க. வெள்ளைவாரணனார் எழுதிய
தில்லைப் பெருங்கோயில் வரலாறு
tillaip perungkOyil varalARu
by veLLaivAraNanAr
In Tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
க. வெள்ளைவாரணனார் எழுதிய தில்லைப் பெருங்கோயில் வரலாறு
Source: நூல் பற்றிய விவரங்கள்
நூல் : தில்லைப் பெருங்கோயில் வரலாறு
ஆசிரியர்: கலைமாமணி பேராசிரியர் திரு. க. வெள்ளைவாரணனார்
பதிப்பு எண்/ ஆண்டு .. இரண்டு, 1983 முதல்பதிப்பு: 1957
பக்கம்: 180
விலை : ரூ. 5.00
பதிப்புரிமையுடையது : 1988
நூல் பதிப்பித்ததும் கிடைக்குமிடமும்: .. தில்லைத் தமிழ் மன்றம்,
9, கனகசபைநகர், சிதம்பரம் 608 001
அச்சிட்டோர்: சிவகாமி அச்சகம், அண்ணாமலை நகர்-608003
-----------
பதிப்புரை
திருச்சிற்றம்பலம்
சிவகாமியம்மை காணத் திருச்சிற்றம்பலத்தில் ஆனந்தத் திருக்கூத்தினை நிகழ்த்தியருளும் நடராசப்பெருமான் திருக்கோயில் திருப்பணி இனிது நிறைவேறி மகா கும்பாபிஷேகம் நிகழும் போது தில்லைப் பெருங்கோயிலின் வரலாறு கல்வெட்டுச் சான்றுகளோடும் இலக்கியச் சான்றுகளோடும் எழுதப் பெற்று வெளிவருதல் வேண்டும் என்பது எங்களது விருப்பம். எங்களது வேண்டுகோட்கிசைந்து 'தில்லைப் பெருங்கோயில் வரலாறு' என்னும் இந்நூலை எழுதியுதவியவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் முன்னாள் தலைவர் திருமுறை ஆராய்ச்சிக்கலைஞர் கலைமாமணி பேராசிரியர் திரு. க. வெள்ளைவாரணனார் ஆவார். அவர்கட்கு உதவியாயிருந்தவர் பச்சையப்பன் பள்ளி முன்னாள் தமிழாசிரியர் புலவர் திரு வீரநாராயணன் ஆவர். உடனிருந்து உதவியவர் அண்ணாமலைப் பல்கலைக் கழக வரலாற்றுத் துறைத் தலைவர் டாக்டர் எம். எஸ். கோவிந்தசாமி அவர்களாவர். விரைவில் வனப்புற அச்சிட்டுக் கொடுத்தோர் அண்ணாமலை நகர் சிவகாமி அச்சகத்தார். இவர்கள் எல்லோர்க்கும் என பாராட்டும் நன்றியும் என்றும் உரியவாகும்.
9. கனகசபைநகர், சிதம்பரம் -608001 இங்ஙனம்
10-02-1987 G. வாகீசம்பிள்ளை
தலைவர், தில்லைத் தமிழ் மன்றம்
--------------
இரண்டாம் பதிப்புரை
சிவமயம் திருச்சிற்றம்பலம்
‘தில்லைப் பெருங்கோயில் வரலாறு' மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற நூல். காரணம், அது தலபுராணச்செய்திகளுடன் வரலாற்று உண்மைகளையும் மற்றும் இலக்கியச் செய்திகளையும் தெரிவிப்பதே.
இதுபோன்ற நூல் ஒன்றினை, மலிவான விலையில் தயாரித்து, அதனைத் தமிழ் மக்கள் அனைவரும் படித்துப்பயன் பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தவர், தில்லைத் தமிழ் மன்றத் தலைவரும், தில்லைப்பெருங்கோயில் திருப்பணிக் குழுவின் செயலாளராக விளங்கிய திருப்பணிச் செல்வர் திரு ஜி. வாகீசம்பிள்ளை அவர்கள். கோயிலின் குடமுழுக்கை 11--2--87ல் பலரும் போற்ற நிகழ்த்திய அவர்கள், எண்ணிய எண்ணியாங்கு எய்தி குடமுழுக்கு விழாவின்போது. இந்நூலை வெளியிட்டு மகிழ்ந்தார்கள்.
இந்நூல் எழுதும் பொறுப்பை தமிழ் மூதறிஞர், பேராசிரியர் திரு. க. வெள்ளைவாரணனார் அவர்களிடம் மன்றத் தலைவர் அவர்கள் ஒப்படைத்தார்கள், என்றும் போற்றத்தக்க வகையில் எவ்வித கைம்மாறும். கருதாது, தமிழுக்கும், சைவத்துக்கும் அளப்பரிய தொண்டுகள் செய்த பேராசிரியர் அவர்கள் தாம் ஏற்ற பொறுப்பை தம் உடல்நிலையைக் கூடக்கருதாது, மிகச் செம்மையாகச் செய்து முடித்தார்கள். முதற்பதிப்பு முடியுந் தறுவாயில், அதனை மேலும் செம்மைப்படுத்தி, இரண்டாவது பதிப்புக்காக. அச்சுக்குக் கொடுக்கும் நிலையில், நூலாசிரியர் சிவப்பேறுபெற்றார்.
மன்றத்தலைவர் அமரர் ஜி. வாகீசம்பிள்ளை மற்றும் நூலாசிரியர் அமரர் க. வெள்ளைவாரணனார் செய்த பணிகளைத் தொடர மன்றம் முடிவு செய்தது. அதற்கேற்ப இரண்டாம் பதிப்பு வெளியாகிறது.
இப்பதிப்பில் தில்லைத் 'திருமடல்கள்' என்ற புதிய பகுதி பிற்சேர்க்கையில் இணைக்கப்பட்டுள்ளது. இந் நூலை ஆங்கிலத்தில் தொழிபெயர்ப்புச் செய்து வெளியிட வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. தில்லை அம்பலவன் திருவருளால் விரைவில் செயல் கூடும்.
தில்லை நடராசப் பெருமானின் வடிவத்தை முகப்புப் பட்டத்திற்காக அழகாக வரைந்து உதவிய மாரியப்பா நகர் ஓவிய ஆசிரியர் திரு. K.N. சேதுராமன், நல்ல முறையில் இரண்டாம் பதிப்பையும் அச்சிட்ட அண்ணாமலை நகர் சிவகாமி அச்சகத்தார், இவ்விரண்டாம் பதிப்பை வெளியிடுவதற்கு உறுதுணையாக இருந்த அன்பர்கள் திரு க. சுவாமிநாதன் மற்றும் திரு இரத்தின சம்பந்தம் ஆகியோருக்கு எங்கள் நன்றியை உரிமையாக்கிக் கொள்கிறோம்.
இந்நூலைப் படித்து, பொன்னம்பலவனின் தண்ணருளை பெற வேண்டுகிறோம்.
9, கனகசபை நகர். சிதம்பரம் இங்ஙனம்
09-12-88 S. திருநாவுக்கரசு
செயலாளர், தில்லைத்தமிழ்மன்றம்,
-------------
பொருளடக்கம்
1. தில்லைப் பெருங்கோயிவின் தொன்மை
2. தலபுராணச் செய்திகள்
3. மூர்த்தியும் தீர்த்தமும்
4. திருக்கோயில் அமைப்பு
5. தில்லையில் கூத்தப்பெருமானை வழிபட்டுப் பேறுபெற்றோர்
6. தில்லைப் பெருங்கோயிலின் நாள் வழிபாடும் திருவிழாக்களும்
7. தில்லைத்திருப்பணி
8. தில்லைச் சிற்றம்பலப் பெருங்கோயிலின் வளர்த்த கலைகள்
9. தில்லைத் திருக்கோயிலின் நிர்வாகம்
10. பிற்சேர்க்கை
(I) தில்லை நடராசர் திருக்கோயிலில் கோவிந்தராசப்பெருமான் இடம் பெற்ற வரலாறு
(II) தில்லையில் ஆடல்புரியும் கூத்தப்பெருமான் திருவுருவம் இடம்பெயர்ந்து மீண்டும் எழுந்தருளினமை
(III) சிவாலய தரிசனவிதி
(IV) சிதம்பரத்திற்குரிய நூல்கள்
(V) தில்லைத்திருமடங்கள்
---------
1. தில்லைப் பெருங்கோயிலின் தொன்மை
சிவமயம் - திருச்சிற்றம்பலம்
"செல்வ நெடுமாடஞ் சென்று சேணோங்கிக்
செல்வ மதிதோயச் செல்வ முயர்கின்ற
செல்வர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
செல்வன் கூழலேத்துஞ் செல்வஞ் செல்வமே"
தமிழ்நாட்டிலுள்ள சைவசமயச் சான்றோர்களால் கோயில் என்னும் பொதுப் பெயராற் சிறப்பித்துப் போற்றப் பெறுவது பெரும்பற்றப் புலியூராகிய தில்லைப் பதியாகும். தில்லைத் திருக்கோயிலில் இறைவன் அருவுருவத் திருமேனி கொண்டு எழுந்தருளிய திருமூலட்டானமும், அப்பெருமான் உமையம்மை கான ஐந்தொழில் நாடகம் செய்தருளும் திருச்சிற்றம்பலமும் சைவத்திருமுறையாசிரியர் எல்லோராலும் போற்றி வழிபடப் பெற்ற அருள் நிலையங்களாகும்.
பெரும்பற்றப் புலியூராகிய தில்லைப்பதியில் எல்லார்க்கும் முன்னே தோன்றி, 'முளைத்த திருமூலட்டானத்திறைவரை வழிபாடு செய்தும், அப்பெருமான் திருவருளால் அம்முதல்வனது ஐந்தொழில் திருக்கூத்தைத் தில்லைச் சிற்றம்பலத்தில் கண்டு போற்றி, இத்திருக்கூத்து. எக்காலத்தும் இடையீடின்றி நிகழுமாறு இறைவனை வேண்டியும் இத்தலத்தில் தங்கி எல்லாம் வல்ல இறைவனை வழிபட்டவர்களில் புலிக்கால் முனிவராகிய வியாக்கிர பாதரும், ஆதிசேடன் அவதாரமாகிய பதஞ்சலி முனிவரும், கூத்தப் பெருமானை இனிய செந்தமிழ்ப் பாடல்களால் பாடிப் போற்றியும் திருத்தொண்டுகள் பல செய்தும் சிவானந்தப் பெரும் பேறெய்திய அடியார்களும் அவர்கள் அருளிய உரைவழி நின்று எண்ணிலாத் திருப்பணிகள் புரிந்த அரசர்களும் படைத் தலைவர்களும் பலராவர். திருமுறைக் காலந்தொட்டு இன்றுவரை தமிழ் மக்களால் சிறப்பு முறையில் வைத்து வழிபடப்பெற்று வருவது இத்திருக்கோயில், இதன் வரலாறுகளை அறிந்து கொள்வது சைவ சமய வளர்ச்சிக்குப் பெரிதும் இன்றியமையாத-தாகும்.
இவர்களை யடுத்துத் தில்லைக் கூத்தப் பெருமானை வளாங்கித் திருவருள் பெற்றவர்கள் வியாக்கிரபாதர் மைந்தராகிய உபமன்யு முனிவரும் மனுவின் மைத்தனாகப் பிறந்து வியாக்கிர பாத முனிவரால் அன்பினால், வளர்க்கப் பெற்ற இரணியவர்மனும் ஆவார். இம் முனிவர்களுடன் ஒத்த காலத்தவரும் சிறந்த சிவயோகியாருமாகிய திருமூலதேவர் இம் முனிவர்களுடன் கூடித் தில்லைத் திருக்கூத்தினைக் காணும் பேறுபெற்றவர்.
கடற்கரைப் பகுதிகளில் வளரும் இயல்புடைய தில்லை யென்னும் தாவரம் அடர்ந்துள்ளமை பற்றி, தில்லைவனம் எனவும், வியாக்கிரபாத முனிவராகிய புலிமுனிவர் எல்லாப் பொருட்கும் சார்பாகிய இறைவனைப் பெரும்பற்றாகக் கொண்டு போற்றியமையால் பெரும்பற்றப்புலியூர் எனவும், எல்லாம் வல்ல இறைவன் நுண்ணிய ஞானமயமான அம்பலத்தில் ஆடல் புரிதலால் திருச்சிற்றம்பலம் எனவும் இத்தலம் அழைக்கப் பெறுவதாயிற்று. சிற்றம்பலம் நுண்ணிய ஞான வெளி. சிற்றம் பலம் என்ற தமிழ்ச் சொல்லே வட, மொழியில் சிதம்பரம் என்றாயிற்று.
எல்லாம் வல்ல இறைவன் புலிமுனியும் பதஞ்சலியும் போற்றத் தில்லைச் சிற்றம்பலத்திலே. திருக்கூத்து. இயற்றத் தொடங்கிய காலம் மிகவும் தொன்மையுடையதாகும். திருவாரூர்த் திருக்கோயிலின் தொன்மையைப் போற்றும் திருநாவுக்கரசர்,
"மாடமொடு மாளிகைகள் மல்குதில்லை
மணிதிகழும் அம்பலத்தே மன்னிக் கூத்தை
ஆடுவாசல் புகுவதற்கு முன்னோ பின்னோ
அணியாரூர் கோயிலாக் கொண்ட நானே" (6-34-3)
எனத் தில்லைச் சிற்றம்பலத்தின் தொன்மையினையும் உடன் இயைத்துப் போற்றியுள்ளமை காணலாம்.
பொற்பதியாசிய தில்லைத் தலமானது உலக புருடனின் இதய கமலமாய் இடைகலை, பிங்கலை, சுழுமுனை யென்னும் waadikaL மூன்றும் சந்திக்கும் இடமாய் இறைவனது ஆடல் நிகழும் திருவருள் நிலையமாகத் திகழ்கின்றது.
சிவபூமியெனப் போற்றப்படும் இப்பாரத நாட்டிலே சிவம் பெருக்கும் சிறப்புடையது தென்னாடாகிய தமிழ் நாடேயாகும். 'தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி' என வரும் திருவாசகத் தொடர், எண்ணற்ற சிவத் தலங்களைத் தன்பாற் கொண்டு விளங்கும் செத்தமிழ் நாடாகிய தென்னாட்டின் சிறப்பினை நன்கு புலப்படுத்துவதாகும். வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்தைத், தொல்காப்பியனார் 'வண்பொழில் மூலர் தண்பொழில் வரைப்பு' என்றார். அவர் காலத்தில் தமிழகம், சேரநாடு, பாண்டிய நாடு, சோழநாடு என மூவகையாகப் பகுக்கப்பெற்றிருந்தது. இம் மூன்று நாடுகளையும் முறையே குடபுலம் தென்புலம் குணபலம் எனப் பத்துப் பாட்டுள் ஒன்றாகிய சிறுபாணாற்றுப் படை குறிப்பிடுகின்றது. சங்ககாலத்தில் சேரமண்டலம், பாண்டி மண்டலம், சோழமண்டலம் என முப்பெரும் பிரிவாக வகுக்கப்பெற்ற தமிழகம் திருமூலர் காலத்தில் ஐந்து மண்டலங்களாகப் பிரிந்தது. அவற்றுள் சேரநாடு மலைமண்டலம் கொங்குமண்டலம் என இரண்டாகவும், சோழ்நாடு சோழ மண்டலம் தொண்டைமண்டலம் என இரண்டாகவும் பகுக்கப் பெற்றன. சோழநாட்டிற்கும் தொண்டை நாட்டிற்கும் இடையே நடுநாடு என்றதொரு பகுப்பும் பிற்காலத்தில் ஏற்பட்டது. நடுநாட்டின் மேலைப்பகுதி மலயமானாடு எனவும், கீழைப்பகுதி திருமுனைப்பாடி நாடு எனவும் பகுத்துரைக்கப் பெறுவதாயிற்று. இந்நிலையில் சோழநாட்டின் தென்னெல்லையாகத் தென் வெள்ளாறும், வடவெல்லைகளாக மருதையாறும், வடவெள்ளாறும், மேலெல்லையாகக் குளிர் தண்டலையும் (குளித்தலையும்} கொள்ளப்பட்டன.
தமிழகத்தில் தேவார ஆசிரியர்களால் பாடப்பெற்ற சிவத் தலங்களில் மலைநாட்டில் ஒன்றும், கொங்குநாட்டில் ஏழும், பாண்டி நாட்டில் பதினான்கும், சோழநாட்டில் காவிரிக்கு வட கரையில் அறுபத்து மூன்றும், தென் கரையில் நூற்றிருபத்தேழும், ஈழநாட்டில் இரண்டும், நடுநாட்டில் இருபத்திரண்டும், தொன்டைநாட்டில் முப்பத்திரண்டும், துளுநாட்டில் ஒன்றும், வட நாட்டில் ஐந்தும் ஆக 272 தலங்கள் அமைந்துள்ளன. இங்குக் குறிக்கப்பெற்ற சிவத்தலங்கள் யாவும் உலகமக்கள் எல்லோரையும் தன்பால் ஈர்த்து உய்யும் நெறி காட்டியருளும் தெய்வத் திருத்தலங்களாகும். இத்தலங்கள் எல்லாவற்றுள்ளும் தலைமையும் சிறப்பும் வாய்ந்தது, பெரும் பற்றப்புலியூராகிய தில்லைப்பதியேயாகும். இதுபற்றியே "பெருமை நன்றுடைய தில்லை" {4-57-4) எனத் திருதாவுக்கரசுப் பெருமான் இத்திருத்தலத்தைச் சிறப்பித்துப் போற்றியுள்ளார்.
தில்லைத்தவமானது சோழநாட்டில் கொள்ளிடத்திற்கு வடக்கும், வடவெள்ளாற்றுக்குத் தெற்கும் ஆக அமைந்த இடப்பரப்பில் வங்கக்கடலுக்கு மேற்கே ஐந்துகல் தொலைவில் அமைந்துள்ளது. சிதம்பரம் என வழங்கப்பெறும் இத்தலம் தென்னார்க்காடு மாவட்டத்திலுள்ள சிதம்பரம் வட்டத்தின் தலைமை ஊராகும். பிற்காலச் சோழராட்சியில் இவ்வூர் ராஜாதிராஜ வளநாட்டுத் தனியூர் பெரும்பற்றப்புலியூர் எனக் கல்வெட்டுக்களின் குறிக்கப் பெற்றுள்ளது. தில்லைநகராகிய இது குடிமக்களுக் குரிய ஊராகவோ அரசர்க்குரிய தலைமை நகராகவோ அரசர்களால் விடப்பட்ட பிரமதேயமாகவோ ஆகாமல் திருச் சிற்றம்பலமுடைய பெருமானாகிய, இறைவனுக்கேயுரிய தலைமையுடைய தெய்வத்தலமாகத் திகழ்தலின் தனியூர் பெரும் பற்றப்புலியூர் எனப் பெயர் பெறுவதாயிற்று எனக்கருத வேண்டியுள்ளது. பெரும்பற்றப்புலியூராகிய இத் தில்லை நகரையடுத்துக் குடிமக்கள் வாழும் எல்லைப்பிடாகைகளாகிய சிற்றூர்கள் சுற்றியமைத்துள்ளன.
இத்தலம் கிழக்கே திருவேட்களத்தையும், தெற்கே பழங் கொள்ளிடப் பேராற்றையும், மேற்கே. கண்ணங்குடியையும் வடடக்கே மணலூரையும் தனக்கு எல்லைகளாகக் கொண்டுள்ளது. இங்குக்குறித்த எல்லைக்குள் ஒன்பது பிடாகைகள் (சிற்றூர்கள்) அமைந்துள்ளன. கிழக்கே சிதம்பரம் புகைவண்டி, நிலையத்திற்கும் இவ்வூருக்கும் இடையே பாலமான் என்னும் சிற்றுாறு இந்நகரத்தையொட்டி ஓடுகின்றது. இதனைக் கடந்தே நகருக்குள் நுழைதல் வேண்டும். இச்சிற்றாறு வீரநாராயணன் ஏரியிலிருந்து தில்லை நகரின் தெற்குப்பக்கமாக ஓடிவருகின்றது. இந்நகரின் மேற்கிலிருந்து வடக்குப் பக்கமாக ஓடி வரும் ஓடையொன்று இந்நகரத்தின் கிழக்கே வரும் இப்பாலமான் என்னும் சிற்றாறுடன் கலக்கின்றது. இந்நகரத்தின் மேற்றிசையிலும் ஆங்காங்கே , ஓடைகள் உள்ளன, இவையனைத்தும் சேர்ந்து தில்லை நகரத்திற்கு அணியப்பெற்ற மாலைபோல் அமைத்துள்ளன. இவ்வோடைகளில் ஓடும்நீர் காவிரியாற்றிலிருந்து வரும் நன்னீராகும். இவ்வாறு பெரும்பற்றப்புலியூராகிய இத்தில்லைத் திருநகரம் காவிரியாற்றின் நன்னீரால் சூழப்பெற்றிருக்கும் அழகிய தோற்றத்தினை, 'பொன்னி வளைத்த புனல் சூழ் புலியூர்' (திருச்சிற்றம்பலக்கோவை) என வரும் தொடரில் மணிவாசகப் பெருமான் குறித்துள்ளமை காணலாம்.
இத்தில்லை நகரமாகிய இப்பதி இவ்விருபதாம் நூற்றாண்டில் தமிழகத்தில் கல்விப்பயிர் வளர்க்கும் கலை நிலையமாகத் திகழ்கின்றது. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தப்பிள்ளையார், தில்லைப்பெருமானைக் காலந் தோறும் வழிபட்டு வருபவர், தில்லையின் கிழக்கேயுள்ள திருவேட்களத்தைத் தாம் தங்குவதற்குரிய இடமாகக் கொண்டிருந்தார் எனப் பெரியபுராணம் கூறுகின்றது. ஞானத்தின் திருவுருவாகிய ஆளுடைய பிள்ளையார் தங்கியிருக்கும் பேறு பெற்ற திருவேட்களமானது, செட்டி நாட்டரசர் பெருங் கொடைவள்ளல் அண்ணாமலைச் செட்டியார் அவர்களால் நிறுவப்பெற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தைத் தன்னகத்தே பெற்று விளங்குகின்றது. அவ்வாறே கி.பி, பதினான்காம் நூற்றான்டில் தில்லைவாழந்தணர் மரபில் தோன்றிச் சைவசமயச் சந்தான ஆசிரியருள் மூன்றாமவரான மறைஞான சமபந்தர்பால் உபதேசம் பெற்றுச் சைவசித்தாந்த சாத்திரங்களையும், கோயிற்புராணம், திருமுறை கண்ட புராணம், சேக்கிழார் புராணம் முதலிய இலக்கிய நூல்களையும் இயற்றியருளிய உமாபதி சிவாசாரியார் அவர்கள் தங்கியிருந்த இடம், சிதம்பரத்தின் கீழ்த்திசையிலேயுள்ள கொற்றங்குடி என்னும் பவித்திர மாணிக்க நல்லுராகும்.
தில்லைக்கூத்தப்பிரான் பாடிக் கொடுத்த சீட்டுக் கவியுடன் தன்னையடைந்த பெத்தான் சாம்பானுக்கு உமாபதிசிவம் சாதிவேறுபாடு கருதாது தீக்கை செய்தருளியதும், அவர் சிவ சமாதி கொண்டருளியதும் ஆகிய உமாபதி சிவாசாரியார் திருமடம் இங்கேதான உள்ளது. மந்திரவழிச்செய்யும் சிவதீட்சையினைச் செயற்படுத்திக் காட்டிய இப்பதியிலே பொறியியற் கல்லூரியும், தொழில் நுட்பக்கல்லூரியும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
தில்லைநகரமாகிய சிதம்பரத்தில் காஞ்சிபுரம் பச்சையப்பர் பெயரால் அமைத்த பச்சையப்பன் மேனிலைப்பள்ளியும், சிதம்பரத்திற்குக் குடிநீர் வழங்கிய திவான்பகதூர் இராமசாமிச் செட்டியார் பெயராலமைந்த இராமசாமிச் செட்டியார் மேனிலைப்பள்ளியும், சைவமும் தமிழும் வளரப் புலமைத் தொண்டு புரிந்த ஆறுமுகநாவலர் பெயராலமைந்த ஆறுமுக நாவலர் மேனிலைப்பள்ளியும், தில்லைப் பெருங்கோயில் திருப்பணியில் பெரும்பங்கு கொண்ட தரும பூஷணம் இரத்தினசாமிச் செட்டியார் நிறுவிய இராமகிருஷ்ணா மேனிலைப் பள்ளியும், சுவாமி சகஜாநந்தர் நிறுவிய நந்தனார் அரசு ஆண், பெண் மேனிலைப்பள்ளிகளும், அரசினர் மகளிர் மேனிலைப் பள்ளியும் ஆக ஏழு கல்விநிலையங்களும் அரசினர் கலைக் கல்லூரி யொன்றும் சிறந்த முறையில் இயங்கிவருகின்றன. கலைக்கெலாம் பொருளாக நின்ற தில்லைச்சிற்றம்பலவர் எழுந்தருளிய இந்நகரத்திலே இத்தகைய கல்வி நிலையங்கள் கலை பயில மாணவர்களைச் செந்நெறியில் வளர்க்கும் செழுங்கலை நியமமாக நடைபெற்று வருதல் மகிழ்ச்சிக்குரிய நிகழ்ச்சியாகும்.
-------------
2. தலபுராணச் செய்திகள்
முன்னொரு காலத்தில் மத்தியந்தன முனிவர் என்பவர், தாம் தவஞ் செய்து பெற்ற புதல்வருக்குக் கல்விப்பயிற்சி நிரம்பிய பின்னர் அறிவு நூற்பொருள் முழுவதையும் அறிவுறுத்தினார். தந்தையார்பால் அறிவு நூற்பொருளை உணர்ந்த அப்புதல்வர், சிறப்புடைய திருத்தலம் ஒன்றிலே சென்று இறைவனை வழிபாடு செய்தற்கு விரும்பினார். பிள்ளையின் விருப்பத்தை யுணர்ந்த மத்தியந்தன முனிவர் அவரைத் தில்லைப்பதிக்குச் செல்லும்படி அனுப்பிவைத்தார். தந்தை சொல்வழி நடக்கும் அப்புதல்வர், தில்லைவனத்தையடைந்து, அவ்விடத்தே ஓர் அழகிய தடாகமும் அதன் தென் பக்கத்தே ஓர் ஆலமரநீழலில் சிவலிங்கத் திருவுருவமும் இருத்தலைக் கண்டு பெருமகிழ்வு கொண்டார். அங்கே ஒரு தவச்சாலை அமைத்துக்கொண்டு சிவலிங்கப் பெருமானைப் பூசித்து வருவாராயினர். தாம் நாள்தோறும் இறைவனை வழிபாடு செய்தற்கென்று பறிக்கும் பலநறுமண மலர்களை ஒருநாள் ஆராய்ந்து பார்த்தார். அம் மலர்களுள் பழையனவும் பழுது பட்டனவுமான மலர்கள் கலந்திருக்கக் கண்டு வருந்தினார்.
பொழுது விடிந்தபின் மலர்களைக் கொய்தால் அவை வண்டுகள் ஊதியனவாக ஆகிவிடுகின்றன. இரவிலேயே சென்று பறிப்போம் என்றால், மரம் செறிந்த இக்காட்டிலே வழிதெரியவில்லை. மரங்களில் ஏறினாலும் பனியால் கால் வழுக்குகின்றது. ஆதலால், என் செய்வோம் என அவ்விளைய முனிவர் பெரிதும் வருந்தினார். அந்நிலையில் எல்லாம்வல்ல சிவபெருமான் அம்முனிவர் முன்னே தோன்றினார். அவ்விளைய முனிவர் இறைவனை வணங்கி வாழ்த்தி, ஐயனே தேவரீரை வழிபடுதல் வேண்டி அடியேன் விடியற் பொழுதில் சென்று மரங்களில் வழுக்காமல் ஏறவேண்டியிருத்தலால் என்னுடைய கைகால்கள் புலியின் வலிய நகங்களை-யுடையனவாதல் வேண்டும். வழி தெரிந்து செல்லுதற்கும், பழுதற்ற நறுமலர்களைத் தெரிந்து கொய்வதற்கும் கால்களிலும் கைகளிலும் கண்கள் உண்டாதல் வேண்டும்" எனக் குறையிரந்து வேண்டினார். எல்லாம்வல்ல இறைவனும் அவர் வேண்டிய-வண்ணமே ஆகுக என்று வரத்தினைத் தந்து மறைந்தருளினார். அன்று முதல் அவ்விளைய முனிவர், வியாக்கிரபாதர் (புலிக்கால் முனிவர்) என்னும் பெயருடையராய், சிவபெருமானைத் தாம் விரும்பிய வண்னம் புது மலர்களால் வழிபாடு செய்து மகிழ்ந்திருந்தார். இவ்வாறு புலிக்கால் முனிவர் வழிபட்ட காரணத்தினால், தில்லைவனமாகிய இப்பதி புலியூர் எனவும் வழங்கப் பெறுவதாயிற்று. வியாக்கிரபாத முனிவர் உலகியல் பற்றுக்களை அறவேநீக்கி எல்லாப் பொருட்கும் சார்பாகிய இறைவன் ஒருவனையே பற்றுக் கோடாகக் கொண்டு வாழ்ந்தமையால் புலியூர் என்னும் இப்பதி பெரும்பற்றப்புலியூர் எனச் சிறப்புடைய அடைமொழியுடன் திருநாவுக்கரசுப் பெருமானால் போற்றப்படும் சிறப்புடையதாயிற்று.
தில்லைப்பதியாகிய புலியூரில் வியாக்கிரபாத முனிவர் திரு மூலட்டானத்துப் பெருமானை வழிபட்டிருக்கும் நாளில், அவர் தந்தையார் மத்தியந்தன முனிவர் தில்லையை யடைந்து, தம் மைந்தர்க்கு நற்குடிப்பிறந்த ஒரு மங்கையை மணஞ் செய்து வைத்தல் வேண்டும் என்னும் தமது விருப்பத்தை வெளியிட்டார். வியாக்கிரபாதரும் தம் தந்தையார் விருப்பத்திற்கு உடன்பட்டார். மத்தியந்தன முனிவர், வசிட்ட முனிவரின் தங்கையாரைத் தம் மைந்தர்க்கு மணம் செய்து வைத்தார். வியாக்கிரபாதரும் அவர் மனைவியாரும் தில்லையில் தங்கி இறைவனை வழிபட்டிருக்கும் நாளில், அவ்விருவர் செய்த தவத்தின் பயனாக உபமன்யு என்னும் குழந்தை பிறந்தது. அக்குழந்தையை, வசிட்ட முனிவரின் மனைவியார் அருந்ததியம்மையார் எடுத்துச் சென்று, தம்பாலுள்ள காமதேனு என்னும் தெய்வப்பசு பொழிந்தபாலை ஊட்டி வளர்த்து வந்தார்.
பின்னர், புலிக்கால் முனிவரும் அவர் மனைவியாரும் தம் குழந்தையைத் தம்மோடு வைத்துக்கொள்ள வேண்டும் என்னும் விருப்பத்தால், உபமன்யுவைத் தில்லைக்கு அழைத்து வந்து இனிய தின்பண்டங்களும் தீம்பாலும் ஊட்டினர். காமதேனுவின் இனிய பாலையருந்தி வளர்ந்த உபமன்யு ஆகிய அக்குழந்தை, அவ்வுணவையுண்ணாது உமிழ்ந்து விட்டுப் பசிதாங்காது அழுவ தாயிற்று. அது கண்டு வருந்திய வியாக்கிர-பாதரும் அவர் மனைவியாறும் திருமூலட்டானப்பெருமான் முன்பு அக்குழந்தையைக் கொண்டு வந்து கிடத்தினர், எவ்லாம் வல்ல சிவபெருமான் அக்குழந்தையின் பொருட்டுத் தெய்வத்தன்மை வாய்ந்த பாற் கடலையே வரவழைத்து உணவாக ஊட்டினார். உபமன்யு ஆகிய அக்குழந்தை திருப்பாற்கடலைப் பருகிக்களித்திருந்தது.
தில்லைப்பெருமான் உபமன்யு ஆகிய குழந்தையின் பசி தீரப் பாற்கடலையழைத்தருளிய அருட்செயலைப் 'பாவனுக் காயன்றுபாற்கடலீந்து' (4-107-6) என அப்பரடிகளும், 'பாலுக்குப்பாலகன்வேண்டியழுதிடப் பாற்கடலீந்தபிரான், {திருப்பல்லாண்டு-) எனச்சேந்தனாரும் குறித்துப் போற்றியுள்ளனர். புலிக்கால் முனிவரும் கவலை நீங்கித் திருமூலட்டானப் பெருமான் சந்நிதியில் சிவயோகத்திலமர்ந்து அப்பெருமான் திருவடியில் கருத்தொன்றுபட்டு இருந்தார். அப்பொழுது' அவருள்ளத்தே, சிவபெருமான் தேவதாரு வனத்தில் வாழ்ந்த முனிவர்களின் பொருட்டு நிகழ்த்திய ஐந்தொழில் இன்பக் கூத்தின் வரலாறு நினைவில் தோன்றியது. அதனைத் தெரிந்த அளவிலே சிவபெருமான் திருக்கூத்தியற்றிய தேவதாரு வனத்தில் அடியேன் இருக்கப் பெறாமல் இந்தவிடத்தில் இருக்கப் பெற்றேனே. இறைவன் ஆடிய திருக்கூத்தினை யான் காணுமாறு எங்ஙனம்? என்று, பெரிதும் நெஞ்சம் நெகிழ்த்துருகி வருந்தினார். இத்தில்லையம்பதியே நிலவுலகத்திற்கு நடுநாடியாயிருத்தலால் இதன் கண்ணேதான் சிவபெருமான் ஐந்தொழில் திருக்கூத்து நிகழ்த்தியருளுவான், ஆதலால் அகத்தே காணுவதற்குரிய அத்திருக்கூத்தினை இத் தில்லையம்பலத்தின் கண்ணே புறத்தேயும் காணப்பெறுவேன், என்று தவக்காட்சியால் உணர்த்த வியாக்கிரபாத முனிவர் தில்லைப்பதியிலேயே திருமூலட்டானப்பெருமானை வழிபாடு செய்து கொண்டு இருப்பாராயினார்.
தேவதாரு வனத்தில் வாழ்ந்த நாற்பத்தெண்ணாயிர முனிவர்களும் தம்முடைய தவவன்மையினையும் தம் மனைவியரது கற்பின் திண்மையினையும் எண்ணி எல்லாவகையாலும் தாமே உயர்ந்தோர் எனச் செருக்குற்று இறைவனை வழிபடாதிருந்தனர். அப்பொழுது சிவபெருமான், திருமால் மோகினியாய்த் தம்முடன் வர, தாம் பிச்சைத் தேவராய்த் தேவதாரு வனத்திற்குச் சென்று அங்குவாழும் முனிவர்களின் தவவுறுதியினையும் அவர்தம் மனைவியரது மனத்திண்மையையும் நெகிழச் செய்தனன். அதுகண்ட முனிவர்கள் எக்காலத்தும் அழிவின்றியுள்ளவன் இறைவன் என்பதனையுணராமல் அம் முதல்வனை யழித்தல் வேண்டித் தீய வேள்வியினைச் செய்தனர். அவ்வேள்வியிலிருந்து தோன்றிய புலி இறைவன் மேற் பாய்ந்தது. அதனை இறைவன் அழித்து அதன் தோலை யுரித்து உடுத்துக் கொண்டனன். வேள்வியிலிருந்து சீறிவந்த பாம்பினைத் தன்கைக்குக் கங்கணமாக அணிந்து கொண்டனன். பின்னர் இவ்வேள்வியிலிருந்து முயலகன் என்னும் கொடியோன் தோன்றி எதிர்த்தனன். இறைவன் அவன் முதுகினை நெரியும்படி வலத்திருவடியால் மிதித்துக்கொண்டனன். அது கண்ட முனிவர்கள் இறைவன் மேற் சாபமொழிகளடங்கிய மந்திரங்களை ஏவினர். இறைவன் அம்மந்திரங்களைச் சிலம்புகளாகத் தொகுத்துத் தன் திருவடியில் அணிந்து கொண்டான். பின்பு! அம் முனிவர்களால் கண்டு தாங்கவொண்ணாத கடுங்கூத்தினை ஆடியருளினான்.. அந்நிலையில் அக்கூத்தின் கடுமையைத் தாங்கிக் கொள்ள இயலாத முனிவர் அனைவரும் மயங்கி வீழ்ந்தனர். அதுகண்டு இறைவனருகே நின்ற திருமாலும் நடுக்க முற்றார். பேரருளாளனாகிய இறைவன், அம் முனிவர்களின் துயரங்களைப் போக்கி அவர்கட்கு அருள் செய்யத் திருவுளங் கொண்டு, எவ்வுயிர்க்கும் இன்னருள் சுரக்கும் ஆனந்தத் திருக்கூத்தை அவர்கள் கண்டு மெய்யுணர்வு பெறும்படி ஆடியருளினான். அதனைக் கண்ட உமையம்மையும், திருமாலும் ஏனைத் தேவர்களும் பேரின்பக் கடலில் திளைத்து மகிழ்ந்தனர். தேவதாரு வனத்து முனிவர்களும் தம் செருக்கடங்கி இறைவனைப் பணிந்து, தமது பிழையினைப் பொறுத்தருளும்படி வேண்டினர். சிவபெருமானும் முனிவர்களது ஆணவ வலியெலாம் திருவடிக்கீழ் அடங்கிக்கிடக்கும் முயலகன் பால் வந்து ஒடுங்கும்படி அருள் செய்து மறைந்தருளினார்.
பின்பு, திருமால், தம் இருக்கையாகிய பாற்கடலையடைந்து பாம்பணையிற் பள்ளிகொண்டு தாம் கண்ட இறைவனது ஆனந்தத் திருக்கூத்தினையே யெண்ணி யெண்ணிப் பெருங்களிப் புடையராய்த் துயிலாதிருந்தார். அந்நிலையில் அவர்க்குப் படுக்கையா யிருந்த ஆதிசேடன் திருமாலைப் பணிந்து அவர் கொண்ட பெரு-மகிழ்ச்சிக்குக் காரணம் யாது என வினவினான். திருமாலும் தேவதாரு வனத்தில் சிவபெருமான் ஆடிய ஆனந்தத் திருக்கூத்தின் இயல்பினை எடுத்துரைத்தார். அதனைக் கேட்ட ஆதிசேடன் அத்திருக்கூத்தினைத் தானும் காணும் பெரு வேட்கை மீதூர்ந்து காதலாகிக் கண்ணீர் மல்கி நின்றான். அவனது பெருவேட்கையையறிந்த திருமால், அவனை நோக்கி 'நீர் சிவ பெருமானுக்கு அன்பராயினமையின் இனி எமக்குப் படுக்கைப்பணி செய்தல் தகாது. நீர் தவஞ் செய்தலே ஏற்பு டையது' என்று கூறினார். அது கேட்ட ஆதிசேடன் தன் மகன் அனந்தன் என்பவனைத் திருமாலுக்குப் பாம்பணையாக்கி விட்டு வடகயிலை மருங்கு சென்று சிவபெருமானை நினைந்து அருந்தவம் புரிந்தனன். அவனது பேரன்பின் திறத்தைப் பலரும் அறியச்செய்யத் திருவுளங் கொண்ட சிவபெருமான், அவன் முன்னே தோன்றி, "யாம் தேவ தாருவனத்தில் திருக்கூத்து ஆடியபோது அவ்விடம் எமது கூத்தினைத் தாங்கப் பொறாது அசைவுற்றது. அதனால் அக்கூத்தினை அங்கு நிகழ்த்தாது விடுத்தோம். இப்போது அதனைச் செய்தற்கு இதுவும் இடமன்று. எமது திருக்கூத்தினைப் பொறுத்தற்கு ஏற்ற இடம் தில்லைவனமே. அத்தகைய தில்லை மன்றத்தின் கண்ணே நமது ஐந்தொழில் இன்பத்திருக்கூத்து எக்காலத்தும் இடையறாது நிகழும். அதற்குரிய காரணம் இங்கு அறியத்தகுலதாகும்.
மன்னுயிர்களின் உடம்பும் அவ்வுயிர்கள் வாழ்வதற்கு இடமாகிய உலகமும் அமைப்பால் ஒத்துள்ளன. இடைகலை பிங்கலை சுழுமுனை என உடம்பினுள்ளே ஓடும் மூன்று நாடிகளிற் சுழுமுனை நாடியென்பது நடுவில் ஓடும் நாடியாகும். இந்நிலவுலகத்திற்கு இலங்கையின் நேரே இடை நாடியும் இமயத்தின் நேரே பிங்கலை நாடியும் செல்லும். மற்றை நடுநாடியாகிய சுழுமுனை நாடி தில்லைக்கு நேரே செல்வதாகும் உடம்ப னுள்ளே செல்லும் நடுநாடியாகிய சுழுமுனையின் நடுவே விளங்கும் நெஞ்சத் தாமரையின் அகத்தேயுள்ள, அருள் வெளியிலே இடைவிடாது யாம் அருட்கூத்து நிகழ்த்துகின்றோம். அது போலவே உலகத்தின் நடுவே தில்லைப்பதியின் கண் மூல இலிங்கம் உள்ள திருமூலட்டானத்தின் தெற்கே நால்வேதங்களும் காணாத அம்பலம் ஒன்றுள்ளது. அத்தகைய ஞானமயமான அருளம்பலத்திலே யாம் எக்காலத்தும் இடைவிடாது திருக்கூத்து நிகழ்த்தி அருள்வோம். அத்திருக்கூத்தினை அங்கே காணும் அறிவுக் கண்ணுடையோர் பிறவித்துன்பம் நீங்கிப் பேரின்பமாகிய வீடு பேற்றினைத் தலைப்படுவர். ஆதலால் நீ இவ்வுருவினை நீத்து முன்னொருகால் அத்திரி முனிவர் மனைவியின் தொழுத கையின் கண்ணே ஐந்தலைச் சிறுபாம்பாகி வந்தமையால் நீ அவ்வுருவுடனேயே நாகலோகத்துக்குப் பொருந்திய வழியே போவாயாக. அந்நாக-லோகத்தின் நடுவே ஒரு மலையுளது; அதற்குத் தெற்குப் பக்கத்தே ஒருபிலத்துவாரமும், இருக்கிறது. அப்பிலத்துவாரத்தின் வழியே தில்லையை அடைந்தால் அதன் வடபக்கத்திலேயுள்ள ஆலமர நிழலிலே மலைக்கொழுந்தாகிய, இலிங்கத்திருமேனி உள்ளமை காணலாம். அங்கு வியாக்கிரபாத முனிவன் அவ்விலிங்கத்தைப் பூசித்துக் தோண்டு, உள்ளான். உன்னைப்போன்றே எனது திருக்கூத்தினைக்காணும் பெருவேட்கையுடன் என்னை வழிபாடு செய்து கொண்டிருக்கும் அவனுடன் நீயும் இருப்பாயாக; உங்கள் இருவர்க்கும் தைப்பூசம் குருவாரத்தோடு கூடும் சித்தயோக நன்னாளில் உச்சிக்காலத்தில் எமது ஆனந்தத் திருக்கூத்தினை நீங்கள் தரிசிக்கும்படி ஆடியருள் புரிவோம்" என்று கூறி மறைந்தருளினார்.
சிவபெருமான் பணித்த வண்ணம் ஆதிசேடனும் பதஞ்சலி முனிவராகி நாகலோகத்தை-யடைந்து பிலத்துவாரத்தின் வழியே தில்லைப்பதியையடைந்தான். புலிக்கால் முனிவருடன் அளவளாவி அனந்தேசுரம் என்னும் திருக்கோயிலில் இறைவனைப் பூசித்தான். பெரும்பற்றப்புலியூர்த் திருமூலட்டானத்தில் இறைவனை வழிபட்டு இருவரும் இருந்தனர். சிவபெருமான் தாம் குறித்தருளியவண்ணம் தைப்பூச நன்னாளில் தில்லைத்திருக் கோயிலிலே பதஞ்சலி முனிவரும் புலிக்கால் முனிவரும் தொழுது போற்றக் கூத்தப்பெருமானாகத் தோன்றி, சிவகாமியம்மையார் காண ஐந்தொழில் இன்பத்திருக்கூத்தினை ஆடியருளினார். முனிவர் இருவரும் கண்களில் நீர்மல்க நெஞ்சம் நெகிழ்ந்துருகித் தலை மேற் கைகுவித்து வணங்கிப் போற்றினார்கள். காத்தற் கடவுளாகிய திருமாலும் படைத்தற் கடவுளாகிய நான்முகனும் இந்திரன் முதலிய தேவர்களும் மூவாயிரவராகிய முனிவர்களும் இறைவன் ஆடியருளிய ஆனந்த நிருத்தத்தினைக்கண்டு மகிழ்ந்து போற்றினார்கள். அத்திருக் கூத்தினைக்கண்டு மகிழ்ந்த பதஞ்சலியும் புலிமுனியும் தாம்பெற்ற பேரின்பத்தினை எல்லோரும் பெறும்படி அருள்புரிதல் வேண்டும் என்று இறைவனை இறைஞ்சி வேண்டிக்கொண்டார்கள். அன்று முதல் தில்லைச் சிற்றம்பலத்திலே இத்திருக்கூத்து என்றும் இடையீடின்றி நிகழும் அனவரத தாண்டவமாக (போது செய்யா நடமாக) நிகழ்ந்து வருகின்றது.
வியாக்கிரபாத முனிவரும் நாகராசாவாகிய பதஞ்சலி முனிவரும் கூத்தப்பெருமான் சந்நிதியிலே பரவசராய்க் கண்களில் ஆனந்தக் கண்ணீர் மல்க நின்றனர். அப்பொழுது கூத்தப்பெருமான் அவர்கள் பாற் கருணை கூர்ந்து 'உங்களுக்கு வேண்டும் வரங்கள் யாவை' எனத் திருவாய் மலர்ந்தருளினார். அந்நிலையில் வியாக்கிரபாத முனிவர் அன்பினால் மனங்கசிந்து தலை மேற் கைகுவித்து நின்று, 'பெருமானே, அடியேன் சிவாகமத்திற் கண்டபடியே முன்புபோல நாள் தோறும் யான் செய்கின்ற பூசனையை உண்மையாக ஏற்றருளுதல் வேண்டும். இது தவிர அடியேன் வேண்டும் வரம் வேறொன்றுமின்று' என விண்ணப்பம் செய்தார். பதஞ்சலி முனிவர் இறைவனை வணங்கி நின்று, ‘எல்லாம் வல்ல பெருமானே, நிலையில்லாத வாழ்க்கையையுடைய ஆன்மாக்கள் கண்களினாலே நின்னை இங்குத் தரிசிக்குந்தோறும் நிறைந்த ஞானவெளியாகிய இச்சபையிலே அன்புருவாகிய உமையம்மையாருடனே இன்று முதல் எக்காலமும் ஆனந்தத் திருக்கூத்தினையாடியருளத் திருவுளம் இரங்குதல் வேண்டும்', என வேண்டிக் கொண்டார். தேவர்கள் தேவனாகிய கூத்தப்பெருமான், முனிவர் இருவரும் வேண்டியவண்ணமே வரமளித்தருளினார். முனிவர் இருவரும் எல்லையில்லாத பெருமகிழ்ச்சியில் திளைத்தார்கள். உடனிருந்த எல்லா முனிவர்களும் ஆனந்த ஆரவாரம் செய்து பரவசமுற்றனர். வானோர் பூமழை பொழிந்தனர்.
நமக்கு விளக்கம் பொருந்திய ஞானமே அம்பலம், மெய்யுணர்வாகிய அது நம்மிற்பிரிவின்றி ஒன்றாயுள்ளது. பேரறிவாகிய அவ்வறிவு பூமியை விட்டுப்பிரியாது பூமிக்கு இதயத்தான மாகிய இத்தில்லைப்பதியாக அமைந்திருக்கும் உடம்பினுள்ளே தங்கிய ஆன்மாவிலே நாம் பிரியாதிருத்தல் போலவே, பூமியிலே ஞான வெளியாகிய இப்பதியிலே நாம் நீக்கமறத் தங்கியிருப்போம். ஆதலால், தேவர்களே இத்தில்லைப் பகுதியை வளைத்து ஒரு சபையாக அமையுங்கள்' எனக் கூத்தப் பெருமான் அங்குள்ள தேவர்களை நோக்கிப் பணித்தருளினார். அது கேட்ட தேவர்கள் அத்தகைய சபையை அமைப்பதற்கு வேண்டிய பொருள் யாது என்று அறியும் பொருட்டு இறைவன் சந்நிதியிலே மலர்களைத் தூவி வணங்கினார்கள். அப்பொழுது நடராசப்பெருமான் தேவர்களை நோக்கி 'பழைய வேதாகம நூல்களிலே ஞானமயமாகிய சபைக்கு இரண்மய கோசம் என்று ஒரு பெயருண்டு. அது பூவுலகத்தார் காணும் பொழுது முழுமையும் பொன்மயமாகும்' எனத்திருவாய் மலர்ந்தருளினார். அது கேட்ட தேவர்கள் மாற்றற்ற உயர்ந்த செம்பொன்னைக் கொண்டு அவ்விடத்தில் இறைவன் ஆடல் புரிதற்கேற்ற கனகசபையை அமைத்தார்கள்.
அன்று தொடங்கி அருளாளனாகிய நடராசப் பெருமான் சிவகாமியம்மையாரோடும் பொன்னம்பலத்திலே தேவர் முனிவர் முதலிய யாவரும் தம்முடைய திருக்கூத்தினைத் தரிசித்து உய்யும்படி அருள் புரிந்து விளங்குகின்றார்.
இறைவனது அனவரத தாண்டவத்தை இடைவிடாது தரிசித்து மகிழும் பெரு-வேட்கையால் திருமால் நான்முகன் இந்திரன் முதலிய தேவர்களும் வியாக்கிரபாதர், பதஞ்சலி மூவாயிர முனிவர் முதலியோரும் முத்தியை நல்கும் தில்லைப்பதியிலே தங்கிச் சிவலிங்கப் பிரதிட்டை செய்து நடராசப்பெருமானை நாள்தோறும் வழிபட்டிருந்தார்கள். நான்முகன் கங்கைக் கரையிலுள்ள அந்தர்வேதி என்னுமிடத்தே ஒரு வேள்வி செய்யத் தொடங்கினான் அவ்வேள்விக்குத் தில்லைவாழந்தணர்களையும் தேவர்களையும் அழைத்து வரும்படி நாரத முனிவரைத் தில்லைக்கு அனுப்பினான். நாரத முனிவரது சொல்லைக் கேட்ட முனிவர்களும் தேவர்களும் “இங்கே இறைவனது ஆனந்தத் திருக்கூத்தின் அமுதத்தைப்பருகும் நாங்கள் வேள்வியின் அவியை உண்ண வரமாட்டோம்" என்றனர். நாரதரும் திரும்பிச் சென்று பிரமதேவர்க்கு விண்ணப்பம் செய்தார். அது கேட்ட பிரமதேவர் தில்லை வனத்தையடைந்து சிவகங்கையில் நீராடிக் கூத்தப்பெருமானை வழிபட்டுத் திருமூலட்டானரை வணங்கி வியாக்கிர-பாதரையடைந்து அவர் வாயிலாகத் தில்லை வாழந்தணர்களையும் தேவர்களையும் தம்வேள்விக்கு வருமாறு இசைவித்து அந்தர்வேதிக்கு அழைத்துச் சென்று தமது வேள் வியை நிறைவு செய்தார்.
இமயமலைக்குத் தெற்கே கௌடதேசத்தையாண்டு கொண்டிருந்த அரசனாகிய ஐந்தாவது மனுவுக்கு மனைவியர் இருவர். அவர்களில் மூத்த மனைவிக்கு ஒரு மைந்தனும் இளைய மனைவிக்கு மைந்தர் இருவரும் பிறந்தனர். மூத்தவள் மைந்தன் சிங்கம் போல் வெண்ணிறமுடைய சிங்கவன்மன் ஆவன். இளையவள் மைந்தர் வேதவன்மன், சுவேதவன்மன் என்போர் அழகிய வடிவினர். மூத்தோனாகிய சிங்கவன்மன் என்பவன் தான் உடற் குற்றமுடைமையால் தன்னுடைய தம்பியர் இருவருள் ஒருவர் அரசுபுரிதற்குரியர் என்றும், தலயாத்திரை செய்து தீர்த்தங்களில் நீராடிச் சிலபெருமானை வழிபடுதலே தான் செய்தற்குரிய தென்றும் தெளிந்து தன் விருப்பத்தினைத் தந்தையிடம் விண்ணப்பஞ்செய்து காசி முதலிய தலங்களை வழிபட்டு, வழியிலே ஒரு வேடனைத் துணையாகக் கொண்டு காஞ்சியை அடைந்து திருவேகம்பரை வணங்கினான். தென்னாடெங்கும் யாத்திரை செய்ய எண்ணிய சிங்கவன்மன், வழிபார்த்து வரும்படி வேடனை முன்னே அனுப்பினான். முன் சென்ற வேடன் "தில்லைவனத்திலே ஒரு பொற்றாமரை வாவிக்கரையிலே ஒரு புலியன் நித்திரை செய்து கொண்டிருக்கின்றான்" என்று கூறினான்.
அதனைக் கேட்ட சிங்கவன்மன் தில்லை வனத்தையடைந்து சிவகங்கைக்கரையிலே சிவனைத் தியானித்துக்கொண்டிருக்கும் புலிக்கால் முனிவர் திருவடிகளில் விழுந்து வணங்கி நின்று, சிவனை நோக்கித் தவம் செய்யும் விருப்பினைத் தெரிவித்துக் கொண்டான். அவனது வரலாறனைத்தையும் தமது யோகக் காட்சியால் அறிந்து கொண்ட வியாக்கிரபாதர், அவனை நோக்கி 'உன் தந்தை மிக முதிர்ந்தவயதினன், அரசாளும் கடமை உனக்குரியது. ஆகவே நீ தவஞ் செய்ய எண்ணுதல் தகாது' என்றார். அதுகேட்ட சிங்கவன்மன் தனது உடல் நோய் அரசாட்சியினை மேற்கொள்ளுதற்குத் தடையாயிருத்தலை முனிவரிடம் தெரிவித்துக் கொண்டான். அப்பொழுது வியாக்கிரபாதர் 'நாம் வரும் வரையிலும் இங்கேநில்' என்று சிங்கவன்மனைச் சிவகங்கைக்கரையில் நிற்கச்செய்து பதஞ்சலி முனிவருடன் கூத்தப் பெருமான் சந்நிதியை யடைந்து அவ்விருவரும் இறைவனை வேண்டி நிற்க, அம்முதல்வன் அருள் புரிந்தவண்ணம் சிங்கவன்மளைச் சிவகங்கையில் நீராடச் செய்தனர். அவ்வாறே சிங்கவன்மன் சிவகங்கையில் நீராடிய நிலையில் உடல் நோய் முற்றும் நீங்கிப் பொன்னிறம் பெற்று இரணியவன்மனாக எழுந்தான். அந்நிலையில் வியாக்கிரபாத முனிவர் இரணியவன்மனுக்குத் திருவைந்தெழுத்து உபதேசித்து நடராசப் பெருமான் திருமுன்னே அவனையழைத்துச் சென்று இறைவனது திருக்கூத்துத் தரிசனத்தைக் காணும்படி செய்தருளினார்.
கூத்தப்பெருமானது திருவருள் பெற்ற, இரணியவன்மன், இறைவனது எல்லையில்லா ஆனந்தத் திருக்கூத்தில் திளைத்து நெஞ்சம் கசிந்து மெய்ம்மயிர் சிலிர்ப்பக் கண்ணீர் மல்கிப் பலமுறை விழுந்து வணங்கினான். வியாக்கிரபாதர் இரணியவன மனை அழைத்துக் கொண்டு திருமூலட்டானமுடையாரையும் திருப்புலீச்சுரமுடையாரையும் திருவனந்தேச்சுரமுடையாரையும் வணங்குலித்துத் தம் ஆசிரமத்தையடைந்து தம் மனைவியாரை நோக்கி 'நீ உபமன்னியுவுக்குப்பின் பெறாது பெற்றபிள்ளை இவ்விரணியவன்மன்' என்றார். உடனே இரணியவன்மனும் அன்னையின் திருவடிகளை வணங்கினான். அம்மையாரும், 'சபாநாதர் தமக்குத் தந்தருளிய இரத்தினம் இப்பிள்ளை' என அன்புடன் தழுவிக் கொண்டார். இரணியவன்மனும் நாள்தோறும் சிவகங்கையில் நீராடித் தில்லைப் பெருமானை வழிபட்டு வியாக்கிரபாதருக்கும் பதஞ்சலி முனிவர்க்கும் தொண்டு செய்துகொண்டு இருந்தனன்.
இவ்வாறிருக்கும் நாளில் கௌட தேச மன்னன் மனு தன் னுடைய அரசினை மூத்த குமாரனாகிய இரணியவன்மனைக் கொண்டு நடத்துவிக்கும்படி வசிட்ட முனிவரிடம் வேண்டிச் சுவர்க்கமடைந்தான். மனுவுக்குச் செய்யவேண்டிய ஈமச்சடங்கினை இளைய மைந்தர் இருவரும் செய்து முடித்தனர். வசிட்ட முனிவர் இரணியவன்மனை அழைத்து வருதற்பொருட்டுத் தில்லை வனத்தையடைந்து அதன் வடமேற்குத் திசையிலுள்ள திருக்களாஞ் செடி நிழலில் எழுந்தருளியுள்ள பிரமபுரீசரைப் பூசனை புரிந்தார். அதனையுணர்ந்த வியாக்கிரபாதர் இரணியவன்மனை நோக்கி, 'நாம் பூசையை முடித்துக்கொண்டு வருவோம்; நீ முன் செல்க', எனப்பணித்தருள அவன் முன் சென்று வசிட்ட முனிவரை வணங்கினான்; தன் தந்தை மனு சுவர்க்கமடைந்த செய்தியை வசிட்ட முனிவர் சொல்லக் கேட்டு வருத்தமுற்றான். அந்நிலையில் வியாக்கிர பாதரும் பதஞ்சலியும் அங்கு வந்தனர். முனிவர் மூவரும் இரணியவன்மனுக்கு ஆறுதல் கூறியருளினர்.
வியாக்கிரபாதரும் பதஞ்சலியும் வசிட்ட முனிவரை அழைத்துக் கொண்டு சென்று சிவகங்கையில் நீராடச் செய்வித்துக் கூத்தப் பெருமானையும் திருமூலட்டான முடையாரையும் திருப்புலீச்சுரமுடையாரையும் திருவனந்தீச்சுரமுடையாரையும் வணங்குவித்தனர், வியாக்கிரபாதர் தமது இல்லத்தில் வசிட்டரை அமுது செய்வித்தார்.
மறுநாள் வசிட்ட முனிவருடன் வியாக்கிரபாதரும் பதஞ்சலியும் கூடியிருந்தபொழுது இரணியவன்மன் அவர்கள் மூவரையும் வணங்கி இருந்தனன். அப்போது வசிட்ட முனிவர் வியாக்கிரபாதரை நோக்கி, 'இரணியவன்மனை அழைத்துக் செல்லுவதற்கு இங்கு வந்தேன்' என்றார். அதுகேட்ட வியாக்கிரபாதர் இரணியவன்மனை நோக்கி 'உன் கருத்து யாது?' என வினவினார். அவனும் முனிவரை வணங்கி நின்று, 'அடியேன் பொன்னம்பல வாணர்க்கும் உமக்கும் செய்யும் வழிபாட்டினை யன்றிப் பிறிதொன் றினையும் விரும்பேன்' என்றான். அதுகேட்ட வியாக்கிரபாதர் 'உன் கருத்து இதுவாயின் நீ வசிட்ட முனிலருடனே சென்று அரச முடியையும் இரத்தினம் பொன் முதலிய அரசுடைமைகளையும் யானை குதிரை தேர் காலாள் ஆகிய சேனைகளையும் அமைச்சர்களையும் கொண்டு விரைவில் இங்கு வருவாயாக, அவ்வாறு வரும் வழியில் அந்தர்வேதியில் வேள்விக்குச் சென்றிருக்கும் தில்லை மூவாயிரவர்களையும் உன்னுடன் அழைத்துக் கொண்டு வருவாயாக' எனப் பணித்தருளினார்.
இரணியவன்மன் கூத்தப் பெருமானையும் வியாக்கிரபாதரையும் அவர் மனைவியாரையும் பதஞ்சலி முனிவரையும் வணங்கி விடைபெற்றுக்கொண்டு வசிட்ட முனிவருடன் கௌட தேசத்தை அடைத்தான். தம்பிமார்களும் நகரமக்களும் எதிர்கொள்ளத் தன் நகரத்திற் சென்று, 'தாய் முதலியோரை வணங்கி, சில நாள் அங்கே தங்கியிருந்தான். பின்பு தம்பிமார் அமைச்சர் முதலியோருடன் தில்லைக்குப் புறப்பட்டு, வழியில் அந்தர்வேதியை அடைந்து அங்கிருந்த தில்லை மூவாயிரவரையும் தேர்களில் ஏற்றிக்கொண்டு தில்லை வனத்தினை அடைந்தான். அவனுடன் வந்த அந்தணர்கள் தாங்கள் ஏறி வந்த தேர்களைக் கனகசபையின் வடமேற்குப் பக்கத்தில் நிறுத்திக் கொண்டு இறங்கினர். மூவாயிரவரும் வியாக்கிரபாத முனிவர்க்குத் தங்களை எண்ணிக் காட்டிய பொழுது அவருள் ஒருவரைக் கானவில்லை. அந்நிலையில் இரவனியவன்மன் திகைத்து நின்றான். அப்பொழுது அங்குள்ள எல்லாரும் கேட்கும்படி, 'இவ் அந்தணர்கள் எல்லோரும் நம்மை ஒப்பாவர்; நாம் இவர்களில் ஒருவர்' என்றதொரு அருள்மொழி
தில்லையம்பலவாணர் திருவருளால் தோன்றியது. அது கேட்ட அந்தணர்கள் அச்சமும் நடுக்கமும் உடையவராய் தங்களுக்குள்ளே, ஒருவர் ஒருவரை வணங்கி எழுந்து பொன்னம்பலத்தை வலம் வந்து 'கூத்தப்பெருமானைப் போற்றி அம்பலத்தைச் சூழ இருந்தார்கள். உத்திரவேதியில் திகழ்ந்த வேள்விக்குச் சென்றிருந்த மூவாயிரவரும், கனகசபையின் வடமேற்குப் பகுதியில் தேரை நிறுத்தி இறங்கினர். இத்தலபுராணச் செய்தியை நினைவு கூறும் முறையில் பாண்டிய நாயகத்தூண்களில் தேர்கள் செதுக்கப் பெற்றுள்ளமை காணலாம். இரணியவன்மன் தில்லையின் கிழக்குத்திசையிலே 'கொற்றவன் குடி' என ஒரு நகரம் செய்வித்து அங்கிருந்தான். அங்கு அரசு வீற்றிருந்தான்.
தில்லையில் எல்லோரும் இறைவனது திருக்கூத்துத் தரிசனம் செய்து கொண்டிருக்கும் நாளில் வியாக்கிரபாத முனிவர் "இரணியவன்மன் இந்நாட்டினை ஆளக்கடவன்: இவன் தம்பிமார் கௌட தேசத்தை ஆளக்கடவர்" என்றார். அதுகேட்டு மகிழ்ந்த பதஞ்சலி முனிவரும் வசிட்ட முனிவரும் ஏனைய முனிவர்களும் அப்படியேயாகுக' என்றனர். வியாக்கிரபாதர் இரணியவன்மனுக்குத் திருமணம் செய்வித்து முடிசூட்டிப் புலிக் கொடி கொடுத்துச் சோழ மன்னனாகச் செய்தார். இரணியவன்மனுடைய தம்பிமார் விடைபெற்றுக்கொண்டு நால்வகைச் சேனைகள் சூழச்சென்று கௌட தேசத்தை அடைந்து அந்நாட்டினை ஆட்சி புரிந்தனர். இரணியவன்மன் வியாக்கிரபாத முனிவர் பணித்த வண்ணம் கூத்தப் பெருமானுக்குத் திருவம்பலமும், திருமூலட்டானேசுரர்க்குத் திருக்கோயிலும் பிற திருப்பணிகளும் செய்து நாள் வழிபாட்டிற்கும் திருவிழாக்களுக்கும் வேண்டிய நிபந்தங்களைச் செய்தனன். இத்தொன்மை வரலாறு உமாபதி சிவாசாரியார் பாடிய கோயிற் புராணத்தில் விரித்துக் கூறப்பெற்றுள்ளது.
