pm logo

அத்திகிரி வரதன் அந்தாதி மாலை
(ஆசிரியர் யார் என தெரியவில்லை)


attakiri varatan antAti mAlai
(author not known)
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
We thank Dr. Meenakshi Balaganesh, Bangalore, India for her assistance in the preparation of this work for publication.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2023.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

அத்திகிரி வரதன் அந்தாதி மாலை

Source: நூல் பற்றிய விவரங்கள்
அத்திகிரி வரதன் அந்தாதி மாலை
திருவல்லிக்கேணித் தமிழ்ச்சங்க வெளியீடு, 47.
சங்கக் காரியாலயம்: ஆநந்த பிருந்தாவநம்,
ஸ்ரீ மௌன சுவாமிகள் மடத்துத்தெரு, அம்பத்தூர்.
4-4-1953.
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீ:
இது ஸ்ரீமத் வேதமார்க்க ப்ரதிஷ்டாபநாசார்ய பரமஹம்ஸ பரிவ்ராஜகாசார்ய
ஸர்வதந்த்ரஸ்வதந்த்ரோபய வேதாந்தாசார்ய ஸ்ரீபகவத் ராமாநுஜ
ஸித்தாந்த நிர்த்தாரண ஸார்வபௌம ஸ்ரீ ஸ்ரீரங்க ராமாநுஜ மஹாதேசிகன்
எழுபத்தொன்றாவது ஆண்டு நிறைவு நன்னாளாகிய ஸர்வமங்கள நந்தன ஆண்டு
மீனத் திங்கள் இருபத்திரண்டாந்தேதி அநுஷத்திருநக்ஷத்திரத்தன்று முத்திதரும்
நகரேழின் முக்கிய மாங்கச்சித் திருப்பதியில் அந்நந் நல்லாசிரியருக்கு
உரிமை செய்யப் பெறுகிறது.
4-4-1953.
------------
முகவுரை.

பந்தல்குடி பாரத்வாஜ மாடபூசி ரெ. திருமலை அய்யங்கார், தமிழ் வித்துவான்,
காரியதரிசி, திருவல்லிக்கேணித் தமிழ்ச் சங்கம்.

அத்திகிரி யருளாளப் பெருமாள் வந்தார்
      ஆனைபரி தேரின்மே லழகர் வந்தார்
கச்சிதனிற் கண்கொடுக்கும் பெருமாள் வந்தார்
      கருதவரந் தருந்தெய்வப் பெருமாள் வந்தார்
முத்திமழை பொழியுமுகில் வண்ணர் வந்தார்
      மூலமென வோலமிட வல்லார் வந்தார்
உத்தரவே திக்குள்ளே யுதித்தார் வந்தார்
      உம்பர்தொழுங் கழலுடையார் வந்தார் தாமே.
      -(தேசிகமாலை. திருச்சின்னமாலை. 10)

“திருமாலுக்கு அடிமை செய்" என்பது முழுதுணர் நீர்மையினராகிய சந்தமிகு செந்தமிழ் ஒளவைப் பிராட்டியார் நல்வார்த்தை. அத்திருமாலே அத்திகிரித் திருமால். அவனே உயர்வற உயர்நலம் உடையவன். அவனே அயர்வறு மமரர்கள் அதிபதி. அவனே அருளாளப் பெருமாள். அவனே அருளாழியம்மான். அவனே பேரருளாளன்.

முத்திதரு நகரேழின் முக்கியமாங் கச்சிதனிற் கண் கொடுக்கும் பெருமாளான அவ்வத்திகிரி அருளாளரை நம்தூப்புற் கோமான் "கடி மலராள் பிரியாத கச்சிநக ரத்திகிரி, யிடமுடைய வருளாளர்," “அடிபணிவா ரனைவர்க்கு மருள்புரியுஞ் சிந்துரவெற்பிறையவனார்,” “நாகமலை நாயகனார்,” "மதிட்கச்சி, நகர்க்கருணை நாதன்,” “துளவமுடி யருள் வரதர்,” “அமைவுடைய வருளாளர்,” "வண்மையுடை யருளாளர்,” "கமலையுட னரசாளுங் கரிகிரி மேற் காவலன்,” “பங்கயத்தாள், அகலகில்லே னென்றுறையு மத்திகிரி யருண்முகில்," "அயன்மக வேதியி லற்புதன்,” “தூதனு நாதனு மாயதொல் லத்தி கிரிச்சுடர்," "பூவன் றொழ வத்தி மாமலை மேனின்ற, புண்ணியன்,” “கட்டெழிற் சோலைக் கரிகிரி மேனின்ற கற்பகம்," "தென்ன னுகந்து தொழுந்தேன வேதியர் தெய்வம்,'' "பார்த்தனுக்குத் தேரூர்ந்தார்," "உயர்விரத வருளாளப் பெருமாள்,'' என்று வாயார வாழ்த்திப் புகழ்ந்துள்ளார் தாம் அருளிச்செய்த தேசிக மாலையில்.

பேரருளாளப் பெருமாளின் பெருமையை அறிய அவாவுபவர் இத்தமிழ்ச்சங்க வெளியீடுகளான "அருளாளர் மாலை” (36), "ஆனைபரிதேரின் மேலழகர்மாலை (45)" முதலிய செந்தமிழ் மாலைகளை நன்கு கற்பாராக.

அத்திகிரி அருளாழியம்மானைப் பாடாத கவியே இல்லை. அவ்வரதன் பேரில் ஒரு சதகத்தந்தாதி ஒருகவி பாடியுள்ளார். பொருட்செறிவும் பல்வகை யழகும் வாய்ந்து வாசிப்போர்க்கு இன்பம் பயக்கும் நன்னிலையில் அமைந்துள்ள இந்நூல் ஆசிரியர், பெயர், பிறந்தஇடம், காலம் முதலியன ஒன்றும் புலப்படவில்லை. கிடைத்த பிரதி இறுதியில் "பவ வருடம் ஆவணி மாதம் 28ம் ஆதிவாரம் ஆயில்யம் துவாதசி யிப்பேர்ப்பட்ட தினத்தில் எழுதி நிறைவேறினது முற்றும் 11-9-1814 English Date" என்று காணப்பெறுகிறது. ஒப்புநோக்க வேறு ஒரு பிரதியின்மையால் அதிலுள்ளவாறே அவ்வந்தாதி "அத்திகிரி வரதன் அந்தாதி மாலை" என்ற திருநாமத்துடன் இச்சங்கத்தின் நாற்பத்தேழாவது வெளியீடாகப் பிரசுரிக்கலாயிற்று. பிரதியை அடையார் லைப்ரேரியிலிருந்து பெற்று எமக்கு நல்கியவர் அருள்வரதரடியார்களிற் சிறந்தவரான ஸ்ரீமான் திண்டுக்கல் ராமஸ்வாமி அய்யங்கார் அவர்கள். அந்நூலகத்துக்கும் அவருக்கும் எமது நன்றி என்றும் உரித்தாகுக.

