கவிஞர் வாணிதாசன் எழுதிய
இன்ப இலக்கியம் (கவிதைத் தொகுப்பு)
inpa ilakkiyam
by vaNitAcan
In Tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2023.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
இன்ப இலக்கியம் (கவிதைத் தொகுப்பு)
Source: நூல் பற்றிய விவரங்கள்
இன்ப இலக்கியம்
கவிஞரேறு வாணிதாசன்
(தமிழ் நாடு அரசின் 1979ஆம் ஆண்டின் பாவேந்தர் விருது பெற்றவர்)
விற்பனை உரிமை : பாரிநிலையம்
184, பிராட்வே.சென்னை-600001.
BIBLIOGRAPHICAL DATA
Title of the Book Inba Ilakiyam இன்ப இலக்கியம்
Author : Kavignareru Vanidasan / கவிஞரேறு வாணிதாசன்
Language : Tamil
Edition : First, 1959 Second, 1979
Copyright holder : The Author
Price : Rs. 2.90
No of pages : 44 pages
Publisher : Novel Art Printers, Madras-14.
Subject : Erotic Poem / அகப் பாடல்கள்
புதுவைத் தமிழ்க் கவிஞர் மன்ற வெளியீடு எண்: 2
----------
முதற்பதிப்பின் முன்னுரை
காதலும் வீரமும் தமிழரின் தலைசிறந்த பண்புகள். "இன்ப இலக்கியம்" என்பது காதல்
இலக்கியமே.
இன்பம் என்பதே துய்த்துணர்வதுதானே. இன்ப இலக்கியத்தில் காணும்
அகவின்பத்தைத் துய்த்துணர்க.
இவ்விலக்கிய நூலை நன்முறையில் அச்சிட்டு வெளிப் படுத்திய வள்ளுவர்
பண்ணை உரிமையாளர் தோழர் திரு. ந. பழனியப்பன் அவர்க்கு என் நன்றி.
இரண்டாம் பதிப்பு :
புதுவைத் தமிழ்க் கவிஞர் மன்றம் 35, பெரியார் சாலை, புதுச்சேரி-605001
28-4- 59 அன்பன்,
சேலியமேடு வாணிதாசன்
--------------
பதிப்புரை
தமிழ்மணக்கும் புதுவை மாநிலத்தில் விடுதலைக் குயிலாகப் பாரதியாரும் புரட்சிக்
குயிலாகப் பாவேந்தரும் நனிசிறந்தனர். அவர்களின் வழியிலே புதுமைக் குயிலாக
வாணிதாசனார் திகழ்ந்தார். கொள்கையில், கொண்ட தமிழுணர்வில் மாறாமல்
வாழ்ந்தார். தம் பாத்திறத்தால் தன்மான உணர்வுத் தணலை மங்காது காத்தார்.
இவருடைய பாக்கள் இனிமை பயப்பன; உணர்வைத் தருவன; எழுச்சியை ஊட்டுவன;
தமிழக மறுமலர்ச்சிக்குப் பெரிதும் துணை நிற்பன.
அன்னாரின் நூற்களை வெளியிடுவதில் யாங்கள் பெரு மகிழ்வெய்துகின்றோம்.
முன்னர் "எழிலோவியம்'' எனும் நூலை வெளியிட்டோம். இப்பொழுது
“இன்ப இலக்கியத்தை" வெளியிடுகின்றோம்.
இந்நூலை நன்முறையில் அச்சிட்டு உதவிய பாவலர் நாரா. நாச்சியப்பன்
அவர்களுக்கு எங்கள் நன்றி.
புதுச்சேரி
17-9-79 } புதுவைத் தமிழ்க் கவிஞர் மன்றம்
--------------
வாணிதாசனார் வாழ்க்கைக் குறிப்பு
பிறப்பு: 22-7-1915; புதுவையை அடுத்த வில்லியனூர்.
இயற்பெயர் : எத்திராசலு (எ) அரங்கசாமி.
பெற்றோர் : அரங்க திருக்காமு, துளசியம்மாள்.
உடன் பிறந்தோர்: தங்கை செயா (எ) ஆண்டாள்.; தம்பியர்: சௌந்திரராசலு, தேவிதாசன், கல்லாடன்
மன்றல் ஆண்டு 1935
மனைவி: ஆதிலட்சுமி;
மக்கள்: மாதரி, ஐயை, நக்கீரன், எழிலி, முல்லை, இளவெயினி,
நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, பெருங்கிள்ளி.
வாழ்ந்த ஊர் : புதுவையை அடுத்த சேலியமேடு.
இல்லம்: புரட்சியகம்.
கல்வி: தொடக்கக்கல்வி வில்லியனூரில்; கலவைக் கல்லூரியில் பிரஞ்சு பயின்றார்
"தமிழ் பிரவே” பட்டம் பெற்றார். 1938-இல் வித்துவான் தேர்வுற்றார்.
பாவேந்தரோடு தொடர்பு:
பாவேந்தரின் முதல் மாணாக்கர்.
இளவயதில் அவரிடத்தில் நான் பயின்று வந்தேன்
.... ...
பாப்புனையும் நற்றொழிலை அவரிடத்தில் கற்றேன்.
படித்துணரும் நற்செயலை அவரிடத்தில் கண்டேன்
யாப்பணியைத் தொன்னூலை அவர் விளக்கக் கேட்டேன்
யார் இனிமேல் அவர்போல எனையூக்க வல்லார்?
காப்பணியாய் எனக்கிருந்தார்; நற்கவிதை யாக்கும்
கலைச் செறிவை நனிவிளக்கி எனை எழுதச் செய்தார்"
இவ்வடிகள் பாவேந்தரோடு இவர் கொண்டிருந்த தொடர்பைக் காட்டும்-
அலுவல்: 1937இல், ரூ 25.75 சம்பளத்தில் ஆசிரியப் பணியைத் தொடங்கினார்.
காரைக்கால் புதினக் கல்லூரி, புதுவைக் கலவைக் கல்லூரி ஆகியவற்றில்
பேராசிரிய ராக இருந்தார். 1971 இல் ஓய்வு பெற்றார்.
கவிதை : முதற்பாடல்; "பாரதி நாள் இன்றடா! பாட்டிசைத்து ஆட்டா?",
"தமிழன்" இதழில் 1938இல் வெளியானது. "ரமி' மற்றும் வேறு புனைபெயர்களில் எழுதத் தொடங்கினார். "வாணிதாசன்'" என்ற பெயரே நிலைத்தது.
பொன்னி, தமிழன், காதல், திராவிடநாடு, முத்தாரம், முராசொலி, மன்றம், குயில், திருவிளக்கு, செண்பகம், நெய்தல், கவிதை ஆகிய இதழ்கள் இவர் கவிதைகளைத் தாங்கி வந்தன.
சாகித்திய அகாடமியின் "தமிழ்க் கவிதைக் களஞ் சியம்" தென்மொழிகளின் புத்தக
வெளியீட்டுக் கழகத் தில் "புதுத் தமிழ்க் கவிமலர்கள்," இன்னும் பல்வேறு தொகுப்பு
நூல்களில் இவர் பாடல்கள் இடம் பெற்றுள் ளன. உருசியம், ஆங்கிலம், ஆகிய மொழிகளில்
இவருடைய பாடல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
திருச்சி, கோவை ஆகிய இலக்கிய மாநாட்டுக் கவியரங்குகளில் பரிசு பெற்றுள்ளார்.
1968-இல் உலகத் தமிழ் மாநாட்டுக் கவியரங்கத் தலைமை ஏற்றார்.
நூல்கள்: முதல் வெளியீடு-1949 தமிழச்சி - மற்றும், பதினைந்து நூல்கள் வெளியிட்டுள்ளார், மொழிபெயர்ப்பு: வித்தோர் உய்கோவின் நாடகம், "காதல் எங்கே?" கீதே மோபசான் கதைகள், பிரஞ்சு தமிழ் அகராதி முதலியன.
