அ. க. நவநீதகிருட்டிண எழுதிய
அறநூல் தந்த அறிவாளர் (இலக்கியக் கட்டுரைகள்)
aRanUl tanta aRivALar
by A.K. Navaneethakrishnan, Tamil Essays
In Tmil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
மானிடர்க்கு விழுப்பம் தருவது ஒழுக்கம். உயர்ந்தோர் போற்றியன புரிந்து வெறுத்தன விலக்கிச் செய்யும் சிறந்த முறையே அறமெனப்படும். உலகிலேயே அறத்திற்கும் அற நூல்களுக்கும் பெரு மதிப்பு அளித்து அவற்றின் வழி நடக்கும் நாடு இப்பாரத மணித் திருநாடே என்று கூறலாம்.
தமிழ் மொழியில் அற நூல்கள் மலிந்துள்ளன. வள்ளுவர் தந்த தெள்ளுதமிழ்க் குறளைப் போன்றதொரு சிறந்த நூல் உலகிலேயே வேறு எந்த மொழியிலும் கிடையாது. இதைத் தமிழராய நாம் கூறவில்லை. மேனாட்டறிஞர்கள் பலர் இக்கருத்தினைத் திரும்பத் திரும்ப வற்புறுத்திக் கூறியுள்ளனர். வள்ளுவர் போல அறத்தின் சிறப்பை வலியுறுத்தியவர்கள் ஒளவையார், அதிவீரராமர், குமரகுருபரர், சிவப்பிரகாசர் போன்றோர். அவர்களைப் பற்றியும் அவர்கள் நூல்களில் கூறப்பட்டுள்ள அறநெறி களைப் பற்றியும் இந் நூல் தெளிவாகவும் சுருக்கமாகவும் விளக்கியுள்ளது.
இத்தகையதொரு பயனுடைய நூலை இயற்றித் தந்தவர் வித்துவான், திருக்குறள்மணி அ. க. நவநீத கிருட்டிணன் ஆவர். யாம் வேண்டுவனவற்றை வேண்டியவாறே எழுதிக்கொடுத்து வரும் அவருக்கு எம் நன்றி உரியதாகுக.
இந் நூல் இளஞ்சிறார்க்கேற்ற நூல், பள்ளியில் பாட நூலாகப் பயில்வதற்கு ஏற்ற நூல். இதனை மாணவர் கற்றுத் தெளிந்து பயன்பெறுவரென எண்ணுகிறோம்.
தமிழுக்கும் தமிழ் நாட்டிற்கும் தனிப் பெருமையைத் தருவன தமிழில் தோன்றியுள்ள அற நூல்கள் ஆகும். இளஞ்சினாரும் பயிலத்தக்க ஆத்திசூடி முதல் திருக்குறள் ஈறாக எண்ணற்ற நீதி நூல்கள் தமிழில் எழுந்துள்ளன, அவற்றில் உள்ள சில தொடர்களையும், சில பாடல்களையுமே படிக்கும் வாய்ப்பினைச் சிறுவர் பெறுகின்றனர். அவற்றைப் பற்றிய தெளிவான வரலாறுகளையும், அவற்றின் அரிய கருத்துக்களையும், உரிய சிறப்புக்களையும் அச்சிறுவர்கள் அறிவதற்கு வாய்ப்பில்லை. அத்தகையதோர் அரிய வாய்ப்பினை அறநூல் தந்த அறிவாளர்' என்னும் இச்சிறு நூல் இளைஞர்க்கு வழங்குவதுடன், அந்நூல்கள் அனைத்தையும் ஓதியுணர்தல் வேண்டும் என்னும், ஆர்வத்தையும் உறுதியாக உண்டுபண்ணும்.
இத்தகைய நன்னோக்கத்துடன் ஆக்கப்பெற்ற இச்சின்னூலைத், தமிழைப் பல்லாற்றானும், நல்லாற்றானும் வளர்ப்பதையே தலையாய கடனாகப் பூண்ட தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சியாளரும் அருந்திறல் மாட்சியாளருமாகிய திருவாளர், வ. சுப்பையா பிள்ளை அவர்கள் அன்படன் வெளியிட்டு எளியேனைத் தமிழ்ப் பணிக்கு ஆளாக்கியுள்ளனர். அன்னவருக்கு என் உளங் கனிந்த நன்றி வணக்கங்கள் என்றும் உரியன.
தமிழகத்தில் உள்ள பெரும் பள்ளித் தலைவர்களும் அருந்தமிழ்ப் புலவர்களும் தத்தம் பள்ளிகளில் இந்நூலைப் பாடமாக்கி, எளியேனது. தமிழ்ப்பணிக்கு ஊக்கமூட்டுமாறு பணிகின்றேன்.
தமிழ் வெல்க!
அ. க. நவநீதகிருட்டிணன்
--------------
உள்ளுறை
1. அருந்தமிழ் அறநூல்கள்
5. நறுந்தொகை பாடிய நாவலர்
2. திருக்குறள் அருளிய தெய்வப்புலவர்
6. அறநெறி அருளிய குருபரர்
3. தமிழ் வளர்த்த சமண் முனிவர்கள்
7. நன்னெறி காட்டிய நற்றவர்
4. அறம் உரைத்த அன்னையார்
7. நன்னெறி காட்டிய நற்றவர்
---------------
அறநூல் தந்த அறிவாளர்
1. அருந்தமிழ் அறநூல்கள்
சங்க நூல்கள்
அமிழ்தினும் இனிய நம் தமிழ்மொழியில் உயர்ந்த நூல்கள் பல உள்ளன. அவற்றுள் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட நூல்களும் இருக்கின்றன. அத்தகைய பழமையான நூல்களைச் 'சங்க நூல்கள்' என்று சாற்றுவர். தமிழை வளர்ப்பதற்குப் பாண்டிய மன்னர்கள் சங்கம் அமைத்தார்கள். தலைச் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் என்று மூன்று சங்கங்கள் தோன்றின. அச்சங்கங்களில் தமிழ்ப் புலவர்கள் பலர் கூடியிருந்து தமிழை ஆராய்ந்தனர். அவர்களால் பல நூல்கள் ஆக்கப் பெற்றன. அவற்றையே “சங்க நூல்கள்' என்று அறிஞர்கள் கூறுவர்.
மேற்கணக்கும் கீழ்க்கணக்கும்
சங்க நூல்களில் முப்பத்தாறு நூல்களைச் சிறந்தவை என்று அறிஞர்கள் குறிப்பிடுவர். அவை பதினெண் மேற்கணக்கு நூல்கள் என்றும், பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என்றும் கூறப்படும். எட்டுத் தொகையும் பத்துப்பாட்டும் பதினெண் மேற்கணக்கு நூல்கள் ஆகும். திருக்குறள் முதலான பதினெண் நூல்களைப் பதினெண் கீழ்க்கணக்கு நாங்கள் என்பர். கீழ்க்கணக்கு நூல்கள் எல்லாம் இரண்டு அடி முதல் ஏழடி வரையுள்ள சிறிய பாக்களால் ஆக்கப்பெற்றவை. அதனாலேயே கீழ்க்கணக்கு நூல்கள் என்று பெயர் பெற்றன. இவற்றுள் பெரும்பாலான நூல்கள் அறத்தையே விரித்துரைப்பன ஆகும்
இவ்வெண்பாவால் கீழ்க்கணக்கு நூல்கள் பதினெட்டு எவை என்பதை அறியலாம்.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, இனியவை நாற்பது, இன்னாநாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், கைந்நிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி என்னும் பதினெட்டு நூல்களும் கீழ்க்கணக்கு நூல்கள் ஆகும். இவை எல்லாம் கடைச் சங்க காலத்தில் தோன்றியன என்று கூற முடியாது. சில நூல்கள் ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பின் தோன்றியன ஆகும்.
நூலும் இரண்டும்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திணை ஒழக்கங்களைப்பற்றிக் கூறும் சில நூல்களைத் தவிர மற்றவையெல்லாம் அறம் உரைக்கும் திறம் உடையனவே, அவற்றுள் திருக்குறளும் நாலடியாரும் இணையற்ற அறநூல்கள் ஆகும். இவ்வுண்மையைத் தமிழில் வழங்கும் பழமொழி ஒன்றால் நன்றாக உணரலாம். ஆலும் ‘வேலும் பல்லுக்கு உறுதி நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி’ என்பது அப்பழமொழி ஆகும். ஆலம் விழுதையும் கருவேலங்குச்சியையும் கொண்டு பற்களைத் துலக்கினால் அவை உறுதியாக இருக்கும்; அவற்றைப் போல் தமிழ்ச் சொல்லுக்கு உறுதியைத் தரும் நூல்கள் - திருக்குறளும் நாலடியாரும் ஆகும்.
போப்பையர் பாராட்டு
ஆங்கிலேயரும் கிறித்துவப் பாதிரியாரும் ஆதிய ஜி. யு. போப்பையர் தமிழில் உள்ள கறதால்களை ஓதி உணர்ந்தார். அவற்றின் சிறப்பைக் குறித்து, அவர் கூறியுள்ள கருத்துக்கள் எண்ணி இன்புறத் தக்கனவாகும். ‘தமிழர்கள் உயர்ந்த ஒழுக்கம் உடையார்கள்; அறத்தில் வழுவாத திறம் படைத்தவர்கள்; அதனாலேயே திருக்குறளைப் போன்ற உயர்ந்த அறநூல்கள் தமிழில் உதிது துள்ளன.’ இங்கனம் தமிழரையும் தமிழ் நூல்களையும் பாராட்டிய பாதிரியார், தம்மை ‘ஒரு தமிழ் மாணவன்’ என்றே உலகிற்கு அறிமுகம் செய்ய விரும்பினார். தமிழரின் அறநெறிகளை ஆங்கில மக்களும் பாங்குற மேற்கொண்டு ஒழுகவேண்டும் என்று ஆசை கொண்டார். உலகம் முழுவதும் அவ்வொழுக்கம் பரவவேண்டும் என்றும் எண்ணினார். அதனால் திருக்குறள், நாலடியார் என்னும் இரு நூல்களையும் அவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து உதவினார். அவர் செய்த பணி, உலகிற்கே பெரிய பயனை விளைப்பதாயிற்று.
சிறுவர்க்குரிய அறநூல்கள்
இவையல்லாமல் பிற்காலத்திலும் பல அறநூல்கள் தோன்றின. அவற்றுள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன் ஔவையார் அருளிய அரிய நீதி நூல்கள் ஆகும். அவை ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி என்பன. ஒளவையாரின் அறநூல்கள் சிற்றறிவுடைய சிறுவர்க்கும் சிறந்த உண்மைகளை விளக்குவன. ஒளவையாருக்கும் பிற்பட்ட காலத்தில் சில அறநூல்கள் தோன்றியுள்ளன. அதிவீரராம பாண்டியன் என்னும் சிற்றரசன் ‘வெற்றி வேற்கை’ என்னும் அறநூலைப் பாடியுள்ளான். முருகன் அருள் பெற்ற முத்தமிழ்க் கவிஞராகிய குமரகுருபரர் ‘நீதிநெறி விளக்கம்’ என்னும் அரிய நீதிநூலை ஆக்கியுள்ளார். அந்நூல் ‘குட்டித் திருக்குறள்’ என்று கொண்டாடப்படும்.
தவமுனிவர் தந்த நூல்கள்
தவச் செல்வர் ஆகிய சிவப்பிரகாசர் ‘நன்னெறி’ என்னும் சின்னூல் ஒன்றைப் பாடியுள்ளார். இந்நூல் எளிய இனிய உவமைகளால் அரிய கருத்துக்களை மக்களுக்கு விளக்கும் மாண்புடையது. சிவப்பிரகாசருக்குப் பின்னர் நெல்லை நாட்டில் தோன்றிய சிவஞான முனிவர் ‘சோமேசர் முதுமொழி வெண்பா’ என்னும் இனிய நூல் ஒன்றை அருளியுள்ளார். இது வரலாறுகளின் வாயிலாகத் திருக்குறளின் கருத்துக்களை விளக்கும் சிறப்பு வாய்ந்தது.
தமிழர் கடமை
மேலும், சதகங்கள் என்று வழங்கும் அறநூல்கள் சில பிற்காலத்தில் எழுந்தன. அவைகளும் சிறந்த நீதிகளை எடுத்து ஓதும் இயல்புடையன. நூறுபாடல்களைக் கொண்ட அந்நூல்கள் ‘சதகம்’ என்று பெயர் பெற்றன. இங்கனம் எண்ணில்லாத நீதி நூல்கள் நம் இன்றமிழ் மொழியில் இருப்பதைக் கண்டு மேல்நாட்டு அறிஞர்கள் வியப்பு அடைகின்றனர். இத்தகைய அறநூல்கள் தோன்றுவதற்கு இடமான தமிழ் நாட்டு மக்கள் ஒழுக்கத்தால் உயர்ந்தவர் என்றும், அறத்தில் பிறழாதவர் என்றும் போற்றுகின்றனர். இத்தகைய நிலை என்றும் மாறாதவாறு தமிழர் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்க முயல்வார்களாக!
------------
2. திருக்குறள் அருளிய தெய்வப் புலவர்
உலகப் பொது மறை
தமிழில் தோன்றிய அறநூல்கள் பலவற்றிலும் தலைமை வாய்ந்தது திருக்குறள் என்னும் தெய்வ நூலே ஆகும். அந்நூல் உலகிலேயே தலைசிறந்த அறநூல் என்று உயர்வாகக் கொண்டாடப் பெறும் சிறப்புடையது. ஆதலின் 'உலகப் பொது மறை’ என்றே கற்றறிந்தோர் அந்நூலை உவந்து போற்றுவர். எந்த நாட்டினரும் ஏற்றுப் போற்றும் இனிய நீதிகளைச் சிறிய பாட்டுக்களால் அரிய முறையில் விளக்குவது அந்நூல்.
திருக்குறள் தமிழ் வேதம்
இரண்டு அடிகளுக்குக் குறைந்த பாடல், நம் இனிய தமிழ் மொழியில் இல்லை. ஆதலின் இரண்டு அடிகளால் ஆகிய சிறிய பாட்டைக் 'குறள்' என்று புலவர் குறித்தனர். அத்தகைய குறட்பாக்களால் ஆக்கப்பெற்ற அறநூலைக் 'குறள்' என்றே கூறினர். இந் நூலின் உயர்வை அறிந்த முன்னோர் திருக்குறள் என்று அடைமொழி கொடுத்துப் பாராட்டினர். இந்நூல் தமிழ் வேதம், என்று புலவர்களால் போற்றப்படும்.
குறளைக் குறிக்கும் பிற பெயர்கள்
இத்தகைய திருக்குறளைக் குறிக்கத் தமிழில் பல பெயர்கள் வழங்குகின்றன. இந்நூல் அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று பிரிவுகளைப் பெற்றிருப்பதால் 'முப்பால்' என்று பெயர் பெற்றது, வடமொழி வேதத்துக்குப் பின்பு தோன்றிய தமிழ் வேதம் ஆதலின் 'உத்தர வேதம்' என்றும் உரைக்கப்படும். மருந்தைப் போல் மக்களை வாழ்விக்கும் திருந்திய உண்மைகளை உரைப்பதால் 'வாயுறை வாழ்த்து' என்றும் வழங்கப்படும். என்றும் பொய்க்காத உண்மைகளைப் புகல்வதால் 'பொய்யா மொழி' என்றும் போற்றப்படும். வள்ளுவர் தம் வாழ்க்கையின் பயனாக இந்நூலை இயற்றினார். ஆதலின் 'திருவள்ளுவப் பயன்' என்றும் குறிக்கப்படும்.
நூலும் நூலாசிரியரும்
தமிழ் இலக்கணத்தில் கருத்தா ஆகுபெயருக்கு எடுத்துக் காட்டாகத் 'திருவள்ளுவர் படித்தான்' என்ற தொடரே காட்டப்படும், அகத்தியம், தொல்காப்பியம் என்ற பெயர்கள் அந்நூல்களை இயற்றிய ஆசிரியர்களின் பெயர்களே. எனினும் அவை ஈறுதிரிந்த பெயர்களாகவே இருக்கின்றன. ஆசிரியர் பெயரை உள்ளவாறே கூறி, நூலை உணர்த்தும் இயல்பு அவற்றுக்கு இல்லை. ஆனால் திருவள்ளுவர் என்ற ஆசிரியரின் பெயர் சிறிதும் வேறுபடாது நின்று நூலைக் குறிப்பதைக் காண்கிறோம். ஆதலின், திருக்குறளைப் பற்றிப் பேசினாலும் ஆகுபெயர்ப் பொருளால் திருவள்ளுவரைப் பற்றிப் பேசிய தாகவே அமையும்.
