் பிறந்த இந்தக் கார்வி அமெரிக்க நீக்ரோக்களின் மாபெரும் தலைவரானார். ஆப்பிரிக்கா சென்றிடுவது என்ற அவருடைய திட்டம், சொல்லளவுடன் இருந்து விடவில்லை; ஏற்பாடுகளே மேற்கொள்ளப்பட்டன. கப்பல்கள் தயாரிக்கப்பட்டன; பெருநிதி திரட்டப்பட்டது; பல இலட்ச நீக்ரோக்கள் புனிதப் பயணத்துக்குத் தயாராயினர், மூன்று கப்பல்கள் கிளம்பின! அந்தப் பயணக் கம்பெனிக்கு கார்வி சூட்டிய பெயர்தான் 'கருப்பு நட்சத்திரம்' என்பது. அந்தப் பெயரைத் தான் ஆட்சியில் அமர்ந்த போது நிக்ருமா கனா நாட்டுக் கப்பல் அணிக்குச் சூட்டினார்.
நிக்ருமாவுக்கு எழுச்சியூட்டத்தக்க சிறப்புப் பட்டங்கள் பல உண்டு; அதுபோலவே கார்விக்கும் தளபதிகளாக்கப்பட்டவர்களுக்கும் விதவிதமான பட்டங்கள்.
ஆப்பிரிக்க மாமன்னர் - மன்னர் - அமைச்சர் - தளபதி - என்றெல்லாம் பட்டங்கள். எல்லாம் அமெரிக்காவில் இருந்து கொண்டே! கார்வி ஆப்பிரிக்காவில் காலடி வைத்ததே இல்லை; ஆனால் பல ஆண்டுகள் அமெரிக்காவில் அவரைச் சுட்டிக் காட்டுவர் பெருமிதத்துடன், ஆப்பிரிக்க மாமன்னர் என்று!
பட்டங்கள் மட்டுமல்ல, அவைகளுக்கேற்ற விதமான பகட்டுடைகள்! பவனிகள்! பராக்குகள்!
கார்வி தோற்ற பிறகு இவை பற்றிப் பலர் ஏளனம் செய்தனர்; ஆனால் அவர் புனிதப் பயணம் பற்றிய திட்டத்தை எடுத்துரைத்துக் கொண்டிருந்தபோது ஏளனம் செய்தவர் எவரும் இல்லை. எங்கும் எழுச்சி மயம்!!
அப்போது நிக்ருமா, அமெரிக்காவில் மாணவர்!
அந்த இளம் உள்ளத்தில் பதிந்துவிட்ட எழுச்சி காரணமாகவே, நிக்ருமா ஆட்சிக்கு வந்தபோது, கார்வியே தனக்கு 'வழிகாட்டி'யாக விளங்கிவந்தார் என்று கூறிடச் செய்தது.
அடிமைப்பட்டு, இன்னலையும் இழிவையும் தாங்கித் தாங்கிக் குமுறிக் கிடக்கும் மக்களுக்கு, விடுதலை ஆர்வம் ஊட்ட, எழுச்சி உண்டாக, ஒரு நம்பிக்கை எழவேண்டும். அந்த நம்பிக்கையைத் தரத்தக்க ஒரு மாவீரன் வேண்டும்.
கார்வி அந்த மாவீரனாக விளங்கினான். ஆனால் எழுச்சியூட்டப் பயன்பட்ட அந்த மாபெருந் தலைவன் தானே எழுச்சி வயப்பட்டு, நடைமுறைக்கு ஏற்றதல்லாத திட்டம் தீட்டி, தோல்வி கண்டான்; சிறையிலே தள்ளப்பட்டான்; நாடு கடத்தப்பட்டான்.
நீக்ரோ இனத்தவரை அழைத்துச் சென்று மாபெரும் ஆப்பிரிக்கப் பேரரசு அமைக்கப் போவதாக அறிவித்து, அணிவகுப்பு நடத்திய கார்வி தன் கடைசி நாட்களை, இலண்டன் நகரில் கழிக்க வேண்டியதாயிற்று; கனவு கலைக்கப்பட்ட நிலையில்; மனம் உடைந்த நிலையில் கவனிப்பாரற்று! நட்சத்திரம் கருப்பாகி விட்டது!
இலட்சியங்களைக் கொண்டு எழுச்சியூட்டுவதிலேயே வெற்றி கிட்டியான பிறகு, மக்களை அணி திரட்டியான பிறகு, செயலில் ஈடுபட்டு, இலட்சியத்தை நிறைவேற்றிட முனையும் போது ஏற்படும் ஏமாற்றம் தோல்வி வரலாற்று ஏட்டினிலே பலப் பல காணக் கிடக்கின்றன. இலட்சியம் காண்பதில், அதனை மக்கள் ஏற்று கொள்ளச் செய்வதில் வெற்றி கண்டவர்களிலேயே பலர், இலட்சியத்தை நடைமுறை வெற்றியாக்கிடும் முயற்சியில் தோல்வியால் தாக்குண்டு போயுள்ளனர். காலம் ஏற்றதாக அமையாததாலும் கருவிகள் செம்மையாகக் கிடைக்காததாலும், புதிய சூழ்நிலைகள் எதிர்பாராதவகையிலே வடிவமெடுத்து விடுவதாலும், அத்தகைய தோல்விகள் ஏற்பட்டு விடுகின்றன.
அந்தத் தோல்விகள் எல்லாமே இலட்சியம் சரியானதல்ல என்பதற்குச் சான்றுகள் என்று கொண்டுவிடக் கூடாது.
தோல்வி தாக்கிடும் என்று அஞ்சி இலட்சியங்களை மேற்கொள்ளாதிருப்பதும் தவறு; நடைமுறைக்கு ஏற்றதோ அல்லவோ என்பது குறித்த கவலையற்று காலமும் கருவியும் தக்கவிதமாக அமைகின்றனவா என்பதுபற்றிப் பொருட்படுத்தாமல், வெறும் இலட்சியமுழக்கம் எழுப்பியபடி இருந்து வருவதும் பயனற்ற வேலையாகிவிடும்.
குழலின் துளைகள் சரியானபடி அமைத்து விடுவதாலேயே அதனைக் கொண்டு எவரும் இன்னிசை எழுப்பிடலாம் என்று எண்ணுவதும் தவறு; அதுபோலவே திறமைமிக்க இசைப் புலவன் நான்! எனவே சூழலின் துளைகள் எப்படித் தாறுமாறாக இருப்பினும் இனிய இசையினை எழுப்பிட என்னால் முடியும் என்று இறுமாந்து கூறுவதும் தவறு.
மக்கள் நம்முடன் வருவார்களா அவர்களால் முடியுமா கடினமான பயணம் மேற்கொள்ள என்று எண்ணி எண்ணித் தயங்கிப் பயணத்தைத் துவக்காமல் இருந்து விடுவதும் தவறு. மக்கள் தன்னோடு வருகிறார்களா இல்லையா என்பது பற்றிய கவலையற்று பயணத்தை மேற்கொண்டு விடுவதும் பயனற்றதாகிவிடும்.
ஆர்வம் காரணமாக, எந்தத் திட்டமும் எளிதாக நிறைவேற்றிவிடக் கூடியது என்ற 'மனமயக்கம்' ஏற்பட்டுவிடுவதுண்டு; ஆனால் அந்த மயக்கம் பீடித்து கொண்ட நிலையிலே செய்துவிடும் செயல் வெற்றிக்கு வழி அமைப்பதில்லை.
அச்சகத் தொழிலாளியாக வாழ்க்கையைத் துவக்கிய கார்வி ஆர்வம் கொந்தளிக்கும் உள்ளத்தினராக கொடி, படை, முழக்கம் அமைத்துக் கொண்டு 'ஆப்பிரிக்கப் பேரரசு அமைத்திடுவேன்' என்று சூள் உரைத்துக் கிளம்பியபோது, வெற்றி நிச்சயம் என்றுதான் நம்பிக் கொண்டிருந்தார்.
பச்சை - கருப்பு - சிகப்பு - என்ற விதமான மூவர்ணக் கொடியினைப் பறக்கவிட்டார் கார்வி! கருப்பு, இனத்திற்குச் சின்னம்; சிகப்பு இரத்தம் சிந்தியேனும் வெற்றி காண்போம் என்பதனை உணர்த்த; பச்சை - வளமான வாழ்வு அமைந்திடும் என்பதற்கான அடையாளம்!
கிட்டத்தட்ட பத்து இலட்சம் டாலர்கள் திரட்டினார், புனிதப் பயணத்துக்காக. கப்பல்கள் கிளம்பின! வழியிலேயே இன்னல், இழப்பு! திரட்டிய பணத்தைக் கொண்டு செம்மையாக அமைப்பை நடத்திட முடியவில்லை. பணம் திரண்டதும், பசப்பித் திரிவோர், பல்லிளிப்போர், பறித்துத் தின்போர் மொய்த்துக் கொண்டனர். பணம் பாழாயிற்று. பொதுமக்களிடம் பணம் திரட்டி மோசம் செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. கார்விக்கு ஐந்தாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இரண்டாண்டுச் சிறை வாழ்க்கைக்குப் பிறகு கார்வியை அமெரிக்க அரசு நாடு கடத்திவிட்டது. அவ்வளவோடு அவர் 'கதை' முடிந்தது.
கார்வியை, மாணவ நாட்களிலே கண்டு களித்து, எழுச்சி பெற்ற நிக்ருமாவும், தனது நாட்டை வாழவைக்க வேண்டும் என்ற ஆர்வம் கொழுந்து விட்டெறியும் உள்ளத்தினர்; அதிலே ஐயமில்லை. ஆனால் நடைமுறைக்கு ஏற்றதா அல்லவா என்பதுபற்றி எண்ணிப் பார்த்திடாமல் திட்டம் பல மேற்கொண்டதுடன், எவருடைய கருத்தையும் மதிக்க மறுத்து, ஜனநாயகத்தைச் சிதைத்து ஒரு கட்சிச் சர்வாதிகாரத்தைத் திணித்தார்; எல்லாம் நாட்டின் நன்மைக்காகவே!! ஆனால் நாடு தாங்கிக் கொள்ள மறுத்துவிட்டது. எந்த நாட்டிலே அவரை 'வழிபட்டு' நிற்க மக்கள் துடித்துக் கிடந்தனரோ, அதே நாட்டிலே அவர் இனி 'படையுடன்' வந்து போரிட்டு வெற்றி பெற்றாலன்றி 'பவனி' வந்திட முடியாது என்ற நிலை.
ஜனநாயகம் சிதைக்கப்பட்டால் ஏற்படக்கூடிய கேட்டினைக் கனா நிகழ்ச்சி எடுத்துக் காட்டுகிறது; அது போன்றே ஜனநாயகத்தை போலியானதாக்கி, ஆட்சி செய்பவரை 'தலையாட்டி' யாக்கிட தருக்கர் சிலர் முனையக் கூடும்; அதிலும் நிறவெறி காரணமாக அந்தத் தருக்கு ஏற்பட்டிருப்பின் எத்தகைய அக்கிரமத்தையும் துணிந்து செய்வார்கள் என்பதை எடுத்துக் காட்டுகிறார் இர்விங் வாலாஸ், தாம் எழுதிய கருத்தாழம் மிக்க மனிதன் என்ற ஏட்டின் மூலம்.
வெள்ளையருக்கு அஞ்சி அநீதிக்கு அடிபணியவும் மாட்டேன்; கருப்பர் என்ற இனப்பாசத்திற்காகவும் அநியாயத்துக்குத் துணை நிற்கவும் மாட்டேன் என்று டில்மன் பேச்சால் அல்ல, செயலால் காட்டியது கண்டு வெகுண்ட வெள்ளைப் பேரதிகாரிகள், அவர் மீது 'கண்டனம்' தொடுத்தனர்.
தகுதியற்றவர்
தருக்கர்
காமவெறி பிடித்தவர்
சதிகாரருக்குத் துணை நிற்பவர்
என்ற பல்வேறு வகையான குற்றங்களைச் சுமத்தினர்.
தம்பி! இனம், ஜாதி, குலம், செல்வம், என்பவை காரணமாக அமைக்கப்பட்டுவிடும் பேத உணர்ச்சி இருக்கிறதே, அதனால் ஆட்டிப்படைக்கப்படுபவர்கள், சொல்லிடவும் கூசும் கொடுமைகளைச் செய்திடவும் துணிவர்; இனப்பெருமை காப்பாற்றப்படவேண்டும் என்பதற்காக, கொலையும் துணிந்து செய்திடுவர்.
நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நாட்களில் - ஜாதிப் பிடிப்பு இன்றுள்ளதைவிட பயங்கரமான அழுத்தத்துடன் இருந்தது; அந்த நாட்களில், ஜாதி வெறிபிடித்தவர்கள் எத்தகைய கொடுமையைச் செய்யத் துணிவர் என்பதனை எடுத்துக் காட்டும் ஒரு பயங்கரச் சம்பவம் நடைபெற்றதாகக் கேள்விப்பட்டு கிடுகிடுத்துப் போனேன்.
தன்னை சற்று மேல்ஜாதி என்று கூறிக் கொண்டு தமது மகளை மணமுடித்துக் கொண்டவன் உள்ளபடி தம்மைவிடச் சிறிதளவு 'மட்டமான' ஜாதி என்று அறிந்து கொண்ட பெண் வீட்டார், என்ன செய்தனர் தெரியுமோ! தாலியை அறுத்துப்போடு! அந்தத் தகாதவனுடன் செய்து கொண்ட திருமணம், சாஸ்திர சம்மதம் பெற்ற திருமணம் அல்ல!! - என்று கூவிக் கொக்கரித்து 'மாப்பிள்ளை'யை விரட்டிவிட்டு, பெண்ணைத் தமது வீட்டோடு வைத்துக் கொண்டார்கள் என்று எண்ணிக் கொள்ளுவாய். அவ்விதம் செய்யவில்லை! ஊரிலே கேள்வி பிறக்காதா? ஏன் பெண் மாப்பிள்ளை வீட்டுக்குப் போகவில்லை? என்ன தகராறு சம்பந்திகளுக்கு? என்று கேள்விகள் துவங்கி, கடைசியில் 'மட்ட ஜாதி'க்காரனுக்குப் பெண்ணைக் கொடுத்துவிட்டார்களாம் என்ற உண்மை அம்பலமாகி, ஊர் ஏசுமே, ஏளனம் செய்யுமே! காலத்துக்கும் இருக்குமே அந்தக் கறை!! ஆகவே வெளியே சொல்லவில்லை. உண்மை தெரிந்துவிட்டது என்று மாப்பிள்ளையே கூடத் தெரிந்துகொள்ள விடவில்லை. புன்னகை காட்டியபடி இருந்தனர். மாப்பிள்ளை 'விருந்து' சாப்பிட வந்தவர், மாலையில் உலவப் போனார்! இரவு பிணத்தைத்தான் தூக்கிக் கொண்டு வந்து போட்டனர்; யாருக்கும் தெரியாமல், ஆளைவிட்டு அடித்துக் கொன்று போட்டு விட்டனர். மகளை விதவையாக்கினர், ஜாதி கெடக்கூடாது, ஜாதி காரணமாக இருந்து வந்த மதிப்பு மடியக் கூடாது என்பதற்காக; கொலையே செய்தனர், குலப் பெருமையைக் காப்பாற்றிக் கொள்ள! பெரிய இடம்! ஒரு துப்பும் கிடைக்கவில்லை! ஒரு புகாரும் எழவில்லை!! இங்கு மங்குமாக, மெள்ள மெள்ளப் பேச்சுக் கிளம்பிற்று.
இருக்கும்! இருக்கும் என்றவர்களும்,
இதை எல்லாம் யார் கண்டனர் என்றவர்களும்,
இல்லாமல் பிறவாது அள்ளாமல் குறையாது என்றவர்களும்
நிரம்ப இருந்தனர்; இந்த அக்கிரமம் ஆகுமா என்று கேட்க எவரும் கிளம்பவில்லை. அது மட்டுமல்ல, தம்பி! ஜாதியைக் கெடுத்துக் கொள்ள எவனய்யா சம்மதிப்பான்? என்று கேட்டவர்களும், "வேறே வழி! தீர்த்துக் கட்டுவது தவிர வேறு வழி?" என்று 'நியாயம்' பேசியவர்களும், அவன் செய்த அநியாயத்துக்கு அவனை வெட்டி வெட்டியல்லவா போட்டிருக்க வேண்டும் என்று கொதித்துக் கூறியவர்களும், கொலை! கொலை! என்று பேசுகிறார்களே! பாம்பைச் சாகடிக்காமல், படுக்கையில் புரளவிடுவார்களா! ஜாதியைக் கெடுக்க வந்தவனைச் சாகடித்துப் போடாமல், சந்தனத் தாம்பூலம் கொடுப்பார்களா! என்று பேசியவர்களும் இருந்தனர், பெரிய புள்ளிகளாக! ஊருக்கு நியாயம் வழங்கும் பெரியவர்களாக!!
ஒரு கருப்பு இனத்தவன் நாட்டை ஆள்வது, எஜமானர் இனமான வெள்ளையர் அடிபணிந்து கிடப்பது இந்த அக்கிரமத்தைச் சகித்துக் கொள்ளச் சொல்லுகிறீர்களா? இது சட்ட சம்பந்தமானது என்று சொல்லுகிறீர்களா? அரசியல் வேறு? இன இயல் வேறு என்று விளக்கம் கூற முற்படுகிறீர்களா? இந்த வாதமும் விளக்கமும் கோழைத்தனத்தின் விளைவு. மதிப்பறியா நிலையின் விளைவு; நான் அவ்விதம் இருக்க மாட்டேன்; இந்தக் கருப்பனை வெள்ளை மாளிகையிலிருந்து விரட்டி அடிக்கும் வரையில் நான் ஓயமாட்டேன், நிம்மதியாக உறங்கமாட்டேன் என்று துவக்கமுதலே உறுமிக் கொண்டிருந்தான், நிறவெறியை ஒரு தத்துவம் தர்மம் என்று நம்பிய வெள்ளை இதழாசிரியன் ஒருவன். அவன் போன்றவர்கள், டில்மன் மீது வழக்கு தொடரப்பட்டதும் களிநடமாடினர். விரட்டி விடுவதைவிட, வீழ்த்தி விடுவதைவிட, அவன் மீது குற்றம் சுமத்தி, தண்டித்து வெளியே துரத்துவதுதான் அவனுக்கு மட்டுமல்ல அவனுடைய 'இனத்துக்கே' - இன்று மட்டுமல்ல, என்றென்றும் துடைக்கப்பட முடியாத கறையை ஏற்றிவைக்கும் என்று கருதி மகிழ்ந்தனர் நிறவெறியர்கள். இனம், ஜாதி, குலம் ஆகியவை கெட்டுவிடாமல் பாதுகாக்கப்பட வேண்டுமானால், 'இரத்தக்கலப்பு' ஏற்படக் கூடாது; இரத்தக் கலப்பு ஏற்படாமலிருக்க வேண்டுமானால் இரு இனத்தவர்க்குள்ளே கலப்புமணம் அனுமதிக்கப்படக்கூடாது; உடலுறவு ஏற்பட்டு விடக்கூடாது என்று அழுத்தமான நம்பிக்கை காரணமாக, கட்டுதிட்டமும் சட்டமும் சம்பிரதாயமும் அமைந்து விடுகின்றன.
நீக்ரோக்கள் தாழ்ந்தவர்கள், அவர்களுடைய 'இரத்தம்' வெள்ளை இனத்தவரின் இரத்தம் போன்றதல்ல; உயர்வானது அல்ல! என்று வாதாடினர்; அக்கிரமக்காரர்களும் அடாவடிப் பேர்வழிகளுமல்ல, கற்றவர்களே!! தம்பி! இன்று வெகு எளிதாகக் கூறிவிடுகிறோம். எல்லோர் உடலிலும் ஒரேவிதமான இரத்தம் தான் ஓடுகிறது! இதிலே நீ என்ன உயர்வு? நான் என்ன மட்டம்? என்று கேட்கிறோம். மறுப்பார் இல்லை!! ஆனால் அமெரிக்காவில் இன்றளவும், நீக்ரோ இரத்தம் வேறு, வெள்ளையர் இரத்தம் வேறு; இந்த இரண்டும் கலந்திடக்கூடாது என்ற முரட்டுத்தனத்தையும் குருட்டுப் போக்கையும் கட்டிப் பிடித்துக் கொண்டுள்ளவர்கள் பலப்பலர்! இத்தகைய 'காட்டுமிராண்டி'க் கருத்தைக் கொண்டவர்கள் முன்பு அமெரிக்காவில், பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் என்ற நிலையிலும், பாதிரிமார்கள் என்ற பட்டத்தைச் சுமந்து கொண்டிருக்கும் நிலையிலும் இருந்தனர்.
