pm logo

மௌனப் பிள்ளையார் (சிறுகதைகள்)
சாவி (சா. விஸ்வநாதன்)

maunap piLLaiyAr (short stories)
by cAvi (S. Viswanathan)
In Tmil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2023.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

மௌனப் பிள்ளையார் (சிறுகதைகள்)
சாவி (சா. விஸ்வநாதன்)

Source:
மௌனப் பிள்ளையார் (சிறுகதைகள்)
சாவி (சா. விஸ்வநாதன்)
மங்கள நூலகம், சென்னை- 34
இரண்டாம் பதிப்பு, ஏப்ரல் 1964
சித்திரங்கள் கோபுலு
விலை ரூபாய் 2, உரிமை பதிவு
அச்சிட்டோர்: ஸ்ரீ பி.எஸ்.எஸ். பிரஸ், சென்னை-24
-----------
காணிக்கை
என் குலதெய்வமான மௌனப் பிள்ளையாருக்கு
-----------
வாசகர்களுக்கு

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் நான் எழுத்துலகில் ஈடுபட்ட காலத்தில் எழுதிய கதைகள் சில "மௌனப் பிள்ளையார்" என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிடப் பட்டது. இப்போது அதையே திரு. கோபுலுவின் அற்புதமான சித்திரங்களுடன் இரண்டாம் பதிப்பாக மங்கள் நூலகத்தார் கொண்டு வந்துள்ளார்கள். திரு. கோபுலுவுக்கும் மங்கள நூலகத்தாருக்கும் என் நன்றி.

இந்தப் புத்தகத்தில் அடங்கியுள்ள கதைகளைச் சமீபத்தில் ஒரு முறை படித்துப் பார்த்தேன். சில இடங்களில் இவ்வளவு நன்றாக எழுதியிருக்கிறோமே?" என்றும், சில இடங்களில் "இந்தக் கதையை இப்போது எழுதியிருந்தால் இன்னும் நன்றாக எழுதியிருக்கலாம்" என்றும் தோன்றியது.

இப்புத்தகம் முதன் முறை வெளியான போது இதைப் படித்த ரசிகமணி டி. கே. சி. அவர்கள் என் எழுத்துத் திறமையைப் பாராட்டி மிக அருமையான கடிதம் ஒன்று எழுதியிருந்தார்கள். எதிர் காலத்தில் நான் ஒரு சிறந்த நகைச்சுவை ஆசிரியராக விளங்குவேன் என்றும் அந்தக் கடிதத்தில் அவர்கள் என்னை வாழ்த்தியிருந்தார்கள்.

இச்சமயம் அவரை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துகிறேன்.

மயிலாப்பூர்
12-4-64         சாவி
------------
என்ன, எங்கே?

---------------

1. மௌனப் பிள்ளையார்

அப்பாசாமி வெகு காலமாகக் காட்டிலேயே வசித்து வந்தான். பிரம்மாண்டமான அந்த வனத்தில் கரடுமுரடான வண்டிப்பாதை ஒன்று வளைந்து வளைந்து சென்று கொண்டிருந்தது. பாதைக்கு இருபுறங்களிலும் அடர்ந்து வளர்ந்த காட்டு மல்லிகைச் செடிகளும் பல விதமான முட் செடிகளும் இருந்தன. அப்பாசாமியைவிட வயது சென்ற விருக்ஷங்களெல்லாம்கூட அங்கே இருந்தன. ஆகையால் அந்தக் காட்டில் சமைத்துச் சாப்பிடுவதற்கு விறகுப் பஞ்சமே கிடையாது.

ஆனால், சாப்பிடுவதற்குத்தான் ஒன்றுமில்லை! என்றாலும் அப்பாசாமி ஒரு சந்தோஷப் பிரகிருதி. ”நாளைக்கு என்ன செய்வது?" என்ற கவலையே அவனுக்குக் கிடையாது. அவன் அந்தப் பாதைக்குப் பக்கத்திலிருந்த ஒரு பெரிய அரச மரத்துக்கு அடியில் குடிசை போட்டு வாசம் செய்து வந்தான். அந்த அரச மரம் அவன் பார்த்து வளர்ந்த மரம். ஆகையால் அவனுக்கு அதன்மேல் அத்தியந்த விசுவாசம் உண்டு. அந்த மரமும் அவனிடத்தில் ஓயாமல் இராப் பகலாய்ச் "சல சல" வென்று பேசிக்கொண்டே யிருக்கும்.

அவனுடைய குழந்தை பானுமதிக்குப் பேசவே தெரியாது. குழந்தை பானுவிடம் அவன் அளவு கடந்த அன்பு வைத்திருந்தான். தாயற்ற அந்தக் குழந்தையைப் பார்த்த போதெல்லாம் அவனுடைய குழி விழுந்த கண்களில் ஜலம் ததும்பும். குடிசைக்குப் பின்புறத்தில் அப்பாசாமிக்குச் சொந்தமாக ஒரு வாழைத் தோட்டம் இருந்தது. வயிற்றுக்கு ஒன்றுமே கிட்டாத நாட்களில் அந்தத் தோட்டத்திலிருந்து பழுத்த பழங்களாகக் கொண்டு வந்து, பானுவுக்குக் கொடுத்துத் தானும் உண்பான். பானு வெள்ளாட்டுப் பாலையும் வாழைப்பழத்தையும் சாப்பிட்டு வளர்ந்து வந்தாள்.

ஒரு நாள் அவன் தன் குழந்தை பானுவைத் தூக்கித் தன் தோளில் வைத்துக்கொண்டு ஆறு மைலுக்கப்பாலுள்ள ஒரு நகரத்துக்குப்போய்க் காட்டு மூலிகைகளை விற்றுவிட்டு வந்துகொண்டிருந்தான். அப்போது நல்ல இருட்டு. மூன்றாம் பிறை தினம். அஸ்தமித்து ஒரு ஜாமத்துக்கு மேலாகிவிட்டதால் வானத்தில் அரிவாளைப் போன்றிருந்த சந்திரனும் மறைந்து போயிருந்தான். நக்ஷத்திரங்களின் வெளிச்சம் அப்பாசாமிக்குச் சிறிதும் பிரயோஜனமற்றதாயிருந்தது. அப்போது ஏதோ ஒரு திசையில் குழந்தை அழும் சத்தம் கேட்டுத் திடுக்கிட்டான்.

தீக்குச்சியைக் கொளுத்தி, அழுகை எழுந்த பக்கம் நோக்கினான். அழகான ஆண் குழந்தை ஒன்று அங்கே படுத்துக் கொண்டிருந்தது. ஒன்றரை வயதிருக்கும். யாரோ திருடர்கள் கொண்டு வந்து நகைகளைக் கழற்றிக்கொண்டு அதை அங்கே விட்டுப் போயிருக்க வேண்டும் என்று அப்பாசாமி யூகித்தறிந்தான். அந்தக் குழந்தையையும் எடுத்து இன்னொரு தோளில் சாத்திக்கொண்டு குடிசைக்கு வந்து சேர்ந்தான்.
# #

பானுவும் ராஜுவும் வெகு அன்னியோன்னியமாய் வளர்ந்து வந்தார்கள். மனித சஞ்சாரமற்ற அந்தக் காட்டில் அவர்களுக்கு அணில்களும் பறவைகளும் கல்லுப் பிள்ளையாருமே துணை.

அப்பாசாமி அரசமரத்தின் அடியில் வெகு தூரத்தி லிருந்து ஒரு கல்லுப் பிள்ளையாரைக் கொண்டுவந்து வைத்திருந்தான். அந்தப் பிள்ளையாரே அவனுடைய குலதெய்வம்.

பானுவும் ராஜுவும் அந்தக் கல்லுப் பிள்ளையாரைச் சுற்றிச் சுற்றி விளையாடிக் களித்தார்கள். அவர்கள் விளையாட்டைக் கண்டு அப்பாசாமி சந்தோஷப்பட்டான்.

பானுவுக்கு ஒன்பது வயதாயிற்று. மாநிறமாயிருந் தாலும் சுருட்டை மயிர், பால் வடியும் முகம், முல்லைச்சிரிப்பு; பார்ப்பதற்கு ரொம்ப லக்ஷணமாயிருந்தாள். ராஜுவும் நல்ல அழகுடன் விளங்கினான். அப்பசாமிக்கு இப்போது காட்டு மூலிகைகள் மூலம் செலவுக்குப் போதிய வருமானம் கிடைத்து வந்தது. ராஜு வந்த வேளையின் அதிர்ஷ்டம் என்றே அவன் எண்ணி ஆனந்தித்தான்.

தான் கண்ணை மூடுவதற்குள் ராஜுவுக்கும் பானுவுக்கும் பிள்ளையார் முன்னிலையில் கல்யாணத்தைச் செய்துவிட அப்பாசாமி விரும்பினான். ஆனால் பிள்ளையாருடைய விருப்பம் அப்போது வேறு விதமாயிருந்தது. அந்தப் பாதை வழியாக சில தினங்களுக்கெல்லாம் ஓர் இரட்டை மாட்டு வண்டி வந்தது. அதில் ஒரு தனவந்தரும் அவர் மனைவியும் பக்கத்து நகரத்துக்குப் போய்க் கொண்டிருந்தார்கள். அப்பாசாமியின் குடிசையை நெருங்கிய சமயம் இருட்டிவிட்டதால் திருட்டுக் கூட்டத்துக்குப் பயந்து அவர்கள் வண்டிக்காரனை அங்கேயே நிறுத்தச் சொல்லி, இரவு அங்குத் தங்கி மறுநாள் காலை போகத் தீர்மானித்தனர்.

இராத்திரி பூராவும் அவர்கள் அப்பாசாமியின் கதையைச் சொல்லச் சொல்லிக் கேட்டார்கள். அவனுடைய கதையைக் கேட்கக் கேட்க அவர்களுக்கு ஆச்சரியமும் பரிதாபமும் மாறி மாறி ஏற்பட்டன. அப்பாசாமி தன் கதையைச் சவிஸ்தாரமாகக் கூறி முடித்துவிட்டு, "பாவம், இந்தப் பிள்ளை என்னிடம் வந்து கஷ்டப்படுகிறான். இவன் இங்கே என்ன சுகத்தைக் காண முடியும்? இவனை நீங்கள் அழைத்துப் போய் வளர்த்தால் உங்களுக்குக் கோடி புண்ணியம் உண்டு" என்று மன்றாடிக் கேட்டுக் கொண்டான்.

அவன் அழுததைக் கண்ட ராஜுவும் பானுவும் ஆளுக்கு ஒரு பக்கமாக அவனைக் கட்டிக்கொண்டார்கள். அப்பாசாமி அவர்கள் இருவரையும் மார்போடு அணைத்துக் கொண்டான். வந்தவர்கள் அவன் குழந்தைகளின் பேரில் வைத்திருந்த வாத்ஸல்யத்தைக் கண்டு மனமிரங்கி, "நீங்கள் மூவருமே எங்கள் வீட்டுக்கு வந்து விடுங்கள். நாங்கள் காப்பாற்றுகிறோம். எங்கள் வீட்டுத் தோட்ட வேலையை நீ கவனித்துக்கொள். சொஸ்தமாய்க் கவலையற்று இருக்கலாம்" என்றார்கள்.

அப்பாசாமி பலமாகத் தலையை ஆட்டி, "முடியாது. முடியாது; நான் இந்தக் காட்டைவிட்டு வரவே முடியாது. நான் இந்தக் காட்டிலேயே வளர்ந்தவன். இந்த அரச மரத்தையும் கல்லுப் பிள்ளையாரையும் விட்டு விட்டா என்னை வரச் சொல்கிறீர்கள்? என்னால் இவைகளை விட்டு ஒரு கணமும் பிரிந்திருக்க முடியாது!" என்று கண்டிப்பாகக் கூறினான். வந்தவர்கள் எவ்வளவோ கேட்டுக்கொண்டும், அப்பாசாமி ஒரே பிடிவாதமாகப் பானுவையும் அனுப்ப முடியாதென்று கூறிவிட்டு, "ராஜு, ராஜு, நீ போகிறாயா?" என்று தழு தழுத்த குரலில் கேட்டான். ராஜு ஒன்றும் புரியாமல் அரை மனத்துடன் தலையை ஆட்டினான்.

பொழுது விடிந்ததும், வந்தவர்கள் ராஜுவை அழைத்துக்கொண்டு புறப்பட்டுச் சென்றார்கள்.

பானுமதி ராஜுவைப் பிரிந்த துக்கத்தால் கோவென்று அழுதாள். அவள் ராஜுவிடம் வைத்திருந்த அன்பைக் கண்டு அப்பாசாமி அதிசயித்து அவளுக்கு ஆறுதல் கூறினான். பானுமதி இரவில் தூங்கும் போதெல்லாம், "ராஜு, ராஜு" என்று பிதற்றினாள்.

இவ்வளவையும் பார்த்துக்கொண்டு அந்த அரசமரத்துப் பிள்ளையார் மட்டும் மௌனமாகவே இருந்தார்.
# #

பல வருஷங்களுக்குப் பின்னர் அந்தக் காட்டு வழியாக வண்டிகளின் நடமாட்டம் சிறிது அதிகமாயிற்று. பொழுது போனபிறகு வரும் வண்டிகள் மட்டும் அப்பாசாமியின் குடிசையண்டைத் தங்குவது வழக்கமாயிற்று. அப்படித் தங்குகிறவர்களுக்கெல்லாம் பானு வேண்டிய உதவிகளைச் செய்தாள். அடுப்புப் பற்றவைத்துக் கொடுப்பாள்; ஜலம் பிடித்து வருவாள். தேவையானவர்களுக்குச் சமைத்துப் போடுவாள். பானுமதிக்கு வயது வந்தவுடன் அப்பாசாமிக்குப் பாதி வேலைகள் குறைந்தன. முக்கியமாகச் சமைத்துச் சாப்பிட வேண்டிய சிரமம் நீங்கிற்று. பானுமதி இப்போது முன்னைவிட அழகுடன் விளங்கினாள். நகைநட்டு இல்லாம லிருந்ததே அவளுக்கு ஓர் அழகாயிருந்தது.

சில தினங்களுக்கெல்லாம் அந்த வழியாகத் தினசரி ஒரு பெரிய மோட்டார் லாரி வர ஆரம்பித்தது. சரியாக இரவு ஏழரை மணிக்கெல்லாம் அந்த லாரி "கிராவல்" கற்களைச் சுமந்து கொண்டு கிடுகிடென்ற சத்தத்துடன் அந்தப் பக்கம் வரும். குடிசைக்குச் சமீபம் வந்ததும் ஒரு பெரிய இரைச்சல் போட்டுக்கொண்டு நிற்கும். அதன் டிரைவர் இரவெல்லாம் அப்பாசாமியின் குடிசையில் தங்கி, விடிந்ததும் கிளம்பிப் போய் விடுவான்.

இப்படி லாரி ஒருமாத காலம் தவறாமல் வந்துகொண்டே யிருந்தது. டிரைவரும் அப்பாசாமியும் நெருங்கிய நண்பர்களாயினர். அப்பாசாமி அவனைப்பற்றிக் கொஞ்சம் கொஞ்சமாக விசாரித்து விவரம் தெரிந்து கொண்டான். பக்கத்து நகரத்தில் ரோட்டுவேலை நடப்பதாகவும் அதற்கு வெகு தூரத்திலிருந்து கற்கள் போவதாகவும், இன்னும் நாலு மாத வேலையிருக்கிறதென்றும் டிரைவர் சொன்னான்.

அந்த டிரைவர் பரம சாதுவாயிருந்தான். அப்பாசாமியிடமும் பானுமதியுடனும் சர்வ சகஜமாகப் பழகித் தமாஷாகப் பேசிக் கொண்டிருந்தான். அப்பாசாமிக்கு வேண்டிய சாமான்களை அவனே வாங்கிக்கொண்டு வந்து கொடுப்பான். இதனால் அப்பாசாமிக்கு நகரத்துக்கு நடந்து போய்வர வேண்டிய வேலையும் குறைந்தது. ஒரு நாள் டிரைவர் பானுமதியைப்பற்றி அப்பாசாமியிடம் விசாரித்தான்.

அதற்கு அப்பாசாமி, "இவள் என் மகள்; குழந்தையா யிருந்தபோதே இவளைவிட்டு இறந்து போனாள் என் மனைவி. அது முதல் இவளை நான் தான் காப்பாற்றி வருகிறேன். அத்துடன் போயிற்றா? இன்னொரு குழந்தையையும் பகவான் என்னிடம் ஒப்படைத்தார். அந்தக் குழந்தை ராஜா வீட்டுக் குழந்தையா யிருக்கணும்; பாவம், போதாத காலம் என்னிடம் வந்து தவித்தது. கடைசியில் அதை ஒரு புண்ணியவான் வந்து அழைத்துக் கொண்டு போனார். அதற்கப்புறம் அவனைப்பற்றி ஒரு தகவலும் தெரியவில்லை. அந்தக் குழந்தை என்னிடம் பத்து வருஷ காலம் வளர்ந்தது. பானுவும் அவனும் இந்தக் கல்லுப் பிள்ளையாரைச் சுற்றிச் சுற்றி விளையாடுவார்கள். நான் சந்தோஷமாய்ப் பார்த்துக் கொண்டிருப்பேன். பானுவும் - அவன் பெயர் ராஜு - ராஜுவும் ரொம்ப சிநேகமா யிருந்தார்கள். இப்போது ராஜுவைப் பிரிந்து வெகு காலமாகிவிட்டது. பானு சதா அவன் ஞாபகமாகவே இருக்கிறாள். எனக்கு அந்தக் கல்லுப் பிள்ளையாரைப் பார்க்கும் போதெல்லாம் அவன் ஞாபகம் வந்து விடும் என்றான்.

”அப்படியா? அந்தக் குழந்தை உங்களிடம் எப்படி வந்தான்?" என்று ஆச்சரியத்தோடு கேட்டான் டிரைவர்.

அப்பாசாமி அந்தக் குழந்தை வந்த கதையைச் சொல்லிப் பெருமூச்சு விட்டான். பானுமதி அதையெல்லாம் கேட்டுக்கொண்டே யிருந்தாள். அவள் முகம் கவலையால் வாடி யிருந்தது.
# #

இதை யெல்லாம் கேட்ட பிறகு டிரைவர், அப்பாசாமியையும் பானுவையும் ஆறுதல் சொல்லித் தேற்றினான். "ஆண்டவனுடைய அருளால் நீங்கள் எப்படியும் ராஜுவைக் காண்பீர்கள் என்றான். அதன் பிறகு அவனுக்கு என்னமோ தன் கதையையும் அவர்களிடம் சொல்லவேண்டும் போலிருந்தது. எனவே, தன் கதையை ஒன்றுகூட விடாமல் உள்ளது உள்ளபடியே சொன்னான்.

"முப்பேட்டை முதலியார்தான் என்னை வளர்த்தவர். அவருக்கு ஒரு மனைவி இருந்தாள். தங்கமானவள். ஐந்தாறு வருஷங்களுக்கு முன்பு அவள் இறந்துவிட்டாள். முதலியார் ஒரு மணிலாக்கொட்டை வியாயாரி. வியாபாரம் நடந்த போது நான் லாரியில் சரக்கு ஏற்றிக்கொண்டு வருவேன். அந்த வியாபாரம் நடந்து கொண்டிருந்த சமயம் தான் முதலியார் ஒரு மோட்டார் லாரி வாங்கி என்னை அதற்கு டிரைவராக்கினார்.

"வியாபாரத்தில் மூன்று வருஷங்களுக்கு முன்பு பெருத்த நஷ்டம் ஏற்பட்டு, கம்பெனியை மூடும்படி ஆயிற்று. அவரிடம் மிகுந்திருந்த இந்த லாரியை என்னிடம் கொடுத்து உன்னை வளர்த்ததற்கு நான் ஆஸ்தியாகக் கொடுப்பது இதுதான் " என்றார்.


"அப்போதுதான் நான் அவருடைய வளர்ப்புக் குழந்தை யென்று தெரிந்து கொண்டேன். முதலியார் இறந்ததும், நான் லாரியை எடுத்துக்கொண்டு கடப்பை ஜில்லாவுக்குப் போய்விட்டேன். அங்கே லாரிக்கு வேலை கிடைத்தது. அதைக் கொண்டு பிழைத்து வந்தேன். இப்போது கடப்பைக் கல் வியாபாரம் க்ஷணமடைந்து போனதால் இந்தப் பக்கம் வந்தேன்" என்றான். இதைக் கேட்ட அப்பாசாமி ஆச்சரியமடைந்து,- "டிரைவர், டிரைவர், உன் பெயரென்ன?" என்று விசாரித்தான்.

என்னைச் சாமிநாதன் என்று வெளியில் கூப்பிடுவார்கள். ஆனால் அந்த முதலியார் மட்டும் ரொம்பப் பட்சமாக ”ராஜு, ராஜு ! என்றுதான் அழைத்து வந்தார் " என்றான் டிரைவர்.

