pm logo

பரிமள கேசவன்
(துப்பறியும் நாவல்,
பாகம் 1, அதிகாரம் 1-6)
வை. மு. கோதைநாயகி அம்மாள்


parimala kEcavan, part 1, chapters 1-6
by kOtainAyaki ammAL
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Our sincere thanks go to Mr. R. Navaneethakrishnan for his assistance in this task.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2023.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

பரிமள கேசவன்
(துப்பறியும் நாவல், பாகம் 1)
வை. மு. கோதைநாயகி அம்மாள்

Source :
பரிமள கேசவன்
(துப்பறியும் நாவல்)
வை. மு. கோதைநாயகி அம்மாள் எழுதியது.
பிரசுராலயம்: "ஜகன்மோகினி” ஆபீஸ்
26, தோடித்தெரு, திருவல்லிக்கேணி, சென்னை,
காபிரைட், 1931
----------
ஸ்ரீ பரிமள கேசவன்
கலைமகள் துதி

வெண்டா மரையுறையும் மெல்லியலே என்னுளத்துத்
தண்டாது நின்று தனிக்காக்கும் –வண்டார்
பரிமள கேசவனாம் பண்புடை இந்நூலை
உரிமையுடன் செய்ய உவந்து.

கணபதி துதி

பரிமள கேசவனைப் பன்னுதற்கென் னெஞ்சில்
கரிமுகனே வந்தருள்வாய் காப்பு.
-----------

1-வது அதிகாரம்
பட்ட காலிலே படும்; கெட்ட குடியே கெடும்

"பிராணநாதா! நான் எத்தனை நாட்களாகச் சொல்கிறேன். அதை அடியோடு மறந்து, மதியாது அலக்ஷ்யம் செய்கின்றீர்களே! பாழுங் குடியும்,வேசியும் ஒரு ஆளைக் கொள்ளும் யமனல்லவா! நமது குடும்பம் முன்னர் பெரியார் நாளில் எவ்வித செழுமையாக இருந்தது? இப்போது எந்த கதியை அடைந்திருக்கின்றது? இந்த சாப்பாட்டுச் சமயத்தை விட்டால் தங்களைப் பார்ப்பதற்கே அரிதாக இருக்கின்றதே ! இவ்விதம் இருந்தால் நான்கு குழந்தைகளும் நானும் எக்கதியாவது? இந்த துர்ப்பழக்கத்தை ஒழியுங்கள்; இனி வேண்டாம். இந்த புட்டியை நான் கட்டாயம் உடைத்தே தீருவேன்" என்று கூறிச் சாராயப் புட்டியைக் கணவனின் கைவிலிருந்து கோமதி என்ற மின்னாள் பிடுங்க முயன்றாள்.

---
அட்டகாஸமாக வாய்ப் பேச்சைக் கொட்டி, சட்டதிட்டமாக அளந்து விட்டு சமயம் கிட்டி முட்டி வருங் காலையில் கிட்ட செருங்காமல் கை விட்டு எட்டிச் சென்று வேடிக்கை பார்க்கும் மட்டு மரியாதை யற்ற கட்டைகளும் சிலர் உண்டு.
----
புட்டி புட்டியாகக் குடியைத் தள்ளும் குண்டோதானின் முன்பு சாமானிய எளிய பேதையின் பலம் சாயுமா! அவன் அவளை இழுத்துத் தாறுமாறாகத் தள்ளி உதைத்து "திமிர் பிடித்த நாயே ! எனக்கு புத்தி சொல்ல வேண்டாம் என்று நான் எத்தனை தரம் சொல்வது. இன்னும் இந்த அகம்பாவத்துடன் இருக்கிறாயா! இனி இப்படிப் பேசாதே. என் இஷ்டம். என் மனம் விரும்புகிற விதந்தான் நான்இருப்பேன், சீ விலகு" என்று தள்ளிவிட்டு, புட்டியிலிலிருந்த சாராயத்தைப் பொட்டு விடாது குடித்து விட்டுத் தாசி லோகாம்பாளின் வீட்டிற்கு ஓடினான்.

கோமதி என்ற மடந்தைக்கு வயது 18 இன்னும் பூர்த்தியாக வில்லை. இதற்குள் 4 குழந்தைகள். அவள் தனது 13-வது வயதிலிருந்து குழந்தைகளைப் பெறும் யந்திரமாயும், வீட்டு வேலை செய்யும் எந்திரமாயும் குடிகாரனிடம் சிக்கிக்கொண்டாள். கேவலம் சிறிய வயது முதல் குழந்தைகளைப் பெற்றுக் குடிகாரனின் உதைகளுக்கும், வெறி கொண்ட செய்கைகளுக்கும், வீட்டு வேலைகளுக்கும் இலக்காகியதால் மிக்க மெலிவடைந்து தேக புஷ்டியும், ரத்த வலிவும் குறைந்து கேவலம் க்ஷீண திசைக்கு அவள் வந்து விட்டாள்.

அவள் தன்னாலான வரையில் அவன் குடிப்பதையும், தாசி வீடு போவதையும் எத்தனை தடுத்தும் அந்தப் படுபாவி அதை சட்டை செய்யாது தன் வேலையிலேயே கண்ணுக் கருத்துமானான்.

---
"எனக்கு என்ன குறைவு? என் சினேகிதனே எனக்கு விவாகத்தை முடித்து வைப்பதாகச் சொல்லி விட்டான்" என்று தைரியமாகப் பெண் பேசியாகிய பிறகு சினேகிதனிடம் தெரிவித்தால், "நான் சொல்லியது உண்மைதான். இச் சமயம் எனக்கு இவ்வித செலவு வந்து விட்டது. என்ன செய்வேன்?
----

அவன் தச்ச வேலை செய்து, தினம் கிடைக்கும் கூலியில் பெரும் பாகம் தன்னிரு செலவுகளுக்கும் போக எஞ்சிய சிறு அணாத் தொகையைக் குடும்பத்திற்குக் கொடுத்து வந்தான். அந்த சிறு தொகை குடும்பத்திற்குப் போதாமல் அனேக நாள் பட்டினி கிடக்க நேரும். குடிகாரன் தான் பணங் கொடுக்காத குற்றத்தை மறந்து "சாப்பாடு வயனமாக நான்குவகை ஏன் செய்யவில்லை?" என்று மனைவியை உதைப்பது வழக்கம். இவ்விதமே வெகு நாட்களாகத் தொந்தரவு செய்து கொண்டிருந்தான்; நாளா விருத்தியில் சிறு தொகை கொடுப்பதையும் நிறுத்தி விட்டான். பின்னும் சில மாதத்தில் சாப்பிட வருவதையும் நிறுத்தி விட்டான்.

நான்கு குழந்தைகளுடன் ஒரு பேதை என்ன செய்வாள் பாவம்! இரண்டு வீடுகளில் வேலை செய்ய ஆரம்பித்தாள். அதோடு ஆபீஸ்களுக்கு நான்கு பேருக்குச் சாப்பாடு எடுத்துச் செல்வதை ஏற்பாடு செய்து கொண்டாள். தினம் காலை வீட்டு வேலைகளைச் செய்து விட்டு, பகல் 10 மணிக்கு நான்கு வீட்டிற்கும் சென்று சாப்பாடுகளை வாங்கி வருவதற்குள் பதினோரு மணியாகிவிடும். ஒவ்வொரு மூலையில் ஒவ்வொரு வீடு, அதுபோலவே ஆபிஸும் ஒவ்வொரு இடமாக அவள் துரதிருஷ்டத்தினால் அமைந்தது.

பகல் பட படக்கும் வெயிலில் சென்னையிலுள்ள தார் ரோட்டில் தலையில் பெரிய பாரத்துடன் நடப்பதென்றால் அந்தோ! பரி தாபம்! பரிதாபம்! அந்தக் கண்ராவியை அனுபவித்தால் தான், கண்ணால் கண்டால் தான் தெரியும், வயிற்றுக் கில்லாக் கொடுமை யினாலும், நான்கு குழந்தைகளின் போஷணைக்காகவும் கோமதி அத்தகைய கொடிய வெயிலில் நடந்து, கால்கள் கொப்புளிக்கச் சாப்பாட்டை எடுத்துச் செல்லலானாள்.

----
நீ எப்படியாவது விவாகத்தைச் செய்து கொள். பிறகு உனக்கு நான் உதவி செய்கிறேன்." என்று கூசாது சொல்லிவிட, நம்பிய மனிதன் அந்த மனிதன் வார்த்தையினால் வெம்பிப் போய் விக்னேச்வார் விவாகம் செய்து கொண்டது போலச் சந்தியில் நிற்க நேருகின்றது.
---
ஒவ்வொருவரும் சாப்பிட்டு மிகுந்த சாப்பாட்டை எடுத்துக் கொண்டுவந்து குழந்தைகளுக்குப் போட்டுக் கணக்கு மிஞ்சினால் புசிப்பது; இல்லையேல் பட்டினி கிடப்பது. இவ்விதமாகவே தன் காலத்தைக் கடத்தனாள். வெயிலின் கொடுமையினால் அவள் கடந்து செல்வதற்குச் சற்று நேரமாகி விட்டால் அவளை அதட்டி வைது தடபுடல் படுத்துவார்கள் சாப்பாட்டு ராமன்கள்.

இவள் வேலை செய்யும் வீடுகளில் ஐந்து ரூபாய் கிடைக்கின்றது. நான்கு எடுப்புக் காப்பாட்டில் ஐந்துரூபாய், ஆக பத்து ரூபாய் கிடைப்பதில்,வீடு குடிக்கூலி மூன்று ரூபாய் போய் விட்டால் 7 ரூபாயும், எடுப்புச் சாப்பாட்டில் மிகுந்த சாப்பாடும், பத்து தேய்ப்பதில் மிகுந்த சாப்பாடுங் கொண்டு நான்கு குழந்தைகளும் அவளும் ஆக ஐந்து பேர்கள் ஒரு மாதம் பூராவும் புசிந்து வாழுவதென்றால் இந்த பட்டினத்தின் சாத்யமானதா என்பதை யோசித்துப் பாருங்கள். இவ்விதமாக எத்தனை ஏழைப் பெண்கள் வருந்துவதை நாம் கண்ணால் காண்கிறோம். இந்த ஏழ்மை நிலை என்றுதான் நமது பாரத நாட்டை விட்டு ஒழியுமோ? என்றுதான் பாரத மாதா வின் அருள் பிறக்குமோ ?..........

* * * * * *
இப்படியே சில வருடங்கள் வேலை செய்து வந்தாள். மூத்த பையனுக்கு 10 வயதாயிற்று. அப் பையனை ஏதேனும் வேலை செய்யும்படியாகக் கோமதி எத்தனை கூறியும் அந்த சோதாப் பபல் தகப்பனுக்கு இரண்டாவதாக ஆய் விட்டதால் பிடிவாதம் செய்துத் தாயை இம்சித்தான். தாயார் மனம் நொந்து கடிந்து திட்டினால் எங்கேனும் ஒடி விடுவது; சாப்பாட்டிற்கு வராது அழ வைப்பது. பிறகு கோமதி கண்ணீர் பெருகத் தேடியலைந்து இழுத்துக் கொண்டு வந்து பெத்த மனம் பித்து என்பது போல உணவிட்டு உபசரிப்பது. அந்தப் பையனை நல்ல வார்த்தை சொல்லி சித்தாள் வேலைக்கு அனுப்பினாள்.

----
"வரம்பு கடந்து பேசினால் பல்லை உடைத்து விடுவேன்" என்கிறான் ஒருவன். அவனை வரம்பு கடக்கும்படியான ஆத்திரத்தைத் தானே உண்டாக்கி விட்டதை அவன் மனம் நினைப்பதே இல்லை.
-----

சித்தாள் வேலைக்குக் கிடைக்கும் ஆறு அணாக் கூலியை அவன் கண்டபடி ஏதேனும் வாங்கித் தின்று விடவும்,சரியாகக் கொண்டு தாயிடம் கொடாமல் சண்டித்தனம் செய்யவும் தொடங்கினான். அவ்வாறு செய்யும் திருட்டுத்தனத்தை யறிந்த கோமதி நேரே மேஸ்த்ரியிடம் சென்று "கூலியைப் பையன் கையில் கொடுக்க வேண்டாம்; என்னிடம் கொடுங்கள்" என்று கூறிவிட்டாள். இதையறிந்த பையன் தாயார் பணம் வைக்கும் இடத்தை யறிந்து திருட வாரம்பித்தான். மகனோ திருட்டுக் கொட்டு; மணவாளனோ குடிகார வேசிக் கள்வன். இத்தகைய இருவரையும் படைத்த நங்கையின் கதி எவ்விதம் தானிருக்கும்?

இரண்டாவது பையன் சற்று அடங்கியவன். அவனுக்கு 9 வயதாகிறது. அப் பயல் தரும பாடசாலையில் சேர்ந்து படிக்கத் தொடங்கினான். அதற்கடுத்தது 7 வயதுப் பெண். கையிலிருப்பதும் பெண் குழந்தை. இந்த ஏழு வயதுப் பெண் குழந்தை தாயார் வேலை செய்யப் போகையில் சின்ன குழந்தையை வைத்துக் கொண்டிருப்பது. இவ்விதமே, பின்னும் சில காலம் சென்றது.

அக் குடிகாரப்பாவி என்றைக்கேனும் வீட்டுக்கு வருவது; கோமதி காலணா, தம்பிடி சேர்த்து வைத்திருந்தால் அதை சண்டையிட்டுப் பிடுங்கிக் கொண்டு போவது. இந்த வழியை மட்டும் அவன் விடாது செய்து வந்தான். கோமதியின் தேக பலம் ஏற்கெனவே குன்றி விட்டதோடு இத்தனை வேதனைகளுக் கிடையில் அதிக வேலை செய்வதும், எடுப்புச் சாதங் கொண்டு நடப்பதனால் தரின் சூடும், வெய்யிலின் வெப்பமும் ஒன்றுகூடி நாளுக்கு நாள் அவள் மிகவும் நலிந்து விட்டாள்.

---
வெளியூர்ப் பிரயாணம் வெகு ஜோர்தான். கண் காட்சிகள் அதி மனோ கரமே! ஊரும் நிரம்ப சுகமே! ஆனால் ஆறுமாதத்திற்குத் தன் ஊரில் செலவாகும் பணத்தை ஒரு மாத வெளியூர்ப் பிரயாணத்தில் செலவழிக்க நேர்ந்து விடுகின்றது. இதுதான் பெரிய கஷ்டம்.
----

இந் நிலைமையில் அவளுடைய கணவன், எத்தளை சொல்லியும் கேளாது அவளை இம்சிப்பதுடன் விடா மூர்க்கமாகவே இருந்தான். கோமதி தன் விதிப்பயனால் மீண்டும் கர்ப்பவதியாகி விட்டாள். கர்ப்ப சின்னத்தின் முதல் ஆரம்பமாகிய மசக்கை என்னும் நோய் பலமாகப் பீடித்து அவளை எழுந்து நடக்கவொட்டாது தசையோடு தள்ளிவிட்டது. அந்தோ ! ஏற்கெனவே கர்ப்பிணி; மேலும் கர்ப்பிணி என்ற வாக்கியம் உண்மையாகி விட்டதால் குழந்தைக ளெல்லாம் "பசியோ! பசியோ!" என்று கத்துகின்றன. எடுப்புச் சாப்பாடு நின்று விட்டதால் அதனால் பெறும் வருமானமே குறைந்து விட்டது. வீட்டு வாடகை ஒரு மாதத்திற்குச் சேர்ந்து விட்டது.

அபலையான கோமதி இந் நிலைமையில் என்ன செய்வாள்? தனக்கோ எழுந்து நடக்க முடியவில்லை. குழந்தைகளின் பசியையோ தீர்க்கும் மார்க்கமில்லை, கணவனோ இவளது கேவல நிலைமையைச் சற்றும் கவனியாது, இங்கு வருவாய் ஏதுமில்லை என்பதை யறிந்து வீட்டிற்கு வருவதையே அடியோடு விட்டு விட்டான்.

வீட்டு வாடதை கொடாமையினால் வீட்டுக்காரர்கள். "வாடகையை முதலில் கீழே வைத்துவிட்டு உடனே காலி செய்து விடு. இரண்டு மாத வாடகை பாக்கியாகி விட்டதால் நீ இன்னும் எப்படி பணத்தைக் கொடுப்பாய். ஆகையினால் உடனே காலி செய்துவிடு" என்று தாக்ஷண்ய மின்றிப் பேச வாரம்பித்தார்கள்.

அந்தோ! துர்ப்பாக்யவதியான கோமதி அவர்கள் காவில் விழுந்து "அம்மா! தாயே! எந்நிலைமையறித்தும் என்னைக் கடிந்து கொண்டால் இந்த நேரம் நான் என்ன செய்வேன்? எங்குய்வேன்? என் மீது இரக்கங் கொண்டு சற்று பொறுத்துக் கொள்ள வேண்டும்" என்று எத்தனை சொல்லியும், கெஞ்சியும் அவர்கள் கேளாது மிக்க கடினமாகவே கூறி விட்டதால் கோமதி மனந் தவித்தவாறு எழுந்து நடக்கவும் மாட்டாது, தள்ளாடி தடுமாறிக் கொண்டே தாசி லோகாவின் வீட்டிற்குச் சென்றாள்.

----
தன் ஊரில் 10 அணாவுக்கு ஒரு டஜன் வாங்கக் கூடிய பழத்தை வெளியூரில் ஒரு ரூபாய் கொடுத்து வாங்கிப் புசிக்க நேருகின்றது. இங்கு காலணா வண்டிச் செலவிற்கு யோசிக்கிறோம். அங்கு 5 ரூபாய் வெள்ளரிப் பழத்தைப் போலக் கொடுத்து விடுகிறோம். இவ்விதமே அதிகப் பணம் கரைந்து விடுகின்றது.
-----

அங்கு சென்று பார்க்கையில் அவ்வீட்டில் ஒரு முதலியார் குடித்தனம் செய்வதைக் கண்டு திடுக்கிட்டு அவர்களை விசாரித்ததில் தாங்கள் நேற்றுதான் குடித்தனம் வந்ததாயும், தங்களுக்கு எதுவும் தெரியாதென்றும் அவர்கள் கூறிவிட்டார்கள். இதுகேட்டு மனமுடைந்த கோமதி அவ் வீட்டிற்கு எதிரில் உள்ள சோடாக் கடைக்குச் சென்று "இத் தாசி எங்கே?” என்று விசாரிக்கையில் அக் கடைக்காரன் அவளுடைய இனத்தினர்கள் ஜாதிப் பிரஷ்டம் போட்டு விட்டதால் அவள் அவர்களின் முன்னிலையில் இருப்பதற்கு வெட்கிச் சிதம்பரத்திற்குக் குடியேறியதாகச் செய்தி தெரிந்தது" என்றான். இது கேட்ட கோமதி மிகுந்த துக்கத்தை யடைந்து "ஐயோ! இதுவும் ஒரு விதியா! என் காலக் கொடுமையே அவளை ஊரை விட்டுத் தள்ளியதோ! ஹா! கடவுளே!" என்று விசனித்த வாறு வீட்டை யடைந்தாள்.

அத் தருணம் வீட்டு வாசலில் அதிகக் கூட்டமாக இருப்பதைக் கண்டு "இங்கென்ன ஆபத்து வந்து விட்டது?" என்று எண்ணி உள்ளே சென்று பார்க்கையில் கோமதியின் பெரிய மகனை ஒரு போலீஸ் சேவகன் பிடித்துக் கொண்டு உதைக்கிறான். அவன் எதிரில் சுமார் 5 வயதுள்ள குழந்தை "இவன்தான் என் கைக் காப்பைக் கழற்றினான்." என்று சொல்லிக் கொண்டிருந்தது. இந்த வேடிக்கையைப் பார்ப்பதற்கு நூற்றுக் கணக்கில் கூட்டம் கூடிவிட்டது.

-----
மைசூரிலுள்ள வீதிகளே ஓர் தனித்த அழகு. அரசர் வாசம் செய்யும் இடங்களின் மகிமையே அபூர்வ வசீகரம் பெற்றிலகும் போலும், கடவுளும் காவலனும் ஒன்று என்பது போல இடமும் அமைகின்றது.
-----

கோமதியின் மனம் ஏற்கெனவே எரிந்துகொண்டிருந்ததற்கு இன்னும் எண்ணெயை ஊற்றியதுபோல இங்கு தம் மகன் திருடனென்று பிடிக்கப்பட்டு நிற்கும் கண்ராவியைக் கண்டதும் அவள் மனம் தாங்கவியலாத துக்கந்தையும், ஆத்திரத்தையும் அடைத்து பொங்கிவிட்டது. "ஐயோ கடவுளே! என்னை இவ்விதம் வைத்து ஆட்டுவதைவிட உன்னடி சேர்த்துக்கொள்ளலாகா? குடியும் வேசிப்பித்தும் பிடித்த கணவனும், திருடனும் சோம்பேறியுமாண மகனும் வேண்டுமென்று நான் எத்தனை நாள் தவம் செய்தேன்! ஐயோ! இப்பூவுலகில் என்னைப்போல எத்தனை ஏழைகள் கஞ்சிக் கில்லாது பஞ்சைகளாக வாழவில்லை. அவர்கள் தங்கள் குடும்பத்துடன் சீராகவில்லையா! என் கதிதானா இவ்லிதம் பலவிதத்திலும் துன்பமும், துக்கமும், அவமானமும் நிறைந்திருக்கவேண்டும். ஹா! சர்வேசா! சண்டாளியின் வயிற்றின் இத்தகைய புத்திகள் பிறக்கவும், நான் இக்கோரமான காட்சியைக் கண்டு சகிக்கவும் இன்னும் உயிருடன் வாழுகின்றேனே!" என்று கண்ணிமை ஓடவிட்டுக் கதறியவாறு மூர்ச்சையானாள்.

சில நிமிஷங்களில் மூர்ச்சை தெளிந்து எழுந்தாள். இதற்குள் போலீஸார் "அம்மா! உங்கள் மகன் திருடிய காப்பு இதோ அவன் மடியிலேயே அகப்பட்டுவிட்டதால் அவனைக் கைது செய்து கொண்டு போகிறோம்" என்று கூறிவிட்டுப் பையனை இழுத்துக் கொண்டுபோசு வாரம்பித்தார்கள். கேவலம் 10 வயதுதான் நிரம்பிய பையனாகையினால் அவன் மிக்க பயந்துபோய் "அம்மா! அம்மா! நான் தெரியாமல் செய்துவிட்டேன். இனிமேல் செய்ய மாட்டேன். அம்மா! அம்மா!" அம்மா! அம்மா!' என்று கத்தினான். திருடன் எத்தனை கத்தினாலும் விடுபவர் உண்டா! சற்று நேரத்திற்கெல்லாம் அவர்கள் போலீஸ் ஸ்டேஷனை அடைந்தார்கள். தான் எவ்வளவு சொல்லியும் கேளாமையால் ஒரு தடவை தண்டனையடைந்த பிறகாவது திருந்துவாள் என்று நினைத்து கோமதி அவனுக்குப் பதிலே பேசாது மெளனம் சாதித்து உள்ளே சென்றாள். அவளுடைய துக்கத்தின் எல்லையை அறிந்தவர் கடவுள் ஒருவர்தான்.

----
அலங்காாவதிகளான பெண்கள் இடையில் ஒரு குழக்கதையைத் தாங்கிச் செல்வதும், ஆண்கள் ஒரூ குழந்தையைத் தாங்கிச் செல்வதும் தனித் தனி யான அழகுடன் விளங்குகின்றது.
-----

இந்த நிலைமையில் கோமதியைக் கண்ட வீட்டுக்காரர்கள் "நீ உடனே காலி செய்கிறாயா! உன் சட்டிப்பானையை எடுத்து வீதியில் வைக்கட்டுமா! எங்கள் வீட்டில் எத்தனையோ பண்டங்கள் இதுபரி யாதம் காணாதுபோனதை எல்லாம் உன் மகன் நான் களவாடியிருப்பான் என்று இப்போதுதான் எங்களுக்குத் தெரிந்தது. இனி அரை விநாடியும் இவ்வீட்டில் இருப்பது கூடாது, உன்னுடைய ஓட்டை உடைல்சல்களை எடுத்துக்கொண்டு நட" என்று கண்டிப்பாய் கூறி அவளுடைய சட்டிபாளைகளை எடுத்து முற்றத்தில் போட்டார்கள்.

"அந்தோ! பட்ட காலிலே படும்; கெட்ட குடியே கெடும். என்பதுபோல என் கதி இவ்விதமாகவா ஆய்விட்டது?" என்று வருந்திய கோமதி அவர்களை நோக்கி "என் அன்புடையீர்! நான் இதோ சாமான்களைக் காலி செய்துவிடுகிறேன். ஆனால் இந்த நிலைமையில் நான் உங்கள் வாடகைப் பாக்கியை எவ்விதம் செலுத்துவேன். அந்தப்பணம் செலுத்துதற்கான மார்க்கம் ஒன்றுமே புலப்படவில்லையே! என் பர்த்தாவைப் பார்க்க எண்ணிச் சென்றேன். அவர் ஊரைவிட்டே சென்று விட்டனராம். என்னுடைய பரிதாபத்திற்கு இறங்கி நீங்கள் ஓர் வழி செய்யவேண்டும். என்னிடம் 5 ரூபாய் பெறுமானமுள்ள பாத்திரங்கள்கூட இல்லையே! நான் என்ன செய்வேன்?" என்று கண்ணீர் உதிரக கேட்டாள்.

இது கேட்ட வீட்டுக்காரி "அதோ உன்னிடம் ஒரு மரப் பெட்டி இருக்கிறதே அதையும், தண்ணீர் மொள்ளும் தவலை ஒன்று இருக்கிறதே அதையும் கொடுத்துவிட்டுச் செல்லு. மற்றவைகளை வேண்டுமானால் நான் ஐயோ பாவமென்று மன்னித்துவிடுகிறேன்." என்று வெகு தாராளமாய்ப் பதில் கூறி அவ்விரண்டையும் எடுத்து வைத்துக்கொண்டாள். பரதேசியான கோமதி மிச்சமுள்ள கந்தல் பொந்தல்,தட்டுமுட்டு, ஓட்டை உடைசல் முதலியவற்றை எடுத்து வீதியில் வைத்துக்கொண்டு தனக்கு உபயோகமற்றதை வீசி எறிந்துவிட்டு வீட்டுக்காரர்களுக்கு நமஸ்காரம் செய்து உத்தரவு பெற்றுக்கொண்டு வீதியில் வந்தாள்.

-----
உண்மைக் காதலுடைய கணவன் தன் மனைவியை கோக்கி " என் கண்மணி! மூன்று தினங்களாக உன் கையினால் அன்னமிட்டுப் புசிக்காததால் என் பசியாறவே இல்லை. இன்றே என் வயிறு நிறையப் பசியாறப் புசித்தேன்" என்கிறான்.
----

அந்தோ! "மூன்று மக்களுடன் கர்ப்பிணியான பேதை எங்கு செல்வது என்னவிதம் இனி உய்வது?" என்ற பெரும் துக்கம் அவளது தொண்டையை அடைத்துக் கொண்டது. அச்சமயத்தில் அவளுடைய சிறிய மகன் தாயின் துயரைக் கண்டு சகியாமல் "அம்மா! வருந்தாதே! எப்போதும் ஈசன் சோதனை செய்யாது நன்மையளிக்கமாட்டார். நாம் பரதேசியாக அலைவது நரஜென்மங் கொண்டவர்களுக்குக் கண் தெரியாவிடினும் சர்வாந்தர்யாமியாகிய அச்சுதனுக்குத் தெரியவில்லையா! அவனை நம்பி நாம் இப்போதே கிளம்புவோம், வா!" என்று கூறி சட்டிப்பானைகளை எடுத்துக்கொண்டு தங்கையிடம் சிலவற்றைக் கொடுத்து எல்லோரும் நடக்கவாரம்பித் தார்கள்.

அப்போது சரியான உச்சி வேளையாதலால் வெய்யில் வெகு தீக்ஷண்யமாகக் காய்கின்றது. "அவ்வீட்டுக்காரர்கள் காட்டிய கடின இருதயத்திற்கு நான் தோற்கவில்லை" என்று சூரியன் போட்டியிடுவது போலிருக்கின்றது. ஆனால் இந்த அநாதைப் பரதேசிகளைக் கண்டு இரக்கங்காட்டிச் சூரியனிடம் சிபார்சு செய்யவருவதுபோல மேகங்கள் தாராளமாகத் தண்ணீரைக் குடித்துவிட்டு குளிர்ந்த முகத்துடன் சூரியனருகில் சென்று, வெப்பத்தை மறைத்துத் தணிக்க வாரம்பித்தன. இந்த நிலைமையில் எங்கு செல்வதென்று தெரியாது சிறிது தூரம் சென்றதும் கோமதிக்கு அசாத்யமான துக்கத்தினாலும்,அப்போதிய நிலைமையின் பலஹீனத்தினாலும் அதற்குமேல் நடக்கமாட்டாது கால் துவண்டு கீழே தள்ளவாரம்பித்துவிட்டது.

-----
வினா:- அமுத மொழிக் கிள்ளையே! உனக்கு மிகப் பிரியமான பொருள் நான் கொண்டு வந்திருக்கிறேன். அது எது ?
விடை:- அன்பு நிறைந்த அரிய முத்தாஹாரம் தான் ராதா! அதற்கே அடியாள் எதிர் நோக்குவது.
-----

இவளுடைய நிலைமையைக் கண்ட கேசவன் மிக்க மனம் வருந்தி "அம்மா! உன்னால் நடக்க முடியவில்லை என்பதை யறிகிறேன். என் மனம் தத்தளிக்கின்றது. இதோ ஓர் மரம் இருக்கின்றது. இதனடியில் சற்று உட்கார்ந்திருப்போம். உன் களை தெளிந்ததும் பிறகு நடக்கலாம்." என்று கூறி அம்மரத்தடியில் சாமான்களை வைத்துவிட்டுத் தாயாரை உட்காரச்செய்தான். கோமதியின் தரித்திர திசையில் முதல் நாள் இரவு முற்றும் சுத்த பட்டினியாகையினாலும், அன்று காலை முதல் அலைச்சல் அதிகரித்ததனாலும் அவளுக்குத் தாங்கவியலாத களைப்பு மேலிட்டுவிட்டது. இந்நிலைமையில் மகா போக்கிரியாகிய முதல் மகன்மீது நினைவு தாவிப் பதிந்தது. இத்தகைய சோகத்தினால் அவள் மயக்கத்தி லாழ்ந்தாள்.

மகா உத்தம புத்திரனாகிய கேசவன் அவளுடைய நிலைமையைக் கண்டு பரிதபித்துத் தன் தங்கையை நோக்கி "பாலா! நான் வெளியில் சென்று அம்மாவுக்குச் சிறிது ஆகாரம் வாங்கிக்கொண்டு வருகிறேன். இங்கு ஜாக்கிரதையாக அம்மாவைப் பார்த்துக்கொள்” என்று கூறி, ஒர் தகரக் குவளையைக் கையில் எடுத்துக்கொண்டு சென்றான். எங்கு செல்வதென்பதை யறியாவிடினும் தாயிடத் துள்ள பாசத்தினால் விரைவில் ஓர் காபி ஒட்டலை அடைந்தான். அப்போது அகாலமாகையினால் ஓட்டலில் ஒன்றும் தயாராக இல்லை. அதைக் கண்டு வருந்திய கேசவன் அவ்வோட்டலுக்கு அடுத்திருந்த வீட்டிற்குச் சென்று “அம்மா! பரதேசி ஏழை; ஒரு கவளம் அன்னம் கொடுத்தால் மிக்க புண்ணியமுண்டு” என்று கேட்டான்.

----
வினா:- கண்ணே! புத்தகப் படிப்பினால் நீ என்ன விஷயம் தெரிந்து கொண்டாய்?
விடை:-- நாதா! என்னுடைய ஆயுள்காலம் பரியத்தம் நான் தங்களுக்கு அடிமையாக விருந்து பெறும் பேற்றைத் தெரிந்து கொண்டேன்.
-----

இந்த குரல் கேட்டு வெளிவந்த வீட்டுக்காரி "ஏனடா கொட்டாப்புளி தடியா! பிச்சைக்காரன் போல வந்து ஏதேனும் அகப் பட்டதைச் சுருட்டிக் கொண்டு போக நினைக்கின்றாயா! ஒடு வெளியில்'' என்று அதட்டினாள். அந்தோ! சுடுச்சரம் போன்ற அவ் வார்த்தையைக் கேட்ட கேசவன் மன முருகிப்போய், "தாயே ! 'பிச்சை இல்லை' என்றால் நான் போய் விடுகிறேன். வீணான வார்த்தைகளைக் கூறி மனத்தை நோகச் செய்ய வேண்டாம்; போய் வருகிறேன்" என்று கூறி வெளியில் வந்தான். கேவலம் சிறிய பாலகனாக விருப்பினும் அவனுடைய மன வேதனையினால் அவன் பெரிய குடும்பஸ்தன் போலவே தவிக்கலானான்.

அவ்வீடு விட்டதும், இனி தான் எங்கு செல்வதென்று யோசித்துப் புலம்பியவாறு நடக்கையில் எதிரில் ஒரு ஸைகில் வண்டி வந்தது. அதற்குப் பக்கத்தில் ஒரு மோட்டார் வந்து விட்டதால் கேசவன் தட்டுத் தடுமாறி மத்தியில் நின்று விட்டான் ஸைகிலில் வந்த மனிதன், திடீரென்று போட்ட பிரேக்கினால் கீழே விழுந்து விட்டான். விழுந்தவன் எழுந்து "அடேய் தடிப்பயலே. உனக்குக் கடவுள் கண் கொடுக்க வில்லையா! வீதியில் பார்த்து நடக்காமல் என் வண்டியில் மோதும்படி அஜாக்கிரதையாக நடந்து வந்து என் வண்டிக்குச் சேதம் உண்டாக்கினாயே கழுதை!" என்று கூறிக் கேசவனை இழுத்து முதுகிலும்,கன்னத்திலும் நான்கு அறைகள் விட்டு "ஓடு நாயே !" என்று கூறிவிட்டுச் சென்று விட்டான்.

அந்த மகானுபாவன் கையில் மோதிரம் போட்டுக் கொண்டிருந்தான். அம் மோதிரத்தின் கூர்மையானது உள் பக்கம் திரும்பி யிருந்ததைக் கவனிக்காது 'பளீர் பளீர்' என்று அடித்ததால் அது முதுகில் நன்றாகக் கீறி ரத்தம் பீறிட்டுக் கொண்டது. கேசவன் இந்த பாதையைக் கூடப் பொருட் படுத்தவில்லை. தன் தாயாரைத் தனித்துவிட்டு வந்த நினைவு அதிகமாய் மனத்தில் வேலை செய்ததால் அதையே நினைத்து "இதுவும் நம் தலைவிதி " என்று நடக்க வாரம்பித்தான்.

----
வினா:- கணவன் மனைவி என்றால் என்ன அர்த்தம்?
விடை:- கனியும் ருசியும் என்றால் என்ன அர்த்தமோ அதே அர்த்தம் தான். கணவன் கனியாயும் மனைவி கனியின் ருசியாயும் இருக்கவேண்டு மென்பதே பொருள்.
-----

ஓர் வீட்டுத் திண்ணையில் மேளம் அடிப்பதைக் கண்டு அங்கு ஓடி "ஐயா! என் தாயாருக்கு அதிக களைப்பாக இருக்கிறது. கொஞ்சம் ஏதேனும் ஆகாரம் வேண்டும் " என்று செஞ்சிக் கேட்டான். சமையற்காரனே மனமிரங்கி சில பக்ஷணங்களும், காப்பியும் கொண்டு வந்து கொடுத்தான். கேசவன் பரம சந்தோஷத்துடன் அதை வாங்கிக் கொண்டு தன் தாயை நோக்கி ஓடிவந்தான்.

மரத்தடியில் ஒருவரும் இல்லாததைக் கண்டு திடுக்கிட்டு "ஹா! அம்மா எங்கே சென்றிருப்பாள்?” என்று மிக்க விசனத்தோடு நாற்புறமும் பார்த்தான். குழந்தையையும் காணவில்லை; தாயாரையும் காணாமையினால் கேசவன் மனத்தில் பலவிதமான எண்ணங்கள் உதிக்க வாரம்பித்து விட்டன. "தாங்க வியலாத களைப்பினால் தாயார் இறந்து விட்டாளோ! இறந்த சவத்தை யாரேனும் குழந்தைகளுடன் தூக்கிக்கொண்டு போய் விட்டனரோ! அன்றி மனக்கிலேசத் தினால் அவள் தானே தற்கொலை செய்து கொண்டாளோ! ஒன்றும் தெரியவில்லையே! ஹா! அம்மா! அம்மா! பாலா! என் கண்ணே! லீலா! லீலா! எங்கு சென்று மறைந்து விட்டீர்கள் ? என் செல்வத் தங்கைகளே! என் அரிய அன்னையே!" என்று துடிதுடித்து அப்படியே புலம்பியவாறு நின்று விட்டான்.

----
வினா:- கணவனுக்கு மனைவி முக்கியமா! மனைவிக்குக் கணவின் முக்கியமா!
விடை :- கரும்புக்குச் சாறு முக்கியமா 1 சாறுக்குக் கரும்பு முக்கியமா! ஒன்றுக்காக மற்றொன்று அவசியம். அதே போல இருவரும் முக்கியமாகும்.
------------

2-வது அதிகாரம்
எத்தன் கையில் சிக்கிய உத்தமி


மரத்தடியில், களைப்பு மேலீட்டினால் கிடந்த கோமதியைக் கண்ட பாலாவென்ற 7 வயதுச்சிறுமி தன்னை யறியாது புலம்பிக்கொண்டே தாயாரின் பக்கலில் உட்கார்ந்திருந்தாள். கேசவன் சென்று வெகு நேரமாகியும் வராமையினால் பாலாவின் கலக்கம் அதிகரித்தது. "அவன் எங்கு சென்றானோ! இன்னும் வரவில்லையே! "அம்மா! அம்மா! மயக்கம் தெளிந்ததா! கண்ணைத்திறந்து பாரேன். லீலா கத்துகிறாளே! அண்ணா கேசவனை இன்னும் காணவில்லையே!" என்று பரிதாபமாகக் கத்தினாள்.

சற்றுநேரங் கழித்து கோமதி சற்று களை தெளிந்து கண் விழித்தாள். "இன்னும் கேசவன் வரவில்லையே!" என்று மன வருத்தத்துடன் உட்கார்ந்திருக்கையில், அவ்வழியே சென்ற சிலர் "ஐயோ! சிறிய பையன் அநியாயமாய் மோட்டாரில் அகப்பட்டுக் கொண்டான்....என்ன அநியாய உலகம்! இதில் எத்தனை விபத்துக்கள் இந்தப் பாழும் மோட்டார் யமனால் நடக்கின்றன!" என்று சொல்லிக்கொண்டே செல்வதைக் கேட்ட கோமதி திடுக்கிட்டாள். "ஐயோ! என்னவோ பையன் மோட்டாரில் அகப்பட்டதாகச் சொல்கிறார்களே! ஒருவேளை நமது கேசவனாக விருப்பானோ! பாலா! அவர்களருகில் சென்று விசாரித்தால் தெரியும்" என்று கூறியவாறு அவர்களருகில் சென்று "ஐயா! எங்கேயோ பையன் மோட்டாரில் அகப்பட்டதாகச் சொன்னீர்களே! எங்கே? எந்தப் பையன்? என் மகன் வெளியில் சென்றான், இன்னும் வரவில்லை. அதனால் கேட்கிறேன்" என்று வெகு பரிதாபகரமாகக் கேட்டாள்.