ஒரு சொட்டு நீக்ரோ இரத்தம் கலந்தாலும் போதும், நீக்ரோ ஆகிவிட வேண்டியதாகிவிடும்! ஒரு சொட்டு நீக்ரோ இரத்தம் கலந்தால் போதும் தலைமுடி சுருண்டுவிடும், உதடு பெருத்துவிடும், முகம் தட்டையாகி விடும், அறிவு ஒளி அணைந்து விடும், மிருக இயல்பு மிகுந்துவிடும், நீக்ரோ தன்மை தன்னாலே வந்துவிடும்.
1906-ல் தம்பி! இப்படிக் கூறியவர் தாமஸ் டிக்சன் என்பார். கர்த்தருக்கு பூஜை நடாத்திடும் புனிதப் பணியில் ஈடுபட்டிருந்தார். இந்தப் போக்கினராக இருந்த பல்லாயிரவரில் இந்த டிக்சன் ஒருவர்.
இவ்விதமான குருட்டுக் கோட்பாடு காரணமாக வெள்ளை இனத்தவர் தங்கள் 'இரத்தம்' தூய்மையானதாக இருந்தாக வேண்டுமென்பதில் மிகுந்த அக்கறை காட்டி வந்ததுடன், நீக்ரோக்களுக்கு உரிமை கொடுத்தால், மனிதத் தன்மையுடன் நடத்திவந்தால், மெள்ள மெள்ள அந்த இரு இனத்துக்கும் இரத்தக் கலப்பு ஏற்பட்டு விடும். பிறகு வெள்ளை இனத்தின் உயர்வும் தனித்தன்மையும் நாசமாகிவிடும் என்று கருதினர். இந்த எண்ணத்தின் தொடர்பாக வேறோர் கருத்து கிளம்பிற்று; நீக்ரோக்கள் காமவெறியர்கள்! சிறிதளவு ஏமாந்த நிலையில் இருந்திடின் போதும், வெள்ளை மாதர்களைக் கற்பழித்து விடுவர்; அவர்களின் விலங்கியல்புக்கு வெள்ளை மாதர்கள் பலியாகிப் போவர்! - என்ற எண்ணம்!
நீக்ரோக்களைத்தான் வெள்ளையர் தமது பண்ணைகளிலே மட்டுமல்ல, வீடுகளில், கடைகளில், அலுவலகங்களில், கேளிக்கைக் கூடங்களில் வேலைக்கு வைத்துக் கொண்டிருந்தனர்; கடுமையாக உழைப்பார்கள், அடக்க ஒடுக்கமாக நடந்து கொள்வார்கள், கூலியும் அதிகம் தரத் தேவையில்லை என்ற காரணத்தால்.
வெள்ளையருடன் - மாதருடனும் - பழகியே தீர வேண்டிய நிலை நீக்ரோக்களுக்கு.
ஆனால் வெள்ளையர்களுக்குச் சொல்லிவைக்கப்பட்ட தகவல், கருப்பரிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், அவர்கள் மிருக இயல்பினர், காமவெறி கொண்டவர்கள் என்பது!
இதன் பயனாக வீணான சந்தேகத்துக்கு ஆளாகி, சித்திரவதை செய்யப்பட்ட நீக்ரோக்களைப் பற்றிய ஏடுகள் படிப்போரின் உள்ளத்தை உருக்கும்; இரத்தக் கண்ணீர் வடிப்பர்.
நிலைமையை உணர்ந்த நீக்ரோக்கள், இது விஷயத்தில் மிக ஜாக்கிரதையாக இருப்பர். வெள்ளை மாதர்களை நெருப்பாகக் கருதுவர்! எந்த நேரத்தில் எந்த விதமான பழி சுமத்தப்பட்டுவிடுமோ என்பது மட்டுமல்ல, எந்தச் சமயத்தில் என்ன விதமான பயங்கரச் சோதனைக்கு ஆளாக்கப்பட்டு விடுவோமோ என்ற பயமும் கூட.
டக்ளஸ் டில்மன் குடியரசுத் தலைவரானதும், இந்த நிலைமையை எடுத்துக்காட்டும் நிகழ்ச்சி ஒன்று நடைபெறுகிறது. தம்பி! படித்ததும், நம்மையுமறியாமல் கண்களில் நீர் துளிர்க்கிறது.
வெள்ளையர்கள் மனதில் நெடுங்காலமாகப் படர்ந்து கிடக்கும் வெறுப்புணர்ச்சி, ஒரு கருப்பர் குடியரசுத் தலைவர் என்ற உயர் பதவி பெற்றுவிடுவதாலே மட்டும், ஒரே அடியாக மறைந்து விடுமா?
தாங்கிக் கொள்ள வேண்டி இருக்கிறது,
சகித்துக் கொண்டாக வேண்டும்.
வேறு வழி இல்லையே, என்ன செய்வது,
என்று எண்ணிக் கொள்வரேயன்றி, நிறம் எதுவாக இருந்தால் என்ன, குடியரசுத் தலைவர் என்ற முறையில், அவர் நம்முடைய அன்புக்கும் மரியாதைக்கும் உரித்தானவராகிறார் என்றா எண்ணிக் கொள்வர்; இயல்பு இலேசாகவா மாறிவிடும்!
டக்ளஸ் டில்மன் குடியரசுத் தலைவராகி, வெள்ளை மாளிகை சென்ற நாள்; முதல் நாள்.
குடியரசுத் தலைவருக்கென்று உள்ள பல அலுவலர்கள், ஒரு கருப்பரின் கீழ் வேலை செய்யவேண்டி இருக்கிறதே என்ற விசாரத்தில் மூழ்கிக் கிடக்கின்றனர். சிலர் நீக்ரோ இனத்தவரான டில்மனுக்கு அதே இனத்தைச் சேர்ந்தவர்கள் பணியாட்களாக இருப்பது முறையாக இருக்கும் என்று கருதி, தமது வேலைகளை ராஜிநாமாச் செய்துவிட முடிவு செய்தனர். அவ்விதம் முடிவு செய்தவர்களில் ஒருவர் எட்னா என்ற வெள்ளை மாது; குடியரசுத் தலைவருக்கு அந்தரங்கக் காரியதரிசியாக வேலை பார்ப்பவர். இனி நீக்ரோ மாது ஒருத்தியைத்தான் இந்த வேலையைப் பார்த்துக்கொள்ளச் சொல்லவேண்டும், இன்று மட்டும் குடியரசுத் தலைவருக்கு அலுவலக முறைகளைக் கூறிவிட்டால் போதும் என்று எண்ணிக் கொண்டு, ராஜிநாமாக் கடிதத்தைத் தயாராக எடுத்துக் கொண்டு, அன்று அவர் பார்க்கவேண்டிய அலுவல்கள் பற்றிய குறிப்புப் புத்தகத்துடன், குடியரசுத் தலைவருடைய தனி அறைக்குச் செல்கிறாள்.
டில்மனுக்கு வணக்கம் கூறிவிட்டு, அவருடைய அன்றைய அலுவல் பற்றிய குறிப்பைத் தந்துவிட்டு, ராஜிநாமாக் கடிதத்தைத் தந்திடத் தயாராகிறாள்.
முக்கியமான ஒரு கடிதம் எழுதப்படவேண்டும் என்ற குறிப்பினைக் காட்டுகிறார் டில்மன். அவர் கூறிக்கொண்டு வர எட்னா சுருக்கெழுத்தில் எழுத வேண்டும். இருவரும் உட்கார்ந்து கொள்வதற்கு வசதியாக அமைந்திருந்த ஒரு சோபாவைக் காட்டுகிறார் டில்மன். உடனே எட்னா, பலகணியை இழுத்து மூடுகிறாள்; அறைக் கதவைச் சாத்தித் தாளிடுகிறாள்.
"என்ன செய்கிறாய் எட்னா?"
"கதவைச் சாத்தித் தாளிடுகிறேன். தாங்கள் கூறப்போகும் தகவல் - கடிதம் - இரகசியமானதாயிற்றே! குடியரசுத் தலைவர் தமது அந்தரங்கக் காரியதரிசியைக் கொண்டு தயாரிக்கும் கடிதத்தில் உள்ள விஷயம் வெளியே ஒருவருக்கும் தெரியக்கூடாதே..."
"அதனால் கதவைத் தாளிட்டாயா, எட்னா? வேண்டாம், கதவு திறந்தே இருக்கட்டும். ஏன் என்று திகைத்திட வேண்டாம் - என் நிலை அப்படி - ஒரு சம்பவம் நினைவிலே இருக்கிறது. முன்பு குடியரசுத் தலைவராக இருந்த அயிசனவர் ஒரு நீக்ரோவுக்கு முக்கியமான பதவி கொடுத்தார் - அந்த நீக்ரோ தனக்கு உதவியாளராகப் பணிபுரிய, வெகு கஷ்டப்பட்டுத்தான் ஒரு வெள்ளை மாதைப் பெற முடிந்தது - வெள்ளை மாதர்கள் ஒரு கருப்பரிடம் வேலை பார்த்திட விரும்பவில்லை... பலர்... எப்படியோ... ஒரு பெண் கிடைத்தாள்... அவள் அலுவலகத் தனி அறையில் அமர்ந்து வேலை பார்க்கும்போது, கதவுகளைத் திறந்தே வைத்திருந்தாள். பாவம்! அத்தனை பயம், யார் என்ன சொல்வார்களோ, கருதிக் கொள்வார்களோ என்பதால்... நான் அந்தச் சம்பவத்தை மறக்கவே இல்லை... மறக்கவே முடியாது... எட்னா! கதவுகளைத் திறந்துவை!
தம்பி! இந்தக் கருத்துப்பட டில்மன் கூறியதும், எட்னாவின் மனம் எப்படி உருகாமலிருந்திருக்க முடியும்? நிறம் கருப்பு என்ற ஒரு காரணத்தினால், குடியரசுத் தலைவர் பதவி பெற்ற போதிலும், வெள்ளை மாதுடன் தாளிடப்பட்ட தனி அறையில் இருப்பது முறையல்ல, முறைமை அல்ல என்று வெள்ளை உலகம் வெகுண்டெழுந்து கூறும் என்றல்லவா கருதுகிறார் டில்மன்! நிலைமையும் வெள்ளையர் நினைப்பும் அதுபோலத்தானே இருக்கிறது! எத்தனை வேதனை ஏற்பட்டிருக்கும் தனது நிலைமையை எண்ணிப் பார்த்திடும் போது! தத்தளிக்கிறார் பரிதாபம்! இவருக்குப் பரிவு காட்டி, மனித உள்ளத்தோடு நடந்துகொள்ள வேண்டும். நிறவெறி எல்லோருக்கும் இருந்தே தீரும் என்பதில்லை; வெள்ளையரிலும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதனை மெய்ப்பித்தாக வேண்டும். அஞ்சாதீர் ஐயா! உமது நிறம் கருப்பு, என் நிறம் வெளுப்பு! இருந்தால் என்ன? ஒரு வெள்ளை மனிதர் மேலான பதவியில் இருந்தபோது நான் எப்படி நடந்து கொண்டேனோ அதுபோலவே உம்மிடம் நடந்துகொள்வேன்; பேதம் காட்டமாட்டேன்; உமது இதயத்தில் குமுறும் வேதனையை நான் உணருகிறேன்! - என்றெல்லாம் எட்னா கூறவில்லை; பார்வையின் மூலமாகவும் பெருமூச்சின் மூலமாகவும் இவ்வளவும் இதற்கு மேலும் விளக்கமாக்கினாள் போலும்!
தலைவர் அவர்களே! கதவுகள் தாளிடப்பட்டே இருக்கட்டும். அதுதான் முறை. எப்போதும் உள்ள முறை.
சரி. எட்னா! நான் பார்க்க வேண்டிய முதல் அலுவல் என்ன? குறிப்பு இருக்கிறதல்லவா?
முதல் அலுவல், உமது அலுவலகத்திற்கான பணியாளர்களை நியமித்துக் கொள்வது. முன்பு குடியரசுத் தலைவராக இருந்தவரிடம் வேலை பார்த்தவர்களையே வேண்டுமானால் நியமித்துக் கொள்ளலாம்; புதிதாக நியமித்துக் கொள்ளவும் செய்யலாம்.
அப்படியா! முன்பு இருந்தவர்களையே நியமிக்க விரும்புகிறேன். எட்னா! முதலாவதாக உன்னிலிருந்து துவக்க விரும்புகிறேன், என்னிடம் பணியாற்ற சம்மதமா?
நன்றி, வணக்கம். பணியாற்றுகிறேன் மகிழ்ச்சியுடன்.
அப்படியானால் எட்னா! குடியரசுத் தலைவராகியுள்ள நான் முதன் முதலாகப் பிறப்பிக்கும் உத்திரவு, உன்னை வேலைக்கு அமர்த்துவதுதான்.
மெத்தவும் நன்றி, தலைவர் அவர்களே! மிக்க நன்றி, உமக்கு எல்லோருமே துணை நிற்பார்கள்; உதவி செய்வார்கள்!
அப்படியா கருதுகிறார்! எனக்கு அப்படித் தோன்றவில்லை, எட்னா!
எல்லோரும் உதவி செய்வர்! உங்கள் வெற்றிக்காகப் பிரார்த்தனை நடத்துவர். ட்ருமனுக்கும் ஜான்சனுக்கும் துணை நின்றது போல உமக்கும் துணை புரிவார்கள், முன்பு போலவே.
முன்பு! இப்போது நிலைமை மாறி இருக்கிறது. அவர்கள் - முன்பு தலைவர்களாக இருந்தவர்கள் கருப்பர் அல்லவே... இருக்கட்டும்... யாருடைய உதவி கிடைக்காவிட்டாலும், ஆண்டவனுடைய உதவி கிடைக்குமல்லவா... ஆண்டவன் கருப்பா, வெள்ளை நிறமா என்று நிச்சயிக்கப்படவில்லை அல்லவா!
இந்தக் கருத்துப்பட டில்மன் பேசக்கேட்ட எட்னாவால் அழுத்திவைக்கப்பட்ட, தாழ்வாக நடத்தப்பட்டு வந்த ஒரு இனத்தின் இதயத்தில் கொதித்துக் கொண்டிருக்கும் வேதனையை உணர முடிந்தது. டில்மன் எத்தனை நேர்த்தியான நற்குணம் படைத்தவர் என்பதையும் எப்படி உணராமல் இருந்திருக்க முடியும்? ராஜிநாமாக் கடிதத்தைக் கசக்கி எறிந்துவிட்டு, அந்த மனிதனிடம் பணியாற்றி, மனிதத்தன்மையின் மாண்பினை உயர்த்திட உறுதி கொண்டாள்.
எட்னா எனும் வெள்ளை மாதிடம் இத்துணைப் பெருங்குணத்துடன் நடந்து கொண்ட டில்மன் மீதுதான் வெள்ளைப் பேரதிகாரிகள், சாலி வாட்சன் என்ற வெள்ளை மாதைக் கற்பழிக்க முயன்றார் என்று குற்றம் சாட்டினர்.
சாலி என்ற அந்த வெள்ளை மாது, வாட்சன் என்ற செனட் உறுப்பினரின் மகள்! சீமானின் மகள், சீமானுக்கு வாழ்க்கைப்பட்டு அவனிடமிருந்து விடுதலை பெற்று, புதிய பூங்காவில் உலவிடத் துடித்துக் கொண்டிருந்த உல்லாசி. குறியற்ற குதூகலத்திலும் சாலி குடைந்தாடியபடி இல்லை. பெரிய இடம் தேடிக் கொண்டிருந்தாள்.
ஈட்டன் என்ற வெள்ளைப் பேரதிகாரி, குடியரசுத் தலைவருக்கு அடுத்த நிலையினன்! ராஜாங்கக் காரியதரிசி என்ற செல்வாக்கு மிக்க பதவி வகித்து வந்தவன் - மணமானவன் - மனைவியோ மலைமுகடு, கடலோரம், சந்தைச் சதுக்கம், சல்லாபக்கூடம் ஆகிய இடங்களிலே உலவிக் கொண்டிருந்தாள், இவனைத் தனியனாக்கி விட்டு! அவனைத் தன் 'இனியன்' ஆக்கிக் கொண்டிருந்தாள் சாலி! இந்தச் சல்லாபியைக் கெடுக்க முயற்சித்ததாகக் குற்றச்சாட்டு. அவள் போக்கு அறிந்தவர்களும் அந்தப் புகார் கேட்டுக் கொதித்தனர்; ஆயிரம்தான் இருக்கட்டும், அவள் ஆடிக் கெட்டவள் என்ற பெயரெடுத்தவளாகக் கூட இருக்கட்டும், அவள் வெள்ளை இனம்! இவன் குடியரசுத் தலைவராகிவிட்டதாலேயே வெள்ளை இனத்தவனாகிவிடுவானா! கருப்பன்! நீக்ரோ! ஒரு நீக்ரோ வெள்ளை மாதைக் கற்பழிக்க...! என்ன அக்கிரமம்! என்ன அக்கிரமம்! என்று கொதித்தனர்.
டில்மன், மாசற்றவன்; பொறுப்பு மிக்கவன்; வெள்ளை இனத்தவரால் தன் இனத்தவர் மீது ஏற்றப்பட்டிருக்கும் பழிகளை நன்கு அறிந்தவன்; எட்னா எனும் வெள்ளை மாது தன்னுடன் தாளிடப்பட்ட தனி அறையில் இருந்துங்கூட தகாத செயல் என்று 'நாலு பேர்' கூறுவார்களே என்பதை எண்ணி நடுங்கினவன்; நேர்மையாளன்! அவன் மீது இந்தப் பழி! பொதுவாக நீக்ரோக்கள் மீது சுமத்தப்படும் பழி இது! அவர்கள் மனிதர்கள் அல்லவே! மிருகங்கள்! மிருகங்கள் தாக்கத்தானே செய்யும், அடக்கி வைக்காவிட்டால்!
சாலி வாட்சன் தந்திர மிக்க சதி புனைந்தாள்.
டில்மன் - ஒரு கரு நிறத்தான் - குடியரசுத் தலைவரானது அவளுக்குக் கட்டோடு பிடிக்கவில்லை; ஆயினும் தானாக வலியச் சென்று 'சிபாரிசு' பிடித்துக் கொண்டு சென்று டில்மனிடம் வேலைக்கு அமர்ந்தாள்; - குடியரசுத் தலைவர் அவ்வப்போது உள்நாட்டுப் பிரமுகர்களுக்கும் வெளிநாட்டுத் தலைவர்களுக்கும் நடத்திடும் விருந்து வைபவங்களைக் கவனித்துக் கொள்ளும் காரியதரிசியாக.
பகட்டும் ஆடம்பரமும், பளபளப்பாளர்கள் பலருடன் பழகும் வாய்ப்பும் கிடைக்கும் என்பதற்கும் மட்டுமல்ல; குடியரசுத் தலைவருடன் நெருங்கிப் பழகவும், அவருடைய 'அந்தரங்கம்' அறியவும் வாய்ப்புக் கிடைக்கும் என்பதால்.
அதிலே என்ன ஆதாயம்? என்று எண்ணுவாய் தம்பி! ஏன் ஆதாயம் இல்லை! கண்டறியும் தகவல்களை உடனுக்குடன் தன் 'காதலன்' ஈட்டனுக்குத் தந்திடலாம்; அதனைக் கொண்டு அவன் தன் செல்வாக்கை மேலும் வலுவாக்கிக் கொள்ளலாம்... பிறகு... பிறகு குடியரசுத் தலைவராகவே வந்துவிடலாமே, தக்கசமயம் பார்த்து. அதனால் சாலிக்கு என்ன கிடைக்கும்? என்ன கிடைக்குமா? அவள் சாலி ஈட்டன் ஆகிவிடலாம்! அமெரிக்காவின் முதல் ஆரணங்கு ஆகிவிடலாம்!!
இத்தனை சதித்திட்டம் உருவாயிற்று, அந்தச் சரசிக்கு.
குடியரசுத் தலைவரின் கட்டிலறை! இரவு! ஆடை நெகிழ, மயங்கிய நிலையில், சாலி!
டில்மன் அவளை எழுப்புகிறார்; அவள் சாய்கிறாள் மேலே; மயக்கத்தில்! அவர் தாங்கிப் பிடித்துக் கொள்கிறார்.
எப்படி நேரிட்டது இந்த நிலை? ஏன் நேரிட்டது என்று கேட்கிறாய்; புரிகிறது தம்பி! உன் ஆசை. சல்லாபச் சீமாட்டியின் சதி நாடகத்தை அவ்வளவு சாமான்யமாகவா எண்ணிக் கொண்டாய். ஒரு வாரம் பொறுத்திரு, முழு வடிவம் கண்டிட.
