pm logo

மதுரைவீரன் அம்மானை
(பதிப்பாசிரியர்: ம. சீராளன்)


maturai vIran ammAnai
edited by M. cIrALan
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2023.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

மதுரைவீரன் அம்மானை
(பதிப்பாசிரியர்: சீராளன் )

Source: நூல் பற்றிய விவரங்கள்
மதுரைவீரன் அம்மானை
பதிப்பாசிரியர் : ம. சீராளன், பி. ஏ., எம். எல். ஐ. எஸ்.
நூலகர் (ஓய்வு), சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர்.
1999
தஞ்சை சரசுவதி மகால் வெளியீடு எண். 401
தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர்.
விலை ரூ.24-00
-------------
நூற்பதிப்பு விளக்கக் குறிப்பு

நூற்பெயர் : மதுரைவீரன் அம்மானை
பதிப்பாசிரியர் : திரும. சீராளன்
வெளியிடுபவர் : இயக்குநர், சரசுவதி மகால் நூலகம்
வெளியீட்டு எண்: 401
மொழி : தமிழ்
பதிப்பு : முதல்பதிப்பு
வெளியீட்டு நாள்: மார்ச் 1999 .
பக்கங்கள் : 122
அச்சிட்டோர் : மகாலிங்கம் அச்சகம், தஞ்சாவூர்
பொருள் : இலக்கியம்
விலை : ரூ. 24
------------------

மதுரைவீரன் அம்மானை


சரசுவதி மகால் நூலகம் பன்மொழிச் சுவடிக் கருவூலமாகத் திகழ்ந்துவருகின்றது. இந்நூலகத்தை அணிசெய்கின்ற அரிய சுவடிகளை நூல்களாகப் பதிப்பித்து வெளியிடுகின்ற அரும்பணியையும் தொடர்ந்து இந்நூலகம் ஆற்றிவருகின்றது.

இலக்கணம், இலக்கியம், சோதிடம், மருத்- துவம் முதலிய துறைகளைச் சார்ந்த பல நூல்கள், இந்நூலக வெளியீடுகளாக மலர்ந்துள்ளன, இலக்கிய வகையுள் ஒன்றாக ஒளிரும் 'அம்மானை' இலக்கிய வகை நூல்கள் பலவற்றையும் இந் நூலகம் ஏற்கெனவே வெளியிட்டுள்ளது. அவ்வரிசையில் தற்பொழுது ‘மதுரைவீரன் அம்மானை' எனும் இந்நூல் சுவடியிலிருந்து பதிப்பித்து வெளியிடப்படுகின்றது.

புகழ்வாய்ந்த சமூகக்கதைப்பாடல் இலக்கியமாக இம் 'மதுரைவீரன் அம்மானை' நூல் விளங்குகின்றது.

இலக்கியநயம் வாய்ந்த இந்நூல், இந்நூ லகத் தமிழ்த்துறையின் 1692 ஆம் எண்ணிட்ட ஓலைச்சுவடியை அடிப்படையாகக்கொண்டு, இந்- நூலகத்தின் முன்னாள் நூலகர் திரு ம. சீராளன் அவர்கள் பதிப்பித்து அளித்துள்ளார். பதிப்பாசிரிய ருக்கு எனது பாராட்டுகள்.

இந்நூல் வெளிவரத் தேவையான நிதியுதவி- யை நல்கியுள்ள மையஅரசு பண்பாட்டுத் துறைக்கு எனது நன்றியை உரித்தாக்கி மகிழ்கின்றேன். நூலகத்திற்குப் பராமரிப்பு நிதியினை வழங்கிவரும் தமிழக அரசுக்கும் எனது மனமார்ந்த நன்றியைப் புலப்படுத்துகின்றேன்.

இந்நூல் நன்முறையில் வெளிவர ஆவன செய்துள்ள இந்நூலக நிருவாக அலுவலர் திரு நா. தியாகராஜன் எம். ஏ., பி. எல். அவர்களுக்கும், நூலக வெளியீட்டு மேலாளர் மற்றும் நூலகர் திரு அ. பஞ்சநாதன் எம். ஏ., எம். எல். ஐ. எஸ். அவர்களுக்கும், இந்நூலினை நன்கு அச்சிட்டளித்த தஞ்சாவூர் மகாலிங்கம் அச்சகத்தாருக்கும் எனது பாராட்டுக்கள்.

இந்நூல், தமிழிலக்கிய அன்பர்களின், குறிப்பாக நாட்டுப்புறக் கதைப்பாடல் இலக்கிய அன்பர்கள் மற்றும் ஆய்வாளர்களின் நல்வரவேற் பைப் பெறுமென நம்புகின்றேன்.

தஞ்சாவூர்       முனைவர் மூ. இராசாராம், இ ஆ ப.
30-3-99       மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் இயக்குநர்,
சரசுவதி மகால் நூலகம்.
------------------
ஆய்வுரை

மதுரை வீரன் அம்மானை' என்னும் நாட்டுப்புறக் கதைப்பாடல், தஞ்சை சரசுவதி மகால்
நூலகத்தின் வாயிலாக வெளிவருகிறது. தமிழகத்தில் ஐயனார், அம்மன் கோயில்களில் சிறு
தெய்வமாக இடம்பெற்று வணங்கப்படும் வீரன் மதுரை வீரன்'. மதுரை வீரன் கதையைத்
தமிழக மக்கள் நன்கு அறிவர்.

தஞ்சை சரசுவதி மகால் நூலகம் இதுவரை 15 அம்மானை நூல்களைப் பதிப்பித்து
வெளியிட் டுள்ளது. அவையாவன :-

1. அதிரியர் அம்மானை
2. அரிச்சந்திரன் அம்மானை
3. இராமய்யன் அம்மானை
4. (ஸ்ரீ) இராமர் அம்மானை
5. கஞ்சனம்மானை
6. காஞ்சி மன்னன் அம்மானை
7, 7. சித்திர புத்திரர் அம்மானை
8. சீவக சிந்தாமணி அம்மானை
9. சுந்தரி அம்மானை
10. ஞானவம்மானை
11. துரோபதை அம்மானை
12. (ஸ்ரீ) பார்சுவநாதர் அம்மானை
13. பாரத அம்மானை
14. மார்க்கண்டேயன் அம்மானை
15. வீரையன் அம்மானை
-----------------

கதைச்சுருக்கம்
r
மதுரைவீரன் காசிமன்னன் மகனாகப் பிறந்தான் எனினும் மாலையொடு பிறந்ததால் காட்டில் விடப் பட்டான். சக்கிலியர் வகுப்பைச் சேர்ந்த ஒருவன் இவனை எடுத்து வளர்த்தான். இவ்வீரன் சித்திகள் பெற்றுப் பொம்மண நாயக்கன் மகள் பொம்மியைக் காந்தர்வத்தால் மணந்தான். பின்னர்த் திருச்சிராப் பள்ளியில் அரசு செலுத்தும் விசயரங்க சொக்கலிங்க வேந்தரிடம் மாதமொன்றுக்கு ஆயிரம்பொன் பெற்றுக் கொண்டு நற்சேவக பதவியில் அமர்ந்தான். அங்குத் தனி வீரனாயிருக்கையில், திருமலைநாயக்கர் மதுரையில் இருந்து கள்ளர்பயம் அதிகமாயிருத்தலின், தாங்கள் வந்து அவர்களை யடக்க வேண்டுமெனக் கேட்டுகொண்டார். இதனை விசயரங்க சொக்கலிங்கருக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினார். அவர் இவ்வீரையனை மதுரைக்குச் சென்று அக்கொடிய கள்ளர்களையடக்கி வருவாயாக என்று ஆணையிட்டார். மதுரைவீரன் அவ்வண்ணமே தென்மதுரையிற் சென்று அக்கள்ளர்களை ஒழித்துக் கள்ளர்பயம் நீக்கினான் அடுத்துத் திருமலைநாயக்கர் அரண்மனையிலே அமர்ந்திருந்து விதிவசத்தால் அந் நாயக்கருக்கு ஆலத்தி எடுக்கும் தாதிப்பெண் வெள்ளச்சி என்பவளை மணந்தான். அவளை அழைத்துச் செல்லும் போது காவலர்களால் கை கால் வாங்கப்பெற்றான். இறுதியில் அத்திருமலைநாயக்கர் மீனாட்சியம்மையை வேண்டிகொள்ளமுன்போல வேகைகால்களைப்பெற்றுக் கடைசியில் பொம்மியம்மாள், வெள்ளையம்மாள் இவர் களுடன் தீக்குழியில் குதித்துத் உயிரைப் போக்கிக் கொண்டு தெய்வமானான். மீனாட்சியம்மன் சந்நிதியிலே கம்பத்தடியில் பூசைகொண்டிருக்கிறார், மேலும் இவரை வீரனாக மக்கள் இன்றும் வணங்குகின்றனர் என்ற செய்தியை விரிவர்க உணர்த்துகிறது இந்நூல்.

கதைபற்றி மாறுபட்ட கருத்துக்கள்

இந்தவீரன் கதையைப் பற்றி மாறுபட்ட கருத் துக்கள் நிலவுகின்றன. மதுரை வீரனின் வரலாற்றை அறிவதற்கு ‘மதுரை வீரன் சாமி கதை' என்னும் நூலும் மக்கள் கூறும் கதைகளும் சான்றுகளாக உள்ளன. காசி மன்னனுக்கு மகனாகப் பிறந்து சக்கிலியன் ஒருவனால் வளர்க்கப்பட்டவன் வீரையன் என்று சொல்கிறது, மதுரைவீரன் சாமி கதை. அவன் பிறவியிலேயே சக்கிலி என்னும் கருத்தும், பாண்டியர் களுக்குக் கப்பங்கட்டிக் கொண்டிருந்த சிற்றரசன் என்னும் கருத்தும் உள்ளன.

பொம்மி என்னும் அரசகுமாரியைத் தூக்கிச்சென்று மணந்தவீரன். பின்னர் வேறு ஓர் அரண்மனை யிலிருந்த வெள்ளையம்மாள் என்ற பெண்ணை விரும் பிய காரணத்தால் தண்டிக்கப்பட்டான். ஆனால் பொம்மியின் தந்தை வீரனைச்சிறைப்பிடித்துத் தண்டித்ததாகக் கூறுவாரும் உளர். மக்கள் அவனைச் சிறு தெய்வமாக வணங்குகின்றனர் என்பதில் கருத்து மாறுபாடு இல்லை.

மதுரை நாயக்கர்களின் காலத்தில் தான் மதுரை வீரன் வழிபாடு தோன்றியது. அக்காலத்தில் மதுரையில் கொலை, கொள்ளை முதலிய தொல்லை கொடுத்து வந்த கள்வாகளைக் கருவறுத்து நன்மை செய்த காரணத்தால் மக்கள் அவனைத் தெய்வமாகக் கொண்டாடுகிறார்கள். இவன் திருமலை நாயக்கர் காலத்தில் இருந்திருக்கலாம் என்று கருதப்படுகின்றது. மதுரை வீரனைக் கருப்புசாமி என்று அழைப்பதும் உண்டு. ஐயனார், அம்மன் கோயில்களில் சிறுதெய்வமாக வணங் கப்படும் வீரனுக்குத் தனிக்கோயில் இல்லை. சில இடங்களில் மதுரைவீரன் பதினெட்டாம்படிக்கருப்பன் என்று அழைக்கப்படுவதாகவும் தெரிகிறது.

தஞ்சை மாவட்டத்தில் பல ஊர்களில் உள்ள ஐயனார் கோயில்களில் வீரனுக்குத் தனிக்கோயில்கள் உள்ளன. தலையில் கொண்டை, கனத்த மீசை, கட்டான உடல் கொண்ட வீரனின் வலக்கையில் வாள், இடக் கையில் கதை, அவனுக்கு முன்பாக ஒரு வேட்டை நாய், எதிரில் ஒன்று அல்லது பல மண்குதிரைகள், இந்த நிலையில் சிலைகள் காட்சி அளிக்கின்றன. சேலம் மாவட்டத்திலுள்ள சில வீரன் கோயில்களில் பெரிய குதிரைகளின் மேலும் குதிரைகளுக்குப் பக்கத்திலும் வாளும் கதையும் வைத்துள்ள பெரிய வீரன் சிலைகளைக் காணமுடியும்.

பிற சுவடிகள் மற்றும் அச்சுநூல்கள்

மதுரை வீரன் அம்மானை என்னும் இந்நூலைப் பதிப்பிக்கும் நிலையில் சுவடிகளிலும், அச்சு நூல்களி லும் வேறுநூலகங்களில் காணப்படுவனவற்றின் பட்டியல் ஒன்று தயார் செய்தேன். ஆய்வாளர்களுக்கு உதவியாக இருக்குமென அதன் விவரங்களைக் கீழே குறித்துள்ளேன்.

‘மதுரைவீரன் அம்மானை' என்ற தலைப்பிலுள்ள ஓலைச்சுவடிகளின் விவரப்பட்டியல்
மதுரைக் காமராசர் பல்கலைக கழகம், கீழ்த்திசைச் சுவடி நூலகம், திருவனந்தபுரம்
ஓலைச்சுவடி எண் எடுகளின்எண்ணிக்கை பதிவேட்டுஎண்
10554 -- 94
10555 110 2179
10556 112 2180
10557 108 2181
10558 97 1932
10559 70 4267
10560 36 4269
10561 28 11551
10562 -- 8669
10563 124 8420
10564 -- 374
10565 68 1576
-----------------

அச்சுப்படிகளின் குறிப்பு

'மதுரை வீர சுவாமி கதை' என்ற தலைப்பில் சிதம்பரம் கந்தசாமி முதலியார் அவர்களால் சித்தாந்த சைவப் பிரகாச இயந்திர சாலையில் ஸ்ரீமுக வருடம் புரட்டாசி மீ" ஒரு நூல் அச்சாகியுள்ளது. சிறிய அளவில் உள்ள இந்நூலின் முதல் பக்கத்தில் சரித்திராலங்காரம் மிகச் சுருக்கமாகக் கொடுக்கப் பட்டுள்ளது.

மேலும் ஒரு நூல் 'மதுரைவீரசுவாமி கதை' என்ற பெயரில் வெளிவந்துள்ளது. அது சிதம்பரம் (ரெகு)நாத சுவாமிகளால் பார்வையிடப்பட்டு நுங்கம்பாக்கம் அருணகிரி முதலியார் அச்சேந்திர சாலையிற் கி.பி. 1896 ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது. இதுவும் முற்பிரதி போன்றது.

இந்நூல்களில் சரித்திராலங்காரம் பின்வருமாறு அச்சிடப்பட்டுள்ளது. "இம் மதுரைவீரன் அம்மானையைப் படித்தவர்களுக்கும் கேட்டவர்களுக்கும். சுக்கிர வாரந்தோறும் பூசை செய்பவர்களுக்கும் கல் யாணங் கூடிவரும் உத்தியோகம் வரும். வியாதியால் மெலிகின்றவர்களுக்கு வியாதி நீங்கிவிடும் மனோகவலை நீங்கிவிடும். சகல பாக்கியமும் சந்தான சம்பத்தும் அஷ்டஐஸ்வரியமும் தன, கனக வஸ்துவும், தீர்க்கா யுசும், புத்திர புத்திர சம்பத்தும் மாடுகள் கன்றுகள் தழைத்துப் பயிர்களெல்லாம் நீட்சியை யோங்கி எப்பொழுதும் மறுவில்லாப் பெருமை யுண்டாகும். இந்தபடிக்கு காசி காண்டத்தில் வியாசரால் சொல்லிய கவிகளிலிருந்ததை இக்கதைக்காக மொழிபெயர்த் தருளியது

'மதுரை வீர சுவாமி கதை' என்று மற்றொரு நூல் சென்னை ஸ்ரீமகள் கம்பெனியாரால் புகழேந்திப் புலவர் இயற்றிய பெரிய எழுத்து மதுரை வீரன்கதை ( படங்களுடன் ) அச்சாகி வெளிவந்துள்ளது.

தஞ்சை சரசுவதிமகால் நூலகத்தின் வாயிலாக 'வீரையன் அம்மானை என்ற பெயரில் ஒரு நூல் 1978 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. இந்நூலாசிரியர் அம்மானை என்னும் நெடும்பாடல் வகையில் மட்டும் இந்நூலை அமைக்காது வெண்பா, விருத்தம், கலித்துறை. கொச்சகம், தாலாட்டிசைக்கும் தனிநடைப் பாடல் முதலியவற்றால் படைத்துள்ளார்.

சுவடிக்குறிப்பு:
இந்தநூலைச் செய்தவர் இன்னாரென்று தெரிய வில்லை நூலாசிரியர் கணபதி, முருகன், சரசுவதி, பரமேசுவரி முதலான தெய்வங்கள்மீது துதிப்பாடல் களும், அவையடக்கமும் பாடியுள்ளார். சுவடியின் முற்பகுதியில் நான்கு ஏடுகள் அப்பகுதியின் கருத்தினைச் சென்னை அரசினர் கீழ்த் திசைச் சுவடிகள் நூலகத்தின் ' மதுரை வீரன் கதை அம்மானை' என்ற சுவடி எண். 2179ல் அமைந்துள்ள 25 அடிகளைக் கொண்டு நிறைவு செய்துள்ளேன். சுவடியின் ஈற்றுக் குறிப்பில் பின்வரும் செய்திகள் காணப்படுகின்றன.

"சர்வதாரி வருடம் மாசி மீ 2 s திங்கட்கிழமை காளியப்ப கவுண்டரூரிலே யிருக்கும் கொத்துக்கார கருப்ப கவுண்டன் மகன் ஸ்ரீ புண்ணிய குமாரன் எட்டியர் கவுண்டன் மதுரைவீரன் அம்மானை எழுதி முடிந்தது முற்றும். சம்பூரணம் - வாலைஞான சரசுபதி எட்டிக்கார கிருபாகடாச்சம் திருச்சிற்றம் துணை பலம்.''

இப்பொழுது வெளிவரும் 'மதுரை வீரன் அம்- மானை' என்னும் இந்நூல் சரசுவதி மகால் நூலகத்தின் தமிழ்ப்பிரிவிற்கு வளையல் காரன்புதூர் திரு. ஆர். இராதாகிருட்டிணன் அவர்களால் 15-6-1987ல் வழங்கப் பட்ட ஓலைச் சுவடியை (த.எண். 2416/6/6001. 1692) ஆதாரமாகக் கொண்டு பதிப்பித்து வெளியிடப் படுகிறது.

நூற்சிறப்பு

இந்நூல் தமிழ்க் கதைப்பாடல்களில் சமூகக் கதைப் பாடல் என்னும் பிரிவைச் சார்ந்துள்ளது. நாட்டுப்புறக் கதைப் பாடலில் நாடோடிப் பாடல் இயல்புகள் அம்மானைப் பாடல்களில் இடம் பெற்று உள்ளன. கொச்சை மொழிகள் அனைவருக்கும் விளங்கும் உவமைகள், உலக வழக்குச் சொற்கள், ஒரு குறிப்பிட்ட சொல்லையே மீண்டும் மீண்டும் சொல்லுதல், சில வகையான அமைப்புகள் போல்வன இப்பாடல்களிலும் இடம்பெற்றுள்ளன. அம்மானைப் பாடல்கள் பொழுது போக்குக்காக எழுந்தவை யெனினும் அவற்றின் வளர்ச்சி பக்தியையும் தமிழ்ப் பண்பாட்டையும் எடுத்து விளக்குவதாக அமைந்து உள்ளது

இந்நூற் செய்திகள் மதுரை வீரன் கதை, மதுரை வீரன் கெடிகாரம், மதுரை வீரன் சிந்து, மதுரை வீரன் நாடகம் போன்ற நூல்களில் காணக்கிடைக்கின்றன.

வீரர்கள் இறந்த பின்னர் இறைவனிடம் வரம் பெற்றுத் தெய்வமாகின்றனர் என்பது கதைப்பாடல்கள் கூறும் செய்தியாகும். மதுரைவீரன் திருமலை நாயக் கருக்கு உறவான வெள்ளை யம்மாளைக் காமவேகத்தில் கலந்துவிடுகிறான். அதன்காரணமாகக் கொல்லப் படுகிறான்.

"பெண்ணாலே நம்முயிரு பொன்னுலகம் சேருதய்யா'' என்று கதறி இறைவனை வேண்டுகிறான். அவனுடைய அழுகுரலுக்கு இறங்கிய இறைவன் 'கம்பத்தடியில் காத்திருந்து பூசை கொள்வாய்' என்று வரம் கொடுக்கிறார். அவனை அனைவரும் தெய்வ மாக்கி வழிபடுகின்றனர்.

கதை மாந்தர்களின் சிறப்பை மிகைப்படுத்திக் காட்டுவதற்காகச் சில இயற்கை இறந்த நிகழ்ச்சிகளை ணைத்துக் கதைகளைப் பின்னுவது வழக்கம். மதுரை வீரன் மாலை சுற்றிப் பிறந்ததும் அவன் இருப்பது நாட்டுக்கு ஆகாது என நிமித்திகர் கூறுகின்றன உடனே அவனுடைய தந்தை காசிராஜன் அவனைக் கானகத்தில் கொண்டு விட்டு விடுகிறான். அக்குழந்தை யை நாகமொன்று காத்து வளர்ப்பதாகக்கதை கூறுகிறது
தீயசகுனங்கள், நல்லசகுனங்கள் காணப்படுவதையும் கதைப்பாடல்கள் குறிப்பிடுகின்றன. இக்கதையில் சக்கிலிச்சி ஒருத்திக்குப் பிள்ளை இல்லை. அவள் பிள்ளை வேண்டித் தவமிருக்கிறாள். அப்போது மதுரைவீரன் காட்டில் குழந்தையாக அவள் கையில் கிடைக்கிறான். சக்கிலிச்சி இன்பமாக அக்குழந்தையை எடுத்து வளர்க்கிறாள். பிள்ளை இல்லாவருத்தத்துடன் அவள் காட்டுக்குள் வரும் போது பல நல்ல சகுனங் களைக் காண்பதாகக் கதைப் பாடல் கூறுகிறது.

பலவிதமான கறிவகைகளுடன் விருந்து பரிமாறு வது மதுரைவீரன் கதை, புலந்திரன் களவு மாலை, பவளக்கொடி மாலை முதலிய கதைப் பாடல்களில் ஒரே மாதிரி விளக்கப்பட்டுள்ளதைக் காணலாம். அத்தகைய உணவு வகைகளை உண்ணமுடியாத பாமர மக்களுக்கு இத்தகைய விளக்கப்பகுதிகள் கற்பனையாகச் சுவை விருந்தூட்டி மகிழ்விக்கும்.

நன்றியுரை

இந்நூல் வெளிவருவதற்கு அனுமதி வழங்கி, வெளியீட்டு முகவுரை தந்துள்ள மதிப்பிற்குரிய தஞ்சை மாவட்ட ஆட்சியர் மற்றும் இயக்குநர் உயர்திரு முனைவர் மூ. இராசாராம்,இ ஆ.ப. அவர்கட்கும் இந்நூலின்படியினை அச்சேறுவதற்கு முன்நுண்ணாய்வு செய்து கொடுத்த மூதறிஞர் முனைவர் அ. மா. பரிமணம், எம். ஏ. எம் லிட்., பிஎச்.டி., அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்பதிப்பு நன்முறையில் வெளிவர ஆர்வமூட்டி ஆவன செய்துள்ள துணை ஆட்சியர் மற்றும் நிர்வாக அலுவலர் திரு நா. தியாகராஜன், எம். ஏ., பி. எல்., அவர்கட்கும் நூலகரும் பதிப்பு மேலாளருமான திரு அ. பஞ்சநாதன் அவர்களுக்கும், ஒப்பீடுசெய்ய அச்சுப்படி பெற்றுத்தந்த இந்நூலகத் தமிழ்ப்பண்டிதர் களுள் ஒருவரான திரு. ய. மணிகண்டன் அவர்கட்கும் என் நன்றியினையும் மகிழ்வையும் உரித்தாக்குகின்றேன்.

இந்நூலினை நன் முறையில் அச்சிட்டுத் தந்த மகாலிங்கம் அச்சகத்தார்க்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ம. சீராளன்
பதிப்பாசிரியர்
-----------------

நன்றி

திருச்சிராப்பள்ளி மாவட்டம், குளித்தலை வட்டம் சார்ந்த வளையல்காரன் புதூர் சோதிடர் திரு. ஆர். இராதாகிருஷ்ணன் அவர்கள் 15-6-1987இல் தஞ்சை சரசுவதி மகால் நூலகத் திற்கு அன்பளிப்பாகக் கொடுத்த சுவடி பதிட்பிக்கப் பெற்று நூல்வடிவாக வெளியிடப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சிகலந்த நன்றியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
--------------

வேண்டுகோள்

கருணையுள்ளங்கொண்ட நம் முன்னோர்கள், அரிய பெரிய இலக்கியங்களையும், பிறவற்றையும், பனையோலைகளில் எழுதிச் சுவடி களாக நமக்குத் தந்தனர். அவை, பல்வேறு இடங்களில் முடங்கி உள்ளன. சுவடிகள் பழுதடைவதற்குமுன் சரசுவதி மகாலுக்கு அன்பளிப்பாகக் கொடுத்துதவினால், அவை மக்களுக்குப் பயன்படும்.

மகாலுக்குக் கொடுப்பதன் மூலம், சுவடி தந்தவர்களும், சுவடி எழுதியோரும் அழியாப் புகழை, பெருமைசால் சரசுவதி மகால் உள்ள ளவும் பெறுவர். அவை பதிப்பாகி வருமாயின் சுவடி தந்தார் பெயர் இடம் பெறுவதோடு, அப்பதிப்பில் ஐந்து பிரதிகளும் பெறுவர்.

எனவே, “நாம் பெற்ற பேறு பெறுக இவ் வையகம்" என்ற எண்ணமுடைய நற்பண்பாளர்கள் தம்மிடமுள்ள சுவடிகளைச் சரசுவதி மகாலுக்குத் தந்துதவ வேண்டுகிறேன்.

