பேரூர்க்கோவை
(நூலாசிரியர் முத்துநயினாத்தை முதலியார்)
pErUrk kOvai
by muttu nayinAttai mutaliyAr
In Tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
We thank Dr. Meenakshi Balaganesh, Bangalore, India for her assistance in the
preparation of this work for publication.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2023.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
பேரூர்க்கோவை
(நூலாசிரியர் முத்துநயினாத்தை முதலியார்)
Source: நூல் பற்றிய விவரங்கள்
பேரூர்க்கோவை - PĒRŰR-K-KŐVAI
Criticallz Edited with Introduction and Notes
By C. M. Ramachandran Chettiar, B.A., B.L.,
Madras Government Oriental Series No. CXXIV
Govt. Oriental Manuscripts Library, Madras
(Published under the authority of the Government of Madras)
General Editor: T. Chandrasekharan, M.A., L.T.,
Curator, Government Oriental Manuscripts Library, Madras. Coimbatore.
Govt. Oriental Manuscripts Library, Madras
1955
Price Rs. 2-4-0.
----
Introduction
The present edition of the Pērūrkkovai is based on a paper manuscript described under R. No. 885, 81 x 6 inches, 41 folios, 20 lines on a page, and compared with the manuscript described under R. No. 279. These two manuscripts were purchased in 1925-26 and 1915-16 respectively from Sri C. V. Jambulingam Pillai of Mylapore.
This is a poem in praise of Lord Siva worshipped under the name Pattisar in the sacred shrine at Tiruppērūr in the Coimbatore district. It was written to illustrate the rules defining the characteristics of Akapporul of the Tamil literature.
-----------
திருப்பேரூர் பட்டீசர்க் கோவை. - முகவுரை.
திருப்பேரூர், பட்டீசர்க் கோவை என்பது கொங்கு நாட்டில் ஒரு சிறந்த புனித ஊராகிய திருப்பேரூரில் கோயில் கொண்டிருக்கும் பட்டீசப் பெருமான் மீது ஒரு புலவரால் அகத்துறையில் பாடப்பெற்ற ஒரு பிரபந்தமாகும். கோவை என்பது தமிழ்ப் புலவர்களால் இயற்றப்பட்ட 96 வகைப் பிரபந்தங்களில் ஒன்று. திருப்பேரூரைப் பற்றிப் பல செய்திகள் கூறுகின்றபடியால் பொது மக்கள் அறியும் பொருட்டு இந்த நூல் பதிப்பிக்கப் படுகின்றது. மேலும், இந்நூலில் கிடைக்கக்கூடிய பல செய்திகளையும் தொகுத்து இந்த முன்னுரை எழுதப்படுகின்றது.
1. இட அமைதி.
திருப்பேரூர் கொங்கு நாட்டில் உள்ள ஒரு வைப்புத்தலம். "பேரூர் உறைவாய்ப் பட்டிப் பெருமான் பிறவா நெறியானே" என்றும் அப்பரடிகள் பேரூர் பிரமபுரம் பேராவூரும்" என்றும், சுந்தரமூர்த்திகள் "மீகொங்கில் காஞ்சிவாய்ப் அணி பேரூர்ப் பெருமானை புலியூர்ச் சிற்றம்பலத்தே பெற்றாம்" என்றுங் கூறியிருக்கின்றார்கள். இவ்வூர், கோவைமா நகருக்கு மேற்கே மூன்று கல் தொலைவில் நொய்யலாறு என்று காஞ்சி நதிக்கரையில் மிகச் செழிப்பான மருதநிலத்தில் உள்ளது.
நாடு - கொங்கு நாட்டின் 24 பிரிவுகளில் ஒன்றாகிய ஆறை நாட்டின் உட் பிரிவான பேரூர் அந்நாட்டின் தலைநகராக இருந்தது. இது மீகொங்கில் (மேல் கொங்கு) ஒரு பகுதியென்று தேவாரமும் கல்வெட்டுங் கூறுகின்றன. பேரூர் நாடு, மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள ஐந்து கிரிகள் வில்லைப்போல் வளைந்து அமைந்திருக்க, அவைகளினிடையே பரவப்பெற்று கிழக்கே வெள்ளலூர் வரையில் அகன்று இருக்கும் நாடாகும். இதில் இருந்த பல பண்டைப் பதிகளில் பேரூரும் ஒன்றாகும்.
பேரூர்.- காஞ்சி நதியின் தெற்குக் கரையில் இவ்வூர் அமைந்திருக்கின்றது. இவ்வூரில் மிகப்புனிதமான சிவாலயமும் அதனைச் சுற்றிப் பல சிறு ஆலயங்களும் உண்டு. கோயிலைச் சுற்றி நான்கு மாட வீதிகளும், அவைகளை ஒட்டிப் பல சிறு வீதிகளும் உண்டு. மேலும், இவ்வூரில் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் திருமடமும் வேறுபல சிறுமடங்களும் சத்திரங்களும் இருக்கின்றன.
2. வரலாறு
பேரூரும் பேரூர் நாடும் மிகப் பண்டைய பகுதிகள். அவற்றின் பண்டைய தன்மைக்குப் பல சான்றுகள் உண்டு. ஊரிலும் ஊர் நத்தங்களிலும் கணக்கற்ற பண்டைய சின்னங்கள் காணப்படுகின்றன. நொய்யலாற்றின் இரு புறங்களிலும் உள்ள மண்திடல்களைத் தோண்டும்போதெல்லாம் அச்சின்னங்கள் கிடைக்கின்றன. அவைகளில் முதுமக்கள் தாழிகள் சிறப்பானவை. பண்டைய நூல்களில், 'அன்னோர் கவிக்கும் கண்ணகல் தாழி' என்று புறநானூறும் 'தாழியிற் கவிப்போர்' என்று மணிமேகலையும் முதுமக்கள் தாழியைக் குறிக்கின்றன. பேரூரில் கிடைத்த தாழிகளின் உருவங்கள் பற்றிப் பேரூர்ப் புராண வரலாற்றுப் பகுதியில் காணலாம். இத்தாழியின் பாழிகளைப் பொதுமக்கள் பாண்டவர் குழிகள் என்பார்கள். அவைகள் உண்மையில் மாண்டவர் குழிகளேயாம். இப்பேரூரிலும் அதற்குக் கிழக்கேயுள்ள வெள்ளலூரிலும் 283 உரோமானிய வெள்ளி நாணயங்கள் புதையல்களில் கிடைத்தன. அவைகள் அகஸ்தஸ் சீஸர் (முதல் நூ) பைசாண்டியன் அரசர்கள் (5 நூ) காலம் வரை வழங்கி வந்தவைகள். ஆகையால் இந்தப் பேரூர் நாடு உரோமானிய அரசோடு வாணிபம் நடாத்தி வளமை பெற்றிருந்ததென்பது தெளிவு.
இனி, ஏழாம் நூற்றாண்டில் பல்லவர் காலத்தில் அவதரித்த அப்பர் அடிகள் இப்பேரூரைத் தம் தேவாரத்தில் குறித்திருக்கின்றார். (க்ஷேத்திரக் கோவை) பிறகு, எட்டு, ஒன்பது நூற்றாண்டுகளில் சேர அரசர்கள் இந் நாட்டின் மீது படையெடுத்து, அச்செய்தியை வெள்ளலூர் என்ற அன்னதான சிவபுரியில் குறித்திருக்கின்றார்கள். (முதல் பாண்டிய ஆதிக்கத்தில் மாறன் சடையன் என்ற பாண்டிய மன்னன் காஞ்சிவாய்ப் பேரூர் புக்கு திருமாலுக்கு அமர்ந்துறைய குன்றம் அன்னதோர் கோயிலாக்கினானாம். சோழர் ஆதிக்கத்தில் இந்நாட்டை ஆண்ட கொங்குச் சோழர் என்ற வமிசத்தார் (1004-1252 வரை) அநேக கல்வெட்டுக்களை இவ்வூர்க் கோயிலில் தீட்டி வைத்துப் பல தானங்களும் நிபந்தங்களுந் தந்திருக்கிறார்கள். அக் கல்வெட்டுக்களின் மூலம் இவ்வூரின் சரிதத் துணுக்குகள் பலவற்றையும் அறியலாம். அவை களில் திரு ஆன்பட்டி உடையார், கூத்தாடு தேவர், இடங்கை நாயகமுடையார், முதலிய மூர்த்திகளின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன அக் கல்வெட்டுக் களின்படி தற்போதைய கோவைமாநகரம், அந்தக் காலத்தில் பேரூர் நாட்டு வீரகேரளநல்லூர் என்ற கோவன் புத்தூராக இருந்தது. பிறகு, கன்னட நாட்டு ஹொயிசலர் வமிசத்தாரும் பின்னர் விஜய நகரத்தாரும் அதற்குப் பின் மதுரை நாயக்கன்மாரும் இக் கோயிலுக்குப் பல நிபந்தங்களை ஏற் படுத்தியுள்ளார்கள். 1625 முதல் 1659 வரை ஆண்ட திருமலை நாயக்கன் காலத்தில் சிற்பக் களஞ்சியமான கனகசபை கட்டப்பட்டது. அண்மையிலேயும் கூட இக்கோயில் பல விதங்களில் செம்மைப்படுத்தப்பட்டுள்ளது.
3. திருக்கோயில்.
பேரூர்த் திருக்கோயில் கொங்கு நாட்டிலும் மலையாள நாட்டிலும் மிகப் பெயர் பெற்றது. ஆண்டு தோறும் இக்கோயிலில் நடைபெறும் விழாக்களிலே கணக்கற்ற மக்கள் இவ்விரு நாடுகளிலிருந்தும் வந்து வழிபாடு செய்கிறார்கள். சிறப்பாக அமாவாசைகளில் பிதிர்க்கடன் செலுத்துவதற்காக மக்கள் வந்து ஆற்றில் நீராடிக் கிரியைகள் நடத்துவதுண்டு. அதனாலே இத்தலத்துக்குப் பிறவாநெறி என்ற பெயரும் வந்தது. மேலும், நடராசர் ஆறு திருமுழுக்குகளிலும் பெருந்திருவிழாவாகிய பங்குனி உத்திரத்திலும் மார்கழித் திருவாதிரையிலும் நடராச தரிசனம் மிகப் பெயர் பெற்றது.
கோயிற் பகுதிகளில் கருவறை மிகப் பண்டையது. "சோழன் பூர்வ பட்டயம் என்ற நூலில் இக்கோயிலின் பரம்பரை வரலாறு கூறப்பட்டுள்ளது. அரசமரக் காட்டில் மேய்ந்து கொண்டிருந்த ஒரு பசு தன்னந் தனியாகவே ஒரு புதரில் மறைந்திருந்த ஒரு உருவத்தின் மீது பால் சொரியக் கண்ட இடையன் அதை அடிக்க, அது மிரண்டு அந்த உருவத்தின் மீது கால் படிய, அதிலிருந்த குருதி ஒழுக அது கண்டு ஊரார் அஃது இறைவனுருவம் என்று அறிந்து கோயில்கட்டி வழிபாடு செய்தனர். பிறகு, கரிகால் சோழன் அந்த இடத்தில் திருப்பணி செய்தான் என்பதே. அவன் நீராடிப் பாவம் போக்கின துறை இன்றைக்கும் சோழன் துறை எனப்படும். மிக அழகு பொருந்தியது. கர்ண பரம்பரை ஐதீகம் கோயில் முன் உள்ள கொடிக் கம்பத்தில் தீட்டப்பட்டுள்ளது. பசு வெளிப்படுத்தியதனால் பட்டீசர் என்று பெயர் வழங்குகிறது, கல்வெட்டிலும் திரு ஆன்பட்டியுடையார் என்று கண்டிருக்கிறது.
கருவறைக்கு இடப்பால் உள்ளது அம்மன் கோயில். அம்மன் பெயர் பச்சைநாயகி (மரகதவல்லி) என்பது. அக்கோயிலேயே ஒரு புறம் துர்க்கை கஜலட்சுமி உருவமும் மற்றொரு புறம் திருமால் உருவமும் முன்னிலையில் உண்டு.
இவ்விரு ஆலயங்களுக்கும் இடையில் கல்யாணமண்டபம் வெகு அழகாக அமைந்துள்ளது. அதற்குப் பின்புறம் முருகக் கடவுள் ஆலயம் மேற்குப் பார்த்த சன்னதியாக இருக்கின்றது. அம்மன் ஆலயததுக்குக் கிழக்கே மிகப் பெருமை வாய்ந்த கனகசபை என்ற நடராசரின் சன்னதி இருக்கிறது. கல்வெட்டுகள் "கூத்தாடு தேவர்" என்று குறிக்கின்றன.
திருக்குளம்.-கோயிலுக்கு வடகிழக்கில் உள்ளது. வெகு அழகாக அமைந்துள்ளது. பதினாறு மூலைகள் கொண்டது. ஒவ்வொரு மூலையிலும் அதைக் கட்டின திருக்கனாம்பி சங்கரையன் மகன் மாதையன் சேவை என்று தமிழிலும் கன்னடத்திலும் செதுக்கப்பட்டிருக்கின்றது. அதன் கீழ்க்கரையில் மாதேச்சரம் என்ற அவன் கட்டின கோயில் இருக்கிறது.
சுற்று ஆலயங்கள்.- பெரிய கோயிலுக்கு வடகிழக்கில் அரசம்பலவாணர் என்ற காலவேச்சரமும் அதற்கருகில் அழகிய சிற்றம்பலம் என்ற இடங்கையீசுவரமுடையார் கோயிலும் வடக்கே பட்டி விநாயகர் சன்னிதியும், அதற்கு வடமேற்கே வடகயிலாயமும் அதன் சுற்றில் பிரமதீர்த்தமும் இறவாப் பனையும், தென்கிழக்கே பட்டிமேடை, பிறவாப்புளி, பள்ளுத் திருவிளையாடல் மூர்த்தியும், தெற்கே ஊர்நடுவில் தென்கயிலையும், மேற்கே அதிமூர்க்கம்மன் என்ற கிராமதேவதை கோயிலும் உள்ளன. இவற்றில் சிலவற்றில் கல்வெட்டுக்கள் உண்டு.
சிற்பங்கள்.- பெரிய கோயிலுக்குள் கனக சபையிலுள்ள தூண்களும் சிற்பங்களும் மிகப்பெயர் போனவை. தூண்களில் உள்ள சிற்பங்களாவன: அரசன் புலிவேட்டை, யாளி ஆரோகணம், யானை வதமூர்த்தி (மிக அற்புதமானது), அக்கினி வீரபத்திரர் (தேள் ஒன்று சித்திரிக்கப்பட்டது). ஊர்த்துவ தாண்டவம் (அடிக்கீழ் காரைக்கால் அம்மையார்), விநாயகர், முருகன், காளி, பிச்சாடனர், அரசன் வேட்டை முதலியன. முகட்டில் உச்சித்தாமரை, ஆடுஞ் சங்கிலி, திக்குப் பாலகர்கள், இராசிகள், நர்த்தன ஆட்டங்கள், முதலிய கணக்கற்ற அரிய உருவங்கள் உள்ளன. பழைய தூண்கள் இம்மண்டபத்துக்குப் பயன்படுத்தப்பட்டன, ஒருவேளை பழைய திருமால் கோயில் தூண்களாக இருத்தல் கூடும். அம்மன் கோயில் தூண்களிலும் மிக அழகிய சிறு உருவங்கள் உண்டு. முன்கொடிக்கம்பத்தில் தல ஐதீகம் அழகாகச் செதுக்கப்பட்டுள்ளது. இச் சிற்பங்கள் எல்லாம் நாயக்கர் ஆட்சிக் காலத்தவை என்பர்.
4. நூல்கள்.
'திருப்பேரூரைப் பற்றிக் கச்சியப்ப மூனிவர் ஒரு அரிய செய்யுட் புராணம் எழுதியிருக்கின்றார். அதில் தல ஐதீகங்கள் எழுதப்பட்டுள்ளன. மேலும் “பிறவா நெறிப்புராணம்" என்று மற்றொரு புராணமும் உண்டு.
இவைகளே தவிர, பலபிரபந்தங்கள் அவ்வக்காலங்களில் பாடப்பட்டுள்ளன. கலிவெண்பா, தூது, கோவை, ஊஞ்சல், மாலை, பிள்ளைத் தமிழ், வண்ணம், பந்தடி, உலா, சதகம் முதலிய பல உண்டு. இப்பிரபந்தங்களில் பேரூர்க்கோவை ஒன்று ஆகும்.
இது ஒரு அகப்பொருள் நூல் என்று ஏற்கனவே சொல்லப்பட்டது. பேரூர்ப் பட்டீசனைத் தலைமகனாகக் கொண்டு வழிபாடு செய்யும் அன்பன் தன்னை தலைமகளாகக் கொண்டு பல சொல்நயம் பொருள் நயம் பொருந்த ஒரு இலக்கியமாகப் பாடியிருப்பது இக்கோவை. பேரூர் இறைவனைக் குறித்து இரண்டு கோவைகள் தற்போது இருக்கின்றன. இரண்டும் இதுவரை அச்சாகவில்லை. இங்கே அச்சிடுவது பழைய ஏட்டுப்பிரதியில் கண்ட கோவை. மற்றொன்று அண்மையிலே சிரவண்புரம் கௌமாரமடாலயத்துத் தவத்திரு கந்தசாமி அடிகளாரால் இயற்றப்பட்டதாகும். இந்த இரண்டு நூல்களிலும் பல அரிய கருத்துக்களும் ஐதீகத்தொடர்புகளும் பொருட் செறிவுகளும் சொற்சிறப்புக்களும் உள்ளன. பழைய நூலை இங்கே வெளிப்படுத்துகிறோம்.
5. நூற்பிரதிகள்.
அரசியல் ஏட்டுப்பிரதி நூலகத்தில் இருக்கிற ஏட்டுப்பிரதியை வைத்துக்கொண்டு இந்நூல் பிரதி செய்யப்பட்டது. பிறகு கோவைப் பேரறிஞர், திரு. சிவக்கவிமணி சுப்பிரமணிய முதலியார் அவர்களிடம் இந்த பிரதியுடன் ஒத்திட்டுப் பாடபேதங்கள் குறிக்கப்பட்டன. இவ்விரண்டிற்கும் மிகுந்த வேற்றுமை இல்லை. பின்பு, அண்மையிலே ஓராட்டுக் குப்பை செட்டிபாளையத்து, சித்திரக்கவி, திரு. கலியாணசுந்தர கவுண்டரிடம் கேட்டபோது, அவர் கலைமகள் விழாவிற்குத் தன்னிடம் இருந்த ஏடுகளைத் தூய்மைப் படுத்தியபோது ஒரு ஏட்டுப் பிரதி இருந்ததை உணர்ந்து என்னிடம் தந்தார். அதில் சில செய்யுட்களும் திருத்தங்களும் இருந்தன. இது எதிர்பாராத வகையில் கிடைத்த உதவி. இந்த இரண்டு பெரியார்களுக்கும் என்னுடைய நன்றி உரித்தாயது.
இந்த மூன்று பிரதிகளிலும் நூல் முழுமையுமாக எழுதப்பெறவில்லை. நாளதுவரை (கிடைத்த செய்யுட்கள்) 360-மட்டும் கிடைத்துள்ளன. துறைப்பகுதிகளிலும் களவுப் பகுதியும் வரைவுப் பகுதியுமே கிடைத்துள்ளன. கற்புப் பகுதி கிடைக்கவில்லை. அதுவும் கிடைத்திருந்தால் நூல் முழுமைப் பெறும்.
செட்டிப்பாளையம் பிரதியில் செய்யுள்களில் அடங்கியுள்ள அகப்பொருள் விரிவுகள் காணப்படுகின்றன. அவைகள் ஏற்கனவே நம்பியகப் பொருளிலும் உரைநூல்களிலும் உள்ளனவாகையால் அவைகள் இங்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.
6. நூலாசிரியர்.
அரசியல் நூல் நிலையப் பிரதியிலும் சிவக்கவிமணிப் பிரதியிலும் ஆசிரியர் பெயர் குறிக்கப்படவில்லை. திருப்பேரூர்ப் புராண முகவுரையில் பிரபந்தச் செய்யுள் திரட்டில் அதனைப் பதிப்பித்த திரு. சிவக்கவிமணி சுப்பிரமணிய முதலியார் அவர்கள் இந்நூலின் பெயரையும் அதில் உள்ள மூன்று மாதிரிச் செய்யுட்களையும் எழுதி, இந்நூலை எழுதிய ஆசிரியர் பெயர் தெரியவில்லை என்று எழுதியிருக்கின்றார். பிறகு பல அறிஞர்களை விசாரித்ததிலும் நூலாசிரியர் பெயர் தெரியவில்லை. ஆனால், செட்டிப்பாளையம் பிரதியில் மட்டும் அடியிற்கண்ட செய்யுளின் தொடக்கத்தில் இருந்ததைக் கண்டோம்.
பாயிரம்.
அகப்பொருட் கோவைத் துறையொரு நானூற்
றீறதா யந்தத்தி னிடையே
அருளினாற் செறித்த துறையதெண் பதினொன்
பானவை யகத்தினி லுணர்ந்து
புகப்பெரு மறிஞர் நெறிபெறு முறையே
புந்தியைச் செலுத்தியன் பதனால்
புவிகொளப் பேரைப் பதியர்பட் டீசர்
பொலியருட் கமலத்தா ளிணைமேல்
இகத்தினிற் புனைந்த தொடையல்நா னூறோ
டெண்பதி னொன்பது தானும்
இதிற்றுரைக் கிரண்டாம் செய்யுள்பன் னொன்றாய்
இசைந்தவை நூறெனும் கவியைச்
செகத்தினே ரசைமுன் னூரொரு பானான்
காய்நிரை நூற்றெண்பத் தாறாய்
செப்பினன் முத்து நயினாத்தை வேளான்
செந்தமிழ் மாவையா திபனே.
ஆசிரியரைப் பற்றிய குறிப்புகள்:
நூலாசிரியர் பெயர் முத்து நயினாத்தை என்றுமட்டும் குறித்திருக்கக் காண்கிறோம்.
இவருடைய ஊர் கோவைக்குத் தெற்கே பத்துக் கல்லில் இருக்கிற ஓராட்டுக்குப்பைச்
செட்டிப்பாளையம் என்று தெரிகிறது. சென்ற இரண்டு மூன்று நூற்றாண்டுகளாகவே
செட்டிப்பாளையம் தமிழ் ஆராயும் புலமை பெற்றிருந்து வந்திருக்கிறது. பல சிறந்த
புலவர்கள் இவ்வூரில் தோன்றி நூல்களை எழுதியிருக்கிறார்கள். அவர்களில் சிறந்தவர்கள்
வித்துவான் வாசுதேவ முதலியார், வித்துவான் முத்து நயினாத்தை முதலியார், வித்துவான்
குட்டிக் கவுண்டர் முதலியவர்கள் ஆவார்கள். வாசுதேவ முதலியார் பவானிப் புராணம்,
திருமுருகன் பூண்டித்தலபுராணம், பல பிரந்தங்கள் முதலியனவும், முத்து நயினாத்தை
முதலியார் பச்சைநாயகியம்மன் பிள்ளைத்தமிழ் முதலியனவும், குட்டிக் கவுண்டர்
அரசம்பல விருத்தம் முதலியனவும் பாடியிருக்கிறார்கள். தற்போதும் இவ்வூரில்
அரிய செய்யுட்கள் இயற்றும் புலவர்கள் இருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட ஊரில் சுமார் 120 ஆண்டுகளுக்குமுன் தொண்டை மண்டலக் கொண்டைக்கட்டி
வேளாளர் மரபில் வித்துவசிகாமணி முத்துநயினாத்தை முதலியார் வாழ்ந்ததாகக்
கர்ண பரம்பரை கூறுகிறது. அவரே இந்தக் கோவை பாடினதாக இந்த ஊர்ப்பிரதி
கூறுகிறது. வேறு சான்றுகள் கிடைக்கவில்லை.
7. நூற் சிறப்புகள்.
இந்நூலில் காணும் தலச் சிறப்புக்கள் அடியிற்கண்டவை:-
1. தலத்தின் பெயர்கள் - பேரை (செ. 1), மேலைச் சிதம்பரம் (செ.7), பிறவாநெறி (செ. 141) என்பன. மற்றைச் சிறப்புக்கள் (72)
2. மூர்த்திகளின் திருப்பெயர்கள் - பட்டீசர் (எல்லாச் செய்யுட்களிலும்).
அம்பாள் - பச்சைவல்லி (12) மரகதவல்லி (318), மரகதாம்பாள் (76)
3. தீர்த்தம் - காஞ்சி நதி (240)
4. தல ஐதீகங்கள் - (1) அரசம்பலவாணர் என்பது. போதிவாழ்நன் (51), போதிதரு (155), போதிதர் (323), வளர்போதி (327), போதிசூழ் (158) இதில் போதி என்பது அரசு, பிப்பிலம் என்று பொருள்படும்.
(2) பசுவின் ஐதீகம்:- கன்று குளம்பு (308), காமதேனு (96) இவைகள் காமதேனுவின் கன்றால் இறைவன் வெளிப்பட்டதைக் குறிக்கும்.
(3) சுந்தரர் இத்தலத்தைப் பாடியது (65)
(4) தலமரங்கள்: இறவாப் பனை (310), பிறவாப்புளி
5. மன்றுள் ஆடினது - கோமுனி, பட்டிமுனிக்காகத் தரிசனம்: பேரூர் நடஞ்செய் (51) மன்றுள் நடம் (88), பொன்னம்பலத்தார் (95, 249), நிருத்தப் பேரூர் (150), நடஞ்செய்தது (259, 260,198).
6. பொது ஐதீகங்கள் - பரவைக்குத் தூது (53,193, 320), யானை உரித்தது (74), யானை வென்றது (313), மதயானை (54), காமனைக் காய்ந்தது (39).
7. தலப்பெருமைகள் - ஊன் உடலை ஒழித்தது கொங்கு மலர் (314), மேதி மிதித்தல் (56), நந்தவனம் (146), ஆகமம் அறிந்தோர் வாழ்வது (82), முத்திக்கு வித்து (93)
8. நூல் நயங்கள் -அடியிற்கண்ட நயங்கள் இந்நூலில் மிளிரல் காணலாம்.
1. உவமைகள் -அக்கும் அரவும் (11), பெண்ணுறுப்புக்கட்கு உவமைகள் (49-100), சிற்றெறும்பின் முலைப்பால்-(101), முலை, விழி, நாசி - உவமை (154).
