படிக்காசு தம்பிரான் அருளிய
தண்டலையார் சதகம் என்னும்
பழமொழி விளக்கம் (குறிப்புரையுடன்)
taNTaliayAr catakam (@ pazamozi viLakkam)
of paTikkAcut tampirAn
In Tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2023.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Ttamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
படிக்காசு தம்பிரான் அருளிய
தண்டலையார் சதகம் என்னும்
பழமொழி விளக்கம் (குறிப்புரையுடன்)
Source:
படிக்காசு தம்பிரான் அருளிய
தண்டலையார் சதகம்
[ குறிப்புரையுடன் ]
வெளியீடு எண்.577.
இது திருக்கயிலாய பரம்பரைத் தருமையாதீனம் 25வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை
சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அவர்களது திருவுளப்பாங்கின் வண்ணம் ஆவணிமூல விழா மலராக வெளியிடப்பட்டது.
தருமையாதீனம், 15-8-1966
--------
குருபாதம்
முன்னுரை
தில்லையில் எழுந்தருளியிருக்கும் சிவகாமி யம்மையைப் பாடிப் படிக்காசு பெற்ற பெருமை யுடையவராகிய படிக்காசு தம்பிரான் இயற்றியுள்ள நூல்களில் தண்டலையார் சதகம் ஓர் அறவுரை நூல். இதன் ஒவ்வொரு பாடலிலும் இறுதியில் ஒவ்வொரு பழமொழியை அமைத்து அரிய கருத்து விளக்கப்படுகின்றது. அதனால், இந்நூல், பழமொழி விளக்கம்’ என்ற மற்றொரு பெயரையும் பெற்று விளங்குகிறது.
தொன்று தொட்டுவரும் பழமொழிகளை வைத்து அரிய கருத்துகளை விளக்கும் பாடல்களைச் செய்வது பழைமையாகவே உள்ள ஒருமுறை என்பதற்கு, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகிய, ‘பழமொழி நானூறு’ என்னும் நூலே போதிய சான்றாகும். தொல்காப்பியனார் “ஏது
நுதலிய முதுமொழி யானும்” என்று செய்யுளியலிற் கூறிய இலக்கணத்தின் வழியே பழமொழி நானூறு செய்யப்பட்ட தென்பர் பேராசிரியர்.
பழமொழிகளை முதலிற் கூறியவர் இன்னார் என்பது அறியப்படாவிடினும், அவை செவிவழக்காய் மக்களிடையே நிலவி, அரும்பெருங்கருத்துக்களை உணர்த்தி வருகின்றன. ஆதலின், அவற்றைப் பலவகையில் பேணிக் காத்தனர் முன்னோர். இவ்வகையில் எழுந்ததே, படிக்காசு தம்பிரான் இயற்றிய தண்டலையார் சதகம்.
‘தண்டலை’ என்பது, சோழநாட்டில் உள்ள காவிரியின் தென்கரைத் தலங்களுள் ஒன்று. ‘திருத்தண்டலை நீணெறி’ என்பது இதன் முழுப்பெயர். இது, திருத்துறைப்பூண்டி ஸ்டேஷனுக்கு வடக்கில் இரண்டுகல் தொலைவில் உள்ளது. ‘தண்டலைச்சேரி’ என
வழங்குகின்றது. இதற்குத் திருஞானசம்பந்தர் அருளிச் செய்த ஒரு திருப்பதிகம் உண்டு. இங்குள்ள கோயில், கோச்செங்கட்சோழ நாயனார் கட்டிய மாடக்கோயில்களுள் ஒன்று. இச்செய்தி, திருப்பதிகத்தின் ஒன்பதாம் திருப்பாட்டில் சொல்லப்பட்டுள்ளது.
கருவ ருந்தியி னான்முகன் கண்ணனென்
றிருவ ருந்தெரி யாவொரு வன்னிடம்
செருவ ருந்திய செம்பியன் கோச்செங்கண்
நிருபர் தண்டலை நீணெறி காண்மினே.
இங்குள்ள சிவபெருமான்மீது பாடப் பெற்ற இச் சதக நூல், இனிய எளிய நடையையும், நல்ல ஓசையையும், ஆற்றொழுக்குப்போன்ற பொருளமைதியையும் உடையதாய் விளங்குகின்றது. திருக்குறள், நாலடியார்போன்ற சிறந்த அறநூல்களிலும், மற்றும் பலதுறை நூல்களிலும் உள்ள அரிய கருத்துக்கள் இந்நூலில் எளிமையாகச் சுவைபடச் சொல்லப்படுகின்றன. இவையன்றிச் சைவ சித்தாந்த நுண்பொருள்களும் ஆங்காங்கு எடுத்துக் கூறப்படுகின்றன. இவற்றால் இந்நூலைச் சிறுவர்கட்குத் தொடக்கக் கல்வி பயிலும் பொழுதே கற்பிக்கும் வழக்கம் முன்னாட்களில் இருந்துவந்தது. அவ்வழக்கம் இஞ்ஞான்று இல்லாது போயினமையால், புத்தகம் கிடைப்பதே அரிதாய்விட்டது. இந்நிலையில் இதனைச் சிறு
குறிப்புரையுடன் வெளியிடுதல் பலர்க்கும் பயன்படுவதாகும் என்னும் திருவுள்ளத்தால், தருமையாதீனம் 25 ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அவர்கள் பணித்தருளிய அருளாணையின் வண்ணம்,
பராபவஆண்டு ஆவணிமூல விழா மலராக இந்நூல் வெளிவருகின்றது.
படிக்காசு தம்பிரான் தருமையாதீனத்து அடியவர் திருக்கூட்டத்துள் ஒருவராதலின், அவரது நூல் இவ்வாதீனத்தின் வெளியீடாக அமைவது மிகமிகப் பொருத்தமே. புள்ளிருக்குவேளூர்ப் புராணத்தில், இவரது புள்ளிருக்குவேளூர்க் கலம்பகத்தையும் உடன் பதிப்பிக்கத் திருவுளம்
பற்றியவாறு, இந்நூலையும் தனியாக வெளியிடத் திருவுளம்பற்றிய ஸ்ரீலஸ்ரீ கயிலைக் குருமணியவர்களது கருணைத் திறத்திற்கு நாம் பெரிதும் நன்றியறியும் கடப்பாடுடையோம். அறிவையும், அறத்தையும் நல்கும் இந்நூலை அனைவரும் பெற்றுப் பயனடைவார்களாக.
------------
சிவமயம்
படிக்காசு புலவர் வரலாற்றுச் சுருக்கம்
பிற்காலப் புலவர்களில் புகழ்பெற்று விளங்கிய சிலருள் படிக்காசு புலவர் ஒருவர். இவர் இல்லறத்திலிருந்து பின் துறவு பூண்டமையால், ‘படிக்காசு தம்பிரான்’ என்றும் சொல்லப்படுகின்றார். இவர் தொண்டை நாட்டில் உள்ள பொன்விளைந்த களத்தூரில் பிறந்து அங்கே பள்ளிக் கல்வியைக் கற்றபின், இலக்கண விளக்கம்செய்த திருவாரூர்
வைத்தியநாத நாவலரை அடைந்து இலக்கண இலக்கியக் கல்விகளைக் கற்றுப் புலமை நிரம்பி, அழகிய இனிய கவிகளை எளிதில் பாடும் திறனும் பெற்று விளங்கினார். பின்னர், திருமணம் புரிந்துகொண்டு இல்வாழ்க்கை நடத்தினார்.
அக்காலத்தில் இவர் வள்ளல்கள் சிலரிடம் சென்று கவிபாடிப் பரிசில்கள் பெற்றார். அவ்வள்ளல்களில் குறிப்பிடத் தக்கவர்கள் வல்லம் காளத்தி பூபதி, மாவண்டூர் கத்தூரி முதலியார் புதல்வர் கறுப்ப முதலியார், காயற்பட்டினம் சீதக்காதி என்பவராவார்கள். மற்றும் சேது சமஸ்தானம் இரகுநாத சேதுபதி. சிவகங்கை திருமலைத்தேவர் என்பவர்களும் இவரால் பாடப்பெற்றவர்கள். இவர்களில் திருமலைத் தேவர் யாது காரணத்தாலோ இவரைக் கிளிக்கூண்டு போன்ற ஒரு சிறையில் அடைத்து வைத்துப் பின்பு இவரது பாடலைக் கேட்டுச்
சிறைவிடுவித்து அளவளாவிப் பரிசுகள் வழங்கினார்.
இறையன்பு மிகுந்தவராகிய இவர் பல தலயாத்திரைகளைச் செய்தார். ஒரு சமையம் தில்லையில் தங்கியிருந்த பொழுது கையிற் பொருள் இன்றிச் சிவகாமி அம்மையைப் பாட, பஞ்சாக்கரப் படியில் ஐந்து பொற்காசுகள் பலரும் பார்க்கும்படி, ‘புலவர்க்கு அம்மை தன்
பொற்கொடை’ என்ற வாக்குடன் வீழ்ந்தன. அவற்றைத் தில்லைவாழந்தணர்கள் பொற்றட்டில் வைத்துப் பல சிறப்புக்களுடன் புலவருக்கு அளித்தனர். இக்காரணம் பற்றியே இவருக்கு, ‘படிக்காசு புலவர்’ என்பது பெயராயிற்று. இவரது இளமைப் பெயர் தெரிந்திலது.
படிக்காசு புலவர் தம் வாழ்நாளின் பிற்பகுதியில் துறவறத்தை அடைய விரும்பித் தருமபுர ஆதீனத்தை அடைந்து அஞ்ஞான்று! ஆறாவது மகாசந்நிதானமாய் ஞானபீடத்தில் வீற்றிருந்தருளிய திருநாவுக்கரசு தேசிகரிடத்தில் துறவு நிலையும், ஞானோபதேசமும்
பெற்றார். இவ்வாதீன வெள்ளியம்பலவாண முனிவருடன் குமரகுருபர சுவாமிகளிடத்தில் சாத்திரங்களைப் பயின்றார். இவர் தமது ஞானாசாரியரிடத்தில் பாத காணிக்கையாக வைத்து வணங்கிய பொருளைக்கொண்டு வாங்கப்பட்ட நிலம் இன்றும் இவர் பெயரால் வழங்கப்பெறுகின்றது.
தருமையாதீனத்தில் துறவுபூண்ட பின்னர், ‘படிக்காசு தம்பிரான்’ எனப் பெயர்பெற்று விளங்கிய இவர் தமது ஞானாசிரியரது அருளாணையின் வண்ணம் வேளூர்க்கட்டளை விசாரணையை மேற்கொண்டு அதனை நடத்தி வந்தார். அக்காலத்தில் அத்தலப்
பெருமான்மீது இவர் பாடியதே புள்ளிருக்கு வேளூர்க்கலம்பகம். இந்நூல்மிக இனிமை வாய்ந்தது. வேளூரில் இருந்த காலத்தில் கூத்தப்பெருமான்மீது வைத்த பேரன்பினால் சில சமயங்களில் தில்லையிலும் சென்று தங்கியது உண்டு.
பின்பு தாம் அலுவலைவிட்டு அமைதியுற்றிருக்க எண்ணித் தம் ஞானாசிரியரை அடைந்து தமது கருத்தை விண்ணப்பித்து அருளாணை பெற்றுத் திருமடத்திலேயே பதினாறொடுக்கத்திலிருந்து சமாதிநிலை பயின்றார். அக்காலத்தில் ஒருநாள் தில்லையில் கூத்தப்பெருமானது திருமுன்பிலிருந்த திரைச்சீலை தீப்பற்றியதை யோகக் காட்சியால் உணர்ந்து இங்கே தம் கைகளைப் பிசைந்தார்; அங்கே தீ அணைந்தது. தம்பிரானது செயலைக் கூத்தப்பெருமான், சிவசங்கர தீக்ஷ¤தர் என்பவரது கனவில் தோன்றிச் சொல்லி, ஒரு விபூதிப்பையைக் கொடுத்துத் தம்பிரான்பால் சேர்ப்பிக்குமாறு கட்டளையிட்டு மறைந்தார். தீக்ஷ¤தர் விழித்துணர்ந்து, அதிசயமுற்று பெருமான் கட்டளைப்படியே தருமையை அடைந்து, ஞானதேசிகரிடத்தில் நடந்தவைகளை விண்ணப்பிக்க, அவர், படிக்காசரை அழைத்து விபூதிப்பையை அவர் கரத்தில் அளிப்பித்து, தீக்ஷ¤தருக்கும் தக்கவாறு சிறப்புச்செய்து அனுப்பினார். தம்பிரான் சுவாமிகள், இறைவன் திருவருளை எண்ணி மனம் உருகினார்.
