pm logo

மயில்வாகனப்‌ புலவர்‌ இயற்றிய
"புலியூரந்தாதி"


puliyUr antAti
of mayilvakanap pulavar
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to noolahan.org for providing a scanned PDF of this work.
We thank Dr. Meenakshi Balaganesh, Bangalore, India for her assistance in the preparation of the soft copy of this work.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2023.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

மயில்வாகனப்‌ புலவர்‌ இயற்றிய
"புலியூரந்தாதி"

Source:
யாழ்ப்பாணத்து மாதகல்‌ மயில்வாகனப்‌ புலவர்‌ இயற்றிய "புலியூரந்தாதி"
மூலமும்‌ உரையாசிரியர்‌ ஸ்ரீமத்‌ ம. க. வேற்பிள்ளையவர்கள்‌ செய்த உரையும்‌.
உரையாசிரியர்‌ குமாரர் வழக்கறிஞர்‌ வே. மாணிக்கவாசகர்‌ J.P. அவர்களால்‌
கொக்குவில்‌ சோதிடப்பிரகாச யந்திரசாலையிற்‌ பதிப்பிக்கப்பட்டன.
சாதாரண வருடம்,‌ சித்திரை மாதம்,
மூன்றாம்‌ பதிப்பு. 1970.
விலை ரூபா 2-00
உரையாசிரியரின் மருகியும் சமாதான நீதிபதி ச. சபாரத்தின முதலியாரின்
அருந்தவப் புதல்வியும் வழக்கறிஞர் அவர்களின் பிரிய நாயகியுமான சிவபதமடைந்த
பரஞான அம்மையாரின் ஞாபகப் பதிப்பு.
----------

சிவமயம்‌

சிறப்புப்பாயிரம்‌.


நல்லூர்‌ ஸ்ரீமத்‌ வே. கார்த்திகேயோபாத்தியாயர்‌,
பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்‌,

புகழ்கின்ற வீழத்தி யாழ்ப்பாண மாதகற்‌
      புனிதமயில்‌ வாகனப்பேர்‌
புலவரரு ளியபரம பதிமகிமை துதிசெயும்‌
      புலியூரி னந்தாதியை
யுகள்கின்ற கல்வியறி வாசார நியதிகளி
      னொப்பிலநு பூதிமானா
யுயர்நல்லை யாறுமுக நாவல வருட்குருவி
      னுண்மையன்‌ புறுசீடரிற்‌
றிகழ்கின்ற வன்சுகுண கணபதிப்‌ பிள்ளைதன்‌
      சேய்திருநெல்‌ வேலிவாசன்‌
றிரமருவு மட்டுவிற்‌ சைவப்ர காசவித்‌
      யாசாலை யதிபதிதிரு
நிகழ்கின்ற வேற்பிள்ளை பலபிரதி ரூபங்கள்‌
      கொடுதிருத்‌ துபுநிகழ்த்து
நிகரில்புத்‌ துரையொடச்‌ சிற்பதிப்‌ பித்துலகி
      னிலவுற நிறீஇயினானே.
=============
நல்லூர்‌ வித்துவசிரோமணி ஸ்ரீமத்‌ ச. பொன்னம்பலபிள்ளை.
அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரியவிருத்தம்‌,

சீர்மேவு நதிமதியொ டரவமருஞ்‌ செய்யசடைச்‌ செம்மன்‌ மேய
வேர்மேவு புலியூரந்‌ தாதிதனக் குரையையியல்‌ வாய்ப்பச்‌ செய்தான்‌
தார்மேவு பொழில்புடைசூழ்‌ நெல்லையாம்‌ பதியனருந்‌ தமிழின்‌ மிக்‌கோன்‌
பேர்மேவு கணபதிவேள்‌ பெறுகுரிசில்‌ வேற்பிள்ளைப்‌ பெயரி னானே.
~~~~~~~~~~~~
உடுப்பிட்டி ஸ்ரீமத்‌ அ. சிவசம்புப்புலவர்‌.
நேரிசை ஆசிரியப்பா.

கங்கையு மதியுங்‌ கடுக்கையு மாதையுந்‌
தங்கிய மின்னிறச்‌ சடைமுடி நாதன்‌
கருமல மொழித்துக்‌ கதியுயிர்க்‌ கருள
நிருமல வுருக்கொடு நின்ற நிராமயன்‌
யோக முதவிட யோகியாய்ப்‌ பஃறிறப்‌
போக முதவிடப்‌ போகியா யுறைவா
னாவியை யாட்ட வானந்த தாண்டவ
மோவிலா தாடு மோங்கிய கருணையோன்‌
றுன்றிய வுயிர்களைச்‌ சுகநிலை வைப்பா
னென்று மைந்தொழி லியற்றா தியற்றுவோன்‌
சோதியாய்ச்‌ சுடராய்ச்‌ சூழொளி விளக்கா
யோதியாய்‌ நிலவ மொப்புயர்‌ வில்லோ
னோரா ளெனமறை யோரொடன்‌ றுற்ற
சீரா ளன்றிருச்‌ செவியிடைச்‌ சேரா
வளர்சுவைச்‌ சொற்பொருள்‌ வண்ண மடக்குக்‌
கிளரிரா மேசர்‌ கிளிவிடு தாது
மிகமத முறுகவி வேழத்‌ தொகைக
ளிகறெறு தோட்டியா மிரகு வமிசமு
மாற்றரும்‌ பிணியையு மருந்தையு மினிதுரைத்‌
தேற்றமிக்‌ குளபர ராசசே கரமும்‌
வியனெறிக்‌ கணிதர்கள்‌ விழைவொடு போற்று
மியனெறி யறுஞ்செக ராசசே கரமுஞ்‌,
சீலமெய்த்‌ திறனருள்‌ சிவநிசி புராணமும்‌
மாலமுற்‌ றொழித்திடு மமுதா கரமு
மறைசையந்‌ தாதிகல்‌ வளையந்‌ தாதியு
நறைமல ரடிக்குரு நாத ருலாவுமா
மின்னன பற்பல வியற்றுபு மேன்மை
மன்னியாழ்ப்‌ பாண மாநக ரமர்ந்த
பதரில்‌ கேள்விப்‌ புதரில்‌ வாய்ந்த
விதியிற்‌ கிளர்ந்த மதியிற்‌ றலைவன்‌
கையா ரழலுடை யையா னைற்றொழு
மெய்யார்‌ புனித வையா மரபினன்‌
மாதகல்‌ வாழ்மயில்‌ வாகனப்‌ புலவ
னோதிய தென்புலி யூரந்‌ தாதிக்‌
கென்றுநின்‌ றிலங்கவு மெவரு நயப்பவு
மொன்றிய வுரையிங்‌ கொன்றுஞற்‌ றுதியெனா
யாமிய திசைக்கன் றெதிருறு திசைக்குமோ
ரேமநற்‌ கலைமுனி யிருந்தன னென்னாப்‌
புடவி சொலக்கலைப்‌ புணரியை முகந்து
திடமொடு தேக்கெறி தேசிகோத்‌ தமனாய்ச்‌
சான்ற கனக சபாபதி யோகியாம்‌
போன்றவர்‌ பிறரிலாப்‌ புண்ணிய னடிதழீஇ
யொவ்வொரு நூலையு மொவ்வொரு முறைவினா
யவ்வவர்‌ சொற்பொரு ளனைத்தையு மகத்தமைக்‌
தூழ்படு திறமிதென்‌ றுலக முவப்பக்‌
காழ்படு கடுமையிற்‌ கற்று நிறைந்த
திதமுறு நுண்மதிச்‌ சேனாதி ராய
முதலிபா லினுமவன்‌ முதல்மா ணாக்கனு
மாண்புகழ்‌ தனக்கு மைத்துன னாயெலாப்‌
பண்பு நிறைந்தசம்‌ பந்தப்‌ புலவன்‌
சிறியேற்‌ கொண்கலை தேற்றுநாட்‌ டானுமெய்ந்
நெறியாற்‌ றேற்றிய நீளருட்‌ குரவனுந்‌
தண்டமிழ்க்‌ கடலுமாஞ்‌ சரவண முத்துப்‌
பண்டிதன்‌ பாலினும்‌ பரிவொடு பணிவுறீஇச்‌
சகநா டெங்கணுஞ்‌ சார்ந்தசீ ராறு
முகநா வலனொடு முதிரிசை முழுப்பூண்‌
பூண்டசம்‌ பந்தப்‌ புலவ னொடுங்கெழீஇ
யீண்டிய கேண்மையின்‌ யாண்டுபல்‌ கற்றோன்‌
வேலா யுதப்பெயர்‌ மேவிய வித்தகன்‌
கலா யுதக்கொடி கந்தனைப்‌ பரவி
யிரங்கிடெந்‌ தாயென்‌ றிணைமலர்த்‌ தாட்கீழ்
வரங்கிடந்‌ தீன்ற மாண்புடைச்‌ செம்ம
னன்மா ணாக்கரை நண்புறக்‌ கூஉய்த்
தொன்மாண்‌ கலைதருஞ்‌ சுத்த மனத்தோ
னரியநாற்‌ பாதத்‌ தரும்பெனக்‌ காணுஞ்‌
சரியை நியமந் தவாத செல்வன்‌
றெருள்வீற்‌ றிருந்தமெய்ச்‌ சிந்தைகுடி கொண்ட
வருள்வீற்‌ றிருந்த வறுமுகத்‌ தெம்பிரா
னாணவ முடைக்குமா னந்தமா ணிக்கத்‌
தாணிமி ருத்தமத்‌ தகைசால்‌ பத்தியான்‌
வெண்ணீற்‌ றொளியறா மேனியைப்‌ பத்திமைக்‌
கண்ணீர்க்‌ கடலிற்‌ கழீஇவினை கடிவோன்‌
வினையற வெழுந்த வீட்டுநூற்‌ பொருடெரீஇ
மனையறம்‌ வெறுத்த மாசில்‌ காட்சியோன்‌
றேசா ரியல்வகை திருந்திய கார்த்திகே
யாசாரியன்‌ றனக்‌ கரிறபு நூல்பல
திரமுறத் தேற்றிய செவ்விய கிழமையின்‌
விரிவுறு மகிழ்வொடு விளம்பின னாக
வுற்றாங்‌ கவன்மொழி யுளமுறத்‌ தலைக்கொளீஇ
யற்றா குகவென வாய்ந்து புரிந்தனன்‌
பீடுறு நயிட்டிகப்‌ பிரம சாரியாய்‌
நீடுறு சிவார்ச்சனை நெறிநின்‌ றரன்பத
முன்னிய வாறு முகநா வலன்கணு
மன்னவற்‌ கினியமா ணாக்கனு மருகனுஞ்‌
சரவண முத்துமா றனையனு மாயபேர்
விரவுபொன்‌ னம்பல வித்து வான்கணும்‌
பாங்குற‌ வழிபடீஇப்‌ பஃறிற நூற்பொரு
ளோங்குற வினாய்வெளி றொழித்தநுண்‌ மதியோன்‌
மாவரு ணிலைமையின்‌ மாறா தொளிரு
மீவிரி செங்கேழ்‌ விளக்கொன்‌ றனந்த
மாய தெனவொளி ரணிதிகழ்‌ மணிமுலைத்‌
தாயெனு மேதகைச்‌ சாந்தநா யகியயொடு
மாட்சிசேர்‌ சந்திர மெளளீச ரென்றுங்‌
காட்சிதந்‌ தமருங்‌ கடிமதிற்‌ கோவிலுஞ்‌
செழுநீ லத்தொகை கெழுநீர்‌ வாவியு
முழுநீர்ப்‌ படுசெங்‌ கழுநீர்த்‌ தடமுஞ்‌
சூதமு மரம்பையுந்‌ தொன்னிலங்‌ கீன்றுவேர்
மீதெழு முட்புற விரைப்பழ வருக்கையும்‌
வாளையே றுகண்டு மடலங்‌ கமுகின்‌
பாளைகீன்‌ றுலவுறூஉம்‌ பதுமவான்‌ றடமுஞ்‌
செந்நெலின்‌ கன்னற்‌ றெரிதடக்‌ கத்தியைக்‌
கன்னல்கள்‌ காட்டிடுங்‌ கழனிசூழ்‌ வைப்புத்‌
தடநிலை குலவிய சத்திர முந்திரு
மடமு நிலாவிய மட்டுவிற்‌ பதியிற்‌
றெய்வவெண்‌ ணீற்றுத்‌ திருநின்‌ றோங்குறூஉஞ்‌
சைவ வித்தியா சாலைக்‌ கதிபன்‌
கண்டரு நதியாற்‌ கவினுறு கண்ணெலாந்‌
தொண்டரு மண்டருந்‌ தோணிசெய்‌ தேத்தப்‌
பங்கொரு மயிலுடைப்‌ பசுபதி யவர்க்குப்‌
பொங்கருள்‌ செய்தமர்‌ புலோலியம்‌ பதியிற்‌
றானவி னோதமுந்‌ தருமமாண்‌ புந்தவாச்‌
சானவி மரபு தயங்க வுதித்த
காண்டகு செல்வக்‌ கணபதிப்‌ பிள்ளைதன்‌
மாண்டகு தவமொரு வடிவெடுத்‌ தனையா
னேணுறு கலைப்பொருள்‌ யாவையு மியல்புளி
மாணவ கர்க்கு வழங்குந்‌ தியாகி
கல்வியும்‌ வாய்பையுங்‌ கனமும்‌ புகழுஞ்‌
செல்வமு மீகையுஞ்‌ சினகர வளமுஞ்‌
சேவிவர்‌ பரம சிவமத நெறியு
மேவிய திருநெல்‌ வேலி வாச
னின்‌பரு ளெண்குணத்‌ திறைமாட்‌
டன்பு நிலைமை யறாவேற்‌ பிள்ளையே.
~~~~~~~~~~~~~~~~~
புலோலிநகர்‌ ஸ்ரீமத்‌ ம. முத்துக்குமாரசுவாமிக்குருக்கள்
நேரிசை வெண்பா.

பாரேறு பல்வளமும்‌ பல்கியொளி ரீழநன்னாட்‌
டேரேறி யாழ்ப்பாணத்‌ தெய்தியுள - பேரேறு
மாதைப்‌ பதிவாழ்‌ மயில்வாக னப்புலவன்‌
மேதைசா லன்பு விளைந்து.

துய்யபுலி யூர்வாழுந்‌ தொல்லோள்ப கம்பேணிச்‌
செய்யபுக ழந்தாதி செப்பினனஃ - தொய்யெனவே
யாரு மினிதுணர வாராய்ந்தொர்‌ நல்லுரையைச்‌
சீருறவே செய்தான்‌ றெரிந்து.

திருமலியாழ்ப்‌ பாணத்துச்‌ சீரார்‌ புலோலி
வருகணப திப்பிள்ளை வள்ள -றருதனய
னுண்மை பொறையன்‌ புயரடக்க மாதிகுண
வண்மைபெறு செல்வ வரன்‌.

வரமாரு நல்லைதகர்‌ வான்கிரிதீ பம்போற்‌
சிரமார்‌ புலவோருட்‌ சீர்த்தி - திரமார்‌
பலர்புகழுங்‌ கார்த்தகேயோ பாத்யாயன்‌ பொன்னம்‌
பலபண்டி தேசனிவர்‌ பால்‌.

ஆன்றார்‌ புகழுமகா னாறுமூக நாவலர்பா
லேன்றார்‌ வியப்பமுறை யேய்தியே - தோன்றா
வதிநுட்ப நூல்கள்பல வாய்கல்வி கேள்வி
மதிநுட்ப நன்பா வலன்‌.

மாசணுகா மட்டுவிலின்‌ மன்னிவளர்‌ சைவப்ர
காசவித்யா சாலை கருதியமைத்‌ - தேசகலக்‌
கற்பார்க்‌ கறிவூட்டுங்‌ காருண்யன்‌ வேற்பிள்ளை
சொற்பாற்‌ றமிழ்வித்‌ துவான்‌.
~~~~~~~~~~~~~~~~~~~~
புலோலிநகர்‌ ஸ்ரீமத்‌ வ குமாரசுவாமிப்புலவர்‌
(அஷ்டகம்‌) எண்‌சீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்‌

மாதங்க மேருகிரி நின்றும்‌ போந்து
      மனுகுலத்துச்‌ சிங்கவன்மன்‌ மகிழ்வாற்‌ கண்ட
மாதங்க மன்றுநின்றெவ்‌ வுயிர்க்கு மாக்கம்‌
      வகுத்தளிக்க வளித்தழிக்க வாரீ சத்து
மாதங்க மேனியனு மயனுங்‌ காணு
      மலா்க்கழலன்‌ பினர்காண மகிழ்வி னாடு
மாதங்க மேனியரும்‌ புலியூ ரானை
      வழுத்தியொரு பிரபந்தம்‌ வகுப்ப னென்றே.

கோதகலு மித்துசமுத்‌ தரமா நெய்யிற்‌
      குலவுமிலங்‌ காதீபக்‌ குவல யத்திற்‌
றீதகலும்‌ வடதிசையாழ்ப்‌ பாண மென்னுந்‌
      தீபகற்பத்‌ தொருசாரிற் றிகழு மேன்மை
மாதகலென்‌ றுள்ளவளம்‌ பதிவே ளாள
      மரபினன்செந்‌ தமிழ்க்க‌விஞன்‌ வழுவா தாய்ந்து
வாதகலு மந்தாதி யமக மாக
      மதித்துமயில்‌ வாகனன்றான்‌ வகுத்தா னன்றே,

அன்றுரைத்த புலியூரந்‌ தாதிக்‌ கர்த்த
      மறிந்திடுவார்‌ சிலரன்றி யறியார்‌ பல்லோர்‌
சென்றுரைத்த போதனையாற்‌ கொள்ளு முள்ளச்‌
      சிறுவருந்தே சிகரின்றித்‌ றெளியுமாற்றா
னன்றுரைத்த பொருளெழுது கெனத் தனக்கு
      நற்றமிழ்போ தித்தநல்லூர் நாய்க ரேறாங்
குன்றுரைத்த தமிழ்க்கலைஞன்‌ சார்த்திகேயக்‌ குரவனினி
      துரைத்தபணி சிரமேற்‌ கொண்டே.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்‌,

பல்லூரி னல்லூரும்‌ பலமதத்திற்‌
      சிவபதமும்‌ படித்துத்‌ தேருஞ்‌
சொல்லூரும்‌ பாடைகளிற்‌ சுவைத்தமிழு
      நன்மரபுத்‌ தொகையோர்‌ நான்கின்‌
வில்லூரு மதவேணி மிசையிசைகங்‌
      காகுலமும்‌ விழுப்ப மெய்த
ஒல்லாரும்‌ வியந்துரைத்த தூழியினுந்‌
      தொலையாதங்‌ குதித்த சீரான்‌

ஆகியவுத்‌ தமனாகு மாறுமுக
      நாவலன்ற னிடத்து மாழ்ந்துள்‌
ளேகியவின்‌ னோன்மருக னியற்றமிழி
      லெத்திறத்து மிணையி லாதான்‌
வேகியல னேவருக்கும்‌ வித்துவ
      சிரோமணியாய்‌ விளங்கி யெங்கும்‌
போகியசீ ரான்பொன்னம்‌ பலவனிடத்‌
      தினுந்தமிழைப்‌ பொருந்தக்‌ கற்றோன்‌.

தரவுகொச்சகக்கலிப்பா.
நட்டுவரி விளைகழனி நன்மருத நாடேயா
மட்டுவிலென்‌ றொருபதியின்‌ மாணவரங்‌ கறியாமை
விட்டுவகை படத்தமிழை விளக்கவொரு கலாசாலை
கட்டுவித்தங்‌ கதிபதியாக்‌ களங்கமற நடத்துவிப்போன்‌.

எண்‌சீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்‌.

தேங்குபுனற்‌ பகீரதியின்‌ குலத்தான்‌ செல்வஞ்‌
      சிறந்தகண பதிப்பிள்ளைச்‌ செம்மல்‌ செய்த
வோங்குதவப்‌ பயனெனவந்‌ துதித்தோ னல்லூர்க்‌
      கொருசாரிற்‌ றிகழ்வளத்துக்‌ குறையு ளான
பாங்குபெறு செழுந்திரு நெல்வேலி யென்னும்‌
      பழம்பதியே விளங்கியதன்‌ பதியாக் கொண்டோன்‌
றாங்குகுட தீபமென விருந்த காலந்‌
      தவிர்ந்துகரி தீபமெனத்‌ தயங்கப்பெற்றே.

சக்கரத்தை யோதிமத்தான்‌ மதித்து முன்னாட்‌
      சக்கரத்தான்‌ சுவையமுதந்‌ தந்த வாபோ
லக்கரத்தை யொருவடிவா யடிமுன்‌ னாடி
      யமைத்தருத்தம்‌ பிறிதுபிறி தாக்கு நூறு
துக்கரத்தை யுடையகவிப்‌ பொருளை யாய்ந்து
      துகளறவே யெளிதெவருந்‌ துணியு மாற்றான்‌
மிக்கரத்தைப்‌ படுதலின்றி வேலுப்‌ பிள்ளை
      விரும்புதமி ழறிஞனுரை விளம்பி னானே.
----------------------------
புலோலிநகர்‌ ஸ்ரீமத்‌ அ. வேன்மயில்வாகன உபாத்தியாயர்‌,
கட்டளைக்கலித்துறை,

சேணுற்‌ றிடுபொழில்‌ யாழ்ப்பண மாதகற்‌ சென்மிதனாப்‌
பேணுற்‌ றிடுபுல வோன்மயில்‌ வாகனன்‌ பெட்புறச்சொன்‌
மாணுற்‌ றிடுநற்‌ புலியூரந்‌ தாதிக்கு வாய்ப்புறவோ
ரேணுற்‌ றிடுமுரை செய்தெழி லாரச்‌ சிடுதியன்றே.

செல்லாரு மிஞ்சிநல்‌ லூரே திகழுஞ்‌ செழும்பதியாச்‌
சொல்லூர்‌ புகழமை வேலா யுதன்செய்த துய்யதவத்‌
தெல்லூர்‌ மணியென வந்திசை வைத்தவ னின்‌றமிழைப்‌
பல்லூ ரவர்க்கும்‌ பகார்கார்த்தி கேயன்‌ பணித்திடவே.

அன்னோ னிடத்தினு முன்னே புகன்றநல்‌ லூரடைந்‌த
முன்‌னோனம்‌ மாறு முகநா வலன்றிரு முன்னருஞ்சொ
லின்னோன்‌ மருக னெனவந்த வித்வ சிரோமணிப்பேர்‌
மன்னாம்பொன்‌ னம்பலப்‌ பிள்ளைதன்‌ மாட்டினும்‌ வாய்த்திடவே.

கற்றோ னிலக்கண லக்கிய மற்றுள கல்வியெலா
மற்றோரொப் பில்லவன்‌ வேளாண்‌ மரபொளிர்‌ மாண்புடையோ
னுற்றோர்ந்‌ திடுமியன்‌ மட்டுவிற்‌ பேர்ப்பதி யுற்றிடுதீங்
கற்றோர்க்கருள்‌ சைவ வக்கழ கத்துக்‌ கதிபதியே.

கயல்சேர்ந்த நீர்வயல்‌ யாழ்ப்பாணத்‌ துக்கனங்‌ காட்டுநயச்‌
செயல்சோ்ந்த சீர்த்திரு நெல்வேலி யன்றினஞ்‌ செய்தவத்தா
னுயல்சோர்‌ கணபதிப்‌ பிள்ளைக்‌ கொருசுத னாவுதித்த
வியல்வேலுப்‌ பிள்ளை யுரைசெய்‌ தெழிலச்சி னிட்டனனே.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சுன்னாகம்‌ ஸ்ரீமத்‌ அ. குமாரசுவாமிப்புலவர்‌.
எண்‌சீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்‌.

தில்லைதநட ராசனடிக்‌ கன்பு மிக்கோன்‌
செயமயில்வா கனப்புலவன்‌ சென்னாட்‌ செய்த
மல்லல்பெறும்‌ புலியூரந்‌ தாதிக்‌ கேற்ப
வாய்மைமிகு முரையொன்றை வரைந்திட்‌ டீந்தா
னல்லைநகர்‌ நாவலருக்‌ கன்பார்‌ சீட
னகுதிருநெல்‌ வேலியெனு நகரி வாசன்‌
சொல்லுகண பதிப்பிள்ளை யருளு மைந்தன்‌
சுகுணமுறும்‌ வேற்பிள்ளைத்‌ தோன்றன்‌ மாதோ.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஊரெழு ஸ்ரீமத்‌ சு. சரவணமுத்துப்பிள்ளை.
கட்டளைக் கலித்‌துறை.

மாதகன்‌ மேவு மயில்வாக னப்புல வன்புலியூர்க்‌
கோதி லியமக வந்தாதிக்‌ கோருரை கூறினனாத்‌
றீதக லுந்திரு நெல்வேலி வாழ்பவன்‌ றேறுகலை
யோதிய சீர்த்தியன்‌ வேற்பிள்ளை யென்றிடு முத்தமனே.
~~~~~~~~~~~~~~~~~
வல்லை இயற்றமிழ்ப்போதகாசிரியர்‌
ஸ்ரீமத்‌ ச. வைத்தியலிங்கபிள்ளை.
எண்‌ சீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்‌

செய்யவேள்சேர்‌ யாழ்ப்பாணச்‌ செழும்பு லோலித்‌
      திகழ்கணப திப்பிள்ளை செம்ம லென்ன
வையமிசை யினிதுதித்தோன்‌ மட்டு விற்சை
      வப்பிரகா சப்பேர்வித்‌ தியாசா லைக்குத்‌
துய்யவதி பதிவேலுப்‌ பிள்ளை நாமன்‌
      றொடுகடலி னிலவுமகா வித்து வானெம்‌
மையலுமற்‌ றயராறு முகனெ னும்பேர்‌
      மாநாவ லனேநல்‌ லூரின்‌ மன்னும்‌.

கார்த்திகே யோபாத்தி யாய னேமன்‌
      கருதுவித்வ சிரோமணிப்பேர்‌ காட்டி நிற்குஞ்‌
சீர்த்தியபொன்‌ லம்பலப்போ்ச்‌ செல்வ னின்னோர்‌
      செந்தமிழைப்‌ பயிற்றவுணர்‌ சிறப்பு வாய்ந்தோன்‌
ஆர்த்தியொடு கார்த்திகே யப்பே பேரோச
      னநுமதியின்‌ படிபுலியூ ரந்தா திக்குப்‌
பூர்த்திபெற வோருரைசெய்‌ தளித்தா னிந்தப்‌
      பூமிசைமா ணவர்மயக்கம்‌ போதன்‌ மெய்யே.

காரைநகர்‌ ஸ்ரீமத்‌ கார்த்‌திகேயையர்‌ குமாரர்‌ நாகைநாதையர்‌.
பன்னிருசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்‌,

சீர்மேவு மாதைநகர்‌ மயில்வாகனப் புலவர்‌
      செய்தசிற்‌ பரமதான
செம்பொனம்‌ பலமருவு புலியூரி னந்தாதி
      டீகைநீ செய்கவென்னப்‌
பேர்மேவு நல்லைநகர்‌ வேலாயுதப் பிள்ளை
      பெருமகிழ்வொ டருள்செய்குமரன்‌
ப்ரபலமிகு கார்த்திகே யாசான்புகன்‌ றிடப்‌
      பிரியா மவவனிடத்தும்‌
வார்மேவு சுகுணசர வணமுத்து மதலைபொன்‌
      னம்பலவ நாமதேய
மருவியநல்‌ வித்துவ சிரோமணி யிடத்தினும்‌
      வளர்மதிப்‌ பெரியமத்தா
லார்மேவு கல்விப்‌ பயோததி மதித்தரிய
      பிரசார வமுதமுதவி
யான்மகோ டிசுண்மயற்‌ பசியொழித்‌ தரனடிக்‌
      கெஞ்ஞான்று மன்புபூண்டோன்‌.

பரமதச்‌ செறியிரு டிசாமுக மறைந்திடப்‌
      பாரில்வரு ஞானபானு
பகருமெக்‌ கொடையினுங்‌ கல்விப்பெருங் கொடைப்‌
      பயனதிக மென்றுணர்ந்து
வரமுதவு தில்லைத்‌ தலத்தினும்‌ வண்ணையினு
      மிருகழகம்‌ வைத்தமேன்மை
மண்டலங்‌ கொண்டபுக ழாறுமுக நாவலன்‌
      மருங்கினுங்‌ கற்றவல்லோன்‌
பொருவில்சீ ராமனது சரிதாதி காவியப்‌
      பொருளினி துணர்ந்தறி நிபுணன்‌
பொழில்வளையு மட்டுவிலொர்‌ வித்தியா சாலையை
      போற்றுமதி காரியாகித்‌
திருநெல்வே லிபபதியி னன்கண பதிப்பிள்ளை
      செய்தவ மெனாவுதித்த
செய்யவே லுப்பிள்ளை யுரைபுரிந் தெழுதா
      வெழுத்தினிற்‌ றீட்டினானே.