விருதுகள்: 1954ஆம் ஆண்டு பிரஞ்சுக் குடியரசு தலைவர் "Ordre de L'Etoile d'Anjouan'
என்னும் சிறப்பு விருது அளித்தார்; "புதுமைக் கவிஞர்" என்று பாராட்டப் பெற்ற
இவர், தெ-ஆ-மா. தமிழ்க் கவிஞர் மன்றத் தாரால் "கவிஞரேறு" என்றும், புதுவைத்
தமிழ்ச் சங்கத்தாரால் "பாவலர் மணி என்றும் 1972ஆம் ஆண்டில் சிறப்பிக்கப் பெற்றார்.
1975இல் "பாட்டரங்கப் பாடல்" எனும் நூலுக்குத் தமிழக அரசின் முதற் பரிசு. 1979இல்,
தமிழக அரசின் பாவேந்தர் விருது.
மறைவு: 'கெஞ்சி வாழ்தல் நஞ்சினுங் கொடிது" "கோடி கொடுப்பினும் கொள்கையிற்
கோடேல்" என்று தாம் உரைத்தவாறு வாழ்ந்த கவிஞரேறு அவர்கள் 7--8-74இல் மறைந்தார்.
-------------
உள்ளுறை
1. காதல் வாழியவே
2. இனிதே! இனிதே!
3. ஒருவழி உரை!
4. இவன் யார்?
5. அவனில்லா வாழ்க்கை!
6. அறிவாளோ?
7. சிரித்தாள்!
8. நன்றன்று!
9. பூட்டிடுமின்!
10. பொருள் தேடி வருகின்றேன்!
11. பெருகும் பிரிவுத் துயர்!
12. வந்தான் மகிழே!
--------------------
1. காதல் வாழியவே!
பொன்னைப் போலப் பூத்தது காடு!
சின்னச் செடியில் சிறுசிறு கூண்டு
புல்லைக் கிழித்துப் புட்கள் புனைந்த
இல்லம்! இதைப்போல் இயற்றுவார் யாரே?
பாட்டொலி, பேடைப் பறப்பொலி வீச்சுக்
கேட்டால் இனிக்கும் செந்தேன் ! செந்தேன்!!
நெளிநீர் ஓடை நிமிர்ந்த தாமரை
ஒளிமலர் அழகின் ஓவியம்! அல்லிச்
செவ்விதழ் விரிப்பே செந்தீ நெருப்பாம்!
அவ்விதழ் ஊடே அலையும் வண்டுகள்
காட்டீந் தின்பழம்; களாப்பழம்! ஆம்! ஆம்!
மீட்டும் இசையோ மென்யாழ் ஒலியாம்!
தென்றல் சிறுபுதர் அலைக்க அலைக்க
ஒன்றிய புறவு மணிக்குரல் எழுப்பும்
முல்லை பூத்த முல்லை நாட!
பரிதி ஒளியெனப், பாய்புனல் வளியெனச்
சரிதிரைக் கடல்சூழ் தொடர்மலை நிலமென,
விரிவான் வெளியென விளம்பிய யாவும்
அரும்பெருங் காதல் ஆக்கத்தின் விளைவாம்!
நடப்பன,பறப்பன, நகர்வன பலவும்
நடப்பன காதலால்! காதலே முதலாம்!
கிடப்பன மலைகள்; கிளைப்பன மரங்கள்!
அடக்கமே காதற்(கு) அடங்குவ துளவே!
காதல் இலையேல் உலகமும் உயிர்க்காது!
காதல் இலையேல் உயிரினம் பிழைக்காது!
காதல் இலையேல் கடலலை முழக்காது!
காதல் இலையேல் காய்கதிர் நிலைக்காது!
அதனால்,-
மலையினும் பெரிதாம்; வானினும் பெரிதாம்;
கடலினும் பெரிதாம் காதல்!
கதிரினும் பெரிதாம் காதல் வாழியவே!!
--------------
2. இனிதே! இனிதே!
பாடுவோம் வாராய்! பாடுவோம் வாராய்!
கோடுயர் மரத்திற் பாடுங் குயில்போற்
பாடுவோம் வாராய்! பாடுவோம் வாராய்!
வலக்கை இடக்கை உலக்கை மாற்றிச்
சலசலத் தோடும் அருவி தந்த
குலைச்செந் நெல்லைக் குற்றுவோம் வாராய்!
மாமழை வாழ்க! மாமழை வாழ்க!
மாமழைக் குயிர்தரும் ஞாயிறு வாழ்க!
காமர் நிலவும் கடலும் மலையும்
பாடுவோம் வாராய்! பாடுவோம் வாராய்!
அன்னம் நாணும் மென்னடைப் பாவாய்!
பொன்செய் மேனி இன்சுவை அமிழ்தே!
நன்செய் விளைவே! நகைமுக நிலவே!
இன்சொற் பாட்டொன் றியம்புக முன்னே!
கரும்புகை யொத்த பெரும்பெயல் ஓய்ந்தது!
கரும்பு விளைந்தது! விளைந்தது கழனி!
அரும்பு புதரெலாம் அரும்பி மலர்ந்தது!
விருந்தே வாழ்க பெருந்தேன் மலையே!
நகுமே கேட்போர் ! நகுமே தலைவி!
முகிலிடைப் பாயும் முழுநில வேயாம்
அகில்வளர் குன்றத் தமைந்த தேனடை
மிகுதொலை வுளதாம்! விளைவாற் பயனென்?
பெயலால் நிறைந்த பெருமலைப் பொய்கை
அயலுள மரத்தின் இலைஅடர் பாறையை
வயற்கரும் பழித்து வருமத யானை
மயலால் தழுவும்! வாழிய காதல்!
காதல்! காதல்! காதல் இனிது!
காதல் எதையும் கடந்தது காதல்!
காதல் உடலுயிர் கண்ணுக் கினிது!
காதல் இலையேற் சாதல் இனிதே!
கொன்ற விலங்கின் ஈனக் குரலைக்
குன்றெதிர் ஒலிக்கும் குறுஞ்சுனை யருகில்
நின்று பிணையுடல் நீள்கலை வருடும்!
என்றும் காதல் இனிதே தோழி!
ஈருடல் ஓருயிர் இணைந்தால் இனிதே!
வார்புனற் செடிபோல் வளர்ந்தால் இனிதே!
கூர்விழி ஒளிபோற் கூடில் இனிதே!
வேர்விடாக் காதல் வீண்பேச் சன்றோ?
செக்கர் சிந்திய செந்நிற ஒளியில்
கொக்குப் பேடை குரல்விளி காட்டும்
அக்கம் பக்கத் தடர்கிளைப் புட்கள்
செக்கச் சிவக்கும் தீச்சுடர் மாலை!
செக்கச் சிவக்கும் தீச்சுடர் மாலை
மிக்குக் காதலர் மேனியைத் தீய்க்கும்!
மிக்குக் காதல் மேவா தோர்க்கே
அக்கறை யேனோ செக்கர் மீதே?
என்றுநான் வெட்டி இடையிடைப் பாடக்
குன்றெழு மதியக் கோதை நல்லாள்,
காதல் இனிதே! காதல் இனிதே!
கண்ணொடு கண்கள் கவ்வும் காதல்
இனிதே! இனிதே! எவற்றினும் இனிதே!
என்றனள்! நானோ எடுத்துரை என்றனன்!
சிற்றில் அமைத்தே சிறுசோறு படைக்க
உண்டான்; இன்பம் உண்டான்; சிற்றில்
அழித்தான்; என்னை அழுதிடச் செய்தான்;
பட்டி மகனென் பள்ளிப் பாட்டையில்
எட்டியிருந்தே இளநகை பூத்தான்!
எட்டின நாட்கள்; இணைந்தன விழிகள்!
