திருமாகறல் கார்த்திகேய முதலியார் இயற்றிய
கச்சி இதழகல் அந்தாதி
kacci itazakal antAti
of kArtikEya mutaliyAr
In Tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
We thank Dr. Meenakshi Balaganesh, Bangalore, India for her assistance in the
preparation of this work for publication.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2023.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
திருமாகறல் கார்த்திகேய முதலியார் இயற்றிய
கச்சி இதழகல் அந்தாதி
Source: நூல் பற்றிய விவரங்கள்
கச்சி இதழகல் அந்தாதி
இது சைதாப்பேட்டை, 'தியலாஜிகல் காலேஜ்' தமிழ்ப் பண்டிதர்
திருமாகறல் - ப -தி. கார்த்திகேய முதலியாரால் இயற்றப்பட்டு
“இராமாயணஸாரம்", "இராஜராஜேஸ்வரி" முதலியவற்றின் நூலாசிரியர்
செய்யூர் - முத்தைய முதலியார், பீ.ஏ இயற்றிய உரையுடன்
சென்னை: 'டிவைன்' அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது.
1907.
------------
முகவுரை.
சிவமயம்.
நீராழியுற்ற இக்கிலவுலகில் செல்வங்கள் பலவும் சிறந்து விளங்குவது தொண்டைமாநாடு.
அந்நாட்டுக்குத் திலகமென ஒளிர்வது எம்மிறைவன் ஒருமாவிற்பெருமான் உறையும் கச்சியம்பதி.
இப்பதியே புண்ணிய தலங்கள் பலவற்றுள்ளும் சிறந்ததென இறைவனாலேயே இயம்பப் பெற்றது.
"புண்ணியமெய்த் திருக்காஞ்சி யெவற்றினுமேம் படுபுரியா மவ்வூர் தன்னை
யெண்ணிலுங்கேட் பினுமசொலினும் வணங்கினும்பே ரின்பவீ டெவர்க்கு நல்கும்"
என்றபடி இந்தத் தலத்தை மனத்தால் நினைக்கினும் நம்முடைய பாபம் நசிக்கும் எனில்
இதன் சிறப்பை வேறு என்னென்று சொல்லுதல் கூடும்?
இத்துணைச் சிறப்புவாய்ந்த இப்பதியில் பத்தர்க்கெளியராய் விளங்கும் பரமசிவத்தின்மீது
அளவில்லாத பத்தி யுடையராவர் இந்நூலின் ஆசிரியர்; இவர் நற்குணத்திலும் நற்செய்கையிலும்
மிகச் சிறந்தவர்; தமிழ்மீதும், தமிழபிமானிகள் மீதும் ஆர்வம் மிகுந்தவர்; எனக்குத் தமிழின் அருமை
பெருமைகளை விளங்கக் கூறி, அதிலுள்ள வற்றாத சுவையை நான் என்றென்றும் சுவைத்து
ஆநந்திக்குமாறு முதன்முதலில் சுவை காட்டியவரும் இவரே.
இவர் சிவபெருமானிடத்துத் தமக்குள்ள அன்பின் மிகுதியால், இக் "கச்சி இதழகல்
அந்தாதி'யை இயற்றுவாராயினர். அந்தாதியாவது ஒரு செய்யுளிறுதியிள்ள எழுத்து, அசை, சீர்
அல்லது அடி அடுத்த செய்யுளின் ஆதியாக வரத்தொடுப்பது. “இதழ் அகல்'' என்றால் மேலிதழும்
கீழிதழும் ஒன்றோடொன்று சேராமல் அகன்றே நிற்பது. அதாவது, இச்செய்யுள்களை
உச்சரிக்கும்போது உதடுகள் ஒன்றுபடாமல் அகன்றே நிற்கும். இதனை வடநூலார் "நிரோட்டகம்"
என்பர்.
இந்நூலாசிரியர் காஞ்சீபுரத்தில் தம்முடைய ஆசிரியர் வ. கணபதி பிள்ளையவர்களினிடம்
தொல்காப்பிய முதலியன பாடங் கேட்டகாலத்தில் இயற்றிய இதனை இப்போது ஆங்குள்ள அன்பர்
பலர் வேண்டிக்கொண்டபடி அச்சிட்டு வெளியிடுவாராயினர்; ஆனால், செய்யுள்களை மட்டில்
வெளியிடுவது பண்டிதர்க்கேயன்றி ஏனையோர்க்கும் பயன்படாதாகலின், உரையுடன் வெளியிடல்
நலமென்று என்னிடம் குறிப்பித்தமையால், யான் இப்போது இதற்கு உரையெழுதலானேன். போதிய
அவகாசமின்மையால் உரை விரிவில் எழுதப்படவில்லை யாயினும், இப்போது எழுதப்பட்டிருக்கும்
பதவுரை, குறிப்புரை, கருத்துரைகளினின்றுமே எவரும் பொருள் எளிதில் அறிந்துகொள்ளக்
கூடுமென்று நம்புகின்றேன்.
யான் மேற்கொண்ட தொழிலுக்கிடைக்கிடையே கிடைத்த அவகாசத்திலும் அவசரத்திலும்
இது எழுதப்பட்டதாதலின், இதிற் பிறழ்வுகள் உளவேல், அவற்றைத் திருத்தியமைத்துக்
கொள்ளுமாறு செந்தமிழ்ச் செல்வர்களைக் கேட்டுக்கொள்ளுகின்றேன்.
சென்னை,
21-3-1907 } செய்யூர் - முத்தைய முதலியார்.
--------------
கச்சி இதழகல் அந்தாதி.
உ - சிவமயம்.
காப்பு.
வெண்பா.
கங்கைகனிந் தீன்ற தனிக் காதலனை யைங்கரனை
நங்கை சிரநிறீஇ நன்றேத்திச் - சங்கையறக்
கச்சியந் தாதி கழறிநலங் கண்டக்கா
லிச்சை யிடர்க ளிலை. (1)
திங்க ளணிசடையான் சேயடிகட் கந்தாதி
நங்களங் கேக நயநதியற்றச் - சிங்கநிகர்
கந்தனை யிற்றைக் கனிந்திறைஞ்சி நன்னெஞ்சே
சிந்தனை செய்தே தெளி. (2)
உ -- சிவமயம்.
நூல்.
கட்டளைக்கலித்துறை
கங்கா தரனந்த காரி சடையன் கயிலையன
கங்கா தரனந்த நந்தன நாதன் கழனியின் றண்
கங்கா தரனந்தற் கீர்ங்கதி தந்தனன் காசினிய
கங்கா தரனந்த ரங்கெடக் கச்சியிற் கண்டனனே. (1)
பதம் - பொருள். கங்காதரன் - கங்கையைத் தரித்தவனும்; அந்தகாரி - அந்தகா சூரனை வென்றவனும்; சடையன் - சடையுடையோனும்; கயிலையன் - வெள்ளிமலை யுடையோனும்; அகம் – பாவங்களை; காது - போக்குகின்ற; அரன் - அரனென்னும் பெயரோனும்; நந்தநந்தனன் – திருமாலுக்கு; நாதன் – இறையோனும்; கழனியின் – கழனிகளின்; தண்கங்கு - தண்ணிய வரம்பிடத்து; ஆதரன் – விருப்பமுள்ளோனாகிய; நந்தற்கு - திருநாளைப் போவாருக்கு; ஈர்ங்கதி - குளிர்ந்த வீட்டுலகத்தை; தந்தனன் - கொடுத்தோனுமாகிய சிவபெருமான்; காசினியகம் – இப்பூமியிடத்து; காதரல் - நம்மைக் காத்தலைச் செய்க; நம் தரங் கெட - நமது அச்சம் நீங்க; கச்சியிற் கண்டனன் - அன்னவனைக் கச்சியிற் கண்டேன்.
கருத்து: -கங்கையைத் தரித்தவனும், அந்தகாசூரனை வென்றவனும், ஜடாதாரியும், வெள்ளிமலை யுடையவனும், அரனென்னும் பெயரோனும், திருமாலுக்கு இறையோனும், திருநாளைப் போவாருக்கு வீட்டுலகத்தைத் தந்தவனுமாகிய சிவபெருமானை நான் கச்சிப்பதியிற் கண்டேன். அன்னவன் நம்மைக் காத்தருள்க. (1)
----------
கண்ணலங் காரி யழைக்க நடந்தே கனிசெய்கரை
கண்ணலங் காரி யெனச்சாற்றி நெஞ்சங் கரைந்தனநிற்
கண்ணலங் காரி யயற்கரி தாங்கதி காணலெற்றங்
கண்ணலங் காரியர் சங்கஞ்சேர் கச்சிக் கனநிதியே. (2)
பதம் – பொருள்; கண்ணலங்காரி - கண்ணலங்காரமுள்ள ஒரு மாது; அழைக்க - கூப்பிட;
நடந்து – போய்; கனிசெய் - கனிதலைச் செய்கின்ற; கரை - (உனது) மொழி; கள்நலம் – தேனலம்
பயப்பதாகும்; காரிநலம் - கிளிநலம் பயப்பதாகும்; எனச்சாற்றி - என்று சொல்லி; நெஞ்சம்
கரைந்தனம் - மனமுருகினோம்; நிற்கண்ணலம் – நின்னை யெண்ணிலோம்; காரி - இந்திரனுக்கும்;
அயற்கு – பிரமனுக்கும்; அரிதாம் – கிடைத்தற்கரிதாகிய; கதி – மோட்சம்; காணல் ஏற்று - காணுதலெப்படி? அங்கண் – அவ்விடத்து; அலங்கு – விளங்குகின்ற; ஆரியர் – பெரியாரது; சங்கம் சேர் - கூட்டம் சேர்கின்ற; கச்சிக் கன நிதியே - கச்சியின் கட்பெருநிதியே.