சதிக்குள் சதி - 1
பண்பு நிறைந்த காதலர்கள்
சாகசக்காரி சாலி வாட்சன்
சாலி தலை குனிந்தாள்!
அருங்குணக் குன்று டில்மன்
அமெரிக்கக் குடியரசுத் தலைவரிடம் 'கலந்து பேசவும்' 'உடன்பாடு காணவும்' 'உதவி பெற்றிடவும்' உலகில் பல்வேறு நாட்டின் தலைவர்கள் வருகை தருவர். அப்போது அளிக்கப்படும் விருந்துகளில், உபசரிக்க - அளவளாவ - குடியரசுத் தலைவரின் துணைவியார் உரிமை பெறுகிறார். குடியரசுத் தலைவரின் துணைவியார், நாட்டின் முதல் ஆரணங்கு எனும் அரியநிலை பெறுகிறார். டக்ளஸ் டில்மன் தாரமிழந்தவர்; எனவே துணைவியாருக்குப் பதிலாக, பண்புள்ள ஒரு மாது இந்தப் பக்குவமான காரியத்தைக் கவனித்துக் கொள்ளத் தேவை. இதனை அறிந்தே, வாட்சன் எனும் செனட்டரின் மகள் சாலி வாட்சன், அந்தப் பதவியைக் கேட்டுப் பெற்றாள்.
குடியரசுத் தலைவர் நடத்திடும் விருந்துகளுக்கு, 'தக்காருக்கு' அழைப்பு அனுப்புவது, விருந்துக்கான எல்லா ஏற்பாடுகளையும் கவனித்துக் கொள்வது, விருந்தில் கலந்து கொள்ள வருபவர்களிடம் உரையாடி மகிழ்விப்பது என்பவைகள் சாலி வாட்சன் மேற்கொண்ட அலுவல்கள்.
தனக்குத் துணைவியில்லாததால், இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டது என்பதனால் மட்டுமல்ல, இது பொருத்தமானது என்பதாலும் டில்மன் மகிழ்ச்சி அடைந்திருக்க வேண்டும். வெள்ளை மாளிகையில் எல்லாமே 'கருப்பு மயம்' ஆகிவிட வில்லை; குடியரசுத் தலைவர் மட்டுமே 'கருப்பு'. ஆனால், விருந்தினை நடத்தி வைக்க, உரையாட, உபசரிக்க அமர்த்தப் பட்டிருப்பவரும் கருப்பு அல்ல; வெள்ளை இன மாது!! - என்பதிலே வெள்ளை இனத்தவர் மிகுந்த மகிழ்ச்சி கொள்வரல்லவா!
துணைவியார் இறந்தபிறகு டில்மன் தனியாக இருந்து வந்தார்; ஆனால் அவருடைய உள்ளம் மெள்ள மெள்ள வேறோர் மாதிடம் ஈர்க்கப்பட்டு வந்தது. அறிவும் அடக்க உணர்வும், பண்பும் நிறைந்த ஒரு மாதினை அவர் உளமார நேசித்தார். திருமணம் செய்துகொள்ளலாம் என்ற முடிவுக்கு அவர் வருகிற சமயத்திலேதான், குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார்!
அந்தப் பெரிய பதவியில் இருந்து கொண்டு திருமணத்தை நடத்திக்கொண்டால், மிகச் சிறப்பாக அல்லவா இருக்கும்; நாடே விழாக்கோலம் கொள்ளுமே; உலகின் பல நாடுகளின் தலைவர்கள் வாழ்த்துக் கூறிட வருவார்களே, எத்தனை கோலாகலமாக நடத்திக் கொள்ளலாம்! ஏன் டில்மன் தாம் விரும்பிய மாதைத் திருமணம் செய்து கொண்டு வெள்ளை மாளிகைக்கு அழைத்துச் செல்லவில்லை? சென்றிருந்தால் சாலி வாட்சன் தேவைப்பட்டிருக்க மாட்டாரே. நாடகம் நடத்திடவே இடம் கிடைத்திருக்காதே என்றுதான் எண்ணிடத் தோன்றும் - எவருக்கும்! ஆனால் டில்மன் மனதில் வேறுவிதமான கருத்து!
ஒரு நீக்ரோ, குடியரசுத் தலைவரானது மட்டுமல்லாமல், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, திருமணமும் செய்துகொண்டு விழா நடத்திக் கொள்கிறான், எத்தனை வீண் பெருமை! என்று வெள்ளையரில் வெறியர் கேலி பேசுவர். வெள்ளை மாளிகையில் தலைவர் மட்டுமல்ல, அவருடைய துணைவியாரும் கருநிற இனம், எப்படித் தாங்கிக் கொள்வது சகித்துக் கொள்வது என்று வெறுப்புடன் பேசுவர். எதற்காக வீண் வம்பைத் தேடிப் பெற்றுக் கொள்ளவேண்டும் என்று டில்மன் எண்ணியிருந்திருக்க வேண்டும். அதனால் தான், அவர், தாம் மிகவும் விரும்பிய வாண்டா கிப்சன் எனும் மாதைத் திருமணம் செய்து கொள்வது தமது நிலைமைக்கு முறையாக இருக்காது என்று கருதிக் கொண்டார்.
தமக்குக் கிடைத்த பதவியைத் தமது பெருமைக்காகவும் சுவைக்காகவும் துளியும் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என்பதிலே அவ்வளவு அக்கறை காட்டினார்.
வாண்டா கிப்சன், கருநிறம் கூட அல்ல; கவர்ச்சிமிக்க மாந்தளிர் மேனி! நீக்ரோ இனம் என்று கூடக் கூறிவிடுவதற்கில்லை. நீக்ரோ - வெள்ளையர் கலப்பிலே பிறந்து, ஒரு தலைமுறை கடந்த இனம்! முலாட்டோ என்பது அவர்கட்கு இடப்பட்டிருந்த பெயர். டில்மன் போலவே, கிப்சன் பெருந்தன்மை கொண்டவராக இருந்திருக்க வேண்டும் எனத் தெரிகிறது. நூற்றிலே தொண்ணூறு பெண்கள், தன்னை விரும்புபவர், தகுதிமிக்க இடம் பெற்றிடும் போது, திருமணம் செய்து கொள்ளும்படி அல்லவா வற்புறுத்துவார்கள்! கண்ணைக் கசக்கிடுவர்! அன்றோர் நாள் சொன்னதனை அடியோடு மறந்தீரோ என்று கேட்பர்; உயர்ந்து விட்டீர், உள்ளத்திலிருந்து என்னைத் தூக்கி எறிந்து விட்டீர் என்று கோபத்துடன் பேசுவர், பார்க்கிறோம்; கதைகளிலே மிகச்சுவையான கட்டங்களாக இவை அமைந்திருப்பதை. வாண்டா கிப்சன், தன் காதலனுக்குத் துளியும் சங்கடம் ஏற்படத் தக்கவிதமான எந்த நிலைமையும் எழக்கூடாது என்ற பெருங்குணம் கொண்டவராக இருந்திருக்கிறார்.
ஆகவே டில்மன் திருமணம் செய்து கொள்ளவில்லை; சாலி வாட்சன் வெள்ளை மாளிகையில் சீமாட்டி வேலை பார்த்து வந்தாள்.
குடியரசுத் தலைவருடன் நெருங்கிப் பழகும் நிலை.
விருந்து, வைபவம் ஆகியவற்றினை ஏற்பாடு செய்திடும் அலுவல்; ஆகவே எப்போதும் அணிபணி பூண்டு, நகைமுகம் காட்டி இருந்திடும் நிலைமை.
மனதைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் திறனற்றவர்களின் மனம் நெகிழ்ந்து போவதும், தவறுகள் நேரிட்டு விடுவதும், நெருக்கடிகள் விளைவதும், இத்தகைய சூழ்நிலையில்தானே!!
ஆளப்பிறந்தவர்கள் என்ற அகம்பாவத்துடன் நடந்து கொள்ளும் வெள்ளையர் மீதே ஆட்சி நடத்தும் வாய்ப்புக் கிடைத்தாலே போதும், தலை சுற்றும்; கால் பூமியில் அழுத்தமாக அமைந்திடாது, கொடுமை செய்திடத் தோன்றும்; கோலாகலமாக நடந்திடத் தோன்றும்; எவரையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசிடத் தோன்றும்! அதுமட்டும் போதாமல், அழகிய இளமை மெருகு குலையாத, ஆடிப்பாடி மகிழ்விக்க வல்ல ஒரு வெள்ளைச் சீமாட்டியும், தன் பக்கம் நின்று, பாசம் நிறைந்த பார்வையை வீசியும், பாகு நிறைந்த சொல்லினைத் தந்தும் வந்திடின், கிடைத்தது இன்ப வாழ்வு! என்று கருதி, களியாட்டத்தில் அல்லவா மூழ்கிடத் துடிப்பர், நூற்றுக்கு அறுபது பேராகிலும். டில்மன் மனதிலே இறுமாப்போ, மயக்கமோ, தூய்மையற்ற எண்ணமோ, துளியும் இடம் பெறவில்லை. இருந்தும், அவர்மீது சாலி வாட்சன் என்ற வெள்ளை மாதினைக் கற்பழிக்க முயன்றதாகக் குற்றச்சாட்டு; சாலியே தொடுக்கிறாள் அந்தக் குற்றச்சாட்டை!
வெளிநாட்டுத் தலைவர் ஒருவருக்கு விருந்து நடைபெறுகிறது. சுவைமிகு பானம்! சொக்க வைக்கும் பேச்சுக்கள்! ஒளிவிடு பார்வை! ஒய்யார நடை! போதைமிகுந்திடும் நிலை! டில்மன் இந்த மயக்கம் எதிலும் சிக்கவில்லை. விருந்தளிப்பது, தனது கடமையின் ஒரு பகுதி என்று மட்டுமே கருதி அதிலே கலந்து கொண்டார்.
சாலி? உல்லாசியாகக் காட்சி தந்தாள்! அளவுக்கு அதிகமாகவே உட்கொண்டாள்; ஆனால் உட்கொண்ட போதைப் பொருளைவிடக் கொடிய சதி எண்ணம் அவள் மனதிலே நிரம்பிக் கிடந்தது. எப்படியும் அன்றிரவு டில்மனுடைய இரகசியக் குறிப்புகளைக் கண்டறிந்து, அவற்றினை ராஜாங்க மந்திரியும் தன் காதலனும் - எதிர்காலக் கணவனுமான - ஈட்டனிடம் தந்துவிடுவது என்று துணிந்து விட்டாள்.
விருந்து மண்டபம் விட்டு டில்மனும் வெளிநாட்டிலிருந்து வந்திருந்த விருந்தினர்களும் வேறோர் கூடம் சென்று ஏதோ ஓர் படக்காட்சி காண ஏற்பாடாகி இருந்தது. தனக்குத் தலைவலியாக இருப்பதாகவும், வீடுசெல்வதாகவும் கூறிவிட்டு, விடைபெற்றுக் கொள்கிறார் சாலி வாட்சன்.
வீட்டுக்கு அல்ல, டில்மனுடைய படுக்கை அறைக்குச் செல்கிறாள்! - அவருடைய குறிப்பு ஏடுகளைக் கண்டெடுக்க! கிடைத்துவிடுகின்றன. அவைகளைத் தனியே தனித் தாட்களில் குறித்துக்கொள்கிறாள் விரைவாக. திடீரென யாரோ நடமாடும் அரவம் கேட்கிறது. ஒரு கணம் மிரட்சி! மறுகணம் சதி தயாராகி விடுகிறது; விளக்கை அணைத்து விடுகிறாள். மயங்கி விழுந்தவள் போல, கட்டிலிலே சாய்ந்து கொள்கிறாள்.
உள்ளே வெண்ணிற நாகம் இருப்பது அறியாமல் - நுழைந்த டில்மன், படுக்கை அறைக் கதவினைத் தாழிட்டு விட்டு விளக்கைப் பொருத்துகிறார்; காட்சி அவரைத் திணறச் செய்கிறது.
நள்ளிரவு நேரத்தில், சாலி வாட்சன், தன் கட்டிலின் மீது! அலங்காரப் பதுமை! ஒய்யார உருவம்! வெள்ளை மாது! சிங்காரவல்லி! அவள் படுத்துக் கிடக்கிறாள், ஆடை நெகிழ்ந்த நிலையில். அறையையோ தானே தாளிட்டிருக்கிறார்!
வெள்ளை மாளிகையில் ஒரு கருப்பர், குடியரசுத் தலைவர்! அவர் படுக்கை அறையில் ஒரு வெள்ளை மாது! நள்ளிரவில்! கட்டிலின் மீது! என்ன கருதுவர் வெள்ளை மாளிகை அலுவலர்கள் இது கண்டிடின்! அமெரிக்காவே அதிர்ச்சி அடையுமே இது பற்றிக் கேள்விப்பட்டால்! வெள்ளையர் மனம் எரிமலையென வெடிக்குமே. அவர் மனத்திலே, அந்தச் சமயம் என்னென்ன அதிர்ச்சி தரத்தக்க எண்ணங்கள் கிளம்பித் தாக்கினவோ, எவ்விதமான திகைப்பும், திகிலும் கொண்டாரோ, யாரறிவார்? எப்படி இருந்திருக்கும் அவர் நிலை என்பதை எண்ணும்போதே நடுக்கம் பிறந்திடும் பலருக்கு.
அருகே செல்கிறார், உற்றுப் பார்க்கிறார். மிகுந்த வேதனையை அடக்கிக்கொண்டு, அவள் மயங்கிச் சாய்ந்திருப்பது போலத் தெரிகிறது, தோற்றம்; அவள் நடிப்பு அவ்வளவு நேர்த்தியாக இருக்கிறது.
குடிமயக்கத்தில் இடம் புரியாமல் வந்து படுத்துக் கொண்டாள் என்று எண்ணிக்கொண்ட டில்மன், சாலியை எழுப்பினார்.
தொட்டு எழுப்பும் வரையில் எழுந்திருப்பாளா - தூங்காமல் தூங்கும் சாலி! எங்கோ கனவு உலகிலிருந்து திரும்புவது போல ஒரு பாவனை காட்டினாள். கண்களைத் திறந்தாள், மீண்டும் மூடிக் கொண்டாள், மறுபடி திறந்தாள் ஒரு மிரட்சிப் பார்வை!
யார் இங்கே எப்படி நீங்கள்... ஏன் வந்தீர்கள்...? அய்யோ!... நான் எங்கு இருக்கிறேன்...!
தம்பி! வழக்கமான திகைப்பு, வியப்பு, அதிர்ச்சி! நாடகத்திலே நாம் பார்க்கிறோமல்லவா, சாகசக்காரிகள் தம்மிடம் சிக்கிக்கொள்ளும் ஆடவரைச் சாய்த்திடும் காட்சியினை.
'என் படுக்கை அறையில் வந்து படுத்துக்கொண்டாய் சாலி! யார் கண்ணிலாவது பட்டிருந்தால் என் கதி!'
உங்கள் படுக்கை அறையா...? அய்யோ...! ஆமாம்... தலைவருடைய தனி அறைதான்... இங்கு எப்படி நான் வந்தேன்...? ஏன் என் தலையில் இவ்வளவு குடைச்சல்...?
'விருந்திலே சற்று அதிகமாக உட்கொண்டு விட்டேன், மயக்கமாக இருக்கிறது, வீடு செல்கிறேன்; தலைவலி' என்று சொல்லி புறப்பட்டாயே சாலி!
ஆமாம்... இப்போதுதான் நினைவிற்கு வருகிறது... மயக்கம் தடுமாற்றம்... எங்காவது சென்று படுத்துத் தூங்கியாக வேண்டும் என்ற நினைப்பு... இது வேறு ஏதோ ஒரு அறை என்று எண்ணி... மன்னிக்க வேண்டும்...
பரவாயில்லை... இப்படியெல்லாம் சில வேளைகளில் நடந்துவிடுவதுண்டு... பரவாயில்லை... எழுந்திருந்து ஆடைகளைச் சரிப்படுத்திக்கொள் சாலி! மோட்டார் வரவழைக்கிறேன்... வீட்டுக்குப் போ!
அய்யோ! ஆடைகள் இப்படியா அலங்கோலமாகவா படுத்துக் கிடந்தேன்... என்ன தவறு செய்துவிட்டேன்... பெருந்தவறு...
நான் அந்தப் பக்கமாகச் சென்றுவிடுகிறேன், சாலி! நீ எழுந்திருந்து ஆடையைச் சரிப்படுத்திக் கொள்.
சாலி திடுக்கிட்டுவிட்டது போலப் பாவனை காட்டி எழுந்திருக்கிறாள்; படுக்கைமீது இருந்த அவளுடைய 'கைப்பை' கரம்பட்டுக் கீழே விழுகிறது; விழும்போது அதற்குள்ளே இருந்த பொருள்கள் - குறிப்பு அட்டைகள் - கீழே சிதறி விழுகின்றன. டில்மன் அவைகளை எடுக்கிறார்.
அவள் அலறுகிறாள்! வேண்டாம்! வேண்டாம்! நான் எடுத்துக் கொள்கிறேன்! ஒன்றுமில்லை... சாதாரண குறிப்பு அட்டைகள்... நானே எடுத்துக் கொள்கிறேன்...
டில்மன், குறிப்பு அட்டைகளைப் பார்த்துவிடுகிறார்; எல்லாம் விளங்கி விடுகிறது. ஆத்திரம் அல்ல, அளவற்ற வருத்தம் பிறக்கிறது அவருக்கு.
நிறவெறி காரணமாக எவ்வளவு கீழ்த்தரமான செயலுக்கும், இழித்தன்மைக்கும் சென்றுவிடத் தோன்றுகிறதே என்பதுபற்றி எண்ணி வருத்தப்பட்டார்.
ஒன்றும் இல்லை; தவறாக எண்ணிக் கொள்ளாதீர்கள்... குறிப்புகள் எடுத்தேன்... உங்கள் வாழ்க்கை பற்றி ஒரு புத்தகம் எழுதப் போகிறேன்... ஒரு நாள்... அதிலே சேர்ப்பதற்காக இந்தக் குறிப்புகள்...
புரிகிறது சாலி, புரிகிறது! இதற்காகத்தானா இங்கு வந்தாய்! ஈட்டனுக்கு வேலை செய்ய, என்னிடம் வேலைக்கு அமர்ந்தாய்... தெரியும்... போ! இந்த இடத்தை விட்டு... உன் குறிப்பு ஏடுகளைக் கொடு ஈட்டனிடம்... வேலையை முடித்துவிட்டேன் என்று கூறிவிடு... போ! சாலி! இனி இங்கு வரவும் வேண்டாம்...
'ஈட்டனைப் பற்றி எனக்கென்ன கவலை? அவனுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? அவன் மணமானவன்... மனைவி இருக்கிறாள்... நான் அவனுக்காக எதையும் செய்யவில்லை... எங்களுக்குள் என்ன தொடர்பு? எங்கள் இருவரையும் இணைத்துப் பேசாதீர்...
நாடே பேசுகிறது! நானும் அறிவேன்... ஈட்டன் குடியரசுத் தலைவர் வேலை பார்க்க விரும்புகிறான்... அவனுக்காக இங்கு வேலை பார்க்கிறாய்... புரிகிறது...
உண்மையைச் சொல்லி விடுகிறேன்... கூச்சத்தை விட்டு... ஈட்டனுக்காக நான் எதுவும் செய்யவில்லை... குறிப்பு எடுத்தது புத்தகம் எழுதத்தான்... இங்கு வந்தது குறிப்பு எடுக்க அல்ல... தனியாகச் சந்திக்க... பழகி... பாசமாக இருந்திட... விரும்புவதால்... அன்பினால்...
சீமாட்டி சாகசம் நடத்திட முனைந்தால் எப்படி இருக்கும் என்பதுபற்றி அதிகமான விவரமா தர வேண்டும்?
வெள்ளை மாளிகையில், அந்த நள்ளிரவில், கட்டிலறையில், கருப்பு இன டில்மன் கரங்களைப் பற்றிக் கொண்டு, வெள்ளை இன சாகசக்காரி காமப் படுகுழிக்கு அழைப்பு விடுக்கிறாள்; தழுவிக் கொள்ளத் துடிக்கிறாள்.
தனியாக தவிக்கிறீர்கள், பாவம்... என் மனம் பாகாய் உருகிவிட்டது... என் நேசம் வேண்டாமா... நானே உம்மிடம் நேசமாக இருந்திடத் துடிக்கிறேன்... அதனால் தான் இங்கு வந்தேன்; உங்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தேன்... அதுவரையில் பொழுதை ஓட்டவேண்டுமே... அதனால் உம்முடைய குறிப்பு ஏடுகளைப் புரட்டினேன்... சிலவற்றைக் குறித்துக் கொண்டேன், புத்தகம் எழுதப் பயன்படும் என்பதற்காக.
