pm logo

கவிஞர் வாணிதாசன் எழுதிய
சிரித்த நுணா (கவிதைத் தொகுப்பு)


ciritta nuNA (poems)
by vaNitAcan
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2023.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

சிரித்த நுணா

Source: நூல் பற்றிய விவரங்கள்
சிரித்த நுணா
கவிஞர் வாணிதாசன்
விற்பனை உரிமை : மனோன்மணி புத்தக நிலையம்
138.A., பவழக்காரத் தெரு, சென்னை-1
மனோன்மணி-39
முதற் பதிப்பு: ஆகஸ்ட்டு, 1963 உரிமை ஆசிரியருக்கே.
விலை ரூ.1-75
வெளியிட்டோர்: ஐயை பதிப்பகம், புரட்சியகம், சேலியமேடு,
கடலூர், என். டி. ; மாருதி பிரஸ், 83, பீட்டர்ஸ் ரோடு, சென்னை-14.
Jacket Printed at Commercial Printing & Publishing House, Madras-1.
--------------
உள்ளுறை

என் உரை
பதிப்புரை
I. அன்பு
II. மலையமான் திருமுடிக்காரி
III. ஒருமைப்பாடு
IV. புதிய ஆத்திசூடி
V. புதிய கொன்றை வேய்ந்தோன்
VI. தாலாட்டு
VII. இயற்கை
1. இயற்கை பொருத்தம் 5. இன்பமே இன்பம்
2. பட்டினச் சேரி 6. குமரி
3. கவிப் பெண் 7. சிரித்த நுணா
4. தீமைக் கிடமில்லை
VIII. இசையாளர்
1. கலைவாணர்
2. நாவலர் பாரதியார்
3. கவிக்கடல் வாழிய
4. எனதாசான்
5. ஆசையோ தமிழில்
6. பெரியார்
7. அண்ணா
8. அண்ணா வாழ்க!
9. நெடுஞ்செழியன்
10. தமிழ்த் தாத்த
11. இசையரசர்
12. இசைக்குரியார்

IX. புரட்சி
1. சூலை பதினான்கு
2. முறையாமோ?
3. எது ஈனத் தொழில்?
4. நாளைய தமிழகம்
5. யார்க்குச் சொந்தம்?
6. முறையாமோ? சொல்வீர்!
7. தாயகம் நம்மதாமே!
8. வேண்டேன்!
9. கலைப் பெண்
10. உடைமை பொது
11. புலவனுக்கேன் அரசியல்?
12. பாரதியின் நினைவு
X. வாழ்த்து
1. புத்தாண்டு
2. வெற்றி ஓங்குக!
3. வாழ்க விடுதலை!
4. மாணவர் மன்றம் வாழ்க!
5. மன்றம் வாழ்க!
6. மாணவர் மன்றம்
7. தமிழ்த்தாய் நிலையம் வாழ்க!
8. தமிழர் மன்றம் வாழ்க!
9. அருவி
10. இரும்பு ஆம் இளைத்த உடல்!
11. வாழ்க்கை வாழிய!
12. செந்தாமரை வாழ்க!
13. வாழ்க தமிழன்பன்
14. பொங்கல் வாழ்த்து
------------

என் உரை

நான் கவிதை எழுதத் தொடங்கிய நாளிலிருந்து இற்றை நாள் வரை எழுதிய கவிதைகளில் இதுவரை வெளிவந்துள்ள கவிதை நூல்கள் ஒன்பதிலும் சேர்க்கப் படாமல் எஞ்சி யிருந்தவைகளைத் தேடித் திரட்டித் தொகுத்தும் வகுத்தும் மூன்று நூலாக உருவாக்கித் தந்தனர் என் கெழுதகை நண்பர்கள். அவற்றுள் முதல் நூல் இச் 'சிரித்த நுணா!'

இதிலுள்ள கவிதைகள் எல்லாம் அவ்வப்போது இதழ்களிலும் கவியரங்குகளிலும், பிற ரால் வெளியிடப்பட்ட நூல்கள் மலர்கள் ஆகிய வற்றிலும் வெளியாகித் தமிழ் கூறும் நல்லுல கத்து மக்களால் படித்துச் சுவைக்கப்பட்டவையே யாகும்.

இதனை வெளியிட்ட ஐயை பதிப்பகத் தார்க்கும், விற்பனை உரிமை ஏற்றுள்ள மனோன்மணி புத்தக நிலையத்தார்க்கும் என் நன்றி!

வாணிதாசன்.
-----------

பதிப்புரை

கவிஞர் திரு வாணிதாசன் அவர்கள் புரட்சிக் கவிஞர் திரு.பாரதிதாசனாரின் முதன் மாணாக்கராவர். 'எனதாசான், கவியரசர், தமிழ் மக்கள் ஆசான்' எனக் கவிஞர் பெருமிதத் தோடு கூறிக்கொள்வதில் தனிச் சிறப்பைக் காண்கின்றோம். வாணிதாசரின் கவிதைகளைப் படித்துச் சுவைத்துத் திறனாய்வு செய்துள்ள தமிழக மக்களுக்கு மேலும் எடுத்துக் கூறி விளக்கவும் வேண்டுமோ? தமிழ்ப் பெரியார் திரு.வி.க., நாவலர் இரா. நெடுஞ்செழியன், தமிழ்த் தாத்தா மயிலை சிவமுத்து,டாக்டர் அ. சிதம்பரநாதனார், கவியரசர் பாரதி தாசனார் ஆகிய நடுவுநிலையாளர்கள் கூறியுள்ள நல்லுரைகளையும் தமிழுலகம் நன்கறியும். இனி அவர் கவிதைகளை நூல் வடிவாக்கி மக்கட்கு அளித்தல் ஒன்றே செய்தக்க செயலாகுமென இந்நூலை வெளியிடுகின்றோம்.

'சிரித்த நுணா' கவிஞருடைய நூற்படைப்பில் பதினோராவது நூலாகும். அன்பு, மலையமான் திருமுடிக்காரி, ஒருமைப்பாடு, புதிய ஆத்திசூடி, புதிய கொன்றை வேய்ந் தோன், தாலாட்டு, இயற்கை, இசையாளர், புரட்சி, வாழ்த்து என்னும் பத்துப் பெருந் தலைப்புக்களின் கீழ் இந்நூல் அமைந்துள்ளது.

அன்பு, ஒருமைப்பாடு இவை யிரண்டும் திருச்சி வானொலியரங்கிற்கெனப் பாடப் பெற்றவை. முன்னது ஒலிபரப்பப் பெற்றது; பின்னது ஒலிபரப்பப் பெறாதது. மலையமான் திருமுடிக்காரி வள்ளல் அழகப்பாவின் நினை வாகக் காரைக்குடியில் நிகழ்ந்த கவியரங்கில் நிறைவேறியது. புதிய ஆத்திசூடி ஒளவை, பாரதி, பாரதிதாசன் ஆகிய மூவ ருக்குப்பின் நான்காவதாகத் தோன்றியது. புதிய கொன்றை வேய்ந்தோன் வழிநூலாகும். தாலாட்டு தொகுப்பு நூலுக்காகப் பாடப்பட்டது. ஏனைய நான்கு தலைப்புக்களும் அவ்வப்போழ்து பாடப்-பட்டனவாகும். இவற்றைக் கோவையாக்கித் தமிழ் மக்களுக்கு அளிக்க விரும்பினோம். கவிஞரும் இசைவு தந்தார்.

திருவள்ளுவர் வழிநின்று, களவியல் கற்பியல் இலக் கணம் வழாமல் 'புதுக்குடியர்' நிலையுணர்த்துகிறார் மக்கள் கவிஞர் வாணிதாசர். மக்கள் அவர்மீது கொண்டுள்ள அன்பிற்கும், அவர் மக்கள்மீது கொண்டுள்ள அன்பிற்கும் சிறந்ததோர் எடுத்துக்காட்டாய் அமைந்துள்ளது அன்பு. 'எல்லாம் இருந்தாலும் வாழ்க்கைக்குத் தேவை அன்பு' என்பதை இளங்கோவடிகள் காதையின் முடிவில் காட்டும் வெண்பாவைப்போல் முடித்துக் காட்டியுள்ள பாங்கு படித்து இன்புறத்தக்கதாகும்.

மலையமான் திருமுடிக்காரி என்னும் தலைப்பில் அன்று எழுந்த கவிதைகள் இன்றைய சூழ்நிலைக்கும் எவ்வளவு இயைந்துளது என்பதைப் படித்து எண்ணிப் பாருங்கள். உண்மைக் கவிஞன் எழுப்பும் குரல் எக்காலத்தும் ஒலிக்கக் கூடியதே யாகும்.

ஒருமைப்பாடு என்னும் தலைப்பில் தமிழகப் புலவர்கள் தந்த கருத்தோவியங்கள் யாவும் உலக மேதைகள் யாவரும் கூறியுள்ள உண்மை நெறிக்கு ஒத்துள்ள ஒருமைப்பாட்டைத் தெளிவுறுத்தி, மொழி வேறுண்மை மொழிதரு பொருள் பொது' என்பதைச் சுருங்கச் சொல்லி விளங்கவைத் துள்ளார்.

புதிய ஆத்திசூடியில் மூவரும் மொழிந்துள்ள கருத்துக்களுக்கு மேலாக இன்னும் மொழிய வேண்டியவற்றைத் திறம்பட எடுத்து விளக்கியுள்ளார்.

புதிய கொன்றை வேய்ந்தோன் வழிநூலாக அமைந் துள்ளது. 'தனித்தமிழ் போல இனிப்பு வேறில்லை' என்பதை, செய்துநீ காட்டிச் செய்யச் சொல்லு' என்கிறார் கவிஞர்.

தாலாட்டில் 'அடித்தொடுக்கி விட்டாலிங்காரடங்கப் போரார்? தொடுப்பார் பகை வெல்வார் சொல்லவே தேவையில்லை' என்னும் அடிகள் பிஞ்சு உள்ளத்தில் வீரவுணர்வூட்டுவனவாயுள்ளன.

கவிஞரின் படைப்பில் இயற்கை பொருத்தமாக அமைந்துவிடுகிறது. இதன் வரிசையில் ஏழாவது தலைப் பாக இருப்பது 'சிரித்த நுணா.' அதுவே இந்நூலின் பெய ராகவும் அமைந்து அணி செய்கிறது.

இசையாளர் வரிசையில் எட்டுப்பேர் வந்துள்ளனர். மேலும் பலர் வரவிருக்கின்றனர்.

புரட்சிப் பகுதியில் பன்னிரு தலைப்புக்களில் கவிஞர் கருத்துப் புரட்சியைத் தோற்றுவித்துள்ளார்.

புரட்சிக்குப்பின் அமைதி நிலவுவதைப்போன்று வாழ்த்துப் பகுதியை இறுதியில் அமைத்துள்ளார். புத்தாண்டு முதலாக மன்றங்கள் பலவும் வாழ வாழ்த்தியுள் ளார். குறிப்பாகச் சென்னை மாணவர் மன்றம், தமிழ்த் தாய் நிலையம், தமிழர் மன்றம் ஆகியவற்றைச் சிறப்பித் துள்ளார். பொங்கல் வாழ்த்துடன் நிறைந்துள்ள இச் 'சிரித்த நுணுா'வைப் பெற்று மகிழ்ந்து துய்த்துத் தமிழின்பம் காண்பீராக!

பக்கம் நான்கில் 'துன்பம் இல்லை' என்பதைத் 'துன்பமே இல்லை' என்றும், ஒன்பதில் 'பிள்ளைபோல் தமிழ ருக்க' என்பதைப் 'பிள்ளையைப்போல் தமிழிருக்க' என்றும், இருபத்தாறில் "செல்லவே தேவையில்லை' என்பதைச் சொல்லவே தேவையில்லை' என்றும், முப்பத்தொன்பதில் 'தமிழினையோர்' என்பதைத் 'தமிழிளையோர்' என்றும், ஐம்பத்தைந்தில் 'கறுப்பாக்க காடு' என்பதைக் 'கறுப் பாக்கக் காடு' என்றும், ஐம்பத்தாறில் 'அரசியிலை' என்பதை அரிசியிலை' என்றும், ஐம்பத்தொன்பதில் கொடுத் தெடுத்தே என்பதைக் "கெடுத்தெடுத்தே' என்றும், அறுபத்தைந்தில் 'தமிழே!சீரிய' என்பதைத் 'தமிழே! நம் சீரிய' என்றும், 'அருகோடி' என்பதை 'அருகில்' என்றும், அறுபத்தேழில் 'தவழுதப்பெண்' என்பதைத்
என்பதைத் தவழுதப் பண் என்றும், எண்பத்தொன்றில் 'வாழ்த்துவேமே' என்பதை 'வாழ்த்துவோமே' என்றும், எண்பத்திரண்டில் 'இருள்' என்பதை 'இருள' என்றும், எண்பத்தாறில் 'பன் மொழி என்பதைப் 'பனிமொழி' என்றும், எண்பத்தேழில் செங்கரும்பில்' என்பதைச் செழுங்கரும்பில்' என்றும் திருத்திப் படிக்க வேண்டுகிறோம்.

இந்நூல் வெளிவரப் பெரிதும் உழைத்த அன்பர்கட்கும், விற்பனை உரிமையை ஏற்கும் மனோன்மணி புத்தக நிலையத் தார்க்கும் எம் உளங்கனிந்த நன்றி.

ஐயை பதிப்பகத்தார்.
---------------

I. அன்பு

'இன்பம் பெருக்கி, நம் இல்வாழ்க்கை செப்பனிடும்
அன்பை விளக்கி அழகாகப் பா டென்ற
அன்பே! எனதுடலின் ஆவியே! கேட்பாய் நீ!
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை பாழாம்!

கடல்வற்றி, நெய்தற் கழிவற்றிப் பாசி
படர்ந்த இடமெல்லாம் பச்சை குலுங்க
உயிர்தோன்றி, அந்த உயிரின் இணையால்
உயிர்தோன்றி வந்த உயிரினத்தின் ஊடன்றே
அன்பு பிறந்ததடி! அன்பே! அதுமுதலாய்
என்புதோல் போர்த்த உடலுயிரில் நின்றதுவே!

என்னின்பத் தீந்தமிழே! இல்லாளே! வீட்டரசி!
'அன்பின் வழிய துயிர்நிலை; அஃதிலார்க்(கு)
என்புதோல் போர்த்த உடம்' பென் றுரைத்த நம்
வன்புலவன் வள்ளுவனின் வாய்மை மொழியேபோல்
நீர்தேக்கி, நன்செய் நிலபுலத்தை உண்டாக்கி,
ஊராக்கி,ஊருக் கரணமைத்தே அவ்வூரைச்
சீராக்கி, வாழச் செழுமை பலவாக்கித்
தேரோடு யானை செழுங்குதிரை காலாளும்
போராட, மக்கள் புகழ்பாடத் தீந்தமிழைக்
காராடு வானம் கவிழ்ந்த உலகினிலே
எண்ணி வியக்க, இயலிசையைக் கூத்தையிங்குப்
பண்ணாய்ந்த மேலோர் படைத்ததுவும் அன்பேயாம்!

