pm logo

கவிஞர் வாணிதாசன் எழுதிய
தீர்த்த யாத்திரை (கவிதைக் கதை)


tIrtta yAttirai (poems)
by vaNitAcan
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2023.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

தீர்த்த யாத்திரை (கவிதைக் கதை)

Source: நூல் பற்றிய விவரங்கள்
தீர்த்த யாத்திரை
(கவிதைக் கதை)
கவிஞர் வாணிதாசன்.
வள்ளுவர் பூண்ணை
137, பிராட்வே சென்னை,1
வெளியீடு: 20 முதற் பதிப்பு : பிப்பிரவரி, '59 உரிமை ஆசிரியர்க்கே
விலை ரூபா ஒன்று
அச்சிட்டோர் : ஸ்ரீநிவாஸ் பிரிண்டிங் பிரஸ் 329, தங்கசாலைத்தெரு, சென்னை-1
Jacket Printed at Neo Art Press, Madras-2
---------

முன்னுரை

'தீர்த்த யாத்திரை' கவிதைக் கதை நூல். முதற் கதையின் பெயரே நூற் பெயரும் ஆயிற்று. இதன் கண் உள்ள முதல் நான்கு கதைகள் அண்மைக் காலத்தே எழுதப்பட்டவை; இடை நான்கு கதைகள் கவிதை எழுதத் தொடங்கிய காலத்தில் எழுதப்பட்டவை ; பின் நான்கு கதைகள் இவ்ஆண்டு எழுதப்பட்டவை. இவை அனைத்தும் கவிதைத் துறையில் ஒரு புது முயற்சி ஆகும். கதைகளைப் பல கோணங்களில் அமைத்துள்ளேன். கருவிற் சில கேள்விப்பட்டவை யாய் இருக்கலாம். ஆனால், கருத்து...? கவிதை....?

இந் நூலை நன்முறையில் வெளியிட்டுதவிய என் அருமை நண்பர் வள்ளுவர் பண்ணை உரிமையாளர் உயர்திரு.ந.பழநியப்பர்க்கு நன்றி!

சேலியமேடு
1-2-59 }       வாணிதாசன்
--------

உள்ளுறை

1. தீர்த்த யாத்திரை
2. பெரிய மனிதர்கள்
3. திருடி
4. வீட்டிற் பகை
5. மன்னிப்பு
6. பேரின்பம்
7. புதுமொட்டு
8. யார் பொறுப்பு?
9. வேலையில்லாத் திண்டாட்டம்
10. வீரச் சிறுமி
11. கொலைகாரன்
12. பிள்ளைத்தாய்ச்சி
-----------

1. தீர்த்த யாத்திரை

அறநிலை வணிகன் ; அழகன்; திரண்ட
மறத்தோ ளாளன்; வாய்மையின் இருப்பு;
வருவோர்க் கெல்லாம் வழங்கும் வள்ளல்
அருங்குணத் தோன்றல்; அயலார் முகத்தில்
வாட்டங் கண்டால் வாட்ட மடைவோன்;
கேட்டதை நல்கும் பெருநிதிக் கிழவன்;

நூல்பல கற்றோன்; நுழைபுல முடையோன்;
வேலை இல்லா வேளையி லெல்லாம்
தமிழுரை கேட்கும் தன்மையன்; தமிழில்
மிகுசுவை யுடையோன்; வெல்லப் பேச்சினன்;
பலர்சொற் கேட்பதும், பழமைப் பிடிப்பும்
சிலரின் சேர்க்கையாற் ‘சிக்'கெனப் பிடித்தோன்!

பூத்த தாமரைப் பொய்கை ; இடையிடைப்
பூத்தசெவ் வல்லியின் புத்திதழ் அவளிதழ்;
வட்டத் தாமரை மலர்போல் இளமை
சொட்டும் முகத்தினள்: கொடியிடை ; பூக்காத்
தாமரை மார்பினள்; தாமரை நோக்கினள்;
காமர் விழியாள்; தாமரை மொய்க்கும்
வண்டெலாம் அவள்விழி கண்டறி யாத
முண்டகம் என்றே மொய்த்தே மாறும்;
அழகோ வியமவள்; பழகு தீந்தமிழ்
குழைந்த பேச்சினள் ; குறும்புக் காரி !

நல்லறம் பேணி இல்லறம் நடத்தினர்;
இல்லோர் இருப்போர்க் கீந்து பலநாள்
வாழ்ந்தனர்; மற்றவர் வாழ வாழ்ந்தனர்!
தாழ்விலாக் குடியில் தம்பெயர் நாட்ட
மகப்பேறில்லா மனக்குறை முளைத்தது!
முகத்தில் நீங்காக் கவலையும் மூண்டது !
மருத்துவர் வந்தார்; மருந்துதின் றோய்ந்தனர் !
'பொருத்தம் இலை'யெனப் புகன்றனர் சில்லோர்!
வருத்தம் மிகுந்தது ; வாட்டம் வளர்ந்தது!
தெருப்பூ சாரி செப்பிய தெல்லாம்
செய்தனர்; பலனிலை ! வேதனை எய்தினர்!
ஐயர் அர்ச்சனை அடிக்கடி செய்தும்
மகப்பே றில்லா வாட்டமே மிகுந்தது!
நகைத்தனர் இளைஞர் ! நரைமூ தாட்டி
ஒருத்தி, 'ஊரின் கோடியி லுள்ள
மரத்தைச் சுற்றினால் மகப்பே றுண்டாம்'
என்றனள்; செய்தனர்; என்றும்போல் இருந்தனர்!
சென்றன நாட்கள்! குறைதீர்ந்த தில்லை!

உறவினர் ஒருத்தி ஊரி லிருந்து
மறைபகல் வேளை வந்தாள்; அவளுடன்
வந்தது குழந்தை! மாணிக்கப் பொம்மை !!
நொந்தது பிள்ளையைக் கண்டதும் நெஞ்சம் !
வந்தவள், மனையி லிருந்தவ ருளத்தில்
வெந்து தணியும் வேதனை கண்டு,
'நானும் எனது கணவரும் நும்போல்
தேன்மொழிப் பிள்ளை இல்லா திருந்தோம்;

தீர்த்த யாத்திரை சென்றோம்; தென்திசை
ஆர்த்தெழு குமரி அலைகடல் மூழ்கினோம்;
கோயிலைச் சுற்றினோம்; குளங்களைச் சுற்றினோம் ;
மாயவன் அருளால் மகப்பேறடைந்தோம்;
நீயும் உனது நெடுந்தோட் கணவரும்
போய்வந்து சொல்லும்; பொய்யல ; உண்மை!
இரண்டொரு திங்கள் தங்கியிருந்து
சுருண்டெழு அலைகடற் குமரியில் மூழ்கி
இருந்தால் ஆண்டவன் அருளும் இருக்கும் !
வருந்த வேண்டா! மகப்பே றுண்டாம்!
இன்றே செல்க!' எனச்சொலிப் போனாள்.

சென்றனர் தீர்த்த யாத்திரைக் கிருவரும் !
புகைவண்டி இறங்கிப் புறப்படும் போழ்து
நகைமுகம் காட்டிமுன் வந்தான் ஒருவன்;
பேரூர் காட்டும் பிழைப்பினை யுடையோன்!
'வாரும்! ஊரினைக் காட்டுவேன்! வாரும்!
தங்கு மிடமும், உணவு விடுதியும்,
பொங்கு கடலும், கோவிலும் போவோம்!'
என்றனன் அந்த வழிகாட்டி இளைஞன்.
சென்றனர் இருவரும் அவன்திசை காட்ட!

வழிகாட்டி நல்ல அழகன் ! அவன்தன்
அழகு வறுமையால் அடிபட் டிருந்தது!
பேச்சிலே சூரன்; பிறர் நிலைக் கேற்பக்
கூச்ச மின்றிக் குழையும் போக்கினன்;
வருவோர், போவோர் மனத்தைக் கவரும்
அருமைக் குணமும், அடக்கமு முடையோன்!
இருவரும் அவனுடன் எங்கெங்கோ சென்றனர்;
இருவரும் அவன் நிலைக் கெண்ணி இரங்கினர் ;
'திரும்பும் வரையில் திசைகாட்டி யாக
இரு'மென அவனை இருவரும் பணித்தனர்!

காலை மாலை கடல்முழுக் காடியும்,
நூலணி குருக்கள் மந்திரம் நுவலக்
கோயில் புகுந்து குறைமனம் காட்டியும்,
வாயிலில் உள்ள வறியோர்க் கீந்தும்
சேய்பெற வேண்டி ஒவ்வொரு நாளும்
மாயவன் இருக்கும் கோயிலைச் சுற்றினர்!

இரண்டொரு நாளில் வழிகாட்டி மீதோ
இருவர்க்கும் நம்பிக்கை ஏற்பட்டு விட்டது!
'சொல்லிலும், செயலிலும் நல்லவ' னென்றே
சொல்லினர்; எங்குந் துணைக்கழைத் தேகினர் !

காலையில் ஒருநாள் கடல்முழுக் காடச்
சேலை எடுத்துச் சென்றாள் அவளும் !
துணைக்கு வழிகாட்டி தொடர்ந்து போனான்;
மணற்கரை இருந்தான்! மங்கை குளித்தாள்!
தேய்ந்த நிலவு தெரிந்தது கடலில்!
பாய்ந்தவள் கடலுள் மூழ்கும் பாங்கினை
எண்ணி எண்ணி ஏங்கினான் இருந்தவன் !
'வண்ணத் தாமரை மறிகடல் வந்ததோ?
வளர்மதி கடலுள் வந்து புகுந்ததோ?
குளம்வாழ் அன்னம் குதித்து வந்ததோ?'
என்றவன் மனத்துள் எண்ணி ஏங்கினான்!
கொன்ற தவள்விழி ! அழகும் கொன்றதே !!
நனைந்த மயில்போல் நங்கை கரைவர
முனைந்தாள்; கரையை மோதும் பேரலை
உருட்டிற் றவளை ; 'ஓ'வெனக் கத்தினள் !
சுருட்டும் அலையுள் வழிகாட்டி குதித்து
மங்கையை வாரி மார்போ டணைத்தே
அங்குள மணற்கரை மேட்டின்மேல் வைத்தான்!

நாணம் அவளைக் கோண லாக்கியதே!
ஆணவ அலைமேற் கோபம் எழுந்தது!
வழிகாட்டி மீது விழிகாட் டாது
சுழியும் கன்னத்தாற் சொன்னாள் நன்றி!
எண்ண அலைகள் எழுந்தன அவளிரு
கண்ணில்! நாணம் கலந்திருந் ததுவே!!
'இச்செய்தி கேட்டால் என்றன் கொழுநர்
அச்சமும், துன்பமும் அடைவார்; அதனால்
சொல்லவே வேண்டாம்; சொல்லவே வேண்டாம்!
கல்லைக் கிணற்றிற் போட்டதைப் போல
இருப்போம்!' என்றாள்; இரண்டொரு முறையே
திருப்பினாள் கண்ணை ; மெல்லச் சிரித்தாள்!
இருவர் மனத்திலும் பருவக் கோளாறு
கருகிப் புகையைக் கண்டனர்; கலங்கினர்!

அடிக்கடி கணவன் ஆலயம் சென்று
படிப்பதும், ஈசனைப் பணிவதும், நல்ல
மருந்தாம் குழவி வரந்தர வேண்டியும்
இருந்தான்! அவன்மனம் இருந்தது பக்தியில்!!

ஒவ்வொரு நாளும் ஓடிக்கொண் டிருந்தது!
பவ்வம் ஆடும் பைங்கொடி நெஞ்சில்
அணுஅணு வாக ஆசை அலைகள்
துணைவழி காட்டித் தோளில் தோய்ந்தன !
சொல்லத் தயங்கினாள்! அவனும் அவள்போற்
சொல்லத் தயங்கித் துயருற் றிருந்தனன்!

வயல்வெளி சுற்றி வந்தனர் ஒருநாள்!
கயல்கள் குட்டைக் கரையிற் பாய்ந்தன!
பச்சைக் கடல்போற் பரந்த வயல்வெளி
இச்சையைக் கிளற, இருவரும் தங்கள்
முன்னர்த் தோன்றும் தென்னந் தோப்புச்
சின்ன பாட்டையிற் செல்லத் தொடங்கினர் !
பாட்டை சென்று பசுமை தோய்ந்த
காட்டினிடையிற் கலந்து கரைந்தது!
நோக்கும் திசையெலாம் புதரின் நுனியிற்
பூக்கள் இன்பப் புதுமணம் வீசின !