கைப்பையில் குறிப்புத் தாள்களைத் திணித்து அவளிடம் கொடுத்தான் டில்மன்; வெறுப்பும் கண்டிப்பும் கலந்த குரலில் கூறினான் போ! உடனே! வெளியே! - என்று.
சாலி கடைசிக் கணையையும் ஏவிட முனைந்தாள்...
பயமா... நான் வெள்ளை மாது என்பதால் பயமா? வெளியே தெரிந்தால் பகை கிளம்புமே என்ற பயமா! எனக்குக் கருப்பு இனத்தின் மீது வெறுப்புக் கிடையாது. நிறபேதம் கிடையாது... சொல்லப்போனால் கருப்பு இனத்தின் மீது எனக்கு விருப்பம் கூட... ஆமால் பலருடன் பழகி இருக்கிறேன். கருப்பு இனத்தவரிடம்... எனக்கு மிகவும் விருப்பம்... பயம் வேண்டாம், துளியும். நான் என்னை உம்மிடம் ஒப்படைக்கிறேன், ஏற்றுக் கொண்டிடுங்கள்.
இணங்க மறுத்தான் டில்மன். அடிபட்ட புலியானாள் சாலி!
மாதின் மனதை அறிந்து கொள்ள முடியாத மதியிலி! சுவை உணர முடியாத மிருகம்!
ஒரு பெண்ணின் உள்ளத்தை மகிழ்விக்கத் தெரியாத உலுத்தன்!!
சுடுசொற்கள் மளமளவெனக் கிளம்பின. அந்தத் தூற்றலுக்கு இடையிலே அவள் டில்மனுக்கு எதிராக உருவாகிக் கொண்டு வரும் சதி பற்றியும் கோடிட்டுக் காட்டினாள்.
இரு கால் மிருகமே! இன்னும் எத்தனை நாளைக்கு உனக்கு இந்த வெள்ளை மாளிகை வாசம். உன் காலம் முடிகிறது, வெகுவிரைவில். வெள்ளை மாளிகையில் இன்னும் எத்தனை நாளைக்கு காட்டுமிராண்டி கொலு இருந்திட முடியும்? இந்த இடத்திற்கு ஏற்ற பெரிய மனிதர் வருகிறார், புறப்பட, வெளியேறத் தயாராகிவிடு!
ஏற்கனவே ஈட்டன் என்ற வெள்ளைப் பேரதிகாரியும் நிறவெறி கொண்ட இதழாசிரியர்களும், டில்மனை விரட்டிவிடத் துடிதுடித்தபடி இருந்தனர்.
எதிர்த்துப் பேசுவதோ, இறுமாந்து கிடப்பதோ தனது முறையாக்கிக் கொண்டிருந்தால், டில்மனை ஒழித்துக் கட்டும் வேலையை அவர்கள் எளிதானதாக்கிக் கொண்டிருந்திருப்பார்கள்.
துளியும் தன்னலம் காட்டாமல், தலைக்கனம் கொள்ளாமல், பதவியைத் தன் உயர்வுக்காகவோ, தனக்கு வேண்டியவர்களின் உயர்வுக்காகவோ பயன்படுத்தாமல், நேர்மையாக, நாணயமாக நடந்துகொள்கிறார். ஆனால் அதே நேரத்தில் எவருடைய மிரட்டலுக்கும் வளைய மறுக்கிறார். குடியரசுத் தலைவர் நாட்டு மக்களுக்கு அளித்திடும் செய்தி என்ற பெயரில் உரை நிகழ்த்துவதும், அந்த உரையைப் பெரிய அதிகாரிகள் தயாரித்துக் கொடுப்பதும், தயாரித்துத் தரப்பட்ட உரையையே தம்முடைய பேருரை என்று படித்து முடிப்பதும் ஒப்புக்கொள்ளப்பட்டிருந்த ஒரு பழக்கம்; முறை. அதன்படி டில்மனுக்கு வெள்ளைப் பேரதிகாரிகள் உரை தயாரித்து அனுப்புகிறார்கள். அதிலே இன்ன குறை இருக்கிறது, இப்படி மாற்றவேண்டும், இன்ன கருத்தைச் சேர்க்க வேண்டும் என்று கூடக் கூறவில்லை, கலந்து பேசவில்லை, வாதாடவில்லை; அதற்கு மாறாக, எனக்காக உரை தயாரித்துக் கொடுத்ததற்கு எனது நன்றி. ஆனால் நானே பேருரை தயாரித்துக் கொண்டுவிட்டதால், தாங்கள் அனுப்பிய உரையைத் திருப்பி அனுப்பி இருக்கிறேன். பெற்றுக் கொள்ளவும். எனக்காகத் தாங்கள் எடுத்துக் கொண்ட கஷ்டத்திற்கு என் நன்றி - இவ்விதமாக அல்லவா கடிதம் அனுப்புகிறார்!
குடியரசுத் தலைவராக்கப்பட்ட கருப்பனாக நடந்து கொள்ள மறுக்கிறார்; குடியரசுத் தலைவராகவே நடந்து கொள்ள விரும்புகிறார்; இது தாங்கிக் கொள்ள முடியாத தொல்லை; அனுமதிக்க முடியாத ஆபத்து என்று வெள்ளைப் பேரதிகாரிகள் முடிவு செய்தனர். அவர்களுக்குத் தலைமை வகித்திருந்தான், ராஜாங்க மந்திரி வேலை பார்த்து வந்த ஈட்டன். அவன் எதிரில் போய் நின்றாள் சாலி வாட்சன், ஆடை கிழிக்கப்பட்டு, அலங்கோல நிலையுடன்! உடலிலே கூடச் சில கீறல்கள்!
என்ன அலங்கோலம்? என்ன நேரிட்டது...
கருப்பு வெறியன் என்னைக் கற்பழிக்க...
அவ்வளவு அக்கிரமம் செய்யத் துணிந்தானா அற்பன்?
முயன்றான்... பெரும் போராட்டம்... தப்பித்துக் கொண்டேன்... அந்தப் பயங்கரமான முரட்டுப் பிடியிலிருந்து... இதோ கீறல்கள்...
ஆமாம்! இரத்த காயம்! கருநிற மிருகம் இனியும் உலவக் கூடாது...
கட்டிப் போட்டாக வேண்டும்...
விரட்ட வேண்டும் வெள்ளை மாளிகையிலிருந்து.
ஏற்கனவே குவிந்துள்ள குற்றச்சாட்டுகளுடன் இதோ புதிய, பயங்கரமான, நாட்டு மக்கள் காதில் விழுந்ததும் கொதிப்பினை மூட்டத்தக்க குற்றம்... கற்பழித்தல்...
கற்பழிக்க முயற்சித்தல்...
வெள்ளை மாதை... சீமாட்டியை.. செனட்டர் வாட்சன் திருக் குமாரியை.
டில்மன் மீது இத்தகைய முறையில் கண்டனக் கணைகள் தொடுத்ததும், அவனைப் பதவியிலிருந்து விரட்டிவிடத் தீர்ப்பாகிவிடும்.
அந்தத் தீர்ப்பு கிடைத்ததும் அன்பே! குடியரசுத் தலைவர் ஆகவேண்டியது... யார்...?
நான் தான்... ராஜாங்க மந்திரி ஈட்டன் தான் அடுத்த குடியரசுத் தலைவர்! முறை அதுதான்...
ராஜாங்க அமைச்சர் ஈட்டனா! என் காதலர் ஈட்டன்! என் கணவர் ஈட்டன்!...
ஆமாம், ஆருயிரே! உன்னை மறந்தா... பதவி எவ்வளவு உயரினும், உன்னிடம் நான் கொண்டுள்ள அன்பு குறையுமா...
எப்போது, உமது மனைவி என்று கூறிக் கொள்பவளிடமிருந்து விடுபடப் போகிறீர்? எப்போது விவாக விடுதலை? எப்போது சாலி வாட்சன், சாலி ஈட்டன் ஆகிவிடுவது?
சதி, தம்பி, ஒரே ஒரு வட்டம் அல்ல; வட்டத்திற்குள் வட்டம்; வட்டங்கள் என்ற முறையில்தான் இருந்திட முடியும்.
ஈட்டன், சதி செய்கிறான் குடியரசுத் தலைவர் ஆகிவிடுவதற்காக.
சாலி சதி செய்கிறாள் ஈட்டனின் மனைவி ஆவதற்காக.
ஈட்டனுக்காகச் சாகசம் காட்டி வேலை செய்கிறாள் சாலி! கற்பழிக்க முயற்சித்த குற்றம் சுமத்தப் படுகிறது டில்மன் மீது. தீர்ப்பைப் பற்றிய சந்தேகம் எழவே நியாயமில்லை. மிகப்பெரும் அளவு வெள்ளையர்கள் - அதிலும் நிறவெறி பிடித்தவர்கள் கொண்ட அவையில், ஒரு கருநிறத்தான் வெள்ளை மாதைக் கற்பழிக்க முயன்றதாக மெய்ப்பிக்கப்பட்டுவிட்டால், பிறகு அவன் கீழே உருட்டப்படுவான் என்பதிலே என்ன சந்தேகம் எழ முடியும்?
கண் சிமிட்டினான்! பச்சைச் சிரிப்பு சிரித்தான்! அந்தத் தோட்டத்து மலர் எனக்குக் கிடைக்குமோ என்று கேட்டான்!
என்ற இவ்விதமான 'குற்றச் சாட்டுகளுக்கே' கருப்பரை, அடித்துக் கொன்று மரத்திலே தொங்கவிட்டிருக்கிறார்கள்! நிறத் தூய்மையைக் காத்தாக வேண்டும் என்ற முறையை வெறியாக்கிக் கொண்ட அமெரிக்காவில்.
வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, டில்மன் மீது கண்டனக் கணைகளைச் சரமாரியாகத் தொடுத்துக் கொண்டிருக்கும்போது, இதழ்கள் வெறுப்பையும் கோபத்தையும் கக்கியபடி இருந்தபோது, தீர்ந்தது இவன் காலம் என்று மக்கள் பேசிக் கொண்டிருந்தபோது, மற்றோர் விசித்திரமான விபரீதம் நடக்கிறது.
சாலி ஈட்டன் ஆகப்போவது உறுதி; வெள்ளை மாளிகையின் ஆரணங்கு ஆகப் போகும் நாள் விரைவில் என்று எண்ணி அகமகிழ்ச்சியுடன் இருந்து வந்த சாலி வாட்சன் தற்செயலாக, ஈட்டன் நடத்தும் சதியைக் கண்டறிகிறாள்.
உனக்காகத்தான் இவ்வளவும் என்று சாலி கூறியபோது உன்னோடு சேர்ந்துதான் வெள்ளை மாளிகைக்குச் செல்லப் போகிறேன் என்று பசப்பிய ஈட்டன், திருநாள் உறுதி என்று தெரிந்ததும், எங்கோ நெடுந் தொலைவில் இருந்து வந்த தன் மனைவிக்கு அழைப்பு அனுப்புகிறான்! நான் குடியரசுத் தலைவராகப் போகிறேன்; வெள்ளை மாளிகை உன்னை அழைக்கிறது; உடனே வந்திடுக! என்று; அவளும் வந்து சேருவதாகச் சேதி அனுப்புகிறாள்.
இது தெரிந்ததும் சாலி சீறுகிறாள்; ஈட்டன் தன்னை ஏமாற்றுவது அறிந்து பதறுகிறாள்.
டில்மன் மீது தொடுக்கப்பட்ட வழக்கிலே நெருக்கடியான கட்டம்!
அதே நேரத்தில், சாலி - ஈட்டன் தொடர்பிலே நெருக்கடி!
ஆத்திரம் பீறிட்டுக் கொண்டு வந்த நிலையில், சாலி வாட்சன், தன் தவறு பற்றியும், டில்மன் மாசற்றவன் என்பது குறித்தும், குற்றச்சாட்டு பொய் - இட்டுக் கட்டப்பட்டது என்பது பற்றியும் - தன் தகப்பனாரிடம் ஒப்புக் கொள்கிறாள். அவளுடைய வாக்குமூலம், சட்டமுறைப்படி தயாரிக்கப்படுகிறது. அதை எடுத்துக் கொண்டு போகிறார் வாட்சன்; தனது மன்னிப்பைத் தெரிவித்துக் கொள்கிறார் டில்மனிடம்.
"வீணான பழி சுமத்தினார்கள் என்பதை உணருகிறேன். இதோ என் மகள் தந்த வாக்குமூலம். இதனைத் தாங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்" என்று கூறி செனட்டர் வாட்சன் தன் பெருந்தன்மையை எடுத்துக் காட்டுகிறார்.
அதனைக் காட்டிலும் மேலான பெருங்குணம் தமக்கு உண்டு என்பதை எடுத்துக் காட்டும் விதத்தில் டில்மன் அந்த வாக்குமூலத்தை வாட்சனிடமே கொடுத்துவிட்டு உண்மையை நீங்கள் உணர்ந்து கொண்டீர்களே அது போதும் எனக்கு என்று கூறுகிறார்.
ஆனால் வாட்சன்! இந்த ஒரு விஷயம், வீண்பழி என்பதாலேயே, நான் உமது பக்கம் இருப்பேன் வழக்கிலே என்று எண்ணிக் கொள்ளாதீர். வழக்கு விபரம் முழுவதும் அறிந்து, நேர்மையின் பக்கம் தான் நிற்பேன், என் மகள் பழி சுமத்தினாளே என்ற பரிதாபத்துக்காக உம்பக்கம் நிற்பேன் என்று நம்பிவிடாதீர்கள் என்று அந்த முதியவர் கூறுகிறார். நேர்மையின் பக்கம் நின்றிடுவதை நான் வரவேற்கிறேன் என்று ஒப்பம் அளிக்கிறார் டில்மன்.
இப்படிச் சித்திரவதை செய்வதைவிட, டில்மனை வெள்ளை வெறியர்கள் ஒரே அடியாகக் கொன்று போட்டு விட்டிருக்கலாமே என்று கேட்கத் தோன்றும்.
ஆபிரகாம்லிங்கனைக் கொன்றுவிடவில்லையா! கென்னடியைச் சுட்டுக் கொன்றுவிடவில்லையா! டில்மன் மீது மட்டும் கொலைகாரர்கள் பாயாமலா இருந்திருப்பார்கள். பாய்ந்தனர்! தப்பித்துக் கொண்டார். அந்தக் கொலை முயற்சியை யொட்டியும் ஒரு உள்ளம் உருக்கும் நிகழ்ச்சி இருக்கிறது. அடுத்த கிழமை அதுபற்றிக் கூறுகிறேன்.
சதிக்குள் சதி - 2
ஆபிரகாம்லிங்கன் - கென்னடி போல
ஆத்திரத்திலே அறிவை இழந்து
உல்லாசியின் சதி வலை
வீரன் விழித்துக் கொண்டான்
கருப்பைக் காத்தது 'வெள்ளை'
உலகம் காடாகிப் போய்விடவில்லை!
அடக்கப்பட முடியாத ஆத்திரம், அதிலும் நீதியற்ற காரணத்துக்காக மூட்டிக் கொள்ளப்பட்டுவிடும் ஆத்திரம், வெறியாகிவிடுகிறது; அந்த வெறியிலே சிக்கிக் கொள்பவர்கள் எந்தக் கொடுமை செய்திடவும், இழிசெயல் புரிந்திடவும் கூசுவதில்லை. வெறிகளில் மிக மோசமானது, தன் இனம், தன் மதம் உலகிலேயே உயர்வானது, தூய்மையானது என்ற அழுத்தமான நம்பிக்கையின் காரணமாக விளைந்திடும் வெறி - தன் இனத் தூய்மை காப்பாற்றப்பட்டாக வேண்டும் என்பதற்காக அந்தத் தூய்மையைக் கெடுக்க முனைபவர்களை அல்லது அந்தத் தூய்மையை ஒப்புக்கொள்ள மறுப்பவர்களைத் தீர்த்துக் கட்டிவிடவும் துணிந்துவிடச் செய்கிறது.
அப்படிப்பட்ட கொலை பாதகத்துக்குப் பலியானவர்களே, அமெரிக்கக் குடியரசுத் தலைவர்களான ஆபிரகாம்லிங்கனும், கென்னடியுமாவர். இங்கேயும் உலக உத்தமர் என்று கொண்டாடப்பட்ட காந்தியாரின் உயிரைக் குடித்ததும் ஒருவிதமான வெறி உணர்ச்சியேயாகும்.
எதிர்பாராத வகையில் குடியரசுத் தலைவராகிவிட்ட டக்ளஸ் டில்மனையும் கொன்று போட வெள்ளை வெறியர் திட்டமிட்டதிலே வியப்பேதும் இல்லை. ஆனால் டில்மன் தப்பித்துக் கொள்கிறார். அவரைக் கொலை செய்துவிடத் தீட்டப்பட்ட சதி தோற்றுவிட்டதாலேதான், அவர் மீது கொடுமையான பழி சுமத்தி வழக்குத் தொடுத்தனர்.
கொலை செய்து போடுவதைக் காட்டிலும் மோசமான செயல் ஒருவருடைய பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தி, இழிவான பழிசுமத்திக் கேவலப்படுத்தி விடுவது.
டக்ளஸ் டில்மனை, வெள்ளை மாளிகைத் தோட்டத்திலேயே அவர் உலவும்போதே மறைந்திருந்து தாக்கித் தீர்த்துக்கட்டி விடுவது என்று தீர்மானித்த சதிகாரர்கள், அதற்கேற்ற சூழ்நிலையை உருவாக்கிட முனைந்தனர்.
குடியரசுத் தலைவருக்குத் தக்க பாதுகாப்பளிக்க, திறமைமிக்க காவலர் பலர் அமர்த்தப்பட்டிருந்தனர். அவர்களில் மிகுந்த கடமை உணர்ச்சியும், துணிவும் கொண்ட வெள்ளை இனத்தவன் ஒருவன் இருந்தான். அவன் மனதிலேயும் ஒரு குமுறல் மூண்டு கிடந்தது; இனவெறி காரணமாக அல்ல; தனக்கு உரிய இடம், மேலிடம் தரப்படாமல், அந்த மேலிடம் ஒரு நீக்ரோவுக்குத் தரப்பட்டுவிட்டது என்பதாலே மூண்டிட்ட குமுறல். ஆனால் அவனைக் கைக்குள் போட்டுக் கொண்டு காரியத்தை முடித்திட சதிகாரர்கள் முனையவில்லை. ஒரு வேளை மனதிலே குமுறல் இருப்பினும், இத்தகையை இழிசெயலுக்கு அவன் உடந்தையாகிட மாட்டான் என்று எண்ணிடத்தக்க விதமாக அவன் போக்கு இருந்திருக்கும் போல இருக்கிறது. சதிச் செயலுக்கு அவன் உடந்தையாக இருக்க மாட்டான் என்பதை மட்டுமல்ல; அவன் டில்மனைக் காத்து நிற்கிற வரையில் தமது கொலை பாதகத் திட்டம் நிறைவேறாது என்ற எண்ணமும் தோன்றிவிட்டது சதிகாரர்களுக்கு. ஆகவே அவனை முதலில் மடக்கத் தீர்மானித்தனர். அதற்கு ஒரு மை விழியாள் கிடைத்தாள்!
அவள் அழகி; கருநிறக் கவர்ச்சியும் இளமை மெருகும், இனிய இயல்பும் கொண்டவள்; நீக்ரோ.
நிறவெறி தலைவிரித்தாடிடும் நிலையிலும் இனத்தூய்மை காப்பாற்றப்படுவதற்காக எத்தகைய கொடுமையையும் இழிசெயலையும் செய்திடத் துணிவு கொண்ட நிலையிலும், காமம் - அல்லது காதல் எனும் உணர்ச்சி, இன பேதம், நிறபேதம் என்பவைகளைக் கடந்த ஒரு கவர்ச்சியாக அல்லவா இருக்கிறது! அந்தக் கவர்ச்சியையே, விழிப்புடன் இருந்து வந்த அந்த வெள்ளைக் காவலாளியை வீழ்த்தப் பயன்படுத்தினர். இது ஒரு 'ஏற்பாடு' என்பதனை அவன் உணரவில்லை; மைவிழியாள் உள்ளபடி தன்னிடம் மயங்கிவிட்டாள் என்று எண்ணிக் கொண்டான்; அவன் அவளிடம் மயங்கி விட்டதன் விளைவு அந்த எண்ணம்.
