pm logo

க. நா. அண்ணாதுரைவின் (அறிஞர் அண்ணா)
சிறுகதைகள் தொகுப்பு 1


short stories collection of
C.N. aNNAturai - 1
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2023.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் தொகுப்பு 1

அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் - முந்தைய வெளியீடுகள்
1. குமாஸ்தாவின் பெண் ( PM629 )
2. குமரிக்கோட்டம் (PM690 )
3. கபோதிபுரத்துக் காதல் (PM758)

உள்ளடக்கம்
4. அப்போதே சொன்னேன் (காஞ்சி – 1968)
5. இரும்பு முள்வேலி (காஞ்சி - 1966)
6. தழும்புகள் (காஞ்சி - 1965)
7. சந்திரோதயம் (திராவிட நாடு - 1955)
8. பிடிசாம்பல் (திராவிட நாடு - 1947)
9. கோமளத்தின் கோபம் (குடியரசு - 1939)
--------------------------------

4. அப்போதே சொன்னேன்

“அப்போதே சொன்னேன், கவனமிருக்கிறதல்லவா? அந்தப் பயல் உருப்படமாட்டான் என்று தெரிந்து சொன்னேன். விளையும் பயிர் முளையிலே என்று பெரியவர்கள் வீணுக்கா சொல்லி வைத்தார்கள்!” என்று ஒவ்வொரு நாளும் நடைபெறும் குளத்தங்கரை மாநாட்டில், கொத்தனார் வேலையிலிருந்து வளர்ந்து ‘காண்ட்ராக்டர்’ ஆகிவிட்ட குத்தாலலிங்கம் அன்று கூறிவிட்டு, உடன் இருந்தவர்களைக் கம்பீரமாகப் பார்த்தார். உடன் இருந்தவர்கள் மூவர். ஒருவர் குத்தாலலிங்கம் தலையில் எப்படியாவது கரம்பு நிலத்தைக் கட்டிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்த கலியபெருமாள் வாழ்ந்து கெட்டவர்; மற்றொருவர் தமது மகளை மருமகளாகக் கொள்ள குத்தாலலிங்கம் திட்டமிட்டுக் கொண்டிருப்பதாகக் கேள்விப்பட்டு பூரித்துப் போயிருந்த பொன்னம்பலம்; மூன்றாவது பேர்வழி மாரியம்மன் கோவில் பரம்பரை பூசாரி. ஒவ்வொரு நாளும் - அதாவது குத்தாலலிங்கத்துக்கு வசதியும் ஓய்வும் கிடைத்திடும் நாள் - குளத்தங்கரையில் அவர்கள் கூடுவதும், தங்கள் தீரனூர் புள்ளிகளைப் பற்றிப் பேசுவதும் வாடிக்கை.

குத்தாலலிங்கம் கொத்தனாராக இருந்த வரையில், மற்றவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருக்கும் நிலை! காண்ட்ராக்டர் ஆனபிறகு, அவர் பேசுபவராகவும் மற்றவர்கள் கேட்டுக் கொள்பவர்களாகவும் நிலைமை மாறிவிட்டது.

தீரனூரில் நாட்டாண்மை வீட்டு ‘பெரிய ஐயா’ காலமாகி விட்ட பிறகு, அந்தக் குடும்பத்தைப் பற்றியும் குளத்தங்கரை மாநாட்டிலே பேச்சு அடிபட ஆரம்பித்தது. பெரிய ஐயா இருந்த வரையில் ‘அந்தப் பேச்சு’ நமக்கு எதற்கு என்று ஒதுக்கி விடுவார்கள்; அத்தனை மதிப்புப் பெற்ற குடும்பம்.

பெரிய ஐயா காலமாகி விட்ட பிறகு, ‘காவேரி’ அம்மா எவ்வளவோ கஷ்டப்பட்டு தன் இரண்டு பிள்ளைகளையும் ஒரு பெண்ணையும் நல்ல முறையிலே வளர்த்து வந்தார்கள்.

பட்ட மரம் துளிர்ப்பது போல, இந்த இரண்டு மகன்களும் அந்தக் குடும்பத்தை மறுபடியும் வளமானதாக்குவார்கள், நாட்டாண்மையை நடத்திச் செல்லுவார்கள் என்ற நம்பிக்கை பலருக்கு. இரண்டு பிள்ளைகளில் மூத்தவன் சாத்தப்பன்; துடிதுடிப்பானவன்; அவன் தம்பி தங்கப்பன்; அமைதியானவன்; பெண்ணின் பெயர் வடிவு; நல்ல அழகி.

சாத்தப்பன் சுறுசுறுப்பாகவும் யாரிடமும் கலகலப்பாகப் பழகுவதையும் கண்டவர்கள், அவன் விரைவில் நல்ல முறையில் படித்துப் பட்டம் பெற்று முன்னுக்கு வருவான் என்று எண்ணிக் கொண்டனர்; பள்ளிக் கூடத்திலேயும் அவனுக்குத் தான் முதலிடம்! தங்கப்பனுக்குக் கிடைத்த மதிப்பே, அவன் சாத்தப்பன் தம்பி என்பதாலேதான்!!
* * *

எதைப்பற்றியும் நுணுகி ஆராய்ந்து, உண்மையைக் கண்டறிந்து கூறத்தக்கவர் என்ற பெயர் குத்தாலலிங்கத்துக்கு. சொத்து சேரச் சேர வளர்ந்து கொண்டிருந்தது. குத்தாலம் சொன்னா சொன்னபடி நடக்கும் என்றும் எப்போதோ நடக்கப் போவதை முன்கூட்டியே அறிந்து சொல்லுவார், அந்தத் திறமை உண்டு என்றும் பேசிக் கொள்வார்கள். அவனுடைய முப்பாட்டனார் பெரிய ஆரூடக்காரர் தெரியுமா! அந்த ‘அம்சம்’ துளியாவது இருக்கத்தானே செய்யும் என்று ஆதாரம் கூடக் காட்டினார்கள்.

ஊரிலே பலரும் சாத்தப்பனைப் பற்றிப் பாராட்டிப் பேசியபோது, குத்தாலம் மட்டும் தலையை அசைத்தபடி, “என் மனத்திலேபட்டதைச் சொல்றேன்... அந்தப் பய சாத்தப்பன் ஒழுங்கா இருக்கப் போவதில்லை. போகப் போகத் தெரியும் பாருங்க” என்று சொல்லி வைத்தார்.

அந்தப் பேச்சு நடந்து மூன்று வருஷங்களுக்குப் பிறகுதான் அன்றைய குளத்தங்கரை மாநாட்டில் குத்தாலலிங்கம் வெற்றிப் புன்சிரிப்புடன் சொன்னார், “நான் அப்போதே சொன்னேனே, கவனமிருக்கிறதா?” என்று. அன்று அந்தப் பேச்சு வந்ததற்குக் காரணம், தாழைப்பட்டி மிட்டாதாரர் மகள் தருமாம்பாளை, தங்கப்பனுக்குத் தருவது என்று நிச்சயித்துத் திருமணத்துக்கு நாள் குறித்து விட்டார்கள் என்ற செய்தி கிடைத்ததுதான்.

தாழைப்பட்டியார் தன் மகளைச் சாத்தப்பனுக்குத் தான் கொடுக்க விரும்புகிறார் என்று ஊரே பேசிக்கொண்டது. சாத்தப்பன் தங்கப்பன் இருவருமே தாரைப்பட்டியை அடுத்த புது நகரக் கல்லூரியில்தான் படித்துக் கொண்டிருந்தார்கள். தர்மாவும் கல்லூரி மாணவி.

சாத்தப்பனும் தர்மாவும் ஒன்றாக உலவுவதும் உல்லாச மாகப் பேசுவதும், பூப்பந்தாட்டம் ஆடுவதும் கண்டவர்கள், பொருத்தமான ஜோடி என்றே கூறினார்கள். தாழைப்பட்டியாரும் தமக்கு ஒரு தடையும் இல்லை என்பதை ‘ஜாடை மாடை’யாகத் தெரிவித்திருந்தார்.

ஊரெல்லாம் எதனை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்களோ அது நடைபெறவில்லை; சாத்தப்பனுக்கு என்று எந்தத் தருமாம்பாளைக் குறிப்பிட்டுக் கூறி வந்தார்களோ, அந்தப் பெண் தங்கப்பனுக்கு என்று நிச்சயம் செய்யப்பட்டுவிட்டது, அதிர்ச்சி பலருக்கு. சாத்தப்பன்? அவன் ஊரில் இருந்தால்தானே அவன் மனநிலை என்ன என்று தெரிந்துகொள்ள.

கல்லூரியில் திறமைமிக்க மாணவனாகப் படித்துக் கொண்டிருந்த சாத்தப்பன், என்ன காரணத்தினாலோ, கல்லூரி முதல்வரிடம் கடுமையாகத் தகறாரிட்டுக் கொண்டான்; அதன் காரணமாகக் கல்லூரியை விட்டு நீக்கப்பட்டான். ஊரை விட்டே ஒருவருக்கும் சொல்லிக் கொள்ளாமல் ஓடிவிட்டான். ஊரை விட்டுப் போகும் முன்பு தங்கப்பனைத் தனியாகச் சந்தித்து அன்புடன் அணைத்துக்கொண்டு. “தம்பி! குடும்பப் பொறப்பு இனி உன்னுடையது” என்று உருக்கமாகச் சொன்னதாகப் பேச்சு உலவிற்று. பொதுவாக ஊரிலே பரவிவிட்ட பேச்சோ, “குடும்பத்திற்கே தலை இறக்கமான காரியத்தைச் செய்து விட்டு சாத்தப்பன் ஓடிவிட்டான்” என்பது.

ஊரைவிட்டு ஓடாமல், எப்படி இங்கே இருப்பான். அவள் போட்ட சொக்குப்பொடி இலேசானதா? என்று ஒரு பேச்சு கிளம்பிற்று. அடியோடு ஆதாரமற்ற பேச்சு அல்ல அது.

“நான் கண்ணால் பார்த்தேன். அவளோடு சாத்தப்பன் ஆடிப்பாடி அலைந்ததை” என்று தருமாம்பாளே கூறியபிறகு சாத்தப்பன் மீது வந்த புகாருக்கு ஆதாரமே இல்லை என்று எப்படிக் கூறிவிட முடியும்.

மேலும் சாத்தப்பன் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் ஊரைவிட்டு ஓடி விட்டதற்கும் ‘ரசவாதம்’ ரங்கலால் தன் தங்கை மங்காவையும் அழைத்துக் கொண்டு அதே ‘இரயிலில்’ பயண
மானதையும், எப்படி ஒன்றாக இணைத்துப் பார்க்காமல் இருக்க முடியும்.

வழக்கமாக விடுமுறை நாட்களைத் தாழைப்பட்டி மாளிகையில் கழித்திடும் வாடிக்கையை மாற்றிவிட்டு, தம்பி தங்கப்பனை மட்டும் போகச் சொல்லிவிட்டு, சாத்தப்பன் ரங்கலால் ஆராய்ச்சிக்கூடத்தில் தங்கிவிட்டது, ஆராய்ச்சிக்காகாவா, அல்லது மைக்கண்ணீ என்று கல்லூரி மாணவர்களால் செல்லப் பெயரிடப்பட்ட மங்காவுக்காகவா!

இவ்விதமாகப் பலவிதமான பேச்சு.

சாத்தப்பன் வலையிலே விழுந்திருந்தால் என் மகள் கதி என்ன ஆகி இருக்கும். நல்லவேளை பயல் ஓடிவிட்டான், இனி தங்கப்பனே என் மருமகன் என்று தாழைப்பட்டியார் தெரிவித்து விட்டார். மகனுக்குப் பெரிய இடத்துச் சம்பந்தம் கிடைத்ததிலே அம்மாவுக்கு மகிழ்ச்சிதான் என்றாலும் மூத்தவன் இப்படி ஆகிவிட்டானே, குடும்பத்துக்குக் கெட்ட பெயர் கொண்டு வந்துவிட்டானே என்பதை எண்ணி எண்ணிக் குமுறினார்கள்.

அந்த நிலையில்தான் குத்தாலம் கூறினார் “அப்போதே சொன்னேனல்லவா?” என்று.

இவ்விதமெல்லாம் நடக்கும் என்று அவர் விவரம் ஏதும் சொல்லவில்லையே; ஆனால் தங்கப்பனுக்குத்தான் நல்ல எதிர்காலம் இருக்கும், சாத்தப்பன் ‘சுழி’ நன்றாக இல்லை என்று பொதுப்படையாகச் சொல்லி வைத்தார். பார்க்கப் போனால் அவர் சொன்னது போலவே நடந்துவிட்டது; சாத்தப்பன் எவள் பின்னோடோ ஓடி விட்டான்; தங்கப்பன் தாழைப்பட்டியாரின் மருமகன் ஆகும் நிலையைப் பெற்றான்.

கல்லூரியில் புதிதாக ஒரு மண்டபம் கட்டும் ‘காண்ட்ராக்டு’ கிடைக்காது போனதற்குக் காரணம் சாத்தப்பன் என்றோர் சந்தேகம் குத்தாலத்துக்கு. ஆதாரமற்ற சந்தேகம். காண்ட்ராக்ட் குத்தலாத்துக்குக் கிடைக்கக் கூடாது என்று கூட சாத்தப்பன் நினைக்கவில்லை. கல்லூரி முதல்வரிடம் தனியாகப் பேசி ‘காண்ட்ராக்ட் தொகை’ எந்த அளவு இருக்க வேண்டும் என்று அவர் எதிர்ப்பார்க்கிறார் என்று அறிந்து கூறும்படி குத்தாலம் கேட்டுக் கொண்டார். சாத்தப்பன் தன்னால் முடியாது என்றும், அது முறையல்ல என்றும் சொல்லிவிட்டான்.
இந்த விரோதத்துக்கும் தன் கணிப்புக்கும் சம்பந்தம் இல்லை என்று குத்தாலம், கூறிவிட்ட பிறகு மறுப்புப் பேசுவார் யார், குளத்தங்கரை மாநாட்டில்!
* * *

ஆண்டுகள் மூன்று உருண்டோடின; குளத்தங்கரை மாநாடு வழக்கம் போல நடைபெற்று வந்தது; குத்தாலலிங்கமே தலைமை; மற்றவர்களிலே மட்டும் மாற்றம் ஏற்பட்டுவிட்டது; சம்பந்தியாகிவிட்ட பொன்னம்பலம் வேறு வேலைகளைக் கவனிக்கலானார்; கரம்பு நிலத்தை விற்க முடியாத கோபத்தில் கலியபெருமாள் மாநாட்டை வெறுத்துவிட்டார்; மாரியம்மன் கோவில் பூசாரி வழக்கத்தை மாற்றிக் கொள்ளவில்லை; செங்கல் சூளை சின்னப்பனும், மரக்கடை மகமதுவும் புதிய அங்கத்தினர் களாகிவிட்டனர்.
* * *

தங்கப்பன் வக்கீலாகி, தர்முவுடன் திருச்சிராப்பள்ளி நகரில், தாழைப்பட்டியார் வாங்கிக் கொடுத்த மாடிக் கட்டித்தில் வசித்துக் கொண்டிருந்தார். தாழைப்பட்டியாரின் மருமகப்பிள்ளை என்பதாலே, கட்சிக்காரர்கள் வந்து குவிவார்களா! கோர்ட்டிலே வக்கீலுடைய திறமை எப்படி என்பதைப் பார்த்துத்தானே! வழக்கறிஞருக்கு வருமானம் கட்டையாவே இருந்தது. ஆனால் அவருக்காகத் திறமையாக வாதாடி தரும் தகப்பனாரிடமிருந்து தாராளமாகப் பணம் பெற்று வந்ததால் குடும்பம் வசதியாக நடந்து வந்தது.
* * *

“தங்கப்பன் கோர்ட்டிலே வாய் திறப்பதே இல்லை தெரியுமா. வக்கீல் வேலைக்கே அவன் இலாயக்கில்லை. எனக்கு அப்போதே தெரியும். நான் அப்போதே சொன்னேன். தங்கப்பன் திறமைசாலி அல்ல என்பதாக, கவனமிருக்கிறதா?” என்று கேட்டார், குத்தாலலிங்கம்.

சாத்தப்பன் மூலமாகக் கல்லூரி காண்ட்ராக்டை முடித்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் சாத்தப்பனிடம் பழகி வந்தபோது குத்தாலம், சாத்தப்பன் திறமைசாலி, தங்கப்பன் ஒரு காரியத்திலும் திறமை பெறமாட்டான் என்று கூறியது உண்மை... மாரி கோவில் பூசாரிக்கு அது தங்கப்பன் திறமைசாலியாக மாட்டான் என்பதை” என்று கூறி மற்றவர்களின் பாராட்டுதலை வாங்கித் தந்தான் குத்தாலத்துக்கு. மாரி கோவில் பூசாரியின் அதிகாரத்தைக் குறைத்துவிட வேண்டுமென்று எவனெவனோ எழுதிப் போட்ட ‘மொட்டை’ பெட்டிஷனை ஒன்றுமில்லாமல் செய்வதாக வாக்களித்திருக்கிறார் குத்தாலம்! பூசாரி குத்தாலத்தைப் பூசை செய்துதானே ஆக வேண்டும், செய்தான்.
* * *

அந்த வருஷம் வடிவுக்கு நல்லபடி திருமணமாயிற்று. தாழைப்பட்டியார் ஏற்பாடுதான்; மாப்பிள்ளை சப்-இன்ஸ் பெக்டர்; சென்னை. வழக்கப்படி கண்ணைக் கசக்கியாயிற்று வாரம் தவறாமல் கடிதம் போடு என்று புத்தி சொல்லியாயிற்று. என் கண் போல மாப்பிள்ளே! என்று கொஞ்சியாயிற்று. வடிவு சென்னை சென்றாகிவிட்டது. அந்தத் திருமணத்திற்கும் சாத்தப்பன் வரவில்லை; இருக்கும் இடம் இன்னது என்றுகூட எவருக்கும் தெரியவில்லை.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள், வழக்கப்படி மாநாடு குளக்கரையில், தொடர்ந்து மூன்று காண்ட்ராக்டுகளில் நஷ்டம் குத்தாலத்துக்கு; சின்னப்பன் யந்திரச் சூளை அமைத்து வளர்ந்துவிட்டிருந்தான். அவனுக்கே தலைமைப்பதவி. மரக்கடை மகமது ஆள் பார்த்துக் கொண்டிருந்தார் முதல் போட்டு வியாபாரத்தைப் பெரிதாக்க. மாரிகோவில் பூசாரி, கோவில்களிலே ஆடு வெட்டக்கூடாது, கோழி அறுக்கக்கூடாது என்று பிரசாரம் செய்தவர்களின் கூட்டத்தில் ஆட்களை ஏவிக் கலகம் செய்ததாகத் தொடுக்கப்பட்ட வழக்குத் தொல்லையில் சிக்கிச் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்.

புத்தம் புதிய படகு மோட்டார், ஊருக்குள்ளே செல்லக் கண்டு, புதுத்தகவல் ஏதோ கிடைக்க இருக்கிறது என்ற ஆர்வத்துடன், மகாநாட்டை அவசர அவசரமாகக் கலைத்து விட்டு குத்தாலலிங்கம் ஊருக்குள் சென்றார்.
* * *

சாத்தப்பன் ஊரைவிட்டுச் சென்றுவிட்ட நாள் முதலாகவே காவேரி அம்மாளின் மனம் நொந்துவிட்டது. தங்கப்பன் தாழைப்பட்டியாரின் மருமகனான போதும் வழக்கறிஞரான போதும், மகள் வடிவுக்கு நல்ல மாப்பிள்ளை கிடைத்தபோதும், நொந்துகிடந்த மனத்துக்குச் சிறிது ஆறுதல் கிடைத்தது என்ற போதிலும் சாத்தப்பனைப் பற்றிய நினைவு அவர்கள் மனத்தைவிட்டு அகல மறுத்தது. தாய் உள்ளத்தின் தனித்தன்மைக்கு நிகராக வேறு எதுவும் இருக்க முடியாதே.

குடும்பத்தை மறந்து, பெற்ற தாயை மறந்து, எவளுடனோ சென்றுவிடத் துணிந்தவன் முகத்தைக்கூட நான் பார்க்க மாட்டேன் என்று பல முறை குமுறினார் காவேரி அம்மாள். ஆனால் அவர்களுக்கு மூண்ட கோபத்தைவிட அவன் என்ன ஆனான், எங்கு சென்றானோ, என்னென்ன இன்னலுக்கு ஆளானானோ என்ற வேதனைதான் அதிகமாக வளரலாயிற்று.
பெற்ற தாயையும் மறந்துவிடத் துணிந்தானே என்ற எண்ணியபோது மூண்ட கோபத்தைக்கூடத் தாங்கிக் கொள்ள முடிந்தது. ஆனால் பெற்ற தாயை மறந்து விட்டாலும் ஊரைவிட்டே போய்விட வேண்டும் என்ற அளவுக்கு அவன் மனத்திலே எதனாலே வெறுப்பு ஏற்பட்டது என்பதை எண்ணிடும் போது பீறிட்டுக்கொண்டு கிளம்பிய வேதனையைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
காவேரிக்கு என்ன! மணிமணியாக இரண்டு பிள்ளைகள்! ஒருவனை வக்கீல் வேலைக்கும், மற்றொருவனை டாக்டர் வேலைக்கும் படிக்க வைக்க ஏற்பாடாகிறது. நாட்டாண்மைக்காரர் இருந்தபோது இருந்ததைக் காட்டிலும் செல்வாக்கு இந்தக் குடும்பத்துக்கு வளரும் என்று நல்லவர்கள் பேசியதைக் காதாரக் கேட்டுக் கேட்டுப் பூரித்திருந்தாள். இடி விழுவது போன்ற செய்தி அல்லவா கிளம்பித் தாக்கிற்று சாத்தப்பன் எங்கோ சென்றுவிட்டான் என்று.

தம்பி! சாத்தப்பன் இதுபோல ஏதாவது விபரீதமாகச் செய்வான் என்று உனக்கு ஏதாவது அறிகுறி தெரிந்ததா என்று கேட்டதற்குத் தங்கப்பன் சரியான பதிலேதும் கூறவில்லை. பாவம்! அண்ணன் இப்படிச் செய்துவிட்டானே என்ற வேதனையில் அவனால் எதுவும் பேசமுடியவில்லை என்று எண்ணம்கொண்ட காவேரி தன் வேதனையை அடக்கிக் கொண்டதுடன், தங்கப்பனுக்கு ஆறுதல் கூறும் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளவேண்டி வந்தது. எதையும் தாங்கிக் கொள்ளத்தானே பெண் ஜென்மம் என்று காவேரி அம்மாள் வீட்டு வேலை செய்பவனிடம் கூறும்போது கண்களில் நீர் பொலபொலவென உதிர்ந்தது.

உன் பேரிலே உயிர் தங்கம், சாத்தப்பனுக்கு! ஒரு வேளை நீ சரியாகச் சாப்பிடாவிட்டால் உடம்புக்கு என்ன? என்ன? என்று கேட்டுக் கேட்டுத் துடிதுடிப்பான். உன்னை விட்டுப் பிரிய எப்படித்தான் மனம் வந்ததோ, தெரியவில்லையே என்று காவேரி அம்மாள் கூறி உருகுவார்கள். அண்ணன் போக்கே ஒரு தனி தினுசு. தெரிந்ததுதானே! என்று தங்கப்பன் சொன்னபோது காவேரி அம்மாள், இதென்ன கூடப் பிறந்தவன் என்ற பாசம் துளியும் இல்லாமல் பேசுகிறானே என்று வருத்தப்பட்டார்கள். ஆனால் மறுகணம், நம்முடைய வேதனையைக் குறைக்கத்தான் தங்கப்பன் இதுபோலப் பேசுகிறான் என்று கருதி ஆறுதலடைந்தார்கள்.

காதல் என்பது பற்றி கவிகள் வருணனை தரும்போது வசீகரமாகத்தான் இருக்கிறது; ஆனால் அந்தப் பாழாய்ப் போன காதல் ஒரு குடும்பத்தை என்ன பாடுபடுத்திவிட்டது பார்த்தாயா! குடும்ப பாரத்தையே தாங்கக் கூடியவனாகத்தான் இருந்தான் சாத்தப்பன். ஆனால் ஒரு மைவிழியாளின் மையலில் சிக்கியதும், பெற்ற தாயையும் துடிதுடிக்கச் செய்துவிடத் துணிந்துவிட்டான். இதைப் பார்த்த பிறகாவது காதல் கீதல் என்றெல்லாம் உளறிக் கொட்டிக் கொண்டிருக்கக் கூடாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டாமா? என்று காதற் கலியாணம் செய்து கொள்ள உறுதி தெரிவிக்கும் வாலிபர்களை மடக்கி அடக்க முனைந்தனர் பெற்றோர்.

ஒரு வார்த்தை என்னிடம் அவன் சொன்னதில்லையே. தனக்கு ஒரு பெண்ணிடம் விருப்பம் இருப்பதாக. அவள் எந்த ஜாதியாக இருந்தாலும், என்மகனுடைய மனத்துக்குப் பிடித்தவள் என்றாகிவிட்டால், நானா குறுக்கே நிற்பேன்? எனக்கு ஜாதிகள் வேண்டுமா வேண்டாமா, நியாயமா அல்லவா? காலத்திற்கு ஏற்றதா இல்லையா என்பது பற்றி ஏதும் தெரியாது. ஆனால் மகன் வேண்டுமா வேண்டாமா என்று கேட்டால் தட்டாமல் தயங்காமல் பதில் சொல்லுவேனே, எனக்கு என் மகன்தான் வேண்டும் என்று என்னிடம் துளிகூட தன் எண்ணம் பற்றிச் சொல்லவில்லையே ஏன்...?

தங்கப்பா! ஏன் உன் அண்ணன் அந்தப் பெண்ணோடு ஊரைவிட்டுப் போய்விட்டான் தெரியுமா? குடும்பம் கெடக்கூடாது; நாமெல்லாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும என்பதற்காகத்தான். ஏன் அவ்விதம் சொல்லுகிறேன் என்று கேட்பாய். என் மகனுடைய மனம் எனக்குத் தெரியும். அவன் எப்படியோ ஒருத்தியிடம் பாசம் கொண்டு விட்டான். என்ன குலமோ என்ன நிலையோ... அவளை என் மருமகளாக்கிக் கொள்ள என் மனம் இடம் தராது என்று எண்ணித் திகில் அடைந்திருக்க வேண்டும், முதலில், பிறகு என்னைச் சம்மதிக்கச் செய்தாலும், ‘தகாத’ திருமணம் செய்து கொண்டவன் குடும்பம் என்பதால், உனக்குத் தக்க இடத்தில் பெண் கிடைக்காது என்று எண்ணி இருக்கிறான்; வடிவுக்கு ஏற்ற மணவாளன் கிடைக்கா விட்டாலும் என்ன செய்வது என்று எண்ணி இருக்கிறான். நம்மாலே குடும்பத்திற்கு இழிவும் இடரும் வரவிடக்கூடாது என்று தீர்மானித்திருக்கிறான்... அதனால்தான், என்னைச் சுற்றிச் சுற்றி வட்டமிட்டு, அம்மா! அம்மா! அம்மா! என்று பாசம் பொழிந்து கொண்டிருந்த என் மகன், என்னையே, மறந்து விடத் துணிந்தான்... நீ வாழ, வடிவு வாழ, குடும்பம் வாழ, எப்போதும் தியாக உள்ளம் அவனுக்கு... தன்னைப் பற்றிய நினைப்பைவிட மற்றவர்களின் நலனைப் பற்றிய நினைப்பே அதிகம் அவனுக்கு என்றெல்லாம் காவேரி அம்மாள் கசிந்துருகிச் சொல்லிக் கொண்டிருக்கும்போது, தருமாம்பாள் குறுக்கிட்டு “அத்தே! அவர் பரீட்சை எழுதத் தயாராகிக் கொண்டிருக்கும்போது, மனத்தைக் குழப்பிவிட்டு விடாதீர்கள்” என்று சொன்னாள் சாதாரணமான முறையில்தான். ஆனால் காவேரி அம்மாளின் நெஞ்சிலே ஒரு சம்மட்டி அடி விழுந்தது போலிருந்தது. எனக்கு இரண்டு பிள்ளைகள் ஒருவன் எங்கோ கண்காணா இடம் சென்று விட்டான்; மற்றவனை இவள் தன் உடைமை ஆக்கிக் கொண்டு விட்டாள்; இனி எனக்கென்று யார்... இரண்டு பிள்ளைகளுமே எனக்காக இல்லையா... பெற்று வளர்த்து மற்றவர்களிடமே ஒப்படைத்துவிடத்தானா பிள்ளைகள்...! என்றெல்லாம் எண்ணி வேதனை அதிகமாகி படுத்தப்படுக்கையாகி விட்டிருந்தார்கள். டாக்டர்கள் கவலைக்கிடமான நிலைமை என்று தெரிவித்தது கேட்டு, திருச்சியிலிருந்து மனைவியுடன் தங்கப்பனும் சென்னையிலிருந்து வடிவும் வந்திருந்தார்கள். பயந்ததுபோல ஏதும் நேரிட்டுவிடவில்லை; உயிருக்கு ஆபத்து இல்லை என்று டாக்டர் உறுதி கூறிவிட்டார். மகிழ்ச்சி துள்ளிட வேண்டிய அந்தச் செய்தியைக் கேட்டு, தர்மாம்பாள் டாக்டரிடம் சீறி விழுந்தாள். விவரம் தெரியாதவர்கள் வீண் பயம் கொள்ளுவார்கள். பதறுவார்கள்; “டாக்டர்! நீங்களுமா ஓர் ஆபத்தும் இல்லாதபோது அபாயச் சங்கு ஊதி, அவருடைய வேலையைக் கெடுப்பது, எவ்வளவு முக்கியமான பெரிய கேசை விட்டுவிட்டு வந்திருக்கிறார் தெரியுமா?” என்று கடுகடுப்புடன் கேட்டாள். தருமு பேசியதிலே சிந்திச்சிதறியது காதிலே விழுந்தது காவேரி அம்மாளுக்கு. வேதனை வெடித்துக்கொண்டு வந்தது. சாத்தப்பனை நான் பார்த்தாக வேண்டும்! உடனே வரச் சொல்லுங்க டாக்டர்... எங்கே இருந்தாலும் வரச் சொல்லுங்க... பேப்பர்லே போட்டா வருவானாம்... சொன்னார்கள் டாக்டர்! உங்களைக் கை எடுத்துக் கும்பிடுகிறேன். என் மகனைக் காட்டுங்கள் டாக்டர்... ஒரே ஒருமுறை... கடைசீ முறை... என்று கேட்டுக்கொண்டபோது டாக்டரின் கண்களோ கலங்கிவிட்டன. பத்திரிகைகளில் செய்தி விளம்பரமாக வெளியிட ஏற்பாடு செய்தார் டாக்டர். அந்த விளம்பரத்தைப் பார்த்துவிட்டுத்தான், பதறிக் கொண்டு சாத்தப்பன் வந்திருக்கிறானோ அவன் மோட்டார்தானோ அது. மோட்டாரில் வர வேண்டிய அளவு அவசரமான, ஆபத்தான நிலை வேறு யாருக்கும் இல்லையே, காவேரி அம்மாளின் நிலைதானே மோசமாக விட்டிருக்கிறது. ஆகவே படகு மோட்டாரில் வந்திருப்பது சாத்தப்பனாகத்தான் இருக்கும் பூசாரி சொன்னபோது, இருக்கலாம் என்று ஆமோதித்தார் குத்தாலம்!; எனக்குத் தெரியும் மறுபடியும் சாத்தப்பன் இந்த ஊருக்கு வருவான் என்பது. நான் அப்போதே சொன்னேனே மரக்கடை மகமதுவிடம் கேட்டுப் பாருங்கள்... எனக்கு அப்போதே தெரியும். சாத்தப்பன் பலே ஆள் என்பது- என்று சூளை சின்னப்பன் கூறிக்கொண்டே மற்றவர்களை அழைத்துக் கொண்டு நாட்டாண்மைக்காரர் வீடு நோக்கி வேகமாக நடந்தான்.

மகனைக் கண்ட மகிழ்ச்சியில் காவேரி அம்மாளுக்கு ஒரு புதிய துடிதுடிப்பு ஏற்பட்டது. அந்தத் துடிதுடிப்பே அவர்களின் உயிரையும் குடித்துவிட்டது. கால்களைக் கண்களில் ஒற்றிக் கொண்டபடி கதறிய சாத்தப்பனைக் கண்டு உருகாதவர்கள் இல்லை.
--------------

அப்போதே சொன்னேன் ( 2)

தருமாம்பாள் தன் கணவனிடம் “நீங்களும் ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு கதறுங்கள். காரியம் தன்னாலே ஆகிவிடும்” என்று சொன்னது யார் காதிலும் விழவில்லை.
தாழைப்பட்டியாருக்கு ஆள் அனுப்பினார்கள்! அவர் வந்துதானே சகல ஏற்பாடுகளும் ஆகவேண்டும்.

காவேரி அம்மாள் இறந்துவிட்டார்களே தவிர, அவர்கள் முகத்திலே பதிந்திருந்த பொலிவு, சாவதற்கு முன்பு காணாமல் போயிருந்த தன் மூத்தமகன் வந்துவிட்டதிலே அவர்களுக்குத் தனியானதோர் மகிழ்ச்சி ஏற்பட்டது என்பதை எடுத்துக் காட்டிற்று.

பக்கத்திலிருந்தவன் பராமரித்துக் கொண்டிருந்தவன். குடும்பத்தின் பெயரைக் காப்பாற்றிக் கொண்டிருந்தவன் தங்கப்பன்; ஊர் தூற்றும், உற்றார் உறவினர் கேவலமாகப் பேச, எவளுடனோ ஓடிவிட்டவன் இந்தச் சாத்தப்பன் தாயை மறந்து. குடும்பத்தை மறந்து; ஆனால் விந்தையைப் பாருங்களேன், காவேரி அம்மாளின் மனம் அவன் மீதே பதிந்து கிடந்திருக்கிறது. இதைத் தானய்யா, தாய்ப்பாசம் என்பது” என்றார் குத்தாலலிங்கம்.

மகன் என்ன ஆனானோ ஏது ஆனானோ என்று அந்த அம்மாள் கவலைப்பட்டிருப்பார்கள்; மகன் நல்லபடி இருக்கிறான் என்பதைக் கண்டதும் கவலை பறந்தே போய்விட்டது; ஒரு திருப்தி ஏற்பட்டிருக்கிறது. கண்ணை மூடுகிற நேரத்தில், கவலையில்லாமல் இருந்திருக்கிறார்கள் என்றான் பூசாரி.

படகு மோட்டாரிலே மகன் வந்திருக்கான் என்பது காவேரி அம்மாளுக்குத் தெரியுமோ, என்னமோ? என்று கூறிக்கொண்டி ருந்தார்; சின்னப்பன். அதுவரையில் மோட்டார் டிரைவரிடம் பேசிக்கொண்டிருந்துவிட்டு வந்த முகமது சாத்தப்பன் பேப்பர் விளம்பரத்தைப் பார்த்ததும் பதறிப்போய் ஓங்கோல் நகரத்திலே இருந்து மோட்டாரிலே மானாகப் பறந்து வந்திருக்கிறார்... என்று சொன்னதிலேயே, மற்றவர்கள், சாத்தப்பன் பெரிய புள்ளியாகி விட்டிருக்கிறான் என்பதைப் புரிந்துகொண்டு, புதிய பாசத்துடன் சாத்தப்பனைப் பார்க்கத் தொடங்கினர்.

“குடும்பத்துக்குத் தலைப்பிள்ளையாச்சே! நீதானேப்பா மற்றவர்களுக்குத் தைரியம் சொல்லணும் தம்பியைப்பாரு! திகைத்துக் கிடக்கிறாரு...” என்று பட்டம் சூட்டிப் பேசினார் குத்தாலம்.

“நூறு வயதுக்கு மேலே ஆகி இருக்கட்டும், தாயாரைப் பறிகொடுக்க நேரிட்டால் தாங்கிக் கொள்ள முடியுமா மகனாலே” என்று உருக்கம் கலந்து பேசினார் சின்னப்பன்.

“எல்லாவற்றையும் துறந்துவிட்ட பட்டிணத்தடிகளே அல்லவா, தன்னோட தாயார் காலமானதைக் கேட்டதும் ஓடோடி வந்து பதறினார் கதறினார்...” என்று பூசாரி சொன்னார்.
* * *

“மணிக்கு 60, 70ன்னு மோட்டாரு பறந்து வந்திருக்குது” என்று விவரம் கூறினார் மகமது.

“கார் பெரிசு, புதுசு...” என்று சின்னப்பன் கூறியது கேட்டு, மகமது, தன்னிடம் விவரம் கேட்காமல், இவர்கள் எல்லாம் தங்களுக்குத் தெரிந்தது போலப் பேசுகிறார்களே என்ற எரிச்சலைக் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு “கார் பெரிசு புதுசு என்பதுதான் தெரியும் உங்களுக்கு. டிரைவர் யார் தெரியுமா... மிலிடரியிலே வேலை பார்த்த ஆசாமி. வேலைக்கு வந்து வருஷம் நாலு ஆகுதாம். மாதச் சம்பளம் இரண்டு நூறு...” என்ற தகவலைத் தந்துவிட்டு சுற்றுமுற்றும் பார்த்தார்.

“ஒங்கோல் ஊரிலே என்ன தொழிலாம்...”

“பெரிய முதலாளியாம் அங்கே இவரு... ஈயச் சுரங்கம் இருக்கிறதாம்... வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யற வியாபாரமாம்...”

“ஈயச் சுரங்கம்னா ஆசாமி பெரிய புள்ளின்னு சொல்லு...”

“முகத்தைப் பார்த்தாலே தெரியலியா லட்சுமி கடாட்சம் பரிபூரணமாக இருக்கற விஷயம்...”

“வெளிநாடுகள் போய் வர்ற வேலை நிறையவாம். கப்பல் கப்பலா ஈயம் அனுப்புவாராம்... வருஷத்துக்கு இரண்டு தடவை மூணு தடவை, வெளிநாடு போய் வருவாராம்.”
* * *

தாழைப்பட்டியார் வந்துவிட்டதால் ஒரு பரபரப்பு ஏற்பட்டுவிட்டது. மற்றத் தகவல்களைப் பற்றிப் பேச முடியவில்லை.

“உன் உடம்பு இருக்கற நிலையிலே நீ அதிகமாகக் கதறி தொந்தரவைக் கொண்டு வந்து விடாதேம்மா. உங்க மாமியாரு பழுத்த பழமான பிறகுதான் காலமாயிட்டாங்க. ஊரிலே இதைத்தான் பெரிய சாவுன்னு சொல்லுவாங்க... அழாதேம்மா, தருமு” என்று தாழைப்பட்டியார் தேறுதல் சொல்ல ஆரம்பித்த கண்டு, தர்மு கண்களைக் கசக்கிக் கொண்டாள். எப்படியோ தாழைப்பட்டியாருடைய பேச்சு காதிலே விழுந்துவிட்டது சாத்தப்பனுக்கு கோபமும் வெறுப்பும் கலந்த குரலில். “அம்மாவுக்கு வயசு உங்களைவிட ஆறு குறைவுதானுங்க” என்று கூறிவிட்டு, பதில் ஏதும் எதிர்பாராதவன்போல வேறு பக்கமாகச் சென்றுவிட்டான். தாழைப்பட்டியாருடைய கோபம், அவருடைய மோட்டார் சாத்தப்பன் மோட்டாருக்கருகே எப்படி அடக்க ஒடுக்கமாக நின்று கொண்டிருந்ததோ, அதுபோல தன்னாலே சுருண்டு கொண்டது.
* * *
‘பெரிய சாவு’ பற்றிய பேச்சு அடங்க நாலைந்து நாட்கள் பிடித்தன. இதற்குள், வடிவும் அவள் புருஷனும் வந்து சேர்ந்தார்கள். ஊரார் கூட்டம் குறைந்து வீட்டிலுள்ளவர்கள் மட்டும் ‘நிலைமைகளை’ப் பற்றிப் பேசிக் கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டது. இதற்குள் சாத்தப்பன் ‘சீமான்’ நிலையில் இருக்கிறான் என்ற உணர்வும், அதற்குத் தக்கபடி நடந்து கொள்ள வேண்டும் என்ற போக்கும் வடிவமெடுத்துவிட்டது.

“தம்பியோட நினைவுதான் அம்மாவுக்கு... இல்லையானா இன்னும் பத்து வருஷத்துக்காவது இருப்பாங்க.”

தாழைப்பட்டியார் அவ்வளவு பரிவுடன் பேசியது பலருக்கு விந்தையாக இருந்தது. சாத்தப்பன் பார்வையிலேயே இருந்த குறும்புத்தனத்தின் பொருள் மற்றவர்களுக்கு விளங்க வில்லை. தருமாம்பாளைத் தனக்குத் தருகிற எண்ணத்தோடு இருந்தபோது இதே பரிவு கனிவு தாழைப்பட்டியாருக்கு இருந்தது. அந்தப் பழைய நாட்களை இருவரும் நினைவு படுத்திக் கொண்டனர். இருவரைக் காட்டிலும் அந்த நாட்களை அதிக அளவு நினைவுபடுத்திக் கொண்டு தத்தளித்தான் தங்கப்பன்.

தாழைப்பட்டியார் மிட்டாதாரர். ஆனால் செல்வம் புரளும் நிலையில் இல்லை. சாத்தப்பன் தனக்கு இதைவிட அதிகச் செல்வம் புரளும் இடம் வேண்டும் என்ற பேராசை காரணமாகவே, ஓடிவிட்டான் என்றோர் எண்ணம் மிட்டாதாருக்கு.

‘ரசவாதி’ ரங்கலால், பித்தளையைப் பொன்னாக்குபவன், ஆகவே அவன் தங்கையை மணம் செய்து கொண்டால் அளவற்ற பணம் கிடைக்கும் என்ற எண்ணத்தினால்தான் சாத்தப்பன் தருமாம்பாளை உதறிவிட்டான் என்று நினைத்துக் கொண்டார். இல்லையானால், தாராளமாகப் பழகிக் கொண்டு வந்தவன், ஏன் திடீரென்று மாறிவிடவேண்டும்.

எங்கே, தம்பி நாலைந்து நாளாகத் தென்படக் காணோமே.

ரங்கலால் ஆராய்ச்சிக் கூடத்திலேயே இருந்து விட்டேன்.

ஆராய்ச்சின்னு நீதான் தம்பி சொல்றே. ஊரிலே அந்த இடத்தைப்பத்தி தாழ்வாப் பேசறாங்க தெரியுமோ. அந்த ஆள் இருக்கறானே, என்னமோ அவனை மோசக்காரன்னு சொல்றாங்க.

தெரியாதவங்க எதையும் பேசுவாங்க. நாலு குருடர் ஒரு யானையைப் பத்தி என்னென்ன சொன்னாங்கன்னு கதை இருக்குதே, அதுபோல,

தம்பி, உன்னோட சினேகிதனை தாழ்வாகப் பேசுவது உனக்குக் கோபமாகத்தான் இருக்கும். தருமுவுக்குத் துளி கூட பிடிக்கவில்லை, நீ அந்த இடத்திலே பழகறது.

தருமு மட்டுமில்லே ஊரேன்னு சொல்லலாம்...
ஊர் எதையும் பேசும். சும்மாவா பெரியவங்க சொன்னாங்க, உலை வாயை மூடலாம் ஊர் வாயை மூட முடியாதென்று...

இவ்விதமான ‘பேச்சு’தான் முறிவுக்குத் துவக்கமாக இருந்தது. பிறகு நிலைமை வேகமாக வளர்ந்தது.

நம்ப அந்தஸ்துக்குத் தகாது தம்பீ...

தலை எறக்கமா இருக்குதப்பா...

இந்த விஷயத்திலே நான் சற்று கண்டிப்பாகத்தான் இருப்பேன்... ஆமாம்!

இந்த இடத்துச் சம்பந்தம் வேண்டுமானா, உன் போக்கை மாற்றிக் கொண்டாகணும்.

உன்னைக் கண்டாலே தருமு வெறுப்படையுது... நானுந்தான்... நீ இங்கே அதிகமாகப் பழகாமல் இருக்கிறது நல்லது...

உள்ளே யாரும் இல்லை சாத்தப்பா! இப்படித் திண்ணையிலே உட்காரு... பேச்சுக் குரல் கேட்குதேன்னு யோசிக்கிறாயா... உன் தம்பியோட குரல்தான்...

எதுவோ பாட விஷயமாகத் தருமுவோடப் பேசிக் கொண்டிருக்குது தங்கம்...

தருமுவைப் பத்தி நினைப்பை விட்டுவிடு சாத்தப்பா. நான் வேறே ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன். தருமுவோட சம்மதத் தோடத்தான்... உன் தம்பி தங்கப்பனுக்கே கொடுத்து விட முடிவு செய்திருக்கிறேன்...

இப்படிப் படிப்படியாக, ஆனால் வேகத்துடன், நிலைமை வளர்ந்தது. சாத்தப்பன் வருத்தப்பட்டதாகவோ, கோபித்துக் கொண்டதாகவோ தெரியவில்லை. ரங்கலாலிடம் பழகுவது அதிகமாயிற்றே தவிர குறையவில்லை. இந்த நிலையில்தான் சாத்தப்பன், எவரிடமும் சொல்லாமல் ஊரைவிட்டே ஓடி விட்டது!

சாத்தப்பனும் தாழம்பட்டியாரும் இவை பற்றிய நினைவிலே நெடுநேரம் ஈடுபட்டிருந்தனர்.

“தம்பீ! உன் கலியாணத்துக்குக் கூடவா ஒரு கடுதாசி போடக்கூடாது” என்று கேட்டார் தாழப்பட்டியார்.

“போடாமல் இருப்பேனா... கலியாணம் ஆகிறபோது?” என்று சாத்தப்பன் சொன்னது தாழப்பட்டியாரை ஓர் உலுக்கு உலுக்கிவிட்டது.

“கலியாணம் ஆகவில்லையா!... அப்படியா... அந்தப் பெண்...?”

“ரங்கலாலோட உடன்பிறந்தாளா...? அந்தப் பெண் இறந்து போய்விட்டாள்...”

எவளைக் காதலித்தானோ, எவளுக்காக ஊரையும் உறவையும் விட்டுவிட்டு ஓடினானோ, அவள் இறந்து போய் விட்டாள். மனம் உடைந்து போய், திருமணமே வேண்டாமென்று இருந்து வருகிறான் போல இருக்கிறது என்று எண்ணிக்கொண்ட தாழம்பட்டியாருக்கு, தனக்கு மற்றொரு பெண் இல்லையே என்ற வருத்தமே கிளம்பி வாட்டிற்று. ஈயச் சுரங்கம்! இலட்சக்கணக்கில் வருமானம்! படகு மோட்டார்! எவள் கொடுத்து வைத்திருக்கிறாளோ, என்று எண்ணிக்கொண்டார்; வேதனையும் அடைந்தார்.

“தம்பி! சப் ஜட்ஜு வேலை உனக்குப் பிடிக்குமா...” என்று ஒருநாள் சாத்தப்பன் கேட்டபோது, தங்கப்பனுக்குத் தூக்கி வாரிப் போட்டுவிட்டது. தருமுவுக்கு உள்ளத்தில் ஆவல் குடைந்திடலாயிற்று. தாழம்பட்டியாருக்கோ’ மகிழ்ச்சி தாங்க முடியாத அளவு பொங்கிற்று. தலை அசைத்தான் தங்கப்பன். ஏற்பாடு செய்கிறேன் என்று சுருக்கமாகப் பதிலளித்தான் சாத்தப்பன். ஒரு வாரம் முடிவதற்குள், தங்கப்பன் சப் ஜட்ஜு வேலையில் அமர்ந்தான்.

சாத்தப்பனுடைய செல்வாக்குப் பற்றிய பேச்சு ஊரையே ஒரு கலக்கு கலக்கிவிட்டது.

குத்தாலம் சொன்னார் “எனக்கு அப்போதே தெரியும். அவனோட ஜாதகம் அப்படிப்பட்டது என்பது அவன் கல்லூரியிலே படிக்கிறபோதே, நான் அவனுடைய சிபாரிசு” வேண்டும் என்று கேட்டேன். நமக்குக் “கொடுப்பினை இல்லாததாலே சாத்தப்பன் உதவி செய்யவில்லை. அப்போதே ஒரு வார்த்தை சொல்லியிருந்தா, எனக்குத்தான் கல்லூரி புது மண்டபக் காண்ட்ராக்டு கிடைத்திருக்கும்” என்று கூறினார், ஏக்கத்துடன்.

“பாருங்களேன், அவரோட செல்வாக்கை. தம்பி! உனக்கு ஜட்ஜு வேலை வேணுமான்னு கேட்டாராம். தங்கப்பன் தலை அசைத்தானாம்; பத்தே நாளிலே ஜட்ஜு வேலை வீடு தேடி வந்திருக்குது. அப்படி அல்லவா இருக்கவேணும்” என்றான் சின்னப்பன்.

“அப்படிப்பட்ட ஓர் அண்ணன் இருக்கிறது தங்கப்பனுக்கு ஒரு பெருமையில்லையா” என்று சொல்லிவிட்டு, தன் அண்ணன் ஆறாயிரம் கடன்பட்டு அதைக் கொடுக்கமாட்டாமல் மஞ்சள் கடிதம் நீட்டியதை எண்ணி வருத்தப்பட்டுக் கொண்டார் மகமது.

அந்த வட்டத்து வணிகர் சங்கம், ஒரு வரவேற்பு வைபவம் ஏற்பாடு செய்தது, சாத்தப்பனுக்கு.
சப்ஃ ஜட்ஜ் தங்கப்பனுடைய அண்ணன், என்ற காரணம் காட்டியதும், அமைச்சர் ஒருவரே, வைபவத்துக்குத் தலைமை வகிக்கச் சம்மதமளித்தார். அவருக்கு அடுத்த முறை அத்தொகுதியில் நிற்கவேண்டும் என்ற விருப்பம்; விழா மூலம் அந்த வட்டத்து வணிகர்களின் நட்பு கிடைக்கும் என்ற எண்ணம். கணக்கு சரியாகவே போட்டிருந்தார் அமைச்சர். பாராட்டும் பிரமாதமாக அமைந்தது. பிரத்தியேக ‘நிருபர்’, புகைப்படக்காரர் புடைசூழ அமைச்சர் வந்திருந்தார்.
‘திரைகடலோடியும் திரவியம் தேடு’ என்று நமது முன்னோர்கள் சொன்ன பொன்மொழியின்படி திருவாளர் சாத்தப்பிள்ளைவாள், செல்வம் தேடிச் செல்வாக்கு தேடி நமக் கெல்லாம் பெருமை தேடி கொடுத்திருக்கிறார். சில வேளைகளில் வியாபாரிகளைக் கண்டிக்கிறோம். ஆனால் இப்படிப்பட்ட நாணயமான, நேர்மையான வியாபாரிகளை அல்ல. இவர்கள் நமது நாட்டுக்கே தூண் போன்றவர்கள். எங்கள் அரசாங்கம் இத்தகைய வியாபாரிகளுக்கு எல்லாவிதமான உதவியும் செய்யச் சித்தமாக இருக்கிறது.

அமைச்சரின் ‘பேருரை’ கேட்டு, வைபவப் பொறுப்பாளர் களான குத்தாலம் குழுவினர் பெருத்த ஆரவாரம் செய்தனர்.

சாத்தப்பன், பேசும்போது அடக்கம், தெளிவு, அனுபவம் எல்லாம் ததும்பியதாகக் கூறிக் களிப்படைந்தனர்.
* * *

விழா முடிந்ததும் பயணிகள் விடுதியில் சென்று தங்கி யிருந்த அமைச்சரிடம் போலீஸ் மேலதிகாரி ஒருவர் சந்தித்துச் சில விநாடிகள் பேசினார். மறுநாள் காலையில் புறப்பட இருந்த அமைச்சர் அவசர அவசரமாக அப்போதே புறப்பட்டுவிட்டார். வணிகர்கள் ஒருவரையும் கண்டு பேசாமல் அமைச்சர், சென்றதும், ஒரு ‘வேன்’ நிறையப் போலீசை அழைத்துக் கொண்டு, மேலதிகாரி, சாத்தப்பன் தங்கியிருந்த வீட்டுக்குச் சென்று, அவனைக் கைது செய்தார்கள்.

ஊரே திடுக்கிட்டுப் போய் விட்டது. திகில் கப்பிக் கொண்டது. தாழம்பட்டியாருக்கு ஒன்றும் புரியவில்லை. விழா காண வந்திருந்த தங்கப்பன் தலையில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்து விட்டான். தருமாம்பாள் ஏதேதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தாள். சாத்தப்பன் துளியும் கலங்கவில்லை. கைகளைக் கூட நீட்டினான். விலங்கு போடுவதாக இருந்தால் போடுங்கள் என்று கூறியபடி, முடுக்காகப் பேசினால் தன் வேலை சுலபமாகி இருக்கும், இவன் அமைதியாகவும் மரியாதையாகவும் பேசுகிறானே இவனிடம் நாம் பக்குவம் தவறி நடந்து கொள்வது முறையாக இருக்காதே என்று எண்ணிச் சங்கடப் பட்ட போலீஸ் மேலதிகாரி “என் கடமையைச் செய்கிறேன். வருத்தமாகக் கூட இருக்கிறது.” என்று சமாதானம் கூறினார். அதனால் என்ன! கடமையைச் செய்யும் போது கலங்கக்கூடாது. அதனால் நமக்கே சங்கடம் தொல்லை, ஆபத்து வருவதானாலும் கலங்கக்கூடாது” என்று சாத்தப்பன் போலீஸ் அதிகாரியிடம் பேசிடக் கேட்டு, தாழம்பட்டியார் திகைத்துப் போனார்.

“ஜாமீனில் விடுவார்களல்லவா சார்! நான் ஜாமீன் கொடுக்கச் சித்தமாக இருக்கிறேன்.” என்று தாழம்பட்டியார் கூறியதற்குப் போலீஸ் அதிகாரி பதிலளிக்கவில்லை, சாத்தப்பன் தான் பதில் கூறினான்.

“இது கொலை, கொள்ளை சம்பந்தப்பட்டதாயிற்றே... ஜாமீனில்விட மாட்டார்கள்” என்பதாக, போலீஸ் அதிகாரி புன்னகை புரிந்தபடி “ஐயா சகல விவரமும் தெரிந்து வைத்திருக்கிறார்” என்று சிறிதளவு குறும்புடன் கூறினார்.

“பார்த்தாயா மகமது! எனக்கு அப்பவே சந்தேகம்! என்னமோ மோசடி நடந்திருக்குது; இல்லையானா இந்தப் பயலுக்கு ஏன் இவ்வளவு செல்வம் என்று. கொள்ளை அடிச்சிருக்கான் பய! யாரும் கண்டுபிடிக்க மாட்டாங்க என்கிற தைரியத்திலே இங்கே வந்து வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறான்.

“மோட்டாரைப் பார்த்தாயா, எல்லாம் பெரிசு.”

“ஊரைக் கொள்ளை அடிச்சா உனக்கும் எனக்கும் கூடத்தான் கிடைக்கும் இதைவிடப் பெரிய மோட்டாரு... பாடுபட்டுத் தேடின பணமாக இருந்தாத்தானே கணக்குப் பார்ப்பானுங்க. இது எப்படியோ வந்தது தானே...”

“ஈயச் சுரங்கம்னு சொல்றபோதே எனக்குச் சந்தேகம்... ஈயத்திலேயா இவ்வளவு பணம் புரளும்னு...”

“கொள்ளை மட்டும் இல்லையாமே, கொலைக் குற்றமே இருக்குதாம், - ஆசாமி பேர்லே...”

“வெளிவேஷம் போட்டுக் கொண்டு நம்மைப் போல இருக்கிறவங்களை ஏமாற்றிவிடலாம்... சர்க்காரு சும்மாவிடும்மா... பார்த்தாயா, அவன் கழுத்திலே போட்ட மாலை கூட வாடலே, வதங்கலே, அதுக்குள்ளே கையிலே மாட்டி விட்டாங்க, காப்பு, இரும்புக் காப்பு...”

“உள்ளபடி நாணயமான தொழில் செய்யறவா, ஏன் இத்தனை வருஷம் தலைமறைவா இருக்கவேணும். சொல்லு.”

“எனக்கு அப்பவே சந்தேகம்.. நான் அப்பவே சொன்னேன் நம்ம பூசாரிகிட்டே, அய்யோவ்! இதிலே என்னமோ மர்மம் இருக்குதுன்னு...”

“சர்க்காரே! தன்னோட உள்ளங்கையிலே இருக்கிறதா காட்டிக்கிட்டானே பார்த்தாயா, இப்போ காட்டுடா கையைன்னு வந்துட்டாரு டி.எஸ்.பி.

“சப்-ஜட்ஜ் வேலை, தம்பிக்கு வாங்கிக் கொடுத்ததாகச் சொன்னாங்களே. அப்போதே எனக்குச் சந்தேகம். எப்படி இப்படிப்பட்ட செல்வாக்கு கிடைச்சிருக்கும்னு...”

“அதெல்லாம் செல்வாக்கும் இல்லே மண்ணும் இல்லை... பழமொழி இல்லே காக்கா உட்கார பனம் பழம் விழன்னு; அது போல... தங்கப்பன் என்ன தகுதியில்லாதவனா... சப்-ஜட்ஜு வேலை தன்னாலே வராதா அவனுக்கு. கோர்ட்டிலே கூட, அதிகமாக அலட்டிக் கொள்றதில்லே தங்கப்பன்... மத்த வக்கீல் களைப் போல... பல பேர் அதைப் பார்த்து அப்பவே சொல்லி இருக்கறாங்க தங்கப்பன் ஜட்ஜு வேலைக்குத் தகுதின்னு...”

“சப் ஜட்ஜு வேலை, தம்பிக்குக் கிடைக்கப் போகிற விஷயம் எப்படியோ தெரிந்துவிட்டிருக்கு பயலுக்கு. ‘இதுதான் சமயம்னு போடு போட்டிருக்கிறான், நான் வாங்கித் தர்ரேன் சப்-ஜட்ஜி வேலைன்னு...”

“அப்படித்தான் இருக்கவேணும். இப்படிப்பட்ட கொலைக்காரப்பயலா உன்னோட அண்ணன் என்று நாலு பேர் கேட்டா, சப் - ஜட்ஜி மனசு என்ன பாடுபடும். தலை இறக்கமாகத்தானே இருக்கும்.”
“சந்தேகமா அதுக்கு இவன் இப்பத்தானா தலை இறக்கமான காரியத்தைச் செய்யறான். அந்தக் காலத்திலேயே எவளையோ இழுத்துக்கிட்டு ஓடிட்டானே, அது என்ன காரியம். குடும்பத்துக்கு கெட்ட பெயர் தேடினவன் தானே...”

“பாவம் தங்கப்பன், படிச்சி பட்டம் பெற்று, ஒரு நாணயமான வக்கீலாகி குடும்ப கௌரவத்தைக் காப்பாத்தினான்... இப்ப இவன் வந்து சேர்ந்தான் அதைக் கெடுக்க.”

“வாயைத் திறக்கிறானா பார்த்திங்களா... இப்பவும் ஓர் அகம்பாவம்.”

“தலைக்கு மேலே போகுது, அது ஜான் போனா என்ன, முழம் போனா என்ன என்கிற போக்கு.”

“எல்லாப் போக்கும் பத்து நாளிலே தெரிந்துவிடும்...”

எல்லோருடனும் சேர்ந்து இதே முறையில் பேசினாலும், மகமது மோட்டார் டிரைவரைச் சந்தித்து தகவல்கள் ஏதாவது கிடைக்கிறதா என்பதிலே ஈடுபட்டார். விளக்கம் தருகிற விதமான தகவல் கிடைக்கவில்லையே தவிர, சாத்தப்பன் கைது ஆனது பற்றியோ என்ன நேரிடும் பற்றியோ டிரைவர் துளியும் கலக்கமோ கவலையோ கொண்டதாகத் தெரியவில்லை. வழக்கப்படி மோட்டாரைச் சுத்தப்படுத்துவதும், கதைப் புத்தகம் படிப்பதும் காப்பிக் கடைக்குப் போவதுமாக இருந்து வந்தான். தாராளமாகச் செலவும் செய்து கொண்டிருந்தான். இதைக் கண்ட மகமது மேலும் திகைப்படைந்து போனார்.

“ஏம்பா! டிரைவர், எஜமானரு போலீசிலே சிக்கிக் கொண்டாரே என்று பயப்படாதே. நாங்க எப்படியும் அவரை வெளியே கொண்டுவர ஏற்பாடு செய்வோம். சமயம் வரணுமேல்லோ...”

“இது சகஜமுங்க... ஐயாவுக்கு இப்படிப்பட்ட ஆபத்து அடிக்கடி மிரட்டும்; ஆனால் அவரு எல்லாவற்றையும் விரட்டி அடித்து விடுவாரு... வல்லமை சாலி...”

“பதறது எங்க மனசு... இப்படிப்பட்டவர் பேர்லே கொலை, கொள்ளை போன்ற அபாண்டம் வந்து விழறதைப் பார்த்து... இதுக்கு முன்னாடி எப்பாவாவது போலீசு பிடிச்ச துண்டா உன்னோட முதலாளியை...”

“பல மாதிரியான கேசு தொல்லை ஏற்படும். ஒரு தடவை இவருடைய தொழிலிலே பங்காளியை இவர் கொலை செய்ய முயற்சி செய்தார்னு கேசு போட்டாங்க. ஒரு ருஜுவும் கிடைக்கல்லே... விடுதலை கிடைச்சுது...”

இந்தத் தகவலை எடுத்துக் கொண்டு மகமது தன் நண்பர்களைத் தேடிக் கொண்டு சென்றான். அனால் சூளை சின்னப்பன், இதைவிட அதிசயமான தகவலைச் சேகரித்து வைத்திருந்து அதைக் கூறி மகமதை ஆச்சரியத்தில் ஆழ்த்தி விட்டான்.
-------------

அப்போதே சொன்னேன் (3)

“முத்துமாலையாம்; பத்தாயிரம் ரூபா விலை இருக்குமாம், அதுதான் இவனைக் காட்டிக் கொடுத்து விட்டிருக்குது...”

“முத்துமாலையா... அது என்ன புதுத் தகவலு...”

“அய்யோவ்! நம்ம சூளையிலே வேலை பார்க்கறானே வெள்ளை... தெரியுமேல்லோ. அவனுடைய சம்சாரம் இருக்காளே பூங்காவனம் தெரியுமேல்லோ... அவ கொண்டு வந்த தகவல் நான் இப்ப சொன்னது...”

“பூங்காவனம் என்ன சொன்னா...”

“அவ போயிருக்காய்யா நாட்டாமை வீட்டுக்கு; ஒரு வேலையா. அப்ப, இவ வந்திருக்கிற விவரம் தெரியாமப் படிக்கு, தங்கப்பனும் தருமாம்பாளும் பேசிக் கொண்டது, காதிலே விழுந்திருக்குது. அந்த முத்துமாலையைத் தூக்கி வடிவுக்கு உங்க அண்ணன் கொடுக்கறபோதே எனக்குச் சந்தேகம்; திருட்டுச் சொத்தாக இருக்கும் என்கிற சந்தேகம்னு தருமாம்பா சொல்ல, அதைக் கேட்டு தங்கப்பன், வீணா இல்லாததும் பொல்லாததும் சொல்லி என் மனத்தைக் குழப்பாதே; ஏற்கெனவே என் மனசு நொந்து கிடக்குதுன்னு சொல்ல, ஏன்! படகு மோட்டார்லே வந்திருக்கிறானே நம்ம அண்ணன் என்ற பூரிப்போ! என்று இடிக்க! அவன் மேலும் கோபமடைந்து உனக்குச் சாத்தப்பனைப் புரிந்துகொள்கிற அளவு மூளை கிடையாதுன்னு பேச, எனக்கு மூளை இருக்கட்டும் இல்லாமல் போகட்டும் ஜட்ஜு வேலை பார்க்கறதுக்குத் தேவையான மூளை இருக்குதான்னு நீங்க முதலிலே தெரிந்துகொள்ளுங்க என்று ஏச, தங்கப்பன் அவளை அடிக்கக் கையை ஓங்க, பயந்து போய் தருமாம்பாள் கூச்சலிட, ஒரே ரகளையாகி இருக்குது. பூங்காவனம் இதைப் பார்த்து விட்டு வந்திருக்கிறா...”

மறுநாள் காலைப் பத்திரிகையை வைத்துக் கொண்டு குத்தாலம் குழுவினர் மிக ஆர்வத்துடன் பேசிக் கொண்டிருந்தனர். முத்து மாலை பற்றிய முழு விபரமும் தரப்பட்டிருந்தது...

போலீஸ் அதிகாரியின் கடமை உணர்ச்சி

‘மைத்துனன்’ பிடிபட துணை நின்றார்

முத்துமாலை ‘மர்மம்’

என்ற கொட்டை எழுத்துத் தலைப்புகளுடன், சாத்தப்பன் சம்பந்தப்பட்ட விவரமான செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

சாத்தப்பன், வடிவுக்குத் திருமணத்தின்போது வர முடியாமல் போய்விட்டதற்கு வருத்தம் தெரிவித்துவிட்டு, விலையுயர்ந்த ஒரு முத்துமாலையைப் பரிசாகக் கொடுத்திருக்கிறான்; அண்ணன் தந்த பரிசு என்று பூரிப்புடனும் பெருமையுடனும் அந்த முத்துமாலையை வடிவு தன் புருஷனிடம் காட்டியிருக்கிறாள்; முத்துமாலையைக் கண்டதும் களிப்படைந்து கணவன், மைத்துனன் சாத்தப்பனைப் புகழ்ந்து பேசுவான், காது குளிரக் கேட்கலாம் என்பது வடிவின் எண்ணம். வைரமாக இழைத்துத் தருகிற பொருள்தானே ஒரு பெண்ணுக்கு அதிக அளவு மகிழ்ச்சியையும் பெருமையையும் தரும். அதிலும் சப்-இன்ஸ்பெக்டர் வேலை பார்க்கும் அவளுடைய கணவன் சபாபதி, ‘சம்பளம்’ போதும் என்ற போக்கினன். அதனால் ஊரிலே நல்ல பெயர் இருந்ததே தவிர, வடிவு மனம் மகிழும்படி ‘நகை நட்டு’ வாங்கித் தரக் கூடிய நிலை இல்லை. அதற்காகச் சபாபதி வருத்தப் பட்டுக் கொள்ளவும் இல்லை, பணம் பெருத்தவர்களிலே முக்கால் பகுதிக்கு மேல், பிடிபடாத குற்றவாளிகளே என்பது அவன் எண்ணம். அந்த எண்ணத்துடன்தான், அவன் சாத்தப்பனையும் பார்த்தான். அதிகமாகக் கூடப் பேசவில்லை. தனக்கு வேலை இருப்பதைக் கூறிவிட்டு சென்னை திரும்பிவிட்டான். சில நாட்களுக்குப் பிறகு தான் வடிவு வந்திருக்கிறாள் முத்துமாலையுடன்.

முத்துமாலையைக் கையிலே வாங்கிய சபாபதியின் கண் களிலே மகிழ்ச்சி பிறக்கவில்லை; குரலில் ஒரு குளுமை எழ

வில்லை; மாலையைக் கூர்ந்து கவனிப்பதும் எதையோ யோசிப்பதுமாகச் சில விநாடிகள் இருந்துவிட்டு,

“உன்னோட அண்ணன் கொடுத்ததா?” என்று கேட்டான்.

வேடிக்கை பேசுவதாக எண்ணிக் கொண்டு வடிவு “பின்னே! உங்க அண்ணன் வாங்கிக் கொடுத்தாரா?” என்று பதில் கூறினாள்.

கேலி நிரம்பிய முறையிலே சிரித்தபடி சபாபதி. “என் அண்ணன் எங்கே கொள்ளை அடித்தார். இதுபோல முத்து மாலையைப் பரிசு தர!” என்று கூறிவிட்டு, முத்துமாலையுடன் அவசரமாகத் தன் மேலதிகாரியிடம் சென்றார். கணவன் பேச்சின் பொருள் தெரிந்து கொள்ளாமல் வடிவு திகைத்துக் கிடந்தாள்.

மேலதிகாரியிடம் சபாபதி முத்துமாலையைக் கொடுத்து “எதிர்பாராத முறையில் கொடி கொண்டா கொள்ளை சம்பந்தமான துப்பு துலக்கக் கூடிய இந்த ‘முத்துமாலை’ என்னிடம் கிடைத்திருக்கிறது, நாலு வருஷங்களுக்கு முன்பு கொடி கொண்டா என்ற மலையூரில் கொள்ளையடிக்கப்பட்ட பொருள்களிலே ஒன்று இந்த முத்து மாலை. முத்துமாலையின் ஒவ்வொன்றிலும், கொ, கொ, கொ. என்ற எழுத்துகள் செதுக்கப்பட்டிருக்கிறது தெரிகிறது. கொடி கொண்டா கொள்ளிச்சாமி என்பதைக் குறிப்பதே கொ.கொ. கொ. என்ற எழுத்துக்கள். இவை என் மனைவிக்குப் பரிசாகக் கொடுத்தது என் மைத்துனன். அவள் அண்ணன், பல வருடம் வீட்டை விட்டு வெளியேறி விட்டிருந்தவன் பெயர் சாத்தப்பன்; பெரிய செல்வனாகக் காணப்படுகிறான். அவனைக் கைது செய்தால், நாலு வருடங்களாகத் துலங்காமலிருக்கும் ‘மர்மம்’ விளங்கி விடும்” என்ற விவரம் கூறியிருக்கிறான். மேலதிகாரி, சபாபதியின் கடமை, நேர்மை ஆகியவற்றைப் பாராட்டிவிட்டு, சாத்தப்பனைக் கைது செய்திருக்கிறார். இந்த விவரம் அவ்வளவும் தரப்பட்டிருந்தது பத்திரிகையில். சபாபதியின் படம், மேலதிகாரியின் படம், முத்துமாலையின் படம், கொள்ளச்சாமியின் படம், கொடி கொண்டாமலையின் படம். மடத்தின் படம், சாத்தப்பன் படம் இவை பத்திரிகையிலே போடப்பட்டிருந்தன. இதழ் தந்த தகவலைப் படித்த ஊர் மக்கள் ஆச்சரியப்பட்டார்கள்.

படித்தவன் - பணம் சேர்க்கும் வித்தையிலே வேறு கெட்டிக்காரனாக இருந்திருக்கிறான் - இருந்தும் திருட்டுச் சொத்து எப்படியும் பிடிபட்டுவிடும் என்று கூடவா தெரிந்து கொள்ளாமலிருப்பது.

எப்போதோ நடந்த கொள்ளைதானே - இன்னமுமா அது பற்றிய நினைப்பு இருந்து கொண்டிருக்கும் என்ற எண்ணமாக இருக்கும்.

சீமானாகி விட்டோம். இனி, எவன் நம் மீது சந்தேகப்படப் போகிறான் என்ற நினைப்பு.

தங்கை புருஷன் போலீஸ் அதிகாரி! திருட்டுச் சொத்து, அவனிடம் இருந்தால், யார் சந்தேகப்பட்டுப் பிடித்து விடப் போகிறார்கள் என்ற விதமான அசட்டுத் தைரியம்...”

ஊரார் இப்படிப் பலவிதமாகப் பேசிக் கொண்டார்கள்.

எல்லோரும் வழக்கு நடைபெறும் நாளை மிக ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருந்தனர்.

பாவம்! தங்கப்பன் முகத்திலே ஈயாடவில்லை. இருக்கு மல்லவா வேதனையும் வெட்கமும் என்று பலர் பேசி வந்தனர்.

தங்கப்பன் உள்ளபடி மிக வேதனையுடன் காணப்பட்ட டான்.

நீங்க ஏன் மனத்தைப் போட்டுக் குழப்பிக் கொள்வது! கூடப்பிறந்தவன் கூண்டிலே கிடக்கிறானே என்ற வருத்தமா! இப்படிப்பட்ட ஆசாமிகளிடம் துளியும் இரக்கம் காட்டவே கூடாது என்று மனைவி கூறக் கேட்டு, தங்கப்பன் கொதித்துக் குமுறினான்.

போதும், உன்னுடைய தர்மோபதேசம்... என் வேதனையைக் கிளராதே... என்று கோபித்துக் கொள்டான்.

அந்தப் பெண்ணோட ஜாதகம் நல்லதாக இருக்கவே இந்த இழிவு அதற்கு வந்து சேராமலிருந்தது. முதலிலே, இந்த சாத்தப் பனுக்குத்தானே இந்தப் பெண்ணைக் கட்டுவதாக இருந்தார்கள்! என்று குளத்தங்கரை மாநாட்டிலே பேச்சு தொடங்கியது; ஏம்பா! நான்தான் அப்போதே சொன்னேனே! மிராசுதாரர் பலே சாமார்த்தியசாலின்னு... இந்தப் பயலோட எதிர்காலம் இப்படித்தான் இருக்கும் என்று முன்னதாகவே மிராசுதாரருக்குத் தெரிந்திருக்குது, அதனாலேயேதான், சமயம் பார்த்து ஆசாமியை விரட்டிவிட்டு தன்னோட மகளை, தங்கப்பனுக்குக் கொடுத்திருக்கிறார்! அனுபவம்; அறிவு.

அதிர்ஷ்டம்னு சொல்லுவாங்க. முதலிலே நினைத்தபடி சாத்தப்பனுக்கே அந்தப் பெண்ணைக் கொடுத்திருந்தா, இந்நேரம் என்ன ஆகியிருக்கும் மிராசுதாரரோட கௌரவம்? பஞ்சு பஞ்சாகப் பறந்து போயிருக்குமே! ஊர், சிரிப்பா, சிரிக்குமே சிரித்திருக்குமே. நல்லவேளை, தப்பித்துக் கொண்டார்.

குளத்தங்கரை மாநாட்டிலே இப்படிப்பட்ட பேச்சு நடந்து கொண்டிருந்தபோது, சிறையிலே தள்ளப்பட்டிருந்த சாத்தப்பன், உடன் இருந்த குற்றவாளிகளுடன், ஒரு கவலையுமில்லாமல் பேசிக்கொண்டும் சிரித்துக் கொண்டும் இருந்தான்.

உடனிருந்தவர்களிலே பெரும்பாலானவர்கள், ‘அந்தஸ்து’ காரணமாக உயர் வகுப்புச் சிறையிலே இருந்தனர்.

இலஞ்சம் வாங்கிய அதிகாரிகள், மோசடி செய்த வணிகர் கள், கள்ள நோட்டு அடித்த கனவான், கோயில் நகையைத் திருடிக் கொண்டு முலாம்பூசிய நகையைக் கோவிலிலே மாற்றி வைத்துவிட்ட எத்தன், இப்படிப்பட்டவர்கள், சாத்தப்பனின் சகாக்கள், அவர்களில் மிகப் பெரும்பாலானவர்கள், தம்மீது ‘அபாண்டம்’ சுமத்தப்பட்டதாகவும் வழக்கறிஞர் தெளிவில்லாத
வராக இருந்ததால், தண்டிக்கப்பட்டு விட்டதாகவும் கூறினர். ஒருவர் இருவர் மட்டுமே, ஏதோ போதாத வேளை - புத்திகெட்டு விட்டது - தவறு செய்து விட்டேன் - அனுபவிக்கிறேன் முன் - ஜென்ம வினை - என்று கூறினர்.

சொத்து திருட்டுச் சொத்துதான்... தெரியும்... ஆனால் களவாடியது நான் அல்ல... ஆனால் என்ன...? யார் களவாடினால் என்ன? என்னால் தண்டனையை அனுபவிக்க முடியும். ஆகவே நான் தண்டனையைப் பெற்றுக் கொள்ளச் சம்மதிக்கிறேன்... என்ற சாத்தப்பன் சொல்லக் கேட்டு, இதை என்ன, வேதாந்தம் என்று கொள்வதா, மனக் குழப்பம் என்று சொல்லுவதா என்று தெரியாமல் அந்தக் கைதிகள் திகைத்தனர்.

மடத்திலே கொள்ளை அடிக்கப்பட்ட சொத்து என்பது உண்மையா? என்ற கேள்விக்குத் துளியும் பதறாமல் சாத்தப்பன், ‘இல்லாமல் பிறவாது அள்ளாமல் குறையாது!’ என்று பதிலளித்தான். மேற்கொண்டு எந்த விவரமும் தரமறுத்து விட்டான்.

சிறைக்குச் சென்று சாத்தப்பனைப் பார்த்துவிட்டு வந்து மோட்டார் டிரைவரிடம், குத்தாலம் குழுவினர், புதுத் தகவல் தெரிந்து கொள்ள எப்படி எப்படியோ கிளறிப் பார்த்தனர். எந்த விஷயமும் சொல்ல மறுத்துவிட்டான்.

எப்படி அப்பா உன் எஜமானர் இருக்கிறார்? என்று குத்தாலம் கேட்டதற்கு, டிரைவர், ‘அவருக்கென்ன, ‘ராஜா’ போல நிம்மதியாகத்தான் இருக்கிறார் என்று மட்டுமே பதிலளித்தான்; வழக்கு என்ன ஆகும் என்பது பற்றிக் கூடப் பேச மறுத்துவிட்டான்.
* * *

கோர்ட் கூடிற்று. திரளான கூட்டம்.

“சாமிகளே! இந்த முத்துமாலை, தங்களுடையது தானே”

‘அபசாரம்! அபசாரம்! நான் - எனது - என்ற மயக்கத் திலிருந்து நான் விடுபட்டவன். என்னுடையது என்று எதுவும் இல்லை”

“சுவாமிகளே! அது சிலாக்கியமான வேதாந்தம்... போற்றப்பட வேண்டிய தத்துவம். ஆனால், இப்போது நாம் ஒரு கொள்ளை பற்றி வழக்கினை விசாரித்துக் கொண்டிருக் கிறோம். அதனால், உண்மையைச் சொல்லும்படிக் கேட்டுக் கொள்கிறேன். இந்த முத்துமாலை, தங்கள் மடத்திலிருந்து கொள்ளை அடிக்கப்பட்டதுதானே...”

“நான் இருக்கும் இடத்தை மடம் என்றும், இந்த நச்சுப் பொருளை முத்துமாலை என்றும் பேதைகள், பெம்மான் அருள் பெறாதவர்கள் பேசுவர்.”

“எமது பொறுமையை மிக அதிக அளவு சோதிக்க வேண்டாம், சுவாமிகளே! தங்களுக்கு எந்தப் பொருள் மீதும் பற்று இருக்காது; உணருகிறோம். ஆனாலும் களவு, கொள்ளை போன்ற குற்றம் செய்திடும் சமூக விரோதிகளைத் தண்டித்தாக வேண்டும். அதுதான் நியாயம். அந்த நியாயம் வெற்றி பெறத் தாங்கள் உதவி செய்திட வேண்டும். தங்கள் மடத்திலிருந்து பல விலையுயர்ந்த பொருள்கள் கொள்ளை போய்விட்டது! உண்மைதானே... போலீசில் வழக்குப் பதிவாயிற்றே. ஒப்புக் கொள்கிறீர்கள் அல்லவா?...

எம்மானின் ஜோதிஸ்வரூபத்தைக் காணாதோரே, பொன் என்றும், மணி என்றும், வைரம் வைடூரியம் என்றும், முத்து என்றும் பவழம் என்றும் பிதற்றுவர் அப்பனே! என் கண்களுக்கு எல்லாம் ஒன்றாகவே தெரிகிறது, கொள்ளை நடந்ததாகக் கூறுகிறீர்கள். நான் அறியேன்... என் கண்முன் தெரிவதெல்லாம் ஐயன்! ஐயன்! ஐயன்! எங்கும் ஐயன்! எப்போதும் ஐயன்! எதிலும் ஐயன்! ஐயனின்றி வேறில்லை...”

கோர்ட்டிலே சிலரால் சிரிப்பை அடக்கிக் கொள்ள முடிய வில்லை. நீதிபதிக்கே கூடச் சங்கடமாக இருந்தது.

சாத்தப்பன், தன் பார்வையை, சாமியாரிடமே பதித்து வைத்திருந்தான்.

வழக்கறிஞர் எத்தனை பணிவாகவும் சாமர்த்தியமாகவும் கேள்விகளைக் கேட்டும் கொள்ளிச்சாமியாரிடமிருந்து ஒரு பதிலும் வரவில்லை.

வழக்கு மறுநாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

குளத்தங்கரை மாநாடு கூடிற்று.

“அப்போதே சொன்னேன் அல்லவா, இந்தச் சாத்தப்பன் மீது உள்ள குற்றத்தை ருஜுப்படுத்துவது கடினம் என்பதாக! கோர்ட் திணறுவதைப் பார்த்தீர்களால்லவா என்று குத்தாலம் கேட்டார்.

“என்னமோ இதிலே சூது இருக்கத்தானே செய்யுது, பெரிய வேதாந்தம் பேசுகிறானே அந்தச் சாமியார் - என்று மகமது கூறினான்.

“இந்தச் சாமிக்கு என்ன பைத்தியமா... கேட்கிற கேள்விக்குத் தாறுமாறா பதில் பேசுதே... தத்துவம் பேசற இடமா-, கோர்ட்டு...”

“போய்க்கேள் அந்தச் சாமியாரை... என்னைக் கேட்டா...”