வந்தான்; போனான்; வந்துகொண் டிருந்தான்;
சந்திலோர் நாளென் சிந்தையைப் பறித்தான்;
காலையும் மாலையும் கடன்கொடுத் தான்போல்
மாலையில் வருவான்; காலையில் வருவான்;
குரலால், விழியால் குறிப்பை அனுப்புவான்;
திரையிட்ட சன்னல் மறைவில் பார்ப்பான்
கதவின் இடுக்கில் கண்ணொளி பாய்ச்சி
இதயத் துள்ளே ஏற்றினான் அன்பை!
பொய்கை ஆடப் புறப்பட் டேன் நான்!
கையை வீசிக் கருத்தில் லான்போல்
மைதவழ் மாமலைச் சாரலின் ஓரம்
நடந்தான்; அவன்விழி நடந்ததென் னருகில்!
குடத்தை இறக்கிக் குனிந்தேன் ! அங்கே
மடமட வென்று வந்தான்; நின்றான்;
‘அடடா! கொண்டையில் அமைந்த பூவில்
எத்தனை வண்டுகள்? எத்தனை வண்டுகள்?'
எனச்சொலிச் சிரித்தான்; என்விழி பறித்தான்!
கைத்தலம் வைத்தென் கரிய கூந்தலைத்
தொடுவான் போலத் தொட்டான் மெய்யை!
நெருப்பால் அவனை எரிப்பாள் போலச்
சொன்னேன் சுடுசொல்; சொன்ன சொல் அறியேன்!
சிரித்தான் ; என்னை இறுக அணைத்தான்!
'விடு! விடு!' என்றேன் வெறுப்பாய்! ஆனால்,
'தொடு! தொடு!' என்றதென் துணிவிலா நெஞ்சம்!
அவனை நான்,-
என்னென் றுரைப்பேன்! என்னென் றுரைப்பேன்!
பொன்னெழில் சிந்தும் புதுஞா யிறுபோல்
முன்னர்த் தோன்றும் அவன்முகப் பொலிவு!
குறிஞ்சி நாட்டுக் குன்றம் அவன் தோள்!
குளிர்தேன் அவன்விழி! கொடும்தீ சொற்கள்!
அளிசெய் உள்ளம்! அடங்கார்க் கோபுலி!
தொட்டான் என்னைத்; தொட்டான் உளத்தைக்!
கட்டுக் கடங்கா முரட்டுக் காளையின்
இருகை அணைப்பே இனிதே! இனிதே!
என்றனள்; அவன்வாழ் இடத்தை நோக்கினாள்!
ஒன்றிய உளத்துக் காதல்
இனிதே! இனிதே! எவற்றினும் இனிதே!
----------------
3. ஒருவழி உரை!
கொடிகள் மறைத்த பெருங்கல், சிறுகல்
அடிமலைச் சாரல் கிழங்காய்ந் தருந்தும்
இன நிரைப் பன்றிகள் மேய்ச்சல் எருமைகள்!
முத்திழை நல்லார் விழிசுனைப் பூக்கள்!
களிறு வளைத்த இளந்தழை மூங்கிலோ
மீன்பிடிப் போரெறி தூண்டில்போல் தோன்றும்!
முழவுகள் தூக்கி முடிந்துவைத்த தைப்போல்
கிழப்பலாத் தொங்கும் பழமலைச் சாரல்
சிறுகுடி நல்லோர் குறுமகள் கண்டேன்!
எழிலோ வியமே எழுந்து நடந்தது!
சிந்திற்றுக் காற்சிலம்பு! சிந்திற் றிளநகை!
காந்தளம் மென்விரல் காந்தளைக் கொய்யப்
புதரின் இடையே புறாப்புகு மாப்போல்
கொடியிடை நோகப் படர்ந்தது திங்கள்
முகமும் நுதலும் இருகையும் கண்ணும்
நடையும் மொழியும் அடடா! என் சொல்வேன்!
முகிலிடைத் தோன்றி ஒளிவிடும் திங்கள்
முகத்தாள்! பொருந்தாது! மாசுண்டு திங்கட்கு!
நெற்றி பிறையாம்! பிறைவளர்ந்து தேயும்!
இளமூங்கில் கைகள்! மலையா பிறப்பிடம்?
பூவிழி ! இல்லை; சுனைவாழும் பூக்கள்!
மயிலியல்! அன்றன்று; கார்கண்டே ஆடும்மயில்!
சொல்கிளி! சொல்ல உரைக்கும் பசுங்கிளி!
ஒவ்வா உவமையைத் தேடி அலுத்தேன்!
அவளுக் கவளே! தமிழ்த்தொகைப் பாடல்கள்!
தோளில் பிரிந்து புரளும் நறுங்கூந்தல்
உச்சி மலையில் உறையும் முகிற்குலம்!
காதணி தொங்கலோ கார்மின்னல்! அம்மின்னல்
கண்டே குயில்கள் களிப்பேறப் பாடினவே!
இன்னும்கேள்:
வல்லான்கைப் பாவையோ? மாமணத் தென்றலோ?
சொல்லாழம் தோய்ந்த கலியோ? அகம்புறமோ?
என்னென்பேன் தோழா!எனைப்பறித்தே போனாள்!
நினைவில் அவளே! நிழலில் அவளே!
கனவிலும் அன்னாள்சீர்க் கட்டழ கேதோன்றும்!
ஓரிருநாள் வந்தென் உளத்தை மலர்விழியால்
ஈர்த்தாள்; உளத்திற்கூர் ஈட்டியைப் பாய்ச்சினாள்!
நோய்தந்தாள்; நோய்க்குப் பகைமருந்து தானென்(று)
அறியாள்; அறியாள்என் னுள்ளம்! அறியாள்!
வெறிகமழ் மாமலை, சோலை, மலர்ப்பொய்கை,
ஊர்ப்பொது மன்றம், குளம், குட்டை, தோப்பு,
விளைந்த வயற்காடு, வீட்டின் புறத்தோட்டம்,
கன்னித் தமிழாய் கழகங்கள், ஓவியத்தைத்
தீட்டும் திருக்கூடம், பந்தாடு மாடங்கள்,
தையல் பயிலும் விடுதியில் தையலைத்
தேடினேன்; ஏமாந்தேன்; செய்வ தறியேன்;
தெருவழியில் நான்செல்லா நாட்களொன் றில்லையே!
செல்வம் இழந்த திருடன் தன் செல்வத்தைத்
தேடுதல்போல் தேடி அலைந் தேன்;மனஞ் சோர்ந்தேன்!
கலையோடு மான்கள் இலைக்காட்டைத் தாவும்
மலைச்சாரற் கொம்பின் தலைப்பூத்த பூப்போல்
நிலையற்றேன் தோழா! அலைமோது துள்ளம்!
வரையூடி நீலக் கடலாடிச் சீறி
இரைந்தோடும் வானக் கருமேகம் போல் நான்
நிரையற்றேன் தோழா! புரையோடிற் றுள்ளம்!
இழிந்தோடும் பாம்பாய் வழிந்தோடும் ஓடை
வழிப்பட்ட கொம்பு சுழிப்பட்ட நீர்போல்
தொழிலற்றேன் தோழா வழியற்ற தாலே!
மலைச்சாரல் புன்செய் அலைக்காற்று மூங்கில்
குலைவிட்ட வாழை குருத்தோலை செந்நெல்
உலைப்பட்ட பொன்போல் அலைப்பட்டேன் தோழா!
களம் வென்ற கோட்டுக் கருமேக யானை
குளம் மூழ்க, அந்தக் குளம்பெற்ற நீர்போல்
உளம் நொந்தேன் தோழா! அலைமோது துள்ளம்!
கார்கண்டு வித்தி மழைபொய்த்துப் போனபின்
நீர்பார்த்தே ஏங்கும் வறியன் உழவன்போல்
சீரற்றுப் போகும் அவளில்லா வாழ்க்கை!