தஞ்சாவூர், மாவட்ட ஆட்சியர் மற்றும் இயக்குநர்,
30-3-99
சரசுவதி மகால் நூலகம்.
---------------

மதுரைவீரன் அம்மானை

காப்பு
முந்தி முந்தி விநாயகனே முருகா சரசோதி
கந்தனுக்கு முன்பிறந்த கணபதியே முன்நடவாய்
ஆலடிப் பிள்ளையீரே அகமயில் விநாயகனே
வேலடி பிள்ளையீரே வேறுவினை வாராமல்
த (ள) (ழ)ஞ்சாலுங் கீழிருந்து கண்ணி மதம் பொழியும்      5

இருண்டாலுங் கீழிருந்து எண்ணை மதம் பொழியும்
நாகமலை தோகைமலை நடுவிருக்கும் வெள்ளிமலை
வெள்ளிமலைக் குள்ளிருக்கும் விநாயகனே முன்நடவாய்
கணபதியை நோக்கிக் கைதொழுவேன் அம்மானை
கணபதி யென்றவர்க்குக் கருமங்களுந் தாந்தொலையும்      10

வினாயகனைத் தொழுதால் விக்கினங்கள் வாராது
அய்யனே கண்மணியே ஆதிசிவன் புத்திரனே
துய்ய கணபதியே தோகைநல்லாள் புத்திரனே
காமாட்சி பெற்றெடுத்த கண்ணே நவமணியே
மீனாட்சி பெற்றெடுத்த மேகவண்ணப் பிள்ளையீரே      15

அத்தனையுங் கொண்டுவந்து அடைவுடனே
வாரியமுது செய்யும் வைகைநதிப் பிள்ளையீரே நான்படைப்பேன்
கூட்டியமுது செய்யும் குளக்கரையிற் பிள்ளையீரே
நம்பினேன் உன்பாதம் நன்றாகக் காருமய்யா
மதுரை துரைபேரில் உந்தன் குழந்தையிப்போ      20

அம்மானை பாடுகிறேன் [1]அவதிகளுந் தீரவேணும்
குற்றங்கள் வாராமற் குடிகாக்க வேணுமய்யா
முப்பது முக்கோடி தேவர்களுந் தாமறிய
நாற்பத் தெண்ணாயிரம் ருஷிகளுந் தாமறிய
அம்மானைப் பாடுகிறேன் அன்பாகக் காருமையா      25

மாதேவி ஈசுபரியே மாதாவே என்தாயே
தட்சனுட யாகத்தில் தான்பிறந்த ஈசுபரியே
சுட்ட பிணம்தின்னி சுடலைவனங் காத்தவளே
வாயிலே அஞ்சுபிணம் வலதுகையி லேழுபிணம்
மிஞ்சின பிணத்தை மிதியடியாய்த் தொட்டவளே      30

ஏந்திய [2] கபாலம் யெடுத்தாய் திருசூலம்
எக்கிய வயிறும் தேகமெல்லாம் வெண்ணீறும்
சடையால் பெருத்தவளே தாயே ஈசுபரியே
நம்பினேன் உன்பாதம் நாடினேன் சீர்பாதம்
வீரையன்மேல் பாடுதற்கு விதமுடனே வரந்தருவாய்      35

மாதேவர் வேர்வையிலே வந்துதித்த வீரபத்திரன்
பதினெட்டு ஆயுதமும் பாங்குடனே வந்துதய்யா
அங்கையற் கண்ணிவாசல் அன்புடனே காத்ததுரை
உந்தனை நம்பியொரு அம்மானை பாடுகிறேன்
வந்தென்னைக் காத்து வரந்தர வேணுமய்யா      40

நாவு தவறாமல் நல்லகுரல் மங்காமல்
ஏடு தவறாமல் எழுத்தாணி சாயாமல்
நாவில் சரசுபதியே நலம்பெறவே எழுதிவைப்பாய்

வேணுமடி தாயே வேதாந்த நாயகியே
ஆறுகுற்றம் நூறுபிழை அடியேன்நான் செய்தாலும் 45

கொண்டு பொறுத்தொரு குற்றங்கள் வாராமல்
காக்கக் கடனய்யா கர்த்தாவே தென்மதுரை

நாட்டுச்சிறப்பு
வடக்கே வடதேசம் வைகுந்த பதவியைப்போல்
காசியெனும் பட்டணமாம் கைலாச மொப்பாக
கங்கை நதியும் கயிலாசப் பொய்கைகளும்      50

விசுவநாத சன்னதியில் வெண்முத்தால் கோபுரமாம்
விசாலட்சி அம்மன் விளங்கியதோர் மண்டபமாம்
ஆலயமும் திருமதிலும் அபரஞ்சிக் கோபுமாம்
பார [3] அபரஞ்சி பளிங்குமா மண்டபமாம்
மாணிக்கம் பதித்த வச்சிரமணிக் கோபுரமாம்      55

தூண்டா விளக்கெரியும் சொக்கருட சன்னதியும்
அசையா விளக்கெரியும் அம்மனுட சன்னதியாம்
வெஞ்சா மரைவீச வேதியர்கள் பாடிவர
நெட்டுப் [4] பதின்காதம் [5] நெருக்கமுள்ள பட்டணமாம்
[6] அஞ்சுநல்ல காதவழி அகலமுள்ள பட்டணமாம்      60

வெள்ளாளர் வீதிகளும் வெகுதூர மாயிருக்கும்
பிராமணர்கள் வீதி பதினா யிரந்தெருவாம்
கடையுங் கடைத்தெருவும் கன்னடியர் வீதிகளும்
அடிக்கடி சத்திரமும் அன்னமிடும் வீதிகளும்
காசியில் தலைமூழ்கிக் கருமங்கள் தீர்ப்பாரும்      65

தீர்த்தங்க ளாடித் திதிகள் கொடுப்பாரும்
ஆறு குளமும் அசையாத் திருமதிலும்
பட்டணத்தைச் சுற்றிப் பாங்காக நெல்விதைத்து
நெல்லறுத்துக் கட்டி நிரைபிடித்து வருவாரும்
ஆனை அடிமறையும் அடிராசி நெற்காணும் 70

கட்டுக் கலங்காணும் கதிர்உழக்கு நெல்காணும்
அஞ்சுக்கு ரெண்டு அரண்மனைக்கே ஈவாரும்
வாரமிடுவாரும் வயல்கணக்குப் பார்பாரும்
காசி நதிமூழ்கிக் காவடிகள் கட்டுவாரும்
மாதா பிதாவுக்கு வந்துதிதி கொடுப்பாரும்      75

அப்படிக்குத் தானும் ஆனதொரு பட்டணமாம்
பட்டணத்தை ஆளும் பாரரசர் வம்மிஷமாம்
சூரிய குலத்துத் தோற்றமுள்ள ராசாவாம்
வச்சிர மணிபதித்த வகையான கிரீடமாம்
ரத்தின மணிபதித்த நல்லதொரு கிரீடமாம்      80

ஒன்பது ரத்தினம் ஒளிவாகத் தான்பதித்துத்
தொல்லுலகை யாளும் துளசிமகா ராசாவும்
மகுடந் தரித்ததொரு மகராசர் வேந்தனுந்தான்
இப்படி உலகை இருந்தர சாளுகையில்

பிள்ளைப்பேறு வேண்டி அறம்பல செய்தல்

மைந்தனு மில்லாமல் மனக்கவலை யாயிருந்து      85
புத்திரனு மில்லாமல் போத மனஞ்சலித்து
பட்டத்துக் குப்பிள்ளை வேணுமென்று பார்வேந்தன்
மெத்த மனநொந்து வேந்தனு மப்போது
ஆயிரங் கோடிபசு அந்தணர்க்குத் தான்கொடுத்து
ஆயிரம் பிராமணருக் ஆகமுடித்து வைத்து      90

ஆயிரம் அந்தணர்க்கு அநேகதர்மம் உண்டுபண்ணி
ஆயிரம் தெப்பக்குளம் அடவாக உண்டுபண்ணி
ஆயிரம் நந்தவனம் அடவாக உண்டுபண்ணி
விசுவநாத சுவாமிக்கு வெள்ளியால் வாகனங்கள்
புதிதாக உண்டுபண்ணிப் [7]பொன்முலாம் பூசிவைத்து 95

தெப்பக் குளத்தருகே திருந்தவனம் உண்டுபண்ணி
புஷ்ப மலரெடுத்துப் பூலோக தேவதைக்கு
சிந்தை மகிழ்ந்து சிவபூஜை பண்ணுவார்கள்
இந்தவிதத் தருமங்கள் இதமாகச் செய்த பின்பும்

பிள்ளைவரம் கொடுத்தல்

மெத்தத் தரிசித்து வேந்தமகா ராசனுக்குப்      100
பரமசிவன் பார்வதியும் பரிந்து தயவாகிச்
[8] சந்தான மயக்கந் தான் தீர்க்க வேணுமென்று
காசிநகர் வேந்தனுக்குக் கண்மணியுந் தான்கொடுத்தார்
ஆன்மபுத்தி ரந்தானும் அடவாகத் தான்கொடுத்தார்
புத்திரனு முன்டானாள் பொற்கொடியாள் தானுமப்போ      105

மதுரைவீரன் பிறப்பு

பத்துமா தம்சுமந்து பாலகனைப் பெற்றெடுத்தாள்
ஆயிரங்கோடி அழகுள்ள சூரியன் போல்
பாலகனும் தான்பிறந்தான் பார்மீதி லிப்போது
மதுரா புரித்துரையும் வந்து பிறந்தான் காண்
வந்து பிறந்தவனும் [9]மலரிட்டுத் தான்பிறந்தான் 110

கொடி சுற்றித் தானும் குடிகெடவே தான்பிறந்தான்
சத்திராதி முண்டன் [10] தனஞ்சியனும் தான்பிறந்தான்
பெண்கள் மயங்கவந்த புண்ணியனு மேபிறந்தான்
தேசத்தா ரெல்லோரும் தென்மதுரை யென்றுசொல்லிக்
கொண்டாடிப் பூசைகொள்ளப் பிறந்தான் குழந்தையுமே 115
------
[1]. அவிதி என்றுள்ளது (அவதி - துன்பம்)
[2]. மண்டையோடு
[3]. அபரஞ்சி - புடமிட்ட பொன் [4]. நூறுனாமல் தூரம் (பத்துக்காதம்
[5]. நெடுகமுள்ள என்றுள்ளது [6]. அன்பதின் ஏன்றுள்ளது
[7]. முலாம்- பொன் வெள்ளிப் பூச்சு [8].சந்தானம்-மரபு, சந்ததி
[9].மலரிட்டு மாலை சுற்றி [10]. அர்ச்சுனன் போல். சிறந்தவன்
---------

பிறந்தவுடன் பூரித்தான் வேந்தனுந்தா னப்போது
அப்போது ராசன் அழையுமென்றார் வேதியரை
மந்திரியு மப்போ வரவழைத்தார் சோசியரை
சோசியரும் ஓடிவந்து துரைராசர் வேந்தனைத்தான்
ஆசீர் வாதமென்று அச்சதையுந் தான்கொடுத்தார்      120

கூடவே கைதொழுதார் குணமுள்ள ராசாவும்
இருமய்யா வென்று யிட்டாரே ஆசனமும்
அப்போது சோசியரும் ஆசனத்தில் வந்திருந்து
அழைத்துவரச் சொன்னதென்ன ஆதிமக ராசாவே
வாருமய்யா சோசியரே மைந்தன் பிறந்தான்காண்      125

உலகமெல்லாம் ஆளுதற்கு ஒருவர் பிறந்தான்காண்
வெள்ளிக் கிழமை விடிந்து பத்து நாழிகைக்கு
பலாபலன்கள் பார்த்துப் பிரபலமாய்ச் சொல்லுமய்யா
என்றுசொல்லத் தானும் இன்பமுடன் சொன்னபின்பு     130

பஞ்சாங்கந் தானவிழ்த்துப் பார்த்தாரே சோசியரும்
காசி பதியாளும் கர்த்தாவே சொல்லுகிறேன்
மைந்தனுங் குழந்தை மாலையிட்டுத் தான்பிறந்தான்
பாருமய்யா பாலகனைப் பதறாமல் காட்டச்சொல்லி
என்றுசொல்லிச் சோசியரும் இதமாகத் தானுரைத்தார்     135

ராசாவும் அப்போது நல்லதென்று தான்கேட்டுச்
சிங்களத்துத் தாதி செங்கமலத் தோழியரே!
பாலகனைத் தானெடுத்துப் பதறாமல் காட்டு மென்றார்
அப்படியே தாதி அழகான பாலகனை
எடுத்துவந்து காட்டினாள் இளங்கொடியாளப்போது      140

காசி பதிவேந்தன் கண்குளிரத் தான்பார்த்து
மைந்தன் கழுத்தில் மாலை யிருக்குதய்யா
இந்த விதிப்பயனோ ஈசுபரனார் தன்செயலோ
நம்மாலே யாவதென்ன நாரணரே யென்றுசொல்லிப்
பட்டரை நெல்லிலேதான் பதரைக் கலந்தேனோ      145

பிச்சைக்கு வந்தவரைப் பின்புவரச் சொன்னேனோ
பிள்ளைப்பால் வார்க்காப் பெரும்பாவி யானேனோ
என்னென்ன பாவங்கள் செய்தேனோ ஈசுபரனே
நம்மாலே யாவதென்ன நாரணரே யென்றுசொல்லி
இந்த நல்ல பாலகனை யென்னதான் செய்வமய்யா      150

கொன்றுயிரைப் பிரித்தால் கொலைகள்வந்து சுற்றுமய்யா
இந்தநல்ல பாவத்துக்கு என்னதான் செய்வமய்யா
சோசியருங் கேட்டுச் சொல்கிறார் அப்போது
அறிந்தமட்டுஞ் சொல்லுகிறேன் ஆதிமக ராசாவே
தெரிந்தமட்டுஞ் சொல்லுகிறேன் தெய்வச் சிகாமணியே 155

ஆயிரங் கோடிப்பொன் அடவா விலை மதிச்சு
தங்கத்தால் தாம்பாளம் தயவாக உண்டுபண்ணி
விலைமதிக்க வொண்ணாத விசித்திர தாம்பாளம்
தங்கத் தாம்பாளம் தயவுடனே கொண்டுவந்து
தாம்பாளந் தன்னில் தனஞ்சியனைத் தூக்கிவைத்து 160

ஆரணிய மானதொரு அருங்கான கந்தனிலே
தட்டோடே பாலகனைத் தானெடுத்துக் கொண்டுச்சென்று
வைத்துவர வேண்டுமென்று மாதவரும் சொல்லலுற்றார்
என்றுமே சோசியரும் எதமாகத் தான்உரைத்தார்
காசிநகர் வேந்தன் காதாலே தான்கேட்டு     165

ஐயோசிவ னேயென்று அடித்தான் வயிற்றிலேதான்
இதுக்கோ தவசிருந்தேன் யென்றுசொல்லி ராசாவும்
கன்னத்தில் அறைந்துகொண்டு கதறினார் இராசமன்னன்
அச்சத்தம் தான்கேட்டு அவனைப்பெற்ற மாதாவும்
ஐயோ சிவனே ஆதிநா ராயணரே      170

இந்த விதிக்கோ என்வயிற்றில் தானடைத்தீர்
அஞ்சு சிரசுள்ள ஆதிவிர்ம தேவர்நீ
பத்துமாதஞ் சுமந்துபெற்ற பாலகனைப் பறிகொடுக்க
எழுதினியோ பிர்மாவே என்தலையில் நீர்தானும்
நல்லதய்யா வென்று நளினமுள்ள எம்பெருமாள்      175

உயிரோடு பாலகனை ஒப்புக் கொடுப்பேனோ
என்றுசொல்லித் தோகையளும் ஏற்றமுடன் தானழுதாள்
பட்டத்துப் பிள்ளை பயணமே போகுதென்று
பட்டணத்துச் ஜனங்களெல்லாம் பதறி யழுகலுற்றார்
தட்டோட பாலகனைத் தான்கொடுத்தாள் தாதிகையில்      180

கோவென்ற சத்தம் கூக்குரலுந் தானாச்சு
எல்லோருங் கூடி அழுதார்கள் பட்டணத்தில்
பட்டணத்தி லுள்ள[11] பரிசனங்க ளெல்லோரும்
வேந்தன் குறையாத்தி விசாரந் தனைமாற்றிக்
காரியப்பே ரெல்லோரும் [12] கைமுகிஞ்சு நின்றார்கள்      185

வேந்தன் மகராசன் வேதியரைத் தானழைத்துக்
கொண்டுபோ வென்றுசொல்லிக் கோதையர்க்கு விடைகொடுத்தார்.
ஆமென்று சொன்னார்கள் அய்யமார் சோசியரும்
செங்கமலத் தாதியைத்தான் சீக்கிரமாய் வரவழைத்துப்
பாலகனைத் தானெடுத்துப் பயணம்வரச் சொன்னாரே 190

மதுரைவீரனை காட்டில் கொண்டுவிடுதல்

தட்டோடப் பாலகனைத் தானெடுத்துத் தாதியவள்
எடுத்துவந்து பாலகனை எதிராக நின்றாளாம்
பார்வேந்தன் அப்போது பல்லக்கு வரவழைத்துத்
தட்டோட பாலகனைத் தான்வாங்கி அப்போது

பல்லக்கு மேல்வைத்துப் பரிசனங்க ளத்தனையும் 195
ஆனைமேல் பேரிகை அதிர முழங்கிவர
குதிரை மேல் டங்கா கூடமுழங்கிவர
தம்பட்ட மேளம் தவில்முரசு தான்முழங்க
புல்லாங் குழலூத, பேரிகை கொட்டிவர
நாட்டியங்க ளாடிவர நகரிசின்ன மூதிவர      200

ஆடலும் பாடலும் அதிசயமாய்க் கூத்துக்களும்
கூட்டத் துடனே கொண்டுபோய்க் கானகத்தில்
வைத்துவரச் சொன்னார் மகராசர் வேந்தனுந்தான்
ஆட்டமும் பாட்டமும் அதிர்வேட்டுச் சத்தமுமாய்க்
கொண்டுபோய்க் கானகத்தில் குழந்தையை வைத்துவந்தார்      205

அந்தமட் டோடே அமர்ந்தார்கள் பட்டணத்தில்
பாலகனும் போய்ப் பார வனந்தனிலே
மாமரத்தின் கீழிருந்து மைந்தன் குழந்தையது
ஆங்காரச் சத்தமிட்டு அழுதான்கா ணம்மானை

மதுரைவீரனை நாகம் காப்பாற்றுதல்

கானகத்தில் குடியிருக்கும் கயிலங்கிரி நாகமது 210

ஆயிரம் சூரியன்போல் அழகுள்ள நாகமது
பாலகன் கிட்டவந்து பரிவான நாகமது
ஈரம் துடைத்து இளவெயில் தான்மறைத்து
அழுகை தனைநிறுத்தி அழகுள்ள நாகமது
ஐந்துதலை நாகம் அருகிருந்து குடைபிடிக்க      215

முகத்தில் வெயில் மறைத்து மூர்க்கமுள்ள நாகமது
இப்படி வைத்து இருக்குமந்த வேளையிலே
மாதிகச் சின்னான் வகையான சக்கிலியன்
பாளையப் பட்டான் பரிவான தொட்டியனாம்
பொம்மண னாயக்கன்னென்று புகழ்பெரிய தொட்டியனாம்      220

பாதரட்சை கட்டும் [13]பரிவான மாதியனாம்
மாதிகன் கொண்டதொரு மயிலிணையாள் சக்கிலிச்சி
வாருகள் சென்மங்கள் வகையாக [14] ஊறக்கட்ட
ஆவாரம் பட்டைவெட்ட அவள்தானும் சக்கிலிச்சி
வனத்துக்கு வந்து வகையாகப் பட்டைவெட்டிப்      225

பட்டை யெடுத்துப் பயணம் வருகையிலே
பாலகன் தானிருக்கும் பாரவனம் தான்நோக்கி
வருகிறபோது [15] மஞ்சன் அழுத சத்தம்
காதினால் கேட்டுக் கன்னியரு மப்போது
காதிலே ஓலையிட்டுக் கழுத்திலே சரமணிந்து      230

ஒருபடி பணம்பெற்ற ஒசத்தியுள்ள சேலைகட்டி
அசைந்து நடந்து அந்தவனத்தில் வந்தாள்

சக்கிலிச்சி குழந்தையைக் காணுதல்

மாமரத்தின் கீழிருந்த மைந்தன் அழுகலுற்றான்
ஆயிரம் சூரியன்போல் அழகுள்ள பாலகனைக்
கண்டு மனமகிழ்ந்து காரிழையு மப்போது
பிள்ளைக்கலி தீர்க்கவந்த பெருமாளே யென்றுசொல்லி     235

வாரி எடுத்து மார்போடே தானணைத்துப்
பைங்கிளியாள் தன்னுடம்பு பச்சைநிற மானதுவே
பாரத் தனங்கள்ரெண்டும் பாலாய்ச் சொரிந்தனவே
பாலகனு முலைகுடித்து பசியாறி ஏப்பமிட்டு     240

கோதை மயிலாளும் குளிர்ந்து முகமலர்ந்து
பாலகனை மடியில்கட்டிப் பட்டையுந் தானெடுத்து
வேர்த்து விறுவிறுத்து வீட்டுக்கு வந்தாளாம்
சக்கிலியன் தானும் தடியெடுத்துக் கோபங்கொண்டு
இந்நேரம் கானகத்தில் யென்செய்தாய் என்றுசொல்லி 245

என்றுசொல்லி சக்கிலியன் எடுத்தான் பெருந்தடியைப்
பைங்கிளியு மப்போது பதறாதே என்கணவா
கோபத்தை நீயடக்கு குணமுள்ள பர்த்தாவே
மைந்தனு மில்லாமல் மனக்கவலை பட்டோமே
ஆண்பிள்ளை யில்லாமல் அருந்தவசு தாமிருந்தோம் 250

மைந்தன் கவலை மனக்கவலை தீர்ந்ததிப்போ
பிள்ளைக் கவலை பெருங்கவலை தீர்ந்ததிப்போ

மதுரைவீரன் சக்கிலிச்சி வீட்டில் வளருதல்

இந்தாரும் பிள்ளையென்று ஏந்தியுழையுந் தான்கொடுத்தாள்
தட்டோடே பாலகனைச் சக்கிலியன் கைகொடுத்தாள்
ஏந்தி யிருக்கையிலே எடுத்தானே சின்னானும்     255

இன்பங் குளிர்ந்தே இருபுசமும் பூரித்து
மனமுங் குளிர்ந்து மாதிகச் சின்னானும்
மாணிக்கத் தொட்டி வச்சிர மணிபதித்து
பச்சைவை டூரியத்தால் பாங்கா வளைபோட்டுத்
தங்கக் கயிறுபின்னி சங்கிலிக ளுண்டுபண்ணி     260

நாலுபக்கம் சங்கிலியில் நலமா மிகப்பூட்டித்
தொட்டிலும் சேர்த்துப் துயிலாடை மேல்போட்டுத்
பாலகனைத் தானெடுத்து பதிவான தொட்டிலிட்டாள்
கண்மணியைத் தானெடுத்துக் காரிழையாள் சக்கிலிச்சி
தாலாட்டி முலைகொடுத்துத் தனஞ்சயனுக் கப்போது      265

எண்ணெய் தலையிலிட்டு இளவெந்நீர் தான்வார்த்து
தீர்க்கமுள்ள நெற்றியிலே திருநீறு தானுமிட்டு
நேரான நெற்றியிலே நிலக்காப்புப் பொட்டுமிட்டு
நீலவிழிக் கண்களுக்கு நீதியுடன் மையெழுதி
சாதிலே [16]மத்திக்காய்கனமாகத் தொங்கவிட்டாள்      270

பச்சைமணி யக்குமணி பவளத்தால் [17] தாவடங்கள்
காலில் சிலம்பணிந்து கையில் வெள்ளிக் காப்புமிட்டு
நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாய்
சக்கிலியன் வீட்டில் தனஞ்செயனும் தான்வளர்ந்தான்
வீரப்பன் என்றுசொல்லி விதமாகப் பேருமிட்டுப்      275

பெற்ற தகப்பனைப்போல் பிரபலமாய்த் தான்வார்த்தான்
பத்துவய தாகிப் பதினோராம் தன்வயதில்
[18]கன்னப் பரிசாகக் கழுத்தடியில் தேமலுமாய்
பேரான தன்சிரசில் புன்னைக்காய் நெத்துபோல்
ஆடும் புருவம்ரெண்டும் அம்மானை கண்மலர்போல் 280

கூடும் புருவம் ரெண்டும் கொன்னைக்காய் நெத்ததுபோல்
மூன்றாம் பிறைபோலே மூக்குத் திருவழகும்
நாலாம் பிறைபோலே நாக்குத் திருவழகும்
வஞ்சிக் கொடிபோலே மகராசன் தன்னிடையும்
ஆலிலை போலே அமர்ந்த திருவயிறும்     285

கடஞ்சமரக் காலதுபோல் கணுக்கால் திருவழகும்
பச்சைவை டூரியம்போல் பல்லுத் திருவழகும்
சந்திர [19] காவிப்பாகை தானணிந்தா ரப்போது
பச்சைக்கல் ஒண்டிமுத்து பாங்காய்க் கடுக்கனிட்டு
ஒண்டிமுத்துக் கடுக்கன் உலகேழுஞ் சோதிமின்ன      290

பச்சைக்கல் வச்சிரம் பதித்த முருகணிந்து
மோகன மாலை முத்தா பரணமின்ன
வச்சிரத்தால் பதக்கம் மார்பில் நிழலாடக்
கண்டசுரம் பொன்னுருட்டுக் கனத்த சரமணிந்து
மார்பில் பதக்கம் வகையுடனே தானணிந்து      295

முன்னங்கை மூதாறி முருக்குவளை பொன்னேனாலை
பச்சைக் கடகம் பத்துலட்சம் பொன்பெறுமாம்
கல்பதித்த மோதிரமுங் கணையாழி தானணிந்து
எட்டு விரலுக்கும் இழைத்தகல் கணையாழி
பத்து விரலுக்கும் பசும்பொன் கணையாழி      300

எண்ணெய்க் கம்பிச்சோமன் இடுப்பில் வரிந்துகட்டிப்
பட்டுக்கம்பிச் சோமன் பாங்காய் வரிந்துகட்டிப்
பாங்கான இடுப்பில் பட்டுக்கச்சை தொங்கலிட்டுப்

பட்டை [20]அரனா பாங்குடனே தானணிந்து
இடதுபுறத் தொங்கலிலே ஏமனுட அட்சரமாம்      305

வலதுபுறத் தொங்கலிலே வடமலையான் அச்சரமாம்
பார்வதியாள் கடாச்சம் பரிவாக யுண்டாகிக்
காலில் மிஞ்சி கனமான வீரதண்டை
பாத சிலம்பு பரிவான பொற்சதங்கை
பஞ்சவர்ணப் பாவாடை பாங்கான சாலுவையும்      310

பட்டுக் கரைச்சோமன் பாங்கான [21] வல்லவட்டம்
முன்கையில் சந்தனமாம் முறுக்கிவிட்ட மீசைகளாம்
தொட்ட மிதியடியும் சுண்டு வில்லுங் கைப்பிடித்து
சொல்லுகளும் கேளான் துள்ளுகுட்டி வீரையனும்
---------
[11]. பரிசனம் - உறவு, ஏவல்செய்வோர். சூழ்வோர்
[12]. கைம் முகிழ்த்தல் - வணக்கம் தெரிவிக்கும் வகையில் கையைக் கூப்புதல்
[13]. பதிவான என்றுள்ளது
[14]. தோலைப்பதனிட ஊறவைத்தல் [15]. மஞ்சன் மனிதன்
[16].மத்திக்காய் - ஒரு காதணி      [17]. தாவடம் கழுத்தணிமாலை
[18]. கண்ணப் பருசையின் மா என்றுள்ளது.
[19]. காந்திப்பாகு' என்றுள்ளது
[20]. அரைஞா (நா)ண் - இடுப்பில் கட்டும் கயிறு, வெள்ளிக்கயிறு
[21]. வில்லவட்டம்
-------------

மதுரைவீரன் பராக்கிரமம்

யாரையு மெண்ணான் அடங்காத வீரையனும்      315

எதிர்த்தவரை வீரையனும் இருபிளவு செய்திடுவார்
கண்டமுனி ராச்சதர்கள் கைகட்டி யஞ்சிநிற்கும்
காளி கதவடைக்கும் கண்டமுனி தெண்டனிடும்
மாதிகன் சொல் கேளாமல் வனங்களிலே போயிவன்
வேட்டைக ளாடுறதும் வேங்கைபுலி குத்துறதும்      320

கரடி புலிசிங்கம் காட்டானை குத்துறதும்
வேஷங்கள் மாறி வீட்டுக்கு வாரதுவும்
சாப்பிட் டிளைப்பாறித் தான்படுத்துத் தூங்குறதும்
இப்படித் தானும் இருக்குமந்த வேளையிலே
வேட்டைக ளாடவென்று விளையாடி வீதிவந்து      325

காட்டைக் கலைத்து கடிநாய் முன்னேவிட்டு
வேட்டைக ளாடுறதும் வேங்கைபுலி குத்துறதும்
கரடி புலிசிங்கம் காட்டானை யுள்ளதெல்லாம்
கடவாய் தனைப்பிடித்துச் சிலுவாயைக் கிழிக்கிறதும்
[22]அண்டரண்டப்பட்சிகளை அதட்டிப் பிடிக்கிறதும்      330