-----
வினா:-‘உனக்குப் பற்றுதலே உண்டாக வில்லையே' என்று என் பெற்றோர்கள் திட்டுகின்றார்களே! அதென்ன?
விடை:-மனைவியைக் கைப்பற்றி விட்டால் சகல பற்றுதலும் உடனே உண்டாகி விடும். அதுதான் பற்றுதல்.
------

இது கேட்ட வழிப் போக்கர்கள் "அம்மா! இந்த சென்னைப் பட்டினத்தில் தினம் இத்தகைய விபத்துக்கள் கணக்கின்றி நடக்கின்றன. இதற்கொரு கேள்வி முறையும் கிடையாது. வண்டி யோட்டிகளில்;சிலர் நன்றாகக் குடித்து விட்டுத் தலைகால் தெரியாமல் வண்டியை விட்டுக் கொண்டு செல்வதால் இத்தகைய கோர சம்பவங்கள் தினம் நடைபெறுகின்றன. உங்கள் மகனோ,யாரோ! நாங்கள் எதைக் கண்டோம். 10 வயதிருக்கலாம்; சிறு பையன் வண்டியில் அகப்பட்டுக் கொண்டான். பையன் அழகாக இருக்கிறான். சைனா பஜார் தெருவில் இந்த விபத்து நடந்தது. உடனே பையனை ஜெனரல் ஆஸ்பத்திரிக்கு தூக்கிக்கொண்டு போனார்கள். அங்கு போய் விசாரித்துப் பாருங்கள்" என்று சொல்லிக்கொண்டே போய் விட்டார்கள்.

இது கேட்ட கோமதி, காலையில் ஒரு புதல்வனை சிறைக் கோட்டத்திற்கு அனுப்பியாயிற்று, இப்போது ஒருவனை யமனுலகத்திற்கு அனுப்பி விட்டோமா!" என்று மிக்க வருத்த மடைந்தவாறு, பாலா, லீலா இருவரையும் அழைத்துக் கொண்டு அந்த சாமான்களைத் தூக்க மாட்டாது தூக்கிக் கொண்டு பதைத்த மனத்துடன் ஜெனால் ஆஸ்பத்திரியை நோக்கி நடக்கலானாள். அதற்கும், இவள் இருக்குமிடத்திற்கும் ஒரு மைல் தூரமிருக்கும், இந்த மைல் தூரத்தையும் பொருட்படுத்தாது வெகு ஆவேசத்துடன் நடந்து ஆஸ்பத்திரியை அடைந்து விசாரிக்கையில் அன்று மோட்டாரில் அகப்பட்ட பையன் ஒரு பிராம்மணப் பையனென்றும் அவனை அவனுடைய பெற்றோர் வந்து ஒப்புக் கொண்டார்கள் என்றும் தெரிந்த உடனே கோமதியம்மாள் அந்த பெருந்திகிலிலிருந்து விடுதலையாகி மீண்டும் முன்பிருந்த இடத்திற்குப் போகலானாள். வழியில் இவளுடைய பலஹீனத்தினால் சற்று உட்காருவதும், படுப்பதும், நடப்பதுமாகச் சிறிது தூரம் சென்றாள்.

----
வினா:- தாயின் அன்பிற்கும், தாரத்தின் அன்பிற்கும் என்ன பேதம்?
விடை:- குழம்புப் பாலுக்கும் திரட்டுப் பாலுக்குமுள்ள பேதம் போலத்தான்.
--------

அங்கு வழியில் ஒருவன் சின்ன மாட்டு வண்டியில் போய்க் கொண்டிருந்தான். அவன் வண்டியை நிறுத்தி "அம்மணி! உங்களைப் பார்த்தால் பிராணன் இப்போதே போய்விடும்போலிருக்கிறதே! என்ன உடம்பு! நீங்கள் எங்கே செல்லவேண்டும், சொல்லுங்கள். இந்த வண்டியில் கொண்டு விட்டுவிடுகிறேன்!'' என்று வெகு உருக்கத்தோடு கேட்டான்.

இதுகேட்ட கோமதி "ஐயா! எனக்கு வண்டியும் வேண்டாம்; நொண்டியும் வேண்டாம். என்னுடைய பையனைக் காணாமல் நான் தேடி யலைகிறேன். எனக்கு எங்கும் போக்கிடம் இல்லை. உலகத்தில் சகல இடமும் என்னுடைய சொந்த இடந்தான்" என்றாள். இதுகேட்ட அம்மனிதன் “தாயே! நான் உங்களுடைய பரிதாபத்தைக் கண்டு கேட்டேன். நீங்கள் பையனை எங்கே யனுப்பினீர்கள்? அல்லது அவனாக எங்கேனும் சென்றுவிட்டானா?" என்றான்.

கோமதி:- எனக்கு சற்று முன் மயக்கம் அதிகரித்ததனால் சிறிது ஆகாரம் வாங்கி வருவதாகச் சென்றான். இன்னும் வாராமை யினால் தேடுகிறேன்.

வந்தவன்:- ஓகோ! அந்தப் பையனா! என் வீட்டிலிருக்கிறான். அங்கு வந்து சாப்பாடு கேட்டான். தாயாருக்கு மயக்கம் என்றும் சொன்னான். சாதம் அவனுக்குப் போடச் செய்து கையிலும் கொடுக்கச் சொன்னேன், அவன் சாப்பிட்ட உடனே தன்னால் தடுக்க வியலாத மயக்க மேலீட்டால் தன்னை யறியாது அப்படியே படுத்து விட்டான், பாவம் பையன் களைத்துவிட்டான் என்று நானும் பேசாதிருந்து விட்டேன். என்னுடைய வீடு சமீபத்திலேயே இருக்கிறது. வாருங்கள்; அழைத்துச் செல்கிறேன். அதற்குள் வழியில் பையனைப் பார்த்தால் அங்கேயே இறங்கி விடுங்கள் - என்றான்.

-----
வினா:-சகோதர வாஞ்சை சிறந்ததா! சினேகித வாஞ்சை சிறந்ததா?
விடை :- ஒவ்வொரு சமயத்திற்கு ஒவ்வொன்று சிறந்தது.
------

இதுகேட்ட கோமதி அதற்கிசைந்து வண்டியில் தன்னிரு பெண்களோடு அமர்ந்தாள். வண்டி செல்லலாயிற்று. சுமார் ஒரு மைல் தூரம் சென்றதும் வண்டியை ஒரு வீட்டின் வாசலில் நிறுத்தி அவன் "பையன் எழுந்து போய்விட்டானா!" என்று வீதியிவிருந்த கிழவியைக் கேட்டான். அதற்குக் கிழவி "பையன் நம்முடைய பங்களாவுக்குப் போயிருக்கிறான்" என்றாள். இது கேட்ட மனிதன் கோமதியை நோக்கி “அம்மா! உங்கள் மகன் என்னுடைய பங்களாவுக்குச் சென்றிருக்கிறானாம். வாருங்கள்; அங்கேயே போகலாம்" என்று கூறினான்.

கோமதிக்கோ, "நம் மகன் விரைவில் ஆகாரம் கொண்டு வருவதாகக் சென்றவன் இவ்விதம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறானே!" என்ற கோபமும் சற்று உண்டாயது, அதை அடக்கிக் கொண்டு அவனோடு பங்களாவிற்குச் செல்ல இசைந்தாள். வண்டி பின்னும் பலத் தெருக்களில் சென்று ஓர் பெரிய சவுக்குத் தோப்புக்குள் சென்றது. இருபுறமும் சவுக்கு மரங்கள் அடர்ந்திருந்தன. அந்த சவுக்கு மரங்கள் நல்ல செழிப்பாயும் உயரமாயும் வளர்ந்திருந்தமையினால் அவ்விடத்தில் சூரியனுடைய ரஸ்மி பூமியில் படாதவாறு நிழலாக இருந்தது. அந்த அடர்ந்த இடத்தில் வண்டி செல்கையில் கோமதியின் முகத்தில் உண்டான மாறுதலைக் கண்டு அந்த மனிதன், "அம்மா! அதோ தெரியும் பங்களாதான் என்னுடையது. இந்த சவுக்குத் தோட்டமும் அந்த பங்களாவும் அதைச் சுற்றியுள்ள அனேக தோட்டங்களும் என் சொந்தமானவை. கடவுள் எனக்கு ஏராளமான செல்வம் கொடுத்திருக்கிறார்" என்று பேசிக்கொண்டே யிருக்கையில் பங்களாவின் முன்பு வண்டி நின்றது.

------
வினா:- யாரைக் கண்டாலும் கோபம் வருகின்றதே! என்ன செய்வது?
விடை:- எல்லா மனிதர்களையும் விட்டு அன்னிய தேசத்திற்குச் சென்றிருந்துவிட்டு வந்தால் கோபம் தணியும்,
-----

வண்டியினின்றும் அம்மனிதன் இறங்கி, கோமதியையும் இறங்கச் செய்து உள்ளே அழைத்துச் சென்றான். அப் பங்களா வாசலில் நின்றிருந்த வேலைக்காரன் இவர்களை வெகு மரியாதை யோடு அழைத்துச் சென்றான். வந்த மனிதன் அவனை நோக்கி "பையன் உள்ளே இருக்கிறானா?" என்றான். "இருக்கிறான்" என்கிற பதிலைப் பெற்றதும் கோமதி மனம் மகிழ்ந்து "கேசவா! என் கண்மணீ! கேசவா! கேசவா!" என்று வெகு பக்ஷத்துடன் அழைத்துக்கொண்டே உள்ளே சென்றாள். பதில் ஒன்று மில்லாமையினால் தன்னை அழைத்துக்கொண்டு வந்த மனிதனை நோக்கி "ஐயா! என் குழந்தை எங்கே! இங்கிருப்பதாகத் தெரிவித்தீரே! என் குழந்தையைக் கூப்பிடும். நான் செல்லவேண்டும்" என்றாள்.

இதுகேட்ட அம் மனிதன் “அம்மா! நீங்கள் முதலில் சாப்பிடுங்கள்; பிறகு பேசிக் கொள்வோம்." என்று கூறி கோமதிக்கும் பாலா, நீலா இருவருக்கும் சாப்பாடு செய்து வைத்தான். அரை மனதோடு உண்ட கோமதி "ஐயா! என் மகனெங்கே! என் குழந்தையைக் கூப்பிடுங்கள்." என்றாள்.

வந்த மனிதன்:-பெண்ணே! உன் மகனாவது அவனாவது? அதெல்லாம் இனி நினைக்காதே! உனக்கு இப்போது பேஷான நல்ல காலம் பிறந்துவிட்டதென்று கூறவேண்டும். நீயும் உன் மக்களிருவரும் கஞ்சிக்கின்றிப் பஞ்சாகப் பறக்கிறீர்களே! இந்த பஞ்சம் அறவே ஒழியும் காலம் வந்துவிட்டது. உனது மகன் எவ்விதமேனும் பிழைத்துக் கொள்வான். நீ உன் மக்களுடன் அதோ அவ்வறை-யிலிருக்கும் ஜனங்களுடன் கப்பலேறி வெளி நாட்டிற்குச் செல்லவேண்டும். அங்கு உனக்குச் சரியான கூலி கிடைக்கும். எத்தனையோ சௌகரியமாக வாழலாம்; கொஞ்ச காலம் சென்றபிறகு இந்த நாட்டிற்குத் திரும்பிவிடலாம்- என்று கூறினான்.

----
"நான் தொழில் செய்யும் காலத்திலும் உன்னுடைய பிம்பமே என் மனத்தில் தோன்றி என்னை மகிழ்விப்பதால் என் வேலையில் நான் சிறப்படைகின்றேன். என் கண்ணே! எனக்கு உற்சாகமளிக்கும் சக்தி உனது பிம்பத்தி லேயே இருக்கின்றது." ஒரு காதலன்
------

இந்த சுடு சரம் போன்ற கடுமையான மொழியைக் கேட்ட கோமதி இடியோசையைக் கேட்ட நாகம் போல நடுநடுக்கலுற்று, "ஆ! அடே பாதகா! உன் வஞ்சகத்தைக் காட்டி விட்டாயா! என்னை அயல் நாட்டிற்கு அனுப்புவதற்கோ நீ இத்தனை மோசமாக அழைத்து வந்தாய்! சண்டாளா! உன் மோச வலையில் சிக்கவோ என் விதி அமைந்தது. நான் அதற்கு ஒருபோதும் சம்மதிக்க மாட்டேன். என்னுடைய குழந்தைகளுடன் பிச்சை எடுத்தேனும் இங்கு தான் ஜீவிப்பேன். நீ என்னைக் காப்பாற்றவேண்டாம். நாசகாலா!" எனத் திட்டியவாறு "பாலா! லீலா! வாருங்கள்" என்று இருவரையும் கையில் பிடித்துக்கொண்டு நடக்க வாரம்பிக்கையில், படீரென்று அவளிருந்த அறையின் கதவு பூட்டப்பட்டது. வேடன் கையிலகப்பட்ட மாடப் புறாவைப் போல இரு குழந்தைகளுடன் பரிதபித்த வண்ணம் அவள் நின்றுவிட்டாள். தன் விதியை எண்ணிப் புலம்பினாள்; கதறினாள். தான் எவ்விதம் தப்புவது என்பதறியாது தத்தளித்தவாறு மூர்ச்சையாகி விட்டாள்.

பிறகு கோமதி கண் திறந்து பார்க்கையில் தானும் தன் மக்களும் பல ஜனங்களுக்கு மத்தியிலிருப்பதாகத் தோன்றியது. நன்றாகக் கண் விழித்துப் பார்க்கையில் ஏதோ வண்டியில் நகருவது போலத் தோன்றியது கண்டு திடுக்கிட்டு அருகிலிருந்தவர்களை விசாரிக்கையில் "நாம் இப்போது கப்பவில் நடுக் கடலில் போய்க் கொண்டிருக்கிறோம்" என்றார்கள். அந்தோ! கோமதியின் மனக் கொதிப்பையும், அளவிட வியலாத துக்கத்தையும் கூறவேண்டுமா! நெருப்பிடை மெழுகென உருகினாள்; தத்தளித்தாள். "ஐயோ! சண்டாளா! எத்தனை பேர்களை இவ்விதம் ஏமாற்றியும், மோசம் செய்தும் அழைத்துச் செல்கிறீர்களோ! நேட்டாலில் கஷ்டப்பட்டேன். ரப்பர் தோட்டத்தில் இம்சைப்பட்டேன். தேயிலைத் தோட்டத்தில் வதைப்பட்டேன்." என்று ஜனங்கள் சொல்லக் சொல்லக் கேட்டிருக்கிறோமே! ஹா! அந்த கஷ்டம் நமக்கே வந்துவிட்டது. ஏ பரம் பொருளே! ஒரு குழந்தையைக் கண்முன்பு கண்டவாறு பிரிந்தேன்; இன்னொரு குழந்தையைக் காணாது பிரிந்துவிட்டேனே! என் வயிறு செய்த பாவமா இது! ஐயோ! என்ன செய்வேன்? புருஷன் குடிகாரனாகவும்: வேசிக் கள்வனாகவும் இருப்பதனாலன்றோ என் கதியும் என் மக்களின் கதியும் இவ்விதமாயிற்று, ஏ பாழுங் குடியே! வேசிப் பேயே! என் கண்ணீர், உன்னை விடுமா! என் சாபம் உன்னைத் தாக்காது போகுமா?" என்று கண்ணீர் விட்டாள்.

------
"நாதா! தங்களுடைய அன்பையே நான் என் மனத்தில் கொண்டு வேலை செய்வதால் சமையல் வெகு ருசிகரமாக அமைகின்றது. நான் பெரியோரிடத்தில் பெரும் புகழ் பெற்று விட்டேன். அன்பே அனைத்திற்கும் காரணம்."
-----

அருகிலுள்ளோர் "ஏன் கத்துகின்றாய்! நாம் அங்கு சென்றால் வெகு சுகமாக வாழலாம். இரு பிள்ளைகளும் செத்துப் போய்விட்ட தென்று எண்ணிவிடு" என்று வெகுவாய்த் தேறுதல் கூறினார்கள். என்ன சொல்லியும் சமாதான மடையாத கோமதி அந்த கடலிலேயே குதித்துவிட எண்ணினாள், தன்னிரு பெண் மக்களையும் நோக்கிப் பேசாது அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டாள்.

கப்பல் துறைமுகத்தை அடைந்தது, கூலிகள் எல்லாம் இறக்கப்பட்டு அந்த முதலாளி வசம் ஒப்புவிக்கப் பட்டார்கள். அந்த தீவில் தனியே யகப்பட்டுக்கொண்ட கோமதியின் நிலைமை முன்னிலும் அதிகரித்து பலஹீனமாகிவிட்டது. அங்கு நடக்கும் கொடுமைகளும், இம்சைகளும் கூறத் திறமன்று, "கூலி நிரம்ப கிடைக்கும்" என்று ஏமார்ந்து வந்துவிட்ட கைதிகளெல்லாம் மிக்க விசனத்தை யடைந்து பரிதபிக்கலானார்கள் என்றால் கோமதியின் கதியைக் கூறவேண்டுமா! தன் விதி இது என்றும், மீள வழி இல்லாமையினாலும் தன் மக்களுடன் அங்கு உழைத்து ஒரு வருடத்தைக் கடத்தினாள். இத்தகைய விசனத்தின் பலனாக அவளது கருப்பம் குறை மாதத்தில் சேதமாகிவிட்டது.

கோமதி யாருடனும் பேசுவதில்லை. எந்த நேரமும் தன் கண்ணீரையும் இரு பெண்களையுமே தனக்குத் துணை கொண்டு வேலை பார்த்துவந்தாள். அங்கு வந்தவர்களில் சிலருக்குத் துன்பம். சிலருக்கு இன்பம்; இன்பப்படும் கோஷ்டியில் சேர்ந்தவர் அந்த இடத்து எஜமானுக்கும் மற்றோருக்கும் அடங்கித் தமது உயிரினும் இனிய கற்பைக் கொள்ளை கொடுத்த பெண்டீர்களே யாவர். அவர் ஆணைக்கும் ஏவலுக்கும் உட்பட்ட ஆள்களும் சிலர் துன்பமற்றிருந்தார்கள். அந்த வகையில் சேராத எத்தனையோ பெண்மணிகள் அவர்களால் கொடுமைபட்டுத் துன்பத்திற் கிலக்காகி இருந்தார்கள்.

-----
"சுருட்டு குடிப்பது மிகுந்த தேக ஆரோக்யம்" என்று ஒரு வைத்தியர் கூறுவதோடு தானே குடித்தும் பழகுகின்றாராம். வேலியே பயிரை மேயும் சங்கதியில் இதுவும் ஒன்று போலும்.
--------

இந்தக் கொடிய தொத்து நோயாகிய நரசோரத்திற்குள் பெருஞ் சோரமாகிய கற்பைப் பங்கம் செய்ய எண்ணும் புண்ணிய வான்களின் கண்ணில் நமது கோமதி இங்கு வேலைக்கு வந்து சுமார் ஒரு வருடத்திற்கு மேல் படாமலிருந்தாள்; எனினும் அதற்குமேல் அந்த பாதகர்கள் தங்கள் எண்ணத்தை வெளியிட்டுக் கூறியதை அறிந்த கோமதி அவர்களைத் துரும்பிலும் துரும்பாக மதித்து வெகு அலக்ஷ்யமாகப் பேசி உதாசீனம் செய்து "ஏ பாதகர்களே! உங்கள் அநியாயத்தைக் கண்டிக்க எந்த தெய்வமும் முன்வரவில்லை; உங்களுடைய பேய்க் குணத்தை அடக்க எந்த கவர்ன்மெண்டும் கவனிக்கவில்லை என்னும் மமதை உங்களை இத்தகைய அடாத செய்கையில் புகுத்துகின்றது. இதையழிக்கக் கடவுள் பார்த்துக் கொண்டு தானிருப்பார். என்னுயிரை இழந்தாலும் இழப்பேன். என் கற்பை உங்களுக்கு அர்ப்பணம் செய்யமாட்டேன்” என்று முறைப்பாகக் கூறிவிட்டாள். இதுகேட்ட அவர்களுக்கு ஆத்திரம் மூண்டுவிட்டது.... இந்த ஆத்திரத்தினால் அவளை இன்னும் கொடுமையாக நடத்தினார்கள். அந்தத் தீவை விட்டு வருவதற்கு ஒருவித வழியும் தெரியாமல் விழித்தவாறு கடவுளை வேண்டிக்கொண்டு தன் காலத்தைக் கடத்தலானாள். இக் குழந்தைகளுடன் அங்கு கோமதி யடைந்த துன்பத்தை நேரில் கண்டவர்கள் தானறிவார்கள்.

----
"சந்தாதாரர்கள் மறுமாதம் முதல் தேதி என்று வரும்? சஞ்சிகை எப்போது படிப்போம்" என்று எதிர்பார்க்கிறார்கள். பத்திராதிபரோ "மாதம் முடிந்து விடப் போகிறதே! இன்னும் வேலை முடியவில்லையே!" என்று ஏக்கம் கொள்கிறார்.
-------------

3-வது அதிகாரம்
பற்றுடையோரன்பு - சிற்றின்பத் துன்பம்

மரத்தடியில் தாயைக் காணாது தத்தளித்த கேசவன் அக்கம் பக்கத்தில் விசாரித்தான். ஒரு தகவலும் தெரியவில்லை; கண் கலங்கினான், "ஐயோ! என் தாயே! என்னை விட்டு நீ எங்கு சென்றாய்? உன்பொருட்டு நான் எத்தனை வேகமாய் வந்தும் உன் முகதரிசனம் கிடைக்காது உன்னையே பறிகொடுத்தவன் போலத் திண்டாடுகின்றேனே! ஹா! அம்மா! அம்மா! பாலா! லீலா!" என்று கதறினான். கேசவன் தந்தையை என்றும் அதிகமாக பக்ஷத்துடன் நேசித்தறியமாட் டான். தாயிடத்திலேயே பெரும் பாசம் வைத்திருந்தான். ஆதலால் தாயின் பிரிவும், தங்கைகளின் பிரிவும் அவன் சிறிய பாலகனாயினும் அபாரமான துக்கத்தை பளித்தன. இனிமேல் தான் தங்கைகளையும், தாயாரையும் எங்குத் தேடுவது? தான் யாரிடம் அண்டி விசாரிப்பது, என்ற கட்டுமீறிய கலக்கத்தினால் விம்மி விம்மிப் புலம்பிக்கொண்டே வழியோடு செல்லலானான்.

வழியில் பார்ப்பவர்களெல்லாம் "ஏனப்பா அழுகிறாய்? " என்று கேட்டால் “என் தாயாரைக் காணவில்லை" என்று தன் கதையைக் கூறுவான். இவன் தாயாரைக் கண்டவர்கள் யார்? இக் கலியின் முதிர்ச்சியில் செல்வவந்தர்களைச் சிறப்பித்து ஆதரிப்பதும், தனத்தின்மேல் தனத்தைத் தேடிப் புதைப்பதும், தன்னுடைய சுய நலத்தை மட்டும் கவனித்துப் பிறரின் விஷயத்தில் எது எவ்விதமாயினும் அக்கரை, இன்றி அதிலும் ஏழை என்றால் சற்றும் இரக்கமின்றி அவர்களை அலக்ஷ்யம் செய்துத் திட்டி வேலை வாங்குவதுமாக இருக்கும் நிலைமையில் இந்த அனாதைச் சிறுவனைக் கவனிப்பார் உண்டா! விசாரிப்பதும் விலகுவதுமாகவே வெகுபேர்கள் சென்று விட்டார்கள்.

-----
அவசர அவசரமாக நடந்துசென்றாலும், செல்லும் இடம் சமீபத்தில் இருப்பதாயினும், அவசரத்தின் வேகத்தினால் இடம் வெகு தூரம் போலக் காணப்படுகின்றது. அவசாம் செய்யும் கூத்து அனேகம்.
-----

இவனுக்குத் தான் படித்த இலவச பாடசாலையின் உபாத்தியாயரையும் சில பையன்களையும் தவிர வேறு யாரையும் தெரியா தாகையினால் தனது பாடசாலையை நோக்கி நடந்து உபாத்தியாயரைக் கண்டு அவரிடத்தில், நடந்த சகலமான விஷயங்களையும் தெரிவித்தான். உபாத்தியாயர் கேசவனின் புத்தி சூக்ஷ்மத்தைக்கண்டு என்றும் அவனிடம் பக்ஷமாயிருப்பவராதலால் கேசவனின் கதையைக் கேட்டதும் மிக்க துயரமடைந்து "அப்பா! நான் இவ்விஷயத்தைப் போலீசாரிடத்தில் தெரிவிக்கிறேன். உன்னுடைய தாயார் வரும்வரையில் நீ என் வீட்டிலேயே சாப்பிட்டுக்கொண்டு பாடசாலையில் படித்துவா; பிறகு பார்க்கலாம்" என்றார்.

இது கேட்ட கேசவன் அதற்கு ஒப்புக்கொண்டு, அவர் வீட்டிலேயே இருந்தான். அவனுடைய உபாத்தியாயரும் இவன் தாயார் விஷயமாகப் போலீசாரிடம் தகவல் கொடுத்தார். கேசவன் வீட்டில் இருப்பதால் வாத்தியாருக்கு வேட்டி துவைப்பது, வென்னீர் விளாவுவது, கடைக்குச் செல்வது முதலிய வேலைகள் குறைந்தன. அவற்றைக் கேசவன் வெகு பக்ஷத்துடன் செய்துவந்தான். குருவின் பத்தினிக்கு கேசவனுக்கு உணவிடுவது, பெருத்த வெள்ளத்தில் செல்வம் அடித்துக்கொண்டு போய்விடுவது போலாய்விட் டது. அதை வெளியில் பலவிதத்தில் சொல்லியும் பார்த்தாள். உபாத்தியாயர் கேளாமையினால் அந்த அம்மாள் மிக்க கோபமடைந்து தினம் கேசவன்மீது ஒவ்வொரு குற்றத்தைச் சொல்வதும் அவனை வீட்டிலுள்ள பத்து பாத்திரங்கள் தேய்க்கவும், தண்ணீர் மொள்ளவுமான வேலைகளைச் செய்யச் சொல்லவும் ஆரம்பித்தாள்.

----
அவசாத்தில் ஒரு வார்த்தையைக் கூறிவிட அது பெருத்த அநர்த்தமாகி சண்டையை மூட்டிவிடுகின்றது. என்றும் மாறாத பகையாகவும் சில சமயம் ஆய்விடுகின்றது.
------

உத்தமனான கேசவன் இந்த கஷ்டங்களையும் பொருட்படுத்தாமல் வெகு பொறுமையோடு செய்துகொண்டே தன் பாடங்களை இராக்காலத்தில் படித்து வந்தான். இவ்விதமே சில வருடங்கள் சென்றன. கேசவனின் துரதிருஷ்ட-வசத்தினால் அவனுடைய குரு காலகதி யடைந்துவிட்டார். அவராலேயே நடத்திவந்த அச்சிறு பாடசாலையின் வேலை நிர்வாகத்தைப் பிறகு கைப்பற்றும் கர்த்தாக்கள் இல்லாமையிஞல் பாடசாலையும் எடுபட்டுவிட்டது. புருஷன் இருக்கையிலேயே வயிறெரிந்த உத்தமி பிறகு ஒரு அனாதையை ஆதரிப்பாளா!

வீட்டை விட்டு வெளியேறி விட உத்தரவு பெற்ற கேசவன் -பன்னிரண்டு வயதுடைய பாலகன் - அழுதுகொண்டே வெளியில் வந்தான். தன் தாயாரின் விஷயம் ஒன்றுமே தெரியாமையினாலும் தான் தனித்த பரதேசியானதாலும் அளவற்ற துக்கத்துடன் "இனிமேல் நான் எவ்விதம் பிழைப்பது? யாரிடம் செல்வது? இவ்விதம் அவஸ்தைப் படுவதைவிட உயிரை விட்டுவிடுதல் மேல்" என்று தீர்மானித்தான். சென்னை ஹைகோர்ட்டுக்கு எதிரிலுள்ள கடற்கரையில் ஒரு நாள் விசனமே வடிவமாக உட்கார்ந்திருந்த கேசவன் தன்னைமீறிப் புலம்பியவாறு "இன்று இருள் சூழும் வரையில் இங்கு இருந்து கடலில் விழுந்து உயிரை விடுவது" என்று தீர்மானித்தான்.

அன்று அந்த கடற்கரையில் பொதுக்கூட்டம் ஒன்று நிகழப் போவதால் அதற்காக ஆயிரக்கணக்கான ஜனங்கள், ஆண்களும் பெண்களும் குழுமிவிட்டார்கள். கூட்டத்தின் ஆரம்பத்தில் தேசீய கீதம் பாடப்பட்டது. அந்த கானத்தின் ஒலியைக் கேட்ட கேசவன் சங்கீதத்தினால் கட்டுப்பட்டு அவ்விடம்விட்டு கூட்டத்தினருகில் வந்தான். தேசீய கீதம் வெகு இனிமையாகப் பாடினவனும் தன்னைப்போன்ற சிறுவனேயாகையினால் "நானும் அவனைப்போல பாடிக்களிக்கும் காலம் வருமா?” என்று ஏங்கினான். அத்தருணம் அங்கு கூட்டத்தில் உட்கார்ந்திருந்த ஓர் மாது "கேசவா!" என்று அழைத்தாள்.

-----
அவசரமாக ஒருவரை காணச் செல்கையில் அவர் யாருடனோ முக்கியமாகப் பேசிக்கொண்டிருக்க, சென்றவன் அவசரத்தின் வேகத்தால் தடாரென்று உள்ளே நுழைந்தால் அந்த மனிதருக்கு அந்த அவசரப் பிரவேசம் கோபத்தை உண்டாக்கிவிட அது ஒருவிதமான கூத்தாக முடிகின்றது.
-------

இக்குரல் கேட்ட கேசவன் திரும்பிப்பார்த்து அங்கு ஓடினான். அந்த அம்மாளைப் பார்த்ததும் "அம்மா! நமஸ்காரம். என்னை தங்களுக்கு நினைவு இருந்ததா!" என்றான். அம்மாது அவனை நோக்கி "கேசவா! நீ அனாதையாக நின்றுவிட்ட செய்தியறிந்தேன். உன்னுடைய கதையைக் கேட்டு மிக்க விசனப்பட்டேன். என்னுடைய பெண்ணுக்கு ஓர் வேலைக்காரன் தேவை; அவ்வீட்டில் நீ வேலை செய்து கொண்டிருக்கிறாயா?" என்று கேட்டாள். கடவுளே தனக்குப் பிழைக்கும் வழி காட்டியதைத் தட்டக்கூடாதென்று நினைத்து அவன் அதற்கு ஒப்புக் கொண்டான். பிறகு கூட்டம் நடந்தேறியதும் அம்மாதுடன் அவள் வீட்டிற்குச் சென்று அன்று முதல் அந்த வேலையை வெகு ஒழுங்காகவும், பக்தியோடும் செய்து வந்தான்.

தினந்தோறும் வேலை ஓய்ந்த நேரத்தில் மாலைப்பொழுதில் கடற்கரையில் உட்கார்ந்து வெகு ஆநந்தமாகப் பாடிக்கொண்டிருப்பதும், பிறகு வீடு செல்வதுமாக இருந்தான். இவ்விதமே சில மாதங்களாய் விட்டன. இவன் தினம் பாடிக்கொண்டே வருவதை அங்கு வரும் அனேகர் கேட்டு ஆனந்திப்பது வழக்கம். அவ்விதம் கேட்போரில் பலர் அவனைத் தம்தம் வீட்டிற்கு அழைத்துச்சென்று பாடச்சொல்லிக் கேட்பார்கள்.

கௌரவமான சிலரை ஒன்றுகூட்டி ஒரு சபையை ஏற்படுத்தி அதில் நாடகம் ஆடுவதும், பாட்டுக்கச்சேரி நடத்துவதுமாகச் சில வருஷங்களாக பொன்னுசாமி என்னும் (ஒருவர் நடத்தி வருகிறார். அவர் ஒரு தினம் கடற்கரையில் கேசவன் பாடுவதைக் கேட்டு ஆனந்தித்துக் கேசவனைத் தமது நாடகத்திற்குச் சேர்த்துக்கொள்ள ஆசைப்பட்டு அவனை அழைத்து "எங்கள் சபைக்கு வருகிறாயா! நாங்களே உனக்குச் சாப்பாடு போட்டு வைத்துக்கொள்கிறோம்" என்று கூறினார்.

-----
மிகவும் அவசரச் செலவுக்குப் பணம் வேண்டி காளைக்கே கொடுப்பதாகக் கூறி ஒருவரிடம் கடன் வாங்கி அவசரத்திற்குச் செலவிட்டுப் பின் கடனைத் திருப்பிக் கொடுக்க தாமதமாகிவிட்டால் அந்த இடத்தில் அவசரம் செய்யும் வேடிக்கை யொரு தினுசு.
------

தான் அன்று கூட்டத்தில் பாட்டு கேட்டபோதே தனக்கும் அம்மாதிரியாக பாடக்கூடிய சமயம் வருமா என்று ஏங்கிக்கொண்டிருந்தானாகையினால் அவன் உடனே முழுமனத்தோடு சம்மதித்தான். வேலை செய்துகொண்டிருந்த வீட்டில் உத்தரவு பெற்றுக் கொண்டு அவரோடு சென்றுவிட்டான். கேசவனுக்கு வயது 12 தான் ஆகிறதென்றாலும் பார்வைக்கு நன்றாகவும், வசீகரமாகவும் இருப்பான். ஆகையினால் அவனுக்கு கிருஷ்ணன் வேஷங்கொடுத்து நடிக்கச்செய்தால் மிக்க பொருத்தமாயும், அழகாயுமிருக்கும் என்று நினைத்து கிருஷ்ணலீலையே முதலில் நடத்தத் தீர்மானித்து அன்று முதல் கேசவனுக்கு வீட்டிலேயே இருக்க இடங் கொடுத்து விட்டார்.

கேசவன் இந்த இடத்தில் வந்துசேர்ந்த பிறகு விளையாட்டுப் புத்தியுடைய சிறு பையனாதலால் தன் விசனத்தையே மறந்து வெகு சந்தோஷத்தையடைந்தான்; எனினும் தன் தாயார், தங்கைகளைப்பற்றி நினைக்காத நாள் இல்லை. அவர் தான் சொல்லிக்கொடுக்கும் பாடல்களையும், நடிக்கும் விதங்களையும் நன்றாகக் கற்றுக்கொள்ளச் செய்வதோடு அவனை நன்றாக முன்னுக்குக் கொண்டுவர எண்ணி பள்ளிக்கூடத்திலும் இலவசமாகவே படிக்கச் சிபார்சு செய்தார்.

கேசவன் வெகு ஆநந்தத்துடனும், முழுமனத்துடனும் கிருஷ்ணலீலா நாடகத்தைக் கற்றுக்கொண்டதால் இரண்டுமாத காலத்திற்குள் வெகு நன்றாகப் பாடம்செய்து ஒத்திகையில் முதல் தரமாக நடித்து சபையோரைக் களிப்பித்ததனால் உடனே நாடகத்தைப் பகிரங்கமாக நடிக்க ஏற்பாடு செய்து மாஸ்டர் கேசவன் கிருஷ்ணனாக நடிப்பான் என்று விளம்பரங்கள் செய்துவிட்டார்கள்.

------
அவசரத்தில் கண் மண் தெரியாமல் ஓடுவதால் அவசரப் பேய் அடி படவும் செய்கின்றது. நடு வீதியில் தடுக்கி விழுந்து அவமானமுறவும் செய்கின்றது.
-----

கிருஷ்ணன் குழலூதுவதுபோல புகைப்படம் பிடித்து அதை நோட்டீஸில்; பிரசுரம் செய்தார்கள். படத்தில் வெகு அழகாக அமைந்துள்ள கிருஷ்ணனைப் பார்த்து எல்லோரும் நாடகத்திற்குத் திரள் திரளாக வந்தார்கள். கொட்டகை நிரம்பி இடமில்லாதபடி ஆய்விட் டது. ஜனத்திரளின் பயனாக ஆயிரமாயிரமாகப் பணம் வசூலாகிவிட் டது. அன்று நடந்த கிருஷ்ணலீலையில், கேசவன் ஆயிரக்-கணக்கான ஜனங்களின் மனத்தை ஒருங்கே கொள்ளையடித்துவிட்டான். அவனைப் பற்றிப் போற்றாதோர் இல்லை. "அடாடா! என்ன அழகாய் நடித்தான்! என்ன இனிமையான சாரீரம்!" என்று புகழ்ந்தவாறு எல்லோரும் வீடு திரும்பினார்கள்.

கேசவனின் கஷ்டகாலம் விமோசனமே ஆய்விட்டது எனலாம். அதே கிருஷ்ண-லீலையை அடுத்தடுத்துப் பத்து முறை நடித்தார்கள். கேசவனுக்கு அந்த நாடகத்திலேயே எண்ணற்ற மெடல்கள் கிடைத்ததுடன் நல்ல கீர்த்தியும் உண்டாகிவிட்டது இத்தனை பெரும் புகழ் தனக்கு வந்துவிட்டதனால் சந்தோஷம் ஒரு புறம் கொண்டான்; எனினும் இவைகளைப் பார்த்துச் சந்தோஷப்பட தன் தாயார் இல்லையே என்ற ஏக்கம் மட்டும் அவனது மனத்தை வாட்டியது. கடவுளைக் குறித்து இது விஷயமாகச் சதா பஜனை செய்து கொண்டே இன்னும் பல நாடகங்களையும் கற்றுக்கொண்டு படிப்பையும் கவனித்து வந்தான். இவ்விதமே பின்னும் சில வருடங்களாயின. கேசவன் மெட்ரிக்குலேஷனையும் பாஸ் செய்தான். அதற்குமேல் காலேஜிலும் சேர்ந்தான். வயது 16 ஆயிற்று. சென்னையில் கேசவனின் பெயரை யறியாத குழந்தைகள் கூட இல்லை.