உடனே அப்பாசாமி அவனை அப்படியே கட்டிக்கொண் டான். "ராஜு, நான் வளர்த்த ராஜுதான் நீ!" என்று அப்பாசாமி சந்தோஷ மிகுதியால் சொன்னபோது அவன் நாக் குழறியது.

பானுமதிக்கு ஒன்றுமே தோன்றவில்லை. ”ராஜுவா?" என்று அப்படியே ஸ்தம்பித்து நின்று விட்டாள்.
# #

சில தினங்களுக்கெல்லாம் ராஜுவுக்கும் பானுமதிக்கும் அரசமரத்தடியில், பிள்ளையார் முன்னிலையில், கல்யாணம் நடந்தது. அப்பாசாமியின் குதூகலத்தைக் கட்டிப் பிடிக்க
முடியவில்லை.

அரசமரத்தின் அருகில் இப்போது ஒரு வேப்பமரம் வளர்ந்து அதைச் சுற்றிக் கொண்டிருக்கிறது. பிள்ளையார் அரசமரத்துக்கும் கல்யாணம் செய்துவிட்டு, பானுமதிக்கும் விவாகம் செய்து வைத்துவிட்டுத்தான் மட்டும் பிரம்மசரி யத்தை அனுஷ்டித்து வருகிறார்.

இப்போதெல்லாம் அரச மரத்தின் சலசலப்புச் சத்தத்துடன் பானுமதி, ராஜு தம்பதிகள் சிரிப்பின் ஒலியும் கலந்து கொள்கிறது. ஆனால், பிள்ளையார் மட்டும் எப்போதும் போல் மௌனமாகவேதான் இருக்கிறார்!
------------------------

2. அஜ கீதம்

பாஸ்கரனை எப்படி வேண்டுமானாலும் கூப்பிடலாம். அவன் தகப்பனார் அவனை, "ஏ கழுதை, இங்கே வா" என்று அழைப்பார். அவனுடைய நண்பர்கள் அவனைப் பல மிருகங்களின் பெயர்களைக் கொண்டு கூப்பிடுவார்கள். யார் எப்படி அழைத்த-போதிலும் பாஸ்கரன் மட்டும் கோபிப்பதே கிடையாது.

இன்னும் சொல்லப்போனால் அவர்களெல்லாம் அவனை, "கழுதை, நாய்" என்று அழைப்பதே அவனுக்குப் பெருமையா யிருந்தது. அவனுடைய பெருமைக்குக் காரணம் உண்டு. நாயைப்போல் குரைப்பான் ; சிம்மத்தைப்போல் கர்ஜிப்பான். இன்னும் எந்தெந்த மிருகம் எப்படி எப்படிக் கத்துகிறதோ, எந்தெந்தப் பட்சி எவ்வெவ்விதம் சப்திக்கின்றனவோ அப்படி யெல்லாம் தத்ரூபமாகச் செய்து காட்டுவான்.

இந்த அதிசய வித்தையை அவன் தானாகவேதான் கற்றுக் கொண்டான். இந்தக் குணம் அவனுக்குப் பிறவியிலேயே அமைந்திருந்தது. அதனால் தான் அவனை எல்லோரும் "கழுதை, நாய்" என்றெல்லாம் பட்டம் சூட்டி அழைத்தார்கள்.

அதற்காகவே பாஸ்கரனுக்கு ஒரு சமயம் அவன் பள்ளிக் கூடத்தின் வருஷாந்திர விழாவின் போது ஒரு வெள்ளிக் கோப்பையைப் பரிசாக அளித்தார்கள்.

சென்ற வருஷம் பாஸ்கரன் மேற்கொண்டு படிப்பதற்காகச் சென்னைக்கு வந்தான். தனியாக வாடகைக்கு ஒரு "ரூம்" எடுத்துக்கொண்டு படிக்க விரும்பினான். ஓர் அறைக்காகச் சென்னை நகரத் தெருக்களைச் சுற்றிப் பார்க்க ஆரம்பித்தான். கடைசியாகப் புரசைவாக்கத்தில் ஓர் இடம் கிடைத்தது. அது அந்த வீட்டு மேல்மாடியில் தெற்கு நோக்கிய அறை. இரண்டு ஜன்னல்கள். மாடியிலேயே குழாய். அந்த இடம் அவனுக்கு மிகவும் பிடித்தமாயிருந்தது. அத்துடன் அந்த வீட்டில் ஒரே ஒரு பாட்டி மட்டும் தான் குடியிருந்தாள். அவளிடம் அரைகுறையாகப் பேசும் ஒரு சின்னக் குழந்தை அவ்வளவேதான்.

பாஸ்கரன், ”பாட்டி, இந்த அறையை நான் எடுத்துக் கொள்கிறேன் ; வாடகையைச் சொல்லுங்கள்" என்றான்.

"ரொம்ப அதிகமில்லை. உன்னைப் பார்த்தால் நல்ல பிள்ளை போல் தோன்றுகிறது. எலெக்ட்ரிக் விளக்கு இருக்கிறது. இரவு பூராவும் வேண்டுமானாலும் படிக்கலாம். எனக்கும் இந்த வீட்டில் மனுஷாள் சகாயமில்லை. என் பிள்ளைக்கு மிலிடரியில் வேலை. இதோ இந்தக் குழந்தை அவனுடையதுதான் ; என் பேரன். இதன் தாயார் போன வருஷம் ”டைபாயிட்" ஜுரத்தில் இறந்து விட்டாள். நான் ஒண்டிக்காரியாக இந்தக் குழந்தையை வைத்துக்கொண்டு கஷ்டப்படுகிறேன். இதற்கு டாக்டர் ஆட்டுப்பால் தான் கொடுக்க வேண்டும் என்று சொல்லி யிருக்கிறார். அதற்காக ஒரு வெள்ளாடு வாங்கி வளர்க்கிறேன். அதோ கீழே கட்டி வைத்திருக்கிறேன், பார்" என்றாள் பாட்டி.

இந்தச் சமயத்தில் கீழே கட்டப்பட்டிருந்த வெள்ளாடு, ”மே........ஏ....ஏ" என்று கத்தித் தான் இருப்பதைத் தெரிவித்துக்கொண்டது.

”பாட்டி ! நான் உங்களை வாடகை என்ன என்று கேட்டேனே ஒழிய இதெல்லாம் கேட்கவில்லையே” என்றான் பாஸ்கரன்.

”அதுக்கில்லேடாப்பா ; வாடகை ஆறு ரூபாய்தான் ; கொடுத்துவிடு" என்றாள் பாட்டி.
# #

பாஸ்கரன் மேற்படி வீட்டுக்குக் குடி வந்த ஒரு மாதத்திற் கெல்லாம் பரீக்ஷையும் நெருங்கிற்று. இராத்திரி பூராவும் மணிக்கணக்கில் கண் விழித்துப் படிக்க ஆரம்பித்தான். தினமும் ”டீ"க்காக மட்டும் நாலணாச் செலவழிந்தது. பாஸ்கரனைப் போல் இராத்திரி வேளையில் அந்த ஆடுகூடக் கண் விழித்துக் கொண்டு அடிக்கடி கத்த ஆரம்பித்தது.

பாஸ்கரனால் அதைச் சகிக்க முடியவில்லை. அந்தத் தலை வேதனையுடன் அவனால் எப்படிப் படிக்க முடியும்? பொறுத்துப் பார்த்தான்.

"மே...ஏ...ஏ..ஏ" என்று விடாமல் கத்தியது ஆடு. அவனால் மேற்படி அஜகீதத்தைச் சகிக்கமுடிய வில்லை. எந்த மிருகத்தைப் போலும் கத்துவதில் அவன் தீரனல்லவா? அவனுக்கு வந்த ஆத்திரத்தில் எரிச்சலுடன் அவனும் "மே..... ஏ....ஏ...ஏ" என்று கத்தி, ஆட்டுக்கு அழகு காட்டினான். பதிலுக்கு ஆடும் கத்தியது. மறுபடியும் பாஸ்கரன் தொடர்ந்து கத்தினான். இப்படியாக ஆடும் பாஸ்கரனும் மாறி மாறி இரவு பூராவும் அஜகீதம் பாடித் தீர்த்தார்கள்.

பாட்டி ஒன்றும் பேசாமல் மௌனமாகத் தானாகவே சிரித்துக் கொண்டாள்.

குழந்தைக்கு அஜகீதத்தில் பிரியம் ஏற்பட்டது. அது அழுகிறபோது ஆடு கத்தினால் அந்தக் குழந்தை அழுகையை நிறுத்தித் தன் பொக்கை வாயைத் திறந்து சிரிக்கும்.

ஆடு சில சமயங்களில் கத்தாமற் போனால் அதற்காக அந்தக் குழந்தை அழுவதும் உண்டு. திடீரென்று ஒருநாள் பாட்டி வளர்த்து வந்த அந்த ஆடு இறந்து விட்டது. தன்னுடைய படிப்புக்குக் குந்தகம் விளைவித்துக் கொண்டிருந்த அந்த ஆடு செத்துப் போனதில் பாஸ்கரனுக்குப் பரம திருப்தி. ஆனால் இன்னொரு இடைஞ்சல் ஏற்படும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.

பாட்டி பாஸ்கரனிடம் வந்து, "அப்பா, உனக்குப் புண்ணியம் உண்டு. தாயில்லாக் குழந்தை அழுவதை நிறுத்தினால் உனக்கு எவ்வளவோ நல்லது. அதோ பார் ; ஆடு கத்தவில்லை என்று குழந்தை பிரமாதமாய் அழுகிறது. அந்த ஆடு செத்துப்போன விஷயம் குழந்தைக்குத் தெரியாது. தெரிந்தால் இன்னும் அதிகமாய் அழ ஆரம்பித்து-விடும். நீதான் அந்த ஆடு மாதிரியே தத்ரூபமாய்க் கத்துகிறாயே. தயவு செய்து குழந்தை அழும் சமயங்களில் மட்டும் கத்தினால் போதும். நீ வாடகை கூடக் கொடுக்க வேண்டாம். இனா மாகவே குடியிருந்து கொள்."

பாஸ்கரன் யோசித்தான். வாடகை இனாமல்லவா? "மே... ஏ... ஏ..ஏ" " என்று கத்தினான்.

உள்ளே அழுதுகொண்டிருந்த குழந்தையும் சிரித்தது. இப்போது ஒவ்வொரு நாளும் பாஸ்கரன் அஜகீதம் பாடி வருகிறான்!
----------------

3. தாட்சண்யப் பிரகிருதி

ராமநாதன் சென்னையிலிருந்து டில்லிக்கு மாற்றப் பட்டான். அவன் ரெயில்வேயில் மெயில் ஸார்ட்டராக இருந்ததால் அடிக்கடி டில்லிக்கும் சென்னைக்கும் போய்வரச் சௌகரியமா யிருந்தது.

சென்னை வாசிகளும் டில்லி வாசிகளும் ராமநாதனைத் தங்களுடைய இலவசத் தபால்காரனாகவும் கூட்ஸ் வண்டி யாகவும் உபயோகித்துக் கொண்டார்கள். அதாவது டில்லியிலிருக்கும் தங்கள் பந்துக்களுக்கு இவன் மூலமாய்த் தபால், கரிவடாம், துணி, அப்பளக்குழவி முதலிய குடும்ப சாமான்களை அனுப்பி வந்தார்கள்.

ராமநாதன் பொறுமைசாலி. இல்லாவிட்டால் பட்டணத்திலுள்ள சாமான்களில் முக்கால் வாசியை டில்லியிலும் டில்லியிலுள்ள சாமான்களைப் பட்டணத்திலும் கொண்டு வந்து சேர்ப்பானா? அத்துடன் அவனுக்கு இரண்டு ஊர் மனுஷ்யர்களும் வேண்டியவர்கள். தாட்சண்யப்பட்ட மனிதர்கள் சொல்லும் பொழுது எப்படி மாட்டேனென்பது? அநேகமாக ராமநாதனுக்கு மாதத்தில் நாலைந்து பிரயாணம் கட்டாயம் உண்டு. ஒவ்வொரு பிரயாணத்திலும் அவன் கொண்டு போகும் சாமான்கள் மூன்று குடும்பத்திற்கு ஆகும்.
# #

ஒரு தடவை ராமநாதனுக்கு அசாத்தியக் கோபம் வந்து விட்டது. அவனுக்குக் கோபம் வந்ததில் தவறென்ன? ஊரார் சாமான்களை யெல்லாம் கொண்டுபோய் டில்லியில் வைப்பதற்குத்தானா அவனுக்கு இந்திய சர்க்கார் சம்பளம் தருகிறார்கள்? இருந்தாலும் அவன் தன் கோபத்தை அடக்கிக்கொண்டு, "பரோபகாரம் இதம் சரீரம்" என்று நண்பர்களுக்கு உதவிக்கொண்டிருந்தான்.

ராமநாதனுடைய குடும்பம் சென்னையில் இருந்தது. டில்லியில் குடித்தனத்தைப் போடலாகாதா என்றால் அங்கே வாடகை எல்லாம் அதிகம். ரெயில்வேயில் இனாம் சவாரி இருப்பதால் சென்னைக்கு அடிக்கடி வந்து போய்க் கொண் டிருந்தான்.

"சரி ; இந்தத் தடவை டில்லிக்குப் போகும் போது யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் ரகசியமாய் ரயிலேறி விடவேண்டியது தான்" என்று தீர்மானம் பண்ணி யிருந்தான்.

எனவே, மனைவி சிவகாமுவைக் கூப்பிட்டு, ”ஏய்! நான் புதன்கிழமை டில்லிக்குப் புறப்படுகிறேன். யாரிடமும் சொல்லி விடாதே. பத்திரம்!" என்று சொல்லிவிட்டு, ஊரார்களிடம் தான் டில்லிக்குப் போக ஒரு மாதம் ஆகு மென்று பொய் சொல்லி ஏமாற்றி விட்டான். அதில் ஒருவர், "ராமநாதா ! நீ எப்போது போனாலும் சரிதான் ; போகும் போது என் மாப்பிள்ளைக்கு ஒரு டப்பி விபூதி வைத்திருக் கிறேன். ஞாபகமாய் எடுத்துக்கொண்டு போகணும் என்று அப்பொழுதே முன்கூட்டிச் சொல்லி வைத்து விட்டார்.

மறுநாள் புதன்கிழமை. சிவகாமு பக்கத்து வீட்டு சுப்புலக்ஷ்மியிடம் ஏதோ வேலையாகப் போயிருந்தாள்.

சுப்புலக்ஷ்மி, "ஏண்டி சிவகாமு! உங்காத்திலே என்றைக்கு டில்லிக்குப் போகிறார்?" என்று கேட்டாள்.

சிவகாமு, "அதென்னமோம்மா, யாரிடமும் சொல்ல வேண்டாம்னு சொல்லியிருக்கார். நாளைக்குத்தான் போகப் போகிறார். நீ போய் யார் கிட்டேயும் சொல்லி வெச்சுடாதே. உனக்கு ஏதாவது கொடுத்தனுப்ப வேண்டுமானால் என்னிடம் சொல்லு ; ரகசியமாய் அனுப்பிவிடு கிறேன்" என்றாள் சிவகாமு.

"ஒண்ணும் இல்லே ; ஒரு வீசை நல்லெண்ணெய் வாங்கி வெச்சிருக்கேன். அதை டில்லியிலே இருக்கிற என் அண்ணாவிடம் கொடுத்து விடவேண்டும். அவ்வளவுதான்" என்று சொல்லி எண்ணெய் டின்னையும் எடுத்து வந்து சிவகாமுவிடம் கொடுத்தாள்.

புதன்கிழமை வந்தது. ராமநாதனுக்குப் பரம சந்தோஷம். பிரயாணம் ஒரு விபூதி சம்புடம் ஒரு வீசை நல்லெண்ணெயோடு மட்டும் ஸ்திரப்பட்டதைக் குறித்து மிகவும் சந்தோஷப்பட்டுக்கொண்டான்.

பகல் மூன்று மணிக்கு ரயிலுக்கு மாப்பிள்ளை போலக் கிளம்பினான். இதுவரை அவன் இந்தமாதிரி மூட்டை முடிச்சு இல்லாமல் போனதே கிடையாது. பரம சந்தோஷத்துடன் ரயிலடிக்குச் சென்ற, ராமநாதனுடைய முகம் வெளுத்தது.

கீழ்க்கண்ட பேர்கள் பின் வரும் சாமான்களை வைத்துக் கொண்டு ராமநாதனிடம் டில்லிக்குக் கொடுத்தனுப்பத் தயாராய்க் காத்துக் கொண்டிருந்தது தான் அதற்குக் காரணம்.

ரகசியம் ரகசியம் என்று ராமநாதன் டில்லி போகிற விஷயம் கிட்டத்தட்ட ஊர் பூராவும் பரவிவிட்டது. ஒரு ஸ்திரீயின் காதில் பட்ட ரகசியம் இந்தக் கதியாயிற்று! பக்கத்துத் தெரு சுந்தரேசய்யர் ராமநாதனிடம் இரண்டு வீசை காப்பிப் பொடியைக் கொடுத்துத் தன் பேத்தி யிடம் சேர்த்துவிடச் சொன்னார். அதைத் தவிர ஒரு பொட்டலம் கற்கண்டைக் கொடுத்துத் தான் கொடுத்ததாகத் தன் பேரனிடம் கொடுக்கச் சொன்னார்.

அடுத்த தெரு அம்முப்பாட்டி முறுக்கு, சீடை, அப்பளம், வடாம், பொரிவிளங்காய் முதலிய பக்ஷணங்களைக் கொடுத்து, தன் அருமைப் பெண்ணிடம் சேர்க்கச் சொன்னாள்.

பாலகிருஷ்ணன் தன் தாத்தாவுக்கு ஐந்து பலம் பட்டணம் பொடியும் ஒரு ஜோடி செருப்பையும் கொடுத் தனுப்பினான்.

லீவிலிருந்த டில்லி போஸ்ட் ஆபீஸ் கிளார்க் அனந்த ராமய்யர், "என் ஆபீஸ் துரைக்கு நாய்க்குட்டி என்றால் உயிர். நம்ம பக்கத்து ராஜபாளையம் நாய்க்குட்டி ஒன்று கிடைத்தது. இதைக் கொண்டு போய் மெள்ள அவரிடம் சேர்த்துவிடு. மெயில் ஸார்ட்டிங் வண்டியிலே இந்தக் குட்டி பிரயாணம் செய்வது நல்லது என்று ஒரு ஜந்துவைக் கொண்டு வந்து விட்டார். அவர் அதைக் "குட்டி" என்று சொன்னாரே யொழிய அது நாலைந்து குட்டி போட்டிருக்கு மென்று ஊகிக்கக்கூடியதாயிருந்தது. ரயில்வேக்காரனுக்கு. ஐந்து ரூபாய் காசு தராது ஏமாற்றும் சாகஸத்தை என்னென்பது? ஏகாம்பரய்யர் ஒரு பெட்ரோமாக்ஸ் விளக்கும் கொஞ்சம் மண்ணெண்ணெயும் தன் மாமனார் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

இவ்வளவையும் ராமநாதன் வாங்கி ரயிலில் மெயில் வானில் அடுக்கிக் கொண்டான். எல்லோருக்கும், "ஆஹா, பேஷாய்க் கொடுத்து விடுகிறேன்" என்று சொல்லி விட்டுக் குறிப்பிட்ட தன் வண்டியில் போய் உட்கார்ந்தான். அவனுக்குக் கோபம் கோபமாய் வந்தது. இவ்வளவு சாமான்களையும் கொண்டு போய்ச் சேர்ப்பதென்றால் லேசாயிருக்கிறதா? அவன் பேசாமல் ரயிலில் படுத்துத் தூங்கினான். ஊரார் தந்த வஸ்துக்களும் அந்த ஜந்துவும் ஒரு மூலையில் கதம்பமாய்க் கிடந்தன. டில்லி ஸ்டேஷனுக்கு முன் ஸ்டேஷ னில் ராமநாதன் கண் விழித்து எழுந்தான். அனந்த ராமய்யர் அனுப்பிய அந்த நாயைக் காணவில்லை. அதன் பக்கத்தில் வைத்திருந்த செருப்பையும் காணோம். எழுந்து ஸ்டேஷனில் இறங்கிப் பார்த்தான். நாய் செருப்பைக் கௌவிக்கொண்டு பிளாட் பாரத்தின் கோடியில் ஓடிக் கொண்டிருந்தது. துரத்திக்கொண்டு போய்ப் பிடித்து வரலாமென்றால், அதற்குள் வண்டி புறப்பட்டு விட்டது. இந்தத் தர்ம சங்கடத்திற்கு என்ன செய்வது?
# #

டில்லியில் ரயிலைவிட்டு ராமநாதன் இறங்கியது தான் தாமதம். அவரவர்கள், ”என் தாத்தா என்ன அனுப்பினார்? என் பாட்டி என்ன அனுப்பினாள்?" என்று ரயிலடிக்கே வந்து விட்டார்கள். எல்லோரையும் பட்டாளம் போல அழைத்துக் கொண்டு அருகிலிருந்த கூட்ஸ் ஷெட்டுக்குப் போய் அவரவர்கள் மூட்டையையும் சாமானையும் பிரித்து வைத்தான்.