வளர்வேனிற் காலம்போய் மாறிப் பொலிவிழந்த
குளிர்மர நீள்சோலை, குன்றம், குளம்போல்
வளமற்றுப் போகும் அவளில்லா வாழ்க்கை!
அரும்பெரும் மக்கள் அணியணியாய்க் கூடித்
திருவிழாச் செய்து முடித்த இடம்போல்
உருவற்றுப் போகும் அவளில்லா வாழ்க்கை!
குடிநலம் பேணா அமைச்சாளும் நாட்டில்
விடுபட்டும் துன்பம் விடுபடா மக்கள் போல்
குடிகெட்டுப் போகும் அவளில்லா வாழ்க்கை!
அறவாழ்க்கை ஓங்க, அறம்பேண, நம்முன்னோர்
காட்டிய வீரமும் ஈகையும் காட்ட,
இசைமன் றியக்கும் இனியநல் யாழாம்;
புதிதீன்ற பூங்கொத்து; புன்னகைச் சோலை;
மலைச்சாரல் நன்செய்; வளர்தீங் கரும்பே
உளந்தொட்டுப் போன இளமயில்! நானவளைப்
பெற்றால் நல் வாழ்வு பெறுதலும் கூடும்!
ஒருவழி தோழா, உரை!
-------------
4. இவன் யார்?
அக்கா ! இவன் யார்? அறியாதான் போல
எக்காலும் எவ்விடத்தும் என்னடியைப் பின்பற்றிப்
பக்கம் வருகின்றான்; பார்க்காமற் பார்க்கின்றான்!
ஆணழகன் ; காண்போர் அகத்தழகன்; திண்தோளான்
செக்கச் சிவந்த மேனியான்; சிரிப்பிதழான்;
ஒளிசெய்து நாட்டிற் குயிரளிக்கும் வெய்யோன்;
அளிசெய் விழியான்; ஆக்கஞ்சேர் மாமழை;
இல்லார்க் களிக்கும் ஈகைக் குணமுடையான்;
நல்லோர் ஒழுக்கம் எல்லாம் உடையான்;
கூத்து முறையுணர் குறுமகளிர் ஆட்டம்போற்
பூத்துக் குனிந்தாடும் பூங்கொம்பை மெல்லத்
தீண்டாது தீண்டிவரும் தென்னாட்டுப் பூந்தென்றல்;
பழக இனிக்கும் பழந்தமிழ்ப் பாட்டக்கா!
இன்னோ ரன்ன இனிய பண்பு
நிறைந்துளன் என்றே நினைக்கத் தோன்றும்!
அன்னோன் அவன் தன் ஆண்டகை விட்டுக்
கருமான் உலைத்தீக் கொழுந்துபோல் இலவன்
பெருமரம் தோட்டத்திற் பூப்பூக்கப் பூத்தேடிப்
பொருளெல்லாம் தேயப் புதிதாய் ஒருவரிடம்
பொருள் கேட்க நாணும் புதியன்போல் நிற்கின்றான்!
இதற்குமுன் வந்தறியாப் பட்டணத்தில் உற்றார்
புதுக்குடியைத் தேடுவான் போல் தேடி
மதுநாறும் பூச்செடிகள் மனைமுன்னர் ஓர்பால்
ஒதுக்கிடத்தில் ஊமைபோல் நிற்கின்றான் அக்கா!
பெற்றதெல்லாம் இந்தப் பெருவுலகிற் கேயளித்து
வற்றி யுலர்ந்த ஆறுபோல் நாம்வாழும்
சிற்றூர்த் தெருவு கிடைக்க, அத்தெருவிற்
பெற்றிழந்தான் போலப் பேசாமல் நிற்கின்றான்!
குன்றச் சிறுகல் குளம் நீந்தி ஆடல்போல்
கன்றீன்ற நாகு தலைமூழ்கிக் காதாட்ட
ஒன்றிரண்டு செண்டை ஓடி வருமளவும்
நின்றிருக்கும் கொக்கேபோல் நிற்கின்றான் அக்கா!
உணவைப் பொதுவாக்கி உண்பிக்கச் செய்யும்
குணமிலா அரசியலார் சீர்கெட்ட கொள்கைபோற்,
பணம்பதுக்கும் செல்வர் வழிபார்க்கும் கள்வன்போல்
மணம் நாறும் சோலை வழிபார்த்து நிற்கின்றான்!
எனைவளர்த்த பொன்னி குடிவளர்க்கும் நாட்டில்
மனைதோறும் கிள்ளை வண்டமிழைப் பாடப்
புனையிழையார் இசைபயிலும் பொதுமன்றத் துள்ளே
வினையாயும் ஒற்றன் போல் மெல்லநுழை கின்றான்!
செந்தமிழர் பூங்கொடிகள், மயிலினங்கள், திங்கள்,
நந்தீன்ற முத்துப்பல் நகைகாட்டி விளாங்காய்ப்
பந்தாடும் கூடத்துள் வந்துவந்து நின்று
நொந்திளைத்த உளத்தோடு நோக்குகிறான் அக்கா!
வீட்டகத்திற் கெண்டை விழிக்கழகு செய்து
காட்டகத்தில் தோகை கார்கண்டே ஆடல்போல்
நாட்டகத்திற் பெண்கள் நடம்பயிலும் கூடத்துள்
நோட்டம்பார்ப் பான்போல் நுழைகின்றான் அக்கா!
மலைதவழும் கார்கடலில் மடங்குதிரைக் கூந்தல்
தலைவாரி நூலடுக்கை மார்பகத்தில் தாங்கிக்
கலைவளர்க்கும் கல்லூரிக் கிளம்பிடிகள் போகச்
சிலையாகத் திசைபார்த்து நிற்கின்றான் அக்கா!
வற்றாத நிழற்சாலை, வாள்போன்ற கொன்றை
நெற்றொலிக்கும் மரக்காடு, நீளோடை, பொய்கை
கற்றார்வாய்ப் பொருள்கேட்கும் பிள்ளையைப்போற் காத்துச்
சுற்றியெனை வந்துவந்து தொடர்கின்றான் அக்கா.
கொடியேறிப் பூத்த கொன்றை அடர்கிளையில்
அடிதப்பி வந்த குயில்தேடி, அக்குயிலைக்
கொடுவேலும் கையுமாய்க் கூர்ந்தாயும் வேடன் போல்
நெடுஞ்சாரல் வந்துவந்து நிற்கின்றான் அக்கா!
மலைக்காட்டுக் குன்றில் வலைப்பட்ட மான் தப்பி
இலையத்திக் காதுயர்த்தி இருட்குன்றம் போய்மறையச்
சிலையேந்தித் தேடிச் செய்வ தறியாது
நிலைகுலைந்து நிற்பான்போல் நிற்கின்றான் அக்கா!
இவன்யார்?
எக்காலும் எவ்விடத்தும் என்னடியைப் பின்பற்றிப்
பக்கம் வருகின்றான்; பார்க்காமற் பார்க்கின்றான்;
பேச நினைக்கின்றான்; பேசியதே இல்லையக்கா!
அறியான்; அடக்க வொடுக்கமாய் வேறேதோ
குறியுள்ளான் போலக் குனிகின்றான்; ஆனாலும்,
கடைக்கண்ணால் என்னைக் கண்டுகண் டேதோ
அடைய விரும்புவான் போல
நடைபயில் கின்றான்! நகைப்புக் குரியோனே!
-------------
5. அவனில்லா வாழ்க்கை!
கெண்டை விழியே! கிளிமொழியே! என்தோழி!
பண்டெழுந்த நற்பாடல், பழந்தமிழின் இனிமையெலாம்
கொண்டிருக்கும் எனதன்பன் கொல்புலியைத் தேனூற்றிக்
கிண்டி யெடுத்த அமுதைக், கீழ்க்கடலிற்
கண்டெடுத்த முத்தைக், கற்கண்டை, ஒளிமணியைக்
கண்டாயா சொல்லேன் கட்டிக் கரும்பை?
