அ. க. நவநீதகிருட்டிணன் எழுதிய
இலக்கியத் தூதர்கள் (இலக்கியக் கட்டுரைகள்)
ilakkiyat tUtarkaL
by A.K. Navaneethakrishnan, Tamil Essays
In Tmil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
பிரிந்தும் மாறுபட்டும் உள்ள இருவரை வேறொருவர் ஒன்றாகச் சேர்த்து வைக்க முயலும் முயற்சியே தூது. பிரிந்திருக்கும் தலைவன் தலைவியருள் ஒருவரிடம் மற்றொருவர் அன்பு காரணமாக அனுப்பும் தூது அகத்துறைத் தூதின்பாற்படும். பகை காரணமாகப் பிரிந்திருக்கும் மன்னர் இருவர் பாலும் செல்லும் தூது புறத்துறைத் தூது எனப்படும். இவ்வாறு அன்பைத் தெரிவிப்பதற்காகவும் பகை தீர்ப்பதறகாகவும் பல தூதர்கள் சென்றுள்ளனர். அவை பல்வேறு இலக்கிய நூல்களில் கூறப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றை மட்டும் எடுத்துத்தொகுத்து இலக்கியச் சுவை வெளிப்பட இயற்றப் பட்டதே ‘இலக்கியத் தூதர்கள்’ என்னும் இந்நூல். அன்னப் பறவையிலிருந்து ஆண்டவன் வரை எல்லோருமே சிலசில சமயங்களில் தூதராகச் சென்று தொண்டாற்றியுள்ளனர்.
போன்ற இலக்கியத் தூதர்கள் இன்னும் பலர் உளர். இவர்களைப் பற்றியும் இவர்கள் மேற்கொண்ட தூதினைப் பற்றியும் விளக்குவதே இந்நூல்.
இந்நூலைச் சுவைபட, நயம்மிக இயற்றித் தந்தவர் திருக்குறள்மணி அ. க. நவநீத கிருட்டிணன் என்பவர் ஆவர். சொற்சுவை பொருட்சுவைபட எழுதுவதில் தனித்திறமை படைத்தவர் இவர். இவருடைய நடை இளைஞரை ஈர்க்கும் இனியநடை. இந்தப் பயனுடை நூலை எழுதித் தந்த இவருக்குக் கழகம் தன் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது.
இந்நூலைப் பலரும் படித்துப் பயன்பெறுவதோடு, குறிப்பாகப் பள்ளியில் பயிலுஞ் சிறார் அனைவரும் கற்றுத் தெளிந்து களிப்புறுவர் என நம்புகிறோம்.
இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட சங்ககாலம் முதல் இக்காலம் வரை எழுந்த அருந்தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலும் தூதர்களைப் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. தமிழில் ‘தூது’ என்னும் வகையைச் சார்ந்த சிற்றிலக்கியங்களும் பலவுள. தெயவப் புலவராகிய திருவள்ளுவர் தம் நூலில் தூதின் இலக்கணத்தைச் திறம்பட வகுத்துரைக்கின்றார். இவற்றையெல்லாம் ஆதாரமாகக் கொண்டே ‘இலக்கியத் தூதர்கள்’ என்னும் இச்சிறிய நூலை உருவாக்கினேன். இந்நூலில் காதல் குறித்துச் செல்லும் அகத்துறைத் தூதரும், போர்குறித்துச் செல்லும் புறத்துறைத் தூதரும் ஆகிய இருவகைத் தூதரையும் காணலாம்.
இந்நூல் வெளிவருவதற்குச் சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழக ஆட்சியாளரும் தமிழ்நூற் காவலருமாகிய திருவாளர் வ. சுப்பையா பிள்ளையவர்கள் காட்டிய கருணைத்திறன் பெரிதும் பாராட்டுதற்குரியது. அச்சிடத் தொடங்கி இரண்டாண்டுகட்குப் பின் இந்நூல் நிறைவுறுகிறது. நீண்ட காலத்தாழ்வுக்குரிய காரணம் பொருந்தாத நெறியிற் சென்ற எனது திருந்தாத அறிவே. எனினும் எனது நலத்தில் பெரிதும் கருத்துடைய கழக ஆட்சியாளரவர்கள் என்னை நன்னெறிப்படுத்தி யாட்கொண்டு மீண்டும் என் எழுத்துப் பணிக்கு ஊக்கமும் உரனும் ஊட்டியதன் விளைவாகவே இந்நூல் வெளிவரலாயிற்று. ஆதலின் கழக ஆட்சியாளர் திரு. வ. சுப்பையா பிள்ளை யவர்கட்கு யான் பெரிதும் கடப்பாடுடையேன்.
இலக்கியத் தூதர்கள்
இந்நூல், உயர்நிலைப்பள்ளி மேல் வகுப்பு மாணவர்க்கு மிக்க பயன் விளக்கும் வகையில் சிறந்த தமிழ் இலக்கியங்களிலிருந்து. எடுத்த அரிய கருத்துக்களைத் துணையாகக் கொண்டு ஆக்கப் பெற்றது. ஆதலின் இதனைக் கண்ணுறும் உயர்நிலைப்பள்ளித் தலைவர்களும், தமிழ்ப் புலவர்களும் தத்தம் பள்ளிகளில இதனைப் பாடமாக்கி, எளியேனது தமிழ்ப்பணிக்கு ஏற்ற நல்லாதரவை நல்குமாறு பணிவுடன் வேண்டிக்கொள்கிறேன்.
தமிழ் வெல்க!
அ. க. நவநீதகிருட்டிணன்
----------- உள்ளுறை
1. தமிழில் தூது
6. இராமன் விடுத்த தூதன்
2. வள்ளுவர் கண்ட தூதர்
7. பாண்டவர் விடுத்த தூதன்
3. தோழர் விடுத்த தூதர்
8. வேளன் விடுத்த தூதன்
4. அதியமான் அனுப்பிய தூதர்
9. இந்திரன் விடுத்த தூதன்
5. மாதவி யனுப்பிய தூதர்
10. சீவகன் விடுத்த தூதன்
------------
இலக்கியத் தூதர்கள்
1. தமிழில் தூது
தமிழில் சிறு நூல்கள்
ஆயுந்தொறுந் தொறும் இன்பந் தரும் மொழியாகிய நந்தம் செந்தமிழ் மொழியில் நவில்தொறும் நயந்தரும் சிறு நூல்கள் எண்ணிறந்தன உள. அவை பல்வேறு வகையினவாய் அமைந்துள்ளன. அவற்றையெல்லாம் ஒருவாறு தொகுத்து வகுத்த நம் முன்னோர் ‘தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தங்கள்’ என்று அறுதியிட்டனர். ஆனால் இவ்வெல்லைக்கு அப்பாற்பட்ட சிற்றிலக்கியங்களும் இக்நாளில் வழங்குகின்றன.
தொல்காப்பியர் சொல்லும் விருந்து
பல்லாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட பழந்தமிழ இலக்கணமாகிய தொல்காப்பியம் சிற்றிலக்கியங்கட்கெல்லாம் அடிப்படையான ஓர் இலக்கணத்தை வகுத்துக் கொடுத்துள்ளது. தொல்காப்பியர் காலத்தில் இக் நாளிற் போலப் பல்வகைச் சிற்றிலக்கியங்கள் வழக்காற்றில் இருந்திலவேனும் காலப்போக்கில் அவை தோன்றுதற்குரிய விதியை அவர் வகுத்துள்ளார். அஃது அவர் எதிர் காலத்தை நுனித்து நோக்கும் பழுத்த மதிநலத்தைப் புலப்படுத்துவதாகும். தொடர்நிலைச் செய்யுட்கு உரியனவாக உரைக்கப்பெற்ற வனப்பு எட்டனுள் ‘விருந்து’ என்பதும் ஒன்று. புலவர்கள் தாந்தாம் விரும்பியவாறு தனித்தும், பல பாக்கள் தொடர்ந்தும் வரப் புதியதாகப் பாடப்பெறுவதே விருந்தெனப்படும். இப்பொது விதியே அந்தாதித் தொடையில் அமைந்து வரும் கலம்பகம், அந்தாதி, மாலை போன்ற சிறு நூல்கட்கும், அந்தாதியாய் வாராத உலா, தூது, கோவை, பிள்ளைத்தமிழ், பரணி முதலான பைந்தமிழ்ச் சிற்றிலக்கியங்கட்கும் இலக்கணமாயிற்று. இவ்விதியை ஆதாரமாகக் கொண்டே மதி நலஞ் சான்ற புலவர் பெருமக்கள் பல துறைச் சிறு நூல்களைப் படைத்துள்ளனர். அத்தகையவற்றுள் ஒன்றாக விளங்குவதே ‘துாது’ என்னும் பிரபந்தமாகும். பாட்டியல் நூல்கள்
இத்தகைய பிரபந்தங்கட்கு இலக்கணம் கூறும் நூல்கள் தமிழிற் பலவுள. பன்னிரு பாட்டியல், வெண்பாப்பாட்டியல்,நவநீதப்பாட்டியல், சிதம்பரப்பாட்டியல், இலக்கண விளக்கப்பாட்டியல் போன்ற நூல்கள் அவ்வகையைச் சார்ந்தனவாகும். இப்பாட்டியல் நூல்களில் ஒன்றிலேனும் ‘பிரபந்தங்கள் தொண்ணூற்றாறு’ என்னும் வரையறை உரைக்கப்படவில்லை. இவற்றில் கூறப்படாத சிறு நூல்கள் பல இன்று வழக்கில் இருக்கின்றன. இன்னும் காலத்திற்கேற்பப் பல்வேறு இலக்கியங்கள், எழுதலுங் கூடும். எனவே, சிற்றிலக்கியங்கள் இத்துணை வகைப்படுமென அறுதியிட்டு உரைத்தல் இயலாது.
தூது நூல்கள்
இலக்கிய வளஞ்சான்ற இனிமைத் தமிழ் மொழிக்கண் நூற்றுக் கணக்கான தூதுப் பிரபந்தங்கள் உள்ளன. நெஞ்சுவிடு தூது, தமிழ்விடு தூது, நெல்விடு தூது, துகில்விடு தூது, மான்விடு தூது, வண்டுவிடு தூது, விறலிவிடு தூது, காக்கைவிடு தூது, பணவிடு தூது, புகையிலைவிடு தூது, வனசவிடு தாது.முதலிய பல தூது நூல்கள் ஓதற்கினிய உறு சுவையுடையனவாய் உள்ளன. இவற்றுள் காலத்தால் முற்பட்டது உமாபதி சிவனார் இயற்றிய நெஞ்சுவிடு தூதாகும்.
பிற நூல்களில் தூது
இவையன்றித் தேவாரம், திருவாசகம், திவ்வியப் பிரபந்தம் ஆகியவற்றில் குயில், கிளி, புறா, நாரை, நாகணவாய்ப்புள், அன்றில், வண்டு முதலியவற்றைத் தூது விடுத்ததாக அமைந்த பாக்கள் பல காணப்படுகின்றன. கலம்பகம், அந்தாதி முதலிய சிற்றிலக்கியங்களிலும் அவ்வாறமைந்த பாக்களைப் பார்க்கலாம்.
தூதின் இலக்கணம்
ஒருவர், தம்முடைய கருத்தைக் காதலர், நண்பர். பகைவர் ஆகியோரில் யாரேனும் ஒருவர்க்கு மற்றொருவர் வாயிலாகக் கூறி விடுப்பதே துாதாகும். மக்களில் ஒருவரையோ, அன்றி விலங்கு, பறவை முதலான அஃறிணைப் பொருள்களில் ஒன்றனையோ தூது விடுப்பதாகக் கலிவெண்பாவான் யாக்கப்பெறும் இயல்பினதே இந்நூலாகும். தெய்வப் புலவராகிய திருவள்ளுவர் தம் நூலில் தூது என்னும் அதிகாரத்தில் தூதிலக்கணத்தைத் திறம்பட வகுத்தோதியுள்ளார்.
அஃறிணைத்தூதுப் பொருட்கள்
ஒருவர் உரைக்கும் கருத்தை அறிந்து மற்றொருவர்க்கு உணர்த்தும் ஆற்றல் வாய்ந்த மக்களையே தூதாக விடுத்தல் இயல்பாயினும் அத்தகைய ஆற்றலில்லாத அஃறிணைப் பொருள்களையும் தூது விடுக்கும் முறை, இலக்கிய வழக்கில் காணப்படுகின்றது. இவ்வழக்குப் பற்றியே,
என்று பின்னாளில் நன்னூலார் இலக்கணம் வகுக்க வேண்டியதாயிற்று.
தூது செல்லும் பத்து
இரத்தினச் சுருக்கம் என்னும் நூல் தூது விடுத்தற்குரிய பொருள்களாகப் பத்தினைக் குறிப்பிடுகின்றது. அன்னம், மயில், கிளி, மேகம், நாகணவாய்ப் புள், தோழி, குயில், நெஞ்சு, தென்றல், வண்டு என்னும் இவற்றுள் ஒன்றைப் பொருளாகக் கொண்டு, புலவர்கள் தம் புலமை கலந்தோன்று மாறும் இலக்கிய நயம் பொதுளுமாறும் தூதிலக்கியத்தை ஓதுகின்றனர்.
கடைச் சங்கத் தொகை நூல்களுள் தலைமை சான்ற புறநானூற்றுள் பிசிராந்தையார் என்னும் பெருந்தமிழ்ப் புலவர் தம் ஆருயிர் நண்பனாகிய கோப்பெருஞ் சோழனுக்கு அன்னச்சேவலை அருந்தூது விடுத்ததாக நறுந்தமிழ்ப் பாடலொன்று உள்ளது. புணர்ச்சி, பழகுதல், உணர்ச்சியென்னும் மூவகை நட்புள் முதன்மை வாய்ந்த உணர்ச்சி யொத்தலாகிய நட்பால் உள்ளங் கலந்து நின்ற அவ்விருவருள் ஒருவராய பிசிராங்தையார் தம்பால் சோழன் கொண்டிருந்த அன்பினையும் நன்மதிப்பையும் அப் பாட்டால் இனிது விளக்குகின்றார்.
அன்னச்சேவல் தூது
“அன்னச்சேவலே! போர் வென்றி மிக்க புரவலனாகிய சோழன் தன்னாட்டைத் தலையளி செய்யும் நன்னராளன். நீ தென்றிசைக் குமரித்துறையிலுள்ள அயிரை மீன்களை அருந்தி வடதிசைக்கண் உள்ள இமயம் நோக்கிப் பெயர்குவையாயின் இரண்டற்கும் இடைப்பட்ட சோழநாட்டுக் கோழியூரைக் குறுகுவாய். அந்நகரின் நடுவண் அமைந்த நெடுநிலை மாடத்தே நின் காதற் பேடாகிய இள வன்னத்துடன் சென்று தங்குவாய். நின் வரவினை வாயிற் காவலர்க்கு உணர்த்தாதே தடையின்றி மன்னவன் கோயிலுட் புகுவாய். எம் நண்பனாகிய கோப்பெருஞ் சோழன் கேட்குமாறு ‘யாம் பிசிராந்தையின் அடிக்கீழ் இருப்போம்’ என்று உரைப்பாய். அது கேட்ட வளவில் சோழன் மகிழ்வுற்று, நின் பேடை யன்னம் பூணுமாறு நினக்குப் பொன்னும் மணியுமாய அணிகலன்களை யளிப்பான்” எனக் கூறி இன்புற்றார்,
சத்தி முற்றம் என்னும் ஊரில் தோன்றிய புலமைச்சான்றார் ஒருவர், பாண்டியனைப் பாடித் தம் வறுமை நோயைக் களைந்துகொள்ளும் பொருட்டு மதுரைமாநகர் புக்கார். அவண் பாண்டியனைக் காண்டற்கியலாது வருந்தி ஒருபால் ஒதுங்கியிருந்தார். அதுபோழ்து ஒருநாள் மாலை வேளையில் வானில் வடதிசை நோக்கிப் பறந்து சென்ற நாரையினத்தை விளித்துப் பாடலுற்றார்.
என்று நாரையை விளித்த நற்றமிழ்ப் புலவர், “நாரையே! நீயும் நின் பேடையும் தென்திசைக் குமரியாடி வடதிசை இமயத்துக்கு ஏகுவீராயின் எம் ஊராகிய சத்திமுற்றத்து வாவியுள் சிறுபொழுது தங்குமின் அதற்கு அணித்தாக அமைந்துள்ளது என் குடில்; அது மழையால் நனைந்த சுவர்களே யுடையது: சிதைந்துபோன கூரையையுடையது; ஆங்கே கனை குரற் பல்லியின் நல்ல சொல்லை எதிர்நோக்கிப் பாடு பார்த்திருப்பாள் என் மனையாள்; அன்னவளைக் கண்டு, மாறன் மதுரையில் ஆடையின்றி வாடையின் மெலிந்து, கையது கொண்டு மெய்யது பொத்திக், காலதுகொண்டு மேலது தழுவிப், பேழையுள்ளிருக்கும் பாம்பென உயிர்க்கும் ஏழையாளனாகிய நின் கணவனைக் கண்டேன் என்று கட்டுரைப்பாய்” எனப் பாடிய சத்தி முற்றப் புலவரின் நற்றமிழ்ப் பாடல் நயமிக்கதொன்றாகும்.
காவியங்களில் தூது
குணமாலை யென்னும் அணங்கு, சீவகன்பால் கிளியைத் தூது விடுத்த செய்தியினைச் சிந்தாமணிக் காப்பியத்திற் காணலாம். வாசவதத்தையின் பிரிவுத் துயருக்கு ஆற்றாது வையங் காவலனை உதயணன் மான் முதலியவற்றை நோக்கி விரித்துரைத்த கருத்துக்களைப் பெருங்கதை பேசுகிறது. நளனிடமிருந்து தூது சென்ற நல்லன்னம், தமயந்தியைக் கண்டு நளனின் நல்வியல்பெல்லாம் சொல்லி இருவர்க்குமே திருமணத்தை முடித்து வைத்த செய்தியை நளவெண்பா நயம்பட எடுத்துரைக்கும். வடமொழியிலும் மேகசந்தேசம், மேகசந்தேசம் அம்ச சந்தேசம் போன்ற நூல்கள் உள்ளன.
தூதின் காரணம்
பிரிவால் வருந்தும் தலைவன் தலைவியர் அஃறிணைப் பொருள்களைத் தூது விடுத்தற்கு அவர்தம் உள்ளக் கலக்கமே உற்ற காரணமாகும். அப்பொருள்கள் தூது சென்று மீளவேண்டுமென்பது அவர்கள் கருத்தன்று, காம நோயால் துன்புறும் தம் உள்ளத்திற்கு ஆறுதல் உண்டுபண்ணவே தம் துயரைப் பலவாறு புலம்பி வெளியிடுவர். இதனைக் ‘காம மிக்க கழிபடர் கிளவி என்பர் இலக்கண நூலார்.
இருதுறைத் தூது
இஃதன்றி அகத்துறைக் கற்பொழுக்கத்தில் நிகழும் பிரிவுகளில் ஒன்றாகத் தூதிற் பிரிவையும் குறிப்பர். பகை தணிக்கும் வினைப்பொருட்டுத் தலைவன் தலைவியை விட்டுப் பிரிந்தகறலே தூதிற் பிரிவு என்பர் இலக்கண ஆசிரியர். எனவே தமிழில் உள்ள தூதுப் பிரபந்தங்களையும் தூதுப் பாடல்களையும் பெரும்பான்மை பற்றி இருவகையுள் அடக்கலாம். காதல் பற்றிய அகத்துறைத் தூதெனவும், பகை தணிக்கும் வினைகுறித்து வேற்று வேந்தர்பாற் செல்லும் புறத்துறைத் தூதெனவும் அவற்றைக் குறிப்பிடலாம், அம்முறையில் தூதுப் பிரபந்தங்கள் அனைத்தும் அகத்துறை இலக்கியங்களேயாகும். இந்நூலுள் இருதுறைத் தூதர்களைப் பற்றியும், அவர்கள் ஆற்றிய அருஞ்செயல்களைப் பற்றியும் விரிவாகக் காண்போம்.
------------
2. வள்ளுவர் கண்ட தூதர்
திருக்குறளில் தூதர் இயல்பு
‘எல்லாப் பொருளும் இதன்பால் உள; இதன்பால் இல்லாத எப்பொருளும் இல்லை’யென்று சொல்லிப் போந்தார் நல்லிசைப் புலவருள் ஒருவராய மதுரைத் தமிழ் நாகனார். அத்தகைய சிறப்பு வாய்ந்த அருந்தமிழ்த் திருமறையாம் திருக்குறளில் தூதரின் இயல்புகள் வகுத்தோதப்படுகின்றன. குறளாசிரியராகிய திருவள்ளுவர் ஒரு பொருளின் இலக்கணத்தைத் திறம்பட ஆராய்ந்து வகுத்துரைப்பது போன்று உலகில் வேறெந்தப் புலவரும் கூறினாரல்லர். அத்தகு முறையில் தூதினுக்கும் இலக்கணம் வகுத்தோதும் திறம் கற்பவர் கருத்தைக் கவர்வதாகும்.
அமைச்சியலுள் தூதியல்
முப்பாலுள் நடுவண் அமைந்த பொருட்பால் திருவள்ளுவரின் பல துறைப் புலமை நலத்தைப் புலப்படுத்தும் கலைக் கருவூலமாகும். எழுபது அதிகாரங்களைக் கொண்ட அப்பகுதியில் முதல் இருபத்தைந்து அதிகாரங்களான் அரசியலை வகுத்துரைத்தார் அப்புலவர். அரசுக்கு அங்கமாக அமைந்த படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்னும் ஆறனுள் அரசற்கு இணையாய தலைமை சான்ற அமைச்சனின் இயல்புகளை அடுத்துள்ள பத்து அதிகாரங்களான் விளக்கினார். அமைச்சியலை விரித்துரைக்கப் புகுந்த பெருநாவலர், அமைச்சராயினர் தூது போதலும் உண்டென்னும் கருத்தானும் தலையாய தூதன் அமைச்சனோடு ஒப்பாவானாக லானும் தூதரியல்பை யோதும் ‘தூது’ என்னும் அதிகாரமொன்றை அமைச்சியலுட் புகுத்தியுள்ளார்.
பிரித்தலும் பொருத்தலும்
‘தூது’ என்னும் சொல்லுக்கு உரைவரைந்த பரிமேலழகர், ‘சந்திவிக்கிரகங்கட்கு’ வேற்று வேந்தரிடைச் செல்வாரது தன்மை’ என்று குறிப்பிட்டார். பொருத்தலும் பிரித்தலுமாய செயல்களின் பொருட்டு வேற்று வேந்தர்பால் செல்லுதற்குரியார் தூதர் என்று கருதினார் அவ்வுரையாசிரியர். பகைவர்க்குத் துணையாயினாரை அவரிற் பிரிக்க வேண்டின் பிரித்தலும், தம் பாலாரை அவர் பிரியாமல் கொடை இன்சொற்களால் பேணிக் கொள்ளுதலும், முன்னே தம்மினும் தம்பாலாரினும் பிரிந்தாரை மீண்டும் பொருத்த வேண்டின் பொருத்தலுமாய செயல்களே யாற்றுவதில் வல்லவராகத் தூதர் இருத்தல் வேண்டும். தன் பகைவரோடு சேராதாரைத் தனக்கு நட்பாக்கிக் கொள்ளும் செயல், தன் நண்பர்க்கு இனியவற்றைச் செய்தலினும் விரைந்து செய்யத் தகுவதொன்றும். இவ்வுண்மையைத் தூதராயினர் நன்கறிந்து பொருத்தல் தொழிலைப் புரிதல் வேண்டு மென்பார் பொய்யில் புலவர்.
‘நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல்’
என்பது அவர்தம் பொய்யா மொழி.
மூவகைத் தூதர்
திருவள்ளுவர் தூதரைத் ‘தான் வகுத்துக் கூறுவான், கூறியது கூறுவான்’ என இருவகைப்படுத் துரைத்தார். வடநூலார் இவ்விருவகையாருடன் ஓலை கொடுத்து நிற்பானையும் கூட்டித் தூதரைத் தலையிடை கடையென்று வகுத்துரைத்தனர். தான் வகுத்துக் கூறுவான் தலையாய தூதன் கூறியது கூறுவான் இடையாய தூதன் ; ஓலை கொடுத்து நிற்பான் கடையாய தூதன் என்பர்.
‘தானறிந்து கூறும் தலைமற் றிடையது
கோனறைந்த தீதன்று கூறுமால்-தானறியா
தோலையே காட்டும் கடையென்(று) ஒருமூன்று
மேலையோர் தூதுரைத்த வாறு’
என்னும் பெருந்தேவனாரின் பழந்தமிழ்ப் பாரத வெண்பாப் பாடல் வடநூலார் கருத்திற்கு அரண் கோலுவதாகும். தான் வகுத்துக் கூறுவாயை தலையாய தூதன் அமைச்சனுக்கு ஒப்பானவன். கூறியது கூறுவாயை இடைத் தூதன் அவனினும் காற்கூறு குணம் குறைந்தோன். கடைத்தூதனே தற்கால அஞ்சல்துறைக் கடைநிலை யூழியற்கு ஒப்பானவன்.
தலையாய தூதன் நிலை
தலையாய தூதனுக்கு அமைய வேண்டிய அரிய பண்புகளையெல்லாம் ஈரடியொருபாவில் ஆராய்ந்துரைக்கும் தெய்வப்புலவரின் திறம் எண்ணியெண்ணி இன்புறுதற் குரியதாகும்.
‘கடனறிந்து காலம் கருதி இடனறிக்
தெண்ணி யுரைப்பான் தலை’
என்பது அவர் வாய்மொழி. வேற்று வேந்தர்பால் தான் செயலாற்றும் முறைமையைத் தெரிதல், அவர் செவ்வி பார்த்தல், சென்ற கருமத்தைச் செப்புதற் கேற்ற இடமறிதல், சொல்லும் வகையினை முன்னே எண்ணியாய்தல் இவற்றையெல்லாம் நுண்ணிதின் நோக்கி யாய்ந்துரைக்கும் வாக்கு நலம் வாய்த்தவனே தலையாய தூதனாவான்.
திருவள்ளுவர் திறம்
வேற்றரசர்பால் தூது செல்வான், அவர் நிலையும், தன் அரசன் நிலையும், தன் நிலையும் தூக்கி, அவற்றிற்கேற்பக் காணும் முறைமையும், பேசும் முறைமையும் உடையனாதல் வேண்டும். அவ்வரசர் தன் சொல்லை ஏற்றுக்கொள்ளும் மனவியல்பைத் தெரிந்து பேசுதல் வேண்டும். தனக்குத் துணையாவார் உடனிருக்கும் இடனறிந்தும் இயம்புதல் வேண்டும். அவர்பால் தான் சொல்ல வந்ததனைச் சொல்லுந் திறமும், அதற்கு அவர் சொல்லும் மறு மொழியும், அதற்குப் பின் தான் சொல்லுவனவும் ஆயவற்றை மேன்மேல் தானே கற்பித்து வகைப்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வியல்புகளெல்லாம் ஒருங்கமையப் பெற்ற பெருங்கலைச் செல்வனே தலையாய தூதன் என்னும் உண்மையை இரண்டடிப் பாவில் எண்ணியமைத்துள்ள வள்ளுவரின் நுண்ணிய புலமைத்திறம் வியத்தற்குரியதன்றோ!
முதலிடைத் தூதர் பொதுவியல்
முதல் இருவகைத் தூதர்க்கும் பொதுவாக அமைய வேண்டிய இலக்கணங்களேயெல்லாம் இரு குறட்பாக்களால் வள்ளுவர் வகுக்கின்றார். தூது, பூணற்குரிய உயர்குடிப் பிறப்பு, தன் உறவினர் மாட்டு அன்புடைமை, வேந்தர் விழையும் பண்பு, தன் அரசன் மாட்டு அன்புடைமை, அவனுக்கு ஆவன அறியும் அறிவுடைமை, அவற்றை வேற்றரசரிடை விளம்புங்கால் ஆராய்ந்து கூறும் வன்மை ஆகிய ஆறு இயல்புகளும் தூதுரைப்பானுக்கு அமைய வேண்டியனவாகும். பின்னர்க் கூறிய மூவியல்பும் ‘இன்றி யமையாத மூன்று’ என்று குறிப்பார் திருவள்ளுவர்.
குலவிச்சை நலம்
அரசியலிற் பட்டறிவுடைய நன்மக்கட் குடியிற் பிறந்தோனாயின் முன்னோர் தூதியல் கேட்டறிந்த வகை இருப்பான். உறவினர்மாட்டு அன்புடையோனாயின் அன்னவர்க்குத் தீங்கு வாராமல் தான் பேணி யொழுகுவான் ; இன்றேல் தன்னைப் பேணியொழுகும் பெற்றியினனாவன். தூதராயினார் குடியிற் பிறந்தோனாயின் அது குலவிச்சையாய்க் கல்லாமற் பாகம் படுமன்றோ? ‘பண்பெனப் படுவது பாடறிந் தொழுகல்’ என்பர் ஆன்றோர். வழிவழியாகப் பல மன்னரைச் சேர்ந்தொழுகிய திறத்தான் வேந்தவாம் பண்பும் இயல்பில் அமைவதொன்றாம்.
மன்னர் மதிக்கும் மாண்பு
தூதனாவான் அமைச்சர்க்குரிய நீதி நூல்களையெல்லாம் ஓதியுணர்ந்து நூலாருள் நூல் வல்லனாக ஒளிர்தல் வேண்டும். இயல்பாகவே நுண்ணறிவைப் பெற்றவனாகவும், கண்டார் விரும்பும் தோற்றப் பொலிவைக் கொண்டவனாகவும், பலரோடும் பல காலும் ஆராயப் பெற்ற கல்விநலஞ் சான்றவனாகவும் திகழ்தல் வேண்டும். இவற்றால் அயல்வேந்தர் நன்கு மதிக்கும் திறம் தூதனுக்கு அமைவதாகும். அதனால் அவன் சென்ற வினை இனிதின் முடியும் என்பார்,
வேற்று வேந்தர்பால் தூதன் பேசவேண்டிய முறையினைப் பெருநாவலர் இரு பாக்களான் விளக்கியுள்ளார். அவரிடம் பல காரியங்களைக் கூற நேர்ந்த வழிக் காரண வகையால் தொகுத்துச் சொல்ல வேண்டும். அவர் விரும்பாத காரியங்களைக் கூற நேர்ந்த வழி வன்சொற்களை நீக்கி இன்சொற்களான் மனமகிழச் சொல்ல வேண்டும். தான் சென்ற கருமத்தைப் பகை வேந்தர் மனங்கொளச் சொல்ல வேண்டும். அவர் வெகுண்டு நோக்கின் அந்நோக்கிற்கு அஞ்சாமல் காலத்திற்கேற்ப அது முடிக்கத் தக்க உபாயத்தை ஓர்ந்துணரவேண்டும். இத்தகைய சொல்வன்மையால் தன் அரசனுக்கு நன்மையை நாடி விளைப்பவனே நற்றூதனாவான்.
இடைத்தூதன் இயல்பு
இடைப்பட்ட தூதனாய கூறியது கூறுவான் இலக்கணத்தை வள்ளுவர் மூன்று பாக்களான் வகுத்துரைத்தார். அவனை வழியுரைப்பான், விடுமாற்றம் வேந்தர்க்குரைப்பான் என்னும் தொடர்களால் குறிப்பிட்டார். அன்னானுக்குத் தூய்மை, துணைமை, துணிவுடைமை, வாய்மை, வாய்சோரா வன்கண்மை, அஞ்சாமை எ ன் னு ம் இயல்புகள் அமைதல் வேண்டும் என்றார். பொருளாசையினாலோ சிற்றின்பத்தில் கொண்ட பற்று மிகுதியினாலோ வேறுபடக் கூறாமைப் பொருட்டுத் தூய்மை வேண்டுவதாயிற்று. தூதன் தன் அரசனை உயர்த்துக்கூறிய வழி ‘எம்மனோர்க்கு அஃது இயல்பு’ எனக் கூறிப் பகை வேந்தன் வெகுளியை நீக்குதற் பொருட்டுத் தனக்கு அவனமைச்சர் துணை வேண்டுவதாயிற்று. இச்செய்தியினைக் கூறின் இவர் நமக்கு ஏதம் விளைப்பர் என்று அஞ்சி ஒழியாது அனைத்தும் உரைத்தற்குத் துணிவும் வேண்டுவதாயிற்று. யாவரானும் தெளியப்படுதல் நம்பப்படுதற் பொருட்டு வாய்மையும் வேண்டுவதாயிற்று. தனக்கு வரும் துன்பத்திற்கு அஞ்சித் தன் அரசனுக்குத் தாழ்வு தரும் சொல்லை மறந்தும் சொல்லாத திண்மை வேண்டுமாதலின் அதனை வாய்சோரா வன்கண்மை என்று குறிப்பிட்டார். வேற்று வேந்தரிடைக் கூறும் அச்சொல் தன்னுயிர்க்கு இறுதி தருமாயினும் அதற்கு அஞ்சி ஒழியாது, தன் அரசன் சொல்லியவாறே சொல்லும் உள்ளுரமும் வேண்டும். ஆதலின்,
என்று தூதிலக்கணத்தை அறுதியிட்டோதினார் திருவள்ளுவர்.
