pm logo

கவிஞர் வாணிதாசன் எழுதிய
பொங்கற் பரிசு
(கவிதைத் தொகுப்பு)


pongaR paricu
by vaNitAcan
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2023.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

பொங்கற் பரிசு (கவிதைத் தொகுப்பு)

Source: நூல் பற்றிய விவரங்கள்
பொங்கற் பரிசு
வாணிதாசன்
அன்பக வெளியீடு, உறையூர் திருச்சி-3.
முதற் பதிப்பு: உரிமை ஆசிரியருக்கே.
75 காசுகள்.
அச்சிட்டோர்: கஸ்தூரி பிரஸ், உறையூர், திருச்சி.
----------
முன்னுரை

பொங்கற் பரிசு' என்னும் இந்நூல் தனியாக எழுதப்பட்ட ஒரு நூலன்று; அவ்வப்போது என்னால் எழுதப்பட்டு, பொங்கலை ஒட்டிப் பல இதழ்களிலும் வெளி வந்த பாக்களின் தொகுப்பாகும். இவற்றைத் தேடி எடுத்து நூலாக வெளியிட்ட அன்பக வெளியீட்டாருக்கு என் நன்றி.

      வாணிதாசன்.
-------------
பொங்கல் நாளில் உங்களைக் காண்கிறோம்.

நாங்கள் தமிழர் தம் திருநாளில் கவிஞர் வாணிதாசனின் பொங்கற் பரிசுடன் உங்களைக் காண்கிறோம். எங்கள் முதல் முயற்சிக்குத் தாங்கள் அளிக்கும் அன்பும் ஆதரவும் அடுத்தடுத்துத் தங்களைக் காண வாய்ப்பளிக்கும் என்று நம்புகிறோம்.

இதனை நன்முறையில் அச்சிட்டு காலத் தில் உதவிய கஸ்தூரி அச்சக உரிமையாளர் திரு. R. தயாநிதி அவர்களுக்கு மனமுவந்த நன்றி உரித்தாகுக.

அன்பக வெளியீட்டார்.
------------

உள்ளுறை
1. தைத் திங்கள் வாழ்க! 24. உளத்தோடு வாழ்வோம் உயர்ந்து
2. வாழ்த்தாய் தம்பி ! 25. உயர்ந்து வாழ்வோம்!
3. புத்தொளி எங்கும்! 26. கிழக்கில் வந்தான்!
4. வாயெங்கும் வாழ்த்துப்பாவே! 27. பச்சை விருந்து!
5. கதிர் வாழ்த்துவோம்! 28. பூத்தது வாழ்வு!
6. பொன்னை வாழ்த்துவோம்! 29.இல்லை இடர்!
7. அலர்ந்ததடா புதுப் பரிதி 30. நிலமடந்தை காண வந்தான்!
8. எழுச்சிப் பாட்டு ! 31. சுவைத்தனர் தமிழை !
9. வாழ்த்தினர் பொங்கல்! 32. பாற்பொங்கல் வாழ்க!
10. வாழ்த்துவோம் பொங்கல்! 33. ஆள்வமெனச் சொல்!
11. வாழ்த்துவோம் வா ! 34.ஊருக்கு வழங்கினார்!
12. கஞ்சிக்கு வழியுண்டோ? 35. அத்தனையும் இன்பம்!
13. இன்பம் தந்த தை! 36. பொங்குதடா இன்பம்!
14. எங்கெங்கும் பொன்னொளி ! 37. செய்ந்நன்றி மறவாதார்!
15. வம்மின்! வாழ்த்துவம்! 38. பங்கிடுவோம்!
16. வா அண்ணே,வா ! 39. நிறைந்ததுவே இன்பம்!
17. அலர்ந்தது பொற்கதிர்! 40. இல்லை! இல்லை ! இல்லை !
18. கண்டனம் களிப்பினையே ! 41. நாம் பணியோம் !
19. வாழிய பொற்சுடர்! 42. தமிழ்க்கதிர் வாழ்க!
20. வாழ்த்துவோம் வாரீர்! 43. பொற்கதிர் வாழ்க!
21. பரிதி தருஞ் செல்வம்! 44. இளங்கதிர் பூத்தது!
22. தோன்றியதே! 45. ஒளிச்சுடர் வாழ்க !
23. புதுத் தை வந்தது! 46. எங்கும் மகிழ்ச்சி!
----------

1. தைத் திங்கள் வாழ்க!

இளங்கதிர் தொடுவா னத்தே
      எழுந்தது! வாழ்க! மக்கள்
உளமெலாம், உடல் மெல்லாம்
      உவகையின் ஆட்சி! மேட்டுக்
களமெலாம். செந்நெல்! பொய்கைக்
      கரையெலாம் அலைமு ழக்கம் !
வளமெலாம் பெருக்கி இன்று
      வந்த தைத் திங்கள் வாழ்க! 1

புத்தொளி விண்ணில் எங்கும்
      புகுந்தது! புகுந்த தின்பம்!
கொத்தெலாம் காய்கள்! வீட்டுக்
      கூரையின் மேலும் காய்கள்!
எத்திசை எதிர்ப்பட் டாலும்
      பழக்காடு! பூச்சி ரிப்பே!
புத்தாண்டின் முதல்நாள் இன்பப்
      பொன்னாளை வாழ்த்தாய் தம்பி! 2

கார்தந்த அரிசி ஆப்பால்
      கழைதந்த கட்டி ஏலம்
நீரொடு வழிந்து பானை
      நெடுகிலும் பொங்கல் பொங்க!
ஊரினில் இல்லம் தோறும்
      `பொங்கலோ பொங்கல்' ஓசை
ஆர்ப்பினில், அட்டா! உள்ளம்
      அடைகின்ற மகிழ்ச்சி என்னே! 3

நாடெலாம் இன்பம்! வண்ண
      நறுமலர் பூக்கப் பச்சைக்
காடெலாம் இன்பம்! ஆற்றங்
      கரையெலாம் இன்பம்! கொல்லை
மேடெலாம் இன்பம்! வான
      வெளியெலாம் இன்பம்! பெண்கள்
ஆடலும் பண்ணும் கேட்க
      இன்பத்தை அடையும் வீடே! 4

வழங்கினர் வரிசை; வாழ்த்து!
      தமிழர்கள் ஒன்றாய்க் கூடி,
அழிந்ததாய் எண்ணும் இன்பத்
      தமிழகம் அடைவோம்' என்றே
முழங்கினர்! பகைப்பு லத்தார்
      முகம் சோர்ந்தார்! ஆண்டோர் முன்னாள்
இழந்ததை மீண்டும் பெற்றே
      இன்பத்தில் திளைக்க நீடே! 5
---------

2. வாழ்த்தாய் தம்பி!

பொற்கதிர் தொடுவா னத்தே
      பூத்தது! தங்கத் தட்டு!
நிற்குமோ எதிர்த்து வந்த
      நீள்பகை? மலர்ச்சி கண்டோம்!
நெற்கதிர் பழுத்த தெங்கும்!
பழுத்ததே இன்பம் நெஞ்சில்!
நற்பெருக் கடைந்தோம்! பொங்கல்
      நன்னாளை வாழ்த்தாய் தம்பி! 1

வீடெல்லாம் புதுமை! மக்கள்
      மேலெலாம் புதுப்பொன் னாடை!
காடெலாம் பூக்கள்! ஆற்றங்
      கரையெலாம் புள்ளின் பாட்டாம்
காவெலாம் இன்பம்! பொத்தற்
      குடிசையி னுள்ளும் இன்பம்!
நாடெலாம் செழிக்க வந்த
      நற்பொங்கல் வாழ்த்தாய் தம்பி! 2

`பொங்கலோ பொங்கல்` ஓசை
      எழுந்தது! பொங்கல் வாழ்க!
மங்கையர் இல்லந் தோறும்
      வந்தவர் போனோர்க் கெல்லாம்
பொங்கலைப் பகிர்ந்தளித்தார்!
      பூரித்தார்! மகிழ்ச்சிக் கூத்தே!
சிங்கமே! சிரித்து வந்த
      செங்கதிர் வாழ்த்தாய் தம்பி! 3
----------

3. புத்தொளி எங்கும்!

கொடும்பனி ஊதை தூறல்
      குளிரெலாம் ஓடுக்கி நின்று
தொடுவானில் ஒளியின் செல்வன்
      தோன்றினான்; வாழ்க! பொங்கல்
இடுமோசை இல்லந் தோறும்
      எழுந்தது; நன்செய் புன்செய்
நெடுவானம் காடு மேடு
      நீர்நிலை எங்கும் பொன்னாம்! 1

கொத்தெலாம் பூச்சி ரிப்பு!
      கொடியெலாம் வண்டின் பாட்டாம்!
புத்தொளி எங்கும்; தோப்புப்
      புதரெலாம் விளைவின் தேக்கம்!
எத்திசை எதிர்ப்பட் டாலும்
      புதுப்புனல்; பசுமைக் காடு!
புத்தமிழ் தளிக்கும் இன்பப்
      பொற்கதிர் வாழ்த்தாய் தம்பி! 2

முதிர்கழை கடிக்கும் வீட்டு
      முதிராத கரும்புப் பிள்ளை!
புதுப்புனல் அரிசி ஆப்பால்
      பொடியுடன் வெல்லம் சேர்த்துக்
கொதித்திடும் பொங்கல்; வாழ்க!
      ஒவ்வொரு குடிசை யுள்ளும்
புதுப்பொங்கல்: மகிழ்ச்சிப் பொங்கல்;
      தமிழ்ப்பொங்கல்! வாழ்க! வாழ்க! 3
-------------

4. வாயெங்கும் வாழ்த்துப்பாவே!