சுந்தரேசய்யரின் பேத்திக்குக் கொடுத்திருந்த காப்பித் தூளும், பாலகிருஷ்ணன் தந்திருந்த மூக்குத் தூளும் ஒன்றாய்ச் சேர்ந்து ஒரே கதம்பமாய்க் கிடந்தது. பாலகிருஷ்ணன் தாத்தாவையும், சுந்தரேசய்யரின் பேத்தியையும் ராமநாதன் கூப்பிட்டு, "வேணுமானால் இந்தப் புது "மிக்சரை "ச் சல்லடை போட்டுச் சலித்துப் பிரித்து எடுத்துக்கொள்ளுங்கள்" என்று அலட்சியமாகச் சொன்னான்.

பாலகிருஷ்ணன் தாத்தா, "ஏண்டா ராமநாதா? என் பிள்ளை செருப்பு அனுப்பினானே, அது எங்கே?" என்று கேட்டார்.

"செருப்பா? அனந்தராமய்யர் அனுப்பிய அந்தத் திருட்டு நாய் அதைக் காலில் மாட்டிக் கொள்ளாமல், வாயில் மாட்டிக் கொண்டு முந்தின ஸ்டேஷனிலேயே இறங்கி ஓடி விட்டது. மெள்ளப் போய் அதைக் கண்டு பிடித்து அதனிடம் செருப்பை வாங்கிக் கொள்ளும்! அப்படியே சௌகரியப்பட்டால் அனந்தராமய்யர் நாயையும் அழைத்து வந்து விடுங்கள்" என்றான் ராமநாதன்.

அம்முப்பாட்டி தந்த பக்ஷணத்திலெல்லாம் ஏகாம்பரய்யரின் மண் எண்ணெய் கலந்து நறுமணம் வீசியது.

இப்படி அமர்க்களமாயிருந்த லக்கேஜிலிருந்து அவரவர்கள் தத்தம் சாமான்களை எடுத்துக்கொள்வதற்குள் மணி மூன்றாயிற்று.

ராமநாதனைப் பிடித்த சனியன் அன்றோடு சமாப்தி யாயிற்று. அதுமுதல் அவனிடம் யாரும், "சாமான் எடுத்துப் போகிறாயா?" என்று கேட்டதே கிடையாது.
---------------

4. ஒண்டுக் குடித்தனம்

யாரோ ஒருவர் தெருக் கதவைப் பலமாகத் தட்டினார். எழுந்து போய்க் கதவைத் திறந்தேன். தடபுடலாய் ஓர் ஆசாமி உள்ளே நுழைந்து, என்னிடம் ரொம்ப நாளாகப் பழக்கப்பட்டவர்போல் என் அருகில் வந்து தட்சிணாமூர்த்தி இரண்டு விரலை மடித்துக் கொண்டிருக்கிறதே அந்த மாதிரி நின்றார்.

ஒரு சிமிட்டா பொடி கேட்கிறாரென்பது எனக்கு விளங்கிற்று:

"இதற்கா இவ்வளவு ஆர்ப்பாட்டமாய்க் கதவைத் தட்டிக்கொண்டு உள்ளே வந்தார்?" என்று கேட்கலாமா என்று கூடப் பார்த்தேன். கொஞ்சம் நிதானித்து ”தாங்கள் யார்? என்னிடம் பொடி போடும் வழக்கம் கிடையாதே" என்றேன்.

"நான் பொடி ஏதும் கேட்கவில்லையே" என்று சொல்லிச் சிரித்துக்கொண்டே தெருவிலிருந்த டு லெட் போர்டைக் காட்டினார்.

நெற்றியில் மூன்று ரேகைச் சந்தனம், பஞ்சகச்சம், பட்டையான அங்கவஸ்திரம், எல்லாவற்றையும்விட ஏழெட்டு நீட்டிக்கொண்டு விளங்கும் உச்சிக்குடுமி இவ்வளவும் சேர்ந்து அவரைக் குடும்பஸ்தர் என்று முறை யிட்டன.

வந்தவர். "இந்த வீட்டுக்கு வாடகை என்னவோ?" கேட்டார்.

வீடு பூராவும் வாடகைக்கு விடுவதில்லை. இதோ பாருங்கோ ! இந்தச் சமையலறை, இந்தக் கூடம்; அதோ எதிர்த்தாப் போலிருக்கிறதே அந்த ரேழி அறை - அது வரைக்கும் தான் வாடகைக்கு விடப்படும். வாடகை பன்னிரண்டே முக்கால் ரூபாய் ஆகும். அதைத் தவிர வீடு கூட்டும் கூலி, தாம்புக் கயிறு வாங்க, துடைப்பம் வாங்க இதற்கெல்லாம் ”எக்ஸ்ட்ரா" செலவு. அதில் பாதி நீங்கள் கொடுக்கவேண்டும். இன்னும் மாதத்தில் பதினைந்து நாள் தெருவில் விளக்குப் போட வேண்டும். நாங்கள் பதினைந்து நாள் போடுவோம். சரிக்குச் சரியா போயிடும். கிருஷ்ண பக்ஷம் பூராவும் நீங்கள் விளக்குப் போடுங்கோ ; சுக்ல பக்ஷம் பூராவும் நாங்கள் போட்டுவிடுகிறோம். தெரிந்ததா? இதைத் தவிர்த்து உங்ககளுக்குத் தனியாக ஓர். வெந்நீர் அறை உண்டு. அதை நீங்கள் உபயோகித்துக் கொள்ளலாம். கூடத்துச் சுவரிலேயோ, உள் சுவரிலேயோ, ஆணி கீணி அடிக்கப்படாது. வீட்டைக் கண்ணாடி மாதிரி வைத்துக்கொள்ள வேண்டும். தெரிஞ்சுதா?" என்று வழக்கப்படி ஒரு குட்டி லெக்சர் அடித்து முடித்தேன். இந்த லெக்சரை ஒண்டுக் குடித்தனக் காரரிடம் ஒப்புவிப்பதற்காகப் பாடம் பண்ணி வைத்திருக்கிறேன். இதுவரையில் வந்தவர்கள் என் பிரசங்கத்தைக் கேட்டுவிட்டு, "நாளைக்கு வருகிறேன் " என்று போய் விடுவார்கள். ஆனால் போனவர்கள் திரும்பி வருவதில்லை. இந்த நபரோ என் பிரசங்கத்துக்குச் சிறிதும் சளைக்கவில்லை.

”சரி, பரவாயில்லை; கூரையில் ஒட்டடை, சிலந்திப் பூச்சிக் கூடு இதெல்லாம் இருக்கே, வாரத்திலே ஒருநாள் இதெல்லாம் பழுது பார்க்கவேண்டும் ஸார். இப்படி வீட்டை வைத்துக்கொண்டிருந்தால் யார் வருவார்கள்?" என்று எனக்கு அவர் பாடம் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார்.

"அதைப்பற்றிக் கவலை வேண்டாம். நீங்கள் இங்கு வரும் பக்ஷத்தில் அதையெல்லாம் சுத்தப்படுத்தித் தருகிறேன்" என்றேன்.

”வீடு ஒழுகும் போலிருக்கே?" என்றார்.

"ஒழுகவாவது? அப்படி ஒழுகினாலும் நான் ”ரிப்பேர்" பண்ணித் தருகிறேன். கவலைப்படாதீர்கள்" என்றேன்.

”புகை போக்கியிலே ஒரே கரியாயிருக்கிறதே?"

"அதுவும் கிளீன்" பண்ணிக் கொடுத்து விடுகிறேன்."

"அதெல்லாம் இருக்கட்டும், வீட்டிலே குழாய் உண்டா ?" என்றார்.

"குழாயும் உண்டு, ஜலமும் வரும்" என்று பதில் கூறினேன்.

"சுவரில் மூட்டைப்பூச்சி இருக்கும் போலிருக்கே?" என்றார்.

எனக்குக் கோபம் கோபமாய் வந்தது. அடக்கிக் கொண்டேன்.

"ஊஹூம், பேசக்கூடாது : ஒரு பூச்சிகூட இங்கே நாடாது " என்றேன்.

"சாக்கடையைத் தினம் சுத்தம் பண்ணுகிறீர்களோ?" என்று கேட்டார்.

இந்த வீட்டில் நான் தான் சாக்கடை வாருகிறவன் என்று நினைத்துக்கொண்டார் போலும்.

"இதோ பாருங்கோ ! வாராவாரம் சுத்தம் பண்ணுவ துண்டு. நீங்க ஒண்ணுமே கேட்க வேண்டாம். என் வீட்டை போலச் சுத்தமான வீட்டை இந்த டவுனிலே வேறு எங்குமே கண்டுபிடிக்க முடியாது."

" நீங்க வேண்டுமானால் வந்து குடித்தனம் இருந்து பாருங்கோ. உங்களுக்குப் பிடிக்கவில்லையென்றால் வாடகையே கொடுக்க வேண்டாம் ஸார், இருந்துவிட்டுச் சொல்லுங்கோ" என்றேன்.

”உம்; கிணற்று ஜலம் உப்பாயிருக்குமோ?" என்றார்.

ஒரு டம்ளர் கிணற்று ஜலத்தை எடுத்துக் கொண்டு வந்து. "சாப்பிட்டுப் பாருங்கோ" என்றேன்.

"ஜலம் பரவாயில்லே" " என்று கூறி, "ஆமாம், இங்கே சத்தம் கித்தம் ஏதாவது உண்டா? அல்லது ஒன்றுமில்லாமல் இடிஞ்ச கோவில் மாதிரி நிம்மதியாயிருக்குமா?" என்று பதில் சொல்ல முடியாதபடி கேட்டார்.

சத்தம் உண்டு என்று சொல்வதா? சத்தமே கிடையாது என்று சொல்வதா?

நான் வீட்டுக்குச் சொந்தக்காரனாயிருந்து கொண்டு இந்த மனுஷன் என்னைக் கேட்கும் கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல எனக்கு இஷ்டமில்லை.

"இதெல்லாம் என்ன கேள்வி? உங்களுக்கு என்னைப் பற்றித் தெரியாது போலிருக்கிறது. நீங்கள் இந்த வீட்டுக்கு வந்துவிட்டீர்களானால் இதை விட்டுப் போகவே மாட்டேள். அப்புறம் நாம்பள்ளாம் ஒரு குடும்பம் மாதிரிதான்" என்று சிரித்துக்கொண்டே கூறினேன்.

"உமக்குக் குழந்தைக் குட்டிகளுண்டா ?" என்று நான் கேட்கவேண்டிய கேள்வியை அவர் கேட்டார்.

"இனிமேல் தான் உண்டாகணும்..."

”அதிருக்கட்டும் வீணை, ஹார்மோனியம்....... ஏதாவது?..." என்று கேட்டார்.

"பேசக்கூடாது.... எங்க வீட்டில் யாருக்குமே பாட வராது" என்றேன்.

எருமை மாடு, பசுமாடு ஏதேனும் இருக்கிறதா என்பது அடுத்த கேள்வி.

"ஹூம்; பால் வெளியிலே தான் வாங்குகிறேன்" என்றேன்.

"இருந்தால் லக்ஷ்மீகரமாய் இருக்குமே ! கிடக்கட்டும்; குலைக்கிற நாய் கீய் இருக்கிறதா?" என்றார் மேலும். எனக்கு ஆத்திரம் பொங்கிற்று. உடனே வாடகைப் பணம் ஞாபகம் வர அடங்கிப் போயிற்று.

"நாயே கிடையாது ஸ்வாமி. இனிமேல் ஏதாவது வந்தால் தான் உண்டு" " என்று சொல்லிவிட்டு, "ஐயா, நான் எழுதும் பேனா மட்டும், கிறீச் கிறீச்" என்று சத்தம் போடும்" என்று எச்சரித்தேன்.

அதனால் பரவாயில்லை" என்றார். பிறகு தான் அடுத்த சனிக்கிழமை குடி வருவதாகச் சொல்லிவிட்டுப் போனவர் நான் எதிர்பாராத விதமாய்க் குடியும் வந்துவிட்டார்.
#

அவர் குடும்பத்தில் இருந்த ஒன்பது ஜீவன்களையும் நவக் கிரகங்கள் என்றால் ரொம்பப் பொருத்தமாய் இருக்கும். அவருடைய பெண் குழந்தை ஒன்று இருக்கிறது. ஹார்மோனிய சகிதமாய், அப்பப்பா ! அது விடமுசாயவே பாட ஆரம்பித்துவிட்டால், சுற்றுப் பக்கத்தில் ஏழேட்டு வீடுகளே அதிர்ந்து விடும். அந்தக் குடித்தனத்தில் யாருமே தூங்கமாட்டார்கள். நான் மட்டும் எப்படித் தூங்க முடியும்? அவர் வந்து ஒரு மாதமாகியும் இன்னும் வாடகை கொடுத்த பாடில்லை. அன்றைக்கு வந்ததும் வராததுமாய் வாடகை என்னவென்று முதல் கேள்வி கேட்டானே எதற்காகக் கேட்டான்? நாளாக ஆக அந்த ஒண்டுக் குடித்தனக்காரனின் முழு யோக்யதையும் தெரிந்தது.

ஊரிலுள்ளவர்கள் என்னிடம் ரகசியமாக வந்து, "ஐயையோ! அவனையா சேர்த்தாய்? அவன் பெரிய பொல்லாதவனல்லவா!" என்று துக்கம் விசாரித்தார்கள்.

இப்பொழுது கூடம் முழுவதும் ஆணியடித்துப் படங்களை மாட்டி வைத்திருக்கிறான். தினந்தோறும் காலையில் எழுந்ததும் வரட்டுத் தவளை மாதிரி நாலு ஸம்ஸ்கிருத சுலோகங்களைத் திரும்பத் திரும்ப நூறு தரம் சொல்ல ஆரம்பித்து விடுகிறான். அவன் மூட்டை முடிச்சுகளோடு சுமார் ஐயாயிரம் மூட்டைப் பூச்சிகளும் என் வீட்டுக்குக் குடி வந்து விட்டன. தெருவில் ஒரு பட்சத்திலும் அவன் விளக்குப் போடும் வழக்கம் கிடையாது.

வீட்டுக்கு வந்து இரண்டு மாதங்கள் ஆகியும் துடைப்பத்துக்கு ஒரு ஈர்க்குச்சி கூட அவன் வாங்கிப் போடவில்லை. ஆனால் பல் குத்துவதற்கென்று என் வீட்டுத் துடைப்பக் கட்டையிலிருந்து குச்சியை உருவிக்கொண்டு போகாத நாள் கிடையாது.

அவன் பசங்கள் செய்யும் லூட்டியோ சகிக்க முடிய வில்லை. தவளை, நண்டு, ஊரிலிருக்கும் தென்னங்குறும்பைகள் ஓட்டாஞ்சால்லி அத்தனையும் "ஸ்டாக்" சேர்க்கின்றன. நாயோடு அவை பண்ணும் கலாட்டாவை நான் என்ன சொல்ல?

அவன் மனைவி வாசலில் கூடைக்காரியைக் கூப்பிட்டு விட்டாளானால் போதும்; அடுத்த நாள் முதல் அந்தக் கூடைக் காரி இந்த வீட்டுப் பக்கம் நாடமாட்டாள். அவன் தன் குழந்தைகளுடன் ஸ்நானம் பண்ண ஆரம்பித்துவிட்டால் கிணற்றண்டை ஒரு பக்கிங்ஹாம்" சாக்கடையே தயாராகி விடும்.

போன மாதத்தில் ஒருநாள் துணிச்சலாக அவனிடம் சென்று சென்றமாத வாடகையைக் கேட்டேன்.

”நாமெல்லாம் ஒரு குடும்பம் மாதிரி இருக்கலாம் என் றேளே?" என்று சிரித்து மழுப்பிவிட்டு நடந்து விட்டான்.
#

இன்னொரு மாதம் கழிந்தது. மறுபடியும் தைரியமாக அவனை அணுகிக் கேட்டேன். "ஏன் ஐயா, வீடு சௌகர்யமா யில்லை என்றால் வாடகையே கொடுக்க வேண்டாமென்று சொன்னீரே? இங்கே என்ன வாழறது? ஒரு கூடைக்காரி கூட இந்த வீட்டை எட்டிப் பார்க்க மாட்டேங்கறாள். கிணற்றங்கரை யெல்லாம் சாக்கடையா யிருக்கு ; ஒரே மூட்டைப்பூச்சி மயம். இந்த லட்சணத்தில் வாடகை கேட்க வாயிருக்கா? மூதேவி மாதிரி இருந்த வீட்டிலே ஒரு மாட்டை கட்டினேன். இரண்டு மூன்று குழந்தைகள் வந்ததில் லக்ஷ்மீ கரம் ஏற்பட்டது. வீட்டுக் காவலுக்கு நாய் வேறே. எல்லாம் நான் கொண்டுவந்தவை. வாடகை வேணுமாம்! வாடகை! உமக்குத் தெரிந்த விதத்திலே வசூலித்துக் கொள்ளும்" என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான்.

இவனை வீட்டைவிட்டுக் கிளப்ப ஏதாவது ஒரு யோசனை சொல்லுங்களேன்!
----------------

5. கையெழுத்து வேட்டை

இது என்ன ஜாதி மாம்பழம் ? புளிப்பு, நார் எல்லாம் இருக்குமா?" என்று கேட்டான் நாகராஜன்.

பழக் கடைக்காரன் பழங்களைத் துணியால் துடைத்துக் கொண்டே, "சாமி, இது ருமானி ஜாதி; கற்கண்டு மாதிரி யிருக்கும். காலையில் ஒரு விலை சொல்லி எடுத்துப் போங்க" என்றான்.

" அப்படியானால் கற்கண்டு விலைக்குக் கொடுப்பாயா?" என்று கேட்டு நாகராஜன் தன் ஹாஸ்யத் திறமையை அவனிடம் காண்பித்துக் கொண்டான்.

"என்ன விலைக்கு எடுப்பீங்க, சாமி?" என்று கேட்டான் வியாபாரி.

" நீதான் சொல்லேன், நூறு என்ன விலைக்குக் கொடுப்பாய்?"

" உங்களுக்கு எத்தனை பழங்கள் வேண்டும்? "

"அதைப்பற்றி உனக்கென்ன? விலையைச் சொல்லேன்!"

"சரி சாமி ; நூறு எட்டு ரூபாய் ஆகும்."

"ஐந்து ரூபாய் என்று போட்டுக் கொண்டு எனக்கு அரை டஜன் பழம் கொடுப்பாயா?" என்று கேட்டான் நாகராஜன்.

"பழம் வாங்கற மூஞ்சியைப் பாருடா!" என்று கடைக்காரன் தன்னுடைய வேலைக்காரப் பையனைப் பார்த்துக் கூறினான். அந்தப் பையனும் பழம் வாங்க வந்த நாகராஜனுடைய முகத்தை உற்றுப் பார்த்தான்.

இது நாகராஜனுக்கு ஆத்திரத்தை உண்டு பண்ணியது. கொஞ்சம் சூடாகப் பேச ஆரம்பித்தான். இப்படியாகக் கடைக்காரனுக்கும் நாகராஜனுக்கும் தர்க்கம் முற்றுகிற சமயம் பார்த்து அந்த இடத்தில் ஒரு கார் வேகமாக வந்து நின்றது. நாகராஜன் திரும்பிப் பார்த்தான். காரின் பின் ஸீட்டில் தேவிகா ராணியைப்போல் "டிரஸ்" செய்துகொண்டு உட்கார்ந்திருந்தாள் ஒரு ஸ்திரீ.

கார் சட்டென்று வந்து நின்ற வேகத்தில் அவள் காதில் அணிந்திருந்த பெரிய பெரிய குண்டலங்கள் முன்னும் பின்னும் ஊசலாடின. நாகராஜன் சண்டை யெல்லாம் மறந்து, தான் இருப்பது பூலோகமா அல்லது தேவலோகமா என்றுகூடப் பிடிபடாமல் ஸ்தம்பித்து நின்றான். அவனுடைய கை சட்டென்று கலைந்திருந்த தன் கிராப்புத் தலையைத் தடவி ஒழுங்குபடுத்தியது.