எப்பவும் இப்படித்தானா, ஏடாகூடமான பேச்சு... இப்ப இந்தச் சாமியாரு ஒரு வாக்குமூலமும் கொடுக்காது போனா, உங்க அண்ணனைத் தண்டிக்க முடியாது, இல்லையா...

ஏன் எங்க அண்ணன் கட்டாயமாகத் தண்டிக்கப் பட்டாக வேண்டுமா...?

குற்றத்தைச் செய்தவங்க தண்டனையை அனுபவிப்பது தானே நியாயம்...!

நியாயத்தை அப்படியே கரைத்துக் குடித்துவிட்டது போலப் பேசாதே.

முத்துமாலை, உங்க அண்ணனிடம் இருந்ததுதானே, அது கொள்ளை போன பொருள்தானே.

நீ சொல்லுற அப்படி, கொள்ளை அடிக்கப்பட்ட பொருள் என்று.

நான் மட்டுமா சொல்கிறேன். இந்த ஊரே சொல்லுது.

ஆனா எந்தச் சாமியார் மடத்திலே இருந்து இந்தப் பொருள் கொள்ளை அடிக்கப்பட்டதாகக் கூறப்படுதோ, அந்தச் சாமியார் அப்படிச் சொன்னாத்தானே...

பார்! பார்! அந்தச் சாமியாருடைய வாயிலே இருந்து உண்மை கக்கிக் கொண்டு வருதா இல்லையான்னு. கோர்ட்டா, கொக்கா! போதும் உன்னோட ஞானோபதேசம், உண்மையைச் சொல்லய்யான்னு போடுவாங்க பத்து; முதுகிலேயும் கன்னத்திலேயும்.

தங்கப்பனுக்கும் அவன் மனைவிக்கும் இப்படி ஒரு வாக்குவாதம்.

எவ்வளவு பெரிய குற்றம் செய்தவனாக இருந்தாலும் அண்ணனிடம் ஒரு பாசம் இருக்கத்தானே செய்கிறது என்று எண்ணி தருமு, தன் கணவனுடைய சிலாக்கியமான குணத்தைப் பற்றி வேலையாட்களிடம் எடுத்துப் பேசக் கேட்ட தங்கப்பனின் முகத்தில் வேதனைக்குறிகள் மேலும் ஆழமாகப் பதிந்திடலாயின.
* * *

ஒரு விஷயம் தெரியுமா உங்களுக்கு... டிரைவரிடம் வெகு கஷ்டப்பட்டுத் தெரிந்து கொண்டு வந்திருக்கிறேன் ஒரு தகவல் என்று பேச்சைத் துவக்கினான் மகமது.

அவன் பெரிய அழுத்தக்காரனாச்சே, ஒரு தகவலும் கொடுப்பதில்லையே...

அவனா கொடுத்தான்! அமிர்தா ஓட்டல் ஸ்வீட்டும், காரமும், ‘டிகிரி’ காபியுமல்லவா கொடுத்தது என்று கூறிவிட்டுச் சிரித்தான். மேலும் விவரம் தரலானான். முடியவே முடியாது. வேண்டவே வேண்டாமென்றுதான் டிரைவர் சொன்னான். ஆனால் மிகவும் வற்புறுத்தி அமிர்தா ஓட்டலுக்கு அழைத்துக் கொண்டு போனேன்... அப்போது வேறு பல விஷயங்களைப் பற்றிப் பேசிப்பேசி பக்குவப்படுத்தி, கடைசியில் முக்கியமான ஒரு தகவலைக் கேட்டுத் தெரிந்து கொண்டேன், அது என்ன வென்றால், இந்த டிரைவரிடம் தங்கப்பனுக்கு ஏகப்பட்ட பயமாம் அவன் சொல்கிறான். என் எஜமானர் சாத்தப்பனுடைய கால் தூசுக்குக்கூட சமமாக மாட்டார் உங்கள் தங்கப்பன். இவ்வளவு எதற்கு என்னைக் கண்டாலே கூட உங்கள் தங்கப்பனுக்குப் பயம். வெட்கம் என்கிறான்” மகமது சொன்னான்.

இது பெரிய புதிர்தானப்பா! நீ சொல்வதைப் பார்த்தால் இந்த டிரைவருக்கும் தங்கப்பனுக்கும் ஏற்கனவே பழக்கம் இருக்கவேண்டும்போல அல்லவா இருக்கிறது என்றார் குத்தாலம்; கூறிவிட்டு நான் அப்போதே சொன்னேனே கவன மிருக்கிறதல்லவா, தங்கப்பன் இந்த டிரைவரிடம் அதிக அளவு மரியாதை காட்டுகிறான். தேவையில்லாத அளவு மரியாதை! என்று கூறினான்.
* * *

தம்பி கூடத்தான் சொல்கிறான். ஜாமீனில் போகலாம். ஏற்பாடு செய்கிறேன் என்று. ஆனால் நான்தான் வேண்டாம் என்று கூறிவிட்டேன், என்று சாத்தப்பன் சிறையிலிருந்த தன் சகாக்களிடம் கூறினான். வெளியே சென்றால் வழக்கை நடத்த ‘தோதாக’ இருக்குமே என்று சிலர் கூறியபோது கூட சாத்தப்பன் அதெல்லாம் என் டிரைவர் வெளியே இருக்கிறான், கவனித்துக் கொள்வான் என்று சமாதானம் கூறினான்.
* * *

வழக்குமன்றத்தில் சுவாமிகளிடம் எந்த வாக்குமூலமும் வாங்க முடியாத நிலையே நீடித்துக் கொண்டிருந்தது சாத்தப் பனைக் காட்டி வழக்கறிஞர்.

“சுவாமிகளே! இவரைத் தெரியுமா உங்களுக்கு. இவர் பெயர், தொழில், இவரைப் பற்றிய விவரம் கூற முடியுமா? இவர் தங்கள் மடத்திற்கு வந்ததுண்டா? என்றெல்லாம் கேள்விக் கணைகளை விடுத்தார். சாமிகள் இவர் யார்? நான் யார்? நீ யார்? எல்லோரும் அவன் பிள்ளைகள்! அவனோ யாருக்கும் பிள்ளை அல்ல! அவன் ஆட்டுவிக்கிறான். நாம் எல்லோரும் ஆடுகிறோம். அவன் அடக்கினால் எல்லோரும் அடங்குகிறோம். சூரியனை அடக்குகிறான். சந்திரனைத் தேய்க்கிறான். அலையை எழுப்பு கிறான் - ஆயிரத்தெட்டு அற்புதங்களையும் ‘ஐயன்’ செய்கிறான். முத்துமாலையைத் தருபவனும் அவனே, அதைக் களவு போகச் செய்பவனும் அவனே! கூண்டில் நிற்பவனுக்கு அவன்தான் பொறுப்பு. எதிரே நிற்பவர்களுக்கும் அவன்தான் பொறுப்பு என்று பழையபடியேதான் பதில் அளித்து வந்தார். ஒரு கட்டத்தில், நீதிபதிக்கே கோபம் பிறந்து, கேள்விகளுக்குப் பொறுப்பான முறையில் பதில் அளிக்காவிட்டால் கோர்ட்டை அவமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, அதற்குரிய தண்டனை தரப்படும் என்று கூற நேரிட்டது. அப்போது ‘சுவாமிகள்’ இடி இடியெனச் சிரித்து, அதுவரை அந்தக் கோர்ட்டும் நீதிபதியும் கேட்டறியாத வேதாந்தப் பேச்சினைப் பொழிந்து தள்ளினார்.
* * *

என்ன இருந்தாலும் அண்ணன் தம்பி என்ற பாசம் விடாது என்பார்களே, அது உண்மைதான். பாரேன், தங்கப்பன் இந்த வழக்கு முடியும் வரையில் ‘லீவ்’ போட்டு விட்டு இங்கேயே தங்கி விட்டிருக்கிறான் என்று குத்தாலம் பேச்சைத் துவக்கினார்.

அதிசயம் அதிலேகூட இல்லை; வழக்குமன்றத்திலே சாத்தப்பனும் தங்கப்பனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் பார்வையைக் கவனித்தீர்களா... சாத்தப்பன் பரிதாபத்துடன் பார்க்கிறான் தங்கப்பனை, தங்கப்பன் பார்வையிலே பயம் தெரிகிறது. இது அதிசயமில்லையா என்று சின்னப்பன் கேட்டார்.

பயத்துக்குக் காரணம் வேறு ஒன்றும் இல்லை. சாத்தப்பன் தண்டிக்கப்பட்டு விட்டால், தனக்கும் தன் குடும்பத்துக்கும் கெட்ட பெயர் ஏற்படுமே என்பது பற்றி ஏற்பட்ட பயமாகத்தான் இருக்கும் என்று குத்தாலம் விளக்கமளித்தார்.
* * *

நீங்கள் எதற்காகப் பயப்பட வேண்டும், ஒரே மரத்திலே ஒரு பழம் ருசியாகவும், மற்றொரு பழம் புளிப்பாகவும் இருப்பதை உலகம் காணவில்லையா, அதைப்போல இந்தக் குடும்பத்திலே இருக்கிறது என்று எண்ணிக் கொண்டு போகிறார்கள். அண்ணனுக்கு பெயர் கெட்டு விட்டால் நமக்கும் தானே கெட்ட பெயர் என்று ஏன் எண்ணி வீணாக மனத்தைப் போட்டுக் குழப்பிக் கொள்கிறீர்கள் விட்டுத் தள்ளுங்கள் என்ற தருமு கூறிடக் கேட்ட, தங்கப்பன், ஒரு விஷயத்தை ஒத்துக் கொள்கிறேன் தருமு உனக்கு இருக்கும் நெஞ்சழுத்தம் எனக்கு இல்லை. உன்னாலே ஒரு பொருளை விரும்பவும் முடியும், பிறகு அதே பொருளை வெறுக்கவும் முடியும். இரண்டுக்கும் உன் மனம் இடம்கொடுக்கும். அந்தத் துணிவு எனக்கு இல்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன்” என்றான் துக்கம் தோய்ந்த குரலில்.
----------------
அப்போதே சொன்னேன் (4)


புரிகிறது, புரிகிறது, நீங்கள் எங்கே பொடி வைத்துப் பேசுகிறீர்கள் என்பது. நான் ஒன்றும் முட்டாள் அல்ல. இதைக்கூடப் புரிந்து கொள்ளாமலிருக்க. முதலிலே உங்கள் அண்ணனோடு பழகினேன். அவரைக் கலியாணம் செய்து கொள்ளச் சம்மதித்திருந்தேன். பிறகு என் விருப்பத்தை மாற்றிக் கொண்டு உங்களை ஏற்றுக் கொண்டேன்; அதைத் துணிச்சல் என்று கூறுகிறீர்கள். பைத்தியம். பைத்தியம். எல்லாம் உங்கள் அண்ணனுக்கே தெரியும், என் விருப்பம் என்ன என்பது என்றாள் தருமு.

இது என்ன புதுக்கரடி விடுகிறாய் என்று கேட்டான் தங்கப்பன்.

கரடியுமில்லே. காவடியுமில்லே. உண்மையைத்தான் சொல்லுகிறேன். எனக்கு ஆரம்ப முதலே உம்மிடம் தான் உண்மையான அன்பு. அப்பா, அண்ணனைத் தேர்ந்தெடுத்த தால், தலை அசைக்க வேண்டி இருந்தது. தலை மட்டும்தான் அசைந்தது. உள்ளம் அல்ல. எப்படியாவது என் உண்மையான விருப்பத்தை உங்கள் அண்ணனிடம் தெரிவித்து விட வேண்டும் என்று முயற்சி செய்தேன். கடைசியில் அதிலே வெற்றியும் பெற்றேன். ரசவாதி ரங்கலாலை மறந்துவிடவில்லையல்லவா. அவனுடன், இருந்தாளே, ஒரு பெண், கவனிமிருக்கிறதல்லவா ‘மைக்கண்ணி’ காதிலே விழுகிற முறையில். அதைக் கேட்ட பிறகுதான், உன் அண்ணன், எங்கள் வீட்டுக்கு வருவதைக் குறைத்துக் கொண்டார். ஊம், என் அப்பாவும் வேறு ஏதேதோ காரணம் இருப்பதாகப் பேசிக் கொண்டார்கள். உண்மையான காரணம், நான் உங்களைத்தான் விரும்புகிறேன் என்பதை நானே பக்குவமாக உங்கள் அண்ணன் காதிலே விழும்படிச் செய்தது தான் என்று கூறிவிட்டு, தருமு, எப்படி என் சாமார்த்தியம், உங்களுக்கு உண்டா அப்படிப்பட்ட சாமார்த்தியம்! என்று கேலிப் புன்னகையை உதிர்த்துக் கொண்டே கேட்டாள். தங்கப்பன் கண்களில் நீர்த்திவலைகள் தோன்றின. ‘தருமு! உன்னுடைய சாமார்த்தியமும் என்னுடைய சாமார்த்தியமும் ஒருபுறம் இருக்கட்டும். என் அண்ணனுடைய தியாக சுபாவத்தைப் பார்த்தாயா... எனக்காகத் தனக்குக் கிடைக்க இருந்த நிலையை இழந்து விடச் சம்மதித்தைக் கவனித்தாயா! துளியும், மனம் கோணாமல், தன்மீது வேண்டுமானால் ஏதாவது பழி ஏற்பட்டுவிட்டுப் போகட்டும் தன் தம்பியின் விருப்பம் நிறைவேற வேண்டும் என்றல்லவா என் அண்ணன் எண்ணி நடந்து கொண்டார். உத்தமர்களால் மட்டுந்தானே அது முடியும் என்று உருக்கமாகக் கூறினான்.

தம்பியின் விருப்பம் என்று கூறினீர்களோ, அப்படியென்றால், உங்களுக்கும் என்மீது அன்பு என்றா சொல்கிறீர்கள்.

வெறும் அன்பு அல்ல; காதல்; உயிர். ஒவ்வொரு கணமும் துடித்தபடி இருந்தேன். உன் அப்பா, உன்னை எனக்கு ‘அண்ணி’ ஆக்குவது என்று தீர்மானமாக இருப்பதையும் என் அண்ணன் அதற்கு இணங்குவதையும் கண்டு பதறினேன். மீறிட வழி இல்லை. நீயோ, என் அண்ணனிடம் உன் மனத்தையே பறிகொடுத்து விட்டவள்போல நடந்து கொள்வதைக் கண்டேன். எங்காவது ஓடி விடுவது என்று முடிவு செய்தேன்... கடைசியில் நான் அல்ல, அவர் ஓடினார் ஊரை விட்டு; பழி ஏற்றுக் கொண்டு... உன்னை நான் அடைந்தேன்... அவர் இப்போது கள்ளன் என்ற பெயருடன் கோர்ட்டிலே நிற்கிறார். எல்லாம் எனக்கு மனத்துணிவு இல்லாததால், ஆனால் இனி அப்படி இருக்கப் போவதில்லை என்று உறுதி கலந்த குரலில் பேசினான். தருமு அந்தக் குரலில் இருந்த உறுதியைக் கவனிக்கவில்லை. தங்கப்பன் தன்னிடம் காதல் கொண்டு துடிதுடித்துக் கிடந்ததாகக் கூறினானே அதைக் கேட்டதாலே எழுந்த உருக்கத்தின் பிடியிலே இருந்தாள்.

“என்னங்க... நான்தான் ‘மைக்கண்ணி’யிடம் என் விருப்பத்தைப் பேசி அவர் காதில் விழும்படியாகச் செய்தேன்; நீங்கள் எப்படி உங்கள் எண்ணம் அவர் காதில் விழும்படிச் செய்தீர்கள் என்று கேட்கலானாள்.

எல்லாம் அதே மைக்கண்ணி மூலமாகத்தான். உன்னுடைய விருப்பத்தைப் பற்றி என்னிடம் விசாரித்தாள். அண்ணன் ஏற்பாடு என்றுதான் எண்ணுகிறேன். நானும் துணிந்து கூறிவிட்டேன். எங்காவது கண்காணா தேசத்துக்கு ஓடிவிடப் போகிறேன் என்பதாக. அப்போது அந்த “மைக்கண்ணி விளையாட்டுக்காகப் பேசுவதாக எண்ணிக் கொண்டேன். அவள் சொன்னாள்: நீங்கள் ஏன் ஓட வேண்டுமா? உங்கள் அண்ணனை இழுத்துக் கொண்டு நான் ஓடிவிடுகிறேன் என்பதாக.

கடைசியில் அப்படியே அல்லவா நடந்துவிட்டது.

எப்படி நடந்தது? நம் இருவருக்கும் திருமணம் நடந்தது. அண்ணன், என்ன அந்த மைக்கண்ணியுடனா வாழ்க்கை நடத்து கிறார். இவள் வேறு எங்கோ சென்றுவிட்டாள். அண்ணன் திருமணமே செய்து கொள்ளவில்லையே... என்று கூறிக் கொண்டே, பெருமூச்செறிந்தான்.

மடாலய மானேஜர், முத்துமாலை, மடாலயத்துடையது என்பது பற்றியும், வேறு சில பொருள்களும் இந்த மாலையுடன் களவாடப்பட்டதாகும், அதனைக் கொள்ளை என்றே கூறலாம் என்றும், ஏனெனில் மடாதிபதியிடம் ‘உபதேசம்’ பெறுபவனைப் போல வந்த ஒருவன், நகைப்பேழையைத் தூக்கிக் கொண்டு ஓடிவிட்டதாகவும், விவரம் கூறினான்.

மடாதிபதியின் வாக்குமூலம் சாதகமளிக்காதபோது, மானேஜரின் வாக்குமூலத்தைக் கொண்டு மட்டும், முத்துமாலை மடாலயச் சொத்து என்று தீர்மானிக்க சட்டம் இடம் கொடுக்குமா என்பதுபற்றி சுவையாக ஊரிலேயே பேசப்பட்டபோது, குளத்தங்கரை மாநாட்டிலேயா நடைபெறாமலிருக்கும்.
* * *

வேறு இடங்களில் சட்டம் பற்றிய சுவையான விவாதம் நடந்து கொண்டிருந்தபோது, தங்கப்பன் அறையில் சூடான பேச்சும், டிரைவரிடம் நடைபெற்றது.

“என்னிடம் ஒரு முழக்கயிறு கொடுத்துவிட்டு, பிறகு உன் விருப்பம் போல் நடந்து கொள். வேறு நான் என்ன சொல்ல முடியும். உன்னைத் தடுத்து நிறுத்த எனக்கு என்ன உரிமை இருக்கிறது. வருவது வந்துதான் தீரும். நடப்பது நடக்கட்டும். ஆனால் நடைபெறக் கூடாதது நடைபெறுவதற்குள் நான் கண்ணை மூடிக்கொள்ள முடிவு செய்துவிட்டேன். கடைசி முறையாகக் கேட்கிறேன். நீ கோர்ட்டிலே சாட்சி கூறத்தான் போகிறாயா? அண்ணனுடைய சம்மதத்தைக் கேட்டுப் பெற்றுக் கொண்டாயா...”

“உங்கள் அண்ணனுடன் தொடர்பு ஏற்பட்ட நாளிலிருந்து அவர் சம்மதம் பெறாமல் நான் எந்தக் காரியத்தையும் செய்த தில்லை. இப்போதும் அப்படித்தான்...”

“கோர்ட்டிலே, என்னதான் சொல்லப் போகிறாய்...”

“வேடிக்கையான கேள்வியைக் கேட்கிறீர்களே, கோர்ட்டிலே என்ன சொல்லுவேன்? உண்மையைத்தான்!”

“உண்மையை... சரி... உண்மையைச் சொல்லு... என் உயிரைக் குடி... ஊரார் இழிவு பேசட்டும்... என்ன வேண்டுமானாலும் பேசட்டும்... எனக்குக் கவலை இல்லை... நான் ஏன் கவலைப்பட வேண்டும்... எதற்காகக் கவலைப்படுவதற்குத் தேவையான உணர்ச்சியுள்ள உருவம் இருந்தால்தானே...”

“பரவாயில்லையே! மடாலயத்தில் இல்லாமலேயே மடாலயப் பேச்சுப் பேசுகிறீரே வழக்கறிஞர் தொழில் பார்த்ததை விட, மடாதிபதி வேலையைப் பார்த்திருக்கலாம் போல இருக்கிறதே. வேதாந்தமே பேசுகிறீர், செய்வதை எல்லாம் செய்துவிட்டு, சிக்கிக் கொள்கிறபோது, இந்த வேதாந்தம் எங்கிருந்து வந்து சேர்ந்து கொள்கிறது பல பேர்களிடம்... பேசுமய்யா பேசும்... எல்லா வேதாந்தத்தையும் ஒரேயடியாகப் பேசிவிடும்...”

தங்கப்பனால் டிரைவரிடம் தொடர்ந்து பேச முடியவில்லை.

“இந்த முத்துமாலையைப் பற்றிய விவரம் தெரியுமா உனக்கு...?”

“தெரிந்த விவரத்தைக் கூறத்தான் வந்திருக்கிறேன்.”

“என்ன விவரம் கூறப் போகிறாய். இந்த முத்து மாலை பற்றி...”

“இது 64 நல்முத்துக்கள் கொண்ட மாலை, அதிலே ஆறு முத்து சொத்தை. மொத்தத்திலே தரமான மாலை...”

“நகைக்கடை அல்லய்யா, இது. கோர்ட்... குற்றவாளி களைப் பற்றிய விசாரணை நடக்கிற இடம்... நகைக்கடை அல்ல...”

“இது நகைக்கடை அல்ல என்பதாலேதான், நகை பற்றிய விவரம் உங்களுக்குத் தெரிந்திருக்காதே என்று இதனைச் சொல்லுகிறேன். மாலையின் விலைமதிப்பு ஏழாயிரம் ரூபாய் இருக்கும்.”

“முத்துமாலையின் விலை பற்றிய கேள்வியே இங்கே எழவில்லை. இதுபற்றி... வழக்குக்குத் தொடர்பான விவரம் கூறலாம்... நகை வியாபார, விவரம் தேவையில்லை...”
“ஐயா, எனக்கு அது தேவை. நான் ஒரு நகை வியாபாரி, ‘ஐயா!”

சாத்தப்பரிடம் மோட்டார் டிரைவர் வேலை பார்க்கிறேன்... நகை வியாபாரத்திலே பெருத்த நஷ்டம் ஏற்பட்டுவிட்டதனால்... ஏன்... இந்த மாலையாலே கூட எனக்குக் கஷ்டம். நஷ்டம், ஏராளம்.”

“இந்த மாலைக்கும் உனக்கும் என்ன தொடர்பு...”

“இந்த மாலையைக் கொடுத்ததே நான்தானே... என்னிடமிருந்து இந்த மாலையைப் பெற்றுக்கொண்ட வரும் இங்கே தானே இருக்கிறார்!”

“என்ன! என்ன! தண்ணீர்! தண்ணீர்! மெல்ல! மெல்ல! - என்று பலரும் பதறிக் கூறினர், தங்கப்பன் திடீரென்று மயக்கமாகிக் கீழே விழுந்தது கண்டு, வழக்கு மன்றத்திலே மிகுந்த பரபரப்பு ஏற்பட்டு விட்டது.

மனத்திற்கு ஏதோ அதிர்ச்சி! அதனால் ஏற்பட்ட மயக்கம்; உயிருக்கு ஆபத்து ஏதும் இல்லை... என்று கூறினார்கள், தங்கப்பனைக் கோர்ட்டிலிருந்து மருத்துவ விடுதிக்கு எடுத்துச் சென்றபோது.
* * *

அப்போதே சொன்னேன் கவனமிருக்கிறதல்லவா; இந்த டிரைவர் டிரைவரல்ல; டிரைவராக வேலை பார்க்கிறானே யொழிய, இவன் சாத்தப்பனுடன் சரிசமமாகப் பழகுகிறான். ஆசாமி வெறும் வேலையாளாக இருக்க முடியாது என்று... எனக் குத்தாலம் கூறினார்.

அவனோட சாட்சியம் வந்ததும் கேசு தூள்தூளாகி விட்டதே.

ஆகாமலிருக்குமா... நான்தான் அப்போதே சொன்னேன். இந்தக் கேசு சாத்தப்பனை ஒன்றும் செய்யாது என்பதாக.

ஆமாம்... முத்துமாலையைச் சாத்தப்பனிடம் விலைக்கு விற்றதற்கான ரசீதும் தானே காட்டினான்.

அதுசரி... இவ்வளவு எளிதாக விஷயம் இருக்கும்போது, சாத்தப்பன் ஏன் எடுத்த எடுப்பிலேயே இதை அதிகாரிகளிடம் சொல்லியிருக்கக் கூடாது. ஜெயிலுக்குப் போயிருக்க வேண்டிய அவசியமே இல்லையே...

குளத்தங்கரை மாநாட்டில் இந்தப் பிரச்சனை எழுந்தது; விவாதம் தொடர்ந்தது; முடிவு கண்டறியப்படவில்லை. ஆனால் வேறோர் இடத்திலே நடைபெற்ற பேச்சிலே இதற்கு ஒரு விளக்கம் பிறந்தது.

“தம்பி! எப்படியோ, சாமார்த்தியமாக என்னிடம் நகையை அவன் விற்றான் என்பதைக் கண்டறிந்து, அவனையும் கோர்ட்டிலே அதை ஒப்புக்கொள்ளும்படியாகச் செய்து, என்னைக் காப்பாற்றினாய். அண்ணனிடம் உனக்கு உள்ள பற்றும் பாசமும் அப்படிப்பட்டது...”

“அண்ணா! அண்ணா! என்னைக் கொல்லாதே! வேண்டாம் இந்தச் சித்தரவதை! வேண்டாம் அண்ணா! இனியும் தாங்கிக் கொள்ளும் சக்தி எனக்கு இல்லை...”

“மனத்தைக் குழப்பிக் கொள்ளாதே... உன் சாமார்த்தியமான தலையீட்டினால்தான், துப்பு துலங்கிற்று. என்று பத்திரிகைகள் பாராட்டி எழுதி இருக்கின்றன... இதோ பார்... பெரிய பெரிய தலைப்புகளுடன் செய்தி வந்திருக்கிறது. தம்பி! முதலிலே அவன் மிகவும் பிடிவாதம் செய்தானாமே... ஒப்புக் கொள்ளவே மாட்டேன் என்றானாமே... எப்படி அவனை உன் வழிக்குக் கொண்டு வந்தாய்...”

தங்கப்பனுக்குக் கண்ணீர் கொப்பளித்துக் கொண்டு வந்தது. அலறினான். பதறிப்போய், அங்கு வந்த பெரிய டாக்டர் சாத்தப்பனிடம் மரியாதையுடன், “விவரம் தெரிந்த நீங்களெல்லாமா, இப்படி நடந்து கொள்வது. இவருக்குத் துளியும் மனஅதிர்ச்சியே ஏற்படக்கூடாது. ஆபத்து அடியோடு நீங்கி விட்ட நிலையில் அவர் இல்லை. ஆகவே அதிகம் பேசக் கூடாது. மன்னிக்க வேண்டும். இனியும் இங்கு இருந்து பேசிக் கொண்டிருக்க அனுமதிப்பதற்கு இல்லை. டாக்டர்கள், தங்களை இவ்வளவு நேரம் அனுமதித்ததே தவறு... பெருந்தவறு... என்று கூறியதுடன், சாத்தப்பனை அழைத்துச் சென்றுவிட்டார்.
* * *

டிரைவர் முன்னாளில் நகை வியாபாரியாக இருந்தவர்; நொடித்துப் போனவர்; சாத்தப்பனிடம் பல நகைகள் விற்றிருக்கிறார்; நொடித்துப் போனவருக்குச் சாத்தப்பன் தன்னிடமே வேலையும் கொடுத்திருக்கிறார் வைத்துக் கொண்டு ஆதரித்து வருகிறார் என்ற செய்தி பரவி குளத்தங்கரை மாநாட்டில், மறுபடி
யும் குத்தாலம் அப்பேதே சொன்னேன் அல்லவா, சாத்தப்பன் பெரிய மனிதன் அலாதியான பெருந்தன்மையான குணம் அவனுக்கு என்று பேசிடலானார்.

சாத்தப்பனுடைய குணாதிசயம் இருக்கட்டும் தம்பி! தங்கப்பனுடைய குணம் என்ன சாமான்யப்பட்டதா! அண்ணன் இன்று கௌரவமாக வெளியே உலவ யார் காரணம்? தங்கப்பன் அல்லவா... டிரைவர் சாட்சியம் எப்படிக் கிடத்தது? தங்கப்பன் திறமையாலே அல்லவா என்று அர்ச்சித்தார்.

உப்பிட்டவரை உள்ளளவும் நினைக்கணும் என்பார்களே. இந்த நகை வியாபாரி நொடித்துப் போன நிலையிலே வேலை கொடுத்த சாத்தப்பன் ஆதரித்து இருக்கிறாரே. அப்படியிருக்கும் போது முத்துமாலை விஷயமாக அவர் பேரிலே ஓர் அபாண்டம் விழுந்தபோது, இவனல்லவா முந்திக் கொண்டு போலீசிலே சொல்லியிருக்க வேண்டும். ஐயா! முத்துமாலை களவுப் பொருள் அல்ல... அது நான் அவருக்கு இன்ன நாளிலே இன்ன விலைக்கு விற்றிருக்கிறேன் என்று ஏன் சொல்லவில்லை...

அது என்னத்தாலே தெரியுமய்யா... சொல்றேன் கேள்... வாழ்ந்து கெட்டவங்க இருக்கிறாங்க பாரு... அவங்களோட சுபாவம் ஒரு மாதிரியா ஆகிடும்... சாத்தப்பன் வேலை கொடுத்து உதவி செய்தாரு... அதனாலே அவரிடம் அன்பு மரியாதை இதெல்லாம்தானே ஏற்பட வேண்டும். இந்த டிரைவரோட மனத்திலே என்று யோசிக்கிறே ஆனால இந்த மாதிரி சில பேருக்கு நாம் எவ்வளவு செல்வாக்கோடு வாழ்ந்து கொண்டிருந்தோம் நமக்கு இன்று இந்தக் கதி ஏற்பட்டுவிட்டதே; இவனிடம் கை கட்டி சேவகம் செய்யும்படியான நிலை வந்திருக்குதே. இவனே கூட பல பேரிடம் யார் தெரியுமா நம்ம டிரைவர்? நகை வியாபாரம் செய்து ‘ஒகோ’ன்னு வாழ்ந்து வந்தாரே நாகலிங்கம். அதே ஆசாமிதான் என்று சொல்லாமலா இருப்பான்; எத்தனை பேர் அதைக் கேட்டுக் கேலியாகச் சிரித்திருப்பார்கள் என்றெல்லாம் எண்ணி எண்ணி அருவருப்பு பொறாமை கொண்ட மனம் ஏற்பட்டுவிடும். எப்படியோ ஆசாமி சிக்கிக் கொண்டான்; நமக்கு வந்த தாழ்வு இவனுக்கும் வரட்டும் என்ற ஒரு நினைப்பு வந்திருக்கும் அதனாலேதான் சாத்தப்பனைக் காப்பாற்றும் ருஜு தன்னிடம் இருந்தும் டிரைவர், ஒதுங்கிக் கொண்டு வேடிக்கை பார்த்திருக்கிறான்.

எனக்கு முதலிலே இருந்தே அவனிடம் ஒரு சந்தேகம் உண்டு, நடந்ததை எல்லாம் பார்க்கிறபோது, என் மனத்திலே டிரைவரைப் பற்றி முதலிலே தோன்றிய எண்ணம் சரியானது என்று தெரியுது.

எல்லா விவரமும் இருக்கட்டும்... முத்துமாலை மடாலயத் தது என்பது விளங்கி விட்டது. இது இந்த நகை வியாபாரிகளிடம் எப்படி வந்தது. சாத்தப்பனுக்கு இவன் கொடுத்தான். ஆதாரம் காட்டினாங்க. ஆனா இந்த நகை வியாபாரியிடம் இந்த முத்துமாலை வந்த விதம்?

அதற்கும் ஒரு கணக்குக் காட்டியிருக்காங்களே... வேறே ஒரு நகை வியாபாரி இந்த நகை வியாபாரிக்கு விற்றதாக...

யாரு அவன்... எங்கே இருக்கிறான்...

அது இனிதான் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். இப்போதைக்கு, சாத்தப்பன் பேரிலே உள்ள பழி நீங்கிவிட்டது... நகை வியாபாரி, முத்துமாலையை யாரிடம் தான் வாங்கியதாகச் சொல்லியிருக்கிறானோ அதுபற்றி தகவல் விசாரித்துக் கொண்டு இருக்கிறாங்க... வேறே என்ன செய்யறது.

டிரைவர் பேரிலே போலீஸ் ஒரு ‘கண்’ வைத்தபடிதான் இருப்பாங்க. இல்லையா...?”

ஆமாம். ஆமாம் பார்வை விழுந்தபடிதான் இருக்கும்.

கொள்ளிச் சாமியார் மடத்திலே கொள்ளை நடந்தபோது, அவனுக்கு ‘வக்கீலாக’ இருந்தவர் ஒருவர் உண்டாமே... அவரிடம் போய்க்கூடத் தகவல் விசாரித்தார்களாமே...

விசாரிக்கப் போனார்கள். ஆனால் பாவம் அந்த வக்கீல் முடக்கு வியாதி ஏற்பட்டு, பேச முடியாத நிலையில் இருக்கிறாராம்... வழக்கு சம்பந்தமான கட்டுகளைப் படித்ததிலே, பிடி பட்டவன் தக்க ருஜு இல்லாததாலே விடுதலை செய்யப் பட்டதாகத் தெரிகிறது...

முடக்கு வியாதி மட்டும் வராமலிருந்திருந்தா, அந்த வக்கீல் இப்ப, பெரிய ஜட்ஜு ஆகியிருந்திருப்பாராமே.

அப்படித்தான் கேள்வி. அவரிடம் வேலை கற்றுக் கொண்டவர்களெல்லாம், இன்றைக்குப் பெரிய நிலையிலே இருப்பதாகக் கேள்வி.
* * *

நாட்கள் பல உருண்டோடின. வேறு பரபரப்பூட்டும் செய்திகள் குளத்தங்கரை மாநாட்டுக்குக் கிடைக்கவில்லை. தங்கப்பன் உடல் நலம் முழுவதும் பெறவில்லை என்றாலும் இனி உயிருக்கு ஆபத்து இல்லை என்ற நிலை பிறந்தது. தருமுவின் தாலி பாக்கியத்தை ஊர் மெச்சிக் கொண்டது.

அண்ணன் பேரிலே ஏற்பட்ட அபாண்டத்தாலே தங்கப்பன் மனம் அதிர்ச்சி அடைந்தது, என்று ஊர் பேசிக் கொண்டது.

வடிவு தங்கப்பனைக் காண வந்திருந்தான் உடன் வந்திருந்த அவள் கணவன் போலீஸ் இன்ஸ்பெக்டர், சாத்தப்பனைக் காணவே கூச்சப்பட்டான்.

“என் கடமையைச் செய்தேன்... மன்னிக்க வேண்டும்.”

“மன்னிக்க வேண்டும் என்று சொல்லாதே... மதிக்க வேண்டும் என்று சொல்லப்பா! உன்னிடம் எனக்கு உண்மையான மதிப்பு ஏற்பட்டதற்குக் காரணமே, உன் கடமையை, தாட்சண்யத்துக்குக் கட்டுப்படாமல் செய்தாய் என்பதாலேதான்...”

“ஆனால் கடைசியில் பார்க்கப் போனால், வீண் சந்தேகம் கொண்டதுதான் மிச்சமாகிறது... அவசரப்பட்டு விட்டேன்... மேலதிகாரிகளிடம் சொல்வதற்கு முன்பு, நானே நேரிலே வந்து உங்களிடமே விசாரித்திருந்தால் இத்தனை விபரீதம் நடந்திருக்காது...”

“உன்னுடைய நேர்மையையும் துணிவையும் உலகு உணர இந்தச் சம்பவம் பயன்பட்டது என்பதிலே எனக்கு ஒரு மகிழ்ச்சி. பெருமை. எப்படித்தான் நடந்து கொள்கிறாய் பார்க்கலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தேன்... நான் எதிர் பார்த்ததைவிட மேன்மையாக நடந்து கொண்டிருக்கிறாய். உனக்கு மிகச் சிறந்த எதிர்காலம் இருக்கிறது என்று கருதுகிறேன்.

உன் மனப்போக்கைப் பாராட்டுகிறேன். ஆனால் முடிவு வரவேற்கக் கூடியது அல்ல. துவக்க காலம் உனக்குச் சிறிது துடிதுடிப்பு, அவசரம், திடீர் முடிவெடுக்கும் இயல்பு இருக்கத் தான் செய்யும். ஆனால் படிப்படியாகப் பக்குவம் ஏற்பட்டுவிடும். வேலையை விட்டு விலகாதே. சரியல்ல, என் தம்பி கூட இப்படித்தான், இனிதான் ஜில்லா ஜட்ஜு வேலையில் இருக்கப் போவதில்லை. விலகிவிடப் போகிறேன் என்று பிடிவாதம் செய்கிறான். அவனுக்கும் இதையேதான் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

தங்களுடைய ‘வாதம்’ என்னைத் திருத்திவிட்டது.

என் தம்பியும் இதைப் போலவே தன் முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும். அவன் ஒரு விதமானவன். என் பேரிலே விழுந்த வழக்கிலே நான் விடுதலையாகி விட்டேன் என்றாலும், அப்படி ஒரு வழக்கு வந்ததே ஓர் இழுக்கல்லவா. அப்படி ஓர் இழுக்கு விழுந்தவனுடைய ‘தம்பி’ இவன் என்று நாலுபேர் நாலு விதமாகப் பேசுவார்களே, என்பதை எண்ணி வேதனைப் படுகிறான்.
என் மனத்தை மாற்றி விட்டதைப் போல அவருடைய மனத்தையும் மாற்றாமலா விடுவீர்கள்?
* * *

ஒரே ஒரு கணம்தான் அண்ணா! அந்தச் சபலம் எனக்கு... சபலத்துக்குப் பலியாகி விட்டேன்...
சபலம் எல்லாமே அப்படித்தான் தம்பி! ஒரு கணம், ஒரு நொடி... அந்த ஒரு நொடிப்போதிலே மனத்திடம் துளி கெட்டாலும் தீர்ந்தது. பாதைகெட்டு விடும்.
அப்படித்தான் அண்ணா, நடந்தது, அவன் குற்றம் செய்தவன் என்பதற்கான சாட்சியம் ருஜு இருந்தது. அதை நான் கோர்ட்டிலே கொடுத்திருக்க முடியும். வேண்டுமென்றே மறைத்தேன்... அவன் தப்பித்துக் கொண்டான்... ஊரே பாராட் டிற்று. அவனுக்காக வாதாடிய வக்கீலின் திறமையால்தான் அவன் விடுதலையானான் என்று... ஆனால் அவனைக் கூண்டுக்குள் தள்ளக்கூடிய ருஜு என்னிடம் இருந்தது... அதைக் கோர்ட்டிலே நான் காட்டாமலிருந்து விட்டேன்... அந்த முத்து மாலை என்னை மயக்கிவிட்டது... அதைக் கொடுத்து காலிலே விழுந்தான்... பேராசை, பெற்றுக் கொள், பெற்றுக் கொள் என்று தூண்டிற்று... நேர்மை தூங்கிவிட்டது... வழி தவறினேன்...
-------------------

அப்போதே சொன்னேன் (5)

விவரம் யாவும் தெரியும் தம்பி! களவாடி பிடிபட்டான், உன்னால் விடுதலை பெற்றான். ஊரெல்லாம், சுற்றி அலைந்தான்... கடைசியில் என்னிடம் அடைக்கலமானான், டிரைவராக. தன் கதையை விவரமாகச் சொன்னபோது, முத்துமாலை பற்றிக் கூறினான்... நீ தான் அதைப் பெற்றுக் கொண்டாய் என்பதை இங்கு வந்த பிறகுதான் எனக்குத் தெரிவித்தான். முத்துமாலையைப் பெற்றுக் கொண்டவன் என் தம்பிதான் என்பது எனக்குத் தெரிந்தபோது நான் திடுக்கிட்டுப் போனேன்... நானே தான், உனக்குத் தெரியாமல், அதை உன்னிடமிருந்து எடுத்தேன்... எடுத்தேனா! களவாடினேன்... அதை எடுக்கும் போது உன் பெருமையை எண்ணாமலில்லை. ஒரு கண சபலம் காரணமாக, அந்த முத்துமாலையை நீ பெற்றுக் கொண்டாயே தவிர, அது அளவுப் பொருள் ஆகவே அதைத் தருமுவுக்குக் கொடுக்கக்கூடாது, எந்த வகையிலும் பயன்படுத்தக்கூடாது என்று எண்ணி, ஒளித்து வைத்திருந்தாய் அல்லவா... அது ஒரு கணம் சபலத்துக்கு ஆட்பட்டுவிட்டாலும், உன் மனத்திலே உள்ள நேர்மை உணர்ச்சி அடியோடு மறந்து விடவில்லை என்பதைக் காட்டுகிறதல்லவா, அதனால் பெருமிதம் எனக்கு...

அப்போதே என்னை இழுத்துப் போட்டு உதைத்திருக்க வேண்டும் நீங்கள்...

உன்னையாடா தம்பி! சிறுவயதிலே அடிக்கடி பொறாமை காரணமாக என்மீது ஏதாவது பழி சுமத்துவாயே... அப்போது கூட நான் உன்னை அடித்ததில்லையே... நான் உன்மீது என் உயிரை அல்லவா வைத்திருக்கிறேன் உன்மீது எப்போதும் எனக்குக் கோபம் ஏற்பட்டதில்லையே... வாலிபத் துடிப்பு எனக்கு இருந்த நாட்களிலேயே...

முத்துமாலையை எடுத்ததுடன், அதை ஏன் அண்ணா! வடிவுக்குக் கொடுத்து; நீங்களாக வம்பை விலைக்கு வாங்கிக் கொள்ள முனைந்தீர்கள்.

ஒரு சிறு விளையாட்டா தம்பி! வடிவு புருஷன் எப்படிப் பட்டவன், நேர்மையானவனா, பொருளைக் கண்டு நெளிபவனா என்று பார்க்க விரும்பினேன். பார்த்தேன்... பூரிப்பு எனக்கு அவனுடைய நேர்மையை உணர்ந்ததில்.

ஆமண்ணா! இவ்வளவு நேர்மையாளருக்கு மத்தியில், நான்... செ! எனக்கே வெட்கமாக இருக்கிறது... இந்தச் சுமையோடு நான், மற்றவர்களுக்கு நீதி வழங்கும் வேலையிலே இருக்க வேண்டும்... மனம் ஒப்பவில்லை அண்ணா! மனம் ஒப்பவில்லை...

களவுப் பொருளைப் பெற்றுக்கொண்டோமே என்ற பழியைப் பற்றிய மனச்சுமையைத்தானே குறிப்பிடுகிறாய்?

ஆமாம்... ஏன்... அது என்ன சாமான்யமான குற்றமா...

களவுப் பொருளைப் பெறுவது, தவறு; குற்றம்; மன்னிக்க முடியாத குற்றம். நான் மறுக்கவில்லை... ஆனால், தம்பி! உன்னிடம் தரப்பட்ட அந்த முத்துமாலை, மடத்திலிருந்து களவாடப்பட்டது உண்மை... ஆனால் அது மடத்துக்கு எப்படிக் கிடைத்தது தெரியுமா?...

யாராவது மடத்துக்குக் காணிக்கை கொடுத்திருப்பார்கள்...

இல்லை, தம்பி! இல்லை. அந்த முத்துமாலை நம் முடையது, தம்பி! நம்முடையது! கொ. கொ. கொ. என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருப்பதால், கொடி கொண்டா மலை கொள்ளிச்சாமியாருடையது என்று ஆயிற்று. ஆனால், அது நம்முடையது. இந்தக் கொள்ளிச்சாமியார் மடம் வைக்காத முன்பு ஊரூருக்கும் சென்று உபதேசம் செய்து கொண்டிருக்கும் ‘போலி’யாக இருந்த வந்துபோது, நம்முடைய வீட்டிலே அப்பா இவனுக்கு ‘பூஜை’ நடத்தினார். அப்போது இவன் நம்முடைய வீட்டிலிருந்து களவாடிச் சென்றிருக்கிறான் இந்த முத்துமாலையை... போன பொருள்தான் திரும்பி வந்திருக்கிறது நம்மிடம்...

திடுக்கிட வைக்கிறீர்களே. இந்த விவரம் வந்திருக்கிறது நம்மிடம்...

ரங்கலால் மூலமாக... ரசவாதி ரங்கலால் தெரியுமல்லவா... இந்தச் சாமியார்கள் ஒவ்வொருவரை மயக்க ஒவ்வொரு வித்தை காட்டுவார்கள்... பலரை மயக்க நமக்கு ‘ரசவாதம்’ தெரியும் என்று கூறுவார்கள். அதிலே மயங்கிச் சேர்ந்து, சாமியாரின் பல அக்கிரமங்களுக்கு உடந்தையாக இருந்தவன் ரங்கலால். அவன் மூலமாகவே இந்த விவரம் அறிந்தேன்.
ரங்கலால் என்ன ஆனான்... அந்தப் பெண்...

ரங்கலாலா... அவன் முதலிலே என்னைத் தன் வலையில் விழ வைக்கலாம் என்று எத்தனித்தான்... முடியவில்லை அந்தப் பெண்ணுக்கும் ‘மோசடி’ வாழ்க்கை பிடிக்கவில்லை... நாணயமான ஒருவனைத் திருமணம் செய்து கொண்டு, தனியே சென்று விட்டாள்... இவன் எங்கோ பினாங்கோ, மோரிசோ ஓடி விட்டான்.

உள்ளபடி இது நம்முடையது என்பதைக் கேட்க, ஓரளவுக்கு எனக்கு மன நிம்மதி ஏற்படுகிறது என்றாலும்...

நீதிபதி வேலை பார்க்க மனம் இடம் தரவில்லை... ஒருவிதத்திலே, தம்பி! உன் எண்ணம் சரியானதுதான்... பொருள் நம்மிடமிருந்து களவாடப்பட்டது என்றாலும், அதை நாம் சட்டத்துக்கு உகந்த முறையிலேதான் திரும்பப் பெற வேண்டும்; குறுக்கு வழியில் அல்ல... அதை நான் ஒப்புக் கொள்கிறேன்...

மேலும், கொள்ளிச்சாமியாரின் அக்கிரமம் ருஜுப் படுத்தப் பட்டும், முத்துமாலை நம்முடையது என்பது நிரூபிக்கப்பட்டாக வேண்டுமல்லவா...

ஆமாம்... அதற்கான வேலைகளைத் தொடர்ந்து நடத்த வேண்டும்... அதற்கு வடிவு புருஷன் ஏற்றவன்... அவன் எப்படியும் கண்டு பிடித்துவிடுவான்...

இதெல்லாம் ஓரளவு மனத்துக்கு ஆறுதல் தருவதாக அமைந்திருப்பினும், முத்துமாலை களவாடப்பட்டிருக்கிறது மடத்திலிருந்து; அந்தக் குற்றவாளியை நான் இலஞ்சம் பெற்றுக் கொண்டு தப்பி விட உடந்தையாக இருந்திருக்கிறேன்; நீங்களோ அவனை உங்களிடம் வேலைக்கே வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

தவறானதாகத்தான் தோன்றும், தம்பீ! முழு விவரம் தெரியாத முன்பு, இவன் மடத்திலே தங்கி கொள்ளிச்சாமிக்கு ஓர் அபூர்வமான தைலம் தயாரித்துக் கொடுத்திருக்கிறான்... அது கொடிய குஷ்ட நோயைத் தீர்க்கக் கூடியது... இந்தச் சாமியார்; அதை மருந்து என்று கூறாமல், தன்னுடைய மாய சக்தி என்று கூறி ஏய்த்து வருவது இவனுக்குப் பிடிக்காமல், தகராறு கிளப்பி
யிருக்கிறான்.

தனக்குத் தருவதாகச் சொன்ன தொகையைக் கொடுக்கும் படி வற்புறுத்தி இருக்கிறான். மடத்துத் தலைவன் கொடுக்க மறுக்கவே, ஒரு நகைப்பெட்டியைத் தூக்கிக் கொண்டு ஓடி விடுவது என்று தீர்மானித்திருக்கிறான். அதுதான் பிறகு ‘கொள்ளை’ என்ற வடிவும் கொண்டது.

என் மனச் சுமையிலே பெரும் அளவு குறைந்து விட்டது அண்ணா! ஆயினும், நான் நீதிபதியாக இருக்க மட்டும் மனம் இடம் தரவில்லை...

என் தம்பி நீதிபதியாக இருக்கிறான் என்ற பெருமிதம் எனக்கு இனிப்பளிக்கும்; அதை இழக்க மனமில்லை. என்றாலும், நீதித் துறையிலே உள்ளவர்கள் ஒரு துளியும் எந்த விதமான களங்கமும் இல்லாதவர்களாக இருக்க வேண்டும் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன்.
* * *

மாதங்கள் உருண்டோடின; தங்கப்பன் வேலையை விட்டு விலகி விட்டான். வக்கீல் வேலை கூடப் பார்க்கப் போவதில்லை என்று கூறிவிட்டான். அண்ணனுடன் சேர்ந்து வியாபாரம் நடத்தப் போவதாக அறிவித்து விட்டான்.
* * *

நான் அப்போதே சொன்னேனே கவனமிருக்கிறதல்லவா, சாத்தப்பன் பெரிய புள்ளி என்பதாக. தம்பியைக்கூட வேலையில் இருக்க வேண்டாம் என்று கூறி விட்டானாம்.

வேலையிலே என்னய்யா கிடைக்கும், ஆயிரம் இரண்டாயிரம் மாதம் இருக்கும். மாதம் ஓர் இலட்சம் புரளுமாமே. வியாபாரத்திலே...

என்னமோ போ! நம்ம ஊரிலே ஒரு பெரிய குடும்பம், இடையிலே பலவிதமான கஷ்டம் ஏற்பட்டாலும் இப்போது நிம்மதி அடைந்திருக்குது. அதுவரையிலே மகிழ்ச்சிதானே, யாருக்கும்.

நான் அப்போதே சொன்னேன். அண்ணன், தம்பியோ ஒற்றுமையைப் பார்க்க வேண்டுமென்றால், சாத்தப்பன் தங்கப் பனைப் பார்க்க வேண்டுமென்று, கல்லூரியிலே படிக்கிற காலத்திலே அவ்வளவு ஒற்றுமை...

சாத்தப்பனுக்குத் தன் தம்பியிடம் அவ்வளவு பாசம்...

தங்கப்பனுக்கு மட்டும்! அண்ணன் பேரிலே வழக்கு வந்தபோது எவ்வளவு கவலை, பாவம்... ஆள் துரும்பு துரும்பாக இளைத்துப் போய் விட்டானே...

எவ்வளவோ கஷ்டப்பட்டு அண்ணன் பேரிலே ஒரு குற்றமும் வராமல் காப்பாற்றினான் இல்லையா...

தருமு அதைத்தான் ஊரெல்லாம் பெருமையாகப் பேசிக் கொள்வதாகக் கேள்வி.

சாத்தப்பனுடைய புதிய வியாபாரக் கம்பெனி துவக்க விழாவுக்கு ஒரு மந்திரி வாராராமே...

கேள்விப்பட்டேன்... முந்தி வந்த மந்திரி இல்லே... இவர் வேறே...

பந்தல் பெரிய அளவு... விருந்து வைபவம் பிரமாதமாகத் தான் இருக்கும். பெரிய வீட்டு விசேஷமில்லையா...

தருமுகூடத் தலை முழுகாமலிருப்பதாகச் சொல்றாங்களே...

நான் அப்பவே சொன்னேன் கவனமிருக்கிறதா, பெரிய வீட்டு மதிப்பு எப்பவும் குறையாதுன்னு...
குளத்தங்கரையிலே வழக்கம்போல மாநாடு நடைபெற்றுக் கொண்டு வந்தது.

சாத்தப்பன் தங்கப்பன் ஆகியோருடைய புதிய ‘மருந்தகம்’ துவக்கப்பட்டது.

மாநாட்டினர், நோய் நொடி மருந்து வகை, அதிலே கிடைக்கக்கூடிய இலாபத்தின் அளவு ஆகியவற்றிலே கவனத்தைத் திருப்பிக் கொண்டனர்.

“நம்ம முகமதுகூடத்தான் என்னமோ ‘சூரணம்’ செய்வதாகச் சொல்றாரு. யாறு சீந்துவாங்க...” என்று கேலி பேசினார் குத்தாலம்.

எல்லாத்துக்கும் ஒரு காலம் வரணுமோல்லோ என்று மகமது பதிலளித்தார்.

முற்றும்
------------------

5. இரும்பு முள்வேலி

இரும்பு முள்வேலி (1)
தமக்கு உரிய இடத்தில் பிறர் நுழையாது தடுத்திட முள்வேலி போடுகிறார்கள். இடத்துக்குப் போடப்பட்ட முள்வேலியைப் பற்றிய கதை அல்ல இது; இதயத்துக்குப் போடப்பட்டுவிடும் முள்வேலி பற்றியது; கருத்துக்களின் தோற்றம், மாற்றம், வகை, வடிவம், விளைவு, அவை ஏற்படுவதற்கான சூழ்நிலை ஆகியவை பற்றிய விளக்கமளிக்கும் இலக்கியம். ‘மனிதத்தன்மை’யின் புனிதத்தை விளக்கிடும் தூய்மைமிக்க கருத்தோவியம்.

கருமேகங்கள் திரண்டுள்ள காட்சியைத் தீட்டிட திறமை மிக்க எந்த ஓவியனாலும் முடியும்.

பால் நிலவு அழகொளி தந்திடும் காட்சியினைத் தீட்டிடவும், கைத்திறன் மிக்க ஓர் ஓவியனால் முடியும்.

ஆனால், கருமேகங்கள் திரண்டிருப்பதால் காரிருள் கப்பிக் கொண்டிக்கும் காட்சியுடன் ஓர் புத்தொளி மெல்ல மெல்லக் கிளம்புகிறது என்பதனையும் இணைத்தளித்திட கைத்திறன் மட்டும் போதாது, கருத்துத் திறனும் இருந்திடவேண்டும், ஓவியனுக்கு.

கெட்டவனைக் காட்டிடுவது எளிதான காரியம், ஓரளவு திறமைபெற்ற எழுத்தாளனுக்கு.

நல்லவனைக் காட்டிடும் எழுத்தோவியம் தந்திடுவதும் எளிதுதான் தரமான எழுத்தாளனுக்கு.

ஆனால் ‘கெட்டவன்’ நல்லதும் எண்ணுகிறான். செய்கிறான் என்று காட்டிடவும், நல்லவனிடம், புற்றுக்குள் அரவுபோல் கெடு நினைப்போ செயலோ இருந்திடுவதைக் காட்டிடவும், எழுத்தாளனாக மட்டும் இருந்தால் போதாது, எண்ணங்களை ஆள்பவனாகவும் இருந்திட வேண்டும்.

எளிதான காரியம் அல்ல என்பதுடன், ஒரு துளி தவறினால், அத்தகைய முயற்சி, ஆபத்தையே கூட மூட்டி விடக்கூடும், படிப்போரின் உள்ளத்தில்.

இந்தச் சூழ்நிலையில், இவன் இப்படித்தான் எண்ணியிருப்பான் இவ்விதம்தான் செய்திருப்பான், என்று யூகித்து எழுதுவதிலேயே தவறுகள் நேரிட்டு விடுகின்றன.

சூழ்நிலை காரணமாக ஏற்பட்டுவிடும் எண்ணத்திலிருந்தும் தன்னை விடுவித்துக்கொண்டு, முற்றிலும் வேறான, ஆனால் தூய்மையான எண்ணத்தை ஒருவன் கொண்டிருந்தான் என்பதை எடுத்துக் காட்டும் எழுத்தோவியம் தீட்டித் தருவதனை எல்லா எழுத்தாளர்களும் மேற்கொள்வதில்லை; ஆபத்தான முயற்சி என்ற காரணத்தால்.

ஆனால் சிற்சிலர், தனித்திறமை பெற்றோர், இத்தகைய எழுத்தோவியம் தருகின்றனர்; இறவாப் புகழுக்கு உரியராகின்றனர்.

பகைவனிடம் கோபமும், கொதிப்பும், வெறுப்பும் எழுவதும் வஞ்சந்தீர்த்தாகவேண்டும் என்ற எண்ணம் வெறி அளவு ஓங்குவதும் இயல்பு.

ஆனால் பகைவனிடமும் பிரிவு எழுகிறது - எழ முடியும் - என்று எடுத்துக்காட்ட மிகச் சிலருக்கு மட்டுமே முடியும் - அது பொது இயல்புக்கு மாறானது; உலகில் ஒப்புக்கொள்ளப்பட்டு விட்டுள்ள முறைக்கு முரணானது. எனவேதான், அதனை எடுத்துக் கூறுவதற்குத் தனியானதோர் திறமை தேவைப்படுகிறது.

நம் நாட்டினை வேறோர் நாட்டினர் தாக்கிடும்போது - போர் மூண்டிடும்போது, நாட்டுப்பற்று எனும் உணர்ச்சிதான், மற்ற எந்த உணர்ச்சியையும்விட, மேலோங்கி நிற்கிறது.

நம் நாடு தாக்கப்படுகிறது! நமது தன்மானம் தாக்கப் படுகிறது!! என்ற எண்ணம், உள்ளத்தை எரிமலையாக்குகிறது. வெடித்துக்கொண்டு கிளம்புகிறது, கோபம், கொதிப்பு, வெறுப்பு, பழிவாங்கும் எண்ணம், பகைவனை அழித்தொழித்தாக வேண்டும் என்ற துடிப்பு.

போர் மூண்டிடாதபோது எவையெவை ‘வெறி’ என்று கருதப்படுமோ அவை யாவும் தேவைப்படுவனவாக, வரவேற்கப் படுவனவாக, போற்றப்படுவனவாக ஆகிவிடுகின்றன.

“இப்படியா இரக்கமின்றி அடிப்பது. அவனும், பாவம், மனிதன்தானே” என்று மனம் உருகிப் பேசிடும் நல்லோர்கூட, மெல்லியலார் கூட, “சுட்டுத் தள்ள வேண்டும்! வெட்டி வீழ்த்த வேண்டும்! பூண்டோடு அழிக்க வேண்டும்!” என்று பேசு கின்றனர் - போர் மூட்டிவிடும் வெறி உணர்ச்சி காரணமாக! அந்த உணர்ச்சியை வெறி என்றுகூடக் கூறிடத் துணிந்திடார்! கவிதைகள் இயற்றப்படுகின்றன, அந்த ‘எழுச்சி’பற்றி.

நாடு வாழ்ந்திட எதனையும் செய்திடுவேன்! - என்ற பேச்சுக்குப் பெரியதோர் மதிப்புக் கிடைக்கிறது. எதனையும் செய்திடுவேன்! படுகொலைகள்கூட! பச்சிளங் குழந்தைகளைக் கொன்றிடும் பாதகம்கூட! போர்க்களத்தில் “கொல்லு! இல்லையேல் கொல்லப்படுவாய்!” என்பதுதான் ஒப்புக் கொள்ளப்பட்ட இலக்கணம் - போரிடும் இரு நாடுகளிலும்!

ஒரு நாடு மற்ற நாட்டின்மீதே எல்லாப் பழிகளையும், எல்லாக் கெடு நினைப்பினையும் ஏற்றி வைக்கும்; காட்டு மிராண்டிகள்! கொலைப் பாதகர்கள்! வெறியர்கள்! மனித மாண்பு அறியாதவர்கள்! - என்று கண்டனக் கணைகள் கிளம்பிடும், இருபுறமுமிருந்து.

போர் ஓய்ந்து, ஓர் புது உறவு ஏற்பட்ட பிறகுதான், உண்மை வெளியே தலைகாட்டும், தைரியமாக! போர் துவங்கியதும், உண்மை ஓடி ஒளிந்து கொள்கிறது.

வெறி பிடித்தலையும் சிலரால் மூண்டது இந்தப் போர் என்று, போர் ஓய்ந்த பிறகுதான் பேசப்படும் - போர் நடக்கும் போது அந்த நாட்டு மக்கள் அனைவரையுமே வெறியர்கள், காட்டுமிராண்டிகள், இரத்தம் குடிப்பவர், பிணம் தின்பவர், கற்பழிப்பவர், கயவர் என்றுதான் பேசுவர் - ஒருவர் தவறாமல்.

யாரேனும் ஒருவர் இவ்விதம் பொதுப்படையாக ஒரு நாட்டு மக்கள் எல்லோரையும் மொத்தமாகக் கண்டிப்பது முறை அல்ல என்று கூறிடின், அவனுடைய நாட்டுப்பற்று பற்றிய பலமான ஐயப்பாடு எழும்; அருவருப்பு கிளம்பும்; அவன் ‘தேசத் துரோகி’ ஆக்கப்பட்டு விடுவான்.
தேசத்துரோகி - நாட்டைக் காட்டிக் கொடுப்பவன் - எதிரிக்கு உளவாளி - எதிரியைவிடக் கொடியவன் - இழிமகன் - என்றெல்லாம் அவன் கண்டிக்கப்படுவான்; தனது நிலைமையை விளக்கிட அவன் முனைந்தாலோ, மக்களின் ஆத்திரம் மேலும் வளரும்; அவனை வெட்டி வீழ்த்திடக் கிளம்புவர்.

இந்தக் கரத்தால் - இந்த வாள் கொண்டு - பகைவர் இருபதின்மரைக் கொன்றேன்.

துரத்தினேன்! அவன் ஏற்கெனவே அடிபட்டவன், ஆகவே வேகமாக ஓடிட முடியவில்லை, களத்திலே இருள் கப்பிக் கொண்டிருந்தது, படை கிளப்பிய தூசியால்! எதிரில் யானை மிரண்டடோடி வருவது அவன் கண்களில் படவில்லை - சிக்கிக் கொண்டான்; காலின் கீழ் போட்டு... ஆ! என்றான் ஒரு முறை ... ஒரே ஒருமுறை... பிறகு... கூழ்! கூழாகிப் போனான்!

இப்படிப் பல நிகழ்ச்சிகளைத் தன் வீரத்திற்குச் சான்றுகளாகக் கூறுவான், களம் சென்று திரும்பிவயன், கேட்போர் மகிழ்வர், அவனை நாட்டைக் காத்த நாயகன் என்று பாராட்டுவர்.

பகை உணர்ச்சி கிளம்பிவிட்டால் அது தடுப்பாரற்று வேகமாக வளரும்; வளர்த்திடுவதும் போரின்போது மேற்கொள்ளப்படும் ஒரு முறையாகிவிடுகின்றது. நாட்டு மக்கள் அனைவரும் அந்தப் பகை உணர்ச்சியைக் கொண்டுவிடுகின்றனர்; பொறி ஏதோ ஓர் இடத்தில்தான் விழுகிறது; தீயோ எங்கும் பரவி, எல்லாவற்றையும் பிடித்துக்கொள்கிறது அல்லவா.

இன்முகம் காட்டுதல், நன்மொழி பேசுதல், அன்பு வழங்குதல், அறநெறி கூறுதல், இரக்கம் கொள்ளுதல் ஆகிய பண்புகள் அவ்வளவும் போர்ச் சூழ்நிலையில் அடியோடு மறைந்துபோய், தாக்கு! அழி! வெட்டு! குத்து! - என்ற உணர்ச்சியை அனைவரும் பெற்றுவிடுகின்றனரே; அப்படியானால் அந்தப் பண்புகள் - மனிதத்தன்மை - அடியோடு மடிந்து போகின்
றனவா? மடிந்து விடுகின்றன என்றும் கூறுவதற்கில்லை, ஏனெனில் போர் முடிந்து வேறோர் புதியநிலை ஏற்பட்டதும், மீண்டும் மெல்ல மெல்ல அந்தப் பண்புகள் மலருகின்றன; சமுதாயத்துக்கு மணம் அளிக்கின்றன.

மடிவதில்லை, ஆனால் அந்தப் பண்புகள் மங்கி விடுகின்றன, மறைந்து விடுகின்றன.

பகைவனிடம் மூண்டுவிடும் வெறுப்புணர்ச்சி, அந்தப் பண்புகளை மூலைக்குத் துரத்தி விடுகின்றன! கண் சிமிட்டிக் களிப்பூட்டும் விண்மீன்களைக் கருமேகம் மறைத்து விடுவது போன்ற நிலை!

கப்பிக்கொண்டிருக்கும் காரிருளுக்குப் பின்னே, விண்மீன் உளது என்பதனையும், அதன் ஒளி காரிருளைக்கூடக் கிழித்தெறிந்துகொண்டு வெளிக் கிளம்பக்கூடும் என்பதனையும் எடுத்துக் காட்டுகிறார் ஹால் கெயின் எனும் பேரறிவாளர், ‘இரும்பு முள்வேலி’ எனும் தமது நூலில்.

இங்கிலாந்துடன் ஜெர்மனி போரிடும் நாட்கள்; உலகையே தன் காலடியில் விழச் செய்திடத் துணிந்து கெய்சர், போர் நடத்திய நாட்கள்; முதலாவது உலகப்போர்.

ஜெர்மனியில், கெய்சர் போர் வெறி மூட்டுகிறார் என்று துவங்கிய பேச்சு, ஜெர்மானியர் போர் வெறியர்கள் என்ற கட்டத்தை அடைந்துவிட்டது. ஒரு நாட்டு மக்களுடைய நாட்டுப் பற்றையும், ‘ராஜபக்தி’யையும் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு, அந்த நாட்டு அதிபன் அவர்களைப் பலிக்கிடாக்களாக்கி, இரத்த வெள்ளம் புரண்டோடச் செய்தான்.

கெய்சர் மீதுதான் முதலில் கண்டனம், வெறுப்பு, கொதிப்பு, பிறகு ஜெர்மன் மக்கள் மீதே அந்த வெறுப்புணர்ச்சி பாய்ந்தது.

குழந்தைகளை வெட்டித் தின்கிறார்கள் ஜெர்மன் வெறியர்கள் என்று இங்கிலாந்து நாட்டு முதியவர்கள் - குறிப்பாகத் தாய்மார்கள் பேசினர்.

ஜெர்மன் மொழி, ஜெர்மன் தொழில் திறமை, ஜெர்மன் கலை என்று எல்லாவற்றின்மீதும் அந்த வெறுப்புணர்ச்சி பாய்ந்தது.

போர் மூளுவதற்கு முன்பு இங்கிலாந்து நாட்டில் பல்வேறு துறைகளில் வேலை பார்த்துவந்த ஜெர்மானியர்கள் விரட்டப் பட்டனர் அல்லது சிறை வைக்கப்பட்டனர்.

ஜெர்மனியுடன் எந்தவிதமான தொடர்பும் கூடாது என்பது தேசியக் கட்டளையாகிவிட்டது, எல்லாத் தொடர்பு

களும் அறுத்தெறியப்பட்டது.

இங்கிலாந்து நாட்டு அரச குடும்பம் ஜெர்மன் கெய்சர் குடும்பத்துக்கு நெருங்கிய உறவு. அதனை வெளியே சொல்லக் கூடக் கூசினர். பகை உணர்ச்சி அந்த அளவு கப்பிக்கொண் டிருந்தது. அந்தச் சூழ்நிலையில் நடைபெறும் நெஞ்சை உருக்கும் நிகழ்ச்சிகளைக் கொண்டது. ‘இரும்பு முள்வேலி.’ போர் கிளப்பிவிடும் பகை உணர்ச்சிக்கும் இதயத்தின் அடியிலே மறைந்திருக்கும் அன்பு உணர்ச்சிக்கும் இடையே நடைபெறும் போர் பற்றி விளக்கம்.

மான் தீவு பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திலே ஒரு பகுதி. அங்கு ஒரு விவசாயக் குடும்பம். மிராசுதாரனிடம் ஒரு பண்ணையைக் குத்தகைக்கு எடுத்துப் பாடுபட்டு வாழ்க்கையை நடத்திச் செல்லும் ஒரு குடும்பம். முதியவர் - அவர் மகன் - அவர் மகள் - கொண்ட குடும்பம்.

ஜெர்மனியை அழித்தொழித்தாலொழிய, இங்கிலாந்து மட்டுமல்ல, மனிதகுலமே அழிந்து போகும் என்ற உணர்ச்சி எங்கும் பரவி இருந்ததுபோலவே, அந்தச் சின்னஞ்சிறு தீவிலும் பரவி இருந்தது.
முதியவரின் மகன், பிரிட்டிஷ் படையில் சேர்ந்தான்; முதியவர் மகிழ்ந்தார்.

என் அண்ணன் போர் வீரன்! பொல்லாத ஜெர்மானியரை அழிக்கும் புனிதப் போரிலே ஈடுபட்டிருக்கிறான் என்ற எண்ணம் கொண்ட அந்த எழில் மங்கை, தன் குடும்பத்துக்கே அண்ணன் பெருமை தேடிக் கொடுக்கிறான் என்ற பெருமித உணர்ச்சியில் திளைத்திருக்கிறாள்.

எங்கும் பரவி, எல்லோர் உள்ளத்திலும் பொங்கி வழிந்து கொண்டிருந்தது போலவே மோனா மனத்திலும் ஜெர்மானியர் மீது வெறுப்புணர்ச்சி ததும்பிக் கிடந்தது. ஒரு துளியும் ஈவு இரக்கம் காட்டக்கூடாது; கொன்று குவிக்கவேண்டும் அந்தக் கொடியவர்களை; பூண்டோடு ஒழிக்கவேண்டும் என்று கருதினாள்.

ஜெர்மானியர்களின் காட்டுமிராண்டித்தனம் - கொலை பாதகத்தன்மை பற்றிய தகவல்கள் நிரம்பக் கிளம்பியபடி இருந்தன. ஒன்றுக்குப் பத்தாக இவை வளர்ந்தன. வெறுப்புணர்ச்சி மூண்டுவிட்டிருந்தது. முதியவர்கூட அவ்வளவு கொதித்துப் பேசுவதில்லை. அவருடைய மனத்திலே சிறிதளவு பழைய பண்புகள் உலவிட இடம் இருந்தது. அந்த மங்கைக்கோ உள்ளம் முழுவதும் அந்த ஒரே ஓர் உணர்ச்சிதான்; ஜெர்மானியர் மீது வெறுப்பு; அளவு கடந்த அகற்றப்பட முடியாத வெறுப்பு. அதிலும் போர்க்களம் சென்றுள்ள தன் அண்ணனைப் பற்றிய எண்ணம், அந்த வெறுப்புணர்ச்சியை வெந்தழல் ஆக்கி விட்டிருந்தது.

ஜெர்மனி வெற்றிகளை ஈட்டிக்கொண்டு, ஆணவத்தைக் கக்கிக்கொண்டிருந்த கட்டம் முடிந்து தற்காத்துக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது; பல இடங்களிலே தோல்வி கண்டு திணறிக்கொண்டிருந்தது; ஜெர்மானியர் பலர் கைதாயினர்.

அந்தக் கைதிகளை, இந்தத் தீவிலே கொண்டு வந்து சிறை வைக்க ஏற்பாடாகிறது.

காட்டுமிராண்டிகள் வருகிறார்கள். இங்கு நாம் இருக்கக் கூடாது என்று எண்ணி அந்தத் தீவிலிருந்து பல குடும்பங்கள், வெளியேறி விட்டன. சில குடும்பத்தினர் தீவிலே தங்கினர் என்றாலும் பெண்களை மட்டும் வேறு இடத்துக்கு அனுப்பி விட்டனர்.

இங்கு ஏன் அந்த இழி மக்களைக்கொண்டு வருகின்றனர். கேவலம், இது மிகக் கேவலம். அந்தக் கொடியவர்களின் நிழல் பட்டாலே இழிவாயிற்றே. அவர்களுக்கா நமது தீவிலே இடம்! அந்த வெறியர்கள் இங்கு இருக்கப்போகிறார்கள் என்றால், அதே இடத்தில் நாம் இருப்பதா! கேவலம்! மிகக் கேவலம் அது! அப்பா! நாம் இந்தத் தீவைவிட்டு வேறிடம் போய்விடலாம். அந்தக் கொடியவர்களைக் காண்பது கூடப் பெரும்பாவம்! இங்கு இருக்கலாகாது என்று பெண் வற்புறுத்துகிறாள். அவள் உள்ளத்தில் வெறுப்புணர்ச்சி அவ்வளவு கப்பிக்கொண்டிருக் கிறது. முதியவர் புன்னகை செய்கிறார், அடே அப்பா! எவ்வளவு கொதிப்புடன் பேசுகிறாள் மகள் என்பதை எண்ணி.

மகளே! மற்றவர்கள் தீவை விட்டுச் சென்றுவிட்டாலும், நாம் செல்வதற்கு இல்லை மிராசுதாரர், நாம் இங்கேயே இருந்தாகவேண்டும்; பண்ணையைப் பார்த்துக்கொள்ள வேண்டும், கவனிப்பு இல்லாவிட்டால் பண்ணை பாழாகிவிடும் என்கிறார். மேலும் இங்குச் சிறை வைக்கப்பட இருப்பவர்களுக்கு, நாம்தான் பால் தரவேண்டி இருக்கிறது வேறு வழியில்லை... என்கிறார்.

பால் தருவதா! அந்தப் பாவிகளுக்கா! எந்தப் பாதகர்களை ஒழித்திடும் புனிதப்போரிலே அண்ணன் ஈடுபட்டிருக்கிறாரோ, அந்தப் பாதகர்களுக்கு நாம் பால் தருவதா! அக்கிரமம்! அநியாயம்! இழிசெயல்! நான் ஒருபோதும் சம்மதிக்க மாட்டேன். அந்தப் பாவிகளை வெட்டி வெட்டிப் போடவேண்டும், கழுகுக்கும் நரிகளுக்கும்; அவர்களுக்கு நமது தீவிலே இடம்! நமது பண்ணையிலிருந்து பால்! இது என்ன அநியாயமப்பா!! - என்றெல்லாம் அவள் எண்ணிக் கொதிப்படைகிறாள். முதியவர் புன்னகை புரிகிறார்.

அதனால் என்னம்மா! அவர்களும் மனிதர்கள்தானே! ஜெர்மானியர்களாகப் பிறந்ததனாலேயே அவர்கள் மனித குலம் அல்ல என்று கூறிவிட முடியுமா! போர் மூண்டுவிட்டது நம் நாட்டுக்கும் ஜெர்மனிக்கும், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்கிறோம். அதனால், ஜெர்மானியர் மனிதர்களே அல்ல என்று கூறிவிட முடியுமா! - என்று கனிவாகப் பேசுகிறார் முதியவர்; கன்னி கடுங்கோபம் கொள்கிறாள்.

போரின்போது, இரு தரப்பினருந்தான் அழிவு வேலையில் ஈடுபடுகின்றனர். எந்தச் சமயத்தில், எந்த இடத்தில், எவருடைய கரம் ஓங்கி இருக்கிறதோ அவர்கள் அதிக அளவுக்கு வெட்டி வீழ்த்துவார்கள்! இரு தரப்பினரும் ஒரேவிதமான வேலையில் - கொல்லும் வேலையில் - ஈடுபட்டுள்ளனர். இதிலே ஒரு தரப்பினர் மட்டுமே காட்டுமிராண்டிகள் - கொலைப் பாதகர்கள் - இரத்தவெறி பிடித்தலைவோர் - என்று கூறிவிட முடியுமா? போர், காட்டுமிராண்டித்தனத்தைக் கட்டவிழ்த்து விட்டு விடுகிறது. ஒரு தரப்பினர் குண்டுகளால் தாக்குகின்றனர், மற்றோர் தரப்பினர் மலர் கொண்டு அர்ச்சிக்கின்றனர் என்பதா போர்! கொலை நடக்கிறது, பெரிய அளவில் - சட்டத்தின் அனுமதியுடன் - சமூகத்தின் ஒப்புதலுடன்! இதிலே அதிகமான அளவு அழிவைச் செய்பவன் வெற்றி வீரனாகிறான். அவனுடைய கரம் இரத்தக்கறை படிந்தது. ஆனால் அது நாட்டைக் காத்த கரம் - வெற்றி ஈட்டிய கரம் - புகழ் தேடித் தந்த கரம் என்பதால் பாராட்டப்படுகிறது.

முதியவர் இதுபோன்ற கருத்தினைக் கொண்டவராக இருந்திக்க வேண்டும்; அவருடைய உள்ளம் ஒரேயடியாக வெறுப்பு நிரம்பியதாக இல்லை; நியாய உணர்ச்சியும் சிறிதளவு உலவிட இடமிருந்தது.

இப்படி ஒரு மனமா! ஜெர்மானியர் வந்து தங்கினால் என்ன!! அவர்களுக்குப் பருகிடப் பால் தந்தால் என்ன என்று பேசுவதா! நமது நாட்டு மக்களின் இரத்தத்தைக் குடிக்க கிளம்பி யுள்ள கொடியவர்கள் இந்த ஜெர்மானியர், இவர்களுக்குப் பருகப் பால்! நாம் கொடுப்பதாம்! என்ன நியாயம் இது! அப்பா ஏன் இப்படிக் கெட்டுக்கிடக்கிறார் - பால் தருவதாமே பகைவர்களுக்கு!! கொடுத்தால் என்னம்மா என்று வாதாடுகிறார்! அவர்களும் மனிதர்தான் என்று! நியாயம் பேசுகிறார்! அவர்கள் மனிதர்களா!! பதைக்கப் பதைக்கக் கொன்றார்கள் நம்மவர்களை! பச்சிளங் குழந்தைகளைக்கூடக் கொன்றனர் அக்கொடியவர்கள்! அவர்களும் மனிதர்கள்தான் என்கிறார் அப்பா! ஏன் இவருக்கு இப்படிப் புத்திகெட்டுப் போய்விட்டது. அங்கே அண்ணன் துரத்துகிறான் ஜெர்மன் கொடியவர்களை - இங்கே அப்பா பால் தரச் சொல்கிறார், அண்ணன் என்ன எண்ணிக்கொள்வார் இதனை அறிந்திடின். செச்சே! அப்பா சுத்த மோசம்!

ஜெர்மன் கைதிகளை அடைத்து வைக்க, சிறைக்கூடம் கட்டப்படுகிறது. கைதிகள் தப்பித்துக்கொள்ளக்கூடாது என்பதற்காக, அங்கு இரும்பு முள்வேலி போடப்படுகிறது. மிருகங்களை அடைத்து வைப்பதுபோல ஜெர்மன் கைதிகளை அடைத்து வைக்கிறார்கள். வெளியே பிரிட்டிஷ் போர் வீரர்கள் காவல் புரிகின்றனர், தப்பியோட முயற்சித்தால் சுட்டுத்தள்.

கைதிகளான எல்லா ஜெர்மானியருமே, போர் வீரர்கள் அல்ல; பலர் தொழிலில், வாணிபத்தில்; பல்வேறு அலுவலகங் களில் ஈடுபட்டிருந்தவர்கள்; சிலர் செல்வம் படைத்தவர்கள்கூட!

எல்லாம் ஜெர்மானியர்தானே! வெறியர்கள் - கொடியவர் கள் தானே! இவர்களை இப்படித்தான் அடைத்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் மோனாவுக்கு முதியவருக்கோ ஒரு பச்சாதாப உணர்ச்சி, ஜெர்மானியர்கள் தமக்கு அளிக்கப்படும் உணவு மோசமாக இருப்பதாகக் குறைபட்டுக் கொள்கிறார்கள் என்று கூறுகிறார். இதுகளுக்கு அப்படிப்பட்ட உணவுதான் தர வேண்டும் என்கிறாள் மோனா. அவள் இதயத்தில் வெறுப்புணர்ச்சி நிரம்பி இருப்பதால். வீட்டை விட்டு, குடும்பத்தை விட்டு இழுத்து வரப்பட்டிருக்கிறார்கள்; அது போதாதா; மேலும் வாட்ட வேண்டுமா அவர்களை என்று முணுமுணுக்கிறார் முதியவர். ஜெர்மன் கொடியவர்களுக்காகப் பரிவு காட்டுவது மோனாவுக்குத் துளியும் பிடிக்கவில்லை. நம்முடைய மக்கள் களத்திலே பூப்பந்தாட்டமா ஆடிக் கொண்டிருக்கிறார்கள்! விருந்தும் இசையும் நடன விழாவுமா நடக்கிறது அவர்களுக்கு. என்னென்ன இன்னலோ, ஆபத்தோ நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கிறதோ! அதைப்பற்றி நினைத்துக்கொண்டால் நெஞ்சிலே நெருப்பு விழுவது போலிருக்கிறது. இவர் என்னடா என்றால், இந்தக் கைதிகளை அடைத்து வைத்திருக்கும் இடம் மோசம், போடப்படும் சாப்பாடு மட்டம் என்று உருகுகிறார். அந்தப் பாவிகளுக்காக! அந்தப் பாதகர்களுக்காக! - என்று மோனா கூறுகிறாள். முதியவர், கல்மனம் மகளே! உனக்குக் கல்மனம்! - என்று மெல்லக் கூறுகிறார்.

மேலும் மேலும் ஜெர்மானியர் கொண்டு வரப்படுகின்றனர். இரும்பு முள்வேலி போட்ட சிறைக்குள்ளே தள்ளப் படுகிறார்கள்.

மோனாவின் மனம் இளகவில்லை! படட்டும், படட்டும்! அனுபவிக்கட்டும், அனுபவிக்கட்டும்!! என்றே கூறுகிறாள். என்ன செய்தார்கள் அவர்கள்? என்ன செய்யவேண்டும்? அவர்கள் ஜெர்மானியர்கள்; அது போதாதா அவர்களிடம் வெறுப்புக் கொள்ள!