கருங்குயில் தொலைவில் விருந்திசை அளித்தது !
நெருங்கிய புதரிற் சிட்டுகள் நெருங்கின !
தென்றலும் மெல்லச் சிலுசிலுத் ததுவே!
அன்றலர் பூமேல் வண்டுகள் சென்றன !
இரண்டு புறாக்கள் இணைந்து முத்திச்
சுருண்டு விழுந்துபின் இன்பம் துய்த்தன!
வழிகாட்டிக் காளையும் மங்கைநல் லாளும்
விழியை அங்கிணை புறாக்களின் மீதே
கலந்தனர்! அவரவர் கண்கள் கலந்தன!!
கலந்தனர்! இன்பக் கடல்கலந் தனரே !!

ஊருக்கு வந்த ஒன்பதாம் மாதம்
சீரார் செல்வன், சிவந்த மேனியன்
பிறந்தான்! இன்பம் பிறந்தது வாழ்வில்!
உறவினர், ஊரார் தீர்த்த யாத்திரைப்
பெருமையைப் பேசினர்! கேட்டாள்;
சிரித்தாள்! வேறென்ன செப்பு வாளே!!
-----------

2. பெரிய மனிதர்கள்

விண்ணில் தவழ்கார் வெறிக்கூத்து! மேல்வானில்
கண்ணைப் பறிக்கும் இடிமின்னல்!-வண்ண
மலர்க்காடும் தோப்பும் வளைந்து நிமிர்ந்து
நிலைமாறிக் காற்றோ டலையும்!-அலைகடலும்
'சோ'வென் றிரையும் ! தொலைவில் வருங்காற்றோ
'ஓ'வென் றெதிர் ஒலிக்கும்! ஊர்ச்சேரி-'கோ'வென்ற
போர்க்களத்தைப் போலப் பொலிவிழந்து நின்றதுவே !

ஊர்க்கோடி யாறு கரையுடைக்கும் !-நீர்கோடி
தென்னை பனையைச் செழு ஆலைக் கால்நடையைத்
தன்னோ டழைத்துத் தடம்புரண்டு- முன்னம்
வெறிகொண்ட யானைபோல் விரிந்த கடலைக்
குறிகொண்டு பாய்ந்தோடும் கூற்றைட அறிகின்ற
உள்ளத்தான் அங்கொருவன் வந்தான்! அவனோ .கார்
வெள்ளம் தடுத்து விளைவிப்போன்;-பள்ளன்;
பிறர்க்கே உழைத்திங் குழைத்துப்பின் மாயும்
கறவல் எருமைக் கழுத்தான்;-நிறத்தாற்
'கறுப்பன்' என உரைப்பர்; கள்ளம் அறியான்;
பொறுப்போ டுழைக்கும் உழவன்;-வெறுப்பிலா

நெஞ்சத்தான்; என்றாலும், நாட்டின் நிலைமையோ
பஞ்சைதான் என்றால், பதறுவோன்;-நெஞ்சில்
கொடுமை எனக்கண்டால் கூர்ந்ததனை நோக்கும்
நெடுமையும், நீள் அறிவும் வாய்த்தோன்;- படுமதிபோல்
தேய்ந்தாலும் தண்மை ஒளியைத் திருநாட்டிற்(கு)
ஈந்துதவும் நெஞ்சத் தியல்பினன்!- காய்ந்த
சருகுநிறை ஆற்றங் கரைத்தோப்பில் நெஞ்சம்
உருகி, நிலைமாறி, உடலும் -கருகி
உருண்டோடும் ஆற்றில் உயிரை இழக்க
வருவாளைக் கண்டான் கறுப்பன்;-அருகில்
மறைந்தான்; மரம்போல் மரமாகி நின்றான்!

நிறைந்த மதிபோல் முகத்தாள் - குறைந்த
மதிபோல் ஒளியிழந்து வாய்பொத்தி ஆற்றில்
குதித்துயிரை மாய்க்கத் துணிந்தாள் !-எதிரில்முன்
பாய்ந்தோடி வந்து கறுப்பன் பசுங்கொடியை
மாய்ந்திடா வண்ணம் தடுத்திட்டான்!-தேய்ந்த
நிலவொளியில் அந்த நீள்கரும்பு கண்ணீர்
'கலகலெனச் சிந்திக் கதறி,-‘உலகில்

இனிவாழ இந்த எளியவளால் ஆகா;
எனைவிடுக!" என்றிறைஞ்சிக் கெஞ்சப் - பனித்தரையில்

அன்னாளைக் கீழிருத்தி, 'அன்புமொழி பேசிப்
பன்னாள் பழக்கமிலை என்றாலும்,-என்னால்

தடுத்தாண்ட இவ்வுயிர்க்கே என்னுயிரை ஏன்றும்
கொடுத்தாண்டு கொள்வேன்; கலங்கேல்!-அடுத்த

துயரெனக்குச் சொல்'லென்று சொன்னான் கறுப்பன்!
கயல்விழியாள், "தாயில்லை; தந்தை-அயலூரில்

பண்ணையிலே கூலிப் பணிபுரிந்த தொண்டுகிழம்;
உண்ண, உடுக்க வழியில்லை ;-பண்ணை

முதலாளி வீட்டில் முழுநேர வேலைக்(கு)
உதவியாய் நான்ஏற்றுக் கொண்டேன்!-'முதலாளி

நல்லசிவ பக்தர்; நாட்டாண்மைக் காரர்; மேற்
செல்வாக் குடையோர்;;நற் றீந்தமிழில்-வல்லார்;

வறியோர் பலர்க்குதவும் வள்ளல்; அறநூல்
நெறியுரைப்போர்; நேர்மைக் குணவான்;-சிறியோர்க்குப்

பள்ளி அமைத்தோர்; நற் பண்பாளர்' என்றந்த
உள்ளூரில் வாழ்வோர் உரைப்பார்கள்!--தள்ளாத

என்தந்தை ஓர்நாள் இருமி உயிர்துறந்தார்!
முன்வந்தார் பண்ணை முதலாளி!-'உன்தந்தை

செத்தார்;உலகில் உயிர்வாழ்வோர் யாவருமே
இத்தரையிற் சாவா திருப்பதில்லை;-சித்தம்

கலங்கா திரு;உன்னை நான்காப்பேன்' என்றார்!
இலங்குலகில் யாருமற்ற ஏழை- கலங்காற்றில்

தத்தளிக்கு மாப்போலத் தத்தளித்தேன்! பண்ணையார்
நித்தம் அழைப்பார்; நிலைகேட்பார்; புத்தம்

புதிய கருத்தோதிப் புன்முறுவல் காட்டி,
"விதியின் விளையாட்டே!" என்பார்!- அதிவிரைவில்

தந்தை பிரிவை மறந்தேன்; இருந்தாலும்,
இந்த உலகினிலே யாரெனக்கு ?-சிந்தித்தேன்!

நாட்கள் பலசெல்ல, நாடோறும் பண்ணையார்
வேட்கை விழியின் விளையாட்டைடவாட்கண்

உணராமல் இல்லை! உணர்ந்தென்ன செய்வேன்?
பணமோடிப் பாதாளம் பாயும்!-குணவான்,

அடுக்களையில் ஓர்நாள் அயர்ந்துறங்கும் போது
படுத்தணைத்(து) என்னைப் பசப்பிக்-கெடுத்தானே!

யாரிடத்திற் போய்ச்சொல்வேன் ? யாரென்னை நம்புவார்?
ஊரின் நிலைமை உணர்ந்தேன்!-ஊரிற்

கதவில்லா வீடுநான்! காப்பில்லாத் தோப்பு!
முதலிரவு போலென்றும் வந்தான்;-விதவிதமாய்ப்

பேசி மயக்கிப் 'பிரியேன்' எனச்சொல்லிக்
காசும் பணமும் கொடுத்தே-ஊசற்

குழம்பாக்கி விட்டுக் குடிகெடுத்தே என்னைப்
பழம்பாயாய் ஆக்கிப் பலர்முன்-தொழுவினிலே

இட்டுத் 'திருடி'ப் பெயரிட்டு வெளித்துரத்தி
விட்டான்! விழித்தேன்நான்! தாயாக்கப்-பட்ட

செயலை நான் யார்முன்னம் செப்புவது? செப்பின்,
அயலாரும் ஒப்புவரோ? ஏழை—பெயற்பெருக்கில்
வீழ்ந்திறந்து சாவதல்லால், வேறமைதி உண்டாமோ?
வாழ்ந்திருக்க என்ன வழியுண்டாம்?-வீழ்ந்திறக்க
விட்டுவிடு!" என்றாள்; மெல்ல எழுந்திருந்தாள்!

எட்டிக் கறுப்பன் இடைமறித்தான்:-'மொட்டுப்போற்
பல்வரிசைப் பெண்ணே! பதறாதே! உன்னுடைய
தொல்லை உணர்ந்தேன்; துயர்துடைப்பேன்;-கொல்லைத்
தினையுண்டு நாமுண்ணச்; சின்ன குடிசை
மனையுண்டு வாழ மகிழ்ந்தே ;- புனையாத
ஓவியமாம் மக்கள் பலருண்டு ; செந்தமிழின்
காவியமாம் என்மனைவி காண்பாய்நீ;-தாவி
வருங்குழந்தை உன்வயிற்றில் வந்து பிறந்தாற்
பெருகுமின்பம்! வேறென்ன வேண்டும்?-இருவீட்டில்!

என்றன் மகள்போல், இருவிழிபோல் நானுன்னை
இன்றுமுதற் காப்பேன்; எழு!' என்றான்.- அன்றே

கறுப்பன் அழைத்துவர, இல்லக் கிழத்தி
பொறுப்பாய் வினவிப் புழுங்கி,-வெறுப்பின்றி,

வந்தவளை 'வா'வென்றாள்; வாழ்த்திமனம் கூசாது
சொந்த மகள்போல் அரவணைத்தாள்;-இந்த

உலகத்தில் ஏழையே உள்ளத்தில் தூய்மை
பலவும் நிறைந்தோர்; பகையைத் - தலைதெறிக்க

ஓட்டும் இயல்புடையோர் ; ஊரில் இவரின்றேல்
ஈட்டும் பொருளில்லை ; வாழ்வில்லை;-நாட்டில்

பொருளைத் தமதாக்கிப் பொய்யுரைத்தே ஏய்க்கும்
திருடராம் செல்வரும் இல்லை !-குருடான

இவ்வுலகம் ஓர்நாள் எழுச்சிபெறப் போவதுண்மை
அவ்வுலகம் காண்போம்! அழாதிருநீ!- நவ்வி

இளங்கன்றே! என்னோ டிரு' வென்றாள்! வந்தாள்
உளங்களித் தொப்பினாள்! சின்னாள்--குளங்கள்,

வயல்வெளிகள், வாய்க்கால், மலர்க்காடும் தோப்பும்
பெயலாற் பெரிதும் தழைத்துப் - பயன்பலவும்
தந்துவர, வந்தாள் மகவொன்று தந்தாளே !

சொந்த மகவால் துயர்மறந்தாள்!- முந்தை
மனக்கசப்பு மூடு பனிபோல் மறைய
இனிக்கும் மொழிபேசி ஈன்ற தனக்குரிய
பிள்ளையைப் பேணி வருநாளில், கைப்பிள்ளை
வெள்ளைச் சிரிப்பால் வெறியேற்ற உள்ளத்தில்
இன்பம் பெருக இருந்துவந்தாள் ! அவ்வூரின்
துன்பம் விலக்கும் குறியோடு- 'நன்மை

நிலையம்' எனும்பெயரில் மேலோர் பலரும்
நிலையாகக் கண்டார் விடுதி ! -'மலர்க்கரையின்
ஓரத்தில்,மாந்தோப்பில் ஊருக் குழைத்துவரும்
சீரார் விடுதி யெனச் செப்புவர்,- ஊரிற்
படித்த பெரும்புலவர்; பண்பட்ட நெஞ்சர்;
தடித்த உருவினர்; மேலோர்;- எடுத்து
விளக்கும் அறிவினர்; 'மேதையாம் காந்தி
வளர்த்த அறநெறியை என்றும் - உளத்திற்
சிறிதும் நழுவாத செம்மலாம்' என்றே
உறுதியாய் மக்கள் உரைப்பர்!- நெறியில்
தவறாதார் என்றந்த நன்மை நிலையம்
அவரைத் தலைவராய் ஆக்கச்-சுவரில்
முளைத்த மரம்போல் முழுஉரிமை யோடு
வளர்த்தார் நிலையத்தை; மக்கள்-உளத்திற்
குடிகொண்டார்; ஓங்கு புகழ்கொண்டார்! அன்னோர்
அடிபற்றி மக்கள் நடக்க-நெடுநாள்
நன்மை நிலையந் தனிற்சென்று நாடோறும்
புன்மை களையப் புகுந்தனர் !--மின்னல்

இடையாள், கறுப்பன் இட்டுவந்த பெண்ணாள்
தடையின்றி நன்மை நிலையம் - இடையிடையே
சென்றாள் நிலையத்திற் செப்பும் அறவழியில்
நின்றாள்; நெறியுரைக்கக் கேட்டுவந்தாள்! - அன்றோர் நாள்
நன்மை நிலையத்து நற்றலைவர் அங்குவந்த
அன்பர்க் கறிவை விளக்கிப்பின்-'என்மகளே!
பின்செல்வாய்! உன்னிடத்திற் பேசப் பலசெய்தி
இன்றுண்டு! நில்'லென் றெழுந்துசென்றார்! - மின்னிடையாள்
ஒன்றும் புரியா தொதுங்கி யிருந்தாளே!