அடியேனிடத்தில் அளவுகடந்த கிருபையுள்ள ஸ்ரீமத் வேதமார்க்க ப்ரதிஷ்டாபநாசார்ய பரமஹம்ஸ பரிவ்ராஜகாசார்ய ஸர்வதந்த்ர ஸவதந்த்ரோபய வேதாந்தாசார்ய ஸ்ரீ பகவத் ராமாநுஜ ஹித்தாந்த நிர்த்தாரண ஸார்வபௌம ஸ்ரீரங்கராமானுஜ மஹாதேசிகன் (ஸ்ரீகோழியாலம் ஸ்வாமி) எழுபத்தொன்றாவது ஆண்டு நிறைவு விழாவன்று இது உரிமை செய்யப் பெறுவது இவ்வெளியீட்டின் ஒரு தனிச் சிறப்பே.
இம்மாலை வெளிவர பூரணவுதவி புரிந்தவர் வரததாசர். "சீரொன்று தூப்புற்றனியன் மாலை'' (வெளியீடுமாலை. 34. 17-3-52. ஸ்ரீஸ்ரீரங்கராமாநுஜ மஹாதேசிகன் எழுபதாண்டு மலர்) யின் வள்ளலாரே இவர். இவரது பாக்கியமே பாக்கியம்.

பொங்கும் மங்கலம் எங்குந் தங்குக.

வாழியருளாளர் வாழியணி யத்திகிரி.
வாழி யெதிராசன் வாசகத்தோர் -வாழி
சரணா கதியென்னுஞ் சார்வுடன் மற்றொன்றை
யரணாகக் கொள்ளாதா ரன்பு.
--(தேசிகமாலை. மெய்விரதநன்னிலத்து மேன்மை.)
      ப. ரெ. திருமலை அய்யங்கார்,
ஸ்ரீரங்க விலாசம்,அம்பத்தூர், )       காரியதரிசி
4-1-1953. )
------------------
அத்திகிரி வரதன் அந்தாதி.

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
காப்பு.
பூரணஞ் சேர் மறை நான்முகன் யாகம்புரியவந்த
வாரணஞ் சூழ்கச்சி மூதூர னத்திகிரி வரதன்
காரணம் சீர்த்திக்கு மந்தாதி பாடக் கருதும் யாம்
ஆரணம் செந்தமி ழாகசசெய் தான்றன் னடியிணையே.

நூல்.

அரிவரதன்... னநகர் கச்சி யாளனத்தி
கிரிவரதன் றிருமா லவன் மூலங்கிளர்ந் தழைத்த
கரிவரதன் றனைக் கை தொழு வார்க் குக் கருதிற்றெல்லாம்
புரிவரதன் செய்ய பொற்றா ளென்னுள்ளம் பொருந்தியதே.       (1)

பொருத்துவன் றன்னடி யாரொடு மென்னைப் புரந்து பணி
திருத்துவன் செய்ய திருவடிக்கே ....வின்பம்
அருத்துவன் கச்சி யருளாள னத்திகிரி வரதன்
எருத்துவன் கஞ்சனுட னகிலாண்டங்க ளீன்றவனே.       (2)

ஈன்றவன் காமனைப் பூமனை யென்னை யிருநிலத்தைக்
கீன்றவன் கேழ லருளாள னத்திகிரி வரதன்
கான்றவன் காலிற் கங்காநதி யாதியங் கச்சியுளஞ்
ஞான்றவன் றாட்கடிமை புகுமா றெண்ணி நண்ணுவதே       (3)

நண்ணி னன்கெய்து நலம்பல செய்து நயந்து தொண்டு
பண்ணினன் றன்னரு ளென்றனக்கே பலகாலி தன்றி
மண்ணினன் கச்சியருளாள னத்திகிரி வரதன்
எண்ணினன் றன்னடிக்கே யென்னை யாட் கொள்ள வின்னமுமே.      (4)

இன்னமு மென்னை யடிமை கொள்வான் பணியே திருத்தி
முன்னமு யானடி யென்றவற் கேகஞ்ச மூலஞ்செய்கால்
அன்னமுன் கச்சி யருளாள னத்திகிரி வரதன்
சொன்னமுன் னூல் துணி யும்பரஞ் சோதிச் சுடர்ப்பிழம்பே.       (5)

சுடருந் திருச் சக்கரக் கையன் மெய்யன் சுருதி கொம்பிர்
படரும் பரஞ்சுடர்ச் சோதிக்கொழுந்து பன்மாதவரோ
டடரும்பர்க் கச்சி யருளாள னத்திகிரி வரதன்
இடருங்கடிந் தென்னுடைப் பிறப்பீர் தருமென்னப்பனே       (6)

என்னப்ப னென்னுடை யேகதை யப்பனெமக்கேழ்
மன்னப்பன் மாமணி யப்பன் முத்தப்பன் மழை முகிலே படிகால்
அன்னப்பன் கச்சி யருளாள னத்திகிரி வரதன்
முன்னப்பன் யார்க்கு மேழுல குக்கு முதலப்பனே.       (7)

முதலப்பன் முப்பத்து முக்கோடி தேவற்கு மூத்தப்பன்கண்
ணுதலப்பன் னான்முக னப்பனென் னப்பன்பன் னூறணிமா
மதலப்பொன் கச்சி யருளாள னத்திகிரி வரதன்
குதலைப்புன் சொல்லென் கட்கொள்ளு மப்பன் குடக்கூத்தப்பனே.       (8)

கூத்தப்பன் காளியன் மேலுமென் மேலுங்கொடு வினைகள்
மாத்தப்பன் சாந்தணி மேனியப்பன் வண்ணனாம் நெற்றி
தீத்தப்பன் கச்சி யருளாள னத்திகிரி வரதன்
காத்தப்பன் றீயப்பன் மண்ணப்பன் கண்ணப்பனே.       (9)

கண்ணொப்பன் றாமரை கால்தளம் பொரு கங்கை கமலந்
தண்ணப்பங் கேருக மார்பகம் நாபி சரோருகமிவ்
வண்ணப்பன் கச்சி யருளாள னத்திகிரி வரதன்
பெண்ணொப்ப னாணொப்பன் பின்னே யலியெனும் பேரொப்பனே.      (10)

பேரா யிரமுடையான் பெருஞ் சீர்த்தியைப் பேசிக்கண்க
ளோரா யிரமுடையானு மயனு முருத்தி ரனும்
ஆராயுங் கச்சி யருளாள னத்திகிரி வரதன்
நாராயண னெம்பிரா னெம்பிரான் றெய்வ நாயகனே.       (11)

