pm logo

அ. க. நவநீதகிருட்டிணன் எழுதிய
கோப்பெருந்தேவியர்


kOpperunttEviyar by
A.K. Navaneethakrishnan
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to noolahan.org for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2023.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

கோப்பெருந்தேவியர்
அ. க. நவநீதகிருட்டிணன்

Source:
கோப்பெருந்தேவியர்
ஆசிரியர் : திருக்குறள் மணி, வித்துவான், செஞ்சொற்புலவர், திரு. அ. க. நவநீதகிருட்டிணன்,
தமிழாசிரியர், ம.தி.தா. இந்துக் கலாசாலை, திருநெல்வேலி .
திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், திருநெல்வேலி .
சென்னை -1.
கழக வெளியீடு : 952
[Approved by the Madras Text-Book Committee, for class use,
vide page 22 of the Fort St. George Gazette, dated 13-5-1959.]
-------------------
பதிப்புரை

நாட்டு முன்னேற்றத்திற்கு நாட்டு நங்கையர் முன்னேற்றமே முதற்காரணம் ஆம். நங்கையர் முன்னேற்றத்திற்கு அவர்பால் அமைந்த கற்பும் பொற்பும், ஈரமும் வீரமும், அறிவும் செறிவும், வாய்மையும் தூய்மையும் ஆகிய நற்பண்புகளே முதற்காரணம் ஆம். மங்கையர் நற்பண்புடையவராய் வாழ்ந்தால் அவர் பெற்று வளர்க்கும் அருமை மக்களும் அப் பண்புடையோராய் வளர்வார். தாளாண்மை வேளாண்மை வாளாண்மையிற் சிறந்த இளைஞராய் வருவார். எல்லாரும் இத்தகைய ஆடவராய் மகளிராய் ஒரு நாட்டில் இருந்தால் அந்நாடு முன்னேற்றம் அடைந்த தன்றோ ?

மங்கையர் நற்பண்புடையவராக வரவேண்டுமெனில் பல நூல்கள் கற்க வேண்டும். பண்டைத் தமிழ்நாட்டுப் பெண்மணிகள் வரலாற்றையும் படிக்கவேண்டும். அன்றியும் சிறந்த மன்னர் பெருந்தேவியராய் வாழ்ந்த மங்கையர் வரலாறும் ஆராய்தல் வேண்டும். இவ்வுண்மை யுணர்ந்தே நாட்டு நலம் கருதி மங்கையர் வரலாற்று நூல்கள் பல எழுதி எமது கழகத்தில் வெளியிட்டு வருகின்றோம்.

''கோப்பெருந்தேவியர் '' என்னும் இந் நூல் நாட்டு நலத்திற்கும் முன்னேற்றத்திற்கும் துணை புரிவதாகும். மங்கையர் உலகத்திற்கு மாண்பு மிக்க நல்வழி காட்டும் நூலாம். "செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும், அறிவும் அருமையும் பெண்பாலான '' என்ற தொல் காப்பியர் கூற்றிற்கேற்ற அறுவகைப் பண்பும் அமைந்து மன்னர் கோப்பெருந்தேவியராய் வாழ்ந்த எண்மர் வரலாற்றை எடுத்துரைப்பது இது. இளமாணவர் மாணவியர் கற்றுப் பயன் அடைய வேண்டும் என்ற நன்னோக்கால் எளிய இனிய செந்தமிழ் உரைநடையில் எழுதப்பட்டது.

இந் நூலை இயற்றிய ஆசிரியர் வித்துவான் திரு. அ. க. நவநீதகிருட்டிணன் என்பவர். இவர் நம் கழகத்திற்கு முன்னும் பல உரைநடை நூல்கள் எழுதி உதவினர். இன்னும் பல நூல்கள் எழுதி உதவுவார் என்பதும் எங்கள் எண்ணம். அவர் எழுதிய பல நூல்கள் அச்சிட்டு வெளி வந்துள்ளன. அவை பள்ளியிலும் நூல் நிலையங்களிலும் பயில்வதைப் பலரும் அறிவார். இன்றும் இந்நூலை இயற்றிக் கழகத்திற்கு உதவினர். என்றும் கழகம் அன்னார்க்கு நன்றி பாராட்டுங் கடப்பாடு உடையது.

இந் நூலை நாட்டு நலம் கருதும் இளைஞரும், பள்ளியிற் பயிலும் சிறுவர் சிறுமியரும், கற்பும் நற்பண்பும் வாய்ந்த கன்னியரும் வாங்கிப் படித்து மனமகிழ்ச்சியுடன் வாழ்க் கைப்பயன் பெறுக. இளைஞர் மனவூக்கமே கழகத்தின் ஆக்கமெனக் கருதுகின்றோம்.

சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்
--------------
அணிந்துரை

தமிழகம் தலைசிறந்த பண்பாட்டிற்குப் பிறப்பிடமும் வளர்ப்பிடமும் சிறப்பிடமும் ஆகும். உயர்ந்த பண்பாட்டிற்கு ஊற்றிடமாய் ஒளிர்வோர் சிறந்த மகளிரே. அவர்கள் தாயராக இருந்து, தாம் பெற்ற சேய்களுக்கு ஊட்டும் சிறந்த பண்புகளே நாட்டிற்கு ஏற்றம் நல்குவனவாகும். அத்தகைய தாயருள்ளும் அரசர்குலத் தாயராய்க், கோப்பெருந்தேவியராய்த் திகழ்வோர் நாட்டிலுள்ள நங்கையர்க்கு ஏற்ற வழிகாட்டிகள் ஆவர்.

பழந்தமிழ் நாட்டுப் பெருந்தேவியர் பலர் சிறந்த பண்பினராய்த் திகழ்ந்து, நங்கையர் உலகிற்கே நன்னெறி காட்டியுள்ளனர். அத்தகைய அறிவு நலம் கனிந்த அரசமா தேவியர் எண்மருடைய சிறப்புக்கள் இந்நூலில் விளக்கப் பெற்றுள்ளன. இளமாணவர் உலகம் இவ் எட்டுக் கோப் பெருந்தேவியரின் சிறப்புக்களையும் விருப்புடன் படித்து அறிய வேண்டும் என்னும் நன்னோக்கத்தால் இந்நூல் எளிய இனிய செந்தமிழ் நடையில் எழுதப்பெற்றுள்ளது.

இற்றைத் தமிழகம் யான் எழுதிய சிறு நூல்களைப் பெரிதும் வரவேற்றுப் போற்றி வருவது கண்டு, உள்ளத்தில் கொண்ட ஊக்கத்தால் இந்நூலையும் எழுதத் துணிந்தேன். என் நூல்களை விருப்புடனும் சிறப்புடனும் வெளியிட்டு என்னை எழுத்துப் பணியில் இழுத்து நிறுத்தி வரும் உயர்திரு. வ. சுப்பையா பிள்ளையவர்கள் நேசமும் இந் நூலின் தோற்றத்திற்கு உற்ற காரணமாகும்.

இந் நூலைக் கண்ணுறும் கலாசாலைத் தலைவர்களும் கன்னித்தமிழ்ப் புலவர்களும் தத்தம் பள்ளி மாணவர்க்கு இதனைப் பாடமாக்கிப் பயன்பெறுமாறு செய்வதுடன், எளியேனையும் இப்பணியில் மேலும் ஊக்கி ஆதரித் தருளுமாறு பணிவன்புடன் வேண்டுகின்றேன்.
தமிழ் வெல்க!

அ. க. நவநீதகிருட்டிணன்.
---------------------------
உள்ளுறை
1. தமிழக மகளிர்
2 . மன்ன ர் குல மகளிர்
3. செங்குட்டுவன் தேவி
4 . ஆட்டனத்தியின் தேவி
5 . மாவண்கிள்ளியின் தேவி
6. குலோத்துங்கன் தேவி
7. பூதப்பாண்டியன் தேவி
8. நெடுஞ்செழியன் தேவி
9. நெடுமாறன் தேவி
10. வரதுங்கன் தேவி
-------------------

கோப்பெருந்தேவியர்
1. தமிழக மகளிர்

நிலமடந்தையின் திலகமென விளங்கும் பழந் தமிழ் நாட்டில் தோன்றும் பாவையர் தனிப்பெருஞ் சிறப்பினை உடையவராவர். இவ் உண்மையினைத் தொன்மைத் தமிழ் நூல்களானும் இற்றை நாள் வரைத் தோன்றியுள்ள பிற்காலப் பெருநூல்களானும் கண்ணாரக் கண்டு மகிழும் காட்சியளவையானும் அறிந்து இன்புறலாம்.

மகளிர் மாண்பை விளக்குவன

தமிழக மகளிரின் தனி மாண்பை அறிதற்குப் பெருந்துணையாக விளங்கும் பழந்தமிழ் நூல்கள் சங்க இலக்கியங்களாகும். தமிழர் வாழ்வுக்குத் தனியிலக் கணம் வகுத்துதவிய தொல்காப்பியர் தம் இலக்கணப் பெருநூலின் பொருளதிகாரப் பகுதியில் மகளிர் இயல்பை விரித்துரைக்கின்றார். தெய்வப் புலவராகிய திருவள்ளுவரும் உலகப் பொதுமறையாகிய தம் பெரு நூலிலும் தமிழ்ப்பெண்களின் தனிப்பெருமையினை விளக்குகின்றார். இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் கண்ணகியின் கற்பு மாண்பை விளக்கும் கவின்மிகு காவியமாகும். கவியரசராகிய கம்பர் பாடிய இராமாயணம் சிறையிருந்த செல்வியாகிய சீதை நல்லாளின் சிறப்பைப் புலப்படுத்தும் செந்தமிழ்க் காவியமாகும்.

மகளிர் மாண்புகள்

இங்ஙனம் பைந்தமிழ் நூல்கள் பலவற்றால் அறியலாகும் மகளிர் மாண்பைச் சிறிது ஆராய்வோம். பழமையும் பெருமையும் வாய்ந்த இலக்கணமாகிய தொல்காப்பியத்தில் அதன் ஆசிரியர் பேசும் பெண்ணியல்புகளை எண்ணுங்கால் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னரேயே தென்னாட்டு மகளிர் பொன்னாட்டு அரம்பையரெனப் போற்றி வணங்கத் தக்க ஏற்ற முடையவராய் விளங்கினர் என்பதை அறியலாம்.

"கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும்
மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின்
விருந்து புறந் தருதலும் சுற்றம் ஓம்பலும்
பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்.''

என்பது தொல்காப்பியம். கற்பு, காமம், நல்லொழுக்கம், பொறை, நிறை, விருந்தூட்டல், சுற்றம் ஓம்பல் இவை போன்ற இயல்புகள் மகளிர்க்கு மாண்பு தருவன என்று குறித்தார் தொல்காப்பியர். இவற்றுள் தலையாய இயல்பாக முதற்கண் மொழியப்பெற்ற கற்பு, உயிரினும் சிறந்ததாகத் தமிழ் மகளிரால் போற்றப்பெற்றது.

"உயிரினும் சிறந்தன்று நாணே, நாணினும்
செயிர்தீர் காட்சிக் கற்புச் சிறந்தன்று."

என்று கற்பின் மாண்பையும் கட்டுரைத்தார் தொல்காப்பியர். மகளிர்க்குரிய நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு என்னும் நான்கு பண்புகளுள்ளும் நாணம் உயிரினும் சிறந்ததாக ஓம்பப்பெற வேண்டும். அந் நாணத்தினும் மாணுடையதாகக் கற்பு காக்கப் பெற வேண்டும்.

கற்பின் பொற்பு

தமிழ் நாட்டில் ஆடவர் போற்றிய அரும் பண்புகளாகக் கொடையும் வீரமும் கொண்டாடப் பெற்றன. அவை போன்று மகளிர் போற்றிய மாண்புறு பண்புகளாகக் கற்பினையும் விருந்து போற்றும் பொற்பினையும் புகலலாம்.

"கற்பெனப் படுவது சொற்றிறம் பாமை"

என்று தமிழ் மூதாட்டியார் மிகவும் சுருங்கிய சொற்களால் கற்பிற்கு இலக்கணம் வகுத்தார். கணவன் உரையினை மறைமொழியாக மதித்து நடக்கும் மாறாத உள்ளமே கற்பென்று அவரால் வரையறுக்கப்பெற் றது. கணவன் கருத்துக்கு மாறாக எதனையும் கூறா திருக்கும் இயல்பே பெண்டிர்க்கு அழகாகும் என்று பேசினார் அதிவீரராமர்.

கற்பு என்ற சொல், கற்றல் என்றே பொருள் தரும். கற்ற கல்வியறிவே ஒருவன் அல்லது ஒருத்தி ஒழுக்கத்தைப் பெற்று உயர்தற்குக் காரணமாய் அமையும். 'அறிவின் பயன் ஒழுக்கம்' என்றே ஆன்றோர் குறிப்பர். மகளொருத்தி மணம் பெறுவதற்கு முன்னர்ப் பெற்றோரால் ஒழுக்க நெறிகளைக் கற்றுக் கொடுக்கப்பெறுவாள். அவள் மணம் புரிந்து மனையறத்தைக் கொண்ட நாள் முதல் மணந்து கொண்ட கணவனாலும் அவன் பெற்றோராகிய மாமன் மாமியராலும் மனையற் நெறிகள் இவையென அறிவுறுத்தப் பெறுவாள். இங்ஙனம் பெற்றோரும் உற்றோரும் கணவனும் கற்றுக்கொடுக்க அதனால் மனையற நெறிகளை அறிந்தொழுகும் மகளிரின் ஒழுக்க நெறியே கற்பெனப் படுவதாயிற்று. இத்தகைய கற்பிற் சிறந்த மகளொருத்தியை மனைவியாகப் பெறுதலே ஆடவனுக்குப் பெறலருஞ் செல்வமாகும். அவளினும் பெறத்தக்க பேறு வேறொன் றில்லை என்றே கூறுகிறார் திருவள்ளுவர்.

" பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மையுண் டாகப் பெறின்.''

என்பது அவர் வாய்மொழியாகும். இங்ஙனம் மகளிர்க்கு மாண்பு தரும் கற்பினை மூவகையாகப் பிரிப்பர் மூதறிஞர்.

மூவகைக் கற்பு

தலைக்கற்பு, இடைக்கற்பு, கடைக்கற்பு என்னும் மூவகையான கற்பினையும் சீத்தலைச் சாத்தனார் என் னும் செந்தமிழ்ப்புலவர் தம் படைப்பாகிய மணிமேகலைக் காவியத்தில் தெளிவுற விளக்குகிறார். கணவர் இறந்ததை அறிந்த அப்பொழுதே நெட்டுயிர்ப்புடன் தம் உயிரை விட்டொழிக்கும் உத்தம மகளிரே தலைக் கற்புடையராவர். கணவர் இறந்தபின் நெருப்பை வளர்த்து அதனுள் நீருள் மூழ்குதற்கு வீழ்வார் போலப் பாய்ந்து மாய்பவர் இடைக்கற்புடையராவர். அங்ஙனமும் செய்யாது மறுமையிலும் அக்கணவருடன் கூடி வாழும் நீடிய பேற்றைப் பெறுதற்காக உண்டி சுருக்குதல், நிலத்தில் பாயின்றிப் படுத்தல் போன்ற நோன்புகளை மேற்கொண்டு உயிரைப் போக்கும் இயல் புடையார் கடைக்கற்புடையார் என்று குறிப்பிட்டார் சீத்தலைச் சாத்தனார் . இம் மூவகைக் கற்பிற்கும் எடுத் துக்காட்டாகப் பழந்தமிழ் நாட்டில் பற்பல மகளிர் விளங்கியுள்ளனர்.

கற்புடை மகளிர் மூவர்

சிலப்பதிகாரம் குறிப்பிடும் பாண்டியன் நெடுஞ்செழியனுடைய கோப்பெருந்தேவி, தன் கணவனாய பாண்டியன் மாண்டான் என்பதை உணர்ந்ததும் அந்த இடத்திலேயே ஆவென உயிர்த்து ஆவி நீத்தாள். அவள் தலைக்கற்பிற்குத் தக்கதோர் எடுத்துக் காட்டாவாள். பூதப்பாண்டியன் இறந்த செய்தி அறிந்த அவன் தேவியாகிய பெருங்கோப்பெண்டு தீயுட் பாய்ந்து மாய்ந்தாள். அவள் இடைக்கற்பிற்கு ஏற்றதோர் எடுத்துக் காட்டாவாள். பெற்றோரால் கணவராகத் தேர்ந்து உறுதி செய்யப்பெற்ற கலிப்பகையார் போர்க்களத்தில் உயிர் துறந்த பின், திலகவதியார் அனைத்துயிர்க்கும் அருள் தாங்கி இம்பர் மனைத்தவம் இருந்தார். இவ் அம்மையார் கடைக் கற்புக்குத் தக்க எடுத்துக்காட்டாவார்.

விருந்தூட்டும் பெருந்தகைமை

இங்ஙனம் கற்பினைக் காத்தொழுகிய மகளிர் இல்லறத்தில் விருந்து போற்றும் சிறந்த பண்பினராய்த் திகழ்ந்தனர். இல்லற நெறிகளை வகுத்துரைக்கும் வள்ளுவரும் இல்வாழ்வில் போற்றத் தக்க தலையாய அறம் விருந்தோம்பலே என்பதை இனிது விளக்கி யுள்ளார்.

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.'

என்பது அவரது தமிழ் மறையாகும். செல்வத்தை ஈட்டி இல்வாழ்வு நடத்துவதெல்லாம் விருந்தூட்டும் பெருந்தகைமைக்கே என்று பேசினார் அப் பெரு நாவலர்.

கற்பரசியாகிய கண்ணகி, தன் கணவனைப் பிரிந்து வாழ்ந்த நாளில் விருந்தோம்பும் சிறந்த அறத்தைச் செய்ய முடியாது போயிற்றே என்பதற்காக உளங் கரைந்துருகினாள். இலங்கை வேந்தனாகிய இராவணனால் அசோக வனத்தில் சிறை வைக்கப்பெற்ற சீதை, இராமனை நினைந்து உள்ளம் நெகிழ்பவள், 'என்னைப் பிரிந்திருக்கும் என் நாயகன் தன் உறையுளுக்கு விருந் தினர் வந்தால் அவரை உபசரித்தற்கு யான் இல்லா மையால் என்ன அல்லற் படுகின்றானோ' என்று எண்ணி யெண்ணி ஏங்கினாள். இவை போன்ற மகளிர் வாழ்வு நிகழ்ச்சிகளெல்லாம் தமிழக மகளிர் விருந்தோம்பலைத் தலையாய அறமாகக் கொண்டவர் என்பதை நன்றாக விளக்குவனவாகும்.
------------------------

2 . மன்னர் குலமகளிர்

மன்னரும் மகளிரும்

பழந்தமிழ் நாட்டைச் சேர சோழ பாண்டியர் என்னும் முடியுடை மூவேந்தர்கள் ஆண்டு வந்தனர். இவரையன்றிக் குறுநில மன்னர்களும் சிறுசிறு நிலப் பகுதிகளை ஆண்டு வந்தனர். இம் மன்னர்கள் தத்தம் தகுதிக்கேற்ற மன்னர் மரபில் தோன்றிய மகளிரையே மணந்து மகிழ்ந்தனர். அம் மகளிர்பால் தமிழகத்திற் குரிய விருந்தூட்டும் பெருந்தகைமையும் கற்பென்னும் பொற்பும் இனிதின் விளங்கின. இவையன்றி மறக்குடி மகளிர்க்குரிய வீர நெஞ்சமும் தம் கணவராகிய வேந்தர்க்கு வேண்டும் அரசியல் அலுவல்களில் ஆய்வுரை கூறும் அறிவுத் திறனும் அவர்கள் ஒருங்கே பெற்று விளங்கினர். அம் மகளிரிற் சிலர் கவி பாட வல்ல புலமையாளராகவும் திகழ்ந்துள்ளனர்.

முன்னைத் தமிழ் மன்னர்கள் புலவர்களை மகிழ்வுடன் வரவேற்று உபசரிக்கும் புரவலர்களாக இருந்து வந்தனர். அவர்கள் தம்மை நாடிப் புகழ் பாடி வந்த புலவர்க்கு உளங்குளிர யானைக் கன்று வளநாடு முதலிய சிறந்த பலவகையான பரிசுகளை வழங்கி இன்புற்றனர். ஈத்துவக்கும் இன்பத்தின் எல்லை கண்டனர் பண்டைத் தமிழ் மன்னர்கள். ஆதலின் மன்னரைக் காணவந்த பாணரையும் பைந்தமிழ்ப் புலவரையும் அம் மன்னரைச் சார்ந்த மகளிர்கள் தகவுற வரவேற்று உணவூட்டி மகிழ்வுறுத்தும் மாண்பினராகவே இருந்தனர்.

பேகனைப் பிரிந்த கண்ணகி

கடையெழு வள்ளல்களுள் ஒருவனாகிய பேகனது பெருமாளிகைக்குக் கபிலராகிய கவிஞர் சென்றார். அங்குப் பேகன் இல்லை. அவன் மனைவியாகிய கண்ணகி ஒருத்தியே அப் பெருமாளிகையில் தனித்திருந்தாள். கபிலர் தமது வருகையை உள்ளிருப் பார்க்கு அறிவிக்குமாறு வாயிற் காவலரை வேண்டினார். சிறிது நேரத்தில் வாடிய முகமும் வழிந்திழியும் கண்ணீரும் உடையாளாய்ப் பேகனின் பெருமனைக் கிழத்தியாகிய கண்ணகி, மாளிகை வாயிலில் வந்து நிற்றலைக் கண்டார். அவளது கலக்கத்திற்குக் காரணம் யாதெனக் கனிவுடன் வினவினார் கபிலர். அதற்கு அவள், ''புலவர் பெருமானே ! என் தலைவராகிய பேகன் இம் மாளிகையில் என்னுடன் வாழுதலை வெறுத்து, நல்லூர்ப் பரத்தை ஒருத்தியுடன் வாழ்கிறார். அதனால் எனது மனை நோக்கி வரும் விருந்தினரைப் பேணவியலாது பெரிதும் கவல்கின்றேன்,'' என்று மறுமொழி பகர்ந்தாள்.

பாரி மகளிரும் பைந்தமிழ் மூதாட்டியாரும்

பறம்புமலைத் தலைவனாகிய பாரியின் மகளிர் இருவரும் தந்தை இறந்தபின் தமிழ்ப் புலவராகிய கபிலர் பெருமானுடன் தம் நாட்டைவிட்டகன்றனர். அவர் அம் மகளிர்க்குத் தக்க மணாளரைத் தேடி மணம் புரிந்து வைத்தற்காகப் பெரிதும் முயன்றார். அப்பாரி மகளிர் தங்கியிருந்த சிறுமனைக்குச் செந்தமிழ் மூதாட்டியாராகிய ஒளவையார் ஒருநாள் பெருமழையில் நனைந்து கொடும் பசியுடன் குறுகினார். அவரைப் பாரி மகளிர் அன்புடன் வரவேற்றுத் தம்மிடம் இருந்த சிற்றாடையைக் கொடுத்துக் கட்டிக்கொள்ளுமாறு செய்தனர். கொல்லையில் கொழுந்துவிட்டு வளர்ந்திருந்த கீரையைப் பறித்துக்கொணர்ந்து சுவைபடச் சமைத்து அவரது கொடும்பசியையும் அகற்றினர். தந்தையையும் தம் நாட்டையும் இழந்து பெருந்துயர் கொண்டு வருந்தும் நிலையிலும் மன்னர்குல மகளிராகிய அப் பாரி மகளிர் தம்மை நாடி வந்த புலவரைப் போற்றி விருந்தூட்டிய பெருந்தகைமையை என்னென்பது! பாரி மகளிரின் அன்பில் திளைத்த பைந்தமிழ் மூதாட்டியார் அவர்தம் அரிய பண்புகளைப் பலவாறு பாராட்டி மகிழ்ந்தார்.

பூதப்பாண்டியன் தேவி

பூதப்பாண்டியன் என்னும் புலமை மிக்க பேரரசன் ஒருவன் இருந்தான். அவனுடைய மனைவியாகிய பெருங்கோப்பெண்டு என்பாள் அருந்தமிழ்ப் புலமை சான்ற அரசியாவாள். கற்பிலும் பொற்பிலும் சிறந்த காரிகையாவாள். அவளது அன்பு, அறிவு, அழகு ஆகிய பண்புகளில் உள்ளத்தைப் பறிகொடுத்த பாண்டியன் என்றும் அகலாது அவளுடன் இன்புற்றுக் கொண்டிருந்தான். அவன்பால் பகைமை கொண்ட சேரனும் சோழனும் பாண்டி நாட்டின் மீது படை யெடுத்தற்குப் பெரும்படை திரட்டும் செயலைப் பூதப் பாண்டியன் கேள்வியுற்றான். உடனே அவன் உள்ளத் தில் சினம் பொங்கியது. கையில் வாளுடன் கண்களில் சினப்பொறி பறக்க எழுந்து நின்று வஞ்சினம் ஒன்று கூறினான்.

'என்னுடன் எவர் வேண்டுமாயினும் போருக்கு வருக. போரில் எதிர்ப்பவர் எவராயினும் அவரைப் போர்க்களத்தில் அலறத் தாக்கி அவரது தேரும் பிற படையும் புறங்காட்டி ஓடுமாறு செய்வேன். அங்ஙனம் யான் செய்யாவிடின், இதோ ! என் அருகில் இருக்கும் என் அழகிய மனைவியைப் பிரிந்து வருந்துவேனாக' என்று பூதப்பாண்டியன் வஞ்சினம் கூறினான்.

'ஆரமர் அலறத் தாக்கித் தேரொடு
அவர்ப்புறம் காணே னாயின், சிறந்த
பேரமர் உண்கண் இவளினும் பிரிக.'

என்பது அவன் புலமை நலம் கனிந்த பொன்மொழிப் பாடல் பகுதியாகும்.

பூதப்பாண்டியன் தேவியாகிய பெருங்கோப் பெண்டும் தன் கணவனாகிய பாண்டியன் மாண்டதும் தீயுள் பாய்ந்து மாய்ந்தாள். அப்பொழுது அவளைத் தடுத்து நின்ற சான்றோரை அவள் பழித்துப் பாடிய பாடல் சங்க இலக்கியமாகிய புறநானூற்றில் இடம் பெற்றுள்ளது. அவளது பாடலால் மன்னர் மரபில் தோன்றிய மகளிரின் வீர நெஞ்சமும் கணவனைப் பிரிந்து வாழ விரும்பாக் கற்புள்ளமும் நன்கு விளங்கக் காணலாம்.

அரசியல் ஆய்வுரை கூறும் அமைச்சர்

செங்குட்டுவன் தேவியாகிய இளங்கோவேண்மாள் தன் கணவனாகிய செங்குட்டுவன் அரசவைக்குச் செல்லுங்கால் தானும் உடன் சென்று அரியணையில் அமர்ந்திருப்பாள். அவைக்கண் நடைபெறும் அரசியல் பற்றிய ஆய்வுரைகளில் தானும் பங்கு கொள்வாள். அரசன் குறிப்பும் விருப்பும் அறிந்து தன் கருத்தையும் பொருத்தமாகவும் திருத்தமாகவும் தெரிவிப்பாள்.

மலைவளம் காணச் சென்ற செங்குட்டுவன் பேரி யாற்றங்கரை மணல் மேட்டில் தங்கியிருந்தான். அப்பொழுது அவனைக் காண வந்த மலைவாழ் வேட்டுவர் தாம் மலைமீது கண்ட மங்கையாகிய கண்ணகியைப் பற்றிய செய்திகளைக் கூறினர். அச்சமயத்தில் செங்குட்டுவன் விருப்பிற்கிணங்க நம்நாடு நோக்கி வந்த பத்தினித் தெய்வத்தைப் பரசல் வேண்டும்' என்று அரசியாகிய வேண்மாள் அறிவித்த கருத்தை அங் ஙனமே அவன் ஏற்றுப் போற்றினான்.

இங்ஙனம் அறிவும் திறனும் நிறைந்தவராய் அரச குல மகளிர் விளங்கினர். கற்பில் சிறந்த காரிகையராய்க் கணவனது பெருமையைக் காக்கும் பெற்றியுடன் திகழ்ந்தனர். தம்மை நாடி வரும் பாவலர்க்கு விருந்தூட்டி மகிழும் சிறந்த பண்பினராய் இருந்தனர். இத்தகைய மகளிரைப் பழந்தமிழ் மன்னர்கள் மணந்து அன்பு கனிந்த இன்ப வாழ்வு நடத்தினர். அவர்களில் சில மன்னர் ஒருவரையே யன்றிப் பல மகளிரை மணம் புரிந்து வாழ்ந்ததும் உண்டு. அங்ஙனம் மன்னர் மணம் செய்த மகளிர் பலராயின் முதற்கண் மணங் கொண்ட மாதரசியே கோப்பெருந்தேவி என்று கொண்டாடும் பெருமை கொண்டவளாவள்.
---------------

3. செங்குட்டுவன் தேவி

மன்னர் மூவர் - வைப்பு முறை

தமிழகத்தைச் சிறப்புற ஆண்ட முடிவேந்தர் மூவரைச் 'சேர சோழ பாண்டியர்' என்று முன்னோர் முறைப்படுத்து மொழிவாராயினர். இங்ஙனம் இயம்புவது உலக வழக்கில் மட்டுமன்று. செய்யுள் வழக்கிலும் இம்முறையே எடுத்தாளப்படுகின்றது. புறநானூற்றைத் தொகுத்த புலவர், மூவேந்தருள் சேரரைப் பற்றிய செய்யுட்களை முன்னரும் ஏனை இருவரைப் பற்றிய பாடல்களைப் பின்னரும் முறைப்படுத்தி அமைத்துள்ளனர். சிறுபாணாற்றுப்படை என்னும் செந்தமிழ் நூலுள்ளும் சேரன், செழியன், செம்பியன் என்னும் முறையே குறிக்கப்பெற்றுள்ளது. தொன்மை வாய்ந்த இலக்கண ஆசிரியராகிய தொல்காப்பியனாரும் தமிழ் வேந்தர் மூவரின் மாலைகளைச் சொல்லுங்கால் சேரர் மாலையாகிய பனம்பூ மாலையினையே முதற்கண் பகர்வாராயினர்.

"போந்தை வேம்பே ஆரென வரூஉம்
மாபெருந் தானையர்.''
என்பது தொல்காப்பியச் சூத்திரப் பகுதியாகும்.

சேரரின் தொன்மை

இத்தகைய வைப்பு முறையில் சேர சோழ பாண்டியர், சேர பாண்டிய சோழர் என்ற இருவகை காணப் படினும் சேரர் முதற்கண் வைத்து மொழியப்பெறுவதில் வேறுபாடில்லை. இம் முறையினை நோக்குங்கால் தமிழ் வேந்தர் மூவருள் சேர மரபினர் மற்றை இருவரினும் மிகத் தொன்மையானவர் என்பது புலனாகும்.

வடமொழியிலுள்ள மிகப் பழங்காவியமாகிய வான்மீகி இராமாயணத்தில் சீதாதேவியை வானர வீரர் தேடி வருமாறு சுக்கிரீவன் குறிப்பிட்ட இடங்களுள் கேரள நாடும் முரசீபத்தனமும் காணப்படுகின் றன. கேரளம் என்பது சேரநாட்டைக் குறிக்கும். முரசீபத்தனம் என்பது சேர நாட்டின் பண்டைத் துறைமுகமாகிய முசிரியைக் குறிக்கும். இது முன்னாளில் பேரியாறு கடலுடன் கலக்கும் இடத்தில் விளங்கிய பெருந்துறைமுக நகரமாகும். சேரனுடைய தலைநகரங்களுள் ஒன்றாகவும் இது நின்று நிலவியதைப் பழந்தமிழ் நூல்களால் அறியலாம். இந்நகர் இருந்த இடத்தில் பிற்காலத்துத் தோன்றிய நகரமே கொடுங் கோளூர் என்பது.
-
பிறிதொரு வடமொழிப் பெருங்காவியமாகிய மகாபாரதத்துள்ளும் சேரரைப் பற்றிய செய்திகள் கூறப்படுகின்றன. பாரதப்போரில் பாண்டவர் பக்க மிருந்து சேரர் தக்கவாறு துணை செய்தனர் என்று அவ் இதிகாசத்தால் அறியப்படுகின்றது. உதியஞ்சேரல் என்னும் சேரவேந்தன் பாரதப்போர் முடியுங்காறும் படைகட்குப் பெருஞ்சோறளித்துப் பேணினான் என்று தமிழ் நூல்களில் போற்றப்படுகிறான். இதனைப் பழந் தமிழ்ப் புலவராகிய முரஞ்சியூர் முடிநாகராயர் என்பார் அப்பெருஞ்சோற்று உதியன் சேரலாதனை நேரில் கண்டு பாராட்டிப் பாடிய பாடலால் அறியலாம்.