கண்ணபிரானுக்குச் சிவ தீக்கை செய்த உபமன்யு முனிவரும் தில்லைக்கு வந்து கூத்தப் பெருமானது திருநடனத்தைக் கண்டு வணங்கி நல்வாழ்வு பெற்றார். சாமவேதத் தலைவர்களுள் ஒருவராகிய சைமினி முனிவர் என்பவர் வேதம் ஒருவராற் செய்யப்படாது சுயம்புவாயுள்ளது. அது கரும காண்டம் ஞான காண்டம் என்னும் இருபகுதிகளை-யுடையது. இவ்விரு பகுதிகளுள் கருமகாண்டம் ஒன்றினையே பிரமாணமாகக் கொண்டு வேத வேள்விகளாகிய கிரியைகளையே வற்புறுத்தி மீமாஞ்சக நூலை இயற்றியவர் சைமினி முனிவர். வேதம் எல்லாம் விதி, புனைந்துரை, மந்திரம், குறியீடு என நால்வகையுள் அடங்கும். இந்நான்கினுள் விதிவாக்கியங்களே பிரமாணமாகக் கொள்ளப்படும். வேதத்துள் விதித்தன செய்தலும் விலக்கியன ஒழிதலுமே செய்யத்தக்கன. உயிர்களுக்கு வேறாகக் கடவுள் என்பதொரு பொருளில்லை. காணப்படும் உலகமே மெய்ப்பொருள் என்பன மீமாஞ்சை நூலிற் கூறப்படும் பொருள்களாகும். சிவபெருமான் பிட்சாடனராகவும் திருமால் மோகினியாகவும் சென்று ஆட்கொள்வதற்கு முன் தாருகா வனத்து முனிவர்கள் இந்த மீமாஞ்சை மதத்தையே மேற்கொண்டு ஒழுகினர் என்பதும், தாங்கள் செய்த அபிசார வேள்வியால் அழிவுறாது சிவபெருமான் நிகழ்த்தியருளிய தாண்டவத்தினைக் கண்டு உள்ளந்திருந்தி இறைவனைவழி பட்டுய்தி பெற்றனர் என்பதும் முன்னர்க்கூறப்பட்டன. மீமாஞ்சை நூல் செய்த சைமினி முனிவர் தமது கொள்கை தவறுடையதென்றுணர்ந்து இச்சிதம்பரத்திலே வந்து தில்லைக் கூத்தப்பெருமானை வணங்கி வேத பாதஸ்தவம் என்ற பனுவலால் இறைவனைத் துதித்துப் போற்றினர். ஸ்தலம்- தோத்திரம்- வேதபாதம்- வேதத்தினடி முதல் மூன்றடிகள் தமது வாக்காகவும் நான்காமடி வேதத் தொடராகவும் அமைய சைமினி முனிவராலே செய்யப்பெற்ற தோத்திரமாதலின் இந்நூல் வேதபாதஸ்தவம் என்னும் பெயருடைய தாயிற்று.
----------
3. மூர்த்தியும் தீர்த்தமும்
எல்லாம் வல்ல இறைவன் ஆன்மாக்கள் தன்னையுணர்ந்து வழிபட்டு உய்திபெறுதல் வேண்டும் பெருங்கருணைத் திறத்தால் அன்பர்கள் தம் உள்ளத்து எண்ணிய பலவேறு திருவுருவங்களாகிய மூர்த்தியாகவும், அம்மூர்த்தி கோயில் கொண்டெழுந்தருளிய திருத்தலங்களாகவும், அங்கு வழிபடவரும் அன்பர்களின் அகத்தையும் புறத்தையும் தூய்மை செய்யும் தீர்த்தங்களாகவும் திகழ்கின்றான் என்பது நம் முன்னோர் தம் வாழ்வியலிற் கண்டுணர்ந்த பேருண்மையாகும். சிவநெறிச் செல்வர்களாற் கோயில் எனச் சிறப்பித்தும் போற்றப்பெறும் பெரும் பற்றப்புலியூராகிய தில்லைப்பதி மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் முத்திறத்தாலும் சிறந்து விளங்குகின்றது. இவ்வுண்மையினை,
"தீர்த்த மென்பது சிவகங் கையே
ஏத்த குந்தலம் எழிற்புலி யூரே
மூர்த்தி யம்பலக் கூத்தன துருவே" (சிதம்பரச்செய்யுட்கோவை)
எனவரும் பாடலிற் குமரகுருபர அடிகளார் எடுத்துரைத்துப் போற்றியுள்ளார்.
தில்லைப் பெருங் கோயிலில் பழமையான மூர்த்தி அருவுருவத் திருமேனியாகிய சிவலிங்க உருவில் எழுந்தருளிய திரு மூலட்டானேச்சுரர். பாதாளத்திலிருந்து தோன்றிய மலையின் கொழுந்தாக முளைத்தெழுந்த மூர்த்தி இச்சிவலிங்கத் திருவுருவமாகும். மத்தியந்தன முனிவருடைய மைந்தராகிய வியாக்கிரபாதர் தில்லை வனத்திற்கு வந்து சிவலிங்கப் பெருமானைத் தமது பெரும் பற்றாகக் கொண்டு வழிபாடு செய்தார். அது பற்றியே இத்தலம் பெரும்பற்றப்புலியூரெனவும், இங்கு எழுந்தருளிய சிவலிங்கத் திருமேனியின் சந்நிதி திருமூலட்டானம் எனவும். வழங்கப் பெறுவன ஆயின. கண்களால் காண இயலாத இறைவனது அருவத்திருமேனிக்கும் கண்களாற் காணக்கூடிய உருவத்திருமேனிக்கும் மூலகாரணமாய்த் திகழ்வது அருவுருவமாகிய இச் சிவலிங்கத் திருமேனியே. இந்நுட்பம்,
"காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணமாய்
நீணாகம் அணிந்தார்க்கு நிகழ் குறியாம் சிவலிங்கம்" (பெரிய சாக்கிய:)
எனவரும் சேக்கிழார் நாயனார் வாய் மொழியால் நன்கு புலனாகும். இவ்வாறு எல்லாம் வல்ல இறைவன் தன்னை அன்பினால் வழிபடும் அடியார்கள் எல்லோர்க்கும் அவரவர் நினைந்த உருவில் தோன்றி அருளும் எல்லாத் திருவுருவங்களுக்கும் மூலமாய்த் திகழ்வது சிவலிங்கத் திருமேனியேயாதலால், ஒங்வொரு திருக்கோயிவிலும் சிவலிங்கத்திருவுருவம் அமைந்த கருவறை மூலஸ்தானம் என வழங்கப்பெறுவதாயிற்று. மூலஸ்தானம். என்னும் வடசொற்றொடர் தமிழொலிக்கேற்ப, மூலட்டானம் எனத் திரிந்து திரு என்னும் அடைமொழி பெற்றுத் திருமூலட்டானம் என வழங்கப்பெறுவதாயிற்று. திருமுறை ஆசிரியர்களால் பரவிப் போற்றப் பெற்று எல்லாத் திருத்தலங்களிலும் இறைவன் அருவுருவத் திருமேனியாகிய சிவலிங்கத் திருவுருடேனேயே எழுந்தருளியிருக்கக் காண்கின்றோம் ஆயினும் தில்லைவனமாகிய பெரும்பற்றப்புலியூரிலும் திருவாரூரிலும் உள்ள சிவலிங்கப் பெருமான் சந்நிதிகள் இரண்டினை மட்டும் திருமூலட்டானம் என்றபெயரால் வழங்கி வருகின்றோம்.
"பெரும்பற்றப்புலியூர் திருமூலட்டானத்தார்”
எனவும்,
"திருவாரூரில் திருமூலட்டானத்தெஞ் செல்வன் தானே" (6-30-1-10)
எனவும் திருநாவுக்கரசர் சிறப்பித்துப் போற்றியுள்ளமையால் இவ்வழக்கின் தொன்மை புலனாகும்.
சிவத்தலங்கள் எல்லாவற்றிலும் தாவரம் (நிலைத்த திருவுருவம்) ஆகச் சிவலிங்கமும், திருவீதிக்கு எழுந்தருளும் திருமேனியாகச் சோமாஸ்கந்தர் சந்திரசேகரர் முதலிய திருவுருவங்களும் வழிபாடு செய்யப்பெற்று வருவதனைக் காண்கின்றோம். இங்குக் கூறப்பெற்ற எழுந்தருளும் திருமேனிகள் அனைத்தும் தாவரம் என மேற்சொல்லப்பட்ட சிவலிங்கத் திருமேனியின் திருவுலாத் திருவுருவங்களாகவே அடங்குவன. தில்லைப் பொன்னம்பலத்தில் எழுந்தருளியுள்ள, கூத்தப் பெருமான் திருமேனியும் திருவாரூர்த் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள தியாகராசப் பெருமான் திருமேனியும் அங்குள்ள சிவலிங்கத் திருமேனியையொத்து மூலட்டான அமைப்பில் அமைந்தனவாகவே போற்றப்பெறுவனவாகும். சைவ, சமய ஆசிரியர்கள் நால்வரும் தில்லைத் திருமூலட்டானப் பெருமானைப் போற்றிப் பரவும் முறையில் தில்லைச் சிற்றம்பலப் பெருமான் முன்னே நின்று செந்தமிழ்ப்பனுவல்களால் பரவிப் போற்றியுள்ளார்கள். "சிற்றம்பலமேய முற்றாவெண்டிங்கள் முதல்வன் பாதமே, பற்றா நின்றாரைப் பற்றா பாவமே” எனத் திருஞானசம்பந்தரும்,
"குனித்த புருவமும் கொவ்வைச்செவ் வாயிற் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால்வெண்ணீறும்
இனித்த முடைய எடுத்தபொற் பாதமும் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவ தேயிந்த மாநிலத்தே" (4-81-4)
எனத் திருநாவுக்கரசரும், "புலியூர்ச்சிற்றம்பலத்தெம் பெருமானைப் பெற்றாமன்றே" எனச் சுந்தரரும் 'தென்பாலு கந்தாடும் தில்லைச் சிற்றம்பலவன்' என மணிவாசகப் பெருமானும், தில்லைச் சிற்றம்பவத்தில் ஆடல்புரியும் அம்பலவாணர் திருவுருவத்தினையே சிறப்பாகப் பாடிப் போற்றியுள்ளமை காணலாம். இவ்வாறே, திருவாரூரில் திருமூலட்டானத்தில் எழுந்தருளிய புற்றிடங்கொண்ட பெருமானைப் பரவிப்போற்றிய சுந்தரர், "வீதிவிடங்கப் பெருமான் முன்பு சென்று தொழுது துதித்து வாழ்ந்து திருமாளிகை வலம் செய்து போந்தார்" (பெரிய தடுத்தாட்-129) எனச் சேக்கிழாரடிகள் கூறுவதாலும், திருநாவுக்கரசர் அருளிய 'முத்து விதானம் மணிப் பொற் கவரி' எனத்தொடங்கும் திரு ஆதிரைத் திருப்பதிகத்தில் வீதி விடங்கப் பெருமானாகிய தியாகராசப்பெருமான் அடியார் புடைசூழத் திருவீதிக்கெழுந்தருளும் திருவுலாக்காட்சியைப் பரவிப் போற்றியிருத்தலாலும், திருவாரூரில் புற்றிடங்கொண்ட பெருமான் எழுந்தருளிய திருமூலட்டானம் என்னும் சந்நிதியைப் போலவே தியாகராசப் பெருமான் எழுந்தருளிய சந்நிதியும் முதன்மையுடையதாகப் போற்றப் பெற்று வந்தமை புலனாகும். ஆசுவே தில்லை, திருவாரூர் ஆகிய இவ்விரு தலங்களிலுமுள்ள சிறப்புடைய சந்நிதிகளாகவுள்ள இவற்றைக் குறிப்பிற் புலப்படுத்தும் வகையில் இங்குள்ள மூலத்தானமுடையார் சந்நிதி 'பெரும்பற்றப்புலியூர்த் திருமூலட்டானம்' எனவும், திருவாரூர்த் திருமூலட்டானம் எனவும், இனமுள்ள அடைமொழி கொடுத்து வழங்கப் பெறுவதாயிற்று.
தில்லைப் பெரும்பற்றப்புலியூரில் எல்லாம்வல்ல சிவபெருமான் பதஞ்சலியும் புலிமுனியும் வேண்டிக் கொண்ட வண்ணம் தில்லைப் பொன்னம்பலத்திலே சிவகாமியம்மை கண்டுகளிக்க வானோர்கள் போற்ற ஆனந்தத் திருக்கூத்து ஆடியருள்கின்றார். இத்தெய்வக்காட்சியினை,
கருமானின் உரியதளே உடையா வீக்கிக்
கனை கழல்கள் கலந்தொலிப்ப அனல்கை ஏந்தி,
வருமானத் திரள் தோள்கள் மட்டித் தாட
வளர்மதியஞ் சடைக்கணித்து மானேர் நோக்கி
அருமான வாண்முகத்தா னமர்ந்து காண
அமரர்கணம் முடி வணங்க ஆடு கின்ற
பெருமானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.
என வரும் திருப்பாடலில் திருநாவுக்கரசர் சொல்லோவியஞ் செய்து காட்டியுள்ளார்.
எல்லாம் வல்ல இறைவனைக் கூத்தப்பெருமான் திருவுருவில் வைத்து வழிபடும் முறை எக்காலத்தில் தோன்றியது என்பது இங்குச் சிந்தித்தற்கு உரியதாகும். மொகஞ்சதரோ, அரப்பா என்ற இடங்களில் நிகழ்ந்த அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ள சிவலிங்கம் முதலிய தெய்வ உருவங்களின் ஆண்சிலையொன்று இடதுகாலைத் தூக்கி வலதுகாலை யூன்றி நின்று நடம்புரியும் நிலையில் காணப்பெறுகின்றது. இதனைச் சிவபெருமானுக்குரிய திருவுருவங்களில் ஒன்றாகிய நடராசர் - திருவுருவத்தின் பழைய உருவமாகக் கருதுவர் ஆராய்ச்சியாளர். சிவபெருமான் மன்னுயிர்கள் உய்ய வேண்டி உலகங்களையெல்லாம் படைத்தும், காத்தும் ஒடுக்கியும் ஆடவல்ல கூத்தப்-பெருமானாகத் திகழ்கின்றான் என்பதும், அம்முதல்வனது ஆடலாலே உலகவுயிர்கள் இயங்குகின்றன என்பதும், அவன் ஆடியருளும் திருக்கூத்தினை அவனுடன் பிரியாதிருந்து கண்டு உயிர்களுக்கு நலஞ்செய்பவள் அவனிற்பிரியாத திருவருட்-சத்தியாகிய உமையம்மையென்பதும், சைவ நூல்களின் துணிபாகும். இவ்வாறு உமையம்மை காண ஆடல்புரியும் இறைவனை முன்னிலையாக்கிப்பரவிப் போற்றுவதாக அமைந்தது 'ஆற்றி அந்தணர்க்கு அருமறை பல பகர்ந்து' எனத் தொடங்கும் கலித்தொகைக் கடவுள் வாழ்த்துப் பாடலாகும்.
முனிவர்களுக்கு அருமறைகளை அருளிச்செய்து பெருகிவரும் கங்கைவெள்ளத்தைத் தன் சடையில் ஏற்று முப்புரத்திலே தீயைச் செலுத்தி வாக்கு மனங்கடந்து நிற்கும் நீலமணிபோலும் மிடற்றினையுடைய இறைவன், தன்னால் தோற்றுவிக்கப்பட்ட பலவடிவுகளையும் மீண்டும் தன்னிடத்தே ஒடுக்கிக்கொண்டு உமையம்மையார் சீர் என்னும் தாள முடிவினைத் தர, கொடு கொட்டி என்னும் கூத்தினை ஆடியருளினான் எனவும், அவன் முப்புரங்களை வென்று அந்த வன்மையினாலே முப்புரத்து அவுணர்கள் வெந்து வீழ்ந்த சாம்பராகிய நீற்றினை அணிந்து கொண்டு பாண்டரங்கம் என்னும் கூத்தினை ஆடியபொழுது பராசக்தியாகிய, அம்மை இடை நிகழும் தூக்கு என்னும் தாளத்தைத் தருவாள் எனவும், கொலைத் தொழிலையுடைய புலியைக் கொன்று அதன் தோலையுடுத்து, கொன்றைப்பூமாலை தோளிலே புரண்டசைய அயனுடைய தலையினை அகங்கையிலே ஏந்திச்சிவபெருமான் காபாலம் என்னும் கூத்தினை ஆடியருளிய பொழுது மலைமகளாகிய உமையம்மையார் தாளத்தின் முதலெடுப்பாகிய பாணியைத் தருவாள் எனவும், இவ்வாறு தாளத்தின் தொடங்கும் காலமாகிய பாணியும் இடை நிகழுங்காலமாகிய தூக்கும் முடியுங்காலமாகிய சீரும் ஆகிய தாளக் கூறு பாட்டை உமாதேவியார் உடனிருந்து காப்ப, எல்லாம் வல்ல இறைவன் மன்னுயிர்கள் உய்திபெற ஆடல்புரிகின்றான் எனவும் மேற்குறித்த கடவுள் வாழ்த்துப் பாடலில் நல்லந்துவனார் என்னும் புலவர் இறைவன் ஆடிய கொடு கொட்டி பாண்டரங்கம் காபாலம் என்னும் மூவகைக் கூத்துக்களையும் முறையே விளக்கிக் கூறியுள்ளார். வாக்கால் கூறப்படாமல் மனத்தால் குறித்த எவ்வகைப் பொருட்கும் எட்டாமல் சொல்லின் வரம்பையும் பொருளின் எல்லையையும் கடந்து நின்ற இறைவன், தன்னை அன்பினால் வழிபடுவோரது உள்ளத்தின்கண் எண்தோள் வீசி நின்று ஆடும் பிரானாகத் தோன்றி அருள்புரிகின்றான் என்பது இக்கலித்தொகைக் கடவுள் வாழ்த்துப்பாடலால் உணர்த்தப் பெறும் உண்மையாகும். இப் பாடலில் குறிக்கப்பெற்ற மூவகைக் கூத்துக்களுள் கொடு கொட்டி என்பது, இறைவன் எல்லா உலகங்களையும் அழித்து நின்று ஆடுதலின் கொடுங் கொட்டி என்னும் பெயருடையதாயிற்று. எல்லாத்தேவரினும் உயர்ந்தவராகிய மகாதேவன் என்னும் இறைவன் அவுணரது முப்புரங்களைத் தீயூட்டி வெற்றிக் களிப்பால் கை கொட்டி நின்று ஆடியது கொடு கொட்டி என்னும் ஆடலாகும். “திரிபுரம் தீமடுத்து எரியக் கண்டு இரங்காது நின்று கைகொட்டி ஆடுதலின் கொடுகொட்டி என்று பெயர் கூறினார்" என்பர் அடியார்க்கு நல்லார். இக்கூத்தினைப் சேரநாட்டிற் பறையூர் என்னும் ஊரில் வாழ்ந்த கூத்தச் சாக்கையன் என்பான் சேரன் செங்குட்டுவன் முன் ஆடிக்காட்டினான் என்ற செய்தியை இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் நடுகற் காதையில் விளக்கியுள்ளார். தேர்முன் நின்ற திசைமுகன் காணும்படி இறைவன் வெண்ணீற்றையணிந்து ஆடியது பாண்டரங்கம் என்னும் கூத்தாகும். முப்புரங்களை வென்று அந்தவலியாலே முப்புரத்து அவுணர்கள் வெந்துவீழ்ந்த வெண்ணீற்றை (சாம்பலை} அணிந்து இறைவன் ஆடுதலினாலே இக்கூத்து பாண்டரங்கம் என்னும் பெயர்த்தாயிற்று எனவும், பாண்டரங்கம் என்பதே பண்டரங்கம் எனத் திரிந்தது எனவும் கருதுவர் நச்சினார்க்கினியர், பாண்டரம் வெண்மை; இங்கு வெண்ணீற்றைக் குறித்தது. வெண்மை வாய்ந்த திருநீற்றை யணிந்து ஆடுதலால் பாண்டரங்கம் என்னும் பெயருடையதாயிற்று. திருவெண்ணீறு பராசக்தியின் வடிவமாம் என்பது, ‘பராவணமாவது நீறு' என வரும் சம்பந்தர் வாக்கால் புலனாகும்.
காபாலம் என்பது சிவபெருமான் பிரமனது தலையைக் கிள்ளி அகங்கையில் ஏந்தி ஆடிய கூத்தாகும். அயனது, மண்டை ஓடாகிய பிரமகபாலத்தைக் கையிலேந்தி ஆடுதலின் இது காபாலம் என்னும் பெயர்த்தாயிற்று. இம்மூன்று கூத்துக்களும் இறைவன் அழித்தற்றொழிலை, நிகழ்த்துங்காலத்தில் ஆடப் பெறுவனவாகும். இச்செய்தி,
"பல்லுருவம் பெயர்த்து நீ கொடு கொட்டி யாடுங்கால்"
“மண்டமர் பலகடந்து மதுகையால் நீறணிந்து பண்டரங்கம் ஆடுங்கால்"
"தலை அங்கை கொண்டு நீகாபாலம் ஆடுங்கால்" என
வரும் கலித்தொகைத் தொடர்களாலும், அழித்தற்றொழிலை நிகழ்த்துகின்ற காலங்களிலே பாணியும் தூக்கும் சீரும் என்று சொல்லப்பட்ட இவையிற்றை மாட்சிமைப்பட்ட அணியினையுடைய உமாதேவி காப்ப ஆடி" என வரும் நச்சினார்க்கினியர் உரையாலும் நன்கு புலனாகும்.
ஆடல்மகளாகிய மாதவி, சிவபெருமான் முதலிய தெய்வங்களால் நிகழ்த்தப்பெற்ற கொடுகொட்டி முதலிய பதினொரு ஆடல்களையும், ஆடிக்காட்டிய செய்தியினைச் சிலப்பதிகாரம் கடலாடுகாதையில் இளங்கோவடிகள் குறித்துள்ளார். தெய்வங்களின் ஆடல்களாக அமைந்த பதினொரு ஆடல்களில் சிவபெருமான் ஆடிய கொடுகொட்டியும் பாண்டரங்கமும் இடம்பெற்றிருத்தல் காணலாம்.
தன் அருள் வழி நில்லாதவர்களை அச்சுறுத்திப் பின்னர் அடிமை கொள்ளும் முறையில் இறைவன் இயற்றியருளும் திருக் கூத்துக்களும், அன்புடைய அடியார்களுக்கு அமைதி நல்கும் முறையில் ஆடும் திருக்கூத்துக்களும் என இறைவன் ஆடியருளும் தாண்டவத்தினை இருவகையாகப் பகுத்துரைக்கலாம். தேவதாரு வனத்து முனிவர்கள் மீமாம்சை நூலை, உண்மை நூலெனக் கொண்ட மயக்கத்தினாலே வேதம் விதித்த கரும காண்டம் ஞான காண்டம் என்னும் இரண்டினுள் கரும காண்டத்தையே மேற்கொண்டு ஞான காண்டத்தை ஒதுக்கிவிட்டுக் கருமங்களை மட்டும் செய்து, தம் மனைவியர்-களுக்கும் அக்கொள்கையைப் போதித்து, கடவுள் வழிபாட்டை இகழ்ந்திருந்தனர் என்பதும் அவர்களைத் திருத்துதற்பொருட்டே சிலபெருமான் பிச்சைக் கோலத்தை-யுடையராய், திருமாலை அழகிய பெண்னுருவில் தம்முடன் அழைத்துச் சென்று அம்முனிவர்களது தவத்திண்மையினையும், அம் முனிவர் மனைவியரது கற்பின் திண்மையினையும், நிலை கலங்கச் செய்தனர். அந்நிலையிலே அம்முனிவர்கள் வெகுண்டு ஆபிசார வேள்வியைச் செய்து அவ் வேள்வியினின்றும் புலி பாம்பு பூதங்கள் தீ முயலகன், மந்திரங்கள் எல்லாவற்றையும் தோற்றுவித்து அழிக்க ஏவிய போது சிவபெருமான் அவற்றையெல்லாம் தனக்குள் அடக்கிக்கொண்டு ஆடல் செய்யத் தொடங்கினார். அவ்வாடலைக்காணப்பெறாது அஞ்சிய முனிவர்கள், தம் பிழையினைப்பொறுத்துக் கொள்ளும்படி இறைவனைப் பணிந்து வேண்டினார். அந்நிலையில் சிவபெருமான் உமாதேவியும் திருமாலும் கண்டு மகிழ ஐந்தொழில் திருக்கூத்தாகிய ஆனந்தத் தாண்டலத்தை ஆடியருளினார் என்பதும், உலகில் மன்னுயிர்கள் அமைதியடைய ஆடிய அவ்வானந்தத் திருக்கூத்தினையே பதஞ்சலி முனிவரும் வியாக்கிரபாதரும் வேண்டிக் கொண்டபடி, தில்லைச்சிற்றம்பலத்திலே ஆடியருளினார் என்பதும் முன்னர்க்கூறப்பெற்றன. இத்தாண்டவங்களுள் படைத்தற் றொழிலை நிகழ்த்தும் காளிகாதாண்டவம் திருநெல்வேலி தாமிர சபையிலும், காத்தற்றொழிலை நிகழ்த்தும் கவுரிதாண்டவம் திருப்புத்தூர்ச் சிற்சபையிலும், சந்தியா தாண்டவம், மதுரை வெள்ளியம் பலத்திலும் அழித்தற் தொழிலை நிகழ்த்தும் சம்கார தாண்டவம் உலகமெல்லாம் ஒடுங்கிய ஊழிக்காலமாகிய நள்ளிரவிலும், மறைத்தற்றொழிலை நிகழ்த்தும் திரிபுர தாண்டவம் திருக்குற்றாலச் சித்திரசபையிலும், அருளல் தொழிலை திகழ்த்தும் ஊர்த்துவ தாண்டவம் திருவாலங்காட்டில் இரத்தின சபையிலும், மேற்கூறிய ஐந்தொழில்களையும் ஒருங்கே நிகழ்த்தும் ஆனந்தத் தாண்டவம் தில்லைச்சிற்றம்பலத்திலும் நிகழும் எனத் திருப்புத்தூர்ப் புராணம் கூறும்.
தில்லையில் கூத்தப்பெருமானை வழிபாடு செய்யும் மூவாயிரவராகிய தில்லைவாழந்தணர் என்னும் தொகையடியார்களைப்பற்றிய வரலாறு கூறுவது பெரியபுராணத்திலுள்ள தில்லைவாழந்தணர் புராணமாகும். இப்புராணத் தொடக்கத்திலே அமைந்த முதலிரண்டு பாடல்கள் தில்லைச்சிற்றம்பலத்தைப் போற்றிப் பரவுவன.
ஆதியாய் நடுவு மாகி அளவிலா அளவு மாகிச்
சோதியாய் உணர்வு மாகித் தோன்றிய பொருளு மாகிப்
பேதியா ஏக மாகிப் பெண்ணுமாய் ஆணு மாகிப்
போதியா நிற்கும் தில்லைப் பொதுநடம் போற்றி போற்றி.
எனவரும் முதற்பாடல், உலகங்களையெல்லாம் தோற்றுவித்து நிலைபெறச்செய்து பின் தன்னுள் ஒடுக்கிக் கொள்ளும் நிலையில் உயிர்க்குயிராய் எல்லாப் பொருள்களோடும் கலந்து நின்றருளும் இறைவன் சிவகாமியம்மை கண்டு மகிழ ஆனந்தத்திருக்கூத்து ஆடியருளும் உருவத்திருமேனியைப் போற்றும் முறையில் அமைந்ததாகும்.
“கற்பனை கடந்த சோதி கருணையே உருவ மாகி
அற்புதக் கோல நீடி அருமறைச் சிரத்தின் மேலாம்
சிற்பர வியோம மாகுந் திருச்சிற்றம் பலத்துள் நின்று
பொற்புடன் நடஞ்செய் கின்ற பூங்கழல் போற்றி போற்றி”
எனவரும் பாடல் அருமறைச் சிரத்தின் மேலாம் ஞானவெளியிலே கற்பனைக்கெட்டாத சோதிப்பொருளாய்த் திருநடம்புரிந்தருளும் இறைவனது அருவநிலையினைக் குறிப்பதாகும். தில்லைச்சிற்றம்பலத்திலே சிவகாமியம்மை காண ஆடியருளும் நடராசப்பெருமான் திருவுருவம், அம் முதல்வனது உருவத் திருமேனியையும், நடராசர்க்கு அருகே மேற்குப்பக்கத்திலுள்ள திருவம்பலச் சக்கரமாகிய சிதம்பர ரகசியம் இறைவனது அருவத் திருமேனியையும் குறிப்பனவாகும். பொன்னம்பலத்திலே நாள் தோறும் ஆறு காலங்களிலும் திருமஞ்சனப் பூசை கொண்டு அருளுகிற சந்திரமௌளீஸ்-வரராகிய படிகலிங்கம் இறைவனது அருவுருவத் திருமேனியையும் குறிப்பதாகும். ஆகவே தில்லைச் சிற்றம்பலத்தே உருவம், அருவம், அருவுருவம் என மூவகைத் திருமேனிகளாக இறைவன் அமர்ந்திருந்து, அன்பர்களது வழி பாட்டினையேற்று அருள் புரிகின்றான் என்பர் பெரியோர். தில்லைவாழந்தணருள் ஒருவரும் சைவசமய சந்தான ஆசாரியருள் நான்காமவரும். ஆகிய உமாபதி சிவாசாரியார் தாமியற்றிய கோயிற் புராணத்தில்,
"ஓங்கும்ஒளி வெளியேநின்று உலகுதொழ நடமாடும்
தேங்கமழும் பொழில்தில்லைத் திருச்சிற்றம் பலம் போற்றி"
எனவும்,
"காரணங் கற்பனை கடந்த கருணைதிரு வுருவாகிப்
பேரணங்கி னுடனாடும் பெரும்பற்றப் புலியூர்சேர்
சீரணங்கு மணிமாடத் திருச்சிற்றம்பலம் போற்றி"
எனவும்,
"சிற்பரமாம் அம்பரமாம் திருச்சிற்றம்பலம் போற்றி"
எனவும் இறைவனுக்குரிய அருவுருத்திருமேனி, உருவத்திருமேனி, அருவத்திருமேனி ஆகிய மூவகைத் திருமேனிகளையும் முறையே போற்றியுள்ளார்.
இங்கு எடுத்துக்காட்டிய மூன்று பாடற்றொடர்களும் தில்லைச்சிற்றம்பலத்தில் நாள்தோறும் நிகழ்ந்து வரும் வழிபாட்டு முறையினை நன்கு புலப்படுத்துவனவாகும்.
வளமார்ந்த தில்லைச்சிற்றம்பலத்தில் இறைவன் நிகழ்த்தியருளும் அற்புதத் திருக்கூத்து உலக வாழ்க்கையில் மக்களுக்கு நேரும் அச்சத்தை அகற்றி ஆனந்தம் நல்குதற் பொருட்டே நிகழ்வது எனவும், இத்திருக்கூத்து நிகழாதாயின் உலகில் கொடியோர்களால் பேரிடர் விளையும் எனவும், அவ்விடையூறுகளை விலக்குதற் பொருட்டுக் கோர சத்தியாகிய காளியின் கொடுங்கூத்து நிகழவேண்டிய இன்றியமையாமை நேரும் எனவும் அறிவுறுத்தும் நிலையில் அமைந்தது.
தேன்புக்க தண்பணைசூழ் தில்லைச்சிற் றம்பலவன்
தான்புக்கு சட்டம் பயிலுமது என்னேடீ
தான்புக்கு நட்டம் பயின்றிலனேல் தரணியெல்லாம்
ஊன்புக்க வேற்காளிக் கூட்டாங்காண் சாழலோ. - திருச்சாழல்-14)
என வரும் திருவாசகம் ஆகும்.
முன்பொரு காலத்தில் தாருகன் என்னும் அவுணனைக் கொல்லுதற் பொருட்டுத் துர்க்கையால் ஏவப்பட்ட காளி, அவனோடு போர் செய்து அவனது உடம்பைப் பிளந்த பொழுது, கீழே சிந்திய இரத்தத்திலிருந்து பின்னும் பல அவுணர்கள் தோன்றினர். அது கண்டு, அவனது உடம்பின் இரத்தம் கீழே சிந்தாதபடி அதனை முற்றும் பருகினாள். அதனால் இரத்த வெறி பிடித்த காளி உலக உயிர்களை எல்லாம் அழிக்கத் தொடங்கினாள். அந்நிலையில் எவ்வுயிர்க்குந் தந்தை ஆகிய இறைவன், அவள் முன்னே தோன்றிக் கொடுங்கூத்து இயற்றினான். அக்கூத்தின கடுமையைக் காணப்பெறாத காளி தனது வெறியடங்கி இறைவன் அருளைப் பெற்று அமைதியுற்றாள் என்பது புராண வரலாறாகும். இச் செய்தியினை,
“வென்றிமிகு தாரகன தாருயிர் மடங்கக்
கன்றிவரு கோபமிகு காளிகதம் ஒவ
நின்று நடம் ஆடியிடம் நீடுமலர் மேலால்
மன்றல்மலி யும்பொழில்கொள் வண்டிருவை யாறே”
எனவரும் பாடலில் ஞானசம்பந்தப் பிள்ளையாரும்;
"ஆடினார் காளி காண ஆலங்காட் டடிகளாரே" (4--68-8)
எனத் திருநாவுக்கரசரும் குறித்துப் போற்றியுள்ளமை காணலாம். இவ்வாறு காளியின் இரத்தவெறி தணிய இறைவன் ஆடிய திருக்கூத்து திருவாலங்காட்டில் மட்டுமன்றித் தில்லையிலும் நிகழ்ந்துள்ளது.
தில்லைவன முடையாளாகிய காளி, அவுணரை அழித்த பின்பும் கோபம் தணியாது மன்னுயிர்களை அழிக்கத் தொடங்கவே தில்லைச்சிற்றம்பலப்பெருமான், ஊர்த்துவ தாண்டம் செய்து, காளியின் சினத்தை அடக்கி நீ தில்லையின் வட எல்லையிலே அமர்ந்திருப்பாயாக, என ஆணை தந்தனர் எனவும், ஆடலில் தோற்று நாணிய தில்லைவன முடையாளாகிய காளி இறைவன் பணித்தவாறே தில்லையின் வட வெல்லையிலே கோயில் கொண்டு எழுந்தருளியுள்ளாள் எனவும், தில்லைக் காளியைக் குறித்துப் புராண வரலாறு ஒன்று வழங்கி வருகின்றது. இவ்வரலாறு மாணிக்கவாசகர் காலத்திற்கு முன்பிருந்தே வழங்கும் தொன்மையுடையது என்பது, 'தேன் புக்க தண்பணை சூழ் தில்லைச் சிற்றம்பலவன்' என முன் எடுத்து காட்டிய திருச்சாழற் பாடலாலும்,
“எழில் பெறும் இமயத்து இயல்புடை அம்பொற்
பொலிதரு புலியூர்ப் பொதுவினில் நடம்நவில்
கனிதரு செவ்வாய் உமையொடு காளிக்
கருளிய திருமுகத் தழகுறு சிறுநகை
இறைவன் ஈண்டிய அடியவ ரோடும்
பொலிதரு புலியூர்ப் புக்கிளி தருளினள்
ஒலிதரு கைலை உயர்கிழ வோனே."
என வரும் கீர்த்தித் திரு அகவல் பகுதியாலும் நன்கு விளங்கும். தில்லையைப் பற்றிய இப்புராணச் செய்தியைப் புலப்படுத்தும் நிலையில் தில்லைப் பொன்னம்பலத்தில் தென்புறத்திலமைந்த நிருத்த சபையில் காளி காண ஆடிய ஊர்த்துவ தாண்டவமூர்த்தியின் சந்நிதி அமைந்துள்ளமை இங்குக் குறிப்பிடத்தகுவதாகும்.
எல்லாம்வல்ல இறைவன் மக்களது அகத்தையும் புறத்தையும் தூய்மைப்படுத்தி நலம் புரியும் தீர்த்த வடிவாகத் திகழ்கின்றான் என்பதனை, ஆர்த்தபிறவித் துயர் கெட நாம் ஆர்த்தாடும் தீர்த்தன்' என வரும் திருவெம்பாலைத் தொடரால் திருவாதவூரடிகளும், 'சென்றாடு தீர்த்தங்கள் ஆனார்தாமே' - ( 6-78-1} எனவரும் திருத்தாண்டகத் தொடரால் திருநாவுக்கரசரும் அறிவுறுத்தியுள்ளனர். அம்முறையில் தங்கண் மூழ்கு வாரது மனமாசினையும் உடற்பிணியையும் அறவே நீக்கி வீடுபேற்று இன்பத்தினை வழங்கும் தெய்வத்தன்மை வாய்ந்த தீர்த்தங்களாகச் சிவகங்கை முதலிய பத்துத் தீர்த்தங்கள் தில்லைப் பெருங்கோயிலைச் சூழ அமைந்துள்ளன. அவையாவன
1. சிவகங்கை:- 'தீர்த்தமென்பது சிவகங்கையே' எனக் குமரகுருபர சுவாமிகளால் போற்றப்பெற்ற இத்தீர்த்தம், தென்புறத்தில் திருமூலட்டானக் கோயிலையும், மேற்புறத்தில், நூற்றுக் கால் மண்டபம், சிவகாமியம்மை திருக்கோயிலையும் வடபுறத்தில் நவலிங்கத் திருக்கோயிலையும், கீழ்ப்புறத்தில் ஆயிரக்கால் மண்டபத்தையும் எல்லையாகக் கொண்டு அவற்றிடையே அமைத்துள்ள தடாகமாகும். உடற்பிணியால் வருந்திய சிங்கவர்மன் என்ற வேந்தன் இச்சிவகங்கைத் தீர்த்தத்தில் நீராடி உடற்பிணி நீங்கிப் பொன்னிறம் பெற்று இரணியவர்மன் ஆயினமை, இத்தீர்த்தத்தின் சிறப்பினை நன்கு புலப்படுத்துவதாகும்.
சிவகங்கைத் தீர்த்தத்தின் நாற்புறமும் அமைக்கப் பெற்ற மண்டபங்களும் கற்படிகளும் சோழமன்னர் காலத்துத் திருப்பணிகளாகும். சிவகங்கை மண்டப உட்சுவர்களிலே பளிங்குக் கற்களைப் பதித்துத் திருவாசகமும் திருச்சிற்றம்பலக் கோவையும் ஆகிய எட்டாந் திருமுறை முழுவதனையும் கல்வெட்டில் வரையச் செய்து பொருத்தியவர் திருப்பனந்தாள் ஸ்ரீகாசி மடத்தின் அதிபர் காசிவாசி தவத்திரு அருணந்தித் தம்பிரான் சுவாமிகள் ஆவர்.
2. கும்ப தீர்த்தம்: இது தில்லைப்பதிக்கு வடகிழக்கே, வெள்ளாறு கடலொடு கலக்குமிடத்தில் அமைந்த கடற்றுறையாகும் ஓர் அசுரனைப் போரில் வெல்லும் உபாயத்தினைக் கற்பிக்கும்படி தேவ குருவானவர் வருண்னிடத்திலே இருட் பொழுதிலே வந்தார். வருணன் அவரைத் தவறாகப் பகைவன் என நினைத்து அவர்மேல் பாசத்தை விடுத்தான். அதனால் குரு இறந்தார். அக்கொலைப்பாவம் காரணமாக ஒரு பிசாசு வடிவம் தோன்றி இரண்டு கால்களிலும் இருகைகளிலும் பொருந்தக் கழுத்தொடு கூடும்படி அவனைக் கட்டிக் கடலில் வீழ்த்தியது, நெடுநாள் கடலிடையே வருந்திக் கிடந்த வருணலுக்குச் சிவபெருமான் மாசிமகத்தில் வெளிப்பட்டு அவனது பாசக்கட்டு அற்றுப்போம்படி அருள் புரிந்தார். அதனால் அக்கடற்றுறை பாசமறுத்த துறை எனப் பெயர் பெற்றது. அத்துறையிலே மாசிமகத்திலே நீராடுபவர்கள் பாசம் நீங்கி முத்தியடையும்படி வருணன் சிவபெருமானிடத்தே வரம் பெற்றான். மகாபாதகனாகிய துர்க்கடன் என்னும் வணிகன் படகில் ஏறிக்கொண்டு மாசிமக நாளில் பாசமறுத்த துறைத்தே வரும் பொழுது படகுடன் தாழ்ந்து முத்திபெற்றான் எனப் புராணம் கூறும்.
3. புலிமடு:- இது தில்லைப் பெருங் கோயிலின் தென் திசையில் அமைந்துள்ள நீர் நிலையாகும். புலிக்கால் முனிவர்க்குத் தந்தையாகிய மத்தியந்தன முனிவர் வழிபட்ட மத்தியந்தனேசுரம் என்னும் திருக்கோயில் இம்மடுவின் மேற்கரையில் அமைந்துள்ளது. இக்கோயில், கல்வெட்டுக்களில் சுடலை யமர்ந்தார் கோயில் எனக் குறிக்கப் பெற்றுள்ளது. இக்கோயிலின் எதிரே அமைந்த புலிமடுவில் இறந்தோர் நற்கதி அடைதற் பொருட்டு அவர்தம் எலும்பினை இடுதல் நெடுநாளைய மரபாக நிலை பெற்று வருகிறது. இங்கு இடப்படும் எலும்பு கரைந்து போதல் பலரும் அறிந்த செய்தி.
4. வியாக்கிரபாதத் தீர்த்தம்:- இது தில்லைப் பெருங் கோயிலின் மேற்றிசையில் வியாக்கிரபாத முனிவர் தம் ஆன்மார்த்தமாகக் கொண்டு வழிபாடு செய்த திருப்புலீச்சுரர் திருக்கோயிலுக்கு எதிரே அமைந்த தீர்த்தமாகும். திருத்தொண்டத்தொகை அடியார்களுள் ஒருவராகிய திருநீலகண்டக் குயவநாயனார் இன்பத்துறையில் எளியராய் ‘எம்மைத் தீண்டுவீராகில் திருநீலகண்டம்' என மனைவியார் கூறிய ஆணைமொழியினை மதித்து மற்றை மாதரார் தம்மையும் மனத்தினும் தீண்டாது ஐம்புலன்களை வென்று விளங்கினார். திருநீலகண்டக்குயவரும் அவர் மனைவியாரும், முதுமை அடைந்த நிலையில் சிவபெருமான் சிவயோகியாராக வந்து ஓர் ஓட்டினைத் தந்து அதனை மறையச் செய்து மீண்டும் வந்து கேட்க அதனைத் தர இயலாத நிலையில் திருநீலக்கண்டக்குயவனார் முதுமைப் பருவமுற்ற தாமும் தம்மனைவியும் ஆக இத்திருக்குளத்தில் மூழ்கி இளமை பெற்று எழுந்தனர் என்பது வரலாறு. முதுமைப் பருவத்தினராகிய திருநீலகண்ட நாயனாரும் அவர்தம் மனைவியாரும் இத்தீர்த்தத்தில் மூழ்கி இளமைபெற்று எழுந்தமையால், இத்தீர்த்தம் இளமை ஆக்கினார் குளம் என்றும், இக்குளத்தின் மேற் கரையிலுள்ள திருப்புலீச்சுரர் திருக்கோயில் இளமை ஆக்கினார் கோயில் என்றும் வழங்கப் பெறுவன ஆயின.
5. அனந்த தீர்த்தம்;- இது தில்லைப் பெருங் கோயிலுக்கு மேற்றிசையில் பதஞ்சலி முனிவர் ஆன்மார்த்தமாக வழிபாடு செய்த அனந்தீச்சுரத் திருக்கோயிலுக்கு முன்னே அமைந்துள்ள தீர்த்தமாகும்.
6. நாகசேரி தீர்த்தம்:- பதஞ்சலி முனிவர் நாகலோகத்தினின்றும் பிலத்துவார வழியாகத் தில்லைக்கு ஏறிவந்த இடத்திலுள்ள தீர்த்தமாதலின் இது நாகசேரி தீர்த்தம் எனப் பெயர் பெற்றது. இத்தீர்த்தம் அனந்தீச்சுரர் திருக்கோயிலுக்கு வட மேற்கே அமைந்துள்ளது.
7. பிரமதீர்த்தம்:- இது தில்லைப்பெருங் கோயிலுக்கு வட மேற்கு மூலையில் சிங்காரத் தோப்பு என வழங்கும் திருக்களாஞ்சேரியில் உள்ளது. இக்குளத்தின் மேற்கே வசிட்டமுனிவரால் வழிபாடு செய்யப்பெற்ற திருகளாஞ்செடிவுடையார் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு எழுந்தருளியுள்ள இறைவனுக்குப் பிரமபுரீசர் என்னும் திருப்பெயருண்டு. பிரமபுரீசர் சந்நிதியில் இத்தீர்த்தம் அமைந்திருத்தலால் இது பிரமதீர்த்தம் என்னும் பெயர் பெறுவதாயிற்று.
8. சிவப் பிரியை:- இத்தீர்த்தம் தில்லைப் பெருங் கோயிலுக்கு வடதிசையில், தில்லைவன முடையாளாகிய தில்லைக் காளியின் திருக்கோயிலுக்கு முன்னே உள்ளது.
9. திருப்பாற்கடல்:- இத்தீர்த்தம் தில்லைப்பெருங்கோயிலின் வடகிழக்குத் திசையில் அமைந்துள்ளது. வியாக்கிரபாத முனிவருடைய இளங்குழந்தையாகிய உபமன்யு காமதேனுவின் பாலை உண்ணப்பெறாது வருந்தி அழுத நிலையில், தில்லைத் திருமூலட்டானப் பெருமான் உபமன்யு வாகிய குழந்தை உண்டு பசி தீரும்படி திருப்பாற் கடலையே தில்லைக்கு வரவழைத்தருளினான் என்பது புராண வரலாறு. 'பாலுக்குப்பாலகன் வேண்டி அழுதிடப் பாற்கடல் ஈந்த பிரான்' எனத் தில்லை இறைவனைப் போற்றுவர் சேந்தனார். உபமன்யுவின் பொருட்டுத் திருப்பாற்கடல் வந்த பொய்கையாகத் திகழ்வது இத்தீர்த்தமாதலின் இது திருப்பாற்கடல் என வழங்கப் பெறுவதாயிற்று. இத் தீர்த்தத்தினையொட்டி வடகரையில் அமைந்தது திருப்பெருந்துறை என்னும் திருக்கோயிலாகும். சிதம்பரத்தின் கீழ்த்திசையில் பர்ணசாலையில் மாணிக்கவாசகர் சிவயோகம் புரிந்திருக்கும் நிலையில் பாண்டிய நாட்டில் குருவாக எழுந்தருளித் தம்மை ஆண்டு கொண்டருளிய ஆன்மநாதரையும் சிவயோகாம்பிகையையும் திருப்பெருந்துறையில் திருவடி உருவில் வைத்து வழிபாடு செய்தது போலவே, தில்லையிலும் பெருந்துறைப் பெருமானைத் திருவடி உருவில் வைத்து வழிபட்டு மகிழ்ந்தார். இச்செய்தியைப்புலப்படுத்தும் முறையில் தெற்கு நோக்கிய சந்நிதியாக இத்திருப்பெருந்துறைத் திருக் கோயில் அமைந்து உன்ளது. இக்கோயில் விமானத்திலுள்ள கல் வெட்டில் இது திருப்பெருந்துறை எனக் குறிக்கப் பெற்றுள்ளமை காணலாம்.
10. பரமானந்த கூவம்:- இது தில்லைச் சிற்றம்பலத்தின் கீழ்ப்பக்கத்தில் சண்டேசுரர் சந்நிதிக்கு அருகில் அமைந்துள்ள திருமஞ்சனக் கிணறு ஆகும்.
சிவ வடிவாகிய சிவகங்கை முதல் பேரின்ப வடிவாகிய பரமானந்த கூவம் ஈறாக உள்ள இப் பத்துத் தீர்த்தங்களிலும் தில்லைப் பெருமானாகிய சிவபெருமான் தை அமாவாசை தோறும் தீர்த்தம் கொடுத்து அருள்வர். இப் பத்துத் தீர்த்தத்திலும் சிபெருமானை வழிபட்டு உடன் சென்று நீராடியவர்கள் இம்மை மறுமை நலங்களை ஒருங்கு பெற்று இன்புறுவர்.
--------------
4. திருக்கோயில் அமைப்பு
தில்லை நகரத்தின் நடு நாயகமாகத் திகழும் தில்லைச் சிற்றம்பலவர் திருக்கோயில் ஏறக்குறைய நாற்பத்து மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. எழுநிலைக் கோபுரங்கள் நான்கினையும் அதன் புறத்தே அமைந்த நந்தவனப் பரப்பையும் உள்ளடக்கிய நிலையில் வெளிப் புறத்தே பெரு மதில் சூழப் பெற்றுள்ளது. கோயிற்புறமதிலாகிய இது, வீரப்ப நாயக்கர் மதிலென வழங்கப் பெறுகின்றது. எனவே இது மதுரையை ஆண்ட வீரப்ப நாயக்கர் என்பவரால் பழுது பார்த்துத் திருப்பணி செய்யப் பெற்றதெனத் தெரிய வருகின்றது. இம்மதிலின் நாற்புறமும் எழுநிலைக் கோபுரங்களுக் கெதிரே நுழைவாயில்கள் அமைந்துள்ளன. இவ்வாயில்களின் வழியே கோயிலினுள் சென்றால் எழுநிலைக் கோபுரங்களைத் தொடர்ந்து அமைந்த பெருமதில்கள், கோயிலின் உட்புறத்தே திருமாளிகைப் பத்தியினை உடையனவாய் விளங்குதல் காணலாம். எழுநிலைக் கோபுரங்களின் உட்புறத்தே அமைந்த மூன்றாம் பிரகாரம் இராஜாக்கள் தம்பிரான் திருவீதி என்னும் பெயருடையது. இராஜாக்கள் தம்பிரான் என்பது மூன்றாம் குலோத்துங்கனுக்குரிய சிறப்புப் பெயராகும் (Incrsiption 80 of 1928). ஆகவே இப்பிரகாரத்திலமைந்த திருமாளிகைப்பத்தி இவ்வேந்தனால் திருப்பணி செய்யப்பெற்றதெனக் கொள்ளுதல் பொருந்தும். கிழக்குக் கோபுரத்தின் வழியாகக் கோயிலினுள்ளே நுழைவதற்கு முன் அக்கோபுரவாசலின் வெளிப்புறத்தே கோபுரத்தை ஒட்டிய நிலையில் தென் பக்கத்தே விநாயகர் கோயிலும் வடபக்கத்தே சுப்பிரமணியர் கோயிலும் அமைந்துள்ளமை காணலாம். கிழக்குக் கோபுர வாசலின் தென் பறத்தே இக் கோபுரத்தைப் பழுது பார்த்துத் திருப்பணிசெய்த காஞ்சிபுரம் பச்சையப்ப முதலியார், அவர் தமக்கையார் உருவச் சிலைகள் மாடங்களில் அமைந்துள்ளன.
சோழராட்சியில் கட்டப்பெற்ற இக்கோபுர வாயிலில் பரத சாத்திரத்திற் கூறிய வண்ணம் நூற்றெட்டுக் கரணங்களைச் செய்யும் ஆடல் மகளிருடைய சிற்ப வடிவங்களை அமைத்து அழகுப்படுத்தியவன் பல்லவ மரபினனாகிய இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனாவான். இவனது படிவம் இக்கோபுரவாயிலுள் வட மேற்குப் பக்கத்தே தெற்கு நோக்கிய மாடத்தில் இடம் பெற்றுள்ளது. இக்கோபுர வாயிலுள் நுழைந்து மூன்றாம் பிரகாரத்தை அடையும் நிலையில் தோன்றும் நந்தி மண்டபம் திருமூலட்டானப் பெருமான் சந்நிதியை நோக்கிப் புறத்தே அமைக்கப் பெற்றதாகும். இப்பிரகாரத்தினை வலம் வரும் பொழுது கிழக்குக் கோபுரத்தின் எதிரே தென்பக்கமாகச் சிறிது தள்ளிய நிலையில் தில்லைப் பெருங்கோயிலின் உள் வாசல் அமைந்துள்ளமை காணலாம். கிழக்கிலிருந்து வலமாகச் சென்றால் தெற்குக் கோபுரத்தின் எதிர்ப்பக்கத்தே கதையாலியன்ற நந்தியம் பெருமான் அமைந்துள்ள கல் மண்டபமும் இதன் பின் புறத்தே பலிபீடமும் இணைந்துள்ளமை காணலாம். வெளிப்புறத்தேயுள்ள இந்நந்தி உள்ளேயுள்ள நடராசப் பெருமான் சந்நிதியை நோக்கிய நிலையில் அமர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாம். நந்தி மண்டபத்தின் தென்புறத்தேயுள்ள தெற்குக் கோபுரம் சொக்கசீயன் என்னும் சிறப்புப் பெயருடைய முதலாம் கோப்பெருஞ்சிங்கனால் திருப்பணி செய்யப் பெற்றமையின் சொக்க சீயன் என்னும் பெயர் பெறுவதாயிற்று. மூன்றாம் குலோத்துங்கனுக்குப் படைத்தலைவனாகவும் அவன் மகளை மணந்த மணவாளப் பெருமாளாகவும் விளங்கிய பல்லவர் தலைவனாகிய கோப்பெருஞ்சிங்கன் இக்கோபுரத்தை ஆண்டுதோறும் பழுதுபார்த்தற்கெனவே செங்கற்பட்டு மாவட்டம் ஆத்தார் என்றும் சிற்றாரைத் தானமாகக்கொடுத்துள்ளான். இக்கோபுர வாயிலின் உட்புறத்தே பரத நாட்டிய கரணங்களை புலப்படுத்தும் மகளிரது ஆடற்சிற்பங்கள் அமைக்கப்பெற்றுள்ளன. இக் கோபுர வாயிலின் மேற்பகுதியில் உட்புறத்தே வடக்கு நோக்கிய நிலையில் முருகப் பெருமானது திருவுருவம் கோபுரத்தையொட்டி அடைந்துள்ளது. தெற்குப் பிரகாரத்தின் மேற்குப் பாதியில் கிழக்கு நோக்கிய சந்நிதியாக முக்குறுணி விநாயகர் கோயில் அமைந்துள்ளது. தென்பாலுகந்தாடும் தில்லன் சிற்றம்பலவனை வழிபாடு செய்தற் பொருட்டுத் தெற்குக் கோபுர வழியே நுழைந்து வலம் வரும் பொழுது முகப்பில் இப்பிள்ளையார் கோயில் அமைந்திருப்பதால் இங்கு எழுந்தருளிய விநாயகப் பெருமான் முகக் கட்டண விநாயகர் எனப் பெயர் பெற்றாரெனவும் அப்பெயரே பிற்காலத்தில் முக்குறுணி விநாயகர் எனத் திரிந்து வழங்கப் பெற்றதெனவும் கருதுவர் ஆராய்ச்சியாளர்'.
முக்குறுணி விநாயகரைத் தரிசித்தவர்கள் மேலைக் கோபுர வழியாக வெளியே சென்று அக்கோபுரத்தின் தென் பகுதியில் மேற்கு நோக்கிய நிலையில் புடைப்புச் சிற்பமாக அமைக்கப் பெற்றுள்ள கற்பக விநாயகரைத் தரிசித்தல் வழக்கம். தல விநாயகராகிய இப்பிள்ளையார் குலோத்துங்க சோழ விநாயகர் என இக்கோயிற் கல்வெட்டில் குறிக்கப் பெறுகின்றார். இப் பிள்ளையாரை வணங்கிய பின்னர், மேலைக் கோபுரத்தின் வழியாக மீண்டும் உள்ளே வந்து அக்கோபுரத்தின் வடபக்கத்தே கிழக்கு நோக்கிய நிலையில் புடைப்புச் சிற்பமாக அமைந்துள்ள முருகப்பெருமானை வழிபடுதல் மரபு. இத்திருக்கோயிலில் வள்ளி தெய்வயானை ஆகிய தேவியர் இருவரும் இருபுறத்தே நிற்க முருகப்பெருமான் மயில் மீது அமர்ந்துள்ளார். இச்சந்நிதியில் முருகப்பெருமானுக்குத் தம்பியராம் பேறு பெற்ற நவவீரர் வடிவங்கள் இடம் பெற்றுள்ளன. இச்சந்நிதியில் மயில்கள் இரண்டுள்ளன. அவற்றுள் ஒன்று முருகன் சூரனுடன், போர் செய்யும் நிலையில் மயிலாய் வந்த இந்திரனையும், மற்றொன்று போரின் முடிவில் மயிலாய் வந்த சூரனையும் குறிக்கும்.
இச்சந்நிதியின் நேர் வடக்கே சென்றால் கிழக்கு நோக்கிய நிலையில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலும் அதன் அருகே நூற்றுக்கால் மண்டபத்தையொட்டித் தெற்கு நோக்கிய வாயிலையுடைய வீரபாண்டியன் திருமண்டபமும் அமைந்திருத்தலைக் காணலாம். தில்லையில் சிவகங்கைக் கரையின் மேற்கே மணவிற் கூத்தன் காலிங்கராயன் என்பவனால் கட்டப் பெற்றது நூற்றுக்கால் மண்டபமாகும். இது விக்கிரமசோழன் திருப்பண்டபம் என்னும் பெயருடையதென்பது இம்மண்டபத்தின் பன்னிரு தூண்களில் அப்பெயர் பொறிக்கப் பெற்றிருத்தலால் அறியலாம். இம் மண்டபம் கிழக்கே சிவகங்கைத் தீர்த்தத்தை நோக்கிய முகப்பு வாயிலையுடையதாய் இரண்டு பக்கங்களிலும் படிகளைப் பெற்றுள்ளது. இத்தகைய நூற்றுக்கால் மண்டபத்தோடு ஒன்றாக இணைக்கப்பெற்றுத் தென்புற முகப்பினையுடையதாய் அமைக்கப்பெற்றதே முற்குறித்த வீர பாண்டியன் திருமண்டபமாகும். இம்மண்டபத்திலுள்ள சில தூண்களில் வீரபாண்டியன் திருமண்டபம் என்னும் பெயர் பொறிக்கப் பெற்றிருத்தலைக் காணலாம். பாண்டிய மன்னர்கள் தங்குல நாயகராகிய சொக்கலிங்கப் பெருமான் மீனாட்சி யம்மை திரு முன்னிலையிலேயே முடி சூடிக்கொள்ளுதல் மரபு. இம்மரபினை யொட்டியே சடையவர்மன் வீரபாண்டியன் என்பான் தான் முடிசூடிக் கொள்ளுதற்கு வாய்ப்பாக இம்மண்டபத்தை யொட்டி மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலைக்கட்டி அப்பெருமான் முன்னிலையில் கி.பி. 1267-ஆம் ஆண்டில் இம் மண்டபத்தில் வீராபிடேகமும் விஜயாபிடேகமும் செய்து கொண்டான் எனத் தெரிகிறது. வீரபாண்டியன் மண்டபத்துக்குக் கிழக்கே சிவகங்கையை நோக்கிய நிலையில் திரு மூல விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் தென் புறத்தில் ஒரு தூணையும் வடபுறத்தில் சுவரையும் உடையதாய் அமைந்துள்ளமையால் இக்கோயில் ஒற்றைக்கால் மண்டபம் என வழங்கப் பெறுகின்றது.
நூற்றுக்கால் மண்டபத்தின் வடபக்கத்தே அமைந்தது சிவகாமியம்மை திருக்கோயிலாகும். சிவகாமக் கோட்டம் என்னும் பெயருடைய இக் கோயில், கி.பி. 1118 முதல் 1136 வரை ஆட்சிபுரிந்த விக்கிரம சோழனால் கற்றளியாக அமைக்கப் பெற்றதாகும் விக்கிரம சோழன் காலத்தில் தொடங்கப்பெற்ற இக்கோயில் திருப்பணி இவன் மகன் இரண்டாம் குலோத்துங்க சோழன் காலத்தில் நிறைவு செய்யப்பெற்றது. கிழக்கு நோக்கிய சந்நிதியாகிய இத்திருக் கோயிலின், முகப்பிலுள்ள சொக்கட்டான் மண்டபம் திருவண்ணாமலை ஆதீனத்தலைவர் ஒருவரால் அமைக்கப் பெற்றதாகும். சிவகாமி அம்மை கோயிலின் முகப்பிலமைந்த கோபுர வாயில், அந்தப்புரப் பெருமாள் திருவாசல் என்னும் பெயருடையதாகும். விக்கிரம சோழன் படைத்தலைவனாகிய மணவிற் கூத்தன் காலிங்கராயன் என்பவன் சிவகாமியம்மை திருக்கோயிலைச் சூழ்ந்த திருச்சுற்றும் திருமாளிகைப்பத்தியும் அமைத்துள்ளான். அந்தப்புரப் பெருமாள் வாசல் வழியே அம்மை கோயிலுட் சென்று வெளிப்பிரகாரத்தை வலம்வரும் பொழுது தென்கீழ்த் திசையில் மேற்கு நோக்கியவாறுள்ள சித்திர புத்திரர் கோயிலையும், திருமாளிகைப் பத்தியின் குறடுகளில் தொடர்ந்து அமைந்துள்ள இசைக்கலை. ஆடற் கலை பற்றிய அழகிய சிற்பங்களையும் காணலாம். வடக்குப் பிரகாரத்தில் அண்மையிலமைக்கப்பெற்ற ஸ்ரீசக்கரத்தையும் ஸ்ரீசங்கராச்சாரியார் திருவுருவத்தையும் காணலாம். அம்மையின் கோபுர வாயிலையொட்டி உள்ளேயமைந்த முன் மண்டபம் மரத்தினால் அமைக்கப்பெற்றது போன்ற வேலைப்பாடுடைய கருங்கல் தூண்களையும் மேற் கூரையையும் உடையதாய்ச் சிற்பவேலைப்பாடுகளைப் பெற்று விளங்குகின்றது. நீளமும் அகலமும் உடையதாய் அமைக்கப்பெற்ற இம்மண்டபத்தில் கொடிமரத்தின் வலப் பக்கத்தமைந்த மேற் கூரையிலே தாருகா வனத்து முனிவர்களின் செருக்கினை அடக்குதல் வேண்டிச் சிவபெருமான் பிச்சைக் கோலம் உடையராய் மோகினி வடிவுடைய திருமாலுடன் சென்றதும், இறைவனது பேரழகிலீடுபட்ட முனிவர் மனைவியர் தம்வசமிழந்து ஆடை அவிழநின்ற நிலையும், திருமாலாகிய மோகினியின் வடிவழகிலீடுபட்டு மையல் கொண்ட முனிவர்கள் தமது தவத்தினை நெகிழவிட்ட தன்மையும் ஆகியகாட்சிகள் வண்ண ஓவியமாக வடிக்கப்பெற்றுள்ளன. இம்மண்டபத்தில் பார்வதிதேவியின் திருவருட் பெருமையை விளக்கும் ஓவியக் காட்சிகள் வரையப் பெற்றிருத்தலைக் காணலாம். முன் மண்டபத்தின் வழியாக உள்ளே சென்று உட்பிரகாரத்தை வலம் வந்து சிவகாமியம்மையைத்தரிசித்து அன்னையின் திருவருளைப் பெறலாம். சிவகாமியம்மை திருக்கோயில் கோபுரவாசலின் வடபுறத்தே மகிஷாசுர மர்த்தனியாகிய துர்க்கையின் சந்நிதி வடக்கு நோக்கி அமைந்துள்ளது. இச்சந்நிதி கி.பி. பதின் மூன்றாம் நூற்றாண்டில் அண்டாபரண தேவர் என்னும் தெய்வத்துக்குரிய திருக்கோயிலாக விளங்கியது. இக்கோயிற் சுவரில் வரையப்பெற்றுள்ள கல்வெட்டுக்களால் இதனை அறியலாம். துர்க்கையை வழிபட்டபின் சிலகாமியம்மை கோயிலின் வடபக்கத்தே பாண்டிய நாயகம் என்னும் பெயருடைய திருக்கோயிலில் அறுமுகப் பெருமான் கிழக்கு நோக்கிய நிலையில் மயில் மீதமர்ந்து வள்ளி தெய்வயானை என்னும் தேவியருடன் தன்னை வழிபடும் அடியார்க்கு அருள் புரிகின்ற தெய்வக் காட்சியைக் காணலாம். இக்கோயில் யானைகளாலும் யாளிகளாலும் இழுக்கப்படும் தேர் வடிவில் அமைக்கப் பெற்றுள்ளது. இம்மண்டபத்தின் நாற்புறங்களிலும் உள்ள கீழ்க் குறடுகளில் ஆடல் பாடல் பற்றிய அழகிய சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. இங்குள்ள தூண்கள் மூன்றாம் குலோத்துங்கனால் கட்டப் பெற்ற திரிபுவன வீரேச்சுரத்தில் அமைந்துள்ள துாண்களைப் போன்று முழுதும் சிற்ப வேலைப்பாடு நிறைந்தளவாய் விளக்குதலாலும், மூன்றாம் குலோத்துங்கனுக்குரிய பாண்டியார் தம்பிரான் என்னும் சிறப்புப் பெயரமைப்பில் பாண்டிய நாயகம் என்னும் பெயரால் இக்கோயில் வழங்கப் பெற்று வருதலாலும் இத்திருக்கோயில், மூன்றாம் குலோத்துங்கனால் கட்டப்பெற்றிருத்தல் வேண்டும் எனக் கருத வேண்டியுள்ளது. தமிழகத்தில் முருகப்பெருமான் கோயில் கொண்ட திருத்தலங்களில் முருகப் பெருமானுக்கென அமைந்த மிகப் பெரிய அழகிய சந்நிதி இப்பாண்டிய நாயகத் திருக்கோயிலேயாகும். இத்திருக்கோயில் மண்டப மேற் கூரையின் உட்புறத்தே கந்தபுராண வரலாறும் முருகனுக்குரிய ஆறுபடை வீடுகளும் நம் பன்னிரு திருமுறையாசிரியர்கள் திருவுருவங்களும் எழில் மிக்கவண்ண ஓவியங்களாக வரையப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வோவியங்களை வரைந்து இத்திருக்கோயிலுக்கு மூன்று முறை குடமுழுக்குச் செய்தவர்கள் சிதம்பரம் அணிகல வணிகர் தருமபூஷணம் செ. இரத்தினசாமிச் செட்டியார் அவர்களும் அவர்தம் மைந்தர்களும் ஆவர்.