தென்னையிலே காக்கைக் கருங்குஞ்சு செவ்வாயை
முன் திறக்கத் தாய்ப்பறவை மூக்கைவிட்டு வாயுள்ளே
குஞ்சுக்குக் கக்கிக் கொடுப்பதை நாம் கண்டிருந்தோம்!
வஞ்சியே! அன்பால் மலையும் அசையுமடி!

கொட்டகையில் நம்மெருமை கன்றின் குரல்கேட்கக்
கட்டறுத்தே ஓடிவரும் காரணத்தைக் கண்டிருப்பாய்!

கீரையின் காம்பொத்த சின்ன விரல்நகத்தாற்
கூரை அருகினிலே குஞ்செல்லாம் சீய்த்திருக்க
வானத்தில் வட்டமிடும் வல்லூற்றைத் தாய்ப்பெட்டை
ஏன் துரத்தும்? குஞ்சை இறக்கைக்குள் ஏனடக்கும்?
தாயன்பு தாயின் மடியிருந்து பால்குடிக்கும்
காயாம்பூ மேனிச் சிறுகுழவி தன்னிரண்டு
வள்ளிக் கிழங்கு மலரடியால் தாய்முகத்தைத்
தள்ளுவதும், தள்ளிச் சிரிப்பதுவும் அன்பேயாம்!

கோனாட்சி நீக்கிக் குடியாட்சி காண்பதற்கு
மான்விழியார், காளையர்கள் செங்குருதி சிந்தியதும்
பொன்னாட்டின் தாய்நாட்டின் தன்னாட்டின் மேலெழுந்த
அன்பின் பெருவிளைவே! ஆக்கத்தின் ஊற்றாகும்!

நல்ல தமிழாட்சி நாட்டில் நிலவுதற்கு
மெல்ல அறப்புரட்சி மேவுவதும் அன்பேயாம்!

இக்காலம் நாமடையும் எல்லா வசதிகளும்
தக்கார் பலரும் 'தமையொத்த மக்கள்
இனம்வாழ வேண்டும்' எனநினைத்த அன்பால்
முனைந்து முனைந்திங்கே முன்னேறி வந்தனவாம்!

நாட்டுக்கு நாடு தமக்குள்ளே ஒவ்வாது
போட்டியிற் புத்தம் புதுப்போர்க் கருவியெல்லாம்
உண்டாக்கி உண்டாக்கி ஊரை மிரட்டுவதும்
கெண்டை விழியாளே! அன்பின் மறுதோற்றம்!
என்றாலும் அன்பை அழிவிற் செலவிடுதல்
நன்றாமோ? அன்பால் நலன் தேட வேண்டுமடி!

அங்கிங்குப் போவானேன்? ஆசை மனையாட்டி!
இங்குள்ள நம்வீடு, வாழ்க்கை, எழிற்சிறுவர்
பொங்கிவரும் அன்பின் புதுத்தோற்றம்! கேள்: நமது
தங்கச் சிறுமி தமிழ்ப்பாட்டே அன்பாகும்!

அன்றொருநாள் காதல் அரும்புகின்ற முன்னாளில்
சென்ற நிகழ்ச்சியிதோ செப்புகின்றேன் கேளேடி!
சின்ன மயில்போற் சிறுவீட்டுத் தோட்டத்தில்
முன்னாள் உனைக்கண்டேன்! அந்நாளை இந்நாளில்
எண்ண இனிக்கும்! இதற்கென்ன காரணம்? சொல்!
பெண்ணே! என்வாழ்விற் பிரியா அகம்புறமே!
பார்க்காது பார்த்துப் படர்ந்த கொடிமுல்லைப்
பூக்கொய்து கொண்டிருந்தாய்; பூத்தேடி வந்தவன்போற்
பேச முனைந்தேன் நான்; இல்லை; பிதற்றினேன்;
ஆசை இருந்தும் அசையாமல் நின்றிருந்தாய்!
பெண்ணை ஏனிந்தப் பெரும்புலவர் எல்லாரும்
'வண்ண மயி' லென்றும், 'மா' னென்றும் சொன்னார்கள்?
ஊமை இனமிவர்கள்! உண்மை யிதோகண்டேன்!
'ஆம்! ஆம்!' எனச்சொன்னேன்! அவ்வேளை என்னைநீ
கொல்லும் விழியாற் கொலைசெய்யப் பார்த்ததுண்டு!
மெல்லச் சிரித்தாய்! விளக்கமென்ன? சொல்லேடி!

ஊருக் கருகில் உயர்தென்னந் தோப்புக்குள்
நீர்மொள்ளத் தோழியோடு வந்தாய் நீ ! நீர்நிலையில்
நொச்சி மணக்க, நுணாமணக்கப் பன்னூறு
பச்சைப் பசுந்திங்கள் வந்து படிந்ததைப்போல்

தாமரைகள் நீர்ப்பரப்பில் ஓச்சும் தனியரசு
காமாறும் காலக் குயில்தேடி உன்னருகில்
நான்வந்தேன்; நின்றேன்; நமதிரண்டு கண்கண்ட
தேன்மொழியாள் தோழி, புதுக்குடியர்' என்றாளே!
தோழியின் சொற்சுவையோ அப்பொழுது தோன்றவில்லை!
'வாழியவள்!' என்றுவமைச் சொல்லாய்ந்து சொற்றொடரை

எண்ணி எண்ணிப் பின்னர் எதற்காக நாம்சிரித்தோம்?
கண்ணான செந்தமிழிற் கற்றோர் வியப்பதற்கும்,
எண்ண இனிப்பதற்கும் எத்தனையோ சொற்களுண்டு!
வண்ண மயிலாளே! வாழ்க்கை வளமுறவே

அன்பு முதற்பொருளாம்! அத்தனையும் பின்துணையாம்!
இன்பத்தி னூடே இடையிடையே ஊடுவதும்,
துன்பத்தி னோடுநாம் தோளிணைந்து நிற்பதுவும்
அன்பின் அசைவே! மனைக்கிழத்தி! இன்னுங்கேள்!

அன்பு வளர்ந்தால் அலைகடல்சூழ் நம்நாட்டில்
துன்பம் இல்லை! தொழிலாளி செல்வனென்ற
வம்பில்லை! தாழ்வுயர்வுச் சாதி மலிவதில்லை!
செம்மை வழியொன்று செப்புகின்றேன்: அன்பாலே
நாட்டின் விளைவைப் பொதுவாக்கி நாம்வாழ்ந்தால்
நாட்டோடு நாடாய் நடைபோட மாட்டோமோ?

உண்ண உணவும், அறிவும், அமைதியும்,
கண்ணாம் மகிழ்ச்சி தெளிவும், உணர்வும்.
நிறைவும் இருந்தாலும், வாழ்க்கைக்குத் தேவை
குறையாத அன்பென்றே கூறு!
---------------

II. மலையமான் திருமுடிக்காரி

மலையெல்லாம் தேன்வழிய,
    வயலெல்லாம் தேன்வழிய,
        மலையின் சாரல்
உலையெல்லாம் தேன்வழிய,
    ஓவியமாம் தமிழ்ப்பெண்கள்
        ஒப்பில் லாத
சிலைவிழியில் தேன்வழியச்,
    செந்தமிழில் தேன்வழியத்
        திளைத்து வாழ்ந்த
மலையமான் திருமுடியே
    உனைப்பாட நீயில்லை!
        வருத்தந் தானே! 1

தீந்தமிழின் துறைபோன
    அம்மூவ னார், பரணர்.
        கபிலர், செஞ்சொல்
ஆய்ந்துணர்ந்த நப்பசலை
    எனும்புலவர் உனைப்புகழ்ந்தார்;
        அவர்போல் நானும்
வாய்திறந்து பாடுகின்றேன்
    உன்இனமாம் அழகப்ப
        வள்ளல் நாட்டில்!
ஈந்துவந்து பாராட்ட
    நீயில்லை; வள்ளலில்லை!
        வருத்தந் தானே! 2

தென்னாட்டில் இரவலருண்(டு)'
என்றுரைக்கும் செய்தியெல்லாம்
அல்லிக் காக்கிப்
பொன்னீட்டிப், புகழீட்டித்
தமிழ்காக்கப் பெரும்புலவர்
வறுமை யோட்டி
அந்நாளில் வாழ்ந்திருந்தான்
திருமுடியே! அழகப்பன்
பின்னாள் வந்தான்!
இந்நாளில் வள்ளலில்லை;
தமிழில்லை என்கின்ற
வருத்தந் தானே! 3

மயிலுக்கும், முல்லைக்கும்
மற்றவர்போல் வாரிவாரி
வழங்கிடாமல்,
இயலிசைகூத் துணர்ந்தோர்க்கும்,
பாடிவந்த இனியதமிழ்ப்
பாவ லர்க்கும்
வயலுழுதே உரமிட்டு
விதைதெளித்து வான்பார்க்கும்
உழவன் போற்றும்
பெயலானான் மலையன்!சீர்
பேசாத வாயெங்கும்
கண்ட தில்லை! 4

அருந்தமிழுக் கேவாழ்ந்தான்;
தன்னையொத்த அரசருக்கும்
தோள் கொடுத்தான்;
திருவெல்லாம் பொதுவாக்கி
மனையறத்துக் கிழத்திக்குக்
கொடுத்தான் மார்பைத்
திருக்கோவ லூர்வாழ்ந்தான்!
காரிநோக்கித் திரண்டுவரும்
புள்ளைப் போலப்
பெருங்கூட்டம் தமிழ்க்கூட்டம்
பாட்டிசைக்கும் பெற்றியினைக்
காணப் போமோ? 5

தமிழுக்கும், தமிழ்நாட்டு
மன்னருக்குந் தடந்தோளின்
தகைமை காட்டித்
தமிழுக்கும், தமிழ்நாட்டுப்
பெரும்புலவர் இனத்திற்கும்
தாய்போல் நின்று
தமிழுக்கும் புகழ்சேர்த்தான்;
தமிழ்வளர்த்தான்; தமிழ்நாட்டைத்
தாக்க வந்த
உமிச்சிறகுக் கொசுக்கூட்டம்
ஆரியரின் ஓட்டத்தை
உரைக்கப் போமோ? 6

வடக்கிருந்து வந்தவரை
வாள்முனையில் வெற்றிகொண்டான்
மலையன் ! அந்த
வடக்கிருந்து வருமெதுவும்
தமிழுக்குப் பகையென்றால்
பகைந மக்காம்!
அடக்கத்திற் கெல்லையுண்டே!
அன்னைக்கும், அருந்தமிழ்க்கும்
தொல்லை யென்றால்
கிடக்கட்டும் என்றிருக்கும்
கீழ்ச்செயலோ தமிழர்செயல்?
கிடையா தென்றும்! 7

போரினிலே கிடைத்தபொருள்
தமிழ்க்களித்துப் புகழ்சேர்த்தான்
வள்ளல் காரி!
கூரையிலே கூடடையும்
சிட்டிற்கும் தாய்ப்பேச்சு
குளிர்மைப் பேச்சாம்!
ஊரினிலே வாழ்கின்றோம்;
உயர்தமிழர் என்கின்றோம்;
உதவாப் பேச்சு!
யாரினிமேல் தமிழ்காக்க?'
எனுங்கேள்வி எழும்பாமுன்
எழுந்து வாரீர்! 8

உன்னைப்போல் தமிழ்காக்க
ஒருகாரி இந்நாட்டிற்
பிறந்தாற் போதும்!
பின்னிங்கே வேற்றுமொழி
வருகின்ற பேச்செடுத்தால்
உதைதான் வீழும்!
இந்நாட்டார், தமிழ்நாட்டார்,
இன்றுள்ள அரசியலார்
எல்லாம் மாறிப்
பொன்னாட்டைப் புனல்நாட்டைத்
தமிழ்நாட்டை வாழ்விக்கும்
புலிப்போத் தாவார்! 9

பாய்புனல்சூழ் தமிழ்நாட்டின்
வீரத்தை, நற்பெயரைப்
பண்பை விட்டே
வாயில்லாப் பூச்சியானார்
கொல்புலிகள்! மறத்தோளும்
சூம்பற் றோளோ?
தாயில்லாப் பிள்ளைபோல்
தமிழருக்க, வருமிந்தி
தட்டிக் கேட்க
நீயில்லை என்கின்ற
நினைப்பென்னில் வரும்போது
கொதிக்கும் நெஞ்சம்! 10

கடையேழு பெருவள்ளல்
வாழ்ந்திருந்த காலத்தை
எண்ணும் போது
நடையினிலே முறுக்கேறும்;
நற்றோளில் வலி வேறும்!
தமிழ்த்தாய் அன்றோ
அடைந்திருந்த பெருஞ்சிறப்பும்,
இன்றுள்ள அவள்வாழ்வும்
எண்ணி எண்ணி,
இடையில்லாப் பெண்மக்கள்
எள்ளாமுன் எழுந்தோடித்
தமிழ்காப் போமே!
-----------

III. ஒருமைப்பாடு

வானைத் தாவும் மலையின் இடையில்
தேனடை யொத்த தீந்தமிழ் வெய்யோன்
கடல்சூழ் உலகக் காரிருள் போக்கும்
இயல்பிற் றாகும் என்ப(து) உணர்ந்தே
பொற்கதிர் புதுக்கதிர் தைக்கதிர் கண்டு
பொங்கல் வாழ்த்திப் பொங்கலை நிறைய
உண்டு களிக்கும் ஊரார்க்(கு) இன்று
தென்னகத் திருச்சி வானொலி யாளர்
கழையின் சாறாம் கவியரங் கத்தை
வழங்கினர்; அவர்க்கென் வணக்கம்! வணக்கம்!

தலைமை தாங்கும் தமிழர் பெருமகன்
இலைமறை காயென ஈத்தேன் அடையென
இன்று நிலவும் எம்மருந் தமிழைக்
கூன்மலை தொங்கும் தேன் இறால் சிதைத்துப்

பிள்ளைக் கூட்டும் பிடியைப் போல
மக்கள் துய்க்க வழங்கும் வள்ளல்
பண்டையர் வழிவரு தொண்டைமான்; அவர்க்கு
வாயார்ந் துரைப்பன் வணக்கம் பலவே!

தென்னகப் பெரியீர்! தீந்தமிழ்ச் சான்றீர்!
கவித்தேன் மாந்தக் கவியரங் கெழுந்து
வந்ததை வாழ்த்தி வந்ததை வாழ்த்திப்
பணிவன் போடு பகர்வன் வணக்கம்!

இருவே றுலகத் தியற்கையைக் குறளும்
திருவேறு தெள்ளிய ராதலும் வே'றெனும்.
திருவும் தெளிவும் மருவுதல் பெற்றால்
இருவே றுலகம் இருக்கா தென்றுமே!