வண்டூத நீள்கழியில்,
      தாழையிலே பூமணக்க,
      மறிக டல்மேல்
வண்டூதாத் தாமரைப்பூ
      பொன்னிதழை மலர்த்தியதே!
      வாழ்க! வாழ்க!
கண்டோடா திருந்திடுமோ,
      தமிழ்மகனே! வந்தபகை
      வாடைக் காற்றும்?
கொண்டோம் நாம் பெருமகிழ்ச்சி !
      புத்தாண்டைக் கைக்கொண்டோம்!
      வளத்தைக் கொண்டோம்! 1

கொல்லையிலே வாழைபலா
      மாங்கனிகள் குலுங்கும்! நீள்
      கருப்ப ழைக்கும்!
நெல்லரியோ வந்தகதிர்
      நிறங்கண்டு தலைதாழ்த்தும்!
      ஊரோ ரத்துக்
கல்லருவி முழவார்க்கும்!
      காடெல்லா பூச்சிரிக்கும்!
      குயில்கள் பாடும்!
இல்லத்தில் புதுப்பொங்கல்!
தைப்பொங்கல்! எழுந்தகதிர்
      வாழ்த்துப் பொங்கல்! 2

விண்ணெங்கும் புத்தொளியாம்!
      வெளியெங்கும் நல்லழகு!
      தாய கத்தின்
கண்ணெங்கும் பொங்கலொலி!
      கையெங்கும் கணுக்கரும்பு!
      கன்னிப் பெண்கள்
பண்ணெங்கும் தமிழ்முழக்கம்!
      மன்றெங்கும் தமிழ்க்கூத்து!
      வெற்றிப் பாட்டு!
மண்ணெங்கும் பெருவளப்பம்!
      வாயெங்கும் எழுந்தகதிர்
      வாழ்த்துப் பாவே! 3
------------------

5. கதிர் வாழ்த்துவோம்!

வானெல்லாம் ஒளிபொங்க,
மலையெல்லாம் இசைபொங்க,
      மலையின் சாரற்
கானெல்லாம் ஒலிபொங்கக்,
      காட்டாற்றில் நீர்பொங்கக்
      காட்டுப் பூக்கள்
தேனெல்லாம் கால்பொங்கச்,
      செழுமருதம் வளம்பொங்கத்
      திண்தோள் வீரர்
ஊனெல்லாம் களிபொங்கக்
கீழ்வானில் உயர்ந்த கதிர்
      வாழ்த்து வோமே! 1

காடெல்லாம் பூத்திருக்கக்,
      கனிமரங்கள் பழுத்திருக்கக்,
      கரும்பு பூக்க,
மாடெல்லாம் கொழுத்திருக்க,
      வயலெல்லாம் விளைந்திருக்க,
      வயலைச் சார்ந்த
வீடெல்லாம் களித்திருக்க,
      வேல்விழியார் கனிவாயிற்
      பொங்க லோசை
நாடெல்லாம் பூத்திருக்க
      வந்ததை நன்னாளை
      வாழ்த்து வோமே! 2
-----------

6. பொன்னை வாழ்த்துவோம்!

வயலெங்கும் கதிர்சாய,
    மரமெங்கும் குலைசாய
      வற்றாப் பொய்கை
அயலெங்கும் நீர்சாயக்
      கயல்சாயக், குலைசாய்,
      அழகுக் கூந்தற்
பெயல்சாய, இடைசாய.
      நடைசாய, விழிசாயப்,
      பேச்சும் சாய
மயலூட்டி வருமூசைப்
      பைம்பொன்னை வாயார்-
      வாழ்த்து வோமே! 1

கீழ்த்திசையில் அலையொதுங்கக்,
    கிளைசெடியிற் பூவொதுங்கக்
    கிள்ளை கொஞ்ச
மேத்திசையில் இருளொதுங்க,
      விரிவானிற் குளிரொதுங்க,
      வெய்ய வாடை
நாத்திசையிற் போயொதுங்க,
    நறுமலரில் வண்டொதுங்க,
      நாட்டுப் பெண்கள்
வாழ்த்திசையில் நாணொதுங்க
      வருமூசைப் பைம்பொன்னை
      வாழ்த்து வோமே! 2

மண்ணெல்லாம் தேன்மணக்க,
      வாயெல்லாம் நெய்மணக்க,
      வளைக்கைக் கன்னிக்
கண்ணெல்லாம் களிமணக்கக்
      காளையரின் தோள் மணக்கக்,
      கரும்புப் பிள்ளைப்
பண்ணெல்லாம் தமிழ்மணக்கப்
பாரெல்லாம் பால்மணக்கப்
      பைம்பொன் வீச்சாம்
விண்ணெல்லாம் ஒளிமணக்க
      மேலெழுந்த செங்கதிரை
      வாழ்த்து வோமே! 3

காட்டிடையில் ஒலிபொங்கக்
    காலிடையில் நீர்பொங்கக்,
      கவின்சேர் புட்கள்
கூட்டிடையில் இசைபொங்கக்
      குளிர்காவில் மணம்பொங்கத்
      தமிழர் நாட்டு
வீட்டிடையிற் பால்பொங்க,
      வெளியெங்கும் ஒளிபொங்க,
      வீட்டுப் பெண்கள்
பாட்டிடையில் தமிழ்பொங்க
      வருமூசைப் பைம்பொன்னை
      வாழ்த்து வோமே! 4
------------

7. அலர்ந்ததடா புதுப்பரிதி!

விண்ணெழுந்து வெருண்டோடி
    மெய்சிலிர்க்க இடியிடித்து
      மின்னல் மின்னிக்
கண்கவரும் மலையுச்சி
      காராடும் மழைக்காலம்
      கடந்து தாண்டிப்
பண்ணெழுப்பும் ஓடையிலே
    பலபூக்கள் தேன்பிலிற்றப்
      பைம்பொன் தேக்கி
விண்ணெழுந்தான் விரிவானில்
      தைமுதல்நாள் செங்கதிரோன்!
      வாழ்க வாழ்க! 1

பகைசூழ்ந்த புலத்திடையில்
அகப்பட்டுத் தத்தளிக்கும்
      படையைப் போலப்
புகைசூழ்ந்த வெளியினிலே
      புதரிருக்க, ஊரிருக்கப்
      பொலிவுண் டாக்கித்
தொகைசூழ்ந்த தமிழ்மக்கள்
      வகைசூழ்ந்து வாழ்ந்திருக்கத்
      தொடுவான் மீது
நகைசூழ்ந்து கீழ்த்திசையில்
      எழுந்திருந்தான் நற்பரிதி!
      வாழ்க! வாழ்க! 2

மலைக்காட்டுச் சாரலிலே
      வற்றாத தேன்பெருக்கி,
      மலையின் சாரல்
இலைக்காட்டுத் தோப்பினிலே
      பூமலர்த்தி, எழில்பெருக்கி,
      இன்ப வாழைக்
குலைக்காட்டுக் கொல்லையிலே
      குயில்பாடக் குரல்கொடுத்துச்,
      செம்மண் பாலை
அலைக்காட்டுப் பெருங்கடல்மேல்
      அலர்ந்ததடா புதுப்பரிதி!
      வாழ்க! வாழ்க! 3

நீர்முழக்கக், காமுழக்க,
      நெல்லறுக்கும் வயல்முழக்க
      நீண்ட மாட

ஊர்முழக்க, மாமுழக்க,
      மலைமுழக்க, உலைமுழக்க,
      ஊரில் உள்ள
ஏர்முழக்கப், பறைமுழக்க,
      இசைமுழக்கத், தமிழ்முழக்க
      எழுந்து வானில்
பார்முழக்கத் தொடுவானில்
      தை முதல்நாள் இதோவந்தான்!
      பரிதி வாழ்க! 4
------------

8. எழுச்சிப் பாட்டு!

கார்முகில் தவழும் கீழ்வான்
      பூத்தது தங்கக் கட்டி!
நீர்நிலை நன்செய் புன்செய்
      நெடுகிலும் பொன்; பொன்; பொன்னாம்!
ஊரெலாம் மகிழ்ச்சிப் பொங்கல்!
      உளமெலாம் எழுச்சிப் பாட்டு!
சீர்நமக் களிக்க வந்த
      செங்கதிர் வாழ்த்தாய் தம்பி! 1

தளிரெலாம் பைம்பொன் தாது!
      தழையெலாம் இருட்டுப் பச்சை !
வெளியெலாம் கிளியின் கூச்சல்!
      வீடெலாம் அழகின் தேக்கம்/
குளிர்பசி ஊதை தூறல்
      குறைந்ததே; நிறைந்த தின்பம்!
களிப்பூட்ட வந்த புத்தம்
      புதுக்கதிர் வாழ்த்தாய் தம்பி! 2

களமெலாம் வைக்கோற் குன்றம் !
      காடெலாம் புள்ளின் பாட்டு!
குளமெலாம் பாசிப் போர்வை!
      குன்றெலாம் பூக்கள்! மக்கள்
உளமெலாம் மகிழ்ச்சிப் பொங்கல்!
      ஊரெலாம் இசைமு ழக்கம்!
வளமெலாம் பெருக்கி இன்று
      வந்ததை வாழ்த்தாய் தம்பி! 3
--------------

9. வாழ்த்தினர் பொங்கல்!