நாயகன் தேவர்க்கும் மூவர்க்கும் யார்க்கும் நறுங்கமலத்
தூயகன் மாமல ராட்கும் புவிக்கும் சுருதிகட்கும்
ஆயகன் கச்சி யருளாள னத்திகிரி வரதன்
மாயகன் மாதிப் பிறப்பறுத் தாளுமென் மாதவனே.       (12)

மாதவன் னாரணன் கேசவ னீசனென் வைகுந்தனென்
றோதவன் றீவினை யேனைப் பிறவியுட னண்டவொட்
டாதவன் கச்சி யருளாள னத்திகிரி வரதன்
போதவன் வேள்வியில் வந்திடு மாதி புராதனனே.       (13)

புராதன நாதன் புராண புருடன் புருடசிங்க
சிராதனன் றெய்வ சிகாமணி யாணிச் செழுந்தரளம்
அராதனன் கச்சி யருளாள னத்திகிரி வரதன்
சுராதனம் புண்ணிய கோடி விமானச் சுடர்விளக்கே.       (14)

விளக்கரும் பாதகங்கைச் சடை யானுடன் வேதன்றொழுங்
களக்கருந் தணகனி மேனிப்பிரான் கண்ணன் மாயன் புகழ்
அளக்கருங் கச்சி யருளாள னத்திகிரி வரதன்
துளக்கருஞ் சோதி விளக்கொளி சோதிச் சுடர்க்கொழுந்தே.      (15)

கொழுந் திருக்கும் பைந்துழாய் மாலை மார்பன் குடந்தைதன்னுள்
எழுந் திருக்கும் சயன சாரங்கபாணி யெங்கெங்கும் புகழ்
கெழுந் திருக்கச்சி யருளாள னத்திகிரி வரதன்
செழுந் திருச்சீர் மணவாள னரும்பெருந் தேவியர்க்கே.       (16)

தேவியர் தாமரை யாளுடன் பூமிதிரு மைந்தர்தன்
னாவியன் காமன் றிருப்பேரன் சங்கரன் நான்மறைக்கும்
ஆவியன் கச்சி யருளாளனத்திகிரி வரதன்
மேவியென் னெஞ்சு ளெழுஞ்சுடர் ஞான விளக்கொளியே.       (17)

ஒளிக்கின்ற குண்டல நீண்முடி யோடு முறைந்தென் னெஞ்சிற்
களிக்கின்ற தாமரைக் கண்ண னெம்மான் கரிக்கன்று முத்தி
அளிக்கின்ற கச்சி யருளாள னத்திகிரி வரதன்
குளிர்க்கின்ற மாமழைக் கானிரை காத்தகைக் குன்றவனே.       (18)

குன்றவனைங்கரன் மோடியொ டீசன் குலைந்தகல்வ
வென்றவன் வாணனை யாயிரந் தோளும் விழமுன் சரிக்
கின்றவன் கச்சி யருளாள னத்திகிரி வரதன்
நின்றவன் வேங்கட மாமலை யூடுநிறைந் தெங்குமே.       (19)

நிறைந்தவ னெங்கும் நிராமயமாகி நிரம்பி நின்று
மறைந்தவன் வேதமுதலாய கீதைமுன் வாள் விசையற்
கறைந்தவன் கச்சி யருளாள னத்திகிரி வரதன்
பறைந்தவன் வல்வினை யேன் பிறவித்துயர் பற்றறவே.      (20)

பற்றொன்று பற்றிப் பதந்தொழு தேத்திப் பணிந்தருத்தி
மற்றொன்று மின்றி மருவிப் பெருந்தேவர் மாயை யெல்லாம்
அற்றொன்று கச்சி யருளாள னத்திகிரி வரதன்
சிற்றொன்று மப்பதந் தானடி யேனுடைச் சிந்தையதே.       (21)

சிந்தையன் பாரத் தினந்தொழு தேத்திநற் றேவரொடும்
வந்தய னிந்திர னீசன் வணங்கிய வார்கழற்கா
லந்தையன் கச்சி யருளாளன த்திகிரி வரதன்
எந்தை யென் னப்பனென் றாதையெம் மானெம்பி ரானவனே.      (22)

பிரானவனே யென்றலற்றி நல்யானை பிதற்றவந்தான்
னோரானவனான் முகனிந்திர னாதிய ருகந்தழைத் தால்
வரானவன் கச்சி யருளாள னத்திகிரி வரதன்
இரானவன் றன்மலர்த் தாட் கன்பிலார்தம் மிடத்துகந்தே.      (23)

இடத்தவன் சங்க நன் னேமி வலத்தவ னேய்ந்த பொன்வேங்
கடத்தவன் தென்னரங் கத்தவன் றிண்கழற் கால்விடையே
ழடர்த்தவன் கச்சி யருளாள னத்தி கிரி வரதன்
விடத்தவன் பாம்பணை மேற்றுயில் கூர்ந்தருள் வித்தகனே.      (24)

வித்தகன் முன்திரு வாலவட் டப்பணி மெய்யன்பிற்செய்
சுத்தகன் மன்திருக் கச்சிநம் பிக்குச் சுடர்ப்பந்தமேந்
தத்தகன் கச்சி யருளாள னத்திகிரி வரதன்
சத்தகன் மாமதிள் சூழெவ்வு ளூரில் தயங்கொளியே.       (25)

தயங்கொளிச் சக்கரஞ் சங்கு வில் வாள் தண்டு தாங்கியென்முன்
இயங்கொளித் தாமரைக் கையெம்பிரா னெங்குமா மணியால்
வயங்கொளிக் கச்சி யருளாள னத்திகிரி வரதன்
முயங்கொளிச் சோதிச் சுடர்க் கொழுந்தார்ந்த முழுமுதலே.       (26)

முழுமுதற் புண்ட ரீகத் திருநாபிண மூவுலகோ
டெழுமுதற் றேவனை யீன்றபிரா னெங்கு மேய்ந்த புகழ்
கெழுமுதற் கச்சி யருளாள னத்திகிரி வரதன்
செழுமுதற் பாத பங்கேருகந் தானெந்தன் சென்னியதே.       (27)

சென்னிய நீண்முடி வார்குழைக் காதன் செழுந்துளபந்
துன்னிய தோளன் சுடர்மணி மார்பன் சுருதிவல்லார்
மன்னிய கச்சி யருளாள னத்திகிரி வரதன்
பன்னிய நான்மறைக் கென்றுமெட்டாத பரஞ் சுடரே.       (28)

பரஞ்சுடர்க் கற்றைப் பெரும்பரஞ் சோதிப் பரம்புக்கிருந்
திரஞ்சுடர்க் கொண்டிங் குதித்த பிரானுதிப் பின்றிநின்ற
வரன் சுடர்க்கச்சி யருளாள னத்திகிரி வரதன்
கரஞ்சுடர்ப் பொற்றிகிரிப் பெருமா னென் கருத்தவனே.       (29)