2. பண்பு நயங்கள் - யான்/எனது (9), மருந்து (36), கற்பூரப் பரிமளம் (63), முன்னிலை பயனிலை (109), தன்னுயிர்போல் (277), காந்தமும் இரும்பும் (22), கடல்நீந்திக் குளத்தில் வீழ்தல் (44), நஞ்சு அரவு (98)
3. பொது நயங்கள் – திருமாலவதாரம் (32), சங்கம் (37), திக்கு விஜயம் (40), பட்டுபுண் (47), மழைக்குச் சிப்பி (56), மனத்திற்கெட்டா (64), உண்டிதினைமா (66), பந்தாடுதல் (69), வேடர் எச்சில் (157), ஆறுமுகம் (158), கைம்மா (263), நோய்க்கு மருந்து (265)
8. நூலின் பண்பு.
உலகின் கண்ணுள்ள உயிர்கட்கெல்லாம் மிக மிக வேண்டப்படுவது இன்பம். இவ்வுலக இன்பத்தில் தலை சிறந்தது காதல் வாழ்வு. இக்காதல், பெருகிய அன்பில் திளைத்தெழுவது. இது ஆண்மை, பெண்மைக் குணங்கள் நிரம்பிய ஆடவர் பெண்டிர் மனத்தில் நினைத்து தழைத்துப் படர்ந்து திகழும் தன்மையது. இதைப்பற்றி விளக்குவனவே கோவை நூல்கள்.
கோவையின், துறை விளக்கங்கள், நாற்கவிராச நம்பியின் அகப்பொருள் இலக்கணத்தின் துணைகொண்டு எழுந்தவை எனினும், இவ்விலக்கணம் பழமைதொட்டுப் பயின்று வருவதொன்று. தொல்காப்பியத்தில் இவ்விலக்கணம் பெரிதாகப் பேசப்படுகிறது. சங்ககால இலக்கியங்களில் பல அகப்பொருள் துறைகளைக் கொண்டனவாகவே அமைந்துள்ளன. இயல்போடும் இல்வாழ்க்கை நடத்துதற்கு இணைக்கும் அன்புப் பாலமே அகப்பொருள் கூறும் வாழ்க்கையாகும்.
கோவையில் களவியல், வரைவியல், கற்பியல் என மூன்று பிரிவுகளமைந்துள்ளன.
9. நூலில் காணும் கதைச் சுருக்கம்.
ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒரு ஆண்மகன் தன் நண்பர்களுடன், காட்டின் கண்ணே வேட்டைக்குச் சென்றான். தோழர்கள் பலரும் பலவாகப் பிரிந்து வேட்டையாடினர். அவ்வாண்மகன் ஒரு விலங்கினைத் துரத்தி நெடுந்தொலைவிற்குச் சென்றான். அதே முறையில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒரு பெண்மகள் பல தோழியர்களுடன் நகரின் அண்மையிலுள்ள பூஞ்சோலையில் மலர் பறிக்கச் சென்றாள். தோழியர் பலவாகப் பிரிந்தனர். இவளும் சோலை உள்சென்று மலர் பறிக்க விரும்பிச் சென்றாள். அங்கே விலங்கினை துரத்தி அதனாலே சோர்வுற்று நிற்கும் ஆண்மகன் இம்மகளைக் கண்டான். கண்டவுடன் இப் பூஞ்சோலையில் தனித்து நிற்கும் இவ்வழகிய பெண் யார்? தெய்வ மகளோ? மண்ணக மடந்தையோ? என ஐயம் எய்துகிறான். பின் அவளது கால் சுவடு, கண்ணிமைத்தல், மாலை வாடுதலாதிய கண்டு இவள் பெருங்குடிப் பிறந்த ஓர் மானிட மடந்தையே எனத் துணிவுறுகிறான். துணிந்த அத்தலைமகன் அவளது உள்ளம் காமக்குறிப்பினை, அதுவும் தன் மேல் விருப்பினையுடையதாக இருக்கின்றதா என்பதையறிய விழைகின்றான். ஒத்த வயதும், பண்பும் ஒருங்கமைந்த அவ்விருவரிடத்தும், புனைந்துறையும் உலகியலும் அமைய பேச்சுகள் தொடங்கின. தலைவன் பலவாறு பேசித் தலைவியின் கருத்தறிந்து கூடுகிறான். இருவரும் எண்ணாது வந்து இயல்பாக அமைந்த இக்கூட்டத்திற்கு அகப்பொருள் நூலார் இயற்கைப் புணர்ச்சி எனப் பெயர் தந்தனர். மறுபடியும் நேற்று நம்மையும் என் உயிரனையாளையும் கூட்டி வைத்த தெய்வம் இன்றும் கூட்டுவிக்கும் எனச் சேர்கின்றான்; கூடுகின்றான்; மகிழ்கின்றான்; இதனை இடந்தலைப்பாடென்பர் அந் நூலார்.
பின் தலைவியை தலைவன் விட்டு நீங்கி விரைவில் வருவதாகச் சொல்லித் தேற்றுகிறான். இறைவன் மேல் ஆணையிட்டுக் கூறிய சூளுரையை நம்பித் தலைவியும் பிரிகின்றாள். தலைவன் மறைந்து நின்று அவள் செல்லும் அழகு கண்டு மகிழ்கின்றான். பின்னர் தன்னிடம் சார்கின்றான். தலைவியைப் பிரிந்ததால் வருந்துகிறான். அவன் நண்பன் வருத்தம் கண்டு வினவுகிறான். வினவிய பாங்கனுக்கு நிகழ்ந்தது கூறுகின்றான் தலைவன். பாங்கன் எளிதாகிய இச்செயலுக்கு ஆண்மை வீரன் வருந்துதல் தகுமோ என்று இடித்துக் கழறுகிறான். தலைவன் அவளது தன்மையைக் கண்டால் ஆன்றவிந்தடங்கியவர் கூட இவ்வாறுரைக்க மாட்டார்கள் என்று கூறி என்னிலைமையறியாது பேசுகின்றாய் என வெறுக்கின்றான். பாங்கன் தலைவியின் வடிவும் இடமும் அறிந்து சென்று அவன் அவ்விடத்துள்ளமை கூறி வியக்கின்றான். பின் தலைவன் தலைவியுடன் கூடி மகிழ்கின்றான். இதனைப் பாங்கற் கூட்டம் என்னும் அகப் பொருள் இலக்கணம்.
இங்ஙனம் பாங்கன் வாயிலாகப் புணர்ந்த தலைவியினுடைய மெய்யின்கண் பண்டு கண்டறியாததோர் நாற்றமும் தோற்றமும் உண்டாகின்றன. தலைவனை மனத்துட் கொண்ட காரணத்தால் அவனையன்றிப் பிறையினைத் தொழும் ஒழுக்கத்தையும் கைவிட்டு விடுகின்றாள். தலைவனையே நினைந்துகொண்டிருப்பதனால் உண்டியின் மீது விருப்பின்றிச் சிறிதளவே உண்கின்றாள். தான் செய்கின்ற செயல்களையெல்லாம் பாங்கியர்க்கு மறைக்கிறாள். ஆயத்தை நீங்கித் தனியே சென்று தனியிடத்தில் எப்பொழுதும் நின்றுகொண்டிருக்கின்றாள். இவ்வண்ணம் தலைவி தன் முன்னர் வேறுபட்டு ஒழுகும் திறத்தினைக் கண்ட பாங்கி, நாற்றம் தோற்றம் முதலியன பற்றித் தலைவியைப் பலவாறாகத் தன் மதியினை உடன் படுத்தி வினவுகின்றாள். மேலும் மெய்யாயினவும் பொய்யாயினவும் கூறி அக்கூற்றில் பல்வேறு கவர் பொருள் தோற்றச் செய்து, கூட்டம் உண்மையை ஆராய்கின்றாள்.
மேலும் பாங்கற் கூட்டத்திற்கு பின் தலைவியைக் காணமுடியாத தலைவன் பாங்கியின் வாயிலாகத் தலைவியைப் பெற எண்ணி, பாங்கியிடம் வந்து உங்களுடைய ஊர் எது? அதற்குச் செல்லும் வழி யாது? உங்களுடைய பெயர் என்ன? என் கை அம்பினால் உடல் புண்பட்ட யானை ஒன்று இவ்வழியே வந்ததா? என்பன போன்று பலவாறு வினாவ, அது கேட்ட தோழி, இவர் யார்? இவர் ஏன் இங்ஙனம் வினாவுகின்றார்? என நினைந்து, இங்ஙனம் வினாவுவதெல்லாம் தலைவியின் பொருட்டே என் உணர்வாள்.
மேலும், தலைவியும் தோழியும் தனித்திருக்கும் போது, தலைவன் நம் குறையினை உணர்த்த இதுவே தக்க சமயம் என எண்ணிக் கையுறை ஏந்தி முன்னர் பாங்கியினிடம் வினாயது போன்று பலவற்றை வினாவுவான். அதற்குப் பாங்கியும் மறுமொழி கூறுவாள். அம்மொழியானது தலைவனை மேலும் அவ்விடம் நில்லாவகை செய்துவிடும். தலைவன் அப்புறம் சென்ற பின், அவன் கூற்றின் மீது நகுதற்கேற்ற சில சொற்களைப் பாங்கி கூறுவாள். தன்னால் விரும்பப்பட்ட தலைவனின் கூற்றை நகும்போது தலைவியின்கண் நிகழும் சில குறிப்பினைக் கண்டும், தலைவனுடைய குறிப்பினைக் கண்டும், இருவருக்கும் கூட்டம் உண்மையையும், தலைவியினுடைய புனங்காவலின் தன்மையினையும், தலைவியினுடைய வேட்டைத் தொழிலின் தன்மையினையும் உணர்ந்து கொள்வாள். இம் மூன்று திறமும் பாங்கி மதியுடம்பாடு என்று இலக்கணத்தில்கூறப்படும்.
பின்னர், கூட்டம் உண்மை யுணர்ந்து பாங்கியிடம் தலைவன் தன் எண்ணத்தைக் கூறுவான். அவனைச் சேட்படுத்தல் காரணமாகப் பாங்கி தலைவியின் குலத்தைத் தாழ்த்தி உமக்குக் குலமுறை பொருந்தாது என்று கூறுவாள். தலைவன் தலைவியை உயர்த்திக் கூறுவான். எங்ஙனம் கூறினும் தோழி ஒன்றும் உணராதவள் போன்றும், தலைவியை பெறுதற்கரியவள் என்றும் வேண்டுமானால் உன் குறையை நீயே சென்று உரைத்து, உலகியற்படி வரைந்து எய்துவாயாக என்றும் பலவாறாகத் தலைவன் மனம் புண்படும்படியாகக் கூறுவாள். மேலும், எங்கள் தமர் வருகின்ற காலமாய்விட்ட-படியால் நீ இங்கிருப்பின் ஏதம் வருமென்று அச்சுறுத்துவாள். எனினும், தலைவன் தன் கையுறையைப் புகழ்ந்து ஏற்றுக்கொள்ளும்படி வேண்டவும் தோழி மறுத்துப் பின் நாளை வருமாறு அவனை ஆற்றுவித்து அனுப்புவாள். மறுநாள் வந்து எய்திய தலைவன் தன் குறைமுடியப் பெறாமையின் பாங்கியிடம் உலகியல் முறைப்படி யான் மடலேறுவேன் என்று கூறுவான். அதற்குள்ள பல இடையூறுகளைப் பாங்கி கூறுவாள். தலைவன் தன் மேம்பாட்டினைபற்றிக் கூறி மடலேற்றினை வற்புறுத்துவான். அதை உணர்ந்த தோழி தலைவன் மடலேறாவண்ணம் உயிர் தாங்கி நிற்குமாறு சில கூறுவாள். பின்னர், தலைவனுடைய கையுறையினை ஏற்றுக்கொள்ளுவாள். தலைவனும் ஒருவாறு ஆற்றியிருப்பான்.
அங்ஙனம் கையுறை யேற்ற பாங்கி அதைத் தலைவியிடம் கொண்டுசென்று தலைவனுடைய துயரத்தைப் பற்றிக் கூறுவாள். தலைவியோ ஒன்றும் உணராதவள் போன்று சில கூற, அதை மறுத்துக்கூறும் தோழியினை முனிவாள். பின் ஒருவாறாக கையுறை ஏற்றுக்கொள்வாள். அதைத் தோழி தலைவனிடம் அறிவித்து, மேலும் குறியிடம் முதலியவற்றையும் உணர்த்தித் தலைவியையும் அங்கு கொண்டுசெல்வாள். பின்னர் தலைவன் தலைவியை எதிர்ப்பட்டுப் புணர்ந்து மகிழ்வான். பாங்கி உலகியல் பெருமைப்படும்படியாகத் தலைவனுக்கு விருந்து கூற அவனும் அதை விரும்பிப் புகழ்வான். இது இலக்கணத்தில் பாங்கியிற் கூட்டம் எனப்படும்.
பாங்கியிற் கூட்டத்திற்குப் பின்னர் தலைவி தலைவனைக் காணாது மாலைப் பொழுதின்கண் இரங்க, அதைக்கண்ட தோழி மாலைப்பொழுது வந்து தலைவியை வருத்துகின்றதே என வருந்துவாள். எனினும் உலகில் அனைவருக்கும் பிரிவெனும் துன்பமுண்டு. ஆகவே நீ வருந்துதல் நல்லதல்ல எனத் தலைவியைக் கழறுவாள். எனினும் தலைவி தலைவனைப் பிரிந்திருக்க முடியாத தன்மையினை நினைந்து வருந்துவாள். அவ்வமயத்தில் தலைவனுடைய தேரின் மணிக்குரல் கேட்கும். எனினும் அந்நாள் தினை கொய்யும் நாளாக அமைந்துவிடும். ஆகவே பாங்கி, கிளி முதலிய பறவையைப் பார்த்துக் கூறுவது போல், "நாங்கள் இன்றிலிருந்து வீட்டுக்குச் சென்று விடுவோம். நீங்கள் எங்களை மறந்து விடாதீர்" என்று கூறித் தலைவனுக்குத் தாங்கள் வீட்டுக்குச் செல்லப்போகும் தன்மையையும் இனித் தம்மை எளிதில் காணமுடியாது என்பதையும் உணர்த்துவாள். தலைவன் அதுகேட்டு நெஞ்சுடன் வருந்துவான். இது தலைவன் மட்டும் தன் வேட்கை மிகுதியால் பகற் குறியிடத்து வந்து தலைவியைப் பெறாது திரும்பிப் போகும் காரணத்தால், தலைவனாகிய ஒரு பகுதியின்கண் நிகழ்ந்த பகற்குறி என்னும் பொருள்பட ஒருசார் பகற்குறி என்று இலக்கணத்துள் குறிக்கப்படும்.
பின்னர், தோழி தலைவனிடம் "அன்னை பலகால் இங்கு வருகின்றாள் ஆதலாலும், தினைமுற்றிக் கொய்யும் காலமாக இருக்கின்றது ஆதலாலும், தலைவி வெளியில் வரத்தக்கவளலல்லள்; ஆகவே நீ இங்கு வராதே என்று கூறித் தலைவியையும் விலக்கி, தாம் பயின்றாடிய இடத்தைவிட்டுத் தலைவியை வீட்டுக்கு அழைத்துக்கொண்டு சென்று விடுவாள். பின்னால் தலைவன் குறியிடத்து வந்து தலைவியை காணப்பெறாது தினைப்புனத்தை நோக்கி வருந்தியும் அவர்கள் வாழும் ஊர் நோக்கியும் மயங்கித் திரும்பச் செல்வான். இது இலக்கணத்தில் பகற்குறியிடையீடு எனப்படும்.
பகற்குறி இடையீடுபட்டுத் தலைவியைப் பெறமுடியாத தலைவன் பின்னர் பாங்கியிடம் சென்று இரவின்கண் வந்து புணர்தலை விரும்பிக் கூறுவான். பாங்கி அதற்கு உடன்படாளாகி இரவின்கண் வருதலால் ஏதம் உண்டெனக் கூறத் தலைவன் ஏதம் இன்று என்பதை உணர்த்துவான். பின்னர் ஒருவாறு உடன்பட்ட பாங்கி அவனாட்டணியியலைத் தலைவன் தன் நாட்டணியியலை வினாவ வேண்டும் என்னும் கருத்தால் வினாவ, தலைவன் அவர்கள் நாட்டணியியலை வினாவுவான். அப்பொழுது பாங்கி தன் நாட்டு மகளிருடைய அணியினையும் இயல்பினை (பயிலும் இடம் முதலியன) யும் கூறும் முகத்தான் குறியிடம் உணர்த்துவாள். பின்னர் தலைவியிடம் சென்று அவளையும் உடன்பட வைத்துத் தாயின் துயில் நிலையறிந்து தலைவியைக் குறிவயின் கொண்டுசென்று நிறுத்துவாள். தலைவி அன்பின் மிகுதியால் தலைவன் வந்த நெறியினது அருமை நினைந்து வருந்தி, புணர்ச்சிக்குப் பின், இனி இவ்வாறு இரவில் வரற்க எனத்தலைவனின் வரவை விலக்குவாள். தோழியும் தலைவியை இல்லின்கண் சேர்த்து தலைவனிடம் வந்து இரவின் கண் வராதே என விலக்கியும், அங்ஙனம் வந்து செல்வதால் வழியில் என்ன நேருமோ எனத் தலைவி நினைந்து வருந்தும்நிலை கூறியும் அனுப்புவாள். இந்நிகழ்ச்சிகள் இரவுக்குறி யென்று இலக்கணத்துட் கூறப்படும்.
தலைவன், இரவுக் குறியின்கண் வந்ததை உணர்த்துவதற்காகப் புள்ளெழுப்பல் முதலிய அடையாளங்களின் மூலம் தலைவிக்கு உணர்த்துவான். அங்ஙனம் அவனால் புள் முதலியன எழுப்பப்படாமல் இயற்கையாக எழுந்த ஓசையைக் கேட்டுத் தலைவி குறிவயின் சென்று தலைவனைக் காணாமல் திரும்பலும், தலைவன் பின்னர் வந்து காத்திருந்து தலைவியைக் காணாமல் தன் மாலையினைக் கழற்றி ஆங்குள்ள கைதைக்கு அணிவித்துத் தான் வந்தமையுணரச்செய்து திரும்பலும் உண்டு. அன்றியும் தலைவனைக் காணுவதற்குத் தாய் தூங்காமல் இருத்தல், ஊர் துஞ்சாமை முதலிய இடையூறுகள் ஏற்படுவதும் உண்டு. இவை முறையே அல்லகுறி, வருந்தொழிற் கருமை என்று குறிக்கப்படும். இவை இரண்டாலும் இரவுக் குறி இடையீடுபடுதலும் உண்டு.
இங்ஙனம் இரவுக்குறியும் இடையீடு படுவதனால் தலைவி வரைந்து கோடலை விரும்பிக் களவொழுக்கத்தினைத் தாய் அறிந்தமையையும், தலைவன் வருவதற்கு முடியாமையையும் தன் உடல் நலம் குறைவதையும் அதனால் வெறியாட்டு எடுத்தலையும், பிறர் வரைவு நேர்தலையும், விலக்குமாறு பாங்கியிடம் கூறித் தன், வரைதல் வேட்கையினை உணர்த்துவாள். அதைக்கேட்ட பாங்கியும் தலைவனிடம், தாய் களவொழுக்கத்தினை அறிந்ததையும், இனிக் குறிவயின் தலைவியைக் காணமுடியாதத் தன்மையையும், ஊரில் அலர் எழுந்த தன்மையினையும், தலைவியின் வருத்தம், அதனால் நிகழும் வெறியாட்டு, பிறர் வரைவு முதலியவற்றையும் தலைவனுடைய குலப்பெருமையினையும் கூறி வரைதல் பற்றி வினாவுவாள். இவை முறையே வரைதல் வேட்கை, வரைவு கடாதல் என்று கூறப்படும்.
அங்ஙனம் பாங்கி வினாவ அதற்கு உடன்பட்ட தலைவன் தன்னூர்க்குப்போய் பின்னர் வருகின்றேன் என்று வற்புறுத்திக்கூறிப் பிரிவான். பிரிந்தவன் உடனே வாராமையின் தலைவி காமமிக்கு வருந்துவாள். தலைவி வருத்தப்பட்டு ஆற்றிய தன்மையினைத் தோழி திரும்பி வந்த தலைவனுக்கு உணர்த்துவாள். இது, ஒருவழித்தணத்தல் என்று கூறப்படும்.
பின்னர் தலைவன் வரைதற்குறிய பொருள் காரணமாகத் தான் பிரிதலைப் பாங்கி உடன்படாதிருக்கவும் உடனே வந்து விடுவேன் என வற்புறுத்திக் கூறிப் பிரிந்து செல்வான். சென்றவனை நினைந்தும், கார்ப்பருவம் கண்டும் தலைவி வருந்தத் தோழி அவளைப் பலவாறு கூறி ஆற்றுவிப்பாள். தலைவனும் பொருள் தேடி முடிந்தவுடன் தலைவியை நினைந்து வருந்தி விரைந்து வருதலைப் பாங்கி உணர்ந்து தலைவிக்கு உணர்த்துவாள். வந்த தலைவனுடன் தாங்கள் ஒருவரை ஒருவர் நினைந்தமை வினாவியிருப்பர். இது, வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிதல் எனப்படும். இத்துணையும் களவியல்.
தலைவன் வரைவு முயற்சிகளை மேற்கொண்டு முலைவிலை கொடுத்தமையையும் அதைத் தமர் ஏற்றுத் தாய் மகிழ்ந்தமையையும் தலைவிக் குணர்த்த அவள் உவந்து தெய்வத்தைப் பரவ, அதைக்கண்டு பாங்கியும் தலைவனும் மகிழும் செய்தி வரைவு மலிவு எனப்படும்.
இதுவன்றி, தலைவியின் களவொழுக்கம் கண்டு தந்தை வெருப்படைந்ததை அறிந்த தலைவன் பிரிந்தேகத் தலைவி வருந்திப் பாங்கியின் மூலம் வெறி விலக்கல் முதலியன நிகழ்த்த, அதுகொண்டு வினாய செவிலிக்குப் பாங்கி பூத்தரு புணர்ச்சி, புனல்தரு புணர்ச்சி, களிறுதரு புணர்ச்சி முதலியவற்றான் முறையாகத் தம் களவினை வெளிப்படுத்துவாள். இக்களவு செவிலியால் நற்றாய்க்கும், நற்றாயால் தந்தை முதலியவர்களுக்கும் உணர்த்தப்படும். இது அறத்தொடு நிற்றல் என்று இலக்கணத்துள் வழங்கப்படும்.
இதுவன்றி, காப்புக் கைமிகலால் பாங்கி, தலைவன் மறுப்பவும் தலைவியை உடன் கொண்டேக உடன்படுத்தியும், தலைவி தன் நாண் அழிதற்கு இரங்கவும், கற்புமேம்பாட்டை உணர்த்தித் தலைமகளை ஒருப்படுத்தியும், தலைவியைத் தலைவனுடன் விடுப்பின் தலைவன் தலைமகளின் இயல்பறிந்து மகிழ்வித்துக், கொண்டுசென்று தன்பதியடைவான். இது உடன்போக்கு.
மகளைக் காணாத நற்றாய் செவிலியை வினாவி, உடன்போயது உணர்ந்து
பாங்கியரோடும் அயலாரோடும் தலைமகள் பழகிய இடத்தோடும், தன்மகளின் மென்மைத் தன்மை, அச்சத் தன்மை முதலியன நினைந்து வருந்த, செவிலி அவளைத் தேற்றித் தலைவியைத் தேடிச் செல்வாள். வழியில் முக்கோற்பகவர் முதலியோரை வினாவ அவர்கள் உலகியல் உணர்த்துவர். தலைவியைக் காணாத செவிலி வருந்துவள். இங்ஙனம் தலைவி அவனது உடமையாய்க் கற்பொடு புணர்ந்ததனை அயலார் பலரும் அறிதலின்
இது கற்பொடு புணர்ந்த கவ்வை எனப்படும்.
உடன்போன தலைவியைத் தேடிச் சென்ற செவிலி மீண்டுவந்து நற்றாய்க்கு உணர்த்துவதையும், தலைவன் தலைவி இருவரும் மீண்டு தலைவியின் ஊர்க்கே வருதலையும் மீட்சி என்று கூறப்படும்.
அன்றியும், உடன் போன தலைவியைத் தலைவன் தன்னூர்க்கே கூட்டிச்சென்று தன் மனையின்கண் வரைந்து கோடலும் அதைப் பாங்கியின் மூலம் நற்றாய்க்கு உணர்த்தலும் தன்மனைவரைதல் என்று இலக்கணநூல் கூறும்.
அங்ஙனமின்றி, உடன் சென்றதைப் பாங்கி, அந்தணர் ஆகியோர் மூலம் உணர்ந்த நற்றாய், தமர்க்குத் தெரிவிக்க, அவர்கள் சென்று இடையிலேயே தலைவியை அழைத்துக்கொண்டு வருதலை, உடன் போக்கு இடையீடு என்பர்.
பின்னர் உலகியற்படி அந்தணரையும் சான்றோரையும் முன்னிட்டு வரைந்து கொள்ளுதலும் உண்டு. இத்துணையும் வரைவியல். இவ்வளவே இந்நூலில் கூறப்பட்டுள்ளது. கற்பியலைப்பற்றிய பகுதி கிடைக்கவில்லை.
இங்ஙனம்,
C.M. ராமச்சந்திரன் செட்டியார்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பேரூர்க் கோவை.
உ - சிவமயம்.
விநாயகர் துதி.
தேனூறு சொற்புல வோர்செய்த கோவை தெரிந்துமட்டு
மேனூறு பச்சடைப் பட்டீசர் கோவை விளம்பவதில்
தானூறு காட்டி லதாய்ஐங் கரனருள் தந்துதுறை
நானூறு மென்றன் மடநாவில் காட்டி நலஞ்செயுமே.
நூல்.
இயற்கைப்புணர்ச்சி.
காட்சி.