நீள் மலை உச்சி குன்றுகள் சாரல்
      நிலவிய மழைகுளிர் ஓட்டித்
தோளினைக் குலுக்கி வந்தது பரிதி!
      குளிர்மலைக் குறத்தியர் சொந்த
ஆளனைக் கண்ட அறிவையர் போல
      ஆடினர்; மயிலினம் ஆடும்
கோளரிக் குறவர் தேனடை பிழிந்து
      கொடுத்தனர்; வாழ்த்தினர் பொங்கல்! 1

கண் நுழை யாத காடுகள் ஓடை
      கருகிய முட்புதர் பூக்க
விண்ணிடை இன்று வந்தது பரிதி!
      வேய்குழல் இசைத்தனர் ஆயர்!
வெண்ணெயைக் கடையும் ஆய்ச்சியர் கூந்தல்
      மெய்யெலாம் புதுமெரு கேறும்
பண்ணொடு பொங்கல் பாளிதம் நெய்மோர்
      பகிர்ந்தனர்; வாழ்த்தினர் பொங்கல்! 2

இருள்மழை போக்கி, எரிகதிர் தேக்கி
      மலர்மிசை எழுந்தது பரிதி!
அரும்புகள் அலர்ந்தன! அடுப்பெலாம் பொங்கல்!
      ஆடலும் பாடலும் கேட்கும்!
கரும்புகள் ஒடித்துக் கன்றுகள் அடித்துக்
      களித்திடும் சிறுவரின் கண்ணில்
பெருகிடும் இன்பம்! பொங்கலோ பொங்கல்!
      பிறர்நிலை கூறிடப் போமோ? 3

அலைகடல் தோய்ந்த இருட்பகை ஓட்டி
      அழகுவான் எழுந்தது பரிதி!
இலையடர் புன்னை தாழையும் தெங்கும்
      இடிகரைப் பெருமணல் மேடும்
வலையடர் முன்றில் சிறுகுடி நெய்தல்
      மங்கையர் நீள்விழி எங்கும்
விலையிட வொண்ணா எழுச்சியின் கூத்தாம்!
      வெளியெலாம் பொங்கலின் வாழ்த்தே! 4
-------------

10. வாழ்த்துவோம் பொங்கல் !

மண்ணிடை விரிந்த வானிடைச் சூழ்ந்த
      மழைகுளிர் வாடையை வீழ்த்தி
விண்ணிடை எழுந்த புதுக்கதிர் கண்டோம்!
      வெளியெலாம் விளைவினைக் கண்டோம்!
பண்ணிடைக் கலந்த தமிழ்ச்சுவை போல
      மனத்திடைப் பரந்ததே இன்பம்!
கண்ணிடை மகிழ்ச்சி, கருத்திடைத் தெளிவு
      கண்டனம்! வாழ்த்துவோம் பொங்கல்!
-------------

11. வாழ்த்துவோம் வா!

களவிளைத்து நன்செய்க் கதிர்விளைத்து நம்வாழ்வின்
பாவிளைத்து வந்ததுவே தைப்பொங்கல்-நாவிளைக்கச்
செந்தமிழால் நாம்பாடிக் கீழ்வான் புதுப்பரிதி
வந்ததை வாழ்த்துவோம் வா!       1

வெண்டா மரைபோல் விரிவானில் தைமுதல்நாள்
கண்டோம்; புதுப்பரிதி கண்டோமே!- முண்டும்
பசிக்கொடுமை ஓட்டிப் பழகு தமிழின்
இசைவளர்ப்போம் வாநீ எழுந்து!       2

ஊனில், உயிரில், உலகப் பெருவெளியில்
வானொளியைச் சேர்த்தான் புதுப்பரிதி !- மானே !
வடவர்க் கடிமையாய் வாழோம்! திரண்டு
விடுபடுவோம்! வாநீ விரைந்து!       3

சுற்றி யிருந்த பகையோட்டிக் கீழ்வானில்
வெற்றி வலம்வந்தான் வெய்யோனும்!- பெற்ற
திருநாட்டை, வாழ்வியலைத் தாயகத்தை மீட்டே
வருவோம்! விரைந்தெழுந்து வா!       4
--------------

12. கஞ்சிக்கு வழியுண்டோ?

உழவன்:
மழையும் குறைந்தது! வானம் வெளுத்தது!
வந்தது புத்தாண்டு பெண்ணே! - தைத்திங்கள்
வந்தது வந்தது கண்ணே!

உழத்தி
வானம் வெளுத்தென்ன? மழையும் குறைந்தென்ன?
வறுமை குறைந்ததோ மச்சான்? - பசி
வாட்டம் குறைந்ததோ மச்சான்?

உழவன்:
கன்னல் முதிர்ந்தது! தென்னை பழுத்தது!
கதிரொளி வந்தது பெண்ணே!
புதுக் கதிரொளி வந்தது பெண்னே!

உழத்தி
கன்னல் முதிர்ந்தென்ன? தென்னை பழுத்தென்ன?
கட்டத் துணியுண்டோ மச்சான்?- நொய்க்
கஞ்சிக்கு வழியுண்டோ மச்சான்?

உழவன்:
குட்டையும் பூத்தது ! கொடிசெடி பூத்தன!
குரலெங்கும் கேட்குது பெண்ணே ! - பொங்கற்
குரலெங்கும் கேட்குது பெண்ணே!

உழத்தி:
குட்டையும் பூத்தென்ன? குரலெங்கும் கேட்பென்ன?
குந்தக் குடிசையுண்டோ மச்சான்? --நாம்
குடிசெய் இடமுண்டோ மச்சான்?

உழவன்:
நன்செய் விளைந்தது! புன்செய் விளைந்தது!
நாம்தமிழ்ப் பொங்கலைக் கண்டோம்! -பெண்ணே!
நாம்தமிழ்ப் பொங்கலை உண்டோம்!

உழத்தி;
நன்செய் விளைந்தென்ன? புன்செய் விளைந்தென்ன ?
நாமென்றும் உழைப்பவர் தாமே? - விளைவை
நம்மாண்டை அறுப்பவர் தாமே!

உழவன்:
ஆண்டவன் படைப்படி ! அதற்கென்ன செய்வது
அழுதாலும் தீராதே கண்ணே! நித்தம்
அழுதாலும் தீராதே கண்ணே!

உழத்தி :
ஆண்டவன் படைப்பல்ல! 'கீ'ண்டவன் படைப்பல்ல
ஆகாதார் படைப்பது மச்சான்! -முனைந்தால்!
போகா திருக்குமோ மச்சான் !
-------------

13. இன்பம் தந்த தை!

மறிகடல்மேற் புதுப்பரிதி
வந்ததைப் பார் தோழி!-இன்பம்
தந்ததைப் பார் தோழி!

பொறிவண்டு பூப்புதரிற்
புதுப்பாட்டைப் பாடப்
பூத்த மலர் கொம்பிருந்தே
தென்றலுடன் ஆட!

நீரலைகள் கரைமுழக்க
வானம் மழை இழக்க
நிறச்சேவல் கொக்கரிக்கும்
வந்ததை அழைக்க!

ஊரெல்லாம் புதுப் பொங்கல்!
உலையினிலே தைப் பொங்கல!
உண்டாடும் கன்னியர்கள்
நடமாடும் திங்கள் !

கையெல்லாம் கணுக் கரும்பு!
வாயில் முல்லை அரும்பு!
கன்னியரின் நீள்புருவம்
தொடர்ந்து செல்லும் எறும்பு!

மெய்யெல்லாம் புதுமகிழ்ச்சி
வெளியிற் குளிர் வீழ்ச்சி
நாமடைவோம் பெருமகிழ்ச்சி
வீழ்ந்தகதிர் வாழ்த்தி!
------------

14. எங்கெங்கும் பொன்னொளி!

அவள்:
செங்கதிர் வந்தது!
குங்குமப் பொட்டுப்போல்
எங்கெங்கும் பொன்னொளி அத்தான்!-- தைத்
திங்களும் வந்ததே அத்தான்!

அவன் :
நீர் நிலை பூத்தது! !
நெல்வயல் காய்த்தது!
ஊரெல்லம் பொங்கலோ பொங்கல்! - நாம்
உண்டு மகிழ்வோம் பாற்பொங்கல்!

அவள்:
குன்றம் மணக்குது
தென்றல் அடிக்குது!
மன்கதிர் வாழ்த்துவோம் அத்தான்!-ஊர்
மருங்கிடை ஆடுவோம் அத்தான்!

அவன்:
அருங்கதிர், தைக்கதிர்
அலர்ந்தது விண்ணிடை!
வருங்கதிர் வாழ்த்துவோம் முன்னர் ! - குன்ற
மருங்கிடை ஆடுவோம் பின்னர்!

அவள் :
களிவண் டிசைக்குதே!
காட்டா றழைக்குதே!
ஒளிப்புனல் ஆடுவோம் அத்தான்!- பொங்கற்
களிப்பினிற் பாடுவோம் அத்தான் !