இத்திருக்கோயிலை யொட்டி அமைந்த வடக்குக் கோபுரம் விஜயநகர மன்னர் கிருஷ்ண தேவராயரால் திருப்பணி செய்யப் பெற்றதாகும். இக்கோபுர வாயிலின் உள்ளே கிருஷ்ண தேவராயர் சிலைவடிவம் கிழக்கு நோக்கிய மாடத்தில் உள்ளமை காணலாம். இக்கோபுரத்தின் உட்பக்கத்தே தெற்கு நோக்கிய நிலையில் முருகப்பெருமான் திருவுருவம் கோபுரத்தை யொட்டிய புடைப்புச் சிற்பமாக அமைந்துள்ளது. இச்சந்நிதியில் அறக்கடவுளாகிய இயமன் திருவுருவம் இடம் பெற்றுள்ளமை காணலாம்.
பாண்டிய நாயகத்தின் கிழக்கே சிவகங்கைத் தீர்த்தத்தின் வடமேற்கு மூலையில் ஒன்பது சிவலிங்கங்கள் எந்தருளிய (sic. எழுந்தருளிய) நவலிங்கம் கோயில் உள்ளது. சுந்தரர் பாடிய திருத் தொண்டத் தொகையில் திருநீலகண்டக் குயவனார் முதல் திருநீலகண்டப் பாணனார், சடையனார், இசைஞானியார் நம்பியாரூரர்வரையுள்ள அறுபத்து மூன்று தனியடியார்களும், தில்லைவாழந்தணர் முதல் அப்பாலும் அடிச்சார்ந்தார் ஈறாகவுள்ள ஒன்பது தொகை அடியார்களும், இடம் பெற்றுள்ளனர். இவ்வொன்பது தொகையினரையும், சிவலிங்கவடிவில் வைத்துப் போற்றும் நிலையில் அமைந்துள்ளதே இந்த நவலிங்கம் திருக்கோயிலாகும். இக்கோயில் திருத்தொண்டத்தொகையீச்சுரம் என்ற பெயரால் கல்வெட்டுக்களில் குறிக்கப்பெற்றுள்ளது. இக் கோயிலை ஐம்பது ஆண்டுகளுக்கு முன் சிவனடியார் ஒருவர் புதுப்பித்துக் கட்டியுள்ளார்.
நவலிங்கம் திருக்கோயிலுக்கு நேர் கிழக்கே சிவகங்கைத் தீர்த்தத்தின் கீழ்ப்பக்கத்தில் அமைந்துள்ள மண்டபம் ஆயிரக்கால் மண்டபமாகும். முதற்குலோத்துங்க சோழன் காலத்தில் வாழ்ந்த மிழலை நாட்டுவேள் கண்டன் மாதவன் என்பான், தில்லையம்பலத்தின் வடகீழ்த்திசையில் சொன்னவாறு அறிவார் (கழறிற்றறிவாராகிய சேரமான் பெருமாள் நாயனார்) கோயிலும், புராண நூல் விரிக்கும் புரிசை மாளிகையும் வரிசையாக அமைத்தான் என்று செய்யுள் வடிவில் அமைந்த கல்வெட்டு ஒன்று கூறுகிறது. கண்டன் மாதவனால் கட்டப் பெற்ற புராண மண்டபத்தை உள்ளடக்கிய நிலையில் விரிந்த இடமுடையதாக அமைக்கப்பெற்றதே இவ்வாயிரக்கால் மண்டபம். இதனைக் கட்டியவன் மூன்றாம் குலோத்துங்க சோழன் என ஆராய்ச்சியாளர் சதாசிவபண்டாரத்தார் கருதுவர். அண்மையில், இம்மண்டபத்தைப் பெரும் பொருட் செலவில் பழுது பார்த்துத் திருப்பணி செய்தவர் ஆடூர் பெருநிலக்கிழார் தரும பூஷணம் M. இரத்தினசபாபதி பிள்ளையவர்களாவர். இவ் வாயிரக்கால் மண்டபத்தில்தான் சேக்கிழார் நாயனார் இயற்றிய திருத்தொண்டர் புராணம் அரங்கேறியது. தில்லையில் ஆண்டுதோறும் நிகழும் ஆனித்திருமஞ்சன விழாவிலும், மார்கழித் திருவாதிரை விழாவிலும், ஒன்பதாந் திருநாளில் தேரில் எழுந்தருளி நான்கு பெருவீதிகளிலும் உலாப்போந்த நடராசப்பெருமானும் சிவகாமி அம்மையும் அன்றிரவு இம் மண்டபத்தில் எழுந்தருளியிருந்து மறுநாள் விடியற்காலை திருமஞ்சனம் கொண்டருளி, நண்பகலில் இங்கிருந்து புறப்பட்டு நடம் கொண்ட கூத்தராய் அடியார்களுக்குத் திருவருட் காட்சி நல்கிக் கீழைவாயில் வழியே சிற்றம்பலத்துள் சென்று புகுந்தருள்வர். பத்தாம் திருநாளில் திகழும் இத் திருநடனக் காட்சியே திருக் கூத்துத் தரிசனம் எனச் சிறப்பித்துப் போற்றப்பெறுகின்றது.
சிற்றம்பலத்தில் ஆடல் புரியும் கூத்தப் பெருமானை ஆயிரக்கால் மண்டபத்தே எழுந்தருளச் செய்து மீண்டும் சிற்றம்பலமாகிய ஞான மன்றத்தே புகுந்தருளச்செய்யும் இத்திருவிழா நிகழ்ச்சியானது, மன்னுயிர்களின் நெஞ்சத் தாமரையில் பயிர்த் துடிப்பாக இடைவிடாது நடம்புரிந் தருளும் கூத்தப்பெருமானை நெஞ்சத்தினின்றும் எழுந்தருளச் செய்து, புருவ நடுவில் தியானித்து, ஆறு ஆதாரங்களுக்கும் அப்பாற்பட்டதாய் உச்சந் தலைக்குமேல் பன்னிரண்டு அங்குலம் உயர்ந்து விளங்கும். மேலிடமாகிய ஆயிர இதழ்த் தாமரை மேல் எழுந்தருளும்படி செய்து, முதல்வனது திருவருளோடு ஒன்றியிருந்து, அம் முதல்வனை மறுபடியும் நெற்றிக்கு நேரே புருவத்து இடை வெளியிற் கண்டு போற்றி, மீண்டும் நெஞ்சத்தாமரையில் எழுந்தருளச் செய்யும் சிவஞானச் செல்வர்களது அகப்பூசை முறையினை நினைவுபடுத்துவதாகும். சிவஞானச் செல்வர்களின் அகத்தே நிகழும் இத் திருக்கூத்துத தரிசனத்தை உலகமக்கள் பலரும் புறத்தே கண்டு உய்தி பெறும் நிலையில் நிகழ்த்தப் பெறுவதே நடராசர் தரிசன விழாவாகும். தில்லைச்சிற்றம்பலமாகிய மன்றம் உலக புருடனது நெஞ்சமாகிய ஞான ஆகாயமாகவும், இங்குள்ள ஆயிரக்கால் மண்டபம் மூலாதாரம் முதல் ஆக்ஞை வரையுள்ள ஆறு ஆதாரங்களுக்கும் அப்பாற்பட்டுத் தலையின் மேலிடமாகத் திகழும் (சகஸ்ராரம்) ஆயிரம் இதழ்த் தாமரையாகவும், சிற்றம்பலத்துக்கும் ஆயிரக்கால் மண்டபத்துக்கும் நடுவே குலோத்துங்க சோழன் திருமாளிகை கிழக்கு வாயிலை யொட்டியமைந்த முகமண்டபம் புருவ நடுவாகவும் அமையக், கூத்தப் பெருமான் சிவகாமியம்மை காண ஆயிரக்கால் மண்டபத்திலிருந்து முகமண்டபம் வரையுள்ள எல்லையிலும், முகமண்டபத்திலிருந்து சிற்றம்பலம் வரை உள்ள எல்லையிலும், திருக்கூத்து நிகழ்த்தியருளும் இத்திரு நடனக் காட்சியானது, சிவஞானச் செல்வர்களால் அகத்திற்கண் கொண்டு பார்த்தற்குரிய திருக்கூத்துத் தரிசனத்தை உலக மக்கள் அனைவரும் முகத்திற்கண் கொண்டு பார்த்து உய்யும் வண்ணம் நிகழ்த்தப் பெறுவதாகும். மூன்றாம் பிரகாரத்தை வலம்வந்தவர்கள் கோயிலினுள்ளே புகுதற்குக் கிழக்கிலும் மேற்கிலும் ஆக இரண்டு வாயில்கள் அமைந்துள்ளன. அவ்விரண்டனுள் மேற்றிசையில் அமைந்துள்ள வாயிலுக்குக் குலோத்துங்க சோழன் திருமாளிகைத் திருவாயில் எனனும் பெயர் கல்வெட்டுக்களிற் காணப்படுகின்றது. எனவே இறைவன் திருவுலாப் போகுங் காலத்தில் எழுந்தருளும் கீழைத்திரு வாயிலைக் குலோத்துங்க சோழன் திருமாளிகைக் கீழைத்திருவாயில் எனக் குறிப்பிடுதல் பொருத்தமுடையதாகும். மூன்றாம் பிரகாரத்திலிருந்து கிழக்கு வாயில் வழியாகக் கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் நுழைகின்றோம். இப்பிரகாரம் இரண்டாங் குலோத்துங்க சோழனால் அமைக்கப்பெற்றமையின் குலோத்துங்க சோழன் திருமாளிகை எனக் கல்வெட்டிற் குறிக்கப்பெறு கின்றது. இருபத்தொரு படிகளமைந்த கீழை வாசலில் நின்று மேற்கே நோக்கினால் கூத்தப் பெருமான் ஆடல்புரியும் பொன்னம்பலம் எதிரே தோன்றுதல் காணலாம். இரண்டாம் திருச்சுற்றை வலம் வரும் வழியில் தெற்குப் பிராகாரத்திலே தில்லையம்பலவாணர் சந்நிதியில் பலிபீடத்துடன் நிறுவப்பெற்றுள்ள கொடிமரத்தினையும் அதன் தென் பாலமைந்த நிருத்த சபையினையும் கண்டு வழிபடலாம்.
இறைவன் காளியுடன் ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியாக ஆடல் புரியும் திருமேனி இந்நிருத்த சபையில் கிழக்கு நோக்கிய சந்நிதியாக அமைக்கப்பெற்றுள்ளது. இம்மண்டபத்தின் தெற்குப் பக்கத்தே வடக்கு நோக்கிய நிலையில் சரபமூர்த்தியின் சந்நிதி அமைந்துள்ளது. இச்சபை குதிரை பூட்டிய தேரின் அமைப்புடையதாய் அமைக்கப் பெற்றமையின் இது தேர்மண்டபம் எனவும் வழங்கப்பெறும். இம் மண்டபத்திலமைத்துள்ள தூண்கள் திரிபுவன வீரேச்சுரத்திலமைந்துள்ள தூண்கள் போன்று சிற்ப அமைப்புடையனவாய் விளங்குவதாலும், இம்மண்டபத்தின் வடபக்கம் கீழேயமைந்த குறட்டில் தில்லையம்பலப் பெருமானைக் கைகூப்பித்தொழும் நிலையில் மூன்றாம் குலோத்துங்க சோழனது உருவம் அமைக்கப் பெற்றிருத்தலாலும், அவ்வேந்தனது வழிபடு தெய்வமாகிய சரபமூர்த்தியின் சந்நிதி இங்கு அமைந்திருத்தலாலும் தேர் மண்டபமாகிய இந்நிருத்த சபையைக்கட்டியவன் மூன்றாம் குலோத்துங்க சோழனே என்பதனை நன்கு உணரலாம். இம்மண்டபத்தின் நடுவிலுள்ள. மேற்கூரை தில்லைச் சிற்றம்பலத்தைப் போலவே மரத்தினால் அமைக்கப்பெற்றுச் செம்புத் தகடு வேட்ட பெற்றுள்ளமை காணலாம். இம்மண்டபத்திலுள்ள சிற்பங்கள் யாவும் சிற்பக்கலை வல்லுநர்களால் வியந்து பாராட்டத்தக்க கலை நுட்பமும் வனப்பமுமுடையனவாக விளங்குகின்றன.
நிருத்த சபைக்கு மேற்குத் திசையில் கிழக்கு நோக்கிய சந்நிதியாகப் புண்டரீகவல்லித் தாயார் சந்நிதி அமைந்துள்ளது. அதன் வடபுறத்தே அமைந்த மண்டபத் தூணில் தெற்கு நோக்கிய நிலையில் தூணில் பாலதண்டாயுதபாணி சந்நிதி அமைந்துள்ளது. அங்கிருந்து மேலைப்பிரகாரத்தின் வழியே செல்லும் போது குலோத்துங்க சோழன் மேலை வாயிலுக்கு எதிரே கீழ்ப் புறமதிலையொட்டி மேலே திருமுறை கண்ட விநாயகர் சந்நிதி மேற்கு நோக்கிய நிலையில் அமைந்துள்ளது. அதன் கீழே தாயுமானேசுவரர் திருவுருவமும் விநாயகர் திருவுருவமும் அமைந்துள்ளன. இப்பிரகாரத்தின் வடமேற்கு மூலையில் சமயாசாரியர் நால்வர் திருவுருவமும், அதனருகில் தென்புறத்தே சந்தானாசாரியர் நால்வர் திருவுருவமும், அதன் தென்புறத்தே வேதாகமத்திருமுறைக் கோயிலும் கிழக்கு நோக்கிய சந்நிதிகளாக அமைக்கப்பெற்றுள்ளன. சமயாசாரியர் நால்வர்க்கு விமானம் அமைத்தும், சந்தானாசாரியர் திருவுருவங்களை விமானம் புதிதாக அமைத்தும், திருமுறைக்கோயிலை விமானத்துடன் அமைத்தும் குடநீராட்டு விழாவைச் சிறப்பாக நிகழ்த்திய பெருமை தருமை யாதீனம் இருபத்தாறாவது குருமகாசந்நிதானம் திருப்பெருந்திரு சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அவர்களுக்குரியதாகும். இச் சந்நிதிகளை வணங்கிக் கிழக்கு நோக்கி வடக்குப் பிரகார வழியே சென்றால் அதன் வட பகுதியில் பெரும்பற்றப்புலியூர்த் திருமூலட்டானம் எனப் போற்றப்பெறும் தொன்மைத் திருக்கோயிலைக் காணலாம். அங்குப் புலிக்கால் முனிவரால் பூசிக்கப்பெற்ற சிவலிங்கப்பெருமான் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். தெற்குநோக்கிய நிலையில் உமைய பார்வதி அம்மையார் எழுந்தருளியுள்ளார். இவ்விரு சந்நிதிகளையும் வழிபட்டு மீண்டும் மேற்குநோக்கித் திருமூலட்டானரை வலமாக வரும்பொழுது விமானத்தின் தென்புறத்தில் வல்லப கணபதியையும் மோகன கணபதியையும், ஆலமர் செல்வராகிய தட்சணாமூர்த்தியையும் கண்டு வழிபடலாம். அங்கிருந்து வடக்குப் பக்கமாகத் திரும்பி, திருமூலட்டான விமானத்தை வலம்வரும் நிலையில் மேற்குப்பக்கத்தே மூத்த பிள்ளையார், தலவிருட்சம், சிவலிங்கம் முதலிய திருவுருவங்கள் அமைந்துள்ளமை புலனாகும். வடக்குப்பக்கத்தே திருத்தொண்டத் தொகையாற் போற்றப்பெற்ற தனியடியார் தொகையடியார் திருவுருவங்களும், அவர்களது வரலாற்றை வகுத்தமைத்த நம்பியாண்டார் நம்பியின் திருவுருவமும், தொண்டர்சீர் பரவுவாராகிய சேக்கிழார் நாயனார் திருவுருவமும் அமைந்த சந்நிதியைக்கண்டு வழிபடலாம். திருமூலட்டானேசுவர விமானத்தின் வடபக்கத்தே அமைந்த சண்டீசுவரரை வணங்கி கிழக்குப்புறமாகத் திரும்பினால் சிவலிங்கத் திருவுருவில் அமைந்துள்ள அண்ணாமலையாரை வணங்கி, மீண்டும் கிழக்கு நோக்கித் திரும்பிச் செல்லுமிடத்துக் கீழைப்பிரகார மூலையில் அமைந்த அலங்கார மண்டபத்தைக் காணலாம். அங்கிருந்து தெற்கு நோக்கி மீண்டும் மேற்குப்பக்கமாகத் திரும்பினால் திருவுலாச் செல்லும் பஞ்சமூர்த்திகள் முதலிய எழுந்தருளும் திருமேனிகள் அமர்ந்துள்ள பேரம்பலத்தைக் கண்டு தரிசிக்கலாம். தேவசபையென வழங்கும் இப்பேரம்பலம் நடுவே செப்புத்தகடு போர்த்தப் பெற்ற கூரையினையுடையதாய்த் தென் திசை நோக்கி அமைந்த வாயிலையுடையதாய் விளங்குகின்றது. இங்கிருந்து மேற்கு நோக்கினால் கூத்தப் பெருமான் எழுந்தருளியுள்ள பொன்னம்பலமும் அங்குச் செல்லுதற்குரிய கிழக்கு வாயிலும் அவ்வாயில் வழியே - சிற்றம்பலத்தைச் சூழவுள்ள முதற் பிரகாரத்தை அடையலாம். தில்லைப் பொன்னம்பலத்தைச் சூழத் திருமாளிகைப்பத்தியுடன் அமைந்த இம்முதற் பிரகாரம் விக்கிரம சோழன் திருமாளிகையெனக் கல்வெட்டுக்களிற் குறிக்கப்பெற்றுள்ளது. இதன் நடுவே இறைவன் ஐந்தொழில் ஆடல் புரியும் சிற்றம்பலம், பொன் வேயப்பெற்ற மேற்கூரையையுடையதாகவும் மேலே ஒன்பது கலசங்களை-யுடையதாகவும், நாற்புறத்தும் சந்தனப் பலகைகளால் அடைக்கப் பெற்றதாகவும், கிழக்கிலும் மேற்கிலும் ஏறிச்செல்லுதற்குரிய திருவணுக்கன் திருவாயில்களை-வுடையதாகவும் அமைந்துள்ளது. இதன் முகப்பில் நந்தியம் பெருமான் எழுந்தருளிய முக மண்டபம் அமைந்துள்ளது. சிற்றம்பலத்தின் எதிரேயுள்ள முக மண்டபத்தினையொட்டிக் கிழக்குப் பக்கத்தில் செப்புத்தகடு போர்த்தப்பெற்றதாய் கருங் கற்றுாண்கள் தாங்கப்பெற்றதாய் உள்ள மரக்கூரை அமைந்துள்ளது. இது, முன்மண்டபமாகிய கனகசபையிலே ஆறுகாலமும் சந்திர மௌலீஸ்வரராகிய படிகலிங்கத்திற்கு நிகழும் அபிடேகத்தை அன்பர் பலரும் நின்று தரிசித்தற்கெனவே அமைக்கப் பெற்றதெனத் தெரிகிறது. இங்கிருந்து வலமாகச் சிறிது மேற்கே சென்றால் தென்பாலுகந்தாடும் தில்லைச் சிற்றம்பலப் பெருமான் சந்நிதியை அடையலாம். இங்கு நின்ற வண்ணமே அம்பலவர் திருக்கூத்தினைக் கண் தரிசிக்கலாம். சிற்சபையிலுள்ள சிதம்பர ரகசியத்தையும் கூத்தப்பெருமானையும் சிவகாமியம்மையையும் அணுகிச் சென்று வழிபடுவோர் சிற்சபையாகிய சிற்றம்பலத்திற்கும் கனகசபையான முன் மண்டபத்திற்கும் இடையே மேற்புறத்தும் கீழ்ப்புறத்தும் அமைந்த திருவணுக்கன் திருவாயில் வழியாக ஏறிச்சென்று முன் மண்டபத்தில் நின்று கண்டு தரிசித்தல் மரபு. முன் மண்டபமாகிய கனகசபையில் கூத்தப்பெருமானை நோக்கிய நிலையில் நந்தியம் பெருமானது திருவுருவம் அமைந்துள்ளது. தில்லைச் சிற்றம்பலவனைப் பூசிக்கும் தில்லை வாழந்தணர்கள் கனக சபையிலிருந்து சிற்சபையினுள்ளே செல்லுதற்குரிய இணைப்பாக ஐந்துபடிகள் அமைக்கப் பெற்றுள்ளன. இப்படிகள் பஞ்சாட்சரப்படிகள் என வழங்கப்பெறும். இப்படிகளின் இருபுறத்தும் இவற்றைத் தாங்கும் நிலையில் துதிக்கை யுடையகளிற்றின் {யாளியின்) கைகள் அமைந்துள்ளமையால், இதனைத் திருக்களிற்றுப்-படியென வழங்குதல் சைவ இலக்கிய மரபாகும். திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார் திருவுந்தியாரின் வழி நூலாக இயற்றிய நூலை இப்படியில் வைத்தபோது, இப் படியிலமைந்தகளிறு இத்நூலைக் கூத்தப் பெருமான் திருவடியில் வைத்தது என்றும் அதுபற்றி அந்நூல் திருக்களிற்றுப்படியார் எனப் பெயர்பெற்ற தென்றும் வழங்கும் வரலாறு இம் மரபினைக் குறிப்பதாகும்.
கூத்தப் பெருமான் அம்மைகாண ஆடல்புரியும் அம்பலத்தைத் திருச்சிற்றம்பலம் எனவும், அவ்வம்பலத்தின் மேல் பொன்வேயப் பெற்ற முகடாகிய புறப்பகுதியைப் பேரம்பலம் எனவும் ஞான சம்பந்தப் பிள்ளையார் குறிப்பித்துப் போற்றியுள்ளார்.
"நிறைவெண் கொடிமாடம் நெற்றி நேர்தீண்டப்
பிறைவந் திறைதாக்கும் பேரம் பலந்தில்லைச்
சிறைவண் டறையோவாச் சிற்றம் பலமேய
இறைவன் கழலேத்து மின்ப மின்பமே” -- என வரும்
திருப்பாடல் பொன்மன்றத்தில் இறைவன் ஆடல் புரியும் உள்பகுதியைச் சிற்றம்பலம் எனவும், பொன் வேய்ந்த மேற்பகுதிபைப் பேரம்பலம் எனவும் குறித்துப் போற்றியுள்ளமை காணலாம். திருநாவுக்கரசுப் பெருமான் இச்சந்நிதியைத் தில்லைச் சிற்றம்பலம் எனவும் தில்லையம்பலம் எனவும் பாடிப் போற்றியுள்ளார். திருமூலநாயனார் பொன்னம்பலம் என இதனைப் போற்றுவதால் அவர் காலத்திலேயே இம்மன்றம் பொன்னினால் வேயப் பெற்றிருந்தது என்பது நன்கு விளங்கும். வானுலகத்து உள்ள தேவர்களே தில்லைப்பெருமானைத் தொழுது போற்றி இவ்வம்பலத்தைப் பொன்னினால் வேய்ந்தார்கள் எனக்கோயிற் புராணம் கூறும். இக்கூற்றுக்கு ஆதாரமாக,
“முழுதும் வானுல கத்துள தேவர்கள்
தொழுதும் போற்றியுந் தூயசெம் பொன்னினால்
எழுதி மேய்ந்தசிற் றம்பலக் கூத்தனை
இழுதை யேன்மறந் தெங்ஙனம் உய்வனோ" -என வரும்
திருநாவுக்கரசர் திருக்குறுந்தொகை அமைந்துள்ளது. இத்திருப் பாடலில் தூய செம்பொன்னினால், எழுதிமேய்ந்த சிற்றம்பலம் என திருநாவுக்கரசுப்பெருமான் குறிப்பிடுதலால் இவ்வம்பலத்தில் வேயப்பெற்ற பொற்றகடுகள் ஒவ்வொன்றிலும் திருவைந்தெழுத்து எழுதப்பெற்றுள்ளமை அறியப்படும். திருச்சிற்றம் பலமாகிய பொன்னம்பலத்தில் அறுபத்து நான்கு கைச்சாத்துக்கள் உள்ளன. இவை அறுபத்து நான்கு கலைகளைக் குறிப்பன என்பர். அம்பல முகட்டில், இருபத்தோராயிரத்து அறு நூறு பொன்னோடுகள். வேயப்பெற்றுள்ளன. இவை ஒவ்வொருநாளும் மனிதர்களாகிய நம்மனோர் விடும் மூச்சின் எண்ணிக்கையை உணர்த்துவன. பொன்னோடுகளிற் பொருத்தப்பெற்ற ஆணிகள் எழுபத்தீராயிரமாகும். இவை மாந்தருடைய சுவாச இயக்கத்திற்கு ஆதாரமாகிய எழுபத்திரண்டு நாடிகளை உணர்த்துவன. இம் மன்றத்தின் புறத்தே வெள்ளித்தகடு போர்த்தப் பெற்ற பலகணிகள் தொண்ணூற்றாறும் சைவசித்தாந்தத் தத்துவங்கள் முப்பத்தாறும் அவற்றின் விளைவாகிய தத்துவங்கள் அறுபதும் ஆகிய தொண்ணூற்றாறு தத்துவங்களை உணர்த்துவன. சிற்றம்பல வாயிலிலமைந்துள்ள திருக்களிற்றுப்படிகள் ஐந்தும் திருவைந் தெழுத்தை உணர்த்துவன. சிற்றம்பலத்தினுள்ளே பிரணவ தீபத்தில் சிதம்பர ரகசியம் அமைந்துள்ளது. சதாசிவபீடத்தில் கூத்தப்பெருமானும் சிவகாமியம்மையும் எழுந்தருளியுள்ளனர். நடுவேயமைந்த பீடத்திலுள்ள பத்துத் தூண்களில் நான்கு நால் வேதங்களையும் ஆறு ஆறங்கங்களையும் உணர்த்துவன. இம்மன்றத்திலுள்ள மரத் தூண்கள் இருபத்தெட்டும் இருபத்தெட்டுச் சிவாகமங்களை உணர்த்துவன. பதினெட்டுக்கற்றூண்கள் பதினெண் புராணங்களைக் குறிப்பன. மேலுள்ள ஒன்பது கலசங்கள் ஒன்பது வாயில்களைக்குறிப்பன. இம்மன்றத்தின் தத்துவ அமைப்பு,
ஆறு சாத்திரம், நாலுவேதமதில் தூண் ஆகமங்கள் இருபத்தெட்டுடன்
ஐம்பெரும் பூதங்கள் பதினெண் புராணங்கள் அரியசிறு தூண் உத்திரம்
ஏறுகலை அறுபத்து நாலு கைம்மா நாட்டி எழுபத்திரண்டாயிரம்
எழில் வரிச்சுடன் ஆணி புவனம் இருநூற்றிருபத்தி னாலும்
குலவு சிற்றோடு இருபத்தோ ராயிரமும் கூறும் அறு நூறும் ஆகத்
தேறுமொரு பெரு வீடு கட்டி விளையாடும் உமை சிறுவீடு கட்டி யருளே
சிவகாமசுந்தரி யெனும் பெரிய விமலையே' சிறுவீடு கட்டி யருளே.
எனவரும் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ்ப் பாடலில் விரித்துக் கூறப்பெற்றிருத்தல் அறியத்தகுவதாகும்.
தில்லைச்சிற்லம்பலமாகிய இத்திருவருள் நிலையத்திலே எல்லாம் வல்ல இறைவன், முக்கண்களும் நான்கு திருக்கரங்களும் உடையவராகவும், இளம்பிறை, பாம்பு, ஊமத்தநறுமலர் கங்கை தங்கிய சடைமகுடம் உடையவராகவும்; புலித்தோலாடை புனைந்தவராகவும்; நீறணிந்த மேனியும் குமிண் சிரிப்புமுடையவராகவும்; தன் இடப்பக்கத்தே உள்ள சிவகாமியம்மையார் கண்டுகளிக்க ஆனந்தத் திருக்கூத்தினையாடியருளும் காட்சி காண்போர்க்கு எக்காலத்தும் பேரின்பத்தினை நல்கும் அற்புதக் காட்சியாகும். இவ்வற்புதக் காட்சியைத் திருநாவுக்கரசு சுவாமிகள் தாம் பாடிய கோயில் திருவிருத்தப் பதிகங்கள் இரண்டிலும் விளித்துரைத்துப் போற்றியுள்ளார். கூத்தப்பெருமானை வழிபடுவோர் இத்திருப்பதிகங்களை இச்சந்நிதியின் முன்னின்று பாடிப் போற்றுவாராயின் அனைத்தும் வேடமாம் அம்பலக் கூத்தனார் நினைப்பவர் மனம் கோயிலாக் கொள்வர் என்பது திண்ணம். நடராசப் பெருமான் எழுந்தருளியுள்ள சதாசிவபீடத்தையொட்டி நடராசப் பெருமானுக்கு வலப்பக்கத்தேயடைந்த பிரணவ பீடத்தில் சிதம்பர ரகசியம் எனப்படும் அருவத் திருமேனியாகிய சந்நிதி அமைந்துள்ளது. பெருவெளியாக இறைவன் விளங்குந் திறத்தைப் புலப்படுத்தும் இது, வில்வப் பொன்னிதழ் மாலை தொங்கவிடப்பட்டுக் கறுப்புத் திரையினால் மறைக்கப் பெற்றுள்ளது. இதனைத் தரிசிப்போர் தில்லைவாழந்தணர் உள்ளிருந்து திரைவிலக்கி, கற்பூர தீபம் காட்டும் நிலையில் சிற்றம்பலத்தில் அமைந்த பலகணி வாயிலாகவே புறத்தே நின்று கண்டு வழிபடுதல் வேண்டும். நடராசப் பெருமானுக்கு அருகே மாணிக்கக் கூத்தராகிய இரத்தின சபாபதியின் திருவுருவம் அமைந்த பேழையும் படிகலிங்கம் அமைந்துள்ள பேழையும் வைக்கப் பெற்றுள்ளமை காணலாம். தில்லைச் சிற்றம்பலத்திலே, அருவத் திருமேனியாகிய சிதம்பர ரகசியத்தையும் உருவத் திருமேனியாகிய கூத்தப்பெருமான் திருவுருவத்தையும் அருவுருவத்திருமேனியாகிய படிகலிங்கத்தையும் ஒருங்கே கண்டு தரிசிக்கலாம். கூத்தப்பெருமான் திருவுருவத்தை அதிகார சிவமாகிய மாகேசுவர மூர்த்தங்கள் இருபத்தைந்தனுள் ஒன்றாகிய சபாபதி எனவும், அம்மூர்த்தங்கட்கும் அப்பாற்பட்ட போக சிவமாகிய சதாசிவமூர்த்தியின் மேலான தத்துவம் கடந்த நிலையில் உள்ள ஆனந்த தாண்டவமூர்த்தி எனவும் ஆகமங்கள் இருதிறனாகக் கூறுகின்றன. மகுடாகமம் கூறும் நடராச வடிவம் தத்துவங்கடந்த ஆனந்தத் தாண்டவ வடிவமாகும். காமிகம் முதலிய ஆகமங்கள் கூறும் நடராசர் சந்நிதி பரிவார சந்நிதி எனவும், மகுடாகமங் கூறும் நடராசர் சந்நிதி மூலத்தானச் சந்நிதி எனவும் பகுத்து ணர்தல் வேண்டும். இச் சிறப்புப்பற்றியே தில்லைப் பெருங்கோயிலின், வழிபாடு மகுடாகமத்தை அடியொற்றியதெனத் தில்லைக் கலம்பக ஆசிரியர் குறித்துள்ளார் எனக்கருத வேண்டியுளது.
தில்லைச்சிற்றம்பலவரை வணங்கி, அவ்வம்பலத்தைச் சூழ்ந்த முதற்பிரகாரத்திலுள்ள கூத்தாடும் விநாயகர் இலிங்கோற்பவர், அறுமுகப்பெருமான் ஆகிய பரிவார தெய்வங்களின் சந்திதியையும், பள்ளியறையையும், மேல் மாளிகையையும், அதனை யொட்டியமைந்தமேன்மாடத்திலுள்ள ஆகாயலிங்கத்தையும், கீழே பிச்சைத்தேவர் சந்நிதியையும் பைரவர் சந்நிதியையும் வணங்கி, பரமானந்த கூவத்தின் அருகேயுள்ள சண்டேசுவரர் சந்நிதியை அடையலாம், பைரவர் சந்நிதிக்கு எதிரில் பரமானந்த கூவத்தின் அருகில் அமைந்தது. சண்டேசுவரர் சந்நிதியாகும். இதன்கண் நான்கு முகங்களையுடைய, பிரம சண்டீசுவரரும் ஒருமுகத்தோடுள்ள சேய்ஞலூர்ப் பிள்ளையாராகிய சண்டீசுவரரும் எழுந்தருளியுள்ளனர். இம்முதற் பிரகாரத்தில் திருமாளிகைப் பத்தியின் குறட்டின் கீழ், திருவிளையாடற் புராணச் சிற்பங்கள் அமைக்கப் பெற்றுள்ளமை காணலாம்.
தில்லையம்பலத்தில் நடம்புரியும் கூத்தப்பெருமான் சந்நிதியை யடைந்து தென்புறமாக எதிரிலுள்ள படிகளின் - மேலேறி நின்று பார்த்தால் தென் பாலுகந்தாடும் தில்லைச் சிற்றம்பல வரது திருவுருவத்தோற்றத்தையும், மேற் பக்கமாகக்கிழக்கு நோக்கியமைந்த சந்நிதியில் அறிதுயிலமர்ந்தருளிய கோவிந்த ராசப்பெருமாள் திருவுருவத்தையும் ஒருங்கே கண்டு வழிபடலாம். கி. பி 726 முதல் கி.பி. 775வரை ஆட்சிபுரிந்த நந்திவர்மப் பல்லவன் என்பவனால்தில்லைப்பெருங் கோயிலில் பிரதிட்டை செய்யப் பெற்ற பெருமாள் சந்நிதி தில்லைத் திருச் சித்திர கூடம் என்பதாகும். இது திருமங்கையாழ்வாராலும் குல சேகராழ்வாராலும் மங்களாசாசனம் செய்யப்பெற்ற திருத்தலமாகும். தில்லை மூவாயிரவராகிய அந்தணர்களே இது திருச் சித்திர கூடப் பெருமாளையும் முற்காலத்தில் பூசனை செய்து வந்தனர். இச்செய்தி,
மூவாயிரநான் மறையாளர் நாளும்
முறையால் வணங்க அணங்காயசோதி
தேவாதி தேவன் திகழ்கின்ற தில்லைத்
திருச்சித்ர கூடம் சென்று சேர் மின்களே. (பெரிய திருமொழி 3-2,3)
எனத் திருமங்கை ஆழ்வாரும்,
'செந்தளிர்வாய் மலர்நகைசேர் செழுந்தண் சோலைத்
தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
அந்தணர்க ளொருமூவா யிரவ ரேத்த
அணிமணியா சனத்திருந்த வமமான் றானே” (பெருமாள் திருமொழி 10-2)
எனக் குலசேகர ஆழ்வாரும் பாடிப் போற்றிய பனுவல்களால் புலனாகின்றது. குலசேகராழ்வார் அருளிய, அங்கணெடு மதில், எனத்தொடங்கும் பதிகம் இராமாயண நிகழ்ச்சியைத்தொகுத்துக் கூறும் சிறப்புடையதாகும்.
இங்ஙனம் ஓரிடத்தில் நின்றே சிவபெருமான் திருமாலாகிய இருபெருந் தெய்வங்களையும் ஒரு சேர வழிபடும் நிலையில் அமைந்துள்ள தெய்வத்தலம் தில்லைப்பெருங்கோயிலாகிய இத்திருத்தலமேயாகும். தம் பெற்றோர்கள் தில்லைப் பெருமானை வழிபட்டதன் பயனாகப் பிறந்த அப்பைய தீட்சதர் என்பவர் வேதசாத்திரங் கலைகளில் வல்லவராய் வட மொழியிற் பல நூல்களை இயற்றிச்சிவபரத்துவத்தை நிலைநாட்டிய பெருந்தகையார் ஆவர். சிறந்த சைவசமயச் சான்றோராகிய இப் பெரியார் இங்கு நின்று தில்லைக்கூத்தனையும் கோவிந்தராசப் பெருமாளையும் ஒருங்கே போற்றும் முறையில் வடமொழியில் தோத்திரப்பாடல்கள் பாடியுள்ளார். இப்பாடல்கள் திருமாலையும் சிவபெருமானையும் ஒருங்கே போற்றுவனவாகவும் சைவ வைணவ, சமரச உணர்வைத் தூண்டுவனவாகவும் அமைந்துள்ளமை இங்குச் சிறப்பாகக் குறிக்கத்தக்கதாகும்.
தில்லைப் பெருங்கோயிலில் தெற்கு மேற்கு வடக்கிலுள்ள கோபுரங்களையடுத்து முறையே திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய தேவார ஆசிரியர் மூவர்க்கும் திருக்கோயில்கள் அமைந்திருந்தன. மேற்குக் கோபுரத்தையொட்டி மூன்றாம் பிரகாரத்தில் திருநோக்கழகியான் மண்டபம் ஒன்றிருந்தது. இன்னும்பல சந்நிதிகளும் இருந்தன. இவையனைத்தும் வேற்றுச் சமயத்தார் தில்லைப்பெருங்கோயிலை அரணாகக் கொண்டு தங்கிச் செய்த சிதைவுகளாலும் அரசியல் ஆட்சி மாற்றங்களாலும் கவனிப்பாரில்லாமையாலும் இருந்த இடம் தெரியாமல் அழிந்து போயின. முன்னோர்கட்டிய கோயில்களைச் சிதையாமற் பாதுகாத்துக்கொள்ளும் ஆற்றல் பிற்காலத்தில் நம்மனோர்க்கு இல்லாமை வருந்துதற்குரியதாகும்.
இறைவன் ஆடல்புரியும் சிற்றம்பலம் சிற்சபை எனவும். அதற்கு முன்னுள்ள எதிரம்பலம் கனகசபை எனவும், கொடிமரத்தின் தெற்கேயள்ள ஊர்த்துவதாண்டவ மூர்த்தியின் சந்நிதி நிருத்தசபை எனவும், சோமாஸ்கந்தர் முதலிய எழுந்தருளும் திருமேனியுள்ள சந்நிதி தேவசபை (பேரம்பலம்) எனவும், ஆயிரக்கால் மண்டபம் இராசசபை எனவும் வழங்கப் பெறும். இவை ஐந்தும் தில்லையிலுள்ள ஐந்து சபைகளாகும்; இவ்வைந்து சபைகளும் சோழ மன்னர்களாலேயே திருப்பணி செய்யப் பெற்றன என்பது இவற்றின் கட்டிட அமைப்பால் நன்குவிளங்கும்.
--------------
5. தில்லையில் கூத்தப்பெருமானை வழிபட்டுப் பேறுபெற்றோர்
எல்லாம் வல்ல சிவபெருமான் சிவகாமியம்மை கண்டுகளிக்க ஞானமயமான தில்லைப்பொன்னம்பலத்திலே அற்புதத்தனிக் கூத்தினை ஆடியருளும் செயல் உலகத்தோற்றம் தொடங்கியது முதலே நிகழந்துவரும் தொன்மை வாய்ந்ததாகும்.
முருகன்
சூரபதுமனால் துயருற்ற தேவர்களைச் சிறைநீக்கி உய்வித்தல் வேண்டிச் சிவபெருமான் பால் விடைபெற்றுத் தாரகனை வதைத்து, கேதாரம், காசி, திருப்பருப்பதம் முதலிய தலங்களை வணங்கி,தென்னாட்டிற்கு எழுந்தருளிய முருகப்பெருமான்,பதஞ்சலிக்கும் புலிமுனிக்கும் ஆடல்காட்டியருளிய தில்லை மூதூரைக் கண்டு அங்கு உலகபுருடனுக்கு இதயகமலமாகத்திகழும் அம் மன்றத்திலே இறைவன் ஆடும் அற்புதத் தனிக்கூத்தினை வணங்கிச் சென்றார் என்பது,
"விரகனல் வேள்வி தன்னில் வியன்றலை அரிந்து வீட்டிப்
பொருவரு தவத்தை யாற்றும் பதஞ்சலி புலிக்கால் அண்ணல்
இருவரும் உணர்வாற் காண எல்லையில் அருளா வீசன்
திருநட வியற்கை காட்டுந் தில்லைமூ தூரைக் கண்டான்”.
“தண்டளிர்ச் சோலைத் தில்லை தபனிய மன்றி லென்றுந்
தொண்டையங் கனிவாய் மாது தொழச் சுராட் புருடன் உள்ளத்
தண்டரு மதிக்க லாற்ற அற்புதத் தனிக்கூத் தாடல்
கண்டன்ன கசிவால் உள்ளங் களிப்புற வணங்கிப் போனாள்".
என வரும் கந்தபுராணச் செய்யுட்களால் புலனாம்.
அருச்சுனன்
வடநாட்டிலிருந்து தீர்த்தயாத்திரையாகப்புறப்பட்ட அருச்சுனன் தில்லைப் பெருங்கோயிலில் கூத்தப்பெருமானை வழிபட்டு மகிழ்ந்தாள் என்பது,
“இன்னம்பலபல யோனியில் எய்தா நெறி பெறவே
முன்னம்பலர் அடிதேடவும் முடிதேடவும் எட்டா
அன்னம் பல பயில்வார் புனல் அணிதில்லையுள் ஆடும்
பொன்னம்பல நாதன் கழல் பொற்போடு பணிந்தான்”
என வரும் வில்லிபுத்தூராழ்வார் பாடலால் இனிது விளங்கும்.
திருமூலநாயனார்
தில்லை மன்றுள் இறைவன் ஆட்டியருளும் இத்திருக்கூத்தினை மன்று தொழுத பதஞ்சலி வியாக்கிரர் ஆகியோருடன் கண்டு தொழுதவர் திருமுறை யாசிரியர்களுள் காலத்தால் முற்பட்ட வரும் சிறந்த சிவயோகியாருமாகிய திருமூல நாயனாராவர். இச்செய்தி,
"நந்தியருள் பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக்கிரர்
என்றிவ ரென்னோ டெண்மரு மாமே” (திருமந்திரம்-67)
எனவும்,
“செப்புஞ் சிவாகமம் என்னும் அப்பேர் பெற்றும்
அப்படி நல்கும் அருள்நந்தி தாள் பெற்றுத்
தப்பிலா மன்றிற் றனிக்கூத்துக் கண்ட பின்
ஒப்பில் எழுகோடி யுகமிருந் தேனே" (திருமந்திரம்-74)
எனவும் வரும் திருமூலர் வாய்மொழியால் நன்கு விளங்கும். தில்லைப் பெருமான் வியாக்கிரபாத முனிவருடைய குழந்தை பாலில்லாது அழுதபோது பாற்கடலையே வருவித்துக் குழந்தையின் பசி தீர்த்தருளினார். இச்செய்தி, ‘பாலுக்குப்பாலகன் வேண்டி அழுதிடப் பாற்கடலீந்தபிரான்' எனவரும் திருப்பல்லாண்டிற் குறிக்கப்பெற்றுள்ளது.
பொற்பதியாகிய தில்லை, உலகபுருடனின் நெஞ்சத்தாமரை யாகவும் இடைகலை பிங்கலை சுழுமுனை என்னும் மூன்று நாடிகளும் சந்திக்கும் இடமாகவும் இறைவனது அருட்கூத்து நிகழும் இடமாகவும் திகழ்வதனை,
மேரு நடுநாடி மிக்கிடை பிங்கலை
கூரும் இமவான் இலங்கைக் குறியுறும்
சாரும் திலைவனத் தண்மா மலயத்தூ
டேறும் சுழுனை இவைசிவ பூமியே’’ (2747)
என வரும் திருமந்திரம் இனிது புலப்படுத்துவதாகும்.
தில்லைப் பதியிலே நுண்ணிய ஞான வெளியாகிய திருச்சிற்றம்பலத்திலே இறைவன் நிகழ்த்தியருளும் அற்புதத் திருக் கூத்தினை நேரிற் கண்டு மகிழ்ந்தவர் திருமூலதேவர் என்பது,
“நெற்றிக்கு நேரே புருவத் திடைவெளி
உற்றுற்றுப் பார்க்க ஒளிவிடும் மந்திரம்
பற்றுக்குப் பற்றாய்ப் பரம னிருந்திடம்
சிற்றம் பலமென்று தேர்ந்து கொண்டேனே” (2770)
எனவரும் திருமந்திரத்தாற் புலனாம். ‘நெற்றிக்கு நேரே புருவத்து இடைவெளி’ என்றது, ஆறாதாரங்களுள் ஆக்ஞை எனப்படும் இடத்தினை. உற்று உற்றுப் பார்த்தல் - ஐம்புல னடக்கி ஒருமைநிலையி லிருந்து கூர்ந்து தியானித்தல். அங்ஙணம் தியானிக்கும் நிலையில் நாதாந்தத்தின் அஞ்செழுத்தாகிய மந்திரவுருவில் ஒளிப்பிழம்பாய் ஆடல்புரியும் இறைவனது திருக்கூத்துப் புலனாகும் என்பார், ‘உற்றுற்றுப் பார்க்க ஒளிவிடும் மந்திரம்’ என்றார். உயிர்கள் தமக்குப் பற்றுக்கோடாகக் கொண்டுள்ள எல்லாப் பொருள்கட்கும் பற்றுக்கோடாகத் திகழ்பவன் பரமன் ஒருவனே என்று அறிவுறுத்துவார் பற்றுக்குப்பற்றாய்ப் பரமன் இருந்திடம் என்றார். இறைவன் உயிர்களின் உள்ளமாகிய நெஞ்சக்கமலத்திலே நுண்ணிய பரவெளியாகிய ஞான ஆகாசமே இடமாக அருட் கூத்தியற்றுகின்றான் என்பதனைத் தில்லைச்சிற்றம்பலத் திருக்கூத்தினால் தெளிந்து கொண்டேன் என்பார், ‘பரமன் இருந்திடம் சிற்றம்பலமென் றுதேர்ந்து கொண்டேனே என்றார். 'நற்றவத்தோர் தாம் காண நாதாந்தத் தஞ்செழுத்தாய் உற்றுரு வாய் நின்றாடல்’ (39) எனவும், 'சிவாய நமவென்னும் திரு வெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்’ (31) எனவும் வரும் உண்மை விளக்கத் தொடர்கள் இங்கு ஒப்பு நோக்கி யுணரத்தக்கன.
சிதாகாசப்பெருவெளியில் ஆனந்தக் கூத்தராகிய அம்பல வாணர் அருட்சத்தியாகிய சிவகாமி யம்மையுடன் திருவைந் தெழுத்தாகிய மந்திரவுருவாய் நின்று ஆடல் புரியுந்திறத்தைப் புலப்படுத்துவது திருவம்பலச் சக்கரம் என்னும் யந்திரமாகும். தில்லை மன்றில் நிகழும் திருக்கூத்தினைக்கண்டு மகிழ்ந்த திரு மூலநாயனாரை கூத்தப்பெருமானது அருவத்திருமேனியாகிய இதனைத் திருமந்திரம் நாலாந்தந்திரம் திருவம்பலச் சக்கரம் என்ற தலைப்பில் விரித்துரைத்துப் போற்றியுள்ளார்.
நந்தியாகிய சிவபெருமான் திருவைந்தெழுத்தாகிய மந்திர வடிவில் எழுந்தருளியுள்ளான் என்பதனை,
'அஞ்செழுத் தாலே அமர்ந்தனன் நந்தியும்
அஞ்செழுத் தாலே அமர்ந்த பஞ்சாக்கரம்
அஞ்செழுத் தாகிய அக்கர சக்கரம்
அஞ்செழுத் துள்ளே யமர்ந்திருந் தானே' (திருமந்திரம்-934)
எனவரும் பாடலிற்குறித்த திருமூலர், திருவைந்தெழுத்தே கூத்தப்பெருமான் திருமேனியாக விளங்குந்திறத்தினை
"ஆகின்ற பாதமும் அந்நாவாய் நின்றிடும்
ஆகின்ற நாபியுள் அங்கே மகரமாம்
ஆகின்ற சியிருதோள், வவ்வாய் கண்டபின்
ஆகின்ற வச்சுடர் யவ்வியல் பாமே” (௸941)
எனவரும் திருமந்திரத்தில் விரித்துக் கூறியுள்ளார். “உயிர்களுக்கு ஆக்கமளிக்கும் திருவடியும் அந்த நகர எழுத்தாய் நிலைபெறும் உந்திச்சுழியாகிய வயிற்றிடத்தே மகர எழுத்துப் பொருந்தும். சிகர எழுத்து இருதோள்களாகவும் வகர எழுத்து வாயாகவும் கண்டபின் திருமுடிக்கண் விளங்குகின்றசுடர் யகரவெழுத்தின் வடிவினதாய்த்தோன்றும்" என்பது இத்திருமந்திரப்பாடலின் பொருளாகும். எல்லாமொழிக்கும் பொதுவாகிய திருவைந்தெழுத்தினைத் தமிழ் எழுத்துவடிவில் மேற்குறித்த வண்ணம் எழுதிப்பார்த்து நடராசப் பெருமானது திருமேனியைத் திருமூலர் முதலிய தமிழ்முனிவர்கள் சிந்தித்துப் போற்றியுள்ளார்கள் என்பது, இங்கு எடுத்துக்காட்டிய திருமந்திரப் பாடலாலும்,
"நவ்விரண்டு காலதாய் நவின்றமவ் வயிறதாய்ச்
சிவ்விரண்டு தோளதாய்ச் சிறந்தவவ்வு வாயதாய்
யவ்விரண்டு கண்ணதாய் எழுந்து நின்ற நேர்மையிற்
செவ்வை யொத்து நின்றதே சிவாயமஞ் செழுத்துமே"
என வரும் சிவவாக்கியர் பாடலாலும்,
"ஆடும் படிகேள்நல் லம்பலத்தான் ஐயனே
நாடும் திருவடியி லேநகரம் -- கூடும்
மகரம் உதரம், வளர்தோள் சிகரம்
பகருமுகம் வா,முடியப் பார்" (உண்மை விளக்கம்-32)
"ஓங்கார மேநற் றிருவாசி யுற்றதனில்
நீங்கா எழுத்தே, நிறைசுடராம்--ஆங்காரம்
அற்றார் அறிவர் அணி அம்பலத்தான் ஆடலிது
பெற்றார் பிறப்பற்றார் பின்" (௸-34)
என வரும் உண்மை விளக்கச் செய்யுட்களாலும் நன்கு புலனாகும்.
தில்லையம்பலவாணர் நிகழ்த்திய திருக்கூத்தினை ஐந்தொழில் திருக்கூத்து எனவும் பஞ்சகிருத்திய பரமானந்த தாண்டவம் எனவும் கூறுவர் பெரியோர். ஐந்தொழில்களாவன படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்பன: அவற்றுள் படைத்தல் என்பது ஆணவ இருளில் அகப்பட்டு அறிவு இச்சை செயல்கள் என்னும் ஆற்றல் தளைப்பட்டுத் தனித்துக் கிடந்த ஆன்மாக்களுக்கு அவ்விருள் சிறிதேயகல, அவ்வுயிர்களின் அறிவு இச்சை செயல்கள் புலப்படுதல் வேண்டி இறைவன் தனது உடைமையாகவுள்ள மாயை என்னும் சடசத்தியிலிருந்து. உடல் கருவி உலகு, நுகர். பொருள்களைத் தோற்றுவித்து அவற்றை ஆன்மாக்களுடன் கூட்டுதல். காத்தல் என்பது உடம்போடு உலகில் வாழ்ந்து இருவினைகளைச் செய்யும் ஆன்மாக்கள் தாங்கள் செய்த இருவினைப் பயன்களாகிய இன்ப துன்பங்களைத் தாங்களே நுகரும் படிசெய்து அவற்றைப்பற்றியுள்ள பாசப் பிணிப்பினை அகற்றுதலாகும். அழித்தல் என்பது கன்மத்தினால் அலைப்புண்டுவருந்தும் ஆன்மாக்களை இளைப்பாற்றும் பொருட்டு, உலகினை ஒடுக்கிக் கொள்வதாகும். மறைத்தல் என்பது ஆன்மாக்கள் செய்த இருவினைப் பயன் அவ்வான் மாக்களே புசித்துக் கழிக்கும் படி மறைந்து நின்று தகர்த்துக் கன்மங்களைப் போக்கி ஆன்மாக்களைச் செம்பிற் களிம்பு போன்று அநாதியேபற்றியுள்ள ஆணவமலம் கழலும் பக்குவத்தினை யுண்டாக்குதல். அருளல் என்பது மலப்பிணிப் பினையறவேயகற்றி ஆன்மாக்கனைத்தன் திருவடியிலே கூட்டிக் கொள்ளுதலாகும். இங்குச் சொல்லப்பட்ட ஐந்தொழில்களும் ஒருங்கே நிகழும் வண்ணம் சிவபெருமான் திருவருட் கூத்து ஆடியருளுதலால் அத்திருக்கூத்து பஞ்சகிருத்திய பரமானந்தத் தாண்டவம் எனப்போற்றப்பெறுவதாயிற்று. தில்லையம்பலத்தில் நிகழும் இத்திருக் கூத்து மேற்கூறிய ஐந்து தொழில்களின் அமைப்புடையதாதலை
"அரன்துடி தோற்றம், அமைத்தல் திதியாம்,
அரன் அங்கிதன்னில் அறையில் சங்காரம்,
அரனுற்றனைப்பில் அணையுந் திரோதாயி,
அரனடி யென்றும் அனுக்கிரகந் தானே" (திருமந்-2799)
எனவரும் திருமந்திரத்தில் திருமூலர் இனிது விளக்கியுள்ளார்.
'கூத்தப்பெருமான் திருக்கரத்தில் உள்ள உடுக்கை படைப்புத் தொழிலைக் குறிக்கும். அஞ்சல் என்று அமைத்த வலக்கை காத்தற்றொழிலை யுணர்த்தும். இடக்கையில் ஏந்திய தீயின் அமைப்பு அழித்தற்றொழிலையுணர்த்தும். இடக்கையில் ஏந்திய தீயின் அமைப்பு அழித்தற் றொழிலைக் குறிக்கும். ஊன்றியவலத் திருவடியினால் முயலகனை மிதித்துள்ள நிலையில் மறைத்தற் றொழில் பொருந்தியுள்ளது. அம்முதல்வனது இடது பாதமாகிய தூக்கிய திருவடியானது எக்காலத்தும் மன்னுயிர்களுக்கு அருள் புரிதலைக்குறிப்பதாகும்" என்பது மேற்காட்டிய திருமந்திரத்தின் பொருளாகும். இத்திருமந்திரப் பொருளை விரித்துரைப்பது,
"தோற்றந் துடியதனில் தோயும் திதி அமைப்பில்
சாற்றியிடும் அங்கியிலே சங்காரம், ஊற்றமாய்
ஊன்று மலர்ப்பதத்தே உற்றதிரோதம், முத்தி
நான்ற மலர்ப்பதத்தே நாடு” (உண்மை -35)
எனவரும் உண்மை விளக்க வெண்பாவாகும்.
மன்னுயிர்களின் சித்தத்தில் எழுந்தருளிய இறைவன் ஐம் பெரும் பூதங்கள், அவற்றிடமாகப் பொருள்களை அறியும் வாயிலாகிய ஐம்பொறிகள், அவற்றின் வழி நிகழும் புலனுணர்வுகள், வேதப் பொருளாய் விளங்கும் திருவைந்தெழுத்து, வேதத்தின் மிக்க சிவாகமங்கள், கலைகள் காலம் ஊழி கலை அண்டங்களின் இயக்கம் ஆகிய எல்லாவற்றிலும் வேறறக் கலந்து நின்று திருக்கூத்து நிகழ்த்தியருளும் திறத்தினை,
"பூதங்கள் ஐந்திற் பொறியிற் புலனைந்தில்
வேதங்கள் ஐந்தின் மிகும் ஆகமம்தன்னில்
ஒதும் கலை காலம் ஊழியுடன் அண்டப்
போதங்கள் ஐந்திற் புணர்ந்தாடும் சித்தனே" (2730)
எனவரும் திருமந்திரம் விரித்துரைக்கின்றது. புணர்தல் - வேறறக்கலத்தல்.
"பூதங்கள் ஐந்தாகிப் புலனாகிப் பொருளாகிப்
பேதங்கள் அனைத்துமாய்ப் பேதமிலாப் பெருமையனைக்
கேதங்கள் கெடுத்தாண்ட கிளரொளியை மரகதத்தை
வேதங்கள் தொழுதேத்த விளங்கு தில்லை கண்டேனே" (கண்ட பத்து -10)
எனவரும் திருவாசகம், மேற்குறித்த திருமந்திரத்தை அடி யொற்றியமைந்துள்ளமை காணலாம்.
அண்டங்கள் ஏழினுக் கப்புறத் தப்பால
உண்டென்ற சத்தி சதாசிவத் துச்சிமேற்
கண்டங் கரியான் கருணை திருவுருக்
கொண்டங் குமை காணக் கூத்துகந் தானே” (2732)
எனவரும் திருமந்திரம் உமையம்மையார் காணத் திருவம்பலத்திலே இறைவன் ஆடியருளும் ஒருபெருந் திருக்கூத்தின் இயல்பினை விரித்துரைப்பதாகும். இத் திருமந்திரப் பொருளை விரித்து விளக்கும் முறையில் அமைந்தது.
“கற்பனை கடந்த சோதி கருணையே உருவமாகி
அற்புதக் கோலம் நீடி அருமறைச் சிரத்தின் மேலாம்
சிற்பர வியோம மாகுந் திருச்சிற்றம் பலத்துள் நின்று
பொற்புடன் நடஞ்செய்கின்ற பூங்கழல் போற்றி போற்றி"
--- (பெரிய - தில்லைவாழ்-2)
என வரும் சேக்கிழார் நாயனார் வாய் மொழியாகும்.
சிற்றம்பலம் எனத் தில்லையம்பலத்தைக் குறித்து வழங்கும் இச்செந்தமிழ்ச் சொல்லே சிதாகாசம் என்ற பொதுப்பொருளில் சிதம்பரம் என மருவி வழங்கப்பெறுவதாயிற்று!
“எங்கும் திருமேனி எங்குஞ் சிவசத்தி
எங்கும் சிதம்பரம் எங்குந் திருநட்டம்
எங்குஞ் சிவமா யிருத்தலால் எங்கெங்கும்
தங்குஞ் சிவனருள் தன்விளை யாட்டதே” -(2722)
எனவரும் திருமந்திரப்பாடல் ஒன்றில் மட்டுமே சிதம்பரம் என்ற சொல் வழங்கப்பெற்றுள்ளது. பன்னிரு திருமுறைகளில் வேறு எங்கும் இப்பெயர் எடுத்தாளப் பெறவில்லை.
தாயின் முலைப்பாலை உணவாகக்கொண்டுவளரும் பசுங் குழந்தைகட்கு நோய்வந்தால் அந்நோயைத் தீர்க்கும் மருந்தினை அக்குழந்தையின் குடர் தாங்காதென்று கருதி அம் மருந்தினைத் தாயே உண்டு அதன் பயனை கைக்குழந்தைகள் பெற்று நலம்பெற உதவுதல் உலகியலிற் கண்டது. உலகமீன்ற பெருமாட்டியாகிய சிவகாமி யன்னையும் இறைவனது திருக்கூத்தினை மன்னுயிர்கள் நேரிற் காண வியலாதநிலையில் அவ்வுயிர்களின் பிறவிநோய் நீங்கப் பெருமான் செய்தருளும் திருக்கூத்தினை, தான் உடனிருந்து கண்டு அதன் பயனை மக்களுக்கு வழங்கியருள்கின்றார்.
இந்நுட்பம்,
“அருமான வாண்முகத்தாள் அமர்ந்து காண
அமரர்கணந் தொழுதேத்த ஆடு கின்ற
பெருமானைப் பெரும்பற்றப் புலியூ ரானை"
எனவரும் திருநாவுக்கரசர் வாய்மொழியாலும், இத்தொடர்ப் பொருளை விரித்து விளக்கும் முறையில்,
"பாலுண்குழவி பசுங்குடர் பொறாதென
நோயுண் மருந்து தாயுண் டாங்கு
மன்னுயிர்த் தொகுதிக் கின்னருள் கிடைப்ப
வைய மீன்றளித்த தெய்வக் கற்பின்
அருள் சூற்கொண்ட வையரித் தடங்கண்
திருமாண் சாயல் திருந்திழை காணச்
சிற்சபை பொனியத் திருநடம் புரியும்
அற்புதக்கூத்த” (சிதம்பர மும்மணிக்கோவை-2)
என வரும் குமரகுருபரர் வாய்மொழியாலும் இனிது புலனாதல் காணலாம்.