ஆறுமுகநாவலர்‌ திருவடி வாழ்க,
திருச்சிற்றம்பலம்‌.
~~~~~~
நெய்யார்ந்த வாட்கைச்‌ செகராச சேகரப்‌ பேர்நிறுவி
மெய்யாக விண்ணெண்‌ கலைதமி ழாக விரித்துரைத்த
வையாவின்‌ கோத்திரத்‌ தான்மயில்‌ வாகனன்‌ மாதவங்கள்‌
பொய்யாத வாய்மைப்‌ புலியூரந்‌ தாதி புகன்றனனே.
~~~~~~~~~~~~~~
முகவுரை
இவ்வந்தாதியுரையிலே எடுத்தோதற்பாலனவாகிய இலக்‌கணவிதிகளுள்ளும்‌, பிறவற்றுள்ளும்‌, பொருளுணர்ச்சிக்கு ஒருதலையான்‌ இன்றியமையாதன சிலவன்றி, ஏனைய எடுத்தோதப்பட்‌டில; அங்ஙனம்‌ எடுத்தோதாமை அந்தாதியுரையாசிரியர்‌ தொன்னெறிமரபென்க. அன்றியும்‌ வேற்றுமை அல்வழிகளுள்‌ யாதானுமொரு சந்தியாற்‌ றொடர்ந்துநிற்கும்‌ வாசகங்கட்கு அச்‌சந்தியாற்‌ கொள்ளப்படும்‌ பொருளோடு விரோதமற, வேறோர்‌ நயம்பற்றிப்‌ பிறிதொரு சந்தியாற்‌ பொருளுரைக்கப்பட்டனவும்‌, ஒரோவிடங்களிற்‌ பொருளை இனிது விளக்குதற்பொருட்டுச்‌ சிறுபான்மைச்‌ சொற்கள்‌ வருவிக்கவேண்டுழி வருவித்துப்‌ பிரயோகிக்கப்பட்டனவுஞ்‌ சிலவுள. அங்ஙனமுரைத்தல்‌, பிரயோகித்‌தல்களைப்‌ பெரும்பான்மை இளம்பூரணருரை, நச்‌சினார்க்கினியருரைகளினும்‌, சிறுபான்‌மை சேனாவரையருரை, பரிமேலழகருரை, சிவஞான முனிவருரைகளிலுங் காண்௧. ம. க. வே.
~~~~~~~~~~~~~~~~~~~~

சிவமயம்
உரையாசிரியர்‌ சரித்திரம்‌
பண்டிதை ச. அமிர்தாம்பிகை, B. A. Honours London

ஈழமண்டலத்தைச்‌ சார்ந்த யாழ்ப்பாணத்திலே சந்திர மெளலீசபுரம்‌ என்று மறுநாமம் பூண்ட மட்டுவிலென்னும்‌ கிராமத்திலே சைவவேளாளர்‌ மரபிலே கி. பி. பத்தொன்பதாம்‌ நாற்றாண்டின்‌ நடுப்பகுதியிலே கணபதிப்பிள்ளை என்பவர்‌ ஒருவர்‌ இருந்தார்‌. இவர்‌ புலோலியில்‌ இரு மரபுந்தூய பெரிய வேளாளக்‌ குடியைச்‌ சேர்ந்தவர்‌. அவர்‌ பெரிய தனவந்தர்‌. புராணபடனஞ்‌ செய்பவர்‌, இவருடைய தந்தையா்‌ வேலாயுதபிள்ளை. அவரின்‌ தந்தையார்‌ நினைவர்‌. கணபதிப்பிள்ளயவர்கள்‌ அக்காலத்தில்‌ மாகாண அதிபதியாயிருந்த டைக்‌ துரையவர்சளால்‌ தென்மராட்சிப்‌ பகுதிக்கு உடையாராக நியமிக்கப்பட்டார்‌. அக்காலத்தில்‌ நற்குடிப்பிறப்பும்‌ செல்வாக்கும்‌ செல்வமும்‌ உடையவர்களையே, இவ்வுத்தியோகத்திற்கு நியமிப்பது வழக்கம்‌. உடையாரின்‌ புதல்வரே இந்நாலுரையாசிரியர்‌. உரையாசிரியரோடு உடன்‌ பிறந்தவர்கள்‌ மூவர்‌. அவர்களுள்‌ இருவர்‌ சகோதரிமார்‌. தமையன்‌ சரவணமுத்து. அவர்‌ தமிழ்‌ வல்லுநர்‌; வைத்தியமும் சிறிது கற்றவர்‌; பெரிய தனவந்தர்‌. உரையாசிரியரின்‌ ஒரு சகோதரி திருநெல்வேலியிலிருந்த பிரசித்திபெற்ற நொத்தாரிசு வைத்திலிங்கமென்பவரை விவாகஞ் செய்தார்‌.

உரையாசிரியரவர்களுக்கு உரிய காலத்திலே அவருடைய தந்தையார்‌ வித்தியாரம்பஞ் செய்து வைத்தனர்‌. மட்டுவில்‌ சண்முகச்சட்டம்பியாரிடமும்‌ நல்லூர்‌ கார்த்திகேய உபாத்தியா யரிடமும்‌ பாடங்கேட்டார்‌. பின்பு வித்துவ சிரோமணி பொன்னம்‌பலப் பிள்ளையிடமும்‌ ஆறுமுகநாவலரிடமும்‌ கல்விகற் றனர்‌, வித்துவசிரோ மணியவர்கள்‌ இவரின்‌ இலக்கயத்திறமையைக்கண்டு இவருக்கு மிகவும்‌ அன்போடு பாடஞ்‌ சொல்லிக்கொடுத்தார்‌, இவரை “மட்டுவிற்பதியிற்‌ சட்டனாயமர்ந்த கணபதிப் பிள்ளைவேள்‌ கணிப்பருந்தவத்தானண்ணிய வேற்பிள்ளை” என ஒரு கவியில்‌ பாராட்டியுள்ளார். இளம்வயது தொடங்கி கோவில்களில்‌ புராண படனஞ்செய்தும்‌ பிரசங்கஞ்செய்தும்‌ வந்தனர்‌. தமது சன்ம நாடாகிய மட்டுவிலில்‌ சந்திரமெளலீச வித்தியாசாலை எனப்‌ பெயர்பூண்ட ஒரு கலாசாலையைத்‌ தாபித்தார். அது இப்போது அரசினரால்‌ நடத்தப்படுகிறது. காலந்தோறும்‌ தமிழறிவில்‌ முதிர்ந்த மாணவர்களுக்கு கந்தபுராணம்‌, இராமாயணம்‌, தொல்காப்பியம்‌ முதலிய நூல்களைக்‌ கற்பித்தார்‌.


பிள்ளையவர்கள்‌ புலோலியில்‌ கல்வியறிவாலும்‌ செல்வத்தாலும் சிறந்த குடும்பத்தைச்‌ சேர்ந்த வல்லிபுரநாதர்‌ சுப்பிரமணியத்தின்‌ மகளாகிய உமாமகேசுவரியை விவாகஞ் செய்தார். உமாமகேசுவரி தமது சிறிய தந்தையர்களாகிய இலக்கண மகாவித்துவான்‌ வ. குமாரசுவாமிப் பிள்ளையிடமும்‌ திருவனந்தபுரம்‌ மகாராசாவின்‌ சமஸ்‌தான வித்துவானும்‌ மகாராசாக்கல்லூரி மகாபண்டிதரும்‌ வில்கணீயம்‌ முதலிய நூலாசிரியருமாகிய வ. கணபதிப்பிள்ளையிடமும்‌, தமது மாமியாராகிய பார்வதியம்மையாரிடமும்‌ கல்விகற்றவர்‌. கடவுள்‌ பத்தியடையவர்‌; இரப்போருக்கீயும்‌ கொடைவள்ளல்‌; நித்தியமும்‌ திருவாசகப்பாராயணம்‌ செய்து அண்மையிலுள்ள வைரவர்கோயிலிலும்‌ மட்டுவில்‌ மருதடிப்‌ பிள்ளையார்‌ கோவிலிலும்‌ சுவாமிதரிசனஞ் செய்தே 'தமது காலை உணவையருந்துவார்‌. சயனிக்கும்போது தலைமாட்டில்‌ திருவாசகப்‌ பிரதியை வைப்பது இவரின்‌ வழக்கம்‌. சைவப்பெரியார்‌ சிவபாதசுந்தரம்‌ இவரின்‌ சகோதரர். 1862-ம்‌ ஆண்டு தை மாசம்‌ 22-ம்‌ திகதி பிறந்து 1920-ம்‌ ஆண்டு சித்திரைப்‌ பூரணையில்‌ காலமானார்‌.

உரையாசிரியரின்‌ சியேட்ட புத்திரர்‌ திருஞானசம்பந்தர்‌. இவர்‌ இருபாலைச்‌ கதிரேசு மணியத்தின்‌ மகன்‌ மயில்வாகனத்தின்‌ மகளை விவாகஞ்செய்தார்‌. இவருக்கு ஒரு புத்திரனுண்டு. நெடுங்காலமாக யாழ்ப்பாணம்‌ இந்துக்கல்லூரித்‌ தமிழ்ப்‌ போதகாசிரியரும்‌ இந்துசாதன பத்திராதிபருமாய்த்‌ தொண்டு செய்தார்‌. இவா்‌ பல நூல்களுக்குரை- யெழுதியுள்ளார்‌. ‘உலகம்‌ பலவிதம்‌” என்னும்‌ கதைத்தொகுதியின்‌ கதாசிரியர்‌. 1955-ம்‌ ஆண்டு ஆடிமாதம்‌ பரகதியடைந்தார்‌.

உரையாசிரியரின்‌ இரண்டாம்‌ மகன்‌ பிரபல வழக்கறிஞரும்‌ சமாதான நீதிபதியுமாகிய மாணிக்கவாசகர்‌, இவர்‌ சித்தாந்த வித்தகரும்‌ குகதம்சருயார்‌ சமாதான நீதிபதியுமாகிய சபாரத்தின முதலியாரின்‌ அருந்தவப்‌ புதல்வி பரஞானவம்‌மையாரைத்‌ திருமணஞ் செய்தார்‌. அம்மையார்‌ 1069-ம்‌ ஆண்டு ஆனி மாதம்‌ 4-ம்‌ திகதி சிவபதமடைந்தார்‌. இவரின்‌ மூத்த மகன்‌ மகாதேவன்‌, B. A. (Hons) Dip. In Education). இவர்‌ தெல்லிப்‌பழை மகாஜனாக்‌ கல்லூரியின்‌ உப அதிபர்‌.

மூத்தமகள்‌ பண்டிதை அமிர்தாம்பிகை, B. A. (Hons) இரண்டாம் மகள்‌ சுந்தராம்பிகை, B. A. இரண்டாம்‌மகன்‌ வாமதேவன்‌, றோயல்கல்‌லூரி விஞ்ஞான ஆசிரியர்‌. மூன்றாம் மகள்‌ கனகாம்பிகை B. A. மூன்றாம் மகன்‌ வைத்தியகலாநிதி சுப்பிரமணியசிவம்‌, இவர்‌ தற்போது மேற்படிப்பிற்காக இங்கிலாந்து சென்றிருக்கிறார்‌,

உரையாசிரியரின்‌ மூன்றாம் மகன்‌ பண்டிதர்‌ மகாலிங்கசிவம்‌. இவர்‌ நெடுங்காலமாகக்‌ கோப்பாய்‌ அரசினர்‌ பயிற்சிக்கல்லூரியில் விரிவுரையாளராயிருந்தார்‌. ஏனைய புதல்வர்கள்‌ திருவாளர்கள்‌ கந்தசுவாமி, நடராசா B.Sc., ஆகியோர்‌. இவர்‌களின்‌ பிள்ளைகளில்‌ அநேகர்‌ பல்கலை‌க்கழகப்‌ பட்டதாரிகள்‌,

ஆசிரியர்‌ இயற்றிய நூல்கள்‌:--
வைரவதோத்திரமாலை, புலியூரந்தாதியுரை, கெவுளிநூல்‌ விளக்கவுரை, திருவாதவூர டிகள்‌ புராண விருத்தியுரை, வேதாரணிய புராணக்‌ குறிப்புரை, அபிராமியந்தாதியுரை, ஆருயிர்க்‌ கண்மணிமாலை, ஈழமண்டலசதகம்‌.

ஆசிரியரின்‌ மாணாக்கர்‌ சிலரின்‌ பெயர்கள்‌ வருமாறு:--
வட்டுக்கோட்டை அம்பலவாண நாவலர்‌, சரசாலை சி. பொன்னம்பல வுபாத்தியாயர்‌, இராசநாயகம்‌, நடராசையர்‌ மீசாலை பண்டிதர்‌ ஏகாம்பரநாதர்‌, மட்டுவில் தெற்கு முத்துத்தம்பி உபாத்தியாயர்‌, வித்துவான்‌ சுப்பையாபிள்ளை, திருவாவடுதுறை ஆதீன மகாவித்துவான்‌ தண்டபாணிதேசிக முதலியோர்‌,

ஆசிரியர்‌ தமது ஐம்பத்தொன்பதாவது வயதில்‌ சோழமண்‌டலஞ்சென்று 1907-ம்‌ ஆண்டு சிதம்பரம்‌ நாவலர்‌ கல்லூரியின்‌ அதிபராக 1930-ம்‌ ஆண்டு தை மாதம் நடராசப்‌ பெருமானின்‌ திருவடியையடைந்தார்‌.
காலம்‌; கி. பி. 1847-1930.

~~~~~~~~~~~~~~~~~~

கணபதிதுணை

புலியூரந்தாதி‌
மூலமும்‌ உரையும்‌

காப்பு
கற்பகங் காக்குங் கவுரிபங் காளன் கருதரிய
கற்பகங் காளன் புலியூரந் தாதிகதி தருசங்‌
கற்பகங் காதரன் செம்மல் செம்முக்கட் கயமுகத்துக்‌
கற்பகங் காணெமைக் கொண்டே புகல்வித்துக் காப்பதுவே.

(இதனது பதப்பொருள்‌:) கற்பு அகம்‌ காக்கும்‌ கவுரி பங்கு ஆளன்‌ - கற்பினைத்‌ தம்மிடத்துப்‌ பாதுகாக்கின்ற பார்ப்பதியை வாமபாகத்தில்‌ ஆளுகின்றவரும்‌, - கருது அரிய கற்ப கங்காளன்‌ - அறிதற்கரிய கற்பங்களிலே இறந்த (பிரமவிஷ்ணுக்களுடைய) முழு வெலும்பைத்‌ தரித்தவருமாகிய சிவபெருமானது, - புலியூர்‌ அந்‌தாதி - புலியூரந்தாதியெனப்‌ பெயரிய இப்‌பிரபந்தத்தை, - கதி தரு சங்கற்ப கங்காதரன்‌ செம்மல்‌ - (ஆன்மாக்கட்கு) முத்தியைக்‌ கொடுக்குஞ்‌ சங்கற்பத்தையுடைய கங்கையைத்தரித்த அச்‌ சிவபெருமானுக்குத்‌ திருக்குமாரராகிய, - செம்முக்கண்‌ கயமுகத்துக்‌ கற்பகம்‌ ஏ - செவ்விய மூன்று கண்களையும்‌ யானைமுகத்தையுமுடைய (மேலைக்கோபுரத்தின்௧ண்‌ எழுந்‌தருளி யிருக்கும்‌ விநாயகக்‌ கடவுளாகிய) கற்பகமே - எமைக்‌ கொண்டு புகல்வித்துக்‌ காப்‌பது - எம்மைக்‌ கொண்டு கூறுவித்து (இடையூறு நிகழாமற்‌) காத்‌தலைச்செய்வது என்றவாறு. காண்‌ அசை. ஏ ஈற்றசை. அந்தாதியைப்‌ புகல்வித்துக்‌ காப்பது எனவியையும்‌. புலியூர்‌ - சிதம்பரம்‌; புலிமுனி சிவலிங்கோபாசனை செய்தற்கிடமாகிய ஏதுவிற் பெற்ற பெயர்‌. புலிமுனி – வியாக்கிரபாத முனிவர்‌. புலியூர்‌ வியாக்கிரபுரம்‌ என்பன ஒரு பொருட்சொற்கள்‌. (1)

பூவாரலங்கலம்பொற்கொன்றைவேணியர்பொன்னுடையார்‌
பூவாரலங்கலந்தா ரெனுமேற்றினர்போ தமன்றிப்‌
பூவாரலங்கலமைந்தமைக்கண்டர்பொருகணிச்சப்‌
பூவாரலங்கலங்கைப்புலியூரர்புகலெமக்கே.       1

(இ-ள்‌:) பூ ஆர்‌ அலங்கல்‌ அம்‌ பொற்கொன்றை வேணியர்‌ - பொலிவுபொருந்திய திருவாத்திப்பூமாலையையும்‌ அழகிய பொற்‌கொன்றைமாலையையுந்‌ தரித்த சடையையுடையவரும்‌, - பொன்‌ உடையார்‌ பூவார்‌ அலம்‌ கலந்தார்‌ எனும்‌ ஏற்றினர்‌ - இலக்குமியையுடையவரும்‌ பூமிதேவியையுடையவருங்‌ கலப்பைப்படை (கையிற்‌) பொருந்தப்பெற்ற பலராம அவதாரத்தையுடையவ௫மாகிய விஷ்ணுவென்னும்‌ இடபவாகனத்தையுடையவரும்‌, - போதம்‌ அன்றிப்‌ பூவார்‌ - (பக்குவான்மாக்கட்கு) ஞானத்தை யன்றி அஞ்ஞானத்தைத்‌ (திருவாய்‌) மலராதவரும்‌, - அங்கு அல்‌ அமைந்த அல்‌ மைக்கண்டர்‌ - அங்கே (தேவர்களுக்கு) அரணா கப்‌ பொருந்திய இருள்போலுங் கரியகண்டத்தையுடையவரும்‌, - பொரு பூ ஆர்‌ கணிச்சி அலங்கல்‌ அம்‌ கைப்‌ புலியூரர்‌ ஏ -
பொருகின்ற கூர்மைபொருந்திய மழுப்படை விளங்குகின்ற அழகிய திருக்கரத்தையுடைய புலியூரருமாகிய சிவபெருமானே; எமக்குப்‌ புகல்‌ - எமக்குப்‌ புகலிடமாயுள்ளவர்‌ எ-று, அல்‌ - மதில்‌; அது “இரவுமிருளு மிரும்பின்‌ பெயரு - மெயிலுமிரவியு மல்லெனலாகும்‌” என்னும்‌ பிங்கலந்தைச்‌ சூத்திரத்தானறிக: அங்கை என்பதற்கு அகங்கை எனப்‌ பொருள்‌ கூறினும்‌ பொருந்தும்‌. (1)
------
புகமந்தரங் கொடுவேலை யினாட்டும் புலவரைவெம்‌
புகமந்தரங் கொடுவந்த நஞ்சுண்ட புனிதனைச்செம்‌
புகமந்தரங் கொடுரகஞ் செயும்புலி யூரனைநம்‌
புகமந்தரங் கொடுங்கார் வினைபோலப் புரியனெஞ்சே.       2

(இ-ள்‌:) மந்தரம்‌ கொடு வேலையில்‌ புக நாட்டும்‌ புலவரை வெம்பு - மந்தரமலையை வளைந்த சமுத்திரத்தில்‌ (மத்தாகப்‌) புகும்படி நாட்டிய விஷ்ணு முதலிய தேவர்களைக்‌ கோபித்து, கமம்‌ தரம்‌ கொடு வந்த நஞ்சு உண்ட புனிதனை - நிறைந்த வலிமையைக்கொண்டு (எதிர்த்து) வந்த விஷத்தையுண்ட சுத்தரும்‌ - சம்புகம்‌ அந்தரம்‌ கொள்‌ துரகம்‌ செயும்‌ புலியூரனை - (திருவாத வூரடிகள்பொருட்டு) நரிகளை ஆகாயகாமிகளாகிய குதிரைகளாக்‌கிய புலியூரருமாகிய சிவபெருமானை, - நெஞ்சே நம்புக - மனமே நம்பி (அவர்விதித்த பதிபுண்ணியங்களைச்‌ செய்யக்‌) கடவாய்‌, மந்தரம்‌ கொடும்‌ கார்வினை புரியல்‌ - (அஃதன்றி) அறிவின்மையினாலே கொடிய பாவத்தொழில்களைச்‌ (சிறிதுஞ்‌) செய்யா தொழிக. எ-று. கார்‌ ஆகுபெயர்‌. போல உரையசை. குதிரை பூகாமி ஆகாயகாமி என வேகம்பற்றி இருவகைப்படுதலின்‌, அவற்றுட் சிறந்த ஆகாயகாமியை ஈண்டெடுத்துக்கூறினார்‌. (2)
-------
புரியா தவன்பிற் பிரியாவ வுணர்புகுந் திருக்கும்‌
புரியா தவன்பற் பொடிபடுத் தோனுர பூதரமுப்‌
புரியா தவன்றொ ழுதென்புக லியூர்புக ழாரையருள்‌
புரியா தவன்பத மெய்யன்பி னாற்புணர்ப் பாய்மனளே.       3

(இ- ள்‌:) புரியாத வன்பில்‌ பிரியா அவுணர்‌ புகுந்திருக்கும்‌ புரி - (நல்லோர்‌) விரும்பாத வல்வினைகளில்‌ (ஒருகாலுந்‌) தவிராத அசுரர்கள்‌ புகுந்திருக்கப்பெற்ற முப்புரங்களையும்‌, - ஆதவன்‌ பல்‌ பொடி படுத்தோன்‌ - பகனென்னுமாதித்தனது பல்லையுந்‌ துகளாக்கினவரும்‌, - பூசரம்‌ உரம்‌ முப்புரி யாதவன்‌ தொழு தென்‌புலியூர்‌ புகழாரை அருள்‌ புரியாதவன்‌ பதம்‌ - மலைபோலும்‌ மார்பிலே முப்புரியாகிய உபவீதத்தைத்‌ தரித்த கண்ணனாகி – யதுகுலத்திற் பிறந்த திருமால்‌ வணங்குகின்ற தெற்கின் கணுள்ள புலியூரைத்‌ துதியாதவர்க்கு அருள்‌ செய்யாதவருமாகிய சிவ பெருமானுடைய திருவடிகளை, - மனனே மெய்‌ அன்பினால்‌ புணர்ப்‌பாய்‌ - மனமே மெய்யன்புகொண்டு (இடையறாது) சிந்திக்கக்‌ கடவாய்‌. எ - று. புகழாரை - உருபுமயக்கம்‌. (3)
--------
பாயசங் கண்டுபரி யாக்கியத்த பத்‌தர்க்கினிய
பாயசங் கண்டுநி கர்புலியூர பகையைவெல்லு
பாயசங் கண்டுகரத் தாற்கரியவ பாழ்வினைக்குப்‌
பாயசங் கண்டொடரா தெனையாள்க பராபரனே.       (4)

(இ-ள்‌:) பாய்‌ அசம்‌ கண்டு பரி ஆக்கி அத்த - (நாரதமுனிவரது யாகாக்கியிற் றோ‌ன்றிய) பாய்கின்ற தகரால்‌ (உயிர்கட்கு விளைத்த துன்பத்தைக்‌) கண்டு அதனை ஊர்தியாக்கியருளிய சுப்‌பிரமணியக் கடவுளுக்குப்‌ பிதாவே, - பத்தர்க்கு இனிய பாயசம்‌ கண்டு நிகர்‌ புலியூர - அன்பர்கட்கு இனிய 'பாற்சோற்றையுங்‌ கற்கண்டையும்போலும்‌ புலியூரரே, - பகையை வெல்‌ உபாய - பகைவரை (எளிதில்‌) வெல்லும்‌ உபாயங்களை யுடையவரே - சங்கு அண்டு கரத்தாற்கு அரியவ - சங்கு பொருத்திய கையையுடைய விஷ்ணுவுக்குக்‌ காணுதற்கரியவரே - பாழ்‌ வினைக்‌ குப்பாயசங்‌கண்‌ தொடராது எனை ஆள்க - கேடுபயக்கும்‌ இருவினையாகிய சட்டையையுடைய பிறவிகளிலே இனிச்‌ சம்பந்தப்படாது தமி யேனை ஆட்கொண்டருளுக - பராபரனே - சுத்த மாயாதத்துவத்‌ துக்கு மேலானவரே. ௭ - று. ஆக்கி என்பது பெயர்‌, சம் – பிறப்பு (4)
--------------
பரசெம்ம லைநிகரும் புலியூர பராபரதா
பரசெம்ம லைமுகநாரி பங்காளபரிக் குமங்கைப்‌
பரசெம்ம லைவினையுந் தெறுசூலப் படையவெனப்‌
பரசெம்ம லைமனமே கதியேயம் பலமதற்கே.       (5)

(இ- ள்‌:) பர - (பக்குவான்மாக்கட்கு) முத்தியைக்‌ கொடுப்‌பவரே, - செம்மலைநிகரும்‌ புலியூர - மாணிக்கமலைபோலும்‌ புலியூரரே, - பர அபர - (முன்‌னுள்ளதற்கு அதன்‌) முன்னும்‌ ( பின்னுள்‌ளதற்கு அதன்‌) பின்னுமுள்ளவரே, - தாபர - எல்லாப்பொருட்‌குங்‌ களைகணாயுள்ளவரே, - செம்மல்‌ - எப்பொருட்குமிறைவரே - ஐமுக - ஐந்து திருமுகங்களை யுடையவரே, - நாரி பங்கு ஆள - உமா தேவியை வாமபாகத்தில்‌ ஆளுகின்றவரே, - அங்கை பரிக்கும்‌ பரசு - அழகிய திருக்கரத்திற்றரிக்கும்‌ மழுவையும்‌ - ௭ மலை வினையும்‌ தெறு சூலப்‌ படைய எனப்‌ பரசு - எத்துணைப்பெரிய அமர்‌ வினைகளையுந்‌ தடிகின்ற சூலப்படையையும்‌ உடையவரேயென்று (இங்ஙனந்‌) துதிப்பாயாக - எம்‌ அலை மனமே - எமது (விடயங்‌களிற்‌) சுழலுகின்ற மனமே, - அதற்குப்‌ பலம்‌ அம்‌ கதி ஏ- அத்‌துதிக்குப் பயன்‌ (எவற்றினும்‌) சிறந்த பரமுத்தியேயாகும்‌, ஆகலான்‌ எ-று. ஐம்முகம்‌ ஐமுகம்‌ என மகரவொற்றுத்‌ தொக்கு நின்றது. பதமுத்திகளிற்‌ பிரித்தலின்‌, ஏகாரம்‌ பிரிநிலை. (5)
-------
அம்பலவா விமலாவென் றிடார்க்கருளா தபங்கை
யம்பலவா வியலர்புலி யூரருக்கா நலம்வே
ளம்பலவா வியடர்ப்ப திவ்வூரவ ராயெடுக்கு
மம்பலவா வியலர்தூற் றுவார்க்கவை யாகவின்றே. (6)

(இ-ள்‌:) அம்பலவா விமலா என்றிடார்க்கு அருளாத - சபா நாயகரே மலரகிதரே என்று துதியாத அபக்குவர்கட்கு அருள்‌ செய்யாத,- பங்கையம்‌ பல வாவி அலர்‌ புலியூரருக்கு நலம்‌ ஆ - தாமரையரும்புகள்‌ பல தடாகங்களிலே மலரப்பெறுகின்ற புலி யூரருக்கே எமதின்பநலம்‌ ஆகக்கடவது, (அதுகிடக்க) - ஆவி அடர்ப்பது வேள்‌ அம்பு அல - எமதுயிரையொறுப்பது காம பாணங்களல்ல, - இல்‌ ஊரவர்‌ ஆய்‌ எடுக்கும்‌ அம்பல்‌ அலர்‌ - இவ்‌வூரவர்கள்‌ நுண்ணிதாக எடுக்கின்ற அம்பலும்‌ அலருமேயாம்‌, - அவை இன்று அவாவித்‌ தூற்றுவார்க்கு ஏ ஆக - அவ்வம்பலும்‌ அலரும்‌ இதுபொழுது (ஒன்றை) உட்கொண்டு தூற்றுகின்‌ற அவர்‌கட்கே ஆகக்கடவன. ௭ - று. அருளாத புலியூரன்‌ என வியையும்‌, பங்கயம்‌ பங்கையம்‌ எனப்‌ போலியாயிற்று. இரண்டாமடியில்‌ ஆக என்னும்‌ வியங்கோளீறு லிகாரத்தாற்றொக்கது, அடர்ப்பது என்னும்‌ முடிக்குஞ்சொல்‌ தனித்தனி கூட்டப்படும்‌. ஆய்தல்‌ - நுணுகுதல்‌ அது ''ஓய்தலாய்தனிழத்தல்சாஅ, யாவயினான்குமுள்ள தனுணுக்கம்‌'' என்னுந்‌ தொல்காப்பியச்‌ சொல்லதிகாரவுரியியற்‌ சூத்திரத்தானறிக. அம்பல்‌ சிலரறிந்து தம்முட்கூறுவது. அலர்‌ பலரறிந்து புறத்திற்கூறுவது, [தலைவியுடன் போதற்கொருப்பட்‌டெழுதல்‌] “அலரே சுமந்து சுமந்தித்தவூர்‌ நின்றழுங்குகவே'* என்பதும்‌ இக்கருத்தேபற்றி வந்தது. (6)
-------
கவின்றிருந் தும்பையுங் கொன்றையுஞ்சூடி யகண்ணுதலே
கவின்றிருந் தும்புலியூர் நடராசகங் காதரலென்‌
கவின்றிருந் தும்பில்‌முடி தன்மெய்யே நரகங்களிலே
கவின்‌றிருந் தும்வெளிறும் வினைதீர்ந்திடுங் காண்மனமே.       (7)

(இ-ள்‌:) இரும்‌ தும்பையுங்‌ கொன்றையும்‌ கவின்று சூடிய கண்‌ நுதல்‌ ஏக - பெருமையாகிய தும்பைப்பூவையுங்‌ கொன்றை மாலையையும்‌ அழகுபொருந்த மூடியிற்றரித்த நெற்றிக்கண்ணையுடைய சர்வலோகநாயகரே, - இன்‌ இருந்தும்‌ புலியூர்‌ நடராச - சீர்திருந்திய புலியூரிலெழுந்தருளியிருக்கின்‌ற திரு நடராசரே, கங்‌காதர - கங்கையைத்‌ தரித்தவரே, - என்க - என்று துதிப்பாயாக, - இன்று இருந்தும்‌ பின்‌ முடிதல்‌ மெய்யே - நாம்‌ இதுபொழுதிருக்‌கினும்‌ பின்னிறத்தல்‌ சத்தியமே, க நரகங்களிலே இன்று - (இறந்‌ தாற்பின்‌) அக்கினி நிரயங்களிலே (வேவுதல்‌) இல்லை - இருந்தும்‌ வெளிறும்‌ வீனைதீர்ந்திடும்‌ - (அதுவன்றியும்‌) கரியும் வெளிறும்படி (இருண்ட) தீவினை எம்மை விட்டகலும்‌ - மனமே - நெஞ்சமே எ-று: கவின என்னும்‌ வினையெச்சங்‌ கவின்றெனத்‌ திரிந்துநின்றது. க - அக்னி. ஈற்றடி இருந்தை இறுதி ஐகாரங்‌ கெட்டுநின்றது, இருந்தை - கரி. காண்‌ அசை. நெஞ்சமே நாம்‌ இதுபொழுதிருக்கினும்‌ பின்னிறத்தல்‌ சத்தியம்‌. (ஆகலின்‌), நாயகரே நடராசரே கங்கையைத்‌ தரித்தவரே என்று துதிப்பாயாக; (அங்ஙனந்‌ துதித்‌தால்‌) இறந்தபின்‌ நிரயங்களிலே வேவுதலில்லை; அதுவன்றியும்‌ தீவினை எம்மை விட்டகலும்‌ எனக்‌ கூட்டுக. (7)
------
மனந்தனங் கந்தருசொல் லாலவன்பணி வாய்த்துவிடா
மனந்தனங் கந்தரஞ்சேர்‌ புலியூரனை வந்திப்பர்வா
மனந்தனங் கந்தரமென் னடையார்கண் வலையிற்படா
மனத்தனங் கந்தலென்பார் பவசாகர மாய்ப்பவரே.       (8)

(இ-ள்‌): மனம்‌ சொல்‌ அங்கம்‌ ஆல்‌ அவன்‌ தரு பணி விடாமல்‌ வாய்த்து – மனவாக்குக் காயங்களினால்‌ அவர்‌ விதித்த திருத்தொண்டுகளை இடையறாது செயப்பெற்று, - நந்தனம்‌ கந்தரம்‌ சேர்‌ புலியூரனை வந்திப்பர்‌ - திரு நந்தனவனங்கள்‌ மேகமண்டலத்திலுயரப்பெற்ற புலியூரில்‌ எழுந்தருளியிருக்குஞ்‌ சிவபெருமானை வழி படுபவர்‌ வாமன்‌ நந்து அனம்‌ கந்தரம்‌ மெல்‌ நடையார்‌ கண்‌ வலையில்‌ படாமல்‌ - வாமனரூபத்தையுடைய விஷ்ணுவினது சங்கையும்‌ பிரமாவினது அன்னப் புள்ளையும் போலுங்‌ கழுத்தையும்‌ மெல்‌லிய நடையினையுமுடைய பெண்களது கண்ணாகிய வலையிலகப்‌ படாமல்‌, - நம்‌ தளம்‌ கந்தல்‌ என்பார்‌ - நம்முடையசெல்வங்கேடு (பயக்கு) மென்று (அதிற்பற்றற்றவ) ராகி, பவசாகரம்‌ மாய்ப்‌பவர்‌ - சனனசாகரத்தைக்‌ கடப்பவராவர்‌. எ-று. தன்‌ சரியை. அன்னம்‌ அனம் என நின்றது. (8)
-------
கரமா யருந்து திக்கைமலை யாய்ப்பிற வாய்க்கருஞ்சூ
கரமா யருந்து தியென்றுவிடா தெனைக்காத் தருள்சக்‌
கரமா யருந்து திரணிரை மேய்க்குங் கழிபொருந்து
கரமா யருந்து திக்கும்பு லியூரகங் காதரனே.       (9)

(இ-ள்‌:) கரம்‌ ஆய்‌ - கழுதையாகியும் - அரும்‌ துதிக்கை மலை ஆய்‌ - அரிய துதிக்கையையுடைய மலைபோலும்‌ யானையாகியும்‌, கரும்‌ சூகரம்‌ ஆய்‌ - கரிய பன்றியாகியும்‌, - பிற ஆம்‌ உதி - மற்றைய யோனிபேதங்களாகியும்‌ பிறப்பாய்‌, - அருந்து என்று விடாது எனைக்‌ காத்தருள்‌ - (பிறந்து முன்செய்த இருவினைப்பயன்‌ களாகிய சுகதுக்கங்களை) அநுபவிப்பாயென்று (இன்னும்‌ அப்பிறவிகளில்‌) விடாது தமியேனைக்‌ காத்தருளும்‌, - சக்கரம்‌ - சக்கரப்படையும்‌, - ஆயர்‌ உந்து திரள்‌ நிரை மேய்க்கும்‌ கழி பொருந்து கரமாயரும்‌ துதிக்கும்‌ புலியூர - இடையர்கள்‌ செலுத்துகின்ற கூட்டமாகிய பசுநிரைகளை மேய்க்குங்‌ கோலும்‌ பொருந்திய கையையுடைய திருமாலுந்‌ துதிக்கின்ற புலியூரையுடையவரே, கங்காதரனே - கங்கையைத்தரித்தவரே, எ-று. (9)
---------
கங்காத ரன்புலி யூர்நகர் காவலன்கா ருண்யமே
கங்காத ரநற்கவு ரிபங்கா ளன்கரு தருமோ
கங்காத ரன்பர னென்றுபுத் தேளினங்கை தொழுசங்‌
கங்காத ரன்பர்க் கினியரல் லார்க்குக் கசந்தவரே.       (10)