சென்றார் பலரும் ; தெருக்கதவு - நன்றாகத்
தாழிட்ட பின்னர்த் தலைவர் வரலானார்:
'ஏழை மகளே ! என் சொற்கேள் !--வாழ
வகைசெய்வேன் காண் நீ ! வழிசொல்வேன்!' என்று
நகைசெய் தருகில் நகர,-வகையின்
வழிகண்ட பெண்ணாள் மனம் நொந்து தப்ப
விழிநீர் கலங்கி வெதும்பிப்- 'பழிகாரா!

நன்மை நிலையத்தின் நன்மை இதுதானா ?
சொன்ன அறவிளக்கத் தூய்மையின்-தன்மை
இதுவோ? பெரிய மனிதர் இயல்போ?
பொதுவாகப் புன்மையின் ஊற்றாம் - கதவைத்
திறந்துவிடு! இன்றேல் செயல்வேறாம்!' என்றாள்
'மறந்துவிடு ! தப்ப வழியோ ?- மறந்துவிடு! செ
ல்வப் பெருக்கம், நற் சிங்கார வாழ்வு,சுகம்
எல்லாம் உனக்கே!' எனத்தாவி- மெல்லியளை
எட்டி அணைக்க எழுந்தானே! நீளிரும்புச்
சட்டம் கிடந்த(து) ! அதைத் தாவினாள்;-எட்டி

வருவான் தலைமேல் மனங்கொண்ட மட்டும்
பெரும் போடு போ'டென்று போட்டாள்;-தெருக்கதவைத்
தாழ்நீக்கி ஓடிக் கறுப்பன் மனைவந்து
வீழ்ந்தாள்; நிலைமை விளக்கினாள்!- சூழ்ந்த
இருட்டிற் கொலைச்செய்தி எங்கும் பரவிக்
கருகிப் புகைந்தது காண!
-----------

3. திருடி

தீப்பொறிக் கொண்டைச் சேவல் எழுந்து
வாய்ப்பறை கொட்டி வருகதிர் வாழ்த்தும்;
திங்கள் மங்கும்; சிறுசுடர் வீசும்;
எங்கோ ஒருநாய் சங்கொலி எழுப்பும்;
தெருநாய் குரைக்கும்; செழுங்கடல் ஆர்க்கும்;
வெள்ளி கிழக்கில் துள்ளி உயரும்;
அழும்பிள் ளைக்கோ அன்னைதா லாட்டச்
செழும்புன லோடை சிறுமுழ வார்க்கும் ;
ஆயர் மத்தால் தோய்தயிர் கடைய
விழித்த கிழங்கள் வெற்றிலை இடிக்கும்;
முல்லை நுணாவும் கொல்லை நொச்சியும்
'சில்'லென் காற்றொடு நன்மணம் தேக்கும் ;
புள்ளின் இசையொடு சில்வண் டார்க்கும்
கவின்மிகு விடியற் காலை கண்டான்!

படித்த உழவன்; படர்ந்த தோளான்;
நடுத்தர உயரம்; நகைதவழ் முகத்தான்;
ஏழைக் குதவும் இயல்பினன்; காளை ;
"இனியன்' அவன்பெயர்; இனியன் எவர்க்கும் ;
கனிமொழி யாளன்; கண்ணுக் கினியன்!
தன்னுடன் பயின்ற தோழன் பொன்னொளி
காலை வருவதாய்'க் கடிதம் கிடைக்கப்
புகைவண்டி நிலையம் போக எழுந்தான்!

தென்னஞ் சாலையும், சிறுசெடிப் பூவும்,
முன்னர்ப் பரந்த செந்நெல் வயலும்,
மூடு பனியும், வாடைக் காற்றும்,
மூடிய மதகிடை ஓடிய நீரும்,
நீண்ட பனையும், நெடுமரக் காடும்
கண்டும், கண்கள் காணா னாகித்
தோழன் நினைவில் தோய்ந்து நடந்தான்!

இருவரும் பள்ளியில் இணைந்து பயின்றவர்
பட்டினம் விட்டும், படிப்பை முடித்தும்
எட்டாண் டாயின ; எனினும், இனியன்
கண்முன் கழிந்த கல்லூரி நாட்கள்
நிகழ்ச்சிஒவ் வொன்றும் நினைவில் இருந்தது!
விரிவுரை யாளர் தமிழ்க்கவி விளக்கிச்
சிரித்ததும், பொன்னன் திகைத்ததும் இன்றும்
விரித்த படம்போல் விழிமுன் தோன்றும்!

நேரம் இருப்பினும், தூரம் குறையினும்
"புகைவண்டி நிலையம் போகும் கால்கள்
விரைந்தே செல்லல் மெய்'யெனக் கண்டான்!
நீள்மரத் திடையில், நெடுவழிக் கோடியில்
புகைவண்டி நிலையம் பொலிவுட னிருந்தது!

பசுமை தோய்ந்த பழமரக் காட்டில்
விசும்பிடை எழுந்தது விடியற் பரிதி!

வந்தவர் அனைவரும் வண்டி வருதிசை
சிந்தையைச் செலுத்தினர்; திரண்ட கும்பலில்
கைப்பொருள், படுக்கை, மெய்ப்பொருள், அணிகள்
அவ்வப் போதும் அவரவர் காத்தனர்;

செய்தித் தாளைச், சிறுபொருட் கூடையை
எய்தினர்; பாய்ந்தே இரைந்தனர் கும்பலில் !
தொங்கிய மணியும் 'தூரத் திருப்போர்
இங்கே வருக!' எனவொலித் தழைத்தது!

தொடுவான் மருங்கில் தோன்றிய புள்ளி
நெடுவான் மருங்கே நிமிர்ந்து வளர்ந்தே
புகையைக் கக்கும் எரிமலை போர்க்களப்
பகையை விரட்டிப் பாய்வதைப் போல
வரவர வளர்ந்து வானிடைப் புகுந்து
பெரும்புகை கக்கிப் பேரொலி எழுப்பி
வண்டி வந்தது! வந்தது கும்பல் !

இனியன் விழியோ இழிவோர் யாரையும்
கனிவுடன் பார்த்தே களைத்துச் சோர்ந்தது!
தோளைப் பிடித்தே துடுக்காய்க் குலுக்கும்
ஆளைப் பார்த்ததும், அந்த விழிகள்
வானொளி பெற்றன ; வாழ்த்தின ! வந்தோன்
தோளோடு இனியன் தோள்பின் னியதே!

ஆய்தப் புள்ளிபோல் அமைந்த அடுப்பிற்
காய்பால் காத்தே இனியன் தாயார்
வாயில் நின்று வழிபார்த் திருந்தார்;
செந்தமிழ் வரவு செப்பி மகிழ்ந்தார்;
சிற்றுணாப் படைத்தார் ; தேநீர் கொடுத்தார்;
சுற்றம் நட்புச் சூழ்நிலை கேட்டார்;
பொன்னொளி அருகிற் பொறுப்புடன் வந்தே,
"என்ன சொன்னாலும் என்மகன் ஏனோ
கன்னி கழியும் கவலையில் இல்லை!
என்னால் எப்படி இனியும் ஆகும்?

என்றே கதையின் எடுப்பை எடுத்தார்;
'சின்ன வயதில், தெரியா உலகில்
நடந்ததை எவரும் நம்பியா வாழ்வார்?
அத்தை மகள் தான் ! அதற்கோ இல்லச்
சொத்தையும் புகழையும் துறந்திடக் கூடும்?
வறுமையால் திருடிய மலர்விழிக் கன்னியை
மறுபடி நினைத்தல் மடமை ; இழிவாம்!
அருமை இனியனுக் கறிவே இல்லை!
‘திருமணம்' என்றால், செவியைப் பொத்துவான்!
ஒருபதில் இல்லை ! ஒருமகன் எனக்கே !
வந்தவன் நீயே வழிசெய வேண்டும்!
நொந்த தாயின் நோயைப் போக்க,
இடித்துரை தம்பி எம்குடி வாழ! !
படித்தவன் நீயும்; அவனும் படித்தவன்!
மற்றவர் போல வாழவேண் டாமோ?
பெற்ற வயிற்றிற் பேரிடி தேக்கி,
'வேண்டாம்' என்றே வெறுத்துரைக் கின்றான் !
ஆண்டியா நாமெலாம்? அப்பன் சொத்து,
வேண்டிய நன்செய், விளைபுலம் இருந்தும்
ஒண்டியாய் வாழ்தல் உயர்வோ ? சொல்லேன்!
'நொண்டியோ, குருடோ நூலிடை யொருத்தியைக்
கொண்டு, பலபொருள் கொண்டு வாழ்தல்'
பண்டை மரபு ; பழந்தமிழ் வழக்கம்!
பணத்தில் மிகுந்த பாவையர் பலரும்,
குணத்திற் சிறந்த கொடியிடை பலரும்,
அழகிற் சிறந்த அணங்குகள் பலரும்,
வழவழப் பான மங்கையர் பலரும்
காத்துக் கிடந்தும், கவலையே இன்றி
மூத்துக் கிடக்கும் என்னையே நம்பித்

'திருமண' மென்றாற், சீறிப்பாய் கின்றான்!
கல்லால் அடித்த கட்டையா என்னுடல்?
சொல்லேன் தம்பி ! நீயவன் தோழன்!
அல்லும் பகலும் அவனது நினைவால்
செல்லா தென்னுயிர் திரிகிற" தென்றே
இனியன் தாயார் எடுத்துரைத் திட்டார்!

இனியன் இதழில் இரண்டொரு தடவை
சிரிப்பின் கீறல் தெரிந்து மறைந்ததே!

உண்ட இருவரும் அண்டை யறையில்
பண்டைய கல்லூரிப் படுக்கை யறைபோல்
பேசிச் சிரித்தே பிதற்றிட லானார் !
அன்னை சொன்ன அறிவுரை யெல்லாம்
பொன்னொளி அறிவில் புதுமை தேக்க,
“என்ன ஆயினும் அன்னை அன்னையே!
தன்னிக ரில்லாத் தமிழே தாயாம்!'
என்று பேச்சை எடுக்கத் தொடங்கினான்!

"தோழா! உன்னிடம் சொல்லவே இருந்தேன்!
ஏழை அத்தை இனிய மகளவள்:
இளமை முதலே என்னோ டிருந்தவள்;
சிற்றூர்ப் பள்ளியிற் கற்றநாள் தொடங்கிப்
பழகி வளர்ந்த பறவைகள் நாங்கள்;
அழகுக் கேற்ற அருங்குண முடையாள்;
கோடை விடுமுறை குளக்கரை யோரம்
ஓடுவோம்; ஆடுவோம்; ஒளிப்புனல் நீந்துவோம்;

பூத்த காட்டுப் புதரிடைப் புகுந்து
மலரைப் பறித்து மாலையாய்க் கட்டிக்
கழுத்தி லிட்டுக் 'கடிமணம்' என்று
சொன்னேன்; சிரித்தே என்மேற் சாய்ந்தாள்;
வளர்ந்தோம்; எம்மிடை வளர்ந்தது காதல்!
கல்லூரி சென்று கற்கத் தொடங்குமுன்
பருவ மடையும் பக்குவ மான
பெரிய மொக்காய்ப் பேரெழில் ஊற்றாய்
இருந்தாள்; சொல்லிப் பிரிந்தேன்; அன்று
நீர்வழி கண்ணை நிமிர்த்திப் பார்த்தாள்;
உள்ளத் துயரை ஒள்விழி காட்ட,
'அஞ்சேல்!' என்றுநான் அவளை அணைத்தேன்;
"காட்டு மலர்க்கு நீட்டிய கழுத்து
நாட்டெம் மலர்க்கும் நீட்டா தத்தான்!
மறந்தால் வாழேன்; வாழேன்!' என்றாள்!

"படித்து வந்தேன்; பல்கலை கற்றேன்;
அடுத்த திருமண ஆசையால் ஊர்வர
அத்தையும், அருமை அத்தை மகளும்
கைத்தொழில் நம்பிக் காலங் கடத்தி
வறுமைப் பிடியால் வாழ வருந்திப்
பஞ்சம் தவிர்க்கப் பட்டினம்சென் றாராம்!
அங்கோர் வீட்டில் வேலைக் கமர்ந்து
வயிற்றைக் கழுவி வருகின்ற நாளில்
வீட்டுப் பிள்ளை வெளியூ ரிருந்து
படிப்பை முடித்துப் பட்டமும் பெற்று
வந்து சேர்ந்தான் சொந்த வீட்டிற்கே!