குறிப்பு:-- ஒரு தொடருள் இறுதி நின்ற பெயர்க்கு மாத்திரம் உருபு விரிந்து நின்று
மற்றைப் பெயர்களில் உருபு தொக்கு வருதலுமுண்டு.
கருத்து:- இந்திராதி தேவர்விளங்கும் கச்சிப்பதியில் வீற்றிருக்கும் எம்மிறையே!
அலங்காரமுள்ள ஒரு பெண்ணைப் பின் சென்று "ஆ! உன் மொழி தேன்மொழியோ?
கிளிமொழியோ என்று மனமுருகினேனேயொழிய, உன்னை ஒரு கணமேனும் நினைத்திலேன். என் செய்கேன்? இப்படிப்பட்ட எனக்கு இந்திரன் பிரமன் முதலியவர்க்கும் கிடைத்தற்கரிய மோட்சம் எங்ஙனம் கிடைக்கும்? (2)
-----------
கனகங்கை யாரலங் கச்சியி னேசர் கனியிரதக்
கனகங்கை யாரலங் கார நகிலக் கதிர்திகழ் தண்
கனகங்கை யாரலங் காணா திறைஞ்சியக் காதலர்சீர்
கனகங்கை யாரலங் காணரி தேர்கிளர் காதலியே. (3)
பதம் – பொருள்: கனகம் – பொன்னால்; கை – அலங்கரிக்கும்; ஆரல் - மதில் சூழ்ந்த; அம்
கச்சியில் - அழகிய காஞ்சியில்; நேசர் – அன்புடையாரும்; கனியிரதம் - கனிகளைப்பெய்யு மாவடியில் வாழும்; கன கங்கையார் - மேன்மைபொருந்திய கங்காதரருமாகிய சிவபெருமான்; அலங்கார நகிலம் - அலங்காரமுள்ள கொங்கையாகிய; கதிர் திகழ் தண் கல் நகம் - ஒளிவிளங்குந் தண்ணியமலையின்கண்; கையார் - வெறுப்படையார். (ஆகலின்); அலம் காணாது - துன்பத்தை நோக்காமல்; இறைஞ்சி – வணங்கி; அக்காதலர் சீர் கல் - அந்நாயகரது சீர்மையைக்கற்க; நகம் - நகுதல் செய்யாம்; கை – சிறுமைதரும்; ஆரலம் – பகை; காணரிது - காணுதல் கூடாது; ஏர் கிளர் காதலியே - அழகால் விளங்குகின்ற காதலியே.
கருத்து:- பேரழகுவாய்ந்த பெண்ணே! அழகிய காஞ்சியில் அன்புடையவராய்
மாமரத்தடியில் விளங்குஞ் சிவபெருமான் உன் மீது வெறுப்படையார். ஆகையால் அந்நாயகரை
வணங்கி அவருடைய சீர்மையைக் கற்க. (3)
------------
காதல னந்தரஞ் சேரிண்டைக் கைதையங் கச்சியிகல்
காதல னந்தர னேத்தநல் லந்தணன் கண்டிறைஞ்சக்
காதல னந்தர னின்றாசி சாற்றக் கழிநலனா
காதல னந்தர னாகநன் னெஞ்சங் கலந்தினிதே. (4)
பதம் – பொருள்: காதல் – அன்புடனே; அனம் – அன்னப்பறவைகள்; தரம் – கூட்டமாக;
சேர் – சேர்கின்ற; இண்டை – தாமரைமலர்களையுடைய; கைதை - வயல்சூழ்ந்த அழகிய கச்சியானது;
இகல்காது - பகைவரைக் கொல்லும்; அலன் - கலப்பை யுடையோனும்; நந்து - சங்கிற்கு; அரன் -
இறையோனுமாகிய திருமால்; ஏத்த - துதிக்கவும், நல் அந்தணன் - நல்லபிரமன்; கண்டு இறைஞ்ச;
காதலன் - கற்பகச் சோலையும் நல்லிடமுமுள்ள; அந்தரன் - சுவர்க்கேந்திரன்; நின்று ஆசிசாற்ற - நின்று
வாழ்த்தெடுப்பவும், கழிநலன் - மிக இன்பந்தருவதாகும்; ஆகாது அலல் -துன்பமுண்டாகாது; நல்
நெஞ்சம் - நல்நெஞ்சத்தில் ; இனிது கலந்து - இனிதேகலந்து; நம் தரன் ஆக - அது நமக்கு வசப்பட்டதாக.
கருத்து:- வளமைமிக்க கச்சிப்பதியானது, திருமால் துதிக்கவும், பிரமன்கண்டு வணங்கவும்,
சுவர்க்கேந்திரன் நின்று வாழ்த்தெடுப்பவும், மேலான இன்பந்தருவதாகும். நாமும் அப்பதியை நினைந்து நற்கதியடைவோமாக. (4)
------------
கலகங்க ணந்தத் திகழ்கச்சிச் சங்கரன் கன்னி
கலகங்க ணந்தச் சிறகலர் கேகயங் கண்டெனினி
கலகங்க ணந்த கராதில நெஞ்சே கனிந்திங்ஙனே
கலகங்க ணந்தரித் தந்தணர் சேர்ந்ததைக் கண்ணிநன்றே. (5)
பதம் – பொருள்: கலகங்கள் - தீமைகள்; நந்த - கெட; திகழ்கச்சி – விளங்குகின்ற
கச்சியின் கண்; சங்கரன் – சிவபெருமானது; கன்னி – அழிவின்மையாகிய; நந்திக்கல்லகம் - நந்திமலையினிடத்து; கண்நந்த – கண்கள் வளர; சிறகு - தோகைகளை; அலர் - விரிக்கின்ற; கேகயம் – மயில்களை கண்டேன் எனில்; இகல் அகம் - பகைக்கின்ற பாவங்கள்; கணம் – கணப்போதில்; தகராதில் - கெடுவனவாம். (ஆகலின்) நெஞ்சே -மனமே; கனிந்து – மகிழ்ந்து; இங்ஙனே கல - இவ்விடத்திற் கலக்க. அந்தணர் – முனிவர்கள்; கங்கணம் தரித்து - விரதஞ்செய்துகொண்டு; சேர்ந்ததை - சேர்ந்திருந்ததை
பெரிதெண்ணி
கருத்து:- கச்சிப்பதியில் சிவபெருமானது நந்திமலையில் உள்ள மயிற் கூட்டங்களைக்
கண்டமாத்திரத்திலேயே நாம்செய்த பாவங்களெல்லாம் அறவே ஒழிந்துவிடும். ஆகையால், மனமே! முனிவர்கள் விரதஞ் செய்துகொண்டிருக்கும் படியான அப்பதியில் நீ எப்போதும் கலந்தி ருப்பாயாக. (5)
---------------------
கண்டிகை யானலஞ் செய்கின்ற செங்கைக் கனதனத்தார்
கண்டிகை யான கரத்திற் சிறந்தநங் கச்சியையே
கண்டிகை யானஞ் செறிநந் தனங்காண் கரிலிங்ஙனங்
கண்டிகை யான கலைநிதங் கற்க கரியநெஞ்சே. (6)
பதம் – பொருள்: கண்டிகையான் – கடகத்தினால்; நலம்செய்கின்ற – அழகுசெய்கின்ற;
செம்கை – சிவந்தகையும்; கனதனத்தார் - கனமாகிய கொங்கையு முடைய மாதரது; கண்
திகையான் - கண்ணிற்கு மயங்காதவனாகிய சிவபெருமானது; நகரத்திற்சிறந்த - எல்லா நகரங்களிலு மேம்பட்ட; நம் கச்சியையே - நமது காஞ்சியையே;
கண்டு இகை – கண்டு கொடுப்பாயாக; யானம்செறி – தேன் செறியும்; நந்தனம் – பூங்காவனம்;
காண் - காண்பாயாக; கரில் - குற்றங்களை; இங்ஙனம் கண்டி - இங்கே நீக்குவாயாக;
கையான - ஒழுக்கமாகிய; கலை - நூல்களை; நிதம் கற்க – தினமுங் கற்பாயாக; கரிய நெஞ்சே - கரிய
மனமே.