ஒரு சிற்றுண்டி விடுதியில் ஏற்பட்ட சந்திப்பு, புன்னகையாகி, பொருளற்ற பேச்சாகி, பொழுது போக்காகி, பிறகு ஆசை தான் ஆனால் அச்சமாக இருக்கிறதே என்ற சாகசப் பேச்சாகி, பிறகு இதுவரையில் நான் என்னை எவரிடமும் ஒப்படைத்ததில்லை, உம்மிடமோ என்னை முழுவதும் ஒப்படைத்து விடத் துணிந்துவிட்டேன் என்ற காதற்பேச்சாகி, கடைசியில் தனி அறைக்கே கொண்டு சென்று விட்டது.
அன்றைய தினமும் அவன் குடியரசுத் தலைவரின் அருகிருந்து காவல் செய்ய வேண்டிய முறை இருந்தது. ஆனால் இந்த விருந்து முடிந்ததும் வேலையைக் கவனிக்கலாம் என்று இருந்துவிட்டான். தன்னைக் கடமையைச் செய்யவிடாமல் தடுத்திடவே இந்தக் கள்ளி அமர்த்தப்பட்டிருக்கிறாள் என்பதை அவன் உணரவில்லை. கள்ளி என்றா எண்ணிக் கொண்டான், கற்கண்டு, பாகு, தேன் என்று அல்லவா எண்ணிக் கொண்டான். ஆடவன்! இளைஞன்! மயக்கம்! தன்னையும் அறியாமல் ஒரு பயங்கர சதியிலே பங்கெடுத்துக் கொள்கிறோம் என்ற எண்ணமே எழவில்லை, அவன் தான் பாவம் அவளுடைய விழியின் ஒளியையும் அது விடுத்திடும் அழைப்பையும் கண்டு மெய்மறந்திருக்கிறானே, மதுவும்கூட அருந்திவிட்டான்! நிலைமையை மேலுமா விளக்கவேண்டும்.
இசைத்தட்டு ஒலி எழுப்புகிறது; அவள் இதழ் அழைக்கிறது; அவன் தன்னை மறந்திருந்தான்.
நீக்ரோ இனத்தவள் தன் இனத்தானைக் கொன்று போடச் செய்யப்படும் சதியிலே எப்படி ஈடுபட முடிந்தது என்று வியப்பு ஏற்படும். தம்பி! வெறுப்பும் ஆத்திரமும், தெளிவான அறிவின் மீது கட்டப்படுவதில்லையல்லவா! டக்ளஸ் டில்மன் மீது வெள்ளையரின் வெறியருக்கு, நிற பேதம் காரணமாகப் பகை கிளம்பியது போலவே, நீக்ரோ இனத்தவருக்கு, டில்மன் தன் இனத்தை மறந்தவன், கை விட்டு விட்டவன், காட்டிக் கொடுப்பவன் என்ற ஒரு தவறான எண்ணம் காரணமாக வெறுப்பும் ஆத்திரமும் கொந்தளித்துக் கொண்டிருந்தது. வெள்ளை மாளிகையில் கொலுவிருக்கிறான், இவன் இனப்பற்று உள்ளவனானால், ஒரே வரியில், நமது இனத்தின் இழிவைத் துடைத்திட முடியாதா - செய்தானா?
குடியரசுத் தலைவர் பதவியைக் காப்பாற்றிக் கொண்டால் போதும், இனம் எக்கேடு கெட்டால் என்ன என்று எண்ணி விட்டான்; சுயநலக்காரன்.
இனத்துக்காகப் பரிந்து பேசினால், வெள்ளைப் பேரதிகாரிகள் தன்னைக் கவிழ்த்து விடுவார்களோ என்ற பயம்! கோழை!
இவன் தான் இப்படி என்றால் நமது இன விடுதலைக்காகப் பாடுபட்டுக் கொண்டு வந்ததே ஒரு இயக்கம், அதனையாவது விட்டு வைத்தானா? தடைச் சட்டம் போட்டு விட்டான்! இனத்தைக் காட்டிக் கொடுத்து விட்டான்.
அது மட்டுமே! வெள்ளையர்களே ஏதோ பச்சாதாபப் பட்டுக் கொண்டு, நீக்ரோ மக்களுடைய வறுமையைப் போக்க பெரிய தொகையைச் செலவிட ஒரு சட்டம் கொண்டு வந்தார்கள்; இந்த இனத்துரோகி அந்தச் சட்டத்தையுமல்லவா, தூக்கி எறிந்து விட்டான்! இவனுக்கு வெள்ளை மாளிகையில் வாசம்! இவன் இனம் நாம்! நமக்குச் சாக்கடை ஓரம்! இவனை நாம் நமது இனத்தின் ரட்சகன் என்று கூறிக் கொண்டாடினோம் புத்தி கெட்டு! இவன் நமது இனத்தின் இழுக்கு அவ்வளவும் ஒன்று திரண்டு வந்துள்ள உருவம்! நீக்ரோ இனத்தை நாசமாக்க வந்துள்ள கேடு! தம்பி, இந்த விதமான எண்ணம், நீக்ரோக்களில் மிகப் பலருக்கு. அவர்களின் தயாரிப்பு இந்தக் கவர்ச்சிமிக்க ஒரு நிறக்காரிகை!
கட்டிலின் மீது சாய்ந்து கிடக்கிறாள்; காமவெறியால் அவன் ஆட்டிவைக்கப்படுகிறான்; மிருக உணர்ச்சியை மது கிளறி விடுகிறது. காரியம் கச்சிதமாக முடிவடைகிறது என்ற களிப்புடன் அவள் பேசுகிறாள்:
நான் உன்னிடம் மயங்கியதுபோல, இதற்கு முன் வேறு எவரிடமும் மனதைப் பறிகொடுத்ததில்லை. எத்தனையோ பேர் முயற்சித்தனர். எட்டிநில்! கிட்டே வராதே! என்றேன். ஆனால் உன்னிடம்! எல்லோரையும் போலவா நீ? நீ தனி!
அதென்ன! நான், மற்றவர்களைக் காட்டிலும் எதிலே சிறந்தவன்! எப்படிச் சிறந்தவன்!
தம்பி! உணர்ச்சி தோன்றிய நாள் தொட்டு, நடைபெற்றுக் கொண்டு வரும் 'உரையாடல்' தான்! காதலில் கண்டுண்ட நேரத்தில், பெருமூச்சும் பூங்காற்றாகத் தோன்றும்; பொருளற்ற பேச்சிலே ஒரு தனிச் சுவை தெரியும்; உள்ளம் நெகிழ்ந்திடும் நிலை அல்லவா! அதிலும் ஒரு பெண் 'சல்லாபம்' செய்வது என்று தீர்மானித்து விட்டால், மயங்காத ஆடவன் ஏது!!
சல்லாபப் பேச்சோடு பேச்சாக அவள்,
"எனக்கு ஒன்று பிடிக்கவில்லை, உன்னுடைய தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ற வேலையிலா இருக்கிறாய்... போயும் போயும் காவல் வேலை! அதிலும் யாருக்கு...
அமெரிக்கக் குடியரசுத் தலைவருக்கு!! அது என்ன சாமான்யமா...
தலைவர்! குடியரசுத் தலைவர்! யார்... கருநிறத் தான் தானே...
உன் இனம்! உன் இனத்தவர் வெள்ளை மாளிகையிலே கொலுவிருப்பது உனக்குப் பெருமை அல்லவா...
என் இனம்! இன உணர்ச்சி அற்ற மனிதனை என் இனம் என்று எண்ணிப் பெருமைகொள்ள நான் என்ன முட்டாளா! எப்படியோ அங்கே இடம் கிடைத்து விட்டது! அனுபவிக்கிறான்! அவ்வளவுதானே...
வியப்பாக இருக்கிறதே உன் பேச்சு... வெறுப்பாகப் பேசுகிறாயே... மகிழ்ச்சியால் துள்ளுவாய் என்றல்லவா எண்ணினேன்...
மகிழ்ச்சியா? எதற்காக! என் இனத்தின் உரிமைக்காகப் போராடி வந்த இயக்கத்தை ஒழித்துக் கட்டினானே அதற்காகவா... என் இனம் வறுமையிலிருந்து விடுபட, பெரிய தொகை தரச் சட்டம் கொண்டுவந்ததை வேண்டாமென்று கூறினானே, அதற்காகவா...
இவ்விதமாகப் பேச்சு தொடர்ந்திடவே, விருந்து பெற வேண்டிய நேரத்தில் வீணான விவாதம் நடைபெறுகிறதே, காலம் வீணாகிறதே என்ற கவலை பிறக்கிறது அவனுக்கு. துடியிடை! சுவை தரும் இதழ்! இனக் கவர்ச்சி மிகு ஈடில்லா இன்பம்! இவைகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான் அவன்! அவளோ கட்டிலறையில், அரசியல் பேசுகிறாள்! அதிலும் வெறுப்பைக் கொட்டிக் காட்டும் பேச்சு! இடத்திற்கோ, நேரத்திற்கோ, நிலைமைக்கோ துளியும் பொருத்தமற்ற பேச்சு. அவளிடம் அவன் எதிர்பார்த்தது, கண்ணாளா! என்ற கொஞ்சும் மொழி; அவளோ வெள்ளை மாளிகையில் உள்ள 'கருப்பன்' எங்கள் இனத்துரோகி என்று பேசுகிறாள். திடுக்கிட்டுப் போனான். அதிலும், குடியரசுத் தலைவரின் அருகே இருந்துவந்ததால் அவன் அறிந்திருந்த உண்மை நிலைமைக்கும், அவள் டில்மனைக் குறித்துப் போட்டிருந்த மதிப்பீட்டுக்கும் பொருந்தவே இல்லை.
ஒரு உண்மை கூறுகிறேன், உல்லாசி! அதை மட்டும் கேட்டிடு; மேற்கொண்டு அரசியல் பேச்சே வேண்டாம்; ஆடிப்பாடி மகிழ்ந்திட வேண்டிய நேரம் இது; அரசியல் பேச அல்ல! நான் அறிந்துள்ள உண்மையைக் கூறுகிறேன், கேள். டில்மன் நீ நினைப்பது போலக் கெட்டவன் அல்ல. வெள்ளை மாளிகையிலே வாழ்வதிலே சுகம் கண்டு அதிலே மூழ்கிக் கிடந்திடவில்லை. இனத்தைக் காட்டிக் கொடுத்திடும் கயவன் அல்ல, டில்மன். தன் இனத்திற்கு ஏதும் செய்திட முடியாத இக்கட்டான நிலைமையில் சிக்கித் தத்தளிக்கிறான்...
என்ன சொல்லுகிறாய்...? டில்மன், வெள்ளை மாளிகை வாழ்விலே இன்பம் கண்டு அதிலே மூழ்கி, தன் இனத்தையும் மறந்து கிடந்திடும் போக்கிலே இல்லை என்றா சொல்லுகிறாய்...
சொல்லப்போனால், வெளியே இருப்பவர்கள் தான் டில்மன் சொகுசான வாழ்க்கை வாழ்வதாக எண்ணிக் கொள்வார்கள்... உண்மை என்ன தெரியுமா... யாரை நம்புவது என்று கூடத் தெரிந்து கொள்ள முடியாத நிலையில், டில்மன் தவிப்பதை நான் கண்கூடாகப் பார்க்கிறேன். டில்மன் நிலைமையைப் பார்க்கும்போது எனக்கு 'ஐயோ பாவம்' என்றுதான் தோன்றுகிறது. சுற்றிலும் சூழ்ச்சிக்காரர்கள் எப்படி, எப்போது கவிழ்த்து விடுவது என்று திட்டம் தீட்டியபடி உள்ள சதிகாரர்கள். தாங்கள் ஆட்டி வைக்கிறபடி அவன் ஆடவேண்டும், இல்லையென்றால் அவனைப் பதவியிலிருந்து விரட்டிட வேண்டும் என்று எண்ணும் சூழ்ச்சிக்காரர்களுக்கு மத்தியிலே கிடந்து திகைக்கிறான்...
உண்மையாகவா... டில்மன், வெள்ளையரின் விளையாட்டுப் பொம்மையாக இல்லையா?
யார் சொன்னது அப்படி?... டில்மன் வெள்ளையர் கருப்பர் என்ற நிறத்தை அடிப்படையாக்கிக் கொண்டு கடமையைச் செய்யவில்லை. நாணயமானவனாக நாலுநாள் பதவியில் இருந்தாலும் போதும் என்று எண்ணுகின்றவன். தன்னை வெள்ளையர் இழிவாக நடத்த விரும்புவதையும் உணருகிறான்; கருப்பர் தன்னிடம் வெறுப்புக் கொண்டிருப்பதையும் உணருகிறான். ஆனால் தன் மனசாட்சியின்படி நடக்க முனைகிறான்; குடியரசுத் தலைவருக்கு உள்ள கடமையைச் செம்மையாகச் செய்திட விரும்புகிறான். மகிழ்ச்சி இல்லை! நட்புக் காட்டுவோர் இல்லை!! பரிதாபமான நிலைமை! இதுதான் உண்மை. சரி... சரி... மேலும் நமக்கு எதற்கு அரசியல்... வா! வடிவழகி! வாரி அணைத்திட நான் துடித்திடும் வேளையில், நீ மேலும் அரசியல் பேசி ஆயாசத்தை மூட்டிவிடாதே; வா!
அவள் வரவில்லை! துடிதுடித்து எழுந்திருக்கிறான். சற்றே தொலைவில் நிற்கிறாள், பாசப்பார்வை காணோம்! பாகுமொழி இல்லை! மையலூட்டும் நிலை இல்லை! கண்களிலே கொப்பளித்துக் கொண்டு வருகிறது கண்ணீர்.
பெருந்தவறு! பெரிய அக்கிரமம் செய்யத் துணிந்தேனே! நானோர் பேதை! கலகக்காரர் பேச்சை நம்பினேன்; நாசவேலைக்கு உடந்தையானேன்... உண்மை புரிகிறது. டில்மன்... பாவம்... இந்நேரம் என்ன நேரிட்டிருக்குமோ... மனம் பதறுகிறதே... என் இனத்தவரில் சிலர், டில்மன் இனத்துரோகி, ஒழித்துக் கட்ட வேண்டும் என்று கூறினர்; இணங்கினேன். இங்கு உன்னை மயக்கத்தில் கட்டிப் போட்டு வைக்கச் சம்மதித்தேன். என் சல்லாபத்தில் உன்னைச் சிக்க வைக்கச் சொன்னார்கள். அந்த நேரமாகப் பார்த்து டில்மனை அவர்கள்... தீர்த்துக்கட்ட ... ஐயோ! என்ன ஆகி இருக்குமோ இந்நேரம்...
கட்டழகியிடம் கொண்ட மையல், சல்லாப உணர்ச்சி, வாலிபத் துடிப்பு எல்லாம் இருக்குமிடம் தெரியாமல் பறந்தது; அவன் நிலைமையை உணர்ந்து கொண்டான். துடித்தெழுந்தான்; "அடிப்பாவி! சாகசக்காரி! சதிகாரி! விபசாரி!" என்று ஏசினான், உடைகளைச் சரிப்படுத்திக் கொண்டான்; அவளைக் கொன்றுவிடத் துடித்தான். குடியரசுத் தலைவரின் நிலைமை எப்படியோ என்ற எண்ணம் அவனைச் செயலிலே துரத்திற்று. ஓடினான்! ஓடினான்! காப்பாற்ற வேண்டும்; கடமையைச் செய்தாக வேண்டும்! பரிதாபத்துக்குரிய டில்மன் பாதகர்களின் குண்டுக்கு விழாதபடி தடுத்தாக வேண்டும் என்று உறுதிகொண்டு, வெள்ளை மாளிகையே நோக்கி அம்பெனப் பாய்ந்தான்.
அவள் சொன்னபடியே சதிகாரர்களால் ஏற்பாடு செய்யப்பட்டபடி, தோட்ட வேலைக்காரனாக வந்திருந்த ஒருவன் - ஒரு நீக்ரோ - டில்மன் மீது குறி பார்த்துத் துப்பாக்கியால் சுடுகின்ற நேரம், கடைசி வினாடி, வெள்ளை இனத்தவனாகப் பிறந்தும் நிறவெறியற்று, நீதியில் பற்று வைத்துப் பணியாற்றிட உறுதி கொண்ட காவலாளி, டில்மன் மீது பாயக் கிளம்பிய குண்டினைத் தானே ஏற்றுக் கொண்டு டக்லஸ் டில்மன் உயிரைக் காப்பாற்றினான். அவன் மடியவில்லை, படுகாயமுற்றான்.
தம்பி! எத்தகைய வெறி உணர்ச்சி ஊட்டப்பட்டிருந்தாலும், நீதியிலும் நேர்மையிலும் நம்பிக்கை கொள்பவர்கள், வெறி உணர்ச்சியை உதறித் தள்ளிவிட முடியும்; மனிதனாக முடியும் என்பதை மெய்ப்பிக்கும் மன நெகிழ்ச்சி தரத்தக்க சம்பவமல்லவா இது!
உடல் வனப்பைக் காட்டி, வலை வீசி காமவெறி ஊட்டி வாழ்க்கை நடத்திடும் ஒரு பெண்ணே அல்லவா, உண்மை புரிந்ததும் உள்ளம் சுட்டதும், திருந்துகிறாள், ஒரு நொடியில்!
வாலிப முடுக்கு காரணமாகவும், இன்பம் பெறும் துடிப்பு காரணமாகவும், தன்னை மறந்து கிடந்திடும் நிலை பெற்ற போதிலும், தன்னையும் அறியாமல் ஒரு அக்கிரமத் திட்டத்திற்குத் தான் உடந்தை ஆக்கப்படுவதை உணர்ந்ததும் அந்த மனிதன், ஓடோடிச் சென்றானல்லவா, உல்லாசியை உதறித் தள்ளிவிட்டு, தன் உயிரை இழந்தாகிலும், தன்னை நம்பியுள்ள நாட்டுத் தலைவன் உயிரைக் காத்திட! இன வெறி எல்லோரிடமும் இடம் பெற முடியாது. மனித உள்ளம், எல்லாவிதமான வெறியையும் மாய்த்துக் கொண்டு எழ முடியும் என்பதனை எடுத்துக்காட்டும் சம்பவமல்லவா இது? மனிதத் தன்மையை மாய்த்திட, மிருக உணர்ச்சியைக் கிளறிவிட எத்தனை கேடான சூழ்ச்சிகள் மூட்டப்பட்டுவிடினும், எல்லோருமே பலியாகிவிடுவதில்லை; ஒரு சிலர் ஒப்பற்ற தனித் தன்மை காட்டி, தாங்கள் மனிதர்கள் என்பதை மெய்ப்பித்துக் கொண்டு வருவதனால்தான், உலகு காடாகிப் போகாமல் இருந்து வருகிறது.
தன்னைக் கவிழ்த்திடச் சதிசெய்யும் வெள்ளையர்களும், தன்னிடம் வெறுப்பைக் கக்கிடும் நிலையில் தன் இனத்தவரும் இருக்கக்கண்டு இதயம் நொந்து கிடந்த டில்மனுக்கு, ஒரு சாதாரணக் காவற்காரன் காட்டிய இந்தத் தியாக உணர்ச்சி, நீதியில் பற்று, நேர்மையில் உறுதி, எவ்வளவு நெஞ்ச நெகிழ்ச்சி உண்டாக்கி இருந்திருக்கும்!
வெள்ளையர் - கருப்பர் என்ற இருபிரிவாக மட்டுமல்ல மக்கள் இருப்பது; மனிதர்களும் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து டில்மன், புதிய உறுதி பெற்றிருக்க வேண்டும்.
அந்தப் புதிய உறுதியுடனேயே டக்ளஸ் டில்மன் தன் மீது தொடுக்கப்பட்ட வழக்கைச் சந்தித்தான்; துளியும் கலக்கமின்றி; விளைவு பற்றிய கவலையற்று, கடமையைச் செய்கிறோம் என்ற மனத்திருப்தியுடன்.
சதிக்குள் சதி - 3
தன்னலத்தின் பல வடிவங்கள்
பெருமைக்கு உரிய நன்மகன்
புகழுரையில் பாதி பொய்யுரை
இனம் வெள்ளை - உள்ளம் தூயது
விந்தையான மாறுதல்
'மனிதன்' என்ற தலைப்பிட்டு இந்த ஏடு எழுதப்பட்டிருப்பதன் நோக்கம் மனிதத் தன்மை இன, மத, குலப்பற்று வெறியாகிடும்போதும், சுகபோகத்தில் நாட்டம், சுயநலத்தில் விருப்பம் எழும்போதும், மாய்க்கப்பட்டுவிடுகிறது; அத்தகைய நிலையிலும் வீழாமல், நிமிர்ந்து நின்று, நேர்மையுடன் யார் நடந்து கொள்கிறார்களோ, 'இதயசுத்தி'யுடன் நடந்து கொள்கிறார்களோ, அவர்களையே 'மனிதன்' என்ற பட்டியலில் சேர்க்க முடியும்; 'மனிதன்' என்ற தகுதியை அவர்களே பெறுகிறார்கள் என்பதை எடுத்துக் காட்டும் தூய நோக்கமே காரணமாக அமைந்திருக்கிறது. இந்த ஏட்டின் தனிச் சிறப்புக்கு இதுவே காரணமாகவும் அமைகிறது.