அழகு, பெண்ணை அழிக்கும் பெருந்தீ !
அதிலும் ஏழையின் அழகுப் பெருக்கோ
உடலுடன் பிறந்த ஒப்பிலாத் தொழுநோய்
செல்வச் செருக்கில் திரியும் காளையர்
கண்வழிப் பட்ட கன்னியர் மீளல்
அரிதே தோழா! அரிதே யாகும் !

"வீட்டுக் காளை வெறித்துப் பார்த்து,
மெல்லச் சிரித்து, மிடுக்காய் நடந்தே
இனிமையாய்ப் பேசியும், கனிவாய்ப் பார்த்தும்,
நெருங்கும் போது நெடுமூச் செறிந்தும்,
இரண்டு பொருள்பட ஏதோ உளறியும்
பார்க்கும் பாங்கின் பண்பை உணர்ந்தே
ஒதுங்கி வந்தாள் ; ஒருநாள் இரவு
பதுங்கி அவளின் படுக்கை அறையில்
நுழைத்தான் காளை ; அறைந்தாள் அவளும்;
திருடி! திருடி'எனத் திரித்துக் கதையை
அருகி லிருக்குஞ் சாவடி அடைத்தான்!
ஏழையின் சொல்லை எவரே கேட்பர்?
நங்கை சிறைப்பட நற்றாய் செத்தாள்!

"சூதாற் பழியைச் சுமத்தும் எவரும்
தீதே வாழ்தல்! தீமையில் தீமை!
படித்தவன் பண்பிப் பண்பா தோழா?
பார்த்தாற் கொன்று பழியைத் தீர்க்கக்
காத்துனேன் என்றும்! காலம் வரட்டும்!'
என்றே கன்னியின் எழிற்படம் தூக்கிப்
பொன்னொளி கையிற் பொருத்தினான் இனியன்

பொருத்தலும்,

கதைகேட் டிருந்த பொன்னொளி கைகள்
நடுங்க, உடலும் நடுங்க எழுந்தே
கண்ணீர் சிந்தக் காலில் விழுந்து,

'தோழா! அந்தச் சுயநலக் காரன்
நானே ஆவேன்! நானே ஆவேன்!"
என்றே இனியன் காலைப்
பிடித்துப் புலம்பிப் பேச்சற் றானே!
------------

4. வீட்டிற் பகை

ஏரிநீர் இல்லை! இருண்ட மலை நிறைந்த
ஊரின் ஒதுக்கில் உயர்ந்த மலைச்சாரல்
இழிந்துவரு ஓடை இடைமறித்துத் தேக்கி,
வழிந்து வருநீரை வாய்க்கால் வழிப்படுத்தி,
நன்செய் பயிர்செய்து நற்குடிசை ஓம்பியும்,
புன்செய் விளைத்துப் புறந்தந்தார் போற்றியும்
வாழ்ந்து வருமேழை, வயலைப் பலநாளாய்
மேய்ந்துபா ழாக்கும் எருமை பிடிக்க
இரவில் தனியே எழுந்திருந்து போனான்;

அரவுவாழ் புற்றும், அடர்ந்த புதரும்
நிறைமனத்தைச் சற்று நிலைகுலைக்க, வானில்
மறைநிலவு கண்டான்; மனஞ்சோர்ந்தான்; என்றாலும்,
வாடிக்கை யொற்றை வழிப்பாட்டை கைக்கோலால்
தேடி நடந்தான்; செறிந்த மலைக்காட்டில்
மூடி யிருந்த முகிலைக் கொடுங்காற்று
சாடிக் கலைக்கத், தலைமேல் திரண்ட
கருமேகக் கூட்டம் பரந்து கவிழ்ந்தே
உரும, விழியைப் பறிக்க ஒளிமின்னப்
பாசி நனிபடர்ந்த பாழ்குட்டை ஓரத்தே
வீசுங்கொடுங்காற்றில் மெய்பொத்தி நின்றிருந்தான்!

'ஐயையோ!' என்றே அலறும் பெருங்கூச்சல்
மைபோர்த்த குன்றின் மருங்கும் எதிரொலிக்கச்
செய்வ தறியான் திகைத்தான் சிறுநேரம் ;
கைத்தடியைக் கீழூன்றிக் காலால் இடமறிந்தான்;
ஓடினான்; நீள்குன்ற ஓரத்துக் குட்டையிலே
ஆடி யலையும் அழகுக் கொடிபோலக்
கன்னிப் பருவத்துக் கட்டழகி ஓர்நல்லாள்
சென்னிவரை மூழ்கித் திணறும் ஒலிகேட்டான்;
பாய்ந்து குதித்தோடிப் பாவை உயிர்மீட்டான்;
காய்ந்த சருகாற் கடுங்குளிரைப் போக்கினான்

வெள்ளி யெழும்ப, விடியல் தொடரப்,
புள்ளிக் குயில்கூவப், பூக்கள் தளையவிழத்,
தென்றல் தவழச், சிறுபுட்கள் தாலாட்டக்,
குன்றத்து மெல்லருவி கொட்டு முழவார்க்க,
மேல்வான் இரு நழுவ, விண்மீன் ஒளியிழப்ப
மாலூட்டும் கீழ்வான் மருங்கெல்லாம் செவ்வரிகள்
இட்டு மெருகேற்றி இல்லாத வண்ணமெலாம்
பட்டெரிக்கும் வானப் பரிதி இளஞ்சுடரிற்
பெண்ணாள் முகமாம் பெரும்பொய்கைத் தாமரையைக்
கண்ணாற் சுவைத்திருந்தான்! கன்னியும் கண்விழித்தாள்

தோகை யடிபட்டுச் சோர்ந்து கிடப்பதைப்போல்
தோகை படுத்திருந்தாள்; சோர்ந்த இருவிழிகள்
மாலை மலர்போல் வளமற் றிருந்தனவே!
மாலை இழந்தமுகம் காலை வருமதியாம்!
தாய்மை நிலையைச் சரிந்த இடைகாட்ட
வாய்திறந்தே, 'என்னை மாளவிடு' மென்றாள்;
தேம்பி யழுதாள் ; திசையெல்லாம் நோக்கினாள்?

கூம்பும் பருவத்துக் கொக்கொத் திருந்தவன்,
'என்ன துயரோ?எடுத்துரைக்க வேண்டு'மென்றான்!
'கன்னி கதைகேட்டாற் காரி உமிழ்வார்!
அருகிருக்கும் சிற்றூர்க் கருகிலுள்ள பேரூர்
மருங்கிற் பலநாளாய் வாழ்ந்த பெருங்குடியில்
தோன்றினேன்; என்னோடு தோன்றினார் மூவராம்:
மான்போல் இருதங்கை; மற்றொருவன் தம்பி!
புறந்தந்த என்னன்னை போற்றி வளர்த்தே
அறந்தந்த ஐயன் கனிந்த பழங்கள்!

'எதிர்வீட்டுச் சன்ன லிடையில் ஒருநாள்
கதிர்காலை கண்டதுபோற் கண்டு மகிழ்ந்தேன்;
புதியவர் ஊருக்குப்; பொற்புடைய தோளர்;
மதுமொழியர்; மாத்தமிழ் வல்லார்; இசைவல்லார்;
கண்ணுக் கினியர் ; கறுப்பழகர் ; யாழோடு
பண்ணமைத்துப் பாடுவார்! பாய்ந்து வருமிசையிற்
சொக்கித் திளைத்ததுண்டு; தோள ழகு கண்டதுண்டு!
பக்கத்திற் பள்ளிப் பணியேற்று மாணவர்க்கே
தீந்தமிழை ஓதும் செழுங்குணத்துச் செம்மலாம்!
ஆய்ந்துரைக்கும் ஆற்றல் அறிவுச் சுடராம்!
இலக்கியத்தின் மேதை! எழிற்கலையின் ஊற்று!
பலர்புகழும் பண்பினர்! பாப்புனையும் பாவலர்!

'தென்றல் சிலிர்க்கும் சிறுகாலை ஆற்றோரம்
நின்றிருந்தார்; நானங்கே நீர்மொள்ளச் சென்றேன்!
"நிறையழி கொல்யானை நீர்க்குவிட்(டு) 'ஆங்குப்
பறையறைந் தல்லது செல்லற்க' என்னா
இறையே தவறுடை யான்" என என்னைக்
குறைகூறி நெஞ்சக் குறிப்பை உணர்த்தினார் !
ஒன்று மறியாள்போல் ஓரக்கண் ணாற்பார்த்துச்
சென்றேன்; எனதுமனம் சென்ற தவரூடே!

வீட்டிலோ அன்னை விடியும் வரைஎன்றும்
தீட்டாத அம்பொத்த சின்ன விழியைப்
பொலிவாக்கி வந்த புதுவேல்போற் காட்டி
நலிவாக்கி வந்தாள்! நறும்பூ வருவண்டை
'வா'வெனச் செப்பல் வழக்கமோ ? மற்றதனைப்
'போ'வெனச் செப்பிடப் போமோ? இயற்கை!

நெளிந்தோடும் ஆற்றின் நெடுங்கரையில், தோப்பிற்,
குளிக்கும் துறையிற் குளிர்நீழற் காவில்
தொடர்ந்து வரலானார்; தோகைஎன் நெஞ்சிற்
படர்ந்துவரும் காதற் பண்பை அறிந்தே
நிலவொளியில் தோட்டத்தில் நின்றிருக்கும் போழ்து
சிலைவிழியைப் பொத்தினார்; "செந்தேன் அடையே!
கலையாத ஓவியமே! காட்சி விருந்தே!
அலைமோதும் பேரூர் அழகுக் கடற்கரையே!
வாழ வழிவகுப்போம்; நீ இன்றேல் என்வாழ்க்கை
பாழாகும்; பண்பில்லாப் பாட்டாகும்!" என்றே
அணைத்து மகிழ்ந்தார்; "அடிக்கடி எங்கள்
இணைப்பு வளர இரவில் மரத்தடியில்
வேய்வாழ் மலையில் விளையாட வேண்டு" மெனப்
பாய்ந்தார்! தடுத்தேன்; "பதறதீர்!" என்றுரைத்தேன
“ஊரார் அறிய ஒளிவளையைக் கைப்பிடிக்கும்
சீரார் திருமணம் செய்தான பின்னரும்
சும்மா இருப்போமோ? தோட்டக் கனியன்றோ
அம்மா வருமோசை! ஆகட்டும் நாளை!"
எனச்சொல்லிப் பன்னாள் இடை போக்கி வந்தேன்;
தினமும், "உனையன்றி வேறார் உளர்?" என்றே
கொஞ்சி,மனம் குழப்பிக் கூறாது கூறியே
கெஞ்சி யிருந்தும் கிடைக்காத வேட்கையாற்
பாய்ந்து புலிபோலப் பண்பைக் கெடுத்தானே !
தாயாகி விட்ட தகையுரைத்தேன்; அன்றுமுதற்
போக்கெல்லாம் மாறிப் புதிய மனிதரின்
நோக்குப்போல் என்னையும் நோக்கி வரலானார் !

எத்தனையோ கெஞ்சியும் என்றன் குறைநீக்க
ஒத்துவர வில்லையவர்; செத்து வரலானேன்!
திங்கள் இருமூன்றாய்ச் செய்தி கிடைக்கவில்லை!
எங்கு மறைந்தானோ? யாருண் டெனக்குரைக்க?
அன்னை யறியாத சூலுண்டோ? அன்னையும்
என்னைக் குரைக்க இடிவிழுந்த கோட்டைபோல்
தற்கொலைக்கே ஆளானார் ! தாயாரோ சுட்டெரித்தார்!
ஆ நிற்க நிழலில்லை! நீரன்றி ஊரெதற்கு?

"மாலாம் இருதங்கை தம்பியும் வாழ, இல்
வேலாய் இருக்க விரும்பாது சாகத்
துணிந்தேன்!' எனத்துயரம் சொல்லி எழுந்தாள்!
மணிப்புறவு போலெழுந்த மங்கை வழிமறித்து,
வீட்டிற்குச் செல்வோம் ! உயிரை விழலாக்கல்
நாட்டிற்கே என்னாம்? நட!' என்றான்; பின்தொடர்ந்தாள்

பாட்டை நெடுமரத்துப் பச்சைப் பசுங்காட்டுக்
கூட்டுக் குயில்கள் குரல்கொடுக்கப், பூமணக்கக்
காளை நடந்தான்; கருத்தே தொடர்வாள்வாழ்
நாளை நினைத்தே நலிய மனம்வருந்தி,
'இல்லுக்கா கட்டும் ! இதிலென்ன தப்(பு) ?' என்றே
சொல்லாம லெண்ணித் துணிந்து வரலானான் ;
'கற்றோரும் காட்டெருமை போல்வரே போலும் 'எனப்
பெற்றோர்பால் வந்தான்; பெருந்துயரைக் கூறினான்;
சுற்றத்தைச், சூழ்நிலையைச் சொல்லி வருந்தினான்
பற்றியதே வீட்டிற் பகை!
--------------

5. மன்னிப்பு

நடுநிசியில் அவன்வந்தான்; பிறன்தோள் மீது
      நடுங்குகின்ற அவளுருவைக் கண்டான்; கையில்
கொடுவாளை எடுத்துயிரைப் போக்க எண்ணிக்
      குறுக்கிட்டான் இருவரையும் பறந்தான் கள்வன்!
நெடுமரம்போல் அவன்காலில் வீழ்ந்து கெஞ்சி,
      நினைத்துப்பார், பிள்ளை!' யென்றாள்! கழுத்தைக்கத்தி
தொடுநேரம் கண்டுவிட்டான் முன்ச ரிந்த
      தொந்தியினைக் ; கலங்குகின்றான் ! மனித னன்றோ?