இங்ஙனம் சிறந்த தமிழ்ப் புலவராயும், துறவியாயும், யோகியாயும், அருள்ஞானச் செல்வராயும் விளங்கிய படிக்காசு தம்பிரான், தாம் பயின்ற சமாதிநிலையின்படியே இறைவன் திருவடி நிழலை அடைந்தார். இவரது தமிழ்ப்பாக்களின் சிறப்பை, பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் என்பவர் பின்வருமாறு வியந்து பாடியுள்ளார்.
மட்டாருந் தென்களந்தைப் படிக்காச
னுரைத்தகவி வரைந்த வேட்டைப்
பட்டாலே சூழ்ந்தாலு மூவுலகும்
பரிமளிக்கும் பரிந்தவ்வேட்டைத்
தொட்டாலுங் கைமணக்குஞ் சொன்னாலும்
வாய் மணக்குந் துய்ய சேற்றில்
நட்டாலுந் தமிழ்ப்பயிராய் விளைந்திடுமே
பாட்டினது நயப்புத் தானே’’
இவர் பாடிய நூல்கள், தொண்டை மண்டல சதகம்’ தண்டலையார் சதகம் சிவந்தெழுந்த பல்லவன் உலா பிள்ளைத் தமிழ், பாம்பலங்கார வருக்கக் கோவை, திருச்செங்கோட்டுத் திருப்பணிமாலை முதலியன. அவ்வவ்வமயங்களில் இயற்றிய தனிப்பாடல்கள் பல.
வல்லம்காளத்தி பூபதியைப் பாடியது;
“பெற்றா ளொருபிள்ளை யென்மனை யாட்டியப் பிள்ளைக்குப்பால்
பற்றாது கஞ்சி குடிக்குந் தரமல்ல பாலிரக்கச்
சிற்றாளு மில்லையிவ் வெல்லா வருத்தமுந் தீரவொரு
கற்றா தரவல்லை யாவல்ல மாநகர்க் காளத்தியே.”
“வழிமேல் விழிவைத்து வாடாம லென்மனை யாளுமற்றோர்
பழியாமற் பிள்ளையும் பாலென் றழாமற் பகீரெனுஞ்சொல்
மொழியாம லென்னை வரவிட்ட பாவை முசித்துச்சதை
கழியாம லாவளித் தாய்வல்ல மாநகர்க் காளத்தியே.”
மாவண்டூர்க் கத்தூரி முதலியார் புதல்வர் கறுப்ப முதலியாரைப் பாடியது; (இவர் இம்முனிவர் பூர்வாச்சிரமத்தில் இயற்றிய தொண்டை மண்டல சதகத்தைக் கேட்டுப் பெரும் பொருள் வழங்கி, இவரைச் சிவிகையில் வைத்து ஊர்வலம் செய்வித்ததோடு, சிவிகையும்
தாங்கியவர்).
“ஓர்சுறுப்பு மில்லாத தொண்டைவள நன்னாட்டி
லுசித வேளைச்
சீர்கறுப்பொன் றில்லாத கத்தூரி மன்னனருள்
சேயைப் பார்மே
லார்கறுப்ப னென்றுசொல்லி யழைத்தாலும் நாமவனை
யன்பி னாலே
பேர்கறுப்ப னிறஞ்சிவப்பன் கீர்த்தியினால் வெளுப்ப
னெனப் பேசுவோமே.”
தில்லையில் சிலரை வெறுத்துப் பாடியது :
“பொல்லாத மூர்க்கருக் கெத்தனை தான்புத்தி போதிக்கினும்
நல்லார்க்குண் டான குணம்வரு மோநடு ராத்திரியிற்
சல்லாப் புடைவை குளிர்தாங்கு மோநடுச் சந்தைதனிற்
செல்லாப் பணஞ்செல்லு மோதில்லை வாழுஞ்சிதம்பரனே”
இரகுநாத சேதுபதியவர்களைப் பாடியது :
“மூவேந் தருமற்றுச் சங்கமும் போய்ப்பதின் மூன்றொடிரு
கோவேந் தருமற்று மற்றொரு வேந்தன் கொடையுமற்றுப்
பாவேந்தர் காற்றி லிலவம்பஞ் சாகப் பறக்கையிலே
தேவேந்தர் தாருவொத் தாய்ரகு நாத செயதுங்கனே”
காயற்பட்டினம் சீதக்காதியைப் பாடியது :
“ஓர்தட்டி லேபொன்னும் ஓர்தட்டி லேநெல்லும் ஒக்கவிற்கும்
கார்தட் டியபஞ்ச காலத்தி லேதங்கள் காரியப்போர்
ஆர்தட்டி னுந்தட்டு வாராம லேயன்ன தானத்துக்கு
மார்தட்டியதுரை மால்சீதக் காதி வரோதயனே”
“ஈயாத புல்லர் இருந்தென்ன போயென்ன எட்டிமரம்
காயா திருந்தென்ன காய்ந்துப் பலனென்னகந்தைசுற்றிப்
போயா சகமென் றிரந்தோர்க்குச் செம்பொன்பிடிபிடி
ஓயாமல் ஈபவன் வேன்சீதக் காதி ஒருவனுமே”
சீதக்காதி இறந்த பின்னர் அவன் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்சென்று பாடியது :
“பூமா திருந்தென்புவிமா திருந்தென்ன பூதலத்தில்
நாம திருந்தென்னநாமிருந் தென்னநன் னாவலர்க்குக்
கோமா னழகமர் மால்சீதக் காதி கொடைமிகுந்த
சீமா னிறந்திட்ட போதே புலமையுஞ் செத்ததுவே”
“தேட்டாளன் காயற் றுரைசீதக் காதி சிறந்தவச்ர
நாட்டான் புகழ்க்கம்ப நாட்டிவைத்தான்புகழ் நாவலரை
ஓட்டாண்டி யாக்கி யவர்கடம் வாயி லொருபிடிமண்
போட்டா னவனு மொளித்தான் சமாதிக்குழிபுகுந்தே”
“மறந்தாகிலுமரைக் காசுங் கொடாமடமாந்தர்மண்மேல்
இறந்தாவ தென்ன இருந்தாவ தென்னஇறந்து விண்போய்ச்
சிறந்தாளுங் காயற் றுறைசீதக்காதிதிரும்பிவந்து
பிறந்தா லொழியப் புலவோர் தமக்குப்பிழைப்பில்லையே”
இவற்றைப் பாடியவுடன் சீதக்காதியின் மோதிரம் அணிந்த கை
வெளிவர, அம்மோதிரத்தைப் பரிசாகப் பெற்றார் என்றும், அதனால்,
‘செத்தும் கொடுத்தான் சீதக்காதி’ என்றும் சொல்லப்படுகின்றன.
தமக்கு இலக்கணங்கற்பித்த திருவாரூர் வைத்தியநாத நாவலர் புதல்வர் சதாசிவ நாவலரைப் புகழ்ந்து பாடியது:
“கூடுஞ் சபையில் கவிவா ரணங்களைக் கோளரிபோல்
சாடுஞ் சதாசிவ சற்குரு வேமுன்னுள் தந்தைதன்னால்
பாடும் புலவர்க ளானோ மினிச்செம்மற் பட்டியெங்கும்
காடும் செடியுமென் னோதமிழ்க் காரிகை கற்பதுளே”
காடு செடிகளின் பக்கத்திலிருந்துகொண்டு காரிகையைப் பாடம் செய்துகொண்டிருந்தவரைப் படிக்காசு புலவர் பார்த்து இவ்வாறு பாடினர். வைத்தியநாத நாவலர் காலத்தில் ஒருவர் இருவர் அவரிடம் இலக்கணம் கற்றுப் புலவரானார்கள். அவர் புதல்வர் காலத்தில் அவரிடம் பலர் இலக்கணம் கற்றனர் என்பது இதன் கருத்து.
இவர் காலத்தில் அரைகுறைப் புலவர் பலர் தோன்றியதைக் கண்டு வருந்திப் பாடியது;
“குட்டுதற்கோ பிள்ளைப்பாண் டியன்சங் கில்லை
குறும்பியளவாக காதைக் குடைந்து தோண்டி
எட்டினமட டறுப்பதற்கோ வில்லி யில்லை
இரண்டொன்றாய் முடிந்துதலை இறங்கப் போட்டு
வெட்டுதற்கோ கவியொட்டக் கூத்த னில்லை
விளையாட்டாய்க் கவிதைதனை விரைந்து பாடிந்
தெட்டுதற்கோ அறிவில்லாத் துரைகளுண்டு
தேசமெங்கும் புலவரெனத் திரியலாமே”
“வெண்பாவிற் புகழேந்தி” என்ற ஒரு தனிப்பாடல், இவர் சந்தப்பாப் பாடுவதில் சிறந்தவர் என்று குறிக்கின்றது. இத்தகைய அரும்பெரும் புலவர்களது தமிழ்க் கவிதைகளைக் கற்று இன்புறுதல் தமிழ் மக்களது கடமையாகும்.
-----------------
திருச்சிற்றம்பலம்
பழமொழி விளக்கம் என்னும்
தண்டலையார் சதகம்
காப்பு
சீர்கொண்ட கற்பகத்தின் வாதாவி நாயகனைத்
தில்லை வாழும்
கார்கொண்ட கரிமுகனை விகடசக்ர கணபதியைக்
கருத்துள் வைப்பாம்
பேர்கொண்ட ஞானநா யகிபாகன் தண்டலைஎம்
பெருமான் மீதில்
ஏர்கொண்ட நவகண்டம் இசைந்தபழ மொழிவிளக்கம்
இயம்பத் தானே.
காப்பு :- 1. வாதா- பெயர் சொல்லப்படுகின்ற கார் கொண்ட - கரிய மதநீரைக் கொண்ட. ‘விகட சக்ர விநாயகர்’ என்னும் பெயர் காஞ்சியில் உள்ள விநாயகருக்குச் சிறப்பாக வழங்கும். நவகண்டம்-ஒன்பது பாகம். பூமியை ஒன்பது பாகமாகக் கூறுதல் பழைய வழக்கம். அதனை நிகண்டு நூல்களிற் காண்க.
வேதநெறி விளம்பியசொல் ஆகமநூல் விளம்பியசொல்
மிகுபு ராணம்
ஏதுவினிற் காட்டியசொல் இலக்கணச்சொல் இசைந்தபொருள்
எல்லாம் நாடி
ஆதிமுதல் உலகுதனில் விளங்குபழ மொழிவிளக்கம்
அறிந்து பாடச்
சோதிபெறு மதவேழ முகத்தொருவன் அகத்தெனக்குத்
துணைசெய் வானே.
அவையடக்கம்
வள்ளுவர்நூ லாதிபல நூலிலுள அரும்பொருளை
வண்மை யாக
உள்ளபடி தெரிந்துணர்ந்த பெரியவர்கள் முன்நானும்
ஒருவன் போலப்
பள்ளமுது நீருலகிற் பரவுபழ மொழிவிளக்கம்
பரிந்து கூறல்
வெள்ளைமதி யினன்கொல்லத் தெருவதனில் ஊசிவிற்கும்
வினைய தாமே.
2. ஏதுவினில் - காரணமாக.
அவையடக்கம் : இது முதல் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஒவ்வொரு பழமொழி வருவது காண்க. சில பாட்டுக்களில் இடையிலும் ஒரு பழமொழி வருகின்றது. பள்ள முதுநீர் - கடலில் நிறைந்துள்ள மிக்க நீராற் சூழப்பட்ட. பரிந்து-அவாவுற்று. வெள்ளை மதியினன்-அறிவில்லாதவன்.
நூல்
திருவிளக்கிடுதல்
வரமளிக்குத் தண்டலையார் திருக்கோயி லுட்புகுந்து
வலமாய் வந்தே
ஒருவிளக்கா கிலும்பசுவின் நெய்யுடன் தாமரை நூலின்
ஒளிர வைத்தால்
கருவிளக்கும் பிறப்புமில்லை இறப்புமில்லை கைலாசங்
காணி யாகும்
திருவிளக்கிட் டார்தமையே தெய்வமறிந் திடும்வினையுந்
தீருந் தானே. 1
1. கரு விளக்கும்- கருவைக் காட்டுகின்ற ; கருவில்சேர்க்கின்ற. காணி- உரிமை இடம். அறிந்திடும்- விரும்பும். “விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ந்நெறி ஞானமாகும்“ என்பது திருமுறை (4.77.3.)