(இ-ள்‌) கங்காதரன்‌ - கங்கையைத்தரித்தவர்‌, புலியூர்‌ நகர்‌ காவலன்‌ - புலியூரை இராசதானியாகவுடைய திரு நடராசர்‌, காருண்ய மேகம் - கிருபாமேகம்‌ - கந்தரம்‌ நல்‌ கவுரி பங்கு ஆளன்‌ - விரும்பத்தகும்‌ நல்ல உமாதேவியை வாமபாகத்திலாளுகின்றவர், கருது அரு மோகம்‌ காது அரன்‌ - மதித்தற்கரிய (விபரீத ஞானம்பயக்கும்‌) மாயா விருத்திகளைப்‌ (பக்குவான்மாக்கட்கு) நிக்கரகிக்கும்‌ அரனென்னுந்‌ திருநாமத் தையுடையவர்‌, - பரன்‌ என்று இனம்‌ புத்தேள்‌ கை தொழு சங்கம்‌ காதர்‌ - (பசுக்கட்கு) மேலாகிய பதியென்று தொகுதியாகிய தேவர்கள்‌ கைதொழும்‌ சங்கக்குண்டலமணிந்த திருச்செவிகளையுடைய சிவபெருமான் - அன்பர்க்கு இனியர்‌ - தம்மன்‌ பர்க்கினியவர்‌, -அல்லார்க்குக்‌ கசந்தவர்‌ - அன்பரல்லாதவர்க்கு இனியராகாதவர்‌, எ.று, (10)
--------
சந்தங் கமழுங் கலாவகை யன்பர்க்குத்‌ தாநடந்தோர்‌
சந்தங் கமழும் புலியூரர் வெற்பிலென் சாந்தணிவா
சந்தங் கமழுந் தணிமுலை தோய்மைந் தரைமறந்த
சந்தங் கமழும் படிகொய்திம் மையறணி வதின்றே.       (11)

(இ-ள்‌:) அன்பர்க்கு அங்கம்‌ அழுங்கலாவகை தாம்‌ சந்து தடந்தோர்‌ - தம் மெய்யன்பராகிய சுந்தரமூர்த்தி நாயனாருக்குத்‌ திருமேனி வருந்தாமைப் பொருட்டுப்‌ (பரவையாரிடத்துத்‌) தாமே தூதுசென்‌றவரும்‌, - புலியூரர்‌ சந்தம்‌ கமழும்‌ வெற்பில்‌ - புலியூரரையுடையவருமாகிய சிவபெருமானது சந்தனமரம்‌ (நறுமணங்‌) ௧மழுகின்ற மலையின்கண்‌, - சாந்து அணி வாசம்‌ அழுந்து தங்கம்‌ என்‌ அணிமுலை தோய்‌ மைந்தரை மறந்து - கலவைகளையணித்த பரிமளமும்‌ (இரத்தினங்கள்‌) பதிக்கப்பெற்ற மாற்றுயர்ந்த பொன்‌னாபரணமும்‌ (பொருந்திய) எனதழகிய தனங்களைப்‌ புணர்ந்த ஆடவரை மறந்துவிட்டு, - அசம்‌ கம்‌ அழும்படி கொய்து இம்‌மையல்‌ தணிவது இன்று - மறியினது தலையை அஃதழும்படி அரிவதினால்‌ இம்மயக்கஞ்‌ (சிறிதுந்‌) தெளிவதின்று. எ - று. தம்‌ சாரியை. [வெறிவிலக்கு.] (11)
-------
மையலங்கா ரம்பயில் கண்டர்வண் புலியூரர் வைத்த
மையலங்கா ரம்பமாகிப் பெருகி வரக் குளிரா
மையலங்கா ரம்பகைத் திடவாடை வருத்தி டத்திண்‌
மையலங்கா ரம்படர வெவ்வா றுயிர்வாழ் பரிசே.       (12)

(இ-ள்‌) மை அலங்காரம்‌ பயில்‌ கண்டர்‌ ஆலாகலம்‌ - அழகு பொருந்துந்‌ திருக்கழுத்தையுடையவராகிய, - வண்‌புலியூரர்‌ வைத்த மையல்‌ - வளவிய புலியூரரிடத்து வைத்‌த மயக்கமானது - அங்கு ஆரம்பமாகிப்‌ பெருகிவர - (அவரெம்மைக் கலந்த) அவ்‌விடத்தே (அப்பொழுது) தொடங்கிப்‌ (படி முறையே) பெருகிவரு தலால்‌, - அலங்கு ஆரம்‌ குளிராமைப்‌ பகைத்திட - விளங்குகின்ற முத்துமாலைகள்‌ குளிராது (வெம்மை கான்று) பகைக்க, - வாடை வருத்திட வடகாற்றுவருத்த, - கார்‌ அம்பு அடர - கரிய சமுத்திரம்‌ பொர, - தண்மை அலம்‌ - (இவைகளை அவர்‌ வருந்துணையும்பொறுக்‌ குஞ்‌) சத்தியற்ற யாம், - உயிர்‌ வாழ்‌ பரிசு எவ்‌ ஆறு - உயிர்வாழுற்‌ தன்மை எப்படி (க்கூடும்‌),
எ-று, பாங்கியே நீ கூறு என்பது எஞ்சி நின்றது முதலடியில்‌ மை ஆகுபெயர்‌. புலியூரர்‌ வைத்த என்புழி ஏழாவது விகாரத்தாற்றொக்கது. [காமமிக்க கழிபடர்கிளவி] (12)
----------
பரிசன வேதியர் சூழ்புலி யூரர்பத்‌ தர்க்கினிய
பரிசன வேதியர் பாதவமே வுமனோ பவனாம்‌
பரிசன வேதிப்ப டைமன்னர் நின்முலைப் பாரவிலைப்‌
பரிசந வேதிணி பொன்கொடு வந்தனர் பான்மொழியே.       (13)

(இ-ள்‌) பரிசன வேதியர்‌ சூழ்‌ புலியூரா்‌ - தமது சுற்றமாகிய தில்லைவாழந்தணர்கள்‌ சூழப்பெறும்‌ புலியூரையுடையவரும்‌, பத்‌தர்க்கு இனிய பரிசன வேதியர்‌ - தம்மன்பருக்கு இனிய பரிசன வேதியாயுள்ளவருமாகிய சிவபெருமானது,- பாதவம்‌ மேவு மனோபவன்‌ ஆம்‌ பரிசு அன ஏதிப்படை மன்னர்‌ - மலையில்‌ வசிக்கின்ற (புருடாகிருதி முதலியவற்றான்‌) மன்மதனையொத்த இயல்பையும்‌ அந்த வாட்போரையுமுடைய (நந்‌) தலைவர்‌, - நின்பாரமுலைவிலைப்‌பரிசம்‌ திணி பொன்‌ நவு கொடு வந்தனர்‌ - நினது பருத்த முலை விலைப்பரிசமாகத்‌ திண்ணிய பொன்னை மரக்கலத்திற்‌ கொடுவந்‌தனர்‌ -பால்‌ மொழியே - பால்போலுமினிய சொற்களையுடைய தலைவியே. எ-று. அன்ன அன எனவும்‌, நவ்வு நவு எனவும்‌ நின்‌றன. ஏகாரம்‌ இசைநிறை. பரிசனவேதி இரும்பு முதலிய லோகங்‌களைப்‌ பரிசித்தவழிப்‌ பொன்னாக்குவதோ ரிரதகுளிகை. [காதலன்‌ முலைவிலை விடுத்தமை பாங்கி காதலிக்குணர்த்தல்‌] (13)
---------
பானகந் தந்தம் வலிகெட வோங்கிப் பணைத்ததிரும்‌
பானகந் தந்தம் பயில்கரித் தோலினன் பாவவிடாய்ப்‌
பானகந் தந்தன நேரிடை பங்கினன் பத்தரைவைப்‌
பானகந் தந்தபுலி யூரெனிற் கெடும் பாசமன்றே.       (14)

(இ-ள்‌:) பால்‌ நகம்‌ தந்தம்‌ வலி கெட ஓங்கிப்‌ பணைத்து அதிரும்‌ பால்‌ நகம்‌ தந்தம்‌ பயில்‌ கரித்தோலினன்‌ - திக்குமலைகள்‌ தத்தம்‌ வலிமை குன்றும்படி யுயர்ந்து பருத்துப்‌ பிளிறிவந்த பால்‌போலும்‌ வெண்மையாகிய நகமும்‌ கொம்பும் பொருந்திய யானையினது தோலைப்‌ (போர்வையாக) வுடையவரும்‌, - பாவ விடாய்ப்‌ பானகம்‌ - (பாவிகளது) பாவமாகிய தாகத்திற்கு (அதுதணிக்கும்‌) பானகமாயுள்ளவரும் - தந்து அன தேர்‌ இடை பங்கினன் - நூல்‌ போலும்‌ நேரிய இடையினையுடைய உமாதேவி பாகருமாகிய சிவ பெருமான் - பத்தரை வைப்பான்‌ அகம்‌ தத்த புலியூர்‌ எனில்‌ - தம்‌ மெய்யன்பரை இருத்தற்கு இடங்கொடுத்த புலியூரென்று துதிக்கில்‌ - பாசம்‌ கெடும்‌ - (ஆன்மாவைப் பந்தித்த பஞ்சபாசங்‌களும்‌ (சேரக்‌) கெடும்‌, எ-று. அன்று ஏ அசை. முதலடியிற்‌ பால்‌ - திக்கு. (14)
----------
சமன்பட ரால்வரு வேதனை தீரத்தகு வினைகள்‌
சமன்பட ராசததா மதசாத்து விகங் கெடப்பா
சமன்பட ரானதறப் புலியூ ரிற்றசை யுளவா
சமன்பட ராநின்‌ றவல்லி பங்காகதி தந்தருளே.       (15)

(இ-ள்‌:) சமன்‌ படரால்‌ வரு வேதனை தீர - (மரணகாலத்தில்‌) யமதூதுவரால்‌ வருந்துன்பங்கள்‌ ஒழியவும்‌, - தகுவினைகள்‌ சமன்‌ பட- பொருந்திய நல்வினையினால்‌ வருமின்பத்திலுந்‌ தீவினையினால்‌ வருந்‌ துன்பத்திலுஞ்‌ சமபுத்தி பண்ணவும்‌, - சாத்துவிகம்‌ இராசதம்‌ தாமதம்‌ கெட - சாத்துவிகம்‌ இராசதம்‌ தாமதமாக முக்குணங்களும்‌ நசிக்கவும்‌, பாசம்‌ மன்‌ படரானது அற - பாசத்தால்‌ வருந்துன்பம்‌ பற்றறவும்‌, தகை உள புலியூரில்‌ வாச மன்‌ - பெருமை பொருந்‌திய புலியூரில்‌ (விசேடமாக) வசிக்குந்‌ தலைவரே, படரா நின்ற வல்லிபாங்கா - படருகின்ற காம வல்லிபோலும்‌ உமாதேவி பாகரே,- தந்து கதி அருள்‌ - தமியேற்கு (வரந்‌) தந்து (பின்‌) முத்தியை ஈந்தருளும்‌, எ- று. பண்ணவும்‌ நசிக்கவும்‌ வரந்தந்து, ஒழியவும்‌ பற்றறவும்‌ முத்தியை ஈந்தருளும்‌ எனக்கூட்டுக, (15)
----------
கதிதந் தருவிழந் தோடும்பர்க் காய்ப்புரங் காய்ந்தவின்ன
கதிதந்‌ தருகயிலைக் கிறைவா கருவித்‌ திரும
கதிதந் தருசொல் லிடையாள் பங்காகமலம் பணைச்ச
கதிதந் தருநற வார்புலி யூரவெற் காத்தருளே.       (16)

(இ-ள்‌:) தம்‌ கதி தரு இழந்து ஒடு உம்பர்க்காய்ப்‌ புரம்‌ காய்ந்த வில்‌ நக – தமது சுவர்க்கபதவியையும்‌ பஞ்சதருக்களையுமிழந்து ஓடியதேவர்கள் பொருட்டு முப்புரங்களைத்‌ தகித்த மேரு மலையாகிய வில்லையுடையவரே, - திதம்‌ தரு கயிலைக்கு இறைவா - நிலைபெற்ற கைலாசகிரிக்குத்‌ தலைவரே:--திரு மகதிக்‌ கருவி தந்து அரு சொல்‌ இடையாள்‌ பங்கா - அழகிய மகதி யாழிசையையும்‌ நூலையும்போலும்‌ அரியசொல்லையும்‌ இடையையுமுடைய உமாதேவி பாகரே, - கமலம்‌ பணைச்‌ சகதி நறவு தந்து ஆர்‌ அரு புலியூர - தாமரைப்பூக்கள்‌ வயல்களிற்‌ சேறு (பொருந்தும்படி) தம்‌மிடத்துள்ள தேனைச்‌ சொரிந்து நிறையப்பெற்ற விசிட்டமாகிய புலியூரை யுடையவரே, - என்‌ காத்தருள்‌ - தேவரீர்‌ தமியேனைப்‌ பாதுகாத்தருளும்‌. எ-று, யாழ்‌ - ஆகுபெயர்‌. (16)
--------
காப்பதிற் றாறுயிர் யாமெனநீ நற்கலை களடங்‌
காப்பதிற் றாறுசதுவி தங்காட்ட வுங்காண் கிலனற்‌
காப்பதிற் றாறுவள வயன்முக் கனிக்கட் கஞ்சமங்‌
காப்பதிற் றாறுகுக் கும்புலி யூர்க்கன காலயனே.       (17)

(இ-ள்‌:) யாம்‌ உயிர்‌ காப்பது ஆது இற்று என – “தாமுயிர்‌களைக்காக்கு நெறி இத்தன்மைத்து'' என்று, - நீ அடங்கா நல்‌ பதிற்றாறு சதுவிதம்‌ கலைகள்‌ காட்டவும்‌ - தேவரீர்‌ பரந்த நல்ல அறுபத்துநான்கு பகுதியவாகிய கலைகளைத்‌ (தந்து) அறிவிக்கவும்‌, அது காண்கிலன்‌ - (தமியேன்‌) அதை அறியப்பெற்றிலேன்‌, - நல்‌ முக்கனிக்‌ காப்பு இற்றுக்‌ கள்‌ ஆறு - நல்ல முக்கனிகளின்‌ காம்பு பதனழிந்து [பெருகும்‌) மதுவெள்ளத்தை, - வள வயல்‌ அங்காப்பது கஞ்சம்‌ இல்‌ தாறு உகுக்கும்‌ - வளவிய வயல்களிற்‌ பொருந்திய வாய்மலர்ந்தனவாகிய தாமரைப்பூக்களிற்‌ குலைகள்‌ சொரியா நிற்கும்‌ - புலியூர்க்‌ கனக ஆலயனே - புலியூரிலுள்ள கனகசபையாகிய ஆலயத்தில்‌ வீற்றிருப்பவரே. எ-று மூன்றாமடியிற்‌ காம்பு காப்பு என வலிந்து நின்றது. ஈற்றடியில்‌ அங்காப்பது - அங்காத் தலைச்செய்வது; சாதியொருமை. (17)

கனகமலைச் சிலைவேணிப் பிரானைக் கயல்வ யற்கோ
கனகமலைச் சிலைக்காவி யிற்பாயுங் கவின்கொள் வள்ளைக்‌
கனகமலைச் சிலைமார் பனும்போற் றற்கரும் புலியூர்க்‌
கனசமலைச் சிலைவாண னைப்போற் றிற்கதி யவர்க்கே.       (18)

(இ- ள்‌:) கனம்‌ கம்‌ அலை சிலை வேணிப்‌ பிரானை - நன்குமதிக்‌கப்படுங்‌ (கங்கா) சலத்தினது இரையொலிக்குஞ்‌ சடையையுடைய எப்பொருட்குமிறைவரும்‌ - கால்‌ வயல்‌ கோகனகம்‌ அலைச்சு இலைக்‌ காவியில்‌ பாயும்‌ கவின்கொள்‌ - (வாவிகளிற்பயிலும்‌) கயன்மற்‌சங்கள்‌ வயல்களினிற்குந்‌ தாமரைகளையலைத்து (மருங்கிலுள்ள) இலைகளையுடைய கருங் குவளைகளிற் பாயுமழகுபொருந்திய,- வள்ளைக்‌ கனம்‌ கமலை சிலை மார்பனும்‌ போற்றற்கு அரும்‌ - வள்ளை யிலைபோலுங்‌ காதுகளையுடைய இலக்குமி (வசிக்கும்‌) மலைபோலும்‌ மார்பையுடைய விஷ்ணுவுந்‌ துதித்தற்கரிய, - கனக மலைச்‌ சிலைப்‌ புலியூர்‌ வாணனைப்‌ போற்றில்‌ - பொன்மயமாகிலய மேருமலையை வில்லாகவுடையவரும்‌ புலியூரில்‌ வாழ்பவருமாகிய சிவபெருமாளைத்‌ துதிக்கில்‌, -அவர்க்கே கதி- அவர்களுக்கே முத்தி (சித்‌திக்கும்‌), எ -று. கொள்‌ புலியூர்‌ என வியையும்‌. வள்ளை ஆகுபெயர்‌. மூன்றா மடியிற்‌ கன்னம்‌ கனம்‌ என நின்றது. (18)
----------
அவரஞ் சிவந்தயி னாகாரி வாகனரா கத்தில்வா
ழவரஞ் சிவந்தடி போற்றுமை பாகனகக் கருமை
யவரஞ் சத்தகு மம்புலி யூரனெனக் கருளி
யவரஞ் சிவந்தப தம்பெற லாகுமைந் தக்கரமே.       (19)

(இ-ள்‌:) வந்து அயில்‌ நாக அரி வாகனர்‌ ஆகத்தில்‌ வாழ்‌ அவரஞ்சி அவர்‌ -வாயுவையுண்கின்ற பாம்புக்குப்‌ பகையாகிய கலுழனை வாகனமாகவுடைய விஷ்ணுவினது மார்பில்‌ வாழுகின்ற (சேட்டைக்குக்‌) கனிட்டையாகிய அந்த இலக்குமியானவர்‌,- அஞ்சி வந்து அடி போற்று உமை பாகன்‌ - அச்சுற்றுவந்து திருவடிகளைத்‌ துதிக்கப்பெறும்‌ உமையம்மையை வாமபாகத்திலுடையவரும்‌, - அகம்‌ கரும்‌ ஐயம்‌ அரம்‌ - (தம்மடியவரது) பாவமாகய கரிய இரும்பைத்‌ (தேய்த்தற்கு) அரமாயுள்ளவரும்‌, - சிவம்‌ தகும்‌ அம்‌ புலியூரன்‌ - (சகல) நன்மைகளும்‌ பொருந்தும்‌ அழகிய புலியூரை யுடையவருமாகிய சிவபெருமான்‌, எனக்கு அருளிய வரம்‌ - தமியேனுக்குத்‌ தந்தருளிய வரம்‌ (யாதெனில்‌),- சிவந்த பதம்‌ பெறல்‌ ஆகும்‌ ஐந்து அக்கரம்‌ - (தமது) சிவந்த திருவடிகளை‌ (என்போலிகளும்‌) பெறுதற்குக்‌ (கருவி) ஆகிய ஸ்ரீபஞ்சாக்கரோப தேசமேயாம்‌. எ-று. அவரஞ்சி என்பது அபரம்‌. என்னும்‌ முதனிலையும்‌, பெண்‌
பாலிகர விறுதிநிலையும்‌, சகரவொற்றிடைநிலையும்‌. திரிதல்‌ விகாரமும்‌ பெற்று முடிந்த பெயர்ப்பகுபதம்‌. அம்முதனிலைக்குப்‌ பொருள்‌ - பின்‌, அது பகர வகர ஏகீபாவநயம் பற்றி அவரம் என நின்றது எனவே அவரஞ்சி பின்னை என்றதாயிற்று. பின்னை - இலக்குமி. இனிப்‌ பொன்‌ எனப்பொருள்படும்‌ அபரஞ்சி மேலை‌ ஏகீபாவநயம்பற்றி அவரஞ்சி என நின்றதெனக்கொண்டு, அஃது ஈண்டு இலக்குமியை யுணர்த்திற்றெனப்‌ பொருளுரைத்தலு மொன்று. இன்னும்‌ அ பிரமாவும்‌, வரம்‌ விருப்பமும்‌ சீ சரசுவதியும்‌ எனப்‌ பொருள்படுதலின்‌, அதற்குப்‌ பிரமா விரும்‌புஞ்‌ சரசுவதி எனப்‌ பொருளுரைத்தலுமாம்‌. இப்பொருட்குச்‌ சீ சி எனக்குறுகி நின்றதாக வுரைக்க, அயம்‌ ஐயம்‌ எனப்‌ போலியாயிற்று, ஏகீபாவம்‌ - ஒருமைப்பாவனை. (19)
-----------
கரமஞ்சரி தருவென் னற்கநீ சரைக்கட் டுகட்சீ
கரமஞ்சரி தருமம் புலிபூரற் கியமன் கடிந
கரமஞ்சரி தருமாயை நெஞ்சே நங்கரு வினையக்‌
கரமஞ்சரி தருமென் றேமொழி ககன விலுமே.       (20)

(இ-ள்‌:) நீசரைக்‌ கரம்‌ மஞ்சு அரி தரு என்னற்க - [குருலிங்க சங்கம பத்தியில்லாத] கீழ் மக்களைப்‌ [பொருட்பேறு முதலிய கருதித்‌] தங்கைகள்‌ [கொடையான்‌] மேகமும்‌ இந்திரனது பஞ்ச தருவுமென்று [புனைந்து] பாடாதொழிக,- புலியூரற்குக்‌ கள்‌ சீகர மஞ்சரி கட்டு - புலியூரில்‌ வீற்றிருக்குஞ்‌ சிவபெருமானுக்குச்‌ சாத்‌தும்பொருட்டுத்‌ தேன்றுளிக்கும்‌ புஷ்பமாலைகளைக்‌ கட்டுவாயாக, - தருமம்‌ - [இது] சிவதருமமாகும்‌,- இயமன்‌ கடி நகரம்‌ அஞ்சு - [நாமிறந்தவழி] யமனது காவல்‌ பொருந்திய யமனி என்னும்‌ நகரிற்‌ புகுவதற்கஞ்சி [யொழுகு] வாயாக - நெஞ்சே அரு மாயை அரிது - [இங்ஙனஞ்செய்யின்‌] மனமே அருவமாகிய மாயாமலம்‌ [எம்மைப்‌ பொருந்துவ] தின்று, - அஞ்சு அக்கரம்‌ நம்‌ கருவினை அரிதரும்‌ என்றே கனவிலும்‌ மொழிக - [அன்றியும்‌] ஸ்ரீபஞ்சாக்கரமாகிய மூலமந்திரம்‌ நமது பிறவியைத்‌ [தப்பாது] அரியுமென்று துணிந்து [அம்மகாமந்திரத்தைச்‌] சொப்பனத்திலும்‌ செபிக்க. எ-று. (20)
-------
கனவைப் படைத்தணத் தார்மூவர் பாடல்களித் திரண்டு
கனவைப் படைத்‌தவர் தென்புலி யூர்வரைக் காதலரைக்‌
கனவைப் படைத்தணை யத்துயில் காண்கிலன் சங்குலும்புக்‌
கனவைப் படைத்‌தம லர்க்கோலிற் பாங்கியெற் கண்டிக்கவே.       (21)

(இ-ள்‌:) கனவை படைத்‌ தணத்தார்‌ - கனத்த கூரிய மழுப்‌ படைமையுடையவரும்‌,- மூவர்‌ பாடல்‌ களித்து இரண்டு கன வைப்பு அடைத்தவர்‌ - (சிவஞானச்‌ செல்வர்களாகிய திருஞானசம்பந்தமூர்த்திநாயனார், திருநாவுக்கரசுநாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் என்னுஞ்‌ சமயகுரவர் மூவர்‌ திருவாய் மலர்ந்தருளிய (பவரோக நிர்மூல அருமருந்தாகிய) தேவாரத்திருப்பதிகங்களை உவந்து தம்முடைய இரண்டு திருச்செவிகளில்‌ அமைத்தருளினவருமாகிய சிவபிரானது,- தென்‌ புலியூர்‌ வரைக்‌ காதலரை - தெற்கின் கட்பொருந்திய புலியூரிலுள்ள மலையில்‌ வசிக்கு மென தன்பரை, - கனவைப் படைத்து அணையத்‌ துயில்‌ காண்கிலன்‌ - கனவைப்பெற்றாயினும்‌ அதன்‌ கட்டழுவுதற்குக்‌ கண்டுயில்‌ வரப்பெற்‌றிலேன்‌ - கங்குலும்‌ புக்கன - இராக்காலமுங்‌ கழிந்தது, - தைத்த மலர்க்‌கோலின்‌ பாங்கி‌ கண்டிக்க என்‌ வைப்பள்‌ - (இங்ஙனம்‌) பட்டமலரம்புகட்குப்போல வருந்தும்படி தோழிகண்டித்துரைக்க என்னைத்‌ [தனக்கெதிர்முகமாக] இருத்துவள்‌ [இதற்கினி யாது செய்வேன்‌] ௭ - று, தண்ணம்‌ தணம்‌ என நின்றது. தென்‌ புலியூர்‌ - அழகிய புலியூர்‌ எனினுமமையும்‌. புக்கது புக்கன என ஒருமைப்‌ பன்மை மயக்கம்‌. கனவைப்பு கன்னமாகிய இடம்‌, (கண்படை பெறாது கங்குனொந்திரங்கல்‌.] (21)
------
கண்டல ராகமுடி புனையா னைக்கரு தினரா
கண்டல ராகவைக் கும்புலியூ ரனைக்கா தைமுகங்‌
கண்டல ராகமதா டகமாமெ ழிற்காரி கையாள்‌
கண்டல ராகமிகுந் தனள்கேட் டகணத் தினிலே.       (22)

(இ-ள்‌) கண்டல்‌ அராக முடி புனையானை - [பொய்க்கரி கூறிய] தாழம்பூவைச்‌ சிவந்த சடாமுடியிற்‌ றரியாதவரும்‌, - கருதினர்‌ ஆகண்டலர்‌ ஆக வைக்கும்‌ புலியூரனை - [தம்மைத்‌ தியானித்த அன்பரை இந்திரராக (மேற்கதியில்‌) இருத்தும்‌ புலியூரருமாகிய தலைவரை - காதை முகம்‌ ஆகம்‌ கண்டு மது அலர்‌ ஆடகம்‌ ஆம்‌ எழில்‌ காரிகையாள்‌ - சொல்லும்‌ முகமும்‌ மேனியும் [முறையே] கற்கண்டையும்‌ தேன்பொருந்திய செந்தாமரை மலரையும்‌ பொன்னையும்‌ போலும்‌ அழகையுடைய தலைவி, கண்டு அல கேட்ட கணத்தில்‌ (இ) ராகம்‌ மிகுந்தனள்‌ - கண்டன்று கேட்ட மாத்திரையிலே அநுராகமிகுந்தனள்‌, எ- று, கண்டல்‌ ஆகுபெயர்‌. தலைவி தலைவரைக்‌ கண்டன்று கேட்டமாத்திரையிலே அநுராகம்‌ - மிகுந்தனளெனக்கூட்டுக, [காதற்சிறப்புரைத்தல்‌.] (22)
--------
கணத்தினி லேற்றுவரு மன்பு செய்யிற் கருதுவ
கணத்தினி லேற்றுநினை மனமேசொற் கதிர் செய்யற்‌
கணத்தினி லேற்றுக்கயல் பாய்கவின் புலியூர ரைப்பொக்‌
கணத்தினி லேற்றுத்திரிந் தாரைநீ தியிற்கா தலித்தே.       (23)

(இ-ள்‌:) கணத்தினில்‌ ஏற்று வரும்‌ அன்பு செய்யில்‌ - ஒருகணமேனும்‌ [மனத்தோடு] இயைந்தெழுஞ் சிரத்தையன்பு செயப்பெறில்‌,- கருது சிவகணத்தினில்‌ ஏற்றும்‌- [எம்மை] நன்கு மதிக்கப்‌படுஞ்‌ சிவகணங்களோடிருத்துவர்‌,- மனமே நினை – [ஆகலான்‌] மனமே அவரைத்‌ தியானஞ்‌ செய்வாயாக - சொல்‌ கதிர்‌ செய்‌ வயற்‌ கண்‌ நத்தினில்‌ ஏற்றுக்‌ கயல்‌ பாய்‌ கவின்‌ புலியூரரை - நெற்‌ பயிர்கள்‌ கதிர்களையீனும்‌ வயலிற்‌ சஞ்சரிக்கும்‌ [பெண்‌] சங்கில்‌ ஆண்கயல்பாயு மழகிய புலியூரிலெழுத்தருளி யிருப்பவரும்‌,- பொக்கணத்தினில்‌ ஏற்றுத்‌ திரிந்தாரை - [பிக்ஷாடன மூர்த்தியாகிப்‌] பொக்கணத்தில்‌ யாசித்துத்‌ திரிந்தவருமாகிய சிவபெருமானை, - நீதியில்‌ காதலித்து - கிரமப்படி விரும்பி. ௭ - று, மனமே ஒரு கணமேனுஞ்‌ சிரத்தையன்பு செயப்பெறில்‌ எம்மைச்‌ சிவகணங்களோடி ருத்துவர்‌, ஆகலாற்‌ சிவபெருமானைக்‌ கிரமப்படி விரும்பித்‌ தியானஞ்செய்யெனக்‌ கூட்டுக, பொக்கணம்‌ - பிக்ஷைப்பை. (23)
--------
திரியும்பணி யுமிதழியு மாருஞ் சிறந் திடுபா
திரியும்பணி யும்புனை புலியூரர் சிவார்ச் சனைப்பத்
திரியும்பணி யுந்தொழிலும்விடார்க்குச் சிறந்த நெய்தோய்‌
திரியும்பணி யுந்திய விளக்காஞ் சிவஞா னமதே.       (24)

(இ-ள்‌:) திரியும்‌ பணியும்‌ இதழியும்‌ ஆரும்‌ சிறந்திடு பாதிரியும்‌ பணியும்‌ புனை புலியூரர்‌ - நகருகின்ற பாம்பையும்‌ கொன்றை மாலையையும்‌ ஆத்திப்பூவையும்‌ சிறந்த பாதிரிமலரையும்‌ ஆபரணங்களையுந்‌ தரித்த புலியூரரது,- சிவ அர்ச்சனைப்‌ பத்திரியும்‌ பணியுந்‌ தொழிலும்‌ விடார்க்கு - சிவபூசைக்கு [வேண்டப்படும்‌] பத்திர புஷ்ப முதலிய உபகரணங்களையும்‌ வணங்குந்தொழிலையுங்‌ கைவிடாத சிவபத்‌தர்களுக்கு, - திரியும்‌ பணி சிறந்த நெய்‌ தோய்‌ உந்திய விளக்கு சிவஞானம்‌ ஆம்‌ - திரியையுந்திரித்து நல்ல நெய்‌யிற்றோய்த்துக்‌ [கொளுவித்‌] தூண்டிய தீபம்போலச்‌ சிவஞானம்‌ பிரகாசிக்கும்‌. எ-று. ஈற்றடியிற்‌ பண்ணி பணி என நின்றது. சிவஞானம்‌ அது சிவஞானமாகிய அது. (24)
---------
அதரங்க ரங்களில வமங்காந் தளழ குறத்தோ
யதரங்க ரங்கவர்பூங் குழன்மா துருவாய் மருவி
யதரங்க ரங்கன்‌பணி புலியூர ளென்றுற் பிறவி
யதரங்க ரங்கவடைத்‌ தமுதாக் குமருள் வருமே.       (25)