கீழை நாடு மேலை நாடென
இருவே றுலகம் என்றுரைத் தாலும்
வாழும் மக்களும் வாழ்வும் என்றும்
ஒருமையோ டொட்டி உயர்ந்தே வந்தன.
தோண்டப் பட்டது தோணியாய்க் கொண்டு
தாண்டிக் கடலைத் தகுபொருள் விளைத்தும்
கலத்தைப் பறித்தும் கடல்முத் தெடுத்தும்
நிலத்தில் வாழ்ந்த நீள்புகழ் தமிழரைக்
கீழை நாட்டுக் கிரேக்கர்' என்றே
உரைத்தனர்; மேலை நாட்டார் உரைத்தனர்.

கலையிலா வாழ்க்கை கலையிலா வாழ்க்கை!
உளத்தில் தோன்றும் உணர்வின் படைப்பே
கலையாம்! கலைப்பயன் இன்பப் பெருக்காம்!
மக்கள் உணர்வை வடித்தே அறிவால்
செப்பம் செய்ததே செழுங்கலை யாகும்!
மொழியில் செயலில் முறைவைப் பிருப்பினும்
இருவே றுலகக் கலையின்
ஒருமைப் பாட்டை உரைப்பன் கேளீர்!

வையக மெல்லாம் கழனியா- வையகத்துச்
செய்யகமே நாற்றிசையின் தேயங்கள் - செய்யகத்து
வான்கரும்பே தொண்டை வளநாடு - வான்கரும்பின்
சாறேயந் நாட்டுத் தலையூர்கள் - சாறட்ட
கட்டியே கச்சிப் புறமெல்லாம் -- கட்டியுட்
டானேற்ற மான சருக்கரை மாமணியே
ஆனேற்றான் கச்சி யகம்.'

இவ்வியல் நாட்டு நகர அமைப்பை
ஒவ்வார் எந்த உலகத் துண்டாம்?
அறிஞன் ஸ்மீத் 'நகர வமைப்பில்
மேல்நா டெல்லாம் கீழ்நாட்டடிப்படை
என்றனன்; உண்மையை எண்ணுவீர் நீரே!

சிற்பம் ஓவியம் செழுங்கலைக் கோபுரம்
மேலை நாடு வியப்பது தம்மொடு
கைகோத் தொருமையில் கலந்து திகழும்
இரசபுத் திரரின் இரவிவர் மாவின்
தாஜ்ம காலின் தகுதியே யாகும்.
ஆனால் இவற்றின் அடிப்படை யாவும்
சிற்றன்ன வாயில் சென்றால் புரியும்.
கடல்மல்லை காஞ்சி தஞ்சை மதுரை
சென்றால் மேலைக் கீழைநாட் டொருமை
இன்று மிருப்பதை யாரே மறுப்பார்?

சாக்கைக் கூத்து துன்பியல் முடிவாம்;
ஓட்டந் துள்ளல் இன்பத் துயர்வாம்;
கதைகளி இரண்டும் கலந்ததே யாகும்.
இந்நிலை கலவாக் கூத்தெங் குண்டாம்?

பிள்ளைக் கிட்டுப் பிணியைப் போக்க
வாழைப் பழத்தில் மருந்தை மறைத்துத்
தாய்தரு பழமே சான்றோர் இலக்கியம்:

"நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரள வின்றே சாரல்
கருங்கோல் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே!
குறுந்தொகை கூறும் காதலிலக் கணமே!
மூலமும் முடிவும் அற்றதே காதல்!"
பல்ஸாக் பகர்ந்த காதல் இலக்கணம்.

"யாயும் யாயும் யாரா கியரோ
எந்தையு நுந்தையும் எம்முறை கேளிர்
யானும் நீயும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே!''
இக்கூற் றையே பல்ஸாக் என்போன்
இயம்பும் சொற்றொடர் இயம்பக் கேண்மின்:
'வயதை இனத்தை மதியாது காதல்.
அறிவில் அழகில் ஆழாது காதல்!'

நம்மரும் இளங்கோ காளிதா சனுமே
நாட்டிய புகழையே மேலைநாட் டறிஞர்
நாடகப் புலவர் ஷேக்ஸ்பியர் யூகோ
நாட்டினர்; இலக்கியத் தொருமை காட்டினர்.

வீரச் சுவைக்கு ஓமரை உரைப்பர்;
வேறென் உண்டாம் புறநா னூற்றில்?

காதற் சுவைக்குத் தாந்தே தந்தை;
கற்றோர் ஏற்றும் கலித்தொகை என்னாம்?

பிறந்தார் மூத்தார் பிணிநோ யுற்றார்
இறந்தார் என்கை இயல்பே யாகும்.'
சிலம்பு செப்பும் செந்தமிழ் இதுவாம்.
'சாவின் வழியே ஒவ்வோர் உயிரும்
சார்ந்தே ஆகும் தப்பா தென்றும்.
மேலைநாட் டறிஞன் விளம்பியே உள்ளான்.

"வில்லே ருழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லே ருழவர் பகை" எனும் திருக்குறள்.
'வாளின் வலிதே எழுதுகோல்' என்றே
மேலை நாட்டு வால்டேர் விளம்பினான்.

'பொய்யுடை ஒருவன் சொல்வன் மையினால்
மெய்போ லும்மே மெய்போ லும்மே!*"
என்றோர் அரசன் இயம்பினான் இங்கே;
வலிமை உடையான் வார்த்தை என்றும்
உண்மை!' லபோந்தேன் உரைத்த கவிஇது.

'உற்றுழி யுதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே.
புறப்பாட்டுரைக்கும் பொன்மொழி இதுவாம்.
"உண்டிக் கடுத்த(து) ஒப்பிலாக் கல்வி
கொண்டு வாழ்தல் குடிமகன் கடமை"
என்றான் ழுய்ல்பெரி மேலைநாட் டமைச்சன்.

நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்(கு)
இனத்தியல்ப தாகும் அறிவெனும் தமிழ்மறை.
"பழகு மிடத்தைப் பகர்வாய்; நீயார்
என்றே நொடியில் இயம்புவன்" என்று
மேலைநாட் டொருவன் விளம்பியே உள்ளான்.

"யாதும் ஊரே யாவரும் கேளிர்"
கோதிலாத் தமிழன் கொள்கை இதுவாம்.
'நாற்றிசைக் கடல்சூழ் நல்லுல கத்தில்
பிறந்தோர் யாவரும் ஒருதாய்ப் பிள்ளைகள்”
என்பது மேலை இலக்கியத் துணிபாம்.

இருவே றுலகத்து இலக்கியம் வளர்ந்த
இயல்பினும் ஒருமை இருப்பதைக் காணீர்:
வீர இலக்கியம் விரும்பினர் மக்கள்;
காதலும் அதனுடன் கலந்தே வளர்ந்த(து).
இயற்கை வளத்தை இயம்பினர் பின்னர்;
டைஇடை அறத்தை எழுதத் தொடங்கினர்;
குடியர சாட்சிக் கொள்கை விளக்கி
முடியர சாட்சிக்கு முடிவு கண்டனர்.
இதுவே மேலை நாட்டார் இலக்கியம்.
தமிழகம் தந்த அகமும் புறமும்
தமிழ்மறை கண்ட திருக்குறள் வளமும்,
"தனிஒருவனுக் குணவிலை எனில்
ஜகத்தினை அழிப்போம்" என்ற பாரதியும்,
"புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உலகை வேரோடு சாய்ப்போம்"
என்ற என் ஆசான் பாரதி தாசன்
இடித்து முழக்கிய இன்தமிழ்ப் பாட்டும்
இலக்கியம் வளர்ந்ததை எடுத்தியம் பாதோ?

மொழிவே றுண்மை மொழிதரு பொருள்பொது
முந்நீர் உலகக் கலைஇலக் கியங்கள்
மக்கள் படைப்பாம். மறுப்பார் இல்லை.
ஆற்றங் கரைபோல் அழியும் கலையும்
அலைகடல் போல அழியாக் கலையும்
நீரில் குமிழிபோல் நிலையா இலக்கியம்
நெடுவான் பரிதிபோல் நிலைத்த இலக்கியம்
இருவே றுலகில் என்றும் உண்டாம்!
மக்கட்கு வகுத்த கலைஇலக் கியங்கள்
எக்கா லத்தும் நிலைத்தே நிற்கும்.
எக்கா லத்தும் நிலைத்த இலக்கியம்
இருவே றுலகில் இன்பம் பயந்தே
ஒருமைப்பாட்டோ டொன்றிச்
சிறந்து வாழ்தல் தெளிந்தபே ருண்மையே!
----

IV. புதிய ஆத்திசூடி

ஆத்தி மலர்தேடி அன்னை தமிழ்முடியிற்
சூட்ட முனைந்தேன் தொகுத்து!

அறிவைப் பெருக்கு.
ஆள்வினை நம்பு.
இழிதொழில் இலைசெய்.
ஈரம் மனங்கொள்.
உடைமை பொதுசெய்.
ஊரினைத் திருத்து.
எட்டியாய் வாழேல்.
ஏர்உழு துண்ணு.
ஐயம் அறத்தெளி.
ஒருதலை பேசேல்.
ஓசைப் படவாழ்.
ஒளவியம் படிப்பிற்கொள்.

கடமை மறவேல்.
காதல் மணம்புரி.
கிழமைக் குயிர்விடு.
கீரை மிகஉண்.
கூடா நட்பொழி.
குளிர்மையாய் நோக்கு.
கெஞ்சி வாழேல்.
கேட்டதை ஆய்ந்துகொள்
கைத்தொழில் பயிலு.
கொடுங்கோல் எதிர்த்துநில்.
கோதிலாப் பொருள்சேர்.
கௌவைக் கஞ்சு.

சள்ளை செய்யேல்.
சாதிப் பிரிவிகழ்
சிட்டுப்போல் வாழு.
சீரியார்ப் போற்று.
சுடுமுகம் காட்டேல்.
சூறையர் சேரேல்.
செய்வன ஆழ்ந்துசெய்.
சேண்மனம் அடைந்துவாழ்.
சையம் வழங்கு.
சொற்படிநட.
சோற்றைப் பகிர்ந்துண்.

ஞாட்பு விரைந்தெழு.
ஞெலுவனுக் குயிர்விடு.
ஞொள்கலை விரட்டு.

தன்மதிப் போடுவாழ்.
தாய்மொழி வளர்த்திடு.
திராவிடம் போற்று.
தீண்டாமை ஒழி.
துயிலைக் குறைத்திடு.
தூய தமிழ்படி.
தெருண்டவர் துணைசேர்.
தேற்றம் மனங்கொள்.
தையலைப் பழியேல்.
தொற்றுநோய்க் கிடங்கொடேல்.
தோண்மை பெருக்கு.
தௌவை வயாநினை.

நலநூற் படிநட
நாட்டிற் குயிர்விடு.
நிலநூல் உணர்ந்திடு.
நீந்திப் பழகு.
நுழைபுலம் கொண்டுபார்.
நூறுபேர்த் தனித்தெதிர்.
நெறிநின் றொழுகு.
நேர்வழி காட்டு.
நையாண்டி செய்யேல்.
நொய்ம்மை யகற்று.
நோய்வரு முன்தடு.
நௌவிபோல் இணைந்துவாழ்.

பகுத்தறி வோடுவாழ்.
பார்ப்பனச் சடங்குதள்.
பிறர்பொருள் வௌவேல்.
பீடையிற் கலங்கேல்.
புகரறக் குடிசெய்.
பூரையும் இகழேல்.
பெண்ண டிமைதவிர்.
பேசிப் பழகு.
பையமு னைந்துசெய்.
பொறுப்புடன் வினைசெய்.
போர்ப்புறங் காட்டேல்.
பௌவம்போல் பயன்கொடு.

மயல்கொண் டுழலேல்.
மாரி போற்று.
மின்கண்டு வித்தேல்.
மீசை முறுக்கு.
முப்பால் கைவிடேல்.
மூடப் பழக்கம்தள்.
மெய்வளர் பயிற்சிசெய்.
மேலை உணர்ந்துசெய்.
மைமல் உலவு.
மொழிபல கற்றுணர்.
மோசம் செய்யேல்.
மௌவல் உளங்கொள்.

யாழ் இசை பயிலு.
வருவாய் செலவுசெய்.
வாய்மை தவறேல்.
விடுதலை யோடுவாழ்.
வீழெனக் குடிசெய்.
வெந்நீர் அழித்திடேல்.
வேளையோ டுண்ணு.
வைகறை ஓது.
வௌவாலாய் வாழேல்.
----------

V. புதிய கொன்றைவேய்ந்தோன்

தனித்தமிழ்க் கொன்றைத் தாரினைச் சூட்ட
நினைத்தேன் தமிழ்த்தாய் நீளடி கட்கே!

அடிமை வாழ்விற் கிடங்கொடுக்காதே.
ஆண்டான் அடிமை வேண்டாம் நாட்டில்.
இழிந்தவர் உயர்ந்தவர் பிறப்பில் இல்லை.
ஈயென இறத்தல் இறப்பிலும் வேண்டாம்.
உழைப்பவர் நாட்டின் உயிர்நாடி யாவார்.
ஊருக் குழைப்பது சீரிய பணியாம்.
எடுபோர் வாளைக் கொடுமையைக் கண்டால்.
ஏதிலார்க் கினிமேல் இடங்கொடுக் காதே.
ஐயம் அகற்ற அஞ்சவே வேண்டாம்.
ஒவ்வொரு வீட்டிலும் மொழிதொழில் உயர்த்து.
ஓதுவ தெல்லாம் தாய்மொழி யாக்கு.
ஒளவை மொழியும் ஆய்ந்து கொள்க.

கற்றலுங் கேட்டலும் பெற்றால் உயர்வாம்.
காப்பது நாட்டைக் காளையின் கடனே.
கிளிமொழிக் குயர்வே அளித்துப் போற்று.
கீரையும் பகிர்ந்து ஊருடன் உண்ணே.
குறைகூறு முன்னுன் குறைகளை எண்ணு.
கூடிப் பழகிக் கேடெண் ணாதே.
கெஞ்சி வாழ்தல் நஞ்சினும் கொடிது.
கேட்டிலும் உறுதி காட்டிட வேண்டும்.
கைப்பாடு பட்டுக் கடும்பசி போக்கு.
கொழுநனைத் திருத்தல் கோதையர்க் கழகு.
கோடி கொடுப்பினும் கொள்கையிற் கோடேல்.
கௌவை வரினும் செவ்வை தவறேல்.

சல்லியும் பிறர்பொருள் இல்லைஎன் னாதே.
சாவாப் புகழை மேவுதல் அழகு.
சீறியோர் பெரியோர் அறிவால் விளங்கும்.
சீரைக் கெடுக்கும் ஆரியம் விலக்கு.
சுடுகா டேனும் விடுதலை வேண்டும்.
சூழ்ச்சியால் பிறரை வீழ்த்தவெண் ணாதே.
செய்துநீ காட்டிச் செய்யச் சொல்லு.
சேரன் பாண்டியன் போரைப் படித்துணர்.
சையென உன்னை வையவா ழாதே.
சொல்லிலும் செயலிலும் தூய்மையுண் டாக்கு.
சோற்றைப் பகிர்ந்தால் வேற்றுமை இல்லை.