வான் சிறப்பு
கூன்செய்த பிறையணியுந் தண்டலையார் கருணைசெய்து
கோடி கோடி
யான்செய்த வினையகற்றி நன்மைசெய்தால் உபகாரம்
என்னால் உண்டோ
ஊன்செய்த உயிர்வளரத் தவம்தானம் நடந்தேற
உதவி யாக
வான்செய்த நன்றிக்கு வையகம்என் செய்யும்அதை
மறந்தி டாதே. 2
2. ‘மறந்திடாது என்செய்யும்’ எனக் கூட்டுக.
இட்டதற்குமேல் இல்லை
அட்டதிசை எங்கணும்போய் அலைந்தாலும் பாதாள
மதிற்சென் றாலும்
பட்டமென வானூடு பறந்தாலும் என்னஅதிற்
பயனுண் டாமோ
பிட்டுவர மண்சுமந்த தண்டலையாரோ முன்னாள்
பெரியோர் கையில்
இட்டபடி யேயொழிய வேறாசைப் படில்வருவ
தில்லை தானே. 3
---
3. அட்ட திசை- எட்டுத்திக்கு. பட்டம்-காற்றாடி. பிட்டு வர- ‘பிட்டு’
என்னும் சிற்றுண்டி கிடைத்தற் பொருட்டு.
நன்மை தீமை
தன்மமதைச் செயல்வேண்டும் தண்டலைநீ ணெறியாரே
தயவு செய்வார்
வன்மவினை செயல்வேண்டா பொய்வேண்டா பிறரை ஒன்றும்
வருத்தல் வேண்டா
கன்மநெறி வரல்வேண்டா வேண்டுவது பலர்க்கும்உப
கார மாகும்
நன்மைசெயதார் நலம்பெறுவர் தீமைசெய்தார் தீமைபெற்று
நலிவர் தாமே. 4
---
4. வன்மம்-பிடிவாதம்.
இல்லறத்தின் சிறப்பு
புல்லறிவுக் கெட்டாத தண்டலையார் வளந்தழைத்த
பொன்னி நாட்டிற்
சொல்லறமா தவம்புரியுஞ் சௌபுரியும் துறவறத்தைத்
துறந்து மீண்டான்
நல்லறமாம் வள்ளுவர்போற் குடிவாழ்க்கை மனைவியுடன்
நடத்தி நின்றால்
இல்லறமே பெரிதாகும் துறவறமும் பழிப்பின்றேல்
எழில தாமே. 5
---
5. சௌபரி. ஒரு முனிவர். இவர், மீன்களின் வாழ்க்கையைக் கண்டு
இல்லறத்தை விரும்பி, மாந்தாதாவின் பெண்கள் நூற்றுவரை மணந்து
வாழ்ந்தார்.
கற்புடை மங்கையர்
முக்கணர்தண் டலைநாட்டிற் கற்புடையமங் கையர்மகிமை
மொழியப் போமோ
ஒக்கும்எரி குளிரவைத்தாள் ஒருத்தி; வில்வே
டனையெரித்தாள் ஒருத்தி; மூவர்
பக்கமுற அமுதளித்தாள் ஒருத்தி;எழு பரிதடுத்தாள்
ஒருத்தி; பண்டு
கொக்கெனவே நினைந்தனையோ கொங்கணவா
என்றொருத்தி கூறி னாளே. 6
---
6. எரி - நெருப்பு. ஏழுபரி - ஏழு குதிரை. இவை சூரியன் தேரில் உள்ளவை. நெருப்பைக் குளிரவைத்தவள். (அதில் மூழ்கி எழுந்தவள்) சீதை. தன்னிடம் தகாத முறையில் பேசிய வேடனை எரித்தவள். தமயந்தி. பொழுது விடியாமற் செய்தவள். நளாயினி. மும்மூர்த்திகளைக்
குழந்தைகளாக்கிப் பால் கொடுத்தவள். அத்திரி முனிவர் மனைவி அனுசூயை. ‘கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா’ என்று கொங்கணச் சித்தரைக் கேட்டவள். திருவள்ளுவர் மனைவி வாசுகி.
நன்மக்கட் பேறு
நன்றிதரும் பிள்ளைஒன்று பெற்றாலும் குலமுழுவதும்
நன்மை யுண்டாம்
அன்றியறி வில்லாத பிள்ளைஒரு நூறுபெற்றும்
ஆவ துண்டோ
மன்றில்நடம் புரிவாரே தண்டலையா ரேசொன்னேன்
வருடந் தோறும்
பன்றிபல ஈன்றுமென்ன குஞ்சரம்ஒன் றீன்றதனாற்
பயனுண் டாமே. 7
---
7. மன்று - சபை. குஞ்சாரம் - யானை.
இறை யன்பு
அல்லமருங் குழலாளை வரகுணபாண் டியராசர்
அன்பால் ஈந்தார்
கல்லைதனின் மென்றுமிழ்ந்த ஊனமுதைக் கண்ணப்பர்
கனிவால் ஈந்தார்
சொல்லியதண் டலையார்க்குக் கீரையும்மா வடுவும்ஒரு
தொண்டர் ஈந்தார்
நல்லதுகண் டாற்பெரியோர் நாயகனுக் கென்றதனை
நல்கு வாரே. 8
---
8. அல் அமரும் - இருள்தங்கியது போன்ற. குழல்- கூந்தல். கல்லை.
தொன்னை - வரகுணபாண்டியன் தனக்கு மணம் செய்வித்த பெண்னை
அன்றே கோயிலில் உள்ள சிவபெருமானுக்குக் கொடுக்க, அவர்
அப்பெண்ணை இலிங்கத்தில் இரண்டறக் கலக்கச் செய்தார்.
சிவபெருமானுக்குச் செந்நெல் அரிசி அமுதும். கீரையும், மாவடுவும்
கொடுத்தவர் அரிவாட்டாய நாயனார்.
விருந்தோம்பல்
திருவிருந்த தண்டலையர் வளநாட்டில் இல்வாழ்க்கை
செலுத்தும் நல்லோர்
ஒருவிருந்தா கிலும்இன்றி உண்டபகல் பகலாமோ
உறவாய் வந்த
பெருவிருந்துக் குபசாரஞ் செய்தனுப்பி இன்னம்எங்கே
பெரியோர் என்று
வருவிருந்தோ டுண்பதல்லால் விருந்தில்லா துணுஞ்சோறு
மருந்து தானே. 9
இன்சொல் பேசுதல்
பொற்குடையும் பொற்றுகிலும் பொற்பணியுங்
கொடுப்பதென்ன பொருளோ என்று
நற்கமல முகமலர்ந்தே உபசார மிக்கஇன்சொல்
நடத்தல் நன்றே
கற்கரையும் மொழிபாகர் தண்டலையார் வளநாட்டிற்
கரும்பின் வேய்ந்த
சற்கரையின் பந்தலிலே தேன்மாரி பொழிந்துவிடுத்
தன்மை தானே. 10
---
10 துகில் - உடை. வேய்ந்த - மூடிய.
நல்லோர்சொற் கேளாமை
குறும்பெண்ணா துயர்ந்தநல்லோர் ஆயிரஞ்சொன் னாலும்
அதைக் குறிக்கொ ளாமல்
வெறும்பெண்ணா சையிற்சுழல்வேன் மெய்ஞ்ஞானம்
பொருந்திஉனை வேண்டேன் அந்தோ
உறும்பெண்ணா ரமுதிடஞ்சேர் தண்டலைநீ ணெறியேஎன்
உண்மை தேரில்
எறும்பெண்ணா யிரமப்பா கழுதையுங்கை கடந்ததெனும்
எண்ணந் தானே. 11
---
11. குறும்பு- தீமை. பெண்ணாரமுது, உமையம்மை.
நன்றி மறவாமை
துப்பிட்ட ஆலம்விதை சிறிதெனினும் பெரிதாகுந்
தோற்றம் போலச்
செப்பிட்ட தினையளவு செய்தநன்றி பனையளவாய்ச்
சிறந்து தோன்றும்
கொப்பிட்ட உமைபாகர் தண்டலையார் வளநாட்டிற்
கொஞ்ச மேனும்
உப்பிட்ட பேர்கள்தமை உளவரையும் நினைக்கும்இந்த
உலகந் தானே. 12
---
12. துப்பு இட்ட - ஆற்றல் அமைக்கப்பட்ட. செப்பிட்ட (செப்பியிட்ட) - சி்றுமைக்கு அளவாகச் சொல்லப்பட்ட, கொப்பு. ஒருவகைக் காதணி. உள வரையும் - உயிருள்ள வரையிலும்.
பயன் இன்மை
மேட்டுக்கே விதைத்தவிதை வீணருக்கே செய்தநன்றி
மேயும் பட்டி
மாட்டுக்கே கொடுத்தவிலை பரத்தையர்க்கே தேடிஇட்ட
வண்மை யெல்லாம்
பாட்டுக்கே அருள்புரியுந் தண்டலையார் வீதிதொறும்
பரப்பி டாமல்
காட்டுக்கே எறித்தநிலாக் கானலுக்கே பெய்தமழை
கடுக்குங் காணே. 13
---
13. பட்டி மாடு - கபடம் உள்ள மாடு. கானல் - கடற்கரை. கடுக்கும்- ஒப்பாகும்.
சிறியோர் இயல்பு
சங்கையறப் படித்தாலும் கேட்டாலும் பிறர்க்குறுதி
தனைச்சொன் னாலும்
அங்கண்உல கிற்சிறியோர் தாம்அடங்கி நடந்துகதி
அடைய மாட்டார்
திங்களணி சடையாரே தண்டலையா ரேசொன்னேன்
சிறிது காலம்
கங்கையிலே படர்ந்தாலும் பேய்ச்சுரைக்காய் நல்லசுரைக்
காயா காதே. 14
---
14. அங்கண் - அழகிய இடத்தையுடைய. திங்கள் - சந்திரன்.
பற்றறாமை
உழையிட்ட விழிமடவார் உறவுவிட்டும் வெகுளிவிட்டும்
உலக வாழ்விற்
பிழைவிட்டும் இன்னமின்னம் ஆசைவிடா தலக்கழியப்
பெற்றேன் அந்தோ
தழையிட்ட கொன்றைபுனை தண்டலைநீ ணெறியேயென்
தன்மை யெல்லாம்
மழைவிட்டுந் தூவானம் விட்டதில்லை யாயிருந்த
வண்மை தானே. 15
---
15. உழையிட்ட- மான்போன்ற. வெகுளி- கோபம்.
அடங்காப் பிள்ளைகள்
கொச்சையிற்பிள் ளைக்குதவுந் தண்டலையார் வளநாட்டிற்
கொடியாய் வந்த
வச்சிரப்பிள் ளைக்குமுனம் மாதவனே புத்திசொன்னான்
வகையுஞ் சொன்னான்
அச்சுதப்பிள் ளைக்கும்அந்த ஆண்டவரே புத்திசொன்னார்
ஆத லாலே
துற்சனப்பிள் ளைக்கூரார் புத்திசொல்லு வாரென்றே
சொல்லுவா ரே. 16
----
16. கொச்சை - சீகாழி. அதில் தோன்றிய பிள்ளை. திருஞானசம்பந்தர். கொடி - காக்கை. வச்சிரப் பிள்ளை-வச்சிராயுதத்தை யுடைய இந்திரன் மகன் ; சயந்தன். ‘சயந்தன் காக்கை யுருவங்கொண்டு சென்று சீதையின் தனத்தைக் குத்த, இராமர் புல்லையே அம்பாக ஏவிக்
காக்கையின் கண்ணை அழித்து. பின்பு இருகண்களுக்கும் ஒருமணியே இருக்க வரங்கொடுத்தார்’ என்பது வரலாறு. அச்சுதப்பிள்ளை - திருமால் மகன் ; மன்மதன். அந்த ஆண்டவர், தண்டலையார், சிவபெருமான் மன்மதனை எரித்த வரலாறு இதில் குறிக்கப்பட்டது.
பொறுமை
கறுத்தவிடம் உண்டருளுந் தண்டலையார் வளநாட்டிற்
கடிய தீயோர்
குறித்துமனை யாள்அரையில் துகிலுரிந்தும் ஐவர்மனங்
கோபித் தாரோ.
பறித்துரிய பொருள்முழுதுங் கவர்ந்தாலும் அடித்தாலும்
பழிசெய் தாலும்
பொறுத்தவரே உலகாள்வர் பொங்கினவர் காடாளப்
போவர் தாமே. 17
---
17. தீயோர், துரியோதனாதியர். ஐவர், பாண்டவர்.