திருவள்ளுவரின் பிற பெயர்கள்
இவ்வாறே திருவள்ளுவரைக் குறிக்கவும் பல பெயர்கள் வழங்குகின்றன. முதற்பாவலர், தெய்வப் புலவர், தேவர், நாயனார், நான்முகனார், மாதா நுபங்கி, செந்நாப்போதார், பெருநாவலர், பொய்யில் புலவர் ஆகிய பல பெயர்கள் அவரது அரிய தெய்வப் புலமை குறித்து வழங்குவன ஆகும். தமிழில் முதன்மையான பாடலாகிய குறட்பாவால் தமது நூலை ஆக்கியவர் திருவள்ளுவர். ஆதலின் முதற்பாவலர் என்று மொழியப் பெற்றார். தாயைப் போன்ற தண்ணருளால் உலகம் நல் வாழ்வைப் பெறுவதற்குத் திருக்குறளை அருளினார் அப்புலவர். ஆதலின் மாதாநுபங்கி என்று ஓதப் பெற்றார்.
குறளின் நறுமணம்
திருவள்ளுவரையும் அவரது திருக்குறளையும் பாராட்டாத புலவர்கள் இல்லை. தமிழ் மணம் எங்கெங்கே உண்டோ, அங்கெல்லாம் திருக்குறளின் நறுமணம் வீசிக் கொண்டே இருக்கும். குறள் மணம் கமழும் இடமெல்லாம் தமிழின் தனி மணம் கமழ்ந்து கொண்டே இருக்கும். தமிழ் வழங்காத பிற நாடுகளில் உள்ள அறிஞர்கள் திருக்குறளின் மொழி பெயர்ப்புக்களைப் படித்து இன்புறுகின்றனர். அங்கே தமிழ் மணம் ஏது? நாமோ தமிழை அறிந்து அதன் வாயிலாகத் திருக்குறளை அறிகின்றோம். அவர்கள் எல்லாரும் குறளின் பொருளை அறிந்து, அதன் வாயிலாகத் தமிழைப் பற்றித் தெரிந்து கொள்கின்றனர். இதனால் தமிழைக் காட்டிலும் திருக்குறள் உலகில் அதிகமாகப் பரவி இருப்பதை அறியலாம். இந்த உண்மையை அறிந்த கவிஞர் ஆகிய பாரதியார்,
‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு’
என்று வாயாரப் புகழ்ந்தார். ஏறத்தாழ எண்பது மொழிகளில் மொழி பெயர்க்கப் பெற்றுள்ள இந்நூல் உலக மக்களின் உள்ளத்தைக் கவர்ந்துள்ளது அல்லவா?
திருக்குறளின் அமைப்பு
இந்நூல் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் உறுதிப் பொருள்களைத் தெளிவாக விளக்கும் திறம் உடையது. அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்னும் மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்டது. உலகிற்கு இன்றியமையாத உண்மைகளை நூற்றுமுப்பத்துமூன்று தலைப்புக்களில் சிறப்பாக விளக்குவது. அத்தலைப்புக்கள் அதிகாரங்கள் என்று கூறப்படும். அதிகாரம் ஒன்றிற்குப்பத்துக்குறட்பாக்களாக ஆயிரத்து முந்நூற்று முப்பது அரிய பாக்களைத் தன்பால் கொண்டு விளங்குவது. இல்லறவியல், துறவறவியல், அரசியல், அமைச்சியல், அங்கவியல், களவியல், கற்பியல் என்னும் முக்கியமான உட்பிரிவுகளைக் கொண்டு ஒளிர்வது. பாயிரம் என்னும் அடிப்படையின் மீது எழுப்பிய எழுநிலை மாடத்தைப் போன்று திகழும் திருக்குறள், தெய்வத் தமிழ் ஒளி வீசும் அறிவுத் திருமாளிகையாகும்.
வள்ளுவருக்கு அணிந்த பாமாலை
இத்தகைய திருக்குறளையும் இதனைப் பாடிய திருவள்ளுவரையும் பாராட்டுவதற்கே ஒரு நூல் தோன்றியது. அதுவே திருவள்ளுவ மாலை என்னும் பாமாலையாகும். இந்நூலில் உள்ள ஐம்பத்து மூன்று பாக்களும் தனித்தனி வெவ்வேறு புலவர்களால் பாடப் பெற்றவை. இங்ஙனம் ஒரு நூலைச் சிறப்பித்துப் பாடிய தனி நூல் வேறு எந்த நூலுக்கும் இல்லை. இது திருக்குறளுக்கு வாய்த்த ஒரு தனிப்பெருமை யாகும்.
திருக்குறள் கற்பக மலர்
திருக்குறள் கற்பக மரத்தில் மலர்ந்த பொற்புடைய தெய்வத் திருமலரைப் போன்றது; எக்காலத்திலும் தன் அழகு கெடாதது; நெடுங்காலம் கழிந்தாலும் நிலைபெற்று மலர்ந்திருப்பது; அரிய கருத்துக்களாகிய தேனைச் சொரியும் திறம் வாய்ந்தது என்று இறையனார் தம் பாடலில் பாராட்டியுள்ளார்.
திருக்குறள் தலைக்குத்து மருந்து
சங்கப் புலவருள் சாத்தனார் என்பவர் ஒருவர். அவர் சீத்தலை என்ற ஊரில் தோன்றியவர். மதுரையில் தானியங்களை விற்கும் வணிகராக விளங்கினார். அதனால் அப்புலவரை ‘மதுரைக் கூல வாணிகன் சித்தலைச்சாத்தனர்’ என்று அறிஞர் குறிப்பிடுவர். தமிழ்ச் சங்கத்தில் அரங்கேறுதற்கு வரும் நூல்களேயெல்லாம் முதன் முதல் பார்வையிட வேண்டியது அப்புலவரின் வேலை. குறைகள் நிறைந்த நூல்களே மிகுதியாகப் பார்த்தும் கேட்டும் அவருக்குத் தலைக்குத்து நோய் பெரிதும் வருத்தியது. அந்நோயால் துன்புற்ற சாத்தனர் திருக்குறள் நூலைக் கேட்ட அன்றே நோய் நீங்கப் பெற்றார். இவ்வுண்மையை அக்காலத்தில் செந்தமிழ்ப் புலவராகவும் சிறந்த மருத்துவராகவும் திகழ்ந்த மருத்துவன் தாமோதரனார் என்பார் விளக்கியுள்ளார்.
முப்பாலும் முப்புலவரும்
திருக்குறள் நினைப்பவர் சிங்தைக்கு இனிப்பது; கேட்பவர் செவிகட்கு இனிப்பது; ஒதுவார் வாய்க்கு இனிப்பது; தொடர்ந்து வரும் இருவினைப் பிணியை அறுக்கும் மருந்தாவது என்று கவுணியனார் இந்நூலைப் போற்றினார். திருக்குறளின் நறுஞ்சுவைக்குத் தெள்ளமுதின் தீஞ்சுவையும் ஒப்பாகாது. அத்தெள்ளமுதை உண்டவர் தேவர்களே, ஆனால், திருக்குறள் என்னும் அமுதையோ உலக முழுதும் உண்டு மகிழும் என்று ஆலங்குடி வங்கனார் அகம் மகிழ்ந்து பாராட்டினார். இந்நூலில் எல்லாப் பொருளும் சொல்லப்பட்டுள்ளன. இதில் சொல்லப்படாத பொருள் எதுவுமே இல்லை என்று புகழ்ந்தார் மதுரைத் தமிழ் நாகனார்.
நத்தத்தனார் நல்லுரை
ஒருவன் திருக்குறளில் உள்ள ஆயிரத்து முந்நாற்று முப்பது அரிய குறட்பாக்களையும் ஒதி உணர்ந்தால் போதும்; அவன் வேறொரு நூலைக் கற்கவோ கேட்கவோ வேண்டாம்; அவன் வீறு பெற்ற தமிழ்ப் புலவனாக விளங்கலாம் என்று நத்தத்தனார் என்னும் நற்றமிழ்ப் புலவர் நயம்படக் கூறினார்.
பாணர் பாராட்டு
திருமால் தன் திருவடிகள் இரண்டால் மூவுலகையும் தாவி அளந்தான்; திருவள்ளுவரோ தாம் பாடிய குறள் வெண்பாவின் ஈரடிகளால் உலக மக்கள் உள்ளத்தையெல்லாம் ஆராய்ந்து அளந்தார். இவ்வாறு பரணர், திருவள்ளுவரைப் பாராட்டினார்.
திருக்குறள் உரையாசிரியர்கள்
இத்தகைய சிறப்பு வாய்ந்த திருக்குறள் நூலுக்குப் பல நூற்றாண்டுகட்கு முன்பே பத்து உரையாசிரியர்கள் உரை எழுதியுள்ளனர்
இப்பாட்டால் திருக்குறள் உரையாசிரியர்கள் பதின்மரையும் அறியலாம். இவர்கட்குப் பின்னால் தோன்றிய உரைகளும் பல உள்ளன. இங்கனம் ஒரே நூலுக்குப் பலர் உரை எழுதிய பெருமை, வேறு நூலுக்கு இல்லை. இவ்வுண்மையும் திருக்குறளின் பெருமையை விளக்குவது ஆகும்.
தமிழர் தவக்குறை
அறிவுக் களஞ்சியமாக விளங்கும் திருக்குறள் ஆகிய அறநூலைப் பாடியருளியவர் திருவள்ளுவர் ஆவார். இவரைத் ‘தெய்வப் புலவர் திருவள்ளுவர்’ என்றே எல்லோரும் சொல்லுவர். இவரது உண்மை வரலாற்றை நாம் உணர முடியவில்லை. அது தமிழர் செய்த தவக்குறையே ஆகும். அவ்வாறே பழந்தமிழ்ப் புலவர்கள் பலருடைய வரலாறுகளும் தெரிய வழியில்லை. மேல் காட்டு அறிஞர்கள் தம் வரலாற்றைத் தாமே நூலாக வரைந்து கொடுக்கும் வழக்கம் உடையவர்கள். அவ்வழக்கம் நம் தமிழ்ப் புலவர்களிடம் அமையவில்லை. தம்மைப் பற்றிய வரலாற்றைத் தாமே வரைந்து வைப்பது பெருங்குற்றமாகும் என்று தமிழ்ப் புலவர்கள் எண்ணியிருக்க வேண்டும். அதனால் வந்த கேடே, திருவள்ளுவர் வரலாற்றை நாம் தெரிந்துகொள்ள முடியவில்லை.
வள்ளுவரைப் பற்றிய கதைகள்
திருவள்ளுவரைப் பற்றி நம் காட்டில் எத்தனையோ கதைகள் வழங்கி வருகின்றன. அவற்றுள் எந்தக் கதைக்கும் எள்ளளவு ஆதாரமும் இல்லே. ஆனல் சில வரலாறுகள் அவருக்குப் பெருமை அளிப்பன; சில வரலாறுகள் மிக்க இழிவைத் தருவன. வள்ளுவர்பால் கொண்ட எல்லையற்ற அன்பின் காரணமாக நல்ல கதைகள் தோன்றியிருக்க வேண்டும். அவர்பால் கொண்ட பொறாமை காரணமாக இழிவைத் தரும் அழிவுக் கதைகளைச் சிலர் புனைந்திருக்க வேண்டும்.
கபிலரும் கபிலர் அகவலும்
'கபிலர் அகவல்' என்னும் சிறு நூலில் வள்ளுவரின் பிறப்பு வளர்ப்புச் செய்திகள் சொல்லப்படுகின்றன. அவை யெல்லாம் வள்ளுவருக்கு இழுக்கைத் தருவனவே ஆகும். அந்நூல் கபிலரால் பாடப் பெற்றது அன்று என்பதற்கு அதுவே தக்க சான்று. கபிலர். சங்க காலப் புலவர். அவர் பாரி என்னும் வள்ளலால் ஆதரிக்கப்பெற்றவர். அவருடைய பாடல்கள் புறநானூறு போன்ற சங்க நூல்களில் உள்ளன. அந்தப் பாடல்களின் நடைக்கும் 'கபிலர் அகவல்' பாடல் நடைக்கும் மிக்க ஏற்றத் தாழ்வு உண்டு. இச்செய்தி ஒன்றே கபிலர் அகவல், சங்கப் புலவர் கபிலரால் பாடப்பெற்றது இல்லை என்பதற்குத் தக்க சான்று ஆகும்.
கபிலர் அகவல் காட்டும் கதை
திருவள்ளுவர், பகவன் என்ற அந்தணனுக்கும், ஆதி என்ற புலைப்பெண்ணுக்கும் மகனாகப் பிறந்தார் என்று கபிலர் அகவல் கூறுகிறது. மேலும் அப் பகவன், தனக்கு அப் புலைப் பெண் வயிற்றில் பிறந்த குழந்தைகளைப் பிறந்த இடத்திலேயே பிறந்த அன்றே விட்டுச் சென்றான்; மகவு ஈன்ற தாயை, ஈன்ற அப்பொழுதே அவ்விடத்தினின்றும் அழைத்துச் சென்றான்; அத்தாயாகிய புலைகளும் விலைமகளைப் போல் பெற்ற பிள்ளையிடம் சற்றும் அன்பின்றி விட்டு அகன்றாள். இவ்வாறு கூறும் கட்டுக்கதையின் போக்கை என்ன வென்று சொல்வது! இவையெல்லாம் பிற்காலத்தவர் புனைந்து வைத்த பொய்க்கதை என்றே கொள்ள வேண்டும்.
கொக்கென்று நினைத்தனையோ, கொங்கணவா?
திருவள்ளுவர் வாசுகி என்னும் பெண்ணை மணம் புரிந்து இல்லற வாழ்வை நடத்தினார் என்பர். ஒரு நாள் வாசுகி தன் கணவருக்கு உணவு படைத்து கொண்டிருந்தாள். அப்போது வீட்டு வாயிலில் பிச்சைக்காரன் ஒருவன் 'அம்மா! சோறிடுக!' என்று கூவி நின்றான். கணவருக்குப் பணி செய்து கொண்டிருந்த வாசுகி சிறிது காலந் தாழ்த்து, உணவை எடுத்துக் கொண்டு வாயிலுக்கு வந்தாள். அங்கு நின்ற பிச்சைக்காரன் பெருங்கோபத்துடன் வாசுகியை நிமிர்ந்து நோக்கினான். அதைக்கண்ட வாசுகி, 'கொக்கென்று நினைத்தனையோ கொங்கணவா?' என்று வினவினாள்.
வாசுகியின் கற்பு வல்லமை
வாசுகியின் சொற்களைக் கேட்ட பிச்சைக்காரன் பெரிதும் வியந்தான். “என்ன வியப்பு! கொங்கணன் என்னும் நம் பெயரை எவரும் அறியாரே! காட்டின் இடையே நம்தலையில் எச்சமிட்ட கொக்கை ஏறெடுத்துப் பார்த்தோம். அது எரிந்து சாம்பல் ஆயிற்று. அச்செய்தியை நாட்டில் எவரும் அறியார். ஆனால் இப்பெண் வீட்டில் இருந்த வண்ணம் எங்ஙனம் தெரிந்து வினவினாள்? இவள் தனது கற்பின் வல்லமையால் உணர்த்து ஓதியிருக்க வேண்டும்! இன்னும் இங்கு நின்றால் நம்மையும் தனது கற்பால் எரித்து விடக்கூடும்" என்று அஞ்சி நெஞ்சம் பதறினான். உடனே தான் வாழ்ந்த காட்டை நோக்கி ஓட்டம் பிடித்தான்.
இவ்வரலாறு, வள்ளுவரது வாழ்க்கைச் சிறப்பையும், வாசுகியின் கற்பு மாண்பையும் விளக்குவது அன்றோ? இதைப் போன்ற பல வரலாறுகள் திருவள்ளுவருக்கு உலகத்தார் தந்த பெருமைக்குச் சின்னமாகத் திகழ்கின்றன.
அரசரின் அணுக்கச் செயலாளர்
தமிழ் நாட்டு அரசர்களிடம் அணுக்கச் செயலாளராகப்பணி புரிந்தவர்கள் 'வள்ளுவர்' என்று பெயர் பெற்றனர். அவர்கள் அமைச்சரைக் காட்டிலும் சிறந்தவர் ஆவர்.