கருக்கலைப்போல் தோன்றிற்று மண்ணில் யாவும் !
      கால்விட்ட வழிநடந்து சென்றான்; ஆந்தை
இருள்கிழிக்கும் குரல்கேட்டு நின்றான் ; பூத்த
      இலுப்பையிலே தலைமுட்டி அழுதான்; தோப்புச்
சருகினிலே பாய்ந்தோடும் எலியைப் பார்த்துச்,
      'சண்டாளி வஞ்சித்தாள்! முறையோ?' என்றான்;
பெருமூச்சு விட்டங்கோர் மதகிற் குந்திப்
      பித்தனைப்போல் ஏதேதோ பேசி னானே !

'காதலெல்லாம் அவளிடத்தில் கொட்டித் தந்து
      கண்ணற்று வாழ்ந்தேன்; கைம் மாறு பெற்றேன்;
மாதவியை ஒத்தவளென் றெண்ணி, அந்தோ!
      மயல்கொண்டிந் நாள்வரையில் இல்லம் பேணித்
தீதின்றி வாழ்ந்துவந்தேன்; கண்ணில் மண்ணைத்
      திணித்திட்டாள் ; குற்றமிலா வயிற்றுப் பிள்ளை
சாதலை நான் எண்ணி, அவள் உயிரைத் தந்தேன்
      தப்பித்தாள்' எனத்தனக்குள் சொல்லிக் கொண்டான்!

மணிப்பொறியின் பெருமுள்ளைப் போல நாட்கள்
      மறைந்தோட அவளவனை நெருங்கி வந்தாள்;
துணிவற்றுக் கால்பணிந்து கெஞ்சிக் கெஞ்சித்
      ‘தூயமனம் பெற்றுவிட்டேன்; பொறுப்பீர்! உங்கள்
பணிபுரிவேன்!' என்றுரைத்தாள்! 'தவறல் இந்தப்
      பாரினிலே உண் 'டென்று சொன்ன துள்ளம்!
மணல்நீராய்த் தெளிந்திட்ட உளத்தைக் கண்கள்
      வழிநீரில் கண்டுகொண்டான்; மன்னித் தானே!
---------

6.பேரின்பம்

வெள்ளிக் குழம்பலைகள் - ஆற்றில்
வீசிக் கரைமோத- இன்பம்
அள்ளும் முழுநிலவில்- பெரு
ஆல மரத்தடியில்

வீணை நரம்பசைத்து-மனத்துள்
வேறோர் எண்ணமற்றே-எழில்
காணக் கிடந்ததங்கே- அந்தக்
கன்னியின் தோற்றத்திலே!

மக்கள் நலன்திரண்ட-அற
மன்னன் இளங்காளை- அந்தப்
பக்கம் வலித்திழுக்க - இசைப்
பண்ணில் மிதந்துவந்தான்!

நாட்டை உனக்களிப்பேன்;-என்
நாட்டுத் தலைவிநீயே!-வான்
கேட்டுப்பார் உன்வாயால் -இதோ
கிட்டிடச் செய்வேன்' என்றான்.

மன்னன் மொழிகேட்டுக்-கன்னி
வணங்கி உரைக்கலுற்றாள் :-'இனி
என்னை மறந்திடுவீர்!-மனத்துள்
இல்லை எவர்க்குமிடம்!

செந்நீர் உறிஞ்சுழடடை.-போல்வர்
சீரிய ஆணினமே!-அவர்க்(கு)
என்னில் உதவிபெறும் - இன்பம்
என்னுள திவ்வுலகில்?

கண்ணினாற் காணும்பல-இயற்கைக்
காட்சிப் பேரழகை-என்றும்
எண்ணியெண் ணிமகிழ்வேன்!- அழியா
இன்பம் அதுதானே!'
---------

7. புது மொட்டு

குளிர்ந்த மாமரச் சோலையிலே
கூவும் குயில்தீம் பண்ணிசைத்து!
நளினம் சிரித்துத் தலையசைத்து
நறுமணம் வாரி வழங்கிடவே
வளியைக் கூவிப் பெருமிதமாய்
'வா! வா!' என்றே அழைத்திடுமால்!
களிப்பில் திளைத்துத் தோகைமயில்
கார்முகில் கண்டு அசைந்தாடும்!

"ஊற்றுக் கல்லிடைப் புகுந்தோடி
ஓடும் குதிரை வாய்நுரைபோல்
காற்றுச் சுவைத்த மலரோடு
கரையா நுரையாய் மினுமினுக்குந்
தோற்றங் கண்டு மீனினங்கள்
துள்ளும் நாணற் கரைமீது !
மாற்றமில்லாக் காதலொடு
மந்தி தாவும் ஆணோடு!

‘சங்குக் கழுத்துப் பெண்ணினங்கள்
சதங்கை காலில் ஒலியெழுப்ப
நுங்கு மேற்றோல் உடற்கைகள்
நொடித்து விழியால் மயக்கிஆண்
அங்கத் திடையே மின்சார
அலைக ளெழுப்பிக் காமவெறி
பொங்க இளமுலை அசைந்தாடப்
புதுப்புது முறையில் நடம்புரிவர்!

'மனமும் ஏனோ எனைச்சூழும்
மட்டில் இன்பப் பெருக்கதிலே
கனிவு காண இசைவில்லை!
கண்மணி யசோதரை எனதில்லாள்
நினைவிற் கசப்பாய் உருவானாள்!
நில்லா தோடும் என்மனத்தின்
வினையை மாற்ற நகர்சுற்ற
விரும்பினன்' என்றான் சித்தார்த்தன்!

'சித்தன் ஆவான் சித்தார்த்தன்!
சிறிதும் என்சொற் பொய்க்காதே!
அத்தா! உண்மை' என்றொருநாள்
அறைந்த நிமித்திகன் சொல்நினைவிற்
குத்திக் காட்டச் சுத்தோதன்.
'குழந்தாய்! நாளைப் போ' வென்றான்;
உத்தர விட்டான், நகாக்கிழங்கள்
உறைவிட மொடுங்கிக் கிடந்திடவே!

சேற்றிற் புதைத்த அரசிலைபோற்
சிறுபசையற்று நார்த்தோலாய்க்
காற்றில் வீழும் எலும்புடலாய்க்
கடந்தான் அவ்வழி ஓர்முதியோன்!
நேற்றே அறைந்த அரசாணை
நினைவி லோம்பாக் கிழப்பிணத்தைக்
கூற்றுவ னுலகிற் கனுப்பிடவே
குதித்தே எழுந்தனர் காவலர்கள்!

கிழத்தைக் கண்டான் சித்தார்த்தன்
கிட்டி நடந்தான் அதனருகில் !
பழுத்த தலைகால் உடல்முழுதும்
பார்த்தான் உள்ளப் பரிவோடு!
'கொழுத்த உடலும் இளவெழிலும்
குன்றா தென்றும் அழியாக்கல்
எழுத்தைப் போலே நிலைநிறுத்த
என்னாலாமோ?' என நினைந்தான்!

சித்தார்த் தன்மன எண்ணமெலாம்
சிரங்கு கிள்ளும் கைபோலே
இத்தரை இன்னல் வாழ்வினிலே
எழுந்து தோன்றி விரைந்தோடிச்
சுத்தித் திரிந்து மனத்துள்ளே
சுடர்விழி காட்டும் பெருவாழ்வின்
புத்தம் புதுமலர் மொட்டொன்றைப்
புவியினுக் களிக்க முனைந்ததுவே!
---------

8. யார் பொறுப்பு?

உள்ளமது பொங்கிடநான் எழுத லுற்றேன்
ஒளிமுகத்தாள் கவிப்பெண்ணென் காத லிக்கு !
துள்ளிவந்தாள் என்மனைவி; அருகில் நின்றாள்;
மிகுகோபச் சுடர்விழியால் கொன்று விட்டாள்;
'வெள்ளைத்தாள் எடுத்தெழுதிக் காலம் போக்கி
விளையாடில், மரக்கறிகள் கடைக்குச் சென்று
கொள்வதியார்? நாழிகையோ ஓடிப் போச்சு!
கூடையிதோ ! விரைந்துசென்று வருவீர்!' என்றாள்.

பெண்சொன்ன படிக்கணவன் கேட்கா விட்டால்
பெற்றபிள்ளை கத்தியழ அடிப்பாள் இல்லாள்!
மண்வீழும் வயிற்றுணவில்1 துன்பம் துன்பம்!
மனப்பெருக்கால் நான்வளர்த்த கவிதைச் சீட்டின்
எண்ணம்வந் திளவிரவில் தேடிப் பார்த்தேன்;
எங்குமதைக் காணேன் நான் ; தூக்க மற்றேன்;
'தண்மதியின் அழகொளியில் என்ற னுள்ளச்
சஞ்சலமே மாயம்' என வெளியைப் பார்த்தேன்.

இருண்டமர அண்டைவீட்டுத் தோட்டத்துள்வாழ்
இடுக்கெல்லாம் பால்நிலவு பாயக் கண்டேன்;
சுருண்டங்கோர் தாள்கிடக்கும் தோற்றங் கண்டேன்
சொல்லிற்று எனதுள்ளம் 'அதுதான்' என்று!
வெருண்டஎன் மனையாளின் செய்கை போலும்!
விரைந்துமதில் தாண்டியதைக் குனிந்தெ டுத்தேன்
இருகரத்தால் எனைத்தழுவி வளையொ விக்க
இதழ்சுடவே முத்த மழை பொழியக் கண்டேன்

'பேய்' என்று உடல்நடுங்க, அணைக ரத்தைப்
பிய்த்தெறிந்து, 'தூ!தூ!தூ! போ!போ!' என்றேன்;
வாய்திறந்தேன் ; கூச்சலிட்டேன் உதவி நாட!
வண்ணமலர் செங்கையாலென் வாயைப் பொத்திப்
'பேயல்ல! அண்டைவீட்டுப் பெண் நான்!' என்றாள்;
பின்புறமாய் மறுமுறையும் எனைய ணைத்து,
'மாயமெலாம் இனுமெதற்கு? நேற்று மாலை
வரைந்தெனக்கு வீசிவிட்ட திதோபார்!' என்றாள்

விளங்கிவிட்ட தொருநொடியில் எனக்கு யாவும் :
விலையில்லா என்காதற் கவிப்பெண் ணிற்கே
உளமகிழ்வால் எழுதியஎன் காதற் சீட்டை
உணராமல் என்மனைவி வீசி விட்டாள்;
இளமங்கை 'நான்'என்று சீட்டைக் கண்டாள்;
இரவெல்லாம் விழித்திருந்தாள் என்னைச் சேர;
களங்கமிலா என்னிதழில் முத்தம் தந்தாள்:
களிப்படைந்தோம்! குற்றத்திற் கியார்பொறுப்பே
------

9. வேலையில்லாத் திண்டாட்டம்!

வானிற் செம்மை வளர்ந்து மலிந்து
கானாறு போலக் காட்சி யளித்தது!
செம்மேட்டு வெள்ளத் தேக்கம் போலவும்,
அம்மேட்டு மருங்கு வயல்வெளி போலவும்,
செங்கடல் திரையெலாம் சீறிப் பாய்ந்து
பொங்கி மோதும் புதுமை போலவும்
சிந்திய சுடரொளி சிரிப்பால் அழைக்கும்!
அந்தி வான அழகு முகில்கள்
புந்தியை மயக்கின! புதுப்புது ஓவியம்
தந்து மறையும் செந்தீத் தொடுவான்
இடையில்! மலையின் இடையில் பரிதி
உடைந்த தட்டென ஒளிமங் கியதே!

கடற்கரை யோரம் காற்றாட வந்த
நடைபயில் நிலவுகள் நகரக் கன்னியர்!
இடையில், இடையில் எழிலோ டிறுக்கிய
உடையில், உடலில், ஒளிசேர் விழியில்,
கடற்கரை மணலிற், கரைதவழ் அலையில்
படரும் இருளொடு படரும் செம்மை !
செக்கர் சிந்திய செவ்வொளிச் சிறுசுடர்
இக்கரை காட்டும் எழில்மது மாந்தி இருந்தான்
இளைஞன்! மனம்அங் கில்லை!