உலகோர் துதிசெ[1]ய்ய நல்அரு ளேதரும் ஓங்கியநற்
றலமே யெனவளர் பேரைப்பட் டீசர் தடங்கிரியின்
நிலவோர் குமிழ் இருகாவி ஓராம்பல் நன்னீள் த[2ளவாம்
இலவோடு உயர் கஞ்சம் ஓர்கொடிதாங்கி இருந்ததுவே. (1)
ஐயம்
திருவோ புவிமகளோ மத னாகமந் தேரிரதி
குருவோ வுரகர்தங் கோதையரோ மணமே கொடுக்குந்
தருவோ டிலங்கும் அரம்பைகொ லிங்குத் தனித்துநின்றார்
அருவோ[3]டுருவுமாம் பட்டீசர் பேரை யணி வரைக்கே. (2)
தெளிவு
மயில்போல் மாதவி மங்கை மணாளன் மலர்ப்பதத்தை
எயில் போல் அடைந்திலர் வாழ்க்கையைப் [4]போல் மனமே யிளையல்
அயில்போல் விழியிமைக் கின்றது தார்மண மற்றதுசீர்
பயில்போல் வளருநம் பட்டீசர் மால்வரைப் பைந்தொடிக்கே. (3)
குறிப்புணர்தல்
நாக்கியம் பாமற் குவளையலர்ந்து நவிலவெந்தன்
பாக்கியம் போல்வரு மானார்தம்[5] மெய்யினிற் பற்றிய நோய்
தாக்கிய நோயனை பட்டீசர் பேரைத் தடங்கிரிமின்
நோக்கிய பார்வை யெல்லாந்துயர்தீர நுவல்கின்றதே. (4)
-----------------
(பிரதிபேதம்) [1]செய்யு; [2]. தழலா; [3]. அருவேடு; [4¨. போன்; [5]. தருமயல் பற்றிய
------------------
இரந்துபின் னிற்றற் கெண்ணல்
கூறாது நோக்கிற் குறிப்புணர்ந்தீயுங் குணத்தின் மிக்கோர்
மாறாது வையக் கணியெனச் சொற்றிடு மாற்றமிவர்
மீறாது பேரை நம் பட்டீசர் மால்வரை மின்னனையார்
சீறாறு சேர்ந்துய்ய லாமெனத் தேர்ந்து தெளிமனமே. (5)
இரந்துபின்னிலை நிற்றல்
தளர்ந்தோ ருண[1]ற்குத் தயையும் அறிவுந் தனமுமிக
வளர்ந்தோரைச் சேர்ந்திடின் மாசுள தோவி[2]ந்த மா[3]னிலத்தை
அளந்தோற் கயற்கரிதாகும் பட்டீசர் அணிவரையில்
உளந்தோய் தலைக்குறி யீர்பெறு குவனுயிர் ஒண்டொடியே. (6)
முன்னிலை யாக்கல்
வேலைப் பொருவும் விழிமாத ராயத்தின் மேவியொண்பூஞ்
சோலைக் கடிமலர் கொய்தணி யாமலித் தொல்புவியின்
மேலைச் சிதம்பரப் பேரைப் பட்டீசர் வியன்கிரியின்
மாலைக் குழன்மட வீர் நின்ற வாரென் சொலீர் மகிழ்ந்தே (7)
மெய்தொட்டுப் ப[4]யிறல்
மனப்பார நீக்கியருளும் பட்டீசர் வரையின் மின்னார்
தனப்பாரந் தாங்கித் தளாந்தது மன்றியுந் தார்குழலாங்
கனப்பாரம் பெற்று மிகவே மெலிந்ததைக் கண்டுமுங்கள்
[5]இனப்பாரந் தானழி வீசிடை[6] யாரஞ் செய்து[7]றுமே. (8)
பொய் பாராட்டல்
யானென் றவையு மெனதென் றவையு மியம்பல்பெரு
மானென் றிடவளித் தானும்பட் டீசர் வரையிடத்தே
தேனென்ற சொல்லிய ரல்குலின் செவ்வியைச் சீறரவு
தானென்ற தென்[8]புமன் னாவிரண் டானது தான்வெடித்தே. (9)
இடம் பெற்றுத் தழால்
படமா ரரவப் பணியார் பட் டீசர் பனிவரையின்
வடமா தனத்திய ரேபோல்[9] வளர்பொழில் மாதவியாம்
விடமார் விழிவலை வீச்சுக்குப் பட்டவென் வெம்மைகடி
தடமாஞ் சுனையினிற் றோய்ந்திளைப் பாறத் தகுமிடமே. (10)
வழிபாடு மறுத்தல்
அக்கும் அரவும் புனைந்த பட் டீசர் அணிவரையின்
மிக்குந் தடம் பொய்கை சூழந்த திலிங்(கு[10]ள) வேய்மிகத்தித்
திக்குமோ ரி[11]பைமுஞ் சோகமு மேற்கிள்ளை சிந்தைமிக்
நி[12]க்குமதை யொ[13]ழிப்பீர் மறைப்பீ ரெ[14]ன்னை நீள்பொழிலே. (11)
---------------------------------
(பிரதிபேதம்)
[1]. உணவெட்டுத்தயை [6]. யாளியீரிடை [10]. இங்குளவேயுமக்கு
[2]. யிந்த [7]. நெய்துமே. [11]. திக்குமினமும்
[3]. மானிவித்தை [8]. தானென்றளவு [12]. நோக்குமதை
[4]. பயிற்றல் [9]. போலில் மொலில் எனவும் [13]. யொனிபிறை
[5]. முங்கனிள பொளிலா மெழில் [14]. ரெனை
-----------------------------------
இடையூறு கிளத்தல்
சாந்த மளைந்த தனப்பச்சை வல்லி தனக்குவந்த
காந்த[1]ரடியரைக் காக்கும்பட் டீசர் கனக வெற்பின்
மாந்தர் தனம் புறங் கொண்டே சில் வேல்கையில் வைத்தன போல்
ஏந்திழை யீர்தனங் காட்டிக்கண் வேல்கையி லேந்தினி[2]ரே. (12)
நீடுநினைந் திரங்கல்
கங்கைச் சடையர் தென்[3]பேரை பட்டீசர் கனவரையின்
மங்கைக் கரசியர் சீறடி சேப்[4]ப வருடவுஞ்சீர்
தங்கச் செப்பென்னச் சிறந்து நெருங்கித் தடித்துவருங்
கொங்கைக்குச் சாந்த மெழுதவு மாவி குறிக்கின்றதே. (13)
மறுத்தெதிர் கோடல்
மறையே முறையிடும் பேரைப் பட்டீசர் வரையில்வரும்
மிறையே துறையற்ற காமப் பெருவெள்ள மென்றிடினின்
நி[5றையே ந[6]கைமலரோ தடுக்கின்றது நீண்ட[7]வுனைக்
குறையே யறைவதல் லானெஞ்ச மேயினிக் கூறரிதே. (14)
வேறிது நகை தாற்றல்
ஏராறும் பேரையில் வாழும் பட்டீசர் எழற்கிரியில்
தாராறுங் கூந்[8]தன் மின்னார் தமையுற்றுத் தளர்ந்த வெமக்கு
ஆராமய லென்றறிந்தது வோநெஞ்ச மேயணங்கார்
தேராமலோபெரு மூச்செறிந் தேந[9]கை செ [10]ய்ததுவே. (15)
முறுவற் குறிப்புணர்தல்
பகைசேரும் ஐந்துபுலன்களை வென்று பதத்தை யுன்னும்
வகைசேரச் செய்திடும் பேரைப்பட் டீசர் வரையிடத்தே
முகைசேரு [11]மொக்கு ளுளம்மலர் வாசமு மொய்த்த மின்னார்
நகைசேரு மொக்கு ளென்னாருயிர் காக்க நகைத்ததுவே. (16)
இதுவு [12]மது
தொழுதே துதிப்பவர்க் காவிப்பட் டீசர் சுடர்க்கிரியின்
பழுதேது மின்றிய நன்மலர்த் தேன்வழி பார்த்தறுகால்
உழுதே பரிகொடுத் தார்குழ லாரெமக் குற்றதிந்தப்
பொழுதே முயங்குதல் வேண்டுமென் றேகுதும் பூம்பொழிற்கே. (17)
-------------------------------------------------------------------------------------------------
(பிரதிபேதம்)
[1]. காந்தள்வ [4]. செப்ப [8]. கூந்தல்
[2]. ஏந்தினவே [5]. நன்னிறை [9]. செறிந்தோகை
[3] தென் பட்டீசர் [6]. நரைமலரோ [10]. செய்தது
பகன்வரைவில் என்றும் [7] வினைக்கு [11]மொக்கினூள் வாசமுமே
தென்பட்டீசர் பேரை பகன் [12]. முயங்குதலுருதல் வரையின் என்றும் பாடம்
-----------------------------------------------------------------------------------------------
:
புணர்ச்சியின் மகிழ்தல்.
கொந்தார் வனஞ்செறி பேரைப்பட் டீசர் குளிர்வரைமின்
னிந்தார் முகங்கண் குவளைகை காந்தளிவ் வேந்திழையார்
பைந்தார் தனத்தை முயங்கி னமிழ்திற் பதின்மடங்கு
தந்தா லதுசுவையா மெனத் தேவர் சொலத்தக்கதே[1]. (18)
புகழல்.
கோங்கே சுனையிற் குமிழி களேபைங் குரும்பைகளே
தேங்கே சுரர்தந் திருமுடி யேசெழும் பங்கயமே
தீங்கேது மின்றித் தவஞ்செய்யி லென்னுயிர்ச் செல்விகொங்கை
பாங்கே யுளங்கொள்ளு வீர்பட்டிநாதர் பனிவரைக்கே. (19)
[2]அணிந்துழி நாணியதுணர்ந்து தெளிவித்தல்.
கடியே கமழ்கொன்றைத் தாரர்பட் டீசர் கனவரையின்
குடியே யம்போருகக் கோயின்மின் னேசிமிழ்க்[3] கொங்கை யென்னுந்
துடியே யுணிந்தனன் கண்களிப் பாயிந்தப் பான்மைகெட்டே
படியே யணிந்தனன் கண்களிப் பாயிந்தப் பான்மை கெட்டே. (20)
பெரு நயப்புரைத்தல்.
பூதப் படையர் நம் பேரைப்பட் டீசர் பொருப்பிடத்திற்
சீதப்பரிமளத் தார் குழலார்வயின்செல் லும்வண்டீர்
ஓதற்ற கானங்கள் கண்டிருப் பீரிவை யோர்ந்ததுண்டோ
கோதற்ற தும்பியின் மீதலர் மொய்த்தது கூறுமின்னே. (21)
.
தெய்வத்திறம் பேசல்.
கூடிடுங் காந்தமும் வல்லிரும் புந்தனைக் கூட்டிவைக்க
நாடிடுந் தெய்வ நமதுபட் டீசர்நன் னாட்டுவெற்பின்
வாடிடு மின்னுயிர் மின்னே வருந்தல் வரும் விதிதான்
தேடிடும் நம்வினை கூட்டவுங் காதல் சிறப்புளதே. (22)
பிரியேனென்றல்.
பணியு நதியும் [4] அறுகுங் கடுக்கையும்[5] பான்மதியோ (டு)
அணியும் பிரானெங்கள் பட்டீசர் பேரை யணிவரையின்
மணியு மொளியு மெனப்பிரி யேனுன்றன் வல்விரகப்
பிணியுந் தவிர்த்திடு வீரென தாருயிர்ப் பேதையரே. (23)
பிரிந்து வருகென்றல்.
அன்னம் மயில்பொழில் பேரைபட் டீச ரணிவரையிற்
கன்னல் மொழிக்கழைத் தோழி யரேயொருக் காற்பிரிந்து
வன்னக் கிளிமொழி யாருடனீ ருண் மகிழ்ந்தெறிபந். (து)
என்ன விரைந்து வருவே னிரங்க லிவையுணர்ந்தே. (24)
----------------------------------------------------------------------------------------------
(பிரதிபேதம்)
[1]. சாலநன்றே [3]. சிமிட [5] கடுக்குகையும்
[2]. அணித்துளி [4]. மதியும்
-----------------------------------------------------------------------------------------
இடமணித் தென்றல்.
வானாடர் போற்றிடும் பேரைபட் டீசர் வரையினெந்தன்
ஊணாரு யிரெனு மொண்டொடி யேயுங்க ளூரின்மலைத்
தேனார ருவி யுறுகுரு மாச்சினைத் தேங்கனியே
மானார் நமது வரையிடத் தேந்தியு மாந்துவரே 5. (25)
தெளிவு.
கருத்தாற் குறிப்பிற் குறிப்புணர் வார்மதிக் கால்சடையர்
திருத்தாள் பணியுநம் மன்பர்நெஞ் சேநம்மைச் சேர்வதற்கு
மருத்தாம மார்பர் மறவார் வருவர் மறைசிறந்து
பெருத்தார வாரம் விளைக்கும் பட்டீசர் பெருவரைக்கே. (26)
செல்லுங் கிழத்தி செலவு கண்டுளத்தோடு சொல்லல்.
காவியம் போருக மாதிவெண் முல்லைசெங் காந்தண் முற்றுந்
தாவியங் கேசெல்லு மோர்கொடி யென்னவுந் தாமரை சூழ்
வாவியங் கெய்திடும் பேரைப்பட் டீசர் வரையிலென்றன்
ஆவியுங் கொண்டல வோசெல்லு மோவிய மாம் அனமே. (27)
பாகனோடு சொல்லல்.
நிலவணி நீள்சடை யெங்கள்பட் டீசர் நெடுங்கீரி [1]யிற்
றிலதம் புலறப் புரை நன்னுதல்[2] வேர்ப்பச் செல்வமிக்க[3]
பலரைமுன் பாராதுகண் ணாசையிற் செல்லும் பாவைபின்பால்
வலவகண் பாரென் உயிர்போலு மோர்மயில் வனசெலவே. (28)
ஆய வெள்ளம்[4] வழிபடக் கண்டிது மாயமோ வென்றல்
கடமோதிய வெங் களிற்றுரி போர்த்த கங்காதார் கார்[5]
விடமோர்ந்திடு கந்தரத்தர் பட்டீசர் வியன் கிரிமின்
குடமோங்குய தனத் தாய் மெரி இன்மைக்கூடினவென்
மடமோ கனவு கொல்லோ நனவோ வென் (ளீ)னமாய் நெஞ்சே. (29)
வாயில் பெற்றுய்தல்.
பெரிதா யருள் செய்யும் பேரைப் பட்டீசர் பிறங்கன் மின்னாள்
விரிதாமரை முகங் காணவும்[6] ஆயத்துண் மேவி நின்றோர்
[7]சுரிதார் குழனகைத் தாள் நெஞ்சமேயினிச் சொல்வதற்கும்
அரிதாகிய மருந்தாம் பெறலா மயலாம் பிணிக்கே. (30)
பண்பு பாராட்டல்.
ஒப்பாந்தலமது பேரைப் பட்டீசர் உயர் கிரியின்
செப்பாமெனக் கொங்கை பால் போல் மொழிச்சி செவ்வாய தரந்
துப்பாமெனி லந்தத்துப்பிற் சுவையில் தாற்சொலவே
தப்பா மிவளிதழ்க கென்னோ வுவமை கொல் சாற்றரிதே. (31)
---------------------------------
(பிரதிபேதம்)
[1] கிரியின் நிலவதாம் புலர் புரை [2]. நன்னுதலே
[3]. செல்வழிக் கல்லை முன் பார்த்த [4]. வெளிப்பட
[5]. கடமாதிய [6]. காணுபு [7].திரிதார்
------------------------------
பயந்தோர் பழிச்சல்.
செங்கமலத் திருவுஞ் சீதரனுந் திகழ்பிறப்பே
யங்கதிற் பன்னோன் றெனவவ தாரமு மாயினரோ
மங்கையை பாகத்தில் வைத்த பட்டீசர் வரையி லெற்குக்
கொங்கையினின் பத்தையே கொடுத்தாரைக் கொடுத்தவரே. (32)
கண்படை பெறாது கங்கு னோதல்.
சந்தார் பொழில் வளர் பேரைப் பட்டீசா தடங்கிரியின்
செந்தா மரைமலர் மைக்கண்ணி நோக்கிற் றிளைக்கமதன்
கொந்தாரு மம்மல ரம்பில் நினைக்கக் கொடுமை செய்யச்
சிந்தா குலம் பெரிதாகச் செய் கீழ்மையை செய் கங்குலே[1]. (33)
தந்ததெய்வந் தருமெனச் சேறல்.
கோணா தருள்புரி பேரைப் பட்டீசர் குளிர்வரையிற்
காணா தவைநென்னல் காட்டுவித் தேகளி கூரமின்னார்
பூணாது சாதி முறைமை நம் மேன் மயல் பூணச் செய்த
நாணாது தெய்வநெஞ் சேயின்று மேநல நல்கிடுமே. (34)
முந்துறக் காண்டல்.
நாடிற் கதிதரும் பட்டீசர் மால்வரை நாரியரோ. (டு)
ஆடிச்சுனை குடையாம லிங்கேயு மதன்பின் வந்தீர்
தேடிப் பணிந்திடச் சென்றோர்க்கு முன்னுறுந் தெய்வமென்ன
வாடிப் புலாந்திடு வேற்கெதி ரே நிறை மங்கையரே. (35)
முயங்குதலுறுத்தல்.
இருந்தா னவரு மிமையோரும் பாந்தளு மேர்மதியுந்
திருந்தா சலமு மெலிந்துநை யாமற் சிறந்த கொன்றை
தருந்தா தலர்புனை பேரைப் பட்டீசர் தடங் கிரியின்
வருந்தாதமுதுபெற் றேன்சுக மேதுகொல் வானவர்க்கே. (36)
புகழ்தல்.
[2]இரைக்கு மருந்துயர் போக்கி யருள் செய்பட் டீசர் வெள்ளி
வரைக்குண் மயிலனை யார்கந்த ரத்துவள மைக் கொப்பாய்
உரைக்கும் படிதன் கண் முத்துகுத்தும் வெளுத் தோலமிட்டுந்
தரைக்கு ளிடம் வலமாகச் சுழல்புரி சங்கங்களே. (37)
ஆயத்துய்த்தல்.
என்னகந் தன்னில [3]மர்ந்தாங்கு நும்மனத் தென்னை வைப்பீர்
பன்னகஞ் சேரசடைப் பட்டீசர் மால் வரைப் பான் மொழியீர்
இன்னகந் தன்னிற் சுனைகுடைந் துங்கழங் கேயெறிந்து
மின்னகந் தன்னினு மாயத்தி லேவிளை யாடுகவே. (38)
----------------------
(பிரதிபேதம்)
[1]. சேர் கங்குலே.
[2]. "இரைக்கிமுற்று கற்பிணிக்கு மருந்து பட்டீசர் வெள்ளி" எனவும்
இறைக்குள் அருந்துயர் எனவும் பாடம்
[3]. உமைத்தாங்கு எனவும் உமைதாங்க எனவும் பாடம்.
----------------------------
தலைவன் பாங்கனைச் சார்தல்
காமனைக் காய்ந்த வனப்பெரு மான்றனைக் கட்டுகொன்றைத்
தாமனைக் காணிற் பவப்பிணி நீங்கிடுந் தானதுபோற்
பூமனை யாடரு நோயும்பட் டீசர் பொருப்பிடத்தே
யாமனைக் கேசென்று பாங்கனிற் றீர்த லியல்புநெஞ்சே.. (39)
பாங்கன்றலைவனை யுற்றது வினாதல்.
இக்கு வலயந் தனிலுன் குடைநிழற் கீனமுண்டோ
திக்கு விசயந் தனிலொரு தேயந் திறையிலையோ
மிக்கு மனமும்புயமு மெலிந்தது மேலவர்பூ
சிக்கும் பட்டீசர் வரை யிறைவா பகர் தேர்ந்திடவே.. (40)
தலைவனுற்றது உரைத்தல்.
எண்ண மவரவர்க் கெப்படி யப்படியே கொடுத்தல்
திண்ண மெனவளர்ந் தோங்குபட் டீசர் திகழ்வரையின்
சுண்ணந் திமிர்ந்து வளர்ந்து செறிந்த துணைமுலைப்பெண்
கண்ணம்பு பட்டதென் னெஞ்சும் புண் ணானது காணன்பனே.. (41)
பாங்கன் கழறல்.
மருச்சோ மலர்வண்டை யுண்பன போலும் வழங்குசுவை
திருச்சேர்[1] நன்னாவின் [2]செயலோர்தல் போலுந் திகழ்ந்த கற்பம்
தருச்சேரும் பேரையில் வாழும் பட்டீசர் தடங்கிரியின்
செருச் சேரும் திண்புயம் பேதைக் கிளைத்த திறன் மன்னனே.. (42)
கிழவோன் கழற்றெதிர் மறுத்தல்.
கொலையே செய்கூற்றும் விடமுங் களமுங் குடியிருக்கும்
வலையேயிணைவிழி வீச்சுக்குட் பட்டனன் மாதுவரும்
விலைபே தமையைச்செய் பட்டீசர் மால்வரை மெல்லியரைக்
கலையே முழுதுணர் பாங்ககண் டாற்றெரி யுங்கவினே.. (43)
கிழவோற் பழித்தல்.
அளப்பரி தாகுங் கடற்கரை நீந்தி யறிந்தவர்மான்
குளப்படி நீருட் குதித்து மலைந்திடுங் கொள்கையன்ன
வளப்படும் வேதந்தென் பேரைப்பட் டீசர் வரையிறைவா
விளப்படுமோ வொரு காரிகையாள்செய் விரகத்திலே.. (44)
கிழவோன் வேட்கை தாங்கற் கருமைசாற்றல்
தீங்கதில் லாவளர் பேரைப்பட் டீசர் திகழ் வரையின்
கோங்கரும் பாந்துணைக் கொங்கை யலர்ந்த குவளை விழி
பூங்கமலத் திருவன்னாள் வந் தென்னைப் புணர்ந்த மயல்
தாங்கற் கருமையென் னாற் பாங்க நீயிகழுந் தன்மை நன்றே.. (45)
-------------------------
(பிரதிபேதம்)
[1]. நன்னாக்கின் செயல் தெரிபோலும். [2]. செயஸ் தெரி.
---------------------------------
பாங்கன்றன் மனத்தழுங்கல்.
ஊனா ருடலை யொழித்தடி யார்க்கரு ளுய்க்கு மலர்த்
தேனார் பொழில்வளர் பேரைப்பட் டீசர் செழுங்கிரியின்
மீனா ரிணைவிழி வாரார் துணைமுலை வீழியிதழ்
மானார்தன் கைவச மானா ரினியென் கொன் மாற்றநெஞ்சே.. (46)
பாங்கன் றலைவனோ டழுங்கல்.
விரையே தரும்பொழிற் பேரைப்பட் டீசர் வியன்கிரியில்
உரையே தினியுனக் காரணங் கார்மய லுற்றபின்பு
வரையேது சொல்லிலுள் ளேநுழை யாவிடின் மன்னவிந்தத்
தரையே யொருபுறஞ் சாய்ந்ததென் றாலெவர் தாங்குவரே.. (47)
பாங்கனெவ்விடத்தெவ்வியற்றென்றல்.
பாரோர் துதித்திடும் பேரைபட் டீசர் பனிவரையிற்
காரோ தியர்பல ராநினைமால் செயுங் காரிகைதன்
சீரோர்ந் திலன் விளை யாடிட மும்மியல் புந்தெரியத்
தாரோ யெனக்குப் பகர்ந்திட வேண்டுந் தராபதியே.. (48)
தலைவனஃதிவ்விடத்திவ் வியற்றென்றல்.
மழையே குழல்வெண் பிறையே நுதல்புரு வஞ்சிலையே
கழைதோ ளயில்விழி யாமிள நீர்கொங்கை கஞ்சமும்வெள்
வழையே செறிவயல் பேரைப்பட் டீசர் வரையி[1] லொற்றை
இழையே யிடைபயி லும்மிட மேபுன மேந்திழைக்கே.. (49)
பாங்கன் இறைவனைத் தேற்றல்
நந்துந் தரளமு மாம்ப லுங்கோ கனகமுமணச்
சந்து மிகுந்திடும் பேரைப்பட் டீசர் தடவரையின்
இந்து வதன மடந்தையை யிக்கணம் ஏகிக்கண்டு
வந்துனைக் காண்ப னதுகாறு மன்னநின் மாலகற்றே. (50)
குறிவழிச் சேறல்.
சீர்க்கும் புகழ்க்குநற் றாய்மனை யாகிச் சிறந்திடும்பே
ரூர்க்கு மகிழ்ந்து நடஞ்செய்பட் டீச ருயர்வரையின்
வார்க்குங் குமக்கொங் கையாள்புன லாடிட வேவருமோ
தார்க்கு நறுமலர் கோத்திடு மோஅங்குச் சார்பொழுதே.. (51)
பாங்கனிறைவியைக் காண்டல்.
செந்தா மரைமுகம் இந்தே நறுநுதல் செல்வரைச்சேர்
கந்தா ரிணைமுலை பந்தே யெழிற்கந் தரமுநந்தே
கொந்தார் பொழில்வளர் பேரைப்பட் டீசர் குலகிரிவாழ்
நந்தர் விளக்கிவ ரேபுன மேனம்ம [2]னாடியிதே.. (52)
------------------------------
(பிரதிபேதம்)
[1]. ஒரு [2]. நம்மன் நாட்டயதே.
--------------------------------------
பாங்கனிகழ்ந்தற் கிரங்கல்.
பரவை மனைக்கிரு காற்றூது சென்றபட் டீசர்வெற்பில்
அரவைப் பழித்திடு மல்குலுங் கூற்றை யடும்விழியு
முரவை நிகர்த்து மதத்த முலைக்களி றும்முயன்ற
வரவைப் பகுந்தறி யாதிகழ்ந் தேனுற்ற மன்னனையே. (53)
பாங்கன் றலைவனை வியத்தல்.
பதமா சிலார்க்கருள் பேரைப்பட் டீசர் பனிவரையின்
மதமாவைக் கைவச மாக்கி வெங் கூற்றை வணங்கச்செய்து
இதுமாம் படியர வைப்பயங் காட்டுமெங் கோனை யெங்கற்
புதமாய்ப் புகழ்ந்திடு வார்புவி மேல்வரும் போர்வலரே.. (54)
பாங்கன் றலைவியை வியத்தல்.
ஊக்கம் புகழ்கொடை தாங்குமே மண்ணலொன் னார்மெலிய
ஆக்க மிகவருள் பேரைப்பட் டீச ரணி வரையில்
வீக்கஞ் சிறந்து வழிதிண் புயத்தையிம் மெல்லியற்கண்
நோக்க மதனின் மெலித்திடும் வீர நுவலரிதே.. (55)
பாங்கன் றலைவன்றனக்குத் தலைவிநிலை கூறல்.
மேமி திக்க கயல்கள் குதித்து வியன்சினைமா
மோதிக் கனியுகும் பேரைப்பட் டீசர் முதுகியிரின்
சோதி மழைக்கிப்பி பார்ப்பது போல் நின் றோகையர்தான்
பாதி யுடன்மெலிந் துன்வர வேவழி பார்த்திடுமே.. (56)
தலைவன் குறிவழிச் சேறல்.