வயதாலும் அறிவாலும் முதிர்ந்தவரே வள்ளுவத் தொழிலை ஏற்பார்கள். வள்ளுவர் வீதியின் வழியே செல்லும்போது, அவரைச் சுற்றிச் சேனைகள் அணிவகுத்துச் செல்லும். மெய்க்காப்பாளர்கள் பலர் சூழ்ந்து செல்லுவர். வள்ளுவரைச் சுற்றிக் காத்துச் செல்லும் சேனை 'செல்வச்சேனை' என்று சிறப்பிக்கப்படும். அப்படையில் பணிபுரியும் வீரர்கட்கு அதிக ஊதியம் உண்டு.
வள்ளுவரின் கடமைகள்
நாம் நம் வீட்டில் நடைபெறும் திருமணத்திற்கு ஊரழைக்க வேலைக்காரனை அனுப்புவோமா? அது முறையாகுமா? நாம் நேரே சென்று அழைப்போம்; அல்லது நம்முடன் நெருங்கிய உறவினரைப் போகச் சொல்லுவோம். அரசன் மகளுக்கோ அல்லது மகனுக்கோ திருமணம் என்றால் அரசன் தான் ஊரமைக்க வேண்டும். ஆனால் அந்த அரசனுக்குப் பதிலாக அவனுக்கு ஒப்பான சிறப்புடைய வள்ளுவர் சென்று ஊரழைப்பார். அரசன் கூறும் செய்திகளை மூன்று சிறந்த நாட்களில் குடிமக்களுக்கு அறிவிக்கும் கடமை வள்ளுவருக்கு உண்டு. அரசன் நடத்தும் திருநாள், திருமண நாள், போர் தொடங்கும் படை நாள் ஆகிய மூன்று நாட்களிலும் அரசன் சார்பாக வள்ளுவர் அச்செய்திகளை மக்களுக்கு அறிவிப்பார். அமைச்சரைக் காட்டிலும் மேன்மை வாய்ந்த வள்ளுவர் அறிவித்தால்தான் மக்களும் ஒப்புக் கொள்ளுவர்.
வள்ளுவர் கோலமும் பணியும்
வள்ளுவர் அவ்வாறு அரசன் ஆணையை அறிவிக்கச் செல்லும் போது பட்டத்து யானையின் மேல் அமர்ந்து கொள்வார். வெண்பட்டு உடுத்தி, வெண் சந்தனம் பூசி, வெள்ளை மாலை அணிந்து கொண்டு யானையின் மேல் விளங்குவார். அந்த யானை செல்லும் போது, அவரைச் சுற்றிப் படைகள் அணி வகுத்துச் செல்லும். அவர் யானையின் பிடரியில் வைத்த வீர முரசினை முழக்கிக் கொண்டு மக்களுக்குச் செய்தியை அறிவிப்பார். அம்முரசிற்கு வழிபாடு செய்த பிறகே, அது யானையின் மேல் ஏற்றப்படும். வள்ளுவர் முழக்கும் முரசில் வெற்றித் தெய்வம் வீற்றிருப்பதாக எண்ணுவர்.
அரசுக்கு அச்சாணி
இத்தகைய சிறப்பு வாய்ந்த வள்ளுவர் மரபில் தோன்றியவரே திருக்குறளை இயற்றியறிய ஆசிரியர் ஆகிய திருவள்ளுவர். மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் ஒருவனுக்கு உற்ற ஆட்சித் துணைவராய் அவர் விளங்கினார். அவனது அரசியலாகிய பெருந்தேருக்கு அச்சாணி போன்று அருந்தொண்டு புரிந்தார். அதனாலேயே ஒரு புலவர், 'செந்நாப் போதார் புனற் கூடற்கு அச்சு' என்று போற்றினார்.
திருக்குறள் இலக்கிய உப்பு
இவர் இயற்றிய திருக்குறள் 'அறநூல்' என்றே புலவர்களால் போற்றப்படும். தமிழில் தோன்றிய அறநூல்கள் எல்லாவற்றிலும் தலைமை வாய்ந்தது திருக்குறளே. இந்நூல் தோன்றிய பின்பு தமிழில் எழுந்த நூல்களில் எல்லாம் இதன் மணம் வீசுகின்றது. ஆதலின் இலக்கியமாகிய உணவுக்குச் சுவை தரும் உப்பு, திருக்குறள் என்பர். இதனை உலகிலேயே தலைசிறந்த நூல் என்று புலவர்கள் போற்றுவர்.
---------------
3. தமிழ் வளர்த்த சமண் முனிவர்கள்
தென்னாட்டில் சமணர்
கடைச் சங்க காலத்திற்குப் பின்னால் தமிழ் நாட்டில் சமண மதம் பரவத் தொடங்கியது. வட நாட்டிலிருந்து வந்த சமணர் பலர் தென்னாட்டில் குடியேறினர். அவர்கள் தம் மதத்தையும் தமிழ் நாட்டில் பரப்பி வந்தனர். தமிழ் நாட்டின் தலைநகரங்களில் பல சமணச் சங்கங்களை அமைத்தனர். அவற்றின் வாயிலாகத் தமிழர் இடையே சமண மதக் கொள்கைகளைப் பரப்பினர்.
சமணர், பாண்டியன் அவைப் புலவர்
அந்நாளில் வடநாட்டில் தொடர்ந்து பல்லாண்டுகளாகப் பாஞ்சம் வாட்டியது. அதனால் எண்ணாயிரம் சமணர் தென்னாட்டில் குடி புகுந்தனர். அவர்கள் மதுரையில் விளங்கிய பாண்டிய மன்னனைச் சரண் புகுந்தனர். அவனது ஆதரவைப் பெற்று, மதுரையைச் சூழ்ந்துள்ள மலைகளில் வாழ்ந்து வந்தனர். அவர்கள் எல்லோரும் அருந்தமிழை முனைந்து பயின்றனர். சில நாட்களில் தமிழ்ப் புலவர் களாய்ச் சிறந்து விளங்கினர். அதனால் பாண்டியன் அவையினை அணி செய்யும் புலவர்களாய்த் திகழ்ந்தனர். அரிய தமிழ் நூல்கள் பலவற்றை ஆக்கித் தமிழ்த்தாயை அலங்கரித்தனர். அவர்கள் தமிழுக்கு அருந்தொண்டு புரிந்தனர்.
சமணரின் தமிழ்த்தொண்டு
இத்தகைய சமண முனிவர்களின் தொண்டால் விளைந்த பயனே நாலடியார் என்னும் நல்லற நூலாகும். இந்நூல் தோன்றியது குறித்து வரலாறு ஒன்று வழங்குகின்றது. பஞ்சத்தால் தமிழ் நாட்டில் தஞ்சம் புகுந்த சமண முனிவர்கள் வட நாடு மழை பொழிந்து வளம் பெற்ற செய்தியைத் தெரிந்தனர். தங்கள் நாட்டிற்குச் செல்ல விரும்பிப் பாண்டிய மன்னனிடம் விடை வேண்டினர். கற்றவர்களும் நற்றவர்களும் ஆகிய அச்சமணப் பெரியார்களை மன்னன் பிரிவதற்கு மனம் வருந்தினான். பல ஆண்டுகளாகத் தனது அரசவையில் புலவர்களாக வீற்றிருந்த அம்முனிவர்களின் பிரிவு அரசனுக்குப் பெருங்கவலை அளித்தது.
‘உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்’
என்பார் திருவள்ளுவர். “புலவர்கள் உள்ளம் மகிழுமாறு கலந்து பழகுவார்கள். ‘மீண்டும் இவரை எப்போது காண்போம்?’ என்று எண்ணி இரங்குமாறு பிரிந்து செல்வார்கள். இது புலவர்களின் இயல்பாகும்” என்றார் அத்தெய்வப் புலவர்.
முனிவர்கள் மறைதல்
முனிவர்களைப் பிரிவதற்கு வருந்திய பாண்டியன் என்றும் பதில் பேசாது சென்று விட்டான். நாட்டுப் பற்று மிகுந்த அச்சமணர்களோ, அன்று இரவே தம் நாட்டிற்குப் புறப்பட்டனர். அவர்கள் புறப்படும் போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாட்டை ஏட்டில் எழுதினர். அவ்வேடுகளைத் தாம் தங்கியிருந்த இடத்திலேயே வைத்து மறைத்தனர். மறுநாள் காலையில் மன்னன் செய்தியைத் தெரிந்தான். சமணப் பெரியார்கள் தங்கியிருந்த இடங்களையெல்லாம், தானே நேரில் சென்று பார்வையிட்டான். ஒவ்வொருவர் தங்கியிருந்த இடத்திலும் ஒவ்வொரு பாடல் எழுதிய ஏடு இருக்கக் கண்டான். அவற்றையெல்லாம் எடுத்துப் புலவர்களை நோக்குமாறு பணித்தான். ஒவ்வொரு பாட்டும் வெவ்வேறு கருத்தை விளக்குவது என்று கண்டான். ஒன்றோடு ஒன்று பொருந்தாத கருத்துக்களுடன் அப்பாட்டுக்கள் இருத்தலை அறிந்தான்.
ஏடுகள் கரை ஏறுதல்
உடனே, பாண்டியன் அவ்வேடுகளை எல்லாம் வையை ஆற்று வெள்ளத்தில் அள்ளி வீசுமாறு கட்டளையிட்டான். அவ்வாறு எறியப்பட்ட எண்ணாயிரம் ஏடுகளில் நானூறு ஏடுகள் மட்டும் வெள்ளத்தை எதிர்த்துக் கரை ஏறின. அவற்றைப் பதுமமனார் என்னும் பைந்தமிழ்ப் புலவரிடம் சேர்த்தான். அவர் அவ்வேடுகளை உற்று நோக்கினார். அவற்றில் உள்ள பாடல்கள் ஒன்றோடு ஒன்று தொடர் உடையனவாக இருத்தலைக் கண்டார் அவற்றை வகைப்படுத்தித் தொகுத்தார்
நாலடியார் நூலின் நலம்
இவ்வாறு தொகுக்கப்பட்ட நூலில் உள்ளபாடல்கள் எல்லாம் நான்கு அடிகளையுடைய வெண்பாக்கள் ஆகும். ஆதலின், இந்நூலுக்கு ‘நாலடி நானூறு’ என்று பதுமனார் பெயர் சூட்டினார். அவர் விளக்கமான உரையும் வரைந்தார். ‘வேளாண் வேதம்’ என்று இந்நூலை வியந்து போற்றினார். ‘இதன்கண் உள்ள நானூறு பாடல்களும் வேத உண்மைகளாகும். வாழ்வுக்கு வழி வகுக்கும் மொழிகள் ஆகும்’ என்று பாராட்டினார்.
என்னும் பழைய பாடல், ‘நாலடி நானூறு’ என்னும் நூல் தோன்றிய வரலாற்றை விளக்கும்.
நாலும் இரண்டும்
இந்நூல் திருக்குறளுக்கு ஒப்பாக வைத்து மதிக்கப்படுவது ஆகும். ‘நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி’, ‘பழகுதமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில்’ என்று வழங்கும் பழமொழிகளில் நான்கு என்பது நாலடியாரைக் குறிப்பது ஆகும்; இரண்டு என்பது திருக்குறளைக் குறிப்பது ஆகும். இவை இரண்டும் தமிழ்ச் சொல்லுக்கு உறுதியைத் தருவன; தமிழ்ச் சொல்லின் அருமையினை
இவ்விரு நூல்களிலேயே காணலாம். இக்கருத்துக்களையெல்லாம் அப்பழமொழிகளால் அறிந்து மகிழலாம்.
நாலடியார் நூல் அமைப்பு
நாலடியாரும் திருக்குறளைப் போன்றே அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்று மூன்று பெரும்பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டுள்ளது. அறத்துப்பால் பதின்மூன்று அதிகாரங்களையும், பொருட்பால் இருபத்துநான்கு அதிகாரங்களையும், காமத்துப்பால் மூன்று அதிகாரங்களையும் கொண்டது. அறத்துப்பால் இல்லறவியல், துறவறவியல் என்று இரண்டு இயல்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. எனினும், துறவறவியலே முதலில் அமைந்துள்ளது. பொருட்பால் அரசியல், நட்பியல், இன்பவியல், துன்பவியல், பொதுவியல், பகையியல், பன்னெறியியல் என்று ஏழு இயல்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. காமத்துப்பால் இன்பதுன்பவியல், இன்பவியல் என்று இரண்டு இயல்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. பொருட்பாலில் வரும் இன்பவியலைத் தலையின்பவியல் என்பர். காமத்துப்பாலில் வருவதனைக் கடையின்பவியல் என்பர். அதிகாரம் ஒன்றிற்குப் பத்து வெண்பாக்கள் வீதம், நாற்பது
அதிகாரங்களும் நானூறு பாடல்களைக் கொண்டுள்ளன. அதனாலேயே ‘நாலடி நானூறு’ என்று பெயர் பெற்றது.
நூலின் சிறப்பு
இந்நூல் சிறந்த உவமைகள், உலக நடைமுறைகள், பழமொழிகள், பண்டைக் கதைகள் ஆகியவற்றைத் துணையாகக் கொண்டு உறுதிப் பொருள்களை விளக்குகிறது. அழகும், சுவையும் பொருந்த அறங்களைத் திறம்பட விளக்குவது இந்நூலின் சிறந்த பண்பு ஆகும். பழைய நூற்கருத்துக்களில் பொருத்தமானவற்றை இந்நூல் எடுத்தாளும், பொருத்தம் இல்லாதவற்றை மறுத்து உரைக்கும். இந்நூலின் சிறப்பை உணர்ந்த டாக்டர் ஜீ. யூ. போப்பையர், குப்புசாமி முதலியார், அனவரத விநாயகம் பிள்ளை ஆகியோர் இதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து உள்ளனர்.
மேன்மக்கள் குணம்
மேன்மக்கள், பிறர் தம்மை இகழ்ந்து பேசினால் அதனைப் பொறுத்துக் கொள்வர். அதற்காகச் சினங் கொண்டு மீண்டும் அவரை இகழ்ந்து பேச மாட்டார். இப்பொருளைச் சிறந்த ஓர் உவமையால் சமண முனிவர் ஒருவர் விளக்குவது மிகவும் நயமாக உள்ளது. ‘கோபங் கொண்ட நாய் ஒருவனைக் கவ்விக் கடித்தது. அதற்காக அவன் மீண்டும். நாயைக் கடிப்பது இல்லை யல்லவா? அது போலவே, மேன்மக்கள் தம்மை இகழ்ந்த வரைத் தாமும் திரும்ப இகழ்ந்து பேசும் இயல்பினர் அல்லர்.’ இங்ஙனம் ஒரு பொருளை எளிதான உவமையைக் கொண்டு விளக்கும் திறம் நாலடியாரில் காணும் நயமாகும்.
ஊழ்வினையின் தன்மை
’மந்தையில் மாடுகள் கூட்டமாக நின்று மேய்கின்றன. அவற்றுள் கன்றையீன்ற பசுக்களும் நின்றன. தாய்ப் பசுவைத் தேடிக் கதறிய கன்று ஒன்றை அக்கூட்டத்துள் ஓட்டினால், அக்கன்று தன் தாய்ப் பசுவைத் தேடிக் கண்டு கொள்ளும். அதைப் போலவே ஒருவன் முற்பிறவியில் செய்த வினை, மறு பிறவியில் அவனை நாடி அடைந்து விடும்' என்கிறார் ஒரு சமண முனிவர்.
அறிஞர் நட்பும் நல்லியல்பும்
‘தேவர்கள் வாழும் வானுலக வாழ்வு இன்பந் தருவதே, கூர்மையான நல்லறிவு கொண்டவர்கள், கேள்வி அறிவு நிரம்பியவர்கள் ஆகியோர் கூடியிருந்து உரையாடி மகிழ்வதால் அடையும் இன்பமே அவ்வானுலக இன்பத்தினும் மேலானது’ என்கிறார் ஒரு சமண முனிவர். ஒருவனுக்கு அமைய வேண்டிய நல்ல பண்புகளைப் பற்றிச் சொல்லுகிறார் ஒரு சமண முனிவர். ‘பிறர் பேசும் இரகசியங்களைக் கேட்பதில் செவிடனாக இருக்க வேண்டும். அயலான் மனைவியைக் காண்பதில் குருடனாக இருக்க வேண்டும். பிறர் மீது புறங்கூறுவதில் ஊமையாக இருக்கவேண்டும். இத்தகைய நல்லொழுக்கங்களை உடையவனுக்கு எந்த அறத்தையும் எடுத்துரைக்க வேண்டுவது இல்லை’ என்கிறார் அச்சமண முனிவர்.