பெருவெளி வானப் பிறையும் மீனும்
பூந்தாழை மடலும் பித்தளைப் பொடியுமாம்!
சீந்துவா ரற்றுக் கிடப்பதைப் போலக்
கிடந்தான்; சோர்ந்து கிடந்தான் இளைஞன்!

படர்ந்தோடி யாடும் பைங்கிளிச் சிறாரும்,
பின்னல் அசையப் பேசிச் சிரிக்கும்
கன்னல் மொழியார் கடைக்கண் தேனும்,
எங்கோ அலறும் வானொலி இசையும்,
பொங்கு கடலின் புதுத்தமிழ்ப் பாட்டும்
வெறுப்பே தந்தன! விரிவான் பரப்புக்
கறுத்தது! மெல்லக் காரிருள் படர்ந்ததே!

எழுந்தான்; நடந்தான்; ஏதேதோ எண்ணினான்;
தொழுநோய்ப் பசியின் தொல்லை தாங்காது
காற்றாடு வோர்முன் கையை நீட்ட
ஆற்றா னாகி அமர்ந்தான் ஓர்பால்!
வறுமையா தெரியும் வயிற்றுப் பசிக்கு ?
'பொறுமையாய் இரு' வெனப் புகன்றாற் கேட்குமா ?
ஒருநா ளன்று; இருநாள் பட்டினி!
பொருளும் இல்லை; புகலிடம் இல்லை!
ஏங்கித் தவித்தான்; எதிர்ப்படு வார்முன்
தாங்காப் பசியின் தகைமை கூறினான்!

பரிகசச் சிரிப்பே பரிசாய்க் கிடைத்தது!
எரியும் வயிற்றை யிறுக்கவா முடியும்?
நின்றான்; ஏங்கினான்; நீள்மூச் செறிந்தான் !
'சென்று திரு'டெனச் செப்பிய துள்ளம்!
'நன்றன் றிச்செயல்' என்றது நுழைபுலம்
நின்றான்! பசியே வென்றது! தொலைவில்

வருவான் ஒருவனின் வழியினைப் பார்த்துத்
தெருவின் முடக்கில் இருளில் மறைந்து
சுண்டெலி தொடரும் பூனையைப் போல
ஒண்டி இருந்தான் ஒதுக்கிடம் பார்த்தே!

'திருடன்' திருடன்!'- சுவரெதி ரொலித்ததே!
அருகில் வாழ்நர், அங்குள மக்கள்
ஒருவ ரேனும் உடன்வர வில்லை!
தெருவில் நிகழும் சிறுசண் டைக்கும்
வருவதும், பார்ப்பதும் வாடிக்கை யில்லை:
பட்டின வீரப் பண்பிப் பண்பாம் !

பட்டினம் பார்க்க வந்தவன், திருடனை
எட்டிப் பிடித்தே இரண்டறை கொடுத்தே
கையும் களவுமாய்க் காரிருள் இல்லா
மைய விளக்கின் மருங்கில் வந்தான்!
இருவரும் விளக்கில் ஒருவரை யொருவர்
அருகிற் பார்த்தனர்! 'அப்பா சாமியா?'
என்றான் வந்தவன்! இருவரும் திகைத்தனர்!

‘பொன்னா! என்னை மன்னித்து விட்டா !
என்நிலை வறுமை! என்செய் கோ நான்?
ஒன்றிய நட்போ டுயர் நிலைப் பள்ளியிற்
படித்து முடித்தோம்; பட்டம் பெற்றோம்!
நடுத்தரக் குடும்ப நலிப் போக்க
அலைந்தேன்; பட்டினம் முழுமையும் அலைந்தேன் !
தொலைந்தது கைப்பொருள் தோழா!' என்றே
நடந்ததை அப்பா சாமி நவின்றான்!

அடங்காப் பசிவந் தவர்களை அலைக்கச்
சென்றனர் இருவரும் சிற்றூ ணருந்த!
இன்றைய செயலொன் றென்னிட மில்லை !
நாளைக் கெதுவோ நான்சொல மாட்டேன்!
தோளை நம்பியும். தொழில்பல கற்றும்
வாழும் நிலையா வகுத்துள தரசு?
சூழும் பஞ்சம் தொலைவதெந் நாளோ?
வாழ்க்கை யுயர வழிசெயாப் படிப்பு
பாழா கட்டும் ! படித்தது போதும்!
என்று நொந்தே இரவெலாம் பேசிச்
சென்றனர் இருவரும் வெவ்வேறு திக்கில்!

கப்பிய குளிரில் கந்தையு மின்றி
அப்பா சாமி அலைந்து திரிந்து
வேலை தேடி வெறுங்கை யாகிச்
சோலை இடையில் தோன்றும் மிருகச்
சாலை வந்து தன்னிலை கூறினான்!
காலையிற் செத்த சாலைக் குரங்கின்
கவலையி லிருந்த காட்சிச் சாலையோர்
கவலை போக்கும் வழியினைக் கண்டனர்!

'எந்தத் தொழிலும் இழிதொழி லன்று !
இந்தக் குரங்கின் தோலை ஏற்று
சிந்தை களிக்கச் செய்வா யானால்,
வந்தது புதிய குரங்கென மகிழ்வோம்!
கூலியும் கூடுதல் ! கூ'றெனக் கேட்டனர்.
வேலை யிலாதான் வேறென் செய்வான்?
குரைத்துப் பெற்ற செல்வம் குரைக்குமா?
உரைத்தான் இணக்கம்; உயிர்வாழ லானான்!

மிருகக் காட்சிச் சாலையிற் கூட்டம்
பெருகி மிகுந்தது ! பேரூர் வாழ்நர்
பந்தி பந்தியாய் வந்து குவிந்தனர்!
தொந்தி பெருத்த மந்திக் குரங்கின்
கூண்டிற் கருகிற் கூண்டொன் றிருந்தது!
நீண்ட வெளியிற் கம்பிகள் நிறுத்தி
வேண்டும் போது விளையாட் டயர
ஆண்டுச் சமைத்த அழகிய கூண்டுள்
ஒருபுறம் புலியொன் றுலவித் திரியும்;
ஒருபுறம் மனிதக் குரங்கொன் றிருக்கும் !

குரங்கைப் பற்றிக் கூறார் இல்லை!
வருவோர்க் கெல்லாம் வணக்கஞ் செய்யும்;
வாழைப் பழமும், வட்ட முறுக்கும்
கூழைவால் குரங்கு, 'கொடு!'வெனக் கேட்கும்;
ஓடும்; ஆடும்; உயர்மர மேறிக்
கூடினர் களிக்கக் குப்புற வீழும்!

ஒருநாள் குரங்கின் ஒப்பிலா ஆடலை
வருவோர் கண்டே வாழ்த்துரை நல்கினர்;
பழம்பல தந்தனர்; பண்ணியம் தந்தனர்;
அழகிய குரங்கின் ஆடலை வியந்தனர்!
மீண்டும் ஏறித் தாண்டிக் குதிக்கையிற்
கூண்டில் வாழும் கொல்புலி அருகில்
வீரிட் டலறி விழுந்ததே குரங்கு!
கூர்நகப் புலியோ கொல்லப் பாய்ந்தது!
குப்புறக் கிடக்கும் குரங்கின் காதில்,
அப்பா சாமி! அஞ்சேல்!' என்று
புலித்தோல் போர்த்த பொன்னன் உரைத்தான்!
ஒலித்தது சிரிப்பொலி ! ஒலித்தது நீடே !
---------

10. வீரச்சிறுமி

கடல்நீர் முகந்து காருடல் கறுத்துப்
படர்ந்து தேங்கிய பனிமலைச் சாரல்
இடுக்கிடைப் பூத்த காந்தள் எழில்மலர்
அடுக்களை வாடா அகல்விளக் காகும்!
கற்று முதிர்ந்தோர் யாத்த காவியம்
முற்றிய தேன் இறால் வான்முழு மதியம் !
கணுக்கழை ஏறிக் கடுவன் மந்தியின்
பிணக்கைத் தீர்க்கப் பேசிக் கொஞ்சி
விரிவுரை யாளர் விளக்கும் கவிபோல்
உரித்துப் பலாச்சுளை ஊட்டி மகிழும்
குன்றும், குன்றுசூழ் ஊரும் முன்னாள்
ஒன்றிய அவ்வூர் மக்களின் உடைமை!

வயலெலாம் செந்நெல், வரப்பெலாம் தென்னை,
அயலெலாம் வாழை, அருகெலாம் கரும்பு,
பழுத்தமாந் தோப்பு, பலகறித் தோட்டம்,
கழுத்து நிலைக்காக் கால்நீர் ஓட்டம்,
மயிலாடு பாறை, மலராடு பொய்கை,
குயில்பாட நாணும் குலப்பெண்டீர் முன்றில்,
எழுத்தறி சாலை, இசைபயில் சாலை,
கொழுத்த காளையின் கொம்பொடி மன்றம்,

சிலம்பம் பயிலும் திறந்த வெளிகள்,
இலவம் வெடிக்க எழுந்த பஞ்சுபோல்
கூட்டமாய்ப் புறவு குடிசெய் கோபுரம்,
ஆட்டம் பயிலும் அணிநகர் மாடம்,
சந்தை கூடும் மந்தை வெளிகள்,
குந்தி ஊர்நலம் கூடிப் பேசும்
செந்தமிழ் மண்டபம், செய்தொழில் பயிலும்
சந்துகள், படைக்கலம் தருநர் உலைகள்,
இன்னோ ரன்ன இயல்புகள் பெற்று
முன்னர் வாழ்ந்த மூதூர் அதுவாம்!

இன்றோ பகைவர் இயல்புகள் பெற்று,
நன்றும் தீதும் அறியாது நலிந்து,
மக்க ளாட்சி மாறி, வேற்றார்.
குக்கலுக் கடங்கும் கொடுமை கண்டே
சீறி எழுந்தனர் திண்தோள் காளையர்!
ஆறு மிகுந்தால் அணைஎன் செய்யும்?
ஒளிமிகின் மறிக்க உயிர்களால் ஆமோ?
வளிமிகின் தடுக்க மக்களால் ஆமோ?
காட்டில், மலையில், கல்லிடைக் குகையில்,
மேட்டில், வெளியில் விரவித் தனித்தனிக்
கூட்ட மாகக் கொள்கை பரப்பி,
நாட்டை விட்டு நட எனக் கூறி,
மாற்றார் படையை மறைவில் அழித்தும்,
ஆற்றை உடைத்தும், அகழியைத் தூர்த்தும்
அல்லும் பகலும் எல்லை இலாத
தொல்லை தந்தனர் விடுதலைத் தோழர்கள்!

அடக்கி ஆண்ட ஆசை குறையுமோ!
மடக்கிப் பிடித்தும், மண்டையை உடைத்தும்,
நிறை இருட் சிறையில் நித்தம் அடைத்தும்,
மறைமுக மாக வாட்டி வதைத்தும்
விடுதலை விரும்பிய வீரரை மாற்றார்
கொடுமைப் படுத்தினர்; குண்டுடல் பாய்ச்சினர்!

தாயின் மேலாம் தாயக வேட்கை
மாய்தல் இல்லை: வரலாற்(று) உண்மை!
மறைவில் காளையர் பாசறை வளைத்து
முறையுடன் புரட்சி மூட்டி வந்தனர்!
மாற்றார் பாசறை வருபொருள் கொள்ளை,
மாற்றார் படைக்கலம் அடிக்கடி கொள்ளை,
மாற்றார் படையை வழிமறித் தழித்தல்,
மாற்றார் பழகிக் கூற்றாய் மாறல்,
ன்னோ ரன்ன எண்ணிலாச் செயல்கள்
பன்முறை செய்து பதுங்கி வாழ்ந்தனர்!

தன்னை ஈன்ற தாயகம் மீட்க
இன்னல் புரியும் காளையர் இருப்பிடம்
தேடி அலுத்துத் திரும்பினர் ஒற்றர் !
‘கோடி கொடுப்பதாய்'க் கூறிப் பார்த்தும்
காளையர் பாசறை கண்டுவந் துரைக்கும்
ஆளையும் காணோம்; ஆசையும் காணோம்!

படைநிலை குலைந்து பாதியும் அழிந்தது!
கடைசியில், 'ஒருகை பார்ப்போம்' என்றே
யானைக் கழுத்துத் தானைத் தலைவன்
சேனையை ஊக்கித் திரும்பிவந் தனனே!
அவனைத் தொடர்ந்தே ஐம்பது மறவர்
கவணெறிக் கானம் கடந்துவந் தனரே!
வழியில் காட்டில் மலையின் சரிவில்
இழியும் அருவியின் எதிரில் மூங்கிற்
கழியாற் கட்டிய கண்கவர் இல்லம்
எழிலுடன் தனித்தே இருக்கக் கண்டனர்!