நாடுங் கொல் லோபுனத் தேவழி தன்னை நலிந்துமிக
வாடுங்கொல் லோவளர் பேரைப்பட் டீசர் வரையிலுற்றால்
கூடுங்கொல் லோதனித் தேநின்ற தன்மையைக் கூறி நம்மோடு
ஊடுங்கொல் லோநெஞ்ச மேபுலர்ந் தேநிற்கும் ஒண்டொடியே.. (57)
தலைவன் தலைவியைக் காண்டல்.
தேனென வேயரு ளீயும்பட் டீசர் செழுங்கிரியின்
மீனென வேவிழி யாரென்றன் மெய்யினுண் மேவுமுயிர்
தானென வேதன் கலையைப் பிரிந்து தயங்கிநிற்கு
மானெனவே தனியே நின்ற வாவிவ் வரைப்புனத்தே.. (58)
தலைவன் கலவியின் மகிழ்தல்
அரிதான பேரைப் பட்டீசர்[1] தம்வெற்பி லமர்ந்துசெம்பொற்
கிரிதானஞ் செய்யினு மிவ்வின்பங் காண்கிலர் கிஞ்சுகவாய்ப்
பெரிதான வின்பத்தைப் பெற்றேன் றனக்குப் பிறர்நிகரோ
கரிதா னதற்குச்சிற் றின்பமென் பார் சுகம் கண்டிலரே. (59)
---------------------------------
(பிரதிபேதம்)
[1]. நம்பட்டீசர் வெற்பில்.
---------------------------
புகழ்தல்
துணையே யுயிர்க்குத் தென் பேரைப்பட் டீசர் சுடர்க்கிரியிற்
புணையே யெனவருங் காமக் கடற்குப் பொருந்துமுன்கை
அணையே லிருந்தும் பவள மிவள தரத்தழகுக்கு
இணையே யிலையிக் கடலே கதியென் றிருந்ததுவே.. (60)
தலைவன் தலைவியை பாங்கியோடு வருகென பகர்தல்
ஓங்கி வளர்புகழ் பட்டீசர் வெற்பி லுயர்ந்ததனந்
தாங்கி நடந்து தனித்துவந் தாய்மெய் தளர்ந்தெழிலும்
நீங்கி யுளமும் பயந்திடுமே யுண்மை நேயமிகும்
பாங்கி யுடன்வரு வாயென்றன் ஆருயிர்ப் பைந்தொடியே.. (61)
தலைவன் தலைவியைப் பாங்கிற் கூட்டல்
மத்த மதிச்சழ லத்தர்பட் டீசர் வரையிடத்தே
சித்தசன் பொற்படை யாமட வார்கள் சிலைநுதலில்
வைத்த திலகம் தென்னவும் பேரை வளநகருக்கு
அத்தனைப் போலவு நும்மாயஞ் சேர்தனன் றாயிழையே.. (62)
[1]பாங்கிவரவால் நாணுதலைக் கண்டைய முற்றோர்தல்
வண்டு சிறந்த வனச முகையவிழ்த் தேமதுவே
உண்டு மகிழ்ந்திடும் பேரைப்பட் டீச ருயர்கிரியின்
கண்டு மொழிமட மங்கைதன் மெய்யினிற் காட்டுதுநாம்
பண்டு பயின்றறி யாதகற் பூரப் பரிமளமே.. (63)
தோற்றங் கண்டையுறல்
மனத்தி நினைக்கவு மெட்டாப் பொருளினர் மாரனைவெஞ்
சினத்திற் பொடிசெய்த பட்டீசர் மால்வரை சேருநந்தம்
இனத்தின் மணமிலர் இல்லையென் னேமின் னெழின்மிகுந்த
தனத்திற் பசலை பிறந்ததென் னோநலஞ் சாற்றரிதே.. (64)
ஒழுக்கங் கண்டையுறல்
திடங்க[2]ண் உடையவர் சுந்தர ரோதிடுஞ் செந்தமிழ்க்கு
விடங்கண்ட கண்டத்தர் மாதொரு பாகம் வியந்து முன்னாள்
நடங்கண்ட பேரைப்பட் டீசர் வரையினம் மாதினுக்கு
மடங்கண்ட தன்றியு மாநாண் பயிற்பச்சம் வாய்த்ததுவே.. (65)
உண்டி கண்டையுறல்
விளைமாயை வேரறுத் தேநலங் காட்டுவர் வெற்றியந்தார்
புனைமார்பன் றாள்படக் கண்டபட் டீசர் பொருப்பின் மின்னாள்
தினைமாவுந்தேனுங் கனியுங் கிழங்குஞ் செலுத்துமிவட்கு
எனைமாய மோகைப் புறுதல்சிற் றுண்டி யெனக்கண்டதே.. (66)
------------------------------------------
(பிரதிபேதம்)
[1]. பாங்கி யவற்றால் நாற்றம் கண்டு ஐயமுற்றோறுதல்; [2]. கொண்ட
---------------------------------------
செய்வினை மறப்பு கண்டையுறல்
சிறியே னுணத்து மிருந்தருள் செய்பவர் செங்கையின்மான்
மறியே தரித்திடும் பட்டீசர் பேரை வரையிடத்தே
வெறியே கமழ்குழல் செய்வினை யாவும் விரகறிந்தும்
அறியேனென் றோதிட கற்றறிந் தாளெம் அணங்கனையே.. (67)
செலவு கண்டையுறல்
கருத்தி லிருத்தித் துதிக்குநல் லோரைக் கதியினிலே
யிருத்தி நலங்கள் பொருத்துபட் டீச ரெழிற்கிரியில்
ஒருத்தி தனித்தெழு ந்துய்யானஞ் சென்றதி லோர்மலருந்
திருத்தி யெடுக்கவு மில்லாமன் மீண்டதென் சேயிழையே.. (68)
பயில் கண்டையுறல்
பாரிடத் தோர்தொழும் பேரைப்பட் டீசர் பனிவரையின்
வாரிடங் கொண்டு வளரு மிளமுலை மாதர்குழாஞ்
சேரிடஞ் சேர்ந்துபந் தாடியு நீர்குடைந் துந்திலனே
ஓரிடஞ் சென்று தனித்தே யிருப்ப துணர்ந்திலனே.. (69)
பிறை தொழு கென்றல்
தலையா னடந்து வருங்காரைக் காலம்மை தன்னையருள்
தொலையா நலஞ்செய்யும் பட்டீசர் மால்வரை சூழ்ந்த
கொலையானை யைவென் றிறையோன் முடியிற் குடியிருக்குங்
கலையார் பிறையைத் தொழவரு வாயென்றன் கண்மணியே.. (70)
ஐயங் கரந்து தையலை வினாதல்
வெறிகமழ் மேனிப் பசலைமென் கொங்கைவிண் ணாணோடுண்டி
அறிவு மறப்புத் தனிவழிச் சேறனம் மாயமொரீ இக்
குறிகொடு நிற்றலின் [1]காரண மேது குளிர்பொழில்கள்
[2]செறிதரும் பேரைநம் பட்டீசர் மால்வரை சேயிழையே.. (71)
கரந்துறைதல்
திருத்தங் கியதலம் வானோர் தொழுந்தலந் தேவியுடன்
நிருத்த மிடுந்தலம் பேரைப்பட் டீசர் நெடுங்கிரியில்
தருத்தங் கியபொழில் சூழ்சுனை யாடித் தகைத்ததன்றோ
வருத்த மெனதுடற் கானதை யோர்ந்திலை வாணுதலே.. (72)
கரவு நாட்டம்
வினையே தொலைத்தெனை யாளும்பட் டீசர் வியங்கிரியின்[3]
நனையே[4]ற் குமுதம்விளர்ப் பச்செங் காவி நலஞ்சிவப்பச்
சுனையே தரினுன்றன் வாயினுங் கண்ணினுந் தோன்றுது நீ
யெனையே[5] யழைத்தச் சுனைக்கேகி லாடுது மேந்திழையே.. (73)
------------------------------------
[1].கொள்கையன் காது குளிர். சொல்வாய் பேரை நம்பட்டீசர்.
[2]. செறிவயல். [3]. குரியி, [4]. செங்குமுதம்.
[5]. எனையு மலைத்த சுனை.
-------------------------------------------
சுனை வியந்துரைத்தல்
கொலையா னையினுரி போர்த்தப்பட் டீசர் குலகிரியின்
நிலையாஞ் சுனையிற் இரியா டிடவெண்ணி நீண்மலையாஞ்
சிலையார் நுதலணங் கேமலை யேயெனச் செப்புமுன்றன்
முலையா டிடுதலிற் பொன்னாக வேபொறி மொய்த்ததுவே.. (74)
நாண நாட்டம்
வாதி லெழுந்திந்நதியிடத்தேதா வந்துகரை
மீதி லெழுந்துகச் செய்தபட் டீசர்தம் வெற்பின்மின்னே
சூதி லெ[1]ழுந்த களபமும் வெவ்விடந் தோய்குவளைப்
போதி லெழுந்துமை யுரும்மளி யாதுன் புனல் குடைவே.. (75)
தகையணங் குறுத்தல்
சீரார் மரகதப் பாகர்பட் டீசர் சிலம்பின் மின்னே
யேராருங் காவி விழியிற் சிவப்பு மிதழ் வெளுப்பும்
வாராருங் கொங்கைப் பசலையுந் தானில்லை மற்றவெல்லாம்
நேரா முனதெழி லென்கா தலியோரு நேரிழையே.. (76)
நடுங்க நாட்டம்
பதம்பட்ட செம்பஞ்சுங் கண்பட் டமையும் பசலை பொன்புற்
புதம்பட்ட சந்தமு நீங்கத் திருக்கும் புணையிலையே
கதம்பட்ட கூற்றை யுதைத்தபட் டீசர் கனகவெற்பில்
மதம்பட்ட வாரணங் கண்டஞ் சினேன்மன்ன மன்றத்திலே.. (77)
பாங்கியை இரவு வலியுறுத்தல்
நாரே கொடுநன் மலர்மாலை செய்வ நவமணியின்
தாரே புனைபவர் நூல்கொடு செய்வ தரையின் மிக்க
சீரே நிறைந்திடும் பேரைப்பட் டீசர் திகழ்கிரியின்
வாரேறு கொங்கையைப் பாங்கி கொண்டே நலம் வாய்ப்பதுவே.. (78)
ஊர் வினாதல்
பண்டும் தூர்சொலிற் பாற்கட லேயிந்தப் பாருழந்து
விண்டலம் போற்றிடும் பேரைப்பட் டீசர் வியன்கிரியைக்
கண்டுவந் தீங்கு குடிகொண்ட தோகனம் பொற்குழலீர்
ஒண்டொடி யீர்மலை யீருரையீர்நும் தூர்ப்பெயரே.. (79)
பேர் வினாதல்
திருவோ தமயந்தி யோசசி யோ நீர் திலோத்தமையோ
ஒருவா[2] மதிப்பங் குரோகணி யோவுல கேழினுக்குங்
குருவாய் விளங்கிடும் பேரைப்பட் டீசர் கு[3]லகிரியின்
வருவீ ருமது பெயருரைப் பீர்கனி வாய்மலர்ந்தே.. (80)
-------------------------------------
[1]. சூதில் எழுது. [2]. ஒருநாண் [3]. குலவரையின்.
------------------------------------------
கெடுதி வினாதல்
சீர்பட்ட மாநகர்ப் பேரைப்பட் டீசர் திகழ்வரையின்
தார்பட்ட கூந்தலும் வார்பட்ட கொங்கையுந் தாங்குநல்லீர்
கார்பட்ட மேனியும் பார்பட்ட கோடுங் கணையினுனிக்
கூர்பட்ட [1]சோரி யுடன் வந்த தோவெங் கொலைக்களிறே.. (81)
நெஞ்சு வினாதல்
இரைந்தேநல் வேத வொலிக்குஞ்சை வாகமத் தினொலிக்குங்
கரைந்தோது மன்பினர் சூழும்பட் டீசர் கனகவெற்பின்
வரைந்தேயுங் கண்டறியாவிடை யீர்மன் மதன்கணையால்
விரைந்தோடி யென்னெஞ்சு வந்ததுண் டோவுங்கள் வெற்பிடத்தே.. (82)
வழி வினாதல்
செல்லா வழியிற்சென் றாற்பழு தோயுறுஞ் செல்வழியே
அல்லார் குழன்மட வீருரைப் பீரறிந் தேயிருந்துஞ்
சொல்லா விடின்மனங் கல்லா முமக்கென்பர் தொல்புவியின்
வல்லார் துதித்திடும் பேரைப்பட் டீசர் வரையிடத்தே.. (83)
மொழியாமை வினாதல்
முதிரு மயன்சிரம் பூண்டபட் டீசர் முதுகிரியில்
எதிரு முறநின் றொழியா தியம்பி லிணையின் மணிக்
கதிருஞ் செறிவடம் பூண்கொங்கை யீரொளி காலுமுத்தம்
உதிரு மெனத்தெளிந் தோமொழி யாதுங்கள் வாயுவந்தே.. (84)
இடை வினாதல்
விடையை யுகைத்திடும் பட்டீசர் வெற்புறு வீரெழில்செங்
[2]கிடையுங் [3]குரும்பையும் பண்டும் பிறையும்பங் கேருகஞ்சேர்
தொடையுங் கருதித் தினைப்புனங் காக்கச் சுமந்துவரு
மிடையில் மறைந்தது வோவினை போனும் மிடையிணையே.. (85)
முகப்புறு கிளவி
துங்கப் பு[4]னைவளர் பேரைபட் டீசர். சுடர்கிரியின்
பங்கத்திற் றாமரை யுற்பலம் போனும் பவமெயினர்
அங்கத்திற் றோன்றத் தினைப்புனங் காத்தற் கமைத்தவர்தாந்
தங்கப் பொடிதந்து செங்கற் பொடியுந் தரக்கொள்வரே.. (86)
யாரேயிவர் மனத்தெண்ணம் யாதெனத் தேர்தல்
ஊரேது நும்பெய ரேதொரு போர்க்களி றோடுமென்பர்
நேரேதன் னெஞ்சும் பழியு மொழியு நிகழ்த்துமென்பர்
தேரே னிடையென் பரையரைத் தூற்றுவர் சிந்தையினோ
யாரே யிவரென லாகும்பட் டீச ரணிவரைக்கே.. (87)
--------------------------------
[1]. சொரியுமாய். [2]. குடையும். [3].குரும்மையும். [4]. புனை.
------------------------------
பாங்கியெண்ணம் தெளிதல்
[1]மன்றுள் நடத்தினர் பேரைப்பட் டீசர் வரையிறைவர்
இன்று பகர்ந்த வித் தாரமெல் லாங் குறித் தேயுணரில்
துன்று மலர்க்குழ லாள்மன முமிவர் தூய்மனமும்
ஒன்றென் றெனது மனத்தினிற் றோன்றிற் றுரைப்பதென்னே.. (88)
கையுறை யேந்தி வருதல்
தேன்போ லினியநற் பால்போ லிருவருஞ் சேர்ந்து நின்றார்
வான்போதி சூழ்ந்ததெனப் பேரைப்பட் டீசர் வரையிலிந்த
மான்போக மாதரிப் பந்தரி லேகண்டு வாழ்ந்ததெல்லாம்
வான்பே ருரைத்தென் மயல்தீர்த்தி மேவ லிவரிடத்தே.. (89)
புனங்கண்டு [2]மருளல்
பாரும் விசும்பும் புகழும்பட் டீசர் பனிவரையின்
வாரும் வடமுந் திகழ்முலை யார்மருள் வாயிதன்மேற்
சேரு மொழியின் கிளிக்குஞ் சுழன்று திரிந்துநம்மை
நேரும் பிணைக்குமோர் கைம்மாறு செய்ய நினைப்பரிதே.. (90)
இருவரு முள்வழிச் சேறல்
உடையிற் புலியதள் சேர்த்துபட் டீச ருயர்வரையின்
நடையினற் சாயன் மொழியின் விழியினன் னாளதிலே
அடையும் பிடியு மயிலுங் கிளியு மணை யாப்பிணையு
மிடையத் தினையை விருந்தாகக் காப்பது மெல்லியரே.. (91)
தலைமகன் அவ்வகை வினாதல்
நிலையே யருள்செய்யும் பேரைப்பட் டீசர் நெடுங்கிரியின்
மலையே நகிலமய றீர்மதி யேநிகர் வாணுதலீர்
சிலையே விடுகணை தைத்ததிற் சோரித் திரள்சொரியக்
கலையேபுல் வாய்பற்றி வந்ததுண்டோ வுங்கள் கானகத்தே.. (92)
பாங்கி தலைமகற் கெதிர்மொழி கொடுத்தல்
முத்திக்கு நல்லவித் தாகும்பட் டீசர் முதுகிரியின்
எத்திக்கும் வென்றிடும் வேலிறை வாநுங்கை யேவுபட்ட
அத்திக்கு மானதற் கும்வழி கேட்டிங் கலைதனன்றே
வத்திக்கு மன்றத்தி லாரே யுரைப்பர்சொல் மானத்தியே.. (93)
பாங்கி யிறைவனை நகுதல்
நல்லிலைச் சூலத்தர் பட்டீசர் வெற்பி [3]னவிலரிய
வில்லிலை யம்பிலை மாந்தளி ரேகலை மெய்ம்முழுதுங்
கல்லிலை யோ, துளைக் கண்சோரி பாய்ந்து கலங்கியந்த
மெல்லிலை மென்று தெளிந்தோமற் றோர்கலை மெல்லியரே.. (94)
-------------------------------------
[1]. மன்று நடனத்தர்பேரை. [2]. மகிழ்தலும் வரம்பெறுதல்.
[3]. வெற்பிலின் நண்பர்க்கு
-----------------------------------
பாங்கி மதியினவரவர் மனக்கருத் துணர்தல்
பொன்னம் பலத்தர்தென் பேரைப்பட்டீசர் பொருப்பிடத்தே
இன்னம்பர் நெஞ்சும இவள்நெஞ்சுங் கூடி யெனைமறைத்து
முன்னம் புணர்ந்தது பின்னும் புணர முயன்றுதவு
மின்னம் பகமுமிம் மன்னர்கண் டானும் விளம்பியதே.. (95)
தலைவனுட் கோள் சாற்றல்
தூவியஞ் சஞ்செறி யேமைப்பட் டீசர் சுடர்க்கிரியின்
ஓவியம் போலனை யீர்[1]காம தேனுவு மொண்ணிதியு
மாவியுங் காயமு மேபொருள் யாவு மளிப்பனுந்தங்
காவியங் கட்கடை நோக்கந்தந் தேயெனைக் காத்திடுமே.. (96)
பாங்கி குலமுறை கிளத்தல்
தேவேந் திரன்வெண் கரியூர்வ தன்றித் திசையினுறங்
காவேந்த லாளு நரியூரு மோகலை கற்றறிந்து
பாவேந்தன் போற்றிடும் பேரைப்பட் டீசர் பனிவரையின்
மாவேந்த நீமய லாகனன் றோவெம் மறக்கொடிக்கே.. (97)
தலைவன் தலைவி தன்மையுயர்த்திக் கூறல்
பஞ்சு மனிச்சமு மன்னத்தின் றூவியும் பார்த்தகற்றக்
கொஞ்சும் பரிபுரத் தாளணங் கேற்றுங் கூவிளமும்
பிஞ்சு மதியு மணிந்துபட் டீசர் பெருங்கிரியின்
நஞ்சும் பொதிபகு வாயர வீன்றது நன்மணியே.. (98)
பாங்கி யறியாள் போன்று வினாதல்
பேதைய ரூசலி லாடு மவரிற் பெதும்பையரிற்
கோது திருத்திடு மங்கையிற் பந்துங் [2]குழற்சுனையுஞ்
சூதையுற் றாடிடும் [3]பட்டீசர் மேவுஞ் சுடர்க்கிரியிற்
காதைப் பொருந்துங் கண் ணாளெவ ளோமன்ன நின்கண்ணுற்றதே.. (99)
இறையோனிறைவி தன்மை யியம்பல்
முத்த நகைகொங்கை செப்பேகை காந்தண் முௗரிமலர்
ஒத்தே யிருந்த முகங்கண் குவளை யுறுங்களமு
நத்தேப்பட் டீசர் வரையிலென் னாசைநன் னாரியின்ப
வித்தேயு மென்னுயிர் போலே நினைக்குமெம் மின்னனையே.. (100)
பாங்கி தலைவியருமை சாற்றல்.
சிற்றெறும் பின்முலைப் பாலின் முயற்கொம்பு சேர்த்தரைத்து
வெற்றி வசீகரமாகுங் குளிகை விளங்கிடினு
நற்றவ மேதரும் பட்டீசர் வெற்ப நளினமுகச்
சிற்றிடையாளைப் பெறுது மென்றெண்ணுதல் சிற்றறிவே.. (101)
----------------------------------
[1]. சுரர்தேனுவு எனவும் “சுரர்தேனு” எனவும் பாடம்.
[2]. குழிற் [3]. பேரைப்பட்டசேர் சுடர்க்கிரியில்.
----------------------------------
இதுவுமது.
மைக்கா நெருங்கும் வரையாண் டிடுமெங்கன் மன்மகளாம்
அக்கா டரவு நதிமதி காத்தம் அறு கொடுதும்
பைக்கா வளர்சடை பட்டீசர் குன்றினிற் பைந்தொடியு
னக்கா மென் றெண்ணுதல் பேதமை யென்பது நான் கண்டதோ.. (102)
தலைவனின்றியமையாமை யியம்பல்.
தோடார் குழைக ளசைந்தாட விண்ணவர் சூழ்மன்றி
னூடாடி யன்பரைக் காக்கும்பட் டீச ருயர் வரையின்
ஏடார் குழல் எனப் பேடாநடையெழிலேந்திழையைக்
கூடா விடில்வெருங் கூடா மெனதுடல் கொம்பனையே.. (103)
பாங்கி நின்குறை நீயே சென்று உரையென்றல்.
வெய்யோனுஞ் சந்திர னும்வரத் தூது விடுப்பர் கொல்லோ
நெய்யாருந் தாமரைக் குங்குவ ளைக்குமுன் னேரில்லர்
செய்யாநின் றாலிக்கும் பேரைபட்டீசர் திகழ்வரையின்
மையார் குழலிக்கு நீயேசென் றோதுன்றன் மையலையே.. (104)
பாங்கியைத் தலைவன் பழித்தல்.
தேன்படு மாமலர்ச் சோலையி னீழலைச் சேரிலது
தான்படு தீயென மேய்முழு துஞ்சுடச் சாடின போற்
கூன்படு வெண்பிறை சேர்ததபட் டீசர்நற் குன்றின் மின்னே
நான்படு நோய்க்கெனையேகென் றனையிது நங்குறையே.. (105)
பாங்கி பேதைமை யூட்டல்.
நிலைவவேதம் போற்றிடும் பேரைப்பட் டீசர் நெடுங்கிரியின்
மலைவேடர் [1]தம்வயிற் றோன்றிய விந்த மறுக் கொடிகண்
[2]கொலை வேலு நஞ்சமுங் கூற்றுங் கிளத்திடுங் கொள்கையளாஞ்
சிலைவேன்மன் னா நி ன்குறை தெரி யாத சிறியவளே.. (106)
காதலன் தலைவி மூதறிவுடைமை மொழிதல்.
கரியாடை போர்த்திடும் பட்டீசர் வெற்பிற் கனங்குழலைப்[3]
பிரியாத காமத் துறுநோ யகன்றிடப் பேணியென்னை
அரியார் குவளைக்கண் ணீர் மை யினான் மயலாற் றினளைத்
தெரியா தவள் சிறி யாளென்று சொல்வர் சிறியவரே.. (107)
பாங்கி முன்னுறு புணர்ச்சி முறையுறக்கூறல்.
நத்தின் முத்தம் வளர் பேரைப்பட் டீசர் நளிர் வரையின்
முத்தி பெற் றோரொரு வாசானைத் தாழ்ந்தந்த முத்தியினின்
பத்தின் வழிசொலக் கேட்பன் நையுமென் பாலுரைத்தாய்
அத்தினம் போன் மின்னை யின்றும் புணர்ந்திடு வாயுரையே.. (108)
------------------------------------
(பாட பேதம்.)
[1]. தலவயிற் றோன்றிய. [2]. மேலை வேலு. [3]. குளலாய்.
-----------------------------------------
தலைவன் தன்னிலை சாற்றல்.
இந்நிலந் தன்னிற் கவி வாணர் சொற்கும் பெண் ணின்பத்திற்கு
முன்னிலை யன்றிப் பயனிலை யாங்கடன் [1]மூடினுமே
நன்னிலை யாகிய பேரைப்பட் டீசர் நளிர் வரையின்
பின்னிய காதற்கு நின்னையல் லாலில்லை பெண்ணணங்கே.. (109)
பாங்கி யுலகிய லுரைத்தல்.
மாயை யழித்தருள் பேரைப்பட் டீசர் வரை யிறைவா
வேயை நிகர்த்து மென்றோளியின் காதல் விரும்புமவர்
தீயைக் கரியெனச்[2] செய் தேவ ரைவர் பின்றீ[3] மயலாம்
நோயைக் கரியென வுஞ்சாம் பராகவு நோக்குவரே.. (110)
உலகியலைத் தலைவன் மறுத்தல்.
எரிந்து வளர்ந்திடுந் தீச்சேரு மெல்லி னெரியவிக்கத்
தெரிந்து [4]சொன் னாலாழம் பார்த்துக் குலங்கல்லச் [5]செப்புதலாம்
பரிந்துயிர் யாவினுந் தோன்றும்பட் டீசர் [6] பனி வரையின்
பிரிந்த வெந்தீக்கு வரைந்து பின் கூடென்றால் பெய் வளையே.. (111)
பாங்கியஞ்சி யச்சுறுத்தல்.
அருளாளர் பேரையிற் பட்டீசர் வெற்பி னலரியொழிந் (து)
இருளாய்ச் செறிந்து தினியெம் பதிதனக் கேகுதும்யாம்
மருளா யெயினர் தினைப்புனங்காக்க வரிலுமை யோர்
பொருளா யறிந்திலர் [7]நும் பதிக்கேகும் புரவலரே.. (112)
தலைமகன் கையுறை புகழ்தல்.
வேதம் புகழ்ந்திடும் பட்டீசர் குன்றில்விண் ணோர் முதலா
ஓத வரிய பொருளிரண்டா மொன் றுடைக் கழகாம்
ஏது மிலாதுமெய்க் [8]கொன்றழ காம் நுண் ணிடைத்தனங்கண்
மீதணி வீரித் தழையுந் தரளமு மெல்லியரே.. (113)
பாங்கி கையுறை மறுத்தல்.