பிரை, உடலை, ஒளிசெய்யும் பரிதியை,
அயர்வைத் துரத்தும் அடர்கிளைப்பூங் காற்றைப்,
பயிர்விளைக்கும் மாமழையைப், பசுங்குன்றைப், புளிக்காத்
தயிர்போல் இனிக்கும் தமிழ்ச்சொல் லழகனைக்
கண்டாயா? சொல்லேன்! கலங்குதடி என்னுள்ளம்!
அன்பன் மறைபொருளை அறிந்து பிறர்க்குரைக்கும்
துன்பம்செய் தோழன் தொடர்புபோல், என்நெற்றி
இன்பம் பருக ஒளிபெருக்கி இல்லாக்கால்
துன்பம் விளைக்கும் பகையாகத் தோன்றியதே!
அருகிருக்க நண்பர் பெரும்புகழை ஏற்றிப்
பெருங்குறை அவர்மறையப் பேசுகின்ற புல்லர்போல்,
கருங்குவளைக் கண்கள் காட்டிக் கொடுக்கும்
பெரும்பகைபோற் பின்தொடர்ந்து வந்ததடி தோழி!
வாய்விட்டுச் சொல்லாது மனமடக்கிப் பார்த்தாலும்
தாய் நாடும் கன்றுபோல் தாவி அவனருகில்
போய் நாடும் என்நெஞ்சின் போக்கே எனக்கு
வாய்த்த பெரும்பகையாய் வந்து முளைத்ததடி !
தாயருகில் இருந்தாலும், தமிழ்பாடக் கேட்டாலும்
தேய்பிறையில் திங்கள் ஒளிமங்கல் போலென்
பாய்புலியைக் காணாது பசப்பூறும் நெற்றி!
பழம்புளியைக் கூட்டிப் பலகறிகள் இட்டுக்
குழம்பாக்கும் சட்டியின் மூடிசொட்டும் நீர்போல்
அழுதழுது நீர்மல்கி அழகிழக்கும் கண்கள்!
வேய்வளரும் மலைத்தோளான் மென்னகையைக் காணாது
காய்ந்த கொடியில் நிறமிழக்கும் கொவ்வைபோல்
வாய்க்கடையில் நிறமிழக்கும் மலர்பூத்த உதடு!
மயலூட்டும் அன்பன் வரைத்தோளைக் காணாமற்
பெயலற் றுலர்ந்த பெருமூங்கில் போல
இயலற்ற தோள்கள் என்செய்வேன் தோழி!
சிலையேந்தும் தீஞ்சொல்லான் திருத்தோள்கள் காணாது
கலகலத்த வண்டிக் கட்டவிழ்தல் போலென்
நிலைகுலைந்த முன்கையின் வளைநெகிழ்ந்து போகும்!
நிழலில் துளிர்த்த சிறுகிளையின் நீள் இலைபோல்
முழவார்க்கும் பாம்போடை முன்கண்ட காதலனின்
அழகெண்ணி என்மேனி அழகற்றுப் போகும்!
இளவேனில் அத்தானின் இன்னுரையைக் கேளாது
குளம் வற்றத் தாமரைப்பூங் கொடிவாடல் போல் நான்
வளங்கெட்டு மனஞ்சோர்ந்து வாடுகிறேன் தோழி!
நட்டு வளர்க்கும் நறுமுல்லை மொட்டரும்பித்
தொட்டேறும் துணைக்கொம்பைக் காணாது காற்றிற்
பட்டலைதல் போல் நானும் பாடழிந்தேன் தோழி!
கார்தந்த செந்நெல்லைச் சீராக்கி இட்ட
நீர்ப்பானை தீயேற நிலைகுலையும் அரிசிபோல்
போர்த்தோளைக் காணாது பொலிவிழந்தேன் தோழி!
நீரற்றுக் காய்ந்த ஆற்றின் நிலைபோலச்
சீரற்றுப் போகும் அவனில்லா வாழ்க்கை !
மாரி வளம்பெருக்க வற்றியபின் காய்ந்த
ஏரிபோல் ஆகும் அவனில்லா வாழ்க்கை !
நெல்விளையா நன்செய் நிலப்பரப்பைப் போலச்
செல்லாத காசாகும் அவனில்லா வாழ்க்கை!
மழைகாணாப் புன்செய்யில் வளரும் பயிர்போல
அழகற்றுப் போகும் அவனில்லா வாழ்க்கை!
உளம்ஒவ்வாக் காதலரின் உருப்படாக் குடித்தனம் போல்
வளமற்ற தாகும் அவனில்லா வாழ்க்கை!
பிள்ளை ஒன்றேனும் இல்லாப் பெருங்குடிபோல்
சள்ளை நிறைந்ததாம் அவனில்லா வாழ்க்கை!
ஒலியற்றுப் போன ஊரின் கடைத்தெருபோல்
பொலிவற்றுப் போகும் அவனில்லா வாழ்க்கை!
கணக்காயன் இல்லா வகுப்பேபோல் என்றும்
பிணக்கு நிறைந்ததாம் அவனில்லா வாழ்க்கை!
அறிவில்லாப் பேச்சின் செறிவுபோல் என்றும்
குறியற்றுப் போகும் அவனில்லா வாழ்க்கை!
உடைமை பொதுசெய்யா நாட்டில் உயரும்
மடைமைபோல் ஆகும் அவனில்லா வாழ்க்கை!
நிலவில்லா வான நீள் இரவைப் போலப்
பலரஞ்சக் கூடும் அவனில்லா வாழ்க்கை!
மணமில்லா வண்ண மலர்பூத்த தைப்போல்
குணமற்றுப் போகும் அவனில்லா வாழ்க்கை!
சொல்லாழம் தோயாக் கல்லார் கவிபோலச்
செல்லாத தாகும் அவனில்லா வாழ்க்கை!
இசையற்ற பாட்டின் இயல்புபோல் என்றும்
பசையற்றுப் போகும் அவனில்லா வாழ்க்கை!
அதனால்,
உடுக்கை இழந்தவன் கைபோல் உதவும்
வடுக்கண்ணாய்! என்தோழி! மாதவிப்பூங் கொத்தே!
இமையே! எனதுயிரே! என்னுயிரை மீட்க நீ
காலைக் கதிரவனாம்! காட்சிப் பெருவிருந்தாம்!
பூமணத்தை வாரிவரும் பூந்தென்றல் காதலனைக்
கண்டு நெருங்கிக் கதிர்க்கேங்கும் தாமரைப்பூ
உண்டென் றுரைத்துவா டி !
-------------
6. அறிவாளோ?
திருவிழாக் காலம் தெருநெடுக நின்றே
அருங்காவல் செய்வோர் அணிபோல் மரங்கள்
வரிசையாய் நிற்க, மலர்க்கிளையின் உச்சி
பொரிவண்டு தாதுண்ணப்,புள்ளிக் குயிலிசைக்க,
முன்னாள் கிளைபூத்து மூத்த மலர்களெல்லாம்
வீழ்ந்து சுருங்கி விரித்தபொன் ஆடைபோற்
பாட்டை நெடுகக் கிடக்க, மனைதோறும்
கூடத்தில் முன்னாள் குலவி மகிழ்ந்தசொல்
மாடத்திற் பைங்கிள்ளை வாய்விட்டுக் கூறிவரக்,
கூண்டுக் கிளியெடுத்துக் கொஞ்சித் தெருவுள்ள
சன்னல் வழிபார்க்கும் மின்னலைக் கண்டார்கள்!
கண்டார்கள் வான் நிலவைக்! கண்டார்கள் தோகையை!
வாய்திறந்து நின்றார் மலைத்து!
அங்கொருவன்,
கண்கலங்கி மூச்செறிந்து பார்த்தான் கனிந்து!