தனித்தமிழ் போல இனிப்புவே றில்லை.
தாயின் சிறந்தது தாய்நா டாகும்.
திண்ணிய தோள்நல் லெண்ணமும் வேண்டும்.
தீண்டாமை அகற்ற வேண்டும் மனத்தில்.
துடியிடை யாரை அடிமையாக் காதே.
தூக்கினும் தமிழர் ஆக்கம் தேடு.
தெம்முனை செல்ல இம்மியும் தயங்கேல்.
தேடத் தக்கது கோடார் கேண்மை.
தைவரு தென்றல் மெய்யிற் கினிது.
தொன்னூல் படித்தால் நன்மை பயக்கும்.
தோல்வி வெற்றியின் கால்கோள் ஆகும்.
தௌவையை முதுமையில் செவ்வையாய்ப் பேணு.
-----------

VI. தாலாட்டு

ஆரோ ஆரரிரோ! ஆரரிரோ ஆராரோ!
ஆரோ ஆரரிரோ! ஆரரிரோ ஆராரோ!

... வும் கன்னித் திருநாட்டின் முன்னோர்கள்
... றக்கப்,பெற்றோர் பெயர்சிறக்க வந்தவனே!

... ண! என் கண்மணியே! காதற் பெருவிளைவே!
இனிக்கும் எழிற்கவிதை உட்பொருளே!

...ப் புலியே! குளிர்கடலின் மேலெழுந்த
... ப் பசும்பொன்னே! புத்தொளியே! கண்ணுறங்கு!

... டவிரல் கற்கண்டோ? கண்ணுறக்கம் கொள்ளாது
...ட்டில் உலகில் துடுக்கெல்லாம் செய்கின்றாய்!

...க் குளத்து வரால்குஞ்சு போலுனது
....லைத் தொட்டிலிலே முட்டி முட்டிக் கத்துகிறாய்!

..வைத்த மைகலைந்தாற், செல்வமே! நான் தாளேன்!
.. சிடுசிடுப்பாள்! பைந்தமிழே! கண்ணுறங்கு! 7

....ளின் நீள் மூக்கை அப்படியே ஒட்டிவந்த
....ச் சிறுசிலையே! சித்திரமே! நம்நாட்டில் 8

....யன்ற ஒன்று தமிழை அழித்ததடா!
....னும் தன்பெயரை வெட்டிவிட்டான்! ஆதலினால் 9

...அழிந்ததென்று சாற்றுவது பொய்ப்பேச்சாமி
... ல் வந்துநம் பண்பழித்த ஆரியத்தைத் 10
---

தீய்த்துப் பொசுக்கச், செல்வமே! கண்ணுறங்கு!
வாய்த்த பெரும்பேறே! மணியே! நீ கண்ணுறங்கு! 11

கண்ணிரண்டும் மூடாது கத்தி அழுதிருந்தால்
மண்ணில் உனை நம்பி வாழ்வதுதான் எப்படியோ? 12

எங்கும் நிலவிவரும் ஏழை பணக்காரன்
கங்கை வழிச்சரக்கு; காவிரிக்குச் சொந்தமன்று! 13

சிங்கத் திருமகனே! அன்பே! எனதுயிரே!
இங்கிந்தத் தொல்லை அறவே அழிந்துவிட்டால் 14

முன்னோர்கள் போல்மக்கள் செல்வம் முதிர்ந்துவிடும்!
சின்னவிழி தூக்கிச் சிரிக்கின்றாய்! செய்வாயோ? 15

செய்வாய்நீ என்கண்ணே! செய்வாய்! தமிழ்வீரம்
கைகால் உயர்த்திநீ காட்டுகின்றாய்! கண்ணுறங்கு! 16

நெஞ்சில் பெருஉரமும் நேர்மைக்கே எந்நாளும்
அஞ்சாது வாழ்வதுவே ஆண்மைக் கறிகுறியாம்! 17

ஊரார் எதிர்ப்பெல்லாம் ஒன்றாய்க் குவிந்தாலும்
கார்வானம் ஓர்நாள் கவின்வானம் ஆவதுண்மை! 18

பால்குடித்து விட்டாய்! பதுமைபோல் தூங்காது
காலுதைத்துக் கத்துவது வேண்டாம்என் கண்ணே! 19

வளமிகுந்த இந்தத் திருநாட்டில் வாழ்வோர்
உளம் விரிந்தோர் இல்லை! உரைத்தாலும் கேளார்! 20

அதற்காக அஞ்சாதே! அஞ்சாதே!முத்தே!
அதைமாற்ற வாழ்வதுவே இன்பமடா இன்பம்! 21

குடியரசு நாட்டின் இளங்கரும்பே! தேனே!
குடியரசு நாடென்று நம்வாழ்வைத் தீய்க்க 22

அடித்தொடுக்கி விட்டாலிங் காரடங்கப் போறார்?
தொடுப்பார்; பகைவெல்வார்! செல்லவே தேவையில்லை! 23

போர்வாள் எடுத்தே புறமுதுகு காட்டாத
ஊரின் இளவரசே! உறங்குநீ கண்ணுறங்கு! 24

நாளைத் திருநாடு நம்மதடா! நாம்இனிமேல்
தோளைச் சதைச்சுமையாய்த் தூக்கித் திரியோமே! 25

இல்லார்கள் இல்லாத இன்பத் திருநாட்டைக்,
கல்லார்கள் இல்லாத கன்னித் தமிழ்நாட்டைச், 26

சாதிச் சனியும் தமிழ்ப்பகையும் இல்லாத
ஆதித் தமிழ்நாட்டை அடைவோம்! நீ கண்ணுறங்கே! 27
----------

VII. இயற்கை

1. இயற்கை பொருத்தம் !

எழுந்து புரண்டு பாய்ந்தே
இடித்துக் கரையை மோதி
அழுந்து கின்றாய் துயரில்!-கடலே!
அன்பினைப் பெற்ற துண்டோ? 1

வெள்ளி நிலவெ ரிக்க
வேதனை நெஞ்சில் துள்ளக்
கள்ளனைப் போல வந்தான்;-கடலே !
கண்ணினைப் பொத்தி நின்றான். 2

எட்டிப் பிடித்துக் கையால்
எடுத்திட நான்மு யன்றேன்;
சிட்டுப் பறப்ப தைப்போல் - கடலே!
சென்று மறைந்தே போனான். 3

பாலொளி சொட்டு கின்ற
பச்சைப் பனைமரத்தின்
ஓலையிற் பாட்டி சைத்தான்;- கடலே!
ஓடையில் முணுமுணுத்தான். 4

தென்றலாய் ஓடி வந்தான்;
'மன்றல் புரிவன்' என்றான்;
அன்றிலாய் வாழ்வோம்' என்றான்;- கடலே!
அண்டத் திற்போய் மறைந்தான். 5

அல்லும் பகலும் வந்தே
அழகு கவிதை சொல்வான்;
புல்நுனிப் பூவில் நின்றே-கடலே!
புதுப்புதுச் செய்தி சொல்வான். 6

.
தேடித் தேடி வருவேன்
சென்ற வழிக ளெல்லாம்;
'ஏடி!' எனவி ளிப்பான்;--கடலே!
எங்கும் நிறைந்திருப்பான். 7

'செந்தில் முருகன்' என்பார்;
தீங்குழற் கண்ணன்' என்பார்;
எந்தப் பெயரோ ?' என்றேன்;- சடலே!
இயற்கை பொருத்தம்!' என்றான். 8

விண்ணெழிற் கண்ட கண்கள்
வேறொன்று வேண்டு மோ, சொல்?
கண்கட் குரிய தொன்றைக் - கடலே!
கண்டுநான் கொண்டேன்! கொண்டேன்! 9
---

2. பட்டினச் சேரி

வட்டமாய் நீண்டு யர்ந்த
     வானத்து மதிற்சி றைக்குள்
கட்டுண்டு கிடப்ப தைப்போற்
     கடல்தோன்றும்! அக்க டல்மேல்
எட்டடி உயர்ந்து சீறி
     எழுகின்ற அலைக ளெல்லாம்
கட்டினை வெருண்ட றுத்த
     வெண்மயிர்க் காளைக் கூட்டம்       1

வள்ளல்போல் வழங்கும் நீல
     மறிகடல் கிழித்துச் செல்லும்
வள்ளத்துப் பாயோ, வெய்யோன்
     ஒளிபட வான்மு கட்டில்
வெள்ளி முக்கோணம் போலத்
     தோன்றிடும்! விரிநீர் மீதோ
துள்ளிடும் மீன்கள் தூய
     பசும்வெள்ளித் தூறல் தம்பி!       2

கடலோர மணல்மேற் கட்டு
     மரக்கூட்டம்! கடலோ ரத்துப்
படகுகள் படுத்த யானை!
     பட்டினச் சேரி சுற்றி
நெடுகிலும் கழிகள்! அந்த
     நீள்கழி முன்னாள் வேந்தர்
கொடிபடை யோடு வாழ்ந்த
     கோட்டையின் அகழி போலாம்!       3

தரங்கத்துச் செல்வம் மீனாம்
     தனைத்தேடச் சென்ற ஆளன்
உரத்தினில் உயிரை ஓட்டி
     ஒவ்வொரு நொடியும் சிற்றிற்
புறத்தினில் வந்து பார்ப்பாள்
     போனவன் மனைவி! அன்னோன்
மரத்தினைக் கடற்பரப்பில்
     வரும்வரை விழிகள் தேடும்!      4

அங்காடிக் கூடை முன்னர்
     அழுமொரு குழவி; ஒன்று
பங்கில்லை என்று தாயின்
     மடியினைப் பற்றிக் கெஞ்சும்;
தெங்கின்கீழ்த் தூங்கு மொன்று;
     செழுந்தாழை வேரில் வந்து
தங்கிய நண்டைச் சுட்டுத்
     தன்பசி அடக்கும் ஒன்றே!       5

விலைபோகா மீன்க ளெல்லாம்
     வீட்டின்முன் காயும்: ஈர
வலையெலாம் ஓர்பு றத்தில்
     மணல்மீது உலரும்; என்றும்
அலைப்புண்ட கரைபோல் வாழும்
     அங்குள்ள மக்கள் வாழ்வின்
நிலையினை, வறுமைப் பாட்டை
     ஓயாமல் இசைக்கும் நெய்தல்!       6

அலைகடல் முழக்கம் நெய்தல்
     ஆண்களின் முழக்கம்! வீட்டில்
உலையிட அரிசி இல்லை!
     உப்புநீர் எங்கும் உண்டாம்!
வலையினைத் தூக்கிச் சென்று
     மறிகடல் தப்பி வந்தால்
உலைக்குண்டு; வாழ்க்கை உண்டு!
     போராட்டம் ஒவ்வோர் நாளும்!      7
----

3. கவிப் பெண்

மேற்றிசையிற் சுழல்பரிதி வானைச் செம்மை
     மெருகிட்டான்; ஓடுதங்கே இரத்த ஆறு!
காற்றெங்கும் மலர்மணத்தை அள்ளி வீசக்
     கண்ணயர்ந்தேன்; அட்டா!என்னைச் சொக்க வைக்கும்
தோற்றத்தை என்சொல்வேன்! இவளைப் போன்ற
     தோகையை நான் கண்டதில்லை! 'நீயா' ரென்றேன்!
வேற்கண்ணாள், 'கவிப்பெண்நான்' என்றாள்! அந்த
     வேசியிள நகைகண்டு விழித்தேன்; காணேன்!       1

தேடிப்பார்த் தேனவளைக்; கண்டே னில்லை!
     தெவிட்டாத தெள்ளமுதாய் உள்ளம் பொங்க
ஏடெடுத்தேன் கவியெழுத; என்முன் வந்தாள்;
     எங்கேடி சென்றொளிந்தாய்?' என்றேன்; 'இந்த
ஓடையிலே, மலரழகில், ஓவி யத்தில்,
     உணர்ச்சிமிகு கவிதையினில், அனலே வீசும்
கோடையினில், குளிர்காற்றில், குமரிப் பெண்கள்
     குறுநகையில் இளந்தளிரிற், குன்றில்!'என்றாள்.       2

உருண்டோடும் ஆற்றிலவள் ஒளிந்தே வந்தாள்;
     'உச்சிமலைத் தேன் பிழிந்து வந்தே னிப்போ(து);
அருந் தென்றாள்; மயங்கிவிட்டேன்; அவளு மந்த
     அடர்மரத்திற் குயிலாகக் கிளையி லாடி
அருகழைத்து வாயிற்செவ் வாயை வைத்தே
     அள்ளிவிட்டாள் உள்ளமெலாம்; இன்பம், இன்பம்
பெருகுதடா! அவளில்லா இடமேயில்லை;
     பேச்சில்லை; துன்பமெனும் பேச்சே யில்லை!       3
---

4. தீமைக் கிடமில்லை!

என்ன எழுதுவ' தென்று பலப்பல
     எண்ண மிடுமதி காலையிலே,
'என்னை எழு' தெனக் கன்னல் மொழிக்குயில்
     இளமரக் காவில் இசைமீட்டும்;
புன்னை மலர்சிரித் தென்னை மயக்கும்;
     புற்றரை 'என்னை வரைக’என்னும்;
பொன்னை யுருக்கி இளம்பரி திவானில்
     பூரிப் புடனெழுந் தோடிவரும்!       1

பாலைப் பொழிந்து களைத்த சிறுமதி
     பார்வையால் தீட்டுக என்று கெஞ்சும்;
காலைக் குளத்தினில் பூத்த மரைமலர்
     கன்னியர் சேல்விழி 'என்னை என்னும்;
சாலை மரத்தினிற் பாய்ந்து பிரியாதே
     சல்லாபஞ் செய்யு மணிற்குலமும்
காலங் கடத்தா தெழுதெழு தென் றென்முன்
     கத்தின! ஆனால், என் கண்ணெதிரே.       2

அடுபசி ஓங்கி உயிர்கள் துடித்திட
     அடிமைப் பெருமலை நெஞ்சழுந்தக்
கொடுமை சகியாத் தமிழ்த்தாய் தலைவிரி
     கோல முடனெழுங் காட்சிகண்டேன்!
கடமை நினைந்திடு தமிழா ! தமிழ்ப்பொதுக்
     கலப்பினில் வேற்றுமைக் கேதிடம்?
திடம்வரும் தோளினில்; தீரம்வரும் நெஞ்சில்;
     தீமைக் கிடமிங் கில்லையடா       3
------

5. இன்பமே இன்பம்!