[9] தழையுந் தரளமுங் கொண்டிடிற் றாயருந் தந்தை யருங்
[10] கிழையும் [11]பிழை சொலுந் [12]தூறே விளையும் பங் கேருகத்தைக்
[13]கழையுங் களைவயல் பேரைப்பட் டீசர் கன வரையில்
[14]மழையுந் தருவு நிகரிறை யேயிது மாசெமக்கே.. (114)
தலைமகனாற்றா நெஞ்சி னோடவன் புலம்பல்.
தேடிக் கொணர்ந்து தழையுந்[15] தரளமுஞ் சேயிழையார்
நாடிக் கவர்ந்தில ரென்று நெஞ் சேயந்த நற்றழை போல்
வாடித் [16]தரள மணிபோ லுனது மதி வெளுத்துக்
கூடிக் கலங்கினை யாகும்பட் டீசர் குலவரைக்கே.. (115)
--------------------------
(பாட பேதம்.)
[1]. முடினும். [2]. செய்துண வரை. [3]. பின்றிமயலாம்.
[4]. சொன்னாணலம். [5]. செய்தின்பொற். [6].பனிவரைமின்.
[7].ரும். [8]. கொன்றழகா. [9]. தளையுத்.
[10]. கிளையும். [11]. பிளை. [12]. தாறே. [13]. களை.
[14]. மளை. [15].தழையுமணிந்திருவனையார். [16]. தரளமது.
--------------------------------
பாங்கி யாற்று வித்தல்.
நாட்டிற் புகழ்கொண்ட பேரைபட் டீசர் நளிர் வரை மேற்
தீட்டியிருந்த திலகப் பகவலன் செய்யதிரு
வீட்டிற் கதவம் விடும்போது வாவிவள் வீறுக்கரிக்
கோட்டினன் முத்து மிழையிற் றுழையுங் குறிப்படுமே.. (116)
பாங்கியையிரந்து குறைவறாது வருந்திய கிழவோன்
மடலே பொருளென மதித்தல்.
வேலைப் புவியிற் பிறந்திடு நோய்க்கிங்கு மேவி வளர்
சோலைத்தென் பேரைத் தலமருந் தாகுந் துலங்கியவான்
பாலைச் சொரிய வருளும் பட்டீசர் பனி வரையில்
மாலைக் குழலி தருங்காம நோய்க்கு மடல்மருந்தே.. (117)
பாங்கிக்குத் தலைமகன் மடலூர்தலை
யுலகின்மேல் வைத்துரைத்தல்.
அரும்பனை [1]யார்ந்திடும் பேரைப்பட் டீச ரணி வரையின்
சுரும்பனை யார்தருங் காமத்திற் காளையர் சூழ்ந்த வரை
இரும்பனை யாய் நெஞ்சிரங்காய் மலரம்பி னெய்வ னந்தக்
கரும்பனை வெல்லக் கரும்பனை யின் மடல் காட்டுவரே.. (118)
மடலூர்தலைத் தலைவன்மேல்[2] வைத்துக் கூறல்.
தணிந்தேனு [3]மேயின்று நாளைக் கெருக்கலந்தார் புயத்தின்
அணிந்தே மடலிவர்ந் தூர்ந்துவிண் ணோரு மரியயனும்
பணிந்தே புகழுந்தென் பேரைப்பட் டீசர் பனி வரையில்
துணிந்தே வரப்பெறு வேனது பார்த்திடுந் தோகையரே.. (119)
பாங்கி தலைமகள் அவயவத் தருமை சாற்றல்.
சுரும்பை யெழுதுவை மேக மெழுதுவை சூழ்தளவத் (து)
அரும்பை யெழுதுவை காந்த ளெழுதுவை யங்கதுபோற்
குரும்பை யெழுதுவை பேரைப்பட் டீசர்தங் குன்றிலஞ் சொற்
கரும்பை [4]யெழுதுவை யோ விறை வாவுன்றன் கைக்[5] கிழிக்கே. (120)
தலை மகன் தன்னைத்தானே புகழ்தல்.
தங்கச் சபை வளர் பேரைப்பட் டீசர் சயிலமின்னே
துங்கப் பணைமுலை யரளெழில் யாவையுந் தூய்தெழுதி
அங்கத் திரண்டு மதயானை தீட்டின தாலருகே
சிங்கத்தைத் தீட்டிடற் கையமுற் றேனது சிற்றிழையே. (121)
பாங்கியருளியல் கிளத்தல்.
நற்பனை தன்னை வடகயிலாயத்தெஞ் ஞான்று மன்னி
நிற்பனையாமல் வழுத்துப்பட் டீசர் நெடுங்கிரியிற்
பொற்பனை யார் தமைக் கூடுக வென்னிற் புலனறியா (து)
அற்பனைக் கைப்பிடிப் பாரோ விறைவ வருளியல்பே.. (122)
-----------------------------
(பாட பேதம்.) [1]. வாழ்ந்திடும். [2]. தலைமகன்தன்மேல்.
[3].தணிந்தேனுமை [4]. யேறதுவையோ. [5]. கிளியே.
--------------------------------
பாங்கி கொண்டுநிலை கூறல்.
பிறையே சடையி லணிந்த பட் டீசர் பெருங்கிரியில்
நறையே நிறை குழற் பைந் தொடி வாட் கண்ணி நட்பு மிகுந் (து)
இறையே யுனது குறை தீர்க்கு மன்றியுன் னெண்ண மிந்தத்
துறையே மடமொழி யா மட லூரத் துணிதனன்றே.. (123)
[1]பாங்கி தலைவற்குணர்த்தல்.
நிழலைப் பரப்பும் பிறையார்பட் டீசர் நெடுங்கிரியின்
மழலைமொழிமுலை தோன்றிலை நன்மலர் மாலைக்கின்னங்
குழலை வளர்த்தில் ளே யிறை வா மயில் கொள்ளுமிந்தத்
தழலை யின தென் றறியார்க்கு மால்கொளுந் தன்மை நன்றே.. (124)
தலைவன் றலைவிவருத்திய வண்ணமுரைத்தல்.
காட்டிடு நற்சுவை தேனிளம் பாகினுங் கண்ணின் விடம்
வாட்டிடு மேயிது[2] தீராத தென்னினு மன்னு நலங்
கூட்டிடும் பேரைப்பட் டீசர் செங் குன்றினிற் கோதை யின்பம்
ஊட்டிடும் பின்மயல் பூட்டுமின் னேயுங்க ளொண்டொடியே.. (125)
பாங்கி தலைமகள் செவ்வியருமை செப்பல்.
குறியாள் [3]கழங்கம் மனைகந் துகங்களைக் கூந்த லிற்றார்
அறியாண் முடிக்கச் சிறுமணற் சோறு மடாள் கமலம்
பொறியாள் சிறந்திடும் பேரைப் பட் டிசர் பொருப்பினெங்கள்
சிறியா ளவை யீண்டி யென் சொல்லும் வாறென்ன செப்புவதே (126)
தலைவன் தலைவி செவ்வியெளிமை செப்பல்.
மண்ணிற் புகழ் கொண்ட பேரைப்பட் டீசர் வரையிடத்திற்
பண்ணின் மொழியணங் கேயெந்தன் பேரினைப் பைந்தொடிக்கைங்
பெண்ணின் முனே சொலி லாரா வுவகை பெருக்கு மிரு
கண்ணின் முத்தேயென நீர் வரும் வாய் நகை காட்டிடுமே.. (127)
பாங்கி என்னை [4]மறைப்பின் எளிதென நகுதல்.
சீர்மாலை பூண்டிடும் [5]பேரைப்பட் டீசர் திகழ் வரையின்
மாமோதி யன்றிப் பழங் கொளு வாரில்லை மன்ன தருத்
தாமேவி [6]னன்றி நற் றண்ணிழ லில்லை தனிப் பெடையா
ளாமேவு கண்ணு முன் னெஞ்சு மறைத்திட்ட தாமெனையே.. (128)
அந்நகை பொறாதவன் புலத்தல்.
திகைக்கு மெனது மனமலர்க் காவியைச் சேர்ந்தெரிந்து
பகைக்கு மதனன்றிப் பண்மொழி யாண் முலைப் பங்கயத்தின்
முகைக்கு முருகிடும் பட்டீசர் வெற்பிலொண் மொய் குழலுன்
நகைக்கு மெனது மனம்படு[7] மாறு நவிலரிதே. (129)
------------------------------------
(பாட பேதம்.) [1]. தலைவியிளமைத் தன்மை பாங்கி தலைவற்குணர்த்தல்.
[2]. முதிர தென்றாயின் மன்னு. [3]. களங்கம். [4]மனனெளி நேகுற்
[5]. பட்டீசர் பேரை. [6]. தாணினாலன்றி தண்ணிழலில்லை தனிப்பம்.
[7]. படும்வாறு
--------------------------------------
பாங்கி தலைமகனைத் தேற்றல்.
மன்னா வருந்தல் தென் பேரைப்பட் டீசர் வரையிலிந்த
மின்னா ளிகுளையர் தங்களி லென்கண் விருப்பமுயிர்
அன்னா ளெனைப்பிரி யாள்விளை யாடுத லாயினுநான்
சொன்னா லதைமருக் காண்மகிழ் வாளென்ன சொல்லினுமே.. (130)
பாங்கி கையுறை யேற்றல்
தரையார் புகழுந்தென் பேரைப்பட் டீசர் சயிலநண்பா
உரையான் சொலக்கன்னி வாயாம்பல் சீற்றத்துடனுரைக்கும்
விரையார் கமல முகமு மகமும் விழியுமொரு
நிரையா மலர்ந்து நின்கையுறை கொள்ளென நீத்ததுவே. (131)
கிழவோனாற்றல்.
கிடையாத முத்துந் தழையுந்தரச் சொல்லிக்கேட்டு மனப்
பெடையாள் கைக்கீந்த வென்னானந் தந்தானது பேரையிற் செஞ்
சடையார் பட்டீசர் திருத்தாளிலே யித்தழையு முத்துந்
தொடையாயணிந்திடு மானந்தம் போலவுந் தோற்றியதே. (132)
இறைவன் தனக்குக் குறைநேர் பாங்கி யிறைவிக்கவன் குறையுரைத்தல்.
மானைத்தொடர்ந்தகலை போலும் வாசமலர் போதயும்
தேனைப் புகுமளி போலும் பட் டீசர் சிலம்பினெழின்
[1]மீனைப் பொருவும் விழியா யொரு வருற் றார் விளம்பார்
கோனைக் கடுப்பவராரோ சுழல்வர் தழை கொணர்ந்தே. (133)
இறைவி யறியாள்போன்று குறியாள் கூறல்.
தருக்கோடு தாக்கப் பொருதேரழிந்து சயிலத்தும்பர்
பெருக்கோடிவாரப் பலதரு நீழலும் பெய்துபவக்
கருக்கோடு தந்தவர் பட்டீசர் பேரையங் காவிலெண்ணில்
உருக்கோடு காட்டுதலின்றோ மின்னேயென்றுமுற்றுளதே. (134)
பாங்கி யிறையோர்க் கண்டமை பகர்தல்.
தேனையு மானு மொழியாய் பட்டீசர் சிலம்பினுந்தன்
யானையுமான தனம்பினை நேர்விழி யானெருனல்
மானையு மானையுங் கண்டிலரோ வென்று வந்தவந்தக்
கோனையு மின்று வரக்கண்டு கண்களி கூர்ந்தனனே. (135)
பாங்கியைத் தலைவி மறைத்தல்
ஏனமு மன்னமு மாய் [2]மாலயனு மிரு நிலமும்
வானமுந் தேடற் கரிதாம் பட்டீசர் வரையிலெம் மோர்க்கு
ஊனநெஞ் சாக வெனை நாடி யோர் மனுற் றானெனவே
நான மிகுங்குழ லாய் நவின் றாயென்ற [3]னாணழிந்தே. (136)
---------------------------------------
(பாடபேதம்) [1]. மீனைப் [2]. மாலுமயனும் [3]. றாணர்க்கே.
---------------------------------------
பாங்கி என்னை மறைத்ததென் னெனத்தழால்.
நஞ்சை யொளிக்கும் மிடற்றார்பட் டீசர் நளிர்வரையின்
மஞ்சை யொளிக்குங் குழலாய்நற் புதங்கள் வாழ்வதிலே
யஞ்சையொளிக்கும் வினையிலையால் உன் அரியவினை
நெஞ்சை யொளிக்கும் ஓர் வஞ்சகம் போலெனை நீத்தனையே. (137)
பாங்கி கையுறை புகழ்தல்.
உடுநேர்தரள் முலைக்கெழில் வெய்யவ னூர்ந்திடு தேர்க்
கிடுவாம் பரி நிற மென்றழையுன்றனிடைக் கழகாங்
கடுநேர் விழிமடவாய் நண்ப ரீந்ததைக் காண்கிலையேல்
வடுவாமிருவர்க்கும் பேரைப்பட் டீசர் வரையிடத்தே.. (138)
தோழி கிழவோன் துயர்நிலை கிளத்தல்.
காவினுறுங் குயில் தன்னுயிர்ப் பேடையைக் காத்தளித்தே
மாவிளந்தண்ட ளிர்க்கோதி யளிக்க மதனையனல்
தூவியளித்திடும் பட் டீசர் குன்றினிற்றூயவன்பர்
ஆவிமெலிந்திடப் பார்த்துயிரா நிற்ப ராயிழையே. (139)
தோழி தலைமகன் மறுத்தற்கருமைமாட்டல்.
தேனு முருகுந் ததும்பிய நன்மலர் சேர்ந்து வளர்
கானு முருகுமிக் கான்வாழும் புள்ளுங் கலையுமெழின்
மானு முருகுந்தென் பேரைபட் டீசர் வரையிறைவர்
ஊனு முருகும் படிநின்ற வாட்டங்கண் டொண்டொடியே.. (140)
தோழி தலைவன் குறிப்பு வேறாக நெறிப்படக் கூறல்.
துறவார் தமக்குந் துறந்தோர் தமக்குமுன் சூழ்வினையிற்
பிறவா நெறிதனைக் காட்டும்பட் டீசர் பெருங் கிரியின்
நறவார் மருக்குழ லாயருங் காம நலம் விளைக்க
இறவாப் பனைதனக் குண்டதென் றாரன்ப ரெண்ண மென்னோ. (141)
தோழி தலைவியை முனிதல்.
நீறாக முப்புரந் தன்னைச் சிரித்தவர் நேரிழைதன்
கூறாக நின்றவர் பட் டீசர் குன்றிலென் கோதில்மனம்
வேறாக வெண்ணுவை யேலடியேன் சொலு மெய்யுரைகள்
மாறாகு மாகிற் பொறுப்பாய் பிழையினை வாணுதலே.. (142)
தலைவிபாங்கியை முனிதல்.
நல்லாய் கிளைகளுற் றோருல கோர்சொன் னவையிலதாய்
வல்லா யெனினுமிம் மாற்றஞ் சொன்னாய் விண்ணுமண்ணுமுள்ளார்
எல்லாம் பணியுந்தென் பேரைப்பட் டீசர்குன் றெய்து நண்பர்
சொல்லாய் புகர்தலுனக்கலதெற் கென்ன தூயதன்றே.. (143)
தலைவி பாங்கி கையுறை யேற்றல்
பன்னாளு மோருயிர் காப்பவளவயிர்ப்பங்கம் பன்னாள்
அன்னாளுயிர்க்குத் துயர் தரிற் றீவினை யானதன்னாள்
முன்னாள் மதனை யெரித்தப்பட் டீசர் முதுகிரியின்
சின்னாணன் முத்துந் தழையும் வினைதரி லென்னமின்னே.. (144)
இறைவி கையுறை யேற்றமை பாங்கி யிறைவர்க் குணர்த்தல்
ஏராரும் பேரைப்பட் டீசர்வரையி லிறைவன்றன்
சீராருங் கையுறை கண்டு கைகூப்பித்தன் செங்கை பற்றிக்
காராருங் கூந்தலின் மீதே யணிந்து மெய்க்கண்ணில் வைத்தும்
வாராருங் கொங்கையில் வைத்தன ளேயந்த வாணுதலே.. (145)
பாங்கிதலை மகற்குக் குறியிடங் கூறல்.
செந்தா மரையுங் குவளையுமாம் பலுந் தேனளிகள்
வந்தார வுண்ணுந்தென் பேரைப்பட் டீசர் வரையினிலே
கொந்தார் கடிமலர்ச் சோலையி னாப்பண் குலாவியிடு
நந்தா வனமது யாம்பக லாடிட நாயகனே.. (146)
பாங்கி குறியிடத்திறைவியைக் கொண்டு சேறல்.
துடிநேரிடை துவளாவிருட் கூந்தல் சொருக்கவிழா
பிடிநேர் நடையினு மென்னடை யாகிப் பிரசமுறுங்
கடியார் மலர்பறித்தே விளையாடவுங் காவிற் செல்வோம்
அடியார் பணிந்திடும் பட் டீசர் குன்றி லணியிழையே.. (147)
பாங்கி தலைமகனைக் குறியிடத்துய்த்து நீங்கல்.
வண்டார் குவளையு மாம்பலுந் தான்விழி வாய் வனப்புக்
கண்டாற் சுனையி லொளிக்குங்கண் டாய்நற் கவிப்புலவோர்
கொண்டாடிப் போற்றிடும் பேரைப்பட் டீசர் குலவரையில்
தண்டார் குழலணங் கேநிற்பை யான்மலர் தந்திடவே.. (148)
நீங்குந் தோழி தலைவர்க்குணர்த்தலும் வரப்பேறும்.
பண்ணிய தோர்தவ முற்றிடச் செய்துமிப் பாரிலன்பால்
எண்ணிய நற்பொருள் கைசேரச் செய்யும்பட் டீசர்வெற்பா
பெண்ணிய லாட்குயி ராகி யுனக்குயிர்ப் பேதையுமாம்
புண்ணிய நீயவ ணற்பல மாகப் பொருந்துகவே.. (149)
இறைவி இறையோனிடத் தெதிர்ப்படுதல்.
தாரூருங் கூந்தலும் வாரூருங் கொங்கையும்[1] தாங்கித்தந்து
நேரூ ரிடையெனைப் போலே வருந்த நிருத்தமென்றும்
பேருரீன் மன்றத்துச் செய்யும் பட் டீசர் பிறங்கன் மின்னே
சோரூரு மென்மய லாற்று தற்கோவிங்குத் தோன்றியதே.. (150)
-------------------------------------
(பாடபேதம்) [1]. தாங்கியிளை
-----------------------------------------------
புணர்ச்சியின் மகிழ்தல்.
சூழ்போதி வாழுந்தென் பேரைப்பட் டீசர் சுடர்க்கிரியின்
வாள்போன் றிடுங்கண்ணி தந்த சுகானந்த வாரியிலே
வீழ்போவென் றேயெனைக் கூட்டுமுன்னாள் செய்த மெய்த் தவமாம்
ஊழ்போகந் துய்க்கவுஞ் செய்திதழ் வாயமு தூட்டியதே,. (151)
புகழ்தல்.
திங்களென் போமெனிற் றிங்களின் மாசு தெரிந்திருக்கும்
பங்கயந் தானெனிற் கங்குற் குவியப் படும் வயலிற்
சங்க நிறைந்திடும் பேரைப்பட் டீசர் தடங்கிரியிற்
செங்கமலத் திரு வன்னாண் முகத்திணை செப்பரிதே,. (152)
தலைமகளைத் தலைமகன் விடுத்தல்.
தன்னேரி லாதவர் பேரைப்பட் டீசர் சயில மின்னே
பொன்னே நவமணியே யெனதாருயிர்ப் பூங்கொடியே
என்னேயம் பூண்ட வனமயிலேநும் மிணைபிரியாச்
சென்னேர் குழலியொடு முங்க ளாயத்திற் சேருகவே. (153)
பாங்கி தலைவியைச் சார்ந்து கையுறை காட்டல்.
கோங்கி னரும்புங்குவளை மலருங் குமிண் மலரும்
பூங்க மலத்திருவே கொணர்ந் தேனிவை பொற்பணிகள்
தாங்கு முலைக்கும் விழிக்குநன் னாசிக்குந் தான்மருளார்
ஓங்கும்படி கைப்பிடியாய்பட் டீசருயர் வரைக்கே.. (154)
பாங்கி தலைவியைப் பாங்கிற் கூட்டல்.
மனம்போம் வழியை மறுக்கவதன் பின்னர் வணங்கச்செய்யு
மினம் போதி சூழுந்தென் பேரைப் பட்டீசர் வெற் பேந்தி ழையே
கனம் போற் குழலின் மலரணிந் தாயிங்கு காண்ப தென்னோ
[2]வனம் போலினி[3] நமதாயஞ் சென் றேவிளையாடுதுமே.. (155)
பாங்கி தலைவியை நீங்கி யோம்படை சாற்றல்.
தோரண வீதியும் வானிமிர் போதியுஞ் சூழ்ந்து நின்ற
யாரணமே வளர் பேரை பட்டீச ரணிவரையின்
காரணமாகச் சுழன்றது மன்ன கருத்திலுன்னேல்
நாரணனுந் திருப் போலவு நீயுமின்னாரியுமே.. (156)
பாங்கி தலைவனை யுலகியன் மேம்பட விருந்து விலக்கல்.
பாரும்விண் ணோரும் புகழ்ந்திட வேவளர் பண்மொழியை
சேரும்பட் டீசர்முன் வேடெரச் சிற்படுஞ் சீர்த் தசைக்கும்
நேருங்குருகிடு மப்படி யாமுந்த நேசத்தினால்
வாரு மிறையவ ரேபேரை வாழெம் வரைப் பதிக்கே.. (157)
----------------------------------------
(பாடபேதம்) [1]. அனகம் போலினி [2]. நமதாயஞ்
-----------------------------------------
தலைமகன் விருந்து விரும்பல்
பேறு முகந்தருள் பேரைப்பட் டீசரும் பேரரவைச்
சீறு முகமயிற் சேவ்வெளு-நும்மூண்டி செய்யவந்து
மாறு முகம்படைத் தாரடியேன்வந் தருந்தின் மின்னே
நூறு முகம்படைப் பாரொன்னலாரெணி நொய்தினிலே.. (158)
கிழவோனைப் பிரிந்துழி கிழத்தி மாலையம் பொழுது கண்டிரங்கல்
வருத்துமிம் மாலை யெனவறிந் தேனில்லை வாழ்பதத்தில்
இருத்து மடியரைப் பேரைப்பட் டீச ரெழிற் கிரியின்
ருத்து மலர்க்குழலாயுயிர் போலெனைச் சேர்ந்துமெந்தன்
கருத்துண ரன்பர் பிரியா திருந்திடுங் காவையிலே.. (159)
பாங்கி புலம்பல்
விரும்பு மடியரைக் காக்கும் பட் டீசர் வியன் கிரியில்
இரும்பு மனத்தரி லன்பர் பிரிந்திந்த வேந்திழையைப்
பெரும்புனத்தின் மதன் கைக்குரை யென்றிடப் பேசிலன்றோ
கரும்புஞ் சுரும்பும் அரும்பும் கொண்டெய்யக் கருதினனே. (160)
தலைவனை நினைந்து தலைவி வருந்தல்
வாட்ட மிகத்தரு ஞ்செல்வர் நம்மாலை வழக்கழித்து
ஈட்டங் கதிர்செவ் வரியினைச் சூட்டிய தேவிசும்பாம்
ஆட்டம் புரிந்திடும் பேரைப்பட் டீச ரணிவரைமே
னாட்டஞ் சிறந்து வராததென் னோபுக நன்னெஞ்சமே.. (161)
தலைவியைப் பாங்கி கழறல்.
இங்கய லாரென வாரார்நம் மன்ப ரெனவுருகேல்
வெங்கயந் தன்னை யுரித்தபட் டீசர்தம் வெற்பின் மின்னே
மங்கைய ரியார்க்கும் பிரிவும் புணர்ப்பும் வகுத்திடுதல்
பங்கயத் தோன்றோழி லல்லா தொருவர்கைப் பட்டதன்றே.. (162)
தலைவி முன்னிலைப் புறமொழி மொழிதல்.
பொருங்காம னல்லும் பகலுந் தொடுத்தெய்யும் பூம்பகழிப்
பெருங்காம நோயையுற் றாரறி வார்கள் பெறாரறியார்
அருங்காமக் கோட்டத்தி பாகர்பட் டீச ரணிவரையின்
வருங்காமர் சோலைக்க ணார்க்குரைப் பேன்என் மனக்குறையே. (163)
தலைவி பாங்கியோடு பகரல்.
ஓங்கும் புணர்ப்பிலின் பந்தரு மன்பர்கை யோர்நிமிடம்
வாங்கும் நெகிழவெண் ணாருயிர் வாடிடு மங்கையையோர்
பாங்குவைத் தாளுந்தென் பேரைப்பட் டீசர் பனிவரையில்
எங்கும் பணியன்பர் நீங்கவந் தாரில்லை யேந்திழையே.. (164)
தலைவியைப் பாங்கி யாற்றுதல்.
அம்மனைச் சேர்ந்தின் புறநினைந் தாயுயிர் யாவும்பெற்ற
அம்மனைப் பங்கினர்பட் டீசர் வெற்பி லணியிழையே
அம்மனை யாடல் தினைப்புனங் காவல்விட் டாயினிதை
அம்மனை யாள்சற் றறிந்தாற் பழிநமக் கானதுவே.. (165)
நீங்கற் கருமை தலைவி நினைந்திரங்கல்.
தன்னுயிர் போலெவ் வுயிரும் புரந்திடத் தாங்கிவந்து
உன்னுயி ராய்வரும் பேரைப்பட் டீச ருயர்வரையின்
மன்னுயிர் தன்னதி லென்னுயிர் சேர்த்திய வண்கமலன்
என்னுயிர் காக்க வுடலுமொன் றாத விசைத்திலனே.. (166)
தலைவிக் கவன்வரல் பாங்கி சாற்றல்.
மணியே யொலிப்பது கேட்டருள் வாயென்றன் வாண்மலர்க்கண்
மணியே யெனவாதலாய்தரை மன்னுசிந்தா
மணியே யெனவளர் பேரைப்பட் டீசர் வரையிற்றெய்வ
மணியே களிப்பரி யூரன்பர் தேரின் வரவிதுவே.. (167)
தோழி சிறைப் புறமாகத் தலைவற்குச் செறிவுறுத்தல்.
விரும்பு மெயினர் தினைப்புனம் நாளைக்குமே விடக்கடன்
இரும்புகொண் டேகுது மென்றா நிறைவர் நம் மேந்திழைகோங்
கரும்புங் கண்ணீர் முத்தரும்பு மொன்றாக்கின ளாற்கமுகுங்
கரும்புஞ் செறிவயல் பேரைப்பட் டீசர் கனவரைக்கே.. (168)
தோழி சிறைப்புறமாகத் தலைமகற்குச் செறிப்பறி வுறுத்தல்.