அவன்:
தென்னவர் தைப்பொங்க
முன்னர் நாம் வாழ்த்துவோம்!
கன்னற் சுவைகண்ட பின்னே - வாய்க்
காலிடை ஆடுவோம் கண்ணே!

அவள் :
மாப்பிள்ளை மாருண்ண
மாங்குயில் கூவுது!
தோப்புப் பழுத்ததே அத்தான்! கொய்யாத்
தோப்புப் பழுத்ததே அத்தான்!

அவன்:
கையொடு கைகோத்துத்
தைப்பொங்கல் வாழ்த்துவோம்!
நெய்ப்பொங்கல் உண்டபின் பெண்ணே!-நாம்
கொய்யாப் பழமுண்போம் கண்ணே!
-------------

15. வம்மின் வாழ்த்துவம்!

மண்டு பொன்னொளி வாரி இறைத்துமே
வண்டு மூசிடா வான்வெளிப் பொய்கையிற்
கொண்டல் மேலெழும் கூம்பிடாப் பொன்மலர்
கண்டு வாழ்த்துவம் வாழ்த்துவம் வம்மினே       1

செந்நெல் நீள்வயல் தீஞ்சுவை வாழையும்
கன்னல் மாபலாக் காண்பவர் யாரையும்
'தின்ன வா'வெனச் செப்பிடச் செங்கதிர்
இந்நாள் வந்ததை! வாழ்த்துவம் வம்மினே!       2

ஓடை பாடிட ஒண்மயில் ஆடிடக்
காடு வான்மலை எங்கும் களியெழ
வாடை ஓட்டியே வந்த பரிதியைக்
கூடி வாழ்த்துவம் வாழ்த்துவம் வம்மினே!       3

நீரில் மூழ்கிநி மிர்ந்திடு கன்னியர்
கூர்வி ழிகளைக் குட்டை மலரெனக்
காரி வண்டினம் மொய்க்கவ ருங்கதிர்
ஊரிற் கண்டனம் வாழ்த்துவம் வம்மினே!       4.

கோதை சூடிய கோதைநல் வாழ்த்தொலி
ஓதை 'பொங்கலோ பொங்க 'லென் றுயர்ந்துமே
காதை இன்பக் களிப்பினல் ஆழ்த்துமால்!
வாதை தீர்ந்ததை வாழ்த்துவம் வம்மினே!       5
----------------

16. வா அண்ணே வா!

கண்ணாம் சிலையோடிக் காதைத் துளைத்துவரப்
பண்ணோ (டு) இழையுமே பாதமலர்!-பெண்ணாள்நம்
பொங்கலை வாழ்த்தும் புதுமையினைக் காண நீ
இங்கெழுந்து வாஅண்ணே வா!       1

நன்செய் பழுக்கநற் காபழுக்கச் செங்கதிரோன்
புன்செய் பழுக்கப் புறப்பட்டான்!- இன்சொல்
தமிழால் கதிர்வாழ்த்தித் தைவாழ்த்திப் பொங்கல்
அமிழ்துண்போம் வாஅண்ணே வா!       2

சின்னக் கரும்பு கணுக்கரும்மைத் துண்டாக்கித்
தின்னும் கதிர்வாழ்த்தும் தாயோடு - பொன்னான
செம்பரிதி வாழ்த்தித்தைத் தீம்பொங்கல் உண்டாக்கும்
நம்பொங்கல் வாஅண்ணே வா!       3

நீலக் கடலும் நெடுவானும் பொன்னாக்கிக்
கோலம் புகுந்தான் குளிர்பரிதி! - ஏலவே
புத்தம் புதுப்பொங்கல் தைப்பொங்கல் உண்டாடி
இத்திங்கள் போலிருப் போம்!       4
--------------

17. அலர்ந்தது பொற்கதிர் !

அலைகடல் மீது பனித்திரை விலக்கி
      அலர்ந்தது பொற்கதிர்! வாழி!
உலகினில், ஊனில், ஊனிடை உயிரில்
      உவகையின் மிகுதியைக் கண்டோம்!
கலகலப் போடு பொங்கலோ பொங்கல்!'
      கலந்தது விண்ணிடை எங்கும்!
மலரணி பெண்கள், கன்னியர்,காளை
      வாழ்த்தொலி யோடுநம் வாழ்த்தே!       1

உழவனை வாழ்த்தி, ஒளிக்கதிர் வாழ்த்தி,
      உயிரினம், கார்முகில் வாழ்த்திப்
பழகிய அன்னைத் தமிழ்மொழி வாழ்த்திப்
      பைந்தமிழ் நாட்டினை வாழ்த்தி,
அழகிய தாய்மார் இணையுடன் ஆட,
      அருவிகள், வண்டுகள் பாட
ஒழுகிய பொங்கல் நெய்யினைச் சுவைக்கும்
      ஓண்சிறார் வாழ்த்தொடு வாழ்த்தே !       2
----------------

18. கண்டனம் களிப்பினையே!

நூட்டிற் கண்டனம்! கண்டனம்
      பொற்சுடர்! வாழிய!நம்
வீட்டிற் கண்டனம் விளைவெலாம்!
      வயலிடை நல்லுழவர்
பாட்டிற் கண்டனம் பண்ணிசை!
      தோள்வலி! இளஞ்சிறார்வாய்ப்
பாட்டிற் கண்டனம் தைமுதற்
      பொங்கலின் பாலொழுக்கே!       1

விண்ணிற் கண்டனம் பொற்சுடர்!
      வாழிய! விரிகடல்சூழ்
மண்ணிற் கண்டனம் செழுமையும்
      வளமையும்! வார்புனல்பாய்
பண்ணிற் கண்டனம் பாவையர்
      தீந்தமிழ்! நற்றமிழர்
கண்ணிற் கண்டனம் தைமுதற்
      பொங்கலின் களிப்பினையே!       2

காட்டிற் கண்டனம் செடிகொடி
      எங்குமே மலர்க்கூட்டம்
மேட்டிற் கண்டனம் பைம்புதர்
      மேலெல்லாம் ஒளிவீச்சு !
கூட்டிற் கண்டனம் குருவியின்
      பாடலும் தாய்ப்பற்றும்!
ஏட்டிற் கண்டனம் தைமுதற்
      பொங்கலின் நல்வாழ்த்தே!       3
------------

19. வாழிய பொற்சுடர் ! !

வானில் வந்தது! வந்தது
      பொற்சுடர்! வாழிய! நம்
ஊனில் வந்தது நல்லுயிர்!
      வந்தது நீளின்பம்!
கானில் வந்தது முட்புதர்
      பைங்கொடி பூநாற்றம்!
தேனில் வந்தது வண்டினம்;
      செந்தமிழ் இசையூற்றே!       1

பரிதி பூத்திடப் பூத்தது
      முல்லையும் நீள் குன்றும்!
மருதம் பூத்திடப் பூத்தது
      மங்கையர் விழிநீலம்
சுருதி பூத்திடப் பூத்தது
      வாயெல்லாம் நற்பொங்கல்!
பெரிது பூத்தது; பூத்தது
      நாடெல்லாம் நல்வாழ்த்தே !       2

பெரும்பூப் பூத்தது பூத்தது
      பொங்கலும் ஊனுடலிற்!
கரும்பு பூத்தது ! பூத்தது
      செந்நெலும்! கார்குழலில்
அரும்பு பூத்தது ! பூத்தது
      செவ்விதழ்! அன்பு நல்லாள்
விரும்பு தோளினில் தாமரை
      பூத்தது! பெரும் மகிழ்வே!       3

விண்ணில் வந்ததுபொற்சுடர்!
      வந்தது தைத்திருநாள்!
மண்ணில் வந்தது மாபலா
      வாழையும் தீங்கரும்பும்!
கண்ணில் வந்தது புத்தொளி!
      வந்தது பெரும் பொங்கல்!
மண்ணில் வந்தது மங்கையர்
      சிலம்பொலி வாழ்த்திசையே!       4
---------------

20. வாழ்த்துவோம் வாரீர்!

கீழ்க்கடல் நீல வான்நிறம் பொன்னாய்க்,
      கிளர்ந்தெழு அலைகடல் பொன்னாய்ச்,
சூழ்ந்திடு சிற்றூர் மரஞ்செடி பொன்னாய்
      மாற்றியே தோன்றினான் பரிதி1
ஆழ்ந்தநல் லறிவும், வளமையும், பண்பும்,
      அறநெறி வாழ்க்கையும் பெற்றே
வாழ்ந்தவர் வாழ வந்தது பொங்கல்!
      வந்ததை வாழ்த்துவோம் வாரீர்!       1

நன்செயிற் செந்நெல், புன்செயிற் கரும்பு,
      நற்கனி எங்கணும் பழுக்க,
மின்செய்க் குழைகள், விழிவேல் பாய,
      மெல்லியர் சிலம்பொலி ஆர்ப்ப,
இன்செயச் சிறுவர் கரும்பினைத் தூக்கி
      எழுந்தெழுந் தாடிட முனைய
பொன்செயப் பரிதி தைமுதல் வந்தான்!
      பொங்கலை வாழ்த்துவோம் வாரீர்!       2
------------

21. பரிதி தருஞ் செல்வம்!