வேட்டைக ளாடி விருதுபெற்று வாரதுவும்
பன்றிகளைக் குத்திப் பதையாமல் வருகிறதும்
வீட்டுக்கு வந்து விளையாடித் திரிகிறதும்
இப்படிக்குத் தானும் இருக்குமந்த வேளையிலே

பொம்மியம்மாள் ருதுவானவிடத்தில் மதுரைவீரன் காவலிருத்தல்

பட்டணத்தை யாளும் பரிவான தொட்டியன்தான் 335

பொம்மண்ணா யக்கன்மகள் பொம்மியருந் தானுமப்போது
பத்து வயதாகிப் பனிரெண்டாந தன்வயதில்
[23] புத்தி யறிந்தவுடன் பொம்மணுந்தா னப்போது
ஊருக்கு மேற்கே [24] ஒருநாழி வழிதனிலே
பச்சைக் குடிசைகட்டிப் பாங்கா யலங்கரித்து      340

பொம்மியம் மாளைப் பொங்கமுடன் கூட்டிவந்து
மாதிகச் சின்னானை வரவழைத்து அந்நேரம்
பைங்கிளியைத் தானும் பத்திரமாய்க் காருமென்றார்
அல்லும் பகலும் அறுபது நாழிகையும்
பட்சிப் பறவாமல் பகல்மோசம் வாராமல்

காகம் பறவாமல் கருங்குருவி நாடாமல்
முப்பது நாளும் முழிப்பாகத் தானிருந்து
காருமடா வென்று கட்டளையு மிட்டாராம்
நல்லதய்யா வென்று நளினமுள்ள மாதியனும்
மாதிகச் சின்னானும் மாளிகைக்கு தான்வந்து      350

குச்சுவுரு மாலைகட்டிக் கூசாமல் மாதியனும்
கச்சை வரிந்துகட்டிக் கருங்கச்சைச் சுங்குவிட்டு
தொட்ட மிதியடியும் சுண்டுவில்லும் கைப்பிடித்து
அம்புவில்லுங் கைப்பிடித்து ஆயுதமுந் தானெடுத்து
வாணாத் தடியும் வளைதடியும் சக்கரமும்      355

பொம்மியம்மாள் காவலுக்குப் போறானே மாதியனும்
தொட்டியப்பெண் காவலுக்குத் துருசாகப் போறானாம்
மாதியனும் தானும் வந்தனம்மா காவலுக்கு
பத்திரமாய்க் காருமென்று பைங்கிளியும் போய்ப் படுத்தாள்
இப்படிக்குத் தானும் ஏந்திழையைக் காக்கயிலே      360

ஒருநாள் பொழுதில் உலகமெல்லாம் இடியிடித்து
வருண பகவானும் வந்து கவிஞ்சானாம்
ஈரேழ் உலகமெங்கும் இருட்டுவந்து தான்கவிய
வயதுசென்ற மாதியனும் மனதுநொந்து மெய்கலங்கி
இந்த இருட்டில் என்னமாய்ப் போவமென்று      365

மனதிலே எண்ணி மகனோடே சொல்லலுற்றான்
அப்போது வீரையனும் அடவாக யேதுசொல்வான்
பெற்றபிள்ளை நானிருக்கப் பெரியவர்தான் போகலாமோ
இந்தமழைக் காலிருட்டில் எப்படி நீ போவீரய்யா
மங்கையுட காவலுக்கு மைந்தன்நான் போய்வாறேன் 370

என்றுசொல்லி வீரையனும் இன்பங்குளிர்ந்தன் னேரம்
வீராதிவீரன் வேகமுடன் தானெழுந்து
சத்தோசப் பட்டுச் சாமிதுரை வீரையனும்
மங்கையுட காவலுக்கு மாதியனே போய்வாறேன்.
[25]சலக்கப் புரையில் தான்வந்து நின்றுகொண்டு      375

சம்பங்கி எண்ணெய்கொண்டு தலைமுழுகி
மயிராத்தி கோதி மயிரைக் குளிரச் சினுக்கறுத்து
செங்கமலக் கையாலே சீக்கிரமாய்த் தான்முடித்துச்
சீரான நெத்தியிலே சிவசிவா வென்றுசொல்லி
அணிந்தான்காண் வெண்ணீறும் ஆணிமுத்து வீரையனும்     380

சந்தனமுங் கஸ்தூரி தானணிந்தான் வீரையனும்
ஒசத்தியுள்ள புனுகெடுத்து உல்லாசமாய்த் தானணிந்து
அல்லித் துறைக்கதம்பம் ஆண்டியப்பன் கெந்தப்பொடி
கெந்தப்பொடி கஸ்தூரி கீறினான் தன்மார்பில்
திருணவல்லிச் சோமன் திட்டமுடன் தானுடுத்தி      385

பஞ்சவர்ணப் பாவாடை பாங்காய்த் தலையில் கட்டிக்
காதில் கடுக்கனிட்டுக் கழுத்தில் சரமணிந்து
பச்சைக்கல் மேல்முருகு பாங்காகத் தானணிந்து
மாணிக்கப் பதக்கம் மார்பிலே தானணிந்து
கல்கட்டு மோதிரம் கணையாழி தானணிந்து      390

பட்டுக்கச்சை ஒட்டியாணம் பாங்காக வரிந்துகட்டி
வீரதண்டை ஓலமிட வெள்ளிச் சதங்கைமின்ன
ஆஸ்தான போசன் அதிவீர தென்மதுரை
மாயாவு தாரனைப்போல் மதுரையும்வேசங் கொண்டு
பொக்கிஷ மாளிகையில் [26]பூசணங்களுள்ளதெல்லாம்      395

எடுத்து மிகப்பூட்டி இன்பமுள்ள வீரையனும்
போசன மாளிகையில் போய்ப்புகுந்து வீரையனும்
கைக்கு நீர்வாங்கிக் கனிவாயுங் கொப்பளித்து
சாமிமுது வீரையர்க்குத் தங்கத்தாம் பாளம்வைத்து
மல்லிகைப்பூச் சம்பா வடித்ததொரு போசனமாம்       400

கொண்டுவந்து படைத்தாள் கோதையரு மப்போது
பொன்போல் பருப்புமிட்டுப் புத்துருக்கு நெய்வார்த்தாள்
வாழைக்காய்ப் பொறியல் [27] வழுதலங்காய் தான்பொறியல்
பச்சடி நூறுவகை [28] பால்குழம்பு தான்படைத்தாள்
கூட்டுக்கறியும் குழம்புவகை தான்படைத்தாள்      405

பால்வடைகள் தோசை பணியாரம் தான்படைத்தாள்
அந்தப் படியாக அமுதுண்ட பிற்பாடு
பால்சிண்ணி வைத்துப் பாங்கான தாயாரும்
அன்னம் படைத்து ஆவின்பால் தான்சொரிந்து
மாம்பழம் பலாச்சுளையும் மதுரைக்குத் தான்படைத்து       410

உண்டு பசியாறி உத்தமனார் பாலகனும்

தின்று பசியாறித் தென்மதுரை யேப்பமிட்டு
பன்னீர் முகந்து பைங்கிளியும் தான்கொடுத்தாள்
வாங்கியே தென்மதுரை வாய்கை சுத்திபண்ணி
அடைக்காயும் வெற்றிலையும் அன்பாகத் தான்வாங்கி       415

வாயிலே பாக்கு வலதுகையில் சுருள்பிடித்து
மாடறுக்குஞ் சூரி வலதுபக்கம் தான்சொருகிக்
கன்னறுக்குஞ் சூரி கையிலே தான்பிடித்துக்
[29]ட்டாரி நேருஷமு கையம்பு [30]சமுதாடு
வாணாத் தடியும் வளைதடியும் சக்கரமும்       420
---------
[22]. பெரும்பறவை, கழுகு      
[23]. பருவமடைந்தான் (முதுக்குறைதல் என இதனை இவ்வாக்கியம் இயம்பும்)
[24]. நாழிகை வழிதனிலே என்றுள்ளது
[25]. சலக்கப்புரை - குளிக்கும் அறை (சலக்கொப்பரை என்றுள்ளது)
[26].பூசணம் - அணிகலன் [27]. விழுதலங்காய் - கத்திரிக்காய்
[28]. பால்கறி போலும்
[29]. கட்டாரி - குறுவாள் அல்லது குத்துவாள் [30].சமுதாடு-ஓராயுதம்
---------

கையிலே வில்லும் கனத்த மிதியடியும்
வாகுதார் பெரியகத்தி வலதுபுறம் தோள்போட்டுக்
சுண்டு வில்லுந் தான்பிடித்துத் துருசாய் எழுந்திருந்து
எழுந்திருந்தான் தென்மதுரை எமலோகந் தத்தளிக்க
மாதிகச் சின்னான் வருகின்றா னன்னேரம்       425

பொம்மியம்மாள் காவலுக்குப் போய்வாறேன் எந்தனப்பா
என்று சொல்லிப்புறப்பட்டான் ஏத்தமுள்ள தென்மதுரை
மழைக்கால் இருட்டில் மதுரைக்கு வழி தெரியவில்லை
குறுக்கே மிதிச்சானாம் கொள்ளைகொண்ட வீரையனும்
மதுரை நடக்க மகாமலைகள் தத்தளிக்க       430

மானம் திறந்து மழைமாரி பொழியு தப்போ
மின்னல் வெளிச்சத்தில் மிதிச்சேறி போறானாம்

[அலங்காரத் தோப்பில் அச்ச]மாய் போய்ச்சேர்ந்தான்
பைங்கிளியாள் தன்குடிசு பக்கமே போய்ச்சேர்ந்தான்
மழையோ பொழியுது மாதியனைக் காணமென்று       435

என்றுசொல்லித் தானும் ஏந்திழையும் மனங்கலங்கிக்
குடிசு விட்டு வெளியில்வந்து கோதையருஞ் சொல்லலுற்றான்
தென்மதுரை நிற்கிறதைக் கண்டாளே தேன்மொழியாள்
நிற்கிறதைக் கண்டு நெடுநேரம் தான்பார்த்து
மாதியனு மல்ல மாத்தானாய்க் காண்கிறது       440

யாரடா நிற்கிறவன் அஞ்சாமல் சொல்லுமடா
ஆரென்று சொல்லி அஞ்சாதே மங்கையரே
சக்கிலியன் பெற்றெடுத்த தனஞ்சயனும் நான்தாண்டி
இருட்டென்று சொல்லி என்னை அனுப்பிவைத்தார்
மங்கையரே உன்காவலுக்கு வந்தனடி நான் தானும்       445

என்றுசொல்லித் தானும் எடுத்துரைத்தான் ஆண்டவனும்
நல்லதென்று சொல்லி நளினமுள்ள என்பெருமாள்
பையுங்கிளியும் தானும் படலெடுத்துச் சாத்தினளாம்
கட்டிலின் மேலிருந்து கன்னியரும் ஏதுசொல்வாள்
பத்திரமாய்த் தானும் படுத்திருடா வென்று சொன்னாள்       450

மதுரைவீரன் பொம்மியம்மாளைச் சேருதல்

பேடை மயிலேநீ! போய்படுத்தா யிப்போது
ஒண்டி ஒருவனுமாய் உட்காந் திருப்பேனோ
மங்கையரே நானும் மழையில் நனையிறது
ஆண்பாவம் பொல்லாது ஆரணங்கே இப்பஎன்னை
குடிசில் வரவழைத்தால் கோடிக் குற்றமுண்டு
மதுரையுட சொல்கேட்டு மங்கையரு மேதுசொல்வாள்       455

சக்கிலியப் பயலுக்கு தலைப்புழுவு ஆட்டுதோடா
பயலென்ற போதை பத்துதடி யென்தேகம்
எகத்தாளம் பேசி எடுத்துரைக்க வந்தாயோ
காவலுக்கு வந்தாயோ களவுசெய்ய வந்தாயோ       460

ஏதுக்குப் பீத்துகிறாய் எழுந்திருந்து போடாநீ
கூவென்று சத்தமிடக் கோடிப்படை வந்துவிடும்
உந்தனையும் வெட்டி உயிர்த்தூண்டி போட்டிடுவார்
தலையைவெட்டிப் போட்டாலும் சக்கிலியன் விடுவதில்லை
உந்தனையும் விட்டு என்னுயிரும் போவதில்லை       465

ஈரத்தில் நின்றால் எந்தனுக்குப் பொறுக்காது
தண்ணியிலே நின்றால் சன்னிவந்து மூடுமடி
எந்தனுடன் கூடினால் ஏற்ற பதமுண்டு
சந்தனமுங் கஸ்தூரி தான்பூசி வாழ்ந்திருப்பாய்
ஏதேது கேட்டாலும் எடுத்துவந்து நான்தருவேன்       470

பேடை மயிலன்னம் பொம்மியம்மாள் கேட்டிருந்து
எண்ணாது எண்ணி ஏங்கி முகம்வாடி
ஈசுபரனே என்தலையில் என்னமா எழுதிவிட்டீர்
கன்னி யழியாமல் கலியாணம் செய்யாமல்
சக்கிலியன் தானழிக்கத் தலையி லெழுதினியோ       475

என்றுசொல்லிக் கன்னியரும் ஏங்கி முகம்வாடி
முத்துப்போல் கண்ணீரை முகத்தோடே சோரவிட்டாள்
பவளம்போல் கண்ணீரைப் பக்கமே சோரவிட்டாள்
மாரளவு கண்ணீரைத் தாரைவிட்டு தானழுதாள்
அழுது முகம்வாடி அவளிருக்குந் தன்குடிசில்       480

மதுரை மகாமுனியும் மண்டியிட்டுத் தான்நுழைந்தான்
உள்ளே நூழைந்து உட்கார்ந்தான் அவள்மடியில்
மங்கையரைத் தானும் மாரோடு தானணைத்து
ஏந்திழையே யுந்தனுக்கு என்ன விசனமடி
என்று சொல்லித் தானும் ஏற்றமுள்ள ராசாவும்       485

துப்பட்டித் தோகையால் துடைத்தானே கண்ணீரை
மங்கையரு மப்போது மனங்குளிர்ந்து அந்நேரம்
தெளிந்து முகம்பார்த்துக் தேன்மொழியு மேது சொல்வாள்
ஏறிட்டுப் பார்த்தாளே எண்ணமற்ற காளையைத்தான்
கண்குளிரப்பார்த்துக் கன்னியரு மேதுசொல்வாள்       490

சக்கிலிய னென்று தட்டிமிக வார்த்தை சொன்னேன்
சக்கிலியன் தானுமல்ல தனஞ்சயனாய்க் காண்கிறது
முன்னழகும் பின்னழகும் மூவுலகில் கண்டதில்லை
மார்பழகைக் கண்டால் மங்கையர்கள் சேர்ந்திடுவார்
தோளழகைக் கண்டால் தொடருவாள் கோடிபெண்கள்       495

ஆபரணந் தன்னை யார்மதிக்கப் போறார்கள்
உருமாலைக் கட்டழகும் ருத்திராச்ச மார்பழகும்
கண்குளிரப் பார்த்துக் கன்னியரும் மெய்சோர்ந்து
மன்னவரும் அப்போது மங்கையரைத் தானெடுத்துச்
சந்தனமுங் கஸ்தூரி தானணிந்தான் மங்கையர்க்கு       500

மல்லிகைப்பூ செண்பகப்பூ வகைவகையாய்த் தான்முடித்து
புனுகு சவ்வாது பொங்கமுடன் தானணிந்தான்
தோளிலே தானிருக்கும் துப்பட்டி தனையெடுத்துத்
தோகையர்க்குத் தானுடுத்தித் துயிலாடை தான்களைந்து
எடுத்து உடுத்தினார் ஏந்திழைக்குத் தானுமப்போ       505

மங்கையருந் தானுமப்போ மணிமெத்தை மேல்சாய்ந்து
என்னை வலதழிக்க எத்தனைநாள் தவசிருந்தீர்
மாதேவர் என்னை மண்பிடித்துப் போடயிலே
மன்னாநீ எந்தனுக்கு வளர்ந்தீரோ பூமியிலே
இந்தப் பிழைப்புஉம்மை எவர்பிழைக்கச் சொன்னார்காண்       510

என்றுசொல்லித் தான்நகைத்தாள் ஏற்றமுள்ள மங்கையரும்
அடைக்காயும் வெற்றிலையும் அன்பாகத் தான்கொடுத்துப்
பாக்கிலைகள் தின்று பறந்துவிளை யாடியப்போ
மதுரைக்கு மோகம் வந்துவிளைந்த தப்போ
மங்கையரும் வீரையனும் மாணிக்கக் கட்டிலின்மேல்       515

கட்டி யணைத்துக் கனிவாய் முத்தமிட்டு
முகத்தோடு முகம்வைத்து முத்தமிட்டார் தென்மதுரை
சிரித்து விளையாடித் தேன்மொழியை முத்தமிட்டார்
அணைந்து விளையாடி ஆண்டவனு முத்தமிட்டார்
கந்தனுடன் வள்ளியம்மை கைகலந்த பாவனைபோல்       520

பார்வதியாள் தன்னுடனே பரமசிவன் சேர்ந்தாற்போல்
மதுரை மகாமுனியும் மங்கையுடன் தான்சேர்ந்து
அப்போது பொம்மியம்மாள் ஆரணங்கு மப்போது
கட்டிலையும் விட்டிறங்கிக் கன்னியரு மேதுசெய்வாள்
தென்மதுரை யைத்தானும் தெண்டனிட்டாள் மங்கையரும்       525

மாணிக்கக் கையாலே மங்கையரைத் தானெடுத்துக்
கட்டி யணைத்துக் காரணனாந் தென்மதுரை
ஏந்திழையைத் தானும் ஏறிட்டுத் தான்பார்த்துக்
கன்னியரே நீதான் காலில் விழுந்ததென்ன
என்று சொல்லிக் கேட்டான் ஏற்றமுள்ள தென்மதுரை       530

வாருங்கள் ராசாவே ஒரு வார்த்தை சொல்லக் கேளும்நீர்
மானிடவர் தானே மகாதேவர் நீர்தானா
இந்துலகில் ராசாவே இந்திரனார் தன்மகனோ
ஆருபெற்ற கண்மணியோ ஆண்டவரே சேதிசொல்லும்
மாதியன் வீட்டில் வந்தவகை சொல்லுமென்றாள்       535

தாய்தகப் பன்பேர் தனஞ்சயனே சொல்லுமென்றாள்

பொம்மியிடம் மதுரைவீரன் தன்வரலாறு கூறுதல்

அப்போது தென்மதுரை அன்பாய் எடுத்துரைப்பார்
கேளுமடி பெண்ணே கிருபையுடன் சொல்லுகிறேன்
கயிலாச நாதருட கடாச்சத்தி னாலே
காசிநதி ராசனுக்குக் கண்மணியாய் நான்பிறந்தேன்       540

மாலையிட்டுப் பிறந்தேன்னு வனத்திலே போட்டு விட்டார்
கானகத்தில் குடியிருக்கும் கயிலங்கிரி நாகமது
கண்காட்சி தந்து கனவெயிலைத் தான்மறைத்து
வனத்தில் குடியிருந்து மாதியன் வீட்டில்வந்தேன்
சக்கிலியன் வீட்டில் வளர்ந்தேன்டி தார்குழலே       545

வளந்தனடி நானும் மங்கையரே யுந்தனுக்கு
இந்தமட்டுஞ் சேதி இனியொன்றும் நானறியேன்
என்றுசொல்லித் தானும் எடுத்துரைத்தான் வீரையனும்
மங்கையருந் தானும் மகிழ்ச்சியுடன் தான்கேட்டுக்
கட்டிலின் மேலிருந்து கன்னியரு மேதுசொல்வாள்       550

பொழுது விடியுதுகாண் போய்ப்பிழையு மன்னவனே
நாளைக்குத் தானும் நாகரிகம் பேசிடலாம்
இந்தப் படியாக இருக்குமந்த வேளையிலே
கங்குல் விடிந்து கதிரோனும் வந்துதித்தார்
அப்போது வீரையனும் அன்பாய் எழுந்திருந்து
தேன்மொழியாள் குடிசைவிட்டுச் சீக்கிரமாய் வெளியில்வந்து       555

தெப்பக் குளத்தருகே சீக்கிரமாய் வந்துநின்று
பாளைகொண்டு பல்துலக்கி ஓலைகொண்டு நாவழித்து
கால்முகம் சுத்திபண்ணிக் கனிவாயைக் கொப்பளித்து
சிவசிவா வென்று திருநீறு தான்சாற்றி       560

அரகரா வென்று அயன்பூசை தான்முடித்து
உல்லாச நடைநடந்து உத்தமியாள் பாலகனும்
மாதியன் வீட்டுக்கு வாரானே தென்மதுரை
ஏகாந்த மாக ஈசுபரன்போல் வாரானே
மாதிய னோடிவந்து மைந்தனை எடுத்தணைத்துக்       565

கண்ணான கண்மணியே கற்பகமே வீரையனே
இந்நேரந் தானும் என்செய்தாய் கண்மணியே
மழையில் நனைந்து வெகுநேரந் தூங்கிவிட்டேன்
என்றுசொல்லி வீரையனும் எடுத்துரைத்தான் அப்போது
நல்லதென்று சொல்லி நளினமுள்ள மாதியனும்       570

மங்கையரே பெண்ணணங்கே மைந்தனுக்கு அன்னமிடு
அன்னடுமிடு வென்றுசொல்லி மாதியனும் ஏற்றமுள்ள
கன்னியர்க்கு வடித்ததொரு சாதம் பரிமாறி
உத்தமனார் வீரையருக்கு உறியில் தயிர்வார்த்து
வத்தல் வடகம் வகையுடனே தான்படைத்தாள்       575

உண்டு பசியாறி உத்தமனும் வீற்றிருந்தான்
கங்கு லிருண்டு கதிரோனும் போய்மறைந்தான்
இன்றைக்குக் காவலுக்கு ஏற்றமுள்ள வீரையனே
போய்வா மகனேயென்று போற்றி விடைகொடுத்தான்
நல்லதென்று சொல்லி நடந்தாரே அப்போது       580

மங்கைநல்லாள் பொம்மி மனையிலே போய்ப்புகுந்தார்
ஆதிசிவன் கர்த்தாவும் ஆனசபை தானறிய
மங்கிலியந் தான்தரிக்க மச்சினரே வாருமென்றாள்
வந்தனென்று தானகைத்து மங்கையரைத் தழுவலுற்றான்
சிரித்து விளையாடித் தேன்மொழியைத் தானணைந்தான் 585

தீராத ஆவலெல்லாம் தீர்ந்து தெளிந்தபின்பு      
மதுரை மகாமுனிமேல் மங்கையரும் ஆசைகொண்டாள்
வாருங்கள் மைத்துனரே! வார்த்தைசொல்லக் கேளூம்நீர்
முப்பது நாளும் முடிந்தது நாளையென்றாள்
நாளை குடிசு நலமாகத் தான் பிடுங்கி       590

மாளிகைக்குத் தானழைக்க வருவார்கள் எங்கய்யர்
உன்னைவிட்டு நான்பிரிய உத்தமனே யுருகுதுகாண்
இருவருங் கூடி இருந்து விளையாட
என்று விடியுமோ எத்தனைநாள் செல்லுமென்றாள்
நாளைக் கிழமைக்கு நலமுடனே சாத்திரங்கள்       595

சாத்திரத்து வேளைக்குச் சக்கிலியர் வாருமென்றாள்
வாறேன்டி சக்கிலிச்சி மத்தியான வேளைக்கு
மாதியனும் நானும் வருகிறோம் பெண்ணணங்கே
சாதம் படைக்கச் சதிராக வந்தாயேல்
மங்கையரே உன்முகத்தை மதுரையும் பார்ப்பனடி       600

என்னைப்போல் பெண் எவளொருத்தி யாகாதோ
நாளைப் பொழுதில் நலமாகப் பார்ப்பீர்காள்!
அதன்பிறகு என்னை யார்பார்க்கப் போறார்கள்
கோட்டைக் குறிக்காரர் கொத்தளத்துச் சேவுகரும்
பத்துதலை வாசலுக்கும் பத்துலட்சங் கோடிமன்னர்       605

தொட்டியற் காவல் துருசாயிருக்கு மென்றாள் உத்தமரே
உன்னை உள்ளேவிடப் போராறோ
என்று சொல்லிப் பொம்மி ஏங்கி முகம்வாடி
என்னைவிட்டு நீர்தானும் இருப்பீரோ பூமியிலே
மன்னவரே யும்மைவிட்டு மறந்தும் இருப்பேனோ       610

கண்ணிலே காணாமல் கலங்கியே தானழுதாள்
கண்ணீர் தனைத்துடைத்துக் காவலனு மேதுசொல்வாள்
உன்னையுங் கொண்டு ஊர்வெளி போவேண்டி
இருவரும் போய்ப்பிழைப்போம் எண்ணாதே மங்கையரே
தேறுதலைச் சொல்லித் தென்னனு தான்நடந்தான்      615

என்செய்வோ மென்று ஏங்கி முகம்வாடி
வீட்டுக்குப்போய் வீற்றிருந்தான் தென்மதுரை;
பொழுது விடிந்து பொம்மன ணாயக்கனும்
கொம்பு தாளத்துடனே குடுசுக்கு வந்தார்கள்
குடுசு பிடுங்கிக் கொள்ளிவைத் தப்போது       620

பொம்மியம்மாள் தன்னைப் பொங்கமுடன் நீராட்டி
நீராட்டி மயிர்கோதி நெத்திக்குப் பொட்டுமிட்டு
[31]கூறையுடுத்திக் கோலப் பணிபூண்டு
வாகு சுட்டிக்கட்டி மயிரால் பிறைமுடித்து
கொப்பிட்டு வாளியிட்டுக் கொந்தளப்பொன் னோலையிட்டு      625

நெத்திக்குத் திலகமிட்டு நீலவிழி மையெழுதிக்
கருங்குருவி வாலதுபோல் கடைக்கண் மையெழுதி
உள்கழுத்துக் காரை உசத்தியுள்ள கல்லழுத்தி
கட்டுவடம் பொன்னுருட்டு கழுத்தில் சரமணிந்து
மோகன மாலை முத்தா பரணமின்ன       630

மார்பில் பதக்கம் வகையுடனே தானணிந்து
முன்கை மூதாரி முருக்குவளை பொன்னோலை
கடகம் பவளமிட்டு கைவளையல் தானணிந்து
பத்து விரலுக்கும் பசும்பொன் கணையாழி
மேகவர்ணப் பட்டு விதமாகத் தானுடுத்தி       635

இடுப்பிலே ஒட்டியாணம் இதமாகத் தானணிந்து
காலாழி பீலி கனத்த சிலம்பணிந்து
[32] பாடகந் தண்டையிட்டுப் பாதச் சிலம்பணிந்து
மேகவர்ணப் பட்டை முக்காடு தான்போட்டு
மங்கையர்க்குத் தானும் மதுரையுந் தானப்போது 640

விலைமதிக்கப் போகாத மிதியடியுங் கட்டியப்போ
கொண்டுவந்து முன்போட்டான் குணமுள்ள மாதியனும்
மிதியடியைத் தொட்டாளே வேல்பொருதுங் கண்ணாளும்
மதுரையுட வேலையென்று மனங்குளிர்ந்தாள் பொம்மியரும்

பொம்மியம்மாள் பொம்மண்ன நாயக்கன் மாளிகை அடைதல்

தொட்டியச்சக்கிலியன் [33] துருசா உறுமிகொட்ட 645

தம்பட்ட மேளம் தவில்முரசு தான் முழங்க
எருததுமேல் தம்பட்டம் எட்டுத் திசையதிரப்
புல்லாங் குழலூதப் பேரிகையுந் தான்முழங்க
[34] நாக சுரமேளம் நாட்டியங்க ளாடிவர
மங்கையரும் பொம்மியம்மாள் வந்துவிட்டாள் மாளிகைக்கு      650