கல்லறம் சொல்லும் நூல்
இங்ஙனம் நானூறு பாடல்களும் நானூறு அறங்களை நயம்படவும் திறம்படவும் விளக்குகின்றன. இத்தகைய நாலடிப் பாக்களைக் கொண்ட நூலை, நம் முன்னோர் ‘நாலடியார்’ என்று ‘ஆர்’விகுதி கொடுத்துப் பாராட்டினர்.
---------------
4. அறம் உரைத்த அன்னயார்
புலவர்களும் வள்ளல்களும்
இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட கடைச் சங்க காலத்தில் தமிழ்ப் புலவர்கள் பலர் வாழ்ந்தனர். அவர்களை ஆதரித்த அரிய வள்ளல்களும் வாழ்ந்தனர். அவர்களில் புலவர் பாடும் புகழ் உடையவராய்ச் சிறந்து விளங்கியவர் ஏழு பேர்கள் ஆவர். அவர்களைக் 'கடையெழு வள்ளல்கள்' என்று கற்றோர் போற்றுவர். அவ்வெழுவரில் ஒருவன் அதியமான் என்னும் அரசன்.
பாணர் குலத்துப் பாவையர்
அதியமானின் அரசவையில் விளங்கிய புலவர்களில் ஒருவர் ஔவையார். அவர் அவனது அவைப் புலவராக மட்டும் விளங்க வில்லை. அவனுக்கு உற்ற இடத்துத்தக்க அறிவுரையும் அறவுரையும் கூறும் அமைச்சராகவும் விளங்கினார். இத்தகைய ஔவையார் பாணர் மரபில் தோன்றிய பாவையார். ஆவர். பாணர் என்பார் யாழினை இசைத்துப் பண்ணுடன் பாடும் பண்புடைபார். அப்பாணர் குலத்தில் தோன்றிய பெண்களைப் பாடினியர் என்றும் விறலியர் என்றும் கூறுவர். பாணர் பாடும் பாட்டலுக்கு ஏற்றவாறு ஆடும் இயல்பு உடையார் விறலியர். தாமும் பாடிக் கொண்டு ஆடும் இயல்பு உடையார் பாடினியர் எனப்படுவர்.
ஒளவையார் துறவும் அமைச்சும்
ஔவையாரோ ஆடலிலும் பாடலிலும் வல்லவராக விளக்கினார். இளமையிலேயே தமிழ்ப் புலமை மிக்கவராகவும் விளங்கினார். அவருடைய அறிவும் திறமும் கண்ட ஆடவர், அவரை மணஞ் செய்து கொள்ள அஞ்சினர். அவரும் தமது புலமையை உலகிற்கு நன்கு பயன்படுத்த வேண்டும் என்று கருதினார். அதற்கு இல்லற வாழ்வு ஒரு தடையாக இருக்கும் என்று எண்ணினார். அதனால் இளமையிலேயே துறவுநெறி பூண்டார். தூய வாழ்வை மேற்கொண்டு ஒழுகினார். நல்லிசைப் புலமை மெல்லியலாராய் நாடு எங்கும் சுற்றி வந்தார். மன்னர்களையும் வள்ளல்களையும் தமது இன்னிசைப் பாக்களால் புகழ்ந்து பாடினார். அவர்கள் அன்புடன் வழங்கிய கொடையை, மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டார். இத்தகைய தமிழ்ச் செல்வியாகிய ஒளவையாரை அதியமான் தனக்கு அமைச்சராக ஏற்றுக் கொண்டான்.
அதியமான் பெற்ற அமுதக்கனி
ஒரு சமயம் அதியமான் பொதிய மலைப் பக்கம் போயிருந்தான். அங்கே அவனுக்கு அரியதொரு நெல்லிக்கனி கிடைத்தது. அது பன்னிரண்டு ஆண்டுகட்கு ஒரு முறை தோன்றுவது. அக்கனியைத் தரும் நெல்லி மரத்தை நெருங்குவதே அருமை. எவரும் ஏற முடியாத மலையுச்சியில் அந்த மரம் நின்றது. பெரிய பாறைகளுக்கு இடையில் உள்ள பிளவு ஒன்றில் அது நின்றது. அந்த மரத்தைப் பருத்த வண்டுகள் சுற்றிச் சுற்றி மொய்த்துக் கொண்டு இருந்தன. அவ்வண்டுகளை அதியமான் மருந்து தூவி விலக்கினான். தக்க வலியவரைக் கொண்டு கனியைப் பறித்துவரச் செய்தான்.
ஒளவையாருக்குக் கனியை அளித்தல்
அக்கனி, உண்டவர்க்கு உரமான உடலைத் தர வல்லது; வளமான நீண்ட கால வாழ்வையும் தர வல்லது. இவ்வளவு அருமை வாய்ந்த கனியை உண்ணும் எண்ணத்துடன் அதியமான் கையில் எடுத்தான். அச்சமயத்தில் தமிழ் மூதாட்டியாராகிய ஔவையார், தன்னை நோக்கி வருவதைக் கண்டான். உடனே, அவன் உள்ளம் மாறி
விட்டது. 'இக்கனியை நாம் உண்ணுவதிலும் இவ்வன்னையார் உண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்? இவர் நீண்ட காலம் வாழ்வார் உலகிற்கு அரிய உண்மைகளை ஆராய்ந்து உரைப்பார். அதனால் மக்கள் மிக்க நலத்துடனும் வளத்துடனும் வாழ்வார்கள் அல்லவா?' என்று எண்ணினான். உடனே, தன்னை நோக்கி வந்த தமிழ் மூதாட்டியாரை அன்புடன் வரவேற்றான். தன் கையில் இருந்த கனி அவர் கையில் அளித்தான். 'தாயே! இதனைத் தாங்கள் உண்ணுங்கள்' என்று வேண்டினான்.
அமுதக்கனி உண்ட அன்னையார்
வள்ளலின் சொல்லைத் தட்டாத தமிழன்னை அக்கனியை வாயில் இட்டுச் சுவைத்து மென்று தின்றார். அது பிற கனி களைப் போல் அல்லாமல், அரிய சுவை உடையதாக இருந்தது. அமிழ்தினும் இனிய சுவை உடையதாக இருந்தது. அச்சுவையினைத் தெரிந்த பிறகுதான் அதியமானிடம் அதன் அருமையைக் கேட்டு அறிந்தார். அதனை அவன் உண்ணாது, தமக்கு அளித்த உயர்ந்த உள்ளத்தை நினைந்து நினைந்து உருகினார். அவ்வள்ளலின் உயர்ந்த பண்பைச் சிறந்த தமிழ்ப் பாட்டு ஒன்றால் புகழ்ந்தார். 'பெருமானே! நீ நீல மணிமிடற்றுச் சிவனைப் போல நிலைபெற்று வாழ்க' என்று வாயார வாழ்த்தினார்.
சுந்தார் காலத்தில் ஔவையார்
அதியமான் அளித்த அமுத நெல்லிக் கனியை உண்ட ஒளவையார் எவ்வளவு காலம் வாழ்ந்திருக்க முடியும்? சைவ சமய ஆசாரியருள் ஒருவராகிய சுந்தரர் காலத்தில் ஔவையார் என்ற பெயருடைய பெண் புலவர் ஒருவர் வாழ்ந்தார். அவர், சுந்தரர் கயிலாயம் செல்லுவதைக் கேள்வியுற்றார். சிவபெருமான் அனுப்பிய வெள்ளை யானையின் மீது ஏறி, அவர் விரைந்து செல்லுவதாகத் தெரிந்தார். அவரைப் பின் தொடர்ந்து, சேரமான் பெருமாள் என்னும் அரசரும் செல்லுவதாகத் தெரிந்தார். அவ்வரசர் குதிரை மீது ஏறிச் செல்லுவதாகவும் செய்தி அறிந்தார்.
ஔவையார் கயிலாயம் அடைதல்
இங்ஙனம் யானை மீதும் குதிரை மீதும் ஏறிச் செல்லும் இருவர்க்கும் முன்னால் ஔவையார் கயிலாயம் சென்று வீட நினைத்தார். அதற்காக விநாயகப் பெருமானை வேண்டினார். அவ்வாறு வேண்டிப் பாடிய அருள் நூலே 'விநாயகர் அகவல்' என்று கூறப்படுகிறது. ஒளவையாரின் அகவலைக் கேட்டருளிய விநாயகர், அவ்வம்மையாருக்கு அருள்புரிந்தார். சுந்தரருக்கும் சேரமான் பெருமாளுக்கும் முன்னால் அவரைக் கயிலாயம் கொண்டு சேர்த்தார். கயிலாயத்தை அடைந்த ஔவையார், தமக்குப் பின் வந்த இருவரையும் அங்கு வரவேற்றார் என்பர்.
இரண்டாம் ஔவையார்
அதியமான் காலத்திற்கு ஆயிரம் ஆண்டு கட்குப் பின்னால் சுந்தரர் வாழ்ந்தவர். சுந்தரர் காலம் வரை அந்த ஔவையார் வாழ்ந்தார் என்று கொள்ள முடியுமா? அவ்வாறு கொண்டால் ஒருவர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்தார் என்று கொள்ள வேண்டும். அவ்வாறு கூறுவதை அறிஞர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆதலின் சுந்தரர் காலத்தில் வாழ்ந்த ஒளவையார் மற்றொருவரே.
ஒளவையார் மூவர்
எனவே, ஔவையார் என்ற பெயருடைய பெண் புலவர்கள் இருவரைப் பற்றித் தெரிந்தோம். ஒருவர் அதியமான் காலத்தில் வாழ்ந்த ஒளவையார்; மற்றொருவர் சுந்தரர் காலத்தில் வாழ்ந்தவர். இவர்கள் இருவரை அல்லாமல், மற்றும் ஓர் ஒளவையார் நானூறு ஆண்டுகட்கு முன் வாழ்ந்தார். அவரே ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி ஆகிய சிறு நூல்களைப் பாடிய செல்வியார்.
வான்கோழியைப் பாடிய ஒளவையார்
பிற்காலத்தில் வாழ்ந்த மூன்றாவது ஔவையார் பாடிய நூல்களில் ஒன்று மூதுரையாகும். அதனை 'வாக்குண்டாம்' என்றும் வழங்குவர். அந்நூலில் 'வான்கோழி' என்ற ஒரு பறவையைப் பற்றி ஒளவையார் குறிப்பிடுகிறார். காட்டில் மயில் தனது அழகான தோகையை விரித்து ஆடியது. அக்காட்சியை வான்கோழி ஒன்று கண்டது. அது தன்னையும் மயிலென எண்ணிக் கொண்டு, தன் அழகு இல்லாத சிறகை விரித்து ஆடியது. இவ்விரண்டு பறவைகளும் ஆடுகின்ற காட்சியை ஒளவையார் கண்டார். இதனை உவமையாகக் கொண்டு, அழகான பாட்டு ஒன்றைப் பாடி னார். 'கற்றவன் ஒருவன் கவி பாடினான். அவன் பாடுவதைக் கண்ட முடன் ஒருவனும் கவி பாடினால் அச்செயல் எப்படி இருக்கும்? வான் கோழி, மயில் ஆடுவதைக் கண்டு தானும் ஆடுவதை ஒக்கும்' என்று பாடலை அமைத்தார்.
அமெரிக்க நாட்டு வான்கோழி
இப்பாட்டில் கூறப்படும் வான்கோழி தமிழ்நாட்டுப் பறவையன்று; அமெரிக்க நாட்டில் வாழ்வது. இப்பறவை நானூறு ஆண்டுகட்கு முன்புதான் தமிழ் நாட்டுக்குக் கொண்டுவரப் பட்டது. ஆதலின் வான்கோழியின் இயல்பை வருணித்துப் பாடிய ஒளவையார் நானூறு ஆண்டுகட்கு முற்பட்டவர் அல்லர். அவர் பதினாறாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்ட காலத்தில் வாழ்ந்தவரே.
சிறுவர்க்கு அறிவுரைகள்
எனவே, வான் கோழியைப் பாடிய ஔவையாரே சிறுவர்க்கு அறிவுரையாக விளங்கும் 'ஆத்திசூடி' போன்ற அறநூல்களைப் பாடினார். இவர் தாம் பாடிய நான்கு சிறு நூல்களிலும் விநாயகப் பெருமானுக்கே வணக்கம் கூறுகிறார். ஆத்திசூடி, கொன்றை வேந்தன், வாக்குண்டாம் ஆகிய மூன்று நூல்களும் அந்நூல்களின் முதற்பாடலின் முதல் தொடரையே பெயராகக் கொண்டுள்ளன. இவ்வாறு வழங்கும் பெயர்களை இலக்கணத்தில் முதற்குறிப்புச் சொல்லுக்கு உதாரணமாக உரைப்பர்.
ஆத்திசூடியின் அருமை
தமிழ் நூல்களில் சிறு பிள்ளைகள் படிப்பதற்கு ஏற்ற தொடக்க நூலாக 'ஆத்தி சூடி' அமைந்துள்ளது. குழந்தைகள் மனப்பாடம் செய்து கொள்வதற்கு ஏற்றவாறு சிறு சிறு தொடர்களால் அந்நூல் அமைந்துள்ளது. தாயுள்ளம் படைத்த தமிழ் மூதாட்டியாராகிய ஔவையார், குழந்தைகளின் உள்ளத்தைத் தெரிந்து அவ்வாறு பாடியுள்ளார். அறஞ் செய் விரும்பு, ஆறுவது சினம், இங்ஙனம் அகர வரிசையில் அமைக்கப்பட்ட நூற்றெட்டுத் தொடர்கள் இதில் உள்ளன. இவை இறை வழிபாட்டுக்கு ஏற்ற நூற்றெட்டு மந்திரங்கள் போல் அமைந்திருப்பது ஓர் அழகாகும். இச்சிறு நூல் குழந்தைப் பருவத்தில் உள்ள பிள்ளைகள் எளிதில் கற்று உள்ளம் கொள்ளத் தக்கது அன்றோ?
நாற்சீர் அறநூல்
இதற்கு அடுத்த படியில் விளங்குவது 'கொன்றை வேந்தன்' என்னும் அறநூல் ஆகும். இஃது இளந்தைப் பருவத்துப் பிள்ளைகள் கற்பதற்கு ஏற்ற எளிமையுடையது ஆகும். நான்கு சீர்களைக் கொண்ட நற்றமிழ்த் தொடராக அமைந்த இந்நூலில் தொண்ணூற்றொரு தொடர்கள் அமைந்துள்ன. ஆத்திசூடியில் குறித்த அறங்களே இந்நூலில் காரணங்களுடன் விளக்கப்படும். ஆத்திசூடியில் 'ஒளவியம் பேசேல்' என்ற ஓளவையார், கொன்றை வேந்தனில் 'ஒளவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு' என்று அதன் விளைவையும் விளக்கினார்.
முதுரை முப்பது
இதனையடுத்துக் காளைப் பருவத்து இளைஞர்கள் கற்றற்கு உரிய சிறிய நூலே 'மூதுரை' என்பது ஆகும். இந்நூலை 'வாக்குண்டாம்' என்றும் வழங்குவர், மூதுரை நூலின் முதற்பாடல் 'வாக்குண்டாம்' என்று தொடங்கும். ஆதலின் இந்நூல் 'வாக்குண்டாம்' என்றும் பெயர் பெற்றது. இதில் கடவுள் வாழ்த்து நீங்கலாக முப்பது பாடல்கள் உள்ளன. தமிழில் உயிரும்
மெய்யும் ஆகிய முதல் எழுத்துக்கள் முப்பது அன்றோ ! அவை போன்று, இந்நூல் முப்பது இனிய வெண்பாக்களைக் கொண்டு விளங்குகின்றது.
நீரளவே யாகும் நீராம்பல்
‘வெள்ளத் தனைய மலர் நீட்டம் மாந்தர் தம்
உள்ளத்(து) அனைய(து) உயர்வு’
என்பது வள்ளுவர் வாக்கு. நீரில் பூக்கும் பூக்களின் தண்டுகள், அந்நீரின் ஆழத்திற்கு ஏற்ற நீளம் உடையனவாக இருக்கும். அதைப் போன்றே மக்களுக்கு உயர்வெல்லாம், அவர்கள் மனத்தில் எழும் ஊக்கத்திற்கு ஏற்ப அமையும் என்பது அப்புலவர் கருத்து. இக்குறளில் வரும் உவமையை மட்டும் ஔவையார் எடுத்துக் கொண்டார். ‘வெள்ளத் தனைய மலர்நீட்டம்’ என்பதை, ‘நீரளவே யாகுமாம் நீராம்பல்’ என்று கூறினார். இந்த ஓர் உவமையை வைத்துக் கொண்டு மூன்று உண்மைகளை விளக்கினார் ஔவையார். ‘ஒருவன் கற்ற நூலின் அளவோட துண்ணறிவு அமையும்; முன்பு செய்த தவத்தின் அளவே செல்வம் அமையும்’. பிறந்த குலத்தின் அளவே குணம் அமையும்.' இவற்றை ஒரு பாட்டில் காட்டும் அவர் திறத்தை என்னென்று போற்றுவது!