எனைவிளித்தான்
அழகொழுகக் கல்லில் அமைத்த சிலைபோலும்,
முழுநிலவு பொய்கை முளைத்த மலர்போலும்
எழிலுடையாள் உன்தலைவி! என்னென்பேன் தோழி !
கண்டார் உயிர்வாழார் என்ப தறிவாளோ?
அன்னத்தைப் போலும், அழகுப் பிடிபோலும்,
மின்னல் இடிவிளைக்கும் முகிற்குலத்தைக் கண்டாடும்
சின்ன மயில்போலும் சாயலள் உன் தலைவி!
கண்டார் உயிர்வாழார் என்ப தறிவாளோ?
மின்னலைப் போலும், வேல்விழியார் தம்பற்கள்
தன்னகத்தே கொண்ட முல்லைக் கொடிபோலும்
சின்ன இடையுடையாள் உன்தலைவி! அன்னாளைக்
கண்டார் உயிர்வாழார் என்ப தறிவாளோ?
கூரம்பு போலும், குளத்து மலர்போலும்,
நீர்வாழும் கெண்டை நிழல்மா வடுப்போலும்
சீர்பெற்ற கண்ணாள் உன் தலைவி! அன்னாளைக்
கண்டார் உயிர்வாழார் என்ப தறிவாளோ?
பொதிகை வளர்சந்தின் புதுப்பலகை போலும்,
மதுமலர்சூழ் ஓடை வாய்த்த மலர்போலும்,
புதுமைக் கவிபோலும் கன்னத்தாள் உன்தலைவி!
கண்டார் உயிர்வாழார் என்ப தறிவாளோ?
வெண்சங்கைப் போலும்,விளைகமுகு போலும்,
மண்குடத்து வாய்போலும் கழுத்துடையாள் உன் தலைவி!
புண்செய்தாள் நெஞ்சில்; போக்கும் மருந்தவளே!
கண்டார் உயிர்வாழார் என்ப தறிவாளோ?
நீர் நிறைந்த பொய்கை நிமிர்ந்தவெண் தாமரையின்
சீரரும்பு போலும், செப்புச் சிமிழ்போலும்
வாரணிந்த மார்புடையாள் உன் தலைவி! அன்னாளைக்
கண்டார் உயிர்வாழார் என்ப தறிவாளோ?
தென்றலைப் போலும், செழும்பரிதி மூழ்கும்
குன்றடர்ந்த இருள்சோலைக் குளிர்மையைப் போலும்,
அன்றலர்ந்த பூப்போலும் இனிமையாள் உன்தலைவி!
கண்டார் உயிர்வாழார் என்ப தறிவாளோ?
இன்னுங்கேள்:
அவளை வெறுத்தென்ன? அவளை ஈன்றெடுத்த
பவள மணிமாலைத் தாயை வெறுத்தென்ன?
குவளை மலர்த்தோழி! உன்னை வெறுத்தென்ன?
குடியை வெறுத்தென்ன? குடிதந்த அந்தக்
கொடியை வெறுத்தென்ன? கொடுநோயாம் உன் தலைவி
நடையை வெறுத்தென்ன? நான் பிழைக்கப் போமோ?
உயிர்த்தோழி!
சிற்றூரிற் கண்டாரின் செவ்வி அழித்தொழிக்கும்
தொற்றுநோய் என்றவளை வீட்டில் அடைத்துத்
தடைசெய்யா நாட்டுப் பெருங்குடி மக்களே!
நஞ்சின் கொடியவ ராம்!
எனக்கூறி என்னருகில் நின்று தவித்துச்
சினவேங்கை சோர்ந்து செயலற் றிருப்பதைப்போல்
ஏங்கித் தவித்தான் அவன்!
நானோ,
மனமிரங்கி ஓடை மலர்ப்பொய்கை காட்டி
உனை வருத்தும் நோய்க்கு மருந்தொன்று கூறித்
தனிவிடுத்து வந்தேன்! நட !
-------------
7. சிரித்தாள்
யார் அவள்?. அவளேதான் !... யாழ்கிடப் பதைப்போல்,
தமிழ்நூல் தனியே படிப்பா ரின்றிக்
கிடப்பதைப் போலக் கிடக்கின்றாள் கிள்ளை!
வேர்மேல் தலைவைத்து மெல்லுடலை நீட்டி
நீர்க்கெண்டை நோக்கி விழிக்கெண்டை பாயக்
கிடக்கின்றாள் கார்காணத் தோகை கிடப்பதைப்போல்!
கண்ணைத் திறக்காது கல்லிற் செதுக்கிவைத்த
வண்ணச் சிலைபோலென் வாழ்வரசி மரத்தடியில்
எண்ணம் எழுந்தோட விழியேங்க நறுஞ்சாந்துக்
கிண்ணம் கிடப்பதைப் போற்கிடக் கின்றாள்!
அவளருகில்,
மெல்ல நெருங்கிநான் வேறேதோ கேட்பான் போல்
சொல்லாடிக் காண்பேன் இனி!
நீலக் கடல்மேல் நெளியும் அலைபோன்ற ற
கோல நறுங்கூந்தற் பொற்கொடியே! மக்கட்குப்
பால்நிலவு நன்மை பயக்க எழுதலன்றி
ஆல்காட்டிற் காய்வதால் என்?
போரைப் புறங்கண்ட என் நாட்டு மூவேந்தர்
கூர்வாளைப் போன்ற குளிர்விழியே! செப்பக்கேள்!
போர்வாள் பகையை மறந்(து) அன்புடையோரை
வேர்கல்லி வீழ்த்துவதால் என்?
வானைத் தொடுமலையின் உச்சி வடித்தெடுத்த
தேன்போன்ற இன்சொற் சிறுகுயிலே! அன்புடையோர்
ஊனில், உயிரில் இனிக்கும் தமிழ்ச்சொற்கள்
போனவிட மெங்கோ? புகல்!
சார்ந்தார்க் கினிமை தரும்பொதிகைச் சாரல்வாழ்
ஈர்சாந்தக் கிண்ணத் தெழிலே! நல் லன்புடையோர்
சீரைக் கெடுத்துத் தெருவில் விடுவதனால்
ஊருன்னைத் தூற்றிடா தோ?
வளம்பெருக்கும் நீள்குன்றச் சாரல் வளர்ந்த
இளமூங்கில் நற்றோள் இளம்பிடியே! அன்புடையோர்
உளம்வாட்டித் தீய்த்துக் கெடுப்பதுவோ பெண்கள்
தளதளத்த தோளின் தகை?
நாட்டிற் குயிரளிக்கும் நன்மழையை வானத்திற்
கூட்டிவரும் கார்மின்னற் சிற்றிடையே! அன்பரை
வாட்டி வதக்கி மனஞ்சோரச் செய்வதுதான்
தீட்டா இடைச்செயலோ? செப்பு!
வாத்தும் பிடியும் வளர்காட்டுப் பாறைமேல்
கூத்துப் பயிலும் களிமயிலும் உன்சாயல்
பார்த்து மிகவேங்கச் செய்யலாம்! அன்பரைத்
தீய்த்தழிப்ப தாலென்ன வாம்?
செப்பக்கேள்!
சென்ற இளமை திரும்பா! மலர்ச்சோலைக்
குன்றும் சுனையும் குளிர் நிழற் பூக்காடும்
இன்றேபோல் என்றும் இருக்குமோ? நினைத்துப்பார்!
பேசாயோ?
இனக்கிளிகள் உன்குரலைக் கேட்டுத் திரும்பித்
தினைக்கொல்லை என்றுன்னைத் தேடி வருமென்ற
மனக்கவலை யாலோ வாய்திறவா திருக்கின்றாய்?
பழமுண்ணும் கிள்ளைகள் முன்காணா இணைகோவைப்
பழமென்றே உன்னிதழைப் பார்த்து விரைந்து
நுழையுமென் றஞ்சியோ வாய்திறவா திருக்கின்றாய்?