-----
அவசாமாகப் பேசுவதால் முக்கியமான விஷயத்தில் தடபுடலாகச் சொல்லும் வார்த்தைகள் சரியானபடி அர்த்தம் தெரியாமல் பெரிய அனர்த்தமாக முடிந்து, அவசரம் சுடு சரமாகவும் சில இடத்தில் நேர்ந்துவிடுகின்றது.
-------

சென்னைக்குத் தெற்கேயுள்ள கடலூரில் ஓர் பெரிய தனவந்தர் இருந்தார். அவருக்கு செல்வத்திற் கேற்ற சந்தானமும் நிரம்பி இருந்தது. வாய் வாழைப் பழம்; கை கரணைக் கிழங்கு என்பது அவருக்கே தகும். தன்னுடைய மக்களுக்கே வயிறு நிரம்பச் சாப்பாடு போட மாட்டார். அவருக்கு இத்தனை செல்வம் எந்த வகையில் சேர்ந்ததெனில் அவர் ஓர் நாடகக் கம்பெனி வைத்து அதற்குத் தலைவராக விருந்து ஏராளமான பொருள் திரட்டிவிட்டார். அவர் வீட்டில் வேலை செய்துகொண்டிருந்த ஓர் பெண் பார்ப்பதற்கு நல்ல வசீகரமும், அழகுக் கேற்ற கூந்தலுடன் மா நிறமுமாக விருந்தாள். அவளுக்கு சுமார் பத்து வயதிருக்கும். அந்த வீட்டில் அப்பெண் இரண்டு வருடங்களுக்கு முன்னால் அந்த நாடகக்காரருக்குத் தெரிந்த வேறொருவரின் சிபார்சின் பேரில் வேலைக்கு வந்தாள். வீட்டு வேலைகளை எல்லாம் செய்வதோடு நாடகக் கொட்டகையில் நாடகத் தன்று கூடவே சென்று அங்கு பெருக்குவதும், ஜமக்காளம் போடுவதும், நாடகத்தில் நடித்தபிறகு துணி மணிகளை வாரி மூட்டை கட்டுவதுமான வேலையையும் அப் பெண்ணே செய்யவேண்டும். இத்தனை வேலை செய்யும் பெண்ணுக்கு அவர் மாதம் 5 ரூபாய் சம்பளமும், இரண்டு வேளைச் சாப்பாடும் வெகு தாராளமாகப் போட்டு வந்தார்.

பிரதி நாடகத்திற்கும் அந்தப் பெண் சென்று பெருக்கிவிட்டு அங்கு ஓர் மூலையில் சாமி ஆடிக்கொண்டே உட்கார்ந்திருப்பாள். அந்தப் பெண் தூங்குவதைக் கண்ட முதலாளி வெள்ளென்று நாய் போலக் குலைத்துச் சீறி விழுந்து "எ தடிப் பெண்ணே! இதென்ன மூதேவித் தூக்கம். இங்கு தூங்குவதற்காகவா வந்தாய்? தினம் இரண்டு வேளை சோற்றைக் கொட்டிக்கொள்ளவில்லையா? தின்ற மயக்கத்தில் தூக்கம் வந்துவிட்டதோ! மாதம் 5 ரூபாயை வாங்கி முடிந்துகொண்டு மூதேவி போலத் தூங்குகிறாயா?" என்று அதட்டுவார்.

இந்த லோபியின் மிரட்டலுக்குப் பயந்த அந்த சிறுமி தூங்கி வழிந்துகொண்டே உட்கார்ந்திருக்கையிலும் இங்கு நாடகத்தில் பாடும் பாடல்கள் அனேகம் அவளுக்குப் பாடமாக வந்துவிட்டன. சங்கீதத்தில் மிக்க பிரேமையுள்ள அப் பெண் பிறகு நாடக தினத்தில் தூங்காமலேயே விழித்திருந்து நாடகத்தைக் கவனிக்க வாரம் பித்தாள். சங்கீதத்தினிடம் வசியமாகாதவர்கள் உலகிலுண்டா! அந்தப் பெண் வீட்டில் வேலை செய்யும்போதும், இன்னும் மற்ற நேரத்திலும் இந்த நாடகத்தில் கேட்ட பாடல்களைப் பாடிக் கொண்டே இருப்பாள்.

-----
அவசர அவசரமாகச் சாப்பிடுவதால் தையல் இலையாயின் ஈர்க்கு தொண்டையில் மாட்டிக் கொள்ளவும், சாதம் மாரில் அடைத்துக் கொள்ளவும் விக்கல் எடுப்பதுமான உபத்திரவங்கள் உண்டாகி விடுகின்றன.
------

நாம் முன்னர் தெரிவித்த சொந்தக்காரர் ஒரு காரியமாக் கடலூருக்கு வந்தார். அவர் எப்போது வந்தாலும் இந்த தனலோபி வீட்டிலேயே இறங்குவது வழக்கம். அப்படி வந்தவர் இவர் வீட்டிலிருக்கையில் அந்தப் பெண் வீடு பெருக்கும்போதும், பாத்திரம் தேய்க்கும்போதும் ஓயாது பாடுவதைக் கண்டும் அந்தப் பெண்ணின் இனிமையான சாரீரத்தைக் கேட்டும் ஆச்சரியமடைந்து அந்தப் பெண்ணை அருகிலழைத்து "அம்மா! நீ யார்? எங்கிருப்பது? உனக்கு வயதென்ன ஆகிறது? உன் பெற்றோர்கள் எங்கே இருக்கிறார்கள்? எத்தனை நாளாக இங்கு வேலை செய்கிறாய்?” என்ற கேள்விகளை அடுக்கடுக்காகக் கேட்டார்.

அதுகேட்ட அந்தப் பெண்மணி வெகு மரியாதையுடன் "ஐயா! நான் இந்த வீட்டில் இரண்டு வருடங்களாக வேலை செய்கிறேன்; நாங்கள் தற்போது இந்த கடலூரில் தான் இருக்கிறோம். இதற்கு முன்னர் பெரியவர்கள் வேறு ஊரில் இருந்தார்களாம். என் தாயாரும், எனக்கொரு தங்கையும் தானிருக்கிறார்கள். என் தங்கை கேவலம் சிறியவள். என் தாயார் காச நோயினால் மிக்க பலஹீன மடைந்துவிட்டார்கள். என் தந்தையின் விஷயமே தெரியாது. என் தாயும் அது பற்றி எதுவும் தெரிவிப்பதில்லை. என்னுடைய இந்த சம்பளத்தினால் எங்கள் தாயாரும் தங்கையும் ஏதோ கஞ்சி குடித்துக்கொண்டும் பட்டினி கிடந்தும் ஜீவிக்கின்றார்கள்" என்று தன் முழு விருத்தாந்தத்தையும் மிக்க வருத்தத்தோடு கூறினாள்.

-----
அவசரத்தில் சாமான்களை ஒழிக்கச் சென்றால் தடார் புடார் என்று பண்டங்கள் கீழே விழுந்து கொட்டி இறைந்து, உடைந்து, சின்னா பின்னமாகக் காரியமே சிதறி விடுகின்றது.
--------

வந்தவர்:- அம்மா! உன் விஷயம் கேட்க மனம் மிகவும் வருந்துகின்றது. உன் பெயரென்ன?

பெண்மணி:- பெரியவரே! குடிக்கத் தண்ணீர் கொடாத மகராஜிக்கு கங்கா பவானி என்று பெயராம் என்கிற பழமொழிப் படிக்கு ஒருவிதத்திலும் பரிமள மற்ற அனாதையாகிய எனக்கு என் தாயார் பரிமளா என்று பெயர் வைத்து அழைக்கிறாள். என்னுடைய இந்த நிலைமையில் பரிமளா என்று என் பெயரைச் சொல்லி கொள்ள வெட்கமடைந்து என்னைக் கேட்போருக்கும், இந்த வீட்டுக்காரர்களுக்குங் கூட என் பெயரை நான் கூறாது கன்னி என்று கூறி வருகிறேன். தாங்கள் ஏதோ என் பேரில் அனுதாபத்துடன் அழைத்து விசாரித்ததால் நான் எனது நிலைமையைப் பூர்ணமாக உங்களிடம் கூறினேன்" என்று மிகக் கண் கலங்கியவாறு கூறினாள்.

இதைக்கேட்ட பொன்னுசாமி உண்மையிலேயே மனமுருகிப் போய் “பரிமளா! நான் உன் தாயாரைப் பார்க்கவேண்டும். அங்கு அழைத்துச் செல்கிறாயா!" என்று கண்ணீர் உதிரக் கேட்டார். அதற்குப் பரிமளா சம்மதித்து அவரை யழைத்துக் கொண்டு வீடு சென்றாள். காச நோயினால் மிக்க மெலிந்து கிடக்கும் பார்வதியம்மாள் வெகு சிரமத்தோடு எழுந்து உட்கார்ந்து மரியாதை செய்து "வாருங்கள்; உட்காருங்கள்" என்றாள். பொன்னுசாமியும் உட்கார்ந்து அவளை நோக்கி "அம்மா! உங்கள் வரலாற்றைக் குழந்தையின் மூலமறிந்தேன். உங்கள் மகள் வெகு இனிமையாகப் பாடுவதைக் கேட்டு நான் மிக்க சந்தோஷமடைந்தேன். நான் உங்களுடைய மகளின் சங்கீதத்தைக் கேட்டது முதல் என் மனம் உங்கள் குழந்தையை என் கூடவே வைத்துக் கொள்ளப் பிரியப்படுகின்றது. உங்களுடைய சகலமான செலவையும் நான் பார்த்துக் கொள்கிறேன். நான் ஓர் நாடகக் கம்பெனி வைத்திருக்கிறேன். அதில் உங்கள் குழந்தையைக் கொண்டு சேர்க்க என் மனம் இச்சிக்கின்றது. உங்கள் சம்மதத்தை அறிந்து உங்களை அழைத்துச் செல்வதற்கே வந்தேன். உங்கள் சம்மதத்தைத் தெரிவித்தால் அதன்படியே செய்கிறேன்" என்றார்.

------
அவசர அவசரமாகப் பரிமாறினால் சாப்பிடுகின்றவர்கள் எதை முதலில் சாப்பிடுவது என்பதே தெரியாமல் எல்லாவற்றையும் வைத்து விழித்துக் கொண்டு கடைசியில் வயிறு நிறையாமல் எழுந்து விடுகிறார்கள்.
------

ஏற்கெனவே தன் குழந்தை அங்கு கஷ்டப்படுவதை பறிந்து "அந்த கஷ்டத்தினின்றும் விடுதலை பெற்றால் போதும். சிறிய குழந்தையாகிய அவள் கஷ்டப்படாது எவ்விதமாவது பிழைக் கட்டும்" என்று நினைத்து அவள் அதற்கு இசைந்தாள். உடனே தான் அவர்களை அழைத்துச் செல்வதாக ஏற்பாடு செய்து அந்த நாடகக்காரனிடமும் சொல்லிவிட்டு அவர்களைத் தன்னுடன் அழைத்துச் சென்று அவர்களைப் பிரத்யேகமான இடத்தில் வைத்து, அவர்களுக்கு வேண்டிய சௌகரியங்களைச் செய்து வைத்து, அன்றே தனது கம்பெனியில் உள்ளோருக்கு இவர்களைப் பற்றி அறிமுகம் செய்துவைத்தான்.

முதலில் ஸ்ரீ வள்ளி நாடகத்தை நடிக்கச் செய்ய ஏற்பாடு செய்து, வள்ளியின் நடிப்பை பரிமளாவுக்குக் கற்றுக் கொடுத்தார்கள். பரிமளா தன்னுடைய நடிப்பையும், பாடல்களையும் வெகு விரைவில் பாடம் செய்யத் துவக்கினாள். கேசவன் சுப்பிரமணியனாகவும், பரிமளா வள்ளியாகவும் நடிக்க ஏற்பாடாகிவிட்டது. பரிமளவல்லி தன் திறமையினால் முதல் முதலிலேயே உயர்ந்த பாத்திரமாகிய வள்ளியம்மையாக நடிக்க இசைந்து சுமார் இரண்டு மாதத்திற்குள்ளாகவே வள்ளி நாடகம் நடிக்கத் தயாராகி விட்டாள். ஒத்திகையில் மிகவும் திருப்திகரமாக பரிமளா நடித்ததால் அபரிமிதமான விளம்பரங்களைக் கம்பெணிக்காரன் செய்து "தேதியை எதிர் பாருங்கள்; எதிர் பாருங்கள் ". என்று பிரசுரித்து விட்டான்! சுவர்கள், விளக்குத் தூண்கள், டிராம் வண்டிகள் முதலிய இடங்களில் பெரிய எழுத்துக்களில் "நீங்கள் இதுவரையில் கேட்டிராத, பார்த்திராத அற்புத நாடக ரத்தினத்தின் இனிமையான கானத்தைக் கேட்கத் தவறாதீர்கள். பரிமளம் மிகுந்த பரிமளா ஸ்ரீ வள்ளியாயும், நாடக உலகத்தில் நற்கீர்த்தி வாய்ந்த மாஸ்டர் கேசவன் சுப்பிரமணிய வேடனாயும் நடிக்கப் போகும் தேதியை எதிர் பாருங்கள்.எதிர்பாருங்கள் " என்று தடபுடலாய் முதலில் போட்டுப் பிறகு நாடகத் தேதியைக் குறித்து விளம்பரம் செய்தான்.

------
தங்கள் வீட்டுக்கல்யாணத்தில் தமக்கே வேலை சரியாகிவிடுகிறது. வந்தவர்களோடு நிம்மதியாக உட்கார்ந்து பேசுவதற்குப் பொழுது கிடைப்பதில்லை பிறர் வீட்டு விவாகத்திற்குச் சென்ற காலையில்தான் குதூகலமாக எல்லோரும் கூடிப் பேசி மகிழ நேருகின்றது.
-----

நாடகத்தன்று ஏராளமான கூட்டம் கூடி விட்டதால் கொட்டகையில் நிற்கவும் இடமின்றி, டிக்கட்டுக்களை வாபீஸ் செய்யும்படி யாகவும் ஆய்விட்டது. நாடகம் ஆரம்பித்தாயிற்று. பரிமளா வள்ளி யாகத் தோன்றும் பொழுது தேவகானமோ, கந்தர்வகானமோ' என்று ஐயுறும் படியாகப் பாடிக்கொண்டே பிரஸன்னமானாள்.

கேவலம் பத்து வயதுப் பெண் குழந்தை என்பதை அப்போதே பார்த்த சபையோர்கள் அவளுடைய அற்புதமான சாரீரத் தின் இனிப்பையும், அழகின் மேம்பாட்டையும், பாடும் திறமையையும் கண்டு வியப்புற்று ஆநந்த சாகரத்தில் மூழ்கி அடிக்கடி கர கோஷம் செய்து ஒன்ஸ் மோர் (once more) என்று கத்தினார்கள். வள்ளி ஆலோலம் என்று பாடுகையில் உண்மையில் கொட்டகையில் நிசப்தம் குடிகொண்டு விட்டது. பிறகு வள்ளிக்கும் சுப்பிரமணியனுக்கும் நடந்த தர்க்கம் சபையோர்களை பிரமிக்கச் செய்து விட்டது. நாடகம் வெகு ருசிகரமாக நடந்தேறியது. அந்த முதல் நாடகத்திலேயே பரிமளாவின் பெயர் உலகில் பறக்க வாரம்பித்து விட்டது.

சிறிய பெண் இத்தனை சாமார்த்தியமாகப் பாடி நடிப்பதைக் கண்டு மிக்க பூரித்த கனதனவான்கள் அவளுக்கு மெடல்களும், பரிசுகளும் கொடுத்தார்கள். பிறகு சாவித்திரி, சீதாகல்யாணம், கண்ணகி, அல்லி, பவளக் கொடி, பாமா விஜியம், பாரிஜாதம் முதலிய பல நாடகங்களில் பரிமளா பிரக்யாதி அடைந்ததோடு நந்தனார் சரித்திரத்தில் முதல் பரிசு பெற்றாள்.

நாம் இப்பொழுது அந்த நாடகக் கம்பெனியின் நோக்கத்தை முக்கியமாகக் கூறவேண்டியது அவசியமாதலால் அதைப் பற்றிச் சிறிது கூறுவோம். பொன்னுசாமி என்பவன் மிக்க செல்வம் படைத்த வம்சத்தில் பிறந்தவன். அவனுடைய பெற்றோர்கள் தங்கள் வம்ச வழக்கத்தை முன்னிட்டுப் பொன்னுசாமிக்கு யுக்த வயதில் ஓர் அழகிய பெண்ணைப் பார்த்து விவாகம் செய்து வைத்தார்கள். பொன்னுசாமிக்குக் கூடிய வரையில் கல்வி கற்று வைத்தார்கள். பொன்னுசாமி பாலியத்தில் செல்வத் திமிரினால் மைனர் ஜமீந்தார் தோரணையில் ஆடம்பரமாக உண்டு களிப்பதும், தினுசு தினுசாக உடை தரிப்பதும், சதா பத்து சினேகிதர்களுடன் குசாலாக உலாவித் திரிவதும் தவறாது சினிமா, ட்ராமா முதலியவற்றிற்குப் போவதும், ஆடம்பரத்துடன் உயர்தர மது வகைகள் குடிப்பதும், வேசி வீட்டுறவு கொள்வனுமான முதலிய லீலைகளைச் சலிக்காது செய்து வந்தான்.

அவனுடைய பெற்றோர்கள் இந்த ஆடம்பா தடபுடலைத் தடுப்பதற்கு எத்தனை சொல்லியும் கேளாது அவன் தத்தாரியாகத் திரியலானான். அவனுடைய பாலிய லீலைகளின் பயனாக பெற்றோரின் செல்வம் சிறுகச் சிறுகக் கரைய வாரம்பித்தது. விவாகமாகிய மனைவி பக்குவமாகி வீட்டிற்கு சம்சாரத்திற்கு வந்து விட்டாள். பெரியோர்களின் நிர்ப்பந்தத்தினால் சோபனக் கல்யாணத்திற்கு ஏற்பாடாயிற்று. பொன்னுசாமி அன்றைய தினமும் வேண்டியபடி குடித்துவிட்டு ஆடிப்பாடிக் கூத்தடித்த பின்னரே சயன அறைக்குச் சென்றான்.

-----
சரி சமானமாக இருப்பதற்கு அனேகர் ஆசைப்படுகிறார்கள், யாருடன் சரிசமானமாக இருக்க வேண்டுமென்று நினைக்கின்றோமோ அவர்கள் இந்த பதவிக்கு வருவதற்குமுன் எத்தனை கஷ்டங்கள் பட்டுப் பெரியாரிடத்தில் பணிவுடன் நடந்து அனுபவப் பட்டிருப்பார்களென்றதை நினைக்கவேண்டும்.
-------

பொன்னுசாமியின் மனைவியான குணவதி என்பவள் இயற்கையான லஜ்ஜையுடன் தலை குனிந்து நிற்பதைக் கண்டு அவன் கோபித்து "சீ நாட்டுப்புறக் கழுதை! கட்டிலின் கீழே புகுந்து கொள்" என்று கூறிவிட்டு அப்போதே கதவைத் திறந்துகொண்டு தன் ஆசை நாயகியாகிய மோகனாவின் வீட்டை யடைந்தான். இச் செய்கையினால் எல்லோரும் மனம் வருந்தி பொன்னுசாமியைத் திட்டினார்கள். மனைவி என்கிற பாசத்தை அவன் சிறிதும் கொள்ள வில்லை.

எந்த நாடகத்திற்குத் தான் சென்ற போதிலும், தாசி மோகனாவுக்கும் முதல் வரிசை சோபாவில் தனிக் கட்டணத்துடன் ரிஸர்வ் செய்து விட்டு, நாடகம் சரியாக ஆரம்பிக்கும் தருணம் இருவரும் வந்து சேருவார்கள். வந்த இடத்தில் உயர்தர சுருட்டுவகைகள், குடிவகைகள் முதலிய செலவிற்கு மட்டும் 5 ரூபாய் செலவிடுவான். இந்த விதத்திலேயே இத்தகைய அநாவசிய செலவு செய்யும் பொன்னுசாமி தன் வைப்பாட்டியின் மற்ற விஷயங்களில் எத்தனை விரயம் செய்திருப்பான் என்பதைக் கவனித்துப் பாருங்கள். நாடகத்தில் யாரேனும் சற்று நன்றாகப் பாடிவிட்டால்—நடித்து விட்டால்- பொன்னுசாமியினுடைய மெடல்தான் அவர்களுக்கு முதலில் கிடைக்கும். அதுவன்றியில் நாடகத்தில் நடிக்கும்போ தெல்லாம் தனக்கு இஷ்டமான நடிகர்களுக்கு 10 ரூபாய் நோட் டுக்கள் தினம் 4-5-க்குக் குறையாமல் விழும். நாடகத்தில் எத்தகைய ஆடம்பரமான உடை தரித்துக் கொள்கிறார்களோ அதைப் பார்த்த மோகனா அதே போலத் தனக்கு உடை வேண்டுமென்று வாங்கிக் கொள்வாள். இதைத் தவிர பெரிய கொள்ளையாகிய குதிரைப் பந்தயத்திற்குத் தன் வைப்பாட்டியுடன் செல்வதும் தாராளமாகப் பணத்தைத் தோற்பதும் குறைவில்லை. இதுவும் தவிர மோகனாவின் ஜாதியில் சற்று தேர்ச்சி பெற்ற நாட்டியக்காரிக்கோ, பாட்டுக் கச்சேரி செய்பவளுக்கோ, கதை செய்பவளுக்கோ முதல் தாம்பூலம் மோகனாவே கொடுத்து தன் வீட்டில் மேற்படியாரை வர வழைத்து மெடல்,சேலை, ரூபா முதலியன இஷ்டமானபடி பரிசு கொடுத்தனுப்புவாள்.

-----
நாட்டுப்புறத்திற்கு விவாகார்த்தம் ஒரு நாள் சென்றாலும் அவ்வூரின் அழகும், சிறிய கோயிலும், குளமும், அக்ராகாரமும், மனிதர்களின் போக்கும் பார்ப்பதற்கு வெகு ஆநந்தமாக விருக்கிறது. இவ் வானந்தத்திற்குக் காரணம் மனமொத்த சினேகிதர்களோ, உறவினர்களோ ஒன்றாகச்செல்வதே யாகும்.
--------

பொன்னுசாமியின் ஆடம்பரம் முற்ற முற்ற அவன் பெற்றோரின் மன நிலைமை கேவலம் முறிந்து விட்டது. எத்தனையோ பாடு பட்டுத் தங்கள் முன்னோர்கள் தேடிய பொருளுடன் தாங்களும் சம்பாதித்துச் சேர்த்து அதை வெகுவாய்க் காப்பாற்றி வந்தார்கள்.

மகனின் துராக்குதமான நடத்தைக்குப் பயந்து அவனைப் பல விதத்திலும் திருத்திப் பார்த்தார்கள். ஒன்றிலும் பயன் படவில்லை. வீட்டில் வந்த மருமகளின் பொறுமையையும் அவளுடைய நற்குணத்தின் மாதிரியையும் கண்டு மாமியாரும் மாமனாரும் அவளைத் தம் சொந்த மகளாகவே பாவித்து, அன்பு காட்டி, வேண்டிய நகைகளைச் செய்து போட்டார்கள். பொன்னுசாமி தன் மனைவியை மிரட்டி, அடித்து, இம்சித்து நகைகளைக் கழற்றிக் கொண்டு போவதோடு தாயாருடைய உடம்பிலிருப்பதையும் லண்டத்தனம் செய்து வாங்கிக் கொண்டு போய்விடுவான். இந்த உபத்திரவத்திற்காகவே பொன்னுசாமியினுடைய மனைவி தனக்கு எதும் நகையே வேண்டாமென்று கூறிவிட்டாள். தினந்தோறும் தன் வேலைகளைச் சரிவரச் செய்வதும், மாமி மாமனை வணங்குவதும், தன் வருத்தத்தை எண்ணிப் புலம்புவதுமாகவே அவள் காலம் நடக்கின்றது.

------
கல்யாண வீட்டில் பெண்ணின் பிறந்த வீட்டினரை முதலில் உபசரிக்க வில்லை என்று அவர்களுக்குக் கோபம். பிள்ளையின் மனிதர்களை மரியாதையாக நடத்தவில்லை என்று இவர்களுக்குக் கோபம். இவ்விரண்டு கோபமும் ஒன்று கூடிக் கல்யாண வீட்டுத் தலைவனுக்கும் தலைவிக்கும் சனியன் பிடித்து விடுகிறது.
-----

அந்தப் பெண்ணின் துயரத்தைக் கண்டு அவள் மாமியார் "அம்மா! குணவதீ! என் வயிறு செய்த பாபத்தினால் நீயும் இவ்விதம் கஷ்டப்படுகின்றாயே! உன்னுடைய இவ் வயதில் எத்தனை மேன்மை பாயும் இன்பமாயும் இருக்க வேண்டும், இக்காலத்தில் நீ தனித்த சன்யாசினி போல விருப்பதைக் காண என் மனம் துடிக்கின்றதே? நான் ஆதியில் என் மாமியிடத்திலும் நாத்தியிடத்திலும் பட்ட சிறுமையும் இம்சையும் அளவிட வியலாது. அத்தகைய இம்சையை அடைந்து தவித்தேன். ஆனால் என் பர்த்தா மட்டும் என்மீது பிரியமாக விருந்ததனால் நான் உயிர் தரித்து வாழ்ந்தேன். என் புருஷன் என்னுடன் பேசுகின்றார்; அன்பாயிருக்கிறார் என்கிற வயிற்றெரிச்சலால் எங்களிருவரையும் சாபமிட்டுக் கொட்டுவார்கள். நான் இம்சைப் படும் காலத்தில் "ஐயோ! நமக்கு இந்த இம்சை போதும். நமக்கொரு மருமகள் வந்தால் கண்மணியைப் போல வைத்துக் கொண்டு மகிழ வேண்டும்" என்று நினைப்பேன்.

அப்படியே மகன் பிறந்தான். மகன் பிறந்த பிறகே என் மாமி, மாமன் மாண்டார்கள். அவர்கள் காலத்திற்குப் பிறகு எனக்கு நல்ல காலமும் செல்வாக்கும் உண்டாயது, என்னுடைய அதிகாரத்தில் குடும்பம் நடக்கத்தலைப்பட்டது, என்ன சுகமுண்டாகி என்ன! பையன் ஆரம்பத்திலேயே பெரும் துயரத்தை விளைவிக்கும் கோடரிக்காம்பாகி விட்டான். எத்தனை சொல்லியும் கேட்க வில்லை. விவாகத்தைச் செய்தால் சற்று குணவானாக விருப்பானோ வென்று அதையும் செய்தோம். பலனில்லாது போயிற்று, நாளாக ஆக வரவா வெகுதூரம் விஞ்சிவிட்டது. இந்த உபத்திரவம் சகிக்கக் கூடவில்லை. ஆகையினால் நாங்கள் காசி முதலிய புண்ணிய க்ஷேத்திரத்திற்கு யாத்திரை போகலாம் என்று நினைக்கின்றோம். நீ இங்கிருந்து சுகப்படுவது கடவுளுக்குத்தான் பிரீதி! ஆகையினால் நீ உன் தாயாரகத்திற்குச் சென்றுவிடு. உனக்கான செலவிற்குப் பணமனுப்புகிறேன். நான் திரும்பிவந்தவுடன் உன்னை அழைத்துக்கொள்கிறேன். நீ இங்கு ஏன் தனியாக வாடவேண்டும்?" என்று வெகு அனுதாபத்துடன் கூறினாள்.

-----
ஒருவர் மனத்தில் களங்க மிருப்பதும் இல்லாததும் கடவுளே யறிவார். அவர்களின் செய்கையோ பிறரின் மனத்திற்கு வெறுப்பையும் அருவருப்பையும் கொடுத்து விடுகின்றது. இதனால் பின்னர் பழைய பழக்க வழக்கத்திற்கு மாறுதல்கள் உண்டாகி விடுகின்றன.
-----

இது கேட்ட குணவதி கண்ணீர் வழிந்தவண்ணம் "அம்மா! நீங்களறியாத விஷயம் நான் ஒன்றும் சொல்லப் போவதில்லை. என்னுடைய தலைவிதி இவ்விதமிருக்கிற-தென்பதை உலகமே அறியும். எனினும் எதற்கும் ஒரு மதிப்பென்பது பொது உடைமையாக இருக்க வேண்டும். அந்த உடைமை எப்படி இருந்தால் இருக்கு மென்பதும் நீங்களறிவீர்கள். எனக்கு ஆயிரம் சிறுமையும் மனக்கிலேசமும் இருப்பினும் என்னுடைய உரிமையுள்ள வீடாகிய தங்கள் வீட்டில், தங்கள் பாதுகாப்பில் இருந்தால் தான் எனக்கு மதிப்பேயன்றி பெற்ற அன்னையாயினும் நான் அங்கு சென்றால் என் வருத்தம் பதின்மடங்கு அதிகரித்து இன்னும் சிறுமை யுண்டாகுமேயன்றிப் பெருமை இல்லை. இதைக் கண்முன்பாக எத்தனையோ பேர்களிடத்தில் பார்த்திருக்கிறேன். கணவன் வீட்டி விருந்து தாய்வீடு செல்கிறவர்களுக்குக்கூட, உடனே திரும்பிவிடக் கூடியவர்களுக்கு அதிகமான மதிப்பும் தடபுடலான உபசாரமும் நடக்கின்றன. பின்னும் நான்கு நாள் தங்குகின்றவர்களுக்கு சற்று ஏற்றம் குறைந்து சிடுசிடுப்புப் பாணத்தை அவர்கள்மீது ப்ரயோகிக்க வாரம்பித்து விடுகிறார்கள். தாய் வீடே கதி என்று கணவன் விலைக்கிவிட்ட பெண்ணின் பரிதாபத்தைக் கூறவேண்டுமா! அந்தோ! அவ்வாறு சிறுமைபட்டு வாடுவதைவிடத் தற்கொலை செய்துகொண்டு இறந்து விடலாம். எந்தெந்த காலத்தில் யார் யார் ஆதீனத்திலிருக்க வேண்டுமோ, அவ்வாறு இருந்தால்தான் பெற்ற தாயாயினும் தந்தையாயினும் மதிப்புடன் பெயரைச் சொல்லியழைப்பார்கள். இல்லையேல் மதிப்பெல்லாம் கால் மிதிப்பாய் விடும். நான் கண் கண்ட அனுபவத்தின் வரையில் எல்லா விஷயங்களையும் பார்த்தாய் விட்டது. என்னுயிர் போவதாயினும் இந்த இடத்தில் இப்படியே போய்விடட்டும். நான் உங்களை விட்டுப் போகமாட்டேன். என் கணவன் இவ்விதமிருந்தபோதிலும் அவருடைய நிழலில் இருந்து அவர் இடும் கூழோ கஞ்சியோ குடித்து என் காலத்தைக் கடத்தி விடுகிறேன். அம்மா! என்னை கைவிட்டு விடாதீர்கள். என் கதி உங்கள் பாதத்தில் முடியட்டும்." என்று வெகு உருக்கமாகக் கூறினாள்.

-----
"என்ன தடபுடலோ! எந்தநோமும் சண்டைதானா! வீட்டில் அமைதி இல்லையா?" என்று வீட்டுத்தலைவன் மற்றவர்களைக் கேட்கிறான். தன் வீட்டில் தான் இத்தகைய போராட்ட மென்று நினைத்து விடுகிறான். பிறர் வீட்டில் இத்தகைய வேடிக்கை- களையே பார்க்கும்போது தன் வீடே மேலென நினைத்துக் கொள்கிறான்.
------

இதைக் கேட்ட லக்ஷ்மியம்மாளுக்கு மனம் மிகவும் உருகிப் போய்விட்டது. "ஐயோ! குணவதி! உன்னரிய மொழிக்கு நான் என்ன பதில் சொல்வேன்? என் கண்ணே! நான் உயிருடன் இருக்கும் வரையில் உன்னைக் கைவிடமாட்டேன். இது சத்தியம். உன்னுடைய கஷ்டம் என்று தான் விடியுமோ எனக்குத் தெரியவில்லை. உன் பொறுமை உன்னைக் காக்காது போகாது. உன்னை நான் தனித்துவிட்டுச்செல்ல மனமிசையமாட்டேன். உன்னையும் கூடவே காசி யாத்திரைக்கு அழைத்துச் செல்கிறேன்". என்று தீர்மானித்தாள்.

பின்னர் 10 தினங்களில் கணவன், மனைவி, மருமகள் மூவரும் யாத்திரைக்குப் புறப்பட்டுச் சென்றார்கள். வீட்டில் யாருமே இல்லாமையினால் பொன்னுசாமிக்கு இன்னும் குசால் பிறந்துவிட்டது. வீட்டை அடியோடு மறந்தான். காசியாத்திரை போனவர்கள் வீட்டில் வேலையாட்கள் இருவரைக் காவல் வைத்துவிட்டுச் சென்றார்கள். இவர்கள் சென்று ஒரு வாரத்திற்குப் பின் ஒரு தினம் இரவு நாலைந்து கள்வர்கள் அவ்வீட்டில் புகுந்து பூட்டுக்களை உடைத்தும், வேலையாட்களைக் கட்டிப்போட்டும் கிடைத்த சகலமானதையும் மூட்டைக் கட்டிக்கொண்டு போய்விட்டார்கள். மறுதினம் காலையில் வேலைக்காரி வீடுகூட்ட வந்தபிறகு இந்த அலங்கோலத்தைக் கண்டு ஓலமிட்டு வேலைக்காரர்களின் கட்டையவிழ்த்து மூர்ச்சைதெளியச் செய்தாள். அச்செய்தியை பொன்னுசாமிக்குத் தெரிவித்தாள்.

----
அதிகமான பிரிய மிருப்பதாக எண்ணி ஏமாறும் சுபாவத்தினரே உலகில் அதிகம். சினேகிதர்களிடம் அதிகப் பிரியத்தை வைத்து ஏமாறுவதைவிட உறவினரிடத்தில் அத்தகைய சம்பவம் நேரிடினும் அவர்கள் உறவின் மனஸ் தாபம், பங்காளிச் சண்டை என்று பிறர் கூறி விடுகிறார்கள். சினேகிதரின் பிரிவினைக்கு என்ன சொல்வது....
-----

அது கேட்ட பொன்னுசாமி அவ் விஷயத்தில் சிரத்தையே எடுத்துக்கொள்ளாது “போனால் பீடை போகட்டும்” என்று கூறித் தாசி மோகத்தில் ஐக்யமாகிவிட்டான். பிறகு வேலைக்காரர்களே இத் திருட்டு விஷயத்தைப் போலீஸாரிடம் தகவல் கொடுத்தார்கள். காசிக்குச் சென்றவர்கள் ஒரு மாதத்தில் திரும்பி வந்ததும் இக் கொள்ளையைக் கேட்டுத் திடுக்கிட்டார்கள். வீட்டிலிருந்த பாத்திரங்கள், பண்டங்கள், சில நகைகள் எல்லாம் களவாடப்பட்டிருப் பதைக் கண்டு கண்ணீர் வடித்ததுடன் அன்றைய சமையலுக்குப் பாத்திரமின்றி கடையில் வாங்கும்படியாக நேர்ந்தது. இத்திருட்டு விஷயத்தில் சற்றும் கவனியாத மகனை நொந்து அழுதார்கள்.

இதே ஏக்கத்தினால் பின்னும் சில வருடத்திற்குள்ளாக பொன்னுசாமியின் தந்தை நோயினால் பீடிக்கப்பட்டுப் படுத்துவிட் டார். "ஒரே ஒரு மகனாகவிருந்தும் தமக்கு அனுகூலமில்லாது போய்விட்டதே" என்ற மனநோயே லக்ஷ்மியம்மாளையும் தாக்கிவிட் டதால் ‘இருவரில் யார் முன்னால், யார் பின்னால்' என்ற நிலைமைக்கு வந்துவிட்டார்கள். தன் விஷயத்தில் அனுகூலமாய் ஆதரவுகாட்டி. வந்த மாமி, மாமனின் கதி இவ்விதம் படுக்கையாகிவிட்டதைக் கண்ட குணவதிக்குப் பெருந்துக்கம் பொங்கிவிட்டது.

அன்று பொன்னுசாமி வீட்டிற்கு வந்தான். அவனை வழி மறித்துக்கொண்ட குணவதி, அன்றே முதல்முதல் அவனெதிரில் தைரியமாகப் பேசத்துணிந்து “நாதா! உங்களை ஈன்றெடுத்த தாய் தந்தையர்கள் பாயும் படுக்கையுமாகி விட்டார்களே! இன்னுமா நீங்கள் கவனியாதிருப்பது. இது அடுக்குமா! நான் தான் வேண்டுமானால் தங்களுக்குச் சத்ருவாகத் தோன்றலாம். உங்களைப் பத்து மாதம் குட்சியில் வைத்துச் சுமந்து ஈன்ற அன்னையல்லவா! அவர்கள்மீது உங்களுக்குத் தானாக உண்டாகக்கூடிய அன்னை என்கிற பாசம் எங்கே மறைந்துவிட்டது? தாயன்பின் மகிமையைப்பற்றி பெரிய, பெரிய துறவிகள் எல்லாம் எப்படிக் கூறி இருக்கின்றார்கள். பட்டினத்துப் பிள்ளையின் செய்கையிலிருந்து தாயின் மாசிலாத அன்பு கூறத் திறமுள்ளதா! அவர்களை நீங்கள் பார்க்காமலேயே போகின்றீர்களே." என்று ஏதேதோ சொல்வதற்குள் பொன்னுசாமி அளவுகடந்த ஆத்திரத்தையடைந்து "சீச்சி! விலகு. பெரிய புராணிகர்போலப் பேசவந்துவிட்டாய்! கழுதை!" என்று உதைத்துத் தள்ளினான்.

-----
அனேக மாத காலமாகக் கண்ணாலும் பாராது, ஒரு கடிதத்திற்கும் விதியற்றுவிட்ட சினேகிதை தன் வீட்டு வழியோடு. போகும்போது அழைப்பென்ன? குலாவலென்ன? இவை பரிகஸிக்கத் தக்க செய்கைகளல்லவா... ஹ! சினேகமே…
------

அப்போதும் குணவதி அவனை விடாது காலை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு "என்னைத் தாங்கள் என்ன செய்தபோதிலும் சரியே! நான் இனி துணிந்துவிட்டேன். என்னைத் தாங்கள் இவ் விதமான இம்சை - சித்திரவதை - செய்வதை விட என்னுயிரைத் தங்கள் கரத்தினாலேயே தாராளமாக வாங்கி விடுவது வெகு நலம். அச் செய்கையினால் மிக்க மகிழ்ச்சியை அடைவேன். நான் எடுத்த ஜன்மத்திற்கு இந்தப் பலனையேனும் அடையும்படியான வரனை யளிப்பீர்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன். தங்களுடைய இக்காலத்து பால்ய லீலைகளின் பலனைத் தாங்கள் இப்போதில்லா விடினும் மற்றொரு காலத்தில் அதுபணித்து ஏங்காமலிருக்க மாட்டீர்கள். நாதா! உயிர் நீங்கிவிடின் அவர்களைத் தவம் செய்தாலும் கண்ணால் காண்பதற்கு முடியாதென்பதை மறக்கவேண்டாம்" என்று கூறிக்கொண்டே இருக்கையில் பொன்னுசாமி ஆவேசத்துடன் பேசத் தொடங்கி "போதும் உன் வார்த்தைகளை நிறுத்து. தாயின் அன்பு எனக்குத் தெரியும். அவளுடைய கடின சித்தத்தினால் என்னை வருத்திக் காசு கொடாது உபத்திரவிப்பது வீண் போகுமா?" என்று கூறிக்கொண்டே போய்விட்டான்.