நீரளவே யாகுமாம் நீராம்பல்; தான்கற்ற
நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு :-மேலைத்
தவத்தளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்:
குலத்தளவே ஆகும் குணம்’
இவ்வாறு உவமைகளைக் கொண்டு பல உண்மைகளைச் சிறுவர்க்கு எளிதாக விளக்கும் திறத்தை மூதுரையில் கண்டு மகிழலாம்.
முத்தமிழ் வேண்டும் மூதாட்டியார்
ஒளவையார் பாடிய மற்றோர் அறநூல் ‘நல்வழி’யாகும். இந்நூல் வயதால் முதிர்ந்தவர்க்கு அறநெறி காட்டும் திறம் உடையதாகும். இந்நூலின் முதற் பாடலில் ஒளவையார் விநாயகப் பெருமானிடம் ‘சங்கத் தமிழ் மூன்றும் தா’ என்று வேண்டுகிறார். முச்சங்கத்தார் போற்றி வளர்த்த முத்தமிழ் நூலறிவை வேண்டும் அவர், அவற்றிற்கு ஈடாகத் தாம் நான்கைத் தருவதாகவும் கூறுகிறார் பால், தேன், பாகு, பருப்பு என்னும் நான்கையும் கலந்து உண்ணுவதற்கு நான் தருவேன். நீயோ எனக்கு முத்தமிழைத் தந்தால் போதும் என்று வித்தகமாக அப்புலவர் கேட்பது வியப்பைத் தருவதாகும்.
பெரியோரும் சிறியோரும்
இவ்வாறு விநாயகப் பெருமானிடம் வேண்டிய ஒளவையார் சங்கத் தமிழ் நூல்களின் அரிய கருத்துக்களையே நல்வழியாகத் திரட்டிக் கொடுத்துள்ளார். “சாதி இரண்டேயன்றி வேறில்லை; அவை பெரியோர், சிறியோர் என்ற சாதிகளே; இல்லாத ஏழை மக்களுக்கு இட்டார். எல்லாரும் பெரியோர் ஆவர்; இடாதார் எல்லாரும் சிறியோர் ஆவர்; இவ்வாறு சாதியைப் பற்றி வேதமே விளக்குகின்றது” என்று உயர்ந்த உண்மையை மிகவும் எளிதாகவும் உறுதியாகவும் ஔவையார் நல்வழியில் விளக்குகின்றார்.
தமிழர் கற்கத் தக்கன
தமிழர் கற்கத் தக்க நூல்கள் எவை என்பதை ஒளவையார் ஒரு பாட்டில் காட்டினார். ‘திருக்குறள், வேதத்தெளிவாய்விளங்கும். சிவஞானபோதம், மூவர் தமிழாகிய தேவாரம், சேக்கிழார் பாடிய திருத்தொண்டர் புராணம், மாணிக்கவாசகர் பாடிய திருக்கோவையார், திருவாசகம், திருமூலர் அருளிய திருமந்திரம் ஆகிய ஏழு நூல்களையும் தமிழர் கட்டாயம் கற்றல் வேண்டும். அவை ஏழும் ஒப்பற்ற நூல்கள்’ என்று நல்வழியில் வற்புறுத்தியுள்ளார்.
அரசர் இருவர்
ஐந்நூறு ஆண்டுகட்கு முன்னர்த் தென்பாண்டி நாட்டைச் சிற்றரசர்கள் இருவர் ஆண்டு வந்தனர். அவர்கள் இருவரும் உடன் பிறந்த சகோதரர் ஆவர். அவருள் மூத்தவர் வரதுங்கராமர்; இளையவர் அதிவீரராமர் இருவரும் சிறந்த தமிழ்ப் புலவர்கள். அவர்கள் காவலரும் பாவலருமாய் நாட்டையாண்ட நல்லோர் ஆவர். மூத்தவர் ஆகிய வரதுங்க ராமர் கரிவலம்வந்த நல்லூரில் இருந்து. அதைச் சூழ்ந்த நிலப்பகுதியை ஆண்டார். அதிவீரராமர் கொற்கை நகரிலிருந்து, அதைச்சார்ந்த நிலப்பகுதியை ஆண்டார். பின்னாளில் அதிவீரராமர் தென்காசியைத் தலைநகராகக் கொண்டார். இவரே தென்காசித் திருக்கோவிலைக் கட்டியவர்.
சிறப்புப் பெயர்கள்
அதிவீரராமர் பல சிறப்புப் பெயர்களைப் பெற்றவர். வல்லபன், பிள்ளைப்பாண்டியன், குலசேகரன், குணசேகர வழுதி, தமிழ் வளர்த்த தென்னவன் என்பன அவர் பெற்ற சிறப்புப் பெயர்கள் ஆகும். இவ்வரசர் தம்மைக் ‘கொற்கையாளி குலசேகரன்’ என்று கூறிக் கொள்கிறார். அதனால் இவர் கொற்கையைத் தலைநகராகக் கொண்டு தமிழ் நாட்டின் ஒரு பகுதியை ஆண்டவர் என்பது புலனாகும்.
அசரும் ஆசிரியரும்
இவ்வரசர் நிரம்ப வழகிய தேசிகர் என்னும் தமிழ்ப் புல்வரிடம் தமிழ் நூல்களைப் பயின்றார். தேசிகர், இவரது அரசவைப் புலவராகவும் விளங்கினார். அவர் மிகவும் கருமையான திருமேனி உடையவர். ஆதலின், அதிவீராமர் ஒருநாள் தம் ஆசிரியரிடம் நீர் அண்டங் காக்கைக்குப் பிறந்தவரோ? என்று நகைச்சுவையாகக் கேட்டார். அது கேட்ட தேசிகர், ‘அரசே! தாங்கள் அன்றோ அண்டங் காக்கைக்குப் பிறந்தவர்? அவ்வாறு இருக்கப் புலவனாகிய என்னை அண்டங் காக்கைக்குப் பிறந்தவன் என்பது பொருந்துமோ?’ என்றார். அண்டங் காக்கை என்ற தொடர் ‘உலகைக் காத்தல்’ என்றும் பொருள் படும். உலகைக் காத்தற்குப் பிறந்தவர் அரசர் என்ற பொருள் தோன்றுமாறு கூறி, மன்னரை மகிழ்வித்தார். புலவரின் நுண்ணறிவைக் கண்ட மன்னர் அவருக்குப் பல பரிசுகளை வழங்கினார்.
மண்டையில் குட்டும் மன்னர்
அதிவீரராமர் தம்மிடம் பரிசு பெறுவதற்கு வரும் புலவர்களைப் பலவாறு சோதிப்பார். தக்க விடையளிக்க முடியாது தத்தளிக்கும் தமிழ்ப்புலவர் மண்டையில் ஓங்கிக் குட்டுவார். ‘நிறைந்த புலமை பெற்றுச் சிறந்த கவிதை பாடுக’ என்று அறிவுரை கூறி அனுப்புவார். ஆதலின் ‘குட்டுதற்கோ பிள்ளைப்பாண்டியன் இங்கில்லை’ என்னும் பழமொழி வழங்கி வருகின்றது.
நைடதம் பாடிய நாவலர்
நிடத நாட்டை ஆண்ட மன்னன் நளன் என்பவன். அவனுடைய வரலாற்றை வட மொழியில் ஹர்ஷகவி என்பார் காவியமாகப் பாடியுள்ளார். அந்நூல் ‘நைஷதம்’ எனப்படும். அதனையே அதிவீரராமர் தமிழில் ‘நைடதம்’ என்று மொழிபெயர்த்துப் பாடினார். அவர் தமிழ், வடமொழி ஆகிய இருமொழிகளிலும் பெரும்புலமை உடையவர். ஆதலின் வடமொழிக் காவியத்தின் சுவை குன்றாது தமிழில் பாடியுள்ளார். அந்நூலின் பெருமையை அறிந்த புலவர்கள் ‘நைடதம் புலவர்க்கு ஒளடதம்’ என்று போற்றினர். புலவர்களின் அறியாமை
அ.த.அ.—4 நோயைப் போக்கும் அரிய மருந்தாக விளங்தகுது நைடதம் என்னும் காவியம் ஆகும்.
தம்பியின் நூல் கண்ட தமையனார்
நைடதம் பாடிய நாவலராகிய அதிவீரராமர், அதனைத் தம் தமையனாரிடம் அனுப்பினார். அந்நாலுக்குச் சாற்றுக்கவி பெற்று தருமாறும் தூதனிடம் கூறி அனுப்பினார். வரதுங்கராமர், வானவர் தலைவனாகிய இறைவன் புகழையே பாடுபவர். மானிடர் புகழைப் பாடச் சிறிதும் மனம் விரும்பாதவர். ஆதலின்; ‘இந்நூல் எதுபற்றியது?’ என்று தூதனிடம் வினவினார். ‘மாநிலம் ஆண்ட பெருமன்னனாகிய நளனைப் பற்றிய காவியம்’ என்று சொல்லக்கேட்டார். ‘இதனை அரசியாரிடம் கொடுத்துச் சாற்றுக்கவி பெற்றுச் செல்க’ என்று கட்டவாயிட்டார். அவ்வாறே நூலைக் கொண்டுவந்த துதனும் வரதுங்கர் மனைவியிடம் கொண்டு கொடுத்தான். அரசர் விருப்பத்தையும் அறிவித்தான்.
அரசியின் அரிய கருத்து
அரசரின் விருப்பினை அறிந்த அரசி நைடத நூலை ஆர்வமுடன் வாசித்தாள். ‘இந்நூல் வேட்டை நாயின் நடையைப் போன்றும், கரும்பினை அடியிலிருந்து கடித்துத் தின்னுவது போன்றும் அமைந்துள்ளது’ என்று ஓலையொன்றில் தன் கருத்தை எழுதினாள். அதனைத் தூதனிடம் கொடுத்து அனுப்பினாள். தமையனாரின் மனைவி எழுதியனுப்பிய ஓலையை அதிவீரராமர் கூர்ந்து நோக்கினார்.
“ஓகோ! முதலில் விரைந்து ஓடிப் பின்பு இளைத்து வருந்தும் வேட்டை நாயின் நடையைப் போன்று அல்லவா நம் நூல் அமைந்துள்ளதாம். கரும்பின் அடிப்பாகம் மிக்க சுவையுடையதாக இருக்கும். மேலே நுனிப் பாகத்தை நோக்கிக் கடித்துச் செல்லச் செல்லச் சுவை குன்றிப் போய்விடும். அதைப் போன்று நம் நூல் தொடக்கத்தில் மிக்க சுவையுடையதாக இருக்கிறது போலும்! பின்னால் செல்லச் செல்லச் சுவை குறைந்து விடுகிறது. போலும்! நன்றாக நம் நூலை மதிப்பிட்டு விட்டாள் மைத்துனி!. இருவரும் தமிழ்ப் புலவர் என்ற செருக்கால் அன்றோ இவ்வாறு எழுதி விடுத்தாள்! இன்றே தமையனாருடன் போருக்கு எழுவேன். அவரைப்போரில் எதிர்த்து வெற்றி கொள்ளுவேன்” என்று வீறுகொண்டு தம் தமையனார் வரதுங்கருடன் போரிடப் புறப்பட்டார்.
அதிவீரராமர் படையெடுப்பு
அதிவீரராமர் நால்வகைப் படைகளுடனும் சென்றார். வரதுங்கர் வாழும் கல்லுரரின் எல்லையை அடைந்தார். ஆங்கொரு சோலையில் தங்கினார். தமது படையெடுப்பைத் தமையனருக்குத் தெரிவிக்குமாறு தூதன் ஒருவனே அனுப்பினார். அவன் திரும்புவதற்கு நீண்ட நேரம் ஆயிற்று. ஆதலின், தாமே நேரே சென்று தமையனாரைச் சக்திக்க நினைத்தார். நகருள் புகுந்து வரதுங்கர் அரண்மனையை அடைந்தார். தமையனார் சிவபூசை செய்து கொண்டிருப்பதாகச் செய்தி அறிந்தார். அவரது பூசையறையின் பக்கமாகவே சென்று வெளியே காத்திருந்தார்.
வரதுங்கரின் பாடல்
வரதுங்கள் நாள்தோறும் தமது பூசை முடிவில் சிவபெருமான்மீது சொந்தமாகவே ஒரு செந்தமிழ்க் கவி பாடி வழிபடுவார். வழக்கம்போல் அன்றும் ஒரு கவியைப் பாடி வழிபட்டார். 'சிவன் காதுகளில் சங்கையே குண்டலமாக அணிந்தவன். தென்திசையில் உள்ள கரிவலம்வந்த நல்லூரில் எழுந்தருளும் இறைவன். கங்கையைச் சடைமுடியில் தரித்தவன். இத்தகைய சிவபெருமான்மீதே புலவர்கள் எல்லோரும் கவி புனையவேண்டும். அவ்விதம் அல்லாமல் உலகில் பிறந்து இறக்கும் மக்களைப் பாடுவது, நரகில் விழுந்து அழுந்துவதற்கே.' இக்கருத்து அமைந்த பாடலை வரதுங்கர் பாடி வழிபட்டார்.
மன்னரின் மனமாற்றம்
சிவபூசை முடிவில் தமையனார் பாடிய அரிய பாடலை அதிவீரராமர் கேட்டார். அப்பாடலின் கருத்தில் தமது மனத்தைப் பறிகொடுத்தார்; உள்ளம் உருகினார். அவர் உடம்பு நடுங்கியது. தாம் செய்த பிழையை அறிந்து வருந்தினார். அங்கிருந்து பூசை அறைக்குள் ஓடோடிச் சென்றார். தமையனார் பாதங்களில் வீழ்ந்து வணங்கினார். தம்மை மன்னிக்குமாறு தமையனாரைப் பன்முறை வேண்டினார். வரதுங்கரோ தம்பியின் செயலைக் கண்டு திகைத்தார். முன்பு நடந்த செய்திகளைப் பிறர் சொல்லக் கேட்டார். தம்பியின் உள்ளத்தை மாற்றிய வள்ளலாகிய இறைவன் அருளைப் பாராட்டினார். தம்பியைத் தம் கரங்களால் தூக்கி மார்போடு அணைத்துக் கொண்டார்.
அரசியின் அறிவுரை
இவ்வேளையில் அங்கு வந்த வரதுங்கரின் மனைவி நிகழ்ந்ததை அறிந்தாள். அவள் தன் மைத்துனனுக்குச் சிறந்த அறிவுரை கூறினாள். 'அரசே! உடன்பிறப்பு என்பது உயர்ந்த தோள்வலி அல்லவா! அதனை இழக்கத்துணிந்தீரே! இராமனும் பரதனும் போன்ற உடன்பிறப்பு அல்லவா உலகில் உயர்வைத் தரும்! கதிரவன் மைந்தனாகிய சுக்கிரீவனையும், இலங்கை வேந்தனாகிய விபீஷணனையும், பாண்டவரில் ஒருவனாகிய பார்த்தனையும் உடன்பிறப்புக்கு எடுத்துக்காட்டாக, எண்ணாதீர்!' என்று அன்புடன் எடுத்துரைத்தாள்.
என்ற இனிய பாட்டைப் பாடினாள். அண்ணியாரின் அறிவுரைபைக் கேட்ட அதிவீரராமர் அகமகிழ்ந்தார்.
நறுந்தொகைச் சிலநூல்
இம்மன்னர், சிறுவர்க்கு அறிவுரை புகட்ட விரும்பினார். சின்னஞ் சிறிய தொடர்களால் உயர்ந்த உண்மைகளை விளக்கினார். அத்தகைய எண்பத்திரண்டு தொடர்களை உடைய சிறுநூலே 'நறுந்தொகை' என்னும் அறநூல். இந்நூல் 'வெற்றி வேற்கை' என்றும் கூறப்படும். இது தமிழ் மணம் கமழும் அரிய கருத்துக்களைத் தொகுத்துக் காட்டும் சிறிய நூல் ஆகும். இந்நூலேக் கற்றுத் தம்குற்றங்களைக் களைவோர் குறைவின்றி வாழ்வார்கள்.