மாங்குயில்கள் நாண மரக்காட்டில் பாட்டிசைத்துத்
தீங்கனியைக் கோதவரும் சின்னஞ் சிறுகுயில்கள்
ஈங்குவரு மென்றாநீ வாய்திறவா திருக்கின்றாய்?
முல்லை மலர்மொட்டு, தெங்கின் முளை, அரிசி,
பல்லில்லை வாயில், மாதுளையின் வித்தென்று
சொல்லுவா ரென்றாநீ வாய்திறவா திருக்கின்றாய்?
விழிச்சிரிப்பும், வெள்ளரித் தீம்பழத்துக் கன்னச்
சுழிச்சிரிப்பும் கூட்டிவரும் வாய்திறந்தால் பூத்த
கழிசிரிக்கும் என்ற கலங்கித் தவிக்கின்றாய்?
வாய்திறந்தால் முல்லை மலர்ந்ததாய் வண்டினங்கள்
ஆய்மலர் விட்டுன் இதழ்மலரை அண்டுமென்றா
நோய்தீர் ஒருவார்த்தை சொல்லா திருக்கின்றாய்?
என்றேன்;
களுக்கென் றிடைகுலுங்கக் கார் முல்லைக் காடு
சிரித்தது போலச் சிரித்தாள்; நெகிழ்ந்தாள்!
சிறகடித்து வானப் பெருவெளியிற் போய்த்திரியும்
மாடப் புறாவானோமே!
-------------
8. நன்றன்று!
கல்லருவி வான விற்போலப் பாய்ந்திசைக்கும்,
கழையின் நுனிதாழ்த்தி மழைக்களிறு பிடியூட்டும்,
குலைவாழைக் கச்சல் கொல்புலியின் கால்போல்
மலைச்சாரல் எங்கும் வளரும் திருநாடா!
பனிபடர்ந்த நீள்குன்றம், பாட்டிசைக்கும் ஓடை,
கனிமொழியாள், பசுங்கிள்ளை என்தலைவி தேடி
இனிஇரவில் நீவருதல் நன்றன்று! வந்தால்,
தனிப்பட்ட காளையெனக் கட்டக்கயி றெடுப்பார்!
இன்னமுது, புரட்சிக்கவி, இனியபழம் பாடல்,
மென்னடையாள், விடிவானம் என்தலைவி தேடி
மின்னிருளில் நீவருதல் நன்றன்று! வந்தால்,
செந்நெல்மேய் எருமையெனத் தேடிப்பார்ப் பார்கள்!
கோட்டைப்பொன், மரமல்லி, குளிர்நீலப் பொய்கை,
தீட்டாத ஓவியமாம் என் தலைவி தேடித்
தோட்டத்துப் புறம்வருதல் நன்றன்று! வந்தால்
காட்டுநரி வந்ததெனக் கதவைத்திறப் பார்கள்!
வான்பூத்த வெண்ணிலவு, வயல்பூத்த நீலம்,
தேன்பூத்த சொல்லாள் என்தலைவி தேடிக்
கானாற்றைக் கடந்துவரல் நன்றன்று! வந்தால்,
மான் திருடும் கள்வனென வளைத்துக்கொள் வார்கள்!
கார்முதிர்ந்த நன்செய், கனிமுதிர்ந்த தோப்பு,
கூர்முதிர்ந்த வேல்விழியாள் என் தலைவி தேடி
ஊரருகே நீவருதல் நன்றன்று! வந்தால்,
போர்ப்புலியே வந்ததென ஆர்த்தெழுவார் மக்கள்!
நீர்பூத்த செவ்வல்லி, நிலம்பூத்த முல்லை,
வேர்பூத்த குண்டுபலா என் தலைவி தேடிக்
காரிருளில் நீவருதல் நன்றன்று; வந்தாற்,
போர்யானை வந்ததெனப் புடைக்க எழும் ஊரே!
உண்மை
வெளிப்பட்டால் தலைவி உயிர்வெளிப் படுமே!
என்னுயிர் அவளுடன் என்றும் இணைந்ததே!
விரைவில் திருமணம் புரிதல்
வேண்டும்! குடிப்புகழ் விளங்க வேண்டுமே!
-------------
9. பூட்டிடுமின்
செடியீன்ற போழ்தின் சிறுநகைக் கேங்கி
விடியல் இசைபாடி மெல்ல நகைகாட்டி
முத்தம் நனியீன்று மொக்கின் முகம்மலர்த்தி
நித்தம் மதுஉண்ணும் வாய்ப்பிருக்க வண்டினங்கள்
ஓங்கி வளர்ந்த உயர்மலையிற் கார்க்கூட்டம்
தேங்கி இருந்து செழுங்காற்றால் தாக்குண்டே
உச்சி புகையும் உயர்மலையின் தீ அணைக்க
நச்சிவரும் நீள் அருவி நன்னீர் முகக்க
மயில்போல் படரும் மலைநாட்டுப் பெண்கள்
இயல்விழியை மொய்த்துப்பின் ஏமாறும் நாடா!கேள்!
காடென்றும், உளிப்போன்ற கல்லென்றும் பாராது
தேடி வரும்செய்கை, தித்திக்கும் செழுந்தேனே!
வாடா மலர்ஒத்த மான்விழியாள் உன்தலைவி
கூடா ஒழுக்கமெனும் ஊர்வாய்க்குப் பூட்டிடுமின்!
ஆறென்றும்,நீர்என்றும், அரவென்றும் கலங்காமல்
தேறி வரும்செய்கை, தித்திக்கும் செழுந்தேனே!
"வேறானாள்' எனும்சொல் வெறும்வாய்க் கவல்போலும்
கூறித் திரியுமிந்த ஊர்வாய்க்குப் பூட்டிடுமின்!
வான்இடியை மலை இடிக்க, வான்மின்னல் வழிகாட்ட
தேன்மொழியைத் தேடி வரும்செய்கை, செழுந்தேனே!
கான்மயிலாள் என் தலைவி களவொழுக்கம் காட்டும்
ஊன்பசலை கண்டேசும் ஊர்வாய்க்குப் பூட்டிடுமின்!
வழிப்பறிப்போர்க் கஞ்சாமல், மதயானைக் கஞ்சாமல்
ஒழிவின்றி வரும்செய்கை, உச்சிமலைச் செழுந்தேனே!
கழிநீல மலர்விழியாள் என்தலைவி களவொழுக்கம்
பழிபேசும் உணர்வில்லா ஊர்வாய்க்குப் பூட்டிடுமின்!
இன்னுங்கேள்:
ஆக்கப் பொறுத்தோம் ஆறப் பொறுப்பமெனும்
நோக்கோ டிருந்தாலும், நூறுமுறை நினைந்தாலும்
பூக்காட்டுத் தாதுப் பொன்பசலை மேனியளைச்
சாக்காட்டுக் கோட்டும் தரம்குறைக்கும் ஊர்ப்பேச்சே !
எட்டியது கிட்டியது பறப்பெதற்கோ என்றெண்ணிக்
கட்டோ டிருந்தாலும், காலம்எதிர் பார்த்தாலும்
மட்டார் குழலி உன்குறையை இவ்வூரார்
திட்டப் பொறுப்பாளோ? செத்தே மடிவாளே!
குளத்து நீர் வருவெள்ளம் கொடுபோகா தென்கின்ற
ளத்தோ டிருந்தாலும், ஊமையாய் ஆனாலும்,
களத்துழவன் தன்குறையைக் கண்டவர்கள் கண்டபடி
தளர்த்த உரைப்பதெலாம் காதேற்று வாழ்வாளோ?
எந்நாளும்,-
இல்லம் வருவிருந்தை ஏற்று மகிழ்விக்கும்
நல்லறத்துக் கேற்ற நடைமுறையைக் கைக்கொண்டு
பெற்றோர் மகிழ, நற் பேரறிஞர் வாழ்த்துரைக்க
உற்ற வழிசெய்! உயர்வு!!