கருத்து:- குற்றங்கள் நிறைந்த மனமே! சிவந்த கையும், சிறந்த கொங்கையுமுடைய மாதரது கண்வலைக்கு மயங்காதவனாகிய சிவபெருமானை, புண்ணிய தலங்கள் பலவற்றுள்ளும் சிறந்த கச்சிப்பதியில் நீ கண்டு, ஒழுக்கநூலை ஓதி, உன்னிடத்திலுள்ள குற்றங்களை ஒழிப்பாயாக. (6)
----------
கரியா னனந்தழை யாநின்ற நாயகன் கந்தனயன்
கரியா னனந்த சயன னிறைஞ்செழிற் கச்சியிற்சங்
கரியா னனந்த நிதிதந் தணங்கின் கனதனச்சி
கரியா னனந்த ரடைந்தேற் கினிய கதிதரலே. (7)
பதம் – பொருள்: கரி ஆனனம் - யானை முகத்தினால்; தழையாநின்ற – தழைந்துகொண்டிருக்கின்ற; நாயகன் – விநாயகனும்; கந்தன் - முருகனும்; அயன் – பிரமனும்; கரியான் - இந்திரனும்; அனந்தசயனன் – திருமாலும்; இறைஞ்சு – வணங்குகின்ற; எழில் கச்சியில் - அழகிய காஞ்சியின்கண்; சங்கரியான் – மங்கை பாகனான சிவபெருமானே! அநந்தம் - அளவின்மையாகிய;நிதிதந்து - பொருள் கொடுத்து; அணங்கின் - பெண்ணினது; கனதனம் - கனத்த கொங்கையாகிய; சிகரியான் – மலையினால்; அனந்தரடைந்தேற்கு – மயக்கமடைந்தேனுக்கு; இனியகதி – இனிய வீட்டுலகத்தை; தரல் - தருக.
குறிப்பு:- சங்கரியான் அண்மைசுட்டிய விளிநிலைக்கிளவி. இனி, அகதி = நரகம், தரல்=தரற்க எனலுமாம்.
கருத்து:- விநாயகன், முருகன், பிரமன், இந்திரன், திருமால் முதலியோர் வணங்கும் கச்சிப்பதியிலுள்ள மங்கைபாகனான சிவபெருமானே! நான் ஒரு பெண்ணுக்குப் பெரும் பொருள் கொடுத்து, அவளுடைய கொங்கையாகிய மலையால் மோதுண்டு மயக்க மடைந்தேன். எனக்கு நரகத்தைத் தராமல் பேரின்பந் தந்தருளல் வேண்டும். (7)
------------
தரனந் தியாகத் தழகின னாரணத் தந்தைசசி
தரனந் தியாகத் திகழர னெங்கள் சரசனற்சீ
தரனந் தியாக நிதஞ்செயங் கச்சியிற் சார்ந்தநிரந்
தரனந் தியாக நசையனஞ் சிந்தையிற் றங்கினனே. (8)
பதம் – பொருள்: தரன் – சிவந்த; அந்தி - அந்திக்காலம்போல; ஆகத்தழகினன் - உடம்பிலழகுடையானும், ஆரணம் – தந்தை - தந்தையும்; சசிதரன் - பிறை சூடியும், நந்தியாக - நந்தீசனாக; திகழரன் - விளங்குகின்ற அரனும், எங்கள் சரசன் - எங்களுக்கு இனியனும், நற்சீதரன் - நல்ல திருமால்; நந்து – வளர்கின்ற; யாகம் – யாகங்களை; நிதம் – நாள்தோறும்; செய் – செய்கின்ற; அம்கச்சியில் - அழகிய கச்சியின்கண்; சார்ந்த நிரந்தரன் - சார்ந்த நிரந்தரனும்; நம் - நமக்கு; தியாகநசையன் - கொடுத்தற்கு விருப்பமுள்ளவனு மாகிய சிவபெருமான்; நம்சிந்தையில் - நம்மனத்தில்; தங்கினன் - தங்கியிருக்கின்றனன்.
கருத்து:- திருமாலினால் யாகங்கள் செய்யப்படும் கச்சிப்பதியிலுள்ள சிவபெருமான் நம் மனத்தில் தங்கியிருக்கின்றனன். அச்சிவபெருமான் மிக வடிவுடைய சுந்தரன்; அவனே வேதங்களுக்குத் தந்தை; அவனே பிறைசூடி; அவனே நந்தீசனாக விளங்கும் அரன்; அவனே நமக்கு இனியன்; அவனே எவர்க்கும் விரும்பியதைக் கொடுக்கும் விருப்புடையவன். (8)
------------
தங்கத் திகைத்தனத் தார்நகை காட்டித் தயங்கியெதிர்
தங்கத் திகைத்தனங் கேகயந் தேனெனத் தாங்கிநித்
தங்கத் திகைத்தனங் கையில னீயெனச் சாற்றிலர்சித்
தங்கத் திகைத்தன னல்லனென் கச்சியிற் சந்தனனே. (9)
பதம் – பொருள்: தங்கம் – தங்கம்போலும்; திகை - தேமலையுடைய; தனத்தார் -
கொங்கையையுடைய மாதர்கள்; நகைகாட்டி - முறுவல்செய்து; தயங்கி – விளங்கி; எதிர்தங்க - எதிரில் நிற்க; திகைத்தனம் - மயங்கினோம்; கேகயம் – மயிலே; தேன் – தேனே; என – என்றுரைத்து; நித்தம் – தினமும்; தாங்கினம் - காத்தோம்; கையிலன் -
கையிலொன்று மிலேன் (ஆதலால்) கத்திகைத் தனம் - பூமாலை வாங்கித்தந்த பொருளை;
ஈ என - ஈயென்று கேட்க; சாற்றிலர் - ஒன்றும் பேசிலர்; சித்தம் - அவர் மனம்; கத்தி - கத்திபோலுங் கொடிது; கைத்தனன் அல்லன் - (இன்னும்) வெறுத்தேன் அல்லன். என் -
இஃது என்ன காரணம்? கச்சியில் – காஞ்சியின்கண்; சந்தனனே - நல்ல பொன்போலுஞ் சிவபெருமானே.
கருத்து:- தங்கம் போலும் தேமல் நிறைந்த மாதொருத்தி புன்னகை புரிந்து என்னெதிரில் நிற்க, அவளைக்கண்டு மயங்கினேன்; 'மயிலே' என்றேன்; 'தேனே' என்றேன் ; அவளை அனுதினமுங் காத்தேன்; உள்ளபொருளெலாம் ஒழியவும், கையி லொன்றுமில்லை; பூமாலை வாங்கித்தந்த பொருளையாவது கொடு' என்று கேட்டேன். அவளோ வாய்திறந்திலள்! ஆ! ஆ!! அவள் மனம் மிகக் கொடிது. இவையெல்லாம் அறிந்தும், இன்னும் நான் அவளை வெறுத்திலனே! கச்சிப்பதியிலுள்ள சிவபெருமானே! இது என்ன காரணம்? (9)
------------
சந்தனஞ் சந்தனஞ் சென்னெறி சென்றன சாலச்சர
சந்தனஞ் சந்தனந் தீட்டிக் கனிந்தகஞ் சாரச்சரா
சந்தனஞ் சந்தனந் தாரா தலநல்ல சர்க்கரைக
சந்தனஞ் சந்தனக் காகா தெழிற்கச்சிச் சங்கரனே. (10)
பதம் – பொருள்: சந்து - தூது போன; அனம் – அன்னப்புள்; சந்தனம் – தேர்;
செல்நெறிசென்றன - சென்ற நெறியே சென்றன; தனம் – கொங்கை; சாலச்சரசம் - மிக இனிமையானது; சந்தனந்தீட்டி – சந்தனம் பூசி; அகம்கனிந்து - மனமகிழ்ந்து; சார – புணர;
சராசந்தன் – சராசந்தனது; அஞ்சம் - அமிசம்போலுயிர் தளிர்ப்பதாகும்; தனம் – செல்வமும்; தாராதல - தருவதாகும்; நல்லசர்க்கரை - இனிய சர்க்கரை; கசந்து – கசப்புற்று; தனக்கு – நாயகிக்கு; அல்நஞ்சம் ஆகாது - இருள்போற்கரிய நஞ்சமாகாது.
எழில் - அழகு வாய்ந்த; கச்சிச்சங்கரனே - கச்சியின்கட் சிவபெருமானே.