-----
எத்தனையோ ஏழைகளாக விருந்தவர்களே செல்வத்தில் துளைவதையும், செல்வத்தில் துளைந்தவர்கள் கூழுக்கு அலைவதையும் இவ் வுலகத்தில் இன்னும் காண்கிறோம். இந்நிலை யறியாது செல்வ வந்தரின் வயிற்றில் பிறந்துவிட்ட கர்வத்தையே சிலர் முக்கியமாகக் காட்டுகிறார்கள்.
------

பொன்னுசாமியின் இரும்பு போன்ற சித்தத்தின் போக்கைக் கண்டு குணவதி மிக்க விசன மடைந்தாள். மோகனா ஒரு கச்சேரியின் நிமித்தம் வெளியூருக்குச் சென்றிருக்கையில் குணவதிக்கு திடீரென்று ஜூரங் கண்டுவிட்டது. சில நாளையில் இந்த ஜூரம் டைபாயிடு என்று டாக்டர் கூறிவிட்டார்.

குணவதியினுடைய நிலைமையைக் கண்ட அவள் மாமி, மாமனுக்கு மிக்க பயம் பிடித்து விட்டதால் அவர்கள் தங்கள் நோய் குணமாகிவிட்டதாக நினைத்து மருமகளைக் கவனிக்க வேண்டிய வேலைகளையே செய்துவந்து வெகு அக்கரையாகப் பாடு பட்டார்கள். குணவதியோ தான் பாயில் விழுந்த நாள் முதலாக அவளுடைய மனம் ஒருபுறம் மிக்க சந்தோஷத்தையும், மற்றொரு புறம் கரை காணா விசனத்தையும் அடைந்தது.

ஏனெனில் தான் இந்த நோய் குணமாகாமல் இப்படியே இறந்துவிடவேண்டும் என்று சந்தோஷித்தாள். ஆனால் தன்மீது உயிரையே வைத்திருக்கும் மாமி, மாமனின் கதி அதோகதியாகி அவர்கள் பின்னும் துக்கத்தி லாழ்ந்து விடுவார்களே; என்கிற விசனம். இவ்விரண்டு விதமான உணர்ச்சிகளினால் மிக்க தத்தளித்து வருந்துகின்றாள். அவளுடைய விசனத்தை வெளியிடவும் அஞ்சுகிறாள்.

வாய் பிதற்றல் முற்றும் "என் புருஷன் வந்தாரா, வந்தாரா!" என்று கத்துவது. இவளுடய நிலைமையைக் கண்டு மனமுருகும் மாமி "அம்மா! குணவதீ! உன் பெயருக்கேற்ற குணத்தை உன்னிடமே கண்டோம். என் செல்வமே! நாங்கள் உன்னையே நம்பி இருக்கின்றோமே! எங்களை மோசம் செய்துவிடுவாயோ! மகா பாபத்தைச் செய்துள்ள எங்கள் கதி என்னவாகுமோ! ஹா! சர்வேசா! குணவதியை எங்களுடைய ஆயுள் உள்ள பரியந்தமாவது அளிப்பாய் அப்பனே!" என்று வேண்டுகிறாள்.

-----
அனாதைப் பரதேசி என்று ஒருவருக்குச் சோறு போட்டு வளர்க்கையில் அவ்வனாதையே இவர்களுக்கு யமனாகி விடுகிறான். வீட்டு ஜோலியிலும் உத்யோக தோரணையிலும் கொள்ளிக்கட்டையாகி விட்டதை யறிந்த எஜமானன்' மனத்தில் பசை நிற்குமா :...
------

அவர்களுடைய கஷ்டத்தைக் கண்டு சகியாத குணவதிக்கோ தான் இனி பிழைப்பது துர்லபம் என்று தெரிந்துவிட்டது. ஆனால் அவர்களுக்கதை அறிவிக்கவும் மனம் கூசினாள் ; எனினும் தன் மனத்திற்குள்ளேயே வைத்துக்கொண்டு வாடுவதற்கு மாட்டாது தன் மாமியை நோக்கி "மாமி! மகா கொடிய பாவி ஒருத்தி உலகிலிருந்து சில தினத்தில் மறைந்துவிடப் போகிறாள். அவளுக்காக விசனப்படுபவர்களை கேவலம் மூடர்களேன்றே கடவுள் மதிப்பார். அவளுடைய ஆன்மா நீங்கிய அன்னாளை நன்னாளாகக் கொண்டாட வேண்டுவதே கடவுளின் மனோல்லாசமான காரியமாகும். கேவலம் ஓர் பேதையாகிய என்மீது நீங்கள் உயிரையே வைத்திருப்பது மிக்க மதியீனமாகும். உலகில் ஒருவருக்கொருவர் சத மன்று; அநித்தியம். என்பதை எத்தனையோ உதாரணங்களோடு பெரியார் வெளியிட்டுள்ளார்கள். ஆகையினால் என்றைக்கிருப்பினும் அழிந்து போகக்கூடிய இவ் வுயிரை நீங்கள் இனி விரும்ப வேண்டாம்.

என் தாயே! என்னுயிர் நீங்கிவிடும் என்று என் மனச் சாக்ஷி சொல்லுகின்றது; ஆதலால் நீங்கள் கவலையை இப்பொழுதே ஒழித்து என் முடிவைத் தைரியமாயும், சந்தோஷமாயும் எதிர் பாருங்கள். கவலை வேண்டாம். இந்த பிரியத்தை எம்பெருமான் மீது செலுத்துங்கள். பரமபதவி கிடைக்கும். மறுமைக்கு எல்லை யில்லா பாக்கியம் கிட்டும். என்னுடைய கர்மா என்னோடு தொலைந்து போகட்டும். என்னுயிர் நீங்குவதற்குள் நான் உங்கள் மகனைப் பார்க்க விரும்புகிறேன். என் கடைசி விருப்பம் இதுதான். அவர் முகத்தைப் பார்த்த உடன் நான் நிம்மதியாகி விடுவேன்" என்றாள்.

இந்த துக்ககரமான வார்த்தைகளைக் கேட்ட அந்த அம்மாள் மிக்க இடிந்துபோய் "ஆ! என்ன இது குணவதி! உன் வாயிலிருந்து இத்தகைய மொழிகளையா வெளியிட்டாய்! ஐயோ! உன்னை இழப்பதையா நன்னாளாகக் கருதுவது ........... அதைவிட எங்களை இழப்பதைக் கூறினும் ஒப்புமே! என் செல்வமே! உன்னை வேண்டி நாங்கள் உயிர் வாழ்ந்தோமே! எங்களைக் கைவிட்டு விடுவதையா நீ விரும்புகின்றாய்....அந்தச் சண்டாளப் பாவி ஊரிலேயே இல்லை யாமே! ஐயோ என்ன செய்வேன்?"....என்று வருந்தினார்கள்.

பொன்னுசாமியை அழைத்துவரும்படியாக வேலைக்காரனை அனுப்பினார்கள். அன்றே பொன்னுசாமி ஊரிலிருந்து வந்தான். வேலைக்காரனைக் கண்டதும் சீறி விழுந்து "வெளியே போ; வருகிறேன்" என்று கூறியனுப்பிவிட்டுப் பின்னர் வீட்டிற்கு அன்று பூராவும் வராது மறுநாள் வந்தான்; குணவதி படுக்கை-யிலிருப்பதைக் கண்டான்.

----
எண்ணற்ற ஜனத்திரளைப் பார்த்தாலே வெகு ஆனந்தம், அத்திரளில் தமக்கு வேண்டியவர்களே அனேகர் இருந்து விட்டால் அவ்வானந்தம் வேறு ருசிதான். அதற்கே ஓர் தனி மதிப்புதான்.
------

அவனைக் கண்ட குணவதி இரு கண்களிலும் நீர் பெருகியவாறு, “நாதா! என்னுடைய அந்திய காலம் சமீபித்துவிட்டது. இந்த தருணத்திலாவது என் கண்முன் சந்தோஷமாக உங்கள் முக தரிசனங் கொடுக்க மாட்டீர்களா! இனியுமா என்மீது வர்மம்? என்னை இனி நீங்கள் வெறுத்து விலக்கினாலும் இன்னும் சில தினங்கள் வரையில் தான் வெறுக்கலாம், அதற்குமேல் என்னாவி இவ்வுலகை விட்டு மறையும், நாதா! உங்கள் அழகிய கரத்தைக் கொடுங்களேன். என் கடைசி ஆவலையாவது தட்டாது பூர்த்திசெய்ய மன மிரங்க வேண்டும்." என்று பின்னும் ஏதோ சொல்வதற்குள் பொன்னுசாமி அதிக ஆவேசத்துடன், "அடீ! எனக்குத் தெரியும் உன் கதைகளெல்லாம். சில தினங்கள் முன் என் பெற்றோருக்கு எதோ ஆபத்து வந்துவிட்டதென்று கூறி என்னை மடக்க எண்ணினாய்; இப்போது உனக்கே வந்துவிட்டதாக நாடகம் நடிக்கின்றாய்! இந்தக் கட்டுப்பாடான முன்னேற்பாடுகளை நானறியாத மூடனன்று, சீச்சி! பாசாங்குக் கள்ளீ! என் பெற்றோர்கள் இறந்தது போலத் தான் நீயும் இறப்பாய். வீணாக என் நேரத்தைக் கெடுக்கின்றாய் மூதேவி!" என்று வைதவாறு, சற்றும் இரக்கமற்று அவளுடைய பலஹீனமான நிலைமையில் அவனைக் காலால் எட்டி உதைத்துவிட்டு, அவ்விடம் விட்டு வேசி மனையில் புகுந்தான்.

அந்தோ! இவ் விபரீதமான :செய்கையைக் கண்ட அவன் பெற்றோர்கள் அவனைத் தாறுமாறாக வாயில் வந்தவாறெல்லாம் திட்டினார்கள். அன்று அவளுடைய கேவலமான நிலைமையில் அந்தச் சண்டாளன் முரட்டுத்தனமாக உதைத்ததால் உடனே அவள் மூர்ச்சையானாள். அன்று முற்றும் அம் மூர்ச்சை தெளியாது வெகு பயங்கரமாகிவிட்டது. இதே நிலைமையில் அடுத்த நாள் செல்ல, சற்று மயக்கம் தெளிந்ததும் "அம்மா! இந்த செய்கையை யாரிடமும் சொல்லவேண்டாம். வெட்கக் கேடு; வெளியாகா திருப்பதே நலம்......நான் இறப்பினும் இவ்விஷயத்தை வெளியிடா தீர்கள்." என்று உறுதியாகக் கூறினாள்.... அன்று இரவே மகா குணவதியாகிய அவ் வுத்தமியின் உயிர் மாயமாய் மறைந்தது.

-----
வயதில் சிறிய பெண்ணாயிருப்பினும் சில சித்திராங்கிகள் தம் அண்ணனையும், அண்ணியையும் ஏமார்ந்த ஓர்ப்படியையும், நாத்திகளையும் இன்னும் மற்ற உறவினர்களையும் பற்றி ஓயாது தூஷிப்பதும் அனியாயமாய்க் குற்றங் கூறுவதுமே காரியமாகி விடுகிறார்கள். இந்த சிறுக்கியின் வயதென்ன. இவள் பேசும் பேச்சென்ன " என்று பிறர் பரிகஸிப்பது அந்தக் குடும்பத்தினர்க்கே தெரிவதில்லை.
-----

குணவதியின் ஆவி பறந்து போய்விட்டபின் மிச்சமான சவத்தின் மீது அவள் மாமியும் மாமனும் விழுந்து புரண்டு கதறுகின்றார்கள். "ஐயோ! குணவதி! எங்கு சென்றாயடீ! என் கண்ணே! எங்களைப் பரதேசியாக விட்டு விட்டாயே என் கண்மணீ! குணவதி! உன் முகத்திற்காக நாங்கள் உயிர் வாழ்ந்தோமே! எங்களை நட்டாற் றில் விட்டு விட்டாயே! ஐயோ! நாங்கள் என்ன செய்வோம்? இனி எவ்விதம் உயிர் வாழ்வோம்? மதியை இழந்த வானம் போலவும் நீரற்றப் பயிர் போலவும் ஆய் விட்டோமே! ஹா! குண மணியே! குணக்குன்றே! கோதிலா மாணிக்கமே!" என்று தன்னிறையழிந்து புலம்பி முட்டிக் கொள்கிறார்கள்.

அண்டை அயலில் உள்ளவர்கள் அவர்களுக்கு ஆறுதல் கூறவும் மாட்டாது குணவதியின் அபாரமான குணத்திற்கும், பொறுமைக்கும் கண்ணீர் விட்டார்கள். இந்த உத்தமி இறந்த செய்தியை அச்சண்டாளனுக்குச் சொல்லி யனுப்பினார்கள். அவன் ஊரிலில்லை என்றும், எங்கு சென்றான் எப்போது வருவான் என்பது ஒன்றுமே தெரியவில்லை என்றும் பதில் கிடைத்தது.

சவத்தை வைத்துக்கொண்டு புலம்பும் இருவருக்கும் "அவனை எங்குத் தேடுவது, எந்த விடத்திற்குத் தந்தி யடிப்பது? ஐயோ! வேசிக் கள்வனின் இருப்பிடத்தை எங்கு கண்டு பிடிப்பது?" என்கிற பெரும் விசனமும் கூடப் பாதித்தது. குணவதியினுடைய மரணத்தினால் அவ்வூரே அல்ல கல்லோலப்படுகின்றது. "அவளை இழந்த பின் இனி உயிருடனும் உலவ வேண்டுமா!" என்று கிழவர்கள் துடித்தவாறு சவத்தைக் காத்தார்கள்.

பொழுது விடிந்ததும், வேசி வீட்டிற்குப் பலதரம் ஆளனுப்பிப் பார்த்தும் தகவலே கிடைக்கவில்லை; கதவு பூட்டப்பட்டிருந்தது. அந்தப் படுபாவியின் தகவலை யறியக் கூடாது தத்தளித்தவாறு அன்று இரவு வரையில் பிணத்தை வைத்துக் கொண்டிருந்தார்கள். அக்கம் பக்கத்திலுள்ளோர் பிணத்தை சீக்கிரம் எடுத்துவிட வேண்டும் என்று கூறியதோடு சவத்தின் நிலைமையும் கேவலமாகி, அசங்கியமாகி விட்டதால் "அவன் வந்தாலும் வராவிடினும் சவத்தை எடுத்து விடுவது" என்று தீர்மானித்துச் சகல காரியமும் செய்து எடுத்து விட்டார்கள்.

------
படித்த முட்டாள்கள் இவ்வுலகில் மலிந்து கிடப்பதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். ஆயிரக் கணக்கான ஜனங்கள் ஏறும் ரயில் வண்டியில் நூற்றுக் கணக்கான ஜனக்கூட்டம் ஒரு வண்டியில் அடைபட்டுச் செல்கையில், அநியாயமாக சில தடியர்கள் "என்மேல் இடித்துக்கொண்டு சென்றாள்" என்று கூசாது சொல்கிறார்களாம். அந்த மடயரின் படிப்பைக் கொண்டு உடைப்பில் போட. அவர்களின் அறிவு இந்த அற்ப விஷயத்தில் வளருவதற்கா ஆயிரமாயிரமாகப் பணத்தைக் கொட்டிப் படிக்கவேண்டும். தூத்தூ! இத்தகையோர் வேறு எதைத்தான் சொல்ல அஞ்சுவார்கள் ?
-----

அந்தோ! குணவதியின் உடலில் உயிரிருந்த காலையில் அவளுக்கு ஒரு வினாடியும் நிம்மதி என்பதே இல்லாது தவித்தாள். அத்தகைய உத்தமி இந்த உலகைவிட்டு மறைந்த பிறகே -- சவமாகிய பிறகே - நிம்மதியான நிலைமையை அடைந்து விட்டாள். அவளுடைய சவ ஊர்வலத்திற்கு கொட்டு முழக்கும், காந்த விளக்குகளும் நிரம்பி விட்டன. கதறித் துடிக்கும் ஜனங்கள் வெகு பேர் திரள் திரளாகப் பின்னே செல்லலாயினர்.

அப்போது இராக் காலமாகையினால் குளிர்ச்சியான காற்று வீசுகின்றது. அன்று பூர்ணமான சந்திரன் பிரகாசிக்கக் கூடிய பௌர்ணமியாக விருந்தும் குணவதியின் மரணத்திற்கு வருந்தி துக்கங் கார்ப்பவன் போலவும், அவளுடைய சவக் கோலத்தைக் கண்டு சகிக்க மாட்டாதவன் போலவும் மேகத்திடை மறைந்து விட்டான். மேகங்களோ இந்த அபாரமான துக்கத்தை—கணவனால் மனம் நொந்து உயிர் விட்ட உத்தமியின் சரிதையை - உலகினருக்கு எடுத்துக் கூறுவது போல வெகு வேகமாய் இங்குமங்கும் ஓடியாடி விசனிக்கின்றன.

அந்த நிலைமையில் சவம் ஒரு வீதியில் போய்க் கொண்டிருக்கையில் ஒரு பெரிய மாடி வீட்டின் மாடியில் உல்லாசமாய்க் காற்று வாங்கிக் கொண்டிருந்த பொன்னுசாமி அங்கு ஏதோ ஊர்வலம் வருகிறதென்று கொட்டு முழக்கினாலும், விளக்கின் ஒளியினாலும் எண்ணி அதைப் பார்க்கலானான். வெளியூருக்குச் சென்றிருந்த அவனும் மோகனாவும் அன்று நேராக அந்த வீட்டில் நடக்கும் தேக் கச்சேரியில் சங்கீதக் கச்சேரி செய்வதற்காக வந்து விட்டார்கள்.

மோகனா உள்ளே ஆநந்தமாகப் பாடிக் கொண்டிருக்கையில் பொன்னுசாமி மாடியில் காற்று வாங்கிக் கொண்டிருந்தான். அச் சமயத்தில் குணவதியின் சவம் அவ்வீட்டின் சமீபத்தில் வரவே அதை அப்போதே சவமென்று அறிந்து உற்றுப் பார்த்தான். அந்தச் சவம் குணவதியினுடையது என்பதை யறிந்ததும் உண்மை யிலேயே அவனால் தாங்க முடியாமலும் தடுக்க முடியாமலும் திடீ ரென்று ஒருவித (Shock)மன அதிர்ச்சி உண்டாகி விட்டது. அவ்வளவுதான் அவன் தன்னை மீறி, "ஆ! இந்தச் சவம் என் மனைவியான குணவதியல்லவா! ஐயோ! குணவதி இறந்து விட்டாளா! குணவதியின் சவம்தானா இது!...ஆ! அதோ! என் பெற்றோர்........ ஐயோ!.... மோசம் போய் விட்டோமே!...." என்று கதறிக்கொண்டே ஒட்டமாகக் கீழே இறங்கி வீதியில் வந்து நடு ரோட்டில் தடா ரென்று விழுந்தான்.

-----
தன் உடன் பிறந்த பைசாசங்களின் ஆபாஸ ஊழலைப் பற்றி உலகமே நகைக்கையில் அதை யறியாத முட்டாள் அன்னியப் பெண்களின்மீது அபாண்டப் பழி சுமத்த வெட்க மின்றி வருகிறான். இவனுக்கெல்லாம் படித்த பட்டதாரி என்ற பெயரிருப்பதானது விளக்கெரிவதற்கு ஒப்புதான்.
-------

பெற்றோரை நோக்கி, "என்னரிய குணவதியைச் சண்டாளன் நேற்று முன் தினமே காலால் உதைத்துத் தள்ளி வந்தேனே! என் பெற்றோர்களே! மகா கொடிய பாதகனாகிய நான் இனி என் குற்றத்தை யுணர்ந்து யாது பயன்.? ஐயோ! என் மதியில் சிற்றின்ப மென்கிற இருள் சூழ்ந்து என்னைக் கேவலம் படுகுழியில்-அன்பற்ற நரகத்தில்-தள்ளி விட்டதே! ஐயோ! குணவதியின் வார்த்தைகளை அலக்ஷியம் செய்தேனே! பெற்றோரைப் புறக்கணித்தேனே! அவள் உத்தமி-யாகையினால் அவள் வாக்கு பலித்துவிட்டதே! என்ன செய்வேன்?” என்று கதறினான்; முட்டிக் கொண்டான்.

இவனுடைய மாறுதலைக் கண்டு சகலமானவர்களும் பிரமித்து விட்டார்கள். அவர்களுடைய வெறுத்த மனமும் உருகும்படியான நிலைமையில் பொன்னுசாமி மாறிவிட்டான். பிறகு எத்தனையழுது என்ன உபயோகம் ? தான் செய்த அக்கிரமத்தை எல்லாம் தானே கூறிக் கதறினான். குணவதியின் சவத்தை தகனத்திற்கும் கொடாது கட்டிப் புலம்பினான். பிறகு சவச் சடங்குகள் முடிந்தன.

அந்த நிமிடத்தில் மாறுதலடைந்த பொன்னுசாமியின் மனம் பரிபூர்ணமான வைராக்கியத்தில் திரும்பிவிட்டது. தாசியை அடியோடு வெறுத்தான். "ஹா! ஏ சிற்றின்பப் பேயே!....மோகனாஸ்திரப்பிரம்ம ராக்ஷஸே! உன்னாலன்றோ, நான் சகல விதத்திலும் கழி பட்டேன். கண்ணான பெற்றோரையும், குணக் குன்றாகிய மனைவியையும் உயிருடனிருக்கையிலேயே இழந்திருந்தேன்; இப்போது அடியோடு இழந்து விட்டேன். ஹா! குணவதி! உன்னை சகல உரிமையுடன் நான் அடைந்தும், உன் குணத்தின் மணமறியாப் பாதகனானேன்." என்று பலவாறு வருந்தினான்.

இந்த விசனத்தைத் தாங்காது அவன் பெற்றோர்கள் அப்போதும் பொன்னுசாமியை முற்றும் நம்பாது வெறுத்தார்கள். இவ் விடத்திலிருக்க மனம் சகியாது மீண்டும் யாத்திரை கிளம்பி விட்டார்கள். அவர்களோடு பொன்னுசாமியும் உலகையே வெறுத்து யாத்திரை கிளம்பினான்.

-----
"அந்தப் பெண் ரவிக்கை இப்படி போட்டுக்கொண்டிருக்கிறாள். இந்தப் பெண் இத்தனை வளையல் அணிந்து கொண்டிருக்கிறாள். இவள் குங்குமம் இப்படி வைத்துக் கொண்டிருக்கிறாள்." என்று வம்பளப்பதைச் சிலர் தங்கள் கடமையாகக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் படித்த படிப்பின் பலன் இதுபோலும்.
---
-----------

4-வது அதிகாரம்
பிறைமதி - நிறைமதி

பரிமளவல்லியின் புகழ் வளர்பிறை மதியம் போலப் பிரகாசிக்கத் தொடங்கியது. பரிமளாவும் கேசவனும்- சிறுமியும் சிறுவனும் - நடிக்கும் திறனும், பாடலின் எழிலும் பொது மக்களின் மனத்தை முக்கியமாகக் கவர்ந்தன. அதோடு அந்த நாடகத்தின் பணம் முற்றும் முக்கியமான தர்ம ஸ்தாபனங்களுக்கே செல்வதால் அது விஷயத்தில் பொது ஜனங்களுக்கு ஒர் வெறுப்பேற்படாமல் விருப்பும் வாஞ்சையுமே ஏற்பட் டது. அதனால் கம்பெனிக்கு அபரிமிதமான செல்வமும், செல்வாக்கும், கீர்த்தியும் உண்டாகி விட்டது.

ஆதி காரணமாகக் கம்பெனி ஆரம்பித்ததை உத்தேசித்து ஜனங்கள் முதலிலிருந்தே நல்ல ஆதரவு கொடுத்துதவினார்கள். பொன்னுசாமி தன் பெற்றோருடன் யாத்திரை சென்று விட்ட பின்னர் அவனுடைய மனச் சாக்ஷியே அவனை பலமாகக் கண்டித்து நல்வழியில் திருப்பி விட்டது. சுமார் ஒரு வருட காலமாக அவர்கள் யாத்திரை செய்தார்கள். மன வேதனையின் பலனாக பொன்னுசாமியின் பெற்றோர்கள் ஒவ்வொரு ஊரில் ஒவ்வொருவர் உயிர் நீத்து விட்டார்கள். பொன்னுசாமி தனித்துப் பரதேசியாக நின்றான்.

------
எந்த விஷயத்தையேனும் அனுபவப்பட்டவர்கள் அதைக் கண்டித்தால் அவ்விஷயத்தில் ஆராய்ச்சியுள்ளவர்களுக்கு விபரீதமான கோபம் திடீரென்று உண்டாகிப் பொங்கி வழிகின்றது. அவர்களின் இயற்கை நிலைமையே மாறு பட்டு வாயில் எதிர்பாராத வார்த்தைகளையும் அந்த ஆவேசம் கொட்டிவிடுகின்றது.
------

பிறகு தன் ஊர் திரும்பினான். அவன் அனேக இடங்கள் யாத்திரை செய்ததின் பயனாக அனேக ஏழைப் பரதேசிகளின் துயரத்தையும் ஆங்காங்கு மக்கள் படும் கஷ்டத்தையும் கண்டு எவ்விதத்திலாவது அவர்களுக்கும் அவ்வகையோரான இன்னும் மற்றையோருக்கும் உதவி செய்ய வேண்டும் என்று மனத்தில் நினைத்து வெகுவாய் யோசனை செய்ததில் 'பணம் லகுவில் திரட்டக் கூடிய வகையில் நாடகக் கம்பெனியே சிறந்தது' என்று அநேகர் யோசனை கூறி நன்றாகச் சங்கீதம் தெரிந்த பெரிய மனிதர்கள் எல்லாம் இனாமாக நடிப்பதாக ஒத்துக் கொண்டு ஆதரவளிக்க முன் வந்தார்கள்.

அதன்மேல் கம்பெனி ஆரம்பமாகி வெகு சிறப்பாக நடந்து கொண்டு வந்தது. அந்த பணத்தில் தர்ம பாடசாலை, வைத்திய சாலை, ஏழைக் குழந்தைகளை - அனாதைக் குழந்தைகளை- வளர்க்கும் சங்கம் முதலியன வெல்லாம் ஸ்தாபனம் செய்தான். கேசவன் வந்து சேர்ந்த பிறகு பொன்னுசாமியின் மனோபாவத்திற்கு உதவியாக வேண்டிய பொருள் கிடைக்கத் தலைப்பட்டது, அவன் அனேக விதமான தானங்களை கை சலிக்கச் செய்யத் தொடங்கினான். பரிமள-வல்லியினால் முன்னிலும் அதிக பரிமளம் அந்த கம்பெனிக்கு உண்டாகி விட்டது.

எந்த காரியம் செய்யப் புகினும் அதில் விக்கினமேற்படுவதோ அன்றி சண்டை, பூசல் முதலியன உண்டாவதோ உலகத்தில் சகஜமல்லவா! அதேபோல நற்குண நாடகக் கம்பெனியிலும் சிற்சில மாறுதல்கள் உண்டாகத் தலைப்பட்டன. “கேசவன் மீதும், பரிமளாவின் மீதும் முதலாளி அதிகப் பிரியம் வைத்துப் பலவிதத்திலும் ஆதரிக்கின்றார். நம்மை அவ்வாறு கவனிப்பதில்லை“ என்கிற பொறாமை உதயமாகி விட்டது. அதை அடிக்கடி ஜாடை மாடையாகப் பேசவும் சிலர் ஆரம்பித்தார்கள், கேசவனிடத்தில் தங்களுடைய கசப்புத் தன்மையைக் காட்டத் துவக்கினார்கள்.

-----
சிலரின் மனப்போக்கை முற்றிலும் அறியாது அவர்களைப்பற்றி வித்யாச மாகவே நினைத்து. அவ்வழியிலேயே நடந்துகொள்கிறவர்கள் பிறகு உண்மை வெளியாகும் காலத்தில் தம்மையேதாம் நொந்துகொள்கிறார்கள்,
----

பரிமளவல்லி கம்பெனியில் சேரும்போது 10 வயதுச் சிறுமியாக விருந்தாள். அவள் சந்தோஷ மற்று, மிக்க துன்புற்று,வறுமையினால் பீடிக்கப்பட்டு ஒரு வீட்டில் அடிமை வேலை செய்து கொண்டிருந்ததால் மன வருத்தத்தினால் தேகம் வளர்ச்சி குன்றிப் போய் ஒளி மங்கிக் கிடந்தாள். கம்பெனியில் வந்து சேர்ந்த பிறகு அவளுடைய கஷ்ட காலம் விமோசனமாகி விட்டது. அந்த சந்தோஷத்தினால் மேனியும் முகமும் வசீகர முற்றுப் பிரகாச முண்டாயது. கம்பெனியின் சொந்தக்-காரரின் அன்பு இவர்கள் குடும்பத்தைப் பூர்ணமாகத் தாங்கியது. நாடகத்தில் நற்கியாதி பெற்ற பரிமளா தன் காலத்தை வீணே கடத்தாமல் தனது அறிவு வளர்ச்சிக்கான ஓர்செல்வத்தையும் சேமிக்க எண்ணி முதலாளியினுடைய ஆதாவில் உபாத்தியாயர் ஒருவரை நியமித்து அவரிடம் கல்வியைக் கற்கலானாள்.

சங்கீதமும் கல்வியும் சமமாக விருத்தியடையப் பெற்ற பரிமளாவினால் கம்பெனி செழித்து ஒங்கி விருத்தியடைவதைக் கண்டு சந்தோஷித்த முதலாளி பரிமளாவின் குடும்பத்தை ஒரு வருடமாக ஆதரித்து வந்த மட்டுடன் நிறுத்தாமல் பரிமளாவுக்கு மாதம் இத்தனை ரூபாய் என்று சம்பளம் போலவும் கொடுக்கலானார். கம்பெனியில் சேருங் காலத்தில் கட்டக் கந்தையற்றுக் கிடந்த பரிமளவல்லிக்கு மூன்று வருடங்களுக்குள்ளாகவே சொந்தமாக உயர்ந்த ஆடைகள், ஆபரணங்கள் எல்லாம் உண்டாகி விட்டன. ஆநந்தப் பெருக்கினால் பரிமளா வளர்பிறை மதியம் போலப் பிரகாசித்து எல்லோருடைய விழிகளுக்கும் பேராநந்த விருந்தளித்தாள்.

பரிமளாவுக்கு வயது பதின்மூன்று நடக்கின்றது. அவளுடைய இயற்கை, செய்கையாகிய எழிலுடன், இனிமையான சங்கீதத்தின் ருசியும் ஒன்று கூடி அவளைக் காண்போரின் மனத்தைக் கவர்ந்தது. உருண்டு திரண்டு இளம் வாழைத் தண்டுகளைப்போன்று பக்குவப் பட்டிருந்த மேனி பிரமிப்பை பளித்தது. எந்த வேடத்தில் எந்த விதமாகத் தோன்றிய போதிலும் அச் சிறுமியின் வனப்பும் பொருத்தமான நாடக நடிப்பும் வெகு அற்புதமாக விளங்கின. அத்தகைய நங்கையின் நடிப்பையும், வனப்பையும், கானத்தின் இனிப்பையும் காண ஒவ்வொரு நாடகத்திலும் ஏராளமான கூட்டம் கூடி விடுவார்கள்.

------
அந்தரங்கமான அன்பு இருக்கலாம். அதைக் காட்டும் வழிஞ்சிலருக்குத் தெரிவதே இல்லை. பேசுவது இன்னதென்று தெரியாமல் உளறி விழிக்கின்றார்கள்.
-----

பரிமளவல்லி தான் சிறிய பிராயத்துப் பெண்ணாயிருப்பினும் ஒழுக்கத்தை மீறியோ, ஆபாசமான முறையிலோ ஒரு போதும் நடிக்க மாட்டாள். ஆபாசமான நாடகத்தை அக் கம்பெனியிலேயே நடிப்பதில்லை என்ற ஓர் திட்டம் கம்பெனியின் ஆரம்ப நோக்கமேயாகும். செல்வவந்தர்கள் பரிமளாவின் நடிகத் திறமையையும், சங்கீத சாரத்தையும் கேட்டுக் களித்து ஒவ்வொரு தினமும் நோட்டுக்களாகவே வீசி எறிவார்கள்.

ஆனால் நமது செல்வி அந்த வெகுமதிகளைக் கண்டு பேராசையும், அல்ப மதியும் கொள்ளாது இவ்வாறு தனக்குக் கொடுப்பது பற்றி வருத்தமே கொண்டாள். அந்தப் பணத்தையும் எடுத்து முதலாளியிடமே கொடுத்து அதையும் தரும வழியில் செலவிடும் படியாகக் கேட்டுக் கொள்வாள். தன்னுடைய சொந்த பிதாவைப் போலவே பொன்னுசாமியைப் பரிமளா நேசித்து வந்தாள்.

அக் கம்பெனியில் நடிக்கும் நடிகர்களிடத்தில் அனாவசியமாகவோ அடிக்கடியேர் பேசவும் சந்திக்கவும் மாட்டாள். கேசவன் ஒருவனை மட்டும் அவள் தன்னை யறியாத ஓர் அன்புடன் நேசித்து அவனிடம் தனக்கு ஓய்ந்த நேரத்தில் பேசுவது, நடிக்கப் பழகுவது, பாடங் கற்றுக் கொள்வது, சங்கீதம் கற்றுக் கொள்வது முதலியன செய்து வந்தாள். கேசவனுக்கும் இயற்கையிலேயே ஒழுக்கம் செழித்திருந்தது. பரிமளாவினுடைய முதல் சந்திப்பிலிருந்தே அத்யந்த அன்பு தெய்வத் தன்மையாக உதித்து மனத்திடை நீறு பூத்த நெருப்புப் போலப் பிரகாசியாமல் நின்றது.

-----
எதிர்பாராத கோபாவேசத்தை முக்கியமானவர்களிடத்தில் வித்யாஸ மான மொழியுடன் - தொனியுடன்-கண்டபிறகு அவ்வமயம் மற்றையோரின் நிலைமை பதில்பேசுவதுகூடாது என்ற உறுதியில் வந்துவிடுகிறதோடு மனமே கூறவியலாத விதமான மாறுதலை யடைகின்றது.
-----

ஏற்கெனவே கேசவன் மீது பொறாமை கொண்டிருந்த மற்றவர்கள் கேசவனும் பரிமளாவும் அன்பொழுக விருப்பது கண்டு ஆத்திரங் கொண்டார்கள். பரிமளவல்லியின் வீட்டிற்கு அனேக கடிதங்கள் வரத் தொடங்கின. நாடகத்தில் நடிப்போரும் இதரர்களும் அவளுடைய மோக வலையில் சிக்குண்டு தம் தம் மனம் போனபடி யெல்லாம் கடிதங்கள் மூலம் பிதற்ற வாரம்பித்தார்கள். பரிமளா கேவலம் சிறுமியாயினும் அவளுடைய அறிவு தனிச் சுடர் போலப் பிரகாசிக்கின்ற-தாகையினால் இக் கடிதங்கள் அவளுடைய மனத்தைப் புண் படுத்தின. "தினந்தோறும் தபால்காரன் தன் வீட்டிற்கு வராது போகக் கூடாதா?" என்று எண்ணுவாள். அவளுடைய இவ் வேதனையை யாரிடம் வெளியிடுவது" என்று ஏங்கி அஞ்சி சில நாள் வாளா விருந்தாள்.

பரிமளாவுடன் நடிப்பதில் நான்நீ என்று போட்டிகளும் உண்டாகும். பரிமளா ஒருத்தியே அங்கு பெண்பாலாதலால் மற்றைய பெண் வேடங்கள் தாங்குவ-தெல்லாம் ஆண் பிள்ளைகளே யாவர். பரிமளாவின் தாயாகவும், தோழியாகவும் பலவிதமான நடிகர்களாகத் தோன்றுவோரிடத்திலும் பரிமளா நெருங்கி நடிக்காமல் தன்னுடைய மனத்திலடங்கியுள்ள வெறுப்புடன் விலகியே நடிப்பாள்.

அவ்வாறான காலங்களில்தான் பரிமளாவின் மனத்தில் அபூர்வமான ஓர் அறிவு உதய மாயிற்று. அது யாதெனில் "நான் ஒர் நாடகமாதாக இருக்கிறேனே" என்கிற ஓர் ஏக்கமே. அவ்வாறு உதயமானதோடு தான் தினம் நடிக்கும் உயரிய நாடகங்களின் வேடத்துப் பாத்திரத்தைப் போல தான் உண்மையிலேயே கற்புடனும் நீதியுடனும் ஒழுக வேண்டும். தான் நடிப்பது பிறர் கண்டு புத்தி பெறுவதற்காகவன்றோ? அந்த உண்மை தன் நடத்தையிலும் சாவித்திரி, சீதை, வள்ளி, தமயந்தி, அனுசூயை முதலியவர்களைப் போல இருக்க வேண்டும் என்ற ஓர் தீவிரமான எண்ணம் உதித்து விட்டது.

-----
காதலுக்கு பயப்படாதவர்கள் உலகில் யாரிருக்கின்றார்கள்? உலகம் முற்றும் மயங்குவது அதற்கே என்கிறார்கள் சிலர். ஆனால் உத்தமமான குண மும், இனிமையான சங்கீதமும் பவ்யப் படுத்துவது போல வேறு எதுவும் முடியாதென்பதுதான் உண்மை.
------

அங்ஙனம் உதித்த எண்ணத்தினால் அவள் அந்த விஷயத்திலேயே இரவு பகலாக மனத்தைச் செலுத்தி அனேக உயர்ந்த க்ரந்தங்களையும் மேலான நாவல்களையும் படித்துக் கற்பரசிகளின் திண்ணிய திடத்தைத் தன் மனத்தில் உறுதி கொண்டாள்.

பரிமளா ஒரு தினம் தன் வீட்டில் இருக்கையில் சில கடிதங்கள் வந்தன. அவைகளைப் பிரித்துப் படிக்கலானாள். அவற்றில் ஒன்றில்,

"என்னுயிரைக் கொள்ளை கொண்ட பரிமள சுந்தரியே!

உனக்கு இக் கடிதத்திற்கு முன்பு பல கடிதங்கள் எழுதியும் நீ பதில் விடுக்கா திருத்தலின் காரணம் எனக்குத் தெரியவில்லை. நான் சாமானிய மனிதனென்று நினைக்காதே! நான் ஓர் ஜமீந்தாரரின் புதல்வன்; மைனர் ஜமீந்தார் என்பதை நினைத்துப் பார். நான் உன்னைப் பார்த்த நாள் முதல் உன்னையே மணக்க ஆசிக்கின்றேன். நீ பெரிய ஜமீந்தாரிணி யாவதைக் கவனித்து எனக்கு உடனே பதில் போடு. கேவலம் நாடகக்காரப் பெண்ணாகிய உன்னை ஓர் ஜமீன்தார் தேடிவருவதானது உனது பூர்வ ஜன்மப் பயன் என்று நினைத்துக் கொண்டு, மறுக்காது பதில் தெரிவிக்கவும்.

      இங்ஙனம்
      ……………………
      மைனர் ஜமீந்தார்.