(இ-ள்‌:) அதரம்‌ கரங்கள்‌ இலவம்‌ அம்‌ காந்தள்‌ அழகு உற வாயுதடுகளும்‌ கைகளும்‌ [முறையே] இலவமலர்‌ செங்காந்தட்பூ என்பவற்றினழகு பொருந்த, தோயதரம்‌ கரம்‌ கவர்‌ பூ குழல்‌ மாது உருவாய்‌ மருவிய - முகிலை இறை கவரும்‌ பூவைமுடித்த கூந்தலையுடைய மோகினி வடிவாகித்‌ தழுவிய, - தரங்க [அ] ரங்கன்‌ பணி புலியூரன்‌ என்றால்‌ - திரை மறிகின்ற ஆற்றிடைக் குறையாகிய சீரங்‌கத்தில்‌ வசிக்குந்‌ திருமால்‌ வணங்குகின்ற புலியூரில்‌ எழுந்தருளி யிருக்குஞ்‌ சிவபெருமானென்று [ஒருகாற்‌] துதித்தால்‌, - பிறவி அதர்‌ அங்கு அரங்க அடைத்து அமுது ஆக்கும்‌ அருள்‌ வரும்‌ - [அவர்க்குப்‌] பிறவி [வரும்‌] நெறியை அங்கே முழுவதுமடைத்து முத்தியை யுண்டாக்குந்‌ திருவருள் பதியும்‌. எ - று. இலவம்‌ காந்தள்‌ என்பன ஆகுபெயர்‌. தோயதரம்‌ சலதரம்‌. (25)
----------
வரவந்த காரம்பயில் கண்டர்பூ மகண்‌மார் பிடங்க
வரவந்த காரம்புகொண் டிகல்வாட்டி மகிழ்ந் தபுங்க
வரவந்த காரம்புலி யூரர்மன்‌னி னர்மற்றென்‌ றன்மேல்‌
வரவந்த காரம்யமின் றுனக்கே வரிலந் தரமே.       (26)

(இ-ள்‌:) வரம்‌ பயில்‌ அந்தகாரம்‌ கண்டர்‌ - மேன்மை பொருந்திய இருள்போலுங்‌ கரிய திருக்கண்டத்தையுடையவரும்‌, - பூமகள்‌ மார்பு இடம்‌ கவர வந்த கார்‌ அம்பு கொண்டு இகல்‌ வாட்டி மகிழ்ந்த புங்கவர்‌ - இலக்குமி மார்பை யுறைவிடமாகக்‌ கவரப்பெற்ற கரிய விஷ்ணுவாகிய அம்பினாலே மாறுபட்ட அசுரரைவென்று [சுரரை] யுவந்த மகாதேவரும்‌,- அவம்‌ தகார்‌ - பயனில்‌ கிருத்தியங்களிற்‌ [றிருவுளம்‌] பொருந்தாதவரும்‌,- அம்‌ புலியரர்‌ மன்னினர்‌ - அழகிய புலியூரருமாகிய சிவபெருமான்‌ [என்னிடத்து] நிலைபெற்றிருக்கின்றனர்‌, மற்று என்மேல்‌ வரவு அந்தகா [இ] ரமியம்‌ இன்று - அவ்வியல்பையுடைய என்மேல்‌ [உயிர்கவர] வருதற்கு அந்ததனே உனக்குப்‌ பூரணவிருப்பமுண்டாகாது,- வரில்‌ உனக்கே அந்தரம்‌ - [ஒருபோது] வரில்‌ உனக்கே கேடு (சம்பவிக்கும்‌) எ-று. கவரவந்த என்பதனைக்‌ கவர்ந்த என ஒரு சொன்னீர்மைத்‌தாகக் கொள்க. தன்‌ சாரியை. (26)
----------
அந்தரங்கம் பகர்ந்தா யிழையார்செய் யதிமயலா
மந்தரங்கம்‌ படுவேலையில் வீழ்ந்திங் கழிகுவனோ
வந்தரங்கம் பயின்மாலயன் போற்றற் கரும்புலியூ
ரந்தரங்கம் பயின்றாடிய பாதவமா தங்கனே.       (27)

(இ-ள்‌:) அந்தரங்கம்‌ பகர்ந்து ஆயிழையார்‌ செய்‌ அதி மயல்‌ ஆம்‌ - இரகசிய வார்த்தைகளைச் சொல்லிப்‌ பெண்கள்‌ செய்‌கின்ற மிக்க மயக்கத்தாலாகிய,- அம்‌ தரங்கம்‌ படு வேலையில்‌ வீழ்ந்து இங்கு அழிகுவனோ - அழகிய திரைமறிகின்ற [காம] சமுத்திரத்தின்கண்‌ வீழ்ந்து தமியேனிங்கே கெடக்கடவேனோ? - அந்த (அ) ரங்கம்‌ பயில்‌ மால்‌ அயன்‌ போற்றற்கு அரும்‌ புலியூர்‌ - அந்தத் திருவரங்கத்தில்‌ வசிக்கும்‌ விஷ்ணுவும்‌ பிரமாவுந்‌ (தன்‌ பெருமை) கூறுதற்கரிய புலியூரிலுள்ள - அந்தம்‌ அரங்கு பயின்று ஆடிய பாத - அழகிய கனகசபையிலே (பதஞ்சலி மகாமுனிவருக்கு) வாக்குத் தத்‌தஞ்செய்து, (அவ்வாறே) அநவரத தாண்டவஞ்‌ செய்‌தருளுன்ற திருவடிகளையடையவரே- அ மாது அங்கனே - அந்தவுமாதேவி பொருந்திய திருமேனியையுடையவரே. எ-று. அம்‌ மாது என நிற்கற்பாலது அ மாது என நின்றது. (27)
---------
மாதங்கங் கோடுவிற்றோ டாக்கிவெண்‌ புலியூரின்‌மத
மாதங்கங் கோடுறப்பாய்ந் தவப்போதிவண் மாழ்குறவிம்‌
மாதங்கங் கோடுமருவிய குன்‌றிடைவந் தவரார்‌
மாதங்கங் கோடுமுன்வந் தளித்தானொரு மன்னவனே.       (28)

(இ-ள்‌:) மா தங்கம்‌ கோடு வில்‌ தோடு ஆக்கி வண்‌ புலி யூரில்‌ - மாற்றுயர்ந்த பொன்மயமாகிய மேருவையுஞ்‌ சங்கையும்‌ (முறையே) வில்லுங் காதணியுமாக்கிய சிவபெருமானது வளவிய புலியூரில்‌, - மத மாதங்கம்‌ கோடு உறப்‌ பாய்ந்த அப்போது இவள்‌ மாழ்குற - மதத்தையுடைய ஒரு யானையானது கொம்பினாலே குற்றும்படி பாய்ந்துவந்த அப்பொழுது இம்மாது மயங்கி விட,- விம்மா தங்கு அங்கு ஒடும்‌ அருவிய குன்றிடை வந்தவர்‌ ஆர்‌ - ஒலித்துக்கொண்டு பொருந்திய அவ்விடத்துப்பாயு மருவியை யுடைய குன்றின்கண்‌ வந்து காத்‌தவரிவர் தாமோ,- மாது அங்கம்‌ கோடுமுன்‌ ஒரு மன்னவன்‌ வந்து அளித்தான்‌ - மயங்கிய விம்மாது (குற்றுண்டு) சாரங்‌ (கீழே) விழுவதற்குமுன்‌ ஒருதலைமகன்‌ வந்து காத்தனன்‌ எ-று. அவனே இவட்கு நாயகன்‌ என்பது குறிப்பெச்சம்‌, ஆக்கி என்பது பெயர்‌. புலியூரிற்‌ குன்றெனவியையும்‌, செய்யுளாகலிற்‌ சுட்டுமுன்‌ வந்தது. [பாங்கியறத்தொடு நிற்றல்‌.] 28
----------
மன்னாவ லையுடைத் தோற்றந்த பநின்புகழ் மறவா
மன்னாவ லையுரைத்துப் பெறுவேன் கொள்மதி முடியா
மன்னாவ லையுறுதீவிற் சிறந்தி டும்வண்‌ புலியூர்‌
மன்னாவ லையுறழ்கண் டாவுன்றுண்‌ மலர்த் தாமரையே.       (29)

(இ-ள்‌:) ஆவலை உடை மன்‌ தோற்றம்‌ தப - அவாவுடைமை யான்‌ வரும்‌ பிறவி கெடும்‌ பொருட்டு, நின்‌ புகழ்மறவாமல்‌ நாவல்‌ உரைத்துப்‌ பெறுவேன்‌ கொல்‌ - தேவரீருடைய திருப்புகழை (ஒருபொழுதும்‌) மறவாமல்‌ நாவினாலே வல்லவாறு துதித்துப்‌
பெறுவேனோ,- மதிமுடியா - பாலசந்திரன்றவழுந்‌ திருமுடியை யுடையவரே,- மன்‌ ஐ உறு நாவல்‌ தீவில்‌ சிறந்திடும்‌ வண்‌ புலியூர்‌ மன்னா - (மற்றைய தீபங்களில்‌) மிகுந்தவழகு பொருந்திய சம்புத்‌தீபத்துள்ள (சிவக்ஷேத்திரங்களுக்குட்‌) சிறந்த வளவிய புலியூரி லெழுந்தருளியிருக்குந்‌ தலைவரே - அலை உறழ்‌ கண்டா- இருளையும்‌ வென்ற கரிய திருக்கழுத்தையுடையவரே,- நின்‌ தாமரை மலர்த்‌ தாள்‌.- தேவரீருடைய செந்தாமரைமலர் போலுந்‌ திருவடிகளை. எ-று. இரண்டாமடியில்‌ ஐ சாரியை. நான்காமடியிற்‌ குறிற்‌கீழொ ற்று உயிர்வர இரட்டாது நின்‌றது. புலியூரிலெழுந்தருளி யிருக்குந்‌ தலைவரே,- பிறவி கெடும்பொருட்டு, முடியையுடையவரே, கழுத்தையுடையவரே, (என்று) தேவரீருடைய திருப்புகழை வல்லவாறு துதித்துத்‌ திருவடிகளைப்‌ பெறுவேனோ எனக்கூட்டுக. (29)
---------
தாமரைப் பாலரும் புல்லுரி சாத்தினர்‌ தங்குகரத்‌
தாமரைப் பாலத்தர் தென்புலி யூர்வரைத் தண்டுளபத்‌
தாமரைப் பாலரை யன்னீரு மாதுந்தசை யொடிங்கே
தாமரைப் பாலருந் தித்தங்கு மேகத்தட மரிதே.       (30)

(இ-ள்‌:) தாம்‌ அரும்‌ அரைப்‌ பால்‌ புல்‌ உரி சாத்தினா் - தாமரிய திருவரையின் கண்ணே புலித்தோலையுடுத்தவரும்‌,- கரத்‌ தாமரைத்‌ தங்கு பாலத்தர்‌ - கையாகிய தாமரைமலரிற்றங்கிய மழுவையுடையவருமாகிய சிவபெருமானது,- தென்‌ புலியூர்‌ வரை - தெற்கின்கணுள்ள புலியூர்‌ வரையில்‌ - தண்‌ துளபத்‌தாமரை பாலரை அன்‌ நீரும்‌ மாதும்‌ - (காத்தற்றொழிலாற்‌) குளிர்ந்த துளசிமாலையைத்தரித்த விஷ்ணுவையுங்‌ [கட்டழகால்‌] அவ்விஷ்ணுவுக்குப்‌ புதல்வனாகிய மன்மதனையுமொத்த நீரும்‌ இப்பெண்ணும்‌,- தசை ஓடு தாம்‌ மரைப்‌ பால்‌ அருந்தி இங்குத்‌ தங்கும்‌ - (மான்‌) றசையோடு தாவுகின்ற மரைப்பாலையுண்டு (இவ்விரவில்‌) இங்கே தங்குங்கள்‌, ஏகத்‌ தடம்‌ அரிது – அப்பாற் செல்லுதற்கு வழியரிது. எ-று. உவமவுருபீறு குறைந்தது. ஈற்றடியில்‌ தாவும்‌ என்பது தாம்‌ என நின்றது. தசை மான்றசை என்பது ‘வலைப்‌ பெய்தமான்றசைதேன்றோய்த்தருந்தி மரைமுலைப்பா, லுலைப்‌ பெய்தவார்தினைமூரலுமூண்டு'' என்பதனானும்‌ அறிக. [விருந்து விலக்கல்.) (30)
---------
தடங்கடி வேங்கைநிழ லொருவித் தவிக்கும் பெரும்பாந்‌
தடங்கடி வேங்கையுங் காட்டிடில் வேங்கடஞ் சார்த்‌தகடி
தடங்கடி வேங்கையுரி யார்புலி யூரிற்றை யல்கஞ்சத்‌
தடங்கடி வேங்கையலர் வயலாக சரிப்புண்‌ கிலே.       (31)

(இ- ள் :) பெரும்‌ பாந்தள்‌ தடம்‌ கடி வேங்கை நிழல்‌ ஒருவித்‌ தவிக்கும்‌ - (தன்கட் பயிலும்‌) பெரும்பாம்புகளும்‌ மலைப்பக்‌கத்திலுள்ள‌ மணம்பொருந்திய வேங்கைமரநிழலை நீங்கியவழி (வெம்மைபொறாது) துடிக்கும்‌, - தங்கு அடி வேம்‌ - (தன்கட்‌) சென்றுசார்வோரதடிகளும்வேகும்‌,- காட்டிடில்‌ கையும்‌ வேம்‌ கடம்‌ - (தன்னைச்‌) சுட்டிக்காட்டில்‌ அக்கையும்‌ வேகும்‌ (அத்தன்‌மைத்தாகிய கொடிய) சுரமானது சார்ந்த கடி தடம்‌ கடி வேங்கை உரியார்‌ புலியூரில்‌ தையல்‌ சரிப்பு உண்கில்‌ - பொருந்‌திய திருவரையில்‌ அஞ்சத்தகும்‌ புலிமினது தோலையுடுத்த சிவபெருமானது புலியூரில்‌ வடக்கும்‌ நம்‌ புதல்வி நடக்கப்பெறின்‌, - கஞ்சத்‌ தடம்‌ கடி வேங்கை அலர்‌ வயல்‌ ஆக - தாமரைப்பொய்கை சிறந்த பொன்போலுந்‌ தாதை இறைக்கும்‌ (தண்ணிய) மருத நிலமாகக் கடவது. எ-று ஒருவினாலென்னும்‌ வினையெச்சம்‌ ஒருவியெனத் திரிந்து நின்றது. வேகும்‌ என்பது இருவழியும்‌ வேமென நின்றது. ஈற்றடியில்‌ வேங்கை ஆகுபெயர்‌ கொடிய சுரமானது நம்புதல்வி நடக்கப்பெறின்‌, தண்ணிய மருதநிலமாகக்‌ கடவது எனக்கூட்டுக [சுரந்தணிவித்தல்‌ ] (31)
--------
புண்டரிகத் தர்தொழும் புலியூரர்வெண் பூதியணி
புண்டரிகத் தர்புயலார் பொருப்பினிற் போற்றுதிசைப்‌
புண்டரிகத் தரத்‌தார்நின்‌ மறக்கவும் போதுமனம்‌
புண்டரிகத் தரவக்குயி லாலன்றுபோந் தவரே.       (32)

(இ- ள் :) புண்டரிகத்தர்‌ தொழும்‌ புலியூரர்‌ - தாமரை மலரை யாசனமாகவுடைய பிரமாவும்‌, நாபிக்கமலத்தையுடைய விஷ்ணுவும்‌ வணங்கும்‌ புலியூரையுடையவகும்‌, -வெண்‌ பூதி அணி புண்டரி- வெண்மையாகிய விபூதியைத்‌ திரிபுண்டரமாகத் தரித்‌தவரும்‌,-- கத்தர்‌ - விசுவகருத்தாவுமாகிய சிவபெருமானது, புயல் ஆர்‌ பொருப்பினில்‌ - முகிலார்ந்த மலையின்௧ண்‌,- போற்று திசைப்‌ புண்டரிகத்‌ தரத்தார்‌ - (உலகைக்‌) காக்குந்‌ திக்கயங்‌களுட்‌ புண்டரீகம்‌ போலுந்தலைவர்‌, - து அரவக்‌ குயிலால்‌ மனம்‌ புண்‌ தரிக அன்று போந்தவர்‌ - (தமது பிரிதற்குறிப்பை அறிந்த நமக்குப்‌) பகையாடிக்‌ கூவுகின்ற குயிலினாலே மனம்‌ புண்பட (அதனைத் தாமறிந்திருத்தும்‌) அன்று (எம்மைப்பிரிந்து) சென்றவன் கண்ணர்‌ (ஆகலின்‌),- நின்‌ மறக்கவும்‌ போதும்‌ - (இன்று) நின்னை மறந்திருக்கவுங் கூடும்‌. எ-று, மூன்றாமடியிற்‌ புண்டரீகம்‌ புண்டரிகம்‌ எனவும்‌, நான்காமடியில்‌ தூ து எனவுங்‌ குறுகிநின்‌றன. இந்நான்காமடியிற்‌ புண்டரிக்க என்பது புண்டரிக என நின்றது, [பாங்க கொடுஞ்சொற்‌ சொல்லல்‌ ] (32)
-----
தவராகமா கனகச்சிலை கொண்டவன்‌ றந்தமெழுத்‌
தவராசுமா கவரிதேட ரியவன்றண்‌ புலியூர்த்‌
தவராகமா கரமானோ னெமக்கருட் டன்மைதந்து
தவராகமா கவொளியாளைப் போற்றறகுதி நெஞ்சே.       (33)

(இ- ள்‌:) கனகம்‌ மா சிலை தவர்‌ ஆக கொண்டவன்‌ - பொன்‌ மயமாகிய மேருகிரியை வில்லாகக்கொண்டவரும்‌,- தந்தம்‌ எழுந்த வராகம்‌ ஆக அரி தேடு அரியவன்‌ - கொம்புமுளைத்த பன்றியாக விஷ்ணுதேடிக்‌ காணுதற்கரியவரும்‌,- தண்‌ புலியூர்‌ தவர்‌ ஆகம்‌ ஆகரம்‌ ஆனோன்‌ - தண்ணிய புலியூரையும்‌ துறவிகளது இருதயத்‌தையுந்‌ தமக்கு வாசஸ்தானமாகவுடையவருமாகிய சிவபெருமான்‌, தன்மை அருள்‌ தந்து எமக்கு உதவ - தமக்கு இயற்கையாகிய திருவருளை எமக்குத்‌ தந்துபகரித்தற்பொருட்டு,- [இ] ராக மாகம்‌ ஒளியானைப்‌ போற்றல்‌ தகுதி நெஞ்சே - செவ்வானம்‌ போலுந்‌ திருமேனிப்‌ பிரகாசமுடைய அச்சிவபெருமானை வழிபடுதல்‌ [எமாற்செய்யத்‌] தக்கது மனமே, ௭ - று. முதலடியில்‌ மா நிறம்‌. (33)
-------
குதிக்கும் புரையற்ற பந்தெறிந்தோ வண்‌கொழுங் கயல்கள்‌
குதிக்கும் புனல்குடைந் தோவிள நீருக்குங் கோட்டிணைத்த
குதிக்கும் புகறருகொங் கையென்வாட் டங்குணக்குன்‌ றனான்‌
குதிக்கும் புகழ்பெறு தென்‌புலியூர் வரைக்கோ மளமே.       (34)

(இ-ள்‌:) குதிக்கும்‌ புரை அற்ற பந்து எறிந்தோ - [நின்‌] காற்குதிக்கும்‌ நிகரற்ற பந்தை எறிந்து விளையாடுதலானோ - வண்‌ கொழும்‌ கயல்கள்‌ குதிக்கும்‌ புனல்‌ குடைந்தோ - அழகிய மதர்த்த கயன்மற்சங்கள்‌ பாயுஞ்சுனையிற்‌ சலக்கிரீடைசெய்தலானோ,- இளநீருக்கும்‌ இணைக்‌கோட்டுக்கும்‌ தகுதி புகல்தரு கொங்கை வாட்டம்‌ என்‌ - இளநீருக்கும்‌ இரண்டியானைக்கொம்‌புக்கும்‌ ஒப்புச்சொல்லத்தகும்‌ நின்‌ முலைகள்‌ வாடுதற்குக்‌ காரணம்‌ யாது, - குணக்‌ குன்றன்‌ - குணமலையாகிய சிவபெருமானது, நான்கு திக்கும்‌ புகழ்‌ பெறு தென்‌புலியூர்‌ வரைக்‌ கோமளமே - நான்கு திகந்தம் வரையும்‌ புகழ்பொருந்தப்பெற்ற தெற்கின் கணுள்ள புலியூர்‌ மலையில்‌ வசிக்கும்‌ இளமைச்செவ்வியையுடைய [நந்‌] தலைவியே. எ-று. வாட்டம்‌ ஈண்டுக்‌ குறிப்புமொழியாய்‌ விம்முதலை யுணர்த்தி நின்றது. [ஐயங்கரந்து தையலைவினாதல்‌.] (34)
---------
வரையாவனலி பிவேதன்‌ செய்யாதன்பர் மாட்டணுவாய்‌
வரையாவனலி பெண்ணாணா யன்றாபவன் வண்‌புலியூர்‌
வரையாவனலி தரமன்னவா மெய்வருத்‌ தமுறேல்‌
வரையாவனலி கரியாநம் மாதைமணந் தருளே.       (35)

(இ-ள்‌:) வரையா வனம்‌ லிபி வேதன்‌ செய்யாது - வினைப்‌ பயன்களை வரையறுத்து [எழுதிய] எழுத்தாகிய விதியை [மறித்தும்‌] பிரமா எழுதாவகை,- அன்பர் மாட்டு அணுவாய்‌ வரையாவன்‌ - தம்‌ மெய்யன்பர்‌ மாட்டணுவைப்போலத்‌ தோன்றாதும்‌ மலையைப்‌போலத்‌ தோன்றியும்‌ நிற்பவரும் - ஆண்‌ பெண்‌ அலியாய்‌ அன்று ஆபவன்‌ - ஆண்‌ பெண்‌ அலியாகியும்‌ அவையல்ல‌வாகியு மிருப்‌பவருமாகிய சிவபெருமானது,- வண்‌ புலியூர்‌ வரை - வளவிய புலியூரின்கண்‌,- ஆவல்‌ நலிதர மன்னவா மெய்‌ வருத்தம்‌ உறேல்‌ - காம [நோய்‌] வருத்த நந்தலைவரே நீர்‌ மேனிவருந்தாதொழிக,- வரையா - [என்‌ சொல்லை] ஏற்றுக்கொண்டு,- அனலி கரி ஆ நம்‌ மாதை மணந்தருள்‌ - அக்கினிசான்றாக [இனிநீர்‌] நம்மாதை வரைந்துகொள்ளுக. எ -று. வன்னம்‌ வனம்‌ எனவும்‌ ஆக ஆ எனவும்‌ நின்றன. அணுவாய்‌ வரையாதல்‌ முறையே சாமானிய விசேட வியாபகமாதல்‌. ஆக்கம்‌ ஈண்டு உவமைப்பொருள்‌ குறித்து நின்‌றது. “ஆள்வாரிலிமாடாவேனோ” என்புழிப்போல. [வரைவு கடாதல்‌.] 35
---------
மணக்குஞ் சரதத்திரு மாற்கரியவர் வண்‌புலியூர்‌
மணக்குஞ் சரர்நம்மறந்தனர் சேவல்வரும் பெடையை
மணக்குஞ் சரந்தைபெடை யாற்றப்புள்ளுறை வான்‌கழியே
மணக்குஞ் சரமெய்துவே ளெதிர்ந்தா ளெங்ஙன்வாழ்குவமே.       (36)

[இ-ள்‌:) மண்‌ நக்கும்‌ சரதம்‌ திருமாற்கு அரியவர்‌ - மண்‌ணுலகையுண்ட மெய்யறிவையுடைய விஷ்ணுவுக்கு (அவ்வறிவு மயங்கியவழிக்‌] காணுதற்கரிய சிவபெருமானது, வண்‌ புலியூர்‌ மணம்‌ குஞ்சரர்‌ நம்‌ மறந்தனர்‌ வளவிய புலியூரின்கண்‌ [அன்று] எம்மை [இனிது] கலந்த மதயானையானவர்‌ [இன்று] எம்மை மறந்தனர்‌ [போலும்‌] - சேவல்‌ வரும்‌ பெடையை மண பெடை குஞ்சு அரந்தை ஆற்ற - சேவல்‌ தன்னை [அவாவி] வரும்பெடையை [உவப்பன செய்து] புனைய, அது [அங்ஙனம்‌ வருந்‌] தன்‌ பார்ப்புக்களை [இரையருத்திப்பசி] வருத்தந்‌ தணிக்க,- புள்‌ உறை வான்‌ கழியோ [இங்ஙனம்‌ ஒன்றனை யொன்றாதரித்துப்‌] புட்கள்‌ வாழும்‌ பெரிய கானலே, - மணக்கும்‌ சரம்‌ வேள்‌ எய்து எதிர்த்ததான் - மணங்கமழும்‌ மலரம்புகளை மன்மதன் பிரயோகித்து எதிர்த்தான்‌, எங்ஙன்‌ வாழ்குவம்‌ - இனி எவ்வாறு நாமுயிர்‌ வாழுவோம்‌. ௭ - று. சரதம்‌ ஆகுபெயர்‌. இரண்டாமடியில்‌ மண்ண மண எனவும்‌, ஈற்றடியில்‌ எங்ஙனம்‌ எங்ஙன்‌ எனவும்‌ நின்றன. விளிப்பெயரடை உள்ளுறை யுவமப்பொருட்கண்‌ வந்தது. [காமமிக்ககழிபடர்செவி.] (36)
--------
குவலயம் போதுவண் டுண்ணு மப்போது குறித்திடுசங்‌
குவலயம் போதுகரத்‌ தன்பர்வேட் டனர்கூட்ட மென்சொல்‌
குவலயம் போதுகண் ணாய்சபை வாணரைக் கூடித்தொழக்‌
குவலயம் போதுறுதென் புலியூர் வல்லி கூறுகவே.       (37)

(இ-ள்‌:) குவலயம்‌ போது வண்டு உண்ணும்‌ அப்போது - நெய்தற்பூக்களிலுள்ள [தேனை] வண்டுகளுண்ணும்‌ அம்மாலைக்‌காலத்து - குறித்திடு சங்கு வலயம்‌ போது கரத்து அன்பர்‌ கூட்டம்‌ வேட்டனர்‌ - குறித்துணரப்படுஞ்‌ சங்கரேகை சக்கரரேகைகள்‌ நீளப்பெற்ற கைகளையுடைய நம்மன்பர்‌ நினது சையோகத்தை விரும்பினர்‌, - என்‌ சொல்குவல்‌ - [இதற்கு] யான்‌ யாதுசொல்‌வேன்‌, ஐ அம்பு ஓது கண்ணாய்‌ - அழகிய அம்பையுவமிக்குங்‌ கண்களையுடையாய் - சபை வாணரைக்‌ கூடித்‌ தொழ - [சிவ
மூர்த்தி பேதங்கட்குளெல்லாம்‌ ஒப்புயர்வற்ற மகாமூர்த்தியாகிய சபாநாயகரை [ஒருங்கு] திரண்டு [தரிசித்து] வணங்கும்‌ பொருட்டு குவலயம்‌ போது உறு தென்‌ புலியூர்‌ வல்லி - [இந்‌நிலவுலகத்தவர்‌] எய்தப்பெறுஞ்‌ [சைவ தலங்களுண்‌ ] மிக்க தெற்‌கின் கணுள்ள புலியூரில்‌ வசிக்குங்‌ காமவல்லி போல்பவளே - கூறுக - நீகூறுவாயாக. எ-று. போது, சங்கு வலயம்‌ குவயலம்‌ என்பன ஆகுபெயர்‌. உடம்படுத்தற்கு உபசாரவிளி ஈரிடத்துத்‌ தந்து கூறினாளென்க, [பாங்கியிரவுக் குறிவேண்டல்‌.] (37)
---------
வல்லிக்கரம் பயில்வேன் முலைசொல் விழிமானு மந்த
வல்லிக்கரம் பையுவமை யன்றேதண் பவாள் சனன
வல்லிக்கரம் பையமு தன்‌பர்க் காம்புலி யூரர்வரை
வல்லிக்கரம்‌ பற்றிநீக் கிலையங் ஙனென்‌மால் கடற்கே.       (38)

(இ-ள்‌:) வல்‌ இக்கு அரம்‌ பயில்‌ வேல்‌ மானும்‌ முலை சொல்‌ விழி அந்த வல்லிக்கு - (முறையே) சூதாடு கருவியையும்‌ கருப்பஞ்‌ சாற்றையும்‌ அரத்தொடு பயின்றவேலையும்‌ போலுந்‌ தனங்களையுஞ்‌ சொல்லையுங்‌ கண்களையுமுடைய அந்த மாதுக்கு - அரம்பை உவமை அன்றே நண்ப - தேவரம்பையும்‌ நிகரல்லள் (அதுநிற்க) நண்‌பனே, - சனன வல்லிக்கு வாள்‌ - சனனவிலங்கையரியும்‌ வாளும்,- அன்பர்க்கு அரம்பை அமுது ஆம்‌ புலியூரர்‌ வரை - தம்மெய்யன்பர்க்குக்‌ கதலிக்கனியும்‌ அமுதுமாகிய புலியூரரது வரையின்‌
கண்‌,- மால்‌ கடற்கு என்‌ வல்‌ இக்கரம்பற்றி அங்ஙன்‌ நீக்கு இலை - (அம்மாது தந்த) மோக சமுத்திரத்தினின்று மென்னை (நின்‌) வலிய இக்கையினாற்பற்றி அங்கே எடுத்தாயில்லை (இங்கே கழறுவதனாற்‌ பயன்யாது?). எ-று இக்கு, அரம்பை என்பன ஆகுபெயர்‌. ஏகாரம்‌ பலரறி தேற்றத்தின் கண் வந்தது. வரையாகிய அங்ஙனென வியையும்‌. [கிழவோன் கழற்றெதிர்‌ மறுத்தல்‌] (38)
---------
மாலுக்கு வந்தன செய்யாமற் போற்றிடின் மாயையெனு
மாலுக்கு வந்தனவாய் வருவார் மற்றியா னெனதா
மாலுக்கு வந்தனை செய்துமுன் வாழ்த்த வளையருளி
மாலுக்கு வந்தபுலி யூரர்‌மாக வண்கங் கையரே.       (39)

(இ-ள்‌) மாலுக்கு வந்தன செய்யாமல்‌ போற்றிடின்‌ - மயக்கத்திற்கு (நிமித்தமாய்‌) வருவனவற்றைச் செய்யாது தம்மை வணங்கித்‌ துதிக்கின்‌, மாயை எனும்‌ மாலுக்கு வந்து அனவாய்‌ வருவார்‌ - (அவரது) மாயையென்னும்‌ மேகத்திற்குச்‌ சண்டமாருதம்போல வருவார். - யான்‌ எனது ஆம்‌ மால்‌ உக்கு முன்‌ வந்தனை செய்து வாழ்த்த - (விஷ்ணு) யான்‌ எனதென்னும்‌ அகங்கார மமகாரங்களாகிய பெருமை குன்றித்‌ திருமுன்னின்று வணங்‌கித்‌ துதிக்க, மாலுக்கு வளை அருளி - அவ்விஷ்ணுவுக்குச்‌ சக்கரத்‌தைக்‌ கொடுத்தவரும்‌ - உவந்த புலியூர‌ர் - புலியூரை யுவந்தவரும்‌, வண்‌ மாக சங்கையர்‌ - வளவிய ஆகாய கங்கையைத்‌ தரித்‌தவருமாகிய சிவபெருமான்‌ எ-று. மற்று அசைநிலை அருளி பெயர்‌: இனி வினையெச்சமெனக்கொண்டு, உவத்தல்‌ வினைக்குச்‌ செயப்படுபொருண்‌ மாலெனக் கோடலுமொன்று. (39)
----------
கங்கைப் பொருவரு செஞ்சடை யார்கமலா லயனார்‌
கங்கைப் பொருளெனக் கொண்டிரந்தார் தமைக்காய் தருமோ
கங்கைப் பொருவின ராகத்துள்ளார் செங்கயல் வயலிற்‌
கங்கைப் பொருபுலி யூரரென்‌ பார்க்கில்லை கன்மங்களே       . (40)