திருஞான சம்பந்தர்
மூவர் அருளிய தேவாரத்திருப்பதிகங்களுள் தில்லைக்குரியனவாகத் திருஞானசம்பந்தர் அருளிய திருப்பதிகங்கள் இரண்டும், திருநாவுக்கரசர் திருப்பதிகங்கள் எட்டும், சுந்தரர் திருப்பதிகம் ஒன்றும் ஆகப் பதினொரு திருப்பதிகங்கள் கிடைத்துள்ளன. தில்லைப்பதியை யடைந்த திருஞானசம்பந்தர். அண்ணலார் தமக்கு அளித்த ஞானமேயான அம்பலமும் தம் உள்ளத்தில்லா நிறைந்த ஞானத்தின்கண் நிகழும் ஆனந்தமாகிய ஒருபெருந் தனிக் கூத்தும் ஆகிய தமது அகக்காட்சியினைத் தில்லைச் சிற்றம்பலத்திலே - புறக்காட்சியாகவும் - கண்ணாரக்கண்டு கும்பிட்டார். “உணர்வின் நேர்பெற வருஞ் சிவபோகத்தினை உருவின்கண் அணையும் ஐம்பொறிகளவினும் - எளிவர அருளினை” என்று கூறித் தில்லையம்பலவாணரை வணங்கிக் ‘கற்றாங்கு எரியோம்பி’ என்னும் பதிகத்தைப் பாடித் தில்லை வாழ் அந்தணர்களைச் சிறப்பித்தருளினார். திருவேட்களத்தினைத் தங்குமிடமாகக் கொண்டு, காலந்தோறும் அம்பலவாணரை வழிபட்டு மகிழ்ந்தார். திருவேட்களத்திலிருந்து திருநீல கண்டப்பாணருடன் தில்லைப் பதியிற் புகுந்தபோது இறைவனுக்குத் தொண்டு புரியும் தில்லைவாழந்தணர் அனைவரும் சிவகண நாதர்களாகத் தோன்றக் கண்டு அக்காட்சியைத் திருநீலகண்டப் பாணர்க்கும் காட்டி, 'ஆடினாய் நறு நெய்யொடு பால் தயிர்' என்னும் திருப்பதிகத்தைப் பாடிப் போற்றினார். அத்திருப்பதிகத்தில் "நீலத்தார் கரியமிடற்றினார் நல்ல நெற்றி மேலுற்ற கணினார் பற்று, சூலத்தார் - சுடலைப் பொடி நீறணிவார் சடையார், சீலத்தார். தொழுதேத்து, சிற்றம்பலம்" எனவரும் பாடலில் தில்லைவாழந்தணர் சிவகண நாதர் களாகத் தோன்றிய காட்சி குறிப்பிடப் பெற்றுள்ளமை காணலாம்.
திருநாவுக்கரசர்
ஊனாலும் உயிராலும் உள்ளபயன் பெற விழைந்த தேனாரும் மலர்ச் சோலைத் தில்லையினை அடைந்த திருநாவுக்கரசர், தில்லைச் சிற்றம்பலவர் திருமுன் அணைந்தபோது 'என்று வந்தாய்' என அன்புடன் வினவும் திருக்குறிப்புடன் கூத்தப் பெருமான் நாவுக்கரசர்க்குக் காட்சி கொடுத்தருளினார். இத் திருவருட் குறிப்பினைக் கருநட்ட கண்டனை' என்னும் முதற்குறிப்புடைய திருப்பதிகத்தில்,
"ஒன்றி யிருந்து நினைமின்கள் உந்தமக் கூனமில்லைக்
கன்றிய காலனைக் காலாற் கடித்தான் அடியவற்காச்
சென்று தொழுமின்கள் தில்லையுட் சிற்றம்பலத்து நட்டம்
'என்று வந்தாய்' எனும் எம்பெரு மான்றன் திருக்குறிப்பே"
எனவரும் திருவிருத்தத்திற் குறித்துள்ளமை காணலாம். தம்மை நோக்கி' என்று வந்தாய் என இறைவன் வினவிய வினாவுக்கு விடை கூறுவார் போல,
"பத்தனாய்ப் பாடமாட்டேன் பரமனே பரமயோகீ
எத்தினாற் பத்திசெய்கேன் என்னைநீ யிகழ வேண்டா
முத்தனே முதல்வா தில்லை யம்பலத் தாடுகின்ற
அத்தாவுன் ஆடல் காண்பான் அடியனேன் வந்தவாறே"
எனவரும் திருநேரிசையினையும், 'அன்னம் பாலிக்கும்' என்னும் திருக்குறுந் தொகையினையும் பாடிப் போற்றினார். பின்பு திருவேட்களம் திருக்கழிப்பாலை முதலிய தலங்களை வணங்கிப் 'பனைக்கை மும்மத வேழ முரித்தவன்' என்னுந் திருக்குறுந் தொகையினைப் பாடித் தில்லையை யடைந்தார். 'அரியானை அந்தணர்தஞ் சிந்தையானை' என்னும் பெரிய திருத்தாண்டகம் பாடி அம்பலவரை வணங்கிச் 'செஞ்சடைக் கற்றை முற்றத் திள நிலா வெறிக்குஞ் சென்னி' என்னும் திருநேரிசையையும், 'பாளையுடைக் கமுகோங்கி' எனனும் திருவிருத்தத்தினையும் பாடிப் போற்றினார்.
"குனித்த புருவமுங் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்,
பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால் வெண்ணீறும்
இனித்த முடைய எடுத்தபொற் பாதமுங் காணப் பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே யிந்த மாநிலத்தே"
எனவும்
"வாய்த்தது நந்தமக் கீதோர்பிறவி மதித்திடுமின்"
எனவும் வரும் திருப்பாடல்களில் தில்லையைக்கண்டு வழிபடுதலே மக்கட்பிறப்பின் மேலான பயன் எனவும் இப்பயனைப் பெறுதற்குச் சாதனமாகிய இப்பிறப்பினை மதித்துப் போற்றுதல் வேண்டும் எனவும் அப்பரடிகள் அறிவுறுத்திய திறம் நினைந்து போற்றுதற்குரியதாகும். இறைவன் கோயில் கொண்டருளிய எல்லாத் தளங்களிலும் மிகவும் பெருமை வாய்ந்தது இத்தில்லைத் தலமே என்பதனைப் "பெருமை நன்றுடைய தில்லை" (4-57-4) எனவரும் தொடரில் நாவுக்கரசர் குறித்துள்ளமை அறியத் தகுவதாகும். சிவபெருமான் பல்வேறு தலங்களிற் கோயில் கொண்டு எழுந்தருளியிருப்பினும் அம் முதல்வனுடைய திருவருட்கலைகள் யாவும் ஒருங்கேபுக்கு ஒடுங்கி, நிற்கும் பொது நிலையம், இறைவன் அருட்கூத்தியற்றும் புலியூர்ச் சிற்றம்பலமே என்னும் உண்மையினை உணர்த்தும் முறையில் தாண்டகவேந்தர் அருளிய திருப்பதிகம் 'மங்குல் மதி தவழும்' எனத் தொடங்கும் புக்க திருத்தாண்டகமாகும்.
"காரார் கமழ்கொன்றைக் கண்ணி சூடிக்
கபாலங் கையேந்திக் கங்காளராய்
ஊராரிடுபிச்சை கொண்டு ழலும்
உத்தமராய் நின்ற ஒருவனார் தாம்
சீரார் கழல் வணங்கும் தேவதேவர்
திருவாரூர்த் திரு மூலட்டான மேயார்
போரார் விடையேறிப் பூதஞ்சூழப்
புலியூர்ச் சிற்றம்பலமே புக்கார்தாமே" (6--2-5)
என வரும் புக்க திருத்தாண்டகப்பாடல், திருவாரூர் முதலிய திருத்தலங்கள் எல்லாவற்றிலும் கோயில் கொண்டெழுந்தருளிய இறைவன் தில்லைச் சிற்றம் பலத்திலே, புகுந்து நள்ளிரவில் நட்டம் பயின்றாடுத்திறத்தினைப் புலப்படுத்தல் காணலாம். இறைவனுடைய எல்லாக்கலைகளும் நள்ளிரவில் தில்லையம்பலத்தில் ஒடுங்க இறைவன் ஆடல்புரிந்தருளுதல் பற்றியே தில்லைப்பெருங்கோயிலில் அர்த்தயாம வழிபாடு மிகவும் சிறப்புடையதாகப் போற்றப் பெற்று வருகின்றது.
சுந்தரர்
நம்பியாரூரராகிய சுந்தரர், தில்லைப்பதியை யடைந்து இறைவனது திருக்கூத்தினைக் கண்டு வணங்கி மனிதப்பிறவியே அடியேற்கு வாலிதாம் இன்பத்தை வழங்கியது எனக் கண்களில் நீர் சொரியக் கசிந்து அறிவரும் பதிகமாகிய சொன்மாலையாற் பரவிப் போற்றினார். சுந்தரர் கொங்கு நாட்டிற் பாண்டிக் கொடுமுடி முதலிய தலங்களைப் பணிந்து காஞ்சியாற்றின் கரையிலுள்ள பேருர்த் திருக்கோயிலை யடைந்தபோது, பேருர்ப் பெருமான் தில்லை மன்றுள் நின்றாடுந் தமது திருக்கோலத்துடன் காட்சி கொடுத்தருளினார். அத்தெய்வக் காட்சியைக்கண்ட சுந்தரர், 'தில்லையம்பலவன் திருக்கூத்தினைக் கண்டு கும்பிடப் பெற்றால் இனிப் புறம்போய்ப் பெறுதற்கு, யாதுளது' என்று கூறிப் பேரூரினின்றும் புறப்பட்டுப் பல தலங்களையும் பாடிப்
பரவித் தில்லைப்பதியை யடைந்து கூத்தப்பெருமானை ஆர்வமுறக் கண்டு தொழுதார். 'நன்னெறியில் ஒழுகியவர்கள் வழுவி நரகினை யடைந்து துன்புறாதபடி தடுத்தாட் கொள்ள வல்ல இறைவனை நமக்கு உரிமையாகப் பெற்றோம்' எனத் தம் நெஞ்சத்திற்கு அறிவுறுத்தும் முறையில் "மடித்தாடும் அடிமைக்க ணன்றியே" என்னும் முதற்குறிப்புடைய திருப்பதிகத்தைப் பாடிப் போற்றினார். அப்பதிகத் திருக்கடைக் காப்பில் 'மீ கொங்கில் அணிகாஞ்சிவாய்ப் பேரூரர் பெருமானைப் புலியூர்ச் சிற்றம்பலத்தே பெற்றாமன்றே' எனத் தில்லையம்பலவன் கொங்கு நாட்டுப் பேரூரில் தமக்கு ஆடற்கோலம் காட்டியருளிய திறத்தைக் குறிப்பிட்டுள்ளமை காணலாம்.
பேரூர் இறைவன் தம்பொருட்டுத் தில்லைத்திருநடனத்தைக் காட்டியருளினமையால் அத்தலத்திறைவனைக் "குடகத் தி(ல்)லையம்பலவாணன்" (7-10-2) என நம்பியாரூரர் - குறித் துள்ளமையும் இங்கு நினைக்கத் தகுவதாகும். பேரூர் மேலைச் சிதம்பரம் எனவழங்குதற்கும் இந்நிகழ்ச்சியே காரணமாகும்.
'கற்றாங்கு எரியோம்பிக் கலியை வாராமே செற்றார் வாழ் தில்லை' எனவும், செல்வர்வாழ்தில்லை, விழவாரணிதில்லை, சீலத்தார் தொழு தேத்து சிற்றம்பலம், தில்லைமாநகர்ச் சிற்றம்பலம், கற்றவர் தொழுதேத்து சிற்றம்பலம், தூய செம் பொன்னினால் எழுதி மேய்ந்த சிற்றம்பலம், தேரினார் மறுகில் திருவாரணிதில்லை' எனவும் புலியூர்ச் சிற்றம்பலம் எனவும் தேவாரத் திருமுறைகளில் இத்தலம் போற்றப் பெற்றுள்ளது.
மணிவாசகர்
திருவாதவூர்மகிழ் செழுமறை முனிவராகிய மனிவாசகப் பெருமான், திருப்பெருந்துறையிற் குருவாய் வந்தருளிய இறைவன் 'நலமலி தில்லையுட் கோலமார் தரு பொதுவினில் வருக' எனப் பணித்த வண்ணம் தில்லைப்பதியை யடைந்து, கூத்தப் பெருமானை அழகிய மணி வார்த்தைகளால் பாடிப்பரவி புத்தரை வாதில் வென்று தவச்சாலையில் தங்கியிருந்தார். அப்போது. இறைவனே மறை முனிவராகி வந்து திருவாசகம் முழுதையும் எழுதிக் கொண்டதுடன் தில்லைச் சிற்றம்பலவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு அகப்பொருட் கோவை யொன்று பாடித்தருக' எனக்கேட்டு அதனையும் எழுதிக் கொண்டு திருவாதவூரன் சொல்ல அழகிய திருச்சிற்றம்பலமுடையார் எழுதியது' எனத் தமது கைச்சாத்திட்டுத் தில்லையம்பலத்தில் வைத்து மறைத்தருளினார். அவ்வேட்டினைக் கண்டு வியப்புற்ற தில்லைவாழந்தணர்களும் அடியார்களும் திருவாதவூரடிகளையடைந்து அதற்குப் பொருள் விரித்தருளும்படி வேண்டினர். அடிகளார் அவர்களுடன் தில்லைப் பொன்னம்பலத்தையடைந்து 'திருவாசகத்துக்குப் பொருளாவார் தில்லை யம்பலவரே' எனச் சுட்டிக்காட்டி எல்லோரும் காணத் தில்லை யம்பலத்துட்புக்கு மறைந்தருளினார் என்பது வரலாறு. எனவே எட்டாந்திருமுறையாகிய திருவாசமும் கோவைத்திருவாசகமும் தில்லைச் சிற்றம்பலத்துடன் நெருங்கிய தொடர்புடைய பனுவல்கள் என்பது நன்கு பெறப்படும்.
திருவாசகம், சிவபுராணம் முதல் அச்சோப்பதிகம் ஈறாக ஐம்பத்தொரு பகுதிகளையுடையது. அவற்றுள் இருபத்து நான்கு பகுதிகள் தில்லையில் அருளிச் செய்யப்பெற்றன. திருச்சிற்றம்பலக் கோவை முழுவதும் தில்லைச் சிற்றம்பலவனைப் போற்றும் தோத்திரமாகவும், அகனைந்திணைப்பொருளை நாடகமாக விரித்துக்கூறும் அகப்பொருளிலக்கியமாகவும் அமைந்துள்ளது. முத்திநெறியாகிய பேரின்ப நிலையினையடைதற்குச் சாதனமாகிய பத்திநெறியின் இலக்கியமாகத் திகழ்வது திருவாசகம். உலகியல் வாழ்வுக்கு இன்றியமையாத ஒருவன் ஒருத்தியின் இன்ப அன்பினை வளர்க்கும் அகத்திணை யொழுகலாற்றை விரித்துக் கூறமுகமாகப் பத்தி நெறியின் பயனாகிய முத்தி நெறியின் வெற்றியினை உவமை வாயிலாக உய்த்துணர வைப்பது திருச்சிற்றம்பலக் கோவை.
தில்லைப் பொன்னம்பலத்திலே சிவபெருமான் தென் திசை நோக்கி ஆடல் பரிந்தருளும் திறத்தினைத்' தென்பாலுகந்தாடுந் தில்லைச் சிற்றம்பலவன்' எனவும், 'தென்மாத்திசை வசை தீர் தரத்தில்லைச் சிற்றம்பலத்துள் என்மாத் தலைக்கழல் வைத்தெரி யாடும் இறை' எனவும் வரும் தொடர்களாலும், பதஞ்சலி முனிவர் வேண்டு கோட்கிணங்கித் தில்லையில் இறைவன் ஆடல் காட்டியருளும் அற்புத நிகழ்ச்சியைப் 'பதஞ்சலிக்கருளிய பரம நாடக' எனவும், நாகந்தொழ எழில் அம்பலம் நண்ணி நடநவில் வோன்' எனவும் வரும் தொடர்களாலும் திருவாதவூரடிகள் போற்றியுள்ளார். தில்லையில் அந்தணர் மூலாயிரவர் குழுமிக் கூத்தப் பிரானை வழிபடும் முறைமையினையும், தம் காலத்தில் தில்லையம்பலத் திருமுற்றத்தே திருமால் அறிதுயிலமர்ந்த கோலத்தில் இடம் பெற்றிருந்த செய்தியினையும், திருக்கோவையில் அடிகள் குறித்துள்ளமை காணலாம்.
திருவிசைப்பா ஆசிரியர்கள்
திருமாளிகைத்தேவர், சேந்தனார், கருவூர்த் தேவர் பூந்துருத்தி நம்பிகாட நம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள் திருவாலியமுதர், புருடோத்தமநம்பி, சேதிராயர் என்னும் ஒன்பதின்மரும் பாடிய திருவிசைப்பாப் பதிகங்கள் இருபத்தெட்டும் திருப்பல்லாண்டுப் பதிகம் ஒன்றும் ஆக இருபத்தொன்பது திருப்பதிகங்களின் தொகுதி ஒன்பதாந்திருமுறை யாகும். இவற்றுள் தில்லைச் சிற்றம்பலத்திற்கு மட்டும் பதினாறு பதிகங்கள் உள்ளன. அவற்றுள் சேந்தனார் பாடிய திருபல்லாண்டுத் திருப்பதிகம் 'மன்னுக தில்லை வளர்க நம் பக்தர்கள்' எனத் தில்லைமா நகரையும் அங்கு வந்து இறைவனை வழிபடும் சிவனடியார்களையும் வாழ்த்தித் தொடங்குகின்றது.
தில்லையில் தங்கி விறகு விற்பதனால் வரும் ஊதியத்தைக் கொண்டு நாள்தோறும் அடியார்களுக்கு உணவளிக்கும் கடமையை மேற்கொண்டு வாழ்ந்தவர் சேந்தனார் ஆவர். பலநாட்கள் தொடர்ந்து மழை பெய்தமையால் பசியால் வருத்தமுற்ற சேந்தனார், விறகு விற்றுக்கிடைத்த மாவைத்தம் மனைவிகையிற் கொடுத்து, களியாக்கச் செய்து சிவனடியாரை எதிர்பார்த்திருந்தார். சில பெருமானே. 'முதுமைப்பருவமுடைய அடியாராகச் சேந்தனார் இல்லத்திற்கு எழுந்தருளி, அவர் அன்பினால் அளித்த களியமுதை உண்டு மகிழ்ந்து, அடுத்த வேளைக்கு வேண்டும் என்பாராய் எஞ்சியகளியையும் பழங்கந்தையில் முடிந்துகொண்டு பொன்னம்பலத்தை அடைந்தார். இஃது இவ்வாறாக தில்லையில் கூத்தப்பெருமானுக்குத் தான் நடத்தும் நாள் வழிபாட்டில் பெருமானது திருவடிச்சிலம்பொலி கேட்டு மகிழ்வதை நியதியாகக் கொண்ட சோழமன்னன், அன்றிரவு முழுதும் காத்திருந்தும் அவ்வொலியைக் கேட்கப் பெறாது வருந்தித் துயில்கொண்டான். நடராசப் பெருமான் மன்னனது கனவிலே தோன்றி, "வேந்தனே, கவலைப்படாதே இன்று நாம் சேந்தனளித்த களியமுதை உண்ணச் சென்றமையால், நீ நடத்தும் பூசைக்குவரத் தாழ்த்தோம்" என்று கூறி மறைந்தருளினார். விழிப்புற்று சோழ மன்னன் சேந்தனாரைக் காண விரும்பி விடியற்காலத்திலேயே தில்லைப்பெருமானை வணங்கச் சென்றான். பொன்னம்பலத்தில் களியமுது சிந்திக் கிடப்பதைக்கண்ட வேந்தன், தான் இரவிற் கண்ட கனவின் உண்மையைத், தில்லை வாழந்தணர் பலர்க்கும் தெரிவித்தான். அதனை யுணர்ந்த பலரும் சேந்தனாராகிய அவ்வடியவர்யார் என்பதனை அறிந்து கொள்ளப் பெரிதும் விரும்பினார்கள்.
மார்கழித்திருலாதிரைத் திருவிழா விழாவில், மழை பெய்தமையால் தில்லையில் திருத்தேர் சேற்றிலழுந்தி ஓடாது தடை பட்டு நின்றது. அப்பொழுது, "சேந்தனே, திருத்தேர் ஓடப் பல்லாண்டு பாடுக', என்றதொரு வானொலி யாவரும் கேட்கத் தோன்றியது. அங்கு, தேரிழுக்கும் அடியார் குழுவில் நின்ற சேந்தனார், “மன்னுகதில்லை வளர்கநம் பக்தர்கள்'எனத் தொடங்கும் திருப்பல்லாண்டுத் திருப்பதிகத்தைப் பாடினார். வடம் பிடிக்காமலே, தேர் திருவீதியில் ஓடி நிலைக்கு வந்து சேர்ந்தது. இவ் வற்புதத்தைக் கண்டார் அனைவரும் சேந்தனாரது பேரன்பின் திறத்தையும் அவர் பொருட்டுக் கூத்தப் பெருமான் நிகழ்த்திய அருட்செயலையும் எண்ணி யெண்ணி நெஞ்சம் நெக்குருகினர். பறையர் குலத்தவராகிய சேந்தனார்க்கு இறைவன் அருள் செய்த இந் நிகழ்ச்சியை,
"பூந்தண் பொழில்சூழ் புலியூர்ப் பொலிசெம்பொ னம்பலத்து
வேந்தன் றனக்கன்றி யாட்செய்வ தென்னே விரிதுணிமே
லாந்தண் பழைய அவிழையன் பாகிய பண்டைப் பறைச் -
சேந்தன் கொடுக்க அதுவும் திருவமிர் தாகியதே"
என நம்பியாண்டார் நம்பிகளும்,
"அவிழ்ந்த துணியில் அவிழ்ந்த அவிழை
அவிழ்ந்த மனத்தால் அவிழ்க்க - அவிழ்ந்தசடை
வேந்தனார்க் கின்னமுத மாயிற்றே மெய்யன்பிற்
சேந்தனார் செய்த செயல்"
எனவரும் திருக்களிற்றுப் படியாரில் உய்யவந்ததேவ நாயனாரும் - முறையே பரவிப் போற்றியுள்ளார்கள்.
ஐயடிகள் காடவர் கோன் நாயனார்
பல்லவர் மரபிலே தோன்றித் தொண்டை நாட்டையாண்ட வேந்தர் பெருமான் காடவர் கோன் என்பார் அரச பதவியை மைந்தரிடம் ஒப்படைத்துத் துறவு பூண்டு தில்லைச் சிற்றம்பலம் முதலிய ஒவ்வொரு திருக்கோயிலையும் ஒவ்வொரு வெண்பாவினாற் பாடிப் போற்றினார். ஐயடிகள் காடவர் கோன் நாயனார் பாடிய க்ஷேத்திரத் திருவெண்பாவின் முதற்பாடல்,
"ஓடுகின்ற நீர்மை யொழிதலுமே உற்றாரும்
கோடுகின்றார் மூப்புங் குறுகிற்று-நாடுகின்ற .
நல்லச்சிற் றம்பலமே நண்ணாமுன் நன்னெஞ்சே
தில்லைச்சிற் றம்பலமே சேர்"
என்பதாகும்.
சேரமான் பெருமாள்
நம்பியாரூரார்க்குத் தோழராய்க் களையாவுடலோடு கயிலை சென்ற சேரமான் பெருமாள் நாயனார், தில்லைத் திருக்கூத்தினைக் கண்டு மகிழ்ந்த நிலையிற் பாடிப் பரவிய செந்தமிழ்ப் பனுவல் பொன்வண்ணத் தந்தாதி என்பதாகும். பொன்னார் மேனியனாகிய இறைவனைக் கண்டு காதலித்த தலைவியொருத்தி அவனையடையப் பெறாமையால் வருந்தித் தன்னுடம்பிற் பொன் போலும் பசலை நிறம் பரவத் தானும் தன் தலைவனும் பொன் வண்ணமாகிய உருவொப்புமை பெற்று விளங்கும் தன்மையினைக் கூறுவதாக அமைந்தது.
"பொன்வண்ணம் எவ்வண்ணம்
அவ்வண்ணம் மேனி பொந்திலங்கும்
மின் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
வீழ்சடை வெள்ளிக் குன்றந்
தன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
மால்விடை தன்னைக்கண்ட
என் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ண
மாகிய ஈசனுக்கே.”
எனவரும் இவ்வந்தாதியின் முதற்பாடலாகும். இத்திருவந்தாதியின் முதற்பாடல் பொன்வண்ணம் எனத் தொடங்கி நூறாவது செய்யுள் பொன்வண்ணமே என முடிந்து அந்தாதியாய் அமைதலின், இது பொன் வண்னத்தந்தாதி யென்னும் பெயருடையதாயிற்று.
நக்கீரதேவ நாயனார்
"கனிதரு செவ்வாய் உமையொடு காளிக்கு, அருளிய திருமுகத் தழகுறு சிறுநகை இறைவன்” எனவும், ஊன்புக்க வேற் காளியின் கோபந்தவிரத் தேன்புக்க தண்பணை சூழ் தில்லைச் சிற்றம்பலவன் தான்புக்கு நட்டம்பயிலும் எனவும் வரும் திருவாசகத்தை அடியொற்றிய நிலையில் நக்கீர தேவ நாயனார்
"தாரகன் தன் மார்பிற் றனிச்சூலம் - வீரங்
கொடுத்தெரியு மாகாளி கோபந் தவிர
எடுத்த நடத்தியல்பு போற்றி"
எனப் போற்றித் திருக்கவி வெண்பாவில் இறைவனது திருநடனத்தைப் பரவிப் போற்றியுள்ளார்.
பரணதேவநாயனார்
"ஆங்குரைக்க லாம்பொன் மலர்ப்பாத மஃதன்றே
பாங்குரைக்க லாம்பொன் னணிதில்லை - யாங்குரைத்த
அம்பலத்தும் அண்டத்தும் அப்பாலு மாய்நின்ற
அம்பரத்தும் அண்டத்து மாம்" (சிவ -17)
எனவும்,
சிவபெருமான் திருவந்தாதியில் தில்லைப்பெருமானைப் போற்றியுள்ளார்.
“அடுத்தபொன் னம்பலமே சார்வும் அதனுள்
அடுத்த திருநட்ட மதுவே” (சிவ-26)
எனவும்,
"ஆர் துணையா ஆங்கிருப்ப தம்பலவர்" (சிவ--45)
எனவும் சிவபெருமான் திருவந்தாதியில் தில்லைப்பெருமானைப் போற்றியுள்ளார்.
திருவெண்காட்டடிகள்
சிவநெறிச் செல்வர்களால் எத்தகைய அடைமொழியுமின்றிக் கோயில் எனப் போற்றப்பெறும் சிறப்புடையது தில்லைச்சிற்றம்பலம். திருவெண்காட்டடிகள், வெண்பா, கலித்துறை விருத்தம், அகவல் என்னும் நால்வகைப் பாக்களும் ஒன்றன் பின் ஒன்றாக அந்தாதியாகத் தொடுத்து வர நால்வகை மணிகளால் தொடுக்கப்பட்ட மாலை போன்று பாடிய பனுவல் கோயில் நான்மணிமாலை என்பதாகும். பதினோராந் திருமுறையில் அமைந்த இதன் பாடல்கள் யாவும் தில்லைப் பெருமானைப் போற்றிப்பரவும் தோத்திரமாகவும் சைவ சித்தாந்த நுண் பொருள்களைத் தெள்ளிதின் விளக்கும் சாத்திர மாகவும் விளங்குகின்றன.
நம்பியாண்டார் நம்பிகள்
கோயிலாகிய தில்லைச் சிற்றம்பலத்திலே அருட்கூத்தியற்றும் அம்பலவாணரைப் பண்ணார்ந்த விருத்தமாகிய கட்டளைக் கலித்துறையால் நம்பியாண்டார் நம்பி பரவிப் போற்றிய செந்தமிழ்ப்பனுவல் கோயில் திருப்பண்ணியர் விருத்தம் என்பதாகும். பண்ணோடியன்ற பாடல் என்ற பொருளுடையது 'பண்ணியல் விருத்தம்' என்றதொடர். லகரத்திற்கு ரகரம் போலியாய்ப் பண்ணியர் விருத்தம் என்றாயிற்று: இனி, 'கோயில் திருப்பண்ணியர்' என்ற தொடர்க்குத் 'தில்லைப் பெருங்கோயிலில் திருத்தகவினதாகிய அருட்கூத்தினை நிகழ்த்தி யருளுபவர்' எனப் பொருள் கொண்டு கூத்தப் பெருமானைப் பரவிய விருத்தம் எனப் பொருளுரைத்தற்கும் இடமுண்டு. திரு நாரையூரில் ஆதிசைவக் குடும்பத்தில் தோன்றிய பொல்லாப் பிள்ளையார் அருள் பெற்ற நம்பியாண்டார் நம்பிகள் அபய குலசேகர சோழ மன்னன் வேண்டிய வண்ணம் தில்லையில் தேவாரத்திருமுறைகள் இருக்குமிடத்தைத் தெரிவித்து, திருமுறைகளை முன்போல வருத்தருளினார். திருத்தொண்டர் திருவந்தாதி பாடியதுடன் சுந்தரர் பாடிய திருத்தொண்டத் தொகையிற் போற்றப்பெற்ற அடியார் வரலாறுகளை வகுத்துரைக்கும் முறையில் திருக்கோயில் திருப்பண்ணியர் விருத்தத்தால் கூத்தப் பெருமானைப் பரவிப் போற்றினார் என்பது திருமுறை கண்ட வரலாறாகும்.
சேக்கிழார் நாயனார்
அருண்மொழித் தேவராகிய சேக்கிழார் பெருமான் அநபாய சோழன் விரும்பியவண்ணம் தில்லைப்பதியையடைந்து பொன்னம்பலவாணரை வழிபட்டு 'உலகெலாம்' என அம்பலவர் - அருளிய மெய்ம் மொழியை முதலாகக்கொண்டு,
உலகெலா முணர்ந் தோதற் கரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்'
அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.
என அம்பலவாணரை வாழ்த்தி வணங்கித் திருத்தொண்டர் புராணமாகிய வரலாற்றுக் காப்பியத்தினைத் தில்லைப்பதியில் தங்கிப்பாடி முடித்தருளினார். இவ்வரலாற்றை உமாபதிசிவம் தாம் இயற்றிய சேக்கிழார் நாயனார் புராணத்தில் விரித்துக் கூறியுள்ளமை இங்கு உணர்தற்குரியதாகும்.
‘பத்திச்சுவை நனி சொட்டச்சொட்டப் பாடிய கவிவல்லவராகிய சேக்கிழார் நாயனார் தில்லைவாழந்தணர் புராணத் தொடக்கத்தில்,
"ஆதியாய் நடுவுமாகி அளவிலா அளவுமாகிச்
சோதியாய் உணர்வுமாகித் தோன்றிய பொருளுமாகிப்
பேதியா ஏகமாகிப் பெண்ணுமாய் ஆணுமாகிப்
போதியா நிற்குந்தில்லைப் பொதுநடம் போற்றிபோற்றி"
எனத் தில்லைத் திருக்கூத்தினைப் பரவிப் போற்றுகின்றார். இத்திருப்பாடலும் இதனையடுத்துவரும் கற்பனை கடந்த. சோதி என்ற முதற்குறிப்புடைய திருப்பாடலும் எல்லாம் வல்ல இறைவனது உண்மையிலக்கணத்தினையும், அம்முதல்வன் மன்னுயிர்கள் உய்திபெறத் தில்லைத் திருவளர் திருச்சிற்றம்பலத்தில் நிகழ்த்தியருளும் அற்புதத்திருக்கூத்தின் நுட்பத்தினையும் நன்கு புலப்படுத்துவனவாகும்.
தில்லைநகர் சிறப்புடைத்தாகத் திருமுடிசூடிய இரண்டாங் குலோத்துங்க சோழமன்னன் காலத்தில் வாழ்ந்த அருண் மொழித் தேவர், தம்காலத்து மருதத்தண்பணையும் தாமரை மலர்ந்த ஓடையும் திருநந்தவனமும் சோலைகளும் மதிலும் புறத்தே சூழப்பெற்று, எழுநிலைக் கோபுரங்களையுடையதாய் அழகிய திருவீதியினைப் பெற்று விளங்கிய தில்லைமா நகரின் எழில் நிலத்தினைத் தடுத்தாட்கொண்ட புராணத்திலும் திருநாவுக்கரசு நாயனார் புராணத்திலும் திருஞானசம்பந்தர் புராணத்திலும் சொல்லோவியஞ்செய்து காட்டியுள்ளார். 'நம்பியாரூரர் வடதிசை வாயிலாகவும், திருநாவுக்கரசர் மேற்றிசைவாயிலாக வும், ஆளுடைய பிள்ளையார் தென் திசைவாயிலாகவும் தில்லைப்பதியையடைந்த வழியமைப்பினைச் சேக்கிழாரடிகள் தெளிவாகக் குறித்துள்ளமை காணலாம்.
உலகெலாம் உணர்ந்து ஓதுதற்கு அரியவனும் அளவில்லாத பேரொளியினனும் ஆகிய இறைவன் ஆடல்புரிந்தருளும் ஞான நிலையமாகிய திருவளர் திருச்சிற்றம்பலம், அருமறைகளின் முதலிலும் நடுவிலும் கடையிலும் அன்பர்கள் சிந்தையிலும் விரிந்து விளங்கும் திருவளரும் ஒளியினாற் சூழப் பெற்றுத் தூய செம்பொன்னினால் {திருவைந்தெழுத்து) எழுதிவேய்ந்த சிறப்பினை உடையதாகும். இந்நுட்பத்தினை,
"அருமறை முதலில் நடுவினிற் கடையில் -
அன்பர்தம் சிந்தையில் அலர்ந்த
திருவளர் ஒளிசூழ் திருச் சிற்றம்பலம்." (பெரிய - தடுத்தாட் - 104)
என வரும் தொடரில் சேக்கிழார் நாயனார் புலப்படுத்திய திறம் நினைந்து போற்றுதற்குரியதாகும்.
சோழமன்னனுக்கு அமைச்சுரிமை பூண்ட சேக்கிழார், அம் மன்னனது வேண்டுகோட் கிணங்கித் தில்லைப்பதியையடைந்து கூத்தப்பெருமானை இறைஞ்சிப் போற்றி அப்பெருமான் 'உலகெலாம்' என்று அடியெடுத்துக் கொடுக்க அதனை முதலாகக் கொண்டு திருத்தொண்டர் புராணமாகிய பெருங்காப்பியத்தை இயற்றித் தில்லைக் கோயிலிலுள்ள ஆயிரக்கால் மண்டபத்திற் கூடியிருந்த புனிதர் பேரவையிலே அரங்கேற்றியருளினார். அவ்வரங்கேற்றத்தினைக் கண்டு மகிழ்ந்த அநபாய சோழன் சேக்கிழாரடிகட்குத் தொண்டர் சீர் பரவுவார் என்னுந் திருப் பெயர் சூட்டி இறைஞ்சிப் போற்றினான். தொண்டர் சீர்பரவுவாராகிய சேக்கிழார் பெருமான் தில்லை நகரிலேயே தங்கியிருந்து திருத்தொண்டத் தொகையடியார்களின் பெருமையினைச் சிந்தித்துப் போற்றித் தவநிலையில் அமர்ந்து அம்பலவாணரது தூக்கிய திருவடி நீழலையடைந்து இன்புற்றார்.
தில்லைவாழந்தணர்
திருத்தொண்டத் தொகையிற் போற்றப்பெறும் திருக்கூட்டத்தார் ஒன்பதின்மருள் முதலிற்போற்றிய, கூட்டத்தவராகிய இவர்கள் மூவாயிரவர் என்னுந்தொகையினர். கூத்தப்பெருமானுக்கு உரிமைத்தொழில் பூண்டுவாழும் இவ்வந்தணர்கள் தில்லைத் திருக்கோயிலினுள்ளே இறைவன் பூசனைக்குரிய அகத் தொண்டுகளைச் செய்து வாழ்பவர்கள்; நான்கு வேதங்களையும் ஆறங்கங்களையும் உணர்ந்தவர்கள்; முத்தீ வளர்த்து வேள்வி செய்பவர்கள்; அறுதொழில் ஆட்சியினாலே வறுமையை நீக்கியவர்கள்; திருநீறு உருத்திராக்கம் பூண்டு சிற்றம்பல மேய செல்வன் கழலேத்தும் செல்வத்தையே உயர்ந்த செல்வமாகக் கொண்டவர்கள் தங்கள் வாழ்வாகவும் வைப்பாகவும் தில்லையிற் கூத்தப் பெருமானை வழிபட்டு உலகெலாம் புகழும் வண்ணம் மானமும் பொறையுந் தாங்கிமனையறம் புரிந்து வாழ்பவர்கள். எனச் சேக்கிழாரடிகள் இவ்வந்தணர்களது பெருமையினை விரித்துக் கூறியுள்ளார்.
வேத விதிப்படி வேள்விபுரியும் தில்லை மூவாயிரவராகிய இத்திருக்கூட்டத்தார் தில்லையிற் கூத்தப்பெருமானைக் கண நேரமும் பிரியாது போற்றிவழிபடும் இயல்பினர். படைத்தற் கடவுளாகிய பிரமன் அந்தர்வேதியென்னும் இடத்தில் தான் செய்யும் வேள்விக்கு உடனிருந்து உதவி புரியும்படி வியாக்கிரபாதமுனிவர் இசைவு பெற்றுத் தில்லை மூவாயிரவரை வற்புறுத்தி அழைத்துச் சென்றான். வேள்வி முடிந்தவுடன் இவ்வந்தணர்களையழைத்து வரும்படி இரணியவர்மனிடம் வியாக்கிரபாதர் கூற அவனும் அங்கே சென்று தில்லை மூவாயிரவரையும் தேர்களில் ஏற்றிக்கொண்டு தில்லையை அடைந்தான். தில்லைக்கு வந்த பின் எண்ணிப் பார்த்து மூவாயிரவருள் ஒருவரைக்காணாது திகைத்தனன். அப்பொழுது தில்லையம்பலப் பெருமான் தேவர் முனிவர் முதலிய யாவரும் கேட்ப 'தில்லை மூவாயிரவருக்கு யாமும் ஒப்பாவோம்' என அருளிச் செய்தான் எனவும் அவ்வருள் மொழிகளைக்கேட்டு அங்குள்ளாரனைவரும் அளவிலா மகிழ்ச்சியுற்றனர் எனவும் கோயிற்புராணம் கூறும்.
தில்லையம்பலவாணராகிய இறைவனோடு ஒத்து ஒன்றி வாழும் சிவயோகநிலை கைவரப் பெற்றவர் தில்லைவாழந்தணர் என்பது மேற்குறித்த புராணச் செய்தியால் இனிது புலனாதல் காணலாம்.
"செம்மையால் தணிந்த சிந்தைத் தெய்வ வேதியர்க ளானார்
மும்மையாயிர வர்தாங்கள் போற்றிட முதல்வனாரை
இம்மையே பெற்று வாழ்வார் இனிப்பெறும் பேறொன்றில்லார்
தம்மையே தமக்கொப்பான நிலைமையால் தலைமை சார்ந்தார்"
--- (பெரிய-தில்லைவாழ்-8)
எனச் சேக்கிழார் நாயனாரும்
"முத்தீயாளர் நான்மறையர் மூவாயிரவர் நின்னோடு
ஒத்தே வாழுந்தன்மையாளர் ஓதிய நான்மறையைத்
தெத்தேயென்று வண்டுபாடுந் தென் தில்லையம்பலத்துள்
அத்தாவுன்றன் ஆடல் காண அணைவதும் என்றுகொலோ"
--(திருவிசைப்பா -23.3)
எனக் கண்டராதித்தரும் தில்லை மூவாயிரவராகிய இத்திருக் கூட்டத்தாரைப் பற்றிக் கூறிய வாய் மொழிகள் இங்கு ஒப்பு நோக்கத்தக்கனவாகும்.
திருநீலகண்டக் குயவனார்
தில்லையில் வேட்கோவர் குலத்திற் பிறந்த இவர், தில்லையம்பலவர் பால் அளவற்ற பேரன்புடையவர். பொய்கடிந்து அறத்தின் வாழும் இவர், வையமம் (பிழை. வையகம்) போற்றும் மனையறத்தினை மேற்கொண்டு சிவனடியார்களுக்குத் திருவோடு அளித்து வந்தார். இளைமீதுார (பிழை. இளைமைமீதூர) இன்பத்துறையில் எளியராகிய இவர் ஒரு பரத்தைபால் அணைந்து வந்தார். அப்பொழுது இவருடைய மனைவியார் ‘எம்மைத் தீண்டுவீராகில் திருநீலகண்டம்’ என இறைவனது திருநீலகண்டத்தின்மேல் ஆணையிட்டுக் கூறினார். அது கேட்ட திருநீலகண்டர் எம்மை என்றதனால் மற்றை மாதரார் தமையும் என்றன் மனத்தினும் தீண்டேன் என உறுதி கூறி அவ்வாணை மொழியினை வழுவாது பாதுகாத்து வாழ்ந்தார். திருநீலகண்டக்குயவரும் அவர் தம் மனைவியாரும் ஐம்புலன்களை வென்ற உளத்திட்பமுடையவர்களாய் மனையறம் ஓம்பி முதுமைப் பருவம் அடைந்தனர். அந்நிலையில் அவர்தம் நெஞ்சத்திட்பத்தினை உலகத்தார்க்கு உணர்த்த எண்ணிய சிவபெருமான் சிவயோகியாராக அவர்களது இல்லத்திற்கு வந்து ஓடொன்றினைப் பாதுகாப்பாக வைத்திருக்கும்படி திருநீலகண்டரிடம் கொடுத்துச் சென்றார். சென்றவர் அவ்வோட்டினை மறையும்படி செய்துவிட்டுச் சில நாள் கழித்துத் திருநீலகண்டரை அடைந்து தாம் கொடுத்த பிச்சைப் பாத்திரமாகிய ஓட்டினைத்தரும் படி வேண்டினார். திருநீலகண்டர் அவ்வோட்டினை வீடுமுழுதும் தேடிப்பார்த்தார். எங்கும் கிடைக்காத நிலையில் பெரிதும் வருத்தமுற்றார். வேறொரு புதுவோடு தருவதாகக் கூறினார். அதுகேட்ட சிவ யோகியார் அவ்வோடு காணவில்லையாயின் 'அதனையான் எடுத்திலேன்' என்று உன் பிள்ளையைக் கைப்பற்றிச் சத்தியம் செய்க என்றார். திருநீலகண்டர் தனக்கு மைந்தன் இல்லையெனக் கூறினார். மனைவி கையைப் பற்றிக் குளத்தில் மூழ்கிச் சத்தியம் செய்’ என்றார் சிவயோகியார். 'எங்களில் ஓர் சபதத்தால் உடன் மூழ்க இசைவில்லை’ என்றார் திருநீல கண்டர். இவ்வழக்கு தில்லைவாழந்தணர் கூடியிருந்த சபைக்கு எடுத்துக் கூறப்பெற்றது. இவ்வழக்கினை விசாரித்த தில்லைவாழந்தணர்கள் திருநீலகண்டக் குயவரை நோக்கி, நீர் சிவ யோகியார் சொன்னபடி நும்மனைவியின் கையைப் பற்றிக் குளத்தில் மூழ்கி உறுதி கூறுதலே முறை எனத் தீர்ப்பளித்தனர். திருநீலகண்டரும் 'பொருந்திய வகையால் மூழ்கித் தருகின்றேன்' என்று சொல்லிச் சிவயோகியாருடன் தம் இல்லத்தை யடைந்து தம் மனைவியாரை அழைத்துக் கொண்டு தில்லைத் திருப்புலீச்சரத்தின் முன்னுள்ள குளத்தில் மூழ்குபவர் கோலொன்றினையெடுத்து ஒருமுனையைத் தாமும் மற்றொரு முனையை மனைவியாரும் பற்றிக்கொண்டு, தாம் இருவரும் கைப்பற்றி முழுகுதற்குத் தடையாயுள்ள தங்கள் சபதத்தைச் சிவயோகியார்க்கு எடுத்துரைத்து மூழ்கினார். முதுமைப் பருவத்தினராகிய அவ்விருவரும் குளத்தில் மூழ்கி எழும்போது இறைவனருளால் இளமை பெற்றுத் தோன்றினார்கள். அந்நிலையிற் சிவபெருமான் உமையம்மையாருடன் விடை மேல் தோன்றி அவ்விருவர்க்கும் அருள் புரிந்து மறைந்தருளினார். இவ்வாறு திருநீலகண்டக் குயவனாரும் அவர்மனைவியாரும் இளமை பெற்றுத் திகழச் செய்தமையால் திருப்புலிச்சரப் பெருமான் கோயில் இளமையாக்கினார் கோயில் எனப் பெயர் பெறுவதாயிற்று.
திருநாளைப்போவார் நாயனார்.
நந்தனார் என்னும் இயற்பெயருடைய இவர், மேற்காநாட்டு ஆதனூரில் தீண்டாதார் மரபில் தோன்றியவர்; சிவபெருமான் திருவடிக்கண் பதித்த நெஞ்சுடையவர். இறைவன் புகழ்த் திறங்களை இன்னிசையாற் பாடவல்லவர். இவர் திருப்புன்கூர் சென்று சிவலோகநாதரை நேரே வழிபடவிரும்பியபோது இறைவன் திருவருளால் கோயிற் சந்நிதியிலுள்ள நந்தி விலகியது. சிவலிங்கப் பெருமானை நேரேகண்டு குறிப்பிட்ட நந்தனார், அங்கு ஒரு திருக்குளத்தை வெட்டினார். தில்லைத் திருமன்றத்தில் இறைவன் ஆடியருளும் அற்புதத் திருக்கூத்தினை நேரிற்கண்டு மகிழ எண்ணினார் நந்தனார், அதற்குத் தாம் தீண்டாதார் மரபிற் பிறந்தமை தடையாதலை யெண்ணி நாளைப்போவேன் நாளைப்போவேன் என்று கூறிக்கொண்டிருந்தமையால் இவர் நாளைப்போவார் எனப்பெயர் பெற்றார். ஒருநாள் தில்லைச்சிற்றம்பலத்தைக் கண்டு இறைஞ்ச வேண்டும் என்ற எண்ணம் மீதூர்தலால் தம் ஊரைவிட்டுப் புறப்பட்டார். தில்லைப்பதியையடைந்து வலம்வந்த நந்தனார், தமது பிறப்பின் நிலையினை யெண்ணித் தில்லைக்கோயிலினுள்ளே நுழைதற்கு அஞ்சினார். இறைவன் திருவருளை எண்ணி ஏக்கத்துடன் புறத்தே துயில்கொண்டார். அவர்தம் ஏக்கத்தைப்போக்க எண்ணிய கூத்தப்பெருமான் அவரது கனவில் தோன்றி 'நீ எண்ணியவாறு இப்பிறவி போய் நீங்க வேள்வித்தீயில் மூழ்கி முப்புரி நூல் மார்பராகிய தில்லைவாழந் தணர்களுடன் என்னை அணைவாயாக’ என அருள்புரிந்து தில்லைவாழந்தணர் கனவிலும் தோன்றி வேள்வித்தீயமைக்கும்படி பணித்து மறைந்தருளினார். இப்பொழுது சிதம்பரத்தின் தென்திசையிலே ஓமக்குளம் என வழங்கும் இடத்தில் தில்லை வாழந்தணரும் வேள்வித்தீயமைத்தனர், நந்தனார் அதன்கண் மூழ்கிப் புண்ணிய முனிவராய்ச் சடை முடிதாங்கித் தோன்றினார். தில்லைவாழந்தணர்கள் மறை முனிவராகிய நந்தனாரை வணங்கி அவரைத் தில்லைச்சிற்றம்பலவர் திருமுன் அழைத்துச் சென்றனர். அந்நிலையில் நந்தனார் உலகுய்ய நடமாடும் எல்லையாகிய சிதாகாசப்பெருவெளியிற் கலந்து பேரின்பப் பெருவாழ்வு பெற்றார். அம்பலவர் திருவடியில் கலந்து மறைந்த நந்தனாரை யாவரும் கண்டிலர். தில்லை வாழந்தணர் அதிசயித்தனர். அந்தமிலா ஆனந்தப் பெருங்கூத்தர் தம்திருவடிகளைத் தொழுது இன்புற்றிருக்கும் வண்ணம் நந்தனார்க்குப் பேரருள் புரிந்தார்.
கூற்றுவநாயனார்
இவர் களந்தை (களப்பாள்) என்னும் ஊரிலே குறுநிலமன்னர் குடியிலே தோன்றியவர். பகைவர்களைப் போரில் வென்று சிவபெருமான் திருப்பெயராகிய திருவைந்தெழுத்தினை நாளும் ஓதிச் சிவனடியார்களைப் பணிந்து திருத்தொண்டு புரியும் கூற்றுவராகிய இவர், திருவருளாற்றலால் அரசர் பலரையும் வென்று வாகை சூடினார். முடிவேந்தர்க்குரிய முடியொன்றும் நீங்கலாக எல்லாச் செல்வங்களும் எய்தப் பெற்ற இவர். தில்லைவாழந்தணரை யடைந்து தமக்கு முடிசூட்டும்படி வேண்டினார். 'சோழ மன்னர்க்கன்றி நாங்கள் முடிசூட்ட மாட்டோம் எனக் கூறிய அந்தணர்கள், தங்களுள் ஒருகுடும்பத்தாரை முடியைக்காத்துக் கொள்ளும்படி இருக்கச்செய்து சேர நாட்டை - அடைந்தார்கள். அந்நிலையிற் கூற்றுவனார் தில்லையம்பலப் பெருமானை மனங்கொண்டு 'அடியேன் நின்திருவடிப் போதினை முடியாகப் பெற வேண்டும்' என்று பரவித்துயில் கொண்டார். அந்நிலையிற் கூத்தப்பெருமான் கூற்றுவனாரது கனவில் தோன்றித் தம்முடைய திருவடிகளை முடியாகச் சூட்டியருளினார். சிவனடிகளையே முடியாகச் சூடிய கூற்றுவ நாயனார் தனியாட்சிபுரிந்து உமையொருபாகர் திருவடியை அடைந்தார்.
கணம்புல்ல நாயனார்
இவர் வடவெள்ளாற்றுத் தென்கரையிலே யமைந்த இருக்குவேளுர் என்றவூரிற் பிறந்து அவ்வூர் மக்களுக்குத் தலைவராய் விளங்கியவர். பெருஞ்செல்வராகிய இவர், சிவபெருமான் திருக்கோயிலில் நாள்தோறும் திருவிளக்கு எரிக்கும் பணியினை ஆர்வமுடன் செய்து வந்தார். வறுமை யெய்திய நிலையில் தில்லையை யடைந்து கணம்புல் என்ற ஒருவகைப் புல்லை அரிந்து விற்று அதனாற் கிடைத்த பொருளைக் கொண்டு தில்லையில் திருப்புலீச்சரப் பெருமாள் கோயிலில் திருவிளக்கு எரித்து வந்தார். ஒருநாள் தாம் அரிந்து கொணர்ந்த கணம்புல் விலைக்கு விற்காத நிலையில் அந்தப் புல்லையே கொண்டு திருக்கோயிலின் விளக்காக எரித்தார். யாமம் வரையிலும் அப்புல் விளக்கெரிக்கப் போதாமையால் அதனுடன் தமது சடை முடியினையும் சேர்த்து எரித்தார். அப்பொழுது சிவபெருமான் தோன்றிப்பேரருள் புரிந்தருளக் கணம்புல்லர் சிவலோகத்தை அடைந்தார்.
கோச்செங்கட் சோழநாயனார்
சோழமன்னன் சுபதேவன் என்பான் தன் மனைவி கமலவதியுடன் தில்லையையடைந்து மகப்பேறு வேண்டித் தில்லைச் சிற்றம்பலவரை வழிபட்டு இருந்தான். அதன் பயனாகக் கமலவதி கருவுற்றாள். திருவானைக்காவில் வெண்ணாவலின் கீழ்எழுந்தருளிய சிவபெருமானுக்குப் பந்தரிழைத்து வழிபட்ட சிலந்தி கமலவதியின் கருப்பத்துள் மகவாய்ச் சார்ந்தது. கரு முதிர்ந்து மகப்பெறும் நிலையில் 'இன்னும் ஒரு நாழிகை கழித்துப் பிறந்தால் இக் குழந்தை மூன்றுலகமும் ஆளும்' எனச் சோதிடர் கூறினர். அதுகேட்ட கமலவதி 'என் காலைப் பிணித்துத் தலைகீழாக நிறுத்துங்கள்’ என்றாள். குறித்தபடி ஒரு நாழிகை கழித்துக் குழந்தை பிறந்தது. காலநீட்டிப்பால் அக்குழந்தையின் கண்கள் சிவந்திருந்தன. ஈன்ற தாய் அக்குழந்தையைக் கண்டு “என்கோச் செங்கண்ணானோ" என அருமை தோன்றப் பரிவுடன் கூறி உயிர் துறந்தாள். சுபதேவன் குழந்தையை வளர்த்து முடிசூட்டினான். கோச்செங்கட் சோழர் சிவபெருமானது திருவருளாலே தம் முன்னைப் பிறப்பின் உணர்வோடு திருவானைக்காவற் பெருமானுக்குப் பெருந்திருக் கோயிலமைத்து வழிபட்டார். சோழநாட்டின் அக நாடுகள் தோறும் சிவபெருமானுக்கு மாடக்கோயில் கட்டினார். இவர் சிவபிரானுக்குக் கட்டிய மாடக்கோயில்கள் எழுபது எனவும் இவரே திருமாலுக்குத் திருநறையூரில் மணிமாடம் என்ற திருக்கோயிலைக் கட்டினார் எனவும் திருமங்கையாழ்வார் கூறிப் பாராட்டியுள்ளார்.
கோச்செங்கட்சோழர் திருச்சிற்றம்பலப் பெருமானை வணங்கித் தில்லைவாழந் தணர்கட்குத் தங்கும் மனைகளைக் கட்டிக் கொடுத்தார். அரசியலாட்சியினை இனிது நிகழ்த்தி முடிவில் தில்லையம்பலப் பெருமான் திருவடியினையடைந்து' பேரின்ப முற்றார்.
முதல் வரகுணபாண்டியன்
‘கொற்றவர்கள் தொழுகழற்கால் கோவரகுண மகாராஜன்’ எனப் போற்றப்பெறும் முதல் வரகுண பாண்டியன், சோழ நாட்டையும் தொண்டை நாட்டையும் தன் ஆட்சிக்குட் படுத்திய பெருவேந்தனாவான். இவன் மாணிக்கவாசகர் காலத்தில் வாழ்ந்த பாண்டியன். இவ்வேந்தர் பெருமானை மானிக்கவாசகர் தாம்பாடிய திருச்சிற்றம்பலக் கோவையில் வரகுணனாம் தென்னவன் ஏத்து சிற்றம்பலத்தான் (திருக்கோவையார்-306) எனவும், 'சிற்றம்பலம் புகழும் மயலோங் கிருங்களி யானை வரகுணன' (திருக்கோவையார்-327) எனவும் வரும் தொடர்களில் தில்லையம்பலப் பெருமான் பால் இவன் கொண்டிருந்த பேரன்பினைப் பாராட்டிப் போற்றியுள்ளார். பெரிய அன்பின் வரகுண தேவராகிய இவ்வேந்தர் பெருமான் திருவிடை மருதூரில் தங்கிச் செய்த அன்பின் வழிப்பட்ட செயல்களைப் பட்டினத்தடிகள் தாம்பாடிய திருவிடைமருதூர் மும்மணிக் கோவையில் எடுத்துரைத்துப் போற்றியுள்ளார். இவ்வேந்தர் பெருமான் திருநீற்றிற் கொண்ட பேரன்பின் திறத்தால் பகைவர் இவன்மேலெய்த அம்புகளெல்லாம் இவன் பாதங்களில் பணிந்து விழ, தில்லையம்பலப்பெருமான் திருவடிகளைத் தன் முடிக்கணிந்து போரில் வெற்றிபெற்றான். இதனை
“பொடியேர் தருமே னியனாகிப் பூசல் புகவடிக்கே
கடிசேர் கணைகுளிப் பக்கண்டு கோயிற் கருவியில்லா
அடியே படவமை யுங்கணை யென்ற வரகுணன்றன்
முடியே தருகழ லம்பத் தாடிதன் மொய் கழலே.”
எனவரும் கோயிற்றிருப்பண்ணிய்ர் விருத்தத்தில், நம்பியாண் டார் நம்பிகள் எடுத்துரைத்துப் போற்றியுள்ளார்.
திருவதிகை மனவாசகங்கடந்தார்.
இவர் மெய்கண்டதேவர் மாணாக்கருள் ஒருவர். தில்லைப் பெருமானை இடைவிடாது சிந்தித்து அம்முதல்வனது ஐந்தொழில் திருக்கூத்தின் இயல்பினைத்தம் ஆசிரியர் மெய்கண்ட தேவர்பாற் கேட்டுணர்ந்தவர். தாம் இயற்றிய உண்மை விளக்கம் என்னும் சைவ சித்தாந்த சாத்திரத்தில் எல்லாம் வல்ல தில்லை யம்பலவாணன் திருவைந் தெழுத்தாகிய மந்திரவுருவில் நின்று மன்னுயிர்கள் உய்தி பெறுதல் வேண்டி ஐந்தொழில் திருக்கூத்து இயற்றியருளும் திறத்தினை உண்மைவிளக்கம் 30 முதல் 38 வரையுள்ள செய்யுட்களில் விரிவாக விளக்கியுள்ளார். இறைவன் செய்யும் ஐந்தொழில்களில் படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் முத்தொழில்களும் உலகமாகிய அண்டத்தில் நிகழ்வன. மறைத்தல், அருளல் என்னும் இரண்டும் பிண்டத்தில் வாழும் உயிர்களின் இதயத்திலே நிகழ்வன, உடுக்கையேந்திய கையினாலே மாயையென்னும் பாசத்தை உதறித்தள்ளுதலும், தீயேந்தியகையினாலே வல்வினையைச் சுட்டெரித்தலும், ஊன்றிய திருவடியினலே ஆணவமலத்தின் வலிகெட அதனை அமுக்குதலும், தூக்கிய திருவடியினாலே அருளே தநுவாக ஆன்மாக்களை எடுத்து நிறுத்துதலும் அமைத்த திருக்கையினாலே ஆருயிர்களை ஆனந்த வெள்ளத்துள் அழுந்தித்திளைக்கச் செய்தலும் இறைவனது திருக்கூத்தின முறைமையாதலை,
"மாயை தனையுதறி, வல்வினையைச் சுட்டு, மலம்
சாய அமுக்கி, அருள் தான் எடுத்து-நேயத்தால்
ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத் தான் அழுத்தல்
தான் எந்தையார் பரதம் தான்" (உண்மைவிளக்கம் 36)
எனவரும் பாடலில் திருவதிகை மனவாசகங் கடந்தார் விளக்கி யுள்ளமை அறியத்தகுவதாகும். மோனம் என்னும் ஞானவரம்பில் நின்ற பெருமக்களின் மும்மலப்பிணிப்புக்களையும் அறவே நீக்கித் தான் என்னும் ஆன்மபோதம் அழிந்த இடத்திலேயுளதாகும் சிவானந்தத் தேனை முகந்து கொண்டு மன்னுயிர்கள் பருகி மகிழச் செய்தலே அருளே திருமேனியாகக் கொண்ட, தில்லையம்பலவாணர் நிகழ்த்தியருளும் ஆனந்தத்திருக்கூத்தின் பயனாகும் என்பதனை அறிவுறுத்துவது,
“மோனந்த மாமுனிவர் மும்மலத்தை மோசித்துத்
தானந்த மானிடத்தே தங்கியிடும்-ஆனந்தம்
மொண்டருந்தி நின்றாடல் காணும் அருள் மூர்த்தியாக்
கொண்டதிரு வம்பலத்தான் கூத்து"
எனவரும் உண்மை விளக்க வெண்பாவாகும்.
தில்லை வாழந்தணர் மரபில் தோன்றிய சைவ சமய சந்தான குரவருள் மூன்றாமவராகிய மறைஞான சம்பந்தரால் ஆட் கொள்ளப்பெற்றவர் உமாபதி சிவாச்சாரியார் ஆவார். சந்தான குரவருள் நாலாமவராகப் போற்றப் பெறும் இவர், கோயிற் புராணம், திருமுறைகண்ட புராணம், சேக்கிழார் புராணம் முதலிய இலக்கியங்களையும், சிவப்பிரகாசம் முதல் சங்கற்ப நிராகரணம் ஈறாகவுள்ள - சித்தாந்த சாத்திரங்களெட்டையும் இயற்றியவர்: வடமொழியில் இவரியற்றிய பல நூல்களுள் பவுஷ்கர ஆகமத்திற்கு எழுதிய பேருரை இங்குச் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கதாகும். தில்லைக்குக் கிழக்கேயுள்ள கொற்றவன் குடியில் தங்கியிருந்து மாணவர் பலர்க்கும் தீக்கை செய்து சிவநெறியைப் பரப்பியவர்; தில்லை அம்பலவாணர் பெத்தான் சாம்பான் பொருட்டுப் பாடிக் கொடுத்த
“அடியார்க் கெளியன் சிற்றம்பலவன் கொற்றங்
குடியார்க் கெழுதியகைச் சீட்டு--படியின் மிசைப்
பெத்தான் சாம்பானுக்குப் பேதமறத் தீக்கை செய்து
முத்தி கொடுக்க முறை"
எனவரும்
வெண்பாவினைப்பெற்று அவனுக்கு சாதிவேறு பாடறத் தீக்கை செய்து வீடுபேற்று நிலையை வழங்கியவர்; தில்லைத் திருவிழாவில் கொடியேறத் தடை யேற்பட்டபொழுது, கொடிக்கவி பாடி, கொடிதானே ஏறும்படி செய்து சித்தாந்தச் செந்நெறியைப் பரப்பியவர்.
அருணகிரி நாதர்: முருகப்பெருமானது திருவருளைப் பெற்ற அருணகிரிநாதர், தில்லை எழுநிலைக் கோபுரங்களிலும் தில்லை யம்பலத்தின்கண்ணும் எழுந்தருளிய முருகப்பெருமானைத் திருப்புகழ்ப் பனுவல்களாற்பாடிப் போற்றியுள்ளார்.
இரட்டைப்புலவர்கள்: இளஞ்சூரியர் முதுசூரியர் எனப்படும் இரட்டைப்புலவர்கள் தில்லைக்கலம்பகம் பாடிக் கூத்தப்பெருமானது திருவருளைப் பெற்றுள்ளார்கள்.
குருஞான சம்பந்தர்: தருமபுர ஆதீனத்தின் முதற் குரவராகிய குருஞான சம்பந்தர், தில்லையில் கூத்தப்பெருமானை வழிபட்டு ஆயிரக்கால் மண்டபத்தில் இரவில் நிட்டை கூடியிருந்த பொழுது, சிவகாமியம்மையார். வெள்ளிக்கிண்ணத்தில் பாயசத்தையும் பொற்கிண்ணத்தில் திருவமுதையும் பருகும் நீரையும் கொணர்ந்து, நள்ளிரவில் அவர்தம் பசியை நீக்கியருளினார். கூத்தப் பெருமான் அருள்பெற்ற குருஞானசம்பந்தர் சிவபோக சாரம் முதலிய எட்டு நூல்களை இயற்றியுள்ளார்.
கண்கட்டி மறைஞான சம்பந்தர்: சிதம்பரத்தில் குகைமடம் என்னும் ஒரு மடத்தை நிறுவி அம்மடத்திற்றங்கியிருந்து, சிவ தரு மோத்தரம், சைவசமய நெறி முதலிய பல நூல்களையியற்றிக் கூத்தப்பெருமான் திருவருளைப் பெற்றவர்.
புராணத் திருமலைநாதர்: தில்லையிற் பிறந்த இவர், தில்லை வாழந்தணர்கள் வேண்டுகோட்கிணங்கிச் சிதம்பரபுராணத்தை இயற்றியுள்ளார். மதுரைச் சொக்கநாதருலாவை இயற்றியவரும் இவரே. இவர், காலம் கி.பி. பதினாறாம் நூற்றாண்டு. இவருடையமைந்தர் பரஞ்சோதியார் சிதம்பரப்பாட்டியல் என்னும் இலக்கண நூலை இயற்றியுள்ளார்.