" அலங்குளைப் புரவி ஐவரொடு சினை இ
நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப் பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்."

என்பது அப்புலவரின் நலங்கெழுமிய வாக்காகும். இச் செய்தியினை இளங்கோவடிகளும் சிலப்பதிகாரத்தில் குறிப்பிடுகின்றனர்.

"ஓரைவர் ஈரைம் பதின்மர் உடன்றெழுந்த
போரில் பெருஞ்சோறு போற்றாது தானளித்த
சேரன்.''

என்பது அவர் வாக்கு. ஓரைவர் என்பார் பாண்டவர் ஐவர் . ஈரைம்பதின்மர் என்பார் கௌரவர் நூற்றுவர். இவ் இரு திறத்தாரும் சீறியெழுந்த போரில் இரு திறத்துப் படைவீரர்க்கும் வேண்டு மட்டும் பெருஞ் சோற்றை விரும்பியளித்து அரும்புகழ் பெற்றான் சேரன் என்று பாராட்டினார் சிலப்பதிகார ஆசிரியர்.

செங்குட்டுவன் தந்தை

இங்ஙனம் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னரேயே புலவர் பாடும் புகழ்பெற்று இலகிய சேரர் மரபில் நெடுஞ்சேரலாதன் என்னும் முடிவேந்தன் ஒருவன் விளங்கினான். அவன் இமயவரம்பன் என்று புலவர்கள் ஏத்தும் சீர்த்தி பெற்று இலங்கினான். 'குமரியொடு வட இமயத்து ஒருமொழிவைத்து உலகாண்ட சேரலாதன் என்று இப் பெருவேந்தனை இவன்றன் மைந்தராகிய இளங்கோவடிகள் குறிப்பிடுகின்றார். இம் மன்னர் பெருமான் இமயம் வரை சென்று, வடநாட்டு வேந்தரை வென்று, தன் இசைக்கொடியினை நாட்டினான். இத்தகைய நெடுஞ்சேரலாதனுக்குக் கோப்பெருந்தேவியாய் அமைந்தவள் சோழன் மணக்கிள்ளியின் மகள் நற்சோணை என்னும் நல்லாள். அன்னாள் மணிவயிற்றில் தோன்றிய மைந்தர் இருவருள் மூத்தவனே செங்குட்டுவன் என்னும் செந்தமிழ்ப் பெருவேந்தன். அவனுக்கு உடன் பிறந்த தம்பியரே இளங்கோவடிகளாவர்.

செங்குட்டுவன் தேவி

பேராண்மை மிக்க சேரப் பெருவேந்தனாகிய செங்குட்டுவனுடைய பெருந்தேவியாகத் திகழும் பேறு பெற்றவள் இளங்கோ வேண்மாள் என்பாள். வதுவை வேண்மாள் மங்கல மடந்தை என்று இவளைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகின்றது. இதனால் இப்பெருந் தேவி வேளிர் குலத்தைச் சார்ந்தவள் என்பது விளங்கும். இவள் ஒருத்தியையன்றிச் செங்குட்டுவன் வேறு மகளிரை மணந்ததாகத் தெரியவில்லை.

அரசியும் அமைச்சும்

இளங்கோ வேண்மாள் செங்குட்டுவன் சிந்தை யினைக் கவரும் சீரிய பேரழகு படைத்த பெண்ணாக விளங்கியதோடன்றிக் கூரிய நுண்ணறிவு கொண்டவளாகவும் விளங்கினாள். அவளுடைய அறிவுத் திறனைப் பலகால் ஆய்ந்துணர்ந்த வேந்தர் பெருமானாகிய செங்குட்டுவன் அவளைத் தன் அமைச்சருள் ஒருவராகவே கருதினான். ஆதலின் அவன் தன் அரசவைக்குச் செல்லும் போதெல்லாம் தன் கோப்பெருந்தேவியாகிய இளங்கோ வேண்மாளையும் உடனழைத்துச் செல்லலானான். அரசவையில் அவளைத் தன் அரியாசனத்திலேயே உடனிருத்தி உளங்குளிர்ந்தான். இதனை இளங்கோவடிகள், ''இளங்கோ வேண்மாள் உடனிருந் தருளி" என்றே குறிப்பிடுவார்.

செங்குட்டுவன் தன் கோப்பெருந்தேவியுடன் அத்தாணி மண்டபத்திற்கு அணிமிகு பெருங்கோலம் தாங்கி இன்னியங்கள் முழங்க எழுந்தருளுவான். அப்போது அவன் வரும் வழியெல்லாம் அரண்மனையி லுள்ள அரங்குகளில் கூத்தர்கள் பல்வகைக் கூத்துக்களை நிகழ்த்தி மகிழ்வூட்டுவர். இருவரும் அக் காட்சிகளைக் கண்ட பெருமகிழ்வுடன் அத்தாணியில் சென்று அமர்வர். அங்கு அமைச்சர் முதலான அரசியல் சுற்றமுடன் மந்திராலோசனை புரியும் போது கோப்பெருந்தேவியும் தன் கருத்தை எடுத்தியம்பும் உரிமையினைச் செங்குட்டுவன் அவட்குக் கொடுத்திருந்தான். இதனால் இளங்கோ வேண்மாளின் நுண்ணறிவு இனிதில் புலனாவதாகும்.

செங்குட்டுவன் மலைவளம் காணச் செல்லுதல்

சேரர் தலைநகரமாகிய வஞ்சிக்கண் மன்னன் வதியும் மாளிகை 'இலவந்திகை வெள்ளிமாடம்' எனப்படும். அம் மாளிகையில் சேர மன்னனாகிய செங்குட்டுவன் தன் தேவியுடன் வாழும் நாளில் 'மஞ்சு சூழும் சோலைகளையுடைய மலைவளத்தைக் கண்டுகளிப்போம்' என்று கருதினான். தேவ மாதருடன் விளையாட விரும்பிய தேவேந்திரன் தனது ஐராவதத்தில் அழகுற அமர்ந்து ஆரவாரத்துடன் செல்வது போலச் செங்குட்டுவனும் தன் பட்டவர்த்தனக் களிற்றின் மேல் அமர்ந்து பரிவாரங்கள் புடைசூழப் புறப்பட்டான். திருமாலின் மார்பிடையே திகழும் முத்தாரம் போன்று பல்வகை மரங்களால் அழகுடன் ஒளிரும் மலையினை ஊடறுத்துக் கொண்டு இழியும் பேரியாறு என்னும் ஆற்றங்கரையின் மணல் நிறைந்த மேட்டிலே சென்று தங்கினான். அவனுடன் கோப்பெருந்தேவியாகிய இளங்கோ வேண்மாளும் தம்பியாராகிய இளங்கோவடிகளும் அவைப் புலவராகிய சீத்தலைச் சாத்தனாரும் அமைச்சர் தலைவனாகிய அழும்பில் வேளும் படைத் தலைவனாகிய வில்லவன் கோதையும் இன்னும் பிற அரசி யல் சுற்றமும் ஆங்கு வந்து பாங்குறத் தங்கினர்.

மலை நாட்டு மக்கள், மன்னனைக் காண்டல்

அக்காலத்தில் குரவை ஆடும் குறமகளிர் பாட லும், மலைக்கண் முருகபூசை செய்யும் வேலனது பாட லும், தினையிடிக்கும் தெரிவையரின் வள்ளைப் பாட்டும், தினைப்புனங்களினின்று எழுகின்ற ஒலியும், தேனெடுக்கும் குறவர்களின் குரல் முழக்கும், அருவி ஒலியும், புலியோடு போராடும் பொருகளிற்றின் பெரு முழக்கும், தினைப்புனப் பரண்களில் இருக்கும் பாவையர் கூவும் ஒலியும், குழியில் வீழ்ந்த வேழங்களைப் பாகர் பழக்கும் ஓசையும் ஆங்குச்சென்ற படைகளின் ஆரவாரத்துடன் கலந்து ஒலித்தன. இந் நிலையில் மலைவாழ் வேட்டுவர் பலர் ஒருங்கு திரண்டு மலையிடத்துக் கிடைக்கும் அரிய பொருள்களாகிய யானைத் தந்தம், அகில், சந்தனம், கவரிமான் மயிர், தேன்குடம், சிந்துரக்கட்டி, அஞ்சனம், அரிதாரம், ஏலம், மிளகு, கூவை, கவலை, தேங்காய், மாங்கனி, பலாக்கனி, கரும்பு, கமுகின் குலை, வாழைக்குலை, சிங்கம் - புலி - யானை - குரங்கு - கரடி ஆகியவற்றின் குட்டிகள், மலையாடு, மான்மறி, கத்தூரிக் குட்டி, கீரிப்பிள்ளை, தோகைமயில், புனுகுப் பூனை, காட்டுக்கோழி, கிளிப்பிள்ளை முதலானவற்றைத் தம் நாட்டு மன்னனுக்குக் கையுறையாகத் தலைமேல் தாங்கிச் செங்குட்டுவன் திருமுன் வந்து நின்றனர்.

வேந்தனைக் கண்ட வேட்டுவக் கூட்டத்தார் தாம் தலைமேல் சுமந்து வந்த மலைபடு பொருள்களையெல்லாம் அவன் திருமுன் வைத்து, 'ஏழ் பிறப்படியேம்! வாழ்க ! நின் கொற்றம்' என்று வாழ்த்தி அவன் அடிகளில் விழுந்து பணிந்தனர். செங்குட்டுவன் தன்னைக் காண வந்த மலைநாட்டு மக்களுக்கு மலர்ந்த முகம் காட்டித் திருமுடி அசைத்து நல்வரவு கூறினான். பின்னர், 'நீவிர் வாழும் மலைநாட்டு நிகழ்ந்த சிறப்பு ஏதும் உளதோ?' என்று அன்புடன் வினவினான். அது கேட்ட வேட்டுவர் தலைவன் அம் மலைநாட்டு நிகழ்ந்த வியத்தகு நிகழ்ச்சியை வேந்தனுக்கு விளக்கலானான்.
-
கண்ணகி காட்சியைக் கட்டுரைத்தல்

''வேந்தர் வேந்தே! யாங்கள் வாழும் மலைக் கண்ணே ஒரு வேங்கை மரத்தின் நீழலில் மங்கை யொருத்தி ஒரு மார்பினை இழந்தவளாய்ப் பெருந்துய ரோடும் வந்து நின்றாள். அச்சமயத்தில் வானத்தி னின்று இறங்கிய விமானத்தில் தேவர்கள் பலர் ஆங்கு வந்துற்றனர். அங்கு நின்ற மங்கைக்கு அத்தேவர்கள் அவள் கணவனைக் காட்டி அவளையும் உடன் அழைத் துக்கொண்டு எங்கள் கண்முன்னரேயே விண்ணுலகம் சென்றனர். அம் மங்கை நல்லாள் எங்குப் பிறந்த வளோ? யார் மகளோ? அறியோம். இது பெரிய தொரு வியப்பாய் இருந்தது. தேவரீர் திருநாட்டில் நிகழ்ந்த இச் செய்தியினைத் தாங்கள் தெரிந்தருளல் வேண்டும்.''

சாத்தனார் செய்தியை விளக்குதல்

இங்ஙனம் வேட்டுவர் தலைவன் விளம்பிய செய்திகளை எல்லாம் உடனிருந்து உற்றுக் கேட்ட முற்றுணர் புலவராகிய மதுரைச்சாத்தனார் அவ்வியத்தகு நிகழ்ச்சியைப் பற்றி வேந்தனுக்கு விளக்கத் தொடங்கினார். அப் புலவர் மதுரையில் கோவலன் கொலையுண்டது முதலாய நிகழ்ச்சிகளை நேரில் கண்டறிந்தவ ராதலின் செங்குட்டுவனை நோக்கி, "அரசர் பெருமானே ! அது நிகழ்ந்தவற்றை யான் நன்கு அறிவேன்" என்று சொல்லத் தொடங்கினார்.

"காவிரிப்பூம்பட்டினத்து வணிகன் கோவலன் என்பான் தன் மனைவி கண்ணகியின் காற்சிலம்பை மதுரையில் விற்றற்கு வந்தான். அவனைப் பாண்டியன் நெடுஞ்செழியன் தன் தேவியின் சிலம்பைத் திருடிய கள்வன் என்று கொலை புரிவித்தான். அதனை அறிந்த கண்ணகி கடுஞ்சினம் கொண்டு பாண்டியன் அவையில் வழக்காடி வென்றாள். மற்றொரு சிலம்பைப் பாண்டியன் தேவி முன் வீசி எறிந்து வஞ்சினம் கூறினாள். மன்னன் மாளிகையினின்று வெளிப்போந்து தனது ஒரு மார்பைத் திருகி வானில் வீசினாள். அதனினின்று எழுந்த கொழுந் தீயால் மதுரை மூதூரைச் சுட்டெரித்தாள். கண்ணகியின் வழக்கைக் கேட்ட நெடுஞ்செழியன் தான் செய்த கொடுங்கோன்மைக்கு ஆற்றாது அரியணை மீதே விழுந்து உயிர் துறந்தான். அவன் கோப்பெருந்தேவி அக் கடுந்துயர் பொறாளாய் 'மன்னவன் செல்வுழிச் செல்க யான்' எனத் தன்னுயிர் கொண்டு அவன் உயிர் தேடினள் போல்' உடனுயிர் நீத்தாள். கண்ணகியோ பாண்டியனது கொடுங் கோன்மை இத்தன்மையது என்பதைப் பெருவேந்தனாகிய நின்னிடத்துக் கூறவந்தவள் போலத் தனக்குரிய சோழநாடு செல்லாது நின்னாடு புகுந்தாள். அரசே! நின் கொற்றம் சிறப்பதாக!''

செங்குட்டுவன் செப்பிய ஆறுதல்

இங்ஙனம் சீத்தலைச் சாத்தனார் செப்பிய செய்தி களைக் கூர்ந்து கேட்ட வேந்தர் பெருமானாகிய செங் குட்டுவன் பெரிதும் சிந்தை நொந்தான். பின் சாத்த னாரை நோக்கிப், ''புலவர் பெருமானே! பாண்டியன் செங்கோன்மையில் வழுவிய செய்தி எம்போன்ற மன்னர் செவிகளில் விழுவதன் முன்னர் உயிர் நீத்தான். அச்செயல் தீவினையால் வளைக்கப்பட்ட அவனது கோலை உடனே நிமிரச்செய்து செங்கோலாக்கி விட்டது. மன்னுயிர் காக்கும் மன்னர் குடியில் பிறத்தல் இன்னலேயன்றி இன்பம் சிறிதும் இல்லை" என்று கூறி உள்ளம் தேறினான்.

செங்குட்டுவன் தேவியை வினவுதல்

பின்னர்ச் செங்குட்டுவன் தன் அருகிருந்த பெருந் தேவியாகிய இளங்கோ வேண்மாளின் உளக்கருத்தை அறிய விரும்பினான்.

"உயிருடன் சென்ற ஒருமகள் தன்னினும்
செயிருடன் வந்த இச் சேயிழை தன்னினும்
நன்னுதல் ! வியக்கும் நலத்தோர் யாரென.''

கணவனாகிய பாண்டியனுடன் தன்னுயிரை நீத்த அவன் கோப்பெருந்தேவியும் சினத்துடன் நம் சேரநாடு நோக்கி வந்த கண்ணகியும் ஆகிய இவ் இருபெரும் பத்தினியருள்ளே வியந்து போற்றும் சிறந்த கற்புடை யார் யாவர்? என்று உசாவினான்.

பெருந்தேவியின் மறுமொழி

கோப்பெருந்தேவி கணவனது வினாவிற்கு மிகவும் ஆய்ந்து தகவுற மறுமொழி பகர்ந்தாள்.

"காதலன் துன்பம் காணாது கழிந்த
மாதரோ பெருந்திரு உறுக வானகத்து,
அத்திறம் நிற்க; நம் அகல்நாடு அடைந்த இப்
பத்தினிக் கடவுளைப் பரசல் வேண்டும்.''

காதற் கணவனது துன்பத்தைக் காணாது உயிர்நீத்த பாண்டியன் பெருந்தேவி வானுலகத்தே பெருந்திருப் பெறுவாளாக நம் நாட்டை நோக்கி வந்த பத்தினித் தெய்வமாகிய கண்ணகியை நாம் வழிபடுதல் கடனாகும் என்று கட்டுரைத்தாள் கோப்பெருந்தேவி.

தெய்வப் புலவராகிய திருவள்ளுவர் தமிழகப் பெண்ணிற்குத் தக்கதோர் உயர்ந்த இலக்கணத்தை வகுத்துள்ளார்.

''தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.''

என்பது அவர் வாய்மொழி. பெண்ணாவாள் கற்பினால் தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும். தன்னை மணந்து கொண்ட கணவனை உண்டி முதலியவற்றால் நன்றாகப் பேண வேண்டும். இருவர் தம் புகழையும் இனிது காக்க வேண்டும். தனக்குரிய நற்குண நற்செயல்களில் தவறா தவளாக இருத்தல் வேண்டும்.
கோப்பெருந்தேவியும் கண்ணகியும்

இங்ஙனம் வள்ளுவர் வகுத்த இலக்கணத்தில் பாண்டியன் கோப்பெருந்தேவிக்கு ஒரு சிறு குறை அமைந்துவிட்டது. அவள் தன் கணவனுக்கு ஏற்பட்ட 'கடுங்கோலன்' என்ற பழியை அகற்றவில்லை. கண்ணகியின் சிலம்பைத் தன் சிலம்பென அறியாது விரும்பிக் கணவன் பெரும்புகழ் நீங்குதற்கும் அவளே காரணமாயினாள். கண்ணகியோ தன் கணவனுக்கு ஏற்பட்ட கள்வன்' என்ற பழிச்சொல்லை நீக்கி, அவன் புகழை நிலைநாட்டினாள். கற்பால் தன்னை நன்கு காத்துக்கொண்டாள் அந் நங்கை. கணவனாகிய கோவலனை இனிது பேணினாள். தனக்குரிய இல்லற ஒழுக்கங்களில் எள்ளளவும் தவறினாளல்லள். இக் காரணங்களால் இணையற்ற கற்புத்தெய்வமாய் எழிலுற்று விளங்கினாள். இந்த உண்மையை இனிதின் உணர்ந்த கோப்பெருந்தேவியாகிய வேண்மாள், கண்ண கிக்குக் கோவிலெடுத்துக் கும்பிட வேண்டும் என்று கூறியதில் என்ன வியப்பு!
-----------------

4 . ஆட்டனத்தியின் தேவி

அத்தியின் அருமை

'வில்லுக்கு வீரன் சேரன், சொல்லுக்கு வீரன் கீரன்' என்பது முன்னோர் வழங்கிய பழமொழியாகும். இப் பழமொழியால் சேர வேந்தர் வீரத்தில் சிறந்தவர் என்பது இனிது புலனாகும். இத்தகைய சேர மரபில் ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னர் நாடகக் கலையில் வல்லவனாகிய நல்லரசன் ஒருவன் இருந்தான். அவன் அத்தி என்னும் அரும்பெயருடையான். அத்தி என்ற சொல்லுக்கு 'யானை' என்பது பொருள். களிறு போன்ற கடுந்திறல் வீரனாதலின் அங்ஙனம் பெயர் பெற்றான் போலும்! அவன் நாடகக்கலையில் பெற்ற நற்றிறத்தால் 'ஆட்டன் அத்தி' என்றே போற்றி அழைக்கப்பெற்றான்.

இத்தகைய அத்தி யென்னும் அரசர் பெருமான் ஆற்றல் மிக்க ஏற்றினைப் போன்ற எழில் நடையுடை யான். பருத்துத் திரண்ட தோள்களையுடையான். அடர்ந்து இருண்டு சுருண்ட தலைமயிருடையான். கலீர் கலீரென்று ஒலிக்கும் கவின்மிகு கழல்புனைந்த கால்களை யுடையான். கரிய கச்சினை அரையிலே கட்டி யவன். பசும்பொன்னால் செய்த பாண்டில் மணிகளை அக்கச்சின் மீது அழகுற அணிந்தவன். வண்ண மலர்களால் தொடுக்கப்பெற்ற வனப்பு மிக்க மாலையினை மார்பிலே தரித்தவன். நீதியிலும் வீரத்திலும் நேரில் லாதவன். சிவபத்தியிலும் ஒழுக்கத்திலும் சிறந்தவன். இயற்றமிழிலும் இசைத்தமிழிலும் வல்லவன் ; சிந்தை யின் ஒருமைப்பாட்டால் மந்திர ஆற்றல் கைவரப் பெற்றவன் ; தன் பார்வையாலும் பரிசத்தாலும் பல நோய்களைப் போக்கும் நன்மருந்து போல்வான் ; நாட்டியக்கலையினைத் தான் கற்றுத் தேர்ந்ததோடு நில்லாது மற்றையோர்க்குக் கற்றுக்கொடுப்பதிலும் வல்லவனாக விளங்கினான். அதனாலேயே பிறரை ஆட்டும் இயல்புடையானாகிய அத்தியை ஆட்டுவான் என்று போற்றினர். அச்சொல்லே ஆட்டன்' என்று மருவியது. அதுவே இந்நாளில் நட்டுவன்' என்று திரிந்து வழங்குகின்றது.

புலவர் நோய் போக்குதல்

இவ் அத்தியின் காலத்தில் விளங்கிய அருந்தமிழ்ப் புலவராகிய நரிவெரூஉத்தலையார் என்பார் நாட்டினர் வெறுக்கும் தோற்றமுடையவராய் இருந்தார். அவருடைய தலையைக் காணும் நரியும் வெருவியோடும் போலும்! அத்தகைய இழிந்த தோற்றத்துடன் இருந்த பெருந்தமிழ்ப் புலவரை, நல்லோர் பலர் ஆட்டன் அத்தியைச் சென்று காணுமாறு தூண்டினர். அங்ஙனமே நல்லிசைப் புலவராகிய நரிவெரூஉத்தலை யாரும் சேரன் தலைநகரமாகிய வஞ்சியைச் சார்ந்து மருந்தனைய மன்னனாகிய அத்தியைக் கண்டார். அவனது அருட்பார்வை பட்ட அப்பொழுதே புலவர் நல்லுடம்பும் பொலிவுமிக்க தோற்றமும் பெற்றார் அதனால் பெருமகிழ்வுற்ற புலவர், அத்தியை அக மகிழ்ந்து போற்றினார். அதனைக் கண்ணுற்ற மன்னன் அன்புடன் வரவேற்று உபசரித்து அவரது வரலாற்றை உசாவி அறிந்தான்.

நரிவெரூஉத்தலையார் நல்வாழ்த்து

அத்தியின் காட்சியால் அருநோய் நீங்கிய நரிவெரூஉத்தலையார் அவன்பால் அமைந்த அரிய இயல்பு என்றும் குன்றாதிருக்க வேண்டும் என்று விரும்பினார். அதனால் அவர் தம் உள்ளங் குளிரத் தெள்ள முதப் பாவொன்றால் வாழ்த்தினார்.
"எருமை யன்ன கருங்கல் இடைதோறு
ஆனிற் பரக்கும் யானைய முன்பின்
கானக நாடனை நீயோ பெரும் !
நீயோ ராகலின் நின்னொன்று மொழிவல்,
அருளும் அன்பும் நீக்கி நீங்கா
நிரயம் கொள்பவரொடு ஒன்றாது காவல்
குழவி கொள்பவரின் ஓம்புமதி
அளிதோ தானே அது பெறல் அருங் குரைத்தே.''
      - புறநானூறு : 5

'எருமையைப் போன்ற கருமையான பாறைகள் நிறைந்த இடந்தொறும் பசுக்களைப்போல யானைகள் உலவும் வலிமை வாய்ந்த காட்டின் நடுவே அமைந்த நாட்டினையுடையாய்! பெருமானே! நீ பெறுதற்கரிய பேராற்றலையும் நல்லியல்பையும் இயல்பாகவே பெற் றுள்ளாய். இவ் அரிய இயல்பு நின்பால் என்றும் நிலவ வேண்டும் என்ற விருப்புமிக்க நினைப்பால் நினக்கு ஒரு செய்தியைச் சொல்லுவேன். அருளும் அன்பும் நீக்கிய வன்புடைய நெஞ்சத்தால் நரகினை வரவேற்கும் கொடியருடன் கூடாமல் நின் நாட்டைக் குழந்தையை வளர்க்கும் தாயரைப்போல நேயமுடன் காப்பாயாக! அத்தகைய காவலே ஆன்றோரும் போற்றும் அருமை யுடையதாகும்.'

இங்ஙனம் அத்தியைச் சித்தங்குளிர வாழ்த்திச் சீரிய நல்லுரை பகர்ந்த நரிவெரூஉத்தலையார் தாம் பெற்ற இன்பம் பிறரும் பெறவேண்டும் என்ற பேருள்ளத்தைத் தம் பாட்டால் பாரறியக் காட்டினார். 'நல்லாரைக் காண்பதுவும் நன்றே' என்று நவின் றருளினார் ஒளவையார். நல்லார் குழாத்தில் ஒருவ னாகத் திகழ்ந்த அத்தியைக் காண்பதாலேயே அரு நோய்கள் கெடுமாயின் அவனது மாட்சியை என் னென்பது!

மன்னனும் மருதியும்

அந்நாளில் நாகப்பட்டினத்தைச் சார்ந்த நெய்தல் நிலத் தலைவன் ஒருவன் இருந்தான். அவனுக்கு உருவிலும் அறிவிலும் மிக்க மருதி யென்னும் மகள் ஒருத்தி இருந்தாள். அவளுக்கு நாட்டியக்கலையைக் கற்பிக்க வேண்டுமெனத் தந்தையாகிய நெய்தல் நிலத் தலைவன் விரும்பினான். சேர வேந்தனாகிய ஆட்டனத்தி நாட்டியக்கலையை ஊட்டுவதில் வல்லவன் என்பதை நல்லார்வாய்க் கேட்டறிந்தான் அந்நாகப்பட்டினத்துத் தலைவன். உடனே அவன் தன் மகளை வஞ்சிக்கே eஆனும் சொன்பால் கலையில் செய்தான். மருத இயலிசைகளில் வல்லவளாக இருந்தமையால் நாட்டியக் கலையை எளிதில் பயின்று ஆடலரசியாகத் திகழ்ந்தாள். அவளது ஆடல், பாடல், அழகு அனைத்தினும் கருத்தைப் பறிகொடுத்த ஆட்டனத்தி அவளைக் காதலித் தான். கலையில் வல்ல வேந்தனைக் கலைபயின்ற மருதி யும் விரும்பினாள். இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர்.

ஆதிமந்தியின் அருந்தொடர்பு

ஆட்டனத்தியின் ஆடல் திறனைக் கேட்டறிந்த சோழவேந்தனாகிய கரிகாலன், தன்மகளாகிய ஆதிமந்தி என்பாளுக்கும் நாட்டியக்கலை பயிற்றுவிக்க நாட்டம் கொண்டான். அவன் தன் தாய்மாமனும் தமிழ்ப் புலவர் கோமானுமாகிய இரும்பிடர்த்தலையார் வாயிலாகத் தன் விருப்பினைத் தெரிவித்தான். அத்தியும் அதற்கு இசையவே கரிகாலன் மகளாகிய ஆதிமந்தி அவன்பால் நாட்டியக்கலையைப் பயின்று தேர்ந்தாள். அந்நாளில் அத்தியும் மருதியும் ஆதிமந்தியும் ஆடற் கலையில் இணையற்றவராய் நாட்டிய மும்மணிகளென நாட்டினர் போற்ற விளங்கினர்.

மருதியின் நாட்டிய மாண்பு

ஆதிமந்தியின் தந்தையாகிய கரிகாலன் புகாரில் தங்கிச் சோழநாட்டின் கீழைப் பகுதியை ஆண்டு வந்தான். அந் நாளில் செங்கணான் என்னும் சோழ வேந்தன் உறையூரில் தங்கி அதைச் சூழ்ந்த பகுதிகளை ஆண்டு வந்தான். இச் செங்கணானுக்கு நல்லிடிக்கோன் என்னும் செல்வமகன் ஒருவன் இருந்தான். அவன் அறிவினும் ஆற்றலினும் அரசியல் திறத்தினும் சிறந்து விளங்கினான். சிவபத்தியின் மிக்க இச் செல்வன், கரூர்த் திருக்கோவிலில் எழுந்தருளிய பசுபதீச்சுரருக்கு ஆண்டுதோறும் நிகழும் பெருவிழாவை ஒருகால் மிகவும் சிறப்புற நடத்தினான். அவ் விழாவில் நாகப்பட் டினத்து நாட்டிய நங்கை மருதியின் நாட்டிய அரங்கு நடைபெறுமாறு செய்தான். சோழன் செங்கணான் பெற்ற செல்வனாகிய நல்லிடிக்கோன், மருதியின் உரு வெழிற் சிறப்பிலும் உயர்ந்த நாட்டியத் திறனிலும் தனது உள்ளத்தைப் பறிகொடுத்தான். உணர்வழிந்து காதல் கொண்டு காம மயக்கத்திலாழ்ந்தான். மருதி யின் நாட்டிய மாண்பைக் கண்டு மக்களெல்லாம் மிக்க மகிழ்ச்சியுற்றனர்.

கோப்பெருந்தேவியர் நல்லிடிக்கோன் காதல்

கரூர்ப் பெருமான் திருவிழா அரங்கத்தில் ஆடல் வல்ல மருதியை முதன் முறையாகச் சந்தித்த இளவரச னாகிய நல்லிடிக்கோன் அவளை மணந்துகொள்ள eவேண்டுமென நினைந்தான் அவள் நாகப்பட்டினத் திற்குத் திரும்பிச் செல்லும்போது தக்கவர்களை உடன் அனுப்பி இடைவழியில் உறையூரில் தங்குமாறு ஏற்பாடு செய்தான். அவளை ஆங்குத் தனிமையில் கண்டு தனது கருத்தைத் தெரிவிக்க விரைந்து பின் தொடர்ந்து வந்தான். அங்ஙனமே உறையூர் அடைந்த நல்லிடிக்கோன், மருதியைக் கண்டு அவளை மணம் புரிந்துகொள்ள விரும்பும் தனது எண்ணத்தை வெளி யிட்டான். அது கேட்ட மருதி திடுக்கிட்டாள். அவள் தன் சித்தத்தில் அத்தி ஒருவனுக்கே இடமுண்டு என்றும் பிறிதொருவருக்கு இடமே இல்லையென்றும் சொல்லித் தன் நகருக்குச் செல்ல விடை தருமாறு வேண்டினாள்.

அத்தியுடன் அரும் போர்

மருதியின் மனக்கருத்தை அறிந்த அரசிளங்கோவாகிய நல்லிடிக்கோன் ஆட்டன் அத்தியை ஒழித்தா லன்றி மருதியை அடைய முடியாது என்று கருதினான். அத்தியுடன் நல்லிடிக்கோன் போர் தொடுக்கச் சித்த மானான். உறையூரின் புறத்தே படையுடன் அவனை எதிர்த்தான். போர் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே மருதி எப்படியோ தப்பி நாகப்பட்டினத்தை நண்ணினாள்.

இச் செய்திகளைத் தெரிந்த இரும்பிடர்த்தலையார், அத்திக்கு உதவியாகக் கரிகாலன் படைகளையும் அவன் மக்களாகிய மணக்கிள்ளி, பெருவிறற்கிள்ளி என்பாரையுபும் அனுப்பினார். படையுடன் வந்த இருபெரும் வீரர் களின் அருந்துணையால் அத்தி உறையூர்ப் போரில் வெற்றிமாலை சூடினான். செங்கணான் செல்வனாகிய நல்லிடிக்கோன் அப்போரில் கொல்லப்பட்டான். ஆட்டன் அத்தியோ அவ் வெற்றிக்கோலத்துடன் கரூரைப் பற்றினான். இரும்பிடர்த்தலையாரின் பெருந் துணையால் அந் நகரில் மணிமுடி சூடிக் கரூர்ப் பகுதி யைச் சேரநாட்டுடன் சேர்ந்துக்கொண்டான். அதனால் ஆட்டன் அத்தி அந்நாள் முதல் கருவூர் ஏறிய ஒள்வாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை' என்ற பட்டப் பெயரைப் பெற்று விளங்கினான்.