தினைக்கதிர்ச் சுமைகள் சிதறிக் கிடந்தன!
நனை இறால் பிழிவும், நற்பலாச் சுளையும்
மூலையில் ஓர்பால் ஓலையிற் கிடந்தன!
வேலை முடித்து விறகு சுமந்து
சிறுமி ஒருத்தி தேனடை சுவைத்தே
உறுமு புலிபோல் உட்புகக் கண்டனர்!

அந்தி மயக்கிய அடிவான் தோற்றம்
சிந்திய குருதிச் செருக்களம் ஒக்கும்!
வீட்டைச் சுற்றி வெளிப்புறக் குழியில்
காட்டு விறகுக் கட்டவிழ்த் திட்டாள்;
முன்றில் நெருப்பு மூட்டிச் சிறுமி
அன்றைய உணவை ஆக்கத் தொடங்கினாள்!

தானைத் தலைவனும், தன்னுடன் வந்த
ஏனைய மறவரும் இல்முன் வந்து,
"குழந்தாய்! அஞ்சேல்! குடிநீர் கொடுப்பாய்!
இழந்தோம் வழியை ! இவ்விடம் வந்தோம்!
மலைவழி மாறி மாறிச் செல்வதால்
அலைந்தோம்; திரிந்தோம்! அயலூர் செல்ல
எவ்வழி? காட்'டென எடுத்தனர் பேச்சை !
'இவ்வழி செலலாம்' என்றனள் பச்சை!
இருளும் மெல்ல எழுந்தது கீழ்வான்!
மருளும் விழியால் மறவரைச் சிறுமி,

பார்த்துப் பார்த்துப் படம்பிடித் தெடுத்தாள்
'யாவிர் நீர்? எவ்வூர்?” என்று வினவினாள் !
'போர்புரி மறவர் ! புதரில் மறைந்தே
ஊரை மீட்பதாய் உளறும் கயவரைத்
தேடி வந்துளோம்! சிறுமியே இந்தா
கோடிப் பொன்!'எனப் பணப்பை கொடுத்தனர்!
"புரட்சிக் காரர் மறைந்துவாழ் புகலிடம்
உரைத்தால் போதும்! உன்பெற் றோர்க்கும்
வீடு, விளைநிலம், விதவித அணிகள்
கூடுத லாகக் கொடுப்போம்!' என்றனர்!

பெண்புலி போலப் பேசா தெழுந்தாள்;
விண்ணைப் பார்த்தாள்; வெளியைப் பார்த்தாள்;
வீட்டைச் சுற்றி வெளிப்புறக் குழியில்
காட்டு விறகில் மூட்டினாள் தீயை!
தானைத் தலைவன் அவள்முன் வந்தே,
"ஏனிவ் விறகும் தீயும் ?' என்றான்.
'பகையாம் சிறுத்தை சிறுநரி யானை
புகுந்தாற் கொளுத்த! பொழுதும் சாய்ந்தது!

தீயைக் கண்டால் தீய விலங்குகள்
பாய்ந்து வரா'தெனச் சிறுமி பகர்ந்தாள்!
மீண்டும் தானைத் தலைவன் சிறுமியை,
'யாண்டுளர்? விடுதலை வீரர் யாண்டுளர்?
மறைவிடம் காட்டு ! மணியும் பொன்னும்
நிறையக் கொடுப்பேன்! நீஅஞ் சாதே!'
என்று கெஞ்சி இள நகை காட்டினன்!
குன்றும் யானையின் குரலை ஒலித்தது!
சிரித்தாள் சிறுமி; சிந்திக்க லானாள்!
குருத்து மூங்கிற் காட்டிற் குருவிகள்
கூட்டை நோக்கிக் கும்பல் கும்பலாய்ப்
பாட்டொலி எழுப்பிப் பறக்கக் கண்டனள்;
தலைவனைச் சிறுமி தலையசைத் தழைத்தாள்;
இலையடர் புதரரு கிட்டுச் சென்றே,
இந்த வீட்டின் உள்ளொரு பரணை ;
அந்தப் பரண்மேல் ஐம்பது பேரும்
எலிகாத் திருக்கும் பூனையைப் போல
ஒளியற்(று) ஒடுங்கி ஒளிந்தே இருங்கள்.
புரட்சிக் காரர்கள் மறைவிடம் புகுந்ததும்
உரைப்பேன்; ஊளைக் குரலால் உரைப்பேன்.

அதுவரை நீங்கள் எதுவந் தாலும்
பதுங்கிய முயல்போல் பரண்மிசை இருங்கள்'
என்றனள்! வந்தோர் பரண்மேல் ஏறினர்!
முன்றில் வந்தாள்; முன்பின் பார்த்தாள்;
தெருக்கத விழுத்து வெளியிற் பூட்டி
உருக்கமாய் அடுப்பில் உலையை ஏற்றினாள்!
கோட்டான் குகைவிட் டெழுந்து பறந்தது!
வீட்டைச் சுற்றி 'விர்விர்' என்றே
காட்டுக் காற்றும் காதைப் பிய்த்தது!
வீட்டுக் கூரையில் வெளிப்புற மெங்கும்

ஓட்டமும் நடையுமாய் ஓடி ஓடி
மூட்டினாள் சிறுமி மூட்டினாள் தீயை!
எண்ணெய்க் கொப்பரை எரிவதைப் போல
வண்ண மூங்கில் வாழ்விடம் எரியத்
தானைத் தலைவனும், ஏனைய வீரரும்
கானம் அதிரக் கத்தித் தீய்ந்து சாவச்
சாவத் தங்கச் சிறுமியும்
கூவி மகிழ்ந்து குதித்தா டினளே!
------------

11. கொலைகாரன்

வியப்பொடு மக்கள் மெல்ல மெல்ல
வழக்கறி மன்றம் வந்து சேர்ந்தனர்!
கொலையைப் பற்றிக் கூறார் இல்லை!
மன்றத் துள்ளும், வெளியிலும் மக்கள்
நின்றும் குந்தியும் நெடுமூச் செறிந்தும்
கொன்ற இளைஞனைப் பழித்துக் கூறினர்!
மன்ற மணியும் வாயிலில் ஒலித்தது!
வெளியும் உள்ளும் வீரரின் காவல்!
வழக்கறி மக்கள் வந்து சூழ்ந்தனர்!
மன்றத் தலைவர் இருக்கையில் இருக்கச்
சிப்பாய் இருவர் சிறையிருந் தொருவனை
விலங்கிட் டழைத்து மெல்ல வந்தனர்!
அழகிய தோற்றம்; அகன்று நெற்றி;
சுருண்டு படிந்த தூய தலைமுடி ; ;
சிரித்த உதடு; சிந்தனைக் கண்கள்;
குழிவிழு கன்னம் ; குளிர்ந்த நோக்கு;
எறும்புச் சிறுதொடர் அரும்பு மீசை ;
கட்டுடற் காளை கைதியின் கூண்டில்
தலையைத் தாழ்த்திய சிலைபோல் நின்றான்!

மன்றத் தலைவர் கைதியைப் பார்த்துக்
'கொலையின் காரணம் கூ'றெனக் கேட்டார்!
'மேன்மை தங்கிய மன்றத் தலைவரே!
நானே கொலைஞன்! நானே கொன்றோன்!
சிறையோ, தூக்கோ, சித்திர வதையோ
எதையும் இன்பமாய் ஏற்க வந்துளேன்.
தீர்ப்பை வழங்குவீர்; ஏற்பேன் !' என்றே
கைதி சிறிதும் கலக்க மின்றி
உரைத்தான்; கூண்டின் ஒருபால் இருந்தான்!

'பன்முறை காரணம் பகரக் கேட்டும்
இன்னும் காரணம் இயம்பா திருத்தல்
நன்றல; இன்றே தீர்ப்பின் இறுதி நாள்!
நீயோ படித்தவன்; பட்டமும் பெற்றவன்;
சீரிய பண்பும், கூரிய அறிவும்
உடையவன் என்றே உணர்ந்துளேன்! அதனால்
உற்ற காரணம் உரை'என மீண்டும்
மன்றத் தலைவர் வலிந்து கூறினார்!

மன்றம் நிறைந்த மக்களை எல்லாம்
கைதியின் கண்கள் பார்த்தன ; கலங்கின !
'தலைவரே! என்கதை சாற்றுவேன். கேட்பீர்!
பிறந்தேன்; பிறந்தஎட் டாண்டு கழித்துத்
தந்தை வெளியூர் தகுபொருள் தேடச்
சென்றவர் திரும்பி வரவே இல்லை!
ஏழைத் தாயோ என்னை வளர்க்கக்
கூலிக் குழைத்தாள்; கொடுமைகள் பொறுத்தாள்
வயிற்றைக் கட்டி, வாயைக் கட்டி
என்னை வளர்க்க ஏதேதோ செய்தாள் ;
சிற்றூர்ப் பள்ளியிற் சேர்த்தாள்! படித்தேன்!
பள்ளியிற் படிக்கப் பணம்வேண் டாமா?
அன்னை பகலிர வழுதுருக் குலைந்தாள்;

பொருளைத் தேடப் போன தந்தை
'வருவர் வருவ'ரென வழிபார்த் திருந்தாள்!
தந்தையைப் பற்றித் தகவலே இல்லை!
ஆண்டுகள் ஓடின ! அன்னை என்னைப்
படிக்க வைக்கப் பகலிர வுழைத்தாள்;
கூடத் திருக்கும் குளிர்முகத் தந்தையின்
படத்தைப் பணிவாள் ; கண்ணீர் வடிப்பாள்!
இரவில் இருவரும் படத்தின் முன்னர்க்
கையைக் கூப்பிக் கண்ணீர் வடிப்போம் !
தந்தை திரும்பி வருவா ரென்ற
நம்பிக்கை இல்லை! நாட்கள் ஓடின !
இருப தாண்டுகள் உயிருடன் இருந்தால்
கடிதம் எழுதக் கைவரா திருக்குமோ ?
'செத்தார்' என்றே சிந்தை கலங்கினோம்!
இருப தாண்டுகள் எனக்கென உழைத்த
அன்னையும் ஒருநாள் ஆருயிர் நீத்தாள்!
வேலை தேடி வெளியூர் சென்றேன்!
எனக்கென அன்னை இட்ட சொத்து
படிப்பும், தந்தையின் படமுமே ஆகும்!
மறிகடல் தாண்டி மலைநா டடைந்தேன்;
பணிமனை தோறும் பட்டம் காட்டினேன்;
வேலை தேடி வெகுநாள் அலைந்தேன்!
வேலை என்ன கடுகா? மிளகா?
ஆளைப் பொறுத்தும், ஆளுக் குள்ள
அறிமுகம் பொறுத்தும் வேலை கிடைக்கும் !
திங்கள் மூன்று சென்ற பின்னர்
வேலை கிடைத்தது! வேலையில் அமர்ந்தேன்!

என்னுடன் வேலையில் இருக்கும் தோழருள்
கையச் சுப்பொறிக் காரிகை ஒருத்தி!
பொன்னில் வடித்த புதுமைச் சிலையவள் ;
ஆற்றிடைத் தேங்கிய அரிப்புக் கருமணற்
கூந்த லுடைய கொடியிடைக் கன்னி;
உழுந்து போன்ற உயர்புரு வத்தாள்;
கன்னத் திடையில் கவின்செய் சிறுசுழி
மறிந்து பாயும் மதர்விழி மடமகள்;
முல்லை நாணும் பல்லின் அழகி ;
வடித்த தேனாம் வாய்மொழி யாட்டி
என்னைப் போலப் பணிபுரிந் திருந்தாள்.
கையச் சுப்பொறி கைவிரல் அடிக்க
மைவிழி வேலிணை வந்துவந் தென்னைக்
குத்தும்; நெஞ்சில் குளிர்மையைத் தேக்கும் !
அடிக்கடி எழுந்தே அருகில் வருவாள்;
'இச்சொல் என்ன எழுத் 'தெனக் கேட்பாள்;
அடித்த படிகளை எடுத்துவந் தளித்துப்
'படித்துப் பார்' எனப் பரிவாய்ச் சொல்வாள்;
செவ்வாய் திறந்து வெண்ணகை காட்டி
மயிலைப் போல அயலிற் செல்வாள்;
காலையில் நான்வரு சாலையின் ஓரம்
சிற்பி செதுக்கிய பெண்சிலை போல
வழிபார்த் திருப்பாள்; வந்தபின் சிரிப்பாள் !
இருவரும் இணைந்தே தொழில்மனை போவோம்!
வேலை முடிந்ததும் மாலையில் இருவரும்
இணைந்து வந்தே இருப்பிடம் பிரிவோம்!
ஓடின நாட்கள் ! ஒன்றின உளங்கள்!
அன்பும் எம்முள் ஆணிவேர் விட்டது !