உள்ளங் கவர்ந்த பாடல்
பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்பான் கல்வியின் சிறப்பை ஒரு பாட்டால் விளக்கியுள்ளான். அப்பாடல் அதிவீரராமரது உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்தது. ஆதலின், அதன் கருத்துக்களேச் சிறுவரும் அறிய வேண்டும் என்று விரும்பினார். எளிய சொற்களைக் கொண்ட தொடர்களால் அப்பாட்டைத் தம்நூலில் விளக்கினார்.
கல்விச் சிறப்பு
'ஆசிரியருக்குத் துன்பம் வந்த இடத்தில் அதனைப் போக்கத் துணை புரிய வேண்டும். மாணவன் தன்னால் இயன்ற பொருளை உதவ வேண்டும். பின் நின்று அவருக்கு வழிபாடு செய்ய வேண்டும். இம்முறையில் ஒருவன் ஆசிரியரிடம் கல்வி கற்றல் நன்மையைத் தரும். ஒரு தாய் வயிற்றில் பிறந்த மக்களில் கற்ற பிள்ளையிடமே தாய் மிக்கபற்றுக் கொள்வாள். ஒரே குடும்பத்தில் பிறந்த பலருள்ளும்
மூத்தவனை எவரும் வருக என்று வரவேற்க பாட்டார். அவருள் கல்வி அறிவுடைய ஒருவனையே அரசனும் போற்றுவான். அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்னும் நான்கு கலத்திலும் கற்றவனையே மற்றவர் வழிபடுவர்.' இதுவே அப்பாண்டியன் பாடற்கருத்து ஆகும்.
சிறுவர்க்கு அறிவுரை
கல்விச் சிறப்பைப் பற்றிய இக்கருத்துக்களை அதிவீரராமர் சிறுவர்க்கு அறிவுறுத்த விரும்பினார். நெடுஞ்செழியன் பாட்டிற்கு விளக்கம் செய்பவரைப் போன்று சிறுசிறு தொடர்களால் அக்கருத்துக்களை அறிவிக்கிறார்.
அதிவீரராமரின் அரிய புலமை
அதிவீரராமரின் சிறந்த புலமையை நறுந்தொகை நூல் ஒன்றே நன்றாக விளக்கும். இவர் ஏதேனும் ஒரு பொருளைச் சொல்ல நினைத்தால் கருத்துக்கள் வெள்ளம் போல் பெருகி வருகின்றன. 'எந்தப் பொருளும் தனது இயல்பில் என்றைக்கும் மாறாது;' இக்கருத்தை விளக்க முற்படும் அவர் உள்ளத்தில் எத்தனை உவமைகள் உதிக்கின்றன! அடுக்கடுக்காக வரும் அரிய கருத்துக்கள் அவரது ஆழமான அறிவைக் காட்டும். பசுவின் பாலை எவ்வளவு காய்ச்சினாலும் தன் சுவை குறைவதில்லை; பொன்னை நெருப்பில் இட்டு எவ்வளவு உருக்கினாலும் தன் ஒளி குன்றுவதில்லை; சந்தனத்தை எவ்வளவு அரைத்தாலும் தன்மணம் அறுவதில்லை; அகிலை எவ்வளவு புகைத்தாலும் தீய நாற்றம் எழுவதில்லை; சுடலை எவ்வளவு கலக்கினாலும் சேறு ஆவதில்லை! பேய்ச்சுரைக்காயைப் பாலில் இட்டுச் சமைத்தாலும் கசப்பு மாறுவதில்லை; உள்ளிக்குப் பல்வகை நறுமணத்தை ஊட்டினாலும் அது கமழ்வது இல்லை. இவ்வாறு தட்டுத் தடையின்றிக் கருத்துக்களைத் தந்து கொண்டிருக்கும் அவரது செந்தமிழ்ப் புலமை வியக்கத்தக்கது ஆகும்.
பதினான்கு அழகுகள்
குறுந்தொகை நூலின் தொடக்கத்தில் அதிவீரராமர் பதினான்கு அழகுகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார். ஒவ்வொரு தொடரில் ஒவ்வோர் அழகை விளக்கும் அவர் அறிவுத்திறம் பாராட்டுவதற்கு உரியது. எளிய உரைநடையைப் போன்றே பாடல் தொடர்கள் அமைந்துள்ளன. 'கல்விக்கு அழகு கசடற மொழிதல். செல்வர்க்கு அழகு செழங்கிளை தாங்குதல். வேதியர்க்கு அழகு வேகமும் ஒழுக்கமும். மன்னவர்க்கு அழகு செங்கோன் முறைமை. வாணிகர்க்கு அழகு வளர்பொருள் ஈட்டல். இவ்வாறு வரும் சிறுசிறு தொடர்கள் எவ்வளவு சிறந்த உன்மைகண விளக்குகின்றன!
பெரியரும் சிறியரும்
உருவால் பெரியவர் எல்வோரும் பெரியவர் ஆகார். உருவால் சிறியவர் எல்லோரும் சிறியவரும் ஆக மாட்டார். இக்கருத்துக்களை அதிவீரராமர் இரண்டு உவமைகளைக் கொண்டு விளக்கியுள்ளார். அக்கருத்துக்கள் சிறுவர் உள்ளத்திற்கு அரிய விருந்தாய் அமைவன ஆகும். பனம்பழத்தில் உள்ள விதை பருமன் ஆனது. அதை விதைத்தால் உண்டாகும் மரமோ வானை அளாவி வளர்கின்றது. அது கட்டுக் கட்டான மட்டைகளைக் கொண்டு நின்றாலும் அதன் நிழலில் ஒருவர் கூட ஒதுங்க முடியாது. அது போலவே உருவால் பெரியவர் எல்லோரும் பெரியவர் ஆகமாட்டார் என்று விளக்கினார்.
ஆலம் விதையின் அருமை
ஆலமரத்தில் தோன்றும் பழம் சிறிய தாகவே இருக்கும். அப்பழத்தினுள் இருக்கும் விதையோ மிகவும் சிறியது. அது மீன் முட்டையைக் காட்டிலும் நுண்ணிதாக இருக்கும். அவ்வளவு மிகச் சிறிய விதையிலிருந்து முளைத்து வரும் மரமோ மிகப் பெரியது. அந்த ஆலமரம் விழுதுகள் விட்டுப் படர்ந்து வளர்ந்து விட்டால் அது எவ்வளவு பேருக்குப் பயன்படும்! அரசன் ஒருவன் தன் நால்வகைப் படைகளுடனும் அதன் நிழலில் தங்கலாம். அவ்வளவு பெரிய மரமாகப் பரவிப் பெருகி வளரும் பண்புடையது. அது போலவே உருவால் சிறியவர் எல்லோரும் சிறியவர் அல்லர். அவர்கள் அறிவாலும் திறனாலும் பெரியவராக இருப்பர். ஆதலின் உருவைக்கண்டு ஒருவரை இகழக்கூடாது என்று அவர் விளக்குவது வியப்பைத் தருகிறது.
இவ்வாறு நறுந்தொகை நூல் உருவால் சிறியதாயினும் உயர்ந்த கருத்துக்களால் பெரியது. அதனைப் பாடிய அதிவீரராமர் மதிநுட்பம் பெரிதும் உடையவர் என்பதை இந்நூலால் அறியலாம். சிறுவர்க்குக் கூறிய செந்தமிழ் நூலாகத் தோன்றினாலும் பெரியோர்க்கும் உரிய விருந்தாகவும் இந்நூல் விளங்குகின்றது.
-------------
6. அறநெறி அருளிய குருபரர்
நெல்லையும் பொருகையும்
தென்பாண்டி நாட்டின் தலைநகரமாகத் திகழ்வது திருநெல்வேலி என்னும் நகரம் ஆகும். இதனை நெல்லை என்றும் சொல்லுவர். இந்நெல்லையைத் தலைநகரமாகக் கொண்டு விளங்குவது திருநெல்வேலி மாவட்டம். இம்மாவட்டத்தில் சிறந்த சிவத்தலங்களும் வைணவத் தலங்களும் உள்ளன. இதில்தான் தமிழ் முனிவன் வாழும் பொதிய மலை உள்ளது. அம்மலையிலிருந்து தோன்றிப் பெருகி வருவதே பொருநை என்னும் திருநதி ஆகும். இதனைத் தண்பொருநை என்றும், தாமிரவருணி என்றும் வழங்குவர். இந்த ஆறு, எப்போதும் தண்மை மாறாத நன்னீரை உடையது. ஆதலின் தண்பொருநை என்று பெயர் பெற்றது. இவ்வாற்று நீர் தாமிரச்சத்து உடையது. ஆதலின் தாமிரவருணி என்றும் பெயர் பெற்றது.
கைலாசமும் திருப்பதியும்
இத்தகைய தண்பொருரையாற்றின் கரையில் ஒன்பது. சிவத்தலங்கள் உள்ளன. அவற்றைப் போன்று ஒன்பது வைணவத் தலங்களும்களும் உள்ளன. அச்சிவத்தலங்கள் ஒன்பதும் ‘நவகைலாசங்கள்’ என்று போற்றப்படும். வைணவத்தலங்கள் ஒன்பதும் ‘நவதிருப்பதிகள்’ என்று போற்றப்படும். இவற்றுள் கைலாசம் ஒன்றும், திருப்பதி மூன்றும் சேர்த்து சிறந்து விளங்கும் சீவைகுண்டம் ஆகும். சீவைகுண்டத்தின் வடபகுதி கைலாயம் என்றும், தென்பகுதி வைகுந்தம் என்றும் வழங்கப்படும். இத்தலம் திருநெல்வேலிக்கும் திருச்செந்தூருக்கும். நடுவே அமைந்துள்ளது. வைணவ அடியார்களில் ஒருவராகிய நம்மாழ்வார் அவதரித்த குருகூர் இத்தலத்தின் கீழ்த்திசையில் உள்ளது. இக்குருகூரை ஆழ்வார்திருநகரி என்றும் அழைப்பர்.
கோட்டைப் பிள்ளைமார்
கைலாயமும் திருப்பதியும் ஒருங்கு விளங்கும் சீவைகுண்டத்தில் சைவ வேளாளர்கள் சிறந்து வாழ்கின்றனர். கோட்டை கட்டிவாழும் பெருமை, அவ்வூர் வேளாளர்க்கு உண்டு. அவர்கள் ‘கோட்டைப் பிள்ளைமார்’ என்றே கொண்டாடப்படுவர். இன்றும் வேளாளர் வாழும் கோட்டை அவ்வூரில் உண்டு. அங்கு வாழும் பெண்கள் கோட்டையுள் இருந்து வெளியே வருவது இல்லை. ஆண்கள் மட்டுமே வெளியே வந்து போவார்கள், கோட்டையைச் சேர்ந்த ஆண்மக்களையன்றிப் பிறர் உள்ளே செல்லக் கூடாது, வெளியில் இருந்து பெண்மக்கள் எவரும் உள்ளே சென்று வரலாம். இத்தகைய கட்டுப்பாடு இன்றும் இருந்து வருகிறது.
குமரகுருபரரின் பெற்றோர்
சீவைகுண்டத்தில் உள்ள கைலாசப் பகுதியில் சைவ வேளாளர்கள் சிறப்புடன் வாழ்ந்து வந்தனர். அவர்களுள் சண்முக சிகாமணிக் கவிராயர் என்பவரும் ஒருவர். அவர்தம் மனைவியார் ஆகிய சிவகாமியம்மையாருடன் இல்லறம் நடத்தி வந்தார். இவர்கள் இருவர்க்கும் பல்லாண்டுகளாகப் பிள்ளைப்பேறு வாய்க்கவில்லை. அதனைப் பெருங்குறையாக எண்ணி இருவரும் வருந்தினர். ‘ஒருவன் அடைய வேண்டிய செல்வங்களில் முதன்மையானது மக்கட் செல்வம்; அதனை ஒழிந்த பிற செல்வங்களை, யாம் சிறிதும் மதிப்ப தில்லை’ என்றார் திருவள்ளுவர்.
‘பெறுமவற்றுள் யாமறிவ தில்லை, அறிவறிந்த
மக்கட்பே நல்ல பிற’
என்பது பொய்யா மொழி அன்றோ!
மகப்பேறும் மனக்கவலையும்
கவிராயரும் அவர் மனைவியாரும் மகப்பேற்றின் பொருட்டுத் திருச்செந்தூர்ப் பெருமானை வழிபட்டனர். அப்பெருமானை உள் ளத்தில் நினைந்து அருந்தவங் கிடந்தனர். அத்தவத்தின் பயனாக முந்நூற்று ஐம்பது ஆண்டுகட்கு முன்னர் அவர்கட்கு ஓர் ஆண்குழந்தை பிறந்தது. பெற்றோர் அப்பிள்ளையைப் பெரிதும் பேணி வளர்த்தனர். அப்பிள்ளை ஐந்து ஆண்டுகள் கழிந்தும் பேசாதிருப்பதைக் கண்டு கவலை கொண்டனர். நாளடைவில் அப்பிள்ளை பேசலாம் என்று எதிர்பார்த்து இருந்தனர். பின்னர் அது மூங்கைப் பிள்ளை என்று எண்ணி மனம் நொந்தனர். அதனைத் திருச்செந்தூர்ப் பெருமானிடம் கொண்டுவிடக் கருதினர். அதனை அழைத்துக்கொண்டு திருச்செந்தூருக்குப் புறப்பட்டனர். அப்போது பற்பல நல்ல சகுனங்கள் தோன்றின. அவற்றைக் கண்டு தாயும் தந்தையும் தெளிவு அடைந்தனர்.
முருகன் அருளால் மூங்கை நீங்குதல்
செந்திலம் பதியை அடைந்த பெற்றோர் முருகப்பெருமானை வழிபட்டனர். அங்கு இலை விபூதி பெற்றுப் பிள்ளையை இறைவனிடம் அடைக்கலமாகச் சேர்த்தனர். திருக்கோவிலில் உள்ள சண்முக விலாச மண்டபத்தில் தங்கினர். நாள்தோறும் கடலில் நீராடிப் பெரு மானை வழிபட்டு உண்ணா நோன்பினை மேற்கொண்டிருந்தனர். அங்ஙனம் நாற்பத்தொருநாள் அப்பெற்றோர் பாடு கிடந்தனர். அதன் பயனாகக் குழந்தை வாய் திறந்து பேசத் தொடங்கியது. முருகப்பெருமானே அப்பிள்ளையைத் தட்டி எழுப்பிக் “குமரகுருபரா!” என்று வாய் குளிர அழைத்தார். ‘நின் வாக்கிற்குத் தடை ஏற்படும் இடத்தில் நினக்குப் பரஞானம் கிடைக்கும்’ என்று சொல்லி அம் முருகப்பெருமானார் மறைந்தார். அவ்வோசை கேட்டு எழுந்த பிள்ளை, தன் பெற்றோரைத் தட்டி எழுப்பி அம்மா! அப்பா! என்று பெற்றோர் உளங்குளிர அழைத்தது. ‘கடலில் ஆடிக் கந்தனை வழிபடுவோம்! வாருங்கள்! வாருங்கள்!’ என்று வாய்திறந்து பேசியது. அதனைக் கண்டு வியப்படைந்து அளவில்லாத இன்ப வெள்ளத்தில் பெற்றோர் மூழ்கினர். முருகப்பெருமான் திருவருளை நினைந்து நினைந்து உள்ளம் உருகினர். அப்பெருமானை வழிபடுதற்குப் பிள்ளையுடன் புறப்பட்டனர். கடலில் நீராடி விசுவரூப தரிசனம் செய்தனர்.
குருபரர் குட்டித் திருஞானசம்பந்தர்
பெற்றோருடன் முருகப்பெருமானை வழி போட்டு நின்ற குமரகுருபரர் உளம் உருகிப் பாடத் தொடங்கினார். துள்ளல் ஓசையுடைய வெள்ளைப் பாவால் உள்ளங் குளிரப் பாடி வழிபட்டார். அவர் தம் ஐந்தாண்டுப் பருவத்தில் வாய் திறந்து பேசத் தொடங்கியதும், அருள் செய்த முருகனுக்கே பாமாலை சூட்டினர். அதுவே ‘கந்தர் கலிவெண்பா’ என்னும் செந்தமிழ்ச் சிறுநூல் ஆகும். இச்சிறுநூல் திருவருள் நலம் வாய்ந்தது ஆகும். சிறுவர்கள் இதனை நாள்தோறும் ஓதுவதால் சிறந்த கல்வி நலம் பெறுவர்; அரிய தமிழ் அறிவைப் பெறுவர். இவ்வாறு ஐந்தாண்டுப் பருவத்தில் குமரகுருபரர் முருகன் திருவருளைப் பெற்றார். அதனால் தம் ஊமைத் தன்மை நீங்கி உயர்ந்த கலைஞானம் கைவரப் பெற்றார். முருகன் மீது பாமாலை தொடுக்கும் பைந்தமிழ்ப் புலமையும் பெற்றார். ஆதலின் இவரைக் ‘குட்டித் திருஞானசம்பந்தர்’ என்று சைவர்கள் கொண்டாடுவர்.