நீரில், நிலத்தில், நிழற்காவில், பூம்புதரில்,
ஊரில், உடலில், உடலுயிரில், - கார்வானிற்       1

பொன்செய்தான் கீழ்வான் புதுப்பரிதி ! தைத்திங்கள்
பொன்செய்யும் புன்செய்யுள்; நன்செய்யுள் ! - மின்னே!       2

கரும்பும், குலைவாழைக் காயும் பழுக்க,
அரும்பும் மலர்ந்த(து) அலர்ந்த - பெருஞ்சிரிப்பைக்       3

காட்டி, உனது விழி காட்டி உடலுயிரை
வாட்டி வதைக்க மகிழ்ந்தேன்நான்!- ஈட்டும்       4

பெருஞ்செல்வம் யார் தந்தார்? கேளேன்! பரிதி
தருஞ்செல்வம் ! இல்லையெனச் சொல்வோர்-ஒருவர்       5

உளரேல், அழைத்துவா! ஒன்றவர் நம்மை
அளறில் அமுக்கிய செல்வர்:- களங்கானா (து)       6

ஏய்த்துப் பிழைக்கும் இழிகுணத்தோர் ஆவரே!
தீய்த்துப் பொசுக்குவோம்! தீமையை - மாய்த்து நாம்?       7

வெற்றி முரசம் முழக்குவோம் - விண்ணெழுந்த
பொற்கதிர் வாழ்த்திப் புதுப்பொங்கல் - சுற்றி       8

இருப்போர் அனைவர்க்கும் ஈவோம்! மகிழ்ந்தே
திருநாட்டை மீட்கத் திரண்டு - பெரும்படையாய்       9

வருவீர்! வருவீர் தமிழ்க்குலத்து மங்கையரே!
தெருவில் தமிழ்வாழ்த்து வோம்!       10
----------------

22. தோன்றியதே!

தேனைப் பொழிந்தான் புதுப்பரிதி!
      தைத்திங்கள் வாழியவே!
ஊனில், எலும்பில்,உயிரில்,
      உலகத்(து) உயிரினத்தில்,
வானிற் பெரும்பொங்கல்!'பொங்கலோ
      பொங்கல்' மகிழ்ச்சியொலி
கூனல் நிமிர்த்தி நமையெலாம்
      வாழ்விக்கத் தோன்றியதே!       1

பொன்னாக்கிக் கீழ்க்கடலை, நம்நாட்டை நல்வாழ்வைப்
பொன்னாக்கி வந்தான் புதுப்பரிதி! மின்னே !
தெருவெல்லாம் பொங்கலோ பொங்கலாம்!வாழ்த்தி
வருவோம்; வளம்பெறு வோம்!       2

வானெங்கும் பொன்மழையாம்! வந்ததுபார் புதுப்பரிதி!
தேனெங்குஞ் செங்கரும்பு! தீந்தமிழா! - ஊனிடையில்
வந்ததுவே நீளின்பம்! வந்ததுவே நம்பொங்கல்!
வந்ததை வாழ்த்துவ மே!       3
--------------

23. புதுத் தை வந்தது!

கீழ்த்திசைக் கிளர்த்தெழு பரிதி கண்டனம்!
வாழ்த்தினம் வந்ததை! மக்கள் வாழ்த்தினம்!
ஆழ்கடல் ஒலியொடு பொங்கல் ஆர்ப்பொலி
சூழ்ந்திட, இன்பமும் வாழ்வும் சூழ்ந்ததே!       1

பாரினில் விண்ணிடைப் பரிதி கண்டனம்!
ஊரினில், ஊரிடை உள்ள வீட்டினில்,
நீரினில், நீரிடை நிலவு பூக்களில்,
ஏரினில், ஊனுடல் எங்கும் இன்பமே!       2

வாடையை ஓட்டியே வந்த தைமுதல்
ஆடலும் பாடலும் அயரும் கன்னியர்
ஏடவிழ் கண்மலர் கண்டு காளையர்
தேடிய பொங்கலின் செந்தேன் என்பரே!       3

பொன்னொளி கண்டனம்! புதுத்தை வந்தது!
தென்னவர் வாயெலாம் பொங்கல் வாழ்த்தொலி!
மின்னொளி வாய்மொழிச் சுவையே மிக்கெனக்
கன்னலைக் கடிப்பவர் கவிதை யாப்பரே!       4

செங்கரும் பொடித்துணும் பிள்ளைச் செவ்விதழ்
செங்கரும் பா மெனச் செப்பும் சேயிழை
துங்கவி ழிமொழி துய்க்கும் கேள்வரும்
'பொங்கலைப் போன்றவர் புதல்வர்' என்பரே !       5
---------------

24. உளத்தொடு வாழ்வோம் உயர்ந்து!

எழுந்தது செங்கதிர் ! எங்கணும் பொன்!பொன்!
உழுபடைப் பொங்கலைக் கண்டோம்!- செழுந்தேன்
பெருக்காகும் மக்கள்வாய்ப் பேச்சு!       1

தொடுவான் பரிதி எழுந்தது! பொன்!பொன்!
அடரிருள் அற்றதே! வாழி!- படரும்
உளத்தொடு வாழ்வோம் உயர்ந்து!       2

பிறந்தது பொற்கதிர் ! கீழ்த்திசை பொன்!பொன்!
பிறந்ததே நல்லின்ப வாழ்வு - நிறைந்த
பயன்துய்த்து வாழ்வோம் பகிர்ந்து!       3

பிறந்தது பைம்பொன்! பிறந்தது தைநாள்!
நிறைந்தது நம்மரும் இல்லம் - மறைந்த
பழம்புகழ்ப் பண்படை வோம்!       4

வந்தது தைநாள்! மலிந்தன பொன்பொருள்!
வந்ததே ஊனுடல் நீளின்பம்!-சொந்த
மொழிநாடு வாழ்த்து மே!       5
-----------------

25. உயர்ந்து வாழ்வோம்!

சேலுஞ்செந் தாமரையும் மேற்றிசையிற் காத்திருக்க
நீலவான் பூத்து நிமிர்ந்ததொளி !-கோல
இளம்பரிதி தந்ததை எல்லோரும் பங்காக்கி
உளமொப்பி வாழ்வோம் உயர்ந்து !       1

இத்திங்கள் தைத்திங்கள்! இப்பரிதி பொற்பரிதி!
புத்தாண்டு வந்ததைப் போற்றுவோம்! - எத்திசையும்
தாயகத்தின் மேன்மை, தமிழின் சிறப்போங்க
ஓயா துழைத்துயர் வோம்!       2

இந்நாடோ உன்னாடாம்! இப்பொங்கல் தைப்பொங்கல்!
பொன்னாம் பரிதி புதுப்பரிதி! -தென்னவனே !
வாழ்ந்த இனம்நீ ! மறந்தாயோ ? இன்றுனது
தாழ்ந்தநிலை சற்றே நினை !       3

விண்ணை, வெளியை, விரிகடலை, மேற்பரப்பை,
மண்ணைப்பொன் ஆக்கி வரும்பரிதி!- பண்ணார்
தமிழீர்! புதுப்பரிதி தந்ததைத் தேக்கா(து)
அமைய அமையுமே நாடு!       4
------------

26. கிழக்கில் வந்தான்!

தென்னாட்டு மாமணியே!
      திராவிடனே! இளம்புலியே!
      சிறுத்தை ஏறே!
உன்னாட்டைத் திராவிடத்தை
      ஒப்பில்லாத் தமிழ்நாட்டைத்
      தாய கத்தைத்
தின்னவந்த பகை நொறுக்கி
      இருள்கிழித்துச் செங்கதிரோன்
      கிழக்கில் வந்தான்!
என்னென்பேன்! பொன்! பொன்! பொன்!
      இளம்பரிதி வாழ்க! தமிழ்ப்
      பொங்கல் வாழ்க!       1

இன்றுவந்த புதிய கல்வி
      முதலமைச்சர் கைச்சரக்கு;
      விளைவைக் கண்டார்;
பொன்றாத செயலிதுவாம்
      படைபலத்தாற் புவியாட்சி
      நிலைத்த துண்டோ?
இன்று தமிழ்த் தைப்பொங்கல்;
      திராவிடரின் தனித்திருநாள்!
      இங்கன் னாளில்
நன்றில்லாத் திட்டங்கள்
      எதுவரினும் நாமெதிர்ப்போம்;
      உறுதி கொள்ளே!       2
---------------

27. பச்சை விருந்து!

கொந்தளிக்கும் நீலக் குளிர் கடல்மேற் செங்கதிரோன்
வந்தான்; நலமே தரவந்தான்! - செந்தேன்
கொழிக்கும் மலர்க்காடு; கொல்லையிலும் செந்நெல்;
விழிக்கெங்கும் பச்சை விருந்து!       1

மண்ணிற் புதுமலர்ச்சி, வானிற் புதுமலர்ச்சி,
கண்ணிற் புதுமலர்ச்சி கண்டோமே!- விண்ணில்
எழுந்தான் புதுப்பரிதி! 'பொங்கலோ பொங்கல்'
எழுந்தது வான்பரப்பி லே!       2

நீரெல்லாம் பூக்கள்; நிலமெல்லாம் செங்கரும்பாம் !
ஊரெல்லாம் புத்தரிசிப் பாற்பொங்கல் !- சீர்தழுவும்
அங்கை மகளிர் அகங்குளிரக் கீழ்வானிற்
செங்கதிரோன் வந்தான் சிரித்து!       3

குளிரொடுக்கி மூடுபனிக் கொட்டம் ஒடுக்கி
அளிசெய்தான் செங்கதிரோன்! வாழ்க!- களிவண்டு
தா துண் டிசைபாடும் ஆளன் திருத்தோளில்
மாதுண் டிசைபாடு வாள்!       4

செங்கரும்பை மக்கட்கே இல்லச் செழுங்கரும்பு
பங்கிட் டளித்தாள் பரிவோடு;-- பொங்கல்
இலைஇட்டாள் எல்லார்க்கும்; இட்டாள் இசைத்தேன்;
தலைப்பரிதி வாழ்த்தினா ளே!       5
------------

28. பூத்தது வாழ்வு!