பெருந்தேவனார் பேசுவது
இவ்வாறு திருவள்ளுவர் வகுத்துரைத்த தூதிலக்கணத்தையெல்லாம், தொகுத்துப் பழந்தமிழ்ப் புலவராகிய பெருந்தேவனார் மூன்று வெண்பாக்களால் மொழியுந் திறம் படித்து இன்புறற் பாலதாகும்.
தமிழில் தோன்றிய புராணங்களுள் பழைமையும் தலைமையும் வாய்ந்த அரிய நூல் பெரிய புராணம் ஆகும். இறைவன் திருவருள் துணைகொண்டு செயற்கரிய செயலைச் செய்து பெரியராய சிவனடியார்கள் அறுபத்துமூவரின் அருள் வரலாற்றை விரித்துரைக்கும் பெருமை சான்றது அந்நூல். முக்கட் பெருமானாகிய சிவபிரானுக்குச் செங்கதிர் வலக்கண் என்று மதிக்கப் பெறும் மாண்புடையது. தெய்வ மணக்கும் செய்யுட்களால் பத்திச்சுவை நனிசொட்டச் சொட்டப் பாடப் பெற்ற பான்மையுடையது. இடைக்காலச் சோழப் பேரரசனாக இலங்கிய அநபாய குலோத்துங்கனின் அரும்பெறல் முதலமைச்சராகிய சேக்கிழார் பெருமானால் ஆக்கப்பெற்ற அருமையுடையது. இடைக்காலத்தில் எழுந்த அருந்தமிழ் இலக்கியங்களுள் சொல்நயம் பொருள் நயங்களால் இணையற்ற நூலாக இலங்குவது. தமிழகத்தின் இருண்ட கால வரலாற்றை விளக்கும் கலங்கரை விளக்கமாக விளங்குவது. தமிழகத்தின் ஐந்நூறு ஆண்டுச் சரிதத்தை அறிவிக்கும் வரலாற்று நூலாகவும் வயங்குவது. சைவ சமயத் தோத்திர நூல்களாம் பன்னிரு திருமுறையுள் இறுதித் திருமுறையாகத் திகழ்வது. தில்லைக் கூத்தனாகிய இறைவனே ‘உலகெலாம்’ என்று அடியெடுத்துக் கொடுக்க, அதனையே முதலாகவும் நடுவாகவும் இறுதியாகவும் கொண்டு பாடப்பெற்ற தெய்வ மாண்புடையது. ‘திருத்தொண்டர் புராணம்’ என்றும் வழங்கும் பெருமை பெற்றது. வரலாற்றுச் சமய நூல்
இத்தகைய பெரியபுராணம் பழங்கதை பாடும் பான்மையவும், இல்லது புனைந்துரைக்கும் இயல்பினவுமாய பிற புராண நூல்களைப் போலன்றி உண்மை வரலாற்றை உறுசுவை கனியத் தக்க சான்றுகளுடன் திண்மையுறப் பேசும் பெற்றியுடையது. மேலும் இந்நூல் சைவ சமய உண்மைகளை இனிது விளக்கும் தெய்வக் காவியமாகவும் திகழ்வதாகும்.
வித்திட்ட வித்தகர்
இந்நூல் தோன்றுதற்கு முதன்முதல் வித்திட்ட வித்தகர் ஆலால சுந்தரர் என்னும் சமய குரவராவர். அவர் பாடியருளிய திருத்தொண்டத் தொகைப் பதிகமே பெரிய புராணம் எழுதற்கு அடிகோலியது. அவர் உலகில் தோன்றுதற்கு உற்றதொரு காரணத்தை உரைக்கப் புகுந்த சேக்கிழார்,
“மாத வம்செய்த தென் திசை வாழ்ந்திடத்
தீதி லாத்திருத் தொண்டத் தொகைதரப்
போது வார் அவர் மேல்மனம் போக்கிடக்
காதல் மாதரும் காட்சியில் கண்ணினார்.”
என்று கட்டுரைத்தனர்.
ஆலால சுந்தரர் அவதாரம்
‘தென்றிசைத் திருநாடு பெருந்தவம் செய்த பெற்றியுடையது; அஃது இறையருள் நிறைந்து இனிது வாழ வேண்டும்; அதற்கு ஆங்குள்ள மக்களைத் திருவருள் நெறியிற் செலுத்தவல்ல ஞானச் செல்வர்கள் ஆண்டுத் தோன்றல் வேண்டும்; தங்கலம் எண்ணாது பிறர்நலமே பேணிப் பணி செய்து கிடப்பதே கடனாகப் பூண்ட திருத்தொண்டர்கள் வரலாற்றை அன்னார் அறிதல் வேண்டும்; அவர்களை வழிகாட்டிகளாகக் கொண்டு வாழ்வினை அருள் பெருக்கும் திருநெறியிலும், அறம் பிறழாப் பெரு நெறியிலும் செலுத்த வேண்டும்; இதற்காகவே இறையருள் உந்த ஆலால சுந்தரர் உலகில் தோன்றியருளினார்’ என்பர் சேக்கிழார்.
காவியத் தலைவர் சுந்தரர்
சைவ சமய குரவருள் ஒருவராய ஆலால சுந்தரரே பெரியபுராணக் காவியத்தின் தலைவராவர். மாதொரு பாகனார்க்கு வழிவழி அடிமை செய்யும் வேதியர் குலமாகிய ஆதிசைவ மரபில் சடையனார்க்கும் இசைஞானியார்க்கும் அரும்பெறல் மகவாய்ச் சுந்தரர் அவதரித்தருளினர். நம்பியாரூரர் என்னும் பிள்ளைத்திருநாமத்துடன் அவர் பேரழகின் கொழுந்தாய் வளர்ந்து வந்தார்; கண்கொள்ளாக் கவின் பொழிந்த திருமேனி கதிர்விரிப்ப, விண்கொள்ளாப் பேரொளிப் பெருவடிவினராய் விளங்கி வந்தார்.
அரசிளங்குமரர் சுந்தரர்
அவருடைய எழில் நலங்கண்ட திருமுனைப்பாடி நாட்டு மன்னனாய நரசிங்க முனையரையன், பெற்றவர் பால் வேண்டித் தன் மகனாகக் கொண்டு அரசிளங் குமரனாக வளர்த்து வந்தான். அதனால் நம்பியாரூரராய சுந்தரர் மன்னவர் திருவும் தங்கள் வைதிகத் திருவும் பொங்க வீறுசால் ஏறென விளங்கினர். இவரைத் திருவாரூர்த் தியாகேசர் ‘தோழமையாக உனக்கு நம்மைத் தந்தனம்’ என்று கூறியருளித் தமக்குத் தோழராக ஏற்றுக்கொண்டார். அதனால் சுந்தரரைச் சிவனடியார்கள் எல்லாம் ‘தம்பிரான் தோழர்’ என்றே தலைக்கொண்டு போற்றினர். பரவையார் சங்கிலியார் மணம்
இத்தகைய சிவபிரான் தோழராய சுந்தரர், திருவாரூர்ப் பெருமான் திருவருளால் அப்பதியில் தோன்றியருளிய பரவை நாச்சியாரைத் திருமணம் புரிந்து பெருமகிழ்வுடன் வாழ்ந்து வந்தார். இடையிடையே பல தலங்கட்கும் சென்று சிவபிரானைத் தரிசித்துச் செந்தமிழ்ப் பதிகம் பாடிவரும் பண்பினராய அவர் ஒருகால் திருவொற்றியூர் என்னும் சிவத்தலத்தையுற்றனர். ஆங்கு எழுந்தருளியுள்ள சிவபிரானுக்கும் தியாகேசன் என்பதே திருநாமம். திருவாரூர்த் தியாகன் திருவருளைப் பெரிதும்பெற்ற அருளாளராய சுந்தரர் ஒற்றியூர்த் தியாகனின் திருவருளையும் பெறுதற்குத் திருக்கோவிலுட் புகுந்தார். ஆங்குப் பூமண்டபத்தில் தங்கி இறைவனுக்குத் திருப்பள்ளித் தாமம் கொடுத்துக் கொண்டிருந்த சங்கிலியாரென்னும் மங்கை நல்லாரைக் கண்டு காதல் கொண்டார். அவரைத் திருவொற்றியூர்ப் பெருமானின் திருவருட் பெருந்துணை கொண்டு மணம் புரிந்து மகிழ்ந்தார்.
திருவாரூர்ப் பெருங்காதல்
ஒற்றியூரில் மற்றொரு மணம் பூண்ட சுந்தரர் பங்குனி யுத்தரத் திருநாள் நெருங்குவதை உணர்ந்தார். திருவாரூரில் பங்குனி யுத்தரத் திருநாள் பெருமுழக்கொடு நடக்கும். அவ்விழாவில் ஆரூர்த்தியாகேசன் அத்தாணி வீற்றிருக்கும் அழகு, கண்கொள்ளாக் காட்சியாகும். அந்நாளில் பெருமான் திருமுன்பு அவரின் காதல் மனைவியாராய பரவையாரின் ஆடலும் பாடலும் அணிபெற நிகழும். அவற்றையெல்லாம் பலகாற் கண்டு களித்த தொண்டராகிய சுந்தரருக்குத் திருவாரூர்க் காதல் கரைகடந்து பெருகியது. ‘முத்தும் முழு மணியும் ஒத்த திருவாரூர்ப் பெருமானை எத்தனை நாள் பிரிந்திருப்பேன்? ஏழிசையாய், இசைப்பயனாய், இன்னமுதாய், என்னுடைய தோழனுமாய், யான் செய்யும் துரிசுகளுக்கெல்லாம் துணையிருந்து, மாழையொண்கண் பரவையைத் தந்து ஆண்டானை எத்தனை நாள் ஏழையேன் பிரிந்திருப்பேன்?’ என்று ஏங்கிப் புலம்பியவாறே திருவாரூரை நோக்கிப் புறப்பட்டார்.
கண்களையிழந்து பெறுதல்
அவர் சங்கிலியாரைத் திருமணம் செய்து கொண்ட நாளில் மகிழடியில் அவருக்களித்த உறுதி மொழியை மறந்து பிரிந்த காரணத்தால் கண்ணொளி யிழந்து கலங்கினார். பிழுக்கை வாரியும் பால் கொள்ளும் பெற்றிமை போல் சிற்றடியேன் குற்றம் பொறுத்துக் குறை நீக்கியருள வேண்டுமென இறைவனை உள்ளங் கரைந்து கரைந்து, ஊனும் உயிரும் உருகத் தேனமுதத் திருப்பாட்டுக்களால் பரவிப் பணிந்து வேண்டினார். மூன்று கண்ணுடைய விண்ணவனே! அடியேன் இரு கண்களையும் பறிப்பது நினக்கு முறையானால் ஊன்று கோலேனும் உதவியருள்வாய் என்று வேண்டி, ஊன்றுகோலொன்றைப் பெற்று, அதன் துணை கொண்டு காஞ்சிமாநகரை அணுகினார். ஆங்குக் கச்சியேகம்பர் கருணையால் இடக்கண் பெற்றுத் திருவாரூரை யுற்றார். அவண் ஆரூர்த்தியாகன் அருளால் மற்றொரு கண்ணையும் பெற்று மகிழ்ந்தார்.
சுந்தார் விருப்பும் பரவையார் வெறுப்பும்
இழந்த கண்ணொளியினை இறைவனாகிய தோழரின் தண்ணருளால் இங்ஙனம் பெற்ற சுந்தரர், தம் முதல் மனைவியாராய பரவையாரைக் கண்டு மகிழும் விருப்பினராய்த் தமது வரவினை அடியார்கள் வாயிலாக அவருக்கு அறிவித்தருளினார். அதற்கு முன்பே சுந்தரர் ஒற்றியூரில் சங்கிலியாரை மணந்த செய்தியறிந்த பரவையார் சினங்கொண்டு மனஞ்சோர்ந்தார். பூம்படுக்கையிற் பொருந்தாது பெருந்துயர் கொண்டு வருந்தினார். அவர் கொண்டது பிணக்கோ பிரிவுத்துயரோ இன்னதென அறியக்கூடவில்லை.
நன்மக்கள் பாவையார் கருத்தைப் பகர்தல்
இவ்வாறு பரவையார் செயலற்று வருந்தும் நாளில் சுந்தரர் திருவாரூர்க்கு வந்த செய்தியைத் தெரிந்தார். அவரது வரவைத் தெரிவிக்க வந்த அடியார்கள் பரவையார் மாளிகையைக் குறுகினர், அது கண்ட பாங்கியர் கதவடைத்து வரவைத் தடுத்தனர். அவர்கள் சுந்தரர்பாற் சென்று பரவையார் நிலையைப் பகர்ந்தனர். அவர் புன் முறுவலுடன் உலகியலறிந்த நன்மக்கள் சிலரைப் பரவையார்பால் தூது விடுத்தனர். அன்னவரும் பரவையாரை அணுகி, இது தகாதெனப் பல வகையான் உலகியல் எடுத்தோதினர். எனினும் அவரது சீற்றம் அகலவில்லை. ‘குற்றம் நிறைந்த அவர் பொருட்டு நீவிர் இத்தகு மொழிகளை யியம்புவீராயின் என்னுயிர் நில்லாது’ என்று வெகுண்டுரைத்தனர். அவ்வுரை கேட்ட நன்மக்கள் அஞ்சி யகன்றனர்; சுந்தரரை யணுகிப் பரவையார் கருத்தை உரைத்தனர்.
தோழர் துயரும் இறைவன் தோற்றமும்
இங்நிலையில் சுந்தரர் துயர்க்கடல் நீந்தும் புணையறியாது உள்ளம் இனைந்தார். பேயும் உறங்கும் பிறங்கிருள் யாமத்தே உடனிருந்த அடியவர் குழாமெல்லாம் உறங்கவும் சுந்தரர் உறக்கங் கொள்ளாது தனித்திருந்து இறைவனை நினைந்து வருந்தினார்.
“என்னே உடையாய் ! நினைந்தருளாய்
இந்தயாமத் தெழுந்தருளி
அன்னம் அனையாள் புலவியினை
அகற்றில் உய்ய லாம்அன்றிப்
பின்னை இல்லைச் செயல்” என்று
பெருமான் அடிகள் தமைநினைந்தார்.
அடியார் இடுக்கண் தரியாத இறைவன் தம் தோழராய சுந்தரர் குறையை அகற்றுதற்கு அவர் முன் தோன்றினார். நெடியோனும் காணாத அடிகள் படிதோய நின்ற பரமனைக் கண்ட வன்றொண்டராய சுந்தரர் அந்தமிலா மகிழ்ச்சியினால் உடம்பெலாம் மயிர்க்கூச்செறிய, மலர்க்கைகள் தலைமேற் குவிய அவர் அடித்தாமரையில் விழுந்து பரவிப் பணிந்தார்.
பரவையால் தூது செல்லப் பணிதல்
உடுக்கை இழந்தவன் கையைப் போலத் தோழர்க் குற்ற இடுக்கண் தொலைப்பதன்றோ உண்மைத் தோழரின் உயரிய செயலாகும் ! தம்மைத் தோழராகச் சுந்தரர்க்குத் தந்தருளிய பெருமான் நண்பரை நோக்கி, ! “நீ உற்ற குறை யாது?” என்று வினவியருளினார். “திருவொற்றியூரில் அடியேன் நீரே பேரருள் செய்ய நேரிழையாம் சங்கிலியை மணஞ் செய்த சீரெல்லாம் பரவை அறிந்து, தன்பால் யான் எய்தின் உயிர் நீப்பேன் என்று உறுதி பூண்டாள் ; நான் இனிச் செய்வது யாது? நீரே என் தலைவர் ; நான் உமக்கு அடியேன் ; நீர் எனக்குத் தாயிற் சிறந்த தோழரும் தம்பிரானுமாவீர் என்பது உண்மையானால் அறிவிழந்து உளமழியும் எளியே னது அயர்வு நீக்க, இவ்விரவே பரவையாற் சென்று அவளது ஊடல் ஒழித்தருளும்” என்று வேண்டினார்.
தோழர்க்குத் தூதராய்ப் போதல்
தோழரின் வேண்டுகோளை ஏற்றருளிய பெருமான் “நீ துன்பம் ஒழிவாய்; யாம் ஒரு தூதனாகி இப்பொழுதே பரவைபாற் போகின்றோம்” என்று அருள் புரிந்தார். அது கண்ட சுந்தரர் அளவிறந்த களிப்பினராய்ப் பெருமான் திருவடியில் விழுந்து வணங்கிப், ‘பரவையின் மாளிகைக்கு விரைவிற் செல்வீர்!’ என்று வேண்டினார். தொண்டனார் துயர் நீக்கத் தூதராய் எழுந்தருளிய ஆரூர்ப் பெருமான் பூதகண நாதர்களும் புங்கவரும் யோகியரும் புடை சூழப் புனிதமிகு வீதியினிற் புறப்பட்டார். அவ் வேளையில் திருவாரூரில் உள்ள ஒரு வீதியிலேயே சிவலோகம் முழுதும் காணுமாறு உளதாயிற்று.
ஆதிசைவர் திருக்கோலம்
பரவையார் திருமாளிகையைக் குறுகிய பெருமான் உடன் வந்தார் குழாமெல்லாம் புறத்தே நிறுத்தி, ஆரூரில் தம்மை அர்ச்சிக்கும் ஆதிசைவரின் கோலத்தில் மாளிகையின் வாயிலையடைந்தார். அவண் நின்று ‘பரவாய்! கதவம் திறவாய்’ என்று அவர் அழைத்த வளவில், துயிலின்றி அயர்ந்துழலும் பரவையார், நம்பெருமானுக்குப் பூசனை புரியும் புரிநூல் மணி மார்பர் குரல்போலும் என்று துணிந்தார்; இவர் நள்ளிருளில் இவண் நண்ணியதன் காரணம் என்னையோ ? என்று எண்ணிப் பதை பதைத்து வாயில் திறந்தார். அவரை வணங்கி “முழுதும் உறங்கும் பொழுதில் என்னை ஆளும் இறைவனே எழுந்தருளியது போல நீவிர் எய்தியதன் காரணம் யாதோ?” என்று வேண்டினார்.
தூதரின் உரையாடல்
தோழர்க்குத் தூதனாய் வந்த பெருமான், “நங்கையே! நான் வேண்டுவதனை நீ மறுக்காது செய்யின் வந்த காரியத்தை விருப்போடு உரைப்பேன்” என்றார். “நீர் வந்த காரியத்தைக் கூறி யருளும்; அஃது எனக்கு இசையுமாயினும் இயலமாயினும் செயல் புரிவேன்” என்று பரவையார் மறுமொழி பகர்ந்தார். ‘நங்கையே ! நம்பியாரூரர் இங்கு வருதற்கு நீ இசைய வேண்டும்’ என்றார் இறைவன். “மிகவும் நன்று! நும் தகவுக்கு இம் மொழி அழகிதே ! பங்குனித் திருநாளுக்குப் பண்டு போல் வருவாராய் ! என்னைப் பிரிந்து ஒற்றியூரை உற்று, அங்குச் சங்கிலியாற் கட்டப் பெற்றவர்க்கு இங்கொரு சார்பும் உண்டோ ? நீர் இந் நள்ளிருளில் வந்து நவின்ற காரியம் நன்று நன்று” என்று பரவையார் இயம்பினர்.
பரவையார் மறுப்புரை
அவர் மொழிகேட்ட துரதர், “நங்கையே ! நம்பியாரூரர் செய்த குற்றங்களை மனத்திற் கொள்ளாமல் நீ கொண்ட வெகுளி நீங்கி, இருவர் துயரையும் களை வதற்கன்றோ நான் நின்னை வேண்டிக்கொண்டேன்; ஆதலின் நீ மறுப்பது சிறப்பன்று” என்று குறிப்பிட்டார். அது கேட்ட பரவையார் பெருஞ் சினங் கொண்டு, “நீர் இங்கு வந்த காரியம் இஃதேயாயின் நும் பெருமைக்குப் பொருந்தாது; ஒற்றியூரில் மற்றொருத்திக்கு உறுதி நல்கியவர் இங்கு வருதற்குச் சிறிதும் இசையேன்” என்று மறுத்துரைத்தார். இறைவன் திருவிளையாடல்
பரவையாரின் மறுப்புரை கேட்ட பரமன் தமது உண்மைக் கோலத்தைக் காட்டாமல் உளத்துள் நகைத்து அவ்விடத்தை விட்டு அகன்றார். தோழரின் காதல் வேட்கையைக் காணும் விருப்பினராய் விரைந்து வெளிப்போந்தார். தம்பிரானைத் தூதனுப்பிய நம்பியாரூரரோ அவரது வருகையை ஆவலுடன் எதிர்நோக்கியிருந்தார். “நான் அறிவில்லாமல் இறைவனைப் பரவைபால் புலவி நீக்கத் தூது விடுத்தேனே” என்று எண்ணிப் புலம்பினார். ‘அப்புண் ணியர் அவள் மனையில் நண்ணி என் செய்தாரோ? பெருமானே என்பொருட்டுத் தூது வந்திருப்பதைக் கண்டால் அப்பேதைதான் மறுப்பாளோ? அவளது ஊடலை ஒழித்தாலன்றி அவர் மீளார்’ என்று தம்முட் பேசித் தூதரை எதிர்கொள்ள எழுந்து வெளியே செல்வார். அவரது வரவைக் காணாது அயர்வுடன் மயங்கி நிற்பார். கண்ணுதற் பெருமான் காலந் தாழ்த்தனரே என்று கவல்வார்.
தூதர் ஓதிய செய்தி
தூது சென்ற இறைவன் துன்னும் பொழுதில் சுந்தரர் அணைகடந்த வெள்ளம் போல் ஆர்வம் பொங்குற எழுந்து சென்று அவரை எதிர்கொண்டு தொழுதார். பெருமான் திருவிளையாட்டை அறியாத தோழர், “முன்னாளில் என்னை நீர் ஆட்கொண்டதற்கு ஏற்பவே இன்று அருள் செய்தீர்” என்று மகிழ்வொடு புகன்றார்.அதுகேட்டுப் புன்முறுவல்கொண்ட புரிசடைப் பெம்மான், “நின் விருப்பின் வண்ணம் நங்கைபால் நண்ணி நாம் எத்தனை சொல்லியும் ஏற்காமல் வன்சொல்லே வழங்கி மறுத்தாள்” என்றார். சுந்தார் கொண்ட வெந்துயர்
இறைவன் இவ்வாறு இயம்பிய மொழி கேட்டுத் தோழர் துணுக்குற்றார், “நும் உரையையோ அடியாளான பரவை மறுப்பாள்? நாங்கள் யாருக்கு அடிமை யென்ற உண்மையை இன்று நீர் கன்று அறிவித்தீர்! அமரர்கள் உய்யவேண்டி ஆலத்தை உண்டருளினர்! திரிபுரத்தை அழித்து அவுணரைத் தவிர்த்து ஆட்கொண்டீர்! மார்க்கண்டனுக்காகக் காலனைக் காலாற் கடிந்து கருணை செய்தீர்! இன்று யான் உமக்கு மிகையானால் என் செய்வீரோ? நீர் என் அடிமையை இன்று விரும்பாவிடின் அன்று வலிய ஆட்கொண்டது எற்றுக்கு? என் துயரெல்லாம் நன்குகண்ட நீர் நங்கைபாற் சென்று அவள் சினம் தணித்து என்னை மனம் கொள்ளுமாறு செய்யீராகில் உயிர்விடுவேன்” என்று உரைத்துப் பெருமான் திருவடியில் விழுந்தார்.
மீண்டும் ஆண்டவன் தூது
நம்பியாரூரர் தளர்ந்து விழும் நிலைமையினை நம் பெருமான் கண்டருளினார். ‘நாம் மீண்டும் பரவைபால் சென்று வேண்டி நீ அவளை அடையுமாறு செய்வோம், துயர் நீங்குக’ என்று கூறித் திரும்பவும் புறப்பட்டார். அவர் அருளிய இன்சொல்லாகிய நல்லமுதம் தோழர்க்குப் புத்துயிர் நல்கியது. அடியவனைப் பயங்கெடுத்துப் பணி கொள்ளும் திறம் இஃதன்ருே!’ என்று போற்றிப் பணிந்தார். நம் பெருமான் பரவையார் மாளிகை நோக்கி கடந்தார்.
மாளிகையில் அதிசயம்
இஃது இங்ஙனமாகப் பரவையார் மாளிகையில் ஆதிசைவராகத் தூது வந்தவர் ஆரூர்ப் பெருமானே யென்னும் உண்மை புலனாகுமாறு அதிசயம் பல தோன்றின. அது கண்டு வியந்த பரவையார், “எம்பிரானே தம்பிரான் தோழர்க்குத் தூதராய் எழுந்தருளவும் அதனை அறியாது உரைமறுத்தேனே! ஐயோ! பாவியேன் என் செய்தேன்?” என்று ஏங்கியவராய் வாயிலில் வந்து நின்று பாங்கியரோடு கலங்கினார்.
மாளிகை-கயிலை மாமலை
அவ்வேளையில் கொன்றை வேணியார், தம்மை பறியும் செம்மைக் கோலமுடன் தேவரும் முனிவரும் பூத நாதரும் புடைசூழ வந்து, பரவையார் மாளிகை புட் புகுந்தார். இவ்வாறு,
என்று பாராட்டிணார் சேக்கிழார். பரவையார் திரு மாளிகை கயிலைத் திருமலையெனக் காட்சியளிக்கப் பெருமானை எதிர்கொண்டு வரவேற்ற பரவையார் மெய்யுறு நடுக்கத்தோடும் மிக்கெழும் மகிழ்ச்சியோடும் அவர் அடியிணையில் விழுந்து பணிந்தார்.
பாவையார் பணிவுரை
அப்போது தூதராய் வந்த பெருமான், “நம்பியாரூரன் உரிமையோடு என்னை மீளவும் ஏவியதனால் உன்பால் வந்தோம்; நீ முன்புபோல் மறுக்காமல் அன்புடன் நின்பால் அவன் வருதற்கு இசைதல் வேண்டும்” என்று வேண்டியருளினார். ஆரூர்ப் பெருமான் அருள்மொழி கேட்ட பரவையார் விழிநீர் பொழியத் தொழுது விண்ணப்பம் செய்தார்.
“ஒளிவளர் செய்ய பாதம்
வருந்தவோர் இரவு மாறா
தளிவரும் அன்பர்க் காக
அங்கொடிங் குழல்வீ ராகி
எளிவரு வீருமானால்
என்செய்கேன் இசையா(து)”
என்றார். ‘தோழராம் அடியவர் பொருட்டு நடுநிசிப் பொழுதில் இருமுறை எளியராய்த் தூது வருவீராயின் அடியேன் இசையாது என் செய்கேன்’ என்று பணிந்த மொழி பகர்ந்து நின்றார்.
தோழரின் துயரை நீக்கல்
அது கேட்ட பெருமான், “நங்கையே! நின் தன்மைக்கேற்ற நன்மொழியே நவின்றாய்” என்று பரவையாரின் பண்பினைப் பாராட்டி எழுந்தார். தூது சென்ற காரியத்தைத் தீதின்றி இனிது முடித்த இறைவன் விரைந்து திருக்கோவில் தேவாசிரிய மண்டபத்தைக் குறுகினார். அவரைத் தூதாக விடுத்துத் துயில்கொள்ளாமல் துயருடன் உழன்றுகொண்டிருக்கும் தொண்டரை அணுகினார். ‘நம்பியாரூர ! நங்கையின் சினத்தைத் தணித்தோம்; இனி நீ போய், அவளை எய்துவாய்’ என்று அருள்புரிந்தார். அது. கண்டு சிங்தை களிகூர்ந்த சுந்தரர், “எந்தை பிரானே! எனக்கு இனி இடர் ஏது?” என்று அவர் அடிமலரில், விழுந்தார். சேயிழைபாற் செல்லுகவென அருள் கூர்ந்து ஆரூர்ப்பெருமான் திருக்கோவிலுட் புகுந்தார்
மாளிகையில் சுந்தார்க்கு வரவேற்பு
நம்பியாரூரர் எம்பிரான் இன்னருளை வியந்து மகிழ்ந்தவராய்ப் பரவையார் திருமாளிகைக்குப் புறப்பட்டார். காலப்பொழுதில் கடிமணத் தென்றல் எதிர்கொண்டு வரவேற்க, அடியவராய சுந்தரர் நறுமணப் பொருள்களும் கன்மணிப் பூண்களும் பொன்னவிர் ஆடைகளும் பரிசனம் ஏந்திச் செல்ல இனிது கடந்து சென்றார். இவரது வருகையை எதிர்நோக்கிய பரவையாரும் தம் திருமாளிகையை அணி செய்து நெய்விளக்கும் நிறைகுடமும் நறுந்தூபமும் நிரைத்து வைத்தார். வீதியிற் பூவும் பொற் சுண்ணமும் வீசிப் பாவையர் பலர் பல்லாண்டிசைத்துச் சுந்தரரை வரவேற்கப் பரவையாரும் மாளிகையின் மணிவாயில் முன்பு வந்து அன்போடு எதிரேற்றார்.
சிரிந்தவர் கூடினர்
வன்றொண்டர் தம் வாயிலில் வந்து நின்றபோது கண்ட பரவையாரின் உள்ளத்தில் காதல் வெள்ளம் கரைபுரண்டது. நாணும் அச்சமும் பெருகக் கரங் கூப்பிக் கணவரை வணங்கினார். சுந்தரரும் அவர் சேந்தளிர்க் கரம்பற்றிச் சந்தமுற மாளிகையுட் சார்ந்தார். இருவரும் தம்பிரான் திருவருள் திறத்தைப் போற்றி மகிழ்ந்து இன்ப வெள்ளத்துள் இனிது மூழ்கினர். ஒருவருள் ஒருவர் மேவும் நிலைமையில் இருவரும் உயிர் ஒன்றேயாயினர். பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ ?
சிவபிரான் தலைத் தூதர்
இவ்வாறு தம்பிரான் தோழராய சுந்தரருக்குக் காதல் தூதராய்ப் பரவையார் மனைக்கு நள்ளிருளில் இருமுறை கடந்து சென்று அவர்களை ஒன்று சேர்க்க முயன்ற சிவபிரான் திருவருள் திறத்தை என் னென்பது !
--------------
4. அதியமான் அனுப்பிய தூதர்
அதியமான் சிறப்பு
கடைச் சங்க காலத்தில் வாழ்ந்த கொடை வள்ளல்கள் எழுவருள்ளே அதியமான் நெடுமான் அஞ்சி என்பானும் ஒருவன். அவன் அதியர் என்னும் குறுநில மன்னர் குடியிற் பிறந்த சிறந்த கொற்றவன். அவன் தனது ஈகை நலத்தாலும் வீர வலத்தாலும் இணையற்று விளங்கினான். அதனால் அதியர் குடிப்புகழ் சிறப்புற்று ஓங்கியது. குடிப்பெருமையைப் பெருக்கிய அதியமானைப் புலவர் பலரும் அதியமான் நெடுமான் என்று அகமகிழ்ந்து போற்றினர்; அவனது இயற்பெயர் அஞ்சி என்பதே. அவன் மழவர் என்னும் வீரர் குலத்திற்குத் தலைவனாதலின் மழவர் பெருமகன் என்றும் அழைக்கப்பெற்றான்.
நாடும் நகரும்
சேலம் மாவட்டத்தில் இற்றை நாளில் தர்மபுரி என்று வழங்குறும் தகடூரைத் தலைநகராகக் கொண்டு அதியர் என்னும் அரச மரபினர் ஆண்டு வந்தனர். அவர்கள் சேர மன்னருடன் பேருறவு பூண்டு ஒழுகு பவராதலின் அச்சேரர்க்குரிய பனம்பூ மாலையையே தாமும் மாலையாகப் புனைந்து கொள்வர். பெறுதற்கரிய இனிமை வாய்ந்த கரும்பைப் பிற நாட்டினின்றும் முதன் முதல் தமிழகத்திற்குக் கொண்டு வந்த பெருமை இவ்வதியர்க்கு உரியதே. குதிரை மலையும் அதனைச் சூழ்ந்த கொல்லிக் கூற்றமும் இவருக்குரிய நாடாய் இருந்தன. வீரமும் புகழும்
இத்தகைய பெருமை சான்ற அதியர் மரபிலே பிறந்த அஞ்சி எவர்க்கும் அஞ்சாத ஆண்மையுடையான்.