ஆதிமந்தி அத்தியின் தேவியாதல்

கரூரில் மணிமுடி தரித்துக் கொண்ட அத்தியின் சித்தத்தை இரும்பிடர்த்தலையார் மாற்றுதற்கு அரும் பாடுபட்டார். அத்திக்கு மருதியின் மீதிருந்த காதலை மாற்றிக் கரிகாலன் திருமகளாகிய ஆதிமந்தியை மணம் செய்து கொள்ளுமாறு வேண்டினார். பெரும்புலவராகிய இரும்பிடர்த்தலையாரின் அருமுயற்சியால் அத்திக்கும் ஆதிமந்திக்கும் திருமணம் நடந்தேறியது. ஆதிமந்தி கோப்பெருந்தேவி ஆயினாள்.

மருதியின் மாதவம்

இச் செய்தியை நெய்தல் நிலத்தலைவன் மகளாகிய மருதி அறிந்தாள். ஆட்டன் அத்தி ஒருவனுக்கே தன் சித்தத்தில் இடமளித்திருந்த அவ் ஏந்திழையாள் என்ன செய்வதென்று தெரியாது ஏங்கினாள் ; இதயம் வெதும்பினாள் ; எல்லையற்ற துயரத்தால் மயங்கி வீழ்ந்தாள் ; பின் ஒருவாறு உள்ளம் தேறினாள். 'என்னைக் காதலித்த மன்னன் அத்தி மனம் மாறி மற்றொரு பெண்ணை மணந்து கொண்டாலும் யான் அங்ஙனம் செய்ய விரும்பேன் ; மறு பிறவியிலேனும் அவனை மணவாளனாகப் பெறுதற்குப் பெருந்தவம் கிடப்பேன்' என்று மருதி உறுதி பூண்டாள்.

மனத்தில் உறுதி கொண்ட மருதி, தான் கருதி யுள்ள முடிவைத் தன் தந்தைக்குத் தெரிவித்தாள். கடற்கரை அருகே கன்னிமாடம் ஒன்று கட்டித்தர வேண்டினாள். அவனும் மகளின் விருப்பிற் கிணங்கிக் கடற்கரையில் கன்னிமாடம் ஒன்றை அமைத்துக் கொடுத்தான். அதில் மருதி சென்று தங்கி மாதவம் செய்து கொண்டிருந்தாள்.

காவிரியில் புதுப்புனல் விழா

சோழ நாட்டைப் புனல் நாடாகப் பொலிவுறச் செய்யும் காவிரியாற்றில் புது வெள்ளம் வரும் பொழுது அந்நாட்டு மக்கள் புனல்விழாக் கொண்டாடி மகிழ்வர். ஆடித் திங்கள் பதினெட்டாம் நாள் நடைபெறும் பதினெட்டாம் பெருக்கு என்னும் விழாவே அப்புதுப் புனல் விழாவாக விளங்கியிருக்க வேண்டும். இவ் விழா நாளில் காவிரியின் இரு கரைகளிலும் உள்ள ஊர்களில் வாழும் மக்கள் மிக்க மகிழ்வுடன் ஆற்று வெள்ளத்தில் குதித்து ஆடி இன்புறுவர். ஆற்றல் மிக்க இளைஞர் பலர் தம் ஆண்மை தோன்ற ஆற்று நீரை எதிர்த்து நீந்திப் போட்டியிட்டு ஆடி மகிழ்வர். இக் காட்சிகளை யெல்லாம் மன்னன் முதல் மக்கள் அனைவரும் கரையில் இருந்து கண்டு களிப்பர்.

கழார்த்துறையின் கவின்

இத்தகைய புதுப்புனல் விழா நடைபெறும் காவிரித்துறைகளில் ஒன்று கழார்ப்பெருந்துறை. அது கடற்கரைக்கும் காவிரிப்பூம்பட்டினத்திற்கும் இடையே இருப்பதாகும். அப் பகுதியில் காவிரி வெள்ளம் கரைகளை மோதியழிக்கும் வேகத்துடன் விரைந்து செல்லும். அங்குக் கரைகள் அழிவுறாமல் காக்கும் அடி பருத்த மருத மரங்கள் வானுற ஓங்கி வளர்ந்தனவாய் அடர்ந்து காணப்படும். இத் துறை யில் தான் அரசன் வந்து தங்கிப் புனல் விழாக் காண்பான். அதனால் கழார்ப் பெருந்துறையில் முழ வொலியும் விழவொலியும் மிக்கு விளங்கும்.

கழார்த்துறையில் கரிகாலன்

ஓராண்டு நடைபெற்ற புனல்விழாவிற்குக் கரி காலன் தன் மகளாகிய ஆதிமந்தியையும் மருகனாகிய ஆட்டன் அத்தியையும் அன்புடன் அழைத்திருந்தான். அவர்களையும் உடன் அழைத்துக்கொண்டு, மன்னன் கரிகாலன் கழார்ப்பெருந்துறையை நண்ணினான். கரைக்கண் அமைத்திருந்த காவல்மிக்க இடமொன்றில் சுற்றம் சூழ அமர்ந்திருந்து புனல்விழாக் காட்சிகளைக் கண்டு இன்புற்றுக் கொண்டிருந்தான். அவன் அருகில் அமர்ந்திருந்த சேரவேந்தனாகிய அத்தியும் அங்கு நடை பெறும் புனல் விளையாட்டுக்களைக் கண்டு பூரித்தான்.

அத்தி ஆற்றில் பாய்தல்

ஆட்டன் அத்தி ஆற்று வெள்ளத்தில் ஆற்றல் தோன்ற ஆடிப் பழகியவன். ஆதலின் அவனால் அக் காட்சிகளைப் பார்த்துக்கொண்டு அமைதியாய் இருக்க முடியவில்லை. அவ் வெள்ளத்தில் துள்ளியாடும் இளம் பிள்ளைகளைப் போலத் தானும் ஆட வேண்டுமென்று ஆசைப்பட்டான். உடனே புனல் விளையாட்டிற்குரிய ஆடையணிகளைப் புனைந்து கொண்டு ஆற்றில் குதித் தான். மன்னனும் மக்களும் வியந்து மகிழுமாறு நீரிலே நெளிந்தும் வளைந்தும் புரண்டும் சுருண்டும் துள்ளியும் தோய்ந்தும் நீண்ட நேரம் ஆடினான்.

அத்தி நீருள் மூழ்குதல்

சேர வேந்தனாகிய அத்தியின் சீரிய புனல் விளையாட் டைக் கண்டு சோழ நாட்டு மக்கள் எல்லோரும் எல்லை யில்லாப் பேருவகை கொண்டனர். கரிகாற்சோழனும் மருகனது புனலாட்டைக் கண்டு உள்ளம் பூரித்தான் தந்தையின் அருகிலிருந்து கணவனது ஆடலைக் கண்ட ஆதிமந்தியின் சிந்தை இன்ப வெள்ளத்தில் மூழ்கியது. இங்ஙனம் எல்லோரும் இன்புற்றுக் கொண்டிருக்கும் வேளையில் திடீரென நீருள் மூழ்கிய சேர வேந்தனைக் காணவில்லை. இன்னும் சிறிது பொழுதில் எழுவான், சேய்மையில் சென்று எழுவான் என்று பலவாறு மன்னனும் சுற்றமும் எண்ணியிருந்தனர். நீண்ட நேரமாகியும் வெள்ளத்துள் மூழ்கிய வீரவேந்தனைக் காணாமல் எல்லோரும் கலங்கினர்.

ஆதிமந்தி அலறுதல்

காதற் கணவனைக் காணப்பெறாத ஆதிமந்தி, "அந்தோ ! என் கணவனைக் காணவில்லையே; துள்ளி யாடிய என் காதலனைக் காவிரி வெள்ளம் கவர்ந்து கொண்டதே ! யான் இனி என் செய்வேன்?'' என்று அலறித் துடித்தவண்ணம் காவிரியின் கரைவழியே கடலை நோக்கி கடிது விரைந்து ஓடினாள். சோழ வேந்தன் ஏவலாளரைக் கூவி, நீருள் மூழ்கிய சேரனைத் தேடுமாறு பணித்தான். அவர்கள் ஓடங்களையும் கட்டு மரங்களையும் வெள்ளத்துள் விரைந்து செலுத்தி நாலா பக்கங்களிலும் சேரனை நாடித் திரிந்தனர்.

அத்தியைப் பலரும் தேடுதல்

அயல்நாட்டவனாகிய அத்தி, காவிரியின் விரைவை யும் வெள்ளப் போக்கையும் நன்கு அறிந்தவனல்லன். அதற்கு முன் காவிரிப் புனலில் ஆடியறியாதவன். அதனால் பெருஞ்சுழல் ஒன்றில் அகப்பட்டு மீள முடியாது சுழற்றி இழுக்கப்பட்டான். வெள்ளத்தின் வேகம் அவனை விரைவில் நெடுந்தொலைவு இழுத்துச் சென்று விட்டது. வெள்ளப்போக்கில் சென்றேனும் சேய்மையில் கரை சேர்வான் என்று எண்ணிக் கரை வழியே மக்கள் பலர் அவனைத் தேடியவாறே விரைந்து நடந்து சென்றனர். ஆங்காங்கு நின்று கொண்டிருந்த மக்களிடமெல்லாம் அத்தியின் அடையாளம் கூறி, அத்தகையான் கரைசேரக் கண்டீரோ? என வினவிய வண்ணம் விரைந்தேகினர்.
ஆதிமந்தி கணவனைத் தேடி அலைதல்

காதலனைக் காணாது காவிரியின் கரைவழியே கதறிக்கொண்டு ஆறாத் துயருடன் ஓடிவரும் ஆதிமந்தி இருகரைகளிலும் இருக்கும் ஊரெல்லாம் சென்று தேடினாள். எங்கும் அப் புதுப்புனல் விழா நடை பெற்றுக்கொண்டிருந்தது. ஆதலின் ஆங்காங்கே ஆடவரும் மகளிரும் பாங்குறக் கூடியாடிப் புனலாட்டு அயர்ந்து கொண்டிருந்தனர். அவர்களையெல்லாம் ஆதி மந்தி அணுகியணுகி, ''உங்களைப் போல ஆடுவதில் வல்லவன் என் கணவன் ; அவன் பெயர் அத்தி; யானும் உங்களைப்போல ஆடி மகிழும் இளம் பருவத் தினள்; யான் மெலிந்து வருந்துமாறு அவன் புனலாட்டு விழாவில் வெள்ளத்துள் மறைந்து போயினான் ; உங்களில் எவரேனும் அவனைக் கண்டீரோ?" என்று கேட்டுக் கேட்டு உள்ளம் ஓய்ந்தாள். பல ஊர்களைக் கடந்து சென்று தேடியும் அவனைக் காணாமையால் ஆதிமந்தியின் அறிவு திரிந்தது. பித்தேறியவளைப் போல அத்தியைக் கண்டீரோ? என் அத்தியைக் கண் டீரோ?' என்று எதிரே வருவாரை எல்லாம் கேட்டுக் கேட்டு ஏங்குவாளாயினாள்.

அத்தியை மருதி காண்டல்

காவிரிச் சுழலில் மூழ்கிய ஆட்டன் அத்தியை வெள்ளம் அடித்துக்கொண்டு போய்க் கடலில் சேர்த்து விட்டது அவன் உடல் வலி பெரிதும் உடையான்; நீரில் நன்கு நீந்தத் தெரிந்தவன். ஆதலின் வெள்ளத் தின் ஈர்ப்பைத் தாங்கிக்கொண்டு, கடலில் நெடுந்தூரம் சென்று விட்டான். கடல் அலைகளின் இடையே தத்தளித்துக்கொண்டு வரும் அத்தியைக் கட்டுமரம் ஏறி, மீன் பிடிக்கும் வலைஞர்கள் கண்டெடுத்துக் கரை சேர்த்தனர். கடல் அலைகளால் மொத்துண்டு உணர் விழந்து கிடந்த அத்தியை அவ் வலைஞர்கள் மருதியின் கன்னிமாடத்துக்கு அருகில் கொண்டு கிடத்தினர்.

அதனைக் கன்னிமாடத்தின் மேடையில் இருந்து கண்ணுற்ற மருதி கீழிறங்கிவந்து, நிகழ்ந்தது யாதென வினவினாள். செய்தியை அறிந்து அத்தியின் முகத்தைக் கூர்ந்து நோக்கினாள். தன் சித்தத்தில் குடி கொண்ட அத்தியே அவன் என்பதை அறிந்தாள். உடனே அவனைக் கன்னிமாடத்துள் எடுத்துச்சென்று அவன் மயக்கினைத் தெளிவித்தாள். உணர்வு பெற்ற அத்தி அருகிருந்த மருதியைக் கண்டு வியந்தான். காவிரிச் சுழலில் மூழ்கிக் கடலிடையே தத்தளித்த தன்னைக் கரை சேர்த்துக் காத்த வலைஞரை வாழ்த்தினான். தனக்குப் புத்துயிரளித்த மருதியை மனங் குளிரப் போற்றினான். அவளுடன் சில நாட்கள் அக் கன்னி மாடத்திலேமே தங்க அகமகிழ்வுடன் வாழ்ந்து வரலானான்.

மருதியின் மகிழ்ச்சி

நீண்ட நாட்களுக்குப் பின்னர்த் தன் காதலனை மீண்டும் கண்ட மருதி அவனுடன் பெருமகிழ்வோடு உரையாடி இன்புற்றாள். புதுப்புனல் விழாவில் அவனுக்கு நேர்ந்த அல்லலை அறிந்து அகங்குழைந்தாள். அவனைத் தன்னுடன் சேர்த்தற் பொருட்டே காவிரித் தாய் இச்சூழ்ச்சி செய்தாள் என்று கருதி மகிழ்ந்தாள். அம் மருதி உறையூரிலிருந்து தப்பி வந்தது முதல் நடந்தவற்றையெல்லாம் தன் காதலனுக்கு ஓதினாள். அவன் தன் உள்ளத்தை மாற்றுதற்கு இரும்பிடர்த் தலையார் போன்றவர்கள் இயம்பியனவெல்லாம் திறம் பட உரைத்த பொய்ம்மொழிகள் என்பதை உணர்ந்து வருந்தினான். அதனால் இனி மருதியைவிட்டு அகல்வ தில்லையென முடிவு செய்தான்.
ஆதிமந்தி அத்தியைக் காண்டல்

ஊர்தொறும் தன் காதலனைத் தேடி உழன்று வரும் ஆதிமந்தி கடற்கரைப் பக்கமாகவே வந்து விட்டாள். கற்பிற் சிறந்தவளாகிய ஆதிமந்திக்கு எவ் விதத்திலும் கணவனை உயிருடன் காண்போம் என்ற உறுதி, உள்ளத்தே வேரூன்றி இருந்தது. ஆதலின் அவனைக் கண்டாலன்றிப் புகார் நகரத்துள் புகுவ தில்லை என்று துணிந்தாள். கணவனைத் தவிர வேறு நினைவின்றி ஊண் உறக்கம் ஒழிந்தவளாய் எங்கும் தேடித் திரிந்தாள். அங்ஙனம் தேடியவாறே நாகப் பட்டினத் துறையை நண்ணினாள். அவள் கடற்கரை மணல் வழியாக நடந்து செல்லும் பொழுது ஆங் கமைந்த மாடத்தின் மேடையில் அத்தியும் மருதியும் நிற்பதைக் கண்டாள். உடனே, " அத்தி ! அத்தி!" என்று அரற்றியவண்ணம் மாடத்தின் மேல் ஓடோடிச் சென்று உணர்ச்சி மேலீட்டால் அவனை ஆரத் தழுவினாள். காதலனைக் கண்ட களிப்பு மிகுதியால் பேசு தற்கு நாவெழாமல் பெரிதும் கண்ணீர் உகுத்து நின்றாள். அத்தியும் அவளைக் கண்டு செயலற்றவனாய்க் கண்ணீர் சிந்தி நின்றான்.

மருதியின் மாபெருந் தியாகம்

சிறிது பொழுது கழிந்த பின்னர், நடந்தவற்றை யெல்லாம் அத்தியும் மருதியும் நவிலக்கேட்டு ஆதிமந்தி அகமுருகினாள். ஆராக் காதலுடன் ஊரெல்லாம் தேடி உழன்று வரும் ஆதிமந்தியின் நிலை கண்டு அத்தியும் மருதியும் நெஞ்சம் நெக்குநெக்குருகினர். அருமைக் கணவனை உயிருடன் அளித்த மருதியை ஆதிமந்தி மனமாரப் பாராட்டி நன்றி கூறினாள். அவ் இருவரின் நிலையையும் கண்ட மருதி தானும் மனமுருகினாள். தான் உயிருடன் இருந்தால் அத்தி, ஆதிமந்தியுடன் வாழமாட்டான் என்பதை அறிந்த மருதி அவர்கள் இருவர்க்கும் தான் சொல்லத்தக்க நல்லுரைகளை அன்புடன் நவின்றாள். அவர்கள் அறியாவண்ணம் அலை பொங்கி வரும் கடலுள் வீழ்ந்து மாய்ந்தாள். அம் மருதி, ஆதிமந்தியின் நல்வாழ்விற்காகத் தன் னுயிரை மாய்த்து இன்னிசையை நாட்டினாள்.

உறவினர் ஒருங்கு சேருதல்

அத்தியும் ஆதிமந்தியும் மருதியின் கன்னிமாடத் திற்கு வந்திருப்பதாக மருதியின் தந்தையாகிய நெய்தல் நிலத் தலைவன் செய்தி அறிந்தான். அவர்களைக் காணும் வேணவாவுடன் மருதியின் கன்னிமாடத்திற்கு விரைந்தான். இச் செய்தியினை ஒற்றர் வாயிலாக உணர்ந்த கரிகாலனும் அவன் மாமனும் மக்களும் நாகப்பட்டினம் வந்துற்றனர். மருதியின் தந்தை அங்கு வந்துற்ற அனைவரையும் வரவேற்று உபசரித் தான். எல்லோரையும் அழைத்துக்கொண்டு மருதியின் கன்னிமாடத்தை நண்ணினான். அங்கே அத்தியையும் ஆதிமந்தியையும் கண்ணுற்ற அன்னோர் மருதியைக் காணப்பெறாது மறுகினர். பணியாளர்கள் பக்க மெல்லாம் சென்று மருதியைத் தேடினர். கடற்கரைப் பக்கமாகச் சென்ற சிலர் அலைகளால் ஒதுக்கப்பட்டுக் கரையோரமாகக் கிடந்த மருதியின் உடலைக் கண்டு கவலையுடன் வந்து தலைவனுக்குத் தெரிவித்தனர்.

மருதி கடலுள் வீழ்ந்து மாய்ந்த செய்தியைத் தெரிந்த அனைவரும் பெருந்துயரத்தில் ஆழ்ந்தனர். அவள் ஆதிமந்திக்குச் செய்த பேருதவியை எண்ணி யெண்ணிக் கண்ணீர் சொரிந்தனர். அனைவரும் கடற் கரை அடைந்து அவளது உடலுக்குச் செய்யத்தகும் கடன்களை ஆற்றி, அவள் தங்கியிருந்த கன்னிமாடத் திலேயே அதனை அடக்கம் செய்தனர்.

பின்னர்க் கரிகாலன், அந் நெய்தல் நிலத் தலைவ னிடம் விடைபெற்றுத் தன் மகளையும் மருகனையும் அழைத்துக் கொண்டு புகார் நகரை அடைந்தான். அத்தி உயிர் பிழைத்த செய்தியை நாட்டினர் அறியு மாறு பறைசாற்றினான். புகாரில் உள்ள கோவில்களில் எல்லாம் சிறப்பான பூசனைகளைச் செய்வித்தான்.

ஆதிமந்தியின் அருந்தமிழ்ப் புலமை

சேரவேந்தனாகிய ஆட்டன் அத்தியின் கோப்பெருந் தேவியாகிய ஆதிமந்தி அருந்தமிழ்ப் புலமையுடையாள். ஆதலின் அவள் காதலன் பிரிவால் கடுந்துயர் எய்தி ஊரெல்லாம் ஓடித் தேடி உழன்ற செய்தியை அகத் துறைப் பாவொன்றால் அழகுற விளக்கியுள்ளாள். அவளது புலமை நலத்தைப் புலப்படுத்தும் அப் பாடல் குறுந்தொகை என்னும் பழந்தமிழ் நூலில் உள்ளது. தலைவி யொருத்தி, தானும் தலைவனும் பெற்று மகிழும் களவொழுக்கத்தைத் தன் தோழிக்கு அறிவிக்கும் அறத்தொடு நிற்றல்' என்னும் துறையில் அமைத்துப் பாடும் ஆதிமந்தியின் பாடல் மிகவும் அழகு வாய்ந்ததாகும்.

''மள்ளர் குழீஇய விழவி னானும்
மகளிர் தழீஇய துணங்கை யானும்,
யாண்டும் காணேன் மாண்தக் கோனை ;
யானும் ஓர் ஆடுகள மகளே ; என்கைக்
கோடு ஈர் இலங்குவளை நெகிழ்த்த
பீடுகெழு குரிசிலும் ஓர் ஆடுகள மகனே.''
- குறுந்தொகை, 31

தலைவி தன் ஆருயிர்த் தோழியை அழைத்தாள். தன் களவொழுக்கத்தை மறைத்து வைத்தால் பெற் றோர் பிறிதோர் ஆண்மகனுக்குத் தன்னை மணம் பேசி விடுவர் என்பதை அறிந்து அவளிடம் செய்தியைத் தெரிவித்தாள். 'தோழியே! என் கைவளை கழலு மாறு மெலியச் செய்தான் ஒரு தலைவன். அவன் ஒரு தலைசிறந்த ஆண்மகன் ; சிறந்த குணங்கள் நிறைந்த செல்வன் ; ஆடுகளம் சென்று ஆடி மகிழும் இயல் புடையான் ; ஆதலின் யானும் அவனுடன் ஆடி மகிழும் விருப்புடன் ஆடுகளம் சென்று அவனை நாடி னேன் ; வீரர் பலர் கூடியாடும் மற்போர் விழாக் களத்திலும் மகளிர் கூடியாடும் துணங்கைக் கூத்து நிகழிடத்திலும் அவனைத் தேடித் தேடிப் பார்த்தேன்; எங்கும் அவனைக் காணேன் ; யான் யாது செய்வேன்?' என்று கூறி வருந்தினாள்.

ஆதிமந்தியைப் பாராட்டினோர்

இத்தகைய புலமை நலங் கனிந்த கோப்பெருந் தேவியாகிய ஆதிமந்தியின் வரலாற்றைப் பரணரும் வெள்ளிவீதியாரும் பைந்தமிழ் அகத்துறைப் பாக் களால் பாராட்டியுள்ளனர். சிலப்பதிகாரம் தந் தருளிய சேரர் குலமணியாகிய இளங்கோவடிகளும் தமது இனிய காவியத்தில் இக் கோப்பெருந்தேவியைப் பாராட்டிக் கூறியுள்ளார். அவர் இவ் ஆதிமந்தியின் தந்தை கரிகாற்பெருவளத்தான் எனவும், அவள் கணவனான ஆட்டன் அத்தி வஞ்சியிலிருந்து ஆண்ட சேரநாட்டுப் பேரரசன் எனவும், அவனைக் காவிரிப் புனல் கடிது இழுத்துச் செல்லத், தன் கற்பின் ஆற்றலால் அவனை மீட்டும் உயிருடன் காணப் பெற்றாள் எனவும், கற்புத் தெய்வமாகிய கண்ணகி பாராட்டிய கற்புடைய மகளிர் எழுவருள் ஆதிமந்தியும் ஒருத்தியாவள் எனவும் விளக்கமாகக் குறித்துள்ளார்.

"மன்னன் கரிகால் வளவன்மகள், வஞ்சிக்கோன்
தன்னைப் புனல்கொள்ளத் தான் புனலின் பின் சென்று
கன்னவில் தோளாயோ என்னக் கடல்வந்து
முன்னிறுத்திக் காட்ட அவனைத் தழீ இக்கொண்டு
பொன்னங் கொடி போலப் போதந்தாள்.''

இங்ஙனம் வஞ்சினம் கூறும் கண்ணகியின் வாயிலாக ஆதிமந்தியின் கற்புத்திறத்தை அடிகளார் பொற்புற விளக்கியுள்ளார்.

இவ்வாறு நல்லிசைப் புலவர் பலரும் நயந்து போற்றும் நற்றமிழ்ப் புலமையும் இசை நாடகத் திறமையும் இனிது வாய்க்கப்பெற்ற கோப்பெருந் தேவியைக் காண்பது அரிதாகும். அங்ஙனமே அவ ளுக்கு வாய்த்த அரும்பெறல் கணவனாகிய ஆட்டன் அத்தியைப் போன்று முத்தமிழ்ப் புலமை சான்ற வித்தகத் திறல் படைத்த வீரப் பேரரசன் ஒருவனையும் காண்டல் அருமையாகும். இவர்கள் வாழ்க்கையின் இடையே புகுந்து, ஆதிமந்தியின் இனிய வாழ்விற் காகத் தனது வாழ்வையே தியாகம் செய்து உயிர் நீத்த உத்தமியாகிய மருதியைப் போன்ற மங்கையினையும் எங்கும் காண்பது அரிது. இவர்களது அரிய வாழ்வு இல்லற நெறியில் செல்லுவார்க்கு இனியதோர் எடுத்துக் காட்டாகும்.
--------------

5. மாவண்கிள்ளியின் தேவி

சோழர் வளவர்

வான் பொய்ப்பினும் தான் பொய்யாத காவிரி யாற்றின் நீர்வளத்தால் கவினுற்று விளங்குவது சோழநாடு. 'சோழ வளநாடு சோறுடைத்து' என்றே சொல்லப்பெறும் நல்வளம் உடையது அந்நாடு. இத் தகைய வளமிகுந்த நாட்டை ஆண்ட மன்னரை வளவர் என்றே புலவர் வழங்கினர். இவர்கள் நிலத்தைக் கிள்ளி வளத்தைப் பெருக்கும் வல்லமையுடையவராத லின் இவர்களைக் 'கிள்ளி' என்றும் சொல்லிப் போந்தனர்.

சோழர்குல முன்னோர்

'காவிரியின் நன்கொடை' என்று கற்றவர் போற் றும் பெற்றியுடைய சோழநாட்டைத் தண்டி என்னும் ஆசிரியர் தமது நூலாகிய தசகுமார சரிதத்தில் 'சிபி தேசம்' என்று குறிப்பிட்டுள்ளார். தன்னை அடைக்கலம் புகுந்த புறவின் துயர் போக்கத் தன் உடல் தசையை அறுத்துக் கொடுத்தவனாகிய சிபி வேந்தன் சோழர் குல முன்னோன் ஆவன். சிறந்த சிவபத்தனான முசுகுந்தன் என்பானும், வானத்தில் அசைந்து கொண்டிருந்த பகைவரது மதிலைச் சிதைத்த மாபெரும் வீரனாகிய தூங்கெயில் எறிந்த தொடித் தோள் செம்பியன் என்பானும் இச்சோழர் குலத்தைச் சேர்ந்தவரே. மகனை முறை செய்த மன்னவனாகிய மனுநீதிச் சோழனும் இக் குலத்தைச் சார்ந்த கொற் றவனே .

காவிரியில் அணை கட்டிக் கால் பல வெட்டிச் சோழநாட்டைப் பெருவளப்படுத்தினான் கரிகாற்பெருவளத்தான். அதனால் அவன் திருமாவளவன் என்று ஏத்தப்பெற்றான். இக் கரிகாலன் சோழர் குலத்தின் மாண்பை மலைமேலிட்ட மணிவிளக்கு ஆக்கிய மன்னர் பெருமானாவன்.

பசிப்பிணி மருத்துவனாய் விளங்கிய பண்ணன் என்னும் பைந்தமிழ் வள்ளலை 'யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய!' என்று வாயார வாழ்த்திப் பாடல் ஒன்று பாடினான் ஒரு சோழன். அவன் நல்லிசைப் புலமை வாய்ந்த கிள்ளிவளவன் என்பான். அவனுடைய புலமையையும் போர்த்திறமையையும் நாட்டைக் காக் கும் நல்லியல்பையும் வெள்ளைக் குடிநாகனார், ஆவூர் மூலங்கிழார், ஐயூர் முடவனார், எருக்காட்டூர்த் தாயங் கண்ணனார் போன்ற தமிழ்ப்பெரும் புலவர்கள் சிறப் புறப் பாடியுள்ளனர். உணர்ச்சியொத்தல் என்னும் உயர்ந்த நட்புக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக இலங்கி வரும் கோப்பெருஞ்சோழன் என்பானும் இக் குலத்தைச் சார்ந்தவனே.

மாவண்கிள்ளி மன்னனாதல்

இங்ஙனம் அறிவும் திறனும் ஆட்சி நலனும் ஒருங்கே பெற்ற பேரரசர் பலர் தோன்றிய சோழ மரபில் மாவண்கிள்ளி என்னும் மன்னன் ஒருவன் சிறந்து விளங்கினான். இவனைச் சீத்தலைச் சாத்தனார் தமது மணிமேகலைக் காவியத்தில் நெடுமுடிக்கிள்ளி, வென்வேற்கிள்ளி, மாவண்கிள்ளி, வடிவேற்கிள்ளி, கழற்கிள்ளி, கிள்ளி முதலிய பல பெயர்களாற் குறிப் பிடுகின்றார். இவனுடைய தந்தையும் செங்குட்டுவன் தாயான நற்சோணை என்பாளும் உடன் பிறந்தவ ராவர். ஆதலின், இவன் செங்குட்டுவனுக்கு மைத்துனச் சோழன் ஆவான். இவன் தந்தை இறந்ததும் தாயத்தார் ஒன்பதின்மர் இவனுடன் போரிட்டனர். அதனை அறிந்த செங்குட்டுவன் அவர்களை நேரிவாயில் என்ற இடத்தில் எதிர்த்து வென்றான். பின்பு தன் மைத்துனச்சோழனாகிய மாவண்கிள்ளிக்கு முடிசூட்டிச் சோழநாட்டின் மன்னன் ஆக்கினான். இவன் அரசு முறைகோடா ஆட்சி நலனும் மானம் காக்கும் மாண் பும் உடையவன்.

காரியாற்றங்கரையில் போர்

இம் மாவண்கிள்ளிக்கு இளங்கிள்ளி என்னும் இளவல் ஒருவன் இருந்தான். அவன் சோழப் பேரர சின் வடபகுதியாகிய தொண்டை மண்டலத்தை, காஞ் சியைத் தலைநகராகக் கொண்டு அரசுபுரிந்து வந்தான். மாவண்கிள்ளி பட்டம் பெற்ற சில ஆண்டுகளில் பாண் டியன் ஒருவனும் சேரன் ஒருவனும் படையுடன் ஒருங்கு சேர்ந்து சோழனை எதிர்த்தனர். சோழநாட் டின் வடமேற்குப் பகுதியில் உள்ள காரியாற்றங்கரையில் போர் நடந்தது. அப்பகுதி தொண்டை நாட்டைச் சார்ந்ததாதலின் இளங்கிள்ளி தன் படையுடன் சென்று கடும் போர் புரிந்தான். மாற்றார் படைகளை யெல்லாம் வென்று வாகைமாலை சூடினான். இரு பேரரசரும் தோல்வியுற்றோடினர்.

மாவண்கிள்ளியின் மாதேவி

சோழவேந்தனாகிய மாவண்கிள்ளியின் கோப் பெருந்தேவியாக விளங்கியவள் சீர்த்தி என்பாள். இவள் பாணர் மரபைச் சார்ந்த அரசமகளாவள். இவளை மணிமேகலை நூலாசிரியர் மாவலியின் தலத்துதித்த மங்கை என்பார்.

'நெடியோன் குறளுரு வாகி நிமிர்ந்து தன்
அடியில் படியை அடக்கிய அந்நாள்
நீரில் பெய்த மூரி வார்சிலை
மாவலி மருமான் சீர்கெழு திருமகள்
சீர்த்தி என்னும் திருத்தகு தேவி.'