இதற்குள் காரிலிருந்த ஸ்திரீ ஒரு தோல் பையிலிருந்து இரண்டு ஐந்து ரூபாய் நோட்டுகளை எடுத்துக் கடைக்காரனிடம் கொடுத்து, "இந்தா, நேற்றுக் கொடுத்தாயே ருமானி, அந்த ஜாதிப் பழத்தில் நூறு பழம் கொடு" என்றாள்.

கடைக்காரன் நாகராஜனை ஒரு மாதிரியாகப் பார்த்துச் சிரித்து விட்டுப் பழங்களை எண்ணி ஒரு கூடையில் போட்டான்.

நாகராஜனுடைய மனம் அந்த ஒரு நிமிஷம் படாதபாடு பட்டது. ஆயிரம் சந்தேகங்கள் தோன்றி மறைந்தன.

"இந்த ஸ்திரீயை எங்கோ பார்த்திருக்கிறோம். அடிக்கடி பார்த்தது போலல்லவா ஞாபகம் இருக்கிறது? ஒரு வேளை... ஆமாம்....... சந்தேகமில்லை ; அவளேதான். ஸினிமா நக்ஷத்திரம் மிஸ். கே. பி. மோஹினிதான். சந்தேகமே இல்லை" என்று எண்ணினான்.

உடனே தன்னுடைய கையெழுத்து வேட்டைப் புஸ்தகத்தை எடுத்து அவளிடமிருந்து ஒரு கையைழுத்து வாங்கி விடுவதென்று தீர்மானித்தான். ஆனால் பின்னோடு ஒரு யோசனை குறுக்கே தோன்றி அந்த எண்ணத்தைத் தடுத்தது. ஒரு வேளை, இவள் மிஸ் மோகினியாயிரா விட்டால், என்ன செய்வது?"
#

மிஸ் கே. பி. மோஹினி அநேக தமிழ்ப் படங்களில் நடித்துப் பிரசித்தி அடைந்திருந்தாள். மிஸ் மோஹினி நடித்த படம் வந்ததென்றால், நாகராஜன் குறைந்த பக்ஷம் நாலு தடவையாவது பார்க்காமல் விடுவதில்லை. அவன் தயாரித்து வைத்திருக்கும் "ஸினிமா ஸ்டார்" போட்டோ ஆல்பத்தின் முதல் பக்கத்தில் மிஸ் மோஹினியின் படத்தைத்தான் ஒட்டி வைத்திருக்கிறான். மிஸ் மோஹினி என்றால் அவனுக்கு அவ்வளவு உயிர் ! அவளுடைய கையெழுத்து தன் வசம் இல்லாத குறை ஒன்றுதான் அவனை வெகுநாளாக வாட்டி வந்தது. அதற்கும் இப்போது ஒரு சந்தர்ப்பம் கிடைத்து விட்டது.

நாகராஜன் பகவானை வாயார வாழ்த்தி மனமாரப் புகழ்ந்து, "கடவுளே, இவள் மிஸ் கே. பி. மோஹினியா யிருக்கட்டுமே!" என்று வேண்டிக் கொண்டான்.

எதற்கும் அவளையே கேட்டு விடுவதுதான் புத்திசாலித் தனம் என்று தீர்மானித்து நாகராஜன் தைரியமாகக் காரின் சமீபத்தில் நெருங்கி, "தாங்கள் தானே மிஸ் கே. பி. மோஹினி.........." என்று கேட்டவாறே தன் சட்டைப் பையி லிருந்த ஒரு நோட்டுப் புஸ்தகத்தை எடுத்தான். அதை அவள் முன் நீட்டி, "ஒரு கையெழுத்து" என்று கெஞ்சிப் பேனாவைக் கொடுக்கப் போனான்.

காரிலிருந்த ஸ்திரீ அவனை அலக்ஷியமாகப் பார்த்து, ”யார் ?........." என்று கம்பீரமாகக் கேட்டாள்.

”கே. பி. மோஹினி...." என்று நாகராஜன் ஓர் அசட்டுச் சிரிப்புடன் இழுத்தான். இதற்குள் அவனுடைய கையும் பின்னுக்கு இழுத்துக்கொண்டது.

காரிலிருந்த ஸ்திரீக்கு இதைக் கண்டதும் சிரிப்பு வந்து விட்டது. அதை ஒருவாறு அடக்கிக்கொண்டு ஒரு ஸினி மாப் புன்னகை புரிந்துவிட்டு, "நான் கே. பி. மோஹினி இல்லை; நான் அவருடைய தங்கை !" " என்றாள்.
#

நாகராஜன் பெரிய ஏமாற்றத்துடன் தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டான். இதற்குள் கடைக்காரன் நூறு மாம்பழங்களை எண்ணிக்கொண்டு வந்து காரில் வைத்து மீதிச் சில்லறையையும் கொடுத்துவிட்டுப் போனான்.

நாகராஜன் உற்சாக மிழந்த போதிலும் முயற்சியை விடவில்லை. அந்தக் கார் நம்பரைக் குறித்து வைத்துக் கொண் டான். அது ஒரு டாக்ஸி என்பதைக்கூட அந்தச் சமயம் அவனால் தெரிந்து கொள்ள முடியவில்லை. கார் வந்த வழியே பறந்து சென்றதும் நாகராஜன் குழம்பிய மனத்துடன் பக்கத்துக் கடைக்குப் போய் அரை டஜன் புளிப்பு மாம்பழங்களை அதிக விலை கொடுத்து வாங்கிப் போனான் !

மறுதினமே நாகராஜன் எப்படியும் கே. பி. மோஹினியை நேரில் போய்ப் பார்த்து ஐந்து நிமிஷமாவது அவளுடன் பேசி ஒரு கையெழுத்தை வாங்கிவிடுவதென்று முடிவு செய்தான். அதற்கு ஒரே ஒரு தடங்கல் ஏற்பட்டது. மிஸ் கே. பி. மோஹினியின் விலாசம் தெரியாதே ! அதற்கென்ன செய்வது ? புத்திசாலியான நாகராஜனுக்கு மோஹினியின் விலாசத்தைக் கண்டுபிடிப்பதுதானா ஒரு பிரமாதமான காரியம்?

தமிழ் வாரப் பத்திரிகை ஒன்றில் யார் எந்த ஸினிமா நக்ஷத்திரங்களின் விலாசத்தைக் கேட்டாலும் தெரியப் படுத்துவதென்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்தார் அதன் ஸினிமா ஆசிரியர். நாகராஜனுக்கு அப்போது அந்த விஷயம் ஞாபகத்துக்கு வந்தது. உடனே, "ஐயா ஆசிரியரே, மிஸ் கே. பி. மோஹினியின் விலாசத்தைக் கொஞ்சம் தயவு செய்து தெரிவிக்க முடியுமா?" என்று ஒரு கடிதம் எழுதிக் கேட்டான். அந்தப் பத்திரிகையின் ஸினிமா ஆசிரியரும் அடுத்த வாரமே ரொம்ப சந்தோஷத்தோடு விலாசத்தைப் பிரசுரித்திருந்தார்.
#

காரில் பறந்து சென்ற ஸ்திரீ தன் வீடு சென்றதும் " அம்மா.. அம்மா..." என்று அவசரமாகக் கூப்பிட்டாள்.

"ஏன்!" என்று அவளுடைய தாயார் கேட்டுக் கொண்டே வந்தாள்.

இன்று பழக்கடையில் யாரோ ஒருவன் என்னை அடையாளம் கண்டு கொண்டு, ”தாங்கள் தானே கே. பி. மோஹினி?" என்று கேட்டுக் கொண்டே ஒரு கையெழுத்துப் போட்டுக் கொடுக்கச் சொன்னான். என் பாடு பெரிய ஆபத்தாய்ப் போய்விட்டது. நான் என்ன செய்தேன் தெரியுமா? சாமர்த்தியமாக, "நானில்லை மோஹினி ; நான் அவளுடைய தங்கை" என்று சொல்லித் தப்பித்துக் கொண்டு பறந்து வந்து விட்டேன். எனக்கு ரொம்ப அவமானமாகப் போய் விட்டதம்மா. கையெழுத்துப் போடக்கூடத் தெரியாமல் இருக்கிறேனே என்று மிகவும் லஜ்ஜையாக இருக்கிறது. கையெழுத்துப் போடத் தெரிந்திருந்தால் இப்படி அவனை ஏமாற்றிவிட்டு வந்திருக்கவேண்டியதில்லை அல்லவா? என்றாள்.

”பரவாயில்லை ; கையெழுத்துப் போடத் தெரியாம லேயே நீ இவ்வளவு பணம் சம்பாதிக்கிறாயே, அதுவே போதும் " என்று தாயார் தேறுதல் கூறினாள்.
#

வாரப் பத்திரிகையில் வெளி வந்த விலாசத்தை எடுத்துக்கொண்டு நாகராஜன் பஸ் ஏறிப் பூந்தமல்லிரோடுக்கு மிஸ் கே. பி. மோஹினியைப் பார்க்க ஓடினான். எப்படியும் பார்த்துப் பேசி, "ஒரு கையெழுத்து வாங்காவிட்டால் என் பெயர் நாகராஜனா?" என்று எண்ணிக்கொண்டு போனவன், மேற்படி விலாசத்தில் மிஸ் மோஹினி இல்லாததைக் கண்டு மனமுடைந்து வீடு திரும்பினான். பாவம், அவனுக்கு என்ன தெரியும்?

வாரப் பத்திரிகையில் தன்னுடைய விலாசம் வந்திருந்த தைச் சொல்லக்கேட்ட கே. பி. மோகினி அலறிப் புடைத் துக்கொண்டு, "ஐயையோ, அம்மா! என் விலாசம் ஒரு வாரப் பத்திரிகையில் போட்டிருக்கிறதாமே ! எல்லாரும் சொல்கிறார்களே! அன்று என்னைப் பழக்கடையில் சந்தித்த பயித்தியம் தான் விலாசத்தைக் கேட்டிருக்க வேண்டும் நாளைக்கே அவன் இங்கு வந்து கையெழுத்தைப் போடு என்று என் பிராணனை வாங்கினால், நான் என்ன செய்வது? உடனே இந்த வீட்டை மாற்றியாக வேண்டும்" என்றாள்.

அன்றைக்கே. நாகராஜன் வருவதற்குள்ளாக மிஸ் மோகினி அந்த வீட்டைக் காலி செய்து வேறு வீட்டுக்குப் போன விஷயம் அவனுக்கு எங்கே தெரியப் போகிறது?
--------------

6. பரதனும் பாதுகையும்

ஸ்ரீ ராமருடைய பாத தூளிபட்ட மாத்திரத்தில், கல்லாகச் சபிக்கப்பட்டுக் கிடந்த அகல்யை சாப விமோசனம் பெற்றுப் பழைய சொரூபத்துடன் உயிர் பெற்றெழுந்தாளாம்.

ராமருடைய பாத தூளிக்கு அத்தனை மகிமை. இந்தக் காலத்தில் அப்பேர்ப்பட்ட மகா புருஷனைக் காண்பதரிது.

கல்மேல் பாத தூளி பட்ட மாத்திரத்தில் கல்லுக்கு உயிர் வரும் காலமல்ல இது. வேண்டுமானால் கல்லில் கால் தடுக்கிக் கீழே விழுந்து உயிர் போகலாம். அவ்வளவுதான்!

அவ்வளவு மகிமை வாய்ந்த ஸ்ரீராமருடைய பாதத்தைக் காத்து ரட்சித்த ஒரு ஜோடிப் பாதரட்சையும் உண்டு.

பாதரட்சை என்பதாக ஒரு ஜோடி வஸ்து இருக்கிறதே! அந்த வஸ்துவை நான் வெகு நாள்வரை லட்சியம் செய்யாமலிருந்தேன். இயற்கையோடு கலந்த வாழ்க்கையை நடத்த வேண்டும் என்ற கட்சியைச் சேர்ந்தவன் நான்.

வெகுநாள்வரை நான் குடை, செருப்பு இந்த இரண்டு வஸ்துக்களையும் உபயோகிக்காமல் தான் இருந்தேன். கொஞ்ச நாட்களுக்கெல்லாம் குடை இரவல் கொடுக்கும் நண்பர்கள் இரவல் கொடுப்பதற்கு மறுக்க ஆரம்பித்துவிட்டதால் சென்ற வருஷம் துணிந்து ஒரு குடை வாங்கிவிட்டேன்.

ஆனால் பாதரட்சை விஷயத்தில் நான் காத்துக் கொண்டிருக்கவில்லை. "அகல்யா சாப விமோசனம்" கதையைக் காலஞ்சென்ற மாங்குடி சிதம்பர பாகவதர் காலக்ஷேபத் தொடர்ச்சியில் கேட்ட மறுதினமே ஒரு ஜோடி செருப்பு வாங்கிவிட்டேன்.

அகல்யையினுடைய சாப விமோசனம் ஏற்படும் போது ஸ்ரீராமருடைய காலில் பாதரட்சை இருந்ததா இல்லையா என்று எனக்கு நிச்சயமாய்த் தெரியாது.

"பாத தூளி பட்டு" என்று சொல்லுவதால் அநேகமாய்ப் பாத தூளியாய்த்தானிருக்க வேண்டும். பாதரட்சையின் தூளியாக இருக்க நியாயமில்லை.

எனவே, எங்காவது தப்பித் தவறி என்னுடைய பாத தூளி ஏதாவது ஒரு கல்லின் மேல் பட்டு, அந்தக் கல் உடனே ஸ்திரி ரூபம் பெற்று... ஐயோ ! அப்படிப்பட்ட ஆபத்து நமக்கு நேரிடக் கூடாது என்று தோன்றியதால் பாகவதர் காலட் சேபம் கேட்ட மறுதினமே பாதரட்சையை வாங்கிவிட்டேன்.

அன்று முதல் நான் வெளிக் கிளம்புவதாயிருந்தால் பாத ரட்சையின்றிப் புறப்படுவதே கிடையாது.

என் மனைவி நேற்றைய முன் தினம் என்னிடம் ஒரு சந்தேக நிவர்த்தி செய்து கொண்டாள்.

"ஆமாம்; நீங்கள் செருப்பு வாங்கி வருஷம் எட்டாகிறது. ஆனால் அது அப்படியே புத்தம் புதிசாக இருக்கே, ஏன் அப்படி?" என்று கேட்டாள்.
#

எட்டு வருஷ காலத்திற்குள் நான் எத்தனை டீ பார்ட்டிகள். எத்தனை கலியாணங்கள், எத்தனை பாட்டுக் கச்சேரிகள் சென்றிருக்கிறேன் என்பது அவளுக்குத் தெரியாது.

"ஆமாம்; கலியாணத்திற்கும் கச்சேரிக்கும் போனால் செருப்பு புதிசாயிருக்குமா என்ன?" என்று கேட்டாள்.

ஒவ்வொரு கச்சேரிகளிலும், ஒவ்வொரு கலியாணத்திலும் நான் என்னுடைய செருப்பை மறந்து வைத்துவிட்டு வேறு செருப்பு வாங்கிக்கொண்டு வருவதை அவளுக்கு ஸ்பஷ்டமாகச் சொன்ன பிறகுதான் தெரிந்தது. குடை விஷயமும் அப்படியே என்பதை நேயர்களுக்கு ரகசியமாகச் சொல்லி வைக்கிறேன்.

எத்தனையோ நண்பர்கள் செருப்பு குடை முதலியவைகளை வாங்கிய மறுநாளே போகிற இடத்தில் மறந்து வைத்துவிட்டு வருவதும் எனக்குத் தெரியும். அவர்களெல்லாம் என் கட்சியைச் சேர்ந்தவர்கள். இருக்கட்டும்; ஆரம்பித்த கதைக்கு வருவோம்.

ஸ்ரீ ராமருடைய பாதரட்சையைப் பற்றி ஒரு கதை உண்டு. ரொம்பவும் சுவாரசியமானது.

ஸ்ரீராமர் பதினாலு வருஷம் வனவாசம் செய்வதற்காகக் காட்டுக்குச் சென்றாரல்லவா? அப்போது பரதன் அயோத்தியில் இல்லை. திரும்பி வந்து கைகேயியிடம், "அம்மா, என் அண்ணன் எங்கே?" என்று கேட்டான்.

கைகேயி நடந்த விஷயத்தைச் சொல்லி, "பரதா, நீதான் இனி ராஜ்யத்தை ஆளவேண்டும்" என்றாள்.

உடனே பரதன் அண்ணன் ராமனைத் தேடிக்கொண்டு, காட்டை நோக்கி விரைந்தான். ஸ்ரீராமனை அயோத்திக்கு அழைத்து வந்து மகுடாபிஷேகம் செய்து வைக்க வேண்டு மென்றா ? ஒரு நாளுமில்லை.

அயோத்தி பரதனுடைய நாடாகி விட்டது. இனி ராமனைப்பற்றி என்ன கவலை?

ஸ்ரீராமர் காட்டுக்குப் போகும் போது, தன் காலிலே பாதரட்சையை அணிந்து கொண்டு போய்விட்டார். அந்தப் பாதரட்சை வெறும் மரத்தினால் செய்யப்பட்டதா? அல்லது சப்பாத்திக் கட்டையா?

பத்தரை மாற்றுத் தங்கத்தினால் செய்யப்பட்ட பாதுகை அது. அந்தத் தங்கப் பாதுகை அயோத்திக்குச் சொந்தம். அயோத்திமா நகரம் பரதனுடையது. பார்த்தான் பரதன். தன்னுடைய அயோத்தியிலிருந்து போன அந்தப் பொன் பாதுகையை ராமனிடமிருந்து தந்திரமாக அடித்துக்கொண்டு வந்துவிட வேண்டும். பிறகு ராமன் எக்கேடு கெட்டால் என்ன ?

பரதன் இதற்கு ஓர் உபாயம் செய்தான். ராமரைப் போய், "அண்ணா! தாங்கள் அவசியம் அயோத்திக்குத் திரும்பி வந்து ராஜ்ய பாரம் ஏற்க வேண்டும்" என்றான்.

ராமர் கண்டிப்பாய் முடியாது என்று தலையசைத்து விட்டார். பரதன் ஒரு பாட்டுக்கூடப் பாடிப் பார்த்தான். ராமர் பதில் பாட்டுப்பாடி "வர முடியாது" என்று சொல்லி விட்டார்.

பரதன், "அண்ணா " என்றான்.

ராமர், "தம்பி" " என்றார்.

”வர முடியாதா?"

"முடியாது!"

பரதன் ஒரு சொட்டுக் கண்ணீர் விட்டான்.

இராமர் இரண்டு துளி நீர் வடித்தார்.

பரதன், " அண்ணா, அயோத்திக்குத்தான் வரமாட் டேன் என்று சொல்லிவிட்டீர்கள். தங்கள் பாதுகையை யாவது கொடுங்கள். அதைக் கொண்டுபோய்ப் பட்டா பிஷேகம் செய்து நாட்டை ஆள்கிறேன்" என்றான். பரத னுடைய பேச்சில் மயங்கிப்போன ராமர் ஏமாந்து போய் விட்டார். பாதுகையைப் பரதனிடம் கொடுத்துவிட்டார்.

பரதன் அதை வாங்கிக்கொண்டு அளவில்லாத ஆனந்தம் கொண்டான். கண்ணிலே ஒத்திக்கொண்டான். தலைமேல் தூக்கி வைத்துக்கொண்டு கூத்தாடினான். பொற் பாதுகை கிடைத்துவிட்டதே என்ற சந்தோஷத்தினால் ! பொற் பாதுகையை அடித்துக்கொண்டே வந்துவிட்டான் கடைசியாக!
--------------

7. வைத்தியர்

அகத்தியபுரம் ஸ்டேஷனில் தினமும் ஒரு ரூபாய் ஏழே காலணாவுக்கு டிக்கட் விற்று வந்தார்கள். ஓரோர் தினத்தில் இரண்டு ரூபாய்க்கு வியாபாரம் நடந்து விட்டதானால், ஸ்டேஷன் மாஸ்டர் மூர்ச்சை போட்டு விழுவது வழக்கம்.

அகத்தியபுரம் என்று ஓர் ஊர் இருப்பதாகவே வெகு நாள்வரை தமிழ் நாட்டு ஜனங்களுக்குத் தெரியாமலிருந்தது. ஆகவே, ஜனங்கள் போக்கு வரத்தும் அந்த ஸ்டேஷனில் குறைவு.

அந்த ஊரில் ஒரு கோயிலோ, குளமோ, அல்லது ஒரு குட்டையோ விசேஷமாக இருந்தால் தானே ஜனங்கள் வரு வார்கள்? மெனக்கட்டு ஊர் என்று ஒன்று இருந்தால் அங்கே ஏதோ ஒரு தொழிலாவது பிரசித்தி அடைந்திருக்க வேண்டும். ஒன்றுமில்லாத ஊரைக் கண்ணெடுத்தும் பார்ப் பவர்கள் யார்? எனவே ரயில்வே ஸ்டேஷனில் போர்ட்டர் முதற்கொண்டு ஸ்டேஷன் மாஸ்டர் வரை சீட்டாடுவதைத் தவிர்த்து வேறு வேலையின்றித் தவியாய் தவித்தார்கள்.