“பிறைமருள் வான்கோட்டு அண்ணல் யானை
சினமிகு முன்பின் வாமான் அஞ்சி”
என்று அதியமான் படைவலத்தைப் பாராட்டிப் பேசினார் ஆசிரியர் மாமூலனார். இவனுக்கு எழினி என்ற மற்றொரு பெயரும் வழங்கும். இக்கோமானைப்பாடிய கொழி தமிழ்ப் புலவர் பலராயினும் பாரியைப் பாடிய கபிலரைப் போலவும் ஆயைப் பாடிய மோசியைப் போலவும் இவன் புகழொளி எங்கும் பெருகுமாறு விரிவாகப் பாடியவர் ஒளவையார் ஒருவரே.
ஒளவையார் அமைச்சராதல்
அதியமான் நெடுமான் அஞ்சியின் படைவலத்தையும் கொடை நலத்தையும் பலர் வாயிலாகக் கேட்டுவந்த தமிழ் மூதாட்டியாராய ஒளவையார் அவன் வாழும் தகடூரை நாடிச் சென்றார். அவனைக் கண்டு தண்டமிழ்ப் பாக்களால் அவன் புகழைப் பாடினார். ஒளவையாரின் செவ்விய புலமையையும் செய்யுள் நலனையும் கண்டு அதியமான் கழிபேருவகை கொண்டான். அவரைத் தன் அரசவைப் புலவராகவும் அமைச்சருள் ஒருவராகவும் ஏற்றுப் போற்றி மகிழ்ந்தான்.
அதியமான் ஒளவையார் நட்பு
அதியமான் தன் படைவலியால் பன்னாட்டுமன்னரையும் வென்று பகைவரைப் பெருக்கி வைத்திருந்த காரணத்தால் ஒளவையாரின் அறிவுரை அவனுக்கு மிகவும் இன்றியமையாததாக இருந்தது. அதனை உணர்ந்த அதியமான் அவரை அமைச்சராக ஏற்றுக் கொண்டதில் சிறிதும் வியப்பில்லையன்றோ? அதனாலேயே அவன் ஒளவையாரைச் சிறுபொழுதும் பிரிதற்கு விழைந்தானல்லன். அவர் எப்பொழுதும் அருகிருந்து அறிவுரையும் ஆறுதலுரையும் தனக்குக் கூறிக்கொண்டிருத்தலைப் பெரிதும் விரும்பினான்.
பாணர்குலப் பாவையர்
அதியமான் அவையில் அமைச்சராகவும் அரசவைப் புலவராகவும் விளங்கிய ஒளவையார் பாணர் மரபில் தோன்றிய பாவையாராவர். பாணர் குலத்தில் உதித்த மகளிரைப் பாடினியர், விறலியர் என்னும் பெயர்களால் குறிப்பர். பண்ணமையப் பாடும் இன்னிசை வல்ல மகளிர் பாடினியர் எனப்படுவர். பாணர் பாடும் பாடலுக்கேற்ப இனிதாடும் இயல்பினர் விறலியராவர். பாடினியர் தாமே பாடிக் கொண்டு ஆடும் பண்புடையாராவர்.
ஒளவையார் பரிசில் வாழ்க்கை
ஒளவையார் இளமையிலேயே ஆடலும் பாடலும் வல்ல அரிவையராய்ப் புலமை மிக்கு விளங்கினார். அவருடைய அறிவும் திறலும் கண்ட ஆடவர் ஆவரை மணஞ் செய்து கொள்ள அஞ்சினர் போலும்! அன்றித் தம் புலமையையும் திறமையையும் உலகிற்கு நன்கு பயன்படுத்த வேண்டும் என்ற அருள் உள்ளத்தால் அவர் இல்லற வாழ்வைக் கொள்ளாதிருந்தனரோ? இன்னதென அறியோம்.அவர் இளமையிலேயே துறவுநெறி பூண்டு தூய வாழ்வை மேற்கொண்டு ஒழுகினார். நல்லிசைப் புலமை மெல்லியலாராய் நாடெங்கும் சுற்றி மன்னர்களையும் வள்ளல்களையும் இன்னிசைப் பாக்களால் புகழ்ந்து பாடினார். அவர்கள் அன்புடன் வழங்கிய கொடைப் பொருளைப் பெற்றுத் தம் வாழ்வைத் தடையிலாது நடத்தி வந்தார்.
அமுத நெல்லிக் கனி
இத்தகைய பரிசில் வாழ்க்கையையுடைய பைந்தமிழ் மூதாட்டியாரை அதியமான் தனக்கு அறிவுரை வழங்கும் அமைச்சராகப் பெற்றான். அவனுக்கு ஒரு நாள் அருமையானதொரு கெல்லிக்கனி கிடைத்தது. அஃது அவன் நாட்டு மலையொன்றன் உச்சியில் மக்கள் ஏறுதற்கொண்ணாத உயரத்தில் அமைந்த பிளவில் முளைத்த நெல்லி மரத்தினின்று அரிதாகக் கிடைத்தது. அக்கனி பன்னிரண்டு ஆண்டுகட்கு ஒரு முறை பழுப்பதாய சிறப்புடையது. அதனை உண்டவர் நெடுநாள் உடலுரத்துடன் ஊறின்றி வாழ்வர்.
ஒளவையாருக்குக் கனியை அளித்தல்
அத்தகைய அருங்கனியைப் பெற்ற அதியமான் தன் அரசவையில் வீற்றிருந்த அருந்தமிழ் மூதாட்டியாரை நோக்கினான். இதனை இப்பெருமாட்டியார் உண்டு பல்லாண்டு வாழ்வாராயின் எத்தனை எத்தனை உண்மைகளை மக்கள் உய்யுமாறு உதவுவார்! இதனை நாம் உண்டு நெடுநாள் வாழ்ந்தோமாயின் அடுபடைகொண்டு அளவற்ற உயிர்களைக் கொன்று குவிப்போம். ஆதலின் இதனை ஒளவையாரே அருந்த வேண்டுமெனத் துணிந்தான். உடனே அதனை ஒளவையார் கரத்திற் கொடுத்து உண்ணுமாறு வேண்டினான். ஒளவையாரின் வியப்பு
பிறர் அன்புடன் அளிக்கும் பொருள் எதுவாயிலும் இன்புடன் ஏற்றுக் கொள்ளும் நல்லியல்பினராகிய ஒளவையார் அதனை இகழாது மகிழ்வுடன் வாங்கி உண்டார். அதனை உண்டபின் அதன் அமுதனைய அருஞ்சுவையினைக் கண்டார். நல்லமுதனைய இந்நெல்லிக்கனியின் இனிய சுவை புதுமையாக வன்றோ இருக்கின்றது என்று வியந்தார்.
அதியமான் அன்பும் பண்பும்
ஒளவையாரின் வியப்பினைக் கண்ட அதியமான் அதன் சிறப்புக்களை விரித்துரைத்தான். “இச்செய்திகளை முன்னரே யான் மொழிந்திருப்பேனாயின் நீர் இக் கனியினை அருந்தியிருக்க மாட்டீர்; நும்மைப் போலும் நுண்ணறிவாளர் பன்னெடுங்காலம் இப் பாருலகில் வாழ வேண்டும் என்னும் பேரார்வத்தாலேயே அதனை நுமக்களித்தேன்” என்று உவகையுடன் உரைத்தான். அதியமானின் பண்புமிக்க அன்புரைகளைக் கேட்டு அகமுருகிய தமிழ் மூதாட்டியார் அவனது உயர்ந்த பண்பை உளமாரப் பாராட்டிச் சிறந்ததொரு செந்தமிழ்ப் பாவால் அவனை வாழ்த்தினார்.
“போரடு திருவிற் பொலந்தார் அஞ்சி
பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீல மணிமிடற் றொருவன் போல
மன்னுக பெரும நீயே தொன்னிலைப்
பெருமலை விடரகத் தருமிசைக் கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது
ஆதல் நின்னகத் தடக்கிச்
சாதல் நீங்க எமக்கீத் தனையே”
“பகைத் தெழுந்த போரில் எதிர்த்து வந்த மன்னரை வென்று வெற்றிமாலை புனையும் அஞ்சியே! பால் போலும் வெண்மையான பிறைமதியைச் சடை முடியில் அணிந்துள்ள ஆலமுண்ட நீலகண்டனைப் போல நீ எந்நாளும் மன்னி வாழ்வாயாக பெரிய மலையின் அரிய பிளவில் தோன்றிய நெல்லி மரத்தில் பல்லாண்டுகட்கு ஒரு முறை பழுப்பதாய கனியின் சிறப்பினை என்பாற் சிறிதும் குறிப்பிடாது மனத்தின் கண் மறைத்தவனுய் யான் இறவா திருக்குமாறு அருளுடன் ஈந்தனையே! நினது அன்பை என்னென் பேன்!” என்று அவனை வாயார வாழ்த்தி மகிழ்ந்தார்.
புலவர்கள் போற்றுதல்
அதியமான் அறிவிற் சிறந்த ஒளவையாருக்கு அமுத நெல்லிக்கனி அளித்த அருஞ்செயலைப் பிற புலவர்களும் வியந்து பேசினர். ‘மால்வரைக், கமழ் பூஞ்சாரல் கவினிய நெல்லி, அமிழ்து விளை தீங்கனி ஒளவைக்கு ஈந்த அதிகன்’ என்று நல்லுரர் நத்தத்தனார் என்னும் புலவர் நயந்து போற்றினார். இனிய கனியைப்பற்றிக் கூறவந்த உரையாசிரியராகிய பரிமேலழகர், ‘ஒளவையுண்ட நெல்லிக்கனி போல அமிழ்தாவனவற்றை என்று பாராட்டினர்.
ஒளவையாரின் அரசியற் பணி
கொடை வள்ளலாகிய அதியமான் உடல்வலியும் படைவலியும் பெரிதும் படைத்தவன். அதனால் அவன் போர்வேட்கை மிக்க பெருவீரனாய் விளங்கினான். அவனுக்குப் பகைவரும் பலராயினர். அப்பகைவரால் அதியமானுக்கு ஊறு நேராவாறு காப்பதைத் தமது கடமையெனக் கருதினார் ஒளவையார். தம்மைப் பேணும் மன்னனும் அவன் நாட்டு மக்களும் அமைதியான நல்வாழ்வை நடத்த வேண்டுமே என்று கருத்துட் கொண்டார். ஆதலின் தகடூர் நாட்டின் மீது படையெடுக்க முற்படும் பகைவர்களைப் பரிசிலாள ரைப் போல் சென்று கண்டு நல்லுரை சொல்லி வருவார். அதியமான் படைவலியை எடுத்துரைத்துப் பகைவரை அச்சுறுத்தி வருவார். அம்முறையில் ஒளவையார் அதியமான் பகைவர்க்குக் கூறிய அறிவுரைகள் பலவாகும்.
அதியமான் பகைவர்க்கு அறிவுரை
அதியமான் தன்பால் வரும் இரவலர்க்கு எண்ணற்ற தேர்களைப் பரிசாக ஈந்து மகிழ்வான். புலவர்கள் அவன் தேர்ப்படைக்கு உவமையாக மாறாது பெய்யும் மழைத்துளிகளைக் குறிப்பர். அங்ஙனமாயின் அவன் தேர்ப்படையின் அளவை என்னால் இயம்பலாகுமோ? அவன் நாட்டுத் தச்சர் ஒவ்வொருவரும் நாளொன்றிற்கு எட்டுத் தேர்களைக் கட்டுற அமைக்கும் தொழில் திறமுடையார். கோடுகளில் செறித்த இருப்புத் தொடிகள் பிளக்குமாறு பகைவர்தம் கோட்டை வாயிற் கதவைக் குத்திச் சிதைக்கும் குன்றனைய யானைப் படையை மிகுதியாகக் கொண்டவன். போர்க்களத்திற் கூடித்தாக்கும் கொடும்படை வீரர்களின் மார்பு குலைந்து பிளந்து சிதையுமாறு மிதித்தோடும் குதிரைப்படையினைப் பெரிதும்பெற்றவன். பகைவரை வெட்டி வெட்டிக் கூர்மை மழுங்கிய வாளையும், குத்திக்குத்திக் கோடும் நுதியுஞ் சிதைந்து செப்பனிடங் பெற்ற வேலையும் தாங்கிய வீரர்கள் அவன்பாற் கடல்போற் பரந்து காணப்படுவர். அவ்வீரர்கள் அடிக்குங் கோலுக்கு அஞ்சாது எதிர் மண்டும் அரவினையொத்த ஆற்றல் படைத்தவர். இத்தகு பெரும் படையினைப் பணிகொள்ளும் பேராற்றல் படைத்தவன் அதியமான். ஆதலால் பகைவர்களே ! அதியமான் இளையன், எளியன் என்று இகழன்மின்! அவனோடு எதிர்த்துப் போரிட்டு வெல்லுவோம் என்று எண்ணன்மின்! உங்கள் நாடும் நகரும் உங்களுக்கே உரியனவாக இருக்க விரும்பின், அவன் வேண்டும் திறை கொடுத்து உய்ம்மின்! மறுப்பின் அவன் விடான். நான் கூறும் இந் நல்லுரைகளைக் கேட்டு நடவா தொழிவீராயின் நீவிர் நுந்தம் உரிமை மகளிரைப் பிரிந்து உயர்ந்தோர் உலகம் புகுவது உறுதி.
அதியமானுக்கு அறிவுரை
இவ்வாறு அதியமானின் பகைவர்பால் அமைதி விளைக்கும் தூதராய்ச் சென்று அறிவுரை கூறிவந்த ஒளவையார், அவ்வதியமானுக்கும் அறிவுரை கூறத் தவறினரல்லர். “அரும்போர் வல்ல அதியமானே! வலிமிக்க புலியொன்று சீறியெழுந்தால் அதனை எதிர்த்துத் தாக்கவல்ல மான் கூட்டமும் இம் மா நிலத்தில் உண்டோ? வானில் செங்கதிரோன் வெங்கதிர் பரப்பியெழுந்த பின்னர் இருள் நீங்காது நிற்பதுண்டோ? பாரும் அச்சும் ஒன்றோடொன்று உராயுமாறு மிக்க பாரத்தை யேற்றிய வண்டி மணலில் ஆழப்புதைந்த வழியும் அப்பாரம் கண்டு கலங்காது, மணல் பரக்கவும் கல் பிளக்கவும் செல்ல வல்ல எருதிற்குப் போதற்கரிய வழியிதுவென்று கூறத்தக்க வழியும் உளதோ? இவை போன்றே நீ போர்க்களம் நோக்கிப் புறப்படின் நின்னை எதிர்க்க வல்ல வீரரும் உளரோ?” என்று அதியமானுக்கும் அறிவுரை கூறி, அவனது போர் வேட்கையைத் தணிக்க முயல்வார்.
ஒளவையாரின் துணிவும் நாட்டமும்
ஒளவையார் கூறும் அறிவுரைகள் சில சமயங்களில் அதியமான் செவியில் ஏறுவதில்லை. ‘பகைவரை அச்சுறுத்திப் பணிய வைத்தல் தகாது ; ஆதலின் அவரைப் போரில் வீறுடன் எதிர்த்தே வெல்லுவேன் என்று அவன் வெகுண்டுரைப்பான். அவன் அவ்வாறு வெகுண்ட போதும் ஒளவையார் அவனுக்கு அறிவுரை கூற அஞ்சுவதில்லை. நாட்டின் அமைதியையும் மக்கள் நலனையுமே பெரிதாகக் கருதிய பெருமாட்டி யாருக்கு அவனது வெகுளி சிறிதும் வேதனையை விளக்கவில்லை. இங்ஙனம் அதியமானுக்கும் அவன் பகைவர்க்கும் அறிவுரை கூறி நாட்டின் அமைதியைக் காப்பதில் நாட்டத்தைச் செலுத்தினார்.
தொண்டைமானிடத்துத் தூது போதல்
அந்நாளில் காஞ்சி மாநகரைத் தலைநகராகக் கொண்டு தொண்டை நாட்டை யாண்ட மன்னன் தொண்டைமான் என்பான். அவன் அதியமானிடத்துப் பகைமை கொண்டு போருக்குப் படை திரட்டினான். அவன் தன்பால் படைவலி மிக்கிருப்பதாக எண்ணிச் செருக்குற்றான். அவனது அறியாமையைத் தெரிந்த அதியமான், போரின் கொடுமையையும், தன்னை எதிர்த்தால் அவன் வலியிழந்து அழிவது உறுதியென்பதையும், அதனால் நாட்டிற்கும் மக்களுக்கும் நேரும் கேட்டையும் தெளிந்துகொள்ளுமாறு அவனுக்கு அறிவுறுத்த நினைந்தான். அவன்பால் தூது சென்று அச்செயலைச் செம்மையாகச் செய்து வருதற்குத் தகுதியுடையார் ஒளவையாரே என்று எண்ணினான். அவ்வாறே தன் கருத்தை அவர்பால் தெரிவித்து அவரைத் தொண்டைமானிடத்துத் தூது விடுத்தான். அயல்நாட்டு அரசன் ஒருவன்பால் பெண்ணொருத்தி தூதுசென்று ஓதினாள் என்னும் பெருமை உலகிலேயே முதன்முதல் தமிழகத்திற்கும் தமிழ் மூதாட்டியாராகிய ஒளவையாருக்குமே வாய்த்தது.
அரசியல் தூதர் ஒளவையார்
தலையாய தூதருக்கு அமையவேண்டிய நிலையாய பண்புகளெல்லாம் ஒருங்கே அமையப்பெற்ற ஒளவையார் அதியமான் தூதராகக் காஞ்சிமாநகரம் புகுந்தார். அவர் தூதராக வந்தாலும் அருந்தமிழ்ப்புலமை சான்ற பெருமாட்டியார் என்பதை நன்குணர்ந்த தொண்டைமான் அவரை அன்புடன் வரவேற்று உபசரித்தான். அவர் தன்பால் வந்துள்ளதன் நோக்கத் தையும் குறிப்பால் உணர்ந்துகொண்டான். அதியமானினும் மிகுதியான படைவலியுடையோம் என்பதை அவருக்கு அறிவுறுத்தி விட்டால் அவர் ஒன்றுமே பேசாது சென்றுவிடுவார் என்று எண்ணினான். அவன் தனது எண்ணத்தை வாயாற் கூற விரும்பவில்லை. அவருக்குத் தன் அரண்மனை முற்றும் சுற்றிக் காட்டுவானைப்போல அவரை அழைத்துச் சென்று பல இடங்களையும் காட்டினான். படைக்கலங்களைத் திருத்தி அணிசெய்து வைத்திருக்கும் தன் படைக்கலச் சாலைக்குள்ளும் அவரை அழைத்துச் சென்றான். ஆங்கே அணியணியாக அடுக்கி வைத்திருக்கும் படைக்கலம் அனைத்தையும் பார்க்குமாறு செய்தான்.
ஒளவையாரின் பழிப்பும் பாராட்டும்
தொண்டைமான் உள்ளக்குறிப்பைத் தெள்ளிதின் உணர்ந்து கொண்டார் ஒளவையார். தொண்டைமானே தூது வந்த மூதாட்டியாருக்குத் தக்க அறி வூட்டினோம் என்ற பெருமித உணர்ச்சியுடன் நின்றான். அதனைக் கண்ட ஒளவையார், “அரசே! இங்குள்ள வேற்படையெல்லாம் எத்துணை அழகுடனும் ஒளியுடனும் விளங்குகின்றன! பீலியும் மாலையும் சூட்டப் பெற்றும், திரண்ட காம்பு திருத்தப் பெற்றும், நெய் பூசப்பெற்றும் ஒளியுடன் திகழ்கின்றன. இவையெல்லாம் காவலையுடைய கோவிலின் கண் அழகாக வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அதியமானுடைய வேற்படைகளோ காவல் மனையில் வைக்கப்படவில்லை. அவையெல்லாம் பகைவரைக் குத்திக் குத்திக் கங்கும் நுனியும் முறிந்து சிதைந்தவை. அவை செப்பனிடுதற்காகக் கொல்லன் உலைக் களமாகிய சிறிய கொட்டிலில் எந்நாளும் கிடக்கும்” என்று கூறித் தொண்டைமானை இகழ்ந்து நோக்கினார்.
‘இவ்வே, பீலி யணிந்து மாலை சூட்டிக்
கண் திரள் நோன்காழ் திருத்திநெய் யணிந்து
கடியுடை வியனக ரவ்வே யவ்வே
பகைவர்க் குத்திக் கோடு துதி சிதைந்து
கொற்றுறைக் குற்றிலம் மாதோ என்றும்
உண்டாயின் பதங்கொடுத்
தில்லாயின் உடனுண்னும்
இல்லோர் ஒக்கல் தலைவன்
அண்ணலெங் கோமான் வைந்துதி வேலே’
என்ற அரிய பாடலைப் பாடினார்.
தூதரின் காலம்
அது கேட்ட தொண்டைமான் உள்ளம் மகிழ்ச்சியால் துள்ளியது. நம் கருத்தையும் படைப் பெருக்கயுைம் ஒளவையார் நன்றாகத் தெரிந்து கொண்டார்; இனி அதியமான் நமக்கு அஞ்சி அடிபணிவான் என்று தவறாகக் கருதினான். ஒளவையாரோ அவனது அறியாமைக்கு இரங்கினார். அதியமான் அனுப்பிய தூதராக வந்த அம்மூதாட்டியார் தம் கடமையைச் செவ்வனே தவறாது செய்துவிட்டார்.
வஞ்சப் புகழ்ச்சி
அவர் தொண்டைமான் முன்னர்ப் பாடிய பாடல் வஞ்சப் புகழ்ச்சியாக அமைந்தது. அது தொண்டைமான் படைக்கலப் பெருக்கைப் பாராட்டுவது போலத் தோன்றினாலும் பழிப்புரையே. அதியமான் படைக் கலங்களை இகழ்ந்துரைப்பது போல இருந்தாலும் புகழ்ந்துரைக்கும் பொன் மொழியாகவே அப்பாடல் அமைந்தது. தொண்டைமான் படைக்கலங்கள் என்றும் போரிற் பயன்படுத்தப்படாதவை; காவற் கூடத்தை விட்டு ஒரு நாளும் அகலாதவை ; போர்க் களத்தையே கண்டறியாதவை; அதனால் அவை என்றும் கூர்மை மழுங்காது அழகுடன் ஒளி வீசிக் கொண்டிருக்கின்றன என்று புலப்படுத்தி, அவனது ஆண்மையை நயமாக எள்ளி நகையாடிய ஒளவையாரின் நாவன்மையை என்னென்பது !
ஒளவையார் தலைத்தூதர்
இவ்வாறு தொண்டைமான் படைக்கலத்தைப் பழித்துரைத்த பைந்தமிழ் மூதாட்டியார் அதியமான் படையாற்றலைப் பாராட்டாதிருக்கவும் இல்லை. அத்தொண்டைமான் எதிரிலேயே அதியமான் படைக்கலங்கள் அடியும் நுனியும் சிதைந்து கொல்லன் உலைக்களத்தில் கிடக்கின்றன என்று கூறினார். அதனால் அதியமான் படைகள் போரிற் பலகாற் பயன்படுத்தப்பட்டவை ; பகைவர் படைகளைத் தாக்கித்தாக்கிப் பழுதுற்றவை; மீண்டும் போர்வரின் பயன்படவேண்டும் என்பதற்காகக் கொல்லன் உலைக்களத்தில் வந்து குவிந்துள்ளன என்று புலப்படுத்தி அவனுடைய போராற்றலையும் படை வலியையும் பழிப்பது போன்று குறிப்பாகப் பாராட்டிய மூதாட்டியாரின் அரசியல் நுண்ணறிவை என்னென்று போற்றுவது! இவரைத் தலையாய தூதர் வரிசையில் ஒருவராக மதிப்பதில் தடையும் உண்டோ?
---------------
5. மாதவி யனுப்பிய தூதர்
தமிழில் முதற் காவியம்
நற்றமிழ் மொழியில் இற்றை நாள் வரையில் தோன்றியுள்ள காவியங்கள் எண்ணற்றவை. அவற்றுட் பெருங்காவியங்கள் சிலவே. சிலப்பதிகாரம், மணிமேகலை, சிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி யென்னும் ஐந்தனையும் ஐம்பெருங் காவியங்கள் என்று ஆன்றோர் சிறப்பாகக் குறிப்பர். அவற்றுள் ஒன்றாகிய சிலப்பதிகாரம் தமிழில் தோன்றிய முதற் பெருங்காவியமாகும். அது தோற்றத்தான் மட்டுமன்றி ஏற்றத்தானும் முதன்மை பெற்ற காவியமாகும்.
முத்தமிழ்க் காப்பியம்
இந்நூல் முதன் முதல் தமிழிலேயே ஆக்கப் பெற்றது. பிற மொழியினின்று மொழி பெயர்க்கப் பெற்ற வழிநூலன்று. இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழும் விரவப்பெற்ற இணையற்ற இனிய காவியமாகும். இடையிடையே உரைநடையும் மருவிய உயர்ந்த இலக்கியமாகும். ஆதலின் ‘முத்தமிழ்க் காப்பியம்’ என்று மூதறிஞர் போற்றும் ஏற்றமுடையது. நாடகத்திற்கு அமைய வேண்டிய இயல்பெல்லாம் நன்கமைந்த காவியமாதலின் ‘நாடகக் காப்பியம்’ என்றும் இதனை நல்லோர் ஏத்துவர்.
பாவலர் பாராட்டு
இந் நூலின் இனிமையில் மனத்தைப் பறிகொடுத்த உரிமைக் கவிஞராகிய பாரதியார்,
-“நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரம்என் றோர்மணி
யாரம் படைத்த தமிழ்நாடு”
என்று பாராட்டினர். கற்பவர் கேட்பவர் உள்ளமெல்லாம் கொள்ளை கொள்ளும் பேராற்றல் அப்பெருங் காவியத்திற்குண்டு என்று நன்றாகக் கண்டு கூறினார் அந்நல்லியற் கவிஞர். இக்காவியத்தின் கனிந்த சுவையில் ஈடுபட்ட கவிமணி தேசிகவிநாயகர், தமிழர் இன்றியமையாது கற்க வேண்டிய ஐம்பேரிலக்கியங் களுள் இதனையும் ஒன்றாக அறிமுகம் செய்து வைக்கிறார்,
‘தேனிலே ஊறிய செந்தமி ழின்சுவை
தேரும் சிலப்பதி காரமதை
ஊனிலே எம்முயிர், உள்ளள வும்நிதம்
ஓதி யுணர்ந்தின் புறுவோமே’
என்பது அக்கவிஞரின் கவிதையாகும். தேனில் ஊறிய தீந்தமிழின் சுவையான பகுதிகளையெல்லாம் தேர்ந்தெடுத்துத் தொகுத்ததொரு பெருநூலே சிலப்பதி காரமாகும். அதனைத் தமிழர் வாழ்நாள் முழுதும் பலகால் ஓதி வளமான இன்பத்தைப் பெறுதல் வேண்டுமென அறிவுறுத்தினர் அக்கவிஞர்.
இளங்கோவின் ஏற்றம்
இத்தகைய நறுஞ்சுவைப் பெருங்காவியத்தைத் தமிழுலகிற்குத் தந்தருளிய செந்தமிழ் வல்லார் சேர நாட்டுப் பேரரசன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் இளைய மகனராவர். இளங்கோவாகிய அவர் இளமையிலேயே துறவு பூண்டு இளங்கோவடிகளென விளங்கிய பெருங்கவிஞராவர்; தூய்மையான துறவு நெறியில் நின்ற வாய்மையாளர்; அறிவு நலங் கனிந்த அரசத் துறவியார். அவர் தமது புலமை நலத்தையெல்லாம் சிலப்பதிகாரக் காவியம் ஒன்றற்கே பயன்படுத்தினார். ஆதலின் முதன் முதல் தமிழில் அவரால் உருவாக்கப் பெற்ற பெருங் காவியமாகிய சிலம்புச் செல்வம் பல்லாற்றானும் முதன்மை பெறும் நல்லியல்புற்றது.
மாதவியின் மாண்பு
கண்ணகியின் கற்பு மாண்பைப் பொற்புற விளக்க வந்த இப்பெருங்காவியத்தில் வரும் சிறப்புடை உறுப்பினர் பலர். அவருள்ளே கண்ணகிக்கு இணையாக வைத்து எண்ணத்தக்க கற்பரசியாய் மாதவியென்னும் மங்கை நல்லாள் விளங்குகின்றாள். சோழ நாட்டுப் பெருநகராக விளங்கிய காவிரிப் பூம்பட்டினத்து நாடகக் கணிகையருள் ஒருத்தியாகிய சித்திராபதி யென்பாட்கு மகளாகப் பிறந்தவள் இம் மாதவி. இவள் ஆடல், பாடல், அழகு என்னும் மூன்று துறையிலும் ஒரு குறையுமின்றி நிறைவுற்று விளங்கினாள். ஐந்தாவது வயது தொடங்கிப் பன்னிரண்டாவது வயது வரையில் ஆடலும் பாடலும் அருந்தமிழ்க் கல்வியும் நன்கு பயின்று தேர்ந்தாள். பன்னிரண்டாண்டுப் பருவத்தில் மாதவி கலைநலஞ் சான்ற எழில்நிறை தலைவியாய்க் காட்சியளித்தாள்.
மாதவியின் கலையரங்கேற்றம்
கரிகாற் பெருவளத்தானாய சோழ மன்னன் முன்னால் மாதவியின் கலையரங்கேற்றம் கவினுற நடைபெற்றது. நாடக அரங்கம் மிகச்சிறந்த முறையில் அமைக்கப் பெற்றிருந்தது. அஃது ஓவியத் திரைகளாலும், ஒளி நிறை விளக்குக்களாலும், வியத்தகு விதானங்களாலும், மணந்தரு மாலைகளாலும் அணி செய்யப்பட்டிருந்தது. நாட்டிய ஆசிரியன், இசையாசிரியன், தமிழாசிரியன், தண்ணுமை ஆசிரியன், குழ லாசிரியன், யாழாசிரியன் ஆகியோர் அரங்கில் உடனிருந்து துணைபுரிந்தனர். மாதவி அவ்வரங்கிலே வலக்காலை முன் வைத்து ஏறி, வலத்தூணைப் பொருந்தி நின்றாள். மங்கல இசை முழங்கியது. அவள் பொன்னலாகிய பூங்கொடி பாங்குற ஆடுவது போல் நாட்டிய நூலின் இலக்கணமெல்லாம் நன்கு கடைப்பிடித்து ஆடினாள்.
கலையரசி பெற்ற சிறப்பு
மன்னன் அவள் கலைத்திறங் கண்டு வியத்து மகிழ்ந்து போற்றினன். ஆயிரத்தெட்டுக் கழஞ்சுப் பொன்னைப் பரிசாக அளித்தான். ‘தலைக்கோல் அரிவை’யென்னும் தலைசிறந்த விருதினை வழங்கினான். பச்சை மணிமாலை யொன்றையும் இச்சையோடு அளித்து இன்புற்றான். இவ்வாறு மாதவியின் ஆடற்கலை அரங்கேற்றம் அழகுற நடைபெற்றது. சித்திரா பதியும் அவளைச் சேர்ந்தோரும் சிந்தை மகிழ்ந்தனர். மாதவி கலையரசியாகத் தலைசிறந்து விளங்கத் தொடங்கினான்.
பணிப்பெண்ணைப் பணித்தல்
மனையகம் புகுந்த மாதவி, பணிப்பெண் ஒருத்தியை அழைத்தாள். மன்னன் வழங்கிய மரகத மாலையை அவள் கையிற் கொடுத்தான். “இதனைக் கையில் ஏந்திச் செல்வக் காளையர் வந்து சேரும் நாற்சந்தியில் நிற்பாயாக. இம்மாலைக்கு விலையாக ஆயிரத்தெட்டுக் கழஞ்சுப் பொன்னை அளிக்கும் இளைஞனை நமது இல்லத்திற்கு அழைத்து வருக. அவனையே என் காதலனாக யான் ஏற்றுக் கொள்வேன்” என்று கூறியனுப்பினாள். மாதவி மனையிற் கோவலன்
அவளும் நகர நம்பியர் பலரும் உலவும் நாற்சந்தியில் வந்து நின்றாள். அவ்வழியே வந்த கோவலன் அம்மாலையின் விலை, மாதவியின் பரிசமெனத் தெரிந்தான். பணிப்பெண் பகர்ந்தவாறே ஆயிரத்தெண் கழஞ்சுப் பொன்னையும் கொடுத்து மாதவியின் மனையகம் அடுத்தான். அவளது கலையினும் அழகிய காதல் மயக்கினும் மூழ்கினான். அவன் தனது மனையகத்தை அறவே மறந்தான்.
இந்திர விழா
காவிரிப்பூம்பட்டினத்தில் ஆண்டுதோறும் இந்திர விழா மிகச் சிறப்பாக நடைபெறும் சித்திரைத் திங்கள் நிறைமதி நாளில் தொடங்கி இருபத்தெட்டு நாட்கள் அப்பெருவிழா நிகழும். விழாவின் முடிவில் முழு நிலா நாளில் நகரமாந்தர் எல்லோரும் கடலாடுதற்குக் களிப்புடன் செல்வர். கோவலன் மாதவியுடன் கூடி வாழும் நாளில் இந்திரவிழா வந்துற்றது.