என்று அவளைப்பற்றிக் குறிப்பிட்டார் சீத்தலைச் சாத்தனார் .
சீர்த்தி பெற்ற செல்வன்

அரசமாதேவியாகிய சீர்த்தியின் வயிற்றில் பிறந்த செல்வத் தனிமகன் உதயகுமரன் என்பான். இவன் ஆண்மையில் சிறந்த அரிய வீரன். ஒருகால் புகாரில் இந்திரவிழா நிகழ்ந்தபோது காலவேகம் என்னும் பட்டத்து யானை மதங்கொண்டு திரிந்தது. அதனை உதயகுமரன் பிறர் துணையின்றித் தனியாகவே அடக்கி ஒடுக்கினான். இவன் கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மகளாகிய மணிமேகலையிடத்துப் பெருங்காதல் கொண்டான். அவள் மலர் கொய்வதற்கு உவவனம் சென்றபோது அங்கே சென்று அவளது இளமை நலங் கனியும் எழிலின் திறத்தை அவள் தோழியாகிய சுதமதியிடம் பலவாறு வியந்துரைத்தான்.

உதயகுமரன் மணிமேகலையிடத்துக் கொண்ட காதல், அவன் உள்ளத்தே வெள்ளம் போல் பெருகி நிற்றலைக் கண்ட மணிமேகலா தெய்வம், தவத்திறம் பூண்ட அத் தையல் பால் கொண்ட மையலை விட் டொழிக்குமாறு கட்டுரைத்தது. எனினும் மணிமேகலை யின் பாட்டியாகிய சித்திராபதியின் சித்தம் உருக்கும் சொல்நயத்தால் அவன் கொண்ட காமம் சிறிதும் தணிந்திலன். ஆதலின் அவளை எவ்விதத்திலும் அடைய வேண்டுமெனப் பெருமுயற்சி செய்தான்.

உதயகுமரன் மணிமேகலையைக் காணுதல்

அம் மணிமேகலை மணிபல்லவத்தீவில் தான் பெற்ற அமுதசுரபி என்னும் அரிய தெய்வப்பாத்திரத் தைக் கையில் ஏந்திக் காவிரிப்பூம்பட்டினத்தில் உள்ள உலகவறவியை அடைந்தாள். அங்கிருந்து பசியால் வாடிய பலர்க்கும் அமுதசுரபியிலிருந்து பெருகிவரும் உணவுத்திரளை வயிறார ஊட்டி வந்தாள். இதை அறிந்த உதயகுமரன் தேரேறி, அவள் இருந்த ஊரம் பலமாகிய உலகவறவியை வந்துற்றான். தந்தையை இழந்த பெருந்துயரால் இன்பவாழ்வைத் துறந்து, பிக்குணிக் கோலத்துடன் இருந்த பெண்ணாகிய மணிமேகலையைக் கண்டு, 'நீ எதற்காகத் தவக்கோலம் ஏற்றனை?' என்று கேட்டான்.

மணிமேகலை, அவனை வணங்கி, " இம் மக்கள் யாக்கை பிறப்பு, பிணி, மூப்பு, இறப்பு ஆகிய இடும் பைகட்கு உறைவிடமாயது ; அவ் உண்மையை உணர்ந்தமையால் பிறவாது பேரின்பத்தைப் பெறு தற்கு உறுதுணை செய்யும் சிறந்த அறத்தைச் செய்யத் துணிந்தேன்!" என்று கூறி ஆங்கிருந்த சம்பாபதியின் கோயிலுள்ளே புகுந்தாள்.

மணிமேகலை வேற்றுருக் கொள்ளுதல்

பின்னர், அம் மணிமேகலை தன்பால் கொண்ட காதல் மயக்கினை உதயகுமரன் ஒழிக்காது மீண்டும் மீண்டும் இருக்கும் இடம் நாடி வருதலைக் கண்டு வருந்தினாள். மணிமேகலா தெய்வம் தனக்கு அருளிய மந்திரத்தின் துணையால் வேற்றுருக் கொள்ள விழைந்தாள். அங்ஙனமே அம் மந்திரத்தை ஓதிக் காய சண்டிகையின் வடிவம் தாங்கி வெளிப் போந்தாள். அவள் வேற்றுருக் கொண்டதை அறியாத வேந்தன் மகன் மணிமேகலை கோயிலுள்ளேயே ஒளித்துக் கொண்டாள் என்று கருத்துட்கொண்டு பெயர்ந்தான். மணிமேகலை அக் காயசண்டிகையின் வடிவத் துடனேயே அமுத சுரபியைக் கையில் ஏந்தி எங்கும் செல்லலானாள். அவள் பசியால் வாடி மெலியும் யாவர்க்கும் உணவூட்டி அவருடைய மலர்முகம் கண்டு இன்புற்றாள்.
சிறைக்கோட்டம் அறக்கோட்டமாதல்

ஒரு நாள் அவள் புகார் நகரிலுள்ள சிறைக் கோட்டத்தில் புகுந்து, அங்கே பசியால் வருந்துவோர்க் கெல்லாம் திருந்து மொழி கூறி, உணவு அருந்துமாறு செய்தாள். அவள் ஒரு பாத்திரத்திலிருந்தே பலர்க்கும் வேண்டு மட்டும் உணவை எடுத்துக் கொடுத்தலைக் கண்ட சிறைக்காவலர் பெரிதும் வியந்தனர். அக் காவலருள் சிலர் இவ் வியத்தகு செய்தியை வேந்தனுக்கு அறிவிக்க விரும்பினர்.
சீர்த்தியும் கிள்ளியும்

சோழ மாதேவியாகிய சீர்த்தி சீரிய பேரெழில் படைத்தவள். கணவன் உளங்கவரும் குணமும் அறிவும் கொண்டவள். ஆதலின் மாவண்கிள்ளியாகிய மன்னன் நாள்தோறும் அவளுடன் மலர்ப்பொழிலை அடைந்து ஆங்கு அவளோடு உரையாடி இன்புற்று மகிழ்வான். ஆங்கு வரிக்குயில் பாடுவதும் மாமயில் ஆடுவதுமாகிய இயற்கைக் காட்சிகளைக் கண்டு களிப் புறுவான். புதுமணம் கமழும் பூம்பந்தரின் கீழிருந்து அவளது பொன் முகத்தின் புன்சிரிப்பும் அன்பு கனியும் இன்மொழியும் கண்டு கேட்டு இன்புறுவான்.

சிறைக்காவலர் செய்தி கூறல்

இங்ஙனம் ஒரு நாள் சோழ வேந்தன் தன் தேவி யாகிய சீர்த்தியுடன் பூம்பொழிற்கண் அமைந்த புது மலர் மண்டபத்தில் தங்கி இன்புற்றிருந்தான். அப் பொழுது சிறைக் காவலர் சிலர் விரைந்து வந்து வேந்தன் செவ்வி யறிந்து சேய்மையில் நின்று வணங் கினர். 'அரசே! ஊழிதோறு ஊழி ஒளியொடு வாழி என்று அவனை வாழ்த்தி நின்றனர். அரசன் அவர்களை நோக்கி, 'நீவிர் வந்த காரணம் யாது?' என்று வின வினான். அவர்கள், "அரசே! இந் நகரில் பன்னாட் களாய் யானைத்தீ என்னும் நோயால் வருந்தி உடல் மெலிந்து திரிந்து வரும் மடந்தை ஒருத்தி நம் சிறைக் கோட்டத்துள்ளே வந்து, தங்களை வாழ்த்தியவாறே தன் கையில் உள்ள பிச்சைப் பாத்திரம் ஒன்றே கொண்டு அங்கு வந்து மொய்க்கின்ற யாவருக்கும் உணவு ஊட்டுகின்றாள்; இவ் வியப்பினைத் தங்களிடம் தெரிவிக்கவே வந்தோம்,'' என்றனர்.
மாவண்கிள்ளியும் மணிமேகலையும்

சிறைக்காவலர் வியந்துரைத்த செய்தியைக் கேட்ட வேந்தன், "அம் மங்கையை இங்கே அழைத்து வருக!'' என்று ஆணையிட்டான். உடனே, அக் காவலர் காய சண்டிகை வடிவுடன் இருந்துவரும் மணிமேகலையை நெருங்கி, மன்னவன் ஆணையை அறிவித்தனர். அவளும் அரண்மனை அடைந்து அரசனைக் கண்டு வாழ்த்தி நின்றாள். அரசன், அவளை நோக்கி, " அருந்தவமுடைய மடந்தையே! நீ யார்? நின் கையிலுள்ள பாத்திரம் உனக்கு எங்கே கிடைத்தது?'' என்று கேட்டான். அதற்கு அவள், "அரசே! நீடு வாழ்வாயாக! யான் ஒரு விஞ்சை மகள்; இந்நகரிலே வேற்றுருக் கொண்டு திரிந்தேன்; இஃது ஒரு பிச்சைப் பாத்திரம் : இது தெய்வத் தன்மை வாய்ந்தது ; இதனை இந் நகர் அம் பலத்தேயுள்ள தெய்வமொன்று எனக்கு அருளியது; எனது யானைத்தீ என்னும் தீராப் பசி நோயைத் தீர்த்தது; பசியால் மெலிந்தவர்க்கு உயிர் தரும் உயர் மருந்தாக உள்ளது,'' என்று சொல்லி நின்றாள்.

சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாக்குதல்

அது கேட்ட அரசன், "யான் செய்யவேண்டுவது யாது?'' என்று கேட்டான். உடனே மணிமேகலை, "இந் நகரில் உள்ள சிறைக்கோட்டத்தை அழித்து அறவோர் வாழும் அறக்கோட்டமாகச் செய்தல் வேண்டும்" என்று வேண்டினாள். அரசன் அவள் விரும்பியவாறே சிறைக் கோட்டத்தை அறக்கோட்ட மாக்கினான். அன்று முதல் புகார் நகரில் இருந்த சிறைச்சாலை பலவகை அறங்களையும் ஆற்றும் அறச் சாலையாக நின்று நிலவியது.

உலகவறவியில் உதயகுமரன்

இந் நிகழ்ச்சிகளைக் கேள்வியுற்ற உதயகுமரன் மீளவும் உலகவறவியை அடைந்தான். 'மணிமேகலை அங்கிருந்து வெளியே வரும்பொழுது அவளைக் கைப் பற்றித் தேரில் ஏற்றிக் கொணர்வேன் ; அவள் கற்ற விஞ்சைகளையும் சொற்ற அறவுரைகளையும் கேட்பேன் என்று தன்னுள் எண்ணிக்கொண்டு அவ் உலக வறவியில் ஏறினான். அங்கே மணிமேகலை, காய சண்டிகையின் வடிவுடன் தன்னைச் சூழ்ந்து நின்ற ஏழை மாந்தரின் பசித்துயரை உணவளித்து மாற்றிக் கொண்டிருந்தாள்.

உலக வறவியில் காஞ்சனன்

காயசண்டிகையின் கணவனாகிய காஞ்சனன், தன் மனைவிக்கு விருச்சிக முனிவன் கொடுத்த சாபம் விடுத்து நீங்கும் காலம் கழிந்தும் அவள் வாராமையின் காரணம் யாதோ என்ற கவலையுடன் காவிரிப்பூம் பட்டினத்தை வந்தடைந்தான். அங்குள்ள மன்றும் பொதியிலும் மாதவரிடங்களும் மலர்ச்சோலைகளும் ஆகிய இடந்தொறும் தேடித்திரிந்து இறுதியில் உலக வறவியை வந்துற்றான். அங்குக் காயசண்டிகை வடிவுடன் நின்று கொண்டிருக்கும் மணிமேகலையைக் கண்டான். அவளைத் தன் மனைவியாகிய காய சண்டிகை என்றே துணிந்தான். அவள் அருகில் சென்று அன்புடன் உரையாடத் தொடங்கினான். பழைய நட்பினைப் புலப்படுத்தும் மொழிகள் பல வற்றைப் பகர்ந்து அவளைப் பாராட்டினான்.

உதயகுமரனுக்கு அறிவுரை

மணிமேகலை அவற்றைச் சிறிதும் மதியாமல் அங்கு நின்ற உதயகுமரனை அணுகினாள். அவனுக்கு இளமையின் நிலையாமையை எடுத்துரைக்க நினைந் தாள். அங்கே இயல்பாக வந்த முதுமகள் ஒருத்தியை அவனுக்குச் சுட்டிக்காட்டினாள். இளமையில் வனப் புடையனவாய் இருந்த அவள் உறுப்புக்கள் முதுமை யில் இயல்பு திரிந்து வெறுப்பூட்டுவனவாய் இருப் பதைப் புலப்படுத்தினாள்.

காஞ்சனன் கடுஞ்சினம்

இச் செயலைக் கண்ணுற்ற காஞ்சனன், என்னைப் பிறன் போல் நோக்கும் இப் பேதையாள் அயலான் பின்னே காதல் குறிப்புடன் பெயர்கின்றாள் ; இவ் அரசகுமாரன் மீது கொண்ட காதலினாலேயே இவள் இந்நகரில் தங்கிவிட்டாள் போலும்' என்று எண்ணி வெகுண்டான். அவன் புற்றில் அடங்கும் அரவம் போன்று அவ் உலக வறவியின் உள்ளே புகுந்து அற்றம் பார்த்து மறைந்திருந்தான்.

உதயகுமரன் வெட்டுண்டு வீழ்தல்

அவன் அங்கு மறைந்திருத்தலை அறியாத மன்னன் மகன், 'மணிமேகலை தான் இங்ஙனம் வேற்றுருக் கொண்டு விளங்குகின்றாள் : இவள் செய்தியை இடையாமத்தே இவண் வந்து ஆய்ந்தறிவோம்' என்று எண்ணி அரண்மனை நண்ணினான். இரவில் அனைவரும் உறங்கிய பின்னர் எவரும் அறியாது அரண்மனையினின்று நீங்கினான். விரைந்து நடந்து உலக வறவியை அடைந்தான். அரவம் கிடந்த புற்றுள்ளே புகுவான் போன்று உலக வறவியினுள்ளே மெல்லப் புகுந்தான். உடனே, அங்கு முன்பே சென்று இவன் வரவை எதிர்நோக்கிச் சினத்துடன் இருந்த காஞ்சனன், 'இவன் நம் மனைவியின் மீது கொண்ட காதலால் இவ்வேளையில் இங்குற்றான்' என்று துணிந்து விரைந்து எழுந்து சென்று வாளால் அவன் தோளைத் துணித்து வீழ்த்தினான்.

கந்திற்பாவையின் கட்டுரை

பின்பு காயசண்டிகையைக் கைப்பற்றிச் செல் வோம் என்று கருதிக் காஞ்சனன் அவள் அருகே சென்றான். அப்பொழுது அங்குள்ள கந்திற்பாவை யொன்று, 'இவள் உன் மனைவியாகிய காயசண்டிகை யல்லள்; மணிமேகலை கொண்ட மாற்று வடிவமே இது' என்று அறிவுறுத்தியது. 'உதயகுமரன் ஊழ்வினையால் உயிர் இழந்தானாயினும் நீ அவனை ஆராயாது வெட்டி வீழ்த்தினாய்; அதனால் நீ மிக்க தீவினை செய்தாய். அவ்வினை நின்னை விடாது தொடர்ந்து வெந்துயர் விளைக்கும்' என்று மேலும் அக் கந்திற் பாவை அவனுக்கு அறிவுறுத்தியது. அது கேட்டுக் காஞ்சனன் கவலை மிக்க உள்ளத்துடன் தன் நகருக்குச் செல்லலானான்.

உதயகுமரன், காஞ்சனன் கை வாளால் வெட் டுண்டு இறந்த செய்தியை மணிமேகலை அறிந்தாள். உடனே அவள் தான் கொண்ட வேற்றுருவை விட் டொழித்தாள். ஆங்கு இறந்து கிடந்த உதயகுமரன் பக்கம் சார்ந்து பெருமூச்செறிந்து புலம்பி வருந்தினாள். அப்போது ஆங்கிருந்த கந்திற்பாவை, அவன்பாற் செல்லாதே ! பிறவித்துயரை அறுக்க முயலும் நீ அவன் இறந்தது பற்றி வருந்தற்க!' என்று அறிவுறுத்தியது. அது கேட்ட மணிமேகலை கவலையும் மயக்கமும் நீங்கி இருந்தாள். அவ்வளவில் கதிரவன் உதயமானான்.

முனிவர்கள் செய்தி அறிதல்

பொழுது புலர்ந்ததும் சம்பாபதியின் கோவிலுக்கு வழிபாடு செய்யவந்த மக்கள் உலகவறவியில் அரசிளங் குமரன் வெட்டுண்டு இறந்து கிடப்பதைக் கண்டனர். உடனே அவர்கள் அச்செய்தியைப் பக்கம் அமைந்த சக்கரவாளக் கோட்டத்து முனிவர்கட்குத் தெரிவித் தனர். அம்முனிவர்கள் மணிமேகலையை அணுகி, 'நீ இது பற்றி ஏதும் அறிவாயோ?' என்று கேட்டனர். அவள் நிகழ்ந்தவற்றை அறிவித்தாள். அவர்கள் உதயகுமரன் பிணவுடலையும் மணிமேகலையையும் தனியிடம் ஒன்றில் மறைத்து வைத்து, மன்னவன் அரண்மனை நண்ணினர்.

கிள்ளிக்குச் செய்தியைக் கிளத்தல்

சோழ வேந்தனாகிய மாவண்கிள்ளியின் மாளிகை அடைந்த மாதவ முனிவர்கள் செவ்வி அறிந்து அவன் பக்கம் சேர்ந்தனர். அவன்பால் உதயகுமரன் இறந்த செய்தியை உடனே அறிவிக்காமல், கற்புடைய மகளிரையும் பொற்புடைய தவநெறி மாதரையும் காமுற்றுக் கெட்டொழிந்த காவலர் சிலருடைய வரலாறுகளை விரித்துரைத்தனர். அவர்களுடைய குறிப்பை அறிந்த மாவண்கிள்ளி,

'இன்றே அல்ல என்றெடுத் துரைத்து
நன்றறி மாதவிர் ! நயம்பல காட்டினிர்
இன்றும் உளதோ? இவ்வினை உரைமின்'

என்று வினவினான். அப்பொழுது அம்முனிவர்கள், தவத்திறம் பூண்ட மணிமேகலையிடம் மையல் கொண்டு அவள் இருந்த ஊரம்பலம் அடைந்து, ஆங்குக் காஞ்ச னன் என்பானால் வெட்டுண்டு இறந்த உதயகுமரன் நிலையை எடுத்துரைத்தனர்.

கிள்ளியின் கட்டளை

அது கேட்ட சோழவேந்தன் தன் மைந்தன் இறந்த தற்கு வருந்தினானல்லன். அவனது இழிசெயலைத் தெரிந்து அருவருத்தான். உடனே தன் பக்கத்தில் நின்ற படைத் தலைவனாகிய சோழிகஏனாதியை விளித் தான். 'தவறிழைத்த உதயகுமரனுக்கு யான் செய்யத் தக்க தண்டனையைக் காஞ்சனன் செய்தான்; ஆதலின் அவன் தகுதியற்றவன்; குலத்தில் உதித்த தனிமகனை நிலத்தில் கிடத்தி அவன் மேல் தேர்க்காலைச் செலுத்தி முறை செய்த மன்னர் மன்னன் மரபில் இத்தீவினை யாளன் பிறந்தான்; என் குலத்திற்குப் பழியைத் தரும் இவ் விழிந்த செய்தி, மற்றைய மன்னர் செவியகம் புகுதற்குமுன் அவன் உடலைப் புறங்காட்டில் கொண்டு போக்குக ; கணிகை மகளாகிய அம் மணிமேகலையையும் சிறைப்படுத்துக' என்று பணித்தான். அங்ஙனமே அச் சோழிக ஏனாதியும் அரசன் கட்டளையை நிறை வேற்றினான்.

இராசமாதேவிக்கு இன்னுரை

ஒரு குலத்திற்கு ஒரு மைந்தனாய் விளங்கிய உதய குமரன் கொலையுண்டு இறந்ததனால் கோப்பெருந் தேவியாகிய சீர்த்திக்கு ஏற்பட்ட துயரத்திற்கு ஓர் எல்லையில்லை. அவளது நிலையைக் கண்ட அரசன் வாசந்தவை என்னும் முதியவள் ஒருத்தியை அவளுக்கு ஆறுதல் கூறித் தேற்றுமாறு விடுத்தான். பயன் தரும் மொழிகளை நயம்பட உரைக்கும் அந் நரை மூதாட்டி கோப்பெருந்தேவியைக் குறுகினாள். அவள் அரசியின் அடியில் வீழ்ந்துரைக்கும் அமைதியை விலக்கினாள். அத் தேவியை வணங்கி நின்று வாயார வாழ்த்தினாள்.

'போர்க்களத்தில் பகைவருடன் வீரப்போர் புரிந்து விழுப்புண் பட்டு வீரசுவர்க்கம் புகுதலையே சீரிதெனக் கொள்ளும் வீரமரபன்றோ சோழர் மரபு ! அங்ஙனம் போரில் இறவாது மூப்பானும் பிணியானும் இறக்கும் அரசர் யாக்கையினைத் தருப்பையில் கிடத்தி வாளால் போழ்ந்து அடக்கம் செய்யும் இயல்புடைய அரிய மரபில் பிறந்த நின்மகன் இறந்தவிதத்தை என் னென்பது! நின்மகன் இறந்தது தன் நிலத்தைக் காத்தமையாலன்று ; பகைவர் நிலத்தைக் கவர்ந்தமை யாலும் அன்று ; காம மயக்கத்தால் கட்டழிந்து கெட்டொழிந்த அவனது இறப்பை எங்ஙனம் கூறு வது / மாநிலம் காக்கும் மன்னன் முன்னர் இம் மகனை இழந்ததற்கு வருந்தாதே!' என்று சொல்லிப் போயினள் அம் முதியாள்.

மாதேவி, மணிமேகலையை வஞ்சிக்கத் துணிதல்

இராசமாதேவி ஒருவாறு உள்ளம் தேறினாள். உதயகுமரன் இறந்ததற்கு உற்ற காரணமாய் நின்ற மணிமேகலையை வஞ்சனையால் கொல்லத் துணிந்தாள். அவள் புறத்தே மெய்யன்பும் தெளிந்த உணர்வும் பெற்றவள் போன்று நடித்தாள். ஒருநாள் அரசனை அணுகி அவன் அடியில் வீழ்ந்து தொழுதாள். 'செங் கோல் வேந்தே! மணிமேகலையின் பிக்குணிக் கோலத் தைக் கண்டு காமத்தால் அறிவு திரிந்து அலைந்த உதய குமரன் அரசாட்சிக்கு உரியனல்லன் ; அவன் அக் கொடுந் தொழிலால் இறந்தது தக்கதே; பெறுதற்கரிய இளமை நலத்தைப் பயனற்றதாக்கிய பேரறிவுடைய மணிமேகலைக்குச் சிறை தக்கதன்று' என்றாள்.

மணிமேகலைக்கு மருந்தூட்டல்

கோப்பெருந்தேவியின் வஞ்சகம் அறியாதவனாகிய மாவண்கிள்ளி, "நின் கருத்து அவ்வாறாயின் அவளைச் சிறையினின்று விடுதலை செய்வோம்," என்று கூறினான். உடனே ஏவலரை விளித்து மணிமேகலையைச் சிறை நீக்குமாறு பணித்தான். சிறையினின்று வெளிப் போந்த மணிமேகலையை இராசமாதேவி மெல்லக் கொணர்ந்து தன் மாளிகையுள்ளே தங்குமாறு செய்தாள். பின்பு, மணிமேகலைக்குப் பித்துண்டாகுமாறு மருந்தொன்றை அருந்தக் கொடுத்தாள். அவள் மறுபிறப்பை உணர்ந்தவளாதலின் அவளை அம் மருந்து ஒன்றும் செய்யவில்லை.

கற்பை அழிக்க முற்படல்

பின்னொரு நாள் இராசமாதேவி அன்னவளின் கற்பை அழிக்குமாறு கல்லா இளைஞன் ஒருவனைத் தூண்டினாள். அவனுக்குக் கைந்நிரம்பப் பொன்னீந்து அவள் இருக்கும் அறைக்குள் விடுத்தாள். அவனது வருகைக் குறிப்பை அறிந்த மணிமேகலை வேற்றுருக் கொள்ளும் மந்திரத்தை ஓதி ஆணுருக் கொண்டு அமர்ந்திருந்தாள். அங்கு வந்தவன், அரசியின் அந்தப்புரத்தில் பிற ஆடவர் எவரும் குறுகார்; இங்கோர் ஆடவன் இருக்கிறான் ; ஈது ஏதோ வஞ்சம்' என்று அஞ்சி ஓடினான்.

புழுக்கறையுள் புகுத்தல்

பிறிதொரு நாள் அவ் இராசமாதேவி, பிணிவாய்ப் பட்ட மணிமேகலை உணவு கொள்ளாள் என்று பொய் யுரைத்து, அவளைப் புழுக்கறையுள் உணவு கொடாது அடைத்து வைத்தாள். அப்பொழுது மணிமேகலை தான் உணர்ந்த ஊணொழி மந்திரத்தை ஓதி உடல் வருந்தாது இனிதிருந்தாள். இங்ஙனம் அவளை அழித் தற்குச் செய்த தீச்செயல்களுள் ஒன்றனாலும் அவள் இன்னல் எய்தாதிருக்கக் கண்ட இராசமாதேவி மிகவும் அஞ்சினாள். அவளிடத்தில் அமைந்த அற்புத ஆற்றலைக் கண்டு பெரிதும் வியந்து அவளை வணங்கினாள். "மகனை இழந்த துயரம் தாங்கலாற்றாது நினக்கு இத் தீங்குகளைச் செய்தேன் ; நீ இவற்றைப் பொறுத்தருள வேண்டும்," என்று மணிமேகலையைப் பலவாறு வேண்டினாள்.

அரசிக்கு அறவுரை கூறுதல்

இரசமாதேவி தான் செய்த பிழைகளை உணர்ந்து பேசிய மொழிகளைக் கேட்ட மணிமேகலை அவளை அன்புடன் மன்னித்தாள். பின் அவ் வரசியை நோக்கித், 'தேவி! முன் பிறப்பில் நின்மகன் இராகுலன் என்னும் பெயருடன் வாழ்ந்து திட்டி விடத்தால் தீங்குற்று இறந்தான்; அப்பொழுது யானும் அவன் பொருட்டு உயிர் துறந்தேன் ; அந் நாளில் நீ யாது செய்தனை? இப்பிறப்பில் அவனுக்காக அலறிப் புலம்பிய நீ முன் பிறப்பில் அவனுக்காக அழுதாயில்லையே ; இப்பொழுது நீ நின் மகனுடைய உடற்கு அழுதனையோ? உயிர்க்கு அழுதனையோ? அவனது உடற்கு அழுதனையேல் அதனை எடுத்துப் புறங்காட்டில் இட்டவர் யாவர்? உயிர்க்கு அழுதனை யேல் வினைவழியே அது சென்று புகும் உடம்பினை உணர்தல் அரிதாகும்; அவ் வுயிர்க்கு நீ அன்பு செய்ய விரும்பினால் உலகில் உள்ள எவ்வுயிர்க்கும் இரங்குதல் வேண்டும்,'' என்று நல்லுரை பகர்ந்தாள்.

'பூங்கொடி நல்லாய் ! பொருந்தாது செய்தனை ;
உடற்கழு தனையோ? உயிர்க்கழு தனையோ?
உடற்கழு தனையேல் உன் மகன் தன்னை
எடுத்துப் புறங்காட்(டு) இட்டனர் யாரே?
உயிர்க்கழு தனையேல் உயிர்புகும் புக்கில்
செயப்பாட்டு வினையால் தெரிந்துணர் வரியது;
அவ்வுயிர்க் கன்பினை யாயின், ஆய்தொடி!
எவ்வுயிர்க் காயினும் இரங்கல் வேண்டும்.'

இங்ஙனம் இராசமாதேவிக்கு இன்னுரை வழங்கிய மணிமேகலை அவள் கொடுத்த இன்னல்களை எல்லாம் தான் பெற்ற மந்திரவன்மையால் வென்ற விதத்தை விளக்கினாள். முன்னைப் பிறப்பில் தன் கணவனாக இருந்த இராகுலனுக்கு இப்பிறப்பில் இராசமாதேவி தாயாவாள் என்பதை மணிமேகலை அறிவாள். ஆதலின் அவளது துன்பத்தைப் போக்கி நன்னெறியில் செலுத்த வேண்டும் என்று எண்ணியே அம் மணி மேகலை வான்வழிச் செல்லாமலும் வேற்றுருக் கொள்ளாமலும் இருந்தாள்.

மேலும் மணிமேகலை இராசமாதேவிக்குப் புத்த சமய உண்மைகள் பலவற்றை அறிவுறுத்தினாள். 'காமம், கொலை, கள், பொய், களவு என்னும் ஐம் பெருங் குற்றங்களும் அல்லல் விளைப்பன ; ஆதலின் அவற்றை அறவே ஒழித்தல் வேண்டும்; அவற்றைத் துறந்தோரே சிறந்த சீலமுடையோர் ஆவர்; செற் றத்தை அடக்கினோரே முற்ற உணர்ந்தோர் ஆவர்; வறியார்க்கு விரும்பும் பொருளை வழங்குவோரே வாழ் பவர் ஆவர்; வருந்தி வந்தோர் அரும்பசி களைபவரே மறுமை உலகினை அறிந்தோர் ஆவர் ; மன்பதைக்கெல் லாம் அன்பு செய்பவரே தத்துவத்தை உணர்ந்தோர் ஆவர்; இவற்றை நன்கு அறிந்து நடப்பாயாக' என்று இன்னுரை பகர்ந்தாள்.

மணிமேகலை ஞானமாகிய நீரினை இராசமாதேவி யின் செவியில் வார்த்து அவளது துயரமாகிய தீயினை அவித்துத் தணித்தாள். அதனால் மனம் தெளிந்த இராசமாதேவி மணிமேகலையை வணங்கினாள். அவள் அச் செயலைக் கண்டு பொறாதவளாய், 'நீ என் கணவ னைப் பெற்ற தாய் ; மேலும் மன்னனுடைய மாபெருந் தேவி ; ஆதலின் நீ என்னை வணங்குதல் தகுதியன்று' என்று கூறித் தானும் அவளை அன்புடன் வணங்கினாள்.

அரசியின் பெருந்தகைமை

பின்னர் மணிமேகலையின் பாட்டியாகிய சித்திரா பதி அரண்மனை அடைந்து, இராசமாதேவியையும் அவளுடன் இருந்த மணிமேகலையையும் கண்டாள். மணிமேகலையைத் தன்னுடன் அனுப்புமாறு இராசமா தேவியைப் பணிவுடன் வேண்டினாள். மணிமேகலை யால் நல்லறிவு பெற்ற அவள்,

'கள்ளும் பொய்யும் காமமும் கொலையும்
உள்ளக் களவும் என்(று) உரவோர் துறந்தவை
தலைமையாக் கொண்டநின் தலைமையில் வாழ்க்கை
புலைமையென்(று) அஞ்சிப் போந்த பூங்கொடி
நின்னொடு போந்து நின்மனைப் புகுதாள்;
என்னொடு இருக்கும்.'

என்று மறுமொழி கூறிச் சித்திராபதியை அனுப் பினாள். அறிவுடையோர் துறந்த இழிந்த செயல்களைச் சிறந்தனவாகக் கொண்டொழுகும் சித்திராபதியின் கணிகை வாழ்க்கையை இராசமாதேவி தலைமையில் வாழ்க்கையெனக் கடிந்துரைத்தாள். மேலும் 'கணி கையர் வாழ்வின் இழிவினைக் கண்டு அஞ்சி வெறுத்துத் துறவு பூண்ட தூயவளாகிய மணிமேகலை நின்னுடன் வரமாட்டாள் ; என்னுடனேயே இருப்பாள்' என்று இயம்பினாள். இவ்வாறு கூறிய இராசமாதேவியின் சொற்களில் அவளது மனமாற்றமும் மாண்புமிக்க பெருந்தகவும் புலனாகின்றன அன்றோ !
-----------------

6. குலோத்துங்கன் தேவி

வெண்ணீறு பரப்பிய வேந்தன்

பொன்னி நாடெனப் புலவர் போற்றும் சோழ வளநாட்டை ஆண்ட மன்னருள்ளே இரண்டாம் குலோத்துங்கன் ஓர் இணையற்ற கொற்றவன் ஆவான். இவன் விக்கிரம சோழனின் வீரத் தனிமகன் ஆவான். இவன் விருதுப் பெயர்கள் பலவற்றைப் பெற்றுச் சிறந்து விளங்கினான். சிவபத்தியில் சிறந்த இம் மன்னன் தன்னாட்டில் வெண்ணீற்று ஒளி விளங்கு மாறு செய்தான். நாட்டு மக்கள் அனைவரும் சைவ நன்னெறியை மேற்கொண்டு ஒழுகுமாறு செய்தான். அதனால் மக்கள் இவனைத் 'திருநீற்றுச் சோழன்' என்று ஏத்தி மகிழ்ந்தனர்.

