pm logo

சரோஜா ராமமூர்த்தி எழுதிய
பனித்துளி (சிறுகதை)


panittuli (short stories)
by carOja rAmamUrti
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
We thank Tamil Virtual Academy, Chennai for providing a scanned PDF version of this work
This version has been produced using Google OCR and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2023.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

பனித்துளி
சரோஜா ராமமூர்த்தி

Source :
பனித்துளி
சரோஜா ராமமூர்த்தி
அல்லயன்ஸ்
(நூற்றாண்டை நெருங்கும் முதல் தமிழ்ப்புத்தக நிறுவனம்)
உரிமைப் பதிவு
முதற்பதிப்பு : ஜூன், 1996
விலை : ரூ.42-00
அல்லயன்ஸ் கம்பெனி
244, ராமகிருஷ்ணா மடம் சாலை, தபால் பெட்டி எண் 617 , மையிலாப்பூர், சென்னை - 600 004.
வேமன் பிரிண்டர்ஸ் சென்னை --600 034.
-------------------
பொருளடக்கம்
1. தை பிறந்தது 9. சர்மா வீட்டில் சம்பகம்
2. காமுவின் கண்ணீர்10. சினிமாவில் நீலா!
3.நீலா போட்டியிட்டாள் 11. நீலாவின் மனக்கசப்பு
4. சங்கரனின் சங்கடம் 12. விசாலாட்சியின் மறைவு
5. சம்பகம் திரும்பினாள்! 13. வேற்றுமையின் எல்லை
6. இடமாற்றம் 14. எதிர்பாராத சம்பவங்கள்
7. பாவம், சங்கரன்! 15. காமுவின் கல்யாணம்
8. காமு கலங்கவில்லை!

---------------------------

பனித்துளி: 1. தை பிறந்தது

உதய சூரிய ன் பொன் கிரணங்கள் பொன்மணிக் கிராமத்தின் வயல் வரப்புகள் மீது தவழ்ந்து விளையாடிக் கொண்டிருந்தன. அதி காலையில் புகை மாதிரி எங்கும் படர்ந்திருந்த பனித் திரையை விலக்கிக்கொண்டு சூர்யோதயம் ஆயிற்று. மார்கழி மாசமாதலால் பஜனை கோஷ்டி ஒன்று பெருமாள் கோவிலிலிருந்து கிளம்பி, கிராமத்தின் வீதிகளில் பாடிக்கொண்டு போயிற்று. சூர்ய உதயத்துக்குள் கிராம வாசிகளில் பெரும்பாலோருக்கு ஸ்நானபானாதிகள் முடிந்துவிடும் என்பதற்கு அத்தாட்சி யாக பெண்கள் குளத்தில் குளித்துவிட்டு, இடுப்பில் குடத்துடன் ஆலயத்தைப் பிரதட்சிணம் செய்து கொண்டு தத்தம் வீடுகளுக்குச் சென்று கொண்டிருந்தனர். வயல்களில் நெற்கதிர்கள் முற்றி அறுவடைக்குத் தயாராக இருந்தன. இன்னும் பதினைந்து தினங்களில் பொங்கல் திருநாள் வருகிறது. உற்றார் உறவினருடன் உழைப்பின் உழைப்பின் பலனை அனுபவிக்க விவசாயிகள் அந்தத் திருநாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். தான் பெற்ற சேயை அன்புடன் தழுவிக் கொள்வதுபோல் அந்தக் காலை நேரத்தில் வயலில் பழுத்துச் சாய்ந்திருக்கும் நெற்கதிர்களை விவசாயிகள் ஆசையுடனும் பெருமையுடனும் பார்த்துச் சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

பஜனை கோஷ்டியில் முக்கியமாகச் சிரத்தையுடன் பங்கெடுத்துக் கொண்டவர்களில் உபாத்தியாயர் ராமபத்திர அய்யரும் ஒருவர். வறுமையிலும் கஷ்டத்திலும் உழலும் அவர், மனச் சாந்தியை வேண்டியே பகவத் பஜனையில் ஈடுபட்டார் என்று சொன்னாலும் பொருந்தும். பஜனை கோஷ்டி பெருமாள் கோவிலை மறுபடி அடைந்ததும் அங்கு அர்ச்சகர் தயாராக வெண்பொங்கலும், மிளகுப் பொங்கலும் கமகமவென்று மணக்க வைத்துக்கொண்டு காத்திருந்தார். பனிக் காற்றில் ஊரைச் சுற்றி வந்தவர்களுக்குச் சுடச் சுடப் பிரசாதத்தைப் பார்த்ததும் நாக்கில் தண்ணீர் ஊறியது.

"ஓய்! சாமாவய்யரே! கொஞ்சம் பின்னாடி நகருங் காணும்!" என்று சொல்லிக் கொண்டே தேசிகர் முன்னாடி வந்து தம் இரு கைகளை நீட்டி, ஆவலுடன் பொங்கலை வாங்கிச் சுவைத்தார்.

"இந்தாரும், ஸ்வாமி! உமக்கு இன்னும் கொஞ்சம் வேண்டுமானால் எடுத்துக் கொள்ளும்'' என்று ராம் பத்திரய்யர் மிளகுப் பொங்கலை தேசிகரிடம் நீட்டினார்.

“அடாடா! பெருமாள் கோவில் பிரசாதம்னா தேவாமிர்தம், சார்! எப்படி பாகம் செய்திருந்தாலும் அதற்கென்றே தனி மணமும், ருசியும் ஏற்பட்டு விடுகிறது பாருங்கள்" என்று சொல்லிக் கொண்டே சுப்பாமணி அந்த அமிர்தத்தை மேலும் ரசித்துச் சாப்பிட்டார்.

'ஆமாம், ராமபத்திரா! இந்த வருஷமாவது உன் பெண்ணுக்கு எங்கேயாவது ஒரு இடம் குதிருமா? வயசு ஏகப்பட்டது ஆகிறதே?" என்று சுப்பாமணி பொங்கலைக் குதப்பிக் கொண்டே கேட்டார்.

ராமபத்திரய்யர் கலக்கத்துடன் மூல ஸ்தானத்தில் எழுந்தருளி இருக்கும் தாயாரையும், பெருமாளையும் பார்த்து விட்டு, என்னைக் கேட்கிறாயே,சுப்பாமணி! அதோ பேசாமல் என்னைச் சஞ்சலத்தில் ஆழ்த்தி வேடிக்கை பார்க்கும் பெருமாளைக் கேளேன் இந்த விஷயம் நமக்குப் புரியாத விஷயமாக அல்லவா இருக்கிறது?" என்றார்.

"தெய்வம் வந்து உன்னோடு நேரில் பேச வேண்டும் என்கிறாயா? போடா பைத்தியக்காரா!” என்று கூறிவிட்டு தமக்கு முக்கியமான வேலை இருப்பதாகச் சொல்லிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினார், சுப்பாமணி என்கிற சுப்பிரமணிய அய்யர்.

ராமபத்திரய்யர் யோசனையில் மூழ்கியவாறு வீட்டை அடைந்தார்.

அவர் வீட்டை அடையும்போது அவர் பெண் காமாட்சி கூடத்தில் இருக்கும் படங்களுக்குப் புஷ்பமாலை போட்டு, குத்துவிளக்கேற்றி நமஸ்கரித்துக் கொண் டிருந்தாள். அவள் மனத்திலும் அன்று காலையிலிருந்து ஏக்கமும் கவலையும் நிரம்பி இருந்தன.

ராமபத்திரய்யர் பெண்ணைச் சிறிது நேரம் கவனித்து விட்டுப் பெருமூச்சுடன் அங்கு இருக்கும் ஊஞ்சலில் உட்கார்ந்து கொண்டார்."இன்னும் பதினைந்து தினங்களில் தை பிறக்கப் போகிறது. 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்பார்கள். ஆனால் கடந்த ஐந்து வருஷங்களாகத் தை மாதம் பிறந்து, கல்யாண மாசங்களெல்லாம் வெறும் மாதங்களாக மறைந்து விடுகின்றன. நம்பிக்கைக்கு இடம் இல்லாமல் அல்லவா தை மாதம் பிறக்கிறது?” என்று யோசித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார் அவர்.

''அப்பா! 'பென்ஷன்' வாங்க ராஜம்பேட்டைக்குப் போக வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருந்தீர்களே? சாப்பிட்டு விட்டுத்தானே போகப் போகிறீர்கள்? வெயில் பொசுக்கி விடுமே!" என்று கேட்டாள் காமு.

"வெயிலைப் பார்த்தால் முடியுமா, அம்மா? முக்கியமான வேலை என்றால் போய்த் தானே ஆக வேண்டும்?" என்று கூறினார் அவர்.

சாப்பாட்டுக்கு அப்புறம் ஏதோ ஒரு தீர்மானத்துடன் காமுவின் ஜாதகத்தையும் கையுடன் எடுத்துக்கொண்டு பென்ஷன் வாங்க ராஜம்பேட்டைக்குக் கிளம்பினார், ராமபத்திரய்யர். புறப்படும்போது, "உன் அம்மா எங்கே காணோம்? வழக்கம்போல் அப்பளக் கச்சேரிக்குக் கிளம்பி விட்டாளோ இன்றைக்கும்? அப்படியானாம் கதவைச் சாத்திக்கொண்டு ஜாக்கிரதையாக இரு, அம்மா!" என்று கூறிவிட்டுத் தம் பழைய குடையை எடுத்துக்கொண்டு புறப்பட்டார்.

அப்பாவை வாசல் வரையில் வழி அனுப்பி விட்டுக் கூடத்து ஊஞ்சலில் வந்து உட்கார்ந்து கொண்டாள் காமு. பகல் வேளையானதால் தெரு நிசப்தமாக இருந்தது. வீட்டில் வேலையெல்லாம் முடிந்து விட்டது. காமுவுக்குப் பொழுது போகவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் ஊஞ்சல் சங்கிலியில் சாய்ந்து கொண்டு, 'யாரோ! இவர் யாரோ!" என்று அவளுக்குத் தெரிந்த அரைகுறைப் பாட்டைச் சற்று இரைந்து பாடிக்கொண் டிருந்தாள். அப்பொழுது வாசல் கதவை யாரோ திறக்கும் சத்தம் கேட்டது. காமு எழுந்து பார்ப்பதற்குள், வாயிற்படி அருகில் அவளுக்குப் புதிதாகத் தோன்றிய இளைஞன் நின்றுகொண்டிருந்தான். அவனை அவள் ஒருவன் அதுவரையில் பொன்மணியில் பார்த்ததில்லை.

“ராமபத்திரய்யர் வீடு இதுதானா? அவர் வீட்டில் இருக்கிறாரா?" என்று இளைஞன் விசாரித்தான்.

காமு சிறிது தயங்கினாள். பிறகு தன்னைச் சமாளித்துக் கொண்டு, "அப்பா டவுனுக்குப் 'பென்ஷன் வாங்கப் போயிருக்கிறார். இன்னும் ஒரு மணயில் திரும்பி விடுவார் என்று கூறினாள்.

"அப்படியானால் நடேச சர்மாவின் பிள்ளை சங்கரன் வந்திருந்ததாகச் சொல்லுங்கள். முடிந்தால் சாயங்காலம் வருவ தாகவும் சொல்லுங்கள்" என்றான் வாலிபன்.

“அப்பா வந்து விடுவார். இருந்து பார்த்து விட்டுப் போகலாமே!' என்று சொன்னாள் காமு.

"இல்லை. முக்கியமான அலுவலாக ராஜம்பேட்டைக்குப் போக வேண்டும். சாயங்காலம் வருகிறேன்.''

"ராஜம்பேட்டைக்குத்தான் அப்பாவும் போய் இருக்கிறார். அநேகமாக நீங்கள் அவரை அங்கேயே சந்தித்தாலும் சந்திக்கலாம்" என்றாள்.

அவள் இவ்விதம் கூறினதும் சங்கரன் போய் விட்டான். நடேச சர்மாவைப் பற்றி ராமபத்திரய்யர் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தது காமுவின் நினைவுக்கு வந்தது.

பால்யத்தில் இருவரும் ஒன்றாகக் கல்வி பயின்றவர்கள். இருவரும் ஒரே மாதிரிதான் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்து, அப்புறம் ஹைஸ்கூலுக்குப் போய்ப் படித்தார்கள். ஆனால்,நடேச சர்மா கலாசாலைப் படிப்புகள் படித்து உயர்ந்த பட்டம் பெற்றார். ராமபத்திரய்யர் கலாசாலைப் பக்கம் கூடத் திரும்பிப் பார்க்க முடியாமல் அவருடைய குடும்ப நிலை குறுக்கிட்டது. பள்ளிக்கூட வாத்தியார் வேலை ஏற்றதுமே வறுமையும் தானாவே அவரைத் தேடி வந்தது. அவருடைய மூத்த பெண்கள் இரண்டு பேர் கல்யாணமாகிக் குடியும் குடித்தனமுமாக வெளியூரில் இருந்தார்கள். அவர்கள் அப்பாவிடம் தங்களுக்கு இது வேண்டும், அது வேண்டும்' என்று கேட்பதில்லை. அவர்களைப் பற்றி ராமபத்திரய்யரும் கவலைப்படுவதில்லை. காமுவின் விவாகத்தை பற்றிதான் ராமபத்திரய்யரும், அவர் மனைவி விசாலாட்சியும் கவலைப்பட்டனர்.

காமுவின் ஜாதகம் நல்ல கயோ ஜாதகம் என்று ஜோஸ்யர் மணி அடிக்கடி கூறி வந்தார். அது எவ்வளவு தூரம் உண்மை என்பது பகவானுக்குத்தான் தெரியும். அவ்வளவு யோகமுள்ள ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் நிறைந்திருந்தது. நல்ல மரத்தில் ஏற்படும் புல்லுருவியைப் போல, மனிதருடைய வாழ்க்கைக்கும். செவ்வாய் என்கிற கிரகத்துக்கும் எவ்வளவு தூரம் சம்பந்தம் இருக்கிறது என்பது புரியாத விஷயந்தான். ஆனால், ஜனங்கள் அதை நம்பினார்கள். ராமபத்திரய்யரும் நம்பினார்.

அன்றும், 'காமுவின் ஜாதகத்தில் குருபலன் ஏற்பட்டிருக் கிறதா? இந்த வருஷமாவது அவளுக்குக் கல்யாணம் நடக்குமா?' என்று ஜோஸ்யர் மணியைக் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆவலினால் தாலுக்கா ஆபீஸில் 'பென்ஷனை’ வாங்கியதும், சிறிது உட்கார்ந்து சிரம பரிகாரம் கூட செய்து கொள்ளாமல் நேராக ஜோஸ்யரின் வீட்டை அடைந்தார் ராமபத்திரய்யர்.

அவர் உள்ளே நுழைந்தபோது மணி பகல் சாப்பாட்டிற்கு அப்புறம் விச்ராந்தியாகக் கூடத்தில் உட்கார்ந்து பத்திரிகைகளுக்கு ஜோஸ்யப் பகுதிகளுக்கு வேண்டிய விஷயங்களைச் சேகரித்து வைத்துக் கொண் டிருந்தார். கூடத்தில் பெரிய அளவில் ஆஞ்சநேய ஸ்வாமியின் படமும், அம்பாளின் படமும் மாட்டி இருந்தன. கூடத்தை அணுகும்போதே தூபத்தின் சுகந்தமும், மலர்களின் நறுமணமும் அவரை ஒரு பக்தர் என்று பறைசாற்றின். ராமபத்திரய்யர் உள்ளே வந்ததும், "என்ன அய்யர்வாள், எங்கே இவ்வளவு தூரம் வெயிலில்?" என்று அவரை இன்முகத்துடன் வரவேற்றார் ஜோஸ்யர் மணி.

"சாப்பாடு எல்லாம் ஆயிற்றா? என்று கேட்டுக் கொண்டே நெற்றியில் வழிந்தோடிய வியர்வையைத் துண்டினால் துடைத்துக் கொண்டே அவர் எதிரில் உட்கார்ந்தார் ராமபத்திரய்யர்.

"அதெல்லாம் அப்பொழுதே முடிந்து விட்டது. எங்கே இவ்வளவு தூரம்?" என்று கேட்டார் ஜோஸ்யர் மணி.

"தை பிறக்கப் போகிறதே, குழந்தைக்கு இந்த வருஷமாவது ஏதாவது வரன் குதிர்ந்து ஆக வேண்டும், அப்பா! வயதாகி விட்டது பார்" என்று சொல்லிவிட்டு, ஜாதகத்தை எடுத்து அவர் முன்பு வைத்தார் ராம பத்திரய்யர்.

ஜோஸ்யர் மணி 'சூள்' கொட்டினார். பிறகு தலையைச் சொறிந்து கொண்டு, "இரண்டு வருஷமாகப் பார்த்துக் கொண்டிருக்கிற ஜாதகம் தானே? திரும்பத் திரும்ப என்ன இருக்கிறது பார்க்கிறதற்கு? பேசாமல் ஜாதகத்தை மூட்டை கட்டி வைத்துவிட்டு சகுனத்தைப் பார்த்து ஏதாவது வரன் வந்தால் முடித்துவிடும்” என்று சொல்லிக் கொண்டு ஜாதகத்தை ராமபத்திரய்யரிடமே திருப்பி நீட்டினார்.

"கொஞ்சம் பார்த்துத்தான் சொல்லேன்?" என்று ராமபத்திரய்யர் கேட்கவும், "குரு பலன், யோக ஜாதகம் முதலிய எல்லா விஷயங்களையும் மீறி பகவத் சங்கல்பத்தால் விவாகம் நடைபெறுகிறது பகவானுடைய அருளினால் இந்த கட்டாயம் கல்யாணம் நடந்து விடும்" என்று தைரியம் கூறினார் மணி.

ராமபத்திரய்யர் கண்களில் உணர்ச்சிப் பெருக்கினால் நீர் நிறைந்தது. 'ஆமாம். ஜாதகமும், ஜோஸ்யமும் மனிதனாகவே மனத்தைக் குழப்பிக் கொள்ளும் விஷயங்கள் தாமே? இவைகளை மீறக் கூடிய சக்தி—அக்ஞை ஒன்று பகவத் அனுக்ரகம் என்று இருக்கிறதல்லவா? அது ஏற்பட வேண்டும். காமுவுக்கு என்று புருஷன் இனிமேலா பிறக்கப் போகிறான்?' என்று மனத்துக்குள் எண்ணமிட்டவர், “அப்படியானால் தோஷ ஜாதகம்தான் பொருந்தும் என்று சொல்லு” என்று ஹீனஸ்வரத்தில் திரும்பவும் நப்பாசை விடாமல் மணியைப் பார்த்துக் கேட்டார்.

"ஆமாம். ஜாதகத்தைப் பொறுத்த வரையில் அங்காரக தோஷம் பரிபூரணமாக இருக்கிறது, சுத்த ஜாதகம் எதுவும் இதோடு பொருந்தாது" என்றார் மணி.