விழாவில் மாதவி கூத்து
அவ்விழாவில் மாதவி அரங்கேறித் திறம்பட ஆடினாள். திருமாற்குரிய தேவபாணிமுதல், திங்களைப் பாடும் தேவபாணியீறாகப் பலவகைத் தேவபாணிகளைப் பாடினாள். பாரதி, கொடுகொட்டி, பாண்டரங்கம் போன்ற பதினொரு வகைக் கூத்தும் ஆடி மக்களை மகிழ்வித்தாள். அவளுடைய ஆடலும் பாடலும் அழகும் மக்கள் மனத்தை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தின. அது கண்டு கோவலன் ஊடற்கோலம் கொண்டான். இங்கேதான் அவன் மாதவியைப் பிரிதற்குக் காரணமான மனப்பிளவு தோன்றுகிறது. கடற்கரையில் காதலர்
இந்திர விழாவின் இறுதிநாள் வந்தடைந்தது. மாதவியின் ஆடலும் கோலமும் ஒருவாறு முடிந்தன. அவற்றைக் கண்டு வெறுப்போடிருந்த கோவலன் விரும்பி மகிழுமாறு, அவள் தன் கோலத்தை மாற்றிப் புதிய வகையில் தன்னைக் குறைவறப் புனைந்து கொண்டாள். கோவலனோடு இருந்து அவனை மகிழ்வித்தாள். விழாவின் முடிவில் நகர மக்கள் கடலாடச் சென்றனர். மாதவி கடல் விளையாட்டைக் காண விரும்பினாள். கோவலனும் மாதவியும் கடற்கரைப் பொழிலை நோக்கிப் புறப்பட்டனர். கோவலன் கோவேறு கழுதைமீது ஏறிச் சென்றான். மாதவி நன்றாக அலங்கரித்த வண்டியொன்றில் ஏறிச் சென்றான். இருவரும் கடற்கரை யடைந்து, ஆங்குப் புன்னைமர நீழலிற் புதுமணற் பரப்பின்மேல் அமைத்த இருக்கையில் தங்கினர். ஓவியத்திரைகளைச் சூழவிட்டு, மேலே விதானமும் கட்டியமைத்த சிறந்த இருக்கையாக அது திகழ்ந்தது. அதனுள்ளே யானை மருப்பால் அமைந்த வெண்கால்களையுடைய கட்டிலில் மாதவியும் கோவலனும் இருந்தனர்.
யாழைத் திருத்தி யளித்தல்
அவ்வேளையில் தோழியாகிய வசந்தமாலை கையில் மகர யாழை வைத்துக் கொண்டு நிற்பதை மாதவி கண்டாள். அதனைத் தொழுது வாங்கிய மாதவி அதன் நரம்புகளைக் காந்தள் மலர் போன்ற மெல்லிய விரல்களால் தடவி இசையெழுப்பிப் பார்த்தாள். இசை நூலில் வகுத்துள்ள இலக்கண வகையில் யாழ் பொருந்தத் திருந்த அமைந்திருப்பதைக் கண்டாள். கோவலன் கையில் அந்த யாழைக் கொடுத்தாள். காதற் குறிப்புடன் கனியிசை
அவ்யாழைக் கையில் வாங்கிய கோவலன் காவிரியைப் பற்றிய ஆற்றுவரிப் பாடல்களும் கானல்வரிப் பாடல்களும் பாடி, மாதவின் மனம் மகிழுமாறு யாழிசைக்கலானான். அவன் இசைத்த பாடல்கள், காதலன் ஒருவன் தன் காதலியை நோக்கிக் கூறும் காதற் கருத்துக்கள் நிறைந்தனவாக இருந்தன. அவற்றைக் கேட்ட மாதவி, அவன் நிலை மாறியிருப்பதாக நினைந்தாள்; வேறு மாதிடத்தே காதல் கொண்டிருப்பதாகக் கருதினாள்; அதனால் மகிழ்ந்தவள் போல் நடித்து மனத்தகத்தில் ஊடல் கொண்டாள். அவன் கையிலிருந்த யாழைத் தன் கையில் வாங்கி இசைக்கத் தொடங்கினாள். கோவலன் பாடியது போலவே, தானும் காதற்குறிப்புக் கொண்டவளைப் போலக் காதற் கருத்துக்கள் நிறைந்த பாடல்களைக் கனிந்த இசையொடு குழைத்துப் பாடினாள். அவள் நிலமகள் வியக்குமாறும் உலகமக்கள் உவக்குமாறும் யாழிசையோடு பொருந்த இனிமையாகப் பாடினாள்.
ஊழ்வினையால் உற்ற பிரிவு
மாதவி பாடிய பாடல்கள், காதலியொருத்தி காதலன்பிரிவுக்கு ஆற்றாமல் வருந்தியுரைக்கும் காதற் கருத்துக்கள் அமைந்தனவாக இருந்தன. அவற்றைக் கேட்ட கோவலன், ‘இவள் வேறோர் ஆண்மகனிடத்துக் காதல் விருப்பங் கொண்டு இவ்வாறு பாடினாள் ; மாயப் பொய் பல கூட்டும் மாயத்தா ளாதலின் இவ்வாறு பாடினாள்’ என்றெண்ணி மனம் மாறினான். அதனையே காரணமாகக் கொண்டு, ஊழ்வினை வந்து உருத்தமையால் உடனே மாதவியை விட்டுப் பிரிந்தான். ஏவலாளர் சூழ்ந்துவரக் கோவலன் அங்கு நின்றும் அகன்றான். அது கண்டு மனம் சோர்ந்த மாதவி வண்டியில் அமர்ந்து, தனியே சென்று மனையை அடைந்தாள்.
மாதவியின் கடிதம்
இவ்வாறு இவர்கள் பிரிந்தது இளவேனிற்பருவம். அதனைப் பொதியத் தென்றலும் குயிலின் குரலும் அறிவித்தன. கோவலன் பிரிந்த காரணத்தால் வருந்தித் திரும்பிய மாதவி வானளாவிய மேன் மாடத்து நிலா முற்றத்தில் ஏறியமர்ந்தாள். யாழைக் கையில் எடுத்து இனிய இசையைத் தொடுத்துப் பாடினாள். வெவ்வேறு பண்ணை விரும்பி இசைத்தாள். அவள் உள்ளம் அமைதி இழந்தமையால் இசை மயங்கியது. கோவலனுக்குக் கடிதம் எழுதி அழைக்க வேண்டுமெனக் கருதினாள். மாதவி, சண்பகம், பச்சிலை, கருமுகை, வெண்பூ, மல்லிகை, செங்கழுநீர் ஆகியவற்றால் அடர்த்தியானதொரு மாலையைத் தொடுத்தாள். அவற்றின் இடையே அமைந்த தாழையின் வெண்ணிறத் தோட்டில் பித்திகை (சிறு சண்பகம்) அரும்பை எழுத்தாணியாகக் கொண்டு, செம்பஞ்சிக் குழம்பில் தோய்த்து உதறி எழுதினாள்:
‘மன்னுயிர் எல்லாம் மகிழ்துணை புணர்க்கும்
இன்னிள வேனில் இளவர சாளன்
அந்திப் போதகத் தரும்பிடர்த் தோன்றிய
திங்கட் செல்வனும் செவ்வியன் அல்லன்
புணர்ந்த மாக்கள் பொழுதிடைப் படுப்பினும்
தணங்த மாக்கள் தந்துணை மறப்பினும்
நறும்பூ வாளியின் நல்லுயிர் கோடல்
இறம்பூ தன்று இஃதறிந் தீமின்.’
‘உலகில் உள்ள எல்லா உயிர்களையும் தத்தம் துணையோடு புணர்த்து மகிழ்விக்கும் இளவேனில் அரசாள் கிறான். இந்நாளில் மாலைப்பொழுதில் தோன்றும் மதியாகிய செல்வனும் நேர்மையாளன் அல்லன். கூடினோர் இடையே ஊடினாலும், பிரிந்தவர் துணைகளை மறந்தாலும் மாரன் மணமுள்ள மலர்க்கணையால் அவர் உயிரைக் கொள்ளை கொள்ளுவான். இஃது அவனுக்கு இயல்பேயன்றிப் புதிய செயலன்று. இதனை நீர் அறிந்தருள வேண்டும்.
வசந்தமாலை தூது
இவ்வாறு அறுபத்துநான்கு கலைகளும் இசைக் தொழுக, இசையைப் பழித்த இனிய மொழியில் விளைந்த மழலையாற் பலகாற் சொல்லிச் சொல்லி, மாதவி தன் காதற் பனுவலை எழுதினாள் பிரிவுத் துயரால் பசந்த மேனியொடு வசந்தமாலையை அழைத்தாள். அவளிடம் மாலையைக் கொடுத்து, “இம் மலர் மாலையிற் பொதிந்த பொருளையெல்லாம் கோவலனுக்கு எடுத்துரைத்து அழைத்து வருக” என்று பணித்தாள்.
கோவலன் மறுப்பு
மாலையைப் பெற்ற வசந்தமாலை கூலமறுகில் கோவலனைக் கண்டு அதனைக் கொடுத்தாள். அவன், ‘நாடக மகளாதலின் பல வகையாலும் நடித்தல் அவட்கு இயல்பு’ என்று வெறுப்புடன் கூறி அதனை வாங்க மறுத்தான். அதனால் வாடி வருந்திய வசந்தமாலை, மாதவியிடம் சென்று செய்தியை ஓதினாள். அது கேட்ட மாதவி, ‘இன்று மாலை வாராமற் போயினும் நாளைக் காலையில் வரக் காண்போம்’ என்று தளர்ந்த மனத்தோடு மலர்ப்படுக்கையிற் பொருந்தாது வருந்தினாள்.
“மாலை வாரார் ஆயினும் மாணிழை
காலேகாண் குவம்எனக் கையறு நெஞ்சமொடு
பூமலர் அமளிமிசைப் பொருந்தாது வதிந்தனள்
மாமலர் நெடுங்கண் மாதவி தானென்.”
மாதவி பெருந்துயர்
மறுநாட் பொழுதுபுலர்வதற்கு முன்னே கோவலன் கண்ணகியோடு புறப்பட்டுப் பெற்றோர்க்கும் தெரியாமல் நகரைவிட்டுப் பெயர்ந்தான். அவனைத் தேடி ஏவலாளர் பலர் பல திசைகளிலும் விரைந்தேகினர். இச்செய்தியை அறிந்த வசந்தமாலை ஓடோடியும் வந்து மாதவியிடம் அதனை ஓதினாள். அதைக் கேட்டதும் மாதவி பெருந்துயருற்று வருந்தினாள். அவளுடைய பெரு மாளிகையின் ஒருபால் படுக்கையில் விழுந்து கிடந்து வெதும்பினாள். அவள் அடைந்த துயரைப் பற்றிக் கேள்வியுற்ற கோசிகன் என்னும் அந்தணாளன் மிகவும் வருந்தி ஆறுதல் கூறச் சென்றிருந்தான்.
கோசிகன் தூது
அக் கோசிகனைக் கண்ட மாசிலா மாதவி துயரக் கோலத்தோடு அவனைத் தொழுது வேண்டினாள். ‘என் ஆற்றொணாத் துயரை நீரே ஆற்றுதல் வேண்டும்; நான் எழுதித் தரும் கடிதத்தை என் கண்மணியனையாரை எங்கேனும் தேடிக் கண்டு அவரிடம் சேர்க்க வேண்டும்’ என்று வேண்டினாள்.
மாதவியின் கடிதம்
‘அடிகளின் திருவடிகளுக்கு வணக்கம். பொய்ம்மை நீங்கிய மெய்யறிவுடைய பெரியோய்! என் திருந்தாச் சொற்களைத் தங்கள் திருவுளத்திற் கொள்ளவேண்டும். பெற்றோரின் கட்டளையில்லாம லும் உயர்குலமகளாகிய துணைவியோடு இரவிலேயே பிரிந்து சென்றதற்குக் காரணமான என் பிழையை ஒரு சிறிதும் அறியாமல் கலங்கி நிற்கும் என் கெஞ்சத்தின் கவலையை மாற்றியருள வேண்டும்.’
‘அடிகள் முன்னர் யான்அடி வீழ்ந்தேன்
வடியாக் கிளவி மனக்கொளல் வேண்டும்
குரவர்பணி யன்றியும் குலப்பிறப் பாட்டியோடு
இரவிடைக் கழிதற் கென்பிழைப் பறியாது
கையறு நெஞ்சம் கடியல் வேண்டும்
பொய்தீர் காட்சிப் புரையோய் போற்றி’
என்று ஓலையொன்றில் எழுதித் தன் கூந்தலால் முத்திரையும் இட்டாள்.
கோசிகன் முயற்சி
மாதவியின் காதல் தூதனாகக் கோவலன்பாற் புறப்பட்ட கோசிகன் அக்கடிதத்தை எடுத்துக் கொண்டு பல வழியிலும் திரிந்து அவனைத் தேடினான். மதுரைக்குச் செல்லும் வழியில் ஒரு பார்ப்பனச்சேரியின் பக்கமாகக் கோசிகன் போய்க் கொண்டிருந்த போது, ஊருக்கு வெளியே வழியோரத்தில் அமைந்த நீர்நிலை யொன்றைக் கண்டான். அதை நோக்கிக் கோவலனைப் போன்ற ஒருவன் போய்க்கொண்டிருப்பதையும் கூர்ந்து நோக்கினான். கற்பு மனையாளொடும் கான் வழியில் நடந்து வந்ததை நினைந்து நினைந்து வருந்தி உடல் மெலிந்து வாடி, உருவம் வேறுபட்டிருந்த காரணத்தால், அவனைக் கோசிகனால் எளிதிற் கண்டுகொள்ள முடியவில்லை. எனினும் தன் ஐயத்தை அகற்றிக் கொள்வதற்காக ஒரு முயற்சி செய்தான். அந்தணன் ஐயந்தெளிதல்
அக்கோசிகன் ஒருபாற் படர்ந்திருந்த குருக்கத்திக் கொடியின் அருகே நெருங்கினான். அதன் மற்றொரு பெயராகிய ‘மாதவி’ என்பதைச் சொல்லி விளித்தான். மாதவிக் கொடியே! நீ இந்த வேனிலால் வெதும்பிக் கோவலனைப் பிரிந்து கொடுந்துயர் அடைந்து வருந்தும் மாதவியைப் போன்றே மலரிழந்து வாடுகின்றனையே!” என்றான்.
இச்சொற்களைக் கேட்டதும் கோவலன் திரும்பிப் பார்த்தான். கோசிகனை நோக்கி, “நீ இப்பொழுது இயம்பியது என்ன?” என்று ஆவலொடு வினாவினான். உடனே கோசிகன் ஐயம் நீங்கி, அவனே கோவலன் என்று தெளிந்து நெருங்கிச் சென்று நிகழ்ந்தவற்றையெல்லாம் மொழிந்தான்.
“ஐயனே! இருநிதிக் கிழவனான நின் தந்தை மாசாத்துவானும், மனைமாட்சி மிக்க தாயும் நின்னைப் பிரிந்து மணியிழந்த நாகம் போன்று ஒளியிழந்து வருந்துகின்றனர். உயிரிழந்த உடலைப் போன்று உன் உறவினரெல்லாம் செயலற்றுத் துயர்க் கடலில் மூழ்கினர். தந்தை நின்னைத் தேடிக்கொண்டு வர ஏவலாளரை எங்கும் அனுப்பினான். தந்தையாகிய தயரதன் சொல்லைக் காத்தற்காகக் கானகம் புகுந்த மானவனாம் இராமனைப் பிரிந்த அயோத்தி போன்று, புகார் நகரம் உன் பிரிவாற் பெருந்துயருற்றுப் பொலிவிழந்தது. மாதவியின் கடிதத்தை நீ மறுத்ததாக வசந்தமாலை சொன்னதும் அவள் மேனி பசந்து நெடுநிலை மாடத்தின் இடைநிலத்தின் ஒருபால் அமைந்த படுக்கையில் நின்னை நினைந்து வருந்தி வீழ்ந்தாள். அவள் அடைந்த துயர்கேட்டு அவளுக்கு ஆறுதல் கூறுதற்காக யான் சென்றேன். அவளோ என் இரண்டு அடிகளையும் தொழுது, ‘எனக் குற்ற துயரத்தைத் தீர்ப்பாயாக!’ என்று தனது மலர்க்கையால் இந்த ஓலையை எழுதி, ‘என் கண்மணியனைய கோவலருக்கு இதனைக் காட்டுக!’ என்று தந்தாள். இதனை எடுத்துக்கொண்டு நின்னைக் காணமல் எங்கெங்கோ தேடியலைந்தேன்” என்று கூறி, மாதவியின் ஓலையைக் கோவலன் கையிற் கொடுத்தான்.
கோவலன் குற்றம் உணர்தல்
ஓலை மடிப்பின் புறத்தே மாதவி தன் கூந்தலால் இட்ட இலாஞ்சனை இனிய நெய் மணம் கமழ்ந்தது. அது கோவலன் முன்பு நுகர்ந்த நறுமணமாதலின் பழைய நினைவை உணர்த்தியது. அதைக் கைவிடாமற் பிடித்திருந்து, பின்னர் அவன் ஓலையைப் பிரித்து நோக்கினான். மாதவி எழுதிய மொழிகளே உணர்ந்து வருந்தினான். ‘இஃது அவள் குற்றமன்று, என் குற்றமே’ என்று மனங் குழைந்து நிகழ்ந்ததை எண்ணி நெக்குருகினான். ஒருவாறு தளர்வு நீங்கி, ‘அந்தணாள இந்த ஓலையின் பொருள் என் பெற்றோருக்கு யான் எழுதுவது போலவும் பொருத்தமாக அமைந்துள்ளது. ஆதலின் இந்த ஓலையையே அவர்கட்குக் கொண்டு காட்டுக! அவர்கள் மலரடி வணங்கினேன் என்று எனது வணக்கத்தைச் சொல்லுக! நின் நடுக்கத்தை யொழித்து என் பெற்றோரின் நன்மனத்திற் பொருந்திய பெருந்துயரைக்களைய விரைந்து செல்லுக!’ என்று கூறிக் கோசிகனைச் செல்ல விடுத்தான்.
மாதவியின் மாளாத் துயரம்
அவன் தன் முயற்சி பயன்படாமை உணர்ந்து வருந்திக் காவிரிப்பூம்பட்டினத்திற்குத் திரும்பினான். மாதவியிடம் கோவலன் மனப்பாங்கை எடுத்துரைத்தான். அவள் இன்னது செய்வதெனத் தெரியாது திகைத்து இன்னலுற்றாள். தான் பிறந்த குலத்தையும், கணிகையர் வாழ்வையும், கற்ற கலையையும் பழித்துத் தன்னையே நொந்து கொண்டாள்.
கடைத் தூதர் இருவர்
இங்கே மாதவியின் காதல் தூதாக வசந்தமாலையென்னும் அவள் தோழியைக் கண்டோம்; கோசிகன் என்னும் அந்தணாளன் ஒருவனையும் கண்டோம். இவர்கள் இருவரும் ஓலை கொடுத்து நிற்பாராய கடைத் தூதர் இனத்தைச் சார்ந்தவராகக் காட்சி தருகின்றனர். மேலும் கோசிகன், கோவலனுக்கும் தூதாய் அமைகின்ற சிறப்பை இங்குக் காண்கின்றோம்.
-----------------
6. இராமன் விடுத்த தூதன்
தமிழுக்குக் கதி
‘தமிழுக்குக் கதி, கம்பரும் திருவள்ளுவரும்’ என்று கற்றோர் போற்றும் புலவர்களுள் ஒருவராகிய கவியரசர் கம்பர் பெருமானல் ஆக்கப்பெற்ற அரிய காவியம் இராமாயணம் ஆகும். சுவைகள் அனைத்துக்கும் நிலைக்களமாக விளங்கும் அப்பெருங்காவியத்தை ஆக்கி யுதவிய கம்பநாடரின் பெருமையினைத் தமிழுலகமேயன்றி, ஏனைக் கவியுலகங்களும் கண்டுணர்ந்து கொண்டாடுகின்றன. ‘கல்விசிறந்த தமிழ்நாடு-புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு’ என்று பாடிய கவிஞர் பாரதியாரின் கவிநயம் எண்ணியெண்ணி இன்புறுதற்கு உரியதாகும்.
அரசகேசரியின் பாராட்டு
ஓர் உயர்ந்த கவியின் இயல்பை அளத்தற்கு மற்றொரு கவியுள்ளமே சிறந்த கருவியாகும். அம்முறையில் இரகுவமிசம் என்னும் பெருங்காவியத்தை அருந்தமிழிற் பாடிய அரசகேசரி என்னும் புலவர்,
உயர்ந்த கருத்துக்களை எடுத்துரைத்துக் கேட்போரைச் செயற்படுத்தும் நெறியில் ஒரு பொருளை மறைநூல் கூறுதல், தலைவன் தன் பணியாளனுக்கிடும் கட்டளையினையொக்கும். அதனையே அறநூல் கூறுதல், ஓர் அன்பன் தன் நண்பனுக்குக் கூறுவதனையொக்கும். அதனைக் காவியம் கூறுதல், காதலியொருத்தி தன் இனிய காதல் தலைவனுக்குக் கூறுவதை யொக்கும். இம்மூவகை முறையுள் இறுதியிற் கூறப்பட்டதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக இலகுவது கம்பராமாயணமாகும்.
கம்பன் காவிய அமைப்பு
சங்கத்துச் சான்றோர் பாக்களுக்குப் பின் சிலப்பதிகாரம், மணிமேகலை, சிந்தாமணி முதலிய செந்தமிழ்க் காவியங்கள் தோன்றின. இவை கதை தழுவிய தொடர்நிலைச் செய்யுட்களாதலேயன்றிப் பாநலம் பழுத்துப் பயில்வார்க்கு இன்பஞ் செய்யும் இன்சுவையு முடையன ஆதலின் அறிவுடையோரால் மிக விரும்பிக் கற்கத்தகும் மாண்புடையனவாகும். இவற்றுள் சிந்தாமணிக் காவிய நடையினை மேற்கொண்டு, திருக்குறள் தமிழ் மறையின் அரிய கருத்துக்களில் தோய்ந்து, இனிய ஓசை நயந் தோன்றப் பிற்காலத்தில் எழுந்த அரிய கதைச் செய்யுள் நூல் கம்பராமாயணமே ஆகும்.
காவியச் சிறப்பு
ஒரு சிறந்த இலக்கியத்தை அஃது எழுந்த காலத்துவாழ்ந்துவந்த மக்களுடைய வாழ்க்கை ஓவியமாகவும், அம்மக்களின் அரிய பண்பாட்டைத் தன்னுட் கொண்டு காட்டும் கண்ணாடியாகவும் கற்றோர் போற்றுவர். அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் கம்பராமாயணமோ இனிமை, எளிமை, ஆழம் ஆகிய மூன்று குணங்களையும் கொண்ட தண்டமிழ்ச் செய்யுள் நடையான் இயன்றது. இது மக்க ளுடைய வாழ்வில் நிகழும் பற்பல செய்திகளையும் தக்க இடங்களில் பொற்புறவும் மெய்ப்பாடு தோன்றவும் கூறும் திட்பமுடையது. வரலாற்று மாந்தர் இயல்புகளைத் தக்கவாறு அவர் தம் வாய்மொழியில் வெளிப்படுத்துந் திறன் வியத்தற்குரியது. ‘செவ்விய மதுரம் சேர்ந்த நற்பொருளிற் சீரிய கூரிய தீஞ்சொல் வவ்விய கவிஞர்’ என்று கம்பர் குறிப்பிடும் கவிஞர் இலக்கணத்திற்கு அவரே ஓர் அரிய எடுத்துக்காட்டாக விளங்குகின்றார்.
அனுமன் செய்தி அறிதல்
இத்தகைய அருஞ்சுவைமிக்க பெருங்காவியத்தில் இராமன், சீதை, அனுமன் முதலான காவிய மாந்தர்களின் இயல்புகள் நயம்பெறவும் தெளிவுறவும் கட்டுரைக்கப்படுகின்றன. வில்லின் செல்வனாகிய இராமன் சொல்லின் செல்வனாகிய அனுமனைத் தன் தேவியாகிய சீதையைக் கண்டு வரும் பொருட்டுத் தென்றிசை நோக்கித் தூது போக்கினான். அந்நாளில் அனுமனைத் தனியே யழைத்துச் சீதையை உணர்ந்துகொள்ளும் பொருட்டு, உற்ற அறிகுறிகள் பலவற்றை உரைத்தான். ஐயமகற்றும் அடையாளங்கள் பலவற்றை அறிவுறுத்தினான். இறுதியில் ஒளிபொருந்திய கணையாழி யொன்றையும் அளித்து வாழ்த்தி வழியனுப்பினான். அனுமன் இராமனை வணங்கி விடை பெற்றுத் தென்றிசை நோக்கிச் சென்றான். அவன் செல்லும் வழியில் சம்பாதியைச் சந்தித்து சீதையைப் பற்றிய செய்தியைத் தெரிந்தான். அப்பிராட்டியை இராவணன் தனது இலங்கை மாநகரில் சிறை வைத்துள்ளான் என்பதை உணர்ந்தான். வானர வீரர்களுடன் அச் செய்தியைப்பற்றி ஆராய்ந்தான். இலங்கை சென்று இவ்வுண்மையினை அறிந்து வரத் தக்கவன் அனுமன் ஒருவனே என்று அனைவரும் முடிவு செய்தனர்.
அனுமன் இலங்கையை யடைதல்
அவ்வாறே வானர வீரர்களிடம் விடைபெற்ற அனுமன் மகேந்திர மலையின்மேல் ஏறினான். கடலைத் தாண்டி இலங்கையினை அடையும் எண்ணத்துடன் பேருருவங் கொண்டு நின்றான். அப்போது அனுமன் உடல், அண்டத்தின் முடியை முட்டுமாறு ஓங்கி உயர்ந்தது. அதனால் விண்ணவர் நாட்டைக் கண்ணால் கண்ட அனுமன், ‘இதுதான் இலங்கையோ?’ என ஐயுற்றான். அது தேவர்கள் வாழும் திருவிடம் என்பதுணர்ந்து கீழே நோக்கினான். இலங்கை மூதூர் அவனுடைய விழிகட்கு இலக்காயிற்று. அந்நகரின் வாயில், மதில், தெருக்கள் முதலிய அனைத்தையும் கண்ட அனுமன் மகிழ்ச்சி கொண்டான். தன் தோள்களைத் தட்டி ஆரவாரம் செய்தான். வானிற் பறந்து செல்லுமாறு தன் கால்களை மகேந்திர மலையின் முடிமேல் அழுத்தி யூன்றினான். அம்மலையின் முழைகளில் வாழ்ந்த அரவங்கள், அனுமனது உடற் சுமையைத் தாங்கலாற்றாது வெளிப் போந்தன. வானவர் மலர் தூவி வாழ்த்துரை வழங்க அனுமன் மலையிலிருந்து மேலெழுந்தான். திரிகூட மலை தென்கடலை கோக்கிச் செல்வதுபோல் அனுமன் தென்றிசை நோக்கிச் சென்றான். அவன் இலங்கையில் அமைந்த பவள மலையின் மீது குதித்து நின்றான் அனுமன் குதித்தலைத் தாங்காத அம்மலை தன்னிடத்துள்ள பொருள்களுடன் தள்ளாடி நிலைகுலையலாயிற்று. இலங்கையின் எழிலைக் காண்டல்
அனுமன் பவள மலையின்மேல் நின்றபடியே இலங்கை மாநகரை உற்று நோக்கினான். இராவணன் வாழும் இலங்கை மூதூருக்கு வானுலகும் ஈடாகாது என்று எண்ணினான். வேண்டிய வேண்டியாங்கெய்தி வெறுப்பின்றித் துய்க்கும் சிறப்புடைய துறக்கம் இது தானோ என்று வியந்து போற்றினான். எழுநூறு யோசனைப் பரப்புடைய இந்நகரின் எண்ணற்ற காட்சிகளை முழுவதும் காண்டல் அருமை என்று எண்ணினான். நகர் வாயிலைக் கடந்து நகருட் புகுதற்கு விரைந்தான். அந்த வாயிலை அரக்கர்கள் பலர் பலவகைப் படைக்கலங்களுடன் பாதுகாத்து நிற்பதைப் பார்த்தான். இவ்வாயிலிற் புகுந்து செல்வதாயின் அரக்கர்களுடன் போர்புரிய நேரிடும்; ஆதலின் வேறு வழியாகச் செல்லுதலே நேரிது என்று நினைந்து வேறு பக்கமாக விரைந்தான். அந்நகரைக் காத்துநின்ற இலங்கா தேவியை வென்று நகரினுட் சென்றான். இராமபிரான மனத்துள் நினைத்து வணங்கியவாறே இலங்கைமாநகர் வீதிகளில் ஓரமாக கடந்து சென்றான். மலர்களில் தேனைநாடிச் செல்லும் வண்டைப்போல் கண்ட இடமெல்லாம் சீதையைத் தேடிக்கொண்டே சென்றான்
அனுமன் சீதையைத் தேடிக் காண்டல்
அங்குள்ள பொழில்களிலும் தேடிப் பார்க்க வேண்டும் என்னும் எண்ணத்துடன் அனுமன் அங்கிருந்த அசோகவனத்தை யடைந்தான். அப் பொழிலின் பல இடங்களிலும் தேடிய அவன் அரக்கியர் நடுவில் சீதை வாடிய தோற்றத்துடன் வருந்தியிருத்தலைக் கண்டான். இராமனைப் பிரிந்த துயரத்தாலும் அச்சத்தாலும் சிறிதும் உறக்கமின்றி ஒளி மழுங்கிய வடிவத்துடன் அவள் புழுவைப் போல் துடித்துக் கொண்டிருந்தாள். கணவனைப் பிரிந்த பிரிவுத் துன்பத்தால் பெருகிய கண்ணிர் அவள் ஆடையை நனைப்பதும், உடலின் வெப்பத்தால் அந்த ஆடை உடனே காய்ந்து போவதுமாக இருந்தது. எவ்விதத்திலும் இராமபிரான் வருதல் கூடும் என்ற நினைவால் அவள் எப்பொழுதும் திக்குகளையே நோக்கிக் கொண்டிருந்தாள். இராமபிரானுடைய இனிய பண்புகள் பலவற்றையும் எண்ணியெண்ணி வருந்திக் கொண்டிருந்தாள்.
அசோகவனத்தில் சீதையும் திரிசடையும்
இத்தகைய நள்ளிரவில் சீதையைச் சூழ்ந்திருந்த அரக்கியர் அனைவரும் தம்மை மறந்து உறங்கலாயினர். அவ்வேளையில் வீடணன் அருமைத் திரு மகளாகிய திரிசடை யொருத்திதான் சீதைக்கு அவண் இனியளாய் அமைந்து, அவள் துயரங்களை ஒருவாறு மாற்றிக்கொண்டிருந்தாள். சீதைக்குச் சில நற்குறிகள் காணப்பெற்றன. அவற்றைத் திரிசடையிடம் தெரிவித்து, அவற்றின் பயனை வினவினாள். நீ விரைவில் உன் கணவனை அடைவது உறுதியெனப் பயனுரைத்த தோழியாகிய திரிசடை, அச்சீதையை நோக்கி மேலும் கூறினாள்; “இப்பொழுது ஒரு வண்டு மெல்லென வந்து உன் காதில் இசை பாடிச் சென்றது கண்டனையோ ? அதன் பயனை ஆய்ந்து நோக்கினால் உன் தலைவனால் உய்க்கப்பெற்ற தூதன் ஒருவன் இங் குற்று உனக்கு நல்ல செய்தி உரைப்பது உறுதி; நான் கனவொன்றனைக் கண்டேன் ; குற்றம் நிறைந்த இந் நாட்டில் காணும் கனவுகள் வீணாவதில்லை” யெனக் கூறித் தான் கண்ட கனவை விளக்கினாள். அதன் பயனாக விரைவில் இலங்கைமாநகர் அழிவது உறுதியென்றும், அரக்கர் குலமே அழிந்தொழியும் என்றும் விளக்கினாள். அதுகேட்ட சீதை, திரிசடையை மீண்டும் உறங்குமாறும், அவள் கண்ட கனவின் குறையையும் கண்டுணர்ந்து கூறுமாறும் வேண்டினாள்.