கருத்து:- கச்சியின்கட் சிவபெருமானே! நினக்குத் தூதுவிட்ட அன்னப்புள் நின் தேர் சென்ற சுவட்டு நெறியே சென்றன, தலைவியின் கொங்கை மிக இனிது. அதன் கண்ணே சந்தனம் பூசி மகிழ்ந்து புணர வாடியஉயிர் தளிர்க்கும்; செல்வமுமுண்டாம்; தலைவியும் விருப்பு வைத்திருக்கின்றனள். (10)
(இது பாங்கி தலைவனைக் கண்ணுற்றுத் தலைவியைப் புனைந்துரைத்தல்.)
-----------
சங்கரி யந்தரி கச்சியி னங்கையர்த் தாங்களிக்கட்
சங்கரி யந்தரி யென்னக் களிக்கின்ற சங்கரநெஞ்
சங்கரி யந்தரி னன்ஞான நன்றெனைத் தள்ளற்கநஞ்
சங்கரி யந்தரி யாநின்ற தீயன சங்கரித்தே. (11)
பதம் – பொருள்: சங்கு – சங்குகளாகிய; அரியம் – வாச்சியவொலி; தரி -
தரிக்கும்; கச்சியில் – கச்சியின்கண்; நங்கையர் - கலைமகளையும் திருமகளையும்; தாங்கு – காத்தருளும்;
அளிக்கண் – அருளொழுகுங்கண்ணுடைய; சங்கரி அந்தரி - சங்கரியே அந்தரியே; என்ன - என்று துதிக்க;
களிக்கின்ற சங்கர - மகிழ்கின்ற சங்கரனே! நெஞ்சம் - மனம்; கரியம் – கருநிறமுடையோம்; நல்ஞானம் – நல்லுணர்வை; தரின் – தந்தால்; நன்று - நன்றாகும்; நஞ்சம் – உண்டநஞ்சமே; கரி - (தள்ளாம லாளுதற்கு)ச் சான்றாகும். அந்து -
அந்தென்னும் வண்டைப்போல்; அரியாநின்ற – கெடுக்கின்ற; தீயன – தீயசெயல்களை; சங்கரித்து - அழித்து.
குறிப்பு :-- காமாட்சி: க =கலைமகளையும், மா = திருமகளையும்,அட்சி = கண்ணில் வைத்துக் காத்தருள்வாளென்பது.
கருத்து:- வளமை மிக்க கச்சிப்பதியில், கலைமகளையும் திருமகளையும் நோக்கி, "அருளொழுகுங் கண்ணுடைய சங்கரியே! சுந்தரியே!" என்று துதிப்பதால் மகிழ்கொள்ளும் சங்கரனே! நான் கரிய மனமுடையேன். எனக்கு நல்லுணர்வு தரல் வேண்டும். எங்ஙனம் கருநிறமுடைய நஞ்சையும தள்ளாமல் உட்கொண்டனையோ, அங்ஙனமே என்னையும் தள்ளிவிடாமல் ஏற்றருளல் வேண்டும். (11)
----------
சங்கர சங்கரத் தானன் கிறைஞ்சித் தகரநிறை
சங்கர சங்கர நீதா யெனக்கேட்டென் தாழ்நெஞ்சிளஞ்
சங்கர சங்கரந் தியாகஞ்செய் கின்றனை தண்ணறிஞர்
சங்கர சங்கரத் தீதழி கச்சியிற் றந்தியங்கே. (12)
பதம் – பொருள்: சங்கு – சங்குகளுக்கு; அரசு - அரசாகிய பாஞ்சசன்னியமுடைய;
அம் – அழகிய; கரத்தான் - கையுடைய திருமால்; நன்கிறைஞ்சி – நன்குவணங்கி; தகரம்நிறை - ஞானவித்தை நிறைந்த; சங்கரசங்கர - சங்கரனே சங்கரனே; நீதாய் - நீ எனக்குத்தாய்; என - என்று துதிக்க; கேட்டு என் - கேட்டுப் பயனென்னை? தாழ் நெஞ்சு -
தாழ்ந்த மனமே! இளஞ்சங்கர் - இளமையாகிய சங்கவளையலணிந்த மகளிரை நிகர்த்தாய்;
அசம் – ஆடுகளை; கரந்து – வஞ்சித்து; யாகஞ்செய்கின்றனை – யாகஞ்செய்கின்றாய்;
தண் அறிஞர் - தண்ணிய அறிஞரது; சங்கரசம் - சங்கத்தால் விளையும் ஞானரசத்தினால்; கரம் தீது - நஞ்சுபோன்ற குற்றம்; அழி – அழிகின்ற; கச்சியில் – கச்சியின்கண்; தந்து இயங்கு - தந்துவிளங்குக.
கருத்து:- பாஞ்சசன்னியமுடைய திருமால் "சங்கரனே! நீயே எனக்குத்தாய்!" என்று துதிப்பதை நீ கேட்பதனால் யாது பயன்? உன்னிடமுள்ள வஞ்சனையை ஒழித்தாயில்லை. ஆகையால், ஏ மனமே! நீ உடனே கச்சிப்பதிசென்று உன்குற்றத்தை ஒழித்து ஒளியுடன் விளங்குவாயாக. (12)
-------------
தந்தியங் காரிகை யாற்றச் சாற்றினன் தானந்தினந்
தந்தியங் காரிகைக் கன்றினி னாய்ந்தனன் தண்ணளியன்
தந்தியங் காரிகை காதலன் றந்தை தயையெழிற்சித்
தந்தியங் காரிகை கச்சித் தலத்திற் சலங்கடிந்தே. (13)
பதம் – பொருள்: தந்து – வேதத்தின்; இயம் – சொற்பொருளை; காரி – கரிக்குருவி;
கையாறு – துன்பம்; அற – நீங்க; சாற்றினன் - சொன்னவனும், தானம் – தானங்களை; தினந்தந்து – தினமுஞ்செய்து; இயங்கு – விளங்குகின்ற; ஆரி – சோழனை; கைக்கன்றினின் – இளங்கன்றினால்; ஆய்ந்தனன் - ஆராய்ச்சிசெய்தவனும், தண்ணளியன் - தண்ணிய அருட்பிழம்பானவனும், தந்தி - யானையால் வளர்க்கப்பட்ட; அம்காரிகை -
அழகிய பெண்ணுக்கு; காதலன் - நாயகனான முருகனுக்கு; தந்தை - தந்தையுமாகிய சிவபெருமானது; தயை எழில் – திருவருளுண்டாயின்; சித்தம்தியங்கார் - மனமயங்கார். (ஆகலின்) இகை – கொடுப்பாயாக; கச்சித்தலத்தில் – காஞ்சித்தலத்தின்கண்; சலங்கடிந்து - பொய்முதலியன தவிர்த்து
கருத்து:- மனமே! கரிக்குருவிக் குபதேசந் செய்தவனும், சோழனை இளங் கன்றினால் ஆராய்ச்சி செய்தவனும், அருட்பிழம்பானவனும், முருகன் தந்தையுமாகிய சிவபெருமானது திருவருளுண்டாயின் உன்னுடைய மயக்கம் ஒழியும். ஆகையால், கச்சிப் பதியடைந்து, பொய் முதலியன தவிர்த்து, தான தருமஞ் செய்வாயாக. (13)
---------------
சலஞ்சலங் கைத்தலத் தேந்தினன் றன்கா தலன் சினநிச்
சலஞ்சலங் கைத்தல ரெய்தனன் தண்ணந் தனந்திகழ
சலஞ்சலங் கைத்தலள் கண்செயி லச்சித் தசன்சிறியீ
சலஞ்சலங் கைத்தலங் கங்கிளர் கச்சியிற் றங்கிறையே. (14)
பதம் – பொருள்: சலஞ்சலம் - சலஞ்சலமென்னுஞ் சங்கினை; கைத்தலத்து – கையில்;
எந்தினன் தன் - ஏந்தினவனாகிய திருமாலுக்கு; காதலன் - மகனாகிய மன்மதன்;
சினம் – கோபத்தினால்; நிச்சல் – தினமும்; அஞ்சு – ஐந்தாகிய; அலங்கு – விளங்குகின்ற;
ஐத்து – அழகிதாகிய; அலர் – மலரம்புகளை; எய்தனன் - விடுத்தனன்; தண்ணந்தனம் - தண்ணிய
கொங்கை; திகழ் அசலம் - விளங்குகின்ற மலையாம்; சலம் - (இன்று) அசையுந்தன்மையதாகும்; கைத்தலள் - இன்னும் வெறுப்பிலள்; கண்செயில் - திருவருள் செய்யின், அச சித்தசன் – அம்மன்மதன்; சிறியீசல் - சிறிய ஈசல் போலாவன். அஞ்சலம் -
யாமும் அஞ்சிலோம். கைத்தல் – அலங்கரித்தலுடைய; அங்கம் - வேதாங்கம்; கிளர் – விளங்குகின்ற; கச்சியில் – காஞ்சியின்கண்; தங்குஇறையே - வாழ்கின்ற சிவபெருமானே!