ஓடையில் தாமரை நகைமுகம் காட்டும்;
உயர்மரக் கிளையில் குயிலிசை மீட்டும்;
வாடை கொணரும் தென்றலுக் காக
வண்டினம் இசையால் வரவேற் பளிக்கும்;
பூத்தலை ஆட்டும் புதரிற் சிட்டு;
இணைக்கே தேதோ இயம்பும்!
எழுந்தான் பரிதி! இன்பமே இன்பம்!
---

6. குமரி

சாதி சமயமும் அற்றவள்;-
தமிழ்ச் சண்பகக் காவுள் உதித்தவள்;
சோதி முகவெழில் திங்களில் -ஓர்நாள்
தோகை மயிலெனக் காட்டுவாள்!      1

காதில் எதிரொலி இன்னிசைக் - கவிக்
கட்டிக் கரும்பைப் பிழிந்தனள்;
ஓதும் தமிழ்மொழிக் குயிரிவள்;- பிற
உலக மொழியின் தாயவள்!      2

தேனதிற் சீனியைக் கூட்டியே - சதா
தித்திக்கும் கட்டுரை செய்தனள்!
கானில் திரிந்து மகிழ்ந்திடும்-இளங்
கன்றுமான் போல நான் துள்ளினேன்!      3

இருகரம் நீட்டித் தழுவினேன்;-அவள்
இன்விழிப் பாகைப் பருகினேன்!
அருமைக் கும மலரவள்!- செவ்
வல்லி சிரித்திடும் குட்டையாம்!      4

மருண்ட வுலகினை மாற்றினள் - புது
மங்கை யிளநகைப் பார்வையால்!
உருண்டு பெருக்கெடுத் தின்பமே - மலை
ஊற்றுப்போற் பாயுதிந் நாட்டிலே!      5
----

7. சிரித்த நுணா!

பொற்குழம்பு ஊற்றைப் புவியிற் பாய்ச்ச
வெட்டித் திறந்தான் விண்ணிற் பரிதி!
உடல்தொறும் உயிர்தொறும் உருக்கிய பொன்னாம்!
கொடிவழி நடந்தேன்! குலவும் புட்கள்
'வீர்வீர்' என்று விரைந்து வானில்      5

கீச்' சென் றென்னை ஏசிப் போயின!
காலில் அங்கோர் காரைமுள் தைத்தது!
'வெடுக்'கெனப் பிடுங்கினேன்! கடுத்தது முள்வாய்!
கடுத்ததென் னுள்ளம்! காலையில் தென்றல்
வந்தது; மணத்தை வாரி இறைத்ததே!      10

என்மன மதனை இந்நறு நாற்றம்
வந்த திசையின் வழியே செலுத்தினேன்!
காய்த்த ஈச்சங் காட்டின் நடுவே
எட்டிக் கூவி என்னை அழைத்து
முல்லை நாணக் 'கொல்' எனச்
சிரித்தாள், அட்டா! சிறுநுணாப் பெண்ணாள்!      15
-----

VIII. இசையாளர்

1. கலைவாணர்

கருத்தினிற் பழமை ஏற்றுக்
     கதிகெட்ட திராவி டர்க்குக்
கருத்தொளி அளிப்பார்; ஒவ்வாக்
     கதை, செயல் இடித்து ரைப்பார்;
சிரித்திடச் செய்வார்; எண்ணத்
     தூண்டுவார்; அஞ்சார் ; வள்ளல்;
திருநாகர் கோவிற் செல்வர்;
     கலைவாணர் கிருஷ்ணன்! வாழ்க!

2. நாவலர் பாரதியார்

செழுந்தமிழ் முன்னாள் தோற்றம்;
     செஞ்சொலோ இடிமு ழக்கம்;
குழந்தைபோற் கொஞ்சும் உள்ளம்;
     கூர்மதி; கொடுமை காணில்
எழுந்தெதிர்த் தழிக்கும் வேங்கை;
     எவருக்கும் பணியா வீரன்;
பழந்தமிழ்ச் சோம சுந்த்ர
     பாரதி! வாழ்க! வாழ்க!

3. கவிக்கடல் வாழிய!

சொல்லணி யாப்பும் பொருளும் மலிந்த சுவைத்தமிழோ
வல்லார் சிலரின் மனத்தோ டழுந்திக் கிடந்ததுவாம்!
கல்லார், பிழையறக் கற்றார் வியக்கத் தனித்தமிழை
எல்லோரும் துய்க்க அளித்தவர் பாரதி தாசனாரே!      1

தமிழின் உயர்வைத், தமிழின் திறத்தைத் தமிழினையோர்
உமியென் றிருந்த அசடு களைந்தே, 'உயிர்க்குயிராம்
நமதரும் அன்னை மொழியாம் தமிழென நன்குணரத்
தமிழ்ச்சுவை ஊட்டினார் பாரதி தாசனார் வாழியவே!       2

இந்நாள் தமிழின் எழுச்சி கவிஞர் உளஎழுச்சி!
கன்னித் தனித்தமிழ் கைவரா தென்று கதைத்தவர்கள்
என்னரும் ஆசான் கவிக்கடல் பாரதி தாசனாரின்
பொன்னாம் கவிமுன் புறமுதுகிட் டோடிப் போயினரே!      3

புதுப்புதுப் பாடல்! உவமை நயமோ புதுவிருந்து!
முதுபெரும் ஆன்றோர் வியக்கக் கருத்துப் புரட்சிமூட்டி
எதற்கும் கலங்கா தெழுதும் புரட்சிக் கவியரசைப்
புதுவை, உலகிற் களித்துப் புகழ்நிலை நாட்டியதே!      4

முற்றி முதிர்ந்த புலமைத் தெளிவை விழிவிளக்கும்!
சுற்றம் பகையெனப் பாரார் நடுநிலைச் சொல்விளக்கும்!
பற்றோ தனித்தமிழ் நாடும் இனமும் செயல்விளக்கும்!
வெற்றி வலம்வரும் ஆசான் கவிக்கடல் வாழியவே!      5

4. எனதாசான்

வீழ்ச்சியுற்ற தமிழருக்கு வலிவூட்டும் குன்றம்!
      மெல்லியரின் வாழ்விற்குப் புரட்சிவழிப் பாட்டை!
சூழ்ச்சியினால் வளர்ந்தமதக் கோட்டைக்கு வேட்டு.
      ஒருசிலரின் சொத்தாக இருந்ததமிழ் ஊற்றைத்
தாழ்ச்சியின்றித் தமிழ்நாட்டு மக்களெல்லாம் உண்ண
      எளிமையொடு சுவைகூட்டிச் சரிசெய்த வள்ளல்!
ஆழ்கடலின் முத்தொத்த அறிவுரையை நல்கும்
      எனதாசான் கவியரசர் தமிழ்மக்கள் ஆசான்!      1

சிரிக்கின்ற அழகெல்லாம் செஞ்சொல்லால் தீட்டிச்
      செந்தமிழின் நயம்விளங்கச் செய்திட்ட ஆசான்!
வரிப்புலியே! இளந்தமிழா!' எனவிளித்து நாட்டில்
      வளர்கொடுமை அறியாமை வறுமையினைக் காட்டி
ஒருநாளும் தயங்காதே! தமிழ்வாளைத் தூக்கே!
      ஒண்டமிழ்த்தாய்ச் சிலம்படியின் முன்னேற்றம் ஏற்றம்!
குரைப்பாருக் கஞ்சாதே!' என, நாளும் ஊக்கும்
      எனதாசான் கொல்லேறு தமிழ்மக்கள் ஆசான்!      2

செக்கிழுக்கும் மாடொத்த தமிழ்ப்புலவர் உள்ளச்
     சிறுமைக்கும் எழுத்திற்கும் அறிவூட்டும் ஆசான்!
கொக்கொத்த ஆரியத்தின் பசப்புமொழி கேட்டுக்
     கும்மிருட்டில் வாழ்வோரின் குடும்பவிளக் கன்னோன்!
மிக்கநறுந் தமிழ்த்தென்றல்! முத்தமிழின் தோற்றம்!
     வேறெவர்க்கும் பணியாத தமிழ்நாட்டு வேங்கை!
இக்காலத் தமிழ்நாட்டின் நிலையுயர்த்தப் பாடும்
     எனதாசான் கவியரசர் தமிழ்மக்கள் ஆசான் !      3

5. ஆசையோ தமிழில்!

தாசனாம் பார திக்குப்
     பாரதி தாசன்! அன்னோன்
ஆசையோ தமிழில்! வற்றா
     அன்பெலாம் தமிழர் வாழ்வில்!
மீசையோ, விழியின் நோக்கோ
     வீரனைக் கோழை யாக்கும்!
ஏசலும் புகழும் பாரான்!
     உண்மையை இயம்பும் மேலோன்!

6. பெரியார்

உடலில் முதியார்; உணர்வில் இளையார்;
உழைப்பிற் சலியார் எங்கள் பெரியார்!
கடலின் கருத்தார்; கலங்கா உளத்தார்;
காட்சிக் கெளியார் எங்கள் பெரியார்!      1

வானின் பெரியார்; நீரின் பெரியார்;
வளியின் பெரியார்; நிலத்தின் பெரியார்;
மானத் தோடு திராவிட மக்கள்
வாழ உழைக்கும் இளைஞர் பெரியார்!      2

வடவர்க் கரியார்; மடமைக் கொளியார்;
வாய்மைக் குரியார் எங்கள் பெரியார்!
இடிசொல் லுடையார்; ஏழைக் கடியார்;
எங்கள் திராவிடத் தந்தை பெரியார்!      3

புதுவாழ் வளிக்கும் வழியார் பெரியார்;
புராணக் குப்பைக் கெரியாம் பெரியார்;
எதுவந் தாலும் கலங்கார் பெரியார்:
எதிர்ப்போர் சாய்க்கும் வலியார் பெரியார்!       4

நான்மறை சாதி உயர்வு தாழ்வு
நரியார்க் கெங்கள் பெரியார் புலியார்!
தேன்மொழி வாழ இந்தி எதிர்த்த
தீரர்; வைக்கம் வீரர் பெரியார்!       5

கூர்வாள் இளைஞர் பயிலும் கூடம்;
குருட்டுக் குன்றைத் தகர்க்கும் வேட்டு;
போர்முர சார்க்கும் வெற்றிப் பாதை;
புதுப்புதுப் படைக்கலம் சமைக்கும் கொட்டில்!      6

வாழ்க எங்கள் தந்தை பெரியார்!
வாழ்க திராவிட வால்டேர் பெரியார்!
வாழ்க வெண்தாடி வீரர், வாழ்க!
வாழ்க ஈ.வே.ரா. பெரியார் வாழ்கவே!
---------

7. அண்ணா

உலகியலைப் பகுத்தறிவை உருவாக்கும் அண்ணா !
உதவாத சமுதாய மாற்றுமருந் தண்ணா!
புலவர்களைப் புறங்கண்ட புலியேறாம் அண்ணா!
புதுமுறையிற் கவிநடையிற் பொழியுமுகில் அண்ணா !

குருட்டுலக இருட்டுவிழிக் கொளிசெய்யும் சுட ….
கொடுவேல்கள் பாய்ந்தாலும் கலங்காத வேங் ….
தெருட்டுகின்ற பெரியாரின் வழிவந்த செம்ம …
முன்னேற்றத் திராவிடத்தின் முதலமைச்சன் …

படித்தவரும் அல்லாரும் பார்த்துணர வேண்ட …
படக்காட்சி நாடகத்தால் பண்புணர்த்தும் அ……
இடித்தூக்கும் ஏடெழுதி இங்குள்ளோர் கண்….
இன்பமிகு திராவிடத்தின் எழில்காட்டும் கலை….

பொன்னாட்டில் திராவிடத்தில் புரையோடிப்..
ஆரியமாம் புண்ணுக்கு மருந்தூட்டும் அன்னை! ..
தன்மானப் பெரும்படையின் தனித்தலைவ னாவ …
தம்பிகளைத் திராவிடத்தில் தந்தளித்த வள்ளல் ..

8. அண்ணா வாழ்க!

அண்ணா வாழ்க! வாழ்க!- அறிஞர்
அண்ணா வாழ்க! வாழ்க!
கண்ணாம் திராவிட நாட்டின்-ஒளிக்
கதிரே! மழையே! வாழ்க!      1

ஏழை எளியவர் இல்லாத்- தனி
இன்பத் திராவிடம் காண
வாழை போலத் தம்பி - பலர்
வளர்த்துத் தந்த அறிஞர்!      2

எழுத்தாற் சொல்லாற் செயலால் - நாட்டை
இழுத்தார் எங்கள் அண்ணா!
புழுத்த புராணக் குப்பை - உள்ளே
புகுந்து பழமை இடித்தார்! 3

புத்தி தீட்டித் தந்தார்!- நல்ல
புலமை ஈட்டித் தந்தார்!
கத்தி அரிவாள் இல்லாப் - பொது
உடைமை கூட்டி வந்தார்!      4

பண்டைத் தமிழர் வாழ்வைத் தமிழ்ப்
பண்பை விளக்கித் தந்தார்!
பெண்ணும் ஆணும் ஒன்றாய்- இனிப்
பெறுவோம் திராவிட நாடே!      5

9. நெடுஞ்செழியன்

நெறிபிறழான்; நேர்மை
பிறழான்; திராவிடத்தின்
குறிபிறழான்; செய்கை
பிறழான்;- அறிவாக்கச்
சொல்லே ருழவன்;
துணிவுடையான்; தீந்தமிழன்!
இல்லை நெடுஞ்செழியர்க் கீடு!

10. தமிழ்த் தாத்தா!

உண்ணா துழைக்கும் தமிழ்த்தாத்தா;
     உண்மை விளக்கம்; எந்நாளும்
கண்ணார் தமிழே தம்வாழ்வாய்க்
     கருதும் கழகப் பெரும்புலவர்;
பண்ணேர் தமிழ்மா ணவர்மன்றப்
     பற்றே பற்றாம்; பெண்ணுரிமை
எண்ணா திருக்கும் நாளுண்டோ
     எங்கள் மயிலை சிவமுத்தே?

11. இசையரசர்

பண்ணைத், தமிழர்பண் பாட்டை,
     இசையைக், கலையுணர்வைக்,
கண்ணாம் மொழியை, இனத்தை,
     உயர்வைத்தன் கண்ணிமைபோல்
எண்ணி வளர்த்துச், சுவையை,
     எழிலை இடையமைத்தே
மண்ணில் வழங்கும் இசைவேந்தர்
     தேசிகர் வாழியரே!

12. இசைக்குரியார்

வீரம்சேர் தொண்டே
பெரியார்! விரிவுரைக்குப்
பாரதி! நீள்செழியன்
பண்புக்குப்!- பாரதி
தாசன் தமிழ்க்கவிக்குப்!
பாட்டுக்குத் தேசிகர்!
ஆசைமொழிக் கண்ணாவே ஆம்!
------------

IX. புரட்சி

1. சூலை புதினான்கு

இச்சைபோல் வரிகள், சட்டம்
     இயற்றினான்; யாரா னாலும்
இச்சையென் றுரைத்துப் பஸ்தீய்
     இருட்சிறை யடைத்தான்; மண்கொள்
இச்சையிற் கடும்போர் செய்தான்;
     ஏழைகள் துயர்கா ணாது
கச்சணி பெண்க ளோடு
     களித்தனன் பதினான் காம்லூய்!       1

பூமியை உழுமே ழைக்குப்
     புதுப்புது வரிகள் வேறு;
சாமியார் கூட்டம் வேறு;
     தாங்கொணா வறுமை வேறு;
மாமியார் போல வாய்த்த
     செல்வரின் கூட்டம் வேறாம்;
ஊமைபோல் எத்தனை நாள்
     ஊரினில் வாழ்வார் மக்கள்?       2

பதினாறாம் லூய்என் வேந்தன்
     பற்றினான் செங்கோல்! இன்ப
மதிமுகப் பெண்க ளோடு
     மகிழ்வதே அறிவான் பேதை;
கதியற்று மக்கள் எங்கும்
     கலங்கினர்! அறிஞர் பல்லோர்
புதுப்புது முறையில் ஊக்கிப்
     புகுத்தினர் உணர்ச்சி நாட்டில்!       3

எதிர்த்தனர் சூலைத் திங்கள்
     ஈரேழாம் நாளில்! வானம்
அதிர்ந்திடப் பஸ்தீய் கோட்டை
     அழித்தனர்! அடிமைப் பேயைக்
கதித்தனர் ஒன்று சேர்ந்து
     காளைகள்! கொடுங்கோல் ஆட்சி
விதிர்த்தது! மண்ணில் மக்கள்
     விடுதலை முழக்கஞ் செய்தார்!       4

வாழிய சூலைத் திங்கள்
     பதினான்காம் பெருநாள் வாழ்க!
வாழிய மக்கள் தோட்கு
     வலிதந்த புரட்சி நன்னாள்!
வாழிய உழவர் கூலி,
     வளமிகு பிரான்சு தேயம்!
வாழிய மக்கள் ஒன்றாய்!
     விடுதலை வாழ்க மன்னே!