(இ- ள்‌:) கங்கைப்‌ பொருவு அரு செம்‌ சடையார்‌ - கங்கையைத் தரித்த நிகரற்ற சிவந்த சடையையுடையவர்‌,- கமல ஆலயனார்‌ கம்‌ கை கொண்டு பொருள்‌ என இரந்தார்‌ - பிரம கபாலத்தைப்‌ (பிக்ஷாபாத்திரமாகக்‌) கையிற்‌ கொண்டு பொருள்‌ (கொடு) என்று யாசித்தவர்‌, தமைக்‌ காய்தரு மோகம்‌ கைப்பு ஒருவினர்‌ ஆகத்து உள்ளார்‌ - (உடைய) தம்மைப்‌ பிறலியில்‌ வீழ்த்துக்‌ கெடுக்கன்ற அவாவை வெறுத்துவிட்ட ஞானிகளது இருதயத்தில்‌ (என்றும்‌) உள்ளவர்‌,- செம்‌ கயல்‌ வயலில்‌ கங்கைப்‌ பொரு புலியூரர்‌ என்பார்க்கு - செவ்விய கயன்மற்சங்கள்‌ வயலிலுள்ள வரம்பருகை மோதும்‌ (நீர்வளவிய) புலியூரையுடையவரென்று (இவ்வாறு) துதிக்குஞ்‌ சிவபத்தர்களுக்கு - கன்‌மங்கள்‌ இல்லை - கன்மங்கள்‌ ஏறுதலில்லை எ-று. (40)
--------
கன்மத்த முந்துபவங் கெடவேண்டிற் கடல் கடையக்‌
கன்மத்த முங்கொளு மால்விடைப் பாகன்கடுக் கையலம்‌
கன்மத்த மும்புனை யும்புலியூரன் கருது மைம்மு
கன்மத்த மும்மைக் கரியுரியான்‌ புகழ்கற் றிடுமே.       (41)

(இ- ள்‌:) கன்மத்து முந்து பவம்‌ கெட வேண்டில்‌ - கன்மத்தினால்‌ வரும்‌ பிறவிகெட விரும்புகில்‌ - கடல்‌ கடையக்‌ கல்‌ மத்தமும்‌ கொளும்‌ மால்‌ விடைப்‌ பாகன்‌ - கடல்‌கடையும் பொருட்டு மந்தரமலையை மத்தாகவும்‌, வாசுகி முதலியவற்றை நாண் முதலியவாகவுந்‌ (திரித்துக்‌) கொண்ட விஷ்ணுவாகிய இடபத்தை வாகனமாக நடத்துபவரும்‌,- கடுக்கை அலங்கல்‌ மத்தமும்‌ புனையும்‌ புலியூரன்‌ - கொன்றைமாலையையும்‌ மதுமத்த மாலையையுந்‌ தரித்த புலியூரரும்‌, - கருதும்‌ ஐ முகன்‌ - (அன்பர்களாலே)தியானிக்கப்படும்‌ ஈசானம் முதலிய ஐந்து திருமுகங்களையுடையவரும்‌, - மும்‌மை மத்தக்‌ கரி உரியான்‌ புகழ்‌ கற்றிடும்‌ - மும்மதங்களையுடைய யானைத்‌ தோலைப்போர்த்‌தவருமாகிய சிவபெருமானது திருப்புகழை (நம்மவர்களே அநவரதமுங்‌) கற்றுத்‌ துதியுங்கள்‌. எ-று, முதலடியிற் கன்மத்த என்புழி ஈற்றகரஞ்‌ சாரியை. (41)
---------
கற்கடகத் தளைமுக் களிதூர்க்கும் கவின்‌ புலியூர்‌
கற்கடகத் தருநெஞ்சி னன்காணவுங் காட்டுங் கொல்லோங்‌
கற்கடகத் தணிகா சினிபோற் றிடக்கை வலம்பு
கற்கடகத் தகுகாயு ணும்போ தர்கருத் தனையே.       (42)

(இ-ள்‌:) கற்கடகத்து அளை முக்கனி தூர்க்கும்‌ கவின்‌ புலியூர்‌ - ஞெண்டுகளெடுத்த புற்றை முப்பழந்‌ தூர்க்கு மழகிய புலியூராரது - கற்கள்‌ தகத்தரு நெஞ்செனும்‌ காணக்‌ காட்டும்‌ கொல்‌ - கல்லைப்போலக் (கடினம்‌) பொருந்திய மனத்தையுடைய தமியேனுங்‌ காணுமாறு காட்டுமோ,- கடக ஓங்கல்‌ அணி காசினி போற்றிட கைவலம்‌ புகற்கு - வாளகிரிசூழ்ந்த அழகிய உலகத்தவர்‌ துதிக்க முத்தியிற்‌ பிரவேசித்தற்கு.- அடகு அத்தகு காய்‌ உணும்‌ போதர்‌ கரத்தனை - இலைக்கறியையும்‌ அந்த (உண்ணத்‌) தக்க காய்களையும்‌ உண்டு தவஞ்செய்கின்ற ஞானிகளது இருதயத்‌தின் கண்ணுள்ள சிவபெருமானை. எ-று. இழிவு சிறப்பும்மை மாற்றியுரைக்கப்பட்டது. புலியூரானது, கல்லைப்போலும்‌ மனத்தையுடய தமியேனுஞ்‌ சிவபெருமானைக்‌ காணுமாறு காட்டுமோ எனக்கூட்டுக. (42)
------------
தனக்கரி யானைச் சசிதுணை யானைத் தகும்பணியா
தனக்கரி யானைப் பிரமனை யாள்பவன்‌ றன்னையெண்ணான்‌
தனக்கரி யானைம் முகன்‌ புலியூரன்‌ சதுரனென்னா
தனக்கரி யானையன் றானென்னை யாளுந்தனி முதலே       (43)

(இ-ள்‌:) யானை தனம்‌ சசி துணையானை - யானைபோலுந்‌ தனங்களையுடைய சசிதேவிக்கு மணமகனாகிய இந்திரனையும்‌, - பணி தகும்‌ ஆதனம்‌ கரியானை - சேஷனாகிய பாம்பைக்‌ [கண்டுயில்‌] பொருந்துஞ்‌ சயனமாகவுடைய கரிய விஷ்ணுவையும்‌, - பிரமனை ஆள்பவன் - பிரமாவையும்‌ ஆளுபவரும்‌,- தன்னை எண்ணான்‌ தனக்கு அரியான்‌ - தம்மை அவமதித்த தக்கனுக்குக்‌ காணுதற்கரியவரும்‌, -
ஐ முகன்‌ - ஐந்து திருமுகங்களையடையவரும்‌,- புலியூரன்‌ - புலியூரில்‌ வீற்றிருப்பவரும்‌,-சதுரன்‌ - நாகரிகரும்‌,- என்‌ நாதன்‌ - எனது குருவும்‌ - அக்கு அரியான்‌ - என்பு மாலையையும்‌ பாம்பையுந் தரித்தவரும்‌,- ஐயன்‌ தான்‌ - பரமபிதாவுமாகிய சிவபெருமானே, என்னை ஆளுந்‌ தனிமுதல்‌ - என்னை அநாதியே அடிமையாகவுடைய முழுமுதற்கடவுள்‌. ௭ - று. கரியானை கரத்தையுடையதாகிய யானையென இருபெயரொட்டுப்‌ பண்புத்தொகை. (43)
----------
முதலைக் கயவரைக் களன்னலின் மாய்த்தடன் மொய்ம்புகெழு
முதலைக் கயவரை போற்றிய மான்முதற் றேவர்பொரு
முதலைக் கயவரைச் செற்றபி ரானைமுது புலியூர்‌
முதலைக் கயவரைப் போதால் வணங்கினர் முத்தர்களே.       (44)

(இ-ள்‌:) முதலைக்‌ கயவு, அரைக்‌ கன்னலில்‌ மாய்த்து- (கயேந்‌திரனைப்பற்றிய) முதலையினது பெருமையை அரைநாழிகையில்‌ நிக்‌கிரகித்து, - அடல்‌ மொய்ம்பு கெழுமு வரை தலைக்‌கயம்‌ போற்‌றிய – மிக்க வலிமை பொருந்திய மலைபோலும்‌ அக்கயேந்திரனுக்கு அநுக்கிரகித்த,- மால்‌ முதல்‌ தேவர்‌ பொருமுதலை – திருமால் முதலாகிய தேவர்களது விம்மலையும்‌,- கயவரைச்‌ செற்ற பிரானை - பதிதர்களாகிய அசுரரையுஞ்‌ (சேர) அழித்த எப்பொருட்கு மிறைவரும்‌,- முது புலியூர்‌ முதலை - பழைய புலியூரில்‌ வீற்றிருக்‌குங்‌ கடவுளுமாகிய சிவபெருமானை - கயம்‌ வரை போதால்‌ வணங்‌கினர்‌ முத்தர்கள்‌ - வாவியின்கணுள்ள பூவாலருச்சித்து வணங்கினவர்‌ மலமுத்தராவர்‌. எ-று. ஆக்கச்சொன்‌ மறைந்து நின்றது. (44)
-------
முத்தருக் கும்பயின் மூர்க்கருக் குந்தவமுற் றிதிற்கு
முத்தருக் கும்விண் ணதிர்த்திடித் தோங்கிமு ழங்குமுரு
முத்தருக் கும்பமுலை மங்கை பங்கர்முது புலியூர்‌
முத்தருக் கும்வனப் பாரிருதா ளென்முடி மணியே.       (45)

(இ-ள்‌:) முத்‌தருக்கும்‌ பயில்‌ மூர்க்கருக்கும்‌ - மூவேடணைகளையுமுடைய பதிதருக்கும்‌,- தவம்‌ முற்றி நிற்கும்‌ முத்தருக்கும்‌ - தவத்தை முடித்து (உடம்போடு கூடி) நிற்குஞ்‌ சிவன்முத்தருக்கும்‌; - விண்‌ ஓங்கி அதிர்த்து இடித்து முழங்கும்‌ உருமு தரு - (முறையே) ஆகாயத்திலுயர்ந்து கர்ச்சித்துப்‌ பேரொலி விளைத்து முழங்கு மிடியும்‌ கற்பகதருவுமாயுள்ளவரும்‌,- கும்ப முலை மங்கை பங்கர்‌ - பூரணகும்பம்போலும்‌ முலைகளையுடைய உமாதேவிபாகரும்‌,- முது புலியூர்‌ முத்து அருக்கும்‌ வனப்பார்‌ பழைய புலியூரிலெழுந்தருளி யிருக்கும்‌ முத்தையும்‌ (ஒளி) குன்றுவிக்கும்‌ (விபூதிப்பிரகாச) அழகையுடையவருமாகிய சிவபெருமானது,- இருதாள்‌ ஏ என்‌ முடி மணி - இரண்டு திருவடிகளுமே என்‌ சிரோரத்தினம்‌ எ - று. மூவேடணை அத்தவேடணை புத்திரவேடணை உலகவேடணை என்பன. ஏடணை விருப்பம்‌, (45)
------
மணியருந் துங்ககய முகத்தேவு மருவு சுப்ர
மணியருந் தும்புரு நாரதரும் புகழ்வண்‌ புலியூர்‌
மணியருந் தும்விடத் தார்சிவ காமிமரு வியர
மணியருந் தும்விடை யாரெனப் போற்‌றலென் மாகடனே.       (46)

(இ-ள்‌:) மணி அரும்‌ துங்க கயமுகத்‌ தேவும்‌- அழகிய அரிய உயர்ச்சிபொருந்திய யானைமுகத்தையுடைய விநாயகக்கடவுளும்‌,- மருவு சுப்ரமணியரும்‌ - (கலியுகவரதரென்று சொல்லும்படி) பொருந்திய சுப்பிரமணியக்கடவுளும்,- தும்புரு நாரதரும்‌ புகழ்‌ வண்‌ புலியூர்‌ மணி – தும்புரு நாரதரும்‌ புகழுகின்‌ற வளவிய புலியூரி லெழுந்தருளியிருக்கும்‌ (எனது கண்‌) மணி,- அருந்தும்‌ விடத்தார்‌ - நஞ்சையுண்டவர்‌,-- சிவகாமி மருவிய (இ) ரமணியர்‌ - சிவகாமி யம்மை வாமபாகத்திற் பொருந்திய மனரம்மியத்தையுடையவர்‌,- உந்தும்விடையார்‌ - இவர்ந்து (செலுத்து) மிடபவாகனத்தை யுடையவர்‌, எனப்‌ போற்றல்‌ ஏ என்‌ மா கடன்‌ - என்று துதித்‌தலே எனது விழுமிய நியதியாம்‌, எ-று. மூன்றுமடியில்‌ மணி சிந்தாமணி எனினுமமையும்‌, (46)

கடக்கருமத் தகைமா மகந்தன் னிற்சுலந் தசுரர்‌
கடக்கருமத் தமிகச் செற்றகூத் தன்கவின்‌ புலியூர்க்‌
கடக்கருமத் தக்கரியு ரித்தோ னன்பர்க் காய்கருவி
கடக்கருமத்‌ தளைக்கட் டறுக்குங் கதிர்ச்சே கரமே.       (46)

(இ-ள்‌:) கடக்கு அரும்‌ அ மா தகை மகம்‌ தன்னில்‌ கலந்த சுரர்கள்‌ - (ஒருவாற்றாலும்‌) மேலிடுதற்கரிய அத்துணைப் பெருமையை யுடைய யாகத்தில்வந்த தேவர்களையும்‌, -- தக்கரும்‌ மத்தம்‌ மிகச்‌ செற்ற கூத்‌தன்‌- யாககருத்தாவாகிய தக்கனையும்‌ மயக்க மிகும்படி தண்டித்த (பஞ்சகிருத்திய) நிருத்தரும்‌,- கவின்‌ புலியூர்க்‌ கரும்‌ கடம்‌ மத்தம்‌ கரி உரித்தோன்‌ ஏ - அழகிய புலியூரில்‌ வீற்றிருக்குங்‌ கரிய மத்தக மதங்கள்பொருந்திய யானையினது தோலையுரித்தவருமாகிய சிவபெருமானே, - அன்பர்க்‌ கருகாய் விகடம்‌ கருமம் தளைக்கட்டு அறுக்கும்‌ - தம் மெய்யன்பரைப்‌ பிறவியிலுய்த்து வருத்தும்‌ வேறுபாட்டையுடைய இருவினைகளும்‌ பாசபந்தமுமாகிய (இரும்பைத்‌) துணிக்கவல்ல,-சேகு கதிர்‌ அரம்‌ - வைரம் பொருந்திய கூரிய அரமாயுள்ளவர்‌. எ-று. தக்கர்‌ என்‌புழிப்பன்மை இழித்தற்கண்வந்தது. கருமந்தளை கருமத்தளை எனநின்றது. மா அளவு, (47)
------------
சேகரிக் குஞ்சரத் தோல்புனைந் தூர்பவன் றேங்கடுக்கை
சேகரிக் குஞ்சடைத் தென்புலி யூரன்‌சிறு பிறைசேர்‌
சேகரிக் குஞ்சன்னு விக்குநன் காதலன்‌ றீயவினைச்‌
சேகரிக் குஞ்சர மென்‌போ நடம்புரி செம்மலையே.       (48)

(இ-ள்‌:) சே கரிக்‌ குஞ்சரம்‌ தோல்‌ புனைந்து ஊர்பவன்‌ - இடபத்தையும்‌ கரிய யானைத்தோலையுந்‌ (திருமேனியிற்‌) போர்த்து (வாகனமாக) நடத்துபவரும்‌,- தேம்‌ கடுக்கை சேகரிக்கும்‌ சடைத்‌ தென்‌ புலியூரன்‌ - மணம் பொருந்திய கொன்றைப் பூமாலையைத்‌ தேடியணியுஞ்‌ சடையையுடைய தெற்கின்கணுள்ள புலியூரரும்‌ - சிறு பிறை சேர்‌ சேகரிக்கும்‌ சன்னுவிக்கும்‌ நல்‌ காதலன்‌ - பாலசந்திரன்பொருந்திய திருமுடியையுடைய உமையம்மைக்குங்‌ கங்‌கைக்கு மினிய நாயகருமாகிய,- நடம்புரி செம்மலை - (கனகசபையிலே) அநவரத தாண்டவஞ்‌ செய்தருளுகின்ற சிவபெருமானை - தீய சேகு வினை அரிக்கும்‌ சரம்‌ என்போம்‌ - (எமது) கொடிய திண்ணிய இருவினைகளை அரிதலைச்செய்யும்‌ அம்பென்று துதிப்‌போம்‌, எ-று, எதிர்‌ நிரனிறை. கடுக்கை இருமடியாகு பெயர்‌, சன்னுவி - சானவி. (48)
--------
மலையசத் தார்தரு கொங்கைமின் னாரைமகிழ்ந் தொருவா
மலையசத் தாதிவீ டயத்தின் மூழ்குற்று மாழ்குவனோ
மலையசத் தானங்கை வீட்டியத்‌ தக்கன்ம கத்தின்மற்ற
மலையசத் தாகச் செயும்புலி யூரூறை வானவனே.       (49)

(இ-ள்‌:) மலையசம்‌ ஆர்தரு கொங்கை மின்னாரை மகிழ்ந்து - சந்தனக் குழம்பையணிந்த தனங்களையுடைய மின்போலும்‌ மகளிரையுவந்து, - ஒருவாமல்‌ - (அவரை ஒருகணமும்‌) விட்டுநீங்‌காமல்‌,- ஐய - சுவாமீ,- சத்தம்‌ ஆதி விடயத்தின்‌ மூழ்குற்று மாழ்‌குவனோ,- ( தமியேன்‌ அவர்மாட்டுள்ள) சத்‌தாதி விடயங்களில்‌ அமிழ்த்திக்‌ கெடுவேனோ? - மலை அசத்தான்‌ அம்‌ கை வீட்டி, பொருகின்ற தகரை வாகனமாகவுடைய அக்கினிதேவனதழகிய கையைத்‌ துணித்து, - அத்தக்கன்‌ மற்று மக அமலை அசத்து ஆகச்‌ செயும்‌ - அத்தக்கனது மற்றைய யாகோபகரணப்‌ பொருட்‌ டொகுதியை யெல்லாம்‌ பயனிலவாகச்‌ செய்தருளிய; புலியூர்‌ உறை வானவனே - புலியூரிலெழுந்தருளியிருக்கன்ற சிதாகாச சொரூபரே. எ-று. சத்தாதிவிடயங்கள்‌ சத்த, ஸ்பரிச, ரூப, ரச, கந்தங்கள்‌. (49)

வானவன் பாலன்று பாணன்கை யோலைவரைந் தனுப்பும்‌
வானவன் பாலன்ன பூதியினான் மயிலோன் பயில்க
வானவன்‌ பாலன்‌ றலைக்கறி யுண்டவன் வண்பதஞ்சேர்‌
வானவன்‌ பாலனம் வாழ்புலியூ ரைவணங் குதுமே.       (50)

(இ-ள்‌:] ஓலை வரைந்து பாணன்‌ கை வானவன்‌ பால்‌ அன்று அனுப்பும்‌ வானவன்‌ - (தமதருமைத் திருக்கரத்தினாலே) 'மதிமலி புரிசை’ என்னுந் திருமுகப் பாசுரத்தை வரைந்து பாணபத்திரரது கையிற்‌ (கொடுத்துச்‌) சேரமான் பெருமாணாயனாரிடத்‌ தக்காலத்‌ தனுப்பிய மகாதேவரும்‌, - பால்‌ அன்ன பூதியினான்‌ - பால்போலும்‌ வெண்மையாகிய விபூதியைத் தரித்தவரும்‌,-- மயிலோன்‌ பயில்‌ கவானவன்‌ - மயில்வானத்தையுடைய சுப்பிரமணியக்கடவள்‌ பொருந்திய திருத்தொடையையுடையவரும்‌,- பாலன்‌ தலைக்கறி உண்டவன்‌ - (சிறுத்தொண்ட நாயனாரது சங்கமபத்தியை எம்‌போலிகட்குணர்த்தி யுய்விக்கத்‌ திருவுளங்கொண்டு) அவருடைய திருக்குமாரராசிய சீராளதேவரது தலைக்கறியைத்‌ திருவமுது செய்தவருமாகிய சிவபெருமானது,- வண்‌ பதம்‌ சேர்வான்‌ - சீபாதங்களையடையும்‌ பொருட்டு,-- அ அன்பால்‌ - அம்மெய்யன்‌போடு,- அனம்‌ வாழ்‌ புலியூரரை வணங்குதும்‌ -அன்னப்புட்கள்‌ வாழும்‌ (நீர்வளவிய அவரது) புலியூரைத்‌ (தரிசித்து) வணங்குவோமாக, எ-று. ஈற்றடியில்‌ அவ்வன்பால்‌ என நிற்கற்பாலது அவன்பால்‌ என நின்றது. (50)
------
குதலைப் பணியமொழி மங்கைபங் கனைக்கொல் விடங்கக்‌
குதலைப் பணியணி யும்புலி யூரனைக் கூடிவணங்‌
குதலைப் பணியதவப் பயனால்யம கோட்டி யின்‌மாழ்‌
குதலைப் பணியறுத் தெள்‌மனக் கல்லைக்கு ழைவித்ததே.       (51)

(இ-ள்‌:) பண்‌ இய குதலை மொழி மங்கை பங்கனை - பண்‌ போலவினிய குதலைச் சொற்களை வசனிக்கும்‌ உமையம்மையை வாமபாகத்திலுடையவரும்‌,- கொல்‌ விடம்‌ கக்கு தலைப்‌ பணி அணியும்‌ புலியூரனை - கொல்லாநின்ற விஷத்தைக் கக்கும்‌ வாயை யுடைய பாம்பை (ஆபரணமாகத்‌) தரித்த புலியூரருமாகிய சிவபெருமானை, கூடி வணங்குதலைப்‌ பணிய தவப்‌ பயன்‌ - (அடியாரோடு) கூடி வணங்குதலைச் செய்த (எனது) தவப்பயனானது,- யம கோட்டியில்‌ மாழ்கு தலைப்‌ பணி அறுத்து - யமனது தருமசபையில்‌ மயக்கமுறுவிக்குந்‌ தண்டத்தொழிலை விலக்கி.- என்‌ மனக்‌ கல்லைக்‌ குழைவித்தது - எனது மனமாகிய கல்லை நெகுழுவித்தது. எ-று. முதலடியில்‌ இனிய எனற்பாலது இய எனவும்‌, மூன்றாமடியிற்‌ பண்ணிய எனற்பாலது பணிய எனவும்‌ நின்றன. இரண்டாமடியில்‌ - தலை ஆகுபெயர்‌. ஆல்‌ அசைநிலை, நான்காமடியில்‌ தலைப்பணி என்புழித்‌தலை - தலைமை, தலைமை - அதிகாரம்‌. தலைமை- பற்றி நிகழுந் தண்டத்தைத்‌ தலைமையென்றது உபசாரம்‌. பணியமொழி என்‌பதற்குப்‌ பணிவைப் புலப்படுத்திய மொழி எனினும்‌ பொருந்தும்‌; (51)
-----------
வித்தகத் தாலரவம் புலிக்கா கவிழுப் பொதுமே
வித்தகத் தாவென நிர்த்தம் புரிந்துமெய்ஞ் ஞானமுணர்‌
வித்தகத் தாபுலியூ ராவினி யென்வினை களெனும்‌
வித்தகத் தாற்பவ மங்குரியா மல்விலக் குகவே.       (52)

(இ-ள்‌:) வித்தகத்தால்‌ அரவம்‌ புலிக்கு ஆக விழுப்‌ பொது மேவி- சதுரப்பாட்டினாற்‌ பதஞ்சலிமுனிவர்‌ வியாக்கிரபாதமுனிவா்‌ பொருட்டு விழுமிய கனகசபையிலே (சதாகாலமும்‌) பொருந்தி தக தா என நிர்த்தம்‌ புரிந்து – தகதா எனத்‌ திருநிருத்தஞ்‌ செய்தருளி,- மெய்‌ ஞானம்‌ உணர்வித்தகத்தா - (அதுவாயிலாக) அவர்கட்குத்‌ தத்துவஞானத்தை உபதேசித்த நிமித்‌தகாரணரே -- புலியூரா - புலியூரை (அதிமுக்கிய வாசஸ்தானமாக) வுடையவரே,- இனி என்‌ வினைகள்‌ எனும்‌ வித்து அகத்தால்‌ பவம்‌ அங்குரியாமல்‌ விலக்குக - இனி எனது இரு வினைகளாகிய வித்தினுண்‌ணின்றும்‌ பிறவியாகிய (முளை) தோன்றாமற்‌ றேவரீர்‌ விலக்கி யருளுக. எ-று. (52)
----------
குகரப் பருப்பத மங்கைபங் காளர் கொடிறிறந்து
குகரப் பருப்பதத் தோலுரியார் குலவும் புலியூர்க்‌
குகரப் பருப்பதங் கொள்வார் கொளார்க்குளங் கூசியொருங்‌
குகரப் பருப்பதன் மேற்கதிர் போல்வந்து கூடுவரே.       (53)

(இ-ள்‌:) குகர பருப்பத மங்கை பங்கு ஆளர்‌ - குகைபொருந்‌திய இமயமலை யரசனுக்குப்‌ புதல்வியாகிய உமையம்மையை வாம பாகத்தில்‌ ஆளுகின்றவரும்‌ - கொடிறு இறந்து உகு கரம்‌ பரும்‌ பதம்‌ தோல்‌ உரியார்‌ - (மதசலம்‌) கதுப்பை நீங்கி யொழுகப்‌ பெறுந்‌ துதிக்கையையும்‌ பருத்த கால்களையுமுடைய யானையைத்‌ (தோல்‌) உரித்தவரும்‌, - குலவும்‌ புலியூர்க்‌ குகர்‌ அப்பர்‌ - (எங்குந்‌ தன்பெயர்‌) விளங்குகின்ற புலியூரில்‌ எழுந்தருளியிருக்குஞ்‌ சுப்பிரமணியக் கடவளுக்குப்‌ பிதாவுமாகிய சிவபெருமான்‌, உப்‌ பதம்‌ உளம்‌ கொள்வார்‌ கொளார்க்கு- தந்திருவடிகளை உட்கொள்பவரும்‌ கொள்ளாதவருமாகிய இருதிறத்தாருக்கும்‌,- கூசி ஒருங்கு கரப்பர்‌- நாணி முழுதும்‌ மறைவர்‌,- உப்பு அதன்மேல்‌ கதிர்‌ போல்‌ வந்து கூடுவர்‌ - அவ்வுவர்க்கடன் மேல்வருஞ்‌ சூரியனைப்போலத்‌ தாமே வந்தடைவர்‌ எ-று. எதிர்‌ நிரனிறை. (53)

கூடம்புடைத்‌ தவயிற் கண்ணி கேள்வன் குளிர்புலியூர்க்‌
கூடம்புடைத்‌ தமலை முலைமா இன்குறுமு யலின்‌
கூடம்புடைத் தமுகங் கண்ணென வுண்டுகொல் வண்டுகாள்‌
கூடம்புடைத் தடவாரிச நீலங் கொளக் கண்டதே.       (54)

(இ-ள்‌:) கூடம்‌ புடைத்த அயில்‌ கண்ணி கேள்வன்‌ குளிர்‌ புலியூர்‌ - (கம்மியர்‌) கூடங்கொண்டு புடைத்தியற்றிய வேல்‌ போலுங்‌ கண்களையுடைய உமையம்மைக்கு நாயகராகிய சிவபெருமானது குளிர்ச்சிபொருந்‌திய புலியூரில்‌ (வசிக்கும்‌) - புடைத்த கூடம்‌ மலை முலை மாதின்‌ - புடைப்புப்‌ பொருந்திய குவடு (உயர்ந்த) மலைபோலுந்‌ தனங்களையுடைய நம்மாதினது - குறு முயலின்‌ கூடு அம்பு உடைத்த முகம்‌ கண்‌ என - குறிய முயற்கூடாகிய சந்திரனையும்‌ அம்பையும்‌ (முறையே) வென்ற முகத்தையும்‌ (அம்முகத்திற்‌ பொருந்திய) கண்களையும்போல, - கூடு அம்பு உடை தடம்‌ நீலம்‌ கொள்வாரிசம்‌ வண்டுகாள்‌ கண்டது உண்டு கொல்‌ - பொருந்திய நீரையுடைய தடாகங்களிலே (இரண்டு) கருங்குவளை மலர்களைத்‌ (தன்மேற்‌) கொண்டு (விகசித்த) ஒரு செந்தாமரைப்பூவை வண்டுகளே நீங்கள்‌ கண்டதுண்டோ (சொல்லுக.) எ-று. கொண்டென்‌ னுஞ்‌ செய்தெனெச்சங்‌ கொளவெனத்‌ திரிந்துநின்றது. ''கண்ணுங்‌ கொளச்சேறிநெஞ்சே'' என்புழிப்போல. முடிக்குஞ்சொல்‌ வருவித்‌துரைக்கப்பட்டது. (பெருநயப்புரைத்தல்‌.) (54)
------
கண்டதுண் டம்பழ முண்டன சொல்வளை காமர்குமிழ்க்‌
கண்டதுண் டம்பயி லொண்டொடி வஞ்சியைக் கைதவரைக்‌
கண்டதுண் டம்படுத் தும்புலி யூரர்கன வரையிற்‌
கண்டதுண் டம்பக நண்பா வெனெஞ்சங் கலக்கியதே.       (55)

(இ- ள்‌:) கண்டு அம்‌ பழம்‌ உண்டு உண்டு அது அன சொல்‌ - கற்கண்டையும்‌ அழகிய முக்கனிகளையும்‌ மேன்மேலுண்டால்‌ அதையொத்த (இனிய) சொல்லும்‌, - வளை காமர்‌ குமிழ்‌ கண்டம்‌ - துண்டம்‌ பயில்‌ ஒள்‌ தொடி வஞ்சியை - சங்கையும்‌ அழகிய குமிழம் பூவையுமொத்த கழுத்தும்‌ மூக்குமுடைய ஒளிபொருந்திய வளையலைத்தரித்த வஞ்சி போல்பவளை- கைதவரைக்‌ கண்டதுண்டம்‌ படுத்தும்‌ புலியூரர்‌ கன வரையில்‌ கண்டது உண்டு - கீழ்மக்களாகிய அசுரரைப்‌ பலதுண்டப்படுத்திய புலியூரரையுடைய சிவபெருமானது முகில்படிகின்ற மலையின்கண்‌ (ஒருகால் யான்‌) கண்டது மாத்திரமுண்டு, - அம்பக நண்பா என்‌ நெஞ்சம்‌ கலக்கியது - கண்போலச் சிறந்த நண்பனே (அஃதொன்றுமே) எனது திடசித்‌தத்தை (இங்ஙனம்‌) நிலைகலங்கும்படி செய்தது. எ-று, (தலைமகன்‌ பாங்கற்குத்‌ தன்னியல்பு இளத்தல்‌ ) (55)
------
கலகத்த நங்கனைச் செற்றுழல் பூவைக் கவின்‌மலயக்‌
கலகத்த நந்ததவ முனியாற் சமங்கண் டொருபக்‌
கலகத்த னம்பபின் மென்னடை யாளைக்க லந்தவன்ச
கலகத்த னம்புலி யூரளென் றால்வருங் கைவலமே.       (56)

(இ-ள்‌) கலகம்‌ அநங்கனைச்‌ செற்று- (தம்மோடு) காம யுத்தஞ்‌ செய்த மன்மதனைக்‌ கொன்று,- கவின்‌ மலயக்‌ கல்‌ அகத்து அநந்த தவ முனியால்‌ உழல்‌ பூவைச்‌ சமம்‌ கண்டு - அழகிய பொதியமலையில்‌ (வசிக்கும்‌) முடிவற்ற தவத்தையுடைய அகத்திய முனிவராற்‌ (றன்னிலை) திரிந்தபூமியை (முன்போல) ஒப்ப நிற்பச்‌ செய்து,- அகத்துப்‌ பயில்‌ அனம்‌ மெல்‌ நடையாளை ஒரு பக்கல்‌ கலந்தவன்‌ - (தம்மை) மனத்திற்கொண்டு (அருந்தவஞ்‌ செய்த) அன்னம்போலுஞ்‌ சுகுமார நடையினையுடைய உமாதேவியைத்‌ (திருமணஞ் செய்து) ஒரு திருமருங்கிற்‌ சேர்த்துக்கொண்‌டவர்‌ - சகலம்‌ கத்தன்‌ - சகல பிரபஞ்சங்கட்குங்‌ கருத்தா, - அம்‌ புலியூரன்‌ என்றால்‌ - அழகிய புலியூரையுடையவரென்று [இங்ஙனந்‌] துதித்தால்‌, - கைவலம்‌ வரும்‌ - (ஒருதலையாக) முத்தி சித்திக்கும்‌. எ-று. (56)
--------
வலம்புரி யும்கழுநீருங் குலாவு மதும லர்ச்சை
வலம்புரி யுங்குழலன் பர்‌தணந்த பின்வண்‌ புலியூர்‌
வலம்புரி யுங்கொண ராழியுமா தர்க்கு வான்பகையாய்‌
வலம்புரி யுங்குயிலுந் துணையா யவசந்த னுக்கே.       (57)