தில்லைக்கூத்தன் திருவருட் காதல்

குலோத்துங்கன், தில்லைக் கூத்தப்பிரானிடத்துக் கொண்ட எல்லையற்ற காதலால் தில்லையிலேயே சென்று, தன் தேவியுடன் பல்லாண்டுகள் வாழ்ந்தான். நாள்தோறும் திருக்கோவிலுக்குச் சென்று, கூத்தப் பெருமானைத் தரிசித்து உள்ளம் குளிர்வான். அதனால் இம் மன்னனைத் 'தில்லைக்கூத்தன் திருவடி மலரில் சென்று ஊதும் வண்டு போன்றவன்' என்று கல் வெட்டுக்கள் பாராட்டிச் சொல்லும். இவனே தில்லைப் பேரம்பலத்திற்குப் பொன் வேய்ந்தான். ஆதலின் இவனைப் 'பேரம்பலம் பொன் வேய்ந்த சோழன் என்று போற்றுவர். இவனுக்கே சிறப்பாக உரிய விருதுப் பெயர் 'அநபாயன்' என்பதாகும்.

கூத்தரும் குலோத்துங்கனும்

இவ் அநபாய குலோத்துங்கன் சிவபத்தியில் சிறந்து விளங்கியதோடு அறநெறி வழுவாத ஆட்சியை அமைதி யுடன் நடத்தி வந்தான். இவன் காலத்தில் சோழநாடு செழிப்புடனும் சிறப்புடனும் திகழ்ந்தது. இவன் தன் அரசவைப் புலவராக விளங்கிய ஒட்டக்கூத்தரிடம் பல்லாண்டுகள் பைந்தமிழைப் பயின்று தேர்ந்தவன். செய்யுள் இயற்ற வல்ல சிறந்த புலமை பெற்றவன். ஆசிரியராகிய ஒட்டக்கூத்தர்பால் மட்டற்ற மதிப் புடையவன். இத்தகைய புலமையாளனாகிய புரவல னுக்கு அமைச்சராக விளங்கியவரே சேக்கிழார். அவரது நூலறிவும் நுண்ண றிவும் உலகறிவும் பத்தி மாண்பும் ஆகிய பன்னலங்களைக் கண்டே தொண்டர் புராணத்தை ஆக்குமாறு தூண்டினான்.

பாண்டியன் மகளைப் பெண்பேசுதல்

சோழ வேந்தனாகிய குலோத்துங்கன், பாண்டியன் மகளைத் திருமணம் செய்ய விரும்பினான். அந்நாளில் மதுரையில் இருந்து, பாண்டி நாட்டை ஆண்ட மன்னன் வரகுணன் என்பான். அவனுக்குத் திருமகள் போன்ற உருவுடைய ஒரே மகள் இருந்தாள். அவள் தியாகவல்லி என்னும் பெயருடையாள். அவள் பாண்டியன் அவைப் புலவராகிய புகழேந்தியாரிடம் கற்றுத் தமிழ்ப் புலமை பெற்றவள். அவளது அறிவும் அழகும் அரிய பண்பும் ஆகிய நலங்களைப் புலவர் வாயிலாகக் கேள்வியுற்றான் குலோத்துங்கன். அவளையே கோப்பெருந்தேவியாகக் கொள்ள வேண்டு மென உள்ளத்தில் உறுதி பூண்டான். ஆசிரியரும் அவைப் புலவருமாகிய ஒட்டக்கூத்தரிடம் தனது கருத்தைத் தெரிவித்தான். அவரையே பெண் பேசி வருமாறு பாண்டியனிடம் அனுப்பினான்.

கவியரசராகிய ஒட்டக்கூத்தர் பாண்டியன் அவையை அடைந்தார். வரகுண பாண்டியனைக் கண்டு வணங்கினார். தம் மாணவனும் சோழ வேந்தனுமாகிய குமார குலோத்துங்கனின் கூரிய பேரறிவையும் சீரிய ஆட்சித் திறனையும் பாண்டிய னுக்குக் கூறினார். அவனுடைய திருமகளைக் குலோத் துங்கனுக்கு மணம் செய்து கொடுக்க வேண்டுமென்று வேண்டினார். அது கேட்ட பாண்டியன் இச் சமயத்தில் இவரது புலமைத் திறனைச் சிறிது ஆராய்தல் வேண்டும் என்று எண்ணினான். உடனே அவரை நோக்கிப், ''பாண்டியர் குலத்துப் பாவையரை மணக்கத் தக்க மாண்பு, சோழ மன்னர்க்கு உண்டோ ?'' என்று வினவினான். அது கேட்ட புலவர் பெருமிதத்துடன் மறுமொழி பகர்ந்தார்.

சோழன் பெருமையைச் சொல்லுதல்

சோழ மன்னர் ஏறும் கோரம் என்னும் குதிரைக் குப் பாண்டிய மன்னர் ஏறும் கனவட்டக் குதிரை இணையாகுமோ? காவிரியாற்றிற்கு வையையாறு நேராகுமோ? சோழர் அணியும் ஆத்தி மாலைக்குப் பாண்டியர் அணியும் வேப்பமாலை ஒப்பாகுமோ? பேரொளி செய்யும் கதிரவனுக்குத் திங்கள் நேராகுமோ? வீரர்க்குள் வீரனாக விளங்குபவன் சோழனோ, பாண்டி யனோ? சோழருடைய புலிக்கொடிக்கு முன்னே பாண்டியருடைய கயற்கொடி நிற்குமோ? 'ஊரெனப் படுவது உறையூர்' என்று புகழ்ந்து உரைக்கப்படுவது உறையூரோ, கொற்கையோ? வளம் பொருந்திய சோழ நாட்டிற்குப் பாண்டிய நாடு ஒப்பாக முடியுமோ? எவ்வகையிலும் சோழ நாடும் சோழ வேந்தருமே மிகச் சிறந்தவராவர். இக் கருத்துக்களை அமைத்து,

'கோரத்துக் கொப்போ கனவட்டம் அம்மானை
கூறுவதும் காவிரிக்கு வையையோ அம்மானை
ஆருக்கு வேம்புநிகர் ஆகுமோ அம்மானை
ஆதித்தனுக்கு நிகர் அம்புலியோ அம்மானை
வீரர்க்குள் வீரனொரு மீனவனோ அம்மானை
வெற்றிப் புலிக்கொடிக்கு மீன் கொடியோ அம்மானை
ஊருக் குறந்தைநிகர் கொற்கையோ அம்மானை
ஒக்குமோ சோணாட்டைப் பாண்டி நா டம்மானை.'

என்னும் பாடலைப் பாடி அமர்ந்தார். அப்போது அங்கிருந்த அருந்தமிழ்ப் புலவராகிய புகழேந்தியார் உள்ளத்தில் சினம் பொங்கியது. உடனே கூத்தரின் கூற்று முழுவதையும் மறுத்துப் பதிலிறுத்தார்.

புகழேந்தியார், பாண்டியன் பெருமையினைப் பகர்தல்

முத்தமிழ் முனிவனாகிய அகத்தியன் அமர்ந்து தமிழை வளர்த்தது பாண்டி நாட்டுப் பொதிய மலை யிலா, சோழ நாட்டு நேரி மலையிலா? சிவபெருமான் அறுபத்து நான்கு திருவிளையாடல்களைச் செய்தரு ளியது மதுரையிலா, உறையூரிலா? திருமால் பிறப் பெடுத்தது மீனாகவா, புலியாகவா? சிவபெருமான் திருமுடியில் திகழ்வது திங்களா, செங்கதிரா? வெள்ளத்தை எதிர்த்துத் தமிழேடு விரைவில் கரை ஏறியது வையையிலா, காவிரியிலா? அச்சந்தரும் பேய்க்குப் பகையாக நின்று அதனைத் தடுப்பது வேம்பா, ஆத்தியா? கடல் வணங்கியது பாண்டியன் பாதத்தையா, சோழன் பாதத்தையா? பாண்டியர் பெருமையைப் பகர்வது எவர்க்கும் அரிதாகும்! இக் கருத்துக்களை அமைத்து,

'ஒரு முனிவன் நேரியிலோ உரைதெளித்த தம்மானை
ஒப்பரிய திருவிளையாட் டுறந்தையிலோ அம்மானை
திருநெடுமால் அவதாரம் சிறுபுலியோ அம்மானை
சிவன் முடியில் ஏறுவதும் செங்கதிரோ அம்மானை
கரையெதிர்ஏ டேறியதும் காவிரியோ அம்மானை
கடிப்பகைக்குத் தாதகியங் கண்ணியோ அம்மானை
பரவை பணிந்ததும் சோழன் பதந்தனையோ அம்மானை
பாண்டியனார் பராக்கிரமம் பகர்வரிதே அம்மானை.'

என்னும் பாடலைப் பாடிப் பாண்டியர் சிறப்பைப் புகழேந்தியார் புலப்படுத்தினார்.

கூத்தரும் புகழேந்தியாரும்

இதனைக் கேட்ட ஒட்டக்கூத்தர் மீட்டும் சோழன் பெருமையைச் சொல்ல விரும்பி,

'வென்றி வளவன் விறல் வேந்தர் தம்பிரான்
என்றும் முதுகிற் கிடான் கவசம்'

என்று பாடிய அளவில் புகழேந்திப் புலவர்,

      - துன்றும்
வெறியார் தொடைகமழும் மீனவர்கோன் கைவேல்
எறியான் புறங்கொடுக்கின் என்று.'

என ஒட்டக்கூத்தர் பாடலை ஒட்டிப் பாடியே கூத்தரின் கருத்தை மறுத்தார். 'வெற்றியை நாடும் வீரப் பெருவேந்தனாகிய சோழன், என்றும் முதுகிற்குக் கவசம் அணிந்து கொள்வதில்லை' என்று கூறி, மேலும் பாடத் தொடங்கினார் கூத்தர். அது கேட்ட புகழேந் தியார், 'நறுமணம் கமழும் நன்மாலை அணிந்த பாண்டிய மன்னன், பகைவர் புறங்காட்டினால் எந்நாளும் அவன் கை வேலை எறிவதில்லை என்பதை அறிந்தே சோழன் முதுகிற்குக் கவசம் அணிவதில்லை' என்று நகைச்சுவை தோன்றக் கூறி அவையோரை மகிழ வைத்தார்.

தியாகவல்லி கோப்பெருந்தேவியாதல்

பின்னர், ஒட்டக்கூத்தர் திருமணப் பேச்சைத் தொடங்கினார். குலோத்துங்கன் புலமை நலம் பற்றித் தெரிந்த புகழேந்தியார், தம் மாணவியாகிய பாண்டி யன் மகளை அவனுக்கே மணம் செய்து கொடுத்தல் வேண்டுமெனப் பாண்டியனை வேண்டினார். வரகுணனும் திருமணத்திற்கு உடன்பட்டான். திருமண நாளும் குறிக்கப்பெற்றது. பாண்டியன் அரண்மனை யிலேயே குலோத்துங்கனுக்கும் தியாகவல்லிக்கும் திருமணம் சிறப்பாக நடந்தேறியது. பாண்டியன் மகள் சோழனின் கோப்பெருந்தேவியானாள்.

அரசன் சோழ நாடு அடைதல்

சில நாட்களில் குலோத்துங்கன் தன் நாட்டிற்குப் புறப்பட்டான். தேவியாகிய தியாகவல்லிக்குக் கணவனுடன் செல்லுவதில் களிப்பு ஒரு பக்கம் இருந்தாலும், அறிவூட்டிய புலவர் பெருமானாகிய புகழேந்தியாரைப் பிரிவதற்கு அவள் வருந்தினாள். அவளது கவலைக் குறிப்பை அறிந்த பாண்டியன் தோழியர் வாயிலாக மகளின் மனக்கருத்தைத் தெரிந்தான். உடனே புகழேந்தியாரை அழைத்து அவரையும் தன் மகளுடன் சோழநாட்டிற்குச் செல்லுமாறு அன்புடன் வேண்டிக் கொண்டான். மாணவியாகிய தியாகவல்லியிடத்துப் பேரன்பு பூண்ட புலவர் பெருமானும் அதற்கு இசைந்தார். குலோத்துங்கன் தன் தேவியொடும் தீந்தமிழ்ப் புலவரொடும் சோழ நாட்டை அடைந்தான்.

பாண்டி நாட்டிலிருந்து மணக்கோலத்துடன் தன்னாட்டில் புகும் மன்னவனை மக்களெல்லாம் மகிழ் வுடன் வரவேற்றனர். தலைநகராகிய உறையூரின் புறத்தே ஒட்டக்கூத்தர், அமைச்சர் முதலான அரசியல் சுற்றமுடன் வந்து எதிர்கொண்டு வரவேற் றார். அரசனுடன் புகழேந்தியாரும் போந்திருப்பது கண்டு பொறாமை கொண்டார். இனித் தமது புகழ் குன்றிவிடுமோ என்று உள்ளம் கன்றினார். பல சூழ்ச்சிகள் செய்து புகழேந்தியாரைச் சிறையுள் தள்ளி விட்டார். இச்செய்தியைச் சோழமாதேவி அறியாள்.

சிறைச்சாலையில் செந்தமிழ்ப்பணி

சிறைச்சாலையில் அடைக்கப்பெற்ற செந்தமிழ்ப் புலவர் அங்கிருந்த பலரையும் நோக்கினார். அவர்கள் எல்லோருமே ஒட்டக்கூத்தரின் சூழ்ச்சியால் சிறை செய்யப்பட்டவர்கள் என்பதைத் தெரிந்து வருந்தினார். அடுத்து வரும் நவராத்திரி விழாவிற்குள் அவர்கள் எல்லோரும் நற்றமிழ்ப் புலமை பெற்றுக் கூத்தரின் வினாக்களுக்குத் தக்க விடையிறுக்க வேண்டும்; இன் றேல் அவர்கள் காளிக்குப் பலியிடப்படுவர் என்ற செய்தியை உணர்ந்தார். அன்று முதல் புகழேந்தியார் சிறையுள் இருந்தவர்க்கெல்லாம் செந்தமிழ் நூல்களைக் கற்பிக்கத் தொடங்கினார்; அவர்கள் அனைவரையும் சில நாட்களில் சிறந்த புலவர்களாக்கி விட்டார்.

கூத்தரின் கோபம்

நகரில் நவராத்திரி விழாத் தொடங்கியது. ஒட்டக் கூத்தரின் உள்ளம் சினத்தால் பொங்கியது. அவர் சிறைச்சாலையில் இருந்த புலவர்களைத் தனித்தனியே அழைத்துவரச் செய்தார். அவர்களிடம் தம் புலமைச் செருக்குத் தோன்றுமாறு பல வினாக்களைக் கேட்டார். எல்லோரும் அவர் நாணித் தலை கவிழுமாறு தக்க விடையிறுத்து நின்றனர். ஆதலின் அவர்களை விடுதலை செய்து விரட்டினார். இவர்கள் இத்தகைய புலமையுடன் அஞ்சாது பதிலிறுப்பதற்குப் புகழேந்தி யாரே காரணமாவார் என்று கருதினார். அதனால் அவ ருக்குப் புகழேந்தியார் மீது கொண்ட சினம் மேலும் பெருகியது. அவருக்கு உணவு முதலியவற்றைக் கொடுக்காதவாறு தடுத்தார். இங்ஙனம் கூத்தர் செய்த கொடுமைகளை எல்லாம் புகழேந்தியார் பொறு மையுடன் அனுபவித்து வந்தார்.

அரசி, ஆசிரியர் துயரை அறிதல்

சில திங்கள் கழிந்தன. குலோத்துங்கன் தேவி யாகிய தியாகவல்லிக்குத் தன் ஆசிரியரின் நினைவு வந்தது. மணம் பெற்றுப் புதிய வாழ்வில் மகிழ் வுற்றுத் திளைத்துக் கொண்டிருந்த தேவி சின்னாட் களாகப் புலவரை மறந்துவிட்டாள். அவளது மறதியால் புகழேந்தியார் சிறைத் துன்பத்தில் ஆழ வேண்டி வந்தது. திடீரென்று தன் ஆசிரியராகிய புகழேந்தியாரைக் காணவேண்டுமென்று கருதிய தேவி, தோழி யரை அனுப்பி அவரை அழைத்து வருமாறு பணித் தாள். புகழேந்தியாரை அழைக்கச்சென்ற தோழியர், கூத்தரின் சூழ்ச்சியால் அவர் ஓராண்டுக் காலம் வரை சிறையில் அடைக்கப்பட்டு வருந்தியிருக்கும் செய்தியை ஆராய்ந்து வந்து அரசிக்குத் தெரிவித்தனர்.

அரசி கொண்ட உறுதி

அச் செய்தியைத் தெரிந்த தேவி மிகவும் வருந்தி னாள். கூத்தரின் அடாத செயலைக் கண்டு உள்ளம் கொதித்தாள். உடனே புலவரை விடுதலை செய்வதற்கு யாது செய்வதென எண்ணினாள். அரசனாகிய குலோத் துங்கன் அந்தப்புரத்துள் வராதவண்ணம் கதவைத் தாழிட்டாள். ஆசிரியர் விடுதலை பெறும் வரை அரசனை அந்தப்புரத்துள் அனுமதிப்பதில்லை என்று உறுதி கொண்டாள்.

கூத்தர் கவி பாடுதல்

குலோத்துங்கன் வழக்கம்போல் தன் தேவியைக் காணும் காதலுடன் அந்தப்புரத்தை நோக்கி வந்தான். அந்தப்புரத்தின் கதவுகள் அடைக்கப்பட் டிருப்பதைக் கண்டு வியந்தான். கதவு தாழிடப்பட் டிருப்பதன் காரணத்தைத் தோழியரை உசாவி அறிந் தான். தேவியின் ஊடலைத் தணிக்கப் பாவியல் புலவரே செல்லுதல் பண்டை வழக்கம். ஆதலின் அரசவைப் புலவராகிய ஒட்டக்கூத்தரை அழைத்து வரப் பணித்தான். அவர்பால் செய்தியைத் தெரிவித் தான். கூத்தர், தேவியின் சினத்தைத் தணித்தற்கு அந்தப்புரத்தின் அருகே வந்தடைந்தார். கதவைத் தட்டியவாறே கவிதை ஒன்றைப் பாடினார் :

'நானே இனியுன்னை வேண்டுதில்லை, நளினமலர்த்
தேனே / கபாடம் திறந்திடுவாய்; திறவாவிடிலோ
வானே றனைய இரவி குலாதிபன் வாயில் வந்தால்
தானே திறக்கும் நின் கைத்தலமாகிய தாமரையே.' '

'தாமரை மலரில் தங்கும் திருமகளனைய தேவியே கதவைத் திறப்பாய்; நீ இப்போது திறவாவிடின், பகைவர்க்கு இடியேறு போன்ற இரவிகுலத் தலைவ னாகிய குலோத்துங்கன் நின் வாயிலுக்கு வருவான் அப்போது நின் கைப்போது, தானே மலர்ந்து தாழைத் திறந்துவிடும் ; ஆதலின் நான் உன்னை வேண்டுவதில் பயனில்லாது போகும்," என்று கூறி நின்றார்.

ஒட்டக்கூத்தர் பாட்டிற்கு இரட்டைத்தாழ்

கூத்தரின் பாடல், தேவியின் சினக் கனலுக்கு எண்ணெய் வார்த்தது போல் இருந்தது. அவர்மீது மேலும் அளவற்ற சினங்கொண்டாள் அத்தேவி. "ஓட்டக்கூத்தர் பாட்டிற்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்று கூறியவாறே கதவின் மற்றொரு தாழைப் பலமாக இட்டாள். அதுகண்ட கூத்தர் பெரிதும் திகைத்தார். அரசியின் சினம் தம்மீதும் பாய்ந்து பெருகியதை அரசனுக்குக் கூறினார். இதற்குக் காரணம் யாதாக இருக்கலாம் என்று குலோத்துங்கன் கூர்ந்து நோக்கினான். பாண்டி நாட்டுப் பைந்தமிழ்ப் புலவர் புகழேந்தியாரைச் சிறையிலிட்டதே இதற்குக் காரண மாகும் என்று துணிந்தான். விரைந்து சென்று சிறைக் கோட்டத்தைத் திறந்து புகழேந்தியாரைக் கண்டு வணங்கினான். அறியாது செய்த பிழையைப் பொறுக்கு மாறு அன்புடன் வேண்டினான். தேவியின் சினத்தைத் தணித்து அவள் மனத்தைத் திருத்துமாறு புலவரை வேண்டிக்கொண்டான்.

புகழேந்தியார் சிறை விடுதலை

புகழேந்தியாரும் அகமகிழ்ந்து சோழன் வேண்டு கோளுக்கு இசைந்தார். புகழேந்தியார் விடுதலை பெற்று அரசியைக் காணவரும் செய்தியைத் தோழியர் அரசிக்கு அறிவித்தனர். அது கேட்டுப் பெருமகிழ்வுற்ற கோப்பெருந்தேவியாகிய தியாகவல்லி ஆசிரியரின் வரவை எதிர்நோக்கி அந்தப்புரக் கதவின் அருகில் வந்து நின்றாள். அங்கு வந்த புகழேந்தியாரும் தம் அருமை மாணவியாகிய அரசியின் செவியில் விழுமாறு அமுதனைய பாடல் ஒன்றைப் பாடினார்.

'இழையொன் றிரண்டு வகிர் செய்த
      நுண்ணிடை ஏந்தியபொன்
குழையொன் றிரண்டு விழியணங்கே !
      கொண்ட கோபம் தணி;
மழையொன் றிரண்டுகை மானா
      பரணன்நின் வாயில் வந்தால்
பிழையொன் றிரண்டு பொறாரோ?
      குடியில் பிறந்தவரே'

"நூலைப் பிளந்தாற் போன்ற நுண்ணிய இடை யினையும் கனகக் குழை அணிந்த காதளவு நீண்டுள்ள கண்களையும் உடைய தெய்வமகள் போன்ற தேவியே! நீ கொண்ட கோபத்தை நீக்குவாய்; மழையைப் போலக் கொடை வழங்கும் இரு கைகளையும் மான மாகிய அணிகலனையும் உடைய மன்னர் பெருமான் நின் அந்தப்புர வாயிலில் வந்து நின்றால் அவன் செய்த பிழைகளைப் பொறுத்து ஏற்றுக்கொள்ள வேண்டுமன்றோ ! அதுதானே உயர்குடியிற் பிறந்த கற்புடை மாதரின் கடமையாகும் !"

தேவி கவி நயம் தெரிதல்

சோழமாதேவி தன் ஆசிரியராகிய புகழேந்தியா ரின் ஆற்றொழுக்குப் போன்ற அரிய பாட்டைக் கேட் டாள். அதன் கண் அமைந்த சொல் நயம் பொருள் நயங்களை அறிந்து மகிழ்ந்தாள். சிறந்த அறிவுரை யொன்றைப் புகுத்தி உரைத்த கருத்து நயத்தைக் கண்டு களிப்புற்றாள். கதவைத் திறந்து வெளிவந்தாள். கலைநலம் உணர்த்திய புலவர் பெருமானைப் பணிந்தாள். அவரை வரவேற்று ஆசனத்தில் அமரச்செய்து உபசரித்தாள். கதவு திறப்பதை எதிர்நோக்கியிருந்த குலோத்துங்கனும் விரைந்து அந்தப்புரத்துள் புகுந்தான். புலவரையும் தேவியையும் பிழை பொறுக்கு மாறு பேரன்புடன் வேண்டினான். புலவரைத் தக்க வாறு போற்றிக் காக்க, அமைச்சர்க்கு ஆணையிட்டான். அதுகண்ட தேவி, தான் கொண்ட ஊடல் தணிந்தாள். வேந்தனும் தேவியும் விருப்புடன் கூடிச் சிறப்புற வாழ்ந்தனர். தேவியின் தெளிந்த அறிவையும் சிறந்த பண்பையும் கண்ட வேந்தன், அவளைப் 'புவன முழு துடையாள்' என்று போற்றிப் புகழ்ந்தான்.

இங்ஙனம் குலோத்துங்கன் தேவியாகத் திகழ்ந்த தியாகவல்லி தீந்தமிழ்ப் புலமைச் செல்வியாக விளங் கினாள். தனக்குத் தமிழறிவை ஊட்டிய புகழேந்தி யாரைப் பெரிதும் போற்றினாள். அவர் அடைந்த சிறைத் துன்பம் கண்டு சிந்தை கலங்கினாள். அவர் விடுதலையின் பொருட்டுத் தன் இன்ப வாழ்வைத் துறந்தாள். அவள் கொண்ட தமிழ்ப்பற்றையும் ஆசிரியர் பால் வைத்த பேரன்பையும் என்னென்பது!
---------------

7 . பூதப்பாண்டியன் தேவி

பண்டையர் பாண்டியர்

'தண்ணார் தமிழ் அளிக்கும் தண்பாண்டி நாடு' என்று பாண்டிய நாட்டைப் பாராட்டி- யருளினார் மணிவாசகப் பெருமான். 'பாண்டிய! நின் நாடுடைத்து நல்ல தமிழ்' என்று பாண்டியன் ஒருவனைப் போற் றினார் தமிழ் மூதாட்டியார். இன்பத் தமிழின் பிறப் பிடமாகிய பாண்டிய நாடு மிகவும் பழமை வாய்ந்தது. 'பண்டைய நாடு ' என்பதே 'பாண்டிய நாடு' என மருவியதாக அறிவுடையோர் சிலர் கூறுவர். படைப்புக் காலந் தொட்டு மேம்பட்டு வந்த பழங்குடியினருள் பாண்டியரும் ஒருவராவர்.

பைந்தமிழ் வளர்த்த பாண்டியர்

இப்பாண்டிய மன்னர்களே பசுந்தமிழைப் பேணி வளர்த்த பெற்றியார்.

'பொருப்பிலே பிறந்து, தென்னன்
      புகழிலே கிடந்து, சங்கத்(து)
இருப்பிலே இருந்து, வையை
      ஏட்டிலே தவழ்ந்த பேதை.'

என்று தமிழணங்கைப் பாராட்டினார் வில்லிபுத்தூரார். பொதிய மலையிலே பிறந்த தமிழ்ச் செல்வி, பாண்டியன் புகழாகிய பாயலிலே கிடந்தாள். அவன் நிறுவிய அருந்தமிழ்ச் சங்கத்தின் தெய்வப் பலகையில் இருந்தாள். வையை ஆற்றின் வெள்ளத்திலிட்ட ஞானசம்பந்தரது ஏட்டில் தவழ்ந்து சென்றாள். இங்ஙனம் தமிழ் பிறந்து வளர்ந்து சிறந்து பெருமை யடைந்த இடமே பாண்டிய நாடு என்று பகர்ந்தனர் பாரதம் பாடிய அப்புலவர்.

பாண்டிய மன்னருள் பாவலர்

இங்ஙனம் தமிழ் வளர்த்த பாண்டியருள்ளே பலர் பைந்தமிழ்ப் புலமையாளராகவும் விளங்கினர். பாண்டியன் அறிவுடை நம்பி, கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி, ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன் போன்ற பாண்டிய வேந்தர்கள் கருத்து நலங்கனிந்த கவிபாடும் பெரும் புலவர்களாகத் திகழ்ந்துள்ளனர். இவர்கள் பாடிய பாக்கள், புறநானூறு போன்ற பழந்தமிழ்ச் சங்க நூல் களில் இடம் பெற்றுள்ளன. இவர்களுள் ஒருவனாகிய பூதப்பாண்டியன் புலமை நலங்கனிந்த புரவலனாவான். இவன் போரில் வல்ல வீரனுமாவான்.

ஒல்லையூர் கொண்ட வல்லவன்

முன்னாளில் பாண்டிய நாட்டின் வடவெல்லை நாடுகளுள் ஒன்றாக ஒல்லையூர் நாடு விளங்கியது. புதுக்கோட்டையைச் சார்ந்த ஒலியமங்கலம் என்னும் ஊரே ஒல்லையூர் எனப்படுவது, அவ் ஒல்லையூரும் அதைச் சூழ்ந்துள்ள நாடும் ஒல்லையூர் நாடு என்று சொல்லப்பெறும். பாண்டியர்க்குரிய அந்நிலப்பகுதி யினை ஒருகால் சோழர் கைப்பற்றிக் கொண்டனர். பாண்டி நாட்டின் எல்லையில் பகைவராகிய சோழர் வந்துவிட்டதால் பாண்டி நாட்டின் காவல் பழுதுற்றது. அது கண்ட பாண்டி நாட்டு மக்கள் மிக்க கவலை கொண்டனர். அந்நாளில் பாண்டி நாட்டு ஆட்சியை ஏற்ற பூதப்பாண்டியன் ஒல்லையூர் நாட்டினை இழந்த தால் உற்ற தொல்லையினை உணர்ந்தான். அந் நாட்டைக் கைப்பற்றிக் குடியின் பெருமை குன்றாமல் காக்கத் துணிந்தான்.

அலறத் எல்லையில் றத் திரப்

போரில் வல்ல வீரனாகிய பூதப்பாண்டியன் பெரும்படை யொன்றைத் திரட்டினான். சோழனை ஒல்லையூர் எல்லையில் சென்று எதிர்த்தான். அவனை அலறத் தாக்கி அந்நாட்டினின்று ஓட்டினான். அதன் பின்னர் ஒல்லையூர் நாடு மீண்டும் பாண்டியர்க்கு உரிய தாயிற்று. ஒல்லையூரை இழந்ததனால் பன்னாட்களாகப் பாண்டியர்க்கு இருந்து வந்த பெரும்பழியை அகற்றி அரும்புகழை நாட்டிய அரசனாகிய பூதப்பாண்டியனைப் பாண்டி நாட்டு மக்கள் எல்லோரும் 'ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்' என்று உவந்து பாராட்டினர்.

அரசனின் ஆருயிர் நண்பர்கள்

இப் பாண்டியனுக்குத் திதியன் என்பான் இனிய நண்பன். அவன் பொதிய மலையைச் சார்ந்த நாட்டிற்கு உரியவன் ; இன்னிசை வழங்கும் வாழ்த் தியம் இயம்புவதில் வல்லவன் ; விற்போர் புரிவதிலும் மிக்க விறல் படைத்தவன். இத்தகைய திதியனைத் தனது ஆட்சிக் கீழ் அடங்கிய ஒரு சிற்றரசன் என்று எண்ணாது அவனது வீரத்தினையும் அரிய இசைத் திறனையும் வியந்து பாராட்டினான் பூதப்பாண்டியன். இவனுக்கு அத் திதியனையன்றி வேறு கண் போன்ற நண்பர்கள் சிலர் இருந்தனர். அவர்களை யெல்லாம் இம்மன்னன் தன்னுடைய பாடலில் விருப்புடன் குறிப்பிடுகிறான்.

'பொய்யா யாணர் மையற் கோமான்
மாவனும் மன்னெயில் ஆந்தையும் உரைசால்
அந்துவஞ் சாத்தனும் ஆதனழிசியும்
வெஞ்சின இயக்கனும் உளப்படப் பிறரும்
கண்போல் நண்பிற் கேளிர்.''

என்னும் அவனது பாடற் பகுதியால் மாவன், ஆந்தை, அந்துவஞ்சாத்தன், ஆதனழிசி, இயக்கன் முதலியோர் அவனுக்குச் சிறந்த நண்பர்களாய் இருந்தனர் என்பது புலனாகும்.
அறிவும் அழகும் அமைந்த தேவியார்

வீரத்தினும் புலமையினும் வீறு பெற்று விளங்கிய இப் பூதப்பாண்டியனுக்குக் கோப்பெருந்தேவியாக வாய்த்த கோதையார் 'பெருங்கோப்பெண்டு' என்று புலவர்களால் ஒருங்கு புகழப்பெற்ற பெருங்குணச் செல்வியாராவர். பூதப்பாண்டியனைப் போன்றே அவன் தேவியாரும் தெளிந்த புலமை நலங்கனிந்தவ ராவர். நல்லிசைப் புலமை மெல்லியலார் வரிசையில் ஒருவராக வைத்து எண்ணப்பெறும் திண்ணிய புலமை யுடையர். இத்தகைய புலமை நலத்துடன் திருமகள் போன்ற உருவெழில் நலனும் இனிது படைத்தவர். இவ் உண்மையினைப் பூதப்பாண்டியனே தனது பாடலில் புலப்படுத்துகின்றான்.