2. முறையாமோ?

ஓட்டம் தடுத்துக் காட்டாற்றின்
     ஒண்ணீர் பாய்ச்சக் காலாக்கிக்
காட்டை, மேட்டைச் செப்பனிட்டுக்
     கலரைத் திருத்தி நெல்விளைத்தே
ஊட்டும் உழவர் இங்கிலையேல்
     உணவிங் குண்டோ? உயிருண்டோ?
வீட்டைக் கட்டும் கொத்தரின்றேல்
     வெய்யில் மழைகுளிர்க் கிருப்பேது?       1

சட்டி பானை பெருஞ்சால்கள்
     குயவ ரின்றேல் தருபவர்யார்?
கொட்டி யளக்கப் படிமரக்கால்
     கொல்ல ரின்றேற் கொடுப்பவர்யார்?
பெட்டி கட்டில் நாற்காலி
     தச்ச ரின்றேற் பெறுவோமோ?
பட்டு பருத்தி ஆடையெலாம்
     நெய்வோ ரின்றேற் பார்ப்போமோ?       2

இருளைப் போக்கும் விளக்கொளிக்கு
     வாணியர் இன்றேல் ஏதெண்ணெய்?
தருவார் யாரே புவிமீது
     தட்டா ரின்றேல் அணியெல்லாம்?
மருத்துவ ரின்றேல் கொடுநோயை மாற்றும்
     மருந்து யார்கொடுப்பார்?
பொருது வெல்லப் படைக்கருவி
     புதுப்புது முறையிற் செய்தவர்யார்?       3

தோட்டந் துரவு நமக்கேது
     தூர்வார் கூலி இல்லையெனில்?
போட்டுக் கொள்ளும் ஆடையெல்லாம்
     வண்ணா ரின்றேற் பொலிவேது?
பாட்டை சமைத்தோ ரில்லையெனில்
     பண்ட மாற்றுத் தொழிலேது?
வாட்டந் தீர்க்கும் இசைக்கருவி
     மண்ணிற் செய்த தியார்வேலை?       4

கட்டக் கந்தைத் துணியற்றுக்
     'கஞ்சி! கஞ்சி!' யெனக்கதறி
எட்டுத் திக்கும் தொழிலாளர்
     இன்ன லுறுதல் முறையாமோ?
குட்டை மனத்தீர்! உணரீரோ?
     கொல்லல் முறையோ செய்ந்நன்றி?
மூட்டு வேண்டாம்; இன்பதுன்பம்
     முழுதும் பொதுவாய்ச் செய்வோமே!       5

3. எது ஈனத் தொழில்?

கானல் மேனியைக் கறுப்பாக்க
     காடு மேடு கரம்புழுது
வான வாரி இருசெய்கள்
     வளஞ்சேர் பயிர்செய் துணவூட்டும்
வீணர் இன்றேல் உலகேது?
     வீரப் பணியும் புவிக்கேது?
ஈனத் தொழில்தாம் இங்குண்டோ?
     ஈதறி யேடீ என்தோழி!       1

சொந்த மணாளன் தாய்தந்தை
     சோதரர் சிறுவர் சிறுமியொடு
குந்திக் குலவி வாழ்ந்திடுநம்
     கூரைக் குடிசை ஏதேது?
இந்தச் சமூகம் உயர்த்திடநூல்
     இழைக்கும் இராட்டை ஈங்கேது?
எந்தத் தொழில்தாம் இங்கீனம்?
     ஈதறி யேடீ என்தோழி!       2

ஓடும் ஆற்றுத் தண்ணீரில்
     ஓயா தடித்துத் துணிவெளுப்போர்,
ஆடும் குடுமிசெய் அம்பட்டர்,
     அச்சுக் காணி செய்திடுவோர்,
காடு மேடு சுற்றிட நம்
     காலுக் குதவும் சக்கிலியர்
ஏடீ! இவர்கள் இல்லையெனில்
     நம்மால் வாழ இயன்றிடுமோ?       3

4. நாளைய தமிழகம்

தமிழ்முரசம் கேட்குதடி! அதோகேள்! பெண்ணே!
     சாதிமதம் கட்சியெலாம் ஒன்றாம் அங்கே!
தமிழ்நாட்டைத் தமிழ்த்தலைவர் ஆளக் கண்டு
     தோளெல்லாம் பூரிக்கும் தமிழ்க்கூட் டம்பார்!
தமிழ்நாட்டிற்(கு) ஊறுசெய நினைத்தாற் போதும்;
     தலையுருளும் எவராக இருந்திட் டாலும்!
தமிழிகழ்ந்தால் குழவிக்கும் மன்னிப் பில்லை!
     சார்ந்துண்டு வாழநினைப் போர்க்கோ தொல்லை!       1

வாளெடுத்துப் பாலுண்ணுங் குழவிக் கீந்து
     மாற்றார்மேற் செல்க' எனும் தாயைப் பார்நீ!
தோளோடு தோள்முட்டித் தமிழை வாழ்த்திப்
     போர்பயிலும் தூயதமிழ் மறவர் பார்நீ !
தாளெடுத்துத் தனித்தமிழிற் பாட்டைத் தீட்டித்
      தமிழ்மக்கட் குணர்வூட்டும் புலவர் பார்நீ!
நாளெல்லாம் ஒருநிறையாய் உழைத்த மக்கள்
     நல்லிசையைக் கேட்கின்ற மன்றம் பாரே!       2

'அடிமை'யெனும் பேச்சங்கே இல்லை; மற்றும்
     'அரசியிலை" எனுந்துயரம் இல்லை; தத்தம்
கடமையினை மறந்தெவரும் வாழ்வ தில்லை;
     கண்மூடி வழக்கமிலை; பெண்கள் யார்க்கும்
அடிமையிலை; அரசொருவர்க்(கு) உரிமை இல்லை;
     அச்சமிலை; படிக்காத ஆண்பெண் இல்லை;
உடைமையினைப் பொதுவாக்கிக் கலைவ ளர்க்கும்
     ஒப்பில்லாத் தமிழகத்தைப் பார்பார் நீயே!       3

5. யார்க்குச் சொந்தம்?

கொட்டகையிற் குற்றுயிராய் உழவு மாடு
     குந்தியழும் உழவனவன் பெண்டு தாயார்
கட்டவொரு கந்தையின்றி உண்ணும் பிள்ளை
     'கஞ்சி! கஞ்சி!' எனக்கதறி மாய்ந்தா லென்ன?
எட்டிரண்டும் பத் தென்று நோட்டை யெண்ணி
     இருப்புவைத்திங் குயிர்வாழும் ஈனச் செய்கை
பட்டினத்துப் பெரியபெருச் சாளிச் செய்கை!
     படுமோசக் காரரிவர் அழிவே இன்பம்!       1

தோப்பிலதோ கருங்காக்கை 'கா! கா!' வென்று
     தொண்டை புண் ணாகிடவே வீட்டில் வந்த
மாப்பிளையை உணவருந்த அழைப்ப தேபோல்
     மகிழ்வோடு தன்னினத்தைக் கூவிக் கூவிச்
சாப்பிடப்பார்த் தென்செய்தோம்? அந்தோ! ஏழைச்
     சாண்வயிற்றிற் கரிசியெங்கும் கிடைப்ப தில்லை!
கத்தரிக்காய் கூறாக்கிப் பங்கே செய்வோம்!
     காப்பாற்றப் பொருளெல்லாம் இயற்கை தந்தாள்!       2

வானந்தான் ஒருவருக்கே வழங்க லுண்டோ?
     வண்ணமலர், மணம், நன்செய், புன்செய்,தென்றல்,
கானாறு, புள்ளோசை, வெயிலும், இன்பக்
     கண்கவரு முழுமதியும் யார்க்குச் சொந்தம்?
யான்என(து) என்றிருக்கும் அகந்தை அற்றால்
     இவ்வுலகில் நிலவுபொருள் பொதுவாம் யார்க்கும்!
ஏனோவிச் சுயவெண்ணத் தடிமை யானோம்?
     எல்லோர்க்கும் பொதுவுடைமை' எனவாழ்வோமே!       3
---

6. முறையோ? சொல்வீர்!

அடகெடுவாய் பலதொழிலும் இருக்கப் பள்ளி
     ஆசிரியத் தொழிலேற்றும் அறிவில் லாமல்
திடமுள போலிசாகி, டாக்ட ராகிக்
     கிம்பளங்கள் திணித்துப்பை நிறைத்தோ மில்லை!
கடன்பட்டு வரிகொடுக்க வாங்கித் தின்று
     கடன் சொல்லும் 'உசியே' வாய் ஆனோ மில்லை!
கொடுமைமிகு கோள்சொல்லிக் குனிந்து தாங்கிக்
     கும்பிட்டுச் சம்பளத்தில் உயர்ந்தோ மில்லை! 1

இருகையில் விலைபேசும் தரக ராகி
     இருநூறு முந்நூறு பெற்றோ மில்லை!
ஒருகாக கண்டதுண்டா? சீச்சீ! இந்த
     உதவாத தொழில்விட்டு நிலம ளக்கும்
கருமூங்கில் தடித்தோட்டி, சிற்றூர் வாழும்
     கர்ணம்தான் ஆனோமா? அதுவும் இல்லை!
அருந்தமிழைப் படித்ததற்கா உயர்விங் கின்றி
     ஆசிரியர் வாழ்கின்றோம்! முறையோ? சொல்வீர்!       2

வெற்றிலை தூள் பாக்குவிற்கும் படித்த பையன்
     வீடுநிலம் வாங்கிவிட்டான்! சிறுவர்க் காகக்
கற்பித்தே உடலிளைத்தோம்; நோய்வாய்ப் பட்டோம்
     கடன்கொடுக்க ஓராளும் துணிவ தில்லை!
பெற்றவள் நோய்க் குதவி செய்ய 'வா' வென்றாலோ,
     'பேசாதீர்' என்கின்றீர்! 'வறுமை' என்றால்,
கற்றளிப்போர் பெருங்கூட்டம்; உங்கட் கிங்கே
     காசில்லை' என்கின்றீர்! முறையோ? சொல்வீர்!

--
உசியே - நிலவரித் தண்டுபவர். வாவு - விடுமுறை.
---

7. தாயகம் நம்மதாமே!

எழுதெழு' தென்று சொல்லி
     என்னருந் தோழ ரெல்லாம்
எழுதாத நாளே இல்லை!
     எனைத்தூண்டும் அன்பின் வேட்கை!
உழுபவன், நாட்டில் உள்ள
     உழைப்பாளி நிலையைக் கண்டே
அழுகின்றேன்! இந்த நாட்டின்
     ஆட்சியினை மாற்ற வேண்டும்!       1

நமக்குள்ளே ஒவ்வ தில்லை!
     நல்லதை நினைப்ப தில்லை!
சுமையாக வாழு கின்றோம்!
     புத்தியோ சொந்த மில்லை!
இமையைப்போற் சொந்த நாட்டை
     இன்தமிழ் மொழியைக் காவா
நமையெலாம் எண்ணும் வேளை
     எழுதவா நாட்டம் தோன்றும்?       2

அரசியல் மேதை எல்லாம்
     அழகாகப் பேசு கின்றார்!
நரைத்தவர்க் கொடுத்தொடுத்தே
     நானூறு முறைசொன் னாலும் !
கருத்தினில் கொள்வ தில்லை!
     'கலிகாலம்' என்கின் றார்கள்!
விரிவுரை இனிமேல் வேண்டாம்!
     செயலினால் வெற்றி காண்போம்!       3

காளைகாள்! படித்த மக்காள்!
     கடமையைச் செயலிற் காட்டும்
வேளையை மறக்க வேண்டாம்!
     விரைந்தெழுந் திடுவீர்! உங்கள்
தோளினைக் குலுக்கி இன்றே
     செயற்படத் தொடங்கி விட்டால்
நாளையே அடை வோம் வெற்றி!
     தாயகம் நம்ம தாமே!       3
-----

8. வேண்டேன்!