குமரகுருபரர்: பிறக்கும் பொழுது ஊமையாய்ப்பிறந்து முருகப் பெருமான் அருளால் ஊமை நீங்கிக் கந்தர்கலிவெண்பாப் பாடிப் போற்றினார். மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ், புள்ளிருக்குவேளூர் முத்துக்குமாரசாமிப்பிள்ளைத் தமிழ் முதலிய செந்தமிழ்ப்பனுவல்களைப் பாடியவர். தருமையாதீனத்தின் நான்காவது பட்டத்தில் எழுந்தருளிய மாசிலாமணி ஞானசம்பந்தரையடைந்தபொழுது ‘ஐந்துபேரறிவுங் கண்களே கொள்ள' என வரும் பெரியபுராணப்பாடற்குப் பொருள் யாது' என அவர் வினவிய நிலையில், தமதுவாக்குத் தடைப்பட்டு அவரையே தம் ஞான குருவாகக்கொண்டு வழிபட்டுத் தமக்குத் துறவுநிலை அருளவேண்டும் என வேண்டிக்கொண்டார். தில்லையில் சிலநாள் தங்கிவருக என ஞான தேசிகர் பணித்த வண்ணம் சிதம்பரத்திற்கு வந்து கூத்தப் பெருமானையும் சிவகாமித்தாயையும் வணங்கி, சிதம்பரச்செய்யுட்கோவை, சிவகாமியம்மை இரட்டை மணிமாலை என்னும் இருபனுவல்களையும் பாடிப்போற்றியுள்ளார்.
வெள்ளியம்பல வாணர்: இவர் தருமையாதீனம் மாசிலாமணி ஞானசம்பந்தரிடம் ஞானோபதேசம் பெற்றவர்; தென்றமிழும் வடமொழியும் தேர்ந்துணர்ந்தவர்; மிருகேந்திரவாகம் மொழி பெயர்ப்பு, - முத்திநிச்சய பாடியம், ஞானாவரண விளக்கம், முதலிய நூல்களை இயற்றி, தில்லையிலே நெடுநாள் வாழ்ந்து கூத்தப்பெருமான் திருவடியை அடைந்தவர்; இவருடைய சமாதி சிதம்பரம் ஞானப்பிரகாசக்குளம் தென்மேற்குக்கரையில் அமைந்துள்ளது.
படிக்காசுத்தம்பிரான்: இவர் தருமபுரவாதீன அடியார்குழாத்துள் ஒருவர். ஒருநாள் தில்லையில் கூத்தப்பெருமான் முன்னிருந்த திரைச்சீலையில் தீப்பற்ற, ஞானத்தாலுணர்ந்து தம்கைகளைப் பிசைந்து அத்தீயை அவித்தார். நடராசப்பெருமான் தில்லை வாழந்தணர் கனவிலே தோன்றி, 'நமது திரைச்சீலையில் பற்றிய தீயைப்படிக்காசன் அவித்தான். அவனிடத்திற்சென்று கொடுக்க' என ஒரு திருநீற்றுப்பையைத் தந்தருளி மறைந்தார். விழித்தெழுந்த அந்தணர் இறையருளை வியந்து தருமபுரத்திற்குச் சென்று படிக்காசரிடம் அத்திருநீற்றுப் பையைச்சேர்ப்பித்தனர்.
சித்தர் சிவப்பிரகாசர்: குடந்தையிற் றோன்றிய இவர், திருவாவடுதுறை திருமடத்தின் தம்பிரானாக விளங்கினார். விஜய நகர மன்னரின் காரியத்தராகச் சிதம்பரத்திலிருந்த வைணவர் சிலரால் நடராசப் பெருமானது நாள் வழிபாடு தடைப்பட்டது. அதனையறிந்த இவர், குரு ஆணையின்படி வேலூரை அடைந்து இலிங்கமநாயக்கரைக் கண்டு தம் கருத்தை எடுத்துரைத்துத் தில்லையில் நடராசப் பெருமானுக்கு நாள் வழிபாடு தடையின்றி நிகழ ஏற்பாடு செய்தார்.
அகோர சிவாச்சாரியர்: ஆதிசைவராகிய இவர், தில்லையில் அனந்தீசுவரன் கோயில் சந்நிதியில் திருமடம் அமைத்துக் கொண்டு வாழ்ந்தவர். தில்லையில் கூத்தப் பெருமான் திருப்பணிகளைக் கண்காணித்து வந்த இவர், சைவசமய நெறிமுறைகளை வகுத்துரைக்கும். 'அகோர சிவாசாரியார் பத்ததி' என்னும் நூலை இயற்றியவர் ஆவார்.
கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவசித்தாந்த சமரச அநுபவ ஞானியாகிய தாயுமானப் பெருந்தகையார் தாம் பாடியருளிய பாடல்களில் ஆகாரபுவனம் - சிதம்பரரகசியம் என்ற பகுதியில் தில்லையம்பலவன் ஆடியருளும் நாதாந்தத் திருக்கூத்தின் மேன்மையையும் அக்கூத்து எச்சமயத்தார்க்கும் பொதுவாய் நிகழுந்திறத்தினையும் இனிது விளக்கியுள்ளார். இப்பாடற் பகுதியைக்கூர்ந்து நோக்குங்கால் தாயுமான அடிகளார் தில்லைப் பதியை யடைந்து கூத்தப் பெருமான் நிகழ்த்தியருளும் அற்புதத் திருக்கூத்தினை நேரிற் கண்டு மகிழ்ந்தவர் என்பது நன்குபுலனாகும்.
உலகெலாமாகி வேறாய் உடனுமாய் விளங்குகின்ற இறைவன் ஞான மயமான பெருவெளியிலே பேரொளிவடிவாய் எல்லார்க்கும் பொதுவாய் நடம் புரிந்தருள்கின்றான் என்னும் பேருண்மையினை அறிவுறுத்தும் நிலையில் அமைந்ததே தில்லைச்சிற்றம்பலமாகும். இங்கு இறைவன் சமயங்கடந்த தனிமுதற் பொருளாய் எவ்லாவுயிர்களும் உய்ய அருட்கூத்து இயற்றுகின்றான் என்பது சிவநெறிச் செல்வர்களது துணிபாகும். இவ்வுலகிற் பல்வேறு சமயங்களையும் கடைப்பிடித் தொழுகுகின்ற எல்லா மக்களும் தம்மிடையேயுள்ள சாதிசமய வேற்றுமைகளைக் களைந்து 'ஒன்றே குலனும் ஒருவனே தேவனும்' என்னும் ஒருமை நிலையில் நின்று இறைவனை வழிபட்டு உய்திபெறுதற்குரிய பொது மன்றாய் திகழ்வதே தில்லைப் பெருங்கோயிலாகும். இவ்வாறு எல்லாச் சமயங்களையும் தனக்கு அங்கமாகக் கொண்டு சமயங்கடந்த தனிமுதற் பொருளாகச் சிவ பெருமானை வழிபடும் சமயமே சைவசமயமாகும். சமயா தீதப் பழம் பொருளாகிய சிவபரம் பொருளை ஞானமயமாகிய மன்றில் ஆடல் புரிவோனாகக் கண்டுவழிபடும் தெய்வசபையே தில்லையிலுள்ள திருச்சிற்றம் பலமாகும். சைவசித்தாந்த சமயத்தின் சமரச நிலைக்கு எடுத்துக் காட்டாக விளங்குவது தில்லைப் பொது என்னும் இவ்வுண்மை யினை
"சைவசமயமே சமயம் சமயா தீதப் பழம் பொருளைக்
கைவந்திடவே மன்றுள் வெளிகாட்டும் இந்தக் கருத்தைவிட்டுப்
பொய் வந்துழலும் சமயநெறி புகுதவேண்டாம் முத்திதரும்
தெய்வசபையைக் காண்பதற்குச் சேர வாரும் செகத்தீரே"
(காடும் கரையும் - 2)
எனவும்,
“சன்மார்க்க ஞானமதின் பொருளும் வீறு
சமய சங்கேதப் பொருளும் தானொன்றாகப்
பன்மார்க்க நெறியினிலுங் கண்டதில்லை
பகர்வரிய தில்லைமன்றுட் பார்த்த போதங்
கென்மார்க்கம் இருக்குதெல்லாம் வெளியேயென்ன
எச்சமயத்தோர்களும் வந்திறைஞ்சாநிற்பர்
கன்மார்க்கநெஞ்சமுள எனக்குந்தானே
கண்டவுடன் ஆனந்தங் காண்டலாகும்"
(ஆகாரபுவனம் சிதம்பரரகசியம்-12)
எனவும் வரும் பாடல்களில் தாயுமான அடிகளார் அறிவுறுத்திய திறம் இங்கு நினைக்கத்தக்கதாகும்.
மாரிமுத்து புலவர்: தில்லையை அடுத்த தில்லைவிடங்கன் எனனும் ஊரில் வேளாளர் மரபில் தோன்றியவர்; முத்தமிழிலும் நிரம்பிய புலமை படைத்தவர்; தில்லைக் கூத்தப் பெருமான்பால் அளவிலாப்பேரன்பு உடையவர். தம்பிள்ளைகள் மூவரில் ஒருவருக்குச் சித்தப்பிரமை உண்டாகிய நிலையில், புலியூர் வெண்பா என்னும் பனுவலால் கூத்தப் பெருமானைப் போற்றி அந்நோயை நீக்கினார். சிதம்பரேசுவரர் விறலிவிடு தூது, புலியூர் நொண்டி நாடகம் என்பனவும் இவர் இயற்றியனவே.
முத்துத்தாண்டவர்: சீர்காழியில் இசை வேளாளர் மரபில் பிறந்த இவர், வயிற்றுவலியால் பெரிதும் வருத்தமுற்றார். சீர்காழித் திருக்கோயிலில் தோணியப்பரை வழிபட்டு இவர் அன்றிரவு அக்கோயிலிலேயே உண்ணாது, பசியால் வருந்தி உறங்கி விட்டார். அந்நிலையில் திருநிலை நாயகியாகிய அம்மையார் இவர் முன் தோன்றி. பாலடிசில் அளித்து உண்ணச்செய்தார். "நீ தில்லைப் பெருமானைத் தரிசித்து வணங்கிப் பாடுவாயாக. அதுவே உனது உடற்பிணியை நீக்கும் மருந்தாகும்". என அம்மையார் அறிவுறுத்தி மறைந்தருளினார். அம்மை அருளிய வண்ணம் தில்லைப் பதியை அடைந்து கூத்தப்பெருமான் திருமுன் நின்ற இவர் 'பூலோக கைலாசகிரி சிதம்பரம்' என ஆங்கெழுந்த சொற்றொடரினையே முதலாகக் கொண்டு இனிய கீர்த்தனைகளைப் பாடித் துதித்தார். கூத்தப் பெருமானருளால் பஞ்சாக்கரப்படிகளிலிருந்து ஐந்து பொற்காசுகளைப் பெற்றுப் பிணி நீங்கி மகிழ்ந்தார். ஒருமுறை தில்லைக்கு வந்த பொழுது இவரைப் பாம்பு தீண்டியது. 'அருமருந்து ஒரு தனி மருந்து அம்பலத்திற் கண்டேனே' என்னும் கீர்த்தனையைப் பாடி விடம் நீங்கப் பெற்றார். தில்லைப் பெருமான் மீது கீர்த்தனங்கள், பதங்கள் பலவும் பாடிய இவர், ஆவணிப் பூச நாளில் கூத்தப்பெருமான் திருமுன் நின்று 'மாணிக்கவாசகர் பேறு எனக்குத் தர வல்லாயோ' என்னும் இசைப் பாடலைப்பாடிப் பிறவா நெறியாகிய முத்தியின்பத்தைப் பெற்றார்.
ஞானப்பிரகாசர். யாழ்ப்பாணத்தில் பாண்டிமழவர் குலத்திற் பிறந்த இவர், வடமொழி, தென்மொழி நூல்களை நன்கு பயின்றவர். திருவண்ணாமலை ஆதீனத்தலைவரிடத்துத் துறவு பூண்டவர். சிவஞான சித்தியார்க்கு உரையெழுதியவர். இவர் சிதம்பரத்தில் தங்கியிருக்கும் பொழுது, இலங்கை அரசனொருவன் இவரிடம், பெரும் பொருளைத் தந்து செல்ல, சிதம்பரத்தில் ஞானப்பிரகாசம் என்ற குளத்தைத் தோண்டி அதனருகில் ஒரு மடத்தையும் கட்டியுள்ளார்.
கோபாலகிருஷ்ண பாரதியார். இவர் நாகப்பட்டினத்தையடுத்த நரிமணம் என்ற ஊரில் இராமசாமி பாரதி என்பாரின் புதல்வராய்த் தோன்றினார். மயிலாடுதுறை கோவிந்த சிவத்திடம் கல்விபயின்றார். தெய்வ இசைப்பாடலைப் பாடிய தியாகராச சுவாமிகளால் பாராட்டப்பெறும் இசைப்புலமை பெற்ற இவர் சிதம்பரத்திற்கு அடிக்கடி சென்று தில்லை நடராசப்பெருமானை இன்னிசைப் பாடல்களால் பரவிப் போற்றி வந்தார். திருநீல கண்டநாயனார், இயற்பகை நாயனார், திருநாளைப் போவார், ஆகிய திருத்தொண்டர்கனின் வரலாறுகளைக் கீர்த்தனைகளாக இயற்றியுள்ளார். இவர் இயற்றிய நந்தனார் சரித்திரக்கீர்த்தனை மிகவும் சுவைநலம் வாய்ந்ததாகும்.
மீனாட்சிசுந்தரம் பிள்ளை. திருவாவடுதுறை ஆதீனத்து மகா வித்துவானாக விளங்கிய இவர், பல தல புராணங்களையும் பிரபந்தங்கள் பலவற்றையும் பாடிய பெறும் புலவர் ஆவார். பிள்ளையவர்கள் தில்லைப் பெருமானைப் போற்றும் முறையில் பாடிய பனுவல் திருத்தில்லை யமகவந்தாதியாகும்.
ஆறுமுகநாவலர். யாழ்ப்பாணத்தில் நல்லூரில், கார்காத்த வேளாளர் மரபிற்றோன்றித் தமிழ் வடமொழி ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் தேர்ச்சிபெற்ற இவர், இராமநாதபுரம் மன்னராலும் திருவாவடுதுறை, தருமபுரம் ஆகியசைவ ஆதீனத் தலைவர்களாலும் பாராட்டப் பெற்றவர். வாழ்வு முழுதும் பிரமச்சரிய ஒழுக்கத்தை மேற்கொண்ட நாவலரவர்கள், சிதம்பரத்திலே தங்கியிருந்து சைவப்பிரகாச வித்தியாசாலையையும், வித்தியாநுபான யந்திரசாலையையும் நிறுவிச் சைவமும் தமிழும் வளரப் பெரும்பணி புரிந்துள்ளார்; திருக்குறள், தொல்காப்பியம் முதலிய தமிழ்த்தொன்னூல்களையும், பெரிய புராணம், கந்தபுராணம் திருவிளையாடற் புராணம் முதலிய சைவ இலக்கிய நூல்களையும், நன்னூல், நிகண்டு முதலிய கருவி நூல்களையும் பிழையற்ற நிலையில் பதிப்பித்து வழங்கியவர் இலரே. தமிழ் மாணவர்களது கல்வி வளர்ச்சியின் பொருட்டு ஒன்று முதல் நான்கு வரையுள்ள பாலபாடங்களையும், சமய ஒழுக்கத்தின் பொருட்டுச் சைவ வினாவிடை முதலிய நூல்களையும் இயற்றியுள்ளார். தமிழ் வளர்ச்சியின் பொருட்டு இவர்கள் நிறுவிய கல்வி நிலையம் சிதம்பரத்தின் மேலைவீதியில் இவர்தம் புகழுருவாகத்திகழ்கின்றது.
சிதம்பரம் இராமலிங்க வள்ளலார். தென்னார்க்காடு மாவட்டத்திலுள்ள மருதூரில் கருணீகர் மரபில் இராமையா பிள்ளைக்கும் சின்னம்மைக்கும் புதல்வராகத்தோன்றிய இவர், முருகப்பெருமானையே குருவாகக் கொண்டு மெய்ந் நூல்கள் பலவற்றையும் ஓதாது உணர்ந்தவர்; தில்லைப்பெருமான்பால் அளவிலாப் பேரன்பு பூண்டு, சிதம்பரத்தில் தங்கி நடராசப் பெருமானை ' நாள் தோறும் வழிபட்டமையால் சிதம்பரம் இராமலிங்கம் என அழைக்கப்பெற்றார். சிதம்பரம் இராமலிங்கம் எனக் கையொப்பமிடுதலை வழக்கமாகக் கொண்டுள்ளதால் தில்லைப்பெருமான்பால் இவர் கொண்டிருந்த பேரார்வம் நன்குபுலனாகும். தில்லைத் திருக்கூத்துத் தரிசனமாகிய சோதி வழிபாட்டினைச் சாதி சமய வேறுபாடின்றி எல்லா மக்களும் கண்டு உய்தி பெறும் நிலையில் பார்வதிபுரம் என வழங்கும் வடலூரில் சத்திய ஞான சபையையும், சமரச சுத்த சன்மார்க்சு சங்கத்தையும் சத்திய தருமச் சாலையையும் நிறுவி ஒன்றே குலம் ஒருவனே தேவன் எனும் திருமூலர் நெறியை வளர்த்த பெருமை வடலூர் இராமலிங்க வள்ளலார்க்குரிய தனிச்சிறப்பாகும். 'கேழில் பரஞ் சோதி கேழில் பரங்கருணை' என மணிவாசகப் பெருமான் அருளிய திருவெம்பாவைத் தொடரை உளங் கொண்ட இராமலிங்கர், 'அருட்பெருஞ்சோதி தனிப் பெருங் கருணை, தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி' என்னும் சமரச சுத்த சன்மார்க்க வழிபாட்டு மந்திரத்தை உருவாக்கியுள்ளமை தில்லைக்கூத்தப்பெருமானையே தம் வழிபடுகடவுளாகக் கொண்டுள்ளார் என்பதனை நன்கு புலப்படுத்தும்.
பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்:
சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் திரு விராமேச்சுரத்தில் பிறந்து பாம்பன் என்னும் பதியில் பலநாள் வாழ்ந்தவர்; பிரப்பின் வலசை யென்னும் ஊரில் முப்பத்தைந்து நாள் சிவயோக நிட்டையிலிருந்து முருகனது திருவருட்காட்சியினைக் காணப் பெற்றவர்; திருவலங்கற்றிரட்டு, திருப்பாமுதலிய செய்யுள் நூல்களையும் சைவசமய சரபம், தகராலய ரகசியம் முதலிய தத்துவ நால்களையும் இயற்றிச் சைவமும் தமிழும் வளர்த்த செந்தமிழ்த் தவமுனிவர். தமிழ் வடமொழி என்னும் இருமொழிப் புலமையும் நிரம்பப்பெற்ற இவர் சிதம்பரத்தையடுத்த சிற்றூரில் தங்கியிருந்து கூத்தப்பெருமானை வழிபட்டுப் புறச்சமய இருள் நீக்கிச் சிவநெறிபரப்பிய அருளாளர் ஆவர். இவர் இயற்றிய தகராலயரகசியம் என்னும் நூல், சிற்பர வியோமமாகிய தில்லைச் சிற்றம்பலத்தினைக் குறித்தும் சிதாகாசப் பெருவெளியாகிய அதன்கண் ஆடல் புரிந்தருளும் முழுமுதற்கடவுளாகிய நடராசப் பெருமானைக் குறித்தும் வடமொழி வேத உபநிடதங்களிலும் செந்தமிழ்மாமறையாகிய திருமுறைகளிலும் கூறப்படும் தத்துவவுண்மைகளை எடுத்துக்காட்டி விளக்கும் சிறப்புடையதாகும்.
----------------
6. தில்லைப் பெருங்கோயிலின் நாள் வழிபாடும் திருவிழாக்களும்
தில்லைப் பெருங்கோயில் நாள்தோறும் காலை ஆறு மணிக்குத் திறக்கப்பெறும்.
பள்ளியறையிலிருந்து இறைவன் திருவடிக்குப் பால் பழம் முதலியன நிவேதனஞ்செய்து,
திருவடியைச் சிவிகைமீதமர்த்திச் சிற்றம்பலத்திற்கொண்டு சேர்த்தல் மரபு. விடியற்காலையில் நிகழும் இவ்வழிபாடு பால் நைவேத்தியம் என வழங்கப்படும். இதன் பின்னர், பகலில் மூன்று கால பூசையும் இரவில் மூன்றுகால பூசையும் ஆக ஆறுகால வழிபாடுகள் நடைபெறும். இவ் ஆறுகாலங்களிலும் சந்திரமௌலீசுவரராகிய, படிகலிங்கத்திற்குக் கனகசபையில் அபிடேகம் ஆராதனை நிகழ்ந்த பின்னே கூத்தப் பெருமானுக்கும் சிவகாமியம்மைக்கும் தீபாராதனை நிகழும். காலை ஒன்பது மணிக்குக் காலை சந்தியும் பதினொரு மணியளவில் இரண்டாங் காலமும் பன்னிரண்டு மணியளவில் உச்சிக்கால வழிபாடும் நிகழும். காலை இரண்டாங்கால பூசையில் பத்துமணியளவில் படிகலிங்கத்துக்கு அபிடேகம் செய்த பின்னர் மாணிக்கக் கூத்தராகிய இரத்தின சபாபதிக்கும் அபிடேகம் செய்து அத்திருவுருவத்தின் முன்னும் பின்னும் கற்பூர ஆரத்திகாட்டுவர். அப்பொழுது மாணிக்கக் கூத்தராகிய இரத்தின சபாபதியின் திருவுருவைக் கண்டு அன்பர் பலரும் தரிசித்து மகிழவர். உச்சிக்காலம். பகல் பன்னிரண்டுமணியளவில் நிகழும்.
மாலை ஐந்து மணியளவில் திருக்கோயில் கதவு திறக்கப் பெறும். படிகலிங்க அபிடேகம் முடிந்த பின்னர் ஆறு மணிக்குச் சாயரட்சை பூசை நடைபெறும். ஏழுமணியளவில் படிகலிங்க அபிடேகம் ஏழரைமணியளவில் சிதம்பர ரகசிய பூசையும் நடை பெற்ற பின்னர், எட்டு மணிக்கு இரண்டாங்கால பூசை நிகழும். இரவு ஒன்பதரை மணிக்குப் படிகலிங்க அபிடேகம் நிகழ்ந்த பின்னர்ப் பத்துமணிக்கு அர்த்தயாம பூசை நடை பெறும். எல்லாத் திருக்கோயில்களிலும் - எழுந்தருளியுள்ள இறைவனது திருவருட் கலைகள் அனைத்தும் தில்லை மன்றுள் ஆடல் புரியும் அம்பலக் கூத்தன் பால் வந்து ஒடுங்குகின்றன என்பது அப்பரருளிய புக்க திருத் தாண்டகத்தாற் புலனாகும். ஆகவே தில்லைப் பெருங்கோயிலில் அர்த்த யாம வழிபாடு மிகவும் சிறப்புடையதாகும். அர்த்த யாமத்தில் தில்லைக் கூத்தப்பெருமானுக்குத் தீபாராதனை நிகழ்ந்த பின், சிற்சபையிலுள்ள பெருமான் திருவடி சிவிகையிலமர்த்தப்பெற்று வலமாகப் பள்ளியறையில் வைக்கப்பெற்றுத் தீபாராதனை செய்யப்பெறும். அதன் பின்னர் சண்டேசுரர்க்கும் பயிரவர்க்கும் தீபாராதனை நிகழும். பின்னர் அர்த்தசாம அழகர் தீபாராதனையுடன் அர்த்தசாம வழிபாடு நிறைவு பெறும். இல்வாறு நாள்தோறும் இக்கோயிலில் நிகழ்த்தப் பெறும் வழிபாடு எந்த அதிகாரியையும் எதிர் பாராமல் குறித்த காலத்தில் நிகழ்த்தப் பெற்று வருகின்றது. நடராசப் பெருமானுக்கு ஆண்டுதோறும் சித்திரைத் திருவோணத்திலும் ஆனித்திருவுத்தர நாளிலும், ஆவணி வளர்பிறைச் சதுர்த்தசியிலும் புரட்டாசி வளர்பிறைச் சதுர்த்தசியிலும் மார்கழித்திருவாதிரையிலும் மாசிவளர் பிறைச் சதுர்த்தசியிலும் ஆக ஆறு அபிடேகங்கள் நடைபெற்று வருகின்றன.
இக்கோயிலில் ஆண்டுதோறும் திருவிழாக்கள் பல நிகழ்ந்து வருகின்றன. அவற்றுள் கூத்தப்பெருமானுக்கு நிகழும் பெரிய திருவிழாக்கள் ஆனித்திருமஞ்சனமும் மார்கழித்திருவாதிரையும் என இரண்டாகும். இத்திருவிழாக்களில் கொடியேற்றம் முதல் எட்டாந் திருவிழா முடிய விநாயகர், கப்பிரமணியர், சோமாஸ்கந்தர், அம்பாள், சண்டேசர் ஆகிய பஞ்சமூர்த்திகள் காலை மாலை இரு பொழுதிலும் திருவீதிக்கு எழுந்தருளுவர். ஒன்பதாந் திருநாள் விடியற்காலை கூத்தப் பெருமானும் சிவகாமியம்மையும் சிற்றம்பலத்தினின்றும் எழுந்தருளித் தேர்மேலமர்ந்து விநாயகர் முருகன் சண்டேசருடன் திரு வீதியில் உலா வந்தருள்வர். மாலை தேரினின்றும் இறங்கி ஆயிரக்கால் மண்டபத்திற்கு எழுந்தருளி மறுநாள் விடியற்காலை பலரும் கண்டு மகிழத் திருமஞ்சனம் கொண்டருளி, நண்பகல் ஆயிரக்கால் மண்டபத்தினின்றும் புறப்பட்டு அன்பர்கட்கு நடனக் காட்சியருளிச் சிற்றம்பலத்திற்கு எழுந்தருள்வர். கூத்தப்பெருமான் சிலகாமியம்மை காண நடனமாடிக் கொண்டு வரும் இவ்வழகிய தெய்வக் காட்சியே தெரிசனம் எனச் சிறப்பித்துப் போற்றப் பெறுகின்றது.
இங்குக் கூறப்பெற்ற ஆனித்திருமஞ்சனப் பெருவிழாவும் மார்கழித்திருவாதிரைத் திருவிழாவும் கங்கை கொண்டசோழன் ஆட்சிக் காலத்திற்குமுன், தேவார ஆசிரியர் காலத்திலிருந்தே தில்லையில் நடைபெற்று வரும் தொன்மை வாய்ந்த திரு விழாக்களாகும். இச்செய்தி முதல் இராசேந்திர சோழதேவராகிய கங்கை கொண்ட சோழனது இருபத்து நான்காவது ஆட்சி யாண்டில் ஸ்ரீராஜேந்திர சோழ தேவர் அணுக்கி நக்கன் பாவை என்பாள் திருவானித் திருநாளில் திருச்சிற்றம்பல முடையாராகிய கூத்தப்பெருமான் எழுந்தருளும் நாளில் வேண்டும் செலவுக்கும் அமுதுபடிக்கும் அப்பொழுது மாகேஸ் வரர் ஆயிரவர்க்கு சட்டிச்சோறு கொடுத்தற்கும், மார்கழித்திருவாதிரைத் திருநாளுக்கு வேண்டும் செலவுகட்கும் திருமாசித் திருநாளில் திருத் தொண்டத் தொகை விண்ணப்பஞ் செய்தற்கும் ஆக நிலமளித்த செய்தி சிதம்பரம் கல்வெட்டிற் குறிக்கப் பெற்றுள்ளது. (தெ. இ. க. தொகுதி IV எண் 223}
தில்லைப் பெருங் கோயிலில் சிவகாமியம்மைக்கு ஆண்டு தோறும் ஐப்பசிப் பூரவிழா சோழமன்னர் காலமுதல் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. திருப்பாலி வளத்திருநாள் எனக் கலவெட்டுக்களிற் குறிக்கப்படும் திருநாள் இப்பூர விழாவை ஒட்டியதே. சீரங்கராயர் II -சிவகாம சுந்தரி ஐப்பசிப் பூரவிழா கொண்டருளும்படி, புறப்பேட்டை என்ற ஊரைத் தேவதானமாகக் கொடுத்துள்ளார். பதினெட்டாம் பெருக்கன்று தில்லை இறைவன் கொள்ளிடத்துக்கு எழுந்தருளித் தீர்த்தங் கொடுத்தல் உண்டு. தீர்த்தங் கொடுத்தற்கெனக் கொள்ளிடத்தின் வடகரையில் இவர் ஒரு மண்டபம் அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மாசி மகத்தில் தில்லைப் பெருமான் கடலிற்கு எழுந்தருளித் தீர்த்தங்கொடுக்கும் விழாவும் விக்கிரமசோழன் காலம் முதல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இவ்விழாவில் இறைவன் கடலுக்கு எழுந்தருளுதற்கு இருபக்கமும் தென்னை வளர்க்கப் பட்ட பெருவழி அமைக்கப் பெற்றது. சிதம்பரத்திலிருந்து கிள்ளைக்குச் செல்லும்வழி விக்கிரம சோழன் தெங்குத் திருவீதி எனக் கல்வெட்டுக்களிற் குறிக்கப்பெற்றுள்ளது. வசந்தத் திருநாளில் தில்லைப் பெருமான் குலோத்துங்க சோழன் திருத் தோப்புக்கு எழுந்தருளுவான், (தெ. இ. க, தொ IV எண் 43} திருக்கண் சாத்தும் திருநாளும், எதிரிலி சோழன் சிவபாத சேகரன் சித்தத்துணைப் பெருமாள் விழாவும் தைப்பூசத்துப் பாவாடையீட்டுப் பெரிய விழாவும் தில்லைப் பெருங் கோயிலில் நிகழ்ந்தனவாகக் கல்வெட்டுக்களிற் குறிக்கப்பெற்றுள்ளன.
திருமூலட்டானப் பெருமானுக்கும் தட்சிணாமூர்த்திக்கும் நாள் தோறும் எட்டுக்காலப் பூசைகள் நடைபெற்றன. (தெ. இ க. தொ. XII எண் 51.) தில்லையில் திருநீற்றுச் சோழர் பஞ்ச மூர்த்திகளுடனும் சமயாசிரியர் நால்வருடனும் திருவீதியில் உலாப் போந்தமை தில்லையுலா வாற்புலனாகும்.
தில்லைப் பெருங்கோயிற் பூசனை மகுடாகம விதிப்படி முற்காலத்தில் நடைபெற்ற-தென்பது, இரட்டையர் பாடிய தில்லைக் கலம்பகத்தாலும் கி.பி. 1684- 1686 ஆம் ஆண்டுகளில் மராட்டிய மன்னர் சாம்போசி நிகழ்த்திய தில்லைச் சிற்றம்பலவர் கோயிற் கும்பாபிசேகம் உயர் ஆகமப்படி நடைபெற்றதாகச் செப்பேட்டிற் குறிக்கப் பெற்றிருத்தவாலும் அறியப்படும். பதஞ்சலி முனிவர் செய்த நூலின் விதிப்படி தில்லைக் கோயிலில் நாட் பூசனையும் திருவிழாவும் நடத்தப் பெற்றன எனக் கோயிற் புராணம் கூறும். பதஞ்சலிமுனிவர் இயற்றியதாகக் கூறப்படும் பதஞ்சலி பூஜா விதிப்படியே தில்லையிற் கூத்தப்பெருமானுக்குப் பூசை நடத்தப் பெறுகின்றது. சிவாகம நெறியினைக் கடைப்பிடித் தொழுகிய வியாக்கிரபாதரைச் சைவமுனி எனவும் வைதிக நெறியினைப் பின்பற்றியொழுகிய பதஞ்சலி முனிவரை வைதிக முனி எனவும் கூறுவதுண்டு. அம்முறைப்படி தில்லைக் கூத்தப்பெருமானுக்கு நிகழ்த்தப் பெற்றுவரும் பூசனையானது ஆகம நெறிக்கும் வேதநெறிக்கும் ஒத்தபொதுநெறியில் நடைபெற்று வருகின்றது எனக்கொள்ளுதல் பொருத்தமுடையதாகும்.
------------
7. தில்லைத் திருப்பணி
1. சோழர்
திருவானைக்காவில் தன் வாயின் நூலால் திருநிழற்பந்தர் செய்து வழிபட்ட சிலந்தியினைச் சிவபெருமான், சோழர் குலத்திற் கோச்செங்கணானாகப் பிறப்பித்தருளினார் என்பது வரலாறு. இதனைத் தேவார ஆசிரியர்கள் மூவரும் தம்பாடல்களிற் குறித்துப் போற்றியுள்ளார்கள். சங்ககாலச் சோழமன்னர்களுள் ஒருவராகிய கோச்செங்கண் சோழர் சோழ நாட்டில் அகநாடுகள் தோறும் சிவபெருமான் அமர்ந்தருளும் அழகிய மாடக்கோயில்களை அமைத்து அக்கோயில்களில் நாடோறும் நிகழும் பூசனைக்கு வேண்டிய அமுது படி முதலான படித்தரங்களுக்குப் பெரும்பொருள் வகுத்தார். சோழர் குலத் தோன்றலாகிய இவர் தமக்குரிய சோழநாட்டுடன் பாண்டியர்க்குரிய தென் புலமாகிய நாட்டினையும் தன்னகப்படுத்திப் பாண்டியர்க்குரிய அடையாள மாலையாகிய வேப்பமலர் மாலையினையும் சூடி ஆட்சி புரிந்தார் என்பது,
"தென்னவனாயுல காண்ட செங்கணாற் கடியேன்”
(திருத்தொண்டத்தொகை 11)
எனச் சுந்தரமூர்த்தி சுவாமிகளும்,
“நிம்பாறுங் தொங்கல் கோச்செங்கணான்”
(திருத்தொண்டர் திருவந்தாதி 82)
என நம்பியாண்டார் நம்பிகளும் இவ்வேந்தர் பெருமானைப் போற்றியுள்ளமையாற் புலனாகும்.
பெருவேந்தரும் சிறந்த சிவனடியாருமாகத் திகழ்ந்த கோச் செங்கட்சோழ நாயனார் எல்லாம் வல்ல சிவபெருமான் ஐந் தொழில் திருக்கூத்தியற்றியருளும் தில்லைப் பதியையடைந்து பொன்னம்பலவன் திருவடிகளை வணங்கித் தில்லையில் தங்கியிருந்து அகத் தொண்டுகள் பல புரிந்து அப்பெருமானைப் பூசனை புரியும் தில்லை வாழந்தணர்கள் தங்குதற்குரிய திருமாளிகைகளைக் கட்டுவித்தார். பின்னரும் பல திருப்பணிகளைச் செய்து தில்லயம்பலவன் திருவடி நீழலை அடைந்தார் என்பது வரலாறு. இச்செய்தியினை வம்பு மலர்த் தில்லையீசனைச் சூழ மறைவுவளத்தான், நிம்பநறுந் தொங்கற் கோச்செங்கணான் (82} எனவரும் திருத்தொண்டர் திருவந்தாதியில் நம்பியாண்டார் நம்பிகளும்,
"திருவார்ந்த செம்பொன்னி னம்பலத்தே நடஞ்செய்யும்
பெருமாளை அடி வணங்கிப் பேரன்பு தலைசிறப்ப
உருகாநின் ராங்களிப்பத் தொழுதேத்தி யுறையுநாள்
வருவாய்மை மறையவர்க்கு மாளிகைகள் பலசமைத்தார்"
(பெரிய-கோச்-10)
“தேவர்பிரான் திருத்தொண்டிற் கோச்செங்கட் செம்பியர்கோன்
பூவலயம் பொது நீக்கி ஆண்டருளிப் புவனியின் மேல்
ஏவியநற் றொண்டுபுரிந் திமையவர்க ளடிபோற்ற
மேவினார் திருத்தில்லை வேந்தர் திருவடி நிழற்கீழ்"
(௸-17)
எனவரும் பெரிய புராணச் செய்யுட்களில் சேக்கிழார் நாயனாரும் விரித்துக் கூறியுள்ளமை காணலாம்.
கி.பி. 871 முதல் 907 வரை சோழநாட்டை ஆட்சி புரிந்த முதலாம் ஆதித்த சோழன், கொங்குமண்டலத்தை வென்று தில்லைச் சிற்றம்பல முகட்டினை அப்பொன்னினால் வேய்ந்தான் இச்செய்தி,
"சிங்கத் துருவனைச் செற்றவன் சிற்றம்பல முகடு
கொங்கிற் கனகம் அணிந்த ஆதித்தன்"
(திருத்தொண்டர் திருவந்தாதி-65)
எனவரும் நம்பியாண்டார் நம்பிகள் வாய் மொழியால் உறுதி செய்யப்படும்.
ஆதித்த சோழன் மகனாகிய முதற் பராந்தக சோழன் கி.பி. 907 முதல் 953 வரை சோழநாட்டை ஆட்சி பரிந்தான்.
இவன் சிவபக்தியிற் சிறந்து விளங்கினான். தன் தந்தை ஆதித்தன் சிற்றம்பலத்தைப் பொன்னம்பலமாகச் செய்யத் தொடங்கிய திருப்பணியை மேலும் தொடர்ந்து செய்து இனிது நிறைவேற்றினான். இவ்வாறு இவ்வேந்தன் தில்லைச் சிற்றம்பலத்தைப் பொன்னம்பலமாக்கிய செய்தி ஆனைமங்கலச் செப்பேடுகளிற் குறிக்கப் பெற்றுள்ளது. பராந்தகன் செய்த இத்தில்லைத் திருப் பணியினை,
“வெங்கோல் வேந்தன் தென்னன் நாடும் ஈழமும் கொண்ட திறற்
செங்கோற் சோழன் கோழிவேந்தன் செம்பியன் பொன்னணிந்து
அங்கோல் வளையார் பாடியாடும் அணிதில்லையம்பலத்துள்
எங்கோன் ஈசன் எம் இறையை என்று கொல் எய்துவதே,”
(திருவிசைப்பா -202)
எனப் பராந்தகன் மகனார் முதற்கண்டராதித்த சோழரும்'
“கோதிலாத் தேறல் குனிக்குந் திருமன்றங்
காதலாற் பொன் வேய்ந்த காவலனும் "
(விக்கிரம சோழனுலா, வரிகள்-31,32)
எனக் கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தரும் போற்றியுள்ளார்கள்.
பகைவரைப் புறங்காணும் வெற்றித் திறத்தாலும் தனது நாட்டுமக்கள் எல்லாரும் எல்லாம் வல்ல சிவபெருமானைத் திருப்பதிக இன்னிசையாற் போற்றி இம்மை மறுமை இன்பங்களைப் பெற்று இன்புறுதல் வேண்டும் என்னும் - சிவபத்தித் திறத்தாலும் பிற்காலச் சோழமன்னர்கள் எல்லாருள்ளும் முதலில் வைத்து எண்ணத்தக்க பெருவேந்தன் முதலாம் இராசராச சோழன் ஆவான். தான் பெற்ற வெற்றிக்கெல்லாம் காரணமாக அமைந்தது எல்லாம் வல்ல சிவபெருமானது திருவருளே யென்னும் மெய்ம்மையினை உலக மக்களுக்கு உணர்த்தும் முறையில், தஞ்சையில் இவ்வேந்தனாற் கட்டப்பட்டுள்ள இராசராசேச்சுரத் திருக்கோயில் இவனது வெற்றிச் சின்னமாகத் திகழ்தலை வரலாற்றறிஞர் பலரும் நன்குணர்வர். தில்லைப் பெருக் கோயிலிற் சேமிக்கப் பெற்றிருந்த தேவாரத் திருமுறைகளைத் திருநாரையூரிற் பொல்லாப் பிள்ளையாரது திருவருள் பெற்ற நம்பியாண்டார் நம்பிகளின் துணை கொண்டு தேடிக்கண்டு தொகுத்த சோழமன்னன் இராசராசன் அபயகுலசேகரன் என்னும் பெருவேந்தன் எனவும், அவ்வேந்தன் திருமுறைகளைக் கண்டு தேடித் தொகுத்தமை பற்றித் திருமுறை கண்ட இராசராச தேவர் என அழைக்கப் பெற்றான் எனவும் திருமுறை கண்ட புராணம் கூறும். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் என்னும் தேவார ஆசிரியர்கள் மூவரும் பாடிய திருப்பதிகங்களில் தமக்குத் தெரிந்த ஒரு சில பதிகங்களையே சிவனடியார்கள் பாடக்கேட்டு நெஞ்சம் நெகிழ்ந்து உருகிய இராசராசனாசிய சோழ மன்னன், மூவர் பாடிய இனிய திருப்பதிகங்கள் எல்லா வற்றையும் தேடிக் கண்டு ஒரு சேரத் தொகுக்கும் முயற்சியில் ஈடுபட்டான். அப்பதிகங்களைப் பலவிடங்களில் தேடியும் முழுதும் கிடைக்கவில்லை.
அந்நிலையில் திருநாரையூரிற் பொல்லாப் பிள்ளையார் திருவருளை நிரம்பப் பெற்ற நம்பியாண்டார் நம்பிகளை வணங்கித் தன் விருப்பத்தைத் தெரிவித்தான். அவரும் மன்னனது விருப்பத்தினை மனத்திற் கொண்டு பொல்லாப் பிள்ளையாரை இறைஞ்சி வேண்டினார். தில்லையில் கூத்தப் பிரான் திருநடஞ் செய்யும் பொன்னம்பலத்தின் அருகிலே தேவார ஆசிரியர்கள் மூவருடைய கைகளின் அடையாளமுள்ள அறையினுள்ளே தேவாரத் திருமுறைகள் வைத்துப் பூட்டப் பெற்றுள்ள செய்தியைப் பொல்லாப் பிள்ளையார் அறிவுறுத்தியருளினார்.
அதனைக் கேட்டு மகிழ்ந்த நம்பியாண்டார் நம்பியும் அபய குலசேகரனும் தில்லையை அடைந்து கூத்தப் பெருமானை வணங்கினர். தில்லைச் சிற்றம்பலத்தின் மேற்றிசையிலுள்ள அறையிலே தேவாரத் திருமுறைகள் இருத்தலைத் தில்லை வாழ் அந்தணர்களிடம் தெரிவித்து அவ்வறையைத் திறக்கும் படி மன்னன் வேண்டிக் கொண்டான். அது கேட்ட அந்தணர்கள் மூவர்கையிலச்சினையுடன் பூட்டப் பெற்றுள்ள அவ்வறையினை அம்மூவரும் வந்தாலன்றித் திறக்கவியலாது என்றனர். உடனே சோழமன்னன் தில்லையம்பல வாணர்க்குச் சிறப்புடைய பூசனை செய்யச் செய்து தேவார ஆசிரியர் மூவர் திருவுருவங்களுக்கும் வழிபாடியற்றித் திருவீதிக்கு எழுந்தருளச் செய்து திருமுறைகள் சேமிக்கப் பெற்றிருந்த அறையின்முன் கொண்டு வந்து நிறுத்தி'மூவரும் வந்தனர், அறையினைத் திறந்திடுமின்' எனப் பணித்தான். அரசனது ஆணையால் அறை திறக்கப்பட்டது. அறையினுள்ளேயிருந்த தேவார ஏடுகள் கரையான் புற்றால் மூடப்பட்டுச் சிதைந்த நிலையிற் காணப்பட்டன. அவ்வேடுகளின் மேல் எண்ணெயைச் சொரிந்து அவற்றை வெளியில் எடுத்துப் பார்த்த அளவில், பெரும்பாலன பழுதுபட்டுச் சிதைவுற்றமை கண்டு மன்னன் பெரிதும் வருந்தினான். அந்நிலையில் இறைவனருளால் 'இக்காலத்திற்கு வேண்டுவனவற்றை மட்டும் செல்லரிக்காமல் வைத்தோம்' என்றதொரு அருள்வாக்கு யாவரும் கேட்கத் தோன்றியது. அது கேட்டு உள்ளந் தேறிய சோழமன்னன் எஞ்சியுள்ள திருப்பதிகங்களை மட்டும் சிதையாமலெடுத்து முன் போலத் தொகுத்துத் தரும்படி நம்பி யாண்டார் நம்பிகளை வேண்டிக் கொண்டான். திருஞான சம்பந்தர் பாடிய திருப்பதிகங்கள் 1, 2, 3, திருமுறைகளாகவும் திருநாவுக்கரசர் அருளிய திருப்பதிகங்கள் 4, 5, 6, திருமுறைகளாகவும், சுந்தரர் பாடிய திருப்பதிகங்கள் 7 ஆம் திருமுறையாகவும் வகுக்கப் பெற்றன. மன்னனும் நம்பியும் திருவெருக்கத்தம் புலியூரை அடைந்து திருநீலகண்ட யாழ்ப்பாணர் மரபிற்பிறந்த இசைவல்ல அம்மையாரைத் தில்லைக்கு அழைத்து வந்து தேவாரத் திருமுறைகட்குப் பண் வகுத்தனர்.
இவ்வாறு நம்பியாண்டார் நம்பியின் துணை கொண்டு திருமுறைகளைத் தேடித் தொகுத்த சோழ மன்னன் தஞ்சை இராசராசேச்சுரந் திருக்கோயிலைக் கட்டிய முதலாம் இராச ராச சோழனேயென ஆராய்ச்சியாளர் கூறுவர். வேந்தர் பெருமானான இவன், தான் கட்டுவித்த தஞ்சை இராசராசேச்சுரத் திருக்கோயிலில் நாள் தோறும் தேவாரப் பதிகங்கள் பாடுதற்குப் பிடாரர் (ஓதுவார்) நாற்பத்தெண்மரையும் அவர்களுக்குத் துணையாக உடுக்கை வாசிப்போர், மத்தளம் முழக்குவோர் இருவரையும் நியமித்து நிபந்தம் வழங்கியுள்ளான். இச்செயதி,
"ஸ்ரீராஜராஜ தேர் கொடுத்த பிடாரர்கள் நாற்பத்தெண் மரும் இவர்களிலே நிலையாய் உடுக்கை வாசிப்பான் ஒருவனும் கொட்டிமத்தளம் வாசிப்பான் ஒருவனும் ஆக ஐம்பதின்மர்க்குப் பேராவ் நிசதடம் நெல்லு முக்குறுணி நிலத்தமாய் ராஜகேசரியோடெர்க்கும் ஆடவல்வானென்னும் மரக்காலால் உடையார் உள்ளூர்ப் பண்டாரத்திலே பெறவும் (தெ.இ.க. தொ. I எண்:65). என வரும் கல்வெட்டுப் பகுதியால் நன்கு விளங்கும். இவ்வாறு திருக்கோயிலில் ஓதுவார் நாற்பத்தெண்மரையும், இசைக்கருவியாளர் இருவரையும் நியமித்துத் தேவாரத் திருப்பதிகங்களைப் பண் பொருந்தப் பாடி இறைவனை வழிபடுதற்குரிய திட்டம் வகுத்த பெருமை முதலாம் இராசராச சோழனுக்கே உரியதாகும். இதுபற்றியே, "சேய திருமுறை கண்ட.. ராசராச தேவர்" (சேக்கிழார் புராணம்-) - என இம்மன்னன் பாராட்டப் பெற்றுள்ளான்.
திருமுறைகண்ட சோழன் எனப் போற்றப் பெறும் முதலாம் இராசராசன் தில்லையம்பல வாணர்பால் நிரம்பிய ஈடுபாடு உடையவன் என்பது தஞ்சைப் பெருங்கோயிலில் ஆட வல்லானை எழுந்தருளுவித்துள்ளமையாலும் அக்கோயிலிற் பயன்படுத்தப்படும் முகத்தலளவையாகிய மரக்காலுக்கு 'ஆட வல்லான்' எனப் பெயரிட்டுள்ளமையாலும் உய்த்துணரப்படும். 'சோழ மன்னர்கட்குத் தில்லையம்பல வாணரே - தெய்வம் என்பது 'கல்வெட்டுகளால் உணரப்படும் செய்தியாதலின், பிற் காலச் சோழர்களில் முதலாம் ஆதித்தன், பராந்தகன் முதலியோர் தில்லைப் பெருங்கோயிலுக்குப் பல திருப்பணிகளைக் செய்துள்ளார்கள் என்பது நம்பியாண்டார் நம்பிகளும், கண்டராதித்தரும் பாடியுள்ள திருமுறைப் பனுவல்களால் நன்கு விளங்கும். கண்டராதித்த சோழர்க்குப் பின் திருமுறை கண்ட சோழர் எனப் போற்றப் பெறும் முதலாம் இராசராச சோழனும் தில்லைப் பெருங் கோயிலிற் பல திருப்பணிகளைச் செய்திருத்தல் வேண்டும், அவர்கள் செய்த திருப்பணிகளைக் குறிப்பிடும் கல்வெட்டுகள் பிற்காலத்தில் அயலவர் படைகள் சிதம்பரம் திருக்கோயிலில் தங்கிச் செய்த அழிவுகளாற் சினதந்து போயின என்பது இக்கோயிலில் தளவரிசையில் ஆங்காங்குத் தூண்டு துண்டாகக் காணப்படும் கல்வெட்டுக் கற்களால் உய்த்து உணரப்படும்.
தனியூராகிய இத்தில்லைப் பதியினைச் சூழ்ந்துள்ள பிடாகைகளாகிய இருபத்திரண்டுக்கு மேற்பட்ட சிற்றூர்களும் வழிகளும் முதலாம் இராசராச சோழனுடைய தந்தை சுந்தர சோழர், தாயார் வானவன் மாதேவி, தமக்கை குந்தவையார் சிறிய தந்தை உத்தம சோழன், இராசராசன் முதலியோர் பெயர்களால் சுந்தர சோழவழி, வானவன் மாதேவி வழி குந்தவை வாய்க்கால், உத்தமசோழபுரம், இராசராசன் வாய்க்கால் என்றாங்குக் கல் வெட்டுகளிற் குறிக்கப் பெற்றுள்ளமையால் முதலாம் இராசராசன் தந்தையார் சுந்தர சோழரும், தாயார் வானவன் மாதேவியும் தமக்கையார் குந்தவையாரும், சிறிய தந்தை உத்தம சோழரும் தம் குலநாயகராகிய ஆடவல்லான் எழுந்தருளிய தில்லைப்பதியிற் பலதிருப்பணிகளைச் செய்துள்ளமை நன்கு புலனாகும்.
தமிழகத்தைக் கி.பி.1012 முதல் 1044வரை ஆட்சிபுரிந்த பெருவேந்தன், முதல் இராசேந்திரனாகிய கங்கை கொண்டசோழன் ஆவான். திருவிசைப்பா ஆசிரியர் கண்டராதித்தர் மனைவியார் செம்பியன் மாதேவியாராலும், தன் தந்தை இராசராச சோழார் தமக்கையார் குந்தவையாராலும், வளர்க்கப் பெற்ற இவ்வேந்தர் பெருமான், தன் வடநாட்டு வெற்றிக்கு அடையாளமாகக் கங்கை கொண்ட சோழேச்சுரம் என்னும் பெருங்கோயிலைக் கட்டியவனாவான். இத்திருக்கோயிலைத் திருவிசைப்பாப் பதிகத்தாற் பரவிப் போற்றிய கருவூர்த் தேவர், இத்திருப்பதிகத்தின் கடைசிப் பாடலில் இவ்வேந்தனது சிவபத்தியின் மாண்பினைச் சிறப்பித்துப் போற்றியுள்ளார். இவ்வேந்தனது 24ஆவது ஆட்சியாண்டில் இவனுக்கு அணுக்கப் பணிபுரிந்த நக்கன் பாவையார் என்பவர், தில்லைக் கூத்தனாகிய திருச்சிற்றம்பலமுடைய பெருமான் திருவானித் திருநாளில் திருவீதிக்கு எழுந்தருளும் அன்றைக்கு வேண்டும் செலவுகட்கும் அமுது படிக்கும் சிவனடியார்களுக்குச் சட்டிச்சோறு ஆயிரம் கொடுக்கவும், திருவிழாவுக்கு வேண்டும் எண்ணெய்க்கும் வேண்டும் வழக்கத்துக்கும் பரிசட்டம் திருவிளக்கு எண்ணெய் முதலிய செலவுகட்கும் திருமாசித் திருநாளில் திருத்தொண்டத் தொகை விண்ணப்பஞ் செய்வதற்கும் ஆண்டொன்றுக்கு மேல்வாரம் இரண்டாயிரத் திருநூற்றைம்பதின் கலம் ஆக வருவாயுள்ள நாற்பத்து நாலு வேலி நிலம் நிபந்தமாக அளித்துள்ளார். அணுக்கி நக்கன் பரலையாராகிய இவரே இத்தில்லைப் பதியில் உள்ள சிங்களாந்தகன் என்னும் அறச்சாலையில் நாள்தோறும் பிராமணர் இருபத்தைவர் உண்பதற்கும், சமையல் ஆளுக்கும், தண்ணீர்க்கலம் கொண்டு வருவோனுக்கும் உடை முதலிய செலவுகட்கும் ஆக ஒராண்டுக்கு மேல்வாரமாக ஆயிரத்து இருநூற்று இருபத்தைந்து கலம் நெல் வருவாயுள்ள பத்து வேலி நிலமும் நிபந்தமாக அளித்துள்ளார். இது பற்றிய விவரங்கள் தில்லைப் பெருங்கோயிலின் முதற் பிரகாரத்தில் வடபுற மதிலில் கங்கை கொண்ட சோழனது 24ஆம். ஆட்சியாண்டில் வரையப்பெற்றுள்ள கல்வெட்டில் (தெ இ.க. தொகுதி IV எண் 223) விரிவாகக் குறிக்கப் பெற்றுள்ளமை காணலாம்.
மேற்குறித்து கல்வெட்டுச் செய்திகளை ஊன்றி நோக்குங்கால், இப்பொழுது தில்லைப் பெருங்கோயிலில் நிகழ்ந்து வரும் ஆனித்திருமஞ்சனத் திருவிழாவும், மார்கழித் திருவாதிரைத் திருவிழாவும் கங்கை கொண்ட சோழன் ஆட்சிக்காலத்திற்கு முன்பிருந்தே நிகழும் தொன்மை வாய்ந்தன என்பதும், இவ்விரு திருவிழாக்களிலும் அடியார்களுக்கும், அந்தணர்களுக்கும் அன்னம் பாலிக்கப் பெற்றதென்பதும் இவ்விரு திருவிழாக்களுடன் திருமாசித் திருநாளிலும் திருவிழா நிகழ்ந்ததென்பதும் அத்திருவிழாவில் 'தில்லை வாழந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்' என ஆரூரிறைவர் அடியெடுத்துக் கொடுக்க, சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடியருளிய திருத்தொண்டத் தொகைத் திருப்பதிகம் தில்லைக் கூத்தப் பெருமான் திருமுன்னர் விண்ணப்பஞ்செய்யப் பெற்றதென்பதும் நன்கு விளங்கும்.
பிற்காலச் சோழரது ஆட்சியில் சோழர்களின் பெண்வழி மரபில் தோன்றித் தமிழகத்தை ஆண்டவர்கள் முதற் குலோத்துங்கன் விக்கிரம சோழன் முதலியோராவர். சோழ நாட்டில் சிறந்த முறையில் ஆட்சி புரிந்த பெருவேந்தர்களுள் முதற்குலோத்துங்க சோழனும் ஒருவன். சிவபெருமான்பால் எல்லையற்ற பேரன்பினனாய், குடிமக்கள் மகிழச் சுங்கம் தவிர்த்த சோழனாகிய இம்மன்னன், கி.பி. 1070 முதல் 1120 வரை சோழநாட்டை நன்முறையில் ஆட்சி புரிந்துள்ளான். இவனது ஆட்சிக்காலத்தில் தில்லைப் பெருங்கோயிலின் திருப்பணி மிகச் சிறப்பாக நிகழ்ந்துள்ளது.
முதற்குலோத்துங்கன் தன் முன்னோர்களைப் போலவே தில்லைக் கூத்தப் பெருமான்பால் பேரன்பு செலுத்தியவனாவான். இவ்வேந்தன் தன் நண்பனாகிய காம்போச நாட்டு மன்னன் தனக்குக் காட்சிப் பொருளாகத் தந்த ஒளிதிகழ் பளிங்குக்கல்லினைத் தில்லைச் சிற்றம்பலத்தைச் சார்ந்துள்ள திருவெதிரம்பலத்தில் அணி திகழ வைத்தான். இச்செய்தி,
“ஸ்ரீ இராசேந்திர சோழ தேவர்க்குக் காம்போஜராஜன் காட்சியாகக் காட்டின கல்லு இது - உடையார் இராசேந்திர சோழ தேவர் திருவாய் மொழிந்தருளி உடையார் திருச்சிற்றம்பலமுடையார் கோயிலில் முன் வைத்தது - இந்தக் கல்லு திருவெதிரம்-பலத்துத் திருக்கல் சரத்தில் திருமுன் பத்திக்கு மேலைப் பத்தியிலே வைத்தது (Ep.Ind.Vol II.No,132).
எனத் தில்லைத் திருக்கோயிலில் வரையப்பெற்றுள்ள கல்வெட்டால் அறியப்படும்.
முதற்குலோத்துங்க சோழனுக்குச் சகோதரிகள் இருவர். இவர்கள் குந்தவை, மதுராந்தகி என்போராவர். இவ்விருவரும் தில்லையம்பலவாணர்பால் எல்லையற்ற பேரன்பினால் தில்லைத் திருக்கோயிலுக்குச் சிறப்புடைய திருப்பணிகள் செய்துள்ளார்கள். இவருள் குந்தவை என்பார், தில்லைச் சிற்றம்பலப் பெருமான் தண்ணீர் அமுது செய்தருளுதற்கென ஐம்பதின் கழஞ்சு நிறையுள்ள பொன்வட்டிலைத் தில்லைப் பெருங்கோயிலுக்கு உளமுவந்து வழங்கியுள்ளார். இச்செய்தி,
ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் - சக்கரவர்த்திகள் குலோத்துங்க சோழ தேவர் திருத்தங்கையார் இராஜராஜன் குந்தவை ஆழ்வார் ஆளுடையாாக்குத் தண்ணீர் அமுது செய்தருள் இட்ட (மி)ண்டம் ஒன்றினால் குடிஞைக்கல் நிறைமதுராந்தகன் மாடையோடு ஒக்கும் பொன் ருய ஐம்பதின் கழஞ்சு உ" (தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதி 5). என வரும் கல்வெட்டிற் குறிக்சுப்பெற்றுள்ளமை காணலாம்.
குந்தவையாழ்வாராகிய இவ்வம்மையார், கி.பி. 1114 ஆம் ஆண்டில் தில்லையம்பலவாணர் திருக்கோயில் முழுவதும் பொலிவுடன் திகழப் பொன்னம்பலத்திற்கு மீண்டும் பொன் வேய்ந்துள்ளார். இச்செய்தி,
நானிலத்தை முழுதாண்ட சயதரற்கு
நாற்பத்து நாலா மாண்டில்
மீனநிகழ் நாயிற்று. வெள்ளி பெற்ற
வுரோகணி நாள் இடபப் போதால்
தேனிலவு பொழிற்றில்லை நாயகர்தங்
கோயிலெலாஞ் செம்பொன் வேய்ந்தாள்
ஏனவருந் தொழுதேத்தும் இராசராசன்
குந்தவை பூ விந்தையாளே"
(எபிராபிகா இண்டிகா தொகுதி 5, பக்,, 105)
என வரும் கல்வெட்டுச் செய்யுளால் இனிது விளங்கும்.
இப்பாடலில் சயதரன் என்றது முதற்குலோத்துங்க சோழனுக்கு வழங்கும் சிறப்புப் பெயர்களுள் ஒன்றாகும். இராசராசன் குந்தவை என்றது அவன் தங்கையாகிய குந்தவையாரை. முதற்குலோத்துங்கனது ஆட்சியில் நாற்பத்து நாலாமாண்டில் அவன் தங்கை குந்தவையாரால் தில்லைச் சிற்றம்பலம் மீண்டும் பொன் வேயப் பெற்றதென்பது இச்செய்யுளால் நன்கு புலனாகிறது.
இனி முதற்குலோத்துங்கனது மற்றொரு தங்கையாகிய மதுராந்தகி என்பார் கி. பி. 1116 ஆம் ஆண்டில் தில்லையில் திருச்சிற்றம்பலமுடையார் திருநந்தவனத்திற்கும் சிவனடியார் திருவமுது செய்யுந் திருமடத்திற்கும் நிவந்தமாக இறையிலி நிலங்கள் வழங்கியுள்ளார். இச்செய்தி, “திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு நாற்பத்தாறாவது ராஜாதிராஜ வளநாட்டுத் தனியூர் பெரும்பற்றப்புலியூர் உடையார் திருச்சிற்றம்பல முடையார்க்குத் திருநந்தவனப்புறமாகவும் ஸ்ரீமாகேஸ்வரர்க்குத் திருவமுது செய்ய மடப்புறம் நம் பெருமாள் திருத்தங்கையார் மதுராந்தகியாழ்வார் வாச்சியன் இரவிதிருச்சிற்றம்பல முடையான் பேரில் விலை கொண்ட நிலம் கிடாரங்கொண்ட சோழப் பேரிளமை நாட்டு எருக்கட்டாஞ் சேரியான ஜயங்கொண்ட சோழ நல்லூர்ப் பால்" (தெ. இ. க. தொகுதி 4 எண் 222) எனவரும் கல்வெட்டுப் பகுதியில் குறிக்கப் பெற்றுள்ளமை காணலாம்.
இங்கு எடுத்துக் காட்டிய கல்வெட்டுப் பகுதிகளால் முதற் குலோத்துங்க சோழன் தங்கைமாராகிய இராசராசன் குந்தவையாரும், மதுராந்தகி யாழ்வாரும் தில்லைப் பெருங்கோயிலுக்குத் திருப்பணிகள் பலபுரிந்துள்ளமை நன்கு புவனாதல் காணலாம்.
முதற்குலோத்துங்க சோழனது நாற்பத்தாறாம் ஆட்சியாண்டில் தொண்டை 'நாட்டுக் காரிகைக் குளத்தூர் தலைவனும், மிழலை நாட்டு வேளாண்மை கொண்டவனுமாகிய கண்டன் மாதவன் என்பான் தில்லையம்பலத்தின் வடகீழ்த் திசையில் சொன்னவாற்றிவார் கோயிலும் சிவபுராணங்களை விரித்துக் கூறுதற்கு இடமாகிய புராண மண்டபமும் அதனை யொட்டிய திருமாளிகைப் பத்தியும் மலைபோன்று உயர்த்து தோன்ற வரிசையாகக் கட்டினான். இச்செய்தி நீடூர்க் கோயிலில் வரையப் பெற்றுள்ள கல்வெட்டில்,
"ஆரியவுலகம் அனைத்தையும் குடைக்கீழ்
ஆக்கிய குலோத்துங்க சோழற்
காண்டொரு நாற்பத்தாரிடைத் தில்லை.