அவர்ப்புறம் காணேன் ஆயின் சிறந்த
பேரமர் உண்கண் இவளினும் பிரிக.'

என்று கூறும் அவனது வஞ்சினத்தில் பெருங்கோப் பெண்டின் பேரழகினைப் 'பேரமர் உண்கண் இவள்' என்ற தொடரால் நயம்படப் பேசுகின்றான். பெண் ணிற்குக் கண்களே பேரழகைச் செய்வன. அகன்று விரிந்து அன்பொழுகும் பண்புடன் மைதீட்டப் பெற்ற மலர் விழியுடையாள் இத் தேவி என்று இயம்பிய ஒரு கருத்தாலே அவரது கவினை நன்கு விளக்கினான்.

இருவரின் அரிய இல்லறம்

'கற்றாரைக் கற்றாரே காமுறுவர்' என்னும் தமிழ் மூதாட்டியாரின் அமுதமொழிக்கு அரிய எடுத்துக் காட்டாகப் புலமையாளர் இருவர் கணவனும் மனைவியு மாய்ப் பொருந்துதல் அருமையினும் அருமையாகும். கலைநலம் வாய்ந்த காவலனாகிய பூதப்பாண்டியனும் கற்புநலம் கனிந்த பொற்புடையாராகிய பெருங்கோப் பெண்டும் ஒருவரையொருவர் பிரியாது இனிய இல் லறத்தை நன்கு நடாத்தி வந்தனர். மணியும் ஒளியும் போல் இணைபிரியாது மருவி வாழும் இவர்களது அரிய வாழ்வைக் கண்டு கூற்றுவனும் பொறாமை கொண்டான்.

பாண்டியனுடன் மீண்டும் போர்

பூதப் பாண்டியனுக்குத் தோற்று ஒல்லையூர் நாட்டை இழந்த சோழன் சில்லாண்டுகள் கழிந்த பின்னர், மீண்டும் ஒல்லையூரைக் கைப்பற்றக் கருதி னான். பாண்டியனைப் போரில் எதிர்க்கச் சேரனது துணையை வேண்டினான். சோழனும் சேரனும் தத்தம் படையொடு திரண்டு வந்து ஒல்லையூர் நாட்டு எல்லை யில் போர் முரசு முழக்கினர். முன்பு ஒல்லையூரை மீட்டுப் புகழை நாட்டிய பூதப்பாண்டியன் அப்போர் முரசின் ஒலி கேட்டுப் பொங்கி எழுந்தான். தன் னுடைய நால்வகைப் படைகளையும் நல்லணி வகுத்து நிற்குமாறு பணித்தான். தன் படைவீரர்கட்கு எழுச்சியூட்டும் வீரமொழிகளைக் கிளர்ச்சியொடும் உணர்ச்சி யொடும் விளம்பினான்.

பாண்டியன் பகர்ந்த வஞ்சினம்

'வீரர்களே! நம் பகைவர்களாகிய சேரனும் சோழ னும் நம்மைப் போரில் எதிர்த்தற்கு ஒல்லையூர் நாட்டு எல்லையில் வந்துள்ளனர். அவரைப் போரில் அலற அலறத் தாக்கிப் புறங்காட்டி ஓடுமாறு யான் செய் யாது போனால், இதோ ! என் அருகில் இருக்கும் அழகே உருவான அரசியைப் பிரிந்து வருந்துவேனாக! நடுநிலை பிறழாது நல்லறம் கூறும் எனது அறங் கூறவையத்தே மறம் பயின்ற கொடியோன் ஒருவனை இருத்தி, நாட்டின் அமைதியைக் குலைத்த கொடுங் கோலன் என்று குடிமக்கள் தூற்றும் பழியுறுவேனாக! மாவன், ஆந்தை, அந்துவஞ்சாத்தன், ஆதனழிசி, இயக்கன் முதலான என் கண்போன்ற இனிய நண்பர் களை இழந்து நட்பாடல் தேற்றாத நயமிலி என்று நாட்டினர் தூற்றும் கேட்டினை நண்ணுவேனாக வளமும் நலமும் கெழுமிய பாண்டி நாட்டை யாளும் பெருங்குடி மரபில் பிறத்தல் நீங்கிச் சிறிதும் வளமில்லாத வன்னிலத்தைக் காக்கும் நலமில்லாத இழி குலத்துப் பிறப்பேனாக!'

பாண்டியன் மீளாப் பிரிவு

இங்ஙனம் பூதப்பாண்டியன் தன் பொரு படை வீரர்க்குப் பெருவீரமூட்டும் அரிய வஞ்சின மொழி களைப் பகர்ந்தான். தன் படையுடன் சென்று இரு பெரு வேந்தரையும் ஒல்லையூர் எல்லையில் எதிர்த்தான். பெரும் படையுடன் தாக்கிய அப் போரில் பூதப் பாண்டியன் வெற்றி கொள்ள முடியவில்லை. போர்க் களத்தில் பகைவரால் விழுப்புண்பட்டு இறந்தான் பூதப்பாண்டியன். அவன் தன் தேவியுடன் இணை பிரியாது வாழ்ந்து வந்தவன். அவன் அரசியல் அலுவல் காரணமாகச் சிறுபொழுது பிரிவானாயினும் அதனைத் தாங்குதற்குத் தேவி பெரிதும் வருந்துவார். அத் துணைப் பேரன்பு பூண்ட பெருங்கோப்பெண்டினைத் தனியே விட்டுப் பாண்டியன் மீளாப் பிரிவினை மேற் கொண்டான். இத்தகைய பெரும்பிரிவைப் பொறுப் பரோ பூதப்பாண்டியன் தேவி!

பெருங்கோப்பெண்டின் பெருந்துயர்

பூதப்பாண்டியன் ஒல்லையூர்ப் போர்க்களத்தில் உயிர்நீத்த செய்தியைத் தேவி உணர்ந்தார்; கண்ணீர் சொரிந்து கதறி அழுதார் ; அறிவினும் உருவினும் திருவினும் ஆற்றலினும் பிற நலங்கள் அனைத்தினும் தம்மோடு ஒத்த தலைவனாகிய பாண்டியனைப் பிரிந்து பெருந்தேவி உயிர்வாழ்வரோ? உள்ளமும் உடலும் சோர்ந்து தரையில் விழுந்தார். சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்தார். "கணவன் இறந்தான் என்ற செய்தி அறிந்ததும் தன்னுயிர் கொண்டு அவ னுயிர் தேடுவது போல் உயிரைப் போக்குவதே மகளிர்க்குத் தலையாய கற்புடைமையாகும் ; யான் அதனைச் செய்தேனில்லை; கணவன் இறந்ததும் நெருப்பை மூட்டி அதனுள் பாய்ந்து மாய்வதே இடைக் கற்புடைய மகளிரின் செயலாகும் ; கணவன் இறந்தபின் உலகில் உயிருடன் வாழ்ந்து மறுமையில் அக் கணவனைப் பெறுதற் பொருட்டுக் கைம்மை நோன்பினைக் கைக்கொண்டு இல்லில் இருத்தல் கடைக் கற்புடையார் செயலாகும் ; யானோ தலைக்கற்புடையார் செயலை பாருத்தவறிவிட்டேன். இனி இடைக் கற்புடைய மகளிரைப் போன்று நெருப்புள் குதித்து உயிரை விடுப்பேன்' என்று உறுதி பூண்டார்.

தேவி தீயுள் பாயச் செல்லுதல்

இங்ஙனம் உறுதி பூண்ட அரசியார் ஏவலாளரை அழைத்துக் காட்டின் நடுவே அமைந்த காடுகிழாள் ஆகிய கொற்றவை திருக்கோவிலுக்கு முன்னர் நெருப்பை வளர்க்குமாறு பணித்தார். அங்ஙனமே களிறுகளால் கொண்டு வரப்பெற்ற கரிய முருட்டுக் கட்டைகளை அடுக்கிப் பணியாளர் கொடுநெருப்பை வளர்த்தனர். பெருங்கோப்பெண்டாகிய பூதப்பாண் டியன் தேவி அந் நெருப்பில் விழுதற்காக நீராடிப் புறப்பட்டார். அவருடைய அவிழ்த்துவிட்ட நெறித்த கருங்கூந்தலினின்று நீர் வடிந்து கொண்டிருக்கவும் கண்களினின்று கண்ணீர் ஆறாகப் பெருகவும் காடு நோக்கி மெல்ல நடந்து சென்றார்.

பேராலவாயர் பேரிரக்கம்

கோப்பெருந்தேவியின் அவலக் கோலத்தை ஆங்கு நின்ற மதுரைப் பேராலவாயர் என்னும் பெரும்புலவர் கண்ணுற்றார். அவரது உள்ளம் அனலிற் பட்ட மெழு கென உருகியது. 'ஐயோ ! இவ் அரசியார் சிறுபொழுது கூடக் கணவனைப் பிரிந்திருக்கப் பொறாதவர். பூதப் பாண்டியன், முழவோசை இடையறாது முழங்கிக் கொண்டிருக்கும் பகற்பொழுது தானே இது, காவலர் கண்ணிமையாது காத்து நிற்கும் கடும்பகல் நேரந் தானே இது என்று தேவியைச் சற்றுப் பிரிவானாயினும் பெரிதும் கலங்கி நடுங்கும் பெற்றியரன்றோ ! இத்தகையார் எங்ஙனம் கணவனைப் பிரிந்து உயிர் வாழ்வர்?' என்று உள்ளுருகிப் பாடினார்.

'யானை தந்த முளிமர விறகின்
கானவர் பொத்திய ஞெலிதீ விளக்கத்து
மடமான் பெருநிரை வைகுதுயில் எடுப்பி
மந்தி சீக்கும் அணங்குடை முன்றிலின்
நீர்வார் கூந்தல் இரும்புறம் தாழப்
பேரஞர்க் கண்ணள் பெருங்காடு நோக்கித்
தெருமரும் அம்ம தானே ; தன் கொழுநன்
முழவுகண் துயிலாக் கடியுடை வியனகர்ச்
சிறுநனி தமியள் ஆயினும்
இன்னுயிர் நடுங்கும் தன் இளமைபுறங் கொடுத்தே.'

என்பது மதுரைப் பேராலவாயர், தீப்பாயப் புகுந்த தேவியின் நிலைகண்டு நெஞ்சம் இரங்கிப் பாடிய செஞ் சொற் பாடலாகும்.

சான்றோர் வேண்டுகோள்

பூதப் பாண்டியன் இறந்த பின்னர் பாண்டிய நாட்டு அரசினை நடாத்துதற்குத் தக்கார் எவரும் இலர். ஆதலின், சான்றோர் பலர் ஒருங்கே தோன்றித் தீப்பாயப் புகுந்த தேவியைத் தடுத்து நிறுத்த முயன்ற னர். பெருங்கோப் பெண்டாகிய பூதப் பாண்டியன் தேவி பேரறிவுடையாராதலின் அவரே அரசினை ஏற்று இனிது நடத்தலாம் என்று எண்ணினர். அதனால் 'தேவியே ! நீவிர் நெருப்பினுள் புகாது நாடாளும் பொறுப்பினை ஏற்க வேண்டும்' என்று அவரை விருப் புடன் வேண்டினர். அரசினை இழந்து அல்லலுறும் நாட்டைக் காக்கும் நல்ல நோக்குடன் நாயகன் இறந்த பின்னும் இன்னுயிர் வாழ்தல் அரசர் குல மகளிர்க்குத் தகுமென்று பலவாறு அறிவுறுத்தினர்.

சான்றோர்க்கு இடித்துரைத்தல்

சான்றோர் பலர் தடுத்துக் கூறும் அறிவுரைகளைக் கேட்ட அரசியார் அளவற்ற சினங்கொண்டார். தம்மைத் தடுத்து நிறுத்த முயலும் அன்னவரைப் 'பொல்லாச் சூழ்ச்சியினர்' என்று இடித்துரைத்தார். "கணவன் இறந்தமையால் அவனுடன் உயிர் விடுதலே கற்புடைய மகளிரின் கடமை என்று அறிவுரை கூறுவதன்றோ சான்றோர் கடனாகும். நீவிர் அவ்வாறு கூறாவிடினும் யான் அன்பும் கடமையும் கொண்டு தீப்பாயத் துணிந்தால் அதற்குத் துணையாகவேனும் நிற்க வேண்டும் ; அதனையும் செய்யாது என்னைத் தடுத்து நிறுத்துகிறீர்களே! நீவிர் உண்மையில் சான்றோர் அல்லர்; நுங்கள் செயல் சான்றாண்மைக்கே இழுக்கை விளைப்பதாகும்; மற்றைய மகளிரைப்போல என்னையும் எளிதாக எண்ணிவிட்டீர்களோ? வெள்ளரி விதையைப் போல நீரில் கிடக்கும் பழஞ்சோற்றை நெய் கலவாமல் புளியிட்டு வெந்த வேளைக் கீரையோடும் எள்ளுத் துவையலோடும் கலந்து உண்டு, பருக்கைக் கற்கள் உறுத்தும் பாழுந்தரையில் பாயில்லாமல் படுத் துறங்கி வருந்தும் கைம்பெண்டிரைப் போல வாழும் வாழ்வை யான் விரும்பமாட்டேன்; இக்காட்டிடையே வளர்த்த கடுநெருப்பு என்னைச் சுடுமே என்று நீவிர் நினைக்கின்றீர்கள் : திண்டோள் கொண்ட கொழுநனை இழந்த எனக்கு இந் நெருப்பும் குளிர்ந்த நீர் நிறைந்த தாமரைத் தடாகமும் ஒரு தன்மையனவாகும். ஆதலால் யான் இப்போதே நெருப்பில் வீழ்ந்து உயிர் துறப்பேன்" என்று இங்ஙனம் பூதப்பாண்டியன் தேவி, தடுத்த சான்றோரை இடித்துரைத்துக், கொழுந்துவிட் டெரிந்தபெருந்தீயுள் புகுந்து மாய்ந்தார்.

தேவியின் தீந்தமிழ்ப் புலமை

இங்ஙனம் கணவன் பிரிவிற்கு ஆற்றாது உயிர்நீத்த கோப்பெருந்தேவியாகிய பூதப் பாண்டியன் தேவி இடைக் கற்புக்கு ஏற்றதோர் எடுத்துக்காட்டாவார். இவர் கோப்பெருந்தேவியாகத் திகழ்ந்ததோடு அல்லா மல் அருந்தமிழ்ப் புலவராகவும் விளங்கியது வியத் தற்கு உரியதாகும். இவர் தீயுள் பாயுங்கால் சான் றோரை விளித்துப் பாடிய,

'பல்சான் றீரே பல்சான் றீரே!
செல்கஎனச் சொல்லாது, ஒழிக என விலக்கும்
பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே!
அணில் வரிக் கொடுங்காய் வாள்போழ்ந் திட்ட
காழ்போல் நல்விளர் நறுநெய் தீண்டாது
அடையிடைக் கிடந்த கைபிழி பிண்டம்,
வெள்ளெட் சாந்தொடு புளிப்பெய்து அட்ட
வேளை வெந்தை வல்சி யாகப்,
பரல்பெய் பள்ளிப் பாயின்று வதியும்
உயவல் பெண்டிரேம் அல்லேம் மாதோ!
பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம்
நுமக்கு அரிதாகுக தில்ல/ எமக்கு, எம்
பெருந்தோள் கணவன் மாய்ந்தென, அரும்பற
வள்ளிதழ் அவிழ்ந்த தாமரை
நள்ளிரும் பொய்கையும் தீயும் ஓரற்றே '.
-- புறம் - 246

என்னும் பாடல் இவரது புலமைச் சிறப்பையும் புகழ் மிகுந்த கற்பு மாண்பையும் நன்கு புலப்படுத்துவதாகும்.
------------------

8. நெடுஞ்செழியன் தேவி

சிலம்பில் மூவர்

நெஞ்சை யள்ளும் செஞ்சொற் காவியமாகிய சிலப்பதிகாரம் மூன்று பெரும்பிரிவுகளைக் கொண்டது. முதற்பெரும் பிரிவாகிய புகார்க்காண்டம் சோழவேந்தர் பெருமையைச் சொல்லும். இரண்டாவது பெரும் பிரிவாகிய மதுரைக் காண்டம் பாண்டியர் சிறப்பினை விரித்துப் பகரும். மூன்றாம் பிரிவாகிய வஞ்சிக் காண் டம் சேர மன்னரின் வீரச் சிறப்பினை விளக்கும்.

நெடுஞ்செழியன் பெருவீரம்

இங்ஙனம் மூவேந்தர் பெருமையினை எடுத்து மொழியும் சிலப்பதிகாரத்தில் மதுரைக் காண்டத்தால் போற்றப்பெறும் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் எனப்படுவான். அவன் தமிழக எல்லைக்கண் இருந்து தமிழ் மன்னர்க்கு இன்னல் விளைத்து வந்த ஆரிய அரசர்களையும் அவருடைய பெரும்படைகளையும் போரில் எதிர்த்துக் கொன்று தொலைத்தான். அங்ஙனம் அவன் ஆரியப் படையினை வெற்றிகொண்ட காரணத்தால் அவனை 'ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன்' என்று ஆன்றோர் போற்றினர்.
நெடுஞ்செழியன் கலையார்வம்

போரில் வல்ல வீரனாகிய நெடுஞ்செழியன் நாட்டில் மக்கள் அமைதியான வாழ்வை நடத்தவும் நல்லாட்சி நிலைபெறவும் அந்நாட்டு மக்கள் எல்லோரும் கல்விச் செல்வத்தைப் பெற வேண்டும் என்று கருதினான். அவன் தனது கருத்தைத் தன் காலத்து மக்களும் தன் நாட்டு மக்களுமேயன்றிப் பிற்கால மக்களும் பிற நாட்டு மக்களும் உணர்ந்து உய்ய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தால் சிறந்ததோர் பாடலாக அதனைப் பாடி வைத்தான். அங்ஙனம் நெடுஞ்செழியன் உலகினர்க்கு உரைத்ததோடு மட்டும் நில்லாமல் தன் நாட்டு மக்களுக்கெல்லாம் சிறந்த கல்வியை ஊட்டினான். அதனால் அவனது அரசவைக்கண் சீத்தலைச் சாத்தனார் போன்ற செந்தமிழ்ப் புலவர் இருந்து அணிசெய்தனர்.

கல்விச் சிறப்பு

'தாய், தான் பெற்ற மக்கள் பலருள் கல்வியால் சிறந்தவனிடத்தே மிகுந்த அன்பைக் காட்டுவாள். பொல்லாத பிள்ளையாக இருந்தாலும் தள்ளாத நல்லியல்பை உடையவளாகிய தாய் கல்விச் சிறப்பின் காரணமாகப் பிள்ளைகளிடத்துக் காட்டும் அன்பில் வேற்றுமை இருக்கத்தான் செய்யும். ஒரே குடியில் பிறந்த மக்கள் பலரில் பருவத்தால் மூத்தவனை அறிவுடையோர் வருகவென்று வரவேற்று உபசரியார். அவருள் கற்றவன் எவனோ அவன் காட்டும் நன்னெறியை அரசனும் கடைப்பிடித்து ஒழுகுவான். அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்னும் நால்வகைக் குலத்துள்ளும் தாழ்குலத்தில் பிறந்த ஒருவன் கல்வியிற் பெரியவனாயின் மேற்குலத்தவனும் அவனை வழிபட்டுப் பின்பற்றி ஒழுகுவான். ஆதலின் எல்லோரும் கல்வி கற்றல் வேண்டும். ஆசிரியனுக்குத் துன்பம் வந்தவிடத்தில் அதனைப் போக்கத் துணை புரிந்தும், அவனுக்கு வேண்டும் அரும்பொருளைக் கொடுத்து உதவியும், அவன் விரும்பும் பணிவிடைகளை வெறுப்பின்றிச் செய்தும் அவன்பால் கல்வி கற்றல் நலமாகும்.'

இங்ஙனம் கல்விச் சிறப்பையும் கற்றலின் இன்றி யமையாமையையும் நன்றாக விளக்கிய பாண்டியன் நெடுஞ்செழியன் தானும் பெரும்புலவனாக விளங்கி யவன். அவன் கலைச்சுவையினைக் கண்டுணர்ந்து துய்த்ததோடன்றி மற்றவரும் அக்கலைச்சுவையைப் பெறுதற்கு வழி வகுத்தான். அவன் அற நூல்களில் கற்றுணர்ந்தவாறே அரசையும் வாழ்வையும் அழ குறவும் திறம் பெறவும் நடத்தினான்.

மதுரைக்குக் கோவலன் வருகை

இம்மன்னன் மதுரை மாநகரிலிருந்து அறநெறி வழுவாது பாண்டிய நாட்டை ஆண்டு வருங்கால் காவிரிப்பூம்பட்டினத்தில் தோன்றிய பெருங்குடி வணிகனாகிய மாசாத்துவான் மகன் கோவலன் தன் மனைவியாகிய கண்ணகியுடன் அந்நகரை அடைந்தான். அவன் தன் மனைவியின் காற்சிலம்பை விற்றுக் கிடைத்த பொன்னை வணிகமுதலாகக் கொண்டு வாணிகம் நடத்தும் விருப்புடன் அங்கு வந்தான்.

கோவலனும் பொற்கொல்லனும்

சமணப் பெண் துறவியாகிய கவுந்தியடிகளின் துணையைப் பெற்று மதுரை மாநகரை அடைந்த கோவலனும் கண்ணகியும் அந்நகரின் புறஞ்சேரியில் வாழ்ந்த மாதரியின் மனையகத்தே தங்கினர். அங்கு இருவரும் தனிமனையொன்றில் நனிசுவை உணவு சமைத்து உண்டு களைப்பாறிய பின், கோவலன் தன் மனைவியாகிய கண்ணகியின் காற்சிலம்பை எடுத்துக் கொண்டு பொன் வாணிகம் நடைபெறும் கடைத்தெரு வழியே நடந்து சென்றான். இடைவழியில் ஆரவாரத்துடன் பொற்கொல்லர் பலர் புடைசூழ நடைபயின்று வரும் விருது பெற்ற பொற்கொல்லன் ஒருவனைக் கண்ணுற்றான். இவன் அரண்மனையைச் சார்ந்த, தொழில் நுட்பம் தேர்ந்த பொற்கொல்லன் போலும் என்று எண்ணிக் கோவலன் அவனை நண்ணினான். கையி லிருந்த சிலம்பினை அவன்பாற் காட்டி, 'இச்சிலம்பினை நீ விலைமதிக்க வல்லாயோ?' என்று வினவினான்.

சிலம்பினை நோக்கிய பொற்கொல்லன் தான் வல்லனாதலைப் பணிவுடன் தெரிவித்து நின்றான். உடனே கோவலன் அச்சிலம்பினைப் பொற்கொல்லன் கையிற் கொடுத்தான். அதனை வாங்கிய பொற் கொல்லன் அதன் எழிலமைந்த தொழில் நுட் பத்தைக் கூர்ந்து நோக்குவான் போலப் பன்முறை முன்னும் பின்னும் மாறிமாறி நோக்கினான். 'இது கோப்பெருந்தேவிக் கல்லது பிறர்க்கு ஏற்புடைத் தன்று; இதனை யான் அரசற்குத் தெரிவித்து வருமள வும் நீவிர் இவ்விடத்தில் இருப்பீராக' என்று கூறி, ஒரிடத்தைக் கோவலனுக்குக் காட்டி அகன்றான். அவன் முன்னர்ப் பாண்டியன் கோப்பெருந்தேவியின் சிலம்பு ஒன்றை வஞ்சித்த கொடியவனாதலின் இச் சிலம்பினை மன்னனுக்குக் காட்டித் தப்பித்துக் கொள்ள முயன்றான். பாண்டியன் அரண்மனையை நோக்கி விரைந்து நடந்தான்.

பொற்கொல்லன் புரவலனைக் காண்டல்

பொற்கொல்லன் அரண்மனையுள் புகுந்த சமயத் தில் பாண்டியன் தன் தேவியின் ஊடல் தணித்து இன்பூட்டும் வேட்கையுடன் அந்தப்புரம் நோக்கி விரைந்து சென்று கொண்டிருந்தான். அந்நிலையில் பொற்கொல்லன் அரசனை வணங்கி வாழ்த்தி, "அரசே நம் அரண்மனையிலிருந்த சிலம்பைத் திருடிய கள்வன் அடியேனுடைய குடிசையில் வந்திருக்கிறான்," என்று கூறினான். ஊழ்வினை பயனூட்டும் காலமாதலின் பாண்டியன் சிறிதும் சிந்தியாமல் காவலாளரைக் கூவி அழைத்தான். 'தேவியின் சிலம்பு இவன் கூறும் கள்வன் கையிடத்தே இருக்குமாயின் அவனைக் கொன்று அச்சிலம்பைக் கொண்டு வருக' என்று கட்டளையிட்டு நடந்தான்.

காவலாளர்க்குக் கோவலனைக் காட்டல்

பொற்கொல்லன் தன் எண்ணம் பலித்ததென்று கருத்துட்கொண்டான். அங்கு நின்ற காவலாளருடன் கோவலன் இருந்த இடத்தை அடைந்தான். இவர்கள் அரசன் ஆணையால் சிலம்பு காண வந்தவர்கள்' என்று காவலாளரைக் கோவலனுக்கு அறிமுகம் செய்து வைத்தான். சிலம்பினை அவர்கட்குக் காட்டுமாறு செய்தான். அவர்களைத் தனியே அழைத்துச் சென்று சிலம்பின் சிறப்பை விளம்புவான் போன்று கோப்பெருந்தேவியின் சிலம்புடன் ஒப்புமை கூறினான்.

கோவலன் கொலையுண்ணல்

அக்காவலாளர் கோவலன் முகக்குறி முதலிய வற்றைக் கூர்ந்து நோக்கினர். 'இவன் கள்வனல்லன்; கொலைப்படுதற்கு உரியனுமல்லன்' என்று கூறிப் பொற்கொல்லன் கருத்தை மறுத்தனர். அது கண்ட பொற்கொல்லன் அக்காவலாளரை இகழ்ந்துரைத் தான். 'இவன் கள்வனே' எனப் பற்பல காரணங்கள் காட்டி வற்புறுத்தினான். அப்பொழுது அவருள் கொலையஞ்சாத கொடியவன் ஒருவன் விரைந்து சென்று கோவலனைத் தன் வாளால் வீசினான். ஊழ் வினை உருத்து வந்தமையால் கோவலன் வெட்டுண்டு வீழ்ந்தான். பாண்டியன் நெடுஞ்செழியனது வளையாத செங்கோல் வளைந்தது. நிலமகள் நீள் துயரடைந்தாள்.

கோப்பெருந்தேவியின் களவு

கோவலன் கொலையுண்பதற்கு முந்திய நாள் இரவில் பாண்டியன் கோப்பெருந்தேவி கொடியதொரு கனவு கண்டாள். மன்னனது வெண்கொற்றக் குடையும் செங்கோலும் இற்றுத் தரையில் விழுந்தன. கொற்ற வாயிலிற் கட்டிய மணி தட்டாது ஒலித்தது. கதிரவனைக் காரிருள் விழுங்கியது. இரவில் வானவில் எழுந்தது. பகலில் விண்மீன்கள் எரிந்து விழுந்தன, எட்டுத் திக்கும் அதிர்ந்தன. இங்ஙனம் அவள் கண்ட கனவினைத் தோழியரிடம் கூறினாள். 'இதனால் நம் நாட்டிற்கும் அரசனுக்கும் வரக்கடவதாகிய துன்பம் ஒன்று உண்டு ; அதனை யாம் அரசனிடம் அறிவிப் போம்,' என்று கூறிக் கோப்பெருந்தேவி அரசவை குறுகினாள். அரியணையில் அமர்ந்திருந்த பாண்டியன் பக்கம் சார்ந்து, தானும் அவனருகில் அமர்ந்தாள். தான் இரவில் கண்ட கனவினை அரசனுக்கு அறி வித்து என்ன நேருமோ? என நெஞ்சம் நடுங்கினாள். தேவியின் நடுக்கம் கண்ட மன்னன் இன்மொழிகளால் அன்னவளுக்கு ஆறுதல் கூறிக்கொண்டிருந்தான்.

கண்ணகி மன்னனைக் காணுதல்

இவ்வேளையில் வாயிற் காவலன் ஒருவன் அரசவை புகுந்து அரசனை வணங்கி வாழ்த்தினான். அவன் வாயிலில் வந்து நிற்கும் கண்ணகியின் வரவை அரசற்கு அறிவித்தான். அரசன் அவளை உள்ளே அனுப்புமாறு அக்காவலனைப் பணித்தான். கண்ணீரும் கம்பலையுமாய்க் கண்ணகி மன்னன் முன்னர் வந்து நின்றாள்.

கண்ணகி வழக்குரை

அவளைக் கண்ணுற்ற மன்னவன், "கண்ணீர் பெருக எம் முன் வந்து நிற்கும் பெண்ணே ! நீ யார்?" என்று வினவினான். உடனே அக்கண்ணகி, "ஆராய்ச்சி இல்லாத அரசனே ! கூறுகின்றேன். விண்ணவரும் வியக்குமாறு ஒரு புறாவின் துயரினைப் போக்க வேண்டித் துலை புக்க சிபி வேந்தனும், கன்றினை இழந்த பசுவின் கண்ணீர் தன் நெஞ்சைச் சுட்டமையால் அக் கன்றுக்கு ஈடாகத் தன் ஒரே மகனைத் தேர்க்காலில் கிடத்திக் கொன்று முறை செய்த மனு வேந்தனும் செங்கோல் செலுத்திய சிறப்புடைய புகார் என் பதி யாகும். அப்பதியில் பெருங்குடி மரபில் தோன்றிய மாசாத்துவான் என்னும் வணிகன் மகனாகப் பிறந்து, வாழ்தல் வேண்டி ஊழ்வினை செலுத்த நின்னகர் அடைந்து, என் சிலம்பினை விற்கச் சென்று நின்னால் கொலைக்களப்பட்ட கோவலனுக்கு மனைவியாவேன் யான்; என் பெயர் கண்ணகி,'' என்று கூறி நின்றாள்.

கொற்றவன் குற்றம் உணர்ந்து இறத்தல்

கண்ணகியின் வழக்கைக் கேட்ட மன்னவன், "கள்வனைக் கொல்லுதல் கடுங்கோலன்று, அஃது அரச நீதியே" என்று ஓதினான். அதுகேட்ட கண்ணகி தன் கணவன் கள்வனல்லன் என்பதை அறிவித்தற் பொருட்டுத் தன் சிலம்பிலுள்ள பரல் மாணிக்கம் என்றாள். உடனே அரசன் தன் தேவியின் சிலம்பிலுள்ள பரல் முத்தென்று மொழிந்து, கோவலனிடமிருந்து பெற்ற சிலம்பைக் கொணர்வித்தான். கண்ணகி அதனைக் கையில் எடுத்து ஓங்கித் தரையில் எறிந்தாள். அப்பொழுது அதனுள் இருந்த மாணிக்கப் பரல்கள் மன்னன் முகமெல்லாம் சென்று தெறித்தன. அவற் றைக் கண்ட அரசன் பெரிதும் கலங்கினான். அவனது வெண்கொற்றக் குடை தாழ்ந்தது. அவன் கையிலிருந்த செங்கோல் தளர்ந்து தரையில் விழுந்தது. ' அந்தோ ! இழிந்த பொற்கொல்லன் சொல்லைக் கேட்ட யானோ அரசன்! யானே கள்வன்! அரும்புகழ் படைத்த பாண்டியர் பெருங்குலம் என்னால் ஆறாத பழியுற்றதே ! இன்றோடு என் வாழ்நாள் முடிவதாக !' என்று சொல்லித் துயரால் மயங்கி அரியணையிலேயே விழுந்து உயிர் துறந்தான் பாண்டியன்.