(இ-ள்:) வலம்புரியும்‌ கழுநீரும்‌ மது குலாவும்‌ மலர்‌ - நந்தியாவர்த்தமுஞ்‌ செங்கழுநீருமாகிய இவற்றின்‌ தேன்பொருந்திய பூக்களை [முடித்த], -சைவலம்‌ புரியும்‌ குழல்‌ அன்பர்‌ தணந்த பின்‌ - நீர்ப்பாசியும்‌ விரும்புங்‌ கூந்தலையுடைய உமாபதியாகிய (நங்‌) காதலர்‌ (எம்மைப்‌) பிரிந்தபின்பு,-வண்‌ புலியூர்‌ வலம்‌ புரியும்‌ கொணர்‌ ஆழியும்‌ - வளவிய புலியூரில்‌ வலம்புரியென்னுஞ்‌ சங்கையும்‌ ஒக்கோலை முதலிய பிறவற்றையுங்‌ கொடுவந்தொதுக்கும்‌ (முரசாகிய) சமுத்திரமும்‌, மாதர்க்கு வான்‌ பகையாய்‌ வலம்புரியும்‌ குயிலும்‌ - [இங்ஙனமே முன்னுந் தங்காதலரைப்‌ பிரித்த) மகளிர்க் குறுபகையாய்‌ வென்‌ றிகுறிக்கும்‌ [விருதாகிய] குயிலும்‌ - வசந்தனுக்குத்‌ துணை ஆய – [இதுபொழுது] தம்‌ மன்‌ மதனுக்குப்‌ போர்த்துணையாயின. எ-று. சிறப்பும்மை விகாரத்‌தாற்றொக்கது. (தலைவி தலைமகன்‌ பிரிவாற்றாமை.] (57)
-----------
சந்தநத் தேவைநிகர் களக்கண் டையலார் மொழிகாற்‌
சந்தனத் தேவைகு வேள்கணை பாறிடத்‌ தாரணிவா
சந்தனத் தேவைத்து வண்‌புலி யூரரைத்தந்‌ தருளுஞ்‌
சந்தனத் தேவையல் லாற்பணியேன் றெய்வந்தாம் பிறவே.       (58)

(இ-ள்‌:) சந்த நத்து ஏவை நிகர்‌ களம்‌ கண்‌ தையலார்‌ மொழி - அழகிய சங்கையும்‌ அம்பையும்போலுங்‌ கழுத்தையுங்‌ கண்களையுமுடைய பெண்கள்‌ கூறும்‌ பழிமொழியும்‌,- கால் சந்தனத்து வைகு வேள்‌ கணை பாறிட - தென்றற்காற்றாகிய தேரிற்றங்கும்‌ மன்மதனது மலரம்புகளும்‌ பற்றற, - அணி வாசம்‌ தார்‌ தனத்து வைத்து - [புலியூரர்‌] அணிந்த மணம்பொருந்திய மாலையை [அரிதிற்பெற்று] எனது தனங்களில்‌ வைத்து [ஆற்றி], - வண்புலியூரரைத்‌ தந்தருளும்‌ சந்து அனத்‌ தேவை அல்லால்‌ - [பின்‌] அவரை [மெய்யுற்றுப்‌ புணரும்படி] எனக்குத்‌ தந்தருளிய தூது போய்மீண்ட அன்னமாகிய தெய்வத்தை யல்லது,--பிற தெய்‌வமே பணியேன்‌ - பிறதெய்வங்களை இனி ஒருகாலும்‌ வணங்‌கேன்‌. எ-று, களக்கண்‌ களங்கண்‌ என நின்றது. இரண்டாமடியிற்‌ சயந்தனம்‌ சந்தனம்‌ என யகரந்தொக்கது. ஏகாரங்கள்‌ இசைநிறை தாமென்பது கட்டுரைச் சுவைக்கண்‌ வந்தது [ஒன்றே தெய்வம்‌ மற்றிலையென்றல்‌.] (58)
------
தானங்கடி யிடநீள்கரித் தோலினர்‌ தண்‌புலியூர்த்‌
தானங்கடி யிடமாநட ராசர்‌தணத் தலிற்சந்‌
தானங்கடி யிடராக வில்வேள்சல சத்தையெடுத்‌
தானங்கடி யிடவந்தது மாரன்ச துரங்கமே.       (59)

(இ-ள்‌:) கடி இட தானம்‌ நீள்‌ கரித்‌ தோலினர்‌ - மணங்‌ கமழ மதம் பில்கும்‌ யானையது தோலையுரித்துப் போர்த்தவரும்‌, - தண்‌ புலியூர்த்‌ தானம்‌ கடி இடம்‌ ஆம்‌ நடராசர்‌ - தண்ணிய புலியூராகிய [திவ்விய] ஸ்தானத்தைப்‌ பிரதான ராசதானியாகக்‌ கொண்டரசு வீற்றிருக்குந்‌ திருநடராசருமாகிய நங்காதலர்‌, - தணத்தலில்‌ - [எம்மைப்‌] பிரிந்தமையினால்‌,- சந்தானம்‌ கடி இடர்‌ ஆசு - சந்தனம்‌ [முதலிய] சைத்தியோபசாரங்கள்‌ கடியப்படும்‌ உஷ்ணோபசாரங்களாகித்‌ துன்பந்தர, - வேள்‌ வில்‌ சலசத்தை எடுத்தான்‌ அடியிட - மன்மதன்‌ கருப்புவில்லையும்‌ வனச வாளியையுங்‌ [கையில்‌] எடுத்துப்‌ [போர்‌] தொடங்க, மாரன்‌ சதுர்‌ அங்கம்‌ அங்கு வந்தது - அவனது சதுர்வித அங்கமும்‌ அங்கே (ஒருங்கு) வந்தது. எ-று. சந்தனம்‌ சந்தானம்‌ என நீண்டது. எடுத்தென்னுஞ்‌ செய்தெனெச்சம்‌ முற்றாய்த்திரிந்து நின்றது. மாரன்‌ சதுரங்கம்‌ தென்றல்‌, இருள்‌, கிளி முதலாயின. (தலைவி பிரிவாற்றாமை.) (59)
---------
துரங்கமுந் தானையும் யாளையுந் தேருமிச்சொல் லிடுஞ்சா
துரங்கமுந் தந்தருளும் புலியூ ரன்றுதித்‌ தவர்க்கோ
துரங்கமுந் துங்கண்ண னுக்கரியான்‌ றொண்டினர்க் குறுமா
துரங்கமுந் துஞ்சடையா னல்குமுத் திச்சுகந் தனையே.       (60)

(இ-ள்‌:) தேரும்‌ யானையும்‌ துரங்கமும்‌ தானையும்‌ இச்சொல்‌லிடும்‌ சாதுரங்கமும்‌ - இரத கச துரக பதாதி யென்றிங்கனஞ்‌ சொல்லப்படுஞ்‌ சதுர்வித அங்கங்களையுந்‌ துணைக்கருவியாகவுடைய இராசரீகத்தை - துதித்தவர்க்கு தந்தருளும்‌ - தம்மைத்‌ துதித்தவருக்கு (இம்மையிற்‌) கொடுத்தருளுவர்‌,- புலியூரன்‌ - புலியூரரும்‌,- ஓது (அ)ரங்கம்‌ முந்தும்‌ கண்ணனுக்கு அரியான்‌: புகழப்‌ படுஞ்‌ சீரங்கத்தைத்‌ தமக்கு உற்கிருட்ட ஸ்‌தலமாகவுடைய விஷ்‌ணுவுக்குத் (திருவடி) அரியவரும்‌,- தொண்டினர்க்கு உறு மாதுரம் - தம்மடியவர்க்கு மிகத்‌ தித்திப்பவரும், - கம்‌ உந்தும்‌ சடையான்‌ - கங்காசலம்‌ பிரவாகிக்குஞ்‌ சடையையுடையவருமாகிய சிவபெருமான்‌, - முத்திச்‌ சுகந்தனை நல்கும்‌ - (தேகாந்தத்தில்‌] முத்தியின்‌பத்தைக்‌ கொடுத்தருளுவர்‌. எ-று. சிவபெருமான்‌ தம்மைத்‌ துதித்தவருக்கு இம்மையில்‌ இராசரீகத்தைக்‌ கொடுத்தருளுவர்‌, தேகாந்தத்தில்‌ முத்தியின்பத்தைக்‌ கொடுத்தருளுவர்‌ எனக்‌ கூட்டுக. (60)
--------
கந்தனை யாகமங் கேட்டாற்கு மைமணங் காட்டியெறுழ்க்‌
கந்தனை யாகவந்தாற் கரியானைக் கதங்கொ டக்கன்‌
கந்தனை யாகத்தடு புலியூர னைக்கண் டுகண்டு
கந்தனை யாகவக் கண்ணார் மயலைக் கடந்தனையே       (61)

(இ-ள்‌:) கந்தனை ஆகமம்‌ கேட்டாற்கு உமை மணம்‌ காட்டி - சுப்பிரமணியக் கடவுளிடத்துச்‌ சிவாகமங்களைக்‌ கேட்ட அகத்திய முனிவருக்குத்‌ தாமுமையம்மையை விவாகஞ் செய்த திருமணக்‌ கோலத்தைத்‌ தரிசிப்பித்து,- எறுழ்க்‌ கந்து அனை ஆக வந்தாற்கு அரியானை – வலிய கற்றூணை மாதாவாகக்கொண்டு (நரசிங்சமாகத்‌) தோன்றிய விஷ்ணுவுக்குத்‌ (திருவடி தானுந் தரிசித்தற்கு) அரியவரும்‌,- கதம்‌ கொள்‌ தக்கன்‌ கந்தனை யாகத்து அடு புலியூரனைச்‌ கண்டு கண்டு உகந்தனை - (செல்லாவழித் தோன்றித்‌ தனக்கே ஏதம்‌ பயக்கும்‌ நிமித்தமாய) கோபத்தையுடைய தக்கனது தலையை யாக சாலையிற்றுணித்த புலியூரருமாகிய சிவபெருமானைத்‌ தரிசித்துத்‌ தரிசித்து மகிழ்ந்‌தனை (ஆகலினன்றோ),- ஆகவக்‌ கண்ணார்‌ மயலைக்‌ கடந்தனை - (எனது மனமே) அமர்த்த கண்களையுடைய பெண்‌களால்‌ வரும்‌ மயக்கமாகிய (பகையை) வென்றாய்‌. எ-று, முதலடியிற்‌ கந்தனை உருபுமயக்கம்‌. இரண்டாமடியில்‌ அன்னை அனை என நின்றது, [புலியூர்‌ தரிசனமாத்திரையில்‌ முத்திகொடுக்கும்‌ என்பது கருத்து.] (61)
-----------
தனை யாதரிக்கும் பிரமத்தை யோதெனச் சண்முகநா
தனை யாதரிக்கும் புகழ்ப்புலி யூரனைத்‌ தாணுவைநித்‌
தனை யாதரிக்கும்பர்‌ தாருவென் றோர்கிலர் சார்பவப்பந்‌
தனை யாதரிக்குமந் தோவிருப் பாரித்‌ தரணியிலே.       (62)

(இ-ள்‌;) தனையா தரிக்கும்‌ பிரமத்தை ஓது என - பிள்ளையே நின்‌ (மனத்திற்‌) றங்கிய பிரணவப்‌ பொருளைச்‌ சொல்லென்று, - சண்முகநாதனை ஆதரிக்கும்‌ புகழ்ப்‌ புலியூரனை - ஆறுதிருமுகங்களையுடைய சுப்பிரமணியக்கடவுளை அன்பு முதிர்ந்து வினவிய புகழையுடைய புலியூரரும்‌, - தாணுவை - இலிங்கவடிவையுடைய திரு மூலட்டானேசுரரும்‌,- நித்தனை - என்றுமுள்ளவருமாகிய சிவபெருமானை, - ஆதர்‌ இக்கு உம்பர்‌ தாரு என்று ஓர்கிலர்‌ - அறிவில்லாதார்‌ கரும்புந்‌ தேவரது பஞ்சதருவுமென்று கருதி வழிபட்டிலர்‌, - சார்‌ பவப்‌ பந்தனை யாது அரிக்கும்‌ (என்று) இத்‌ தரணியில்‌ அந்தோ இருப்பார்‌ - அவர்‌ (அநாதியே) சகசித்த பிறவிக்கேதுவாகிய பாச பந்தத்தை வேறியாது அரிதலைச்‌ செய்யுமென்று கருதி (ஒரு சிந்தனையுமற்று, இப்பூமியில்‌ அந்தோ (வாளா) இருக்கின்றனர்‌. எ-று. தனயன்‌ தனையன்‌ எனப்‌ போலியாயிற்று. ஈற்றடியில்‌ அரிக்கும்‌ என்புழி என்றென்னுஞ்சொல்‌ அவாய்நிலையான்‌ வருவித்‌ துரைக்கப்பட்டது. (62)

தரணியி லேகையை சேர்புலிபூர தருகவரந்‌
தரணியி லேகைதவத் துழலாமற் சதுமறைவி
தரணியி லேகைவரை யாமலெய்து சமன்படர்வை
தரணியி லேகைதொடுத் தயர்‌தண்டந் தகாதெனக்கே.       (63)

(இ-ள்‌:) தரணியில்‌ ஏகு ஐபைசேர்‌ புலியூர - (கைலாசகிரியினின்றும்‌) இமையமலையி ற் சென்று (குழந்தையாகி அருந்தவஞ்‌ செய்த) உமையம்மை தழுவும்‌ புலியூரரே,- தரணியிலே கைதலத்து உழலாமல்‌ - இப்பூமியிலே அநித்தியமாகய தொழின்‌ முயற்‌சிகளிற்‌ சுழன்றுதிரியாமலும்‌,- சது மறை விதரணி இலேகை வரையாமல்‌ - சதுர்வேத தாதாவாகிய பிரமா (வினைப்போகங்களை வரையறுத்து) விதித்தெழுதாமலும்‌, - எய்து சமன்‌ படர்‌ வைதரணியிலே கை தொடுத்து அயர்‌ தண்டம்‌ தகாது- [மரண காலத்திற் றப்பாது] வரும்‌ யமதூதுவர்‌ வைதரணியாற்றிலே கையிற்பற்றி (ஈர்த்துச்‌) செய்யுந்‌ தண்டனை பொருந்தாமலும்‌, - எனக்கு வரம்‌ தருக - தேவரீர்‌ தமியேனுக்கு வரந் தந்‌தருளுக, எ-று. (63)
-----------
தண்டா திருக்குஞ் சடைப் புலியூர தபனியக்கோ
தண்டா திருக்குழைச் சங்கா கராவிச் சகந்தனிலே
தண்டா திருக்குமொ ழிந்தருள் வெள்ளித்‌ தடக்குலவே தண்டா திருக்குமு டித்தாளெ னைப்பொய் தகாமலுக்கே.       (64)

(இ-ள்‌:) தண்‌ தாது இருக்கும்‌ சடைப்‌ புலியூர - தண்ணிய பூந்தாது பொருந்துஞ்‌ சடையையுடைய புலியூரரே, - தபனியக்‌ கோதண்டா - பொன்மயமாகிய மேருகிரியை வில்லாகவுடையவரே,- திருக்குழைச்சங்கா - திரருச்செவியிலே சங்கக்குண்டலத்தைத்‌ தரித்தவரே, - கரா நஞ்சையுண்டவரே,- இச்‌ சகந்தனில்‌ தீண்டாது இருக்கு மொழிந்தருள்‌ வெள்ளித்‌ தட குல வேதண்டா - இவ்வுலகின்கண்‌ நீங்காது (வழங்கும்‌) வேதத்தைச் சொல்லியருளிய வெள்ளி மயமாக பெரிய குலகிரியில்‌ வீற்றிருப்பவரே,- பொய்‌ தகாமலுக்கு - பொய்யாகிய பிரபஞ்சத்தை (மெய்யெனக்கொண்டு) மயங்காமைப் பொருட்டு, - திருக்கு முடித்து எனை ஆள்‌ - அநாதியே சகசித்த ஆணவமலத்தை அகற்றித்‌ தமியேனை (இனி) அடிமை கொண்டருளுக. எ-று. ஏகாரம்‌ இசைநிறை. (64)
---------
காமதக னந்தரு வீரசெய்க் கனிக்கட் கள்‌பெரு
காமதக னந்தரம் பாய்க வின்‌ புலியூர கலங்‌
காமதக னந்தகுக ரிச்சன்‌ மகன்மக் கடன்‌மீ
காமதக னந்தமை தயாண்ட ருளுன்கழற் சித்தியே.       (65)

(இ-ள்‌:) காமன்‌ தகனம்‌ தரு வீர – மன்மதனைத் தகித்த வீரரே, - கனிக்‌ கட்கள்‌ பெருகா செய்‌ மதகு அனந்தரம்‌ பாய்‌ கவின்‌ புலியூர - (சோலையிற் பொருந்திய கனிகளிலுள்ள தேன்‌ பெருகி வயன் மதகு கடோறும்‌ பிரதிதினம் பாயும்‌ அழகிய புலியூரை யுடையவரே,- கலங்கா மதம்‌ கனம்‌ தகு கரிச்‌ சன்ம- அஞ்சாத மதத்தையுடைய முகில்போலும்‌ யானையினதுதோலைப்‌ (போர்வையாக) உடையவரே,- கன்மக்‌ கடல்‌ மீகாம - (ஆன்மாக்களைப்‌) பாவசமுத்திரத்தினின்றும்‌ (ஏற்றி முத்திக்கரையில் விடும்‌) மாலுமி யாயுள்ளவரே,- தக நந்தமை ஆண்டு உன்‌ கழல்‌ சித்தி அருள்‌ - (பரிபக்குவத்திற்குத்‌) தக எம்மை (இனி) அடிமை கொண்டு தேவரீருடைய திருவடியை அடைதலாகிய முத்தியைத் தந்‌தருளுக, எ-று. (65)
-----------
சித்திரைக் குண்மதன் போர்க்கிலக் காயசென்மச் சலரா
சித்‌திரைக் குப்பதைத் துச்சலியார் சிற்சபை தனினே
சித்திரைக் கும்மறைத் தென்புலி யூரன்‌றிருக் கரம்வீ
சித்திரைக் குண்ணின்று தூக்கிய பாதத்தைச் சிந்திக்கினே.       (66)
]
(இ-ள்‌:) சித்திரைக்கு உள்‌ மதன்‌ போர்க்கு இலக்கு ஆய - வசந்தகாலத்துக்கு (அரசனாகக்‌) கருதப்படும்‌ மன்மதன்செய்யும்‌ போருக்கு இலக்காகிய, - சென்மச்‌ சலராசித்‌ திரைக்கு பதைத்து சலியார்‌ - பிறவியாகிய சமுத்திரத்தின்கண் மறியுந்‌ (துன்பமாகிய) திரைமோத அதற்குச்‌ சிறிதுந்தளரார்‌, - மறை இரைக்கும்‌ தென்‌ புலியூரன்‌ - வேதங்களொலிக்கப் பெறுந்‌ தெற்கின்கணுள்ள புலியூரில்‌ வீற்றிருக்குந் திருநடராசர்‌, சிற்சபைதனின்‌ நேசித்துத்‌ திருக்‌கரம்‌ வீசி - சிற்சபையிலே (உயிர்களிடத்து) அன்புமுதிர்ந்து திருக்‌கரத்தைவீசி, - திரைக்கு உள்‌ நின்று தூக்கிய பாதத்தைச்‌ சிந்‌திக்கின்‌ - இடுதிரைக்குண்ணின்று (நிருத்தஞ் செய்வதாகத்‌) தூக்கியருளிய திருவடியைத்‌ தியானஞ் செய்யின்‌, எ – று. இரைக்கும்‌ மறை என்புழி மகரவொற்று விரிந்துநின்றது. தியானஞ் செய்யிற்‌றளரார் எனக்கூட்டுக. (66)
--------------
சிந்துர முங்கிரியும் பகச்சூரன் சிதைந்து டன
சிந்துர மும்முயிரும் பிளவாகச் செய்சேயு மைங்கைச்‌
சிந்துர முந்தொழு தென்புலி யூரற்றி கழுநுதற்‌
சிந்துர முந்திய வந்தரி பங்கற்றி யானித்துமே.       (67)

(இ- ள் :) சிந்துர உரமும்‌ கிரியும்‌ பக - (இந்திரனது பணியினால்‌ வருணன்‌ மதுரைமேல்‌ விடுத்த) சமுத்திரவலியும்‌ கிரெளஞ்ச கிரியும்‌ பகிரவும்‌,- சூரன்‌ சிதைந்து உடல்‌ நசிந்து உரமும்‌ உயிரும்‌ பிளவு ஆக செய்சேயும்‌ - சூரபன்மா (மனம்‌) அழிந்து சரீரநெரிந்து மார்புமுயிரும்‌ இருபிளவாகச்செய்த சுப்பிரமணியக்கடவுளும்‌, - ஐங்கை சிந்துரமும்‌ தொழு தென்‌ புலியூரன்‌ - ஐந்து திருக்கரங்‌களையும்‌ யானைவதனத்தை யுமுடைய விநாயகக்கடவுளும்‌ வணங்குந்‌ தெற்கின் கணுள்ள புலியூரரும் - நுதல்‌ சிந்துரம்‌ திகழும்‌ முந்திய அந்தரி பங்கன்‌ தியானித்தும்‌ - திருநுதலிற்‌ சிறுபொட்டு விளங்குஞ்‌ (சத்திகளுண்‌) மிக்க உமாதேவி பாகருமாகிய சிவபெருமானைத்‌ தியானஞ் செய்வோமாக. எ-று, சிந்துரம்‌ ஆகுபெயர்‌. (67)
---------
ஆனித்திரு விழவிற் கண்டு போற்றிடு மப்படித்தி
யானித்திரு மெங்களம் புலியூர னையன் புடைமை
யானித்திரு வுமுடலு மெல்லா நிலையன் மைகண்‌டீ
ரானித்திரு முற்பவ மறுப்பீ ரரும்பா தகரே.       (68)

(இ- ள்:) ஆனித்‌ திருவிழவில்‌ கண்டு போற்றிடும்‌ அப்படி - ஆனிமாசத்துத் திரு (வுத்தர நக்ஷத்திர] மகோற்சவத்திற்றரிசித்து (வணங்கித்‌) துதித்த அப்பெற்றியே,- எங்கள்‌ அம்‌ புலியூரனை அன்பு உடைமையால்‌ தியானித்து இரும்‌ - எம்முடைய அழகிய புலியூரில்‌ வீற்றிருக்குஞ்‌ சபாநடேசரைச்‌ (சிரத்தை) அன்போடு (என்றுந்‌) தியானித்துக் கொண்டிருங்கள்‌, - இத்திருவும்‌ உடலும்‌ எல்லாம்‌ நிலை அன்மை கண்டீர்‌ - (உள்‌ வழி நிலையதலுடையவென்று நீர்‌ மாறுபடக்கருதிய) இச்செல்வமுஞ்‌ சரீரமுமாகிய எனது யாள்‌ எனப்படும்‌ பிரபஞ்சங்களெல்லாம்‌ நிலையாமையை (இல்வழி நீரே பிரத்தியக்ஷமாகக்‌) கண்டீர்கள்‌ (ஆகலான்‌ அக்கருத்தை அகற்றி விட்டு),- திரும்‌ உற்பவம்‌ ஆனி அறுப்பீர்‌- (முற்கூறிய சிவத்தியானமாகிய வாளினாற்‌) பிரவாகநாதியாய் வருஞ்‌ சனனமரணமாகிய மரத்தை அரியக்கடவீர்கள்‌ அரும்‌ பாதகரே - (பிராயச்சித்தங்‌க ளானீக்கிக் கோடற்கு) அரிய பெரும்பாதகங்களைச்செய்த நம்மவர்களே. எ-று. கேடெனப் பொருள்படும்‌ ஆனி ஈண்டு மரணத்தின் மேலும்‌, திரும்புதலெனப்‌ பொருள்படும்‌ திருமென்‌ னும்‌ முதனிலைத்‌ தொழிற்பெயர்‌ ஈண்டு மீளமீளவருதன்மேலும்‌ நின்றன. (68)
----------
பாதவத் தைக்குறித் தேழெய்த கேழன்முன் பார்க்கரிய
பாதவத் தைக்குமெய்ப் பங்களித் தோய்புலியூர்ப் பதியப்‌
பாதவத் தைக்குறு கேனுயிர் போமப்பக லிடைத்தப்‌
பாதவத் தைக்குத வுற்றிடுவாய் பரிந்தஞ்ச லென்றே.       (69)

(இ-ள்‌:) பாதவத்தைக்‌ குறித்து ஏழ்‌ எய்த கேழல்‌ முன்‌ பார்க்கு அரிய பாத – ஒரு மராமரத்தை (இலக்காகக்‌) குறித்து எழு மராமரத்தை (உருவும்படி ஒருபாணத்தை) எய்த விஷ்ணுவாகிய பன்றி முன்னே காணுதற்கரிய திருவடிகளையுடையவரே - அத்தைக்குப்‌ பங்கு மெய்‌ அளித்தோய்‌ - மங்கையர்க்கரசியாகிய பார்வதிதேவிக்குப்‌ பாதித் திருமேனியைக்‌ கொடுத்‌தருளினவரே,- புலியூர்ப்‌ பதி அப்பா - புலியூரைத்‌ திருப்பதி யாகவுடைய பரம பிதாவே,- தவத்தைக்‌ குறுகேன்‌ உயிர்‌ போம்‌ அப்‌ பகல்‌ இடை -தவவொழுக்கத்தை மேற்கொள்ளாத தமியேனது (உடம்பினின்‌றும்‌) உயிர்நீங்கும்‌ அம்மரணகாலத்தில்‌, - பரிந்து தப்பாது அவத்தைக்கு அஞ்சல்‌ என்று உதவுற்றிடுவாய்‌ - அன்புகூர்ந்து தவறாது (எழுத்தருளி வந்து) அம்மரணாவத்தைக்குச்‌ (சிறிதும்‌) அஞ்சற்க வென்று தேவரீர்‌ உபகரித்தருளுச. ௭- று. (69)
----------
சலஞ்சலம் போலற்ற தாபதர்போல வென்‌றன் னையுமஞ்‌
சலஞ்சலம் போருகத் தாடந்த வாவெனத் தந்தருளாய்‌
சலஞ்சலம் போதென் றறல்பாய் வயலிடைச் சஞ்சலமாய்ச்‌
சலஞ்சலம் போதுளைந் தோடுந் தமிழ்ப்புலி யூரவனே.       (70)

(இ-ள்‌) சலம்‌ சலம்‌ போல்‌ அற்ற தாபதர்‌ போல கோபமாகிய (அக்கினி) தண்ணீர்போல (வெம்மை) தணியப்பெற்ற துறவிகட்குப்போல, - என்‌ தன்னையும்‌ அஞ்சல்‌ அஞ்சல்‌ (என்று) - அது தணியப்பெறாத தமியேனையும்‌ அஞ்சற்க அஞ்சற்கவென்று அபயமளித்து, - அம்போரு கம்தாள்‌ தந்தவா எனத்‌ தந்தருளாய்‌. தமது செந்தாமரைமலர் போலுந் திருவடிகளைக் கொடுத்‌தபடி என்னையென்று (இவ்வுலகம்‌ வியந்துரைக்குமாறு) அவற்றைத் தந்‌தருளும்‌, - சலம்‌ சலம்‌ என்று போது அறல்‌ பாய்‌ வயல்‌ இடைப்‌போது சலஞ்சலம்‌ - சலசலவென்று (எப்‌) பொழுதும்‌ நீர்பாயும்‌ வயலின் கணுள்ள தாமரைப்பூவாகிய (சேக்கையிலுறையுஞ்‌) சலஞ்‌ சலமாகிய சங்குகள்‌, உளைந்து சஞ்சலம்‌ ஆய்‌ ஓடும்‌ தமிழ்‌ புலியூரவனே - ஈற்றுளைந்து வியாகுலமுற்று (அதனையாற்றாது புறத்‌திற் குதித்து) ஓடும்‌ (நீர்வளவிய) இனிய புலியூரையுடையவரே. எ-று. இரண்டாமடியில்‌ அஞ்சலஞ்சல்‌ என்புழி என்றென்பது அவாய்‌ நிலையான்‌ வருவித்துரைக்கப்பட்டது. தந்‌தவாறு எனற்‌ பாலது தந்தவா எனக் கடைக்குறைந்து நின்றதோர்‌ செய்யுண்‌ முடிபு. மூன்றாமடியிற்‌ சலசல என நிற்கற்பாலது மெல்லொற்று விரிந்து சலஞ்சலம்‌ எனநின்றது (70)
-------
புலியர வங்கண்டு கொண்டாட வாடும்புராதனைம்‌
புலியர வங்கங்கை சோ்சடையான் றிருப்பொற் பதத்தைப்‌
புலியர வங்கண சங்கர வண்புலி யூரவென்னார்‌
புலியர வங்கடியா துழல் வாரிப் புவனியிலே.       (71)
---------
(இ-ள்‌) புலி அரவம்‌ கண்டு கொண்டாட ஆடும்‌ புராதனன்‌ - வியாக்ரபாத முனிவருந்‌ தரிசித்து (வணங்கித்‌) துதிக்க! (கனக சபையிலே பஞ்சகிருத்திய) நிருத்தஞ்செய்தருளும்‌ முன்னைப்பழம்‌ பொருட்கும்‌ முன்னைப்பழம்பொருளாயுள்ளவரும்‌,-- அம்புலி அரவம்‌ கங்கை சேர்‌ சடையான்‌ - பாலசந்திரனும்‌ ஒலியையுடைய கங்கையும்‌ பொருந்திய சடையையுடையவருமாகிய சிவபெருமானது, பொன்‌ திருப்பாதத்தைப்‌ புலி – பொன்போலுந் திருவடிகளைச்‌ (சிரசில்‌) வைத்து வணங்கி, அர - (பாசத்தை) அரிப்‌ பவரே, - அங்கண - அருட்கண்களையுடையவரே, - சங்கர - சுகஞ்‌ செய்பவரே, - வண்‌ புலியூர என்னார்‌ - வளவிய புலியூரை யுடையவரே என்று துதிக்கப்பெற்றிலர்‌, - புலியர்‌ அவம்‌ கடியாது இப்‌ புவனியில்‌ உழல்வார்‌ - அவ்வற்பர்‌ (அதன்மேலும்‌) பயனின்‌ முயற்சிகளை நீக்காது (மேற்கொண்டு) இப்பூமியில்‌ ஒருகணமேனுந்‌ தரியாது சுழன்று திரிவர்‌ (அவரதுள்ளக் கிடக்கை யாது?) எ-று. இரண்டாமடியில்‌ அரவக்கங்கை அரவங்கங்கை எனவும்‌, மூன்றாமடியிற்‌ புல்லி எனற்பாலது புலி எனவும்‌, நான்காமடியிற்‌ புல்லியர்‌ எனற்பாலது புலியர்‌ எனவும்‌ நின்றன. (71)
---------
புவனமுங் காலுங்ககனமு மற்றும் புணா்ந்து மன்றாய்ப்‌
புவனமுங் காலுமமுத கதிரும் புனைநந்து கருப்‌
புவனமுங் காலுந் தரளம் புரள்புலியூ ரனைநம்‌
புவனமுங் காலுமழகுந் தியானித்துப் போற்று நெஞ்சே.       (72)

(இ-ள்‌:) புவனமும்‌ மற்றும்‌ காலும்‌ ககனமும்‌ புணர்ந்தும்‌ அன்றாய்‌ (உம்‌) – பிருதிவியு மப்புவுந் தேயுவும்‌ வாயுவு மாகாயமு மாகிய பஞ்சபூதங்களாகியும்‌ அவையல்லவாகியும்‌ — புவனமும்‌ அமுதம்‌ காலும்‌ கதிரும்‌ புனைந்து (உம்‌) – கங்கா நீரையும்‌ அமுத கிரணங்களாலுஞ் சந்திரகலையையுந்‌ (திருமுடியிற்‌) தரித்தும்‌, - கருப்பு வனமும்‌ காலும்‌ தரளம்புரள்‌ புலியூரனை நம்பு - கருப்பஞ்‌ சோலைகளிலுங் கால்வாய்களிலும்‌ முத்துக்கள் புரளப்பெறும்‌ புலியூரில்‌ வீற்றிருக்குஞ்‌ சிவபெருமானை விசுவசித்து, - வனமும்‌ காலும்‌ அழகும்‌ தியானித்து போற்று – (அவருடைய) திருமேனியையுந்‌ திருவடிகளையுந்‌ திருவழகையுந்‌ தியானித்து வணங்கித்‌ துதிக்கக்‌ கடவாய்‌, நெஞ்சே - மனமே. எ-று. ஈண்டுப்‌ புலியூரன்‌ என்பது குறிப்பு வினையாலணையும் பெயராய்‌, புனைந்தென்னுமெச்சத்திற்கு முடிபாயிற்று. நான்காமடியில்‌ வன்னம்‌ வனம்‌ எனநின்றது. (72)
------
சேடனென் றோதியசெவ் வேணடு வொற்றுச் சேருமவன்‌
சேடனென் றோர்புகழ் தென்புலி யூரவன் றெய்வதவி
சேடனென் றோமறுப் பான்பதி மீதுமதேர்‌ செயல்குற்‌
சேடனென் றோவெற் கருடரு மோதுந்தி கிரிமின்னே.       (73)