பொறாமை
அள்ளித்தண் ணீறணியுந் தண்டலையார் வளநாட்டில்
ஆண்மை யுள்ளோர்
விள்ளுற்ற கல்வியுள்ளோர் செல்வமுள்ளோர்
அழகுடையோர் மேன்மை நோக்கி
உள்ளத்தில் அழன்றழன்று நமக்கில்லை எனஉரைத்திங்
குழல்வா ரெல்லாம்
பிள்ளைப்பெற் றவர்தமைப்பார்த் திருந்துபெரு மூச்செறி
யும் பெற்றியோரே. 18
---
18. தண் நீறு - அருள்வடிவான விபூதி. விள்ளுற்ற - எல்லாவற்றையும் தெரிவிக்கின்ற. அழன்று அழன்று - மனம் கொதித்துக் கொதித்து.
மனக்கோட்டை
மண்ணுலகா ளவும் நினைப்பார் பிறர்பொருள்மேல்
ஆசைவைப்பார் வலுமை செய்வார்
புண்ணியம்என் பதைச்செய்யார் கடைமுறையில்
அலக்கழிந்து புரண்டே போவார்
பண்ணுலவு மொழிபாகர் தண்டலையார் வகுத்தவிதிப்
படியல் லாமல்
எண்ணமெல்லாம் பொய்யாகும் மௌனமே மெய்யாகும்
இயற்கை தானே. 19
----
19. வலுமை- வலுச்சண்டை கடைமுறையில் - கடைசியில்.
புறங்கூறல்
சொன்னத்தைச் சொல்லும்இளங் கிள்ளையென்பார்
தண்டலையார் தொண்டு பேணி
இன்னத்துக் கின்னதெனும் பகுத்தறிவொன் றில்லாத
ஈன ரெல்லாம்
தன்னொத்துக் கண்டவுடன் காணாமல் முறைபேசிச்
சாடை பேசி
முன்னுக்கொன் றாயிருந்து பின்னுக்கொன் றாய்நடந்து
மொழிவர் தாமே. 20
---
20. கிள்ளை - கிளி. சாடை-நடிப்பு.
அறிவில்லாதவர்
கொடியருக்கு நல்லபுத்தி சொன்னாலுந் தெரியாது
கொடையில் லாத
மடையருக்கு மதுரகவி யுரைத்தாலும் அவர்கொடுக்க
மாட்டார் கண்டீர்
படியளக்குந் தண்டலைநீ ணெறியாரே உலகமெலாம்
பரவி மூடி
விடியல்மட்டும் மழைபெயினும் அதினோட்டாங்
கிச்சில்முளை வீசி டாதே. 21
---
21. ‘மடவர்’ என்பது, ‘மடையர்’ என மருவிற்று படி அளக்கும் - எல்லா உயிர்கட்கும் உணவளித்துக் காக்கின்ற.
வினைப் பயன்
செங்காவி மலர்த்தடஞ்சூழ் தண்டலைநீ ணெறியேநின்
செயல்உண் டாகில்
எங்காகில் என்னஅவர் எண்ணியதெல்லாம் முடியும்
இல்லை யாகில்
பொங்காழி சூழுலகில் உள்ளங்கால் வெள்ளெலும்பாய்ப்
போக ஓடி
ஐங்காதம் போனாலும் தன்பாவந் தன்னுடனே
யாகுந் தானே. 22
---
22. காவி- குவளை மலர். ஆழி- கடல்.
அருமை அறியாமை
தாயறிவாள் மகளருமை தண்டலைநீ ணெறிநாதர்
தாமே தந்தை
யாயறிவார் எமதருமை பரவையிடந் தூதுசென்ற
தறிந்தி டாரோ
பேயறிவார் முழுமூடர் தமிழருமை யறிவாரோ
பேசு வாரோ
நாயறியா தொருசந்திச் சட்டிபானையின் அந்த
நியாயந் தானே. 23
---
23. பேய் அறிவார் - பேய்க்கு அஞ்சத் தெரிவார். ஒருசந்தி-ஒருபொழுது ; விரதம்.
ஈயாதார் வாழ்வு
கட்டுமாங் கனிவாழைக் கனிபலவின் கனிகள்உப
கார மாகும்
சிட்டரும்அவ் வணந்தேடும் பொருளைஎல்லாம்
இரப்பவர்க்கே
செலுத்தி வாழ்வார்
மட்டுலவுஞ் சடையாரே தண்டலையா ரேசொன்னேன்
வனங்கள் தோறும்
எட்டிமரம் பழுத்தாலும் ஈயாதார் வாழ்ந்தாலும்
என்னுண் டாமே. 24
---
24. கட்டு மாங்கனி - ஒட்டு மாம்பழம். சிட்டர்- மேலோர். மட்டு - தேன்.
புகழ்பெறாமை
ஓதரிய தண்டலையா ரடிபணிந்து நல்லவனென்
றுலக மெல்லாம்
போதமிகும் பேருடனே புகழ்படைத்து வாழ்பவனே
புருட னல்லால்
ஈதலுடன் இரக்கமின்றிப் பொன்காத்த பூதமென
இருந்தால் என்ன
காதவழி பேரில்லான் கழுதையோ டொக்கும்எனக்
கழற லாமே. 25
---
25. போத மிகும் - மிகவும் அதிகமாகப் பரவிய
பயன்படாதவை
பரியாமல் இடுஞ்சோறும் ஊமைகண்ட கனவும்ஒரு
பரிசில் ஈயான்
அரிதான செந்தமிழின் அருள்சிறிதும் இல்லாதான்
அறிவு மேதான்
கரிகாலன் பூசைபுரி தண்டலைநீ ணெறியாரே
கதித்த ஓசை
தெரியாத செவிடன்கா தினிற்சங்கு குறித்ததெனச்
செப்ப லாமே. 26
---
26. பரியாமல் - அன்பில்லாமல். செந்தமிழின் அருள் சிறிதும் இல்லாதான் - தமிழைக் கற்ற புலவரிடத்தில் இரக்கம் சிறிதும் இல்லாதவன். கதித்த - மிகுந்த.
உயிர் இரக்கம்
முன்னரிய மறைவழங்குந் தண்டலையார் ஆகமத்தின்
மொழிகே ளாமல்
பின்னுயிரை வதைத்தவனும் கொன்றவனும் குறைத்தவனும்
பேரு ளோனும்
அந்நெறியே சமைத்தவனும் உண்டவனும் நரகுறுவர்
ஆத லாலே
தன்னுயிர்போல் எந்நாளும் மன்னுயிருக் கிரங்குவது
தக்க தாமே. 27
---
27. முன்னரிய - நினைத்தற்கரிய. வதைத்தவன் - துன்புறுத்தியவன். குறைத்தவன் - கொன்றபின் உடம்பைக் கூறுபடுத்தினவன். பேருளோன் - இவர்கள் செய்கைகட்குத் துணைபுரிந்தவன்.
பயன் நுகராமை
உருவெடுத்த நாள்முதலா ஒருசாணும் வளர்க்கஉடல்
உழல்வ தல்லால்
மருவிருக்கும் நின்பாத மலர்தேடித் தினம்பணிய
மாட்டேன் அந்தோ
திருவிருக்கும் மணிமாடத் தண்டலைநீ ணெறியேஎன்
செய்தி யெல்லாம்
சருகரிக்க நேரமன்றித் தீக்காய நேரமில்லாத்
தன்மை தானே. 28
----
28. ஒருசாணும் - வயிற்றைமட்டும். மரு இருக்கும் - வாசனை பொருந்திய (பாதம்). ‘பாதமலரைத் தேடிப் பணியமாட்டேன்’ என்றும், ‘பாதத்தை மலர்தேடி இட்டுப் பணிய மாட்டேன்’ என்றும், இருபொருளும் கொள்க. திரு - திருமகள்.
போலி வேடம்
காதிலே திருவேடம் கையிலே செபமாலை
கழுத்தில் மார்பின்
மீதிலே தாழ்வடங்கள் மனதிலே கரவடமாம்
வேட மாமோ
வாதிலே அயன்தேடும் தண்டலைநீ ணெறியாரே
மனிதர் காணும்
போதிலே மௌனம்இராப் போதிலே உருத்ராட்சப்
பூனை தானே. 29
----
29. திருவேடம் -‘சுந்தரவேடம்’ என்ற ஆபரணம். இராப்போது- (மனிதர்) இல்லாத சமையம்; இரவுக்காலம்: இவ் விருபொருளும் கொள்.
மக்களும் தெய்வமும்
மானொன்று வடிவெடுத்து மாரீசன் போய்மடிந்தான்
மானே யென்று
தேனொன்று மொழிபேசிச் சீதைதனைச் சிறையிருத்தத்
திருடிச் சென்றோன்
வானொன்றும் அரசிழந்தான் தண்டலையார் திருவுளத்தின்
மகிமை காணீர்
தானொன்று நினைக்கையிலே தெய்வமொன்று
நினைப்பதுவும் சகசந் தானே. 30
பொய்யின் தீமை
கைசொல்லும் பனைகாட்டுங் களிற்றுரியார் தண்டலையைக்
காணார் போலப்
பொய்சொல்லும் வாயினர்க்குப் போசனமுங் கிடையாது
பொருள்நில் லாது
மைசொல்லும் காரளிசூழ் தாழைமலர் பொய்சொல்லி
வாழ்ந்த துண்டோ
மெய்சொல்லி வாழாதான் பொய்சொல்லி வாழ்வதில்லை
மெய்ம்மை தானே. 31
---
31. கை சொல்லும் பனை- தும்பிக்கை என்று சொல்லப்படுகிற பனைமரம்; உருவகம். கார் அளி- கரியவண்டுகள்.
பெரியோரை இகழ்தல்
அந்தணரை நல்லவரைப் பரமசிவ னடியவரை
அகந்தை யாலோர்
நிந்தனைசொன் னாலும்என்ன வைதாலும் என்னஅதில்
நிடேதம் உண்டோ
சுந்தரர்க்குத் தூதுசென்ற தண்டலைநீ ணெறியாரே
துலங்கும் பூர்ண
சந்திரனைப் பார்த்துநின்று நாய்குரைத்த போதிலென்ன
தாழ்ச்சி தானே. 32
---
32. அகந்தை- அகங்காரம். நிடேதம்-குற்றம்.
குலத்தைக் கெடுப்போர்
கோடாமற் பெரியவர்பால் நடப்பதன்றிக் குற்றமுடன்
குறைசெய் தோர்கள்
ஆடாகிக் கிடந்தவிடத் ததன்மயிருங் கிடவாமல்
அழிந்து போவார்
வீடாநற் கதியுதவுந் தண்டலையா ரேசொன்னேன்
மெய்யோ பொய்யோ
கோடாலிக் காம்பேதன் குலத்தினுக்குக் கேடான
கொள்கை தானே. 33
----
33. கோடாமல் - மாறுபடாமல். ஆகிக் கிடத்தல். மிகுதியாய்க் கிடத்தல். ‘ஆடு கிடந்த இடத்தில் அதன் மயிரும் இல்லாமல் அழிந்தது’ என்பது ஒரு பழமொழி. வீடா- அழியாத. ‘வீடாம் நற்கதி ‘என்று பிரித்து,’மோட்சமாகிய நல்ல கதி’ என்றும் பொருள் கூறலாம். ‘மெய்யோ பொய்யோ’ என்னும் தெரிநிலை ஓகாரங்கள், தெளிவு குறித்து நின்றன.
ஒழுக்கங் கெடுதல்
சின்னம்எங்கே கொம்பெங்கே சிவிகைஎங்கே பரிஎங்கே
சிவியா ரெங்கே
பின்னையொரு பாழுமில்லை நடக்கைகுலைந் தாலுடனே
பேய்பே யன்றோ
சொன்னவிலுந் தண்டலையார் வளநாட்டிற் குங்கிலியத்
தூபங் காட்டும்
சன்னதமா னதுகுலைந்தாற் கும்பிடெங்கே வம்பர்இது
தனையெண் ணாரே. 34
----
34. கொம்பு - தாரை. சிவிகை- பல்லக்கு. பரி- குதிரை. சிவிகையார்- பல்லக்குத் தூக்குவோர்; இது, இடைக்குறைந்து ‘சிவியார்’ என வந்தது. நடக்கை- ஒழுக்கம். ‘நாய்’என்பது போல, ‘பேய்’ என்பதும் இழிவைக் குறிப்பது. சன்னதம்-ஆவேசம்; தெய்வம் ஏறி ஆடுதல்.