அனுமன் அடைந்த மகிழ்ச்சி
இச்சமயத்தில் சீதையைக் கண்ட அனுமனுக்குத் துன்பங்கள் எல்லாம் பறந்து போயின. இந்தப் பெண்ணரசியே சீதாபிராட்டியாதல் வேண்டுமென்று எண்ணினான். அவளை யனுகுதற்கு முற்படும் வேளையில் உறக்கத்தில் ஆழ்ந்திருந்த அரக்கியர் விழித் தெழுந்தனர். சீதையைச் சூழ்ந்து கொண்டு அவளை அச்சுறுத்தினர். அவர்களைக் கண்டு அஞ்சிய சீதை யாதும் பேசாமல் இருந்தாள். அனுமன் அந்நிகழ்ச்சிகளையெல்லாம் ஒரு மரத்தின்மீது ஏறி மறைந்திருந்து நோக்கினன். அரக்கியர் நடுவண் அமர்ந்திருப்பவள் சீதாபிராட்டியே என்று தெளிந்தான்; மிகுந்த களிப் படைந்தான். “அறம் பொய்த்து விட்டதென்று நான் முன்பு எண்ணினேன். அஃது அப்படியாகவில்லை; நானும் இனிமேல் இறக்கமாட்டேன்” என்று கூறினான். இன்பமாகிய தேனையுண்டு தன்னை மறந்து கூத்தாடினன். “இம்மங்கையர்க்கரசியின் பேரழகு, இராமபிரான் இயம்பிய அடையாளத்திற்குச் சிறிதும் மாறுபடவில்லை , கள்ளச் செயலையுடைய இராவணன் இராமபிரானுடைய உயிர்த் துணைவியாகிய இவளை ஒளித்து வைத்தது, தன்னுயிரை இழத்தற்கே என்பதில் சிறிதும் ஐயமில்லை ; அந்த இராமபிரான் திருமாலே; இப்பிராட்டி செந்தாமரை மலரில் தங்கியிருக்கும் திருமகளே ஆவள்” என்று அனுமன் மரத்தின் மறைவில் தங்கிப் பலவாறு எண்ணிக் கொண்டிருந்தான்.
புலியைக் கண்ட மான்
இவ்வேளையில் இராவணன் சீதை இருக்கும் இடத்திற்குப் புறப்பட்டு வந்தான். அவனைக் கண்ட சீதாபிராட்டி சிந்தை கலங்கிக் கூற்றுவனைக் கண்ட உயிர் போல நடுநடுங்கினாள். தன்னைத் தின்னுதற்கு வரும் கடும்புலியைக் கண்டு அஞ்சி நடுங்கும் இளம்பெண் மான் போன்று அஞ்சியொடுங்கினாள். அவள் ஏக்கத்தையும் இராவணன் ஊக்கத்தையும் அனுமன் நோக்கி அளவிலாச் சினங் கொண்டான். இராவணன் சீதையைப் பலவாறு புகழ்ந்துரைத்து முடிமீது குவித்த கையினனாய்ப் படிமீது வீழ்ந்து பணிந்தான். அவன் கூறிய சொற்கள் சீதையின் காதுகளில் காராசம் போல் நுழைந்தன. அவள் இருவிழிகளிலும் குருதி ஒழுகியது. அவள் தன் உயிரையும் பொருட் படுத்தாமல் இராவணனைச் சிறு துரும்பினும் கீழானவனாக எண்ணிப் பலவாறு இகழ்ந்துரைத்தாள். அவள் கூறிய மொழிகளைக் கேட்ட இராவணனுக்குப் பெருஞ் சினம் எழுந்தது. அவனுடைய இருபது விழிகளிலுமிருந்து தீப்பொறிகள் பறந்தன. அவன் தன் பத்து வாய்களாலும் அதட்டி ஆரவாரம் செய்தான். அஞ்சாமல் நமக்கொரு பெண் அறிவுரை கூறுவதோ என்று எண்ணினன். அதனால் நாணமும் சினமும் மிகுந்த அவன் ‘இவளைப் பிளந்து தின்பேன்’ என்று எழுந்தான். ஆனால் அச் சீதைமீது அவன் கொண்ட காதலே அச்சிற்றத்தை மாற்றிவிட்டது. அனுமன் சினமும் அரக்கன் ஆணையும்
இந்த நிகழ்ச்சிகளையெல்லாம் மறைந்து பார்த்துக் கொண்டிருந்த அனுமனுக்கு அளவிலாச் சினம் பொங்கியது. ‘பிராட்டியை இகழ்ந்துரைத்த இவ்வரக்கனை அழிப்பேன்; இலங்கையைக் கடலினுள் மூழ்கச் செய்வேன் ; இப்பிராட்டியை இங்கிருந்து எடுத்துப் போய்விடுவேன் அவ்வாறு செய்வது இராமபிரானுடைய பெருமைக்கு இழுக்காகுமே’ என்று எண்ணினான். செய்யத் தகுந்தது எது என்று தோன்றாமல் கைகளைப் பிசைந்து கொண்டே பேசாதிருந்தான். சீதையின் மீது கொண்ட காதலால் சினந்தணிந்து இராவணன் மறுமொழி பலவற்றைப் பகர்ந்தான். அவள் உள்ளத்தைத் தன்பால் திருப்புமாறு அரக்கியருக்கு ஆணையிட்டு அவ்விடம் விட்டகன்றான்அரக்கியர் துயிலும் சீதையின் துயரும்
பிராட்டியைக் காணுதற்கு இதுவே ஏற்ற சமயமென எண்ணிய அனுமன் தனது மந்திர வன்மையால் அரக்கியர் உறக்கம் கொள்ளுமாறு செய்தான். உற்ற தோழியாய் அமைந்த திரிசடையும் துயில் கொள்ளலானாள். அவ்வேளையில் தனது துன்பத்திற்கு ஒரு முடிவு காணாமல் சீதை வருந்தினாள். ‘பகைவர் ஊரில் சிறையிருந்தவளாகிய என்னை அத்தூய்மையாளர் சேர்த்துக் கொள்வரோ ? பிறர் என்னை விரும்பியதை உணர்ந்தும் நான் இன்னும் உயிரை வைத்துக் கொண்டிருக்கிறேன்: என்னினும் கொடிய அரக்கியர் உளரோ? கணவனைப் பிரிந்தும் உயிர்வாழ்ந்திருக்கும் பெண்கள் என்னைத் தவிர வேறு யாருளர்?’ இங்ஙனம் பலவாறு நினைந்த சீதை, தன்னை மாய்த்துக்கொள்ளத் துணிந்து குருக்கத்திப் புதரொன்றைக் குறுகினாள். இராம தூதனைச் சீதை காண்டல்
இவ்வேளையில் சீதையின் கருத்தை யுணர்ந்த அனுமன், “இராமபிரானல் அனுப்பப் பெற்ற தூதன் நான்” என்று கூறியவாறே அவளை வணங்கி முன்னே சென்றான். “இராமபிரான் உம்மைத் தேடிக் கண்டு வருமாறு உலகெங்கும் தூதர்களையனுப்பியுள்ளார் ; அவர்களுள் நானும் ஒருவன் நான் நல்வினை செய் துள்ளமையால் உம்மைக் கண்டேன் ; இவண் நீர் இருத்தலை இராமபிரான் அறியார்; அவர் அறிந்திருப்பாராயின் இங்குள்ள அரக்கர்கள் இந்நாள் வரையிலும் உயிருடன் இருக்க மாட்டார்கள் என்னைக் குறித்துச் சிறிதும் ஐயுற வேண்டாம்; அப்பெருமான் அருளிய அடையாளம் என்பால் இருக்கிறது” என்று கூறி வணங்கினான்.
சீதையின் உயிர் காத்த வீரன்
சீதை அவ்வனுமனை நோக்கினாள். அவளுக்கு இரக்கமும் சினமும் ஒருங்கே எழுந்தன. “என் எதிரில் நிற்பவன் அரக்கன் அல்லன் ; நல்லொழுக்க நெறியில் நின்று ஐம்புலன்களையும் வென்றவனாக விளங்குகிறான் ; இல்லையேல் தேவனாக இருத்தல் வேண்டும்; இவன் உரைகள் நல்லறிவைப் புலப்படுத்துகின்றன; இவன் அரக்கனோ, அன்றித் தேவனோ, குரங்கினத் தலைவனோ, யாவனாயினும் ஆகுக. இவண் எய்தி எம்பெருமான் திருப்பெயரைச் சொல்வி என் உள்ளத்தை உருகச் செய்தான் ; எனது உயிரைக் காத்தான். இதனினும் செய்யத்தக்க உதவி வேறுள்ளதோ ? இவன் உரைகள் அரக்கர்களின் இரக்கமற்ற உரையைப் போன்றனவல்ல ; இவன் யாரென உசாவுதற்குரியன்” என்று உள்ளத்தில் எண்ணி “வீரனே ! நீ யாவன் ? ” என்று அனுமனை வினாவினாள்.
“அரக்கனே யாக, வேறோர்
அமரனே யாக, அன்றிக்
குரக்கினத் தலைவ னேதான்
ஆகுக, கொடுமை யாக
இரக்கமே யாக வந்திங்
கெம்பிரான் நாமம் சொல்லி
உருக்கினன் உணர்வைத் தந்தான்
உயிரிதின் உதவி யுண்டோ ?”
ஆழி கண்ட சீதை அனுமனை வாழ்த்துதல்
இவ்வாறு உள்ளந் தேறி, ‘வீர ! நீ யாவன்?’ என்று வினவிய சீதைக்கு அனுமன் தன்வரலாற்றைக் கூறி வணங்கினான். அவன் எடுத்துரைத்த இராமபிரான் எழில் நலத்தைக் கேட்டு அவள் இதயம் உருகினாள். இராமபிரான் கூறியனவாக அனுமன் கூறிய அடையாள மொழிகளையும் கேட்டு உள்ளம் உருகினாள். பின்னர், இராமபிரான் அளித்த கணையாழி யொன்றை எடுத்துப் பிராட்டிக்குக் காட்டினான். அதனைக் கண்ட சீதை பெருமகிழ்ச்சி கொண்டாள். அதனை அன்புடன் வாங்கித் தன் மார்பில் வைத்துத் தழுவிக் கொண்டாள் ; தலைமேல் தாங்கினாள்; கண்களில் ஒத்திக் கொண்டாள்; அதனைக் கொண்டுவந்தளித்த அனுமனை வாயார வாழ்த்தினாள். “இராம பிரானின் தூதனாக வந்து எனது உயிரைக் கொடுத்த உனக்கு என்னாற் செய்யக்கூடிய கைம்மாறும் உளதோ ? ஈரேழு உலகங்களும் அழிவடைந்த காலத்திலும் நீ இற்றை நாள் இருப்பது போன்றே எற்றைக்கும் ஒரு தன்மையுடன் வாழ்ந்திருப்பாயாக!” என்று வாழ்த்தினாள். சூளாமணி பெறுதலும் சூழ்ச்சி புரிதலும்
பின்னர்ச் சீதை, அனுமன் தன்னைக் கண்டு பேசியதற்கு அடையாளமாகத் தன்பால் இருந்த சூளாமணி யென்னும் அணிகலத்தை அவனிடம் நல்கினாள். அதனைத் தொழுது வாங்கிய அனுமன் தன் ஆடை யிலே முடிந்து பாதுகாப்புச் செய்து கொண்டான். பிறகு, பிராட்டியிடம் விடைபெற்று அவ்விடம் விட்டுப் பெயர்ந்தான். சிறிது நேரத்தில் அவனது எண்ணம் மாறியது. நான் சீதாபிராட்டியைக் கண்டு பேசிய சிறுசெயலை மட்டும் முடித்துத் திரும்புதல் என் பெருமைக்கு இழுக்காகும். இங்குள்ள அரக்கர்களை யழித்துச் சீதாபிராட்டியை மீட்டுச் சென்று, இராமபிரான் திருவடிகளில் சேர்க்காமல் இருந்தால் நான் இராமபிரானுக்கு அடியவனாவது எங்ஙணம் ? ஆதலின் நான் இப்பொழுது செய்ய வேண்டுவது, இங்குள்ள அரக்கர்களைத் துன்புறுத்தி எனது ஆண்மையினைக் காட்ட வேண்டியதேயாகும். ஆகவே இவ்வரக்கர்களைப் போருக்கு இழுப்பதற்கு யாது செய்யலாம் ?’ என்ற எண்ணமிட்டான். அசோக வனத்தை யழிப்பதே தக்கது என்று நினைந்தான்.
அசோக வனமும் அரக்கர் இனமும் அழித்தல்
இவ்வாறு அரக்கர்களைப் போருக்கிழுக்க எண்ணிய அனுமன் பேருருவங் கொண்டான். தன் கால்களால் அவ்வனத்தை மிதித்துத் துவைத்துச் சிதைத்தழித்தான். ஆங்கிருந்த உயர்ந்த செய்குன்று ஒன்றனையும் தூக்கி இலங்கை நகரத்தின்மீது வீசினான். இதனால் அஞ்சியோடிய அரக்கர்கள், இராவணன் இருக்கும் இடத்தையடைந்து முறையிட்டனர். இத்தனையும் ஒரு குரங்கின் செயல் என்று கூறக்கேட்ட இராவ ணன், அவர்களை எள்ளி நகையாடினான். வலிமை மிக்க அரக்கர்கள் பலரை நோக்கி, அந்தக் குரங்கு தப்பியோடிப் போகாதவாறு அதனைப் பிடித்துக் கொண்டு வருக; கொன்று விடாதீர்கள்” என்று பணித்தான். அப்பணியினைச் சிரமேற் கொண்டு அனுமனை எதிர்த்த அரக்கர் தலைவர் பலர் அழிந்தொழிந்தனர். இறுதியில் இராவணன் மகனாகிய இந்திரசித்து அனுமனை எதிர்த்தான். அவனும் தன்னுடன் வந்த படையெல்லாம் அழிந்தொழியத் தனது தேருடன் விண்ணில் நெடுந்தொலை சென்றான். அங்குநின்று பேராற்றல் வாய்ந்த நான்முகக் கணையினைச் செலுத்தி, அனுமன் தோள்களை இறுகக் கட்டினான்.
கட்டுண்ட அனுமன், இராவணனைக் காண்டல்
அதனால் கீழே சாய்ந்த அனுமன் அக்கட்டினை யறுத்துக்கொண்டு எழவல்ல ஆற்றலுடையனாயினும் நான்முகக் கணையின் தெய்வத்தன்மையை இகழ்ந்து அகலுதல் தகாது என்று எண்ணினான். செயலற்றவனைப் போல் கண்களை மூடிக்கிடந்த அவனது ஆற்றல் அழிந்துவிட்டதென்று நினைந்து இந்திரசித்து அவனை நெருங்கினான். அரக்கர்கள் அவனைப் பிணித்துள்ள கயிற்றைப் பற்றித் தெரு வழியாக இழுத்துச் சென்றனர். இந்திரசித்தும் அனுமனோடு இராவணன் அரண்மனை யடைந்தான். இராவணனுக்கு அனுமனைச் சுட்டிக்காட்டி, “குரங்கு வடிவமாக இருக்கும் இப்பேராண்மையாளன் திருமாலைப் போலவும், சிவபிரானைப் போலவும் வீரம் வாய்ந்தவன்” என்று கூறிக் கைகூப்பி வணங்கினான். அது கேட்ட இராவணன் மிகுந்த சினத்துடன் அனுமனை நோக்கி, “நீ யாவன்? இங்கு வந்த காரணம் யாது? உன்னை இவண் அனுப்பியவர் யார்?” என்று வினவினான்.
அனுமன் அறிவுரை
அமரர் புகழையெல்லாம் வேருடன் விழுங்கிய இராவணன், அனுமனை நோக்கி இவ்வாறு வினவியதும் அவனுக்குப் பல அறிவுரைகளை வழங்கினான். “உனது எல்லையற்ற வரம் முதலியவற்றைத் தனது நீட்டிய பகழியொன்றால் முதலொடு நீக்க நின்றவனாகிய இராமன் விடுத்த தூதன் யான்; அனுமன் என்பது எனது பெயர்; சீதாபிராட்டியைத் தேடி நான்கு திசைகளிலும் வானர வீரர் சென்றுள்ளனர்; தென்பால் வந்த கூட்டத்திற்கு வாலியின் மகனை அங்கதன் தலைவனாவன் ; நான் அவனது ஏவலால் இங்குத் தனியே வந்தேன்” என்று கூறினான்.
இராவணன் வினாவும் அனுமன் விடையும்
அதுகேட்ட இராவணன் தன் பற்கள் வெளியே தெரியுமாறு நகைத்தான். “வாலியின் மகனால் அனுப்பப்பட்ட தூதனே பேராற்றல் படைத்தவனாகிய வாலி நலமோ? அவனது அரசாட்சி நன்கு நடைபெறுகின்றதோ ?” என்று கேட்டான். இராவணன் வினாக்களைக் கேட்ட அனுமன் தானும் நகைத்தான். அரக்கனே! அஞ்சற்க: வாலி இறந்துபோனான் அவனது வாலும் அன்றே போய்விட்டது; அவன் இராமபிரானுடைய கணையொன்றினாலே இறந்துபோனன் ; இப்போது சுக்கிரீவன்தான் எங்கள் அரசன் ; அவன் இராமபிரானுக்கு இனிய நண்பனானான்; அப்பெருமான் தனது கணையொன்றினால் வாலியைக் கொன்று சுக்கிரீவன் மனைவியை மீட்டுக் கொடுத்தான்; அரசியலையும் அவனுக்கே வழங்கினான்; அவ்வாறு தனக்கு உதவி செய்த இராமபிரானுக்குத் தானும் உதவி செய்ய விரும்பித் தன் படையைத் திசையெல்லாம் அனுப்பிச் சீதாபிராட்டியைத் தேடுமாறு செய்துள்ளான்” என்று அனுமன் கூறினான்.
அனுமன் தூதுச் செய்தி அறிவித்தல்
மேலும், அனுமன் இராவணனை நோக்கி, “நான் சொல்ல வந்த செய்தியைக் கேள்; உனது செல்வ வாழ்வை வீணாக்கிக் கொண்டாய்; அரச தருமத்தைச் சிறிதும் நீ நினைந்தாயல்ல; கொடிய செயலைச் செய்துவிட்டாய்; அதனால் உனக்கு அழிவு நெருங்கியுள்ளது; இனிமேலாயினும் நான் இயம்பும் உறுதியினைக்கேட்டு நடந்தால் உனது உயிரை நெடுங்காலம் காத்துக்கொள்வாய், சீதாபிராட்டியைத் துன்புறுத்திய தீவினையால், தவஞ்செய்து ஈட்டிய நல்வினையை அடியோடு இழந்தாய்; உனது பெருமை முழுவதும் அழிந்துவிட்டது; ‘தீவினை நல்வினையை வெல்லமாட்டாது’ என்னும் பெரியோர் உரையை நீ உளங்கொள்ளாமல் ஒழிந்தாய் ; நேர்மையில்லாத சிற்றின்ப வேட்கையினால் நன்னெறியை மறந்தவர்கள் மேன்மையடைய வியலுமோ ? சிவபிரான் உனக்களித்த வரம் தவறினாலும் இராமபிரானது அம்பு தவறிப் போகமாட்டாது; ஆகையால் உனது செல்வம் அழியாதிருக்கவும், உறவினர்கள் ஒழியாதிருக்கவும் நீ விரும்பினால் கவர்ந்து வந்த சீதையை உடனே விட்டு விடுமாறு சுக்கிரீவன் உன்பால் உரைத்து வரச்சொன்னன்” என்று, தான் தூது வந்த செய்தியினை ஓதி முடித்தான். இராவணன் சினமும் அனுமன் மனமும்
அனுமன் கூறிய செய்திகளை இராவணன் கேட்டான். மலையில் வாழும் குரங்கோ இத்துணை அறிவுரைகளை எடுத்தியம்பியது! என்று கூறிப் பெருநகை புரிந்தான். ‘ஒருவனுடைய தூதனாக இந்நகரம் புகுந்த நீ அழகிய பொழிலை யழித்ததும், அரக்கர்களைக் கொன்றொழித்ததும் ஏன்?’ என்று வினவினான். ‘உன்னைக் காட்டுவோர் எவரும் இன்மையால் அசோக வனத்தை யழித்தேன் என் கருத்தைக்கேட்டுத் தெரிந்து கொள்ளாமல் என்னைக் கொல்ல வந்தவர்களை நான் கொன்றொழித்தேன் ; இறுதியில் கட்டுண்டவன் போல் நான் வந்ததும் உன்னைக் காணவே’ என்ருன் அனுமன்.
அனுமன் மகேந்திரம் அடைதல்
அனுமன் மறுமொழி கேட்டுச் சினங்கொண்ட இலங்கைவேந்தன் கட்டளையால் அரக்கர்கள் அவனது வாலில் தீ வைத்தனர். அவன் அத்தீயினால் இலங்கை மாநகரை அழித்து வெளிப்போந்தான். இராமபிரான் திருவடிகளைத் திக்கு நோக்கி இறைஞ்சினான். விண்வழியே பறந்து வந்து இடைவழியில் மைந்நாகமலையில் சிறிது போழ்து தங்கினான். மீண்டும் அங்கிருந்து எழுந்து மகேந்திர மலையிற் குதித்தான். மனக் கவலையுடன் அங்கிருந்த வானர வீரர்கள், அவனது முகக் குறிப்பைப் பார்த்து அகக்களிப்பு அடைந்தனர். அனுமன் அங்கிருந்த அங்கதன் முதலான வானர வீரர்களைக் கண்டு வணங்கினான். அவர்கள் பால் அனுமன் இலங்கை சென்று மீண்டசெய்திகளுள் சிலவற்றை உரைத்தான். அவன் கூறாதவற்றையும் வானர வீரர்கள் குறிப்பினால் உணர்ந்து மகிழ்ந்தனர்.
அனுமனைக் கண்ட இராமன்
இராமபிரானுக்குச் செய்தி கூறும் பொருட்டு எல்லோரும் புறப்பட்டனர். அனைவர்க்கும் முன்னே அனுமன் விரைந்து சென்றான். இராமபிரான் சுக்கிரீவனுடன் உரையாடிக் கொண்டிருந்தான். சிறிது போழ்தில் அனுமன் இராமபிரான் இருக்கும் இடத்தையடைந்தான். அவன் அங்கு இராமபிரானை வணங்கவில்லை. சீதை இருக்கும் திக்கை கோக்கி வணங்கி வாழ்த்தினான். குறிப்பறிவதில் வல்ல இராமபிரான் அனுமனது செயலை உற்று நோக்கினன். சீதை நலமாக உள்ளாள் ; இவ்வனுமன் அவளைப் பார்த்துவிட்டு வந்துள்ளான் அவளுடைய கற்பும் கலங்காது இலங்குகின்றது என்று அறிந்து கொண்டான். அவனுக்கு உற்ற துயர் நீங்கியது; உவகையால் தோள்கள் பூரித்தன.
சொல்லின் செல்வனாய அனுமன் உரை
இவ்வேளையில் அனுமன் இராமனை நோக்கி, “தேவர்கள் தலைவனே! கண்டேன் கற்பினுக்கணியாம் சீதாபிராட்டியை இலங்கையிலே; இனி நீவிர் ஐயமும் துயரும் அறவே நீக்குவீர்! என் பெருந்தெய்வம் போல் திகழும் அவர், நும் பெருந்தேவியென்னும் தகுதிக்கும், நும்மைப் பெற்ற தசரத மன்னரின் மருமகள் என்னும் வாய்மைக்கும், சனக மன்னரின் மகள் என்னும் தகைமைக்கும் ஏற்பச் சிறப்புடன் விளங்குகின்றார் ; வில்லில் வல்ல வீரனே நான் இலங்கைமாநகரில் சீதா பிராட்டியாரைக் காணவில்லை; ஆனால், உயர்குடிப் பிறப்பும் பொறுமையும் கற்பும் ஒரு பெண்ணுருவம் கொண்டு களிநடம் புரிதலைக் கண்டேன்; நீர் அப்பிராட்டியின் கண்ணிலும் கருத்திலும் வாயிலும் எப்பொழுதும் இருக்கின்றீர்; அங்ஙனமாகவும் பிராட்டி நும்மைப் பிரிந்தார் என்பது பொருந்தியதாகுமோ? நான்முகன் கொடுத்த சாபத்தால் இராவணன் சீதாபிராட்டியைத் தொடுதற்கஞ்சி நிலத்தொடு பெயர்த்தெடுத்துச் சென்றான் , அப்பிராட்டியின் கற்புச் சிறப்பால் தேவ மாதர்கள் யாவரும் மிகுந்த சிறப்புற்றனர்” என்று பலவாறு சீதையின் கற்பு மாண்பினைப் பொற்புற விளக்கினான். ‘இன்னும் ஒரு திங்கள் வரையிலும் உயிரோடிருப்பேன்; அதற்குள் இராகவன் இங்கே வாரா தொழியின் உயிரிழப்பேன்’ என்று கூறிப், பின் தன் ஆடையில் மறைத்து வைத்திருந்த சூளாமணியை எடுத்து, நும்பால் கொடுக்குமாறு அப்பிராட்டி என் கையில் தந்தருளினர் என அனுமன் உரைத்துச் சூளாமணியை இராமபிரான் கையில் கொடுத்தான். அதனைப் பெற்ற இராமன் களிப்பென்னும் கடலில் மூழ்கித் திளைத்தான்.
இருவகைத் தூதுக்கு ஒருவன்
இங்ஙனம் இராமன் விடுத்த தூதனாய அனுமன் அவ்விராமனைப் பிரிந்த சீதைக்குக் கணவன் விடுத்த காதல் தூதனாகமட்டும் தொண்டாற்றவில்லை. தன் பெருந்தலைவனாகிய இராமன் விடுத்த போர்த்தூதனாகவும் இலங்கை வேந்தனைக் கண்டு, அவனது உள்ளமும் துளங்குமாறு செய்து மீண்டான். அதனாலேயே கவியரசராகிய கம்பர், அவ்வனுமனைச் ‘சொல்லின் செல்வன்’ என்று தம் காவியத்தில் போற்றிப் புகழ்கின்றார். எனவே, அவ்வனுமன் தலைமைத் தூதனுக்குரிய தகுதியெல்லாம் பெற்றுச்சிறந்து திகழ்கின்றான்.
---------------
7. பாண்டவர் விடுத்த தூதன்
கம்பரும் வில்லியும்
பாரத நாட்டில் தோன்றிய பழைமையான வடமொழி இதிகாசங்கள் இராமாயணமும் பாரதமும் ஆகும். அவற்றைத் தமிழிற் பாடித்தந்த அருந் தமிழ்க் கவிவாணர் பலர். ஆயினும் இராமாயணத்தைப் பாடிய கம்பரும், பாரதத்தைப் பாடிய வில்லி புத்தூரருமே கற்றோரால் வியந்து போற்றப்படுகின்றனர். இப் பெருங்கவிஞர் இருவரும் அவ் விதிகாசங்களைக் கற்றவர் வியக்கவும் நயக்கவும் நற்றமிழிற் பாடிய பின்னர், முன்னர்த் தமிழில் தோன்றிய இராமாயண பாரத நூல்கள் வழக்காற்றினின்று மங்கி மறையலாயின.
தமிழுக்குக் கவி
நெஞ்சை யள்ளும் செஞ்சொற் காவியமாகிய சிலப்பதிகாரக் காலத்திற்குப் பின், அருந்தமிழிற் பெருங் காவியம் ஆக்கியவர்களில் சிறந்து நிற்போர் கம்பரும் வில்லிபுத்தூரருமே என்று சொல்லலாம். பிற்காலத்தில் தமிழுக்குக் ‘கவி’ என்று சிறப்பாகக் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கார் கம்பரும் வில்லியும் என்று கவியுலகம் கொண்டாடும். இராமாயண பாரத வரலாறுகளைச் செவிக்கினிய செஞ்சொற் பாக்களால் தெவிட்டாத தெள்ளமுதமாக்கித் தந்த இவ்விருவர்க்கும் ஒப்பாவார் பிற்காலத்தில் எவருமிலர். கவிச்சக்கரவர்த்தி என்று கம்பர் சிறப்பிக்கப் பெற்றதுபோல், வில்லிபுத்தூரரும் ‘கவி சார்வ பெளமன்’ என்று சிறப்பிக்கப்பெற்றார். இவர் தம் காலத்தில் பிழையுடைய கவிபாடும் புல்லறிவாளரின் செவிகளைக் குடைந்து தோண்டி, எட்டின மட்டும் அறுத்து விடும் கொடுஞ்செயலைப் புரிந்து வந்தார் என்பர். ஆதலின், “குறும்பியளவாக் காதைக் குடைந்து தோண்டி, எட்டின மட்டறுப்பதற்கோ வில்லியில்லை” என்று பிற்காலப் புலவர் ஒருவர் பாடினர்.
வில்லி பாரதச் சிறப்பு
இத்தகைய பெருங்கவிஞராகிய வில்லியார் தாம் ‘பிறந்த திசைக்கு இசைநிற்பப் பாரதமாம் பெருங் கதையைப் பெரியோர் தங்கள் சிறந்த செவிக்கு அமுதமெனப் பாடித் தந்தனர். இவர் பாக்கள் சொற்சுவை பொருட்சுவை மலிந்து மிடுக்கான நடைகொண்டு மிளிர்வனவாகும். இவர் தம் காலவியல்புக்கேற்ப மணியும் பவளமுங் கோத்தது போல, வட சொல்லையும் தொடர்களையும் இடையிடையே கலந்து வளம்படப் பாடுவதை இந்நூலிற் காணலாம். வீரச்சுவை, வெகுளிச்சுவை மிக்க கதைப்பகுதிகளில் சுவை கனிந்த சந்தப்பாக்களால் ஓசைகயம் சிறக்குமாறு இவர் பாடியுள்ள திறம் வியக்கற்பாலதாகும்.
பாரதக்கதை அமைப்பு
பாரதம் ஒரு குலத்துதித்த தாயத்தார்களில் ஒரு சாரார் ஒழுகிய அறநெறிகளையும், மற்றொரு சாராரின் மறநெறியான் விளைந்த தீய விளைவுகளையும் விரித்துக் கூறுவது. குருகுல வேந்தர்களாகிய கெளரவர்க்கும் பாண்டவர்க்கும் நிகழ்ந்த சூதுப்போரில் பாண்டவர் தம் அரசுரிமை யாவும் இழந்தனர். கெளரவர் தலைவனாகிய துரியோதனன் நியமித்தவாறே அப்பாண்டவர் பன்னிரண்டாண்டுகள் காட்டில் வாழ்ந்தனர்; ஓராண்டுக் காலம் விராட நகரிலே கரந்துறை வாழ்வை நடத்தினர். அங்ஙனம் பதின்மூன்று ஆண்டுகள் கழிந்ததும் பாண்டவர் ஐவரும் வெளிப்பட்டனர். தமக்குரிய தாயபாகத்தைத் தருமாறு வேண்டி முதலில் உலூக முனிவரையும், பின்னர்க் கண்ணபிரானையும் துரியோதனன்பால் தூது அனுப்பினர்.
கண்ணனைத் தூது செல்ல வேண்டுதல்
துரியோதனன் விடுத்த தூதனாய்ப் பாண்டவர் உறைவிடம் அடைந்த சஞ்சய முனிவன், நுமக்கு இனித் தவம் செய்வதே தக்கதென உரைத்து அகன்றான். அவன் சென்ற பிறகு, பாண்டவர் தலைவனாகிய தருமன் அரசர்க்குரிய அறநெறியை ஆராய்ந்தான். துரியோதனன்பால் கண்ணபிரானைத் தூதனுப்பி, இன்னும் ஒரு முறை அவன் எண்ணத்தைத் திண்ணமாகத் தெரியலாம் என்று எண்ணினான். பின்னர்க் கண்ணபிரானிடம், “நீ தூதாகச் சென்று எம்முடைய எண்ணத்தை அத் துரியோதனாதியர்க்குச் சொல் , அவர்கள் எமக்குரிய பங்கைக் கொடுப்பதற்கு மறுப்பராயின் போர் புரிந்தேனும் நாட்டைக் கைப்பற்றுவோம் ; நீ முதலில் எமக்குரிய பாகத்தைக் கேள் , அதனைத் தருதற்குத் துரியோதனன் மறுப்பானாயின் எங்கள் ஐந்து பேருக்கும் ஐந்து ஊர்களேனும் கேள்; அவன் அதனையும் மறுப்பானாயின் ஐவர்க்கும் ஐந்து இல்லங்களையேனும் கேள் ; அதனையும் அளிக்க மறுப்பானாயின் போருக்குத் தயாராகுமாறு அறிவுறுத்தி வருக ” என்று வேண்டினான்.
கண்ணன் அத்தினாபுரம் அடைதல்
பாண்டவர் தலைவனாகிய தருமன் வேண்டுகோளுக்கு இசைந்த கண்ணபிரான் அத்தினாபுரத்தை யடைந்தான். புறநகரில் அமைந்ததொரு பொழிலில் தங்கினான். அவனது வருகையைத் தூதர் துரியோதனனுக்கு அறிவித்தனர். துரியோதனன் நகரை அணி செய்யுமாறு கட்டளையிட்டுக் கண்ணனை எதிர் கொள்ளப் புறப்பட்டான். அவன் மாமனாகிய சகுனியோ, தன் மருகனைத் தடுத்து நிறுத்தினான். ஆதலின் துரியோதனன் கண்ணனை எதிர்கொள்ளாது, அவனுக்கு இருக்கை யமைத்துத் தம்பியர் புடைசூழ வீற்றிருந்தான்.