அத்தனை வெறுப்புக் கொண்டிருக்கும் மோனா, அந்த ஜெர்மானியர்களை நாளைக்கு இரண்டு வேளையாவது பார்த்துத் தொலைக்க வேண்டி வருகிறது. பால் வாங்கிக் கொண்டுபோக, ஜெர்மன் கைதிகளில் சிலர் வருகிறார்கள். பிரிட்டிஷ் போர் வீரர்கள் உடன் வருகின்றனர், கைதிகள் தப்பி ஓடிடாதபடி பார்த்துக்கொள்ள. ஜெர்மானியரைப் பார்க்கும் போதே எள்ளும் - கொள்ளும்! வெடிக்கிறது மோனாவின் முகத்தில். சுட்டுவிடுவதுபோன்ற பார்வை! காலில் ஒட்டிக் கொள்ளும் மலத்தைக் கழுவினயா பிறகும் ஒருவிதமான அருவருப்பு இருந்தபடி இருக்குமல்லவா, அதுபோல, அவர்களைக் கண்டாலே மோனாவுக்கு ஓர் அருவருப்பு.

அந்தக் கைதிகள் அவளிடம் ஏதாவது பேச முயன்றார்கள், மோனா வாய்திறக்க மறுக்கிறாள். இதுகளுடன் பேசுவேனா!! என்று நினைக்கிறாள்.

மகளே! இவ்வளவு குரூரமாக இருக்கிறாயே! நமது வேதம் என்ன சொல்லுகிறது. பகைவனுக்கும் அருள் பாலிக்கும்படி அல்லவா கூறுகிறது. பரமண்டலத்துள்ள பிதாவை நோக்கி நாம் பூஜிக்கும் பாடல் நினைவிற்கு வரவில்லையா என்று கேட்கிறார். அவர்களுக்கு அந்த நினைவெல்லாம் இல்லை; ஒரே ஓர் எண்ணம்தான் அவள் உள்ளத்தில் இடம் பிடித்துக்கொண்டிருக் கிறது, வெறுப்பு! ஜெர்மானியர்கள் என்ற உடன் ஒரு கொதிப்பு! அவர்கள் அழிந்துவிடவேண்டும் என்ற ஆத்திரம் உணர்ச்சி. பகைவனுக்காகக்கூடப் பகவானிடம் பிரார்த்திக்கலாம், ஆனால் அந்தப் பகைவன், மனிதனாக இருக்க வேண்டுமே! ஜெர்மானியரைத்தான் மோனா, மனிதர் என்றே ஏற்றுக்கொள்ள மறுக்கிறாளே; மனித வடிவிலே உலவும் மிருகங்கள்; பிரிட்டிஷ் இரத்தத்ததைக் குடிக்கக் கிளம்பிடும் கொடிய விலங்குகள் என்றல்லவா திடமாக நம்புகிறாள். அவர்களிடம் பச்சாதாபமா...! முடியுமா!!
-------------

இரும்பு முள்வேலி (2)

பால் எடுத்துக்கொண்டுபோக பண்ணை வீட்டுக்கு வந்திடும் ஜெர்மானியரில் ஒருவன், உடல் மெலிந்து கிடந்தான். எப்போதும் இருமிக் கொண்டிருப்பான்; வெளுத்துப்போன முகம். சில வேளைகளில், அவனிடம் சிறுதளவு பச்சாதாப உணர்ச்சி தோன்றும், மோனாவின் உள்ளத்தில், ஆனால் அந்த உணர்ச்சியை ஒரு நொடியில் விரட்டி அடிக்கிறாள். ஐயோ பாவம் என்று எண்ணுவதா! பச்சாதாபம் காட்டுவதா! இவனுக்கா! இளைத்திருக்கிறான், இருமிக் கொண்டிருக்கிறான்; ஆனால் இவன் யார்? இவனும் ஜெர்மானியன்தானே! மனித குலத்தை நாசமாக்கத் திட்டமிட்டுப் போரினை மூட்டிவிட்ட ஜெர்மன் இனத்தான் தானே!! இவனிடமா பச்சாதாபம் காட்டுவது கூடாது! முடியாது!

மோனாவின் உள்ளத்திலுள்ள வெறுப்புணர்ச்சி வெற்றி பெறுகிறது.

ஜெர்மானியர் செய்திடும் அட்டூழியங்களைப் பற்றி இதழ்கள் செய்திகளைத் தந்தபடி உள்ளன. அவற்றினைப் படிக்க, படிக்க வெறுப்புணர்ச்சி மேலும் கொழுந்துவிட்டு எரிகிறது, எரிகிற நெருப்பிலே கொட்டப்படும் எண்ணெய் ஆகிறது அந்தச் செய்திகள்.

முதியவர் வழக்கம்போலப் பிரார்த்தனையின்போது, சமாதானத்தை வழங்கும்படி ‘பிதா’வை வேண்டிக்கொள்கிறார். சமாதானம் வழங்கும்படி பிதாவை வேண்டிக்கொள்வதுகூட மோனாவுக்குப் பிடிக்கவில்லை. பிதாவே! ஜெர்மானியரைப் பூண்டோடு அழித்தொழித்திடு, மனித குலத்தை ரட்சித்திடு! - என்பதுபோலப் பிரார்த்தனை இருந்திடின் மோனாவுக்குப் பிடித்தமாக இருக்கும். முதியவர் தமது பிரார்த்தனையில் ஜெர்மானியர் அழிக்கப்பட்டாகவேண்டும் என்பதனை வலியுறுத்தாமல் சமாதானம் வேண்டும் என்று மட்டும் கூறு கிறாரே, நியாயமா... நாட்டுப்பற்று உள்ளவர்கள் இப்போது சமாதானம் காணவா விரும்புவார்கள். போர்! போர்! பகைவர் அழிந்தொழியும் வரையில் போர்! இதனை அல்லவா விரும்புவர்! பகைவனை அழித்தொழிக்கும் வல்லமையை ஆண்டவனே! எமக்கு அளித்திடும் என்பதல்லவா நாட்டுப்பற்று மிக்கவன் செய்திடத்தக்க பிரார்த்தனை. மோனா இதுகுறித்து முதியவரிடம் கேட்டே விடுகிறாள்.

“அப்பா உண்மையிலேயே சமாதானம் வேண்டும் என விரும்புகிறீரா?”

“ஆமாம் மகளே? சமாதானம் நாடக்கூடாதா...”

“நான் சமாதானம் மலர்வதை விரும்பவில்லை. போர் வேண்டும்! மேலும் மேலும் போர் வேண்டும்! அந்தக் கொடிய மிருகங்கள் உலகிலிருந்தே விரட்டி அடிக்கப்படும் வரையில் போர்வேண்டும்”

முதியவர் தன் மகளின் நிலையை உணருகிறார்; ஆனால் அவள் போக்கை மாற்றமுடியாது என்று கண்டு கொள்கிறார் போலும், திருத்த முயலவில்லை; வாதிடக்கூட இல்லை.

நமது மகள் மட்டுமா, நாட்டிலே அனைவருமே இப்போது இவ்விதமான போக்குடன் உள்ளனர்; இது திருத்தப்படக் கூடியதாகத் தெரியவில்லை; ஓங்கி வளர்ந்து வளர்ந்து பேருருக் கொண்டு, பெரியதோர் அழிவை மூட்டிவிட்டு, பிறகே இந்த வெறி உணர்ச்சி மடியும், இடையிலே இந்த உணர்ச்சியின் வேகத்தைக் குறைத்திடுவதுகூட முடியாத காரியம் என்று முதியவர் எண்ணிக் கொண்டார்போலும்.

ராபி - மோனாவின் அண்ணன் கடிதம் எழுதுகிறான். களத்தின் நிலைபற்றி, உற்சாகத்துடன், நம்பிக்கையுடன் பெரியதோர் தாக்குதலை நடத்தப்போகிறோம்; முன்னணிப் படையினில் நான் இருக்கப் போகிறேன்; இந்தத் தாக்குதல் பகவைர்களை அழித்திடும் என்று கடிதத்தில் குறிப்பிட்டிருக் கிறான். கேட்கக் கேட்க இனிப்பாக இருக்கிறது மோனாவுக்கு.

“அப்பா! மோனாவிடம் சொல்லு, அவள் எனக்கு எழுதிய கடிதத்தின் சில பகுதிகளை, அதிகாரிகள் சிலரிடம் படித்துக் காட்டினேன், அவர்கள் மிகவும் மெச்சுகிறார்கள்; உன் தங்கை போன்ற உணர்ச்சியும் எழுச்சியும்கொண்ட வீரர் ஆயிரவர் இருந்தால் போதும் இந்தப் போர் ஒரு திங்களில் வெற்றி தந்திடும் என்று கூறிப் பாராட்டுகின்றனர்.” ராபியின் கடிதத்திலிருந்து இந்தப் பகுதியைப் படித்திடக் கேட்டபோது மோனாவுக்குப் புல்லரித்தது; பூரித்துப் போனாள்.

பிரிட்டிஷ் படைகள் பலமாகத் தாக்குகின்றன.

ஜெர்மன் படைகள் மிரண்டோடுகின்றன.

ஜெர்மன் படைக்குத் தோல்வி மேல் தோல்வி ஏற்படுகிறது.

இதழ்கள் தந்திடும் இந்தச் செய்தி தலைப்புகள் மோனாவுக்குச் செந்தேனாக இனிக்கிறது.

ராபி ஏன் இந்த வெற்றிச் செய்திகளைப் பற்றித் தெரிவிக்க வில்லை; கடிதம் காணோமே என்று எண்ணி கவலை கொள்கிறாள்.

ஒரு நாள் அஞ்சல் வருகிறது; அதை எடுத்துக்கொண்டு வருபவன் முகத்தில் ஈயாடவில்லை; குனிந்த தலையுடன் வருகிறான்; கடிதத்தைக் கொடுத்துவிட்டுப் போய்விடுகிறான்; நீளமான உறை; சர்க்கார் முத்திரை குத்தப்பட்டிருக்கிறது. முதியவர் பிரித்துப் படிக்கிறார், சர்க்கார் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்ளும் சேதி என்னவென்றால், படை வீரன் ராவி, களத்தில்... முழுவதும் படிப்பானேன்; விஷயம் புரிந்து விட்டது, ராபி இறந்துவிட்டான். வீரமரணம் நாட்டைக் காத்திடும் முயற்சியில் உயிரை இழந்தான் - என்றெல்லாம் பாராட்டு இணைக்கப்பட்டிருக்கிறது கடிதத்தில்; ஆனால் தந்தையின் தத்தளிப்பை, வீரமரணம் என்று பாராட்டுதல் குறைத்திட முடியுமா...

மகளே! படி அம்மா! பாரம்மா!

மோனா படிக்கிறாள்! அண்ணன் இறந்துவிட்டான்! ராபி மறைந்துவிட்டான்! ராபியைக் கொன்றுவிட்டார்கள் - கொடியவர்கள் - ஜெர்மானியர்! அந்தக் கொடிய ஜெர்மானிய இனத்தவரிலே ஒரு பிரிவினர், கைதிகள் என்ற பெயருடன் இங்கே உள்ளனர்! என் அண்ணனைக் கொன்றுவிட்ட கொடியவர்கள், ஜெர்மானியர்! அவர்களிலே ஒரு பகுதியினர் இங்கே! அவர்கள் பருகிடப் பால் நமது பண்ணையிலிருந்து. என் அண்ணனின் குருதியைக் குடித்துவிட்டார்கள் அந்தக் கொடியவர்கள்; அந்த இனத்தார் இங்குப் பருகிட நாங்கள் பால் அளிக்கிறோம்!

இதுபோல என்னென்ன எண்ணிக் கொண்டிருந்திருப்பாள், பாவம், ஏற்கெனவே மூண்டு கிடந்த கொதிப்பு மேலும் எந்த அளவு கிளம்பிவிட்டிருக்கும்!

பிதாவிடம் பிரார்த்திக்கச் சொன்னாரே, அப்பா! இப்பொழுது என்ன சொல்லுவார்!

அப்பா! பால் கொடுத்து வருகிறோமே பாதகர்களுக்கு; அந்த ஜெர்மன் கொடியவர்கள் உன் மகனுடைய இரத்தத்தை, என் அண்ணன் உயிரைக் குடித்து விட்டார்களப்பா! அண்ணனைக் கொன்றுவிட்டார்களப்பா! அந்தக் கொடிய இனத்தவர், இங்கேயும் உள்ளனர்; நமது பண்ணையில் பால் வாங்கிப் பருகிக் கொழுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் பச்சாதாபம் காட்டச் சொன்னீர்களே! அவர்கள் ஜெர்மானியராக இருந்தால் என்ன, அவர்களும் மனிதர்கள் என்று வாதாடினீர்களே! அந்த மிருகங்கள் என் மகனை - என் அண்ணனை நாட்டுப்பற்று மிக்கவனை, நியாயத்தை நிலை நாட்ட போரிட்ட மாவீரனைக் கொன்றுவிட்டார்களே அப்பா! இப்போது என்ன சொல்கிறீர்? பிரார்த்தனை செய்ய வேண்டுமா, பிதாவிடம் சமாதானம வழங்கும்படி! சமாதானமா அப்பா வேண்டும்!! அண்ணன் உயிரைக் குடித்த கொடியவர்கள் கொட்டமடித்துக் கொண்டிருப்பது, நாம் பிதாவிடம் சமாதானம் வேண்டி பூஜித்துக் கிடப்பதா? சொல்லுங்கள் அப்பா! சொல்லுங்கள்!! என்ன செய்யலாம் சொல்லுங்கள் - என்றெல்லாம் கேட்டிட அந்தக் கன்னி துடித்திருப்பாள்.

முதியவரின் நிலை? மகன் இறந்துவிட்டான் என்ற செய்தியை அறிந்ததும், அருவடைய மனத்திலே சிறிதளவு தலைதூக்கியபடி இருந்ததே மனிதத்தன்மைக்கே உரிய பண்பு, அன்பு காட்டுதல், பகைவருக்கும் இரங்குதல், அது மடிந்து விட்டது; அடியோடு மடிந்தே போய்விட்டது. இதயத்திலே ஒரு பயங்கரமான சம்மட்டி அடி விழுகிறது; முதியவர் கீழே சாய்கிறார், நினைவு இழந்து. மருத்துவர் வருகிறார், இதயத்திலே அடி! என்றாலும் இப்போதைக்கு ஆபத்து இல்லை. படுத்துறங் கட்டும்; முழு ஓய்வு வேண்டும் என்று கூறிச் செல்கிறார்.

முதியவர் படுத்துக்கிடக்கிறார்; மோனாவின் உள்ளக் கொதிப்பு மேலும் ஓங்கி வளருகிறது.

ஜெர்மானியர்களை ஆண்டவன் அழித்தொழிக்க வேண்டும்.

எல்லா ஜெர்மானியரையும் ஜெர்மன் அதிபர்கள் - ஜெர்மன் கெய்சர் என்போரை மட்டுமல்ல, எல்லா ஜெர்மானி யரையும் அழித்திட வேண்டும் - ஆண் - பெண் குழந்தை குட்டி அவ்வளவு பேரும் - ஒருவர் பாக்கியில்லாமல் ஒழிந்துபோக வேண்டும். ஆண்டவன் ஜெர்மன் மக்கள் அனைவரையும் அழித்தாகவேண்டும்; இல்லையென்றால் அவர் உண்மையான ஆண்டவன் அல்ல!!

மோனாவின் பிரார்த்தனை இதுபோல! வேதனை நிரம்பிய உள்ளத்திலிருந்து பீறிட்டுக் கிளம்பும் பிரார்த்தனை.

முதியவர் நடத்தச் சொன்ன பிரார்த்தனை, பகைவனுக்கும் அருள் பாலிக்கும்படி, மோனா அதனை மறுத்தாள். கல்மனம் அம்மா உனக்கு என்று முதியவர் கூறினார். இப்போது?

ஆண்டவனே எழுந்தருளுவீர்! உமது பகைவர்கள் சிதறி ஓடிடட்டும். கடவுள் நெறி மறந்தோர் கொட்டமடித்திடவிடக் கூடாது. தேவதேவா! தழலென எரியும் கரித்துண்டுகள் அவர்கள் மீது பொழியட்டும். நெருப்பிலே தள்ளிடுவீர் அந்த நாசகாலர் களை! நரகப் படுகுழியில் தள்ளிடுவீர்! மீண்டும் அவர்கள் தலை தூக்கிடாதபடி படுகுழியில் அந்தப் பாவிகளைத் தள்ளிடுவீர்!

இது முதியவரின் பிரார்த்தனை. வேதப் புத்தகத்தில், பாவிகளை ஆண்டவன் அழித்தொழித்த படலத்தில் உள்ள பிரார்த்தனையைப் படிக்கிறார். பரிவு, பச்சாதாபம், பகைவனுக்கு இரங்கல் என்பவை இப்போது அவருடைய உள்ளத்தில் இடம்பெற மறுத்துவிடுகிறது. மகனைக் கொன்ற மாபாவிகள் என்று எண்ணும்போதே, ஜெர்மானியர் பூண்டோடு அழிந்து விடவேண்டும் என்ற கொதிப்பு எழுகிறது. மோனா சொன்னது தான் சரி; அவர்கள் அழிக்கப்படவேண்டியவர்கள் என்கிறார் முதியவர். ஆண்டவனை அழைக்கிறார் சமாதானம் வழங்கச் சொல்லி அல்ல; ஜெர்மானியர்களை அடியோடு அழித்தொழிக்கும்படி.

ஜெர்மன் கைதிகள் அடைப்பட்டுக் கிடந்ததால், மிருக உணர்ச்சி மேலிட்ட நிலையினராகின்றனர்.
அடிக்கடி சச்சரவு, குழப்பம், அடிதடி, அமளி.

கலகம் செய்த கைதிகள் சிலர் காவற்காரர்களால் சுட்டுத் தள்ளப்படுகின்றனர்.

நிலைமையை அறிந்துபோக வந்திருந்த மேலதிகாரி, இவர்களை நாய்களை அடைத்து வைப்பதுபோல அடைத்து வைத்தால், நாய்குணம் ஏற்பட்டுவிடத்தானே செய்யும். ஒரு வேலையுமின்றி அடைபட்டுக் கிடப்பதால் வெறிகொண்டு விடுகின்றனர். ஏதாவது வேலை கொடுக்கவேண்டும் என்று கூறுகிறார்.

இரும்பு முள்வேலி போடப்பட்ட இடங்களிலேயே தொழில் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன, கைதிகள் வேலை செய்ய.

மிருகங்களை மனிதர்களாக்க முயல்கிறார்கள் என்று கேலி பேசினாள் மோனா, இந்தப் புதிய திட்டத்தைப் பார்த்து.

வழக்கப்படி பால் வாங்கிக்கொண்டுபோக வரும் இருமல் காரனுக்குப் பதிலாக வேறோர் ஜெர்மானியன் வந்தான், ஓர் நாள்.

மோனா அதனைக் கவனிக்கக்கூட இல்லை; பால் பாத்திரத்தை அவன் பக்கம் வைத்தாள். இது நான் எடுத்துப்போக வேண்டிய பாத்திரமா? என்று புதியவன் கேட்டபோதுதான் திரும்பிப் பார்த்தாள். அவன் மருத்துவமனைக்குச் சென்று விட்டான்; அவனுக்குப் பதிலாக நான் வந்திருக்கிறேன் என்றான் புதியவன்; இளைஞன்; சாந்தமான முகத்தினன்.

குரலிலே கடுமை இல்லை, நடையிலே ஆணவம் காணோம், முகத்திலே வெறித்தனம் காணோம்; யார் இவன்? ஜெர்மானியனாக இருக்க முடியுமா என்ற ஐயம் மோனாவுக்கு.

உன் பெயர்?

ஆஸ்க்கார்

ஆஸ்க்கார்...?

ஆஸ்க்கார் ஹெயின்

மூன்றாம் நம்பர் சிறைக் கூடத்திலா இருக்கிறாய்?

ஆமாம்!

மோனா, எதுவும் பேசாமல் அவனை ஒருகணம் உற்றுப் பார்த்துவிட்டு, “அதுதான் நீ எடுத்துச் செல்லவேண்டிய பாத்திரம்” என்று கூறுகிறாள்.

‘நன்றி!’ என்று கூறுகிறான் ஜெர்மானியன். பதிலுக்கு நன்றி கூற நினைத்தாள் மோனா, முடியவில்லை. அவன் போகிறான்; அவள் பார்க்கிறாள்; அவன் போன பக்கமே பார்த்துக் கொண்டிருக்கிறாள்; வாசற்படியில் நின்றுகொண்டு பார்க்கிறாள்; பிறகு பலகணி வழியாகவும் பார்க்கிறாள்;

அன்று முழுவதும் மோனா சிடுசிடுவென்று இருக்கிறாள்; ஏதோ குமுறல், மனத்தில்.

வழக்கப்படி பிரார்த்தனைக்கு அழைக்கிறார் முதியவர்.

இன்றிரவு வேண்டாமப்பா, தலைவலி என்று கூறி விடுகிறாள் மோனா, தலைவலியா!!

அன்றிலிருந்து ஒரு மனப்போராட்டம்; மோனா தன் உள்ளத்தில் இடம்பெறப் பார்க்கும் புதிய உணர்ச்சியை விரட்டும் முயற்சியில் மும்முரமாகிறாள்; முடியவில்லை. முதியவருடன் அதிகநேரம் அளவளாவுகிறாள்; அவர் புதிதாகப் பெற்றுள்ள வெறுப்புணர்ச்சியைத் தனக்கு ஊட்டுவார், உள்ளத்தில் இடம்பெறப் பார்க்கும் புதிய உணர்ச்சியை விரட்டிடுவார் என்ற நம்பிக்கையுடன்.

ஜெர்மானியர்களை அழித்தொழிக்கச் சொல்லி முதியவர் ஆண்டவனைப் பிரார்த்திக்கிறார். மோனா? பிரார்த்தனையில் கலந்துகொள்கிறாள்; ஆனால் வேறு ஏதோ ஓர் உணர்ச்சி அவளை வேறு எங்கோ அழைக்கிறது; இழுத்துச் செல்லப் பார்க்கிறது. அந்த ஆஸ்க்கார் கூடவா, ஜெர்மானியன். அத்தனை பணிவாக இருக்கிறான்; கனிவாகப் பேசுகிறான்; முகத்தைப் பார்த்தால் கொடியவனாகத் தெரியவில்லை; ஜெர்மானியனா இவன்; ஆஸ்க்கார் போன்றவர்கள்கூட இருக்கிறார்களா ஜெர்மன் இனத்தில் - என்றெல்லாம் எண்ணுகிறாள் மோனா.

நரகப் படுகுழியில், பகைவர்களைத் தள்ளு - என்று ஆண்டவனைப் பிரார்த்திக்கிறார் முதியவர்; மோனாவுக்குப் பிடித்தமான பிரார்த்தனை அது; முன்பு! இப்போது? அந்தப் பிரார்த்தனை அவளுக்கு என்னமோபோல இருக்கிறது. ஆண்டவனையா இவ்வளவு கொடுமைகளைச் செய்திடச் சொல்லிக் கேட்பது. ஆண்டவன் என்றால் தயாபரன் அல்லவா! அவரிடம் இப்படியா ஒரு பிரார்த்தனை செய்வது என்று கூடி எண்ணிச் சிறிதளவு அருவருப்பு அடைகிறாள். கன்னியின் இதயத்திலே புதிய கருத்து கருவளவாகிறது!

மோனா, சபலத்துக்கு இடமளிக்கக்கூடாது என்று உறுதியுடன் போரிடுகிறாள். ஜெர்மன் கைதிகளைக் கண்டால் கடுகடுப்பைக் காட்டுவது; அவர்களிடம் ஒரு பேச்சும் பேசாதிருப்பது; அவர்களிடம் தனக்கு உள்ள வெறுப்பை வெளிப்படையாகத் தெரியச் செய்வது என்ற முறையில் நடந்து கொள்கிறாள். ஆனால் அந்த ஆஸ்க்கார்!

லட்விக் இறந்து விட்டான்?

யாரவன் லட்விக்?

முன்பெல்லாம் வருவானே இருமிக்கொண்டு... அவன் தான் லட்விக். வயது 22! பரிதாபம். செத்துவிட்டான். கடிதம் எழுதவேண்டும் அவன் தாயாருக்கு.

மோனாவுக்குத் துக்கம் நெஞ்சை அடைத்துக் கொள்கிறது. கண்களில் நீர் துளிர்க்கிறது; ஆனால் சமாளித்துக்கொண்டு கூறுகிறாள்.

மகனை இழந்த தாய் அவள் ஒருத்திதானா! போர் மூட்டிவிடுபவர்கள் அதனால் விளையும் பொல்லாங்குகளை அனுபவிக்கத்தானே வேண்டும்.

ஆஸ்க்கார் பதிலேதும் பேசவில்லை. திரும்பிச் செல்கிறான். சுடச்சுடப் பதில் கொடுத்துவிட்டோம் என்ற திருப்தியுடன் அல்லவா மோனா இருக்கவேண்டும்! இல்லையே! போகிறவனைப் பார்த்துக்கொண்டே நிற்கிறாள்; தவறாகப் பேசிவிட்டோம் என்றெண்ணி வருந்துபவள் போல! சிறிது தூரம் சென்றவன் திரும்பிப் பார்க்கிறான்! மோனாவின் உள்ளம்? தவறு செய்துவிட்டாய், தவறு செய்துவிட்டாய் என்று கூறுவது போலிருந்தது.

மற்றோர் நாள் அந்த ஆஸ்க்கார் ஒரு சிறு பெட்டியைக் கொண்டு வருகிறான். இது இறந்துபட்ட லட்விக்கின் தாயார் அனுப்பியது. அவன் கல்லறை மீது தூவும்படி கண்ணாடியாலான இந்த மலரினை அனுப்பி வைத்திருக்கிறார்கள். நான் கல்லறை இருக்கும் இடம் செல்ல முடியாது. அனதால், இதனைத் தாங்கள்...

ஆஸ்க்கார் கொஞ்சும் குரலில் பேசுகிறான்; மோனா கண்டிப்பாகச் சொல்லி விடுகிறாள், என்னால் முடியாது, இதனை எடுத்துக்கொண்டு போய்விடு என்று. அவன் போய் விடுகிறான்; ஆனால் பெட்டியை அங்கேயே வைத்துவிட்டு!!

கிடக்கட்டும் இங்கேயே எனக்கென்ன என்றுதான் மோனா எண்ணிக்கொள்கிறாள். அன்று பகலெல்லாம் அவள் எதிரே கிடக்கிறது அந்தப் பெட்டி! எடுத்து எறியவில்லை! முடியவில்லை! ஆஸ்க்காரின் முகம், அதிலே தெரிந்ததுபோலும்.

மாலையில் யாருமறியாமல் சென்சு லட்விக்கின் கல்லறை மீது அந்தக் கண்ணாடி மலரைத் தூவி விட்டு வந்துவிடுகிறாள்.

மோனா! ஜெர்மன் இனம் முழுவதும் அழிக்கப்பட வேண்டும். குழந்தை குட்டிகள் உட்பட என்று கொதித்துக் கூறிடும் கன்னி, ஒரு ஜெர்மானியன் கல்லறைமீது மலர் தூவுகிறாள்! எப்படி முடிந்தது! பகைவனிடம் பச்சாதாபம் காட்டுவதா! என்று கேட்ட மோனா செய்கிற காரியமா இது! எப்படி ஏற்பட்டது அந்த மாறுதல்? யார் புகுத்தியது அந்தப் புதிய உணர்ச்சியை? ஆஸ்க்கார்! அவன் பார்வை, அவளுடைய உள்ளத்தில் ஒரு புதிய உணர்வை எழுப்பிவிட்டது. எவ்வளவோ முயன்று பார்த்தும் அவளால் அந்தப் புதிய உணர்வை உதறித் தள்ளிவிட முடியவில்லை. இடம் பிடித்துக்கொண்டது!

ராபியின் வீரதீரத்தை மெச்சிப் பிரிட்டிஷ் துரைத்தனம் அனுப்பி வைத்த வீரப் பதக்கத்தை மோனா அணிந்து கொள்கிறாள் எழுச்சியுடன்.

வீரப்பதக்கம்! அண்ணன் பெற்றது? கொடியவர்களாம் ஜெர்மானியரைக் கொன்று குவித்ததற்காக! அந்த ஜெர்மானியரில் ஒருவன் இந்த ஆஸ்க்கார். அவன் இந்த வீரப்பதக்கம் பற்றி விவரம் கேட்கிறான். மோனா கூறுகிறாள். நமது இனத்தவர்களைச் சாகடித்ததை வீரம் என்று மெச்சித் தரப்பட்டது இந்தப் பதக்கம், என்பதனை அறிந்ததும் ஆஸ்காரின் முகம் கடுகடுப்பை அல்லவா காட்டவேண்டும்! இல்லை! அவன், ராபியைப் புகழ்ந்து பேசுகிறான்; பாராட்டுதலுக்குரிய வீரன் என்று!!

என்ன விந்தை இது! கப்பிக்கொண்டிருந்த வெறுப்புணர்ச்சி எங்கே போய்விட்டது.

தன் அண்ணனைக் கொன்ற பாவிகளாம் ஜெர்மானிய இனத்தவரில் ஒருவனாம் ஆஸ்க்காரிடம், மோனா வெறுப்பைக் காட்ட முடியவில்லை; எவ்வளவோ முயன்றும்.

தன் இனத்தவரைச் சுட்டுத் தள்ளியதற்காக வீரப்பதக்கம் பெற்ற ராபியைப் பாராட்டிப் பேசுகிறான் ஜெர்மானியன் ஆஸ்க்கார்!

கப்பிக் கொண்டிருக்கும் காரிருளைக் கிழித்தெறிந்து கொண்டு விண்மீன் கண் சிமிட்டுகிறதே!!

மோனாவிடம் ஏதோ ஒரு மாறுதல் தோன்றிவிட்டிருக்கிறது என்பது முதியவருக்குத் தெரிகிறது விவரம் புரியவில்லை.

பிரிட்டிஷ் கப்பலை ஒரு ஜெர்மன் நீர்முழ்கிக் கப்பல் தாக்கி அழித்ததுபற்றியும், அதனால் பலர் மாண்டது பற்றியும் கூறக் கேட்ட முதியவர், கொதித்துச் சபிக்கிறார், ஜெர்மானியர் நாசமாகப் போகட்டும்! ஆழ்நரகில் வீழட்டும்! என்று, ஏனப்பா இப்படி பகை உணர்ச்சி. நமது வேதம் இதனை அனுமதிக்காது. பகைவனிடமும் பச்சாதாபம் காட்டச் சொல்லுகிறது என்று முன்பு சொல்வீரே, நினைவில்லையா என்று கேட்டு விடுகிறாள் மோனா! முதியவர் திகைக்கிறார். மகளே! என்ன இது இவ்விதம் பேசுகிறாய்! உன் போக்கே மாறிவிட்டிருக்கிறதே! எப்படி? எதனால்? என்று கேட்கிறார்.

அவளுக்கே புரியவில்லை அந்தக் காரணம்! முதியவர் கேட்கிறார்; பதில் என்ன தருவாள்.

மோனா, முதியவர் மனத்தில் குடியேறி விட்டாளோ?

முதியவர், மோனா மனதிலே இடம்பெற்று விட்டாரோ!

முதியவரின் முன்னாள் மனப்பான்மை இந்நாள் மோனா வுக்கும், முன்னாளில் மோனா கொண்டிருந்த மனப்பான்மை இப்போது முதியவருக்கும் அமைந்துவிட்டதோ! விந்தை! ஆனால் காரணம்?

ஜெர்மானியரின் அட்டூழியம் பற்றிய செய்திகளைப் படிக்கிறார் முதியவர்; அவர் உள்ளத்திலே மூண்டு கிடந்த வெறுப்புணர்ச்சி மேலும் தடித்துக்கொண்டிருக்கிறது.
--------------

இரும்பு முள்வேலி (3)

அதே இதழ்களில், போர்ச் சூழ்நிலையிலும், இதயம் படைத்தவர்கள் நற்செயல் சில புரிகின்றனர் என்பதற்கான செய்திகள் வெளி வருகின்றன. மோனா அதைப் பார்த்துப் பார்க்கிறாள். ஏற்கெனவே மெல்ல மெல்ல அவள் உள்ளத்திலிருந்து கலைந்துகொண்டிருந்த வெறுப்புணர்ச்சி மேலும் கலைகிறது.

எப்போது கலையத் தொடங்கிற்று அந்த வெறுப்புணர்ச்சி? ஆஸ்க்கார் எனும் ஜெர்மானியனைக் கண்ட நாள்தொட்டு; அவன் பேச்சிலே குழைந்திருந்த பாசத்தை உணர்ந்த நாள்முதல்.

ஜெர்மானியரின் பாசறைப் பகுதியில், பலத்த அடிபட்ட பிரிட்டிஷ் போர் வீரனொருவன் தப்பிச் செல்ல முயல்கிறான். துரத்திப் பிடிக்க வருகின்றனர். ஒரு வீட்டுக்குள் நுழைந்து கொள்கிறான். அது ஒரு ஜெர்மானியன் வீடு!

அந்த வீட்டிலே, ஜெர்மன் படைத்தலைவர்கள் சிலர் விருந்துண்டுக் களிநடமாடுகின்றனர்.

வீட்டுக்கு உரியவனான ஜெர்மானியன், பிரிட்டிஷ் வீரனைக் கண்டு விடுகிறான்.

ஒரு குண்டு! ஓர் அலறல்! ஒரு பிணம்! பிறகு கை தட்டல், பாராட்டு, வீரப்பதக்கம்!! - இப்படித்தானே நிகழ்ச்சி வடிவம் கொண்டிருக்கவேண்டும். அதுபோல நடக்கவில்லை.

உயிருக்குப் பயந்து ஒளிந்து கொள்ள வந்த பிரிட்டிஷ் படை வீரனை, அந்த ஜெர்மானியன் பிடித்து மேலிடம் ஒப்படைக்கக் கூட இல்லை. ஜெர்மன் தளபதிகள் கண்களில் பட்டு விடாதபடி மறைந்துகொள்ள வழிசெய்து தருகிறான். அந்தத் தளபதிகள் சென்றான பிறகு, பிரிட்டிஷ் வீரனைத் தப்பி ஓடிவிடும்படிச் சொல்லுகிறான்!

பிரிட்டிஷ் வீரன் உயிரை ஜெர்மானியன் காப்பாற்றுகிறான்! தீராத பகை! ஓயாத போர்! பயங்கரமான பழிவாங்கும் உணர்ச்சி! எங்கும் வெறுப்புணர்ச்சி கப்பிக் கொண்டிருக்கிறது. என்றாலும் ஒரு ஜெர்மானியன் இதயம் படைத்தவனாகிறான், இரக்கம் காட்டுகிறான், பகைவனுக்கே துணை செய்கிறான்.

இந்தச் செய்தியை மோனா இதழிலிருந்து முதியவருக்குப் படித்துக் காட்டுகிறாள்.

புரிகிறதா அப்பா, எந்த இனத்திலும் நல்லவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். இதோ இந்த ஜெர்மானியன் நல்லவனல்லவா? என்று கேட்கிறாள். முதியவர் மனத்தில் மூண்டுள்ள வெறுப்புணர்ச்சியைக் குறைத்திடலாம் என்ற எண்ணத்துடன்.

முதியவர் அதற்குத் தயாராக இல்லை.

“இவன் நல்லவனாக இருக்கலாம் மகளே! ஆனால், என் மகன் உயிரைக் குடித்த குண்டு வீசியவன், இவனுடைய மகனாக இருந்திருந்தால்... மகளே! ஜெர்மானியரில் நல்லவர் என்று ஒரு பிரிவும் உண்டா? வெறியர்கள்! அழிந்துபட வேண்டியவர்கள்! மனிதகுல விரோதிகள்! ?” என்று முதியவர் பேசுகிறார்.

அந்தப் பேச்சைக் கேட்டுக்கொண்டிருக்க முடியவில்லை மோனாவினால், அந்த இடத்தைவிட்டுச் செல்கிறாள்.

முதியவர் காண்கிறார்! என்னமோ நேரிட்டு விட்டிருக்கிறது, என் மகளின் மனத்திலே ஓர் மாறுதல் புகுந்து விட்டிருக்கிறது, என்ன காரணம் இந்த மாறுதலுக்கு? என்றெண்ணித் திகைக்கிறார்

போரினில் ஈடுபட்டு இதயம் இரும்பாகி விடும் நிலையிலே கூட, மனிதத்தன்மை பளிச்சிட்டுக் காட்டத் தவறுவதில்லை என்பதற்கான சான்றுகள் ஒன்றன்பின் ஒன்றாக மோனாவுக்குக் கிடைக்கின்றன. அதன் காரணமாக ஜெர்மானியர் அனைவருமே கொடியவர்கள் என்ற எண்ணம் தகர்ந்து போய்விடுகிறது.

அவர்களிலேயும் நல்லவர்கள் உண்டு என்ற எண்ணம் பிறக்கிறது.

ஜெர்மானியர் எல்லோருமே கொடியவர்கள் என்றால் இவ்வளவு நல்லவனான ஆஸ்க்கார் எப்படி அந்த இனத்திலே பிறந்திருக்க முடியும் என்ற கேள்வி எழுந்தது. மோனாவின் மனமாற்றம் வேகமாக வளர்ந்தவண்ணம் இருந்தது. ஆனால் அவளைச் சுற்றிலும் சூழ்ந்து கொண்டிருந்ததோ, வெறுப் புணர்ச்சிதான். முதியவரே ஒவ்வொரு நாளும் ‘பிதா’வை வேண்டிக் கொண்டிருக்கிறார், கொடிய ஜெர்மானியரைக் கொன்றொழி என்று.

ராபி களத்திலே கடும் போரில் ஈடுபட்டிருந்தபோது பிரிட்டிஷ் படை வரிசையினால் தாக்கப்பட்டு, குற்றுயிராகிய ஒரு ஜெர்மன் போர் வீரர், ராயி இருந்த ‘குழிக்கு’ அருகே துடித்துக் கொண்டிருந்தான். அந்தக் காட்சியைக் கண்ட ராபி உருகிப் போனான். இவனை இப்படி இம்சைப்பட விடக்கூடாது என்ற இரக்க உணர்ச்சி எழுந்தது. பாய்ந்தோடிச் சென்று துடித்துக் கிடந்த ஜெர்மானியனைத் தன் வரிசையினர் பதுங்கிக் கிடந்த ‘குழிக்கு’ இழுத்துக்கொண்டு வந்தான். ஆனால் அந்த முயற்சியில் ஜெர்மன் படை வரிசையினரின் குண்டுகள் அவனைத் துளைத்தன; துடித்துக் கிடந்தான்.

ஒரே குழியில், ஒரு ஜெர்மன் போர்வீரன், பிரிட்டிஷ் படையினரின் குண்டடிப்பட்டு; ஒரு பிரிட்டிஷ் போர் வீரன், ஜெர்மன் குண்டடிப்பட்டு! ஜெர்மானியன் துடிப்பது கண்டு மனம் தாளவில்லை பிரிட்டிஷ் ராபிக்கு! ஜெர்மன் வீரனைக் காத்திடச் சென்றபோது ஜெர்மன் குண்டு தாக்குகிறது பிரிட்டிஷ் ராபியை! குண்டடிபட்ட இருவரும் ஒரே குழியில் கிடக்கிறார்கள்.

பிரிட்டிஷ் படை வேறிடம் செல்கிறது, அடிப்பட்ட இருவரையும் விட்டுவிட்டு.

ஜெர்மானியன் மரணத்தின் பிடியிலிருந்து தப்பிவிட்டான்; பிரிட்டிஷ் ராபியோ மரணத்தின் பிடியில் சிக்கிக் கொண்டான்.

கடைசி நேரம் நெருங்குவது அறிந்த ராபி, தன் கைக் கடிகாரத்தைக் கொடுக்கிறான் ஜெர்மானியனிடம், நீ உயிர் தப்பி ஊர் திரும்பினால் இதனை என் தங்கையிடம் சேர்த்துவிடு என்று கூறிவிட்டு.

ராபி இறந்து விடுகிறான்; அந்த ஜெர்மானியன் பிழைத்துக் கொள்கிறான்.

அவன், ஆஸ்க்காருக்குப் பள்ளித் தோழன். விவரம் தெரிந்து கொண்டு அந்தக் கைக்கடிகாரத்தை ஆஸ்க்காருக்கு அனுப்பி வைக்கிறான். ராபியின் தங்கையிடம் கொடுத்து விடு, அதுதான் ராபியின் கடைசி விருப்பம் என்பதைக் கூறு என்று.

ஆஸ்க்கார் இந்தத் தகவலையும் கைக்கடிகாரத்தையும் மோனாவிடம் கொடுக்கிறான். அவள் மனம் பாகாய் உருகி விடுகிறது.

கடும்போர் நடைபெறும் களத்திலேகூட இப்படி ஒரு நட்புணர்ச்சி பூத்திட முடிந்ததே!

ஒரே பதுங்குமிடத்தில் அடிபட்ட இருவர்; ஒருவர் ஜெர்மானியர் மற்றவர் பிரிட்டிஷ்.

அவர்கள் வெட்டிக்கொள்ளவில்லை. சுட்டுக்கொள்ள வில்லை; மரணப் படுக்கையிலே வீழ்ந்துவிட்டிருந்த அந்த இருவரும் நட்புணர்ச்சி பெற்றனர், முடிந்தது.

இந்த மனிதத் தன்மைதான் இயற்கையானது.

போர் இந்த இயற்கையான பண்பை அழித்து விடுகிறது.

ஒருவரிடம் ஒருவர் நட்புணர்ச்சி காட்டிடப் பிறந்த மக்களை, ஒருவரை ஒருவர் சுட்டுத் தள்ளி கொள்ளச் செய்கிறது; வெறி ஊட்டுகிறது; மனிதத் தன்மையை மாய்க்கிறது; போர்! ஏன்தான் போர் மூட்டிக்கொள்கின்றனரோ! என்றெல்லாம் எண்ணி உருகுகிறாள் மோனா.

ஒரு முனையில், தன் தகப்பனாரின் உள்ளத்தில் வளர்ந்த வண்ணம் இருந்த வெறுப்புணர்ச்சியைப் போக்கிடப் போரிட வேண்டி இருந்தது. வெற்றி கிட்டவில்லை.

மற்றோர் முனையில், ஆஸ்க்கார் நிற்கிறான், இதயத்தில் இடம் கொடு என்று கேட்டபடி; மறுத்திடவும் முடியவில்லை, கொடுத்திடவும் துணிவில்லை; போர் மூள்கிறது; நாளாகவாக மோனாவின் போரிடும் ஆற்றல் குறைந்துகொண்டு வருகிறது.

எப்போதும் ஆஸ்க்கார் பற்றிய நினைவு; இரவிலும் பகலிலும்; பார்க்கும்போது பார்க்காதிருக்கும்போதும், அந்தப் பாசம் நிறைந்த கண்கள் அவளைப் படாதபாடு படுத்துகின்றன.
வாய் திறந்து அவன் தன் காதலைக் கூறிவிடவில்லை. ஆனால் அவன் கண்கள் வேறென்ன பேசுகின்றன! ஜெர்மானியர்களை வெறுத்த நிலைமாறி, அவர்களிலும் நல்லவர் இருக்கின்றார்கள் என்ற அளவுக்குக் கருத்து மாற்றம் கொண்டு, ஆஸ்க்காரிடம் பச்சாதபம் காட்டத் தொடங்கி, பிறகு பரிவு கொள்ளத் தொடங்கி, இறுதியில் காதலே அல்லவா அரும்பத் தொடங்கிவிட்டது. நெஞ்சிலே நெருப்பு மூண்டு கிடந்தது; அங்குக் காதல் மலருகிறதே; எப்படி? எண்ணுகிறாள், விம்முகிறாள்; குமுறுகிறாள்; எப்படியாவது தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகப் போராடுகிறாள்; துடிக்கிறாள்.

கேட்டாயா பெண்ணே! அக்கொடியவர் செயலை. பள்ளிக்கூடத்தின் மீது குண்டுவீசி, பச்சிளங் குழந்தைகளைக் கொன்றுவிட்டனர். இந்தப் பாவம் சும்மா விடுமா! ஆண்டவன் இதைச் சகித்துக் கொள்வாரா! நமது அரசாங்கம் பழிக்குப் பழி வாங்காமலிருக்குமா! உடனே கிளம்ப வேண்டும், ஜெர்மன் குழந்தைகளைக் கொன்று போடவேண்டும். ஒரு பிரிட்டிஷ் குழந்தை கொல்லப்பட்டால், ஓர் ஆயிரம் ஜெர்மன் குழந்தைகள் கொல்லப்பட வேண்டும்! ஒன்றுக்கு ஓராயிரம்! பழிக்குப் பழி! - என்று பதறுகிறார் முதியவர்.

அவர்கள் செய்த கொடுமையை நாமும் செய்வதுதான் நியாயமா!

குழந்தைகள் தூய்மையின் சின்னம்! ஜெர்மன் குழந்தை களாக இருந்தால் என்ன! - இவ்விதம் பேசிப் பார்க்கிறாள் மோனா; முதியவரின் கோபம் அதிகமாகிறதே தவிர பழிவாங்கும் உணர்ச்சி மாறுவதாக இல்லை.

அதே சம்பவம் பற்றிய சேதி அறிந்த ஆஸ்க்கார், பச்சாதாபம் காட்டுகிறான். என் நாட்டவர் இந்தக் கொடுமை செய்ததைக் கேள்விப்பட்டு நான் வெட்கப்படுகிறேன், வேதனைப் படுகிறேன் என்கிறான். மோனாவின் மனம் சாந்தி அடையவில்லை. மிகக் கடுமையான முறையில் பேசுகிறாள்.

நீ வெட்கப்பட்டு என்ன பயன், வேதனைப்பட்டு என்ன பயன். எங்கள் நாட்டுக் குழந்தைகளுக்கு நேரிட்டதுபோன்ற கொடுமை, உங்கள் நாட்டுக் குழந்தைகளுக்கு நேரிடவேண்டும், அப்போது புரியும் என்று மோனா கூறிவிட்டுப் போகிறாள். ஆஸ்க்கார் திகைத்துப் போகிறான்.

சில நாட்கள், வரையில் மோனா ஆஸ்க்காரைப் பார்க்க முயலவில்லை, ஜெர்மானியரிடம் வெறுப்புணர்ச்சிகொள்ள முயல்கிறாள்.

கிறிஸ்துமஸ் பண்டிகை! கைதிகள் முகாமிலேயும் இசை, விருந்து, விழாக்கோலம்.

அன்றிரவு ஆஸ்க்கார் வருகிறான், வீடு நோக்கி.

வீட்டுக்குள்ளேயே வந்தமருகிறான்; காரணம், தனக்கு ஏற்பட்ட வேதனையை மோனாவிடம் கூறி ஆறுதல்பெற. அவனுடைய வீட்டின்மீது பிரிட்டிஷ் குண்டு வீசப்பட்டதில், அவனுடைய தங்கை பத்து வயதுச் சிறுமி இறந்துவிட்டிருக்கும் செய்தி அன்று அவனுக்குக் கிடைத்திருக்கிறது; வேதனை தாள மாட்டாமல் வந்தேன், ஆறுதல் அளித்திட வேறுயாரும் இல்லை. அதனால் இங்கு வந்தேன். தங்கச் சிலை என் தங்கை! பத்தே வயது! சின்னஞ்சிறு சிட்டு! என் உயிர்! எங்கள் குடும்பத்துக் கொடிமலர்! - என்றெல்லாம் கூறிக் குமுறிக் குமுறி அழுகிறான் ஆஸ்க்கார்.

வேதனை நிரம்பிய இந்தச் செய்திபற்றி அவனுக்குக் கிடைத்த கடிதத்தைப் படித்துவிட்டு மோனா கலங்குகிறாள். அருகே செல்கிறாள் ஆறுதல் கூற! அணைத்துக்கொள்கிறாள்! அவன் மெய்மறந்த நிலை அடைகிறான். எவருமே பிரிக்க முடியாததோர் அணைப்பு! காலமெல்லாம் இதற்காகத்தானே காத்துக்கிடந்தோம் என்று ஒருவருக்கொருவர் கூறிக்கொள்ள வில்லை, ஆனால் அந்த அணைப்பின் பொருள் அதுவாகத்தான் இருந்தது.

ஜெர்மானியரும் பிரிட்டிஷாரும் ஒருவரை ஒருவர் வெட்டி வீழ்த்திக் கொள்கின்றனர். இங்கு ஓர் ஜெர்மன் வாலிபனைத் தழுவிக்கொள்கிறாள் ஓர் பிரிட்டிஷ் கன்னி; காம வெறியால் அல்ல, கயமைக் குணத்தால் அல்ல, எந்தத் தடையும் தகர்த் தெரியும் காதலின் தூய்மை தந்திடும் வலிவு காரணமாக இரண்டு உள்ளங்கள் கலந்துவிட்டன; இன பேதம், மூண்டுள்ள பகை, நடைபெறும் போர், கப்பிக்கொண்டுள்ள வெறுப்புணர்ச்சி எதுவும் அவர்களைத் தடுக்க முடியவில்லை. அவர்கள் ஜெர்மனி - பிரிட்டன் என்ற நாட்டுக் கட்டுகளை மீறியதோர் காதலால் கட்டுண்டு கிடந்தனர். ஒரு நிமிடமா, ஓராயிரம் ஆண்டுகளா எவ்வளவு நேரமாக ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி நின்றனர் என்பது இருவருக்கும் புரியாத நிலை. நாடு இனம் எனும் உணர்ச்சிகளைக் கடந்த நிலை மட்டுமல்ல, காலத்தையும் கடந்ததோர் நிலை! காதல் உணர்ச்சி அவர்களைப் பிணைத்து விட்டது.

கீழே ஏதோ பேச்சுக்குரல் கேட்ட முதியவர், தள்ளாடித் தள்ளாடி வந்து பார்க்கிறார், ஜெர்மானியனுடன் தன் மகள் குலவு வதை! திகைத்தார்! துடித்தார்! பதறினார்! கதறினார்! அடி கள்ளி! உன் அண்ணனைக் கொன்றவர் ஜெர்மானியர்; நீ அணைத்துக் கொண்டிருப்பது ஒரு ஜெரமானியனை! விபசாரி! குடும்பத்துக்கும், நமது இனத்துக்கும் இழிவு தேடிவிட்டாயே! இந்தக் கள்ளக் காதல் காரணமாகத்தான் உன் போக்கு மாறிவிட்டிருந்ததா! பாவி! இந்தப் பாவம் உன்னைச் சும்மா விடுமா! உன் அண்ணனின் ஆவி உன்னைச் சுற்றிச் சுற்றி வட்டமிட்டு சித்திரவதை செய்யாதா? அண்ணன் உயிர் குடித்த அக்கிரம ஜெர்மானிய இனத்தானுடன், அடிப் பாதகி! விபசாரி.

முதியவரால் அந்த அதிர்ச்சியைத் தாங்கிக்கொள்ள முடிய வில்லை. மகனைக் களத்திலே சாகடித்தான் ஒரு ஜெர்மானியன்! மகளின் கற்பையே அழிக்கத் துணிந்தான் மற்றோர் ஜெர்மானியன்! இதனைக் கண்ட பிறகமா உயிர் தங்கும் உடலில்! கீழே சாய்ந்தார். கூக்குரல் கேட்டு அங்கு வந்த பண்ணையாட்கள், முதியவரைப் படுக்கையில் கிடத்தினர். மோனாவின் இழிசெயலைப்பற்றி முதியவர் பதறிக் கூறியது அவ்வளவையும் அவர்கள் கேட்டுவிட்டிருந்தனர். மோனா இனி அவர்களிடமிருந்து தப்ப முடியாது. அவள் பாதகி, காதகி, விபசாரி! என்று கூறிடும் அந்த ஊர் முழுதும். திரும்பிப் பார்த்தாள், ஆஸ்க்காரைக் காணோம். நடந்ததை நினைத்துக் கொண்டாள், அவளுக்கே நடுக்கம் எடுத்தது. படுக்கையில் பார்க்கிறாள், முதியவர் மரணத்தின் பிடியில் தன்னை ஒப்படைத்துவிட்டதை. சுற்றிலும் பார்க்கிறாள், சுட்டுவிடுவது போன்ற பார்வையைச் செலுத்தும் பண்ணையாட்களை. முதியவர் இறந்துவிட்டார்.

ஊரே அவளைத் தூற்றுகிறது! பண்ணையாட்கள் அவளிடம் வேலை செய்வது இழிவு என்ற கூறி விலகிக் கொள்கிறார்கள்.

அப்பனைச் சாகடித்தவள்.
ஜெர்மானியனுடன் குலவினவள்,
கெட்ட நடத்தைக்காரி,
காம சேட்டைக்காரி.
எனவெல்லாம் தூற்றுகிறார்கள்; இதயத்தைத் துளைக் கிறார்கள், நான் என்ன தவறு செய்தேன் என்று கேட்க முடியுமா? இனத்தவர் முழுவதும் ஜெர்மானியரிடம் வெறுப்புணர்ச்சியைக் கக்கிடும்போது இவள் ஒரு ஜெர்மானியனுடன் காதல் கொண்டால் சகித்துக்கொள்வார்களா! இனத்துரோகி நாட்டுத் துரோகி! பெண்குலத்தின் பெருமையையே அழித்தவள் என்று பேசத்தான் செய்வார்கள். ஜெர்மானியன் பிரிட்டனைத் தோற்கடித்து, பொன்னையும், பொருளையும்தான் கொண்டு போயிருப்பான், இந்தப் பொல்லாதவள் ஜெர்மானியனிடம் கற்பையே அல்லவா பறிகொடுத்தாள்; மனமொப்பி!

பண்ணை முழுவதும், முதியவர் மோனாவுக்கே சொந்த மாக்கி வைத்திருந்தார். தூற்றுவோர் தூற்றட்டும் என்று எண்ணிக் கொண்டு மோனா பண்ணை வேலைகளைப் பார்த்துக் கொண்டு வந்தாள்.

மோனாவும் ஆஸ்க்காரும் பல நாட்கள் சந்திக்கக்கூட இல்லை.

அவர்கள் இருவரும் கள்ளக்காதல் நடத்திக்கொண்டிருந்தனர், அதனை ஒரு நாள் முதியவர் கண்டு பிடித்துவிட்டார் என்று ஊர் பேசிற்று; நடைபெற்றதோ ஒரு கணம் தோன்றி அவர்கள் இருவரையும் பிணைத்துவிட்ட காதல் உணர்ச்சி. அதனை அவள் விளக்கிடத்தான் முடியுமா. ஊரே தூற்றுகிறது அவளை விபசாரி என்று.

வெறுப்புணர்ச்சிக்கும் மனிதத் தன்மைக்கும் நடைபெறும் கடும் போர், உள்ளத்தை உலுக்கிவிடத்தக்கது, பலருடைய வாழ்க்கையிலே விபத்துக்களை மூட்டிவிடக் கூடியது என்பது ‘இரும்பு முள்வேலி’போன்ற ஏடுகள் மூலம் விளக்கப்படுகின்றன.

ஆனால் இதிலே எடுத்துக் காட்டப்படும் ‘மக்கள் மனப் போக்கு’ எளிதிலே மாற்றப்படுவதில்லை, மூட்டிவிடப்பட்ட வெறுப்புணர்ச்சியிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்ள மக்களில் பெரும்பாலோரால் முடிவதில்லை.

வெறுப்புணர்ச்சி சூழ்நிலை கப்பிக்கொண்டிருக்கும் போதும் மோனா போல் ஒருவரிருவர் அதிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்கின்றனர் - என்றாலும் வெறுப்புணர்ச்சியின் பிடியில் தம்மை ஒப்படைத்துவிட்ட மக்கள், ‘மோனா’ போன்றவர்கள்மீது சீறிப் பாய்வர்.

மோனா, பிரிட்டிஷ் இனம்; ஆஸ்க்கார், ஜெர்மன் இனம்; இருந்தால் என்ன? காதல் அவர்களைப் பிணைக்கிறது! அதிலே என்ன தவறு என்று எண்ணிட முடியவில்லை, வெறுப்புணர்ச்சி கொண்ட மக்களால்.

எந்த நாட்டிலும் இவ்விதமான உணர்ச்சியின் பிடியில் சிக்கிக்கொண்ட மக்களின் தொகையே மிக அதிகம்.

பெர்ல் பக் எனும் உலகப் புகழ்பெற்ற ஆசிரியர். தமது படைப்புகளில், இதுபோன்ற உணர்ச்சிக் குழப்பங்களை விளக்கிக் காட்டியுள்ளார்.

மோனாவுக்கு ஏற்பட்ட பிரச்சினை தன் மனதிலே இடம் பெற்ற ஜெர்மானியனை மணம் செய்துகொள்வது தவறல்ல என்பதை நாட்டவர் ஒப்புக்கொள்ளச் செய்திடவேண்டும் என்பதாகும்.

மற்றோர் ‘முனை’யைக் காட்டுவதுபோல, பெர்ல் பக் ஓர் கதையைத் தீட்டி அளித்துள்ளார் ஜப்பானியர்களுக்கும் அமெரிக்கர்களுக்கும் போர் நடந்திடும் நேரம் - இரண்டாவது உலகப்போர் இட்லர் மூட்டிவிட்ட போர்!

ஜப்பானியரைக் கண்டதும் சுட்டுத்தள்ளவேண்டும் என்ற உணர்ச்சி அமெரிக்கர்களுக்கு; அதுபோன்றே ஜப்பானியருக்கும். இது ‘தேசிய உணர்ச்சி’ என்ற மதிப்புப் பெற்றுவிட்டிருந்த நேரம்.

அவனும் மனிதன்தான்! - என்று பேசுவதே தேசத் துரோகம்!

அவன் ஜப்பானியன், ஆகவே கொல்லப்பட வேண்டியவன் என்ற எண்ணம், ஏற்புடையது என்று ஆக்கப்பட்டு விட்டிருந்த சூழ்நிலை.

அந்நிலையில், ஏதோ விபத்திலே சிக்கி, குற்றுயிராகிக் கிடந்த நிலையில் ஓர் அமெரிக்கன், கடலோரம் கிடத்தப்பட்டிருப்பதை ஒரு ஜப்பானியன் காண்கின்றான்.

அந்த ஜப்பானியன் ஒரு டாக்டர். அமெரிக்கனோ, உயிருக்கு மன்றாடுகிறான்!

டாக்டரின் கடமை என்ன? விபத்திலே சிக்கி உயிர் துடித்துக்கொண்டிருப்பவனைக் காப்பாற்றுவது! இனம், ஜாதி எனும் எதனையும் கவனிக்கக்கூடாது. நோயாளி - டாக்டர் என்ற தொடர்பு மட்டுமே அப்போது தெரியவேண்டும்.

வீட்டுக்கு எடுத்துச் சென்று சிகிச்சை செய்கிறான் அமெரிக்கன் பிழைத்துக்கொள்கிறான்.

எந்த அமெரிக்கனைக் கொல்வது, ‘தேசியக் கடமை’ என்று கொள்ளப்படிருக்கிறதோ, அந்த அமெரிக்கனைச் சாவின் பிடியிலிருந்து மீட்டுவிட்டான்!

மருத்துவன், தன் கடமையைச் செய்தான்! ஆனால் ஜப்பானியன் என்ற முறையில் செய்யவேண்டியதை மறந்து!!

இது தேசத் துரோகம் என்று கருதப்படுமே, தன்மீது பழி வருமே என்ற பயம் பிடித்துக்கொள்கிறது ஜப்பானிய மருத்துவரை.

அதே ஊரில் இருந்த மேலதிகாரியிடம் சென்று, ஓர் அமெரிக்கன், பிடிபட்டிருக்கிறான் என்றும், தன் வீட்டில் அடைபட்டுக் கிடக்கிறான் என்றும் கூறுகிறான்.

அந்த அதிகாரி, அமெரிக்கனை இரவு இரண்டு ஆட்களை ஏவி கொன்றுவிடச் செய்வதாகக் கூறி அனுப்புகிறான்.

எந்த அமெரிக்கன் உயிரைக் காப்பாற்றினானோ, அதே அமெரிக்கன் உயிரைப் போக்க ஏற்பாடு செய்வதாக அதிகாரி கூறுகிறார்; அற்கு இந்த ஜப்பானிய மருத்துவர் உடந்தை!

இது கொலைபாதகச் செயல்! ஆனால், இரக்கமற்றவனா இந்த ஜப்பானியன் என்றால், இல்லை! உயிர் காத்தவன்! மருத்துவன்! எனினும் இதற்கு இணங்குகிறான். ஏன்? தன்னை ஒரு ஜப்பானியன் என்று மெய்ப்பித்துக் கொள்ள வேண்டுமே, அதனால்.

நாமாக அவனைக் கொல்லக்கூடாது. வேறு யாராவது கொன்றால் கொன்றுகொள்ளட்டும் என்று எண்ணுகிறான்.

இதற்கிடையில் அவன் மனத்தில் எவ்வளவு கடுமையான போராட்டம் நடந்திருக்கவேண்டும்!

ஜப்பானியனாக இருந்தாலும் தன் உயிரைக் காத்தானே இந்த உத்தமன் என்று எண்ணிக்கொண்டு படுத்துக் கிடக்கிறான் அந்த அமெரிக்கன்.

அவன் கொல்லப்படுவதற்கான ஏற்பாட்டினுக்கு அதே ஜப்பானியன் உடந்தையாகிறான் என்பதை அறியவில்லை. சாகக் கிடந்தவனை நாம்தானே காப்பாற்றினோம்; இப்போது அவனைக் கொல்வதற்கு நாம்தானே காரணமாக இருக்கிறோம்; அவனைச் சாகடிக்கவா பிழைக்க வைத்தோம் என்று எண்ணாமலிருந்திருக்க முடியுமா!

ஓரிரவு, ஈரிரவு, ஆகிறது; அமெரிக்கன் கொல்லப் படவில்லை.

கடைசியில், ஜப்பானியன், அமெரிக்கனை ஒரு படகில் ஏற்றி, தப்பிச் சென்றுவிட ஏற்பாடு செய்துவிடுகிறான். வேறோர் தீவில் அமெரிக்க முகாம் இருக்கிறது, அங்குப் போய்விடச் சொல்கிறான்.

மனிதத்தன்மை எனும் உணர்ச்சியின் வெற்றி என்பதா இதனை!

மேலதிகாரியிடம் சென்று, நீங்கள் சொன்னபடி ஆட்களை அனுப்பவில்லை; அவன் தப்பியோடிவிட்டான் என்று கூறுகிறான் ஜப்பானியன்.

மேலதிகாரி பதறவில்லை! அவரும் உள்ளூர அந்தக் ‘கொலை’ கூடாது என்று எண்ணினார்போலும்! அவர் உள்ளத்திலும் மனிதத்தன்மை மேலோங்கி நின்றிருக்கும்போல் தெரிகிறது.

உன் கடமையை நீ செய்தாய்; அமெரிக்கன் பிடிபட் டிருக்கிறான் என்பதை அறிவித்துவிட்டாய்; நான் அனுப்பிய ஆட்கள் தங்கள் கடமையைச் செய்யத் தவறிவிட்டார்கள். சரி! நடந்தது நடந்துவிட்டது! நடந்தது வெளியே தெரிய வேண்டாம்! - என்று மேலதிகாரி கூறி விடுகிறார்.
ஆக இரு ஜப்பானியர், தம்மிடம் சிக்கிய ஓர் அமெரிக்கனைக் கொன்றுபோட வாய்ப்பு இருந்தும் அவனைச் சாவின் பிடியிலிருந்து மீட்டதுடன், தப்பியோடிடவும் செய்துவிடுகின்றனர்.
-----------------

இரும்பு முள்வேலி (4)

இதுபோன்ற உணர்ச்சிகளின் மோதுதல், பலரால் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

வெறுப்புணர்ச்சி இயற்கையானது அல்ல; மூட்டி விடப் படுவது; மனிதத்தன்மைதான் இயற்கையானது, அதனைப் போர் மாய்த்துவிடுகிறது என்பதை விளக்கிட. ‘இரும்பு முள்வேலி’யில் மோனா, மனிதத் தன்மையின் எடுத்துக் காட்டாக விளங்குகிறாள். மெத்தப் பாடுபட்டுத் தன்னை வெறுப்புணர்ச்சியிலிருந்து விடுவித்துக் கொண்டவளாக!

அவள்மீது வெறுப்புணர்ச்சிகொண்டோர் பாய்கின்றனர்.

இது, காவல் புரிய வந்திருந்த ஒரு பிரிட்டிஷ் வீரனுக்குத் துணிவைக் கொடுத்து; மோனாவைச் சுற்றி வட்டமிடத் தொடங்கினான்.

ஜெர்மானியனுக்கே இணங்கியவள், நாம் தொட்டால் பட்டா போய்விடுவாள் என்று எண்ணிக்கொண்ட அந்த இழி மகன், ஓரிரவு அவள் வீடு சென்று கற்பழிக்கவே முயலுகிறான். அவள் போரிடுகிறாள்; அலறுகிறாள். எங்கிருந்தோ வந்த ஒருவன், அந்தக் கயவனைத் தாக்கித் துரத்துகிறான், தக்க சமயத்தில் வந்திருந்து தன் கற்பினைக் காத்த வீரன் யார் என்று பார்க்கிறாள் மோனா. ‘ஆஸ்க்கார்! அரும்பு மலர்ந்தேவிட்டது.

நிகழ்ச்சிகள் பலப்பல உருண்டோடுகின்றன.

கற்பழிக்க வந்த கயவனை ஜெர்மன் கைதிகள் சூழ்ந்து கொண்டு தாக்குகின்றனர், ஒருநாள்; மோனா தான் அவனைக் காப்பாற்றுகிறாள்.

தன்னைத் தாக்கியவர்களைத் தூண்டிவிட்டவன் ஆஸ்க்கார் என்று பழிசுமத்துகிறான் காவலாளிகளின் தலைவன். விசாரணை நடத்த மேலதிகாரிகள் வந்தபோது, ஆஸ்க்கார் குற்றமற்றவன் என்பதை விளக்கிக் காட்டுகிறாள் மோனா. தன் கற்பைக் கெடுக்க காவலர் தலைவன் முயன்றபோது, காப்பாற்றியவன் ஆஸ்க்கார் என்பதைக் கூறுகிறாள். ஆஸ்க்கார் குற்றமற்றவன் என்பது மெய்ப்பிக்கப்படுகிறது.

இனிக் களைந்தெரிய முடியாத அளவு வளர்ந்துவிட்ட காதல் உணர்ச்சியைத் தாங்கிக்கொண்டு இருவரும் தத்தளித்துக் கொண்டிருந்தனர். களத்திலே போர், ஜெர்மானியருக்கும் பிரிட்டிஷாருக்கும்; இங்குக் காதலா! ஒப்புமா உலகு? ஊரோ, மோனா ஜெர்மானியனுக்கு கள்ளக்காதலி ஆகிவிட்டாள் என்று ஏசுகிறது, சபிக்கிறார்கள் - வெறுப்பைக் கக்குகிறார்கள். அண்ணன் நாடு காக்க உயிரைக் கொடுத்தான்; இவள் பகைவனுக்குத் தன்னையே கொடுத்துவிட்டாள்! பிறந்தாளே இப்படிப்பட்டவள் ஒரு வீரக் குடும்பத்தில்! இவளையும் நாடு தாங்கிக்கொண்டிருக்கிறதே என்றெல்லாம் ஏசினர்.

மோனாவுக்கு இந்தத் தூற்றலைப் பற்றியெல்லாம் கவலை எழவில்லை, அவளுடைய கவலை முழுவதும், அவள் உள்ளத்தில் இடம்பெற்றுவிட்டிருந்த காதல் பற்றியே! என்ன முடிவு ஏற்படும். இந்தக் காதலுக்கு! இந்தக் காதல், நாடு, இனம் எனும் கட்டுகளை உடைத்துக்கொண்டு பிறந்துவிட்டது. போர்ப் புகையால் அரும்பை அழித்துவிட முடியவில்லை. மலரே ஆகிவிட்டது!! ஆஸ்க்காருடன் கடிமணம் செய்துகொண்டு வாழ்ந்தாக வேண்டும் இந்தப் போர்ச் சூழ்நிலையில் இது நடைபெறக்கூடிய காரியமா! அனுமதி கிடைக்குமா! சமுதாயம் ஒப்புக்கொள்ளுமா!

தத்தளிக்கிறாள் மோனா - திகைத்துக் கிடக்கிறான் ஆஸ்க்கார்.

காரிருள் நீங்குமா, பொழுது புலருமா, புது நிலை மலருமா என்று எண்ணி எண்ணி ஏங்கிக் கிடக்கின்றனர் காதலால் கட்டுண்ட இருவரும்.

விடிவெள்ளி முளைக்கிறது, பல இடங்களில் செம்மையாக அடிவாங்கி நிலை குலைந்து போய்விட்டது ஜெர்மன் படைகள். கெய்சரின் வெறிக்கு நாம் பலியாக்கப்பட்டோம் என்ற உணர்ச்சி ஜெர்மன் மக்களிடம் பீறிட்டுக்கொண்டு கிளம்பிற்று. நம்மை அழிப்பவர், உண்மையான பகைவர் பிரிட்டனிலே இல்லை. ஜெர்மனியிலே இருக்கிறார்,போர் மூட்டிவிட்ட கெய்சரே நம்மை அழித்திடத் துணிந்தவர், நாம் அழிவைத் தடுத்துக் கொள்ள வேண்டுமானால் கெய்சரை விரட்டவேண்டும்; போர் நிறுத்தத்தைக் கோரவேண்டும் என்று ஜெர்மன் மக்கள் துணிகின்றனர்; சமாதானம் ஏற்படுகின்றது. பீரங்கிச் சத்தம் நிற்கிறது; இரும்பு முள்வேலிகள் அகற்றப்படுகின்றன. கவலை தோய்ந்த முகங்
களிலெல்லாம் ஒரு களிப்பு பூத்திடுகிறது. போர் முடிந்தது! அழிவு இனி இல்லை! பகை இல்லை, புகை எழாது! களம் நின்று குருதி கொட்டினர் எண்ணற்றவர்;ஆயிரமாயிரம் வீரர் பிணமாயினர்; இனி வீரர் வீடு திரும்பலாம்; பெற்றோரை மகிழ்விக்கலாம். காதற் கிழத்தியுடன் கொஞ்சி மகிழலாம், குழந்தைகளின் மழலை கேட்டு இன்பம் பெறலாம் உருண்டோடி வரும் பீரங்கி வண்டிகள் கிளப்பிடும் சத்தம் வீழ்ந்து வீழ்ந்து வேதனைத் தீயால் துளைக்கப்பட்ட செவிகளில் இனி மகனே! அப்பா! அண்ணா! மாமா! தம்பி! அன்பே! கண்ணாளா - என்ற அன்பு மொழி இசையெனப்புகும்; மகிழ்ச்சி பொங்கும்.

சடலங்கள் கிடக்கும் வெட்ட வெளிகள், இரத்தம் தோய்ந்த திடல் அழிக்கப்பட்ட வயல், இடிபாடாகிவிட்ட கட்டடங்கள், ஆழ்குழிகள், அதிலே குற்றுயிராகக் கிடந்திடும் வீரர்கள் - இவற்றையே கண்டு கண்டு புண்ணாகிப் போயிருந்த கண்களில், இனி வாழ்வு தெரியும், மாடு மனை தெரியும் மக்கள் சுற்றம் தெரிவர், விருந்து மண்டபம் தெரியும், விழாக்கோலம் தெரியும், பூங்கா தெரியும், ஆங்கு உலவும் பூவையின் புதுமலர் முகம் தெரியும்; கண்கள் களி நடமிடும்.

மோனாவுக்கு ஆஸ்க்காருக்கும்கூடப் புதுவாழ்வு பிறந்திடு மல்லவா!

பகைவனிடமா காதல், ஜெர்மன் வெறியனிடமா காதல் என்ற பேச்சுக்கு இனி இடமில்லை அல்லவா?

சமாதானம் ஏற்பட்டுவிட்டது, இனி ஜெர்மானியரும் பிரிட்டிஷ் மக்களும் பகைவர்கள் அல்லர், வெவ்வேறு நாட்டினர், நேச நாட்டினர். இனி மோனாவை ஆஸ்க்காரிடமிருந்து பிரித்து வைக்கும் பேதம் ஏது!

கைதிகளை விடுதலை செய்து ஜெர்மன் நாட்டுக்கு அனுப்பி விடும்படி உத்தரவு வந்துவிட்டது. சிறுசிறு அளவினராக அவர்கள் ஜெர்மனிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர் ஆஸ்க்கர்? அவனையும்தான் போகச் சொல்லுவார்கள் ஜெர்மனிக்கு. அவன் போய்விடுவதா! நான்? என் கதி! - என்று எண்ணுகிறாள் மோனா.

பிரிட்டிஷ் பெண்ணை மணம் செய்துகொள்பவன் ஜெர்மனி போகத் தேவையில்லை, என்றோர் விளக்கம் கிடைக் கிறது; மோனா மனத்திலே ஒரு நம்பிக்கை எழுகிறது.

ஆஸ்க்காரைத் திருமணம் செய்துகொண்டு தீவிலேயே வாழலாம்; பண்ணை வேலைகளை இருவரும் கவனித்துக் கொள்ளலாம். கள்ளி என்றும் விபச்சாரி என்றும் ஏசிப் பேசினவர்கள் கண் முன், நாங்கள் காதலித்தோம் கடிமணம் புரிந்து கொண்டோம் காண்பீர்! ஏதேதோ கதைத்தீர்களே முன்பு. இப்போது புரிகிறதா? நாங்கள் எந்த முறைகேடான செயலிலும் எங்களை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை; முறைப்படி திருமணம் செய்துகொண்டோம் என்று கூறிடலாம்; வீசப்பட்ட மாசுகூட துடைக்கப்பட்டு விடும் என்று எண்ணிக்கொண்டாள் மோனா. பேதைப் பெண்! இந்த உலகம் உண்மைக் காதல் வெற்றிபெற அவ்வளவு எளிதாக அனுமதி கொடுத்து விடுகிறதா! துளியும் எதிர்பாராதிருந்த இன்னல்கள் தாக்கிடக் கிளம்பின.

மிராசுதாரர், குத்தகைக் காலம் முடிந்துவிட்டது, இனிப் பண்ணையைவிட்டு வெளியேறு என்று உத்திரவு பிறப்பித்தார்.

மறுபடியும் குத்தகைக்குக் கொடுமய்யா! எப்போதும் போலத் தொகை கொடுத்து வருகிறேன், பாடுபட்டு, பண்ணையும் நடத்து என்கிறாள் பாவை. “உனக்கா! ஊர் என் முகத்திலே காரித்துப்பும்! ஜெர்மனிக்காரனுடன் திருட்டுத்தன மாகத் தொடர்பு கொண்டவளல்லவா நீ! உன் அப்பனே அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து செத்தானே! நீதானே அவனைக் கொன்று போட்டாய்! உனக்கு என் பண்ணையைக் குத்தகைக்குத் தர முடியாது. விரைவில் வெளியேறு என்று கண்டிப்பாகக் கூறி விட்டான் மிராசுதாரன்.

ஊர் மக்கள் கொண்டிருந்த வெறுப்பு மாறவில்லை. இங்கு எவரும் ஆதரிக்கமாட்டார்கள்; தங்கும் இடமும் தர மாட்டார்கள்; தொழிலும் நடத்தவிடமாட்டார்கள் என்பது புரிந்துவிட்டது. ஆஸ்க்கார் கூறினான். “கலக்கம் வேண்டாம்! நாம் வாழ வழி இருக்கிறது. நான் ஜெர்மானியன் என்றாலும், பிரிட்டனில்தான் ஒரு தொழில் நிலையத்தில் வேலை பார்த்து வந்தேன். போர் மூண்டதும் ஜெர்மானியன் என்பதால் என்னைச் சிறைப் பிடித்தார்கள். நான் தவறேதும் செய்தவன் அல்ல என்பதும், ஜெர்மனியில் கெய்சர் மேற்கொள்ளும் போக்கினைக் கண்டிப்பவன் என்பதையும், நான் வேலை பார்த்த தொழில் நிலையத்தார் அறிவர்; அப்போதே எனக்கு உறுதி அளித்தார்கள், போர் முடிந்து புது உறவு மலர்ந்ததும் நீ இங்கேயே வேலைக்கு வந்து அமரலாம்; உனக்காக அந்த வேலை காத்துக் கொண்டே இருக்கும் என்பதாக இப்போது அதை நினைவுபடுத்திக் கடிதம் எழுதுகிறேன். வேலை கிடைத்துவிடும்; பிரிட்டன் சென்று வாழ்ந்திடலாம்; போர்க் காலத்து நிகழ்ச்சிகள் கெட்ட கனவுபோல கலைந்தோடிப் போய்விடும். இல்லறம் எனும் நல்லறத்தில் இன்பம் பெறுவோம்; இனத்தைக் காட்டி ஒன்றுபட்டுவிட்ட இதயங்களைப் பிரித்திட முடியாது என்பதை உலகு உணரட்டும் என்றான். இசையென இனித்தது அவன் பேச்சு. ஆனால் சின்னாட்களில் இடியெனத் தாக்கிற்று பிரிட்டிஷ் தொழில் நிலையம் அனுப்பி வைத்த பதில் கடிதம். வேலை இப்போதைக்கு இல்லை! போர் முடிந்துவிட்டது என்றாலும், இங்கே ஜெர்மானியர்கள்மீது பரவிவிட்டுள்ள வெறுப்புணர்ச்சி குறையவில்லை. இந்நிலையில் தொழில் நிலையத்தில் ஒரு ஜெர்மானியனை வேலைக்கு அமர்த்துவது ஆபத்தாக முடியும். கடிதம் இந்தக் கருத்துடன். ஆஸ்க்கார் அழவில்லை; சிரித்தான்! வெறுப்புணர்ச்சியின் பிடியிலே உலகே சிக்கி விட்டிருப்பதை எண்ணிச் சிரித்தான்! மோனா! போர் நின்றுவிட்டது என்கிறார்களே, எங்கே நின்று விட்டது! சமாதானம் மலர்ந்துவிட்டது என்கிறார்களே, எங்கே அதன் மணம்! பகை உணர்ச்சி ஒழியா முன்பு போர் நின்றுவிட்டது என்று கூறுவது பொருளற்ற பேச்சு மோனா! போர் நடந்தபடி இருக்கிறது! வெறுப்புணர்ச்சி தாண்டவமாடிய படியேதான் இருக்கிறது. இதோ பார் கடிதத்தை! ஒரு ஜெர்மானியனை வேலைக்கு வைத்துக்கொள்ள முடியாதாம்! ஆபத்தாம்! ஆஸ்க்காரின் பேய்ச் சிரிப்புக் கேட்டு மோனா பயந்துவிட்டாள்! நிலைமையை அறிந்து கண்கலங்கினாள்.

அமெரிக்கா, இனவெறி அற்ற இடம், யாரும் சென்றிடலாம், தாயகமாகக் கொண்டிடலாம் என்ற செய்தி அறிந்தனர் காதலர். கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் ஒரே வெள்ளக் காடாக இருக்கையில் தொலைவிலே ஒரு பசுமையான இடம் தெரிந்தால் மகிழ்ந்திடும் புள்ளினம்போலாயினர். புறப்படுவோம் அமெரிக்காவுக்கு; புதிய உலகுக்கு; இன பேதமற்ற சமுதாய நெறி தவழ்ந்திடும் நாட்டுக்கு என்று எண்ணினர். ஆனால் அந்த எண்ணத்திலும் மண் விழுந்தது. எந்த இனத்தவரும் அமெரிக்கா வந்து குடியேறலாம். ஆனால் குறிப்பிட்ட அளவு பணத்தோடு வந்தால் மட்டுமே இடம் கிடைக்கும், ஒரு வசதியுமின்றிப் புகுந்து கொண்டு நாட்டுக்குப் பாரமாக இருக்கக்கூடாது என்ற நிபந்தனை குறுக்கிட்டது.

பண்ணை நடத்தியதில் ஏற்பட்ட நஷ்டங்களுக்காக மோனா தனக்குச் சொந்தமான பசுக்களை விற்றுவிட்டாள். அவளிடம் இருந்த செல்வம் பசுக்கள் மட்டுமே! ஆகவே இப்போது அவள் பரம ஏழை! ஆஸ்க்காரோ ‘கைதி’யாக இருந்தவன்! இருவரும் பணத்துக்கு என்ன செய்ய முடியும்! அமெரிக்காவை மறந்துவிட வேண்டியதுதான். அது பொருள் உள்ளவர்களை மட்டுமே ஏற்றுக்கொள்ளும் பொன் விளையும் பூமி. ஏழைக்கு இங்கு இடமில்லை! வேறு என்ன செய்வது? வாழ இடம்? வாழ வழி?

தயங்கித் தயங்கிக் கூறினான் ஆஸ்க்கார், ‘மோனா நீ மட்டும் சம்மதித்தால், நாம் நிம்மதியாக வாழ, மதிப்புடன் குடும்பம் நடத்த வழி இருக்கிறது. போரை மறந்து ஜெர்மனிக்கு வந்திருக்கச் சம்மதித்தால், நாம் இருவரும் அங்குச் சென்று வாழ்ந்திடலாம், அம்மா அன்புள்ளம் கொண்டவர்கள். என் வாழ்வே தன் வாழ்வு என்பவர்கள் உன்னைக் கண்டால் பூரித்துப்போவார்கள்! போகலாமா?” என்று கேட்டான். மோனா சம்மதித்தாள். இடம் எதுவாக இருந்தால் என்ன, அவருடன் இருந்திடும் இடமே எனக்குத் திருஇடம் என்று கருதினாள். ஆர்வத்துடன் கடிதம் எழுதினான் ஆஸ்க்கார் தன் அன்னைக்கு. பதில் வந்தது. இருவர் நெஞ்சிலும் நெருப்பை வாரிக் கொட்டுவதுபோல்.