-------------
10. பொருள் தேடி வருகின்றேன்
செப்பு மலைபோலும் தீயின் உருக்கோடி
அப்படியே தேங்கி உறைந்த அணிபோலும்
நீரில்லா மேடு நிழலில்லாப் படுபள்ளம்
நேர் இல்லா வழிப்பாட்டை நெடுகும் சிதறுண்ட
கூரான உளிபோற் குறுங்கற்கள் பெருங்கற்கள்
தார்க்குச்சி போலத் தாக்கும் வழியெங்கும்
அறிவில்லா மாற்றான் படைஅழித்த பேரூர்போல்
செறிவின்றி மொட்டை மரங்கள் கிளைகாய்ந்தே
எங்கெங்கோ ஒன்றிரண்டு எழிலற்று நின்றிருக்கும்
வெங்கொடுமை மிக்க விரிகானம் தாண்டிச்
சென்று பொருள்தேடித் திரும்பி வருகின்றேன்!
என்றும் பொருளுக் கடிமையே மண்ணுலகம்!
கன்று பசுநிறைத்தே கடிமனையை ஓம்பிடலாம்!
அன்றன்றும் வருவோர்க்கு அகமகிழத் தந்திடலாம்!
பொருள் இல்லார்க் கிவ்வுலகம் இலையென்ற பொன்மொழியை
ஒருநாள் மறப்பதுவோ? உறுபொருளைத் தேடியபின்
வருவார் பலர்மனைக்கே; வகைவகையாய்ப் பணிபுரிவார்;
தருவார் புகழ்மாலை; தனிமதிப்பும் உண்டாம்!
அணிமணிக்குப் பொருள்தேவை! அறஞ்செய்யப் பொருள்தேவை!
பிணிபோக்கப் பொருள்தேவை! பிறர்க்கீயப் பொருள் தேவை!
துணிவாங்கப் பொருள் தேவை! தோகை மனையாட்டி
இணையோ டிருக்க, நல் லின்பமுறப் பொருள்தேவை!
அதனால்,
பொருளை விரைவில் தேடி மீண்டே
வருவன் வருவன் மனது கலங்கா (து)
இருவெனச் சொன்னதாய்ச் சொல்லி
கண்ணீர் மல்குமென் கண்மணிக் குரையே!
-------------
11. பெருகும் பிரிவுத்துயர்!
கைமலர் பொத்தி விழிமலர் கசக்கும்
நெய்தற் கன்னியர் நீள்கடை திறக்க
வைகறை எழுந்து மறிகடல் நிமிர்ந்து
கைதையம் பெரும்பூக் காட்டை மலர்த்தி
அலைகடல் வந்த கதிரவன் மாலை உலையிற்
கொல்லர் உருக்கும் இரும்பென
மலையிடை மறைந்து மக்களைப் பார்த்தே
’உலகம் நானின்றேல் உய்யுமோ?' என்னும்
தலைக்கனச் செருக்கன் போல்ஒளி அடக்கும்!
இலையடர் புன்னை நெடுங்கிளை இருந்தே
பேடை பிரிந்த நாரையை விளிக்கும்!
கூட்டைத் தேடிப் புட்கள் குறுகும்!
கடன்பட் டேனும் மற்றவர்க் (கு) அளிக்க
உடன்பட் டேனெனத் திங்கள் உயரும்
செக்கச் சிவந்த இளஇருள் மாலை!
பொருள் தேட முனைந்த புதுப்புனல் நாட்டில்
பெருமாட அணிசுவர்மேற் கிளிப்பிள்ளை தத்தை
வருமளவும் தொளையிருந்து வந்துவந்து பார்க்கும்
தரங்கண்டு விரைந்தேனும் வருவாரோ தோழி?
இல்லிருந்து பிரியாத எழில்மார்பன் அணைத்தோள்
புல்லும் மகளிர்க்குப் பாலைப் பொழி நிலவு
கொல்லும் தனித்தோரை என்ப துணர்ந்தேனும்
வல்லே நிலவின் வலிவடக்க வாராரோ?
தாழைப் புதரில் தனித்துறங்கும் பெட்டையினை
ஆழக் கடல்தாண்டி அணையவரும் நீள்நாரை!
தாழைச் சலசலப்பும் தலைதாழ்த்தும் வெய்யோனும்
ஏழை எனைவாட்டும்; இடர்களைய வாராரோ?
அதோகேள்!
கோயில் மணியும் குரலெழுப்பி ஓய்ந்ததடி!
வாயில் விளக்கை வளைக்கைகள் ஏற்ற
அருகிலிருந்து பூநுகரும் ஆளன் பெருந்தோளை
இருகையால் தாவும் எழில்மகளிர் கண்டே
பெருகும் பிரிவுத் துயர்!
----------------
12. வந்தான் மகிழே!
பைந்தமிழ் முறையே பயின்றவர் பாடல்போல்
வந்தது, புகுந்தது வயலிடை யாறு!
நிரம்பிய குளத்தே நிமிர்ந்தன மலர்கள்!
மரமெலாம் பூத்தது! கிளைசெடி பூத்தது?
வயலெலாம் நீலம்! வரப்பெலாம் குவளை!
அயலெலாம் உதிர்ந்த அழகுப் பூக்கள்!
பன்மணி நிறைந்த பசுமைப்பட்டாடை
தன்உழைப்பின்றியே மற்றவர் உழைப்பில்
உண்டு களிப்போர்க் குதவும் வண்டுகள்!
மண்டிப் புதுப்பூ வலம்வந் திசைக்கும்!
செங்கண் சிறுகுயில் எங்கும் விளிக்கும்!
அங்குள மாந்தளிர் அரிவையர் மேனியே!
சிந்திய தாதுகள் மகளிர்மெய்த் தேமலாம்!
வந்தது தென்றல்! மலரிடைப் புகுந்தது!
வந்தது நறுமணம்! இளவேனில் வந்ததே!
செடிமலர் சிதறிய சிறுபாறை மேல்மயிலும்
அடிபெயர்த்(து) ஆடியே அகவலால் எனைஎள்ளும்!
அடிபெயர்த்(து) ஆடிமயில் அகவலால் எனைஎள்ள
விடுவதுதான் அன்பென்றால், மெலியும் உடல்! யார் தடுப்பார்?
கரும்புவயல் பறந்தாடிக் கனிமரத்துப் பழங்கோதி
அருங்கிளிகள் அக்கக்கா' என என்னை அலக்கழிக்கும்
அருங்கிளிகள் ‘அக்கக்கா' எனஎன்னை அலக்கழிக்க
இருப்பதுதான் அன்பென்றால், உயிர்ப்பிரிவை எவர்தடுப்பார்?
பூத்தகுளம் புகுந்தாடிப் புதுமலரின் மதுவுண்டே
ஆர்த்திருக்கும் கருவண்டோ வழி அணுகி எனைஎள்ளும்
ஆர்த்திருக்கும் கருவண்டோ வழி அணுகி எனை எள்ளக்
காத்திருப்ப(து) அன்பென்றால், உயிர்காத் திருந்திடுமோ?
என்றுநீ-
புலம்பும் போழ்தே அலங்கல் மார்பன்
தலைபுனை குதிரை ஊர்ந்தே
வலம்வரு பரிதிபோல் வந்தான்! மகிழே!!
--------------
கவிஞரின் படைப்புக்கள்
தமிழச்சி
கொடி முல்லை
தொடு
எழிலோவியம்
வாணிதாசன் கவிதைகள் தீர்த்த யாத்திரை
இன்ப இலக்கியம்
பொங்கற் பரிசு
குழந்தை இலக்கியம்.
சிரித்த நுணா
இரவு வரவில்லை
பாட்டுப் பிறக்குமடா
இனிக்கும் பாட்டு
எழில் விருத்தம்
பாட்டரங்கப் பாடல்கள்
வாணிதாசன் கவிதைகள் II
-----------
This file was last updated on 15 Feb 2023.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)