அப்படி அங்காரக தோஷமுள்ள ஜாதகம் ஏதாவது கிடைத்தாலும் வரதட்சிணை தோஷம் அதற்குக் குறுக்கே நின்றது. தவிர கலாசாலைப் படிப்போ, சங்கீதமோ, நடனமோ ஒன்றும் தெரியாத காமுவை ஏற்பதே ஒரு தோஷம் என்று சிலர் கருதினார்கள். காமு இப்படி இருபது வயசு வரையில் கல்யாணம் ஆகாமல் பெற்றவர்களுக்குக் கவலையை ஏற்படுத்தி வந்தாள்.

சோர்ந்த முகத்துடனும், கவலை நிரம்பிய உள்ளத் துடனும் ராமபத்திரய்யர் ஜோஸ்யர் மணியிடம் விடை பெற்றுக் கொண்டு பொன்மணிக்குக் கிளம்பினார்.

களைத்துப் போய் அவர் வீட்டினுள் நுழைந்ததும், "அப்பா" என்று காமு ஏதோ சொல்ல வந்தாள்.

"இருக்கட்டும், அம்மா. முதலில் கொஞ்சம் மோர் தீர்த்தம் கொண்டுவா. ரொம்பவும் களைப்பாக இருக்கிறது” என்று சொல்லிக் கொண்டே ஊஞ்சலில் ஆயாசத்துடன் சாய்ந்து கொண்டார் ராமபத்திரய்யர்.

மோரைக் கொண்டு வந்து வைத்து விட்டு, தகப்பனார் தன்னால் படும் கவலையையும், கஷ்டத்தையும் நினைத்து வருந்திக் சொண்டே நின்றாள் காமு. படுத்திருந்தவர் கண்ணை மூடிக் கொண்டே இருப்பதைப் பார்த்து, "அப்பா! மோர் கேட்டீர்களே, கொண்டு வந்து வைத்திருக்கிறேன். சாப்பிடுங்களேன்!" என்று கூப்பிட்டாள் காமு.

ராமபத்திரய்யர் மோர் தீர்த்தத்தைப் பருகி விட்டு, களைப்பு நீங்கப் பட்டவராய், "என்னவோ சொல்ல வந்தாயே, அம்மா! என்ன விஷயம்? தபால் ஏதாவது வந்ததா?" என்று கேட்டார்.

"யாரோ நடேச சர்மாவின் பிள்ளையாம்; சங்கரன் என்று சொன்னார். உங்களைப் பார்ப்பதற்காக வந்திருந்தார். திரும்பவும் வருவதாகச் சொல்லிவிட்டுப் போய் இருக்கிறார்.”

"ஓஹோ! இருந்துவிட்டுப் போகச் சொல்லுகிறது தானே? அவன் அப்பாவும் நானும் பால்யத்தில் ஒன்றாகப் படித்தவர்கள் என்று அடிக்கடி சொல்லி இருக்கிறேனே?'

"அவரை இருந்து விட்டுத்தான் போகச் சொன்னேன். ஏதோ அவசர வேலை இருப்பதாகவும், மறுபடியும் கட்டாயம் வருவதாகவும் சொல்லி விட்டுப் போனார்" என்றாள் காமு.

இந்தப் பையனை நான் பத்து வருஷங்களுக்கு முன்பு பார்த்தது. பையன் ரொம்பவும் கெட்டிக்காரன். இப்போது அவனுக்குக் கல்யாணம் பண்ணுகிற வயசு. ஒருவேளை கல்யாணம் ஆகிவிட்டதோ என்னவோ!" என்று தமக்குத் தாமே சொல்லிக் கொண்டார் அவர். பிறகு ஏதோ நினைத்துக் கொண்டவர் போல், "அம்மா எங்கே போய் இருக்கிறாள்?" என்று கேட்டார்.

"கோபு அகத்திற்கு அப்பளம் இடுவதற்குப் போய் இருக்கிறாள், அப்பா. ஏன் கேட்கிறீர்கள்?"

"அந்தப் பிள்ளை வந்தால் ஏதாவது 'டிபன்' தயாரிக்க வேண்டாமா? தினம் தினம் அப்பளம் இடுவதற்கு இவள் கிளம்பி விடுகிறாளே?" என்று கோபித்துக் கொண்டார் அவர்.

"நான் செய்து விடுகிறேன் அப்பா. அம்மா வந்துதான் அதைச் செய்ய வேண்டுமா என்ன? இது ஒரு கஷ்டமும் இல்லை” என்று கூறிவிட்டுக் காமு சமையலறைக்குச் சென்றாள்.

ராமபத்திரய்யர் வெயிலில் நடந்து வந்த களைப்பால் ஊஞ்சலில் படுத்துக் கொண்டு ஆழ்ந்த நித்திரையில் ஆழ்ந்தார். சமையலறையில் இருந்த காமு அவசர அவசரமாக இட்டிலியும், சட்டினியும் செய்வதில் முனைந் திருந்தாள். ஆமை நகருவதுபோல் அவள் தாயார் விசாலாட்சி செய்யும் வேலைக்கும், காமு பரபரவென்று செய்யும் வேலைக்கும் மிகவும் வித்தியாசம் இருந்தது. அடுப்பில் இட்டிலிப் பாத்திரத்தை வைத்துவிட்டு காமு கொல்லையிலிருந்து பறித்து வந்திருந்த கனகாம்பர மலர்களைச் செண்டாகக் கட்டிக் கொண்டிருந்தாள். நொடிப் பொழுதில் பூமாலையும் தொடுத்தாயிற்று. காலையில் வந்து போனவர் திரும்பவும் வதவதற்குள் தலை பின்னிப் பூவைச் சூட்டிக் கொள்ள. வேண்டும் என்கிற ஆசையும் அவளுக்கு ஏற்பட்டது. கும்மட்டி அடுப்பில் காபிக்காக தண்ணீர் வைத்து விட்டுக் காமரா அரைக்குள் சென்று தலை பின்னிக் கொள்ள ஆரம்பித்தாள்.

காமு தலை பின்னிக் கொண்டு வெளியே வருவதும் அவளுடைய தாயார் விசாலாட்சி அப்பளக் கச்சேரியிலிருந்து திரும்பி வருவதும் சரியாக இருந்தது. கூடத்தில் ஊஞ்சலில் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருக்கும் தன் கணவரைப் பார்த்ததும் அவளுக்கு ஆத்திரமும், கோபமும் ஏற்பட்டன. விடு விடு என்று சமையலறைக்குச் சென்று குடத்திலிருந்து ஒரு டம்ளர் குளிர்ந்த தண்ணீர் சாப்பிட்டு விட்டு. ஆயாசத்துடன் காலை நீட்டிக் கொண்டு உட்கார்ந்தாள்.

"ஏண்டி இதற்குள் அடுப்பு மூட்டி விட்டாய்? இப்போ என்ன அவசரம்?" என்று இரைந்து கேட்டாள் விசாலாட்சி.

"யாரோ அப்பாவுக்குத் தெரிந்தவர்கள் வருகிறார்கலாம் அம்மா!" என்று கூறிவிட்டு காமு அடுப்பு வேலையைக் கவனிக்க முனைந்தாள்.

"ஆமாம். வேறே வேலை என்ன உன் அப்பாவுக்கு? தை பிறக்கப் போகிறது. வழி பிறந்தால் தான் தேவலையே! கன்யாகுமரி மாதிரி இன்னும் எத்தனை நாளைக்கு நிற்கப் போறியோ?''

காமுவுக்குத் தாயாரின் கடுமையான வார்த்தைகள் புதியவையல்ல. தினம் பொழுது விடிந்து பொழுது போகும் வரையில் ஓயாமல் விசாலாட்சி ஏதாவது சொல்லிக் கொண்டுதான் இருப்பாள். மாறி மாறிக் கணவனையும் பெண்ணையும் ஏதாவது சொல்லாமல் அவளால் இருக்க முடியாது.

ஊஞ்சலில் தூங்கிக் கொண்டிருந்த ராமபத்திரய்யர். விழித்துக் கொண்டார். சமையலறையில் தாய்க்கும் மகளுக்கும் நடந்த பேச்சைக் கவனித்தார். வயசு வந்த பெண்ணிடம், வர வர விசாலாட்சி மனம் நோகும்படி நடந்து கொள்வது அவருக்கு மிக வருத்தத்தை அளித்தது. காமுவுக்குச் சிறு வயதிலிருந்த கலகலப்பான சுபாவமும், குறும்புத்தனமும் மறைந்து போய் எங்கிருந்தோ அடக்கமும் பதவிசும் அவளைத் தேடி வந்து விட்டிருப்பதை அவர் உணர்ந்திருந்தார். அவள் யாருடனும் அதிகம் பேசாமலும், கலகலப்பாகப் பழகாமலும், வீட்டை விட்டு அதிகமாக வெளியில் செல்லாமலும் ஒருவிதக் கவலையுடன் இருந்து வருவது அவருக்குத் தெரியும்.

ஊஞ்சலை விட்டு எழுந்தவர் கோபத்துடன் சமையலறைப் பக்கம் சென்று, 'ஆமாம், வர வர உன் தொந்தரவு பெரிசாக இருக்கிறதே! பேசாமல் இருக்க மாட்டாயா நீ? குழந்தையை சதா ஏதாவது துணப்பிக் கொண்டே இருக்கிறாயே?" என்று மனைவியைப் பார்த்து இரைந்து விட்டுக் கொல்லைப் பக்கம் சென்றார். கிணற்றி லிருந்து இரண்டு வாளி தண்ணீர் இறைத்து முகம், கை கால்களைச் சுத்தம் செய்து கொண்டு, மாட்டுக் கொட்டிலில் அவரையே பார்த்துக்கொண்டு நிற்கும் செவிலிப் பசுவுக்குப் புல்லை எடுத்துப் போட்டார்.

அப்போது காமு கூடத்தைப் பெருக்கிச் சுத்தம் செய்து வரவிருக்கும் விருந்தாளியை வரவேற்கத் தயார் செய்து கொண்டு இருந்தாள். அவள் பெருக்கி முடித்த சமயம் வாசற் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. ஓடிப்போய் கதவைத் திறந்தாள் காமு. சங்கரன் அவளைப் பார்த்து, ''அப்பா வந்து விட்டாரா?"" என்று கேட்டுக் கொண்டே நுழைந்தான்.

"வந்து விட்டார். உட்காருங்கள்!" என்று கூறிவிட்டு, அப்பாவைக் கூப்பிட காமு கொல்லைப் பக்கம் சென்றாள்.

சிறிது நேரத்துக் கெல்லாம் ராமபத்திரய்யரும், சங்கரனும் நெடு நாள் பழகியவர்கள் போல் பேச ஆரம்பித் தார்கள். “இந்த ஊருக்கு வந்தும் நீ நேரே நம் வீட்டிற்கு வராமல் எங்கேயோ போய் இருக்கிறாயே! உன் அப்பாவாக இருந்தால் அப்படிச் செய்ய மாட்டான்" என்று வெகு உரிமையுடன் கடிந்து கொண்டார் ராமபத்திரய்யர்.

வந்திருப்பேன் மாமா. பல வேலைகளை வைத்துக் கொண்டு வந்திருக்கிறேன். நினைத்தபோது சாப்பிடு கிறேன். இதற்கெல்லாம் சௌக்கியமான இடம் ஹோட்டல் தான் என்று தீர்மானித்து ராஜம்பேட்டையில் ஹோட்டலில் தங்கியிருக்கிறேன்” என்று மன்னிப்புக் கேட்கும் தோரணையில் வினயமாகப் பேசினான் சங்கரன்.

இதற்குள் காமு இரண்டுதட்டுகளில் இட்டிலியும், டம்ளர்களில் காபியும் கொண்டு வந்து வைத்தாள். அவளைப் பார்த்து ராமபத்திரய்யர், "காமு! இங்கே வந்திருப்பது யார் என்று உன் அம்மாவுக்குத் தெரியாது. யாரோ என்று நினைத்துக் கொண்டிருக்கிறாள், போய் அவளை அனுப்பு" என்று சொன்னதும் காமு தலையை அசைத்து விட்டு உள்ளே சென்றாள்.

சிறிது நேரத்திற்கெல்லாம் விசாலாட்சி புடவைத் தலைப்பை இழுத்துப் போர்த்திக்கொண்டு வந்து தூண் ஓரமாக நின்றாள். கொஞ்சம் யோசனை செய்து விட்டு, "யார் இது, தெரியலியே?” என்று ராமபத்திரய்யரைப் பார்த்துக் கேட்டாள்.

"நடேசன் பிள்ளை. ஜாடையைப் பார்த்தால் தெரியலையோ?”

"ஊரிலே எல்லாரும் சௌக்கியமா அப்பா: உன் தமக்கை இப்போது எங்கே இருக்கிறாள்? உன் அத்திம்பேர் சரிவர நடந்து கொள்கிறாரா? உன்னோடு பிறந்தவா எத்தனை பேர்?" என்று கேள்விமாரியாகக் கேட்க ஆரம்பித் தாள் விசாலாட்சி.

''மாமிக்குக் குடும்ப விஷயம் பூராவும் தெரியும்போல் இருக்கே மாமா!...... அத்திம்பேர் இனிமேலாவது சரியாக இருக்கவாவது? அவர் ரங்கூனிலேயே அந்தப் பர்மாக் காரியோடு தங்கி விட்டார். மாசா மாசம் அக்காவுக்கும், குழந்தைகளுக்கும் இருநூறு ரூபாய் அனுப்புகிறார். என் தமையன் ஒருவன் மேல் படிப்புக்காக அமெரிக்கா போய் இருக்கிறான். அவனுக்குக் கல்யாணம் ஆகி ஒரு குழந்தை இருக்கிறது. அங்கே வெள்ளைக்காரியுடன் நிரந்தரமாகத் தங்கிவிட்டான். மன்னியையும், குழந்தையையும் நாங்கள் தான் வைத்துக் காப்பாற்றுகிறோம். என்னவோ அப்பா நிறைய சம்பாதிக்கிறாரே தவிர, குடும்பத்தில் சுகத்தைக் காணோம்!" என்று சங்கரன் அலுத்துக் கொண்டான்.

"சம்சாரம் என்றால் அப்படி இப்படித்தான் இருக்கும். சுகமும், துக்கமும் சம்சாரத்தின் இரு சக்கரங்கள். இரண்டையும் மாறி மாறி அனுபவித்துத் தான் ஆக வேண்டும் அப்பா! தெரியாமலா பெரியவர்கள் சம்சாரத்தைச் சாகரத்துக்கு ஒப்பிட்டார்கள்? சமுத்திரத்தில் முத்தும் பவழங்களும் விளைவது போலவே பயங்கரமான ஜந்துக்களும் இருக்கின்றன அல்லவா?"

ராமபத்திரய்யரின் ஆழ்ந்த கருத்தமைந்த சொற்களைப் பணிவுடன் கேட்டுக் கொண்டிருந்தான் சங்கரன். 'உனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லையே?" என்று சங்கரனைப் பார்த்து விசாலாட்சி கேட்டதும், "இல்லை மாமி!" என்று பதில் அளித்தான் சங்கரன்.

"வயசாகிறது போல் இருக்கே. பெண்ணுக்குக் கல்யாணம் ஆகிறதென்றால்தான் படாத பாடும் பட வேண்டி இருக்கிறது, இந்தக் காலத்தில்!" என்று அலுத்துக் கொண்டாள் அவள்.

அவளுக்கு ஏற்பட்டிருந்த சலிப்பின் காரணத்தை ஒருவாறு புரிந்து கொண்டான் சங்கரன். சற்று முன்பு சிற்றுண்டி அளித்த காமுவுக்கு இன்னும் கல்யாணம் ஆக வில்லை என்பதும் தெரிந்தது தள தளவென்று வாழைக் குருத்து போல் மூக்கும் விழியுமாக இருக்கும் அவளுக்கு என்ன குறை என்பதுதான் சங்கரனுக்குப் புரியவில்லை.
---------------------------

2. காமுவின் கண்ணீர்

சங்கரனின் தகப்பனார் நடேச சர்மாவின் குணமும், போக்கும் அலாதியானவை. அவர், எதையும் தன்னுடைய உரிமையோடு செய்யக் கூடிய மனம் படைத்தவர் அல்ல. சம்பாதிக்க வேண்டியது ஒன்றுதான் தன்னுடைய கடமை களில் ஒன்று என்று நினைத்திருந்தவர். அவர் வீட்டில் அவர் மனைவி மீனாட்சி அம்மாள் இட்டதுதான் சட்டமாக இருந்தது. வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரர் களிலிருந்து பெரிய விவகாரங்கள் வரையில் மீனாட்சி அம்மாளின் இஷ்டப்படி தான் நடந்து வந்தன. வேலைக் காரர்களுக்கு முன் பணம் கொடுக்க வேண்டுமா, பெண்ணை சீர் வகையறாக்களுடன் புத்தகம் அனுப்ப வேண்டுமா, காலேஜுக்குப்' பிள்ளைக்குச் சம்பளம் கட்டவேண்டுமா, எல்லா விவகாரங்களும் அம்மாளின் இஷ்டப்படிதான் நடக்கும்.

அன்று சாப்பாட்டுக்கு அப்புறம் கையில் வெற்றிலைத் தட்டுடன் கூடத்தில் வந்து உட்கார்ந்தாள் மீனாட்சி அம்மாள். பச்சையும், அரக்கும் கலந்து கட்டம் போட்ட ஆரணிப் பட்டுப் புடவை உடுத்தி, இரண்டு மூக்குகளிலும் வைர பேசரிகள் ஜிலுஜிலுவென்று ஜ்வலிக்க ஒரு பெருமூச்சு விட்டுக்கொண்டே உட்கார்ந்தாள்.அவள் காதில் தொங்கிய வைரக் கம்மல்கள் நட்சத்திரங்களைப்போல் சுடர் விட்டன. கையில் புதையப் புதைய கொலுசும், பம்பாய் வளையல் களும், சழுத்தில் வைர முகப்பு வைத்த மூன்று வடம் சங்கிலி யும், முகத்தில் அலாதியாக வீசிக் கொண்டிருந்த லட்சுமி கடாட்சமும் அந்த அம்மாளைப் பார்ப்பவர்களுக்குப் பரவசம் ஊட்டின. நெற்றியில் வட்ட வடிவமான குங்குமத் தின் மேல் சிறியதாக விபூதியும் இட்டிருந்தாள்.வயசு ஐம்பதுக்கு மேல் இருந்தாலும் தாழை மடலைப் போன்ற நிறமும், மூக்கும் விழியும்; அவளால் தான் நடேச சர்மா அதிர்ஷ்டத்தில் கொழிக்கிறார் என்று சொல்லும்படி இருந்தன.

வெற்றிலைக்குச் சுண்ணாம்பைத் தடவிக்கொண்டே ஒரு கொட்டைப் பாக்கை எடுத்து பாக்கு வெட்டியால் 'கடக் கடக்'கென்று வெட்டித் துருவலாகச் செய்து வாயில் போட்டுக் கொண்டாள் மீனாட்சி. பிறகு ஒவ்வொன்றாக வெற்றிலைக்குச் சுண்ணாம்பு தடவி வாயில் போட்டு மென்று கொண்டே, **6 501 607 IT! இன்னிக்கி தபாலில் சங்கரனிடமிருந்து ஏதாவது கடிதாசி வந்திருக்கா?" என்று சர்மாவைப் பார்த்துக் கேட்டாள் அவள்.