எப்படியடா மனம் துணிந்தது நம்மை நாசமாக்கிய பிரிட்டிஷ் இனத்தின் பெண் ஒருத்தியைக் காதலிக்க. அவர்கள் நமக்குச் செய்த கொடுமையை எப்படி மறந்துவிட முடிந்தது. உன் தங்கை, பத்து வயதுச் சிறுமியைக் கொன்றது பிரிட்டிஷ் குண்டு என்பதையும் மறந்தனையா? காதல் கண்ணை மறைக் கிறதா! என் மகனா நீ! ஜெர்மானியன்தானா நீ? நாட்டைவிடப் பெரியவளோ உன்னை மயக்கிவிட்ட கள்ளி! - என்றெல்லாம் கண்டனச் சொற்களைக் கொட்டியிருந்தாள் மூதாட்டி அந்தக் கடிதத்தில்.

போர் முடிந்துவிட்டது என்றால் புதுநேசம் பிறந்து விட்டது, பகை அழிந்துவிட்டது, பாசம் பிறந்துவிட்டது என்பதல்ல பொருள், பீரங்கி ஓசை இல்லை, படைகொண்டு தாக்குதல் இல்லை, ஆனால் ஜெர்மானியர் ஜெர்மானியர்தான், பிரிட்டிஷார் பிரிட்டிஷார்தான் - வெவ்வேறு இனம்! என்ற கருத்து பிடித்துக்கொண்டிருக்கிறது என்பதனை இருவரும் உணர்ந்தனர். வெறுப்புணர்ச்சியற்ற ஒரு நாடே கிடையாதா! இனத்தை மறந்து இதயங்கள் ஒன்றுபட்டதால் கடிமணம் புரிந்து கொண்டு வாழ்ந்திட இடமளிக்கும் நாடே கிடையாதா என்று எண்ணி ஏங்கினர்.
ஓர் இடம் இருக்கிறது, போரும் பகையும் அற்ற இடம்; பேதமும் குரோதமும் அற்ற இடம்; மனிதர்களாக வாழக்கூடிய இடம்; வெறுப்புணர்ச்சி நுழைய முடியாத இடம் ஒன்று இருக்கிறது மோனா! நான் அங்குப் போய்விடுவது என்று தீர்மானித்துவிட்டேன் என்று கூறுகிறான் ஆஸ்க்கார். அது எந்த இடம் என்று கேட்கிறாள் மோனா! அவன் கூறுகிறான்; அவள் திடுக்கிட்டுப் போகிறாள்; மறுகணம் உறுதி பெறுகிறாள்; உண்மைதான் ஆஸ்க்கார்! அந்த இடமே பகைப்புயல் வீசாத இடம், நிம்மதியாக வாழ்ந்திட ஏற்ற இடம்; ஆனால் அங்கு நீ மட்டுமா செல்வது; எனக்கும் அதே இடந்தான்; இருவருமே செல்வோம் நமக்கு ஏற்ற அந்த இடத்துக்கு என்கிறாள் மோனா. அவர்கள் தேர்ந்தெடுத்த இடம், கொந்தளிக்கும் கடல், மரணபுரியில் மட்டுமே நாம் வாழ்ந்திட முடியும்; மக்களை மாக்களாக்கிடும் வெறுப்புணர்ச்சி தீண்டாத இடம் அதுவே. வேறு எந்த இடமும் நம்மை ஏற்றுக்கொள்ளாது! உன் இனம் என்ன? என்று கேட்கும்; உன் மரபு என்ன? என்று கேட்கும். மரணபுரியில் மட்டுமே அந்தக் கேள்விகள் எழுவதில்லை. மான் தீவிலே இடம் இல்லை! பிரிட்டன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. அமெரிக்காவிலே தங்கிட அனுமதி இல்லை. ஜெர்மனி துரத்து கிறது உள்ளே நுழையாதே. இடம் கிடையாது என்று. அதோ ஆழ் கடல்! கொந்தளித்தபடி இருக்கிறது. அலைக்கரம் நீட்டி வா! வா! என்று அழைக்கிறது. காதலால் கட்டுண்ட என் மக்களே! நாடு பலவும் உங்களை வாட்டுகின்றனவா, இனபேதம் கிளறிவிடும் வெறுப்புணர்ச்சியால். கவலைப்படாதீர்கள்! இதோ நான் இருக்கிறேன். உங்களை ஆரத்தழுவி வரவேற்றிட! இங்கு இனபேதம் பகை உணர்ச்சி கிடையாது! வந்திடுவீர்! வந்திடுவீர்! என்று கூவி அழைக்கிறது. பல நாடுகள் இடமளிக்க மறுத்து விட்டன இந்தக் காதலருக்கு; காதலின் மேன்மையினை அறிந்திடும் திறனற்று. இதோ இந்த இடமே நமக்கு ஏற்ற இடம் என்று வருகின்றனர்! என் பெருமை உணர்ந்து வருகின்றனர்! - என்ற மகிழ்ச்சிப் பெருக்கில்தான், கொந்தளிக்கிறதோ.

உறுதி பிறந்துவிட்டது, புது உற்சாகமே வந்துவிட்டது. இருவரும் புறப்படுகின்றனர், தமக்கு ஏற்ற நாடு நோக்கி;

குன்றேறுகிறார்கள்! மேலே மேலே செல்கின்றனர்! பகை உணர்வும் வெறுப்புணர்ச்சியும் நெளியும் இடம், அதோ கீழே காலடியில்! அவர்கள் உயரச் சென்றுவிட்டனர்! குன்றேறிப் பார்க்கின்றனர், கீழே ஆழ்கடல்! அலைக்கரங்கள் அழைக்கின்றன.

ஆரத்தழுவிக் கொள்கின்றனர். மேலே வானம்! கீழே கடல்! மணமேடையோ சிறு குன்று!! இயற்கையோ எழிலளிக்கிறது மண வீட்டுக்கு! எதிர்ப்பார் இல்லை! ஏளனம் பேசுவார் இல்லை! இனம் வேறு வேறு அல்லவோ என்று குளறுவார் இல்லை. காதலரிருவர் கருத்து ஒருமித்து ஆதரவுபட்டதே இன்பம்! அந்த இன்பத்தில் திளைத்திருந்தனர், புதுவாழ்வு பெற்ற இருவரும்.

ஆஸ்க்கார், தனது இடுப்பில் கட்டியிருந்த பெல்ட்டை எடுத்து, மோனாவையும் சேர்த்துத் தன்னுடன் பிணைத்துக் கொண்டான். ஈருடல் ஓர் உயிர்! அந்த ஈருடலும் கூட ஒன்றாகப் பிணைக்கப்பட்டிருக்கட்டும் என்று எண்ணினான்போலும்.

கண்களைக் கண்கள் கவ்விக்கொண்டன.

அந்தக் கண்கள் என்னென்ன பேசிக்கொண்டனவோ! ஒரு புன்னகை பூத்திருக்கும்! இதழமுது சுவைத்திருப்பர்! நம் காலடியில் கிடக்கிறது குள்ளமனம் படைத்தோர் இருக்கும் இடம்! அவர்கள் தொட முடியாத உயரத்தில் நாம் நிற்கிறோம்; காதலின் சிகரத்தில்! இனி... சென்று சேர்ந்தனர் கடலடி. மரணபுரி அவர்களை வரவேற்றுக் கொண்டது. மாதாகோவிலின் மணி ஓசை கிளம்புகிறது போர் முடிந்தது. பகை ஒழிந்தது சமாதானம் மலர்ந்தது என்று அந்த ஓசை கூறுகிறது என்பர்!
இல்லை போய்ச் சேர்ந்தனர்; போரற்ற, பகையற்ற, பேதமற்ற, வெறுப்பற்ற இடம் போய்ச் சேர்ந்தனர் என்றல்லவா ஒலி அறிவிக்கிறது!

காதற்பயணம் முடிந்தது, போய்ச் சேர வேண்டிய இடத்திற்குப் போய்ச் சேர்ந்தனர்! வாழ்க காதலர்! வாழ்க காதல்! என்று ஒலிக்கிறதோ!!

(காஞ்சி - 1966)
------------------

6. தழும்புகள்

தழும்புகள் (1)
அவன் ஓர் ஏழை! எண்ணற்ற ஏழைகளுக்கிடையில் அவன் ஒருவன்! ஆனால், ஏழைகளில் பலருக்கு ஏற்படாத எண்ணம் அவன் மனத்திலே கொந்தளித்தபடி இருந்து வந்தது.

அவன் ஓர் ஏழை! ஆனால் அவன் மனத்திலே கொந்தளித்துக் கொண்டிருந்த எண்ணம், எப்படித் தனது ஏழ்மையைப் போக்கிக் கொள்வது என்பது அல்ல; எப்படி நிம்மதியான வாழ்க்கையைப் பெறுவது என்பது அல்ல; அதைப்பற்றி எண்ணிப் பார்த்திட அவனுக்கு நேரமே இல்லை. எந்த நேரமும் அவன் மனத்திலே கொந்தளித்துக் கொண்டிருந்த எண்ணம் அக்கிரமம், அநீதி இவற்றைத் தொலைத்தாக வேண்டும் என்பதுதான்!

அவன் ஓர் ஏழை! ஆனால் நல்ல உடற்கட்டு, துணிவு; தனக்கென்று எதையும் தேடிப் பெற்றாகவேண்டும் என்ற நினைப்பற்ற நெஞ்சம், வாழ்க்கை நடத்த எதையாவது செய்தாக வேண்டுமே என்ற எண்ணம்கூட அல்ல; வாழ்க்கையிலே ஏன் இத்தனை வஞ்சகமும் அநீதியும் நெளிகின்றன என்ற கேள்வியே அவன் மனத்தைக் குடைந்து கொண்டிருந்தது.

அவன் ஏழை! ஆனால் மற்ற ஏழைகள் மனத்திலே மூண்டிடாத கேள்வி குடையும் மனத்தினன்; மற்ற ஏழைகளுக்கு இந்தக் கேள்வி தோன்றியிருந்திருக்கலாம் – பல சந்தர்ப்பங்களில். ஆனால் அவர்கள் அந்தக் கேள்விக்கான விடை கண்டிடத் தம்மால் ஆகாது என்று விட்டு விட்டனர்; தமது வாழ்வுக்கு வழிதேடிக்கொள்ள முனைந்தனர்; மும்முரமாயினர். பிறகு அவர்களுக்கு வேறு எண்ணம் எழவில்லை. இயல்பு அதற்கு இடம் கொடுக்கவில்லை.

அவன் ஓர் ஏழை – மற்ற பல ஏழைகளைப் போலவே உழைத்து உண்டு, உலவி உறங்கியும் வந்தான். ஆனால் அதுதான் வாழ்க்கை என்று திருப்தி பெறவில்லை. அவன் உலகிலேயே காணக்கிடக்கும் கேடுகளை ஒழித்தாக வேண்டுமே, என்னவழி அதற்கு, என்று எண்ணி எண்ணி மனத்தை எரிமலையாக்கிக் கொண்டான்.

அவன் ஓர் ஏழை – ஆனால் மற்ற ஏழைகள் சிரித்துக் கொண்டிருப்பதைக் காணும்போது சீற்றம் பீறிட்டுக் கொண்டு வந்தது – இத்தனை கொடுமைகள் இழைக்கப்படுகின்றன; ஏன் என்று கேட்கக்கூடத் திராணியற்றுக் கிடக்கிறார்களே! ஏன்? ஏன்? ஏன்? எப்படி முடிகிறது அவர்களால்? என்னால் முடியவில்லையே! – என்று கேட்டபடி இருந்தான் – ஊராரைப் பார்த்து அல்ல – தன் உள்ளத்தை.

‘அண்ணன் மகா முரடு! அண்ணன் காலை யாராவது மிதித்தால், அவர்கள் தலையை மிதிக்கும் – அவ்வளவு ரோஷம்! எவனாக இருந்தாலும் கூழைக்கும்பிடு போடாது! எதைக்காட்டினாலும், ஆசைப்பட்டு பல்லை இளிக்காது’ என்று சொல்லுகிறார்கள் மற்ற ஏழைகள் – காதிலே விழுகிறது; ஆனால் காரணம் புரியவில்லை, அவர்களின் போக்குக்கு!

முருங்கையை எளிதாக ஒடித்துவிட முடிகிறது. தேக்கு? எளிதாக முடியாதல்லவா! அதுபோலவே தன் இயல்பும் மற்ற ஏழைகளின் இயல்பும் – இரண்டுக்கும் இடையே உள்ள வித்தியாசமும்!! புரியவில்லை! புரியாததால், கோபம் அதிகமாக வளர்ந்தது; குறையவில்லை.
அவன் ஏழை! ஆனால் ஏழைக்கும் பெயர் உண்டே –இவன் பெயர், குப்பம் முழுவதும் கூப்பிடுவது ‘அண்ணே’ என்ற செல்லப் பெயர். பெற்றோர் இட்ட பெயர் மாகாளி!

‘அப்பவே தெரியும் போலிருக்குடோய்! அண்ணனோட குணம், எப்படி இருக்கும் என்று, பெத்தவங்களுக்கு. பேர் பார்த்தயேல்லோ! வெறும் காளிகூட இல்லா, மாகாளி!’ என்று அந்தக் குப்பத்திலே உள்ள மற்ற ஏழைகள் பேசிக் கொள்கின்றனர்.

‘மாகாளி – அந்தக் குப்பத்திலே பிறந்தவனல்லன்! ஏதோ ஒரு குப்பை மேடு! அது என்ன இடமா இருந்தாத்தான் என்னவாம்!!’ என்று பதில் வரும், குப்பத்தார் பக்குவமாக விவரம் கேட்கும்போது.
ஊர் பெயரே கூறாதபோது அவன் பெயரையா மாகாளியிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள முடியும்? அப்பனா! எங்க அப்பனைத்தானே கேட்கறே? ஏன், போய் கூட்டிக்கிட்டு வரப்போறியா? அவன் செத்துச் சிவலோகம் போயி பல வருஷமாகுதுன்னு சொல்லிச்சி எங்க அம்மா, அது சாகறப்ப... எனக்கு வயது எட்டு, அப்போ...”

“ஐயோ பாவம்!” என்பார்கள் சிலர்.

“உருகாதடா, உருகாதே! ஏன், இப்ப அவங்களும் இருந்து, நம்மைப் போல நாய் படாதபாடு படவேணுமா.... போய் விட்டாங்களே, அதைச் சொல்லு, நிம்மதியா...”

மாகாளிக்கு என்ன வேலை? எந்த வேலையாவது கிடைக்கும் – உடல் உழைப்பு வேலை! பாரமூட்டை சுமப்பதோ – கட்டை வெட்டுவதோ – கிணறு தோண்டுவதோ – வண்டி ஓட்டுவதோ – ஏதாவது ஒன்று. இன்னின்னாருக்கு இன்னின்ன வேலை என்று ஒரு திட்டமா இருக்கிறது. விருப்பம் அறிந்து வேலை கொடுக்கும் இடமா இந்த உலகம்!! பசுவைக் கழுவி சுத்தமாக வைத்திருக்கிறார்கள். எருமையைச் சேற்றிலே புரளவிடுகிறார்கள்; இரண்டும் பால் கொடுக்கிறது! இந்த உலகத்தில் ஏதாவது ஓர் ஒழுங்குமுறை இருக்கிறதா என்ன! மாகாளி கேட்பான் இதுபோல – ‘ஏண்ணேன், உனக்கு ஏத்ததா ஓர் ஒழுங்கான வேலையைத் தேடிக் கொள்ளமாட்டேன்கிறே’ என்று சொந்தத்துடன் கேட்பவர்களும் உண்டு.

அவன் ஏழை – ஆனால் ஏழைக்காக இந்த உலகம் இல்லை என்ற எண்ணம் அவனுக்கு. ஏழையை இந்த உலகம், ஏழ்மையில் இல்லாதவர்களின் முன்பு நடமாட விட்டு வேடிக்கை காட்டுகிறது என்ற எண்ணம்!!

‘ஐயோ பாவம்!’ என்று உருக்கமாகப் பேசவேண்டுமே ஏழை இல்லாவிட்டால் எப்படிப் பேச முடியும், அதுபோல் அதற்காகத்தான் இந்த உலகம் நம்மை வைத்துக் கொண்டிக்கிறது; இல்லையென்றால் இவ்வளவு கொடுமை செய்யும் இந்த உலகம் ஒரே விழுங்காக நம்மை விழுங்கிவிட்டு, வேலை முடிந்துவிட்டது என்று கூறிவிடாதா என்ன!!” என்று கேட்பான் மாகாளி. மற்றவர்கள், “அண்ணன் வேதாந்தம் பேசுது! ஒரு சமயம் அதனோட அப்பாரு பெரிய சாமியாரா இருப்பாரோ?” என்று பேசிக் கொள்வார்கள்.

“புத்தி உனக்கு உலக்கைக் கொழுந்துடா டோய் சாமியாரா இருந்தாபிள்ளை எப்படிடா பெத்துக்க முடியும்?” என்று கேட்பான் ஒருவன். “பிள்ளை பொறந்த பிறகு சாமியாராகியிருக்கக் கூடாதா” என்பான் இன்னொருவன். “ஏம்பா! சாமியாரா வேஷம் போட்டுக்கிட்டே நம்ம சடையன் மகளோட சினேகிதம் வைத்துக்கொள்ளலியா, அந்தப் புதுசாமி... அதுபோல இருக்கப்படாதோ” என்பான் மற்றொருவன். எல்லாம் மாகாளி, இல்லாதபோது.

மாகாளி! தன்னுடைய பிறப்பு வளர்ப்பு பற்றிய கேள்விகளுக்குத் தான் பதில் சொல்லுவதில்லை; ஆனால், அவன் உடலிலே காணப்பட்ட தழும்புகளைப் பற்றிக் கேட்டால் போதும், மளமளவென்று விவரம் கூறுவான். ‘இந்தத் தழும்புகள்தாம் என் வாழ்க்கைக்கான குறிப்புகள்’ என்பான், சிரித்தபடி, என்ன சிரிப்பு அது! இந்த உலகத்தைக் கேலி செய்யும் முறையிலே அமைந்த சிரிப்பு அது!

“அதைக்கேள் சொல்கிறேன்” என்று ஆர்வத்துடன் ஆரம்பித்தான். அவனுடைய வாழ்க்கையிலே நடைபெற்ற ஏதாவதொரு நிகழ்ச்சியைக் கூறுவான் – கூறும்போது போர்க்களத்திலே ஒரு வீரன் பெற்ற ‘காயம்’ குறித்துப் பேசும்போது எவ்வளவு பெருமிதம் கொள்வானோ, அந்த விதமான பெருமிதம் ஏற்படும்.

“நான் எங்கே பிறந்தேன் – என் பெற்றோர் யார் – அவர்களின் நிலைமை என்ன – என்ற விவரம் கேட்டுத் தெரிந்து கொள்வதாலே எள்ளத்தனை பயனும் உனக்கோ, மற்றவர்களுக்கோ ஏற்படாது; இதோ இந்தத் தழும்பின் விவரம் கேட்கிறாயே, இது கேட்க வேண்டிய கேள்வி. இதுபற்றி விவரம் உனக்குத் தெரிவது நல்லது; அதாவது, நீ ஏழை என்பதை மறந்து, மனிதன், ஆகவே நீதி நியாயத்துக்காகப் பாடுபட வேண்டியவன், அக்கிரமத்துக்கு அடிபணியாமலிருக்க வேண்டியவன் என்ற உணர்வு இருந்தால்” என்ற முன்னுரையுடன் மாகாளி பேச ஆரம்பிப்பான்.

மாகாளியின் உடலிலே இருந்த தழும்புகள் – முகத்திலே கூடத்தான் – அவனை அவலட்சணமாக்கிவிடவில்லை; அவனுடைய வயதுக்கு மீறிய ஒரு முதுமைக் கோலத்தை மட்டுமே அந்த வடுக்கள் ஏற்படுத்திவிட்டிருந்தன.

அந்தத் தழும்புகளைத் தடவிக் கொடுத்துக்கொண்டு பேசுவதில் மாகாளிக்கு ஒரு தனி ஆர்வம்.

“இது விறகுக் கட்டையாலே பலமாக அடித்ததாலே ஏற்பட்டது. இரத்தம் எப்படிக் கொட்டிற்று தெரியுமா... பனியன் முழுவதும் இரத்தக்கறை.. நாலு மாதம் பிடித்தது மண் உலர.. பிறகு பலமாதம் அந்த இடத்திலே ஒருவிதமான வலி மட்டும் இருக்கும், அடிக்கடி... ஒரு வருஷத்துக்குப் பிறகு வலியும் நின்றுவிட்டது. வடு மட்டும் பதிந்துவிட்டது... ஏன்! ஏண்டா! அப்படிப் பார்க்கிறாய்... எப்படித்தான் தாங்கிக் கொண்டானோ என்ற யோசனையா... பைத்தியக்காரா! அப்போது நான் போட்ட கூச்சல் இப்போதுகூடக் காதிலே விழுவது போலிருக்கிறது... எட்டு வயது எனக்கு அப்போது...”

“அண்ணேன்! எட்டு வயதிலோ இந்தக் கொடுமை?”

“ஏன்! ஏண்டா அப்படி ஒரு கேள்வி கிளப்பறே... எண்பது வயதான பிறகுதான் விழணும், இந்த மாதிரி அடி என்கிறாயா...”

“போண்ணேன்! தழும்பைப் பார்க்கறபோதே எனக்கு வயிறு பகீல்னு இருக்குது... நீ சும்மா தமாஷ் பேசறியே...”

“டே! தழும்பைப் பார்த்தாலே நீ பதறிப் போறே... இந்த இடத்திலே இருந்து இரத்தம் குபுகுபுன்னு வந்ததைப் பார்த்தே மனசு துளிகூடப் பதறலியே, என்னோட எஜமானுக்கு, தெரியுமா....”

“யாரண்ணேன் இந்தக் கொடுமையைச் செய்த பாவி?”

“புண்ணிய கோட்டீஸ்வர அய்யர்னு பேர்டா அவருக்கு. முட்டாப் பயலே! அவரைப் போயி பாவின்னு பேசறியே.... பாவி என்கிற பட்டம் இருக்குதே, அது நம்மாட்டம் பஞ்சைப் பராரிகளுக்குன்னேதான் ஏற்பட்டதுடா... பெரிய இடத்துப் பக்கம்கூட அது தலைகாட்டாது... எட்டு வயது எனக்கு... குண்டுக் கட்டையன்னுதான் கூப்பிடுவாங்க...கோபமா இல்லே... செல்லமா... அப்படி இருப்பேன். புண்ணிய கோட்டீஸ்வர அய்யர் ஓட்டலிலே வேலை... மேஜை துடைக்கறது, எச்சில் எடுக்கறது, பாத்திரம் துலக்கறது, இதெல்லாம்...”

“அண்ணேன்! கோபம் செய்து கெள்ளாதே.. அம்மா அப்பா உன்னை எட்டு வயதுக்கேவா உழைக்க விட்டுவிட்டாங்க...”

“அம்மா இருந்தா என்ன சொல்லியிருப்பாங்கன்னு தெரியாது; அப்பாதான் அம்மாவை விட்டுவிட்டுப் போயிட்டாரே, முன்னாலேயே, சிவலோகம்... ஒரு விறகு பிளக்கற ஆளை அப்பா அம்மான்னு கூப்பிட்டுக்கிட்டு இருந்தேன். என்னை வளர்த்தவரு... அவருக்கு என்ன கூலி கிடைக்கும்? சொல்லணுமா... அதனாலே ஓட்டல் வேலைக்குப் போனேன்...”

“வேலை செய்கிறபோது எங்காவது உயரமாக ஏறிக் கீழே விழுந்துட்டயா...”

“உயரக்க ஏறி! ஆளைப்பாரு! நாம் குப்பை மேட்டுக்காரரு... கோபுரமா ஏறிடுவோம்... கீழே விழுந்ததாலே ஏற்பட்டது இல்லா.... செம்மையான அடி விறகுக் கட்டையாலே...”

“ஓட்டல்காரனா அடிச்சான்?”

“அவனுக்கு அதுதான் வேலையா... ஓர் ஆளைக் கூப்பிட்டு அடிடான்னு உத்தரவு போட்டான். அவன் எடுத்தான் விறகுக் கட்டையை; கொடுத்தான் பலமா, கொட்டு கொட்டுன்னு இரத்தம் கொட்டிச்சு.”

“ஏன், நீ என்ன தப்பு செய்தே...?”

“பாரேன் உன்னோட புத்தியை. மாறமாட்டேன்குதே அந்தப் புத்தி. ஏழை தப்பு செய்துதான் இருப்பான். அதனாலேதான் அடி வாங்கி இருக்கிறான்னு தீர்மானமா எண்ணிக் கொள்றே... உன் பேர்லே குத்தம் இல்லேடோய்! குப்பத்திலே கிடக்கிறபோது வேறு என்ன நினைப்பு வரும்... போன ஜென்மத்திலே ஏதோ பெரிசா பாவம் செய்து விட்டதாலேதான் இப்ப இப்படி இருக்கிறோம்னு சொல்ற கூட்டந்தானே நாம... மடப்பயலே! தப்பு செய்யததாலே இந்த அடி கொடுக்கலே... அய்யருக்குப் பிடிக்காத காரியம் செய்தேன்... அதனாலே அவருக்குக் கோபம்.... ஏன் அந்தக் காரியம் அவருக்குப் பிடிக்கலேன்னு கேட்பே. ஏன் பிடிக்கலேன்னா நான் செய்த காரியத்தாலே அய்யருக்கு நஷ்டம். அதனாலே கோபம். புரியலையா இது? புரியாது. அதோ... மேலே ஆகாசத்திலே ஆயிரமாயிரமா தேவர்கள் இருக்கறாங்கன்னா போதும், இருக்கும்னு சொல்லுவே புரிந்தவன்போல.... கேள் – நடந்ததை... வழக்கம்போல மேஜை துடைத்துவிட்டுப் பாத்திரத்தைக் கழுவ எடுத்துக்கிட்டுப் போனேன், உள் பக்கம்... சமையற்கட்டு பக்கம். இட்லிக்கு மாவு ஆட்டிக்கிட்டு இருந்தான் வேலைக்காரன். எங்கோ பார்த்துக்கிட்டிருக்கிறான் என்ன கவலையோ அவனுக்கு! தடால்னு மேலே இருந்து ஒரு பல்லி விழுந்தது பாரேன் மாவிலே... பார்த்ததும் பதறிப் போயிட்டேன். அவன் அதைப் பார்க்காமலே மாவை அரைக்கிறான். பல்லி கூழாயிட்டிருக்கும்; மாவோடு சேர்ந்து போச்சு. பல்லி, பல்லின்னு ஒரு கூச்சல் போட்டேன். அப்பத்தான் விஷயம் விளங்கிச்சி அவனுக்கு. கூழாயிப் போனதுபோக மிச்சம் இருந்த பல்லித் துண்டை, துழாவித் துழாவி எடுத்து வெளியே போடப்போனான். இதற்குள்ளே சமையற்கட்டு ஆளுங்க கூடிட்டாங்க. பல்லி விழுந்து செத்துத் தொலைந்துவிட்டது. விஷமாச்சே! அந்த மாவை இட்லிக்கு உபயோகப் படுத்தினா சாப்பிடறவங்க என்ன கதி ஆவாங்க? எனக்கு அந்த எண்ணம்.... பல்லி! பல்லின்னு! கூவிக்கிட்டே ஓடியாந்தேன் அய்யரிடம் சொல்ல. பின்னாலேயே துரத்திக்கிட்டு போயிட்டான் என்னை, ஓட்டல் பின்புறம். விடு என்னை விடு! நான் அய்யர்கிட்டே சொல்லப்போறேன். மாவிலே பல்லி, பல்லின்னா விஷம்! இட்லி சாப்பிட்டா செத்துப் போயிடுவாங்க... அப்படி இப்படின்னு ஒரே கூச்சல்... அய்யரே வந்துவிட்டார். நான் அவரிடம் விஷயத்தைச் சொல்லுகிறதுக்குள்ளே மாவு அரைக்கிறவனே அவரிடம் இரகசியமாக எதையோ சொன்னான். அய்யர் உடனே என் பக்கம் வந்து ‘டேய் குண்டுக்கட்டை! வாயைப் பொத்திக்கிட்டு இருக்கமாட்டே. ஓட்டல் பெயரையே நாசம் ஆக்கிவிடுவே போலிருக்கிறதே! விழுந்த பல்லியைத்தான் வெளியே எடுத்துப் போட்டாச்சே! நீ எதுக்காக வருகிறவனெல்லாம் பயம் கொள்ற மாதிரி பல்லி, பல்லின்னு கத்திக்கிட்டு இருக்கேன்’னு கேட்டார். பதறிப் போயிட்டேன்! பல்லி செத்துக் கூழாயிப் போய்விட்டது. விஷம்! நான் எல்லோருக்கும் சொல்லத்தான் போறேன்னு சொன்னேன். அப்பதான் அய்யரு போட்டாரு. போட்டாரா.. வேலையாள் ஒருத்தன் அங்கே கிடந்த கட்டையாலே பலமாகப் போட்டான்... குழகுழன்னு...இரத்தம்.

“யாருமே கேட்கலியா என்ன இது? ஏன் அடிக்கறிங்கன்னு...”
“நீ ஒரு முட்டா பயதானே! ஏண்டா அவனுக்கு அதுதானா வேலை. சாம்பார் கொஞ்சம் போடு, அய்யர் சட்னி கொண்டா, வடை சூடா கொடு... காப்பிக்குச் சக்கரை அப்படி இப்படின்னு அவனவன் நாக்கு ருசியைக் கவனிச்சிக்கிட்டு இருக்கிறான். அந்த நேரத்திலேயா எவனை எவன் அடித்தான்! ஏன் அடிச்சான்! என்று கேட்கத் தோணும். அடேயப்பா! அப்படிக் கேட்கிற சுபாவம் மட்டும்இருந்துதுன்னா உலகம் இப்படியா இருக்கும். ஒரு பயலும் ஒன்னும் கேட்கலே. இரத்தம் அதிகமாகக் கொட்டறதைப் பார்த்து அய்யரேதான் வேறே ஓர் ஆளைப் பார்த்து அடுப்படிக் கரித்தூளை அரைச்சித் தடவுடான்னு சொன்னாரு. இந்தச் சின்ன வயசிலே திருட்டுக் கையிருந்தா, பெரிய பயலானா வழிப்பறி கொள்ளையல்ல நடத்துவான்” என்று கூறிக்கொண்டே வியாபாரத்தைக் கவனிக்கச் சென்றுவிட்டார்.

‘அடப் பாவிப்பயலே! இப்படி ஈவு இரக்கம் இல்லாமலா?’

“டேய்! என்னைத்தாண்டா பலபேர் ‘பாவிப்பயலே! எனக்கேண்டா திருட்டுப் புத்தி! ஓட்டலிலே வயிறு நிறைய காட்டறாங்களே போதாதா’ என்று கேட்டுப் புத்தி சொன்னாங்க.”

“அய்யர் சொன்னதையே நம்பிவிட்டாங்களா!”

“நம்பாம, நான் சொன்னதையா நம்புவாங்க... யே, அய்யர் சொன்னதைத்தான் நம்பியிருப்பே... கொஞ்சம் முணுமுணுத்து இருந்தா போடற இட்லியிலே கொஞ்சம் பெரிசாப் பார்த்துப் போட்டா போதுமே, பல்லை இளிச்சிக்கிட்டு அவர் பக்கம் சேர்ந்துவிடமாட்டயா!”

இப்படி நடந்தது பற்றிக் கூறுவான் மாகாளி. கேட்கும் குப்பத்து ஆட்கள் ‘ஐயோ பாவம்! ஐயோ பாவம்’ என்று கூறி பச்சாதாபம் காட்டுவார்கள். அதிலே மாகாளி என்றும் திருப்தி அடைந்துவிடுவதில்லை.

‘அக்கிரமத்தைக் கண்டால் எனக்கு, ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது. இது இன்று நேற்று ஏற்பட்ட சுபாவம் அல்ல. கூடவே பிறந்த சுபாவம்னு நினைக்கிறேன். நமக்கு என்ன என்று இருந்துவிட மனம் ஒப்புவதில்லை. அக்கிரமத்தைக் கண்டிக்க எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. கடமை இருக்கிறது என்று அழுத்தமான நம்பிக்கை எனக்கு. கடமை என்ற எண்ணம். அந்தக் கடமையைச் செய்யும்போது எந்தத் தொல்லை வந்தாலும் தாங்கிக் கொண்டாக வேண்டும் என்று ஓர் உறுதி. இரத்தத் தழும்புகள் அந்த உறுதியின் சின்னங்கள்” என்று கூறுவான்.

மாகாளி குப்பத்து பாணியில்தான் பேசினான். அவனுடன் பழகியவர்களிலே பலரும் அதே பாணியிலேதான் பேசினார்கள். நான் அந்தப் பாணியிலேயே முழுவதும் எழுதிக் கொடுக்கவே எண்ணினேன். ஆசிரியர் ஒப்புக்கொள்ளவில்லை. அதனால் சில பகுதிகளை அவர் விரும்பிய விதமாகவும் எழுதினேன். முக்கியமானதைக் கூற மறந்துவிட்டேன் நான் ‘மரபு’ இதழில் துணையாசிரியன்.

எங்கள் மரபு இதழில் வியப்பு அளிக்கும் உண்மை நிகழ்ச்சிகள் ஒரு தனிச்சுவையுள்ள பகுதி. உங்களிடம் உண்மையை ஒப்புக்கொள்வதிலே என்ன தவறு? பெரிய புள்ளிகள் நடக்காதவற்றைக்கூட உண்மையில் நடந்ததாகச் சொல்லுவார்கள். எங்களுக்கு அவர்கள் சொல்வது பொய் என்று தெரியும். தெரிந்ததும், வெளியிடுவோம் வியப்பளிக்கும் உண்மை நிகழ்ச்சி என்று. எமது மரபு இதழில் இந்தப் பகுதிக்குத் தலைப்பு, ‘அதிசயம் ஆனால் உண்மை’ என்பதாகும்.

வேட்டையாடுவதில் திறமைமிக்கவர் என்று பெயர் பெற்ற வெட்டியூர் மிட்டாதாரர் குட்டப்ப பூபதியாரைப் பேட்டி கண்டு, ‘அதிசயம் ஆனால் உண்மை’ பகுதிக்கான தகவலைப் பெற்றுவரச் சொல்லி ஆசிரியர் என்னை ஒருநாள் அனுப்பி வைத்தார். வழக்கமாகக் கிடைக்கும் தகவல்கள் கிடைத்தன. காட்டெருமை அவரைக் கீழே தள்ளி தொடையில் ஆழமாகக் குத்திவிட்டதாம், ஒரு தடவை; வடு இருந்தது. போட்டோகூட எடுத்துக்கொண்டேன். எனக்கென்னவோ அந்த வடு அறுவைச் சிகிச்சையின் விளைவு போலத் தெரிந்தது. ஆனால் மிட்டாதாரர் கூறுகிறாரே, காட்டெருமை குத்தியதால் ஏற்பட்ட வடு என்று. காட்டெருமைத் தலையைக்கூடக் காட்டினார். மாளிகைக் கூடத்திலே படம் போட்டுத் தொங்க விடப்பட்டிருந்தது. வெட்டியூரார் உடம்பில் காணப்பட்ட தழும்புகளைக் குறித்த விவரத்தை எழுதிக் கொடுத்தேன். எழுத எழுத எனக்கு ஒரு விதமான கசப்புணர்ச்சி, வெறுப்புணர்ச்சி. இவர் இந்த வடுக்களைப் பெற்றதனால் உலகுக்கு என்ன பலன்? உலகிலே ஏதாவது ஒரு நல்ல காரியம் செய்வதிலே ஈடுபட்டு, அதிலே காயம் ஏற்பட்டு, அது வடுவாகி இருந்தால் அதுபற்றிப் பெருமைப் படலாம். உல்லாச புருஷனின் பொழுதுபோக்கு வேட்டையாடுவது. இதிலே ஏற்பட்ட ‘வடு’ பற்றிப் பெருமைப்பட என்ன இருக்கிறது என்று எண்ணிக்கொண்டேன். வெளியே சொல்லத்தான் முடியுமா! அவருடைய தயவினால் மரபு இதழுக்கு ஆயுள் சந்தாக்காரர்கள் மட்டும் அறுபது பேர் கிடைத்தார்கள். ஒரு சந்தா ஆயிரம் ரூபாய்!

தமிழாசிரியர்கள், பழந்தமிழ் மன்னர்கள் களத்திலே கலங்காது நின்று போராடிப்பெற்ற விழுப்புண் பற்றிப் பெருமிதத்துடன் பேசக் கேட்டிருக்கிறேன். புகழின் சின்னம், வீரத்தின் முத்திரை, வெற்றிக் குறிகள் என்றெல்லாம் பாராட்டுவர். ஓரளவுக்கு இது பெருமைக்குரியதுதான். ஆனால் இதிலேயும் மன்னர்களுக்கு மூண்டுவிட்ட போர்தான் அடிப்படைக் காரணமாக அமைந்திருக்கிறது. யாரோ ஒருவருக்கு ஏற்படும் அக்கிரமம் கண்டு கொதித்து எழுந்து போராடிப் பெற்ற வடு அல்லவா முழுப் பெருமிதம் தரத்தக்கது என்று எண்ணிக் கொண்டேன்.

அந்த எண்ணம் வளர வளர, சாமான்யர்கள் என்ற வரிசையிலே இருந்தபோதிலும் பிறருக்காகப் பாடுபட்டு இன்னல் ஏற்றுக் கொண்டவர்கள் இருப்பார்களே. அவர்களைக் கண்டு பேசி, அவர்களின் வாழ்க்கையிலே நடைபெற்ற வியப்பளிக்கும் நிகழ்ச்சிகளை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் பிறந்தது. ஆசிரியரிடம் கூறினால் பெற்றுக் கொள்வார் என்ற நம்பிக்கை ஏற்படவில்லை. ஆகவே, இதழுக்காகத் தகவல் சேகரித்திடும் நேரம் போக, மிச்ச நேரத்தை என் இருதயம் விரும்பிய காரியத்துக்காகச் செலவிட்டு வந்தேன். அப்போதுதான் மாகாளி எனக்குக் கிடைத்தான்.

ஒரு மருத்துவமனையில் மாகாளி கிடத்தப்பட்டிருந்தான், உடலெங்கும் கட்டுகளுடன். ஆபத்து நீங்கிவிட்டது. ஆள் பிழைத்துக் கொள்வான், குறைந்தது மூன்று மாதம் மருத்துவமனையில் இருக்கவேண்டும் என்று கூறினார்கள். மறந்துவிட்டேனே, நான் மருத்துவமனையில் சென்றது மாகாளியைப் பார்க்க அல்ல; புதிய மோட்டாரில் ஏறும்போது கால் வழுக்கிக் கீழே விழுந்துவிட்ட அனாதை விடுதி தர்மகர்த்தா அய்யப்பனைக் கண்டு தகவல் சேகரிக்கச் சென்றிருந்தேன்.

நாளிதழ்கள், அய்யப்பன் மோட்டாரில் ஏறப்போகும்போது கால் வழுக்கிவிட்டது. காரணம் அவர் போட்டிருந்த கால் செருப்பின் அடிப்பாகம் ரப்பராலானது; வழவழப்பானது என்று எழுதி இருந்தன.

வழவழப்பான ரப்பர் அடிப்பாகம் கொண்ட புதுவிதச் செருப்புத் தயாரித்து விற்பனை செய்யும் கம்பெனியாருக்குக் கடுங்கோபம். அவர்கள் உடனே மரபு ஆசிரியரைக் கண்டு அய்யப்பன் வழுக்கி விழுவதற்கான உண்மைக் காரணத்தைக் கண்டு அறியும்படிக் கூறி இருந்தனர். நான் மருத்துவமனை செல்ல நேரிட்டது, இந்தக் காரணத்தால்.

அய்யப்பன், பலமாக மறுத்தார். கால் வழுக்கிக் கீழே விழவில்லை! கண் இருண்டது. மயக்கம் ஏற்பட்டது; திடீர் மயக்கம். காரணம் என்ன தெரியுமா என்று கேட்டு உருக்கமான செய்தி கூறினார். அவர் மோட்டாரில் ஏறப்போகும்போது ஒரு சிறுவனைக் கண்டாராம், பாதையின் மற்றொரு பக்கத்தில் அவன் கண்களிலே தெரிந்த துயரத்தைக் கண்டதும், ‘ஆண்டவனே, இப்படிப்பட்ட அனாதைகளை இரட்சிக்கும் தொண்டினைப் பரிபூரணமாக என்னால் செய்ய முடியவில்லையே! போதுமான பணமில்லையே. முந்நூறு குழந்தைகளை மட்டுந்தானே இரட்சிக்க முடிகிறது. இதோ ஒரு மொட்டு கருகிக் கொண்டிருக்கிறதே’ என்று எண்ணினாராம். உடனே ஒரு மயக்கம். கண் இருண்டது; கீழே சாய்ந்தார். அய்யப்பன் சொன்னது இது. அதிசயம் ஆனால் உண்மை. தொழில் முடிந்ததும் நான் மருத்துவமனையில் கிடந்த மற்றவர்களைப் பார்த்தபடி கிடந்தேன். மாகாளி உடலெங்கும் கட்டுகளுடன் கிடத்தப்பட்டிருந்தான். அவனருகே நின்று கொண்டு பரிவுடன் பழம் சாப்பிடச் சொல்லி, நின்று கொண்டிருந்த இளமங்கையைக் கண்டதும், எனக்கு வியப்பாகிவிட்டது. பெண் பெரிய இடத்தில் வாழ்க்கைப்பட்டு, ஏதோ சச்சரவு காரணமாகக் கணவனைப் பிரிந்து தனியாகிப் பள்ளிக்கூடத்தில் ஆசிரியை வேலை பார்த்து வருபவள்; மாஜி பெரிய இடம். பெயர் வள்ளி.
-------------

தழும்புகள் (2)

திருமணத்தின்போது வள்ளியாச்சியார் என்பது பெயர்.

வள்ளியிடம் நான் பேசியதுகூட படுத்துக் கிடப்பதனைப் பற்றிய சேதி தெரிந்து கொள்ள அல்ல; பெரிய இடத்திலே வாழ்க்கைப்பட்ட வள்ளி ஏன் கணவனை விட்டுப் பிரிய நேரிட்டது என்பது பற்றிய தகவல் பெறத்தான். வழக்கம்போல வள்ளி அந்தத் தகவல் தர மறுத்துவிட்டாள். மாகாளி பற்றிய தகவலைக் கூறலானாள். மெல்ல மெல்லத்தான் எனக்கு மாகாளி பற்றிய தகவலில் சுவை ஏற்பட்டது. வள்ளி தந்த தகவலைத் தொடர்ந்து, மாகாளியிடமும், அவன் இருந்துவந்த குப்பத்து ஆட்களிடமும், தொடர்புள்ள வேறு பலரிடமும் கேட்டுப் பல தகவல்களைத் தெரிந்துகொண்டு ‘தழும்புகள்’ என்ற தலைப்பிட்டு ‘மரபு’ இதழுக்கு அளித்தேன். அவர் என்னையும் வருத்தப்படவிடக்கூடாது, ‘மரபு மேற்கொண்டுள்ள மரபும் பாழ்படக்கூடாது’ என்று ‘தழும்புகள்’ தனி ஏடாக வெளிவர ஏற்பாடு செய்தார். அதன் துவக்கப் பகுதியைத்தான் இதுவரை நீங்கள் பார்த்தீர்கள். இனி மாகாளி பற்றி நான் தெரிந்து கொண்ட தகவல்களில் சிலவற்றைத் தருகிறேன். நிகழ்ச்சி நடைபெறுவது போன்ற வடிவத்தில்.

(ஒரு சிற்றூரின் சாலை வழியில் ஓர் இரட்டை மாட்டு வண்டி செல்கிறது. சலங்கை மணி பூட்டப்பட்ட பெரிய காளைகள் வண்டியில் பூட்டப்பட்டு உள்ளன.)

உடற்கட்டும், அழகான தோற்றமும் உள்ள வாலிபன், வண்டியை ஓட்டிச் செல்கிறான். வண்டிக்குள் திண்டு போட்டுச் சாய்ந்து கொண்டிருக்கிறார். நாற்பத்தைந்து வயதான ஒரு மிராசுதாரர். சில்க் சட்டையும் வேட்டியும் போட்டுக் கொண்டு இருக்கிறார். காதிலும் கைவிரல்களிலும் வைரம் மின்னுகிறது. நெற்றியில் சந்தனப் பொட்டு இருக்கிறது.

வெள்ளிப்பூண் போட்ட அலங்காரத் தடி அவருக்குப் பக்கத்திலே இருக்கிறது.

வெள்ளி வெற்றிலைப் பெட்டியும் வெட்டிவேர் விசிறியும் வண்டியில் இருக்கின்றன. வழியில் வருவோர் போவோர் அவரைக் கண்டதும் மரியாதை செய்கிறார்கள்.

மிராசுதாரர் : டே, மாகாளி! தட்டி ஓட்டேண்டா மாட்டை! தடவிக் கொடுக்கறியே... ஓட்டு, ஓட்டு சுருக்கா....

மாகாளி : வாயில்லா ஜீவனாச்சிங்களே... வேகமாத்தான்
போகுது... தா! தா!

(மெதுவாகத் தட்டுகிறான்; வேகமாக வண்டி செல்கிறது.)

வயல் காட்சிகளைப் பார்த்து மாகாளி ரசித்துக் கொண்டிருக்கிறான்.

மிராசுதாரர் எதையோ எண்ணி, மகிழ்ந்து கொண்டு இருக்கிறார்.

ஓர் இரயில்வே கேட் தெரிகிறது.

இரயில், தொலைவில் வருகிறது.

கேட், மூடிவிடுகிறார்கள். வண்டி நிற்கிறது. இரயில் செல்கிறது.

கேட் திறக்கப்பட்டு வண்டி செல்கிறது.

மாகாளி : (ஆவலாக) ஏங்க... இரயிலைப் பாருங்க, முதமுதல் கண்டுபிடிச்சது...

மிராசு : (கோபமாக) ஆ... உங்க பாட்டன்... ஓட்டேண்டா, வண்டியை, பெரிய விசாரணை நடத்தறான்.

மாகாளி : (சலித்துக்கொண்டு) தெரியல்லேன்னா தெரியாதுன்னு சொல்லிட்டுப் போங்களேன். அதுக்கு ஏங்க இப்படி எறிஞ்சி விழறீங்க. நீங்களெல்லாம் படிச்சவங்களாச்சே, தெரிஞ்சிருக்கும்னு கேட்டேன்.

மிராசு : வரவர உனக்கு வாய்த்துடுக்கு அதிகமாயிட்டுது; கிண்டல் பேச்சு, விதண்டாவாதம் வளருது... அன்னக்கி ஒருநாள் நீ என்ன கேட்டே, எமனுக்கு எருமைக்கடா வாகனம்; எப்படிப் பொருந்தும்னு கேட்டல்லே நீ... இரு, இரு, உன்னை...

மாகாளி : (சிரித்தபடி) நீங்க ஏங்க அதுக்காக இவ்வளவு கோபப்படறிங்க... பூலோகம் வந்து, பாசக் கயிறு வீசி, உயிர்களைப் பிடித்துக்கொண்டு போகிறவன்தான் எமன்; அவனுக்கு ஒரு வாகனம் எருமைக்கடான்னு சொல்லவே, அவசரமான வேலையாச்சே, ஒரு குதிரையாவது வாகனமா இருக்கப்படாதா, எருமைதானா இருக்கணும், அது அசைஞ்சு அசைஞ்சு அல்லவா நடக்கும்னு கேட்டேன்...

மிராசு : ஏன் கேட்கமாட்டே... நம்ம வீட்டுச் சோறு அப்படிப்பட்டது...

மாகாளி : நீங்க தின்ன மிச்சம்தானுங்களே, நமக்கு.

மிராசு : சரி, சரி... ஓட்டு.

(கிராமம் வந்து சேருகிறது, வண்டி; ஒரு பெரிய ஆலமரத்தடியைக் காட்டி...)

மிராசு : வண்டி இங்கேயே இருக்கட்டும்... நான் ஊருக்குள்ளே போயி காரியத்தைப் பார்த்துவிட்டு வர்றேன்... டேய்! மாட்டைப் பார்த்துக்கோ... ஜமக்காளம் இருக்கு, திண்டு கிடக்கு, நீ பாட்டுக்கு, எங்காவது சுத்தக் கிளம்பிடாதே...

(வெள்ளி வெற்றிலைப் பெட்டியையும், தடியையும் எடுத்துக் கொண்டு மிராசுதாரர் கிராமத்துக்குள்ளே செல்கிறார்.)

வண்டியை அவிழ்த்து விட்டுவிட்டு, மாடுகளுக்கு வைக்கோல் போட்டுவிட்டு, மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு, ஆட்டுக்குட்டிகள் துள்ளி விளையாடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறான் மாகாளி.

மாலை நேரம் வருகிறது; பறவைகள் கூட்டம் கூட்டமாகக் கூடுகளை நோக்கிப் பறந்து செல்கின்றன.

ஆடுகளை மடக்கி சிறுவன் ஊருக்குள்ளே ஓட்டிக்கொண்டு போகிறான்.

வாத்துகளை, வயலில் மேயவிடுகிறான் ஒருவன்.

இருள் மெல்ல மெல்ல வருகிறது.

“டேய்! மாகாளி! மாகாளி! டேய்!” என்று பதறிக் கூவியபடி மிராசுதாரர் ஓடிவருகிறார் அலங்கோலமாக.

அருகே வந்துகொண்டே, ‘கட்டுடா, வண்டியை பூட்டுடா சீக்கிரம்’ என்று மேல்மூச்சு வாங்கும் நிலையில் கூறிக்கொண்டே மிரள மிரள, ஊர் பக்கம் பார்க்கிறார். வண்டியைப் பூட்டித் திருப்பி நிறுத்துகிறான் மாகாளி.

“விடாதே! விடாதே! பிடி! டேய் நில்லு!” என்று கூவிக் கொண்டே தடிகளுடன் நாலைந்து பேர் மிராசுதாரை நோக்கி ஓடி வருகிறார்கள் தாக்க.

மிராசு : (நடுநடுங்கி) மாகாளி! கொலைகாரப் பசங்களைப் பாருடா.

என்று கதறுகிறார்.

முதலில் தடியை ஓங்கினான் ஒருவன். மாகாளி, தடியைப் பிடித்து இழுக்க, அவன் கீழே விழுந்துவிட்டான். தடி மாகாளியிடம் சிக்கியது.

(மற்றவர்களைத் தடியால் தாக்க ஆரம்பித்தான். மாகாளி மிராசுதாரர் வண்டியின் மறைவில் நின்று கொள்கிறார் சுழன்று சுழன்று தாக்குகின்றான். தாக்க வந்தவர்கள் மிரண்டோடுகிறார்கள். மாகாளி, மிராசுதாரரை வண்டியில் ஏறச்சொல்லி ஜாடை காட்டிவிட்டு வண்டியை ஓட்டுகிறான்.)

மிராசு : வேகமாக ஓட்டுடா மாகாளி! விஷக்கடி வேளைடா... ஊருக்கு இருட்டறதுக்குள்ளே போயிடலாம்.

மாகாளி : பொழுது இன்னும் சரியாச் சாயக்கூட இல்லே, அதுக்குள்ளே வழிமடக்கி அடிக்க வந்தானுங்களே!

மிராசு : வழிமடக்கி அடிக்கிறவனுங்க இல்லேடா அவனுங்க; கொலைகாரப் பசங்க. என்னைத் தீர்த்துக் கட்டிவிட வந்தானுங்க, தடியும் தாம்பும் தூக்கிக்கிட்டு.

மாகாளி : எதனாலே விரோதமுங்க... ஏதாவது நிலத் தகராறு?

மிராசு : வண்டியை ஓட்டுடா வேகமா! விவரம் கேட்டுகிட்டு இருக்க இதுவா நேரம்.

மாகாளி : பயப்படாதீங்க! நான் இருக்கறேன்... என்னை அடிச்சிப் போட்டுட்டுதானே உங்ககிட்ட வரவேணும்; பயப்படாதீங்க.

மிராசு : படுபாவிப் பசங்க! இந்த மாதிரித் திட்டம் போடுவாங்கன்னு தெரிஞ்சிருந்தா நான் அந்தச் சனியனுக்கு ஆசைப்பட்டே இருக்கமாட்டேன்.

மாகாளி! உன் மனசோட போட்டு வை. அந்தக் கிராமத்திலே நமக்கு வேண்டியவ ஒருத்தி இருக்கறா.
(மாகாளியின் முகம் இலேசாக மாறுகிறது.)

எப்படியோ, கர்மம், அந்தச் சிநேகம் ஏற்பட்டுப் போச்சி.

(மாகாளி கோபம் கொள்கிறான்.)

மிராசு : மூணு முடிச்சி போடுங்க, மூணு முடிச்சுப் போடுங்கன்னு சொல்லிக்கிட்டே இருப்பா. அவ என்னத்தைக் கண்டா. ஊருக்கு அவமானம், குலத்துக்கு அவமானம்னு யாரோ கலகம் செய்து விட்டாங்க... ஆகட்டும் பார்க்கலாம், ஆகட்டும் பார்க்கலாம்னு சொல்லிக்கிட்டே இருந்தேன்.

மாகாளி : அடுக்குமா இந்த அக்கிரமம்? நம்பினவளைமோசம் செய்யலாமா... அவ கதி என்ன ஆகும்?

மிராசு : அதாண்டா மாகாளி, அப்படி எல்லாம்தான் கூவி, கொக்கரிச்சி, கோவிலுக்கு வா, சாமி எதிரே அவளுக்குத் தாலி கட்டு என்று சொல்லி, இழுத்துக்கிட்டுப் போனாங்க...

மாகாளி : நீங்க அவங்களை ஏமாத்திவிட்டு தப்பித்துக் கெண்டு வந்துட்டிங்க...

மிராசு : அது தெரிஞ்சிதான், தடி தூக்கிகிட்டு ஓடி வந்தாங்க, என்னைக் கொன்றுபோட.
(வண்டியின் வேகம் குறைகிறது. மாட்டுக் கயிற்றை இழுத்துப் பிடிக்கிறான் மாகாளி.)

மாகாளி : நான் இருந்தேன், மடையன் – அவங்களைத் துரத்திவிட்டு, தர்மப் பிரபுவைக் காப்பாத்த...

(வண்டியை எதிர்ப்பக்கம் திருப்புகிறான்.)

மிராசு : டே! டே! என்னடா இது? என்னடா இது...

மாகாளி : இதுவா... வண்டி கிராமத்துக்குப் போகுது. அநியாயக்காரப் பாவி! ஒரு பெண்ணைக் கெடுத்துவிட்டு தப்பித்துக் கொள்ளவா பார்க்கறே...

(மிராசுதாரர் வண்டியை விட்டுக் கீழே குதிக்க முயலுகிறார். ஒரு கரத்தால், அவரை இழுத்துப் பிடித்துக் கொண்டு.)

மாகாளி : அவங்களை ஏமாத்தினதுபோல என்கிட்டே செய்தே, எலும்புக்கு ஓர் அடின்னு எண்ணி எண்ணி கொடுப்பேன்... நான் ஒரு மடப்பய! என்ன விஷயம், ஏன் துரத்திகிட்டு வர்றாங்கன்னு கேட்டனா? பாவம், அவனுங்களை, தாக்கினேன் பலமா...

மிராசு : மாகாளி! மாகாளி! உன்னைக் கையெடுத்துக் கும்பிடுகிறேண்டா! காலிலேகூட விழறேண்டாப்பா வண்டியை நிறுத்து... கிராமம் போகாதே! வெட்டிப்போட்டு விடுவாங்கடா.
மாகாளி : நீ செய்திருக்கிற காரியத்துக்கு வெட்டிப் போடாமே, விருந்து வைத்து அனுப்புவாங்களா?

மிராசு : ஆயிரம், ஐந்நூறு வேணுமானாகூடக் கொடுத்துடறேண்டா மாகாளி!

மாகாளி : யாருக்கு, எனக்குத்தானே?

மிராசு : அவளுக்கும் வேணுமானா தர்றேண்டா அப்பா.

மாகாளி : எதை? பணத்தைத்தானே! பணம் தவிர வேறு என்ன இருக்கு உன்னிடம் கொடுக்க? பணம் இருக்குது, என்ன பாவம் வேணுமானா செய்து தப்பித்துக் கொள்ளலாம் என்ற நெஞ்சழுத்தம். நல்லவேளை வழியிலேயாவது நான் என்ன விஷயம்னு கேட்டனே! இல்லையானா உன்னுடைய அக்கிரமத்துக்கு நானும்தானே உடந்தையாகி இருப்பேன்.

மிராசு : மாகாளி! என்னை என்னதான் செய்யப் போறே! அந்தப் பயல்களிடம் விட்டுக் கொலை செய்யச் சொல்லப் போறியா?

மாகாளி : செய்வேனா அப்படி! அப்புறம் அந்தப் பொம்பளையோட கதி என்ன ஆகிறது. கூட்டிக்கிட்டு வாங்கய்யா கோவிலுக்கு என்பேன். பெரியவங்களைப் பெத்தவங்களைக் கூப்பிடுன்னுவேன். உம்... ஆகட்டும்னு சொல்லுவேன். மறுபேச்சு பேசாமே, அந்தப் பொம்பளை கழுத்திலே தாலியைக் கட்டணும். நான்தான் தோழி மாப்பிள்ளை. நடந்தா அந்தக் கலியாணம் நடக்கணும். இல்லே, நிச்சயமா கொலை நடக்கும்.

(கிராமத்துக்குள் வண்டி வருகிறது. கிராமத்து ஆட்கள்) ‘டேய்! வந்துட்டான்டா ஊருக்குள்ளேயே’ என்று கூவி கும்பலாகச் சேருகிறார்கள். தொலைவிலிருந்து சிலர் கற்பனை வீசுகிறார்கள், மாகாளியைக் குறிவைத்து. மாடுகள் மிரளுகின்றன. மாகாளி ஏர்க்காலில் நின்று கொண்டு, மாடுகள் மிரண்டு ஓடாதபடி கயிற்றையும் இழுத்துப் பிடித்துக் கொண்டு கிராமத்து மக்கள் போடும் கூச்சலை அடக்கும் அளவுக்குக் குரலை உயர்த்தி...

மாகாளி : பெரியோர்களே! தாய்மார்களே! அமைதி! அமைதி! நான் சொல்வதைக் கேளுங்கள்.
(‘போடா, டோய்!’ என்ற கூச்சல் கிளம்புகிறது. கற்கள் மாகாளி மீது விழுகின்றன. இரத்தம் கசிகிறது.)

மாகாளி : ஆத்திரம் வேண்டாம், இதோ மிராசுதாரரை அழைத்து வந்திருக்கிறேன்... கலியாணம் செய்து கொள்ள வந்திருக்கிறார்....

(பலர் கை தட்டுகிறார்கள். சிலர், மற்றவர்களைக் கூச்சல் போடாதீர்கள் என்று அடக்குகிறார்கள்; சத்தம் அடங்குகிறது.)

மாகாளி : முதலிலே எனக்கு உண்மை தெரியாததால், கிராமத்து மக்களை அடித்து விட்டேன். மன்னிக்க வேண்டும் என்னை. இப்போது, நான் உங்கள் பக்கம்... கிராமத்தார் பக்கம்..
(கை தட்டுகிறார்கள்.)

நீதியின் பக்கம் நிற்கிறேன். அக்கிரமத்துக்குத் துணை போக மாட்டேன். மிராசுதாரர் வந்திருக்கிறார். கோவிலுக்குப் போகலாம்... பெண்ணைக் கூப்பிடுங்கள்...

அனைவரும் மகிழ்ச்சி ஆரவாரத்தோடு, மாகாளியிடம் வருகிறார்கள். மிராசுதாரர் வண்டியிலிருந்து கீழே இறக்கப்படுகிறார்.

தலைவிரி கோலமாக இருக்கும் பெண் இழுத்து வரப்படுகிறாள். மாகாளியின் காலைத் தொட்டுக் கும்பிடுகிறாள்.

ஓர் ஆள் ஓடி வந்து,‘கோவிற் கதவைப் பூட்டிக் கொண்டு ஐயர் எங்கோ போய்விட்டார்’ என்று கூறுகிறான்.

மாகாளி : பரவாயில்லை! மேலே நிலவும் நட்சத்திரங்

களும்! சுற்றிலும் உற்றார் உறவினர்! ஊர்ப்பெரியவர்கள்! கோவிலாவது மனிதன் கட்டியது; இந்த இடம் – நாம் நிற்கும் இடம் – கடவுளே படைத்த கோவிலைவிடச் சிறந்தது. கொண்டு வாருங்கள், தாலிக்கயிறு. உட்காருங்கள் அனைவரும்...

(தாலியை ஒருவர் கொண்டு வருகிறார்.

மாகாளி, மிராசுதாரர் கையில் அதைக் கொடுக்கிறான்.

மிராசுதாரர் தயக்கமடைகிறார். மாகாளி அவன் காலை அழுத்தி மிதிக்கிறான் யாருக்கும் தெரியாமல்.

மிராசுதாரர் தாலி கட்டுகிறார். அவள் அவன் காலைத் தொட்டுக் கும்பிடுகிறாள்.

மாடோட்டும் வாலிபன், குழலில் இசை எழுப்புகிறான்.

காற்று பலமாக அடிக்கிறது. மலர்கள் காற்றால் வந்து விழுகின்றன.

மாகாளி மகிழ்ச்சி அடைகிறான்.)

நிலவு ஒரு மேகத்திலிருந்து மற்றோர் மேகத்துக்கு ஊர்ந்து செல்வதுபோல் தெரிகிறது.

மாகாளி சாவடித் திண்ணையில் உட்காருகிறான். எதிரே சிலர் உட்காருகிறார்கள்.

“பால் வேணுமா? பழம் வேணுமா?” என்று கேட்கிறார்கள்.

மாகாளி : நமக்குக் கட்டிவருமா பாலும், பழமும்? சோறும் ஊறுகாயும். இல்லையானா கூழும் வெங்காயமும்.

(இரண்டு மூன்று பேர் ஓடுகிறார்கள்.)

(ஒரு மாது சோறும் ஊறுகாயும் கொண்டு வருகிறாள். தண்ணீர் ஊற்றி உப்பு போடுகிறாள் மாது. மாகாளி அதைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான்.)

ஒருவர் : ஏண்டாப்பா! எப்படி உனக்கு, இப்படிப்பட்ட தைரியம் வந்தது...

மாகாளி : இது என்ன பெரியவரே, அதிசயம்... கோழிக் குஞ்சை அடிச்சிக்கிட்டுப் போக பருந்து வருதே, அப்ப கோழி போடுதே, சண்டை, வீராவேசமா...

(சிறுவர் சிலர் கை தட்டுகிறார்கள்.)

ஒருவர் : தம்பிக்கு எந்த ஊரு...

மாகாளி : கருவூரு...

ஒருவர் : எந்தப் பக்கம்...

இன்னொருவர் : திருச்சிராப்பள்ளிப் பக்கம்னு சொல்லுவாங்க.

மாகாளி : நான் அந்தக் கருவூரைச் சொல்லலே. கரூர்னு நான் சொன்னது, கரு...கரு..தாயுடைய கருதானே, நம்ப ஊரு, அதைச் சொன்னேன்...

பெரியவர் : நிஜமான பேச்சு...

மாகாளி : எல்லா ஊரும் எனக்குச் சொந்தமான ஊர்தான்.

பெரியவர் : அப்பா, அம்மா?

மாகாளி : (சோகமடைந்து) யாருமில்லை.

(தலையசைத்துக் கொண்டு கூறுகிறான்.)

(மேற்கொண்டு சாப்பிட முடியவில்லை. மாகாளியால். பேச்சும் ஓடவில்லை. படுத்துக் கொள்கிறான். சிலர், அங்கேயே படுத்துக் கொள்கிறார்கள்.)

(நகரில் மிராசுதாரர் வீடு. கோவில் ஐயர் ஓடி வருகிறார். மிராசுதாரர் மகனிடம் குசுகுசுவெனப் பேசுகிறார். அவன் வேலையாட்களைக் கூப்பிடுகிறான். அவர்கள் பல பக்கம் ஓடுகிறார்கள்.)
வேறிடத்தில்...

(மணமானவள் பாத்திரத்தில் பாலும், தட்டில் சோறும் வைத்துக் கொண்டு, மிராசுதாரரிடம் வந்து நிற்கிறாள். மிராசுதாரர் திகிலும், சோகமும் கொண்ட நிலையிலே இருக்கிறார்.)

மிராசு : என் உயிரை வாங்காதே... என் மனம் சாந்தியாக இல்லை. பசி இல்லை. தொல்லை செய்யாதே...
(அவள் பாயும் தலையணையும் மிராசுதாரருக்குப் போட்டுவிட்டுத் தரையில் ஓர் ஓரமாகக் கையைத் தலைக்கு வைத்துக் கொண்டு படுத்துக்கொள்கிறாள்.

சாவடியில் படுத்துக் கொண்டு இருக்கும் மாகாளிக்குத் தூக்கம் வராமல் புரண்டு கொண்டு இருக்கிறான்.

மோட்டார் சத்தம் காதில் விழுகிறது. ஒருவர் விழித்துக் கொண்டு, ‘தம்பி! தூக்கம் வரலியா...கொசுக்கடியா?’ என்று கேட்கிறார்.

மாகாளி பதில் கூறாமல் உற்றுக் கேட்டவண்ணம் ‘உஸ்! உஸ்!’ என்று சத்தம் செய்யாதிருக்கும்படி ஜாடை காட்டுகிறான்.

சத்தம் வரவர, பலமாக இருக்கிறது. மாகாளி எழுந்து உட்காருகிறான்; கூட இருந்தவர்களும் உற்றுக் கேட்கிறார்கள், அச்சத்துடன்.

மோட்டார் வெளிச்சம் தொலைவில் தெரிகிறது. பல விளக்குகள் தெரிகின்றன. ஒரு பெரியவர் மெதுவாக, “தம்பி! போலீசா!” என்று கேட்கிறார். பலத்த சத்தத்துடன் ஒரு ஜீப்பும, நாலு லாரிகளும் வருகின்றன.

ஊருக்குள் நுழையும்போதே, காட்டுக் கூச்சல் போடுகிறார்கள், லாரியில் வந்தவர்கள்.

மிராசுதாரர் வெளியே வருகிறார். ஜீப்பைப் பார்த்ததும் துள்ளிக் குதித்து ‘சபாஷ்டா சபாஷ்!’ என்று கூறிக்கொண்டே ஜீப்பை நோக்கி ஓடுகிறார்.

‘அப்பா!’ என்று அழைக்கிறான் ஜீப்பில் வந்த வாலிபன்.

மிராசு : பயல்களை விடாதீர்கள். வெட்டிப் போடுங்கள். வந்தது வரட்டும். மாகாளியை முதலில் ஒழித்துக் கட்டுங்கள்...
(என்று மிராசுதாரர் கொக்கரிக்கிறார்.)

பெருங்கூச்சலுடன் அடிதடி நடக்கிறது. மாகாளி, எங்கும் சுற்றிச் சுழன்று சண்டை போடுகிறான். லாரிமீது ஏறிக்கொண்டு சண்டை போடுகிறான். லாரியை ஓட்டுகிறான் டிரைவர் வேண்டுமென்றே!
பக்கத்து லாரியில் தாவிக் குதித்துவிடுகிறான் மாகாளி. கிராமத்து மக்கள் சுருண்டு, சுருண்டு விழுகிறார்கள்; தாய்மார்கள் மிரண்டு ஓடுகிறார்கள்.

‘அப்பா! நாம போகலாம்! ஊரைக் கொளுத்தி விட்டுத்தான் நம்ம ஆட்கள் திரும்புவார்கள்... எல்லா ஏற்பாட்டுடனும் வந்திருக்கிறார்கள். நாம் இருக்கவேண்டாம்.

(என்று கூறுகிறான். ஜீப் புறப்படுகிறது.)
மாகாளி பலமாகத் தாக்கப்படுகிறான். கிராமத்தார் பலருக்குப் படுகாயம்.

மூர்ச்சையாகிக் கீழே விழுந்த மாகாளியை லாரியில் தூக்கிப் போட்டுக் கொண்டு செல்கிறார்கள். வழியில் ஓர் ஆற்றிலே போட்டுவிட்டுப் போய்விடுகிறார்கள்.

மாகாளி கண் விழித்துப் பார்க்கிறான்.

ஓர் எருமையின் முதுகில் சாய்ந்து கொண்டிருப்பதையும், எருமை, அதிக ஆழம் இல்லாத ஆற்றில் நடந்து செல்வதையும் அறிகிறான். கீழே இறங்கி, எருமையைப் பார்த்து,‘என் உயிரைக் காப்பாத்தினாயே! உன்னைப்போய், எமனுக்கு வாகனம்னு சொல்லி வைச்சிருக்காங்களே’ என்கிறான்.

(தள்ளாடி நடக்கிறான். ஒரு மூட்டை வண்டியில் செல்கிறான். பல ஊர்களில் நடக்கிறான்; கடுங்கோபம் கொண்ட நிலை பெறுகிறான்.)
மோட்டாரைப் பார்த்தால் கோபம்.

செல்வவான்களைப் பார்த்தால் கோபம்...

ஓர் ஆள் : யாரப்பா, நீ, ஊருக்குப் புதுசா?

மாகாளி : (கோபமாக) நான் யாராக இருந்தா உனக்கென்னய்யா?

அவர் : அட இதுக்கு ஏன் இவ்வளவு கோபம்?

மாகாளி : கோபித்துக் கொண்டா என்ன செய்து விடுவே!

அவர் : சுத்த வம்புக்காரனா இருக்கறியே! முரட்டுப் பய!

மாகாளி : தெரியுதேல்லோ பார்த்ததும்... ஒதுங்கிக்கோ என் பேச்சுக்கு வராதே...
வேகமாக நடக்கிறான்.

லாரிகளில் மூட்டைகளைத் தூக்கிப் போடுகிறான்.

லாரிக்காரர் : என்ன தரணும் கூலி!

மாகாளி : பெரிய பிரபு இவரு! கொடுக்கறதைக் கொடய்யா.

(ஒரு சிறிய ஓட்டலில்)
மாகாளி : நாலு இட்லி.

ஓட்டல்காரன் : நெய் போடட்டுமா?

மாகாளி : வெண்ணெய் போடு, வெண்ணே! ஆளைப் பார்த்து வியாபாரம் செய்யேன்யா! நெய் கேட்குதா நெய்! இட்லி போதும்! மிளகா சட்னிபோடு.

(அதிகமான பாரமுள்ள வண்டியை இழுக்க முடியாமல் கஷ்டப்படுபவனைப் பார்த்துவிட்டு வண்டியை முட்டித் தள்ளிவிட்டு.)

மாகாளி : ஏன் ஐயா! இப்படி உன் சக்திக்கு மீறின வேலை செய்து சாகறே!...

வண்டிக்காரன் : என்னப்பா பண்றது! வயிறு ஒண்ணு இருக்குதே!

மாகாளி : உனக்கு இருக்குது ஒட்டிப்போயி.

(கடையில் உட்கார்ந்திருக்கும் ஆளைக்காட்டி)

அவனைப் பாரு வயிறுன்னா அது வயிறு!

(வண்டிக்காரன் சிரிக்கிறான்.)

(ஒரு குளத்தங்கரையில் நிற்கிறான்; ஒரு புரோகிதர் பார்த்துவிட்டு.)

புரோகிதர் : புண்ணிய தீர்த்தம்டா! தர்ப்பணம் பண்ணணுமா?

மாகாளி : என்னா பணம்!

புரோகிதர் : இஷ்டப்பட்டதைக் கொடு.

மாகாளி : அட, நான் அதைச் சொல்லவில்லை. தர்ப்பணம்னு சொன்னயே!

புரோகிதர் : அதுவா உங்க குடும்பத்திலே யாராவது காலமாயிருப்பாங்களே, அவாளுக்காகத் தர்ப்பணம் செய்தரா மோட்சத்திலே அவாளுக்குச் சௌக்கியம் கிடைக்கும்.

மாகாளி : அவாளுக்கு அங்கே! இங்கே நான் சாகறேன். அதுக்கு ஒரு வழியைக் காணும்.

புரோகிதர் : அதுக்கு வேண்டியது பணம்.

மாகாளி : (சிரித்தபடி) கெட்டிக்கார ஆசாமிதான் நீ. அங்கே இக்கிறவங்களுக்குத் தர்ப்பணம்... இங்கே இருக்கிறவங்களுக்குப் பணம்.

புரோகிதர் : ஆமாம்...

மாகாளி : எனக்கு இப்ப எந்தப் பணமும் வேண்டாம். குணம் கெட்டவங்களை எல்லாம் கொன்று குவிச்சாப் போதும்.

புரோகிதர் : சட்டம் இடம் கொடுக்குமோ.
---------------

தழும்புகள் (3)

சட்டம் இடங்கொடுக்காதுதான் இல்லை, அக்கிரமக்காரனைத் தண்டிக்காவிட்டால் பணமூட்டை பாதுகாப்புத் தரும்பொழுது மாகாளி மீண்டும் அந்தச் சிற்றூர் சென்று மிராசுதாரர் கிராமத்துக்குப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டது பற்றியும், கிராமத்தைத் தாக்கி, கிராமத்தைக் கொளுத்தி நாசம் செய்தது பற்றியும், ஊராரிடம் சொல்லி நியாயம் பெற நினைத்தான். கிராமத்துக்குச் சென்றபோது, பெண் தற்கொலை செய்து கொண்ட சேதியும், மிராசுதாரருக்கு எதிராகச் சாட்சி சொல்ல கிராமத்தார் அச்சப்பட்டுக் கொண்டிருப்பதையும் அறிந்து பதறினான். கிராமத்து மக்கள் அவனிடம் பரிவுகாட்டினர். ஆனால், துணிவு பெற மறுத்துவிட்டனர். மாகாளி கோபித்துக் கொண்டார். கிராமத்து மக்களோ, ‘அந்த மிராசுதாரருடைய பகையைத் தாங்கிக் கொள்ளும் சக்தி எங்களுக்குக் கிடையாதப்பா! எங்களை மன்னித்துவிடு. ஆனால் இங்கே நீ இருப்பதுகூட ஆபத்து. மிராசுதாரன் மோப்பம் பிடித்தபடி இருக்கிறான்; போலீசில் சிக்க வைத்து விடுவான். வீணாகத் தொல்லையைத்தேடிக் கெள்ளாதே’ என்று கூறினர்.

‘இப்படிப் பயந்து பயந்து செத்துப் பிழைப்பதைக் காட்டிலும் ஒரே அடியாக அக்கிரமத்தை எதிர்த்து நின்று கொல்லப்பட்டுச் செத்துத் தொலைக்கலாமே! நீங்கள் இப்படிக் கோழையாக இருப்பதனால்தான் அக்கிரமக்காரர்கள் கொட்டம் அடிக்கிறார்கள். கொடுமை கொடிகட்டிப் பறக்கிறது. தூ... தூ...’ என்று கூறிவிட்டு அந்தக் கிராமத்தை விட்டு வேறு ஊருக்குச் சென்றுவிட்டான்.

‘அக்கிரமத்தைத் தடுத்திட முடியவில்லை. ஆனால் எதிர்த்து நின்றேன். என் கடமையைச் செய்தேன். அந்த மிராசுதாரன் இனி இவ்விதமான அக்கிரமம் செய்ய எண்ணும் போதெல்லாம் என் நினைவல்லவா வரும். நான் தெரிவேனல்லவா அவன் மனக்கண் முன்பு – அவ்வளவுதான் என்னால் சாதிக்க முடிந்தது. அந்தப் பெண் தற்கொலை செய்து கொள்ளாது இருந்திருப்பாளானால் கிராமத்தார் ஒத்துழைக்காவிட்டால்கூட நான் மிராசுதாரருடைய மாளிகையில் அவர் குடியேறுவதற்கான காரியத்திலே ஈடுபட்டு, அதிலேயே மாண்டு போக நேரிட்டாலும் மகிழ்ச்சியோடு மரணத்தைத் தழுவிக் கொண்டிருப்பேன். இப்போது எனக்கு இருக்கும் திருப்தி நாம் நமது கடமையைச் செய்தோம் என்பதுதான். அதனை எனக்கு அடிக்கடி நினைவுபடுத்திக் கொண்டிருப்பவை இந்தத் தழும்புகள். பலமான தாக்குதல்! பல மாதங்கள் எனக்கு வலி இருந்தது. என்னென்னமோ பச்சிலைகள் மெழுகுகள் தைலங்கள் புண்ணைக் குணப்படுத்த. மேலேதானே புண் ஆறுகிறது. நெஞ்சிலே ஏற்பட்ட புண்? அது எங்கே ஆறப்போகிறது. மாற்ற எவ்வளவோ பேர் நமக்கென்ன என்று இருந்துவிட்டாலும் நாம் நமது கடமையைச் செய்தோம் என்ற மகிழ்ச்சி எனக்கு இந்தத் தழும்புகளைப் பார்த்துக் கொள்ளும்போது’ என்று மாகாளி கூறினான்.

மற்றும் சிறுசிறு நிகழ்ச்சிகள் பலப்பல கூறினான். ஒரு நிகழ்ச்சி, என் உள்ளத்தில் ஆழமான இடம் பெற்றது. அதனையும் நிகழ்ச்சி நடைபெறுவது போன்ற வடிவத்திலேயே தருகிறேன்.

(ஓர் ஊருக்குச் சற்றே வெளிப்பகுதியில் உள்ள ஒரு கல்லாலான கட்டிடம்; மாகாளி ஒருபுறம் சுருண்டு படுத்துக் கொண்டிருக்கிறான்.

இரு வாலிபர்கள் சிகரெட் பிடித்தபடி வருகிறார்கள்.

அங்கு ஒரு பக்கமாக உட்காருகிறார்கள், மாகாளி படுத்துக் கொண்டிருப்பதைப் பார்க்காமலேயே...)
தாமு : சோமு! நீ அதிர்ஷ்டக்காரண்டா... எதுவாக இருந்தாலும் உன் வலையிலே வீழ்ந்துவிடுகிறது.

சோமு : போடா ஃபூல்... அதெல்லாம் நம்ம Face Cut Personality. தரித்திரப் பயலே அது தனி Art தனிக்கலை.

தாமு : நான் நம்பவே இல்லை, நளினா உன் வலையில் விழுவாளென்று...

சோமு : சும்மா சொல்லக் கூடாது, தாமு. நளினா, நெருப்பு, நெருப்பு போலத்தான் இருந்தாள். ஆனால்...
தாமு : எப்படிடா... சொல்வேன்... நல்ல இடத்துப்பெண்...

சோமு : படித்துக்கூடத்தான் இருக்கிறாள்... பல்லைக் காட்டியதும் பரவசமாகிவிடக்கூடிய ஏமாளி அல்ல... கண்டிப்பான சுபவாம்...

தாமு : அதுதானே, எனக்கும் ஆச்சரியம் எப்படி?

சோமு : (கேலியாக) எப்படி...! சொல்லி வருமா அந்த வித்தை... என் பேச்சு, பார்வை, அப்படி! பாகாக உருகினாளே, நான் கண்கலங்கியபோது...

தாமு : கண் கலங்கினாயா...?

சோமு : ஆமாம்! அப்படி ஒரு போஸ். நளினா! என்னால் நீ இன்றி நான் உயிர் வாழ முடியாது... என்னால் வேதனையை இனியும் தாங்கிக் கொள்ள முடியாது... நாளைக் காலையில் கோவில் திருக்குளத்திலே என் பிணம் மிதக்கும்... என்று டயலாக்.... அதற்குத் தகுந்த ஆக்ட்... போஸ்... நளினா என்ன, சிலைகூடச் சம்மதம்! சம்மதம்!என்று கூறும்டா, கூறும்.... மண்டு! உனக்கெங்கே தெரியப்போகிறது, அந்த வித்தை! ஒரு புன்னகை தவழ்ந்தது... கண்களிலே ஒரு மகிழ்ச்சி... உடனே.

தாமு : உடனே?

சோமு : சத்தியம் செய்தேன்! “தாயின் மேல் ஆணை; தந்தை மேல் ஆணை... தூய காதல்மேல் ஆணை! உன்னைத் தவிர வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை. நீயே என் உயிர் – என் இன்பம்” என்றேன்.
தாமு : சொன்னதும்...?

சோமு : (கேலியாக) சொன்னதும்... போடா போ! நடக்க வேண்டியதெல்லாம் நடந்தது. நடந்து கொண்டே இருக்கிறது...

தாமு : (தழுதழுத்த குரலில்) நல்ல அழகு...

சோமு : (கேலியாக) ஏண்டா உருகறே... ஏய்!... தந்தத்தால் செய்த பதுமையடா அவள்... அடா, அடா! சிரிக்கும்போது அவள் கன்னத்திலே ஒரு குழி விழும். ஆஹா... ஹா...ஹா.... அற்புதமா இருக்கும் பார்க்க... விழுங்க விழுங்க.... இது என்ன கன்னமா, பச்சரிசி மங்காயா, என்று கொஞ்சுவாள். கன்னத்தைக் கிள்ளும்போது.... அடா அடா, அடா! இத்தோடு இருபத்தி இரண்டு போதும் என்பாள்...