இப்படிக் காசுக்கு உதவாத அந்த ஊர் மிகப்பிரசித்தி பெற்ற கிராமமாக மாறிவிடும் என்று அந்தச் சங்கரனுக்கே தெரியாது.
#

சங்கரன் ஒரு சாமான்ய மனிதன். அவனுக்கு ஆஸ்திக புத்தி அபாரமாயிருந்தது. ”கடவுளை நம்பினோர் கைவிடப் படார்" என்ற முதுமொழியை நம்பி வாழ்ந்து வந்தான்
அவன் ; வேதாந்தி. உலக வாழ்க்கையே மாயம், அதில் தான் இருப்பது நியாயம் என்று அவன் எண்ணிக் கொண்டிருக்கவில்லை.

சங்கரனுக்கு ஸ்வப்பன சாஸ்திரத்தில் பரம நம்பிக்கை உண்டு. பிரதி தினமும் ராமாயணப் பாராயணத்திற்குப் பிறகு, திரிஜடையின் சொப்பன கட்டத்தை ஒருமுறை படித்து முடிப்பான். அவனுக்கு அதில் அவ்வளவு நம்பிக்கை.

"ஸம்சயாத்மா விநச்யதி" என்று பகவான் ஏன் சொன்னார் ? நம்பிக்கையற்றவன் நாசமடைவான் என்பதுதானே அதன் தாத்பர்யம்? ஆகையால் எதிலும் நம்பிக்கை வை, அது ஸ்வப்பனமாயிருந்தால் என்ன, பனங் கற்கண்டாய் இருந் தால் என்ன? நம்பினவன் மோசம் போகான் என்று இப்படி யெல்லாம் கனாக்கண்டு வந்தான் சங்கரன்.

ஒரு நாள் கனவில் ஒரு குள்ள உருவம் சங்கரன் முன் சான்னித்யமாயிற்று. அது யார்? அவர்தான் ஆயுர்வேதப் பிதா அகத்தியமா முனிவர். சங்கரன் ஸ்வப்பனத்தில் தோன்றி, "அப்பா, இந்தா ; இந்த ஏனத்தை வைத்துக் கொள். நீ கடவுளை நம்புகிறாய் ; அதற்குப் பதிலாகக் கடவுள் என்னை இந்த மருந்தை உன்னிடம் கொடுத்துவரச் சொன்னார். இதற்கு அகத்திய கல்பத்வஜம் என்று பெயர். நீ நாளை முதல் கடவுளின் கட்டளைப்படி வைத்தியனாகி இந்த உலகுக்கு உதவி புரிவாயாக. அவரவர்கள் சக்திக்குத் தக்கபடி கொடுக்கும் பணத்தை உன் வயிற்றுப் பிழைப்புக்கு உபயோ கித்துக்கொள்" என்று சொல்லி மறைந்தார்.

கண் விழித்துப் பார்த்தான் சங்கரன். அங்கே அகஸ்தி யரையும் காணோம். அவர் கொடுத்த ஏனத்தையும் காணோம்.

"ஸம்சயாத்மா விநச்யதி!" - சந்தேகப் படுகிறவன் நாசமடைவான். ஏன் அகஸ்தியர் கொடுத்த ஏனம் இல்லை யென்று சந்தேகப்பட வேண்டும்? அவர் கொடுத்தால் தான் அது இருக்கவேண்டுமா? கொடுக்காமலேயே அது இருக்கக் கூடாதா?

"இதோ" என்று சங்கரன் திரும்பிப் பார்த்தான். சமை யலறை அலமாரியில் அவன் மனைவி வைத்திருந்த மிளகு ஏனம் தென்பட்டது. "ஆ ! அகத்தியர் இன்று காட்டியதும் இந்த அருமை ஏனம் தானென்று நம்பினான். இதோ வைத்தி யனானேன்! இன்றே இதை உலகத்திற்கு அறிவிக்கிறேன்" என்று ஒரு கரும் பலகையில், "அகத்திய கல்பத்வஜம்; தீராத வியாதிகளைத் தீர்த்து வைக்கும். அகத்தியர் கனவில் தோன்றி அருளிச் செய்த மருந்தைச் சாப்பிட்டு இன்றே உங்கள் வியாதிகளைப் போக்கிக் கொள்ளுங்கள் " என்று எழுதித் தன் வீட்டு வாசலில் தொங்க விட்டான். அவ்வளவு தான்!

இந்த விஷயம் அக்கம் பக்கம் உலவி பிறகு நாடெங்கும் காட்டுத்தீ போல் கன சீக்கிரத்தில் பரவியது.

காயகல்ப சிகிச்சை செய்து கொள்ளலாமா என்று யோசித்துக்கொண்டிருந்த கிழங்களெல்லாம் சங்கரனை நாடிப் போனார்கள்.

நாட்டின் நாலா பக்கத்திலிருந்தும் ஜனங்கள் சங்கரனைத் தேடி வந்து புடைசூழ நின்று கொண்டு, "கொண்டா அந்த மருந்தை " என்று கூக்குரலிட்டனர்.

நற்சாட்சிப் பத்திரங்களெல்லாம் சங்கரன் மேஜையில் வந்து குவிந்த வண்ணம் இருந்தன. உதாரணமாக ஒரு கடிதத்தை மட்டும் இங்குத் தருகிறோம்:

" ஐயா,
எழுந்து நடக்கக்கூடச் சக்தியின்றித் தடியைப் பிடித்துத் தள்ளாடித் தள்ளாடி நடந்து கொண்டி ருந்த எங்கள் வீட்டுக் கிழத்திற்கு உங்கள் அகஸ்தியர் லேகியத்தை ஒரு தடவை கொடுத்துப் பார்த்தோம். அவ்வளவு தான் ; சாப்பிட்ட இரண்டு நிமிஷத்திற் கெல்லாம் அந்தக் கிழவர், யௌவனத்தை அடைந்து விட்டார். இன்னும் கொஞ்சம் உங்கள் லேகியத்தைக் கொடுத்துவிட்டேன். இப்போது "அப்பா! நான் பள்ளிக்கூடம் போகவேண்டும். "ஐஸ்கிரீம்" வாங்கிச் சாப்பிடவேண்டும். காலணாக் கொடு என்று பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்து விட்டார். எனக்கு வெளியே சொல்லிக் கொள்ள வெட்கமா யிருக்கிறது; வீட்டுக்குள்ளேயே இந்தப் புதுப் பையனை வைத்திருக்க விரும்புகிறேன். அவருக்கு விளையாட ஒரு பம்பரமும் நாய்க்குட்டியும் வாங்கத் தீர்மானித்திருக்கிறேன். இதெல்லாம் உங்களுடைய மருந்தினால் வந்த ரகளை அல்லவா?
இப்படிக்கு,
ஒரு கிரகஸ்தன்."

டாக்டர் ஷங்கருக்கு நாடி பிடித்து பார்க்கக்கூடத் தெரியாது. என்றாலும் ஊரார் டாக்டர், டாக்டர்" என்று அவரைக் கொண்டாடுகிறார்கள்.

எப்படி அந்தப் புகழ் வந்தது? அகத்தியர் அருளிச் செய்த மருந்தைச் சகல விதமான ரோகங்களுக்கும் சங்கரன் கொடுத்து வருகிறான். ஆனால் அவன் சொல்லும் முறை மிக மிக விசித்திரமானது! அதன்படி செய்தால் உடனே எந்த வியாதிகளும் குணமாகிறது.

தலைவலி வந்தால் - யூகலிப்டஸ் ஆயிலில் இந்தப் பௌடரைக் கலந்து பத்துப் போட்டுக் கொள்ள வேண்டும்.

ஜுரம் வந்தால் சுக்குக் கஷாயத்தில் இந்த மருந்தைக் கலக்கிச் சாப்பிட வேண்டும்.

இப்படிச் சங்கரன் கொடுத்த அகஸ்திய மருந்தைச் சாப்பிடப் பல ஊர்களிலிருந்தும் ஜனங்கள் திரண்டு வந்து கொண்டே இருந்தனர். ஈ ஒட்டிக் கொண்டிருந்த ஸ்டேஷனில் இப்பொழுது ஒரு கொசு நுழையக்கூட இடம் கிடையாது. டாக்டர் சங்கரன் ஒரு பெரிய லக்ஷாதிபதியாக மாறினான்.

கொச்சியில் மிளகு எஸ்டேட்கூட ஒன்று வாங்கி விட்டானாம். இவ்வளவும் வைத்தியத்திற்கு வருகிறவர்கள் அவரவர்கள் இஷ்டப்படி காலணா அரையணா என்று கொடுத்த காசு தான்.
#

" யார் அது? உங்களைத்தானே! உடம்பு சரியாயில்லை என்று சொன்னீர்களே? மிளகுக் கஷாயம் போட்டு வைத்திருக்கிறேன். மணி எட்டடித்து விட்டது. இன்னும் தூங்குகிறீர்களே ! எழுந்து கஷாயத்தைச் சாப்பிடுங்கோ! மிளகுக் கஷாயத்தின் மகிமை உங்களுக்குத் தெரியவில்லையே? சகல வியாதிக்கும் நல்லதாயிற்றே!" என்ற கம்பீரமான அவன் மனைவியின் குரல் சங்கரனுக்குக் கேட்டது!
---------------

8. வசூலான வாடகை

“இரண்டு பெரிய அறைகள், ஒரு கூடம் இந்தத் தாழ்வாரத்திலும் பாதியை நீங்கள் உபயோகித்துக் கொள்ளலாம். வாடகை பன்னிரண்டு ரூபாயாகிறது. இந்தத் தெருவில் இவ்வளவு மலிவாக வேறு எங்குமே இடம் கிடைக்காது" என்று சபாபதி அய்யர் வருபவர்களிடம் சொல்லிச் சொல்லிப் பாடமாய்ப் போன மேற்படி வார்த்தைகளை அன்று புதிதாக வீடு பார்க்க வந்தவரிடமும் ஒப்பித்தார்.

"ஓஹோ ! இந்தச் சமையலறையில் புகை போகாது போலிருக்கே? ரேழி அறையில் வெளிச்சத்தைக் காணாமே? காற்றும் வராதோ? கொடி கட்டுவதற்கு வசதி இல்லையே? வாடகை என்ன சொன்னீர்கள் ? பன்னிரண்டு ரூபாயா? அப்பாடா! தனி வீடு பார்க்கலாம் போல் இருக்கே! துவையல் அரைக்க வேண்டுமென்றால் அம்மியைக் காணோம். எனக்குத் துவையல் என்றால் உயிராக்கும்! இந்த வீட்டுக்குக் குடி வந்தால் துவையல் சாதத்தை விட்டு விடணும் போலி ருக்கு ! குழாயில் மணிக்கு எத்தனை படி ஜலம் சொட்டும்?" என்று வந்தவர் கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டுச் சபாபதி அய்யரின் இடுப்பை ஒடித்தார்.

சபாபதி அய்யர் இதற்கெல்லாம் சளைக்கவில்லை. இவரைப் போல் அவர் எத்தனையோ பேர்களைப் பார்த்திருக்கிறார். "அதெல்லாம் இல்லைங்காணும் ! ஜன்னலைத் திறந்து விட்டால் போதும். காற்று சிண்டைப் பிய்த்துக் கொண்டு போகும்" என்றார்.

அவர் அப்படிச் சொல்லி முடிப்பதற்குள் வந்தவர் தமது தலையைத் தடவிக் கொண்டார். நல்ல வேளையாகத் தமக்கு வழுக்கைத் தலை என்று ஞாபகம் வந்ததும் சந்தோஷப்பட்டுக் கொண்டார்!

சபாபதி அய்யர் மேலும், புகை போகவா இடமில்லை? கரியடுப்பில் சமைத்துக் கொள்கிறவர்களுக்குத்தான் இங்கே வாடகைக்கு விடுகிறது. எல்லாருக்கும் பொதுவாகப் பின் கட்டில் ஓர் அம்மி இருக்கிறது. அங்கே போய் உமக்கு வேண்டிய துவையலை அரைத்துக் கொள்ளும்" என்றார்.

இரண்டு பேரும் பேசி ஒரு முடிவுக்கு வந்த பிறகு சபாபதி அய்யர் வீடு பார்க்க வந்தவரிடமிருந்து அட்வான்ஸ் பணம் பன்னிரண்டு ரூபாயை வாங்கிக் கொண்டார். முன் பணம் கொடுத்துவிட்டுப் போன சங்கர ராவும் முதல் தேதியன்று சக குடும்ப சமேதராய்ச் சபாபதி அய்யர் வீட்டில் கிரகப் பிரவேசம் செய்தார்.

சபாபதி அய்யர் வீட்டில் மூன்று மாத காலமாகக் காலியாய்க் கிடந்த பாகம் இப்போது வாடகைக்கு விட்டாயிற்று. அவரது தம்புலிங்கத் தெரு 78-ம் நெம்பர் வீட்டிலிருந்து இனி மாதம் பிறந்தால் முழுசாக 65 ரூபாய் வாடகை கிடைத்து விடும்.

கடந்த ஆறு மாதத்துக்கு முன்பு வரையில் சபாபதி அய்யர் மேற்படி வீட்டில் தான் குடியிருந்தார். அப்போதெல்லாம் அவர் சர்க்கார் உத்தியோகத்தில் இருந்தார். மாதச் சம்பளம் 150 ரூபாய் கிடைத்தது. அவர் இப்பொழுது ”ரிடையர்" ஆகிவிட்டதால் பென்ஷன் பணத்தை வைத்துக் கொண்டு குடும்பச் செலவு போக, பாங்கியில் பணம் போட்டு வைக்க முடியாதாகையால், தம்முடைய வீட்டை வாட கைக்கு விட்டு விட்டுக் கோடம்பாக்கத்தில் தமக்காக 26 ரூபாயில் ஒரு தனி வீட்டைப் பார்த்துக் கொண்டார். தம்முடைய வீட்டிலிருந்து வந்த வாடகை 65 ரூபாயில் 25 ரூபாய் போனாலும் மிச்சப் பணம் லாபந்தானே? இந்த உத்தேசத்தோடுதான் அவர் கோடம்பாக்கத்துக்குக் குடி போனார்.

சென்ற மூன்று மாத காலமாக, சபாபதி அய்யர் வீட்டில் ஒரு பாகம் காலியாகவே இருந்ததால் மாதம் பன்னிரண்டு ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறதே என்று அவர் நினைத்துக் கொண்டிருந்த சமயத்தில் தான், சங்கர ராவ் அந்த பாகத்தை வந்து பிடித்துக் கொண்டார். ஆனால் குடி வந்து மாதம் இரண்டாகியும் ஒரு தம்படி கூட அவர் வாடகை கொடுக்கவில்லை.

வீட்டுக்காரர் ஒரு மாதம் பொறுத்தார் ; இரண்டு மாதம் காத்திருந்து பார்த்தார் ; மூன்றாவது மாதம் சங்கர ராவுக்கு ஆள் அனுப்பினார். சரியான பதில் கிடைக்காததால் கோடம்பாக்கத்திலிருந்தபடியே ராவுக்கு ஒரு கடிதமும் எழுதினார். அதற்கும் சரியான பதில் இல்லாமற் போகவே, சபாபதி அய்யருக்கு அசாத்தியக் கோபம் வந்துவிட்டது. கோடம்பாக்கத்திலிருந்து புறப்பட்டு வந்து சங்கர ராவைக் கண்டு கண்டிப்பாகப் பேசினார். சங்கர ராவ் சாவதானமாக, "உம்முடைய பணம் எங்கேயும் போய்விடாது. பெட்டியில் இருக்கிற மாதிரி நினைத்துக்கொள்ளும். அடுத்த மாதம் எப்படியும் கொடுத்து விடுகிறேன்" என்று சமாதானமாகப் பதில் சொல்லி அனுப்பினார்.

இதற்குள் வெயில் காலம் வந்து விட்டதால் சபாபதி அய்யருக்குக் கோடம்பாக்கத்தில் வசிக்க முடியவில்லை. வெயில் தீக்ஷண்யம் அங்கே பொறுக்க முடியாமல் இருந்தது. வாடகை கொஞ்சம் அதிகமானாலும் பாதகமில்லை என்று பூந்தமல்லியில் வீடு பார்க்க ஆரம்பித்தார்.

அநேக தெருக்களைச் சுற்றிப் பல வீடுகள் ஏறி இறங்கின பிறகு, கடைசியாக ஒரு வீடு அவர் மனத்துக்குப் பிடித்தமா யிருந்தது. வெளித் தாழ்வாரத்து ஜன்னல் கம்பிகளில் கட்டப்பட்டிருந்த "டுலெட்” போர்டைக் கவனித்தார். "முப்பது ரூபாய் வாடகை. முழு விவரத்திற்கு ஜார்ஜ் டவுன் தம்புலிங்கத் தெரு 78-ம் நெம்பர் வீட்டில் விசாரிக்க வும்" என்று அதில் விவரம் கொடுக்கப்பட்டிருந்தது.

அதைக் கண்டதும் சபாபதி அய்யருக்கு ஒன்றும் புரிய வில்லை. தம்புலிங்கத் தெரு 78-ம் நெம்பர் வீடு நம்முடைய தல்லவா? அங்கே யாரை விசாரிப்பது? ஒரு வேளை அங்கே குடியிருப்பவர்களின் சொந்தக்காரர்கள் அல்லது சிநேகிதர்களின் வீடா யிருக்குமோ?" என்று யோசித்துப் பார்த்தார். உடனே கிளம்பிச் சென்று தம் வீட்டில் விசாரித்ததில் அது சங்கர ராவுடைய வீடு என்று தெரிந்தது.

சொந்த வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டுத் தான் ஒண்டுக்குடித்தனம் செய்து கொண்டிருந்தார் சங்கர ராவ். அவருக்கு வேலை வெட்டி கிடையாது. மனைவி வகையில் வந்த அந்த வீடு அவருக்குச் சொந்தமா யிருந்தது. பத்துப் பன்னிரண்டு ரூபாயில் கூட்டுக் குடித்தனம் இருந்து கொண்டு சொந்த வீட்டு வாடகைப் பணத்தைக் கொண்டு காலக்ஷேபம் பண்ணலாமல்லவா? அந்த உத்தேசத்துடன் தான் சங்கர ராவ் பூந்தமல்லியிலிருந்த தமது வீட்டில் "டுலெட்" போர்டைத் தொங்கவிட்டு, ஜார்ஜ் டவுனுக்குக் குடி வந்து சேர்ந்தார். மேற்படி வீடு அதுவரையில் காலியாகவே இருந்ததால் தான் சங்கர ராவால் அவர் குடியிருந்த வீட்டு வாடகையைக் கொடுக்க முடியவில்லை.

இந்த விவரங்களை யெல்லாம் தெரிந்து கொண்ட பிறகு சபாபதி அய்யர் சங்கர ராவையும் அழைத்துக்கொண்டு பூந்தமல்லிக்குப் போய் அந்த வீட்டைத் திறக்கச் சொல்லி வீடு பூராவும் பார்வையிட்டார். சங்கர ராவ், "மொத்தம் ஆறு அறைகள். இது கூடம். இந்தத் தாழ்வாரம் பூராவை யும் உபயோகித்துக் கொள்ளலாம். இதோ பார்த்தீர்களா பேஷான அம்மி! குழாயில் பாருங்கள், ஜலம் நீர்வீழ்ச்சி மாதிரி கொட்டுகிறது. துணி உலர்த்தக் கொடி எவ்வளவு சௌகரியமா யிருக்கிறது, பாருங்கள். வாடகை முப்பதே ரூபாய்தான். இந்தப் பக்கத்தில் இவ்வளவு மலிவாக வேறு வீடே கிடைக்காது" என்று சபாபதி அய்யர் தனக்கு முன்பு ஒப்பித்த பாடத்தை இப்போது திருப்பிச் சொன்னார் சங்கர ராவ்.

"அதெல்லாம் சரிதாங்காணும். இந்தச் சமையலறையில் புகை போக இடமில்லையே?" என்று சபாபதி அய்யர் கேட்டார்.

"புகையா? அடுப்பு மூட்டி இங்கே சமையல் செய்யக் கூடாது. கரியடுப்பில் தான் சமையல் நடக்கணும். காற்றைப் பார்த்தீர்களா? எவ்வளவு கணக்காக வீசுகிறது இங்கே?" என்று குத்தலாகச் சொன்னார்.