பொதுவிடம் இல்லம் வயல்வெளி
      தோப்புப் புறங்களெல்லாம்
இதுநாள் வரையில் இருந்த
      பகையாம் குளிரிருட்டின்
முதுகை ஒடித்து முழக்கும்
      கடலின் விசும்பினின்று
புதுமலர் பொன்மலர் பொற்றா
      மரைமலர் பூத்ததுவே!       1

பூத்தது நெற்கதிர்! பூத்தது
      வாழ்வு! புதரிலெங்கும்
பூத்தது கண்டோம் தமிழர்
      திருநாள் தமிழகத்தில்!
பூத்தது நீர்நிலை ! பூத்தது
      பொங்கல்! நலம்பலவும்
பூத்தது! வாழ்க! புதுப்பொங்கல்
      வாழிய! வாழியவே!       2

வெண்ணெல் அரிசி புதுப்புனல்
      ஆப்பால் மணப்பொடிகள்
உண்ணத் தெவிட்டா உயர்கழை
      வெல்லம் உடன் கலந்தே
எண்ணம் இனிக்க இனிக்க
      எழுந்தநற் பொங்லோசை
விண்ணில் அதிர, அதிரும்
      தமிழ்ப்பெண்டிர் மென்சிலம்பே!       3
------------

29. இல்லை இடர்!

இன்பம் பொலிக! இடர்நலிக! நம்வாழ்வில்
அன்பு பொலிக! அறம்மலிக! -- துன்பமெல்லாம்
நீங்கிற்று! வாழ்வு பெருகிற்று! செங்கதிரோன்
ஈங்கெழுந்தான்! இல்லை! இடர்!       1

இருள்திரையை நீக்கி எழுந்தான் பரிதி!
இருள்மனத்தில் நீக்கமுன் னேற்றம் - பொருளைப்
பொதுசெய் திராவிடனே! பொங்கல்நன் னாளில்
இதுவன்றோ உன்கடமை யாம்!       2
------------

30. நிலமடந்தை காண வந்தான் !

பொற்றுகளை வான்சிந்தப் புள்ளினங்கள் பாடப்
புதராடிக் கிளை தாவித் தவழ்ந்துவரும் தென்றல்
நெற்கழனி இடைபூத்த செங்கரும்பு வாழை
நின்றுவர வேற்பளிக்கும்; இசைமீட்டும் வண்டு;

பொற்புடைய புதுப்பெண்ணின் புன்முறுவல் போலப்
பூத்திருக்கும் நீரோடை; முழவார்க்கும் ஆறு;
கற்பரசி நிலமடந்தை காணவந்தான் வெய்யோன்!
கடுங்குளிரும் பனிப்புகையும் இனியில்லை! வாழி!
------------

31. சுவைத்தனர் தமிழை !

பொன்னொளி வீசித் தன்னெழில் காட்டிப்
புறப்பட்டான் பரிதி! பொங்கலோ பொங்கல்!
பசுந்தழைக் காடெல்லாம் விசும்பின் பேரெழில்!
வண்ண மாமலர் கண்ணாற் சிரித்தது!
மதுமயக் கேறிய நாவல் வண்டு       5

மெல்லிசை கூட்டி நல்லியாழ் இசைத்தது!
புள்ளிணை இன்ப வெள்ளத்தில் திளைத்தது!
மாக்க ளெல்லாம் நோக்குவே றின்றித்
துணையுடல் வருடி இணைந்திருந்தனவே!
அரும்புப்பற் சிறுவர் கரும்பைச் சுவைத்தனர் !       10

கன்னியர் விழியும், காளையின் தோளும்
ஒன்றோ டொன்று கலந்துற வாடின!
தமிழின் சுவையாம் பொங்கல் அமிழ்தைச்
சுவைத்தனர் யாவரும்! சுவைத்தனர் தமிழை!
ஆடினர்! இணைந்தே பாடினர்!       15

வாழ்த்தினர் பொங்கலை! வாழ்கநம் பொங்கலே!
--------------

32. பாற்பொங்கல் வாழ்க !

பொங்கும் அலைகடலில் பொன்பொங்கத் தீவளர்த்துத்
தங்கப் பரிதி தலைநிமிர்ந்தான்! இல்லமெலாம்
பொங்குதடா இன்பம்! புதுப்பானைப் பச்சரிசிப்
பொங்கலோ பொங்கல்! பெரும்பொங்கல்! வாழியவே!       1

ஓடை இசைக்க உயர்ந்து நகைகாட்டித்
தோடவிழ்க்கும் தாமரையின் தோள்தழுவும் செங்கதிரை
மாடுழுத நன்செய் வளம்பெருக்கும் பொற்கதிரை
நாடிஇடும் நற்பொங்கல் நன்னாளும் வாழியவே!       2

குட்டை குளஞ்செடிகள் கன்னற் குலைவாழை
மட்டை விரிதென்னை மாப்பரிதி செங்கதிரை
இட்டுமெரு கிட்டின்பம் இட்டுவரக் கன்னியர்கள்:
பட்டுடுத்திப் பால்கொரியும் தைப்பொங்கல் வாழியவே!       3

ஒடுக்கும் குளிர்பனியை, ஊர்நிலவும் மையிருட்டை
ஓடுக்கினான் ஒண்பரிதி!வாழ்வும் உயர்ந்ததுவே!
நடுவில்லா நங்கையர்கள் நற்றமிழாம் தேனூற்
இடும்பொங்கல், இன்பத் தமிழ்ப்பொங்கல் வாழியவே!       4

அரும்பு மிளமீசை ஆளன் அகங்குளிர
அரும்பு நகைகாட்டிப் பொங்கல் அமுதூட்டிக்
கரும்பு கரும்பொடித்தே கண்ணீரைச் சிந்துமிளங்
கரும்பிற் களிக்கும் பெரும்பொங்கல் வாழியவே!       5
--------------

33. ஆள்வமெனச் சொல்லே!

பொன்னுலையைக் கீழ்வானில் இளம்பரிதிக் கொல்லன்
      புலர்காலை மூடிவிட்டான்! பனிப்போர்வை நீக்கித்
தன்னுடலின் அழகெல்லாம் நீர்ப்பரப்பில் வானம்
      சரிபார்த்துக் கொண்டிருக்கும்; பூச்சிரிக்கும் பொய்கை;
மின்னிடையார் விழிவண்டு கள்வெறியிற் பாடும்;
      மேனிதரும் நாற்றத்தை நொச்சிப்பூ வீசும்
நன்னாளில் நற்பொங்கல் திருநாளில், தம்பி!
      திராவிடத்தைத் திராவிடரே ஆள்ள மெனச் சொல்லே!       1

தோய்ந்திருக்கும் நற்பசுமை வயற்காட்டில்; பூத்த
      செங்கரும்புத் தோட்டமோ மணல்மேடாய்த் தோன்றும்
மேய்ந்திருக்கும் பசுமாடு: கிழக்காளை காதல்
      வெறியூட்டும்; பொறுக்காத இளங்காளை பாயும்;
சாய்ந்திருக்கும் கிளையிருந்து குழலூதும் பையன்;
      தனைமறந்து புள்ளிசைக்கும் நற்பொங்கல் நாளில்,
தேய்ந்திருக்கும் நம்மினத்தின் நிலையுயர்த்தத், தம்பி!
      திராவிடத்தைத் திராவிடரே ஆள்வ'மெனச் சொல்லே!       2

கண்ணிட்ட செங்கரும்பின் மேற்றோலை நீக்கிக்
      கத்துகின்ற சிறுபிள்ளைக் களித்துநகை காட்டிப்
பண்ணிட்ட செவ்வாயர் மருதிநலப் பெண்கள்
      பாலோடு குங்குமப்பூ ஏலத்தைச் சேர்த்து
விண்ணிட்ட பச்சரிசி புதுப்பானைப் பொங்கல்
      விருந்தூட்டித் தமிழூட்டும் நற்பொங்கல் நாளில்,
மண்ணிட்ட வளமெல்லாம் பொதுவாக்கித், தம்பி !
      "திராவிடத்தைத் திராவிடரே ஆள்வ 'மெனச் சொல்லே!       3

கற்றூணைப் பிளக்கின்ற தோளுடைய காளை
      கார்முழக்கம் செய்கின்ற ஏர்தழுவக் கண்டு
சிற்றூரின் நடுவிருக்கும் மன்றத்திற் சிற்றூர்த்
      திங்களெல்லாம் கடைக்கண்ணாற் சிரித்துநகை காட்டும்!
செற்றாரும் மறம்வாழ்த்தும் செந்தமிழைக் கேட்டுச்
      செவிகுளிரும் கிழவர்களின் தோளுயரும் தம்பி!
நற்றமிழர் திருநாளில், தைப்பொங்கல் நாளில்
      ‘திராவிடத்தைத் திராவிடரே ஆள்வமெனச் சொல்லே!       4
------------

34. வாழ்க திராவிடம்!