விதுரன் மாளிகையில் விருந்து
புறநகரில் வந்து தங்கிய கண்ணனை வீடுமன், விதுரன், துரோணன், அசுவத்தாமன் முதலிய பலர் எதிர்கொண்டு வரவேற்றனர். அவர்களுடன் நகருள் நுழைந்த கண்ணன் எல்லோரையும் அனுப்பிவிட்டு, விதுரன் மாளிகையில் விருப்புடன் புகுந்து தங்கினான். தனது மாளிகையில் தங்கிய கண்ணனை விதுரன் பலவாறு போற்றி வழிபட்டான். “பெருமானே! எளியேனது இச்சிறிய குடிசை என்ன அரிய தவத்தைச் செய்ததோ ? நீ முன்பு அறிதுயில் புரிந்தருளிய பாற்கடலோ இது! அன்றி ஆதிசேடனாகிய பாம்புப் பாயலோ! பச்சை ஆலிலையோ? அல்லது நால்வகை வேதங்களோ ? நீ இங்கு எழுந்தருளியதை என்னென்று போற்றுவேன்?” என்று பாராட்டி மகிழ்ந்தான்.
“முன்ன மேதுயின் றருளிய முதுபயோ ததியோ?
பன்ன காதிபப் பாயலோ? பச்சை ஆல் இலையோ?
சொன்ன நால்வகைச் சுருதியோ? கருதி எய்தற்
கென்ன மாதவம் செய்ததுஇச் சிறுகுடில்! என்றான்.”
பின்பு கண்ணபிரானுக்கும் உடன் வந்தவர்க்கும் சிறந்த விருந்து நடைபெற்றது. எல்லோரும் தத்தம் உறையுள் எய்தினர்.
கண்ணனும் விதூரனும் கனிந்துரையாடல்
பின்னர்க் கண்ணனும் விதுரனும் தனியே அமர்ந்து உரையாடத் தொடங்கினர். விதுரன் கண்ணனை நோக்கி, “கருணையங் கடலே ! நீ இங்கு எழுந்தருளியதன் காரணத்தைக் கூறியருள்க” என்று அன்புடன் வேண்டினான். அது கேட்ட கண்ணன், “துரியோதனன் கருத்துப்படியே பாண்டவர்கள் காடு சென்று மீண்டுளாரன்றோ? அவர்கட்குரிய நாட்டைக் கேட்டற் பொருட்டே யான் இங்கு வந்தேன்!” என்று இயம்பியருளினான். அவ்வுரை கேட்ட விதுரன், “பெருமானே ! அத் துரியோதனன், தருமனுக்குரிய நாட்டை ஒழுங்காகத் தரமாட்டான்; அவன் அறநெறியினைச் சிறிதும் அறியாதவன் ; அவனைச் சூழ்ந்துள்ள கூட்டமும் அத்தகையதே. ஆதலின் அத் துரியோதனனைப் போரில் எதிர்த்துக் கலக்கினாலன்றி அறியான்” என்று உரைத்தான். “துரியோதனன் ஒழுங்காக நாட்டைக் கொடாவிடின் பாண்டவர் அரும்போர் புரிந்து அனைவரையும் அழித்தொழிப்பர்; இஃது உறுதியாகும்; மேலும் அத்துரியோதனன் அவர்கட்குரிய பாகத்தைக் கொடேன் என்று கூறுவது புதுமையன்று; இவ்வுலகத்தின் இயல்பே; போரில் எதிர்த்து அவர்கள் மீது பொன்றுமாறு அம்புகளைச் செலுத்தும் போதுதான் சொன்னவையெல்லாம் தருதற்கு முன் வருவர்” என்று கண்ணன் கட்டுரைத்து விதுரனுக்கு விடையளித்தான். துரியோதனன் அரசவையில் கண்ணன்
மறுநாட் காலையில் கண்ணன் துரியோதனன் அரசவை நண்ணினான். ஆங்கிருந்த வீடுமன் முதலிய பலர் கண்ணனைப் போற்றி வரவேற்றனர். அவ் வண்ணல் தனக்கென அமைத்த இருக்கையில் எழுந்தருளினான். உடனே துரியோதனன், கண்ணனை நோக்கி, இந்த நகருக்கு வந்த நீ எனது மாளிகைக்கு வராமல் விதுரன் மாளிகையிற் சென்று தங்கியதேன்?” என்று வினவினான். “என் வீடு, உன் வீடு என்று எனக்கு எந்த வேறுபாடும் இல்லை விதுரன் அன்புடன் எதிர்வந்து வரவேற்றுப் பேசினான் ; மேலும் நான் பாண்டவர் விடுத்த தூதனும் ஆவேன்; அவ்வாறிருக்க உனது வீட்டில் உணவுண்டு, பின்னர்; வெறுக்குமாறு உன்னுடன் உரையாடுவது முறை யாகுமோ ? அமைச்சர்களாக இருந்துகொண்டே ஒருவருடைய ஆட்சியினை அழித்தாலும், பெரியோர் அறிவுரையை மறுத்து கடந்தாலும், பிறர் செய்த நன்றியை மறந்தாலும், ஒருவர் மனையில் உண்டு பின்பு பகை கொண்டு அவருடன் பொருதற்குப் புகுந்தாலும் இவர்களுடைய பழி என்றும் அழியாது; இவர்கள் நால்வரும் நரகில் வீழ்தற்கே உரியவராவர்.” என்று கண்ணன் மறுமொழி யருளினான்.
“அரவ மல்கிய பதாகை யாய்! மதி
அமைச்ச ராய் அற சழிப்பினும்
குரவர் நல்லுரை மறுக்கி னும்பிறர்
புரிந்த நன்றியது கொல்லினும்
ஒருவர் வாழ்மனையில் உண்டு பின்னும் அவ
ருடன்அ ழன்றுபொற உன்னினும்
இரவி உள்ளளவும் மதியம் உள்ளளவும்
இவர்களே நரகில் எய்துவார்.” கண்ணன் தூதுவந்த செய்தியை ஓதுதல்
கண்ணனின் கட்டுரையைக் கேட்ட கண்ணிலான் மகனாகிய துரியோதனன் நகைத்தான். ‘நீ தூது வந்த செய்தி யாது?’ என்று வினவினான். “சூதினால் அரசிழந்த நின் துணைவராகிய பாண்டவர் நீ சொன்ன சொல் தவறாத வண்ணம் பகைவர்களைப்போல் காட்டிற்குச் சென்று குறித்த காலத்தைக் கழித்து மீண்டுள்ளனர்; இனி அவர்கட்குரிய நாட்டை நட்புடன் கொடுப்பதே அறமாகும்; அங்ஙனம் செய்தால் பிற அரசர்களும் உன்னை உவந்து போற்றுவர்; மறுப்பாயானால் அஃது அறமன்று; ஆண்மையும் அன்று; புகழும் அன்று” என்று அருளோடு கண்ணன் அறவுரை கூறினான்.
துரியோதனன் மறுப்புரை
கண்ணன் மொழிகளைக் கேட்ட துரியோதனன் கடுஞ்சினத்துடன் பேசத் தொடங்கினான். இப் பாண்டவர் அன்று சூதாடித் தம் உரிமையெல்லாம் இழந்து வனம் புகுந்தனர்; இன்று அவ்வுரிமைகளை நீ சூழ்ச்சியாகக் கவர நினைத்தால் நான் அவரினும் எளியனோ? அவர்கள் இன்னும் காட்டில் சென்று திரிவதே உறுதியாகும் ; நீ என்னை வெறுத்தால் என்ன ? இங்குள்ள அரசர்கள் திகைத்தால் என்ன ? மறைவாகச் சென்று நகைத்தால்தான் என்ன? உண்மை பொய்த்துப்போய்விட்டது என்று தேவர்கள் கூறினால் என்ன ? பாண்டவர் என்னுடன் மாறுபட்டுப் போரைத் தொடங்கினாலும் என்ன? ஈ இருக்கும் இடங்கூட இனி நான் அவர்கட்குக் கொடுக்கமாட்டேன்” என்று கூறினான். கண்ணன் அறிவுரையும் அறவுரையும்
இவ்வாறு கூறிய துரியோதனனின் கொடுமொழிகளைக் கேட்ட கண்ணபிரான், “அவர்கட்குரிய நாடு முழுவதையும் கொடுப்பதற்கு விருப்பமில்லையானால் அதிற் பாதியாவது கொடு” என்றான். அதுவுங் கொடுக்க முடியாதென அவன் மறுக்கவே, கண்ணன், “ஐந்து பேர்களுக்கும் ஐந்து ஊரேனும் உதவுக” என்று கேட்டான். “காட்டில் திரிந்து நாட்டுள் புகுந்த அவர்கட்கு நாடும் ஊரும் வேண்டுமோ? ஐந்து வீடு கொடுப்பினும் அவர்கள் அவற்றை மறுப்பார்களோ?” என்று மறுமொழி பகர்ந்தான் துரியோதனன். அதனைக் கேட்ட கண்ணன், “தந்தையின் காதலுக்காகத் தன் தம்பிக்கு இந்த வாழ்வையும் அரசையும் கொடுத்த நின் குலத்து அரசன் ஒருவனும் இந்த அவையில் இருக்கிறான்; அவ்வாறாக இந்த நாடு முழுமைக்கும் உரிமையுடையவர்க்கு ஐந்து ஊர்களையேனும் நீ உதவமாட்டேன் என்றால் உனது அரசாட்சி அறநெறியுடையதாகுமோ?” என்று இடித்துரைத்தான். இதைக் கேட்ட துரியோதனன், “இவ்வுலகம் ஆண்மையுடையவர்க்கே உரியதாகும். இதற்கு உரிமை வேண்டுவதில்லை” என்று விளம்பினான். “அங்ஙனமாயின் போர் செய்வதற்காவது உடன்பட்டிருப்பதாக உறுதிமொழி கூறிக் கையடித்துத் தருக” என்று கண்ணன் கூறினான்.
துரியோதனன் பழித்துரைத்தல்
பொய்யனாகிய துரியோதனனுக்குப் புண்ணியனாகிய கண்ணன் புகன்ற மொழிகள் மேலும் சினத்தையே விளைத்தன. அவன் கண்ணனைப் பலவாறு இழித்தும் பழித்தும் உரைத்தான். யானைகள் பகை கொண்டு எதிர்த்தால் சிங்கங்கள் வாளாவிருக்குமோ? போருக்கு உடன்பட்டுக் கையறைய வேண்டும் என்று நீ கூறியது தகுமா? என்று சினந்தான். பாண்டவர்களைப் பலவாறு இகழ்ந்து பேசினான். அவன் பழித்துரைத்த மொழிகளையெல்லாம் கண்ணன் பொறுமையுடன் கேட்டான். பின்பு அந்த அவையினின்று நீங்கி விதுரன் மாளிகையை அடைந்தான். இனிமேல் பாண்டவர் எண்ணம் இனிது நிறைவேறும் என்று நினைந்து மகிழ்ந்தான்.
விதுரனை இகழ்தலும் வில்லை முறித்தலும்
கண்ணபிரான் அரசவையின் நீங்கிய பின்னர்த் துரியோதனன் கண்ணபிரானுக்கு விருந்தாட்டியதற்காக விதுரன்மீது சினங்கொண்டான். ‘விலைமகள் மகனாகிய விதுரன் இன்று கண்ணனுடன் உறவு கொண்டதாகிய வியப்பை என்சொல்லி வெறுப்பது?’ என்று கூறி அவனை இகழ்ந்தான். நாவைக் காவாமல் துரியோதனன் நவின்ற மொழிகள் விதுரனுக்குப் பெருஞ்சினத்தை விளைத்தன. ‘என்னை விலைமகளின் மகன் என்று இகழ்ந்துரைத்த உன் பக்கத்தில் துணையாக நின்று வில்லைத் தொடேன்’ என்று விதுரன் வஞ்சினம் கூறித் தன் வில்லை முறித்து இல்லம் நோக்கி விரைந்தான். அது கண்ட வீடுமர் துரியோதனனைக் கடிந்துரைத்தார். அவனோ வீடுமர் மொழிகளையும் பொருட்படுத்தாது, கன்னன் வில்லாண்மையையே வியந்து பேசினான்.
விதுரன் கண்ணனுக்கு விளம்பியன
விதுரன் வில்லை முறித்து விரைந்து வருதலைக் கண்ட கண்ணன், அதனை முறித்தற்குக் காரணம் என்னவென்று உசாவினான். “ஒருவன் நடக்கவேண்டியவற்றை ஆராய்ந்து பாரானாயினும், அமைச்சர்கள் அறிவுரையைக் கேளானாயினும், அழிவை எண்ணாதவனாயினும், நாவினைக் காவானாயினும் அத்தகையோனுக்குத் துணையாகச் சென்று போரில் இறப்பது வீணென்று உலகம் கூறும் ; அங்ஙணமிருக்கத் துரியோதனன் பொருட்டுப் போர்புரிந்து ஏனோ வீணில் இறக்கவேண்டும்? இவ்வுலகமக்கள் தமக்குச் செல்வம் வந்து சேரும் பொழுது அதற்குக் காரணமான தெய்வத்தைச் சிறிதும் போற்றமாட்டார்கள் ; எதனையும் எண்ணிப் பார்த்துப் பேசமாட்டார்கள்; உறவினர் என்றும் உற்ற நண்பர் என்றும் உள்ளத்திற் கொள்ளார்; தாங்கள் வெற்றியடைவது பற்றி எண்ணுவார்களே யல்லாமல், தம் பகைவர்களின் வலிமையை எண்ணிப்பாரார் ; ஊழ்வினையின் விளைவையும் உற்றுநோக்கார் நினைக்கவும் தொழவும் எட்டாத சிறப்புடைய நீ இங்கு எழுந்தருளப் பெற்றும் துரியோதனன் நின்னைப் போற்றாது ஒழிந்தான்; உறவினருடன் வாழ வெறுத்தான்; அவன் கூறிய கொடுஞ் சொற்களை என்னால் பொறுக்க முடியவில்லை; அதனாலேயே என் வில்லை முறித்தெறிந் தேன்” என்று விதுரன் விளம்பினான்.
“செல்வம்வந் துற்ற காலைத்
தெய்வமும் சிறிது பேணார்;
சொல்வன அறிந்து சொல்லார் ;
சுற்றமும் துணையும் நோக்கார்
வெல்வதே நினைவ கல்லால்
வெம்பகை வலிதென் றெண்ணார்;
வல்வினை விளைவும் ஓரார்
மண்ணின்மேல் வாழும் மாந்தர்.”
அத்தினாபுரியில் கண்ணன் அருஞ்செயல்கள்
விதுரன் விளம்பிய மொழிகளைக் கேட்டுக் கண்ணன் மகிழ்ந்தான். “நெய்யைச் சொரிந்து விறகுகளை அடுக்கினாலும் காற்று வீசவில்லையாயின் அவ்விறகில் தீப்பற்றமாட்டாது. அதுபோல் நின் கைவில் முறிந்து போனதனால் துரியோதனன் படை அழிவது உறுதியாகும்; நின்னைத் துரியோதனன் இகழ்ந்துரைத்த சொற்களை மனத்திற் கொள்ளாமல் மறந்திடுக” என்று கூறினான். பின்னரும், இன்றியமையாத பல செயல்களைப் புரிந்தருளினான் பாண்டவர்களின் அன்னையாகிய குந்திதேவியைச் சந்தித்துக் கன்னன், அவள் பெற்றமைந்தனே என்பதை அறிவுறுத்தினான். அவனிடம் உள்ள அரவக்கணையை வரப்போகும் போரில் அருச்சுனன் மீது ஒரு முறைக்குமேல் செலுத்தாதிருக்குமாறு உறுதிமொழி பெற்றுவரச் செய்தான். இந்திரனைக் கன்னன்பால் அனுப்பி, அவனுடன் பிறந்த கவசகுண்டலங்களைக் கவர்ந்து வருமாறு செய்தான். துரியோதனன், தன்னைக் கொல்லுதற்கென்று செய்த சூழ்ச்சியினை வென்று, தன் பெரு வடிவைக் காட்டியருளினான். துரியோதனனுக்குப் போரில் துணையாவதில்லையென்று அசுவத்தாமனிடம் உறுதிமொழி பெறுபவனைப்போல் சூழ்ச்சி புரிந்தான்.
கண்ணன் தலைமைத் தூதன்
தூதனாக அத்தினாபுரம் அடைந்த கண்ணபிரான் திரும்பிச் சென்று தருமன் முதலியோரைக் கண்டு அத்தினாபுரத்தில் நிகழ்ந்த அரிய செய்திகளையெல்லாம் விரித்துரைத்தான். ஆனால் கன்னனுக்கும் குந்திதேவிக்கும் இடையே நிகழ்ந்த செய்திகளை மட்டும் வெளிப்படுத்தாது மறைத்தருளினான். இம்முறையில் தூது சென்று மீண்ட கண்ணபிரான் தலையாய தூதர்க்கு நிலையாய எடுத்துக்காட்டாக இலங்குவதைக் காணலாம்.
-------------
8. வேலன் விடுத்த தூதன்
தமிழில் சிறந்த புராணங்கள்
நந்தம் செந்தமிழ் மொழியிலுள்ள புராணங்கள் பலவற்றுள்ளும் சிறந்தனவாகத் திகழ்வன ஒன்பது புராணங்கள் என்று ஆன்றோர் உரைப்பர். அவைதாம் பெரியபுராணம், திருவிளையாடற் புராணம், கந்த புராணம், கோயிற் புராணம், சேது புராணம், காளத்திப் புராணம், காஞ்சிப் புராணம், தணிகைப் புராணம், திருக்குற்றாலப் புராணம் என்பனவாம். இவ்வொன்பது புராணங்களுள்ளும் மூன்றன. மிகச் சிறந்தனவாகக் கற்றோர் போற்றுவர். பெரிய புராணம், திருவிளையாடற் புராணம், கந்த புராணம் என்னும் இம் மூன்று நூல்களையும் சிவபெருமானுக்கமைந்த மூன்று விழிகளைப் போன்றவையென்று போற்றி மகிழ்வர். தொண்டர்தம் பெருமையைப் பேசும் திருத்தொண்டர் புராணம் பெரிய புராணம் எனப்படும். சிவகுமாரனாகிய முருகன் பெருமையை விரித்துரைக்கும் கந்தபுராணமோ ‘புராண நன்னாயகம்’ என்று போற்றப்படும்.
கந்தபுராணச் சிறப்பு
பெரிய புராணத்தை யருளிய சேக்கிழார் பெருமான் அப்புராணத்தை ‘மாக்கதை’ என்று சிறப்பித்த வாறே, கந்த புராண ஆசிரியரும் கந்த புராணத்தை ‘அறுமுகம் உடையவோர் அமலன் மாக்கதை’ என்று சிறப்பித்துள்ளார். தில்லைக் கூத்தனாகிய சிவபெருமான், ‘உலகெலாம்’ என்று அடியெடுத்துக் கொடுக்கச் சேக்கிழார் பெரிய புராணம் பாடத் தொடங்கியது போன்றே, கந்தபுராண ஆசிரியரும் காஞ்சிக் குமர. கோட்டத்து முருகவேள் ‘திகடசக்கரம்’ என்று அடியெடுத்துக்கொடுக்க, அத்தொடரையே முதலாகக் கொண்டு நூலைப் பாடினர். சிவபெருமான் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய ஆறு நெருப்புப் பொறிகளே ஆறுமுகப்பெருமானாக வடிவெடுத்தனவாதலின், அப்பெருமானின் வரலாற்றைக் கூறும் கந்த புராணமும் சிவபெருமானது நெற்றிக் கண்ணுக்கு நேரானதெனப் பாராட்டப்பெறும்.
கச்சியப்பர் இருமொழிப் புலமை
காஞ்சிக் குமரகோட்டத்தில் எழுந்தருளியுள்ள முருகவேளை முப்போதும் திருமேனி தீண்டி வழிபடும் தொழும்பு பூண்டவராகிய கச்சியப்பர் வடமொழிப் புலவரும் தென்மொழிப் புலவரும் ஒருங்கே கொண்டாட இருமொழிப்புலமையும் சான்ற பெருங்கவிஞராக விளங்கினார். இத்தகைய வித்தகரைக் காஞ்சியில் வாழ்ந்து வந்த கற்றோர் பலரும் முருகன் வரலாற்றை இனிய தமிழில் பாடித்தருமாறு பலகால் வேண்டினர். முருகப்பெருமானும் ஒருநாள் இரவு, அவரது கனவில் தோன்றி, “அன்பனே! நமது புராணத்தை நற்றமிழிற் பாடித் தருக” என்று கட்டளையிட்டருளி ‘திகட சக்கரம்’ என்று முதலும் எடுத்துக் கொடுத்துவிட்டு மறைந்தருளினான்.
முருகன் திருத்திய முழுநூல்
அக் கட்டளையைச் சிரமேற் கொண்டு கச்சியப்பர் கந்தபுராண நூலைப் பாடத் தொடங்கினார். நாள் தோறும் தாம் பாடிய பாடல்களை யெழுதிய ஓலைச் சுவடிகளே நள்ளிருட் பூசனை முடிவுற்றதும் முருகப் பெருமான் திருவடியில் வைத்துத் திருக்கதவத்தை அடைத்து வருவார். மறுகாட் காலையில் திருக்கதவம் திறக்கும் பொழுது, அவர் வைத்துவந்த சுவடிகளில் திருத்தங்கள் செய்யப்பெற்றிருக்கும். அத் திருத்தங்களை முருகப் பெருமானே செய்தருளினான் என்று காது வழிச் செய்தியொன்று வழங்கி வருகின்றது. ஆதலால், தமிழ்த் தெய்வமாகிய முருகப்பெருமான் திருக்கரத்தால் திருத்தம் செய்யப்பெற்ற தெய்வச் சைவத் திருநூலாகத் திகழ்வது கந்த புராணம் ஆகும்.
வீரசோழிய விதிக்கு இலக்கியம்
இத்தகைய கந்த புராணத்தை நூலாசிரியராகிய கச்சியப்பர் தாம் வழிபடும் காஞ்சிக் குமரகோட்டத்தில் அரங்கேற்றத் தொடங்கினர். அப்போது இந் நூலின் முதற் பாடலில் ‘திகழ் தசக்கரம்’ என்பது ‘திகடசக்கரம்’ என ஆனதற்கு இலக்கண விதி கூறுமாறு அவையிலிருந்தோர் வினவினர். அவ்வேளையில் ஒருவர் அங்கு விரைந்து வந்து, வீரசோழியம் என்னும் நூலிலுள்ள விதியை எடுத்துக்காட்டி, அவையோர் வியக்குமாறு விடைகூறி மறைந்தனர். அவ்வாறு வந்தவர் முருகப் பெருமானே என்று அறிந்து, கச்சியப்பரின் கவித்திறனப் பலவாறு மெச்சினர்.
நூலின் உயர்வும் உட்பொருளும்
முருகப்பெருமான் திருவருள் நலங்கனிந்த தெய்வ நூலாகிய கந்த புராணம் வீறுபெற்ற செந்தமிழ் நடையுடையது. உவமை நலஞ்செறிந்த எளிய இனிய செய்யுட்களால் இயன்றது. அணிகள் பலவும் அமைந்து சிறந்த காவியமாகத் திகழ்வது. பதினாயிரத்துக்கு மேற்பட்ட பைந்தமிழ்ப் பாக்களைக் கொண்டது. சிறந்ததோர் உட்பொருளைத் தன் னகத்தே கொண்டொளிர்வது. விதிவழி விலகிய இந்திரன் முதலான வானவர், சூரன் முதலான அசுரர்களின் வாயிலாக வினைவழி வரும் துன்பங்களால் துயரம் அடைகின்றனர். பின்பு இறைவனை நினைவு கூர்ந்து, அன்பால் வழிபாடாற்றி, முருகப்பெருமான் துணைகொண்டு சூரன் முதலானோரை அழித்து இன்புறுகின்றனர். இவ்வரலாற்றால் உயர்ந்த சமய உண்மையைக் கச்சியப்பர் திண்மையுறப் புலப்படுத்துகின்றார். ‘விதிவழி தவறிய உயிர்கள் ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களின் வினைப் பயன்களால் வெந்துயர் எய்தும்; அப்போது இறைவனை நினைந்து அன்பால் வழிபாடு புரியத் திருவருள் வாய்க்கும்; அத் திருவருள் துணைகொண்டு மும்மலங்களை நீக்க, இறவாத இன்ப முத்திவந்துறும், என்னும் தத்துவத்தை உட்கொண்ட கந்த புராணம் சொல்லாலும் பொருளாலும் அழகுற்று விளங்குவது; உயர்ந்த வேலைப் பாட்டுடன் இழைக்கப்பெற்ற மாணிக்கம் போல்வது.
நூலின் அமைப்பும் சிறப்பும்
மேலும், இந்நூல் இலக்கண மேற்கோளாகக் காட்டப்பெறும் சிறந்த இலக்கியமாகும். இந்நூலாசிரியர் ஒரு பொருளைக் குறிக்கும்போது அதன் பெயராகிய பல சொற்களாலும் குறிப்பிடுவர். இவர் நடையிலே தொனிப் பொருள் சிறந்திருக்கும். இந்நூலின் நடை, தெளிந்த நீரோட்டம் போன்று ஒரே தன்மையாக வீறுபெற்றுச் செல்லும் நல்லியல்புடையது. இந்நூலின்கண் சைவாகமங்களின் கருத்துக்களும், வேதோபநிடதங்களின் கருத்துக்களும் இனிது விளக்கப்படுகின்றன. கச்சியப்பர் வாழ்ந்த காலம்
இனிக் கம்பரே கந்த புராணத்தைப் பாட இருந்தனர் என்றும், கச்சியப்பர் அதனை முன்னரே பாடியுள்ளார் என்பதை அறிந்து இராமாயணத்தைப் பாடத் தொடங்கினர் என்றும் காது வழிச் செய்தியொன்று வழங்குகின்றது. இது குறித்துக் ‘கச்சியப்பர் என்னும் சுறாவா கந்த புராணக் கடலைக் கலக்கியது?’ என்று கம்பர் வினவியதாகப் பழமொழியொன்று வழங்கும். இதனால் கச்சியப்பர், கம்பர் காலத்திற்குச் சிறிது முற்பட்டவர் என்று கருதலாம். வீரசோழிய இலக்கண விதியைக் கடைப்பிடித்த கச்சியப்பர் அவ் வீரசோழிய காலத்துக்குப் பின்னும், கம்பர் காலத்துக்கு முன்னும் வாழ்ந்தவராதல் வேண்டும்.
கதையமைப்பில் இருநூல்களின் ஒற்றுமை
இவ்வுண்மை கந்த புராணம், இராமாயணம் ஆகிய இரு நூல்களின் கதையமைப்பில் உள்ள ஒற்றுமைகளால் தெள்ளிதிற் புலனாகும். இலங்கையில் இராவணன் நிறுவிய அரசு இராமனது வில்லால் அழிந்தது. வீரமகேந்திரத்தில் சூரன் அமைத்த அரசு முருகனது வேலால் முறிந்தது. இராவணன் நெடுந்தவம் புரிந்து பெற்ற வரத்தாலும் வலிமையாலும் தேவரையும் மூவரையும் வென்றான். மாநில மன்னர், அவன் படைவலி கண்டு அஞ்சி அடி பணிந்தனர். இத்தகைய வீரஞ் செறிந்த வேந்தன் கும்பகருணன் முதலான தம்பியரோடும், மேகநாதன் முதலான மைந்தரோடும் இலங்கையிற் சிறந்து விளங்கினான். வானவர் அந்நாட்டில் வாயடங்கிப் பணிபுரிந்தனர், எங்கும் அறம் தளர்ந்து, மறம் வளர்ந்தது. இவ்வாறே சூரனும் பெருந்தவம் புரிந்து அண்டங்கள் பலவற்றை யும் ஆளும் அரிய வரம் பெற்றான். விண்ணவரைப் பிடித்து வந்து, தன் நகரமாகிய வீரமகேந்திரத்தில் சிறைவைத்தான். சிங்க முகன் முதலான தம்பியரோடும், பானுகோபன் முதலான மைந்தரோடும் மாண்புற்று விளங்கினான்.
இராமனும் வேலனும்
உலகில் மறம் பெருகி அறம் அருகும்பொழுது இறைவன் தோன்றி, மறத்தினை வேரோடு அறுத்து, அறத்தினைச் சீரோடு நிறுத்துவான் என்பது ஆன்றோர் கருத்தாகும். அதற்கேற்ப அரக்கர்கோன் செய்த கொடுமையால் இராமன் அவதரித்தான். அசுரர் கோன் விளைத்த தீமையால் முருகன் அவதரித்தான். சீதையைச் சிறை மீட்பதற்கு இராமன் வில்லுடன் எழுந்தான். சயந்தன் முதலான வானவரைச் சிறை மீட்பதற்கு முருகன் வேலுடன் விரைந்தான்.இலங்கை வேந்தன் தங்கையாகிய சூர்ப்பணகையே அண்ணன் அழிந்தொழிய வழிதேடினாள். சூரன் தங்கையாகிய அசுமுகியும் தன் அண்ணன் அரசோடொழிதற்கு அடிகோலினாள். அழகே உருவாயமைந்த சீதையைக் கவர்ந்து சென்று தன் அண்ணனிடம் சேர்க்க எண்ணினாள் சூர்ப்பணகை. அதனால் இராமன் தம்பியாகிய இலக்குவனால் மூக்கறுபட்டுத் தமையனிடம் ஓடி முறையிட்டாள்.
அசமுகியும் சூர்ப்பணகையும்
பொன்னாடு துறந்து பொன்னி நாட்டையடைந்த இந்திரன் சிவமணங் கமழும் சீர்காழிப் பதியில் பொழில் ஒன்றையமைத்து,அங்குத் தன் தேவியுடன் தங்கியிருந்தான். தனித்திருந்த அவன் தேவியைச் சூரன் தங்கையாகிய அசமுகி கண்ணுற்றாள். அவளைத் தன் தமையனிடம் கொண்டு சேர்க்க விரும்பிய அசமுகி, பலவாறு இழித்துரைத்து எடுத்துச் செல்லத் துணிந்தாள். அவ்வேளையில் சோலையைக் காவல் புரிந்த மாகாளன் வெளிப்பட்டு அசமுகியின் கையை வாளால் வெட்டி வீழ்த்தினான். இலக்குவனால் மூக்கிழந்த சூர்ப்பண கையைப் போன்று மாகாளனால் கையிழந்த அசமுகி கதறியழுதாள். வீரமகேந்திரத்தில் வீற்றிருந்த சூரனை நினைத்து ஓலமிட்டாள். அவனது அவையிற் புகுந்து தனக்கு நேர்ந்த சிறுமையை முறையிட்டாள்.
இராமன் விடுத்த தூதன்
இராம தூதனாகிய அனுமன் இலங்கையடைந்தான். அவன் சிறையிலிருந்த செல்வியாகிய சீதையைக் கண்டு ஆறுதல் கூறினான். வீரமாநகரமாய் விளங்கிய இலங்கையில் விண்ணவர், அரக்கர்கோன் அடிபணிந்து தொண்டு புரியும் நிலையினைக் கண்டு வியந்தான். இராவணன் அரசவையடைந்து இறு மாந்திருந்த அவன் செவிகளில், தன்னை ஆட்கொண்ட நாயகன் பெருமையை நன்றாக எடுத்துரைத்தான். அறநெறி தவறிய அவ்வரசனை நோக்கி, “உன் செல்வம் சிதையாதிருக்க வேண்டுமாயின் உடனே சீதையை விடுக; உனது ஆவியை ஒரு பொருளாகப் போற்றுவாயாயின் அப் பெருமான் தேவியை விடுக” என்று அவ்வனுமன் அறுதியிட்டு உறுதியாக உரைத்தான்.
வேலன் விடுத்த தூதன்
அங்ஙனமே வீரமகேந்திரத்தை யடைந்த முருக தூதனாகிய வீரவாகுவும் அந் நகரின் சிறப்பையெல்லாம் கண்டு வியந்தான். அங்கு வானவர் அசுரரை வணங்கி ஏவல் புரியும் இழிநிலையைக் கண்டு இரங்கினான். மீனெடுத்து வரும் ஈனத்தொழிலை வானவர் புரிந்து வருதலைக் கண்டு பெரிதும் வருந்தினான். இந்திரன் மைந்தனாகிய சயந்தன் சிறையிருந்த இடத்திற்கும் சென்று, அவனைத் தேற்றினான். நகரை முற்றும் சுற்றிப் பார்த்த அவ் வீரவாகு, சூரன் பேரவையைச் சார்ந்தான். அச் சூரனிடம் வேலேந்திய முருகன் பெருமையை விளக்கி யுரைத்தான். முத் தொழில் புரிந்தருளும் இறைவனே முருகனாய்த் தோன்றியுள்ள சிறப்பினை விரித்துரைத்தான். ‘நின் கிளையொடு நெடிது வாழ நீ விரும்பினால் இப்பொழுதே விண்ணவரைச் சிறையினின்றும் விடுக; வேலேந்திய முருகன் திருவடியைப் பணிக’ என்று தூதரை யோதினான்.