இருவரும் ஒருவிதமாகப் பேசி முடித்ததும் சங்கர ராவ் சபாபதி அய்யரிடமிருந்து முன்பணமாக ஆறு ரூபாய் வாங்கிக் கொண்டார். ஏனென்றால், சங்கர ராவ் சபாபதி அய்யருக்கு இரண்டு மாத வாடகை பாக்கி தரவேண்டி யிருந்ததல்லவா? அந்தப் பாக்கி போக ஆறு ரூபாயே கொடுத்தார் சபாபதி அய்யர்.

சங்கர ராவ் சமயத்தை நழுவவிடாமல், "பார்த்தீராங் காணும்? உம்முடைய பணம் எங்கேயும் போய்விடாது. பெட்டியில் இருக்கிற மாதிரி நினைத்துக்கொள்ளும் என்று சொன்னேனே ! நான் சொன்னபடியே இப்போது பிடித்துக் கொண்டீரல்லவா?" என்று இடித்துக் காண்பித்தார்.
------------

9. இலவசப் பிரயாணம்

அன்று நான் பங்களூருக்குப் போவதற்காக ஸ்டேஷனுக்குப் போய் ரயில் ஏறப் போனேன். கூட்டம் சொல்ல முடியாமலிருந்தது. எள்ளுப்போட்டால் அது கீழே விழாது. யார் தோளிலாவது தொத்திக்கொண்டுதான் நிற்கும். அப்படித் தொத்திக்கொண்டு நிற்கிறதா என்று பார்க்க நான் அன்று கையோடு எள் எடுத்துக்கொண்டு போகவில்லை. எனவே அதற்குப் பதிலாக நானே ஒருவருடைய தோளில் தொத்திக்கொண்டு நின்றேன்.

பங்களூர் பாஸஞ்சர் ஸெண்ட்ரல் ஸ்டேஷனைவிட்டுச் சாவதானமாகக் கிளம்பியது. ரயில் சிறிது நேரத்துக்கெல் லாம் அதிவேகமாகப் போக ஆரம்பித்தது.

நான் நின்றுகொண்டிருந்த வண்டியில் ஒரு முரட்டு ஆசாமி காலை நீட்டிக்கொண்டு ஒரு பெரிய படுக்கையைப் பக்கத்தில் பரப்பிவிட்டு உட்கார்ந்திருந்தான். கொஞ்சம் கூட மட்டு மரியாதையில்லாத மனுஷன் ! படுக்கையோடு விட்டானா? அதற்குப் பக்கத்தில் ஒரு பெரிய பெட்டி, அதன் பக்கத்தில் கூஜா, விசிறி இவைகளையெல்லாம் வைத்திருந் தான். கிட்டத்தட்ட நாலு பேர் உட்காரக்கூடிய இடத்தில் இதெல்லாம் போட்டு அடைத்து வைத்திருந்தான் என்றால் வண்டியில் இருப்பவர்களுக்குக் கோபம் வருமா வராதா?

பெட்டியிலிருந்தவர்களுக்குக் கோபம் மூக்குக்குமேல் வந்தது. ஆனால் வெளிக்குக் காட்டிக்கொள்ளவில்லை. பயங் காளிகள் ! அந்த முரட்டு ஆசாமி மீசையை வைத்துக் கொண்டு பார்வைக்கு மிகவும் பயங்கரமா யிருந்தது தான் அவர்களெல்லாம் பயந்ததற்குக் காரணம். இவர்கள் ஆண் பிள்ளைகளாம் !
------------

10. தங்கச் சங்கிலி

அம்புஜத்தின் பிறந்தகத்திலிருந்து திரள் திரளாக வந்து என் வீட்டில் முகாம் போட்டுச் சௌக்கியமாகச் சாப்பிட்டுக் காலம் கழிப்பவர்கள் அநேகம்பேர். பெயரைச் சொன்னால் அவரவர்களுக்கு மூக்குக்குமேல் கோபம் வந்து விடும். மனுஷ்ய சுபாவமே அப்படித்தானல்லவா? அவர்களைச் சொல்லி என்ன பயன்? சாதாரண நாட்களிலேயே அவளுடைய பந்துக்கள் கூட்டம் போடுவார்கள். மேலும் இந்தக் கிறிஸ்மஸ்ஸின் போது சொல்லவா வேண்டும்? அவசியமானா லன்றிப் பிரயாணம் செய்யாதீர்கள்" என்று ரயில்வேக் காரர்கள் என்னதான் விளம்பரம் செய்தபோதிலும் அதை இவர்கள் லட்சியம் செய்வதில்லை. இவர்களுக்காக நான் பழைய வீட்டை விட்டு இப்பொழுது ஒரு பெரிய வீட்டை வாடகை பேசி எடுத்துக் கொண்டேன். வீடு கலியாணம் பட்ட பாடாயிருக்கிறது. முந்தா நாள் நாலு வீசைக் காப்பிக் கொட்டை வாங்கினேன். இன்று மறுபடியும் என் மனைவி, "யாரங்கே ! உங்களைத்தான்! காது என்ன மந்தமாய்ப் போச்சோ? நான் ஒருத்தி இருக்கிற வரைக்கும் உங்களுக்கு அப்படித்தானிருக்கும். காப்பிக்கொட்டை ஆயிடுத்துன்னு காலம்பர பிடிச்சு சொல்றேனே ; காதிலே விழலே? ஏன்னா? என்கிறாள். என்னத்தைப் பண்ணுகிறது? சதா சர்வ காலமும் வேலைக்காரன் காப்பிக்கொட்டை இடித்தபடியே இருக்கிறான்! காப்பி கலக்கிய கங்காளத்தை வேலைக்காரி துலக்கிக் கொண்டே யிருக்கிறாள் !

வந்திருக்கும் பரிவாரங்களுக்குத் தினமும் சினிமா போக நான் பணம் கொடுக்க வேண்டும். அதுவும் இரண்டாம் வகுப்பு டிக்கட்டு வாங்கிக் கொடுக்கனும்! நான் பணம் கொடுக்காவிடில் அம்புஜத்திற்குக் கவலையே கிடையாது. அவளிடம் தான் என்னுடைய பீரோவுக்கு வேறு. சாவி இருக்கிறதே! இன்றைக்கு சினிமா நாளைக்கு டிராமா அதற்கடுத்த நாள் கண்காட்சிகள், சங்கீதக் கச்சேரிகள், வேறொருநாள் மீன் காலேஜ்! இப்படி தினமும் என்னுடைய பணமெல்லாம் பீரோவினின்றும் அந்தர்த்தான மாகிக்கொண்டிருந்தது. நான் ஒரு நாள் சினிமாவுக்குப் போவதென்றால் பன்னிரண்டு நாள் யோசிப் பேன். பிறகு நமக்கு இதெல்லாம் லாயக்கில்லை. பணம் கொடுத்து என்ன சினிமா வேண்டிக்கிடக்கிறது என்று சும்மா இருந்து விடுவேன். வீட்டிற்கு வந்து பார்த்தால் கதவு பூட்டப்பட்டிருக்கும். அம்புஜம் அவளுடைய பந்து மித்தி ரர்கள் சகிதம் எந்தச் சினிமாக் கொட்டகையில் இருக்கி றாளோ? யார் கண்டது? சிவனே என்று தெருத்திண்ணையில் படுத்துக் கிடப்பேன். நடுநிசி பன்னிரண்டு மணிக்கு அவர்கள் வந்து சேருவார்கள். அப்புறம் படம் அப்படி இருந்தது, இப்படி இருந்தது என்று கிரிடிஸிஸம் " தொடங்கி விடுவார்கள்.

ரகசியமாக அம்புஜத்தைக் கூப்பிட்டு, இவர்களுக்கெல்லாம் இங்கு என்ன வேலை? வந்தால் இங்கேயே சிலையாய்ப் பதிந்து போகிறார்களே! இவர்களுக்கெல்லாம் தண்டத்திற்குச் செலவு செய்ய எனக்கு என்ன கலெக்டர் உத்தியோகமா கிடைத்திருக்கிறது?" என்று கேட்டால், "இல்லாமலென்ன? நீங்கள் பில் கலெக்டர் இல்லையோ? கலெக்டர் என்ன ஒசத்தி?" என்பாள்.

"சரி, அவர்களெல்லாம் இங்கு வந்து, சுமார் இரண்டு மாசம் ஆயிருக்கும் போலிருக்கே ! வந்தபடி போய்த் தொலை யறதுதானே?" என்று கேட்டால், "நன்றாய்ச் சொன்னேள்? இவர்களெல்லாம் நம் வீட்டுக்கு வரத்தக்க மனுஷாளா என்ன? என்னமோ கிறிஸ்மஸ் ஆச்சேன்னு வந்தா ? தினமுமா வரப்போறாள்?" என்பாள்.

அவள் சொல்வதில் ஓர் உண்மை இருக்கத்தான் செய் கிறது. அவர்கள் ஏன் தினமும் வரப்போகிறார்கள் ? வந்தால் திரும்பிப்போவது தான் கிடையாதே! - அவர்கள் முகாம் போட்டால் குறைந்த பக்ஷம் ஆறுமாசமாவது இல்லாமல் திரும்பிப்போனால் தானே?

கிறிஸ்மஸ்ஸுக்காக அம்புஜத்தின் அத்தை பெண் ஒருத்தி வந்திருந்தாள். நாலைந்து மாதத்திற்குள் அவள் திரும்பிப் போவதாகக் கேட்டு ஆச்சரியப்பட்டேன். இன்னும்
பிரயாணத்தை ஸ்திரம் பண்ணவில்லையென்றும் பத்து தினங்களில் போகவேண்டுமென்று சொல்லுவதாகவும் அம்புஜம் என்னிடம் சொன்னாள்.

"ஆமாம், அதற்கு என்ன பண்ணவேண்டு மென்கிறாய்?"

"என்னத்தைப் பண்ணிவிடப் போறயள்? அவளுக்கு ஏதாவது செய்து தான் அனுப்பணும். வெறுமனே அனுப்பினால் நன்றாயிராது. அவள் ரொம்ப நாளாய் ஒரு வடத்தில் செயின் வேணும்னு கேட்டுக்கொண்டு இருக்கா. இப்போ நேரே வந்திருக்கும் போதே வாங்கிக் கொடுத்தால் நன்றா யிருக்கும். அவளிடம் முக்கால் பவுன் இருக்கிறதாம். பாக்கி நீங்க போட்டால் போதும். அப்புறம் உங்களிஷ்டம். நான் சொன்னபடியா நடக்கப்போறது?" என்று இவ்வளவையும் சொல்லிக் குறைப்பட்டுக் கொண்டாள்.

"சரி; இவளுக்கு ஒரு நல்ல பாடம் கற்பிக்கவேண்டும்" என்று மனத்திற்குள் நினைத்துக் கொண்டேன்.

”ஒரு வடத்தில் செயின்! இந்த ஸ்திரீகளுக்கே வாய் கூசாது போல் இருக்கிறது! இப்பொழுது சவரன் விற்கும் விலையில் கிட்டத்தட்ட நூறு ரூபாய்க்குக் குறையாமல் ஆகுமே? ஆனால் நான் அதை வாங்கிக் கொடுக்கா விட் டாலும் அவ்ளே வாங்கிக் கொடுத்து, அந்தப் பெண்ணை அனுப்பிவிடப் போகிறாள், இதற்கு என்ன செய்வது?" என்று யோசித்தேன். பேசாமல் தங்க கிலட் கொடுத்த "ரோல்ட் கோல்ட்" செயினை வாங்கிக் கொடுத்து ஏமாற்றி விட வேண்டியது தான்" என்று தீர்மானித்தேன். ”முக்கால் பவுனை நாம் வாங்கிக் கொள்வது சரியில்லை" என்று மனைவி யிடம் கூறிவிட்டு நடந்தேன்.

நகைக் கடையை அடைந்தேன். அங்கே ஒரு வியாபாரி ஒரு ரோல்ட் கோல்ட் செயினை எடுத்துக் காண்பித்து, விலை ரூ. 3.20 ஆகும் என்றான். எனக்கு உள்ளுக்குள் ஆனந்தம் பொங்கியது. ரூ.3.20விற்கு ஒரு செயின் கிடைப்பதென்றால் யாருக்குத்தான் இராது? அதுவும் இந்த மாதிரிசந்தர்ப்பத்தில். கடைக்காரரிடம் நான் சாயந்திரம் என் மனைவியுடன் வருவதாகச் சொல்லி இதே செயினை அசல் தங்கம் என்றும் விலை ரூ.258.78 என்றும் சொல்லும்படி ஏற்பாடு செய்திருந்தேன்.

சாயந்திரம் அதன்படியே மனைவியுடன் அந்த நகைக் கடைக்குப் போய் அதே செயினை ரூ. 258.78க்கு விலைபேசி வாங்கிக்கொண்டேன். ஆனால் - கடைக்காரனிடம் மனை விக்குத் தெரியாமல் ரூ.3.20 கொடுத்து விட்டு வீடு வந்து சேர்ந்தேன். அம்புஜத்திற்குச் சந்தோஷம் தாங்கவில்லை!

பத்து தினங்களில் தன் தங்கையைச் சொந்த ஊருக்கு அனுப்பிவிட்டு மறு நாள் நான் காப்பி சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, பின் வரும் விஷயத்தை என்னிடம் சொல்லி மூர்ச்சை போடச் செய்தாள்.

"என் அத்தை பெண்ணை ஊருக்கு அனுப்பிவிட்டேன். அவளுக்காக ஐந்து சவரனில் புதிதாக வாங்கிய செயினைக் கொடுக்க எனக்கு மனசு வரவில்லை. ஆகையால் நான் போட்டுக் கொண்டிருந்த சங்கிலியை அவளிடம் கொடுத்தனுப்பிவிட்டேன். நான் இப்போது அழகாயிருக்கேன். இல்லையா?" என்று கேட்டுக்கொண்டே என் அருகில் வந்தாள்.
--------------------

11. பூங்காவனம்

பொன்னிக்கு இப்போது பதினெட்டு வயதாகிறது. நல்ல அழகுடையவள். விஷமத்தனம் நிறைந்த பார்வை. "பொல்லாத பொன்னி" " என்று கிராமத்தார்கள் கூப்பிடுவார்கள். பூங்காவனமும் அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவனே. பொன்னியைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமென்று அவன் ஒரே ஏக்கமாயிருந்தான். சதா அவள் ஞாபகந் தான். அவளுடைய அழகிலும், துடி துடிப்பான பார்வையிலும், மணி மணியான பேச்சிலும் அவன் மயங்கிப் போய் விட்டான்.

பூங்காவனம் இருந்த கிராமத்திற்குப் பக்கத்தில் பட வேடு என்றொரு பெரிய கிராமம் இருந்தது. அங்கே காளி கோவில் ஒன்று உண்டு. அந்தக் காளி கோவிலின் முன்பு வருஷா வருஷம் வெகு விமரிசையாகப் படவேட்டம்மன் திருவிழா நடக்கும். தேர் ஊரைச் சுற்றி நிலைக்கு வருகிற வரைக்கும் தாரை தப்பட்டைகளின் சத்தம் காதைப் பிய்த் துக்கொண்டு போகும். கிராமத்திலுள்ளவர்களுக்கு எல்லாம் படவேட்டம்மன் திருவிழா என்றால் ஒரே கொண்டாட்டம். அதிலும் பெண்களுடைய குதூகலத்திற்கு அளவே கிடை யாது. அவ்வளவு கூட்டத்திற்கிடையில் வளையல் போட்டுக் கொள்வதிலும், மக்காச் சோளம் வாங்கிக் கடிப்பதிலும். தேரடியில் தேங்காயுடைத்துத் தின்பதிலும் அவர்கள் அடைந்த சந்தோஷத்திற்குக் கங்கு கரையே கிடையாது. சிறுவர்களோ, ரங்கராட்டினம் சுற்றி அகமகிழ்வார்கள்.

அந்தத் திருவிழாவுக்குப் பொன்னி ஒரு தடவை சென்றிருந்தாள். பூங்காவனமும் வந்திருந்தான். பொன்னிக்குப் பூங்காவனத்தை மிகவும் நன்றாகத் தெரியும். அவனுடன் பேசிச் சிரித்து விளையாடுவது எல்லாம் உண்டு. ஆகவே அந்தத் திருவிழாக் கூட்டத்தில் பூங்காவனத்தைச் சந்தித்து, வளையல் போட்டுக்கொள்ள வேண்டுமென்று ஒரு ரூபாய் கடனாக வாங்கிக் கொண்டாள் பொன்னி.

பூங்காவனமும் மிகுந்த சந்தோஷத்துடன் ஒரு ரூபாயைத் தன் சுருக்குப் பையிலிருந்து எடுத்துக் கொடுத்தான். திருவிழா முடிந்து வெகுநாள் வரை அவன் அந்த ரூபாயைத் திருப்பிக் கேட்கவேயில்லை.
#

பூங்காவனம் ஒரு பெரிய தோட்டம் வைத்துப் பயிர் செய்து வந்தான். அதில் அந்த வருஷம் கத்தரி நாற்றுக்கள் நட்டிருந்தான். நாற்றுக்கள் ரொம்பவும் வளப்பமாக இருந்தன. பச்சைப் பசேலென்று இருந்த அந்தத் தோட்டத்தில் ஒரு நாள் ஏழெட்டு ஆடுகளும் குட்டிகளுமாய்ப் புகுந்து கத்தரிச் செடிகளை மேய்ந்து கொண்டிருந்தன. இதைக் கண்ட பூங்காவனத்திற்குக் கோபம் அளவுக்கு மீறி வந்து விட்டது. ஆடுகளை அப்படியே மடக்கி ஓட்டிக்கொண்டு போய்ப் பவுண்டுக்குள் அடைத்து விட்டான்.

கோபத்தில் அந்த ஆடுகள் யாருடையவை என்று கூடக் கவனிக்கவில்லை. அவை பொன்னியினுடைய ஆடுகள் என்று மட்டும் தெரிந்திருந்தால் அவ்வளவு நிர்த்தாட்சண்ய மாகப் பவுண்டில் அடைத்திருக்க மாட்டான்.

பூங்காவனத்தின் தாட்சண்யமற்ற இந்தக் காரியத்தினால் பொன்னி மணியக்காரர் காலில் விழுந்ததோடில்லாமல், பூங்காவனத்திற்குத் திருப்பிக் கொடுக்க வேண்டுமென்று வைத்திருந்த ஒரு ரூபாயையும் "தண்டம்" அழுது ஆடுகளை மீட்டுக்கொண்டு வந்தாள். "பூங்காவனமா இப்படிச் செய்தது? பாவம்! என்னுடைய ஆடுகள் என்று தெரிந் திருந்தால் பவுண்டில் அடைத்திருக்க மாட்டார்" என்று நினைத்தாள். எப்படியோ ஒரு ரூபாய் தண்டம்" அழுதா யிற்று. அவை பொன்னியிடைய ஆடுகள் என்று தெரிந்ததும் பூங்காவனம் தன்னுடைய கோபத்தை நினைத்துப் பெரிதும் வருந்தினான். "ஐயோ, பொன்னிக்கு அநியாயமாய் ஒரு ரூபாய் தண்டம் வைத்தோமே !" என்று மனம் துடித்தான்.

சில தினங்களுக்குப் பிறகு பூங்காவனம் பொன்னியைக் கண்டு முன்பு திருவிழாவின் போது கொடுத்த ரூபாயைக் கேட்டான்.

"ரூபாயா? நல்லா வாங்கிக்கு வீங்க! கத்தரிச் செடியிலே ஆடு வாயை வச்சிடுச்சின்னு பவுண்டிலே அடைச் சுட்டீங்களே! அந்த ஆடுகளை மீட்டு வர ஒரு ரூபாய் தண்டம் அழுதேனே ! அதை யார் கொடுப்பது? உங்களுக்கு நான் கொடுக்க வேண்டுமென்று வெச்சிருந்த ரூபாய் சரியாப் போயிடுச்சு. வாங்கின கடனைக் கொடுத்திட்டேன். இனி என்னை ரூபாய் கேக்காதீங்க " என்று கண்டிப்பாகவும் சிரித்து மழுப்பியும் கூறிவிட்டாள்.

பூங்காவனம் அந்த ரூபாய் திரும்பி வரவில்லையே என்று வருத்தப்படவே யில்லை. அதற்குப் பதிலாகப் பொன்னியின் சாமர்த்தியத்தையும் சாதுர்யமான பேச்சையும் கண்டு அதிசயப்பட்டான்.

அவன் ஏற்கெனவே பொன்னியின் மீது வைத்திருந்த அன்பு இப்போது பன்மடங்காயிற்று. பொன்னியை எப்படியும் மணந்து கொள்ள வேண்டுமென்று தீர்மானித்தான். அப்படித் தீர்மானிக்கும் போது பொன்னி மட்டும் தனக்குக் கிடைக்க வேண்டுமே என்று வேண்டிக் கொண்டான்.

சீக்கிரமே அவன் பிரார்த்தனை பலித்தது. திருமணமும் நடந்தது.