இது வரையில் மனைவி வந்து அமர்ந்து வெற்றிலை போடுவதையோ, வேறொன்றையோ கவனிக்காமல் பத்திரிகை படித்துக்கொண்டிருந்தார் சர்மா. மனைவி கேட்டதும் தினசரியை மேஜை மீது வைத்து விட்டு, "நேற்றே கடிதம் வந்ததே உன்னிடம் சொல்ல மறந்து விட்டேன்.ராஜம்பேட்டையில் நான் படித்துக்கொண்டிருந்த போது. என்னுடைய சிநேகிதன் ஒருவனைப்பற்றி உன்னிடம், அடிக்கடி சொல்லி இருக்கிறேனே நினைவிருக்கிறதா உனக்கு?" என்று கேட்டார் சர்மா.

"எல்லாம் தெரியும். ராமபத்திரனைத் தானே சொல் கிறீர்கள்? ஆயிரம் தடவை ‘ஸ்ரீ கிருஷ்ணனும், சுதாமா'வும் போல் நீங்கள் குருகுலவாசம்' செய்ததைச் சொல்லி இருக்கிறீர்களே! மறந்தா போய் விடுவேன் நான்?" என்று அவளுக்கே உரித்தான ஒருவித அலட்சியத்துடன் கூறினாள் மீனாட்சி.

'பணமும். பாக்கியமும் நாமே தேடிக் கொள்பவை அல்ல, சிலர் பிறக்கும்போதே போக பாக்கியங்களை அனுபவிக்கவே பிறக்கிறார்கள். சிலர் அவைகளை அடைய வேண்டும் என்று எவ்வளவு முயற்சி செய்தாலும் கிட்டுவ தில்லை. ராமபத்திரன் என்னைவிடப் படிப்பில் மிகவும் கொரன் எனக்குச் சந்தேகம் ஏற்படும் போதெல் லாம் அவனிடமிருந்து நான் பாடங்களைக் கற்றுத் தெரிந்திருக்கிறேன். ஆனால், அவன் இன்றும் மாசம் நாற்பது ரூபாய்க்கு மேல் கண்ணால் பார்க்க வில்லை" என்றார் சர்மா.

மீனாட்சி அலுப்புடன் தூணில் சாய்ந்து கொண்டாள். பிறகு நிதானமாக, "ஆமாம், சங்கரனிடமிருந்து ஏதாவது கடிதாசி வந்திருக்கா என்று கேட்டால் நீங்கள் பாட்டுக்கு எதையோ சொல்லிக் கொண்டு போகிறீர்களே?" என்றாள்.

"சம்பந்தம் இல்லாமல் பேசவில்லை மீனு. ராமபத்திரன் ராஜம்பேட்டைக்கு அருகே பொன்மணியில் இருக்கிறானாம். சங்கரன் அவனைப் போய்ப் பார்த்து நிலங்களைப் பற்றி விசாரித்ததாகவும், அப்போது ராமபத்திரன் அவனுக்கு ஆசார உபசாரங்கள் செய்து தன்னுடன் வந்து இருக்க வேண்டும் என்று உரிமையுடன் கோபித்துக் கொண்டதாகவும் எழுதி இருக்கிறான். 'பணம் காசு குறைவாக இருக்கிறதே ஒழிய தாராள மனசும், கருணையும் நிறைய இருக்கிறது” என்று சங்கரன் எழுதி இருக்கிறான்.”

சர்மா நண்பனைப் பற்றிய பெருமையில் லயித்து மேலும் பேசுவதற்குள் மீனாட்சி, 'த்சூ” என்று ஒரு பெரு மூச்சு விட்டாள். பிறகு கூடத்தின் மூலையில் வைக்கப் பட்டிருந்த ரத்தினக் கம்பளத்தை எடுத்து விரித்துக் கொண்டு படுத்தாள். சட்டென்று ஏதோ நினைவு வந்தவள் போல், "ஏன்னா! இவன் பாட்டுக்கு ஒரு மாசமா அங்கே போய் உட்கார்ந்திருக்கானே? அந்த டாக்டர் பிராம்மணன் தினமும் வந்து ஜாதகத்துக்கு அலைகிறாரே! எனக்குத் தினமும் ஏதாவது சால்ஜாப்பு சொல்ல முடியவில்லை. இன்றைக்கு வந்தால் சங்கரனின் ஜாதகத்தைக் கொடுத்து விடுகிறேனே?” என்று சர்மாவின் அபிப்பிராயத்தைக் கேட்டாள்.

"ஜாதகத்தைக் கொடுத்தாயானால் அப்புறம் பெண்ணைப் பார்க்கக் கூப்பிடுவார்கள். எதற்கும் அவன் ஊரிலிருந்து வரட்டுமே என்று பார்க்கிறேன்" என்று சர்மா தன் அபிப்பிராயத்தைக் கூறினார்.

"சீக்கிரம் வரச் சொல்லி எழுதுங்கோ அவனுக்கு!" என்று கூறிவிட்டு மீனாட்சி படுத்துத் தூங்க ஆரம்பித்தாள்.

சர்மாவுக்குப் பிள்ளையின் கல்யாணம் அவ்வளவு முக்கியமாகப் படவில்லை. ஏற்கெனவே ஒரு பிள்ளை பேருக்குக் கல்யாணம் பண்ணி ஒரு குழந்தையையும் மனைவி யையும் விட்டு விட்டு மேல் படிப்புக்காக அமெரிக்கா சென்றவள், அங்கேயே ஒரு ஆங்கிலப் பெண்ணுடன் தங்கி விட்டான். அவனைப் பார்த்துப் பத்துப் பதினைந்து வருஷங்களுக்கு மேல் ஆகிவிட்டன. பெண் ஒருத்தி மூன்று குழந்தைகளுடன் கணவனுடன் வாழச் சரிப்படாமல் பிறந்த வீட்டில் ஆறு மாசங்களும், கணவனுடன் ஆறு மாசங்களும் இருந்து வந்தாள்.

வாழாவெட்டியாக இருக்கும் நாட்டுப் பெண்ணையும், அவள் குழந்தையையும் சர்மா தன்னுடனேயே வைத்துக் கொண்டிருந்தார். என்றாவது ஒரு நாள் கணவன் வந்து தன்னுடன் இல்லறம் நடத்துவான் என்கிற நம்பிக்கை யுடனேயே சம்பகம் என்கிற அந்தப் பெண் சிரித்த முகத்துடன், பணத்தாசை பிடித்த மாமியாரிடம் வாழ்ந்து வந்தாள். அவளைப் பார்க்கும் போதெல்லாம் சர்மாவின் மனம் அனலிடை காட்டிய மெழுகு போல் உருகியது. எவ்வளவு தான் சிரித்த முகத்துடன் அவள் துயரத்தை மறைக்க -முயன்றாலும் அவளுடைய கரு நீல விழிகளில் துயாம் தேங்கிக் கிடத்தது. பளபளக்கும் அந்தக் கண்களில் கண்ணீர் தேங்குவதாகவே சர்மாவுக்கு ஒருவித பிரமை ஏற்படுவது உண்டு.

அவருடைய பெண் ருக்மிணியின் குணம் விசித்திர மானது. பிறந்தகத்தில் தகப்பனாரின் சம்பாத்தியமும், உடன் பிறந்தார்களின் வரும்படியும் தன்னைத்தான் சேர வேண்டும் என்று விரும்புகிறவள் அவள். "ஒவ்வொருத்தர் பெண்ணுக்குச் செய்வதில் கால்பங்குக் கூட காணாது இதெல்லாம்” என்று ஒரே வார்த்தையில் கூறி விடுவாள் ருக்மிணி. அவள் கணவன் தன் வேட்டகத்தை ஒரு சுரங்க மாகவே கருதி வந்தான். அவன் தீய நடவடிக்கைகளுக்குப் பணம் தேவையான போதெல்லாம் மனைவியின் மூலம் வேட்கத்திலிருந்து பணத்தை எதிர் பார்ப்பது ஒன்றுதான் அவனுக்குத் தெரிந்த விஷயம்.

இதை யெல்லாம் எண்ணியபடி சிந்தனையில் மூழ்கி இருந்த சர்மா அப்படியே அரைத் தூக்கத்தில் ஆழ்ந்தார். கூடத்தில் மாட்டியிருந்த பெரிய கடியாரத்தின் 'டக் டிக்’ என்ற சத்தத்தைத் தவிர வேறு சத்தம் எதுவுமில்லாமல் அங்கே அமைதி நிலவியது.

டாக்டர் மகாதேவன் அந்த வட்டாரத்தில் பெரிய நிபுணர் என்று பெயர் வாங்கியவர். ரண சிகிச்சையில் அவர், பார்த்த கேசுகளில் யாருக்கும் கெடுதி நேரிட்டது கிடையாது. திறமைக்கு ஏற்றாற்போல் செல்வமும் குவிந்து கிடந்தது. அருமையாக ஒரே ஒரு பெண் மட்டும் திரண்ட இவ்வளவு ஆஸ்தியையும் அனுபவிப்பதற்கு இருந்தாள். ஒரே குழந்தையாக இருந்ததால் மகாதேவன் தம்பதி அவர்கள் பெண் நீலாவை அளவுக்கு மீறிய சலுகை காண்பித்து வளர்த்தார்கள்.

போதாக் குறைக்கு கலாசாலைப் படிப்பும், சங்கீதமும் வேறு நீலாவைச் சற்று நிலை தடுமாறச் செய்தன எனலாம். காலேஜிலே படித்த பெண்கள் எல்லாம் நீலாவைப் போல் இல்லை. சங்கீத மேதைகளான அநேகம் பெண்கள் அன்பும், அடக்கமும் பூண்டு வாழவில்லையா என்ன? நீலா தனக்கு இருக்கும் திரண்ட செல்வத்தையும் அதனால் தன்னுடைய செல்வாக்கான நிலையையும் கண்டு இறுமாந்திருந்தாள்.

டாக்டர் மகாதேவனும், சர்மாவும் 'மாலைச் சங்கத்' தில் (Evening Club) அங்கத்தினர்கள். இருவரும் நண்பர் களாயினர். மகாதேவனுக்குச் சங்கரனின் சரளமான குணம் பிடித்திருந்தது. ஏறக்குறைய ஒரே அந்தஸ்தில் இருக்கும் அவனுக்குத் தன் பெண் நீலாவை மணமுடிக்க ஆசைப்பட்டார் மகாதேவன். இரண்டொரு தடவை சர்மாவிடம் சங்கரனின் ஜாதகத்தைக் கொடுக்கும்படியும் கேட்டார். தன்னுடைய அந்தஸ்தை விட ஒரு படி மேலாக இருக்கும் மகாதேவனுடன் சம்பந்தம் செய்வதற்கு யோசித் தார் சர்மா. மூன்று வேளையும் சோபாவில் சாய்ந்து நாவல் களைப் படித்துக் குவிக்கும் நீலா, கர்னாடகப் பழக்க வழக்கமுள்ள தன் மனைவியிடம் மாட்டுப் பெண்ணாக நடந்து கொண்டு நல்ல பெயர் எடுப்பாளா என்பது அவருக்குச் சந்தேகமாக இருந்தது.

ஒரு தினம் மகாதேவனுடன், நீலாவைப் பார்ப்பதற் காகச் சென்றிருந்தார் சர்மா. ஹாலில் கிடந்த சோபா ஒன்றில் அமர்ந்து புஸ்தகம் எதையோ படித்துக் கொண் டிருந்த நீலா, இவர்களைப் பார்த்ததும் ஒரு சிறு புன்னகை யுடன் மறுபடியும் புஸ்தகம் படிப்பதில் ஈடுபட்டாள். சர்மா தன் நண்பருடன் அங்கு இருந்த நாற்காலியில் உட்கார்ந்த பிறகு கூட நீலா அந்த இடத்தை விட்டு எழுந்திருக்க வில்லை.

"நீலு! அம்மாவிடம் போய் இரண்டு டம்ளர்களில் காபி கொண்டு வரச் சொல்" என்று தகப்பனார் கூறிய பிறகுதான் ஒருவித அலட்சியத்துடன் அவள் எழுந்து உள்ளே சென்றாள்.

நீலா அணிந்திருந்த பஞ்சாபி உடையும், இரட்டைப் பின்னலும் அவள் கொடி போன்ற உடலுக்கு அழகாகத் தான் இருந்தன, இருந்தாலும், தழையத் தழைய கொசுவம் வைத்துக் கட்டிக் கொண்டு. நெற்றியில் பளிச் சென்று குங்குமம் ஒளிர, இழுத்துப் போர்த்திய தலைப்புடன் கணவனைப் பிரிந்திருக்கும் கவலையைச் சிறிதும் முகத்தில் காட்டாமல் பதவிசாக இருக்கும் தன்னுடைய மூத்த நாட்டுப் பெண் சம்பதத்துடன் நீலாவை ஒப்பிட முடிய வில்லை சர்மாவினால்.

இரண்டு வெள்ளி டம்ளர்களில் காபியைக் கொண்டு வந்து மேஜை மேல் வைத்துவிட்டு, நீலா ஒய்யாரமாகச் சாய்ந்து கொண்டு சோபாவில் உட்கார்ந்தாள்.

"குழந்தை படித்துக் கொண்டிருக்கிறாளா?” என்று கேட்டார் சர்மா.

"பி.ஏ. முடித்தாகி விட்டது. மேலே படிப்பதற்கு அப்பாவுக்கு இஷ்டமில்லை. அம்மாவும் குடும்ப வேலை களில் பழக்கம் ஏற்பட வேண்டும் என்று சொல்லுகிறாள்" என்றாள் நீலா, 'களுக்' கென்று சிரித்துக் கொண்டே.

"பள்ளிக்கூடங்களில் தான் சமையல் கலையை ஒரு பாடமாக வைத்திருக்கிறார்களே இந்தக் காலத்தில்!" என்றார் சர்மா.

"என்ன வைத்திருக்கிறார்களோ? நாலு பேருக்கு உப்புமா கிளறி காபி போட வேண்டுமானால் தெரிகிற தில்லை இவர்களுக்கு! ஒருத்தருக்கு அரை ஆழாக்கு ரவை வேண்டுமானால் நாலு பேருக்கு கால்படி என்று அளந்து, உப்பை நிறுத்து, தாளிதம் செய்ய வேண்டிய சாமான்களை நிறுத்து எதற்கு எடுத்தாலும் தராசையும் படியையும் தேட வேண்டியிருக்கு. வாணலியைப் போட்டுக் கண் திட்டத் திற்கு நெய்யோ. எண்ணெயோ ஊற்றி உத்தேசமாக ரவை யைக் கொட்டிக் கிளறி விடுவாள் என் சம்சாரம். நாலு பேருக்கு மேல் இரண்டொருத்தர்கூட சாப்பிடலாம்."

மகாதேவன் இவ்விதம் கூறிவிட்டு, நீலாவைப் பார்த்துச் சிரித்தார். நீலாவின் சிவந்த முகம் மேலும் கோபத்தால் சிவந்தது. ஜிவ்வென்று பறந்து போகும் புறாவைப்போல் மெல்லிய வெண் மஸ்லின் மேலாக்குப் பறக்க மாடிப்படி களில் ஏறி உள்ளே போய் விட்டாள்.

"அடடா! நீங்கள் தமாஷுக்குச் சொனதை நிஜம் என்று கோபித்துக் கொண்டு விட்டாளே குழந்தை?" என்று அனுதாபப்பட்டார் சர்மா.

"அவளுக்குத் தொட்டதற்கெல்லாம் கோபம் வரும், சார்! கொஞ்சம் செல்லமாக வளர்ந்த பெண்" என்று பெருமையுடன் கூறினார் டாக்டர்.

சர்மா வீட்டிற்குக் கிளம்புவதற்கு முன்பு மகாதேவன், "நாளைக்கு வெள்ளிக்கிழமை. ஜாதகம் கேட்பதற்கு உங்கள் வீட்டிற்கு ராகு காலத்துக்கு மேல் வருகிறேன். பிறகு உங்கள் வீட்டிலிருந்து பெண்களும் வந்து நீலாவைப் பார்க்கட்டும்" என்றார்.

"ஆகட்டும். யோசித்துச் சொல்லுகிறேன்.சங்கரன் ஊரில் இல்லை" என்று கூறிவிட்டு வந்து விட்டார் சர்மா.

அதன் பிறகு டாக்டர் மகாதேவன் இரண்டு மூன்று தடவைகள் சர்மாவின் வீட்டிற்கு ஜாதக விஷயமாகப் போயிருந்தார். அப்பொழுது சர்மா வீட்டில் இல்லை. அவர் மனைவி மீனாட்சி அம்மாளே மகாதேவனுடன் பேசும்படி நேரிட்டது. இன்னொருவருடைய குடும்ப விவகாரங்களை விசாரிப்பதில் ஆண்களை விடப் பெண்களுக்கு சாமர்த்தியம் அதிகம். நொடிப் பொழுதில் மகாதேவனைப் பற்றியும், அவர் அந்தஸ்தைப் பற்றியும், அவர் பெண் நீலாவைப் பற்றி யும் மீனாட்சி அறிந்து கொண்டாள். மூத்த நாட்டுப் பெண் சம்பகத்தைப் போல் இல்லாமல் நீலா. பணக்காரியாக இருப்பது அவள் மனத்துக்கு ஆறுதலாக இருந்தது. அண்டாவிலிருந்து குடம் வரைக்கும் வெள்ளிப்பாத்திரங்கள் வாங்கவும், தங்க முலாம் பூசிய டீ செட்டுகள் வாங்கவும் சந்தர்ப்பம் இருக்கிறது என்று நினைத்துச் சந்தோஷப் பட்டாள் மீனாட்சி. சீரும். சிறப்புறமாகத் தடபுடலாக சங்கரனின் கல்யாணத்தை நடத்த வேண்டும் என்கிற ஆசை யால் ஒவ்வொரு நாளும் மகாதேவனிடம் சங்கரனின் ஜாதகத்தைக் கொடுத்துவிடத் துடித்துக் கொண்டிருந் தாள் அவள்.