கோப்பெருந்தேவி உயிர்நீத்தல்

கணவனாகிய பாண்டியன் மயங்கி விழுந்ததைக் கண்ட கோப்பெருந்தேவி உள்ளம் குலைந்தாள்; உடலம் நடுங்கினாள் ; ஓவென அலறினாள் ; கணவனை இழந் தோர்க்குக் காட்டுவ தில்லென்று அவன் இணையடி களைத் தொழுது தானும் வீழ்ந்து மாய்ந்தாள். தந்தை, தாய், உடன் பிறந்தார் போன்றவர்களை இழந்தால் அம் முறையினையுடைய பிறரைக் காட்டி ஆறுதல் கூறுதல் தகும். கணவனை இழந்த மகளிர்க்கு அம்முறை சொல்லிப் பிறரைக் காட்டுதல் இயலாதன்றோ! ஆதலின் கோப்பெருந்தேவி, கணவனை இழந்தோர்க்குக் காட்டுவ தில்லென்று தானும் கணவனுடன் உயிர் நீத்தாள். இங்ஙனம் கணவனுடன் உயிர்நீத்த கோட் பெருந்தேவி உத்தமக் கற்புடைய பத்தினியாகம் பாராட்டப்படுகின்றாள்.
---------------

9. நெடுமாறன் தேவி

சைவத்தின் சால்பு

எந்நாட்டினரும் வணங்கும் இறைவனைத் தென் னாட்டினர் சிவன் என்று வாழ்த்தி வணங்கினர். தென்னாடுடைய சிவனே போற்றி' என்று திருவாசக ஆசிரியர் இறைவனைப் பரவிப்பணிந்தார். சிவபெருமா னைத் 'தென்பாண்டி நாடன்' என்றே குறித்தருளினார் அவ் ஆசிரியர். சிவனைத் தெய்வமாகக் கொண்டு வழி படும் சமயத்தைச் சைவம் என்பர் சான்றோர். தமிழர் மேற்கொண்டு ஒழுகிய சமயங்கள் பலவற்றுள் தலையாயது சைவமே. அது பழமையும் பெருமையும் வாய்ந்த சமயமாகும்.

சமணரும் பாண்டியனும்

தமிழகத்தே சைவ சமயம் தழைத்தோங்கியிருந்த பண்டை நாளில் வடநாட்டிலிருந்து எண்ணாயிரம் சமணர்கள் தென்னாட்டில் புகுந்தனர். அவர்கள் காட்டில் பல்லாண்டுகளாக மழையின்மையால் வளமும் நலமும் சுருங்கி மக்கள் மிக்க வாட்டமுற்றனர். அதனால் தென்னாடு புகுந்த எண்ணாயிரம் சமணரும் பாண்டியனைச் சரண் புகுந்தனர். அந்நாளில் பாண்டி நாட்டை ஆண்ட மன்னன், மாறன் என்பான். இவன் மாறவர்மன் என்ற பட்டம் புனைந்தவன். இவனைச் சுந்தர பாண்டியன் எனவும், கூன் பாண்டியன் எனவும் புராண நூல்கள் குறிப்பிடும். சைவசமய குரவருள் ஒருவராகிய சுந்தரமூர்த்திகள் தாம் பாடிய திருத் தொண்டத் தொகைப் பதிகத்துள்,

நிறை கொண்ட சிந்தையால் நெல்வேலி வென்ற
நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்.'

என்று இம் மாறனைப் பாராட்டியுள்ளார்.

மங்கையர்க்கரசியார் மாதேவியாதல்

இப்பாண்டியன் சேரர்களையும் பரவரையும் குறு நில மன்னர் சிலரையும் பாழி, நெல்வேலி, செந்நிலம் முதலான இடங்களில் வென்றவன். இவன் சோழ னுடன் போர் புரிந்து ஒரு பகலில் அவன் தலைநகராகிய உறையூரைக் கைப்பற்றினன் என்று வேள்விக்குடிச் செப்பேடுகள் விளக்குகின்றன. இவனது படைவலிக்கு ஆற்றாது தோற்றோடிய சோழவேந்தன் மணிமுடிச் சோழன் என்பான். நெடுமாறன் அவனை அடுபோரில் வெற்றி கொண்ட பின்னர் அவன் தன் மகளாராகிய மங்கையர்க்கரசியாரைப் பாண்டியனுக்கு மணம் செய்து கொடுத்தான். மங்கையர்க்கரசியார் நெடு மாறன் கோப்பெருந்தேவியாயினார். அதன் பின்னர்ப் பாண்டியன் சோழனுடன் கொண்ட பகைமை ஒழிந்து நட்புடன் பழகினான். பன்னாட்டு மன்னரும் தனக்குத் திறை செலுத்தப் பாண்டியன் நெடுமாறன் வேந்தர் வேந்தனாய்ச் சிறப்புற்று வாழ்ந்தான்.

அரசியார், அமைச்சர் கவலை

நெடுமாறன் ஆட்சியில் அமைச்சராய் விளங்கி யவர் குலச்சிறையார் என்னும் கூர்த்த மதியுடையார். இவர் நாட்டின் நலத்தில் பெரிதும் நாட்டமுடையவர். வடநாட்டிலிருந்து வந்துற்ற சமணர்க்குப் புகலிடம் அளித்த பாண்டியன், அவர்கள் மேற்கொண்டு ஒழுகிய சமண் சமயத்தைத் தானும் பற்றியொழுகத் தலைப் பட்டான். சமணர் வலைப்பட்ட மாறனை மதியமைச்சராகிய குலச்சிறையார் நல்வழியில் செலுத்த முயன்றார். சைவ சமயத்தில் ஆழ்ந்த பற்றுப் பூண்ட பாண்டிமா தேவியாராகிய மங்கையர்க்கரசியாரும் மன்னனது மாற்றம் கண்டு மயங்கினார். அறிவிற் சிறந்த அமைச்சருடன் கலந்து யாது செய்வதென ஆராய்ந்தார். 'மன்னன் எவ்வழி மன்னுயிர் அவ்வழி' என்று ஆன்றோர் கூறுவர். மன்னன் சமண் சமயம் சார்ந்த தால் நாளடைவில் பாண்டி நாடே சமணிருள் சூழ்ந்த நாடாக மாறிவிடுமே என்று மனங் கவன்றனர்.

'அறிகொன்று அறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன்.'

என்று அமைச்சனது கடமையைத் திருவள்ளுவர் அறிவுறுத்தினார். அரசன் அறிவுடையார் கூறும் அறிவுரைகளைக் கேளாமல், தானும் அறியாமல் இருப் பானாயினும் உறுதி பயக்கும் உண்மைகளை எடுத்து இடித்துரைக்க வேண்டுவது அமைச்சனின் இன்றி யமையாத கடமையாகும்.

குலச்சிறையார் உறுதி கூறல்

ஆதலின், கடமையில் தவறாத அமைச்சராகிய குலச்சிறையாரும் பாண்டியனை அடுத்துப் பரசமயம் புகுவது படுகுழியில் விழுவதற்கு ஒப்பாகும் என்று பலவாறு இடித்துரைத்தனர். அவர் உரைகளைப் பாண்டியன் சிறிதும் பொருட்படுத்த வில்லை. அவன் மங்கையர்க்கரசியாரின் நன்மொழிகளையும் கேட்க மறுத்து விட்டான்.

திருஞானசம்பந்தர் சிறப்பைத் தெரிதல்

இந்நாளில் சோழ நாட்டிலுள்ள சீர்காழிப் பதியில் தோன்றிய திருஞானசம்பந்தர் என்னும் செந்தண்மை பூண்ட அந்தணச் சிறுவர் சிவனருள் பெற்ற செல்வ ராகத் திகழ்ந்தனர். சிவபெருமான் திருவருளால் உமாதேவியார் உவந்தளித்த ஞானப்பாலை உண்டு, மூன்றாண்டுப் பருவத்திலேயே கலைஞானம் கைவரப் பெற்ற அருளாளராக அவர் விளங்கினார். அத னாலேயே ஞானசம்பந்தர் என்று நல்லோர் ஏத்தும் சீர்த்தி எய்தினார். நற்றமிழ் வல்ல நாவலராய், நல்லிசை வல்ல பாவலராய்த் திகழ்ந்த திருஞான சம்பந்தர், தம்மை யொத்த செம்மை வாய்ந்த சிவத் தொண்டராகிய திருநாவுக்கரசருடன் திருமறைக்காடு என்னும் தலத்திற்கு எழுந்தருளியிருக்கும் செய்தியை ஒற்றர் வாயிலாகக் கேள்வியுற்றனர் குலச்சிறையார்.

அச்செய்தியினைப் பாண்டிமாதேவியாராகிய மங்கையர்க்கரசியாருக்கு அமைச்சராகிய குலச்சிறை யார் அறிவித்தனர். அப்பெருமானார் ஆற்றி வரும் அற்புதங்களையும் அரிய சைவத் திருப்பணிகளையும் பற்றி உரையாடி மகிழ்வுற்றனர். இத்தகைய திருஞானசம்பந்தர், நம் பாண்டி நாட்டிற்கு எழுந் தருளினால் சமணிருள் நீங்கிச் சைவப்பேரொளி பரவும் என்று இருவரும் கருதினர்.

சம்பந்தருக்குத் தூதனுப்புதல்

உடனே, அவர்கள் அப்பெருமானை மதுரை மாநகருக்கு எழுந்தருளுமாறு செய்யத், தக்க ஏவலா ளரை அவர்பால் தூது விட்டனர். அவர்களும் திருமறைக்காட்டை அடைந்து சீர்காழிச் செல்வராகிய ஞானசம்பந்தப் பெருமானின் திருவடிகளைத் தொழுதனர். அவர் திருமுன்பு பாண்டிமாதேவியாரும் குலச்சிறையாரும் கூறி யனுப்பிய வேண்டுகோளைப் பணிவுடன் தெரிவித்தனர். பாண்டி நாட்டில் சைவப் பேரொளி பொங்குமாறு தேவரீர் எழுந்தருள வேண்டும் என்று பணிவுடன் வேண்டி நின்றனர்.

நாவுக்கரசர் தடுத்தல்

பாண்டிமாதேவியாரும் குலச்சிறையாரும் கூறி விடுத்த வேண்டுகோளைத் திருஞானசம்பந்தர் நிறை வேற்றத் திருவுளம் பற்றினார். உடனே அவர் தமது உள்ளக் கருத்தினை உடனிருந்த திருநாவுக்கரசரிடம் தெரிவித்தார். அது கேட்ட திருநாவுக்கரசர் திடுக்குற்றனர். 'அந்தோ ! சமணர் எதற்கும் அஞ்சாத வன்னெஞ்சம் படைத்த வஞ்சகர் அன்றோ! இளம் பிள்ளையாராகிய ஞானசம்பந்தருக்கு யாது நேருமோ?' என்று நெஞ்சம் பதைத்தனர். 'பெருமானே! நீவிர் இப்பொழுது மதுரை மாநகருக்கு எழுந்தருளல் இனிய தன்று; நாளும் கோளும் நல்லனவாக இல்லை' என்று அன்புடன் அவர்பால் சொல்லியருளினார்.

சம்பந்தர் மதுரைக்கு எழுந்தருளுதல்

திருநாவுக்கரசரின் அன்பு மொழிகளைக் கேட்ட சம்பந்தப்பெருமான் புன்முறுவல் பூத்தார். 'சிவனார் சேவடி வணங்கும் நமக்கு நாளும் கோளும் என்ன தீங்கு செய்ய இயலும்? எல்லாம் நல்லனவாகவே அமையும்' என்று கூறிக் கோளறு பதிகம் பாடினார். பின்னர்த் திருநாவுக்கரசர்பால் விடைபெற்றுத் திரு மறைக்காட்டு இறைவனைப் பணிந்து முத்துச்சிவிகை யில் ஏறி மதுரைக்குப் புறப்பட்டனர். இடையில் உள்ள பல தலங்களையும் தரிசித்து வழிபட்டவாறே மதுரையை நெருங்கினார்.

நெடுமாறன் தேவி திருஞானசம்பந்தரை வரவேற்றல்

அந்நாளில் மதுரையைச் சூழ்ந்துள்ள ஆனைமலை முதலான எட்டு மலைகளிலும் வாழ்ந்த சமணர்கள் தீக்கனவும் தீக்குறியும் கண்டு திகைத்தனர். மங்கை யர்க்கரசியாரும் குலச்சிறையாரும் மங்கலக் கனாக்களும் மகிழ்வூட்டும் நன்னிமித்தங்களும் கண்டு உவகை கொண்டனர். திருஞானசம்பந்தர் மதுரை நகரத்தின் எல்லையை வந்தடைந்த நற்செய்தி கேட்ட மங்கையர்க் கரசியார், குலச்சிறையாரிடம் சம்பந்தப்பெருமானை எதிர்கொண்டு வணங்கி அழைத்து வருமாறு பணித் தார். குலச்சிறையார் நகரின் எல்லையை நண்ணித் திருஞானசம்பந்தர் எழுந்தருளுவதைக் கண்கள் களி கூரத் தரிசித்து, அடியார் திருக்கூட்டத்தின் எதிரே விழுந்து வணங்கினார். அவரை அன்புடன் வரவேற்று முகமன் மொழிந்து அகமகிழ்வுடன் அழைத்துக் சென்றனர்.

ஆலவாய்க் காட்சி

அவர்பால் நலம் உசாவி நல்வாழ்த்துக் கூறி யருளிய ஞானசம்பந்தர், 'இறைவன் எழுந்தருளும் ஆவலாய் எம்மருங்குள்ளது?' என்று வினவினார். அது கேட்ட அடியவர் ஒருவர், 'அதோ தோன்றும் வான ளாவிய கோபுரத்துடன் குலவும் திருக்கோவிலே ஆலவாய் ஆகும்' என்று பணிந்து மொழிந்தார். உடனே திருஞானசம்பந்தர் தம் சிறு மலர்க் கைகளைக் குவித்து நிலமிசை நெடிது வீழ்ந்து வணங்கி எழுந் தார். 'மங்கையர்க்கரசி நாள்தோறும் பணிசெய்து பரவும் ஆலவாய் இதுதானோ!' என்று வியந்து பதிகம் பாடியருளினார்.

'மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை
      வரிவளைக் கைம்மட மானி
பங்கயச் செல்வி பாண்டிமா தேவி
      பணி செய்து நாள்தொறும் பரவப்
பொங்கழல் உருவன் பூதநா யகன் நால்
      வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற் கண்ணி தன்னொடும் அமர்ந்த
      ஆலவாய் ஆவதும் இதுவே !'

இங்ஙனம் ஆலவாய்ப் பெருமானைத் திருஞானசம் பந்தர் அகமுருகிப் பாடியருளிய அருந்தமிழ்ப் பதிகத் தில் மங்கையர்க்கரசியாராகிய நெடுமாறன் கோப் பெருந்தேவியை நெஞ்சாரப் போற்றி யுள்ளார். பாண்டிமாதேவியாரை ஆலவாய்ப் பதிகப் பாக்களில் அழகுறப் பாராட்டி யருளிய ஞானசம்பந்தர் திருக் கோவிலை அடைந்தார். ஆலவாய் அமர்ந்த அண்ணலை அங்கயற்கண்ணி தன்னொடும் இன்னிசைப் பதிகம் பாடிப் பரவிப் படிமிசை விழுந்து பணிந்தார். அவர் திருவாயிலை அடைந்த பொழுது அங்குத் தலைமேல் மலர்க்கை குவித்து வணங்கி நிற்கும் மங்கையர்க்கரசி யாரைக் குலச்சிறையார் ஞானசம்பந்தருக்குக் காட்டி னார். அவரைக் கண்டு பிள்ளையார் எதிர்செல்ல அரசியாரும் எதிர்வந்து மலரடியில் விழுந்து வணங்கினார்.

சம்பந்தர் அரசியாரைப் பாராட்டுதல்

பிள்ளையாரை வணங்கி எழுந்த வளவர்கோன் பாவையார் மகிழ்ச்சிப்பெருக்கால் வாய் குழறக் கண்ணீர் மல்க, அடியேனும் என் கணவரும் முன் செய்த தவம் என்கொல்' என்று கூறி நின்றார். அதற்கு விடை பகர்வார் போலப் பிள்ளையார், அரசியாரை நோக்கிச், சுற்றிலும் பரசமயம் சூழ்ந்திருக்கவும் சிவத்தொண்டு புரிந்து கொண்டிருக்கும் தங்களைக் கண்டு செல்லவே வந்தோம்' என்று அன்புரை அருளினார். பின்னர் அங்கு நின்ற அடியார் திருக்கூட்டத்திற்கெல்லாம் அருட்பார்வை செய்து முத்துச்சிவிகை ஏறி, அவர்க்கென அமைத்திருந்த திருமடத்தினை அடைந்து அங்கு எழுந்தருளினர்.

சமணர் சூழ்ச்சி

மதுரை மாநகரைச் சூழ்ந்து வாழ்ந்து வந்த சமண ரெல்லாரும் அன்று இரவில் ஒன்று சேர்ந்தனர். சம்பந் தப்பெருமான் எழுந்தருளியிருந்த திருமடத்தில் சிவம் பெருக்கும் பேரொலி கிளர்ந்து எழுவதைக் கேட்டு வருந் தினர். மன்னவன் அரண்மனை அடைந்து சிவ வேதிய ராகிய திருஞானசம்பந்தரின் வருகையை அவனுக்கு அறிவித்தனர். 'அவ் வேதியச் சிறுவன் எங்களுடன் வாது செய்ய வந்துள்ளானாம்'' என்று இகழ்ந்து பேசினர். பாண்டியனுடன் அச்சமணர்கள் சம்பந்த ருக்கு யாது கேடு சூழ்வதெனச் சூழ்ந்தனர். 'அவன் உறையும் மடத்திலே விஞ்சையால் தீயை உண்டாக்கு வோம்; அதைக் கண்டு அவன் அஞ்சி அகல்வான்' என்று துணிந்து மொழிந்தனர்.

திருமடத்தில் தீவைத்தல்

ஞானசம்பந்தர் தங்கிய திருமடத்தில் தீ வைத் தற்கு அரசன் இசைவு பெற்ற சமணர், அங்குச் சென்று தங்கள் மந்திர வலியால் தழல் பற்றுமாறு செய்யப் பெரிதும் முயன்றனர். அவர்கள் மந்திரம் பயன் தாராமையால் தந்திரமாக நெருப்பைக் கொண்டு சென்று மடத்தில் பற்ற வைத்து மறைந்தனர். மடத்தின் ஒரு புறத்தில் தீப் பற்றியதைத் தெரிந்த அடியார் விரைந்து அதனை அணைத்தனர். அச்செய்தியைத் திருஞானசம்பந்தருக்குத் தெரிவித்தனர். அது கேட்டு ஞானசம்பந்தர் வருந்தினார். 'என் பொருட்டு இவ் அடியார்கட்கும் அவலம் உண்டாயிற்றே' என்று இரங்கினார். 'இச்செயலுக்குப் பாண்டியனும் இசைந் துள்ளானாதலின் இதன் பயனை அவன் அடைவானாக! எனினும் அவனுக்குக் கேடு வராமல் நல்லறிவு கொளுத் தும் அத்துணையே இதன் பயனை எய்த வேண்டும்' என்று திருவுளம்பற்றினார்.

'செய்ய னே திரு ஆலவாய் மேவிய
ஐயனே அஞ்சல் என்றருள் செய்எனைப்
பொய்ய ராம் அமணர் கொளுவுஞ்சுடர்
பைய வேசென்று பாண்டியற் காகவே.'

என்று பைந்தமிழ்ப் பதிகம் பாடியருளினார்.

சம்பந்தர் தீயைப் பணித்தல்

திருமடத்தில் பற்றிய தீயினைப்பையவே சென்று பாண்டியனைப் பற்றுமாறு பணித்தருளிய திருஞான சம்பந்தப் பெருமானின் திருவருள் திறத்தினைச் சேக் கிழார் தெய்வ மணக்கும் செய்யுளால் விளக்குகின்றார். பாண்டிய நாட்டில் சைவ ஒளி பரப்பும் பொருட்டுப் பாண்டிமாதேவியாரின் வேண்டுகோளை யேற்று மதுரை மாநகர் புகுந்தவர் திருஞானசம்பந்தர். அவர் வெங்கனலை விரைந்து சென்று வேந்தனைப் பற்றுமாறு ஏவியிருந்தால் அவன் இறந்தொழிவான். அரசன் இறந்தால் மங்கையர்க்கரசியாரின் மங்கலநாண் மறைந் தொழியும். அமைச்சராகிய குலச்சிறையார் கொண்ட அன்பு குலையும், அரசன் செய்த தீங்கின் பயனைத் தெரியாது போவான். அவன் மீண்டும் சிவநெறியடை யும் தவப்பேறு உடையவன். அதனால் அவன் தன் வெப்பு நோய் அகலுமாறு திருஞானசம்பந்தரால் eஇவண்ண தீண்டி அணிபெறும் அருபேறுடை யான். இத்தனை உண்மைகளையும் இனிதுணர்ந்த ஞானச்செல்வராகிய சீர்காழிச்செல்வர் அவ் வெய்ய தீயினைப் பையவே செல்க!' என்று அருளுடன் பகர்ந் தருளினார்.

"பாண்டிமா தேவியார் தமது பொற்பில்
      பயிலும் நெடு மங்கலநாண் பாதுகாத்தும்
ஆண்டகையார் குலச்சிறையார் அன்பினாலும்
      அரசன்பால் அபராதம் உறுதலாலும்
மீண்டுசிவ நெறியடையும் விதியினாலும்
      வெண்ணீறு வெப்பகலப் புகலிவேந்தர்
தீண்டியிடப் பேறுடையன் ஆதலாலும்
      தீப்பிணியைப் பையவே செல்க!'

என்றார்.'' இங்ஙனம் 'பையவே செல்க!' என்ற மறை மொழிக்கு உரைவகுத்தருளிய சேக்கிழாரின் சீரிய புலமைத்திறம் பெரிதும் போற்றற்கு உரியதாகும்.

வேந்தனுக்கு வெப்புநோய்

நிறைமொழியாளராகிய திருஞானசம்பந்தர் 'பையவே சென்று பாண்டியற்கு ஆகவே' என்று பகர்ந்தருளிய மறைமொழியால் பாண்டியன் உடம்பில் வெப்பு நோய் பரவியது. சமணர்கள் சம்பந்தப்பெரு மான் எழுந்தருளியிருந்த திருமடத்தில் தீ வைத்ததும் பாண்டியனுக்கு வெப்பு நோய் பற்றியதுமாகிய செய்தி களைக் கேட்டு மங்கையர்க்கரசியார் அஞ்சி நெஞ்சம் பதைத்தார். திருஞானசம்பந்தருக்கும் உடன் வந்த அடியார்கட்கும் தீங்கொன்றும் நேராமையினைத் தெரிந்து மனம் தெளிந்தார். விரைந்து சென்று வேந்தனைக் கண்டார். குலச்சிறையாரும் வேந்தனுக்கு ஏற்பட்ட வெப்பு நோயைக் கூர்ந்து நோக்கினார்.

சமணர் நோய் தீர்க்க முயலுதல்

பாண்டியன் தன்னைப் பற்றிய வெப்பு நோயால் பெரிதும் வெதும்பினான். அவன் தழலிடைப்பட்ட புழுவென உழன்று சுழன்றான். அவன் உடம்பிலிருந்து வீசிய வெப்பம் பக்கத்தில் அமர்ந்தவரையும் பற்றி வெதுப்பியது. அவனைக் கிடத்திய கதலிக் குருத்தும் கன்னித் தளிர்களும் காய்ந்து சாம்பின. கைதேர்ந்த மருத்துவரும் மெய் தேராது மெலிவுற்றனர். அரச னுக்கோ வெம்மை மேலும் மேலும் பெருகியது. சமணர்கள் உண்மை உணராது தங்கள் மந்திரங்களைக் கூறிப் பீலி கொண்டு தடவினார். அவர் தம் கைப்பீலி களும் பிரம்புகளும் காய்ந்து தீயந்தன. அருகனைப் பணிந்து வேண்டிக் குண்டிகை நீரைக் கொண்டு தெளித்தனர். அந்நீர் அரசன் உடல் வெம்மையைப் பெருக்கும் நெய்யாயிற்று. அரசன் அருகிருந்த சமணரை வெகுண்டு அகலுமாறு பணித்தான்.

அரசியார் வெப்பு நோயின் காரணம் விளம்புதல்

இந்நிலையைக் கண்ட கோப்பெருந்தேவியாகிய மங்கையர்க்கரசியாரும் மதியமைச்சராகிய குலச்சிறை யாரும் பெரிதும் வருந்தினர். 'இரவில் திருஞானசம் பந்தருக்கு இவ் அமணர்கள் செய்த தீங்கே இத்தகைய இன்னலை விளைத்தது; அதனால் தான் அவர்கள் தீர்க்க முயன்றால் தீராது மேலும் மூளுகிறது' என்று தெளிந் தனர். இதனை அரசனுக்கு மெல்ல அறிவிப்போம் என்று இருவரும் பாண்டியனை அணுகி, "இச் சமண் சமயத்து அடிகள் மார் சம்பந்தருக்குச் செய்த தீங்கா லேயே தங்கட்கு இவ் வெப்பு நோய் விளைந்தது; இதற்குத் தீர்வும் அப்பெருமானது அருளேயன்றிப் பிறிதில்லை'' என்று பரிவுடன் பணிந்து இயம்பினர்.

மன்னன் மனம் இசைதல்

தேவியாரும் அமைச்சரும் தெளிந்து கூறிய மொழி கள் பாண்டியன் செவியகத்தே அமுதமெனப் பாய்ந் தன . அவன் சிறிதே உணர்வு பெற்று அச்செய்தியைச் சிந்தித்தான். உடனே அவர்களை நோக்கி, ''நீவிர் கூறும் அச்சிவ வேதியச் சிறுவரால் என் நோய் அகலு மாயின் அதனை ஏற்பேன்; மேலும் என் பிணியைத் தீர்த்து வென்றவர் பக்கம் வீறுடன் சேர்வேன்; அவரை அழைத்து வருக" என்று பணித்தான்.

திருமடத்தில் சம்பந்தரைத் தரிசித்தல்

அரசன் உறுதிமொழிகேட்ட இருவரும் பெரு மகிழ்வுற்று, 'இனி நாமும் உய்ந்தோம்; நம் நாடும் நன்கு உய்யும் ; அரசனும் பிணி அகல்வான் ; எங்கும் சைவப் பேரொளி பொங்கும்' என்று நினைந்தவராய் ஞானசம்பந்தர் எழுந்தருளிய திருமடத்தை அடைந்தனர். தங்கள் வருகையைப் பிள்ளையாருக்கு விண் ணப்பிக்குமாறு அடியவர்பால் வேண்டினர். அவர் களும், அரசியாரும் அமைச்சரும் மடத்திற்கு வந்துள்ள செய்தியினைச் சம்பந்தர் திருவடி பணிந்து தெரிவித் தனர். பிள்ளையார் அவர்கள் வருகைக்கு மகிழ்ந்து திருவருள் செய்ய, மடத்தினுள் புகுந்து ஞானமே திரு வுருவாய் எழுந்தருளிய பெருமானைத் தரிசித்தனர். அவர்கள் அங்குக் கண்ட காட்சியினைத் தெய்வப் புலமைச் சேக்கிழார் பெருமான் சிறந்ததொரு சொல் லோவியமாக நமக்கு வரைந்து காட்டியுள்ளார்.
'ஞானத்தின் திருவுருவை
      நான்மறையின் தனித்துணையை
வானத்தின் மிசையன்றி
      மண்ணில் வளர் மதிக்கொழுந்தைத்
தேனக்க மலர்க்கொன்றைச்
      செஞ்சடையார் சீர்தொடுக்கும்
கானத்தின் எழுபிறப்பைக்
      கண்களிப்பக் கண்டார்கள்.''
      - பெரிய புராணம் : 728.

ஞானச்செல்வரின் திருக்கோலம்

இளஞாயிறு போன்று ஞானக்கதிர் பரப்பி எழுந் தருளிய திருஞானசம்பந்தர் பரஞானமாகிய மெய் யுணர்வின் வடிவாக விளங்கினார். அபரஞானமாகிய நூலறிவிற்குச் சிறந்த துணையாகத் திகழ்ந்தார். பதினாறு கலைகளையுடைய பனிமதியைப் போன்று பதினாறு ஆண்டுகளே பருவுடலுடன் வாழ்ந்த பெருமானார் மண்ணில் ஒளிரும் மதிக்கொழுந்தாகத் தண்ணொளி வீசியிருந்தார். கொன்றையணிந்த குளிர்சடைப் பெம்மானின் புகழ் தொடுக்கும் எழுவகை இன்னிசையின் திருவடிவாய் இலங்கினார். இங்ஙனம் ஞானப் பேரொளி வீசிக் கானச் சீரொலி எழுப்பும் கருணைத் திருவுருவை அரசியாரும் அமைச்சரும் கண்களிப்பக் கண்டு கழிபேருவகை கொண்டனர். அவர்தம் திருவடி களில் விழுந்து வணங்கினர்.

வேந்தன் வெப்பு நோய் தீர்த்தருள வேண்டுதல்

திருஞானசம்பந்தர் அவ் இருவரையும் அருளுடன் எழுந்திருக்கப் பணித்து, 'ஏதும் தீங்குளதோ?' என்று வினவினார். அது கேட்ட அமைச்சர், ''சமணர்கள், தங்கட்குச் செய்த வஞ்சனை அறிந்து நெஞ்சழிந்தோம். சிவனார் அருளால் தங்கள் திருமேனிக்குத் தீங்கு நேராதெனத் தெளிந்தோம். ஆனால் அவர்கள் செய்த தீமை அரசனுக்கு வெப்பு நோயாக வந்து வெதுப்புகிறது. தீயராகிய சமணரால் அது தீர்தற்கு இல்லை. தாங்கள் எழுந்தருளி வேந்தனை வருத்தும் வெப்பு நோயைத் தணித்து வெய்யராம் சமணரை வென்றருள வேண்டும். அவ்விதம் செய்தருளினால் அரசரும் யாங்களும் உய் வோம்" என்று குறையிரந்து பணிந்து நின்றனர்

சம்பந்தர், மன்னன் மாளிகை சார்தல்

இருவரின் வேண்டுகோளையும் அன்புடன் ஏற் றருளிய சம்பந்தர், "நீவிர் அஞ்சல் வேண்டா ; இன்று யாம் நீவிர் இன்புறுமாறு சமணரை வென்று அரசனை வெண்ணீறு அணிவிப்போம்' என்று புன்முறுவ லுடன் புகன்றருளினார். பின்னர் ஆலவாய்த் திருக் கோவிலை அடைந்து அரனார் திருவடி பணிந்து,

ஞாலம் நின்புகழே மிக வேண்டும், தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே.'

என்று பாடிப் பரவினார். சிவனடியார் திருக்கூட்டம் புடைசூழ்ந்து வர, முத்துச்சிவிகையில் ஏறி முத்தமிழ் வளர்க்கும் பாண்டியன் மாளிகை அடைந்தார். குலச் சிறையார் முன் சென்று, கொற்ற வேந்தனுக்குச் சம்பந்தர் வருகையைச் சாற்றினார். அச்செய்தி கேட்டதுமே அரசனுக்கு வெப்பு நோயின் துன்பம் சிறிது விலகியது. தலைப்பக்கமாகப் பொன்னணை அமைக்கப் பணித்து அவரை எதிர்கொண்டு அழைத்துவர ஏவினான்.

சமணர்களின் அச்சம்

இச்செயலைக் கண்ட சமணர் அஞ்சினர். அரசனை நோக்கி, " இதுவோ நம் சமயத்தைக் காக்கும் முறை? தாங்களே நம் சமயத்தைத் தக்கவாறு காத்தருள வேண்டும்; அவ்வேதியச் சிறுவர் இங்கு வந்தால் எங்கள் இருதிறத்தாரையும் தங்கள் வெப்பு நோயைத் தீர்க்குமாறு பணித்தருள்க' என்று வேண்டி நின்றனர். இந்நிலையில் சீர்காழிச் செல்வர், வேந்தன் பக்கம் வந்து சேர்ந்தார். அவரைக் கண்டதும் மன்னன் மனத்தில் அவனை அறியாமலே அவர்பால் மதிப்புண்டாயிற்று. அவன் தனது நோய்த் துன்பத்தையும் நோக்காமல் கை தூக்கிப் பொன்னணையைக் காட்டினான். சம்பந் தரும் அதன்மிசை அமர்ந்தார்.