குட்டிக் கந்த புராணம்
இவர் முதன்முதல் பாடிய கந்தர் கலிவெண்பா மிகவும் அருமையானதொரு சிறுநூல் ஆகும். முருகப்பெருமான் வரலாற்றைக் கூறும் நூல் கந்த புராணம் எனப்படும். அது பத்தாயிரம் பாடல்களையுடைய மிகப் பெரிய நூல் ஆகும். அந்நால் கூறும் கதையினைக் கந்தர் கலிவெண்பா மிகவும் சுருக்கமாகக் கூறி விளக்குகிறது. ஆதலின் இதனைக் ‘குட்டிக் கந்த புராணம்’ என்று போற்றுவது உண்டு.
வைகுந்தத்தில் குமரகுகுருபரர்
இவ்வாறு முருகன் அருளால் வாய்திறந்து. பாடத் தொடங்கிய பிள்ளையுடன் பெற்றோர் தம் ஊரை உற்றனர். அவர் சுற்றத்தினர் எல்லோரும் செய்தி அறிந்து மிகவும் மகிழ்ந்தனர். செந்தில் கந்தவேள் கருணைத்திறத்தை வியந்து பாராட்டினர். குமரகுருபரர் ஆகிய குழந்தையைக் கண்டு உள்ளத்தில் குதூகலம் கொண்டனர். அவரை வாயார வாழ்த்திப் பெருமானை வணங்கிச் சென்றனர். சிலநாட் கழித்துக் குமரகுருபரர் தாம் பிறந்த ஊரில் எழுந்தருளும் சிவபெருமான் மீது ‘கயிலைக் கலம்பகம்’ என்னும் சிறு நூலைப் பாடினர்,
குமரகுருபரர் சமய வாதம்
சில ஆண்டுகட்குப் பின் குமரகுருபரர் திருநெல்வேலியை அடைந்தார். அங்குள்ள தருமை ஆதீனத் திருமடத்தில் தங்கினார். நெல்லையிலும் அதைச் சூழ்ந்த எல்லையிலும் கிறித்துவ சமயம் பரவுவதைத் தெரிந்தார். இத்தாலிய நாட்டிலிருந்து கிறித்துவப்பாதிரியார் ஒருவர் அப்பகுதியில் வந்து தங்கி இருப்பதை அறிந்தார். அவர் வீரமாமுனிவர் என்ற பெயருடன் கிறித்துவ சமயப்பணி செய்து வந்தார். அவர் தமிழ் காட்டு முனிவர்களைப் போல் கோலம் பூண்டு, தமிழர் உள்ளங்களைக் கவர்ந்து வந்தார். அவர் தமிழைப் பயின்று வீரத்துடன் சொற்பொழிவு ஆற்றினர். அதனால் மக்களைத் தம் சமயத்திற்கு இழுத்தார். அவரைச் சந்தித்துக் குமரகுருபரர் சமயவாதம் புரிந்தார்.
சைவம் காத்த தெய்வக்கவிஞர்
குமரகுருபரரது அறிவையும் ஆற்றலேயும் கண்டு வீரமாமுனிவர் அஞ்சினர். அவர் நெல்லை நகரைவிட்டு நீங்கினர். உடனே குமரகுருபரர் நெல்லேயில் இரு சைவ மடங்களே நிறுவினார். ஊரின் தென்பால் மெய்கண்டார் மடத்தை உண்டுபண்ணினார். வடபால் சேக்கிழார் மடத்தை அமைத்தார். இரண்டு மடங்களிலும் சைவ சமயச் சொற்பொழிவுகள் நடைபெறுமாறு செய்தார். மக்களுக்குச் சைவத்தின் பெருமை தெரியுமாறு அறிவுறுத்தினர். இச்செயலால் குமரகுருபரர் சைவம் காத்த தெய்வக் கவிஞர் ஆனார்.
குருபார் மதுரை அடைதல்
அதன் பின்னர்க் குமரகுருபார் பாண்டி நாட்டில் உள்ள சிவத்தலங்கள் பலவற்றையும் தரிசித்து மகிழ்ந்தார். முருகப்பெருமான் விளங்கும் திருப்பரங்குன்றத்தை அடைந்தார். அங்குள்ள திருமட்டம் ஒன்றில் தங்கினார். மதுரையில் விளங்கும் மீனாட்சியம்மை மீது பிள்ளைத்தமிழ் நூல் ஒன்றைப் பாடினார். இந்நூலை அவ்வம்மையின் சந்நிதியிலேயே அரங்கேற்ற வேண்டும் என்று விரும்பினார். கவிஞரின் விருப்பத்தை மீனாட்சியம்மை அறிந்தாள். அதனை நிறைவேற்றத் திருவுளம் கொண்டாள். மதுரையை ஆண்ட திருமலை நாயக்க மன்னரின் கனவில் தோன்றினாள். குமரகுருபரரின் பெருமையை அவருக்கு அறிவித்தாள். அவர் பாடியுள்ள நூலைத் தன் திருமுன்பு அரங்கேற்றுவதற்கு வேண்டுவன செய்க என்று அருள்புரிந்தாள். தாயின் இன்னருள் ஆணையைக் கேட்ட திருமலை நாயக்க மன்னர் மிக்க மகிழ்ச்சி அடைந்தார். குமரகுருபரரை அழைத்து வருமாறு பல்லக்கை அனுப்பித் தாமும் எதிர்சென்று பெரு மகிழ்வுடனும் பணிவுடனும் வரவேற்கலானார். குமரகுருபரர் மதுரைமாநகருக்கு எழுந்தருளினார்.
பிள்ளைத்தமிழ் அரங்கேற்றம்
திருமலை நாயக்கர், மீனாட்சியம்மையின் திருமுன்பு நூலை அரங்கேற்றுவதற்கு வேண்டுவன செய்தார். நகரில் உள்ள புலவர்களும் கலைஞர்களும் ஒன்று கூடினர். குமரகுருபரர் பிள்ளைத்தமிழ் நூலை அரங்கேற்றத் தொடர்ங்கினார். அந்நூல் பத்துப் பருவங்களை உடையது, பருவத்துக்குப் பத்துப் பாடல்களாக நூறு பாடல்களைக் கொண்டது. காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, அம்மானை, நீராடல், ஊசல் என்னும் பத்துப் பருவங்களில் ஆறாவதாக விளங்குவது வருகைப் பருவம். அப்பருவத்தின் ஒன்பதாவது பாடல் ‘தொடுக்கும் கடவுள் பழம்பாடல்’ என்று தொடங்குவது. அப்பாடலைக் குமரகுருபரர். இசையுடன் பாடினார். பத்தி வெள்ளம் கரை புரண்டு ஓடுமாறு சித்தம் உருகிப்பாடினார். அதைக் கேட்டு அங்கிருந்தவர்கள் எல்லோரும் இன்ப வெள்ளத்தில் மூழ்கினர்.
அங்கயற்கண்ணியின் அருள்விளையாட்டு
பத்தி வலையிற் படுபவளாகிய மீனாட்சியம்மையும் திருக்கோயில் அர்ச்சகரின் மகள் வடிவில் அங்கு ஓடோடியும் வந்தாள். அங்கிருந்த திருமலை நாயக்க மன்னர் மடியில் அமர்ந்தாள். குமரகுருபரரின் இன்னிசைப் பாடலை மனம் குளிரக் கேட்டு மகிழ்ந்தாள். மன்னரின் கழுத்தில் கிடந்த முத்தாரத்தைக் கழற்றினாள், அதனைக் குமரகுருபரர் கழுத்தில் அணிந்தாள், ‘சைவம் வாழத் தெய்வக் கவிஞனாய் வாழ்க’ என்று வாழ்த்தி மறைந்தாள்.
குருபாருக்குப் பொன் முழுக்கு
மீனாட்சியம்மையின் அருட்செயலைக் கண்டு எல்லோரும் வியப்பு அடைந்தனர். இதனைக் கண்ட மன்னர் அளவற்ற மகிழ்ச்சியும் இன்பமும் அடைந்தார். குமரகுருபரரின் பெருமையை அறிந்து வியந்தார். பிள்ளைத்தமிழ் அரங்கேற்றம் சிறப்புடன் முடிந்தது. மன்னர், கவிஞராகிய குமரகுருபரரைத் தம் மாளிகைக்கு அழைத்துச் சென்றார். அவரைப் பொன்னால் செய்த ஆசனத்தில் அமரச் செய்தார். பொன்னாலும் மணியாலும் அவர் திருமேனியை முழுக்காட்டினார். அவர் திருவடியில் வீரக்கழலைச் சாத்தினார். யானை, குதிரை, சிவிகை, குடை, கொடி முதலிய பல விருதுகளையும் அவருக்கு வழங்கினார். சில காலம் அவரைத் தம் மாளிகையில் தங்கிச் செல்ல வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்.
மன்னருக்குத் திருக்குறள் விளக்கம்
மன்னரின் வேண்டுகோளுக்கு இணங்கிய குமரகுருபரர் அங்கேயே சில நாட்கள் தங்கினார். அந்நாளில் மீனாட்சியம்மைமீது குறம், இரட்டை மணிமாலை முதலிய நூல் களைப்பாடினார். அரச காரியங்களில் ஈடுபட்டிருந்த மன்னர் ஒரு நாள் காலந்தாழ்த்து உணவு கொள்வதைக் குமரகுருபரர் கண்டார். அப்போது மன்னரை நோக்கித் திருக்குறட் பாடல் ஒன்றைச் சொன்னார்.
‘வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது’
என்பது அக்குறள். இதனைக் குமரகுருபரர் கூறியவுடன் அரசர். ‘பாட்டின் பொருள் என்ன? என்று கேட்டார். ‘கோடிக்கணக்கான செல்வத்தைத் தேடி வைத்தாலும் கடவுள் வகுத்த வழியில்தான் அதனை அனுபவிக்க முடியுமே அல்லாமல் தாம் விரும்பிய வாறு அனுபவிக்க ஒருவராலும் முடியாது என்று குமரகுருபரர் அதன் பொருளை விளக்கினார்.
அறநூல் பாடுவதற்கு அரசன் வேண்டுதல்
பாட்டின் பொருளைக் கேட்டுத் தெரிந்த திருமலைநாயக்கர், “இப்பாடல் எந்த நூலில் உள்ளது?' என்று வினவினார். குமரகுருபரர். இது ‘திருக்குறள் நூலில் உள்ள ஒரு குறள்’ என்றார். இதைப் போன்று அந்த நூலில் ஆயிரத்து முந்நூற்று முப்பது அரிய குறட்பாக்கள் உள்ளன என்றும் உரைத்தார். அப்படியானால் அந்த நூலின் கருத்துக்களைச் சுருக்கித் தாங்கள் ஒரு சிறு நூல் ஆக்கித் தந்தருள வேண்டும் என்று அரசர் வேண்டினார். அவ்வாறே செய்து முடிப்பதாகக் கூறினார் குமரகுருபரர். அன்றே ‘நீதிநெறி விளக்கம்’ என்ற அரிய அறநூலைப் பாடத் தொடங்கினார். சில நாட்களில் அதனை முடித்து அரசரிடம் கொடுத்தார்.
அறநூலுக்கு அரசரின் பரிசு
அந்நூலில் அமைந்த கருத்துக்களை எல்லாம் குமரகுருபரர், அரசருக்கு விளக்கினார். உலகப் பொதுமறையாகிய திருக்குறளின் உயர்ந்த உண்மைகளைச் சிறியதொரு நூலால் விளக்கிய அவர் திறமையை அரசர் பாராட்டினார். ஆண்டு ஒன்றுக்கு இருபதினாயிரம் பொன் வருவாய் உடையது அரியநாயகிபுரம் என்னும் ஊர். அதனைக் குமரகுருபரருக்கு நன்கொடையாகக் கொடுத்தார். இத்தகைய பெரும் பரிசு ஒன்றைப் பெற்ற அருந்தமிழ் அறநூல் ‘நீதிநெறி விளக்கம்’ ஆகும். இதனை அறிஞர்கள் ‘குட்டித் திருக்குறள்’ என்று கொண்டாடுவர்.
குட்டித் திருக்குறள்
இந்நூலைப் பிற்காலத்தில் தோன்றிய அறநூல்களில் தலைசிறந்தது என்பர். இது நூற்றிரண்டு வெண்பாக்களைக் கொண்டு விளங்குவது. நடையாலும் பொருளாலும் சங்ககாலத்து அறநூல்களுக்கு ஒப்பாக எண்ணத்தக்கது. படிப்பதற்கு இனிமையும் பொருட், செறிவும் உடையது. இதன் சிறப்பை உணர்ந்த பலர், இதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து உள்ளனர். ‘குட்டித் திருக்குறள்’ என்ற பெயருக்கு ஏற்ப, இந்நூலில் திருக்குளின் கருத்துக்களும் தொடர்களும் செறிந்துள்ளன,
வாழ்த்தும் வளமும்
இந்நூல் கல்வி, செல்வம், உலகியல், அரசியல், தவம், மெய்யுணர்வு முதலிய சிறந்த பொருள்களின் இயல்டையும் பயனையும் இனிது விளக்குவது. அறத்தின் சிறப்பை அறிவதற்குக் கல்வி வேண்டும் அல்லவா? ஆதலின் அதன் பெருமையை முதலில் கூறியுள்ளார், நூலின் தொடக்கத்தில் எம்பிரான் மன்றத்தை வழுத்தினார், அந்த வாழ்த்துப் பாடலில் நிலையாமை பற்றிய கருத்துக்களைச் சுருக்கமாக விளக்கி விட்டார், இளமை நீர்க்குமிழியைப் போன்றது. செல்வம் நீரில் எழும் அலைகளைப் போன்றது. உடம்போ நீரில் எழுதிய எழுத்தைப் போன்றது. இவ்வாறு இருக்க, எம்பிரான் மன்றத்தை வாழ்த்தி வணங்காமல் இருப்பது எதனால்? அப்பெருமான் மன்றினை வணங்கித் திருவருள் பெற்று உய்யுங்கள் என்று அறிவுறுத்தினார்.
இங்கனம் திருக்குறளின் சுருக்கமாக அமைந்த நீதிநெறி விளக்கம் அரியதோர் அறநூல் ஆகும். திருக்குறளில் உள்ள பல அதிகாரங்களின் கருத்துக்களை ஒரு பாடலில் விளக்கும் இந்நூலைக் ‘குட்டித் திருக்குறள்’ என்று குறிப்பது பொருத்தமே அன்றே! குறைந்த சொற்களில் நிறைந்த கருத்துக்களைக் கூறுவது குறள். அக்குறளையும் சுருக்கிக் கூறிய குமரகுருபரரின் கூரிய அறிவை எவ்வாறு போற்றுவது!
-----------
7. நன்னெறி காட்டிய நற்றவர்
தொண்டை நாட்டுச் சான்றோர்
தண்டமிழ் நாட்டின் ஒரு பகுதியாக விளங்குவது தொண்டை நாடு, அது தொண்டைமான் என்ற அரசனால் ஆளப் பெற்றது. ஆதலின் தொண்டை நாடு என்று பெயர் பெற்றது. தமிழ் மூதாட்டியார் ஆகிய ஔவையார் இந்நாட்டைத், தொண்டை நன்னாடு சான்றோர் உடைத்து' என்று பாராட்டியுள்ளார். இத்தகைய தொண்டை நாட்டின் தலைநகரமாகப் பண்டு விளங்கியது காஞ்சிமாநகரம். இந்நகரில் முந்நூறு ஆண்டுகட்கு முன்னர்க் குமாரசாமி தேசிகர் என்னும் ஒருவர் வாழ்ந்தார். இவர் வேளாளர்களின் குருவாக விளங்கினார். இவர் வீரசைவ மரபைச் சேர்ந்தவர்.
தந்தையும் உடன் பிறந்தாரும்
குமாரசாமி தேசிகருக்கு ஆண்மக்கள் மூவர் இருந்தனர். அவர்கள் சிவப்பிரகாசர், வேலையர், கருணைப்பிரகாசர் என்போர் ஆவர். ஞானாம்பிகை என்னும் பெண் மகள் ஒருத்தியும் இருந்தாள். ஆண்மக்கள் மூவரும் தமிழில் சிறந்த அறிஞர்களாக விளங்கினர். அவருள் மூத்தவராகிய சிவப்பிரகாசர் செந்தமிழ் இலக்கண நூல்களைத் தெளிவாகக் கற்க விரும்பினார். அதற்குத் தக்க நல்லாசிரியர் ஒருவரை நாடினார்.