தன்னலம் தலை காட்டவே செய்யாது என்று கூறிவிடுவதோ, என்னிடம் தன்னல உணர்ச்சி வெற்றி கொள்ளவே செய்யாது என்று இறுமாந்து கூறிவிடுவதோ பொருளற்றதாகும்.
தன்னலம் என்பதற்கே வடிவங்கள் பலப்பல.
தன்னலத்தை ஊட்டிடும் நிலைகளும் பலப்பல.
தன்னலத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கான முறைகளும் பலப்பல.
தன்னலத்தைத் துளியும் கருதாதவன் என்றோ, தன்னல நோக்கமே எழாத நிலையினன் என்றோ ஒருவரைப் பற்றிக் கூறி, பெருமைப்படுத்துவதைக் காட்டிலும், உண்மையான பெருமை, தன்னலத்தை வென்றவன், தன்னல உணர்ச்சியால் தாக்கப்பட்டும் தாழ்ந்துவிட மறுத்தவன், தன்னல உணர்ச்சியுடன் போரிட்டு வெற்றி கண்டவன் என்பதிலேதான் இருக்கிறது.
தன் வாழ்க்கை, அதிலே குளிர்ச்சி; தன் குடும்பம், அதிலே ஏற்றம்; தன் நிலை, அதிலே பெருமிதம் பெற்றிட வேண்டும் என்ற உணர்ச்சி, கெட்டவர்களுக்கு மட்டுமே தோன்றிடக் கூடியது என்று கூறிவிடுவதும் முற்றிலும் உண்மையாகிவிடாது. இயற்கையாகவே அனைவருக்கும் எழக்கூடிய உணர்ச்சியே அது.
அவ்விதமான உணர்ச்சியே இல்லை, கற்சிலை போன்ற உறுதி இவருக்கு என்று பெருமைப்படுத்தக் கூறிடலாம்; அது கேட்டுச் சிலர் பெருமகிழ்ச்சியும் கொண்டிடலாம். ஆனால் உண்மையான பெருமை, தன்னல உணர்ச்சி எழவே எழாது என்ற நிலையில் இல்லை; தன்னல உணர்ச்சி எழுகிறது; எதைச் செய்தாகிலும், எவரைக் கெடுத்தாகிலும், நேர்மையை மறந்தாகிலும் தன்னலத்தைப் பெருக்கிக் கொள்ளலாம் என்று கருதிவிடாமல், தன்னல உணர்ச்சியைக் கட்டுப்படுத்தவும், பொது நன்மைக்காக விட்டுக் கொடுக்கவும், நீதியாக நடப்பதன் மூலம் தன்னலம் பெற்றிட முடியாது என்ற நிலை ஏற்படின் நீதி பெரிது, தன்னலம் அல்ல என்ற உறுதி கொள்வதும், அதன்படி ஒழுகி இன்னலை இன்முகத்துடன் ஏற்றுக் கொள்வதுமாகிய நிலைமை இருக்கிறதே, அதிலே தான் உண்மையான, நிலையான பெருமை இருக்க முடியும்.
அதிலும், அடிப்படைத் தேவைகளைப் பெறும் முயற்சியிலேயே அநீதிக்கு அடிபணிய வேண்டிய நிலை ஏற்பட்டு விடுகிறபோது, யார் அடிப்படைத் தேவைகளையும் கூட இழந்திடுவேன், இன்னலை ஏற்பேன், வாழ்வதற்காக நீதியை இழந்திட மாட்டேன் என்று கூறுகிறானோ, கூறியபடி செயல் படுகிறானோ, அவனே எல்லாப் பெருமைக்கும் உரியவனாகிறான்.
தம்பி! நமது செவிகளிலே விழுகிறதல்லவா, பெரிய இடத்தைப் பிடித்துக்கொண்டவர்களைப் பற்றிய புகழுரை; அவற்றிலே மிகப்பெரும் அளவு வெற்றுரையே; அல்லது பலன்பெற விழைந்து செய்யப்படும் அர்ச்சனையேயாகும்.
அவர் எப்படிப்பட்டவர் தெரியுமா! தன்னலம் துளியும் அற்றவர்! தன் குடும்பம், தன் குழந்தைகள் இதைப் பெறவேண்டும் அதைப் பெறவேண்டும் என்று அலைபவர் அல்ல, குடும்பம் அல்ல அவருடைய கண்முன் தெரிவது; நாடு, மக்கள்; அத்தகைய தியாகி அவர் என்று ஒருவரைப் பற்றிப் புகழ் சொரிவது எப்போது பொருளுள்ள பேச்சாக முடியும்? அவருக்குக் குடும்பம் இருந்து, அதனைக் காத்திடவும், ஏற்றம் பெறச் செய்திடவும் அவர் தமது முழுநேரத்தையும் நினைப்பையும், ஆற்றலையும் வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொண்டிருந்துவிடும் போக்கிலே செல்லாமல், தன் குடும்பம் நாட்டு மக்கள் சமுதாயத்தில் ஒரு அங்கம் என்ற அளவிலே கருதி, பொதுநலனைப் புறக்கணிக்காமல் தமது பணியினை நாடாத்திச் செல்லும்போது; குடும்பத்துடன் இயற்கையாக ஏற்படும் பாசத்துக்கு முழுக்க முழுக்கக் கட்டுப்பட்டு விடாமல், சமுதாயத்தை மனதிலே கொண்டு பணியாற்றும்போது; தன் குடும்ப நலனை மட்டுமே கவனித்துக் கொண்டு பிறர் நலனைப் பேணிடத் தவறாமல், பொது நலனுக்காக உழைத்திடும் போது. அவ்விதமின்றி, குழந்தை குட்டிகளைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் போக்கு கொண்டவரல்ல அவர்; எப்போதும் பொதுத் தொண்டிலே நாட்டம் காட்டுபவர் என்று ஒருவரைக் குறித்துப் புகழ்ந்துவிட்டு அவருக்கு எத்தனைக் குழந்தைகள்? என்று கேட்கும் போது, அவருக்குத் திருமணமே ஆகவில்லையே! என்று பதிலளித்தால், தியாகி என்றும், தன்னலம் மறுத்தவர் என்றும் புகழ்ந்து பேசியது என்ன பொருளைத் தரும்?
அவர் தன் குழந்தைகளைக் கவனிப்பதிலே காலத்தைத் தள்ளிவிடவில்லை! ஏனென்றால், அவருக்குக் குழந்தைகளே இல்லை!! ஏனென்றால் அவருக்குத் திருமணமே ஆகவில்லை!!
இந்த நிலையிலே அவரைப் புகழ்ந்து பேசுவதிலே பொருளோ பொருத்தமோ எப்படி இருக்கமுடியும்!
அவருடன் நீச்சல் போட்டியிலே எவனும் வெற்றி காண முடியாது; ஆனால் அவருக்கு நீச்சலே தெரியாது.
அவள் மலரைத் தொடுத்துத் தன் கொண்டையில் செருகிக் கொள்ளவே மாட்டாள்; ஏனெனில் அவள் தலை மொட்டை.
அவன் பசும்பாலே சாப்பிடமாட்டான்; ஏனெனில் அவன் இருக்கும் இடத்தில் உள்ளவை அவ்வளவும் எருமைகள்?
அவன் எந்த அழகியையும் ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்; ஏனெனில் அவன் பிறவிக் குருடன்!
தம்பி! இந்த வரிசையிலேதான் சேர்க்க வேண்டும், திருமணம் செய்து கொள்ளாத ஒருவரைப் பற்றிப் பேசும் போது அவர் தமது குழந்தை குட்டிகளின் நலனுக்காகப் பாடுபடுபவர் அல்ல என்று புகழ்வது! இல்லை ஆகவே தேவை இல்லை! குழந்தைகள் இருந்து, அவை காகூவெனக் கூவி, அவைகளுக்காகப் பாடுபடாமல், நாட்டுத் தொண்டுக்கே என் நேரம் முழுவதும் என்று கூறிச் செயலாற்றினவரா? இல்லையே! குழந்தைகள் இல்லை, ஆகவே குழந்தைகளைக் கவனிப்பதா சமுதாயத்தைக் கவனிப்பதா என்ற சிக்கல் எழவே காரணம் இல்லை.
என்றாலும் புகழ்கிறார்களே! ஏன்? மகிழச் செய்திடலாம் என்ற எண்ணம். அந்த எண்ணம் எழக்காரணம்? ஏதாவது கிடைக்காதா என்ற ஆசைதான்!
தம்பி! தன்னலத்துக்கும் பொதுநலனுக்கும் இடையிலே சிக்கி, தத்தளித்து இறுதியில் பொதுநலனுக்காகத் தன்னலத்தை இழந்திட உறுதிகொள்பவனே, மனிதன்!
நிறம் கருப்பு என்ற போதிலும், குடியரசுத் தலைவர் நிலை என்ற போதிலும், நான் ஓர் மனிதன் என்பதை எத்தனையோ இடர்பாடுகள் இடித்தபோதும் கலங்காது எடுத்துக் காட்டினாரே டக்ளஸ் டில்மன், அவருக்கு மற்றோர் 'மனிதன்' துணை நிற்க முன்வருகிறான்.
ஓர் வழக்கறிஞன்; டில்மனுக்கு நெடுநாளைய நண்பன்; வெள்ளை இனம்; ஆனாலும் தூய உள்ளம்.
திறமை மிக்க வழக்கறிஞர்! ஆனால் வருவாய் அதிகம் இல்லை! காரணம் அவர் ஏழை எளியோருக்காகவே வாழ்ந்து வந்தார்.
குடும்பம் இல்லாதவர் அல்ல! வாழத் தெரியாதவர் அல்ல, வாழ்ந்திட வேண்டிய அவசியமே அற்றவர் அல்ல! ஒண்டிக் கட்டை அல்ல; நான் எதற்காகவும் எவரிடமும் தயவு கேட்கத் தேவையில்லை; நாலு முழத் துண்டு போதும் இடுப்புக்கு; நாளைக்கு ஒரு வேளை சோறு போதும்; படுத்து உறங்க எந்தத் தெருத்திண்னை கிடைத்தாலும் போதும் என்று 'வக்கணை' பேச.
தன்னையொத்த வழக்கறிஞர்கள், தன்னிலும் திறமை குறைவானவர்கள் பொருள் திரட்டி, தனவானாகி, கனவானாகி, மாளிகையிலே வாழ்ந்திடக் காணும்போது கூட, நாம் ஏன் பணம் திரட்டக் கூடாது என்ற எண்ணம் கொள்ளவில்லை.
"உழைப்பு அதிகம். இதயம் பலகீனமாக இருக்கிறது. இதே அளவிலும் வேகத்திலும் வேலை செய்து கொண்டிருந்தால், நல்லதல்ல; ஆபத்தாகிடக் கூடும்."
மருத்துவர் கூறுகிறார் இதுபோல. இது கேட்ட துணைவர் தன் துணைவியின் கண்களைக் காண்கிறார்; சோகம் கப்பிக் கொண்டிருக்கிறது! ஆகவே ஒரு புது முடிவுக்கு வருகிறார், நல்ல வருவாய் தரத்தக்க முறையில் தொழிலை அமைத்து நடத்தி, பிறகு ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். சிற்றூரில் ஒரு வசதியான வீடு அமைத்துக் கொண்டு, இயற்கைச் சூழ்நிலையில் தனது முதுமையைக் கழித்திட வேண்டும் என்று விரும்புகிறார். இந்த எண்ணத்தை, அனுமதிக்கப்பட முடியாத தன்னலம் என்றோ பொறுத்துக் கொள்ளக்கூடாத கெடு நினைப்பு என்றோ பேதையும் கூறிடான்.
நாலுமுழத் துண்டு போதும் என்று 'தன்னலமற்றவர்' பேசுகிறாரே, அவருக்கு நாளைக்கு மூன்று வேளை குளியல்! ஒவ்வொரு குளிப்பாட்டுக்குப் பிறகும் புதிதாக வெளுக்கப்பட்ட ஆடை! என்றால் அவர் நாலு முழத்துண்டு போதும் என்று பேசியது, தன்னலமற்ற தன்மையா அல்லது ஏழையைத் தடவிக் கொடுக்கும் தந்திரமா என்பது பற்றிய விளக்கம் கூற வேண்டும்.
பெரியதோர் மாளிகையில், திண்டு மீது சாய்ந்தபடி பேசலாம், எனக்கென்னய்யா? படுத்துத் தூங்கத் தெருத் திண்ணை போதும்! என்று. தந்திரப் பேச்சன்றி வேறென்னவாக அது இருக்க முடியும்?
கடினமாகப் பல ஆண்டுகள் ஏழைகளுக்காக உழைத்தான் பிறகு, மேலும் அதுபோலவே உழைத்துக் கொண்டிருக்க உடல் இடம் தராது என்று மருத்துவர் எச்சரிக்கை தந்தான பிறகு, வாழ்க்கையை இனிச் சற்று நிம்மதியாக நடத்திச் செல்ல வழி தேடிக்கொள்ள வேண்டும் என்ற நிலையினைக் கொள்வது - 'தன்னலம்' என்று இழிவாகக் கூறப்பட வேண்டியதாகிவிடுமா! பேதையும் அங்ஙனம் கூறிடக் கூசுவான்.
ஒரு வாய்ப்பும் தன்னாலே வந்தது, அந்த வழக்கறிஞருக்கு.
செல்வாக்கு மிக்க ஒரு வணிக நிறுவனம், குறிப்பிட்ட சில ஆண்டுகள், சட்ட ஆலோசகராக இருக்க அழைத்தது, ஊதியம் அதிக அளவில்! கட்டு திட்டங்கள் குறைவு, கண்ணியமாக நடத்துவார்கள்! இந்த வணிக அமைப்புடன் ஒப்பந்தம் செய்து கொண்டு சில ஆண்டுகள் வேலை பார்த்தால், பிறகு பலப்பல ஆண்டுகள் இன்னலற்ற வாழ்க்கை நடத்திச் செல்வதற்கு ஏற்ற பொருள் கிடைத்துவிடும். சிங்காரச் சிற்றூர்! வயல் வெளி! இயற்கை அழகு! ஓய்வு தரும் மகிழ்ச்சி!
வழக்கறிஞர் இசைவு தருகிறார்! துணைவியார் மெத்தவும் மகிழ்ச்சி கொள்கிறார்கள்; வணிக அமைப்பின் பொறுப்பாளர் வேலை சம்பந்தமான ஒப்பந்தம் அச்சடித்துத் தருகிறார்; படித்துப் பார்க்கிறார் வழக்கறிஞர்; திருப்தியாகவே இருக்கிறது; கையொப்பமிட முனைகிறார்; தொலைபேசி மணி அடிக்கிறது.
இன்ப நிகழ்ச்சிகள் காண்கிறாள் வழக்கறிஞரின் மனைவி, வணிகக் கோட்டத்துப் பொறுப்பாளன், விழா நடத்த விரும்புகிறான்; உயர்தரமான உணவு விடுதியில்! இனி அவர் உடலுக்கு ஆபத்தின்றி வாழ்க்கை நடத்தலாம்; நிம்மதி பெறலாம் என்பதிலே அவளுக்கு மகிழ்ச்சி; சிற்றூரும் சிங்காரச் சிற்றிலும் மனக் கண்ணால் காணுகின்றாள்; இதழ்களில் புன்னகை தவழ்கிறது.
கவலை தோய்ந்த முகத்துடன் காணப்படுகிறார் வழக்கறிஞர்.
என்ன! என்ன! தொலைபேசியில் யார்? என்ன திடுக்கிடத்தக்க செய்தி? ஏன் இந்தக் கலக்கம்?
யார் பேசினார்கள் தொலைபேசி மூலம்.
என் நண்பர் டக்ளஸ் டில்மன் குடியரசுத் தலைவர்.
என்ன சொல்கிறார் உங்கள் நண்பர்?
அவர் மீது வழக்குத் தொடுத்திருக்கிறார்களல்லவா...?
ஆமாம்! பயங்கரமான குற்றச்சாட்டுக்கள், கடினமான வழக்கு!
அந்த வழக்கில், அவர் சார்பாக வாதாட அழைக்கிறார், என்னை; நம்பிக்கையுடன்; நட்பு உரிமையுடன்...
என்ன! என்ன! டில்மனுக்காக நீர் வாதாடுவதா? நன்றாய் இருக்கிறது வேடிக்கை. வேடிக்கைகூட அல்ல; இது விபரீதம்! நமது கம்பெனி, டில்மன் வீழ்த்தப்பட வேண்டும் இந்த வழக்கின் மூலம் என்று விரும்புகிறது; திட்டமிட்டிருக்கிறது; அதற்காகப் பணம் செலவிடவும் முனைந்திருக்கிறது.
நான் உமது வணிகக் கோட்டத்திலே பணி புரிய ஒப்பந்தம் செய்துகொள்வது என்றால், என் இச்சையாக வேறு வழக்குகளை கவனிக்கக் கூடாதா? அப்படி ஒரு நிபந்தனையா...!
எந்த வழக்கையும் கவனிக்கலாம், இந்த வழக்கைத் தவிர! டில்மன் ஆட்சியில் இருப்பது எமது கம்பெனிக்கு இடையூறாக இருக்கிறது.
குடியரசுத் தலைவருக்காக வாதாட எத்தனையோ வழக்கறிஞர்கள் கிடைப்பார்களே...
கிடைப்பார்கள்... ஆனால், அவர் என்னை அழைக்கிறார்; நம்பிக்கையுடன்; நான் மறுக்க மாட்டேன் என்ற நம்பிக்கையுடன்...
மறுக்கத்தான் வேண்டும்... உம்மையே டில்மனுக்கு எதிராக வாதாடச் செய்திட விரும்பினோம். நண்பர் என்கிறீர். ஆகவே வற்புறுத்த விரும்பவில்லை. ஆனால் கம்பெனியுடன் ஒப்பந்தம் செய்து கொள்வதானால், டில்மனுக்காக வாதாடக் கூடாது...
ஒப்பந்தம் நமக்கு நிரம்பச் சாதகமானது என்பதை மறவாதீர். உமது துணைவியாக உள்ள நான் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்; இத்தனை ஆண்டுகள் உழைத்தது போதும்; இனிக் குடும்பத்தைச் சற்று கவனித்திட வேண்டுகிறேன். மருத்துவர் கூறினதை மறந்திடலாமா... உங்கள் நண்பர் புரிந்து கொள்வார் நிலைமையை... கூறிவிடுங்கள் வேறு ஒருவரை வழக்கை நடத்தச் சொல்லி...
ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதானால், இந்த நிபந்தனையை மறவாதீர்; டில்மனுக்காக வாதாடக் கூடாது...
கையொப்பமிட்டால்தானே, நிபந்தனை...?
அப்படியானால் எமது கம்பெனி அழைப்பை மறுத்து விடப்போகிறீரா...
வேண்டாம்... வேண்டாம்... என் பேச்சைக் கேளுங்கள். குடும்பத்தை நாசமாக்காதீர்கள். மனைவி என்ற உரிமையுடன் உங்கள் நலனில் அக்கறை கொண்டவள் என்ற முறையில், உம்மைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்...
ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் ஐயா! ஏன் ஓராயிரம் யோசனை. உம்மாலும் முடியாது, உம்மைப் போன்ற பலர் கூடினாலும் முடியாது டில்மனைக் காப்பாற்ற...
நிலைமை மோசமாக இருப்பதால்தான், டில்மன் என்னை அழைத்திருக்கிறார்; புரிகிறது. நான் ஒப்பந்தத்தில் கையொப்பம் செய்யப்போவதில்லை.