தொட்டியப் படைகளெல்லாம் தொடர்ந்து மிகநடக்கப்
பதினெட்டு மேளம் பாங்குடனே தான்முழங்க
அதிர்வேட்டு இடிவாணம் அதிர்ந்து முழங்கிவர

வாராளே பொம்மியம்மாள் வர்ணமணி மாளிகைக்கு
ஆலாத்தி சோடித்தார் அஞ்சுலட்சம் தாதியர்கள்       655

தாரைச் சின்னமூத தவிலோசை தான்முழங்க
மங்கையரும் பொம்மியம்மாள் வந்துவிட்டா ளரமனைக்குப்
பொம்மியரைக் கூட்டிவந்து பொறுமையுடன் தாதியர்கள்
முத்தினால் ஆலாத்தி முன்பாகச் சுற்றிவந்தார்
பவளத்தால் ஆலாத்தி பக்கமே சுற்றிவந்தார்       660

மாணிக்க ஆலாத்தி வகையுடனே சுற்றிவந்தார்
பட்டுச் சுழற்றிப் பாங்குடனே விட்டெறிந்தார்
கட்டியங்கள் கூற கவரி பரிமாற
மங்கைநல்லாள் தானும் மாளிகையி னுட்புகுந்து
அந்த சணமே ஆனதொரு பொம்மணனும்       665

தையல்நல்லாள் பொம்மிக்குச் சாத்திரங்கள் செய்யவென்று
சந்தனக்கால் வெட்டிச் சதிரமுகக் கால்நாட்டிப்
பத்திரை மாத்துப் பசும்பொன்னால் வளைபரப்பி
வச்சிரத்தூண் வகையுடனே தான்சேர்த்துச்
செண்பகப் பூவரும்பால் திறமாகத் தான்மேய்ந்து       670

மெல்லியலாள் தானிருக்க மேற்கட்டுத் தூக்கமிட்டு
மல்லிகையும் செண்பகமும் வகையாகப் பந்தலிட்டுப்
பச்சைக்கிளியும் பசுங்கிளியும் தானெழுதித்
தூணுக்குத் தூண் தூண்டா விளக்கெரிய
குத்து விளக்கெரிய கோதையர்கள் பாடிவர       675

தூணுக்குத்தூண் தூங்கா விளக்கெரிய
அகலமுள்ள பந்தலிலே அசையா விளக்கெரிய
நாத சுரமேளம் நாட்டியங்க ளாடிவரத்
தம்பட்ட மேளம் தவில்முரசு தான்முழங்க
எக்காள மூத இடிவர்ணம் கைவிருது       680

பட்டண மெல்லாம் பாரிமுழக்க மிட்டார்
ஊரிலுள்ள தொட்டியரும் உறமுறையா ரெல்லோரும்
பாளையப் பட்டிலுள்ள பரிசனங்க ளத்தினையும்
துரைகள் துரைமக்கள் துரைராச மன்னர்களும்
மாணிக்கப் பந்தலிலே வந்து நிறைந்தார்கள்      685

மங்கைநல்லாள் பொம்மியையும் வகையுடனே அலங்கரித்து
மாணிக்க மணவறையில் மங்கையரைக் கூட்டிவந்து
வச்சிரத்தால் நாற்காலி வகையுடனே தான்போட்டுப்
பொம்மியரைக் கொண்டுவந்து பொங்கமுடன் தானிறுத்தி
சாத்திரங்களெல்லாம் சதிராக வேமுடித்து 690

வேதங்க ளெல்லாம் முடிந்தது காணம்மானை
அன்னக் கிளியாளும் அரண்மனையிலுட்புகுந்தாள்
சந்தனமுங் கஸ்தூரி தானணிந்தா ரெல்லோரும்
பரிசனங்க ளெல்லோர்க்கும் பாக்கிலைகள் தான் கொடுத்தார்

விருந்திடல்

விருந்து சமைத்தார்கள் விதமான தொட்டியர்க்கு 695

ஆயிரக் கலச்சம்பா அரிசி வடித்தார்கள்
பதின் கலப்பருப்பு பாங்காய்ச் சமைத்தார்கள்
வாழைக்காய்ப் பொரியல் [35]வழுதலங்காய் பச்சடியும்
பச்சடியும் நூறுவகை பால்குழம்பு தான்சமைத்தார்
ஆட்டுக் கிடாயில் ஐநூறு தான்சமைத்தார்      700

கூவு நல்ல சாவல் கோழிசமைத்தார்கள்      
வகையாய்ச் சமைத்தார்கள் மன்ன னுறமுறைக்கு
ஊள்ளூரில் தொட்டியனும் ஊர்சனங்க ளுக்கெல்லாம்
அகலமுள்ள பந்தலிலே ஆயிரம் பந்திவைத்து
பந்தி யமர்த்திப் பரிவாரம் தொட்டியரும்       705

உறமுறையா ரெல்லோரும் உண்டு பசியாறித்
தின்று பசியாறிச் சீக்கிரமா யெல்லாரும்
சந்தனமும் பாக்கும் தயவாக வேகொடுத்தார்.
சாப்பிட் டிளைப்பாறித் தானிருக்கும் வேளையிலே
மாதாரிச் சின்னானும் வண்டத்துரை வீரையனும்       710

சாதங்கள் வாங்கவென்று தான்வந்தா ரப்போது
மாதாரி முன்போக வண்டத்துரை பின்நடக்க
மாதியனும் வீரையனும் வந்தா ரரமனைக்குப்
பானையும் கொண்டுவந்து பதிவான சக்கிலியன்
இவரிரெண்டு பேரும் இதமாக நிற்கிறதைப்      715

பொம்மண நாயக்கன் பொறுமையுடன் தான்பார்த்து
யாரடி தாதி அன்னம் படையுமென்றார்
படையுமென்ற சத்தம் பைங்கிளியும் தான்கேட்டு
யாரென்று சொல்லி அலறி எழுந்திருந்தாள்
தாதி எழுந்து சக்கிலியன் என்று சொன்னாள்      720

சாதமுங் கறியும் தட்டில் பரிமாறி
தாதியர் முன்நடக்கத் தையலும் கூடவந்தாள்
மாதியர்க்கு பொம்மியம்மாள் வாரியமு திட்டாளாம்.

மதுரை நல்ல வீரையனை மங்கையரும் தான்பார்த்துக்
கண்ணாலே பார்த்துக் கலங்கினாள் பொம்மியரும் 725

ஏறிட்டுப் பார்த்து எண்ணமற்ற காளையரும்
கடைக்கண்ணால் மிரட்டி கார்மேகச் சாடைபண்ணி
மங்கையரும் நல்லதென்று மாளிகையி னுட்புகுந்தான்
அந்தச் சணமே அரண்மனையை விட்டவளும்
மாதியனும் வீரையனும் வந்துவிட்டார் மாளிகைக்கு       730

சாப்பிட் டிளைப்பாறிச் சாமிமுத்து வீரையனும்
பாக்கி லகள் தின்று பசியாறி யிருக்கையிலே
கன்னியரெல் லாங்களிக்கக் கர்ளைமுத்து வீரையனும்
மட்டற்ற காளை மதுரை மகரமுனியும்
ஏந்திழையைக் கொண்டுசெல்ல எண்ணி நினைத்தான்காண்      735

நினைந்துமங்கே வீரையனும் நேசமுடன் எழுந்திருந்து
மைந்தனென்று தான்வளர்த்த மாதியர்க்குச் சொல்லாமல்
பிள்ளையென்று தான்வளர்த்த பேதையர்க்குச் சொல்லாமல்
மன்னர்துரை வீரையனாம் மதுரை மகர்முனியும்
பதினைந்து நாழிகையில் பள்ளியறை விட்டுமெல்ல       740

சருவர் பரணமெல்லாந் தானெடுத்து மேல்பூட்டி
வண்டத் துலுக்கனைப்போல் வடிவுள்ள பாகைகட்டி
மாதளம்பூச் [36] சல்லடம் வகையுடனே தொட்டான்காண்
குத்து [37] நிசாரு தொட்டுக் குலுங்கப் பணிபூண்டு
துத்திப்பூ அங்கிதொட்டு துருசாக வீரையனும்       745
---------
[31]. கூறை -புதுப்புடவை [32]. பாடகம் - காலணியிலொன்று
[33]. துகுசு விரைவு [34]. நாகசறமேளம் என்றுள்ளது
[35]. வழுதலை - கத்தரி [36]. சல்லடம் - குறுங்காற்சட்டை
[37]. நிசார் - நீண்ட காற்சட்டை
-------

நடுக்கட்டுக் கச்சை நலமாகத் தான்கட்டி
இடையில் சமுதாடு ஏற்றமுடன் தான்சொருகிப்
பீரங்கிக் கத்தி பெரியகத்தி தோள்போட்டு
மாடறுக்குஞ் சூரி வலதுபுறந் தான்சொருகி
கன்னறுக்குஞ் சூரி கையிலே தானெடுத்துக்       750

கையம்பு நெஞ்சமுங் கட்டிகனந் தானெடுத்து
காலிலே வில்லை கனக்க மிதியடியும்
மாளிகையை விட்டு வாரான்காண் தென்மதுரை
வாரானே ஆண்டவனும் மாமலைகள் தத்தளிக்க
பூமி யதிரப் பூலோகம் தான்நடுங்க       755

பொம்மிமே லாசைகொண்டு புறப்பட்டான் தென்மதுரை
கொல்லைகொண்ட வீரையனும் கோட்டையை வந்துகண்டான்
கோட்டையைத் தான்பார்த்துக் குரும்பாட்டுப் பட்டிஎன்றான்
ஏறிக் குதித்தான்காண் யெண்ணமத்த காளையுந்தான்
பத்துலட்சங் கோடி பாங்கான் காளையுந்தான்       760

பத்துதலை வாசலையும் பாங்காகத் தான்கடந்து
பார்க்கு மளவிலே பைங்கிளியாள் வாசல்முன்னே
பொம்மிக் காவலால் பொம்மணனுந் தானுமப்போ.
தலைவாசல் முன்னே சபரமஞ்சக் கட்டிலின்மேல்
உருவின கத்தியுடன் உறங்குகின்ற வேளையிலே       765

பஞ்ச கல்யாணி பக்கமே கட்டிநிற்க
உள்ளறையில் பொம்மியம்மாள் உறங்குகிற வேளையிலே
இத்தனை கட்டுமெட்டாய் இருந்து நம்மை என்னசெய்வான்
என்றுசொல்லித் தான்சிரித்து ஏற்றமுள்ள தென்மதுரை
என்ன உபாயம் எடுத்தான்காண் தென்மதுரை       770

மதுரைவீரன் பொம்மியின் மாளிகை அடைதல்

ஈயென்று வேஷம் எடுத்தான்காண் ஆண்டவனும்
எடுத்தான் வடிவு எண்ணமற்ற காளையுந்தான்
கதவிடுக்கில் தான்நுழைந்து கன்னியிடம் தான்வந்து
மெல்ல உட்காந்து மெல்லியரைத் தானெழுப்பத்
தேன்மொழியாள் பொம்மி திடுக்கிட் டெழுந்தவளும்       775

கட்டி அணைத்துக் கனிவாய் முத்தமிட்டு
மங்கையரும் பொம்மியம்மாள் மதுரையைப்பார்த் தேதுரைப்பாள்
வாருங்காள் மைத்துனரே ஒருவார்த்தை சொலக்கேண்மின்!
பொக்கிஷ மாளிகையில் பொட்டனவே தான்புகுந்து
செலவுக்கு ஆயிரம்பொன் சீக்கிரமாய்த் தானெடுத்து       780

பட்டுப் பட்டாவளிகள் பாங்குடனே தானெடுத்து
அத்தனையும் கட்டி அடவா யிருவருந்தான்

மதுரைவீரன் பொம்மியைக் கடத்திச்செல்லல்

மாளிகையை விட்டு வாசலிலே வந்துநின்று
மட்டடங்காக் காளை மதுரா புரித்துரையும்
போம்அந் நேரம் புரவிதனை அவிழ்த்துக்       785

கால்கயிறுந் தான்வைத்தான் கள்ளவண்ட
தங்கக் கடிவாளம் தயவாக மேல்பூட்டி வீரையனும்
மாணிக்க முகமிட்டு வகையுடனே தான்பூட்டிக்
கழுத்துக்குப் பொற்சதங்கை கனமாக மேல்பூட்டிப்
நாலுகால் வீர தண்டை நடையனுக்கு மேல்பூட்டி       790

அங்கவடி பொன்னோலை அமடுபடா நடையனுக்குப்
பத்தரை மாத்துப் பசும்பொன்னால் சீனிவைத்துப்
பட்டத்துக் கத்தி பாங்குடனே தானெடுத்துப்
பொன்புரவி மேலே பொம்மியரைத் தூக்கி வைத்து
அங்கவடி கால்போட்டு ஆண்டவனு மேறினான் 795

ஏறினார் குதிரை எமலோகந் தத்தளிக்க
மூட்டினார் குதிரை மேகம்போல் பாய்ந்ததுவே
கோட்டை கடந்தார் கொள்ளை கொண்ட வீரையனும்
பொம்மியரை முன்னேவைத்து போகிறான் வேகமுடன்
ஆரணியந் தான்கடந்து அசையா நகரிவிட்டுக்       800

கோதா வரிகடந்து கோனேரி தான்கடந்து
கொல்லிமலை விட்டு குமரிமலை தான்கடந்து
கருங்கல் வழியாக காளைமுத்து வீரையனும்
தொட்டிய முசிறிவிட்டு துள்ளுகுட்டி தான் நடந்தான்
மதுரை மகாமுனியும் வல்லாளன் தென்மதுரை       805

வல்லமை யாக வாரானே தென்மதுரை
ஆமூர் வழியாக ஆற்றிலே வந்திறங்கி
நாட்டினார் கூடாரம் நடுமணலில் வீரையனும்
ஒத்தை நல்ல கூடாரம் ஊன்றினான் தென்மதுரை
குளிர்ந்த மணலிலே கூடாரம் தான்போட்டார்       810

கூடாரம் தன்னில் கொம்பனையும் வீரையனும்
பலகாரஞ் சாப்பிட்டு பள்ளிகொண் டிருவருமாய்
ஏகாந்த மாக இருக்குமந்த வேளையிலே
பொழுது விடிந்து பொம்மணனுந் தானுமப்போ
பட்டத்துக் குதிரை பஞ்சகல் யாணியாம்       815

பார்த்தாரே அப்போது பாங்கான பொம்மணனும்
காணா மென்றுசொல்லிக் கண்கலங்கி யந்நேரம்
பொம்மியம் மாளைப் பொங்கமுடன் கூப்பிட்டார்
நாலுசத்தம் மூன்றுசத்தம் நன்றாகக் கூப்பிட்டார்
பேசவில்லை யென்றுசொல்லிப் பெயர்த்தான் காண் பொற்கதவைப்       820

பார்த்துமகள் காணாமல் பதறி விழுந்தார்காண்
பொம்மியரைக் காணாமல் புலம்பி வெளியில்வந்து
வாசலெங்கும் தான்பார்த்தான் வண்ணக் கிளியாளை
பட்டணத்தி லுள்ள பரிசனங்க ளத்தினையும்
திக்குக்குத் திக்குத் தேடித் திரிகையிலே       825

மாதியச் சின்னானும் மகனையுங் காணமென்று
எதிர்கொண்டு தேடிவந்தான் எண்ணமற்ற சக்கிலியன்
எல்லோரும் பார்த்து எடுத்துரைத்தார் அப்போது

பொம்மியைத் தேடிப் பொம்மணன் படை புறப்படுதல்

தலையாரியைத் தானழைத்து தார்வேந்தன் அப்போது
தாரை பற்றிமுன்னே தாண்டி நடவுமென்றார்       830

தலையாரி முன்பாகத் தளங்களெல்லாம் பின்தொடரச
சேனைவருகிறது செந்தூள் பறக்குது காண்
தென்திசையை நோக்கிச் சீக்கிரமாய்ப் போனார்கள்
வருகிற போது வழியிலே கண்டவரை
ஒத்தைக் குதிரையும் ஒருபெண்ணு மாப்பிள்ளையும்       835

கண்மணியே தம்பியரே கண்டீரோ இந்தவழி
என்றுசொல்லிக் கேட்டார்கள் ஏற்றமுள்ள மன்னவரும்
வாருமய்யா சுவாமி வந்தவகை சொல்லுகிறேன்
கருங்கல் வழியாகக் காரிக் குதிரையொன்று
குதிரையின் மேலொரு கோதையரும் ஆண்பிளையும்       840

இவரிரெண்டு பேரும் இதுதடமாய்ப் போனார்கள்
அந்தமட்டுஞ் சேதி ஆட்டிடையன் தானுரைக்க
அந்த நல்ல சேதி அடவாகத் தான்கேட்டு
பொம்மண நாயக்கன் போட்டானங் குதிரையப்போ
கருங்கல் வழியாகக் கருந்தூளும் செந்தூளும்       845

தொட்டிய முசிறிவிட்டுத் துருசாக வாரார்கள்
காவேரி யாற்றில் கண்டார்கள் கூடாரம்
ஆற்றி லிறங்கி அலைகொட்டி வருகுதப்பா
அப்போது பொம்மியம்மாள் அந்தசத்தம் தான்கேட்டுக்
கூடாரம் தன்னைவிட்டுக் கோதையரும் வெளியில்வந்து       850

வடக்குமுகம் பார்த்தாளே மங்கையரும் அப்போது
அலறியே போய்விழுந்தாள் ஆணிமுத்து வீரையன்மேல்
என்னவென்று சொல்லி எழுந்திருந்து வெளியில் வந்தார்
ஆற்று மணலெல்லாம் ஆகாசம் பறக்குதப்போ
கூடா ரத்துமேலே கொள்ளைகொள்ளை யென்றுசொல்லி      855

வந்து நிறைந்துகொண்டார் மகாகோடி சேனையெல்லாம்
பதினாயிரம்பேர் பாங்குடனே அம்பு தொட்டார்
கூடாரத் தைநோக்கிக் கோடியம்பு தொட்டார்கள்
துப்பாக்கி கொண்டு சுட்டார்கள் துலுக்கரெல்லாம்
பட்டா உருவி பார்த்துத் துலுக்கரெல்லாம்       860

வெட்டுவோ மென்று வீரமுடன் வந்தார்கள்

மதுரைவீரன் சண்டைக்குப் போகுதல்

கண்டுமந்த வீரையருக்குக் கடுங்கோபந் தானாகிக்
கண்கள் சிவக்குதப்போ கடுங்கோப மாகுதப்போ
கட்டழகன் மேனியெல்லாம் கலங்கித் துடிக்குதப்போ
மீசை துடிக்குதப்போ வெகுகோப மாகுதங்கே       865

மட்டற்ற கோபத்தை மனதி லடக்காமல்
ஏறினார் குதிரை எடுத்தார் பெரியகத்தி
குதிரையின் மேலேறிக் கொள்ளைகொண்ட வீரை யனும்
அப்போது பொம்மி ஆண்டவன் முன்னேவந்து
மன்னவனைப் பார்த்து மங்கையரு மேது சொல்வாள்       870

மன்னவரே உங்கள் மாமன் ஒருத்தனையும்
வேண்டாம் விட்டுவிடு வேந்தன்துரை ராசாவே
பைங்கிளியே! பெண் மயிலே ! படுகளத்தி லொப்பாரி
உண்டடியோ ஒப்பாரி உண்மைசொல்ல வந்தாயோ
என்றுசொல்லி வீரையனும் எதிராளி தன்மேலே 875

கொக்குத் திரளிலே ராசாளி பாய்ந்தாற்போல்
போட்டார் குதிரை பொம்மணன் சேனையின்மேல்
பரலோகந் தத்தளிக்கப் பாறிக் குதிரைவிட்டார்
வீசினார் தென்மதுரை வெள்ளரிக் காயதுபோல்
உருளுது தலைகள் ஒன்பது நூறாயிரமாம்       880

முன்வீச்சுக் காயிரம்பேர் பின்வீச்சுக் காயிரம்பேர்
இறந்து மடியுதப்போ எண்ணற்ற சேனையெல்லாம்
பொம்மியால் நம்முயிர் போகுதே யென்பாரும்
என்று புலம்பி இறந்து மடியுதப்போ
பட்டாணி துலுக்க ரெல்லாம் பாரம்பு தானெடுத்துக்       885

கொக்கரித்துச் சேனையைப்போய் கோடிசரம் அம்பு தொட்டார்
தொட்டம்பு வாளியெல்லாம் மதுரை துரை வீரையருக்கு
புஷ்பமாய் வந்து பொழியுது ஆண்டவர்மேல்
தொடர்ந்துபோய் வீரையனும் துலுக்கர் படைகளெல்லாம்
துண்டதுண்ட மாகத் துணித்தாரே அப்போது       890

சாயிபு சலாமென்று தான்விழுவார் கோடிபடை
பாயிபு சலாமென்று பதறி விழுவானாம்
வீரையன் படைபொருத மேலோகந் தத்தளிக்க
ஆறு குளங்கள்வற்றி அண்டமெல்லாங் கிடுகிடென
திருச்சினாப் பள்ளித் தேசத்தை யாளுகின்ற       895

விசையலிங்க சொக்கலிங்க வேந்தன்துரை ராணுவங்கள்
கோட்டைக் கதவடைத்துக் கொத்தளத்து மேலிருந்து
வேடிக்கை பார்க்கிறார்கள் வேந்தன்துரை ராணுவங்கள்
இப்படிப் பார்க்க இறக்கடித்தார் தென்மதுரை
பொம்மணனும் பட்டான் போய்மடிந்தார் சேனையெல்லாம் 900

தொட்டியப் படைகளெல்லாம் துணித்துக் கருவறுத்தான்
கத்தி பரிசை யெல்லாம் காவேரியில் தானலம்பிக்
கொள்ளைக்கொண்ட ராசாவும் கூடாரம் தான்பார்த்து
வாராராம் தென்மதுரை வண்டநல்ல தேசியின் மேல்
குலுங்க நடைநடந்து குறுஞ்சிரிப்புத் தான்சிரித்து       905

அடுத்தாரைக் காக்கும் ஆணிமுத்து வீரையனும்
வர்ணமணிக் கூடாரம் வந்திறங்கும் வேளையிலே
எந்தனுட ராசாவே எந்தகப்பன் எங்கென்றாள்
உன்தகப்பன் தானும் ஒக்க மடிந்தாண்டி
என்று சொல்லத் தான்கேட்டு ஏற்றமுள்ள பொம்மியரும்      910

அலறியே போய்விழுந்தான் அய்யன் படுகளத்தில்
பொம்மணன் மேல்விழுந்து புலம்பி யழுகலுற்றாள்
என்னாலே உங்களுயிர் எமலோகஞ் சேர்ந்ததோ
பாவிகளே எம்பொருட்டால் பட்டு மடிந்தீரோ
ஆற்றில் சுடுகாடு ஆச்சுதோ உங்களுக்கு       915

ஐயாவே என் தகப்பா ஆற்றில் மடிந்தீரோ
தரையிலே என்னைவிட்டால் தண்டைக்கால் நோகுமென்பீர்
பூமியிலே விட்டால் பொற்பாதம் நோகுமென்பீர்
மடியி லரிசிகட்டி மார்மேல் நடைபழக்கி
தோளிலே தொட்டில்கட்டித் தொடைமேல் நடைபழக்கி       920

அருமையா யெனைவளர்த்த அய்யாவே மாண்டீரோ
என்று புலம்பி யிருக்குமந்த வேளையிலே
பொம்மியருந் தானழுகப் பொறுமையுள்ள வீரையனும்
மங்கையரைத் தானெடுத்து மார்போடே தானணைத்து
அழுகை தனைநிறுத்தி அந்நேரம் வீரையனும்       925

திருச்சினாப் பள்ளிசென்று சீக்கிரமாய்க் கட்டைகொண்டு
சந்தனக் கட்டைகொண்டு தயவா யெடுத்தடக்கி
நீர்க்கடனும் தீக்கடனும் நீதிக்கேட்ட மாமனுக்கு
வகையுடனே காடாத்தி [38]வனமயிலும் வீரையனும்
-------
[38]. வாள்மயில் என்றுள்ளது
--------------

காவேரி தீர்த்தம் கனமாக நீராடி
மங்கையரும் வீரையனும் வந்தார்கள் கூடாரம்
கூடாரம் வந்து கோதைமயில் பொம்மியரும்
சாதமுடன் கறிவகைகள் சமைத்தாளாம் அந்நேரம்
சாமிமுத்து வீரையருக்குத் தங்கத்தாம் பாளம்வைத்து
ஆணிமுத்து வீரையருக்கு அன்பாகத் தான்படைத்தாள்       935

உண்டு பசியாறி உத்தமியாள் பாலகனும்
பைங்கிளியைத் தான்பாத்துப் பசியாறும் பெண்ணே யென்றார்
ஏந்திழையாள் பொம்மி எடுத்துரைத்தா ளப்போது
மன்னவனே ராசாவே மகிழ்ச்சியாய்ப் பேசுகிறாய்
தரையிலே என்னைவிட்டால் தண்டைக்கால் நோகுமென்பார்       940

பூமியிலே என்னைவிட்டால் பொற்பாதம் நோகுமென்று
மடியில் குழந்தைகட்டி வகையுடனே தான்வளர்த்த
போற்றி வளர்த்தெடுத்த பொம்மணனுந் தானுமிப்போ
கட்டையின் மேலிருந்து கனலா எரியயிலே
பசியாறும் பெண்ணேயென்று பதறாமல் சொன்னீரே       945

பாரமுடி யென்தகப்பன் பற்றி எரியயிலே
பால்பழமுஞ் சாதம் பசியாறி ஏப்பமிட்டால்
உம்முடைய சாதம் உசத்தியோ மன்னவரே
என்றுசொல்லிப் பொம்மி ஏங்கி யழுகலுற்றாள்
அஞ்சனக் காரன் அடங்காத முத்தயனும்       950

கண்ணீர் துடைத்துக் காரிழையாள் பொம்மியர்க்கு
வட்டில் விளக்கிவைத்து வகையுடனே அன்னமிட்டு
உண்ணுமுண்னு மென்று சொல்லி உபசரித்தார் அப்போது
உண்டுபசியாறி உத்தமியாள் பொம்மியரும்
இவரிரெண்டு பேரும் ஏகாந்த மாயிருந்து       955

பாக்கிலைகள் தின்று பரிந்து விளையாடி
என்னடி பொம்மி இங்கிருக்கக் காரியமேன்
கூடாரம் தான் பிடுங்கி கோட்டைக்குப் போவோமென்றார்
என்று சொல்லி வீரையனும் எழுந்திருந்தார் அப்போது
கொள்ளைகொண்ட வீரையனும் கூடாரந் தான்பிடுங்கி      960

மதுரைவீரனும் பொம்மியும் திருச்சினுப்பள்ளிக்குப் புறப்படல்

பொம்மியரும் வீரையனும் புரவி தனியேறி
திருச்சினாப் பள்ளிக்குச் சீக்கிரமாய் போகையிலே
கோட்டைக் குறிக்காரர் கொத்தளத்துச் சேவுகரும்
எந்தஊர் என்று இதமாகத் தான்கேட்டார்
மதுரை மகாமுனியும் வாய்திறந் தேதுசொல்வார்       965

வடக்கே யிருந்து வருகிறோ மென்றுரைத்தார்
சேவுக மில்லாமல் சிதிலமா யிங்குவந்தோம்
நல்லதென்று சொல்லி நாயக்கருக் கறிக்கையிட
விசையரெங்க சொக்கலிங்க வேந்தன்துரை தான்கேட்டு
வந்ததொரு சேவுகனை வாசல்தடை யில்லாமல்       970