அழகுண்டு செவ்வானில்; அடங்காக் காதல்
     அன்புண்டு சுழற்பரிதித் தோற்றந் தன்னில்:
கழைக்கையும் சுழல்விழியும் இடையும் தோளும்
     கட்டவிழுந் தாமரையிற் காட்டி யுள்ளம்
விழைநேரம் பார்த்தறிவில் அணைத்தே என்றன்
     விருப்பத்திற் கேற்றாற்போல் கவிதை பாடி
அழகொழுகத் தமிழ்பேசுங் கவிப்பெண் ணுண்டே!
     அச்சமில்லை; வேறொன்றும் வேண்டேன்; வேண்டேன்!       1

உடல்வீட்டில் அறிவுண்டாம்; உணர்வும் உண்டாம்!
     ஓங்கியெழும் இசையுண்டென் மூங்கிற் காட்டில்!
கடலலையும் இளங்காற்றும் உண்டாம் எங்கும்!
     கற்பனைக்கு மெருகிடத்தண் மதியும் உண்டாம்!
படபடக்கும் உயர்ந்தபனை யோலை யுண்டாம்!
     பாட்டிசைக்குங் குயிலுண்டாம்! இச்சை போல்.
விடுதலையில் திரிந்துவரக் காடு மேடாம்;
     விளைநிலமாம்! வேறொன்றும் வேண்டேன்; வேண்டேன்! 2

பெண்டுபிள்ளை நோய்வறுமை அடிமை கோதப்
     பேச்சுரிமை யற்றிங்குத் தமிழர் கூட்டம்
அண்டையிலே வாழ்வதை நான் கண்டேன்; கண்டேன்!
     ஆண்மையற்று வாழ்வதனால் வந்த கேடு!
வண்டைப்போல் கவித்தேனை யுண்டு, மக்கள்
     வணங்காது வாழுலகம் வேண்டும்; வேண்டும்!
பண்டைவாள் மறவனைப்போல் வாழ லன்றிப்
     பலர்நகைக்க உடல்வளர்க்க வேண்டேன்; வேண்டேன்! 3

பிறர்க்குழைக்கச் சிறுகூலி தருவார் நோயைப்
     போக்காது பெற்றியில்லை; ஆனால், என்றன்
அறம்வளர்த்த தமிழ்நாட்டிற் குழைத்தா லின்பம்
     அழியாது; பசியில்லை; அடிமை போகும்!
திறமையுட னென்கிளைகள் யாவும் கற்றுத்
     திண்ணியதோள் கன்னெஞ்ச மடைதல் வேண்டும்!
சிறகொடித்துப் பிறநாட்டார் நம்மை யாளும்
     சிச்சிச்சீ! இவ்வுலக வாழ்க்கை வேண்டேன்! 4
-----------

9. கலைப் பெண்

பூவில் நின்று புதுமைகள் செய்வாள்;
     புத்தகத்துள் எழுத்தாய்ச் சிரிப்பாள்;
ஓவியத்துள் உயிரென நிற்பாள்;
     ஓசை வீணை நரம்பில் அதிர்வாள்;
பாவி சைக்கவிக் கற்பனைக் குள்ளே
     படிந்து தண்விழி காட்டுவாள்; வானைத்
தாவுங் கோபுரத் தெங்கணும் நின்று
     தளிர்க்க ரம்பல நீட்டி யழைப்பாள்! 1

என்றும் வெண்ணிறத் தாமரை போன்றார்
     இதய மாமலர் மீது கிடப்பாள்;
மன்றி லாடும் நாட்டியப் பெண்கள்
     மலர்க்க ரம்விழி நெளிவி லிருப்பாள்;
அன்றில் நாணக் கலைகள் வளர்ப்போர்
     ஆர்வ அணைப்பினிற் சொக்கிக் கிடப்பாள்;
இன்று நம்நாட் டடிமையை வெல்லும்
     ஈட்டி முனையின் எஃகவள் தம்பி! 2

துருப்பிடித்த ஆயுத மெல்லாம்
     துடைத்து நீறு குங்குமஞ் சாத்தி
அருங்கொலு வாகக் கூடம் நிரப்பி
     அன்னை பூசை செய்யும் வழக்கால்
கருவ ழிந்தோம்; அந்நிய நாட்டார்
     கலைக ளெல்லாம் கவர்ந்தே போனார்!
உருவம் பெற்றிங்(கு) 'ஆண்நான்' என்றே
     ஊரில் வாழல் நன்றோ தம்பி? 3

புத்த கத்தை அடுக்கி அதன்மேற்
     பூநி ரப்பி மணப்பொடி தூவிக்
கத்திக் கத்தி அர்ச்சனை செய்தென்?
     கலைவ ளருமோ நாட்டினிற் சொல்வாய்?
எத்தி சையும் கலைகள் வளர்த்தே
     எண்ணில் காவியம் செய்து குவித்தே
கைத்தி றத்தினைக் காட்டிடு நாளே
     கலைம களின் நற் பூசனை நாளாம்! 4
----

10. உடைமை பொது

வான் தீ நிலம்கால் புனல்கண்டு நம்மவர்
வாழ்நாள் முதலாய் வளங்கொள் தமிழே!
சீரிய பண்பும் சிறப்பும் ஒடுக்கியே
ஆரியர் கண்டோம்; துருக்கரைக் கண்டோம்; பின்
ஆங்கில மக்களைக் கண்டோம்; விழிப்படைந்தோம்!
நாட்டிற் குடிசெய்வல் என்பதை மறந்துமுட்
பாட்டை நடந்தோம்; பலர்நகைக் காளானோம்!
பூத்தது பொற்புடன் புத்தாண்டு! வாழிய!
ஏக்கம் தவிர்க்க எழுந்தோம் காளைகள்!
போர்முரசு கொட்டிப் புரிஎடுத்(து) ஊதுவோம்!
தாயிற் சிறந்த தமிழ்நா டதனை நாம்
ஆளுவோம் எந்நாடும் அஞ்சி வியக்கவே!
வாளை புரளும் வயலின் விளைவெலாம்
தானே நனியுணும் தாத்தாக் களையெலாம்
ஓட்டுவோம்; நாட்டில் உடைமை பொதுசெய்வோம்!
வானிருந் திங்கோர் அணுக்குண்டு வீழினும்
ஆருக்கும் அஞ்சோம்என்(று) ஆள்வோர் அருகோடி
அறைக! அறைக வே!
----------

11. புலவனுக்கேன் அரசியல்?

பாட்டெழுதும் புலவனுக்கிங் கரசியலேன்?' என்றே
     பலநண்பர் என்னருகில் வந்துவந்து சொல்வார்!
கேட்டிற்கே தன்னாடு தாய்நாடு செல்லக்
     கீழான அறிவற்ற ஏழையும் வேண்டான்!
'நாட்டிற்கே ஒருகட்சி போது மெனச் சொல்லும்
     நம்மவர்கள் உண்மையிலே அறிவில்லா மக்கள்!
ஏட்டிற்கும் அரசியற்கும் தொடர்பில்லை' என்றால்,
     எந்நாடும் என்றேனும் உருப்பட்டுப் போமோ? 1

எழுத்தாலே தாய்நாட்டைத் தான்பிறந்த நாட்டை
     ஈடேற்ற முனைவதுதான் படித்தவனின் செய்கை!
பழுத்திருக்கும் முதியோரும் பெண்டீரும் தத்தம்
     பண்பட்ட தமிழகத்தைத் தாயகத்தை எண்ணின்
கொழுத்திருக்கும் செல்வனிங்குத் தலைகாட்ட மாட்டான்!
     கோபுரமும் குடிசையும் ஒன்றாகிப் போகும்!
விழித்தெழுவீர்; என் நாட்டீர்! தமிழகத்தீர் ! உங்கள்
     வெற்றியெலாம் இந்நாட்டின் தாய்நாட்டின் வெற்றி! 2

'வாழ்ந்தவர் நாம்; இந்நாளில் வகையற்றுப் போனோம்!
     மனமார என்றேனும் நீர்நினைத்த துண்டோ?
ஆழ்ந்தெண்ணி நினைத்திடுவோம்; அன்றன்றோ நம்மின்
     அறியாமை, ஆக்கத்தின் விளக்கங்கள் தோன்றும்?
சூழ்ந்திருக்கும் பகைவிலக்கித் தோள் குலுக்கி நிற்போம்!
     தூளாகும் எப்பகையும்! வெற்றிநம தாகும்!
வாழ்ந்திடுவோம்! வாழவைப்போம்! மடைமையினைச் சாய்ப் போம்!
     வரிப்புலிகாள்! தாயகத்தை நாமடைவோம்! வாரீர்! 3
---------

12. பாரதியின் நினைவு

அதிகாலை குளிர்காற்று முகத்தில் வீச,
     அயர்ச்சியெலாம் பறந்தின்பம் உடலிற் பாய் மி
தியடிமேற் கால்வைத்தேன்; இயற்கை யன்னை
     விழிக்காத நிலைகாண வெளியில் வந்தேன்!
குதுகலமாய் மரக்கிளையில் ஊஞ்ச லாடிக்
     'குக்குக்கூ' எனப்பாடிக் குயிலங் கொன்று
கதியாகும் பாரதியின் காதல் தீயில்
     கனிந்துருகி யுரைத்ததென்றன் காதோ ரத்தே 1

'அன்றொருநாள் என்னுயிரில் அவர்பு குந்தார்;
     அழியாது என்காதல் நிலைக்க' வென்றே
தன்மொழியாற் குயிற்பாட்டைப் பாடித் தந்தார்;
     தவழுதப்பெண் செவ்வாய்கள் இடைபு குந்து!
மன்னனென்ன? மக்களென்ன? யாவும் ஒன்றே!
     மடைமையெலாம் விட்டொழிப்போம்; விழிப்போம் என்றார்;
பொன்னான அவர்தமிழின் இனிமை யுண்டேன்;
     புதுமையெலாம் அவர்வாயாற் சொல்லக் கேட்டேன்! 2

“அன்னவரை உலகிற்சிலர் 'மாய்ந்தார்' என்பர்;
     அதோபார் நீ! கீழ்வானிற் பரிதி ஏறி
மன்னவரும் வருகின்றார் என்னைச் சேர!
     மாந்தர்க்குச் சென்றுரைநீ! போய்வா!" என்று
பொன்னொளியான் மெருகிடுமக் கிளையை விட்டுப்
     'பொது'க்கென்று கிளம்பிற்றுக் குயில்ப றந்தே!
என்விழிமுன் பாரதியைக் கண்டேன்; கண்டேன்!
     இன்பமடா இன்பமவர் நினைவி னாலே! 3
--------

X. வாழ்த்து

1. புத்தாண்டு

இல்லை என்பாரும், இரந்துண் போரும்
இல்லெனச் செய்வாய்! இப்புவி தன்னில்
நல்வான் பொழிவாய்! நலிவுகள் தீர்ப்பாய்!
கொல்லே றெனத்தமிழ்க் குழவிகள் வளர்ப்பாய்!
காரிருட் சிறையின் கதவுகள் திறப்பாய்! 5

ஊருயி ருண்ணும் போரினைத் தடுப்பாய்!
தமிழன் உயிராம் தமிழ்க்குடி யரசே!
அமுதைப் போற்ற ஆர்வம் அளிப்பாய்!
சொல்லிலும் செயலிலும் சுதந்தரம் அளிப்பாய்!
அல்லலை நீக்கி நல்லவை புரியும் 10

ஆற்றலும் அறிவும் ஆண்மையும் ஈவாய்!
ஏற்றமென் சாதி' எனும்மனப் பான்மை
கனவிலும் தோன்றாக் கருத்தைக் கொடுப்பாய்?
தினம் தமிழ் நாட்டின் திருப்பணிக் காகக்
கவிபல பாடிக் கதைபல சொல்லிப் 15

புவியினைத் தூண்டும் புதுமா னிடனாய்
எனைவளர்த் திடுவாய்! இல்லெனில் அழிப்பாய்!
உன்னைப் பணிவோ(டு) உன் முதல் நாளில்
கேட்ப(து)இதுவே: சிறியேன் என்னை
ஆட்கொண் டென்சொல் அருள்புது வாண்டே! 20
------

2. வெற்றி ஓங்குக!

ஒண்டவந் தூரைத் தமிழை
     உயிரைநந் தாய்மொழியைப்
பண்டை நிலைசாய்க்கப் பாராநற்
     பாவேந்தர் இன்றுவரை
உண்டென்ப துண்மை எனில்வெற்றி
     உண்டாம் உறுதியிதே!
உண்டு குமர, முழுவெற்றி!
     ஓங்குக,ஓங்குகவே!
------------

3.வாழ்க விடுதலை!

விடுதலை வாழ்க! விடுதலை வாழ்க!
உயிரின் மேலாம் விடுதலை வாழ்க!

அட்டை யைப்போல் ஆங்கி லேயன்
உறிஞ்சி வந்தான்; ஒடுக்கினான் நம்மை;
மீறிப் பேசினால் மிதித்தான்; அடித்தான்; 5

விடுதலை என்றால் விலங்கிட் டடைத்தான்;
எத்தனை பேரை ஏற்றினான் கழுவில்;
எத்தனை பேரை இருட்சிறை யடைத்தான்;
பொருளைப் பறித்தான்; புகழைப் பறித்தான்;
அந்தோ! மக்கள் அடிமையில் நலிந்தனர்! 10

தலைவர் சில்லோர் தந்நலம் விட்டு
நாட்டிற் காக நாளும் உழைத்தனர்;
உயிரைக் கொடுத்தனர் ஒருசிலர்; விரைந்தே
எழுதி எழுதி இளைத்தனர் ஓருசிலர்!
இதுபோல்,- 15

முயன்றார்; முயன்றார்; முயன்றார்! முடிவில்
அறப்பணி பூண்டோம்; அறப்போர் செய்தோம்;
அடைந்தோம் விடுதலை! ஆண்டொன் றானது!
விடுதலை வாழ்க ! விடுதலை வாழ்க!
இனிமேல், 20

வறுமை யற்று நாடு வளம்பெறக்
கைத்தொழில் வளர்ப்போம்; கழனி நீர் நிறைப்போம்;
ஏழை செல்வன் இல்லெனச் செய்வோம்;
சாதியும் மதமும் சார விடாது,
தாய்மொழி நாட்டின் தலைமொழி யாக 25
மக்கள் விருப்பமே சட்டமாய்
ஆள்வோம் நாட்டை; நாமாள் வோமே! 27
---------

4. மாணவர் மன்றம் வாழ்க!

உலகத்துக் குயிர்நாடி.
உலகத்துள் தனிப்பட்ட
ஒவ்வோர் நாட்டின்
கலகத்துக் குயிர்நாடி.
காப்புக்கும் உயிர்நாடி,
கண்கள் ஒத்த
பலகலைக்கும் உயிர்நாடி,
பண்பிற்கும் உயிர்நாடி
கல்வி கேள்வி
நிலைபெற்ற மாணவர்கள்!
மன்றத்து மாணவரே!
நினைவில் வைப்பீர்! 1

மாணவர்காள்! சென்னை நகர்
மாணவர்மன் றப்புலிகாள்!
வாழ்க! வாழ்க!
வீணாகப் போக்காதீர்
பொன்னான காலத்தை!
விரைந்து கற்பீர்!
நாணலென வளைகின்ற
புதுப்பழக்கம் நரிப்பழக்கம்
நம்ம தல்ல!
கோணலெலாம் நிமிர்த்திடுவீர்!
கொடுமையெலாம் சாய்த்திடுவீர்!
குறைத விர்ப்பீர்!      2

தென்னாட்டு மாணவர்காள்!
தீந்தமிழின் செல்வங்காள்!
சிறுத்தை காள் ! நீர்
இந்நாட்டைத் திருநாட்டை
இன்றுள்ள தமிழ்நாட்டை
எண்ணி எண்ணி
முன்னாட்டின் வழிவந்த
பொன்னாடாய்ப் புதுநாடாய்
முனைந்து நாளும்
நன்னாடாய் வளநாடாய்
நல்லறிஞர் பெருநாடாய்
ஆக்கல் வேண்டும்!      3

செந்தமிழின் இலக்கியங்காள்!
திருநாட்டுப் பெரும்படைகாள்!
மாண வர்காள்!
நொந்தலுத்த தாய்நாட்டை
நும்நாட்டைத் தமிழ்நாட்டை
உயர்த்தும் நோக்கம்
எந்தெந்த நேரத்தும்
சொல்லினிலும் செயலினிலும்
இருக்க வேண்டும்!
பந்திபந்தி யாய் எழுவீர்!
பகையெல்லாம் அற்றொழியும்!
செழிக்கும் நாடே!      4

தாய்மொழியின் தமிழ்மொழியின்
வளர்ச்சியெலாம் தாயகத்தின்
வளர்ச்சி யாகும்!
சேய்களருந் தலைக்கடனாம்
செந்தமிழைத் திருநாட்டைச்
செப்பஞ் செய்தல்!
நோய்நாடி நோய்முதலாம்
பகைநாடிப் பகைக்குமாற்று
நுணுகி ஆய்ந்து
பாய்புலிகாள்!மாணவர்காள்!
பதைபதைத்து விரைந்தெழுவீர்!
வாழ்க நீடே!      5
-------

5. மன்றம் வாழ்க!