கருத்தவன் றன்சிற் சொரூப மதன்றிக் கருதலஞ்சீர்
திருத்தவன் சேவடி யன்றித் தொழுகிலந் தேவர்க்கெல்லாம்
மருத்தவன் கச்சி யருளாள னத்திகிரி வரதன்
பெருத்தவன் சீர்த்தியி னாலவன் போன்றிப் பேசிலமே.       (30)

பேசவன் பேர்களோ ராயிரமும் தினம் பேசினெஞ்சே
நேசவன் போடிணைத் தாள்தொழு தேத்துதி நேசஞ்செய்வான்
கேசவன் கச்சி யருளாள னத்திகிரிவரதன்
தேசவன் றேவற்கெல்லாஞ் சின்மெஞ் ஞானத் திகம்பரனே.       (31)

திகம்பர னம்பர னும்பர்பிரான் றிகழ் செம்பொற்கதிர்
.கம்பர நல்லறன் கேட்குந் திருக்கச்சி நம்பிக்குச்சொல்
லகம்பரன் கச்சி யருளாள னத்திகிரி வரதன்
இகம்பரந் தன்னடியரற் கின்ப பவாரி யெழா ரமுதே.       (32)

எழாவருங் கங்கைப் பதாம்புய னேந்து நண்பன்
றொழாவரு ம்புட்கரு டக்கொடி வாகனன் றொன்மைநெறி
வழாவருங் கச்சி யருளாள ன த்திகிரி வரதன்
குழாவருந் தேவர்க் கெல்லாங் கோதில்ஞானக் குலவிளக்கே.      (33)

குலவளக் குஞ்சரங் கூப்பிட்டு நின்று குறித்துதன்பேர்
சொலவளச் சக்கர மேந்தி வந்தான் சொரி நீர்வபலார்
அல்வளக் கச்சி யருளாள னத்திகிரி வரதன்
பலவளச் சீர்த்தி நின்றேத்தி யன்னான் பெயர் பாடுதுமே.       (34)

பாடுதும் பாடிப்பணிகுதும் பின்னர் பணிந்து நின்று
கூடுதுங் கூடிக் குலாவுது மின்பங் குலாவியெங்கும்
ஆடுதுங் கச்சி யருளாள னத்திகிரி வரதன்
வீடுதுன் பங்களையுந் திருத் தாமரை நீள்கழலே.       (35)

நீள்கழற் றாமரை காட்டி யென்னெஞ்சம் நிறைந்துள்வினை
தாள்கழற் றும்படி நின்றபி ரான்றமி யேனையென்றும்
ஆள்கழற் கச்சி யருளாள னத்திகிரி வரதன்
றோள்கழற் கண்ணுந்தி வாய்மார்பு தான்மலர்ச் சோதியனே.       (36)

சோதியன் மாமணிவண்ணனென் கண்ணன் சுருதிசொன்ன
நீதியன் கொல்நிலாத் திங்கட்டுண்டத்த னீடுகள்வன்
ஆதியன் கச்சி யருளாள னத்திகிரி வரதன்
மீதியனெப்பொருட் கும்மென்றவ் வேதம் விளம்பிடுமே.       (37)

விளம்பிடுந் தீங்கனிக் குக்கன்று வீசிய வீசனெந்தன்
னுளம்படு மாதவ னுள்ளவ ருள்ள முகந்தபிரான்
வளம்படு கச்சி யருளாள னத்திகிரி வரதன்
குளம்படு வேகவதீ தீர்த்த வாறிடங் கொண்டவனே.       (38)

இடங்கொண்ட சங்கநன் னேமி வலங்கொண்ட வெம்பெருமான்
படங்கொண்ட பாம்பணை மேற்றுயின் றோன்பல மாதவர்தம்
மடங்கொண்ட கச்சி யருளாள னத்திகிரி வரதன்
தடங்கொண்ட பொய்கைப் பொற்றாமரைத் தீர்த்தற் றடாகத்தனே.      (39)

கத்தனென் கண்ணன் கருமுகில் வண்ணன் கருதுமவர்
சித்தனென் செல்வன் றிருமறுமார்பன் றிகழ்துளபன்
அத்தனென் கச்சி யருளாள னத்திகிரி வரதன்
நித்தனின் னாம னிராகர னின்மல நிற்குணனே.       (40)

நிற்குண நற்குண னேமிப் பிரா னெடியோ னரிய
சற்குணன் முற்குண னில்லா வசுரரைத் தான்கடிந்த
வற்குணன் கச்சி யருளாள னத்திகிரி வரதன்
பற்குனன் றற்குணர்த்தும் பெருங் கீதைப் பரம்பரனே.       (41)

பரம்பர மென்றுமுன் பாஞ்சாலி கூவப் பரிந்தவட்குத்
தரம்பர னம்பா னும்பர்பிரான் சங்கரன் பிரமன்
வரம்பெருங் கச்சி யருளாள னத்திகிரிவரதன்
உரம்பரந் தார்திரு வாழு மணாளனென் னுள்ளத்தனே.       (42)

உள்ளத்த னென்னுடை வ... னென் காய னோராலிற்றுயில்
வெள்ளத்த நீள்முடிக் குண்டலத் தன்விற்றண் டாழிசங்க
வள்ளத்தன் கச்சி யருளாள னத்திகிரி வரதன்
கள்ளத்தன் வெண்ணை தன் னோடென்னைச் சிந்தை கவர்ந்தவனே.      (43)

கவர்ந்தவ னென்னைத்தன் னொடுறக் கொண்டு கலந்தனன்புக்
குவந்தவ னீரக மூரகங் காரகமோங்கு வெஃகா
வமர்ந்தவன் கச்சி யருளாள னத்திகிரி வரதன்
சிவந்த வனுந்தி கண்வாய்த் திருமார்பங் கைச்சேவடியே.       (44)

சேவடித் தாமரை தீண்டி விளக்குத் திசைமுகனார்
ஈவடிக கங்கைச் சடாதர னேகம்பன் வீற்றிருக்கும்
மாவடிக் கச்சி யருளாள னத்திகிரி வரதன்
மூவடிக் கொண்டுல கேழுட னேழுங்கொள் மூர்த்தியனே.       (45)

மூர்த்திய னாதிமுழு முதற்றேவன் முகுந்த னெங்கும்
பூர்த்திய னாளரி வேளுக்கை பாடகம் புட்குழியங்
கீர்த்தியங் கச்சி யருளாள னத்திகிரி வரதன்
சீர்த்தி யென்னா னவின்றேத்தப் பன்னாளும் திருத்துவனே.       (46)