பம்பலத்தே வட கீழ்பால்
போரியல் மதத்துச் சொன்னவாற்றிவார்
கோயிலும் புராண நூல் விரிக்கும்
புரிசை மாளிகையும் வரிசையா விளங்கப்
பொருப்பினான் விருப்புறச் செய்தான் ... கண்டன் --- மாதவனே"
என வரும் பாடலில் விரித்துரைக்கப் பெற்றுள்ளமை காணலாம் இப்பாடலில் சொன்னவாறறிவார் கோயில் என்றது, யாரும் யாவும் கழறினவும் அறியும் ஆற்றலை இறைவனருளாற் பெற்ற சேரமான் பெருமாளுக்கு அமைத்த திருக்கோயிலாகும். தில்லைப் பெருங்கோயிலின் வடகீழ்த்திசையிற் கண்டன் மாதவனாற் கட்டப்பட்ட இத்திருக்கோயில் காலப்பழமையால் பேணுவாரின்றிச் சிதைந்து அழிந்து போய்விட்டதெனக் கருத வேண்டியுளது. தில்லைப் பெருங்கோயிலில் கூத்தப் பெருமானைச் சுற்றியுள்ள முதல் திருச்சுற்று விக்கிரம சோழன் திருமாளிகை எனவும்; இரண்டாம் திருச்சுற்று குலோத்துங்க சோழன் திருமாளிகை எனவும், மூன்றாம் திருச்சுற்று, இராசாக்கள் தம்பிரான் திருவீதி எனவும் கல்வெட்டுக்களிற் குறிக்கப் பெற்றுள்ளன. குலோத்துங்க சோழன் திருமாளினகயாகிய இரண்டாம் திருச்சுற்றின் மேற்புறத்தில் அமைந்த கோபுரவாயில் குலோத்துங்க சோழன் திருமாளிகைப் புறவாயில் (தெ.இ.க. தொ, எண், -22) எனக் கல்வெட்டிற் குறிக்கப்பெற்றுள்ளது.
வாச்சியன் திருச்சிற்றம்பலமுடையான் சங்கரனான தென்னவன் பிரபராயன் என்பான், பெரும்பற்றப்புலியூர் வடபிடாகை மணலூரில் தான் அனுபவித்து வருகிற மணற் கொல்லை கால் வேலி நிலத்தையும் சுங்கத் தவிர்த்தருளின குலோத்துங்க சோழ தேவர் மகளார் அம்மங்கையாழ்வாரான பெரிய நாச்சியார்க்குச் சேமமாக சம்மதித்து அன்னிய நாம கரணத்தால் தில்லைப் பெருங்கோயிலுக்கு அளித்துள்ளான். (தெ.இ.க.தொருதி IV எண் 226), அடுத்து.,
"திருமணி பொற்றோட் டெழுது பத்தாண்டில்
வருதிறை முன்னே மன்னவர் சுமந்து
திறை நிறைத்துச் சொரிந்த செம்பொற்குவையால்
தன்குல நாயகன் தாண்டவம் பயிலும்
செம்பொனம்பலஞ் சூழ் திருமாளிகையும்
கோபுரவாசல் கூடசாலைகளும்
உலகு வலங்கொண் டொளிவிளங்கு நேமிக்
குலவனாயுதய குன்றமொடு நின்றெனப்
பசும்பொன் வேய்ந்த பலிவளர் பீடமும்
விசும்பொளி தழைப்ப விளங்கு பொன் வேய்ந்து
இருநிலந் தழைப்ப இமையவர் களிப்ப
பெரிய திருநாள் பெரும்பெயர் விழாவெனும்
உயர் பூரட்டாதி உத்திரட்டாதியில்
அம்பலம் நிறைந்த அற்புதக்கூத்தர்
இம்பர் வாழ எழுந்தருளுவதற்குத்
திருத்தேர்க் கோயில் செம்பொன் வேய்ந்து
பருத்திரன் முத்தின் பயில்வடம் பரப்பி
நிறைமணி மாளிகை நெடுந்திருவீதிதன்
திருவளர் பெயராற் செய்து சமைத்தருளி
பைம்பொற் குழித்த பரிகல முதலாச்
செம்பொற் கற்பகத்தொடு பரிச்சின்னமும்
அளவில்லாதன வொளிபெற அமைத்துப்
பத்தாமாண்டிற் சித்திரைத் திங்கள்
அத்தம் பெற்ற ஆதி வாரத்துத்
திருவளர் மதியின் திரையோதசிப்பக்கத்து
இன்ன பலவும் இனிது சமைத்தருளி"
எனவரும் விக்கிரம சோழனின் மெய்க்கீர்த்திப் பகுதி அவன் செய்த தில்லைத் திருப்பணிகளைத் தெளிவாக எடுத்துரைக்கின்றது.
"அழகிய மணிபதித்த பொன்னேட்டிற் குறிப்பிட்டு எழுதத்தக்க தனது பத்தாம் ஆட்சியாண்டில் தனக்குக் கீழ்ப்படிந்த மன்னவர்கள் சுமந்து வந்து நிறைத்த திறைப்பொருளாகிய பொற்குவையினைக் கொண்டு தன் குலதெய்வமாகிய சிவபெருமான் திருநடம் புரியும் பொன்னம்பலத்தினைச் சூழவுள்ள சுற்று மாளிகையும் அதனையடுத்துள்ள கோபுரவாயிலும் மலைகளும் உலகினைச் சூழவுள்ள சக்கரவாள மலை கதிரவன் உதிக்கும் உதய மலையுடன் கூடி நின்றாற் போல பொன்னால் வேயப்பட்ட பலிபீடமும் வானத்தில் விளங்கப் பொன் வேய்ந்து மண்ணுலகத்தவர் விண்ணவர் மகிழத்தான் பிறந்த பெரியவிழா வென்னும்பூரட்டாதி, - உத்திரட்டாதி திருச்சிற்றம்பலத்தின் அருளும் வாய்நிறைந்து ஆடும் அற்புதக் கூத்தினை நிகழ்த்தி யருளும் சுத்தப்பெருமான் இவ்வுலகத்தவர் வாழ எழுந்தருளித் திருவுலா வருதற்குரிய இயங்குத் திருக்கோயிலாகிய திருத்தேரினைச் செம்பொற் கூரையுடையதாகப் பொன் வேய்ந்து அதன் கண் பருமை வாய்ந்த முத்து வடங்களை வரிசையாகத் தொங்கும்படி அணி செய்து, அத்தேரானது உலா வருதற்கு ஏற்றவாறு தில்லைப்பதியில் நிறைமணி மாளிகையுடைய நெடுந் திருவீதிகளாக நான்கு வீதிகளையும் விக்கிரம சோழன் திருவீதி எனத் தன் பெயரால் அமைத்துப் பசியபொன்னினால் உட்குழிவுடையதாகச் செய்யப் பெற்ற பரிகலம் (உண்கலம்) முதலாகச் செம் பொன்னாற் செய்யப்பட்ட கற்பகத் தருவினையும் பரிச்சின்னங்களையும் அளவில்லாதனவாக ஒளி பெற அமைத்துத் தனது பத்தாம் ஆட்சியாண்டில் சித்திரை மாதம் அத்த விண்மீனுடன் கூடிய ஞாயிற்றுக்-கிழமையில் வளர்பிறைத் திரயோதசித் திதியில் இத்தகைய பல திருப்பணிகளைத் தில்லைப் பெருங்கோயிலிற் செய்து நிறைவேற்றினான்" என்பது மேற்குறித்த மெய்க்கீர்த்தி கூறும் செய்தியாகும்.
இவ்வாறு விக்கிரம சோழன் தில்லைப்பதியிற் செய்த திருப்பணிகள் யாவும் கி.பி. 1128 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் பதினைந்தாம் நாளில் நிறைவேறின என்பது இம்மெய்க் கீர்த்தியிற் குறிக்கப்பட்டுள்ள காலக்குறிப்பினால் நன்கு அறியப்படும். தில்லைச்சிற்றம்பலத்தைச் சூழவுள்ள திருமாளிகைப் பத்தியாகிய முதற்பிரகாரம் இவ்வேந்தனால் அமைக்கப் பெற்றமையின் “விக்கிரம சோழன் திருமாளிகை” என வழங்கியதென்பது கல்வெட்டுகளாற் புலனாகின்றது. (Ins, No. 282, 284; and 287 of 1913).
விக்கிரமசோழன் பெரும் பற்றப்புலியூராகிய தில்லையிற் பெருவீதியமைத்த செய்தியைக் கவிச் சக்கரவர்த்தி ஒட்டக் கூத்தர் இவன் மகன் இரண்டாங்குலோத்துங்கனைக் குறித்துப் பாடிய குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழில்,
'பாவக நிரம்பு திரு மாலும் மலரோனும்
பரந்த பதினெண் கணமும் வந்து பரவந்தம்
சேவக நிரம்பு திருவீதி புலியூரிற்
செய்த பெருமான்
(குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ் 9-7)
எனவரும் தொடரிற் பாராட்டிப் போற்றியுள்ளமை காணலாம்.
தில்லைத் திருக்கோயிலிற் சிவகங்கைத் தீர்த்தத்திற்கு மேற்பக்கத்தேயுள்ள நூற்றுக்கால் மண்டபம் விக்கிரம சோழன் பணித்த வண்ணம் அவனுடைய படைத் தலைவனாகிய அரும்பாக்கிழான் மணவிற் கூத்தன் காலிங்கராயன் என்பவனாற் கட்டப்பெற்றதாகும். இம்மண்டபத்தில் பன்னிரண்டு தூண்களில் ‘விக்கிரமசோழன் திரு மண்டபம்' எனப்பெயர்பொறிக்கப் பெற்றிருத்தலால் இம்மண்டபம் விக்கிரம சோழன் பெயரால் அவனது படைத்தலைவன் காலிங்கராயனாற் கட்டப் பெற்றதெனத் தெரிகிறது. இம்மண்டபத்தைக் கட்டியவன் அரும்பாக்கிழான் மணவிற்கூத்தன் காலிங்கராயன் என்பது
"மல்லற் குலவரையால் நூற்றுக்கால் மண்டபத்தைத்
தில்லைப் பிரானுக்குச் செய்தமைத்தான் - கொல்லம்
அழிவுகண்டான் சேரன் அளப்பரிய வாற்றற்
கிழிவு கண்டான் தொண்டைபா ரேறு” -
(தெ. இ. க. தொ . IV பக். 33)
எனவரும் சிதம்பரம் கல்வெட்டுச் செய்யுளால் அறியப்படும்.
தில்லையம்பலவாணர் மாசிமக நாளில் கிள்ளையிலுள்ள கடல் துறையில் தீர்த்தமாடி வீற்றிருந்தருளுதற்கு மண்டபமும், தில்லையிலிருந்து கிள்ளைக் கடற்கரைக்குச் செல்லுதற்குரிய பெருவழியும் விக்கிரம சோழன் ஆட்சியில் அவ்வேந்தனது ஆணை எங்கும் நிகழ அவன் படைத்தலைவனாகிய காலிங்கராயனால் அமைக்கப் பெற்றன. இச்செய்தி,
“மாசிக் கடலாடி வீற்றிருக்க மண்டபமும்
பேசற்ற அற்றைப் பெருவழியும் - ஈசற்குத்
தென்புலியூர்க் கேயமைத்தான் கூத்தன் திசையனைத்தும்
மன்புலியாணை நடக்க வந்து"
(தெ. இ. க. தொ IV. பக், 34)
எனவரும் வெண்பாவால் இனிது புலனாதல் காணலாம்.
அரும்பாக்கிழான் காலிங்கரானாகிய இவன் முதற்குலோத்துங்க சோழன் ஆட்சியிலும் விக்கிரம சோழன் ஆட்சியிலும் படைத் தலைவனாக விளங்கியவன். இவன் தொண்டை மண்டலத்து இருபத்து நான்கு கோட்டங்களுள் ஒன்றாகிய மணவிற் கோட்டத்தின் தலையூராகிய மணவில் என்னும் ஊரினன். தொண்டையர் கோனாகிய இத்தலைவன் முதற்குலோத்துங்கனது ஆட்சியில், படைத்தலைவனாயமர்ந்து வேணாடு மழைநாடு பாண்டிநாடு வடநாடு முதலியவற்றில் நிகழ்ந்த போரில் தன் வேந்தனுக்த வெற்றியை நல்கிப் பெரும்புகழ் பெற்றான். இவனது வெற்றிச் செயல்களை நன்குணர்ந்த முதற் குலோத்துங்கன் இவனுக்குக் காலிங்கராயன், என்னும் பட்டமளித்துப் பாராட்டினான். இவன் அருளாகரன், அரும்பாக்கிமான் பொன்னம்பலக் கூத்தன், நரலோக வீரன் முதலிய பெயர்களாற் பாராட்டப் பெற்றுள்ளான். இவன் விக்கிரமசோழன் ஆட்சியின் முற்பகுதியிலும் படைத் தலைவனாக இருந்தனன் என்பது ஒட்டக்கூத்தர் பாடிய விக்கிரம சோழனுலாவால் நன்கு புலனாகின்றது.
சோழ வேந்தர்க்கு வெற்றி விளைக்கும் போர்த்திறம் வாய்ந்த . கலிங்கராயனாகிய இத்தலைவன் தமிழ் மக்கள் உள்ளத்திலே சிவபத்தியினை விளைக்கும் சிறந்த சிவநெறிச் செல்வனாகவும் திகழ்ந்துள்ளான். இச்செய்தி தில்லைப் பெருங்கோயிலிலும் திருவதிகை வீரட்டானத்திலும் இவன் செய்துள்ள திருப்பணிகளை வெண்பா நடையிற் போற்றி வரையப் பெற்றுள்ள கல்வெட்டுக்களால் இனிது புலனாகும். தில்லைப் பெருங்கோயிலுக்கு இவன் செய்துள்ள திருப்பணிகளைக் குறித்த முப்பத்தேழு வெண்பாக்கள் சிதம்பரம் கல்வெட்டிற் பொறிக்கப் பெற்றுள்ளமை காணலாம்.
{1} தில்லைச் சிற்றம்பலத்தில் உள்ள திருக்கொடுங்கைப் பகுதியைப் பொன்னால் வேய்ந்தது, (2) தில்லையிற் பொன்னம்பலத்தைச் செம்பொன்னால் வேய்ந்தது, (3) தில்லைப் பெருங் கோயிலிலுள்ள திருஞானசம்பந்தர் திருக்கோயிலைப் பொன்னால் வேய்ந்தது, (4) திவ்லைப் பெருங்கோயிலிலுள்ள பேரம்பலத்திற்கு செப்புத் தகடு வேய்ந்தது. (5) வடநாட்டுப் பகையரசர் திறையாகத் தந்த செம்பொன்னைத் தில்லைக் கூத்த பெருமானுக்குப் பரிகலமாகச் செய்தளித்தது, (6) கூத்தப்பெருமானுக்குப் பொற்படிக்கம் செய்து கொடுத்தது, {7} செம் பொற்காளஞ் செய்து கொடுத்தது. கூத்தப் பெருமனுக்கு நீண்டெரியும் கற்பூர விளக்கு அமைத்தது. பொன்னம்பலத்தினைச் சூழ்ந்த திருச்சுற்றில் பொன்விளக்கமைத்தது, தில்லைப் பெருமானுக்கு நாள்தோறும் பாலமுது நிவேதிக்க நிபந்தம் அளித்தது. ஆயிரம் நாழி நெய்யால் கூத்தப் பெருமான் திருமஞ்சனஞ் செய்தருளக் கண்டு மகிழ்ந்தது, சிவபெருமான் ஞானங் குழைத்தளித்த சிவஞானப் பாலைப் பருகிய திருஞான சம்பந்தப் பிள்ளையார் பாடியருளிய திருப்பதிகம் முதலாகவுள்ள தேவாரத் திருப்பதிகங்களை நாளுந் தடையின்றி ஓதுவதற்கும் பலர் கூடியிருந்து கேட்டு மகிழ்வதற்கும் உரிய வண்ணம் தேவார மண்டபத்தைக் கட்டியது, தில்லைப் பெருங்கோயிலில் மலை போன்று உயர்ந்த நூற்றுக்கால் மண்டபத்தைக் கட்டியது தில்லையம்பலத்தைச் சூழத் திருச்சுற்று மாளிகை அமைத்தது, சிவகங்கைத் தீர்த்தத்துக்குக் கருங்கற்களால் படியமைத்தது, தில்லைத் திருவீதி சூழ நல்ல ஒளி விளக்கும் அவ்வீதியின் நாற்றிசையிலும் இறைவன் விற்றிருக்குந் திருமண்டபமும் செய்தது, தில்லைக் கூத்தப்பெருமான் இடப்பாகத்தேயுள்ள சிவகாமியம்மைக்குத் தனிக் கோயிலாகச் சிவகாமக்கோட்டம் அமைத்தது; அக்கோட்டத்தினைச் சூழத் திருச்சுற்று மாளிகை அமைத்தது; சிவகாமியன்னைக்கு நாள் தோறும் திருமஞ்சனஞ் செய்து வழிபாடு நிகழ்த்த ஏற்பாடு செய்தது, சிவகாமியன்னைக்குப் பொன்னாடை சாத்தியது, உலகம் ஈன்ற அன்னையின் அருளை நினைந்து போற்றும் முறையில் அக்கோயிலில் நாள்தோறும் குழந்தைகட்குப் பாலும் எண்ணெயும் வழங்க திபந்தம் செய்தது, புலியூர்ச் சிற்றம்பலத்தைப் பொன்மயமான கொடிகளால் அலங்கரித்தது, தில்லையில் கூத்தப்பிரான் திருவீதியில் எழுந்தருளும்போது நறும்புகை கமழ ஏற்பாடு செய்தது, அத்திருவிழாவில் திருஞானசம்பந்தர் முதலான சைவ சமய ஆசிரியர்களின் திருவுருவமான திருக்கோலங்களை ஒளி பெருக எழுந்தருளச் செய்தது, தில்லைப் பெருமானை வழிபடும் அன்பர்கள் தில்லையில் தங்கியிருந்து உணவு கொள்ளும் முறையில், அன்னம் பாலிக்க. அறக்கட்டளை வகுத்தது, முதலாம் குலோத்துங்கன் பட்டத்தரசியாசிய தியாகவல்லியின் பெயரால் நிலம் வாங்கி அந்நிலத்திற்குரிய வரியை நீக்கித் தில்லை வாழந்தணர்க்கு வீதியில் மனை கட்டிக் கொடுத்தது, தில்லைப்பெருங் கோயிலுக்குக் களிற்று யானை கொடுத்தது, திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆசிய மூவரும் எல்லாம் வல்ல முதல்வனாகிய சிவபெருமானது புகழ்த் திறத்தைப் பாடியவாறு அம்மூவர் அருளிய தேவாரப் பதிகங்கள் முழுவதையும் முன்போற் சிதலரிக்கவொண்ணாதவாறு அளவொத்த செப்பேடுகளில் எழுதித் தில்லைப்பெருங்கோயிலிற் சேமித்து வைத்தது, தில்லைக் கூத்தப்பெருமானுக்குத் திருநந்தவனம் அமைத்தது, தில்லைப் பெருமான் மாசிமக நாளில் கடலாட்டிற்கு எழுந்தருளுந் திருவிழாவில் அம்முதல்வன் வீற்றிருந்தருளக் கிள்ளைக் கடற்றுறையில் மண்டபம் அமைத்தது, தில்லைப் பெருங்கோயிலுக்கு ஆயிரம் பசுக்களை அளித்தது, தில்லையில் புலி மடுவின் அருகே வியாக்கிரபாதர் தந்தையார் மத்தியந்தன முனிவர் வழிபட்ட சுடலையமர்ந்தார் திருக்கோயிலைக் கற்றளியாக்கியது. தில்லை மூவாயிரவராகிய அந்தணர்கள் செல்வப் பெருக்கமுடையராதல் வேண்டும் என்னும் நல்ல நோக்கத்துடன் தில்லையருகேயுள்ள ஏரியிலிருந்து தண்ணீர் பாய்தற்கமைந்த மதகினைக் கல்லினாற் செய்தமைத்தது ஆகிய பணிகள் மேற்குறித்த செய்யுட் கல்வெட்டில் விரித்துரைத்துப் பாராட்டப் பெற்றுள்ளன. இவ்வாறே மணவிற் கூத்தன் காலிங்கராயனாகிய இவன் தில்லையிற் போன்றே திருவதிகை திருவீரட்டானத் திருக்கோயிலிலும் பல திருப்பணிகளைச் செய்துள்ளான். அப்பணிகள் யாவும் அக்கோயிலில் வரையப்பெற்றுள்ள இருபத்தைந்து வெண்பாக்களில் எழில் பெற விரித்துரைக்கப் பெற்றுள்ளமை காணலாம்.
இவ்வாறு சோழரது அரசியல் ஆட்சிவளம் பெறவும், தமிழகத்தின் அருளியலாட்சி முறையாகிய சிவநெறி வளர்ச்சி பெறவும் மணவிற்கூத்தன் காலிங்கராயன் செய்துள்ள திருப்பணிகளில் சிறப்புடையதாகக் குறிக்கத் தகுவது. தேலார ஆசிரியர் மூவரும் பாடிய திருப்பதிகங்கள் முழுவதையும் செப்பேடுகளில் வரையச் செய்து சிவராச தானியாகத் திகழும் தில்லைப் பெருங்கோயிலிற் சேமித்து வைத்த திருநெறித் தமிழ்ப் பணியேயாகும். இத்திருப்பணியை விரித்துரைத்துப் போற்றும் முறையில் அமைந்தது.
'முத்திறத்தார் ஈசன் முதற்றிறத்தைப் பாடியவா(று)
ஒத்தமைத்த செப்பேட்டி னுள்ளெழுதி - இத்தலத்தின்
எல்லைக் கிரிவாய் இசையெழுதி னான் கூத்தன்
தில்லைக்சிற் றம்பலத்தே சென்று'
(தெ. இ. க. தொகுதி IV. பக்கம் 34, செய்யுள் 55).
என வரும் வெண்பாவாகும்.
இறைவன் திருக்கோயிலுக்குச் செய்யும் திருப்பணி, நாட்டில் வாழும் ஏழையெளிய மக்களுக்கும் நற்பயனளித்தல் வேண்டும் என்னும் பெருநோக்குடையவன் காலிங்கராயன் என்பது, அவன் தில்லைச் சிவகாமியம்மை திருக்கோயிலில் நாள் தோறும் இளங்குழந்தைகளுக்குப் பாலும் எண்ணெயும் வழங்குமாறு அறக்கட்டளை வகுத்துள்ள சமுதாயத் தொண்டினால் நன்குணரப்படும். இச் செய்தி.
“செல்வி திருந்தறங்கள் தென்னகரித் தில்லைக்கே
நல்லமகப் பால்எண்ணெய் நாடோறுஞ் செல்லத்தான்
கண்டான் அரும்பையர்கோன் கண்ணகனீர் ஞாலமெல்லாங்
கொண்டானந் தொண்டையார் கோன்"
(தெ. இ. தொகுதி IV. பக். 34, பாடல் 47)
எனவரும் வெண்பாவில் விரித்துரைக்கப் பெற்றுள்ளமை காணலாம்.
திருஞானசம்பந்தப் பிள்ளையார் முதலிய தேவார ஆசிரியர்கள் மூவரும் பாடியருளிய தேவாரத்திருப்பதிகங்களை தடையின்றி எல்லாரும் இருந்து கேட்டற்குரிய தேவராய மண்டபத்தைத் தில்லையம்பல முன்றிலிலே காலிங்கராயன் கட்டினான், இச்செய்தி.
நட்டப் பெருமானார் ஞானங் குழைத்தளித்த
சிட்டப் பெருமான் திருப்பதியம்- முட்டாமைக்
கேட்போர்க்கு மண்டபத்தைச் செய்தான்தெவ் வேந்தர்கெட
வாட்போக்குத் தொண்டையர்கோன் மன்'
(தெ. இ.க. தொகுதி IV, பக். 34)
எனவரும் வெண்பாலிற் கூறப்பெற்றுள்ளது. தில்லைப் பொன்னம்பல முன்றிலிலே இப்பொழுது கோவிந்தராசப் பெருமாள் சந்நிதியின் - கிழக்குப் பகுதியே காலிங்கராயன் கட்டிய தேவார மண்டபம் இருந்த இடமாகும். இப்பகுதியில் தேவார ஆசிரியர் மூவர்க்கும் தில்லைக் கூத்தப்பெருமானை நோக்கிய நிலையில் சந்நிதியிருந்தது. இச்சந்நிதியிலிருந்த தேவார ஆசிரியர் மூவர் திருவுருவமும் இப்பொழுது பொன்னம்பலத்தைச் சூழவுள்ள முதற்பிரகாரத்தில் பரமானந்த கூபத்தின் எதிரே பைரவர் சந்நிதியையொட்டி எழுந்தருளச் செய்யப் பெற்றமை காணலாம்.
விக்கிரம சோழனுக்குப் பின் அவன் மைந்தன் இரண்டாங் குலோத்துங்க சோழன் கி.பி. 1133 முதல் 1150 வரை இந் நாட்டினைச் சிறந்த முறையில் ஆட்சி புரிந்த பெருவேந்தனாவான். இவ்வேந்தனைத் "தில்லைத் திருநகர் சிறப்புடைத்தாகத் திருமுடி சூடிய குலோத்துங்க சோழ தேவர்" (தெ. இ.க தொகுதி VII எண் 780) எனத் திருமாணிகுழியிலுள்ள கல் வெட்டு சிறப்பித்துப் போற்றுகின்றது. எனவே இவனது ஆட்சிக் காலத்தில் தில்லைப் பெருங்கோயில் திருப்பணிகள் பல இனிது நிறைவேற்றப்பெற்றுத் தில்லைத் திருநகரம் மிகவும் சிறப்புடையதாகத் திகழ்வதாயிற்று என்பது நன்கு புலனாகும். இரண்டாம் குலோத்துங்கனாகிய இவ்வேந்தன் தில்லைச் சிற்றம்பலப் - பெருமான் பால் அளவிலாப் பேரன்புடையவன் என்பது, "தில்லையில் நடஞ்செய் கமலங்களை வளைக்கும் சிந்தை யபயன்" (குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்:-78) எனவும், "நவ நிதிதூஉய், ஏத்தற் கருங்கடவுள் எல்லையில் ஆனந்தக் கூத்தைக் களிகூரக் கும்பிட்டு” (குலோத்துங்க சோழனுலா வரி 74-76) எனவும் வரும் ஒட்டக் கூத்தர் வாய்மொழியாலும், 'தில்லைக் கூத்தபிரான் திருவடித் தாமரையிலுள்ள . அருளாசிய தேனைப் பருகும் வண்டு போன்றவன்' (தெ. இ. க. தொகுதி IV எண் 397) எனத் திருவாருர்க்கல்வெட்டு இவ்வேந்தனது சிவபத்தித் திறத்தினைக் குறிப்பிடுதலாலும் நன்கு விளங்கும்.
இவ்வேந்தன். தில்லைத் திருநகரின் நான்குபெருவீதிகளையும் வனப்புடையனவாக அழகுபடுத்தினான், பற்பல மண்டபங்களைக் கட்டுவித்தான். சிவபெருமான் திருக்கூத்தியற்றியருளும் திருச்சிற்றம்பலத்தைத் தம்முன்னோர் செய்தது போலவே பொன்னாலும் மணிகளாலும் அணி பெறச் செய்தான். திருச்சிற்றம்பலத்தின் முகப்பாகிய 'எதிரம்பலத்தையும்' உட்கோபுரத்தையும், திருச்சுற்று மாளிகையையும் பொன்மயமாக்கினான். எழுநிலைக் கோபுரங்களைக் கட்டினான். தன் தந்தை விக்கிரம சோழன் காலத்திற் சுட்டப்பெற்ற சிவகாமக் கோட்டத்தினை உமாதேவியார் தாம் தோன்றிய இமயமலையையும் மறக்கும்படி மேலும் விரிவுடையதாக்கினான். சிவகாமியம்மையார் திருவிழா நாளில் உலா வருதற்குப் பொன்னினும் மணியினும் அணி செய்யப் பெற்ற தேரினைச் செய்து கொடுத்தான்; பொன்னாலாகிய கற்பகத் தருக்களை அமைத்தான், அம்மை இருக்கோயிலுக்கு எதிரேயுள்ள சிவகங்கைத் தீர்த்தத்தினைச் சூழ நாற்புறமும் மண்டபம் அமைத்தான். இவ்வாறு இவ்வேந்தன் தில்லைச் சிற்றம்பலத்தை விரிவுபடுத்தும் திருப்பணிகளைச் செய்யத் தொடங்கிய போது. கி.பி. எட்டாம் நூற்றாண்டில் தில்லைத் திருமுற்றத்தில் நந்திவர்மனால் பிரதிட்டை செய்யப் பட்ட தில்லைக் கோவிந்தராசர் கோயிலை இடமாகப் பற்றி வாழ்ந்த எலவனைவர் சிலர் இத்திருப்பணிக்குத் தடையாய் இடையூறு பல புரிந்தனர். அது கண்டு சினமுற்ற இவ்வேந்தன் அத்திருமால் மூர்த்தத்தை இடம் பெயர்த்துப் பின்னர்த் தான் மேற்கொண்ட தில்லையம்பலத் திருப்பணியினை இனிது நிறைவேற்றினன் என்பது வரலாறு.
இவ்வேந்தன் தில்லையில் சிவகாமி அம்மை திருக்கோயிலைத் தென் திசைமேரு என்னும்படி பலரும் வந்து பணிந்து தங்கும்படி உயர்ந்த விமானமும் மண்டபமும் உடையதாக விரிவுபடுத்தினான் என்பதனை,
“நீடிய வெண்டிசை நீழல் வாய்ப்ப'
நேரிய தெக்கிண மேரு வென்னப்
பீடிகை தில்லை வனத்தமைத்த
பெரியபெருமாளை வாழ்த்தினவே"
(தக்கயாகப்பரணி)
என வரும் தாழிசையில் ஒட்டக்கூத்தர் குறித்துள்ளார். தில்லை யம்பலத்தைச் சூழ்ந்துள்ள இரண்டாம் திருச்சுற்றினைக் திருமாளிகைப் பத்தியுடன் அமைத்தவன் இரண்டாங் குலோத்துங்கள். தில்லைப் பொன்னம்பலத்தைச் சூழ்ந்துள்ள இரண்டாம் திருச்சுற்று, குலோத்துங்க சோழன் திருமாளிகை என வழங்கப்பெற்றது.
அருண்மொழித் தேவராகிய சேக்கிழாரடிகளைக் கொண்டு சிவனடியார்கள் அறுபத்து மூவர் வரலாறுகளையும் குறித்துத் திருத்தொண்டர் புராணமாகிய வரலாற்றுக் காப்பியத்தைப் பாடும்படி செய்தவன் இரண்டாங் குலோத்துங்கனே என்பது ஆராய்ச்சியாளரிற் பெரும்பாலோர் துணிபாகும். தில்லையம் பலவன் 'உலகெலாம்' என்று அடியெடுத்துக் கொடுக்கத் திருத் தொண்டர் புராணத்தைப் பாடியருளிய சேக்கிழார் நாயனார் தம்மை ஆதரித்துப் போற்றிய சோழ மன்னனைப் பத்து இடங்களில் பாராட்டிப் போற்றியுள்ளார். அப்பாடல்களுள் அநபாயன் என்ற பெயரையே சிறப்பாகக் குறிப்பிடுகின்றார்.
“சென்னி அபயன் குலோத்துங்கச் சோழன்
தில்லைத்திருவெல்லை பொன்னின் மயமாக்கிய
வளவர் போரேறு என்றும் புவிகாக்கும்
மன்னர் பெருமான் அநபாயன்”
(பெரியபுராணம் சண்டேசர்.8)
எனவரும் பாடலில் ‘தில்லைத் திருவெல்லை பொன்னின் 'மயமாக்கிய வளலர் போரேறு' எனச் சேக்கிழார் நாயனார் தில்லைப்பதியில் இவனுக்குள்ள பெரும்பற்றினைப் புலப்படுத்தியுள்ளமை காணலாம்.
திருநீற்றுச்சோழன்
தில்லைநகர் சிறப்புடைத்தாகத் திருமுடி சூடி இறைவனது திருவருள் வண்ணமாகிய திருநீற்றின் ஒளிவளரத் தில்லைப் பெருங்கோயிலிற் பலவகைத் திருப்பணிகளையும் ஆர்வமுடன் செய்து இத்திருக்கோயிலைப் பொன்மயமாக்கியவன் அநபாயன் இன்னும் சிறப்புப் பெயருடைய சோழ மன்னனாதலின் அவ்வேந்தர் பெருமானைச் சிவநெறிச் செல்வர் பலரும் திருநீற்றுச் சோழன் எனச் சிறப்பித்துப் போற்றுவாராயினர். தில்லையம்பலவாணர்பால் வைத்த பேரன்பின் திறத்தால் தில்லைப் பெருங் கோயிலிற் சிவத்திருப்பணிகள் புரிந்து தில்லையம்பலவாணர் எடுத்த பொற்பாதத்தின் கீழ் என்றும் பிரியாதமார்ந் தின்புறும் தெய்வநிலை கைவரப் பெற்ற இச் சோழர் பெருமானை உமாபதி சிவாசாரியார் தாம் இயற்றிய கோயிற்புராணத்தில்,
“ஒன்றிய சீர் இரவிகுலம் உவந்தருளி யுலகுய்யத்
துன்று புகழ்த் திருநீற்றுச் சோழனென முடி சூடி
மன்றினடந் தொழுதெல்லை வளர்கனக மயமாக்கி
வென்றிபுனை யநபாயன் விளங்கிய பூங்கழல் போற்றி"
(கோயில்- பாயிரம்-12)
எளவரும் பாடலால் வணங்கிப் போற்றியுள்ளார். தில்லைப் பெருமான் திருவீதிக்கு எழுந்தருளும் போது விநாயகர், முருகன் சமயாசாரியர் முதலியோர் திருவுருவங்களோடு திருநீற்றுச் சோழனாகிய இவ்வேந்தர் பெருமான் திருவுருவமும் எழுந்தருளச் செய்யப் பெற்றது என்ற செய்தி தில்லையுலாவில் இடம் பெற்றுள்ளமை இங்குச் சிறப்பாகக் குறிப்பிடத்தகுவதாகும்.
“தில்லையில் நடஞ்செய் கமலங்களை வளைக்குஞ் சிந்தை யப்யன்" எனக் குலோத்துங்க சோழன் பிள்ளைத் தமிழிலும்,
ஏத்தற் கருங்கடவுள் எல்லையி லானந்தக்
கூத்தைக் களிகூரக் கும்பிட்டு”
எனக் குலோத்துங்க சோழனுலாவீலும் கவிச்சக்கரவர்த்தி ஓட்டக்கூத்தர் தில்லையம்பதியில் அநபாயனாகிய இவ்வேந்தனுக்குள்ள ஈடுபாட்டினைப் புலப்படுத்தியுள்ளமை இங்கு ஒப்பு நோக்கத்தகுலதாகும். இவன் மைந்தன் இரண்டாம் இராசராச சோழனது 17-ஆம் ஆட்சியாண்டில் திருமழபாடிக் கோயிலில் வரையப் பெற்றுள்ள கல்வெட்டொன்றில் ஜயங்கொண்ட சோழமண்டலத்து ......... குன்றத்தூர்ச் சேக்கிழான்மாதேவடிகள் ராமதேவனான உத்தம சோழப் பல்லவராயன் என்பார் திருமழபாடித் திருக் கோயிலுக்குத் தொண்ணூறு பேராடுகள் உதவிய செய்தி குறிக்கப்பட்டுள்ளது.
'அத்தகைய புகழ்வோரண் மரபிற்சேக்கி
ழார் குடியில் வந்த அருண்மொழித் தேவர்க்குத்
தத்துபரி வளவனுந்தன் செங்கோ லோச்சுந்
தலைமையளித் தவர் தமக்குத் தனது பேரும்
உத்தம சோழப் பல்லவன் தானென்னும்
உயர் பட்டங் கொடுத்திட ஆங்கவர் நீர்நாட்டு
நிந்தனுறை திருநாகேச் சுரத்திலன்பு
நிறைதலினால் மறவாத நிலைமை மிக்கார்'
எனச் சேக்கிழார் புராணங் கூறுமாறு, குன்றத்தூரிற் சேக்கிழார் குடியிற் பிறந்து, இரண்டாம் இராசராசன் 17-ஆம் ஆட்சி யாண்டில் கோயிலுக்கு நீயத்தமளித்த குன்றத்தூர்ச் சேக்கிழான் மாதேவடிகள் ராமதேவனான உத்தமசோமப்பல்லவராயன் என்பவரே சேக்கிழார் நாயனார் என்பதும், இவரை ஆதரித்துத் திருத்தொண்டர் புராணத்தைப் பாடச்செய்த அநபாயன் என்பவன் இரண்டாம் இராசராசனுடைய தந்தை இரண்டாங் குலோத்துங்க சோழன் கான்பதும், சேக்கிழாருடைய தம்பியார் பாலறாவாயர் என்பவர் இரண்டாம் இராசராசனது 19-ஆம் ஆட்சியாண்டில் திருவறத்துறையில் நிகழும் மாசி வைகாசி விழாக்களில் திருஞானசம்பந்தப் பிள்ளையார் மாறன்பாடிக்கு எழுந்தருளுதற்கு நிலமளித்தகுன்றத்தூர்ச் சேக்கிழான் பாலறாவாயன் - களப்பாளராயன் என்பது, இவர் இரண்டாங்குலோத்துங்கனது ஆட்சியின் இடைப்பகுதி தொடங்கி மூன்றாங்குலோத்துங்கன் ஆட்சியின் முற்பகுதிவரை வாழ்ந்தவரென்பதும் அறிஞர் மு. இராகவையங்கார் முதலிய ஆராய்ச்சியாளர் துணிபாகும்.
தில்லை நகர்ச்சிறப்புடைத்தாகத் திருமுடி சூடிய இரண்டாம் குலோத்துங்கசோழன் தில்லைப்பெருங்கோயிலில் எழுநிலைக் கோபுரங்களைக் கட்டினான். சேக்கிழாரடிகள் பெரியபுராணம் பாடுதற்கு முன்னேயே தில்லைப் பெருங்கோயிலிலுள்ள எழு நிலைக் கோபுரங்கள் நான்கும் கட்டப்பெற்றிருந்தன என்பது,
'நீடுவான்பணிய உயர்ந்த பொன்வரைபோல் நிலையெழுகோபுரம்'
(பெரிய-தடுத்-109)
எனவும்,
"நிலையேழ் கோபுரம் முறையே கொடுதொழு துன்புக்கார்” (௸.திருநாவுக்-194)
எனவும்,
“நீடு நீணிலைக் கோபுரத்துள் புக்கு" (௸. திருஞான -158)
எனவும் வரும் சேக்கிழார் வாய்மொழியால் நன்கு தெளியப்படும்.
தில்லையின் மேற்குக் கோபுரம் சுந்தரபாண்டியன் கோபுரம் எனக் கல்வெட்டுக்களிற் குறிக்கப்பெறினும் (தெ.இ.க தொகுதி IV எண் 628-30) அது அவனுக்கு முன் அரசாண்ட சோழர்களாலே கட்டப்பெற்றிருத்தல் வேண்டும் எனவும், அதனை மேலும் புதுப்பித்தவன் முதல் சடையவர்மன் சுந்தரபாண்டியன் எனவும் அவ்வாறே தில்லையின் தெற்குக்கோபுரத்தைப் புதுப்பித்துக் சொக்கசீயன் என்று பெயரிட்டவன் முதற்கோப்பெருஞ்சிங்கன் எனவும், வடக்குக்கோபுரத்தைப் பதுப்பித்தவர் கிருஷ்ண தேவராயர் எனவும் கொள்ள வேண்டியுள்ளது. இந்நான்கு கோபுரங்களின் அமைப்பும் இவற்றின் மேலுள்ள கருங்கற்சிற்பங்களின் வடிவ அமைப்பும் சிற்பத்தினை வடிந்த கற்களும் ஒரே தன்மையவாக அமைந்திருத்தலைக் கூர்ந்து நோக்குங்கால் இந் நான்கு கோபுரங்களும் சோழ மன்னர்களால் அமைக்கப்பெற்றுச் சேக்கிழார் காலத்திலேயே சிறந்து விளங்கின என்பது இனிது புலனாகும்.
"சுந்தர பாண்டியன் திருநிலை யெழு கோபுரச்சன்னதியில் சொக்கச்சீயன் குறளில், கீழ்ப்பக்கத்துக் கீழைமடஸ்தானமாகத் திருநோக்கழகியான் திருமடமென்னும் பேரால் செய்வித்த மடத்துக்கு மடசேஷமாக நாயகரும் நாச்சியாரும் எழுந்தருளும் நாள் ... எதிரிலிசோழன் திருநந்தவனத்துக்கு.” (தெ. இ: க , தொ. IV எண் 624) - எனவும் "ஸ்ரீகிருஷ்ணதேவமகாராயன் தன்மமாக ஸிம்ஹாத்திறை பொட்டுனூற்கு எழுந்தருளி ஜயஸ்தம்பம் நாட்டி திரும்பி பொன்னம்பலத்துக்கு எழுந்தருளி பொன்னம்பல நாதனையும் சேவித்து, வடக்குக் கோபுரம் கட்டி வித்தசேவை" (௸ எண் 623)
எனவும் வரும் கல்வெட்டுக்கள் சுந்தரபாண்டியன் கட்டியது மேலைக்கோபுரம் என்பதனையும் வடக்குக் கோபுரம் கிருஷ்ணதேவராயரால் கட்டப்பெற்ற-தென்பதனையும் குறித்துள்ளமை காணலாம்.
"இராஜாக்கள் தம்பிரான் திருமாளிகை மேலைத்திருமாளிகையில் நிலையெழுகோபரத் திருவாசல் புறவாசல் தென் பக்கத்து எழுந்தருளியிருந்து பூசைகொண்டருளுகிற குலோத்துங்கசோழ விநாயகர்" எனப்பாண்டியர் கல்வெட்டிற் குறிக்கப்பட்ட தல விநாயகர் மேலைக்கோபுரத்துடன் இணைந்துள்ள திருமேனியாதலால் அப்பெருமான் எழுந்தருளியுள்ள மேலைக்கோபுரம் குலோத்துங்க சோழனால் முதன் முதற் கட்டப்பெற்றதென்பது உயத்துணரப்படும்.
கி.பி.1178 முதல் 1218 வரை தமிழகத்தை ஆட்சி புரிந்தசோழ மன்னன் மூன்றாங்குலோத்துங்கன் ஆவன். இவன் தில்லையில் சிற்றம்பலத்திற்கு முன்னுள்ளதும் இப்பொழுது கனகசபையென வழங்கப் பெறுவதும் ஆகிய எதிரம்பலத்னதப் பொன்னினால் வேய்ந்தான். கூத்தப்பெருமானுக்குச் சித்திரைத்திங்களில் திருவிழா நிகழ ஏற்பாடு செய்தான். சிவகாமியம்மை திருக்கோயிலின் விமானமாகிய கோபுரத்தைப் பொன்னால் வேய்ந்தான். இவன் தில்லையிற்செய்த இத்திருப்பணிகள் "எத்தரையும் தொழும் இறைவற்கு எதிரம்பலம் செம்பொன் வேய்ந்து, சித்திரை விழா அமைத்து இறைவிதிருக்கோபுரம் செம்பொன் வேய்ந்து" எனவரும் இவனுடைய மெய்க்கீர்த்தியிற் குறிக்கப்பெற்றுள்ளமை காணலாம். இங்கு எதிரம்பலம் என்றது சேக்கிழார் கூறும் பேரம்பலமே எனவும், எதிரம்பலம் பொன் வேய்ந்த மூன்றாங்குலோத்துங்கனே திருத்தொண்டர் புராணம் கூறும் பேரம்பலம் பொன் வேய்ந்த அநபாயன் எனவும், சேக்கிழாரை ஆதரித்துத் திருத் தொண்டர் புராணம் பாடு வித்தவன் இம்மூன்றாங் குலோத்துங்கனே எனவும் கூறுவர் ஆராய்ச்சியறிஞர் சதாசிவபண்டாரத்தார்.
"சபாபதியின் முன்னுள்ள, முகமண்டபத்தையும் மலைமகள் (சிவகாமியம்மை) கோயிலின் கோபுரத்தையும் சுற்றியுள்ள பிரகாரமாளிகைகளையும் அவ்வூர்ப் பெருமானிடத்தே இடையறாத பக்தி கொண்ட இவ்வரசன் பொன்மயமாக விளங்கும் படி நிர்மாணித்தான்." எனத் திரிபுவன வீரேச்சுரத் திருக்கோயிலில் வரையப்பட்டுள்ள வடமொழிக்கல்வெட்டும், இவ்வேந்தன் தில்லையிற் செய்த திருப்பணிகளைக் கூறியுள்ம்மமை காணலாம். இக்கல்வெட்டில் முகமண்டபம் என்றது, தில்லைச்சிற்றம்பலவர் திருமுன் கொடி மரத்தின் தென் திசையில் அமைந்துள்ள நிருத்தசபையெனக் கொள்ளுதல் ஏற்புடையதாகும். இச் சபையானது குதிரைகள் பூட்டிய தேரின் அமைப்பினையுடைய தாயிருத்தலின் இது தேர் மண்டபம் எனவும் வழங்கப் பெறும். (சங்கற்ப நிராகரணம்), இம்மண்டபத்தின் தூண்கள் யாவும் இவ்வேந்தனால் தஞ்சை மாவட்டம் திரிபுவனத்தில் நிறுவப் பெற்ற திரிபுவன வீரேச்சுரத்திலுள்ள தூண்களின் அமைப்பினையுடையனவாக இருத்தலாலும் இவனது வழிபடு மூர்த்த மாகத் திரிபுவனத்திலுள்ள சரபமூர்த்தியின் திருமேனி இச்சபையிலும் இருத்தலாலும் இம்மண்டபத்தின் வடபுறத்து அடிப் பட்டியலில் கூத்தப்பெருமானை நோக்கிக் கும்பிடும் நிலையில் இவனது உருவப் படிவம் நேரே அமைக்கப் பெற்றிருத்தலாலும் நன்கு விளங்கும். சிறிய அளவில் இச்சபையில் உள்ள இவ்வேந்தனது கருங்கற் படிவமும் திரிபுவன வீரேச்சுர விமானத்தில் உள்ள இவனது சுதைப்படிவமும் ஒன்றாயிருத்தலால் இந் நிருத்தசபையைக் கட்டியவன் திரிபு வீரேச்சுரத் திருக்கோயிலை நிறுவிய மூன்றாங் குலோத்துங்க சோழனே என்பது நன்கு தெளியப்படும்.
தில்லையில் திருமாளிகைப் பத்தியுடன் கூடிய மூன்றாம் பிராகாரம் இராஜாக்கள் தம்பிரான் என்னும் சிறப்புப் பெயரினையுடைய மூன்றாங் குலோத்துங்கனால் அமைக்கப் பெற்றதாகும். அதுபற்றியே இது இராசாக்கள் தம்பிரான் திருமாளிகையென கல்வெட்டில் வழங்கப் பெறுகின்றது. சேரபாண்டிய மண்டலமாகிய பாண்டி நாட்டை இவ்வேந்தன் கைப்பற்றிய நிலையில் அந்நாட்டில் திறையாகப் பெற்ற பசும்பொன்னும் விளை நிலங்களும் ஆகியவற்றைப் பெரும்பற்றப்புலியூர் தில்லையம்பலத்திலே ஆடல் புரியும் கூத்தப் பெருமானுடன் இருந்து அம் முதல்வனது அருள் நடனங்கண்டருளும் சிலகாமியம்மைக்கும் திருவாரூர்ப்பெருமானுக்கும் திரிபுவன வீரேச்சுரத்து இறைவனுக்கும் மதுரைத்திருவாலவாய் இறைவனுக்கும் கொடுத்து மகிழ்ந்தான். இச்செய்தி,
'சிறை கொண்ட புனல் வையைச் சேர பாண்டிய மண்டலத்து
இறை கொண்ட பகம் பொன்னும் இறையிலியு மெயிற்புலியூர்
ஆடும் அம்பலவாணர் கூடி வாய்ந்த திருநடங் கண்டருளும்
பாடகக்காற் பைங்கிளிக்கும் பைம்பொன் மதிள் திருவாரூர்
வானவற்கும் திரிபுவன வீரீச்சுர அருந்தவற்கும்
தேன்விரிசடைத் திருவாலவாய்ச் செழுஞ்சுடர்க்குங்
கொடுத்தருளி'
எனவரும் இவ்வேந்தனது யெய்ச்சீர்த்தியால் அறியப்படும்.
இவ்வேந்தனது முப்பத்தாறாவது ஆட்சியாண்டில் தில்லைச் சிற்றம்பலத்தில் திரு அணுக்கன் திருவாயிலை ஒட்டி, அமைந்த கனக சபையாகிய எதிரம்பலத்தின் அடிப்பீடமாகிய குறடு இவ்வேந்தனால் பொற்றகடு போர்த்தப் பெற்றது. பொற்றகடு போர்த்துவதற்குமுன் அக்குறட்டில் வரையப் பெற்றிருந்த கல்வெட்டு படியெடுக்கப் பெற்று இரண்டாம் பிரகாரத்தினையொட்டிய வாயிலாகிய குலோத்துங்க சோழன் திருமாளிகைப் புறவாயில் வடபக்கத்திற் பொறிக்கப்பட்டது. முதற் குலோத்துங்க சோழனது நாற்பத்தாறாவது ஆண்டில் அவ்வேந்தனுடைய தங்கையார் மதுராந்தகி ஆழ்வார் திருச்சிற்றம்பல முடையார்க்குத் திருநந்தவனமாகவும்; ஸ்ரீ மாகேஸ்வரர்க்குத் திருவமுது செய்ய மடப்புறமாகவும் நிலமளித்த செய்தியினைக் கூறுவது இக்கல்வெட்டாகும்.
தில்லைப் பெருக்கோயிலின் மூன்றாம் பிராகாரத்தை இராசாக்கள் தம்பிரான் திருமாளிகை எனத் தன் பெயரால் அமைத்த மூன்றாங் குலோத்துங்க சோழன் அத்திருச்சுற்றின் மேலைப் பிராகாரத்தில் தன் முன்னோர் நிறுவிய சிலகாமியம்மை திருக் கோயிலுக்குத் திருப்பணி செய்ததோடு அதனையடுத்துள்ள முருகப்பெருமான் திருக்கோயிலாகிய பாண்டிய நாயகத் திருக்கோயிலையும் நிருத்தசபையினைப் போன்று பெரிய தேர்மண்டபமாக அமைத்துள்ளான் எனக் கருத வேண்டியுள்ளது.
தில்லைக்கோயிலில் அண்டமுற நிமிர்ந்தாடும் கூத்தப் பெருமானுக்கு அமைக்கப்பெற்துள்ள நிருத்தசபையிலும் அறுமுகப்பெருமான் வள்ளி தெய்வயானையுடன் அமர்ந்தருளிய பாண்டியநாயகத்திலும் அமைந்துள்ள தூண்கள் மூன்றாங் குலோத்துங்கனால் நிறுவப்பெற்றுள்ள திரிபுவன வீரேச்சுரத்தில் உள்ள துண்களை யொத்த அமைப்புடையனவாகவும், இம் மண்டபங்களிலுள்ள சிற்ப அனமப்புகள் ஒரு காலத்தனவாகவும் காணப்படுவதாலும் இலை தமிழகத்தை நாற்பது ஆண்டுகள் நலம்பெற ஆட்சிபுரிந்த மூன்நாங்குலோத்துங்கனால் அமைக்கப் பெற்றனவே எனக் கருத வேண்டியுள்ளது. இவ்வேந்தன் பாண்டியர்களை வென்று பாண்டி மண்டலத்திற்குச் சோழ பாண்டிய மண்டலம் எனவும், மதுரைமாநகர்க்கு முடித்தலை கொண்ட சோழபுரம் எனவும், மதுரையரண்மனையிலுள்ள கொலுமண்டபத்திற்குச் சேர பாண்டியர் தம்பிரான் எனவும் தன் பெயர்களை வழங்கியுள்ளான் அவ்வாறே இத்தில்லைப் பதியில் பாண்டியர்தம் பிரானாகிய மூன்றாங் குவோத்துங்கனாற்கட்டப் பெற்ற முருகன் கோயிலும் பாண்டிய நாயகம் என வழங்கப் பெறுவதாயிற்று எனத்தெரிகிறது. தில்லைத் திருக்கோயிலிற் சேக்கிழார் பெருமான் அமர்ந்து திருத்தொண்டர் புராணத்தை இயற்றுதற்கும், உரைவிரித்தற்கும் இடமாக விளங்கியது ஆயிரக்கால் மண்டபமாகும். இது மூன்றாங் குலோத்துங்கனாகிய, இவ்வேந்தனாற் கட்டப் பெற்றிருத்தல் வேண்டும். என்பது ஆராய்ச்சியறிஞர் சதாசிவ பண்டாரத்தார் துணிபாகும்.
முதல் குலோத்துங்க சோழனது நாற்பத்தாறாம் ஆட்சியாண்டில் மிழலைநாட்டு வேளாண்மை கொண்ட கண்டன் மாதவன் என்பான் தில்லையம்பலத்தின் வடகீழ்த்திசையில் புராண நூல் விரிக்கும் புரிசைமளிகையினை அமைத்தான் என்ற செய்தி முன்னர்க் கூறப்பட்டது, அப்புராணமண்டபத்தினை ஆயிர்க்கால் மண்டபமாக விரிவுபடுத்தியவன் மூன்றாங் குலோத்துங்க சோழன் எனக்கருதுதல் பொருத்தமுடையதாகும். ஆயிரக் கால் மண்டபம் கட்டும் வழக்கம் இவன் காலத்தில், தான் தோன்றியிருத்தல் வேண்டும் என்பர் ஆராய்ச்சியாளர். திருவாரூரிலுள்ள ஆயிரக்கால் மண்டபம் தேவாசிரியன் என வழங்கப்பெறுகின்றது. இம் மண்டபம் மூன்றாம் குலோத்துங்கனால் கட்டப்பட்டதென்பது, திரிபுவன வீரேச்சுரத்திலுள்ள வடமொழிக்கல்வெட்டால் அறியப்படும். இவ்வேந்தனது படைத் தலைவனாகிய கண்டர் சூரியன் சம்புவராயன் என்பான் திருவக்கரையிலுள்ள சிவன் கோயிலில் சூரியன் திருக்கோபுரமும் கண்டர் சூரியன் என்ற ஆயிரக்கால் மண்டபமும் ஆகியவற்றைக் கட்டியுள்ளான். எனவே தில்லையிலுள்ள ஆயிரக்கால் மண்டபமும் இவ்வேந்தன் காலத்திலேயே கட்டப்பெற்றிருத்தல் வேண்டும். இவ்வாயிரக்கால் மண்டபத்திலேயே சேக்கிழார் நாயனார் தாம்பாடிய திருத்தொண்டர் புராணத்திற்கு உரை விரித்தருளினார் என்பது உமாபதி சிவாசாரியார் இயற்றிய சேக்கிழார் புராணத்தால் அறியப்படும்.
-------------
2. பாண்டியர்
கி.பி. 1251-71 முடிசூடிய முதல் சடையவர்மன் சுந்தர பாண்டியன் என்பான் பலநாடுகளை வென்றமையால் மகாரா சாதி ராசபரமேசுவரன், எம் மண்டலமுங் கொண்டருளியவன் எல்லாந் தலையான பெருமாள் எனப் பல பட்டங்களைப் புனைந்து கொண்டான். இல்வேந்தர் பெருமான் சைவர்களால் கோயில் எனப் போற்றப்பெறும் தில்லைப் பெருங் கோயிலுக்கும், வைணவர்களால் கோயில் எனப்போற்றப்பெறும் திருவரங்கம் பெரிய கோயிலுக்கும் பலதிருப்பணிகளைப் புரிந்துள்ளான். இவன் தில்லையிற் கூத்தப்பெருமானை வணங்கிப் பல துலாபாரதானங்கள் செய்தான். தில்லையம்பலத்தைப் பொன் வேய்ந்தான். தில்லைத் திருக் கோயிலின் மேலைக் கோபுரம் 'சுந்தர பாண்டியன் திருநிலை எழுகோபுரம்' என்னும் பெயரால் (தெ. இ. சு. தொகுதி 4-6.24} கல்வெட்டுக்களிற் குறிக்கப் பெற்றுள்ளது. எனவே இக்கோபுரத்தைப் பழுது பார்த்துப் பதுக்கியவன் இப்பாண்டிய மன்னன் என்பது நன்கு புலனாகும். இவன் தான் துலாபாரம் புக்க பொன்னைக் கொண்டு, தில்லைக் கோயிலுக்குப் பொன் வேய்ந்துள்ளான்.
இது பற்றியே இவ்வேந்தன் "கோயில் பொன்வேய்ந்த பெருமாள்" எனப் போற்றப் பெற்றனன். இச்செய்தி,
"வாழ்க கோயில் பொன் வேய்ந்த மகிபதி
வாழ்க செந்தமிழ் மாலை தெரிந்தவன்
வாழ்க மண்டலம் யாவையும் கொண்டவன்
வாழ்க சுந்தர மன்னவன் தென்னனே"
(தொகுதி IV 455)
எனத் திருப்புட்குழி திருமால் கோயிலில் வரையப்பெற்றுள்ள கல்வெட்டுப் பாடலாற் புலனாகும். இப்பாடலிற் "கோயில்" என்றது தில்லைப் பெருங் கோயிலையும், திருவரங்கம் பெரிய கோயிலையும். இங்ஙனம் தில்லையிலும் திருவரங்கத்திலுமுள்ள திருக்கோயில்களைப் பொன் வேய்ந்தமை பற்றிக் “கோயில் பொன் வேய்ந்த பெருமாள்” என இவன் போற்றப் பெற்றனன் எனத் தெரிகிறது. (கல்வெட்டு, ஆண்டறிக்கை 1936-37)
சினவரிக் கிம்புரி வெண்பிறைக் கோட்டிகல் வெங்கடுங்கட்
சினமத வெங்கரிச் சுந்தரத் தென்னவன் தில்லை மன்றில்
வனசத் திருவுடன் செஞ்சொற்றிருவை மணந்ததாக்கும்
கனகத்துலையுடன் முத்துத்துலையிற் கலந்ததுவே.
(தொகுதி IV 620)
எனவரும் பாடல் இவன் தில்லையில் துலாபாரம் புக்க செய்தியை யுணர்த்தும். இவனது பதினோராம் ஆட்சியாண்டில் நந்தவனத்துக்குரிய வரி நீக்கப்பட்டது. சுந்தரபாண்டியன் திருத்தோப்பு, சுந்தர பாண்டியன் தெற்குத் திருவீதி இவற்றின் வளர்ச்சிக்காகவும் குடிகள் வாழ்வுக்காகவும் நிலம் அளித்துள்ளான். (S. 1. 1. 546-18) திருமூலட்டானமுடையார்க்குத் திருவுருத்திரம் அத்தியயனம் பண்ண நிலம் அளித்துள்ளான் (A.R. Vol. VI 631). இவனது ஆட்சிக் காலத்தில் 1253 முதல் 1268 வரை சோழநாடு நடுநாடு தொண்டை நாடுகளுக்கு அரசப் பிரதிநிதியாயிருந்து ஆண்டவன் சடையவர்மன் வீரபாண்டியன் ஆவான். இவன் பல்லவ அரசனாகிய இரண்டாங் கோப்பெருஞ் சிங்கனிடம் திறை கொண்டு தில்லையில் - வீராபிடேகமும் விசயாபிடேகமும் செய்து கொண்டான். இச்செய்தி
"திங்கள் அரவமுஞ் செழுமலர்த் தாருடன்
பொங்குபுனற் செஞ்சடையோன் பொற்புலியூர் வீற்றிருந்து
காடவன் திறையிடக் கண்டினிதிருந்து
வீராபிஷேகமும் விசயாபிஷேகமும் பண்ணியருளிய"
ஸ்ரீ வீரபாண்டிய தேவர்க்கு யாண்டு '(புதுக்கோட்டைக் கல்வெட்டுத் தொகுதி 370-372)' என வரும் இவனது மெய்க் கீர்த்தித் தொடரால் இனிது புலனாகும்.
----------------
3. பல்லவர்
சிம்மவர்மன் முதலிய முற்காலப் பல்லவர்களின் கல்வெட்டுக்கள் தில்லையிற் கிடைக்கவில்லை. சோழமன்னர்களுக்குப் படைத்தலைவர்களாயிருந்து பின்னர்த் தனியரசு நடத்திய பிற்காலப் பல்லவர்களின் திருப்பணிகளே இக்கோயிற் கல்வெட்டுக்களில் காணப்பெறுகின்றன.
காடவராய மன்னர்களில் மிகவும் சிறப்புடன் விளங்கியவர்கள் சாடும் பெருமானான முதலாவது கோப்பெருஞ்சிங்கனும் அவன் மகன் வாள்வல்ல பெருமாளான இரண்டாவது கோப் பெருஞ்சிங்கனும் ஆவர். இருவரும் சகலபுவனச் சக்கரவர்த்தி, அவனியாளப் பிறந்தான் என்ற பட்டங்களைப் பெற்றிருந்தனர். முதலாவது கோப்பெருஞ்சிங்கன் சோழர் குல இளவரசியைத் திருமணம் புரிந்தவன். அதனால் மணவாளப் பெருமாள் எனப் போற்றப் பெற்றான்.