என்று வரைந்திருந்தது. அதைப் படித்துக் கண்ணீர் உதிர்த்தாள். பிறகு மற்றொன்றைப் படிக்கலானாள். அது பின் வருமாறு:-

-----
தலைமுறை தலைமுறையாக வறுமையினால் பீடித்தாலும் சிலருக்கு அவர்களின் பெருந் தன்மை மட்டும் மாறுவதில்லை. அதே போல செல்வத்தில் திளைந்தாலும் சிலருக்கு அல்ப குணம் அகலுவதில்லை.
---

"நாடகக்காரியாகிய நாரீயே!

உனது தொழில் நாடகம் நடிக்கும் இழிவாகவிருந்த போதிலும் உன்னுடைய பேராநந்த எழிலும் சங்கீதமும் ஒன்று கூடி என்னை உன் வயப படுத்தி விட்டதால் நான் உனக்குப் பல பதக்கங்களும், தோடாவும் பரிசு கொடுத்திருக்கிறேன். நான் ஓர் ரத்தின் வியாபாரி. என்னுடைய ஆசை நாயகியாக உன்னை அடைய மனம் தாவுகின்றது. நான் என்னுடைய அவாவைக் கடிதத்தில் தெரிவிக்க எடு இடம் தராது. நீ ஓர் உயர்தரக் கம்பெனியில் நடித்தாலும் நாடகக்.காரி என்கிற ஓர் பெயர் வந்து தாக்காது நிற்காது. எது எவ் விதமிருப்பினும் என்னுடைய மனோ வேட்கையினால் நான் உன்னை என் மனத்திற்கிசைந்த மனைவியாகச் செய்து கொள்ளத் தீர்மானித்தேன். நான் உன்னை நேரில் வந்து காண ஆசைப் படுகிறேன். என்று வரலாம், எப்போது வரலாம். என்ற விஷயத்தை அடுத்த தபாலில் கீழ்க் காணும் விலாசத் திற்குத் தெரியப் படுத்தவும்.

      இங்ஙனம்
      ……………………….
      ரத்ன வியாபாரி.

அந்தக் கடிதங்களைப் போலவே இன்னும் அனேகக் கடிதங்களிருந்தன. அவற்றுள் அந்த நாடகத்திலேயே நடிக்கின்றவன் ஒருவன் எழுதியதின் சாரம் பின் வருமாறு:-

"பரிமளா ! உன் பெயருக் கேற்ற இன்பப் பரிமளம் உன்னிடத்தில்தான் ததும்புகின்றது. உன்னைப் போன்று எழிலும் சகல அம்சங்களும் பொருந்திய புவனசுந்தரி நீதான் என்பதை எவராலும் மறுக்க முடியாது. நீ உன்னழகையும் ஆநந்த சுகத்தையும் எந்த வகையில் தக்க யோக்யதா பக்ஷமானவர்களிடம் அர்ப்பணம் செய்ய வேண்டுமென்ற பகுத்தறிவு தெரியாது,

நீ சிறு பிராயத்தின் அறியாமையினால், கேவலம் பிச்சைக்காரப் பயலாயும்-வேலைக்காரப் பயலாயும்— சமையல்காரனாயும் இருந்த கேசவனிடத்தில் உனது மேலான அன்பை வைத்திருப்பதானது மிகவும் விசனிக்கவும் பரிகஸிக்கவும் இடமுண்டாகின்றது. நான் உன்னுடன் பலமுறை நடித்திருப்பதை இங்கு குறிப்பிட வேண்டாம். உனக்குப் பல விதத்திலும் தக்க யோக்கியதை யுடைய என்னை நீ விரும்பாதவளாக இருப்பது உன் துர்ப்பாக்கியமே யாகும். அதை நான் குற்றமாக மதிக்கவில்லை. நீ இப்போது இன்னம் புத்தி யறியாத சிறுமியாக இருந்தாலும் இன்னும் சில வருடத்திற்குள்ளாக நீ பெரிய மங்கையாய் விடுவாய்! அப்படி ஆகும் காலத்தில் உன்னழகும் சங்கீதமும் எத்தனை உயர்வாக இருந்தாலும் நீயொரு நாடகக்காரி என்பதை உன்னால் மறைக்க முடியாது. உன்னைக் கண்டு காமுறும் ஜனங்கள் கோடிக் கணக்கிலிருக்கி றார்கள். அவர்களால் உனக்கு எத்தனையோ துன்பங்கள் நேரிடலாம். அவைகளுக்கு இலக்காகாமல் என்னுடன் வந்து விடு. ரங்கோன் முதலிய இடத்திற்குப் போய் நாம் சுகமே வாழலாம். இதற்குப் பதிலை நான் உன் வீட்டிலேயே எதிர் பார்க்கிறேன்; இன்று மாலை வருகிறேன்.

      இங்ஙனம்
      ……………….
      அன்பன்."

------
ஒருவரோடொருவர் அதிகமாக சினேகத்தினால் அடிக்கடி சந்தித்தால் அதற்கு வம்பு பேசும் கர்த்தாக்கள் காத்திருக்கிறார்கள். வம்பு செயலற்று உலக விஷயத்தில் பாடு படுவதற்கோ அவர்களின் மனத்தில் இடம் இல்லை.
----

அக் கடிதத்தைப் படித்த பரிமளாவின் மனத் துயரம் அவள் என்றும் கண்டிராத வகையில் பொங்கி விட்டது. "ஹா! நான் ஓர் கூத்தாடியா! நாடகக்காரியா! அவ்விதமா நம்மை ஏளனம் செய்வார்கள். என்ன அனியாயம்! சீச்சீ! என்ன வாழ்க்கை நாம் வாழுகின்றோம். நாம் நமது வறுமையினாலும் சிறிய குழந்தைப் பருவத்தின் விளையாட்டினாலும் இது பரியந்தம் இவ்விதம் கவுரவ மாக நடித்ததெல்லாம் இப்படி பல ஜனங்களின் மனத்திற்கு விரோதமாகவா ஆய் விட்டது?

------
மாதா மாதம் பேப்பருக்கும், அச்சாபீஸுக்கும், பயிண்டருக்கும், தபால் தலைகளுக்கும் நூற்றுக் கணக்கான பணத்தைக் கொடுப்பதை வெளியார் அறிவதில்லை. வாபம் எத்தனை ஆயிரம் என்ற கேள்விகளை மாத்திரம் கேட்கின் றார்கள். அவரவர் பட்டால்தான் தெரியும்.
----

ஹா! கடவுளே! என் மதியை எனக்கு அறிவிக்க நீ ஏன் இதுகாறும் தாமதம் செய்தாய்!.. நான் இன்னும் என்னுடைய நிலையை அறியாமலிருப்பதைக் கண்டு தான் பல ஜனங்களின் மூலம் எனக்குப் புத்தி பிறக்கச் செய்தாயோ!.... ஐயோ! இப்பாழும் பெண் ஜென்மம் எடுத்ததனாலன்றோ, என் கதி இவ்விதமாகி விட்டது! உத்தமர்களின் சகவாசத்துடன் சிறுமியாக நடிப்பதுவும் என்னைத் தாக்கி விட்டதே. சீச்சீ! நாடகத்திற்கு வரும் மக்களின் மனத்திற்கு இத்தகைய ஆபாச எண்ணத்தை ஏன் அளிக்கின்றாய் என்னப்பனே! எனக்கு இன்னும் 14 வயது நிரம்பப் பெறாதிருப்பினும் என்னுடைய துயரம் என்னை வாட்டி வருத்துகின்றதே! சர்வேசா! என் மனம் இக்கடிதங்களினால் தத்தளிக்கின்றதே! இதனின்றும் விடுதலையடைய ஒர் மார்க்க மில்லையா!

ஆபத்ரக்ஷகா! எனக்கு வயதோ இன்னும் கேவலம் கொஞ்சமாக இருக்கிறது. இதற்குள் நான் எனது ஏழ்மை நிலைமையைக் கண்டு முதலில் ஒருவிதமாக வருந்தி கஷ்டப்பட்டுப் பின்னர் சற்று சுகமடைந்து தெம்பாகவிருந்து அந்த சந்தோஷம் வெகுநாள் நீடிப்பதற்குள்ளேயே என்னுடைய பிற்காலத்தின் நிலைமை, கண்ணாடியில் தெரிவதுபோலப் பிரகாசித்து என் துயரத்தை எடுத்துக் காட்டிப் பெருக்குகின்றதே! இதை நான் யாரிடத் தில் எடுத்துக்கூறுவேன்? எனக்கு வயது சிறியதாக இருந்தபோதிலும் என் நடிப்பில் நான் பணத்தையும் புகழையும் மட்டும் லக்ஷ்யம் செய்யாமல் நான் எடுத்துக்கொண்ட பாத்திரங்களாகிய சாவித்திரி, ஸீதை, நளாயணி, வள்ளி, சந்திரமதி, ருக்மிணி முதலியவர்களைப்போல எனது அனுபவத்திலும் தினசரி வாழ்க்கையிலும் நடந்துகொள்ளவேண்டும் என்கிற எண்ணமே மனத்தில் புகுந்து கொண்டிருக்கிறது. அதேபோல நான் என்னால் கூடியவரையில் சாவித்திரியைப் போல கற்பினும், சந்திரமதியைப்போல சத்தி யத்திலும், நளாயினியைப்போல பொறுமையிலும் பதி பக்தியிலும் இன்னும் மற்ற சற்குணங்களையும் கையாண்டு வருவதையன்றோ நான் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறேன்.

---
லாபத்தை எண்ணி வியாபாரம் செய்யப் புகுந்தோருக்கு நஷ்டம் தான் பலன் கிடைக்கிறது. கண்மூடித்தனமாக வியாபாரம் செய்பவருக்குத் தான் எதிர்பாராத லாபம் கிடைத்து அளப்பரிய சந்தோஷம் கிடைத்து விடுகிறது.
-----

இந்தக் கடிதங்கள் அவற்றைக் குலைத்திடும் வழியிலல்லவோ என் பிற்காலத்திய நிலைமையை பயங்கரமாக எடுத்துக்காட்டுகின்றன. சீ! குழந்தைப் பருவமாக நாம் நாடகம் நடித்தது போதும். இனி நமக்கு நாடகம் வேண்டாம்" என்று மனந்தவித்துப் பலவிதமான யோசனையோடு உட்கார்ந்து விட்டாள்.

பரிமளவல்லியின் மீதுள்ள பிரியத்தினால் பொன்னுசாமி அவளை அடிக்கடி வீட்டில் வந்து சந்திக்கும் வழக்கப்படிக்கு அன்றும் வந்தார். அப்போது பரிமளா தன்னந்தனியாகத் தன்னறையில் உட்கார்ந்து சோகித்திருப்பதைக் கண்ட பொன்னுசாமி திடுக்கிட்டு அருகில் சென்று "செல்வீ! பரிமளா! என்ன இது! ஒரு நாளும் நான் கண்டறியாத நிலைமையில் விசனித்து வீற்றிருக்கிறாய்? கலக்கம் யாது? என்னிடம் தியங்காது சொல்வாய் அம்மா!" என்று வெகு வாஞ்சையோடும், உண்மையான பரிதாபத்துடனும் கேட்டார்.

இதுகேட்ட பரிமளா தனது சொந்த தந்தையைப்போல எண்ணி இருக்கும் பொன்னுசாமியின் இரு கரங்களையும் பிடித்துக்கொண்டு சிறிய குழந்தையைப்-போல் கோவெனக் கதறியவாறு "என்னரிய பெரியாரே! நான் உருவத்திலும், வயதிலும் சிறுமியேதான். ஆனால் மனோ துயரத்தில் மிகமிகப் பெரியவளாகி விட்டேன். என்னுடைய சுகத்தையும் துக்கத்தையும் சமமாகக் கவனிக்கக்-கூடியவர்கள் தாங்களும், என் தாயுமே ஆவீர்கள். ஆதலால் எனக்குற்ற விசனத்தை நீங்கள் அறிவதால் எனக்கு நன்மையேயன்றி தீமை இல்லை, அதோ என் தாயும் வருகிறாள். அம்மா! உட்காருங்கள். போஷகரே! இதோ இக்கடிதங்களை நீங்க ளிருவரும் பாருங்கள்." என்று பணிவாகக் கூறி, அதையவர் கையில் கொடுத்தாள்.

-----
சிலருக்கு சதா காலமும் வாயில் ஏதேனும் அரைத்துக் கொண்டே இருக்க வேண்டும். அதற்கு ஒரு தினம் தடை வந்து விட்டால் கோபமோ தலைக்கு மேல் ஒரு முழம் போய் அவர்கள் ஆடத் துடங்கி விடுகிறார்கள்.
-----

கடிதத்தை வாங்கிய பொன்னுசாமி படித்து முடித்து மனந் தாங்காத துயரத்தை யடைந்து அதைப் பார்வதியம்மாளிடத்தில் கொடுத்தார். அந்த அம்மாளும் அதைப் படித்துத் திடுக்கிட்டாள். இருவரின் மனமும் கடிதங்களினால் கலங்கின. இதையறிந்த பரிமளா அதிகாரியை நோக்கி “என் பிதாவுக்குச் சமமானவரே! என் விசனத்திற்குக் காரணம் தெரிந்ததா! இதுபோன்ற கடிதங்கள் விஷபாணங்கள் போன்று வரத்தொடங்கி வெகுநாட்களாயின. அன்றுமுதல் இன்றுவரையில் அந்த பாணங்களாலேயே என் மனமும் தேகமும் மெலிவுற்று மிக்க வேதனைக் குள்ளாகிக்கொண்டே இருந்தது. நான் இந்நாள்வரையில் பொறுத்துப் பார்த்தேன். இனி என்னால் பொறுக்க முடியாது. நான் எனது இளமைப் பிராயத்தின் வருத்தத்தை முன்னிட்டு நாடகத்தில் நடிக்க வாரம்பித்தது எனக்குப் பெருத்த புதைபாணம் போன்ற துன்பங்கள் நேரிடும்போலிருக்கிறது. என் தாயே!... பெரியவரே! நான் இனி நாடகத்தில் நடிக்க விரும்பவில்லை. என்னுடைய பிற்காலத்தின் நன்மையைக் கோரி நான் விலகிக்கொள்கிறேன். என்னை மன்னிக்க வேண்டும்." என்று மிக்க நயமாகச் சொன்னாள்.•

பொன்னு- ஹா! என் கண்மணி! பரிமளவல்லீ! உன்னறிவுக்கு என்னுள்ளம் பொங்கிக் களிக்கின்றது. நீ புத்தியிலும் தீர்க்காலோசனையிலும் மகா பெரியவள். உன்னுடைய அபாரமான அறிவை நான் பன்முறைகளில் கவனித்திருக்கிறேன். இன்று பூர்ணமாகப் பார்த்துவிட்டேன். அந்தோ! நாடகம் என்பது பூர்வம் எத்தகைய மேன்மையான நோக்கங்கொண்டு ஆரம்பிக்கப்பட்டது தெரியுமா!

------
பலஹீனம் என்பது வியாதியஸ்தர்கள், கர்ப்பிணி, அதிக உழைப்பாளிகள், முதலியோருக்கு இருப்பது சகஜம். பல் தேய்ப்பதற்கு முதல் ஜலம் கொண்டு கொடுக்கக் கூடிய நிலையில் உட்கார்ந்திருக்கும் அம்மாமார்களுக்கோ சாப்பாட்டை எடுத்து வாயில் போடுவதற்குள் ஆயாஸ்மும் பெரு மூச்சும் வந்து விடுகின்றது. என்ன வேடிக்கை!
-------

பகவத் விஷயங்களையும் பக்தர்களின் விஷயங்களையும் கல்வியறிந்தவர்கள் நன்றாகப் படித்து அறிந்துவிடுகிறார்கள். எனினும் உலகத்துள்ள பல்கோடி மக்களின் போக்கும் ஒன்றுபட்டு வராது. சிலருக்குப் படித்தால் மனத்தில் பதிந்துவிடும். சிலருக்குக் கேட்டால் பதியும்; சிலருக்குப் பார்த்தால் பதியும். சிலருக்கு எதிலும் பதியாது. பல வேறுபட்ட பேதங்களிருக்கின்றன. அதை உத்தேசித்துத்தான் எல்லோருக்கும் நன்றாகக் கண்கூடாகப் பார்த்தால் நல்ல விஷயங்களை படிக்கத் தெரியாதவர்களுக்குக்கூட மனத்தில் பதியும் பொருட்டு நடித்துக் காட்டுவது என்று பெரியார் நாடகங்களை ஏற்படுத்தியதாகப் பெரியாரே சொல்ல நான் கேட்டிருக்கிறேன். பகவானுடைய குணங்களும், செய்கைகளும், பாகவதர்களின் பக்திப் பிரபாவமும் உலகத்தில் சகல ஜனங்களுக்கும் நன்றாக விளங்கவேண்டி சத்விஷயமான சரிதைகளையே நாடகமாக நடித்துப் பெரும் பயனை விளைவித்தார்கள். அந்த அரிய நாடகம் காலக்கிரமத்தில் அதன் கவுரவமே குறைந்து கேவலமாக மதிக்கக் கூடிய நிலைமையில் வந்துவிட்டது. அந்த இழிவு நமது நாட்டில் தினே தினே விருத்தியாகும்படியாக அனேக ஆபாசங்களும் விபரீதங்களும் உண்டாகிவிட்டன.

ஆனால் மேல் நாட்டில் இன்னும் நாடகத்திற்கும் நடிகர்களுக்கும் பேராதரவும் பெரும் புகழும் கொடுத்துவருகிறார்கள். அதனாலேயே அந்நாட்டில் நாடக உலகம் நலம் பெற்று விளங்குகின்றது. பரிமளா! உனது யோசனை என்னவோ மிகவும் ச்லாக்யமானதே! உன் மனத்திற்கு விரோதமாக நான் ஏதும் சொல்லத் தயாராக இல்லை. இக்காரியங்கள் செய்திருப்பது கேவலமான காலாடிக் கூட் டங்கள் என்பது உனக்கு நன்கு தெரியும், அத்தகையோரிடத்தில்தான் அதிகமான ஜாக்கிரதையுடன் இருக்கவேண்டும். என்னுடைய கம்பெனிக்கே ஓர் பரிமளத்தை அளித்த நீ நின்றுவிடுவதால் நாடகப் பிரியர்கள் மிக்க விசனிப்பார்கள். எல்லாம் காலச் சக்கரத்தின் சுழல்வு. இதை எண்ணி விசனிப்பதில் பயனில்லை. அம்மா! நீ நடிப்பதை நிறுத்திவிட்டதனாலேயே நான் உன்னை மறப்பேனென நினைக்காதே! உன்னாலும் கேசவனாலுமே என் கம்பெனிக்குப் புது மணமும் புத்துயிரும் உண்டாயது. ஏராளமான செல்வத்திற்கு கம்பெனி உரித்தாயது. தருமங்களைச் செய்ய சாதனமாயது. ஆதலால் உனது குடும்பத்தை நான் கைவிடமாட்டேன்.

-------
சிலரிடத்தில் ஒரு ரகஸியமான விஷயத்தைச் சொல்லி வெளியிட வேண்டாமென்று பலதரம் கூறினாலும் அவ் விஷயம் அடுத்த நாள் சந்தைக் கடையில் விற்பனைக்கு வந்து விடுகிறது. அதனால் வரும் அனர்த்தமோ.....
------

பரிமள - அன்பார்ந்த பெரியவரே! நான் இதுகாறும் இத்தகைய நிலைமைக்கு வந்தது முற்றும் தங்களின் கிருபையினால் என்பதை மறவேன். நான் இனி அநாவசியமாய் உழைப்பின்றி உங்கள் பொருளுக்கு உரியவளாதல் பிழையேயாகும். என் மனம் அதற்குச் சம்மதப்படாது உங்கள் தயவினால் வாங்கப்பட்ட அனேக விலையுயர்ந்த ஆடையாபரணங்கள், பிறரால் வழங்கப்பட்ட பரிசுப் பொருள்கள் இவை எல்லாம் எனக்குத் தேவையில்லை. அவை பயனின்றி என் பெட்டியிலேயே தூங்குவதைவிட தாங்களே ஸ்வீகரித்து உபயோகப்படுத்திக் கொள்ள என் மனம் விரும்புகின்றது. தங்களின் அன்பு என்மீதிருக்குமாயின் ஒருவித குறைவுமில்லை, எனக்குத் தாங்கள் மாதம் 150 ரூபாய் சம்பளமாக இந்த இரண்டு வருடங்களுக்கு மேலாகக் கொடுத்து வந்ததில் நான் அதிகமாக எதுவும் செலவிடாமல் அதில் மிச்சம் செய்து இரண்டாயிரத்து ஐந்நூறு ரூபாய் என் தாயாரின்பேரில் பாங்கியில் போட்டு வைத்திருக்கிறேன். அதுவும் உங்களுக்குத் தெரிந்ததே! அந்த ரூபாயில் எனக்கு மாதம் கிடைக்கக்கூடிய வட்டியைக்கொண்டு என் காலத்தை நான் தாராளமாகக் கழிக்கலாம். பெரியவரே! என் விருப்பப்படி இவைகளை ஸ்வீகரிக்கவேண்டும்" என்று வேண்டினாள்.

அதே யோசனைக்கு அவள் தாயாரும் இசைந்ததால் பொன்னுசாமியும் அதற்கு உடன்பட்டான். பிறகு வெகுநேரம் பேசிய பிறகு அவர் கண்ணீர் பெருக "பரிமளா! நான் ஒரு விஷயம் வேண்டுகிறேன். அதாவது "நீ கடைசீயாக இன்னும் ஒரு நாடகம் மட்டும் நடித்துவிட்டு அதோடு இந்த வேலையை விட்டு விலகிக்கொள்" என்று கெஞ்சிக்கேட்டார். அதற்குப் பரிமளா யோசித்து இசைந்தாள். பிறகு பொன்னுசாமி போய்விட்டார்.

--------
பிறர் விஷயத்திலேயே கண்ணும் கவலையுமாக இரூக்கும் வம்பர் கூட்டத் தாரைக் கவனிப்பதற்கு ஒர் பிரத்தியேகக் கூட்டம் மறைந்திருக்கும் என்பதை அவர்களறிவதில்லை.
------

பரிமளா வெகு கலக்கத்தோடு வீற்றிருந்தாள். அவளுடைய சகோதரியை ஆரம்பம் முதலே நல்ல கல்வி மார்க்கத்தில் பயிலுவிப் பதிலேயே பரிமளா இச்சித்திருந்தாளதலால் அவள் கல்வி கற்று வருகிறாள். சகுந்தலா என்கிற அப்பெண்மணியும் பரிமளாவைப் போலவே ஒழுக்கத்தில் பிறவிக்குணமாகவே அமைந்துவிட்டாள். அன்று நாடக நாள் அல்லவாகையினால் கேசவன் பரிமளாவின் வீட்டிற்கு வந்தான்.

சாதாரணமாக, கேசவன் பரிமளாவின் வீட்டிற்கு வருவது பழக்கமாதலாலும் அவனை அறியாத ஓர்விதமான அன்பு அவன் இதயத்தில் பதிந்துவிட்டதனாலும் அவ்வன்பாகிய கயிற்றால் கட்டுப் பட்டு பரிமளாவுக்குப் பாடம் சொல்லுவது, சங்கீதம் கற்பிப்பது முதலியன செய்துவந்தான். அவனுடைய அன்பிற்குக் காரணம் அவனுக்கே தெரியாது. அன்று பரிமளாவினுடைய மாறுதல் கேசவனுக்குச் சிறிதும் தெரியாது. தன் போக்காக வந்த கேசவன் பரிமளாவின் மாறுதலையும், முக-வாட்டத்தையும், புலம்பிய கண்களின் குன்றிய ஒளியையும் கண்டு திடுக்கிட்டு "பரிமளா! என்னவிது! அன்றலர்ந்த தாமரையைப்போன்றிருக்கும் உனது வதனம் கலக்க முற்றுக் கண்ணீர் வடித்திருக்கின்றதே! காரணம் என்ன? நான் அறியலாகுமா!" என்று கேட்டான்.

பரிமளா.- உட்காருங்கள். நான் தங்களை எல்லாம் விட்டுப் பிரியுங்காலம் வந்துவிட்டது. அதை எண்ணியே விசனிக்கின்றேன். நாம் ஓர் நாடகம் நடிப்பதுபோலக் கடவுள் நம்மையே ஓர் நாடகமாக நடிக்கிறார். நமது பிரிவுக்காக என் மனம் வருந்துவது சகஐ மல்லவா!

------
வஞ்சம் நினைத்துத் துரோகம் செய்து லிட்டப் பாவிகளை பிறகு பார்ப்பதற்கும் நினைப்பதற்கும் விஷமாக ஆய் விடுகிறது. ஒப்பிலாத உதவியை அனேக நன்மைகளைச் செய்தவர்கள் செய்தாலும் அவைகள் பொருட்படுவதில்லை. நன்மையை எண்ணியே மனம் அவர்களை மறக்கக் கூடாது போராடுகின்றது.
------

கேசவன் - என்ன! என்ன! பரிமளா! நீ பேசுவது எனக்குப் புரியவில்லையே! நாம் பிரியவேண்டுமா! ஏன்! என்ன காரணம்? நான் எனக்குத் தெரிந்து ஒருவிதமான குற்றமும்- தவறுதலும்- உன்பால் செய்ததாகத் தெரியவில்லையே! பரிமளா! அவ்வாறு நான் ஏதேனும் என்னை யறியாது செய்துவிட்டேனா! அதை விளக்கிக் கூறு. என்னை நான் திருத்திக்கொள்கிறேன். உன் முகவாட்டங் கண்டு என் மனம் பதறுகின்றதே!

பரிமளா - ஹா! தாங்கள் குற்றமிழைத்ததாகவா நினைக்கின்றீர்கள். அப்படிக் கொன்றுமில்லை. இதோ! இந்தக் கடிதங்களாகிய பாணங்களினால் நான் வெதும்பிப் போய்விட்டேன். நான் கேவலம் பெண்பிள்ளை. அதிலும் ஓர் நாடகக்காரி. நான் இனி கலங்காது சந்தோஷமாக விருப்பதற்கு எவ்விதம் இடமுண்டு.

கேசவன்.-(கடிதங்களைப் படித்துவிட்டு) ஹா! பரிமளா! இப்போது விளங்கியது. உனக்கு நமது கம்பெனியினின்று எழுதிய ஆசாமி யார் என்பது. நாராயணன்தான் நம்மிருவர் பேரிலும் பெரும் பகை வைத்திருக்கிறான். அவனுடைய பகையின் பாணம் தான் இது.... இதற்காக நீ ஏன் பிரிவு காலம் என்று கூறினாய்?

பரிமளா:- நண்பரே! நான் இனி நாடக மேடையில் நடிக்கப் பிரியப்படவில்லை. என் மனம் முற்றும் முறிந்து விட்டது. என்னுடைய தற்போதிய நிலைமையில் நான் எனது வாழ்க்கையைக் கூட வெறுக்கக் கூடியவளாக இருக்கிறேன். நாடகம் நம்மைச் சேர்த்தது. அதுவே நம்மைப் பிரித்தது. இப்போதே முதலாளி வந்திருந்தார். அவரிடம் சகலமான விஷயங்களையும் பேசி முடித்தாய் விட்டது. கடைசியாக ஒரு நாடகம் நடிக்க இச்சையுற்றார்; அதற்கு மட்டும் இசைந்தேன். நான் முதலில் நாடக அரங்கத்தில் தோன்றியது வள்ளியம்மையாக; அதே வேடத்துடன் மறைகிறேன்" என்றாள்.

------
விடியற் காலம் 5 மணிக்கு எழுந்தாலும் சிலர் தம் வேலைகளைக் கவனிக்காது சோம்பேறியாக உட்கார்ந்திருந்து 8 மணிக்கே தம் காரியத்தைச் செய்கிறார்கள். சுருசுருப்பு இருந்தாலன்றோ!
------

இதைக் கேட்ட கேசவன் உண்மையிலேயே தன்னை யறியாத விதமாய்க் கண்ணீர் உதிர்த்தான். பரிமளா! உன்னைப் பிரிய வேண்டுமா! உன்னைப் பாராதிருக்க வேண்டுமா! இவ்விதமான ஏற்பாடுகள் உண்மையில் நடந்தேறி விட்டனவா! என்ன ஆச்சரியம்! இந்த நான்கு வருடங்களாக நாம் ஒன்றாக நடித்துப் பிரியமான நண்பர்களாகும்படிச் செய்த கடவுள் நம்மைப் பிரித்து விடவா எண்ணி விட்டார் ! ... பரிமளா !... பரிமளா ["....... என்று மேலே பேச மாட்டாது அவள் முகத்தை நோக்கியவாறு தம்பித்து விட்டான்.

கேசவனின் ஆழ்ந்த அன்பையும், பரிதாபகரமான நிலைமை யையும் கண்ட பரிமளா மனமுருகினாள். அவள் தன்னை யறியாத துக்கமேலிட்டால் தன்னிரு கரங்களினாலும் தன் முகத்தை மூடிக் கொண்டு கவிழ்ந்தவாறு மேஜையின் மீது சாய்ந்தாள். பரிமளாவின் கண்ணீர் மேஜையின்மீது சொட்டி அதை நனைக்க வாரம்பித்தது. அன்றைய மனோ வேதனையினால் அவள் தலை கூட வாராதிருந்ததனால் சிகை தாறுமாறாகக் கலைந்து கிடந்தது. இத்தனை இளம் பிராயத்தில் இச் சிறுமி உலகானுபவம் முற்றும் விசன ரூபமாயறிந்து கலங்க நேரிட்டதை எண்ணிக் கேசவன் மனந்தாங்காது வருந்துகிறான். "பரிமளா! பரிமளா! நான் இங்கு இப்பொழுது எதற்கு வந்தேன், எவ்விதம் முடிந்தது. ஐயோ! என் மனத்தில் என்னரிய தாயாரையும், சகோதரிகளையும் எண்ணிப் புலம்பிக் கொண்டிருந்தேன். நேற்றிரவு கண்ட கனவினால் இன்று முற்றும் விசனக் கடலில் மூழ்கினேன். என் மனத்தின் துயரத்திற்கு ஓர் ஆறுதல் செய்து கொள்ளும் பொருட்டு இங்கு வந்தால் உனது இனிய சங்கீதத்தையும், இன்ப மொழிகளையும் கேட்டு மகிழலாம் என்ற எண்ணத்துடன் வந்தேன். வந்த விடத்திலோ எனது வேதனையை விடப் பதின் மடங்கு அதிகரித்த மனக் கிலேசத்தை யடைந்து விட்டேன். என் அன்பான பரிமளா! எழுந்திரு; விசனத்தை விலக்கு." என்று மிக்க வாஞ்சையோடு கூறினான்,

------
தம் மனிதரைப் பார்க்க வேண்டு மென்று வெகு ஆவல் மனத்தில் உதய மாகி விட்டால் அது தீவிரமாகப் பறக்கின்றது. பார்த்த பிறகே மனச் சாந்தி யடைகின்றது.
--------

இதைக் கேட்ட பரிமனா, தலை நிமிர்ந்து கண்ணில் தாரை பெருகியவாறு, "நண்பரே! நான் எவ்விதமான தென்பைக் கொண்டு மனந் தேறுவேன்? இனி எனக்கு மகிழ்ச்சி என்பது உண்டா! என்னுடைய இப்போதிய மன நிலைமையில் என் வாழ்க்கையே முறிந்து விட்டதாயும், நான் நடைச் சவமாகி விட்டதாயும் என்னை யறியாது யாதோ சொல்லுகின்றது, என் விதியே எனக்கு இவ்விதம் சொல்லுகின்றதோ, அன்றி எனது முடிவைக் கடவுள் தான் சொல்லுகி றாரோ தெரியவில்லை. நான் கேவலம் ஓர் நாடக மாது என்றும், கூத்தாடி என்றும் பெயர் வாங்கி இனி பூமியில் இருப்பதைவிட மாண்டு மடிவது எனக்கு மெத்த சந்தோஷமாகத் தோன்றுகின்றது." என்று கூறி முடிப்பதற்குள் கேசவன் இடை மறுத்து "ஹா! பரிமளா! என்ன சொன்னாய்!.... இத்தனை இளம் பிராயத்தில் உனக்கு இத்தகைய பார யோசனையும், பார புத்தியும் எவ்விதம் உண்டாகியது? வேண்டாம். இத்தகைய விபரீத சித்தம் வேண்டாம், நீயோ புத்தியறியாத சிறுமி, உனது குழந்தைப் பருவத்தில் நீ அனேகம் வினையாட்டுக்கள் விளையாடியதாக எண்ணு. இதை நீ விபரீதமாக நினைத்தல் கூடாது. உன் விருப்பப்படி நீ இந்த நாடகத்திலிருந்து விலகி விடு, அதற்கு மேல் உன்னுடைய தாயாரும் நமது முதலாளியும் சொல்லுவது போலக் கேட்டு நடந்து கொள், பரிமளா! பொறாமையும், காமமும் நிறைந்த இக் கடிதங்களை மட்டும் நம்பி உன் மனத்தைப் பாழடித்துக் கொள்ளாதே. இவைகளைக் குப்பைக்குச் சமமாய் உதைத்துத் தள்ளு, இந்த சனியன் பிடித்த வார்த்தைகள் மறையட்டும். பரிமளா! உன் மனம் சற்று தேறும் பொருட்டு கடற்கரைக்கு எஜமானருடன் சென்று வரலாம்; வருகிறாயா?" என்றான்.

------
முதலில் பஜனையைப் பழித்தவர்கள் பிறகு அதில் தாமே கலந்து கொள்கிறார்கள். அவர்களுடைய காரியம், நடத்தை முதலிய யாவும் இப்படித்தான் இருக்கும் போலும்.
--------

இது கேட்ட வனிதை "என் மனம் மகிழ்வதற்குக் கடலில் நான் கலக்க வேண்டும். அன்றி எனக்கு அக் கடலின் அலைகளைப் போன்ற சந்தோஷம் பொங்க வேண்டிய மார்க்கத்தைக் கடவுள் அளிக்க வேண்டும். இவ்விரண்டு மன்னியில் வேறு வகையில் எனக்குச் சந்தோஷமில்லை. நண்பரே! என் பிறவி இவ்வித மாகுமென்று நான் கனவிலும் கருதவில்லை." என்றாள்.

கேசவன்:- பரிமளா! நீ சொல்வது உனக்குள்ள விசனத்தினால்; அதன் நன்மை தீமை நீ யறியவில்லை. உயிர் உன் ஸ்வாதீனமன்று, அவன் பிறப்பித்தான்; அவனே அழைத்துக் கொள்ளுகிறான். நீ முயற்சித்தாலும் உன்னால் எக் காரியமும் நடத்திவிட முடியாது, தற்கொலை எண்ணத்தை விட்டு விடு." என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கையில் பரிமளாவின் சகோதரி ஒடி வந்து ''அக்கா! இந்த அறையின் ஜன்னல் கதவருகில் வீதிப் பக்கத்தில் யாரோ ஒருவன் நின்று நீங்கள் பேசுவதை எல்லாம் ஒட்டுக் கேட்கிறான். அதை நான் இப்போதுதான் கவனித்தேன். அவன் என்னைப் பார்த்து "குழந்தை! இங்கே வா!" என்று கூப்பிட்டான்; நான் போனேன். என் கையில் ஒரு பொட்டணத்தைக் கொடுத்து இதைச் சாப்பிடு. உன் சகோதரியினிடத்தில் நான் பேச வேண்டும். அதற்கு எப்போது சமயம் கிடைக்கும். அதை எனக்குத் தெரிவித்தால் நான் உனக்கு இன்னும் ரூபாய் கூடத் தருவேன்" என்று கேட்டான். இது கேட்ட எனக்கு ஏதோ ஒரு மாதிரியாகி விட்டது. அதனால்தான் "நான் இதோ வருகிறேன்" என்று கூறி விட்டு ஒடி வந்தேன். அதோ பார்; ஜன்னலின் பக்கம் அவன் இருக்கிறான்" என்றாள்.

இவ்வதிசயமான சம்பவத்தைக் கேட்ட இருவரும் நெடுக்கலுற்று, ஆச்சரிய-மடைந்து விட்டார்கள். ஏற்கெனவே இருந்த கலக்கத்தோடு இச் செய்தியும் கூடப் புகுந்து கொண்டதால் இன்ன செய்வதென்பதை யறியாது நிமிட நேரம் தத்தளித்தார்கள். உடனே கேசவனுக்கு ஓர் யோசனை தோன்றியது. அதாவது பரிமளாவின் சகோதரியை அழைத்து 'அம்மா! நீ வீதியில் சென்று அந்த ஆசாமியைக் கண்டு "இன்று இரவு 9 மணிக்கு வந்தால் என் சகோதரியைப் பார்க்கலாம்" என்று சொல்லிவிட்டு வா" என்றான்.

--------
"அன்பு இருக்கிறது; இருக்கிறது.' என்று சிலர் வாய்ப் பறை சாற்றுகின்றார்கள். அந்த வாய்ப் பறையாளர் அன்பின் அடையாளமான ஒரு வார்த்தையோ, அன்றி கடிதமோ அளிக்க மனம் இல்லை……
-------


பரிமள:- ஏன்! தாங்கள் எதற்காக இவ்விதம் சொல்கிறீர்கள்? எனக்கு மிக்க பயமாக விருக்கிறதே! அவன் ஏன் இங்கு வந்து என்னைக் காண வேண்டும். எனக்கு விளங்க வில்லையே!

கேசவன்:- பரிமளா! பயப்படாதே! என்னுடைய வார்த்தையைப் பூர்ணமாக நம்பு! ஒரே உறுதியாயும் கடைசி வார்த்தையாயும் நான் சொல்கிறேன். என்னுடைய உயிர் நீங்கிய பின்னரும் என் சவங்கூட உன்னை மறக்க முடியாது. என்னாவியைக் கொடுத்தேனும் உன்னைக் காப்பாற்ற நான் முயற்சி செய்வேன். உன் கண்கள் நீரைக் கக்கவும், மனம் விசனத்திலாழவும், தேகம் மெலிந்து வாட வும், முகம் சோர்ந்து வதங்கவும் நான் ஒரு போதும் பார்த்துச் சகிக்க மாட்டேன். என் மனத்தின் உண்மையை நீ அறிந்திருப்பினும் சரி; அறியாதிருப்பினும் சரி கடவுளறிய நான் உனக்கு என்னாலான உதவியைச் செய்து காப்பாற்ற ஒரு போதும் பின்னடையேன், பரிமளா ! நீ பயப்படாதே. நான் ஏதோ காரணமாகத் தான் சொல்கிறேன்." என்று நயமாகக் கூறினான்.

பரிமளா ஏதும் பதில் பேசவில்லை. உடனே சகுந்தலா வீதியில் சென்று அந்த மனிதனிடத்தில் கேசவன் சொல்லியது போலச் சொல்லி விட்டாள். அம் மனிதனும் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டு அவ்விடம் விட்டுச் சென்றான். பிறகு கேசவன் "பரிமளா! நீ என்னுடன் சற்று எஜமானர் வீட்டிற்கு வருகிறாயா! அன்றி நான் மட்டும் சென்று வாட்டுமா?" என்றான். பரிமளா தானும் வருவதாகத் தெரிவித்தாள். அதன் பிறகு இருவரும் வண்டியிலமர்ந்து முதலாளியின் வீட்டிற்குச் சென்றார்கள்.