திருத்துவனென்னைத்தன் சிற்பதத் தின்பணி செய்யப்பின்னர்
பொருத்துவ னப்பதந் தன்னொடு மேபொங்கு மின்பவெள்ளம்
அருத்துவன் கச்சி யருளாள னத்திகிரி வரதன்
கருத்துவந்தென்னைக் கொள்ளுங் களவக்கூத்தொன்றுங் கண்டிலனே.      (47)

கண்டலந் தாமரை கால்கைக டாமரை காமர்முக
மண்டலந் தாமரை மார்புந்தி தாமரை வார்பொன்செய்
குண்டலங் கச்சி யருளாள னத்திகிரி வரதன்
கொண்டலந் தாமரை பூத்தெழுந் தாலன்ன கோலத்தனே.       (48)

கோலத்தன் கோதண்ட பாணியென் னாணிக் குணங்கொள்முத்து
நீலத்தன் கோல மரகத மாமலை நீடுதுயில்
ஆலத்தின் கச்சி யருளாள னத்திகிரி வரதன்
மூலத்த னென்றோகை மாவொடு வேத முறையிடுமே.       (49).

முறைகொண்ட வேதங்கட் கெட்டாது நின்றமுதல்வன் முன்னாட்
கறைகொண்ட கண்டர்க் கையந் தவிர்த்தான் கலைவாணர் பயில்
மறைகொண்ட கச்சி யருளாளன த்திகிரி வரதன்
நறைகொண்ட பூங்கழற் கேதஞ்ச மாமென நண்ணு துமே.       (50)

நண்ணலங் கற்றண் டுழாய் மார்ப னார்ந்த நளினமுகில்
தண்ணலங் காரத் திருவுரு வாயவன் சங்கவண்ணன்
அண்ணலங் கச்சி யருளாள னத்திகிரி வரதன்
விண்ணலங் கொண்டெழு புண்ணிய கோடி விமானத்தனே.       (51)

விமானத்த னான்முகன் சங்கர னாதியர் மேவித்தொழும்
நமானத்த நேமியங்கை யெம்பிரா னங்கள் நாதனெந்தை
அமானத்தன் கச்சி யருளாள னத்திகிரி வரதன்
சமானத்த னீலமரகத மாணிக்கந் தண்முத்தமே.       (52)

தண்முற்று மண்முற்று வாண்முற்றுந் கான்முற்றுந் தாவு செந்தீ
யுண்முற்று மற்று முற்று மாய்வைத்துண் ணிறைந்தான்
கெண்முற்றுங் கச்சி யருளாள னத்திகிரி வரதன்
கண்முற்றுந் தாமரையோன் றாள்க ளொன்றிக் காண்கிலனே.       (53)

காணலன் றேவர்க்கு மூவர்க்கு மயற்குங் கருதிநின்றும்
பேணல னுள்ளவ னல்ல நில்லா நல்லன்பே யுயிர்காள்
கேணலன் கச்சி யருளாள னத்திகிரி வரதன்
ஆணலன் பெண்ணல னல்லா வலியு மிலநலனே.       (54)

அலனல னெப்பொருளும் பரந்தாமன் முன்னா கிலுமின்
னிலனல னீரலன் றீயலன் காலல னீள்விசும்பிற்
வலனலன் கச்சி யருளாள னத்திகிரி வரதன்
இலனல னுள்ள வனல்ல னில்லாதுள னெங்கெங்குமே.       (55)

எங்கெங்கும் தன்கழல் காட்டி நிறைந்திந்த வேழுலகில்
அங்கெங்குந் தானென நின்றபிரான் பரவத்து வெங்கும்
வங்கங்கொள் கச்சி யருளாள னத்திகிரி வரதன்
சங்கங் கொள்கை யெம்பிரான் சரணே சரண்தா னெனக்கே.       (56)

தானெனக்குச் சரணார விந்தந் தருந் தாயகனா
னானெனக் கப்பன் செய்நன் கென்கொலோ வறியேன் புவிக்கங்
கானனக் கச்சி யருளாள னத்திகிரி வரதன்
தேனெனக்குச் சுவைக் கட்டி பின்பாலருந் தீங்கரும்பே.       (57)

தீங்கரும் பாதியென் சிந்தையுளூறிதித் தித்தெழுந்த
பூங்கருங் காவிவண்ணப் பெருமான் பொங்குநீர்ப் பரப்புள்
வாங்கருங் கச்சி யருளாள னத்திகிரி வரதன்
நீங்கரும் பேரின்ப வள்ள மென்னாளு மென்னெஞ் சுற்றத்தே.       (58)

என்னெஞ்ச மொடகி லாண்டங்கள் முற்றவு மெம்பெருமான்
றன்னெஞ்ச முள்ளுவந் தோன் னேறானென்றுந் தானவர்க்கு
வன்னெஞ்சன் கச்சி யருளாள னத்திகிரி வரதன்
நன்னெஞ்ச னென்றனக் கின்பப் பொற்பாதங்கள் நல்குதற்கே.      (59)

நல்குபொன் மாமணிக் கற்பக மொப்ப நறுங்கமலை
மல்குபொன் மார்பன் றிருக்கடன் மல்லை மருவும்பிரான்
கெல்குபொன் கச்சி யருளாள னத்திகிரி வரதன்.
புல்குபொன் பூம்பதப் போதடி யேனுடைப் புந்தியதே.       (60)

புந்திக்குள் நின்று புரைபுரை யோடிப் புகுந்துபுக்கு
சிந்திக்குந் தோறுவந் தருள்வ ரன்பர் தேவருடன்
வந்திக்குங் கச்சி யருளாள னத்திகிரி வரதன்
உந்திக்குள் முந்திப் பிரமனையீன்ற வென் னுத்தமனே.       (61)

உத்தவ னீர்மலை கார்வானம் வேங்கட மோங்குதண்கா
நிற்றவன் வைகுந்த மேவியி ருந்தவ நீரிற்றுயில்
கிற்றவன் கச்சி யருளாள னத்திரி வரதன்
சிற்றவன் சேவடி யடியேன் றுய்க்குந் தெள்ளமுதே.       (62)

தெள்ளிய சிங்கந் திருவல்லிக் கேணியுட் டேர்விசையற்
கொள்ளிய பாகன் றிருவிட வெந்தை யுறைந்தபிரான்
தெள்ளிய கச்சி யருளாள னத்திகிரி வரதன்
உள்ளி யென்னெஞ்ச முகந்தவ னாளு மொருங்குறவே.       (63)

ஒருங்குறத் தேவர் குழாங் குழுமித் தொழுமுத்தமனார்
நெருங்குறத் தானுற வென்றனக் கேயப்ப னீணிலந்தா
வருங்குறட் கச்சி யருளாள னத்திகிரி வரதன்
மருங்குறத் தாமரை யாருடன் புவியை வைத்தவனே.       (64)