சர்மா தீர்மானமாகத் தன் அபிப்பிராயத்தை அவளிடம் ஒன்றும் கூறாததால் மீனாட்சி சிறிது தயங்கிக் கொண் டிருந்தாள். வலிய வரும் ஸ்ரீதேவியை உதைத்துத் தள்ளுவது போல் இருந்தது சர்மாவின் மௌனம். அவர் சம்மதம் தெரிவிக்கா விட்டாலும் அடுத்த முறை மகாதேவன் வரும் போது கட்டாயமாக சங்கரனின் ஜாதகத்தைக் கொடுத்து விடுவது என்று தீர்மானித்துக் கொண்டிருந்தாள் மீனாட்சி.
------

பொன்மணி கிராமத்தில் சங்கரன் காமுவின் வீட்டிற்கு அடிக்கடி வந்து போய்க் கொண்டிருந்தான். அவன் வரும் போதெல்லாம் ராமபத்திரய்யர் அவனுக்கு ஆசார உபசாரங்கள் செய்தார். பெரிய அந்தஸ்தில் இருக்கும் தன் நண்பனின் பிள்ளை தன் வீட்டைத் தேடி வந்து இவ்வளவு சரளமாகப் பழகுவது அவருக்கு ஆனந்தத்தை அளித்தது. நகரவாசத்தில் கிடைக்காத ருசியுள்ள அநேக பதார்த்தங்களைச் சமைத்துப் போடும்படி விசாலாட்சியிடம் கூறினார். கொல்லையில் விளைந்த முளைக்கீரையை மோர்க் கூட்டு செய்யும்படி கூறினார். பிஞ்சுக் கத்திரிக்காயை எண்ணெய்க் கறி செய்து போட்டாள் விசாலாட்சி.

எல்லாவற்றிற்கும் மேலாக ராமபத்திரய்யரின் அன்பு சங்கரனின் மனத்தை நெகிழச் செய்தது. பட்டினத்தில் தன் வீட்டில் இருக்கும் பெண்களிடம் இல்லாத ஒரு பெருந் தன்மையைக் காமுவின் குணத்தில் கண்டான். அன்பும் அறிவும் அவள் கண்களில் சுடர் விட்டன.

மதனி சம்பகம் சதா துக்கத்தில் மூழ்கி இருப்பவள். என்னதான் அவள் சிரிக்க முயன்றாலும் துயரம் ததும்பும் அவள் பார்வை மனசைக் காட்டிக் கொடுத்து விடும். தமக்கை ருக்மிணியின் அகம்பாவமும், யாரையும் மதியாத குணமும் அவனுக்கு அவளிடம் உள்ளூர ஒருவித வெறுப்பை ஏற்படுத்தி விட்டிருந்தன. தாயாருக்கு, பணத்தைத் தவிர வேறு ஒன்றையும் உலகத்தில் முக்கியமாக நி னைக்கும் சுபாவம் கிடையாது. தானும், தன் குழந்தைகளும் அமோகமாக வாழ வேண்டும். இதற்காகப் பிறத்தியார் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் பார்த்துச் சகிக்கும் மனசைப் படைத்தவள் அந்த அம்மாள். நிராதரவாக மனைவியையும், குழந்தையையும் விட்டு விட்டு, அயல் நாட்டில் வேறு மணம் செய்து கொண்டு வாழும் பிள்ளையிடம் காண்பிக்க வேண்டிய வெறுப்பை நாட்டுப் பெண் சம்பகத்திடமும், அவள் ஒரே குழந்தையிடமும் காண்பித்து வந்தாள் மீனாட்சி அவளுடைய அதிர்ஷ்டக் குறைவால்தான் தன் பிள்ளை வீடு வாசலை விட்டுக் கண்காணாத இடத்துக்குப் போய் விட்டான் என்று தூற்றினாள் அவள்.

இவ்விதம் செல்வத்தினால் சகல பாக்கியங்களையும் அனுபவிக்க முடிந்திருந்தும் குண வேறுபாட்டால் அவன் குடும்பத்தில் ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமாக இருந்தனர்.

அன்று சாப்பாட்டுக்கு அப்புறம் சங்கரனும், ராமபத்திர அய்யரும் ஊஞ்சலில் அமர்ந்து உலக விஷயங் களைப் பற்றி ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். சமையலறையைப் பெருக்கி சுத்தம் செய்யும் காமுவின் மேல் சங்கரனின் பார்வை அடிக்கொரு தரம் சென்று மீண்டது. கறுப்பு நிறத்தில் அரக்குக் கரைபோட்ட புடவையும், சாதாரண பச்சை சீட்டி ஜாக்கெட்டும் அணிந்திருந்தாள் காமு. கழுத்தில் இரட்டை சரம் கருகமணி மாலையில் சிறிய பதக்கம் ஒன்றைப் பொருத்தி அணிந்திருந்தாள். அதன் நடுவில் பதிந்திருந்த ரத்தினத்தின் சிவப்பைப் போல் அவள் குவிந்த அதரங்களும் தாம்பூலத்தால் சிவந்திருந்தன. கையில் சிவப்பும் பச்சையும் கலந்த கண்ணாடி வளையல் களை அணிந்திருந்தாள். சாட்டை போல் துவளும் பின்னலை அன்று மலர்ந்த குண்டு மல்லிகைச் செண்டு அலங்கரித்தது. 'டானிக்குகளாலும், மாத்திரைகளாலும் பெற முடியாத உடல் வனப்பை வீட்டு வேலைகள் செய்வ தாலும், அன்பையும் பொறுமையையும் கடைப் பிடிப்ப தாலும் பெண்கள் அடைந்து விடலாம் என்பதற்கு அத்தாட்சியாகவே காமு விளங்கினாள்.

சமையலறையைச் சுத்தம் செய்துவிட்டு, சவுக்கம் பின்னும் நூலையும் ஊசியையும் எடுத்துக் கொண்டு ஊஞ்சலைத் தாண்டிக் காமரா அறைக்குள் சென்றாள் காமு. அந்தக் கொஞ்ச நாழிகைக்குள் காமுவின் முகம் குங்குமம்போல் சிவந்துவிட்டது. சங்கரனும் ஏதோ உணர்ச்சியால் தாக்கப்பட்டவன் போல் ராமபத்திரய்யர் பேசுவதையும் கவனியாமல் உட்கார்ந்திருந்தான்.

"பெரிய பண்ணை இருக்கிறாரே, அவருக்கு ஒரு பெண் இருக்கிறது. வயசு பதினாறுக்குமேல் இருக்காது. சுமாராக லட்சணமாகத்தான் இருப்பாள். உனக்கு வேண்டுமானால் பார்க்கலாம் என்று தோன்றுகிறது. உன் அப்பாவுக்கு எழு தட்டுமா,சங்கரா?" என்று ஆரம்பித்தார் ராமபத்திரய்யர். சங்கரனோ, சாட்சாத் சங்கரன் கைலையில் உமாதேவியைப் பார்த்துப் பரவசமடைந்திருந்த நிலையில் இருந்தான் காமுவைப் பார்த்தபடி. சட்டென்று சுய உணர்ச்சி அடைந்தவனாக, "சே, சே, எனக்கு என்ன மாமா கல்யாணத்துக்கு அவசரம்?" என்று அசடு வழியக் கூறிவிட்டு ராஜம்பேட்டைக்குப் புறப்படுவதற்காக ஊஞ்சலை விட்டு எழுந்தான்.

பாதி திறந்திருந்த கதவின் வழியாகக் காமு சங்கரனைப் பார்த்தாள். நேருக்கு நேர் பார்க்கக் கூசிய கண்கள் இப்பொழுது திருட்டுத்தனமாகப் பார்ப்பதால் கூசவில்லை போலும்! கையில் பின்னும் தாமரைச் சவுக்கத்தில் எவ்வளவோ தவறுகள் நேர்ந்திருப்பதை அவள் கவனிக்க வில்லை. சங்கரன் கிளம்பியதும் காமரா அறையின் கதவை லேசாகத் திறந்து கொண்டு வாயிற்படி அருகில் நின்றாள் சாமு.

"அப்பா! இன்னும் அரை மணியில் காபி ஆகிவிடும். சாப்பிட்டுவிட்டுப் போகச் அவரைச் சொல்லுங்கள்” என்றாள் பதவிசாக.

"சாப்பாடே ஒரேயடியாகத் திணறுகிறது! அதற்குள்ளாகவா காபி சாப்பிட முடியும். நாளைக்கு வருறேன் மாமா காபி சாப்பிட!" என்று ராமபத்திர அய்யரைப் பார்த்துக் கூறிவிட்டுப் புறப்பட்டான் சங்கரன்,

சங்கரனை வழி அனுப்ப வாசல் வரையில் போய் விட்டு வந்த ராமபத்திரய்யர் கையில் ஒரு தபால் கவருடன் ஊஞ்சலில் வந்து உட்கார்ந்தார்.

கடிதம் விசாலாட்சியின் ஒன்றுவிட்ட தம்பி முத்தையாவிட மிருந்து வந்திருந்தது. நாலைந்து வருஷங்களாக அவனிடமிருந்து தகவல் ஒன்றும் அதிகமாகத் தெரியாமல் இருந்தது. திடீரென்று ஏழெட்டு மாதங்களுக்கு முன்பு அவன் இரண்டாவது மனைவி தவறிப்போன செய்தியைத் தாங்கிய கடிதம் ஒன்று வந்தது. முதல் மனைவி தவறிய இரண்டு மாசங்களுக் கெல்லாம் இரண்டாவது கல்யாணம் பண்ணிக் கொண்டான். முதல் மனைவிக்கு மூன்று குழந்தைகள் இருந்தார்கள். முத்தையாவுக்கும் வயசு முப்பத்தி ஒன்றுக்கு மேல் ஆகாமல் இருந்ததால் அவனுடைய இரண்டாவது கல்யாணத்தைப் பற்றி யாரும் அவ்வளவாகக் குறை - கூறவில்லை. இரண்டாவது மனைவியும் நான்கு குழந்தைகளை விட்டு விட்டுப் போய் விட்டாள்

"ஐயோ பாவம்! ஏழு குழந்தைகளை வைத்துக்கொண்டு அவன் என்ன பண்ணுவான்
என்று விசனித்தாள் விசாலாட்சி, துக்கச் செய்தி வந்தபோது.

"என்ன பண்ணுகிறது? யாரையாவது சமையலுக்கு வைத்துக் கொண்டு குழந்தைகள் பெரியவர்கள் ஆகும் வரை காலத்தைக் கடத்த வேண்டியது தான்" என்றார் ராமபத்திரய்யர்.

"பணங் காசுக்குக் குறைவில்லாமல் இருந்தாலும், வீட்டிலே ஒருத்தி இருக்கிற மாதிரி ஆகுமா இதெல்லாம்?" என்று விசாரப்பட்ட விசாலாட்சி அன்றே துக்கம் விசாரிக்கத் தம்பியின் வீட்டுக்குப் புறப்பட்டு விட்டாள்.

ஊரிலிருந்து திரும்பி வந்த பிறகு பத்து தினங்கள் வரையில் முத்தையாவின் செல்வத்தைப் பற்றியும், அவன் தன் இளைய மனைவிக்குக் கல்லுக் கல்லாக நகைகள் செய்து பூட்டி இருந்ததையும் சொல்லிக் கொண்டிருந்தாள் விசாலாட்சி. "அரைப் பவுன் மாலையும், தங்க ஒட்டியாணமும் கண்ணைப் பறிக்கிறது. பாழும் பெண் இருந்து அனுபவிக்கக் கொடுத்து வைக்கவில்லை" என்று அங்கலாய்த்துக் கொண்டாள். கெட்டிக் கரைப் புடவைகள் பீரோ நிறைய அடுக்கி வைத்திருக்கும் பிரதாபங்களை ஓயாமல் அளந்து கொண்டிருந்தாள். ராமபத்திரய்யருக்கு எரிச்சல் பற்றிக்கொண்டு வந்தது.

"ஏண்டி, நீ துக்கம் விசாரிக்கப் போனாயா அல்லது வீட்டைச் சோதனை போடப் போனாயா? உன்னுடைய சகிக்க என்னால் உளறல் பத்து நாட்களாக முடிய வில்லையே!" என்று அவர் அதட்டிய பிறகுதான் விசாலாட்சி ஓய்ந்தாள்.

நாற்பத்தி மூன்று வயதானாலும் முத்தையாவுக்கு இன்னொரு விவாகம் செய்து கொள்ள வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டது. முதல் தாரத்துக்குப் பெண் இருந்தாள். அவளுக்குக் கல்யாணம் நடந்தால் அதை விமரிசையாக நடத்துவதற்கு என்னதான் பணம் இருந்தாலும் வீட்டில் ஒரு பெண் இருக்கிற மாதிரி ஆகாது என்று நினைத்து முதலில் மூன்றாந் தாரமாகத் தான் கால்யாணம் பண்ணிக் கொண்டு பிறகு மகளின் கல்யாணத்தை நடத்தத் தீர்மானித்தான்.

"பாருவுக்குக் கல்யாணம் ஆகவேண்டும். அதற்காகத் தான் இந்தக் கல்யாணம் பண்ணிக் கொள்ள நினைத்திருக் கிறேன். காமுவைப் பற்றி எனக்குத் தெரியும். பதவிசும், அடக்கமும், பொறுமையுமே உருவானவள் அவள். இவ்வளவு பெரிய பாரத்தை அவளால் வகிக்க முடியும் என்கிற தீர்மானத்தால் தான் நான் தங்களைத் துணிவுடன் கேட்கிறேன்" என்று அவனிடமிருந்து வந்த கடிதத்தை ராமபத்திரய்யர் கண் கலங்க வாசித்தார்.

வளர்பிறை மதியம் போல் விளங்கும் காமுவின் அழகு, கேவலம் மூன்றாந்தாரமாகத்தானா வாழ்க்கைப்பட்டு மாய்ந்து போக வேண்டும்? பதினெட்டு வயதுப் பெண்ணின் மனத் துடிப்புகளையும், இருதய தாபங்களையும் ஏழு குழந்தைகளுக்குத் தகப்பனாகி இருப்பவனால் உணர முடியுமா?

“ஏழை என்கிற ஒரே காரணத்தினால் அல்லவா முத்தையா துணிந்து என்னைப் பெண் கேட்கிறான்?" என்று பொருமினார் ராமபத்திரய்யர்.

வழக்கம் போல் எங்கோ போய்விட்டுத் திரும்பிய விசாலாட்சி, கணவன் கையில் கடிதம் இருப்பதைப் பார்த்து ஊஞ்சலுக்கு எதிரில் வந்து உட்கார்ந்து கொண்டு, "எங்கேயிருந்து கடிதம் வந்திருக்கிறது?" என்று கேட்டாள்.

“உன் தம்பி எழுதி இருக்கிறான்!" என்று சுருக்க மாகவே கூறி, கடிதத்தை அவளிடம் கொடுத்து விட்டுக் கொல்லைப் பக்கம் போனார் ராமபத்திரய்யர்.

விசாலாட்சி கடிதத்தைக் காமுவிடம் கொடுத்துப் படி க்கச் சொல்லிக் கேட்டாள். "முத்தையா மாமாவுக்குக் கல்யாணம்' என்றதும் காமுவுக்குச் சிரிப்பு வந்தது. ஆனால், மணப் பெண்ணாகத் தன்னைக் கேட்கிறார் என்பதைப் படித்ததும் அவள் முகம் வாட்டமடைந்தது. கடிதத்தை உறையில் போட்டு கூடத்தில் மாட்டியிருந்த கடிகாரத்தின் பின்னால் செருகி வைத்து விட்டுக் காமு சவுக்கம் பின்ன ஆரம்பித்தாள். விசாலாட்சி சிறிது நேரம் ஒன்றும் பேசாமல் ஊஞ்சலில் உட்கார்ந்திருந்தாள்.

கடுதாசியைப் பற்றி அப்பா ஏதாவது சொன்னாரா?” என்று பெண்ணைப் பார்த்துக் கேட்டாள் அவள்.

“கடிதம் வந்தது. படித்துக் கொண்டிருந்தார். அதற்குள் நீங்கள் வந்துவிட்டீர்கள்" என்றாள் காமு.

“நான் வந்து என்ன புரட்டப் போகிறேன். என் வார்த்தை என்றால் தான் உன் அப்பாவுக்கு ரொம்பவும் அலட்சியமாச்சே!" என்று சலித்துக் கொண்டாள் விசாலாட்சி.

கொல்லையில் கிணற்றங்கரையில் வாழை மரங் களுக்கு இடையில் போடப்பட்டிருந்த கல்லில் உட்கார்ந்து என்னவோ யோசித்துக் கொண்டிருந்தார், ராமபத்திர அய்யர். அந்த வருஷம் நல்ல மழை பெய்திருந்ததால் அவர் வீட்டுக் கொல்லையிலிருந்து பார்த்த போது பொன்மணி கிராமத்து ஏரியில் சமுத்திரம் போல் தண்ணீர் ததும்பிக் கொண்டிருந்தது தெரிந்தது.

ஏரியில் படகு ஒன்றில் செம்படவ தம்பதி மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். காற்றுடன் கலந்து வந்தது அவர்கள் களிப்புடன் பாடும் இசை. இளமையும் ஆனந்தமும் தளும்பி நின்றது, அவர்கள் வாழ்க்கையில்.

சமூகத்தில் ஏற்றத் தாழ்வையும், வாழ்க்கையில் ஆனந்தத்தையும் அளிப்பது பணம் ஒன்றுதான் என்று தோன்றியது ராமபத்திரய்யருக்கு, இல்லாவிடில் பணக்கார வீட்டுப் பெண்களைவிட எந்த விதத்திலும் காமு தாழ்ந்தவள் அல்ல. அழகும் அறிவும் அவளிடம் இருக்கிறது. இருந்தாலும் ஏழ்மை அவளைச் சமூகத்தில் ஆனந்தமாக வாழவிடாமல் தடை விதிக்கிறது. பணம் இல்லாமல் அவளை ஏ ஏற்க யாரும் துணிவுடன் வரத் தயங்குகிறார்கள்.முத்தையா கூட தன்னிடம் பணம் இருக்கும் காரணத்தால் தன் வயதையும் யோசியாமல் மூன்றாந்தாரமாக அவளைக் கொடுக்கும்படி கேட்கிறான். ஆனால், செம்படவ தம்பதிக்கு அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான வருமானம் கிடைக்கிறது. அதோடு அவர்கள் திருப்தி அடைகிறார்கள். களிப்புடன் வாழ்கிறார்கள்.

ராமபத்திரய்யர் பெருமூச்சுடன் உட்கார்ந்திந்த கல்லை விட்டு எழுந்தார். மத்தியான வெயில் சுரீர் என்று அவர் வழுக்கை மண்டையைச் சுட்டது. நெஞ்சிலே சுட்ட முத்தையாவின் கடிதம் போல் அது அவ்வளவு தீட்சண்ய மாக இல்லை அவருக்கு.

இங்கே என்ன வேலை பாழாய்ப் போகிறது?" என்று சற்று உரக்கக் கூறியவாறு விசாலாட்சி கொல்லை வாசற் படியில் வந்து நின்றாள். ராமபத்திர அய்யர் திடுக்கிட்டுத் திரும்பிய போது அவள், "சங்கராந்தி போய் காரடை நோன்பும் வரப் போகிறது! பார்த்துக் கொண்டே இருந் தால் ஆடி பிறந்து மறுபடியும் தை பிறக்கக் காத்துக் கொண்டிருக்க வேண்டியதுதான். கன்யாகுமரி மாதிரி வளர்ந்து நிற்கிறது பெண். வெளியிலே தலை காட்ட முடிய வில்லை..." என்றாள் படபடப்போடு.