துன்ப மொடிபடச் செய்தபட் டீசர் சுடர்க்கிரியின்
என்பகர் வேன்மயில் காள்கிள்ளை காள்தினை யின்றுகொய்தார்
இன்பஞ் சிறந்திடு மேந்திழை யாளையு மென்னையுநல்
அன்பர் மறப்பினு நீர்மற வீரெம தன்புகண்டே.. (169)
பாங்கி தலைமகள் முன்னின்று செறிப்பறிவுறுத்தல்.
நீலமு நேர்விழி யாள்புனங் காவலு நீதிதன்மேல்
ஓலமு நீத்தென் பதிக்கே குதுமானு மொண்மழுவுஞ்
சூலமு மேற்றவர்பட் டீசர் வெற்பிலத் தோகையநு
கூலமு நீர்மற வாதிருப் பீரெங்கள் கொற்றவரே.. (170)
பாங்கி தலைமகன் முன்னின்று செறிப்புணர்த்தி யோம்படை சாற்றல்.
மாமன் சிரத்தைத் துணித்து சமனை வலங்கெடுத்து
காமனைக் காய்ந்திடும்பட் டீசர் வெற்பினங் காவலரே
பூமனை யாளக லாதுறு மாறும் புனிதமுகச்
சோமனை நம்பதிக் கேவிடு விரன்பு சொல்வதற்கே.. (171)
தலைமகன் தஞ்சம் பெறாது நெஞ்சொடு கிளத்தல்.
கனமே பொருவுங் குழலார் தினைப்புனங் காவலின்றி
அனமே யெனநடந் தார்க்கேக நீயு மவர்பிறகே
மனமே தொடர்ந்தனை யான்றனித் தேன்மெய் வரிஞர்க்கென்றுந்
தனமே யெனவளர் பேரைப்பட் டீசர் சயிலத்திலே.. (172)
இறைவனைப் பாங்கி குறிவரல் விலக்கல்.
காயத் திருவினை யாவும் பவத்துக் கருக்குழியும்
மாயத் தொலைத்தருள் பேரைப்பட் டீசர் வரையிறைவா
தூயத் தினைப்புனம் நீங்கிமின் னாள்பதி சூழிலங்கள்
ஆயக் குழாமு முறும்பல கால்வரு மன்னையுமே.. (173)
பாங்கி யிறைவியைக் குறிவரல் விலக்கல்.
கஞ்சஞ் செறிவயற் பேரைப்பட் டீசர் கனவரையின்
நஞ்சம் பொதியும் விழியணங் கேயுன் னகிலமதில்
வஞ்சம் பொறித்த பசலையு நாணு மதித்துணர்ந்து
நெஞ்சம் புழுங்கி நகைத்தாள் நம் மன்னை நெடிதுயிர்த்தே.. (174)
இறைமக ளாடிடம் நோக்கி யழுங்கல்.
பரையோர்பங் கானவர் பேரைப்பட் டீசர் பனிவரையும்
விரைசேர் பொழிலுஞ் சுனையுஞ்சிற் றில்லும் வியந்துபன்னாள்
நிரையாக வென்னுட னேவிளை யாடியு நீத்ததின்று
தரைமேன் மருவிப் பிரிபவர் யாருந் தறுகணரே.. (175)
இறைவியைப் பாங்கி யாடிடம் விடுத்துக் கொண்டு அகறல்.
காலாற் சமனை யுதைத்தப்பட் டீசர் கனவரையின்
பாலா மெனப்பகர் பைங்கிளி காளன்பர் பண்பினுற்றுச்
சேலாம் விழிமட வாள்செல் வழியேது செப்புமென்னில்
மாலாகி யேசங்கு மாழியுங் கண்டு வரச்சொல்லுமே.. (176)
பண்ணெடுந்தகை குறிவையி னீடு நின்றிரங்கல்
காரோதி யார்பொழில் நீங்கிச்சென் றாரென்று கண்டெமக்கு
நீரோதி னீரில்லை யென்னசெய் வேனந்த நேசமிகும்
சீரோர்ந் திடுங்கிளி காள்பட்டி நாதர் சிலம்பிலும்மை
யாரோ வுரைக்கலி ரென்றதன் றோமறப் பானதுவே.. (177)
தலைமகள் வருங்கள நாடி மருகல்.
அனையாகி யுந்தந்தை யாகியுங் காலனுக் கஞ்சலென்றே
எனையாண் டருளுந்தென் பேரைப்பட் டீச ரெழில்வரையின்
நனையே செறிமலர்ச் சூழலில் வாழ்ந்திடு நாரியையென்
வினைபோ யகற்றத் தினையே யொழிந்த விதிப்பயனே.. (178)
தலைமகன் தலைமகள் வாழுமூர் நோக்கி மதிமயங்கல்.
தானவ ராலும் புகவரி தாய்வலி தாங்கிமிகக்
கானவ ரூருங் காரிகை யார்நலங் காண்பதற்கு
யானவ ரூர்க்கினிச் சென்றிடு மாறெங்ங னெப்பொழுதும்
வானவ ரேதொழும் பேரைபட் டீசர் வரையிடத்தே.. (179)
இறை யோனிருட்குறி வேண்டல்.
அருளே செறிந்திடும் பேரைப்பட் டீச ரணிவரையின்
பொருளே யெனச்செந் தினையோங்கி வாழ்ந்த புனத்தின் முன்னான்
மருளே சிறந்திரண டம்புங்கொண் டோடிடு மானைப்பற்றி
இருளே பகலினு நன்னலங் காட்டிடு மேந்திழையே.. (180)
பாங்கி நெறியின தருமை கூறல்.
அரியும் பசிக்குக் கரிதேர்ந் துலவு மரிதனக்குக்
கரியும் பயந்து திரியுநல் லன்பரைக் காக்கவருள்
புரியுந் தென்பேரைப் பட் டீசர் வெற்பின் பொழிற்கணெங்கும்
விரியுங் கருங்கங்குல் வாயண்ண வேரல் விள்ளரிதே.. (181)
இறையோன் நெறியின தெளிமை கூறல்.
இக்காவி லெங்கு மிருகப் பயமுள தென்றமின்னே
நெக்கா விலங்கல் வளைத்தபட் டீசர் நெடுங்கிரியில்
தக்கா விலங்குந் தளர்ந்தோடும் யான்செலச் சார்ந்தநெறி
புக்கா விலங்குங் கதிருமிழ் வேல்கண்ட போதினிலே.. (182)
பாங்கிய வனாட்டணியியல் வினாதல்.
பனையும் மரச வனமுங்கண் டேதொழப் பாசமுற்றும்
வினையுந் தொலையுந்தென் பேரைப்பட் டீசர்தன் வெற்பிறைவா
வனையும் மலருந் துகிலும் பயிலிட மும்மதித்துப்
புனையும் பணிபகர் வாயுங் கணாட்டிளம் பூவையர்க்கே.. (183)
[1]தலைவன் தலைவியின் நாட்டணி வினாதல்.
விரும்பியெண் ணீயெங்கள் நாட்டணி கேட்கவு[2] மேன்மைதவ
மரும்பிய தென்ன [3]முறுவன்மின் னேயடி யார்பவத்தில்
திரும்பி வராம லருளும்பட் டீசர் செழுங்கிரியின்
கரும்பி னிசையுந் தனாட்டணி யாவதுங் கன்னியர்க்கே.. (184)
பாங்கி யவர்க்குத் தன்னாட்டணியியல் சாற்றல்.
ஆடையும் பைந்தழை யாரமும் வேய்முத்த மாடுவனீ
ரோடைமெய் பூசுவ தேயகி லாமல் ரூடுருவி
வாடையுலாவிய பேரைப்பட் டீசர் வரையிறைவா
தாடை யிலேயரி தாரமின் னாட்டணி தையலர்க்கே.. (185)
-----------------------
(பாட பேதம்.)
[1]. தலைமகன். [2].மென்றவை. [3]. முறுவல்.
--------------------------------
பாங்கி தலைமகட்குத் தலைமகன் குறியறிவுறுத்தல்.
செங்குழு தச்செழுந் தேனினை வண்டுணச் சேர்பொழுதின்
இங்குவந் தின்கும் தத்தேன ருந்தா வியைந்தனர்பெண்
பங்குவைத் தேவகளர் பட்டீசர் பேரைப் பனிவரையிற்
கங்குலை நேர்குழ லாயென்சொல் வேனந்தக் காவலாக்கே.. (186)
நேராதிறைவி நெஞ்சொடு கிளத்தல்.
காய்ந்திடு சீயங் களிறு நிரம்பிய கானகமை
தோய்ந்திடு கங்குலி னண்ணவெவ் வாறிங்கு சூழ்வர்பவ
மாய்ந்திடச் செய்யுந்தென் பேரைப்பட் டீசர் வரையின்மின்னாள்
எய்ந்திடு மாகில் நெஞ்சே யன்பர் மேவ லிசைதலன்றே.. (187)
தலைமகணேர்ந்து பாங்கியோடு ரைத்தல்.
கலையார் பிறையும் நதியுந் தரித்தவர் கம்பமதக்
கொலையானை வென்றவர் பேரைப்பட் டீசர் குலவரையின்
வலையாகச் சூழ்ந்திடு கங்குலி னன்பர் வரவுமுகிண்
முலையா யிசைந்தனை யான்வே றுனக்கு மொழிவதென்னே.. (188)
தலைமகணேர்ந்தமை பாங்கி தலைவர்க் குணர்த்தல்.
நன்னா வலர்புகழ் பேரைப்பட் டீசர் நளிர் வரையின்
இன்னா ளிரவுக் குறியை யுணர்த்தி யிசைவதற்கு
மின்னாள் பதத்திற் பணிந்துப சாரம் விளம்பினதைச்
சொன்னா லதுதொலை யாதண்ண லேயினிச் சொல்வதன்றே. (189)
பாங்கி தலைமகனைக் குறியிடத்து நிறுத்தி வந்ததாய் துயிலறிதல்.
விடஞ்சேர் களத்தர்தென் பேரைப்பட் டீசர் வியின்கிரியின்
வடஞ்சேர்ந் திலங்குந் தனக்கொடி யேயன்னை மருமுன்போல்
இடஞ்சேர்ந் தமளியி லேதுயி லாமிவ் விடையிருள்வாய்
கடஞ்சேர்கை மாவென்று கொல்லைக் கரும்பைக் கவர்வதுவே. (190)
பாங்கி தலை மகட்குத் தலைமகன் வரவறிவித்தல்.
[1]கற்றார் புகழ்ந்திடும் பேரைப்பட் டீசர் கனவரையின்
முற்ற முகிண்முலை யாய்நங் கடிமனை முன்றினில்வந் (து)
உற்றா ரசோகந் தழைகொணர்ந் தார்மனத் துன்னையென்று
நற்றா ரகலந் தழீஇயக லாது நயந்தவரே.. (191)
பாங்கி தலைமகளைக் குறியிடத்துக் கொண்டு சேறல்.
என்பு முருகுமெய் யன்பரைக் காக்க இசைந்துமவர்
முன்புவந் தீண்டிடும் பேரைப்பட் டீசர் முதுகிரியின்
அன்புமுன் னேசெல்லு மந்நெறி நாடி யதன்வழியே
பின்புசெல் வோமன்பர் தம்மை யெதிர்கொளப் பெண்ணணங்கே.. (192)
-----------------------------
(பாட பேதம்) [1]. கற்றார் என்பது காணப்படவில்லை.
------------------------------
பாங்கி தலைமகனைக் குறியிடத்துய்த்து நீங்கல்.
பாதாம் புயஞ்சிவப்புர விருளிற் பரவையின்பால்
தூதாய் நடந்தவர் பேரைப்பட் டீசர் சுடர்க்கிரியின்
காதாருங் கண்ணியுன்வாயி னியல்பிலைக் காதலிக்குஞ்
சேதாம் பறந்திரு வேனிங்கு நீ நிற்வை தேப்பொழிற்கே.. (193)
தலைமகன் தலைமகளைக் குறியிடத் தெதிர்ப்படுதல்.
உய்ய வரந்தரும் பேரைப்பட் டீச ருயர்வரையிற்
செய்ய கமலத் திருவேநும் மில்லந் திறப்பதற்கு
வெய்ய வனில்லையிக் கங்குல்வந் தீர்விர தாக்கினியே
எய்ய மதன்வெய் யவனே யெனுமும் எழிற்கடைக்கே.. (194)
தலைமகள் ஆற்றினது அருமை நினைந்து இரங்கல்.
அரவும் புலியுங் கரியும் செரிந்த அடவியிலே
இரவும் பகலும் தெரியாஇந் நேரத்திலென்பொருட்டாய்
வரவும் உனக்குத் தகுமோ நல்லன்ப சொல்வானவர்கள்
பரவுந் தொழுதெழும் பேரைப் பட்டீசர் பணிவரைக்கே.. (195)
தலைமகன் தலைவியைத் தேற்றல்.
நஞ்சு மிடற்றர்தென் பேரைப்பட் டீசர் நளிர்வரையின்
மஞ்சு நிகர்த்த குழல்மட வீரென் வழித்துணையாய்க்
கொஞ்சு மொழிமட வார்படை யோடுங் குனிவிலம்பது
அஞ்சு மெடுத்தெந்தன் கூடவந் தானந்த வங்கசனே.. (196)
புணர்ச்சியின் மகிழ்தல்.
சேலாம் விழியுமை பாகர்பட் டீசர் சிலம்பினரு
நூலாங் குரைத்திடுஞ் சாலோக [1]மென்ன நுவன்றிடுமந்
நாலாம் பதத்தினிவ் வின்பங் கிட்டாத தின்னகுயர்ந்த
மேலாம் பதத்துறு மின்பம்பெற் றேனெந்தன் மெய்யகத்தே.. (197)
புகழ்தல்.
நடம்புரிந் தேமகிழ் பேரைப்பட் டீசர் நளிர்வரையின்
விடம்பயில் கண்களு நஞ்சுமிழ்ந் தூர்ந்திடும் வீறரவின்
படந்திக ழல்குலும் விண்ணோ ரமுதைப் பழித்திடலாற்
கடஞ்செறி கொங்கைமின் னாள்வா யமுதமென் காட்டிடுமே.. (198)
தலைமகனைத் தலைமகள் குறிவரல் விலக்கல்.
பொறியா டரவப் பணியார்பட் டீசர் புகழ்க்கிரியி
னெறியா வையுமில் விருளே விழுங்கிடு நீள்வனத்தைக்
குறியாதென் னண்பகல் நீரிங்கு வாரற்க கூறவொன்று
மறியாள் சொன் னாளென்றெண் ணாதே வருதல் அழகல்லவே.. (199)
-----------------------
(பாடபேதம்). [1]. முன்ன நுவன்றிடும்.
-----------------------
தலைமகன் தலைமகளை இல்வயின் விடுத்தல்.
சைவ ருமைபங்க சங்கர வென்னத் தவப்பயனே
கைவரு மாரருள் பேரைப்பட் டீசர் கனவரையின்
மைவரும் கண்ணிற் றுயிலுறுவாமன் மலர்த்திருவே
மெய்வவருந் தாதுந்த னன்னையின் முன்னநீ மேவுகவே.. (200)
பாங்கி தலைமகளை யெய்திக் கையுறைகாட்டல்.
முடியார்ந்த கொன்றையர் பேரைப்பட் டீசர் முதுகிரியிற்
படியார்ந்து தேடினு மிம்மலர் போலில்லை பைங்கொடியுந்
துடியாரு நுண்ணிடைத் தோகையரே யிந்தச் சூழலிற்போய்க்
கடியார் செங்காந் தள்கொணர்ந் தேனிதுவுந் தன்கைக்கிணையே.. (201)
பாங்கி தலைமகளை யிற்கொண்டணைதல்.
ஆடியும் பாடியு முள்ள முருகுமெய் யன்பர்தமைத்
தேடி யருளருள் பேரைப்பட் டீசர் சிலம்மின்மின்னே
நீடிய கங்குலி லன்னை விழித்து நெடிதுணர்ந்து
நாடிய போது சென் றாபழி பூணு நடந்தருளே.. (202)
பாங்கி பின்சென்று தலைமகனை வரவுவிலக்கல்.
[2]செல்லார் நறும்பொழிற் [3]பேரைப்பட் டீசர் திகழ்கிரியி
னல்லார் குழலினைப் புல்லா வரலுன் னகமகிழ்ந்து
மல்லாருந் திண்புயத் தாயினி மேலுன் வரவிசையாப்
பொல்லா தவளன்னை கண்டுயி லாள்கங்குற் போதினுமே.. (203)
தலைமகன் மயங்கல்.
கரும்புங் கனியி னிரதமுந் தேனுங்கற் கண்டு மென்ன
விரும்பு மனதுமின் னாடரும் போக மிதவையிலோர்
துரும்பு கிடந்தெனப் பாங்கி தடுத்தசொல் தூயவெல்லாந்
தரும்பு வனத்திடைப் பேரைப்பட் டீசர் சயிலத்திலே.. (204)
தோழி தலைமகள் துயர்நிலை கிளத்தல்.
பலியை யிரந்தவர் பேரைப்பட் டீசர் பனிவரையின்
வலியை வனப்பைப் புனைபுயத் தோயிவ் வனத்திருள்வாய்
புலியைக் களிற்றை யகற்றிநும் மூர்புகும் போதுவெற்றி
யொலியை யுணரி லுயிர்பெறு மேயிந்த வோவியமே.. (205)
தலைமகட் புணர்ந்த தலைமகன் சேறல்.
தேனார் பொழில்வளர் பேரைப்பட் டீசர் சிலம்பிலெந்த
னூனார் மதியொன்று மின்னாண் முகமதி யொன்று மென்னைக்
கானார் பதியில் வரச்சம்மதியொன்று [4]கண்டு [5]நம்மூர்
போனா லிதுமதி யோவிருள் பொங்கிடும் பூங்கொடியே.. (206)
---------------------------------
(பாடபேதம்). [1]. சைவரும். [2].’நறும்’ என்பது காணப்படவில்லை.
[3]. வளர் என்பது உள்ளது. [4]. கண்ண - என்றும் பாடம்.
[5]. தெம்மூர் - என்றும் பாடம்.
------------------------------------
இறைவிக்கிகுளை யிறைவரவுணர்த்தல்.
அயிலு நிறத்த விழிமட வாய்நல் லணிபலவு
மெயிலுஞ் சிறந்ததென் பேரைப்பட் டீச ரெழில்வரையிற்
பயிலு நமது பதிமு னசோகப் பனையினுறுங்
[1]குயிலுந் துயிலா திடையே வருந்தும் குடம்பையிலே.. (207)
தான்குறிமருண்டமை தலைவி பாங்கிக் குணர்த்தல்.
வந்தித் திடும்விண் மகபதி யுந்திரு மாலுமம்மா
லுந்திக் கமலனும் பேரைப்பட் டீசர்த மோங்கன்மின்னே
முந்திக் கலந்த குறியெனச் சேர்ந்திந்த மொய்யிருள்வா
யந்திப் பொழுது மலைந்தேன்கண் டேனில்லை யன்பரையே.. (208)
குறிபிழைத்தலுந் தலைவரப்பேறும்.
பண்படுஞ் சொல்லியிக் கங்கு லினகுறி பார்த்தயர்ந்து
புண்படு நெஞ்சின ளாய்த்தன் கடமனை புக்கனளென்
றெண்படும் பேரைப்பட் டீசர் வரையன்பரிங்குவந்தால்
விண்படுங் கானினங் காண்மறவாது விளம்புவிரே.. (209)
பாங்கி தலைவன் தீங்கெடுத்தியம்பல்.
பாரி லறிஞர் வழுத்தற்கெட்டாத பரம்பெருள்சே
ரூரி லுயர்ந்ததென் பேரைப்பட் டீச ருயர்வரையிற்
போரில் வலியதிண் டோளன்ப ரின்றிங்குப் பொய்த்தகுறி
தேரி லிவர் நெஞ்சங் கல்னெஞ்ச மானது சேயிழையே.. (210)
தலைமகன் புலந்து போதல்.
பன்னா ளரியன் போற்றுந்தென் பேரைப்பட் டீசர்வெற்பின்
மின்னார் பொருட்டின் வருவதற் காக விரும்புதற்கு
முன்னாளின் யான்செய்த வினைமூட்ட நன்னெஞ்ச மேமுயன்றும்
இன்னா ளிரங்கற் குறிபார்த் தயர்ந்ததை யென்சொல்வனே.. (211)
பிரிந்தபின் வருங்களந் தலைவி கண்டிரங்கல்.
தனத்திற் சிறந்ததென் பேரைப்பட் டீசர் சயிலத்திற்றைத்
தினத்திற் றுணைவரைக் கண்டதுண் டோவிடை சேர்ந்தொசியக்
கனத்திற் சிறந்த கனியாகுங் கொங்கை கவினுமென்போன்
மனத்திற் பெருமை யலாயினை யோபகர் மாமரமே.. (212)
தலைவி பாங்கியோடுரைத்தல்.
காய்ந்திடுங் கூற்றை யுதைத்துப் புரத்தைக் கனலிலிட
வேய்ந்திடும் பேரைப்பட் டீசர் வரையி னிகுளைநல்லாய்
வாய்ந்திடு நீல மலர்த்தொடை தூங்கிடு மாதவியை
யாய்ந்திடி னன்பர்வந் தாரென லாமிவ் வடவியிலே.. (213)
-------------------------------
[1]. குயிலும் பயிலும் நகுதுயிலா வருந்தும் குடம்பையிலே…… என்பது பேதம்.
-----------------------------
தலைமகன் வம்பாங்கு தணித்தல்.
உன்ன வரிதெனும் பேரைப்பட் டீச ருயர்வரையிற்
கன்னமொழிமட வாயன்பர் போய்க்குறி காட்டுவரோ
நென்ன லிரவின் மலர்சூழ் பொதும்பரி னீள்தொடையுந்
துன்ன வணிந்துசென் றார்விடு தூதென்று சொல்வதற்கே.. (214)
இறைவன் மேற்பாங்கி குறிபிழைப்பேற்றல்.
சிறியா டுயர்க்கடல் வீழும் பழிமிகச் சேருமென்று
குறியாம லிங்கு வரவொழிந் தாயன்ப கூர்மழுமான்
மறியாருங் கையிர்தென் பேரைப்பட் டீசர் வரையிலுன்னூர்
நெறியா மறிந்திருந் தால்வர வேகொள் நினைந்தனமே.. (215)
இறைவிமேலிறைவன் குறிபிழைப் பேற்றல்.
மானே யுறுங்கையர் பேரைப்பட் டீசர் வரையின்மின்னே
மீனேர் விழிமட வாடருங் காமவெந் நோயகற்றத்
தேனே பொதிமலர் சோலையி லுற்ற திசைகளெல்லாம்
யானேகித் தேடியிக் கங்குலின் வாடி யிளைத்ததுவே.. (216)
தலைமகள் குறிமாண்டமை தோழி தலைவர்க்குணர்த்தல்.
காயும்வெங் கூற்றை யுதைத்தவ ரன்பர் கருதில் வினை
[1]தேயும் படிசெய்யும் பேரைப்பட் டீசர் சிலம்பிறைவா
பாயுங் கருங்கங்குல் வாய்நின் குறியிடம் பார்த்துமின்னாள்
போயு முனையங்குக் காணாமல் வாடிப் புலம்பினளே.. (217)
தோழி தலைமகன் மொழிக் கொடுமையைத் தலைமகட்கியம்பல்.
விடமார் களத்தர்தென் பேரைப்பட் டீசர்தம் வெற்பிறைவா
கடமார் களிறும் பிடியும் புணர்ந்திடுங் கான்வழியாய்
மடமான் பொருட்டங்கு சென்றிட நீக்கின வாரதனாற்
படமா றகலல் குலாய்பிரி வென்று பகர்ந்தனரே.. (218)
[2]ஈதன்பர் பண்பன் றென்றிறைவி நோதல்.
அரவு புனைந்தவர் பேரைப்பட் டீச ரணிவரையின்
வரவு குறித்தனபர் சென்றபி னெந்தன் மனமுமந்தக்
கரவு படைத்த குறிக்குச் சென்றோடுமென் காணுநென்னல்
இரவுக் குழன்றதெல் லாமுரை ராரன்ப ரேந்திழையே.. (219)
தாய் துயிலறிதல்.
ஆலமன் றுண்டுதங் கண்டத்தி லேமை யமைத்தவெழிற்
கோலந் தரித்தவர் பேரைப்பட் டீசர் குலவரையிற்
கால முணர்ந்தன்பர் நம்பதிக் கேவருங் கான்டமாய்
நீலங்கண் ணெண்பதிக் கங்குலெந் தாய்கண்ணி நீகண்டதே.. (220)
---------------------------------
[1]. தேயும் தென்பேரையில் பட்டீசர் - பாடபேதம்.
[2].என் பிழைப்பன்றென்று இறைவி நோதல்.
---------------------------------------
நாய்துஞ் சாமை.
அறங்கலன் பூண்டதென் பேரைப்பட் டீச ரணிவரையின்
மறங்கிளர் வேற்கண்ணி நம்மன்பர் தேர்வரு மோபதியைக்
கறங்கெனச் சூழும் சுவானக் கனைகுரற் கங்குலிற்றாய்
உறங்கினு மோசை யுறங்கவொட் டாம லொலித் துடுமே,. (221)
ஊர்துஞ்சாமை.
சீரூரு மாநக ரோரூரு மிந்தச் சிறப்பிலதாற்
பேரூரு மன்றத்து ளாடும்பட் டீசர் பிறங்கன்மின்னே
தாரூருந் திண்புயத் தன்பரிக் கங்குலிற் சார்வதெங்ஙன்
ஊரூரும் போனம் பதியார்கண் மூடி யுறங்கிலரே.. (222)
காவலர் கடுகுதல்.
பிறையைத் தரித்தவர் பேரைப்பட் டீசர் பெருங்கிரியின்
நறைகொப் புளிக்கு மலர்க்குழ லாயிந் நள்ளிருளில்
இறையைப் பிரிந்திடும் யான்மதன் போருக் கிளைத்து நெஞ்சம்
பறையை யறைவது போற்கா வலர்கள்செய் பறையொலியே. (223)
நிலவு வெளிப்படுதல்.
கரக முனிபுகழ் பேரைப்பட் டீசர் கனவரைமன்
துரக மிலங்கிருந் தேர்வரு மாரெவண் தூமொழியே
விரக மிகச்செய் தனற்கதி ரென்னுடல் வீட்டவிண்ணில்
உரக மொளித்த நிலவோ னைவாதிங் கொறுப்பதற்றே.. (224)
கூகை குளறல்.