தாமு : இருபத்தி இரண்டா... என்னது...

சோமு : முத்தம்டா, முத்தம்... பரிபூரணமாக நம்புகிறாள்... என்னை... திருமணத்துக்கு நாள் பார்த்தாகிவிட்டதா... கண்ணா என்பாள்... ஓ... என்பேன்... எப்போ... என்று ஆவலாகக் கேட்பாள்... அதோ அந்தச் சந்திரன் மேகத்திற்குள் மறைந்ததும்... இப்போதே... இங்கேயே என்பேன்... போங்கள் எப்போதும் விளையாட்டுத்தானா, என்பாள்.

தாமு : நீ....?

சோமு : (கேலியாக)... நீ? உடனே நாள் நட்சத்திரம் பார்த்துச் சொன்னேன். என்று எதிர்பார்க்கிறாயா... பைத்தியக்காரா... அப்படியே என் மார்மீது சாய்த்துக் கொண்டேன். அன்பே என்றாள்; இன்பமே என்றேன். என்னைக் கைவிடமாட்டீர்களே என்றாள். நானா என்னையா கேட்கிறாய், அந்தக் கேள்வி என்றேன். கேட்டபடி அவள் முகத்தை என் கரங்களில் தாங்கிக் கொண்டு என் முகத்தருகே கொண்டு சென்றேன். பார்! என் முகத்தைப் பார். இந்தக் கண்களைப் பார்! உன்னைக் கைவிடும் கயவனுடைய முகமா இது என்றேன்.

தாமு : அவள்?
சோமு : அவளா! அதற்குமேல் முடியுமா அந்தப் பேதைப் பெண்ணால், ஆனந்தத்தை அணைபோட்டுத் தடுக்க! நான் நம்புகிறேன். முக்காலும் நம்புகிறேன் என்றாள். இதழ் என்னிடம் – இன்ப இரவு – இணையில்லா ஆனந்தம்.

தாமு : (பெருமூச்சுடன்) கொடுத்து வைத்தவனடா நீ... அதுசரி, நளினாவைத் திருமணம் செய்து கொள்வது என்ற முடிவுக்கே வந்து விட்டாயா?

சோமு : முட்டாள் வருவன் அந்த முடிவுக்கு... நானா? நளினா ஒரு ‘ஒன்வீக்’... ஒரு வார விருந்து. பிறகு...
(மகாகாளியின் பலமான பிடி சோமுவின் கழுத்தில் விழுகிறது. பதறுகிறான்.
உடனிருந்தவன் ஓடிவிடுகிறான். கழுத்தைப் பிடித்துத் தூக்கிச் சோமுவை நிறுத்தியபடி மாகாளி கடுங்கோபத்துடன்.)

மாகாளி : பெண்ணைக் கெடுத்த பேயனே! ‘ஒன்வீக்’ ஒருவார விருந்தா அவள் உனக்கு... (தாக்குகிறான்.) மயக்க மொழி பேசி, அவளை நம்ப வைத்தாய்! பரிபூரணமாக நம்புகிறாள். நீ அவளைக் கெடுத்துவிட்டு அதை ஒரு கலை என்று இங்குப் பேசிக் கொட்டம் அடிக்கிறாய்... பைத்தியக்காரப் பெண்ணே! பசப்பு வார்த்தையைக் கேட்டுப் பாழாகிப் போனாயே அம்மா! (மீண்டும் தாக்கி) அடப்பாதகா! உன்னை நம்பிய அந்தப் பெண் உன்னை உத்தமன் என்று எண்ணிக் கொண்டு, என்ன என்ன ஆசைக்கனவுகள், இன்ப எண்ணங்கள் கொண்டிருக்கிறாளோ! உள்ளத்தில் இடமளித்தோம் இனி ஊர் அறிய – உலகமறியக் கூறி மகிழவேண்டும். மாலை சூட்டுவான், மக்கள் வாழ்த்துவார்கள், மணாளனுடனே மதிப்புடன் வாழ்வோம் என்றெல்லாம் எண்ணி அவள் மனத்திலே மகிழ்ச்சி பொங்கும்.. இங்கு நீ ஒரு வாரம் என்று துளிகூட, பழிபாவத்துக்கு அஞ்சாமல், யார் இருக்கிறார்கள் நம்மைக் கேட்க என்ற தைரியத்தில் உன் வீரப்பிரதாபங்களைப் பேசிக் கொண்டிருக்கிறாய்.

(தாக்குகிறான்; அவன் அடிதாளமாட்டாமல்)
சோமு : ஐயோ... ஐயையோ... என்னைக் கொல்லாதே! நான் தாங்கமாட்டேன். சத்தியமா இனி அப்படிப்பட்ட தப்பு தண்டாவுக்குப்போகமாட்டேன்.

மாகாளி : இனி தப்புத் தண்டாவுக்குப் போகமாட்டியா! அயோக்கியப்பயலே! இப்ப நடந்ததற்கு என்ன சொல்றே... நடந்தது நடந்ததுதானா... யார் அந்தப் பெண்? எங்கே இருக்கிறாள்?
சோமு : பெரிய இடத்துப் பெண்ணய்யா... விஷயம் தெரியக்கூடாது... இனி அவ்விதம் நான் நடந்தா, கேள்... கொன்று போடு...

மாகாளி : அடப் பாதகா! ஒரு பெண்ணைக் கெடுத்துவிட்டு... அவள் கதி என்னவென்று கூறாமல்,... உன்னிடம் என்ன பேச்சு (இழுத்தபடி) நட! அந்தப் பெண்ணைக் காட்டு... அவள் காலில் விழுந்து கதறு... நான் மட்டும் இங்கே இல்லாதிருந்தால், அந்தப் பெண்ணின் கதி என்ன ஆகியிருக்கும்? புறப்படு... இப்போதே திருமணமாக வேண்டும்... அவள் வாழ வேண்டும்.

சோமு : ஆகட்டும்... என்னை விட்டுவிடு... நான் அவளையே கலியாணம் செய்து கொள்கிறேன்.
மாகாளி : (கேலியாக) அப்படிங்களா... அப்போ, போயிட்டு வாங்க... கலியாணத்தன்று, நான் வருகிறேன். (கேவலமாக) ஏண்டா! உன் பேச்சை நம்பச் சொல்கிறயா... நீதான், ‘போஸ்’ கொடுப்பியே, ‘போஸ்’; கேட்டுக் கொண்டுதான் இருந்தேன், உன் பேச்சை... நான் என்ன ஏமாளிப் பெண்ணா, உன் பசப்பிலே மயங்க... (தாக்கியபடி) நம்ம ‘பாஷை’ புரியுதா! புரியதேல்லோ...
(சோமு திணறுகிறான்.)

மாகாளி : அதனாலே, என்னோடு பேசி, தப்பித்துக் கொள்ளலாம் என்று எண்ணாதே... புறப்படு... அந்தப் பெண் வீட்டுக்கு...
(இழுத்துச் செல்கிறான்.)

சோமு : (மெல்லிய குரலில்) நாலுபேர் பார்த்தா கேவலமாகப் பேசுவாங்க! என் கையை விடுங்க... நான் ஓடிவிடமாட்டேன்... சத்தியமா...

மாகாளி : ஓஹோ! துரைக்கு இது கேவலமாத் தெரியுதா! நாலுபேர் பார்த்தா கேலியாகப் பேசுவாங்களேன்னு சுருக்குன்னு தைக்குது... ஏண்டப்பா (ஊச்ஞிஞு இதt) இதற்கே உனக்கு இப்படித் தோணுதே, அந்தப் பெண்ணைக் கெடுத்துக் கைவிட்டுவிட்டா, அவளுக்கு எவ்வளவு கேவலம்... இழிவு! உம்! நீ ஏன் அதைப் பத்தி எண்ணி இருக்கப் போறே... நீதான் ‘ஒன்வீக்’ – போதும். என்பவனாச்சே.

(தலையைக் கவிழ்த்துக் கொள்கிறான் சோமு.

(இருவரும் நடக்கிறார்கள்; எதிரே சில பெண்கள் வருகிறார்கள்.

‘இவளா? அவளா?’ என்று கேட்பதுபோல மாகாளி ஜாடை செய்கிறான்.

இல்லை இல்லை என்பதைச் சோமு ஜாடையால் தெரிவிக்கிறான்.

எதிர்ப்புறமிருந்து வள்ளி சைக்கிளில் வருகிறாள்.

சோமுவின் கண்களிலே திருட்டுத்தனம் தெரிகிறது.)

மாகாளி : வருஷம் பத்து ஆனாலும் விடமாட்டேன்... தெரியுதா... இப்படிப்பட்ட ஆசாமியைக் கண்டா, நமக்கு விருந்து... புரியுதா..

(சோமு வள்ளியைப் பார்க்கக் கண்டு.)

மாகாளி : அதோ வருதே, ஒரு பொண்ணு சைக்கிளில்...

சோமு : (மெல்லிய குரலில்) அந்தப் பொண்ணுதான்...

(சைக்கிள் அருகே வருகிறது. தன்னை யாரோ இருவர் தடுத்து நிறுத்துவாக எண்ணிக்காண்டு வள்ளி திகிலடைகிறாள்.)

மாகாளி : சைக்கிள் சவாரியா... பட்டத்தரனை நானே கூட்டிக்கிட்டு வந்திருக்கிறேன்... இறங்கு...கீழே. (திகைக்கிறாள்.)

மாகாளி : இறங்கு... ஏமாளிப் பொண்ணே! வா, இப்படி... ஏன் இப்படி விழிக்கறே...

வள்ளி : (திணறி) யாரு... என்ன... என்னய்யா இது... என்னை ஏன் மிரட்டறே... யாரு நீங்க?

மாகாளி : (சோமுவைப் பிடித்திழுத்து வள்ளி எதிரே நிறுத்தி) புரியுதா, ஏன் உன்னைக் கூப்பிட்டேன் என்கிறது வந்திருக்காரே உன்னை வாழ வைக்கும் மணாளர். வாம்மா வா!... என்னா, நம்ம காதலரை, யாரோ ஒரு முரட்டுப் பய இழுத்துக் கொண்டு வருகிறானேன்னு திகைக்கறியா... வேறே வழி இல்லை.... அதனாலே இப்படி...

வள்ளி : என்ன சொல்றீங்க... ஒண்ணும் புரியலையே...

மாகாளி : (கோபமாக) இரகசியம் தெரிந்து விட்டதே என்று திகைப்பா? இப்படி மூடி மூடி மறைத்துத்தானே, நாசமாகப் போறீங்க! இப்படிப்பட்ட பயல்களும் உங்களை நம்ப வைத்து நாசமாக்க முடிகிறது...

வள்ளி : (சோமுவையும் மாகாளியையும் மாறி மாறிப் பார்த்தபடி)
ஒன்றும் விளங்கவில்லையே... என்னய்யா இது...

மாகாளி : இப்போதும் இவனுக்கு எங்கே மனக்குறை வந்து விடுகிறதோ என்றுதானே பார்க்கிறாய்? புத்தி கெட்ட பெண்ணே! இவன் உன்னை ஏமாற்றிவிடப் பர்த்தான். காதலித்தானே, அதே காதகன் ‘கண்ணே!’ என்றானே, ‘மணியே’ என்றானே, அதே கயவன்! உன்னைத் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை... ஒருவாரம் போதுமாம்! என் காதால் கேட்டேன், இவன் பேசியதை. நல்ல வேளையாகக் கேட்டேன்... கேட்டதால், கெட இருந்த உன் வாழ்வு, அழிய இருந்த உன் கற்பு, போக இருந்த உன் மானம் மீண்டும் கிடைக்க வழி ஏற்பட்டது. வா, உன் வீட்டுக்கு! உன் அப்பா யார்?... பார்த்துப் பேச வேண்டும்... இவனும் வருவான்... திருமண நாள் குறிப்போம்... நாளென்ன நாள்! நல்லது நடக்கும் நாளெல்லாம் நல்ல நாள்தான்... புறப்படு.... புறப்படு...

வள்ளி : (சிறிது புன்னகையுடன்) திருமணம் எனக்கா...

மாகாளி : ஆமாம், ஆமாம்... ஒத்துக் கொண்டான்...

வள்ளி : (சிரிப்புடன்) யார், இவ...ரா?

மாகாளி : (வெறுப்புடன்) ஆமாம்... பரிபூரணமாகத் தான் நம்பினாயே இவரை...

வள்ளி : (மேலும் சிரித்தபடி) பைத்தியமே! பைத்தியமே! அவர் யாரோ, நான் யாரோ? ஐயா! உம்மிடம் நல்லதுக்குப் போராடும் வீரம் இருக்கிறது... ஆனால் சுலபத்திலே ஏமாந்து விட்டீர்... எனக்கும் இவருக்கும், முன்பின் பழக்கமே கிடையாது...

மாகாளி : ஏய்! என்னது... இது... (என்று கூறி சோமுவைத் தாக்க.)

(வள்ளி குறுக்கிட்டு)
வள்ளி : முரட்டுத்தனத்தாலே என்ன காரியத்தைச் சாதிக்க முடியும்... இப்போதுதான் எனக்குக் கொஞ்சம் விஷயம் விளங்குகிறது.. காதலித்தவளைக் கைவிட இருந்தார் இந்த ஆசாமி... கண்டு பிடித்துவிட்டீர்... அந்தப் பெண்ணுக்காக, அவள் வாழ்வுக்காக, மானத்துக்காகப் போராடுகிறீர்.

மாகாளி : ஆமாம்..

வள்ளி : ஆனால் அந்தப் பெண், நான் அல்ல...

மாகாளி : இவன் காட்டினானே உன்னை...

வள்ளி : அடிதாங்கமாட்டாமல், யாரையாவது காட்டித் தப்பித்துக் கொள்ளலாம் என்று, சுலபத்தில் – ஏமாற்ற முடியும் உம்மை என்ற எண்ணத்தால்...

மாகாளி : (கோபத்துடன்) அட பழிக்கஞ்சாத பாதகா! (நோக்கி) இப்படியுமா ஒரு சுபாவம்!... நான் ஒரு முட்டாள்... உன்னை நம்பிவிட்டேன்...

வள்ளி : பார்த்தீர்களா! நீங்களே இவன் பேச்சை நம்பி விட்டீர்களே! ஒரு பெண் ஏமாந்ததிலே என்ன ஆச்சரியம்... அடிக்காதீர்கள்... பக்குவமாகப் பேசி...

மாகாளி : (கேலியாக) வாடா, என் ராஜா! (என்று கொஞ்சி) புண்ணியவானே, அந்தப் பெண்ணை ஏற்றுக் கொள் என்று சொல்லிக் காலிலே விழ வேண்டுமா...

வள்ளி : ஒரு பெண்ணுடைய வாழ்வுக்காக இவ்வளவு பரிந்து பேசும் உங்கள் குணம் தங்கம்... தங்கமய்யா தங்கம். ஆனால், முறை தெரியவில்லை... தாக்கித் தாக்கியா திருத்த முடியும்... சாகடிக்கலாம்...

மாகாளி : இப்படிப்பட்ட ஈனர்கள் செத்தால் என்ன... சாகடித்தால்தான் என்ன...

வள்ளி : ஒன்றுமில்லை... எந்தப் பெண்ணுடைய நல்வாழ்வுக்காகப் பாடுபடுகிறீரோ, அந்தப் பெண்ணின் கதி என்ன ஆகும்... நாசமாய்ப் போகும்... அழிக்கத்தான் தெரிகிறது உமக்கு... வாழ வைப்பது இந்த முறையால் அல்ல...

மாகாளி : (வெறுப்புடன்) இந்த முறை அல்ல! வேறே என்னவாம்? ஒரு பள்ளிக்கூடம் நடத்தி இவனுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கச் சொல்கிறாயா... பெண்ணே! உனக்குப் பேசத் தெரிகிறது... சும்மா இரு...
(சோமுவின் கழுத்தைப் பிடித்திழுத்து)

யார் அந்தப் பெண்? உண்மையைச் சொல்லு! உதைபட்டுச் சாகாதே!

வள்ளி : சொல்லய்யா... யார் அந்தப் பெண்... இதோ பார், ஒரு பெண்ணின் வாழ்க்கையைப் பாழாக்குவது தர்மமா நியாயமா... உங்களை எவ்வளவு நம்பி தன்னை ஒப்படைத்தாள்! துரோகம் செய்யலாமா...

மாகாளி : இந்தக் கல் நெஞ்சனிடம் உன் கனிவான பேச்சு, பலிக்குமா, அம்மா... அவனுக்குப் புரிவது ஒரே ஒரு பாஷைதான்.
(தாக்குகிறான். வள்ளி குறுக்கிட்டுத் தடுக்கிறாள்.)

மாகாளி : (கோபமாக) தா, பெண்ணே! இதிலே குறுக்கிடாதே! நீ அல்ல, இவனிடம் ஏமாந்தவள்.. பிறகு உனக்கென்ன வேலை இங்கே? போ, பேசாமல்... நான் பார்த்துக் கொள்கிறேன்.

வள்ளி : தெரிகிறதே நீங்கள் பார்த்துக் கொள்கிற இலட்சணம். பக்குவமாகப் பேசி, உண்மையைத் தெரிந்து கொள்ளத் திறமை இல்லை; புத்தி புகட்டி, மனத்தை மாற்றத் தெரியவில்லை.
மாகாளி : அம்மா, மகராசி! அந்தத் திறமை எல்லாம் உங்களோடு இருக்கட்டும்.. என் திறமை அவனுக்குத் தெரியும் (சோமு அடிபட்ட இடத்தைத் தடவிக் கொடுக்கிறான்.) உனக்கு எப்படித் தெரியும்... உனக்குச் சம்பந்தமில்லாத விஷயம்.. தலையிடாதே... போ, பேசாமல்.

வள்ளி : எனக்குச் சம்பந்தமில்லாத விஷயமா... சரி, உமக்கு மட்டும் என்ன சம்பந்தம்... இவனால் கெடுக்கப்பட்டவள் யார்? உன் அக்காவா, நான் தலையிட...

வள்ளி : நீதிக்காகப் போராடுபவர்கள் இலட்சத்தில் ஒருவர்கூட இருப்பது கஷ்டம்... ஆடவர்களிலே இப்படிப்பட்ட ஓர் அபூர்வ மனிதர் இருப்பது கண்டு நான் எவ்வளவு மகிழ்ச்சி அடைகிறேன் தெரியுமா... பெண் குலத்தின் சார்பிலே வாதாட, போராட இப்படிப்பட்ட வீரர்கள் தேவை... நிரம்பத் தேவை.. வீரம் இருக்கிறது, தங்களிடம் நிரம்ப... விவேகம் இல்லை...

மாகாளி : முட்டாள், முரடன் நான்... அதைத்தானே அம்மா, நாசுக்காகச் சொல்கிறாய்... சரி, நான் இவனை இழுத்துக்கொண்டு போய், முச்சந்திக்கு முச்சந்தி நிறுத்திப் பேசப் போகிறேன்... அந்தப் பெண்ணின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்கும் வரையில் வேறு வேலை எனக்குக் கிடையாது...

வள்ளி : நீ முச்சந்திகளிலே இவனை நிறுத்தி வைத்து முரட்டுத்தனமாக நடத்துவாய் – ஊரார் இவனுக்கு வேண்டியவர்கள் – போலீஸ் – எல்லாம் கைகட்டி, வாய் புதைத்து, ஓஹோ! ஓர் இலட்சியவீரன் போராடுகிறான். நாம் குறுக்கிடக்கூடாது என்று இருப்பார்கள் என்றா எதிர்பார்க்கிறாய்? உள்ளத்திலே நல்ல எண்ணம் இருக்கிறது... உலகம் தெரியவில்லையே... யாரும் துணை இல்லாததால் இவன் சும்மா இருக்கிறான்... நாலு பேர், தெரிந்தவர்களைக் கண்டால் போதுமே, காகாவென்று கூச்சலிட்டு ‘திருடன், திருடன்! முரடன்! கத்தியால் குத்தவந்தான்! பணத்தைப் பறித்துக் கொண்டான்’ என்று கூவுவான்... ஊர் பாயும் உன் மீது... உன் வலிவு பயன்படாது... போலீஸ் வரும்... கோர்ட்டிலே நிறுத்துவார்கள்... கையில் விலங்கு போட்டு... நீ கூறுவாய் இவன் ஒரு பெண்ணைக் கெடுத்த பேயன், திருத்தப் பார்த்தேன் என்று கோர்ட்டிலே; கைகொட்டிச் சிரிப்பார்கள், ஆழ்வார்கள், நாயன்மார்களுக்குப் பிறகு அவதரித்திருக்கிறார் ஐயா இந்த மகான்! என்று கூறி, வழிப்பறி நடத்திய குற்றத்திற்காக ஆறு வருடம் தண்டனை தருவார்கள்... இவன் வெற்றிச் சிரிப்புடன் வேறு வேட்டைக்குக் கிளம்புவான் – இவனால் நாசமாக்கப்பட்டபெண், குளத்தைத் தேடுகிறாளோ விஷத்தைத் தேடுகிறாளோ, யார் கண்டார்கள்...

மாகாளி : நன்றாகத்தான் பேசுகிறாய்... நியாயமாகத்தான் பேசுகிறாய்.. உலகம் அப்படித்தான் இருக்கிறது... ஆனால்... அந்தப் பெண்ணின் வாழ்வு நாசமாகலாமா... நீயும் ஒரு பெண்... சொல்லம்மா, சொல்லு... இந்தப் பேயனைச் சும்மா விடலாமா...

வள்ளி : (சோமுவிடம் கனிவாக) ஐயா! பழிபாவத்துக்கு அஞ்ச வேண்டாமா... அடுக்குமா உமது போக்கு? அபலையை நாசமாக்கலாமா... உம்மிடம் கொஞ்சி இருப்பாள். கெஞ்சி இருப்பாள்... சத்தியம் சத்தியம் என்று கூறி நம்ப வைத்திருப்பீர்... அவளைக் கைவிட்டால் அவள் மானமிழந்து வாழ்வாளா... நமது சமூகத்துக்கே இழிவு அல்லவா... ஐயா!

தாயின் வயிற்றில் பிறந்தீர்! தாய்க்குலத்துக்கு இழிவு தேடலாமா! அக்கா தங்கை இல்லையா உமக்கு! உமது காதலை நம்பினாளே அந்தப் பெண், அவளிடம் சரசமாடிக் கொண்டிருக்கும்போதே, அவளைச் சாகடித்து விட்டிருக்கலாமே! அது எவ்வளவோ மேல், இதைவிட!
(சோமு கண்கலங்குகிறான். மாகாளி அதைக் காண்கிறான்.)
-------------

தழும்புகள் (4)

வள்ளி : அவளுடைய அழகு கண்டீர் உமது மனம் அவளை நாடிற்று... அருகே அழைத்தீர்.... ஆயிரம் தடவை, அவள் தடுத்திருப்பாள், ஆகாது... அடுக்காது... முறையல்ல – நெறி அல்ல என்று. என்னென்ன கூறினீரோ... கவிதை பாடி இருப்பீர், கதை சொல்லி இருப்பீர், கைநீட்டி, சத்தியம் என்று சொல்லி இருப்பீர்... நம்பினாள்... அவளை நாசமாக்காதீர்... நான் அவளுடைய தமக்கை என்று வைத்துக் கொள்ளும்... காலில் விழச் சொன்னால்கூட விழுகிறேன்.

சோமு : (விம்மும் நிலையில்) அம்மா! என்னை மன்னித்து விடு... மன்னித்துவிடு... மன்னித்துவிடம்மா, மன்னித்துவிடு.

வள்ளி : அவளை உமது நிரந்தர விருந்தாக்கிக் கொள்ளுமய்யா... அவளிடம் பெற்ற அன்புக்குக் கட்டுப்படுவதுதான் தர்மம். அந்த அன்பு ஒன்றுக்கு ஆயிரமாக ஓங்கி வளரும்... குடும்பம் தழைக்கும்.

(வள்ளி கண்கசக்குகிறாள். அதைக் கண்ட மாகாளி.)

மாகாளி : நீ ஏனம்மா அழுகிறாய்... பாரடா பார்! பேயனே! அந்தப் பெண்ணின் கண்ணீருக்காவது பயப்படு...

வள்ளி : அந்தப் பெண் வீட்டிலே திருமணத்துக்கு எதிர்ப்பு இருந்தால்கூட, நான் கெஞ்சிக் கூத்தாடிச் சம்மதம் பெற்றுத் தருகிறேன்!

(வேறோர் சைக்கிளில் வேறோர் பெண் வருகிறாள். வள்ளியைப் பார்த்துவிட்டு.)

வள்ளி! வள்ளி! எங்கே... இப்படி...

(சோமுவைப் பார்த்தபடி தலைகுனிகிறாள். சோமு கூச்சமடைந்து தலையைக் கவிழ்த்துக் கொள்கிறான்.)

மாகாளியும் வள்ளியும் அதைக் கண்டு ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்கின்றனர்.

மாகாளி, பெண்கள் அறியாமல், சோமுவை இடித்து வந்தவளைக் காட்டி, ‘இவளா?’ என்று ஜாடையால் கேட்கிறான்.

வெட்கமும் புன்னகையும் கொண்ட நிலையில், சோமு ‘ஆமாம்’ என்று தலையை அசைக்கிறான்.)
வள்ளி : நீதானா... நளினா... என்னிடம்கூட இத்தனை நாள் மறைத்து வைத்தாயே...

நளினா : சொல்லிவிட்டாரா...

மாகாளி : உம்! உம்! சொல்லி நாள் பார்க்கச் சொல்லுகிறார்.

வள்ளி : வாருங்கள். நளினா வீட்டுக்குப் போவோம்... பெரியப்பாவிடம் பேசலாம்...

மாகாளி : பெரியப்பாவா...?

வள்ளி : ஆமாம்; நளினாவின் அப்பாவை நான் செல்லமாகப் பெரியப்பா என்றுதான் கூப்பிடுவது... நானும் நளினாவும் ஒன்றாகப் படித்தவர்கள்..

மாகாளி : (குறும்புப் புன்னகையுடன்) நான் நம்பமாட்டேன்... இதோ இவரும் நம்பமாட்டார். உனக்குத் தெரிந்தததில் ஆயிரத்தில் ஒரு பகுதிகூட...அதுக்கு... நளினாவுக்குத் தெரியாது...

வள்ளி : இந்த மாதிரி, சாந்தமாக வருஷத்திலே எத்தனை தடவை... ஒரு மூன்று நாலு தடவையாவது இருப்பது உண்டா...?

மாகாளி : மனத்திலே குமுறல் இருக்கும்போது, சாந்தி எப்படி ஏற்படும்?...

வள்ளி : ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

மாகாளி : அதற்கு ஒன்று, உணர்ச்சியற்ற மரக்கட்டை ஆகிவிட வேண்டும்... அல்லது செத்துத் தொலைக்க வேண்டும்.

(இருவரும் பேசிக்கொண்டு இருக்கையில் சோமு, நளினாவின் கரங்களை எடுத்துக் கண்களில் ஒற்றிக் கொள்கிறான்.)

மாகாளி : என் கதை கிடக்கட்டும்... இனி இந்தப் பெண் விஷயம்.

வள்ளி : நான் பொறுப்பு... திருமணம் நடக்கும்...

மாகாளி : மனம் நிம்மதி அடைந்ததம்மா. நான் வருகிறேன்... அபலை அழியாது பார்த்துக் கொள்ள முடிந்தது... என்றும் ஏற்படாத மகிழ்ச்சி எனக்கு...

வள்ளி : கோபம் ஏன் வருகிறது தெரியுமா...

மாகாளி : நமக்குப் பிடிக்காதது நடக்கும்போது கோபம் வரத்தானே செய்யும்?

வள்ளி : நமக்குப் பிடிக்காதது மட்டுமல்ல... நம்மால் தடுக்க முடியாதது நடந்தாலும், கோபம் வரும்...நம்மால் தடுக்க முடியவில்லையே என்பதாலே கோபம், வெட்கம், இரண்டும் சேர்ந்து கொட்டுகிறது.

மாகாளி : உண்மைதான்... எனக்கு, அக்கிரமத்தைக் கண்டால் கட்டோடு பிடிக்காது... கோபம்தான் வரும்...

வள்ளி : அக்கிரமத்தைப் போக்க முடிவதில்லை.

மாகாளி : ஆமாம்... முடிவதில்லை.

வள்ளி : ஏன்? முயலுவதில்லை... நம்மால் ஆகுமா என்ற பயம்.

மாகாளி : அதுவும் உண்மைதான்.

வள்ளி : ஆனால், கோபத்தால் என்ன பலன்? அக்கிரமம் ஒழிகிறதா? உம்! அதுதான் இல்லை. கோபம் நம்மையே அக்கிரமம் செய்ய வைக்கிறது.

மாகாளி : வலியோர் எளியோரை வாட்டும்போது... எப்படிச் சகித்துக் கொண்டிருக்க முடியும்.

வள்ளி : முடியாது... கூடாது... ஆனால் அதற்காக நாமே துடுக்குத்தனம் செய்வதா...?

மாகாளி : அப்பொழுதுதான் அக்கிரமக்காரன் அடங்குகிறான்.

வள்ளி : சரியாகச் சொன்னாய்... அக்கிரமக்காரன் அடங்குகிறான்... அக்கிரமம் அழிவதில்லை... அக்கிரமம் கூடாது என்பதுதானே உன் நோக்கம்?

மாகாளி : ஆமாம்... ஆனால் வழி தெரியக் காணோமே...

வள்ளி : அடேயப்பா! அவ்வளவு சுலபத்திலா, வழி கிடைத்துவிடும்.

அவ்வளவு சுலபத்திலே வழி கிடைத்துவிடும் என்று வள்ளி சொன்னது போலத்தான், நிகழ்ச்சிகள் தொடர்ந்தன. நளினாவைத் திருமணம் செய்துகொள்ள சோமு இணங்கினான். ஆனால் சோமுவின் தந்தை சீறினார். சோமுவின் தாய்மாமன் படை திரட்டினான். வள்ளியின் தூண்டுதலே இதற்குக் காரணம் என்று தூற்றினான். வள்ளிக்கும் மாகாளிக்கும் கள்ளக்காதல் என்று கதை கட்டிவிட்டான். இது வள்ளியை மணந்து கொண்டவன் காதிலே விழுந்தது; விவாக விடுதலைக்கான வழக்குத் தொடுத்துவிட்டான்; சோமுவின் மாமன் சாட்சி.

நளினாவின் திருமணத்தன்று ஒரே கலவரம் – மூட்டி விடப்பட்ட கலவரம். அதிலே மாகாளிக்குத்தான் பலமான தாக்குதல்.

அந்தத் தாக்குதலில் கிடைத்த காயங்களுக்காகத்தான். மாகாளிக்கு உடலெங்கும் கட்டுப் போட்டிருந்தார்கள்.

மாகாளியின் உடல்நிலை தேறுவதற்காக வள்ளி மிகுந்த முயற்சி எடுத்துக் கொண்டாள். அவள் அடிக்கடி மருத்துவமனை சென்று வந்ததையேகூடக் காரணமாக்கிக் காட்டினார். வழக்கறிஞர் – விவாக விடுதலைக்காக.

மாகாளியின் மனம் எரிமலையாகக் கொதித்தது. வள்ளியோ அமைதியை இழக்கவில்லை; புன்னகையைக்கூட இழக்கவில்லை.

“தூற்றுகிறார்கள்! அதனால் என்ன? என் உள்ளத்தில் தூய்மை இருக்கிறது! எனக்கு ஓர் அண்ணன் கிடைத்ததாக எண்ணி நான் பெருமைப்படுகிறேன்” என்று வள்ளி சொன்னபோது, எதற்கும் அழுது பழக்கப்படாத மாகாளிகூடக் கசிந்து கண்ணீர் வடித்தான். ‘நான் இத்தகைய பாச உணர்ச்சியை, நேச உணர்ச்சியைக் கண்டதே இல்லையம்மா, கண்டதே இல்லை’ என்று கூறி, வள்ளியின் கரங்களை எடுத்துத் தன் கண்களில் ஒற்றிக் கொண்டான்.

மருத்துவர், ‘மாகாளி! உனக்கு இனி ஆபத்து இல்லை. ஆனால் உடலில் பல இடங்களிலே தழும்புகள் இருக்கும்; மறைய நெடுங்காலம் பிடிக்கும்’ என்றார்.

“தழும்புகளா! அவை மறையவே வேண்டாம் டாக்டர்! அவை அப்படியே இருக்க வேண்டும் என்றுதான் நான் விரும்புகிறேன். நான் பெற்ற பரிசுகள் அல்லவா அவை! அக்கிரமத்தை எதிர்த்து நிற்கும் என் கடமையை என்னால் முடிந்த மட்டும் செய்தேன் என்பதற்கான அடையாளங்கள்” என்றான்.

டாக்டருக்கு அவன் கூறியதன் முழுப்பொருள் விளங்கவில்லை.

“என் தங்கை மட்டும் எனக்கு அனுமதி கொடுத்தால், இன்னும் ஒரே ஒரு தழும்பு கடைசி தழும்பு பெற முனைவேன்! இந்தக் குணவதியைத் தவிக்கச் செய்து, தூற்றித் திரிபவனைத் தாக்கி தாக்கி...” என்று கூறியபடியே, களைப்பால் மாகாளி மயக்கமுற்றான்.

அவன் விரும்பிய கடைசித் தழும்பை அவன் பெற முடியவில்லை. வள்ளி அதற்கு அனுமதி கொடுக்காததால் அல்ல, வள்ளியை மணந்தவன், சதிசெய்து, மாகாளியின் உணவில் நஞ்சு கலந்து கொடுத்ததால், மாகாளி மாண்டு போனான்.

அவன் மறைந்தாலும், அவன் பெற்ற தழும்புகள் எவர் மனத்தையும் விட்டு மறையக்கூடாது. அவை உணர்த்தும் பாடங்களும் மங்கிவிடக்கூடாது என்பதற்காகவே ‘தழும்புகள்’ பற்றிய இந்தத் தகவலைத் தந்திருக்கிறேன்.

(காஞ்சி - 1965)
-------------------

7. சந்திரோதயம்

சந்திரோதயம் (1)

“தங்கள் பெயர்...?”

“சாம்பசிவம்!”

“என் பெயர்..........”

“சந்திரோதயம் என்பேன்!”

காதல் அவனை ஒருகண நேரம் கவியாக்கிற்று.

ஆர்வமுள்ள இளைஞன் - அழகு ததும்பும் மங்கை - அந்தி வானத்தில் அழகு நிலா எழுகிறது - பிறகு...!! கூறவா வேண்டும். இதயகீதம் இவ்வளவு இனிமையாகக் கிளம்பிற்று என்பதை!

பொறி பறக்கும் கண்கள் - கனல் தெறிக்கும் பேச்சு - இவற்றை எதிர்பார்த்துத்தான் அந்த இளைஞன். பூந்தோட்டம் வந்தான். அங்கோ புள்ளிமான் ஆடிற்று. பூங்குயில் பாடிநிலா புதியதோர் உலகையே அவனுக்குக் காட்டிற்று.

ஊரின் பெரிய புள்ளி, சிங்காரவேலு முதலியார் - சிவபக்தர்! செல்வம் நிரம்ப இருந்தது, எனவே அவருக்குச் சிவ பக்தி செலுத்தவும், ஊரார் அதை அறியும்படி காட்டிக் கொள்ளவும், நேரம் இருந்தது, நேர்த்தியான முறையும் அமைந்திருந்தது.

பணம் படைத்த அவர், பிராமண பக்தியுடன் இருந்துவந்தார்! சிவன் கோவிலுக்கும் அவர்தான் தர்மகர்த்தா.

கோவில் குருக்கள் வாஞ்சிநாதர், முதலியாருடைய அத்யந்த நண்பர்!

பகவத் கடாட்சத்தைப் பரிபூரணமாகப் பெற்றவர், பாக்கியவான், நம்ம முதலியார் -எதற்கும் கொடுத்துவைக்க வேண்டுமல்லவா... - என்று வாஞ்சிநாதர், முதலியாரின் அருமை பெருமை பற்றிப் பேசுவார். சிங்காரவேலரும், எல்லாச் சீமான்களையும் போலவே, “அய்யர வாளின்’ அபிலாஷைகளைப் பூர்த்திசெய்து வைப்பதிலே ஓர் அலாதியான ஆனந்தம் அடைந்தார்.

சிங்காரவேலரின், செல்வக்குமாரி, சந்திரா!

அவளைத்தான், சாம்பசிவம் அந்தி சாயும் வேளையிலே கண்டான், எந்த இளைஞனும் தவிர்த்திட முடியாத காதலால் தாக்குண்டான்.

“நான்... சிங்காரவேலரின் மகள்...” என்று சேயிழை சொன்னாள், அவ்வளவுதான், அவன் ‘காதலை’க் கடுங்கோபத் துடன் விரட்டலானான்.

காதல், அவ்வளவு எளிதிலே விரண்டோடிவிடவா செய்யும் - மறுத்தது.

சாம்பசிவம், சிறிதளவு வசதியான குடும்பத்திலே இருப்பவன் - மக்களின் வாழ்வு துலங்கவேண்டும், அதற்கான வழிவகையைக் கூறவும் காணவும் பணிபுரிய வேண்டும் என்பதில் பேரார்வம் கொண்டவன். அவனுடைய வயோதிகத்தாய், மகனுடைய போக்கு கண்டு ஆச்சரியப் பட்டாள் - ஆகவே, அவனுக்கு ஒரு ‘கால்கட்டு’ போட்டு, சரிப்படுத்தவேண்டும் என்று திட்டமிட்டாள்.

இந்தத் திட்டத்தையும் வேதம்மாள், செல்வர் சிங்கார வேலரிடம் சென்று கூறினார் - ஊர்ப்பெரியவரிடம் தானே மனத்திலுள்ள குறையைக் கூற வேண்டும் - அதுதானே முறை! அதே முறைப்படி, வேதம்மாள், தம்மிடம் இருந்த சில ஆயிரம் ரூபாய்களையும், சிங்காரவேலரிடம் தந்தார்கள்.

“எனக்கேனம்மா, இந்த வீண் வேலை! பாங்கில் போட்டு வை - நான் சீட்டு தருகிறேன்!’ என்று முதலியார் மறுத்தார்.

“எனக்கு எந்தப் பாங்கி தெரியுமுங்க - அதிலே போட ஒரு மனுவாம், வாங்க ஒரு மனுவாம்! இதெல்லாம் யாராலே முடியும்.” என்று சமாதானம் கூறிப் பணத்தைக் கொடுத்துவிட்டு வந்தார்கள்!

இப்படி, ‘விதவைகளின்’ கண்ணீர், முதலியாரின் பேழையில், ஏராளம்.

அவர் இதனை ‘வாழும் முறை’ என்று எண்ணினாரேயன்றி, தவறு என்றோ, பாபம் என்றோ கருதவில்லை. அவர் மட்டுமா, சிங்காரவேலர்களின் சித்தாந்தமே அது!

ஏழை புழுப்போலத் துடிக்கிறான் - அவன் வயிற்றிலடிக் கிறோமே, தவறல்லவா, பாபமல்லவா என்று எவனாவது கேட்டால் - யாரும் கேட்கமாட்டார்கள்! - அவனவன் எழுத்து அது, நாம் என்ன செய்யமுடியும், என்று தான் சிங்காரவேலர்கள் கூறுவர்.

ஜாதி ஆச்சாரம், மதாச்சாரம் கெடக் கூடாது - கெடும்படி நடந்து கொள்ளக் கூடாது - அப்படி நடப்பதுதான் தவறு, பாபம்!! சிங்காரவேலர் போன்றாரின் தத்துவம் அது!

சாம்பசிவம், ஜாதி, குலம், மதம் என்பவற்றின் காரணமாகச் சமூகத்திலே விளைந்துள்ள கேடுகளைக் களைந்தெறியவேண்டும் என்ற கொள்கை கொண்டவன் - கொள்கையில் உறுதிப்பாடு மிகுந்தவன்.

உழைத்துத்தான் பிழைக்கவேண்டும் என்ற நிலை இல்லை அவனுக்கு - வரைமுறையின் படி நடந்துகொண்டால், அவன் சிங்காரவேலர் போன்றாருக்கு, மருமகனாகி வாழ்வில் விருந்து காணமுடியும். ஆனால் அவனை, நாட்டிலே வீறுகொண்டு எழுந்த சீர்திருத்த இயக்கம் ஆட்கொண்டுவிட்டது. அவன் தொண்டாற்றும் பக்குவம் பெற முனைந்தான், தொல்லைகளைத் தாங்கிக் கொள்ளவும் பழகிக் கொண்டான்.

“என்ன போறாத வேளையோ! எந்தக் கிரகத்தின் கோளாறோ! எப்போது என் வயிற்றில் பால் வார்க்கப் போகிறானோ!” - என்று வேதம்மா விசாரப்படுகிறார்கள், அந்த வீர இளைஞனோ, எப்போதுதான் ஜாதிப்பித்தம் ஒழியப் போகிறதோ, சமத்துவம் மலரப் போகிறதோ, சமதர்ம மணம் பரவப் போகிறதோ, என்று எண்ணி எண்ணி ஏங்கிக்கொண் டிருந்தான்.

புத்துலகக் கழகம் அவனுக்குப் பாசறையாக அமைந்தது. சாம்பசிவம் போன்ற இளைஞர் பலர், அந்தக் கழகத்தில் பணியாற்றி வந்தனர். அவர்களை ஊக்குவித்தும், ஆக்க வேலைகளுக்கு அவர்களைப் பக்குவப்படுத்திக் கொண்டு வந்தான் துரைராஜ் - சாம்பசிவத்தின் நெருங்கிய நண்பன். நல்லவர்களை நாசப்பாதைக்கு அழைத்துச் செல்கிறான் - நாட்டின் புனிதமான ஏற்பாடுகளை அழிக்கிறான் - என்று பலர் தூற்றினர், துரைராஜ் என்பவனை. ‘நமது பணி, பலன் தருகிறது. நம்மை ஊரார் கவனிக்கிறார்கள். தூற்றலின் பொருள் அதுதான்! தொடர்ந்து பணியாற்றினால், தூற்றுபவர்களே தொண்டாற்ற முன்வருவார்கள்’ - என்று துரைராஜ் சொல்வதுண்டு. ஆம்! ஆம்! என்றனர் நண்பர்கள் - சாம்பசிவம் உட்பட. ஆனால் சாம்பசிவத் துக்கு மட்டும், தன்னலம் கருதாது தூய்மையும் வாய்மையும் தழைத்திடப் பணியாற்றும் தன் நண்பனை, சிங்காரவேலர் நிந்திக்கிறார் என்பது கேட்டுக் கொதிப்பு ஏற்பட்டது. “கொம்பா முறைத்திருக்கிறது! கோடீஸ்வரனாகக்கூட இருக்கட்டும் அந்தச் சிங்காரவேலர் - கொள்கையை எதிர்க்கட்டும் நாணயமாக - இழி மொழி பேசுவதா எங்கள் கழகத்தைப் பற்றி - இதைக் கண்டிப்பாகக் கேட்டுத் தீரவேண்டும் என்று சினந்தெழுந்தான் - இளம் கன்று! - எனவே சிங்காரவேலரைக் காணச்சென்றான்.

அவன் எரிமலையைக் காணச் சென்றான், குளிர் நிலவைக் கண்டான்!

தந்தையின் போக்கு என்ன என்பது தெரியும் சந்திராவுக்கு - அவள் மனமோ, முற்போக்குக் கருத்துகள் பூத்திடும் பூங்கா.

தாயிழந்த சந்திரா, நகரில் தன் அத்தை வீட்டில் வளர்ந்து வந்தாள் - அங்கு நல்ல சூழ்நிலை - நற்கருத்துகள் அவளிடம் உறவாடின. தந்தையின் பணத்தாசை, அதைப் பாதுகாக்க அவர் கொண்டிருந்த வைதீகக் கோலம், அதைக்கண்டு மக்கள் மயங்கிடும் தன்மை, எல்லாம் அவளுக்குத் தெரியும்.

அவள் அப்படிப்பட்டவள் என்பது, சாம்பசிவத்துக்கு எப்படித் தெரியும்!

அவள், தன்னை அவன் சரியாக அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே, எதிர்பாராமல் ஏற்பட்ட சந்திப்பின் போதே, அவனைச் சில கேள்விகள் கேட்டாள் - பெண்களுக்கே உரிய சாமர்த்தியத்தின் மூலம், தன் நிலையை அவனுக்கு உணரத்த!

சேற்றிலே செந்தாமரை இருந்தால் என்ன செய்வீர் என்று கேட்டாள் - சேற்றிலே இருந்தால் என்ன! பறித்து வரத்தான் வேண்டும் என்று பளிச்செனப் பதிலளித்தான் சாம்பசிவம்.

பாவை மகிழ்ந்தாள். மற்றோர் கேள்விக் கணையை ஏவினாள்.

“வண்டு கொட்டுமே என்று பயந்தால், தேன் கிட்டுமா!” - என்றாள்.

காதல் வயத்தனான சாம்பவசிவம், வண்டுக்குவிரண்டு விடுவதா! - என்று வீரமாகப் பதிலளித்தான். இனிப் பயமில்லை என்று எண்ணிக் கொண்ட ஏந்திழை கூறினாள், “நான் சேற்றி லிருக்கும் செந்தாமரை! சிங்காரவேலர் மகள்!” என்றும்.

சாம்பசிவனுக்கோ, ஆயிரம் தேள் கொட்டுவது போலாகி விட்டது - ஆபத்து! பேராபத்து! இந்த அணங்கிகளிடம் காதல் கொண்டால், கொள்கை மாண்டுவிடும் என்று அஞ்சினான் - காதலைக் கடிந்து கொண்டான் - விரட்டி விட நினைத்தான்! அனுபவமற்றவன்!!

வாஞ்சிநாத சாஸ்திரி, வயோதிகர் - இளமையும் எழிலும் குலுங்கும் லலிதா அவர் மனைவி - இரண்டாந்தாரம்!

கோவில் வருமானம் - ஊரார் தரும் தட்சணை, சன்மானம், இவற்றுடன், செல்வச் சீமான்களின் தயவு - இவ்வளவு இருக்கும் போது இரண்டாந்தாரம், ஏன் கிடைக்காமற் போகிறது, ஐயருடைய கோலம் அருவருப்பைத் தருவதுதான், ஆனால் அழகான சிறு மாளிகை, அந்தஸ்து அளிக்கும் செல்வம், இவற்றைப்பெற, லலிதா விரும்பினாள் - பெற்றாள். இவற்றைப் பெற்றால் போதுமா - எதுவும் அந்த இன்பத்துக்கு ஈடாகுமா - வயோதிக வாஞ்சிநாதரிடம் அவள் பெறக்கூடியதல் லவே அந்த இன்பம், என்று, விஷயமறியாதார் பேசினர். லலிதாவுக்கு வரதன் கிடைத்தான் - ஐயர் மாளிகையிலேயே - அவன் அவர் மருமான் “அடிக்கடி வீட்டுக்கு வருவான் போவான்! நல்ல பயல்!” - என்பார் வாஞ்சி.

யார்டா அது வரதனா - என்று கேட்பார் வாஞ்சி - கண் சிறிது மங்கல் - பருவக் கோளாறு.

ஆமாம் - என்று வரதன் பதிலளித்தபடி, லலிதாவைப் பார்ப்பான் - எப்படி என்கிறீர்களா? எப்படிப் பார்க்க வேண்டுமோ, அப்படி!! அவள், “ஆமாம் கதை அளந்துண்டு காலத்தை ஓட்டிண்டு இருக்கீறே, கந்தப்பன் வீட்டு சிரார்த்தம் போகணும்னு சொன்னீரே -” என்று கூறி, ஐயரை விரட்டுவாள்! ஐயர் பாதுகாப்புக்காக, “வாயேண்டா வரதா! போயிட்டு வருவோம்” என்று அவனை அழைப்பார்! அவளுக்கு அந்த ஆபத்தையும் தடுத்துக்கொள்ளத் தெரியும் - “டேய், அப்பா! வராதா! மூணுநாளாச் சொல்றனே, முந்திரிப்பழம் பறிச்சிண்டு வான்னு, ஆகட்டும் ஆகட்டும்னு சொல்லி ஆசை மாட்டிண்டேதானே வர்ரே...” என்று துவக்குவாள், “இன்னக்கிக் கட்டாயம் ஆகட்டும் மாமி!” என்பான் வரதன்.

“ஏண்டா, இன்னமும் பொய் பேசறே, இப்ப நீ அவர் கூடப்போனா, நேக்கு, முந்திரிப்பழம் பறிச்சுத் தரப்போறது ஏது -” என்பாள்.

“சரி - மாமா - இதோ நான் போய், மாமிக்குப் பழம் பறிச்சிண்டு வந்துடறேன் -” என்று அவன் கிளம்புவான்.

அவர் தனியாக - சந்தேகத்தையும் சஞ்சலத்தையும் சுமந்து கொண்டு! சிரார்த்தம், கவனிக்கச் செல்வார்! வெற்றிப் புன்னகையுடன் கதவைத் தாளிட்டுக் கொள்வாள் லலிதா! முந்திரி! கமலா! ஆப்பில்! மா! பலா! வாழை! பழம் எல்லாம் கொண்டு வந்து குவிப்பான் வர தன்!! ஊஞ்சல் பாடும்! இன்பம், குதூகலிக்கும்! குமாரிக்கு விருந்து!! அங்கே, வேதசால இதிகாசாதி மேன்மையை மகிமையையும் ஆளக்கிக் கொண்டிருப்பார் - இங்கு வரதன் மெல்லிய குரலில்-.

“புது இன்பம் எனக்கு மிக தந்தவளே! கண்ணே! பூலோக மதைச் சொர்க்கம் ஆக்கினயே!! என்று பாடுவான்! அவள் அவனுடைய பாடலையும் ரசித்தாள் ஓரளவுக்குத்தான் - ஐயர் வருகிற வரையில் ஆலாபனம் கேட்டுக் கொண்டே இருக்கவா சம்மதம் இருக்கும்!

வரதன், புத்துலகக் கழகத்தில் புகுந்தான், புதியகொள்கை கள் தனக்கும் உடன்பாடுதான் என்று புளுகிவிட்டு! - ‘லலிதபவனம்’ அவனுக்கு விருந்து மண்டபம் - புத்துலகக் கழகம் அவனுக்குப் பொழுது போக்குமிடம்!!

கொள்கை பேசுவது மட்டும் கூடாது - செயலில் காட்ட வேண்டும் என்ற கட்டம் பிறந்தது. சாம்பசிவம், ‘சரி’ என்றான்! தன் வீட்டில் அப்பாவின் ‘திவசம்’ வருகிறது - அதற்குப் புரோ கிதர் வருவார் - அவரை விரட்டப் போகிறேன், என்று சூள் உரைத்தான். வரதன் வெகுண்டெழுந்தான் - அது அடாத காரியம் என்றான்! என்ன சொல்லுவாள் லலிதா! ஊஞ்சலி லிருந்து ஒரே அடியாகக் கீழே உருட்டியல்லவா விடுவாள்! புத்துலகக் கழகத்திலிருந்து ராஜினாமாச் செய்தான். ஒழிந்தது ஒரு பீடை என்று கூறினான் சாம்பசிவம். வாஞ்சிநாதர் வழக்கப்படி வந்தார், ‘திவச’ காரியத்துக்கு. சாம்பசிவனும் நண்பர்களும் விரட்டினர், வேதம்மாள் பதைபதைத்தாள், ஐயர் ஐதீகத்தை அழியவிடமாட்டேன் என்று ஆர்ப்பரித்தார், அடிதடியில் முடிந்தது சம்பவம் - போலீஸ் நுழைந்தது, சாம்பசிவமும் நண்பர்களும், சிறையில் தள்ளப்பட்டனர் - வாஞ்சிநாதர் வெற்றிச் செய்தியை லலிதாவிடம் கூற ஓடோடிச் சென்றார், அவள் “நேக்குத் தெரியுமே - வரதன் சொன்னான்” என்று சுருக்கமாகக் கூறிவிட்டு ‘ஸ்நானம்’ செய்யச் சென்றாள்.

‘என்ன பண்றது உடம்பை! என்னமோ போலிருக்கே” என்று அன்பாகக் கேட்கிறார் வாஞ்சிநாதர்.

“ஒண்ணுமில்லையே - எப்பவும் இருக்கற மாதிரியாத்தான் இருக்கறேன்” என்கிறாள் லலிதா.

“இல்லையே! என்னமோ ஒரு மாதிரியா, ஆயாசமா இருக்கிறது போலத் தோண்றது” என்கிறார். ஐயர்,

“ஆயாசமாத்தான் இருக்கு - அதுக்கு என்ன செய்யணும் என்கிறீர் -” என்று, வெடுக்கெனக் கூறிவிட்டு, வாஞ்சிநாதரின் உள்ளத்தில் கிளம்பிய கோபத்தை, ஒரு சிறு கண்வெட்டால் போக்கிவிட்டு உள்ளே சென்று விட்டாள்.

‘விஷயம்’ பிறகு ஐயரவாளுக்குத் தெரிந்தது! தெரிந்து? தலை தலையென்று அடித்துக் கொண்டார். கொன்றுவிடுகிறேன் என்று கூறினார். குலத்துரோகி! நீ நாசமாப் போக! என்று வரதனைச் சபித்தார்.

கூக்குரல் கேட்டு, தெருவோடு போகிறவர்கள் உள்ளே நுழைந்து என்ன சேதி? என்று கூடக் கேட்டனர். என்ன சொல்லுவார்!

“உங்களுக்குக் கோடி புண்ணியம், போங்க வெளியே” என்றார் அவர்.

“அவருக்கு இப்படி அடிக்கடி காக்கா வலி வரும் - கூவுவர் - கொஞ்ச நேரத்திலே சரியாப்போகும் - நீங்க போங்கய்யா” என்று அவள் அமைதியாகச் சொன்னாள். ஐயர் ஆகாயத்துக்கும் பூமிக்குமாகத் தாவினார். அவள்’ “இப்படி எல்லாம் கூவிண்டிருந்தா, நான் பொறந்தாத்துக்குப் போறேன்” என்றாள், அவர் பெட்டிப் பாம்பானார்.

வீட்டிலேதான் பெட்டிப் பாம்பு! சிங்காரவேலர் மாளிகையிலே, அவர் சீறினார் - எப்படியாவது, புத்துலகக் கழகத்தை ஒழித்தே ஆக வேண்டும் என்று. அதற்காகக் கோவிலிலே, முதலியாரும், ஐயரும், பிரமுகர்கள் சிலருமாகச் சேர்ந்து மந்திராலோசனை நடத்தினர். இது தெரிந்த துரைராஜ், மாறுவேட மணிந்து சென்று, அவர்களுடன் உறவாடினான். ஒட்டி உலர்ந்துபோன ஒரு பிச்சைக்காரன் இவ்வளவு தர்மப் பிரபுக்கள் இருக்கிறார்களே ஆளுக்கு ஒரு காலணா கொடுத்தால், தன் பசி நோயைத் தீர்த்துக்கொள்ளலாமே என்று எண்ணி, அவர்களை அணுகினான் விரட்டினார் முதலியார்! விதி! விதி! என்று காரணம் காட்டினர் கனதனவான்கள். கண்றாவியா இருக்கு இதுகளைப் பார்த்தால் - ஜெர்மனியிலே இப்படிப் பட்டதுகளைச் சுட்டுத்தள்ளி விடுவாளாம் - என்று கொடூரமாகக் கூறினார் வாஞ்சி - துரைராஜ் துடிதுடித்தான். தன்னை மறந்தான், மடமடவென்று பேசலானான்.

என்ன கன்னெஞ்சமய்யா உமக்கு!

அந்த ஏழையும் மனிதன் தானே! உம்மைப் போல!

அன்பே சிவம், சிவமே அன்பு என்று பேசுகிறீர்கள் - ஏழையைக் கண்டால் சுட்டுத்தள்ள வேண்டும் என்கிறீரே! அந்த ஏழைக்கும் ஒரு காலம் வரும்!

அந்த உலர்ந்த உதடுகளில் இருந்தும் உக்கிரம் பிறக்கும், கண்கள் கனலைக் கக்கும்!

புழுவும் போரிடும்!

அப்போது உங்கள் செல்வம், அந்தஸ்து, சாஸ்திரம், யாவும் மண்ணோடு மண்ணாய்ப் போகும்!

துரைராஜ் பேசிவிட்டான் - அவர்கள் புரிந்துகொண்டனர்- பிடித்துக் கொண்டனர் - வேஷம் கலைத்துவிட்டனர் - கம்பத்தில் பிடித்துக் கட்டி, கோவில் திருவாபரணம் ஒன்றை அவன் கையிலே கொடுத்துவிட்டு, போலீசுக்கு ஆள் அனுப்பிவிட்டனர்! துரைராஜ் கள்ளன் ஆக்கப்பட்டான்! காதகர்களின் போக்கைக் கண்டு மனம் குமுறிற்று - நீதி, அன்பு, அறம், இவற்றை எடுத்து வீசினான், தூணோடு சேர்த்துக் கட்டிவிட்டனர்.

காவலுக்கு ஐயர்! மற்றவர்கள் ‘ஆள் அம்பு’ தேடச் சென்றனர்.

முதல் தாக்குதல் - ஏதேதோ வகையான அச்சம் உள்ளத் திலே நச்சரித்தது!

எப்படியாவது, இப்போது தப்பித்துக் கொள்ள வேண்டும் - கள்ளன் என்று கயவர்கள் குற்றம் சுமத்திச் சிறையிலே தள்ளிவிட்டால் கழகத்தவருக்கே இழிவு.

என்ன செய்தாவது, இந்த இக்கட்டிலிருந்து தப்பிவிட வேண்டும், என்று எண்ணினான். எதையும் தாங்கும் பக்குவத்தை இதயம் பெறவில்லை!

களவாடியதாகச் சொல்லித் தன்னிடம் திணிக்கப்பட்ட திருவாபரணத்தை ஐயருக்குக் கொடுத்துவிட்டு, இனி ஜென்ம ஜென்மத்துக்கும் பகவத் நிந்தனையோ பாகவத அபசாரமோ, பிராமண தூஷணையோ செய்வதில்லை, எங்காவது ரங்கோன், பினாங்கு ஓடி விடுகிறேன், என்று கூறினான்; கட்டுகளை அவிழ்த்தார் ஐயர், ஓடிவிட்டான். அவன் நெடுந்தூரம் சென்றிருப்பான் என்று தெரிந்தபிறகு, ஐயர், “ஐயயோ! முதலியாரே! யாரங்கே! ஓடி விட்டானே” என்று கூவினாள்; அழுதார். ஆள் அம்புடன் வந்த முதலியாரிடம், “பய சிம்மம் போலக் கர்ஜித்துண்டு, ஒரு திமிரு திமிரினான் பாருங்கோ, கட்டியிருந்த கயிறு பொடி பொடியாயிட்டுது, பிடிக்கலாம்னு கிட்டெப் போனேன், விட்டான் ஓர் அறையும் குத்தும், நான் என்னசெய்ய முடியும், புலிப்போலப் பாய்ந்தான், ஒடியே போயிட்டான்... இந்தப் பக்கமா...” என்று, துரைராஜ் ஓடின தற்கு எதிர்ப்பக்கத்தைக் காட்டினார். மடியிலே, மாங்காய் மாலை! கண்களிலே தண்ணீர்கூட! தண்ணீருக்குப் பின்னாலே குறும்பு கூத்தாடிற்று, வஞ்சனை உள்ளே வெற்றிக் களையோடு இருந்தது. முதலியார், ஐயர் காட்டிய திக்கிலே ஆட்களை அனுப்பினார். எப்படியும் போலீஸ் பிடித்துவிடும், பத்து வருடத் தண்டனையாவது கிடைக்கும், கோவிலில் புகுந்து கொள்ளை யடிப்பது ‘மகாப்பெரிய பாபம்’ என்றார் முதலியார் சந்தேகமா அதற்கு என்று ஆமோதித்தனர் கனதனவான்கள், சர்வேஸ்வரா! எல்லாம் உன்னோட சோதனை என்று பக்தி பேசினார் வாஞ்சிநாதர்.

ஊரே திடுக்கிட்டுப் போயிற்று, சேதிகேட்டு.

ஆள், நல்லவனாப்பா - ஏதோ ஆச்சார அனுஷ்டானங்களைக் குறை சொல்லிக்கொண்டு இருப்பானே தவிர, பொய்புரட்டு, சூதுவாது, எதுவும் கிடையாதே. அவன் கோவிலில் புகுந்து களவாடினான் என்றால் நம்ப முடியவில்லையே என்று சிலர், கோவில் என்றால்தான் அந்தப் பயல் வைதீகக் கோட்டை, பார்ப்பனீயப் பாசறை என்றெல்லாம் பழிப்பானே, செய்திருப்பான், செய்திருப்பான் என்று சிலர், எப்போது பாவமில்லே புண்ணியமில்லே, மோட்சமாவது நரகமாவது, இதை எல்லாம் பார்த்தது யார் என்றெல்லாம் துடுக்குத்தனமாகப் பேசிக்கொண் டிருந்தானோ அப்போதே எனக்குத் தெரியும், பய, இப்படிப் பட்ட அக்கிரமம் செய்யப் போகிறான் என்பது; இப்படிச் சிலர். புத்துலகக் கழகம் எள்ளி நகையாடப்பட்டது.

“ஏண்டா தம்பீ டோய்! நீ எந்தக் கோவிலைக் பார்த்து வைச்சிருக்கே?” என்று கேலி பேசலாயினர் புத்துலகக் கழகத் தோழர்களைக் கண்டால். கொள்கைப்பற்று நல்ல அளவில் ஏற்படாத நிலையிலிருந்தவர்கள் பலர், புத்துலகக் கழகத்திலிருந்து விலகிக் கொண்டனர்! சாம்பசிவம், செய்தி கிடைத்ததும், பதறினான். துரைராஜ் ஒருபோதும் இப்படிப்பட்ட அக்கிரமம் செய்திருக்கவே முடியாது. இதில் ஏதோ சூது இருக்க வேண்டும்; கழகத்தை அழித்தொழிக்க இதைச் சந்தர்ப்பமாகச் சிலர் பயன் படுத்துவர், இது சகஜம். ஆனால் நான் கழகப் பணியை நிறுத்த மாட்டேன் - நிறுத்துவது கூடாது, என்று உறுதி கொண்டான், எப்போதும் போலப் பணியாற்றி வரலானான்.

துரைராஜ், ரங்கோனும் போகவில்லை, சிங்கப்பூருக்கும் செல்லவில்லை. தலைமறைவாகவே உலவலானாள். உள்ளத்தில் வேதனையுடன். தன்னைத்தானே நொந்து கொண்டான். எவ்வளவு கோழைத்தனம்! எத்தகைய பைத்தியக்காரத்தனம்! எத்தகைய பைத்தியக்காரத்தனம்! ஏன் நான் ஓடி வர வேண்டும்! ஐயோ! கொள்கையைப் பொறிபறக்கப் பேசக் கற்றுக் கொண்டேனே தவிர உலக அனுபவம் இல்லையே எனக்கு. கள்ளனென்று கூறித் தண்டித்துக் கொடுஞ் சிறையில் தள்ளி விடுவார்களே என்ற அச்சம் கொண்டேன். இதோ, சிறையைவிடக் கொடுமையை அல்லவா அனுபவிக் கிறேன். வழக்கு மன்றத்திலே வாதாடி இருக்கலாம்! நீதிக்காகப் பரிந்து பேசச் சிலராவது முன்வந்திருப்பர்! நான் ஓர் கோழை; அதிலும் ஏமாளி! ஓடிவிட்டால், பழியிலிருந்து தப்பித்துக் கொண்டேன். பழி என்னைப் பற்றிக்கொண்டதே. குற்ற மற்றவனானால், ஏன் ஓடி விட்டான்? ஏன் தலைமறைவாகத் திரிகிறான்? என்று கேட்கிறார்கள் - காதிலே விழத்தான் செய்கிறது. முதல் தாக்குதல், என் மூளையைக் குழப்பிவிட்டது. என் போக்கால், என் நண்பர்களுக்கு, கழகத்துக்கு எத்துணை இழிவும் பழியும் ஏற்பட்டுவிட்டது. என்ன செய்வது? என்ன செய்வேன்? என்றெல்லாம் எண்ணி எண்ணி மனம் குமுறினான், உருமாறிப்போனான். ஓர் ஊரிலிருந்து மற்றோர் ஊர், அங்கிருந்து வேறோர் இடம் இப்படி, அலைந்தபடி இருந்தான், அவன் சிறுவயதிலே மலேயாவிலே இருந்துவிட்டு, தமிழகத்துக்கு வந்து சில ஆண்டுகளே ஆயிருந்தன, எனவே அவனைச் சுலபத்திலே அடையாளம் கண்டு பிடிக்க அதிகமான வர்கள் இல்லை. அந்த ஒரு வாய்ப்பினால், துரைராஜ், தப்பித்திரிய முடிந்தது. மனமோ சுட்டவண்ணமிருந்தது.

புலன் விசாரித்து விசாரித்துப் போலீசும் ஓய்ந்து போயிற்று.

கோவிலுக்குப் பக்த சிகாமணி ஒருவர், புதிதாக மாங்காய் மாலை செய்து சமர்ப்பித்துவிட்டார்.
பழய மாங்காய்மாலையை லலிதாவுக்கும் காட்டாமல், வாஞ்சிநாதர், மறைத்து வைத்திருந்தார்.
“கோவில் திருவாபரணம்! அந்தப் பயலைப் பாபம் சும்மாவிடாது” என்பார் வாஞ்சிநாதர்.

“ஆமாம்-ஆமாம் -” என்று ஆமோதிப்பார் சிங்காரவேலர்.

“பயல், உருக்கி விற்று விட்டிருப்பான்” என்பார் பிரமுகர்.

“வாங்குபவனுடைய குலத்தையே நாசம் செய்துவிடாதோ?” என்று ஆவேசமாகப் பேசுவார் சிங்காரவேலர். ஐயருக்குத் தெரியும், எத்தனை கோவில் திருவாபரணங்களை முதலியார், உருக்கி எடுத்துச் சீமானானார் என்பது! வெளியே சொல்வதில்லை - மனத்திலேயே போட்டு வைத்திருந்தார்.

முதலியாரிடம், வாஞ்சிநாதர் பாசமும் நேசமும் கொண்டிருந்தார் என்றாலும், அவருடைய அட்டகாசம், அந்தஸ்து, இவை பல சமயங்களில் ஐயருக்கு அருவருப்பு தரும். தன்னை, மரியாதையாக சாமீ! சாஸ்திரிகளே! ஐயரவாள்! என்று முதலியார் அழைப்பார். ஆனால், தன் எதிரிலேயே, வேறு பிராமணர்களைப் பற்றிப் பேசும்போது பாப்பான் - என்று கேலியாகத்தான் பேசுவார். இது வாஞ்சிநாதருக்குக் கோபமூட்டும்; வெளியே பல்லைக் காட்டுவார், மனத்துக்குள், ‘திமிர்’ என்று சபிப்பார்.

“பணம் எப்படியோ சேர்ந்துவிட்டது, நிலம் இருக்கு நேர்த்தியான நஞ்சை, செல்வம் ஏராளமாயிருக்கு, ஊரை அடிச்சி உலையிலே போட்டுண்டான், சீமானாயிட்டான். யார் அவனோட செல்வம் எப்படி எப்படிக் கிடைச்சுதுன்னா கேட்க முடியும், தலைகால் தெரியாமல் ஆடுகிறான். உம்! மன்னாதி மன்னர்களெல்லாம் இருந்த இடம் தெரியாமல் தரைமட்டமாருக்கா, இவன் எம்மாத்திரம்” என்று வாஞ்சிநாதர், கூறலானார், அந்தரங்க நண்பர்களிடம். ஐயருடைய கோபத்துக்குக் காரணம் இல்லாமலில்லை - முதலியார் சமயம் கிடைக்கும்போதெல்லாம் மறைமுகமாக, லலிதா-வரதன் லீலைகள்பற்றிக் கேலிசெய்து வந்தார்!
கேலி, கண்டனம் எனும் கட்டங்களைத் தாண்டிவிட்ட காரணத்தால், லலிதா வரதன் காதலாட்டம் தங்கு தடையின்றி வளர்ந்து, இருவருக்கும் சலிப்புதரும் நிலைக்குச் சென்று, சரிவதற்கான கட்டத்தில் இருந்து வந்தது.

வறுமையர் உலகிலே கிடந்தான் துரைராஜ்.

கொள்கை பரப்பிக்கொண்டிருந்தான் சாம்பசிவம்.

காதல் கை கூடாததால் கலக்கமடைந்து கிடந்தாள் கட்டழகி சந்திரா.

பாட்டாளிகளிடம் பழகிய துரைராஜ் - அவர்களிடம் கிளர்ச்சி மனப்பான்மையை மூட்டுவான் - முதலாளிக்கு விஷயம் எட்டும், உடனே வேலையை விட்டு விரட்டப்படுவான். இங்ஙனம், கயிறு அறுந்த காற்றாடியானான் துரைராஜ். ஆனால் கழகம் - கழகம் - என்று மட்டும் அடிக்கடி எண்ணம் குடையும், ஒரு முறைதான் தவறி விட்டோம், வைதீகமும் பணக்காரத் தன்மையும் ஒன்றுகூடி, வாஞ்சிநாதரும் சிங்காரவேலரும் கூட்டு சேர்ந்து நம்மை இந்தக் கதிக்குக் கொண்டு வந்து விட்டனர். அவர்கள் மீது பழி தீர்த்துக்கொள்ள மட்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால்... எண்ணும்போதே இனிக்கிறதே... நிறைவேறுமா...! - என்று எண்ணுவான், வறண்ட சிரிப்புடன் வழி நடப்பான்.

சிங்காரவேலர் போன்ற சீமான்களின் ஆதரவினால் தானே, வாஞ்சிநாதர் போன்றாரின் வஞ்சகத் திட்டம் வளர்ச்சி அடைகிறது... சிங்காரவேலர்கள் திருந்தினால்... திருத்தப் பட்டால்... வாஞ்சிநாதர்களின் வஞ்சகம் அவர்களுக்கு விளங்கி விட்டால்... என்று யோசிப்பான், கவலை குறையும்.

சிங்காரவேலர் போன்ற சீமான்களும் வாஞ்சிநாதர் போன்ற வஞ்சக வைதீகர்களும் சமுதாயத்தைச் சீரழிக்கிறார்கள். அவர்களின் புரட்டுகளை அம்பலப்படுத்த, அவர்களின் எதிர்ப்பு களைச் சமாளிக்க, வீண்பழிகள் சுமத்தப்பட்டால் அவற்றி லிருந்தும் விடுபட, நமக்குப் பணபலம் வேண்டும்! ஆமாம்! பணம் இருந்தால், அந்தப் பாதகர்களின் கொட்டத்தை அடைக்கலாம்!! முன்புகூட நான் அதற்கேற்றவனாக இல்லை - கோழைத்தனம் குடிகொண்டிருந்தது - இப்போது, வறுமையில் உழன்று அனுபவம் பெற்றிருக்கிறேன். பசி பட்டினி பழக்கமாகி விட்டது. கயவரின் கத்திக்குத்துக்கூட எனக்குக் கிலியூட்டாது, இந்த நிலையில், என்னால், சிங்கார வேலர்களை எதிர்த்து நிற்க முடியும்... எதிர்த்து நிற்க முடியும்... ஆனால் பணம் வேண்டும்!

எந்தச் சிங்காரவேலர் வாஞ்சிநாதர் கீறிய கோட்டினைத் தாண்டாமல் பயபக்தி விசுவாசத்துடன் நடந்து வருகிறாரோ, அவரே, வாஞ்சிநாதரின் வஞ்சகத்தை அறியும் நாள் வரவேண்டும் - அறியும்படி செய்ய வேண்டும்... அந்த நாள் தான், என் வெற்றி நாள்!

எந்தக் கழகத்துக்குக் களங்கம் ஏற்படும்படி நடந்துகொண்டு விட்டேனோ, அந்தக் கழகத்தின் பணி, முட்டின்றி நடந்திட என்னாலானதைச் செய்ய வேண்டும்! பணம் தாராளமாகக் கிடைத்தால் கழகத்தின் பணி பன்மடங்கு வளரும்! எத்தர்களின் புரட்டுகளை அம்பலப்படுத்தலாம்! ஏழையின் பக்கம் வாதாடலாம்! ஏற்றம் தரும் செயல் எவ்வளவோ செய்யலாம் பணபலம் கிடைத்தால்....!

இங்ஙனம் எண்ணுவான், பஞ்சையாகிவிட்ட துரைராஜ்!

“உம்மோட பணத்தைக் கட்டிக் கொண்டு அழும்; நான் பொறந்தாத்துக்குப் போறேன்; திரும்பிவரச் சொன்னா... வாரேன்” என்று கூறி விட்டு லலிதா கிளம்பிவிட்டாள்.

“நாலு பணம் காசு சேர்த்தாத் தாண்டியம்மா, நானும் ஊரிலே மதிப்போடு உலர்த்த முடியும். உன் பின்னோடு தாளம் தட்டிண்டு நானும் கிளம்பிவிட்டா நன்னாயிருக்குமா, நீ, போய்விட்டு வா. உடம்புகூட ரொம்ப இளைத்திருக்கு; ஓய்வா, நிம்மதியா, ஒரு வருஷமாவது போய் இரு; நான் மாதத்துக்கொரு முறை வந்து போவேன், சந்தேகப்படாதே” என்று வரதன் சமாதானம் கூறிவிட்டான்.

வாஞ்சிநாதர், வழக்கப்படி “சர்வேஸ்வரா! ஏனோடாப்பா இந்தச் சோதனை” என்று ஆயாசப்பட்டுக் கொண்டார்.

“என்ன பிரமாதமான பணமிருக்கு நம்மிடம், ஒவ்வொரு சீமான் வீட்டுச் செல்வத்தைப் பத்திக் கேள்விப் படும்போது, நம்மிடம் இது இருக்குன்னு சொல்லிக் கொள்ளவே வெட்கமாயி ருக்கய்யா! கோடாலிபுரம் கோவிந்த செட்டியாரைப் பற்றிக் கேள்வியுண்டா? தங்கத்தாலே கோடாலி இருக்கய்யா - நாலு தலைமுறையா இருக்கு - வருஷத்துக்கு ஒரு தடவை பூஜை போடுவாங்களாம் தங்கக் கோடாலிக்கு. எப்படி அந்த ஐஸ்வரியம் வந்ததுன்னு நினைக்கறிங்க. நாலு தலைமுறைக்கு முந்தி, கோவிந்த செட்டியோட குடும்பத் தலைவன், கோடாலி எடுத்துக்கிட்டு, காட்டுக்குப் போயி, கட்டை வெட்டி அதைக் கொண்டு தான் ஜீவனம் செய்றது; பணம் காசு சேர்ந்த பிறகுதான், செட்டிப் பட்டம். கோடாலியும் கையுமாக திரிந்தபோது, பட்டமும் இல்லை, ஜாதியும் கிடையாது - வேட ஜாதின்னு சொல்றாங்க சிலபேர்; இப்ப செட்டியார். கோடாலி மாடசாமின்னா, ஊருக்கே கிலியாம். அந்த மாடசாõமிக்குக் காட்டிலே ஒரு பெரிய புதையல் கிடைச்சுது - அந்த ஐஸ்வரியம்தான் இப்ப, கோவிந்த செட்டி யாரைக் கோடீஸ்வரனாக்கி இருக்கு. போனவாரம், கவர்னரோட வீட்டுக்குப் போயிருந்தாராம்; கவர்னர் கூட தங்கக் கோடாலியைப் பார்த்தாரா போட்டோகூட எடுத்தாங்களாம்” இப்படித் தமது பேராசையை அடிக்கடி சிங்காரவேலர் வெளியிடுவார்.

“பகவான் ஒரு குறையும் வைகல்லே. சகல சம்பத்தும் கொடுத்திருக்கார்; இருந்தாலும் மனஷனுக்குப் பாரேன் ஆசை, பேயாப் பிடிச்சின்டிருக்கு” என்று வாஞ்சிநாதர் எண்ணிக் கொள்வார்.

“பெரிய தப்பய்யா நீ செய்த காரியம்”

“எதைச் சொல்றேள் முதலியாரவாள்...”

“எதைச் சொல்லுவாங்க... நீர் ஏனய்யா இந்த வயதான காலத்திலே கலியாணம் செய்திண்டீர். அடெ, என்னமோ வீட்டுக்குக் காவலா, கை அமுக்க கால்பிடிக்க ஒண்ணு தேவையாச்சேன்னா, சுமாரனாதாகப் பார்த்துக் கல்யாணம் செய் திண்டிருக்கலாம். லலிதாவை...”

“என்ன செய்வது, கர்மம்”

ஊரே கேலிபேசுது, பாரும்.

“அழிஞ்சி போறா, இல்லாததும் பொல்லாததும் பேசறவா”

“சாபம் கொடுக்கிறீரோ! போமய்யா, போம்.”

“முதலியாரவாள்! நேக்கு மனசு ஒண்ணும் நிம்மதியா இல்லே. - வேறே பேச்சுப் பேசுங்கோ”

முதலியார் இரண்டு விஷயங்களைத்தான் பேசிக் கொண்டிருந்தார். ஒன்று வாஞ்சி நாதரின் குடும்பக் கோளாறு - மற்றொன்று தன்னை மிஞ்சும் நிலையிலுள்ள சீமான்களைப் பற்றிய சேதிகள். ஆகவே, லலிதா விஷயத்தை நிறுத்திவிட்டு, சீமான்கள் பற்றிப் பேசலானார். வலையில் விழ வைக்க வேண்டும் என்று தீர்மானித்தார் வாஞ்சிநாதர், மெல்ல ரசவாதம் பற்றிப் பேச்சைத் துவக்கினார். கட்டுக்கதை என்றார் முதலியார், அவர் மயங்குமளவு ஆதாரங்களைக் கொட்டிக் காட்டினார் வாஞ்சிநாதர் - ரசவாதத்துக்கான ஏற்பாடு, ஐயர்வசம் ஒப்படைக்கப்பட்டது.

‘ராம்ஜீ’ - ரசவாதம் செய்து வயிற்றைக் கழுவும் பேர்வழி. அவனுடன் கூடிச் சதிசெய்து, முதலியாருக்கு மயக்க மருந்து கொடுத்துவிட்டு, அவருடைய நகை, கோயில் நகை, சகலமும் மூட்டையாகக் கட்டிக் கொண்டுபோய் ஒளித்துவிட்டு, பழியை ராம்ஜீ மீது போட்டுப் பசப்பிவிட்டார் வாஞ்சிநாதர்.

புரண்டழுதார் சிங்காரவேலர். பாவிப் பிராமணா, உன் பேச்சைக் கேட்டேனே, கெட்டேனே! என்று கதறினார்.

“யார்டாப்பாவி அந்த ராம்ஜீ” என்று கேட்டார்.

“நேக்கென்ன தெரியும். இமாலம்னு சொன்னான் - நம்பினேன் - நம்ம ரெண்டுபேர் கண்ணிலேயும் மயக்கப் பொடி போட்டுட்டு, மூட்டையை அடிச்சிண்டே போய்ட்டான். என்ன செய்யறது. வாரும் போலீசிலே எழுதிவைப்போம்” என்று அழைத்தார் ஐயர்.

“போலீசுக்குப் போகப்படாதே! பறிபோன மூட்டையிலே கோவில் திருவாபரணமும் இருக்கே” என்று தத்தளித்தார் சிங்காரவேலர்.

“விஷயம் தெரிஞ்சா மானம் போகுமே!” என்று, எரிகிற நெருப்பில் எண்ணெய் கொட்டினார் வாஞ்சிநாதர்.

பேராசைக்குப் பலியான தந்தை தவிப்பது தெரியாமல், சந்திரா, நகரில் தன் அத்தை வீட்டில் இருந்து கொண்டு, அந்தப் பகுதிகளில் சாம்பசிவம் பகுத்தறிவுப் பிரசாரம் செய்யும்போது கட்டுக் களித்துக்கொண்டு, தன் கல்லூரி வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தாள்.

துரும்பாக இளைத்துவிட்டார் சிங்காரவேலர். அவருடைய முடுக்கு, எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற பேச்சு, எல்லாம் ஓடி ஒளிந்தன. ஐயர் தான் அவருக்குப் பொழுதுபோக்கு, பாதுகாப்பு, எல்லாம்.

அறுபதிருக்கு, ஆனால் ஐம்பதுக்குக் கொண்டுவந்தார் தமது வயதை, மேற்பூச்சுகளின் உதவியால், நல்லூர் ஜமீன்தார்.

அவருக்குச் சந்திரவைப் ‘பாணிக் கிரஹணம்’ செய்து வைத் தால், பறிபோன கோவில் திருவாபரணத்துக்குப் பதிலாக வேறு ‘செட்’ செய்யமுடியும், என்று தேன் தடவினார் வாஞ்சிநாதர். முதலிலே முதலியாருக்குக் குமட்டலாகத்தான் இருந்தது - ஆனால் நிலைமையை ஐயர் விளக்க விளக்க, அது தவிர, தான் மீள வேறு மார்க்கமில்லை என்பது புரிந்தது, சம்மதமளித்தார். சந்திராவை அழைத்துக்கொண்டு வந்தார் சாஸ்திரிகள்; “உமக்கேனய்யா இந்த வயதிலே கல்யாணம்!” என்று என்னைக் கேட்டான் கேலியாக, முட்டாள்! இதோ நல்லூர் ஜெமீன்தாரனுக்குச் சந்திரா!! என்று மனத்திலே எண்ணி மகிழந்தார், பூணூ<லை வெற்றிச் சிரிப்புடன் உருவி விட்டுக்கொண்டார்.