இந்நாடும் எந்நாடும் நாட்டில் வாழும்
     எழிற்சிறுவர் எழுச்சியினால் ஏற்றம் காணும்!
தென்னாடு தாய்நாடு தமிழர் நாடு
     திக்கெட்டும் புகழ்பரப்ப வேண்டு மென்ற
பொன்னான எண்ணத்தை எண்மூ வாண்டாய்ப்
     புதுமுறையில் நாட்டிடையே புகுத்திப் போற்றி
இந்நாளும் இயலிசைகூத் தளிக்கும் 'சென்னை
     மாணவர்மன் றம்'வாழ்க வாழ்க நீடே!       1

பேச்சாலே, எழுத்தாலே, அழகு சிந்தப்
     பின்னுகின்ற கைத்தொழிலின் வளப்பத் தாலே
மூச்சாகும் அரசுரிமை மக்கள் ஆட்சி
     முடக்கின்றி நிலைத்திருக்கச் செய்யக் கூடும்!
வாய்ச்சொல்லாம் தெளிதேனாற் செயலாற் 'சென்னை
     மாணவர்மன் றம்' காக்கும்; எதிர்க்கும் மாற்றார்
வீச்செல்லாம் தூளாக்கும்; அஞ்சா நெஞ்சு
     வெற்றிப்போர்த் தமிழ்ப்படையைக் கவிக்கும்! வாழி!       2

பள்ளியிலே பயிலுகின்ற சிறுவர் நாளைப்
     பார்புகழும் சான்றோராய்த் திகழ்ந்தால், வற்றா
வெள்ளத்தால், மிகுகாற்றால், தீயால், மாற்றார்
     வெஞ்சினத்தால் எதுவரினும் முறிக்கக் கூடும்!
தள்ளாத வயதினிலும் தடியை ஊன்றித்
     தமிழுக்கும், தமைப்பெற்ற தாய்நாட்டிற்கும்
உள்ளத்தைப் பெருமுழைப்பை நல்கி மன்றம்
     ஓம்புகின்றார் மயிலைசிவ முத்து! வாழ்க!       3

தமிழுக்கே உயிர்வாழும் மக்கள் பல்லோர்
     தமையணுகிக் கருத்தோதி விளக்கம் சேர்த்துத்
தமிழுக்கே உயிர்வாழும் தம்மை யொத்த
     தமிழ்பயிற்றும் கணக்காயர் கூட்டம் கூட்டித்
தமிழ்நாட்டு மாணவர்கள் தேவைக் கேற்பத்
     தமிழ்மொழியை, இசைவளத்தை, அரிய பேச்சைத்
தமிழ்நாட்டின் உயர்வுக்கே முறையாய்த் தந்த
     தமிழ்த்தாத்தா மயிலைசிவ முத்து வாழ்க!       4

மன்றத்தின் பெருந்துணைக்குத் தாய்மார் கூட்ட
     மணிவிளக்குத் தருமாம்பாள்; உழைப்பின் மேன்மை
குன்றாத நல்லறிஞர் வல்லை; ஆன்ற
     கூர்த்தமதிக் கலைவிளக்கம் உலக நாதன்;
என்றைக்கும் சிரித்தமுகம் இனிய செஞ்சொல்
     இருப்பிடமாம் வில்வபதி; இவர்க ளோடு
நன்றாற்றும் செயல்வீரர், ஊக்கம் குன்றா
     நல்லோர்கள், உழைப்பாளர் வாழ்க! வாழ்க!       5
---------

6. மாணவர் மன்றம்

பாட்டின் வளர்ச்சி விளைவால்
     பயனால் பகுத்தறிவாம்!
வீட்டின் வளர்ச்சி அறிவால்
     விளைந்த சிறுவர்களாம்!
நாட்டின் வளர்ச்சி உயர்வு
     செழுமை அறப்பெருக்கம்!
கோட்டை வளர்ச்சி கலைபயில்
     மாணவர் கூட்டுறவே!       1

கண்டேன் அழகைக் கலைதேர்
     சிறுவர் கருத்தொளியைக்!
கண்டேன் புலவர் மயிலை
     சிவமுத்தின் கைத்திறனைக்!
கண்டேன் உடலை உயிரை
     வளர்த்த கனிதமிழை!
கண்டேன் பழந்தமிழ் வாழ்க்கையும்
     கைவரக் கண்டனனே!      2

அன்பும் அறனும் அறிவும்
     பெருக்கும் அருங்கலைகள்
இன்பச் சிறுவர் பயிலப்
     பழக இருள்கழியும்;
துன்பம் விலகும்; விலகும்
     பெரும்பகை; தூய தமிழ்க்
கென்பாய்த் தமிழக மாணவர்
     மன்றம் இயங்குகவே!       3

ஆணொடு பெண்ணும் அருங்கலை
     கற்கும் அருங்கூடம்
மாணவர் மன்றம்! தமிழைத்
     தமிழர் வளர்உலகைப்
பேணி வளர்க்கப் பெருவாழ்வை
     நாட்டப் பிறந்ததுவாம்!
காணக்கண் வேண்டும் மயிலை
     சிவமுத்தின் கைத்திறனே!       4
-----------
7. தமிழ்த்தாய் நிலையம் வாழ்க!

உலகினில் உழவர் தத்தம்
     உழைப்பினால் பசியை ஓட்டும்
தலையாய அறத்தைச் செய்து து
     தழைத்தனர்; அவர்கட் குள்ளே
விலையிலா மணிகள் வாழும்
     அரும்பார்த்த புரத்துள் வீரத்
தலையினை நிமிர்த்தி நிற்கும்
     தமிழ்த்தாயின் நிலையம்' வாழ்க!       1

மாந்தரின் மடமை யோட்ட,
     மக்களின் அறிவைத் தீட்டத்,
தீந்தமிழ் மொழியைக் காக்கச்
     சிறார்க்கெலாம் கல்வி ஈந்து,
'வேந்தர்நாம் இந்த நாட்டில்!
     வேற்றுமை வேண்டாம்!' என்றே
ஏந்தல்சேர் 'தமிழ்த்தாய் நிலையம்'
     இன்னுரை பயிலும்! வாழ்க!      2

'என்றவள் பிறந்தாள்?' என்றே
     இதுவரை அறியாத் தொன்மை,
குன்றிடா இளமை, தேனிற்
     குறைகாணும் இனிமை, வான
மன்றிலே தவழும் வட்ட
     மதிதரு தண்மை பெற்றே
நின்றனள் தமிழ்த்தாய் என்னும்
     நிலையத்துள்! வாழி! வாழி!      3

எழுந்திரு தமிழா. இன்னே!
     எத்திக்கும் உனது வன்மை
வழிந்திடக், கலையும் சொல்லும்
     வளர்த்திடு! நெஞ்சில் வீரம்
அழிந்ததோ?' என்று நம்மை
     அரும்பார்த்த புரத்துள் நின்றே
உழுவலன் பாலே ஊக்கும்
     ஓண்டமிழ்த்தாய் நிலையம்"! வாழி!      4
----

8. 'தமிழர் மன்றம்' வாழ்க!

இன்பத் தமிழை மொழியை நம்
     வாழ்வை நமதுயிரை
அன்பும் அறமும் பொலிய
     வளர்த்தார்! இடைபுகுந்த
துன்பம் தொலைக்க எழுவோம்!
     விரைவோம்! தனித் தமிழர்
மன்றம்' வளர்க! தழைக! நாம்
     வாழ்த்துவோம்! வாழ்த்துவமே!      1

இல்லை இழிவும் உயர்வும்
     பிரிவும்! இடையில் வந்த
தொல்லை இவையாம்! விழிப்போம்!
     எழுவோம்! தமிழர் மன்றம்'
நல்ல நிலையை உயர்வைச்
     சிறப்பை நமதினத்திற்(கு)
அல்லும் பகலும் அளிக்கும்!
     உழைக்கும்! நாம் வாழ்த்துவேமே!      2

எங்கே இருந்தும் வளர்ந்தும்
     செழித்தும் இளந்தமிழர்
பங்கே பெரிதாய் உயிராய்
     உடலாய் நினைத்திருக்கும்
சிங்கத் தமிழர் வழிவரு
     மன்றம் திசைகளெட்டும்
மங்காப் பெருஞ்சுடர் தண்ணொளி
     பாய்ச்சி வளர்கநீடே!      3
----------

9. அருவி

வானம் இருள் மலையிற் பிறந்தாலும்
போன இடமெங்கும் பொன் கொழிக்கும்!- ஏனற்
புனம்காக்கும் கன்னிபோற் புத்தம் புதிய
மனைகாக்கும் வற்றாத் தமிழ்!       1

பண்டை இலக்கியத்தின் பண்பைப் பழந்தமிழைக்
கொண்டுவரும் எங்கள் குளிரருவி- கெண்டை
விழிமாதர் மேன்மை விளக்கித் தமிழர்
மொழிவளர்க்கும் நாளும் முனைந்து!      2

ஆண்ட இனம்வடவர் ஆட்சிக் கடங்கியே
தோண்டி விளக்குப்போல் தோன்றுதே!- யாண்டும்
பழந்தமிழர் பண்பை அருவி விளக்கி
முழங்குமே வெற்றி முரசு!      3

இந்நாட்டுக் கொல்புலியை எங்கள் சிறுத்தைகளை
எந்நாளும் ஊக்கி இயக்குமே!-பொன்னாம்
திருவிடத்தின் செல்வத்தைத் தீந்தமிழை வாழ்வை
மருங்கிருந்து காக்கும் வலிந்து!      4

இடித்தே உரைக்கும்; இழிசெயல் நீக்கி
வடித்தெடுக்கும்; மக்கள் மனத்தைப் - பிடித்திழுத்து
நன்மை விளக்கும் அருவி நமது தமிழ்த்
தொன்மை விளக்கும் தொடர்ந்து!      5
---------

10. இரும்பு ஆம் இளைத்த உடல்!

தெற்கை வடக்கு மிதித்தாளும் செய்கையினைக்
கொற்கை அரசாண்டான் கொள்வானோ?- விற்போர்
மறவன் தமிழ்த் தம்பி'மாவளவன் வந்தான்!
நிறைவோடு வாழ்க நிலைத்து!      1

'எல்லார்க்கும் எல்லாம்' எனுங்கொள்கை நம்நாட்டில்
அல்லும் பகலும் நிலைத்திருக்கத் - தில்லைவாழ்
வில்லாளன் தம்பி விளக்கித் தரவந்தான்!
இல்லை இனிமேல் இடர்!      2

தட்டி எழுப்பித் தமிழ்காட்டி நம்மாற்றார்
கொட்டம் அடக்கிக் குதித்தெழுந்தான்-கட்டிக்
கரும்பாம் தமிழ்த்தம்பி! கருத்துரையைக் கேட்க
இரும்பாம் இளைத்த உடல்!      3
-----

11. வாழ்க்கை வாழிய!

வீட்டுக் குயர்வறன் அன்பு
     மகிழ்ச்சி விரிந்தமனம்!
நாட்டுக் குயர்வு நல் வீரம்
     வளமை நடுநிலைமை!
ஊட்டிக் குளிர்தேன் சுவைத்தமிழ்
     ஊட்டி உலகறியக்
காட்டுதல் வாழ்க்கை! தமிழ்வாழ்க்கை!
     வாழிய, வாழியவே!
--------

12. செந்தாமரை வாழ்க!

செந்தா மரையொன்று பூத்தது!
     பூத்தது தென்னிலங்கை!
செந்தா மரைவாழ்க! தீந்தமிழ்
     வாழ்க ! திசைபலவும்
செந்தா மரைமுகச் சேல்விழிக்
     கன்னியர் காளையரும்
நந்தமி ழன்னை நறுந்தமிழ்க்
     காக்கம் நவிலுகவே!      1

இன்றைய பிள்ளைகள் நாளைய
     வீரர்! இயலிசைகூத்
தொன்றிய அன்னை மொழிவளர்
     நாட்டை உயர்த்துதற்கே
பொன்றுத லில்லா உடல்வளம்
     கல்வி புதுப்புகழை
என்றும் எழுப்புக! தாயக
     நாட்டை எழுப்புகவே!       2

நலன்பல துய்த்தோம்! நமதரும்
     பங்கையிந் நல்லுலகும்
இலையெனில் ஏசும்; மனத்திடை
     யெண்ணி இயன்றளவு
பலன்பெறச் செய்க! மொழிவளம்
     போற்றுக! பண்புடைய
தலைநிமிர் வாழ்வும் வளனும்
     தருந்தமிழ் போற்றுகவே!       3
--------

13. வாழ்க தமிழன்பன்!

பிறந்தநாள் அறிய வொண்ணாப்
     பெற்றிசேர் தமிழே! உன்னை
மறந்ததால், அந்தோ! மக்கள்
     அடிமையில் வாழு கின்றார்!
திறம்பெறு தோளும், கொள்கைக்(கு)
     உயிர்விடும் உளமும் சேர்த்தே
மறத்தமிழ் உணர்வை யூட்டத்
     'தமிழன்பன்' வந்தான்! வாழி!       1

மனிதனை மனிதன் ஆளும்
     வழக்கத்தை வெட்டிச் சாய்க்கும்
தனித்தமிழ் வாளெடுத்தான்!
     தமிழ்நாட்டுக் கலையை, வாழ்வைப்
பன்மொழிச் சவுக்கால் தட்டிப்
     பண்டையர் வளத்தைச் சேர்த்தான்!
நனிபுகழ் நாட்டில் நன்கு
     'தமிழன்பன்' வாழ்க மாதோ!      2

இளையவர்க் கடக்கம் தூண்டி
     எடுத்துளம் தூய்மை தேக்கித்
தளையற்றுத் தமிழர் வாழச்
     சளைக்காதிங் குழைத்து நாணல்
முளையெயிற் றினிய சொல்லார்
     விடுதலை முழக்கம் செய்ய
வளமைக்கா வேரி யாறாய்த்
     'தமிழன்பன்' வாழ்க மாதோ!      3
-------

14. பொங்கல் வாழ்த்து

செய்யை விளைத்துச்
செங்கரும்பில் தேனேற்றி
மையைக் கிழித்து
வருங்கதிரைத் -- தையால்!
புதுப்பொங்கல் நாம் இட்டுப்
பொன்னாம் தமிழால்
குதித்தாடி வாழ்த்துரைப் போம்!
-----------
எல்லாரும் நல்லார்' என்(று)
எண்ணுவார் இன்றமிழ்
வல்ல கவிவாணி
தாசனார் - அல்லும்
பகலும் தமிழர்தம்
பண்பாடு பற்றிப்
புகலும்பாட்(டு) ஒவ்வொன்றும் பொன்!

     --- பாவேந்தர் பாரதிதாசனார்.
-------------


This file was last updated on 15 Feb 2023.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)