ஒருநாள் பட்டண ஓர மிருக்கும்
சிற்றூர் திரியச் சென்றனம் இருவரும் !
மரத்துப் பூக்கள் வழியெலாம் சிந்திப்
பாட்டை அழகைப் பன்மடங் குயர்த்தின!
வளைந்த வாய்க்கால் இருகரைச் சேமை
இலைகள் விரித்த விசிறிபோல் இருந்தன!
செங்கண் கருவரால் செய்கால் உழக்கிப்
பாய்மடை அடைக்கும் ! பசுந்தாள் தாமரை
பூக்க வண்டுகள் புதுப்பாட் டிசைக்கும்!
வாய்க்கால் இறங்கி வயலெலாம் தாண்டி
இருண்ட தோப்பில் இருவரும் நுழைந்தோம்!

செந்தமிழ்ப் பாட்டைச் செங்கண் குயில்கள்
இணைந்தே இசைக்கக் கேட்டோம் இருவரும்!
பைம்புல் தரையில் பகலவன் பொன்னொளி
சிறுதுளை சிந்தும் மதகுநீர் போலப்
பாய்ந்து பலப்பல வண்ணம் காட்ட,
'அத்தான்' என்றே அணைத்தாள் என்னை!
உதடும் உதடும் கலந்துற வாடின !
'தன்னைப் பெற்ற தந்தைதாய் இடத்தில்
என்னைப் பற்றி எடுத்து விளக்கி
இருமனம் ஒத்த திருமணம் செய்ய
வழிசெய் வேன்'என மங்கை மொழிந்தாள்!
இருவரும் அவரவர் இல்லம் பிரிந்தோம் !

இரண்டொரு கிழமை இன்பமாய்க் கழிந்தது!
அவளைப் பெற்ற அன்னையும் தந்தையும்
என்னைப் பார்க்க இசைவதாய்ச் சொல்லி
வீட்டிற் கென்னைக் கூட்டிச் சென்றாள் !
விருந்தெதிர் கொள்ளும் பெருஞ்சுவர்க் கூடம்
இருந்தேன்! கூடத் தெதிர்ப்புறச் சுவரில்
இயற்கைக் காட்சிப் படங்கள் இருந்தன !
மூக்கும் விழியும் முறுக்கு மீசையும்

தருக்குடன் இருக்கும் காட்சி யோடு
படமொன் றிருக்கப் பார்த்தன கண்கள்!
படத்தை எங்கோ பார்த்ததைப் போன்ற
நினைவுண் டாக நிலைதடு மாறினேன் !
அருகில் இருந்த அவளை விளித்தே,
'இந்தப் படத்தில் இருப்பவர் யார்?' என
வேதனை யோடு வினவ லானேன்!
‘என்றன் தந்தை புகைப்படம்!' என்றாள்!
அவரும் உடனே அறைக்குள் வந்தார்!
கண்டன கண்கள்! விரிந்தன அவர்மேல்!
'அப்பா!' என்றே அசைந்ததென் உதடும் !
அவரும் திகைத்தார்! நானும் திகைத்தேன்!
குடிமுறை கேட்டேன்; குலமுறை கேட்டேன்!
'மறுமண வாழ்க்கை மகளிவள்!' என்றார்!
துடித்தேன்; துடித்தேன்! சொல்எழ வில்லை!
அப்பா வேதான்! அதில்தவ றில்லை!
‘என்தாய் வாழ்வை, என்னரும் வாழ்வைத்
தன்னலம் பேணித் தகர்த்த அப்பா!
தங்கையின் வாழ்வைத் தகர்த்த அப்பா!'
என்று சீறி நாற்காலி எடுத்து
மண்டையில் ஓங்கி ஓங்கி
அடித்தேன்! துடித்தார்! அடங்கிற் றுயிரே!
-----------

12. பிள்ளைத்தாய்ச்சி

எங்கோ தொலைவில் எரியும் ஊர்போல்
மேற்குத் தொடுவான் மலைகள் விளங்கின!
தென்னை,பலா,மா, செழுங்கழைக் காட்டுப்
பசுமை நிறத்தில் பாய்ந்தது பொன்னொளி !
மலையின் உச்சி பரிதி மறையச்
சாரல் அருவி சலசலத்(து) இரையும் !
கருங்கால் வெண்ணுடல் பெருமூக்கு நாரை
கத்திக் கத்திக் காட்டைக் குறுகும்!
வானை முட்டும் கோயில் மணியும்
அந்தி வந்ததை அறிவித்(து) ஓயும் !
வானில் முன்னர் வந்த மீன்போல்
வீட்டுத் திண்ணை விளக்கை ஏற்றிப்
பாட்டி வந்து தெருவைப் பார்த்தாள்!
தெருவின் கோடியில் தெரிந்தனர் இருவர்!
நின்று நின்றே இடுப்பிற்கை யூன்றி
வந்தாள் ஒருபெண் மலர்முகம் சோர்ந்தே!
அவளின் அருகில் ஒருவன் வந்தான்:
கட்டுடற் காளை ; கரிய நிறத்தான்;
முகப்பொலி வுடையோன்; முறுக்கு மீசையன் ;
பணிவாய்ப் பேசிப் பகையும் வெல்லும்

துணிவும், இனிமைச் சொல்லும் உடையவன்;
பாட்டி நிற்கும் வீட்டின் அருகில்
வந்தான்; நின்றான் ; வணங்கிச் சிரித்தான்;
அவனுடன் வந்த அணங்கைக் காட்டி,
'இவள்என் மனைவி ! ஈரைந் திங்கள்
நிரம்பினள் ! எம்மூர் நெடுந்தொலை வாகும்!
மருத்துவ மனையிற் சேர்த்து வைக்க
அழைத்து வந்தேன்! அந்தியும் வந்ததே!
இரவு மட்டும் இவளிங் கிருக்க
இடந்தர வேண்டும்; இடந்தர வேண்டும்!
காலையில் இவளை மருத்துவச் சாலை
சேர்ப்பேன்!' என்று கெஞ்சிநின் றிருந்தான்!

பிள்ளைத் தாய்ச்சி பெருமூச் செறிந்து
தூணில் தலையைத் தொங்க விட்டுக்
கையால் இடையைக் கசக்கிக் கொண்டே
அப்படி இப்படித் தலையை அசைத்தே
நின்று சோர்ந்து நெடுமூச் செறிந்தாள்!
சாலைப் போல வயிறு சரிந்து
மேலெலாம் வெளுத்து மினுமினுப் பேறிக்
கொவ்வைச் செவ்வாய் குளிர்மை இழப்ப
மைவிழி மஞ்சள் விழியாய் மாறக்
கன்னம் உப்பிக் கண்ணை மறைக்க
நிற்க முடியாமல் நின்றுகொண் டிருந்தாள்!
'பிள்ளை பெற்ற பெரியம் மாவே !
இரவு மட்டிலும் இருக்க இடத்தைக்
காட்டுக! காலையிற் கணவ னோடு
சென்று மருத்துவம் செய்திடு விடுதி
அடைவேன்' என்று கெஞ்சினாள் அவளும்

பெண்ணினம் என்றும் பெண்ணுக் கிரங்கும்!
அதிலும் பிள்ளைத் தாய்ச்சியா மவளைக்
கண்ட பாட்டிக்குக் கனிவு பிறந்தது!
வீட்டினுள் வெளிப்புற அறையைக் காட்டினாள் ;
கூட்டிப் பெருக்கிக் குந்தச் சொன்னாள்!
காலையில் வந்து காண்பதாய்ச் சொல்லி
அழைத்து வந்த அவளின் கணவன்
பாட்டிக்கு நன்றி பலசொலிப் போனான்!

வயது முதிர்ந்த பாட்டிக் கொருமகன்
நாளங் காடி நடத்திப் பலபொருள்
சேர்த்தும் திருமணம் செய்துகொள் ளாமல்
சேவல் போலத் திரிந்து வந்தான்!
வேளை யோடு வீட்டில் உணவை
உண்டு படுக்கும் உயர்குணம் இல்லான்!
சிதறிய சிறுசிறு செம்பொன் துண்டுபோல்
விண்மீன் வான வெளியில் கிடந்தன 1
வகைவகை உணவு வைத்திருந் தாலும்
உப்புக் குறைந்தால் உணவென் னாகும்?
கோடி விண்மீன் குவிந்திருந் தாலும்
நிலவிலா வான நிலைஎன் ஆகும்?

இரவு தடித்தே இருந்த தெங்கும்!
காலை நீட்டிக் கனிவாய்ப் பாட்டி
பேசிப் பிள்ளைத் தாய்ச்சியோ டிருந்தாள்!
பழங்கதை என்றால் பாட்டிமார்க் கின்பம்!
சோர்வே இன்றி இரவெலாம் சொல்வார்!
கிழவியின் வாயைக் கிண்டக் கிண்டப்
பாட்டி வீட்டின் பண்பெலாம் சொன்னாள்!
பிள்ளைத் தாய்ச்சியும் பேசிக் கொண்டே
படுத்துக் காலைப் பக்கமாய் நீட்டி
ஊங்கொட்டிப் பாட்டியின் உரைகேட் டிருந்தாள்!
"தூங்கினால் பாட்டியும் தூங்குவாள்' என்று
பொய்த்துயில் புரிந்து புரண்டு படுத்தாள்!
பாட்டி, படுத்தவள் காலைத் தொட்டே
ஆட்டி எழுப்பினாள்! அடர்ந்த மயிர்கள்
கையிற் பட்டதைக் கண்டாள் பாட்டி!
'பெண்கட் கேது பெருமயிர் காலில்?
ஆணின் காலில் அடர்ந்த மயிர்கள்
இருப்பதே உண்மை ! இதுஎன் புதுமை?'
என்று நினைத்தே எழுந்தாள் பாட்டி!
"நடந்த களைப்பு! நன்றாய்த் தூங்கு!
தூங்கினால் சோர்வு தொலையும் ! நானும்
வெளித்தாழ் வார விரிப்பிற் படுப்பேன்!'
என்றே அறையை இழுத்துப் பூட்டி வந்து
மகனின் வழிபார்த் திருந்தாள்!

அக்கம் பக்கத் தொலிகள் அடங்கின!
வானிலும் கார்முகில் வந்து சூழ்ந்தது!
இரவில் திரிந்தே இரையைத் தேடும்
பறவையின் கூச்சல் படப்பையிற் கேட்டது!
சந்து விளக்குகள் தணியத் தொடங்கின!
மரத்துப் பழுப்பு வாடையில் உதிரும்
சிற்றொலி காதில் தெளிவாய்க் கேட்க,
ஊரின் கோடியில் ஒருநாய் குரைத்தது!
வாயிற் கதவை யாரோ வருடுதல்
பாயில் இருந்த பாட்டி உணர்ந்தாள்!
மகனென் றெண்ணி எழுந்து வந்தாள்!
ஏதோ எண்ணி இடையில் நின்று
வந்தவன் யாரெனச் சந்திற் பார்த்தாள்!

அந்தியில் அவளை அழைத்துவந் தவனே
என்ப தறிந்தே ‘என்?'எனக் கேட்டாள்!
"பாட்டி! மருத்துவப் பணிமனை சென்றேன்.
இரவே மனைவியை இட்டு வந்து
விரைவில் விடு' என மருத்துவர் சொன்னார்"
என்றான் வந்தவன்! அவனுடன் இருவர்
மறைவில் வருவதைப் பாட்டியும் கண்டாள்!
"மகனே! மனைவி வயிற்றுநோய்ப் பட்டாள்!
மணிபத் திருக்கும்! மருத்துவ மனைக்கு
மாட்டு வண்டியிற் கூட்டிச் சென்றேன்!
'இரண்டொரு மணியில் ஈனுவாள்' என்றே
மருத்துவர் உரைத்தார்! மனைவியை விட்டு
வந்தேன்! காலையில் மருத்துவ மனைக்குச்
சென்றுபார்' என்றே பாட்டி செப்பினாள்!
வந்தவன் திகைத்தான்; வந்த வழியே
சென்றான்! அவனுடன் சென்றனர் இருவரும்!

பாட்டி மகன்வரு வழிபார்த் திருந்தாள்!
மகனும் வந்தான்! வாயில் திறந்து
வீட்டுள் நிலைமையை விளக்கினாள் காதில்!
சிட்டெனப் பறந்து சிப்பாய் பலரை
இட்டு வந்தான் இல்லத் துள்ளே!
பூட்டைத் திறந்து சிப்பாய் புகுதலும்
கத்தியைக் காட்டிக் கதவின் ஓரம்
பிள்ளைத் தாய்ச்சி பேசா திருந்தாள்!
விலங்கை மாட்டி வெளியில்
ஆடை களைய ஆண்கண் டாரே!
------------

This file was last updated on 15 Feb 2023.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)