விஷயம் கூறப்பட்டதும், சந்திரா, புலியெனச் சீறினாள். ஐயரைச் சாடினாள்; பணத்தாசை கூடாது என்று முதலியாரைக் கடிந்துகொண்டாள்; “கோந்தைக்கு விஷயம் தெரியாது, கோபிக்கறா!” என்று துவக்கி, ரசவாதச் சம்பவத்தைக் கூறினார் ஐயர். சிங்காரவேலர் சித்திரவரைக்கு ஆளாக்கப் படுவது சந்திராவுக்குத் தெரிந்தது, தத்தளித்தனர்.

காலில் வீழ்கிறார், கண்ணீர் பொழிகிறார், தாயே! என்று அழைக்கிறார், மகளை.

“நிலைமை அறியாமல் ஏதேதோ பேசிவிட்டேன் தந்தையே. நான் உம்மைக் காப்பாற்றுவேன். நல்லூர் ஜெமீந்தாரணியாவேன்” என்று கூறினாள். திருமணம் நடந்தது, திருவாபரணத்துக்கு ஈடான தொகை கிடைத்தது - ஆனால்... அடுத்த மாதமே, சந்திரா விதவையானாள்.

“மலைபோல வந்த துன்பம் பனி போல நீங்கிவிட்டது, முதலியாரவாள்; எல்லாம் பகவத் அனுக்ரஹம். ஓர் ஆயிரம் ரூபாய் கொடுங்கோ” என்று கேட்டார் ஐயர்.

“ஆயிரமா? எதற்கு ஐயரே!” என்கிறார் முதலியார்.

“நல்லூர் சம்பந்தம் முடிந்ததானா, பகவானுக்கு ஆயிரம் ரூபாயிலே அபிஷேகம் செய்து வைக்கறதாக நான் பிரார்த்தனை செய்திண்டிருக்கேன். பகவானோட கிருபாகடாட்சத்தாலே, நல்லூர் சம்பந்தம் ஏற்பட்டு, கோவில் திருவாபரணம் செய்யும் சௌகரியம் ஏற்பட்டு, உமக்குவந்த ஆபத்து ஒழிந்து போச்சு பாருங்கோ - அதனாலே ஓர் ஆயிரம் கொடுத்தா அபிஷேகத்தை ஜாம் ஜாம்னு நடத்திடறேன்” என்று விளக்க மளிக்கிறார் வாஞ்சி.

அந்தச் சமயம்தான் தந்தி வருகிறது, நல்லூர் மாப்பிள்ளை இறந்து விட்டார் என்று.

விதவைக் கோலத்தில் சந்திரா உலவக் கண்ட சிங்காலவேலருக்கு, தாங்கொணா வேதனை ஏற்படட்து. தியாகவல்லி! என்னை ஊரார் பழிக்காதிருக்கவேண்டும் என்பதற்காகத்தான் வாழ்வையே பாழாக்கிக்கொள்ள முன்வந்த உத்தமி.
அவளுக்கு ஒரு குறையும் இல்லை என்று அளந்தான் இந்த ஐயர்.

எனக்குச் சொர்ணானுக்கிரஹம் இருக்கிறது, ஆகவோ ரசவாதம் செய்தால் பலிக்கும் என்று புளுகினான், என்னைப் பாழ்படுத்தினான்.

அவருக்கென்ன ஆயுசுக்குக் குறைவா! கல்லுப் பிள்ளையார்போல் இருப்பார்! நல்லயோக ஜாதகம்! என்று நல்லூர் மாப்பிள்ளை விஷயமாக அளந்து கொட்டினான்.

எல்லாமே பொய்த்துப் போய் விட்டது.

நான் என்ன செய்ய! எல்லாம் வினைப் பயன்படிதானே நடக்கும் என்று இப்போது வேறு பாஷையில் பேசுகிறான்.

நான் நடைப்பிணமானேன், அவனோ கொழுத்துத் திரிகிறான்.

கவலையால் என் மேனி அவனோ தங்க நிறமாகிக் கொண்டு வருகிறான்.

என் மகள், கோவெனக் கதறி அழுதாலாவது, நானும் கூடச் சேர்ந்து அழுது என் துக்கத்தை வெளியே கொட்டலாம் - என்னைச் சந்திரா பார்க்கும் பார்வை, “பாவீ! பார்த்தாயா! உன்னால் எனக்கு நேரிட்ட கதியை!” என்று கேட்பது போலிருக்கிறது. என்னால் இந்த வேதனையைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை - என்றெல்லாம் எண்ணி எண்ணிக் கலங்கினார் சிங்காரவேலர்.

சந்திராவுக்கு நேரிட்ட கதியை அறிந்த சாம்பசிவம் துடிதுடித்தான்.

சிங்காரவேலரின் மகள் என்ற ஒரே காரணத்துக்காகத் தனக்கு அவள் ஏற்றவளல்ல என்று எண்ணினானே தவிர, சாம்பசிவம், சந்திராவை மறந்தவனல்ல.

காதல் மணம், மாதர் விடுதலை ஆண் பெண் சமத்துவம் என்பவை பற்றியெல்லாம் பேசும்போது, அவனுக்குச் சந்திராவின் நினைவுதான் வரும்.

நல்லூர் ஜெமீன்தாரனுக்குத் தாரமாகி ஒரே திங்களில் தாலி இழந்தாள் என்று கேள்விப்பட்டதும், சாம்பசிவம் சந்திராவைச் சந்தித்து ஆறுதல் கூறுவதுதான் அறிவுடைமை என்று எண்ணினான். தோட்டத்தில் சந்தித்தனர்.

கண்களிலே களிப்பு இல்லை, குரலிலே இனிமை இல்லை, இளமைகூட விலகிவிட்டதுபோன்ற கோலத்தில் இருந்தாள் சந்திரா.

ஆறுதல்கூற வந்தான் சாமபசிவம், அவனுக்கு ஆறுதல் கூறவேண்டிய நிலை ஏற்பட்டது சந்திராவுக்கு.

நல்லூர் சம்பந்தம் ஏற்பட வேண்டிய நிலைமையைச் சந்திரா விளக்கியபோது, சாம்பசிவம் உருகிவிட்டான். கடமை உணர்ச்சியையும் தியாக உள்ளத்தையும் இவ்வளவு அளவுக்குச் சந்திரா எப்படிப் பெற்றிருந்தாள் என்பது அவனுக்கு விளங்கவில்லை.

இனி...? என்று ஏதோ சொல்ல ஆரம்பித்து துணிவு பிறக்காததால் தத்தளித்தாள். சோகத்தைக் கீறிக் கொண்டு இலேசான ஓர் புன்னகை பிறந்தது - அதன் பொருள் புரிந்தது, சாம்பசிவத்துக்கு. மீண்டும் சந்திப்போம் என்று கூறிப் பிரிந்தன.
* * *

“தேடிப்போன மூலிகை காலிலே சிக்கிக் கொண்டது” என்று கூறி தூங்கிக் கொண்டிருந்த துரைராஜை தட்டி எழுப்பினார் கந்தபூபதி.

அழகூர் மடாதிபதியின் கையாள்கள், கந்தபூபதியும் முருகதாசரும்.

இருவரும், “பட்டத்துக்கு’ வரும் பாத்தியதை பெற்றவர்கள்.

மடாதிபதியோ மறைய மறுக்கிறார் இரு அடியார்களுக்கும் ஆசை அலையோ மோதுகிறது.

பீடத்தில் வீற்றிருப்பதால் அவர் அனுபவிக்கும் ‘சுகானுபவத்தை’க் காணக்காண, அடியார் இருவருக்கும் ஆவல் கட்டுக்கு அடங்க மறுக்கிறது.

மடாதிபதியைக் ‘கைலை’ அனுப்பி விடுவது என்று திட்ட மிட்டுவிட்டனர். அதே சிந்தனையுடன் மடாலயத்தருகே உள்ள வனத்தில் உலவுகிறார்கள், அங்கு உருமாறிப் போயிருந்த துரை ராஜ் உறங்கிக் கிடக்கிறான். அவன் ஏறத்தாழ, மடாதிபதியின் ஜாடையாக இருப்பது கண்டு ஆச்சரியம் கொண்டு, புதிதாகத் தந்திரமான திட்டம் தீட்டுகிறார்கள், திரு அருளை மக்கட்கு வழங்கும் தொண்டாற்றக் காவிகட்டிய கண்ணியர்கள்.

வெகுண்டெழுந்த துரைராஜிடம் பேசும்போது, மடாலயம், ஆண்டிகள், எனும் ஏற்பாடுகளையே வன்மையாகக் கண்டிப்பவன் என்பது தெரிகிறது. எனவே தைரியமாகத் தங்கள் திட்டத்தைக் கூறி, துணைக்கு இருக்கும்படி அழைக்கிறார்கள்.

தங்கச் சுரங்கத்துக்கு அல்லவா அழைப்பு வருகிறது என்று எண்ணிய துரைராஜ், பண்டாரங்கள் தீட்டிய முரட்டுத் தனமான திட்டத்துக்குப் பதிலாக, சாதுர்யமாக வேறோர் திட்டம் தயாரித்துத் தருகிறான்.

மடாதிபதி ‘சக்தி பூஜை’யிலே ஈடுபடுவது என்றும், அது போது துரைராஜ் மடாதிபதியின் கோலம் தங்கி ஒருநாள் ‘தர்பார்’ நடத்துவது என்பதும், அன்றே பழைய மடாதிபதியை ஒழித்துக் கட்ட பக்தர்களையே துரைராஜ் தூண்டுவது என்றும் ஏற்பாடு.

மடாதிபதிக்குச் ‘சக்தி பூஜை’க்கான ஏற்பாடு எளிதிலே முடிந்தது. அதுதான் லலிதாவின் தாய் வீடு இருந்த ஊர். ‘சிவத்தொண்டு’ செய்ய அந்தச் சிற்றிடையாள் முன்வந்தாள்.
காலை எல்லாம் சைவத்தைச் சுமந்து நொந்தேன். கட்டழகி! மடத்திலேயோ மன்னார்சாமிகள் வருவதும் போவதும் ஓயவில்லை! என்று கொஞ்சு மொழி பேசினார், லலித பூஜையில் ஈடுபட்டார் - தன்னை மறந்தார் - தர்பார் நாளை மறந்தார் - சோலையிலே வெட்டிவேர்ப் பந்தலிடப்பட்ட சித்திரகூடத்திலே, அவர் களியாட்டத்தில் மூழ்கிக் கிடந்தார்.

‘தர்பார்’ நடைபெற்றது, மடாதிபதி கோலத்தில் துரைராஜ் அமர்ந்தனர் - மடத்தின் பொருளை மக்களுக்கு வாரி வாரி வழங்கினான். “மதி பெற்றேன் மகேசன் அருளால்! புதிய பிறவியே எடுத்தேன். என் அஞ்ஞானம் என்னை விட்டோடி விட்டது; மீண்டும் வரக்கூடும், பக்தர்கள்; வந்தால் விரட்டும் தொண்டு செய்து, புண்ணியம் பெறுவீராக,” என்று உபதேசம் செய்தான். லலித பூஜையை முடித்துக்கொண்டு, ஓடோடி வந்தார் பழையவர், வேறோர் உருவம் அரசோச்சக் கண்டார், அலறினார், ஆர்ப்பரித்தார், ஐயகோ! என்றார், அரனை அழைத்தார், - ஆனால் அனைவரும் சேர்ந்துகொண்டு, “இதோ அஞ்ஞானம் வந்துவிட்டது” என்று கூவி, அடித்துத் தள்ளினர் கீழே. இந்த அமளியைச் சாக்காகக் கொண்டு துரைராஜ் விலையுயர்ந்த நவமணிகள் கொண்ட பேழையுடன், மடாலயத்தை விட்டு வெளியேறிவிட்டான்.

அடுத்த மடாதிபதி கந்தபூபதியா, முருகதாசரா என்பது பற்றிப் பக்தர்கள் விவாதித்துக் கொண்டிருந்தனர். துரைராஜ், தாடியும் ஜடையும் கலைத்துவிட்டு, வேறோர் புதிய வேடம் அணிந்துகொண்டிருந்தான்.

மாயேந்திரன் ஊரையே ஒரு கலக்குக் கலக்குகிறான்.

பணத்தை அள்ளி அள்ளி வீசுகிறான் - ஆனால், தேர் திருவிழாவுக்கல்ல, தேர்தலுக்குமல்ல; அனாதை விடுதிகள், பள்ளிக்கூடங்கள், படிப்பகங்கள், இவற்றுக்கு.

ஆராதனை, அர்ச்சனை, அபிஷேகம் இற்றைக் கேலி செய்கிறான், அறிவு வளர்ச்சியைப் பாராட்டுகிறான்.

ஆலைத் தொழிலாளர் வேலை நிறுத்தமா, பாட்டாளிகளுக்குப் பரிந்து பேசுகிறான். பயல்கள் பத்து நாளைக்குக் கூவும், பிறகு கும்பி காயும், தானாக வேலைக்குத் திரும்பு என்று ஆலை முதலாளி சேட் எண்ணுகிறார் - ஆனால், மாயேந்திரன், ஆலைத் தொழிலாளருக்குப் பண உதவி தருகிறார்; அவர் களுடைய போராட்டத்தை ஆதரிக்கிறார். ஆலை முதலாளியே மாயேந்திரரிடம் வருகிறார்.

“இவர் பெயர் என்ன தெரியுமாடா வெள்ளே!” என்று கேட்கிறார், மாயேந்திரன் தன் வேலையாளிடம்.

“சேட்டு...” என்கிறான், அந்த அப்பாவி.

“பரமதயாள் சேட்! பாம்பிலே அதிக விஷமுள்ள பாம்புக்கு நல்ல பாம்பு என்று பெயர், இதோ இவனுக்குப் பரமதயாள் சேட்!” என்று கூறிக் கேலி செய்கிறார், மாயேந்திரன்.

“என்மீது என்ன கோபம் ஜீ! நான் தங்களுக்கு என்ன செய்தேன்” என்று கேட்கிறான், சேட்.

“எனக்கா? ஒன்றும் இல்லை. ஆனால் நீ ஏழைத் தொழிலாளருக்குச் செய்யும் கேடு தெரியாதா! அவர்களின் கண்ணீர், உனக்குப் பன்னீர்!! நான் ஏழைத் தொழிலாளருக்குத் தான் நண்பன் உன் போன்ற ஆள் விழுங்கிக்கல்ல, போ!” என்று விரட்டுகிறார்.

தொழிலாளர்கள் வெற்றி பெறுகிறார்கள்.

புத்துலகக் கழகம் புதுமை வீரரை வாழ்த்துகிறது.

வாஞ்சிநாதர், மாயேந்திரரைக் காண வருகிறார், ‘அம்பாள் பிரசாதத்துடன்.’

“அம்பாள் பிரசாதம் கிடக்கட்டும் அய்யர்... நமக்குத் தேவை, அம்பாள்...!” என்று ஜாடை காட்டுகிறார் மாயேந்திரன். “புரிகிறது! புரிகிறது! அதற்கென்ன ‘ஜெமீந்தாரவாள்! எதேஷ்டம்’ என்று கூறிக் குதூகலமூட்டுகிறார் வாஞ்சிநாதர்.

“இதெல்லாம் வேண்டாமய்யா... சிங்காரவேலர் மகள் சந்திரா மீது...” என்று தூபமிடுகிறார் மாயேந்திரன்.

“சிரமமான காரியம் - பெரிய இடத்து விவசாரம்...” என்று கூறித் தயக்கம் காட்டுகிறார் வாஞ்சி. பச்சை நோட்டுகளை நீட்டுகிறார் மாயேந்திரர், பல்லிளிக்கிறார் வாஞ்சிநாதர்.

வாஞ்சிநாதருடைய வஞ்சகத்தை வெளிப்படுத்தும் கட்டம் வருவதற்குச் சில காலம் பிடித்தது - கட்டம் உருவெடுத்துக் கொண்டு வந்தது.

ஒருநாள் சிங்காரவேலருக்கு ஆள் அனுப்பி வரவழைத்தார் மாயேந்திரர்.

“அழைத்ததாகக் கேள்விப்பட்டேன், ஓடோடி வந்தேன்” என்று அடக்க ஒடுக்கமாகப் பேசுகிறார் சிங்காரவேலர்.

“ஆமாம், தங்களைப் பற்றி நிரம்பக் கேள்விப்பட்டிருக் கிறேன். பெரிய பக்திமானாம்...” என்று துவக்கினார் மாயேந்திரர்.

“உண்மைதான். இந்த ஊர்க் கோவில் தர்மகர்த்தா...”

“தாங்கள் தானாம்! ஆனால் தங்கள் பக்தியும் பிராமண சேவையும் தங்களுக்கு ஒரு பயனும் தரக் காணோமே. தங்கள் மகள் சந்திரா, பாவம், தாலி அறுத்துவிட்டாள்”

“ஆமாம், தலைவிதி...”

“அந்தத் தலைவிதியைக்கூட உமது பக்தியும் பிராமண சேவையும் போக்க முடியவில்லை, பிறகு என்ன பிரயோஜனம்”

“இதைப் போலத்தான் பேசுவான் துரைராஜ்!”

“அவனைத்தான் அடித்துத் துரத்தியாச்சே”

“ஜெமீதாரவாளுக்கு அவனைத் தெரியுமோ?”

“ஏன் தெரியாது! துரைராஜ் இப்போது உம்மைப் பார்த்தால்...”

“காரி உமிழ்வான்...”

“துரைராஜ் அப்படிப்பட்டவனல்ல... உம்மிடம் பரிதாபம் காட்டுவான்...”

“துரைராஜ் பேசுவதுபோலவே இருக்கிறதே...”

“இருக்கட்டும், நானேதான் துரைராஜ்... என்று வைத்துக் கொள்ளுங்களேன்...”

இவ்விதம் உரையாடல் வளர்ந்தது; வாஞ்சிநாதரின் வஞ்சகத்தை விளக்கி, அவன் போன்றாரின் பேச்சுக்குக் கட்டுப்படுவது எவ்வளவு கண்மூடித்தனமானது என்பதை எடுத்துரைக்கிறார் மாயேந்திரர்.

அதே சமயம் வாஞ்சிநாதர் வருவதாக வேலையாள் கூறுகிறார். உடனே மாயேந்திரர், “வாஞ்சிநாதரின் வஞ்சனம் எந்த அளவுக்குச் செல்கிறது என்பதைக் காட்டுகிறேன். அதோ அந்தத் திரைக்குப் பின்புறம் சந்தடி செய்யாமல் இருந்து கொண்டு, நாங்கள் பேசுவதைக் கேளும் என்று கூறுகிறார். சிங்காரவேலர் கொள்கிறார். சிரித்தமுகத்துடன் வாஞ்சிநாதர் வருகிறார்.

“வாருமய்யா! வாஞ்சிநாதரே! வாரம் இரண்டாகிறது, இன்னமும் காரியம் முடியக் காணோம்.”

“எதைச் சொல்றேள் ஜெமீந்தாரவாள்!”

“சற்றுச் சிரமமாக இருக்கிறது”

“என்னய்யா இழுத்துப் பேசுகிறீர். இரண்டு கையையும் நீட்டி வாங்கியதை...”

“நான் மறப்பேனா...”

“என்னய்யா, என்னைவிட அந்தச் சிங்கார மொதலி மேலானவனா...”

“கிடக்கிறான் தள்ளுங்கோ. நேக்கு அவனோட தயவு எதுக்கு...”

“சிங்காரமுதலிதான் உம்ம பேச்சைத் தட்டி நடப்பதே கிடையாதாமே.”

“ஆமாம் - அப்படித்தான் இருந்தான். கோவில் கட்டடான்னா, கட்டினான்; கும்பாபிஷேகம் செய்டான்னேன், செய்தான்...”

“ரசவாதம் செய்ததுகூட, நீர் சொல்லித்தானாம்...”

“யார் சொன்னா அப்படி, இழுத்து வாரும் இப்படி; நான் ஜோட்டாலே அடிச்சுடுவேன். நான் தலைப்பாடா அடிச்சுண்டேன், வேண்டாம்டா, போதும் உனக்கிருக்கிற சொத்து, ரசவாதம் எதுக்குன்னா - என் பேச்சைக் கேட்டானோ! தன் சொத்து, கோவில் சொத்து பூராவும் பறி கொடுத்தான். நல்ல வேளையாக நல்லூர் சம்பந்தம் ஏற்பட்டுது, இல்லையானா, நாறிப் போயிருக்கும் அவனோட வாழ்வு.”

“அதுவும் தக்கவில்லையே பாபம். தாலி அறுத்து விட்டாளே சந்திரா”

“அறாமல் என்ன ஆகும். அவன் ஆயிரத்தெட்டு ரோகம் பிடிச்சவன்...”

“அப்படிப்பட்ட இடத்திலே சந்திராவைக் கொடுக்கச் சொன்னீரே...”

“நான் சொன்னா! இவன் புத்தி எங்கே போச்சின்னேன்!”

அவ்வளவுதான் பொறுக்கமுடிந்தது சிங்காரவேலரால்.

பாவி! படுமோசக்காரா! என்று இடி முழக்கமிட்டார். புலி யெனப் பாய்ந்தார். வாஞ்சிநாதனின் குரவளையைப் பிடித்துத் தன் பலம் கொண்ட மட்டும் அழுத்தி நெரிக்கலானார். எவ்வளவு அழுத்தி வாஞ்சிநாதர் சொல்லி வந்த தத்துவங்களைக் கட்டிப் பிடித்துக் கொண்டிருந்தாரோ, அவ்வளவு அழுத்தமாக நெரிக்கலானார். மாயேந்திரனால் கூடத் தடுக்கமுடியவில்லை. வாஞ்சி நாதன் பிணமாகிக் கீழே விழுந்த பிறகுதான் பிடி தளர்ந்தது, கொலை செய்துவிட்டோம் என்ற உணர்வும் அப்போதுதான் வந்தது. மாயேந்திரன் காலில் வீழ்ந்து கதறலானார். அவரைத் தூக்கி நிறுத்தித் தைரியம் கூறிவிட்டு, “இது சம்பந்தமாகத் திகில் வேண்டாம், நான் கவனித்துக் கொள்கிறேன்.” என்று கூறிவிட்டு, சிங்காரவேலரை வாஞ்சிநாதர் வீட்டுக்கு அழைத்துச் சென்று, துரைராஜ் தூக்கிக்கொண்டு ஓடினதாகக் கூறப்பட்ட மாங்காய் மாலையையும், ரசவாதி ‘அடித்துக் கொண்டு’ போனதாகச் சொல்லப்பட்ட நகைகளையும் காட்டி, வாஞ்சிநாதனின் வஞ்சகத்தைப் படம் பிடித்துக் காட்டினார் மாயேந்திரர்.

திடுக்கிடத்தக்க சம்பவங்கள் உருண்டோடி வந்தன - இவை கண்டு, சிங்காரவேலர் தெளிவுபெற்று, “இனி நான் வஞ்சகத்துக்கு அடிமை ஆக மாட்டேன், வைதீகத்துக்கு இட மளிக்கமாட்டேன், பகுத்தறிவு பரப்புவேன், ஜாதிபேதம் ஒழியட்டும், மூடநம்பிக்கை ஒழியட்டும, புரட்டர்களின் கொட்டம் அழியட்டும்,” என்று ஆவேசத்துடன் கூறிட, அகமிக மகிழ்ந்த துரைராஜ், சந்திராவைச் சாம்பசிவத்துக்கு மறுமணம் செய்து தரும்படி கேட்டுச் சம்மதம் பெறுகிறார்.

மறுநாளே, மாயேந்திரர் தலைமையில் மறுமணம் நடந்தேறுகிறது.

அதேபோது துரைராஜ் மடாலயத்தில் செய்த கபட நாடகம் பற்றி லலிதா மூலம் கேள்விப்பட்டு, மாயேந்திரனின் போக்கையும் கவனித்துப் பார்த்து, துரைராஜே, மாயேந்திரனாக நடிக்கிறான் என்பதைக் கண்டறிந்து, துரைராஜை வந்து மிரட்டுகிறான் வரதன்.

உன்னால் ஆனதைச் செய் என்று கூறிவிட்டு, தானே துரைராஜ் என்பதையும், வாஞ்சி நாதரைக் கொன்றது தானே என்றும் கடிதம் எழுதி வைத்து விட்டுத் தனியாகச் சாம்பசிவத்தைச் சந்தித்து, தான் தான் துரைராஜ் என்பதைக் கூறி, தன்னிடம் உள்ள பணம் முழுவதையும் பகுத்தறிவுப் பிரசாரத்துக்கே பயன்படுத்தும்படி கூறிவிட்டு, அங்கேயே, நண்பனுடைய அணைப்பில் இருந்தபடியே, இரத்தம் கக்கிக் கீழே வீழ்ந்து இறந்து விடுகிறான், “விஷம் சாப்பிட்டு விட்டேன்! வேலை முடிந்தது!” என்று கூறியவண்ணம்.

அலறிப் புரண்டழுகிறான் சாம்பசிவம். திருந்தி விட்டேன் துரைராஜ், திருந்தி விட்டேன், என்பொருட்டு நீ இறப்பதா! உத்தமனே! என்று உள்ளம் உருகக் கூறிக் கதறுகிறார், வைதீகப் பிடியிலிருந்து விடுபட்ட சிங்காரவேலர்.

மக்களை வஞ்சகர்களிடம் சிக்க வைத்து, அவர்தம் மதியை மாய்த்து, சமூகத்தைச் சீரழிக்கும் பார்ப்பனீயத்தை ஒழிக்கும் பணியாற்றுவேன், நீ துவக்கி வைத்த வேலையைத் தொடர்ந்து செய்து வருவேன் - என்று கூறித் துரைராஜின் கால்களைத் தொட்டுக் கண்களில் ஒத்திக் கொள்கிறான், சாம்பசிவம்.

(திராவிட நாடு - 1955)
-----------------

8. பிடிசாம்பல்

பிடிசாம்பல் (1)

“சாம்பல்! சாம்பல்! சாளுக்கிய நாடு சாம்பலாயிற்று! சாளுக்கிய மன்னன் பிணமானான், களத்தில்! முடிவிலொரு பிடிசாம்பலானான்! முடிவிலொரு பிடி சாம்பல்! பாய்ந்து சென்ற திக்கெலாம் வெற்றி கண்ட வேந்தன், பராக்கிரம மிக்க பார்த்திபன், சாளுக்கிய திலகம் புலிகேசியும் போரில் தோற்றான்; அவனுடைய குருதி சாளுக்கிய மண்ணிலே குழைந்து கிடக்கிறது. வீர உரையாற்றி, வெற்றி முழக்கமிட்டு, பிடிபட்ட மன்னர்களை விரட்டிப் பேசிய, அவனுடைய வாயிலே இரத்தம்! புகழ் மாலை தாங்கிய உடலிலே, புண்! சாளுக்கிய நாடே! தீயிட்டனர் உனக்கு! தீய்ந்தது உன் எழில்! செல்வம் கருகி விட்டது. புகழ் புகைந்து போயிற்று. மாடமாளிகைகளிலே நெருப்பு! மண்டபங்களெல்லாம் மண்மேடுகளாயின. அழிந்தது கோட்டை. மிகுந்தது என்ன? எதிரியிட்ட தீ, தன் பசி தீர சாளுக்கிய நாட்டைத் தின்று தீர்த்தான பிறகு, மிச்சமானது என்ன? சாம்பல்! ஆம்! சாளுக்கிய நாட்டின் கதி இதுவாயிற்று. பிடி சாம்பல்! முடிவிலோர் பிடி சாம்பல்!”

சாளுக்கிய நாட்டின் மீது, பல்லவன் நரசிம்மன் போர் தொடுத்தான் - போரென்றால், மிகப் பயங்கரமானது; வரலாற்றிலே மிகமிகக் குறிப்பிடப்பட வேண்டிய சம்பவம்.

வாதாபி, சாளுக்கியத்தின் தலைநகரம் - எழில்மிக்க இடம். பல்லவப்படை, அந்த அழகு நகரை, அடியோடு அழித்து விட்டது. வாதாபியின் அழிவுபோல், வேறெந்தப் போரிலும், வேறெந்த நகருக்கும் அழிவு நேரிட்டதில்லை என்று கூறுவர் - அவ்வளவு பயங்கரமான அழிவு. சாளுக்கியனின் படைகள், சண்ட மாருதத்தில் சிக்கிய கலம் சுக்கு நூறாவது போல, சின்னா பின்னமாயிற்று. ஊர், உருத் தெரியாது அழிந்தது. மன்னனும் களத்திலே பிணமானான். பல்லவப் படையின் தாக்குதலால், சாளுக்கிய சாம்ராஜ்யமே படுசூரணமாகி விட்டது.

வாதாபி, இன்றைய பம்பாய் மாவட்டத்திலே உள்ள இடம்! அதனை அழித்த பல்லவப் படையோ, காஞ்சியிலிருந்து கிளம்பிச் சென்றது - பல்லவ சாம்ராஜ்யத் தலைநகரம் காஞ்சிபுரம்.

காஞ்சிபுரம் - வாதாபி! இடையே, எவ்வளவு தொலைவு!! இடையே, எவ்வளவு ஆறுகள், காடுகள், நாடு நகரங்கள்! இவ்வளவையும் தாண்டிச் சென்று, சிங்கத்தை அதன் குகையிலே சென்று தாக்கிக் கொன்றிடும் வீரம்போல பல்லவனின் படை, மாற்றானின் மணிபுரிக்குச் சென்று, தாக்குதலை நடத்தி வெற்றி பெற்றது.

சாளுக்கியன், சொந்த நாட்டுக்குள்ளிருந்து கொண்டு போர் நடத்தினான் - பல்லவனோ, எதிரி நாட்டுக்குள் நுழைந்து, கடும் போரிட்டு வெற்றி பெற்றான். மகத்தான வெற்றி! சாளுக்கிய மக்களின் மனத்தை மருட்டிவிட்டது, பல்லவ மாவீரர்களின் பேராற்றல்!

எங்கும் நாசம் நர்த்தனமாடிற்று! அழிவு எனும் அந்தகாரம் கப்பிக் கொண்டது சாளுக்கியத்தை. அந்த அழிவு கண்ட சாளுக்கிய வீரன் கதறினான், ‘பிடி சாம்பல்! முடிவிலொரு பிடி சாம்பலாகிவிட்டது சாளுக்கிய நாடு!!’ என்று.

அந்தச் சாளுக்கிய வீரனின் அழுகுரல் கேட்ட தமிழ் வீரர் சிலர், தாய்நாட்டைத் தீ தின்னக் கண்டு தேம்பியவனைப் பிடித்திழுத்துக் கேட்டனர், “ஏடா! மூடா! எதுக்குக் கதறுகிறாய்?” என்று. “யாரிவன் பித்தன்! பிணக்குவியலுக்கிடையே பிதற்றிக் கிடக்கிறான்! பிடி சாம்பலாம், பிடி சாம்பல்! பேதை! தமிழ்நாட்டு வீரமெனும் வெந்தழலிற் பட்டால், எதுதான் பிடி சாம்பலாகாது? வாதாபி மட்டும் விதிவிலக்கோ! உமது புலிகேசி மட்டும் தப்புவானோ! சிங்கங்கள் பலச் சீறிப் போரிட்டுச் செந்தமிழ் நாட்டவ

ரிடம் பங்கப்பட்டதை இவன் அறியான் போலும்! ஏடா! மூடா! புலிகேசி தமிழகத்தைத் தாளின்கீழ் போட்டுத் துவைக்கலாம் என்று எண்ணினான்; அவனுடைய சேனை தோற்றோடும் போக்கில், அவனுடைய பிணத்தைத் துவைக்கும் என்பதைக் கண்டானா அவன். வேங்கி நாட்டிலே அவன் பெற்ற வெற்றி, வெறியூட்டிவிட்டது. வடநாட்டு வேந்தன் ஹர்ஷனை வென்று விட்டதாலேயே, தன்னை மிஞ்சிடும் தார்வேந்தன் எவனும் இல்லை என்று இறுமாந்து கிடந்தான்; இறந்துபட்டான்! அவனுடைய நகரம் எரிந்துபட்டது. தமிழரிடம் கலந்துறைவோர், அவரி

டம் திங்களின் குளிர்ச்சியைக் காண்பர்; எதிர்த்தோர், கதிரவனின் வெம்மையால் கருகுவர்.” என்றனர் தமிழ் வீரர். சோகத்தோடு சாளுக்கியன், “ஆம்! வீரர்களே! வெற்றியால் களித்துள்ளவரே! கருகித்தான் போயிற்று, எமது வாதாபி!” என்ற கூறினான்.

“சாளுக்கிய நாடு...?” என்று கேலி செய்தனர் தமிழ் வீரர்.

“இனி, தலை தூக்காது.” - என்று தலையைக் கவிழ்த்துக் கொண்டு பேசினான் சாளுக்கியன். அழிந்துபட்ட நகரைவிட, அவன் அதிக பரிதாபமாகக் காணப்பட்டான்.

வெற்றி பெற்ற பல்லவப் படை, வேழம் முதற்கொண்டு வேழமுகச் சிலை வரையிலே, ஒன்றுவிடாமல், சாளுக்கிய நாட்டுப் பொருள்களைப் பல்லவ நாட்டுக்குக் கொண்டு சென்றனர். அந்தச் சாளுக்கியனும், பல்லவ நாட்டுக்கு இழுத்து வரப்பட்டான். - போரிலே பிடிபட்டவனல்லவா! அவனுடைய கண்கள், சாளுக்கியத்தின் அழிவைக் கொண்டு கலங்கிற்று - ஆனால், பல்லவ நாட்டிலே, ஒவ்வொருவர் முகத்திலும் வெற்றி ஒளிவீசக் கண்டு, பல்லவத்தின் எழிலைக் கண்டு, அவனுடைய கண்கள் அடைந்த வேதனை. களத்திலே எழுந்ததைவிட அதிகமென்றே கூறலாம்.

சாளுக்கியன் பிடிபட்டவன், அடிமை, யுத்தக் கைதி என்று தன்னைப் பற்றிப் பல்லவ நாட்டவர் கேலி பேசினதால் கூட அவன் மனம் புண்படவில்லை.

“வாதாபி படுசூரணமாயிற்று.”

“சாளுக்கியம் சிதைந்தது.”

“புலிகேசி பிணமானான்.”

இந்த வார்த்தைகள், எந்தப் பக்கத்திலும் கிளம்பின! நாலா பக்கங்களிலிருந்தும் அம்புகள், வேல், ஈட்டி முதலியன பாய்ந்து வந்து தாக்குவதுபோல, சாளுக்கியனின் செவியில், இந்த வார்த்தைகள் வீழ்ந்தன.

வேலை ஒன்றும் கடினமில்லை. அதிலும், அவன் வேலைக்கு அமர்ந்திருந்த இடம், பல்லவ சாம்ராஜ்யாதிபதியின் அரண்மனைக்கு அடுத்த அந்தஸ்துள்ளது! படைத்தலைவர் பரஞ்சோதியிடம், அந்தச் சாளுக்கியன் வேலைக்கு அமர்ந்தான். தாய் நாட்டின் வெற்றிக்காக, வீரவாளேந்தி, பணிபுரிந்து வந்த அந்தச் சாளுக்கியனுக்கு, என்ன வேலை கிடைத்தது? பரஞ்சோதியின் ஆயுதச்சாலையில் காவல்!! பரஞ்சோதிக்கு அடைப்பம் தாங்கும் பணி; எடுபிடி வேலை செய்வது, நிலத்தில் உழுவது, தோட்டக்காவல் - இப்படி ஏதேனும் வேலை தந்திருந்தால்கூட, அந்தச் சாளுக்கியனின் மனம் வேதனை அடைந்திருக்காது. ஆளப் பிறந்தவர்கள் கூட ஆளடிமையானதுண்டு. படையிலே பணிபுரிய வேண்டியவன், பணியாளானால் பரவாயில்லை, சகித்துக் கொள்ளலாம் என்றாவது தோன்றும். ஆனால், சாளுக்கியனுக்குத் தரப்பட்ட வேலை, பரஞ்சோதியின் ஆயுதச் சாலையிலே காவல் புரிவது!

அந்த வாள் - எத்தனையோ சாளுக்கியப் படைத்தள பதிகளின் சிங்களை வெட்டி வீழ்த்திய வாள்! சாளுக்கியரின் குருதி தோய்ந்த வாள்! வேல்! அம்பி! ஈட்டி! எறிவாள்! சொருகுவாள்! வளை மற்றும் பல பொறிகள் எல்லாம் சாளுக்கிய சாம்ராஜ்ய அழிவுக்குப் பயன்பட்ட கருவிகள்! புலிகேசியைப் பிணமாக்கிய படைத்தலைவனின் ஆயுதச்சாலையிலே, காவல் புரியவேண்டும்! சாளுக்கியன் மனம் மிக மிக வேதனைப் பட்டதிலே ஆச்சரியமென்ன! தாய்நாட்டை அழித்த கருவிகள், நாள்தோறும் பார்க்க வேண்டும்; அவை வரிசையாக, ஒழுங்குபடுத்தவேண்டும், பழுது பார்க்க வேண்டும் - இவை, சாளுக்கியனின் பணி! இதைவிட, நாள்தோறும், நானூறு சவுக்கடி பெற்றுக் கொள்ளவேண்டும். என்று கட்டளையிடலாம்! பிரதி தினமும் பாம்புப்புற்றிலே கரத்தைவிட்டுக் கடிபட வேண்டும் என்ற தண்டனை தந்திருக்கலாம்.

ஒவ்வொரு நாளும், பரஞ்ஜோதியின் ஆயுதச்சாலையில் காவல் புரிவதைவிட, ஒவ்வொரு விநாடியும், அந்த வாளைக் காண்பதைவிட, அந்தத் தண்டனைகள் கொடுமையல்லவே என்றெண்ணினான் சாளுக்கியன்.

இவ்வளவு வேதனையில் தள்ளப்பட்ட, வில்லாளன் - அந்தச் சாளுக்கியனின் சிறப்புப் பெயர் அங்ஙனம் அமைந்திருந்தது - தன் தாய்நாட்டைப் பற்றி எண்ணத் தவறவில்லை. எண்ணினது மட்டுமல்ல, தன் ஆயுள் முடிவதற்குள், தாய் நாட்டுக்கு ஏற்பட்ட பழியையும் இழிவையும், தன் இரத்தத்தால் கழுவ வேண்டும் என்று தீர்மானித்தான்.

அவன் அந்தப் பிடி சாம்பலை மட்டும் விடவில்லை பேழையில் இருந்தது. சிறு பட்டுத் துண்டிலே முடியப்பட்டு! யாருமறியாவண்ணம், ஒவ்வோர் நாளும் நடுநிசியில் செல்வான்; பேழையைத் திறப்பான்; கண்களிலே கொப்பளிக்கும் நீரைத் துடைப்பான்; பட்டு முடிப்பை எடுப்பான், பார்ப்பான்; பெரு மூச்செறிவான்; ‘பிடி சாம்பல்! பிடி சாம்பல். முடிவிலொரு பிடி சாம்பல்! சாளுக்கியன் கரத்தில் சாளுக்கிய நாட்டின் அழிவைக் காட்டும் பிடி சாம்பல்!’ என்று தனக்குள் கூறிக் கொள்வான்; பட்டு முடிப்பைப் பேழையுள் வைப்பான்; பிறகு படுக்கையிற் சென்று புரள்வான்; கண்ணை மூடினால், களம் தெரியும்; திறந்தாலோ, விளக்கொளி தீப்பந்தமாகக் காணப்படும்; விடிய விடியத் துடித்தபடி இருப்பான்! வேறென்ன செய்வான்! வெற்றி பெற்ற வீரரிடம், அவனோர் வேலைக்காரன். சரணடைந்த சாளுக்கியன் தன் தாய்நாடு சாம்பலானதைக் கண்டவன்!

பரஞ்ஜோதியின் ஆற்றலை, வாதாபியின் வீழ்ச்சி, தமிழகம் உணரச் செய்தது. நரசிம்மப் பல்லவனின் கீர்த்தி, பல்லவ சாம்ராஜ்யத்தின் சிறப்பு, இவை பற்றி மக்கள் பேசாமலில்லை, பெருமை அடையாமலுமில்லை. ஆனால், பரஞ்ஜோதியைப் பற்றிப் பேசியான பிறகுதான்!

பரஞ்ஜோதியின் புகழ் வளர்வது கண்டு, சாளுக்கியன் ஏற்கெனவே வேதனைப் பட்டதைவிட அதிகமாக அனுபவித்தது சகஜம். ஆனால், பரஞ்ஜோதியின் புகழ் வளருவது கண்டு, பல்லவ சாம்ராஜ்யத்திலே வேறு சிலருக்கு வேதனை பிறந்தது. அவர்கள், பரஞ்ஜோதிபோல, படைத் தளபதிகளுமல்ல - புகழுக்காகப் போட்டியிடுபவர்களுக்குள் உண்டாகும் மாச்சரியம் என்ற அளவிலே கருதலாம். ஆனால், பரஞ்ஜோதியின் புகழ் ஒளி கண்டு, வேதனைப்பட்டவர்கள், வீரர்களல்லர்!

பல்லவ சாம்ராஜ்யம் பல்வேறு வளங்களுடன் சிறந்து விளங்கிற்று. செல்வம் செழித்த இடம். கலையும் ஓங்கி வளர்ந்திருந்தது. மன்னன் நரசிம்மன், வைணவன் - ஆனால், சைவரின் பகைவனல்லன்!

சைவம் - வைணவம் இரண்டும் வெளிப்படையாக ஒன்றை ஒன்று தாக்கிக் கொண்டு, ஊரைக் களமாக்கிய காலமல்ல அது. அந்தக் கோரம் குறைந்துவிட்டது. குறைய வேண்டிய அளவு. வேறோர் மார்க்கம், இரண்டையும் அறைகூவி அழைத்தது. அந்த மார்க்கமே, சமணம். சமணத்தின் ஆதிக்கத்தைக் கண்டு, வைணவமும் சைவமும் அஞ்சின - அஞ்சினதுடன், இரு சக்திகளும், கூட்டுச் சக்தியானாலொழிய, சமணத்தை வீழ்த்த முடியாது என்று முடிவு செய்தன. எனவே தான் சைவ - வைணவ, மாச்சரியம் குறைந்தது. அரியும், அரனும் ஒன்றுதானென்று பேசப்பட்டு வந்தது. இரு மார்க்கங்களும், இறைவனின் திருவடிகளுக்கே அழைத்துச் செல்ல ஏற்பட்டன - சமணம் போல, நிரீஸ்வரவாதமல்ல அவை - என்று பேசவும் தலைப்பட்டன.

இந்த ‘பாசம்’ இருந்த காலம் - பல்லவ சாம்ராஜ்யம் ஓங்கி வளர்ந்த சமயம். பல்லவ மன்னர்களும், சைவ - வைணவம் இரண்டையும் ஆதரித்து வந்தனர். மன்னரின் ஆதரவு பெற்றதால், இவ்விரு மார்க்கங்களும், மகோன்னத நிலை அடைந்தன. பெரும் பொருள் செலவிட்டுக் கலை நிபுணர்களை கொண்டு அழகான பல பெரிய கோவில்களை அமைத்து மன்னர்கள். ‘பக்திமான்’கள் - ‘கலாவாணர்கள்’ என்ற விருதுகளுடன் புகழடைந்தனர். சமணம், ஆதரிப்பாரற்றுப் போயிற்று. இசையும் நடனமும், கூத்தும் கேளிக்கையும் பஜனைகளும் பல்வேறு விழாக்களும், சைவ வைணவச் செல்வாக்கை அதிகரிக்கச் செய்ததுடன், மக்களுக்குப் பெரியதோர் மனமயக்கத்தை ஊட்டின. இத்தகு முறைகளற்றதாலும் தத்துவங்களின் மீது கட்டப்பட்டதாலும், துறவு நிலையைப் பெரிதும் வற்புறுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்ததாலும், சமணம் செல்வாக்கிழந்தது. அரசன் எவ்வழி, குடிகள் அவ்வழி என்ற முறைக்கேற்றபடி, மன்னரின் ஆதரவைப் பெற்ற சைவ - வைணவத்தையே மக்களும் ஆதரித்தனர்.

இந்த ‘வெற்றி’க்காக ஏற்பட்ட, சைவ - வைணவக் கூட்டுறவு, சமணம் இனித் தலைதூக்காது என்ற நிலை ஏற்பட்ட பிறகு, மீண்டும் போட்டியிடலாயின. இம்முறை நடந்த போட்டி, மக்களிடை, தத்தமது மதத்தின் அருமைபெருமைகளை எடுத்துக் கூறியும், வேறு மதத்தின் சிறுமைகளை எடுத்துக் காட்டியும், நடத்தப்படும் பிரச்சாரமாக அமையவில்லை. பல நாட்கள் ‘அரியும் - அரனும் ஒன்றே’ என்று மக்களிடையே பேசியாகிவிட்டதால், மீண்டும், அரி - அரன் இருவரில், யார் உண்மைத் தெய்வம், சைவம் - வைணவம் இரண்டிலே எது சிறந்த மதம் என்ற போட்டிப் பிரச்சாரத்தை நடத்துவது முறையுமாகாது, பலனும் தராது என்பதை அறிந்த, அம்மதத் தலைவர்கள், மக்களிடம் சென்று பேசி, மண்டையை உடைக்கும் கலகத்தை மூட்டிவிடும் முறையைக் கைவிட்டு, அரண்மனையை முற்றுகையிடலாயினர்! மன்னரிடம் செல்வாக்குப் பெற்று, தமது மார்க்கத்துக்கு மதிப்புத் தேட எண்ணினர். அரசாங்க மதம் என்ற அந்தஸ்து கிடைப்பதற்காக அரும்பாடுபட்டனர். இந்த முயற்சியில், போட்டியில், ஓரோர் சமயம், சைவரும், பிறிதோர் சமயம் வைணவரும் வெற்றி பெறுவர் - அதற்கேற்றபடி சைவத்துக்கோ, வைணவத்துக்கோ, ஆதிக்கம் கிடைக்கும். அரசபலம் பெற்று அந்த மதம் ஓங்கும்.

இந்தப் ‘போட்டிக்கு’ப் பல்லவநாடு, வளமான இடமாக அமைந்தது. ஓர் அரசர், வைணவத்தை ஆதரிப்பார் - அவர் காலத்தில் எங்கும் வைணவக் கோவில்கள் எழிலுடன் கிளம்பும்! விழாக்கள், வைணவத்தின் சார்பில் நடைபெறும். மற்றொருவர், சைவத்தை ஆதரிப்பார் - அவர் காலத்திலே சைவக் கோவில்கள் கட்டப்படும்; இம்முறையில், இரு மார்க்கங்களும் தழைத்தன.

நரசிம்ம பல்லவன், வைணவ மதத்தை ஆதரித்தான் - அவனுடைய தகப்பனோ, சைவன். மன்னன் மகேந்திரன் காலத்திலே, மகேஸ்வரனுக்குக் கோவில்கள் கட்டப்பட்டு, மானியங்கள் அளிக்கப்பட்டன. மகேந்திரன் மகன், நரசிம்மப் பல்லவன், வைணவ மதத்தை ஆதரித்தான்.

இந்நிலையில், படைத்தலைவர், வாதாபியின் மாபெரும் வெற்றி பெற்ற மாவீரன், பரஞ்ஜோதி சைவன். பரஞ்ஜோதியின் புகழொளி கண்டு, வைணவருக்கு அருவருப்பு ஏற்படாமலிருக்க முடியுமா! மன்னனின் ஆதரவு வைணவத்துக்குக் கிடைத்திருக்கிறது. ஆனால் வெற்றி ஒளியோ, சைவப் பரஞ்ஜோதி மீது வீசுகிறது - சைவர் பெருமையடைகின்றனர் - இது இத்துடன் நிற்குமோ, அன்றி, அரண்மனைக்குள், சைவம், புகுநிலை ஏற்படுமோ! பரஞ்ஜோதி புகழ் பெருகுவது, வைணவத்துக்கு இருட்டடிப்பாய் முடியுமாயின், என் செய்வது என்ற அச்சம் அரிதாசர்களைப் பிடித்தாட்டிற்று.

“பரஞ்ஜோதி, மாவீரன்; தமிழ் நாட்டின் திலகம்; பல்லவ சாம்ராஜ்யத்தின் மணிவிளக்கு.”

“ஹர்ஷனை வென்றான் புலிகேசி! புலிகேசி தோற்றான் நம் பரஞ்ஜோதியிடம்!”

“படைத்தலைவருக்கேற்ற புத்தி கூர்மை, அஞ்சா நெஞ்சு அனைத்தும் படைத்த ஆற்றலானன்றோ நம் பரஞ்ஜோதி.”

“படைத்தொழில் நுட்பம் சகலமும் அறிந்தவர்.”

“வாதாபியின் வீழ்ச்சி...”

“வாடிக்கிடந்த மக்களைக் குதூகலப்படச் செய்து விட்டது.”

“மற்றையத் தமிழ் வேந்தர்களும்...”

“பாராட்டுவர், வெளியே; உள்ளே பொறாமை அடைவர்.”

“பயமிருக்கும்!”

“எங்கும் இந்த இணையில்லா வீரருக்குப் பெருமதிப் புத்தான்!”

“மக்கள், பரஞ்ஜோதியை...”

“வணங்குகிறார்கள்!”

“மன்னருக்கும் அவரிடம் அளவு கடந்த மதிப்பு!”

“இராதா? ரணகளச்சூரன்! வெற்றி வீரன்! வாதாபிக்குத் தீயிட்ட தீரன்! மகேந்திர மன்னன் தோல்வியைத் துடைத்த தளபதி! மட்டற்ற மதிப்பும் மங்காப் புகழும் இந்தப் பல்லவ பரம்பரைக்குப் பெற்றுத் தந்த தலைவன்...”

“ஆம்! ஆனால்... பரஞ்ஜோதி ஒரு சைவன்!”

“ஆமாம்! சைவன்!”

“சைவன்! மன்னன் வைஷ்ணவன்! நாமும் அரிதாசர்கள்! கீர்த்தி பெற்றவனோ சைவன்!”

“ஆனால், அதனால்”

“ஆனால் என்ன! அதனால் என்ன! பரஞ்ஜோதியின் புகழ், சைவத்துக்குத்தான் உரம் அளிக்கும். பாற்கடலிற் பள்ளி கொண்ட பரந்தாமனின் பக்தனான நரசிம்ம மன்னனின் மனமும், மெள்ள மெள்ள, சைவானம் பரஞ்ஜோதியின் கீர்த்தியைக் கேட்டுக் கேட்டு மாறி...”

“மகேந்திர மன்னன் மகன்! வைணவத்தை விட்டு...”

“தந்தை போலத் திருநீற்றுப் பூச்சுக்காரனாவானே!”

“நிச்சயம்! அரச அவையில் ஆற்றலரசன் பரஞ்ஜோதி வீற்றிருக்கும் வரை, வைணவத்துக்கு இந்த ஆபத்து ஏற்பட்டே தீரும் என்று நிச்சயமாகச் சொல்லலாம்.”

“ஏன் அப்படி எண்ணுகிறீர்! எம்பெருமானின் பெருமைகளை எடுத்துக் கூறுவோம். சைவம் உயர்ந்ததா வைணவம் சிறந்ததா என்பதை பரஞ்ஜோதியே முன்னின்று பேசுவதாயினும், நமது கட்சி ஜெயம் பெறச் செய்யும் சக்தி நமக்கு இல்லையா? மேலும் பரஞ்ஜோதி போரிலே புலி; போதகாசிரியனோ? வீரன்; ஆனால் வைணவத்தை வீழ்த்தக்கூடிய விவகார ஞானஸ்தானே! வரட்டுமே, அப்படியொரு சந்தர்ப்பம். வைணவமே சிறந்தது என்று என்னால் - உங்கள் யாவரைக் காட்டிலும் ஞானத்திலே மிகக் குறைந்தவனான அடியேனால் ஸ்தாபிக்க முடியும்.”

“அசட்டுத்தனமான காரியம்! சைவம் பெரிதா, வைணவம் பெரிதா என்று சண்டையிடத் தொடங்கினால், சமணம் மீண்டும் தலைதூக்கும்.”

“உண்மை! அந்தத் தொந்தரவு வேறு இருக்கிறது.”

“அரி - அர ஒற்றுமைக்கு அவசியம் இருக்கிறது;அந்த ஆபத்தைப் போக்கும் அரு மருந்து அது ஒன்றே மிச்சம். ஆகவே, சைவ - வைணவ விவாதம் கூடாது.”

“பிறகு...”

“அந்த முறை கூடாது! ஆனால், எப்படியேனும் பரஞ்ஜோதியை அரச அவையிலிருந்து நீக்கியாக வேண்டும். அவன் படைத்தலைவனாக வீற்றிருக்கவிட்டால், வைணவம் தானாக நசிந்துவிடும்.”

“மன்னனோ, பரஞ்ஜோதியைக் கிடைத்தற்கரிய பொக்கிஷமாகக் கருதுகிறான்.”

“கருதுகிறானல்லவா! இனி மற்றவர்கள் செல்லாக்காசு தானே!”

“ஆமாம்!...”

“பரஞ்ஜோதி சைவன்! எப்படியேனும், ராஜசபையில் அவன் இனியும் இருக்க இடம் தரலாகாது.”

அச்சம் கொண்ட அரிதாசர்கள், இங்ஙனம் பேசிடாது இருக்க முடியுமோ! சைவம், பிரசாரத்தால் அல்ல; மன்னனிடம் செல்வாக்குப் பெற்று அல்ல, ஒரு மாவீரனின் வெற்றி ஒளியின் துணைகொண்டு இனி, செல்வாக்குப் பெறுமே, மன்னன் நரசிம்மன், அரிதாசன் என்று ஆனந்தமாகக் கூறினவுடன், ஆம்! ஆனால், படைத்தலைவர் பரஞ்ஜோதியார் சைவர் - அவர் பல்லவ நாட்டுக்கே மணிவிளக்காக உள்ளார்; அவர் சிவ பக்தர் - என்றென்றோ சைவர் கூறுவர்!
அரசு ஆதரவு அற்றுப் போய்விடுமோ என்ற அச்சம் கொண்ட வைணவர்கள், வாதாபியை வீழ்ச்சி பெறச் செய்த பரஞ்ஜோதியை, வைணவத்துக்கு வைரியாகிவிடக் கூடியவர் என்று எண்ணி ஏங்கினர். இந்த ஏக்கத்தைப் போக்கிக் கொள்ள, பேச்சு மட்டும் பயன் தருமா, செயலிலும் இறங்கியாக வேண்டுமல்லவா! என்ன செய்ய முடியும்? மெல்ல பிரச்சாரம் நடத்தினர். வருகிறது வைணவத்துக்கு ஆபத்து! மன்னன் நரசிம்மப் பல்லவனின் ஆதரவு பெற்ற வைணவத்துக்கு நெருக்கடியான நிலைமை வருகிறது. வாதாபியிலே பரஞ்ஜோதி பெற்ற வெற்றியைச் சைவர்கள் தமக்குச் சாதகமாகக்கொண்டு, சைவத்திற்கு அரசர் ஆதரவு கிடைக்குமாறு செய்யப் போகிறார்கள். வீழ்ந்தது வாதாபி! தாழ்ந்தது வைணவம் என்ற நிலைமை ஏற்பட்டுவிடும். எனவே, வைணவம் வாழ வேண்டுமானால், பரஞ்ஜோதியாருக்கு அரச அவையிலே, இன்றுள்ள செல்வாக்கு ஒழிந்தாக வேண்டும் - என்று பிரச்சாரம் புரியவும், கட்சி சேர்க்கவும், வைணவர்கள் முனையாமலிருக்க முடியாதல்லவா?

தாய்நாடு சாம்பலானதைக் கண்டு தவித்துக் கொண்டிருந்த சாளுக்கிய வீரன், வில்லாளன், இந்த நிலையை நன்கு அறிந்து கொண்டதுடன், தன் நோக்கத்துக்கு, இச்சூழ்நிலையைச் சாதகமாக்கிக் கொண்டான்.

“பரஞ்ஜோதி! எமது வாதாபிக்கு நெருப்பிட்டாயல்லவா? தீக்கு இரையாக்கினாய் திருநகரை! இதோ, தோற்ற சாளுக்கியன் மூட்டும் தீ, உன் நாட்டை அழிக்கப் போகிறது பார்!” என்று கூறவில்லை - ஆனால் அவன் செய்தது என்னவோ அதுதான். வெகுண்ட வைணவருக்கு, வேகமூட்டலானான், அவர்களிடம் பேசி. என்ன பேசினான்?

“புலிகேசி, பிணமானான் களத்தில்! கடும் புயலினால் வேருடன் களைந்து எறியப்பட்ட மரமானான். சாளுக்கியப் படை சின்னாபின்னமாகிவிட்டது. வாதாபி நகரம் தீக்கு இரையா
யிற்று. எல்லாம் நமது படைவீரர்களின் தீரத்தால் - அவர்கள் காட்டிய அபாரமான போர்த்திறனால்!”

“சாளுக்கியப் படை தோற்றது உண்மை. பல்லவருக்கு வெற்றி கிட்டியதும் உண்மை. ஆனால் அந்த வெற்றிக்குக் காரணம், பல்லவப்படை காட்டிய வீரம் என்று கூறுவது முழு உண்மையாகாது. நண்பர்களே! என் மீது கோபிக்க வேண்டாம். சாளுக்கியர் கோழைகளல்ல; வீரம், பல்லவருக்கு மட்டுமே உரித்தானதுமல்ல; பல்லவப் படை காட்டிய வீரம் மட்டுமல்ல, வாதாபியின் வீழ்ச்சிக்குக் காரணம்...”

“பேசுகிறாய், பெருமூச்செறிகிறாய், உண்மை அல்ல வென்கிறாய். நீ கூறுவதுதானே, பல்லவப் படையின் வெற்றிக்குக் காரணம். அவர்களின் வீரதீரமல்லவா?”

“அதுமட்டுமல்ல என்றுதான் கூறுகிறேன்.”

“ஆமாம் நண்பர்களே! அவன் கூறுவதிலும் அர்த்தம் இருக்கிறது. படைவீரர் காட்டிய வீரம் மட்டுமல்ல, வெற்றிக்குக் காரணம். படைத்தலைவர் பரஞ்ஜோதியாரின் அபாரமான ஆற்றலும், போர்த்தொழில் நுண்ணறிவுமேதான் வெற்றிக்கு முக்கிய காரணம்.”

“முக்கிய காரணம் என்று கூறினீர் வீரரே! பொருத்தமாகப் பேசினீர், குழம்பியநிலை மக்கள்; தலைவர் கூற்றை கேட்டல் வெற்றிக்கு முக்கிய காரணம் தளபதியின் தீரமும் திறமும். ஆனால் மூலகாரணம் ஒன்று இருக்கிறது.”

“அதென்னவாம், மூல காரணம்?”

“உண்டு.”

“உண்டெனினும் கூறும். விழியை உருட்டினால் விஷயம் விளங்குமோ! பெருமூச்சு, எங்களுக்குக் கூறும் பதிலாகுமா?”

“எனக்குத் தெரியும் அந்த மூலகாரணம். கூறினால், நீங்கள் சரி என்று ஏற்றுக் கொள்ள மாட்டீர்களே என்றுதான் அஞ்சுகிறேன்.”

“அறிவுக்குப் பொருத்தமானது எது கூறினும், மறுப்புரை கூறுவது எமது மரபன்றோ. மூல காரணம் என்ன? சொல், கேட்போம்.”

“உரைக்குமுன் ஒன்று, உம்மைக் கேட்கிறேன்; கோபியாது பதில் கூற வேண்டும். வீரமும் வீரரும், படைவரிசை யும் படைக்கலன்களும், உங்கட்கு, பல்லவ வேந்தன் நரசிம்மன் காலத்துக்கு முன்பும் உண்டல்லவா?”

“ஏன் இல்லை! மன்னன் மகேந்திரன் காலத்தில் மாவீரர்கள் இருந்தனர்.”

“மகேந்திரன் காலத்திலே, போர் இருந்ததன்றோ?”

“ஆமாம்! போரிட்டோம்.”

“வருத்தமோ, வெட்கமோ வேண்டாம் நண்பர்களே! மகேந்திரன் காலத்திலே, தோல்வி கண்டீர்கள். பெருந்தோல்வி. வீரர்களே! வீரமும் தீரமும் நிறைந்த வேந்தன் புலிகேசியின் படைகள், பல்லவ நாட்டுக்குப் பயங்கரமானதோர் புயலாயிற்று. அதைத் தாங்க மாட்டாது தவித்த பல்லவப் படைதான், இன்று வாதாபியை வென்றது.”

“ஆமாம்.”

“எப்படி முடிந்தது என்று கேட்கிறேன்.”

“இது என்ன கேள்வி? வீர தீரமிக்க எமது படைகள், ஆற்றல் மிக்க எமது தலைவர், பரஞ்ஜோதியின் திறமையால் வெற்றி கிடைத்தது.”

“உண்மைக்கு வெகு அருகாமையிலே வந்து விட்டீர்களே! பரஞ்ஜோதி! ஆம்! அந்தச் சைவரின் பலம்! சைவத்தின் மகிமை! அதுதான் வெற்றியைத் தேடித்தந்தது. படைத் தலைவரின் சிவசக்தியே பல்லவத்தின் வெற்றிக்குக் காரணம். வாதாபியை, உமது படைவீரர் கொளுத்தினார் என்று எண்ணுகிறீர்! பித்தம் உங்களுக்கு. சிவபக்தராம் பரஞ்ஜோதி, சைவத்தின் பலத்தை, எமக்கு விளக்க அல்ல, வைணவ நரசிம்ம மன்னருக்கு விளக்க, திருபுராந்தகனை வேண்டித் தொழ, அவர் தமது நெற்றிக் கண்ணைத் திறந்தார் - ஒரு கணம்; ஆமாம்! எமது வாதாபி எரிந்தது - பிடி சாம்பல்! பிடி சாம்பல்! முடிவிலோர் பிடிசாம்பலாயிற்று!”
-------------
பிடிசாம்பல் (2)

சாளுக்கியன், சைவத்தின் மேன்மையை வெற்றிக்குக் காரணம் என்பதை விளக்கினது, கலங்கிக் கிடந்த வைணவருக்கு, மேலும் கலக்கத்தைக் கொடுத்தது. அவர்களுக்கு ஆத்திரமாகத்தான் இருந்தது. அவன்மீது அடங்காக் கோபம் ஏற்பட்டது. அவன் பொய்யுரைத்திருப்பின், கோபம் பொங்கிப் பிறகு அடங்கிவிட்டிருக்கும். ஆனால் அவன் சொன்னதை எண்ணிப் பார்க்கப் பார்க்க, அவன் உரையிலே உண்மை இருக்கக் கண்டனர். காணவே, கோபம் மேலும் மேலும் கொதித்தது!
அந்தச் சாளுக்கியன் அடிமைதான்! ஆனால் அவன் சொன்னது உண்மை. வெற்றிக் களிப்பு, அந்த வேதனையை மாற்ற முடியாது. எந்தப் புலிகேசி களத்திலே பிணமாக்கப் பட்டானோ, அவனுடைய வெற்றி முரசு, பல்லவத்தின் தலை நகரத் தலைவாயிலில் கேட்டதை அத்தமிழ் வீரர்களறிவர். மகேந்திரன் காலத்தில் நேரிட்ட அந்த விபத்தைச் சாளுக்கியன் கவனப்படுத்தினான். என்ன கர்வம்! என்ன ஆணவம்! தோற்றோடிய துஷ்டன், துடுக்குத்தனமாகவும் பேசுகிறானே! வெற்றி வீரர்களாக இருக்கும் நம் எதிரிலேயே, நம்மை இழிவாகப் பேசுகிறானே! என்று கோபம் பிறந்தது முதலில். ஆனால் உடனே தணிந்து விட்டது. அவன் உரைத்ததோ உண்மை! ஓர் நாள், காஞ்சிபுரம், பல்லவத்தின் தலைநகரம், இன்றோ நாளையோ, இரவோ, பகலோ, இப்போதோ, இன்னும் சற்று நேரத்திலோ, சாளுக்கியனிடம் சிக்கிச் சீரழியும் என்று வீரர்கள் எல்லாம் விசாரப்பட்ட நிலை இருந்தது. தோல்வி! துயரம்! வெட்கம்! வேதனை! அதனைத் தான், பிடிபட்ட சாளுக்கியன் கவனப்படுத்தினான். பிழை அல்ல, உண்மை.

ஆம்! அந்த நாள், அவர்கள் கவனத்துக்குக் கொண்டு வரப் பட்டதும், பழைய நிகழ்ச்சிகள் பலவும் மனக்கண் முன் தோன்றின.

பல்லவ சாம்ராஜ்யத்தைப் பதைக்க வைத்த புலிகேசி, அவர்கள் மனக்கண்முன் வந்து நின்றான்.

புலிகேசி, இராஷ்டிரகூடர், கடம்பர், கொங்கணர், இலாடவர், சேதிநாட்டவர், கலிங்கர், கோசலர், வேங்கி நாட்டவர் என்று பல்வேறு நாட்டவரை வென்று புகழ் பெற்றவன். சாளுக்கியாதிபதி சமர் செய்து வைரம் ஏறிய வீரனானான்! எங்கும் வெற்றியே கண்டான்.

புலிகேசியின் புகழ், வடக்கே இமயம் வரை மட்டுமல்ல, பாரசீக மண்டலம் வரை பரவிற்று. பாரசீக மன்னன் வெற்றிப் பவனி வரும் புலிகேசியிடம் தோழமை கொண்டாடுவதைத் தனக்குற்ற பெருமை எனக்கொண்டான். இமயம் தடுத்திராவிட்டால், அதற்கு அப்பாலுள்ள நாடுகளையும் ‘ஒரு கை’ பார்த்திருக்கக் கூடியவனே புலிகேசி. சாளுக்கிய நாட்டின் புகழொளியாய் விளங்கிய புலிகேசி பெற்ற எல்லா வெற்றிகளையும் மிஞ்சிவிட்டது. ஹர்ஷனுடன் போரிட்டுப் பெற்ற வெற்றி, சாம்ராஜ்யாதிபதி எனவும், சமரில்வல்லவனெனவும் புகழ் பெற்றவன் ஹர்ஷன். வடநாட்டிலே அவன் அமைத்த வல்லரசு, தென்னாட்டையும் விழுங்கிவிடக் கூடியதோ என்று எவரும் அஞ்சக்கூடியதாகவே இருந்தது. வடநாட்டுச் சிற்றரசர் களின் சிரம் தன் அடிதொழ, மணிமுடி பூண்டு மகோன்னதமாக வாழ்ந்து வந்த ஹர்ஷன், தனக்கு இணை யாரும் இல்லை என்று இறுமாந்திருந்ததில் ஆச்சரியமில்லை. அவனுக்கு ஈடும், எதிர்ப்பும், சாளுக்கியத்திலிருந்து கிளம்பிற்று. புலிகேசி போர் தொடுத்தான். தோல்வி கண்டறியாத ஹர்ஷனைத் தோற்கடித்தான். புலிகேசியின் புகழ், இந்த வெற்றியினால் உச்சநிலை அடைந்ததும், சாளுக்கிய நாட்டுக்குப் பெருமதிப்பு பிறந்தது.

மகேந்திரன், மதிவாணர்களின் தோழன்; இசைவாணர் கட்கு நண்பன்; மாவீரர்கட்குத் தலைவன். பல்லவ நாடு பலவகை வளங்களுடன் விளங்கிடவே, மகேந்திரன், கலை இன்பத்திலே மூழ்கினான். மலைகளைக் கோயிலாக்கினான். காவியரும் ஓவியரும் களி கொள்ளும் விதத்திலே, செல்வத்தை அள்ளித் தந்தான். இன்பபுரியாகத் திகழ்ந்தது பல்லவ நாடு.

பூங்காவை அழிக்கப் புயல் கிளம்புவது போல, கலை இன்பத்தில் ஈடுபட்டிருந்த காவலனின் மன அமைதியைக் கெடுக்கவும், பல்லவ நாட்டின் சுதந்திரத்தை மாய்க்கவும், புலிகேசி புறப்பட்டான். தலைநகருக்கு வெளியே சென்று, தாக்க வரும் சாளுக்கியப் படையை எதிர்ந்து நின்று பார்த்தான். பல்லவன். முடியவில்லை. பல்லவனின் படை வரிசையைப் புலிகேசி பிளந்திடலானான். களத்திலே நிலைமை மோசமாகி வருவதை உணர்ந்தான் மகேந்திரன். கடைசி வரை அங்கேயே நின்று போரிட்டு, களத்திலே பிணமாவதா, அன்றி வரவிருக்கும் ஆபத்தினின்றும் அந்தச்சமயம் எப்படித் தப்புவது என்ற முறையைக் கவனிப்பதா என்று யோசித்தான். ஆவேசத்துடன் போரிடும் சாளுக்கியப் படையிடம் தோற்றால், தோல்விக்குப் பிறகு, வெற்றி வெறியுடன் அப்படை முன்னேறிச் செல்லும்; தலைநகருக்குள் நுழையும். தலைநகரமோ கலைக்கூடம். சிற்பிகளின் சிந்தனைகளைச் சித்தரித்துக்காட்டும் மாட மாளிகைகள்! இசை பயிலும் இடங்கள்! கூத்தர் தங்கும் கூடங்கள்! நல்லற மன்றங்கள்! பள்ளிகள்! இவை எல்லாம் பாழ்
படுமே! பல்லவனின் உள்ளமெலாம் அதனையே எண்ணிற்று. எண்ணிடவே, என்ன செய்தேனும் தலைநகரை, கலைக்கூடத்தை, காஞ்சிபுரத்தைக் காப்பாற்றியாக வேண்டும் என்று உறுதி பிறந்தது. ஆம்! காஞ்சிபுரத்துக்குள்ளே சென்று தங்கிவிட வேண்டும். அந்நகர் கலைக்கூடம் மட்டுமல்ல, எதிரி சுலபத்திலே பிடிக்க முடியாத கோட்டையுங்கூட! மதிற்சுவர்கள் பலமானவை.

மகேந்திரன், தன் படைவீரர்களை அழைத்துக் கொண்டு காஞ்சிபுரத்துக்கு வந்து சேர்ந்தான். உள்ளே, முஸ்தீபுகளைப் பலப்படுத்தினான். சாளுக்கியப் படைக்கும் பல்லவப் படைக்கும் இடையே, பலமான மதில்! கலைக்கூடம், கோட்டையாகி விட்டது. முற்றுகையிட்டான் சாளுக்கியன். காஞ்சிபுரத்தைக் கைப்பற்றுவது அவ்வளவு எளிதானதல்ல என்பதைக் கண்டான். வேட்டைக்காரரிடமிருந்து தப்பி, சிங்கம் தன் குகைக்குள்ளே நுழைந்து கொண்டது போலிருந்தது மகேந்திரன் நிலைமை. இந்திய உபகண்டத்திலே, பல்வேறு இடங்களிலும், தன் பண்பால், உயர் மதிப்புப் பெற்று விளங்கிய காஞ்சிபுர மக்கள், அதுகாலை, கலக்கமடைந்து, காலமெல்லாம் செலவிட்டுக் கருத்தைச் செலவிட்டு அமைத்த கலைக்கூடங்கள், சாளுக்கியனால் அழிந்துபடுமோ என்று அஞ்சினர். சமணம், பௌத்தம், வைணவம், சைவம் எனும் மதத் துறைகள் ஒவ்வொன்றுக்கும், ஆங்கு பேராசிரியர்கள் இருந்தனர்; பல்கலைக்கழகங்கள் இருந்தன; வணிகர்கள், வெளிநாட்டு வேந்தர்கட்கும் நுண்ணறிவு கூறிய பண்பினர் இருந்தனர்; நாளந்தா, தட்சசீலம் முதலிய வடநாட்டுப் பல்கலைக் கழகங்களுக்குப் பேராசிரியர்களைத் தந்து உதவிய, சான்றோர் மன்றமாக விளங்கிய காஞ்சிபுரம், இனிச் சாளுக்கியப் படைக்கு இரையாவதோ! இதற்கோ இத்துணை எழிலும் செல்வமும், கலையும் உயர்நிலையும் பெற்றோம், வளர்த்தோம் என்றெண்ணி ஏங்கினர்.

சாளுக்கிய மன்னன் புலிகேசி, மகேந்திரன் மருட்சி அடைந்தது கண்டு மகிழ்ந்து, அடியோடு பல்லவ நாட்டை அழித்தொழிப்பதைவிட, அங்கு தனக்குப் பணிந்த நிலையில் பல்லவ மன்னன் இருந்து அரசாள்வது சிறந்தது என்று எண்ணியே, சாளுக்கியன் சென்றான். பல்லவனின் படைபலம் பாழ்பட்டது. செல்வம் குறைந்தது. மதிப்பு மங்கிற்று. தோல்வித் துயரத்தால், பல்லவம் துவண்டுவிட்டது. அதைத்தான் அந்தச் சாளுக்கியன் கவனப்படுத்தினான். பழைய புண்ணைக் கிளறினான் - கிளறியதோடு விடவில்லை - தோல்வியால் துவண்ட பல்லவம், மீண்டும் ஒளிபெற்றது. சைவத்தின் பலத்தினால் என்று கூறுவதன் மூலம், புண்ணிலே வேலும் பாய்ச்சினான், எங்ஙனம் தாங்குவர் இந்த வேதனையை.

சைவம் வெல்கிறது! சைவம் ஓங்குகிறது! வீழ்ந்தது வாதாபியல்ல, வைணவம் வீழ்ந்தது! என்று பல்லவ நாட்டு வைணவர்கள் பதைபதைத்தனர்.

சாளுக்கியன் எதிர்ப்பார்த்தது நடைபெறத் தொடங்கிற்று. வெற்றிக்களிப்பினூடே வேதனை. ஆனந்தப்பட வேண்டிய மக்களுக்குள்ளே, அச்சம், அருவருப்பு, அவநம்பிக்கை! ஆம்! அவன் எண்ணத்தின்படி, பல்லவ நாட்டுக்குள் தீ மூண்டுவிட்டது - கலகத்தீ!

இது மூண்டுவிட்ட பிறகு, சாளுக்கியனின் மனதிலே, நம்பிக்கை அதிகரித்தது. பரஞ்ஜோதியாரிடம் பணியாளாக இருப்பவன் என்ற முறையிலே, பலரைக் காணச் சந்தர்ப்பம் கிடைத்ததைப் பயன்படுத்திக் கொண்டு, சைவத்தின் மேன்மையை விளக்கும் போக்கின் மூலம் எவ்வளவு அருவருப்பைக் கிளப்ப முடியுமோ அந்த அளவு செய்து வந்தான்.

“என்ன இது?”

“திருநீறு?”

“ராம! ராம!”

“ஏன்? இந்தத் திருநீறு அல்லவா பல்லவ ராஜ்யத்தைக் காப்பாற்றி, நரசிம்ம மன்னனின் பீடம் ஆடாதபடி பார்த்துக் கொண்டது - பாதுகாப்பளித்தது?”

“துடுக்குத்தனமாகப் பேசாதே. ஓய்! வைணவ சிரோன் மணியே! வாயை மூடும்! வாதாபி தீக்கு இரையாகாது இருந்தால் என்ன நேரிட்டிருக்கும்?”

“நேரிடுவது என்ன - என்ன ஐயா! மிரட்டுகிறீர்?”

‘நானா? இதுவா மிரட்டல்! உண்மையைக் கண்டு ஏன் நீர் மிரள்கிறீர்? வாதாபி வீழ்ச்சி, பல்லவனின் மீட்சியல்லவா?’

“ஆமென்றே வைத்துக் கொள்வோம்!”

இதிலென்ன தயை! சாளுக்கியப்படையை, சாலிக்கிராமம் தடுத்துவிடவில்லை, ஞாபகமிருக்கட்டும். ‘சாடாட்சரம்’ தடுத்தது. சடாட்சரமோ, பஞ்சாட்சரமோ - எனக்கு அக்கறை இல்லை; எமது நரசிம்ம மன்னர் வெற்றி பெற்றார் மன்னர், மனமறிந்த பொய் பேசுகிறீர். மாதவன் அடியார் என்று கூறிக் கொள்கிறீர். மன்னனுக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தது, இந்தத் திருநீறு. தோல்வியால் துவண்ட பல்லவ நாட்டை வெற்றியால் ஜொலிக்கச் செய்த விசித்திர நீறு! மதிலுக்குள் ஓடி ஒளிந்து மகேந்திரனின் காலத்தை - அவன் மகன் காலத்தோடு ஒப்பிட்டுப் பாரும்! இடையே என்ன காண்கிறீர்? அன்று பரஞ்ஜோதி இல்லை; விளைவு என்ன? படுதோல்வி; இன்று பரஞ்ஜோதி இருக்கிறார். பலன்? பெருவெற்றி! திருநீற்றின் வெற்றி - சிவனருளின் வெற்றி! - சைவத்தின் மேன்மையை ஜெகம் அறியச் செய்தது இந்தப் பிடி சாம்பல்! பூசும் நெற்றியில், வாழ்க்கை வற்றாத வளமுள்ளதாகும். இது சாமான்யத் திருநீறு அல்ல - பரஞ்ஜோதி
யின் பூஜைக்குப் பயன்படும், பரிமளத் திருநீறு - பகையை ஒழிக்கும் பொடி - பல்லவ சாம்ராஜ்யத்தை நிலைநாட்டிய திருநீறு!

வில்லாளன், விபரீதமான விளையாட்டிலே ஈடுபட்டான். சைவத்தின், மேன்மையை எடுத்துக் கூறுவது மட்டுமல்ல, மதமாற்ற வேலையையே, அதிலும் கட்டாய மதமாற்றக் காரியத்தையே துணிவுடன் செய்யலானான். அவன் தோற்ற சாளுக்கியன்தான் - அடிமை, சந்தேகமில்லை - ஆனால் அவன் ‘பெரிய இடத்திலே’ படைத்தலைவர் வீட்டிலே அல்லவா பணியாளாக இருக்கிறான். அக்கிரமக் காரியந்தான் செய்கிறான் - கட்டாய மதமாற்றம் - ஆனால், அதற்காக அவனைக் கண்டித்தால், தண்டித்தால், அவன் பரஞ்ஜோதியாரிடம் முறையிட்டுக் கொள்வானே!

“என்ன துணிவு உங்கட்கு! எனது மனையிலுள்ள பணியாளைத் தண்டித்தீர் - அது என்னையே கேவலப்படுத்தியதன்றோ! என்ன எண்ணினீர் என்னைப் பற்றி! என் ஆற்றல் தேவைப்பட்டது. புலிகேசியை வீழ்த்த. இன்று என்னை அவமானப்படுத்துகிறீர் - என்று பரஞ்ஜோதியார் சீறினால் என்ன செய்வது. “நீங்கள் கண்டிக்குமளவு என்ன குற்றம் புரிந்து விட்டான் வில்லாளன்! திருநீற்றின பெருமையை எடுத்துக் கூறினதா, குற்றம்! திருநீறு, உமக்குப் பிடிக்கவில்லை, ஆனால் திருநீற்றுக்காரனின் தோள்வலியும், வாள்வலியும் தேவைப்பட்டது நாட்டைக் காக்க,” என்று வெகுண்டுரைத்தால், என்ன செய்வது என்று கலங்கினர் - மக்கள் - குறிப்பாக, வைணவர்கள். மன்னனிடம் முறையிட வேண்டிய அளவு விவகாரம் முற்றிவிட்டது. மன்னனே, ஆழ்ந்த யோசனையில் ஈடுபட்டான்.

“அன்னிய நாட்டானின் துடுக்குத்தனம்”

“பரஞ்ஜோதியார் இப்பயனற்றவனை ஏன் பணியாளாகக் கொண்டார்?”

“பரஞ்ஜோதியாருக்குத் தெரிந்திராது, இவனுடைய செயல்.”

“ஒரு சமயம், சாளுக்கியன் சைவத்தின் பெருமையை உணர்ந்தது பற்றி அவர் மகிழ்கிறாரோ என்னவோ!”

“அவருக்குத் தெரிந்தேதான். இவன் சைவப் பிரச்சாரத்தை இவ்வளவு துணிவாகச் செய்கிறான் போலும்.”

“பக்கபலமில்லாமல் வெளிநாட்டான் இந்த விபரீதச் செயல் புரிவானா?”

“தன்னைக் கேட்பவர் யார் இருக்க முடியும் இந்த மண்டலத்தில் என்று பரஞ்ஜோதியார் எண்ணுகிறார் போலும்.”

“வாதாபியே அழிந்தது, வைணவர் எம்மாத்திரமென்று எண்ணுகிறாரோ என்னவோ?”
“சைவன் நான் - என் நாட்களிலே, அரசாங்க மதமாகச் சைவம் திகழ்வதுதான் முறை என்று கருதுகிறார் போலும்.”
மன்னனின் செவியில் விழும்படி மட்டுமல்ல, மக்களிடம் பரவுமளவு, விதவிதமாகப் பேசலாயினர், மேலே குறித்துள்ளபடி. சாளுக்கியன் பூரிப்படைந்தான். தீ பரவுகிறது என்றெண்ணி வெற்றிப் பாதையிலே விரைந்து நடக்கலானான். தான் கையாள ஆரம்பித்த முறை பலிக்கிறது என்று தெரிந்ததும், வில்லாளன், அதைத் தொடர்ந்து நடத்தலானான் - அவன் மட்டுமல்ல - அவன் துவக்கினான், பல சைவர்கள், அவனைத் தொடர்ந்தனர். எங்கும் சைவத்தின் மேன்மையைப் பற்றியே பேச்சாகிவிட்டது. வைணவர்களின் முறையீடு, மன்னன் செவி புகுந்தது, அவன் தீவிரமாக யோசிக்கலானான்.