(இ-ள்‌:) சேடன்‌ என்று ஒதிய செவ்வேள்‌ நடு ஒற்றுச்‌ சேரும்‌ அவன்‌ சேடன்‌ என்றோர்‌ - என்றுமிளையோரென்று (அறிஞர்‌) கூறிய சுப்பிரமணியக்கடவுளும்‌, அச்சுப்பிரமணியக்கடவுட்கு முன்‌ தோன்றிய விநாயகக்கடவுளும்‌ என்பவர்‌,- புகழ்‌ தென்‌ புலியூரவன்‌- புகழ்ந்துரைக்குந்‌ தெற்கின்கணுள்ள புலியூரரும்‌,- தெய்வத விசேடன்‌ - மகாதேவரும்‌,- என்‌ தோம்‌ அறுப்பான்‌ - எனது காம வெகுளி மயக்கமென்னுங்‌ குற்றங்களை ஓழிப்பவருமாகிய சிவபெருமானது.- பதி மீது தேர்‌ செய்‌ உம் அல்குல்‌ சேடன்‌ - திருப்பதியிற்‌ (பொருந்துந்‌) தேரினழகைச் செய்யும்‌ நுமதல்குலாய சேஷனா னது,- என்றோ எற்கு அருள்‌ தரும்‌ ஓதும்‌ - (இனி) எஞ்ஞான்றோ எனக்கு இரங்குவது சொல்லும்‌,- இரி மின்னே - (அவரது) மலையில் வசிக்கும்‌ மின்போல்பவரே. எ- று. நடு ஒற்றுச்‌ சேரும்‌ அவன்‌ சேடன்‌ என்பது மேனிற்குஞ் சேடனென்னும்‌ பகுபதந்‌ தன்முதலயலில்‌ ஒரு டகரவல்லொற்றுச்‌ சேரப்பெறும். அவனது சேடனெனப்பொருள்படும்‌; படவே, அவனது சேட்டன்‌ என்றவாறாயிற்று, சேட்டன்‌ - தமையன்‌, என்றோரென்பது ஈண்‌டெழுவா யுருபு. (தலைமகன்‌ குறையிரந்தலமரலுறுதல்‌ ) (73)
----------
திகிரிக் கனநிகர் மாலாக மீதுறை செங்கமலத்‌
திகிரிக் கனமுலை வாணியிந்த் ராணிதினந் தொழுஞ்சீர்த்‌
திகிரிக் கனன்‌ மொழிமங்கை பங்காளர் திகழ்புலியூர்த்‌
திகிரிக் கனமுத் தெனவுதித் தாரெங்க டெய்‌வதமே,       (74)

(இ-ள்‌:) திகிரிக் கனம் நிகர் மால்‌ ஆக மீது உறை செம்‌ கமலத்தி - சக்கரத்தையுடைய மேகம்போலும்‌ விஷ்ணுவினது திருமார்பில் வசிக்குஞ்‌ செந்தாமரையாசனியாகிய இலக்குமியும்‌, - கிரிக்‌ கனம்‌ முலை வாணி - மலைபோலும்‌ பருத்த முலைகளையுடைய சரஸ்வதியும்‌, - இந்த்ராணி - இந்திராணியும்‌,- தினம்‌ தொழும்‌ சீர்‌ - நாடோறும்‌ வந்து வணங்கப்பெறுஞ்‌ சிறப்புடைய - திகிரிக்‌ கனல்‌ மொழி மங்கை பங்கு ஆளர்‌ - இமையமலையிற்‌ (றவஞ்செய்த) கரும்புபோலுமினிய சொற்களை வசனிக்கும்‌ உமாதேவியை வாமபாகத்தில்‌ ஆளுகின்‌றவரும்‌,- கனம்‌ திகிரி முத்து என உதிர்த்தார்‌ ஏ – (திருநெல்வேலியென்னுந்‌ திருப்பதியிலே) நன்கு மதிக்கப்படும்‌ மூங்கின் முத்தாகச்‌ தோன்றியருளினவருமாகிய சிவபெருமானே, - திகழ்‌ புலியூர்‌ எங்கள்‌ தெய்வம்‌ - விளங்காநின்‌ற புலியூரிலெழுந்‌தருளியிருக்கும்‌ முழுமுதற்கடவுள்‌. எ - று. மூன்றாமடியிற்‌ கன்னல்‌ கனல்‌ என நின்றது. (74)
---------
வதனங்க ளையைந் துடைப்புலி யூரன்‌மர புடைத்தெய்‌
வதநங்க ளையகழ்‌ மன்னனென் றோர்க்கு வளர்ந்துமிகு
வதனங்க ளையுறுமோ டைசெய் காமனை வன்மைபுகு
வதனங்க ளைங்கதி மாக்கரி வையம குடங்களே.       (75)

(இ-ள்‌:) ஐந்து வதனங்களை உடைப்‌ புலியூரன்‌ - ஐந்து திருமுகங்களையுடைய புலியூரர்‌, - மரபு உடைத்‌ தெய்வம்‌ - (எல்லா) நன்மைகளையும்‌ (ஒருங்கே) யுடைய கடவுள்‌, - நம்‌ களை அகழ்‌ மன்னன்‌ என்றோர்க்கு - தம்முடைய மலமாகிய களையைப் பறிக்கின்ற பரமபதி என்று (இங்ஙனம்‌) துதிப்பவர்களுக்கு, - வளர்ந்து மிகுவது - (இம்மையிற்‌) பெருகி மிகுவன (யாவையெனின்‌),- அனங்களை உறும்‌ ஓடை - அன்னங்களையுடைய நீர்நிலையும் - செய்‌ - விளையுளும்‌, - கா - சோலையும்‌, - மனை - உறையுளும்‌, - வன்மை – அரோக திடகாத்‌திரமும் - புகுவதனங்கள்‌ - (ஒருவரிடத்தும்‌ நிலையுதலின்றி எல்லாரிடத்துங்‌ கடிதின் மாறிமாறிப்‌) புகுவனவாகிய திரவியங்களும்‌, ஐங்‌ கதி மா – ஐங்கதிகளையுடைய குதிரையும்‌, - கரி - யானையும்‌, - வையம்‌ - உலக பரிபாலனமும்‌, - மகுடங்களே - கிரீடமுமென்பவைகளேயாம்‌. எ-று. மரபுடையவற்றை மரபு என்றது உபசாரம்‌. மிகுவது பன்மை ஒருமை மயக்கம்‌, வன்மை ஆகுபெயர்‌. வண்மை எனப்‌ பாடமோதி, உதாரணகுணமெனப்‌ பொருள்‌ கூறுதலுமொன்று. (75)
-----------
குடந்தந் திரிமுலைச் சொல்லீ ருலசங்கு ளிர்புனற்ச
குடந்தந் திரிபென்‌ பவர்க்கி கலேகுறிப் பீர்புரிவன்‌
குடந்தந் திரிகரணம் முமக்கே செய்வள் கோமதன்ம
குடந்தந் திரித்‌திடு வீர்புலி யூரர்‌தங் குன்‌றிடத்தே.       (76)

(இ-ள்‌:) குடம்‌ தந்திரி முலை சொல்லீர்‌ குடமும்‌ யாழோசையும்போலும்‌ முலைகளையுஞ்‌ சொற்களையுமுடையீர்‌, - உலகம்‌ தம்‌ திரிபு சகுடம்‌ குளிர்‌ புனல்‌ என்பவர்க்கு இகலே குறிப்பீர்‌ - உலகமுந்‌ தாமும்‌ ஒன்றியும்‌ ஒன்றாது நிற்றல்‌ சகுடவிலையுங்‌ குளிர்ந்த சலமும்‌ ஒன்றியும்‌ ஒன்றாது நிற்றல்‌ போலுமென்று கூறப்படும்‌
ஞானிகட்கும்‌ பிரதிகூல வினைவிளைவுகளையே (விளைக்கக்‌) கருதுவீர்‌, - குடந்தம்‌ புரிவன்‌ - குடந்தத்தைச்‌ செய்வேன்‌, - திரி கரணம்‌ உமக்கே செய்வன்‌ - மனவாக்குக்‌ காயமென்னுந்‌ திரிகரணங்களையும்‌ உமக்கே சமர்ப்பிப்பேன்‌ - கோ மதன்‌ மகுடம்‌ தந்து இரித்‌திடுவீர்‌ - நும்மரசனாகிய மன்மதனது மகுடம்போலுந்‌ தனங்களை (அணையத்‌) தந்து (இம்மயக்கத்தை) ஓழித்திடுவீர்‌, - புலியூரர்‌ தம்‌ குன்று இடத்து - புலியூரரது இம்மலையின் கண்ணே எ-று. தந்திரி, சகுடம்‌, மகுடம்‌ என்பன ஆகுபெயர்‌. சிறப்பும்மை விகாரத்தாற்‌ றொக்கது. குடந்தம்‌ ஓர்வகைக் கூத்துநிலை, அதனாற்‌றன்‌ பணிந்த சொற்‌ செயலுடைமை விளக்கி மகிழ்வித்தல்‌ பெறப்படும்‌. இரித்‌தல் வினைக்குச்‌ செயப்படு பொருள்‌ வருவித்துரைக்கப்பட்டது. (இரந்துபின்னிற்றல்‌) (76)
--------
இடந்தா லமாவுறை யன்றிலும் பேடுமெழிற் சத்திமார்‌
பிடந்தா லம்வைத்திடு மூவரும்போன் மின்னுமேந் தலுமண்‌
ணிடந்தா லம்வாழரி யேற்றோ னுறையிணர் மேய்ந்திகன்ம
கிடந்தா லமன்னு மியற்புலி யூர்‌நகர்க் கேகினரே.       (77)

(இ-ள்‌:) தாலம்‌ உறை இடம்‌ ஆ அன்றிலும்‌ பேடும்‌ (போல்‌) - பனையை உறைவிடமாகவுடைய அன்றிலையும்‌ அதன்‌ பெடையையும் போலவும்‌, - எழில்‌ சத்தி மார்பு இடம்‌ தாலம்‌ வைத்திடு மூவரும்‌ போல்‌ - அழகிய சத்திகளையும்‌, அச்சத்திகளை மார்பிலும்‌ வாமபாகத்திலும்‌ நாவிலும்‌ வைத்த சத்திமான்களாகிய திரிமூர்த்திகளையும்‌ போலவும்‌ - மின்னும்‌ ஏந்தலும்‌ - தலைமகளுந் தலைமகனும்‌, - மண்‌ இடந்து ஆலம்‌ வாழ்‌ அரி ஏற்றோன்‌ உறை - பூமியை அகழ்ந்து ஆலிலையிற்றுயின்‌ற விஷ்ணுவாகிய இடப வாகனத்தையுடைய சிவபெருமான் வீற்றிருக்கும்‌, - இகல்‌ மகிடம்‌ இணர்‌ மேய்ந்து தாலம்‌ மன்னும்‌ இயல்‌ புலியூர்‌ நகர்க்கு ஏகினர்‌ - வலிய எருமைகள்‌ பூங்கொத்துக்களை மேய்ந்து வயலிற்றங்கு மியல்பையுடைய புலியூர் நகர்க்குச்‌ சென்றனர்‌. எ-று. உறை புலியூர்நகர்‌ என வியையும்‌, (தம்பதியடைந்தமை கண்டோர்‌ கூறுதல்‌.) (77)

ஏகாசலம் பமியறிரு மார்ப விரணி யமா
மேகாசலம் பயில்விற் புலியூர வெண்ணான் கறஞ்செ
யேகாசலம் பணிசோ்‌ கொங்கைபங்க வென்றேத் தினல்லா
லேகாசலம் படிதொல் வினையா யவிருட் கடலே       (78)

(இ-ள்‌:) ஏகாசம்‌ (இ) லம்பம்‌ இயல்‌ திருமார்ப - உத்தரீயந்‌ தொங்கியசையுந்‌ திருமார்பையுடையவரே, - இரணியம்‌ ஆம்‌ ஏக அசலம்‌ வில்‌ பயில்‌ புலியூர - பொன்மயமாகிய ஒப்பற்ற மேருகிரியை வில்லாக வளைத்த புலியூரரே, - எண்‌ நான்கு அறம்‌ செய்‌- (காஞ்சீபுரத்திலே சாமானிய) தருமங்கள்‌ முப்பத்திரண்டையும்‌ வளர்க்கின்ற - காசு அலம்பு அணி சேர்‌ கொங்கை பங்க என்று ஏத்தின்‌ அல்லால்‌ - முத்துமாலை புரளும்‌ அழகிய (பர அபரஞானமாகிய) தனங்களையுடைய பார்ப்பதி தேவியை வாமபாகத்திலுடையவரே யென்று (இங்ஙனம்‌) துதித்தாலன்றி - சலம்‌ படி தொல்‌ வினை ஆய இருள்‌ கடல்‌ ஏகா - கோப (முதலிய) துர்க்குணங்களாகிய நீர்பொருந்திய பழைய வல்வினையாகிய பாவசமுத்திரம்‌ வற்றாது. எ-று. ஈற்றயலடி முதல்‌ ஏகாரம்‌ இசைநிறை. ஈற்றடி முதல்‌ ஏகாது என்னும்‌ அஃறிணையொன்றன் பாற் படர்க்கை எதிர்‌ மறை வினைமுற்று விகுதிகுறைந்து ஏகா என நின்றது. சலம்‌ - இரட்டுறமொழிதல்‌. (78)
---------
கடநாக மன்னுகயி லையினான்‌ கருதார்க் கொருவி
கடனாக மன்புலி யூரன்ப ரோர்கிலர் கொல்கவினார்‌
கடனாக மன்னகடி தடத்தா யெமைக்காய் வதுவே
கடனாக மன்பிறைப் பன்‌மாலைக் கூற்றமங் காந்ததுவே.       (79)

(இ-ள்‌:) கடம்‌ நாகம்‌ மன்னு கயிலையினான்‌ - மதம்பொருந்திய யானைகள்‌ சஞ்சரிக்குங்‌ கைலாசகிரியில்‌ வீற்றிருப்பவரும்‌,- கருதார்க்கு ஒரு விகடன்‌ - (தம்மை உள்ளபடி) சிந்தியாதவர் கட்‌கொருவிகடரும்‌, - ஆகமன்‌ - சைவாகமங்களைத்‌ திருவாய் மலர்ந்‌தருளினவருமாகிய சிவபெருமானது,- புலியூர்‌ அன்பர்‌ ஓர்கிலர்‌ கொல்‌ - புலியூரில்‌ எம்மன்பர்‌ அறியார்போலும்‌,- கவின்‌ ஆர்‌ கடல்‌ நாகம்‌ அன்ன கடி தடத்தாய்‌ - அழகு பொருந்திய கடலையுஞ்‌ சர்ப்பபடத்தையும் போலும்‌ அல்குலையடைய பாங்கியே, - எமைக்‌ காய்வதுவே கடனாக - எம்மைக‌ வருத்துவதே தனக்குக் கடமையாக, மாலைக்‌ கூற்றம்‌ பிறைப்‌ பல்‌ அங்காந்தது - மாலையாகிய கூற்றம்‌ பிறையாகிய பல்லையுடைய செவ்வானமாகிய வாயைத்‌ திறந்தது. எ-று, இதற்கினி யாது செய்வேம்‌ நீ கூறுக எனப்‌ பொருள் படுதலின்‌, மன்‌ ஒழியிசைக்கண் வந்தது. பிறைப்பல்‌ என்பது பிறையாகிய பல்லையடையது எனப் பண்புத்தொகைப்‌ புறத்துப்பிறந்த அன்மொழித்தொகையாய்‌, ஈண்டுச்‌ செவ்வானை யுணர்த்தி நின்றது. அது மேலை உருவகங்கட்கேற்ப வாயாக உருவகிக்கப் படுதலே ஆசிரியர்‌ கருத்தென்பது அங்காந்தது என்னும்‌ முற்றுவினையாற்‌ பெறப்பட்டது. இவ்வன்மொழித்தொகை தொக்க இருமொழிப் பொருளிற்‌ றீராதுநின்றே புறமொழிப்பொருளும்‌ பயத்தலின்‌, விடாதவன்மொழித்தொகை எனப்படுமென்பது முதற் சூத்திரவிருத்தி முதலியவற்றுட் காண்க. விகடன்‌ வேறுபாட்‌டையுடையவன்‌, அது “பொக்கமிக்கவர் பூவுநீருங்கண்டு, நக்கு நிற்பனவர் தமைநாணியே'' என்னுந்‌ திருவாக்கானுமுணர்க. (தலைவன்‌ பிரிந்துழித்‌ தலைவி மாலை கண்டிரங்கல்‌.) (79)
-------
காந்தத்தில் வீழுமிரும் பினைப்போற் கனற்கண் ணுதலிற்‌
காந்தத்திலக நுதலாண் மருங்கு றைகத்த னையே
காந்தத்தில் வீழிற்க வின்புலி யூரன்க மலமதங்‌
காந்தத்தில் வந்தகளி வண்டிற் றோன்றுங் கருத்துறவே.       (80)

(இ-ள்‌:) காந்தத்தில்‌ வீழும்‌ இரும்பினைப்போல்‌ - காந்தத்திற் பற்றுமிரும்‌பைப் போல, - கனல்‌ கண்‌ நுதலில்‌ காந்த - அக்கினிக்கண்‌ நெற்றியிற் சுவாலிக்க,- திலக நுதலாள்‌ மருங்கு உறை கத்தனை - சிறுபொட்டையணித்த நெற்றியையுடைய சிவகாமி யம்மைக்கு வலப்பாகத்தில்‌ நின்றருளும்‌ விசுவகருத்தாவாகிய திருநடராசரை,- ஏகாந்தத்தில்‌ வீழில்‌ - கேவல ஸ்தானத்திலே (விடய நிக்கரக ஸ்திதியோடிருந்து திரிகரணங்களாலும்‌) பற்றி (வழிபடின்‌),-- கவின்‌ புலியூரன்‌- அழகிய அப்புலியூரர்‌,- அங்காந்‌தத்து கமலமதில்‌ வந்த களி வண்டில்‌ - வீகசித்ததொரு தாமரைப்‌ பூவிற்றானே சென்று சாரும்‌ மதுமயக்கத்தையுடைய வண்டைப்‌ போல, கருத்து உறத்‌ தோன்றும்‌ - அவரதிருதய கமலத்திற்றாமே வந்து தோன்றியருளுவர்‌. எ-று. அங்காந்தது எனற்பாலது அங்‌காந்தத்து எனத்‌ தகர வல்லொற்று விரிந்துநின்றது. காந்தத்திற்‌ பற்றுமிரும்பைப் போலத்‌ திருநடராசரைத்‌ திரிகரணங்களாலும்‌ பற்றி வழிபடின்‌, அப்புலியூரர்‌ தாமரைப் பூவிற் றானே சென்றுசாரும்‌ வண்டைப்போல அவரதிருதய கமலத்திற்‌ றாமே வந்து தோன்றி யருளுவரெனக் கூட்டுக. (80)

கருத்தர வல்குலவர் பானிறுத் துங்கசட் டுயிர்காள்‌
கருத்தர வல்லவினை கெடல்வேண் டிற்கல்லா னிழல்யோ
கருத்தர வல்லசலச் சிலையார் புலியூர்க் கருணைக்‌
கருத்தர வலமிலா ரெனப்போற்றல் கைகோள் கடிந்தே.       (81)

(இ-ள்‌:) கருத்து அரவு அங்குலவர்‌ பால்‌ நிறுத்தும்‌ கசட்டு உயிர்காள்‌ - மனத்தைச்‌ சர்ப்பபடம்போலும்‌ அல்குலையுடைய மகளிரிடத்துப் பதித்த பேதைகளே,- கருத்தர வல்ல வினை கெடல்‌ வேண்டில்‌ - (மேன்மேலும்‌) பிறவியைத்‌ தரவல்ல நும்வினைகள்‌ கேடுபடுதலை நீர்‌ விரும்புகில்‌, - கல்‌ ஆல்‌ நிழல்‌ யோகர்‌ - கல்லாலின்‌ கீழ்ச்‌ (சனகர் முதலிய முனீந்திரர் நால்வருக்கும்‌) யோகாப்பியாசஞ் செய்து கொடுத்தவர்‌, - வல்‌ உத்தர அசலச்‌ சிலையார்‌ - வலிய வடமலையாகிய மேருவை வில்லாகவுடையவர்‌,- புலியூர்க்‌ கருணைக்‌ கருத்தர்‌ - புலியூரிலெழுந்தருளியிருக்குஞ்‌ சீவகாருண்ணிய கருத்தா,- அவலம்‌ இலார்‌ எனப்‌ போற்றல்‌ - ஒரு துன்பமுமில்‌லாதவரென்று துதிக்க,- கை கோள்‌ கடிந்து - (நீவிர்‌) மேற்‌ கொண்ட (இவ) வொழுக்கத்தைத் தவிர்ந்து. எ-று. (81)
---------
கோகநகத் தைச்சகச் சணிமா முலைக்கோ தைநல்லார்‌
கோகனகத் தைநிகர் முகத்தா ரென்றுகூறி மகிழ்‌
கோகனகத் தைவிடாய் புலியூர னைக்கூ டியைய
கோசனகத் தையைபங்க வெள்ளாய் கும்பிக்காய் கொடிறே.       (82)

(இ-ள்‌:) கோகம்‌ நகு அத்‌ தச்ச கச்சு அணி மா முலைக்‌ கோதை நல்லார்‌ - சக்கரவாகப்புள்ளையும்‌ நகுகின்ற அத்துன்னிய கச்சையணிந்த பெரிய முலைகளையுடைய மாலையைத் தரித்த பெண்‌களை, - கோகனகத்தை நிகர்‌ முகத்தார்‌ என்று கூறி மகிழ்‌ - செந்‌தாமரை மலரை நிகர்த்த முகத்தையுடையவரென்று (புனைந்து) கூறிக்களிக்கின்ற,-- கோகு அன கத்தை விடாய்‌ - கழுதையது கத்தையொத்த நின் பிதற்றைவிட்டு,- புலியூரனைக்கூடி – புலியூரரைக்குறுகி - ஐயகோ - அந்தோ, கல்‌ நகத்து ஐயை பங்க என்னாய்‌ - இமையமலையிற் றோன்றிய உமையம்மை பொருந்திய வாமபாகத்தை யுடையவரே என்று துதித்தாயில்லை,- கும்பிக்‌ காய்‌ கொடிறே - (என்னை) நரகில்‌ (வீழ்த்தி) வருத்தும்‌ (மனமாகிய) கொடிறே. எ-று. சுட்டு முலைமேற்று, சிறப்பும்மை விகாரத்தாற்‌ றொக்கது, நல்லாரென்னும் பெயரடைகத்து விடாமைக்‌ கேதுவிளக்‌ குதற்கண் வந்தது. கோகு ஆகுபெயர்‌. விட்டென்னுஞ்செய்தெனெச்சம்‌ முற்றாய்த் திரிந்தது. இனம்‌ பற்றி இமையமலை கல்லாயிற்று. கொண்டது விடாமையாற்‌ பேதமின்மையின்‌ மனங்கொடிறாக உருவகிக்கப்பட்டது. கொடிறு - குறடு, கத்துண்மையுந்‌ துதியின்‌மையும்‌ வாக்கின் குற்றமாயினும்‌, மனமடியாக வருதலின்‌, அதன்‌ பாற்பட்டன. (82)
----------
காயத்தைக் கும்பியை நன்றென்றி ரோங்கைக் கடுங்கணையிற்‌
காயத்தைக் கும்பிவிழி யிற்படோங் கதியைப் பரமா
காயத்தைக் கும்பிடுமன்‌ பர்க்கமு தைக்கதி ரைநற்ச
காயத்தைக் கும்பிநுதற் புலியூர னைக்கை தொழுதே.       (83)

(இ-ள்‌:) காயத்தைக்‌ கும்பியை நன்று என்று இரோம்‌ - இந்தச் சரீரத்தையும்‌ (இதுபற்றி வரும்‌) நரகயாதனையையும்‌ (யாம்‌) நன்றென்று கருதியிருக்கின்றிலம்‌,- கைக்‌கடும்‌ கணையில்‌ காயத்‌தைக் கும்பி விழியில்‌ படோம்‌ - (வீரரது) கையிற் பொருந்திய கொடிய அம்பைப்போல (வருந்தும்படி) உருவும்‌ (மகளிரது) அழகிய கண்ணுக்கு இலக்காகின்றிலம்‌,- கதியை - புகலிடமும்‌, - பரம ஆகாயத்தை - சிதாகாயமும்‌, கும்பிடும்‌ அன்‌பர்க்கு அமுதை - (தம்மை) வழிபடும்‌ பத்தர்க்குக்‌ (கழிபெருஞ்சுவையோடுறுதி பயக்கும்‌) அமுதும்‌, - கதிரை - (அவரதஞ்ஞான விருளையோட்டுஞ்) சூரியனும்‌,- நல்‌ சகாயத்தை - நல்ல (உயிர்த்‌) துணையும்‌, நுதல்‌ கும்பி புலியூரனைக்‌ கை தொழுது - நெற்றியிலே (அக்கினிக்) கண்ணையுடைய புலியூரருமாகிய சிவபெருமானைத்‌ (தரிசித்துக்‌) கைகுவித்து வணங்குதலால்‌, எ-று. நன்று தனித்தனி கூட்டப்படும்‌, இரண்‌ டாமடியிற்‌ பி - அழகு. நான்காமடியிற்‌ கும்பி - அக்கினி, வணங்‌குதலாற் கருதியிருக்கின்றிலம்‌ இலக்காரின்றிலம்‌ எனக்கூட்டுக. (83)

கைவல மும்மைத் தொழிற் புலியூரக ஞலுமது
கைவல மும்மிகு முப்புரந் தீயிட்ட கண்ணுதலே
கைவல மும்மிட மும்‌மறியா தகருத் திலிக்குங்‌
கைவல மும்புரிந் தாடற் பரையிரு கண்மணியே.       (84)

(இ-ள்‌:) கைவல - (ஆன்‌மாக்கட்கறிவுறுத்தும் பொருட்டொழுகும்‌) ஒழுக்கத்தில் வல்லவரே, - மும்மைத்‌ தொழில்‌ புலியூர - சிருட்டி திதி சங்காரம்‌ என்னும்‌ முத்தொழில் களையுஞ் செய்யும்‌ புலியூரரே,- கஞலும்‌ மதுகை (யும்‌) வலமும்‌ மிகு முப்புரம்‌ தீ இட்ட கண்ணுதலே - (ஆகாயத்தில்‌) எழுந்துசெல்லும்‌ வலிமையும்‌ வெற்றியும்‌ மிகுந்த முப்புரங்களில்‌ அக்கினிகொழுவிய நெற்றிக்‌ கண்ணையுடையவரே, - கை வலமும்‌ இடமும்‌ அறியாத கருத்திலிக்கும்‌- கைகளுள்‌ வலக்கையிதுவென்றும்‌ இடக்கை யிதுவென்றும்‌ பகுத்தறியாத பேதையாகிய தமியேனுக்கும்‌, - கைவலமும்‌ - புரிந்து ஆள்‌ - ஆட்கொண்டு முத்தியை ஈந்தருளும்‌,- தற்பரை இரு கண்மணியே - உமையம்மைக்கிரு கண்மணியாயுள்ளவரே. எ-று. (84)
----------
தற்சங்கள் செய்யுஞ் சமயங்க டோறுஞ்ச ரிப்பவன்மா
தற்கங்க மைஞ்செழுத் தாம்புலி யூரன்சகத் தவரோர்‌
தற்கங்க மாகமமா ரணந்தந்த வன்றாழ் புலிப்பா
தற்கங்கரு நடங்காட்டி யென்பார்க் கில்லை தற்கையமே.       (85)

(இ-ள்‌:) தற்கங்கள்‌ செய்யும்‌ சமயங்கள்‌ தோறும்‌ சரிப்‌பவன்‌-(தம்முளிகலித்‌) தருக்கங்கள்‌ செய்யுஞ்‌ சமயகோடிகடோறும்‌ அவ்வச்சமய கருத்தாவாயிருப்பவர்‌, - மா தற்கு அங்கம்‌ அஞ்சு எழுத்து ஆம்‌ புலியூரன்‌ - மாட்சிமைப்பட்ட தமக்குப்‌ பரியங்கம்‌ ஸ்ரீபஞ்சாக்ஷரமாகவுடைய புலியூரர்‌,- சகத்தவர்‌ ஓர்தற்கு அங்கம்‌ ஆகமம்‌ ஆரணம்‌ தந்தவன்‌ - உலகின்கண் வசிப்பவர்‌ (அச்சமய சொருபங்களை) அறிந்து தள்ளற்குஞ்‌ (சித்தாந்த சைவத்திருதெறிப்‌ பட்டுத் தம்மையே பரமபதியென்று) கொள்ளற்கும்‌ ஆறங்கங்‌களையும்‌ இருபத்தெட்டாகமங்களையும்‌ நான்கு வேதங்களையுங்‌ கொடுத்தருளினவர்‌, - தாழ்‌ புலிப்பாதற்கு அங்கு அரு நடம்‌ காட்டி என்பார்க்கு - (தம்மைப்பூசித்து) வணங்கிய வியாக்கிரபாத முனிவருக்கு அங்கே பெறுதற்கரிய திருநடனத்தைத்‌ தரிசிப்பித்தவரென்று துதிப்பவர்கட்கு, - ஐயம்‌ தற்கு இல்லை - அம்முதனூல்களிற்‌ சந்தேக விபரீதக்‌ காட்சிகளுண்டாதலில்லை. எ -று. தருக்கம்‌ தற்கம்‌ என மருவிற்று. தன்கு தற்கு என வலித்தல்விகாரம்‌ பெற்று நின்றது, (திருவருளை முன்னிட்டு நின்றோர்பவருக்கே அவற்றது மெய்ப்பொருடோன்றுமென்பது கருத்து.) பரியங்கம் - கட்டில்‌. (85)
----------
கைச்சுந் தரித்து மணியும் புனைந்‌த கதிர்முலையோ
கைச்சுந் தரிவல்ல வன்‌புலி யூரன்கறுத் துமுன்ன
கைச்சுந் தரியலரைச் சிதைத்தோன் பொய்க்க படிகளைக்‌
கைச்சுந் தரிவிடை யானுடை யான்க‌ழல் பாடுதுமே.       (86)

(இ-ள்‌:) கைச்சும்‌ தரித்து மணியும்‌ புனைந்த கதிர்‌ முலை ஓகைச்‌ சுந்தரி வல்லவன்‌ - கச்சையுமணிந்து முத்துமாலையையுந்‌ தரித்த பர அபரஞானமாகிய தனங்களையும்‌ (எஞ்ஞான்றுமொரு பெற்றித்தாய) பேரின்பவாழ்வையுமுடைய சிவகாமசுந்தரிக்கு நாயகரும்‌, - புலியூரன்‌ - புலியூரையுடையவரும் - முன்‌ கறுத்து தரியலரை நகைச்சும்‌ சிதைத்தோன்‌ - முன்வெகுண்டு தாரகாக்கன்‌ கமலாக்கன்‌ வித்தியுன்மாலி என்னும்‌ பகைவரை முறுவலினாலும்‌ வதைத்தவரும்‌, பொய்க்‌ கபடிகளைக்‌ கைச்சு உந்து அரி விடையான்‌ - பொய்யை அனுசரித்தொழுகும்‌ படிறர்களை உவர்த்து எற்றிவிடுகின்ற விஷ்ணுவாகிய இடபத்தையுடையவரும்‌,-- உடையான்‌ - (எம்மை அநாதியே அடிமையாக) உடைய பசுபதியுமாகிய சிவபெருமானது, - கழல்‌ பாடுதும்‌ - திருவடிகளை (என்றும்‌ இப்‌பெற்றியே) பாடுவோமாக, எ-று. முதலடியிற்‌ கச்சு கைச்சு எனப்‌ போலியாயிற்று. ஓகை - ஆகுபெயர்‌. கதிர்‌ - தளி; என்றது ஞானத்தை, அது “சுடச்சடரும் பொன்போலொளிவிடும்‌'' என்‌பதனானுமுணர்க. நகைச்சுமென்னுமும்மை இழிவு சிறப்பு. (86)
--------
பாடலங் கந்தம்பயில் சடையார் பதுமத்து மள்ளர்‌
பாடலங் கந்தத்த மும்புலி யூரர்செம் பங்கியிரு
பாடலங் கந்தகற் செற்றுரென வொன்று பாடுகிலீர்‌
பாடலங் கந்தமை யாதினுக் கோதுவிர் பாவலரே.       (87)