கூட்டியிங்கே வாருமென்று கொல்லரை அனுப்பி வைத்தார்
அப்போது வந்துசொல்லி அழைத்துவரச் சொன்னார்கள்
மட்டற்ற காளை மதுரை மகாமுனியும்
வீரையன் தான்கேட்டு விருப்பமுடன் அந்நேரம்
விடுதியிலே பெண்ணைவைத்து வேந்தரிடம் தான்போனார்      975

வாருங்க ளென்று சொல்லி வரிசை யிடங்கொடுத்தார்
எங்கேவந் தீரென்று ஏற்றமுடன் தான்கேட்க
வடதேசம் தானிருந்து வந்தமய்யா உங்களிடம்
ஆனதொரு சேவுகமும் அடவுடனே தான்கொடுத்தால்
அரண்மனை வாசலிலே அடவாகக் காத்திருப்பேன்       980

என்று சொன்னார் வீரையனும் ஏற்றமுள்ள ராசர்முன்னே
என்னகாண் சம்பளம் ஏற்றமுள்ள சேவுகனே
மாசமொன்றுக் காயிரம்பொன் வகையுடனே தான் கொடுத்தால்
இருந்து சமாளிப்பேன் என்று சொன்னான் வீரையனும்
நல்லதென்று சொல்லி நாயக்கரும் தான்கேட்டு       985

ஆயிரம் பேருக்கு மேலான சேவுகமாம்
கட்டளையு மிட்டுக் கனத்த உடுப்பளித்து
வீரையர்க்குத் தானும் விடுதியும் தானமத்தி
வெகுமதியுந் தாள்வாங்கி விடுதிக்கே வாராராம்
குலுங்க நடைநடந்து குறுஞ்சிரிப்புத் தான்சிரித்துக்       990

கட்டாத காளை காரணனாம் தென்மதுரை
வந்தாரே அப்போது மாளிகைக்குத் தென்மதுரை
இப்படித் தானும் இருக்குமந்த வேளையிலே
காலமே எழுந்திருந்து காலுமுகஞ் சுத்தம்பண்ணி
யானையின் மேலேறி அலங்கரித்து வாரதுவும்       995

குதிரையின் மேலேறிக் கோட்டைசுற்றி வாரதுவும்
பாதி பதினஞ்சில் பாங்கான முத்தயனும்
கோட்டைக்கு வெளியே குதிச்சேறி வாரதுவும்
வேஷங்கள் மாறி வீதிசுற்றி வாரதுவும்
ஆரு மறியாமல் அரண்மனைக்குள் இருக்கிறதும்      1000

பத்தினிப் பெண்கள் பதுவைக் குலைக்கிறதும்
கன்னி யழியாத பெண்கற்பைக் குலைக்கிறதும்
இப்படித் தானும் ஏற்றமுள்ள வீரையனும்
உல்லாசக்காரன் ஒயிலழகன் வடிவுகண்டு
கன்னியர்க ளப்போது கண்கலங்கி நிற்பாரும்       1005

தண்ணியென்று வாறாறே தாங்கி மெள்ளப் போகாறே
என்று சொல்லித் தானும் ஏங்கி விழுவாரும்
நடையுடையுங் கைவீச்சும் நாட்டிலே கண்டதில்லை
மதுரை யணிந்திருக்கும் வாசனைகள் மெத்தவுண்டு
மருந்து பொடிவாசம் மயங்குவார் கோடிபெண்கள்       1010

கைசோர்ந்து மெய்சோர்ந்து கண்கலங்கி நிற்பாரும்
தென்ன மரம்போலே திடுக்கிட்டு விழுவாரும்
என்னை அழையாரோ என்னைமுகம் பாராரோ
ஸ்தன்யத்தைக் காட்டி விழித்து நகைத்திடுவாள்
மன்னவன்மார் பில்களப வாசனைகள் வீசிடுமே       1015

இத்தனைக் கூத்து ஏற்றமுள்ள தென்மதுரை
கடைக்கண்ணால் பார்த்துக் கட்டழகன் தென்மதுரை
உல்லாசக் காரன் ஒயிலழகன் தென்மதுரை
அவ்வீதி விட்டு மறுவீதி வருகையிலே
தேசக் குறிகாரர் கிருஷ்ணப்ப நாயக்கருஞ்       1020

தவசிருந்து பெற்றதொரு தங்கப்பூ மேனியரும்
மருந்துப்பொடி வாசம் வகையுடனே வீசுதென்று
ஆரென்று சொல்லி அவளெட்டித் தான்பார்த்தாள்
அப்போது தென்மதுரை ஆணிமுத்து வீரையனும்
கன்னி யிளமயிலை கண்டுமந்த வீரையனும்       1025

வாள்மயிலை மனதிலெண்ணி வண்டத்துரை வீரையனும்
ஆகட்டு மென்றுசொல்லி அதட்டியே தான்நடந்தான்
இருங்காணும் பெண்ணேநீர் என்றேதான் வீரையனும்
பொம்மியள் மனைக்குப் போய்புகுந்தான் தென்மதுரை
சாப்பிட் டிளைப்பாறித் தங்கமுத்து வீரையனும்       1030

நஞ்சுதின்று நஞ்சறுக்கும் நடுசாம வேளையிலே
பள்ளியறை விட்டுப் பைங்கிளியா ளரண்மனைக்கு
போகவென்று சொல்லிப் புறப்பட்டான் தென்மதுரை
ஆசார வாசல் அரண்மனையுந் தான்கடந்து
சிங்காரத் தோப்பு தெப்பக்குளங் கடந்து       1035

வடுகத்தெரு வீதியிலே வந்துமெல்ல வீரையனும்
சுத்தாலே யேறி துருசாக் குதித்திறங்கி
ஏத்தமுள்ள தென்மதுரை யிதமாக நிற்கையிலே
நாயக்கர்மகள் தானும் ரத்தினமணி மாளிகையில்
சப்ரமஞ்சத் தங்கத்திரு கட்டி லின்மேல்       1040

மல்லிகைப்பூ மெத்தையின்மேல் மயிலணையாள் பள்ளிகொண்டு
இப்படித் தானும் இருக்குமந்த வேளையிலே
மதுரை யணிந்திருக்கும் மருந்துபொடி வாசனைகள்
மல்லிகைப்பூ செண்பகப்பூ வாய்த்தஇரு வாட்சிமுல்லை
வல்லத்துப் புனுகு வடமதுரைச் சவ்வாது       1045


மதுரை அணிந்திருக்கும் மருந்துப் பொடிவாசம்
மங்கை படுத்திருக்கும் மாளிகையே சுற்றுதுகாண்
பள்ளிகொண்டு தானிருக்கும் பைங்கிளியா எப்போது
சுற்றி வளைந்ததுகாண் சூறா வளிப்போலே
மருந்துப் பொடிவாசம் மங்கையரைத் தானெழுப்ப       1050

இந்தப் பொடிவாசம் ஏதுகாண் என்றுசொல்லி
காலமே கண்ட கட்டழகன் வந்தானோ
மத்தியானம் கண்ட மன்னவனும் வந்தானோ
பார்த்து மிகப்போன பாதகனும் வந்தானோ
ஆரென்று சொல்லி அறிந்துவர வேண்டுமென்று       1055

பஞ்சணை மெத்தைவிட்டுப் பைங்கிளியு மப்போது
மாணிக்கப் பொற்கதவை வகையுடனே தாழ்திறந்து
மாளிகையை விட்டு மங்கையரும் வெளியில்வந்து
பார்க்கு மளவில் பாதகனுந் தென்மதுரை
உல்லாச மாக ஒயிலழகன் நிற்கையிலே       1060

கண்டுமந்த மங்கையரும் கால்கள் தடுமாறி
மன்னவனைத் தான்பார்த்து மங்கையரும் போய்விழுந்தாள்
துள்ளுகுட்டி வீரையனும் துரைசாமி அப்போது
மாணிக்கக் கையாலே மங்கையரைத் தானெடுத்து
மாளிகையு னுட்புகுந்து மாணிக்க மெத்தையின்மேல்       1060

வைத்துமந்தப் பைங்கிளியை வாய்த்ததொரு வீரையனும்
கற்பூர மையெடுத்துக் கன்னியர்க்குத் தானுமிட்டு
அந்தச் சணமே ஆனதொரு பெண்மயிலாள்
மயக்கந் தெளிந்து வாரி யெழுந்திருந்து
மன்னர் முகம்பார்த்து மங்கையரு மேதுசொல்வாள்       1070

வாருங்காள் ராசாவே ஒருவார்த்தை சொலக்கேண்மின்
ஆரென்று சொல்லி அன்பாகத் தான்பார்த்தேன்
கடைக்கண்ணால் பார்த்துக் கதித்து நடந்தீரே
கண்காட்டி நீர்நடக்கக் காயம்பட்ட மானதுபோல்
ஊணின்றித் தவித்து உலாவியே நானிருந்தேன் 1075

அன்னமு முண்ணாமல் அடைக்கா யருந்தாமல்
மையல் கொண்டுநான் மணிமெத்தை மேல்படுத்தேன்
இப்படி நானிருக்க ஏற்றதொரு வாசனைகள்
கலந்துதான் தூங்கையிலே கண்மயக்கந் தானாகி
எப்பவரு வீரென்று ஏங்கி யிருந்தேன்நான்       1080

என்றுசொல்லி மங்கையரும் ஏற்றமுள்ள வீரையர்க்கு
மன்மதப் பாணம் மார்புருகிப் போகுதங்கே
கட்டி யணைத்துக் கனிவாய் முத்தமிட்டு
அடைக்காயும் வெற்றிலையும் அன்பாகத் தான்கொடுத்துச்
சிரித்து விளையாடித் தேன்மொழியைத் தான்சேர்ந்தார்       1085

தீராத ஆவலெல்லாம் தீர்ந்து தெளிந்தபின்பு
மங்கையரு மப்போது மகிழ்ச்சியுட னெழுந்திருந்து
வீரையர்க்குத் தானும் வேண்டுமென்ற பலகாரம்
[39]உக்கிராணம் தான்திறந்து ஓடைமலர்க் கண்ணாளும்
அதிரசமுந் தேன்குழலும் ஆன [40] சுகிவடையும்       1090

முருக்குப் பணியாரம் மோதகமுந் தானெடுத்துப்
பொரிகடலை சிறுபயறு போதவே தானெடுத்துச்
[41]கச்சாயம் தோசை கடலைப்பொரி யெள்ளுருண்டை
தீவுச் சரக்கு தேசத்துச் சாராயம்
ஐநூறு சீசா அடவுடனே தானெடுத்து             1095

அத்தனையுங் கொடுத்து ஆண்டவர்க்கு அப்போது
இத்தனை நேரம் இளைப்புடனே தானிருந்தீர்
பசியாறு மென்றுசொல்லிப் பைங்கிளியுந் தான்கொடுத்தாள்
தென்மதுரை தானும் தின்று பசியாறி
ஐநூறு சீசா ஆனதொரு சாராயம்       1100

அண்ணாக்க விட்டான்காண் ஆணிமுத்து வீரையனும்
புகைச்சுருட்டுப் பற்றவைத்துப் பொன்னணங்குத் தான்கொடுத்தாள்
புகைச்சுருட்டுத் தான்வாங்கி பொறுமையுடன் தான்குடித்தான்
அடைக்காயும் [42] வெள்ளிலையும் அன்புடன் தான்வாங்கி
வாங்கியே தென்மதுரை வகையாகத் தானருந்தி       1105

மங்கையர்மே லாசைகொண்டு மணிமெத்தை மேல்படுத்து
இவரிரெண்டு பேரும் யிதமாகத் தான்படுத்து

----------
[39]. உக்கிராணம் - களஞ்சியம் பண்டகசாலை       [40]. சுகி - இனிப்புப்
[41].கச்சாயம் ஒரு வகைப் பணிகாரம் - பணிகாரவகை
[42]. வெள்ளிலை வெற்றிலை
------------

மன்னவருந் தேன்மொழியும் மகிழ்ச்சியுடன் தானிணைந்து
ஆசையெல்லாம் தீர அணைந்து விளையாடி
வீரையனு மப்போது மெல்ல எழுந்திருந்து       1110

வாருமடி பெண்மயிலே வார்த்தைசொல்லக் கேளுமடி
சொல்லென்று தானும் துயிலாடை யெடுத்துடுத்திக்
கேட்டாளே அப்போது கிளிமொழியாள் எம்பெருமாள்
அப்போது சொல்லுகிறார் ஆண்டவனும் தென்மதுரை
பெண்ணமுதே நானும் போறேன்டி அரண்மனைக்கு       1115

என்று சொல்லி வீரையனும் ஏந்திழையைக் கேட்கலுற்றார்.
மங்கையரும் தானும் மன்னன் முகம்பார்த்து
என்று வருவீர்கள் எத்தனை நாள் செல்லுமென்றாள்
மாத மொருக்க வருவனடி தப்பாமல்
என்று சொல்லி வீரையனும் இதமாகத் தானுரைத்தார்       1120

மங்கையர்க்குத் திடஞ் சொல்லி மதுரை மகாமுனியும்
[43] சுத்தாந்தச் சுவரேறி துருசாய்க் குதிச்சாராம்
உல்லாசக் காரன் ஒயிலழகன் தென்மதுரை
ஆணிமுத்து வீரையனும் அசைந்து நடைநடந்து
வாரான்காண் பொம்மி வர்ணமணி மாளிகைக்கு       1125

வீரையனு மப்போ விடுதிவந்து சேர்ந்தானாம்
கட்டாத காளையைத்தான் கண்டாளே பொம்மியரும்
பொம்மியருங் கண்டு பொங்கியே கோபங்கொண்டு

அழுதசத்தம் தான்கேட்டு ஆரணங்கு பொம்மியரும்
ஆரென்று சொல்லி அன்னம்போ லோடிவந்து       1130

வீரையன் தான்பார்த்து வேல்பொருதுங் கண்ணாளும்
கல்லான மேனிக்குக் கலக்கமில்லை யென்றிருந்தேன்
தங்கத்திரு மேனிக்குத் தாழ்வில்லை என்றிருந்தேன்
பூலோக முள்ளமட்டும் பொங்கமுடன் வாழ்வமென்று
எழுத்தை யறியாமல் எண்ணினனே கோடிசிந்தை       1135

தகப்பனை நானிழந்து தாயரைத் தான்பிரிந்து
மனுசரையும் விட்டு மகிழ்ச்சியுடன் உன்பிறகே
நம்பிவந்தே னுன்பிறகே நட்டாற்றில் விட்டாயே
என்றுசொல்லி கோதையரும் ஏங்கியே தானழுதாள்.
ஆண்டவனே சுவாமி அசடுவந்த வகையேது       1140

தங்கத்திரு மேனியிலே தழும்புவந்த வாறேது
மன்னவனே உன்னை வழிமறிப்பார் தானுமுண்டோ
மட்டற்ற கோபத்தை மனதி லடைக்கின்றீர்
ஆண்மையும் புசபலமும் அடக்கினீர் நெஞ்சகத்தில்
கல்லான தூணைக் கரையான் அரித்ததோ       1145

இரும்பான தூணை ஈவந்து மொய்த்ததேன்
எங்கேயோ வானம் இடிக்குது என்றிருந்தேன்
காலடியில் செம்மான் கதறி விழுந்ததிங்கே
[44] சத்துராதி யென்று சற்று மறியேனே
வஞ்சனைக் காரனென்று வகையொன்று நானறியேன்       1150

என்றுசொல்லித் தானும் எண்ணி யழுகலுற்றாள்
தண்ணி வெறிக்காரன் தனஞ்சயனு மப்போது
இத்தனைக்கு நீசலித்தாய் ஏந்திழையே பொம்மியென்று

வாரி எடுத்து மார்போட தானணைத்துத்
தெருவீதி போனதில்லை தேன்மொழியைக் கண்டதில்லை       1155

உன்னைவிட்டு நானும் ஒருத்தர்முகம் பார்த்ததில்லை
என்மேலே சந்தேகம் எண்ணி நினைக்காதே
பைங்கிளியே நானும் பரவசமாய்ச் சொன்னேண்டி
என்றுசொல்லி வீரையனும் ஏந்திழையை மனந்தேற்றி
உண்டு பசியாறி உத்தமனார் வீரையனும்       1160

அந்தநாள் சென்று மத்தநாள் வீரையனும்      
ஆசார வாசல்விட்டு அரண்மனைக்குத் தானடந்தார்
விசையரெங்க சொக்கலிங்கம் வேந்தன்துரை ராசாவும்
தரிசனங் கொடுத்துத் திகைத்திருக்கும் வேளையிலே
மன்னர்துரை ராசருக்கு மதுரையிலே தானிருந்து       1165

வெள்ளித் தடிக்காரர் விருசாக ஓலைகொண்டு
துருசாக ஓலைக்கொண்டு தூதுவர்கள் ஓடிவந்தார்
ஆசார வாசல்வந்து அடவுடனே கைதொழுது
கச்சித் திருமலையன் காரணமா யெழுதிவிட்ட
[45] உத்தரமுங் கொண்டுவந்து ஒப்பமுடன் முன்வைத்து       1170

வைத்ததொரு உத்தரத்தை வாகுடனே தானெடுத்து
விசையரெங்க சொக்கலிங்கம் வேந்தன்துரை ராசாவும்
வாசித்துப் பாருமென்று வகையுடனே சொன்னாராம்
காரியக் காரர் கணக்கெழுதும் பிள்ளைகளே
கோட்டைக் குறிக்கார கொத்தளத்துச் சேவுகரே       1175

[46]கெஷ்த்திக் குறிக்கார கிருஷ்ணப்ப நாயக்கரே
ஆயிரம்பொன் சேர்வை ஆணிமுத்து வீரையனே
எல்லோரும் கேளுங்கள் அடவாகத் தானிருந்து
விசையரங்க சொக்கலிங்க வேந்தன்துரை ராசாவும்
மதுரையிலே தானிருந்து வந்ததொரு சேதிதன்னைச்       1180

சேர்வை தானிருந்து சேர்ந்த சபை நடுவே

மதுரைச்சிறப்பு

மதுரை இருகாதம் வாழ்மதுரை முக்காதம்
வைகை நதியும் வற்றாத பொய்கைகளாம்
சொக்கருட சன்னதியாம் சொர்ணமணிக் கோபுரமாம்
அங்கையற்கண் சன்னதியாம் அசையாத் திருமதிலாம் 1185

மீனாட்சி சன்னதியும் வெண்முத்தால் கோபுரமாம்
சுற்று மதிலும் சூழ்ந்தநிலைக் கோபுரமும்
புஷ்ப வனமும் பொற்றா மரைக்குளமும்
வண்டியூர்த் தெப்பக்குளம் வற்றாத ஊருணியும்
இப்படித் தானிருக்கும் எண்ணமற்ற ராச்சியத்தில்       1190

கள்வர் தொல்லை

தன்னரசு நாட்டும் தனிக்காட்டுக் கள்ளரெல்லாம்
நாட்டிலுள்ள கள்ளரெல்லாம் நன்றாய்க் கூட்டமிட்டு
அழகருட கோவிலுக்கு ஆரொருவர் வந்தாலும்
-------
[43]. சுத்தாந்தம் - அரசன்தேவியில்லம்
[44]. சத்துராதி-பகைவன்
[45]. உத்தரம் -மறுமொழி,எதிர்மொழி
[46]. ?
----------

தாலிபறி சீலைபறி தான்பிடுங்கிப் போறதுவும்
ஆம்பிளையைக் கண்டால் ஆனதலைக் கொயிறதும் 1195

மதுரையுட வீதி வடக்குநல்ல வாசல்மட்டும்
தனியொருவர் வந்தால் தலைக்கொய்து போறதுவும்
கண்ட விடமெல்லாம் கள்ளரு பத்திரியம்
உழவு நடவுமில்லை உபத்திரத்து னாலேயிப்போ
கொல்லரிடம் பொன்முடிப்புக் கொடுக்கப் பயமாச்சு       1200

இப்படிக் கள்ளர் இசவுபண்ணி வாரதுவும்
யென்றுசொல்லி நாயக்கர் எழுதிவிட்டா ரென்றுசொல்லி
விசையரங்க சொக்கலிங்க வேந்தன்துரை தானுரைக்க
எல்லோருங் கேட்டு ஆகட்டு மென்றுசொல்லி
ராசர் முகம்பார்த்து நன்றா யெடுத்துரைப்பார்       1205

தன்னரசு நாட்டுத் தனிக்காட்டுக் கள்ளரையும்
வெட்டிக் கெலிக்க வேந்தரா லாகாது
ஒருத்தரால் முடியாது உள்ளபடி சொல்லுகிறேன்
ஆயிரம்பொன் சேர்வை ஆணிமுத்து வீரையனை
சேனைகள் கூட்டித் தெற்கே அனுப்பிவைத்தால்       1210

கள்ளர்பற்று நாட்டைக் கருவறுப்பான் தென்மதுரை
சீக்கிரமாய்த் தான்வருவான் தெள்ளிமைக் காரனவன்
என்றுசொல்லி எல்லோரும் இதமாகத் தானுரைத்தார்

மதுரைவீரன் கள்ளர்களை அடக்க மதுரைச்செல்லல்

அந்தநல்ல சேதி அடவுடனே தான் கேட்டு
விசையரங்க சொக்கலிங்க வேந்தன்துரை தான்கேட்டு       1215

வீரையனைத் தானழைத்து வெகுமதியுந் தான்கொடுத்துப்
பதினெட்டு மேளம் பாங்குடனே தான்முழங்க விடைகொடுத்தார்.
போய்வாரு மென்றுசொல்லி போற்றி
அடைக்காயும் வெற்றிலையும் அடவாகத் தான்கொடுத்து
அத்தனை வெகுமதியும் அடவாகத் தான்வாங்கி       1220

அனுக்கிரகம் பெற்று ஆணிமுத்து வீரையனும்
பாங்கான வீரையனும் பல்லக்கு மேலேறி
ஏறினார் பல்லக்கு எண்ணமற்ற சேனையுடன்
பொம்மியர் மனைக்குப் பொங்கமுடன் வாராராம்
கன்னியரும் பார்த்து கண்பிரிய முண்டாகி       1225

பூரித்துப் பொம்மி பொங்கமுடன் வீற்றிருந்தாள்
ஆணிமுத்து வீரையனும் அரண்மனைக்கு வந்திறங்கிக்
கோதி மயிரைக் குளிரச் சினுக்கறுத்து
செங்கமலக் கையினால் சீக்கிரமாய் மயிர்முடித்துச்
சீரான நெற்றியிலே சிவசிவா வென்றுசொல்லி       1230

அணிந்தான்காண் வெண்ணீறு ஆணிமுத்து வீரையனும்
கந்தபொடி கஸ்தூரி கீறினான் தன்மார்பில்
[47] கட்டுவர்க்கம் தானணிந்து கனத்த பணிபூண்டு
சாப்பிட் டிளைப்பாறிச் சாமிமுத்து வீரையனும்
பாக்கிலைகள் தின்று பறந்து விளையாடி 1235

வாருமடி பெண்ணேஓர் வார்த்தைசொல்லக் கேளுமடி
மதுரையிலே கள்ளர்வந்து வெகுலூட்டி செய்கின்றார்
என்று சொல்லி நாயக்கர் யிதமுடனே யெனையழைத்துப்
பல்லக்கு வெகுமதியும் பரிவுடனே தான்கொடுத்துப்
போய்வாரு மென்றுசொல்லிப் போற்றி விடைகொடுத்து 1240

ஆகையினாலே ஆரணங்கே நீர்தானும்
பயணம் புறப்பட வேணுமடி பைங்கிளியே
என்றுசொல்லி வீரையனும் எழுந்திருந்தான் அந்நேரம்
பொம்மியருந் தானும் பிரியமுடன் வெளிவந்து
அனையோர்க்கும் பயணஞ்சொல்லி ஆணிமுத்து வீரையனும்       1245

ஏறினார் குதிரை எடுத்தார் நெடுங்குடையைப்
[48]பரிக்கு நகுலனைப்போல் பாய்ந்தாராம் தென்மதுரை
ஐயா யிரஞ்சேனை அடவாகக் கூட்டமிட்டு
மதுரைத் திசைநோக்கி மங்கம்மா சாலைவழி
நடந்தான்காண் தென்மதுரை நாலு திசையதிர       1250

ஆனைமேல் பேரிகை அதிர்ந்து முழங்கிவரக்
குதிரைமேல் டங்கா கூடத் தொடர்ந்துவரத்
தம்பட்டங் கொம்பு தவிலோசை தான்முழங்கப்
புல்லங் குழலூத பேரிகை கொட்டிவர
நாத சுரமேளம் நாட்டியங்க ளாடிவரப்       1255

பட்டுக் குடைகள் பக்கமே சூழ்ந்துவர
பஞ்சவர்ண டால்விருது பாவாடை வீசிவர
புண்ணியனார் வீரையர்க்கு பூச்சக்கரக் குடைநிழற்ற
வெண்சா மரைவீச வேதியர்கள் பாடிவர
இருபுறமுங் கவரி இதமுடனே வீசிவரக்       1260

கட்டியங்கள் கூறக் கவிவாணர் பாடிவரப்
பட்டுடனே ராசாக்கள் பரிவுடனே கூறிவர
நடந்தான்காண் தென்மதுரை நாட்டமுடன்
பூமி யதிரப் பூலோகம் தத்தளிக்கச் வீரையனும்
சேனை வருகிறது செந்தூள் பறக்குதய்யா       1265

துள்ளுக்குட்டி வீரையனும் மணப்பாறை வீதியிலே
கூடாரந் தானடித்துப் பொம்மியரும் வீரையனும்
மணப்பாறை துறைகண் பானைசட்டி எரிதுரும்பு
பாங்குடனே தானமத்தி (பக்குவமாய்த் தான்சமைத்து)
ஆனதொரு சேனைக்கு ஆகுமென்ற தளவாடம் 1270

பால் தயிருநெய் பாங்குடனே (தான்சேர்த்து)
வீரையர்க்கும் பொம்மியர்க்கும் விருந்து சமைத்தார்கள்
பயபத்தி யாகப் பாங்குடனே காத்திருந்தார்
கங்குல் விடிந்து கதிரோ [49](னும் வந்துதித்தான்)
பயணமென்று சொல்(லிப் பாரசின்ன மூதலுற்றார்)       1275

ஆனைமேல் பேரிகை (அதிர்ந்து முழங்கிவர)
குதிரைமேல் நகார் கூட முழங்கிவர

ஓட்டகம்மேல் பேரிகை ( ....... ............ )
[50] (.......... ............... ..................)
கூடாரம் தான் பிடுங்கிக் கொள்ளைகொண்ட வீரையனும்       1280

தென்திசையை நோக்கிச் சீக்கிரமாய் வருகையிலே
வீரையன் சேனைதளம் வெகுண்டு வருகுதென்று
தோரா துலக்கையனும் தும்பிக்கைப் பூச்சியனும்
இவரிரண்டு துரைமாரும் ஏற்றதொரு ராணுவமும்       1285

மாம்பூண்டிச் சாலையிலே வந்து எதிராக
திகட்டுநல்ல பாகும் சாலுவையு முன்வைத்து
வீரையனும் முன்பாக விதமுடனே முன்வைத்து
இருவருங் [51] கைகுவித்து எதிராக நின்றார்கள்
வாருங்கள் என்றுசொல்லி வரிசையுடன் தானழைத்துச்       1290

சேனைபடை நீங்கள் சீக்கிரமாய்ப் போயெறங்கச்
சமையலுக்கு நல்ல சௌக்கியமெங் கேயென்றார்
இவரிரண்டு துரைமாரும் இதமாகத் தான்கேட்டு
அய்யாவே சுவாமி அறிந்தமட்டுஞ் சொல்லுகிறேன்
துவரங் குறிச்சிக்குத் துருசாகப் போய்ச்சேர்ந்தால்       1295