கைலைநாதனின் கட்டளையை உனக்குக் கூற வந்தேன் - காடு மலை வனம் கடந்து. கருத்தறியாது நீ செய்யும் காரியத்தினால், உனக்கு நேரிட இருக்கும் சர்வ நாசத்தினின்றும் நீயும், உன் ராஜ்யமும், குலமும், தப்ப வேண்டுமானால், பாபத்தைத் துடைத்துக் கொள்ள வேண்டுமானால், நரசிம்ம மன்னனே! நமச்சிவாயத்தின் நல்ல தொண்டனாம் பரஞ்ஜோதியை, நரவேட்டையாடும் பழிப்பணியிலே புகுத்தும் செயலை நிறுத்து இன்றே - இல்லையேல் சொல்லக் கூசுகிறேன்! மன்னவா! எல்லையற்ற பரம்பொருளின் பக்தனை, இழி தொழிலில் புகுத்தும் பாபம், உன்னைச் சும்மாவிடாது!

மதலைக்கு மதுவினைத் தருபவள் தாயல்ல, பேய்! மகேந்திரன் மகனே! மாசிலாமணியாம் ஈசனார்க்குத் தொண்டராக உள்ள பரஞ்ஜோதியை, ‘வெட்டு குத்து’ வேலைக்கு அனுப்பும் உன்னைக் கண்டு, உலகின் முதல்வன், கோபிக்கிறான் - சபித்திட முடிவு செய்துள்ளான்.

நீ வெற்றி பல பெறுவதற்காக, உன் கீர்த்தி பரவுவதற்காக, உன் ராஜ்யம் வளர்வதற்காக, உன் எதிரிகளை ஒழிப்பதற்காக, பரஞ்ஜோதியை - பக்தனை - சிவத் தொண்டனை வேலை வாங்குகிறார் - பசுவைக் கொன்று தின்பது போன்று பாபக்கிருத்யம் அது - வேண்டாம், பல்லவ குலாதிபா! பராக்கிரமம் உனக்கு இருந்தால், போரிலே நீ வெற்றி பெறு, இரவல் கேட்காதே - அதிலும் இறைவன்பால் தொண்டு செய்யும் எமது பரஞ்ஜோதியை பாழ்படுத்தி, வெற்றியை நாடாதே.

உண்மையை உன் உள்ளம் உணரவில்லையா! உன் தகப்பன் மகேந்திரன் சாளுக்கியனிடம் தோற்றான் - வஞ்சம் தீர்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு பரஞ்ஜோதியுடைய தல்ல, உன் பொறுப்பு! தவறினாய்! தயாபரனின் தொண்டனைத் தவறான பாதையிலே திருப்பினாய்.

என்ன யோசிக்கிறாய்! பரஞ்ஜோதி இல்லாப் பல்லவ நாடு, நீரில்லா ஆறாகுமென்றா? பேஷ்! இதற்கு நீ ஏன் பல்லவ மன்னன் என்ற பட்டத்தைச் சுமக்கிறாய், பட்டம் உனக்கு; அரசபீடம் உனக்கு! கஷ்டமும், நஷ்டமும் பரஞ்ஜோதிக்கா! கைலைவாசன் உன்னைக் கேட்கிறான், முற்றிடா முன்னம், பழி வழியைவிட்டு நேர்வழி நடந்து, பாபத்தைப் போக்கிக் கொள். பரஞ்ஜோதியைச் சிறையிலிருந்து விடுதலை செய் - உன் அரண்மனை அவனுக்குச் சிறைதான்; சந்தேகம் இல்லை. நீ தரும் அந்தஸ்து - பொன் விலங்கு; வேண்டாம் அவை. விடுதலைசெய், விமோசனம் வேண்டுமானால் படைக்கு வேறு தலைவனைத் தேடு - பரஞ்ஜோதிக்கு வேலை இருக்கிறது, ஊர் கொளுத்துவது அல்ல அவன் வேலை.

ஊராள நீ! ஊர்பிடிக்க பரஞ்ஜோதி! பல்லவனே! இது உன் பரம்பரை நியாயமோ? வீரர் வழி வந்தவனே, விடுதலை செய். இல்லையேல், விண்ணவன் விடும் சாபம் உன்னையும், உன் பின் சந்ததியையும் இலேசாய்விடாது.

மேனி எல்லாம் திருநீறணிந்த அந்தச் சாது, மிக்க சீற்றத்தோடு, பேசினார் இதுபோல - பேசினரா - கட்டளை பிறப்பித்தார் - கைலைநாதன் மீது ஆணையிட்டுக் கூறினார். காவலன் துளியும் பதறாமல், சீறாமல் அவர் உரையைக் கேட்டுக் கொண்டான் - இடையிடையே புன்சிரிப்புடன்.

மன்னன் கோபிக்குமளவு, கடுஞ்சொற்களை வீசிய காவி அணிந்தோர், புயலை எதிர்பார்த்து ஏமாந்தார். மன்னனைத் தன் கேலி மொழியால், கோபப் பார்வையால், ஆர்ப்பரிப்பால், தாக்கினான், குன்றெடுக்கும் நெடுந்தோளனாகிய நிரசிம்மப் பல்லவன், சாந்தத்துடன் வீற்றிருந்தார் - குறுக்குச் கேள்வி - கோபக்குறி - வெறுப்பு - ஏதுமின்றிக் கேட்டுக் கொண்டார், வசை மொழிகளை.

மன்னின் போக்குக்கண்டு, சாதுவுக்குக் கடுங்கோபமே பிறந்தது.

“நாடாளும் உன்னை நேரிலே, வாயில் வந்தபடி ஏசுகிறேன். அவமதிப்பாகவே பேசுகிறேன்! ஆடாமல் அசையாமல், பதறாமல், சீறாமல், அவ்வளவையும் கேட்டுக் கொள்கிறாயே - ஏன் கோபிக்க மறுக்கிறாய் - ஏன் என்னைத் தண்டிக்காமலிருக்கிறாய் - வா, போருக்கு!” என்று, மன்னனை மல்லுக்கு இழுத்தது, அந்தச் சாதுவின் பார்வை! அவன், உண்மைச் சாதுவாக இருந்தால்தானே! அவனுடைய அன்றைய போக்கு ஆச்சரியமூட்டுவதாக கருதலாம் - அவன் சாளுக்கியன் - சாதுவல்ல! சாதுபோல வேடமணிந்து வந்து, சைவத்தின் பெயரைக் கூறி, சாம்ராஜ்யாதி பதியை மிரட்டினான் வில்லாளன். வேந்தன், வெகுண்டானில்லை, “ஆவன செய்வோம். அறனடியாரே! ஆவின் பாலும், முக்கனியும் அரண்மனை விருந்து மண்டபத்திலே தயாராக உள - வாரும்” என்று அன்புடன் அழைத்தான்.

“நாம் வந்தது நாவின் ருசிக்காக அல்ல! நாதன் கட்டளையை நாடாளும் உமக்கு அறிவிக்கவே வந்தோம் - இனிச் செல்கிறோம்” என்று கூறிவிட்டு, சாது வேடத்திலிருந்த சாளுக்கியன் போய்விட்டான். அவன் போன பிறகு, நெடு நேரம் வரையில் மன்னன் சிரித்தான்.
“அரசனிடம் யாரோ ஒரு சாது வந்து, ஏதேதோ பேசினானாம்.”

“மிரட்டினானாம்.”

“சாபம் கொடுப்பேன் என்று கூறினானாம்.”

“மன்னன் மனம்மாறி, அவன் கட்டளையை நிறைவேற்ற இசைந்துள்ளாராம்.”

“சபை கூட்டுகிறாராமே!”

சாது - சாம்ராஜ்யாதிபதி சந்திப்பிற்குப் பிறகு, அரண்மனை முக்யஸ்தர்கள் இதுபோல் பேசிக் கொண்டனர். அவர்கள் கூறியபடி, அரச அவை கூடிற்று. மன்னன் நரசிம்மப் பல்லவன், வைணவர்கள் முறையீடு பற்றியோ, வம்பு பேசிய சாதுவைப் பற்றியோ பிரஸ்தாபிக்கவில்லை.

அவையில், அன்று விசேஷ அலங்காரங்கள் செய்யப் பட்டிருந்தன. மன்னனின் வருகைக்கு முன்பே, சபை கூடி விடுவது முறை - அன்று சபைக்கு, மன்னனே முதலில் வந்து சேர்ந்தான். சபையில், பரஞ்ஜோதியாருக்கு வழக்கமாகத் தரப்படும் ஆசனத்தை எடுத்துவிட்டு, வேறோர் விலை உயர்ந்த ஆசனம் அவருக்காகப் போடச் செய்தான். வழக்கமான விசாரணைகளை அன்று நிறுத்திவிட்டான். பரஞ்ஜோதியார் சபை வந்ததும், தழுவிக் கொண்டான். சபை ஆரம்பமாயிற்று. மன்னன், ஆசனத்திலிருந்து எழுந்து நின்றபடி பேசினான், தழுதழுத்த குரலில்.

“ஆஹா! அபசாரம், அபசாரம்! என்ன காரியம் செய்தேன்! சிவனடியாராகிய தங்களை, சிவத்தொண்டில் ஈடுபட்டு, மெய்ஞான போதகனின் அருளைத் தேடும் அவாக் கொண்ட மெய்யன்பராகிய தங்களைப் பாவியேன், படுகொலைத் தொழிலல்லவா இதுநாள் பரியந்தம் ஈடுபடுத்தி வைத்தேன். இறைவனின் கோபத்துக்கு இலக்கானேன். என்னே என்மதி! தங்கள் பெருமையை முற்றும் உணராது இருந்தேன்!”

“மன்னரே! ஏன் இந்த மனக்கலக்கம்? மண்டலாதிபதி யாகத் தங்களின் சேவையில் நான் மனமுவந்து ஈடுபட்டவனன்றோ...!”

“எனக்கா சேவை! தாங்களா! தகுமா தவச்சிரேஷ்டரே! தங்களைச் சேவை செய்யச் சொல்வதா! நானா! என்ன விபரீதமான காரியம்? மன்னாதி மன்னர்களெல்லாம் தங்கட்குச் செய்தலன்றோ முறை...”

“அரச சேவை, என் கடமைதானே!”

“உமக்கு அரசன் யானோ! திரிபுரமெரித்த விரிசடைக் கடவுளன்றோ!”

“அவன் அண்டசராசரங்கட்கும் ஐயன்! ஆயினுமென்ன காவலா! நான் போர்த் தொழில் புரிவரை மேற்கொண்டேன். தங்களவையில் இடம்பெற்றேன். அன்பும் ஆதரவும் பெற்றேன். மன்னருக்காகப் பணிபுரிவது, அந்த மண்டலத்து வாழ் மக்களின் கடமைதானே? அந்தக் கடமையை நான் களிப்புடன் ஆற்றினேன்.”

“கலக்கமடைகிறேன், கங்கையைத் தலைக்கணிந்த கடவுளின் திருத்தொண்டரை, யான், ‘வேலை’ வாங்கும் ‘பாப’ காரியத்தில் இதுவரை ஈடுபட்டதை எண்ணி,”

“வீண் வேதனை அடைகிறீர் வேந்தரே! நாட்டுக்குப் பணியாற்றுவது நல்லோர் கடமை. நான் அஃதன்றி வேறென்ன செய்தேன். என்றும் அப்பணி புரிவதே என் விருப்பம்; முறையுங்கூட.”

“முறையன்று, அறமன்று. சைவ மெய்யன்பராம் உம்மை, அறியாது போனேன். பெரும்பழி தேடிக் கொண்டேன். இப்போதுதான் உணர்ந்தேன் உமது பெருமையினை. அமைச்சரே! சீலராம் பரஞ்ஜோதியாருக்கு மானியமாக்கிய ஊர்ப் பெயர் குறிக்கப்பட்ட செப்புப் பட்டயம் எங்கே? பெற்றுக் கொள்க, பெருநெறி கண்டவரே, பிழை பொறுத்தருள்க!”

“மன்னரே! தாங்கள் மனமுவந்து அளிக்கும் இந்த மானியம்...”

“பேழையில் பொற்கட்டிகள் உள்ளன. பெருந்தகையீர்! ஏற்றுக் கொள்க!”

“என்னே மன்னரின் கொடைத்திறன்! ஏனோ எனக்கு இத்துணைச் செல்வம்?”

“சைவச் செல்வரே! பெருநிதியன்று யான் அளித்தது”

“ பெருநிதியன்றோ! மன்னரே! தங்கள் ஆதரவு பெற்று அவையில் அமர்ந்த அன்றே யான் பெருநிதி பெற்றவனானேன். என் அரசர்க்குப் பணிபுரியும் பேறு கிடைத்ததே பெருநிதியன்றோ! ஏதோ, தங்களின் வலிமை மிகுந்த படை பலத்தைக் கொண்டு, புலிகேசியைத் தோற்கடித்தேன் இச்சிறு செயலுக்கு எவ்வளவு பரிசு! என்னென்ன வகையான உபசாரம்!”

“உபசாரமென்று உரைத்திட வேண்டாம் உத்தமரே! என் காணிக்கை இவை.”

“மன்னா! யான் உமது படைத் தலைவன் - பரிசு இவை - என் பணிக்கு மெச்சி.”

“பரிசு அல்ல! தாங்கள் பணியாளரல்ல! படைத்தலைமையல்ல, தங்கள் தகுதிக்கும் தவத்துக்கும் ஏற்ற நிலை.
----------
பிடிசாம்பல் (3)

பரஞ்ஜோதியாரே! பல்லவ சாம்ராஜ்யத்தின் கீர்த்தி மிக்க படைத் தலைவர் என்ற நிலையிலே, பாவியேன், ஒரு பரம பக்தரை, சைவ அன்பரைச் சிறைப்படுத்தி வைத்திருந்தேன். இறைவனின் அன்பனை, இரக்கமற்ற போர்த் தொழிலிலே புகுத்தினேன். இன்று அந்தத் தவறை உணர்ந்தேன். இனித் தாங்கள், எல்லையற்ற இன்பம் தருவதும், இகபரசுகத்துக்கும் ஏதுவாவதும், தங்கள் இருதயத்துக்கு இன்பமூட்டுவதுமான சிவத் தொண்டு செய்து கொண்டு சுகமே வாழ்வீராக!

“வேந்தே! இதென்ன வார்த்தை! இதன் பொருள் என்ன? இனி நான் அரச அவையில்...”

“அரச அவையில் என்றும் நீர் ஓர் மணிவிளக்கு. ஆனால், என் படைத்தலைவன் என்ற சிறு தொழில் புரியச் சொல்லிப் பழி ஏற்க மாட்டேன்...”

“படைத் தலைவனாக இனி நான்...”

“அதனை நான் அனுமதிப்பது மன்னிக்க முடியாத குற்றமாகும்! தாங்கள் இருக்க வேண்டிய இடம் வேறு! வேந்தர் சபையிலே வேலை தாங்கும் வேலையல்ல, விழி மூன்றுடையோனின் சேவை செயது விளங்க வேண்டும் தாங்கள்.”

பரஞ்ஜோதி திகைப்படைந்தார் - பிரதானியர்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை - வைணவர்கள், புன்சிரிப்பை அடக்கிப் பார்த்தனர், முடியவில்லை - மன்னன், அவையைக் கலைத்துவிட்டு, அரண்மனைக்கு சென்றுவிட்டான்.

பரஞ்ஜோதியார் வாழ்க!

சைவம் ஓங்குக!

நரசிம்மப்பல்லவன் வாழ்க!

நாதனின் நற்றொண்டன் வாழ்க!

என்று நகரெங்கும் முழக்கம். மன்னனின் கனவிலே ஈசன் பிரத்யட்சமாகி இட்ட கட்டளையாம் என்று தெளிவற்றவர்கள் பேசினர். அதுவே நகரெங்கும் பரவிவிட்டது - பகுத்தறியக் கூடியவர்கள், இதைத் தடுக்க முடியவில்லை.

பரஞ்ஜோதியார் தமது மாளிகை சென்றார் மனவாட்டத்துடன்.

மன்னன் மதி மிக்கவன்! எதிர்பார்த்ததைவிட, அதிகத் திறமையாகவே காரியத்தைக் காவலன் முடித்துவிட்டான். சைவத் தவ வேடதாரியின் மொழி கேட்டு, மன்னன் மிரண்டே போனான் போலும். உண்மையிலேயே பழியும் பாவமும் தன்னைப் பற்றிக் கொள்ளும் என்று கருதினானோ என்று வைணவ மார்க்கத்தவர் பேசிக் கொண்டனர் - சைவத்துக்கு, அரச அவையிலும் அதன் மூலம் நாடெங்கும் ஏற்பட்ட செல்வாக்கு இனிச் சிதைந்தொழியும் என்று எண்ணி மகிழ்ந்தனர். வைணவத்துக்கு நேரிட இருந்த விபத்து, தவிர்க்கப்பட்டது என்று களித்தனர்.

சிவபக்தன், ஆகவே சேனாதிபதியாக இருக்கக்கூடாது, இருப்பது மகாபாவம் என்று மன்னர் கூறுகிறார். எதிரிகளை ஒழித்தவன், இணையில்லாப் போர்வீரன், படைகளை நடத்திச் செல்வதிலே, திறமைமிக்கோன், இனி இவனால் பல்லவ சாம்ராஜ்யத்தின் புகழ் திக்கெட்டும் பரவும் என்று மக்கள் பூரிப்புடன் பேசிக் கொண்டனர். மன்னனோ! பொன்னும், பொருளும் பூமியும் கொடுத்து, வாளையும் கேடயத்தையும் பறித்துக் கொண்டான். ஏன்? என்ன நோக்கம்? சிவத்தொண்டு புரியத்தான் வேண்டும். ஆமாம், நானே அதனை அறிந்துதான் இருக்கிறேன். அத்தொண்டு செய்வதற்கும், நாட்டைக் காத்திடும் நற்றொண்டு புரிவதற்கும் எப்படி முரண் வந்து சேரும்.

என் ஐயன், எதிர்த்தோரை அழிக்காமல் விட்டவனல்லவே! திரிபுராந்தகனல்லவோ! அவர் அடியவனாம் நான், போர்த்தொழிலில் ஈடுபடுவது, சிவ நெறிக்குத் தகுதியல்ல என்றார் மன்னர்! என் செவியில் அச்சொல் வீழ்ந்தபோது, திகைத்தேன். அந்தத் திகைப்பு இன்னமும் மாறவில்லை; எப்படி மாறும்?
நானே, மறுத்துப் பார்த்தேன். இறைவனுக்கு ஆற்ற வேண்டிய தொண்டு போலவே, என் அரசனுக்கும் பணி புரியவதேயன்றோ முறை என்று வாதாடினேன். மன்னன் தன் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.

தமிழகம் வாதாபியின் வீழ்ச்சியைக் கேட்டுக் களித்தது. வாதாபி... என்வெற்றி... கடைசியில் அந்த வெற்றி... என்னை அரச அவையிலிருந்து விரட்டிவிடவா பயன்பட்டது! அவனுக்கு அடியவனாக இருந்து வருபவன். ஆகவே, இங்கு வேண்டாம்! யாரும் கேட்டறியா வாதம்! எதிர்பாராத விபத்து! ஏன்? என்பால் மன்னருக்கு என்ன கோபம்? வெறுப்புக்குக் காரணம் இல்லையே பேழையும் பொற்கட்டிகளும் மானியமும் அளித்தார் மன்னர்; அளித்து, என்னை ‘பஜனை’ செய்யச் சொல்கிறார்!

பரஞ்ஜோதி! பரம பக்தன்! சிவத்தொண்டு புரியும் செம்மல்! சிவனருள் காரணமாகவே, வாதாபியில் வெற்றி கிடைத்தது என்றனர் அமைச்சர். ஏன், அதே சிவனருள் அதன் பயனையும், என் மூலமாகவே மன்னன் அடையக்கூடாது? இதுவரை போர்த்தொழிலிலேயும் ஈடுபட்டபடி, சிவத் தொண்டும் செய்து கொண்டு, சிவனருளைப் பெற என்னால் முடிந்தது - அமைச்சர் கூறி அரசனும் ஒப்பின மொழிப்படியே யோசிக்கும்போது, அங்ஙனமிருக்க, எப்போதும் போலவே, அரச அவையில் இருந்து ஆற்ற வேண்டிய பணியினையும் செய்து கொண்டே என்னால் அதே சிவத்தொண்டில் ஈடுபட்டிருக்க முடியாதா! மன்னரின் நோக்கந்தான் என்னவோ!
பலப்பல எண்ணினார் பரஞ்ஜோதியார். காலை முதல் மாலை நெடுநேரம் வரையில், இதே சிந்தனை - “விரட்டப் பட்டோம்” என்பதுதான், அவருடைய சிந்தனையின் முடிவு. ஏன் என்று யோசித்தார். - அவருடைய சிந்தனையின் முடிவு. ஏன் என்று யோசித்தார். அவருடைய முகத்திலே புன்னகை பூத்தது. மெல்ல வாய்விட்டுக் கூறினார், “பாபம்! பீதி! பாபம்! பரிதாபம்!” என்று.

வைணவர்கள், விழாக் கொண்டாடினர், இரகசியமாக - பரஞ்ஜோதி தொலைந்தான் அரச அவையைவிட்டு என்று களித்து. சைவர்கள், பகிரங்கமாகவே விழாக் கொண்டாடினர், மன்னன் சைவத்தின் மேன்மையை உணர்ந்து, சிவ பக்தராம் பரஞ்ஜோதியாரை, சிவத்தொண்டு புரிக என்று கூறிவிட்டான் - இனிச் சைவம் கொழிக்கும் எதிரிப் படைகள் முறிந்தது போல. எமது சைவத்துக்கு எதிராக உள்ள மார்க்கங்கள் அழிந்துபடும்என்று பெருமையுடன் பேசிக் கொண்டனர். மன்னன், அரண்மனைத் தோட்டத்திலே, தனியாக உலவ அமைக்கப்பட்டிருந்த மணிமண்டபத்திலே, உலவியவண்ணம், ஏதேதோ எண்ணிக் கொண்டே இருந்தான். இடையிடையே மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருந்தான். இருள் சூழ்ந்தது. பணியாள், விளக்கு ஏற்றி வைத்து விட்டுப் போய்விட்டான். விளக்கை அடிக்கடி தூண்டி விட்டுக் கொண்டே மன்னன் உலவினான் - அவன் மனதிலே உலவிய எண்ணங்கள்; அவை இவை.

“அப்பா! மிகமிகச் சிரமப்பட வேண்டி இருந்தது. சிக்கலான காரியம்! பரஞ்சோதி எதிர்பார்த்திருக்க முடியாது. தெரிந்து கொண்டும் இருக்க முடியாது. ஒரே திகைப்பு.

ஆனால் என்ன செய்வது! ஓங்கி வருகிறது. அவன் கீர்த்தி. ஒப்பற்ற வீரன் பரஞ்ஜோதி என்று மண்டலமெங்கும் பேசுகிறார்கள் சகலரும் - ஆமாம்! இடையிடையே ஒப்புக்கு ஒரு மொழி என்னைப் பற்றி வருகிறது. இதற்கு நான் ஏன் மன்னனாக இருக்க வேண்டும்! மண்டலம் புகழ்வது வாதாபியை வென்றவனை! மண்டலத்துக்கு நான் மன்னன்! அலங்காரப் பொம்மை! அந்த நிலையில் மகேந்திரன் மகன் இருப்பதா! படைத் தலைவன் பரஞ்ஜோதியைக் கொண்டுதான், பல்லவ மன்னன் தன்னைத் தமிழருக்கு அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டிய நிலைமை பிறந்தது. நரசிம்மன் யார் தெரியுமோ? வாதாபியை வென்ற வீரர் திலகம். பரஞ்ஜோதியார் வாழும் பல்லவ நாட்டுக்கு மன்னன்! படைத்தலைவன் முதலில், பல்லவ மன்னன் பிறகு! மன்னன் மண் பொம்மை, பரஞ்ஜோதி; அதைக் காட்டும் விளக்கு!

பரஞ்ஜோதியாக இருக்க இசையலாம், யாரும்! பரஞ்ஜோதியின் புகழ் ஒளிமுன், மின்மினி போன்று மன்னவன் என்ற பட்டத்தை மட்டும் தாங்கிக் கொண்டிருக்க யாருக்கு மனம் இடங்கொடுக்கும்?

எங்கே போர் மூண்டாலும் இனி, என்ன பேசுவர், ‘பல்லவனுக்குப் பயமில்லை. பரஞ்ஜோதியார் இருக்கிறார்’ என்று கூறுவர். என் அரசு, அவருடைய ஆற்றலை அரணாகக் கொண்டுதான் நிலைக்க முடியும் என்ற நிலை! எத்தனை மண்டலங்களிலே இதுவரை கேலிமொழி பேசினரோ, யான் என்ன கண்டேன்.”

“பல்லவன் ஏன் போருக்குத் துள்ளுகிறான் தெரியுமா? பரஞ்ஜோதி இருக்கிற தைரியம்!”

“எனக்கும் ஒரு பரஞ்ஜோதி கிடைத்தால் நானும் நரசிம்மப் பல்லவன் போலப் பெருமை அடைந்துதான் இருப்பேன்” என்றெல்லாம் பேசி இருப்பர். என் மண்டல மக்களும் அதே மனப்போக்கைக் கொண்டுள்ளனர்.

பல்லவன் - பரஞ்ஜோதி - இரு பதவிகளில்! என்னைக் கேட்டால், பரஞ்ஜோதிப் பதவியே மேல் என்பேன்!

இரு ‘அரசு’ ஏற்பட்டு விட்டது. ஆம்! ஆற்றலரசனாகி விட்ட பரஞ்ஜோதி ஓர் அரசர்! அரசர் மகனானதால் அரசனான நான் ஓர் அரசன்! ஒரு மண்டலத்தில் இரு அரசர்களா? கூடாது! நிலைக்காது!!

ஆகவேதான், அவர் விலகுவதால் நஷ்டம் என்ற போதிலும் விலக்க வேண்டி நேரிட்டது. மண்டலம் பலவற்றை, அந்த மாவீரனுடைய துணையால் பெறலாம்! ஆனால் என்ன பலன்? புது மண்டலங்கள், பழைய மண்டலம், இரு இடமும், என்னை மட்டுமல்லவே, அவரையும்தானே, அரசராகக் கொள்ளும்! பல்லவ சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்த படைத்தலைவர் பரஞ்ஜோதியால் முடியும்! ஆனால் சாம்ராஜ்யம் மட்டுந்தானா விரிவாகும், அவருடைய கீர்த்தியும், செல்வாக்கும் கூடத்தான் வளரும்! ஓங்கி வளரும்! என்னை மன்னன் மறைக்குமளவு வளரும்! அரசனைக் கேலிச் சித்திரமாக்கும் நோக்கம் அளவுக்கும் படைத்தலைவனின் புகழ் பரவும்! செ! அந்த நிலையை நரசிம்மன் விரும்ப முடியுமா? பரஞ்ஜோதியில்லாப் பல்லவ சாம்ராஜ்யத்தை நான் ஆள வேண்டும் - அரசன் என்ற பெயருக்கு அப்போதுதான் நான் அருகதையுள்ளவனாவேன்.

ஆமாம்! நரசிம்மன் அரசனாகவும், பரஞ்ஜோதி படைத் தலைவராகவும் இருந்தால், மன்னன் என்ற நிலையே மங்கும். மங்குவதோடு முடியுமா? அந்த மாவீரன் மனதிலே மாசு இல்லை. ஆமாம்! இன்று இல்லை! மாசு உண்டானால்? ஆசை ஏற்பட்டால்? மங்குவது மட்டுமா, அந்த மாவீரன் மனதிலே, மகுடத்தின் மீது ஆசை பிறந்தால், நரசிம்மன் சிரத்திலே இருக்கும் நவரத்தின கிரீடம் ... ஆமாம்... பறிக்கப்பட்டும் விடக்கூடும்... படைத்தலைவர்கள் பட்டத்தரசர்களை வெட்டி வீழ்த்திக்கூட இருக்கிறார்கள்!

பரஞ்ஜோதி அப்படிப்பட்டவரல்ல! ஆனால் எப்படியோ எதிர் காலம்! இன்னும் இரண்டோர் வெற்றிகள் வாதாபி வீழ்ந்தது போல் வேறு சில பல நகர்கள் வீழ்ந்து, வெற்றி மாலை மேலும் பல, அவர் மார்பில் வீழ்ந்தால், எண்ணம் எப்படி எப்படி மாறுமோ! என்னென்ன தூவுவரோ, சதி செய்யும் தந்திரக்காரர்? யார் கண்டார்கள்!

கொஞ்சும்போதே கிளி கடித்து விடுகிறதே கோதையர் இதழை! மன்னனாம் எனக்குள்ள புகழை மிஞ்சிடும் புகழ்பெற்ற மாவீரன் பரஞ்ஜோதியின் கூர்வாள், புகழின் சின்னம் இன்று. நாளை அதுவே புரட்சிக் கருவியாக மாறினால்?...

பொறாமையா எனக்கு? இல்லை! இருக்காது! - அப்படியும் திட்டமாகச் சொல்வதற்கில்லையே.

அன்றோர் நாள் பவனி வந்தேன்... “பல்லவ சாம்ராஜ்யாதிபதி, நரசிம்ம மகாராஜாதி ராஜர் வாழ்க!” என்று பெருந்திரளான மக்கள் அன்புடன் ஆரவாரம் செய்தனர். அதே மக்கள், அடுத்த விநாடி அவரைக் கண்டதும் “புலிகேசியை வீழ்த்தி ஈடில்லாத் தலைவர், எமது பரஞ்ஜோதியார் வாழ்க!” என்று ஆரவாரம் செய்தனர்.

என்ன இருந்தாலும், எனக்கு உரைத்த வாழ்த்தொலியை, பரஞ்ஜோதியாருக்கு அளித்த வாழ்த்தொலி வென்றுவிட்டது!

நான், பல்லவ சாம்ராஜயாதிபதி! அவ்வளவுதான் சொன்னார்கள் மக்கள்!

அவரை? எமது பரஞ்ஜோதி என்றல்லவா அழைத்தனர்.

எனக்கு இலேசாகக் கோபம்! பொறாமை, கொஞ்சம் உண்டாயிற்று - மறைப்பானேன். கொஞ்சம் அச்சம்கூடத்தான். அருவருப்பும் தட்டிற்று, அடிக்கடி மக்கள் வெற்றி வீரன், வாதாபியை வென்ற தீரன் என்றெல்லாம் அவரைப் புகழக் கேட்டு.

மன்னனும் மனிதன்தானே! மனம் நிம்மதியாகவா இருக்க முடியும் மன்னன், மக்களின் மனம், படைத்தலைவனிடம் அடைக்கலம் புகுவது கண்டு?

பரஞ்ஜோதியாரிடம் எனக்கும் மதிப்புத்தான். இல்லை என்று யாரும் கூற முடியாது. ஆனால், அவர் அருகே இருக்கும் வரை, நான் அரசனாக இருக்க முடியாது. நரசிம்மன் அரசனாக வேண்டும்! பரஞ்ஜோதியில்லாமல், பல வெற்றி பெற்றாக வேண்டும். பல்லவ மன்னனிடம் ஒரு படைத்தலைவன் இருந்தான், பரஞ்ஜோதி அவன் பெயர், என்று வரலாறு இருக்க வேண்டுமேயொழிய, பரஞ்ஜோதியைப் படைத்தலைவராகக் கொண்ட பல்லவ மன்னன் ஒருவன் இருந்தான்; அவன் பெயர் நரசிம்மன் என்று வரலாறு இருத்தலாகாது.

ஆகவேதான் அவரை நீக்கிவிட்டேன்.

நல்ல வேளை! சைவ - வைணவ மாச்சாரியத்தைக் கொண்ட அந்தப் பிரதானியர்கள் கிடைத்தனர். அவர்கள் சொன்ன யோசனையும், தக்கதோர் உதவியாக அமைந்தது.

கரணமின்றி அவரை நீக்கியிருக்க முடியாது - கலகமே பிறந்துமிருக்கும். சைவர் என்ற துவேஷத்தால் வைணவ மன்னர், பரஞ்ஜோதியை விலக்கிவிட்டார் என்ற வதந்தி பரவினால், வீண் வம்பாகும். அவரைச் சிவத்தொண்டு புரியச் செய்துவிட்டேன். அதுவே சரியான முறை! பரஞ்ஜோதியாரை, படைத்தலைவர் பதவியிலிருந்து விலக்கிவிட்டு மட்டும் இருந்தால், ஆபத்து வேறு உருவில் வரக்கூடும்! ஆமாம்! எந்த மண்டலமும் அவர் வரவை ஆவலோடு எதிர்பார்க்கும். சென்றால் பல்லவ சாம்ராஜ்யமும் சிதையும்.

இப்போது நிர்ப்பயம்! பரஞ்ஜோதியார், வாளெடுத்துத் தன் வல்லமையை நிலைநாட்டி, வளரும் புகழ் மேலும் ஓங்கச் செய்து, என் புகழையும் மங்கச் செய்ய முடியாது; வேற்றூர் சென்று என் மனதை மருட்டவும் முடியாது! அவர் இனிச் சிவத் தொண்டு புரிந்து வருவார்! இங்கே என் விருப்பத்தின்படி, பல்லவனின் படை இருக்கும். போரில் வெற்றியும் கிடைக்கும்! தளபதி யார்? பரஞ்ஜோதியல்ல. மன்னனை மிஞ்சும் ஜோதியல்ல, நானாகப் பார்த்து உண்டாக்கும் ‘ஜோதி’ இருக்கும்.

ஆம்! நரசிம்மனின் வீரத்தையும், புகழையும் இழக்காமலிருக்க வேண்டுமானால், நரசிம்மனின் படை, தலைவர் பரஞ்ஜோதியாரை இழக்கத்தான் வேண்டும். மணிமுடி தரித்த எனக்கு மன்னனுக்குரிய வீரம், கீர்த்தி கிடைக்க வேண்டுமானால், பரஞ்ஜோதியார் மடம் புகுந்தாக வேண்டும். ஆகவேதான் அவரை மடத்தில் சென்று மகேஸ்வரனைத் தொழுமாறு கட்டளையிடவில்லை - வேண்டிக் கேட்டுக் கொண்டேன் - வென்றேன்; மன நிம்மதியும் பெற்றேன் - வாழ்ந்தேன்.

விளக்கொளி மங்கலாயிற்று. உலவிக் கொண்டே நரசிம்மப் பல்லவன், நிழலுருவத்தைக் கண்டான் - சிரித்தான் - விளக்கைத் தூண்டிக் கொண்டே, “பரஞ்ஜோதி! எனக்கு ஒளி கொடுக்க ஒரு ஜோதி வேண்டாம்! என்னால் தூண்டிவிடப் பட்டு, ஒளிவிடும் ஜோதி போதும்” என்றுகூறிக் கொண்டே, அரண்மனை உட்பகுதிக்குச் சென்றான். காற்றுவீசி, விளக்கு அலைந்தது; எண்ணெய் குறைந்தது; தூண்டிவிட ஆளில்லை, விளக்கு படர்ந்து போய்விட்டது - எங்கும் இருள்மயம்!

சேனைத் தலைவர் சிவபக்தரானார் - மாளிகை, காட்சிப் பொருளாக்கப்பட்டது - மடத்தில் குடி ஏறினார் பரஞ்ஜோதி - சாளுக்கியன் அந்தக் குடிபுகு விழாவை வெற்றி விழாவாகக் கொண்டாடினான். சின்னாட்கள். பரஞ்ஜோதியின் புதிய கோலத்தைக் கண்டு களிப்பதிலே செலவிட்டான். மடத்திலே புகுந்த படைத்தலைவரின் செயலைப் பலரிடம் பாராட்டிப் பேசினான். சிவநெறி புகுவோர் சிலர், பரஞ்ஜோதியாரைப்போலக் கொலைத் தொழிலாம் படைத்தொழிலை விட்டு விலக வேண்டுவதே முறை என்று கூறினான். பரஞ்ஜோதியின் பண்டாரக் கோலத்தைக் கண்டு ஏற்கெனவே மயக்கமடைந்தவர்கள், வில்லாளனின் தூண்டுதலால், அடியோடு மயக்கமுற்று, ஆளுக்கோர் மடம் தேடிக் கொள்ளலாயினர். படைத் தளபதிகள் பலர், மடம் புகுந்தனர் - களத்திலே அவர்களைக் கொல்வதைவிட, அவர்களை வாழ அனுமதித்து, அதேபோது அவர்களின் ஆற்றலைப் பயனற்றதாக்கிவிடுவது சிறந்தது. நாகத்தை அடித்துக் கொல்லலாம்; இல்லையேல், அதன் நச்சுப்பல்லைப் பெயர்த்தெடுத்துவிட்டுப் பெட்டியில் போட்டு வைக்கலாம்; ஆட வைத்துக்கூடி மகிழலாம் - அதுபோல, சாளுக்கியத்தை அழித்த படைவீரர்கள், அவர்களின் தலைவன் பரஞ்ஜோதி மடம் போய்ச் சேர்ந்தான் - பல்லவம், தன் கூர்வாளை, வெற்றி வாளை இழந்தது - இழக்கச் செய்தோம்; வென்றோம் என்று சாளுக்கியன் கூறிக் களித்தான். அவனுடைய நினைவு, உடனே தாய்நாட்டின் மீது சென்றது. இந்தச் சந்தோஷச் செய்தியை வெற்றிச் செய்தியைச் சாளுக்கியரிடம் கூற வேண்டும் என்று துடிதுடித்தான். பக்குவமாகப் பேசிப் பரஞ்ஜோதியாரிடம் அனுமதி பெற்றுக் கொண்டான்; சாளுக்கியம் செல்லப் புறப்பட்டான் - அவன் மனதிலே, சொல்லொணாக் களிப்பு ஓட்டம் பெருநடையாக, குதிரைக் கொட்டில் சென்றான் - அழகியதோர் கருங் குதிரையைத் தேர்ந்தெடுத்தான் - வெற்றி வீரன் போல் அதன் மீது அமர்ந்தான். குதிரை கம்பீரமாக நடந்தது - சாளுக்கியன் காஞ்சிபுரத்தை ஒருமுறை சுற்றிப் பார்த்தான், வெற்றிக் களிப்புடன் - பிறகு ஊரைவிட்டுக் கிளம்பினான். குதிரை வேகமாக ஓடலாயிற்று; அதைவிட வேகமாக, அவன் மனதிலே எண்ணங்கள் கிளம்பிக் கூத்தாடின. மகேந்திரனைப் பணியச் செய்தபோது புலிகேசி பெற்ற பூரிப்பை விட அதிகக் களிப்பு வில்லாளனுக்கு. தனி ஆள்! படை இல்லை! ஆனால் வெற்றி கிடைத்தது என்று எண்ணி மகிழ்ந்தான்.

வென்றேன்! வென்றேன்! கொன்றேன்! கொன்றேன் சாளுக்கியத்தை வென்ற வீரனை! வாளிழந்து, போர் ஆற்றலொழிந்து போனான்.

மன்னா! புலிகேசி! எந்த வாதாபியைக் கொளுத்திச் சாம்பலாக்கினரோ, அந்த வாதாபியிலிருந்து படை அல்ல கிளம்பினது, நான் ஒருவனே கிளம்பினேன்; வென்றேன், பழி தீர்த்துக் கொண்டேன். வாதாபியைச் சுட்டெரித்துச் சாம்பலாக்கினர்! அதை நான் கண்டேன் கண்ணெனும் புண் கொண்டு! அந்தச் சாம்பலில் ஒரு பிடி! அதே ஒரு பிடிச் சாம்பல்தான், சாளுக்கியத்திலிருந்து நான் கொண்டு வந்த, ஆயுதம்! ஆம்! பிடி சாம்பல்!

முடிவில் ஓர் பிடி சாம்பல்! அதனையே உபயோகித்தேன்; பெற்றேன் பெரும் வெற்றி! பிடி சாம்பலால், முடியுடைய மன்னரையும் மிஞ்சிய புகழ் படைத்து, இடியெனப் போர் முழக்கமிட்டு, வெற்றிக்கொடி பிடித்து உலவிய வீராதி வீரன், வாதாபியைத் தீயிட்ட தீரன், புலிகேசியைப் போரிலே வீழ்த்தி சூரன், பல்லவ சாம்ராஜ்யத்தின் வீரச் சின்னமாக விளங்கிய படைத் தலைவன் பரஞ்ஜோதியைப் படுகளத்தில் அல்ல - பாய்ந்து தாக்கி அல்ல - கூர்வாள் கொண்டு அல்ல - அவனுடைய நாட்டில், அவன் அறியா வண்ணம், ஒரு பிடி சாம்பலால் வென்றுவிட்டேன்!

அந்த வெற்றியின் தன்மை எத்தகையது? ஆஹா! எண்ணும்போதே என் உள்ளம் பூரிக்கிறது. பரஞ்ஜோதி! தமிழகம் அந்த ‘ஜோதி’யைக் காண முடியாதபடிச் செய்துவிட்டேன்.

‘பரஞ்ஜோதி’ இனி இல்லை அல்லவா! அடியார் இருப்பார்! நாயன்மாராக இருப்பார்! ஆனால் தமிழகத்தின் தலை சிறந்த படைத்தலைவன் இனி இல்லை! வாதாபிகளைத் தாக்க வரும் வீரர்கள் இல்லை - தோத்தரிக்கும் திருவாயும் கூப்பிய கரமும் இருக்கும். இருக்கட்டும் - கோயில் கட்டுபவர் கட்டட்டும் - பதிகம் பாடுவர், - சலிக்காது பாடட்டும் - ஆனால் ஒரு மாவீரனை இழப்பர்; படைத்தலைவன் இனி இரான்.

வெற்றி மாலை பூண்ட மார்பிலே இனி வெண்ணிறச் சாம்பற்பொடி! விடு கணையை! வீசு வாளை! செலுத்து தேரை! குதிரைப் படை முன்னால் பாயட்டும்! வேற்படையாளர்கள் விரைந்து வருக! என்றெல்லாம் முழக்கமிட்ட வாயிலிருந்து இனி, ‘பொன்னார் மேனியன்’ - ‘பிறவாவரம் தாரும் அடியார்க்கும் அடியேன்’ என்றெல்லாம் பஜனைப் பதங்கள்தான் வரும். வாதாபியை வென்றவனை நான் வென்றேன்! புலிகேசியைக் கொன்றவன் மீது வஞ்சம் தீர்த்துக் கொண்டேன். மாற்றார்கள் என்றால் சீற்றம் கொண்டெழுவோனை, சிவனடியாராக்கிவிட்டேன். ஒருபிடி சாம்பலால்! ஒப்பற்ற சாளுக்கிய சேனையால் சாதிக்க முடியாத காரியத்தைச் சாதித்துவிட்டேன். அஞ்சாநெஞ்சனை அடியவனாக்கி விட்டேன்.

வாளேந்திய கரம், இனி வழியே வருகிற பண்டாரங்களின் தாள் ஏந்திடும். தோள் பலத்தால் தொலை தூரம் வரை தன் நாட்டின் கீர்த்தியை நிலை நாட்டினான். இனி நாடு, வீரம், போர், வெற்றி இவை பற்றிய சிந்தனையே இராது. சிங்கத்தைச் சிறு முயலாக்கி விட்டேன்! வீரப்பட்டயம் கட்டிய நெற்றியில் விபூதிப்பட்டை!

பரஞ்ஜோதி சிறுத்தொண்டனானான். படைத்தலைவன் பக்தனானான்; முரசு கொட்டியவன் முக்திக்கு வழி தேட முனைந்து விட்டான்; வீரக் கோட்டத்திலே இடம் பெற வேண்டியவன் வீழ்ந்து வணங்க வேண்டிய கோயிலுக்குக் குடி ஏறிவிட்டான். சாளுக்கிய நாட்டுக்குச் சண்ட மாருதமாகியவன் சரித்திரத்தில் இடம் பெறாமல், சாதுக்கள் கூட்டத்தில் ஒருவனாகி விடுகிறான்! போர்ப் பயிற்சிக்கெனத் தமிழகம் ஓர் போற்றற்குரிய கழகம் அமைத்திடின், அதிலே சாளுக்கிய நாட்டை ஜெயித்துப் புலிகேசியைக் கொன்ற மாவீரன் பரஞ்ஜோதி என்று ஓர் சிலை இராது. அது எவ்வளவு பெரிய இலாபம் நமக்கெல்லாம்.
-------------
பிடிசாம்பல் (4)
பரஞ்ஜோதி! காடு மலை கடந்து, ஆறுகளைத் தாண்டி, அஞ்சா நெஞ்சன், ஆற்றல் மிக்கோன், வடநாட்டு வீரனை வீழ்த்திய வல்லமைசாலி, புலிகேசியை வென்றவன் என்ற எண்ணத்தை, அதன் மூலம் வீரத்தை, தமிழ் இனத்தின் தீரத்தை, தமிழகத்தின் கீர்த்தியை ஊட்டும் உருவமாக அமைந்து விட்டால், பிறகு தமிழரின் வெற்றி எட்டுத் திக்கும் கொட்டுவரே! இனி அப்பயமில்லை! பரஞ்ஜோதியைப் பக்தராக்கி விட்டோம்; இனித் தாளமும் மத்தளமும் கொட்டுவர் தமிழர். தாராளமாகக் கொட்டட்டும்; புலிகேசி! சாளுக்கிய நாட்டுக்காக இரத்தத்தைக் கொட்டினாய்! உன் இரத்தத்தைக் குடித்து வெற்றி கண்ட தமிழரின்மீது இதோ வஞ்சகம் தீர்த்துக் கொண்டேன்! ஒரு பிடி சாம்பலால்! முடிவில் இந்தப் பிடி சாம்பல், சாளுக்கிய நாட்டின் சாம்பல், வெற்றியைப் பெற்றுத் தந்தது.

சாளுக்கிய நாட்டுக்குச் செல்லும் வழியில், எதிர்ப்படுவோரிடம், பழைய நண்பர்களிடம், பாதி பட்டுப்போன மரம் கருகிக் கிடந்த இடம், போர் நடந்த களம் ஆகிய இடங்களைக் கண்டபோது எல்லாம், வெற்றிக் களிப்புடன், வில்லாளன் இங்ஙனம் பேசினான் - சில சமயங்களிலே கூவினான் - கூத்துமாடினான்! ஆம்! அவன் ஆனந்தமடைந்ததிலே ஆழ்ந்த அர்த்தமிருந்தது; பல்லவ நாடு திறமை மிக்க படைத் தலைவரை இழந்து விட்டது; பல்லவப் படை, போர்த் திறனும், போர் பலவற்றிலே பெற்ற அனுபவத்தை எடுத்துக் கூறும் ஆற்றலையும் படைத்த பரஞ்ஜோதியாரின் துணையை இழந்தது; ஒளியிழந்த மணிபோல, கூர் இழந்த வாள் போலாயிற்று பல்லவ நாடு. இதனை மக்கள் உணரக் கொஞ்ச காலம் பிடித்தது. ஆனால், உணர்ந்தனர் - பல ஆண்டுகளுக்குப் பிறகு.

“சாளுக்கிய படை வருகிறதாமே!”

“படை பெரிய அளவாம் - மிக வீரமாகப் போராடும் படையினராம்.”

“ஆமாம்! ஆனால் என்ன! நாமென்ன, படைபலமற்ற நாட்டிலேயா வாழ்கிறோம். நரசிம்மப் பல்லவனின் திருக் குமரனிடம் தேர்ச்சி பெற்ற படை இருக்கிறது. கவலை ஏன்?”

“படை இருக்கிறது - பெரும் படைதான் - ஆனால் பரஞ்ஜோதி இல்லையே! பரஞ்ஜோதி இல்லை என்ற தைரியத்தாலல்லவா, வாதாபி தரைமட்டமானதைக் கண்டு கலங்கிய சாளுக்கியர், மீண்டும் தலைதூக்க - நமது நாட்டின் மீது போர்த்தொடுக்கத் துணிந்தனர்.”

“பரஞ்ஜோதி இன்று இருந்தால்...”

“பரஞ்ஜோதி இல்லையே...”

“பரஞ்ஜோதியை இழந்த பிறகு, நமக்கு வெற்றி ஏது...”

கலங்கிப் பேசினர், காஞ்சிபுரத்து அரசு அவையினர், இதுபோல். அவசர அவசரமாக, அணிவகுப்புகள் தயாராயின. முரசுகள் ஆர்ப்பரித்தன! ஆயுத ஒலி கிளம்பிற்று; நால்வகைச் சேனை கிளம்பிற்று; பாய்ந்து வரும் சாளுக்கியப் படையைத் தடுக்க, எல்லாம் இருந்தது. ஆனால் மக்கள் மனதிலே நம்பிக்கை எழவில்லை. ஏனெனில், களத்திலே நின்று படைகளை நடத்திச் செல்ல பரஞ்ஜோதி இல்லை - படைத்தலைவர் பரஞ்ஜோதிதான் மடத்தலைவர் சிறுத்தொண்டரானாரே.

பல்லவர் படை வரிசையிலே மட்டுமல்ல, பரஞ்ஜோதியார் நினைவு சென்றது. தாக்க வரும் சாளுக்கியப் படை வகித்துக் கம்பீரமாக வருகிறான் வில்லாளன் - “பாய்ந்து செல்லுங்கள்! பயமின்றிச் செல்லுங்கள்! பல்லவ நாடு, பரஞ்ஜோதியில்லா நாடு! பயமில்லை, படைகளை மட்டும் படைத்த நாடு, படைத் தலைவர் மடத்தினுள் சென்றுவிட்டார். பிடி சாம்பலால் பெரும் படைத் தலைவனை, சிறுத்தொண்டனாக்கிவிட்டேன். இனி பயமில்லை, ஜெய முண்டு, செல்க!” என்று கூவினான் களிப்புடன்.

அவன் சொன்னது சரியாகவே இருந்தது. வெற்றி சாளுக்கிய மன்னனுக்கே. புலிகேசியின் புதல்வன், நரசிம்மனின் மகனைத் தோற்கடித்தான். காஞ்சிபுரத்தில் தோற்ற மன்னன், வாதாபியை எண்ணாதிருந்திருக்க முடியுமா? வாளிழந்து நின்றபோது, பரஞ்ஜோதியைப் பற்றிய நினைவு வராமலிருக்க முடியுமா? வெற்றி பெற்ற சாளுக்கியப் படை வெறியாட்டமாடிக் கொண்டு, காஞ்சிபுரத் தெருக்களிலே பவனி வந்தபோது, சில ஆண்டுகளுக்கு முன்பு, சாளுக்கிய நாட்டிலே இருந்து கொண்டு வந்த பொருளின் குவியல்கள், யானை மீதும் குதிரை மீதும் ஏற்றப்பட்டு, முன்னே செல்ல, வெற்றிச் சங்கொலிக்க, பின்னே, பிடிபட்ட சாளுக்கியர்கள் வரிசையாக நடத்தி வரப்பட, இருமருங்கும் ஊர் மக்கள் நின்று வாழ்த்தொலி கூற, பரஞ்ஜோதி, வாதாபியை வென்ற வீரன் பவனி வந்த காட்சி, மக்கள் மனக்கண்முன் தோன்றாதிருக்க முடியுமா? கண்கள் குளமாயின!

பரஞ்ஜோதி வெற்றிப் பவனி வந்த வீதிகளில் சாளுக்கிய மன்னன் பவனி வந்தான். அவன் சித்திரகாந்தா எனும் குதிரை மீதமர்ந்து வந்தான். அவனுடைய படைகள் சாளுக்கிய நாட்டுக்கு வாழ்த்தொலி கூறின. பல்லவ நாட்டுத் தலைநகருக்குள்.

பல்லவ மன்னனைப் பணியச் செய்தான் சாளுக்கியன்.

தன் பாதத்தை முத்தமிடச் செய்தான், சாளுக்கிய மன்னன்!

பல்லவ மன்னன், அந்த விநாடியில், எத்தனை முறை எண்ணினானோ பரஞ்ஜோதியைப் பற்றி!

எவ்வளவு ஆயிரமாயிரம் மக்களின் கண்களிலே, நெருப்பைச் சுடும் நீர் வெளி வந்ததோ!

தாய்நாடு பிறனிடம் அடிமைப்பட்டுத் தார்வேந்தன் எதிர்நாட்டு மன்னனின் பாதத்தை முத்தமிடக் கண்ட பிறகு, கண்களா அவை? புண்களல்லவா! ஆஹா! பரஞ்ஜோதி மட்டும் மடலாயம் புகாமல், படையில் இருந்திருந்தால்... என்று எண்ணித் துடித்தனர் மக்கள். வேறென்ன செய்வர்?

‘பிடி சாம்பல்! பிடி சாம்பல்!’ என்று முழக்கமிட்டான் வில்லாளன்.

‘யாரிவன் பித்தன்? பிதற்றுகிறான்! பிடி சாம்பலாம், பிடி சாம்பல்!’ என்று அன்று வாதாபியில் வில்லாளனைக் கடிந்துரைத் தனரே தமிழ் வீரர்கள்; அவர்கள் இம்முறை என்ன கூற முடியும் “ஆம்! பிடி சாம்பல்! பிடி சாம்பலைத் தந்து பரஞ்ஜோதியாரைப் பூசிக் கொள்ளச் செய்து, மடத்துக்குள் அனுப்பினோம்; இன்று படைத்தலைவர் இன்றித் திகைத்துத் தோற்றோம்! பிடி சாம்பலால் தோற்றோம்.” என்று மெல்லக் கூறிக் கொண்டனர்.

“அழுக்கற்ற வெண் சாமரங்களையும் நூற்றுக்கணக்கான கொடிகளையும், குடைகளையும் பிடித்துக் கொண்டு புலிகேசியின் - அறுவகைப் படைகள் செல்லுங்கால், கிளம்பிய, தூசியானது எதிர்க்க வந்த பல்லவவேந்திரன் ஒளியை மங்கச் செய்தது. பல்லவனும் காஞ்சிபுரத்து மதில்களுக்குள் போய் ஒளிந்து கொண்டான்.”

“மன்னவர்க்குத் தண்டுபோய் வடபுலத்து வாதாபித் தொன்னகரந் துகளாகத் துளைநெடுங்கை வரையுகைத்துப் பன்மணியும நிதிக்குவையும் பகட்டினமும் பரித்தொகையும் இன்னன எண்ணில கவர்ந்தே இகலரசன்முன் கொணர்ந்தான்.”
- சேக்கிழார்.

புலிகேசியின் புதல்வன் விக்ரமன், நரசிம்மன் பல்லவன் மகன் பரமேஸ்வரனைத் தோற்கடித்து, சித்திரகாந்தா என்ற தன் குதிரை மீது அமர்ந்து, உருவிய வாளுடன் பவனி வந்து, பரமேஸ்வரனைத் தன் பாதத்தை முத்தமிடச் செய்தான்.” - வரலாறு.

மகேந்திர பல்லவன் புலிகேசியிடம் தோற்றான். மகேந்திரன் மகன் நரசிம்மன், புலிகேசியைத் தோற்கடித்தான். - கொன்றான். புலிகேசியின் மகன் விக்ரமன், நரசிம்மனின் மகன் பரமேஸ்வரனைத் தோற்கடித்துப் பணிய வைத்தான்.

காஞ்சிபுரம் கலங்கிற்று. புலிகேசியின் வெற்றி முரசு கேட்டு; மகேந்திரன் காலத்தில், காஞ்சிபுரம் களித்தது. மகேந்திரனின் மகன் காலத்திலே, புலிகேசி களத்தில் கொல்லப்பட்டு, தலைநகர் வாதாபி தீக்கு இரையான செய்தி கேட்டு காஞ்சிபுரம் மீண்டும் கலங்கிற்று, புலிகேசியின் மகன் விக்ரம், நரசிம்மனின் மகன் (மகேந்திரனின் பேரன்) பரமேஸ்வரனைப் பணிய வைத்தது கண்டு.

அழுகுரல் - ஆனந்தம் - அழுகுரல் - மாறி மாறி வரும்! இதற்கு ஏதேனும் காரணம் இருந்தாக வேண்டுமே! ஒன்றும் இல்லையோ! மகேந்திரன், களத்திலே புலி, பல வெற்றிகளைப் பெற்றவன்; எனினும் புலிகேசியிடம் தோற்கிறான். பிறகு அதே புலிகேசி, மகேந்திரனின் மகனிடம் தோற்கிறான். பிறகு, புலிகேசியின் மகன் விக்ரமன், நரசிம்மனின் மகன் பரமேஸ்வரனைத் தோற்கடிக்கிறான்.

இந்த விசித்திர வரலாற்றுக்கு, ஒரு விளக்கம், எங்கோ ஓர் உண்மை புதைந்திருக்க வேண்டும் - அதைக் கண்டறியும் முயற்சியே மேலே தீட்டியுள்ள வரலாறு கலந்த கற்பனை உரை.

என் முடிவு இது! பரஞ்ஜோதி படைத்தலைவராக இருந்ததால், பல்லவ நாட்டின் ராணுவ பலத்தைச் சாளுக்கியம் உணர முடிந்தது - வாதாபி வீழ்ந்தது.

படைத் தலைவரிற் சிறந்த பரஞ்ஜோதி, சிறுத்தொண்டராகி விட்ட பிறகு, பல்லவ நாட்டுப் படை பலம் சரிந்தது; தோல்வி வந்தது.

பரஞ்ஜோதி, சிறுத்தொண்டன் ஆனார் என்பதை நான், ஆக்கப்பட்டார் என்கிறேன்.

அதாவது, பரஞ்ஜோதியை, மன்னன், சைவன், என்ற காரணத்தைக் காட்டிப் பதவியிலிருந்து விலக்குகிறான்.

இதற்கு மூன்று காரணங்கள் இருக்க வேண்டும்மென்பது என் யூகம்.

1. சாளுக்கியர் தந்திரம்.

2. வைச, வைணவ ஆதிக்கப் போட்டி.

3. மன்னனுக்குப் பரஞ்ஜோதியாரிடம் ஏற்பட்ட இலேசான பொறாமை.

இவை அர்த்தமற்றன என்றோ, விஷம் நிறைந்தன என்றோ, விதண்டாவாதம் என்றோ குறைகூறப் பலர் உளர் என்பதை நான் அறிவேன். ஆனால், அவர்களை நான் கேட்க விரும்பும் சில கேள்விகளுக்கு அவர்களிடமிருந்தல்ல, உங்களிடமிருந்து பதிலை எதிர்பார்க்கிறேன் - அவர்களிடமிருந்து சிந்தனையை எதிர்பார்க்கிறேன்.

1. புகழ் பெற்ற பரஞ்ஜோதிக்குப் பிறகு, படைத் தளபதி என்ற பெயருக்குரிய வேறோர் வீரரின் பெயரும் பல்லவர் வரலாற்றில் இல்லாமற் போனது ஏன்?

2. கீர்த்தி பெற்ற பிறகு பரஞ்ஜோதியை, படைத்தலைவர் பதவியிலிருந்து மன்னன் விலக்குவானேன்?

மன்னன் விலக்கினான் என்று எப்படிக் கூறலாம்? மன்னன், பரஞ்ஜோதியாரின் பெருமையை உணர்ந்தான் என்றன்றோ அதற்குப் பொருள் என்று அறனடியார்கள் கூறுவர். அவர்களுக்குக் கூறுகிறேன், மன்னன் விலக்கினார் - பரஞ்ஜோதி மறுத்தார் - திகைத்தார் - இந்தப் பாடல்களை மீண்டும் ஓர் முறை படிக்க வேண்டுகிறேன் - என்னை மறந்து.

உங்கள் கண்முன், பதவியில் இருக்கக்கூடாது என்று தந்திரமாகப் பேசும் மன்னனும், திகைக்கும் பரஞஜோதியும தெரிவர்.

மேலும், எத்தனையோ அடியார்களும், தொண்டர்களும், நாயன்மார்களும், சைவத்தின் பெருமையை நினைவூட்டவும், நிலைநாட்டவும் உளர்.

ஒரு பரஞ்ஜோதி சிறுத்தொண்டராக்கப்படாமல், படைத்தலைவராகவே இருக்க அனுமதித்தால், நஷ்டம் இல்லை, நாட்டுக்கும் சைவத்துக்கும் . ஏற்கெனவே ஏராளமாக உள்ள அடியார் கூட்டத்தில், இராணுவ வரலாற்றுக்கே ஓர் தலைசிறந்த எடுத்துக்காட்டாக இன்றுவரை, உலக வரலாற்று ஏடுகள் வரை, யாருடைய பெயர் இருக்க வேண்டுமோ, அந்தப் பரஞ்ஜோதியை அடியவர் கூட்டத்தில் சேர்த்து, வீரக்கோட்டத்துக்கு நஷ்டம், ஈடுசெய்யமுடியாத நஷ்டத்தை உண்டாக்கிவிட்டனர் இது. சரிடியா? சிந்திக்க வேண்டுகிறேன்.

சிந்தனையை, குறிப்பாகச் சிவநேசர்களின் சிந்தனையைக் கிளறவே இச்சிறு ஓவியம். பாராயணத்துக்குப் பயன்படுத்திய பாடல்களை, இதோ, சற்று நான் கூறினவை சரியா என்பதைப் பகுத்தறிவுப் பயன்படுத்திப் படித்துப் பாருங்கள்.

“மன்னவர்க்குத் தண்டுபோய் வடபுலத்து வாதாபித்
தொன்னகரந் துகளாகத்துளை நெடுங்கை வரையுகைத்துப்
பன்மணியும் நிதிக்குவையும் பகட்டினமும் பரித் தொகையும்
இன்னன எண்ணிலா கவர்ந்தே இகலரசன் முன் கொணர்ந்தார்.”

பரஞ்ஜோதியார், தென்னகரமாம் வாதாபியை வென்று அங்கிருந்து மணியும் அணியும், கரியும் பரியும் கொணர்ந்தார் என்று அறிவிக்கிறது இச்செய்யுள்.

“கதிர்முடி மன்னனும் இவர் தங்களிற்றுரிமை ஆண்மையினை
அதிசயித்துப் புகழ்ந்துரைப்ப அறிந்த அமைச்சர்க ளுரைப்பார்
மதியணிந்தார் திருத்தொண்டு வாய்த்த வலியுட மையினால்
எதிர்வருக் கிவ்வுலகிலில்லை என எடுத்துரைத்தார்.”

மன்னன் மகிழ்கிறான், பரஞ்ஜோதியாரின் ஆண்மையைக் கண்டு; அமைச்சர் கூறுகிறார் - பரஞ்ஜோதி, அறனடியார்; ஆகவேதான் வென்றார். அவருக்கு ஈடு இவ்வுலகில் இல்லை என்று கூறினர். இது இச்செய்யுளின் பொருள்.

“தம்பெருமான் திருத்தொண்டர் எனக் கேட்ட தார் வேந்தன்
உம்பர்பிரான் அடியாரை உணராதே கெட்டொழிந்தேன்.
வெம்பு கொடும் போர்முனையில் விட்டிருந்தேன்
எனவெருவுற்றெமபெருமான் இது பொறுக்கவேண்டும் என இறைஞ்சினான்.”

சிவனடியாரா இவர்! இவரையா நான் போர்க்கள வேலையில் ஈடுபடுத்தினேன், அபசாரம் என்று மன்னன் வருந்தினான் என்பது இச்செய்யுளின் பொருள். இதிலே ஆச்சரியப் பகுதி என்னை எனில், படைத்தலைவர், சிவபக்தர் என்ற விஷயமும், மன்னனுக்கு மந்திரி சொல்லித் தான் தெரிய வருகிறது!

“இறைஞ்சுதலும் முன்னிறைஞ்சி என்னுரிமைத் தொழிற்கடுத்த
திறம்புரிவேன் அதற்கென்னோ தீங்கென்ன ஆங் கவர்க்கு
நிறைந்த நிதிக்குவைகளுடன் நீடுவிருத்திகள் அளித்தே
அறம்புரி செங்கோலரசன் அஞ்சலி செய்துரைக்கின்றான்.”

மன்னனைப் பரஞ்ஜோதி வணங்கி, என் தொழில் போரிடுவது. அதைச் செய்வதிலே தீது என்ன? அது என்கடமை என்று கூற, மன்னனோ, அவருக்கு ஏராளமாகப் பரிசுகள் வழங்கிப் பேசலானான் என்பது இச்செய்யுளின் பொருள்.

“உம்முடைய நிலைமையினை அறியாமை கொண்டுய்த்தீர் எம்முடைய மனக்கருத்துக்கினிதாக இசைந்துமதுமெய்ம்மைபுரி செயல் விளங்க வேண்டியவாறே சரித்துசெம்மை நெறித்திருத் தொண்டு செய்யும் னெவிடையளித்தான்.”

அப்படியல்ல, அறனடியாரே! உமது பெருமையை உணராமல் இருந்துவிட்டேன். இனி நீர் மடத்தில் சென்று சிவத் தொண்டு புரிக! என்று மன்னன் கூறி அனுப்பிவிட்டான் என்பது இச்செய்யுளின் கருத்து.

இனி யோசியுங்கள். விலக்கப்பட்டார் பரஞ்ஜோதி; அதற்காக விசாரப்பட்டார் என்று நான் கூறினது தவறா? செய்யுள் யாவும், பெரிய புராணம் - நமது சரக்கல்ல. ஒவ்வொரு செய்யுளுக்கு உள்ளேயும், இடையிடையேயும் புதைந்துள்ள பொருளை, யூகித்துத் தீட்டினேன் - சிந்தனையைக் கிளற.

வேவலுக்கோ, ஐசன்ஹவருக்கோ, பைபிளிடம் ஆசை; ஏசுவிடம் விசுவாசம் என்று பிறர் கூறக்கேட்டு, ஆஹா! அப்படியா! அங்ஙனமாயின் மாதாகோயில் பாதிரி வேலைக்கு அனுப்புகிறோம் என்று, பிரிட்டிஷ் அமெரிக்க சர்க்கார்கள் கூறுமா? பரஞ்ஜோதிக்குக் கூறப்படுகிறது. ஏன்?

படைத்தொழிலில் இருப்பதால் சிவத்தொண்டு சாத்யமின்றிப் போகுமா? ஆவுரித்தித் தின்று உழல்பவனும், யனை நம்பினால், அவர்களே நாம் வணங்கும் தெய்வம் என்று சைவம் கூறப் போர்த் தொழிலைக் கடமையாகக் கொண்ட ரஞ்ஜோதியாருக்கு மட்டும், ஏன் மடாலயம் புகவேண்டுமென்று நிர்ப்பந்திக்கப்பட்டது? இவை நீங்கள் சிந்திக்க வேண்டியவை. ‘பிடி சாம்பல்’ தீட்டியதன் நோக்கம் அதுதான். ஆகவே சைவ மெய்யன்பர்கள், ‘பிடி சாபம்’ என்று சீறிடாமல், சற்றே சிந்தனையைச் செலவிடுங்கள்... முடியுமானால்!

(திராவிட நாடு - 1947)
----------------------

9. கோமளத்தின் கோபம்

கோமளத்தின் கோபம் (1)

“விடுதலை! வந்துவிட்டது தங்கத்திற்கு! லிங்கத்தின் பாடு கொண்டாட்டந்தாண்டா. இனி மேலே அவன் அவன்தான்; நாம்ப நாம்பதான்.”

“நம்மை எல்லாம் மறந்து விட்டாலும், நாராயணனை மாத்திரம் மறக்கமாட்டான். அவங்க இரண்டு பேரும், வந்த நாளா ஜோடி போட்டுக்கிட்டாங்க. என்னமோ சூது இருக்கு.”

“நாராயணன் மந்திரக்காரனாச்சே! ஏதாகிலும் மந்திரம் கிந்திரம் கற்றுக் கொடுத்திருப்பான்.”

“மந்திரமாவது தந்திரமாவது! மந்திரம் தெரிந்தவன், இங்கே யேண்டா வந்து மாட்டிக்கிட்டு கம்பி எண்ணிக்கிட்டு கிடக்கிறான்.”

“இங்கேன்னா என்னடாப்பா! இந்தே பெரிய வூடு உங்க அப்பங் காலத்திலே கண்டெயா? நம்ம ராணியம்மா சத்திரத்திலே மணியடிச்சா சோறு; மயிர் முளைச்சா மொட்டை”

“தன்னானே தானென்ன
தன்னான தன்னானே.”

“சாலையிலே ரெண்டுமரம்
சர்க்காரு வைத்தமரம்...”

வார்டர் நம்பர் 9, ரொம்ப முரட்டுப் பேர்வழி “பைல், பைல்” என்று கூவினால், எவ்வளவு முரட்டுக் கைதியும், பெட்டியில் போட்ட பாம்பு போலத்தான்! அவனும் வந்தான்! நாம் மேலே தீட்டியபடி வம்பளந்து கொண்டும், பாடிக் கொண்டுமிருந்த கைதிகள், பேச்சை நிறுத்திக்கொண்டு சிமிட்டி திண்ணை மேலே சிவனே என்று உட்கார்ந்து விட்டார்கள்.

சிறையிலே எல்லா வார்டரும், கைதிகளும் மனிதர்கள் தானே என்றா எண்ணுவார்கள். வீடுவாசல், குழந்தை குட்டி, பெண்டுகளை விட்டுப் பிரிந்து தனித்து வந்து இருப்பவர் ஏதோ பேசிப் பாடி ஆடி, பொழுதைப் போக்கட்டும் என்று விட்டு விடுவார்களா?

அதிலும், சீப் வார்டராக வேண்டுமென்ற ஆசை 9-க்கு அதிகம். ஆகவே, ஏகதடபுடல். அதிகாரம்! கைதிகளை மிகக் கண்டிப்பாக நடத்துவது வாடிக்கை.

லிங்கத்துக்கு அன்று விடுதலை! முக்கா போர்டிலே பேர் விழுந்தது. ஐந்து வருடம் தண்டனை அவனுக்கு. உள்ளே வந்து மூன்று வருஷமாச்சு. இரண்டு வருஷமிருக்கும்போதே ஓர் அதிர்ஷ்டம். விடுதலை! அப்பா! இனி சூரியனையும், சந்திரனையும், வானத்தையும், நட்சத்திரத்தையும் பார்க்கலாம்! வீதியிலே உலாவலாம்! கடை வீதி செல்லலாம். கீரையுந்தண்டுமே மூன்று வருஷமாகக் கண்டு சலித்துப் போனவன் இனி வாய்க்கு ருசியாக எதையாவது உண்ணலாம். ராஜா அவன் இனி மேலே! விடுதலை வந்து விட்டது. அதோ வந்து விட்டான் வார்டர்.

“டே லிங்கம்! எங்கே எடு படுக்கையைச் சுருட்டு! கம்பளியை” என்றான். ஒரு படுக்கையைச் சுருட்டினான்; குதித்தான். கம்பளியை எடுத்துக் கொண்டான். அவனைச் சுற்றிலுமிருந்த கைதிகளை நோக்கினான் ஒரு முறை. அவர்கள் தலையை ஆட்டினார்கள். இவன் பல்லைக் காட்டினான்.

மூலையில் உட்கார்ந்து கொண்டிருந்த நாராயணன் தள்ளாடி நடந்து வந்தான் லிங்கத்திடம்! நாராயணன். கிழவன் பாவம். ஜென்ம தண்டனை! உள்ளே வந்து எட்டு வருடத்திற்கு மேலாயிற்று. உலகத்தை அவன் மறந்தே விட்டான். லிங்கத்திடம் அவனுக்கு ஓர் ஆசை. லிங்கத்துக்கும் அப்படியே.

“லிங்கம்! இனிமேலே புத்தியா பிழை. பார்த்தாயே. இங்கே படறபாட்டை” என்றான் நாரயணன்.
லிங்கம் பதில் சொல்ல எண்ணினான். ஆனால் துக்கம் தொண்டையை வந்து அடைத்துவிட்டது.
“வருகிறவனெல்லாம் இப்படித்தான் போறப்போ புத்தியோடு இருப்பதா பேசுவான்! புத்தியாவது வருவதாவது” என்றான் வார்டர்.

‘மார்ச்’ என உத்திரவிட்டான்

9.
மூன்று வருஷமாக வார்டர் எத்தனையோ தடவை, உத்தரவிட்டிருக்கிறான். அப்போதெல்லாம் தோன்றாத ஒரு புதிய சந்தோஷம் இந்த உத்தரவைக் கேட்டதும் வந்தது.

மார்ச்! புறப்படு! போ வெளியே!

எங்கே? உலகத்துக்கு! சிறைக்கதவு திறந்து விட்டது. கூண்டைவிட்டுக் கிளம்பு. போ வெளியே! பார் உலகை! நீ பல நாளும் பார்க்காது மனம் வெந்து, மண்ணைத் தின்று கொண்டிருந்தாயே, இனி உலகத்துக்குப் போ! உன் மக்களைப் பார்! என்றல்லவோ அந்த உத்தரவு சொல்லுகிறது.

பார்க்கும்போதே யமன் போலத் தோழனாகத் தோன்றினான்.

ரொம்ப குஷாலாகத்தான் நடந்தான். வார்டர் பொழுது போக்க வேண்டி, “டே! லிங்கம் யாராவது வந்திருப்பார்களா வெளியே உன்னைப் பார்க்க” என்று கேட்டான்.

லிங்கத்துக்குத் துக்கம் பொங்கிற்று! கைகால்கள் நடுங்கின. கோமளத்தை எண்ணினான். கண்களில் நீர் ததும்பிற்று.

மாதச் சம்பளத்திற்கு மாரடிக்கும் அந்த வார்டருக்கு லிங்கம் கொலைக்கேசில் சம்பந்தப்பட்டு, 5 வருஷம் தண்டிக்கப்பட்ட கைதி என்பது தெரியுமே தவிர, லிங்கத்தின் உள்ளம் என்ன தெரியும்? லிங்கத்தின் மனத்தை அந்த நேரத்தில் கலக்கிய அந்தக் கோமளத்தைப் பற்றித்தான் என்ன தெரியும்?

உங்களுக்குத்தான் என்ன தெரியும்? லிங்கம் ஒரு கைதி! ஆகவே அவன் வெறுக்கப்பட வேண்டியவன் என்று வாதாடு வீர்களே தவிர, லிங்கம் ஏன் கைதியானான், எது அவனை அந்த நிலைக்குக் கொண்டு வந்தது என்பது உங்களுக்கு என்ன தெரியும்?

என்ன உலகமிது? ஏழைக்கு உலகமா? ஏழையின் மனம் புண்பட்டால், அதை ஆற்றும் உலகமா? அல்ல! அல்ல! ஏழையின் துயரைப்பற்றி எள்ளத்தனை சிந்தனையும் செய்யாது ஏழை மீது ஏதேனும் பழி சுமத்தப்பட்டாலும் “ஆமாம் அவன் துஷ்டன்! செய்துதான் இருப்பான்” என்று சாதிக்கும் உலகமாச்சே.
* * *

அன்று, ஒரே கருக்கல்! இருட்டுடன் மேகம், அடிக்கடி இடி, காது செவிடுபடும்படி. மின்னல் கண்களைக் குத்துவது போல. பிசுபிசுவெனத் தூறல். லிங்கம் மாட்டுக் கொட்டிலுக்குப் பக்கத்திலே தனக்கென விடப்பட்டிருந்த அறையிலே படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தான். அந்த நேரத்திலே கோமளத்தைப் பற்றித்தான் கனவு கண்டு கொண்டிருந்தான். இரவு 12 ஆயிற்று. அவன் அறையின் கதவு மெதுவாகத் திறக்கப்பட்டு, கறுப்புக் கம்பளியால் தன்னை முழுதும் மறைத்துக் கொண்டிருந்த ஓர் உருவம் உள்ளே நுழைந்தது. அதுதான் கோமளம்.

மிஸ். கோமளம் சார், மிஸ் கோமளம். லிங்கத்தின் சின்ன எஜமானி! வக்கீல் வரதாச்சாரியின் சொந்தத் தங்கை. ரொம்ப அழகி. மகா கைகாரி! சூதுவாது அறியாத லிங்கத்துக்கு மோகமெனும் அபினியை நித்த நித்தம், சிரிப்பாலும், சிமிட்டலாலும் ஊட்டி வந்தவள்.

லிங்கம் ஒரு காலத்தில் அந்த ஊருக்கே பெரிய தனக்கார ராக இருந்த மண்டி மகாதேவ முதலியாரின் மகன். கோமளத்தின் தகப்பனார்தான் முதலியார் வீட்டுக்குப் புரோகிதர். புரோகிதம் செய்து சேர்த்த பணந்தான், வரதாச்சாரியை வக்கீலாக்கிற்று. புரோகிதச் செலவுடன் புதுச்சத்திரம் கட்டுதல், கோதானம் அளித்தல், கும்பாபிஷேகம் செய்தல் முதலிய கைங்கரியங்களை 20 ஆண்டு விடாமல் செய்தான், மண்டி மகாதேவ முதலியார், 10,000 ரூபாய் சொத்தும் இருபதனாயிரம் கடனும், மகன் லிங்கத்துக்கு வைத்துவிட்டு இறந்தார். போனால் போகிறது என்று வக்கீல் வரதாச்சாரி, வேலையின்றித் திண்டாடிக் கொண்டிருந்த லிங்கத்துக்குக் கட்டுத்தூக்கும் வேலைகொடுத்து தன் வீட்டிலேயே சோறும், மாட்டுக் கொட்டிலுக்கு மறு அறையில் அவனுக்கு இடமும் கொடுத்தார். லிங்கத்தின் தாய், மகனுடைய நிலை, புரோகிதர் மகனுக்குப் போக்குவரத்து ஆளாக மாறும் வரை இல்லை. அந்த அம்மை “அகிலாண்ட நாயகியின் அனுக்கிரகத்தால்” கணவனுக்கு முன்னதாகவே இறந்து விட்டாள். அப்போதுகூட இருபது பிராமணாளுக்கு வேஷ்டி வாங்கி தானம் செய்தார், லிங்கத்தின் தகப்பனார்.

உள்ளே நுழைந்த கோமளம் மெல்ல தட்டி எழுப்பினாள் லிங்கத்தை! எப்படி இருக்கும் அவனுக்கு. தான் கண்டு கொண்டிருந்த கனவில் அதுவும் ஒரு பகுதிதானோ என்று எண்ணினான். மிரள மிரள விழித்தான். கண்களைத் துடைத்துக் கொண்டு பார்த்தான். நிஜமான கோமளம், நிஜமாகவே தன் எதிரில் நிற்கக் கண்டான்.

லிங்கத்துக்குக் கோமளத்தின் மீது அளவற்ற ஆசை! உழைத்து அலுத்துப் படுக்கப் போகும் நேரத்திலும் கோமளம் ‘லிங்கம்’ என்று கூப்பிட்டால் போதும்; ஓடுவான், அவள் என்ன வேலை சொன்னாலும் செய்ய.

முதலிலே அவன், சினிமாவிலே தோன்றும் பெண்களைப் பார்த்துச் சந்தோஷப்படுகிற அளவுக்குத்தான் இருந்தான். கோமளமும், எந்தச் சினிமாக்காரியின் சாகசம் சல்லாபத்திலும் குறைந்தவளல்ல.

‘டால்’ அடிக்கிறது உடம்பிலே என்பார்களே, அதை லிங்கம் கோமளத்திடம்தான் கண்டான். “கண்ணாலே மயங்கி விடுவார்கள் பெண்கள்” என்று லிங்கம் கதையிலே படித்தது, கோமளத்தைக் கண்ட பிறகுதான் அவனுக்கு உண்மையாகப் பட்டது.

கோமளம், சிவந்த மேனியள்! சிங்கார உருவம்! சிரிப்பும் குலுக்கும் அவளுடைய சொந்தச் சொத்து! பேச்சோ, மிக சாதுர்யம்! ஆடை அணிவதிலோ ஒருதனி முறை! கோமளம், லிங்கத்துக்குச் சரியான மயக்க மருந்தைக் கொடுத்து விட்டாள். லிங்கமும் எட்டாத கனி என்று முதலிலே எண்ணியவன், “இல்லை! இல்லை! கோமளத்திற்கு என் மீது கொஞ்சம் ஆசைதான். இல்லாவிட்டால் ஏன் என்னிடம் அடிக்கடி கொஞ்சுவது போல் இருக்கிறாள் என்ன இருந்தாலும் நான் என்ன பரம்பரை ஆண்டியா! பஞ்சத்து ஆண்டிதானே” என்று எண்ணத் தொடங்கினான்!

அவன் மீது குற்றமில்லை! அவள் மீதுகூட அவ்வளவு. குற்றமில்லை. பருவம்! அதன் சேட்டை அது! லிங்கத்துக்கு உலகம் தெரியாது பாபம். அதிலும் கோமளத்தின் உலகம் தெரியாது!

கோமளத்தின் உலகம், மிக பொல்லாதது. ஆனால் பார்ப்பதற்கு ஜொலிக்கும். எரிகிற நெருப்பிலே இல்லையா ஒரு ஜொலிப்பு! விஷப்பாம்பிலே தலைசிறந்த நல்லபாம்புக்கு இல்லையா ஒரு தனி வனப்பு! அதைப்போலக் கோமளத்தின் உலகம்.