கருத்து:- திருமாலின் மகனாகிய மன்மதன் பஞ்சமா பாணங்களை இடைவிடாது விடுக்கவும், அசையா மலைபோலுங் கொங்கையானது இன்று அசையுந்தன்மையதாயிற்று. ஆயினும் என்? இன்னும் வெறுப்பிலள்! ஆகையால், காஞ்சியின்கண் வாழும் சிவபெருமானே! நீயே திருவருள் செய்யவேண்டும். உன்னருள் உண்டாயின் அம்மன்மதனும் அழிவான்; யாமும் அஞ்சிலோம். (14)
(இது பாங்கி தலைவியின் தன்மை கூறல்.)
--------------
தங்கலை யார னனந்தலை சேர்த்த தனிநதிநத்
தங்கலை யாரந் நிலநேர்நன் கச்சியிற் றண்ணியசித்
தங்கலை யார நிலங்கெடச் சாலத தயைசெயநித்
தங்கலை யார ஞரீட்டினென் நெஞ்சே தனநல்கியே. (15)
பதம் – பொருள்: தங்கு – பொருந்தும்; அலை – அலைகள்; ஆரல் – மதிலின்;
நனந்தலை – உச்சியில்; சேர்த்த - சேர்த்துவைத்த; தனிநதி - ஒப்பற்ற யாற்றிலுள்ள;
நத்தம் – சங்கு; கலை - பதினாறு கலைகளும்; ஆர் – நிறைந்த; அந்நில – அச்சந்திரனை;
நேர் - நிகர்க்கும்; நன்கச்சியில் - நல்ல கச்சியின் கண்; தண்ணியசித்தங்கலையார் - குளிந்த மனம்
அலையாதவராகிய சிவபெருமான்; அநிலம்கெட – பிறவிநீங்க; சாலத்தயைசெய – மிகத்திருவருள்
செய்ய; நித்தம் – தினமும்; கலையார் - ஆடையால் மயக்கு மகளிரது; அஞர் – துன்பங்களை;
ஈட்டின் – தேடினால்; என் - என்னபயன்? நெஞ்சே – மனமே; தனம் நல்கி - பொருள் கொடுத்து.
குறிப்பு:--நிலா நில என்றாயிற்று. குறியதன் கீழாக்குறுகும்.
கருத்து:- சங்குகள் நிறைந்த கச்சிப்பதியிலுள்ள சிவபெருமானுடைய திருவருளைப் பெற்று, உன் பிறவியை நீக்கிக்கொள்ள நீ விரும்புதியேல், ஆடையால் மனத்தை மயக்கும் மகளிர்பின் சென்று அவருக்குப் பொன்னைக் கொடுத்துத் துன்பத்தை தேடிக்கொள்வதால் யாது பயன்? (15)
----------------
தனத்தரங் கத்தனை யார்நடஞ் செய்கச்சித் தானனைக்கே
தனத்தரங் கத்தனைக் கஞ்சனைச் சேணிற் கலசநிகர்
தனத்தரங் கத்தனை யாக்கி யளிக்கின்ற தந்தையைச்சே
தனத்தரங் கத்தனை நெஞ்சிலிட் டஞ்சலி தந்தனனே. (16)
பதம் – பொருள்: தனத்து – பொன்னாலாகிய; அரங்கத்து – நாடகசாலையில்;
அனையார் - அன்னைபோலும் அன்புடைய கணிகைமாதர்; நடம் செய் - நடனஞ் செய்கின்ற;
கச்சித்தானனை - கச்சித்தலத்தானும், கேதனம் – (கருடக்) கொடியுடைய;
தரங்கத்தனை - பாற்கடலிற் பள்ளிகொள்ளும் திருமாலையும்; கஞ்சனை – பிரமனையும்;
சேணில் – துறக்கத்தில்; சலசநிகர் – தாமரையரும்பொத்த; தனத்தர் - கொங்கையுடைய
அரம்பையருக்கு; அம் கத்தனை - அழகிய நாயகனாகிய இந்திரனையும்; ஆக்கி – படைத்து;
அளிக்கின்ற – காக்கின்ற; தந்தையை - அப்பனும், சேதனம் – ஞானமாகிய;
தரங்கு – நெறியிலுள்ள; அத்தனை - கடவுளும் ஆகிய சிவபெருமானை; நெஞ்சிலிட்டு – மனத்தில்
வைத்து; அஞ்சலி தந்தனன் - அஞ்சலி செய்தேனாக.
குறிப்பு :- சேண் - இருமடியாகு பெயர்.
கருத்து:- பொன்னாலாகிய நாடக சாலையில் கணிகைமாதர் நடனஞ் செய்கின்ற கச்சித் தலத்தானும், திருமால், பிரமன், இந்திரன், முதலியோரைப் படைத்துக் காக்கின்ற அப்பனும், ஞானமாகிய நெறியிலுள்ள கடவுளுமாகிய சிவபெருமானை மனதில் வைத்து அஞ்சலிசெய்தேனாக. (16)
---------------
தந்தனந் தங்கற் றதனாலென் னாரியைத் தாளநத்தந்
தந்தனந் தங்கச் சிலையெனச் சாற்றித் தனங்கணனி
தந்தனந் தங்க நிழலிலை யென்செய்கேஞ் சங்கிறைநித்
தந்தனந் தங்க டியநினை கச்சியிற் சங்கரனே. (17)
பதம் - பொருள்: தந்து – நூல்கள்; அநந்தம் - பலவாக; கற்றதனால் என் - படித்ததனாலென்ன?
நாரியை - மகளிரை; தனம் - நும்கொங்கை; தாளம் – தாளமாகும்;
நத்தந்தம் - யானையது சிறந்ததந்தமாகும்; தங்கச்சிலை – பொன்மலையாகும்; எனச்சாற்றி - என்று
புகழ்ந்து; தனங்கள் – செல்வங்கள்; நனிதந்தனம் - மிகத்தந்தோம். தங்க – இருக்க;
நிழல் இலை - திருவடிநிழ லில்லையாகும். என்செய்கேம் – என்செய்வோம்? சங்கு இறை – திருமால்;
நித்தம் – தினமும்; தன் – தனது; அந்தம் – மரணம்; கடிய – நீங்க; நினை – நினைக்கின்ற;
கச்சியில் – கச்சியின்கண்; சங்கரனே – சிவபெருமானே.
குறிப்பு :- செய்கேம். கு - எதிர்கால விடைநிலை.
கருத்து:- திருமாலால் துதிக்கப்படும் கச்சிப்பதியில் வாழும் சிவபெருமானே! நான் பல நூல்களைப்படித்தேன். ஆனால், என்ன பயன்? பெண்களைப் பார்த்து 'உங்கள் கொங்கை தாளமோ, யானைத்தந்தமோ, பொன்மலையோ" என்று பலவாறு புகழ்ந்து உள்ள பொருளையெல்லாம் கொடுத்தொழித்தேன். உன்னுடைய திருவடி நிழலைப் பெறாதவனாயினேன். அந்தோ! என் செய்வேன்? (17)
-------------
கரந்தரி யாதரத் திண்கயி றேந்தினன் கைக்கனிநி
கரந்தரி யாதர நாதற்சேர் கென்னக் கதிர்க்கச்சிந
கரந்தரி யாதர ணற்றிநன் றன்றே கழலினிச்சி
கரந்தரி யாதர ணிக்க ணரியன காரிகையே. (18)
பதம் – பொருள்: கரந்து – ஒளித்து; அரி – யமன்; ஆதர – இரக்கமுண்டாக;
திண்கயிறு – திண்ணியபாசத்தை; ஏந்தினன் - எடுத்தான்; கைக்கனி - உள்ளங்கை நெல்லிக்கனியை;
நிகர் - ஒத்த; அந்தரி - பார்வதிக்கு; ஆதரம் - விருப்பமுள்ள; நாதன் -
சிவபெருமானை; சேர்க என்ன - அடைக என்றுரைக்க; கதிர்க்கச்சி நகரம் - ஒள்ளிய காஞ்சி
நகரத்தில்; தரியாது – தங்காமல்; அரண் அற்றி – அழகற்றாய்; நன்று அன்றே – இது நன்று
அன்றே! கழல் - அவன் திருவடிகளை; இனி – இனி; சிகரம் – தலைக்கணியாக; தரி – தரிக்க; யா – எவை; தரணிக்கண் – உலகத்தில்; அரியன – அருமையானவை; காரிகையே – பெண்ணே.
குறிப்பு :- அன்றே - ஏகாரம் இரக்கப்பொருட்டு, பெண்ணே - மகடுஉ முன்னிலை.