வைப்பவ னென்னைத் தன்னோடுடன் கூடவைகுந்தத் தின்பந்
துய்ப்பவன் பின்னரு மென்றனக்கே யப்பன் சோதி வண்ணம்
மைப்பவன் கச்சி யருளாள னத்திகிரி வரதன்
துய்ப்பவ னெவ்வுயிர்க்குந் தாணுவாய் நின்ற வொண்சுடரே.       (65)

ஒண்சுடர்த் தாமரைத் தாள்தொழு தேத்தி யுகந்துநின்ற
விண்சுடர்த் தேவர் பிரான் பரமேச்சுர விண்ணகரான்
வண்சுடர்க் கச்சி யருளாள னத்திகிரி வரதன்
கண்சுடர்த் தாமரை யோன் றாள்களாகுங் கதியெனக்கே.       (66)

கதிர்தரு நீண்முடிக் குண்டலத் தோடுங் கவுத்துவம்பூண்
டெதிர் தரும் பீதநல் லாடையம்மா னெங்கு மாமுரசம்
அதிர்தருங் கச்சி யருளாள னத்திகிரி வரதன்
முதிர் தரும் பாதபங் கேருகந் தானென் றயாநிதியே.       (67)

நிதிதரு மாமணி நின்றவூர் நித்திலம் நீடுமின்பக்
கதிதரு மாதவங் கண்ணபிரான் கைகளாற் கடலை
பதிதருங் கச்சி யருளாள னத்திகிரி வரதன்
நதி தரும் பூங்கமலப் பதமே கதி நந்தமக்கே.       (68)

நந்தமர் கையன் றிருச் சக்கரதர ணாண்மலராள்
வந்தமர் மார்பன் றுழாய்மலி தோளன் வளர்தருவோ
ரைந்தமர் கச்சி யருளாள னத்திகிரி வரதன்
தந்தமரோ டெனையும் புரந்தாளுந் தயாப ரனே.       (69)

பரம்பந் தானுணர்ந் தோனவர் நால்வர்க்குப் பண்டுரைத்த
முரன்பரந் தாதிரி சூலங்கைத் தெக்கண் மூர்த்தியென்றும்
அரன்பரன் கச்சி யருளாள னத்திகிரி வரதன்
கரன்பரஞ் சாதிக்க சார்ங்கம் வாங்கிய காகுத்தனே.       (70)

காகத்தின் றீமை பொருத்தான் கார்வைக் கடிந்தடித்த
னாகத்த னட்ட புயக்கரத்தான் வரநான்முகன் செய்
யாகத்தன் கக்சி யருளாள னத்திகிரி வரதன்
ஈகத்தன் சேவடி யென்றனக்கே யொத்தி சைந்தவனே.       (71)

இசையிருஞ் சீர்த்தியிவ் வேழுல கோடுல கேழுமன்று
திசையிரு னான்குஞ் செல்லா நிற்குமூர் தெய்வப்புட்கொடிநின்
றசையிருங் கச்சி யருளாள னத்திகிரி வரதன்
மிசையிரும் புண்ட நன்னீராகி யென்னெஞ்சமேவியதே.       (72)

மேவியென் னெஞ்சத் திருக்கின்ற மாதவன் மேதினியைத்
தாவியளந்த சரோருகப் பாதன் பொற் றாமரைசூழ்
வாவியங் கச்சி யருளாள னத்திகிரி வரதன்
கூவியென் னைத்தன் னுடனுய்ய வாங்குமென் கோவிந்தனே.       (73)

கோவிய ரொன்பதி னாயிரவர் கொழுநன் பட்டத்
தேவிய ரெண்மர்க்கு நாயகன் கண்ணன் றிருந்து நல்ல
கேள்வியர் கச்சி யருளாள னத்திகிரி வரதன்
வாழ்வியரும் பெருந் தேவி மணாள னென் மாயவனே.       (74)

மாயவ னென்னுண் மயக் கறுப்பான் மதுசூதனன் வையந்
தாயவந் தாமரைத் தாளுடையான் தக்க வேதங்கள்முன்
நாயகன் கச்சி யருளாள னத்திகிரி வரதன்
மேயவ னாடுங் கொடிக்கடி தோச... கந்தே.       (75)

மீதமர் புட்கரு டக்கொடி வாகனன் மேவியுந்திப்
போதமர் நாதன் புரக்கின்ற வேள்வியன் பூங்கமல்
மாதமர் கச்சியருளாள னத்திகிரி வரதன்
பாதமிரண்டு மென் னாவி லென்னாளும் பயில்கின்றதே.      (76)

பயின்றவன் காளியன் மீதுநடம் பண் டொ ராலிலைமேற்
றுயின்றவ னீடுமகி லாண்ட முற்றவுந் தோய்தயிரோ
டயின்றவன் கச்சி யருளாள னத்திகிரி வரதன்
மெயின்றவன் றானெனக்குத் தருவான் றிருவிண்ணுலகே.       (77)

விண்ணவன் வேத விழுப்பொருள் வேங்கட வித்தகனென்
கண்ணவன் சீயபுரத் தமர்ந்தோ னெழிற் கார்முகில்போல்
வண்ணவன் கச்சி யருளாள னத்திகிரி வரதன்
பண்ணவன் றேவர்க்கு மூவர்க்கும் யார்க்கும் பழையவனே.       (78)

பழையவ னாழிப் பிரான் பரந்தாமன் பருமகரக்
குழையவன் மூலமென் னோலமிட்டோர் கயங் கூப்பிட்டுநின்
றழையவன் கச்சி யருளாள னத்திகிரி வரதன்
பிழையவன் றன்னடி யார்க்கே பொறுக்கும் பெருமையனே.      (79)

பெருமையன் றானவ னாயிரநாமம் பிதற்று மவர்க்
கொருமைய னான்முகன் சங்கரனே முதலும்பர்க் கெல்லாம்
அருமையன் கச்சி யருளாள னத்திகிரி வரதன்
கருமையன் செம்மையன் வெண் மை (யா) ய... ன் பச்சை கன்(ண்) மையனே.      (80)

கன்மையந் தோள்க ளோராயிரமுங் கழல் வாணன்றனக்
கின்மை தாம்படி நேமிதொட்டோன் விடை யேழடர்த்த
வன்மையன் கச்சி யருளாள னத்திகிரி வரதன்
சின்மைய னெவ் வுயிர்க்குஞ் செகச்சோதிச் சிகாமணியே.       (81).