தண்ணீர்ச் செளக்கியமும் சாலை நல்ல தோப்புகளும்
பேட்டைநல்ல சாவடியும் பெரிய கடைத்தெருவும்
ஊருக்கு மேற்கே உசந்தக் [52] கிராய் மேடு
பாளையமுந் தானிறங்க, பந்தியிட இடமுண்டு
என்றுசொல்லி நாயக்கன் ஏற்றமுடன் தானுரைத்தான்       1300
-----------
[47]. கட்டுவர்க்கம் - பலவீத உடை
[48]. பறிக்கு நல்குலனேப்போல் ஏன்றுள்ளது
[49]. இவ்வரியிலிருந்து ஐந்துவரிகளில் அடைப்புக்குள் கொடுக்கப்பட்டுள்ள
சொற்கள் சுவடியில் இல்லை (முறிந்துள்ளது)
[50]. சுவடியில் வரியில்லை
[51]. கைமுகஞ்சு என்றுள்ளது       [52]. கிராய் - புறகாடு; கருஞ்சேற்று நிலம்
------------

நல்லதென்று சொல்லி நடந்தான்காண் வீரையனும்
பாளையப் பட்டார் பாதை கொண்டு முன்னடக்கத்
தீர்க்கமுள்ள வீரையனும் சேனைப் படைத்தளமும்
துவரங் குறிச்சிக்குத் துருசாகப் போய்ச்சேர்ந்தார்
ஊருக்கு மேற்கே உசந்தக் கிராய்மேட்டில்       1305

அனுமந்த கூடாரம் அடவாகத் தானாட்டி
வானமுட்டக் கூடாரம் வகையுடனே தானாட்டிச்
கோட்டைச் சலாதியிட்டுக் கொள்ளைகொண்ட ராசாவும்
விரிந்தநல் கூடரத்தில் வீற்றிருந்தார் தென்மதுரை
சேனைப் படையுடனே தீரன் கொலுவிருந்தார்       1310

கார்வண்ணன் தென்மதுரை கட்டழகன் கொலுவிருந்தான்
பூச்சிய நாயக்கன் பொறுமையுடன் ஓடிவந்து
ஒசத்தியுள்ள பாகுகளும் உண்மையாய்க் கொண்டுவந்து
ஒடுங்கியே முன்வைத்து ராசாவும் கைதொழுதார்
கட்டாணி முத்துக் காரழகன் தான்பார்த்து       1315

வாருங்காள் என்றுசொல்லி வரிசையுடன் தானழைத்து
அப்போது பூச்சியனும் ஆனபடை சேனைக்கெலாம்
சொல்லுமென்ற சாமான் சீக்கிரமாய் தான்கொடுத்து
விருந்து சமைத்தார்கள் வீரையர்க்கும் பொம்மியர்க்கும்
பாங்கான வீரையர்க்குப் படிச்செலவு தான்கொடுத்து       1320

காரழகன் கொலுவில்முன் கருத்தாகத் தானிருந்து
ஆசிராய் காத்திருந்தான் ஆனதொரு பூச்சியனும்
சாப்பிட் டிளைப்பாறித் தங்கமுத்து வீரையனும்
பாக்கிலைகள் தின்று பாங்காக வீற்றிருந்தார்
அந்தநாள் சென்று அலைகதிரோன் வந்துதித்தான்       1325

காலமே எழுந்திருந்து காலுமுகஞ் சுத்திபண்ணி
வண்டத் துலுக்கனைப்போல் வடிவுள்ள பாகைகட்டி
அங்கி நிசாறுதொட்டு அடவுடனே கச்சைகட்டி
பதினெட்டு ஆயுதமும் பாங்குடனே தானணிந்து
கூடாரம் தான் பிடுங்கிக் கொள்ளைகொண்ட வீரையனும்       1330

பாளையங் கூச்சிபண்ணி பாங்கான தென்மதுரை
ஏறினார் குதிரை எடுத்தார் பெரியகத்தி
நடவு நடவுமென்று நட்டபேரி தான்முழங்க
துவரங் குறிச்சிவிட்டுத் துருசாகத் தான்நடந்தார்
வீரன் சேனைதளம் வேகமாய் வருகுதய்யா       1335

நத்தத்து லிங்கயனும் நலமுடனே தான்பார்த்து
ஆசீராய் காத்திருந்தான் ஆனதொரு லிங்கயனும்
அந்தநாள் சென்று அலைகதிரோன் வந்துதித்தான்
[53]மத்தாநாள் காலமே மன்ன னெழுந்திருந்து
மதுரையை நோக்கி வரிசையுடன் நடக்கலுற்றார்             1340

ஆனைபடை சேனைகளும் [54]அதிர்த்தியாய் வாரார்கள்
வைகைக் கரையோரம் வந்தடித்தார் கூடாரம்
அடித்தார்கள் கூடாரம் ஆன திசையதிரச்
சிங்கமுகக் கூடாரம் சீராகத் தானடித்தார்

மாணிக்கக் கூடாரம் மானமுட்டத் தானடித்தார்
கோட்டை [55]சலாதியிட்டுக் கொள்ளைகொண்ட வீரையனும்
விடுதியிலே தானும் வீற்றிருந்தார் தென்மதுரை
கொத்தளத்து மேலிருந்து கோட்டைத் தலையாரி
திட்டனவே யோடிவந்து திருமலைநா யக்கர்முன்னே
சிந்துகண்டு தெண்டனிட்டு வகையுடனே சொல்லலுற்றார்       1350

வடக்கே யிருந்து வருகுதய்யா சேனைதளம்
குதிரைப் படையும் கொள்ளைகொண்ட ராணுவமும்
ஆனைப்படை சேனைதளம் அன்பாகத் தானும்வந்து
வைகைக் கரையோரம் வந்தடித்தார் கூடாரம்
மாதானப் படையோ மறுமன்னர் தன்படையோ       1355

ஆரோ தெரியாது அடியேன்நான் கண்டுவந்தேன்
என்றுசொல்லித் தானுரைத்தான் இதமாக ராசர்முன்னே
திருமலை நாயக்கர் சேதி தனைக்கேட்டுச்
சிங்காதனம் விட்டுச் சீக்கிரமாய்த் தான்குதித்து
உப்பரிகை மேலே உயரவே தானேறிப்       1360

பார்த்தானாம் வடக்குமுகம் பார்த்துமந்த சேனையைத்தான்
கண்டு நெடுநேரம் கலங்கியே ராசர்மன்னன்
யாரென்றா லென்ன ஆகட்டும் என்றுசொல்லி
அரிக்காரப் பிராமணரை அன்பாகத் தானழைத்து
வரண்டு பேரையும் இதமாகத் தானழைத்து       1365

யாரென்று சொல்லி அறிந்துமெள்ள வாருமென்று
அந்நேரம் தானும் [56]அரிக்காரர் தானோடி
வைகை நதிகடந்து வந்துமெள்ள பாளையத்தில்
வேதிய ரிருவரையும் மேட்டிலே தான்மரித்தார்
யாரென்று சொல்லி அப்போது தான்கேட்டார்       1370

நாயக்கர் அனுப்பிவைக்க நாங்கள்வந்தோ மென்றுசொன்னார்
அந்த மொழிகேட்டு ஆனதொரு [57] மேட்டாளர்
எஜமானுக் கிருக்கையிட்டு இப்பவே நான்வாறேன்
வாறே னென்றுசொல்லி மன்னனுக் குரைத்திடவே
மன்னன்துரை வீரையனும் வந்ததொரு சேவுகனே       1375

அட்டியில் லாமல் அழைத்துவா வென்றுரைத்தார்
அப்போது மேட்டாள் அடவாக ஒடிவந்து
உம்மை வரும்படியாய் உத்தாரம் தான்கொடுத்தார்
எசமானன் கூடாரம் எங்கென்று தான்கேட்டார்
மத்தியிலே தானிருக்கும் மாணிக்கக் கூடாரம்       1380

என்றுசொல்லித் தானும் ஏற்றமுடன் தானுரைத்தார்
நல்லதென்று சொல்லி நாட்டமுடன் வேதியர்கள்
மேடுங் கடந்து வேகமுட னந்தநொடி வந்துகண்டு
வீரையன் கொலுவிருக்கும் விடுதிமெல்ல
இவரிரண்டு பேரும் ஏற்றமுடன் கைதொழுதார்       1385

கூடவே கைதொழுதார் குணமுள்ள தென்மதுரை
எங்கேவந் தீர்களென்று ஏற்றமுடன் தான்கேட்டார்
திருமலை நாயக்கன் தீர்க்கமுடன் தான்போய்
ஆரென்று சொல்லி அறிந்துவரச் சொன்னார்காண்
என்றுசொல்லித் தானும் இருவரும் தானுரைத்தார்       1390

வேதியரைத் தான்பார்த்து வீரையனு மப்போது
விசையரெங்க சொக்கலிங்கம் வேந்தரும் தானழைத்து
மதுரைக்குப் போய் வன்மையுடன் கள்ளரைத்தான்
மட்டடக்கி வாருமென்று வரிசையுடன் அனுப்பிவைத்தார்
ஆகையி னாலே அடவுடனே வந்தமென்றார்       1395

நா யக்கர் தான்கொடுத்த நலமான [58]உத்தாரம்
எடுத்துமவர் கைக்கொடுத்தார் ஏற்றமுள்ள வீரையனும்
வாங்கியே அரிக்காரர் வகையுடனே தான்நடந்தார்
திருமலை நா யக்கர் முன்னே உத்தாரம்
கொண்டுவந்து கைகொடுத்துக் குணமாகக் கைதொழுதார்       1400      

வாசித்துப் பார்த்து மகிழ்ச்சியுடன் நாயக்கரும்
வடக்குநல்ல வாசலிலே வகையுடனே செப்பனிட்டார்
விடுதி யலங்கரித்தார் வீரையர்க்குத் தானுமப்போ
அன்னசத் திரசெட்டி அரண்மனையைத் தானமத்தி
இத்தனையும் தானமத்தி ஏற்றமுள்ள வீரையர்க்கு       1405

வாசல் பிரதானி [59] வரிசையுள்ள சாமயனும்
ஆனைபடை சேனைதளம் அன்பாகக் கூட்டமிட்டு
எழுதிகொண்டு நீயும் இன்பமுடன் தான்போய்
ஆணிமுத்து வீரையனை அன்பாகத் தான்போய்
அழைத்துமே வாருமென்று அன்பாய் விடைகொடுத்தார்       1410

எழுந்திருந்து சாமயனும் ஏறினார் குதிரையின்மேல்
குதிரை நடக்கக் கோடிதளம் பின்தொடரப்
பதினெட்டு மேள வாத்தியங்கள் தான்முழங்க
வெள்ளை விசிறி விதமுடனே தான் நடந்தார்
அடித்தானாம் பேரிகை அண்டரண்டம் தானதிர       1415

வீரைய் னுமப்போ வேகமுடன் தானெழுந்து
ஏறினார் யானை எடுத்தார் நெடுங்குடையைக்
காளைசின்ன மூத கவரி பரிமாற
எக்காள மூத இடிவான மேயதிர
நாகசின்ன மூத நாட்டியங்க ளாடிவர       1420

கட்டியங்கள் கூறக் கவிவாணர் பாடிவரப்
பஞ்சவர்ண டால்விருது பக்கமே சூழ்ந்துவர
வைகைக் கரைவிட்டு வருகிறார் வீரையனும்
சாமயன் சேனைதளம் சதுராக முன்வந்து
வாருமென்று சொல்லி வகையுடனே தானழைத்து       1425

இருவர் படையும் யெண்ணற்ற காலாளும்
அதட்டி நடந்தார்கள் அன்பான சேனைதளம்
பூமி யதிரப் பூலோகம் தத்தளிக்க
பட்டணத்தி லுள்ள பரிசனங்க ளத்தினையும்
மச்சேறிப் பார்ப்பாரும் மதிலேறிப் பார்ப்பாரும் 1430

குட்டிச் சுவரேறிக் குதிச்சோடி பார்ப்பாரும்
வீதியி லுள்ளசனம் வேடிக்கை பார்ப்பாரும்
மதுரைத்தெரு வீதிவிட்டு வடக்குநல் வாசலிலே
மயங்காமல் வீரையனும் வரிசையுடன் கூடாரம்
அடித்தான்காண் கூடாரம் அண்டமெல்லாந் தானதிரத்       1435

திருமலை நாயக்கா செண்ப (க) மணி மாளிகைக்குப்
பொம்மியரைத் தானும்வைத்து பெர்றுமையுள்ள வீரையனும்
பாங்கான வீரையனும் பல்லக்குத் தானேறி

மதுரைவீரன் திருமலை நாயக்கரைச் சந்தித்தல்

திருமலை நாயக்கர் சிறப்பாய்க் கொலுவிருக்கும்
ஆசார வாசல்முன்னே அன்பாகத் தான்போய்ப்       1440

பல்லக்கு விட்டிறங்கிப் பாங்கான வீரையனும்
திருமலை நாயக்கரைத் திறமாகக் கைதொழுதார்
கூடவே கைதொழுதார் குணமுள்ள கர்த்தாவும்
வாருமென்று சொல்லி வரிசை யிடங்கொடுத்தார்
அப்போது வீரையனும் அன்பான வார்த்தைசொன்னார்       1445

பதினைஞ்சு நாளையிலே பாங்கான கள்ளரைத்தான்
வெட்டிக் கருவறுத்து விருதுபெற்று வாரனய்யா
என்றுசொல்லி வீரையனும் ஏற்றமுடன் தானுரைத்தார்.
நாயக்க ரதுகேட்டு நன்றாகத் தான்மகிழ்ந்தார்
வீரையர்க்குத் தானும் வெகுமதியுந் தான்கொடுத்து       1450

வண்டநல்ல வீரையனும் வாங்கினார் வெகுமதியை
அடைக்காயும் வெற்றிலையும் அன்பாகத் தான்கொடுத்து
அரண்மனைக்குப் போமென்று அனுப்பிவைத்தார் வீரையனை
வீரையனு மப்போ மெள்ள எழுந்திருந்து
ஆசார வாசல் அரண்மனையைத் தான்நோக்கி       1455

ஏறினாா பல்லக்கு எண்ணமற்ற சேனையுடன்
சீக்கிரமாய்த் தானே சேனையுடன் மெள்ளவந்து
அரண்மனையில் வந்து அன்பாக வீற்றிருந்தார்
பாங்கான மூதையர்க்குப் படிச்செலவு தானமர்த்திச்
சேனைபடை காவலர்க்குச் செல்லுமென்ற திரவியங்கள்       1460

அடவுடனே கொடுத்துவிட்டார் அன்பான வீரையர்க்கு
வாங்கியே செலவுபண்ணி வகையுடனே வீற்றிருந்தார்
அந்த நாள் சென்று அலைகதிரோன் வந்துதித்தார்
காலமே எழுந்திருந்து கால்முகம் சுத்திபண்ணிப்
பட்டண மெல்லாம் பாங்குடனே சுற்றிவந்து       1465

சாப்பிட் டிளைப்பாறிச் சாமிமுத்து வீரையனும்
[60]சாயரட்ச வேளைக்குத் தங்கதுரை வீரையனும்
தீவிட்டிச் [61] சலாத்துடனே சீக்கிரமாய்த் தான்போய்
சொக்கருட சன்னதியில் துருசாகத் தான்போய்
சீர்பாதம் தன்னைக்கண்டு சேவித்து வருகிறதும்       1470
---------
[53]. மறுநாள்             [54]. அதிரித்தம் - மிகுதி
[55]. சலாத்தி-திரைச்சீலை
[56]. நூதன், கட்டியங் கூறுவோன்       [57]. மேட்டினாம்தலைமை
[58]. உத்திரத்தை என்றுள்ளது       [59]. பிரதானி -அதிகாரன், பொக்கிஷக்காரன்
[60]. சாயரட்சை-சாயங்காலம்             [61]. சலாத்தி திரைச்சீலை
-------------

இப்படித் தானும் யிருக்குமந்த வேளையிலே
தன்னரசு நாட்டு தனிக்காட்டுக் கள்ளரெல்லாம்
நாட்டிலுள்ள கள்ளரெல்லாம் நலமுடனே கூட்டமிட்டு
வாள் தடியுஞ் சக்கரமும் வகையுடனே தானெடுத்து
ஈட்டிக்கோல் தானெடுத்து ஏவலருங் கூட்டமிட்டு       1475

மதுரைக் கடைவீதி வந்துமெள்ளத் தாம்புகுந்து
காசுபணம் ரொக்கம் கனமாகக் கொள்ளையிட்டுப்
பட்டுப் பட்டாவிளிகள் பாங்காகக் கொள்ளையிட்டுப்
பட்டணத்தி லுள்ள பரிசனங்க ளெல்லோரும்
கோவென்ற சத்தம் கூக்குரலுந் தானாகிப்       1480

பட்டணத்துத் தலையாரி பாங்குடனே ஓடிவந்து
திருமலைநா யக்கரிடம் திறமுடனே சொப்பலுற்றார்
திருலைநா யக்கர் சேதி தனைக்கேட்டு
ஆணிமுத்து வீரையனை அன்னேரந் தானழைத்து
அடைக்காயும் வெள்ளிலையும் அன்பாகத் தான்கொடுத்து 1485

வெட்டிக் கெலித்து விருதுபெற்று வாருமென்று
போற்றி விடைகொடுத்துப் போய்வாரு மென்றுரைத்தார்
நல்லதென்று சொல்லி நளினமுள்ள வீரையனும்
ஏறினார் குதிரை எண்ணற்ற சேனையுடன்
சேனைப் படைத்தலைவர் சிறப்புடனே கூட்டமிட்டு       1490

வடக்குநல்ல வாசல்விட்டு வகையுடனே தான்நடந்தார்
நலமுடனே வீரையனும் நடந்தார்கா ணம்மானை
பொல்லாத வீரையனும் பொங்கியே கோபமுடன்
பட்டாவுருவி [62]பரிஞ்சிமேல் கைபோட்டார்
கள்ளர் படையில் கருத்துடனே போய்ப்புகுந்து       1495

பீரங்கிக் கத்தி பெரியகத்தி தானெடுத்து
வீசினார் கள்ளரையும் வீராதி வீரையனும்
முன்வீச்சுக் காயிரம்பேர் பின்வீச்சுக் காயிரம்பேர்
இந்தப் படியாக இறக்கடித்தான் வீரையனும்
தன்னரசு நாட்டுத் தனிக்காட்டுக் கள்ளரெல்லாம்       1500

கொக்கரித்துச் சேனைதளம் கோடிபடை தானடந்து
வாள்தடி சக்கரத்தால் வகையுடனே தானெறிந்தார்
ஈட்டிக் கோலாலே யெறிந்தார்கள் வீரையனைக்
கள்ளர் படைபொருது காரணனும் தென்மதுரை
கண்கள் சிவந்து கடுங்கோபம் தானாகி       1505

[63] ஐவிரலிக் கண்கள்ரெண்டும் செவ்வரளி பூத்ததுபோல்
வாயா லுதிரம் வலதுகண்ணால் செஞ்சாரல்
மட்டுக் கடங்காத மதுரா புரிதுரையும்
வர்குதார் பெரியகத்தி வகையுடனே தானெடுத்துக்
கொக்குத் திரளிலே ராசாளிப் பாய்ந்தாற்போல்       1510

பொல்லாத வீரையனும் பொங்கியே வீசலுற்றார்
கள்ளர் படைகளெல்லாம் கலங்கியே மெய்மறந்து
காலொடிந்து வீழ்வாரும் கையொடிந்து வீழ்வாரும்
மெய்யசந்து வீழ்வாரும் விதிவசமே யென்பாரும்

கள்ளர் படைகளெல்லாம் கருவறுக்க தானுமவர்       1515

எமதூத னாக இங்கேவந்தா னென்பாரும்
குத்துயி ரோடே கும்பிட்டு வீழ்வாரும்
பிள்ளை தனைநினைந்து பெருமூச்சு விடுவாரும்
இன்று முடிந்ததென்று எண்ணி விழுவாரும்
ஆதி சிவனுக்கு அபயமென்று வீழ்வாரும்       1520

ஈட்டிக்கோல் முன்வைத்து எண்ணி யழுவாரும்
அச்சமத்த நாட்டுக்கு அச்சம்வந்த தென்பாரும்
கள்ளர்ரெல்லாம் புலம்பி கைகுவித்து வீழ்வாரும்
தன்னரசு நாட்டுத் தனிக்காட்டுக் கள்ளரெல்லாம்
கொக்கரித்துச் சேனை கொடிபடை யத்தனையும்       1525

வளைதடியும் சக்கரமும் வகையுடனே எறிந்தார்கள்
ஈட்டிக் கோலாலே எறிந்தார்கள் வீரையனை
கள்ளர் படைபொருத காரணனும் தென்மதுரை
கண்கள் சிவந்து கடுங்கோபம் தானாகி
ஐவிரலிக் கண்ணிரெண்டும் செவ்வரளி பூத்ததுபோல்       1530

வாயா லுதிரம் வலதுகண்ணால் செஞ்சாரல்
மட்டற்ற கோபமுடன் மதுரா புரித்துரையும்
வாகுதார் பெரியகத்தி வகையுடனே தானெடுத்துக்
கொக்குத் திரளிலே ஆளிவந்து பாய்ந்தாற்போல்
பொல்லாத வீரையனும் பொங்கியே வீசலுற்றார்       1535

வீரையன் படைபொருத மேலோகத் தேவர்களும்
தேவதைக ளெல்லோரும் சிறப்புடனே பார்த்திருந்தார்
அப்போது வீரையர்க்கு அதிகோபம் முண்டாகிக்
கண்கள் சிவந்து கடுங்கோபந் தானாகி
ஐவிரலிக் கண்ரெண்டும் செவ்வரளி பூத்ததுபோல்       1540

கள்ளர்படை யத்தினையும் கருவறுத்துத் தான்குவித்தான்
துண்டந் துண்டமாகத் துணித்தாராம் முத்தயனும்
கொல்லி மலைபோலே குமித்தானாம் தென்மதுரை
ரணகொலுவு தானிருந்து நளினமுள்ள வீரையனும்
அல்லும் பகலும் அறுபது நாழிகையும்       1545

நாலு திசையதிர நன்றாய்க் கொலுவிருந்தான்
ரத்தினமணி வீரையனும் ரணகொலுவை விட்டிறங்கி
மதுரையைத் தான்நோக்கி வண்டத்துரை வீரையனும்
வெள்ளானை மேலேறி விருதுபெற வாரானாம்
பதினெட்டு மேளம் வாத்தியங்கள் தான்முழங்கப்       1550

பஞ்சவர்ண டால்விருது பக்கமே சூழ்ந்துவர
மதுரைத் திசைநோக்கி வருகிறார் ஆண்டவனும்
வெள்ளானை மேலேறி விருதுபெற்று வாராராம்
பதினெட்டு மேளம் வாத்தியங்கள் தான்முழங்க
வெட்டி விருதுபெற்று வீரையனு வாராராம்       1555

என்றுசொல்லித் தூதுவர்கள் இதமுடனே ஓடிவந்து
கச்சித் திருமலையன் கனத்தக் கொலுவுமுன்னே
திறமான தூதுவர்கள் செப்பலுற்றார் அந்நேரம்
கச்சித் திருமலையன் காதிலே தான்கேட்டுச்
சந்தோசப் பட்டு தாதியரைத் தானழைத்து       1560

ஆயிரம்பேர் தாதியர்க்கு மேலான தாதியரே
தேனாச்சி மீனாட்சி செண்பகப்பூ நாச்சியரே
ஆனந்த வல்லி அங்கயற்கண் மீனாட்சி
பச்சை நிறத்தாளே பவளக் கொடியாளே
கொழுந்தி செவந்தி குங்குமப்பூ மேனியரே       1565

அங்கயற்கண் மீனாட்சி அம்மனுக் குகந்தவளே
மாசுபடா பத்தினியாள் மானத்தருந் ததியாள்
ஆலாத்தி வெள்ளையரே அன்புடனே தானழைத்து
இந்தப் படிக்கு இயல்வான தாதியரே
வாருமடி தாதியரே ஒருவார்த்தைக் கேளுமடி       1570

கள்ளர் பத்துநாடும் கருவறுத்த வீரனுக்கு
வெட்டி விருதுபெற்று வீரையனும் வாரானாம்
ஆலாத்தி தானெடுங்கள் அன்புடனே நீங்களும்தான்
வீரையர்க்கு ஆலாத்தி விதமுடனே தானெடுங்கள்
வாருங்கள் என்றுசொல்லி வரிசையுடன் அனுப்பிவைத்தார்       1575

ஆலாத்தி சோடித்தார் அஞ்சுலட்சம் தாதியர்கள்
முத்தினா லாலாத்தி மூவாயிரங் கோடி
பவளத்தா லாலாத்தி பதினா யிரங்கோடி
ஆலாத்தி சோடித்தார் ஐந்நூறு தாதியர்கள்
ஆணிமுத்து வீரையர்க்கு அன்பாகச் சுற்றினார்கள்       1580

அஞ்சுலட்சம் தாதியர்க்கு மேலான தாதியரே
ஆலாத்தி வெள்ளையரை ஆணிமுத்து வீரையனும்
ஏறிட்டுப் பார்த்தாராம் எண்ணமற்ற காளையரும்
இருங்காணும் பெண்ணே நீ எங்குதப்பப் போய்றா நீ
என்றுசொல்லி மதுரை இதமாய் மனதிலெண்ணி       1585

ஆலாத்திப் பெண்களுடன் ஆணிமுத்து வீரையனும்
துருசாகத் தான்நடந்தான் துரைசாமி அப்போது
வருகின்ற சப்பிரமதை வடுகத்துரை தான்பார்த்து
உப்பரிகை மேலிருந்து உம்மையுடன் பார்த்திருந்தார்
வண்டத் துரையும் வள்ளாளன் தென்மதுரை       1590

ஆனையை, விட்டிறங்கி அதிர நடந்துவந்து
பொம்மியம்மாள் அரண்மனைக்குப் பெருமையுட னேபோய்
கட்டுவர்க்கம் தான்விளைத்து காரணனு தென்மதுரை
சலக்கப் புரையிலே தான்போய் நின்றுகொண்டு
வெந்நீர் கொண்டு வீரையனும் தான்குளித்து             1595

சாப்பிட் டிளைப்பாறித் தான்படுத்துப் பஞ்சணைமேல்
மெத்தையின் மேலிருந்து மெள்ள எழுந்திருந்து
ஆலாத்தி வெள்ளையின்மேல் ஆசைகொண்டு வீரையனும்
தீராத ஆசைகொண்டு சீக்கிரமாய் எழுந்திருந்து
கட்டுவர்க்கம் தானணிந்து கனத்த பணிபூண்டு       1600

பள்ளியறை விட்டுப் பாங்கான முத்தயனும்
சிலிநல்லி கோட்டைவிட்டுச் சீக்கிரமாய்எ ழுந்திருந்து
கோட்டை தனிலேறி குதித்தான்காண் அம்மானை.
உல்லாசக் காரன் ஒயிலழகன் வரும்போது
அங்கையற்கண் அம்மனுக்கு அடிபணியும் வெள்ளையம்மாள்       1605

மீனாட்சி சன்னதிக்கு மீனாம்பா வெள்ளையம்மாள்
தூங்குமஞ் சக்கட்டில் துலங்க அலங்கரித்துப்
பஞ்சணை மெத்தையின்மேல் படுத்திருக்கும் வேளையிலே
நினவு தெரியாமல் நித்திரை செய்கையிலே
வண்டத் துரைச்சாமி வள்ளாளன் தென்மதுரை       1610

உல்லாச மாக ஒயிலழகன் தென்மதுரை
விதிப்பயனே அறியாமல் மெல்லியர்மே லாசைகொண்டு
மதிலேறித் தான்குதித்து மண்டபமுந் தான்கடந்து
வெள்ளையம்மாள் வாசல் முன்பாக வந்துநின்று
கள்ளர்வண்டர் போலே காரணனும் தென்மதுரை       1615