அவள் கண்பார்வை, ஒரு மாய வலை, யார் மீது விழுந்தாலும் ஆளை அடிப்படியே சிக்க வைக்கும். அதிலும் லிங்கத்தின் மீது ஒவ்வொரு நாளும் எத்தனையோ முறை விழுந்தபடி இருந்தது. என் செய்வான் லிங்கம்! ஏமாந்தான் அவளிடம்.
தன் காதலைப்பற்றி ஒரு நாளாவது ஒரு வார்த்தையாவது அவளிடம் பேசியதும் கிடையாது. அவன் தன்னிடம் அப்படியே சொக்கிக் கிடக்கிறான் என்பதைக் கோமளம் தெரிந்து கொள்ளாமலும் இல்லை. அதனைத் தடுக்கவும் இல்லை. மாறாக, வேண்டுமென்றே அதனை வளர்த்தாள். தன் அழகைக் கொண்டு அவனை அறிவிலியாக்கினாள். தன் பிரகாசத்தால் அவன் கண்களை மங்கச் செய்தாள். அடிமை கொண்டாள் அவனை. தன் இஷ்டப்படி ஆட்டி வைத்தாள்.

ராவ்பகதூர் ராமானுஜாச்சாரியார் மட்டும் இவ்விதம் தன்னிடம் அடிமைப்பட்டிருந்தால் கோமளம் ஏன் பிறந்த வீட்டிலேயே இருக்கப் போகிறாள். எத்தனையோ பேருக்கு ஏக்கத்தைக் கொடுத்த அவள் அழகும், சல்லாபமும், அவள் கணவன், ராமானுஜாச்சாரிக்கு ஒரு மாற்றத்தையும் கொடுக்க வில்லை. அவர் உண்டு, கீதை உண்டு, ஜெர்மன் நிபுணரின் வீரிய விருத்தி மருந்து கேட்லாக் உண்டு.

ஊடலிலிருந்து, உள்ளபடி சண்டையாகி, பிரதிதினம் சண்டை என வந்து, “இனி உன் முகத்திலேயே நான் விழிக்க மாட்டேன் போ” எனக் கண்டிப்பாகச் சொல்லிவிட்டு, வீடு வந்த கோமளம், ராவ்பகதூரைப் பிறகு கண்ணெடுத்தும் பார்ப்பதில்லை. அவரும் யோகத்தில் இறங்கிவிட்டார். கீதையின் சாரத்தில் மூழ்கிவிட்டார்.
* * *
‘லிங்கம்’ என்றாள் மெல்ல, அந்த மாது. குல தேவதையை நோக்குவதைப் போலப் பார்த்தான் லிங்கம்!
“கோபமா? இந்த நேரத்தில் இங்கு ஏன் வந்தேன்” எனக் கேட்டாள் கோமளம். “கோபமா! எனக்கா! வருமா கோ...” அதற்கு மேல் அவனால் பேசமுடியவில்லை; நாக்கிலே ஒருவிதமான பிசின் வந்துவிட்டது.

“சரி! நான் ஒன்று சொல்கிறேன் கேட்கிறாயா, கேட்பாயா, மாட்டாயா?” என்று கொஞ்சினாள் கோமளம்.

தலையை அசைத்தான். தன்னை மறந்த லிங்கம். காதிலே மந்திரம் ஓதுவதைப் போல ஏதோ சொன்னாள் மாது. லிங்கத்தின் முகத்திலே ஒரு மருட்சி ஏற்பட்டது. “பைத்தியமே! பயமா?” என்று புன்சிரிப்புடன் கேட்டாள் கோமளம்.

அந்தப் புன்சிரிப்பு, அவனை ஒரு வீரனாக்கிவிட்டது.

“எனக்கா பயம்?” என்று கூறினான், “நான் போகட்டுமா. அண்ணா எழுந்து விடுவாரோ என்று பயம்” என்றாள் கோமளம், லிங்கத்தின் தவடையைத் தடவிக் கொண்டே.

கண்கள் திறந்திருந்தும் லிங்கத்துக்குப் பார்வை தெரிய வில்லை.

“செய்” என்று ஈனக்குரலில் பதில் சொன்னான். சரேலெனக் கோமளம் வெளியே சென்றுவிட்டாள். லிங்கம் மறுபடியும் கண்களைத் துடைத்துக் கொண்டு பார்த்தான்-, அவ்வளவும் கனவா நினைவா என்று. தாடை சொல்லிற்று அவனுக்கு நடந்தது கனவல்ல, உண்மைதான் என்று! அந்தக் கொடி இடையாள் கோமளம், அவன் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்துவிட்டுப் போனாள். அந்த முத்திரை இருந்தது அவன் கன்னத்திலும்; அதைவிட அதிகத் தெளிவாக அவன் மனத்திலும்.
உலகம் ஒரு துரும்பு இனி! ஆபத்து ஓர் அணு அவனுக்கு. கோமளத்தின் முத்தம் அவனுக்கு ஒரு கவசம்! ஒண்டி ஆளாக இருப்பினும், உலகம் முழுவதையும் எதிர்க்கலாம் என்ற தீரம் வந்துவிட்டது.

மங்கையரின் மையல், மனிதனுக்கு உண்டாக்கும் மன மாற்றந்தான் என்னே!

என்ன சொல்லிவிட்டுப் போனாள் தெரியுமோ கோமளம்! தனது கணவனை எப்படியாவது அடித்துக் கொன்று விட வேண்டுமென்று சொன்னாள். ஏன்? ராவ்பகதூர் உயில் எழுதி வைத்திருந்தார்; தனக்குப் பிறகு தன்சொத்து, கோமளத்துக்கு என்று. சொத்து கிடக்கிறது; ஆனால் ராவ் பகதூர் செத்தபாடில்லை. கோமளம் எப்படியாவது அவரை ஒழித்துவிட்டால், பணம் கிடைக்கும். படாடோபமாக வாழலாம் என்பது கோமளத்தின் எண்ணம். அதற்காகத் தனது கணவனைக் கொல்ல லிங்கத்தையே கத்தியாக உபயோகித்தாள்.

“அவர் ஒருவர் குத்துக்கல் போல இருப்பதுதான் நமக்குள் தடையா இருக்கிறது. அவர் ஒழியட்டும்; உடனே நாம் உல்லாசமாக வாழலாம்” என்று கூறினாள் கோமளம்.

லிங்கம் அது கொலையாயிற்றே. அதைச் செய்தல் தவறாயிற்றே, ஆபத்தாயிற்றே என்பதைப் பற்றி எண்ணவே யில்லை.

கோமளம் மிக அழகி! தன்னை விரும்புகிறாள். ஆகவே அவள் சொல்வதைச் செய்ய வேண்டும் என்று மட்டுமே எண்ணினான்.

கொலை! குலை நடுங்கும் சொல்லாயிற்றே! ஆமாம்; ஆனால் கோமளமல்லவா சொன்னாள்-, அந்தச் சொல்லை! அதிலே பயமென்ன இருக்கிறது.

‘இவ்வளவுதானா நீ! கையாலாகாதவனே! இதோ நான் என்னை எடுத்துக் கொள் என்று சொன்னேன். என்னை உன்னிடம் வாழவொட்டாது தடுக்கும் ஒரு தடைக்கல்லை நீக்கு என்று சொன்னேன். அது முடியவில்லையே உன்னால்! நீயும் ஓர் ஆண்பிள்ளையா” - என்றல்லவோ கோமளம் கேட்பாள். அவள் பேச்சின் ‘குத்தலை’ச் சொல்லவா வேண்டும்.

கோமளம், நமக்கேன் இந்தத் தொல்லை? போலீசில் மாட்டிக் கொண்டால் வீண் தொந்தரவுதானே. நீயும் நானும் சிங்கப்பூர் போய்விடலாமே. அங்கு என் தங்கை புருஷன் பெரிய பணக்காரர். அவரிடம் எனக்கு வேலை கிடைக்கும். நாம் சுகமாக இருக்கலாமே - என்று கோமளத்திடம் கூறவேண்டுமென எண்ணினான் லிங்கம்.

அதை எண்ணும்போதே அவனுக்கு ஓர் இன்பம். நீல நிறக் கடல்! கப்பல் அசைந்து ஆடிச் செல்கிறது! அவனும் கோமளமும் சிங்கப்பூர் செல்கிறார்கள். லிங்கம் மோகன ராகம் பாடுகிறான். கோமளம் புன்சிரிப்புடன் அவனை நோக்குகிறாள்.

இதெல்லாம் அவனுடைய மனக்கண் முன்பு தோன்றிய படக்காட்சி. சரி! ஒருமுறை கோமளத்திடம் இந்த ஏற்பாட்டைச் சொல்லிப் பார்ப்பது என்று எண்ணினான். இப்போதே சொல்வது என எண்ணம் தோன்றிற்று. எழுந்தான், நேராக கோமளத்தின் படுக்கை அறைப்பக்கம் சென்றான்.

கோமளம் சிரித்த சத்தம் கேட்டது! மணி ஓசை போன்ற குரல்.

“மாட்ட வைத்துவிட்டாய் லிங்கத்தை” என்று மற்றொரு குரல் பேசுவதும் கேட்டது.

திகைத்து அப்படியே நின்றுவிட்டான் லிங்கம். படுக்கை அறையிலே அந்தப் பாதகி, பரந்தாமன் என்னும் வக்கீலின் மோட்டார் டிரைவருடன் கொஞ்சுகிறாள். “அந்தக் கிழத்தின்மீது இந்தக் கிறுக்கனை ஏவி விட்டேன். இவனுக்குத் தலைகால் தெரியவில்லை. அவ்வளவு ஆசை இந்தத் தடியனுக்கு என் மேலே. உனக்குத்தான் என் மேலே அவ்வளவு ஆசை கிடையாது” என்றாள் கோமளம்.

“பாவி! பாதகி! பழிகாரி! குடிகெடுக்கும் கோமளம் - திறடீ கதவை - ஐய்யா! வக்கீலய்யா, எழுந்திருங்கள்! வாருங்கள்; இங்கே வந்து பாருங்கள், இந்த நாசகாரி செய்யும் வேலையை. டேய், பரந்தாமா, வாடா வெளியே! மோட்டார் ஓட்டறயா மோட்டார். கோமளம்! நான் தடியனா, கிறுக்கனா, வெறியனா, திற கதவை. ராவ் பகதூரைக் கொல்லச் சொன்னாயே உன் கழுத்தை ஒடித்துவிட்டு மறுவேலை பார்க்கிறேன்...” என லிங்கம் ஆவேசம் வந்தவன்போல அலறினான். வீடு பூராவும் அமர்க்களமாகிவிட்டது. அண்டை எதிர்வீட்டுக் கதவுகள் திறக்கப் பட்டன. அறையைத் திறந்துகொண்டு பரந்தாமன் பயந்து கொண்டே வெளியே வந்தான். அங்கொரு கட்டை கிடந்தது. தூக்கினான லிங்கம் அதனை. கொடுத்தான் ஓர் அடி பரந்தாமன் தலைமேல். இரத்தம் குபீரென வெளியே வந்தது. கோமளம் கோவெனக் கதறினாள். வக்கீல் வாயிலே அறைந்து கொண்டார். தெருமக்கள் கூடிவிட்டனர்.

ஆ! ஆ! என்ன அநியாயம்! அடே லிங்கம், கொலைகாரா! பிடி, உதை, அடி! போலீஸ், போலீஸ்!!
எல்லோரும் லிங்கத்தின் மீதே பாய்ந்தனர்.
* * *

“நான் விடியற்காலை வெளியே போகவேண்டுமென மோட்டார் டிரைவரை இங்கேயே இரவு படுத்திருக்கச் சொன்னேன். அவனை அநியாயமாக இந்தத் தடியன் அடித்துப் போட்டு விட்டானே” என்றார் வக்கீல்.

“நடு இரவில் என்னை வந்து எழுப்பி, தகாத வார்த்தைகள் பேசினான். நான் கூவினேன்; பரந்தாமன் ஓடிவந்தான். இந்தப் பாவி அவனை அடித்துவிட்டான்” என்றாள் கோமளம்.

பரந்தாமன் கோர்ட்டுக்கு வர முடியவில்லை. அடிபட்ட 5 நாளில் அவன் ‘அந்த லோகம்’ போய்விட்டான். லிங்கம் ரிமாண்டில் இருந்தான்.

வழக்கு முடிந்தது. ஐந்து வருடம் கடுங்காவல் தண்டனை கிடைத்தது லிங்கத்துக்கு. அந்த நேரத்தில் கோர்ட்டில் வந்திருந்த கோமளத்தை அவன் பார்த்த பார்வை அவளை அப்படியே அலற வைத்துவிட்டது.

சிறையினின்று வெளிவரும்போது, லிங்கம் என்னென்ன எண்ணினான். அவன் மனம் இருந்த நிலை என்ன என்பதைப் பற்றி விவரிப்பதென்பது முடியாது. அது மிக மிகக் கஷ்டம். கூண்டிலிருந்து விடுபட்ட கிளி, நீரில் மூழ்கிக் கரை ஏறியவன், சிறையினின்று வெளிவந்தான் ஆகியோரின் மனநிலையைப் படமெடுப்பது முடியாத காரியம்.

கடலூர் மூன்று ஆண்டுகளுக்குள் எப்படி எப்படி மாறி விட்டதோ! வக்கீல் என்ன ஆனாரோ! அந்த வம்புக்காரக் கோமளம் என்ன ஆனாளோ? பாபம்! பரந்தாமனின் குடும்பம் என்ன கதியில் இருக்கிறதோ? தனது நண்பர்கள் என்ன எண்ணுகிறார்களோ, பேசுவார்களோ, கொலைகாரன் ஜெயிலுக்குப் போய் வந்தவன் என்று தன்னிடம் பேசவும் வெட்கப்படுவார்களோ என்று எண்ணினான்.

இனி பிழைப்பிற்கு வேறு மார்க்கம் வேண்டுமே. ஏதவாது கூலி வேலை செய்தாவது பிழைக்க வேண்டும். வயிறு ஒன்று இருக்கிறதே, என்ன செய்வது. ஆனால், யார், கொலை செய்த, ஜெயிலுக்குப் போய்வந்த லிங்கத்தை நம்பி வேலைக்கு வைத்துக் கொள்ள முடியும்.

செத்த மனிதனாக்கிவிட்டாளே பாவி. என் தந்தை தன் பொருளைப் புரோகிதப் புரட்டுக்கு அழுதார், நான் என் வாழ்வை இந்தப் பொல்லாத கோமளத்தின் பொருட்டுப் பாழாக்கிக் கொண்டேனே. அவள் பார்வையே எனக்கு நஞ்சாகி விட்டதே என லிங்கம் எண்ணி எண்ணிப் பரிதவித்தான். பாபம்! அவன் நிலைதான் உள்ளபடி என்ன? அன்று பொழுது போவதற்குள், கடலூரை ஒரு சுற்று சுற்றினான். பல பழைய நண்பர்களைப் பார்த்தான். சேதிகள் சொன்னார்கள் ஆனால் ஒருவர்கூட, தோழமை கொள்ளவில்லை.

“அடே! பாவி, லிங்கம். வெளியே வந்துவிட்டாயா? சரி! இனிமேலாகிலும், ஒன்றும் தப்பு தண்டா செய்யாமல், ஏதாகிலும் வேலை செய்து பிழை” என்றும்,

“ஜாக்கிரதை லிங்கம், ஊரிலே இனி எங்கே என்ன நடந்தாலும் உன்பாடுதான் ஆபத்து. போலீசார் உன்மீது எப்போதும் ஒரு கண் வைத்தபடிதான் இருப்பார்கள்” என்றும்.

“நீதான் அந்த லிங்கமா! மறந்துவிட்டேன். சரி! கொஞ்சம் ஜாலியாக நான் வெளியே போகிறேன். என் வீட்டுக்கு மட்டும் வராதேயப்பா” என்றும்,

“வேலையாவது, கீலையாவது, மாடு போலே உழைக்கிறேனென்றாலும் வேலை எங்கேயப்பா இருக்கிறது. என்னைப் போன்றவனுக்கு வேலை கிடைக்கவில்லை என்றால் உன்னை யார் கூப்பிடப் போகிறார்கள்” என்றும், அவரவர் எண்ணத்திற்கு ஏற்றபடி பேசினர். ஒரு சிலர் காசு கொடுத்தனர். அன்றைய பொழுது போயிற்று. தனது உற்றார் உறவினர் முகத்தில் விழிக்க அவனுக்குத் துணிவில்லை. அன்றிரவு சாவடியில் படுத்துக் கொண்டு, தான் கேட்ட சேதிகளை எண்ணிப் பார்த்தான்.

என்ன அச் சேதிகள்?
-----------
கோமளத்தின் கோபம் (2)

வக்கீல் வரதாச்சாரி, எங்கோ பெரிய உத்தியோகத்திற்குப் போய்விட்டார். ராவ்பகதூர் தமது சொத்தைக் கோமளத்துக்கு எழுதி வைத்துவிட்டு ‘கண்ணன் திருவடி’ சேர்ந்தார். கோமளம், தனிப்பங்களா எடுத்துக் கொண்டு எங்கோ, சென்னையில் இருப்பதாகவும்-, கோமளத்தின் படம் அடிக்கடி பத்திரிகையிலே வருவதாகவும் சேதி. பரந்தாமன் வீட்டார் பரிதாப நிலைமையில் இருப்பதாகவும் கேள்விப்பட்டான்.

அன்று இரவு முழுவதும் புரண்டு புரண்டு படுத்தான். மணிக்கு மணி வார்டர் கூப்பிடுவது போன்ற கவனம்.

பொழுது புலர்ந்ததும், நேராகப் பரந்தாமன் இருந்த வீட்டிற்குச் சென்றான்.

பரந்தாமனின் குழந்தைகள் வெளியே புழுதியில் புரண்டு கொண்டிருந்தன. அந்த ஏழைக் குழந்தைகளுக்கு அதுதான் விளையாட்டு. கடையிலே பொம்மைகளும், ஊதுகுழலும் இருக்கின்றன. ஆனால், அம்மா காசு கொடுத்தால்தானே! அம்மாவைக் காசு கேட்டால்தான் போட்டு அடித்துத் தம்மை அழவைத்துவிட்டுத் தானும் அழுகிறார்களே. காசு இல்லாத விளையாட்டுச்சாமான், கல்லும், மண்ணுந்தானே! ஆகவேதான் குழந்தைகள் புழுதியில் புரண்டு விளையாடின. பரந்தாமன் இறந்த பிறகு அவனுடைய மனைவி மரகதம் சிறு பலகாரக்கடை வைத்துக் கொண்டு காலந்தள்ளி வந்தாள்.

“அம்மா! யாரோ ஒரு ஐயா வந்தாங்க” என்று கூவினான் குப்பன். அவன்தான் மரகத்தின் மூத்த மகன்.

“யாரய்யா! என்ன வேண்டும்? இட்டிலி சூடா இருக்கிறது” என்று கூறிக்கொண்டே வெளியே வந்த மரகதம், லிங்கத்தைக் கண்டாள். அப்படியே ஸ்தம்பித்து நின்றாள் ஒரு விநாடி. உடனே கோவென ஆத்திரத்துடன் கத்தினாள். “ஆ! பாவி! என் முகத்திலும் விழிக்க வந்துவிட்டாயா! என் குடியைக் கெடுத்தவனே. இங்கேன் வந்தாய்? டே குப்பா, சின்னா, சரசு, அங்கே போக வேண்டாம். அந்தக் கொலைக்காரப்பாவி, நம்மையும் ஏதோ செய்யத்தான் இங்கே வந்தான். ஜெயிலிலே இருந்து ஓடிவந்து விட்டான். கூப்பிடு போலீசை” எனக் கூக்குரலிட்டாள்.

லிங்கம் அந்தச் சோகக் காட்சியைக் கண்டு தானும் அழுதான். பாவி நான் செய்த பாவத்தின் பயனாக, இந்தப் பாவையும் அவள் மக்களும் வாடுகின்றனரே, என் செய்வேன்! என்னைச் சித்திரவதை செய்தாலும் தகுமே என எண்ணினான் லிங்கம். பிறகு, மரகதத்தை நோக்கி, “அம்மா! நான் செய்தது தப்புதான்...” என்று சமாதானம் சொல்வதற்குள், மரகதத்தின் கூச்சலைக் கேட்டு அங்குக் கும்பல் கூடிவிட்டது. “இங்கேண்டா வந்தாய். என்னா தைரியண்டா இவனுக்கு. போடா வெளியே . கூப்பிட்டு போலீசுகிட்ட கொடுக்கணும்” என்று பலர் மிரட்டினார்கள். லிங்கம் பதிலுக்கு ஒரு வார்த்தை பேசவில்லை. சிலர் அடித்தார்கள். பதிலுக்குக் கையைத் தூக்கவுமில்லை. அவர்கள் துரத்தத் துரத்த ஓடினான். அந்த இடத்தைவிட்டு ஓடி, பழையபடி சாவடியில் படுத்தான். படுத்து கண்கள் சிவக்குமளவு, தலை பளுவாகு மட்டும் தன் நிலையையும், தன்னால் பரந்தாமன் குடும்பம் பரிதவிப்பதையும் எண்ணி எண்ணி அழுதான். அழுது பயன் என்ன? அவனைத் தேற்ற யார் இருக்கிறார்கள். ஆம்! ஒரே ஒரு தங்கை, சிங்கப்பூரில் சீமாட்டியாக இருக்கிறாள்.

கொலைகார லிங்கத்துக்கு, ஒரு தங்கை இருப்பதைக் கூட உலகம் ஒப்புமோ ஒப்பாதோ! மேலும், தங்கை மணம் செய்து கொண்டு சிங்கப்பூர் போனது முதல் வீடு வருவதுமில்லை. கடிதம் போடுவதுமில்லை. தகப்பனார் இறந்தபோது சேதி கூட அனுப்பப்படவில்லை. “தெரியாமல் ஆச்சாரமற்ற அந்தப் பயலுக்குக் கிளியை வளர்த்துப் பூனையிடம் பறிகொடுத்ததைப் போலத் தந்துவிட்டேன். அவனும் என் முகத்தில் விழிக்கக்கூடாது. அந்தப் பெண்ணும் வரக்கூடாது, என் பிணத்தருகே” என்று கூறிவிட்டு இறந்தவர் லிங்கத்தின் தகப்பனார். அவருடைய புரோகிதப் பித்து, சீர்த்திருத்தவாதியான சுந்தரத்துக்குப் பிடிக்கவில்லை. சுந்தரம் மாமனாரைக் கடிந்து பேசலானான். ‘போக்கிரிப்பயல்! என்னமோ எல்லாம் தெரிந்தவன் போலப் பேசுகிறான்!’ என்று மாமானார் ஏசுவார்; காந்தா பாடு மிகக் கஷ்டமாகிவிடும். யார் பக்கம் பேசுவது. தகப்பனார் கூறும்போது, தன் கணவர் குற்றம் செய்வதாகத்தான் தோன்றுகிறது. கணவர் விஷயத்தை விளக்கும்போதோ, தகப்பனார் செய்வது ஆபாசம் எனத் தெரிகிறது. இந்தச் சில்லறைச் சண்டை முற்றி, கடைசியில் ஒருவர் முகத்தில் ஒருவர் இனி விழிப்பதில்லை என்று சண்டை போட்டுக் கொண்டு சுந்தரம், தன் மனைவி காந்தாவுடன் சிங்கப்பூர் சென்று, வியாபாரம் செய்து பெரும் பொருள் சேர்த்தான். கடைசிவரை விரோதம் நீங்கவில்லை; அவர்கள் தனியாகவே வாழ்ந்தனர்.

அவர்களை எண்ணினான் லிங்கம், அந்தச் சாவடியில் படுத்துக்கொண்டு.

எவ்வளவு பெரிய மாளிகையோ, என் தங்கை புருஷனுக்கு என்ன அழகான மோட்டாரோ, எத்தனை குழந்தைகளோ, ஒன்றும் எனக்குத் தெரிய மார்க்கமில்லையே! நான் அங்குச் செல்லலாமா? சென்றால் என்னைக் கவனிப்பார்களோ, அன்றி கொலை செய்தவனுடன் கோடீசுவரனான நான் பேச முடியாது எனச் சுந்தரம் சொல்லிவிட்டால் என்ன செய்வது என்றும் எண்ணினான்.

மேலே பார்த்தான் ஒரு கயிறு கட்டித் தொங்கவிடப் பட்டிருந்தது. அவனையும் அறியாது அவன் கைகள் நெஞ்சருகே சென்றன.

தற்கொலை செய்து கொள்வதே நல்லது. நான் ஏன் இருக்க வேண்டும்? பொருள் இழந்தேன். பொன் இழந்தேன், பெற்றோரை இழந்தேன். கொலை செய்தேன், சிறைபுகுந்தேன், இன்று சீந்துவாரில்லை. வேலையில்லை, வாழ வகையில்லை. மரியாதை கிடைப்பதில்லை. மண்தின்று வாழ்வதா! பிச்சை எடுத்துப் பிழைப்பதா? என் செய்வது? அலையில் அகப்பட்ட சிறு குழந்தை, நெருப்பில் விழுந்த புழு, ஆடிக் காற்றில் சிக்கிய பஞ்சு போலவன்றோ எனது நிலை இருக்கிறது. ஏன் நான் வாழவேண்டும்? இறப்பதே நல்லது. இன்றிரவே இந்தச் சாவடியே சரியான இடம். இதோ இக்கயிறே போதும், என் வகையற்ற வாழ்வை ஒரு முடிவுக்குக் கொண்டு வர!

கோமளம், பங்களாவிலே வாழுகிறாள்; அவள் தூண்டு தலால் கெட்ட நான் சாவடியில் புரளுகிறேன்.

பரந்தாமன் ஏன் அடிபட்டு இறந்தான். அவன் குடும்பம் படும்பாட்டைப் பார்த்தால் வயிறு ‘பகீரென’ எரிகிறது.

வக்கீலாம், வக்கீல். கோமளத்தின் சேட்டைகளைத் தெரிந்தும் கண்டிக்காது இருந்து வந்தார். அவருக்குப் பெரிய உத்தியோகம் கிடைத்ததாம். எனக்கோ வேலையில்லை.

‘நான் ஒரு கொலைகாரன்! ஜெயில் பறவை! தீண்டாதான். நடைப்பிணம்! கண்டவர் வெறுக்க, காலந்தள்ளுவதா? ஏன் இந்தப் பிழைப்பு, இன்றே முடித்துவிடுகிறேன் என் சோகமான வாழ்க்கையை’ என்று தீர்மானித்தான். விநாடிக்கு விநாடி அவனது உறுதி பலப்பட்டது. வாழ்க்கையில் வெறுப்பு அதிகரித்தது. அதுமட்டும் பகற் பொழுதாக இல்லாதிருந்தால், அவன் அப்போதே தற்கொலை செய்து கொண்டிருந்திருப்பான். பாழாய்ப்போன சூரியன் எப்போது மறைவானோ, என் வாழ்வும் எப்போது மறையுமோ என்று வாய்விட்டுக் கூறினான். படுத்துப் புரண்டான் சாவடிப் புழுதியிலே. சிவந்த கண்களிலே நித்திரை புகுந்தது. அயர்ந்து தூங்கிவிட்டான், துர்ப்பாக்கியமே உருவென வந்த லிங்கம்.

மணி பனிரெண்டுக்கு மேலாகிவிட்டது. நாகரிக உடை அணிந்த ஓர் ஆள் அங்கு வந்தான். படுத்துக் கிடக்கும் லிங்கத்தைத் தட்டி எழுப்பினான். கண்களைத் திறந்தான் லிங்கம். தனது நண்பர்களிலே ஒருவனும், முன்னாள் தன்னை வீட்டுக்கும் வரவேண்டாமெனக் கடிந்துரைத்தவனுமான, வீரப்பன் சிரிப்புடன் நிற்பதைக் கண்டான்.

“லிங்கம்! எழுந்திரு. இது என்ன, புழுதியிலே படுத்துப் புரளுகிறாயே. இதோ பார்! நான் உனக்கொரு நல்ல சேதி கொண்டு வந்திருக்கிறேன்! இனி நீ பெரிய சீமான்” என்றான்.
லிங்கத்துக்கு அவ்வளவு சோகத்திலும் சிரிப்புத்தான் வந்தது. “இவன் யாரடா பித்தன்!” என்று எண்ணினான்.

“உன் தங்கை புருஷர் சிங்கப்பூரிலே இறந்துவிட்டாராம். அதற்கு இரண்டு மாதத்திற்கு முன்பே உன் தங்கையும் பிரசவ வேதனையால் இறந்துவிட்டதாம். ஒரு கோடி ரூபாய்க்கு மேற்பட்ட சொத்தை உனக்கு எழுதி வைத்திருக்கிறார் சுந்தரம் பிள்ளை. இதோபார், பத்திரிகையை” என்று வீரப்பன் கூறினான். பத்திரிகையைப் பிடுங்கிப் பார்த்தான் லிங்கம்.

‘உண்மைதான்! வீரப்பன் சொன்னது நிஜமே!’ என்பது விளங்கிற்று.

ஒரு கோடி ரூபாய்க்கு மேற்பட்ட சொத்து வந்து விட்டது, கைதி லிங்கத்திற்கு! கொலைகார லிங்கம் கோடீசுவரர் இனி!

பணம்! பணம்! பஞ்சையாய், பதராய், பலராலும் தூற்றப் பட்டு, பட்டினி கிடந்து படுத்துப் புரண்ட லிங்கம் இனி பணக்காரன். ஒரு கோடி ரூபாய்! ஒரு முழங்கயிற்றால் உயிரைப் போக்கிக் கொள்ள முடிவு கட்டிய நேரத்திலே, ஒரு கோடி ரூபாய் வருகிறது. கயிறு ஏன்? கவலை ஏன்? வெறுப்பு ஏன்? தற்கொலை ஏன்?

“இதோ ஒரு கோடி ரூபாய். உலகம் இனி உன் காலடியில். உற்றார் உறவினர் இனி உன் சொற்படி நடப்பர். இதோ உன்னை ஒரு நாளைக்கு முன்பு வெறுத்த வீரப்பனைப் பார்! விஷயம் அறிந்ததும் வந்துவிட்டான், உன்னைத் தேடிக் கொண்டு. எழுந்திரு! எழுந்திரு லிங்கம்! நான் இருக்கிறேன் உனக்குத் துணை. இந்த நானிலம் முழுதும் இனி உன் அடிமை” என்று கோடி ரூபாய் சொல்லாமற் சொல்லிற்று.

கோடி ரூபாய்க்குச் சொந்தக்காரனான லிங்கம் வீரப்பனுடன், சாவடியை விட்டுக் கிளம்பினான்.

ஊரார் துரத்தப்பட்டு ஓடிவந்து சாவடியில் படுத்த லிங்கம் ஒரு கோடி ரூபாயின் சொந்தக்காரனாகி, வீரப்பனுடன் சாவடியை விட்டுப் புறப்பட்டு வீரப்பன் மாளிகை சென்றான்.

வீரப்பன் வீடு சென்ற லிங்கம் அங்குத் தங்கியபடியே, சிங்கப்பூர் சேதியின் முழுவிவரமும் தெரிந்து கொண்டான். பிரபல வக்கீல்கள் வலிய வந்து, எப்படி, அந்தச் சொத்தை எடுத்துக் கொள்வதென்பதையும், என்ன செய்வதென்பதையும் சிரித்த முகத்துடன் கூறினர். வீரப்பன், வக்கீலை அழைத்துக் கொண்டு தானே சிங்கப்பூருக்குச் சென்று வருவதாகச் சொன்னான். சரி என ஒப்பினான் லிங்கம். ஆனால் உடனே ஒரு பத்தாயிரம் தேவை என்றான். சேட்ஜி அழைக்கப்பட்டார். “பத்தாயிரம் போதுமா பிள்ளைவாள், இருபதினாயிரம் தரட்டுமா” என்று கேட்டபடியே, ஒரே கையெழுத்தைப் பெற்றுக்கொண்டு, பத்தாயிரம் ரூபாய் தந்தான்.

ஆமாம்! ஒரு கையெழுத்து என்றாலும் அது ஒரு கோடீசு வரரின் கையெழுத்தல்லவா?

வீரப்பா, இனி மாதமொன்றுக்கு உனக்கு 200 ரூபாய் சம்பளம். பரந்தாமன் குடும்பத்துக்கு மாதா மாதம் 100 ரூபாய் தரவேண்டும். கோடி ரூபாயோ, இரண்டு கோடியோ, எந்த இழவோ அது எனக்குத் தெரியாது. அதனை மேனேஜ் செய்ய வேண்டியது நீ. நான் கேட்கும்போது எனக்குப் பணம் வேண்டும்.” என்று லிங்கம் கூறினான்.

வீரப்பனும் ஒரு வக்கீலுமாகச் சிங்கப்பூர் சென்றனர், செல்வத்தைத் திரட்டிக் கொண்டு வர.

லிங்கம், பத்தாயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு சென்னை சென்று, தனி விடுதியில் சமையற்காரன், வேலை ஆள் அமர்த்திக் கொண்டு வாழலானான். மோட்டார் வாங்கியாகி விட்டது.

வாழ்க்கையின் இன்பத்திற்கு வேண்டிய சாதனங்கள் எல்லாம் இருந்தன. உண்ண உணவும், இருக்க இடமும் இன்றித் தவித்தவன், கோடீசுவரனானதும் அதிக ஆனந்தம் அடைவதே இயல்பு என்ற போதிலும், லிங்கத்துக்கு மனோபாவம் அப்படியாகவில்லை.
அடிக்கடி பெருமூச்சு விடுவதும், ‘இது என்ன உலகம்! மின்னுவதைக் கண்டு மயங்குகிறது. மோசக்காரர் வலையில் இலேசாக விழுகிறது. பாடுபடுவோரைப் பாதுகாப்பதில்லை’ என்று முணுமுணுப்பான்.

எங்கே அந்தக் கோமளம்? அவளைக் காண வேண்டும். கண்டு, பழிக்குப்பழி வாங்கி, பாதகி என்று கேட்க வேண்டும். பரந்தாமனின் மனைவியின் பாதத்தில் இவள் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும்.

ஏன் இதைச் செய்ய முடியாது? கோடி ரூபாய் இருக்கும் போது இது கூடவா கஷ்டம். பார்க்கிறேன் ஒரு கை என்று தீர்மானித்தான் லிங்கம்.

ஒரு தினம், வழக்கப்படி லிங்கம் தனது அழகிய மோட்டாரிலே மாலைக் காற்று வாங்கப் போனான். காற்றிலும் கடுவேகமாக வேறொரு மோட்டார் வந்தது. தனது மோட்டரை நொடியில் தாண்டிற்று. பார்த்தான் லிங்கம்.

“டிரைவர், யாருடைய கார் அது?” என்று கேட்டான்.

“அது குமாரி கோமளாதேவி என்பவரின் கார்” என்றான்.

“விடு வேகமாக அதன் பின்னால். உம்! சீக்கிரம்” என்று உத்தரவிட்டான்.

கோமளத்தின் காரைத் துரத்திக் கொண்டு கோடீசுவரனின் மோட்டார் ஓடிற்று. மோட்டார் டிரைவர் அலுக்கிற நேரத்திலே, கோமளத்தின் கார் ஒரு சாலை ஓரமாக நின்றது. லிங்கத்தின் காரும் நிறுத்தப்பட்டது. கோமளம், காரிலிருந்து இறங்கினாள். கூடவே ஒரு குச்சு நாய் குதித்தது. கோமளம் கீழே இறங்கிய உடனே புன்னகையோடு, அங்குமிங்கும் நோக்கினாள்.
தன் மோட்டாரில் அமர்ந்தபடியே லிங்கம் அவளைப் பார்த்தான். மூன்று ஆண்டுகள் அவள் அழகையும் அலங் காரத்தையும் அதிகப்படுத்தினதைக் கண்டான். மூன்று ஆண்டுகள் ஆயினவே யொழிய அவள் பருவத்திலே மூன்று அல்ல; பத்து ஆண்டுகள் குறைந்தவள் போலவே காணப்பட்டாள்.

கடலூரில் இருந்ததைவிட அதிக அலங்காரம்! குலுக்கு நடையிலே விசேஷ அபிவிருத்தி. கொடிபோல வளைந்து நிற்பதிலே ஒரு புது முறை கற்றுக் கொண்டிருந்தாள் கோமளம். மோட்டார் கதவின் மீது சாய்ந்தபடி நின்றாள். அந்தக் குச்சு நாய், அவளுடைய தொடை மீது தாவிப் பாய்ந்தது. ‘சீச்சி, சோமு! கீழே படு. உம்... ஜாக்கிரதை” என்று கொஞ்சினாள் கோமளம். குச்சுநாய் மேலும் ஒரு குதி குதித்து அவள் முகத்தைத் தொட்டது.

‘சோமு! கண்ணான சோமு!’ என்று மறுபடியும் கொஞ்சி அதனை முத்தமிட்டாள் கோமளம்.
அதே நேரத்தில், லிங்கம் அவள் எதிரில் வந்து நின்றான்!

“ஒரு முத்தம் என்னைக் கெடுத்தது போல, சோமுவையும் கெடுத்துவிடப் போகிறது” என்று கூறினான் சிரித்துக் கொண்டே.

கோமளத்துக்குத் தூக்கிவாரிப் போட்டது போலாகி விட்டது. நாயைக் கீழே போட்டுவிட்டு, மிரள மிரள லிங்கத்தைப் பார்த்தாள்.

“யார்...! லிங்கமா... நீயா...?” என்று கேட்டாள்.

“நானேதான் தேவி! உன் லிங்கந்தான். உன் அழகால் மதிமோசம் போனவனே” என்று புன்சிரிப்புடன் லிங்கம் கூறினான்.

அவன் மிரட்டி இருந்தால், கோபித்துக் கொண்டிருந்தால், அடிக்க வந்திருந்தால்கூட கோமளம் பயந்திருக்கமாட்டாள். ஆனால் அவனது புன்சிரிப்பு அவளுடைய மனத்திலே ஈட்டி போலப் பாய்ந்தது. துளியும் கடுகடுக்காது, மிகச் சாவதானமாக அவன் பேசிய பேச்சு அவளுக்குப் பெரும் பயத்தை உண்டாக்கி விட்டது. தன்னால் சிறைக்கு அனுப்பப்பட்டவன் தன்மீது சீறி விழாது, தன் எதிரில் நின்று சிரிக்கும்போது இது லிங்கமா? அவனது ஆவியா’ என்று சந்தேகிக்கும்படித் தோன்றிற்று.

முகத்திலே பயங்கரமும், அசடும் தட்டிற்று. நாக்கிலே நீரில்லை. தொண்டையிலே ஒரு வறட்சி. தன்னையும் அறியாமல் கைகால்கள் நடுங்கின.

சோமு, கோமளத்தின் காலடியில் படுத்தது. சோமு, “என்னைப் போலவே உன்னிடம் மிக அடங்கி இருக்கிறான். பாபம்! அவனுக்கு என்ன கதியோ” என்றான் லிங்கம்.

கோமளத்தின் கண்களிலே நீர் ததும்பிற்று. “குமாரி கோமளாதேவி! வருந்தாதே இதற்குள். நான் உன் காதலன் லிங்கமல்லவா! உன்னுடைய எத்தனையோ காதலரில் நானும் ஒருவன். என் பேச்சு உனக்குக் கசப்பாக இருக்கிறதா? இதோ பார்! என்னிடம் பணமும் இருக்கிறது. உன்னுடைய நாகரிக வாழ்க்கைக்குப் பணம் வேண்டாமா! அதற்குத்தான் என் போன்றவர்களிடம் பணம் வந்து சேருகிறது. என்ன வேண்டும் உனக்கு. புதுமோஸ்தர் டோலக்கு, வைரத்தில் தேவையா? பூனாகரை பட்டுச் சேலை வேண்டுமா? உதட்டுக்கு உன்னதமான சாயம் வேண்டுமா, பாரிஸ் நகரத்து செண்ட், இலண்டன் நகரத்து சோப், ஜெர்மனி மோட்டார், அமெரிக்க தேசத்து அத்தர், எது வேண்டும் கோமளம்? முன்பு நான் உன் வீட்டு வேலைக்
காரனாக இருந்தேன். எனவே என் காதலுக்காக என் இதயத்தை, உழைப்பை, உணர்ச்சியை உனக்குத் தத்தம் செய்தேன். இன்று நான் பணக்காரன். மானே, ஒரு கோடிக்கு மேல் என்னிடம் இருக்கிறது. கொட்டுகிறேன் உன் காலடியில். அதன்மீது நீ தாண்டவமாடு. என் மனத்தை மிதித்து என் வாழ்வைத் துவைத்த கோமளம் இன்று நீ எப்படிக் குமாரி கோமளாதேவியானாயோ அதைப் போலவே கைதியாக இருந்த நானும் கோடீஸ்வரனாகிவிட்டேன். என் நேசம் வேண்டுமா உனக்கு. நேரமிருக்குமா என்னையும் கவனிக்க. இதுவரை எத்தனை பேரை அடிமை கொண்டாயோ” என்று அடுக்கிக் கொண்டே போனான் லிங்கம். கோமளம் அழுதாள். கண்ணீர் தாடை வழியாக ஓடி வந்தது.

“அழாதே தேவி! மாலை எவ்வளவோ கஷ்டப்பட்டு முகத்தை நீ செய்து கொண்ட அலங்காரம் கெட்டுவிடும். உன் முக அலங்காரத்தை நம்பி, இங்கு எத்தனையோ பேர் வருவார்கள். அவர்கள் நல்ல காட்சியைப் பார்ப்பதைக் கெடுத்துவிடாதே. கண்களைத் துடைக்கட்டுமா?” என்று கிட்டே நெருங்கப்போகும் சமயம், “ஹலோ கோமளாதேவி” என்ற குரல் கேட்டது. கண்களை அவசர அவசரமாகத் துடைத்தபடியே, கோமளம் திரும்பினாள். லிங்கமும் பார்த்ததான்! ஆங்கில உடையுடன் வாயில் சிகரெட்டுடன், முகத்தில் புன்னகையுடன், 25 வயதுள்ள சீமான் வீட்டு வாலிபன் நிற்கக் கண்டான்.

“ஏதாவது இரகசியமா? நான் கெடுத்துவிட்டேனா?” என்றான் வாலிபன் கோமளத்தை நோக்கி. எப்படியோ புன் சிரிப்பை வரவழைத்துக் கொண்டு கோமளம், “ஒன்றுமில்லை பாஸ்கர், இதோ இவர் என் நண்பர், மிஸ்டர் லிங்கம்” என்று வந்தவனுக்கு லிங்கத்தை அறிமுகப்படுத்தி வைத்தாள். “இவர், சிங்காரச் சோலை ஜெமீன்தார் பாஸ்கர்; எனக்கு நண்பர்” என்று லிங்கத்திடம் கூறினாள் கோமளம்.

“ரொம்ப சந்தோஷம்” என்றான் லிங்கம். அந்தச் சொல், கோமளத்தின் இருதயத்தைப் பிளந்தது. பாஸ்கரின் முகத்தை மாற்றிவிட்டது. சிறிது நேரம் மூவரும் மௌனமாக நின்றனர். திடீரென, லிங்கம் உரக்கச் சிரித்தான். இருவரும் திடுக்கிட்டுப் போனார்கள்.

“மிஸ்டர் பாஸ்கர்! நாளை மாலை பார்க்கிறேன். குமாரி கோமளம்! நான் விடைபெற்றுக் கொள்கிறேன். உனக்குத் தான் தெரியுமோ நான் ‘பழிக்குப்பழி கொட்டி’ என்ற நாவல் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று. திடீரென ஒரு கருத்து வந்தது. உடனே போய் அதை எழுத வேண்டும்” என்று கூறிவிட்டு, அவர்களை விட்டுப் பிரிந்து, காரில் ஏறிக் கொண்டான். மோட்டாரும் அவன் தங்கியிருந்த விடுதியில் போய்ச் சேர்ந்தது.
* * *

ஒரு வாரம் வரையில், லிங்கம், பழைய பத்திரிகைகளைப் படிப்பதும், ஏதேதோ குறிப்பு புத்தகத்தில் எழுதிக் கொள்வதுமாக இருந்தான். யாராரோ அவனிடம் வந்து பேசிக் கொண்டிருந்தனர். ஒரு வாரத்திற்குப் பிறகு சரி! இனி பழிதீர்க்கும் படலம் நம்பர் 1 ஆரம்பமாக வேண்டியதுதான் என்று எண்ணினான்.

அன்றிரவு 10 மணிக்கு மேல் ஒரு முரட்டு மனிதன், லிங்கத்தைத் தேடிக் கொண்டு வந்தான். இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். 100 ரூபாய் பெற்றுக் கொண்டு அவன் போய்விட்டான்.
* * *

கடலூரை விட்டு சென்னைக்கு வந்த கோமளம், தனது கணவன் வைத்துவிட்டுப் போன சொத்தை முதலாக வைத்துக் கொண்டு ஆடம்பர அலங்கார வாழ்வு வாழ்வதையும் தனது தளுக்கால் பல பெரிய இடத்து மைனர்களை, ஜெமீன்தாரர்களை மயக்கிப் பணம் பறித்து, பெரும் செல்வம் தேடிக் கொண்டதோடு, ‘பெரிய மனிதர்களின்’ பழக்கத்தால் சமுதாயத்திலே மிக மதிக்கப்பட வேண்டியவர்களிலே ஒருத்தியாகக் கருதப்பட்டு, பத்திரிகைக்காரர்களால் புகழப்பட்டு, அரசியல் தலைவர்கள், பாங்கிக்காரர்கள், பெரிய வியாபாரிகள் ஆகியோருடன் சரிசமமான அந்தஸ்துடன் பழகத் தொடங்கிய சாதாரண கோமளம், குமாரி கோமளாதேவி எனக் கொண்டாடப்பட்டு சமூகத்தின் மணியாக ஜொலிக்கலானாள் என்பதைத்தான், லிங்கம் அந்த ஒரு வார காலத்தில் பல ஆதாரங்களைக் கொண்டு கண்டுபிடித்தான். பல ஒற்றர்களை ஏற்படுத்தி அவளுடைய மூன்று ஆண்டு அலுவலர்களையும் திரட்டி குறித்து வைத்துக் கொண்டான். பழைய பத்திரிகைகள் மூலமாக அவள் எவ்வளவு மதிப்புக்குரியவளாகக் கருதப்பட்டாள் என்பதும் தெரியவந்தது.
* * *

வாரந்தவறாது அவளது படம்! எந்த விருந்திலும் அவளுக்கு இடம்! எந்த அரசியல் கூட்டத்திலும் அவளுக்குச் செல்வாக்கு.

குமாரி கோமளா தேவிதான் சென்னைச் சீமாட்டிகள் சங்கத்தின் தலைவி, கலாபிமான மண்டலியின் காரியதரிசி, கீழ்த்திசைக் கலைக் கல்லூரியின் கௌரவ ஆசிரியை, ‘விழி மாதே’ என்னும் பத்திரிகையில் உதவி ஆசிரியை. ஆம்! அவள் இல்லாத இடமே இல்லை. அவளைக் கொண்டாடாத பேர் வழியில்லை.

பரந்தாமனின் கள்ளக் காதலி லிங்கத்தை சிறைக்கு அனுப்பிய காதகி, சென்னையின் சீமான்கள் - சீமாட்டிகள் உலகிலே ஜொலிக்கிறாள்.

லிங்கம், அவளுடைய உண்மை உருவை வெளிப்படுத் துவதென்பதே அசாத்தியம். யார் நம்புவார்கள். சொன்னால் இவன் ஒரு பித்தன் என்று கூறிவிடுவார்கள். அவ்வளவு உயர்ந்த இடத்தில் தங்கி நின்றாள். உருவத்தால் பெண்ணாகவும், உணர்ச்சியால் பேயாகவும் வாழ்ந்து வந்த கோமளம்.
-----------
கோமளத்தின் கோபம் (3)

அவளுடைய செல்வமும் செல்வாக்கும் அழிக்கப்பட்டா லொழிய, கோமளத்தை, என்னால் பழிக்குப்பழி வாங்க முடியாது. எனவே எனது முதல் வேலை, கோமளத்தின் பணக் கொட்டத்தை அடக்குவதுதான்.

ஆம்! முள்ளை முள் கொண்டேதான் எடுக்க முடியும். பணத்தைப் பணங்கொண்டே அடக்க முடியும். பார்க்கிறேன் ஒருகை. அவளைப் பராரியாக்கினால்தான் அவள் ஒரு பாதகி என்பது விளங்கும். இல்லையேல் நான்தான் பித்தனெனப் பேசப்படுவேன். எனவே பொறு மனமே பொறு என்று எண்ணி, ஒரு முடிவுக்கு வந்தான், வஞ்சந் தீர்த்துக் கொள்ள வேண்டுமென சென்னைக்கு வந்த லிங்கம்.

எனக்கும் அவளுக்கும் வயது எவ்வளவோ வித்தியாசந் தான்! என்னைவிடக் குறைந்தது 10 ஆண்டுகளாவது அவள் பெரியவளாகத்தான் இருப்பாள். என்றாலும் எனக்கென்னவோ அவள் மீது ஆசை அவ்வளவு இருக்கிறது.”

“எதைக் கண்டு நீ ஆசைப்பட்டாய் தம்பி!”

“எதைக் கண்டா? என்ன அப்பனே, அப்படிக் கேட்கிறாய்? உனக்குக் கண்ணில்லையா! அவளுடைய பார்வை எப்படிப் பட்டது? வாட்டுகிறதே என்னை. அவள்மேனி என் மனத்தை உருக்குகிறதே. அவள் நடையழகை என்னென்பேன். உடை அழகை என்னென்பேன்? உடற்கட்டு உள்ளத்திலே கொள்ளை எண்ணத்தைக் கிளப்புகிறதே. அவள் பேச்சு எனக்குத் தேனாக இருக்கிறதே. நீ பேசிப்பார், அவளோடு. தெரியும் உனக்கு அந்த இன்பம். வேண்டாம் நண்பா, பேசக்கூடாது. என் கண் எதிரே வேறு ஆளுடன் அவள் பேச நான் சகியேன். கண்களைச் சற்றுக் குறுக்கிக் கொண்டு கருத்துத் திரண்டு வளைந்துள்ள புருவத்தைச் சிறிதளவு அசைத்தபடி அவள் பேசும்போது நீ கண்டால் தெரியும், அந்தக் காட்சியின் அழகை! என்னை அந்தச் சிங்காரி சொக்க வைத்து விட்டாள்.

ஆம்! அதிலே அவள் மகா கைகாரி!”

“நண்பா, அப்படிச் சொல்லாதே! அவளை அடைய நான் பட்டபாடு உனக்கென்ன தெரியும். இவ்வளவு பழக்கம் ஏற்பட நான் எத்தனை நாட்கள், வாரங்கள் காத்துக் கொள்டிருந்தேன் தெரியுமோ, மான் குட்டி போலவன்றோ அவள் துள்ளி ஓடினாள்! நான் முதன்முதல் அவள் கைகளைப் பிடித்து இழுத்தபோது அதை எண்ணும்போதே என் உள்ளம் எப்படி இருக்கிறது தெரியுமா?”

“வேதாந்தம் பேசாதே நண்பா!”

“வேதாந்தம் அல்ல தம்பி, அனுபவம்! நான் பட்ட பாடு. உனக்கு வர இருக்கும் ஆபத்து கேள் தோழா! அவளை நம்பாதே. அவள் சிரிப்பிலே சொக்கி வீழ்ந்து சிதையாதே, அவளைத் தீண்டாதே. அவள் ஒரு விபச்சாரி. விபச்சாரியின் தன்மையோடு கொலைகாரியின் மனம் படைத்தவள் அவள்”

பாஸ்கரன், ‘பளீர்’ என ஓர் அறை கொடுத்தான் லிங்கத்தின் தாடையில்.

‘கோமளத்தைக் குறைகூறும் குண்டனே. உன்னைக் கொல்வேன். என் எதிரில் பேசாதே! இனி முகத்தில் விழிக்காதே. போ வெளியே எழுந்து.”

லிங்கம் சிரித்துக்கொண்டே, பாஸ்கரன் வீட்டினின்றும் வெளியேறினான்.

‘நான் கூண்டிலே போவதற்கு முன்பு இருந்த நிலையில் இருக்கிறான் பாஸ்கரன். இவனாவது அடித்தான் தாடையில். இந்தக் கோமளத்தின் மையலால் சிக்கிய நான் ஆளை அடித்துக் கொன்றே விட்டேனே! பாதகி, அப்படித்தான் ஆளை அடியோடு தன் அடிமையாக்கிக் கொள்கிறாள். ஆடவர் அழியவே அழகைப் பெற்றாள்” என்று எண்ணினான் லிங்கம்.
பாஸ்கரன் என்ற சீமான் வீட்டு மகன், கோமளத்தைக் கண்டு அவள் மையலில் சிக்கியதைக் கடற்கரையிலேயே கண்ட லிங்கம், ஒருநாள், பாஸ்கரன் வீட்டுக்குச் சென்று அவனைத் தடுக்க எண்ணினான். இருவரும் பேசிய சம்பாஷணையே மேலே தரப்பட்டது. சம்பாஷணையின்போது கோமளத்தைப் பற்றிய உண்மையை எடுத்துச் சொன்ன லிங்கத்தைத்தான், பாஸ்கரன் அடித்தான்.
* * *

காதலால் கருத்தை இழந்த காளையின் கோபத்தைக் கண்டு லிங்கம் வருத்தப்படவில்லை. அவனுக்கே தெரியுமன்றோ அந்த ஆத்திரம், ஆவேசம் பரந்தாமன் மீது பாய்ந்த போது, மனம் இருந்த நிலை! எனவே கோபம் வரவில்லை லிங்கத்துக்கு; யோசனைதான் வந்தது. என்ன செய்வது, இந்த இளைஞனுக்கு வர இருக்கும் ஆபத்தை. எப்படிக் கோமளத்தின் நாகரிகப் போர்வையைக் கிழித்தெறிந்து, அவளுடைய நாசகாலத் தன்மையைக் காட்டுவது என்பதிலேயே லிங்கத்தின் யோசனை இருந்தது.
* * *

கோமளத்தின் செல்வத்தைச் சிதைத்தாலன்றிச் செல்வாக்கைச் சிதைக்க முடியாதென்பது லிங்கத்துக்கு நன்கு தெரியும். பணந்தானே, பராரியாகப் பாழுஞ்சத்திரத்திலே உயிரை மாய்த்துக் கொள்ள இருந்த தன்னை, பட்டினத்துக்குப் புது குபேரனாக் கிற்று. லிங்கத்துக்குப் பணத்தின் சக்தியா தெரியாது? எனவே அந்தப் பாதகிக்குப் பணமெனும் பலம் இருக்கும் வரையில் அவளைப் பகைத்து ஒன்றும் செய்யமுடியாது என்று எண்ணியே வேறு ஏற்பாடுகளைச் செய்து கொண்டு வந்தான். இடையே பாஸ்கரனின் கவலை வந்துவிட்டது. பாபம் பாஸ்கரன்! கோமளத்தையே தனது உயிராக எண்ணினான். தனது குடும்பச் சொத்து மிக விரைவாகவே கரைத்துக் கொண்டு வந்தான். இந்த ஆபத்தைத் தடுக்க வேண்டும் என்று எண்ணினான் லிங்கம். தன் வார்த்தை பாஸ்கரன் காதில் ஏறுமென எண்ணியே அவன் மாளிகை சென்று மந்திராலோசனை கூறினான். ஏறுமா இவன் சொல்! தலையணை மந்திரம் செல்ல இடமுமுண்டோ? தையலின் மையலில் சிக்கிய பிறகு, நண்பன் மொழி என்ன செய்யும், நல்லோர் வார்த்தை எதுக்கு! மன்மதனிடம் மண்டியிட்ட பிறகு மகேஸ்வரனாலும் மீட்க முடியாதே அந்த அடிமையை!
* * *

ஒரு முரட்டு மனிதனை அழைத்து 100 ரூபாய் கொடுத் தனுப்பினான் லிங்கம் என முந்திய இதழில் குறிப்பிடிருந்த தோமல்லவா! அவன் லிங்கத்தின் சொற்படி கோமளத்தின் தோட்டக்காரனாக வேலைக்கமர்ந்தான்.

அவன்தான் லிங்கத்துக்கு ஒற்றன். கோமளத்தின் வீட்டில் நடக்கும் ஒவ்வொன்றையும் விடாது கவனித்துச் சேதி சொல்பவன். விநாடிக்கு விநாடி கோமளம் என்ன செய்கிறாள், யாரைக் காண்கிறாள் என்பதெல்லாம் லிங்கத்துக்குத் தெரியும். கோமளம் இதை அறியாள். லிங்கத்திடம் அவளுக்குப் பயமிருந்தது. ஆனால் தன் மீது வஞ்சம் தீர்த்துக் கொள்ள அவன் விரும்புவது மட்டும் அவளுக்குத் தெரியாது. அவன் மட்டும் ‘ஜாடை’ காட்டி இருந்தால் போதும், கோமளம் அவனுடன் கூடிக்குலாவத் தயாராக இருந்தாள். அவளுக்கென்ன அந்த வித்தை தெரியாதா? பழக்கமில்லையா! அழகு இருக்கிறது, அதைவிட அதிகமாக ‘சாகசம்’ இருக்கிறது. பாழாய்ப் போன பருவம் மாறிவிடுகிறதே என்ற கவலைதான்! அவளுக்குப் பவுடரும், மினுக்குத் தைலமும் எத்தனை நாளைகுத்தான் பருவத்தை மறைத்து பாவையாக்கிக் காட்டமுடியும்? இளமை மட்டும் என்றுமே இருக்குமானால் இகத்திலே இவளுக்கு இணை யாருமில்லை என்று ஆகிவிடுவாள் கோமளம். அவ்வளவு கைகாரி! ஆனால் லிங்கம் தன்னை அலட்சியம் செய்வதைக் கண்டாள். மேல்விழுந்து செல்ல மட்டும் பயமாகத்தான் இருந்தது. மேலும், பாஸ்கரன் இருந்தான், பணத்துடன், பித்தம் தலைக்கேறி.
* * *

‘சம்போ! சதாசிவம்!’ - என்று உருக்கமாகக் கூறிக் கொண்டே, ஜடைமுடியுடன் நெற்றியில் நீறு துலங்க, நீண்ட தொரு காவியாடை அணிந்து, ஒரு சாமி, கோமளத்தின் வீடு சென்றார். பிச்சை போட வேலைக்காரி வந்தாள். அரிசியைக் கொட்டினாள் பையிலே. “அபலையே! இந்தா அருட் பிரசாதம்” என்று கூறியபடி, தன் வெறுங்கையை நீட்டினார் சாமி. வேலைக்காரி விழித்தாள். “ஏன் விழிக்கிறாய், திற வாயை” என்றார் சாமி. திறந்தாள். கையை வாயருகே கொண்டு போனார். எங்கிருந்தோ சீனி வந்தது. சுவைத்தாள் வேலைக்காரி. சாமியின் அற்புதத்தை ஓடோடிச் சென்று கோமளத்துக்குக் கூறினாள். கோமளம் சாமியை நாட, சாமி பலவித அற்புதங்களைச் செய்து காட்டினார்.

“சாமி! தங்களுக்கு வேறு என்னென்ன தெரியும்” என்றாள் கோமளம். “ஆண்டவனின் அடிமைக்கு அனந்தம் அற்புதம் செய்யத் தெரியும். கைலையங்கிரியான் கடாட்சத்தால் காணாத பொருளைக் கண்டெடுப்பேன் - இல்லாத பொருளை உண்டாக்குவேன் - ஆகாத காரியத்தை ஆக வைப்பேன் - பேயோட்டுவேன் - பித்தம் தெளிவிப்பேன் - இரசவாதம் செய்யவும் வல்லேன். ஆனால் அதை மட்டும் அடிக்கடி செய்வதில்லை” - என்று சாமியார் கூறினார்.

“எல்லாச் சாமிகளுந்தான் இரசவாதம் செய்யமுடியுமெனக் கூறுவது. ஆனால் ஏமாற்றந்தான்” என்றாள் கோமளம்.

“இருக்கலாம் அணங்கே! என் பேச்சு சரியோ, தப்போ! பிறகு பார்ப்போம். நான் இன்று ஒரு ஆரூடம் சொல்கிறேன். நாளை வரச்சொன்னேன். ஆண்டவனறிய வருகிறேன். நான் சொன்னது நடக்கிறதா இல்லையா என்று பாரும் அப்போது” என்று சாமியார் சொன்னார்.

“சொல்லும்” என்றாள் கோமளம்.

“சுகமும் துக்கமும் மாறிமாறி வரும். அது இயற்கை அம்மையே! இன்று சுகமாக இருக்கும் உன் தமையன் நாளை கைது செய்யப்படுவான். இலஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக-” என்றான் சாமியார். ‘என்ன? என் அண்ணா கைது ஆவதா?’ என்று திகைத்துக் கேட்டாள் கோமளம்.

பாபம்! நெஞ்சிலே பயம். குலை நடுக்கம்! மாதரசி மனம் நொந்து, “என்ன பயம்? நடப்பன நடக்கும் நானிலத்திலே. இதுவே முறை” என்றார் சாமியார்.

“சுவாமி! என்னைச் சோதிக்க வேண்டாம்” என்று கெஞ்சி னாள் கோமளம். “மாதே! நான் ஏன் சோதிக்க வேண்டும். சோமேசன் என்னையன்றோ சோதிக்கிறார்” என்றார் சாமியார்.
“என்ன அது?” என்றாள் கோமளம்.

“உன் அண்ணனைக் காப்பாற்றி உன் மனத்தைக் குளிர வைக்க வேண்டுமென்று ஓர் எண்ணமும் என் உள்ளத்திலே எழுகின்றது. அதே நேரத்திலே அடாது செய்தவர் படாதபாடு படுவதன்றோ முறை! நாம் ஏன் அதிலே குறுக்கிட வேண்டுமெனவும் தோன்றுகிறது. ஆண்டவன் என்னைச் சோதிக்கிறான்” என்றார் சாமியார்.

“சுவாமி! எப்படியேனும் என் அண்ணாவைக் காப்பாற்றும். அவர் ஆபத்திலே சிக்கிக்கொண்டதென்னமோ உண்மைதான். என்ன செய்வது அதற்கு” என்றாள் கோமளம்.

“மாதே! ஒன்று செய். உன் அண்ணனை இங்குவரச் சொல். நாளை நாம் மூவருமாகச் செல்வோம். இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் இடுகாட்டில் என் அண்ணல் ஏகாந்தனுக்கு ஒரு பூஜை நடத்துவோம். அவர் காப்பாற்றுவார். உமது அண்ணன், தான் இதுவரை செய்த தவறை ஒன்று விடாது எழுதி அதை இலிங்கேசன் பாதத்திலே வைத்து வணங்கவேண்டும். ஆண்டவன் அருள் புரிவார்” என்று கூறிவிட்டு விடைபெற்றுக் கொண்டு போனார் சாமியார்.
* * *

கவலையுடன் உள்ளே சென்ற கோமளம், தனது படுக்கை யறையில் ஒளிந்து கொண்டிருந்த தனது அண்ணன் வக்கீல் வரதாச்சாரியிடம் சாமியாரைப் பற்றிச் சொல்ல, அவனும் ஏற்பாட்டுக்கு ஒப்பினான்.

மறுநாள் இரவு 10 மணிக்குச் சாமியார் வந்தார். வரவேற்று இருவரும் வணங்கினர். ‘எழுதி விட்டீரோ ஆண்டவனுக்கு விண்ணப்பத்தை’ என்று கேட்க, ‘ஆம்’ என்று சொல்லி ஒரு கடிதத்தைக் கொடுத்தார். வக்கீலாக இருந்த பிறகு ஒரு ஜெமீனில் திவானாக இருந்து கள்ளக் கையொப்பம், இலஞ்சம் முதலிய பல செய்து, விஷயம் வெளிவந்துவிடவே சென்னைக்கு ஓடிவந்து தங்கையிடம் சரண் அடைந்த வரதாச்சாரி. சாமியார் அதை வாங்கிப் படித்துக்கூடப் பார்க்கவில்லை. சிறிது நேரம், மூவரும் ஆண்டவனைத் தொழுதனர்.

மணி பனிரெண்டடித்தது. மூவரும் சுடுகாடு செல்லப் புறப்பட்டனர். வீட்டு வாயிலை அடைந்ததும், எங்கிருந்தோ போலீசார் திடீரெனத் தோன்றினர். வரதாச்சாரியைக் கைது செய்தனர். சாமியிடமிருந்த பையையும் பிடுங்கிக் கொண்டனர். அதிலேதான் வரதாச்சாரி தன் குற்றம் பூராவையும் எழுதி வைத்திருந்த கடிதம் இருந்தது. மூவரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்குப் போலீஸ் கமிஷனரே இருந்தார்.

“மிஸ்டர் லிங்கம்! சபாஷ்! சரியான வேலை செய்தீர். ஆசாமி அகப்படாமலே மூன்று மாதமாகத் தலைமறைந்து கிடந்தான்” என்று கூறி சாமியாரைத் தட்டிக் கொடுத்தார். ஜடை முடியுடன் விளங்கிச் சாகசமாகக் கோமளத்தை – வரதாச்சாரியையும் ஏய்த்த லிங்கம் சிரித்தான். சொல்ல வேண்டுமா கோமளத்தின் கோபத்தை. தோட்டக்காரனாக நடிக்கும் ஒற்றன் மூலமாக வரதாச்சாரி மீது பலவித குற்றமிருப்பதைக் கோமளம் கேள்விப்பட்டு வருந்தின சேதியும், வரதாச்சாரி தப்பு தண்டா செய்துவிட்டு தலை மறைந்த சேதியும், திருட்டுத்தனமாக வீடு வந்த சேதியும் கேள்விப்பட்டு, சாமிவேடம் பூண்டு, லிங்கம், வரதாச்சாரியைச் சிக்க வைத்தான். கோமளத்தின் கொட்டம் அடங்கும் இனி என்று எண்ணி மகிழ்ந்தான்.

* * *

வரதாச்சாரியின் வழக்கு ஆரம்பமானதும், கோமளத்தைக் கொண்டாடி வந்த கூட்டம் கொஞ்சங் கொஞ்சமாகக் குறைந்து விட்டது. அண்ணனைப் போலத்தான் இவளும் இருப்பாள் என்று பேசிக் கொண்டனர். பாஸ்கரன் மட்டும், அவளையும், அவளுக்காக வரதாச்சாரியையும்கூடப் புகழ்ந்தே பேசினான்.

வழக்கு காரணமாக, கோமளத்தின் பணம் பஞ்சாய் பறந்தது. அலைச்சல், மனக்கலக்கம், எவ்வளவு பணத்தை வாரி வீசியும் ஒன்றும் பயனில்லாமலே போய்விட்டது. வரதாச்
சாரிக்கு ஏழு வருடக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
* * *

வழக்கு முடிந்த மறுதினம்...

“குமாரி கோமளாதேவியின் அண்ணன் வரதாச்சாரிக்கு மோசடி குற்றத்திற்காக 7 வருடம் கடுங்காவல் தண்டனை விதிக் கப்பட்டது.” என்ற சுவரொட்டி சென்னை முழுவதும் ஒட்டப் பட்டது. அதற்காக லிங்கத்துக்குச் செலவு இருநூறு ரூபாய். ஆனாலும் இரண்டாயிரம் ரூபாய்க்கு மேலாகச் செலவிட்டாலும் வராத அளவு ஆனந்தம். பழி தீர்த்துக் கொண்டோம். இனி அவள் வெளியே தலைநீட்ட முடியாது. ஒழிந்தது அவள் பணம். மீதமிருப்பது அவளுடைய டம்பத்துக்குக் காணாது; செல்வாக்கு அற்றுவிட்டது. செத்தாள் அவள் - எண்ணி எண்ணி மகிழ்ந்தான்.
* * *

இவ்வளவு நடந்தும் பாஸ்கரனின் மனம் மாறவில்லை. முன்னைவிட மோகம் அதிகரித்தது. கோமளமும், உலகம் தன்னை இனி வெறுத்து ஒதுக்கும் என்பதை நன்கு தெரிந்து கொண்டதால் பாஸ்கரனையும் விட்டுவிட்டால் வீதியில் திண்டாட வேண்டி வரும் என்பதைத் தெரிந்து கொண்டு, அவனிடம் அளவற்ற ஆசை கொண்டவன் போல நடித்தாள். குடும்பமோ பெருத்துவிட்டது. வரதாச்சாரியின் மனைவி, குழந்தைகள், கோமளத்திடம் வந்து விட்டனர். இந்நிலையில் பாஸ்கரனின் தந்தை இறந்துவிட்டார். இந்தத் துக்கச் சேதி கோமளத்துக்குப் புதிய ஆனந்தத்தைக் கொடுத்தது. ஏனெனில், பாஸ்கரன் தந்தையின்கீழ் பிள்ளையாக இருந்ததால் அதிக தாராளமாகப் பணத்தை இறைக்க முடியாதிருந்தான். தந்தை போனபின், பாஸ்கரனே ஜெமீன்தார். எனவே இனி கோமளம் ஒரு ஜெமீன் தாரணியன்றோ! பாஸ்கரன் கோமளத்தை ரிஜிஸ்தர் மணம் செய்து கொள்ளவும் ஏற்பாடு செய்ய ஆரம்பித்துவிட்டான். இச்சேதி கேட்டு லிங்கம் துடிதுடித்தான். எந்தப் பாடுபட்டாவது இந்த மணம் நடக்க ஒட்டாது தடுத்தே தீரவேண்டும் எனத் தீர்மானித்தான். பாஸ்கரனோ யார் வார்த்தையும் கேட்கமாட்டான். தன்னை ஒரு பகைவனாகவே கருதிவந்தான். என் செய்வது?

கோமளத்தின் கெட்டகாலம் மாறி மறுபடியும் அவள் சீமாட்டியாக வாழ்வதைக் கண்ணால் காண்பதைவிட, தான் பழையபடி பஞ்சையாகிப் போவதேமேல் என்று எண்ணினான். ஆனால் வீரப்பன், கணக்குப்படி, எவ்வளவோ செலவிட்டும், லிங்கத்தின் பணம் குறையவில்லை. வீரப்பன் லிங்கத்தின் சொத்தைக் கொண்டு ஆரம்பித்த வியாபாரம் நல்ல இலாபத்தைத் தந்தது. எனவே, பணத்துக்குப் பஞ்சமில்லை! ஆனால் பாதகி கோமளம் மறுபடியும் சீமாட்டியாவதா. அதுதானே கூடாது என்று எண்ணி எண்ணி வாடினான் லிங்கம். அந்த பாஸ்கரன் மட்டும் அவளைக் கைவிட்டால் போதும், அவள் கொட்டம் அடியோடு அடங்கும். அவனோ அவளைக் கலியாணம் செய்து கொள்கிறானாமே. இதற்கென்ன செய்வது என்று ஏங்கினான்.
* * *

ஒரு நாள் இரவு தோட்டக்கார ஒற்றன் ஓடோடி வந்து ஏதோ சேதி சொல்லிவிட்டுப் போனான். உடனே மோட்டாரை ஓட்டிக் கொண்டு லிங்கம் நகரின் கோடியில் இருந்து ஒரு சிறு தெருவுக்குச் சென்றான். ஒரு வீட்டினுள்ளே போனான்.

ஒரு நடுத்தர வயதுடைய மாது “வாங்கய்யா, உட்காருங்கோ! எங்கிருந்து வருகிறீர். அம்மா, அம்புஜம் ஏதோ வெட்கப்படாதே - தாம்பூலம் எடுத்துவா” என்றாள். அது ஒரு தாசி வீடு. அம்புஜம் என்ற பெண் தாம்பூலத்தை எடுத்து வந்து வைத்துவிட்டு வெட்கப்பட்டாள். அது அவளுடைய வாழ்க்கை வித்தையிலே ஒரு முக்கியமான பாகம்.

“அம்மா! நான் வந்த விஷயம் வேறு. நீங்கள் எண்ணுவது வேறு. அம்புஜம். நாட்டியம் ஆடுமென்று கேள்விப் பட்டேன். பிரபலமான கலா மண்டபத்திலே பயிற்சியாமே! எனக்கு நாட்டியக் கலையிலே கொஞ்சம் ஆசை” என்றான் லிங்கம். நாட்டியம் ஆடும்; ஆனால் குழந்தைக்கு இப்போது கொஞ்சம் உடம்பு சரியில்லை என்றாள் தாய்.

‘கலாமண்டபத்திலே நல்ல பயிற்சிதானோ?’ - என்று கேட்டான் லிங்கம்.

‘பயிற்சிதான்’ என்று இழுத்தாற்போல் பதில் கூறினாள் அம்புஜம்.

“ஆயிரம் ரூபாய் இப்போதே தருகிறேன் அம்புஜம், கலா மண்டபத்தின் மர்மத்தை எனக்குச் சொல்லு. உங்களுக்கு ஓர் ஆபத்தும் வராதபடி நான் பார்த்துக் கொள்கிறேன். கோமளம் செய்த கொடுமைகளை மட்டும் சொல்லு எனக்கு. நீ நேற்று அவள் வீடு சென்று அழுதவரைக்கும் விஷயம் தெரியும். ஆகவே ஒன்றையும் ஒளிக்காதே. நான் உன்னைச் சிக்க வைக்க மாட்டேன்; நடந்ததைக் கூறு” என்று கேட்டான் லிங்கம்.

வெகுநேரம் வரையில் விஷயத்தைக் கூற அம்புஜம் ஒப்பவில்லை. பிறகு சொல்லிவிட்டாள்.

“அந்தப் பாவி கோமளம், எங்களை எல்லாம் வீணாக வஞ்சித்து, பெரிய ஆட்களுக்கு அந்தக் கலாமண்டபத்தை விபசார விடுதியாக்கிப் பணம் சேர்த்தாள். இப்போது அதைக் கலைத்து விட்டாள். நாங்கள் கஷ்டப்படுகிறோம். அவள் அதுமட்டுமா செய்தாள். எத்தனையோ பெண்களே, எங்கோ வடநாட்டிலே ஓர் ஊர் இருக்கிறதாம்.அங்கு விற்று வந்தாள். அவள் செய்த கொடுமை கொஞ்சமல்ல” என்றாள் அம்புஜம்.

“எனக்கு ருஜு வேண்டுமே” என்று கேட்டான் லிங்கம்.

“இதை எப்படி ருஜு செய்வது. நேற்றுகூட இவளால் விற்கப்பட்ட பெண் எனக்குக் கடிதம் எழுதியிருக்கிறாள்” என்றாள் அம்புஜம்.

“அதுவே போதுமே! எங்கே எடு அக்கடிதத்தை” என்றான் லிங்கம்.

அதிலே, ‘பாவி கோமளம் என்னைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கி, குடிகாரனுக்கு விற்றுவிட்டாள். நான் இங்குத் தவிக்கிறேன். அவள் என்னைக் கன்னிகை என்று சொல்லி ஏமாற்றி, 2000 ரூபாய்க்கு விற்று விட்டாளாம். நான் கன்னிகை அல்ல என்று அவனுக்குத் தெரிந்து விட்டது. என்னைக் கொல்லுகிறான் குடிகாரன்.’

என்று அந்த அபலை தன் கதையை எழுதியிருந்தாள். ஆயிரம் ரூபாயைக் கொடுத்து, அக்கடித்தை வாங்கிக் கொண்டான் லிங்கம். இனி தீர்ந்தது கோமளத்தின் வாழ்க்கை எனக் குதித்தான்; வீடு வந்தான்.
* * *

“மிஸ்டர் பாஸ்கர்! பேசுவது லிங்கம்... அடடே, கொஞ்சம் இருப்பா, விஷயம் முக்கியமானது. கோபிக்காதே! உனக்கு எப்போது கலியாணம்.”

“உனக்கு அதைச் சொல்ல வேண்டிய அவசியமில்லை”

“மிஸ்டர் பாஸ்கர்! இன்றிரவு கோமளம் என்னிடம் கொஞ்சி விளையாடி முத்தமிடுவதை நீ கண்டால் என்ன பரிசு தருவாய்...?

“துப்பாக்கியால் அவளையும் உன்னையும் சேர்த்துச் சுடுவேன்...”

“துப்பாக்கி இல்லையானால்-”

“விளையாடாதே.”

“கேள் பாஸ்கர்! நாளை இரவு பத்து மணிக்கு, நீ இங்கு வர வேண்டும். இங்கு நான் சில காட்சிகளைக் காட்டுகிறேன். பிறகு தாராளமாகக் கோமளத்தைக் கலியாணம் செய்து கொள்ளலாம்.”

“சரி! வருகிறேன்-”

இந்த டெலிபோன் சம்பாஷணைக்குப் பிறகு...

“கோமளந்தானே பேசுவது.”

“ஆமாம், நீங்கள்...”

“பழைய காதலன்...”

“நான்சென்ஸ்...”

“உன் கலியாணத்துக்கு ஏதாவது பரிசு தர வேண்டாமா? லிங்கத்தின் பரிசு வராமல் கலியாணம் நடக்கலாமா...”

“என்னிடம் வீண் வார்த்தை பேச வேண்டாம்.”

“இதேதான் கலாமண்டலி அம்புஜம்கூடச் சொன்னாள்.”

“என்ன? அம்புஜமா? அது யார்?”

“அவள்தான் உனது கலா மண்டல நட்சத்திரம். கல்வி மண்டபத்தில் கெட்டவள். அவளுக்கு நீ விற்ற பெண் கடிதம் எழுதினாள். ஆயிரம் ரூபாய்க்கு அதை விலைக்கு வாங்கினேன். பாஸ்கரனுக்கு அதைத்தரப் போகிறேன். இன்றிரவு 9 மணி முதல் 10 மணிவரை நீ என்னுடன் தனித்திருக்கச் சம்மதித்தால் - கடிதம் கொளுத்தப்படும். இல்லையேல் கொடுக்கப்படும். ‘லிங்கம்... லிங்கம்... ஹலோ!’ ...டெலிபோனைக் கீழே வைத்துவிட்டு லிங்கம் சிரித்தான்.
* * *

இரவு 9 மணிக்கு லிங்கத்தின் வீடு நோக்கி கோமளம் வந்தாள். என் செய்வாள் பாபம். அந்த ஒரு கடிதம் அவளுக்கு எமனன்றோ?

மலர்ந்த முகத்துடன் வரவேற்றான் லிங்கம்.

அவளுக்கு முகத்தில் ஈயாடவில்லை. பயம், நடுக்கம், கண்களிலே நீர் ததும்பிற்று. நேரே இருவரும் படுக்கை அறை சென்றனர். கடிதத்தைப் படித்துக் காட்டினான் லிங்கம். கோமளம் அழுதாள்.

“லிங்கம்! போதாதா நீ என்மீது வஞ்சந்தீர்த்துக் கொள்வது? இந்த உதவி செய். கடிதத்தைக் கொளுத்தி விடு. பாஸ்கரனை நான் மணக்காவிட்டால் என் வாழ்வு பாழாகிவிடும்.

“கோமளம்! உனக்குப் பாஸ்கரன் மீது காதலா?” என்று கேட்டான் லிங்கம்.

“ஆம்! தடையில்லாமல், கடைசிவரை கெட்டவளாகவா இருப்பேன். எனக்குப் புத்தி வந்துவிட்டது” என்றாள் கோமளம்.

“அதைப் போலவே உன்மீதும் எனக்கு ஆசை வந்து விட்டது. அதோ உன் அழகிய உதடு என்னை அழைக்கிறது. முத்தம் வேண்டும் கோமளம்! மூன்று முத்தங்கள் கொடு,

இக்கடிதத்தை உன்னிடம் கொடுத்து விடுகிறேன்” என்றான் லிங்கம்.

“நிஜமாகவா! உள்ளபடி என் முத்தம் உமக்கு வேண்டுமா” என்று கேட்டாள் கோமளம்.

“ஆமாம்; கொடு! ஆசையுடன் கொடு!” என்று ஆவேசம் வந்தவனைப்போலக் கேட்டான் லிங்கம்.
அவன் மீது பாய்ந்து விழுந்தபடி கோமளம், ஒன்று, இரண்டு, மூன்று நான்கு ஐந்து என முத்தங்களைக் கொடுத்த வண்ணமிருந்தாள்.

“போதுமடி உன் முத்தம்” என்று கூறியபடி பாஸ்கரன் அவள் மயிரைப் பிடித்து இழுத்தான். லிங்கம் சிரித்தான். கோமளத்தின் கோபம், எப்படித்தான் இருந்ததென்று யாராலும் சொல்லமுடியாது. வாயில் வந்தபடி திட்டிக் கொண்டே ஓடிவிட்டான். பாஸ்கரன், “எனக்கு நீதான் குரு” என்று லிங்கத்தின் அடி பணிந்தாள்.

கோமளத்தின் வாழ்க்கை, கிடுகிடுவெனக் கீழே வந்து விட்டது. கடைசியில் அவள் பகிரங்கமான விபசாரியாகி, விபசார சட்டத்தின்படி தண்டிக்கப்பட்டாள்.

லிங்கம் தனது வியாபாரத்தையும், சொத்தையும், ஒரு பகுதி பரந்தாமன் குடும்பத்துக்கும், மற்றொரு பகுதி விபசாரிகள் மீட்பு சங்கத்துக்கும் ஒதுக்கி வைத்துவிட்டு தனது நண்பர்களிடம் விடைபெற்றுக் கொண்டு தானாகப் பொருள் தேட சிங்கப்பூர் சென்றுவிட்டான்.

(குடியரசு - 1939)
--------------------

This file was last updated on 1 Feb. 2023
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)