துறவறச் சிறப்பு
சிறுபிறைதுன் னியசடையார் தண்டலைசூழ் பொன்னிவளஞ்
செழித்த நாட்டில்
குறையகலும் பெருவாழ்வும் மனைவியும்மக் களும்பொருளாக்
குறித்தி டாமல்
மறைபயில்பத் திரகிரியும் பட்டினத்துப் பிள்ளையும்சேர்
மகிமை யாலே
துறவறமே பெரிதாகும் துறவிக்கு வேத்தனொரு
துரும்பு தானே. 35
கருமமே கண்ணாதல்
பேரிசைக்குஞ் சுற்றமுடன் மைந்தரும்மா தருஞ்சூழப்
பிரபஞ் சத்தே
பாரியையுற் றிருந்தாலும் திருநீற்றிற் கழற்காய்போற்
பற்றில் லாமல்
சீரிசைக்குந் தண்டலையார் அஞ்செழுத்தை
நினைக்கின்முத்தி சேர லாகும்
ஆரியக்கூத் தாடுகினுங் காரியமேற் கண்ணாவ
தறிவு தானே. 36
----
36. பேர் இசைக்கும் - தன் பெயரைச் சொல்லுகின்ற. பாரியை - மனைவி. கழற் காய் - கழற்சிக்காய்; இதில் திருநீறு ஒட்டாது. சீர் இசைக்கும் - தமது புகழைப் பலரும் சொல்லுகின்ற. தமிழ் முறையில் ஆடும் கூத்து, தமிழ்க் கூத்து. ஆரிய முறையில் ஆடும் கூத்து. ஆரியக் கூத்து. ஆரியக்கூத்து தமிழர்க்குப் புதுமையாய்த் தோன்றுமாதலின். அதையே கூறுகின்றது பழமொழி.
கடவுளை நம்பினோர் கைவிடப்படார்
இரந்தனைஇத் தனைநாளும் பரந்தனைநான் என்றலைந்தாய்
இனிமே லேனும்
கரந்தைமதி சடையணியுந் தண்டலைநீ ணெறியாரே
காப்பார் என்னும்
உரந்தனைவைத் திருந்தபடி இருந்தவருக் குள்ளதெல்லாம்
உண்டாம் உண்மை
மரந்தனைவைத் தவர்நாளும் வாடாமல் மண்ணீரும்
வார்ப்பர் தாமே. 37
------
37. கரந்தை-ஒருசெடி. உரம்-உறுதி.
கொடுங்கோல் அரசனும் அமைச்சனும்
நாற்கவியும் புகழவருந் தண்டலையார் வளநாட்டில்
நல்ல நீதி
மார்க்கமுடன் நடந்துசெங்கோல் வழுவாமற் புவியாளும்
வண்மை செய்த
தீர்க்கமுள அரசனையே தெய்வமென்பார் கொடுங்கோன்மை
செலுத்தி நின்ற
மூர்க்கமுள்ள அரசனும்தன் மந்திரியும் ஆழ்நரகின்
மூழ்கு வாரே. 38
அழகு செய்வன
ஓதரிய வித்தை வந்தால் உரியசபைக் கழகாகும்
உலகில் யார்க்கும்
ஈதலுடன் அறிவுவந்தால் இனியகுணங் களுக்கழகாய்
இருக்கு மன்றோ
நீதிபெறு தண்டலையார் திருநீறு மெய்க்கழகாய்
நிறைந்து தோன்றும்
காதில்அணி கடுக்கனிட்டால் முகத்தினுக்கே யழகாகிக்
காணுந் தானே. 39
போலிப் புலவர்கள்
பாரதியார் அண்ணாஇப் புலவரென்பார் கல்வியினிற்
பழக்க மில்லார்
சீரறியார் தளையறியார் பல்லக்கே றுவர்புலமை
செலுத்திக் கொள்வார்
ஆரணியுந் தண்டலைநீ ணெறியாரே இலக்கணநூல்
அறியா ரேனும்
காரிகையா கிலுங்கற்றுக் கவிசொல்லார் பேரிகொட்டக்
கடவர் தாமே. 40
-----
40. ஆர்-ஆத்திப் பூ. காரிகை, செய்யுளிலக்கணம் கூறும் ஒரு சிறு
நூல்.
போலிக் குருமார்கள்
அருள்மிகுத்த ஆகமநூல் படித்தறியார் கேள்வியையும்
அறியார் முன்னே
இருவினையின் பயனறியார் குருக்களென்றே உபதேசம்
எவர்க்கும் செய்வார்
வரம்மிகுந்த தண்டலை நீணெறியாரே அவர்கிரியா
மார்க்க மெல்லாம்
குருடனுக்குக் குருடன்கோல் கொடுத்துவழி காட்டிவருங்
கொள்கை தானே. 41
---
41. வரம் - மேன்மை. கிரியா மார்க்கம்-சடங்கு முறை.
யாக்கை நிலையாமை
நேற்றுள்ளார் இன்றிருக்கை நிச்சயமோ ஆதலினால்
நினைந்த போதே
ஊற்றுள்ள பொருளுதவி அறந்தேடி வைப்பதறி
வுடைமை யன்றோ
கூற்றுள்ள மலையவருந் தண்டலையா ரேசொன்னேன்
குடபால் வீசும்
காற்றுள்ள போதெவரும் தூற்றிக்கொள் வதுநல்ல
கருமந் தானே. 42
---
42. கூற்று-யமன். ‘மலைய’ என்றாயினும், ‘அலைய’ என்றாயினும் பிரிக்க. மலைதல்- கலங்குதல். குடபால்-மேற்குத்திசை.
துறந்தும் துறவாமை
வற்கத்தார் தமைவெறுத்த விருத்தருமாய் மெய்ஞ்ஞான
வடிவ மானோர்
கற்கட்டா கியமடமுங் காணியும் செம்பொனுந்தேடுங்
கரும மெல்லாம்
பொற்கொத்தாஞ் செந்நெல்வயல் தண்டலையா
ரேசொன்னேன்
பொன்னா டாளும்
சொற்கத்தே போம்போதுங் கக்கத்தே ராட்டினத்தைச்
சுமந்த வாறே. 43
---
43. வர்க்கத்தார் - சுற்றத்தார். ‘வெறுத்த’ என்றதற்கு ‘வெறுக்கப்பட்ட’ என்றும் பொருள் கொள்க. விருத்தர் - முதியவர். கற்கட்டு-கருங்கற் கட்டடம். கக்கம் - தோளின்கீழ். ராட்டினம்-நூல் நூற்கும் சக்கரம். ‘நினைத்ததைக் கொடுக்கக் காமதேனு, கற்பகத் தரு முதலியவை உள்ள
சுவர்க்கலோகத்தில், நூல் நூற்கும் ராட்டையைக் கொண்டு செல்லுதல் எதற்கு’ என்பது கருத்து.
துணை வலிமை
ஆம்பிள்ளாய் எனக்கொடுக்கும் பெரியோரை அடுத்தவரை
அவனிக் கெல்லாம்
நாம்பிள்ளாய் அதிகமென்பார் நண்ணாரும் ஏவல்செய
நாளும் வாழ்வார்
வான்பிள்ளாய் எனுமேனித் தண்டலையார் பூடணமாய்
வளர்ந்த நாகம்
ஏன்பிள்ளாய் கருடாநீ சுகமோஎன் றுரைத்தவிதம்
என்ன லாமே. 44
----
44. ‘ஆம்’ உடன்படுதலைத் தெரிவிப்பதோர் இடைச்சொல். ‘பிள்ளாய்’ என்பது. ‘தம்பீ’என்பது போன்றதொரு மரியாதை விளி. நண்ணார்- பகைவர். வான்பிள்ளாய் எனும் மேனி-வானமே நீ பிளந்தொழிவாய் என்று சொல்லுகின்ற உருவம்; ‘அண்டங் கடந்த உருவம்’ என்பதாம். பூடணம்-ஆபரணம்.
திருவருட் பெருமை
வடியிட்ட புல்லர்தமை அடுத்தாலும் இடுவதுண்டோ
மலிநீர்க் கங்கை
முடியிட்ட தண்டலைநா தரைப்புகழிற் பெருவாழ்வு
முழுது முண்டாம்
மிடியிட்ட வினைதீரும் தெய்வமீட்டும் விடியாமல்
வீணர் வாயிற்
படியிட்டு விடிவதுண்டோ அவரருளே கண்ணாகப்
பற்று வீரே. 45
-----
45. மிடி இட்ட-வறுமையைத் தந்த. வீணர்-பயன்படாதவர். அவர்கள் இடுவதை, அவர்கள் வீட்டு வாயிற்படி இடுவதாகக் கூறப்படுகின்றது. விடிதல்-வறுமை நீங்குதல்.
கூற்றுவன் வலிமை
பொலியவளம் பலதழைத்த தண்டலநீ ணெறிபாதம்
போற்றி நாளும்
வலியவலம் செய்தறியீர் மறஞ்செய்வீர் நமன்தூதர்
வந்து கூடி
மெலியஅறைந் திடுபொழுது கலக்கண்ணீர் உகுத்தாலும்
விடுவ துண்டோ
எலியழுது புலம்பிடினும் பூனைபிடித் ததுவிடுமோ
என்செய் வீரே. 46
----
46. பொலிய-விளங்க. வலிய வலம்- வலிமையைத் தருகின்ற பிரதட்சிணம். மறம்- பாவம்.
புலமைச் சிறப்பு
மற்றவரோ தமிழ்பாடி நாட்டவல்லார் நக்கீரன்
வலிய னாகி
வெற்றிபுனை மீனாட்சி சுந்தரநா யகர்அடுத்து
விளம்பும் போதில்
பற்றுளதண் டலைவாழுங் கடவுளென்றும் பாராமற்
பயப்ப டாமல்
நெற்றிவிழி காட்டுகினுங் குற்றம்குற் றம்மெனவும்
நிறுத்தி னாரே. 47
----
47. பற்று-விருப்பம். நிறுத்தினார்- (தம் கவியை) நிலைநாட்டினார்.
உரியகாலத்தில் உதவி
சீரிலகுந் தண்டலையார் திருவருளால் அகம்ஏறிச்
செழித்த நாளில்
பாரிஎன ஆயிரம்பேர்க் கன்னதா னங்கொடுக்கும்
பலனைப் பார்க்க
நேரிடும்பஞ் சந்தனிலே எவ்வளவா கிலுங்கொடுத்தல்
நீதி யாகும்
மாரிபதின் கலநீரிற் கோடைதனில் ஒருகுடநீர்
வண்மை யாமே. 48
----
48. அகம்-இல்லம்; குடும்பம். பாரி, ஒரு வள்ளல்.
செல்வத்தின் பயன்
பிறக்கும்போ தொருபொருளுங் கொடுவந்த தில்லைஉயிர்
பிரிந்து மண்மேல்
இறக்கும்போ திலும்கொண்டு போவதில்லை என்றுசும்மா
இருந்து வீணே
சிறக்குந்தா யினும்அருள்வார் தண்டலையிற் சேராமல்
தேச மெல்லாம்
பறக்குங்கா கமதிருக்குங் கொம்பறியா தெனத்திரிந்து
பயன் பெறாரே. 49
எல்லாம் அவன் செயல்
வைதிடினும் வாழ்த்திடினும் இன்பதுன்பம் வந்திடினும்
வம்பு கோடி
செய்திடினுந் தண்டலைநீ ணெறியார்தஞ் செயலென்றே
தெளிவ தல்லால்
மெய்தவிர அவர்செய்தார் இவர்செய்தார் எனநாடி
வெறுக்க லாமோ
எய்தவர்தம் அருகிருக்க அம்பைநொந்த கருமமென்ன
இயம்பு வீரே. 50
----
50. வம்பு-வீண்வாதம். நாடி-நினைத்து.
இளமையே அறம் செய்க
வாங்கால முண்டசெழுந் தண்டலையா ரடிபோற்றி
வணங்கி நாடிப்
போங்காலம் வருமுன்னே புண்ணியஞ்செய் தரியகதி
பொருந்து றாமல்
ஆங்கால முள்ளதெல்லாம் அபசார மாகிஅறி
வழிந்து வீணே
சாங்காலம் சங்கரா சங்கரா எனில்வருமோ
தருமத் தானே. 51
------
51. வாங்கு ஆலம் - கையில் வாங்கிய நஞ்சு. செழுமை, தண்டலைக்குச் சிறப்பு. ஆம் காலம் - தன்னால் ஆகக் கூடிய காலம்; இளமை.
ஆடம்பரச் செயல்
சுற்றமாய் நெருங்கியுள்ளார் தனையடைந்தார் கற்றறிந்தார்
துணைவே றில்லார்
உற்றவே தியர்பெரியோர்க் குதவியன்றிப் பிறர்க்குதவும்
உதவி யெல்லாம்
சொற்றநான் மறைபரவுந் தண்டலையா ரேசொன்னேன்
சுமந்தே நொந்து
பெற்றதாய் பசித்திருக்கப் பிராமணபோ சனம்நடத்தும்
பெருமை தானே. 52
----
52. பிறர்-செல்வர். அமைச்சர். படைத் தலைவர் முதலியோர். சொற்ற-எல்லாவற்றையும் சொல்லியுள்ள.