முதலாவது கோப்பெருஞ்சிங்கன் தன் ஆட்சியின் மூன்றாவது, நான்காவது ஆண்டுகளில் தில்லைக் கோயிலின் பால் நெய் தேவைகளுக்காக ஆயிரத்து எண்பத்தாறு பசுக்களை ரிஷப, சூல முத்திரையுடன் அளித்தான் (S. I. I.V.ol VII.No 54}. இது இவன் மகனின் மூன்றாம் ஆண்டுக் கல்வெட்டிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. கி.பி. 1237-இல் இவன் தில்லைக் கோயிலின் தெற்குக் கோபுரம் கட்டுவதற்காகத் தொண்டை மண்டலத்து ஆற்றூரில் முந்தாற்று ஒன்றே முக்கால் வேலி நில வருவாயையும் பிறவரிகள் சிலவற்றிலிருந்து கிடைக்கும் பொருளையும், அளித்துள்ளான். (S. I. I, Vol No. 51). இச்செய்தியைத் தில்லைக் கோயிலிலும், ஆற்றூர் முத்தீஸ்வரர் கோயிலிலும், காஞ்சி ஏகம்பமுடையார் கோயிலிலும் கல்லில் செதுக்கி வைத்தான். இவனால் கட்டப்பட்ட தெற்குக் கோபுரம், "சொக்கச்சீயன் திருநிலை எழுகோபுரத் திருவாசல்" என்ற பெயருடன் விளங்கியது. சொக்கச்சீயன் என்பது முதலாவது கோப்பெருஞ் சிங்கனுடைய விருதுப் பெயராகும். இவன் தனது 15-ஆவது ஆட்சியாண்டில் தில்லைக் கோயிலுக்காக வேசாலிப் பாடிப் பற்றுப் பூவாலையில் 'சொக்கச் சீயன் கமுகு திருநந்தவனம்' எனத் தன் பெயரால் ஒரு நந்தவனம் அமைத்தான், (S. I. I.. Vol. VIII No. 55). இவ்வறக்கட்டளையை இவன் மகனுடைய மூன்றாவது ஆண்டுக் கல்வெட்டு ஒன்று குறிப்பிடுவதும் கவனிக்கத்தக்கது (S.I. I. Vol. VIII. No. 53)
வாள்வல்ல பெருமாளான இரண்டாவது கோப்பெருஞ் சிங்கன் தில்லைக் கோயிலில் அளவிலா ஈடுபாடுடையவன். இவனுடைய ஆற்றூர்க் கவ்வெட்டு இவனைக் 'கனக சபாபதி சபா சர்வகார்ய சர்வகால நிர்வாகன்' (S, I, I. Vol, XII -No. 120) என்றும், திரிபுராந்தகக் கல்வெட்டு 'கனகசபாபதி நாத சரணாரவிந்த மதுகரமானவன்' (S. I, 1. Vol. XII, No 247) என்றும் குறிக்கின்றன. இவனது மூன்றாவது ஆட்சியாண்டில் சிதம்பரத்தின் மேல் பிடாகையான விக்கிரம சிங்கபுரத்து மேற்புறத்தில் தில்லைக் கோயிலின் தேவைக்கான பழங்கள் காய்கள் முதலியவைகளைப் பெற 'ஆளியார் திருத்தோப்பு' என்னும் திருத்தோப்பு அமைக்கப்பட்டது. (S. 1. I. Vol. VII. No. 53). அதில் பணிபுரிவோருக்குச் சொக்கச் சீயன் திருநந்தவனக் குடிகளுக்கு அளிக்கப்பட்ட ஊதியத்தைப் போன்று அளிக்க இக்காடவன் ஏற்பாடு செய்தான். அதேயாண்டில் இவன் தில்லைக் கோயிலுக்கு நானூற்றுப்பத்துப் பசுக்களை விட்டான். (S 1. 1. Vol. VIII, No. 54) இதைக் கூறும் கல்வெட்டு இவன் தந்தை விட்ட பசுக்களையும் குறிப்பிடுகிறது. கி. பி. 1251-இல் இவன் கடவாச்சேரி என்று தற்பொழுது அழைக்கப்படும் தில்லை நாயக நல்லூரில் சாலியர் (நெசவாளர்) சிலரைக் குடியமர்த்தி அவர்கள் திருக்காமக் கோட்டமுடைய நாச்சியார்க்குச் சாத்தும் பரிசட்டத்தை அளிக்க ஏற்பாடு செய்ததுடன் தில்லை நாயக நல்லூருக்குத் 'திருவம்பலப் பெருமாள் புரம்' என்ற புதிய பெயரையும் சூட்டினான். (S.II. Vol. XII. No. 154). அடுத்த ஆண்டில் இவன் தில்லைக் கோயிலுக்குரிய மூன்று திருநந்தவனங்களின் பராமரிப்பிற்காகச் சில நிலங்களை அளித்தான். (ibid No. 154). இவன் காலத்தில்தான் தில்லைக் காளி கோயில் சுற்றளியாக எடுக்கப்பட்டது. இவனது 8-ஆம் ஆண்டுக் கல்வெட்டு அக்கோயில் திருப்பணி நடைபெற்று வந்ததைத் தெளிவாகக் குறிப்பிடுகின்றது. (SI.1 Vol. VIII. No. 717). இவனது பத்தாவது ஆட்சியாண்டில் அத்திருப்பணி முடிவுற்றிருத்தல் வேண்டும். (S. I. I, Vol, XII No. 159). இதற்கு முன்னர்த் தில்லைக்காளி 'தில்லைவனமுடைய பரமேஸ்வரி' எனவும், பின்னர் பிடாரியார் 'திருச்சிற்றம்பல மாகாளி' எனவும் அழைக்கப் பட்டதைக் கல்வெட்டுக்களிலிருந்து அறிகின்றோம். இக்காளி கோயில் தற்பொழுது பள்ளிப் படை என்றழைக்கப்படும் விக்கிரம சோழ நல்லூரின் எல்லைக் குட்பட்டிருக்கின்றது. தில்லைக் கோயிலின் கிழக்குக்கோபுரம் இவனால் கட்டப்பட்டதை இவனுடைய திரிபுராந்தகக் கல்வெட்டிலிருந்து அறிகிறோம். (S. I. I. Vol. XII No. 247). நான்கு திக்கிலும் மிருந்த வேந்தர்களை வென்று, அவர் செல்வத்தைக் கவர்ந்து, துலாபாரம் நடத்தி, அப்பொன்னால் மேருமலையைப் போன்ற கிழக்குக் கோபுரத்தைத் தன் பெயரால் இக்காடவன் எடுப்பித்தான். இக்கோபுரத்தின் நான்கு பக்கங்களையும் இவன் ஒளிமயமாக நிர்மாணித்துக் கும்பாபிஷேகத்தைச் செய்தான், இத்திருப்பணி கி.பி. 1262-ஆம் ஆண்டிற்குள் நடைபெற்றிருத்தல் வேண்டும். மேற் கூறிய திரிபுராந்தகக் கல்வெட்டில் தெற்குக் கோபுரத்தைப்பற்றிய குறிப்பு எதுவும் இல்லாதது கவனிக்கத் தக்கது. ஒரே பெயரில் விளங்கிய தந்தையும் மகனும் முறையே தெற்குக் கோபுரத்தையும் கிழக்குக் கோபுரத்தையும் கட்டினார்கள் என்ற உண்மையை மறுப்பதற்கில்லை. இருவரும் தில்லைக் கோயிலுக்கும், திருக்களாஞ் செடியுடையார் கோயிலுக்கும் தனிப்பட்டோர் பலர் அளித்த நிலங்களுக்கு வரிவிலக்குச் செய்துள்ளார்கள்.
முதலாவது கோப்பெருஞ் சிங்கனும் அவன் மகனும் நாட்டியக் கலையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள். இருவரும் 'பரதம் வல்ல பெருமாள்' என்ற விருதுப் பெயரைக் கொண்டிருந்தனர். (S.I.l. Vol. VIII. No. 69). இரண்டாவது கோப்பெருஞ்சிங்கனை அவனுடைய ஆற்றூர்க் கல்வெட்டு 'பரதமல்லன்' என்றும் (S, 1, 1, Vol, VII. No. 120}, திரிபுராந்தகக் கல்வெட்டு 'சாகித்ய ரத்னாகரன்' {ibid No. 247), என்றும் அழைக்கின்றன. தில்லைக் கோயிலின் தெற்கு கிழக்குக் கோபுரங்களின் திருவாசல் உட்புறச் சுவரில் பரதநாட்டிய முத்திரைகள் செதுக்கப்பட்டிருப்பது மேற்கூறிய கல்வெட்டுச் சான்றினை உறுதிப் படுத்துகின்றது.
--------------
4. சேரமன்னர் :
சகம் 1498 (கி. பி. 1576)-இல் சேரமான் பெருமாள் குடியில் தோன்றிய கொச்சி இராமவர்ம மகாராஜா ஆனந்த தாண்டவ மாகேசுரர்களுக்கும், அந்தணர்களுக்கும், பரிசாரகர்களுக்கும் நாள்தோறும் 33 தளிகையளிக்க நிபந்தம் அளித்துள்ளார்.
--------------
5. விசயநகர மன்னர்
மகாதேவராயர் II
இவர் கி.பி. 1428-இல் தேவத்தான நிர்வாக ஊழல்களைத் திருத்தினார். அதிகவரி வசூலிப்பினால் குடிகள் கிராமங்களை விட்டு ஓடிப்போயினர். அதனால் வருமானம் குறைந்தமையால் சிதம்பரம் கோயில் பூசை தடைப்பட்டது. ஓடிப் போன குடிகளை மீண்டும் அழைத்துக் கிராமங்களை வளப்படுத்திக் கோயில் நிர்வாகத்தைச் செப்பஞ் செய்தார். {376-1913).
திம்மராயர்:
வீரப்பிரதாப திம்மராயராகிய இவர் சகம் 1425 (கி.பி. 1503} இல் சுவாமி, அம்பாளுக்கு இரட்டை மாலை சாத்தப் பெரும்பற்றப் புலியூர்க்கு மேற்கேயுள்ள காரிகுடி கிராமத்தை அளித்துள்ளார்.
கிருஷ்ணதேவராயர்
சகம் 1432 (கி.பி. 1510) இல் அழகிய சிற்றம்பல முடையார்க்கு மகாபூசை நிகழவும் அடியார்களுக்கு அமுது வழங்கவும் ஏற்பாடு செய்தார். சகம் 1433 (கி.பி. 1511) இல் சிதம்பர நாதபுரம் என்ற கிராமத்தைக் கோயிலுக்குச் சர்வமானியமாக அளித்தார். சகம் 1431 (கி. பி. 1509) இல் சிம்மஹாத்திரை பொட்டனூருக்குச் சென்று வென்று வடக்குக் கோபுரத்தைக் கட்டினார். (S. 1, 1 of 13) (S.1.1, Vol. IV 622).
அச்சுததேவராயர்:
இவர் திருமால் மூர்த்தத்தை மீண்டும் தில்லைக் கோயிலில் பிரதிட்டை செய்து வைகானச விதிப்படி பூசை நிகழ 5000 பொன் கொடுத்துள்ளார்.
சைவ, வைணவ வேற்றுமையில்லா இவர். சகம் 1451 (கி.பி 1529)-இல் கூத்தப் பெருமான் தேர்விழாவிற்காக 64, கிராமங்களையும், வடக்குக் கோபுரத் திருப்பணிக்காக 38 கிராமங்களையும் சர்வ மானியமாகக் கொடுத்துள்ளார். (Oriental Research Vol. 12. P. 169-178).
வேங்கட தேவராயர்
சகம் 1500 (கி.பி. 1578) சிவகாம சுந்தரியம்மைக்குத் திருவனந்தல் பூசைக்காகக் கிராமங்களை அளித்தார். சகம் 1506 {சி.பி. 1613}-இல் 300 பொன் கொடுத்து ஏழைகளுக்கு நாள்தோறும் 20 கட்டிச் சோறு அளிக்கும்படி ஏற்பாடு செய்தார். 5000 சலம் நெல் வருவாயுள்ள கிராமத்தையளித்து நாள் தோறும் துறவிகளுக்கு 30 கட்டிச் சோறு அளிக்க ஏற்பாடு செய்தார், (S. 1. 1. 346, 347-13) சகம் 1586 {கி.பி. 1664)- இல் சிதம்பரத்தில் இருந்த நமசிவாய உடையார் மேற்பார்வையில் இருபது கட்டிச் சோறு கொடுக்க நிபந்தம் அளித்துள்ளார். இங்குக் குறித்த நமசிவாய உடையார் என்பவர் குருநமசிவாயராக இருத்தல் கூடுமோ என்று ஐயுறுவர் சிலர். இவருடைய கல்வெட்டுக்கள் சிதம்பரம் கோயிலில் 12-உள்ளன. இவற்றுள் பெரும்பாலன அன்னம் பாலிப்புப் பற்றியன.
ஸ்ரீரங்கராயர் II
இவர் சகம 1503 (கி.பி. 1581-இல் மிளகுத் தரகு வருமானங் கொண்டு சிற்றம்பலவர்க்கு அபிஷேகம் செய்யவும், சகம் 1517 (கி.பி. 1595) இல் சிவகாமசுந்தரி ஐப்பசி பூரவிழாக் கொண்டருளவும் புறப்பேட்டை ஊரைத் தேவத்சனமாகக் கொடுத்துள்ளார். சகம் 1503 (கி.பி. 1581) - இல் ஏழு கிராமங்களின் வருமானத்தைக் கொண்டும், மிளகுத்தரகைக் கொண்டும் பெருமாளுக்கு அபிஷேக ஆராதனை விழாச் செலவுகள் நடத்திவர ஏற்பாடு செய்துள்ளார்.
ஸ்ரீரங்கராயர் VI:
இவர் சகம் 1565 இல் தில்லைத் திருச்சித்திர கூடத்தில் கோவிந்தராசப் பெருமாள் முன் மண்டபத்தைப் பழுது பார்த்தார். புண்டரீகவல்லித் தாயார், சூடிக்கொடுத்த நாச்சியார் விமானங்களும் பழுதுபார்க்கப் பெற்றன. இவர்காலத்தில் ஆடூர், கருங்குழி, குரியாமங்கலம், மதுராந்தக நல்லூர், உடையூர் முதலிய கிராமங்களுக்குத் தீர்வை தள்ளுபடி செய்யப்பட்டது. இது நிகழ்ந்த காலம் 2.2.1644 என்று எல்.டி. சாமிக் கண்ணுப் பிள்ளையவர்கள் கணக்கிட்டுள்ளார்.
வீரபூபதிராயர்:
இவர் நிருத்தநாதன் (கூத்தப்பிரான்) திருமுன் விளக்குக்காக தனது அரசியல் பிரதானி செண்டப்பராசா ஆதித்த ராஜாவைக் கொண்டு 64 பசுக்கள் அளித்துள்ளார். இவர் காலம் புக்கா II காலமாக இருக்கலாம் என்று எபிகிராபிகா (1909 பக் 115) ஆண்டறிக்கை கூறும்
-------------
6. நாயக்க மன்னர்கள்:
நாகமநாயக்கர்:
மதுரையில் நாயக்கர் ஆட்சியை நிறுவிய விசுவநாத நாயக்கர் தந்தை நாகம நாயக்கர் சிதம்பரத்தில் ஒரு சரக்கறையை விலைக்கு வாங்கிக் கோயிலுக்கு அளித்துள்ளார். முத்துக்கிருஷ்ணப்ப நாயக்கர்:-
இவர் (சிதம்பரத்தில் கோவித்தராசப் பெருமாளை மீளவும் பிரதிட்சை செய்த) வையப்ப கிருஷ்ணப்ப கொண்டப்பு நாயக்கர் மகனாவார். இவர் சகம் 1520 (கி.பி. 1598)-இல் ஆடிப் பதினெட்டாம் பெருக்கின் போது கொள்ளிடத்தில் கூத்தப் பிரான் தீர்த்தங் கொடுத்தருளுதற்காகக் கொள்ளிடத்தின வட கரையில் தீர்த்த மண்டபம் கட்டியுள்ளார்.
----------------
7. மராட்டிய மன்னர்
சாம்போஜி:-
சிவாஜியின் முதல் மைந்தராகிய இவர் செஞ்சியைத் தலைநகராகக் கொண்டு கொள்ளிடத்தின் வடபகுதியை ஆண்டவர். ஏறக்குறைய 38 ஆண்டுகள் குடுமியா மலையிலும், மதுரையிலும் பாதுகாப்பாக வைக்கப் பெற்றிருந்த நடராசப் பெருமானுடைய திருவுருவம் இவர்காலத்தில் தில்லைச் சிற்றம்பலத்திற்குக் கொண்டு வரப்பெற்றது. கி. பி. 1684-இல் செப்புத் தகடு வேயப்பெற்றுக் குடமுழுக்கு நிகழ்ந்தது. கி. பி. 1686-இல் பொன்வேய்ந்து மீண்டும் குடமுழக்கு நிகழ்த்தப்பெற்றது. தில்லைப் பெருங்கோயில் திருப்பணியை இவருடைய அதிகாரி 'கோபாலதாதாஜி' என்பவர் கண்காணித்து நிறைவேற்றினார். தில்லைச்சிற்றம்பலத் தவமுனிவர் என்பார் தில்லைக் கோயிலில் நடராசப்பெருமான் மீண்டும் எழுந்தருள உதவி புரிந்தார். அரசருடைய குலகுருவாகிய முத்தையா தீட்சதர் என் பலர் கும்பாபிஷேகத்தை முன்நின்று நடத்திவைத்தார். இவர் செய்த திருப்பணிகள் தமிழ்ப்பல்கலைக்கழகத்தால் வெளியிடப் பெற்ற 'தஞ்சைமராட்டியர் செப்பேடுகள்-50' என்னும் நூலில் 45 முதல் 48 வரை எண்ணிடப் பெற்ற திருவாரூர்ச் செப்பேடுகளில் எடுத்துரைக்கப்பெற்றன.
மகமதியர் படையெடுப்புக்காலத்தில் ஹைதர் அலி இக் கோயிலைப் பாசறையாகக்கொண்டமையாலும், கி.பி. 1749-இல் படைத்தலைவன் கோப் என்பவன் தேவிகோட்டைக்குப் புறங்காட்டி ஓடிவரும்போது தில்லைக்கோயிலைத் தனக்கு அரணாகக் கொண்டமையாலும், கி.பி. 1753-இல் பிரஞ்சுக்காரர் புவனகிரியைக் கைப்பற்றித் தில்லைக்கோயிலை அரணாகக் கொண்டு ஆங்கிலேயரைப் புறங்காட்டி யோடச்செய்தமையாலும் கி.பி. 1780-இல் நிகழ்ந்த மைசூர்யுத்தத்தில் ஸ்ர் ஹயர்வுட் என்பவர் இக்கோயிலைப் படை தங்கும் இடமாகக் கொண்டு எதிரியைத் தாக்கினமையா லும் சைவர்க்குத் தலைமைக் கோயிலாகவுள்ள இத் தில்லைப் பெருங்கோயிலானது பலவேறு இடிபாடுகளையடைந்தது. அழகிய சிற்பங்கள் அழிவுற்றன ஆங்கிலேயர் ஆட்சி இந் நாட்டில் நிலை பெற்ற பின்னரே இப்பெருங்கோயிலில் அமைதியான முறையில் நாட்பூசனையும் திருவிழாக்களும் முன்போலத் தொடர்ந்து நிகழ்வனவாயின.
காஞ்சிபுரம் பச்சையப்ப முதலியார் திருப்பணி
சிவநெறிச் செல்வராகிய இவர், தமிழகத்திற் சிறப்புடைய கோயில்கள் சிலவற்றுக்கு நிபந்தம் அளித்துள்ளார். தில்லைப் பதியிற் பலநாட்கள் தங்கியிருந்து நடராசப்பெருமானை வழி பட்டு நாட்பூசனைக்கும் திருவிழாக்களுக்கும் அறக்கட்டளை நிறுவியுள்ளார். தில்லைப் பெருங்கோயிலின் கிழக்குக் கோபுரத்தைப் பழுது பார்த்துத் திருப்பணி செய்துள்ளார்.
நகரத்தார் திருப்பணி
சைவமும் தமிழும் வளர்த்த தனவணிகச் செல்வர்களாகிய நகரத்தார் சார்பில் தில்லை நடராசப் பெருமான் திருக்கோயில் சென்ற பத்தொன்பதாம் நூற்றாண்டில் மிகவும் விரிவான முறையில் திருப்பணி செய்யப் பெற்றது. தில்லையின் எல்லையில் அண்ணாமலைப்பல்கலைக்கழகம் நிறுவிய பெருங்கொடை வள்ளல் செட்டிநாட்டரசர் ராஜா சர் மு. அண்ணாமலைச் செட்டியார் அவர்களுடைய தந்தையார் சா. ராம முத்தைய செட்டியர்வர்கள் தில்லைப் பெருங்கோயிலின் முதற்பிராகாரத்தின் திருமாளிகைப்பத்தியினைப் புதுப்பித்தும், திருமூலட்டானே சுவரர் திருக்கோயிலையும் உமையபார்வதி திருக்கோயிலையும் புதுப்பித்தும்,இரண்டாம் பிராகாரத்தையொட்டி அணிவெட்டிக்கால் மண்டபங்களைக் கட்டியும், தில்லைப் பொன்னம்பலத்தை மேலும் பொலிவுறச் செய்தும் கி.பி. 1891-ஆம் ஆண்டில் குட முழுககு விழாவைச் சிறப்புற நிகழ்த்தினார்கள். இவர்கட்குப்பின் இவர்தம் மைந்தர் ராஜா சர். மு. அண்ணாமலைச் செட்டியார் அவர்கள், இக்கோயிலின் சைவவைணவ வேறுபாடு அகலத் தில்லைக் கோவிந்தராசப் பெருமாள் கோயிலைத்திருப்பணி செய்து நடராசர் சந்நிதியிலும் கோவித்தராசர் சந்நிதியிலும் முன்மண்டபங்களைக் கட்டி கி.பி. 1934-ஆம் ஆண்டு தில்லைக் கோவிந்தராசப் பெருமாளுக் குக் குடமுழுக்கு விழாச் செய்தார்கள்.
சீர்காழி சபாநாயக முதலியார் திருப்பணி
சீர்காழி பெருநிலக்கிழாராகிய இவர், தில்லையிற் கனக சபையில் நாள்தோறும் சந்திரமெளலீஸ்வரர்க்கும் இரத்தன சபாபதிக்கும் நிகழ்ந்துவரும் திருமஞ்சனத்தை அன்பர்கள் இருந்து தரிசிப்பதற்கு வசதியாகக் கனகசபையின் கிழக்கே தேக்குமரக்கூரையில் செப்புத்தகடு வேய்ந்த தரிசனமன்றத்தை அமைத்தார்கள். இத்திருப்பணியை இவர்கட்குப்பின் சிதம்பர நாத முதலியார் அவர்கள் நிறைவேற்றினார்கள்.
இக்காலத்திருப்பணி
இவ்விருபதாம் நூற்றாண்டில் ஆடுர் பெருநிலக்கிழார் தரும பூஷணம் M. இரத்தினசபாபதிப்பிள்ளையவர்களும், சிதம்பரம் அணிகலவணிகர் தருமபூஷணம் செ. இரத்தினசாமிச் செட்டியார் அவர்களும் சேர்ந்து ரூபா மூன்று இலட்சத்திற்கு மேல் செலவுசெய்து தில்லைச் சிற்சபையினையும் கனகசபையினையும் திருப்பணி செய்து 1955-ஆம் ஆண்டில் குடமுழுக்கு விழாவைச் சிறப்புற நிகழ்த்தினர்.
பின்னர் ஆடூர் பெருநிலக்கிழார் தரும பூஷணம் M. இரத்தின சபாபதிப் பிள்ளையவர்களால் ஆயிரக்கால் மண்டபத் திருப்பணி தொடங்கிச் செய்யப்பெற்றது. அவர்களுக்குப்பின் அவர்கள் பெயரால் நிறுவப்பட்ட அறக்கட்டளையின் சார்பில் பழுது பார்த்து இரும்புக் கம்பிகளால் சுற்றிலும் வசியமைக்கப் பெற்றுத் திருப்பணி இனிது நிறை வேறியது.
சிதம்பரம் திரு. W. கல்யாண ராமபிள்ளை யவர்களால் தொடங்கப்பெற்ற சிவகாமியம்மை திருக்கோயில் திருப்பணி அவர்கட்குப்பின் திரு. N.M. பொன்னம்பலம்-பிள்ளையவர்கள் தலைமையில் தமிழக அரசும் செட்டி நாட்டரசர் ராஜா சர் முத்தைய செட்டியார் அவர்களும் பொதுமக்களும் உதவிய நிதியுதவியைக் கொண்டு நிறைவு செய்யப்பெற்றது. 1972-இல் குடமுழுக்கு இனிது நிறைவேறியது.
சிதம்பரம் நகரமன்றத் தலைவராகவும் பாராளுமன்றவுறுப்பினராகவும் சட்டமன்ற-வுறுப்பினராகவும் இருந்து கூட்டுறவுத் துறை முதலிய பலதுறைகளிலும் நாடுவளம் பெற நல்ல பல பணிகளைப் புரிந்த R. கனகசபைப்பிள்ளை அவர்கள் தம் தந்தையார் ஆடூர் இரத்தினசபாதிப்பிள்ளையவர்கள் விரும்பிய வண்ணம் தில்லைப் பெருங்கோயில் திருப்பணியில் ஈடுபாடுடையராயினர், அவர்களைத் தலைவராகவும் முன்னாள் சட்டமன்ற வுறுப்பினர் திருப்பணிச்செல்வர் G. வாகீசம்பிள்ளையவர்களைச் செயலாளராகவும் கொண்ட சிதம்பரம் சபாநாயகர் திருமதில் திருப்பணிக்குழு தில்லைப்பெருங்கோயிலின் வெளிப்புறப் பெரு மதிலாகிய வீரப்பநாயக்கர்மதில் திருப்பணியை இனிது நிறை வேற்றியது. இக்குழு 1972-இல் சிதம்பரம் சபாநாயகர் கோயில் திருப்பணிக்குழுவாக மாற்றியமைக்கப்பெற்றது. அப்பொழுது தமிழக அரசின் அறநிலையத்துறை ஆணையராகப் பணிபுரிந்த திரு.M.K. பாலசுப்பிரமணியம் அவர்களது உதவியுடன் தில்லைப் பெருங்கோயில் திருப்பணியைச் சிறப்புற நிகழ்த்துதற்கு முப்பத் தைந்துலட்ச ரூபா அளவில் பெரிய திட்டம் (மாஸ்டர்பிளான்) ஒன்று வரையப்பட்டது. அதன்படி தமிழக அரசின் நன்கொடை யாக ரூபா பத்தொன்பது லட்சமும், பொதுமக்கள் நன் கொடையாக ரூபா இருபதுலட்சமும், பழநி தேவத்தானம் M.S கட்டளையின் சார்பில் ராஜா சர் M.A. முத்தையசெட்டியார் குடும்பத்தார், சென்னை மருத்துவர் டாக்டர் இரத்தின வேல் சுப்பிரமணியம் ஆகியோர்மூலம் ரூபா பன்னிரண்டு லட்சமும் ஆக ரூபா ஐம்பது லட்சத்திற்கு மேல் செலவிடப்பட்டுச் சிதம்பரம் திருக்கோயிலின் நான்கு கோபுரங்களும் திரு மாளிகைப்பத்தியும் முக்குறுணிப்-பிள்ளையார், கற்பக விநாயகர், சுப்பிரமணியர் முதலியமூர்த்திகளின் கோயில்களும், சுற்றுப்பிராகாரமும்,நிருத்த சபையும். பேரம்பலமும், கனகசபையும், ஆக எல்லாப் பகுதிகளும் திருப்பணிசெய்யப்பெற்றுத் தனித்தனியே குடமுழுக்கு விழா நிகழத்தப்பெற்றன. இத்திருப்பணிகளின் நிறைவாகத் தில்லைக் கூத்தப்பெருமானுக்கு நிகழும் அட்சய ஆண்டு தைத்திங்கள் 29-ஆம் நாள் (11-2-1987) புதன்கிழமை மகாகும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. அண்மையில் நடைபெற்ற இத்திருப்பணிகளால் தில்லை நடராசப்பெருமான் திருக்கோயிலிலுள்ள எல்லாச் சந்நிதிகளும் உற்புற மதில்களும் திருமாளிகைப் பத்தியும் ஆயிரக்கால் மண்டபமும் வெளிப்புறமதில்களும் திருந்திய முறையிற் பழுதுபார்க்கப் பெற்றுப் புதிய பொலிவுடன் திகழ்தல் காணலாம்.
----------------
8. தில்லைச் சிற்றம்பலப் பெருங்கோயிலில் வளர்ந்த கலைகள்
கற்றகல்வியிலும் இனியவனும், கலைக்கெலாம் பொருளாகியவனும் ஆகிய கண்ணுதற்கடவுள் ஆடல்புரியும் தில்லைப்பெருங் கோயிலானது கட்டடக்கலை, ஓவியக்கலை, சிற்பக்கலை ஆடற்கலை, இசைக்கலை முதலிய கலைகள் பலவற்றையும் வளர்த்த தனிச்சிறப்புடையதாகத் திகழ்கின்றது.
உள்ளத்திற்கு உவகையளிக்கும் கலைகளுள் ஆடற்கலையும் ஒன்று. இது இயல் இசை நாடகமெனும் முத்தமிழோடும் தொடர்புடையது. இக்கலையானது அகக்கூத்து, புறக்கூத்து பதினோர் ஆடல்கள் எனப் பல்வேறு பகுதிகளாக வளர்க்கப் பெற்றது. ஏதேனும் ஒருகதையினைத் தழுவி நடிக்கப் பெறும் கூத்தினை நாடகமென்றும், கதை தழுவாது பாட்டினது பொருளி னுக்கேற்பக் கைகாட்டி வல்லபஞ் செய்யும் சுவையும் மெய்ப் பாடும் பொருந்திய அவிநயக் கூத்தினை நாட்டியமெனவும் வழங்குதல் மரபு. நாட்டியமென்பது, ஆடல் பாடல் அழகு என்னும் மூவகை நலங்களையும் ஒருங்கே பெற்ற ஆடல்மகளிரால் தமது அகக்குறிப்பு உடம்பில் தோன்றும் மெய்ப்பாடுகளால் புறத்தே புலப்படும்படி சுவைபெற நடிக்கப்பெறுவது. இதன் இலக்கணத்தினை விரித்துரைப்பது நாட்டிய நூல். நாட்டியக் கலையானது எல்லாம் வல்ல கூத்தப்பெருமானது ஐந்தொழில் திருக்கூத்தை அடிப்படையாகக் கொண்டு தோன்றி வளர்ந்ததாகும். இக்கலையானது ஓவியம், சிற்பம், காவியம், ஆகிய கலைகள் பலவற்றோடும் தொடர்புடையதாகும்.
தில்லைப்பெருங்கோயிலானது மேற்குறித்த கலைகள் எல்லாவற்றையும் வளர்க்கும் செழுங்கலை நியமமாகத் திகழ்கின்றது, கூத்தப்பெருமான் உயிர்களுக்கு இன் பந்தரும் உலகினைப்படைக்க வேண்டும் என்ற திருவுள்ளத்தோடு பேரின்பத் திருக்கூத்தினை ஆடத்தொடங்கினார். அவரது உடுக்கையிலிருந்தே ஒலிகள் உண்டாயின. அவ்வொலிகளே எழுத்துக்களுக் கெல்லாம் பிறப்பிடம். எனவே எழுத்துக்களை முதலாகக் கொண்டு இயங்கும் எல்லாமொழிகளும் அக்கூத்தப்பேருமானது உடுக்கை ஒலியினின்றும் தோன்றியனவேயாம், தில்லைச்சிற்றம்பலவர் எழுந்தருளியுள்ள இத்திருக்கோயிலில் எழுநிலைக்கோபுரங்கள் நான்கிலும் இறைவனது திருமேனித் தோற்றங்களையும் தேவர் முனிவர் முதலியோர் உருவங்களையும் எழில்பெற வடுத்துக்காட்டும் சிறபங்கள் பல இடம் பெற்றிருத்தல் காணலாம்.
தெய்வத்திறம் வாய்ந்த கூத்துக்களாக நம் தமிழகத்து நெடுங்காலமாகப் போற்றப்பெறும் சிறப்புடைய ஆடல்களில் பல இத்திருக்கோயிற் சிற்பங்களில் இடம் பெற்றுள்ளன. சிவபெருமான் ஆடிய நூற்றெட்டுக்கரணங்களும் அவைபற்றிய இலக்கணங்கூறும் நாட்டிய நூலின் சுலோகங்களும் மேலைக் கோபுர உள்வாயிலில் மகளிராடும் முறையில் விளக்கப் பெற்றுள்ளன. இவ்வாறே தெற்கு, வடக்கு, கிழக்கு ஆகிய கோபுரங்களிலும் இக்கரணங்களின் செயல் முறைகள் சிற்ப அமைப்பில் வெளிப்படுத்தப்பட்டுள்ளமை காணலாம். இறைவனுக்குரியனவாகச் சொல்லப்பட்ட இக்கரணங்கள், எழுநிலைக் கோபுரம் நான்கின்வாயில்களிலும் இருபுறமும் தோழியர் நிற்க நடுவே தலைமகள் ஒருத்தி ஆடும் முறையில் அமைக்கப்பெற்றிருத்தல் காணலாம். இங்கு நடுநின்றாடும் ஆடல் மகளின் வடிவம் எல்லாம்வல்ல இறைவியைக் குறித்ததெனக் கொள்வாருமுளர். இப்பெருங்கோயிலில் நிருத்த சபையிலும் சிவகாமியம்மை கோயிலின் உட்பிரகாரமாகிய திருமாளிகைப்பத்தியின் குறடுகளிலும், பாண்டிய நாயகம் கோயிலின் குறடுகளிலும் அமைந்துள்ள சிற்பங்கள் ஆடற்கலையின் பல்வேறு கரணங்களையும் புலப்படுத்து-வனவாக அமைந்துள்ளன. சிவகாமியம்மை திருக்கோயிலில் ஆடற்கலைக்குரிய அங்கமாக அமைந்த பல்வேறு இசைக் கருவிகளின் அமைப்பும், அவற்றை இசைவாணர்கள் வாசிக்கும் முறையும் சிற்பங்களாக வடித்துக் காட்டப்பெற்றுள்ளன. தோற்கருவி துணைக்கருவி கஞ்சக்கருவி நரம்புக்கருவி எனப்படும் இசைக்கருவிகளின் உருவங்களில் இப்பொழுது வழக்கில் இல்லாதன சிலவும் இடம் பெற்றிருத்தல் காணலாம். 18-ஆம் நூற்றாண்டில் மகமதியர் முதலிய புறச்சமயப் படைவீரர்கள் காயிலைப் பாசறையாகக் கொண்டு தங்கினமையால். இக் சிற்பங்களிற் பல சிதைவுற்றன. வீணை, யாழ் முதலிய நரம்புக கருவிகள் விரலால் மீட்டி வாசித்தற்குரியன என்பதனைப் பலரும் அறிவர். சிவகாமியம்மை கோயிலிற் காணப்படும் நரம்புக் கருவி ஒன்று இக்காலத்தில் வழங்கும் மேலைநாட்டு இசைக் கருவியான பிடிலைப் போன்று, வில்லினால் வாசித்தற்குரிய கருவியாக அமைந்துள்ளமை காணலாம். இக்கருவியின் முழு அமைப்பினையும் நாம் காண முடியாதபடி கலகக்காரர்களால், இது சிதைவுற்றுக் காணப்படுகின்றது.
தில்லைக்கோயிலில் குதிரை பூட்டிய தேர்மண்டபமாக நிருத்த சபையும், யானையும் யாளியும் இழுக்கும் தேர் அமைப்பாகப் பாண்டிய நாயகம் திருக்கோயிலும் அமைந்துள்ளமை பழங்காலக் கட்டடக் கலையின் சிறப்பினை விளக்குவதாகும். இவ்விருமண்டபங்களில் உள்ள தூண்கள் யாவும், முழுவதும் தெய்வத் திருவுருவினைத் தன்னகத்தே கொண்ட சிறு சிறு தேர்களைப் பெற்றனவாக விளங்குதல் அக்காலச் சிற்பிகளின் நுண்ணிய வேலைப்பாட்டுத் திறமைக்கு, ஒர் எடுத்துக்காட்டாகும்.
தில்லைப் பெருங்கோயில், நெடுந்துாரத்திலேயே ஒளியுடன் திகழும் செம்பொன் மாளிகையாகிய பொன்னம் பலத்தினைத் தன்னகத்தே கொண்டு அழகிய சிற்பங்கள் பலவற்றையுடைய தாய் அமைந்திருந்தது என்பதனையும், அதன் நடுவே மாணிக்கக் கூத்தன ஆடல் புரிந்தருளும் தில்லைச் சிற்றம்பலமாகிய திருமன்றம் அழகிய சிறந்த ஒவியங்கள் பல எழுதப்பெற்றுக் கவினுறத்திகழ்ந்தது என்பதனையும் “சிற்பந்திகழ்தரு திண்மதிற்றில்லை” (திருக்கோவையார்.315) எனவும், “சேணிற்பொலி செம்பொன் மாளிகைத் தில்லைச் சிற்றம்பலத்து மாணிக்கக் கூத்தன்” (திருக்கோவையார் 23) எனவும், 'சிற்றம்பலத்து எழுதும் ஒவியங்கண்டன்ன ஒண்ணுதலாள்'(திருக்-384) எனவும் வரும் தொடர்களில் மணிவாசகப் பெருமான் குறித்துப் போற்றியுள்ளமை, அவர் காலத்திலேயே தில்லைச் சிற்றம்பலம் சிற்பம் ஒவியம் முதலிய கலைகளுக்கு நிலைக்களனாகத் திகழ்ந்த செய்தியைப் புலப்படுத்துவதாகும்.
தில்லைத் திருச்சிற்றம்பலத் திருக்கோயிலில் வழிபாட்டுக் காலங்களில் நாள்தோறும் குடமுழா முழக்கப்பெற்றது. இச்செய்தியினை, 'சிற்றம்பலத்து அடியேன் களிதரக் கார்மிடற்றோன் நடமாடக் கண்ணார் முழவம் துளிதரக் காரென ஆர்த்தன' (திருக்கோவையார் 324) எனவரும் திருக் கோவையார் தொடரால் அறியலாம். சிவபாத சேகரன் எனப் போற்றப்பெறும் இராஜராஜ சோழனால் திருமுறை கண்டு எடுக்கப்பட்டதும் மூவர் அருளிய இயலிசைத் தமிழாகிய இத் திருப்பதிகங்களுக்குத் திருநீலகண்ட யாழ்ப்பாணர் மரபில் தோன்றிய அம்மையார் ஒருவரைக் கொண்டு பண்டுபோல் இசையமைத்தற்குரிய அருள் நிலையமாக அமைந்ததும் இத் தில்லைப் பெருங் கோயிலேயாகும்.
“நரம்புடை யாழ் ஒலி முழவின் காதவொலி வேதஒலி
அரம்பையர்தங் கீத ஒலி அறாத்தில்லை”
(பெரிய தடுத்தாட்-9)
எனச் சேக்கிழார் பெருமான் இயலிசை நாடகமெனும் முத்தமிழ் வளர்ச்சிக்கும் இத் தில்லைப்பெருங்கோயில் நிலைக்களமாய் அமைந்த திறத்தை விரித்துரைத்துள்ளமை இங்கு ஒப்பு நோக்கத்தகுவதாகும்.
சிவகாமியம்மை திருக்கோயிலில் முன் மண்டபக் கூரையில் வரையப் பெற்றுள்ள ஒவியங்கள் மிகவும் பழமை வாய்ந்தன. பாண்டிய நாயகம் திருக்கோயிலின் மேற்கூரையில் எழுதப் பெற்ற ஒவியங்களும் இத்திருக்கோயிலின் பிறவிடங்களில் அண்மையிலெழுதப் பெற்ற ஒவியங்களும் புதுமைப் பொலிவு பெற்றுத் திகழ்கின்றன. இத்திருக்கோயிலில் அமைந்த ஏழுநிலைக் கோபுரங்கள் நான்கும் இக்காலக் கட்டடப் பொறியாளர் பலரும் வியந்துபாராட்டும் முறையில் அமைந்துள்ளமை காணலாம்.
தில்லைப் பெருங் கோயில் எழுநிலைக்கோபுரங்கள் நான்கினுள்ளும் கிழக்குக் கோபுரம், தரைமட்டம் முதல் வியாளம் வரை 35 அடி உயரமும் 108 அடி நீளமும் 60 அடி அகலமும் உடைய கருங்கற்கட்டிடமும், அதற்குமேல் வியாளம் முதல் கலசம் வரை 15 அடி உயரம் உடைய எழுநிலை மாடங்களும் ஆக 152 உயர முடையது. அதன்மேல் 7 அடி 6 அங்குலம் உயரமுடைய 13 செப்புக்கலசங்கள் உள்ளன. இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனால் அமைக்கப்பெற்ற இக்கோபுரவாயிலின் வட புறத்து மாடத்திலே தெற்கு நோக்கிய நிலையில், இவனது உருவம் இடம் பெற்றுள்ளது. இக்கோபுரத்தை முந்நூறாண்டுகட்கு முன் பழுதுபார்த்துத் திருப்பணி செய்தவர் காஞ்சிபுரம் பச்சையப்ப முதலியாராவார்.
தெற்குக் கோபுரம் தரைமட்டம் முதல் விமானம் வரை 35 அடி உயரமும் 108 அடி நீளமும் 62 அடி அகலமும் உடைய கருங்கற்கட்டிடமும், அதன் மேல் விமானம் முதல் கலசம் வரை 110 அடி உயரமுள்ள எழுநிலை மாடப்பகுதியும் ஆக 142 அடி உயரமுடையது. மேலுள்ள 13 செப்புக் கலசங்களும் 8 அடி 3 அங்குலம் உயரமுடையன.
மேற்குக் கோபுரம் தரைமட்டம் முதல் விமானம் வரை 37 அடி உயரமும் 102 அடி நீளமும் 60 அடி அகலமும் உடைய கருங்கற் கட்டிடப் பகுதியும், அதன் மேல் விமானம் முதல் கலசம் வரை 115 அடி உயரமுடைய எழுநிலை மாடமும் ஆக 145 அடி உயரமுடையது. இதன் மேலுள்ள 13 செப்புக்கலசங்களும் 5 அடி 9 அங்குலம் உயரமுடையன. இக்கோபுரத்தை அமைத்தவன் சடையவர்மன் சுந்தரபாண்டியன். ஆதலால் இதுசுந்தர பாண்டியன் திருக்கோபுரம் எனக் கல்வெட்டுக்களிற் குறிக்கப் பெற்றுள்ளது. இக் கோபுர வாயிலின் தென்புறமாடத்திலே வடக்கு நோக்கி வழிபடும் நிலையில் இப்பாண்டியனது உருவம் இடம் பெற்றுள்ளமை காணலாம்.
வடக்குக் கோபுரம் தரை மட்டம் முதல் விமானம் வரை 40 அடி உயரமும் 108 அடி நீளமும் 70 அடி அகலமும் உடைய கருங்கற்கட்டிடப் பகுதியும் அதன் மேல் விமானம் முதல் கலசம் வரை 107 அடி உயரமுடைய எழுநிலைமாடப் பகுதியும் ஆக 147 அடி உயரமுடையது. அதன் மேல் 7 அடி 11 அங்குல உயரம் வாய்ந்த 13 செப்புக் கலசங்கள் உள்ளன.
மேற்குறித்த எழுநிலைக்கோபுரங்கள் நான்கின் வாயிற்படிகளின் நிலைகளைக்காண்போர் தமிழகக்கட்டிடக்கலைவல்லுநர் மேற்கொண்ட பொறியியல் வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக இத் தில்லைப் பெருங்கோயில் விளங்குவதனை நன்குணர்வர். இவ்வாறு தமிழகத்தின் கட்டிடக்கலை, சிற்பக்கலை, நாட்டியக் கலை, இசைக்கலை, ஓவியக்கலை முதலிய கலைகள் பலவற்றின் வளர்ச்சிக்கும் நிலைக்களமாக அமைந்த தில்லைப் பெருங்கோயிலின் கலைநயங்களைப் பேணிப்பாதுகாத்தல் தமிழக அரசுக்கும் இந்திய அரசுக்கும் தமிழ் மக்களுக்கும் உரிய தலையாய கடமையாகும்.
----------------
9. தில்லைக்கோயிலின் நிர்வாகம்
தில்லைப் பெருங்கோயிலின் நிர்வாகமனைத்தும் நாடாளும் மன்னனது நேரடிப்பார்வையில் நிகழ்ந்தமையால் இத்தலம், கல்வெட்டுக்களில் தனியூர் பெரும்பற்றப்புலியூர் என வழங்கப் பெறுவதாயிற்று. (தெ. இ. க. தொகுதி IV எண் 226) அரசனுடைய அதிகாரி ஒருவரோ இருவரோ இத்திருக்கோயிலின் நடைமுறையை, தில்லையில் தங்கிக் கவனித்து வருவார். கோயில் பணிகளைப் புரிந்து வரும் பல்வேறு குழுவினரும் மூலப்பருஷையாரும் நகரமக்களும் இவ்வதிகாரிகளுடன் கலந்து கோயிலுக்குரிய நிலமுதலிய உடைமைகளைப் பாதுகாக்கும் பொறுப்பினை மேற்கொள்வர். இச்செய்தி, "தொண்டைமானும் திருவை யாறுடையானும் மதுராந்தகப் பிரமராயனும் ஆளுடையார் கோயிலுக்குச் சமுதாயத் திருமாளிகைக் கூறு தில்லையம்பலப் பல்லவராயனும் சீகாரியஞ் செய்வார்களும் சமுதாயஞ் செய்வார்களும் கோயில் நாயகஞ் செய்வார்களும் திருமாளிகைக் கூறு செய்ய திருவாய் மொழிந்தருளின படி" (தெ.இ. க, தொ. IV எண் 222.) என வரும் அரசு ஆணையால் நன்குபுலனாகும். முதற் கோப்பெருஞ்சிங்கன் ஆட்சியில் தில்லைப்பெருங்கோயில் அவனது நேர்ப்பார்வையில் நிர்வாகஞ் செய்யப்பெற்றதாகத் தெரிகின்றது.
இரண்டாம் கோப்பெருஞ் சிங்கன் காலத்தில் உடையார் திருச்சிற்றம்பல முடையார் கோயிலை "ஸ்ரீ மாகேசுவரக் கண்காணி செய்வார்களும் ஸ்ரீகாரியம் செய்வார்களும் கோயில் நாயகஞ் செய்வார்களும் திருமாளிகைக் கூறு செய்வார்களும் கணக்கரும்" (தெ. இ. க, தொ. XII எண் 148) அரசனது ஆணைப்படி கண்காணித்து வந்தனர் எனத் தெரிகின்றது. இக்கோயிலின் நில முதலியன பற்றிய சான்றுகள் பெரும்பற்றப் புலியூர் மூலபருஷையார் கையெழுத்துடன் திருக்கையொட்டிப் பண்டாரத்தில் ஒடுக்கப் பெற்றிருந்தன. தில்லைப்பெருங் கோயிலில் வரையப்பெற்றுப் படியெடுக்கப் பெற்றுள்ள இருநூற்றெழுபது கல்வெட்டுக்களில் இக்கோயிலின் நிர்வாகம் நாடாள் வேந்தனின் ஆணைப்படி திருக்கோயிலில் பணிசெய்யும் பல்வேறு குழுவினராலும் சமுதாயஞ் செய்வாராகிய நகர மக்களாலும் நிர்வகிக்கப் பெற்று வந்த செய்தியே இடம் பெற்றுள்ளமை மனம் கொள்ளத் தகுவதாகும். புறச்சமய மக்கள் படையெடுப்பினால் இக்கோயிற் பூசை தடைப்பட்ட நிலையில் கூத்தப்பெருமான் திருவுருவத்தையும் இன்றியமையாத பிற உடைமைகளையும் பாதுகாக்கும் பொறுப்பில் இக்கோயிலிற் பூசை புரியும் தில்லைவாழந்தணர்கள், தம் கடமையாக மேற் கொண்டு ஒழுகினமையாலும், மிக நெருக்கடியான காலத்தில் உயிர்த்தியாகம் செய்து திருக்கோயில் உடைமைகளைப் பாது காத்தமையாலும் இக்கோயிலின் நிர்வாகத்தைப் பிற்காலத்தில் தில்லைப் பொதுவார் எனப்படும் தில்லைவாழந்தணர் கவனித்து வருவாராயினர்.
முதலாம் சரபோசியின் ஆட்சியில் கி.பி. 1719-இல் ஏகோசி யரசராற் சிறப்புச் செய்யப்பெற்ற தொண்டை மண்டல வேளாளரும் சேறைகிழார் கோத்திரத்தினரும், நியமம் என்ற ஊரின் தலைவரும் ஆகிய ராயஸ்ரீ முதலியார் முத்துச் செல்லப்ப முதலியார் தருமமாகச் சைவப்பேரன்பர் தாண்டவமூர்த்தி சேரு வைகாரர் என்பார் வல்லத்துத்தோட்டமும் ஒரு ஆள் ஆயத்தீர்வையும் தில்லைச் சிதம்பரேசுவரசுவாமிக்கும் தில்லைக்கோவிந்தராயப் பெருமாளுக்கும் தான சாசனம் செய்து சிதம்பரம் அகோர பண்டாரம் சார்பிலே அரிசியப்ப முதலியார் கட்டளையினை நடத்திவரும் தாண்டவன் தோட்டம் சரவணைத்தம்பிரானுக்கு நீர்வார்த்துக்கொடுத்தார் என்பதும், சிதம்பரம் சபாபதிக் கட்டளையினை நடத்திவரும் சரவணைத்தம்பிரான் என்பவர் இத் தான சாசனத்தை ஏற்றுக்கொண்டு சூரியசந்திரர் உள்ள வரையும் இக்கட்டளையினை நடத்துவதாக ஒப்புக்கொண்டார் என்பதும் தமிழ்ப்பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள 'தஞ்சை மராட்டிய செப்பேடுகள் - 50' என்ற நூலில் 7-ஆம் எண்ணுள்ள ' 'திருவாரூர்ச்செப்பேடு-1'- இல் குறிக்கப்பெற்றுள்ளன. (பக்கம் 55-61)
கி.பி. 25-8-1719-இல் அளிக்கப்பட்ட. இத்தமிழ்ச் செப் பேடு சிதம்பரம் - கோயிலுக்கு உரியதாகும். திருவாரூர்க் கோயிலிற் பாதுகாக்கப்பட்டிருத்தலால், திருவாரூர்ச் செப்பேடு, என்ற பெயரில் வெளியிடப்பெற்றுள்ளது. இச்செப்பேட்டிற் குறிக்கப்பட்டுள்ள அறக்கட்டளையினை ஏற்று நடத்தும் பொறுப் புடையவராகவோ இக்கட்டளைக்குரிய நிர்வாகத்திற்கு உரியவராகவோ தீட்சிதர்கள் இச்செப்பேட்டிற் குறிக்கப்படவில்லை. இவ்வறக்கட்டளையினை ஏற்று நடத்தும் நிர்வாகப் பொறுப்புடையவராகத் தாண்டவன் தோட்டம் சபாபதிகட்டளையினை நடத்தும் சரவணைத்தம்பிரான் என்பவரே குறிப்பிடப்பெற்றுள்ளார்.
இச்செப்பேட்டிற் கூறப்பட்ட - செய்தியினைக் கூர்ந்து நோக்குங்கால் அக்காலத்தில் தில்லைப் பெருங்கோயிலுக்கு மன்னர்களாலும் குடிமக்களாலும் நிறுவப்படும் கட்டளைகளை நிர்வகிக்கும் பொறுப்பு அகோரபண்டாரம் போன்ற திருமடத்தின் தலைவர்களிடத்திலும் சரவணைத் தம்பிரான் தலைவர்களிடத்திலும் சரவனைத் தம்பிரான் போன்ற துறவிகளிடத்திலும் ஒப்படைக்கப்பட்ட தென்பதும் தில்லை வரழந்தணர்கள் திருக்கோயிலின் பூசனை முறைகளாகிய உள் துறை அலுவல்களை மட்டுமே கவனித்துக்கொள்ளும் உரிமையாளராக இருந்தனர் என்பதும் நன்கு புலனாதல் காணலாம்.
தில்லைப்பெருங்கோயிலுக்கென - வேந்தர்களும் குறுநில மன்னார்களும், வள்ளல்களும், தேவதானமாகக் கொடுத்துள்ள ஊர்களும் நிலங்களும் பிற்காலத்தவர்களாற் சுவரப்பட்டன. எனவே. தில்லைப் பெருங்கோயிலுக்கென இப்பொழுது நில வுடைமை எதுவுமில்லை. காஞ்சிபுரம் பச்சையப்பமுதலியார் போன்றதமிழ் முன்னோர்கள் நிறுவியுள்ள அறக்கட்டளை சுளைக் கொண்டே இக்கோயிலின் நாள்வழிபாடும் திருவிழாக்களும் சிறப்புற நிகழ்ந்து வருகின்றன.
தில்லைவாழந்தணர்கள் கூத்தப்பெருமானுக்குப் பூசனை புரியும் அவ்வளவில் மட்டும் அமைந்துவிடாமல் இக்கோயிலுள்ளே நிகழும் அகத்தொண்டுகள் எவ்லாவற்றையும் தாமே செய்யும் பொறுப்பினை - மேற்கொண்டவர்கள் என்பது 'அந்தணர் கோயி லுள்ளால் அகம்படித் தொண்டு செய்வார்.' எனவரும் சேக்கிழார் வாய் மொழியாலும், குடந்தையை யடுத்துள்ள இராசராசேச்சுரத் திருக்கோயிலிலுள்ள தில்லை வாழந்தணர்களைக் குறித்த திருத்தொண்டத் தொகையடியார் சிற்பத்தினாலும் இனிது புலனாகும். தில்லையம்பலப் பெருமானைத் தமது வாழ்வாகவும் வைப்பு நிதியாகவும் கொண்டு வழிபாடு செய்து வரும் நான்மறை யந்தணர்களாகிய இத்தில்லைவாழ் அந்தனர்களை 'ஊறுஇன் தமிழால் உயர்ந்தார்' எனத் திருஞானசம்பந்தப் பிள்ளையார் சிறப்பித்துப் போற்றியுள்ளார். பின்ளையார் அருளிய வண்ணம் தமிழால் உயர்ந்த தில்லைவாழந்தணர்கள் தில்லைக் கனகசபையிவே செந்தமிழ்ச் சைவத் திருமுறைகளைப் பண்ணுடன் ஓதிப் போற்றி வருவது தமிழ் மக்கள் எல்லோரும் பாராட்டுதற்குரிய திருப்பணியாகும்.
"அகலிடத் துயர்த்த தில்லை யந்தணர் அகிலமெல்லாம்
புகழ்திரு மறையோர் என்றும் பொது நடம் போற்றிவாழ்க"
எனச் சேக்கிழார் பெருமான் வாழ்த்திய அருண்மொழி வாழ்த்து தில்லைவாழந்தணர்க்கு என்றும் உரியதாகும்.
----------
10. பிற்சேர்க்கை
1. தில்லை நடராசர் திருக்கோயிலில் கோவிந்தராசப் பெருமாள் இடம் பெற்ற வரலாறு
செந்தமிழ் நூல்களிலும் வடமொழி நூல்களிலும் தில்லைப் பெருங்கோயில் சைவசமயத்தார்க்குச் சிறப்புரிமையுடைய தலைமைக் கோயிலாகவே போற்றப் பெற்றுள்ளது. வியாக்கிர பாதராகிய புலிக்கால் முனிவர் திருமூலட்டானப் பெருமானை வழிபட்டுப் போற்றினமையால் பெரும் பற்றப்புலியூர் எனவும், தில்லைவனமாகிய இத்திருத்தலத்திலே பதஞ்சலி முனிவர் செய்த தவத்திற்கு அருள்கூர்ந்து எல்லாம் வல்ல சிவபெருமான் ஞான மயமான அம்பலத்திலே ஆனந்தக் கூத்து நிகழ்த்தியருளுதலால் தில்லைச் சிற்றம்பலம் எனவும் வழங்கப் பெறுவது இத்தில்லைப் பெருங் கோயிலாகும். திருஞானசம்பந்தர், திரு நாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் அருளிய தேவாரத் திருப் பதிகங்களும், மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் திருச்சிற்றம்பலக் கோவையாகிய அருள் நூல்களும் திருமூலர் திருமந்திரம் முதல் திருத்தொண்டர் புராணம் ஈறாகவுள்ள ஏனைய திருமுறைகளும் தில்லைச்சிற்றம்பலத்தையே சிவ தலங்களெல்லாவற்றிலும் முதன்மையுடையதாகக் கொண்டு'கோயில்' என்னும் பெயராற் சிறப்பித்துப் போற்றியுள்ளன. சேரசோழ பாண்டியர்களாகிய தமிழ் வேந்தர் ஆட்சியிலும் இடைக்காலத்தில் வந்த பல்லவ மன்னர்கள் ஆட்சியிலும் பிற்காலத்தில் வந்த விசயநகர மன்னர் நாயக்கமன்னர் மராட்டிய மன்னர் ஆட்சியிலும் தில்லைப் பெருங்கோயில் கூத்தப் பெருமானுக்குரிய திருக்கோயிலாகவே கல்வெட்டுக்களிற் குறிக்கப் பெற்றுள்ளது. இத்திருக்கோயிலின் ஆட்சியுரிமைகள் அனைத்தும் சிவனடியாாகளாகிய மாதேஸ்வரர்களுக்கும் கோயிலில் ஸ்ரீ காரியமாகிய அகத்தொண்டு புரிந்து வரும் தில்லை வாழந்தணர் முதலியோர்க்கும் கோயில் நாயகஞ் செய்வார் ஆகிய அரசியலதிகாரிகட்கும் சமுதாயஞ் செய்வாராகிய ஊர்ப் பொதுமக்களுக்கும் உரியனவாகக் கோயிலில் வரையப்பெற்ற கல்வெட்டுக்களிற் குறிக்கப்பெற்றுள்ளன. சிதம்பரம் நடராசர் கோயிலில், வரையப் பெற்றுள்ள 270 க்கு மேற்பட்ட கல்வெட்டுக்களில் இக்கோயில் உடையார் திருச்சிற்றம்பலமுடையராகிய பொன்னம்பலவாணர்க்குச் சிறப்புரிமை யுடைய திருக்கோயிலாகக் குறிக்கப்பெற்றுள்ளமை காணலாம்.
இவ்வாறு சைவ சமயத்தார்க்கே சிறப்புரிமை வாய்ந்த சிதம்பரம் நடராசப் பெருமான் திருக்கோயிலில் கோவிந்தராசப் பெருமாள் திருவுருவம் எப்பொழுது பிரதிஷ்டை செய்யப்பட்டது என்பதும் இக்கோயிலில் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு எத்தகைய உரிமையுண்டு என்பதும் வரலாற்று முறையில் நோக்குவது இக்கோவிலின் அமைதியான நடைமுறைக்கு மிகவும் உறுதுணை செய்வதாகும்.
தேவார ஆசிரியர் மூவர் காலம் வரையிலும் தில்லைப்பெருங் கோயிலில் கோவிந்தராசப்பெருமாள் சந்நிதி இடம்பெற வில்லை. சிதம்பரம் சபாநாயகர் திருக்கோயிலில் கோவிந்த ராசப்பெருமாளை முதன் முதற் பிரதிஷ்டை செய்தவன் கி.பி. 726 முதல் 775 வரை ஆட்சிபுரிந்த நந்திவர்மபல்லவன் ஆவன், இச்செய்தி திருச்சித்திரகூடத்தைப் போற்றித் திருமங்கை யாழ்வார் பாடியருளிய பெரிய திருமொழியாற் புலனாகின்றது.
“பைம் பொன்னும் முத்தும் மணியுங் கொணர்ந்து
படைமன்னவன் பல்லவர்கோன் பணிந்த
செம்பொன் மணிமாடங்கள் சூழ்ந்த தில்லைத்
திருச் சித்திர கூடம் சென்று சேர்மின்களே"
(பெரிய திருமொழி 3-2-3)
எனத் திருமங்கையாழ்வார் பாடிப் போற்றுதலால் தில்லைப் பெருங்கோயிலிலுள்ள கோவிந்தராசப்பெருமாள் சந்நிதி நந்தி வர்ம பல்லவனால் முதன் முதல் அமைக்கப்பெற்ற தென்பது நன்கு புலனாகும். இச்சந்நிதி தில்லைக் கூத்தப்பிரான் திருமுற்றத்தில் சிறிய திண்ணையளவில்தான் முதன் முதல் நிறுவப்பெற்றிருந்தது என்பது தில்லைத் திருச்சித்திரகூடம் என்ற பெயரால் தெளியப்படும். 'சித்திரகூடம் தெற்றியம்பலம்' என்பது திவாகரம். தெற்றி -- திண்ணை, எனவே திண்ணையளவிலமைந்த சிறிய இடத்திலேயே நந்திவர்மபல்லவன் கோவிந்தராசப்பெருமாளைப் பிரதிஷ்டை செய்தான் என்று தெரிகின்றது.
சிவனைத் தொழுகுலமாகப் பெற்று அம்முதல்வனது ஊர்தியாகிய இடபத்தினை இலச்சினையாகக் கொண்டவர்கள் பல்லவ மன்னர்கள். அத்தகைய பல்லவமரபிலே தோன்றிய நந்திவர்ம பல்லவன் தன் ஆட்சியின் முற்பகுதியில் சைவ வைணவ சமயங்களிற் சமநோக்குடையனாக விளங்கினான். இவன் தன்காலத்தில் திருமாலின் திருவருளுக்குரிய அருளாசிரியராகத் திகழ்ந்த திருமங்கையாழ்வாரது தொடர்பினால் பரமவைணவனாக மாறி விட்டான். "முகுந்தன் திருவடிகளைத் தவிர வேறொன்றிற்கும் அவன் தலைவணங்கவில்லை” எனத்தண்டத்தோட்டப் பட்டயம் இம்மன்னனைப் பற்றிக் கூறுதலால் இவன் வைணவனாக மாறிய செய்தி நன்கு புலனாகும். இவன் பரம வைணவனாக மாறிய பின்பே தில்லைச் சிற்றம்பலப் பெருங்கோயில் முற்றத்திற் கோவிந்தராசப் பெருமாளைப் பிரதிஷ்டை செய்தனன் என்று தெரிகிறது.
தில்லைத் திருச்சித்திர கூடத்தில் பிரதிஷ்டை செய்யப் பெற்ற கோவிந்தராசப் பெருமாளை முறைப்படி பூசை செய்து வந்தவர்கள் தில்லை மூவாயிரர் எனச் சிறப்பித்துரைக்கப்படும் தில்லைவாழந்தணர்களேயாவர். இங்குள்ள பெருமாள் திருவுருவம் நடராசர்கோயிலைச் சார்ந்த சுற்றுக்கோயில் தெய்வம் (பரிவாரதெய்வம்) என்ற அளவிலேயே தில்லைவாழந்தணர்களால் முறைப்படி பூசனை செய்யப்பெற்று வந்தது. இவ்வாறே காஞ்சிநகரில் ஏகாம்பரநாதர் திருக்கோயிவில் பரிவார தெய்வமாக எழுந்தருளியுள்ள பெருமாளை "நிலாத்திங்கள் துண்டத்தான்” எனத் திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்திருப்பதும் இங்கு எழுந்தருளிய பெருமாளைப் பூசனை செய்யும் உரிமையினை இக்கோயிற் பூசை முறையினராகிய ஆதி சைவக் குருக்கள் இன்றளவும் மேற்கொண்டிருப்பதும் இங்கு நினைத்தற்குரியதாகும். தில்லைக் கோவிந்தராசப்பெருமாள் பிரதிஷ்டை பற்றியும் ஆதியிலிருந்த பூசை முறைபற்றியும் ஆராய்ச்சியறிஞர் மு. இராகவையங்கார் அவர்கள் 'திருச்சித்திரகூடம்' என்னும் ஆராய்ச்சிக் கட்டுரையில் பின் வருமாறு கூறியுள்ளார்:
திருமங்கை மன்னன்
"பைம் பொன்னும் முத்தும் மணியுங் கொணர்ந்து
படைமன்னன் பல்லவர்கோன் பணிந்த
-- தில்லைத் திருச்சித்திரகூடம்" (பெ.தி. 3-2-3)
என்று பாடுகின்றார். இதனால் பல்லவ வேந்தனொருவனால் ஆதியில் அபிமானிக்கப்பட்டது இத்திருமால்கோயில் என்பது தெரியவரும்.
"பல்லவ மல்லையர் கோன்பணிந்த பரமேச்சுர விண்ணகரம்",
"நந்திபணிசெய்தநகர் நந்திபுரவிண்ணகரம்" (பெ.தி' 5-19-7)
கோச்சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம்” (6, 5, 5.9)
எனப் பண்டையரசர்கள் திருப்பணிசெய்து வணங்கிய தலங்களை இவ்வாறே ஆழ்வார்கள் பாடியிருத்தல் காணலாம்.
'பணிந்த கோயில்' முதலியன, பணிசெய்து, பிரதிஷ்டித்த கோயில் என்ற பொருளில் முன்பு வழங்கியவை என்பது; மேற் காட்டிய ஆழ்வார்கள் வாக்குகளினின்றும் அறியப்படும்.
பல்லவர்கோனால் பணிசெய்து வழிபடப்பட்டது இத்திருச் சித்திரகூடம் என்று கருதுதல் பொருந்தும். இங்கனம் பணிந்த பல்லவனாகத் திருமங்கையாழ்வாராற் புகழப்பட்டவன் அவர் காலத்தே பரம வைஷ்ணவனாக விளங்கிய இரண்டாம் நந்தி வர்மனாகச் சொல்லலாம்.
இச் சித்திரகூடத் திருமாலை முற்காலத்தில் முறைப்படி ஆராதித்து வந்தவர்கள் தில்லை மூவாயிரவரேயாவர்.
"மூவாயிரநான் மறையாளர் முறையால் வணங்க
--தேவாதிதேவன் திகழ்கின்ற தில்லைத் திருச்சித்திரகூடம்"
(பெ.தி. 3.2-8)
"தில்லைநகர்த் திருச்சித்திர கூடந்தன்னுள்
அந்தணர்கள் ஒரு மூவாயிரவ ரேத்த
அணிமணியா சனத்திருந்த வம்மான்"
(குல. தி.10,2)
என்ற ஆழ்வார்கள் வாக்குக்களால் இது தெரியவருகின்றது. இவற்றால் சிற்றம்பலமான சிவாலய வழிபாட்டையும், தெற்றியம்பலமான சித்திரகூட வழிபாட்டையும், முறைப்படி புரித்து வந்தவர்கள் தில்லை மூவாயிரவர் என்பது விளக்கமாம்" (சென்னைப் பல்கலைக் கீழ்த்திசை மொழி ஆராய்ச்சித்துணர் தொகுதி III {1938-39) பகுதி 1) எனச் சிறந்த ஆராய்ச்சியாளரும் ஸ்ரீவைஷ்ணவருமான ராவ்சாகேப் மு. இராகவையங்காரவர்கள் காய்த்லுவத்தலகற்றி நடு நின்று கூறிய ஆய்வு முடிவுகள் அறிஞர்களது பாராட்டுக்கு உரியனவாகும்.