பலுக்கினி வாசல்வழி பாங்குடனே தான்நுழைந்து
பத்தினியாள் பள்ளிகொண்ட பஞ்சணை மெத்தையின்மேல்
இருந்து நினைந்தான்காண் ஏற்றமுள்ள வீரையனும்
மங்கையரைத் தானெழுப்ப [64]வாயசம் தானுமில்லை
கன்னியுட தன்னிலவு கண்டறியப் போகாது       1620

என்றுசொல்லி வீரையனும் இதமுடனே தானினைந்து
தட்டி யெழுப்பினால் தைய லெழுந்திருப்பாள்
கூவென்னா வெள்ளையளும் கோவில் பரிசனங்கள்
வந்து நிரைந்து வழிமறித்துக் கொள்வார்கள்
என்று பலநினைவாய் எண்ணியே தானினைந்து       1625

அட்டாலைச் சொக்கர் அங்கையற்கண் மீனாட்சி
மூவர் துணையென்று மூர்க்கமுள்ள தென்மதுரை
இங்கொன்று பண்ணினால் ஏற்காது ஈசுபரிக்கு
என்றுசொல்லி வீரையனும் எழுந்திருந்தா ரந்நேரம்
தோளிலே போட்டிருந்த துப்பட்டி தனைவிரித்து       1630

மெள்ள நலியாமல் மெல்லியரைத் தூக்கிவைத்து
கட்டி யிறுக்கிக் காரணனுந் தென்மதுரை
தூக்கியே மெள்ள தோள்பாரம் தான்போட்டு
மாளிகையை விட்டு மண்டபமுந் தான்கடந்து
கோவில் வாசல் குதித்துமெள்ளத் தானிறங்கிப்       1635

பொல்லாத வீரையனும் பொறுமையுடன் தான்நடந்தார்
தானிருக்குங் கோட்டை தாண்டிக் குதிக்கையிலே
கண்டாரே சேவுகரும் கள்ளனென்று தான்பிடித்து
ஆரென்று சொல்லி அதட்டியே தான்கேட்கத்
தங்கதுரை வீரையனும் தனஞ்சயனும் தானுமப்போ       1640

தோள்பாரம் தான்வாங்கி சுகமுடனே முன்வைத்து
என்னசொல்லப் போறமென்று ஏங்கி முகம்வாடி
பத்தினியைக் கொண்டுவந்த பாவம் பலித்ததென்று
மனதிலே எண்ணி மயங்கியே தானிருந்தார்
ஒன்றும் தெரியாத ஊமையனே போலிருந்தார்       1645

பேசத் தெரியாத பேயனே போலிருந்தார்
அப்போது சேவுகரும் அடவாக ஏதுரைப்பார்
எந்தவூரடா நீதான் இயல்பாகச் சொல்லுமடா
உள்ளதைச் சொல்லாட்டி உயிர்த்தூண்டி போட்டிடுவேன்
வந்த விடமும் வகைவிவரஞ் சொன்னாக்கால்       1650

வீரையர்க்குச் சொல்லாமல் விட்டிடுவோம் உந்தனைதான்
இல்லாது போனால் எசமானிடஞ் சொல்லிப்
பண்ணாத கீர்த்தி பண்ணிவைப்போம் பாதகனே
என்றுசொல்லித் தானும் இதமுடனே தான்கேட்க
வாயைத் திறவாமல் மறுவார்த்தை பேசாமல்       1655

ஒன்றுந் தெரியாத உத்தமனைப் போலிருந்தான்
சேர்வைக் குறிக்காரர் சேர்ந்ததொரு ராணுவங்கள்
எல்லோருங் கூடி ஆகட்டு மென்றுசொல்லி
ஏற்றதொரு வீரையனை எழுப்பினதே ஆனாக்கால்
வாளுக் கிரையிடுவான் மதுரை மகாமுனியும்       1660

இப்படிப் பலநினைவு இதமுடனே தானினைந்து
திருமலைநா யக்கருக்குச் சேதிசொல்லி வாருமென்று
அனுப்பிவைத்தார் தூதுவரை ஆனதொரு சேவுகரும்
தூதுவரும் போய் துரைராசர் மன்னவனை
ஆசார வாசல்நின்று அன்புடனே கூப்பிட்டார்             1665

திருமலை நாயக்கர் செவியிலே தான்கேட்டு
யாரடா தூதுவனே அதிசயங்க ளுண்டோதான்
என்றுசொல்லி நாயக்கர் இதமுடனே தான்கேட்கத்
தூதுவனு மப்போ துரைராசர் மன்னவர்க்கு
அய்யாவே சுவாமி அதிசயங்க ளொன்றுமில்லை       1670

உள்கோட்டை தானிருந்து [65]உம்மையுடன் கன்னமிட்டு
கோட்டை தனிலேறிக் குதித்துமெள்ள வருகையிலே
கள்ளனையுங் கண்டு கைப்பிடியாய்த் தான்பிடித்தோம்
யாரென்று சொல்லி அதட்டியே தான்கேட்டோம்
வாயைத் திறவாமல் மறுவார்த்தை சொல்லாமல்       1675
-----------
[62]. பரிஞ்சு - வாட்பிடி       [63]. ஐவிரலி - கொவ்வை
[64]. இச்சக மொழி முதலியவற்றால் பிறரை வீசப்படுத்துதல்
[65]. உண்மை என்பதனை வழக்காற்றுச்சொல் உம்மை எனக்குறிக்கப் பட்டுள்ளது.
-------------

ஊமை யனைப்போல உட்கார்ந் திருக்கிறான்
மதுரை வீரையனுக்கு வகையுடனே தானுரைத்தால்
வாளுக் கிரையிடுவான் வண்டத் துரைவீரையனும்
என்று சொல்லிச் சேவுகரும் இதமுடனே எனையழைத்து
அறிக்கையிட்டு வரச்சொல்லி அனுப்பிவைத்தா ரிப்போது       1680

நல்லதென்று சொல்லி நாயக்க ரதுகேட்டு
இன்னேர மேசென்று ஏற்றதொரு கள்ளனைத்தான்
மாறுகால் மாறுகை வாங்குமென்னு தானுரைத்தார்
உத்தாரம் பண்ணி (யுடனே அனுப்பிவைத்தார்
நல்லதென்று சொல்லி நலியாம லோடிவந்து       1685

தூது வனும்போய்ச் சொல்ல லுற்றாரப்போது
இந்நேரமே சென்று ஏற்றதொரு கள்ளனைத்தான்
கால்கை வாங்கக் கட்டளையு மிட்டார்காண்
என்றுசொல்லித் தானும் இதமுடனே தானுரைத்தார்      
அந்தச் ணமேதான் ஆணிமுத்து வீரையனை 1690

எண்ணற்ற சேவுகரும் இதமுடனே கீர்த்திபண்ணி
மாறுகால் மாறுகை வாங்கிவிட்டார் வீரையனை
வண்டத்துரை வீரையனும் (..) தென்மதுரை
ஆதி சிவனுக்கு அபயமென்று - தானினைந்து
இப்படித் தானும் இருக்குமந்த வேளையிலே       1695

கங்குல் விடிந்து கதிரோனும் வந்துதித்தான்
பொழுது விடிந்தபின்பு 'போய்நல்ல ( )
ஆணிமுத்து வீரனென்று எல்லோருந் தானறிந்து
அய்யோ சிவனேயென்று அறியாமல் செய்தோமே
வீரைய னென்று விதமுடனே தெரியாமல்       1700

என்று சொல்லிச்சேவுகரும் இதமுடனே கண்கலங்கிக்
காலிலே விழுந்து கதறி யழுவாரும்
ஆரோதா னென்று அறியாமல் செய்துவிட்டோம்
என்று சொல்லிச் சேவுகரும் இதமுடனே புலம்பலுற்றார்
பொங்கியே சேவுகரும் புலம்பி யழுகலுற்றார்       1705

உலையிலிடு மெழுகதுபோல் உள்ளமெல்லாம் தானுருகி
என்றுசொல்லித் தானும் ஏங்கி யழுகலுற்றாள்
மன்னவரே என்சாமி வந்தவகை சொல்லுமென்றாள்
பொம்மியருங் கேட்கப் புண்ணியனும் தென்மதுரை
வாருமடி பொம்மி வந்தவகை சொல்லுகிறேன்       1710

ஆதிசிவன் பிர்மாவும் அன்பான மாயவரும்
கூடி எழுதினதைக் குறைப்பாரோ வையகத்தில்
எழுத்தைத் துடைக்க எவராலும் முடியாது
பொம்மியரே நானும் பூமியி லிருப்பதில்லை
மீனாட்சி பொற்பாதம் விருப்பமுடன் சேர்வனடி       1715

[66]அரைச்சணம் நானிருக்க அதிகார மில்லையடி
என்றுசொல்லி வீரையனும் இதமுடனே தானுரைத்தார்
ஆரணங்கு பொம்மி அதுசேதி தான்கேட்டு
மன்னவனே யுன்னைவிட்டு மண்ணி லிருப்பதில்லை
வருவேன்காண் குணமுள்ள ராசமன்னா       1720
-------------
[66]. சணம்- நொடிநேரம்
-------------

என்றுசொல்லி பொம்மி இதமுடனே தான்நடந்தாள்
வைகை நதியிலே வாள்மயிலாள் ஸ்நானம்பண்ணிக்
கூந்த லுதறிக் கோடாலி தான்முடிந்து
கூறை யுடுத்திக் கோலப் பணிபூண்டு
வாகுசுட்டி கட்டி மயிரால் பிறைமுடித்துக்       1725

காதிலே ஓலையிட்டுக் கழுத்தில் சரமணிந்து
ஆபரண மெல்லாம் அன்பாகத் தானணிந்து
சிவசிவா வென்று திருநீறு தானணிந்து
அரகரா மீனாட்சி அடியாளும் வாறேனம்மா
சிவசிவா சொக்கலிங்கம் சீர்பாதங் காணவென்று 1730

அடியாளும் வாறேனய்யா ஆனசொர்க்கம் தரவேணும்
சாக வரங்கோரிச் சமுத்திரத்தில் தானிருந்து
இப்படித் தானும் இருக்குமந்த வேளையிலே
ஆலாத்தி வெள்ளை ஆண்பெண் மங்கையரும்
வீரையன் முன்வந்து விதமுடனே ஏதுரைப்பாள்       1735

வாருங்காண் ராசமன்னா ஒருவார்த்தை சொல்லக்கேளும்நீ
ஆனதிரு மேனிக்கு அசடுவந்து சேர்ந்ததுகாண்
துன்பம்வந்து நேர்ந்ததென்று துயரப்பட வேண்டாங்காண்
மன்னவனே யுந்தனுக்கு வரந்தருவாள் மீனாட்சி
தெய்வமாய் நின்று தேசத்தை ஆள்வீர்காண்       1740

மீனாட்சி யம்மன் வேண்டிய வரந்தருவாள்
மதுரை வீரனென்று மண்டலத்தா ரெல்லோரும்
கொண்டாடிப் பூசையிட்டுக் குணமுடனே கைதொழுவார்
ஆண்டவனே சுவாமி அடியார்க்குப் புத்திசொல்லும்
கைதொட்டு நீஎடுக்க என்கற்புக் குலைந்ததுகாண்       1745

ஆசையுடன் நீரெடுக்க அடியாளு மானேங்காண்
என்னுயிர் மன்னவனே யிங்கிருக்கம், போறதில்லை
கூட வருவேன்காண் குணமுள்ள ராசமன்னா
மண்ணி லுயிரை வைத்திருக்கப் போறதில்லை
என்றுசொல்லி வெள்ளையரும் இதமுடனே வீற்றிருந்தாள்       1750

பட்டணத்தி லுள்ள பரிசனங்க பரிசனங்க ளெல்லோரும்
இதுசேதி கேட்டு எல்லோரு மப்போது
மகாதேவன் தன்பலத்தை வாங்கினார் ஈசுபரரும்
உனக்கு வருவினையோ உத்தமனே சொல்லுமென்று
மண்ணும் மரமும் வாய்விட் டழுகுதய்யா       1755

ஆணிமுத்து வீரையர்க்கு அபக்கேடு வந்ததென்று
திருமலை நாயக்கர் சேதி தனைக்கேட்டு
அன்பான பிள்ளைக்கு அசடுவந்து நேர்ந்ததென்று
ஆசார வாசல்விட்டு அலறியே தான்குதித்து
ஆடை குலைய ஆபரணந் தான்குலுங்க       1760

பல்லக்கு ஏறாமல் பரியின்மேற் கொள்ளாமல்
ஓட்டமாய் ஓடிவந்து உத்தமனைத் தான்பார்த்து
அப்பா மகனேயென்று அலறியே போய்விழுந்தார்.
கட்டி யணைத்து என் கண்மணியே நீதானும்
திருச்சினாப் பள்ளிவிட்டுத் தென்மதுரை வருகையிலே 1765

பொன்னான மேனியைப் போக்கடிக்க வந்தாயோ
அப்பா மகனே என் அன்புள்ள வீரையனே
கட்டி மகனேஎன் கண் ணாளா வீரையனே
உன்னைப்போல் பிள்ளை உலகத்தில் காண்பேனோ
கள்ளர்பத்து நாடும் கருவறுத்து வந்தீரே 1770

வந்ததே போதுமென்று மகிழ்ச்சியா நானிருந்தேன்
உந்தனுக்குத் தானும் உகந்தபெண் வேண்டுமென்று
எந்தனுட பெண்மேலே இச்சையாய் வந்தாலும்
கூட்டிவந்து நானும் கோலமுடன் மாலையிட்டுக்
கண்ணழகு பார்ப்பேனே கட்டழகா வீரையனே       1775

வெள்ளையளே வேணுமென்று விரும்பியே சொன்னாலும்
கூட்டிவந்து நான்தருவேன் கொற்றவனே வீரையனே
வெள்ளையளைத் தானெடுத்து வெளிப்பட்டு வருகையிலே
காவலர்கள் கண்டு கைப்பிடியாய்த் தான்பிடித்து
ஆரென்று சொல்லி அதட்டியே கேட்டாரே       1780

நான்தாண்டா வீரனென்று நலமுடனே சொன்னாக்கால்
இந்த அபகீர்த்தி ஏன்வரும் வீரையனே
என்று சொல்லித் திருமலையன் ஏங்கியே தான்புலம்பி
மீனாட்சி சன்னதிக்கு விருப்பமுடன் தான்போய்
அம்மனுட பாதத்தில் அடிவணங்கித் தெண்டனிட்டுத்       1785

தாயே பராசக்தி தமியனான் செய்தபிழை
கொண்டு பொறுத்துக் குழந்தையைக் காருமம்மா
சிறியோர்கள் செய்தபிழை பெரியோர் பொறுக்கவேணும்
ஆயிபர மேசுபரியே ஆனவரம் தரவேணும்
நான் கேட்ட வரந்தானும் கிருபையுடன் தரவேணும்       1790

அன்பான பிள்ளைக்கு [67]அமடுவந்து நேர்ந்ததம்மா
கள்ளர்பத்து நாடும் கருவறுத்த வீரையர்க்குத்
தெள்ளுமைக் காரனுக்குத் தீங்குவந்து நேர்ந்ததம்மா
வந்தவினை நீக்கி வரந்தர வேணுமம்மா
அறுத்தகை கால்வளர அன்பாய் வரந்தருவாய்       1795
------
[67]. அமடு-சிக்குதல்
---------

வரந்தர வேணுமம்மா மாதாவே என்தாயே
வணங்கியிரு கைகூப்பி மலரடியைத் தான் வணங்கி
மனமுங் குளிர்ந்து மனோமணியு
கேட்கும் பொழுது கிருபையுள்ள பத்தினியாள் மேதுசொல்வாள்
கைகால் வளரக் கட்டளையு மிட்டாளே       1800

அறுத்தகை கால்வரை அம்மணியும் விடைகொடுத்தாள்
விடைவாங்கிக் கொண்டு வேகமாய் வந்தாராம்
மண்டபம் விட்டு வாராரே வாராரே திருமலையன்
மதுரை யிருக்கும் மண்டபத்தில் வந்துநின்று
பார்க்கு மிடத்தில் பாங்கான வீரையர்க்குக்       1805

கால்கைகள் தான்வளர்ந்து கட்டழகன் வீற்றிருந்தான்
இப்படித் தானும் இருக்குமந்த வேளையிலே
வேடிக்கை பார்த்து வீற்றிருந்தார் தேவரெல்லாம்
அப்போது கன்னியர்கள் அடவாக ஓடிவந்து
வீரையன் பாதம் விதமுடனே தெண்டனிட்டுத்       1810

தெண்டனிட்ட மங்கையரும் தேவியரும் தான்பார்த்து
ஆதிசிவன் மாயவரே அன்பர் மனதிலெண்ணி
அழகிய சொக்கரையும் அன்பாய் மனதிலெண்ணி
மனதிலே தான்நினைத்து வகையா யிருவருந்தான்
மீனாட்சி கிருபையினால் வீரையன் எழுந்திருந்து 1815

கால்கை வளர்ந்து கடுக எழுந்திருந்து
திருமலை நாயக்கர் சீக்கிரமாய் ஓடிவந்து
வாருங்காண் ராசாவே வார்த்தைசொல்லக் கேளும்நீ
மறுப்படா வம்மிசத்தில் வந்து பிறந்தேன்நான்
மறுப்படா மேனியிலே மறுப்படவும் ஆச்சுதுகாண்       1820

மண்ணி லிருப்பதில்லை மாய்வதோ நிச்சயங்காண்
பெண்ணாலே நம்முயிரு பொன்னுலகம் சேருதய்யா
பிருமதே வன்யெழுத்தை விலக்க முடியாது
அன்று எழுதினதை அழித்தெழுதப் போகாது
என்றுசொல்லி வீரையனும் இப்படிக்குத் தானுரைக்கக்       1825

கருத்தில் திருமலையர் காதாலே தான்கேட்டுக்
கண்கலங்கி ராசாவும் கதறி யழுதாராம்
அழுதுமந்த ராசாவும் அவர்முகத்தைத் தான்பார்த்து
என்னசொல்லப் போறேன் ஏற்றமுள்ள சேவுகனே
மேனியைக் காட்டி விளக்கநீர் வந்தீரோ       1830

எண்ணமற்ற காளையைப்போல் எனக்குதவி ஆகுமோ
திருச்சினாப் பள்ளிவிட்டு தென்மதுரை வருகையிலே
பொன்னான மேனியைப் போக்கடிக்க வந்தாயோ
என்று புலம்பி ஏங்கி முகம்வாடி
முத்துப்போல் கண்ணீரை முகத்தோடு சோரவிட்டார்       1835

மாரளவு கண்ணீரைத் தாரைவிட்டுத் தான(ழுக)
பொல்லாத முத்தயனும் பொறுமையுடன் தான்பார்த்து
வாருங்காண் ராசமன்னா வார்த்தைசொல்லக் கேளும்நீ
வாழ்வு பெருஞ்செல்வம் மயக்கமிது ராசாவே
நீர்மேல் குமிழி நிச்சமத்த தன்வாழ்வு       1840

என்று இருந்தாலும் இறப்பதே நிச்சயங்காண்
ஆகையி னாலே அழுகவே வேண்டாங்காண்
சலித்துநீர் தானழுக தருமமல்ல ராசாவே
என்றுசொல்லி வீரையனும் இதமுடனே தானுரைத்தார்
வாரி யெடுத்து மார்போட தானணைத்துக்       1845

கண்ணீர் தனைத்துடைத்துக் கலங்க நீ வேண்டாங்காண்
இருவருங் கூடி ஏற்கவே தான்நடந்து
ஆசார வாசல் அடவுடனே தான்கடந்து
மாந்தோப்புக் குள்ளே வைகைக்கு மேல்புறமாம்
நாற்சமுக்க மாக நன்றாய்க் குழியைவெட்டி       1850

சந்தனக் கட்டைகொண்டு தயவாகத் தானடுக்கி
தீவளர்க்கச் சொன்னார் தீர்க்கமுள்ள வீரையனும்
அண்டங் கிடுகிடுடென ஆகாசம் பொறிபறக்கத்
தீக்குழியைச் சுற்றித் திறமாகப் பந்தலிட்டுச்
சாத்திரங்க ளெல்லாம் தயவாக உண்டுபண்ணி       1855

ஆலாத்தி சுத்தும் ஆனபெண்ணாள் வெள்ளையரும்
ஆசை யுடன்கூடி அடவுடனே வாழ்ந்திருக்கப்
பொன்னினந் திருமேனி பொறுமையுள்ள பொம்மியரும்
இருவரையும் தானழைத்து ஏற்றமுள்ள வீரையனும்
சனத்துக்கோ ராயிரம்பொன் தான்கொடுத்து வீரையனும்       1860

வாருமடி பெண்ணேஒரு வார்த்தை சொல்லக் கேளுமடி
கன்னி யிருவரையும் கைலாசஞ் சேருமென்றார்
என்றுசொல்லி வீரையனும் இயல்புடனே தானுரைத்தார்
அப்போது கன்னியர்கள் அதுசேதி தான்கேட்டுக்
காதினால் தான்கேட்டுக் கன்னியருந் தானுமப்போ       1865

வைகையிலே ஸ்நானம்பண்ணி மயிராத்திப் பின்போட்டு
இழையாயிரம் பொன்பெற்ற இந்திரவர்ணப் பட்டுடுத்திச்
சருவா பரணமெல்லாம் தானெடுத்து மேல் பூட்டி
பூவையர்கள் இருவருந்தான் பூச்செண்டு கைபிடித்து
எலும்பிச்சங் கனிபிடித்து இயல்பா யிருவருந்தான்       1870

அரகரா வென்றுசொல்லி அணல் குழியைச் சுற்றிவந்து
அழகிய சொக்கரையும் அங்கயற்கண் அம்மனையும்
தியானித்துக் கொண்டு தீக்குழியைச் சுற்றிவந்து
பறராச மன்னரெல்லாம் பக்கமே சூழ்ந்துவரப்
பட்டணத்தி லுள்ள பரிசனங்க ளெல்லோரும்       1875

வந்து நல்ல கூடி வகையாகத் தான்கூடி
ஆதிசிவன் மாயவரும் அன்பானத் தேவர்களும்
கைலாச மேயிருந்துக் காரணமாய்ப் பார்த்திருந்தார்
இருவருங் கைகோர்த்து இதமுடனே தான்குதித்தார்
ஆகாசம் பூமி அம்பாய்ப் பறந்தாற் போல்       1880

வீரையனு மப்போது விதமுடனே ஓடிவந்து
தீக்குழியை மூடி சிறப்பாய் கடன்தீர்த்து
நன்மைகளும் தின்மைகளும் நன்றாகத் தான்பண்ணி
வைகை நதியில் வகையாக ஸ்நானம்பண்ணி
பொற்றா மரைக்குளத்தில் போயிறங்கி ஸ்நானம்பண்ணி       1885

கோடாலி முடியவிழ்த்து குளத்திலே ஸ்நானம்பண்ணி
அட்டாலைச் சொக்கரையும் அங்கயற்கண் அம்மனையும்
தியானிச்சு அப்போது தீர்க்கமுள்ள வீரையனும்
சிவசிவா வென்றுசொல்லித் திருநீறு தானணிந்து
பாத சரமணிந்து பஞ்சாட்சர மணிந்து       1890

காலில் சதங்கையிட்டுக் கைப்பிரம்பு தானெடுத்துப்
பார்த்தனு மப்போ பறையனைப்போல் வேசங்கொண்டு
மாடொறுக்கும் பெரியதடி [68]மதகுளிரும் தோளில்வைத்து
கன்னறுக்குஞ் [69] சூரி கச்சைப்புரை தன்னில்வைத்து
மாடறுக்குஞ் சூரி வலதுபுறம் தான்சொருகி       1895
-----------
[68]. குளிர் - தட்டை ஏனும் ஒலி செய்யும் சாதனம்
[69]. சூரி - மடக்குக்கத்தி
------------

வாயா லுதிரம் வலது கண்ணில் செஞ்சாரல்
கண்ணா லுதிரம் கடைக்கண்ணால் நீர்போலப்
பொந்திப் பசியாலே பொல்லாத வீரையனும்
கண்ணில் பொறிபறக்கக் காளைமுத்து வீரையனும்
உண்டுபின் தான்படுத்து உறங்குகின்ற வேளையிலே       1900

நஞ்சுதின்று நஞ்சறுக்கும் நடுச்சாம வேளையிலே
அரண்மனையை நோக்கி அதட்டி வரும்போது
பட்டணத்தி லுள்ள பாரமுனிக ளெல்லாம்
பாதகன்முன் னேவந்து பாதம் பணியுதப்போ
சந்தியி லுள்ள தனிக்கருப்பு உள்ளதெல்லாம்       1905

வண்டத்துரை வீரையனும் வார வழிதனிலே
எதிரே வரப்பயந்து இறப்பில் நுழைவதுவும்
எல்லா அதிசயமும் இன்பமுடன் தான்பார்த்து
மன்னன் அரண்மனையில் மதிலேறித் தான்குதித்துக்
கச்சித் திருமலையன் கனகரத்தின மாளிகையில்       1910

சப்பிர மஞ்சக்கூடத்தில் தங்கத்திருப்ப் கட்டிலின்மேல்
உல்லாச மாசு ஒழுகுதலைக் காணிவைத்து
குத்து விளக்கெரியக் கோலப் பணிபூண்டு.
சந்தனம் கஸ்தூரி சவ்வாது புனுகணிந்து
மல்லிகைப்பூ முல்லை மரிக்கொழுந்து வாசமுடன்       1915

பள்ளியறை மண்டபத்தில் பதுமைகளும் சித்திரமும்
இதனில் உன்னதமாய் ஏற்றமுள்ள ராசாவும்
பைங்கிளியும் தானும் பள்ளிகொண்டு தானிருக்கும்
வாசல் மணிமுகப்பில் வாசல்தொறும் [70]தலையாரி
முப்பது பேரும் முழிப்புடனே காத்திருக்க       1920
------------
[70]. தலையாரி - காவற்காரன்
------------

இப்படிக் காத்திருக்கும். ஏற்றமுள்ள அரண்மனையில்
வந்தான் வீரனுந்தான் மதயானைப் போலேதான்
பொல்லாத தென்மதுரை பறையனைப்போல் வேசங்கொண்டு
கண்ணாலே தான்பார்த்துக் கைகொட்டித் தான்சிரித்து
ஆண்மையும் புசபலமும் அறிந்துமெல்லப் பார்ப்பமென்று       1925

அஞ்சா மதயானை அடங்காத காளையிவன்
புலையனைப்போல் சொப்பனத்தில் பொறுமையுள்ள தென்மதுரை
அரட்டியும் சொப்பனமும் அலங்கோல மாகவும்தான்
வாயா லுதிரம் வலதுகண்ணால் செஞ்சாரல்
காளைமுத்து வீரையர்க்குக் கடுங்கோபந் தானாதி 1930

கன்னறுக்குஞ் சூரி கடுசாகத் தானெடுத்துப்
பஞ்சகல் யாணி பதினாயிரம் குதிரைகளை
அரைநொடியில் தானும் அறுத்துமிகக் குமித்துப்
பீரங்கி வண்டி பிரபலமாய்த் தானிழுக்கும்
வண்டி எருது வாய்த்ததோ ரானையெல்லாம்       1935

அதட்டிக் குலவையிட்டு ஆண்டவனுந் தென்மதுரை
மண்டியிட்டுத் தான்தட்டி மதுரை மகாமுனியும்
பார்த்த ரிசபமெல்லாம் பதறி விழுந்ததுவே
தாண்டிக் குதித்துத் தாடாளன் தென்மதுரை
பாதகத்துக் கஞ்சாத பழிகார வீரையனும்       1940