சன்மார்க்கர் இயல்பு
துன்மார்க்கர்க் காயிரந்தான் சொன்னாலும் மறந்துவிட்டுத்
துடுக்கே செய்வார்
சன்மார்க்கர்க் கொருவார்த்தை சொலுமளவே மெய்யதனில்
தழும்பாக் கொள்வார்
பன்மார்க்க மறைபுகழுந் தண்டலையா ரேசொன்னேன்
பதமே யான
நன்மாட்டுக் கோரடியாம் நற்பெண்டீர்க் கொருவார்த்தை
நடத்தை யாமே. 53
----
53. மெய்-உடம்பு. தழும்பு-வடு. பதம்-பொருத்தம் நடத்தை-முறை.
கவலை இன்மை
கரப்பார்க்கு நல்லகதி வருவதில்லை செங்கோலிற்
கடல்சூழ் வையம்
புரப்பார்க்கு முடிவிலே சுவர்க்கமல்லால் நரகமில்லை
பொய்யீ தன்றால்
உரப்பார்க்கு நலம்புரியுந் தண்டலையா ரேசொன்னேன்
ஒருமை யாக
இரப்பார்க்கு வெண்சோறு பஞ்சமுண்டோ ஒருகாலும்
இல்லை தானே. 54
----
54. கரப்பார் - உள்ளதை இல்லை என்று சொல்லி மறைப்பவர். புரப்பார்-காப்பாற்றும் அரசர். உர பார்-வலிமை பொருந்திய பூமி; இது பூமியில் உள்ளவர்களைக் குறித்தது.
கொடுங்கோன்மை
படுங்கோலம் அறியாமல் தண்டலையார் திருப்பணிக்கும்
பங்கஞ் செய்வார்
நெடுங்கோளுத் தண்டமுமாய் வீணார வீணனைப்போல்
நீதி செய்வார்
கெடுங்கோப மல்லாமல் விளைவுண்டோ மழையுண்டோ
கேள்வி யுண்டோ
கொடுங்கோல்மன் னவன்நாட்டிற் கடும்புலிவா ழுங்காடு
குணம்என் பாரே. 55
----
55. படும் கோலம் - விளையும் துன்பம். நெடுங்கோள்- நீண்ட ஆராய்ச்சி தண்டம்-தண்டனை செய்தல். ‘இவைகளை உடையவராய்’ என்க. ‘வீணார வீணன்’ என்பது ஒரு வழக்கச் சொல். ‘வீணிலும் நிரம்ப வீண் உடையவன்; மிக்க வீணன்’ என்பது பொருள். ‘அவனைப் போல்’
என்றது. ‘முழுமூடன் போல’ என்றபடி. நீதி செய்தல் - நியாயம் வழங்குதல். குணம் - நன்மை.
தீமைக்குத் தீமை நன்மைக்கு நன்மை
உள்ளவரைக் கெடுத்தோரும் உதவியற்று வாழ்ந்தோரும்
உரைபெற் றோருந்
தள்ளிவழக் குரைத்தோரும் சற்குருவைப் பழித்தோரும்
சாய்ந்தே போவார்
பள்ளவயல் தண்டலையார் பத்தரடி பணிந்தோரும்
பாடி னோரும்
பிள்ளைகளைப் பெற்றோரும் பிச்சையிட்ட நல்லோரும்
பெருகு வாரே. 56
----
56. உள்ளவர் - நல்வாழ்வு உடையவர். உரை-சொல். ‘ஒருசொல் பொறார்’ என்பது போல, ‘சொல்’ என்றது. இங்கு இகழ்ச்சிச் சொல்லைக் குறித்தது. தள்ளி-நீதியை நீக்கி. வழக்கு - நியாயம்.
அற்பர் வாழ்வு
விற்பனர்க்கு வாழ்வுவந்தால் மிகவணங்கிக் கண்ணோட்டம்
மிகவுஞ் செய்வார்
சொற்பருக்கு வாழ்வுவந்தால் கண்தெரியா திறுமாந்து
துன்பஞ் செய்வார்
பற்பலர்க்கு வாழ்வுதருந் தண்டலையா ரேசொன்னேன்
பண்பில் லாத
அற்பருக்கு வாழ்வுவந்தால் அர்த்தராத் திரிகுடைமே
லாகுந் தானே. 57
----
57. விற்பனர் - அறிவுடையவர். கண்ணோட்டம்-பழைமை. நோக்கல். சொற்பர்-சிறியோர்; அற்பர் என்பதற்கும் பொருள் இதுவே. இறுதியிற்சொல்லிய பழமொழி, அதற்கு முன் சொல்லியதை வலியுறுத்துகின்றது.
தகாத செயல்
விசையமிகுந் தண்டலையார் வளநாட்டில் ஒருத்தர்சொல்லை
மெய்யா எண்ணி
வசைபெருக அநியாயஞ் செய்துபிறர் பொருளையெல்லாம்
வலிய வாங்கித்
திசைபெருகுங் கீர்த்தியென்றுந் தன்மமென்றுந்
தானமென்றுஞ் செய்வ தெல்லாம்
பசுவினையே வதைசெய்து செருப்பினைத்தா
னங்கொடுக்கும் பண்பு தானே 58
---
விசயம் - வெற்றி, இது விரையம் எனப் போலியாயிற்று. ஒருத்தர் எப்படியேனும் இதைச் செய்தல் நல்லது என்று சொல்லுபவர்.
திருந்தாமை
சிறியவரா முழுமூடர் துரைத்தனமாய்
உலகாளத் திறம்பெற் றாலும்
அறிவுடையார் தங்களைப்போற் சர்குணமும்
உடையோர்க ளாக மாட்டார்
மறிதருமான் மழுவேந்துந் தண்டலையா
ரேசொன்னேன் வாரிவாரிக்
குறுணிமைதா னிட்டாலுங் குறிவடிவங்
கண்ணாகிக் குணங்கொ டாதே. 59
குற்றம் இன்மை
கற்றவற்குக் கோபமில்லை கடந்தவர்க்குச்
சாதியில்லை கருணை கூர்ந்த
நற்றவற்கு விருப்பமில்லை நல்லவருக்
கொருகாலு நரக மில்லை
கொற்றவருக் கடிமையில்ல தண்டலையார்
மலர்பாதங் கும்பிட் டேத்தப்
பெற்றவர்க்கு பிறப்பில்லை பிச்சைசொற்றி
னுக்கில்லை பேச்சு தானே. 60
---
கடந்தவர் - உலகியலை விட்டு துறந்தவர், நற்றவர் - நல்ல தவத்தவர்- விருப்பம் - பற்று. கொற்றவர் - அரசர், அரசருக்கு அடிமைத் தொழில் இல்லை என்றபடி,. பேச்சு - ஆராய்ச்சி.
பொருத்தம் இன்மை
பரங்கருணை வடிவாகுந் தண்டலையார் வளநாட்டிற்
பருவஞ் சேர்ந்த
சரங்குலவு காமகலை தனையறிந்த அதிரூபத்
தைய லாரை
வரம்புறுதா ளாண்மையில்லா மட்டிகளுக் கேகொடுத்தால்
வாய்க்கு மோதான்
குரங்கினது கையில்நறும் பூமாலை தனைக்கொடுத்த
கொள்கை தானே. 61
----
61. பரம் - மேலான. சரம்-மன்மதனது அம்புகள். தாளாண்மை-முயற்சி.
ஒன்றால் ஒன்று உளதாதல்
பிரசமுண்டு வரிபாடுந் தண்டலையார் வளநாட்டிற்
பெண்க ளோடு
சரசமுண்டு போகமுண்டு சங்கீத முண்டுசுகந்
தானே யுண்டிங்
குரைசிறந்த அடிமையுண்டோ இடுக்கணுண்டோ
ஒன்றுமில்லை உலகுக் கெல்லாம்
அரிசியுண்டேல் வரிசையுண்டாம் அக்காளுண்
டாகில்மச்சான் அன்புண் டாமே. 62
----
62. பிரசம்-தேன். வரி-இசை. இசை பாடுவன வண்டுகள்.
அமைச்சர் இல்லா அரசு
தத்தைமொழி உமைசேருந் தண்டலையார் பொன்னிவளந்
தழைத்த நாட்டில்
வித்தகமந் திரியில்லாச் சபைதனிலே நீதியில்லை
வேந்தர்க் கெல்லாம்
புத்திநெறி நீதிசொல்ல மந்திரியல் லாலொருவர்
போதிப் பாரோ
நித்தலும்உண் சோற்றில்முழுப் பூசணிக்காய் மறைத்ததுவும்
நிசம் தாமே. 63
----
63. தத்தை-கிளி. வித்தகம் - திறமை. மந்திரி அல்லால்-அமைச்சன் வேண்டுமே யன்றி.
இடையூறு விளைத்தல்
நேசமுடன் சபையில்வந்தால் வேளையறிந் திங்கிதமா
நிருபர் முன்னே
பேசுவதே உசிதமல்லாமல் நடுவில்ஒரு வன்குழறிப்
பேச லெல்லாம்
வாசமிகுந் தண்டலைநீ ணெறியாரே அபிடேக
மலிநீ ராட்டிப்
பூசைபண்ணும் வேளையிலே கரடியைவிட் டாட்டுவது
போலுந் தானே. 64
----
64. இங்கிதம் - இனிமை. நிருபர் - அரசர். ‘நிருபர் பேசுவதே உசிதம்’ என்க. வாசம் - வசித்தல். மலி-நிறைந்த.
கெடுவான் கேடு நினைப்பான்
மண்ணுலகிற் பிறர்குடியை வஞ்சனையிற் கெடுப்பதற்கு
மனத்தினாலே
உன்னிடினும் உரைத்திடினும் அவன்றானே கெடுவனென்ப
துண்மை யன்றோ
தென்னவன்சோ ழன்பணியுந் தண்டலைநீ ணெறியாரே
தெரிந்து செய்யுந்
தன்வினைதன் னைச்சுடஓட் டப்பம்வீட் டைக்கடவுந்
தான் கண்டோமே. 65
----
65. உன்னுதல்-நினைத்தல். தென்னவன்-பாண்டியன்.
புல்லறிவாண்மை
முன்பெரியோர் தொண்டுபட்டு நடந்தவழி தனைப்பழித்து
முரணே பேசிப்
பின்பலரை உடன்கூட்டி நூதனமா நடத்துவது
பிழைபா டெய்தில்
துன்பறியாக் கதியருளுந் தண்டலைநீ ணெறியாரே
தூய ளாகி
அன்புளதா யைப்பழித்து மகள்ஏதோ செயத்தொடங்கும்
அறிவு தானே. 66
அறிவின்மை
தண்ணமரு மலர்ச்சோலைத் தண்டலைநீ ணெறியேநின்
றன்னைப் பாடில்
எண்ணமிக இம்மையிலும் மறுமையிலும் வேண்டியதுண்
டிதையோ ராமல்
மண்ணின்மிசை நரத்துதிகள் பண்ணிஅலைந் தேதிரிபா
வாண ரெல்லாம்
வெண்ணெய்தம திடத்திருக்க நெய்தேடிக் கொண்டலையும்
வீணர் தாமே. 67
----
67. ஓராமல்-ஆராய்ந்து பாராமல். நரத்துதிகள்- மனிதரைப் புகழும் புகழ்ச்சிகள்.
தெய்வம் துணை
அந்தணர்க்குத் துணைவேதம் அரசருக்குத்துணைவயவாள்
அவனி மீது
மைந்தருக்குத் துணைதாயார் தூதருக்குத் துணைமதுர
வார்த்தை யன்றோ.
நந்தமக்குத் துணையான தண்டலைநீ ணெறியாரே
நண்ப ரான
சுந்தரர்க்குத் துணைநாளும் ஏழையர்க்குத் தெய்வமே
துணைஎன் பாரே. 68
----
68. வயம்-வெற்றி. அவனி-உலகம்.
அஞ்சாமை
போரஞ்சார் அதிவீரர் பொருளஞ்சார் விதரணஞ்சேர்
புருடர் தோயும்
நீரஞ்சார் மறைமுனிவர் நெருப்பஞ்சார் கற்புடைய
நிறைசேர் மின்னார்
வாரஞ்சா முலையிடஞ்சேர் தண்டலையா ரேசொன்னேன்
மதமா என்னுங்
காரஞ்சா திளஞ்சிங்கம் கனத்தவலி யாந்தூதன்
காலஞ் சானே. 69
----
69. விதரணம்- கொடை. வார்-கச்சு. மதமா-யானை. கார்-மேகம். மதமா என்னுங் கார், உருவகம். கால்-காலம்.