வணிகக் கோட்டத்தானுக்குக் கடுங்கோபம். ஒப்பந்தத் தாளை மடித்து எடுத்துக்கொண்டு வெளியே செல்கிறான். கண்ணீர் பொழிந்த நிலையில் துணைவி இருக்கிறாள். ஒரு புறம் அவளுடைய கண்ணீர் தெரிகிறது! மற்றோர் புறம் டில்மனுடைய குரல் காதிலே விழுகிறது! மனக்கண்ணால் பார்க்கும்போது ஒரு பக்கம், மாளிகை, பைபையாகப் பணம், பளபளப்பான வாழ்க்கை, பொன்னகையும் புன்னகையும் துலங்கிடும் நிலையில் மனைவி; சிற்றூர்; சாலை; சோலை; இன்பச் சூழ்நிலை தெரிகிறது; மற்றோர் புறமோ, துயரம் தோய்ந்த முகத்துடன் டில்மன்; அவன் கண்கள் அனுப்பும் அழைப்பு! நான் துரத்தப்படுகிறேன்! என்னை வேட்டையாடுகிறார்கள் - கருநிறம் என்பதால்! பழி சுமத்துகிறார்கள் என்னைச் சூழ்ந்து நிற்கும் நிறவெறியர்! என் கண்களுக்கு ஒரே ஒரு நண்பன் தெரிகிறான்! அதனால் தான் அழைக்கிறேன்; நம்பிக்கையுடன் என்று அந்தக் கண்கள் பேசுகின்றன.
தத்தளிக்கும் நிலையினளான அம்மாதரசி விழி நீரைத் துடைத்திடவும் மனமின்றி, எழுந்து செல்கிறாள் வெளியே...
எங்கே? இந்த நேரத்தில்? தனியாக! என்னிடம் சொல்லிக் கொள்ளாமல்! அவன் கேட்கிறான்.
எங்கே என்றா கேட்கிறீர்கள் - நெடுஞ்சாலை நோக்கிச் செல்கிறேன்; ஏதாவது ஒரு மோட்டார் கிடைக்காதா... விழுந்து செத்துத் தொலைக்கிறேன். அவள் கூறுகிறாள், மனம் உடைந்த நிலையில்.
தம்பி! இது அல்லவா சிக்கல்! இது அல்லவா சோதனை! திருமணமே ஆகாத ஒரு திருவாளர், நான் என்ன என் பிள்ளை குட்டிகளுக்காகவா பாடுபடுகிறேன், எல்லாம் உங்களுக்காகத்தானே என்று பேசுகிறாரே, அந்த நிலைமையா இது!
ஒரு புறம் உள்ளம் உருகிக் கசிந்திடும் மனைவி.
மற்றோர் புறம், திகைத்துக் கிடக்கும் நண்பன்.
மனைவியின் கண்ணீரையும் துச்சமென்று கருதிவிட முடியாது; அந்த மாதரசியும் அக்கிரமம் எதனைச் செய்தாகிலும் எனக்குச் சுகபோக வாழ்வு அமைத்துக் கொடு என்று கேட்கவில்லை. நிம்மதியாக வாழக் கிடைத்திடும் ஒரே வாய்ப்பை இழந்துவிட வேண்டாம் என்றுதான் கெஞ்சுகிறாள்.
மனைவியின் வேண்டுகோளை மதித்திடுவதும், குடும்பத்திற்கு நிம்மதியான நிலையை அமைத்திடுவதும், ஒரு குடும்பத் தலைவன் மேற்கொண்டாக வேண்டிய கடமைகளிலே ஒன்று! அநீதியல்ல, அக்கிரமம் அல்ல! பிறரைக் கெடுப்பது அல்ல!
நண்பன் அழைப்பை ஏற்றுக் கொண்டால், அந்த தலைவன் கண்களிலே ஒரு களிப்பு ஒளிவிடும்! மறுத்தால், அந்தக் கண்களிலே இரண்டொரு சொட்டு கண்ணீர் சிந்திடும்.
நண்பனுடைய கண்களிலே நம்பிக்கை ஒளி எழக் காண வேண்டுமானால், மனைவியின் கண்ணீரைக் கண்டு கலங்கக் கூடாது.
மனைவியை மகிழச் செய்திடும் கடமையைக் காட்டிலும் நண்பனைக் காத்திடும் கடமை பெரிது.
குடும்பம் - தன்னை ஒட்டியது! நண்பன் பிரச்சினையோ, பொதுவானது!
தன்னலம் விரண்டோடிற்று! பொதுநல உணர்ச்சி வென்றது. வெளியே புறப்பட்ட மனைவியைத் தடுக்கக் கூட இல்லை.
தம்பி! இதனை ஒத்த சிக்கல் எழும்போது, தன்னலத்தைத் துறந்திடும் உறுதி பிறந்திட வேண்டும். இந்த நிகழ்ச்சியைத் திருப்பித் திருப்பிப் படித்துக் கொண்டே இருக்க வேண்டும்போலத் தோன்றுகிறது.
குடும்ப நலனைப் பற்றிய கவலையை உதறித் தள்ளி விட்டு கண்ணீர் பொழியும் மனைவியின் மனம் நொந்து போகிறதே என்பது பற்றிய சங்கடத்தையும் தாங்கிக் கொண்டு, அந்த வழக்கறிஞர் டில்மனுக்காக வாதாடியே தீருவேன் என்று உறுதி கொண்டாரே, அது எவருடைய மனதிலே முளைத்திடும் தன்னல உணர்ச்சியையும் பொசுக்கிக் கருக்கி விடத்தக்கது. எவரும் வியந்து பாராட்டுவர் அந்த வழக்கறிஞர் மேற்கொண்ட தன்னல மறுப்பினை.
ஆனால் அவரே கண்டு வியந்து பாராட்டும் விதமாக அமைகிறது அவருடைய துணைவியாரின் செயல். என்ன செயல்! அந்த மாதரசிதான் குடும்பத்தைக் கவனிக்கும்படி வற்புறுத்தினார்களே; வணிகக் கோட்டப் பணியை மேற்கொள்ளச் சொன்னார்களே; சிக்கலை ஏற்படுத்தினார்களே; அப்படிப்பட்ட செயலுக்காகவா பாராட்ட முடியும் என்று கேட்கிறாய்!
இல்லை, தம்பி! வெளியே சென்ற மாதரசி, ஒரு மணி நேரம் கழித்த பிறகு வீடு திரும்பினார்கள்; திரும்பியதும், "கண்ணாளா! என்னை மன்னித்துவிடும்! டில்மனுக்காக வாதாடச் சம்மதம் தெரிவித்துவிடும்! எப்படியும் டில்மனைக் காப்பாற்றியாக வேண்டும்" என்று கூறினார்கள். எதனால் ஏற்பட்டது இந்த விந்தையான மாறுதல் என்று கேட்கிறாய்.
மனிதன் மிருகமல்ல!
வழக்கறிஞரின் திறமை எதற்குப் பயப்படவேண்டும்?
பெண் உள்ளம் பெரிய உள்ளம்
'நல்ல நாடு' என்ற பெயரே ஒரு நாட்டுக்கு வேண்டும்!
ஐந்தாவது 'குற்றச்சாட்டு!'
ஏடு காட்டும் நன்முடிவு நாட்டிலே ஏற்படுமா?
இன்ப வாழ்க்கைக்கான அழைப்பு ஒரு புறத்திலிருந்து. செல்வம்! செல்வாக்கு! மாளிகை! மலர்த்தோட்டம்! துணைவியாரின் மனம் மகிழ்ச்சியால் துள்ளிடும் நிலை! குடும்பத்துக்கு நிம்மதி! இவையாவும் எதிரே நிற்கின்றன!
எங்கோ நெடுந்தொலைவிலிருந்து ஒரு பெருமூச்சு ஒலி கிளம்புகிறது! வழக்கறிஞர் நாட் ஆபிரகாம்ஸ் செவியிலே அந்தப் பெருமூச்சு புகுந்ததும், இன்ப வாழ்க்கைக்கான அழைப்பை அவர் உதறித் தள்ளுகிறார்.
வழக்கறிஞர் திறமையைக் காட்டி வெற்றி பெற்றிடுவதை மட்டுமே கடமையாகக் கொள்ள வேண்டும் என்ற ஒப்புக் கொள்ளப்பட்ட 'மரபு', மனிதத்தன்மையை மாய்த்திடும் நிலைக்கு அந்த வழக்கறிஞரை இழுத்துச் செல்லுமானால், அந்த 'மரபு' மாண்பானதாக முடியாது.
வழக்கறிஞரின் திறமை எதற்குப் பயன்படுதல் வேண்டும்? எதிர்த்தரப்பினர் எந்த இடத்திலே இடருவார், எந்தக் குறிப்பிலே குழம்புவார், எந்தக் கட்டத்திலே குளறுவார், எந்த வாதத்தை மறந்திடுவார், எந்த சட்ட நுணுக்கத்தை வலியுறுத்தத் தவறிவிடுவார் என்று கூர்மையாகக் கவனித்துக் கொண்டிருந்து, தக்க சமயமாகப் பார்த்து பாய்ந்து தாக்கி வீழ்த்துவது மட்டுந்தானா!
நாட் அவ்விதம் எண்ணவில்லை. வழக்கறிஞர், நீதிக்காகப் பரிந்து பேசவேண்டும்; சட்டத்தைக் கொண்டு எவரேனும் எவரையேனும் வாட்டி வதைத்திட முனைந்தால், அவர்களைக் காத்திட முனைய வேண்டும். எத்தனை சட்ட நுணுக்கங்கள், சான்றுகள், விளக்கப்பட்ட போதிலும் அவையாவும், நீதியை நிலைநாட்ட மட்டுமே பயன்படுதல் வேண்டும்; அதற்கான முறையிலே வழக்கு நடத்தப்படுகிறதா என்பதைக் கண்டறிவதே வழக்கறிஞரின் தனித் திறமையாக இருக்க வேண்டும் என்று நாட் கருதினார்.
குற்றவாளிக் கூண்டிலே கொண்டு வந்து நிறுத்தப்படுபவர், தமது நண்பர் என்பதாலேயே, அவர் காப்பாற்றப்பட்டாக வேண்டியவர் என்ற கோணல் வாதத்தை நாட் ஆபிரகாம் மேற்கொள்ளவில்லை.
தனது நண்பர், ஓர் மனிதர்! நிறம் கருப்பு. ஆனால் நெஞ்சம் தூய்மையானது! அவர் மீது பழி சுமத்தப்படுகிறது என்று நம்பினார்.
அவர் மீது குற்றம் சாட்டும் வெள்ளை இனத்தவர் பல நூற்றாண்டுகளாகக் கருப்பர் மீது பகை, வெறுப்பு கக்கி வருபவர். கருப்பர்களைக் கொடுமை செய்வது அறமல்லவே முறையல்லவே என்ற உணர்வே அற்றவர்கள். அவர்கள் குற்றம் சுமத்துகிறார்கள் என்றால், பகை காரணமாகத்தான் இருக்க முடியும் என்று நாட் திடமாக நம்பினார்.
எல்லாவற்றையும் விட, தன்னை எத்தனை நம்பிக்கையுடன், நட்புணர்ச்சியுடன் அழைத்தார் டில்மன் என்பதை எண்ணும் போது, எதை இழப்பதாயினும் சரி, எத்தனை இன்னலை ஏற்க வேண்டி நேரிடினும் சரி, நண்பன் பக்கம் நின்றாக வேண்டும் என்ற உறுதி பிறந்தது.
துணைவியாரின் பேச்சும் கண்ணீரும், தன் நெஞ்சை உருக்கிவிடுவதை உணர்ந்தார். பேதைப் பெண்! என்னைக் கணவனாகப் பெற்றதால், சீமாட்டியாகலாம், சிங்கார வாழ்விலே புரளலாம் என்று எண்ணிக் கொண்டாள். பெருத்த ஏமாற்றம், பாவம்! எறிச்சலாகத்தான் இருக்கும். இத்தனைக் காலமாகத்தான் ஏழை எளியோர்களுக்காக வேலை செய்து, வாழ்க்கையைப் பாலையாக்கிக் கொண்டார்! இப்போது ஒரு வாய்ப்புக் கிடைக்கிறது - பெரிய வணிகக் கோட்டம் அழைக்கிறது - கேட்கும் பணம் தரச் சம்மதிக்கிறது - இதையும் உதறித் தள்ளிவிடுவதா! குடும்பம் எக்கேடோ கெடட்டும் என்றா இருப்பது! நான் வேண்டுகிறேன், கெஞ்சுகிறேன், கண்ணீர் வடிக்கிறேன்! கவலைப்படக் காணோமே!! என்று பாபம், அவள் பதறுகிறாள். என் எண்ணத்தை அவள் ஏற்க மறுக்கிறாள். அவள் மீது கோபித்து என்ன பயன்? எந்த மனைவியும் தன் கணவனிடம் எதை எதிர்பார்ப்பாளோ அதைத்தான் அவள் எதிர்பார்க்கிறாள்! நான் தான் அவளுக்கு ஏமாற்றத்தைத் தருகிறேன். நான் வேறென்ன செய்ய முடியும்...
நாட் ஆபிரகாம்ஸ் இவ்விதமாகவெல்லாம் எண்ணி எண்ணி ஏங்குகிறார். உட்கார்ந்தபடியே உறங்கிவிடுகிறார்.
வெகுண்டு வெளியே சென்ற அவர் மனைவி வருகிறாள்; மெள்ளத் தன் கணவன் தோளைத் தொட்டு எழுப்புகிறாள். வேறு ஏதோ ஓர் உலகு சென்று திரும்பியவன் போன்ற நிலையில் ஆபிரகாம் இருக்கக் காண்கிறாள்.
தழதழத்த குரலில் அவள் பேசுகிறாள்! "அன்பே! என்னை மன்னித்து விடு! ஏதோ மனக் குழப்பம். என்னென்னமோ பேசிவிட்டேன், கோபமாக. உங்கள் முடிவுதான் சரியானது, நியாயமானது, டக்ளஸ் டில்மனை நாம் கைவிடக்கூடாது. அவருக்காக வாதாட வேண்டியது தான் கடமை..."
"என்ன சொல்லுகிறாய் அன்பே! டக்ளஸ் டில்மனிடம் இத்தனைப் பரிவு எப்படி ஏற்பட்டது."
"பாவம்! அத்தனைப் பெரிய மாளிகையில், தன்னந்தனியாகத் தானே டில்மன் தவித்துக் கொண்டிருப்பார்; தனக்காகப் பரிந்து பேச, தனக்கு நியாயம் கிடைக்கும்படிச் செய்ய ஒருவரும் இல்லையே என்ற துக்கம் துளைத்திடும் நிலையில், அதை எண்ணிக்கொண்டால், மனம் என்ன பாடுபடுகிறது தெரியுமா..."
"இந்த மனமாற்றம் ஏற்படக் காரணம்?"
"உண்மையை உணர்ந்ததால்; டக்ளஸ் டில்மன் எந்த நிலைமையில் இருக்கிறார்; அவரைச் சுற்றிலும் எத்தனைப் பகை கப்பிக் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்ததால், அன்பே! கோபமாகச் சென்றேனல்லவா வெளியே; சிறிது தூரம் சுற்றிவிட்டு, அந்த மாளிகைக்கு எதிர்ப்புறம் நின்றேன்; வெள்ளை மாளிகைக்கு எதிர்ப்புறம் உள்ள சாலையில் அகமகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டே அவ்விடம் வந்த ஓர் ஆரணங்கையும் அவள் மணவாளனையும் கண்டேன்! புது மணமக்கள் போல இருக்கிறது. அந்தப் பெண் அவனைக் கேட்டாள், "அதோ அதுதானே வெள்ளை மாளிகை?" என்று; ஆம் என்றான் அவன்; "உள்ளே போய்ப் பார்க்க வேண்டும் என்று எனக்கு ஆசையாக இருக்கிறது" என்றாள் அந்தப் பெண், அவனோ ஓர் ஏளனச் சிரிப்புடன் கூறினான்:
"அங்குதானே! போகலாம்; ஆனால் இப்போது வேண்டாம்; இப்போது அங்கு ஒரு கருப்பன் அல்லவா இருக்கிறான்!! ஆனால் அவன் அங்கே அதிக நாட்கள் இருக்கப் போவதில்லை; வெளியே துரத்தப் போகிறார்கள். வழக்குத் தொடுத்தாகிவிட்டது; கருநிறத்தான் வெளியே சென்றதும், நாம் உள்ளே போய்ப் பார்க்கலாம், வெள்ளை மாளிகையைக் கழுவிச் சுத்தப்படுத்தி விடுவார்கள்" என்றான்; அவள் சிரித்தாள். அன்பே! அப்போது தான் எனக்கு டக்ளஸ் டில்மனுடைய நிலைமை புரிந்தது! சட்டப்படி குடியரசுத் தலைவராக அமர்ந்திருக்கிறார். ஆனால் நிறவெறி காரணமாக அவரை அவ்வளவு வெறுக்கிறார்கள்; கேவலமாக பேசுகிறார்கள்; ஒழித்துக் கட்டவே முனைகிறார்கள். அவ்வளவையும் தாங்கிக் கொண்டல்லவா அவர் தத்தளிக்கிறார். நீதி அறிந்தவர்கள் அவர் பக்கமாக நிற்க வேண்டும்! அதனை உணர்ந்தேன், ஓடோடி வந்தேன்; என்ன தவறான காரியம் செய்துவிட்டேன் என்பதை எண்ணியபடி. அன்பே! உடனே குடியரசுத் தலைவரிடம் கூறிவிடு, வழக்கு மன்றம் வரத் தயார் என்று; நீதிக்காக வாதாடத் தயார் என்று."
"அன்பே, உன் மனம் மாறும் என்பதை நான் அறிவேன். அதனை எதிர்பார்த்து, நான் ஏற்கனவே குடியரசுத் தலைவருக்குத் தொலைபேசி மூலம் தெரிவித்து விட்டேன், அவர் சார்பில் வழக்கை நடத்துவதாக!"
தம்பி! இதுபோல இருவரும் உரையாடி மகிழ்கின்றனர். குடும்பம் நிம்மதியாக வாழ்ந்திட வேண்டும் என்ற இயற்கையான, தேவையான, நியாயமான எண்ணத்தின் காரணமாகச் சிறிதளவு 'மாசு' மனத்திலே புகுந்தது; எனினும் மீண்டும் தூய்மைப்பட்டு விட்டது.
அப்போது அந்த மாது கூறுவதாக நூலாசிரியர் ஓர் கருத்தைத் தருகிறார்; அது என் மனதை வெகுவாக நெகிழச் செய்தது.
பெரிய வணிகக் கோட்டத்தின் வழக்கறிஞரானால், பணம் ஏராளமாகக் கிடைக்கும்; சில ஆண்டுகளுக்குப் பிறகு, சிற்றூரில் ஓர் சிங்கார இல்லம், சாலையும் சோலையும் சூழ்ந்த இடத்தில் ஒரு பண்ணை அமைத்திடலாம்; அங்கு நிம்மதியாகக் குதூகலமாக வாழ்ந்திடலாம்; குழந்தைகளுக்கு அந்த எழிலகத்தைத் தந்திடலாம் என்றல்லவா ஆசைப்பட்டாள் வழக்கறிஞரின் மனைவி; அதை மீண்டும் நினைவுபடுத்திவிட்டுச் சொல்கிறாள்; நாம் நினைத்தபடி சிற்றூரில் எழிலகம்! சாலையும் சோலையும் அமைந்த ஒரு பண்ணை! இவைகளை நமது குழந்தைகளுக்கு நாம் பெற்றளிக்க முடியாது, ஆனால் அன்பே! நீதிக்கு இடமளிக்கும் நாட்டை ஒப்படைத்துவிட்டுச் செல்லும் பாக்கியம் கிடைக்குமல்லவா! அது போதும்! அது பண்ணையை விட எவ்வளவோ மேலானது."
இரும்புப் பெட்டியிலே எண்பது இலட்சம்! கரும்புத் தோட்டத்திலே வருட வருமானம் பல இலட்சம்! ஆலை! சோலை! சாலை! ஆள் அம்பு! கோட்டம்! மாடம்! கூடம்! எல்லாம் தன் பிள்ளைகளுக்குத் தரவேண்டும்! எத்தனைப் பாடுபட்டாகிலும் அந்தச் செல்வநிலையைப் பெற வேண்டும். பிறகு!
அந்த மாளிகையிலே மந்தகாசம்!
மலர்த்தோட்டத்திலே காதல் கீதம்!
ஊரிலே பெருமதிப்பு! செல்வாக்கு! உயர்நிலை!!
பிள்ளைகள் - பேரப்பிள்ளைகள் - வழிவழி வந்தோர் மகிழ்ச்சிப் பொங்கிடும் நிலையில் வாழ்ந்திடுவர்!
என் முன்னோர் எனக்காக இத்தனை செல்வத்தைச் சம்பாதித்து வைத்தார் என்று பேசுவர்; போற்றுவர்; வழிபடக்கூடச் செய்வர்.
ஆனால், ஒரு தந்தை தன் மகனுக்கு இத்தகைய செல்வத்தை மட்டும் சேர்த்து வைத்துவிட்டால் போதுமா?