சூழிய நன்மை ; பகைமை தொலைக! அலைமுழக்கும்
ஆழிசூழ் கன்னித் தமிழ்மொழி வாழ்க! அறம்வளர்க!
வாழிய பொற்கதிர்! வாழிய அண்ணா! மறத்தமிழர்
வாழிய! வாழிய தாயகம்! வாழ்க திராவிடமே!
-------------

35. ஊருக்கு வழங்கினார்!

தை பி றந்தது ! தைபி றந்தது!
மைவிழிப் பெண்கள் மலரைத் தேடிக்
கொய்தார்; கொண்டு வந்து குவித்தார்;
மாவிலை கட்டினார் வாயிற் படிக்கு;
திண்ணை மெழுகினார் ; தெருவிளக் கேற்றினார்;       5

அருங்கவி போன்ற கரும்பு வைத்தார்;
அடுக்கடுக் காக மஞ்சள் வைத்தார்;
புதிய பானையிற் புதுநெல் அரிசி
இட்டார் ; வெல்லக் கட்டியும் இட்டார்!
பொங்கிற்றுப் பானை! பொங்கலோ பொங்கல்!       10

திங்கள் முகத்தார், சங்குக் கழுத்தார்,
சிங்கத் தமிழர், தங்கக் குழவிகள்
படையல் இட்டார்! பரிதி வாழ்த்தினார்;
தமிழை வாழ்த்தினார் ; 'தமிழ்நாட்டை நாமே
அமைதியாய் அடைவோம்: ஆள்வோம்' என்றார்;       15

உண்டார்: களித்தார்: ஊருக்கு
வழங்கினார் பொங்கலை! வாழ்த்தினாரே! 17
-----------

36. அத்தனையும் இன்பம் !

கீழ்க்கடல்மேல் தொடுவானில் தங்கத்தாம் பாளம்
      இருள் திரையைப் பனிகுளிரைக் கிழித்துவந்த தைபார்!
வாழ்வளிக்கும் பொன்னொளிவான் பூத்ததடா! வாழ்க!
      வறுமையிலை; அறியாமை இனிச்சிறிது மில்லை!
ஆழ்கடலும் நிலப்பரப்பும் காடுமலை நன்செய்
      அத்தனையும் இன்பமயம்! அத்தனையும் பொன்னாம்!
சூழ்ந்துவந்த இடரெல்லாம் தமிழகத்தில் இன்றே
      சுக்குச்சுக் கானதுவாம் ! தைப்பொங்கல் வாழ்க!
-----------

37. பொங்குதடா இன்பம்!

உலகிருளைக் கிழித்துவந்து கீழ்த்திசையில் வெய்யோன்
      உயர்கின்றான்! என்சொல்வேன்! பொங்குதடா இன்பம்!
பலகலையில் முன்னேறிப் பழந்தமிழர் வாழ்வை
      நம்மக்கள் பற்றிவிட்டார்; இனியில்லை துன்பம்!
கலகலப்பிற் சோலைகளும் வயல்வெளியும் காடும்
      கைகாட்டி யழைப்பதைப்பார்! உளம்குளிரும் பொங்கள்
பலகுரலில் எழுந்தெழுந்து வான்பரப்பில் முட்டும்!
      பகுத்துண்டு வாழ்ந்திடுவோம்! பிறர்க்கீழ்வா ழோமே!
-------------

38. செய்ந்நன்றி மறவாதார்!

நீர்க்கோமான் முகிலேவி நெற்பயிரைக் காத்து
      நெஞ்சுருக்கும் பசிப்பிணியை யோட்டிவிட்டான் நாட்டில்!
கார்முகிலைக் கிழித்தெறிந்தான் கீழ்த்திசையிற் பரிதி !
      கலியாணப் புதுப்பெண்போல் நகைமுகத்திற் சொட்ட
ஊரிலுள்ள குளிர்நடுக்கம் ஓட்டிவிட்டான் ஒளியால்!
      உடலெல்லாம் இளவலிமை பெற்றுவிட்ட தின்றே!
பார்மீது செய்ந்நன்றி மறவாதார் தமிழர்!
      பலர்மெச்சச் சொல்வதல்ல; உண்மையிது தம்பி !       1

பொக்கைக்கு மண்பூசிப் புதுமெருகு மிட்டார்;
      புதுமைசெய்தார்; மஞ்சளினாற் பொட்டிட்டார் கதவில்;
எக்களிப்பில் தமிழ்ப்பெண்கள் தத்தமது வீட்டில்
      இலைவிரித்து விளக்கேற்றிக் கொத்துமஞ்சள் வைத்தார்;
மிக்கசுவைக் கரும்புவைத்தார்: பூசனிக்காய்ப் பத்தை
      விளைந்தசம்பா நெல்லரிசி புதுப்பானைப் பொங்கல்
பக்கத்தில் எடுத்துவைத்தார்! நன்றிநிறை யுள்ளம் !
      பல்குரலில் பொங்கிற்றுப் பொங்கலோ பொங்கல்       2

வீடெல்லாம் புடைசூழ மந்தைவெளி சென்று
      வீரமுடன் எருதடக்கி மீண்டுவந்த ஆண்கள்
மாடெல்லாம் பொங்கலன்று குளிப்பாட்டி நிறுத்தி
      மலர்சூட்டிக் கொம்பில்நணிகள் பூட்டி
ஓடவிட்டு மகிழ்கின்றார்! இதுதானே வீரம்?
      ஊர்மக்கள் நலம்கேட்கத் 'தட்சணை'கள் எதற்கு?
கூட்டுப்புள் சுதந்தரத்தைக் கோருவதைக் கண்டும்
      குத்துக்கல் லாய்த்தமிழர் வாழ்கின்றார் ஏனோ?       3
---------------

39. பங்கிடுவோம்!

தங்கத்திலே வார்த்தெடுத்த
தட்டைப்போலே செம்பரிதி
இங்கெழுந்தான்! வாழ்கதமிழ்ப் பொங்கல்!- நமக்கு
இன்றலவோ வந்ததுதைத் திங்கள்!       1

கங்குலைக் கிழித்தெறிந்து
கார்குளிரை வெட்டி வீழ்த்தி
எங்கும் ஒளி பாய்ச்சுகின்றான்; பொன்னே!-வளர்
இன்பமின்பம் இன்பமின்பம் என்னே!       2

செங்கரும்பு வெட்டிவந்து
செய்யில்நெல் லறுத்துவந்து
பொங்கிடுவோம் புத்தம்புதுப் பொங்கல்!- நாம்
யாவருக்கும் பங்கிடுவோம் பொங்கல்!       3

மங்கையரும் கன்னியரும்
வாய்குளிரத் தமிழ்பாடி
மங்கல விழாவெடுப்போம்; வாரீர் ! - தமிழ்ப்
பொங்கலுண்டு ஆடிடுவோம்; சேரீர் !       4

சங்கெடுத்து ஊதிடுவோம்!
தமிழ்முரசம் ஆர்த்திடுவோம்!
சிங்கத்தமிழ்ப் பெண்களடி நாமே - இன்று
திராவிடத்தை நீடுவாழ்த்து வோமே!       5
-----------

40. இல்லை! இல்லை! இல்லை!

கீழ்த்திசையில் தொடுவானில்
      மையிருட்டை வெய்யோன்
கிழித்துவந்த தைக்கண்டோம்;
      புத்தாண்டைக் கண்டோம்!
தாழ்ந்திருக்கும் புதரெலாம்
      இணைந்திருக்குஞ் சிட்டு
தரையெல்லாம் பூவிரிப்பு:
      மரமெங்கும் பாட்டாம்!
சூழ்ந்திருந்த பகையெல்லாம்
      தொலைந்ததுவாம் இன்றே!
தோப்பெல்லாம் பழக்குலைகள்
      வயலெல்லாம் செந்நெல்!
தாழ்வில்லை ; பசியில்லை;
      பகைக்கொடுமை இல்லை!
தமிழ்ப்பரிதி தலைநிமிர்ந்தான்;
      வாழியவே பொங்கல்!       1

ஒளிப்பரப்பிச் செங்கதிரோன்
      தங்கத்தாம் பாளம்
உயிர்த்தெழுந்தான்; ஊனுடலில்
      உயர்ந்ததுவே இன்பம்!
வெளியெலாம் பசுங்காடு;
      வேலியெலாம் காய்கள்;
பூப்பூத்த மென்கரும்பு
      நீர்நிலைபோல் தோன்றும்;
தளிரெல்லாம் பூந்தாது;
      குளமெல்லாம் பூக்கள்;
தாழ்குடிசை சிறப்பெல்லாம்
      சிட்டின் ஆர்ப் பாட்டம்;
குளிரொடுக்கி மூடுபனிக்
      குறையொடுக்கி வந்த
நம்பொங்கல் புதுப்பொங்கல்
      தமிழ்ப்பொங்கல் வாழ்க!       2

முற்றாத மாதுளையின்
      விதையொத்த சம்பா
முளையறியாப் பச்சரிசி
      கழைதந்த வெல்லம்
புற்றோர நீளாற்றுப்
      புனல்கூட்டி ஆப்பால்
புதுப்பானை உலையேற்றப்
      பொங்கிவரும் பொங்கல்
நற்றமிழர் புதுப்பொங்கல்
      தமிழ்ப்பொங்கல் வாழ்க!
நலிவெல்லாம் பறந்ததுவாம்;
      பரந்ததுவே இன்பம்!
பெற்றோம் நாம் புத்தாண்டை;
      வளமெல்லாம் பெற்றோம்!
பெருமகிழ்ச்சி ஊரெங்கும்;
      வீடெங்கும் வாழ்த்தே!       3
-----------

41. நாம் பணியோம்!