அன்று ஆடி கிருத்திகை. பூங்காவனம் வீட்டு உத்தரத்தில் வெகு நாட்களாக ஒரு புதுச்சட்டி தொங்கிக் கொண்டிருந்தது. அது கைக்கு எட்டாத உயரத்தில் ஊசலாடிக் கொண்டிருந்ததால் அதற்குள் என்ன இருக்கிறதென்பதைத் தெரிந்து கொள்ளப் பொன்னி இத்தனை நாட்களாக அவ்வளவாகச் சிரத்தை கொள்ளாமலிருந்தாள். திடீரென்று அன்றைக் கென்னமோ பூங்காவனத்தினிடம், "அந்தச் சட்டியிலே என்ன இருக்கு?" என்று கேட்டாள்.

"அதிலே ஒரு பெரிய ரகசியம் இருக்கு" என்று சொல்லிப் பூங்காவனம் அந்தச் சட்டியைப் புன்னகையோடு பார்த்தான். அவன் அப்படிச் சிரித்துக்கொண்டே அதைப் பார்க்கவும் பொன்னிக்கு அந்தப் பரம ரகசியத்தைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆவல் மேலும் அதிகமாயிற்று.

”அப்படிப்பட்ட ரகசியம் என்ன?" என்று ஆத்திரத் தோடும் ஆவலோடும் கேட்டாள்.

”உனக்கும் எனக்கும் கலியாணம் நடந்தால் திருத்தணி முருகக் கடவுளுக்கு ஆடி கிருத்திகை யன்று - ஒரு ரூபாய் காணிக்கை செலுத்துவதென்று வேண்டிக் கொண்டிருக்கிறேன். இன்றைக்கு ஆடி கிருத்திகை யில்லே?" என்று சொல்லிக் கொண்டே பூங்காவனம் மேலே ஏறி உத்தரத்திலிருந்த சட்டியை அவிழ்த்துக்கொண்டு வந்தான். சட்டியை மூடிக் கட்டியிருந்த துணியை அகற்றி அதிலிருந்து ஒரு மஞ்சள் துணி முடிச்சை எடுத்துக் காண்பித்தான். மஞ்சள் துணியில் ஒரு ரூபாய் முடிச்சுப் போடப்பட்டிருந்தது.

”ஆமாம் ; என்னைத்தான் பொல்லாதவள் என்கிறீங்களே? எதுக்காக அப்படி இந்தப் பொல்லாத பெண்ணைக் கண்ணாலம் செய்து கொள்ளப் பிரார்த்தனை செய்து கொள்ள வேணும்?" என்று பொன்னி கேட்டாள்.

”அதென்னவோ பொன்னி! நீ பொல்லாதவளா யிருப் பதற்காகவேதான் நான் உன்னைக் கலியாணம் செய்து கொள்ள ஆசைப்பட்டேன். அத்துடன் நீ ரொம்பச் சாமர்த்தியசாலியாயும் இருக்கிறாய். நீ கெட்டிக்காரியா யிருப்பதுனால்தானே என் கடனைத் திருப்பிக் கொடுக்காத வகையில் பக்குவமாகப் பேசி என்னை மயக்கிவிட்டாய்? முருகன் கிருபையால் கலியாணமும் நடந்தது. பிரார்த்தனையைச் செலுத்த வேண்டிய நாளும் வந்திடுச்சு" என்றான் பூங்காவனம்.

"ரொம்ப சரி ; பிரார்த்தனைக்கு ஒரு ரூவா கட்டி வெச்சிருக்கீங்களே. அது என்ன கணக்கு?" என்று கேட்டாள்.

பொன்னி இம்மாதிரி கேட்டதும் பூங்காவனத்திற்குப் பழைய ஞாபகங்களெல்லாம் வந்து நின்றன.

அந்தக் கதை யெல்லாம் பொன்னிக்கு ஒன்றுவிடாமல் நினைவுபடுத்தி, பொன்னி ! என்னால் தானே மணியக்காரருக்கு நீ ஒரு ரூபாய் அபராதம் செலுத்தினாய்? அதற்கு நான் தானே காரணம்? அந்தக் குற்றத்துக்கு ஈடாகவே திருத்தணி முருகக் கடவுளுக்கு ஒரு ரூபாய் உண்டி செலுத்துவதாக வேண்டிக் கொண்டேன். அப்படி வேண்டிக் கொள்ளும் போது நீயே எனக்கு மனைவியாகக் கிடைக்க வேண்டுமென்றும் பிரார்த்தித்துக் கொண்டேன். வா, இப்போதே போவோம்" என்று சொல்லி, பூங்காவனம் பொன்னியுடன் திருத்தணி முருகக் கடவுளைத் தரிசிக்கப் பிராயணமானான்.
-------------

12. கலியுகக் கர்ணன்

தேவர்களும் அசுரர்களும், முனிவர்களும் பெண்ணாசைக்கு ஆளாகி யிருக்கும் போது, கேவலம் நமது பால கோபால் மட்டும் அந்த ஆசையிலிருந்து தப்ப முடியுமா? ஒரு நாள் அவர் ஸினிமாவுக்குப் போய் விட்டு வந்தார். படம் முடிந்து வெளியே வந்தபோது ஒரு பிச்சைக்காரன் அவரைப் பார்த்துக் கையை நீட்டினான். பாலகோபால் அவனை லட்சியம் செய்ய வில்லை. வெகு அலட்சியமாகத் தன்னுடைய கார் நிறுத்தப்பட்டிருந்த இடத்தை நோக்கி நடந்தார்.

அதே சமயத்தில் பெண்கள் வகுப்பிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்த சித்ரலேகை இதைப் பார்த்து விட்டு, பாலகோபாலனின் கருமித்தனத்தை நினைத்து யோசித்துக் கொண்டே சென்றாள்.

அவளைப் பார்த்துவிட்ட பாலகோபால் தம்முடைய செய்கையைக் குறித்துப் பெரிதும் வருந்தினார். அடாடா! இந்தச் சமயத்தில் இவள் வருவாள் என்று தெரிந்திருந்தால் பிச்சைக்காரனுக்கு ஒரு ரூபா யல்லவா போட்டிருப்பேன்? என்று தம்மைத் தாமே நொந்து கொண்டார்.

ஸினிமாக் கொட்டையிலிருந்து வந்த அந்தப் பெண்ணினுடைய அழகில், அவர்தம்முடைய மனத்தை ஏற்கெனவே பறிகொடுத்து விட்டிருந்ததுதான் அதற்குக் காரணம்.

பாலகோபால் வசித்து வந்த தெருவின் கோடியில் வெகு நாளாக ஒரு வீடு பூட்டப்பட்டுக் கிடந்தது. அதைச் சாதாரண வீடு என்று சொல்ல முடியாது. ஏறக்குறைய ஓர் அரண்மனையைப் போலவே இருந்தது. பாலகோபால் அந்த வீட்டை விலைக்கு வாங்குவதற்காக அதன் சொந்தக்காரர் யார் என்பதைப்பற்றிப் புலன் விசாரித்துக் கொண்டிருந் தார். அப்படி விசாரித்ததில் அது ஒரு ஸப் கலெக்டர் வீடு என்றும், அவர் வெளியூரில் உத்தியோகம் செய்து கொண்டிருப்பதால் வீட்டைப் பூட்டிக் கொண்டு போயிருக்கிறார் என்றும், அவருடைய ஒரே பெண் சித்ரலேகை என்பவளைச் சீமைக்குப் படிக்க அனுப்பி யிருக்கிறார் என்றும் விவரம் தெரிந்து கொண்டார்.

ஒரு நாள் அந்தக் கலெக்டர் வீட்டு வாசலில் குதிரை வண்டி ஒன்று வந்து நின்றது. வண்டியிலிருந்து ஸப்கலெக்டர் பெண் சித்ரலேகையும் வயதான ஒரு மாதும் வந்து இறங்கினார்கள். அவள் சீமையில் படித்துக் கொண்டிருக்கும் போதே அவளுடைய தகப்பனாரும் தாயாரும் இறந்து போனார்கள். இந்தச் செய்தியைக் கேட்ட பிறகு சித்ரலேகைக்குச் சீமையில் இருப்புக் கொள்ளவில்லை. அடுத்த கப்பலிலேயே ஏறி ஊருக்குப் பிரயாணமானாள். நேராகத் தன் அத்தை வீட்டைத் தேடிச் சென்று கையோடு அவளையும் அழைத்துக் கொண்டு, தனக்கு அப்பா வைத்து விட்டுப்போன வீட்டுக்கு வந்து சேர்ந்தாள். அன்றைக்குத்தான் பாலகோபாலனும் அவளை முதல் தடவையாகப் பார்த்தது. அப்போதே அவளுடைய அழகில் தம்முடைய மனத்தைப் பறிகொடுத்துவிட்ட போல கோபால், சாப்பிடுகிற வேளையில் தூங்கிக்கொண்டும் தூங்குகிற வேளையில் சாப்பிட்டுக் கொண்டு மிருந்தார். "அவளை மறுபடியும் எப்படிப் பார்ப்பது? எங்கே சந்திப்பது? எவ்வாறு பேசுவது?" என்றெல்லாம் அது முதல் மூன்று மாத காலமாக ஏக்கம் பிடித்துக் கிடந்தார். அதற்குப் பிறகு இப்போது மறுபடியும் அவள் தன்னைப் பார்க்கும் போது தானா இந்தச் சோம்பேறிப் பிச்சைக்காரன் கையை நீட்டித் தன்னுடைய கருமித்தனத்தை வெளிப்படுத்த வேண்டும்?

சித்ரலேகையை நாளைக்கே சந்தித்து அவளுடன் ஒரு மணி நேரமாவது பேசித் தன்னுடைய எண்ணத்தைத் தெரிவித்துவிடுவது என்று தீர்மானித்தார் பாலகோபால்.

பாலகோபாலனுக்குப் பெண்களின் குணாதிசயங்கள் ஒன்றும் தெரியாது. அவருக்குப் பணம் சம்பாதிக்கத்தான் தெரியும். அவர் தம்முடைய பதினைந்தாவது வயதிலேயே பொருளீட்டத் தொடங்கி விட்டார். இப்போது வயது முப்பதுகூட ஆகவில்லை. இதற்குள் ஒரு பெரிய "எஸ்டேட்" டுக்கே அதிபதி ஆகிவிட்டார். நீலகிரிமலைப் பிரதேசத்தில் அவருக்கு பிரம்மாண்டமான ”தேயிலை எஸ்டேட்" ஒன்று இருந்தது. சர்க்கார் இப்போது அந்த இடத்தை அழித்து அணைக்கட்டு கட்டி விட்டார்கள். அதற்காகப் பாலகோபாலுக்குப் பல லட்சம் ரூபாய்களை விலையாகக் கொடுத்து விட்டனர். பாலகோபாலனும் கஷ்டப்பட்டுச் சம்பாதித்தது போதுமென்று மொத்தமாகத் தமக்குக் கிடைத்த பணத்தை வைத்துக்கொண்டு நிம்மதியாக வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தார். அவரைப்போல் அந்த வட்டாரத்தில் தேயிலைத் தோட்டம் வைத்துப் பணம் சம்பாதித்த பேர்வழிகள் வேறு யாருமே இல்லையாகையால் ஊரார் எல்லோரும் அவரைத் தேயிலை ராஜா என்றே அழைக்கத் தொடங்கினார்கள். ஆனால் தேயிலை ராஜாவைத் தெரிந்த ஆசாமிகளுக்கெல்லாம் அவர் ஒரு கருமி என்றும் தெரிந்திருந்தது. பிச்சைக்காரர்களோ, நன்கொடை வசூலிப் பவர்களோ அவரிடம் போய் ஒரு மணி தானியமோ அல்லது ஒரு செல்லாக்காசோ வாங்கிவிடமுடியாது. இதனால் அவரைச் சில பேர் கருமி ராஜா" என்றும் சொல்லிக் கொண்டார்கள்.

ஆனால் அப்படிப்பட்ட கருமி ராஜா சித்ரலேகைக்காக எதையும் செய்யத் தயாராயிருந்தார்.

பாலகோபால் மறுதினமே சித்ரலேகையைப் பார்க்க அவள் வீட்டைத் தேடிச் சென்றார். அதிருஷ்டவசமாய்ச் சித்ரலேகை அப்போது தனியாக ஸோபாவில் சாய்ந்து புத்தகம் படித்துக்கொண்டிருந்தாள். அதுதான் சமயமென்று பாலகோபால் தன்னைப்பற்றியும் தன்னுடைய அந்தரங்கமான அபிப்பிராயத்தைப்பற்றியும் அவளிடம் ஒளிவு மறைவு இன்றித் தெரிவித்துக் கொண்டார்.

சித்ரலேகை ஏற்கெனவே பாலகோபாலைப்பற்றியும் அவருடைய கருமித்தனத்தைப் பற்றியும் அறிந்து வைத்திருந்தாள். எனவே அவள், "நான் சீமைக்குப் போய் வந்தவள். என்னால் சிக்கனமா யிருக்கமுடியாது. டாம்பிகச் செலவுகள் எனக்கு அதிகம். உங்களுடைய பணம் அநியாயமாய்க் கரைந்து போகும். நீங்களோ பாவம், ரொம்பவும் செட்டா யிருக்கிறீர்கள்..." என்று ஆரம்பித்தாள்.

”சித்ரலேகா ! உனக்காக நான் என்னுடைய உடல், பொருள், ஆவி மூன்றையுமே கொடுக்கத் தயாராயிருக்கும் போது, பணந்தானா ஒரு பிரமாதம் ? என்னைப்பற்றிப் பல பேர் பலவிதமாய்ச் சொல்லியிருப்பார்கள். அதையெல்லாம் நீ நிஜமென்று நம்பிவிடாதே. நீ எப்படி வேண்டுமானாலும் செலவழித்துக்கொள். அதற்கெல்லாம் நான் தயார்” என்று சொல்லிவிட்டுப் பாலகோபால் அவளிடம் விடை பெற்றுக் கொண்டார்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, பாலகோபால் பணத்தை ஒரு பொருட்டாசு நினைக்காமல் தான தர்மங்கள் செய்யத் தொடங்கினார். யார் வந்து எதைக் கேட்டாலும் சரிதான்; இல்லையென்று சொல்லாத வள்ளலாக ஆனார். கோயில் கட்ட வேண்டுமா? இந்தாருங்கள் பணம் ! ஏழைகளுக்கு அன்னதானமா? இதோ இருக்கிறது அரிசி மூட்டை. அநாதை ஆசிரமம் கட்ட வேண்டுமா? ரொம்ப நல்ல காரியம் ! பிடியுங்கள் நோட்டை! " என்று கேட்டதற்கெல்லாம் பணத்தை எடுத்து வீச ஆரம்பித்தார்.

திடீரென்று இப்படி பாலகோபாலனுக்குத் தர்ம சிந்தனை ஏற்பட்டுவிட்டதைக் குறித்து ஊரில் பேச்சு வளர ஆரம்பித்தது. எந்தக் காரியத்துக்கும் குற்றம் கண்டுபிடித்துக் கொண்டிருக்கும் சில பேர்வழிகள், பாலகோபாலனுடைய தர்மத்துக்கும் ஏதோ மறைமுகமான காரணம் இருக்க வேண்டுமென்று பேசிக் கொண்டார்கள். பாலகோபால் அதையெல்லாம் சிறிதும் பொருட் படுத்த வில்லை. மேலும் மேலும் அவருடைய தர்மத்தைப்பற்றிப் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகிக்கொண்டே இருந்தன.

ஒரு நாள் பாலகோபால் சித்ரலேகைக்காக வைர அட்டிகை ஒன்று வாங்கி வந்தார். கண்ணைப் பறிக்கும் அந்த வைர நகைக்கு எத்தனை விலை கொடுத்தாரோ தெரியாது. பாலகோபால் அந்த வைர அட்டிகையை எடுத்துக்கொண்டு சித்ரலேகையிடம் சென்றார்.

சித்ரலேகை புன்னகை பூத்த முகத்துடன் பாலகோபாலை வரவேற்று உபசரித்தாள். அப்போது யாரோ தனக்கு அறிமுகமில்லாத ஒருவன் அங்கே உட்கார்ந்திருந்ததைப் பார்த்த பாலகோபாலனுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. இதற்குள் சித்ரலேகை, "இவர் என்னுடைய பள்ளிக்கூடத் தோழர் ; சீமையில் நாங்கள் இருவரும் ஒரே வகுப்பில் படித்துக் கொண்டிருந்தோம். இவர் பெயர் கங்காதரன் " என்று அறிமுகப்படுத்தினாள். பாலகோபாலனும் கங்காதரனும் விளக்கெண்ணெய் சாப்பிட்ட மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு ஒருவரை யொருவர் பார்த்துக் கொண்டார்கள்.

சித்ரலேகையிடம் பேசமுடியாமல் தவித்தார் பால கோபால். அதைக் கண்ட அந்த வாலிபன் தானாகவே அந்த இடத்தை விட்டு நழுவி வெளியே சென்றுவிட்டான். பாலகோபால் நிம்மதிப் பெருமூச்சு விட்டார். அப்புறம் தான் அவருக்கு வாயிலிருந்து பேச்சு வந்தது.

"சித்ரலேகா ! நான் ஒரு வாரமாய் ஊரில் இல்லை. இதோ பார்; இந்த அட்டிகையை வாங்குவதற்காக எங்கெல்லாம் அலைந்து திரிந்தேன் தெரியுமா?" என்று சொல்லிக் கொண்டே அட்டிகை வைத்திருந்த ”வெல்வெட்" பெட்டியை அவளிடம் நீட்டினார்.
பெட்டியைத் திறந்து பார்த்த சித்ரலேகையின் கண்கள் வைரம் போல் பிரகாச-மடைந்தன. "ரொம்ப நன்றாயிருக்கிறது. எனக்காகவா வாங்கி வந்தீர்கள்?" என்று கேட்டாள்.

"ஆமாம் ; உனக்காகவேதான். உன்னுடைய அழகுக்கு இதெல்லாம் ஒரு பிரமாதமா?" என்றார் பாலகோபால்.

"நீங்கள் என்னை அளவுக்கு மீறிப் புகழ்கிறீர்கள். நான் அவ்வளவுக்கெல்லாம் அருகதையில்லை. இந்த அட்டிகையை நான் எப்படி ஏற்றுக்கொள்வது? கலியாண விஷயமாக நான் எந்தவிதமான வாக்குறுதியும் கொடுக்கவில்லையே?"

”சித்ரலேகா ! நீ என்னைக் கலியாணம் செய்துகொள்ள மறுத்தாலும் பரவாயில்லை. இதை உனக்குப் பரிசாகக் கொடுத்தே தீருவேன்" என்றார் பாலகோபால்

"அப்படியானால் சரி " என்று அட்டிகையை வாங்கிக் கொண்டாள் சித்ரலேகை.

பாலகோபால் மட்டற்ற மகிழ்ச்சியுடன் வெளியே வந்தார்.

திருமண விஷயமாக சித்ரலேகை எவ்வித உறுதியும் கூற முடியாது என்று சொல்லியும் கூடப் பாலகோபாலின் நம்பிக்கை சிதைந்து போகவில்லை. எப்படியும் அவளிடம், தான் தயாள குணம் படைத்தவன் என்று பெயரெடுத்துவிட வேண்டும் என்ற திடமான லட்சியத்துடன் இருந்தார். ஆனால் கங்காதரனைப்பற்றி மட்டும் அவருக்கு அடிக்கடி நினைவு வந்தது. அவனிடம் பணம் காசு ஒன்றும் கிடையாதென்று மட்டும் அவனைப் பார்த்தபோதே தெரிந்துவிட்டது. பணமில் வாதவனைச் சித்ரலேகை மதிக்கமாட்டாள் என்பது மட்டும் நிச்சயம். அவளேதான் சொல்லியிருக்கிறாளே, தான் டாம்பீகச் செலவு செய்பவள் என்று. அப்படிப்பட்டவள் கங்காதரனை மணந்து கொண்டு எப்படிக் காலம் தள்ள முடியும் என்று பாலகோபால் யோசித்தார்.

சித்ரலேகையும் அவ்விதமே யோசனை செய்தாள்.

பாலகோபால் எனக்காகப் பதினாயிரம் ரூபாய் கொடுத்தல்லவா வைர அட்டிகை வாங்கி வந்திருக்கிறார்? அவர் எவ்வளவு பெரிய பணக்காரராயிருக்க வேண்டும்? அவர் வாங்கிக்கொடுத்த அட்டிகையை விற்றதினால் அல்லவா இத்தனை நாள் கஷ்டமின்றி ஜீவிக்க முடிந்தது? எனக்கென்று அப்பா இந்த வீட்டைத் தவிர வேறு ஒரு சொத்தும் வைத்துவிட்டுப் போகவில்லையே? கங்காதரனை மணந்து கொண்டு கஷ்டப்பட என்னால் முடியாது. பாலகோபாலனை மணந்துகொள்ள வேண்டியதுதான்" என்று முடிவு செய்தாள் சித்ரலேகை.