மணிகொண்ட வண்ணனென் மாமலர்க் கண்ணன் மருவுந்துழாய்த்
திணிகொண்ட திண்புய னான்குடையான் செம்பொன் மாடங்கள் சூழ்ந்
தணிகொண்ட கச்சியருளாள னத்திகிரி வரதன்
பணிகொண்டெனைப் பவமேழ் துடைத் தாளும் பராபரனே.       (82)

பரந்த வனண்ட பகிரண்ட முற்றவும் பண்டுண்டெழச்
சுரந்த வன்பின்னர் தன்னாபியினா லுதிர்த்த தொன்றி நின்று
துரந்தவன் கச்சியருளாள னத்திகிரி வரதன்
புரந்தவ னென்னைத் தன் பொன்னடிக் காட்செய்யப் போதவுமே.      (83)

போதவன் சங்கர னிந்திர னாதியர் போற்றி செய்யும்
பாதவம் போருகத் தெம்பெருமான் பண்டு யாம் புரிந்து
மாதவன் கச்சி யருளான னத்திகிரி வரதன்
ஆதவன் சந்திர னோடைந்து பூதமு மானவனே.       (84)

ஆனவன் யாவையும் யாவருந் தானு மயனரனுந்
தானவனாக மிடந்த பிரான் சங்கு சக்கரக்கை
வானவன் கச்சிய அருளாள னத்திகிரி வரதன்
யானவன் றன்பெருஞ் சீர்த்தி யல்லாதொன்று மேத்திலனே.       (85)

எத்திருஞ் சீர்த்திய னெந்தை பிரா னிமையோர் பெருமான்
தி மாமகள் கேள்வ னெம்மான் புடை சூழ்தரும்பா
லாற்றிருங் கச்சி யருளாள னத்திதிரி வரதன்
வீற்றிருந் தார்திரு மார்பன் முக்கூடலின் மேயவனே.       (86)

மேயவன் மாலிருஞ் சோலைநல் வேங்கட வெற்பரங்கந்
தாயவன் றாள்களி னாலுல கேழையுந் தான்முனுண்ட
வாயவன் கச்சி யருளாள னத்திகிரி வரதன்
தூயவ னென்னைத் தன் சேவடிக்கே பணிகொள் வனின்றே.       (87)

கொள்வ னென்னைத் தன் றிருவடிக்குப் பணிகொண் டென்னெஞ்சத்
துள்வ னப்பெய்த வுகந்திருந்தே யென்னுயிர் கவருங்
கள்வனென் கச்சியருளாள னத்திகிரி வரதன்
புள்வனைந் தேறும் பிரான் புருஷோத்தமன் புன்ணியனே.       (88)

புண்ணிய கோடி விமானமும் கோயிலும் புட்கொடியுந்
தண்ணியல் சாலைத் தடங்கூபத்தொ டனந்த சரசும்
வண்ணியல் கச்சி யருளாள னத்திகிரி வரதன்
நண்ணியென் சிந்தையுள் தித்திக்கும் ஞானநறுங் கனிக்கே.       (89)

கனிதரு சிந்தைய ராகிக் கசிந்து கசிந்துருகிப்
பனிதரு கண்ணுடன் பாடிநின் றாடிப் பதம் பரவு
மனிகருங் கச்சி யருளாள னத்திகிரி வரதன்
குனிதரு சாரங்க சேவகனாய் வருங் கோவலனே.       (90)

கோவல னாடுகுடக்கூத்தன் பூமகள் கொண்க னெம்மான்
காவலன் மூவுலகோடுயிர் முற்ற வுங் காதல்செய்தே
கேவலங் கச்சி யருளாள னத்திகிரி வரதன்
ஆவல மென்மேலும் வைத்தா னன்பரொ டென்னையாள்வதற்கே.       (91)

ஆழ்வார் பழவடி யா னிவ னின்றெனை யன்புறத்தன்
னீழ்வார மாக்கி வைத்தா னதுவன்றி யென்னெஞ்சம் புக்கான்
வாழ்வாரங் கச்சி யருளாள னத்திகிரி வரதன்,
தாழ்வார்குழற் றிருமாமகள் கேள்வன் றயா பரனே.       (92)

பரமண் ணுலகம் படைத்த பிரான் பரமேட்டி யென்னும்
பிரமன் னுருத்திர னிந்திர னாதியர் பெற்றிடுமா
வரமன்னு கச்சி யருளாள னத்திகிரி வரதன்
கரமன்னு சக்கரத் தண்ணல் பொன்மேனி யென்கண்ணுளவே.       (93)

கண்ணன் செய்யாள் மணவாள னெண்ணெண் கலையாரச்சுருதிப்
பண்ணன் சென்னாப் புலவன் பினிற் சொல் (லென்)றோ பத்தன்சொன்ன
வண்ணஞ்செய் கச்சி யருளாள னத்திகிரி வரதன்
தண்ணஞ்செய் தாமரைத் தாளினிப் பொன்முடித் தார்க்கொழுந்தே.      (94)

தாரார்ந்த தண்ணந் துழாயணி மார்பன் றடம்பொய்
வேரார்ந்த தோளொரு நான்குடை யானிரண்டாய கலைவல்
லாரார்ந்த கச்சி யருளாள னத்திகிரி வரதன்
வாரார்ந்த கொங்கை பெருந்தேவி யாள்மண வாளனென்றே.       (95)

வாளுடைத் தோளன் கதாயுதன் வில்வளை யாழிக்கை கையன்
தாளுடைக் கங்கையன் மங்கைநன் மார்பன் சரண்தந்தென்னை
யாளுடைக் கச்சி யருளாள னத்திகிரி வரதன்
வேளுடைத் தந்தை யென்றாதை யல்லாதில்லை மெய்ப்பொருளே. (96)

மெய்வண்ண மாமணி வண்ணம் பொன்னார் வண்ணம் வெள்ளிவண்ணம்
பைவண்ண மாகிய பச்சைவண்ணம் பின்னும் பன்னியிடில்
மைவண்ணன் கச்சி யருளாள னத்திகிரி வரதன்
கைவண்ணந் தாமரை தாமரை யேதிருக் காலவண்ணமே.       (97)

கால்வண்ணங் கைவண்ணங் கண்வண்ணம் வாய்வண்ணம் கஞ்சங்கொண்ட
பால்வண்ண னீலவண்ணன் பச்சை வண்ணன் பவளவண்ணன்
மால்வண்ணன் கச்சி யருளாள னத்திகிரி வரதன்
போல்வண்ணம் யாவர் சொல்லீர் தேவராமவர் புக்கெங்குமே.       (98)

புக்கரன் றேடித்தன் பொன்னடிக் கீழ்வந்து புக்கிருந்த
நக்கரன் றன்பெருஞ் சாபத்தை நீக்கிய நாயகனெட்
டக்கரன் கச்சி யருளாள னத்திகிரி வரதன்
சக்கரஞ் சங்குவில் வாள் தண்டு தாங்குந் தடக்கையனே.       (99)