வேந்தர் இருவரின் வீழ்ச்சி
இலங்கையை அழித்து மீண்ட அனுமனைப் போன்றே வீரவாகுவும் மகேந்திர நகரை யழித்துத் திரும்பினான். இறுதியில் இலங்கை வேந்தன் இராமனொடு போர்புரிந்து வீழ்ந்தான். சூரனும் வேலனுடன் கண்டோர் வியப்புறக் கடும்போர் புரிந்து மாண்டொழிந்தான். இராவணன் மனைவியாகிய மண்டோ தரியும், சூரன் மனைவியாகிய பதுமையும் கற்புநெறி வழுவாமல் தத்தம் கணவருடன் உயிர் நீத்தனர். இங்ஙனம் முதலிலிருந்து முடிவுகாறும் கதையமைப்பில் பெரிதும் ஒற்றுமையுடைய இராமாயணம், கந்த புராணம் ஆகிய இருபெருங் காவியங்களும் தமிழகத்தில் நிலவும் வைணவம், சைவம் ஆகிய இரு சமயங்களின் உண்மைகளை இனிதின் விளக்குவனவாகும். வேலன் தூது விடுத்தல்
வானவரைக் கொடுஞ் சிறையில் இட்ட அசுரர் கோமானாகிய சூரனது உயிரைக் கவருதற்கு வந்த வடிவேல்முருகன், முதலில் ஒரு தூதனை விடுத்து அவனது கருத்தை அறிய விரும்பினான். அச் சூரனுடன் வீரப் போர் தொடங்கு முன்னே ஆற்றல் மிக்க தூதன் ஒருவனை அனுப்புதலே அறநெறியாகும் என்று மலரவனும் மாயவனும் கூறினர் அது கேட்ட வேல் வீரனாகிய முருகன் அருகே நின்ற வீர வாகுவை அருளொடு கோக்கினான். “வீரனே! நீ மகேந்திர நகருக்கு இன்றே விரைந்து சென்று சூரனைக் கண்டுவரல் வேண்டும்; அவன்பால் இந்திரன் மைந்தனையும் ஏனைய வானவரையும் உடனே சிறையினின்று விடுவித்தல் வேண்டும் என்றும், அறநெறி வழுவாமல் அரசாள வேண்டும் என்றும் அறிவிப்பாய்; அசுரர் கோன் அதற்கு இசையானாயின் அவன் இனத்தை அடியோடு அழித்தற்கு வடிவேல் எடுத்து நாளையே நாம் போருக்கு வருவோம். இஃது உண்மையென்று உரைத்து மீள்க” என் பணித்தருளினான்.
வீரவாகு வீரமகேந்திரம் அடைதல்
வேலன் ஆணையைச் சிரமேல் தாங்கிய வீரவாகு, இந்திரன் முதலிய தேவரிடம் விடைபெற்றுக் கடற் கரையின் அருகமைந்த கந்தமாதன மலையின்மீது ஏறினான். அம்மலையின் உச்சியில் நின்று முருகப் பெருமான் திருவடியைத் தொழுது தியானித்தான். வானவர் கண்டு வியக்கும் பேருருவைக் கொண்டான். சூரனது நகரமாகிய வீரமகேந்திரத்தின் மீது பாயத் துணிந்து காலையூன்றினான். வேலனை வாழ்த்தி வானில் விரைந்தெழுந்து பறந்தான். இடையில் அசுரர்களால் ஏற்பட்ட இடையூறுகளை யெல்லாம் வென்று சூரனது வீரமாநகரை யடைந்த வீரவாகு, வேலன் திருவடியை வாழ்த்தி வணங்கினான். அப் பெருமான் திருவருளால் ஓர் அணுவின் உருவங் கொண்டு மகேந்திர மாநகரின் வளங்களைக் கண்டு வியந்தான். சயந்தனும் வானவரும் சிறையிருந்த இடத்தைக் கண்டு சிந்தைநைந் துருகினான்.
வானவர் வாழ்த்தைப் பெறுதல்
இந்திரன் மைந்தனாகிய சயந்தனுக்கு இன்னுரை கூற எண்ணிய வீரவாகு ஆறெழுத்து மந்திரத்தை அன்புடன் ஓதினான். அவ்வேளையில் சிறைச் சாலையைக் காத்துநின்ற அசுரர் மந்திர வலையிற்பட்டு மயக்குற்றனர். உடனே, அவ் வீரவாகு சிறையினுள்ளே புகுந்து சீரிழந்து வாடும் சயத்தன் முன்னே அமர்ந்தான். தன்னக் கண்டு வியந்து நின்ற சயந்தனுக்குத் தன் வரலாற்றை எடுத்துரைத்தான். வேலன் விடுத்த தூதனாய் வந்தடைந்த சிறப்பினை விரித்துரைத்தான். அவனது மொழிகளைக் கேட்ட இமையவர் அனைவரும் மனமகிழ்வெய்தினர். ‘வேலன் விடுத்த தூதனே! நீ வெற்றி எய்துக!’ என்று வாழ்த்துக் கூறி வழியனுப்பினர்.
சூரன் அத்தாணியில் வீரவாகு
அவ்விடத்தினின்று வான் வழியே விரைந்து பறந்த வீரவாகு, சூரனது மாளிகையைச் சார்ந்த செய் குன்றின்மேல் நின்று அவனது அரண்மனை வளத்தை யெல்லாம் கூர்ந்து நோக்கினான். பின்னர் அங்கிருந்து எழுந்து, வீரனாகிய சூரன் வீற்றிருந்த அத்தாணி மண்டபத்தை யடைந்தான். மேரு மலையை வில்லாகக் கொண்ட மேலவன் மைந்தனாகிய வேலவன் விடுத்த தூதன் யான்; இச்சூரன் அரியாசனத்தில் வீறுடன் இருக்க, எளியனாய் அவன்முன் சென்று நிற்றல் எம் பெருமான் பெருமைக்கு இழிவைத் தரும் என்று எண்ணினான். அப்பெருமான் திருவடியை நினைந்து உருகினான். அந்நிலையில் முருகவேள் திருவருளால் பேரொளி வீசும் பீடமொன்று விரைவில் அங்கு வந்துற்றது. அதனைக் கண்ட வீரவாகு, ‘இஃது எம் பெருமான் அனுப்பியருளிய ஆசனம் போலும்!’ என்றெண்ணி அகமகிழ்ந்து அதன் மீது ஏறியமர்ந்தான்.
சூரன் வினாவும் வீரன் விடையும்
வீரவாகுவின் செயலைக் கண்ட சூரன் வெஞ்சினங் கொண்டு உடம்பெல்லாம் வியர்க்கவும், விழிகளில் தீப்பொறி பறக்கவும் பற்களைக் கடித்தான். ‘இங்குத் துணிந்து வந்த நீ யாவன்?’ என்று வினவினான். அது கேட்ட வீரவாகு, ‘அசுரனே! இந்திரன் துயரைப் போக்கித், தேவரைச் சிறையினின்றும் நீக்கி, அவர்க்குப் பண்டைச் சிறப்பையெல்லாம் ஆக்கி வைத்தற்கு ஆதி முதல்வனாகிய முருகவேள் திருச்செந்துரில் எழுந்தருளியுள்ளான்; அப்பெருமானுக்கு அடியவன் நான்; நின் தம்பியாகிய தாரகனையும் கிரவுஞ்சம் என்னும் பெரு வெற்பையும் எளிதிற் கொன்றொழித்த வேல் வீரனாகிய குமரவேள் உன்னிடம் இன்னருள் கொண்டு என்னைத் தூது அனுப்பினான்; வானவர்க்குத் தந்தை முறையினரான காசிப முனிவர் தந்த மைந்தனாகிய நீ அவ்வானவரைச் சிறைசெய்தல் முறையாமோ? நீ வேத நூல் முறையினின்றும் விலகினாய், அற்பமான பொருள்களில் ஆசை கொண்டாய் அளவிறந்த காலம் நீ அருந்தவம் புரிந்து இறைவன்பால் அழியாத ஆயுளையும் செல்வத்தையும் பெற்றாய்; அவற்றைத் தவருண நெறியிலே சென்று அழித்துக் கொள்ளுதல் தகுமோ? நீயும் நின் சுற்றமும் நீண்ட செல்வத்துடன் வாழ வேண்டுமாயின் வானவரைச் சிறையினின்றும் விடுக! அறநெறியிலே அரசு புரிக! அங்ஙனம் செய்யத் தவறினால் செவ்வேள் இங்கு எழுந்தருளி, நின்னையும் நின்னைச் சேர்ந்த அசுரர் கூட்டத்தையும் கொன்றொழித்தல் உறுதியாகும்” என்று தூதரை யோதினான்.
சூரனின் வீரமொழி
வீரவாகு விளம்பிய சொற்களைக் கேட்ட சூரன் மனத்தில் கடுஞ்சினம் மூண்டது. அவன் கையொடு கையறைந்து கடுமையாகப் பேசத் தொடங்கினான். “ஆயிரத்தெட்டு அண்டங்களையும் வென்று, இணையற்ற தனியரசு புரியும் எனக்கு இச்சிறுவனோ அறிவுரை சொல்லத் தலைப்பட்டான்? அசுரர் குலத்தை வருத்திய வானவரைச் சிறையில் கொணர்ந்து அடைத்தது தவருகுமோ? முருகனாகிய இச்சிறுவன் தந்தையார் எனக்கு முறையாக அளித்த வரங்கள் விணாகுமோ? போர் புரிந்து என்னை வெல்ல வல்லார் யாரே? நான் அவ்வானவரை விடமாட்டேன்; ஏதும் அறியாத இளம்பிள்ளையின் சொல்லைக் கேட்டு, இங்குத் தூதனாக வந்த உனக்கு உயிர்ப்பிச்சை தந்தேன்; பிழைத்துப் போவாய்” என்று சூரன் வீரமொழி கூறினான்.
வேலன் பெருமையை விளக்குதல்
இம்மொழிகளைக் கேட்ட முருகதூதனது உள்ளத்தில் பெருஞ்சினம் முறுகி எழுந்தது; மெய்ம்மயிர் சிலிர்த்தது; கண்கள் சிவக்தன. “மன்னுயிர்க்கு இன்னுயிராய், தன்னேரில்லாத் தலைவனாய், அனைவர்க்கும் அம்மையப்பராய் அமர்ந்த பரம்பொருளே அறுமுகப் பெருமான்; எங்கும் நிறைந்து இன்னருள் புரியும் அப்பெருமானுக்கு எங்கும் திருமுகங்கள்; எங்கும் திருவிழிகள்; எங்கும் திருச்செவிகள்; எங்கும் திருக்கரங்கள்; எங்கும் வீரக்கழல்புனைந்த திருவடிகள்; எங்கும் அவன் திருவுருவமே. இத்தகைய பேராற்றல் படைத்த பெருமான், வானவர் துயரைப் போக்கவும், அசுரக்களையை வேரறுத்து அறப்பயிரைக் காக்கவும் இங்கு எழுந்தருளியுள்ளான்; அப்பெருமான இழிந்த சொற்களால் இகழ்ந்துரைத்த உன் நாவை அப்போதே அறுத்திருப்பேன்; உன்னுயிரைபும் பிரித்திருப்பேன்; என் தலைவனாகிய வேலன் என்னை அதற்காக அனுப்பவில்லையாதலின் உன்னை உயிரோடு விடுகிறேன்; வேற்படைக்கு இரையாக இருப்பவனே! இன்னும் ஒரு நாள் உயிர் வாழ்ந்திரு; மீண்டும் ஒரு முறை உறுதி கூறுகின்றேன்; நீயும் நின் சுற்றமும் வாழ விரும்பினால் வானவரைச் சிறை வீடு செய்க! பகைமை யொழித்துப் பரம்பொருளாகிய முருகன் திருவடியைப் பணிக!” என்று அச்சூரனுக்கு நல்லுரை பகர்ந்தான்.
அசுரரை அழித்துச் செந்திலை அடைதல்
வீரவாகுவின் சீரிய உரைகள் சூரனது உள்ளத்தில் சினத்தையே விளைத்தன. ‘விரைவில் இவனைப் பிடித்துச் சிறையில் இடுக’ என்று அசுர வீரர்க்கு ஆணையிட்டான். அந்நிலையில் வீரவாகு ஆசனத்தைவிட்டு எழுந்தான். தன்னை வளைந்த அசுரர் தலைகளின் சிகையைப் கரத்தாற் பிடித்து நிலத்தில் அடித்தான். பின்பு சூரனை நோக்கி, “நீ என் ஆண்டவனது நெடுவேலால் மாண்டொழிவாய்; அது காறும் ஐம்புல இன்பங்களை ஆரத் துய்த்திரு; நான் போய் வருகிறேன்” என்று கூறிப் புறப்பட்டான். அப்போது அவன் அமர்ந்திருந்த அரியாசனமும் வானத்தில் எழுந்து மறைந்தது. பெருமான் அருளால் உலகளந்த திருமாலைப் போல் நெடியதோர் உருவங் கொண்டு நின்றான். அறம் திறம்பிய அசுர வேந்தன் வீற்றிருந்த அத்தாணி மண்டபத்தைச் சின்னா பின்னமாகச் சிதைத்தான். தன்னை எதிர்த்துத் தாக்கிய அசுர வீரர்களையெல்லாம் அழித்தொழித்தான். கருங்கடல் கடந்து கந்தமாதன மலையைச் சேர்ந்த செந்திற் பதியினை வந்தடைந்தான். அன்பினால் என்பும் உள்ளமும் உருகவும், விழிகளில் ஆனந்த வெள்ளம் பெருகவும், முருக வள்ளலின் திருவடியை வணங்கினான். தான் தூது சென்று மீண்ட செய்தியைப் பணிவுடன் பகர்ந்து நின்றான்.
இங்ஙனம் வேலன் விடுத்த தூதனய்ச் சூரனது வீரமகேந்திரம் அடைந்த வீரவாகு தலைமைத் தூதனுக்குரிய தகுதிகள் பலவும் படைத்தவன் என்பதை அவன் கூறிய மொழிகளாலும், சீரிய செயல்களாலும் அறிந்து மகிழலாம்.
---------------
9. இந்திரன் விடுத்த தூதன்
நளன் வரலாற்றைக் கூறும் இருநூல்கள்
முதல் ஏழு வள்ளல்களில் ஒருவனாகிய நளனது வரலாற்றைக் கூறும் நூல்கள் தமிழில் இரண்டுள. அவற்றுள் தலையாயது நளவெண்பா. மற்றொன்று நைடதம் என்னும் நற்காவியமாகும். ‘வெண்பாவிற் புகழேந்தி’ என்று புலவரெல்லாம் வியந்து போற்றும் சிறந்த கவிஞராகிய புகழேந்தியார் நளவெண்பா நூலை யாத்தனர். ‘நைடதம் புலவர்க்கு ஒளடதம்’ என்று நாவலர் நயந்து போற்றும் நைடதக் காவியத்தை நற்றமிழ் வல்ல சிற்றரசனாகிய அதிவீரராம பாண்டியன் ஆக்கினான்.
ஆதாரமாய் அமைந்த நூல்கள்
புலமை நலத்தால் புகழேந்திய புலவராகிய புகழேந்தியார் பாரதக் கதையில் வரும் நளன் சரிதையை ஆதரவாகக் கொண்டு நளவெண்பா நூலைப் பாடினர் என்பர். சூதாட்டத்தால் நாட்டை யிழந்து காட்டை யடைந்து கவலுற்றுக் கொண்டிருக்கும் பாண்டவர்க்கு ஆறுதல் கூறும் வேதவியாசர், நளன் வரலாற்றை எடுத்துக்காட்டாகக் கூறிவிளக்கினார். அதனை அடிப்படையாகக்கொண்டே நூலைப்பாடியதாகப் புகழேந்தியார் நளவெண்பாவின் தோற்றுவாயில் நவில்கின்றார், நளனால் ஆளப்பெற்ற நாடு நிடதம் எனப்படும்; ஆதலின் அந்நாட்டு மன்னன் வரலாற்றைக் கூறும் காவியம் ‘நைடதம்’ எனப்பட்டது. இந்நூல் வடமொழியில், ஹர்ஷ கவி என்பார் இயற்றிய ‘நைஷதம்’ என்னும் காவியத்தின் மொழிபெயர்ப்பாகும். அவ்வடமொழி நூலின் சுவை குன்றாமல் அதிவீரராம பாண்டியன் மொழி பெயர்த்துள்ளான் என்று இருமொழி நூல்களையும் ஒருங்கே பயின்ற அறிஞர்கள் உரைப்பர்.
வெண்பாவிற் புகழேந்தி
தமிழில் உள்ள நால்வகைப் பாக்களில் வெண்பாவே முதன்மை வாய்ந்தது. புலவர்கள் அதனைப் பாடுவதும் அருமையாகும். ஆதலின் ‘புலவர்க்கு வெண்பாப் புலி’ என்றே வழங்கும் பழமொழியுண்டு. வெண்பா வகையினுள் ஒன்றாகிய குறள் வெண்பாக்களால் தம் நூலைப்பாடிய திருவள்ளுவரை ‘முதற்பாவலர்’ என்று பாராட்டுவதும் இக் காரணத்தாலேயே ஆகும். எனவே, செப்பலோசையிற் சிறந்து விளங்கும் செவ்விய இனிய நேரிசை வெண்பாக்களால் நளன் வரலாற்றைப் பாடிய புகழேந்தியாரை வெண்பாப் பாடுவதில் வீறு பெற்றவர் என்று வியந்து போற்றுவாராயினர்.
புகழேந்தியார் வைணவப் புலவர்
நளவெண்பா சுயம்வர காண்டம், கலிதொடர் காண்டம், கலி நீங்கு காண்டம் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பெற்றுள்ளது. ஒவ்வொரு காண்டத்தின் தொடக்கத்திலும் நூலாசிரியர் திருமாலுக்கு வணக்கங் கூறியுள்ளார். மேலும், கலி தொடர் காண்டத்தில் நளனைக் கலி தொடர்ந்தவாற்றைக் குறிப்பிடும் புலவர், ‘நாராயணாய நமவென்று அவனடியிற் சேராரை வெந்துயரம் சேர்ந்தாற் போல்’ கலி தொடர்ந்தது என்று கட்டுரைக்கின்றார், கலிநீங்கு காண்டத்திலும் ‘மிக்கோன் உலகளந்த மெய்யடியே சார்வாகப் புக்கோர் அருவினைப்போல்’நளனைக் கலி நீங்கியதென்றும் நவில்கின்றார். ஆதலின், புகழேந்தியார் திருமால் அடியவர் என்பது தெள்ளிதிற் புலனாகும்.
புலவரைப் போற்றிய வள்ளல்
புகழேந்தியார் தம்மை யாதரித்த குறுநில மன்னனாகிய சந்திரன் சுவர்க்கி என்பானின் அன்பான வேண்டுகோளுக்கு இணங்கியே நளவெண்பாவை யாத்தனர் என்பர். ஆதலின் செய்ந்நன்றி மறவாச் செந்தமிழ்ப் புலவராகிய புகழேந்தியார், தம் நூலில் அம் மன்னனைத் தக்கவாறு போற்றிப் பரவுகின்றார், மனுமுறை தவறாது செங்கோல் செலுத்திய அம் மன்னனே ‘மாமனு நூல் வாழ வருசந்திரன் சுவர்க்கி’ என்று வாழ்த்தினார். அவனது வளம் பொருந்திய மள்ளுவ நாட்டைச் சொல்லும்போது, ‘வண்டார் வள வயல்சூழ் மள்ளுவநாட் டெங்கோமான் - தண்டார் புனை சந்திரன் சுவர்க்கி’ என்று போற்றினர். அவனது கொடை நலத்தைக் கொண்டாடும் புலவர், ‘தாருவெனப் பார்மேல் தருசந்திரன் சுவர்க்கி’ என்றும், ‘சங்கநிதிபோல் தருசந்திரன் சுவர்க்கி’ என்றும் குறிப்பிடுகின்றார்.
நளவெண்பா அரங்கேற்றம்
கொடை வள்ளலாகிய சந்திரன் சுவர்க்கியின் அரசவையில் புகழேந்தியார் தம் நளவெண்பா நூலை அரங்கேற்றினர். அப்போது அந்திப் பொழுதின் வருணனையைக் குறிக்கும் அழகிய பாடலொன்றைப் பாடிப் புலவர் விளக்கினார்.
“மல்லிகையே வெண்சங்கா வண்டுத, வான்கருப்பு
வில்லி கணை தெரிந்து மெய்காப்ப,-முல்லையெனும்
மென் மாலை தோளசைய, மெல்ல நடந்ததே
புன் மாலை அந்திப் பொழுது.”
அந்திப்பொழுதாகிய அரசன் மெல்ல கடந்து வருகிறான். வண்டு, அவ்வேளையில் மல்லிகை யென்னும் சங்கை ஊதுகிறது. மன்மதன் மெய்காப்பாளனாகக் காத்து வருகின்றான். அவன் கையில் கரும்பு வில் விளங்குகின்றது. முல்லை மலர்மாலை, அவன் தோளிற் கிடந்து துவள்கின்றது. எத்துணை அழகிய கற்பனை!
அவையில் எழுந்த தடை
பாட்டையும் விளக்கத்தையும் கேட்ட புலவரெல்லாம் உள்ளங் கிளர்ந்து முகமலர்ந்த தலையசைத்தனர். ஒரு புலவர் மட்டும் எழுந்து, இவ்வருணனையில் தவறுள்ளதெனத் தடை கூறினார். சங்கினை ஊதுவான் அதன் அடிப்புறத்திலன்றோ வாய்வைத்து ஊதுதல் மரபு; அங்ஙணமிருக்க, மலரின் மேற்புறத்திலிருந்து ஊதும் வண்டு சங்கூதுவானை யொப்பது எங்ஙனம் ? ஆதலின் இக்கற்பனை தவறுடையதாகும் என்று புகழேந்தியார் கருத்தை மறுத்துரைத்தார்.
புகழேந்தியாரின் புலமை
அது கேட்ட புகழேந்தியார் மகிழ்வோடு அப் புலவரை நோக்கினார். “நீவிர் கூறிய கருத்துப் பொருத்தமுடையதே; ஆயினும் கள்ளுண்ட களி மயக்குடன் சங்கை ஊதுவான், அதன் பின்பக்கம் முன்பக்கங்களே யறியானன்றோ? ஆதலின் தேனுண்ட வண்டும் களிகொண்டு மேலமர்ந்து ஊதிற்று; இதில் ஏதும் ஐயமுண்டோ?” என்று அவையிலிருந்த புலவரெல்லாம் வியக்குமாறு விடையிறுத்து மேற் சென்றார். மறுப்புரை கூறிய புலவர் வாயடைத்து வாளா அமர்ந்தனர் என்பர். இங்நிகழ்ச்சி, புகழேந்தியாரின் நிகரிலாப் புலமை நலத்தை விளக்குவதாகும்.
மன்னன் அன்னத்தைக் கண்ணுறல்
இத்தகைய இனிமை வாய்ந்த நளவெண்பா நூலில் இரண்டு தூது நிகழ்ச்சிகள் சிறப்பான இடம் பெற்றுள்ளன. அவற்றுள் ஒன்று அன்னத்தின் தூது. மற்றொன்று நளன் தூது. முதலில் அன்னத்தின் தூது பற்றிய செய்திகளை ஆய்ந்துணர்வோம். நிடத நாட்டின் தலைநகரமாகிய மாவிந்த நகரின் நடுவேயமைந்த மாளிகையைச் சூழ்ந்து மாமலர்ச் சோலை விளங்கியது. அரசனாகிய நளன் அச்சோலையிலுள்ள நன்மலர்களைக் கொய்தற்குத் தோழியர் பலர் புடை சூழ மெல்ல நடைபயின்று சென்றான். அச்சோலையின் நடுவண் அமைந்த பொய்கையில் பூத்த நறுமலர்த் தாமரையின்மேல் அன்னம் ஒன்று அமர்ந்திருத்தலைக் கண்டான். அதனைப் பிடித்துக்கொணருமாறு, அவன் தோழியரை ஏவினான். அவர்களும் அவ்வாறே அன்னத்தைப் பிடித்து மன்னன் திருமுன்னர்க் கொண்டு வந்து வைத்தனர். மன்னனைக் கண்ட அன்னம் மலங்கியது; தன் இனமான பிற அன்னங்களைக் காணாது கலங்கியது. அவ்வன்னத்திற்கு அரசன் ஆறுதல் கூறினான்.
அன்னம் சொன்ன அரிவை
நளன் கூறிய ஆறுதல் மொழியைக் கேட்டுத் தடுமாற்றம் தீர்ந்த அன்னம் அவனுக்கொரு நற் செய்தியைக் கூறியது. ‘அரசே! நின் தோளுக் கிசைந்த தோகை நல்லாளாகத் தமயந்தி என்னும் தையலாள் ஒருத்தி யுள்ளாள்’ என்று உரைத்தது. அவள் பண்பு நலத்தை யெல்லாம் அன்பொழுகச் சொல்லியது. அவள் பெண்மை யென்னும் நாட்டைப் பேணி யரசாண்ட திறம், புலவரால் நயம்பட உரைக்கப் படுகின்றது. நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு என்னும் நாற்குணங்களையும், தமயந்தி தேர், யானை, குதிரை, காலாள் என்னும் நாற்படைகளாகக் கொண்டாள்; ஐம்பொறிகளையும் அரிய அமைச்சர்களாகக் கொண்டாள் ; கால்களில் அணிந்துள்ள சிலம்புகளைக் கடிமுரசாகக் கொண்டாள்; கண்கள் இரண்டையும் வேலும் வாளுமாகக் கொண்டாள்; முகமாகிய மதியினைக் கொற்றக் குடையாகப் பெற்றாள்; இவ்வாறு அவள் பெண்மை யரசைப் பேணி யொழுகினாள் என்று அன்னத்தின் வாயிலாகப் புலவர், தமயந்தியின் நலமுரைக்கும் திறம் பாராட்டற் குரியதாகும்.
அன்னம் தூது போதல்
தமயந்தியின் சிறப்பைக் குறித்து அன்னம் சொன்ன அரிய செய்திகளைக் கேட்ட நளன் அவள் மீது அளவிலாப் பெருங்காதல் கொண்டான். அதனால் அவனது நெஞ்சம் இற்றது; மானம் அற்றது; நாணம் அழிந்தது. ‘இனி என் வாழ்வு, உன் வாய்ச்சொற்களில்தான் உள்ளது’ என்று கூறி, அன்னத்தை அத் தமயந்தியின்பால் தூது போக்கினான். அங்கு நின்று அன்னம் வானில் எழுந்து விதர்ப்ப நாட்டின் தலைநகரமாகிய குண்டினபுரத்தை நோக்கி விரைந்து பறக்கலுற்றது. அதனைத் தூதனுப்பிய நளன் உள்ளம், காதல் வெள்ளத்தால் அலைமோதித் தடுமாறும் நிலையினைப் புலவர் விளக்கும் திறம் பெரிதும் போற்றற்குரியதாகும்.
நளனது காதல் உள்ளம்
‘அன்னம் இந்நேரத்தில் குண்டினபுரத்தைக் குறுகியிருக்குமோ ? இந்நேரத்தில் அப்பெண்ணரசியைக் கண்டிருக்குமோ ? இந்நேரத்தில் அவள்பால் எனக்குள்ள காதலை இயம்பியிருக்குமோ? அங்கிருந்து திரும்பி யிருக்குமோ?’ என்று கூறிப் பெருமூச்சுவிடும் நளனது காதல் உள்ளத்தைப் புலவர் புலப்படுத்துகிறார்.
அன்னம் தமயந்தியைக் கண்ணுறல்
நளன் அனுப்பிய காதல் தூதாகக் குண்டின புரச் சோலையைக் கண்டடைந்த அன்னம், ஆங்குத் தோழியருடன் விளையாடிக் கொண்டிருந்த தமயந்தியைக் கண்டது. அவளும் அவ்வன்னத்தைத் தனியிடத்தே அழைத்துச் சென்று, தன்னை நாடி வந்த செய்தியை நவிலுமாறு வேண்டினாள். அவள் உள்ளங் களிகொள்ளுமாறு, அன்னம் நளனது பெருமையை நன்கு விளக்கியது. “பெண்ணரசே! உனக்கேற்ற மன்னன் ஒருவன் உள்ளான்; அவன் அறநெறி பிறழாத அன்புடையான் ; தண்ணளி நிறைந்த உண்மையாளன் ; செங்கோன்மை தவறாத சீரிய வேந்தன் ; மங்கையர் மனங் கவரும் தடந்தோளான் ; மண்ணுலகிலும் விண்ணுலகிலும் தன்னேரில்லாத தலைவன்; அறங்கிடந்த நெஞ்சும், அருள் ஒழுகும் கண்ணும், மறங்கிடந்த திண்டோள் வலியும் கொண்டவன்; அவனுக்குத் திருமாலையன்றி உலகிலுள்ள தேர்வேந்தர் எவரும் ஒப்பாகார்; அன்னவனையே நீ நன்மணம் புரிந்து வாழவேண்டும்” என்று அவ்வன்னம் தூதுரை பகர்ந்தது. தமயந்தியின் உள்ளக் காதலை உணர்ந்தது. ‘வேந்தனுக்கு எனது உள்ள நிலையினை விளக்கியுரைப்பாய்’ என்று வேண்டிய அவள் விருப்பினை அறிந்து மகிழ்ந்தது. அவளுக்கு ஆறுதல் கூறி, வானில் பறந்து மாவிந்த நகரையடைந்தது.
அன்னம் மன்னனிடம் திரும்புதல்
தூது சென்ற அன்னத்தின் வரவை எதிர்நோக்கி நின்ற நளன் வானில் விரைந்து பறந்து வரும் அப் பறவையைக் கண்டான். அதனை அன்போடு வரவேற்றுத் தன்மீது தமயந்திக்கு உண்டான பெருங் காதலைக் கூறக்கேட்டு இன்புற்றான். ‘அன்னக் குலத்தின் அரசே! அழிகின்ற எனது உயிரை மீளவும் எனக்குத் தந்தாய்!’ என்று அதனைப் பாராட்டினான்.
நளன் இந்திரன் விடுத்த தூதனாதல்
தமயந்தியின் சுயம்வரத் திருநாளைத் தெரிவித்தற்கு விதர்ப்ப நாட்டினின்றும் வீமன் விடுத்த தூதர் மாவிந்த நகரை யடைந்தனர். நிடத நாட்டு வேந்தனாகிய நளனை நண்ணித் தாம் கொணர்ந்த நற்செய்தியினைத் தெரிவித்தனர். தமயந்தியின் சுயம்வரச்செய்தியைக் கேட்ட நளன் தேரேறி விதர்ப்ப நாட்டின் தலை நகருக்கு விரைந்தான். தமயந்தியிடம் சென்ற தனது மனத்தைக் காணாமல் தேடி வருபவனைப் போலத் தேரேறி வரும் நளனை இந்திரன் முதலான இமையவர் நால்வர் இடைவழியில் கண்டனர். இந்திரன், நளனை நெருங்கி, “வேந்தே! யாங்கள் ஏவும் தொழிலைச் செய்தற்கு நீ இசைய வேண்டும்” என்று வேண்டினான். அவன் ஏவக் கருதிய பணி இன்னதென அறியாத நளன் அத் தொழிலைச் செய்தற்கு இசைந்தான்.
நளனது உள்ளமும் இந்திரன் மந்திரமும்
இவ்வாறு நளனது இசைவைப்பெற்ற இந்திரன், “வேந்தே! தமயந்தி தன் சுயம்வர மாலையினை எங்களில் ஒருவர்க்குச் சூட்ட வேண்டுமென்று அவள்பால் தூது சென்று ஓதி வருக!” என்று வேண்டினான். இச் செய்தியைக் கேட்ட நளனது உள்ளம் தடுமாறியது; பாவினிடத்தே நூலைச் செலுத்தும் குழலைப் போல, அஃது அங்கும் இங்கும் திரிந்து தள்ளாடியது. அவன் தனது உள்ளத்தெழுந்த காதல் வெள்ளத்தை அடக்கிக் கொண்டான். இந்திரனை நோக்கி, “தேவர் கோனே! நீ ஏவிய பணியினைப் புரிய இசைந்து நின்றேன் ; காவலைக் கடந்து கன்னி மாடத்துள் புகுவது எங்ஙனம்?” என்று வினவினான். இந்திரன் அவனுக்கு மந்திரம் ஒன்றைக் கற்றுக் கொடுத்து, “இதனை நீ உச்சரித்துக் கொண்டு சென்றால் எவரும் உன்னைக் காணமாட்டார் ; நீ கன்னிமாடத்தில் புகுந்து தமயந்தியை எளிதிற் கண்டு வரலாம்” என்று கூறி, நளனை நகருள் அனுப்பினான்.