உடனே பாலகோபாலனைப் போய்ப் பார்ப்பதற்குக் கிளம்பினாள்.

வேதனையுடன் உட்கார்ந்து பலவாறு யோசித்துக் கொண்டிருந்த பாலகோபாலனுக்குச் சித்திரலேகையைக் கண்டதும் ஆச்சரியமாகப் போய்விட்டது.

சித்ரலேகையின் முகம் வாடியிருந்ததைக் கண்ட பால கோபால் அதற்குக் காரணம் என்னவென்று விசாரித்தார். "நீங்கள் எனக்குக் கொடுத்த வைர அட்டிகைதான்" என்றாள் சித்ரலேகை.

”என்ன, வைர அட்டிகையா?" என்று கேட்டு விட்டுப் பாலகோபால் கடகடவென்று வாய் விட்டுச் சிரித்தார். அவர் அப்படிச் சிரித்ததின் காரணம் தெரியாமல் சித்ரலேகை விழித்தபோது, அது தொலைந்து போய் விட்டதா? போனால் போகட்டும்; இந்த அற்ப விஷயத்துக்காக நீ வருந்தவே வேண்டாம்" " என்றார் பாலகோபால்.

”ரூபாய் பத்தாயிரம் கொடுத்தல்லவா அதை வாங்கினீர்கள்!”

"சித்ரலேகா ! உன் அழகுக்கும் குணத்துக்கும் அதைப் போல் ஆயிரம் அட்டிகை வேண்டுமானாலும் வாங்கித் தருவேன். நீ மட்டும்..."

சித்ரலேகை ஒரு கணம் யோசித்தாள். பிறகு, ”என் மனம் மாறிவிட்டது. தங்களுடைய தாராள மனத்தையும் தர்ம சிந்தனையையும் கண்டு தங்களையே மணப்பதென்று முடிவு செய்து விட்டேன்" என்றாள்.

பாலகோபால் பரம ஆச்சரியத்துடன் அவளை உற்றுப் பார்த்தார். சித்ரலேகை சொன்ன வார்த்தையை அவரால் நம்ப முடியவே இல்லை.

"நிஜமாகவா, சித்ரலேகை!"

"ஆமாம்; நிஜமாகத்தான் சொல்கிறேன். அந்தத் தரித்திரம் பிடித்த கங்காதரனை நான் மணக்கப் போவதில்லை. என்னுடைய செலவுக்கும் அவருடைய கருமித்தனத்துக்கும் கட்டி வராது" என்றாள் சித்ரலேகை.

பாலகோபாலனுக்குச் சித்ரலேகை சொன்ன வார்த்தை கள் சரியாய்க் காதில் விழவில்லை. அதற்குள் அவருடைய மனம் குழம்பிப் போய்விட்டது.

"ஐயோ! சித்ரலேகையின் மனத்தை மாற்றுவதற்காக கையிலிருந்த பணத்தையெல்லாம் தான தருமங்கள் செய்வதி லும் டாம்பீகச் செலவிலும் தீர்த்து விட்டேனே! இதை இப்போது சித்ரலேகையிடம் சொன்னால் என்ன சொல்வாளோ? என்ன நினைப்பாளோ?" என்று பாலகோபால் தவித்துப் போனார்.

ஆனால் சித்ரலேகைக்கும் தனக்கும் திருமணம் ஆகிற வரையில் அவர் இந்த ரகசியத்தை அவளிடம் வெளியிடவே யில்லை !
---------------

13. கடிதமும் கவலையும்

போஸ்ட்மாஸ்டர் சம்பந்தம் பிள்ளையின் பக்கத்து வீட்டில் குடியிருந்தார் ரத்தின முதலியார். " என்னோடு சண்டை போடுவதற்காகவே இந்த முதலியார் இங்கே குடியிருக்கிறான். போன ஜன்மத்தில் இவன் எனக்குச் சத்துருவா யிருக்க வேண்டும். இப்பவும் சத்துரு. அடுத்த ஜன்மத் திலும் அப்படித்தான் போலும்" என்று சொல்லிக்கொண் டிருந்தார் முதலியார்வாள். அண்டை வீட்டுச் சண்டை மகோற்சவம் இப்படி நடந்து வந்தது.

பெரிய ராம் - ராவண யுத்தம், பாரத யுத்தம், டிராய் யுத்தம் இவைகளுக்கெல்லாம் ஒரு ஜானகி, ஒரு திரௌபதி, ஒரு ஹெலன் இவர்கள் காரணமானது போலவே முதலியார் - பிள்ளைவாள் யுத்தத்துக்கும் அவரவர்கள் மனைவிமார்களே காரணஸ்தரானார்கள்.
#

ஒரு சமயம் பிள்ளையின் மனைவி தண்ணியெடுக்கத் தோட்டத்துப் பக்கம் போனாள். அங்கே கிணற்றண்டை விழுந்து கிடந்த ஒரு எச்சில் இலையைக் கண்டு பிரமித்துப் போனாள். அவள் கையிலிருந்த குடம் தானாக நழுவிக் கீழே விழுந்தது. அவ்வளவுதான் ! புடைவையை வரிந்து கட்டிக் கொண்டாள்.

பக்கத்து வீட்டு முதலியார் மனைவியைக் கையைத் தட்டிக் கூப்பிட்டு, "உங்கள் வீட்டு எச்சில் இலையைப் போடுவதற்கு எங்க தோட்டம் தானா இடம்?" என்று கோபாவேசத் தோடு கேட்டாள்.

முதலியார் மனைவி எச்சில் இலையைத் தன் வீட்டுத் தோட்டத்தில் தான் போட்டதாகவும், அந்த இலையைப் பிள்ளை வாள் வீட்டு நாய் வந்து எடுத்துக்கொண்டு போய் அங்கே போட்டுவிட்டதாகவும் சொன்னாள்.

”எங்கள் வீட்டு நாய் பிறத்தியார் வீட்டு எச்சிலைச் சாப் பிடாது " என்று ஒரேயடியாய்ப் பதில் கூறினாள் பிள்ளைவாள் மனைவி.

அதற்குமேல், "நாய், பேய்" என்று பேச்சு வளர்ந்து சண்டை பலத்தது. சண்டையை ஊரார் வந்து விலக்கும்படி யாயிற்று.

இதற்குப் பிறகு பிள்ளை வாளுக்கும் முதலியார்வாளுக்கும் இடையே ஒரு பெரிய அக்னி ஜ்வாலை வீசிக்கொண்டிருந்தது. ஒருவரையொருவர் அவமானப்-படுத்துவதற்கான சமயத்தை ஆவலோடு எதிர்பார்த்து நின்றனர். ஒருவர் மீது ஒருவர் வதந்திகளையும் வம்புகளையும் சிருஷ்டித்துக்கொண்டேயிருந்தனர்.
#

சண்டை நடந்த கொஞ்ச நாட்களுக்கெல்லாம் முதலியார்வாள் அவருடைய பெண்டு பிள்ளைகளை யெல்லாம் ஊரிலேயே விட்டுவிட்டுச் சிங்கப்பூருக்குப் போகும்படி
ஆயிற்று.

முதலியார் வீட்டுக்குப் பின்புறத்தில் விசாலமானதோர் தோட்டம் இருந்தது.

அவர் ஊரிலிருந்தவரை அந்தத் தோட்டத்தில் கத்தரி, வெண்டை முதலிய செடிகள் போட்டுக் காய்களைச் சாகுபடி செய்து வந்தார். ஆனால், அந்தத் தோட்ட நிலம் சம்பந்தமாக ஏதோ ஒரு வியாஜ்யமும் இருந்து வந்தது.

முதலியார் ஊரை விட்டுப் போனதும், தோட்டத்தைக் கவனிக்கத் தக்க ஆளில்லாமற் போயிற்று. யார் குழி வெட்டுவது? யார் பாத்தி கட்டுவது? யார் செடி வைப்பது? யார் தண்ணீர் இறைப்பது?

முதலியாரின் மனைவி அவர் ஊருக்குக் கிளம்பும் போது, தோட்டம் பாழாய்விடுமே, இதற்கு என்ன செய்வது? என்று கேட்டாள். அதற்கு முதலியார் அவள் காதோடு காதாய் அரை மணி நேரம் ஏதோ ரகசியமாகச் சொல்லி விட்டுப் போனார்.

முதலியார் ஊரைவிட்டுப் போனது போஸ்ட்மாஸ்டர் சம்பந்தம் பிள்ளைக்குக் கையில் இரண்டு தேங்காய் உடைத்துக் கொடுத்த மாதிரி இருந்தது. முதலியார் வீட்டுக் குடும்ப வம்புகளையெல்லாம் அறிந்து கொள்ளச் சந்தர்ப்பம் வாய்த்த தல்லவா? "சிங்கப்பூரிலிருந்து முதலியார் தன் மனைவிக்கு எழுதும் கடிதங்களை எல்லாம் பிரித்துப் பார்த்தால் முதலியார் குடும்ப ரகசியங்களெல்லாம் இனி வெளிப்பட்டுப் போகுமல்லவா?" என்று நினைத்து ஆனந்தமடைந்தார்.

சம்பந்தம் பிள்ளை எண்ணியபடி ஒருநாள் சிங்கப்பூரிலிருந்து முதலியார் வீட்டுக்கு ஒரு கவர் வந்தது. போஸ்ட் மாஸ்டர் உடனே அதை எடுத்துக் கொண்டு போய் ஒரு தனி அறையில் வைத்துக் கொண்டார். அவருடைய மார்பு பட படவென்று அடித்துக் கொண்டது.

பிரித்துப் பார்த்ததும் அது ரத்தின முதலியாருடைய கையெழுத்தா யிருப்பதைக்கண்டு சம்பந்தம் பிள்ளை புள காங்கிதம் அடைந்தார்.

சிங்கப்பூர் 17-2-38

"நான் சிங்கப்பூருக்குச் சௌக்யமாய் வந்து சேர்ந்தேன். ஒரு விஷயத்தை உன்னிடம் வெகு நாளாகச் சொல்ல வேண்டுமென்று இருந்தேன்.

நமது தோட்டத்தில் ரொம்ப ஆழத்தில் ஒரு பானையில் 2,000 ரூபாய் வெள்ளி நாணயங்களைப் போட்டுப் பத்திரமாய் மூடி வைத்திருக்கிறேன். அதைச் சீக்கிரத்தில் யாருக்கும் தெரியாமல் தோண்டி எடுத்துக் கொள். அதைச் செய்வதற்கு முன்னால் போளூருக்குப் போய் முனியாண்டிக்குப் பூசை போட்டு விட்டுத் திரும்பி வா. இது பக்கத்து வீட்டாருக்குத் தெரிந்தால் சொத்து போய்விடும். ஜாக்கிரதை ! பணத்தை எடுத்துப் பத்திரப்படுத்தி விடு.

இப்படிக்கு, ரத்ன முதலியார்.

இதைப் படித்ததும் பிள்ளை ஓடோடிச் சென்று இந்த விஷயத்தைத் தன் மனைவிக்குத் தெரிவித்தார். ஒருவரை ஒருவர் பார்த்துச் சந்தோஷப்பட்டனர். "ரூபாய் இரண்டாயிரம்" அதுவும் அந்த முதலியாருடையது. ஆஹா ! சரியானபடி அகப்பட்டுக் கொண்டான். அதை நாம் போய்த் தோண்டி எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்" என்று தீர்மானித்தனர்.

அன்று இரவே அடுத்த வீட்டு முதலியார் சம்சாரம் போளூருக்கு வண்டி கட்டிக்கொண்டு போனதையும் பார்த்தனர்.

மறு நாள் இரவு நடுநிசிக்குமேல் முதலியார் வீட்டுத் தோட்டத்தில் பிள்ளைவாளும் வேலையாட்களும் மண்வெட்டி சகிதம் வேலை செய்து கொண்டிருந்தனர்.

சுமார் ஐம்பது இடங்களில் குழிபறித்துப் பார்த்தார்கள். முதலியார் கடிதத்தில் கண்டிருந்தபடி புதையல் அகப் படவில்லை. தோட்டம் முழுதும் நெடுகப் பள்ளம் வெட்டியதே கண்ட பலன்.

பிள்ளையவர்கள் பெரிய ஏமாற்றத்துடன் பொழுது விடிய ஐந்து மணிக்குச் சோர்ந்து போய்ப் படுக்கலானார்.

இரண்டு நாள் கழித்து முதலியாரின் மனைவி ஊரினின்றும் வந்து சேர்ந்தாள். தோட்டப் பக்கம் வந்து பார்க்க, தோட்டத்தில் ஆழமாய்ப் பல குழிகள் தோண்டப்பட்டிருந்தன. அப்பொழுதே அவளுக்கு விஷயம் புரிந்துவிட்டது.

தன் புருஷன் ரகசியமாகத் தன்னிடம் சொல்லிவிட்டுப் போனபடி அவள் அந்தக் குழிகளில் வாழைக் கன்றுகளைப் பதியன் போட்டு வளர்த்தாள்.

வாழைக்கன்றுகள் குலு குலுவென்று தழைத்தோங்கின.
------------------

14. பெண்ணைப் பெற்றவர்

பள்ளிக்கூடத்திலிருந்து வந்த கோதண்டராமய்யர் தமது கோட்டைக் கழற்றி ஆணியில் மாட்டினார்.

உள்ளேயிருந்து வெளியே வந்த சமையலறைத் தெய்வம் அவரைப் பார்த்து, "இந்த வருஷமும் சீட்டாடி நாளைக் கழித்து விடாதீர்கள். மரகதத்துக்கு எப்படியாவது எங்கேயவாது நாலு இடம் அலைந்து வரன் பார்த்துக் கொண்டு வாருங்கள். வைகாசி மாதத்துக்குள் அவளுக்குக் கல்யாணம் நடந்தாகணும். உம் ;....... நாளைக்கே புறப் படுங்கோ!" என்று கண்டிப்பான உத்தரவு போட்டாள்.

கோதண்டராமய்யர் பதில் பேசவில்லை. மனைவியின் உத்தரவுப்படி மறுதினமே டிரங்குப் பெட்டி சகிதம் மாப்பிள்ளை தேடக் கிளம்பிவிட்டார். அவருடைய நண்பர் ஆபத்சகாயமய்யர் கும்பகோணத்தில் ஓர் இடம் இருப்பதாக அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார். எனவே, கோதண்ட ராமய்யர் தமது நண்பர் சொன்னபடி கும்பகோணம் போய் அவர் குறிப்பிட்ட இடத்தையும் பார்த்தார்.

ஆபத்சகாயமய்யர் கொடுத்த விலாசத்தில் யாருமே இல்லை. அந்த இடத்திலிருந்தவர் திருநெல்வேலிக்குப் போய் விட்டதாகத் தகவல் தெரிந்தது. எனவே, கோதண்ட ராமய்யர் திருநெல்வேலிக்குப் போனார். திருநெல்வேலியி லும் அவர்கள் அகப்படவில்லை. அவருக்கு உத்தியோகம் மாற்றலாகிவிட்டதால் டில்லிக்குப் போய்விட்டதாகக் கேள்விப் பட்டார். கோதண்டராமய்யர் செலவைச் சிறிதும் லட்சியம் செய்யவில்லை.

பெண்ணைப் பெற்றவர்கள் செலவைப் பார்த்தால் முடியுமா? டில்லியை நோக்கிப் பயணமானார். டில்லிக்குப் போயும் காரியம் ஆன பாடில்லை. காரணம் இவர் தேடிப் போன மனிதர் டில்லியிலிருந்து பம்பாய்க்குப் போய்விட்டதுதான். உடனே பம்பாய்க்குக் கிளம்பினார். நல்லவேளையாக, ஆபத்சகாயமய்யர் குறிப்பிட்ட ஆசாமி பம்பாயில் அகப் பட்டார்.

கோதண்டராமய்யர் அவரைக் கண்டு, தான் வந்த விவரங்களைச் சாங்கோபாங்கமாகக் கூறி முடித்தார்.

பிள்ளை வீட்டுக்காரர் அதற்குமேல், "பெண்ணுக்குப் பாடத் தெரியுமா? வயசு என்ன? வரதட்சணை எத்தனை?" முதலிய விவரங்களை யெல்லாம் அறிந்து கொண்டார். பிறகு கோதண்டராமய்யர், "பிள்ளையை நான் பார்க்கலாமோ?" என்று கேட்டார்.
பிள்ளையா? அவன் சென்னைப் பட்டினத்திலல்லவா இருக்கிறான்!" என்றார் பிள்ளையைப் பெற்றவர்.

கோதண்டராமய்யர், "எங்கே? சென்னைப் பட்டினத்திலா?" என்று கேட்டார் தூக்கிவாரிப் போட்டவராய்.

"ஆமாம்; சென்னைப் பட்டினத்தில்தான் ; ஜார்ஜ் டவுனில் பிள்ளையார் கோயில் தெருவில் இருக்கிறான்" என்றார் பிள்ளை வீட்டுக்காரர்.

கோதண்டராமய்யருக்கு ஆச்சரியமாயிருந்தது. பிள்ளையார் கோயில் தெருவில் இருக்கும் பிள்ளையைத் தேடியா இத்தனை ஊர்கள் அலைந்தோம்? நாம் இருக்கிற தெருவுக்குப் பக்கத்தில் அல்லவா இருக்கிறது பிள்ளையார் கோயில் தெரு? அந்தப் பையன் யாராக இருக்கலாம் ? என்றெல்லாம் யோசிக்கலானார்.

சென்னைக்கு அவர் வந்து சேர்ந்ததும் மனைவியைக் கூப்பிட்டு, "அநாவசியமாய் என்னை ஊரெல்லாம் அலைய வைத்தாயே? கடைசியில் பிள்ளை வெளியூரிலா அகப்பட்டான்? பிள்ளையார் கோயில் தெருவில் அல்லவா ஒரு பையன் இருக்கிறானாம்? அவனைக் கண்டு பிடிப்பதற்கு டில்லிக்கும் பம்பாய்க்கும் அலையச் சொன்னாயே!" என்றார்.

”பார்த்தயளர் ? இப்படி நாலு இடம் போய் அலைந்தால் தான் பிள்ளை கிடைப்பான் என்றுதான் நான் முதலிலேயே சொன்னேனே?" என்று பிரமாதமாகப் பெருமை யடித்துக் கொண்டாள் கோதண்டராமய்யர் மனைவி.

பிள்ளையார் கோயில் தெருவில் இருந்த பிள்ளை வேறு ஒருவரும் இல்லை. பள்ளிக்கூடத்தில் கோதண்டராமய்யரிடம் வாசித்துக்கொண் டிருந்த சாக்ஷாத் சுந்தரராமன் என்கிற பிள்ளைதான்! அடாடா ! நமது வகுப்பிலேயே வாசித்துக் கொண்டிருந்த சுந்தரராமனுக்காக எங்கெல்லாம் சுற்றி அலைந்தோம் என்பதை நினைத்துப் பார்க்கும் போது கோதண்டராமய்யருக்கு ஆத்திரமும் அவமானமுமா யிருந்தது.

இவ்வளவு தூரம் தன்னை அலைக்கழித்த சுந்தரராமனுக்கு அவரால் என்ன தண்டனை கொடுக்க முடியும் ? தமது பெண்ணையே அவனுக்கு திருமணம் செய்து வைத்தார்!
----------------

நவகாளி யாத்திரை

"வீட்டுக்குள்ளேயிருந்து ஒரு பலகணி வழியாகப் பார்த்தால், அந்தப் பலகணியின் அளவு தான் வெளியே தெரியும் என்பது கிடையாது, சின் னப் பலகணியின் வழியே வெகு தூரம் பார்க்கலாம்.

அதுபோலவே "சாவி" இரண்டு தினங்களே காந்தியுடன் இருந்த போதிலும் பலகணி வழியாகப் பார்ப்பது போலப் பார்த்து மகாத்மாவின் நவகாளி யாத்திரை முழுவதையுமே கண்ணோட்ட மிட்டு எழுதியிருக்கிறார். வெகு ரசமாகவும், எழுதி யிருக்கிறார்.

இந்த நூலில் உள்ள கட்டுரைகள் வெறும் நகைச் சுவை கட்டுரைகள் அல்ல; வெறும் பிர யாணக் கட்டுரைகள் அல்ல ; சரித்திரத்தில் இடம் பெறவேண்டிய முக்கிய நிகழ்ச்சியைப் பற்றிய தார்மிகக் கட்டுரைகள் ; இலக்கியம் என்று சொல்வ தற்குரிய ரசமான கட்டுரைகள்."
ரா. கிருஷ்ணமூர்த்தி,
* கல்கி "
-------------

This file was last updated on 28 October 2020.
Feel free to send the corrections to the webmaster.