தாண்டிக் குதித்து தாடாளன் தென்மதுரை
ஆனதொரு காளையெல்லாம் அடிவயிற்றில் சூரிகொண்டு
கால்வயிறு பசியாறி கல்கோட்டை தான்கடந்து
கட்டுத்துறை காவல்கொண்டு காரணனும் தென்மதுரை
உக்கிரானம் காக்கும் ஒருநூறு தலையாரி       1945

படுத்திருக்கும் சாவடியில் பாங்குடனே தான்புகுந்து
தலையாரி யாவரையும் தான்பிடித்து ஒருகையிலே
சுத்தி யெறிந்தான்காண் சுத்தாலைக் கப்புறத்தே
அந்த இடம்விட்டு அப்புறமே தான்போய்
ஆனைகட்டும் லாயம் அஞ்சாமல் போய்ப்புகுந்து       1950

மண்டியிட்டுப் பாய்ந்தான் மதயானை அப்போது
பார்த்து நல்ல வீரன் பாங்குடனே தான்சிரித்து
ஆனையை விட்டு அப்புறமே தான்போய்க்
கன்னிச் சிறுபெண்கள் கண்ணுறங்கு மண்டபத்தில்
உல்லாசக்காரன் ஒயிலழகன் தென்மதுரை       1955

கன்னியர்கள் கிட்டே காளைமுத்து வீரையனும்
உல்லாசக் காரன் ஓயிலழகன் தென்மதுரை
கொஞ்சியே தென்மதுரை கோதையரை முத்தமிட்டு
அந்நேரமே தான் ஆனதொரு பெண்களெல்லாம்
அலறி எழுந்தார்கள் ஆனதொரு கன்னியர்கள்       1960

கண்ட விடமெல்லாம் கனகூப்பா டானதுவே
அபய மென்றசத்தம் தானாச்சு அப்போது
காரணனும் தென்மதுரை கம்பத் தடியில்வந்தான்
அந்தநாள் சென்று அலைகதிரோன் வந்துதித்தான்
கஞ்சித் திருமலையன் காலமே யெழுந்திருந்து       1965

காலுமுகஞ் சுத்திபண்ணிக் கனத்த பணிபூண்டு
கட்டியங்கள் கூற கவரி பரிமாற
நாக சுரமேளம் நாட்டியங்க ளாடிவர
வீரன் குறையொழிய வேறொன்று தானுமில்லை
அவன்கோ பத்தை யடக்கிக் குணமாகக்             1970

கம்பத்தடியில் கனமாகப் பூசையிட்டுப்
பட்டண மெங்கும் பார முரசறைந்து
கந்திக்குச் சந்தி தனிக்கரும்பால் பந்தலிட்டுத்
துத்தியுடன் சாராயம் துரிதமுடன் தான்வைத்து
இந்தப் படிபண்ணி யெல்லோரும் கைமுகங்கால்       1975

வீரனுட குறையாறி விதமுடனே நிற்குமப்பால்
அப்படிக்குப் பண்னுமடா ஆலோசனை வேண்டாம்
யென்றுசொல்லித் தேவி இதமுடனே வாக்குரைத்தாள்
அப்போது திருமலையன் அன்புடனே தானெழுந்து
முக்கால் வலம்வந்து மூவிருக்கால் தெண்டனிட்டுத்       1980

தெண்டம்பண்ணி வெளியில்வந்து திருமலையன் அப்போது
ஐநூறு பொன்னெடுத் தபிசேகம் பண்ணிவைத்துக்
கம்பத் தடியில் காளையுட திருவடியில்
[71]சுத்திகரம் பண்ணிச் சுகமுடனே செப்பனிட்டு
நாலுகால் மண்டபத்தில் நவரத்தினக் கால்நிறுத்தி       1985

மண்டபமும் உண்டுபண்ணி வகையா யலங்கரித்து
அலங்கார நேத்தி அஞ்சுலட்சம் பொன்பெறும்
ஐநூறு கலஅரிசி கலஅரிசி ஆடுபன்றி கோழியுடன்
வேணுமென்ற பதார்த்தமெல்லாம் விதமாகப் பூசையிட்டுத்
தாக விடாய்நீங்கித் தங்கதுரை வீரையனும்       1990

வீதிக்கு வீதி விதமுடனே பூசைமுகம்
சந்திக்குச் சந்தி தனிக்கரும்பு நறுக்கிவைத்துத்
தேங்காய் பழமும் திரளாகத் தானும்வைத்து
இப்படி வைக்கச்சொல்லி இதமாய் முறையறைந்தார்
அந்தப் படியாக அனைவோரும் கைமுகிஞ்சு       1995

கர்த்தன் திருமலையன் கம்பத் தடியில்வந்து
நின்று நெடுநேரம் நேசமுடன் கைதொழுதார்
எனக்குத் துணையாக இயல்வாக வந்திருந்து
வந்த வினையை வகையாகத் திருமலைய்யா
இப்பவந்த வல்வினையை இப்பவே தீருமய்யா 2000

முப்பேரு மிட்டு முப்பூசை போடுகிறேன்
வினைதீர வேணுமய்யா வேந்தன்முத்து வீரையனே
என்றுசொல்லித் திருமலையன் இதமுடனே கைதொழுதார்
கைமுகையு முன்னே காளைமுத்து வீரையனும்
அதட்டியே [72]சன்னதம் அவன்மேலே குலவையிட்டுத்       2005

திருவாய் மலர்ந்து செப்பலுற்றா ரந்நேரம்
என்னை நினையாமல் இருந்தாயே நீர்தானும்
மந்திர மகாமுனியும் மனமகிழ்ந்து தானுரைத்தார்
தாரணியார் செய்தகுற்றம் தான்பொறுக்க வேணுமய்யா
குற்ற மெல்லாந் தான்பொறுத்துக் குடிகாக்க வேணுமய்யா       2010

மதுரா புரித்துரையும் வாய்திறந்து செப்பலுற்றார்
மதுரை யறுகாதம் வாழ்மதுரை முக்காதம்
மதுரை யறுகாதம் வகையாகப் பேருமிட்டுத்
துள்ளுகுட்டி ஆயிரமாம் துரைமகனே [73] தந்தியென்றால்
[74]ஆசார வாசலிலே அன்புட னே [75]தந்தியென்றால்       2015

என்குறையுந் தீந்தால் இயல்புடனே எழுந்திருக்கும்
ஆனை எருது அன்பான சீவனெல்லாம்
இப்ப எழுந்திருக்கும் என்மேலே குற்றமில்லை
இல்லாதே போனால் என்குறையும் தீராது
நல்லதென்று திருமலையன் நலமாக வந்தான்போய்       2020

ஆயிரம் குட்டி அன்புடனே தான்பிடித்து
கொண்டுவந்து விட்டார் குணமுள்ள திருமலையன்
காவு கொடுத்தார்கள் காளைமுத்து வீரையர்க்கு
கானகத்தி லிடிமுழங்கக் [76]காந்தாள மானதுவே
காவல் முகத்தில் காட்டாத காளையரும்       2025

சத்தமிட்டு அதட்டினார் தங்கமுத்து வீரையனும்
அனைவோருந் திடுக்கிடவே அரண்டுமிக நிற்கையிலே
அஞ்சாயே என்று அங்கொருவன் தான்மேலே
மந்திர மகாமுனியும் மதுரைமுத்து வீரையனும்
அதட்டியே சன்னதமும் அவன்மேலே தானும்வந்து       2030

திருவாய் மலர்ந்து தேறுதலை சொல்லலுற்றார்.
மயங்க நீ வேண்டாம் மன்னவனே இப்போது
துயரத்தை விட்டுத் துரைராசர் மன்னவனே
என்று விபூதியள்ளி ஏகாந்த மாய்க்கொடுத்தார்
என்பேரு சொல்லி இதமுடனே போடுமென்று       2035
------------
[71] சுத்தரங்கம் என்றுளது. சுத்திகரம் - தூய்மைசெய்கை
[72]. சன்னதம் - ஆவேசம், தெய்வங்கூறல்
[73]. தந்தி என்றால் தந்தால் எனப் பொருள் கொள்க
[74]. ஆசாரவாயில் - தலைவாசல். வெளிவாயில்
[75]. தந்தி ஏன்றால் தந்தால் எனப் பொருள் கொள்க. [76]. காந்தாளம் - கோபம்
------------

கொண்டுபோய் போடும் குறையெல்லாம் தீருமென்றார்
விபூதி தான்கொடுத்தீர் வேதமுத்து வீரையனே
அப்போது திருமலையன் அன்பாகக் கைதொழுது
ஆனை படையுடனே அத்தனையும் தானெழுந்தால்
முப்பேரு மிட்டு முப்பூசை போடுகிறேன்       2040

அந்தப்படி தீருமென்று ஆண்டவனுந் தானுரைத்தார்      
கொடுத்த விபூதியை குதிரைலாயம் தான்புகுந்து
தீர்த்தமும் புஷ்பமும் திருநீறும் தான்போட்டார்
அந்தச் சணமே அலறி யெழுந்திருந்து
சந்தோசப் பட்டுத் தானிருந்தார் நாயக்கரும்       2045

கோவில் பரிவார குருக்கள்மா ரத்தினையும்
பட்டணத்தி லுள்ள பரிசனங்க ளத்தினையும்
அடிமைக் குடியாக ஆண்டவனும் கொண்டாராம்
என்றுமே சொல்லி ஈசுபரியும் வரங்கொடுத்தாள்
வரம் பெற்றுக்கொண்டு வந்தான்காண் அம்மானை       2050

கம்பத் தடியில் காரணமாய் வீற்றிருந்தான்
இப்படித் தானும் இருக்குமந்த வேளையிலே
அப்போது திருமலையன் அடவாக ஏதுரைப்பார்
மதுரை யறுகாதம் வாழ்மதுரை முக்காதம்
அனையோரும் தாமறிய அடியுமென்றார் தவுலோசை       2055

வெள்ளிக் கிழமை வீரையர்க்குத் தானுமப்போ
முப்பூசை யென்று முறையறையு மென்றுசொல்லி
ஆடுபன்றி கோழியுடன் அன்புடனே வாருமென்று
ஆரொருவர் தானும் அசதியா யெண்ணாமல்
மெய்யென்று சொல்லி விருப்பமுட னெல்லொரும்       2060

வந்து சேருமென்று வகையுடனே முரசறையும்
வீதிக்கு வீதி விதமாய் முரசறையும்
என்றுமே திருமலையன் எடுத்துரைத்தா ரப்போது
அந்த விதமாக அடியுமென்றார் பெருந்தமுக்கு
தமுக்கோசை கேட்டவர்கள் தானெழுந்து அப்போது       2065

உலுப்பைகள் சேகரித்தார் உத்தமர்க ளப்போது
என்னென்ன தளவாடம் ஏற்கையுடன் தான்சேர்த்தார்
கம்பத் தடியில்வந்தார் காளைமுத்து வீரையனும்
மீனாட்சி பக்கம் விதமுடனே ஓடிவந்து
முக்கால் வலம்வந்து மூவிருகால் தெண்டனிட்டு       2070

என்தாயே மீனாட்சி எனக்குநீ சொன்னபடி
அரைவயிறு பசியாறி அண்ணருட சன்னதிக்கு
என்றுசொல்லி வீரையனும் ஈசுபரியும் தான்மகிழ்ந்து
வாடா மதுரை வரிசையுள்ள தென்மதுரை
அரை வயிறுக்கு அண்ணருட சன்னதிக்கு             2075

அழகர் பக்கம்போய் அன்பாய் வரம்வாங்கி
மந்திரிகள் சேனை மகிழ்ச்சியுடன் கூட்டமிட்டு
ஆசார வாசல்விட்டு அரண்மனையுந் தான்கடந்து
சொக்கருட சன்னதிக்குத் துருசாகத் தான்நடந்து
அங்கயற்கண் மீனாட்சி அம்மனுட சன்னதியில்       2080

முக்கால் வலம்வந்து மூவிருகால் தெண்டனிட்டு
எப்போது மில்லாத இதுபுதுமை தானுமென்றார்
காணாத சொப்பனங்கள் காரணங்க ளானதென்ன
ஆனதென்ன ஈசுபரியே அதிசயங்க ளிப்போது
வகைவிபரம் உரைக்கவேணு மாதாவே என்தாயே       2085

திரிபுர மெரித்த தேவிபர மேஷ்பரியே
பார்வேந்த னப்போது பாதச் சரணம்பண்ணி
வாழ்மதுரைச் சொக்கர் மனையாளும் தேவியப்போ
அப்பா மகனே அதிசயங்கள் சொல்லுகிறேன்
கேளடா இப்போது [77]கிருவிதமா யென்மகனே       2090

விதமாக வந்தவகை வேறொன்று தானுமில்லை
காரணமாய் வந்தான் கம்பத் தடிவீரன்
பட்டதொரு வீரையனைப் பராபரிக்க யில்லையென்று
பொந்தி பசிமெத்த பொல்லாத வீரனுக்கு
உத்தாரம் வாங்கி ஓடிவந்தா னிப்போது       2095
------
[77]. ...?
--------------

மஞ்சநல்ல பாவாடை வகையுடனே தோள்போட்டு
என்தாயே மீனாட்சி ஈசுபரியே என்றுசொல்லி
மீனாட்சி கோவில் விருப்பமுடன் தான்நோக்கி
காளைமுத்து வீரையனும் கடுசாய் வரும்போது
கல்லு மலைகளெல்லாம் கடுகுபொடி யாகுதய்யா       2100

பாதக் குறடுபட்டுப் பஞ்சாப் பறக்குதப்போ
சாமியுட திருமேனி தங்க ஒளிவிடுது
கெந்தபொடி கஸ்தூரி கிருவிதமாய் மணக்குதுகாண்
புனுகுசட்டம் தான்மணக்கும் பொங்கமுடன் வீரையன்மேல்
ஆண்டவன் வருகிறது வருகிறது அதட்டிதனைக் கேட்டு       2105

மதுரையறுகாதம் வாழ்மதுரை முக்காதம்
சேனைத் தளத்துடனே சீக்கிரமாய் வாராராம்
பட்டணத்திலுள்ள டரராசர் மன்னவரும்
வேடிக்கை தான்பார்த்து விதமுடனே ஓடிவந்து       2110

பதினெட்டு மேளம் வாத்தியங்கள் தான்முழங்க
மயில்விசிறி கொண்டு மன்னவர்கள் வீசிவர
பாதந் தனில்விழுந்து பாரமனுக் கேட்பாரும்
கேட்ட மனுக்கொடுத்து கிருபையுள்ள தென்மதுரை
எட்டி நடக்க எமலோகம் தத்தளிக்க             2115

தேவலோ கந்தன்னில் தேவதைகள் பார்த்துநிற்க
வைகுந்த லோகத்தில் மாயவரும் பார்த்துநிற்க
அய்யரும் அம்மனும் அன்புடனே பார்த்துநிற்கச்
சொக்கருட கோவிலுக்குத் துரைவீரன் வருவதற்குப்
பவளக்கால் நாட்டிப் பசும்பொன் வளைபரப்பி       2120

அபரஞ்சி கொண்டு அடவுடனே தான்மேய்ந்து
மேல்கட்டித் தூக்கும் விபரிதமாய் அலங்கரித்து
வாழைக் கம்பத்தால் வகையாய் அலங்கரித்து
நடபா வாடை நலமுடனே தான்விரித்துப்
பச்சைப் புனுகு பாதையெல்லாந் தான்தெளித்து       2125

மருவும் கொழுந்தும் வாசமுள்ள செண்பகமும்
இருபுறமுந் தொங்கவிட்டு இதமுடனே யலங்கரித்துப்
பந்தல் வளைந்து பாவாடை மேல்நடந்து
ஆதி சிவாயென்று அன்புடனே தான் நடந்தான்
முக்கால் வலம்வந்து மூவிருக்கால் தெண்டனிட்டுப்       2130

பொய்யாத சுவாமி பொறுமையுள்ள வீரையனும்
திருமலை நாயக்கரை திரும்பி முகம்பார்த்து
வாருமென்று சொல்லி வரிசையுடன் தானழைத்து
மீனாட்சி பொற்பாதம் விருப்பமுடன் சேர்வதற்கு
உத்தாரஞ் சொல்லுமென்று ஒருவார்த்தை தான்கேட்கத் 2135

திருமலை நாயக்கர் திரும்பி முகம்பார்த்து
நெஞ்சு தவறி நினைவு தப்பிப் போகாமல்
கண்ணாலே நீர்சொரிய கலங்கியே ராசமன்னன்
ஆனமட்டும் சொன்னேன் [78] அமடுகொள்ளா வீரையர்க்கு
என்ன சொன்னபோதும் இனிநிற்கப் போறாயோ       2140
-------------
[78]. அமடு - பொல்லாங்கு, மடிப்பு
---------------

மனதுக்கு ஏற்றபடி மன்னவனே யென்றுசொல்ல
அந்த நல்ல சேதி அடவுடனே தான்கேட்டுத்
துள்ளுகுட்டி வீரையனும் துரைசாமி அப்போது
போய்வாறே னென்று பொறுமையுள்ள வீரையனும்
பார்வதியாள் கோவில் பதினெட்டாம் படியேறி       2145

என்தாயே மீனாட்சி எனக்கென்ன புத்திசொல்லும்
மதுரா புரித்துரையும் மாதாவைத் தான்கேட்க
ஆண்டியுட னாடு ஆண்டிச்சி தானிருந்து
கட்டாத காளிக்குக் காரணமாய் வந்தமன்னா
முந்தினமாலை முதல்மாலை யென்னு தன்றாள்       2150

கம்பத் தடியில் காத்திருந்து பூசைகொள்ளும்
என்றுசொல்லி மீனாட்சி ஏற்க வரங்கொடுத்தாள்
நல்லதென்று சொல்லி நாட்டமுட னோடிவந்து
கம்பத் தடியில்வந்து காளைமுத்து வீரையனும்
கன்னறுக்குஞ் சூரி கையிலே தானெடுத்துப்       2155

பார்வதியாள் தேவி பக்கமே போயிருந்து
ஒருகாலை மண்டியிட்டு உட்கார்ந்து வீரையனும்
கைச்சூரி கொண்டு கழுத்தறுத்தான் வீரையனும்
வீரனுட தன்சிரசு மீனாட்சி தன்காலில்
பாதமே கெதியென்று பக்கமே வீழ்ந்ததுவே 2160

வண்டத்துரை வீரையர்க்கு வரங்கொடுத்தாள் மீனாட்சி
எல்லோருங் கூடி அலங்கரித்துக் கொக்கரித்து
வீரையனும் போய்ச்சேர்ந்தான் விடுதியில் தானுமப்போ
அவரவர் விடுதிக்கு அவரவர் போய்ச்சேர்ந்தார்
அந்தநாள் சென்று மத்தானா ளப்பொழுதில் 2165

மதுரையுட பட்டணத்தில் வரும்பூசை யென்றுசொல்லிச்
சந்தோச மாகத் தனித்திருந்தான் வீரையனும்
வீராதி வீரன் மேகவர்ணன் ஏதுசெய்வான்
இந்தநல்ல பட்டணத்தில் என்னை நினைப் பாருமில்லை
நீதியு மில்லை நிச்சயமுந் தானுமில்லை       2170

உள்ளபடி யாகுதென்று உத்தமனும் வீற்றிருந்தான்
அன்றுமுதல் இன்னாள்வரைக்கும் ஆகார மில்லாமல்
இல்லையென்று பார்த்து இருந்தானே தென்மதுரை
பட்டணத்தி லுள்ள பரிசனங்க ளெல்லோரும்
வீரையனை நினையாமல் வீற்றிருந்தார் பட்டணத்தில்       2175

பார்த்துமள்ள வீரையனும் பதறியே கோபங்கொண்டு
இப்படித் தானிருந்தால் ஏற்காது கலியுகத்தில்
என்று சொல்லி வீரையனும் எழுந்திருந்து அப்போது
மீனாட்சி சந்நிதிக்கு விதமுடனே ஓடிவந்து
முக்கால் வலம்வந்து மூவிருகால் தெண்டனிட்டு       2180

என்தாயே மீனாட்சி எனக்குச்சொன்ன புத்தி என்ன
பட்டணத்தி லுள்ளபேர் பராபரிப்பா ராருமில்லை
அவர்களுடன் நீயும் ஆதிபர மேசுவரியே
பார்வதியே என்தாயே பார்த்து மிருந்தாயே
இப்படித் தானிருந்தால் என்வயிறு பசியாதேர்       2185

தாயேநீ மீனாட்சி தாகம் பசிமெத்தவடி      
எரியுதடி என்வயிறு என்தேகமெல்லாம் பத்துதடி
கோபமே வந்ததென்றால் குடிகேடன் நான்தாண்டி
பட்டணத்தி லுள்ள பரிசனங்க ளெல்லோரும்
கைகாட்டிச் சொன்னாக்கால் கால்கடிய வீரையனும்       2190

உத்தாரம் பண்ணிவைத்தால் உத்தமியேன் தானும்
கொன்றுதின்று பசியாறி உன்கோவிலுக்கு வரும்போது
காவடியுந் தோள்போட்டுக் கம்பத்தடி வாறனம்மா
என்றுதான் சொல்லி ஈசுபரியைத் தான்கேட்க
யாருக்கு மடங்காத அஞ்சா மதயானை             2195

வண்டக் குழந்தை வலுக்கார தென்மதுரை
கம்பத் தடிவீரா காரியமாய்ச் சொல்லுகிறேன்
துண்டநல்ல வீரா துடுக்குமெத்தப் பண்ணாதே
திருமலை நாயக்கர் திறமான அரண்மனையில்
உள்ளே நுழைந்து உபாயமாய் போய்வாடா       2200

அருட்டியும் சொற்பனமும் ஆறாட்ட மயக்கமுமாய்ப்
பண்ணிவைத்துப் பூசை பாங்குடனே வாங்குமென்றாள்
உத்தாரம் பண்ணி உமையவள் மீனாட்சி
போடாநீ யென்று போற்றி விடைகொடுத்தாள்
எந்தாயே மீனாட்சி இதுபோது மென்றுசொல்லி       2205

அங்கயற்கண் மீனாட்சி ஆலயத்தை மெல்ல
முக்கால் வலம் வந்து மூவிருகால் தெண்டனிட்டு
ஆலயத்தை விட்டுமெல்ல அதட்டியே தான்நடந்தான்
கம்பத் தடியில்வந்து காரணனும் தென்மதுரை
திருமலை நாயக்கர் செம்பொன்மணி மண்டபத்தில்       2210

பார்த்து அந்தவீரையனும் பல்கடித்தா ரந்நேரம்
அடித்துடையைத் தட்டி அதட்டினான் காளைமுத்து
இப்படித் தானும் இருக்குமந்த வேளையிலே
உத்தமன் வீரையர்க்கு உலுப்பைகள் வருகுதய்யா
[79]உலுப்பை வ வருகிற உண்மைகளை என்னசொல்வேன் 2215
------
[79]. உலுப்பை பெரியோர் முதலியவர்களுக்களிக்கும் உண்பண்டம்
சாமான்னப; கோயில் முதலியவற்றிற்கு அனுப்பும் காணிக்கை
-------------

காவல் வருகிற காரணத்தை என்னசொல்வேன்
பொங்கல் வருகிற புதுமைகளை என்னசொல்வேன்
பட்டணத்திலுள்ள பரிசனங்க ளெல்லோரும்
வாழைக் கரும்பு வகையாகத் தான்நாட்டி
தூணுக்குத் தூண் தூண்டா விளக்கேற்றி       2220

வீரையன் தானிருக்கும் விடுதியில் வந்துநின்று
மந்திர மகாமுனியும் மதுரைமுத்து வீரையர்க்கு
தாக விடாய்தீரத் தான்சேர்த்தார் [80] பானக்கம்
ஆயிரம் செவ்விளநீர் அன்பாகக் கண்திறந்து
இஞ்சி எலும்பிச்சை இயல்பாகத் தான்கலந்து       2225
---------
[80]. பானக்கம் - சருக்கரை, ஏலம் முதலியன கலந்த குடிநீர்வகை
------------

ஆயிரம் அச்சுவெல்லம் அடவாய்ப் பொடியாக்கிப்
பானக்கம் செய்து பரிவாகமுன் னேவைத்து
தாகந் தணிந்து தண்ணிவெறிக் காரனுக்குக்
காவல் குட்டிதானும் கணக்கு வழக்குமில்லை
இப்படிக்குத் தான்சேர்த்து இருக்குமந்த வேளையிலே 2230

திருமலை நாயக்கர் தீர்க்கமுடன் ஓடிவந்து
கம்பத் தடியில் காரணனு வந்துநின்று
மதுரையும் தானிருக்கும் மாணிக்க மண்டபத்தை
பொன்முலாம் பூசி போத அலங்கரித்து
பந்த லலங்கரித்தார் பார்வேந்தன் அப்போது       2235

மண்டபத்தைச் சுற்றி மாணிக்கப் பந்தலிட்டார்
காலுக்குக் கால் காலை விளக்கெரியும்
பட்டுமேல் கட்டிப் பாங்காய் அலங்கரித்துப்
பூசைக்கு ஏற்றதொரு பொன்னுலுப்பைத் தான்சேர்த்துக்
கொத்தோட தேங்காய் குலையோட செவ்விளநீர்       2240

நாணாக் கழிபோலே நானூறு செங்கரும்பு
மூங்கிக் கழிபோலே முன்னூறு செங்கரும்பு
குட்டியிலே ஆயிரமாம் குலைச்சாவ லாயிரமாம்
ஆடுபன்றி கோழி அடங்கலும் தான்சேர்த்துக்
கஞ்சா அபினி கலந்தொரு சாராயம்       2245

ஆயிரம் [81]துத்திசாராயம் அன்புடனே தான்சேர்த்து
[82] மம்ம ருருண்டை [83] மதனகா மியப்பூவும்
தீவுச் சரக்கும் தேசத்துச் சாராயம்
கம்பத் தடியில் காத்திருந்து பூசைகொள்ளும்
மதுரைவீர அம்மானை மகிழ்ச்சியுடன் படித்தோரும்       2250
----
[81]. துத்தி - உண்டற்குரியன [82]. மம்மர் - மயக்கம்
[83]. மதனகா மியப்பூ - ஒரு சரக்கு
----------------

சொல்லும் சொல்லுமென்று சுகமுடனே கேட்டோரும்
இன்னமும் சொல்லுமென்று இன்பமுடன் கேட்டோரும்
பரிசங் கொடுத்துப் பணம்பாக்குத் தந்தோரும்
ஆல்போல் தழைத்து அறுகதுபோல் வேரூன்றி
மூங்கில்போல் சற்றும் முசியாமல் வாழ்ந்திருப்பார் 2255

சந்திரரும் சூரியரும் தான்வருவார் வாழியதே !
இந்திரருந் தேவர்களும் இறைவனுந் தான்வாழி!
ஆகாயம் பூமி அந்திரமுந் தான்வாழி!
கேட்டவர்கள் எல்லோரும் கிளைகோத்திரம் வாழியவே!
படித்தோர்க ளெல்லோரும் பாக்கியங்கள் பெற்றிருப்பார்!! 2260

மதுரைவீரையன் அம்மானை எழுதிமுடிந்தது முற்றும்
திருச்சிற்றம்பலம்
---------
தேவிசகாயம்

[சர்வதாரி வருடம் மாசி மீ 2 s திங்கட்கிழமை காளியப்ப
கவுண்டரூரிலே யிருக்கும் கொத்துக்கார கருப்ப கவுண்டன் மகன்
ஸ்ரீபுண்ணிய குமாரன்எட்டியர் கவுண்டன் மதுரைவீரன் அம்மானை
எழுதி முடிந்தது முற்றும் சம்பூரணம்.

வாலை ஞான சரசுபதி துணை
எட்டிக்கார கிருபா கடாச்சம்]
------------


This file was last updated on 24 Feb 2023.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)