தடக்கை யம்போருகந் தாள்கள் பங்கேருகந் தாமரைக்கண்
படர்க்கை யம்புட்கரு டக்கொடி வாகனம் பையரவங்
கிடக்கையங் கச்சி யருளாள னத்திகிரி வரதன்
அடர்க்கய மாமருப் பீர்த்த பிரானம் மரியினுக்கே.       (100)

====================================
ஸ்ரீ:
திருவல்லிக்கேணித் தமிழ்ச்சங்கப் பிரசுரம்.
இலக்கம். வெளியீட்டின் பெயர். வள்ளலார் பெயர்.
1. ஸ்ரீ ஆதிவண் சடகோப யதீந்த்ர
மஹாதேசிகன் வைபவம்.
ஸ்ரீமான் வி. யன். சிங்காரவேலுமுதலியார்
2. தேசிகர் நூற்றந்தாதி. (42) ஸ்ரீமான் ஆர். கேசவய்யங்கார்அவர்கள்
3. மறைமுடித் தேசிகனார். ஸ்ரீமான் சுந்தரசேகர நாயக்கர்
4. மணவாள மாமுனிகள் . ஸ்ரீமான் ஸி. நரஸிம்மாசாரியார்.
6. வேதாந்த தேசிக ரூசல். ஸ்ரீமான் ஆர். கேசவய்யங்கார்
9. கம்பர் மாலை ராவ்ஸாஹெப் ஆர். ராமஸ்வாமி அய்யங்கார் அவர்கள்.
11. ஸ்ரீ ஆண்டாள் மாலை. ஸ்ரீமான் பி. எஸ். திருமலை அய்யங்கார் அவர்கள்.
12. ஸ்ரீ பார்த்தசாரதி மாலை. ராவ்பஹதூர் கே. ஆர். ராமாநுஜம்அவர்கள்.
13. திருவருண் மாலை. (33) ஸ்ரீமான் ஆர். கேசவய்யங்கார் அவர்கள்
14. தூப்புல் வள்ளல் பழமொழிச் சிறப்பு. (34) ப.ரெ.திருமலை அய்யங்கார்.
17. புகழ் மாலை. தமிழன்பர்
18. கம்பர் தருங் கண்ணன். ஸ்ரீமான் பி. சேஷாத்திரி அய்யங்கார் அவர்கள்
19. முக்கோற்பவர். ஸ்ரீமான் ஸ்ரீநிவாஸ கோபாலய்யங்கார் அவர்கள்.
20. ஸ்ரீ வீரராகவ மாலை. ஸ்ரீமான் ரா. கிருஷ்ணய்யங்கார்
21. திருமாமகள் மாலை. திருப்புகழ்மணி பிரும்மஸ்ரீ டி. எம்.கிருஷ்ணஸ்வாமி அய்யர் அவர்கள்.
22. திருநரசிங்கர் மாலை. ஸ்ரீமான் கமலாபுரம் ஆர். ராமஸ்வாமி அய்யங்கார் அவர்கள்
திருத்தேவியார் ஸ்ரீரங்கநாயகி
23. அழகியசிங்கர் மாலை. ஸ்ரீமான் எம்.பி. கிருஷ்ணஸ்வாமி அய்யங்கார்
24. பொய்கையார் மாலை. ஸ்ரீமான் மங்கலம் இராமாநுஜய்யங்கார்
25. ஸ்ரீ ஆண்டாள் சந்திரகலாமாலை. சிறந்த தேசிக பக்தர்.
26. வாரணமாயிரமாலை. ஸ்ரீமான் பி. எஸ். திருமலை அய்யங்கார்
27. ஸ்ரீ பார்த்தசாரதி யம்மான் பாமாலை ஸ்ரீமான் பி. எஸ். கோவிந்த ராஜய்யங்கார்
28. தமிழரேத்தும் ஸ்ரீ மணவாளமாமுனிகள் சந்தமிகு செந்தமிழ்ச் செல்வர்.
29. திருச்சின்னமாலை . ஸ்ரீமான் கே. துரைசாமி அய்யங்கார்
30.திருவேங்கடவர்மாலை. நான்மறையாளர்கள்.
31. மார்கழிமாலை. ஸ்ரீமான் பூண்டி அச்சுத கோபாலாசாரியார்
32. மதுரகவி மாலை. ஸ்ரீமான் கே. எஸ். ஸ்ரீநிவாஸா சாரியார்
33. திருவருட்சதக மாலை. ஸ்ரீமான் என். கிருஷ்ணய்யங்கார்
34. சீரொன்று தூப்புற்றனியன் மாலை. அருள் வரதரடியார்
35. மும்மறைத் தளிவுப் பொருண் மூதுரை மாலை ஸ்ரீமான் அமிஞ்சிக்கரை ஆதி
. நாராயண ஸ்வாமி ரெட்டியார்
36. அருளாளர் மாலை. ஸ்ரீமான் திண்டுக்கல் ராமஸ்வாமி அய்யங்கார்
37. பூங்கோதை மாலை. ஸ்ரீமான் பி.எஸ். கிருஷ்ணய்யங்கார்
38. பூமகள் மாலை ஸ்ரீமான் பி.கோபாலாசார்யா
39. இடைப்பிள்ளை மாலை. ஸ்ரீமான் பி.ஏ. சந்தானமய்யங்கார்
40. செந்தாமரையாள் மாலை. ராவ்பஹதூர் என். கிருஷ்ண ஸ்வாமி அய்யங்கார்
41. பெரியபிராட்டியார் மாலை. ஸ்ரீமான் ஆர். கோபாலஸ்வாமி அய்யங்கார்
42. தேசிகரந்தாதிமாலை. ஸ்ரீமான் திருநின்றவூர் பாலவேடு
பரவஸ்து நரஸிம்மாசாரியார்
43. இராமாவதாரமாலை. ஸ்ரீமான் டி.ஸி. நாராயணஸ்வாமி
44. திருவெவ்வுளூர் ஸ்ரீ வீரராகவமாலை. ஸ்ரீமான் லக்ஷ்மீநரஸிம்ஹ பிள்ளை
45. ஆனைபரிதேரின் மேலழகர் மாலை. ஸ்ரீமான் சுந்தரவரதய்யங்கார்
ஸ்ரீமான் நரஸிம்ஹராகவ அய்யங்கார் .
46. வாழித்திருநாமப்பாமாலை. ஸ்ரீமான் என். கிருஷ்ணமாசாரியார்
47. அத்திகிரி வரதன் அந்தாதி மாலை. அருள்வரதரடியார்.
--------------------------------------------------------------------------------------------------------
பெறும் இடம்: ஆநந்த பிருந்தாவநம்,
ஸ்ரீ மௌனசுவாமிகள் மடத்துத் தெரு, அம்பத்தூர்.
---------------------------------------------------------------------------------------------------------

This file was last updated on 3 April 2023.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)