தில்லைப் பெருங் கோயிலில் இடைக்காலத்தில் நந்திவர்ம பல்லவனால் பிரதிட்டை செய்யப்பெற்ற கோவிந்தராசப் பெருமாளுக்குச் சைவசமயத்தவராகிய தில்லைமூவாயிரவர் பூசை செய்து வருவதனைக் கண்டு மனம் பொறுக்காத பிற்கால வீர வைஷ்ணவர்களிற் சிலர். சிறுகச் சிறுகத் தில்லைத் திருச்சிற்றம்பலக் கோயில் நடைமுறைகளுக்குத் தொல்லையுண்டாக்கி வந்தனர். அவர்களாற் செய்யப்பட்டுவரும் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்தன. அவற்றால் தில்லைச்சிற்றம்பலத் திருப்பணிகளும் நாட்பூசனைகளும் தடைப்படுவனவாயின. அதுகண்டு மனம், பொறாத இரண்டாங் குலோத்துங்க சோழன் இவ்வைணவர்கள் செய்யும் தொல்லைகளுக் கெல்லாம் ஒரு காரணமாக வுள்ளது கோவிந்தராசப்பெருமாள் மூர்த்தமேயென எண்ணி அதனைத் தில்லைப் பெருங்கோயிலினின்றும் அப்புறப்படுத்தினன் என்பதனை இவனுடைய அவைக்களப் புலவராகிய கவிச் சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் தாம்பாடிய உலாவிலும் தக்கயாகப்பரணியிலும் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாம் குலோத்துங்கன் தில்லைக்கோயிலினின்றும் திருமால் மூர்த்தத்தை அப்புறப்படுத்திய இச்செயலைப் பிற் காலத்தில் வைணவர்களால் எழுதப்பட்ட திவ்யசூரிசரிதம், கோயிலொழுகு முதலான நூல்கள் மிகைப்படுத்திக்கூறி இவ் வேந்தன் மீது அடாத பழிகளைச் சுமத்தியும், கிருமிகண்ட சோழன் என இவனை இழித்துக் கூறியும் உள்ளன. இந்நூல்களில் இவ்வேந்தனைக்குறித்துக் கூறப்படுவனவெல்லாம் வெறுங் கற்பனைக் கனதகளே; உண்மையாவன அல்ல என்பது வரலாற்றாசிரியர்கள் துணிபாகும். (பிற்காலச் சோழர் சரித்திரம், அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடு, பக்கம் 95,96 பார்க்க).
இரண்டாங் குலோத்துங்கன் ஆட்சிக்காலத்தில் தில்லைக் கோயிலிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட கோவிந்தராசப்பெருமாள் திருவுருவத்தை இராமாநுசர் கீழைத் திருப்பதியிற் கொண்டு சேர்த்து அங்கே பிரதிட்டை செய்தார் என இராமாநுஜ திவ்ய சரிதை கூறுகிறது. இராமாநுசரால் பிரதிட்டை செய்யப்பட்ட திருவுருவம் இன்றும் அங்கேயுள்ளதென்பதும், இப்போது சிதம்பரம் கோயிலிலுள்ள கோவிந்தராசப் பெருமாள் திருவுருவம் விசயநகர அரசர் அச்சுதராயர் காலத்தில் புதிதாகப் பிரதிட்டை செய்யப்பட்டதென்பதும் வரதராஜ ஐயங்கார் பாடிய பாகவதபுராணத்தில் திருவரங்கப்படலத்திலுள்ள 63, 99 ஆம் செய்யுட்களால் நன்கு புலனாகும். எனவே இரண்டாங் குலோத்துங்கசோழன் ஆட்சிக்காலமாகிய கி.பி. பன்னிரண்டாம் நாற்றாண்டிற்கும் அச்சுதராயர் ஆட்சிக்காலமாகிய கி.பி.பதினாறாம் நுாற்றாண்டிற்கும் இடைப்பட்டகாலத்திலே சிதம்பரம் நடராசப்பெருமான் கோயிலில் கோவிந்தராசப் பெருமாள் மூர்த்தம் இல்லையென்று தெரிகிறது. கி.பி 1251 முதல் 1271 வரை ஆட்சிபுரிந்தவரும் சைவவைணவசமயங்கள் இரண்டினையும் ஒப்ப மதித்துப் போற்றியவரும் 'ஆமுத்தமால்யதா' என்னும் நூலை இயற்றி நாச்சியாராகிய ஆண்டாளைப் போற்றியவரும் ஸ்ரீவைஷ்ணவரும் ஆகிய விசயநகர் மன்னர் கிருஷ்ணதேவராயர், கி.பி. 1516-இல் பொட்டனூரில் தாம் பெற்ற வெற்றிக்கு அடையாளமாகத் தில்லை நடராசப்பெருமான் திருக்கோயிலின் வடக்குக் கோபுரத்தைக்கட்டி முடித்துப் பொன்னம்பல வாணர்க்கு நிலம் வழங்கியுள்ளார் (தெ. இ. க தொகுதி VII எண் 149). இதனை யுற்றுநோக்குங்கால் கிருஷ்ணதேவராயர் காலத்தில் கோவிந்தராசப் பெருமாள் சந்நிதியில்லையென்பதும், தில்லைப் பெருங்கோயில் பொன்னம்பல நாதராகிய சிவபெருமானுக்கே சிறப்புடைய திருக்கோயில் என்னும் கருத்துடையவர் கிருஷ்ண தேவராயர் என்பதும் நன்கு விளங்கும்.
கிருஷ்ண தேவராயருக்குப் பின் கி.பி 1529-இல் பட்டத்துக்கு வந்த அச்சுததேவராயர் கி. பி 1539-இல் தில்லை நடராசர் கோயிலில் கோவிந்தராசப் பெருமானை மீண்டும் பிரதிஷ்டை செய்து வைகாநச சூத்திரத்தின்படி பூசைநடக்க 500 பொன் வருவாயுள்ள நான்கு கிராமங்களின் வரியை நீக்கிக் கொடுத்துள்ளார். இவர் பெருமாளை மீண்டும் பிரதிட்டை செய்த இடம் முற்காலத்தில் நந்திவர்மபல்லவன் பிரதிட்டை செய்திருந்த திண்ணையளவாகிய சிறிய இடமே என்பது இங்குக் கவனித்தற்குரியதாகும். ஆயினும் இங்கு எழுந்தருளுவித்த பெருமாளைப் பூசிக்க ஸ்ரீவைஷ்ணவர்களை நியமித்தமையால் பெருமாளை வழிபாடு செய்யும் உரிமையை அரசன் வழியாகப் பெற்ற அவ் வைணவர்கள் மெல்லமெல்லத் தங்களுக்குரியனவாக நடராசர் கோயிலிடங்களை, வலிதிற் கைப்பற்றிக்கொள்ள முயன்று வந்தார்கள். வேங்கடபதி தேவமகாராயர் ஆட்சியில் அவருடைய பிரதிநிதியாகச் செஞ்சியிலிருந்து ஆட்சிபுரிந்த வையப்ப கிருஷ்ணப்ப கொண்டம நாயகன் என்னும் அதிகாரி வைணவர் முயற்சிக்கு உடந்தையாய்க் கி.பி. 1597-இல் நடராசர் கோயில் முதற் பிராகாரத்திலேயே கோவிந்தராசப் பெருமாளுக்குத் தனிக் கோயிலை அமைக்கத் தொடங்கினான். இந்நிலையில் தில்லைப் பெருங்கோயிலின் பூசையுரிமையைத் தொன்றுதொட்டுப் பெற்றுடையராகிய தில்லைவாழந்தணர்களும் நகரப் பொது மக்களும் நடராசப்பெருமானுக்கேயுரிய இக்கோயிலில் பெருமாளுக்கெனப் புதிதாகத் தனிக்கோயில் கட்டுதல் வேண்டாம் எனவும் இரண்டாம் பிராகாரத்தில் முன்னிருந்த இடத்திலேயே பெருமாளுக்குப் பூசை நிகழச் செய்தலே பொருத்தமாகும் எனவும் அவ்வதிகாரியை எவ்வளவோ முறை நயந்து கேட்டார்கள். கொண்டது விடாக் கொண்டம நாயக்கனாகிய அவ்வதிகாரி அவர்களது வேண்டுகோளைப் பொருட்படுத்தாமல் கோவிந்த ராசர் சந்நிதியைப் பொன்னம்பலலாணர் சந்நிதிக்கு மிகவும் அருகிலேயே அமைக்கத் தொடங்கினான். அந்நிலையில் தில்லை வாழந்தணர்கள் தங்கள் உயிரைக் கொடுத்தேனும் அவ் வன் செயலைத் தடுத்து நிறுத்த உறுதி பூண்டனர்; தாங்கள் உயிரோடிருக்கும் வரை நடராசர் கோயிலின் உட்புறத்தில் கோவிந்தராசப் பெருமாள் கோயில் கட்டுதற்கு இணங்க மாட்டோம் என்று சொல்லி ஒருவர் பின் ஒருவராகக் கோபுரத்தின் மேலேறிக் கீழே வீழ்ந்து உயிர் விடுவாராயினர். இவ்வாறு இருபது பேர் வரை தற்கொலை செய்து கொண்ட துன்பக்காட்சியைத் தன் கண்களாற் கண்டும் மனமிரங்காத கொண்டம நாயக்கன் கோபுரத்தின் மேலேறித் தற்கொலை செய்ய முந்துபவர்களையெல்லாம் சுட்டுத் தள்ளும்படி உத்தரவிட்டான். அதன்படி தில்லை வாழந்தணர் இருவர் சுடப்பட்டு இறந்தனர். இத்துன்ப திலையைப் பொறுக்கலாற்றாது தில்லைவாழந்தணர் குடும்பத்தைச் சேர்ந்த அம்மையார் ஒருவர் தமது கழுத்தையறுத்துத் தற்கொலை செய்து கொண்டார்.
இவ்வாறு அரசாங்க அதிகாரியொருவனது சமயப் பிடி வாதங்காரணமாகச் சிதம்பரம் கோயிலுக்குள்ளே இத்துன்பச் செயல்கள் நிகழ்ந்த நாளில் மேலை நாட்டிலிருந்து யாத்திரை காரணமாகத் தமிழ் நாட்டிற்குச் சுற்றுப்பயணஞ் செய்த பிமெண்டா (Jesevit Father N. Pimenta) என்னும் பாதிரியார் கொண்டம நாயக்கன் செய்த இக்கொடுங் கோன்மையை நேரிற் கண்டு வருந்தியதுடன். இக் கொடுஞ்செயலைத் தம்முடைய யாத்திரைக் குறிப்பிலும் குறித்துள்ளார். இந்நிகழ்ச்சியை யுணரும் நல்லறிவுடையோர் எவரும் கண்ணீர் விட்டு வருந்துவர் என்பது திண்ணம்.
The Aravidu Dynasty by Father Heras (P. 553)
1. 'A notable instance of the struggle between the two sects is the lamentable event that took place at Chidambaram in 1597 A. D. While Krishnappa Nayaka of Jinji, himself a Staunch Vaishnava, was there Superintending the improvements which he had ordered at the temple of Govinda Raja within the great Saiva Temple. Father: N. Pimenta, who passed through Chidambaram at this time narrates in one of his letters that on this occasion a great controversy arose as to 'Whether it were lawful to place the signe of Perumal in the temple at Chidambaram. Some cefused, others by their legates importunatly urged and the Naiks of Gingee degreed to erect in the temple'. These last words of pimenta indicate that after the restoration of the idol to the temple by Rama Rayan it had again been removed and its shrine probably destroyed. In order to re-instal it with due honour, Krishnappa Nayaka ordered the old shrine to be repaired and even perhaps enlarged'
This was the cause of the whole trouble. "The priests of the Temple which were the Treasuries” Continues, pimenta (were) with standing, and threatening if it was done, to cast down themselves from the top. The Brahmanes of the temple Swore to do the like after they buried the former, which yet after better advice they performed not". But Krishanppa Nayaka was unmoved by any such threat. When the reconstruction of the shrine was carried on with out hesitation where upon the priests climbing one of the high Gopurams of the temple started to cast themselves down while the Nayak was in the temple. 'Aboat twenty bad perished in that precipitation on that day of our departure, whereat the Naichus angry, caused his gunners to shoot at the rest which killed two of them. A woman also was so hot in this Zealous quarrel taat she cut her own throat", Naturally Krishnappa Nayaka accomplished his purpose in spite of this opposition.
நந்திவர்மபல்லவன் திருமால் மூர்த்தத்தைத் தில்லைக் கோயிலில் பிரதிஷ்டை செய்த காலத்தில் அத்திருமேனி திண்ணையளவாக அமைத்த சிறிய இடத்திலே தான் வழிபடப் பெற்றது. பின் நானூறு ஆண்டுகள் கழித்து அச்சுதராயர் பிரதிஷ்டை செய்ததும் அதே இடத்தில் தான். சமயவெறிபிடித்த வையப்ப கிருஷ்ணப்ப கொண்டம நாயக்கன் என்பான் கி.பி 1597-இல் முன்னிருந்த அத் தெற்றியம்பலத்தளவில் நில்லாது நடராசர்சந்நிதிமுகப்பிலுள்ள இடத்தையும் சேர்த்துக் கொண்டு, கோவிந்த ராசப் பெருமாளுக்குத் தனிக் கோயில் கட்டிவிட்டான். இந்த வம்புகளுக்கெல்லாம் காரணம் வைஷ்ணவத்தை எங்கும் பரப்ப வேண்டுமென்று முயன்ற விசயநகர அரசர்களும் அவர்களுக்குத் துணை நின்ற அவர்களுடைய குரு தாதாசாரியாரும் ஆவர் என்று அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறைப் பேராசிரியராக இருந்து காலஞ்சென்ற C.S.சீனிவாசாசாரியார் அவர்கள் மனம் வருந்தி எழுதியுள்ளார்கள்.
கிருஷ்ணப்ப நாயக்கனுக்குப் பின் விசயநகர மன்னனாகிய சீரங்கராயன்-III கி.பி. 1643-இல் தில்லைக்கோவிந்தராசர் சந்நிதியை மேலும் விரிவுபடுத்த எண்ணி முன்பு இல்லாத புண்டரீகவல்லித்தாயார் சந்நிதி முதலிய புதிய சந்நிதிகளையும் தில்லைக்கோயிலில் அமைத்தான். இவர்களுடைய மதவெறி காரணமாகத் தில்லை நடராசர் கோயிலிற் பழமையாக இருந்த சிலசந்நிதிகள் இடிக்கப்பட்டு மறைந்துபோயின. இவ்வாறு வைஷ்ணவர்கள் கொஞ்சங் கொஞ்சமாகத் தில்லைக்கோயிலின் பெரும்பகுதியைத் தமக்கு உரிமையாக்கிக்கொள்ளும் முயற்சியில் ஈடுபடுவாராயினர். அதனையுணர்ந்த தில்லைநகரச் சைவப் பெருமக்களும் தில்லைவாழந்தணர்களும் கொதித்தெழுந்து தில்லைக்கோயிலில் கோவிந்தராசப்பெருமாளுக்கு இனி இடமில்லையென்று கூறும் அளவுக்குப் பெருமாள் சந்நிதியையே அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவாராயினர். அந்நிலையில் கோவிந்தராசப் பெருமாள் பூசை முறையினைக் கண்காணிக்கும் உரிமையுடைய ஸ்ரீவைஷ்ணவர்கள் கி. பி. 1862-இல் தில்லைப் பெருங்கோயில் பூசை முறை உரிமையாளராகிய' தில்லைவாழந்தணர்களோடு ஓர் உடன்படிக்கை செய்து கொள்ள வேண்டிய இன்றியமையாமை உண்டாயிற்று. சிதம்பரம் கோவிந்தராசப் பெருமாள் பூசை முறையைக் கவனிக்கும் உரிமையடைய வைஷ்ணவர்கள் தில்லைவாழந்தணர்கட்கு எழுதிக் கொடுத்த உடன்படிக்கையில் தாங்கள் கோவிந்தராசப் பெருமாளுக்குச் செய்து வரும் நித்தியபூசைகளைத் தவிர வேறு பிரமோற்சவம் நடத்துவதில்லையெனவும், தில்லையில் நடராசப்பெருமானுக்குத் தொன்று தொட்டு நடைபெற்று வரும் நித்திய பூசைகளிலும் திருவிழாக்களிலும் தாம் தடையாக இருப்பதில்லையெனவும் ஒப்புக்கொண்டு உறுதி கூறியுள்ளார்கள். இவ்வுறுதியின் பேரில் கி. பி. 1867-இல் நீதிமன்றமும் தீர்ப்பளித்துள்ளது. தில்லைப் பெருங்கோயிலில் சைவர் வைணவர் ஆகிய இருதிறத்தார்க்கும் ஏற்பட்ட உடன்பாடும் தில்லைவாழந்தணர்கள் பெற்றுள்ள நீதிமன்றத் தீர்ப்பும் காரணமாகத் தில்லைப் பெருங்கோயிலில் சைவரும் வைணவர்களும் அன்பினால் ஒன்றுகூடி நடராசர் கோவிந்தராசர் ஆகிய இருபெருந்தெய்வங்களையும் வழிபட்டு மகிழ்தற்குரிய அமைதியான சூழ்நிலை தொடர்ந்து நிலைபெற்றுள்ளது என்பதனை இத்திருக்கோயிலுக்கு வரும் அன்பர்கள் எல்லோரும் நன்குணர்வர். இத்தகைய அமைதிநிலையே என்றும் நின்று நிலவி இன்பம் அளிப்பதாகுக.
------------
2. தில்லையில் ஆடல்புரியும் கூத்தப்பெருமான் திருவுருவம்
இடம்பெயர்ந்து மீண்டு எழுந்தருளினமை.
தில்லைச் சிற்றம்பலத்தில் சிவகாமியம்மை காணத் திருநடம் புரிந்தருளும் கூத்தப்பெருமானது திருவுருவம் கி. பி. பதினேழாம் நூற்றாண்டில் முகமதியர் படையெடுப்பினால் சிதம்பரத்தினின்றும் இடம்பெயர்ந்து செல்லவேண்டிய இன்றியமையாமை ஏற்பட்டது. புறச்சமயத்தவரால் நடராசப்பெருமான் திருவுரு சிதைக்கப்பெற்றுவிடும் நிலையேற்படுமோ என அஞ்சிய தில்லைவாழந்தணர்கள், அம் மூர்த்தியை ஒரு பேழையில் வைத்து அயலவர் அறியாதவாறு சிதம்பரத்தினின்றும் எடுத்துச் சென்றனர். எதிர்ப்பட்ட சிற்றூரொன்றின் புறத்தே மக்கள் நடமாட்டமில்லாத புளியந் தோப்பினை நள்ளிரவில் அடைந்தனர். அத்தோப்பிலுள்ள பெரிய புளியமரம் ஒன்று பெரிய பொந்தினையுடையதாகத் தென்பட்டது. அப்பொந்தினுள்ளே நடராசமூர்த்தியை ஒருவரும் அறியாதபடி பாதுகாப்பாக வைத்து மூடிவிட்டுத் திரும்பினர். சிலநாள் கழித்து அப்புளியந் தோப்புக்குச் சொந்தக்காரராகிய வேளாளர் ஒருவர் தமக்குச் சொந்தமான புளியமரத்தின் பெரும்பொந்து அடைக்கப்பட்டிருத்தல் கண்டு அதனை வெட்டிப்பார்த்தார். அதன் கண் நடராசர் திருவுருவம் மறைத்து வைக்கப்பெற்றிருத்தலைக் கண்டார். அவ்வாறு மறைக்கப்பட்ட சூழ்நிலையை யுணர்ந்து ஒருவரும் அறியாதவாறு அப்பொந்தினை நன்றாக மூடிவிட்டார். அம்மரத்தில் தெய்வமிருத்தலைத் தாம் கனவுகண்டதாக ஊர் மக்களுக்குச் சொல்லி இம்மரத்திற்குப் பூசை செய்துவந்தார்.
புறச்சமயத்தார் படையெடுப்பினால் நேர்ந்த அச்ச நிலை நீங்கிய பின் தில்லைவாழந்தணர்கள் தாம் பொந்தில் புதைத்து வைத்த நடராசமூர்த்தியை எடுத்து வந்து மீண்டும் தில்லைப் பொன்னம்பவத்தில் வழிபாடு செய்ய எண்ணித் தாம் நடராச மூர்த்தியைப் பாதுகாப்பாக வைத்த சிற்றூரையடைந்தனர். ஆண்டுகள் பல சென்றமையாலும் நள்ளிரவில் வைத்தமையாலும் அம்மூர்த்தியைப் புதைத்து வைத்த இடம் இன்னதென அறிந்து கொள்ள இயலாமல் மனக்கலக்கமுடையவராய் நின்றனர். புளியந் தோப்பினருகே மாடு மேய்த்துக்கொண்டிருந்த முதியவரொருவர் உச்சிவேளையில் தன்னுடனிருந்த சிறுவனை நோக்கி 'தம்பீ, அந்த அம்பலப்புளியிலே கொண்டு மாடுகளை விடு. நான் வந்து விடுவேன்' எனக் கூறினார். அதனைக் கேட்ட தில்லை வாழந்தணர்கள் அம்மரத்திற்கு 'அம்பலப்புளி' என்ற பெயர்வரக் காரணம் என்ன என வினவினர். எனக்குத் தெரியாது; எங்கள் எசமான் இம்மரத்திற்கு அடிக்கடி பூசை போடுவார்" என்றார் கிழவர். அதனைக் கேள்வியுற்ற அந்தணர்கள் மரத்துக்குச் சொந்தக்காரர் யார்? எனக் கேட்டுத் தெரிந்து அவரையடைந்து அதுபற்றிக் கேட்டனர். அவரும் தமக்குரிய புளியமரப் பொந்தில் நடராசப் பெருமானை மறைத்து வைக்கப் பெற்றிருத்தலை ஒருவரும் அறியாதபடி பாதுகாத்து வருவதனை எடுத்துரைத்தார். தில்லைவாழந்தணரும் அவரது இசைவுபெற்று நடராச மூர்த்தியைப் பொன்னம்பலத்தில் எழுந்தருளச் செய்து முன்போல் பூசனை செய்வாராயினர். நடராசர் மறைக்கப் பெற்றிருந்த அம்பலப்புளியைத் தன்னகத்தே கொண்டுள்ள சிற்றூர் அன்று முதல் புளியங்குடியென வழங்கப் பெற்றது. நடராசர் திருவுருவினைப் பாதுகாத்துவந்த சிவவேளாளர் குடும்பத்தார் புளியங்குடியார் என அழைக்கப் பெற்றனர். செவி வழியாக வழங்கப் பெற்றுவரும் இச்செய்தி,
"தெளிவந் தயன்மா லறியாத தில்லைப் பதியம் பலவாணர்
புளியம் பொந்தினிடம் வாழும் புதுமை காட்டிப் பொருள் காட்டி
எளிதிற் புளியங் குடியாரென் றிசைக்கும் பெருமை ஏருழவர்
வளருங் குடியிற் பொலிவாழ்வு வளஞ்சேர் சோழ மண்டலமே" (99)
எனச் சோழ மண்டலச் சதகச் செய்யுளில் இடம் பெற்றுள்ளமை காணலாம். இப்பாடலை யூன்றி நோக்குங்கால் நடராசர் திருவுருவம் மறைத்து வைக்கப்பெற்ற புளியங்குடி என்னும் ஊர் சோழ மண்டலத்தைச் சார்ந்த சிற்றூர் என்றே கருதவேண்டியுளது. மகாமகோபாத்தியாய டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் எழுதிய 'அம்பலப்புளி' என்னும் கட்டுரையில் இச் செய்தி வெளியிடப்பெற்றுள்ளது. (நினைவு மஞ்சரி - இரண்டாம் பாகம் - பக்கம் 1 - 10)
ஹைதர் அலி காலத்தில் தில்லைவாழந்தணர் மலைநாட்டிற்குச் சென்று அங்குள்ள சிற்றூரில் புளியமரப் பொந்தில் நடராசப் பெருமாளை வைத்து மூடிவிட்டார்கள். சில ஆண்டுகள் கழித்துச் சென்று பார்த்துத் தாம் வைத்த இடம் தெரியாது மயங்கிய, நிலையில் அங்கு உழுது கொண்டிருந்த உழவர்கள், 'காளையை அவிழ்த்து அம்பலப்புளியருகில் கொண்டு விடு' என்ற வார்த்தையைக் கேட்டு நடராசப்பெருமான் இருக்குமிடமறிந்து எடுத்து வந்தார்கள் என்ற செய்தி செவிவழியாக வழங்கி வருகிறது. (மகாவித்துவான். ச. தண்டபாணி தேசிகர் எழுதிய சிதம்பரம் என்ற நூல் - பக்கம் 125)
தில்லைவாழந்தணர் நடராசப் பெருமானைப் புளியமரப் பொந்திற் புதைத்து வைத்திருந்த புளியங்குடி என்ற ஊர் ஸ்ரீ வில்லிபுத்தூர்க்கு அருகே 30 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள புளியங்குடி எனவும், அவ்வூருக்கு அருகேயுள்ள ராஜபாளையத்தில் 'அம்பலப் புளிப்பஜார்' என அவ்வூர்க் கடை வீதி வழங்கப் பெறுதல் இதனைப் புலப்படுத்தும் எனவும் கூறுவாரும் உளர்.
கூத்தப் பெருமான் தில்லையிலிருந்து இடம் பெயர்ந்து மீண்டும் தில்லைக்கு எழுந்தருளிய வரலாறு குறித்து அண்மையில் தஞ்சையிலுள்ள தமிழ்ப் பல்கலைக் கழகத்தார் வெளியிட்ட தஞ்சை மராட்டியர் செப்பேடுகள் 50 என்னும் நூலில் தெளிவான குறிப்புக்கள் கிடைத்துள்ளன. இந்நூலில் 45 முதல் 48 வரையுள்ள நான்கு செப்பேடுகளும் தில்லைக்குரிய செப்பேடுகளாகும். இவை திருவாரூர்த் தியாகராசர் கோயில் நிருவாக அலுவலகத்திலிருந்து கிடைத்தமையால் திருவாரூர்ச் செப்பேடுகள் என்ற பெயரில் 4, 5, 6, 7 எண் வரிசையில் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
இவை நான்கும் மராட்டிய மன்னர் சாம்போசி காலத்தில் அளிக்கப் பெற்றவை. இவற்றுள் முதல் மூன்று செப்பேடுகளிலும் முதற்பதியில் வடமொழியும், பிற்பகுதியில், தமிழ்ப்பாடலும் வரையப் பெற்றுள்ளன. 48 ஆம் எண்ணுள்ள செப்பேடு முழுவதும் வடமொழியில் வரையப் பெற்றதாகும்.
மேற்குறித்த செப்பேடுகளுள் 47-ஆம் செப்பேடு கி. பி 1684-இல் அளிக்கப் பெற்றதாகும். இதன் முதற்கண் உள்ள வடமொழிப் பகுதி தில்லைக் கூத்தப்பெருமானது திருவருட் பெருமையினைக் கூறி மராட்டிய மன்னனுடைய குலகுருவாகிய முத்தைய தீட்சிதரால் சிதம்பரம் நடராசர் கோயில் குட முழுக்குச் செய்யப்பெற்ற செய்தியினைக் கூறுகின்றது. சேர நாட்டைச் சேர்ந்த சிற்பி இச்செப்பேட்டை அளித்ததாக இதன் வடமொழிப் பகுதியிற் கூறப்பெற்றுள்ள குறிப்பு ஆழ்ந்து சிந்தித்தற்குரியதாகும். இதன் கண்
'இயல்வாம சகாத்தம் ஆயிரமோடறு நூற்றாறின்
இனிய ரத்தாட்சி வருடம்
இலகு கார்த்திகை மாதம் இருபத்திரண்டாந்
தேதி சுக்கிர வாரமும்
செயமான தசமியும் அத்தநட்சேத்திரமும்
திகழ் கும்ப லெக்கினமுமே
திருந்து பவ கரணமும் ஆயிஷ்யமான யோகமும்
தினமும் வந்தே சிறப்ப
உயர் ஆகமப் படியின் ஆனந்த நடராசர்
ஒளி பெற நிருத்த மிடவே
ஓங்கு சிற்சபை தனைச் செம்பினால் மேய்ந்திடும்
உண்மையை யுரைக்க வெளிதோ
வயலாரும் வரவிசூழ் புலிசையழகிய திருச்
சிற்றம்பலத் தவமுனி
வையகம் துதி செயக் கும்பஅபிஷேகமும்
மகிழுற முடித்த நாளே'
எனவரும் தமிழ்ப்பாடல் வரையப் பெற்றுள்ளது. சாலிவாகன சகம் 1606 ஆம் ஆண்டு (கி. பி. 1684) - இரத்தாட்சி வருடம் கார்த்திகை மாதம் இருபத்திரண்டாந்தேதி வெள்ளிக்கிழமை தசமிதிதியும். அத்த நட்சத்திரமும் கும்பலக்கினமும் பெற்ற நல்லநாளில் தில்லையம்பலவாணர் திருநடம்பரியும் சிற்சபையினைச் செப்புத்தகடு வேய்ந்து தில்லையில் வாழும் அழகிய திருச்சிற்றம்பலத் தவமுனி என்பார் உலகம் போற்றக் குட நீராட்டு விழாவை நிகழ்த்தினார் என்ற செய்தியை மேற்குறித்த தமிழ்ப்பாடல் நன்கு விரித்துரைத்தல் காணலாம்.
"கேரள தேசத்தின் மலைகளுக்கருகில் உள்ளவரும் மரத்தின் நிழலில் இருப்பவரும், மக்களின் அரசரும், ஆள்பவரும், அருந்தும் தீருக்கு அருகில் உளளவரும், அம்பலத்திற்கு இலக்கணமாக விளங்குபவரும் ஆன சிவனுக்குக் கேரள தேசத்தைச் சேர்ந்த சிற்பி கொடுத்த செப்பேடு” என்ற செய்தி, இச்செப்பேட்டின் வடமொழிப்பகுதியிற் கூறப்பட்டுள்ளது. இதனைக் கூர்ந்து சிந்திக்குங்கால் தில்லைக் கூத்தப்பெருமான் கேரள நாட்டின் மலைகளுக்கருகில் மர நிழலில் ஒரு காலத்தில் மறைக்கப் பட்டிருந்த செய்தி நன்கு புலனாகும். அன்றியும் கி.பி 1684-இல் தில்லையில் வாழும் அழகிய திருச்சிற்றம்பல முனிவர் முயற்சியால் கி.பி. 1684-இல் நிகழ்த்த குடமுழுக்கு உயர் ஆகமப்படி நிகழ்த்தப் பெற்றது எனக் குறிப்பிடுதலால் அவர் காலத்துத் தில்லைப் பெருங்கோயிற்பூசை, மகுடாகமவிதிப்படி நடைபெற்றதென்பதும், "சிற்சபையினைச் செம்பினால் மேய்ந்திடும் உண்மையினை' என்றதனால் முன்னர்ச்சிற்சபைக்கு வேய்ப்பெற்றிருந்த பொன்னோடு பிறமதத்தவரால் கொள்ளை கொள்ளப்பட்டிருத்தல் வேண்டும் என்பதும் நன்கு விளங்கும்.
45 ஆம் எண்ணுள்ள செப்பேடு, ஸ்ரீமத் சர்வதாரியாண்டு மார்கழிமாதம் தன்னிடத்தை (சிதம்பரத்தை) விட்டு வெளியே சென்றவருக்குச் சாம்போசி என்னும் அரசனுடைய ஆணையால் கோபால தாதாசி என்பவரால் திருப்பணி செய்யப்பெற்று இரத்தாட்சி ஆண்டு கார்த்திகையில் ஆடவல்லான் மீண்டும் தன் அம்பலத்தை அணிசெய்தார். விபவ ஆண்டு தைமாதம் 27 ஆம் நாள் வியாழக்கிழமை பௌர்ணமியன்று கனகசபை முற்றலும் பொன்னால் வேயப்பெற்று இறைவனுக்குக் குடமுழுக்கு நடத்தப்பெற்ற செய்தியைக் கூறுகின்றது. இச்செப்பேட்டினிறுதியில்,
விடையில்வந்த செம்பொன் அம் பலத்தான் அந்த
வெள்ளியம் பலத்திலே விரும்பிச் சென்ற
நடையில் வந்த வருடமோ சர்வ தாரி
நாயபமார் கழியிருபத் தைந்து நாளாம்
கடையில்வந்த வருடங்கார்த் திகையீ ரேழு
கதிர்வாரம் திரும்பவந்து கலந்த நாளாம்
இடையில்வந்த வருடமெண்ணிப் பார்க்கில் முப்பத்
தேழுபத்து மாதநாள் இருப தாமே!
எனவரும் பாடல் அமைந்துள்ளது. சிதம்பரம் பொன்னம்பலத்து எழுந்தருளிய நடராசப்பெருமான் சர்வதாரி வருடம் மார்கழி 25 முதல் அட்சய வருடம் கார்த்திகை பதினான்கு வரை (கி.பி 24.12.1648 முதல் 14.11.1686 முடிய) 37 ஆண்டுகளும் 10 மாதங்களும் 20 நாட்களும் கூடிய காலப்பகுதியில் தில்லையில் இல்லாமல் பாண்டிய நாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டாரெனவும், அங்குக் குடுமியான் மலையில் 40 மாதங்களும் பின்னர் மதுரையிலும் பாதுகாப்பாக வைக்கப்பெற்றிருந்து பின்னர் தில்லைக்கு எழுந்தருளினார் என்பதும் இப்பாடலால் அறிகின்றோம். 46 ஆம் எண்ணுள்ள செப்பேட்டில் பின்வரையப் பெற்ற தமிழ்ப்பாடலில் இச்செய்தி இன்னும் விளக்கமாகக் கூறப்பெற்றுள்ளது. சகாப்தம் 1606 இரத்தாட்சி வருடம் கோபால பிருத்வி சுரபதியினுடைய வேண்டுகோளுக்கிணங்க சாம்போசி மன்னர் தில்லைக் கோயிலைப் புதுப்பித்து, சிற்சபைக்குப் பொன் வேய்ந்து செப்பேடு அளித்தார் என்று செய்தி வட மொழிப் பத்தியில் குறிக்கப்பெற்றுள்ளது.
மருவிய சகாத்தமா யிரமுமஐ நூறறெழுப
துக்குமேற் சருவதாரி
வருஷமார் கழிமாதம் ஆதித்த வாரமதில்
மன்னும் அம் பலவாணரை
அருமையொடு குடுமிமா மலையி னாற்பதுமாதம்
அப்புற மதுரை தனிலே
அடவுடன் எழுந்தருளி ஆகமுப்பதிமின்
னெட்டான அட்சய வருஷமும்
பரவுகார்த் திகை மாத தேதிபதி னாலுடன்
பருதிநாள் வளர்பக்கமும்
பகருத்தி ரட்டாதி திசமிக்கும் பத்தினிற்
பாருயிரே லாமுய்யவே
திருமருவு செம்பொன்மா மழைகளது பொழியவுந்
தில்லைமா னகர்வாழவுந்
தேவர்கள் துதிக்கவு மூருடைய முதலியார்
சிற்சபையுள் மேவினாரே.
சாம்போசி மன்னர் கி.பி. 1684-இல் தில்லைத் திருப்பணியைத் தொடங்கி 1685 இல் சிற்சபைக்குப் பொன் வேய்ந்தார் என்பதும், தில்லையில் சிற்சபையில் எழுந்தருளிய நடராசப் பெருமானுக்கு ஊருடைய முதலியார் என்ற பெயர் வழங்கியது என்பதும் இச்செப்பேட்டால் விளங்குகிறது. 48 ஆம் எண்ணுள்ள செப்பேடு 14.11.1686 இல் சாம்போசி மன்னரால் அளிக்கப் பெற்றதாகும். முழுவதும்வட மொழியிலெழுதப்பெற்ற இச்செப்பேட்டில் கி.பி. 1684-இலும், கி.பி. 1686-இலும் சிதம்பரத்தில் நிகழ்ந்த குடமுழுக்கு விழாக்கள் இரண்டும் குறிக்கபெற்றுள்ளன. இச்செப்பேடு கூத்தப் பெருமான் திருப்பணியை முன்னிருந்து நடத்தும் சிற்றம்பல முனிவரால் விமானக்கலசத்தில் அலங்கரிக்கப் பெற்றது என்ற செய்தியும் இடம்பெற்றுள்ளது. 1684- இல் செம்பு வேயப் பெற்று, 1686-இல் மீண்டும் குடமுழுக்குச் செய்யப்பெற்றது என்பதும் தில்லைக் கோயிலில் நிகழ்ந்த இத்திருப் பணிகளை மேற்பார்வை செய்தவர் சிற்றம்பல முனிவராகிய துறவி என்பதும் இச் செய்பேட்டினால் இனிது விளங்கும். இக்கும்பாபிஷேகம் இரண்டிலும் சாம்போசியின் குலகுருவான முத்தைய தீட்சதர் என்பவர் முன்னிருந்து நடத்திவைத்தாரென்பது மேற்குறித்த செப்பேடுகளால் புலனாகின்றது.
1684-ஆம் ஆண்டிலும், 1686-ஆம் ஆண்டிலும் நடராசப் பெருமான் எழுந்தருளிய சிற்சபைக்குச் செம்பு வேய்ந்தும், பொன் வேய்ந்தும் இருமுறை கும்பாபிஷேகம் செய்த சாம்போசி என்னும் மராட்டிய மன்னன் சத்திரபதி சிவாஜியின் மூத்தமகனாவான். இவன் கொள்ளிடத்தின் வடகரையிலுள்ள பகுதியை (செஞ்சியிலிருந்து) ஆண்டவன். பறங்கிப்பேட்டையிலிருந்த இவருடைய அதிகாரியாகிய கோபால தாதாஜி பண்டிதர் என்பவர் தில்லைத் திருப்பணியைக் கண்காணித்தவராவார். இவ்வாறு தில்லைக்கூத்தப்பெருமான் சிதம்பரத்தினின்றும் இடம்பெயர்ந்தமைக்கு பீஜப்பூர் சுல்தானின் படையெடுப்பே காரணமாதல் வேண்டும்.
கி.பி. 1686-க்குப்பின் தில்லை நடராசப் பெருமான் சிதம்பரத்தினின்றும் வெளியே புறப்பட்டு 1696-இல் மீண்டும் சிதம்பரத்திற்கு வந்து சேர்ந்தார் என்ற செய்தி, ஆயிரக்கால் மண்டபக் கல்வெட்டில் குறிக்கப் பெற்றுள்ளது. இவ்விடப் பெயர்ச்சிக்கு அக்காலத்தில் ஔரங்கசீப்பின் படையெடுப்பு தெற்கு நோக்கி வந்ததே காரணம் எனத் தெரிகின்றது. தென்னாட்டில் வந்த இம் முகலாயப் படைகள் செஞ்சியில் 7 ஆண்டுகள் தங்கியிருந்தன. இவர்களால் ஏற்படும் அபாயத்தை எண்ணியே தில்லைக் கூத்தப்பெருமானைத் திருவாரூர்க்கு எடுத்துச்சென்றிருத்தல் வேண்டும். தில்லை நடராசப்பெருமான் சில ஆண்டுகள் திருவாரூர்க்கோயிலில் தங்கியிருந்தமைக்குரிய அடையாளங்கள் அக்கோயிலில் உள்ளன என்பர். தஞ்சையிலிருந்து ஆண்ட மராட்டிய மன்னர் சகசி என்பவர் திருவாரூர்த்தலத்தின் மீது மிகுந்த ஈடுபாடு உடையவராதலின் தில்லைநடராசப் பெருமான் திருவுருவத்தை அவ்வூர்த் திருக்கோயிலில் வைத்துப் பாதுகாத்து வத்தார் எனக் கருத இடமுண்டு. தில்லைக் கூத்தப் பெருமானுடன் எடுத்துச் செல்லப்பெற்ற தில்லைச் செப்பேடுகள் நான்கும் திருவாரூரிலேயே சேமிக்கப் பெற்றிருந்தமையால் அவை திருவாரூர்ச் செப்பேடுகள் எனக் குறிக்கப்பெறுவனவாயின. தில்லை நடராசப் பெருமானை யாரும் அறியாதபடி மூடி மறைத்துத் திருவாரூர்க்கு எடுத்துச் சென்ற மரப்பெட்டி தில்லைப்பேரம்பலத்தில் இன்னும் வைக்கப்பெற்றுள்ளமை காணலாம்.
--------------
3. சிவாலய தரிசன விதி
சிவபரம்பொருளை வழிபடுதற்குச் சிறந்த இடம் திருக்கோயிலாகும். திருக்கோயிலுக்கு நீராடி, தூய உடை உடுத்து திருநீறு அணிந்து செல்லுதல் வேண்டும்.
திருக்கோயிலை நெருங்கியவுடன் தூல இலிங்கமாகிய திருக் கோபுரத்தைக் கண்டு, இரண்டு கைகளையும் தலை மீது குவித்துச் சிவ நாமங்களை உச்சரித்த வண்ணம் உட்புகுந்து பலிபீடத்துக்கு இப்பால் நிலமிசை வீழ்ந்து வணங்குதல் வேண்டும்.
கிழக்கு நோக்கிய சந்நிதானத்திலும் மேற்கு நோக்கிய சந்நிதானத்திலும் வடக்கே தலைவைத்து வீழ்ந்துவணங்குதல் வேண்டும்.
தெற்கு நோக்கிய சந்நிதானத்திலும், வடக்கு நோக்கிய சந்நிதானத்திலும் கிழக்கே தலைவைத்து வணங்குதல் வேண்டும். கிழக்கிலும் வடக்கிலும் ஒருபோதும் கால் நீட்டி வணங்குதல் கூடாது.
தலை, இரண்டு கைகள், இரண்டு செவிகள், மோவாய், இரண்டு புயங்கள் என்னும் எட்டு உறுப்புக்களும் நிலத்தில் பொருந்தும்படி வீழ்ந்து வணங்குதல் அட்டாங்க நமஸ்காரம் ஆகும். இஃது ஆடவர்க்கு உரியது.
தலை, இரண்டு கைகள், இரண்டு முழந்தாள்கள் என்னும் ஐந்து உறுப்புக்களும் நிலத்தில் பொருந்துமாறு வணங்குதல் பஞ்சாங்க நமஸ்காரம் ஆகும். இது மகளிர்க்கு உரியது.
நிலமிசை வீழ்ந்து வணங்கியபின் திருக்கோயிலை வலம் வருதல் வேண்டும். அவ்வாறு வலம் வரும் போது கரங்களைக் குவித்து வணங்கியவாறு சிவ நாமங்களை உச்சரித்துக்கொண்டு மெல்ல அடிமேல் அடிவைத்து வலம் வருதல் வேண்டும்.
திருச்கோயிலை மூன்று முறையேனும் ஐந்து முறையேனும், ஏழு முறையேனும், ஒன்பது முறையேனும் வலம் வருதல் நலமாகும்.
முதலில் விநாயகப்பெருமானை வணங்கிய பிறகு சிவலிங்கப் பெருமானையும், உமையவளையும் தரிசனம் செய்து திருநீறு பெற்று அணிந்து கொள்ளுதல் வேண்டும். அதன் பிறகு நடராசர், ஆலமர் செல்வர், சோமாஸ்கந்தர், சந்திரசேகரர் குமரப் பெருமான் முதலிய - மூர்த்திகளை வணங்குதல் வேண்டும். விநாயகரை வணங்கும்போது இரண்டு கைகளாலும் நெற்றியில் மும்முறைகுட்டி, வலக்காதை. இடக்கையினாலும், இடக்காதை வலக்கையினாலும் பிடித்துக்கொண்டு மூன்று முறை தாழ்ந்தெழுந்து கும்பிடல் வேண்டும்.
அபிடேகம், நிவேதனம் ஆகியவை நிகழும்போது தரிசனம் செய்தல் ஆகாது.
தரிசனம் முடிந்தவுடன் சண்டேசுவரர் சந்நிதியை அடைந்து வணங்கி மூன்று முறை கைகொட்டி சிவதரிசன பலத்தைத் தரும் பொருட்டு வேண்டுதல் வேண்டும்.
சண்டேசுவரர் வழிபாடு நிறைவு பெற்றவுடன் சிவ சந்நிதானத்தை அடைந்து வணங்கிப் பின் ஓரிடத்தில் அமைதியாக இருந்து கொண்டு ஐந்தெழுத்து மந்திரத்தை இயன்றவரை உச்சரிததல் வேண்டும். பின்னரே எழுந்து இல்லத்திற்குச் செல்லுதல் வேண்டும்.
பிரதோஷம்
என்றும் சாவாதிருக்க அமிழ்தம் பெறவிரும்பிய தேவர்களும் அசுரர்களும் மந்தர மலையை மத்தாகவும், வாசுகியென்னும் பாம்பினைக் கயிறாகவும் கொண்டு பாற்கடலைக் கடைந்தனர். அப்பொழுது ஆலாலம் என்னும் நஞ்சு தோன்றியது. அப்பொழுது திருமால் முதலிய எல்லோரும் அந்நஞ்சின் வெம்மையைத் தாங்க முடியாமல் சிலபெருமானைச் சரணடைந்தனர். கருணையே வடிவாகிய சிவபெருமான் தேவர்கள் வேண்டுகோட்கிணங்கி அந்நஞ்சினைத் தமது கண்டத்தில் அடக்கி மன்னுயிர்களை உய்வித்தருளினார். இவ்வாறு ஆலகால நஞ்சினைத் தன் கண்டத்தில் அடக்கியது ஏகாதசி மாலை நேரமாகும். மறு நாள் திரயோதசி, பாற்கடலைக் கடைந்து அமுதம் பெற்ற தேவர்கள் தம்மைக் காத்தருளிய சிவபெருமானை முதல்நாளே வணங்காத தம்பிழையை யெண்ணிச் சிவபெருமானைப் பணிந்து தம் பிழையைப் பொறுத்தருளும்படி வேண்டினர். சிவ பெருமான் அன்று மாலை (4½ மணி முதல் 6 மணி வரை பிரதோஷ வேளையில் தம் திருமுன் உள்ள இடபதேவரின் இரு கொம்புகளுக்கிடையே நின்று அம்பிகை காணத் திருநடம் செய் தருளினார். தேவர்கள் வணங்கித் துதித்தனர். அதுமுதல் திரயோதசி திதியன்று மாலைப்பொழுது பிரதோஷம் {பாபத்தைப் போக்கும் காலம்) என வழங்கலாயிற்று.
சிவராத்திரி
மாசிமாதம் தேய்பிறை சதுர்த்தசி பதினாலாம் நாள்) இரவு பதினான்கு நாழிகை இறைவன் இலிங்கமாகத் தோன்றிய காலம். இதுவே மகா சிவராத்திரி என வழங்கப் பெறுகின்றது. இந்தநாளில் நேரிடும் திரயோதசி சிவபெருமானுக்கு உடம்பாகவும், சதுர்த்தசி சத்தியாகவும் சிவாகமம் கூறும். சிவராத்திரி நான்கு காலங்களிலும் ஆன்மார்த்த பூசையும் பரார்த்த பூசையும் நிகழ்த்தல் வேண்டும். இவற்றை அன்புடன் நிகழ்த்துவோர் இம்மை மறுமை யின்பங்களையும், முடிவில் முத்தியின்பத்தையும் பெறுவர். சிவராத்திரியாகிய இக்காலம் திருமால் பிரமர் பொருட்டுச் சிவபெருமான் 'இங்குற்றேன் என இலிங்கத்தே தோன்றியகாலமாகும்'. பிரமகற்பத்திலே நான்கு யாமங்களிலும் சத்திசிவபெருமானைப் பூசித்தார். உமையம்மையார் விளையாட்டாகச் சிவபெருமானின் கண்ணை மூட உலகங்கள் இருண்டன. அக்காலத்தில் தேவர்கள். சிவபெருமானை வணங்கினர். தேவர்களும் அசுரர்களும் கூடிப் பாற்கடலைக் கடைந்தபோது உலகெலாம் அழிக்கும் வேகத்துடன் எழுந்த ஆலகால நஞ்சினைச் சிவபெருமான் உட்கொண்டு தன் கண்டத்தில் அடக்கியருளினான். அந்நஞ்சு இறைவனைப் பீடிக்காமல் இரவு முழுவதும் தேவர்கள் இறைவனைப் பூசித்தகாலம் இச்சிவராத்திரியேயாகும். ஒரு கற்பத்தில் அண்டங்களெல்லாம் இருள் மூடிய நிலையில் அவ்விருள் நீங்க உருத்திரர் இறைவனைப் பூசனை புரிந்ததும் சிவ ராத்திரி காலமேயாகும்.
சிவசாதனம்
திருநீறு, உருத்திராக்கம், திருவைந்தெழுத்து என்பன, திருநீறு பராசத்தியின் வண்ண மாகும். 'பராவணமாவது நீறு' 'என்பது திருஞான சம்பந்தர் அருள் வாக்காகும். உருத்திராக்கம்: திரிபுரசங்காரத்தின் பொருட்டு எழுந்தருளிய உருத்திர மூர்த்தியின் கோபக் கண்ணில் உண்டான விதையினின்று முளைத்த மரத்தின் மணியாதலின் உருத்திராக்ஷம் எனப் பெயர் பெற்றது. இதனை அணிவோர் உடற் பிணியும் ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மலக் குற்றங்களும் நீங்கி எவ்வுயிர்க்கும் அருளுடையராவர்.
திருவைந்தெழுத்து: குருவின் பால் உபதேசம் பெற்றோர் மீண்டும் தம்மை மும்மலப் பிணிப்பு வருத்தாதவாறு இடைவிடாது எண்ணிப் போற்றுதற்குரியதாய் வேதம் நான்கினும் மெய்ப்பொருளாய் விளங்குமந்திரம் திருவைந்தெழுத்தாகும்.இது தூல பஞ்சாக்கரம், சூக்கும பஞ்சாக்கரம், முத்தி பஞ்சாக்கரம் என மூவகைப்படும்.
'நாதன் நாமம் நமச்சிவாயவே, (சம்பந்தர் 3--49--1)
சிவாயநம என்று நீறணிந்தேன், (அப்பர் 4-94--6}
'மறவாது, சிவாயவென்று எண்ணினார்க்கு' (5-51--6)
என வரும் தேவாரத் தொடர்களில் இம் மூவகைப் பஞ்சாக்கரமும் எடுத்தாளப் பெற்றுள்ளமை உணர்ந்து போற்றத்தகுவதாகும்.
நடராசர் அபிடேகம்
மக்களுக்குரிய ஓராண்டு தேவர்க்கு ஒரு நாள். ஒரு நாளைக் காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம், வைகறை என ஆறு சிறு பொழுதுகளாகப் பகுத்துரைத்தல் போலவே, ஓர் ஆண்டினையும் ஆறுகாலங்களாகப் பகுத்துக்கொண்டு கூடத்தப் பெருமானுக்கு ஆறு அபிடேகங்கள் நடைபெறுகின்றன. மார்கழித் திருவாதிரை விடியற்காலம். மாசி வளர்பிறைச் சதுர்த்தசி காலசந்தி. சித்திரைத் திருவோணம் உச்சிக்காலம், ஆனி உத்தரம் சாயரட்சை, ஆவணி வளர்பிறைச் சதுர்த்தசி இரண்டாங்காலம், புரட்டாசி வளர்பிறைச் சதுர்த்தசி அர்த்த யாமம். நடராசர்க்குரிய ஆறு அபிடேக நாள்களையும்
“சித்திரையில் ஓணமுதல் சீரானி உத்தரமாம்
சத்ததனு வாதிரையின் சார்வாகும் - பத்தி
மாசி அரி கன்னி மருவு சதுர்த்தசிமன் '
றீசரபி டே கதினமாம்".
என்ற வெண்பாவினால் அறியலாம். அட்டவீரட்டம்
சிவபெருமான் பிரமனது தருக்கினையடக்குதல் வேண்டி அவனுடைய ஐந்து தலைகளில் ஒன்றைக் கிள்ளிய இடம் திருக்கண்டியூர். அந்தகாசுரனைக் கொன்ற தலம் திருக்கோவலூர். திரிபுரத்தை எரித்தழித்த தலம் திருவதிகை. தக்கனது தலையைத் தடிந்த தலம் திருப்பறியலூர். சலந்தராசுரனைத் தன் காற் பெருவிரலாற் கீறியமைத்த சக்கரத்தினால் தலையரிந்த தலம் திருவிற்குடி. கயமுகாசுரனாகிய யானையினைக் கொன்று அதன் தோலை உரித்துப் போர்த்த தலம் வழுவூர். மன்மதனை எரித்த தலம் திருக்குறுக்கை. மார்க்கண்டேயர்க்காகக் கூற்றுவனை உதைத்த தலம் திருக்கடவூர். இங்கே கூறப்பட்ட எட்டுத் திருத்தலங்களும் சிவபெருமானுடைய வீரச் செயல் வெளிப்பட்டுத் தோன்றுதற்கு நிலைக்களமாய் விளங்குதலால் திருவீரட்டம் எனப் போற்றப் பெற்றன.
பஞ்சபூதத்தலங்கள்
எல்லாம் வல்ல இறைவன் நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் ஐம்பெரும் பூதங்களின் வடிவில் எழுந்தருளியுள்ளான். அக்குறிப்பினை விளக்கும் திருத்தலங்கள்:
காஞ்சி திருவேகம்பம், திருவாரூர் -- நிலம்
திருவானைக்கா -- நீர்
திருவண்ணாமலை -- தீ
திருக்காளத்தி -- காற்று
தில்லைச் சிற்றம்பலம் -- ஆகாயம்.
சத்தவிடங்கத்தலங்கள்
முசுகுந்தச் சக்கரவர்த்தி தேவர்கோமானாகிய இந்திரனிடமிருந்து தான்பெற்று வந்த தியாகராசர் திருமேனி ஏழினையும் வைத்து வழிபட்ட திருத்தலங்கள் ஏழு. அவை: திருவாரூர், நாகப்பட்டினம், திருநள்ளாறு, திருமறைக்காடு, திருக்காறாயில், திருவாய்மூர், திருக்கோளிலி என்பன.
அட்டமூர்த்தம்
சிவபெருமான் நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம், ஞாயிறு, திங்கள், ஆன்மா. என்னும் எட்டினையும் தன் திருமேனியாகக் கொண்டு விளங்குதலின் அம்முதல்வனுக்கு அட்டமூர்த்தி என்பது பெயராயிற்று.
அட்டபுட்பம்
இறைவனை அருச்சனை செய்தற்குரியன எண் மலர்கள். அவை: புன்னை, வெள்ளெருக்கு, சண்பகம், நந்தியாவட்டம், பாதிரி, குவளை, அலரி, செந்தாமரை. இவை புறத்தே அருச்சனை புரிதற்குரிய மலர்கள். கொல்லாமை, ஐம்பொறியடக்கம், பொறை, அருள், அறிவு, வாய்மை, தவம், அன்பு என்னும் எட்டும் நம் அகப்பூசைக்குரிய மலர்களாகும். இவற்றை 'நலஞ்சிறந்தார் மனத்தகத்து மலர்கள் எட்டு' என்பர் திருநாவுக்கரசர்.
நால்வகைநெறி
சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பன.
சரியை - இறைவனை வழிபடுவோர் திருக்கோயிலை அலகிடல், மெழுகிடல், பூமாலை தொடுத்தல் முதலாகச் செய்யும் புறத்தொழில்கள்.
கிரியை - சிவபெருமானை நீராட்டி மலர் தூவி வழி படுதலாகிய அகத்தொழில்.
யோகம் - அருவத்திருமேனியை நோக்கிய நிலையில் மனத்தை ஒரு வழிப்படட நிறுத்தி அகத்தே செய்யும் வழிபாடு.
ஞானம் - அகத்தும் புறத்தும் ஆக எங்கும் நிறைந்த உண்மை அறிவு இன்பவுருவாகிய இறைவனை அறிவுத் தொழிலால் செய்யும் வழிபாடு.
சைவசமய குரவர் நால்வர்
திருஞான சம்பந்தர்: சீகாழிப்பதியில் தோன்றி, மூவாண்டில் உமையம்மையார் அளித்த ஞானப்பாலைப் பருகித் 'தோடுடைய செவியன்' முதலாகவுள்ள தேவாரப் பதிகங்களைப் பாடித் திருநல்லூர்த் திருமணத்தில் வைகாசி மூலத்தில் முத்திபெற்றவர், இவருக்கு வயது 16.
திருநாவுக்கரசர்: திருவாமூரில் தோன்றிச் சமணசமயத்தினைச் சார்ந்து வயிற்றுவலியால் வருந்தித் தமக்கையார் திலகவதியார் அருளால் திருவதிகை வீரட்டானத்துப் பெருமானை வழிபட்டுக் *கூற்றாயினவாறு விலக்ககிலீர்' என்பது முதலாகவுள்ள தேவாரப்பதிகங்களைப் பாடித் திருப்புகலூரில் சித்திரைச்சதயநாளில் முத்திபெற்றவர். வயது 81.
சுந்தரர்: திருநாவலூரில் தோன்றித் திருமணக்காலத்தில் வெண்ணெய்நல்லூர் அருட்டுறை யிறைவரால் தடுத்தாட் கொள்ளப்பெற்றுப் 'பித்தா பிறைசூடி' முதலிய தேவாரத் திருப்பதிகங்களைப் பாடிச் சேரமான் பெருமாளுடன் ஆடிச் சுவாதியில் திருக்கயிலாயத்தையடைந்தார். வயது 18.
மாணிக்கவாசகர்: திருவாதவூரில் தோன்றிப் பாண்டியனுக்கு அமைச்சராகித் திருப்பெருந்துறையில் இறைவனே குருவாக எழுந்தருளி உபதேசிக்கப் பெற்று 'நமச்சிவாய வாழ்க' என்பது முதலிய திருவாசகப்பனுவலைப் பாடிப் போற்றித் தில்லையில் ஊமைப் பெண்ணைப் பேசச்செய்து இறைவனே கேட்டு எழுதிக் கொள்ளும்படி திருக்கோவையாரைப்பாடியவர். அந்நூற்கு அன்பர்கள் பொருள் கேட்டபோது திருவாசகத்திற்குப் பொருளாவான் தில்லையம்பலவாணனே எனக்காட்டி ஆனிமகத்தில் தில்லைப் பெருமானுடன் இரண்டறக்கலந்தவர். வயது 32.
சைவத்திருமுறைகள் பன்னிரண்டு
திருஞானசம்பந்தர் அருளிய தேவாரப்பதிகங்கள் 1, 2, 3 திருமுறைகள், திருநாவுக்கரசர் அருளியவை 4,5,6 திருமுறைகள், சுந்தரர் அருளியது 7-ஆம் திருமுறை, மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் திருக்கோவையார் எட்டாம் திருமுறை. திருமாளிகைத்தேவர் முதலிய ஒன்பதின்மர் பாடிய திருவிசைப்பா, திருப்பல்லாண்டு ஒன்பதாம் திருமுறை. திருமூலநாயனார் அருளிய திருமந்திரம் பத்தாம் திருமுறை. திருவாலவாயிறைவார் பாடிய திருமுகப் பாசுரம் முதல் நம்பியாண்டார் நம்பி பாடிய திருநாவுக்கரசர் திரு ஏகாதசமாலை ஈறாகவுள்ள நாற்பது பிரபந்தங்கள் அடங்கிய தொகுதி - பதினோராம் திருமுறை. சேக்கிழார் நாயனார் பாடியருளிய திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணம் பன்னிரண்டாம் திருமுறை.
சந்தான குரவர் நால்வர்.
மெய்கண்டார், அருணந்திசிவாசாரியார் மறைஞான சம்பந்தர், உமாபதிசிவாசாரியார் இவர்கள் முத்தி பெற்ற குரு பூசை நாள்கள் :
மெய்கண்டார் - ஜப்பசிச் சுவாதி
அருணந்தி சிவாசாரியார் - புரட்டாசிப் பூரம்
மறைஞான சம்பந்தர் - ஆவணி உத்தரம்
உமாபதிசிவம் - சித்திரை அத்தம்.
சைவசித்தாந்த நூல்கள் பதினான்கு
திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார், சிவஞான போதம், சிவஞானசித்தியார், இருபாவிருபது. உண்மைவிளக்கம், சிவப்பிரகாசம், திருவருட்பயன், வினாவெண்பா, போற்றிப்பஃறொடை, கொடிக்கவி, நெஞ்சுவிடுதூது, உண்மைநெறிவிளக்கம் சங்கற்ப நிராகரணம்.
நால்வேதம்: இருக்கு, எசுர், சாமம், அதர்வணம் என்பன.
ஆறங்கம்: சி௸, கற்பசூத்திரம், வியாகரணம், நிருத்தம், சந்தோ விசிதி, சோதிடம் என்பன.
பதினெண்புராணம்: சைவம், பௌஷிகம், மார்க்கண்டம், லிங்கம், காந்தம், வராகம், வாமனம், மச்சம், கூர்மம், பிரமாண்டம் - இவை பத்தும் சிவபுராணம். காருடம், நாரதீயம், விஷ்ணு புராணம், பாகவதம் நான்கும் விஷ்ணு புராணம். பிரமபுராணம், பதும புராணம் இரண்டும் பிரமபுராணம். ஆக்கினேயம் அக்கினி புராணம். பிரமகைவர்த்தம் சூரியபுராணம்.
இறைவன் ஆடல்புரியும் ஐந்து சபைகள்:
(!) தில்லையிற் பொன்னம்பலம்
(2) மதுரையில் வெள்ளியம்பலம்
(3) திருநெல்வேலியில் தாமிரசபை
{4) திருக்குற்றாலத்தில் சித்திரசபை
(5) திருவாலங் காட்டில் இரத்தின சபை
———————
4. சிதம்பரத்திற்குரிய நூல்கள்
தமிழ் நூல்கள்
பன்னிரு திருமுறைகள்
சிதம்பர் மும்மணிக்கோவை
சிதம்பரச் செய்யுட்கோவை
சிவகாமியம்மை இரட்டைமணிமாலை
தில்லைக் கலம்பகம்
தில்லையுலா
தில்லை யமகவந்தாதி
சிதம்பரவெண்பா
சிதம்பர சபாநாதபுராணம்
கோயிற் புராணம்
நடேசர் திருவருட்பா
நடராச சதகம்
நடராசர் திருப்புகழ்
சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ்
சிவகாமியம்மை பதிகம்
தில்லைக் கற்பக விநாயகர் வெண்பாவந்தாதி
தில்லை நவமணிமாலை
சிதம்பர விலாசம்
பரமரகசிய மாலை
இருவருட்பா
தில்லைத் திருவாயிரம்
புலியூர்ப் புராணம்
சிதம்பர புராணம்
நடராஜர் காவடிச்சிந்து
நடராச சதகம்
நந்தனார் சரித்திரக் கீர்த்தனை
சிதம்பரப் பாட்டியல்
முத்துத்தாண்டவர் கீர்த்தனைகள்
பாண்டிநாயகம் பிள்ளைத்தமிழ்
சிதம்பரேசுவரர் விறலிவிடுதூது
புலியூர்வெண்பா முதலியன.
வடமொழி நூல்கள்:
சாந்தோக்கியம் சுவேதாசுவதரம் முதலிய உபநிடதங்கள்
குஞ்சிதாங்கிரிஸ்தவம்
பதஞ்சலி பூஜா விதி
சிதம்பர மான்மியம்
சித்சபாபிரதிஷ்டா மான்மியம்
வியாக்கிரபுர மான்மியம்
ஹேமசபாநாத மான்மியம்
சிதம்பரரகசியம்
மகாரகசியஸ்தான லட்சணம்
ஆகா சபைரவ கற்பம்
சித்சபா சம்புரோட்ச்ண பாஷ்யம்
நடராஜ சகஸ்ரநாம தோத்திரம்
சிதம்பராஷ்டகம்
நடேசாஷ்டகம்
நடராஜ திக்வந்தனம்
சிதானந்தாஷ்டக தோத்திரம்
சிதம்பரேஸ்வர புஜங்காஷ்டகம் முதலியன.
----------------
This file was last updated on 07 Feb. 2023
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)