கன்னிமாடத்தில் தமயந்தியைக் காண்டல்
இந்திரன் விடுத்த தூதனாய்த் தமயந்தியின் கன்னி மாடம் புகுந்த மன்னனாகிய நளன் ஆங்கிருந்த அப் பெண்ணரசியைக் கண்ணுற்றான். அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் நோக்கிய பொழுது கருங்குவளை மலரில் செந்தாமரை மலர் பூத்தது போன்றும், செந்தாமரை மலரில் கருங்குவளை மலர் பூத்தது போன்றும் விளங்கியது. தமயந்தியின் வேட்கை நிறைந்த உள்ள மாகிய உள்ளறையில் கற்பென்னும் தாழிட்டுப் பூட்டியிருந்த நிறைக்கதவம் அவள் காதல் வேகத்தால் தானே திறந்தது. அவள் நளனது பேரழகைத் தன் கண்களால் நன்கு பருகினாள். ‘காவலைக் கடந்து கன்னிமாடம் புகுந்த நீ யார்?’ என்று அவனை வினவினாள். ‘விண்ணவர் விடுத்த தூதனாக யான் இங்கு வந்தேன் ; நான் நிடத நாட்டு வேந்தன்; நளன் என்பது என், பெயர்’ என்று நளன் தன்னை இன்னானென அறிவித்தான்.
தமயந்தியின் வேண்டுகோள்
நளனது தூது மொழிகளைக் கேட்ட நங்கையாகிய தமயந்தி, “மன்னனே ! நின்னை மணம் புரிவதற் கென்றே இச்சுயம்வரம் நடைபெறுவது என்பதை அறிக” என்று மனமுருகக் கூறினாள். நான் சுயம்வர மணமாலையைச் சூட்டுவதற்கு அத் தேவர்களுடன் நீயும் சுயம்வர மண்டபத்திற்கு எழுந்தருள்க” என்று கனிந்துருகி வேண்டினாள்.
நளன் தலைத்தூதன்
தமயந்தியின் மனக்கருத்தை யறிந்து மீண்ட மன்னன், இந்திரனைச் சந்தித்தான். அவள் உரைத்த வன்மொழியும், தான் உரைத்த இன்மொழியும் எடுத்தியம்பினான். அவன், தமக்குச் செய்த நன்றியைப் பாராட்டி இந்திரன், இயமன், வருணன், தீக்கடவுள் ஆகிய தேவர்கள் நால்வரும் வரங்கள் பல வழங்கினர். இம்முறையில் இந்திரன் விடுத்த தூதனாய்த் தமயந்தி பாற் சென்ற நளன் காதலுரைக்கும் தூதனாயினும் தானே வகுத்துரைக்கும் வல்லவனாதலின், அவன் தூதருள் தலையாயவன் ஆவான்.
---------------
10. சீவகன் விடுத்த தூதன்
குறை போக்க வந்த நிறைநூல்
இயல், இசை, நாடகம் என்னும் முப்பிரிவினை உடையதாகிய ஒப்பரிய தமிழ்மொழியில் பண்டை நாளில் பற்பல நாடக நூல்கள் இருந்தன என்பர். சிந்தையள்ளும் சிலப்பதிகாரம் ஒன்றே செந்தமிழ் நாடகக் காப்பியமாக இன்று நாம் காணக் கிடைக்கின்றது. அதைப் போன்றதொரு நாடகநூல் இல்லாத பெருங் குறையினைப் போக்க வெழுந்த அருந்தமிழ் நாடக நூல் மனோன்மணீயம் ஆகும். மனோன்மணி யென்னும் மங்கை நல்லாளைத் தலைவியாகக் கொண்டு ஆக்கப்பெற்ற அரிய நூல் அதுவாகும்.
சுந்தரர் செந்தமிழ்த் திறம்
சென்ற நூற்றாண்டில் திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தத்துவப் பேராசிரியராகவும், பின்பு நெல்லை இந்துக் கல்லூரியின் முதல்வராகவும் விளங்கிய பேரறிஞர் சுந்தரம் பிள்ளையவர்கள் தமிழ்த் தாயின் முடிமணியாக அணியத் தக்க மனோன்மணியத்தை இயற்றியளித்தனர். அவர் ஆங்கிலத்திலும் அருந்தமிழிலும் சிறந்த புலமையாளர்; தத்துவ நூலாராய்ச்சியுடன் வரலாற்றாராய்ச்சி, மொழி யாராய்ச்சி முதலியவற்றிலும் சிறந்தவர். தமிழிற் கவி பாடும் திறன் நன்கு வாய்க்கப்பெற்றவர். சைவசமயக் குரவர்களில் ஒருவராகிய திருஞான சம்பந்தரின் காலத்தை முதன் முதலாக ஆராய்ந்து அறுதியிட்டு உரைத்தவர் இவ்வறிஞரே. அது தமிழ் இலக்கிய ஆராய்ச்சி செய்வார்க்கு ஒரு கலங்கரை விளக்கமாக விளங்கிவருகிறது. தமிழ்த்தெய்வ வணக்கத்தின் தனிச்சிறப்பு
மனோன்மணீய நூலின் தமிழ்த்தெய்வ வணக்கப் பாடல் தனிப்பெருஞ் சிறப்புடையது. அது நூலாசிரியரின் சிறந்த மொழியாராய்ச்சித் திறனையும், தாய் மொழியாகிய தமிழின்பால் அவருக்கிருந்த அளவிறந்த பற்றினையும் தெளிவுற விளக்கும். ‘பரம்பொருளாகிய இறைவன் பல்லுயிரும் பலவுலகும் படைத்துக் காத்துத் துடைத்தாலும், தான் எந்த வேறுபாடும் அடையாது முன் இருந்தபடியே இருக்கிறான். அவ்வுண்மையைப் போன்றே, தமிழ்த்தாய் கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு ஆகிய மொழிக் குழந்தைகளைப் பெற்றாலும் உலக வழக்கில் அழிந்தொழிந்து சிதையாத அருந்திறன் படைத்துள்ளாள். அத்தகைய தமிழ்த்தாயின் இளமைத் திறத்தை வியந்தும் செயல் மறந்தும் வாழ்த்துவோம்’ என்று தமிழ்த்தெய்வத்தை வாழ்த்தி வணங்கும் நூலாசிரியரின் தமிழுள்ளம் சாலச் சிறந்ததாகும். தமிழிலுள்ள இணையற்ற நூல்களாகிய திருக்குறள், திருவாசகம் என்னும் இரண்டனையும் அவர் பாராட்டுந் திறன் பலகாற் படித்து இன்புறத் தக்கதாகும்.
திருவள்ளுவர் அருளிய திருக்குறளைக் குற்றமறக் கற்றுணர்ந்த நல்லோர், ஒரு குலத்திற்கு ஒரு நீதி யோதும் மனுவாதி நூல்களை மனத்திற் கொள்ளு வரோ? உலகமுழுதும் அழிந்தொழியும் கடையூழிக் காலத்தில், தனக்கு ஏற்படும் தனிமையைப் போக்கிக் கொள்வதற்கே இறைவன் திருவாசகத்தில் ஒரு பிரதியெழுதி வைத்துக்கொண்டான். ஓதுவார் உள்ளத்தையெல்லாம் உருக்கி, அவர்கள் உயிரைப் பற்றிய ஆணவம் முதலான குற்றங்களையெல்லாம் ஒழிக்கும் பெற்றி வாய்ந்த திருவாசகத்தில் பற்றுக் கொண்டோர் கண்மூடிக் கடுந்தவம் புரிய வேண்டுவதில்லை. இவை போன்ற பல அரிய கருத்துக்களைக் கொண்டொளிரும் தமிழ்த்தெய்வ வணக்கம் தமிழறிஞர் பலரும் ஒருங்கே பாராட்டும் உயர்வுடையது.
மனோன்மணீய நூலின் அமைப்பு
இந்நால் லிட்டன் பெருமகனாரால் ஆங்கிலத்தில் எழுதப்பெற்ற ‘இரகசிய வழி’ (The Secret Way) என்னும் கவிதைக் கதையைத் தழுவி இயற்றப்பட்டதாகும். எனினும் ஆசிரியர் தமிழ் நாட்டுக்கு ஏற்ற வகையில் வாழ்த்து வணக்கங்களுடன் நூலைத் தொடங்குகிறார். நூற்பயனாகிய அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நாற்பொருளும் விளங்கவும், மலை, கடல், நாடு, வளநகர், பருவம், இருசுடர்த் தோற்றம் முதலியவற்றை இடத்துக்கு ஏற்ற வகையில் அமைத்து நூலை ஆக்கியுள்ளார். மந்திரம், தூது, வெற்றி முதலிய அரசியல் நிகழ்ச்சிகளையும் இடையே கலந்துள்ளார். அங்கம், களம் என்னும் பாகுபாடுகளோடும் மங்கல முடிவோடும் நூலை ஆசிரியர் முடித்திருப்பது பாராட்டற்பாலது.
மனோன்மணீயத்தில் சிவகாமி சரிதை
மேலும், ஆசிரியர் இந்நாடக நூலுள் ‘சிவகாமி சரிதை’யென்னும் கிளைக்கதை யொன்றைப் புகுத்தி யுள்ளார். அக்கதை ஆங்கிலத்தில் ஆலிவர் கோல்ட்ஸ்மித் என்பார் ஆக்கியுள்ள ‘துறவி’ (The Hermit) என்னும் கவிதைக் கதையினைத் தழுவிய தாகும். அதனையும் ஆசிரியர் தமிழ்ப் பண்பாட்டுக்கு ஏற்ற வகையில், கற்போர் உள்ளத்தைக் கவருமாறு பொற்புறப் பாடியிருப்பது பாராட்டத் தக்கதாகும்.
மனோன்மணீயத்தின் மாண்பு
இந்நாடக நூல் தோன்றிய நாள் தொட்டு அறிஞர்களின் மதிப்பிற்கும் பாராட்டிற்கும் உரியதாயிற்று. அந்நாள் முதல் இந்நாள் வரை இதைப் போன்றதொரு நூல் தோன்றாதிருப்பதே இதன் பெருமைக்கு ஏற்ற சான்றாகும். இந்நூலில் மக்கள் அறியவேண்டிய அரிய பொருள்கள் பலவற்றை, உரிய இடங்களில் வெளிப்படையாகவே விளக்கியுள்ளார். நூல் முழுதும் தத்துவக் கருத்துக்களை உள்ளுறையாக அமைத்திருப்பது ஆசிரியரின் உயர்ந்த நோக்கையும் ஆழ்ந்த புலமையையும் புலப்படுத்தும். இந்நூல் செய்யுள் நடையில் அமைந்திருப்பினும் பெரும் பகுதியான ஆசிரியப்பாக்கள் உரைநடை போன்றே தோன்றும். இடையிடையே வரும் பல வகையான பாக்களும் பாவினங்களும் கருத்துக்களுக்கேற்ற சந்தமுடையனவாக வந்துள்ளன. தமிழரின் உயர்ந்த பண்பாட்டைப் புலப்படுத்துவது ஒன்றே ஆசிரியரின் குறிக்கோளாதலின், அதற்கேற்ப நாடகம் நிகழும் இடத்தையும் நாடகப் பாத்திரங்களையும் அமைத்துக் கொண்டார்.
நாடக உறுப்பினர்
இந்நாடகத்தில் வரும் உறுப்பினர் எண்ணிலராயினும் அவருள் முக்கியமானவர் ஒன்பதின்மர் ஆவர். சீவகன், குடிலன், சுந்தர முனிவர், நடராசன், நாராயணன், பலதேவன், புருஷோத்தமன் ஆகிய எழுவரும் ஆண்பாலார் ; மனோன்மணி, வாணி ஆகிய இருவரும் பெண்பாலார். நூல் முழுவதும் மனோன்மணியைக் குறித்த செய்திகளாகவே அமைந்திருத்தலால், ஆசிரியர் இதற்கு ‘மனோன்மணியம்’ என்ற பெயரைச் சூட்டியுள்ளார்.
பாத்திரங்களின் பண்புகள்
ஆசிரியர் சுந்தரம் பிள்ளை நாடக உறுப்பினர்களின் பண்புகளை நூலின் தொடக்கத்திலிருந்து இறுதி வரை சிறிதும் வழுவாத முறையில் படம் பிடித்துக் காட்டுவதுபோல வகுத்துரைப்பது வியத்தற்குரிய ஓர் அமிசமாகும். சீவகனைக் கள்ள மில்லாத வெள்ளை உள்ளத்தகைவும், குடிலனை வஞ்சகம்நிறைந்த நெஞ்சினனாகவும், சுந்தரமுனிவரை உயர்ந்த சிந்தையுடைய செந்தண்மையாளராகவும், நடராசனை ஒரு நல்லறிஞனாகவும், நாராயணனை நற்குணங்கள் நிறைந்த போர் வீரனாகவும், பலதேவனைக் கயமைக் குணமுடைய இழி மகனாகவும், புருஷோத்தமனை வல்லமை வாய்ந்த நல்லாட்சி புரியும் அரசனாகவும், மனோன்மணியை அறிவும் அழகும் அருங்குணமும் ஒருங்கே அமைந்த தலைவியாகவும், வாணியைக் கற்பிற் சிறந்த பொற்புடைய தோழியாகவும் வகுத்துக் கொண்டு கதையினை அமைக்கும் ஆசிரியரின் கலைத்திறம் கற்பாரை வியப்பில் ஆழ்த்துவதாகும். குடிலன், நடராசன் முதலானோர் இயல்புகளை அவரவர் வாய்ச் சொற்களின் வாயிலாகவே வெளிப்படுத்தியிருப்பது படிப்பவர்க்குப் பெருமகிழ்ச்சி தருவதாகும். மனோன்மணீயக் கதை
சீவகன் என்னும் பாண்டிய மன்னன், தீய நினைவும் திறமான சூழ்ச்சியும் உடைய குடிலன் என்னும் அமைச்சன் வயப்பட்டான். அவன் சொற்படியே மதுரையை விடுத்து, நெல்லையிற் கோட்டையமைத்து, அதன்கண் உறையலானான். சீவகனுக்குக் குல குருவாக விளங்கிய சுந்தர முனிவர், அவனை இடையூற்றினின்றும் காத்தற் பொருட்டு, நெல்லைக் கோட்டையில் தமக்கென ஓர் அறையை வாங்கினர். அதிலிருந்து அரணின் புறத்தேயமைத்த தமது உறையுள்வரை பிறர் அறியாது. சுருங்கை வழி யொன்றை அமைத்தார்.
சீவகன் பெற்ற ஒரே செல்வியாகிய மனோன்மணியும் சேர நாட்டரசன் புருடோத்தமனும் ஒருவரை யொருவர் கனவிற் கண்டு காதல் கொள்கின்றனர். அதற்கு முன்பே மனோன்மணியின் தோழியாகிய வாணியும் பாண்டியன் படைத்தலைவனாகிய நடராசனும் ஒருவரை யொருவர் கண்டு காதல் கொண்டுள்ளனர். வாணியின் தந்தையாகிய சகடன் பொருளாசையால் குடிலன் மகனாகிய பலதேவனுக்கே தன்மகளை மணஞ் செய்விக்கத் துணிந்தான். அதற்குப் பாண்டியன் இசைவையும் வேண்டிப் பெற்றான்.
மனோன்மணியின் மனநிலையைக் கண்ட சுந்தர முனிவர் இளவரசிக்கேற்ற மணவாளன் சேர வேந்தனாகிய புருடோத்தமனே என்று அரசனுக்கு அறிவித்தார். இதனையறிந்த குடிலன், மனஎன்மணியும் அவளுக்குரிய பாண்டிய அரசும் தன் மகன் பல தேவனுக்குக் கிடைத்தலாகாதா என்று பேராசை கொண்டான். உடனே சூழ்ச்சி யொன்றைச் செய்து பல தேவனையே சேரனிடம் தூது விடுக்குமாறு பாண்டியனைத் தூண்டினான். சேரனுக்குச் சினத்தை விளைத்துப் பாண்டி நாட்டின்மீது படையெடுத்து வருமாறும் செய்துவிட்டான்.
உண்மைக் காதலின் வெற்றி
போரிலே பாண்டியன் தோல்வியுற நேர்ந்தது. அவ்வேளையிலும் அவன் குடிலன் கூற்றையே மெய்யென நம்புகிறான். அவனது சூழ்ச்சியால் மனோன்மணியைப் பல தேவனுக்கு மணஞ்செய்விக்க மன்னன் துணிகின்றான். மனோன்மணியும் கடமையுணர்ச்சியின் காரணமாக அதற்கு இசைகின்றனள். நள்ளிரவில் மணவறையில் சுந்தர முனிவர் மணச்சடங்கினை கடாத்த, மனோன்மணி பலதேவன் எதிரே மணமாலை தாங்கி வந்து நிற்கின்றாள். அந்த மணவேளையில் சேர வேந்தனாகிய புருடோத்தமன், கொடிய வஞ்சகனாகிய குடிலனுக்கு விலங்கு பூட்டி, அவன் காட்டிய சுருங்கை வழியே அரண்மனையுட் புகுந்து மனோன்மணியின் கண்ணெதிரே காட்சியளித்தான். கனவிற் கண்ட காதலனைக் கண்ணுற்ற பெண்ணரசியாகிய மனோன்மணி, அன்னவனுக்கே மணமாலையைச் சூட்டி மகிழ்ந்தாள். உண்மைக் காதல் வெற்றியுற்றது.
நூலின் தத்துவ உண்மைகள்
இவ்வரலாற்றை நாடக முறையில் வகுத்துக் காட்டும் ஆசிரியர் தத்துவப் பொருள்களை உள்ளுறையாகக் கொண்டு நூலை ஆக்கியுள்ளார். சீவகனைக் குடிலன் தன் வயப்படுத்தி ஆட்டுவித்தல், சீவான்மாவை மாயை ஆட்டுவிக்கும் திறமேயாகும். அருட்குரவருடைய அறவுரைகளைப் பாண்டியன் நம்பாதவாறு செய்யும் அம் மாயையின் வல்லமையை என்ன வென்று சொல்வது! ‘ஆறுகோடி மாயா சத்திகள், வேறு வேறு தம் மாயைகள் தொடங்கின’ என்று மணிவாசகப் பெருமானும் பேசியுள்ளார். எனினும், இறைவனது அருட்சத்தியானது முடிவில் மாயையின் ஆற்றலையழித்து, உயிரின் தற்போதத்தைக் கெடுத்து, அதனைத் தன்வயமாக்கிக் கொள்ளும் என்பது இந் நூலின் முடிந்த பொருளாகும். இந்நூலில் சுந்தர முனிவரின் சீடர்களாக நிட்டாபரர், கருணாகரர் என்னும் இருவர் வருகின்றனர். இவர்களை முறையே வேதாந்தியாகவும் சித்தாந்தியாகவும் கொள்ளலாம். பாண்டியனுக்கும் சேரனுக்கும் போர் மூண்டதனை அறிந்தபோது கருணாகரர் பரிவுற்று இரங்குகிறார். அது கண்டு நிட்டாபரர் கட்டுரைப்பதும், அதற்கு மாறாகக் கருணாகரர் கூறுவதும் வேதாந்த சித்தாந்த உண்மைகளைத் திரட்டி யுரைக்கும் இரு விரிவுரைகளாக விளங்குகின்றன.
மனோன்மணியின் கனவும் முனிவர் வரவும்
பாண்டியன் மகளாகிய மனோன்மணி ஒரு நாள் இரவு உறங்கும்பொழுது கனவொன்று கண்டாள். அக்கனவில் சேர வேந்தன் புருடோத்தமனைக் கண்டு, அவனது பேரெழிலில் மனத்தைப் பறிகொடுத்தாள். அவனையன்றிப் பிறரை மணப்பதில்லை யென்றும் மனவுறுதி பூண்டாள். அதனால், அவள் உணவு கொள்ளாது நினைவு நோயால் பெரிதும் உடல் மெலிந்து வாடினாள். இந்நிலையில் மன்னவன், சுந்தர முனிவருடன் அந்தப்புரம் அடைந்து, மகளின் நிலையைக் கண்டு மனமுடைந்தான். மனோன்மணியின் கலத்தில் பெரிதும் கருத்துடையவராகிய முனிவர், அவளது மனநிலையை அறிந்து கொண்டார். பின்னர் மன்னனுக்கு மனோன்மணியின் மணவினை குறித்து நினைவூட்டினார். அவளை மணப்பதற்குரிய தகுதி வாய்ந்த மணவாளன் சேரவேந்தன் புருடோத்தமனே என்பதையும் அவன் சிந்தை கொள்ளுமாறு அறிவுறுத்தினார். ‘அச்சேரனிடத்து நடராசனைத் தூதனுப்புக; அவன் சென்று காரியத்தை நன்றே முடித்துக் கொண்டு திரும்புவான்’ என்றும் நினைவூட்டினார்.
குடிலன் சூழ்ச்சி
முனிவரின் மொழிகளைக் கேட்ட மன்னன், அமைச்சனாகிய குடிலனிடம் இதுபற்றிக் கலந்து கொண்டே தூதனுப்புதல் நலமெனக் கருதினான். அவனோ தன்னுடைய சூழ்ச்சிகட்கெல்லாம் சுந்தர முனிவர் தடையாயுள்ளனர் என்று நினைத்தான். அம்முனிவர் மீது அரசனுக்கு வெறுப்பினை விளைத்தல் வேண்டுமென நினைத்தான். நடராசனுக்குப் பதிலாகத் தன் மகன் பலதேவனைத் தூதுதனுப்புமாறு செய்யவேண்டு மென உறுதி பூண்டான். பலதேவன் சேரனிடம் தூது சென்று, அவனை இகழ்ந்து பேசுமாறு செய்து விட்டால் சினங்கொண்ட சேரன் போருக்குச் சீறியெழுவான்; அவ்வாறு போர் நிகழ்ந்து கொண்டிருக்கும்போதே மறைமுகமாகச் சூழ்ச்சி செய்து ஆட்சியைக் கைப்பற்ற வேண்டுமெனத் திட்டமிட்டான்.
சீவகனும் குடிலனும்
மறுநாள் குடிலன், மன்னன் மாளிகையை அடைந்தான். இளவரசியின் திருமணச் செய்தி கேட்டுப் பெருமகிழ்வுற்ற செய்தியை அரசனுக்கு அறிவித்தான். தக்க காரணத்துடன் அச்சேரனுக்குத் தூதனுப்புதல் வேண்டும் என்றும் விளம்பினான். “வஞ்சி நாட்டின் ஒருபகுதியாகிய நன்செய் நாடு நீர் வளமும் நிலவளமும் நிறைந்தது. அது நம் பாண்டி நாட்டைச் சேர்ந்த பகுதியாகும். அங்கு வாழ்வார் பேசும் மொழி நம் தமிழே. இஃது ஒன்றே அப்பகுதி நம்முடையது என்பதை நாட்டப் போதிய சான்றாகும். அந்நாட்டினைச் சில காலமாகச் சேரன் ஆண்டு வருகிறான். அதனை எவ்விதத்திலும் மீட்டல் வேண்டும் என்ற நினைவாலேயே யான் இந் நெல்லையில் கோட்டையும் படையும் கொண்டு நிறுவினேன். ஆதலின் அச்சேரன்பால் நாம் ஒரு தூதனை யனுப்பி, நன்செய் நாட்டின் உரிமையை விளக்குவோம்; அதனை நம்பால் ஒப்படைத்து விடுமாறு அறிவுறுத்துவோம் ; நம் வீரத்தையறிந்த சேரன் நம்பால் அதனை ஒப்புவித்து நம்முடன் நட்புக் கொண்டொழுக விரும்புவான். அப்போது நாமும் அதற்கு இசைந்து, நம் ஒற்றுமைக்கு அறிகுறியாக மனோன்மணியின் திருமணத்தைப் பற்றி மெல்ல உரைத்தால் அவன் அதற்கு மறுப்பின்றி விருப்புடன் ஒருப்படுவான். மணமும் நாம் நினைத்தவாறே இனிது நிறைவேறும்” என்று பக்குவமாகப் பகர்ந்தான்.
பலதேவன் தூது போதல்
குடிலன் கூறிய மொழிகளைக் கேட்ட சீவகன் சிந்தை பெரிதும் மகிழ்ந்தான். அவனைப் பெரிதும் பாராட்டி, இச் செயலை இனிது முடித்தற்கேற்ற பேராற்றல் படைத்தவன் நும் மகனாகிய பலதேவனே என்று பகர்ந்தான். அது கேட்டு அளவிறந்த மகிழ்ச்சி யடைந்த குடிலன், தன் மகனைத் தூதனுப்ப உடன் பட்டான். சீவகன் விடுத்த தூதனாய்ச் சேரன் பேரவை யடைந்த பலதேவன் அவன் முன் சென்று செருக்குடன் நின்றான். அவனது நிலை, சேரனுக்குச் சினத்தையும் வெறுப்பையும் விளைத்ததாயினும் அடக்கிக்கொண்டு, அவன் தூது வந்த காரணத்தை வினவினான்.
சேரன் பேரவையில் பலதேவன்
அப்பொழுது பலதேவன், “மலைய மன்னவ ! நெல்லையிலிருந்து பாண்டி நாட்டு எல்லையை ஆளும் சிவக வேந்தன் விடுத்த தூதன் யான். அவ்வழுதியின் மந்திரத் தலைவனாகிய குடிலேந்திரன் மகன் பலதேவன் என்பது என் பெயர். எம் மன்னனாகிய சீவகன், தன் பகைவரை யெல்லாம் வெல்லுதற்கே நெல்லையைத் தலைநகராக்கி ஆங்கு வல்லமை வாய்ந்த அரணையும் அமைத்துள்ளான் ; வேந்தே ! நீ ஆளும் வஞ்சி நாட்டின் தென்கீழ்த் திசையில் அமைந்த நன்செய் நாடு எங்கட்கு உரியது. அங்குள்ளார் பேசும் மொழியும், ஆளும் ஒழுக்கமுமே அதற்குத் தக்க சான்றுகள். முன்னிருந்த மன்னர் சோர்ந்திருந்த வேளையில் எங்கள் எல்லைக்குட் புகுந்து சின்னாள் நீ அந்நாட்டை ஆண்டாய். அந் நாட்டின் உரிமையை மீட்கும் நோக்குடனேயே நெல்லையை வல்லையில் தலை நகராக்கினோம். படைகளும் ஆங்குத் திரண்டு வந்துள்ளன” என்றான்.
சேரன் சினமும் சீவகன் மனமும்
பலதேவன் மொழிகளைக் கேட்ட சேரன் சிரித்தான், சினந்தான். ‘அதற்காக யாம் செய்ய வேண்டுவது என்ன?’ என்று வினவினான். அதுகேட்ட பலதேவன், “சேரனும் செழியனும் போரினில் எதிர்த்தால் யார் பிழைப்பரோ? நீவிர் இருவரும் போர் புரிந்தால் வீணே பலர் இறந்தொழிவர். அத்தகைய துன்பம் நேராதிருக்கவே பாண்டியன் என்னை இங்கு ஏவினான். நன்செய் நாட்டை உரிமை நோக்கிப் பாண்டியனுக்கு அளிப்பதே கடனெனக் கூறவும் நின் கருத்தை யறிந்து மீளவுமே என்னைத் தூது விடுத்தான்-வேந்தே ! நினக்கு நன்மை விளைக்கும் உண்மை சிலவற்றை உரைக்கிறேன். நீவிர் இருவரும் பகைத்தால் யாது விளையுமோ? அறியோம். போரில் அஞ்சாத ஏறனைய சீவகனுடன் நீ வெஞ்சமர் விளைத்தல் நன்றன்று. மேலும் நன்செய் நாட்டை உரிமை பாராட்டி நீயே அடைதற்குரிய வழியொன்றும் உளது. எங்கள் மன்னனுக்குக் கண்ணனைய பெண்ணொருத்தி யுள்ளாள் அவள் பேரெழில் பெற்றவள்; அமுதே உருவெடுத்தாற் போன்ற ஆரணங்கு அன்னாள். அழகிய நறுமலராய் மலர்ந்துள்ளாள் அவள். அந் நறுமலர்த் தேனை நாடிப் பருகும் வண்டு, இதோ! இவ்வரியணையில் வீற்றிருக்கிறது. அம்மனோன்மணி நின் அரியணையில் அமர்ந்தால் தென்னவன் மனம் திருந்தும் ; நன்செய் நாடும் நின்னதாகும்” என்று கூறி நின்றான்.
சேரன் வீரமொழி
அதுகேட்ட சேரன், ‘நன்று ! நன்று!’ என்று சிரித்தான். “ஒகோ ! உங்கள் நாட்டில் மலரையணை தற்கு வண்டினைக் கொண்டு விடுவார்கள் போலும் ! இருபுறக் காதலின்றி எம் நாட்டில் திருமணம் இல்லை. மேலும், நம் அரியணை இருவர்க்கு இடங் கொடாது. நன்செய் நாடு குறித்து நீ நவின்ற சொற்கள் நினைக்குக்தொறும் நினைக்குந்தொறும் எனக்கு நகைப்பையே தருகிறது. நம் அரண்மனைக் கடைத் தலையில் அடைக்கலம் புகுந்த மன்னர் பலர் நடைப் பிணமாய்த் திரிந்துகொண்டிருத்தலைக் கண்டிலையோ ? அவர்கள் முடியும் செங்கோலும் நம் அடியில் வைத்து வாய்புதைத்து நின்று, தத்தம் மனைவியரின் மங்கல நாணை இரந்து நிற்கும் எம் அரசவை புகுந்து, நாக்கூசாமல் நன்செய் நாட்டைப் பாண்டியனுக்குத் தருக! என்று பகர்ந்த பின்னும் நீ உயிர் தாங்கி நிற்பது தூதன் என்ற ஒரே காரணத்தால் என்பதை அறிவாய்! ஆராயாது உன்னை இங்குக் தூதனுப்பிய பாண்டியன் இதுகாறும் முடியணிந்து அரசாள்வது யாரால் என்பதை இன்னும் ஒரு வாரத்திற்குள் தானே உணர்வான். இதனை உங்கள் அரசனுக்கு அறிவிப்பாய்” என்று வீரமும் வெகுளியும் தோன்றக் கூறிப் பலதேவனை அனுப்பினான்.
பாண்டியன் அவையில் பலதேவன்
சேரன் அரசவையினின்று நீங்கிய தூதனாகிய பலதேவன் தன் தந்தையின் சூழ்ச்சி பலித்தது என்று மகிழ்ந்தான். நெல்லையைச் சார்ந்து சீவகன் திருமுன் சென்று வணங்கி நின்றான். அவனது முகக்குறிப்பினைக் கண்ட குடிலன் தனது சூழ்ச்சி பலித்து விட்டதெனத் தன்னுள் எண்ணி இறுமாந்தான், அதனால் அரசனுக்கு இறுதியும் தனக்கு உறுதியும் விளைவது திண்ணமென எண்ணி இன்புற்றான். பலதேவன், பாண்டியனை வணங்கி, “அரசே! சேர வேந்தன் நம்மைச் சிறிதும் மதித்திலன்; அவன் இழித்துரைத்த மொழிகளைக் கூற என் நா எழவில்லை ; வஞ்சி நாட்டுப் படை இன்றே நெல்லையை நோக்கிப் புறப்படும் என்றும் அவன் வீறுடன் கூறினான்” எனச் சொல்லி யகன்றான்.
பலதேவன் இடைத்தூதன்
இங்ஙணம் குடிலன் கூறிய கருத்துக்களை அவன் கூறியவாறே கூறிச் சேரன் சீறியெழுமாறு செய்து வந்த பலதேவன், கூறியது கூறுவானாகிய இடைத் தூதனுக்கு ஏற்ற சான்றாக விளங்குவதை மனோன்மணிய நூலால் அறிகின்றோம். இவ்விடத்துக் குடிலன் வாயிலாகத் தூதர் இலக்கணத்தை எடுத்துரைக்கும் நூலாசிரியர், வள்ளுவர் உள்ளத்தைத் தெள்ளிதின் உணர்ந்து சொல்லுவதைக் கண்டு மகிழலாம்.
“வினை தெரிந்து உரைத்தல் பெரிதல, அஃது
தணைநன் காற்றலே ஆற்றல், அதனால்,
அன்பும் குடிமைப் பிறப்பும் அரசவாம்
பண்பும் அறிவும் பரவுநூல் உணர்வும்
தூய்மையும் மன்னவை யஞ்சாத் திண்மையும்
வாய்மையும் சொல்லில் வழுவா வன்மையும்
துணிவும் காலமும் நளமுந் துணியுங்
குணமும் மந்திரத் தலைவர் துணைமையும்
உடையனே வினையாள் தூதன்என்(று) ஓதினர்.”
--------------
This file was last updated on 19 December 2022.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)