நும்நாட்டைத் தாய்நாட்டைத் திராவிடத்தை இந்நாள்
      நலித்துவந்த வடகாற்றைப் பகைக்குளிரை வீழ்த்தி
அம்பொன்னாம் புதுப்பரிதி அதோவந்தான்; வாழ்க!
      அடலேறே! கொல்புலியே! திராவிடனே! தம்பி
நம்நாடு நம்மதடா! நமையாள எண்ணும்
      நாடோடி வடவருக்கு நாம்பணிய மாட்டோம்!
சும்மாநாம் இருப்பதுவோ! திராவிடத்தை மீட்கத்
      துடித்தெழுவோம்; கதிர்வாழ்த்தித் தோள்குலுக்கு வோமே!
--------------

42. தமிழ்க்கதிர் வாழ்க!

அலைகடல் மீது பனித்திரை கிழித்தே
      அழகொளி எழுந்தது கீழ்வான்!
தலைக்கதிர் வாழ்க! தமிழ்க்கதிர் வாழ்க!
      தழைத்திடச் செய்கதிர் வாழ்க!
மலையிடைப் பச்சை! மரத்திடைக் கூடு!
      வயலிடை அறுவடைப் பாட்டாம்!
உலையிடைப் பொங்கல்! ஊரிடைக் கூத்து!
      வாயிடைப் பொங்கலின் வாழ்த்தே!
---------

43. பொற்கதிர் வாழ்க!

தூற்றல் மழையைக் குளிரைப்
      பனியைத் தொடர்ந்து வந்த
காற்றாகும் வாடையைப் பகையை
      நொறுக்கிக் கருங்கடல்மேல்
மாற்றார்க் கொளியைத் தருமெங்கள்
      அண்ணாவின் வாயுரைபோல்
போற்ற எழுந்தது கீழ்க்கடல்
      பொற்கதிர்; வாழியவே!       1

செந்நெல் விளைத்துத் திருந்திய
      புன்செய் வெளியிலெங்கும்
கன்னல் விளைத்துக் கனிமலர்
      சிந்தித் திராவிடத்தின்
இன்னல் களைந்து கீழ்க்கடல்
      போற்கதிர் ; எங்களண்ணா
சொன்னயம் போல வளப்பம்
      மிகுந்தின்று தோன்றியதே!       2

செய்யின் விளைவைப் பசுங்காச்
      சிரிப்பை அழைத்துவந்த
தையின் முதல் நாள் திராவிடர்
      பொன்னாள்; தனித்திருநாள்!
வையத் திருளை யகற்றும்
      அறிஞர் அண் ணாத்துரைபோல்
மையைக் கிழித்தது கீழ்க்கடல்
      பொற்கதிர் வாழியவே!       3
----------

44. இளங்கதிர் பூத்தது!

பொன்னேர் தொடுவான் இளங்கதிர்
      பூத்தது! பூத்ததைப்பார்!
தன்னே ரிலாத தனித்தமிழ்
      வாழ்த்தொலி பொங்கலோசை
முன்னே எழுந்தது! வீட்டில்,
      வெளியில் இசை முழக்கம்
பின்னே எழ, எழும் மக்களின்
      நெஞ்சில் பெருமகிழ்வே!       1

கன்னற் சுவைமிகு கட்டியாம்
      வெல்லக் கலப்பினோடு
செந்நெற் சுவைமிகு பச்சை
      அரிசி தெரிந்தெடுத்தே
பின்னற் சடையார் இறக்கிய
      பொங்கற் பெருஞ்சுவையை
மின்ன விடையார் அளிக்க
      வியந்தனர் காளையரே!       2

தேடினார் வந்தார்; குடிசையில்
      குந்தித் தமிழகத்தைப்
பாடினார் கேட்டார் ; பரிதியை
      வாழ்த்தினார்; பாட்டிசையில்
ஆடினார்; பொங்கல் அருந்தினார் ;
      கன்னி அருந்தமிழைச்
சாடினார் சீறித் தமிழ்மொழி
      காக்க எழுந்தனரே!       3
-----------

45. ஒளிச்சுடர் வாழ்க!

எழுந்தது பரிதி! கீழ்க்கடல் வானம்
      இருட்புதர் நீள்கழி யாவும்
இழிந்தது பைம்பொன் 1 ஒளிச்சுடர் வாழ்க!
      அங்குள திராவிடர் இல்லில்
வழிந்தது பொங்கல் வாழிய என்றும்!
      மலரடிக் கன்னியர் நெஞ்சில்
அழுந்திய மகிழ்ச்சி; 'பொங்கலோ பொங்கல்!
      அளவிடக் கூடுத லுண்டோ?       1

வயலிடைச் செந்நெல்; வழியெலாம் பூக்கள்:
      மதகிடைப் புதுப்புனல் ஓசை;
பெயலிடை பட்ட கழையெலாம் கணுக்கள்;
      பின்னிய கூந்தலில் முல்லை ;
அயலிடைத் தோப்புக் கிளையெலாம் கனிகள்;
      அரிவையர் கையெலாம் கரும்பு ;
மயலிடைப் பட்ட காளையர் நெஞ்சில்
      வாழ்த்தொலி வாழிய பொங்கல்!       2

பொன்னென எங்கும் மலைப்பொதி சம்பா
      பூசணி மாபலா வாழை
மன்னிய இல்லம்; வாழிய பொங்கல்!
      மங்கையர் உளத்தினில் இன்று
தென்னவர்; ஆம்; நாம்!திராவிடர்; அஞ்சாச்
      சிறப்புடை மக்களாம்! என்ற
பின்னிய நினைப்பு வளர்ந்தது; வாழ்க!
      பிறிதினி அடைவது நாடே!       3

உழவரின் தோளில், உளத்தினிற் பொங்கல்!
      ஊர்ப்பொது மன்றினில் காளை
முழக்கொலி கேட்டு வந்தது கூட்டம்!
      வெற்றியின் நீள்முர சார்க்கும்!
இழந்ததை நாமே அடைந்தனம்: வாழ்க!
      இன்றலோ நம்மரும் பொங்கல்!
கிழவரும் காளை ஆகினர்;பாட்டிச்
      சிறிப்பொலி தேன்சுவை யாமே!       4
---------

நிறைந்ததுவே இன்பம்!

பொன்மலர், பொற்றா மரைமலர், நம்வாழ்வின்
நன்மலர் பூத்தது; வெற்றி நமதாம்!
விரிந்த மலர்க்காடு நீர்நிலை மேடும்
பரந்ததுகாண் தங்கப் பரிதி! குளிரோ
விறைந்தது மெல்லப் புறங்காட்டி! வாழ்வில்
நிறைந்ததுவாம் இன்பம்! நெடுநாள் பகையோ
குறைந்தது; யாவும் குறைந்தது; வாழ்க!
குளிர்புனல் ஓடை கொடிபுதற் தோப்பு
வளர்ந்தது செங்கதிர்; வாழிய! வாழிய!
வையமெலாம் பொங்கலோ பொங்கல் தமிசைத்தேன்

மெய்யில் உயிரில் புகுந்து மிகுந்து
      விரிந்தது; வாழ்க நிலைத்து!
.....
.....
தொடர்ச்சி காணப்படவில்லை
--------------

46. எங்கும் மகிழ்ச்சி!

...
ஆரம்பம காணப் படவில்லை
....
இன்னிசைப் பாட்டு! தமிழின்
      முழக்கம்! இளந்தமிழர்
முன்வரும் எந்தப் பகையும்
      தூளாக முறிந்ததுவே!       3

வீட்டில் மகிழ்ச்சி ! வெளியில்
      மகிழ்ச்சி! விளைந்தவயற்
காட்டில் மகிழ்ச்சி ! கடையில்
      மகிழ்ச்சி திருவிடமாம்
நாட்டில் மகிழ்ச்சி ! இதுநாள்
      வரையில் உழைத்தவர்கள்
பாட்டில் மகிழ்ச்சி ! மகிழ்ச்சி
      பழமை அகன்றதாலே!       4

நன்னாள்! திராவிடர் பொன்னாள்!
      புதுநாள் இத்தை முதல்நாள்
உன்னரும் நாட்டை உயிராம்தாய்
      நாட்டைத் திராவிடத்தை
இன்றே அடைவோம்! எழுவாய்
      தமிழர்! இளங்கதிர்போய்
முன்னே முளைத்த பகையைப்
      பொடியாய் நொறுக்குநீயே!       5
----------

This file was last updated on 15 Feb 2023.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)