-------
ஆடம்பரமான பட்டுப் பட்டாடைகளை உடுத்திக்கொண்டு தடபுடலான அலங்காரத்துடன் ஒய்யார நடை நடந்து சங்கீதக் கச்சேரிக்கு வருகையில், தமக்கு ஒரு காலத்தில் சினேகிதமாகத் தோன்றிய மனிதர்களைப் பார்க்கையில் கசந்ததோ, புளித்ததோ என்ற பார்வையுடன் சிலர் விசாரிக்கின்றார்கள் பாவம். இந்த விசாரணை இல்லை என்று யார் வருந்தினார்கள்?
---------

இவ்விருவரையும் கண்ட முதலாளி மிக்க ஆச்சரியமடைந்து "என்ன பரிமளா! கேசவா! இருவரும் ஒன்றாக எங்கே வந்தீர்கள்? விஷயம் என்ன! உட்காருங்கள்." என்று அன்போடு கூறினார். உடனே இருவரும் நமஸ்காரம் செய்து விட்டு உட்கார்ந்தார்கள்.

கேசவன்:- தந்தையே! எங்களிருவருடைய போஷகராகிய நீங்கள் இருக்கையில் எங்களுக்கு ஒரு விதமான குறைவு மில்லை. இன்று சற்று முன்னர் இப்படி நடந்தது. நான் இப்படிச் சொல்லியனுப்பினேன்- என்று நடந்த விஷயங்களை எல்லாம் கூறினான்.

இது கேட்ட பொன்னுசாமி ஆச்சரிய மடைந்து "அப்படியா! அந்த ஆசாமி யார் தெரியுமா! அவனை இன்னாரென்று காண முடிய வில்லையா! சரி; இருக்கட்டும்.. என்று சில விஷயங்களை அவ்விருவருக்கும் சொல்லி விட்டு அவர்களுடன் தானும் புறப்பட்டுப் பரிமளாவின் வீட்டிற்கு வந்து சேர்ந்தார். அனேக ஏற்பாடுகள் ஆயின.

இரவு மணி ஒன்பது அடித்தது, பரிமளா தன்னறையில் உட்கார்ந்திருந்தாள். அப்போது ஒரு மாது முக்காடிட்டுக்கொண்டு பரிமளவல்லியின் அறையில் நுழைந்தாள். அவளைப் பார்க்கும் போதே பரிமளாவின் மனம் ஆச்சரியமுற்று, திப்பிரமை யடைந்தது.

-----
இலவசமாகப் புத்ததம் பெறும் புண்ணியாத்மாக்களுக்கு ஒரு மாதம் தவறினால் சந்தா செலுத்தியவர்களை விட அதிகமான கோபம் உண்டாகின்றது. பேச்சும் வலுத்து விடுகின்றது. என்ன வேடிக்கை!
-------

5-வது அதிகாரம்
புதையல் கண்டெடுத்த நிதிகள்


வனவாசம் செய்வது போலச் சென்ற கேசவனின் தாயாகிய கோமதியின் மனத் துயரம் இன்ன தென்று விவரிக்க வியலாத விதம் தினே தினே பெருகிக் கொண்டே சென்று அதன் பயனாக அவளை மிக்க துன்பத்திற் கிலக்காகும்படியாகச் செய்து விட்டது. அவள் தனது இரு பெண்களையும் வைத்துக் கொண்டு படும் பாதையை விவரிக்கவே இயலாது, தன் மனக் குறையை முறையிடுவதற்கு ஓர் தக்க துணை இன்றி பரிதபிக்கின்றாள். கோமதிக்கு ஒவ்வொரு தினமும் ஒவ்வொரு நிமிடமும் அவளை யறியாத திகிலும் பயமும் சதா மனத்தில் தோன்றி வருத்திக் கொண்டே இருக்கின்றது. எந்த நிமிடத்தில் தனக்கு எந்த விதமான ஆபத்து நேருமோ என்ற பீதி அவள் மனத்தில் அதிகரிக்க அதிகரிக்க அவள் பலம் குன்றி விட்டது, வேர்ப்புழு ஓர் செடியின் வேரைத் துளைக்க வாரம்பித்ததும் அச் செடி எப்படி பட்டுப் போய் பாழாகி விடுகிறதோ அது போல திகிலும் பீதியும் மன வருத்தமும் ஒன்று கூடி வேர் பூச்சியைப் போலக் கோமதியின் உயிரை வாட்டத் தொடங்கின. அதனால் அவள் அன்னமும் கொள்ளாது மெலிவுற்று தேக பலம் குன்றி வியாதியின் வசமானாள்.

'வேலை செய்வதற்குச் சீவனில்லை, மானமிழப்பதற்கும் மனமில்லை' என்கிற நோக்கத்தை யறிந்த தோட்டக்காரர்கள் பின்னும் அதிகமான கொடுமைகளைச் செய்வதோடு அடிக்கவும் தலைப்பட்டார்கள். எத்தனைத் துன்பங்களைச் செய்த போதிலும் தன்னையவர்கள் அடித்த போதிலும் கோமதி வாய் திறந்து ஏதும் பேசுவதையே விட்டு விட்டாள். அடியைப் படும் போதெல்லாம் "ஐயோ! அம்மா!" என்று கத்தாமல் கடவுளின் திருநாமங்களையே உச்சரித்துக் கண்ணீர் வடிப்பாள். பலஹீனம் அதிகரித்ததனாலும், மனோ வேதனையினாலும், புத்திர சோகத்தினாலும் அவள் வேலை செய்ய மாட்டாது விழுந்து விட்டாள். அந்நிலைமையிலும் அவளைக் கஷ்டப் படுத்தியே வந்தார்கள்.

------
எந்த விஷயத்தைப் பற்றி யோசித்தாலும் சில தினத்தில் குழப்பமும் பெரும் சந்தேகமுமே உண்டாகி வேலையில் மூளையைச் செல்லவிடாது தடுக்கின்றது. அதே காரியம் பிறகு ஒரு தினம் திடீரென்று முடிந்து விடுகின்றது. எல்லாம் வேளையின் பயன்.
--------

இவ்வித வேதனைகளைப் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்திருக்கும் கோமதியின் காலம் அத் தீவில் சில வருஷங்கள் சென்றன. அவளுடைய பெண்கள் இருவரும் பெரியவர்களானார்கள். கோமதி படுக்கையிலேயே படுத்து விடும் நிலைமைக்கு வந்து விட்டாள். அன்னிலைமையில் அப் பெண்கள் தாயின் வேலையைச் செய்து பொருள் தேடித் தாயைக் காப்பாற்றி வந்தார்கள். கோமதியின் மூத்த மகள் பக்குவமான பாவையாக இருப்பதால் அவளையும் முன் கூறிய சனியன் பிடித்து ஆட்டத் தொடங்கியது. இந்த வேதனையைச் சகிக்கக் கூடாத அச்சிறுமி வருந்துகையில் ஒரு தினம் ஒரு கிராதகன் அப் பெண்ணை
வழிமறித்துக் கடுமையான வார்த்தைகளால் பேசி இம்சிக்க எத்தனிக்கையில் அப்பெண் தன் மானத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு தைரியமாயும் வீரமாயும் கையிலிருந்த தோட்ட வேலை செய்யும் சிறிய இரும்பு ஆயுதம் ஒன்றினால் அந்த துராத்மாவின் மண்டையில் ஓங்கி யடித்ததோடு அவனை நகா விடாது காலிலும் நன்றாகக் குத்திவிட்டு அவ்விடம் விட்டு ஓட்டமாக ஓடித் தன் வீட்டை படைந்தாள்.

அப்போது மாலை 6 மணி சுமாருக்கு இருக்கலாம். சூரியன் அஸ்தமித்து விட்டான். எங்கும் சிறு இருள் சூழ வாரம்பித்தது. பக்ஷி ஜாதிகளெல்லாம் தம் தம் கூடுகளில் அடைந்து கொள்ள ஆநந்தமாய்ப் பாடிக் கொண்டும், கொக்கரித்துக் கொண்டும் ஓடுகின்றன. மந்த மாருதம் அந்தமாக வீசுகின்றது. இன்னிலைமையில் அச் சிறுமி தனது கற்பைக் காத்துக் கொள்ளும் பொருட்டு அத் துட்டனை ஓங்கி அடித்து விட்டு அவன் மூர்ச்சையுற்றுக் கீழே விழுந்த வளவில் "அடேய் பாதகா! நான் ஒரு கொலை செய்யவும் அஞ்சேன். என் கற்பை இழக்க முன் வருவேன் என நினைக்காதே" என்று கூறியவாறு ஓடி வீட்டிற்குள் புகுந்தாள்.

-------
'அன்யோன்யமான சினேகத்திற்கு ஆபத்தே வராது' என்கிறார்கள் சிலர். 'அத்தகையோரிடத்தில்தான் பேராபத்து நேரிட்டு சினேகம் சிதறி விடுகின்றது.' என்கிறார்கள் மற்றும் சிலர். இரண்டில் எந்த வித அனுபவம் யாருக்கு இருக்கிறதோ! அதையவர்கள் கூறுவதுதான் உண்மை.
-------

கோமதிக்கு இருமல் நோய் கண்டுவிட்டதால் இரைப்பும் மூச்சுத் திணறலும் வதைக்கின்றன. அச் சமயத்தில் பாலா வென்கிற அம்மாதாசி பெருமூச்சு விட்டுப் பதறிய வண்ணம் அங்கு ஓடி வந்து தன் தாயின் இரு கரங்களையும் பிடித்துக் கொண்டு "அம்மா! நான் கூறப்போகும் விஷயத்தைக் கேட்டுக் கலங்காதே; மனம் சிதறாதே! என் மீது வெகு நாட்களாகக் கறம் வைத்திருந்த கங்காதரனை நீ அறியாய். அவன் இன்று என்னைப் பலாத்கரித்து என்னைக் கெடுக்க முயன்றான். நான் எனது கற்பைக் காத்துக் கொள்ளும் பொருட்டு என் கையிலிருந்த ஆயுதத்தினால் அவன் தலையிலும் காலிலும் அடித்துக் கீழே தள்ளி விட்டுவந்து விட்டேன். அவன் மண்டையில் ரத்தம் வெள்ளமாக வந்து விட்டது. நான் அவ்விடத்தில் நிற்காது ஒடி வந்துவிட்டேன்.; நான் செய்து விட்ட குற்றத்தை யாரேனும் பார்த்திருந்தால் எனக்குப் பேராபத்து சம்பவிக்கப் போகின்றது. அந்த ஆபத்துக்களை நான் திருணமாய் மதிக்கின்றேன். அந்த ஆசாமியின் உயிர் நீங்கி இருக்குமாயின் நான் தூக்கு மேடை ஏறவும் தயாராக விருக்கிறேன். என் கற்பை நான் அற்பமாக எண்ணமாட்டேன். அம்மா! என் செய்கை கடினமானதுதான்; எனினும் அதை விடக் கொடிய செய்கையைச் செய்யவந்த கள்ளனுக்கு இதுவே தக்க சிக்ஷை என்று என் மனச்சாட்சி கூறியதால் நான் செய்தேன். என் தாயே! இதனால் எனக்கு எந்த நேரம் எத்தகைய ஆபத்து வந்தாலும் வரும். நீ கலங்காதே; கவலைப்படாதே" என்று கூறினாள்.

--------
அவசரத்தில் சில பண்டங்கள் ஒன்றுக்கொன்று தெரியாமல் சிலர் உப்பு போடுவதற்குச் சர்க்கரையும் பாயசத்திற்கு மிளகாய்ப் பொடியும் போட்டு சமைத்து விட்டு நாசமடித்து விடுகிறார்கள்.
-------

இந்த எதிர்பாராத சம்பவத்தைக் கேட்ட கோமதிக்கு ஒரு புறம் ஆச்சரியமும், ஒரு புறம் துக்கமும் தொண்டையை அடைத்துக் கொண்டது. அந்த விஷயங்களில் முக்கியமாகத் தான் எதைக் கவனித்துப் பேசுவது என்பதையே அறியாது தியங்கினாள். பின்னர் பாலாவை நோக்கி, "பாலா! உன் மனோ தீரத்திற்கும் வீரத்தனமான செய்கைக்கும் மெச்சினேன். இன்னிலைமையில் உன்னை யாரேனும் வந்து கண்டு பிடித்து விடுவார்களோ! அப்படிக் கண்டு பிடித்துக் கைதியாக்கி விட்டால் நான் என்ன செய்வேன். என்னுடைய நிலைமையோ மிக்க கேவலமாகி விட்டது. நாளைக்கு நாள் பேசவும் கூடவில்லை. அத்தகைய பலஹீனமாகிக் கொண்டே வருகிறது. இது சமயம் நான் எவ்வாறு உன்னையும் பிரிந்து உயிர் வாழ்வேன்? அதற்குத்தான் நான் வருந்துகிறேன்." என்றாள்.

பாலா:- அம்மா! நீ என்ன கோழையாகப் பேசுகிறாய் + என்னுடைய விதியின் படிக்குத்தான் யாவும் முடியும். என்னைக் கண்டுதானா நீ உலகத்தில் உயிர் வாழுகிறாய்! நம்மைக் காப்பதற்குக் கடவுள் ஒருவரில்லையா! அவரை மறந்து விட்டாயா! அவரை மறந்து விட்டால் பிறகு நாம் வாழுவதெங்ஙனம்? அம்மா! உன்னுடைய தேக நிலைமையைப் பார்த்தால் நீ கட்டாயம் பிழைப்பாய் என்று கூறுவதற்கு இடமில்லை. இந்த விஷயத்தைக் குறித்து நீயும் நானும் மனோ தைரியமா யிருக்க வேண்டியது நமது கடமை யாகிவிட்டது.. உலகத்தில் சகலமான பிராணிகளையும் படைத்தலும், காத்தலும், அழித்தலும் ஆகிய எல்லாவற்றையும் செய்யும் கர்த்தா எவனோ அவனது தாள் தொழுது போற்றுவது-தான் நாம் செய்யக் கூடிய வேலையாகும்.

-------
அவசரத்தில் கடையில் ரூபாயை மாற்றிக் கொண்டு சில்லரை சரியாக விருக்கின்றதா என்பதையும் பார்க்காமல் ஒடி வருவதும் பிறகு கணக்குக் குறைவது கண்டு கடைக்காரனைக் கேட்டால் 'நான் அப்போதே சரியாகக் கொடுத்து விட்டேன். நீ அவசரத்தில் எங்கு போட்டு விட்டாயோ!' என்று அவன் கூறிவிட நஷ்டத்தை அடைய நேருகின்றது.
-------

இம்மைக்கும், மறுமைக்கும், மற்றெதற்கும் சாதன மனிக்கக் கூடியது அந்த தாரக நாமந்தான் என்று அன்று ஒரு புத்தகத்தில் படிக்க வில்லையா! எனக்குற்ற குற்றத்திற்குத் தண்டனை விதிக்கவோ, தூக்கு மரத்தில் தொங்கச் செய்யவோ கடவுள் திருவுள்ளப்படியேதான் நடக்கும். இவைகளுக்காக நீ சித்தம் சிதறாதே! வருந்தாதே! சதா கவலை கொள்ளாதே! உன் விஷயத்திவ் நான் கவலைப் பட்டும் ஆவதொன்றுமில்லை. கர்மாவின் வழியே காரியம் நடக்கும். ஆதலால் எல்லாவற்றிற்கும் தைரியமாக இருக்க வேண்டும். என்னுடைய செய்கையை ஒருவரும் கவனிக்கவில்லை என்று நான் எண்ணுகிறேன். ஆயினும் சொல்வதற்கில்லை. அப்படி ஏதேனும் சம்பவம் நேர்ந்தால் நீ கதறாதே; பதறாதே!" என்று பல விதமான தேறுதல்களைக் கூறினாள்.

கோமதிக்கு மனத்திற்குள் எத்தனையோ விசனம் அழுத்தியதெனினும் பாலாவின் பொன்னுரைகளைக் கேட்டுத் தன் கவனத் தைக் கடவுள் பேரில் செலுத்தித் தியானிக்கலானாள். பாலா தினந் தோறும் தன் வேலை முடிந்ததும் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு லக்ஷ்மி, ஸரஸ்வதி முதலிய படங்களை வைத்துப் பூஜை செய்து பாடுகிற வழக்கம். அதே போல அன்றும் தன்னுடைய மாறுதலைக் காட்டிக் கொள்ளலாகா தென்கிற நோக்கத்துடன் படத்தருகில் பாட உட்கார்ந்தாள். அவள் சகோதரியாகிய நீலாவும் சேர்ந்து இருவரும்,

("கோரீபஜிந்துனு" என்ற மெட்டு)

வாரீஜ லோசனா! பாப விமோசனா ! மார ஜனக கோபாலா—வா
தாரக நாமா! பாரினில் எம்மை சீருடன் காக்கும் பிதாவே
நந்த குமாரனே! நவநீத சோரனே! பந்த மகற்றி யருள்வாயே
செங்கண் மாலா! மங்கை லோலா! பங்கய மலர் பொற்தாளா-
பார்த்தன் தேரோட்டிய நாதா-

-------
அவசரத்தில் குலம், கோத்திரம், வம்சாவளிகள், குணம், பணம் முதலிய எவையும் தீர விசாரியாது சம்மந்தத்தைச் செய்த பிறகு அதிலுள்ள ஊழலைக் கண்டு கலங்கும்படியாகி விடுகின்றது.
----------

("சத்யவதே" என்ற மெட்டு)

1. பாண்டவநேய சகாயா! மாயா!
ஆண்டருள் செய்திடுவாய் அன்பர் தூயா- பா

2. தேவாதி தேவா! ஸ்ரீ வாஸு தேவா! பாவன நாம ஸ்ரீ பரந்தாமா!
சேவடி தந்தின்பம் சேர்க்திடச் செய்வாய்

3, பார்த்தனுக்குரைத்த பண்புள்ள கீதையில்
"மார்கழி மதி யான்" என்று இயம்பிய
மாதவனே பஜனைக் கிரங்கிவோய்

4. உன்னரும் மக்கட்கு உணர்ச்சி யளித்திட
இன்னமும் தாமதம் ஏற்குமோ கண்ணா!
பன்னக சயனா! பரிவுடன் வா வா-

5. தேசம் செழித்திட கேசவ நின் திரு
மாசற்ற நோக்கருள்வாய் மனோல்லாசா!
பூசுரர் போற்றிடும் புவனப் பிரகாசா !

என்கிற இரண்டு பாடல்களையும் பாடினார்கள். கோமதி இச்சங்கீத ஆனந்தத்தினால் மிக்க மகிழ்ச்சி யடைந்தாள். பிறகு பாலா "எந்த சமயத்தில் யார் வருவார்களோ!" என்கிற பெரும் குழப்பத்துடனேயே ஒவ்வோர் நிமிடமும் எதிர் பார்த்தாள். மனம் அலைந்து கொண்டே இருந்தது. இரவும் சமீபித்தது. அன்றிரவு நித்திரை என்பதே கொள்ளவில்லை, ஏதேதோ பலவிதமான எண்ணத்துடன் தத்தளித்தாள். ஒருவரும் வரவில்லை. ஒரு விஷயமும் தெரியவில்லை. ஆகையினால் இந்த சம்பவம் அறியாதவாறே மறைந்து விட்டதாகத் தாயும் மகளும் எண்ணினார்கள்.

உதயமாயிற்று. பாலா வழக்கம் போல வேலைக்குச் செல்லும் நேரம் சமீபித்தது. வேலைக்குச் சென்ற விடத்தில் என்ன விஷயம் காதில் விழுமோ! எவ்விதமான செய்தி எட்டுமோ! என்கிற பெரும் பீதியோடும் கலக்கத்தோடும் அவள் சென்றாள். தன் மனத்திலுள்ள எண்ணங்களினால் முகத்தில் ஏதேனும் மாறுதல் தெரிந்து விடப் போகிறதே என்கிற கவலையினால் தன்னால் கூடியவரையில் ஒரு சிறு மாறுதலையும் காட்டிக் கொள்ளாது தன் வேலையைச் செய்யப் புகுந்தாள்.

-------
அவசரத்தில் பார்க்காமல் காய் கறிகளை வாங்கி வந்து விடுகின்றது, பிறகு அதிலுள்ள சொத்தல், புழுத்தல், முத்தல், விரை முதலியவற்றைக் கண்டு வருந்துவது.
--------

முதல் நாள் தன்னால் அடியுண்டவன் அன்று வேலைக்கு வராமையைக் கண்டு மனத்திற்குள்ளேயே எண்ணறியாத கலக்கமும் விசனமும் உண்டாகியது. இவ் விஷயத்தைப் பிறரைக் கேட்கவும் அஞ்சினாள். அப்படியே தன் வேலைகளை முடித்துக் கொண்டு வீடு வந்தாள். மகளைப் பார்த்த உடன் கோமதி "அம்மா! உன்னுடைய செய்கை அப்படியே மறைந்து விட்டதா! ஏதேனும் விசேஷ முண்டா?" என்று கேட்டாள்.

இதுகேட்ட பாலா "அம்மா! இது பரியந்தம் ஒருவித தகவலும் தெரியவில்லை. எவ்விதமான பேச்சும் பிறக்க வில்லை. அந்த ஆசாமியையே காணவில்லை. காரணம் என்னவோ கடவுளுக்குத் தான் தெரியும். நானும் இது விஷயமாக யாருடனும் எதுவும் பேசவோ, கேட்கவோ இல்லை.' இனி போகப் போகத்தான் தெரியும்" என்றாள். பிறகு ஒருவித விசேஷமுமின்றி அமைதியாக அவ்விரவு கழிந்தது,

மறுதினம் உதயமாயிற்று. பாலா வேலைக்குப் புறப்படு முன்னர் ஓர் கிழவி அங்கு வந்து ஒரு கடிதத்தைக் கொடுத்து "அம்மா! இக் கடிதத்தைத் தம்மிடம் கொடுக்கும்படியாக கங்காதரன் கூறினார்." என்று கொடுத்துவிட்டு உடனே சென்றாள். இதைக் கேட்ட தும் பாலாவுக்குக் குலை நடுக்கம் எடுத்துக் கொண்டது, தனக்கு ஏதோ ஆபத்து உதயமாகி விட்டதாகவே அவள் மனத்தில் தீர்மானமாகத் தெரிந்து விட்டது. அக் கடிதத்தைப் பிரித்துப் படிக்கவும் நடுங்கினாள். அவளால் கூடுமான தைரியம் செய்து கொண்டு கடிதத்தைப் பிரித்துப் பார்த்தாள்.

-------
அவசரத்தில் குழந்தையை தடார் புடார் என்று புடைத்து விட்டு அந்த உதை தாங்காது குழந்தை ஜ்வரத்துடன் படுத்த பிறகு வருந்திப் பயன் யாது?
------

"பாலம்மாளுக்கு :

இக் கடிதம் கண்ட தக்ஷணம் இதிலுள்ள விலாசத்திற்கு உடனே வர வேண்டியது. அங்ஙனம் தவறினால் பேராபத்து நேருவது நிச்சயம். போலீஸ் பக்ஷிகள் வட்டமிட்டுக் கொண்டிருப்பதை மறக்க வேண்டாம். உடனே வரவும்.

      கங்காதரன்."

அக் கடிதத்தைப் படித்ததும், அவளுடைய திகிலும், குழப்பமும் முன்னிலும் நூறு மடங்கு அதிகரித்து விட்டன. அவளுடைய தலை சுழலுகின்றது. தான் செய்துவிட்ட காரியத்தின் பலனாகிய சூரியன் தன் கண்ணெதிரில் பிரகாசிப்பதாக நினைத்து விட்டாள். அவளுடைய பரம சங்கடமான நிலைமையோடு தன் தாயாரருகில் வந்து கண்ணீர் பெருகியவாறு கடிதத்திலுள்ள விஷயத்தைத் தெரிவித்தாள்.

இது கேட்ட கோமதி மிக்க விசனத்தை யடைந்து, "ஹா! பாலா! என்னமோ பெரிய ஆபத்து வந்து விட்டதாகவே என் மனமும் கூறுகின்றதே! என்ன செய்வேன்? எவ்விதமாக முடியுமென்று எனக்குத் தெரியவில்லையே! ஐயோ! என்ன செய்வேன்! கண்ணே! நீ தயங்காதே ! இக் கடிதத்தை தீயிட்டுப் பொசுக்கிவிட்டுப் பேசாமலிருந்துவிடு. விஷயமே அறியாதவள்போல நீ உன் வேலைக்குச் சென்றுவிடு, இவ்விதம் செய்தால் என்ன?" என்று வெகு அன்போடு கேட்டாள்.

பாலா:- அம்மா! என்ன இது இவ்விதம் பேசுகின்றாய்! கடவுளுக்குப் பொதுவாக நான் நடந்து கொள்ள வேண்டாமா! ஏன் பயப்படுகின்றாய் பயப்படாதே! என் விஷயத்தில் அந்த மனிதனும் பெரும் குற்றவாளி; என் கற்பைக் காத்துக் கொள்ள நான் செய்தது சரி எனினும் அதுவும் அவனுக்குக் குற்றமாகத் தோன்றலாம். வருவது வழியில் தங்கி விடாது. நான் இன்று பயந்து கொண்டு போகாது வீட்டிற்குள்ளேயே புகுந்து கொண்டிருப்பின் என்னை நாளை போலீஸ் காரர்கள் வந்து வாரண்டுடன் அழைத்துச் சென்றால் அப்போது என்ன செய்வது? அது மட்டும் சரியானதா! ஆகையினால் நீ சற்றும் கவலைப்படாதே!

--------
அவசரத்தின் வேகத்தினால் முக்கியமான சாமானை வைத்து விட்டு மறந்து செல்வதால் அங்கு சென்ற பிறகு மீண்டும் ஒடி வந்து அதை[ எடுத்துச் செல்ல நேருகின்றது.
---------

அம்மா! உயிருடன் என்னருமை கேசவனை இழந்தோம். மூத்த அண்ணனையும் பிரிந்தோம். அவ்விருவர்களை இழந்த உனக்கு என்னைப்பற்றிக் கவலை ஏன்? என் விதி முடிவின்படி என்னையும் நடத்து. இதற்கெல்லாம் ஏன் வருத்தப்படுகிறாய்? நான் கட்டாயம் சென்று வருகிறேன். எதற்கும் பயப்படவேண்டாம். விதியை வெல்ல எவராலுமாகாது; தைரியமாக இரு. நான் சென்று வருகிறேன்." என்று கூறித் தைரியம் சொல்விவிட்டு அவ்விடம் விட்டு வெகு துணிகரமாயும் பரபரப்புடனும் கடிதத்தில் கண்டுள்ள விலாசத்திற்குச் சென்றாள்.

அங்கு கடிதம் கொண்டு கொடுத்த கிழவியே வாசலிலிருந்தாள். "வாருங்கள். " என்று மரியாதையாகவே அழைத்துக் கொண்டு சென்று உள்ளே படுத்திருக்கும் ஆசாமியிடத்தில் பாலாவின் வருசையைத் தெரிவித்தாள். உடனே அவன் "இங்கே யனுப்பிவிட்டு வெளிக்கதவைத் தாளிடு" என்று உத்தரவு செய்தான். இவ்வார்த்தைகள் நமது பெண்மணியின் செவியில் விழுந்ததும் அவள் குலை ஈடுங்கியது. "ஹா! ஏதோ மோசம் வந்துவிட்டதே!” என்று வயிற்றில் இடி இடித்தது. அவ்வறையின் கதவருகிலேயே பாலா நின்று "கதவை ஏன் தாளிடவேண்டும்? நான் இவ்விடத்திலேயே நின்று பேசுகிறேன். என்னை வரவழைத்த காரணம் யாது? அதை இப்படியே கூறலாம்." என்று முடுக்காகவே கேட்டாள்.

கங்காதரன்.- அம்மா! என் தாயே! பாலா! இதோ இப்படி என்னருகில் வா! உன் திருமுகத்தை என் கண் முன்பு தாராளமாகக் காட்டு. உன் முகத்தில் பயக்குறியும் கவலைத் தோற்றமும் ஜ்வலிக்கின்றது. அப்படியெல்லாம் கவலைப்படாதே! நீ குற்றமற்ற குணவதி, பழியற்ற பாம சிரேஷ்டை. கற்பைக்காத்த காரிகை. என்னுடைய தீய வினையை எனக்கறிவித்த தெய்வப்பெண்; என் கண்ணே! பாலா!" என்று ஏதேதோ சொல்லிக்கொண்டே மெல்ல படுக்கையை விட்டு எழுந்து நடக்கமாட்டாது தத்தித்திணறி நடந்துகொண்டே பாலா அருகில் வந்து அவள் காத்தைப்பற்ற முயன்றான்.

------
தூங்குகின்றவர்களைப் பார்த்தால் விழித்திருப்பவர்களுக்குத் தூக்கம் தானாக வந்துவிடுகிறதாம். விழித்தவர்களை தூங்குகின்றவர்கள் பார்த்தா லன்றோ! அவ்வாறு பார்த்தாலும் விழிக்கமாட்டேனென்கிறதாம்.
-------

இச்செய்கையை அறிந்த பாலா "ஐயா! இதற்குத்தானா என்னை அவ்வளவு பிகுவுடன் அழைத்தீர்; உம்முடைய மோச எண்ணம் இன்னும் மனத்தைவிட்டு அகலவில்லை போலும். சேச்சே! என் கரத்தைப் பற்ற வரும் வெட்கம் கெட்டவரே! விலகும் தூர! என்னுடைய கரம் இவ்வல்ப மதியினருக்கு இலகுவில் கிடைக்கு மென்று நினைக்க வேண்டாம். நான் சென்று வருகிறேன். இதுகா றும் சொல்லிய வார்த்தை என்ன! 'கண்ணே! பெண்ணே!' என்கிற குலாவல் என்ன? உமக்கு மூளை கலங்கி விட்டதாகத்தான் தோன்றுகின்றது. என்னைச் சுற்றி போலீஸ் பக்ஷிகள் வட்டமிடுவதாக மிரட்டினீரே! உம்முடைய போலீஸ் பக்ஷிகளே என்னைக் கொத்தித் தின்னட்டும். நான் அத்தகைய பக்ஷிகளுக்கு இரையாகிறேன். ஆனால் காமாந்தகாரமான பெருங்கடலில் மூழ்கித் தத்தளிக்கும் உம்முடைய களங்கமான கரத்திற்கு நான் அகப்படமாட்டேன். சத்தியம்." என்று கூறி வெளியே செல்ல முயன்றாள்.

இதற்குள் அம்மனிதன் "கண்மணி! நீ கூறுவதன் உண்மையை நான் அறிந்தேன். உன்னுடைய பாரமார்த்தீகத்தைக் கண்டு நான் உள்ளம் பூரிக்கின்றேன். மகா பாவி, சண்டாளன், கொடிய பாதகனாகிய நான் உன் கரத்தைத் தீண்டுதற்கு அருகதை இல்லை. இது சத்தியமே! உண்மையே! என்னிலைமை என்னையே வெட்கித் தலைகுனியச் செய்கின்றது, எனக்கு புத்தி கற்பித்த உத்தமியே! பயப்படாதே; என்னருகில் வா!....வா! ...வா!... என் கண்ணே! .....என் கரத்திற்கு விருந்தளி....வா.... அருகில் வா. இப்பாவியின் உதிரத்தில்தான் நீ பிறந்தாய்! ....ஐயோ!...... எனது நாவால் கூறவும் வெட்கமாக விருக்கிறது... உன்னைப் பெற்ற தந்தையே உன் மீது பித்தங்கொண்டு சித்தம் சிதறியதை எண்ண என் ஜென்மம் கூசுகின்றதே! என் செல்வியே! என் பாலாம்பிகையே! என் கண்ணே! வா; என்னருகில் வா! உன் தந்தையை இனி உதாசீனம் செய்யாதே!" என்று கூறிக்கொண்டே பாலாவின் இரு கரங்களையும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டான்.

--------
நவரஸங்களும் பொருந்தி நடிக்கும் காடகங்களைப் பார்த்தால் பிரம்மாகத்தமாக இருக்கிறது. நடிகர்களின் திறமையும் ரூபலாவண்ய அமைப்பும் ஒன்று கூடிவிட்டால் வெகு அற்புதமாக நாடகம் அமைந்துவிடுகின்றது.
----------

இந்த அதியத்புதமான வார்த்தைகளைக் கேட்ட பாலாவின் நிலைமை திடுக்கிட்டு வியப்பே வடிவமாகிவிட்டது. அந்த மனிதனை ஏற இறங்கப் பலமுறை பார்த்தாள். தன் கையைத் திமிறிக் கொண்டாள். அந்த வார்த்தையை நம்பாது தவிக்கின்றாள். அவளுடைய அப்போதிய நிலைமையை ஊகித்தறிவதே வெகு பிரயாசையாகிவிட்டது. அவள் வெகு தைரியத்துடன் "ஐயா! இதென்ன ஆச்சரியம்! நீர் சொல்வதெல்லாம் எனக்கு வியப்பாயும் வேடிக்கையாயும் இருக்கிறதே! நீரா என் தந்தை! உமது உதிரத்திலா நான் பிறந்தேன்?....... இத்தகைய வார்த்தைகளால் பசப்பின், தந்தையென்று தளுக்குக் காட்டிச் சிந்தையின் எண்ணத்தை முடித்துக் கொள்ளலாமென்கிற தீர்மானமே! அங்ஙனம் ஏன் இருத்தல் கூடாது? திடீரென்று உம்மை நான் தந்தை என்று நம்புதல் எப்படி சாத்யமாகும். இந்தக் கட்டுக்கதையை நான் ஒருபோதும் ஒப்ப முடியாது," என்றாள்.

கங்காதரன்.- -என் கண்ணே! உன் மனோ உறுதியையும் தைரியமான மொழிகளையும் காணக் காண எனக்குண்டாகும் மகிழ்ச்சிக்கோர் எல்லை இல்லை. நீ சொல்வது முற்றும் உண்மையே! நீ நம்புவது சாத்யமற்றதேயாகும். காமப் பார்வையோடும், காம எண்ணத்தோடும் நோக்கிய பாவி நான்தான். ஆயினும் பின்னர் எனது அவ்வெண்ணங்கள் தீக்கிரையாயின, நான் தற்போது அந்த களங்கத்தினின்று களையப்பெற்றுள்ளேன். உன்னை ஈன்ற தந்தையாக விருக்கிறேன்.

------
பிறர் வீட்டில் புசிப்பதற்கு சகஜமாக யாருக்கும் சங்கோஜம் உண்டாவது இயல்பு. பிறவியிலேயே சங்கோஜம் உள்ளவர்கள் அன்னியர் வீட்டில் புசிக்க நேர்ந்தால் கேட்கவேண்டாம்; அன்று அவர்கள் பட்டினி என்றுதான் நினைக்கவேண்டும்.
-------

என் கண்ணே! பாலா! கோமதி சுகமா! நீலா சுகமா! கேசவனும் மருதப்பாவும் சுகமா! என் விதி என்னை எவ்வெவ்விதம் ஆட்டியது என்பதை நீ கேட்டால் நகைப்பாய்; பெற்ற மகளைப் பெண்டாள எண்ணியத் துரோகியின் மற்றைய செய்கைகளைப்பற்றி நான் கூறவேண்டுவதில்லை. என்னைப்போன்ற கசடன் உலகத்தில் இருக்கமாட்டான் என்பது சத்தியம். என் செல்வமே! உன் திரு முகத்தை நான் காமப் பார்வையினால்தான் முதல் முதல் நோக்கினேன். குழந்தைப் பருவத்தில் என் விதி என்னை ஓர் தாசிக்கு அடிமையாக்கியதால் அவள் முகமன்னியில் மற்றைய முகம் பார்த்த தில்லை. உங்களைப் பெற்ற பாசமும் அக்காலைமுதல் இக்காலைவரை மறைந்திருந்தது. படுபாவி நான் சொல்வதை நீ நம்பாமல் விழிப்பதை உன் முகங் காட்டுகின்றது. பெற்ற மகளைப் பெண்டாள நினைத்த சண்டாளனைக் கண்டாலும் பாதகமே; இதை உன் இதயம் உனக்கு எடுத்துக் கூறுகின்றது. என்னையும் குத்திக் காட்டுகின்றது. என் கண்ணே! பாலா!

என்னை நீ ஒரு நாளாயினும் நேரில் நன்றாகப் பார்த்ததில்லையாதலால் என்னுருவமே உனக்குத் தெரியவில்லை. உன் அன்னை என்னைப் பார்த்தால் தெரிந்துகொள்வாள்: ஹா!...... அந்த உத்தமியின் முகத்தில் எவ்விதம் நான் வெட்கமின்றி விழிப்பேன்?.... ஐயோர் என் முகத்தைக் காணவும் அவள் மனங் கூசுவாளே! கண்மணீ! பாலா! உன் தாயை நான் கடைசீமுறை விட்டுச் செல்கையில் நான்கு மாதம் கர்ப்பவதியாகவிருந்தாளே! என்ன சிசு பிறந்தது. அது உயிருடன் இருக்கிறதா! உன் மூத்த அண்ணன் எங்கே இருக்கிறான்?” என்று ஏதேதோ பேசுவதைக்கேட்ட பாலா வின் மனம் இன்னதென்று விவரம் அறியாது தத்தளித்தது.

--------
பழங்காலத்து விஷயங்களை நினைத்துக்கொண்டு படுத்திருப்பது ஒருவித ஆநந்தம். நிகழ்காலத்தை நினைப்பது ஓர் சந்தோஷம். வருங்காலத்து நிகழ்ச்சிகளை எண்ணி மனோதர்மமாகக் கோட்டை கட்டுவது எல்லாவற்றையும்விட இன்பக்கனவாகின்றது.
---------

தான் என்ன விதமான பதில் சொல்வதென்று யோசித்தாள். பிறகு அம்மனிதனை நோக்கி "ஐயா! உம்முடைய முந்திய செய்கையின் அம்பே என் இதயத்தைத் துளைத்துப் பதிந்துவிட்டதால் தாங்கள் இப்போது சொல்வது எதுவும் என் மனத்தில் பதியவில்லை, நம்பிக்கையும் கொடுக்கவில்லை. நீர் என் பிதாவா, அல்லவா என்பதை நானே நிர்ணயிக்கவும் என்னால் முடியாது. உமது வார்த்தையைக் கொண்டு தீர்மானிக்கவும் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆதலால் வீணான கால தாமதம் செய்ய வேண்டாம். நீர் என்னோடு என் தாயின் முன்பு வந்த.பிறகு என் தாய் தீர்மானிக்கின்றபடி நான் நடக்கத் தயாராக விருக்கிறேன். தயவு செய்து நீர் இப்போதே வாரும்" என்று வெகு முடுக்காயும் மனத்தில் பதியும்படியாயும் கூறினாள்.