விசாலாட்சி கோபத்துடன் பேசுவதன் காரணத்தை. அவர் ஒருவாறு ஊகித்துக் கொண்டவராக, "இப்போ என்னை என்ன செய்யச் சொல்றே?" என்று கேட்டார்.

"முத்தையாவின் கடுதாசிக்கு என்ன பதில் எழுதப் போகிறீர்கள்?' என்று பளிச் சென்று கேட்டாள் விசாலாட்சி.

"அவனுக்கு வயசாகிறதே ஒழிய புத்தி இல்லையே? நாற்பது வயதுக்கு மேலே என்ன கல்யாணம் வேண்டி இருக் கிறது? பெண்ணுக்குக் கல்யாணம் பண்ண வேண்டுமானால் இவன் கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டுமா என்ன? நாலு காசை விட்டெரிந்தால் நான் நீ என்று யாராவது செய்து விட்டுப் போகிறார்கள்? பெண்ணுக்குக் கல்யாணம் நிச்சயம் ஆனதும் தெரிவித்தால் நீதான் போய் எல்லாவற்றையும் கவனித்துச் செய்து விட்டு வாயேன்.''

"உங்களிடம் அவன் என்ன யோசனையா கேட்டிருக் கிறான்?" என்றாள் விசாலாட்சி கொஞ்சம் பரிகாசமாக.

"வயசாகியும் புத்தி இல்லையே என்று தான் சொல்லு கிறேன். சங்கரன் இருக்கிறோனே, என்ன அறிவுடன் பேசு கிறான்?” என்றார் ராமபத்திரய்யர்.

'என் தம்பி ஒன்றும் அறிவு கெட்டுப் போகவில்லை. சங்கரன் என்னவோ பிரமாதமாகச் சாதிக்கப் போகிறான் என்று நினைத்துக் கொண்டிருங்கள். பணம் பணத்தோடு தான் சேரும். நாலாயிரம் பிள்ளை நாற்பது ரூபாய் சம்பாதிக்கிறவர் பெண்ணைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளத்தான் வந்திருக்கிறான், பொன்மணியை தேடிக் கொண்டு.

விசாலாட்சி விடுவிடு என்று எழுந்து உள்ளே போனாள். இதுவரையில் சமையலறை ஜன்னல் வழியாகப் பெற்றோரின் சம்பாஷணையைக் கேட்டுக் கொண்டிருந்த காமுவின் கண்களிலிருந்து முத்துப் போல் இரண்டு துளிகள் நீர் கன்னத்தில் வழிந்தது.
----------------------

3. நீலா போட்டியிட்டாள்...

மீனாட்சியின் மத்தியானத் தூக்கம், கலைந்ததும் முதன் முதலில் அவசரமாக சங்கரனின் ஜாதகத்தைப் பெட்டி யிலிருந்து எடுத்து வைத்துக்கொண்டாள். அன்று சாயங்காலம் டாக்டர் மகாதேவன் வந்தால் சாக்குப்போக்கு ஒன்றும் சொல்லாமல் ஜாதகத்தைக் கொடுத்து வேண்டும் என்றும் தீர்மானித்துக் கொண்டாள். ஜாதகத்தை எடுத்துச் சமையலறையில் இருக்கும் சுவாமி படத்தின் அருகில் வைத்து விட்டுச் சமையலறையை ஒரு கண்ணோட்டம் பார்த்தாள் மீனாட்சி.

இரண்டாந்தரம் சிற்றுண்டிக்காக அங்கே யாதொரு ஏற்பாடும் நடக்கவில்லை. மணி இரண்டுக்கு மேல் ஆகியும் வீட்டில் எல்லோரும் பேசாமல் இருப்பதைப் பார்த்ததும் அவளுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. பரபர வென்று ஆட்டுக் கல்லை அலம்பி உளுத்தம் பருப்பை உரலில் இட்டு அரைக்க ஆரம்பித்தாள்.

சமையல் கட்டுக்கு அடுத்தாற் போல் தையல் மிஷினில் ஏதோ தைத்துக் கொண்டிருந்த சம்பகம் திடுக்கிட்டு எழுந்தாள். காலைச் சமையலுக்கு அப்புறம் சமையல்கார அம்மாமி யாரோ உறவினர் வீட்டுக்குப் போக வேண்டும் என்று சொல்லிக் கொண்டு போய்விட்டது அவள் நி னைவுக்கு வந்தது. பயத்துடன் சமையலறை நிலைப்படி அருகில் வந்து நின்று, "அம்மா! நான் அரைக்கிறேன். நீங்கள் எழுந்திருங்கள்” என்றாள் சம்பகம். மீனாட்சி கோபத்தால் குழவியை வேகமாகச் சுற்றத் தொடங்கினாள். சம்பகம் மேடை அருகில் சென்று கும்மட்டியைப் பற்ற வைத்து தண்ணீர் வைத்து விட்டு மறுபடியும்,"அம்மா! எழுந்திருக்கிறீர்களா?" என்று விநயமாகக் கேட்டாள்.

"எழுந்திருக்க வேண்டுமா? இவ்வளவு நாழி வேலை இருக்கிறது என்று உனக்குத் தெரியவில்லையே? இப்போ தான் தெரிஞ்சுதாக்கும்!” என்று படபடவென்று கூறிக் கொண்டே உரலை விட்டு எழுந்தாள் மீனாட்சி.

சம்பகம் பதில் பேசாமல் உரல் அடியில் உட்கார்ந்து அரைக்க ஆரம்பித்தாள்.

"ஒரு நாளைக்குச் செய்ய இப்படி மூக்கால் அழுகிறாயே, உன் புருஷன் சம்பாத்தியம் பாழாகவா போகிறது இங்கே? அவன் சம்பாதிக்க ஆரம்பித்துக் காலணா காசு கூட நாங்கள் கண்ணால் பார்க்க வில்லை. உன்னுடைய அதிர்ஷ்டம் சரியாக இருந்தால் அவன் ஏன் இப்படிக் கண் காணாத இடத்தில் இருக்கிறான்?" என்றாள் மீனாட்சி.

காரணமில்லாமல் மாமியாரின் கோபத்துக்கு ஆளாகும் போதெல்லாம் சம்பகம் மௌனமாக இருந்து விடுவது வழக்கம். துக்கம் தாளாது அவள் எதிரில் அழ ஆரம்பித்து விட்டால் இன்னும் பல கொடுஞ் சொற்களைக் கேட்க நேரிடும் என்று, அவள் துக்கத்தை மனத்துடன் அழுத்திக் கொண்டு விடுவாள். தன்னந் தனியாகப் பேச்சுத் துணை யின்றி இருக்கும் இரவு நேரங்களில் தான் அவள் தன்னுடைய நிலையை நினைத்து அழுவாள். வானத்தில் பவனி வரும் சந்திரனும், சுடர் விடும் தாரகைகளும் அவளுடைய மனத் துயரத்தைக் கண்டிருக்கின்றன. பக்கத்தில் தூங்கும் ஆறு
வயசுப் பெண் பானு திடீரென்று விழித்துக் கொண்டு, தாயின் கண்களில் குளமாகத் தேங்கிக் கிடக்கும் கண்ணீ ரைப் பார்த்து ஒன்றும் புரியாமல் திகைப்பாள். மனத் துயரைத் மறைக்கும் சக்தி—சகிப்புத் தன்மை சம்பகத்துக்கு எப்படியோ ஏற்பட்டு விட்டது.

கட கடவென்று உருளும் குழவியின் சத்தத்தை மீறிக் கொண்டு மறுபடியும் மீனாட்சி அம்மாள் ஆரம்பித்தாள். ''ஆமாம், சங்கரன் ஊருக்குப் போனானே, அவனுடன் நீயும் கொஞ்ச நாள் உன் பிறந்த வீட்டுக்குப் போய் விட்டு வருவது தானே? வருஷக் கணக்காக உனக்கும் உன் குழந்தைக்கும் செய்ய இங்கே கொட்டிக் கிடக்கிறதா?"

என்னதான் பொறுமையுடன் சகித்துக் கொண்டாலும் அதற்கும் ஒரு எல்லை இருக்கிறதல்லவா? பொழுது விடிந்து பொழுது பேர்வதற்குள் நாலைந்து முறைகளாவது தினம், "உனக்குத் தண்டச் சோறு போடுகிறேன்" என்று மீனாட்சி குத்திக் காட்டாமல் இருப்பதில்லை. சர்மா சம்பாதித் திருக்கும் சொத்தில் சம்பகத்தின் கணவனுக்கும் பங்கு உண்டு என்பதை மறந்து மீனாட்சி பேசிக் கொண்டிருந் தாள். சம்பகத்தின் கல்யாணத்துக்காக அவள் பிறந்த வீட்டார் அவர்கள். சக்திக்கு மீறியே செலவழித்தார்கள். பாத்திரங்களும், பண்டங்களும், விலை உயர்ந்த நகை களுமாகச் செய்து போட்டார்கள். ஒட்டியாணம் இல்லாமல் நாட்டுப் பெண் தன் வீட்டுப் படி ஏறக்கூடாது என்று மீனாட்சி தடை விதித்தாள். சம்பகத்தின் தகப்பனா கையில் இருந்த ரூபாயுடன் கடன் வாங்கி இருபது பவுனுக்கு ஒட்டியாணம் செய்து போட்டுப் பெண்ணை மாமியார் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். மருமகன் அயல் நாட்டில் வேறு பெண் ணுடன் தங்கி விட்டான் என்கிற செய்தியைக் கேட்டு மனம் இடிந்து போனவர், அப்புறம் எழுந்திருக்கவே இல்லை. அவருக்குப் பிறகு, தங்கையின் மாமியார் வீட்டார் மீது ஏற்பட்டிருந்த அளவுக்கு மீறிய வெறுப்பால் சம்பகத்தின் தமையன் அவளைப் பற்றி அக்கறையுடன் ஒன்றும் விசாரிப்பதில்லை. வாழா வெட்டி யாக இருந்தாலும், பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் பணத் துடன் போயிருக்கும் அவளைக் கவனிக்க வேண்டிய கடமை தன்னுடையது இல்லைபோல் நடந்து கொண்டான் அவன்.

"மைத்துனர் போகும்போது என்னையும் அனுப்பச் சொல்லி மாமாவைக் கேட்டேன். அவருக்கு என்னை அங்கே அனுப்ப இஷ்டமில்லை என்று சொல்லி விட்டார் அம்மா!" என்றாள் சம்பகம். அவள் கண்களில் நீர் தேங்கி இருந்தது. இருபத்தி ஐந்து வயது கூட நிரம்பாத தான் வாழ்க்கையின் கசப்பு அவ்வளவையும் ருசித்து விட்ட வெறுப்பும் அக்கண்களில் காணப்பட்டது.

"மாமா சொல்லுவார்! ஹும்...அவர் ஏன் சொல்ல மாட்டார்? வளவன்குடி மிராசுதார் வீட்டுப் பெண் வந்ததே உன் அகமுடையானுக்கு! அதை வேண்டாமென்று விட்டு "மகாலட்சுமி மாதிரி இருக்கிறாள் பெண்' என்று உன்னைத் தேடிப் பிடித்து வந்தாரோல்லியோ? லட்சுமீகரம் தாண்டவம் ஆடுகிறது, உன்னாலே!' என்று கையை ஆட்டி முகத்தைச் சுளுக்கி அழகு காண்பித்தாள் மீனாட்சி.

சமையல்கட்டில் மனைவியின் குரல் உரத்துக் கேட்கவே சர்மாவின் மத்தியானத் தூக்கம் கலைந்தது. உடனே எழுந்து சமையலறைக்கு வந்தார் சர்மா. "ஏண்டி, வர வர உன் அட்டகாசம் இந்த வீட்டில் சகிக்கமுடியவில்லை? மத்தி யான வேளையில் உன் தொண்டைதான் இந்தத் தெருவில் கேட்கிறது?" என்று கூறிவிட்டு, குளியல் அறைக்குச் சென்றார் அவர்.

அதற்குள் உளுத்தம் பருப்பை அரைத்து எடுத்துக் கொண்டு, வாணலியில் எண்ணெயை வார்த்து அடுப்பில் வைத்து விட்டுக் காபியைக் கலப்பதில் ஈடுபட்டாள் சம்பகம். நாத்தனார் ருக்மிணி எழுந்து வந்து அதிகாரம் செய்வதற்கு முன்பே காபியைத் தயாராக வைத்து விட வேண்டும் என்கிற பயம் அவளுக்கு.

மீனாட்சி அம்மாள் என்ன தான் அதிகாரம் செலுத்து வதில் கை தேர்ந்தவளாக இருந்தாலும், சர்மாவின் வார்த்தையை மீறி அவளால் ஒன்றும் செய்ய முடிவதில்லை. சள சளவென்று ஓயாமல் சம்பகத்தை அவள் தமையனுடன் அனுப்பி விடச் சொல்லி எவ்வளவோ முறைகள் சர்மாவிடம் கூறியிருக்கிறாள் மீனாட்சி. ஆனால், அவர் அவள் துணைப்பு வதை லட்சியம் பண்ணுவதேயில்லை. அவராலும் பொறுக்க முடியாமல் போனால், அடி சீ அந்தப் பெண் இங்கே இருப்பதால் உன் மஞ்சக் காணி சொத்தா குறைந்து போகிறது? பாவம்! புருஷனைப் பிரிந்து இருக்கும் துக்கம் போதாதென்று நீ ஏன் அதை வாட்டி எடுக்கிறாய்?" என்று ஒரு அதட்டல் போடுவார், பதிலுக்கு முணு முணுத்துக் கொண்டே போய் விடுவாள் மீனாட்சி. அன்றையப் பொழுதுக்கெல்லாம் சம்பகத்துக்குத் திட்டுகளும் இடிச் சொற்களும் பலமாகக் கிடைக்கும்.

மாமனாருக்காக அவர் மேஜை மீது காபியையும், சிற்றுண்டியையும் வைத்து விட்டு சம்பகம் உள்ளே திரும்பும் போது, வாயிற் கதவைத் திறந்து கொண்டு டாக்டர் மகாதேவன் வந்து சேர்ந்தார். வந்தவரை வரவேற்று உட்காரச் சொல்லி விட்டு சர்மா, "அம்மா சம்பகம்! டாக்டர் வந்திருப்பதாக உன் மாமியாரிடம் சொல்" என்று கூறினார்.

சம்பகம் சமையலறைக்குச் சென்று விஷயத்தை அறிவித்தவுடன் சுவாமி படத்து அருகில் சுருட்டி வைக்கப் பட்டிருந்த ஜாதகத்தை அவசரமாக எடுத்தாள் மீனாட்சி. பெரிய அளவில் மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்பாளி படம் அது. மீனாட்சி ஜாதகத்தைச் சரேலென்று எடுத்த வேகத்தில், சுவரிலிருந்து கயிறு அறுபட்டு படம் கீழே விழுந்து, கண்ணாடி சுக்கு நூறாக உடைந்து பூஜை அறை முழுவதும் சிதறியது

'ஏண்டி! படத்தின் கயிறு சரியாக இருக்கிறதா என்று பாக்கமாட்டாயா என்று கூறிக் கொண்டே கீழே சிதறி இருந்த கண்ணாடித் துண்டுகளையும், ஜாதகம் எடுக்கும் போது நேர்ந்த சகுனத் தடையையும் பொருட்படுத்தாமல் மீனாட்சி முன் கட்டுக்கு விரைந்தாள்.

உடைந்த படத்துள், கருணையே வடிவான அம்பிகை யின் வண்ணப் படம் சிறிதும் சேதமடையாமல் இருந்தது.

"தாயே! இந்த குடும்பத்துக்கு யாதொரு கஷ்டமும் வராமல் காப்பது உன்னுடைய கருணை அம்மா!” என்று வாய் விட்டு வேண்டிக் கொண்டே சிதறிக் கிடந்த கண்ணாடித் துண்டுகளைப் பெருக்கிச் சுத்தம் செய்வதில் முனைந்தாள் சம்பகம். "மைத்துனர் சங்கரனின் குணத்துக்கு அவர் நன்றாக இருக்க வேண்டும்" என்று அவள் மன அந்தரங்கத்தில் ஒரு வேண்டுகோள் எழுந்தது.

"அவருக்குக் கல்யாண விஷயம் பேச ஆரம்பிப்பதற்கு முன்பு படம் உடைந்ததே! எதன் ஆரம்பமோ இது” என்று வேறு அவள் மனம் குழம்பிக் கொண்டிருந்தது.

டாக்டர் மகாதேவன் சங்கரனின் ஜாதகத்தை வாங்கிக் கொண்டு அவருடைய பெண் நீலாவின் ஜாதகத்தை மீனாட்சி அம்மாளிடம் கொடுத்தார். 'சங்கரனைத்தான் நேரில் பல இடங்களில் பார்த்திருப்பதால் பிள்ளையைப் பார்க்க வேண்டும் என்கிற அபிப்பிராயம் தனக்கு இல்லை என்பதாகவும், நீலாவும் சங்கரனை அநேக இடங்களில் பார்த்து தன் சம்மதத்தை அறிவித்ததன் பேரில்தான் இந்த விவாகத்துக்குத் தான் முயற்சி எடுத்துக்கொண்டிருப்பதாக வும் தெரிவித்தார். பெண்ணைப் பார்ப்பதற்கு மீனாட்சி அம்மாளையும், சங்கரனின் தமக்கை ருக்மிணியையும் வரச் சொல்லி அழைத்தார். மரியாதைக்காக மேஜைமீது வைக்கப் பட்ட சிற்றுண்டியைச் சிறிது ருசிபார்த்து விட்டு, ஒரு பெரிய கும்பிடோடு விடை பெற்றுக் கொண்டார் அவர். அந்த ஹாலை விட்டு அவர் வெளியேறி ஐந்து நிமிஷங்கள் வரையில் புகை போல் சூழ்ந்திருந்தது அவர் குடித்த சுருட்டின் புகை!

"வருகிற இடத்திலுமா ஊத வேண்டும் சுருட்டை!" என்று தன் அருவருப்பை முகத்தைச் சுளித்து அறிவித்துக் கொண்டாள் மீனர்ட்சி.

"நாற்றம் சகிக்கவில்லை!" என்று உதட்டை மடக்கித் தன் அபிப்பிராயத்தைக் கூறிவிட்டு ருக்மிணி, அன்று மாலை பெண் பார்ப்பதற்காகத் தன்னை அலங்காரம் செய்து கொள்வதில் முனைந்தாள்.

'ஏன்னா! நீங்களும் வருகிறீர்களா எங்களோடு?” என்று சர்மாவைக் கொஞ்சியவாறு கேட்டாள் மீனாட்சி. நாணிக் குழைந்து அவள் கேட்ட மாதிரியிலிருந்து அவளே ஒரு கல்யாணப் பெண்ணைப் போல் இருந்தாள் என்று சொல்லலாம்.