அரசியார் அச்சமும் சம்பந்தர் ஆறுதலும்

அரசன் சம்பந்தரை நோக்கித் தங்கள் நகர் எது?' என்று வினவினான். அதற்கு விடையாகச் சம்பந்தர் சீர் காழிப்பதியின் பன்னிரு திருப்பெயர்களையும் அமைத்து இன்னிசைப் பாடல் ஒன்று பாடியருளினார். அதுகண்ட சமணர்கள் சினம் கொண்டு வாது செய்யத் தொடங்கினர். சமணர் செயலைக் கண்ட கோப்பெருந்தேவியார் பிள்ளையாருக்கு யாது நேருமோ என்று உள்ளம் குலைந் தார். அவரது நடுக்கத்தைக் கண்ட சம்பந்தர், பாண்டிமாதேவியை நோக்கி, "மாபெருந்தேவியே! மயங்கவேண்டாம்; இவன் பால்மணம் மாறாத பாலனாயிற்றே; இவனுக்குச் சமணர்களால் என்ன தீங்கு நேருமோ என்று ஏங்க வேண்டாம்; ஆலவாய்ப் பெருமான் இன்னருள் எனக்கு முன்னிற்கும்'' என்று ஆறுதல் கூறியருளினார்.

சம்பந்தரும் சமணரும் பிணி தீர்க்க முயலுதல்

பாண்டியன் இருதிறத்தாரையும் பார்த்து, "நீவிர் எனது நோயைத் தீர்ப்பதன் வாயிலாக நுங்கள் தெய்வத் திருவருள் திறத்தைத் தெளிவிக்கவேண்டும்; எனது நோய் தீர்த்தவரே வாதில் வென்றவராவீர்' என்று இயம்பினான். அது கேட்ட சமணர், "நாங்கள் உமது இடப்பக்க வெப்பு நோயை ஒழிப்போம்'' என்று கூறிப் பீலி கொண்டு தடவினார். அப்பொழுது அரசனது நோய் இரு மடங்காகப் பெருகியது. ஞானசம்பந்தர், ஆலவாய் அண்ணல் வெண்ணீறே மருந்தும் மந்திரமும் ஆகும் என்று திருநீற்றுப் பதிகம் பாடியருளினார். பின்பு, தம் சிறுமலர்க் கரத்தால் திருநீறு எடுத்துப் பாண்டியன் வலப்பக்கத்தே நலம்பெறத் தடவினார். உடனே அப்பக்கம் வெப்பு நோயின் வேதனை நீங்கிக் குளிர்ந்தது. இடப்பக்கம் முன்னையினும் பன்மடங்கு வேதனையால் வெதும்பியது. வேந்தன் உடம்பில் வெப்பமும் தட்பமும் ஒருங்கே குடி புகுந்தாற் போன்று விளங்கியது.
-
--
சம்பந்தர் நோய் தீர்த்தருளுதல்
இந்நிலையை உணர்ந்த மன்னன், "இஃது என்ன வியப்பு! ஒரே காலத்தில் வெய்ய நரகிலும் பேரின்ப வீட்டிலும் இருப்பது போல் அன்றோ இருக்கிறது! ஆலத்தையும் அமுதையும் அருந்துவது போல் அன்றோ இருக்கிறது!" என்று வருந்தி மொழிந்தான். அங்கிருந்த சமணரை நோக்கி, "நீவிர் தோற்றீர்கள்; இவ்விடத்தை விட்டு அகலுங்கள்'' என்று கோபத்துடன் கூறினான். பிணிநீக்கிய பெருமானை நோக்கிச், ''சிவனருள் பெற்ற செல்வரே ! தாங்கள் எனது உடலின் இடப்பக்கத்து நோயையும் தீர்த்தருள வேண்டும்; என்னால் அவ் இன்னலைப் பொறுக்க இயலவில்லை" என்று பணிவுடன் இயம்பினான். ஞானசம்பந்தர் மீண்டும் தமது திருக்கரத்தால் திருநீற்றை எடுத்து ஆலவாயண்ணல் திருவருளைச் சிந்தித்து அரசனது இடப்பக்கந் தட வினார். அவனது இடப்பக்கமும் வலப்பக்கத்தைப் போன்று நலம் பெற்றுக் குளிர்ந்தது. அரசன் உவகை யுடன் சம்பந்தரைக் கைகூப்பி வணங்கிப், 'பெரு மானே ! உய்ந்தேன் உய்ந்தேன்!' என்று பேசினான்.

அனல் வாதம்

அது கண்ட சமணர் செய்வது அறியாது திகைத் தனர். சிறிது சிந்தித்து நெருப்பினாலும் நீரினாலும் வெல்லுவதென்று உறுதி கொண்டனர். சம்பந்தரும் அவர்களை நோக்கி, நுங்கள் சமய உண்மையினை நுவ லுங்கள்!' என்றனர். அவர்கள், 'நம் சமய உண்மையின் திண்மையைக் கண்களால் காணுமாறு நெருப் பிலும் நீரிலும் இட்டு ஒட்டுவோம்' என்றனர். சம்பந்தர் அதற்கு இசைந்தருளினார். ஆனால் வேந்தனோ சமணரை வெகுண்டு நோக்கி, "நீவிர் எனது வெப்பு நோய் தீர்க்க முடியாது தோற்றீர் ! இனி என்ன வாது?'' என்றான். அரசனது சொல்லையே வினாவாகக் கொண்ட அச்சமணர், "எங்கள் சமய உண்மைகளை ஏட்டில் எழுதித் தீயினும் நீரினும் இட்டு நிலை நாட்டுவோம்" என்றனர். அங்ஙனம் இருதிறத்தாரும் கொடுத்த ஏடுகளை முதற்கண் நெருப்பில் இட்டனர். சம்பந்தர் எழுதித் தந்த ஏடு நெருப்பில் எரியாது பசுமையாய் ஒளிவிட்டு இலங்கியது. சமணர் இட்ட ஏடோ சாம்ப லாயிற்று.

புனல் வாதம்

இங்ஙனம் இருமுறை தோற்ற சமணரைப் பாண்டியன் இகழ்ந்து பேசினான். அதனையும் பொருட் படுத்தாத அமணர், "இனி ஒரு முறை ஒட்டுவோம்; நம் ஏடுகளை ஓடும் நீரில் இடுவோம்' என்று கூறினர். இவ்வேளையில் அமைச்சராகிய குலச்சிறையார் குறுக்கிட்டு, "இம்முறையில் தோற்றவர் என்னாவது என் பதையும் துணிய வேண்டும்" என்றனர். அப்பொழுது சமணர் சற்றும் ஆராயாமல், 'தோற்றவரை அரசன் கழுவில் ஏற்றுவான்' என்று கூறினர். பின்னர்ப் புனல் வாதம் நடத்தும் பொருட்டு அனைவரும் வையைக் கரை அடைந்தனர். அப்பொழுது கார்காலமாதலின் வையையில் நீர் பெருகிச் சென்றது. சமணர் ''அத்தி நாத்தி' என்னும் மந்திரச் சொல்லை எழுதிய ஏட்டை ஆற்று வெள்ளத்தில் இட்டனர். அவ்ஏடு வெள்ளம் சென்ற திசையிலேயே விரைந்து ஓடியது. சம்பந்தர் தமது ஏட்டையும் வெள்ளத்தில் இட்டனர். அவ் ஏடோ விரைந்து செல்லும் வெள்ளத்தை எதிர்த்து மேல்நோக்கிச் சென்றது. அதனைக் கண்ட அரசனும் மக்களும் வியந்து கைகுவித்து வணங்கினர். குலச் சிறையார் கொண்ட மகிழ்ச்சிக்கு ஓர் எல்லையில்லை.
அவ்ஏட்டில் வரைந்த,

'வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீய(து)எல் லாம் அரன் நாமமே
சூழ்க வையக மும்துயர் தீர்கவே.'

என்னும் அப்பொருண்மொழிப் பாடலில் 'வேந்தனும் ஓங்குக' என்று சம்பந்தர், மன்னனை வாழ்த்தியருளிய காரணத்தால் கரையில் நின்று அக்காட்சியைக் கண்டு கொண்டிருந்த பாண்டியனின் உடற்கூன் திடீரெனத் திருவருளால் மறைந்தது. மாறனாகிய மன்னன் நின்றசீர் நெடுமாறன் ஆயினான்.

கூன்பாண்டியன் நெடுமாறன் ஆதல்

திருஞானசம்பந்தரின் அருள் நிறைந்த மறைமொழி வாழ்த்தினால் உடற்கூன் மறையப்பெற்ற பாண்டிய மன்னன் அப்பெருமானை வணங்கித் திருநீறு பெற்றான்; சைவ சமயமே மெய்ச்சமயமெனப் போற்றி மகிழ்ந் தான். அவன் தன் மேனி முழுதும் வெண்ணீறு அணிந்து சிவம் பேணும் தவமுடையன் ஆனான். மன்னன் நிலையைக் கண்ட மதுரை நகர மாந்தர் அனை வரும் திருநீறு அணிந்து சிவநேசச் செல்வராயினர். இக்காட்சியினைக் கண்ணாரக் கண்டு களித்த பாண்டி மாதேவியாரும் குலச்சிறையாரும் திருஞானசம்பந்தரைப் பணிந்து அவரது திருவருள் திறத்தை வியந்து போற்றினர். அவர் அடியார் புடை சூழ ஆலவாய்த் திருக்கோவிலை அடைந்தார். ஆங்கு எழுந்தருளிய கண்ணுதற் பெருமானைப் பண்ணமைந்த பாக்களால் பாடிப் பரவினார். பாண்டிய நாடு பைந்தமிழ்ச் சைவத் திருநாடாக மலர்ச்சி பெறுதற்கு அரும்பணி புரிந்து வந்த கோப்பெருந்தேவியையும் குலச்சிறையாரையும் தாம் பாடிய பதிகத்தில் வாயார வாழ்த்தினார்.

நெடுமாறன் கோப்பெருந்தேவியாய் விளங்கிய மங்கையர்க்கரசியாரின் மனத்திண்மையே நாட்டின் சமய மாற்றத்திற்குக் காரணமாயிற்று. அவர் ஆற்றிய அரும்பணியால் அவருடைய கணவனாகிய காவலன் நன்னெறி பேணும் புண்ணியன் ஆயினான். அவன் தனது உடற்கூனும் உளக்கூனும் ஒருங்கு நீங்கி உத்தமச் சிவநேசன் ஆயினான். பெரிய புராணம் பேசும் அரிய சிவனடியார்கள் அறுபத்து மூவருள் அவனும் ஓர் அடியவனாக எண்ணப்பெற்றான். அவனையும் பாண்டி நாட்டையும் பரசமயத்தினின்று காத்த கோப்பெருந்தேவியும் ஓர் அடியவராகக் கொண்டு போற்றப் பெற்றார். அவருக்குத் துணையாக இருந்த அமைச்சர் பெருமானும் நாயனாரென நயந் தேத்தும் பெருமையுற்றார்.

சேக்கிழார் பாராட்டு

இத்தகைய கோப்பெருந்தேவியைச் சேக்கிழார் பெருமான், எங்கள் தெய்வம் என்றும், பாண்டியர் குலத்தின் பழியைத் தீர்த்த தெய்வப் பாவை என்றும், சம்பந்தர் திருவருளால் கன்னி நாட்டில் வெண்ணீற் றொளி பரவுமாறு செய்த திருமகளார் என்றும் தெய்வ மணக்கும் செய்யுளால் பாராட்டியுள்ளார்.

'மங்கையர்க்குத் தனியரசி எங்கள் தெய்வம்
      வளவர் திருக் குலக்கொழுந்து வளைக்கை மானி
செங்கமலத் திருமடந்தை கன்னி நாடாள்
      தென்னர்குலப் பழி தீர்த்த தெய்வப் பாவை
எங்கள் பிரான் சண்பையர்கோன் அருளி னாலே
      இருந்தமிழ் நா(டு) உற்ற இடர் நீக்கித்
தங்கள் பொங்கொளிவெண் திருநீறு பரப்பி னாரைப்
      போற்றுவார் கழல் எம்மால் போற்ற லாமே!'

கன்னி நாட்டில் வெண்ணீற்றின் பேரொளி பரப்பிய பெருந்தேவியாரின் அரும்புகழைப் பேணியுரைப் போர் மிக்க பேறு பெற்றவராவர்; பாண்டிமாதேவி யின் சிறப்பினைப் பகர்தல் எளிதாகுமோ? என்று பரவும் சேக்கிழாரின் பத்தி மாண்பை என்னென்பது
-------------

10. வரதுங்கன் தேவி

பாண்டியர் குலத் தோன்றல்கள்

ஐந்நூறு ஆண்டுகட்கு முன்னர்த் தென்பாண்டி நாடாகிய திருநெல்வேலிச் சீமையைப் பாண்டியர் குலத்தோன்றல்களாகிய இரு மன்னர்கள் அரசு புரிந்து வந்தனர். அவருள் மூத்தவன் வரதுங்கராமன்; இளை யவன் அதிவீரராமன். இவர்கள் இருவரும் கொற்கையை ஆண்ட குலசேகரன் என்னும் கொற்றவன் பெற்ற மக்களாவர்.

இராமர் இருவரின் கலை நலம்

கொற்கை வேந்தனாகிய குலசேகரன் தன் மக்களை அக்காலத்தில் தக்க பெரும் புலவராய் விளங்கிய நிரம்பவழகிய தேசிகர் என்பார்பால் தமிழ் நூல்களைப் பயிலுமாறு செய்தான். ஆன்று அவிந்து அடங்கிய அருந்தமிழ்ப் புலமைச் சான்றாராகிய தேசிகர்பால் பழந்தமிழ் நூல்கள் பலவற்றையும் கற்றுணர்ந்த காவலன் மக்கள் இருவரும் கற்றவர் வியக்கும் கவிஞர் களாக விளங்கினர். இலக்கிய இலக்கணங்களைக் கலக்க மறக் கற்றறிந்த காரணத்தால் அவர்கள் அரிய நூல் களை ஆக்க வல்ல பெரிய புலவர்களாயினர்.

அரச குமாரர்களின் தனியாட்சி

குலசேகரன், புலமை நலங்கனிந்த மக்கள் இரு வர்க்கும் தன் நாட்டைப் பிரித்துக் கொடுத்துத் தனி யாட்சி செலுத்துமாறு செய்தான். மூத்தவனாகிய வரதுங்கராமன் நெல்லை நாட்டிலுள்ள கரிவலம் வந்த நல்லூரைத் தலைநகராகக் கொண்டு அந்நகரைச் சூழ்ந்த நிலப்பகுதியை ஆண்டு வந்தான். இளையவனாகிய அதி வீரராமன் தென்காசித் திருநகரைத் தலைநகராகக் கொண்டு அதைச் சூழ்ந்த நிலப்பகுதியினைப் புரந்து வந்தான்.

அதிவீரராமன் காவியம் அமைத்தல்

அதிவீரராமன் அருந்தமிழ்ப் புலமை பெற்ற தோடு வடமொழி நூல்களையும் கற்றுணர்ந்தான். இரு மொழிகளிலும் உள்ள அகத்துறை இலக்கியங்களை அவன் ஆர்வமுடன் கற்று இன்புற்றான். தான் பெற்ற இன்பத்தை மற்றவர்களும் பெற்று மகிழுமாறு செய்யப் பேராவல் கொண்டான். அதனால் காதற் சுவை கனிந்தொழுகும் காவியம் ஒன்றைப் படைக்க விரும்பினான். நளனுடைய வரலாற்றை நற்றமிழ்ப் பெருங்காவியமாகப் பாடுதற்கு முற்பட்டான். வட மொழியில் ஹர்ஷகவி இயற்றிய நைஷதம் என்னும் நன்னூலையும், தமிழில் புகழேந்தியார் வகுத்துள்ள நளவெண்பா என்னும் நயந்தரு நூலையும் உளங் குளிரப் பலகால் ஓதினான். பன்னூல்களையும் கற்றுணர்ந்த தனது புலமையாகிய இன்னமுதத்தை அவ் இரு நூல் கருத்துக்களுடன் குழைத்தான். 'புலவர்க்கு ஒளடதம்' என்று போற்றத் தக்க நைடதம் என்னும் காவியத்தைப் படைத்தான்.
காவியத்தைத் தமையனிடம் காட்டல்

காவியம் இயற்றிய காவலனாகிய அதிவீரராமன் தனது நற்றமிழ்ப் படைப்பாகிய நைடதத்தைத் தன் தமையனாகிய வரதுங்கராமனிடம் கொண்டு கொடுத்தான். அதனைப் படித்துத் தனது கருத்தை அறிவிக்குமாறு வேண்டினான். தம்பியின் வேண்டு கோளை நிறைவேற்ற விரும்பிய தமையனாகிய வரதுங்கன், ''தம்பி நீயோ தென்மொழி வடமொழியாகிய இரு மொழிக் கடலின் நிலைகண்டு உணர்ந்தவன். அத்தகைய நீ அமைத்த காவியம் மிகவும் அருமையாகவே இருக்கும். அதனை யான் படித்துப் பார்த்தோ பகர வேண்டும்! நீ இந்நூலுள் குறித்துள்ள பொருள் தான் யாதோ?'' என்று கேட்டான். 'நிடத நாட்டை ஆண்ட நீள்புகழ் வேந்தனாகிய நளனது சுவை மிக்க வரலாறே இந்நூல் சொல்லும் பொருளாகும்' என்று இயம்பினான் அதிவீரராமன்.

வரதுங்கன் சிவபத்தி

மூத்தவனாகிய வரதுங்கன் முக்கட் பெருமானிடம் மிக்க பத்தி பூண்டவன். இறைவனது நிறைபுகழைப் பாடுவதே இருவினையும் அகல்வதற்கு உரிய வழியாகும் என்பதை நன்கு உணர்ந்தவன்.

இருள்சேர் இருவினையும் சேரா, இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.'

என்னும் தெய்வப் புலவர் திருவாக்கின் அருமையை அனுபவத்தில் கண்டு இன்புற்று வருபவன். அவன் சிவனடி மறவாத சிந்தையால் நாள்தோறும் தவறாது சிவபூசை செய்து வரும் திருவருட் செல்வனாகத் திகழ்ந்து வந்தான். ஒவ்வொரு நாளும் அவ் வரதுங்கன் கருவைப் பதியில் மருவும் பெருமானைக் கருத்துள் இருத்திக் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்க நின்று வழிபடும் செல்வன். உலகில் பிறந்திறக்கும் மக்களைப் பாடுவதெல்லாம் பாழ்நரகப் படுகுழியில் வீழ்வதற்கே காரணமாகும் என்னும் கருத்துடையவன்.

இத்தகைய வரதுங்கராமன் தம்பியின் மொழி கேட்டுத் தயக்கமுற்றான். சிறிது நேரம் கழித்துத், "தம்பி நின் வளமான புலமையை நின்னைப் போன்ற ஒரு மன்னன் வரலாற்றைப் பாடுதற்கோ பயன் படுத்தினை! பிறவா யாக்கைப் பெரியோனாகிய நீல மணிமிடற் றிறைவனது நீள்புகழைப் பாடுதற்குப் பயன்படுத்தினால் அச்செயல், மாறாத பேரின்பத்தைப் பெற்று மகிழ்தற்கு உற்ற காரணம் ஆகுமே !' என்று இரங்கினான்.

காவியத்தை மனைவியிடம் காட்டுமாறு கூறுதல்

பின்பு, வரதுங்கன் தம்பியை அன்புடன் நோக்கித் "தம்பி ! நின் அண்ணியும் அருந்தமிழ்ப் புலமையுடை யாள் அன்றோ ! அவள் எந்த நேரமும் அந்தப்புரத்தில் செந்தமிழ் நூல்களிலேயே தன் சிந்தையைச் செலுத்திக் கொண்டிருக்கிறாள். 'கற்றது கைம்மண் அளவு, கல்லாதது உலகளவு' என்று அவள் இடையறாது ஓதி வரும் நூல்களுக்கு ஒரு கணக்கே இல்லை. அத் தகைய தமிழ் வித்தகியாகிய நின் அண்ணியிடம் இந் நூலைக் கொண்டு கொடுப்பாய். அவள் சில நாட்களில் இதனைப் படித்துச் சிறந்த மதிப்புரை வழங்குவாள்'' என்று கூறி விடை கொடுத்தான்.

அண்ணியிடம் நூலைக் காட்டுதல்

தமையன் கூறியவாறே தம்பியாகிய அதிவீர ராமன் தனது நூலை அண்ணியாரிடம் கொண்டு காட்டினான். இந்நூலைப் படித்துத் தங்கள் கருத்தைத் தெரிவிக்க வேண்டும்' என்று வேண்டினான். மைத் துனக் கேண்மையனாகிய மன்னன் தந்த செந்தமிழ் நூலை மனமுவந்து கையில் வாங்கினாள் வரதுங்கன் தேவி. 'அரசே! நீவிர் இரு மொழியும் வல்ல பெரும் புலவர். யானோ தமிழ் ஒன்றே ஓரளவு கற்றவள். இன்னும் யான் தமிழில் கல்லாத நூல்கள் கணக்கி றந்தவை. அங்ஙனமிருக்கச் சிற்றறிவுடைய யானோ நுமது நூலுக்கு மதிப்புரை வழங்கத் தகுதியுடை யேன்; எனினும் நுமது விருப்பை நிறைவேற்ற வேண்டுவது என் கடமை; சில நாட்களில் இதனைச் செவ்விதின் ஓதிச் சிறப்பினை உணர்ந்து விரிப்பேன் என்று விளம்பினாள்.

அண்ணி அனுப்பிய மதிப்புரை

தமிழ்ப் புலமை சான்ற அண்ணியாரிடம் தன் நூலைக் கொடுத்து விடை பெற்ற வேந்தனாகிய அதி வீரராமன் தனது தலைநகரமாகிய தென்காசியை அடைந்தான். சில நாட்களில் கரிவலம் வந்த நல்லூரி லிருந்து வரதுங்கன் தேவியார் தந்தனுப்பிய ஒலையுடன் தூதன் ஒருவன் தென்காசியை வந்தடைந்தான். அரசனாகிய அதிவீரராமன் மாளிகை அடைந்து வாயிற் காவலர்பால் தன் வரவினை அறிவித்தான். அரசன் உத்திரவைப் பெற்று அரண்மனையுள்ளே புகுந்த தூதன், அரசனை வணங்கித் தான் கொண்டு வந்த ஓலையைப் பணிவுடன் கொடுத்தான். 'இது தங்கள் அண்ணியார் அன்புடன் அனுப்பிய திருமுகம்' என்று சொல்லி நின்றான்.

அவ் ஓலையைக் கையில் வாங்கிய அதிவீரராமன் 'அண்ணியார் நம் நூலைப் பற்றிய எண்ணத்தை இத்துணை விரைவில் அறிவித்து விட்டாரே' என்ற மகிழ்வுடன் ஓலையை விரித்து நோக்கினான். நுமது நூல் வேட்டை நாய் ஓடி இளைத்தது போன்றும், கரும்பினை அடியினின்று சுவைத்தது போன்றும் இருக்கிறது' என்று அவ் ஓலையில் எழுதியிருந்தது. நைடதக் காவியம் தொடக்கத்திலிருந்து நடுப்பகுதி வரை மிகவும் சுவையாகவும் விறுவிறுப்பாகவும் கற்பவர் கருத்தை இழுத்துச் செல்லும் வேகமான கதைப் போக்குடையதாகவும் விளங்குவது. பிற் பகுதியோ அத்துணை வேகமோ விறுவிறுப்போ இன்றிக் கதை தளர் நடையிட்டுச் செல்லுவது. இந்த உண்மையைப் புலப்படுத்தவே வரதுங்கன் தேவி, 'வேட்டை நாய் ஓடி இளைத்தது போன்று இருக்கிறது' என்றும் 'கரும்பினை அடிப்பாகத்தினின்று கறித்துச் சுவைத்ததற்கு ஒப்பாகும்' என்றும் குறிப்பிட்டாள்.

அதிவீரராமன் கொதித்தெழுதல்

அண்ணியார் அனுப்பிய ஓலையைப் பன்முறை படித்துப் படித்துப் பார்த்தான் அதிவீரராமன். அவனுக்கு உள்ளம் ஒரு நிலையில் இல்லை. கோப்பெருந் தேவி கொடுத்த மதிப்புரை அவனுக்குப் பழிப்புரை யாகத் தோன்றியது. அண்ணனும் அண்ணியும் வேண்டுமென்றே தன்னை இகழ்ந்ததாக அதிவீரராமன் எண்ணினான். அவன் உள்ளத்தில் சினத்தீ பொங்கி எழுந்தது. உடனே தமையனைக் கொன்றொழிக்க வேண்டும் என்று கொதித்தெழுந்தான்.
அதிவீரராமன் புலமைச் செருக்கு

அதிவீரராமன் தன்னைப் பாடிப் பரிசில் பெறு தற்கு வரும் தமிழ்ப் புலவர்களின் புலமையைப் பலவாறு ஆராய்வான். அவர்கள் புலமையில் ஏதேனும் குறை காணுவானாயின் அவர்கள் தலையில் குட்டிக் குற்றமறக் கற்றுக் கவிபாடுக!' என்று இடித் துரைத்து அனுப்புவான். அங்ஙனம் புலவரை எல் லாம் அடக்கும் பெரும்புலமையாளனாகிய அவ் அரசன் தன் பிள்ளைமைச் செயலால் 'பிள்ளைப் பாண்டியன் என்றே சொல்லப் பெற்றான். அதனால் புலவர் ஒருவர், 'குட்டு தற்கோ பிள்ளைப் பாண்டியன் இங் கில்லை' என்று கட்டுரைத்தார்.

அதிவீரராமன் போருக்குப் புறப்படுதல்

இத்தகைய பிள்ளைப் பாண்டியன் தனது நூலைப் பிறர் குற்றமுடையதெனப் பேச மனம் பொறுப் பானோ? அதிலும் ஒரு பெண் நுமது நூல் வேட்டை நாய் ஓடி இளைத்தது போன்றுள்ளது' என்று இகழ்ந் துரைக்க அவ்இழிவைக் கேட்டு வாளா இருப்பனோ? உள்ளம் கொதித்தெழுந்த அதிவீரராமன் போர்க் கோலம் புனைந்து தன் படைகளைத் திரட்டினான் அவன் நால்வகைப் படையுடனும் கரிவலம் வந்த நல்லூரின் எல்லையை வந்தடைந்தான். அங்கு நின்று போர் முரசை முழக்கினான். தமையனுக்குத் தனது வரவைத் தூதர் வாயிலாகத் தெரிவித்தான்.

வரதுங்கன் சிவனைப் பணிதல்

நகர்ப்புறத்தே போர் முரசு முழங்குவதைக் கேட்ட வரதுங்கராமன் அமைச்சரையும் படைத் தலைவரையும் அழைத்துப் போருக்குரிய காரணத்தை ஆராயுமாறு பணித்தான். அவர்கள் கோப்பெருந் தேவியின் ஓலையால் வந்த விளைவே இஃதென அறிந் தனர். அதனை அரசனுக்கு அறிவித்தனர். அது கேட்ட வரதுங்கன் அமைச்சரை அனுப்பித் தம்பியை அழைத்து வருமாறு பணித்தான். அமைச்சர் சென்ற பின், வரதுங்கன் வழக்கமாகச் செய்யும் வழிபாட்டை முடித்தற்குப் பூசையறையுள் புகுந்தான். தணியாத சீற்றத்துடன் போர்க்கோலம் புனைந்து வந்துள்ள தம்பியின் சினத்தைத் தணித்தருளுமாறு பனித்த சடைப் பரம்பொருளைப் பணிந்து வேண்டினான். அவன் முறையாகச் சிவபூசை முடித்து இறுதியில் உள்ளம் நெக்கு நெக்குருகியவனாய்த் தெள்ளமுதத் தீஞ்சுவைப் பாடலொன்று பாடினான்.

பூசையறையின் வாசலில் வாள் வேந்தன்

இதற்குள் அதிவீரராமனை அழைத்து வரச் சென்ற அமைச்சருடன் அவன் அச் சிவபூசை அறையின் வாயிலில் வந்து நின்று கொண்டிருந்தான். சிவபூசை செய்யும் வேளையில் ஏதும் ஊறிழைத்த லாகாது என்று எண்ணிய அதிவீரராமன், தமையன் வெளிப் போந்ததும் வாளால் வீசியிட வேண்டும் என்ற வெகுளியுடன் நின்றான். அங்ஙனம் நின்ற அதி வீரராமன் காதுகளில் வரதுங்கன் மனமுருகிப் பாடிய பாடல், அமுதெனப் பாய்ந்து அவன் அகத்தெழுந்த சினத்தீயைத் தணித்தது.

'சங்கக் குழையனைத் தென்கரு வாபுரித் தாணுவைவான்
கங்கைச் சடையனைப் பாடல் செய்யாத கவிப்புலவீர்!
அங்கச் சுமைகொண்(டு) எழுநான்கு கோடி அழிநரகப்
பங்கத்துள் வீழ அன்றோ! பொன்று வார்தமைப் பாடுவதே!"

'சங்கினைக் காதணியும் குண்டலமாகக் கொண்ட வனும் தென் திசையில் திகழும் கருவைப்பதியில் எழுந் தருளிய பெருமானும் கங்கையைச் சடையில் அணிந்த கடவுளும் ஆகிய சிவபெருமானைப் பாடாது உலகின் பிறந்திறக்கும் மக்களைப் பாடும் செயலெல்லாம் உடற் பாரத்தைச் சுமந்து கொண்டு பல்கோடி நரகப் படுகுழிச் சேற்றுள் விழுந்து அழுந்து தற்கன்றோ காரணமாகும்? ஆதலின் புலவர்களே! நீவிர் இறை eவனது காதல் கொண்டு இநஞ்சுருக சொந் கவிதை பாடுங்கள்' என்று அறிவுறுத்தினான் வரதுங்க ராமன்.

அதிவீரராமன் தமையனைப் பணிதல்

தமிழ்ச் சுவை அறிந்த மன்னனாகிய அதிவீரராமன் தன் தமையன் பத்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய பைந்தமிழ்ப் பாடலைக் கேட்டுச் சிந்தை உருகினான். மெய்ம்மறந்து தன் கையிலிருந்த வாளைத் தரையில் நழுவவிட்டான். பூசையறையுள் புகுந்து சிவபூசை செய்யும் தவமுடைய தமையனது தாளில் வீழ்ந்து வணங்கினான். 'பிழைத்தவை பொறுக்கை எல்லாம் பெரியவர் கடமை போற்றி' என்று புகன்று, பிழை பொறுத்தருளுமாறு தமையனை வேண்டினான். குற்றம் உணர்ந்த தம்பியைத் தமையன் பெருமகிழ் வுடன் வாரியெடுத்துக் குணத்துடன் அணைத்துக் கொண்டான்.

அண்ணியின் அறிவுரை

இச்சமயத்தில் நிகழ்ந்ததை அறிந்து அவ்விடத்தை வந்தடைந்த வரதுங்கன் தேவி தன் மைத்துனனாகிய அதிவீரராமனுக்குச் சிறந்ததோர் அறிவுரை பகர்ந் தாள். "அரசே! உடன் பிறப்பு என்பது உயர்ந்த தோள்வலம் போன்ற தன்றோ! அதனை இழக்கத் துணிந்தீரே ! இராமனும் பரதனும் போன்ற உடன் பிறப்பன்றோ உலகில் உயர்வளிப்பது. கதிரவன் மைந்தனாகிய சுக்கிரீவனையும், தென்னிலங்கை வேந்த னாகிய இராவணனையும், பாண்டவரில் ஒருவனாகிய பார்த்தனையும் உடன் பிறப்பின் சிறப்பை உணர உற்று நோக்காதீர் !

'செஞ்சுடரின் மைந்தனையும் தென்னிலங்கை வேந்தனையும்
பஞ்சவரில் பார்த்தனையும் பாராதே - விஞ்சு
விரதமே பூண்டிந்த மேதினியை ஆண்ட
பரதனையும் ராமனையும் பார்.''

என்று பாடி, நாடாளும் மன்னனுக்கு நல்லறிவு கொளுத்தும் நங்கையாக வரதுங்கன் கோப்பெருந் தேவி விளங்கினாள். அண்ணியாரின் பொன்னுரை கேட்ட அதிவீரராமன் அன்று முதல் தமையனுடன் அமைவுடைய நட்புப் பூண்டு ஒழுகினான்.
--------------

This file was last updated on 3 May 2023.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)