பாகைப் பழிக்கும் பனிமொழி யாயரும் பாவலர்க்கு
ஈகை யெனநடங் காட்டுந்தென் பேரைப்பட் டீசர்வெற்பின்
வாகையந் தாரன்பர் வாராம னள்ளிருள் வாய்க்குளருங்
கூகை குளறலென் றீவினை யாவையுங் கூப்பிட்டதே.. (225)
கோழி குரற்காட்டுதல்.
இன்பந் தருவதற் இவ்விர வேனு மெனமதித்தே
அன்பர் வருவா ரெனவிருந் தேனடித் தாமரைக்கு
மன்பதைக் காட்டிடும் பேரைப்பட் டீசர் வரையணங்கே
துன்ப மிகவிருள் போகக் குகன்கொடி சொல்லியதே.. (226)
தலைமகளைப் பாங்கி பருவரல் வினவியது.
தேடாது நம்மைச் சமன்சஞ்சி தங்கள் தெறிந்துடனே
நாடா தருள்செயும் பேரைப்பட் டீசர் நளிர்வரையிற்
சூடாது நன்மலர் பூணாதருங்கலன் சோகமுற
வாடாது வாடி நலிவதென் னோபகர் வாணுதலே.. (227)
பாங்கிக்குத் தலைமகளருமறை செவிலி யறிந்தமை கூறல்.
வரையும் வளைத்தவர் பேரைப்பட் டீசர் வரையணங்கே
நிரையும் வளைக ணெகிழ்ந்ததுந் தேம னிறைந்ததுவும்
விரையுந் தருங்குங் குமக்கொங்கை சேர்ந்திடு மென்களபங்
கரையும் படியென்கண் ணீர்சோர் வதுமன்னை கண்டனளே.. (228)
தலைமகடலைமகன் வருந்தொழிற் கருமை சாற்றல்.
தாயுஞ் சுவானமு மூருந்துஞ் சாதித் தனிநகரில்
ஈயும் புகா வகை காவலர் செய்பறை யிந்து விண்ணிற்
றோயுறல் போலவுங் கூகையுங் கோழியுஞ் சூழ்ந்து நின்று
வாயுங் கதரிடும் பேரைப்பட் டீசர் வரையணங்கே.. (229)
தலைமகள் தலைமகனூர்க்குச் செலவொருப்படுதல்.
இறவா[1] தெஞ் ஞான்றும்மெப் பேற்றையு மீபவ ரின்னிலத்திற்
பிறவாப்[2] புகழுறும் பேரைப்பட் டீசர் பிறங்கன்மின்னே
யுறவாய்நம் பானல முண்டநம் பாதக ரூர்க்கு செல்வோம்
மறவாவென் னெஞ்சை மறந்தது வோநம் மகிழ்நர்நெஞ்சே.. (230)
பாங்கி யிறைவனைப் பழித்தல்.
கன்னையு மேயவர் சோற்றிக்குச் சொற்கள் கனவெனலாய்ப்
பின்னைத் தெரிந்திடும் பேரைப்பட் டீசர் பெருங்கிரியின்
மன்னை யுளத்திற் பிரியா திருத்து மடமயிலே
உன்னைப் பிரிந்ததும் பெண்பழி யாவது மோர்ந்திலரே.. (231)
தலைமகடலைமகன் றன்னை நொந்தியற் படமொழிதல்.
பிரியா தவர்பிரி யா நிற்கத் துன்பம் பெருத்ததுவும்
எரியா யுடலிற் பசலை பரந்தது மேந்திழையே
மரியாப் பனைவளர் பேரைப்பட் டீசர் வரையிறைவர்
தெரியா திருப்பதும் வேறொன்று மில்லைநந் தீவினையே.. (232)
கனவு நலிவுரைத்தல்.
கூற்றம் ஒழிக்குவ மானஞ்சொல் வாரது கொம்பனையாய்
நீற்றார்[3] மகிழுந்தென் பேரைப்பட் டீசர் நெடுங்கிரியர்
ஆற்றா மயல்தனில் மாழ்குங்[4] கனவின் அகமகிழ்ந்து
மேற்றாவிப் புல்லவென் கூற்றா யினகண் விழித்ததுவே.. (233)
கவினழி புரைத்தல்.
கள்ளக்[5] கருவிழி யாய்நீயுஞ் சங்கரன் காதையினைத்
தெள்ளக் கருத்தருள் பேரைப்பட் டீசர் சிலம்பினரும்
விள்ளப் படாதவென் மெய்யை வருத்தும் விரகமுற்ற
உள்ளத்து நோயை யறிந்தாற்று மோவெந்த னூழ்வினையே.. (234)
---------------------------
[1]. வளர்ந்திடு பொன்னையும் மின்னி-(பா.பே.) [2]. புளியுறும் பேரை.
[3]. நின்றார்- என்பதும் பாடம். [4]. பார்னங்கனவினகம்.
[5]. புரைத்தற்குச் செப்புளயாய் நீயும்-பாடபேதம்.
--------------------------------------
தலைமகள் தன்துயர் தலைவர்க் குணர்த்தவேண்டல்.
தேனுந்து சோலைத் தென் பேரைப்பட் டீசர் சிலம்பின்மின்னே
ஊனு முயிரு மெனக்காண வன்பர்முன் னோங்குமென்னோய்
தானு முறுதுய ரும்முறைப் பாருள ரேற்றரையில்
யானு முயிர்பெறு வேரைப் பார்க்கும் புகழெய்துமே.. (235)
பாங்கி தலைமகட்கு நின்குறை நீயே சொல்லெனக் கூறற்குச் செய்யுள்.
புயலார் பொழில்வளர் பேரைப்பட் டீசர்[1] புகழ்க்கிரியிற்
கயலாகுங் கண்ணியுன் காதலர் தந்திடுங் காமவெந்நோய்
அயலா ருரைப்பதற் குன்றுய ரந்தா[2] னறிவர்களோ
மயலா மனத்தொடு நீயேசென் றோதுந்தன் மன்னவர்க்கே.. (236)
தலைமகள் அலர் பார்த்துற்ற வச்சக்கிளவி.
பாரிற் கதிதரும் பேரைப்பட் டீசர் பனிவரையின்
நீரி லுறுங்குமு தந்தா னலரு நிலாக்கதிர்கள்
சேரி[3] லென் பாரா லண[4]ங்கே தனிமையைத் தேர்ந்திகழாய்
ஊரி லுறுங்குமு தந்தா னலர்வ துறும்பகலே.. (237)
தலைமகள் ஆறு பார்த்துற்ற வச்சக்கிளவி.
மதமே நிரம்பி யிடிபோல வீறிட்டு மண்ணெறிந்து
கதமே வளர்கரி வாழன மோவன மோகதிசேர்
பதமே தரவருள் பேரைப்பட் டீசர் பனிவரையின்
இதமே தருமென்ப ரெப்போ[5] துலாவுவ ரின்னெறியே.. (238)
காமமிக்க கழிபடர் கிளவி.
வரைசேர் முலைக்கண் ணருவிகள் சோர மயலுழைந்தேன்
பரைசேர்ந் திலங்குமோர் பாகத்தர் பேரைப்பட் டீசர் வெற்[6]பில்
இரைசேர்ந் துலவு மெழிற்குரு கேகைதை யேசுறவே
கரைசேரும் வாரிதி யேயெனக் கோர்கரை காட்டுவீரே.. (239)
தன்னுட் கையாறெய்தல்.
பாரே யுறங்கிலை தள்ளினை யொள்வளை[7] பையுளைநற்
சீரே விழுங்கிடும் பேரைப்பட் டீசர் செழுங்கிரியிற்
காரே யெனவு மிரங்கினை யாகுமிக் காஞ்சிநதி
நீரே யுனக்குமுண் டோவன்ப ராற்றுயர் நீண்டதுவே.. (240)
தலைமகள் நெறி விலக்கு வித்தல்.
தண்ணார் பொழில்வளர் பேரைப்பட் டீசர் சயிலத்திலே
விண்ணார்ந்த சோலையில்[8] வெய்ய மிருக மிகுமதிலே
[9]யெண்ணாகு வாரன்மி னென்றுரைத்[10] தாயினி யென்றனிரு
கண்ணாகு மன்ப ரிரவு வரவொழி காரிகையே.. (241)
-----------------------
[1]. புகல்கிரியிற் என்பது பாடம். [6].சேரிலன்றோ-என்பது பாடம்.
[2]. தானறியரால் - என்பது பேதம். [7]. லணங்கே என்றனிமை தெரிந்திகலா.
[3]. விடுமின்னெறிய - பாட பேதம். [8]. சோலையின் - என்பது பாடம்
[4]. வெற்பிலரை - பாட பேதம். [9].யொண்ணாது - என்பது பாட பேதம்.
[5]. பாயளை என்பது பாடம். [10]. றுரைத்தோனுயிருமிரு கண்ணாகும்.
-------------------------------------
தலைமகள் குறி விலக்குவித்தல்.
மன்ன குறிக்கினி வாரன்மின் அன்னை வரவு வரா (து)
இன்னந் தினைப்புனங் காவல்செய் வீரென் றெமக்களித்தார்
பொன்னம் பலவர்தென் பேரைப்பட் டீசர் பொருப்பின்மின்னே
கன்ன[1]ன் மொழிவரு நாளைப் பகலென்று கட்டுரையே.. (242)
வெறி விலக்கல்.
பிறிதேது மின்றியே பேரைப்பட் டீசர் பிறங்கன்[2] மின்னே
குறிதேர்ந் திடாதென்றன் காமவெந் நோயின் குணமறியார்
சிறிதேனு மன்னைசொல் லையர் தள் ளாரன்பர் செய்[3] பிழைக்கு
வெறிதே வெறியுயிர் கொள்ளாது தாயை விலக்குவையே.. (243)
பிற விலக்கு வித்தல்.
பொன்மணங் கண்டனள் பேரைப்பட் டீசர் பொருப்[4]பின்மின்னே
மன்மணங் காணவென் னாருயிர் தேடுமிம் மாநகரிற்
பன்மணஞ் செய்பவ ரார்த்திடு மோசைப் பறைபசித்தோர்
கன்மணற் சோறுணல் போலா மெனதிரு காதினுக்கே.. (244)
குரவரை யெதிர்கொள்வித்தல்.
கோவே கடிமணத் தூதுவிட்டாலெதிர் கொண்டுபுவித்
தேவேந்திரன் விட்ட தூதனென் றேறிடத் தேங்கனிசேர்
மாவே சிறந்திடும் பேரைப்பட் டீசர் வரையின்மின்னே
காவேந்த னேமுத லாநமர் சொல்[5]லக் கழறு[6]வையே.. (245)
வினவிய செவிலிக்கு மறைத்தமை விளம்பல்.
கந்த முறும்பொழிற் பேரைப்பட் டீசர் கனகவெற்பா
வந்த துயருனக் கென்னவென் றாளன்னை மன்னு[7] மையர்
தந்தவுன் மானைக்கை கொள்க வளைமன்னர் தந்ததனால்
எந்த னுடலம் பதைத்ததென் றாணம் மிளங்கொடியே.. (246)
அலரறி வுறுத்தல்,
நெய்தலு மாம்பலுந் தாமரை யுங்களை நீத்துவயல்
செய்தவர் பேரைப்பட் டீசர்வரையிலிச் சித்தசன்றான்
எய்த மலருமிவ் வூர லரும்பட வேங் கியுள்ளம்
பைத லடைந்தன ளேயிறை வாநந்தம் பைந்தொடியே.. (247)
தாயறிவுணர்த்தல்.
சிரத்தி லரவு மதியுந் திகழத் திருப்பனைசேர்
புரத்தி னடமிடும் பட்டீசர் பேரைப் பொருப்பிறைவா
கரத்தி[8] லுறைத்தன ரேகைச் சுவடன்ன காரிகையா
ளுரத்தி லு[9]றைந்தன வீதேதென் றுட்கள வோர்ந்தனளே. (248)
---------------------------
(பிரதிபேதம்)
[1]கன்னல் - என்பது பாடம். [5]. செல்ல.-
[2]. பிறங்கல் என்பது பாடம். [6]. களறுவையே - என்றும் பாடம்.
[3]. செய்பிளிக்கு [7].மன்னுமைய்யர்.
[4]. பொருப்புமின்னே - [8]. சாந்ததிலுறை.
[9]. இதற்குமேல் ஓலையில்லை.
--------------------------------------
வெறியச்சுறுத்தல்.
கலையார் பிறையணிப் பட்டீசர் பேரைக் கனவரையிற்
சிலையார் நுதலிவள் நோய்க்கு மருந்தெனச் செய்வதற்குத்
தலையா மிராசிப் பெயர்கொளும் சீவன் றனைக்குமிகக்
கொலையா முனையைய ரோடுரைத் தாரெங்கள் கொற்றவனே.. (249)
[1]குரவறையுணர்த்தல்.
கோது படாததென் பேரைப்பட் டீசர்தங் குன்றினிலெம்
மாது தனத்தை மணப்பான் முயன்றிடு மன்னவரெப்
போது மொருவர்க் கொருவர் தனக்கெனப் பூசலிட்டு
வாது புரிந்து வருவா ரளப்பிலர் மன்னவனே.. (250)
வரைவெதிர் வுணர்த்தல்.
கண்டனை யொப்பல வென்னுங் குவளையைக் காமர்கொம்பைக்
கண்டனை யேமணத் தூதுவிட் டால்வருங் காலெதிர்போய்க்
கண்டனை யையதென் பேரைப்பட் டீசர் கனவரையிற்
கண்டனை யாகப் புகல்வார் குறியொழி காவலனே.. (251)
வரைவு நாளுணர்த்தல்.
ஏவே யனைகண் ணாள்பாகர் பேரைப்பட் டீசர் வெற்பிற்
காவே நிறைந்திடும் வேங்கையு மேறிக் கடிமலர்ந்து
பூவே சொரிந்திடும் காலந் தவராது பொருந்துமணங்
கோவே யிதுவன்றி யேமணக் காலங் கொளவரிதே.. (252)
தலைமகளறிவு தலைமகற் கறிவுறுத்தல்
குணமு மொழுக்கமும் வாய்மையு மன்புங் குறிக்கிலொரு
கணமும் விடாமன் தாம் பூங் கொடிவண்டு [2]கானிலுறும்
மணமுந் தருமலர்ப் பேரைப்பட் டீசர் வரையிலொன்னார்
நிணம் நிறைந்து சுடர்க்காலும் வேற்கை நெடுந்தகையே. (253)
குறிபெயர்த் திடுதல்
பொழிந்த கருணையிர் பேரைப்பட் டீசர் பொருப்பிறைவி
தெளிந்த கருத்தினராய் மாதர் 3முன்பு தெரித்த தென்று
குழிந்த வழியக் குறியலைவர் வந்த குற்றமதை
ஒழிந்த குறியில்வந் தானீ மதிமன் னுரோகணியே!. (254)
பகல் வருவானை இரவு வருகென்றல்
குடியுங் குலமு மில்லாதவர் பேரைப்பட் டீசர் குன்றும்
படியும் புரந்திடு மன்பநின் காதலைப் பன்னப் பன்னி
விடியு மளவும் பிரிந்திடு நாளை விரைவிலெண்ணி
முடியு மிரவு துயின்றறியா ளென்றன் மெய்குழலே.. (255)
------------------------------
(பிரதிபேதம்)
[1]. பிறாவரை வுணர்த்தல். 3முன்குறி சென்று சென்று
[2]. காலுழுது-என்று பாடம்.
------------------
இரவு வருவானைப் பகல் வருகென்றல்
தானந் தவம் வளர் பேரைப்பட் டீசர் சயிலத்திலே
கானம் புலிதரு மன்பர் வருநெறிக் கங்குலிலே
வானம் புலிதரு மூர்கா வலர்மிக [1]வன்கணரா
நானந் தருகுழ லாட்சிது வேயுள்ள நைந்ததுவே.. (256)
பகலினு மிரவினும் பயின்று வருகென்றல்
மாமனைச் செற்றவர் பேரைப்பட் டீசர் வரையிறைவா
காமனைக் காய்ந்த விழியின்று காண்கிலனே கதிர்ச்
சோமனை நேரும் விழிகணன் றாமெனச் சொற்றனள் செம்
பூமனை நீத்தேம் மனைவாழ வந்து புகுந்திருவே. (257)
இதுவுமது
வார்வைக்குங் கொங்கையை நீபுணர்ப் பானுறின் மன்னு கொன்றைத்
தார்வைக்குஞ் செஞ்சடைப் பேரைப்பட் டீசர் தரியலர்கள்
ஊர்வைக்குஞ் செந்தழல் கண்ணா மலர்ச்சொல் லொழியவுறு
பார்வைக் கிருகண்ணு நன்றாகென் றாளெங்கள் பார்த்திபனே. (258)
பகலினு மிரவினு மகலிவ ணென்றல்
தென்பேரை மன்று ணடஞ் செய்பட்டீசர் திருவிழியை
முன்பே யுமைபுதைத் தாளது போலின்று மூடியென்றன்
என்பே குழைய நின் றெம்மா துரைத்தரு ணீங்குறுதல்
அன்பே யெனினு மிருகுறி மாற்றனன் றாமண்ணலே. (259)
இதுவுமது
சுடராஞ் சுடரு ளொளியாய் விளங்கிடுஞ் சோதியதா
நடராசர் பேரைப்பட் டீசர் வரையினண் ணாதொழிநீ
படராம் பகலிற் கலகமென் மேலும் பயக்குங் கங்குல்
இடராம் பொழுதென் றிரண்டுமென றாளெங்க ளேந்திழையே. (260)
உரவோனாடு மூருங்குலமும் மரபும் புகழும் வாய்மையுங் கூறல்
தேனே மலர்பொழி பேரைப்பட் டீசர் செழுங்கிரியின்
மானேர் விழியை யுலகோரறிய வரையிலின் றெங்
கோனே யுன்னா டென்று மூரென்று நல்ல குலமி தென்றுந்
தானே புகழென்றும் வாய்மையு மற்றுந் தரும்பழியே. (261)
தலைவன் ஆறு [2]பார்த்துற்ற வச்சங்கூறல்
தேவியங் கோர்புற மெய்யிற் றுலங்கத் திருநடனம்
மேவி யருடரும் பேரைப்பட் டீசர் தம்வெற் பிறைவா
காவியங் கண்ணிநின் சென்னெறி நோக்கிக் கலங்குமன்பின்
ஆவியின் பின்வருங் கூட3லி யாமுன்வந் தாண்டுகொள்ளே. (262)
-------------------------------
(பிரதிபேதம்)
[1]. மிகவன் கணரே - 3கூடளியர் - பேதம்.
[2]. ஆறுயார்த்துற்ற வசங் கூறல்.
-------------------------------
ஆற்றாத் தன்மை யாற்றக் கூறல்.
விரகத்தை யென் சொல்லக் கைம்மா வருந்தும் விளாங்கனியு
முரகத்தின் வாய் புகுந் தேரையு மாயின ளுண்மை திரி
புரகட் டழவினர் பேரைப்பட் டீசர் பொருப் பிறைவா
திரக வளைவரைந் தாற்றுதி மாளுமால் தீர்வதற்கே. (263)
காவல்மிக வுரைத்தல்
தோற்றுங் கிளிமொழி யெவ்வா றுனையுறுந் தொண்டரன்பிற்
போற்றுந் தென் பேரை வளரும் பட் டீசர் பொருப்பிறைவர்
மாற்றுந் தரமின்றி மாய்கை செய் தேயுயிர் வாங்கிச் செல்லுங்
கூற்றும் புறப்படு மோவன்னை காவற் கொடுமை விட்டே. (264)
காமமிக வுரைத்தல்
முற்றிடுங் காம நெருப்பிலெம் பைந்தொடி மூழ்க நல்லோர்
பெற்றிடும் பேறருள் பேரைப்பட் டீசர் பிறங்கன் மன்னா
உற்றிடு நோய்க்கு மருந்துநின் றோளி லுளதெனநாச்
சொற்றிடும் போது தணிப்ப ளெம்மாது மெய் சோர்வகன்றே. (265)
கனவு நலிவுரைத்தல்
நனவினெஞ் சத்து ளொளித்திடு மன்னநள் ளாரழியச்
சினவி லெடுத்தவர் பேரைப்பட் டீசர் [1]சிலம்பின் மின்னாள்
கனவில்வந் தாநீ யுறலாற் றுயிலது கண்டறவே
வினவி லதுவுங் கொடாயாகில் வாட்ட மிகுந்திடுமே. (266)
கவினழி புரைத்தல்
[2]கெடாம லருட்டரும் பேரைப்பட் டீசர் கிரியிறைவா
விடாமலெப் போதுமெம் மின்னாணெஞ் சுன்னை வெளிப்படுத்தப்
படாம லிருத்திய வாறுகண் டேமதன் பாணத்தினால்
இடாமல்நெஞ் சைத்துளைந் துன்னைத் துளாவ இளைத்தனளே. (267)
தன்பதிக்ககற்சி தலைவன் சாற்றல்
இந்நா ளெனது பதிக்கேகிச் செய்வ தியற்றி மின்னே
பன்னாளும் பேரைப்பட் டீசரைத் தாழ்ந்து பணிவதுபோன்
மின்னா ணலத்தையுங் காண்பான் பொருட்டு மிகவிரும்பி
நன்னா ளிதுதரி யேன் கங்குல் வாய்வர நாடுவனே. (268)
மென்சொற் பாங்கி விலக்கல்
நில மேழ் அளந்திடும் பேரைப்பட் டீசர் நெடுங்கிரியில்
……………. …………………..
………… ……….. …………. (269)
[குறிப்பு:- இடையில் 25 பாடல்கள் இல்லை.]
------------------------------
(பிரதிபேதம்)
[1]. மறங்கல் மின்னா-பேதம்.
[2]. கெடாமலராள் தரும் பேரை.
----------------------------
இகுளை வம்பென்றல்
முயலா தருடரும் பேரைப்பட் டீசர் முதுகிரியின்
புயலான துந்தன் மருச்சொல்லு கைக்குடம் புக்கதெல்லாம்
மயலாகு நீதணித் தாயென்று நீங்குன வள்ளலுக்குக்
கயலாகுங் கண்ணி விடுதூதென் றேசின காண்மயிலே. (295)
இறைமகள் மறுத்தல்
கார்கால மன்றின்பஞ் சேர்கால மென்றிடுங் காரிகையே
சீர்காலங் காட்டுந் தென் பேரைப்பட்டீசர் சிலம்பிலெனக்
கோர்கால மன்மதன் போர்கால மன்னரு கைத்திடுந்தேர்
ஊர்கால மன்றென்கண் ணீர்கால மான துணர்ந்திலையே. (296)
வன்புரை யென்றல்
அரியு மயனு முரிய மலர்கொண் டருச்சனையே
புரியுந்தென் பேரையில் வாழும்பட் டீசர் பொருப்பின்மின்னே
பிரியும வர்தம் பதியுஞ் சரியப் பெரிய முகில்
சொரியு மெனிலுள் ளுருகித் தெரியுந் துயரமுமே. (297)
வன்புரை யெதிர்மறுத்தல்
பொன்னே யுனைப்பிரி யேனென் றுரைத்தசொற் பொய்த்தலன்பர்
மின்னே யிவர்நிலை என்னசொல் கே னிந்த மேதினியில்
தன்னேரில் லாததென் பேரைப்பட் டீசர் சயிலத்திலே
என்னேர மும்பிரி வேனினைந் தேங்குத லென்வினையே. (298)
தலைமகட்குப் பாங்கி சொல்லல்
நங்காய்நம் மன்பர் பிரிந்தேகும் போதொரு நாழிகையுந்
தங்காம லிங்கு வருதுமென்றாருமை தன்னையொரு
பங்காளர் பேரைப்பட் டீசர் வரையிற் பருவமுகில்
மங்காது பெய்யினும் பொய்யாத நெஞ்சம் வரச்செயுமே. (299)
தலைமகள் மறுத்தல்
தரையினி லூர்ந்திடுந் தேரும் புரவியுந்தா னதனை
விரைய நடத்திடும் பாகனல் லால் விண் விமானமன்றே
புரையக மாய்த்திடும் பேரைப்பட் டீசர் பொருப்பின் மின்னே
வரையநங் கேள்வர் வருவதெவ் வாறிம் மழைதனிலே. (300)
அலர்தூதாகி லங்குதிரைப் போறாதெனத் துணைவி சாற்றல்
போகத்தை யன்பர்மின் னேயுள்ளி மோகத்தைப் பூண்டவருன்
தேகத்தி லேயுறு சோகத்தை யாவையுந் தீர்க்கவென்றே
பாகத் துமை வளர் பேரைப்பட் டீசர் பனிவரையின்
வேகத்திற் போய்ச் சொல்ல மேகத்தைத் தூது விடுத்தனரே.. (301)
இதுவுமது
இல்லென் றுளதென் றிருந்தவர் பேரைப்பட் டீசர் வெற்பின்
வல்லென் றுரைக்குந் தனத்தாய் நம் மன்பர் வரவுதனைச்
சொல்லென்று வான்புய றன்னைக் கடிதினிற் றூது நம்பாற்
செல்லென்று சொன்னதன்றோ புயனாமஞ் செல் லாயினவே. (302)
தலைமகளாற்றல்
பிஞ்சம் புலியணி பேரைப்பட் டீசர் பெருவரையில்
வஞ்ச மிலாது நம் மன்பர்தம் மாவியைவைப்பிடமாய்
நெஞ்ச மிருத்தி வைத் தேகின ராற்றுன்ப நீயுறலுன்
றஞ்ச முயிர் வருந்தாம லிருக்கத் தகுமனமே. (303)
அவனவன் புலம்பல்
ஆடிக் குலிரவு மயிலிந்த மேகத்தினார் புக்கன்பர்
தேடிக் கொணர்ந்தனன் பேரைப்பட் டீசர் சிலம்பினம்மை
நாடித் திகைத்திடு மேபுயல்காண நலிந்திடுமே
வாடிப் புலர்ந்திடு மேயெந்த னாசை மயின்மனமே. (304)
தலைமகன் பாகனோடு சொல்லல்
வல்லுந்து கொங்கைமின் னாள்நெறி பார்த்து வருந்து மெனக்கு
அல்லும் பகலுமென் னாவியன் னாளிடத்தன்புமிகச்
செல்லு மனமல வாவலவா பரித் தேர் முகிலை
வெல்லும் படிவிடும் பேரைப்பட் டீசர் வியன்கிரிக்கே. (305)
மேகந் தன்னோடு சோகங்கண்டவன் சொல்லல்
சூது தனங்கள் கண் ணீரிற் குளிக்குந் தொடி நெகிழும்
மாது முகத்திற் பசலையுங் காட்டுமவ் வாணுதற்கே
யோகந்தென் பேரைப்பட் டீசர் வரையி லொருவர் திண்டேர்
மீது வருவதைக் கண்டோமெனச் சொல்லு மேகங்களே. (306)
வலம்புரி கேட்டவன் வரவறிவுறுத்தல்
பார்வந்த நற்றலம் பேரைப்பட் டீசர் பனிவரையில்
தார்வந்த கூந்தன் மின்னேகை வளைக டளர்ந்து நிற்கும்
நீர்வந்த கூர்விழி யும்மகி ழாநிற்கு நீங்கு மன்பர்
தேர்வந்த தாரும் வலம்புரி யோசை செவிக்குற்றதோ. (307)
தலைவி மகிழ்ச்சி வரப்பெறுதல்
கன்று கரத்துறக் கண்ணீ ரறவென் கருத்திற்றுன்ப
கன்று நடக்கநம் மன்பர் சங்கத்தொனி [1]காதிரண்டிற்
கன்று விடுத்தலி னுள்ள மகிழ்ந்தது காண் சுரபிக்
கன்று குளம்பு கொள் பட்டீசர் வெற்பிற் கனங்குழலே. (308)
---------------------------------
(பிரதிபேதம்)
[1]. காதினிற்பு.