(இ-ள்‌:) பாடலம்‌ கந்தம்‌ பயில்‌ சடையார்‌ - பாதிரிப்பூக்களினது பரிமளம்‌ பொருந்துஞ் சடையையுடையவர்‌,- மள்ளர்‌ பதுமத்‌துக்‌ கந்தத்துப்‌ பாடு அலம்‌ உழும்‌ புலியூரர்‌ - உழவர்கள்‌ தாமரைக்‌ கிழங்கிற்‌ பெருமைபொருந்திய கலப்பைகளினாலுழும்‌ புலியூரில்‌ வீற்றிருப்பவர்‌,- செம்‌ பங்கி இருபாடு அலங்கு அந்தகன்‌ செற்றார்‌ என ஒன்று பாடுகலீர்‌ - வெந்தபயிர்‌ இரண்டுபக்கத்துந்‌ (தொங்கி) அசையப்பெறுங்‌ கூற்றுவனை வதைத்தவர்‌ என்று துதித்து ஒரு பிரபந்தமும்‌ பாடுகின்றீர்களில்லை - அங்கம்‌ பாடல்‌ தமை யாதினுக்கு ஓதுவிர்‌ - சருக்கம்‌ இலம்பகம்‌ படலமுதலிய அவயவங்‌களையுடைய அவயவிகளாகிய வேறு பிரபந்தங்களை எதன்‌ பொருட்டுப்‌ பாடுகின்றீர்கள்‌, - பாவலரே -புலவர்களே. எ-று. (87)
--------
பாவிக்குண்‌ மிக்கபெரும் பாவியான்‌ புலியூர்ப் பதியப்‌
பாவிக்கு நேர்‌மொழி பங்கா வெனாதவன் பாடுமிந்தப்‌
பாவிக்கு வலயமீதே வழங்கவும் பண்ணி யவாற்‌
பாவிக்கு மன்பர்க் கமுதாமதி கள்பதாம் புயமே.       (88)

(இ-ள்‌:) பாவிக்குள்‌ மிக்க பெரும்‌ பாவி - பாவிகளுக்குளெல்லாம்‌ மிகப்பெரும் பாவியும்‌, - புலியூர்ப்‌ பதி அப்பா இக்கு நேர்‌ மொழி பங்கா எனாதவன்‌ யான்‌ - புலியூரைத்‌ திருப்பதியாகவுடைய பரமபிதாவே கரும்பினது சாற்றை நிகர்க்கும்‌ இன்சொற்‌களை வசனிக்கும்‌ பார்ப்பதிதேவியை வாமபாகத்திலுடையவரே - என்று (விசுவசித்துத்‌) துதியாத பொறியிலியுமாகிய தமியேன்‌ - பாடும்‌ இந்தப்‌ பாவும்‌ இக்குவலயம்‌ மீது வழங்கப்‌ பண்ணிய - பாடுகின்ற புலியூரந்தாதியாகிய இப்பிரபந்தமும்‌ இவ்வுலகின்கண்‌ வழங்கும்படி செய்தன, - பாவிக்கும்‌ அன்பர்க்கு அமுது ஆம்‌: அதிகன்‌ பத அம்புயம் - தம்மைப்‌ பாவனைபண்ணும்‌ மெய்யன்பருக்‌கமுதுபோலும்‌ விச்சுவாதிகராகிய சிவபெருமானுடைய உபய திருவடித்தாமரைகள்‌. எ-று. இக்கு ஆகுபெயர்‌. இழிவு சிறப்‌ பும்மை மாற்றியுரைக்கப்பட்டது. பண்ணும்‌ என எதிர்காலத்தாற்‌ கூறற்பாலது. தெளிவுபற்றிப்‌ பண்ணிய என இறந்தகாலத்தாற்‌ கூறப்பட்டது. ஆல்‌ அசைநிலை. (88)
---------
பதாம்புயங் காணவொரு கானனி வரம்பா லிப்பதப்‌
பதாம்புயங் கும்புயக் கண்ணற் கெட்டாதவ பாழியிரு
பதாம்புயங் கொண்டவற் செற்றபகவ பணாமணி மொய்ப்‌
பதாம்புயங் காபரணப் புலியூர நின்‌பான் மையதே.       (89)

(இ-ள்‌:) பத அம்புயம்‌ ஒருகால்‌ காணநனி வரம்‌ பாலிப்பது - தேவரீருடைய உபயதிருவடித்தாமரைகளை ஒருகாற்‌றரிசிக்க மிக வரங்கொடுப்பது, - அப்ப – பரமபிதாவே, - தாம்பு உயங்கும்‌ புயக்‌ கண்ணற்கு எட்டாதவ - (அசோதைபிணித்த) கயிற்றான் வருந்திய புயங்களையுடைய விஷ்ணுவுக்குக்‌ காணுதற்கரியவரே - பாழி இருபது ஆம்‌ புயம்‌ கொண்டவற்‌ செற்ற பகவ - வலிய இருபதாகிய புயங்களையுடைய இராவணனை (க்குற்றத்திற்குத்‌தக)த்‌ தண்டித்த ஆதிபகவரே - பணா மணி மொய்ப்பது ஆம்‌ புயங்க ஆபரணப்‌ புலியூர - படத்தின்கண்‌ இரத்தினங்கள்‌ நெருங்கப்‌ பெறுஞ்‌ சர்ப்பாபரணத்தையுடைய புலியூரரே, - நின்‌ பான்மையதே - தேவரீருக்கு இயற்கையோம்‌. எ-று. வரம்பாலிப்பது நின்‌பான்மையது எனவியையும்‌. புலியூர்‌ தரிசிக்க முத்திகொடுக்குந்‌ தேவஸ்தானமாகலின்‌, இங்ஙனங்‌ கூறப்பட்டது. (89)
---------
பானம்ப ரிந்துடை யாரில்லின் மோழைபயின்‌ றநற்சோ
பானம்ப ரிந்துதி ரியவிடார் மிகுபத்‌ திமையிற்‌
பானம்ப ரிந்துமுடிப் புலியூரர் பதாம் புயத்தின்‌
பாளம்ப ரிந்துவிடு வார்நம் மின்னலைப் பாண்மனமே.       (90)

(இ-ள்‌:) மோழை பானம்‌ பரிந்து- (பசிமிகவாற்‌) கஞ்சிமுதற்‌ பருகுவனவற்றையாயினும்‌ (பெற) விரும்பி, - உடையார்‌ இல்லின்‌ பயின்ற நல்‌ சோபானம்‌ பரிந்து திரிய விடார்‌ - செல்வரது வீடுகளிற் பொருந்திய நல்ல தாழ்வாரங்கடோறுஞ்‌ சுழன்றுதிரிய (இம்மையில்‌) விடார்‌, - மிகு பத்திமையில்‌ - பேரன்‌பினால்‌ நம்பர்‌ - அதிபரமாப்தரும், - பால்‌ இந்து முடிப்‌ புலியூரர்‌ - வெண்மையாகிய பாலசந்திரனைத்‌ தரித்த திருமுடியையுடைய புலியூரருமாகிய சிவபெருமானது, - பத அம்புயத்தின்‌ பால்‌ நம்பு - பாததாரைகளில்‌ விசுவசி, - நம்‌ இன்னலை அரிந்து விடுவார்‌ - (அங்களம்‌ விசுவசிக்கின்‌ அவர்‌) நம் பிறவித்துன்பத்தைத்‌ (தேகநீக்கத்தில்‌) தப்பாது களைந்துவிடுவர்‌,- பாண்‌ மனமே - பாழாகிய எமது மனமே எ-று, பாழ்‌ பாண்‌ என மருவிற்று, ‘ஐம்மூன்றதா முடல் வன்மைபின் வந்திடிலாறொடைந்தா, மெய்ம்மாண்பதா நவ்‌வரின் முன்னழிந்து பின்‌மிக்கணவ்வா, மம்மேல்வருனிருமூன்றாமுடல்‌” என்னும்‌ விதிபற்றி இன்னோரன்னவற்றை மரூஉமுடிபென்னாது விதிமுடி பென்றலுமொன்று. மனமே, சிவபெருமானது பாதங்‌களிற்‌ பேரன்பினால்‌ 'விசுவசி, அங்ஙனம்‌ விசுவசிக்கின்‌, அவர்‌ இம்மையிற்‌ றாழ்வாரங்கடோறுந்‌ திரியவிடார்‌, தேகநீக்கத்திற்‌ பிறவித்துன்பத்தைத்‌ தப்பாது களைவர்‌ எனக்‌ கூட்டுக. (90)
------------
பாணித்தில கமெனுங் கங்கை வேணியனைப் பதுமப்‌
பாணித்தில மன்னதுண் டத்தனப் பொற்பரி யபொருப்‌
பாணித்தில நகைசேர் புலியூர னைப்பாடி நெஞ்சே
பாணித்தில மினியெவ் வண்ணமோ நம்பவஞ் சிந்துமே.       (91)

(இ-ள்‌:) பாணித்‌ திலகம்‌ எனும்‌ கங்கை வேணியனை - யமுனை சரசுவதி நருமதை முதலிய நதிகட்கெல்லாந்‌ திலகமென்று சொல்லத்தகுங்‌ கங்காநதி பொருந்திய சடையையுடையவரும்‌ - பதுமம்‌ பாணி – செந்தாமரைமலர் போலுந்‌ திருக்கைகளும்‌ - திலம்‌ அன்ன துண்டம்‌ - எட்பூவை நிகர்த்த திருமூக்கும்‌, - தனம்‌ பரிய பொன்‌ பொருப்பாள்‌ - தனங்களாகிய பெரிய பொன்‌ மலைகளுமுடையவராகிய,- நித்திலநகை சேர்‌ புலியரனை - முத்துப்‌ போலும்‌ பற்களையுடைய உமாதேவி தழுவும்‌ புலியூரருமாகிய சிவபெருமானையே (கவிநாயகராகக் கொண்டு),- நெஞ்சே பாடிப்‌ பாணித்திலம் - மனமே (இங்ஙனந்‌ துதிரூபமாகிய பிரபந்தங்களைப்) பாடிக்‌ காலநீட்டித்திலம் - இனி எவ்வண்ணமோ நம்‌ பவம்‌ சிந்தும்‌ - இனி எவ்வாற்றானோ நம்‌ பிறவியறும்‌. எ-று. பதுமம்‌ திலம்‌ என்பன ஆகுபெயர்‌. நித்திலநகை அன்மொழித்தொகை. காலநீட்டித்திலம்‌ என்பதற்குக்‌ காலங்கழித்திலம்‌ என்பது கருத்தாகக்கொள்க. (91)
--------
சிந்தாமணி தென்‌றலன் றிலுமற்று மென்சிற் றுயிரைச்‌
சிந்தாமணி யைச்சிதை விக்குமாற் செகற்தா ளிரக்கச்‌
சிந்தாமணி துளவத்தோன்‌ பரவுந் திகழ் புலியூர்ச்‌
சிந்தாமணி யைவரக் கண்டிலே னின்னந் தேனினமே.       (92)

(இ-ள்‌:) சிந்து - சமுத்திரமும்‌, - ஆ மணி - பசுமணியும்‌ - தென்றல்‌ - மந்தமாருதமும்‌, - அன்றில்‌ - மகன்றிலும்‌, - மற்றும்‌ - இவை போல்வன பிறவும்‌, - என்‌ சிற்று உயிரைச்‌ சிந்தா - எனது (அறிவாற்‌) சிறிய உயிரை நலிவித்து, - மணியைச்‌ சிதைவிக்கும்‌ - அழகை அழிகின்றன,- செகம்‌ தாள்‌ இரக்கச்‌ சிந்து ஆம்‌ அணி துளவத்தோன்‌ பரவும்‌ - (மாபலியிடத்துப்‌) பூமியைப்‌ பாதத்தான்‌ (அளந்து) யாசிக்கும்பொருட்டு வாமனரூபங்கொண்ட துளசிமாலையைத் தரித்த விஷ்ணுபுகழும்‌, - திகழ்‌ புலியூர்ச்‌ சிந்தாமணியை இன்னம்‌ வரக்‌ கண்டிலேன்‌ (தலவிசேட முதலியவற்றாற் சிறந்து) விளங்குகின்ற புலியூரில்‌ எழுந்தருளியிருக்குஞ்‌ சிந்தித்‌தனவற்றை எஞ்சாது கொடுக்குந்‌ தேவமணி போலு மென்றலைவரை இன்னும்‌ வரக்‌ கண்ணுற்றிலேன்‌ - இனம்‌ தேனே - (துணைபிரியாது ஒன்றற்‌கொன்று) இனமாகிமருவும்‌ வண்டுகளே. எ-று. ஆல்‌ அசைநிலை, (வரவுநீடத் தலைவியிரங்கல்‌.) (92)
------------
தேனினம்பார்ந்து தெவிட்டி யுவட்டிச் செருக்கு மிகுந்‌
தேனிம்பாய் கொன்றை யன்‌புலி யூரனைச்‌சென்று பணிந்‌
தேநினம்பாத செலவாற் புலத்‌த வர்‌தீமை சிதைத்‌
தேனினம்பா விநெஞ்சே செல்வனோ பழிச்சென் மத்திலே.       (93)

(இ-ள்‌:) தேன்‌ இன்‌ அம்பு ஆர்ந்து தெவிட்டி உவட்டிச்‌ செருக்கு மிகும்‌ தேன்‌ இனம்‌ பாய்‌ - தேனாகிய இனியநீரையுண்டு தேக்கியுவர்த்துக்‌ களிப்புமிகும்‌ வண்டினங்கள்‌ பரவியிருக்கப்‌ பெறும்‌, - கொன்றையன்‌ புலியூரனைச்‌ சென்று பணிந்து - கொன்‌றை மாலையைத் தரித்தவராகிய புலியூரரை (அங்கே) சென்று (தரிசித்து) வணங்கி, - நின்‌ நம்பாத செலவால்‌ புலத்தவர்‌ தீமை சிதைத்தேன்‌ - நினது நம்புதற்கரிய செலவு காரணமாக ஐம்புல வேட்டுவர்‌ செய்த தீமைகளைப் பரிகரித்தேன்‌,- பாவி நெஞ்சே
இனம்‌ பழிச்‌ சென்மத்தில்‌ செல்வனோ - பாவியாகிய எனது மனமே (நின்பொருட்டு) இன்னமும்‌ பழிக்கப்படும்‌ பிறவியிற்‌ பிரவேசிப்‌பேனோ. எ.-று. ஈற்றயலடிமுதல்‌ ஏகாரம்‌ இசைநிறை. ஈற்றடியில்‌ இன்னம்‌ என நிற்கற்பாலது இனம்‌ என நின்றது. (மறித்‌தும்‌ விடயவெதிர்முகமாகிய மனத்தை நோக்கிக்கூறியது.) (93)
----------
மத்தன் பராபரை கொண்கன் முகறொடு மந்தரமா
மத்தன் பராக மலர்த்தா திறைத்து மணத்தபது
மத்தன் பராவுறு தென்‌புலி யூரன்மன மெனுஞ்சே
மத்தன் பராலறி யப்படுவா னெங்குமாய்ந் திருந்தே.       (94)

(இ-ள்‌:) மத்தன் - நித்தியானந்தரும்‌, - பராபரை கொண்கன்‌ - பராசத்திக்குச் சத்திமானாயுள்ளவரும்‌, - முகில்‌ தொடும்‌ மந்தரம்‌ ஆம்‌ மத்தன்‌ - மேகமண்டலத்தைத் தொடுகின்ற மந்தர மலையாகிய மத்தையுடைய விஷ்ணுவும்‌, - பராக மலர்த்‌ தாது இறைத்து மணத்த பதுமத்தன்‌ பராவுறு - அணுவடிவாகிய பூந்தாதை யிறைத்து வாசனைகமழுஞ்‌ செந்தாமரைமலரை யாசனமாகவுடைய பிரமாவுந்‌ (தரிசித்து வணங்கித்‌) துதிக்கப்பெறும்‌, - தென்‌ புலியூரன்‌ - தெற்கின் கணுள்ள புலியூரில்‌ வீற்றிருப்பவருமாகிய சிவபெருமான்‌ எங்கும்‌ மாய்ந்து இருந்து - (பாலினெய்போல வெளிப்‌படாது) எங்கும்‌ மறைந்து வியாபித்திருக்கினும்‌, - மனம்‌ எனும்‌ சேமத்து அன்பரால்‌ அறியப்படுவான்‌ - மனக்காவலையுடைய தம்‌ மெய்யன்பர்களிடத்துத்‌ (தயிரினெய்போல வெளிப்பட்டு நின்று) அவரால்‌ அறியப்படுவர்‌, ௭ -று. இருந்தும்‌என நிற்கற்‌ பாலது. உம்மை தொக்கு இருந்து என நின்றது. மாய்தல்‌ மறைதல்‌; அது “செந்நெலின்‌, வான்புகழ் களிறுமாய் கமனியாக்கமும்‌” என்பதனானுமறிக. (94)
---------
இரும்பன கத்தைக் குழைத்‌தமின் னேயிரங் காதினிகா
யிரும்பன கத்துநுஞ் சாரலிற் கேட்குமி ரண்டுறழை
யிரும்பன கத்திரளிற் கொலைசூழ் வதிலீர்ம் புலியூ
ரிரும்பனகத்‌ தணியான் சிலம்போசை யெனுஞ் செல்வமே.       (95)

(இ-ள் :) இரும்பு அன்‌ (ன) அகத்தைக்‌ குழைத்த மின்னே - இரும்பையொத்த திண்ணிய என்னெஞ்சை நெகிழ்ந்துருகும்படி செய்த மின்போல்பவரே,- இரங்காது இனிது ஆய்‌ இரும்‌ - (யானிது பொழுது பிரிவலெனவும்‌, பிரிந்தாற்‌ பின்‌ வரவு நீடிக்கு மெனவும்‌ உட்கொண்டு நீர்சிறிதும்‌) இரங்காமலீண் டினிதாகவிரும்‌,- பல்‌ நகத்து நும்‌ சாரலில்‌ கேட்கும்‌ - பல மரங்களை உடைய நும்‌ மலைச்சாரலின்கண்‌ நுஞ்செவிக்குப்‌ புலப்படாநிற்கும்‌,- இரண்டு உறழ்‌ ஐ இரு உம்பல்‌ நகத்திரளில்‌ கொலை சூழ்வது இல்‌ ஈர்ம்‌ புலி ஊர்‌ - இரண்டானுறழ்ந்த பத்தாகிய இருபது வலிய நகக்குழுவாலுங்‌ கோறலை (மனத்தின்கணொருகாற்‌) சிந்திக்‌கவும்‌ பெறாத சீவகாருண்ணிய முதிர்ச்சியையுடைய புலி (சிவலிங்‌கோபாசனை செயப்பெற்றகாரணத்தாற்‌) புலியூர்‌ எனப்பெயர்‌ பெறுஞ்‌ சிதம்பரத்திலெழுந்‌ தருளியிருக்கும்‌ - இரும்‌ பனகத்து அணியான்‌ சிலம்பு ஒசை எனும்‌ செல்வம்‌ - பெரிய பாம்பை ஆபரணமாகத்தரித்த சிவபெருமானது திருவடிகளிற் பொருந்திய திருச்சிலம்பொலியாகிய பேரானந்தப்‌ பெருஞ்செல்வமானது எ-று. முதலடியில்‌ அன்ன என்னும்‌ உவமவுருபு ஈறுதொக்கு அன்‌ என நின்றது செல்வமானது. புலப்படாநிற்கும்‌ எனக்‌ கூட்டுக [இடமணித்தென்றல்‌ ] (95)
-----------
செல்வாரணக் குழற்கண் டத்தர்மாயை யுட்சேர்த் திடினுஞ்‌
செல்வாரண முதற்சென்ம முற்றாலு மெனசெய் திடினுஞ்‌
செல்வாரணக்‌ கணிச்சிப் புலியூர சிறியன் முத்திச்‌
செல்‌வாரண வுநின்றாண்‌ மறவா வரஞ் செய்தருளே.       (96)

(இ-ள்‌:) செல்‌ வாரணம்‌ குழல்‌ கண்டத்தர்‌ மாயை உள்‌ சேர்ந்திடினும்‌ - முகிலையுஞ்‌ சங்கையும்‌ போலுங்‌ கூந்தலையுங்‌ கழுத்தையுமுடைய மகளிர்செய்யும்‌ மாயாகாரியங் களாகிய காமலீலைகளுட்‌ பிரவேசிக்கினும்‌, - வாரணம்‌ முதல்‌ செல்‌ சென்மம்‌ உற்றாலும்‌ - அத்தி முதல்‌ எறும்பு (ஈறாகிய) யோனி பேதங்களிற்‌ பிறக்கினும்‌, - என்‌ செய்திடினும்‌ - அப்பிறவிகளில்‌ எத்துணைப்‌ பெரும்பாதகங்களைச்செய்யினும்‌,- செல்வா - அருட்செல்வரே,- (இ) ரணம்‌ கணிச்சிப்‌ புலியூர - விரணத்தைச்செய்யும்‌ மழுப்‌ படையையுடைய புலியூரரே- சிறியன்‌ - ஒன்றுக்கும் பற்றாத சிறியேன்‌, - முத்திச்‌ செல்வார்‌ அணவும்‌ நின்‌ தாள்‌ மறவா வரம்‌ செய்தருள்‌ - முத்தியின்கட்செல்லுஞ்சத்திநிபாதருக்கு அணிமையாகுந் தேவரீருடைய திருவடிகளை (ஒருகணமும்‌) மறவாத இவ்வரமொன்றையும்‌ பிரசாதித்தருளுக எ-று. மறவாத எள்னும்‌ பெயரெச்சத்தகரம்‌ விகாரத்தாற்றொக்கது. இரண்டா மடிமுதற்‌ செல்‌ - சிதல்‌. அஃது ஈண்டு அறிவு முதலிய ஒப்புமை நயம்பற்றி எறும்பின்மேற்று; ‘கோடுநான்குடையவேழந்தாரகன்‌ குறைத்தகோட்டைப்‌, பாடறநோற்றுப்பெற்றபதியிது'' என்‌புழிப்போல. (96)
-------
செய்யான னந்தங்கு சேக்கையம் வாரிசத்தேன்‌ பெருகிச்‌
செய்யான னந்தலை பாய்புலி யூரன்செ ழுங்கருணை
செய்யான னந்தமை யைந்துடை யான்‌றிரு மேனிமிகச்‌
செய்யான னந்தரஞ் சேர்வானஞ்‌ சிந்தையென் பஞ்சரமே.       (97)

(இ-ள்‌:) செய்யான்‌ - நடுவு நிலமையினையுடையவரும்‌,- அனம்‌ தங்கு சேக்கை அம்‌ வாரிசத்‌ தேன்‌ பெருகிச்‌ செய்யால்‌ நனந்தலை பாய்‌ புலியூரன்‌ - அள்ளப்புட்களுறங்குஞ்‌ சேக்கையாகிய அழகிய தாமரைப்பூவிலுள்ள தேன்பெருகி வயன்மத்தியிற்‌ பிரவாகிக்கும்‌ புலியூரையுடையவரும்‌,- செழும்‌ கருணை செய்‌ ஆனனந்தமை ஐந்து உடையான்‌ - செழுமையாகிய திருவருள்‌ சுரக்குந்‌ திருமுகங்‌களை ஐந்தாகவுடையவரும்‌ - திருமேனி மிகச்‌ செய்யான்‌ - திருமேனி மிகச்‌ சிவந்தவருமாகி சிவபெருமான்‌, நம்‌ சிந்தை என்‌ பஞ்சரம்‌ அனந்தரம்‌ சேர்வான்‌ - நமது இருதயமாகிய கூட்டின்கண்‌ எஞ்‌ஞான்றும்‌ (இனிது) வாழுவர்‌. (இஃதென்னையற்புதம்‌!) எ-று. இரண்டாமடியிற்‌ செய்யால்‌ என்பது உருபுமயக்கம்‌. (97)
-----------
பஞ்சரங் கண்டகிளி மொழிபா கபவ வதன
பஞ்சரங் கண்பணி யும்புலி யூரவெனப் புகழ்பா
பஞ்சரங் கன்றிடவாடு நெஞ்சேநம் பவங்க ளெனும்‌
பஞ்சரங் கற்கழலாம் பயில்விக் குமின்பச் சுகமே.       (98)

(இ-ள்‌) பஞ்சரம்‌ கண்ட கிளிமொழி பாக - கூட்டின்கட்‌ காணப்படுங்‌ கிளியினது சொல்லைப்போலும்‌ இனிய சொற்களை வசனிக்கும்‌ உமாதேவிக்கு வலப்பாகரே, - பவ - விசுவகாரணரே, - பஞ்ச வதன - ஈசானம்‌ தற்புருஷம்‌ அகோரம்‌ வாமதேவம்‌ சத்தியோ சாதம்‌ என்னும்‌ ஐந்து திருமுகங்களையுடையவரே, - (அ)ரங்கன்‌ பணியும்‌ புலியூர எனப்‌ புகழ்‌ : சீரங்கத்தில்‌ வசிக்கும்‌ திருமால்‌ வணங்கும்‌ புலியூரரே என்று (இங்ஙனம்‌) துதிப்பாயாக, - பாபம்‌ சரம்‌ கன்றிட வாடு நெஞ்சே - (பூரூவ சன்மங்களில்‌ ஆர்ச்‌சித்த) பாவமானது அம்பைப்போல நலிய வாடுகின்‌ற மனமே - நம்‌ பவங்கள்‌ எனும்‌ பஞ்சு அரங்கற்கு அழலாம்‌ - (அங்ஙனந்‌ துதித்தால்‌ அத்துதி) நம்முடைய அப்பாவங்களாகிய பஞ்சு தீர்தற்கு அக்கினீயாகும்‌.- இன்பச்‌ சுகம்‌ பயில்விக்கும்‌ - (அதவன்றியுஞ்‌ சிவஞானம்‌ வாயிலாக) நிரதிசயவின்ப பரசுகாநுபவத்தையும்‌ எமக்குப்‌ பொருந்தச்செய்யும்‌, ௭- று. அரங்கல்‌ - அழிதல்‌. (98)
----------
சுகம்பன் னகஞ்சொனி தம்பமம் பாலிகைதூய நற்கிஞ்‌
சுகம்பன் னகஞ்சசியின் சியன்னநண்‌ பவத்தோ கைக்குநஞ்‌
சுகம்பன் னகண்கழுத் தம்புலி யூரார்சுடர்க் கரிமேற்‌
சுகம்பன் னகங்கொள்ளு மோமெய் யெலாமச் சுராபுத்தமே.       (99)

(இ-ள்‌:) சொல்‌ நிதம்பம்‌ சுகம்‌ பன்னகம்‌ (அன்ன) - சொல்லும்‌ நிதம்பமும்‌ (நிரனிறையே) கிளிமொழியையுஞ்‌ சர்ப்ப படத்தையும்‌ ஒப்பனவாம்‌,- தூய அம்‌ பாலிகை நல்‌ கிஞ்சுகம் (அன்ன) - சுத்தமாகிய அழகிய வாயிதழ்கள்‌ (நடுவிற்கொய்த)
நல்ல முருக்கலரை ஒப்பனவாம்‌,- பல்‌ நகம்‌ சசி சின்னம்‌ (அன்ன) - பல்லும்‌ நகமும்‌ (எதிர்நிரனிறையே) சந்திரனையும்‌ சங்கினது முத்தையும்‌ ஒப்பனவாம்‌,- நண்ப - பாங்கனே, - அத்‌ தோகைக்கு - (சாயலான்‌) மயிலை (ஒத்த) அத்தலைமகட்கு, - கண்‌ கழுத்து நஞ்சு கம்பு அன்ன - கண்களும்‌ கழுத்தும்‌ (முறையே) நஞ்சையுஞ்‌ சங்கையும்‌ ஒப்பனவாம்‌,- அம்‌ புலியூரர்‌ சுடர்க்‌கிரி மேல்‌ சுகம்‌ பன்‌ (ன) அகம்‌ கொள்ளுமோ - அழகிய புலியூரரது (சேய்மைக்கண் விளங்காநின்ற) சுடரையுடைய மலையின்கண்‌ (அத்தலைமகண் மாட்டநுபவித்த) காமசுகத்தை (நினக்குச்‌) சொல்ல அதனை நின்னுள்ளம்‌ அமைத்துக்‌ கொள்ளுமோ, - மெய்‌ எலாம்‌ அச்சுர அபுத்தம்‌ (அன்ன) - ஒழிந்த உறுப்புக்களெல்லாம்‌ அத்தேவர்‌ உண்டறியாத (புதிய) அமுதை ஒப்பனவாம்‌. ௭- று. இன்‌ சாரியை - சின்னம்‌: சங்கு, அஃதாகுபெயராய்‌ ஈண்டு முத்தையுணா்த்தி நின்றது. தோகை உடம்பொடுபுணர்தல்‌, அன்ன என்னும்‌ உவமவுருபு ஏனையிடத்துங்கூட்டிப்‌ பொருளுரைக்கப்‌ பட்டது. ஈற்றடியிற்‌ பன்ன என நிற்கற்பாலது பன்‌ என நின்றது: அபுத்தம்‌ - உண்ணப்படாதது. (தலைமகளெழினலந்‌ தலைமகன்‌ பாங்கற்‌ குரைத்தல்‌.) (99)
---------
புத்திக் குறும்பசுந் தேனமு தாம்புலி யூரரெனிற்‌
புத்திக் குடையகலை மங்கைசே ரும்புரை யில்பொருப்‌
புத்திக் குலவிப் புகழ்மிக நீடும்புவ னியிலே
புத்திக் கரிய பொருடந்து மேவிடும் பூத்திருவே.       (100)

(இ-ள்‌:) புத்து இக்கு உறும்‌ பசும்‌ தேன்‌ அமுது ஆம்‌ புலியூரா்‌ எனில்‌ - (தம் மெய்யன்பருக்குப்‌) புதிய கருப்பஞ்சாற்றையும்‌ இறுகிய பசிய தேனையும்‌ அமுதையும்போலத்‌ தித்திக்கும்‌ புலியூரா்‌ என்று (சிரத்தையன்போடு ஒருகாற்‌) றுதிக்கின்‌, புத்திக்கு உடைய கலைமங்கை சேரும்‌ - (அவரிடத்து) அறிவிற்குரிய கலைமகள்‌ சென்று சேருவள்‌, - புரை இல்‌ புகழ்‌ திக்குப்‌ பொருப்பு உலவி மிகநீடும்‌ - (ஆதாரமாகிய உலகம்‌ பொன்றுந்துணையும்‌ ஆதேயமாகி நிற்றலிற்‌ றனக்கு) நிகரில்லாத புகழானது திக்குமலையைப்‌ போல விளங்கி மிதந்தோங்கும்‌, - புவனியில்‌ பூ திரு புத்திக்கு உரியபொருள்‌ தந்து மேவிடும்‌ - இப்பூமியின்‌கண்‌ அழகிய இலக்குமி அநுபவத்திற்குரிய செல்வப்பொருள்களைக் கொடுத்து (அவரிலின்‌ கணீங்காது) வதிவள்‌. ௭- று. உலாவி உலவி என நின்றது. ஏகாரம்‌ முன்னையது இசைநிறை. பின்னையது ஈற்றசை. [புலியூரர்‌] எனச்‌ சிரத்தையன்போடு ஒருகாற்றுதிக்கிற்‌ கல்விப்பொருளுஞ்‌ செல்வப்‌ பொருளும்‌ பொரும்பான்மையும்‌ இவற்றான் வரும்‌ புகழும்‌ அவரை விட்டுநீங்கா என்பது கருத்து. (100)

புலியூரந்தாதியுரை முற்றுப்பெற்றது.

மெய்கண்டதேவர்‌ திருவடி வாழ்க.

திருச்சிற்றம்பலம்‌.
~~~~~~~~~~~~~~

This file was last updated on 30 April 2023.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)