அவரவர் இயல்பு
உபசாரஞ் செய்பவரை விலக்கிடினும் அவர்செய்கை
ஒழிந்து போகா
தபசாரஞ் செய்வாரை அடித்தாலும் வைதாலும்
அதுநில்லாது
சுபசாரத் தண்டலையார் வளநாட்டில் திருடருக்கத்
தொழில்நில் லாது
விபசாரஞ் செய்வாரை மேனியெல்லாம் சுட்டாலும்
விட்டி டாரே. 70
----
70. அபசாரம்-குற்றம். சுப சாரத் தண்டலையார்-நன்மைகளின் பயனாகிய சிவபெருமான்.
உலக இயல்பு
சகமிக்க தண்டலையார் அடிபோற்று மகராசர்
சபையில் வந்தால்
சுகமிக்க வேசையர்க்குப் பொன்நூறு கொடுப்பர்தமிழ்
சொன்ன பேர்க்கோ
அகமிக்க சோறிடுவார் அந்தணருக் கெனில்நாழி
யரிசி ஈவார்
பகடிக்கோ பணம்பத்துத் திருப்பாட்டுக் கொருகாசு
பாலிப் பாரே. 71
----
71. சகம் மிக்க - உலகத்தில் உயர்ந்த. அகம் மிக்க - வீட்டில் எஞ்சியுள்ள. பகடி - விகடப் பேச்சு.
பணத்தின் பெருமை
பணந்தானே அறிவாகும் பணந்தானே வித்தையுமாம்
பரிந்து தேடும்
பணந்தானே குணமாகும் பணமில்லா தவர்பிணமாம்
பான்மை சேர்வர்
பணந்தானே பேசுவிக்கும் தண்டலைநீ ணெறியாரே
பார்மீ திற்றான்
பணந்தானே பந்தியிலே குலந்தானே குப்பையிலே
படுக்குந் தானே. 72
வெருளாமை
புனங்காட்டும் மண்ணும்விண்ணும் அஞ்சவருங் காலனையும்
போடா என்றே
இனங்காட்டும் மார்க்கண்டன் கடிந்துபதி னாறுவய
தென்றும் பெற்றான்
அனங்காட்டுந் தண்டலையா ரடியாரெல் லாமொருவர்க்
கஞ்சு வாரோ
பனங்காட்டு நரிதானும் சலசலப்புக் கொருநாளும்
பயப்ப டாதே. 73
---
73. புனம் - காடு. ‘காட்டை யுடைய மண்ணுலகம்’ என்பது கருத்து. இனம் காட்டும் - அடியவர் கூட்டம் தன்னுட் கொண்டு காட்டுகின்ற. அன்னம், ‘அனம்’ என இடைக்குறையாயிற்று. அன்னம் காட்டும் - யாவருக்கும் உணவைத் தருகின்ற; காப்பாற்றுகின்ற.
நண்பனாவான் மனைவியாவாள்
சீரிலகுந் தண்டலையார் வளநாட்டில் ஒருதோழன்
தீமை தீர
வாரமிகும் பிள்ளைதனை அரிந்துண்டான் ஒருவேந்தன்
மணந்து கொண்ட
ஆர்வமிகு மனைக்கிழத்தி ஆண்டிச்சி வடிவுகொண்டாள்
ஆத லாலே
ஊரில்ஒரு வன்தோழன் ஆருமற்ற தேதாரம்
உண்மை தானே. 74
----
74. சீர் - அழகு. இலகும் - விளங்குகின்ற வாரம் - அன்பு தோழனுடைய துன்பத்தை நீக்குதற்குத் தன் மகனை அரிந்துண்டவன், தன் கணவனாகிய அரசன் பொருட்டுத் தான் துறவியாகிய அரசி - இவர்களது வரலாறு அறியப்படவில்லை.
சீவன் முத்தர்
தானவனா கியஞானச் செயலுடையார் மாதர்முலை
தழுவி னாலும்
ஆனதொழில் வகைவகையாச் செய்தாலும் அனுபோகம்
அவர்பால் உண்டோ
கானுறையுந் தண்டலையா ரடிபோற்றுஞ் சுந்தரனார்
காமி போலாய்
மேனவிலுஞ் சுகம்படுக்கை மெத்தையறி யாதெனவே
விளம்பி னாரே. 75
----
75. தான் அவனாகிய - உயிர் சிவமாம் தன்மையை அடைந்த. கான்-காடு. காமி-காமமுடையவன். ‘காமிபோல் ஆகியும்’ என்க. மேல் நவிலும் சுகம். பேரின்பம். படுக்கை மெத்தை-மெத்தையாகிய படுக்கை. அறியாது. அனுபவியாது. ‘மேனவிலும் சுகம்............அறியாது’ என்றது. ‘எமக்குக் கிடைத்துள்ள பேரின்பம். பஞ்சணை மெத்தை இன்பத்தை யாம் அனுபவியாதபடி செய்தது’ என்றதாம். ‘சுந்தரமூர்த்தி நாயனார், தம்மை அடுத்துப் பழகினவர்களிடம் இவ்வாறு கூறினார்’ என்பது ஒரு செவிவழிச் செய்தியாதல் வேண்டும். ‘நித்திரை சுகமறியாது’ என்னும் பழமொழி இவ்வாறு இச்செய்யுளில் விளக்கப்பட்டதுபோலும்!
செல்வக் களிப்பு
சோறென்ன செய்யும்எல்லாம் படைத்திடவே செய்யும்
அருள் சுரந்து காக்கும்
சோறென்ன செய்யும்எல்லாம் அழித்திடவே செய்யும்தன்
சொரூப மாக்கும்
சோறென்ன எளிதேயோ தண்டலையார் தம்பூசை
துலங்கச் செய்யும்
சோறென்ன செய்யுமெனிற் சொன்னவண்ணஞ் செயும்பழமை
தோற்றுந் தானே. 76
----
76. படைத்திட-ஈட்டும்படி. காக்கும்-உயிரை உடலில் வைத்துக் காப்பாற்றும். அழித்தல்-பொருளைத் தீயவழியில் செலவழித்தல். மதன்-மன்மதன். ‘நினைத்த வண்ணம்’ என்பது, ‘சொன்னவண்ணம்’ எனப்பட்டது. மனிதருக்குக் கவலையின்றி உணவு கிடைத்தால். நல்லது. தீயது எல்லாவற்றையும் செய்யும் ஆற்றலை உண்டாகும்’ என்பதாம்.
பித்தர் இயல்பு
எத்தருக்கும் உலுத்தருக்கும் ஈனருக்கும் மூடருக்கும்
இரக்கம் பாரா
மத்தருக்கும் கொடிதாம்அவ் வக்குணமே நற்குணமா
வாழ்ந்து போவார்
பத்தருக்கு நலங்காட்டுந் தண்டலையா ரேயறிவார்
பழிப்பா ரேனும்
பித்தருக்குக் தங்குணமே நூலினுஞ்செம் மையதான
பெற்றி யாமே. 77
---
77. எத்தர்-ஏமாற்றுபவர். உலுத்தர்-உலோபிகள். ஈனர்-இழிந்தவர். மத்தர்-வெறிகொண்டவர். பித்தர்-பித்துக்கொண்டோர். இவர்கட்குத் தங்கள் குணமே நூல்களிற் சொல்லப்பட்ட நீதியைக் காட்டிலும் சிறந்தது எனத் தோன்றும். “பித்தர்க்குத் தங்குணம் நூலினும் செம்மை
பெரியம்மையே” என்று சிவப்பிரகாசரும் இப்பழமொழியைக் கூறியுள்ளார்.
வீண் பெருமை
பன்னகவே ணிப்பரமர் தண்டலையார் நாட்டிலுள
பலருங் கேளீர்
தன்னறிவு தன்னினைவு தன்மகிமைக் கேற்றநடை
தகுமே யல்லால்
சின்னவரும் பெரியவர்போ லேநடந்தால் உள்ளதுபோம்
சிறிய காகம்
அன்னநடை நடக்கப்போய்த் தன்னடையுங் கெட்டவகை
யாகும் தானே. 78
----
78. பன்னகம்-பாம்பு. வேணி-சடை. மகிமை-பெருமை
தன்நிலை அறியாமை
பேரான கவிராச ருடன்சிறிய கவிகளும் ஓர்
ப்ரபந்தஞ் செய்வார்
வீராதி வீரருடன் கோழைகளும் வாள்பிடித்து
விருது சொல்வார்
பாராளுந் தண்டலைநீ ணெறியாரே இருவகையும்
பகுத்துக் காணில்
ஆராயும் மாதேவர் ஆடிடத்துப் பேய்களும்நின்
றாடு மாறே. 79
---
79. விருது-வீரமொழி. மகதேவர்-சிவபெருமான்.
வஞ்சகர்
செழுங்கள்ளி நிறைசோலைத் தண்டலைநீ ணெறியாரே
திருடிக் கொண்டே
எழுங்கள்ளர் நல்லகள்ளர் பொல்லாத கள்ளரினி
யாரோ என்றால்
கொழுங்கள்ளர் தம்முடன்கும் பிடுங்கள்ளர் திருநீறு
குழைக்குங் கள்ளர்
அழுங்கள்ளர் தொழுங்கள்ளர் ஆசாரக் கள்ளர்இவர்
ஐவர் தாமே. 80
80. கொழுங்கள்ளர்-நன்னெறியில் வெறுப்புடையவராய் இருந்தும் அதனை வெளியில் காட்டாது மறைத்தொழுகுகின்ற வஞ்சகர். மற்றைய ஐவரும், நன்னெறியில் பற்று, வெறுப்பு இரண்டும் இல்லாதிருந்தும். மிகவும் பற்றுடையவர்போல நடிப்பவர்கள்.
உள்ளும் புறம்பும்
தனத்திலே மிகுத்தசெழுந் தண்டலையார் பொன்னிவளந்
தழைத்த நாட்டில்
இனத்திலே மிகும்பெரியோர் வாக்குமனம் ஒன்றாகி
எல்லாம் செய்வார்
சினத்திலே மிகுஞ்சிறியோர் காரியமோ சொல்வதொன்று
செய்வ தொன்று
மனத்திலே பகையாகி உதட்டிலே உறவாகி
மடிவர் தாமே. 81
ஊருடன் ஒத்து வாழ்தல்
தேரோடு மணிவீதித் தண்டலையார் வளங்காணுந்
தேச மெல்லாம்
போரோடும் விறல்படைத்து வீராதி வீரரெனும்
புகழே பெற்றார்
நேரோடும் உலகத்தோ டொன்றுபட்டு நடப்பதுவே
நீதி யாகும்
ஊரோட உடனோடல் நாடோட நடுவோடல்
உணர்வு தானே. 82
----
82. நேரோடும்-நேர்மையோடும் ‘நூல் நெறியோடு, உலக நடையையும் தழுவி நடத்தல்வேண்டும்’ என்பதாம்.
அரைகுறைத் தன்மை
இழைபொறுத்த முலைபாகர் தண்டலையார் வளநாட்டில்
எடுத்த ராகம்
தழுதழுத்துப் பாடுவதில் மௌனமாய் யிருப்பதுவே
தக்க தாகும்
குழைகுழைத்த கல்வியினும் கேள்வியினும் கல்லாமை
குணமே நாளும்
வழுவழுத்த உறவதனில் வயிரம்பற் றியபகையே
வண்மை யாமே. 83
----
83. இழை-ஆபரணம். குழைகுழைத்த கல்வி கேள்வி - தெளிவில்லாது ஐயப்பாடுடைய கல்வி கேள்விகள்.
இகழ்தலின் தீமை
அருப்பயிலுந் தண்டலைவாழ் சிவனடியார் எக்குலத்தோ
ரானா லென்ன
உருப்பயிலுந் திருநீறும் சாதனமும் கண்டவுடன்
உகந்து போற்றி
இருப்பதுவே முறைமையல்லால் ஏழையென்றும் சிறியரென்றும்
இகழ்ந்து கூறின்
நெருப்பினையே சிறிதென்று முன்தானை தனில்முடிய
நினைந்த வாறே. 84
-----
84. அரு பயிலும்-அருவத் திருமேனியை உடைய. சாதனம்-உருத்திராக்கம். முன்தானை- (தானைமுன்) துணியின் முனை.
பெண்மையின் விளைவு
உரங்காணும் பெண்ணாசை கொடிதாகும் பெண்புத்தி
உதவா தாகும்
திரங்காணும் பெண்வார்த்தை தீதாகும் பெண்சென்மம்
சென்ம மாமோ
வரங்காணுந் தண்டலைநீ ணெறியாரே பெண்ணிடத்தின்
மயக்கத் தாலே
இரங்காத பேருமுண்டோ பெண்ணென்ற வுடன்பேயும்
இரங்குந் தானே. 85
----
85. உரம்-வலிமை. திரம் காணும்-நிலையுடையது போலக் காணப்படுகின்ற. வரம்-மேன்மை.