அம்மனிதன் அதற்கு இசைந்தான்; எனினும் அவனுடைய மனத்தில் ஒரு புறம் அபாரமான வெட்கம் வந்து மூடிவிட்டது. "என் செல்வீ! உன் கையின் ஆயுதத்தினால் என் மண்டையில் நீ தைரியமாய் அடித்ததனால் என் தலையிலிருந்த துர்ச் செய்கைக்கு உதவியான திமிர் படைத்த ரத்தம் பெரும் பாகமும் கொட்டிவிட் டது, பிறகு எனக்கு ஓர் பிரகாசமான புத்தியும், பழைய பாசமும், அறிவும் தோன்றின. அதனால் நான் இழந்த மக்கள் மனைவியை மீண்டும் அடைந்தேன். கண்ணே! உன் வார்த்தைக்கு மறு பேச்சில்லை. நான் அப்படியே வருகிறேன். உன் தாயார் என்னைக் கண்டு வெறுக்காமலிருப்பாளா! கட்டாயம் வெறுப்பாள்... அவ்வுத்தமியின் நற்குணங்கள் அறிந்து அனுபவிக்கப் பாவி நான் பாக்யம் செய்யவில்லை. அவள் என்னை: எட்டி உதைத்தாலும் நான் அதை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறேன். கிளம்பு; போகலாம்.' என்றான்.

உடனே ஓர் வண்டியை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு அதில் பாலாவும் கங்காதரனும் ஏறிக் கொண்டார்கள். வண்டியும் கிளம்பியது. பாலாவுக்கு மட்டும் மனத்திற்குள்ளேயே பயந்தான். தன் வீடு சேருகிற பரியந்தம் வாய் திறவாது மவுனமாகவே சென்றான். வண்டியும் பாலாவின் வீட்டை யடைந்தது. பாலா இறங்கி அவனையும் அழைத்துக் கொண்டு நேரே தன் தாயிருந்தவிடத்திற்குச் சென்று "அம்மா! இந்த விசித்திரமான விஷயத்தில் நீ தான் தீர்ப்பு அளிக்க வேண்டும். இதனால் மன அதிர்ச்சி அடையாதே. இதோ வரும் இம் மனிதர் யார் என்று கவனித்துப் பார்." என்று கூறிக் கங்காதரனைக் காட்டினாள்.

--------
உதயமானதும் குழந்தை தன் மழலைச் சொற்களுடன் வந்து எழுப்பும் ஆனந்தத்திற்கு நிகர் வேறெதுவுமே இல்லை எனலாம். அதன் முகத்தில் விழித்தவாறு, அதன் புன்சிரிப்பை நோக்கியவாறு எழுத்து அக்குழந்தையை முத்தமிட்டுப் பின் வெளியில் வந்தால் பண்ணிய பாவமும் தீரும்.
---------

எதிர்பாராத இவ் வார்த்தைகளைக் கேட்ட கோமதி மெல்ல எழுந்து உட்கார்ந்து வந்த மனிதனை உற்றுக் கவளித்தாள். அதற்குள் அம் மனிதன் "ஹா!....கோமதி! சண்டாளன் என்னை உனக்குத் தெரியவில்லையா!" என்று கூறிக்கொண்டே கோமதியின் இரு கரங்களையும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு கோவென்று கதறினான். கோமதிக்கு அவனை தூரவிருந்து பார்க்கையிலேயே தன் புருஷனின் ஜாடையாக விருப்பதைக் கண்டு ப்ரமித்தவளவில் இவ்விதம் அவனே கூறிக் கொண்டு அருகில் வந்ததும் உண்மையில் கோமதிக்கு ஒன்றுமே தோன்றாது மன அதிர்ச்சியினால் மெளனமானாள்.

ஐந்து நிமிடநேரம் எவ்விதமான சந்தடியுமின்றி மூச்சுப் பேச்சற்று அவ்விடம் நிசப்தமாக விருந்தது. பிறகு கோமதி சற்று தெளிவுற்று, "தங்கள் நினைவில் இவ்வனாதைப் பரதேசிகள் இப் பூவுலகில் இருக்கிறார்கள் என்பது உதயமாயிற்றா! அன்றி இதுவும் வேஷந்தானா! இதென்ன முகத்தில் தழும்புகள் இருக்கின்றனவே!.... வேசி மோகமும்...குடியின் கோரமும் தங்களை விட்டதா! என்ன ஆச்சரியம்.... பெற்ற மகளையா பெண்டாள நினைத்தீர்கள். ஐயோ! கலிகாலக் கொடுமையே!" என்று கூறி முடிப்பதற்குள் பாலா "அம்மா! இவரா என் பிதா! உண்மையில் என் பிதா தானா! இத்தகைய காமுகனாயும் குடியனாயுமுள்ள இவர் உதிரத்திலா நான் ஜெனித்தேன்!" என்று வியப்பே வடிவமாக நின்றாள்.

-------
ஒரு காரியத்தைச் செய்ய ஆரம்பித்தால் அதை உடனே தடங்கலின்றி செய்தால் அக்காரியம் சீர்பெறும்; அதற்கு ஆரம்பத்திலேயே ஆயிரம் தடங்கல் களும் "நீதான் செய்; நீதான் செய்". என்கிற போட்டியும் ஏற்பட்டுவிட் டால் காரியம் எங்ஙனம் நடைபெறும்?
-------

கங்காதரன்:- என்னுடைய கெடுமதியின் கொடுமையினால் நான் செய்த தீங்கிற்கு என்னை நீங்கள் என்ன சொன்ன போதிலும் நான் ஏற்றுக் கொள்ளத் தயாராக விருக்கிறேன். என்னுடைய பிழைப்பின் கேட்டிற்கு இதுமட்டுமல்ல; இன்னும் எதை வேண்டுமானாலும் கூறுவதற்கு இடமுண்டு. கோமதி! என்னைப் பிடித்து ஆட்டிய இரண்டு பைசாசங்களும் முன்பே என்னை விட்டு ஒழிந்தன. ஆனால் என்னுள் அவிவேகமாக நிறைந்து கிடந்த சிற்றின்பப் பேய் மட்டும் என்னரிய புதல்வியின் கை வாளினால் ஒழிந்தது. இனி நான் ஓர் புனிதன்தான். எனக்குற்ற இச் சம்பவத்தினால் புத்துயிர் பெற்றவனானேன்...

கோமதீ!...என் கண்ணே! பாலா!.... செல்வி!. நீலா!.... நான் இக் கதியை அடைந்ததற்குக் காரணமும் அந்த துராத்மா வேசியின் உறவேயாம். என்னை நல்வழிப் படச் செய்ததும் அவ்வேசி உறவேயாம். மகா கொடிய பாதகத்தில், காள கோடி சர்ப்பத்தின் மத்தியில் நான் இருப்பதை யறியாது பேராநந்த சுக-போகத்திலிருப்பதாக மனமகிழ்ந்து அக்கினி சாக்ஷியாக மணந்த மனைவி-யையும் நான் பெற்ற மக்களையும் துறந்தேன். அவ்வேசியுடன் ஊரை விட்டுச் சென்றேன்.அவள் இழுத்துச் சென்ற விட மெல்லாம் நாய் போல லோல் பட்டேன். சில வருடங்கள் அம் மாதிரியாகக் கழிந்தன. அந்த வேசிக் கழுதை மற்றும் பலருடன் நட்பு கொண்டு என்னை அலக்ஷியம் செய்து விலக்கினாள், நான் அவள்பால் வைத்திருந்த ப்ரியத்தினால் வேலைக்காரனைப்போல வேனும் வீட்டிலேயே இருப்பதாகத் தீர்மானித்தேன். அந்த வேசியினுடைய மற்ற சினேகிதர்களுக்குள் பலத்த சண்டை ஏற்பட்டது.

ஒரு தினம் காலையில் அவ்வேசி குத்தப் பட்டுக் கொலையுண்டு கிடந்தாள். இதைப் பார்த்து நான் நடுக்கலுற்றேன் அதே சமயம் அவளுடைய சினேகிதன் அங்கு வந்து தான் ஏதுமறியாதவன் போல அந்த கோரக் கொலையைக் கண்டு திடுக்கிட்டு "அடேய் எங்களுடன் அவள் சினேகமாக விருக்கிறாள் என்கிற ஆத்திரத்தினால் நீதான் இக் கொலையைச் செய்து விட்டாய்! உன்னையின்றி வேறு யாரும் இக் காரியம் செய்யமாட்டார்கள். இப்போதே உன்னை. போலீஸாரிடம் பிடித்துத் தருகிறேன்" என்றான்.

---------
எங்கேனும் செல்வதற்குப் புறப்படுகையில்தான் சிலருக்கு சண்டையும், சச்சரவும், ஆக்‌ஷேபனை சமாதானங்களும், கோப தாபங்களும் உண்டாகி விடுகின்றன. இந்த தடபுடிலில் சென்றவிடத்தில் காரியமும் மிஞ்சிவிடுகின்றது. கண்காட்சியாயின் பாதி கடந்துவிடுகின்றது.
--------

இது கேட்ட எனக்குப் பெருத்த அதிர்ச்சியும் ஆவேசமும் உண்டாகி விட்டது. அவனுக்கும் எனக்கும் பலத்த சச்சரவும் சண்டையும் நடந்தது. நான் அவனை அடித்துப் போட்டுவிட்டு அந்த நிமிடமே அவ்விடத்தை விட்டு ஓடோடியும் வந்து விட்டேன். குற்றமோ கொலைக் குற்றம். என்னை எப்படியும் போலீஸார் கண்டு பிடித்து விடுவார்களே என்கிற ஓர் யோசனையினால் நான் என் முகம் அடையாளம் தெரியாமலிருக்கும் பொருட்டு நெருப்பினால் முகத்தைச் சுட்டு இவ் வடுக்களுண்டாக்கிக் கொண்டேன். நான் வெகு தூரம் சென்று ஓர் ஊரில் தங்கினேன். அங்கு ஓர் கங்காணி சில பிரயாணிகளை அழைத்துக் கொண்டு இத் தீவுக்கு வருவதற்குத் தயாராக விருந்ததைக் கண்டு நானும் என் பெயரை கங்காதரன் என்று மாற்றிக்கொண்டு அக் குற்றத்திற்குப் பாத்திரமாகாது தப்பித்துக் கொள்ள இங்கு வந்தேன். இங்கு நான் வந்து ஒரு மாத காலந்தானாகிறது" என்று கூறி முடிப்பதற்குள் கோமதி "ஐயோ! மோசம் வந்து விட்டதா! பாழும் குடியும், வேசியும் மகா கொடிது விஷம் என்பதை அறிந்தும் அதிலிறங்கி பெரும் பாபத்திற்கு ஆளாகியதோடு கொலைக் குற்றமும் சாற்றப்பட்டீரா!.... ஐயோ! கொலையாளி என்.ற பெயருடனா இங்கு ஒளிந்து வருகிறீர் ?" என்று கூறிச் செயலற்று விட்டாள்.

கங்காதரனுக்கோ இன்னதென்று தெரியாதவிதமான துக்கம் தொண்டையை அடைக்கின்றது. கோமதியின் இரு கரங்களையும் பிடித்துக் கொண்டு, "என் கோமதீ ! உண்மையில் நான் ஒருவித குற்றமும் செய்தவனன்று. நான் கடைசீப் பாகமாகிய கொலையில் சம்மந்தப் பட்டவனேயன்று, கடவுள் மீது ஆணையாக நான் கொலை யாளியல்ல. என்மீது வீணான பழிவந்து தாக்கிவிடப் போகின்றதே என்கிற எண்ணத்தினால் நான் இந்த பக்கம் வந்துவிட்டேன். நேரே உங்களிடம் செல்லவும் எண்ணினேன்.

-------
சில நாடகங்களுக்குச் சென்றால் அக்காடகத்தைப்பற்றிய கதை முழுதும் கடப்பதில்லை; நாடகத்திற்கு முக்கிய லக்ஷணமான நடிக்குக் திறமையோ முழு தும் பூஜயம் போட்டா போட்டி பாட்டுக் கச்சேரியாகவே முடிந்துவிடுகின் ற்து. இதற்கு நாடகம் என்ற பெயர் எதனாலே?
----------

நீங்கள் எங்கே இருக்கி றீர்கள், என்ன செய்கிறீர்கள் என்ற தகவல் ஒன்றுமே தெரிய வில்லை. அது சமயம் விகாரித்தறிவதற்கும் நேரமில்லை. நிலைமையோ பகைவரின் கத்தி முனையில் இருந்ததால் நான் அது காலை ஊரைவிட்டு வெளி யேறுவது தான் உசிதம் என்று தோன்றியதால் நான் உடனே இங்கு வந்து வேலைக்கு ஒத்துக் கொண்டேன். ஒரு மாதமாக நான் இங்கு வேலை செய்தும் நீங்கள் இங்கிருப்பதை நான் அறியவில்லை. ஆனால் நான் கொலைக் குற்றம் என்ற ஒரு பெரிய பட்டத்தோடு வந்திருப்பினும் என்னை இதுகாறும் அழுத்திக் கொண்டிருந்த சிற்றின்பப்பித்து என்னை விட்டு அகலாதிருந்ததால் நான் பெற்ற சிறுமி என்கிற வித்யாசமும் தெரியாமல் காமத்துக்குக் கண்ணில்லை என்கிற பழமொழிப்படிக்கு என்னைச் செய்துவிட்டது.

பார்ப்பதற்கு வெகு சிறியவளாக விருந்தபோதிலும் என்னிடம் அவள் பேசிய பேச்சும், காட்டிய வீரமும், செய்த சூரச் செய்கையும் என்னையே திடுக்கிடச் செய்தது. மகா கொடிய காமுகனாகிய என்னுள்ளத்திலேயே இவ்வீர நங்கையின் செய்கை மிக்க மகிழ்ச்சியையும் என்னையறியாத ஓர் உணர்ச்சியையும் கொடுத்தது. நான் அந்த காயத்துடன் வீட்டிற்குச் சென்றேன். கைமருந்து களையே போட்டுக் கட்டு கட்டிக்கொண்டேன். அன்று அதிக நோய் தெரியவில்லை; எனினும் ரத்தம் பெரும்பாகமாகச் சென்றதால் களைப்பு மேலிட்டுவிட்டது. கால் நடக்கக்கூடவில்லை. என்னையறியாத மயக்கம் வந்துவிட்டதால் படுத்துவிட்டேன்.

இரவு முற்றும் அவ்வீரப் பெண்மணியின் உருவமும், அவள் சொல்லிய மொழிகளும், அவள் காட்டிய தீரச்செயலும் என் கண் முன்பு தோன்றி நாடகமாடிக்கொண்டே இருந்தன. இந்த சிற்றின்பப் பேயை ஒட்டுதற்கே அச்சிற்றிடை மாதரசி தோன்றினாள் என்று என் மனத்தில் பட்டுவிட்டது. அத்தகைய நாரீமணி யார்? அவனைக் கண்டுபிடிக்க வேண்டுமென்ற மனவெழுச்சியும் உண்டாகியது. உடனே நான் அதை எவ்விதமாயினும் அறிவதென்கிற தீர்மானங்கொண்டேன். இரவு தொலையப் போகின்றதா! என்று எதிர் பார்த்து அதைத் தொலைத்தேன்.

-------
நாம் யாரிடத்தில் ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசுவதில் யாதொரு குணமுமில்லை என்று நினைக்கின்றோமோ அவர்களாலேயே அக்காரியத்திற்கு உதவி சற்றும் எதிர்பாராவிதமாகக் கிடைத்துவிடுகின்றது.
-------

நேற்று பொழுது விடிந்தது. எனக்கு இக்காயங்களின் வலி அதிகமாய்விட்டது. கூடியவரையில் பொறுத்தும் நடக்கக்கூட வில்லை. பிறகு இரவு வரையில் பொறுத்தேன். தடுக்கி விழுந்து அடி பட்டதாகவும் லீவு வேண்டுமென்றும் எஜமானுக்கு எழுதியனுப்பினேன். நான் எழுதியது உண்மையாயல்லவா! என்று பார்ப்பதற்கு ஓர் கங்காணி வந்தான் அவன் வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தான். அவனிடத்தில் பேசும்போது வார்த்தைப் பராக்கில் பாலா விஷயத்தைப்பற்றிக் கேட்டேன். அவன் உங்கள் சகலமான வரலாற்றையும் கூறினான்.

அந்தோ! அதைக் கேட்டதுமே, என்னாவி துடித்தது. என் பழைய கதைகள் முற்றும் நினைவிற்கு வந்தன. என்னுடைய தீச் செயல்கள் கண் முன்பு தாண்டவமாடின. எல்லாவற்றையும் விடப் பெற்ற மகளையே பெண்டாள நினைத்த பெரும் பாதகமே ஆயிரக் கணக்கான அம்புகள் போல என் அங்கம் முற்றும் குத்தியது. என்னுடைய சகலமான நாடிகளும் அடங்கிவிட்டன. அப்போது தான் சிற்றின்பத்தின் கேடும், "காமம் செத்த நாயையும் பெற்ற பெண்ணையும் விடாது" என்கிற பழமொழியும் என் இதயத்தில் தைத்தன. என் மாறுதலை அவர் அறியாதவாறு சமாளித்துக் கொண்டு பின்னும் சற்று பேசிவிட்டு அவரை யனுப்பிவிட்டேன்.

எனினும் நான் கேட்ட விஷயங்கள் மெய்தானா என்பதை அறியும் பொருட்டு ஒரு வண்டியமர்த்திக் கொண்டு மெல்ல இரவு இவ்விடம் வந்தேன். நேரில் பார்க்கும் எண்ணத்துடன் நான் வந்த சமயம் பாலா ஏதோ சங்கீதம் கர்ணாமிருதமாகப் பாடிக் கொண்டிருந்தாள். நீ படுக்கையில் கேவலமான நிலைமையில் கிடந்ததை வெளிப் புறத்துப் பலகணி வழியாகக் கண்டேன்.

-------
வெறுமனே பிச்சை கேட்டால் போடுகிறவர்கள் சிலரே. ஆனால் பாட்டு பாடியோ, ஏதாவது வேடிக்கை செய்தோ கேட்டால் அநேகர் தங்களை யறி யாது கொடுத்து விடுகின்றார்கள்.
--------

நீ என்னை மணந்த உத்தமி கோமதி என்பதை அறிந்ததும் உள்ளே வர நினைத்தேன். ஆனால் என் மனச்சாக்ஷி என்னைத் தடுத்தது. உடனே நான் வீடு திரும்பி இரவு முற்றும் யோசனை செய்தேன். எந்த விதமாக உன்னைக் காண்பது என்று புலப்படாது தத்தளித்தேன். பிறகு இந்த யோசனை தான் சரி என்று பட்டதும் காலையில் கடிதமனுப்பினேன். கடிதத்தைக் கண்டு எங்கே அலக்ஷியமாய் வராதிருந்துவிடப் போகிறாளோ! என்று போலீஸ் பயங்காட்டி எழுதினேன்; பிறகு உங்களை அடைந்தேன்.

கோமதீ! உனது பொன்னுரைகளை ஆதியில் கேளாது அனாதரித்ததற்குக் கடைசீப் பலனாக கொலைக் குற்றத்தையும், பெற்ற பெண்ணைப் பெண்டான நினைத்த பரம பாதகத்தையும் அடைந்தேன். கடவுள் எனக்கு அறிவு கொடுத்திருந்தும் என் மதி யழிந்தது; மான மழிந்தது, மாண்பு குலைந்தது, மதிப்பு மடிந்தது, மகிழ்ச்சி ஒழிந்தது. எல்லாம் அழிந்த கட்டையானேன். என் வாழ் நாள் முற்றும் நரகக் குழிக்கு நாற்றங்காலாகிவிட்டேன். பாழ் நாளாகக் கழித்தேன்.... பாலா!.... இனியேனும் என்மீது நம்பிக்கை பிறந்ததா! என்னைப் பிதாவென்று ஏற்றுக் கொள்வாயா?" என்று கெஞ்சிக் கேட்டான்.

இது கேட்ட பாலா ஒருவிதமான நகைப்புடன் "இந்த பூமியில் ஒரு உயிர் ஜெனித்த வளவிலேயே அதற்குத் தாய் என்றும் தந்தை என்றும் இரு பொருள்கள் முன்பே இருக்க வேண்டும் என்பது கடமையல்லவா! அக் கடமையின்படிக்கு என் தாயை இது காறும் தெரிந்துகூட எனக்குத் தாய் தந்தையர் சாக்ஷாத் அம்பிகையும் பரமேச்வானும்தான் என்று நான் நினைத்திருக்கிறேன். அவனன்றி தாய் தந்தையர்கள் வேறில்லை என்பதே என் துணிபு. உம்முடைய உதரத்தில் ஜெனித்ததை யறியா முன்னர் கவலையற்றிருந்தேன். அதை யறிந்ததும் என்னைப் பெருங் கவலை வந்து சுற்றிக் கொண்டது.

--------
அச்சாபீஸில் வேலையில்லாது தூங்குகையில் வேலை கொடுப்பவர்களுக்கு அசௌகரிய மேற்பட்டுவிடுகின்றது. அவர்கள் வேலை கொடுக்கும் சமயத்தில் அச்சாபீஸில் வேலைகள் அதிகமாக வந்து சேர்கின்றன. இருவரும் சரிப்படுத்திக் கொண்டு வேலை அரிதமாக நடக்கையில் பேபர் பஞ்சம் வந்துவிடுகின்றது.
---------

இத்தகைய உதிரத்தில் என்னை என் ஜெனிக்கச் செய்தாய் கடவுளே என்று நான் வருந்துகிறேன். எனினும் பூத உடல் படைத்த தந்தையாகக் கடவுள் உம்மை நியமித்திருப்பதால் நீர் என் தந்தை என்று நம்புகிறேன். உம்மையும் உமது செய்கையையும் கண்டவர்கள் என்னைப் பார்த்தால் என்ன சொல்வார்கள்.......... இத்தகைய மனிதனின் - கொலைகாரனின்-பெண்ணாம் என்ற பட்டமல்லவோ எனக்கு வரும்!.... நான் ஏதோ செய்த தீரச் செய்கைக்கு ஏற்ற தந்தையாக எனக்கில்லையே என்ற வருத்தம் உண்மையில் என் மனத்தைப் பிளக்கின்றது. என்ன செய்வது? பூர்வ ஜென்ம சுகிர்தம்." என்றாள்.

கோமதி:- பாலாம்பாள்! நீ சின்னத்தனமாகப் பேசுகின்றாய்! உன்னுடைய மனத்தில் ஆயிரம் எண்ணங்கள் உதிப்பினும் உன்னுடைய பிதா அவர் என்பதை மறக்க முடியாது. அவர் மனம் ஏற்கெனவே புண்பட்டுத் தவிக்கும் சமயம் நீயும் இவ்விதமான சுடு சரத்தை விடாதே! அது தருமமன்று. அவ்வெண்ணத்தை மாற்றிக் கொள். உன்னுடைய தூய எண்ணத்தினாலும் செய்கையினாலும் அவருடைய மாசை ஒழித்து விடக் கூடும். அவ்வழியில் உன் எண்ணத்தைச் செலுத்து. இதுகாறும் அவர் எவ்விதம் இருந்த போதிலும் இப்போது அவர் நல்லறிவு பெற்று தன்னையே தான் நொந்து கொள்ளும் நிலைமைக்கு வந்து விட்டார். ஆதலால் இனி நாம் நமது கடமையில் தவறாது நடக்க வேண்டும். அவருடைய குற்றத்திலிருந்து மீட்கும் வழியை நாம் கட்டாயம் செய்து அவரைக் காக்க வேண்டும். அதற்கான வழியில் நாம் உழைப்பதே கடவுளின் முக உல்லாசமாகும். இனி துடுக்காகப் பேசாதே!

---------
எந்த புத்தகம் கைவசமில்லையோ அதைக் கேட்போர் பலர். அதை சீக்கிரம் அச்சிடுவோமென்று ஆரம்பித்தாலும் முடிவதற்குள் பல தடைகள் குறுக்கிடுகின்றன. அதிக காலதாமதமானால் முன் கேட்டவர்களின் மனம் மாறி விடுகின்றது.
----------

கங்காதரன்:- கோமதி! குழந்தையைக் கடிந்து கொள்ளாதே. மகா கொடிய பாதகன் நான் காமுகனாய் என் செல்வியையே என் வாயினால் கண்டபடி உளறிய நாவைத் துண்டிக்கவும் அவள் மனம் விரும்பலாம். அதற்காக நான் கோபிக்கவில்லை. கோபிக்கவும் எனக்கு முகமிருக்கின்றதா ! இல்லை; இல்லை. பாலா! உனக்குத் தந்தை என்று கூறிக்கொள்ள எவ்விதமும் நான் அருகதையல்லன் என்பதை என்னுள்ளம் அறிகின்றது. கண்ணே! நீ கவலைப்படாதே! நான் இழந்த புதையலை உன்னால் கண்டெடுத்தேன். பெரும் நிதியை அடைந்தேன். நான் உன்னால் பெரும் பாபத்தினின்றும் விடுதலை யடைந்தேன். புத்துயிர் பெற்றேன். இனிமேல் நான் புதிய மனிதன். அதை மட்டும் சத்தியமாக நம்பு." என்றான்.

பிறகு கேசவன், மூத்த குமாரன் முதலியோரைப் பற்றித் தெரிந்து கொண்டு விசனித்தான். பிரிந்த கால வர்த்தமானங்களைக் குறித்து பேசிக் கொண்டே இருக்கையில் இவர்களிருக்கும் அறைக் கதவு இடிக்கப்பட்டது. யாரென்று பாலா கேட்டாள். உடனே, வெகு அட்டகாசமாயும் அதிகார தொனியுடனும் ஒரு குரல் "போலீஸ்! கதவைத் திறவுங்கள்!....என்றதைக் கேட்ட உடனே அந் நால்வரும் இன்னதென்று விவரிக்க வியலாத நடுக்கலும் அபார மான குழப்பமும் அடைந்து ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்த படியே தம்பித்துவிட்டார்கள்.

--------
தேகபாதைகளையும் மனோபாதைகளையும் நிவர்த்திக்க மருந்துண்டு. ஆனால் எப்பொழுதும் சோம்பேறித்தனத்திற்கு அடிமையாயுள்ளவர்களைத் திருத்த மருந்து எது? அவர்கள் முடிவில் அடையும் அதோகதிதான்.
சுகம் துக்கம் இரண்டையும் ஆராய்ந்து பார்த்தால் அதிக சுகம் வேண்டு மென்று ஆசைப்படுவோருக்கே அதிக தூக்கம் கப்பிக் கொள்கின்றது. ஆகை யால் எதிலும் மிதமான ஆசைவைத்து விரலுக்குத் தக்க வீக்கம் என்கிற படி தன் சக்திக்குட்பட்ட சுகத்தையே விரும்பின் கடவுள் அதிக துக்கத்தைக் கொடுக்கமாட்டார்.
------

6-வது அதிகாரம்
அன்பை அழிக்கும் துன்பப் பேய்கள்

பரிமளவல்லியின் விடுதிக்கு வந்த பெண்பிள்ளையைக் கண்டு ஆச்சரியங் கொண்ட பரிமளா வந்த அம்மாளை உட்காரச் செய்துத் தானும் உட்கார்ந்தான். அந்த அம்மாளின் வருகை பரிமளாவின் மனத்திற்குப் பலவிதமான சந்தேகங்களையும் கலவரங்களையும் கொடுத்தது. "உண்மையில் இவள் பெண்பிள்ளைதானா! அன்றி ஆண் பிள்ளை பெண் வேடந் தாங்கி வந்திருக்கலாமோ!" என்கிற சந்தேகமும் மனத்திடை எழுந்தது. வந்த பெண்மணியின் முகத்திலோ களையற்று, ஒளி மங்கி விசனமே வடிவமாகச் சோர்ந்து கிடப்பதும் தெற்றென விளங்குகின்றது. "இராக் காலத்தில் இங்கு திடீரென்று வரும் இப்பெண் பிள்ளை யார்? எதற்காக வந்தாள்?" என்று பலமான கேள்விகள் அவளது மனத்திடையே பிறக்க வாரம்பித்தன.

இத்தகைய யோசனைகளோடு அந்த அம்மாளிடம் எதுவும் பேசாமல் உட்கார்ந்திருந்த பரிமளாவை அங்கு வந்த அம்மாள் நோக்கி "அம்மா! உன் மனத்தில் தோன்றியுள்ன எண்ணங்களை உன் முகமே நன்கு எடுத்துக் காட்டுகின்றன. நீ யோசிப்பதுபோல நான் உனக்குத் தீங்கு எதுவும் இழைக்க வரவில்லை என்னுடைய வெட்கக்கேடான நிலைமையில் நான் வெளியில் வரவும், உன் போன்ற உத்தமியான சிறுமிகளைக் கண்டு மகிழவும் பாக்கியமற்றவள். இன்னும் ஓர் முக்கியமான காரணம் பற்றி நான் எனது வெட்கம், துக்கம் இரண்டையும் விட்டு இங்கே வந்திருக்கிறேன். பரிமளா!

-------
நாம் என்று காலா காலத்தில் சாப்பிடவேண்டுமென்று நினைக்கின் றோமோ அன்றுதான் என்றுமில்லாத இடைஞ்சல்கள் ஏற்பட்டு முதலுக்கே மோசமாகி விடுகின்றது.
------

நான் பகிரங்கமான நாடக மேடையில் உன்னுடைய சங்கீதத் திறமையைக் கண்டு வியந்து ஆனந்த சாகரத்திலாழ்ந்திருக்கிறேன்; இருப்பினும் உன்னுடைய கோகில கானத்தை மீண்டும் நேரில் கேட்க மனம் ஆவல் கொண்டு தவிக்கின்றது ஒரு பாட்டு பாட முடியுமா?" என்று கேட்டாள்.

பரிமளா.- அம்மா! தாங்கள் வந்த காரியம் சங்கீதம் கேட்பதற்குத்தானா! அன்றி வேறு இருக்கின்றதா! அதையே முதலிலறியவில்லையே! தங்களுடைய விருப்பப்படிக்குப் பாடுகிறேன். முதலில் நீங்கள் யார், எங்கிருப்பது, எதற்காக வந்திருக்கிறீர்கள் முதலியனவற்றைத் தெரிந்துகொண்டு பிறகு பாடுகிறேன்.

வந்தவள்.- அம்மா! நீ கேட்பது மிகவும் சரியே! உன்னுடைய கேள்விக்கு நான் பதிலளிப்பதற்குக் கடமைப்பட்டிருக்கிறேன். என் கடமையை நான் செலுத்திய பிறகு உன்னுடைய வாக்கை நீ நிறைவேற்றாது மறுக்கக்கூடும். அதைப்பற்றி நான் இப்போது சொல்ல வேண்டாம். நீ உன்னுடைய இனிமையான கான விருந்தை முதலில் அளித்துவிடு; பிறகு நான் பேசுகிறேன்" என்றாள்.

இதுகேட்ட பரிமளா தன் தாயாரை அவ்விடத்திற்கு வரவழைத்துக்கொண்டு பிறகு பாடத் தொடங்கினாள்.


("எத்தனை ஜென்மங்கள்" என்ற மெட்டு)

(1) அச்சுதன் காமங்கள் உச்சரித்தால் பெரும்
துச்சவினைகளும் தீர்ந்திடுமே-
பச்சைமா மேனியும் மெச்சுகை யாழியும்
பார்த்திடப் பாபங்கள் தீர்ந்திடுமே:
உச்சித பாதங்கள் உச்சிமேற் கொண்டிடில்
உள்ள கரும வினை தீர்ந்திடுமே!

------
ஒரு சமயம் மனோவியாகூலத்தினால் மெலிந்திருந்த மனிதர்கள் சில காலத்திற்குப் பிறகு பார்த்தால் சந்தோஷப் பெருக்கினால் சிற்றானைக்குட்டி போலக் காணப்படுகின்றார்கள். தேகத்தில் எவ்வளவு பருமன் ஏறி இருக்கின் றதோ அவ்வளவு மனோ மாறுதல்களும் உண்டாய்விடுகின்றன.
-------

(2) ஏழை என்றோரது பாழ்வினை போக்கிடும்
இன்ப நாமம் துயர் தீர்த்திடுமே
ஆழ்கடல் மூழ்கினும் அனுதினம் போற்றிடில்
தாழ்வுறும் தீமைகள் தீர்ந்திடுமே:

(3) அந்தரங்க பக்தி சொந்தமாய்ச் செய்திடில்
முந்தி வினைகளும் தீர்ந்திடுமே:
மந்தகாசன் திவ்ய அந்தமாம் சரிதை
மனனம் செய்தால் துயர் தீர்ந்திடுமே:

(4) குன்றமெடுத்தோனை அன்றலர்முகத்தோனைக்
கோரிடில் கொடுமைகள் தீர்ந்திடுமே
கன்றினோடாடிய காருண்ய மூர்த்தியின்
கழல் பணிந்தால் பிணி தீர்ந்திடுமே

(5) சுத்தசுதாமன்போல் பக்தி செய்தால் நித்ய
சொர்க்கப் பதவியும் கிட்டிடுமே
உத்தம பக்தர்போல் சத்திய நெறியுடன்
உழைத்திடில் கருணை கிட்டிடுமே!

("ஷடானன” என்ற மெட்டு)

1. தாயே கதி! நீயே துணை சேயான் போற்றிச்
செய்யுமுறை கேளாய்-

2. மாயவன்மன மகிழ்ராணியே!
வேயர் போற்றும் தேவி! மேவும் ரங்கனாவி!- தா-

3. பங்கஜாஸனீ! பத்மலோசனீ!
அங்கஜமாதே! அம்புஜபொற்பாதே
மங்களவல்லி! மகிழ்வேதவல்லி!
பொங்கும் அல்லிக்கேணி; புகழ்வாஸினீ-தா-


-------
எந்த இடத்தில் நம்மை பிரீதியாக அழைக்கின்றார்களோ அந்த இடத்திற் குப் போக மனம் தாவுகின்றது. பொறாமைக்காரப் புண்ணியவான்களோ அதற்கெல்லாம் ஒரு கயிறு திரிக்க ஆரம்பிக்கின்றார்கன். ஐயோ! மாயை உலகமே!
--------
அம்மா! நான் சங்கீதத்தின் கரையை அறிந்த கலாவதியல்ல. எனக்கு குருமுகமான பாடமும் இல்லை. ஏதோ அந்த வாணியின் அருள் பிரசாதம் அவர் உண்மை பக்தர்களிடையே சிந்தியபோது ஒரு துளி என்னையறியாது என்மீதும் படிந்திருக்க வேண்டும். அன் னாளின் அனுக்கிரகத்தால் ஏதோ பாடுகிறேன். என்னுடைய சங்கீதத்தின்மீது விருப்பங்கொண்டு கேட்டதால் பாடினேன். இனி நீங்கள் வந்த காரியத்தைச் சொல்லலாமல்லவா?" என்று குயில் போலக் கூறினாள்.

வந்த மனுஷி அந்த தேவகானத்திற்கு ஒப்பான சங்கீதத்தைக் கேட்டு மட்டிலடங்காத மகிழ்ச்சியடைந்து ஆனந்தக் கண்ணீர் பெருக "பரிமளா! நானே மகா சண்டாளி! பெரும் பாவி! என்னைப் போல இவ்வுலகத்தில் யாரும் இருக்கமாட்டார்கள். என் செவிகளுக்கும் மனத்திற்கும் பேராநந்தத்தை வாரி யளித்த உத்தமச் சிறுமியாகிய உனக்கு நான் எவ்வகையிலும் கைம்மாறு செய்ய கடமைப் பட்டிருக்கிறேன். எனினும் மகர கொடிய பாபத்தைச் செய்துள்ள எனது கைம்மாறை வயதில் சிறுமியாயினும் நன்னெறியோடு ஒழுகும் நீ எதிர்பார்க்கமாட்டாய்! உனது சங்கீதம் எத்தகைய இனிப்புடன் இருக்கிறதோ அதேபோன்று உன்னுடைய கீர்த்தியும் ஒழுக்கமும் பிரகாசிக்கின்றன. குழந்தாய்! இதோ என்னுடைய ஞாபகார்த்தமாக இச்சண்டாளியின் கர்ம வினைகள் அலையும் பொருட்டும் உத்தமர்களின் உள்ளத்தில் என்னுடைய நினைவு இருக்கும் பொருட்டும் இந்த கடிதத்தை வாங்கிக்கொள். காரணம் கேட்காதே! நீ சற்றுமுன் பாடிய பாடலில் அந்த ஆதிமூர்த்தியின் பாதம் போற்றினால், நாம மந்திரம் பஜித்தால், திவ்ய சரிதையைப் பாராயணம் செய்தால் பாபம் தீருமென்ற மார்க்கம் அறிந்தும் அறியாமல் பாபக்கடலில் மூழ்கி பாதகியானேன்! செல்வீ! பரிமளா! நான் இவ்விடம் விட்டுச் சென்ற பிறகு இந்த கடிதத்தை உடைத்துப் பார். நான் சென்றுவருகிறேன்." என்று கடிதத்தைப் பரிமளாவின் கையில் கொடுத்துவிட்டு மறு பேச்சுக்கு எதிர் பார்க்காது ஒரே விசையாக எழுந்துபோய் விட்டாள்

-------
ஒரே பதம் ஒருவர் வாயிலிருந்து வரும்போது அவர்களுக்கு ஒருவிதமான கருத்தையளிக்கின்றது. அதைக் கேட்டபேருக்கு • வேறொரு விதமான கருத்தை உண்டாக்குகின்றது. இரண்டு பேருடைய மனோபாவத்தையும் ஒத்திட்டுப் பார்த்தால் மலைக்கும் மடுவிற்குமாக ஆய்விடுகின்றது.
-------

கேவலம் சிறுமியாகிய பரிமளவல்லி ஒன்றுமே தோன்றாது- விவரம் தெரியாது - கலவரமடைந்தாள். க்ஷண நோத்திற்குள் அந்த அம்மாள் மறைந்துவிட்டாள். பிறகு பரிமளா அந்தக் கவரை உடைத்தாள். அதில் ஒரு கடிதமும், ஒரு ஒட்டிய கவரும் இருந்தது கண்டு அக் கடிதத்தைப் படிக்க வாரம்பித்தாள்.

“வயதில் சிறுமியாயிருப்பினும் மன உறுதியில் மகிமை பெற்ற மங்கையே! பரிமளவல்லீ! இக் கடிதத்தை நான் எழுது வதற்கு முன்னர், சுமார் எத்தனையோ நாட்கள் - எத்தனையோ இரவுகள் - என் மனம் அலைபாய்ந்து தத்தளித்தது கண்ணீர் ஆறாய் ஓடிற்று. என்னுடைய பாபக் குவியல்களெல்லாம் ஒவ்வொரு கொடிய மிருகம் போன்று என்னுடைய கண் முன்பு தோன்றி என்னைக் கடிப்பதாயும், குத்துவதாயும் என் மீது பாய்வதாயும் என்னைச் சித்திரவதை செய்வதாயும் தோன்றி வதைத்தன. இதனால் எத்தகைய கொடிய பாபத்தைச் செய்திருப்பேன் என்று நீயே அறிந்து கொள்ளலாம். என்னுடைய சகலமான செய்கைகளையும் கடவுள் பார்த்திருக்கிறான் என்கிற எண்ணம் எனக்கு உதயமாவதற்கே என் கன்மா இடங் கொடுக்காது சகடம் போலத் தடுத்தது. என் பாபக் குவியல்களை - பயங்கரத்தை-நீ படிக்கும்போதே உள்ளம் நடுங்குவாய்; அத்தகைய கொடுமையை நானே மனத் துணிந்து செய்திருக்கிறேன்.