துறைமங்கலத்தில் சிவப்பிரகாசர்
திருநெல்வேலியில் தருமை ஆதீனத்தைச் சேர்ந்த திருமடம் ஒன்று உண்டு. அம்மடத்தில் முன்பு வெள்ளியம்பலவாணர் என்னும் தம்பிரான் ஒருவர். இருந்தார். அவர் தமிழ் இலக்கண இலக்கியங்களில் இணையற்ற புலவராய் விளங்கினார். சிவப்பிரகாசர் அத்தம்பிரானைப் பற்றி அறிஞர் சிலர் சொல்லக் கேட்டார். அவரிடம் சென்று இலக்கணப் புலமை பெறுவதற்கு விரும்பினார். அதனால் காஞ்சி மாநகரினின்று புறப்பட்டார். அவர் வரும் வழியில் துறைமங்கலம் என்னும் ஊரில் தங்கினார். அண்ணாமலை ரெட்டியார் என்னும் செல்வர் அவ்வூரின் தலைவராக விளங்கினார். அவர், தம் ஊருக்குச் சிவப்பிரகாசர் வந்திருக்கும் செய்தியை அறிந்தார். உடனே அவர் சிவப்பிரகாசரைக் கண்டு வணங்கி அன்புடன் வரவேற்றார். சிவப்பிரகாசரைத் தமது ஊரிலேயே தங்குமாறு விருப்புடன் வேண்டினார். அவரது வேண்டுகோளுக்கு இணங்கிய சிவப்பிரகாசர் சிறிது காலம் துறைமங்கலத்திலேயே தங்கி விட்டார்.
ஆதீன மடத்தில் சோதனை
ஒரு நாள் சிவப்பிரகாசர் தம் கருத்தை அண்ணாமலை ரெட்டியாரிடம் அறிவித்தார். பின்னும் அவர் சிவப்பிரகாசரை விட்டுப் பிரிவதற்கு விரும்பவில்லை. திருநெல்வேலிக்குச் சென்று திரும்பிய பின்னர், அங்குத் தங்குவதாகக்கூறி விடை பெற்றார். திருநெல்வேலியை அடைந்து தருமை ஆதீனத் திருமடத்தில் வீற்றிருந்த வெள்ளியம்பலவாணரைக் கண்டு வணங்கினார். அவரிடம் தமது வரலாற்றைப் பணிவுடன் தெரிவித்தார். அவர் சிவப்பிரகாசரின் செந்தமிழ்ப் புலமையைச் சோதிக்க விரும்பினார். ‘கு’ என்ற எழுத்தில் தொடங்கி ‘கு’ என்று முடியுமாறும், இடையில் ‘ஊருடையான்’ என்ற தொடர் அமையுமாறும் ஒரு செய்யுள் இயற்றுமாறு கட்டளையிட்டார். உடனே,
தம்பிரானிடம் தமிழ் இலக்கணப் பயிற்சி
இப்பாட்டைக் கேட்ட தம்பிரான் மிகவும் மகிழ்ந்தார். ‘ஊருடையான்’ என்ற தொடருக்கு ஏற்றவாறு முந்திய அடியில் ‘வடக்கோடு தேருடையான்’ என வந்துள்ள தொடரின் அழகைக் கண்டு வியந்தார். சிவப்பிரகாசரின். செந்தமிழ்ப் புலமையையும் செய்யுள் இயற்றும் திறமையையும் பாராட்டினார். அவர் விரும்பியவாறே இலக்கண தூல்களைக் கற்பிக்க இசைந்தார். சில திங்களில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் ஐந்து இலக்கணங்களையும் அவருக்குக் கற்பித்தார். தம்பிரானிடம் தமிழ் இலக்கணத்தை ஐயந்திரிபு இல்லாமல் சிவப்பிரகாசர் கற்றுத் தெளிந்தார்.
இலக்கியங்களில் வெள்ளி பாடல்
பெரிய புராணம், கம்ப ராமாயணம் போன்ற அரிய தமிழ்க் காவியங்களில் இடையிடையே உள்ள சில பாடல்களை. ‘வெள்ளி பாடல்’ என்று அறிஞர் சொல்லுவர். இங்கு ‘வெள்ளி’ என்ற சொல் வெள்ளியம்பலத் தம்பிரானைக் குறிக்கும். அவர் சேக்கிழார், கம்பர் முதலான செந்தமிழ்ப் புலவர்களைப் போன்று செய்யுள் இயற்றுவதில் கைதேர்ந்தவர், எவரேனும் ஒருவர் நூலில் தம்பாட்டைப் புகுத்தினால் வேற்றுமை காண முடியாதவாறு அதனை அமைக்கும் திறம் படைத்தவர். அம்முறையில் பிற நூல்களில் தம் பாட்டை இடையே புகுத்தி இன்றுவார், அவர் மாணவர்கட்குத் தமிழ் இலக்கணத்தைக் கற்பிப்பதில் வல்லவராக இருந்தார். அவர் குமரகுருபரரிடம் கல்வி கற்றவர். இத்தகைய வெள்ளியம்பலவாணரிடமே சிவப்பிரகாசர் இலக்கணம் கற்றுத் தெள்ளிய புலவர் ஆனார்.
ஆசிரியருக்குக் காணிக்கை
இவ்வாறு இலக்கண அறிவைப் பெற்ற சிவப்பிரகாசர், தம் குருவுக்குக் காணிக்கை செலுத்தக் கருதினார். அவர் தம்மிடம் இருந்த முந்நூறு பொன்னைத் தம்பிரான் திருவடியில் வைத்து வணங்கினார். அதனை ஏற்றுக் கொள்ள விரும்பாத தம்பிரான், தம் மாணவர்க்குத் தமது விருப்பம் ஒன்றைத் தெரிவித்தார். “செந்திற்பதியில் செந்தமிழ்ப்” புலவர் ஒருவர் உள்ளார். அவர் அங்கு வந்த புலவரை எல்லாம் வாதில் வென்று ‘வென்றிமாலைக் கவிராயர்’ என்ற பெயருடன் விளங்குகிறார். அவர் நம்மை எப்போதும் இகழ்ந்து வருகிறார். அவரை நீர் கண்டு, நும் புலடைப்பால் வென்று, அவ்ன்றிமாலை பட்டன் இங்கு மீளவேண்டும். அதுவே நீர் எமக்குச் செலுத்தத் தக்க காணிக்கையாகும்” என்று இயம்பினார்.
செந்தில் புலவர் சந்திப்பு
அவ்வாறே செய்து திரும்புவதாகச் சிவப்பிரகாசர் துணிந்து கூறினார், அன்றே திருச்செந்தூரை அடைந்தார். அங்கே எழுந்தருளும் முருகப்பெருமானை வழிபட்டுத் திருக்கோவிலை வலம் வந்தார். அப்போது அச்செந்திற் பதியில் வாழும் செந்தமிழ்ப் புலவரைச் சந்தித்தார். அவர் சிவப்பிரகாசரை இன்னாரெனப் பிறரிடம் கேட்டு அறிந்தார். உடனே, அவரையும் அச்செந்திற் புலவர் எள்ளி நகையாடத் தொடங்கினார். அதனை அறிந்த சிவப்பிரகாசர் அப்புலவரை அணுகினார். 'நாம் இருவரும் செந்தில் கந்தவேள் மீது 'நிரோட்டக யமகம்' பாடுவோம். எவர் முந்திப் பாடி முடிக்கின்றனரோ அவருக்கு மற்றவர் அடிமையாவோம்' என்று உறுதி செய்து கொண்டனர்.
நிரோட்டக யமக அந்தாதி
பாட்டைப் பாடும்போது உதடுகள் இரண்டும் ஒன்றோடு ஒன்று சேரக்கூடாது, ஓர் அடியில் வந்த சொற்களே பெரும்பாலும் மற்ற அடிகளிலும் வருதல் வேண்டும். ஆனால் அவை வெவ்வேறு பொருளைத் தரவேண்டும் ஒரு பாட்டின் அந்தம், அடுத்த பாட்டின் ஆதியாக அமைய வேண்டும். அத்தகைய அந்தாதித் தொடையில் அமைந்த முப்பது பாட்டுக்களைப் பாட வேண்டும். இவ்வாறு பாடப் பெறுவதே ‘நிரோட்டக யமக அந்தாதி’ என்று பெயர்பெறும். திருக்கோவிலை ஒரு முறை வலம் வருவதற்குள் இந்நூலைப் பாடி முடிக்க வேண்டும்.
சிலப்பிரகாசரின் வெற்றி
இத்தகைய நூலை முருகன் மீது இருவரும் பாடத் தொடங்கினர். சிவப்பிரகாசர், திருக்கோவிலை ஒருமுறை வலமாகச் சுற்றி வருவதற்குள் நூலைப் பாடி முடித்து விட்டார். வென்றிமாலைக் கவிராயரோ ஒரு பாடல் கூடப் பாட முடியாது தோல்வியுற்றார். ‘சிவப்பிரகாசருக்கு வென்றிமாலை அடிமை’ என்று கூறி, அவர் அடிகளில் விழுந்து பணிந்தார். சிவப்பிரகாசரோ, “எமக்குப் புலமையளித்த தம்பிரான் அடிகளைப் பணிவதற்கு எம்முடன் வருக” என்று அவரை அழைத்தார். சிந்து பூந்துறைத் திருமடத்திற்குக் கூட்டி வந்து வெள்ளியம்பலத் தம்பிரான் பாதங்களில் அவரை விழுந்து வணங்குமாறு செய்தார். அச்செயலைக் கண்ட தம்பிரான் பெருமகிழ்ச்சி கொண்டார். தம் மாணவரின் திறமையைப் பாராட்டி வாழ்த்தினார். பின்பு அவருக்கு விடை கொடுத்து அனுப்பினார்
உப்பு விற்கும் பெண்ணின் உயர்வு
சிவப்பிரகாசர் தமது ஊராகிய காஞ்சியை நோக்கிச் செல்லும் வழியில் திருக்காட்டுப்பள்ளி என்னும் ஊரை அடைந்தார். அங்கு அவர் தங்கியிருக்கும் நாளில் அறிவில் சிறந்த பெண்ணொருத்தி தெருவில் உப்பு விற்றலைக்கண்டார். அவளுடைய புலமையைப் பிறர்க்குப் புலப்படுத்த எண்ணினார். அவளை அருகில் அழைத்துப் பாடல் ஒன்றைப் பாடினார். அதைக் கேட்ட அப்பெண்ணும் சிவப்பிரகாசரை வணங்கிப் பாடல் ஒன்றைப் பாடினாள்.
இப்பாடலைப்பாடி, அனலிடைப்பட்ட மெழுகு போல் மனம் உருகி நின்றாள்.
சிவப்பிரகாசர் தவ வாழ்க்கை
பின்னர், சிவப்பிரகாசர் தாம் வாழ்ந்த துறைமங்கலத்தை அடைந்தார். அங்கு அண்ணாமலை ரெட்டியார் அவருக்காகத் திருமடம் ஒன்றை அமைத்திருந்தார். அதில் தங்கியிருக்கும் காலத்தில் அருகில் உள்ள திருவெங்கை என்னும் தலத்திற்குச் சென்று வருவார். அங்குள்ள பழமலைநாதரை வழிபட்டு, அவர்மீது பல நூல்களைப் பாடினார். அக்காலத்தில் அண்ணாமலை ரெட்டியார், சிவப்பிரகாசரை மணஞ்செய்து இல்லறம் நடத்து; மாறு வேண்டினார். அதற்கு அவர், “நூறு வயதுவரை நோயுடன் வாழ்ந்தாலும் வாழலாம்; பேயுடன் வாழ்ந்தாலும் வாழலாம்; பெண் கொண்டு வாழ்வது ஆகாது” என்று கூறி மறுத்தார். ‘தாலி கட்டையிலே தொடுத்து, நடுக்கட்டையிலே கிடத்துமட்டும் கவலைதான்’ என்றும் விடை கூறினார். ஆனால், தம் தம்பியர்க்குத் திருமணம் செய்துவைத்து வாழ்த்தினார்.
பொம்மபுரம் போதல்
சில காலம் சென்ற பின் அவர் சிதம்பரம் சென்று தங்கினார். அங்கு இருக்கும் நாளில் ‘நால்வர் நான்மணிமாலை’ முதலான சில நூல்களைப் பாடினார். பின்பு காஞ்சிபுரம் சென்று தங்கினார். அங்கே பேரூர்ச்சாந்தலிங்கர் என்னும் பெரியவரைக் கண்டு அளவளாவினார். அவர்கள் இருவரும் சிவஞான பாலையரைத் தரிசிக்கப் புறப்பட்டனர். அவர் எழுந்தருளும் பொம்மபுரத்தை அடைந்தனர். அவரை வணங்கி அவரது அருளைப் பெற்றனர். சிவப்பிரகாசர், பாலையரைத் தம் ஞானதேசிகராகக் கொண்டு போற்றினர். அவர்மீது பிள்ளைத் தமிழ், பள்ளியெழுச்சி, கலம்பகம் முதலான நூல்களைப் பாடினர்.
மணலில் எழுதிய தமிழ் நூல்
பொம்மபுரம், கடற்கரையில் அமைந்த சிற்றூர். சிவப்பிரகாசர் அங்குத் தங்கியிருந்த காலத்தில் நாள்தோறும் மாலையில் கடற்கரைக்குச் செல்வார். அங்குள்ள மணல் வெளியில் அமர்ந்து இயற்கைக் காட்சிகளைக்கண்டு இன்புறுவார். ஒருநாள் அவர் மணலின்மேல் இருக்கும்போது அவர் உள்ளத்தில் பல கருத்துக்கள் உதித்தன. அவைகள் வெண்பாக்களாக வெளிவந்தன. நாற்பது வெண்பாக்கள் ஒன்றன் பின் ஒன்றாக எழுந்தன. சிவப்பிரகாசரிடம் அப்போது ஏடோ எழுத்தாணியோ கையில் இல்லை. அப்பாட்டுக்களை விரைவாக மணல் மேட்டிலேயே எழுதினார். இருள் வந்ததும் திருமடத்தை அடைந்தார். மறுநாள் பொழுது விடிந்ததும் தம் மாணவர் ஒருவரை அனுப்பி, அப்பாட்டுக்களை ஏட்டில் எழுதி வருமாறு கட்டளையிட்டார்.
நன்னெறி வெண்பா நாற்பது
அவ்வாறு எழுதி வந்த நாற்பது வெண்பாக்களும் நன்னெறி காட்டும் பொன்னான பாக்களாக விளங்கின. ஆதலின் அவற்றைத் தொகுத்து ‘நன்னெறி’ என்றே பெயர் சூட்டினார். இந்நூலில் உள்ள பல பாடல்கள், கடலையும் கடல் நிகழ்ச்சிகளையும் உவமைகளாகக் கொண்டு ஒளிர்வன ஆகும்.
கடல்நீரும் கயவர் செல்வமும்
கருங்கடலின் உப்புநீர் மக்கட்குப் பயன்படுவது இல்லை. ஆனால், அந்நீரை மேகம் முகந்து வந்து மழையாகப் பெய்து மக்கட்குப் பயன்படுத்துகிறது. இச்செய்தியை உவமையாகக் கொண்டு, சிவப்பிரகாசர் உலகிற்கு ஒரு கருத்தை விளக்கினார். சிலர், தம் பெருஞ்செல்வத்தைப் பிறர்க்குச் சிறிதும் உதவமாட்டார். அத்தகையோருடைய செல்வம் சில காலத்தில் பிறர்க்கு உதவும் தன்மையுடையோரைச் சென்று சேரும் என்று கூறினார்.
கடலும் கல்விச் செருக்கும்
கடல் அளவினால் பெரியது. அதன்கண் உள்ள நீரோ அளவு கடந்தது. அத்தகைய கடல் நீரும் அகத்திய முனிவன் கையால் ஒரு காலத்தில் அள்ளியுண்ணப் பெற்றது. ஆதலின், 'கடலைப் போன்ற கல்விப் பெருமை புடையோம்' என்று எவரும் செருக்குக் கொள்ளக் கூடாது. இவ்வாறு கடலை ஒப்புமைப் படுத்திச் சிவப்பிரகாசர் பல உண்மைகளை நன்னெறியில் விளக்கியுள்ளார்.
-------------------
This file was last updated on 19 December 2022.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)