-------------------------------
வலம்புரி கிணர்த்தி வாழ்த்தல்
பொழியுங் கருணையர் பேரைப்பட்டீசர் பொருப்பின் மின்னே
செழியு மனத்தினிற் சஞ்சலங் கண்கலந் தேங்கினதை
ஒழியும் படிக்குச் சலஞ்சலங் காணிங் கொலித்தபொருள்
மொழியு மெனிலென் னுயிர்காக்க வந்த முழக்கமிதே.. (309)
வந்தழி தலைவனைப் பாங்கி நினைத்தமை வினாதல்
இறவாப் பனைவளர் பேரைபட்டீச ரெழிற்கிரியிற்
புறவா நெறியிற் பொருடேடி நீர்செல்லும் போதுமலர்
நறவார் குழலியை யுள்ளத் துளேவைத்து நாடியலன்பின்
மறவாது தானிருந்தீரோ வலது மறந்ததுவே.. (310)
தலைவன் நினைத்தமை செம்பல்
அறந்தரும் பேரைப்பட் டீசர் வரையி லணியிழையே
துறந்தவ ரேனு மறப்பர் கொல்லோ புவித் தோகையரிற்
சிறந்தமின் னாளென்ற னெஞ்சத் தமர்ந்த திறத்தை யென்று
மறந்த துளதெனி லன்றோ நினைப்பை வசனிப்பதோ.. (311)
அனந்தகை யவ்னையாற்று வித்திருந்தமை பாங்கி கூறல்
திங்கட் கதிரு மதின் சாயகமுமித் தென்றலுமின்
அங்கத்தை விரட்டியதாலயர்ந் தாள்முன் னருந்தமிழ்நூற்
சங்கத்தர் போற்றிடும் பேரைப் பட்டீசர் சயிலமன்னா
துங்கக் கலவை முலைக்கணிந் தாற்றலென் சொல்லுவதே.. (312)
[1]தலைவன் முலைவிலை கொடுத்தமை பாங்கி தலைவிக்குரைத்தல்
சிலையார் நுதலணங் கேகுங்குமங்கள் செறிந்தமுலை
கொலையானை வென்றவர் பேரைப்பட் டீசர் குலவரையிற்
விலையாக வெள்ளி மலைபோலு மன்பர் நம் வீறுகடைத்
தலையாக வென்றுந் தொலையா நிதிக்குவை தந்தனரே.. (313)
நற்றாயுள்ள மகிழ்ச்சி காதலியுன்னல்
சீருஞ் சிறப்பு மணப்பறை யோசையுஞ் செம்பொனொடு
நீருநங் காதலர் செங்கரத் தேயிடு நேர்மையும் விண்
ஊரு மருந்ததி பார்க்கச் சிலை நிற்ற லோர்ந்துகளி
கூறுமென் னன்னைதென் பேரைப்பட் டீசர் குலவரைக்கே. (314)
பாங்கு தமர்வரை வெதிர்ந்தமை தலைவிக் குணர்த்தல்.
சலத்திற்செந் தாமரை யுற்பவித் தாலென்ன தாழ் குழனங்
குலத்திலுதித்திந்த மன்னர் வரைவெதிர் கூடினதின்
நிலத்தி னமக்கழு கென்றார் தமரண்ட நீடுயிர்க்குந்
திலத்தினெய் போன்றுரை பேரைப்பட் டீசர் சிலம்பின்மின்னே. (315)
-------------------------------------
(பிரதிபேதம்)
[1]. வேற்றுட காதல் முலைவிலை விடுத்தமை பாங்கி காதலிக்கு உணர்த்தல்.
----------------------------------
தலைமகளு வகையாற்றா துளத் தொடுகிளத்தல்.
கூட்டத்தி லேமகிழ்வாய் பிரியாதுயிர் கொப்பளிக்கு
நாட்டத்தைக் காட்டுவை நெஞ்சே வல்லோர் தமர்நாடுமந்த
ஈட்டத்தின் நாளைக்கு மன்னர்கைக் கென்கை யிசைக்கிலுந்தன்
வாட்டத்தை வீட்டுவைப் பேரைப்பட் டீசர் வரையிடந்தே.. (316)
தலைவனை பாங்கி வாழ்த்தல்.
ஆரலர் வேந்தவர் பேரைப்பட் டீச ரணி வரையில்
ஊரலர் கூறும் வடுவையுந் தோன்று முருவிலிகைக்
கூரல ரம்பையும் வேரறக் கொய்திடுங் கொற்றவநின்
தாரலர் வாழ்ந்திட நீடூழி காலந் தரையிடத்தே.. (317)
தலைவி மணம் பொருட்டாக அணங்கைப் பராநிலை
பாங்கி தலைமகற்குக் காட்டல்
எங்கு நிறைந்த பராபரை பேரைப்பட் டீசரிடப்
பங்கு வளர்ந்த மரகத வல்லி பதாம் புயத்திற்
பொங்கு மன்பாக வணங்குவள் நின்மணம் பூண்டிடத்தார்
தங்கு புயமன்னனேபார் மின்னாள்செய் தவத்தினையே. (318)
தலைமகளணங்கை பராநிலைகண்ட தலைமகன் கூறல்.
இந்த மனதிவட் கெவ்வாறுண் டான திருவினைசேர்
பந்த வலையை யடியார்க் கொழிக்கும் [1]பராபரையாங்
கந்தங் கமழ்குழ லாளிடம் பாலுறக் காரகிலுஞ்
சந்தமுஞ் சூழ்பொழிற் பேரைப்பட் டீசர் சயிலமின்னே.. (319)
[2]பாங்கி தலைமகள் கண்ணீர் துடைத்தல்.
மாதேநம் மன்னை செயிர்த்தன ளோவுன்றன்[3] வண்டறனில்
தீதே தெனினும் விளைந்ததுண் டோநற் றெரிவையர்பால்
தூதே நடந்தவர் பேரைப்பட்டீசர் சுடர்க்கிரியிற்
காதே பொருவும்[4] விழிநீர் கொண்டாயென்ன காரணமே.. (320)
[5]தலைவி கண்கலுழ்தற்குக் காரணங் கூறல்.
நாடித் தடுத்தருள் பேரைப்பட் டீசர் நளிர்வரையின்
நீடிக் கனவி[6] லெனைப்பிரி யாதுறு நேயமொடுங்
கூடிக் கலந்த சுகத்தை நனவிற் கொடாதவரைத்
தேடிப் புறப்பட்ட தாமென் விழிப்புனல் தேமொழியே.. (321)
-------------------------------
(பிரதிபேதம்)
[1]. பரை பதத்திற், கந்த நறுமலரிட்டுப் பரவவும் காரகிலும் சந்தமிகுந்திடும்
பேரைப்பட்டீசர் - பாடம்.
[2]. கையறு நீதாழி கண்ணீர் துடைத்தல்.-
[3]. வண்டல்தனில் தீதேனு முற்றுதுவேர சந்தராற்குத் தெரிவையார் பால்தூதே
நடந்தவர் பேரை.
[4]. ழிநீர் சொரிவதன் காரணமே.-
[5]. தலைவிகண் - இல்லை.
[6]. கனவிலென்ப மென்னோள் புல்லிநேச.-
---------------------------
[1]தலைவியை தெளியத் தெளிந்தமை கூறல்.
செய்யாரும் பூகந்தென் பேரைப்பட் டீசர்[2] செழுங்கிரியில்
[3]நெய்யாரும் வெண்மையை வான்மதி நீப்பினு நீங் கிலசொல்
மெய்யா மெனவெண் ணினேனன்பர் வாய்மை [4]மிகப்பிழைத்துப்
பொய்யா [5]மெனவறிந் தேனினி யென்ன புகல்வதுவே.. (322)
தலைவி யிகழ்ந்தமை யியம்பல்.
போதித் தருள்தரும் பேரைப்பட் டீசர் பொருப்பரென்கை
மீதிற்கை வைத்துஞ் சிரந்தொட்டு நீங்கினர் வீறுடைய
நீதிச்செங் கோன்மன்னர் நென்னல் வரையி னெறிபலவாய்
ஓதித் திரிவதென் பங்கிற்பொய் யாய்விட்ட தோவியமே.. (323)
[6]பாங்கி யிறைவனை யிகழ்தல்.
மறந்தார்கொல் லோநெஞ்சம் வன்கண்மை யோசொன்ன வார்த்தை யங்கே
துறந்தார்கொல் லோவவர் சூளிது வோவரைத் தோகையை யோர்
புறந்தா னிருத்திய பேரைப்பட்டீசர் பொருப்பின் மின்னே
சிறந்தார்க் கிவைநல மோவழ கோமன்னர் செய்கையென்னே. (324)
தலைவியியற் படமொழிதல்.
சிறுகாப் பெருகா முறைபிற ழாதுமுன் செய்தவினை
உறுகாலத் தன்பரை நோவதென் னேமல ரோடையிலே
அறுகால் முரலுந்தென் பேரைப்பட் டீச ரணிவரையின்
இறுகாத நெஞ்சின ராகுமின் னேயிவை யென்வினையே.. (325)
தெய்வம் பொறை கொள்ளச் செல்குவமென்றல்.
நித்திய மானவர் பேரைப்பட் டீசர் நெடுங்கிரியிற்
கத்தியஞ் சாத்தி மலரடி பூசித்து காதலர்தம்
புத்தியம் பாநிலை மெய்யா யெமக்கவர் பொய் பகர்ந்தார்
சத்தியம் தப்பினு நீபொறுப்பாயைன்று தாழ்து [7]மின்னே.. (326)
இல்வயிற் செறித்தமை செப்பல்.
கனம்போற் செறிந்த குழலணங் கேவிண்ணிற் கற்பகமாம்
வனம்போதி சூழ்ந்தேன் பேரைப்பட் டீசர் வரையிடத்தே
இனம்போ தனையு மலருங்கண் டென்னை யெழுத்துஞ்சில்லார்
மனம்போ லிருண்ட வகத்துள்வைத் தாளன்னை வன்சிறையே.. (327)
-------------------------------
(பிரதிபேதம்)
[1]தலைவன்றே யவன்காட்டித் தெளிய தெளிந்தமை யெய்தற் கூறல்
[2]. சிலம்பின் மின்னே. [3]. நெய்யாரும் குவளையை வான்மதி.
[4]. பின் வேறுபட்டு. [5].பொய்யாய் சுனந்தேனினி.
[6]. பாங்கி யியற்பழத்தல் - பாடம். [7]. தாலிது - பாடம்.
---------------------------------
செவிலி கனையிரு ளவன்வரக் கடமை கூறல்.
தேங்கும் புகழ்வளர் பேரைப்பட் டீசர் சிலம்பின்மின்னே
வீங்கு மிருளின் மவுலிக் கதிரும்வை வேற்கதிரும்
ஆங்கு மகலம் புயம் [1]வள ரன்ப ரடிச்[2] சுவடின்
பாங்குநம் மன்னைகண் டென்னை யுறுத்துக்கண் பார்த்தனளே.. (328)
[3]எறிவளை வேற்றுமைக் கேதுவினாதல்.
குரும்பை முலைபொள் [4]கொழிக்கக் கவிழ்புனல் கொப்பளிக்கக்
கரும்பை யொழிக்கு மொழியாள் தினைப்புனங் காவற்பின்னர்
தரும்பை தலையின தென்றுரைப் பாயிந்த தாரணியில்
வரும்பை யரவணி பேரைப்பட் டீசர் வரையிணங்கே.. (329)
பாங்கி வெறி விலக்கல்
தகரக் குழலி மனத்திடை மால்வெள்ளந் தன்னையடைத்
தகரை யுடைத்தது போலுமின் னோய்க்குத் தனுநுதலாய்
தகரைச் சிதைக்குற் றணிந்திடு மோவித் தரையினில்வித்
தகரைப் புரக்குந் தென்பேரைப்பட் டீசர் சயிலத்திலே.. (330)
செவிலி வெறிவிலக்கிய வழிவினாதல்
மின்னாடன் னோய்க்குக் குறியுணர்ந் தார் [5]சொல்லை மேவியன்னை
முன்னாளி லேவெறி யாடலை நீக்கி முருகர்பதந்
தொன்னாளி லேயெமர் போற்றிய வாரைத் தொலைத்துவிட்டாய்
[6]பொன்னாடர் போற்றுந்தென் பேரைப்பட் டீசர் பொருப்பணங்கே.. (331)
பாங்கி பூத்தரு புணர்ச்சியால் அறத்தொடு நிற்றல்
[7]சோலையின் மன்மது …………… தங்ககனாஞ் சூழ்பரிசேர்
காலையில் யாம்வினை யாடை யிலேயுங்கன் காரிகைக்கு
மாலையுங் காட்டிநன் றாலையுஞ் சூட்டியோர் மன்னனந்த
வேலையிற் போயினன் பேரைப்பட் டீசர்தம் வெற்புமின்னே.. (332)
பாங்கி புனறரு புணர்ச்சியா னறத்தொடு நிற்றல்
வந்தித் தவர்க்கருள் பேரைப்பட்டீசர் வரையணங்கே
[8]சந்தித் தவர்களெஞ் ஞான்றுந்தந் தாருங்கள் தார்குழலாள்
உந்திச் சுழிதனை யுந்திச் சுழிவெல்வ தோர்ந்தரிதான்
தந்திக் குதலின் போலெடுத் தானந்தத் தார்மன்னனே.. (333)
----------------------------
(பிரதிபேதம்)
[1]. வளயன் பாடம். [2]. சுவட்டின் -
[3]. எறிவளை என்பது ஒரு பிரதியில் காணவில்லை.
[4]. பொள் என்பது ஒரு பிரதியில் இல்லை.
[5]. சொல்லி மெல்லியன்னை - ஒரு பாடம். [6]. பொன்னாளுடைந்திடும்.-
[7]. இப்பாட்டு ஒரு பிரதியிலில்லை.
[8]. ‘சந்தித காஞ்சி நதி குடைந்தாளுந் தார்குழலாள் அந்தி சுழிதனையுந்தி
கழிவெல்வதோ மந்தரிதாள்’ - பாடம்.
-----------------------
களிறுதரு புணர்ச்சியா னறத்தொடுநிற்றல்
தொலையாத முப்புர நீறாக்க மேருவைத் தொட்டுக் கையிற்
சிலையாய் வளைத்தவர் பேரைப்பட் டீசர் சிலம்பின் மின்னாள்
முலையானை யைப்புணர்ந் தேகண்டு சார்ந்திடு மும்மதமார்
கொலையானை யையடர்ந் தானந்த வேந்தன் குயின் மொழியே.. (334)
தலைமகள் வேற்றுமைகண்டு நற்றாய் செவிலியை வினாதல்
கொங்கு மலர்செறி பேரைப்பட் டீசர் குலவரையிற்
சங்கு நெகிழ்ந்த துகைகளிற் கண்களிற் சார்ந்துபுனற்
பொங்கி தனங்களின் மின்னே திதலை பொறித்ததுடல்
எங்கும் பசந்ததை யின்னதென் றாரிலை யென்றனக்கே.. (335)
[336,337,338 பாடல்கள் இல்லை.]
செவிலி நற்றாய்க்கு முன்னிலை மொழியால் மொழிதல்
நன்னேயத் தாற்கருள் பேரைப்பட் டீசர் நளிர்வரையில்
அன்னே கரியும் கலையும் வினாவிநம் மாயிழைக்குப்
பின்னே மலர்ந்ததும் நீரு ளெடுத்ததும் பெரும் களிற்றே
மன்னே யடாது முலைவிலைக் கேயவன் வந்ததென்றே.. (339)
நற்றாய் தமருக் கறத்தொடு நிற்றல்
பன்னரி தாகும் நற் பேரைப்பட் டீசர் பனிவரையின்
னென்ன சேய்நின்றனிகுர் தந்தைகேழ வர்க்கிருங்கனையிற்
முன்னமொரு பெண்ணை செவ்வேளுக் கீந்த முறைமையைப்போல்
மன்னனுக் கேயளிப் பீர்வினை யேன்பெற்ற மங்கையையே.. (340)
பாங்கி தலைவர்க்கு உடன்போக்கு உணர்த்தல்
இப்பார்வெண் பாதல் முற்று முலைவிலை யீந்திடனும்
ஒப்பாரெம்மையர்தென் பேரைப் பட்டீச ருயர்வரையிற்
செப்பார் தனத்தியை நின்னகர்க் கேகொண்டு சேரலது
தப்பானதுவல்ல மேன்மையுண் டாம்மறைத் தார்மன்னனே.. (341)
தலைவனுடன் போக்கு மறுத்தல்
மனம்போல் விரிந்தவர் பேரைப்பட் டீசர் வரையணங்கே
கனம்போற் குழலி யடிக்குப்பஞ் சாய்சுரங் காட்டிடுமோ
வனம்போல் நடப்பதே யல்லாற் பறந்தே வரிந்திலள்சந்
தனம்போல் வடவைத்தீப் பிறந்தங்கு தங்கிடமே.. (342)
பாங்கி தலைவனைப் போக்குடன் படுத்தல்
தாயினு மன்பர்தென் பேரைப்பட் டீசர் சயில மன்னா
நோயி னுந்தீய தாமலர் காட்டி நுவலுகின்ற
வாயி னுமுனை பிரிந்தாலுந் தன்வீடும் வாழியுயர்
தீயினும் வன்சுரங் காய்ந்திடு மோவெங்கள் சேயிழைக்கே. (343)
இதுவுமது
சோமக் கொளுந்தணி பேரைப்பட் டீசர் சுடர்க்கிரியில்
காமக் கனலில் வளர்பயி ரானதைக் கான்சுடுமோ
தாமக் குழலியை விட்டேகி லாருயிர் தாங்க கில்லாள்
ஏமக் கெதிர்முலை யாய்சுர மேவலி தற்கெளிதே. (344)
பாங்கி தலைவிக்கு உடன்போக்கு உறுத்தல்
சேவைப் படைத்தவர் பேரைப்பட் டீசர் சிலம்பிறைவர்
பூவைக்குப் பாலமு தாரளிப் பாரென்று பூங்கமலப்
பாவைக்குத் தாள்கண் முதிர்க்கும்கொல் லென்று பகர்ந்தனரால்
ஏவைப் பொரு விழியாய்தெரி யாதவர் எண்ணங்களே. (345)
தலைவி நாணழிபு இரங்கல்
பேணுமிக் காய மெடுத்துமின் னேயிதை பெண்பிறப்பிற்
பூணுநன் மான மழிய வுயிரைத் துறப்பதற்கோ
நாணும் தனுவிற்குள் தேனிற்கு சீர்தரு நற்பதங்கள்
காணும் படியருள் பேரைப்பட் டீசர் கனவரைக்கே. (346)
கற்புமேம்பாடு பாங்கி கூறல்
மின்னார்மெய் நாணுயிர் தன்னிற் சிறக்கும் வியந்த கற்பு
அன்னா ணினும்சிறப் பாமென வேயிவை யாரணத்திற்
சொன்னார்தென் பேரைப்பட் டீசர் வரையிற் சுரிகுழலாய்
முன்னாளிற் சீதை துரோபதை கற்பின் முயன்றனரே. (347)
தலைவி யொருப்பட்ட டெழுதல்
காரார் குழையிற்சொல் லல்லா ரரளையுள்கண் மலர்கள்
சேராமல் நோக்கிய பார்வையி னாலிங்கு சேர்வரிதாம்
ஏராரும் பேரைப்பட் டீசர் வரைமயி லேயினியிவ்
வூரால் …… தாரே புனைந்திங் குறைந்திடவே……... (348)
பாங்கி சுரத்தியல் புரைத்தல்
சோமனைக் கங்கையை வேணியில் வைத்தவர் தூயவெழிற்
காமனைக் காய்ந்திடும் பேரைப்பட் டீசர்தங் கண்ணது போல்
தீமனை யாகிய பாலையி லேயுந்தன் சீரடிதான்
பூமனை யாயங் குறுமோ யதினும் பொறுப்பரிதே. (349)
பாங்கி சுரத்தியல்புரைத்துழித் தலைவிசொல்லல்
தெரிந்திடு மன்பர் பணிந்திடு நற்கதி சேர்கருணை
புரிந்திடும் பேரையில் வாழும்பட் டீசர் பொருப்பிறைவர்
பிரிந்திடு தீயினும் சொல்லலர் தீயினும் பெற்றிய தாய்
எரிந்திடு மோவன சுரத்துறு தீபகர் ஏந்திழையே. (350)
பாங்கி கையடை கொடுத்தல்
பாலோ ததியை யருந்தும் புயலின் படிவமெனும்
மாலோ வளர்த்தும் தளவத் தரும்பு மறுத்திடினும்
மேலோர்துதி செயும்பேரைப்பட் டீசர் தம் வெற்பினிற் செங்
கோலோர்ந் திடுமன்ன நன்மைசெய் மாதின் குழல் நகையே. (351)
பாங்கி வைகு இருள் விடுத்தல்
பொறியா ளுரையுந் தென் பேரைப்பட் டீசர் பொருப்பின் மின்னார்
அறியா தலர்புகன் றேயென செய்துநம் மன்னை துயிற்
குறியாது செய்தனர் நீரிரு வோர் வழிகூடுமந்த
நெறியாக யான்வரு வேன்புல ராதுசெல் நேரிழையே. (352)
தலைமகளைத் தலைமகன் சுரத்துய்த்தல்
மாவும் பலாவும் அசோகமும் புன்னை மரங்கள் மிகும்
காவும் சுனையும் கதிர்காணும் தாமரைக் கட்டவிழ்ந்த
பூவு மிவை யெழில் பார்த்தனம் போல் நடப் பாய்புலவர்
மேவும் தென்பேரைப்பட் டீசர் வரைவளர் மெல்லியலே. (353)
தலைமகன் தலைமகள் அசைவறிந்திருத்தல்
கஞ்சப் பதமுத் தெனகொப் பழிக்க கதிர் வெயில்கள்
மிஞ்சக் கமல முகமுத் தெனவும் வெயர்த்திடுமெய்
அஞ்சக் கரத்தர்தென் பேரைப்பட் டீச ரணிவரையின்
நஞ்சத் தினைவிழி யாயினிப் பாரிட நல்லிடமே. (354)
தலைமகன் தலைமகளையுவந்து அலர் சூட்டியுண்மகிழ்ந்து உரைத்தல்
மானா ரடிமலர் போற்றவும் கூந்தலின் வாய்ந்து நரைத்
தேனார் மலர்தனைச் சூட்டவுஞ் செய்தது சித்தசனை
மேனா ளெரித்தவர் பேரைப்பட் டீசர் வியன் கிரியின்
யானார் தரத்தொடு முன்செய்த மாதவ மென்னெஞ்சமே. (355)
கண்டோர் இரங்கல்
கரத்தின் முகத்தினிற் காலிற் செவ் வாயிற் கமலமுமாம்
உரத்திற் கவுத்துவ முண்டாகில் மாலென் றுரைத்திடலாம்
புரத்தி லெரியிடப் பேரைப்பட் டீசர்செய் புன்னகைபோற்
சுரத்தி லிவெரெவ ரோயொரு மாதுடன் சூழ்ந்தவரே. (356)
இதுவுமது
பொன்னையு மன்னையு நேரறியதினப் பூங்குடிசீர்
தன்னை வளர்த்திடும் பேரைப்பட் டீசர் சயிலத்திந்த
மின்னைவில் வேளெனு மன்னன்பின் போவென்று விட்டவள்
அன்னையன் றோசொலுங் கல்நெஞ் சினரில் வகிலத்திலே. (357)
கண்டோர் காதலின் விலக்கல்
மடமான் நடந்து வருந்தினள் மன்னவா னக்கதிருங்
குடமாக கடலிற் படிந்தவிவ் வூரிற் கொடிதிலவாங்
கடமான றசையுள் பாலுள தேனுள் கங்குற்றங்க
விடமாம்பட் டீசர்தென் பேரைக்கு நாளைக் கெழுந்தருளே. (358)
கண்டோர் தன்பதி யணிமை சாற்றல்
நீதியு மானமன் னாவழல் போற்சுரம் நீங்கியிக்கார்
ஓதியு நீயுஞ்சென் றாலொரு காதமப் பாலுளது
போதியுங் காஞ்சி நதியுநல் வெள்ளிப் பொருப்புமுமை
பாதியு மானவர் பட்டீசர் பேரைப் பதியதுவே. (359)
தலைவன் தன்பதியடைந்தமை தலைவிக்கு உணர்த்தல்
துன்றுங் குழன்மட வாய்சீ ரடித்துன்பந் தோற்ற நென்னல்
இன்றும் நடந்த வருத்தமுன் னேஏழில் பேரையினில்
மன்னும் கணவெள்ளி மலையருகே நிற்கு மாகனகக்
குன்றிங்கு தோன்றுதல் பட்டீசர் கோயில் பொற் கோபுரமே. (360)
குறிப்பு.- வரைவியலில் உடன் போக்கு என்னும் பகுதி வரைதான் பாடல்களுள்ளன.
பின்னுள்ளவை காணப்படவில்லை. இடையில், 269-வது பாடலுக்குப்பின் ஒரு வழி
தணத்தற் பகுதியிலும், வரை விடை வைத்துப் பொருள் வயிற் பிரிதல் என்ற பகுதியிலும் சில காணப்படவில்லை.
============================================