சர்மா சாய்வு நாற்காலியில் நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டார். பிறகு தொண்டையைக் கனைத்துக் கொண்டு, 'மீனு! எந்தக் காரியத்தையும் செய்வதற்கு முன்பு நன்றாக யோசனை செய்ய வேண்டும். டாக்டரின் பெண்ணை நான் இரண்டு மூன்று தடவைகள் பார்த்திருக்கிறேன். பெண் 'ரொம்பவும் நாகரிகமாக இருப்பாள். மாமியார், மாமனார் எதிரில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் அவளுக்குத் தெரியாது. காபி அவள் இருக்கும் இடத்துக்குத்தான் அனுப்ப வேண்டும் சம்பகம் மாதிரி நீ சொல்வதை யெல்லாம் கேட்டுச் சகித்துக் கொண்டிருக்க மாட்டாள். நாளைக்குக் கல்யாணம் நடந்த பிறகு எந்தவித மனஸ்தாபங்களுக்கும் இடமில்லாமல் நடந்து கொள்ள வேண்டும். பெண் என்னவோ நன்றாகப் படித்திருக்கிறாள். லட்சணமாகவும் இருக்கிறாள்" என்றார்.

சர்மா தன் அபிப்பிர யத்தைக் கூறிவிட்டு மறுபடியும் நாற்காலியில் சாய்ந்து கொண்டு தினசரி படிப்பதில் முனைந்தார்.

'அவளை நான் என்ன சொல்லக் கிட க்கிறது? அவ்வளவு விவேகம் இல்லையா எனக்கு?' என்று மனத் தாங்கலுடன் கேட்டாள் மீனாட்சி தன் கணவனைப் பார்த்து.

மணி ஐந்துக்கு டாக்டர் மகாதேவன் வீட்டிற்கு வருவதாகத் தெரிவித்திருந்ததால் மீனாட்சி பேச்சை அதிகம் வளர்த்தாமல் இருந்து விட்டாள். பெண்ணும், தாயாரும் உடுத்திக் கொண்டு புறப்பட்டார்கள். ருக்மணி பள பள வென் று ஜ்வலிக்கும் வைர நெக்லெஸை அணிந்து கொண்டாள். 'உப்'பென்று பருத்திருந்த கழுத்தில் புதையப் புதைய இருந்தது அட்டிகை. மீனாட்சி அம்மாள் கெம்பு அட்டிகையையும், கெம்பு வளையல்களையும் அணிந்து அரக்குப் புடவை உடுத்திக் கொண்டு புறப்பட்ட போது சர்மா லேசாகச் சிரித்து, "இன்றைக்கு அம்பாளுக்கு ரத்தினச் சேவை போலிருக்கிறது!" என்று அவளைப் பரிகசித்தார்.

இருவரும் காரில் புறப்பட்டுச் சென்ற பிறகு, சர்மா பின் கட்டு கூடத்துக் கதவு அருகில் நின்று கொண்டிருந்த சம்பகத்தைப் பார்த்தார். சாதாரண நூல் சேலை உடுத்திக் கழுத்தில் பளிச்சென்று ஒளிரும் மாங்கல்யச் சரடுடன், ஒரு மெல்லிய தங்கச் சங்கிலியும் கைகளில் மெல்லிய இரண்டு தங்க வளையல்களும் அணிந்து, நெற்றியில் பளிச்சிடும் குங்குமப் பொட்டுடன் நிற்கும் சம்பகம் எளிமைக்கு எடுத்துக் காட்டாக இருந்தாள்.

"நீயும் போய்விட்டு வருவது தானே அம்மா?" என்று கேட்டார் சர்மா, நாட்டுப் பெண்ணைப் பார்த்து.

"வீட்டிலே சமையல்கார மாமி இல்லை. இரவு தான் வருவாள். எல்லோரும் போய் விட்டால் எப்படி?" என்று விநயமாகக் கூறினாள் சம்பகம்.

சமையல்காரி இருக்கும் நாட்களில்கூட சம்பகம் சிறையில் அடைபட்ட சீதா தேவியைப் போல் வெளியில் எங்கும் 'போகாமல் இருப்பது சர்மாவுக்குத் தெரியும். கணவன் செய்த குற்றத்துக்காக அவள் மனம் வருந்தி துன்ப வாழ்க்கை நடத்துவதும் அவருக்குத் தெரிந்த விஷயம்தான். சமையல்காரிக்கு உதவியாக வேலைகள் செய்தது போக எஞ்சி இருக்கும் நேரத்தைக் குடும்பத்துக்கு வேண்டிய துணிமணிகள் தைப்பதில் கழிப்பாள் சம்பகம்,

“குழந்தை பானு பள்ளிக்கூடத்திலிருந்து வந்து விட்டாளா?" என்று சர்மா கேட்டார்.

"இன்றைக்கு மத்தியானம் அவளுக்குப் பள்ளிக்கூடம் விடுமுறையாம். அந்தப் பக்கத்தில் இருக்கிறாள் போல் இருக்கிறது" என்று கூறிவிட்டு, பானுவை அழைத்து வர கொல்லைப் பக்கம் சென்றாள் சம்பகம்.

கொல்லையில் ஒரு மாமரத்தடியில் பானு கண்கள் சிவக்க அழுது கொண்டு உட்கார்ந்திருந்ததைப் பார்த்த சம்பகத்துக்கு வேதனை நெஞ்சைப் பிழிந்தது.

"அம்மா! பாட்டியும், அத்தையும் என்னை அவர்களுடன் வரக் கூடாதென்று சொல்லி விட்டார்கள்" என்று கூறி,பானு பெரிதாக அழ ஆரம்பித்தாள்.

'குழந்தையிடமா இவர்கள் மனக் கசப்பைக் காட்ட வேண்டும். தன் பிள்ளையின் குழந்தை என்கிற பாசம் கூடப் போய்விட்டதோ" என்று சம்பகம் வேதனைப் பட்டாள்.

"பானு! தாத்தா உன்னைக் கூப்பிடுகிறார் அம்மா. அழாமல் சமத்தாக உள்ளே போய் என்ன என்று கேள் பார்க்கலாம்" என்று அவளைத் தேற்றி சம்பகம் உள்ளே அனுப்பினாள்.

உலகத்திலே 'தாய் இல்லாத பிறந்தகமும், கணவன் இல்லாத புக்ககமும் போல்' என்று சொல்லுவது சம்பகத்தின் வரையில் பொருத்தமாக இருந்தது.
---

முத்தையாவின் கடிதம் வந்த பிறகு காமுவின வீட்டில் தினம் ராமபத்திர அய்யருக்கும் அவர் மனைவிக்கும் ஏதாவது சில்லறை சச்சரவுகள் ஏற்பட்டு வந்தன.தம்பிக்குப் பெண்ணைக் கொடுப்பதற்கு சம்மதமாக இருந்தாள் விசாலாட்சி. தம்பியின் வயதோ, மூன்றாந்தாரம் என்கிற காரணமோ, ஒன்றும் அவளுக்குப் பெரிதாகத் தோன்றவில்லை. இந்த வருஷமும் காமுவை கல்யாணமாகாமல் விட்டவைக்க அவள் மனம் ஒப்பவில்லை,

ராமபத்திர அய்யரின் மனம் மட்டும் ஒரே பிடிவாதமாக இருந்தது. ஏழையானாலும் இளைஞனாகவும் மனைவி யிடம் அன்புடையவனாகவும் பார்த்துத்தான் காமுவை ஒப்புவிக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டிருந்தார்.

அன்று சங்கரன் ராஜம்பேட்டையிலிருந்து வந்திருந் தான். ஏழ்மையின் துன்பத்தை வெளிக்குக் காட்டாமல் சதா சிரித்த முகத்துடன் பேசும் ராமபத்திர அய்யர் அன்று என்னவோபோல் இருந்தார். கலகலப்பாகப் பேசாமல் முகத்தில் துயரம் தேங்க அவர் இருந்த நிலைமை சங்கரனைச் சஞ்சலத்தில் ஆழ்த்தியது. சங்கரன் ராஜம்பேட்டையிலிருந்து வந்துவிட்டால் காமு நொடிக்கொரு தடவை ஏதாவது காரணத்தை வைத்துக் கொண்டு அங்கும் இங்கும். போவதும் வருவதுமாக இருப்பாள். அன்று சாப்பாட்டிற்கு அப்புறம் காமு சமையலறையிலேயே ஐக்யமாகி விட்டாள்.

ராமபத்திரய்யர் ஊஞ்சலில் சாய்ந்து கொண்டு . யோசனையில், ஆழ்ந்திருந்தார். சங்கரன் ஏதோ ஒரு புஸ்தகம் படிப்பதில் ஈடுபட்டிருந்தான். ஊஞ்சல் சிறிதே ஆடுவதால் 'ஞொய் ஞொய்' என்கிற சத்தத்தைத் தவிர வேறு ஒரு சத்தமும் இல்லாமல் நிசப்தமாக இருந்தது அந்த வீடு. முற்றத்தில் துளசி மாடத்துக்குக் காலையில் பூஜை செய்தபோது அணிவித்திருந்த நித்திய மல்லிகை மாலையி லிருந்து 'கம்' மென்று வாசனை வீசிக் கொண்டிருந்தது. துளசி மாடத்தைச் சுற்றி அழகாகக் கோலம் இட்டு செம்மண் பூசி இருந்தாள் காமு. அவள் போட்டிருந்த கோலத்தின் மூலமே அவள் கைத்திறனை ஒருவாறு உணர்ந்து கொண்டான் சங்கரன். நொடிக்கொரு தரம் அவன் சமையலறைப் பக்கம் பார்த்து அங்கே காமு இல்லாமல் இருப்பதைக் கண்டு சோர்ந்து போனான்.

"என்ன மாமா இன்றைக்கு ஒரு மாதிரியாக இருக்கிறீர்களே? உடம்பு சரியில்லையா என்ன?" என்று இதுவரையில் பொறுமையாக இருந்தவன் கேட்டே விட்டான்.

"உடம்புக்கு என்ன அப்பா? மனசுதான் சரியாக இல்லை” என்று சூள் கொட்டிவிட்டு, நிமிர்ந்து உட்கார்ந்தார் ராமபத்திரய்யர்.

அதற்குள் கொல்லைப் பக்கத்தில் கட்டியிருந்த கறவைப் பசு மத்தியானத் தீனிக்காக ' அம்மா' என்று கத்த ஆரம்பித்தது. காமு சரேலென்று எழுந்து கொல்லைப் பக்கம் போவதற்காக வெளியே வந்தாள். சங்கரனின் கண்களும் அவள் கண்களும் நேருக்கு நேர் சந்தித்தன..

அகன்ற அக் கருவிழிகள் சிவந்தும் வீங்கியும் இருந்தன. தள தளவென்று சிரிப்புடன் விளங்கும் அவள் அழகிய வதனம் வாடிப் போயிருந்தது. தவிர அவள் கொஞ்சம் களைத்துப் போய் இருப்பதாகவும் சங்கரன் நினைத்தான். ஒரு வினாடிக்குள் காமு சட்டென்று கொல்லைப் பக்கம் போய் விட்டாள்.

“என்ன மாமா புதிர் போட்டுப் பேசுகிறீர்கள்? என்னிடம் சொல்லக் கூடுமானால் விஷயத்தைச் சொல்லுங் களேன்!" என்று சங்கரன் அவரை வற்புறுத்தினான்.

குறுகிய சில நாட்களுக்குள் சங்கரனுக்கும், ராமபத்திர அய்யருக்கும் நெருங்கிய நட்பு ஏற்பட்டிருந்தது. சங்கரனின் வெள்ளை மனமும், பணக்கார வீட்டுப் பிள்ளை என்கிற அகம்பாவம் இல்லாமல் அவன் சரளமாக எல்லோரிடமும் பழகும் சுபாவமும் அவருக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டன. சங்கரன் கேட்டதும் ராமபத்திர அய்யர் கூடத்தில் கடியாரத்துக்குப் பின்புறமிருந்து கடிதம் ஒன்றை எடுத்து அவனிடம் கொடுத்தார்.

கடிதத்தை வாசித்து முடித்ததும் சங்கரன் ஒரு நிமிஷம் யோசித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான். அவன் மனக் கண் முன்பு காமுவின் உருவம் பல தடவைகள் நிழல் படம் போல் சுழன்று சுழன்று தோன்றியது. பதினெட்டு வயசு நிரம்பி, அன்று மலர்ந்த மலரைப் போல் இருக்கும் காமு, நாற்பத்து மூன்று வயசுக்காரனை மணந்து கொள்வதா? பதினாறு வயசில் தனக்கு ஒரு பெண் இருக்கும் போது பதினெட்டு வயசு மங்கை ஒருத்தியை மனைவியாக ஏற்றுக் கொள்ள முத்தையாவின் மனம் ஒப்புகிறது. கடிதம் எழுதவும் தூண்டுகிறது!

அங்கு நிலவி இருக்கும் மௌனத்தை மீறிக் கொண்டு, "பொழுது விடிந்து அஸ்தமிப்பதற்குள் நூறு தடவை அம்மாமி. என்னைத் துணப்பி எடுக்கிறாள் அப்பா! பெண்ணுக்கு வயசாகி வருகிறதே என்கிற விசாரம் அவளுக்கு. ஆனால், காமுவை மூன்றாந்தாரமாகக் கொடுப்பதற்கு எனக்கு இஷ்டமில்லை” என்றார் ராமபத்திர அய்யர்.

“இந்தக் கடிதத்துக்குப் பதில் எழுதி. விட்டீர்களா?” என்று சிறிது பதட்டத்துடன் கேட்டான் சங்கரன்.

'ஆமாம். அவன் ஒரு மனுஷன் என்று மதித்து பதில் வேறு எழுத வேண்டுமா என்ன?" என்றார் அவர்.

எனக்கும் இன்று தபாலில் ஊரிலிருந்து அம்மா கடிதம் எழுதி இருக்கிறாள். எனக்குக் கல்யாணம் நிச்சயம் பண்ணுவதற்கு ஒரே அவசரம் அவளுக்கு. பெண் ஏற்கெனவே தெரிந்த இடம். காலேஜிலே படிக்கிறாள். நான் கூட இரண்டொரு தடவைகள் பார்த்திருக்கிறேன். காமுவைப் போல் இருக்கமாட்டாள். சுமாரான அழகி தான்" என்றான் சங்கரன்.

"இஷ்டமிருந்தால் உன் சம்மதத்தை எழுதி விடேன் அப்பா! 'சுபஸ்ய சீக்கிரம்' என்பார்கள். சங்கரா நான் என்னவோ காமுவைப் பாழுங் கிணற்றில் தள்ளுகிற மாதிரி முத்தையாவுக்குக் கொடுக்கப் போவதில்லை. இன்னும் இரண்டொரு வருஷங்கள் ஆனாலும் பாதகமில்லை. பட்டினத்தில் உனக்குத்தெரிந்தவர்கள் எவ்வளவோ பேர்கள் இருப்பார்கள். ஐம்பது ரூபாய் சம்பாதித்தாலும் பாதக மில்லை. பையன் யோக்கியனாகவும், குணவானாகவும் இருக்க வேண்டும். ஏதாவது பார்த்து ஏற்பாடு செய்வாய் என்கிற நம்பிக்கையுடன் தான் உன்னிடம் சொல்லுகிறேன்."

சங்கரனின் மனம் துடித்தது, "நான். இப்பொழுது கல்யாணம் செய்து கொள்ளும் உத்தேசமே இல்லை. அப்படிச் செய்து கொண்டால் காமுவையே பண்ணிக் கொண்டு விடுகிறேன்!” என்று கூறிவிட்டு நகைத்தான்.

பிச்சைக்காரன் ஒருவனுக்கு முழு வெள்ளி ரூபாய் கிடைத்த மாதிரியும், பஞ்சத்தில் வாடுபவனுக்குப் பால் அன்னம் கிடைத்த மாதிரியும் இருந்தது சங்கரன் கூறிய வார்த்தைகள் ராமபத்திர அய்யருக்கு.

'சங்கரா! இதெல்லாம் என்ன பேச்சப்பா? உன் அந்தஸ்து என்ன? உன் தகப்பனாரும் நானும் நண்பர்களாக இருந்தாலும் ஸ்ரீகிருஷ்ணனும், சுதாமனும் போல் அல்லவா எங்களுக்குள் வித்தியாசம் ஏற்பட்டிருக்கிறது?" என்றார் அவர், உணர்ச்சியுடன். அவர் தொண்டை கரகரத்தது.

"அதனால் என்ன, மாமா? ஸ்ரீபரமாத்மா மனது வைத்ததும் சுதாமனை குபேரனுக்குச் சமமாகச் செய்துவிட வில்லையா? எங்களிடம் தான் பணம் இருக்கிறதே! இன்னொருவர் கொடுத்து எங்களுக்கு ஆக வேண்டியது ஒன்றுமில்லையே?" என்றான் சங்கரன்.

"உனக்கு உலகம் தெரியவில்லை அப்பா. பணம் பணத்துடன் தான் சேரும். காமுவுக்கு ஏதாவது சுமாரான இடமாகப் பார்த்துச் சொன்னாயானால் போதும் அப்பா!" என்றார் அவர்.

"காமுவைக் கல்யாணம் செய்து கொள்ள எனக்கு இஷ்டமிருக்கிறது. அவள் சம்மதத்தைக் கேட்டுச் சொல்லி விடுங்கள், மாமா! மற்ற ஏற்பாடுகளை நான் அப்பா மூலமாய்ச் செய்து கொள்ளுகிறேன்" என்றான் சங்கரன்.

கொல்லையில் மாட்டுக்குத் தீனி வைத்து முடித்து விட்டுக் காமு உள்ளே வந்தாள். சங்கரன் கூறிய வார்த்தைகள் கணீரென்று அவள் காதுகளில் விழுந்தன.

"இது உண்மையா? கனவா?" என்று பல தடவைகள் தன்னையே கேட்டுக் கொண்டு, சமையலறைக்குள் சென்றாள் காமு. அவள் முகம் நாலைந்து தினங்களாக இழந்திருந்த பழைய சாந்தியை மீண்டும் பெற்றது போல் புன்னகையுடன் காணப்பட்டது.
---

மீனாட்சியும், ருக்மிணியும் டாக்டர் மகாதேவனின் வீட்டினுள் நுழைந்தவுடனேயே சோபாவில் ஒய்யாரமாகச் சாய்ந்து உட்கார்ந்து கொண்டிருந்த பெண்ணைப் பார்த்து இருவரும் திடுக்கிட்டனர். ஊதா நிற 'ஸாடின்' பைஜாமாவும், தங்கநிற 'ஸில்க் ஜிப்பாவும்' அணிந்து, அதன் மேல் மெல்லிய மஸ்லின் மேலாக்கைப் பறக்க விட்டிருந்தாள் நீலா. காதளவு தீட்டி விடப்பட்ட மையும், இரட்டைப் பின்னலும், காதுகளில் ஒளிரும் முத்து லோலாக்கும், உதடுகளில் பூசப்பட்டிருந்த சிவப்புச் சாயமும் அவளை நாகரிகப் பெண்களில் முதன்மையானவள் என்பதைச் சொல்லாமல் விளங்க வைத்தன.