பரிமளா அதிகமாக வளர்த்திக் கொண்டு போக என் மனம் இடந்தரவில்லை. என்னுடைய சரித்திரத்தின் சுருக் கத்தை அறிந்து கொள். என்னால் கெட்டு அனியாயமான- நிர் மூலமான, அதோகதியான - பூண்டற்று விட்ட

--------
அதிர்ஷ்டம் என்பது எல்லாவிதத்திலும் அமைவதில்லை. சிலர் தங்களைப் பார்ப்பவர்கள் "அவர்களுக்கென்ன குறைவு சகல போக பாக்கியங்களுடன் இருக்கிறார்கள்" என்று நினைக்கக்கூடிய விதமாக இருக்கின்றார்கள். ஆனால் உண்மையில் அவர்களை ஆராய்ந்து பார்த்தால் முக்கியமான விஷயத்தில் அதிர்ஷ்டம் எங்கோ மறைந்து கிடக்கின்றது. தூரத்து மலை பசப்பு போன்றுதான் உலகம்.
--------

குடும்பங்கள் அநந்தம். என்னுடைய துராசையினாலும், சிற்றின்பப் பித்தினாலும், நான் என்கிற மமதையினாலும் உலகத்தையும் கடவுளையும் பாப புண்ணியத்தையும் அடியோடு மறந்து இறுமாந்திருந்ததனால் எனது ஏழேழு ஜென்மத்திற்கும் இழுக்கு தேடிக் கொண்டேன். என்னால் குடி முழுகிய ஜாபிதாவில் உனது எஜமானராயும், தற்போது தர்ம கர்த்தாவாக விளங்குபவருமான பொன்னுசாமி என்பவரும் ஒருவராவர். பரிமளா! இந்த வரியைப் படிக்கும்போது நீ திடுக்கிடுவாய்! அது இயற்கையே! பொன்னுசாமி என்பவரை அடியோடு பாழாக்கி அவர் குடும்பத்தையும், தர்ம பத்தினியையும், செல்வத்தையும் உயிருடன் உரிஞ்சிய பூதம் நானே யாவேன். பணப் பேராசையினால் அவர் நேர் முகமாகக் கொடுத்த பணம் போதாமல், அவர் பெற்றோரில்லாத சமயம் எனது கையாட்களை விட்டு அவர் வீட்டில் கொள்ளையடிக்கச் செய்தேன். அவர் தன்னுடைய மனைவியின் முகம் பார்க்கா வண்ணம் மாயை வலையை வீசி மறைத்தேன். அவரை விடச் செல்வவந்தர்களின் தொடர்பு கொண்டு அவருக் குத்துரோகம் பலவும் செய்தேன். ரத்தின வியாபாரியின் ரத்தினங்களை ஒரேயடியாகக் கொள்ளையிடும் நோக்கத்தில் அவருக்கு விஷத்தைக் கொடுத்து கொலையும் செய்தேன். ஐயோ!.... இந்த ஆபாஸங்களை -ஊழல்களை எல்லாம் சொல்லி உன் மனத் திற்கு வெறுப்பு உண்டாக்க நான் சம்மதிக்கவில்லை. நான் செய்த அக்ரமங்களெல்லாம் எனக்குச் செய்யும்போது தெரியாவிடினும் பிறகு தெரிவதற்கு ஓர் காலமும் நேர்ந்தது.

அக் காலம் முதல் என் மனமே என்னை இடித்து இம்சை யுறுத்தியது. நான் கண் காணாது மறைந்தேன். நான் கொள்ளையடித்ததுபோல என் வீட்டில் கொள்ளைக்காரர்கள் கொள்ளையடித்தார்கள். என்னுடைய அருமைக் குழந்தைகளில் ஒன்று மோட்டாரில் நசுங்கி உயிர் நீத்தது.

-------
நாம் ஒரு வஸ்துவிடத்தில் ஆசைகொள்ளும்போது அது நமக்குக் கிடைக்கக் கூடியதா இல்லையா என்பதை யோசித்து கிடைக்கக்கூடியதாயின் அதை அடைவதற்கு வேண்டிய மார்க்கங்களைத் தேடவேண்டும். கிட்டாத பொருளை அடைய விரும்புவது கானல் நீரைக் கண்டு மகிழ்வது போலாகும்.

மற்றொன்று எனது பகைவன் கரத்தால் கொல்லப்பட்டது. மற்றொன்று நான் வேறு ஒருவனை எமனுலகமனுப்புதற்கு வைத்திருந்த விஷங்கலந்த பாலைக் குடித்து இறந்தது. இவ்விதம் என் கதியும் செய்கையும் கடவுள் அதோகதியாகச் செய்த பிறகே எனக்குப் புத்தி பிறந்தது. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதற்கு? உயிர் துடித்தேன்; தத்தளித்தேன். விரக்தி கொண்டேன். என் கர்மம் தொலையும் பொருட்டு சில வருடங்கள் காசி க்ஷேத்திரத்திலேயே கங்கை நீராடிக் காலத்தைத் துலைத்தேன்.

என் மனம் சமாதானமாகவில்லை. என்னால் கொள்ளை டிக்கப்பட்ட செல்வத்தில் பெரும் பாகமும் பல வழிகளில் தொலைந்த தெனினும் இன்னும் ஒரு லக்ஷ ரூபாயிக்கு என்னிடம் இருப்பது எனக்குப் பெரும் பாரமாக இருந்தது. அதை என்ன செய்யலாம் என்று நினைத்து அதே யோசனையிலிருக் கையில் ஒரு தினம் கனவில் ஒரு விருந்தர் தோன்றி, "மகா கர்ம சண்டாளியாகிய உன் பணத்தை தர்மத்திற்கு வாரி இறைத்தால் உன் பாபம் கொஞ்சம் கழியலாம்." என்று கூறி னார். அன்று முதல் என்ன விதமான தருமம் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கையில் இந்த நற்குண நாடகக் கம்பெனியை நடத்துவது அந்த புண்யவான் என்றும் அவருடைய மனம் விரக்தி மார்க்கத்தில் பறந்து விட்டதென் றும், தர்ம ஸ்தாபனங்கள் மலிந்திருப்பதையும், நீயும் கேசவன் என்ற சிறுவனும் நடிப்பதும் முதலிய பல விஷயங்களையும் நான் ஒரு தினம் பத்திரிகையில் படித்தேன்.

இந்த செல்வத்தில் பெரும் பாகமும் அந்த உத்தமராகிய பொன்னுசாமியினுடைய தென்பதை இப் பாவியினுள்ளம் மறக்க முடியாது. அவ்வுத்தமரின் சொத்துக்கள் அவரிடமே சேரட்டும். அவருடைய கரத்தினாலேயே தரும வழியில் வினியோக மாகட்டும். இப் பாவியின் மிகுதி சொத்தும் பூவுடன் சேர்ந்த நாறும் மணம் பெறுவதே போல ஆகட்டும் என்கிற நோக்கங் கொண்டு அதை அவரிடமே சேர்க்க எண்ணி இவ்வூருக்கு வந்தேன்.

--------
புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கொள்வது போல சிலர் நல்ல ஸ்திதியில் இருக்கும் பிறரைக் கண்டு அம்மாதிரி தாங்களும் ஆகவேண்டு மென்ற அதிக ஆசை கொண்டால் அதிக நஷ்டம் அடைய வேண்டியே வரும் என்பதை முன்னால் அறிவதில்லை.
------
ஆனால் எனது வெட்கங் கெட்ட முகத்துடன், மான மிழந்த உருவத்துடன் அந்த புண்ணிய மூர்த்தியின் எதிரில் வருவதற்கு மனங் கூசியது. இதை யாரிடம் எவ்வகையில் சேர்ப்பதென்று அறியாது தவித்தேன். தண்ணீராயுருகி னேன். உங்கள் நாடக நடிப்பைக் காண ஆவல் கொண்டு சில நாடகங்களையும் கண்டு களித்தேன். உனக்கு ஒரு வைர பதக்கமும் பரிசளித்தேன். பிறகு உன் மூலமாகவே இதை உன்னி டம் சேர்ப்பதென்று தீர்மானித்துக்கொண்டு என் வீட்டு வேலைக் காரனை யனுப்பி விசாரித்துவரச் செய்தேன். உன்னுடைய உத்தரவு கிடைத்த பிறகே இக் கடிதம் எழுதலானேன்.

பரிமளா! உன்னுடைய எஜமானரிடத்தில் இக் கடிதத்தைக் காட்டு. இதோடு இருக்கும் கவரினுள் மொந்த ரூபாயிக்கும் ஒரு செக்கு என் கை யெழுத்துடன் இருக்கிறது. அதையும் உன் எஜமானரிடம் சேர்த்துவிடு. அவ்வுத்தமரிடத்தில் நான் மன்னிப்பு கேட்பதற்கும் அருகதை யற்ற பாவியாகி விட்டேன். அவர் மனம் போலச் செலவிட்டுக் கொள்ளட்டும். அதில் என் இறந்த புதல்வியின் ஞாபகமாக உனக்கு ஒரு பத்தாயிர ரூபாய்க்குத் தனியாக ஒரு செக்கு வைத்திருக்கிறேன். அதை நீ அங்கீகரிக்க வேண்டுகிறேன். "இத்தகைய பாவியும் உலகத்திலிருக்கின்றாளே" என்று ஆச்சரியப் படுவாய்; இனி என்னை- என் ப்ரேதத்தை - ஒருவரும் கண்ணாலும் காண முடியாது. இது நிச்சயம், பரிமளம் மிகுந்த பரிமளா! இதோடு நான் நிறுத்திக் கொள்கிறேன். மன்னிப்பாயாக,
      இங்ஙனம்
      மகா கொடிய சண்டாளி
      கொலைகாரி

----------
பரீக்ஷைக்குப் படிக்கையிலோ அன்றி மும்முரமாக எழுதுகையிலேர சிலர் வந்து “நான் இப்போது வந்ததில் தங்களுக்கு இடைஞ்சலாக இருக்கும்; ஆகை யால் இதோ போய்விடுகிறேன்" என்று சொல்லிக்கொண்டே வீண் வார்த்தை களைப் பேச ஆரம்பித்து மணி நேரத்தில் நேரத்தைக் கடத்தி எல்லா வேலைகளை யும் பாழாக்கி விடுகின்றார்கள்.

இக் கடிதத்தைப் படித்த பரிமளாவின் உடல் உண்மையி லேயே ஆடிற்று. தலை கிறு கிறுத்தது. அவள் 10 நிமிட நேரம் பதுமை போலானாள். "ஆகா! இதென்ன ஆச்சரியம்! இப்படியும் நடக்குமா!?” என்று அபாரமான வியப்பு கொண்டாள். அக் கடிதத்திற்குள்ளிருந்த மற்றொரு கடிதத்தையும் உடைத்து செக்குகளைப் பார்த்தாள்; கூறவியலாத ஆச்சரியமடைந்தாள். உடனே அக்கடிதத் துடன் அவ்வறையின் மற்றொரு கதவைத் திறந்து கொண்டு ஓடினாள். அங்கு வீற்றிருந்த பொன்னுசாமியினிடம் கடிதத்தை நீட்டி, "பெரியவரே! இதோ இதைப் பாரும். " என்று கூறியவாறு கொடுத்து வியப்பே வடிவமாக நின்றாள்.

அன்றைய தினம் பரிமளவல்லியைப் பார்க்க வருவதாகச் சொல்லியவர்கள் பாராக விருக்குமோ, என்னவோ! எதேனும் தீங்கு செய்பவர்களாக விருப்பார்களோ என்கிற; ஒரே எண்ணத்தினால் அவ்வாறு ஏதேனும் நடக்கும் சமயம் வாய்த்தால் காப்பாற்றும் நோக்கத்துடன் கேசவனும், பொன்னுசாமியும் அவ்வறைக்குப் பக்கத்து அறையில் தயாராக உட்கார்ந்திருந்தார்கள். ஏதேனும் அபாயம் நேரும்போலத் தோன்றினால் உடனே ஒரு மணியை அழுத்தினால் அது பக்கத்தறையில் தங்களுக்குக் கேட்கும்; தாங்கள் ஓடி வருவதாகச் சொல்லித் தீர்மானித்திருந்தபடி ஒன்றும் மணியடிக்காததனாலும், பரிமளா ஆனந்தமாகப் பாடியதாலும் ஆபத்து ஒன்றுமில்லை என்பதாக இருவரும் எண்ணி அவ்வறையில் உட்கார்ந்திருந்த தருணம் பரிமளா கடிதத்தைப் பொன்னுசாமியின் முன்பு நீட்டியதும், பொன்னுசாமி ஆச்சரியப்பட்டு அதை வாங்கிப் படிக்கலானான்.

அந்த கையெழுத்தைப் பார்க்கும்போதே அவனுக்குத் தூக்கி வாரிப்போட்டுவிட்டது. இது தனது குலத்தையே ஒழித்த கொடும் பாவியினுடைய கையெழுத்து என்பது தெட்டென விளங்கி விட்டது. உடனே அங்கு வந்தவள் அந்த சண்டாளி தான் என்று நன்கு தெரிந்துகொண்டான். அவ்வாறு தெரிந்துகொண்டதும் அவன் மனத்தில் பழய எண்ணங்கள் ஒன்றன்பின்னே ஒன்று தோன்றின. குணவதியின் சாந்தமான முகம் கண்முன்பு அப்படியே கண்ணீர் வடிய நிற்பதுபோன்றும், உடனே நோய்வாய்ப்பட்டுக் கிடப்பதுபோன்றும், அடுத்த நிமிடம் தன்னைக் கெஞ்சுவதுபோ லும், மறு வினாடி சவக்கோலமாகச் சென்றதும் மாறி மாறி சினிமாப் படம்போலத் தெரிந்தன.

-----
சில பணமுள்ள பெரிய மனிதர்கள் "முன்பண மனுப்புவதென்றால் கை வருவதில்லை; வி.பி. யில் அனுப்பினால் உடனே பெற்றுக்கொள்கிறோம்" என் பது; ஆனால் வி. பி. யைத் திருப்பிவிடுகிறது. இது ஒரு கெளரவம்போலும்.
------

அவ்வாறு தோன்றிய தோற்றத்தினால் தன்னை மறந்து "ஹா!" என்று கதறிக்கொண்டு தன்னிரு கைகளால் கண்களை மூடிக் கொண்டு கண்ணீரை ஓடவிட்டான். அருகிலிருந்த பரிமளாவிற்கும் கேசவனுக்கும் விஷயம் இன்னதென்று விளங்காது இருவரும் தவித்தவாறு, "பெரியவரே! போஷகரே! ஏன் இக்கடிதங் கண்ட தும் முகம் மாறுபட்டதோடு புலம்புகின்றீர்கள்? இக்கடிதத்திற்கும் உமக்கும் என்ன சம்மந்தமிருக்கிறது?" என்று கேட்டு அவரையே உற்றுநோக்கியபடி நின்றார்கள்.

சற்று சமாதானமடைந்த பொன்னுசாமி இருவரையும் தன்னிரு கரங்களினாலும் இழுத்துத் தன் பக்கலில் அமர்த்திக்கொண்டே கடிதத்தைப் படித்து முடித்தார். வாய் பேசாது தேம்பித் தேம்பிப் புலம்பினார். "என் கண்மணிகளே! மறைந்து கிடந்த நாற்றக் குப்பை திடீரென்று துர்மணத்துடன் கிளம்பி உங்கள் நாசியில் புகுந்துவிட்
டது. கேசவா! நீயும் அத் துர்மணத்தைப் பார்த்துவிடு. இதோ இக்கடிதத்தைப் படி" என்றான். உடனே கேசவன் கடிதத்தைப் படித்தான். அடங்காத வியப்புடன் "தந்தையே! இதென்னவிது? இதில் எனக்குத் தகவல் ஒன்றும் விளங்கவில்லை; எனினும் உங்களை அதோகதியாக்கிய பாவி ஒரு உயிர் இருப்பதாக அறிகிறேன். அவ்வளவுதான் பரிமளாவும் அறிந்திருப்பாள். விஷயத்தை விளங்கச் சொல்லுங்கள்: உங்கள் மனம் இத்தகைய தத்தளிப்பையடைவ தற்குக் காரணம் யாது? எங்களுக்கு உரைக்கவேண்டும்." என்று கேசவன் கேட்டான். பரிமளாவும் "தந்தையே! இதென்ன! தாங்கள் ஏன் மாறுதல்களை யடையவேண்டும்? அந்த அம்மாளிடத்தில் தங்களுக்குச் சம்மந்தம் இருந்ததாகக் கூறுவது உண்மையாக விருப்பினும் அதுபற்றி கவலையேன் அடையவேண்டும். எங்களிடம் விஷயங்களைத் தெரிவியுங்கள்." என்று கெஞ்சிக் கேட்டாள்.

-------
மிகவும் சொல்பமான துகையை ஒரு நல்ல விஷயத்திற்குச் செலவிடத் தயங்குவது; உடனே நம்மை யறியாதோ அறிந்தோ ஒரு பெருந் தொகை நம் கையைவிட்டுப் போய்விடுகின்றது. இது முன்னர் செய்த தப்புக்குக் கை கண்ட பலன். தெய்வம் நின்று கொல்லும் என்கிற பழமொழி அன்று கொல்லும் என மாறிவிடுகின்றது.
-----------

பொன்னுசாமியின் மன நிலைமை மிகவும் கேவலமாகிவிட்டது. பிறகு அதைச் சமாளித்துக்கொண்டு தன்னுடைய ஜீவிய சரிதை முற்றும் ஒன்று விடாது கூறி "என் கண்மணிகளே! என்னுடைய பிறவியின் கேட்டைப் பார்த்தீர்களா? எஜமானனின் பவிஷு நன்றாகத் தெரிந்துவிட்டது. என் சரிதை இவ்விதம் இருக்குமென்று நீங்கள் கனவிலும் கருதி இருக்கமாட்டீர்கள். இந்த பிசாசம் இங்கு வரும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. என்னுடைய பழைய கதைகளை நினைப்பூட்டுதற்கே இந்த மூதேவி இங்கு வந்தது." என்று நிரம்பவும் விசனித்தார்.

இந்த வாலாற்றைக் கேட்டு இருவரும் கட்டு மீறிய ஆச்சரிய மும் பிரமிப்புமடைந்து "தந்தையே! நீங்கள் சொல்லிய விஷயங்கள் உண்மையில் நடந்தனவா! அல்லது நாவலில் படித்ததைக் கூறுகின்றீர்களா! குணவதியம்மாளின் பெயராலா இந்நாடகக் கம்பெனி நடை பெறுகின்றது. ஆகா! என்ன துக்ககரமான செய்தி! இதைக் கேட்கும் போதே எங்கள் மனம் பதறுகின்றது. இத்தனைத் துன்பங்களை யும் எவ்விதம்தான் அனுபவித்தீர்களோ! நீங்கள் தெய்வத்தன்மை பொருந்தியவர்கள் என்பது இப்போதுதான் தெரிகின்றது. பெரிய வரே! தாங்கள் எத்தனை தப்பிதம் செய்திருந்த போதிலும் அவைகளின் தீமையை உணர்ந்து இப்போது ஓர் துறவிபோல ஆய்விட் டது மிகவும் போற்றத் தக்கதாகும். நாங்கள் இந்த விஷயங்களைத் தெரிந்துகொண்டதனால் ஏதோ மாறிவிடுவோம் என்று கனவிலும் கருதவேண்டாம். எங்களிருவருக்கும் புத்துயிரளித்துக் காப்பாற் றிய கர்த்தாவாகிய உங்களை நாங்கள் மறந்தோமானால்- உங்களிடம் வித்யாசம் நினைத்தோமானால் - எங்கள் கண்ணவிழ்ந்து திண்டாடுவோம். எந்த காலத்திலும் நாங்கள் தங்களை தெய்வமாகவே கொண்டாடுவோம். இது சத்யம். நீங்கள் வருந்தவோ, வித்யாசமாக சம்சயிக்கவோவேண்டாம். இந்த சம்பவத்தை நீங்கள் இப்போதே மறந்துவிடுங்கள். அந்த அம்மாளும் எவ்வளவோ மனம் வெறுத்து நொந்திருப்பதாக இக்கடிதம் காட்டுகிறது. இனி அதைப்பற்றி நினைக்கவே வேண்டாம். மேலே யாகவேண்டிய காரியத்தைக் கவனி யுங்கள். பொழுதுபோய்விட்டது. படுத்துக்கொள்ளுங்கள்." என்று வெகு உருக்கமாகக் கூறினார்கள்.

--------
சிலர் தங்கள் மனத்திற்குத் திருப்தியுண்டாகும்படி எல்லோரும் நடந்து கொள்ள வேண்டுமென்று நினைத்துக்கொள்வது. அதனால் மற்றவர்க்கு எவ்வித கஷ்ட நஷ்டங்களுண்டாகு மென்பதைக் கணமும் கருதுவதில்லை; அவர்கள் மீது
பழி சுமத்துவது. இது என்ன சுபாவமோ.
----------

இதுகேட்ட பொன்னுசாமி "என் செல்வங்களே! உங்களுடைய மேன்மையான புத்தியின் விசேஷத்தினால் இவ்விதம் என் மீது வெறுப்பு கொள்ளவில்லை. எனினும் என் மனமே என்னை வெறுக்காத நிமிடமில்லை. என்னுடைய பாபங்களை நினைத்துப் பார்த்தால் என்னை அன்புடன் ஈன்றெடுத்து, ஆயிரம் பாடுபாட்டு வளர்த்த அன்னை, பிதாவின் அன்பை மதியாது அவர்களைக் கொலை செய்த பெருந்துக்கத்தையும், என்னையே நம்பி இருந்து என் முகம் பார்ப்பதற்கும் ஏங்கிய உத்தமியான குணவதியைக் கொலை செய்த சண்டாளத் தன்மையையும் நினைத்தால் என் அங்கமே நடுநடுங்குகின் றது. இரவுபகல் சதா என்னுடைய இதயத்தில் ஓர் அம்புகுத்துவது போல குத்திக்கொண்டே இருக்கின்றது. எந்த காலத்திலும் நான் செய்திருக்கும் அக்கிரமத்திற்குக் கடவுளினிடம் தக்க தண்டனை படையாமலிருக்க முடியாது. அந்த நாளை எதிர்நோக்கிக்கொண்டுதா னிருக்கிறேன். குணவதியின் திவ்ய முகத்தை நான் ஒருபோதும் நேரில் நோக்கியறியேன். சாந்தமாக ஒரு வார்த்தைகூடப் பதில் பேசியறியேன்.

--------
ஒருவர் நம்மைத் தேடிவந்தாலும், வேறொருவர் கூட இருப்பதால் நமக் குப் பேச முடிவதில்லை. யாதலால் பின்னவரை அவர்கள் நொந்து கொள்கி றோம். ஆனால் தனியாக வருகையில் நாமே வீட்டிலில்லாமலிருக்கும்படியாய் விடுகின்றது. அப்போது யாரைச் சொல்வதுர்
--------

என் கரத்தால் தாலியைக் கட்டிய தோஷத்திற்காக அக்கரத்தினால் அவளை என்னறிவு அழிந்து வேண்டிய வரையில் நையப் புடைத்தேன். அந்த உத்தமியின் அழகிய கரத்தினால் என் காலைப் பிடித்து நலங்கிட்டதற்குப் பதிலாக காலினாலேயே உதைத்தது போதாமல் அந்தப் புண்யவதிபின் உயிர் போகும் தறுவாயிலும் காலினால் உதைத்துத் தள்ளினேன். அந்தோ! அதை நினைத்தால் என் மனம் இப்போதும் நடுங்குகின்றது. அவ்வுத்தமியை ஒருபோதேனும் நான் இன்பமாக அழைத்து ஒரு வார்த்தை பேசாவிடினும் அடித்து உதைத்துத் திட்டியது எனது ஏழேழு ஜன்மாவிற்குந் தாங்கும். அவளுடைய பிணத்தைப் பார்த்தபிறகுதான் எனக்குக் குணம் திரும்பியது. அவளுடைய மணம் எனக்கு வீசியது. அக்கினி பகவானுக்கு இரையாக்கக்கூடிய சவத்தை என்ன செய்வது?

சவத்தை வைத்துக் கொண்டு கத்தினேன்; கதறினேன். பிணத்தின் மேல் விழுந்து புரண்டேன். மூன்று நாள் கண்ணை விழிக்காது கதறினேன். என் மனத்திற்கு முதலில் வேம்பாக இருந்த குணவதி பிணமாகிய பிறகு கரும்பாக இனித்தாள். அதை எண்ணி எண்ணி எங்கினேன். இன்னும் ஏங்கிக் கொண்டே என் பொல்லாத பொழுதைத் தள்ளுகிறேன். கேசவா! பரிமளா! என் செல்வங்களே! தற்போது உங்களிருவரைத்தான் நான் என்னுயிராக மதித்துள்ளேன், என் குற்றத்தை மறந்து விடுங்கள்" என்றான்.

இதைக் கேட்ட இருவரும் கண்ணீர் வடித்தார்கள். பிறகு வெகு நேரம் மூவரும் பேசிக்கொண்டிருந்து நித்திரா தேவியின் வச மானார்கள். உதயமானதும் கேசவனும் பொன்னுசாமியும் வீடு போய்ச் சேர்ந்தார்கள், பரிமளாவினுடைய கவலைகளோடு அவள் எஜமானரின் ஜீவிய சரித்திரம் அவள் மனத்தை உருக்கியது. அதையே எண்ணிக் கொண்டு அன்று பூராவும் இன்பமும் துன்ப மும் அடைந்தாள்.

------
ஏதேனும் போட்டிகள் வைப்பதாயின் சிலர் லஜ்ஜை யின்றி "எனக்குப் பரிசு கொடுப்பதாயிருப்பின் நான் போட்டியில் கலந்துகொள்வேன்; இல்லை யேல் வாமாட்டேன்" என்கிறார்கள். இது பெரிய வேடிக்கை யல்லவா
-----

பின்னும் சில தினங்களாயின. முன்னர் தெரிவித்தது போலப் பரிமளாவும் கேசவனும் கடைசீ தரமாக நடிக்கும் நாடகத்தைப் பொன்னுசாமி தயார் செய்தார். ஊரெங்கும் நோட்டீஸ்கள் பறக்க வாரம்பித்தன.

===========
"நாடகத்தில் நற்சியாதி பெற்று வரும் சிறுவன் கேசவனும், சிறுமி பரிமளவல்லியும் சேர்ந்து நடிக்கும் கடைசி நாடகம் இதுவே யாகும்' நாடகப் பிரியர்கள் பார்க்கத் தவறாதீர்கள். நிகரற்ற வள்ளி நாயசியாயும் சுப்பிரமணிய வேடனாயும் அவ்விரு சிறுவர்களும்; தோன்றி நடிக்கும் கடைசீ தரு ணம் இதுதான். இனிமேல் காணக் கிடைக்காது, இனி மேல் நாடக மேடையில் இரு ரத்தினங்களையும் சேர்ந்து காண முடியாது: அனேக காரணங்களை முன்னிட்டு பரிமளா இனி நாடகம் நடிக்கப் போவதில்லை. நமது வேண்டுகோளுக்கிணங்கி இந்த வள்ளி நாடகம் ஒரே ஸ்பெஷல் நாடகமாக நடிக்க ஏற்பாடு செய்திருக்கிறது. இதுகாறும் நாடக உலத்தையே பிரமிக்கச் செய்து எல்லோருக்கும் கர்ணாநந்தமான சங்கீதத்தை அள்ளி இறைத்த சிறுமிக்கு நாம் கடைசீயாக ஏதேனும் கைம்மாறு செய்யக் கடமைப் பட்டிருக்கிறோம். அக் கடமையாவது, இந்த கடைசீ நாடகத்தில் வசூலாகக் கூடிய தொகையை அச் சிறுமிக்கு நன்கொடையாக அளிப்பதே அச் சிறுமியின் விஷயத்தில் நாம் இந் நன்றியறிதலைக் காட்ட வேண்டுவது முக்கிய மாதலால் நாடகாபிமானிகள் எல்லோரும் தவறாது விஜயம் செய்வார்களென்று எதிர் பார்க்கப்படுகின்றது.
=========

---------
சில தந்திரக் குள்ளாரிகள் எல்லோரிடத்திலும் நயமாகவே நல்லவர்களாகவே பழகிவிடுகிறார்கள். சமயம் நேரும்போது "நான் அப்போதே சொன்னதில் உஷாராயிரு" என்று குறிப்பாகத் தெரிவிக்கவில்லையா ! என் மேல் பிசகில்லை" என்று இரு புறமும் தாளம் போடுகிறார்கள்.
----------

மேற்கண்ட நோட்டீஸ் ஊரெங்கும் ஒட்டப்பட்டும் வீட்டிற்கு வீடு கொடுக்கப்பட்டும் வந்தது. நாடகத் தேதியும் சமீபித்தது. பரிமளாவும் கேசவனும் வெகு பொருத்தமாயும் இனிமையான சங்கீதத்துடனும் நடித்துப் பார்க்கப் போவது இதுவே கடைசி யாகையினால் அனேக ஜனங்கள் திகள் திரளாகக் கூடிவிட்டார்கள். எட்டு மணிக்கே கொட்டகையில் இடம் கிடைக்காது போய் விட் டது, பரிமளாவின் கானத்தைக் கேட்டு மகிழ்வதற்கு ஆயிரக்கணக் கான கூட்டம் எதிர் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

சரியாகக் குறித்த நேரத்தில் நமது பரிமளவல்லி
(இந்துஸ்தானி காபி ராகம்; ஏக தாளம்)

1. ஸ்ரீ ரகுநாதா! வாரிஜ பாதா!
தாரக நாமஹரே! நானவர் காலா!— த-

2. இக்ஷ்வாகு வம்சா! லக்ஷ்மீ ப்ராணேசா!
பக்ஷிவாகன நேசா! ஜெய சர்வேசா- ப-

3 அசுர சம்ஹாரா! சசிமுகதீரா!
வசுந்தர பரிபாலா! மங்கள லீலா- வ-

4. ஜானகி ரமணா! ஸரஸிஜ சரணா!
தீனதயாபரணா!திவ்ய கருணா- தீ-

என்கிற பாடலை வெகு இனிமையாக தேனோ, பாகோ, தெவிட்டா வமுதோ என்னும்படியாகப் பாடிக் கொண்டே தினைப்புனம் காக்கும் வள்ளியாகத் தோன்றினாள். இதுபரியந்தம் அமைந்ததை விடப் பன்மடங்கு அதிகரித்த இன்பகரமாக அன்று நாடகம் வெகு மனோகரமாக விருந்தது. கேசவனும் வெகு திறமையாக நடித்தான்.

நாடகம் முடிவடைந்தது, அன்றைய தினம் வசூலான பணத்தை பொன்னுசாமி அந்த நாடக மேடையின் மேலேயே அரியதோர் உபன்யாசம் செய்து அதைப் பரிமளாவுக்குக் கொடுத்து விட்டார். பரிமளாவும் பிரதி வந்தனம் கூறித் தான் இதோடு விலகிக் கொள்வதைப்பற்றி உருக்கமாகப் பேசிப் பின்னர் விடை பெற்றுக் கொண்டாள். நாடகம் கலைவுற்றது. எல்லோரும் வீடு போய்ச் சேர்ந்தார்கள். பரிமளவல்லிக்கு மட்டும் அன்று என்றுமில்லாத துக்கம் அவளை யறியாது பொங்கி விட்டது; வீட்டிற்கு வந்து படுத்துவிட்டாள்.

-------
ஒருவருக்குப் பலர் பலவிதமான தீங்குகளை இழைத்த பிறகு, வேறொருவர் அவர்களுக்கு உதவி செய்யத் தூய சிந்தையுடன் வந்தாலும் அவர்களையும் சந்தேகிக்க நேர்ந்து விடுகின்றது.
-------

மறுதினம் காலையில் அனேகர் பரிமளாவைக் காண்பதற்காக அவன் வீட்டிற்கு வந்து "ஏன் நின்று விட்டீர்கள்?" என்று கேட்டார்கள். அவர்களுக்கெல்லாம் பரிமளா தன் தாயையே விட்டு ஏதோ தக்க சாக்குப் பதில் கூறி யனுப்பி விட்டாள். சில தினங்கள் வரையில் இந்த தொல்லை இப்படியே அதிகரித்திருந்தது.

நாடகம் நடக்கையில் கேசவன் அதன் காரணம் பற்றி பரிமளாவைச் சந்தித்து வந்தான். நாடகம் நின்றுவிட்ட பிறகு பரிமளாவின் வீட்டிற்கு முன் போல அடிக்கடி செல்வதற்கும் சந்திப்பதற்கும் அஞ்சினான். ஒரு தினம் பரிமளாவின் வீட்டிற்குக் கேசவன் வந்தான்.

அவனைக் கண்ட பரிமளவல்லி அழைத்து உட்காரச் செய்து "ஏது! நான் நாடகத்தை விட்ட உடனேயே என்னை மறந்து வீட்டீர்களே! உங்கள் மனம் இதற்குத் துணிந்ததா!" என்று வெகு விசனத்துடன் கேட்டாள்.

கேசவன்:- பரிமளா! நான் எந்த காலத்திலும் உன்னை மறக்க மாட்டேன் என்பது அந்த கடவுளுக்குத்தான் தெரியும். ஆனால் நீறு பூத்த நெருப்பு எப்படியோ அப்படித்தான் இனிமேல் நாம் இருக்கவேண்டி இருக்குமென்று தோன்றுகின்றது. ஏனென்பதை நான் கூற வேண்டாம். மகா புத்தி நுட்பமுடையவளாகிய நீயே தெரிந்து கொள்வாய். பரிமளா! எனக்குப் பேசவும் நாவெழவில்லை. என்னால் உனக்கு யாதொரு தீங்கும் நேரிடக்கூடாதென்பதே என்னுடைய நோக்கமாகும். உனக்கு ஒரு அணுப்பிரமாணமும் வருத்தமோ, வசையோ உண்டு பண்ண நான் சம்மதியேன். அபக்கியாதி என்கிற பெருங் காற்று உன் மீது அடிக்காதிருப்பதை நானும் கவனிக்கக் கடமைப் பட்டுள்ளேன். நாமிருவரும் நாடக பந்தத்திலிருந்து விலகி விட்டது. வெளி ஜனங்களுக்கு நன்றாகத் தெரியும். அப்படியிருக்க நான் இனிமேல் அடிக்கடி உன்னைச் சந்திப்பதால் உனக்கன்றோ ஓர் விதமான பெயர் உண்டாகும்........

--------
தினம் அதிகாலையிலெழுந்திருந்து ஸ்நானஞ் செய்து பகவானைப் பஜித் தால் மனம் அதிக பரிசுத்தத்தை அடைவதுடன் அன்றைய வேலைகளெல்லாம் வெகு ஒழுங்காக நடைபெறுகின்றன. கும்பகர்ணனின் வசப்பட்டு விட்டால் முதற் கோணல் முழுதும் கோணல் என்றபடியாகின்றது.
-----

பரிமளா:- ஆஹா!....சரியான யோசனை!... இதற்கு நான் ஒப்புக்கொள்ள வேண்டியவளே யாவேன்.... மனத்தில் பதிந்து கிடக்கும் ஆழ்ந்த அன்பை நினைக்கின்... அந்தோ!.... மனம் பகீரென்கின றதே! நண்பரே!

கேசவன்:- பரிமளா! உலகம் நம்மைப் பிரித்துவிட நினைத்து விட்டது; ஆனால் அன்பு சேச்சே! நான் இந்த துக்ககரமான விஷயத்தைத் தெரிவிப்பதற்காகவோ இங்கு வந்தேன்.... பரிமளா !.. நான் சென்று வருகிறேன்.

பரிமளா - என்ன இது? என்னவோ பேசுகின்றீரே! எனக்குப் புரியவில்லையே! தாங்கள் ஏதோ விஷயத்தை ஒளிப்பது போலப் பேசுகின்றீர்களே! அதென்ன! அதை எனக்குத் தெரிவிக்கலாகாதா! என்னிடம் என்ன வித்யாசம்? விவரத்தைக் கூறும்.

கேசவன்:- பரிமளா! ஒன்றுமில்லை. விசேஷமென்ன விருக்கிறது! கடவுளின் ஆணை எந்தெந்த விதமிருக்கின்றதோ அப்படித் தானே யாவும் நடக்கும்... பரிமளா!... என்னுடைய மனத்தவிப் பிறகு உவமை கூறச் சக்தி யற்றிருக்கிறேன். என்னாலான வரையில் உன்னைச் சந்திக்க வேண்டாமென்றே நினைத்தேன். ஆனால் மனந்தாங்க வில்லை. திடீரென்று நான் வராது நின்று விட்டால் நீ என்ன நினைப்பாயோ என்று எண்ணியே வந்தேன். நீ மகா யூகசாலி யாதலால் எனது நிலைமையைத் தெரிந்து கொண்டாய்! இனி நான் எவ்விதம் ஒளிப்பேன்? நம்மிருவருக்கும் இடையில் ஒரு பெரிய எமன் இருக்கின்றது; இதோ தெரிந்து கொள்." என்று ஒரு கடி தத்தை அவள் கையில் கொடுத்தான். பரிமளா வெகு வியப்புடன் கடிதத்தை வாங்கிப் படிக்கலானாள்.

---------
பாட்டு பாடும்படிச் சிலரைக் கேட்டால் அவர்கள் "எனக்குத் தொண்டை சரியாக இல்லை; அதிக அவசரமாகப் போகவேண்டி யிருக்கிறது" என்று ஏதாவது சாக்குப் போக்குச் சொல்லி தட்டு கட்டி விடுகிறார்கள். ஆனால் வேறு சிலர் எப்பொழுது சொல்லப் போகிறார்களென்று காத்துக் கொண்டிருந்து உடனே பாடுகிறார்கள்.
--------

"அடேய் கேசவா!

நீ உயிருடன் இப் பூவுலகில் வாழ வேண்டுமாயின் இனி மேல் பரிமளாவின் நினைவை மறந்துவிடு. அவளைச் சந்திப்பதை விட்டு விடு. இந்த கடிதத்தை ஏதோ ஓர் விளையாட்டுக் கடிதமாகவோ, வம்புக் கடிதமாகவோ நினைக்காதே! இக் கடிதத்தில் கண்டபடிக்கு நீ நடக்காவிடின் இக் கடிதமே உனக்குக் காலன் என்பதை மறக்காதே ! இனி நீ அவளைச் சக்தித்தால் உனக்குப் பேராபத்து விளையும், அவ்வாபத்தில் சிக்கிவிட்டால் எமனு கில் சென்றுதான் மீட்சி யடையவேண்டும். ஜாக்ரதை! இக் கடிதம்தான் உனக்கு எச்சரிக்கை யாகும். உஷாராக விரு.
      இங்ஙனம்
      ............

அதைப் படித்ததூம் அவள் திடுக்கிட்டாள். “ஹா! இதென்ன பெரும் மோசமாக விருக்கிறதே! ஐயோ! கடவுளே! இதுவும் ஒரு சோதனையா ?' என்று அபாரமான சோகத்திலாழ்ந்தாள்

------
"பாடு" என்று சொல்லும்போது உடனே மாடாவிடில் சிலருக்குக் கோபம் வந்து விடுகின்றது. தாமதத்திற்குக் காரணம் என்ன, அது சரியான தானா என்பதைக் கூட அவர்கள் கவனிப்பதில்லை.
-------------


This file was last updated on 3 April 2023.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)