தெளிந்த பொருள்
மையிலே தோய்ந்தவிழி வஞ்சியரைச் சேர்ந்தவர்க்கு
மறுமை யில்லை
மெய்யிலே பிணியுமுண்டாம் கைப்பொருளுங் கேடாகி
விழல ராவார்
செய்யிலே வளந்தழைத்த தண்டலையார் வளநாட்டில்
தெளிந்த தன்றோ
கையிலே புண்ணிருக்கக் கண்ணாடி பார்ப்பதென்ன
கருமந் தானே. 86
----
86. மெய் - உடம்பு. செய்-வயல். ‘முகத்தில் உள்ள புண்ணைப் பார்க்கக் கண்ணாடி வேண்டுமன்றிக் கையில் உள்ள புண்ணைப் பார்க்கக் கண்ணாடி ஏன்’ என்பதாம். இப்பழமொழியைச் சிலர். ‘கைப்பொன்னுக்குக் கண்ணாடி ஏன்’ என்று மாற்றிக் கூறுதல் பொருந்தாது என்பது, இப்பாட்டினால் விளங்கும்.
தீச்சார்பு ஆகாமை
காலமறி தண்டலையார் வளநாட்டிற் கொலைகளவு
கள்ளே காமம்
சாலவருங் குருநிந்தை செய்பவர்பால் மேவிஅறந்
தனைச்செய் தற்கும்
சீலமுடை யோர்நினையார் பனையடியி லேயிருந்து
தெளிந்த ஆவின்
பாலினையே குடித்தாலுங் கள்ளென்பார் தள்ளென்பார்
பள்ளென் பாரே. 87
----
87. காலம்-முக்காலமும், கொலை முதலிய ஐந்தும் பஞ்ச மாபாதகங்களாம். ‘அறம் செய்வோர், இவற்றுள் ஒன்றும் பலவும் உடையவரை அணுகுதலும் கூடாது’ என்றபடி.
சூதின் தீமை
கைக்கெட்டா தொருபொருளுங் கண்டவர்க்கு
நகையாகுங் கனமே யில்லை
இக்கட்டாம் வருவதெல்லாம் லாபமுண்டோ
கவறுகையி லெடுக்க லாமோ
திக்கெட்டே றியகீர்த்தித் தண்டலையார்
வளநாட்டிற் சீசீ யென்னச்
சொக்கட்டா னெடுத்த வர்க்குச் சொக்கட்டான்
சூதுபொல்லாச் சூதுதானே. 88
---
88. இக்கட்டு - துன்பம், கவறு - சூதாடு கருவி, கவறு கையில் எடுத்தல் என முதலில் வருவித்து - உரைக்க முதலில் சொக்கட்டான் என்பதற்கு சூதாடு கருவி என்றும், இரண்டாவது சொக்கட்டான் என்பது பொருளை அழிக்கும் கருவி (சொக்கு - பொன், அட்டான் - அழிப்பது) என்றும் பொருள் கொள்க. அவ்வாறே, முதலில் சூது என்பதற்கு சூதாடு கருவி என்றும் இரண்டாவது சூது என்பதற்கு தன்னை எடுத்தவறை வஞ்சிக்கும் வஞ்சனை என்றும் பொருள் கொள்வ. ஒரு பெயர் இருமுறை வருவதில் முன்னது எழுவாய், பின்னது பயனிலை. அட்டான் என்பது கரப்பான் உள்ளான் என்பன போன்ற னகர ஈறு அஃறிணைப் பெயர்.
வினையின் வலிமை
தனமேவும் புற்றடிமண் குருந்தடிமண்
பிரமகுண்டந் தன்னி லேய்மண்
மனமேவு மணியுடனே மந்திரமும்
தந்திரமும் மருந்து மாகி
இனமேவுந் தண்டலையார் தொண்டருக்கு
வந்தபிணி யெல்லாந் தீர்க்கும்
அனுபோகந் தொலைந்தவுடன் சித்தியாம்
வேறும்உள அவிழ்தந் தானே. 89
---
89. குண்டம் - குழி, குளம், மணி - குளிகை, அனுபோகம் - வினைப்பவன்.
மானமுடைமை
கான்அமருங் கவரிஓரு மயிர்படினும்
இறக்குமது கழுதைக் குண்டோ
மானமுடன் வாழ்பவனே மாபுருடன்
சுயோதனனை மறந்தா ருண்டோ
ஆனகஞ்சேர் ஒலிமுழங்குந் தண்டலையா
ரேசொன்னேன் அரைக்கா சுக்குப்
போன அபிமானம் இனி ஆயிரம் பொன்
கொடுத்தாலும் பொருந்திடாதே 90
---
90. கான் அமரும் - காட்டிலே வாழ்கின்ற, கவரி- கவரி மான், படினும் - அழிந்தாலும்
ஆன் - பசுக்கள், அகம்சேர் ஒலி - வீட்டை வந்து அடைகின்ற ஓசை.
நற்சார்பின் பயன்
நிலைசேரும் அதிகவித ரணசுமுக
துரைகளுடன் நேசமாகிப்
பலநாளு மேயவரை அடுத்தவர்க்குப்
பலனுண்டாம் பயமு மில்லை
கலைசேருங் திங்களணி தண்டலையா
ரேசொன்னேன் கண்ணிற்காண
மலைமீதி லிருப்பவரை வந்துபன்றி
பாய்வதெந்த வண்ணந் தானே. 91
நிறைவின் பெருமை
பொறுமையுடன் அறிவுடையார் இருந்தஇடம்
விளக்கேற்றி புகுத வேண்டும்
கெருவமுள்ளார் அகந்தையுடன் இறுமாந்து
நடந்துதலை கீழா வீழ்வார்
வறுமையினும் மறுமையினுங் காணலாம்
தண்டலையார் வாழுநாட்டில்
நிறைகுடமே தளும்பாது குறைகுடமே
கூத்தாடி நிற்ப தாமே 92
----
92. அவர்கள் இருக்கின்ற இடத்தை விளக்கேற்றிப் பார்க்க வேண்டும் என்பது ஒரு பழமொழி. அடக்கமுள்ளவர்கள் என்பது கருத்து. வறுமையிலும் மறுமையிலும் அவரைக் காணலாம் என்றப்டி அஃதாவது தலைகீழாகத் துள்ளியதன் பயனை அனுபவிப்பர் என்பதாம்.
நல்லோர் செல்வம்
ஞாலமுறு நல்லவர்க்குச் செல்வம் வந்தால்
எல்லவர்க்கும் நாவ லோர்க்கும்
காலமறிந் தருமையயுடன் பெருமையறிந்
துதவிசெய்து கனமே செய்வார்
மாலறியாத் தண்டலைநீள் நெறியாரே
அவரிடத்தே வருவார் யாரும்
ஆலமரம் பழுத்தவுடன் பறவையின்பால்
சீட்டெவரே அனுப்பு வாரே 93
--
93. யாரும் வருவார் என மாற்றிக்கொள்க.
நாணம் இன்மை
சேணிலகு மதிச்சடையார் தண்டலையார் வளநாட்டிற்
சிறந்த பூணிற்
காணவரு நாணுடையார் கனமுடையார் அல்லாதார்
கரும மெல்லாம்
ஆணவலம் பெண்ணவலம் ஆடியகூத் தவலமென
அலைந்து கேடாம்
நாணமில்லாக் கூத்தியர்க்கு நாலுதிக்கும் வாயில்எனும்
நடத்தை யாமே. 94
---
94. பூணிற் காணவரும் நாணுடையார் - நாணத்தையே ஆபரணமாகக் கொண்டவர்கள். கனம் உடையார்-பெருமை யுடையவராவர். ஆண் அவலம்- ஆணாய்ப் பிறந்தும் பயனில்லை. பெண் அவலம் - பெண்ணாய்ப் பிறந்தும் பயனில்லை.
அடங்காப் பெண்டிர்
அடுத்தமனை தொறும்புகுவாள் கணவன்உணும் முனம்
உண்பாள் அடக்க மில்லாள்
கடுத்தமொழி பேசிடுவாள் சிறுதனந்தே டுவள்இவளைக்
கலந்து வாழ்தல்
எடுத்தவிடைக் கொடியாரே தண்டலையா ரேஎவர்க்கும்
இன்ப மாமோ
குடித்தனமே கெடவேண்டிப் பிடாரிதனைப் பெண்டுவைத்துக்
கொண்ட தாமே. 95
வறுமையின் சிறுமை
களித்துவருஞ் செல்வருக்கு வலிமையுண்டு மிடியருக்குக்
கனந்தா னுண்டோ
வளைத்தமலை யெனுஞ்சிலையார் தண்டலைசூழ் தரும்உலக
வழக்கம் பாரீர்
ஒளித்திடுவர் தம்மனையிற் பெண்டீரைக் கண்டவரும்
ஒன்றும் பேசார்
இளைத்தவன்பெண் டீரென்றால் எல்லார்க்கும் மச்சினியா
இயம்பு வாரே. 96
----
96. மிடியர் - வறுமையுடையவர். ‘செல்வம் உடையவர்களது மனைவியரைக் கண்டால் அவரவரும் தங்கள் வீட்டிற்குள் ஓடி ஒளிப்பர்’ என்பதாம்.
பிறர் துன்பம் அறியாமை
நொந்தவரும் பசித்தவரும் விருந்தினரும் விரகினரும்
நோயுள் ளோரும்
தந்தமது வருத்தமல்லால் பிறருடைய வருத்தமது
சற்றும் எண்ணார்
இந்துலவுஞ் சடையாரே தண்டலையா ரேசொன்னேன்
ஈன்ற தாயின்
அந்தமுலைக் குத்துவலி சவலைமக வோகிறிதும்
அறிந்தி டாதே. 97
----
97. விரகினர்-சூழ்ச்சி யுடையவர். மகவு-பிள்ளை.
உள்ளது நீங்காமை
ஆழியெல்லாம் பாலாகி அவனியெல்லாம் அன்னமய
மானால் என்ன
சூழவரும் இரவலர்க்குப் பசிதீர உண்டிருக்கும்
சுகந்தான் உண்டோ
ஏழுலகும் பணியவருந் தண்டலையா ரேசொன்னேன்
எந்த நாளும்
நாழிநெல்லுக் கொருபுடைவை விற்றாலும் நிருவாணம்
நாய்க்குத் தானே. 98
தகுதி நிலை
கொச்சையிலே பாலும்உண்டோ கூத்தியர்கள் தம்மிடத்திற்
குணந்தான் உண்டோ
துச்சரிடத் தறிவுண்டோ துச்சர் எங்கே போனாலுந்
துரையா வாரோ
நச்சரவத் தொடையாரே தண்டலையா ரேஇந்த
நாட்டல் லாமல்
அச்சியிலே போனாலும் அகப்பைஅரைக் காசதன்மேல்
ஆர்கொள் வாரே. 99
----
99. கொச்சை-வறட்டாடு. துச்சர்-கீழ்மக்கள் அச்சி, ஒருநாடு.
இயற்கை மாறாமை
நித்தமெழு நூறுநன்றி செந்தாலு மொருதீது
நேரே வந்தால்
அத்தனையுந் தீதென்பார் பழிகருமக் கயவர்குணம்
அகற்ற லாமோ
வித்தகஞ்சேர் தண்டலையார் வளநாட்டிற் சாம்பலிட்டு
விளக்கி னாலும்
எத்தனைசெய் தாலுமென்ன பித்தளைக்குத் தன்குற்றம்
இயற்கை யாமே. 100
-----
100 பழி கருமம்- பழிக்கத்தக்க செயல். கயவர்- கீழ்மக்கள். வித்தகம் - திறமை. பித்தளையின் குற்றம். களிம்பேறுதல்.
--------------
புறக்கோலத்தின் சிறப்பு
இரக்கத்தால் உலகாளுந் தண்டலையாரே
சிவனே எந்தநாளும்,
இரக்கத்தான் புறப்பட்டீர் என்றனையும் இரக்கவைத்தீர்
இதனால் என்ன,
இரக்கத்தான் அதிபாவம் இரப்பதுதீதென்றாலும்
இன்மையாலே,
இரக்கப்போனா லும அவர் சிறக்கப்போவது
கருமம் என்னலாமே. (101)
----
இன்மை - வருமை, சிறக்கப்போவது - பகட்டாமப் போவது
பழமொழி விளக்கம் என்னும் தண்டலையார் சதகம் முற்றிற்று
-----------------
This file was last updated on 25 Jan 2023-
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)