கருத்து:- பெண்ணே! மரணம் நிச்சயமாகலின் சிவபெருமானை அடைக என்ன, அவனது காஞ்சிநகரத்திலேயே வசியாமலிருக்கின்றாய். இது நன்று அன்று. இனியேனும் அவன் திருவடிகளைச் சூட்டுக. யாவும் சித்திக்கும். (18)
---------------
காரிகை யாதனந் தன்கத்த னென்னக் கயிலையன்றீக்
காரிகை யாதனந் தந்தே யளிக்கின்ற கச்சியில்
காரிகை யாதனஞ் சந்ததிக் கேநகை காலிலிந்தக்
காரிகை யாதனந் தானே யிழந்தனள் கன்னெஞ்சனே. (19)
பதம் – பொருள்: காரி – இந்திரன்; கையாது – வெறுக்காமல்; அநந்தன் கத்தன் -
அநந்தனே கர்த்தனே; என் – என்றுதொழும்; அக்கயிலையன் – அவ்வெள்ளிமலையானும்;
தீக்கார் – தீயகுற்றங்களை; இகையாது – தராமல்; அனந்தந்தே - அன்னந்தந்தே;
அளிக்கின்ற – காக்கின்ற; கச்சியில் அகாரி - கச்சியின்கட் கடவுளும்; கை ஆதன் - ஒழுக்கந்
தருமாசிரியனுமாகிய சிவபெருமான்; காலில் – காலின்கண்; இந்தக்காரிகை – இந்தப்
பெண்; ஆதனம் – ஆடையை; தானே இழந்தனள் – தானே யிழந்துவிட்டாள்; நம்சந்ததிக்கே - இது நமது மரபிற்கே; நகை – நகைப்பாகும்; கல் நெஞ்சனே - அவன் கல்லொத்த மனமுடையானோ.
குறிப்பு :- கார் - பண்பாகு பெயர். அநந்தன் கத்தன் - அண்மை சுட்டிய விளிநிலைக் கிளவி.
ஏகாரம் - வினாப்பொருட்டு.
கருத்து:- தலைவி ஆடையைக் காலினிடத்தே தானேயிழந்தனள். இது நம் குடிமைக்கு
நகைப்பாகும். கச்சியின்கட் சிவபெருமான் கல்லொத்த மனமுடையானோ?
(இது பாங்கி தலைவியின் தன்மை கூறல், மிக்க மோகத்தால் ஆடையிழந்தாளென்பது.) (19)
---------------
கன்னலஞ் செய்தனச் சந்தனஞ் சிந்தக் கதழனங்கன்
கன்னலஞ் செய்தனந் தள்ளா திரானாற் கனிதல்சில
கன்னலஞ் செய்தன கந்தீங் கிரதங் கலந்தனன்றாள்
கன்னலஞ் செய்தனத் தனிகழ் கச்சியிற் கண்ணிநின்றே. (20)
பதம் – பொருள்: கல் நலம் செய் - மலைபோல் நலஞ்செய்கின்ற; தனம் - கொங்கையிற் பூசிய;
சந்தனம் - சந்தனம்; சிந்த - சிந்தும்படி; கதழ் அநங்கன் - கோபிக்கின்ற மன்மதன்; கன்னல் – கருப்பு
வில்லால்; அஞ்சு எய்து - பஞ்சபாணங்க ளெய்து; அனம் தள்ளாதிரான் - அன்னந் தள்ளாதிரான்;
கனிதல் - இங்கு மகிழ்ந்திருத்தல்; சில கன்னல் - சிலநாழிகையேயாம். (ஆதலால்); அஞ்சு தீங்கு - தீவினைக்கு அஞ்சுக. எய்து அநகம் - நல்வினையை அடைக. இரதம் – மாவடியில்; கலந்தனன் தாள் - கலந்த சிவபெருமான் திருவடியை; கல் – கற்க; நலம் - நற்குணமுடையோம் ஆவோம். செய் – கழனிகள்; தனத்தால் - பொன்னினால்; நிகழ் - விளங்குகின்ற; கச்சியில் - காஞ்சியின் கண்; கண்ணி நின்று - எண்ணி நின்று.
குறிப்பு :- நல்லம், கலம் - இடைக்குறை
கருத்து:- மன்மதனுடைய பஞ்சபாணங்களால் துன்பமே உண்டாகும்; இங்கு நாம் மகிழ்வதெல்லாம் சில நாழிகையேயாம். ஆதலால், காஞ்சியில் விளங்கும் சிவபெருமானை எண்ணித் தீவினைக்கு அஞ்சி நல்வினையையும் நற்குணத்தையும் அடைக. (20)
---------------
கண்ணிய னங்கை யிடத்தினன் கச்சியிற் காரிதழிக்
கண்ணிய னங்கைக் கனலினன் றீய கனிந்தியற்றக்
கண்ணிய னங்கை யறியாச் சிறியங் கழலினிநாங்
கண்ணிய னங்கைத் தறஞ்செய் திறைஞ்சிற் கரந்திலனே. (21)
பதம் – பொருள்: நாம் - நாம்; தீய – பாவங்களை; கனிந்து இயற்ற – மகிழ்ந்து செய்ய;
கண்ணி – வலையை; அனம் - ஒத்திருக்கின்றோம்; கை அறியா - கை அறியாத;
சிறியம் - சிறுதன்மையுடையோம்; இனி – இனி; கண் இயல் – பெருமைபொருந்திய;
நங்கையிடத்தினன் – மங்கைபாகனும்; கச்சியில் – கச்சியின்கண்; காரிதழிக் கண்ணியன் - கரிய
கொன்றைமாலை சூடியும்; அங்கைக் கனலினன் - அங்கையில் மழுவுடையோனும் ஆகிய
சிவபெருமானது; கழல் – திருவடிகளை; கண்ணி – எண்ணி; அனம் – சோறும்; கைத்து – பொருளும்; அறம் செய்து – தருமஞ்செய்து; இறைஞ்சின் – வணங்கின்; கரந்திலன் - ஒளித்திரான்.
குறிப்பு:- அனம் - இடைக்குறை.
கருத்து:- நாம் பாவங்களையே மகிழ்ந்து செய்பவர்களாயும், சிறுதன்மையர்களாயு மிருப்பதால், இனியாவது மங்கைபாகனாயும், கொன்றைமாலை சூடினவனாயும், மழுவேந்தியவனாயும் கச்சிப் பதியில் விளங்கும் சிவபெருமான் திருவடிகளை எண்ணித் தானதருமஞ் செய்து அவனை வழிபடுவோமாக. (21)
--------------
கரந்தை யலங்க னிகழ்செஞ் சடையான் கடலிலற்றைக்
கரந்தை யலங்க ளிலாததண் கச்சிக் கனியளிச்சா
கரந்தை யலங்க னிரந்தர னென்றே கரந்திறைஞ்சக்
கரந்தை யலங்க லிலனென்ன லென்கலைக் கையரனே. (22)
பதம் – பொருள்: கரந்தை அலங்கல் - கரந்தை மாலையால்; நிகழ் – விளங்குகின்ற;
செஞ்சடையான் – செஞ்சடையுடையவன்; கடலில் – கடலின்கண்; அற்றை – அந்நாள்;
கரம் – நஞ்சை; து - உண்ட; ஐ - கடவுள்; அலங்கள் – சஞ்சலங்கள்; இலாத – இல்லாத;
தண்கச்சி - தண்ணிய கச்சியில்; கனி – கனிவுடைய; அளிச்சாகரம் – அன்பாங்கடல்; தையல் அங்கன் – மங்கைபாகன்; நிரந்தரன் – நிரந்தரன்; என்றே - என்று சொல்லியே; கரந்து இறைஞ்ச – வஞ்சித்துவணங்க; கரந்தை - (நீயும்) வஞ்சித்து நின்றாய். அலங்கல் இலன் – இரக்கமில்லாதவன்; என்னல் - என்று சொல்லல்; என் - என்காரணம்? கலைக் கையரனே - மான்பிடித்த கையுடைய சிவபெருமானே.
குறிப்பு :- துத்து துப்பு முதலியன துவ்வென்னுந் தனிவினையிற் பிறந்த தொழிற்பெயர்.