மீனாட்சியையும், ருக்மிணியையும் கண்டதும் அவள் தன் புருவங்களை நெரித்து ஒரு ஆச்சர்யத்தை வரவழைத்துக் கொண்டாள் தன்னுடைய முகத்தில். கூடத்தில் யாரோ வந்திருப்பதைத் தன் தாயாரிடம் தெரிவிப்பதற்காக அவள் பின் கட்டுக்கு விரைந்தாள். சிறிது நேரத்துக் கெல்லாம் டாக்டர் மகாதேவனின் மனைவி சீதாலட்சுமி அவசரமாக ஹாலுக்கு வந்து இருவரையும் உபசாரம் செய்து வரவேற்றாள்.

"நீங்கள் வரப்போவதாக பத்து நிமிஷங்களுக்கு முன்பு தான் 'போனி'ல் கூப்பிட்டுச் சொன்னார். எதிர்பார்த்துக் கொண்டுதான் இருந்தேன்" என்றாள் சீதாலட்சுமி. சம்பந்தி வீட்டாரிடமிருந்து பலமான உபசாரங்களை எதிர்பார்க்கும் மீனாட்சி அம்மாளுக்கு முதலில் பெரிய ஏமாற்றமாகவே இருந்தது. தங்கள் வரவை எதிர் பார்ப்பதாகச் சொல்லும் சம்பந்தி அம்மாள் தாங்கள் வந்து பத்து நிமிஷங்களுக்கு அப்புறமே கவனிப்பதைக் கண்டவுடன் கொஞ்சம் அவமான மாகவும் இருந்தது. இருந்தாலும் வெளிக்குத் தன் உணர்ச்சியைக் காட்டிக் கொள்ளாமல் அங்கிருக்கும் சோபாவில் அமர்ந்தாள் மீனாட்சி அம்மாள்.

ஆயிரக் கணக்கான ஏழை மக்கள் கட்டத் துணியின்றித் தவிக்கும் நாட்டில் டாக்டர் மகாதேவன் வீட்டுக் கதவு களும், ஜன்னல்களும் உயர்தர மஸ்லின் திரை அணிந்து காணப்பட்டன. ஹாலின் ஒவ்வொரு மூலையிலும் கருங்காலி மேஜை மீது தந்தச் சிலைகள் வைக்கப் பட்டிருந்தன. அழகிய சீனா பூ தொட்டியில் மலர்ந்த ரோஜா மலர்களைச் செருகி வைத்திருந்தார்கள். பளிச்சென்று எங்கு பார்த்தாலும் துப்புரவாக இருந்தது. கீழே பளிங்குத் தரையில் அழகான காஷ்மீரக் கம்பளம் விரித்திருந்தார்கள்.

சற்று முன்பு பஞ்சாபி உடை அணிந்திருந்த நீலா இப்பொழுது மைசூர் கிரேப் பாவாடையும், ஜார்ஜெட் தாவணியும் அணிந்து கொண்டு வந்தாள். பரிசார்கன் இரண்டு தட்டுகளில் சிற்றுண்டியையும், காபியையும் வைத்து விட்டுப் போனதும் நீலா வெற்றிலைத் தட்டைக் கொண்டு வந்து மேஜை மீது வைத்துவிட்டு, மீனாட்சி அம்மாளையும் ருக்மிணியையும் வணங்கினாள். எதிரில் சோபாவில் அமர்ந்திருந்த சீதாலட்சுமியைப் பார்த்து மீனாட்சி சிரித்துக் கொண்டே, "குழந்தைக்குப் பாடத் தெரியுமா?" என்று சம்பிர தாயத்தை விடாமல் கேட்டாள்.

"பாட்டிலே அவள் அதிக அக்கறை காட்டவில்லை. நாங்களும் வற்புறுத்த வில்லை” என்று சுருக்கமாகக் கூறினாள் சீதாலட்சுமி.

"எத்தனை செல்வமிருந்தாலும் இந்தக் காலத்துக் குழந்தைகள் உடம்பில் எதுவும் போட்டுக் கொள்ளாமல் நிற்கிறதுகள்!" என்று நீலாவைக் குறிப்பாகப் பார்த்துக் கொண்டே கூறினாள், மீனாட்சி

"வேண்டியது செய்து வைத்திருக்கிறேன். நேற்றுக் கூட அவள் அப்பா ஒரு ஜதை முத்து வளையல்களை வாங்கி வந்தார்" என்று கூறிவிட்டு, அருகிலிருந்த அறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே போனாள் சீதாலட்சுமி.

சிறிது நேரத்துக் கெல்லாம் அழகிய தந்தப் பெட்டி ஒன்றை எடுத்து வந்து மேஜை மீது வைத்தாள். பெட்டியைத் திறந்ததும் கண்ணைப் பறிக்கும் ரகங்களில் புது மாதிரியான பல அணிகள் இருந்தன. இவ்வளவு நகை களையும் உள்ளே வைத்துப் பூட்டி விட்டுக் கழுத்தில் நெருக்கமாகக் கோத்திருந்த முத்து மாலை ஒன்றையும், கைகளில் சிவப்புக் கற்கள் பதித்த வளை ஒன்றும், இடது கையில் 'ரிஸ்ட் வாட்சு'ம், காதுகளில் மாங்காய் வடிவத்தில் செய்த பச்சைக்கல் தோடும் அணிந்து நிற்கும் பெண்ணின் மனத்தைப் பற்றிக் கர்னாடக மனுஷியான மீனாட்சி அம்மாளுக்குப் புரியவில்லை! சுமைதாங்கியைப் போல் வடம் வடமாக ஐந்து சரம் தங்கச்சங்கிலியும், கைகளில் ஆறு ஏழு வளையல்களும், காதுகளில் நட்சத்திரம் போல் சுடர் விடும் வைரக் கம்மல்களும், அகலமாகச் சரிகை போட்ட புடவையும் தன்னை ஒரு பத்தாம் பசலி என்பதைச் சொல்லாமலேயே விளங்க வைத்து விடும் என்று மீனாட்சியும் ருக்மிணியும் நினைத்து வெட்கப்பட்டனர்.

"குழந்தை ஊரில் இல்லை. கிராமத்துக்குப் போய் இருக்கிறான். அவனுடைய சம்மதம் தெரிந்தால் முகூர்த்தம் வைத்துக் கொண்டு விடலாம். பெண்ணின் இஷ்டத்தையும் தெரிந்து தான் அவனுக்கு எழுத வேண்டும்" என்றாள் மீனாட்சி.

"மிஸ்டர் சங்கரனை எனக்குத் தெரியுமே! எவ்வளவோ முறைகள் காலேஜில் நடக்கும் விழாக்களில் நாங்கள் சந்தித்திருக்கிறோம்" என்றாள் நீலா பளிச்சென்று.

"மிஸ்டர் சங்கரன், மிஸ்டர் சங்கரன்" என்று மீனாட்சி அம்மாள் தனக்குள் இரண்டு தடவைகள் சொல்லிக் கொண்டாள்.

நாளைக்குக் கணவனாக வரிக்கப் போகிறவனை 'மிஸ்டர் சங்கரன்' என்று மாமியாராகப் போகிறவளின் எதிரிலேயே கூறும் நீலாவின் நாகரிகம் அவளுக்குப் பிடிக்கவில்லை. பக்கத்தில் தந்தப் பேழையில் மின்னும் நகைகள். அரண்மனை போன்ற வீடு. டாக்டர் மகாதேவனுக்கு நீலா ஒரே பெண். திரண்ட இவ்வளவு ஐச்வர்யத்தையும் ஸ்ரீதனமாகக் கொண்டு வரும் நீலா சாக்ஷாத் ஸ்ரீமகாலட்சுமியைப் போலவே அவள் கண்களுக்குத் தோன்றினாள். அவளிடம் காணப்படும் குற்றங் குறைகளை மீனாட்சி அம்மாள் பெரிதாக மதிக்கவில்லை.

தாயும், மகளும் தாம்பூலம் பெற்றுக் கொண்டு வீட்டிற்குத் திரும்பினர். அன்றே மீனாட்சி தன் பிள்ளைக்கு ஒரு கடிதம் எழுதித் தபாலில் சேர்த்தாள்: நிலம் வாங்குவதற்காக அதிக நாட்கள் தாமதிக்க வேண்டா மென்றும் உடனே புறப்பட்டு வரும்படியும் அதில் குறிப்பிட்டிருந்தாள்.

அந்தக் கடிதத்தில் எழுதி இருந்த தகவலைத்தான் சங்கரன் ராமபத்திர அய்யரிடம் முன்பு கூறினான்.


"எந்தன் இடது தோளும், கண்ணும் துடிப்பதென்ன? இன்பம் வருகுதென்று சொல், சொல் சொல் கிளியே!" என்று காமு, இசைத்தட்டில் கேட்டுப் பழகியிருந்த பாட்டைப் பாடிக் கொண்டே கீரைப் பாத்தியைக் கொத்தி விட்டு விதை தெளிப்பதில் ஈடுபட்டிருந்தாள்.

இரண்டு மூன்று தினங்களாகவே காமுவின் மனம் நிறைந்திருந்தது. உள்ளம் இன்ப வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தது. நொடிக் கொருதரம் யாரும் பார்க்காத வேளைகளில் நிலைக் கண்ணாடி முன்பு நின்று தன் அழகைக் கண்டு பிரமித்து நின்றாள். நெற்றியில் அலை அலையாகச் சுருண்டு விழும் கூந்தலைக் கண்டு சங்கரன் மோகித்து விட்டானா வேலைப் போன்ற கருமணிக் கண்களின் காந்த சக்தியில் மனத்தைப் பறி கொடுத்து விட்டானா? வீட்டு வேலைகளில் தான் காட்டும் கைத்திறமையைக் கண்டு உள்ளம் நெகிழ்ந்து விட்டானா? எல்லாவற்றிற்கும் மேலாகத் தன் தந்தையின் ஏழ்மை நிலையைக் கண்டு பரிதாபம் கொண்டா தன்னை அவன் மணக்க விரும்புகிறான்? கையில் பிடித்திருந்த மண் வெட்டியைக் கீழே வைத்துவிட்டு, யோசனையில் ஆழ்ந்திருந்தாள் காமு.

அவனிடமிருந்து இரக்கமும், பச்சாத்தாபமும் பெற காமு விரும்பவில்லை. பெண்மை வேண்டும் இதயபூர்வமான அன்பையும், காதலையுமே அவள் பெற விரும்பினாள். 'பாவம், ஏழை!' என்று சங்கரன் தன்னை ஒன்றும் மணக்க வேண்டாம்! அந்த மாதிரியான இரக்கம் அவளுக்குத் தேவையில்லை.

சங்கரன் வந்து போய் மூன்று தினங்கள் ஆகிவிட்டன். அவன் வரவை திர்பார்த்து ஏங்கும் மனம் காரணமற்ற ஒரு ஆனந்தத்தில் ஆழ்ந்திருந்தது.
---------------------

4. சங்கரனின் சங்கடம்

அன்று ராமபத்திர அய்யர் ராஜம்பேட்டைக்கு ஏதோ அலுவலாகப் போய் இருந்தார். விசாலாட்சி தன் வழக்கம் போல் மத்தியானப் பொழுதைக் கழிக்கப் போய்விட்டாள். கீரைப் பாத்திகளுக்கு தண்ணீர் தெளித்துவிட்டுக் காமு உள்ளே வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து ஆடத் தொடங்கினாள். "இன்பம் வருகுதென்று சொல் சொல் கிளியே!" என்று பாடிக் கொண்டே ஆடினாள். வெறுமனே சாத்தியிருந்த கதவைத் திறந்துகொண்டு சங்கரன் உள்ளே வந்தான். அவன் கையில் சிறிய பெட்டி ஒன்றும், படுக்கை ஒன்றும் இருந்தன.

"அப்பா இல்லைபோல் இருக்கிறது?" என்று காமுவைப் பார்த்துக் கேட்டவன், உரிமையோடு அங்கு இருந்த பெஞ்சியில் உட்கார்ந்து கொண்டான்.

காமுவின் உடல் ஒரு முறை நடுங்கியது. சட்டென்று எழுந்து ஊஞ்சல் சங்கிலியைப் பிடித்துக்கொண்டு நின்றாள். யாருடைய வரவை எதிர்பார்த்து ஏங்கி யிருந்தாளோ, அவனே நேரில் வந்து பேசுகிறான். வெட்கத்தால் முகம் குப்பென்று சிவக்க, தலையைக் குனிந்து கொண்டாள் காமு.

ஆ...மா...ம்" பாழும் வார்த்தைகள் தொண்டை யிலேயே சிக்கிக் கொண்டன.

"நாளைக்கு ஊருக்குப் போகிறேன். இங்கே வந்து இரண்டு நாட்கள் கூட தங்கவில்லை என்று உன் அப்பா கோபித்துக் கொள்ளப் போகிறாரே என்று வந்து விட்டேன்" என்றான் சங்கரன். அவன் மட்டும் நெடு நாள் பழகியவன் போல் அவளுடன் பேசினான்.

"இதோ வந்து விட்டேன். அப்பா இன்னும் அரை மணியில் வந்து விடுவார்"-சமையலறைப் பக்கம் போவ தற்குத் திரும்பினாள் காமு.

"காபி போடுவதற்கு அவசரம் ஒன்றும் இல்லை. உன்னை ஒரு வார்த்தை கேட்க வேண்டும் என்றே ஓடி வந்திருக்கிறேன்."

சங்கரன் ஆவலுடன் காமுவைப் பார்த்தான். தந்தப் பதுமை போல் நிற்கும் அவளுக்குத் தன் கண்ணே பட்டு விடப் போகிறது என்று அஞ்சினான்.

"அன்றைக்கு அப்பாவிடம் சொல்லிக் கொண்டிருந்த தைக் கேட்டாயோ? உன் சம்மதம் தெரிந்தால் ஊருக்குப் போய் வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து விடுவேன்'' என்றான் சங்கரன்.

காமு பூமியைப் பார்த்துக் கொண்டு நின்றாள். ''சம்மதம் வேண்டுமாம் இவருக்கு!" காமுவின் மனம் பல தடவைகள் இவ்வார்த்தைகளைச் சொல்லியது. கரும்பு நின்பதற்குக் கூலியா கேட்பார்கள்? வருடந்தோறும் மார்கழி திங்களில் விடியற்காலம், தான் வணங்கும் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் அருளினால் அல்லவா வலியவே வந்து தன்னை மணக்க வேண்டுகிறார்?- கண்ணனின் கருணைதான் என்ன? கருணைக்கடல் என்று பெரியவர்கள் தெரியாமலா குறிப்பிட்டார்கள் அவனை?

"காமு...!" என்று உள்ளம் குழைய அழைத்தான் சங்கரன்.

காமு தலை நிமிர்ந்து, நீர் நிறைந்த கண்களால் அவளைப் பார்த்தாள்.

"அசடே! ஏன் அழுகிறாய்? லட்சுமி தேவியைப் போல் இருக்கும் உன்னை மணந்து கொள்கிறவன் பாக்கியசாலி அல்லவா? சம்மதம் தானே காமு?" என்று இரண்டாம் முறையாகக் கேட்டான் சங்கரன்.

காமுவின் கொவ்வை அதரங்கள் உணர்ச்சியால் துடித்தன. அதில் நெளிந்தோடும் புன்னகையால் அவள் சம்மதத்தை அறிந்து கொண்டான் சங்கரன்.

அதே சமயம் ராமபத்திர அய்யர் ராஜம்பேட்டை யிலிருந்து திரும்பி வந்து சேர்ந்தார். ரேழியைத் தாண்டி தகப்பனார் உள்ளே வருவதற்குள் காமு சமையலறையில் பதுங்கிக் கொண்டாள்.

"வா, அப்பா சங்கரா! என்ன, படுக்கை பெட்டி எல்லாம் தடபுடலாக இருக்கிறது?" என்று கேட்டு விட்டு, ஊஞ்சலில் உட்கார்ந்தார் அவர்.

''நாளைக்கு ஊருக்குப் புறப்படுகிறேன் மாமா. இங்கு வந்து இரண்டு நாட்கள் கூடத் தங்காமல் போய் விட்டால் கோபித்துக்கொள்ளப் போகிறீர்களே என்று பெட்டி, படுக்கையுடன் வந்து விட்டேன்” என்றான் சங்கரன் புன்சிரிப்புடன்.

அவனுடைய சரளமான சுபாவம் ராமபத்திரய்யருக்கு மேலும் அவனிடம் உள்ள மதிப்பை அதிகரிக்கச் செய்தது.

"விற்றது எல்லாம் போக ஏதோ கொஞ்சம் நிலம் இருக்கிறது. அதையும் விற்று விட்டால் காமுவின் கல்யாணத்தை நடத்தி விடலாம் என்று உத்தேசித்துத் தான் ராஜம்பேட்டை வரைக்கும் ஒருவரைப் பார்க்கப் போயிருந்தேன்” என்றார் ராமபத்திரய்யர்.

"இந்தக் காலத்தில் இருக்கிறதையும் விற்று விட்டால் பிறகு குடும்பம் நடத்துவதே கஷ்டமாகப் போய்விடுமே மாமா? அப்பாவைக் கலந்து யோசனை செய்து நான் விவரமாகத் தெரிவிக்கிறேன். அவசரப்பட்டு விடாதீர்கள்!” என்று எச்சரிக்கை செய்யும் தொனியில் கூறினான் சங்கரன்.

காமு சமையலறையிலிருந்து இரண்டு டம்ளர்களில் காபியைக் கொண்டு வந்து வைத்தாள். இருவர் மனத்திலும் எழும் ஆயிரமாயிரம் உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு, ஒன்றும் தெரியாத பச்சிளங் குழந்தைகள் போல் இருந்தனர் சங்கரனும், காமுவும்.

சங்கரன் கூறிய வார்த்தைகள் நிஜமாக நடக்கக் கூடியவையா? உயர்ந்த பதவியில் இருப்பவரும், செல்வத் தில் திளைத்திருப்பவருமான நடேச சர்மா, 'பரம ஏழையான தன் மகளைச் சங்கரனுக்கு விவாகம் செய்து கொள்ளத் துணிவாரா?''

நடக்க முடியாத விஷயங்கள் சில சமயங்களில் நடந்தே விடுகின்றன. 'ஒன்றை நினைக்கின் அது ஒழிந்திட்டு ஒன்றாகும்' என்கிற பாடல் ராமபத்திரய்யருக்கு. நினைவு வந்தது "எனையாளும் ஈசன் செயல்!" இருந்தால் எதுதான் உலகில் சாத்தியமில்லை என்று நினைத்தார் அவர்.

சங்கரன் ஊருக்குப் புறப்படு முன்பு காமுவிடம் விடை பெற்றுக் கொண்டான். வாசல் ரேழியில் கதவோரமாக நிற்கும் அவளை அன்பு கனியப் பார்த்துக் கொண்டே, “போய் விட்டு வரட்டுமா?” என்று கேட்டு, புன்சிரிப்பு சிரித்தான். இன்பமும், துன்பமும் கலந்த உணர்ச்சியால் காமுவின் கண்களில் நீர் நிறைந்திருந்தது. பணிவுடன் தலையை அசைத்தாள்.