செல்வத்தைக் குவித்து வைத்துக் கொள்வதாலே மட்டுமே இன்ப வாழ்வு கிடைத்துவிடுமா?
பொறாமை! வஞ்சகம்! பொல்லாங்கு! பகை! சூது! சூழ்ச்சி! மாச்சரியம்! - இவை நெளியும் நிலையில் நாடு இருந்திடின், அந்த நாட்டிலே மாளிகை உண்டு மந்தகாச வாழ்வு உண்டு என்று கூறி இருந்திட முடியுமா!
நீதி! நேர்மை! பண்பு! அறம்! அறிவு! இவைகளற்ற நிலையில் ஒரு நாடு இருந்திடின்... அங்கு கோடி கோடியாகப் பணம் குவிந்திருந்திடினும், வாழ்விலே ஒரு நிம்மதி கிடைத்திடுமா!
நல்ல நாடு! என்பதைக் காட்டிலும் மேலான செல்வம், நிலையான செல்வம் வேறு எதுவும் இல்லை.
நல்ல நாடு! ஒருவரை ஒருவர் தாழ்த்திடும் இழித்தன்மை இல்லாத நாடு! நிறம், மதம், மொழி, குலம், எனும் எதன் காரணமாகவும் பேதமும் பிளவும் ஏற்படாமல், எல்லோரும் ஓர் இனம், எல்லோரும் ஓர் நிறை என்ற முறை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள இடமே நல்ல நாடு!
என் மக்கள் வாழ்வதற்காக அத்தகைய நல்ல நாடாக இந்நாட்டை ஆக்கிட உழைப்பேன்; இதனைக் காட்டிலும் நான் என் பிள்ளைகளுக்குச் செய்யக்கூடிய நன்மை - தரக்கூடிய செல்வம் - விட்டுச் செல்லக் கூடிய வரலாறு - வேறு என்ன இருக்க முடியும்.
செல்வம் சேர்த்துக் கொடுத்திடலாம் - எதற்கு அது பயன்பட வேண்டும்? நிறவெறி தலைக்கேறி ஆட்டமாடுகிறார்களே அதற்காகவா! ஆளப்பிறந்த இனம் என்ற செருக்கை மூட்டிவிடவா செல்வம்!!
பூங்கொடியாளிடம் ஓர் பேழை! பேழை நிறைய வைரக் கற்கள்!! ஆனால் அவள் இருக்கும் இடமோ, வழிப்பறிக்காரர்கள் தங்கும் குகை!!
படுத்துத் தூங்க மலர் தூவப்பட்ட படுக்கை!! ஆனால் எந்த இடத்தில்! பாம்புப் புற்றின் பக்கத்தில்!!
இவ்விதமல்லவா இருந்திடும் நமது மக்களுக்குச் சுகமளித்திடும் என்ற நம்பிக்கையில் சொத்து மட்டும் சேர்த்துக் கொடுத்துவிட்டு, நாட்டை நயவஞ்சகர் கொட்டமடிக்கும் காடாக இருக்க விட்டு விட்டால்!
தம்பி! இதுபோலப் பலப்பல எண்ணிடத் தோன்றுகிறது. அந்த மாது கூறிய,
நமது மக்கள் வாழ ஒரு நல்ல நாடு கிடைத்திடச் செய்திடுவோம்!
என்ற அருமை மிகு கருத்து,
நாம் வாழும் நாட்டில் நாம் காணும் கொடுமைகளில், அநீதிகளில், ஒரு சிறு அளவினையாகிலும் நாம் நமது அறிவாற்றலால், உழைப்பால், தன்னல மறுப்பால், போக்கிடுவது தான் நாம் முதல் கடமையாகக் கொண்டிடுவது என்ற நெறி, நடைமுறையாகிடுமானால், தம்பி! உலகு புன்னகைப் பூங்காவாக அல்லவா வடிவம் கொள்ளும்.
ஆனால் மிகப் பெரும்பாலோரின் எண்ணம், தன் வீடு, தன் குடும்பம், தன் மக்கள், அவர்களின் எதிர்காலம் என்ற அளவோடு அல்லவா நின்றுவிடுகிறது.
தன் பிள்ளைகளின் எதிர்காலம் இன்பமுள்ளதாக இருந்திட வேண்டும் என்று எண்ணிக் கொண்டு, காலமெல்லாம் அதற்காகவே கடுமையாக உழைத்துவிட்டு, நிம்மதியான வாழ்வையே கெடுத்திடத்தக்க அக்கிரம புரியாக நாடு இருந்திடுவதை மாற்றி அமைக்காவிட்டால் என்ன பயன்?
ஒரு தலைமுறை மற்றோர் தலைமுறைக்காக, தனித் தனி இல்லங்கள், செல்வம் என்ற இன்றைய முறையைக் காட்டிலும், ஒரு தலைமுறை தன் காலத்தில் காணப்படும் கேட்டினைக் களைந்தெறிந்து தன் நாட்டைத்தான் காண்பதைக் காட்டிலும் சிறிதளவேனும் நல்ல நாடு ஆக்கி அளித்துவிட்டுச் சென்றிடவேண்டும் என்ற முறை எத்துணை நேர்த்தியானது!
பலப்பல எண்ணம் என் மனதிலே மலர்ந்தது தம்பி! அந்த வழக்கறிஞரின் மனைவி கூறிய கருத்தைக் கேட்டு.
தான் மேற்கொள்ளும் காரியத்தைத் தன் மனைவியும் வரவேற்று ஆதரிக்கிறாள் என்பதைத் தவிர மகிழ்ச்சியையும் எழுச்சியையும் மிஞ்சக் கூடியதாக வேறு எதுவும் இருக்க முடியாதல்லவா!
என்னமோ போக்கு! வீட்டை கவனிக்காமல் குடும்பத்தைக் கெடுத்துக் கொண்டு ஊருக்கு உழைக்கிறாராம் ஊருக்கு!!
என்ற சலிப்பும் வேதனையும் நிரம்பிய பேச்சைத் தாங்கிக் கொண்டபடி பொதுத் தொண்டாற்றுவது காதுக்குள் ஓர் வண்டு புகுந்து கொட்டிக் கொண்டிருக்கும் நிலையில், வாட்போரில் ஈடுபட்டு வெற்றி பெற முனைவதற்கு ஒப்பானதாகும்.
ஆனால் நமது கழகத் தோழர்களிலே மிகப் பலர் அத்தகைய பேச்சையும் தாங்கிக் கொண்டுதான் தொண்டாற்றுகிறார்கள்.
அவர்களின் தொண்டு மிகச் சிறந்தது என்ற நேர்த்திக்கு உரியதாவதன் காரணமே அதுதான். மாலை நேரப் பூப்பந்தாட்டம் அல்ல, பொதுத் தொண்டு.
வழக்கறிஞர் ஆபிரகாம்ஸ் தன் துணைவியின் எண்ணம் தூய்மைப்பட்டு விட்டதனால், புதிய எழுச்சி பெற்றிருக்க வேண்டும் - நிச்சயமாக.
வழக்கு மன்றத்திலே அவர் அதே எழுச்சியுடன் பேசுகிறார்.
வாதத் திறமையால் குற்றச்சாட்டுகளை உடைத்தெறிவது, குறுக்குக் கேள்விகளால் சான்றுகளைப் பிளந்தெறிவது, சட்ட நுணுக்க விளக்கத்தால் வழக்கின் அடித்தளத்தைப் பெயர்த்திடுவது என்ற இவைகளிலே சுவை உண்டு; இந்தச் சுவை கிடைத்திடத்தக்க வழக்குப்பற்றிய ஏடுகள் பல படித்திருக்கிறேன். இந்த ஏட்டிலே என் மனதை மிகவும் ஈர்த்த பகுதி, வழக்கறிஞர் தமது திறமையை விளக்கிய பகுதி அல்ல; இதயத்தைத் தொட்டிடும் பகுதியே.
தம்பி! டக்ளஸ் டில்மன் மீது நான்கு குற்றச்சாட்டுகள், அவைகளில் ஒன்று கூட இறுதியில் மெய்ப்பிக்கப்படவில்லை, ஆதாரமற்றவை என்பதால்; இட்டுக் கட்டப்பட்டவை என்பதால்.
அந்தக் குற்றச்சாட்டுகளை உடைத்தெறிவதிலே அல்ல, வழக்கறிஞர் என் மனதைக் கவர்ந்தது.
நான்கு குற்றச்சாட்டுகளை வெறியர் டில்மன் மீது சுமத்தினர், இவரோ, ஐந்தாவது குற்றச்சாட்டு ஒன்றைச் சேர்த்துக் கொண்டார்.
ஐந்தாவது குற்றம் - பட்டியலிலே சேர்க்கப்படாதது - வெளிப்படையாக எடுத்துச் சொல்லப்படாதது - ஆனால் மற்ற நான்கு குற்றச்சாட்டுகளுக்கும் அடிப்படையாக அமைந்திருப்பது - அதுதான் அவர் ஓர் நீக்ரோ என்ற குற்றச்சாட்டு!! - என்று வழக்கறிஞர் ஆபிரகாம்ஸ் எடுத்து விளக்குகிறார்; ஆனால் மனதிலே நியாய உணர்ச்சிக்கு இடமளித்திடுவோர் அனைவரும் உருகிடும் நிலை பெறுகின்றனர்.
குற்றம் சாட்டுகிறார்கள்!
யார்! யார் மீது?
வெள்ளையர்! கருப்பர் மீது!
ஏன் குற்றம் சாட்டுகிறார்கள்?
கருப்பன் அரசாள்வதா என்பதால்!
குடிவெறி! காமச் சேட்டை; திறமைக் குறைவு, கற்பழிக்க முயற்சித்தது! மகனுக்கு உடந்தையாக இருந்தது! வெள்ளை இனம் என்று ஏய்த்துத் திரியும் மகளுக்குத் தந்தையாக இருப்பது; - இவை குற்றச்சாட்டுகள்.
இவைகள் எப்போது கிளம்புகின்றன? எப்போது கிளப்பப்படுகின்றன! வெள்ளையரின் தலையாட்டிப் பொம்மையாக டில்மன் இருக்க மறுத்திடும்போது!
கிடைத்த பதவி போதும், சுகபோகம் போதும் என்று இருந்திருந்தால்? வழக்கு எழாது! வாழ்த்துக் கிடைத்திடும், ஆனால் அந்த வாழ்த்திலே கூட விஷம் கலந்திருக்கும்;
கருப்பர் இனத்தவராக இருப்பினும் கண்ணியமாக, திறமையுடன் நடந்து கொண்டார்!
கருப்பு இனத்தவர் கண்ணியமாக நடந்து கொள்ளமாட்டார்கள், திறமையாக நடந்திட மாட்டார்கள், என்ற பொதுவான குற்றச் சாட்டை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
கருப்பு இனத்தில் தவறிப் பிறந்தவர்!
என்ற பட்டம் தரப்படும்; சூட்டிக் கொள்ளலாம்.
இனத்தை இழிவுபடுத்துபவர்; ஏன் என்று கேட்கக் கூடாது. தனி மனிதருக்கு புகழ் தரும் என்று மகிழலாம்!
இந்த நிலையினை உணர்ந்த ஆபிரகாம்ஸ், வழக்கு மன்றத்திலே கூடி டில்மனை ஒழித்துக்கட்ட ஏன் விரும்புகிறார்கள் என்ற இரகசியத்தை அம்பலப்படுத்த முனைந்தார். அதனால்தான், ஐந்தாவது குற்றம் அடிப்படைக் குற்றம் - என்பது பற்றிப் பேசுகிறார்.
தம்பி! அவருடைய விளக்கத்தில், நூலுடைய தலைப்பு இருக்கிறதே மனிதன் என்ற தலைப்பு - அதனையே எடுத்து ஒரு தத்துவமாக்கிக் காட்டுகிறார்.
மனிதன்! மனிதன்! என்று தம்பி! எல்லோருந்தான் பேசுகிறோம்; என்ன எண்ணிக் கொண்டு பேசுகிறோம்? எண்ணிப் பார்த்திடும்போதுதான் விந்தையான பல உண்மைகள் நமக்குத் தோன்றிடும்.
நானும் மனிதன் தான்!
அவன் ஒரு மனிதனா? எல்லோரும் மனிதர்கள் தானய்யா!
மனிதனுக்கு மனிதன் என்ன வித்தியாசம்?
மனிதனாகப் பிறந்துவிட்டால் போதுமா!
அவன் மனிதன் அல்லய்யா...!
மனிதன் செய்கிற காரியமா இது!
இப்படிப் பல்வேறு நிலைகளில் பல்வேறு முறையாகப் பேசுகிறோம்.
மனிதன் என்றால் என்ன பொருள்? - இது பற்றியே வழக்கு மன்றத்தில் விளக்கம் அளிக்கப்படுகிறது.
பல்வேறு சிந்தனையாளர்கள் தந்துள்ள விளக்கங்களை எடுத்துக் காட்டிவிட்டு, இறுதியாகக் கூறுகிறார்.
மனிதன் மிருகமல்ல!
இதைக் கூடச் சொல்லவேண்டுமா என்று கேட்கத் தோன்றும், தம்பி! ஆனால் நீக்ரோக்களை, 'மிருகம்' என்று கூட அல்ல, 'உடைமை' என்றே அமெரிக்க 'நீதி' மன்றங்கள் கூறியுள்ளன என்பதை மறந்து விடக்கூடாது.
இங்கு மட்டும் என்ன!! ஜாதியால், பொருளாதார நிலையால் மூட்டப்பட்டுவிடும் வெறுப்பும் கேவல உணர்ச்சியும் ஆட்டிப் படைக்கும் நிலையில் உள்ளவர்கள், தம்மிலும் தாழ்ந்தவர்கள் என்று கருதப்படுபவர்களை மனிதர்களாகவா நடத்துகிறார்கள். மிருகமாக! மிருகத்தை விடக் கேவலமாக!!
டாக்டர் அம்பேத்கார் ஒரு முறை கூறினார், ஒரு உயர் ஜாதி இந்து தன்னுடைய நாயிடம் பரிவு காட்டித் தொட்டு விளையாடுவான், ஒரு தாழ்த்தப்பட்டவனைத் தொடமாட்டான் என்று.
மிருகங்கள் பல உள; சிங்கம், புலி, நாய், நரி, ஓநாய்! - இப்படி. ஆனால் பித்துப்பிடித்தவனன்றி மற்ற எவனும் மனிதனுக்கும் மிருகத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் குளற மாட்டான்.
ஆனால் நமது நாட்டிலே சிலர், கருப்பு நிறம் கொண்டவர்களை அந்த நிறம் காரணமாகவே, மிருகம் என்று கூறுவதைக் கேட்டிருக்கிறேன்.
இது மடத்தனம் அல்லது வெறுப்பு என்பதும், இந்த முட்டாள்தனத்தைப் போக்கவல்லது கல்வி அறிவு என்பதையும் உணர்ந்திருக்கிறேன்.
மனிதன் - மிருகம் - இவை பற்றிய விளக்கம் கூறுவதற்காகப் பொறுத்திட வேண்டுகிறேன்; ஆனால் இந்த வழக்கு நடைபெறும் போது இந்த விளக்கத்தை மறந்துவிடாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.
வழக்கு நடப்பது, நாற்கால் பிராணி மீது அல்ல! ஒரு மனிதன் மீது! உங்களைப் போன்ற ஒரு மனிதன் மீது! அதை மறந்துவிடாதீர்கள்!
நான் குறிப்பிடும் ஐந்தாவது குற்றச்சாட்டு என்னவென்றால் டக்ளஸ் டில்மன் நீக்ரோ என்பதை மறந்து அமெரிக்கக் குடியரசுத் தலைவராக அமருவதற்கு இணங்கினார் அல்லவா, அதுதான்!
நீக்ரோ யார்? முழுமனிதன் அல்லவே! மட்டம்! இரண்டாந்தரக் குடிமகன்! மிருகம்! - அப்படித்தானே நிற வெறியர்கள் கருதுகின்றனர், பேசுகின்றனர்.
நீக்ரோ முழு மனிதன் அல்ல! ஆகவே அறிவுள்ளவனாக இருக்க முடியாதே! ஆகவே அடக்கி வைக்கப்பட வேண்டியவன்!! இல்லையென்றால், குடித்துவிட்டு உருளுவான், குமரிப் பெண்களைக் கெடுத்திடத் துடிப்பான்! - அப்படித்தானே வெள்ளை இனத்தின் உயர்வு பற்றிய வெறியுணர்ச்சி கொண்டோர் கருதுகின்றனர்.
அப்படிப்பட்ட ஒரு கருப்பன், உயர்ந்த இனமான வெள்ளையர்களையும் சேர்த்து ஆளத்தக்க நினைப்பு கொள்ளலாமா! குடியரசுத் தலைவர் ஆகலாமா!! பெரிய குற்றமல்லவா! மன்னிக்கப்பட முடியாத குற்றமல்லவா!
டக்ளஸ் டில்மன் செய்த குற்றம் இதுதான் - அடிமை இனத்தவன் இவன்! ஆளப்பிறந்தவர் வெள்ளையர்! இந்த நியதியை மறந்தானே!! குடியரசுத் தலைவன் என்றானானே, அதுதான் அவன் செய்த குற்றம்.
குற்றப் பட்டியலில் அது இல்லை; வெள்ளை வெறியரின் உள்ளத்தில் அதுதான் மேலோங்கி நிற்கிறது.
அந்தக் குற்றத்தை வெளியே கூறக் கூச்சப்பட்டுக் கொண்டு வேறு பலவற்றை இட்டுக் கட்டியிருக்கிறார்கள்.
நான் ஒரு மனிதனுக்காக வாதாடுகிறேன் - மனிதன் மிருகமல்ல என்ற தூய கருத்துக்காக வாதாடுகிறேன்.
தம்பி! வழக்கறிஞரின் இந்தப் பேச்சு உள்ளத்தைத் தொடுகிறது; ஆனால் வெள்ளையர் தலைவர் ஒருவர் வெகுண்டெழுந்து இது வழக்குக்குத் தொடர்பற்ற பேச்சு, விபரீதப் பேச்சு, இதனை மேலும் அனுமதிக்கக் கூடாது என்றெல்லாம் கூறுகிறார். நீதிபதியும், மேற்கொண்டு இது பற்றிப் பேச அனுமதி கிடையாது என்று அறிவித்து விடுகிறார்.
மேலும் பேசுவானேன் தம்பி! மனிதன் மிருகமல்ல! அந்த ஒரு வாக்கியமே போதுமே; அதிலே பொதிந்துள்ள பொருள் ஏடு பல கொள்ளுமே! நல்லவர் உள்ளத்தை உருக்குமே; அதுபோதும்!
மனிதன் மிருகமல்ல! என்பது மட்டும் தம்பி! உலகிலே அதிலே குறிப்பாக 'உயரிடங்களிலே' ஒப்புக் கொள்ளப்பட்டு விட்டால்!
மனிதன், மிருகமல்ல! என்பது மட்டும், அது எல்லாச் செயல்களுக்கும் அடிப்படையாக அமைந்து விட்டால்!!
மனிதன், மிருகமல்ல! இதனை மட்டும் ஆட்சியாளர்கள் உணர்ந்துவிட்டால்!
நாடு, காடு ஆகிடாது! நல்ல நாடு கண்டிடலாம்.
தம்பி! வழக்கிலே டில்மன் குற்றமற்றவர் என்பது மெய்ப்பிக்கப்படுகிறது என்பது பற்றியும், தன்னைக் கற்பழிக்க முயன்றதாகக் குற்றம் சாட்டிய சாலி வாட்சன் எனும் மாது, உண்மையை எடுத்துரைத்து, டில்மன் மீது ஏற்றப்பட்ட பழியைத் துடைத்திட்டாள் என்பதையும் முன்பே குறிப்பிட்டுக் காட்டினேன்; நினைவிலிருக்கும் என்று நம்புகிறேன்.
வழக்கு முடிகிறது; டில்மன் குற்றமற்றவர் என்ற தீர்ப்புக் கிடைக்கிறது; வழக்கறிஞரும் அவர் போன்றோரும் மகிழ்கின்றனர்; குடியரசுத் தலைவர் டில்மன் தமது 'கடமை'யைக் கவனிக்கச் செல்கிறார் என்ற முறையில் ஏடு முடிகிறது.
ஏடு, ஒரு நல்ல முடிவைக் காட்டுகிறது. நாடு? அது பற்றித் தம்பி! எண்ணிப் பார்த்திடத்தான் இவ்வளவும் சொல்லி வைத்தேன்.
வெள்ளை மாளிகையில் முற்றும்
--------------
This file was last updated on 28 Jan 2023.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)