கருத்து:- செஞ்சடையுடையான் முதலிய உன் பெயர்களை உண்மையாகச் சொல்லி வணங்காமல் வஞ்சித்துச் சொல்லி வணங்கினமையால் நீயும் வஞ்சித்து நின்றாய். நீ இரக்கமில்லாதவன் என்னல் என்னை? (22)
--------------
கையாற் றினனந்தை நாயகன் செந்நெற் கழனியலைக்
கையாற் றினனந்தைத் தண்கரை யேற்றெழிற் கச்சியிற்கங்
கையாற் றினனந்தை யாளனென் றேத்திக் கரையாற்ற
கையாற் றினனந்தை தாஞ்சடை யானங்ஙன் கண்டிலங்கே. (23)
பதம் – பொருள்: கையாறு – ஒழுக்கமுடைய; இன் அநந்தை - இனிய பார்வதிக்கு;
நாயகன் – தலைவன்; செந்நெல் - செந்நெல் கொழிக்கும்; கழனி – வயல்கள்;
அலைக்கையால் - அலையாகிய கையால்; தினன் – தினமும்; நந்தை – சங்குகளை;
தண்கரை - தண்ணிய வரம்பில்; ஏற்று – ஏற்றுகின்ற; எழிற்கச்சி – அழகியகச்சியின்கண்;
கங்கையாற்றினன் - கங்கையாற்றையுடையவன்; நம் தையாளன் - நமது திருவருட் செல்வன்;
என்றேத்தி - என்று தொழுது; கரைய - மனமுருக; நல்தகை – நற்குணங்களை;
ஆற்றினன் – செய்தான்; நந்து – வளர்கின்ற; ஐ து ஆம் – அழகுடையதாகிய; சடையான் -
சடையுடைய சிவபெருமான். (ஆதலால்) அங்ஙன் -அவ்விடத்தை; கண்டு – பார்த்து;
இலங்கு - விளங்குக.
குறிப்பு:- நற்றகை யாற்றினன் = மிக்க தளர்ச்சியைத் தணித்தான் எனலுமாம். தயாளன் - தையாளன்.போலி,
கருத்து:- வளப்பம் மிகுந்த கச்சிப்பதியிலுள்ள சிவபெருமான், 'கங்கையாற்றை யுடையவன்', 'நமது திருவருட் செல்வன்' என்று தொழுது மனமுருக, நற்குணங்களைச் செய்தான். ஆதலால் அவ்விடத்தைப்பார்த்து விளங்குக. (23)
----------
இலங்கை யனங்கஞ் சிதைத்தா னிறைஞ்சர னிண்டையலர்
இலங்கை யனங்கஞ் சனந்திகழ் கச்சியி லேற்றினிடை
இலங்கை யனங்க ணிதிய னிரத னெனச்செயிர்தான்
இலங்கை யனங்க னலரெயா னெஞ்சே யிலங்கடிந்தே. (24)
பதம் – பொருள்: இலங்கையன் - இலங்காபுரியாண்ட இராவணனது; அங்கஞ்
சிதைத்தான் - உடலையழித்த இராமசந்திரன்; இறைஞ்சு அரன் - வணங்குகின்ற அரனே;
இண்டை அலர் – தாமரைமலர்கின்ற; இலங்கு – திருக்குளங்களில்; ஐ அனம் - அழகிய
அன்னப்பறவைகள்; கஞ்சனந்திகழ் – கண்ணாடிபோல்விளங்கும்; கச்சியில் - கச்சியின்
கண்; ஏற்றினிடை – இடபத்தின்கண்ணே; இலங்கு – விளங்குகின்ற; ஐயன் – ஐயன்; நங்கள் நிதியன் - நமது செல்வன்; இரதன் - மாவடிக்கீழ்ச் சிவபெருமான்; என – என்றிறைஞ்ச; செயிர்தான் – குற்றம்; இல் – இல்லையாகும்; அம்கை – அழகியகையால்; அநங்கன் – மன்மதன்; அலரெயான் - மலரம்புகளை யெய்யான்; நெஞ்சே – மனமே; இலங்கடிந்து - வறுமைத்துன்பமொழித்து.
குறிப்பு:- தான் - செய்யுளின்பம் பயக்கநின்றது.
கருத்து:- கச்சிப் பதியில் இடபத்தின் மீது விளங்கும் எம்மிறைவனை, 'இராவணனையழித்த ஸ்ரீ ராமபிரானால் வணங்கப் பெறும் அரனே! மாவடிக்கீழ்ச் சிவபெருமானே!" என்று இறைஞ்சுவோமேயானால் நம்முடைய குற்றங்களும் ஒழியும்; மன்மதனும் நம்மீது மலரம்புகளை எய்யான். (24)
--------------
இலங்கங் கனந்தரித் தேகளி காட்டி யியைந்தகச்சி
இலங்கங் கனந்தரி யானந்த நேய னெழிற்கைதலை
யிலங்கங் கனந்தரி சச்சிதா னந்த னெனினிடர்கள்
இலங்கங் கனந்தரி லின்றங் கனையா ரினந்தணந்தே. (25)
பதம் – பொருள்: கங்கு – வரம்பின்பக்கமே; இலம் – வீடாக; அனம் – அன்னப்பறவைகள்;
தரித்தே – தங்கியே; களிகாட்டி – மகிழ்வுகாட்டி; இயைந்த கச்சி - உறைந்திருக்கின்ற கச்சியில்;
இலங்கு – விளங்குகின்ற; அங்கன் – திருமேனியுடையானே;
அந்தரி – பார்வதிக்கு; ஆநந்த நேயன் – ஆநந்தநேயனே; எழில் – எழுச்சியுடைய; கை
தலையில் - கையிலும் தலையிலும்; அங்கம் - என்பு மாலைகளை; கனந்தரி - கனமாகத் தரிக்கின்ற;
சச்சிதானந்தன் – சச்சிதானந்தனே; எனின் - என்று துதிக்கின்; இடர்கள் இல் -
துன்பங்களில்லையாகும்; அங்கம் – வேதாங்கங்களை; கல் – கற்க; நந்து அரில் – வளர்கின்ற குற்றம்;
இன்று – இன்றி; அங்கனையார் – மகளிரது; இனந்தணந்து – கூட்டத்தினீங்கி.
குறிப்பு:- இன்றி யென்னும் வினையெஞ் சிகரம் உகரமாயிற்று.
கருத்து:- அன்னப்பறவைகள் மிகுந்த கச்சிப்பதியில் விளங்கும் பரமசிவனைப் பார்த்து, ''பார்வதிக்கு ஆநந்த நேயனே! என்பாபரணனே! சச்சிதானந்தனே!" என்று துதிப்பின், நமக்குத் துன்பங்கள் இல்லையாகும்; ஆகையால் நாம் மகளிர் கூட்டத்தினீங்கி வேதாங்கங்களைக் கற்போமாக. (25)
----------
தனநந் தனந்தன தாகச்செய் யாநின்ற தண்கச்சியத்
தனநந் தனந்தனன் றன்சிரங் கிள்ளிய சங்கரன்சே
தனனந் தநந்தன னேத்தரன் சீரியன் றாங்களிச்சா
தனனந் தநந்தன கந்தரத் தாயடி தங்கினனே. (26)
பதம் – பொருள்: தனம் – பொன்மயமாகிய; நந்தனம் – நந்தவனங்களை;
தனதாக – தன்னுடையதாக;
செய்யாநின்ற – செய்கின்ற; தண்கச்சி – தண்ணியகச்சியில்; அத்தன் – தந்தையும்;
அநந்தன் – அநந்தனும்;
நந்து – வளர்ச்சிசெய்யும்; அனன்தன் - அன்னவூர்தியாகிய பிரமனது; சிரம்கிள்ளிய - தலையைக் கிள்ளிய; சங்கரன் – சங்கரனும்; சேதனன் – பேரறிவாளனும்; நந்தநந்தனன் – திருமால்; ஏத்து அரன் - ஏத்துகின்ற அரனும்;
சீரியன் – சிறப்புடையோனும்; தாங்கு – காக்கின்ற; அளிச்சாதனன் - அருட்சாதன முடையானுமாகிய சிவபெருமானது; அடி – திருவடிகளில்; தங்கினன் – தங்கினேனாக;
அந்த நந்து அன – அந்த சங்கைப்போலும்; கந்தரத்தாய் – கழுத்துடைய மாதே.
குறிப்பு :- கந்தரத்தாய் - மகடூஉ முன்னிலை.
கருத்து :- சங்கைப்போலும் கழுத்துடைய மாதே! நந்தவனம் நிறைந்த கச்சிப்பதியில் வாழும் சிவபெருமானே எனக்குத்தந்தை; அவனே அநந்தன்; அவனே பிரமன் தலையைக் கிள்ளிய சங்கரன்; அவனே பேரறிவாளன்; அவனே திருமால் வணங்கும் அரன்; அவனே அளவற்ற சிறப்புடையோன்; அவனே அருட்சாதன முடையோன். அன்னவன் திருவடிகளில் நான் தங்கினேன். (26)
-----------
தரித்திரங் காத நடந்தே திரிகின்ற தண்கச்சியில்
தரித்திரங் காத தனியேனைச் சாலத் தயையளித்தா
தரித்திரங் காத லினியானை நீயிர்தான் தந்தையரத்
தரித்திரங் காத லியாரில் ரந்திரி தந்திரரே. (27)
பதம் – பொருள்: தரித்திரம் – வறுமையானது; காதம் – காததூரம்; நடந்தே - சென்றே;
திரிகின்ற - கெடுகின்ற; தண்கச்சியில் – தண்ணிய கச்சியின்கண்; தரித்து – தங்கி; இரங்காத – மனமுருகாத; தனியேனை – அடியேனை; சால – மிகுதியும்; தயை அளித்து – திருவருள்வைத்து; ஆதரித்திர் – காப்பாற்றினீர்; இனி – இனி; அங்கு ஆதல் -
வீட்டுலகத்திற் பேரின்பமடைதல்; ஆணை - சத்தியமாகும். நீயிர்தான் தந்தையர் - நீரே என்தந்தையர்; அத்தர் - நீரே என்பரமாசாரியர்; இத்திரம் – இந்நிலைமையை; காதலியாரிலர் - விரும்பாதாரிலர். அந்தரி – உமாதேவிக்கு; தந்திரரே- தந்திரராகிய சிவபெருமானே!
குறிப்பு :- தான் - தேற்றத்தின்கண்வந்த இடைச்சொல்.
கருத்து:- செல்வத்திற் சிறந்த கச்சிப்பதியில் தங்கிக் கொஞ்சமும் மனமுருகாத என்மீதும் தேவரீர் திருவருள் வைத்துக் காப்பாற்றினீர். ஆதலின், இனி நான் பேரின்பத்தைப்பெறுதல் நிச்சயம். நீரே எனக்குத் தந்தையும் பரமாசாரியருமாயினிர். சிவபெருமானே! இந்நிலைமையை விரும்பாதவரும் இருப்பரோ இவ்வுலகில்? (27)
-------------
தந்திரங் காரண ஞானந் திரண்டார் தழைகின்றநித்
தந்திரங் காரணத் தண்டலை சேர்கச்சித் தானநனி
தந்திரங் காரணங் கெய்தின ரென்னச் சகத்தினிடைத்
தந்திரங் காரண னீர்ந்தயை யெங்ஙனஞ் சந்தித்தலே. (28)
பதம் – பொருள்: தந்திரம் - பல நூல்கள்; காரணம் – காரணமாக; ஞானந்திரண்டார் - ஞானந்திரண்டுள்ளபெரியார்; தழைகின்ற – செழிக்கின்ற; நித்தம் – தினமும்; திரம் – நிலையாக; கார் – மேகங்கள்; அண – பொருந்த; தண்டலை – சோலைகள்; சேர் – சேரும்;
கச்சித்தானம் – கச்சித்தலத்தில்; நனிதந்து – மிகக்கொடுத்து; இரங்கார் – மனமிரங்காதவர்;
அணங்கு எய்தினர் – துன்பமடைந்தனர்; என்ன - என்று சொல்ல; சகத்தினிடைத் தந்திர் -
உலகத்தில் வசப்பட்டீர்கள்; அங்கு ஆரணன் - அங்கு மறைமுதலியாகிய சிவபெருமானது;
ஈர்ந்தயை – தண்ணிய திருவருளை; சந்தித்தல் – கிட்டுதல்; எங்ஙனம் - எவ்வாறு?
குறிப்பு :- ஈர்ந்தயை - இடைக்குறை.
கருத்து:- கச்சித்தலத்தில் தான தருமஞ்செய்து மனமிரங்காதவர் பெருந்துன்பத்துக் காளாயினரென்று சொல்லவும், அதற்குச் செவிகொடாது உலக விச்சைக்கே உட்பட்டீர். அந்தோ! அச்சிவபெருமானின் தண்ணிய திருவருளை இனிநீர் எங்கனம் பெறுவீர்? (28)
-------------
சந்தா னகரணி யன்னான் சடையனார் தந்தனயர்
சந்தா னகரணி யிற்சிறந் தேய்கச்சிச் சங்கரன்றண்
சந்தா னகரணி தந்தாழ் தனத்தியர் சங்கங்கிலே
சந்தா னகரணித் தாயிரே லென்றனன் றந்திரியே. (29)
பதம் – பொருள்: சந்தானகரணி - முறிந்தவுறுப்புகளை யிணக்குமருந்தை;
அன்னான் – ஒத்தவனும்; சடையனார்தம் – சடையனாருக்கு; தனயர் - புதல்வராகிய சுந்தரமூர்த்திக்கு;
சந்தான் – தூதுசென்றவனும்; நகரணியில் - நகரத்துக்குரிய அணிகளினால்; சிறந்தேய் – மேம்பட்டுள்ள;
கச்சசிச்சங்கரன் - கச்சசியின்கட் சங்கரனுமாகிய சிவபெருமான்; தண்சந்து ஆன - தண்ணிய சந்தனம் பூசிய; கரணிதம் - மனம் புத்தி சித்தம் அகங்காரமென்பவை; தாழ் – பணிந்து நிற்கும்; தனத்தியர் -கொங்கையுடைய மாதரது; சங்கம் – கூட்டம்; கிலேசந்தான் – துன்பமே தருவதாகும்;
நகர் - அவரைவிட்டு நீங்குக; அணித்தாயிரேல் – அவரருகிலிருக்கற்க; என்றனன் - என்று சொல்லினன். தந்திரியே - அவன் தந்திரமுள்ளவனேயாவன்.
குறிப்பு :- தான் - தேற்றப்பொருட்டு.
கருத்து:- சந்தானகரணியை ஒத்தவனும், சுந்தரர்க்குத் தூது சென்றவனுமாகிய கச்சிப்பதியில் விளங்கும் சிவபெருமான், "அன்பர்காள்! மகளிரது சந்தனம் பூசிய கொங்கையைக்கண்டக்கால், மனம் புத்தி சித்தம் அகங்காரம் என்னும் யாவும் அடங்கியொடுங்கும். ஆகலின், அம்மகளிர் கூட்டம் துன்பமே தருவதாகும். அவரை விட்டு நீங்குக," என்று கூறினன். என்னே அவன்றன் தந்திரம்? (29)
------------
திரிகை யகங்கை யடையெனச் சாற்றிச் சிலைநகிலத்
திரிகை யகங்கை யறலாயிற் றேயெழிற் சேதனக்க
திரிகை யகங்கைத் திரிந்தே யழிந்திடல் தேரினஃதெ
திரிகை யகங்கைச் சடைத்தலைக் கச்சியிற் சிரியனே. (30)
பதம் – பொருள்: திரிகை அகம் - குயவன் சக்கரம்போன்ற மனம்; கையடைஎன் -
அடைக்கலமென்று; சாற்றி – சொல்லி; சிலைநகிலம் - மலைபோலுங் கொங்கையுடைய;
திரி – மாதரது; கைஅகம் -கைவசப்பட்டு; கையறலாயிற்றே - ஒழுக்கமில்லாமற் போயிற்றே;
எழில் – எழுச்சியுடைய; சேதனக்கதிர் – ஞானசூரியனை; இகை – அருள்க; அகம் – தீவினையானது;
கைத்து – வெறுத்து; இரிந்து – முரிந்து; அழிந்திடல் – அழிந்திடுக; தேரின் – ஆராயின்; அஃது – அத்தீவினையே; எதிரி – பகையாகும்; கைய – அலங்காரமுள்ள; கங்கை – கங்கையைத்தரித்த; சடைத்தலை – சடைநிறைந்த தலையுடைய; கச்சியிற் சீரியனே - கச்சியின்கட் சீரிய சிவபெருமானே.
குறிப்பு :- கைய குறிப்புப் பெயரெச்சம்.
கருத்து :-- சுற்றிச் சுற்றிவரும் குயவன் சக்கரத்தையொத்த மனத்தை அடைக்கலமென்று சொல்லி, மலைபோலுங் கொங்கையுடைய மங்கையர் வசப்பட்டு ஒழுக்கங் குறைந்தவனாயினேன். என் செய்வேன்? கங்காதாரியாய் கச்சியில் விளங்குஞ் சிவபெருமானே! என்னுடைய தீவினையை அழித்து எனக்கு ஞானச்சுடர் நல்குவாயாக. (30)
-----------
கச்சி இதழகல் அந்தாதி முற்றிற்று.
----------
இந்நூலாசிரியரால் இனி அச்சிற் பதிப்பிக்கப்படும் புத்தகங்களாவன:-
--------------------
திருமாகறற் புராணம்.
திருமாகறல் வைபவம்.
திருமாகறல் வெண்பா.
கறசைக் கலிப்பா.
இலக்கணக் குறிப்பு.
சூரியதீபிகை.
ஐந்திணை விளக்கம்.
ஆத்திசூடி முதற்சூத்திரவிருத்தி
பாகை வெண்பா
முதற்பா.
சப்ததத்துவ சூடாமணி.
-------------------------------------
This file was last updated on 22 feb 2023.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com=