"உன் வீட்டில் எல்லோரையும் விசாரித்ததாகச் சொல் அப்பா' என்று விசாலாட்சி விடை கொடுத்தாள்.

"சங்கரா! முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படுவது போலவும், எட்டாத பழத்துக்குக் கொட்டாவி விடுவது போலவும் இருக்கிறது என் ஆசை, ஆசை வித்தை நீ ஊன்றி விட்டாய், சற்றும் நாங்கள் எதிர்பாராத விஷயத்தை நீ கூறியிருக்கிறாய். பெற்றோர்கள் மனத்தைக் கெடுக்கும் வேண்டாம். படியாக எந்தக் காரியத்தையும் நீ செய்ய யோசித்துத் தகவல் எழுது” என்று ராமபத்திரய்யர் கூறி வழி அனுப்பினார் சங்கரனை,

சங்கரனின் புன்முறுவல் தவழும் முகம் எதையும் ஒரு சிரிப்புடன் ஏற்றுக் கொண்டது.

வண்டி மாடுகளின் சதங்கை ஒலி 'ஜல் ஜல்' என்று சப்திக்க, வண்டி தெருக்கோடி திரும்பி ரயிலடியை நோக்கி விரைந்தது. காமுவின் எழில் வதனம் அழியாத சித்திரமாக சங்கரன் மனத்துள் பதிந்து இருந்தது. "எல்லோரும் எவ்வளவோ நகைகளை அணிந்து கொள்ளுகிறார்களே, காமுவுக்கு அந்தக் கருகமணி மாலை ஒன்றே எவ்வளவு சோபையைக் கொடுக்கிறது?" என்று எண்ணிப் பூரித்துப் போனான் அவன்.

"எல்லோரும் விலை உயர்ந்த உடுப்புகளாக உடுத்திக் கொள்கிறார்களே,சாதாரண கதர் வேஷ்டியும், சட்டை யுமே அவருக்கு எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது?' என்று வீட்டில் காமரா அறையில் உட்கார்ந்திருந்த காமு நினைத்துக் கொண்டாள். ரயிலில் பிரயாணம் செய்யும் சங்கரனின் மனமும், பொன்மணி கிராமத்தில் வீட்டில் காமரா அறையில் நூல் சவுக்கம் பின்னும் காமுவின் மனமும் ஒரே சிந்தனையில் மூழ்கி இருந்தன.

சங்கரன் ஊருக்குப் போன பிறகு அங்கே நிலவி இருந்த நிசப்தத்தைக் கலைத்துக் கொண்டு, 'முத்தையாவுக்கு என்ன பதில் எழுதப் போகிறீர்கள்?" என்று கேட்டாள் விசாலாட்சி.

"என்னத்தை எழுதுகிறது அவனுக்கு!" என்று பதில் கூறினார் ராமபத்திர அய்யர் அலட்சியமாக.

"என்ன எழுதுகிறதாவது? பச்சைக் குழந்தையா என்ன நீங்கள், நான் எழுதச் சொல்லித் தர? அவன் எழுதியிருக்கிற விஷயத்துக்கு உங்கள் சம்மதத்தை எழுதுங்கள். அவ்வளவு தான்!" என்றாள் விசாலாட்சி.

ராமபத்திர அய்யர் ஒரு வரட்டுச் சிரிப்புச் சிரித்தார். மனைவியின் அறியாமையைக் கண்டு அவர் அப்படித்தான் சிரிப்பது வழக்கம்.

"அவன்தான் என்னவோ தெரியாமல் உளறுகிறான் என்றால் நீயுமா அதையே சொல்லிக் கொண்டிருப்பாய்?” என்றார் கோபத்துடன்.

"அவன் உளறுகிறான்! நீங்கள் 'பெப்பே' என்கிறீர்கள்! அவ்வளவுதான் வித்தியாசம். அந்தப் பிள்ளை என்னவோ சொல்லிவிட்டுப் போய் இருக்கிறான் என்றுமலைக்கிறீர்கள். என்னையும் பைத்தியக்காரியாக நினைத்துக் கொண்டிருக் கிறீர்கள். நமக்கும் அவர்களுக்கும் மலைக்கும், மடுவுக்கும் உள்ள சம்பந்தம்தான் உண்டு!"-விசாலாட்சி வருத்தம் தொனிக்கக் கூறினாள்.

சங்கரன் வார்த்தை தவறுபவனா? தன்னிடமும், காமு விடமும் பரிதாபம் கொண்டு கூறிய வார்த்தைகளா அவைகள்? ராமபத்திர அய்யர் கொஞ்சநேர சிந்தனையில் மூழ்கி இருந்தார்.

கடவுளின் செயல் இருந்தால் எதுவும் நடக்கக் கூடும் என்று சிறிது நேரத்துக்கு முன்பு உறுதியான தீர்மானத்துடன் இருந்தவரின் உள்ளமும் கலங்கியது. மாதம் நாலாயிரம் சம்பாதிக்கும் சர்மாவின் அந்தஸ்து எங்கே. நாற்பது ரூபாய் சம்பாதிக்கும் ராமபத்திர அய்யருடைய நிலைமை எங்கே? அதற்காகப் பெற்று வளர்த்த பெண்ணைக் கிணற்றில் தள்ளுவது போல் மூன்றாந்தாரமாகவா விவாகம் செய்து தருவது? இது எவ்வளவு பாதகமான செயல்?

பலதரப்பட்ட கேள்விகள் ராமபத்திரய்யரின் மனத்தைக் குழப்பி, அவர் தலையைக் கிறுக்க வைத்தன.

"அம்மா காமு! நான் கொஞ்சம் கழனி வரைக்கும் போய்விட்டு வருகிறேன்" என்று கூறிவிட்டு, மனைவி கேட்ட கேள்விக்குப் பதில் ஒன்றும் கூறாமல் கொல்லைப் பக்கமாகக் கழனி வெளியை நோக்கிப் போனார், ராமபத்திர அய்யர்.

"நான் எதற்கு வரட்டுத் தவளை மாதிரி கத்த வேண்டும்? அததன் தலையெழுத்துப்படி நடக்கிறது! கோபு அகத்தில் அப்பளம் இடக் கூப்பிட்டார்கள் என்னை போய்விட்டு வருகிறேன் காமு" என்று கூறிவிட்டு, விசாலாட்சியும் கிளம்பி விட்டாள்.

தனியாக விடப்பட்ட காமுவின் மனம் தாமரை இலைத் தண்ணீர் மாதிரி தத்தளித்தது.

"என்னுடைய சம்மதம் ஒன்றுதானே கேட்டார் அவர்? வேறு சீர் சிறப்புகளைப் பற்றி லட்சியம் செய்பவராகவே காணோமே?" என்று பல விதமாக நினைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள் காமு. மணி ஜோஸ்யர் அடிக்கடி தன் தந்தையிடம் 'அவள் ஒரு அதிர்ஷ்டக்காரி' என்று கூறி வருவதை நினைத்துப் பார்த்தது அவள் மனம். அந்த அதிர்ஷ்டம் இதுதானோ என்றும் நினைத்தாள் காமு.

எந்த நிமிஷத்தில் யாரைத்தேடி ஸ்ரீ மகாலட்சுமியின் 9 டாட்சம் ஏற்படுகிறது என்பது யாராலும் அறிய முடியாத ஷயம் அல்லவா? காமுவின் அதிர்ஷ்டத்தால் அவளும், அவள் குடும்பமும் உயர வேண்டும் என்று இருந்தால் அப்படி நடந்தே தீரும். கடவுளின் கருணை இருந்தால் எது வேண்டு மானாலும் நடக்க முடியும் என்று அவள் தந்தை தீர்மானித்து இருந்தபடியே காமுவும் தீர்மானித்துக் கொண்டாள்.
----

மீனாட்சி அம்மாளும், ருக்மிணியும் பெண் பார்த்து விட்டு வந்த பத்து தினங்களுக்கு அப்புறம் ஒரு தினம் திடீரென்று பள்ளிக்கூடத்திலிருந்து வந்த பானுவுக்கு லேசாக ஜுரமும், இருமலும் ஆரம்பித்தன. சம்பகம் முதலில் அதை அவ்வளவாகப் பாராட்டாமல் கஷாயம் வைத்துக் குழந்தைக்குக் கொடுத்தாள்.

அந்த வீட்டில் எடுத்ததற்கெல்லாம் ஓயாமல் ருக்மிணியும், அவள் குழந்தைகளும் மருந்து சாப்பிடுவார்கள். பொழுது விடிந்தால் அரை ‘பாக்கெட்' பிஸ்கோத்துகளைக் கொடுத்துவிட்டுக் குழந்தை சரிவரச் சாப்பிடுவதில்லை என்று சொல்லிக் கொண்டு டாக்டரிடம் இழுத்துக்கொண்டு ஓடுவாள் ருக்மிணி அவர் தன் மனத்துக்குள் சிரித்துக் கொண்டே ஏதாவது மருந்தைக் கொடுத்து அனுப்புவார். ஓயாமல் பசியால் வாடும் ஏழை மக்களின் குழந்தைகளுக்கு ஒரு பிடி அன்னம் கொடுக்க மறுக்கும் உள்ளம், வெள்ளித் தட்டில் தயிர் விட்டுப் பிசைந்த சாதத்தைக் கூசாமல் நாய்க்குப் போடத் தயங்குவதில்லை.

பானுவுக்கு உடம்புக்கு வந்தால் முதலில் அதைப்பற்றி அவள் தாத்தா சர்மாவிடம் யாரும் சொல்லிவிடக் கூடாது என்பது மீனாட்சி அம்மாளின் தடை உத்தரவு! 'தண்டத்திற்குப் பணம் செலவழித்துப் பிள்ளையின் குழந்தைக்கு வைத்தியம் பார்க்கக் குழந்தையின் தகப்பன் ஒன்றும் சம்பாதித்துப் புரட்டவில்லை' என்பது அவள் தீர்மானம். சுக்கும், மிளகும்தான் பானுவின் ஔஷதங்கள்.

அந்த வீட்டிலேயே பானுவிடம் அன்புடன் இருப்பவர் சர்மா ஒருவர்தான். ஆகவே, அவருடைய அன்பையும் அந்தக் குழந்தை அடைவதில் மீனாட்சி அம்மாளுக்கு விருப்ப மில்லை.

குழந்தைக்குக் கஷாயம் கொடுத்துப் போர்த்திப் படுக்க வைத்து விட்டுத் தன் அலுவலைக் கவனிக்க ஆரம்பித்தாள் சம்பகம். சங்கரன் காரியாலயத்திலிருந்து வந்ததும் பானுவிடம் சிறிது நேரம் பேசுவான். அவன் அவ்விதம் குழந்தையிடம் சலுகை காட்டுவதும் மீனாட்சிக்குப் பிடிக்க வில்லை.

"ஆமாம், அது ஒண்ணுதான் குறைச்சல்!” என்று முகத்தைத் தோள் பட்டையில் இடித்துக் கொண்டு போவாள் அவள்.

அன்று டாக்டர் மகாதேவன் சங்கரனின் விருப்பத்தை அறிந்து கொண்டு போக வந்திருந்தார். சங்கரன் ஊரி லிருந்து வந்தது முதற்கொண்டு அவன் மனம் குழம்பிக் கிடந்தது. காமுவின் அழகிய வதனம் அடிக்கடி தோன்றி அவனைச் சஞ்சலத்தில் ஆழ்த்தியது குழம்பிய மனத்துடன் சங்கரன் தோட்டத்தில் உலாவிக்கொண்டே யோசனையில் ஆழ்ந்திருந்தான்.

தகப்பனாரிடம் தான் ஊரிலிருந்து வந்ததும் காமுவைப் பற்றிப் பிரஸ்தாபித்தது அவன் நினைவுக்கு வந்தது.

"எனக்கு நீ யாரைக் கல்யாணம் பண்ணிக் கொண் டாலும் ஒன்றுதான் அப்பா. பணம் பணம் என்று பறக்கிறவள் உன் அம்மாதான். அவளுடைய அபிப்பிராயத் தில் பணம் ஒன்றுக்குத்தான் மதிப்பு இருக்கிறதே ஒழிய வேறு விஷயங்களுக்கு மதிப்பே இல்லை! பதினைந்தாயிரம் சீருடன் வந்த உன் மதனி சம்பகம் இந்த வீட்டில் படும் அவஸ்தையைப் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறாய் சங்கரா? நீயும் ஒரு ஏழைப் பெண்ணைக் கொண்டு வந்து இந்த வீட்டில் அவஸ்தைப்பட விட்டு வைக்கப் போகிறாயா?" என்று கேட்டார் சர்மா.

சங்கரன் காமுவைப் பற்றிக் கூறியபோது, "ஆமாம். ஒன்றும் இல்லாமல் போனால் இரண்டாந்தாரமாக யாருக்காவது கொடுக்கிறதுதானே?" என்று வெகு அலட்சியமாகச் சொன்னாள் மீனாட்சி அம்மாள், தகப்பனார் சர்மாவோ எதிலும் பட்டுக் கொள்ளாதவர். தாய் ஒரு அகங்காரம் பிடித்தவள். சங்கரன் காமுவைப் பற்றி அந்த வீட்டில் யாருடன் பேசுவது? யோசனையில் மூழ்கி இருந்த சங்கரனைச் சம்பகம் வந்து கூப்பிட்டாள்.

"அம்மா உங்களைத் தேடுகிறாரே?' என்றாள் சம்பகம்.

பரிதாபமான அந்த முகத்தைப் பார்த்ததும் சங்கரனுக்குக் காமுவின் வருங்கால வாழ்வு இந்த வீட்டில் இன்னும் பரிதாபமாக ஆகிவிடக் கூடும் என்று தோன்றியது.

'மன்னி, எனக்கு ஏனோ கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்கிற எண்ணமே இல்லை?" என்று கூறினான் சங்கரன்.

"பெண் நன்றாக இருக்கிறாளாமே? எல்லோரும் பார்த்து விட்டு வந்தார்கள். நீங்களும் பார்த்திருக்கிறீர்களாம். "

"பெண் பார்ப்பதற்கு நீங்கள் போக வில்லையா மன்னி?" என்று ஆச்சரியத்துடன் கேட்டான் சங்கரன்.

"இல்லை. நான் எதற்கு?" அவள் கூறிய பதிலில் அந்தக் குடும்பத்தின் மனோபாவம் பளிங்கு போல் தெரிந்தது.

"சம்பகம் எதற்கு? வாழாவெட்டி! கணவனால் கை விடப்பட்டவள் எதற்கு?''- இவ்வாறு எண்ணியபோது, சங்கரனுக்கு மூளையே குழம்பி விடும் போல் ஆகிவிட்டது.

''மன்னி! பானு எங்கே?' என்று கேட்டான்.

“ஜுரம் நெருப்புப் பறக்கிறது. நான் வருகிறேன்” என்று கூறிவிட்டு, சம்பகம் அங்கிருந்து போய்விட்டாள்.

அடுப்பங்கரையில் தன்னுடைய மேற்பார்வையில் தயாரான ரவாஸொஜ்ஜியையும், வெள்ளி டம்ளரில் காபியையும் எடுத்துப் போய் மீனாட்சி அம்மாள் டாக்டர் மகாதேவனுக்கு உபசாரம் பண்ணினாள்.

"சீர் விஷயங்கள் எல்லாம் நீங்கள் ஒன்றுமே சொல்ல வேண்டியதில்லை. எனக்கு இருப்பதெல்லாம் நீலாவுக்குத் தான். அவளைத் தவிர வேறு யாருக்குக் கொடுக்கப் போகிறேன் நான்?” என்று பெருமையுடன் கூறி முடித்தார் ம காதேவன்.

"சங்கரனை ஒரு நிமிஷம் பார்த்துவிட்டுப் போய் விட்டால் தேவலை" என்று மகாதேவன் அவசரப்படுத்தவே, மறுபடியம் மீனாட்சி அம்மாள் அவனைத் தேடிக் கொண்டு கொல்லைப் பக்கம் வந்தாள். ஆனால், சங்கரன் அங்கு இல்லாமல் குழந்தை பானுவின் பக்கத்தில் உட்கார்ந்திருந் தான். நெருப்புப் பறக்கும் ஜுர வேகத்தில் குழந்தை மூச்சு விடுவதற்கே திணறினாள். பக்கத்தில் சம்பகம் துயரமே வடிவாக உட்கார்ந்திருந்தாள்.

'ஏண்டா, ஒரு நாழியாக உன்னைத் தேடுகிறேன். அவர் உன்னைப் பார்க்க வேண்டும் என்று காத்துக்கொண்டிருக் கிறார். நீ பாட்டுக்கு இங்கே உட்கார்ந்திருக்கிறாயே? இதுக்கு என்ன முழுகி விட்டதாம் இப்போ?" என்று அதிசயத்துடனும், ஆத்திரத்துடனும் கேட்டாள் மீனாட்சி அம்மாள்.

சங்கரனுக்குத் தாயின் குணம் தெரியும். தமையனால் நிராதரவாக விடப்பட்ட குழந்தை பானுவும், சம்பகமும் அந்த வீட்டில் படும் அவஸ்தையும் தெரியும்.

"வருகிறேன் அம்மா, பானுவுக்கு ஜுரம் அதிகமா இருக்கிறதே? சாயங்காலம் என்னிடம் ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் டாக்டர் வீட்டுக்குக் கூட்டிப் போய் இருப்பேனே?"

பிரசன்னமாக இருந்த மீனாட்சி அம்மாளின் முகம் கடு கடுவென்று மாறியது. கோபத்தால் முகம் சிவக்க சம்பகத்தை உருட்டி விழித்துப் பார்த்தாள்.

"அதுக்குத் தான் குளிர் காலமானால் காய்ச்சலும், இருமலும் வருகிறதே? இவள் செல்லம் கொடுத்துக் கொடுத்து குட்டிச் சுவராக்குகிறாள் அதை. கண்டும் காணாமலும் வெறுமனே எதையாவது தின்று கொண்டே. இருந்தால் உடம்புக்கு வராதா?"

சம்பகமோ, சங்கரனோடு பதில் கூறுவதற்கு முன்பு ருக்மிணி அங்கு வந்து சேர்ந்தாள்.

"நன்றாக இருக்கிறதே மரியாதை!அவர் எத்தனை நாழி உனக்காகக் காத்திருப்பார்? போய் ஒரு நிமிஷம் பேசி விட்டுத்தான் வாயேண்டா!" என்று உரிமையுடன் தம்பியை அதட்டி, சங்கரனை அங்கிருந்து ஹாலுக்கு அனுப்பி வைத்தாள்.

தொலைவில் பொன்மணி கிராமத்தில் சிறிய வீட்டில் பொறுமையே உருவான காடுவின் அழகியமுகம் மறுபடியும் சங்கரனின் மனக் கண் முன்பு தோன்றி மறைந்தது. அங்கு அவன் அவளுடன் பேசிய பேச்சுக்கள்,ராமபத்திரஅய்யரிடம் நம்பிக்கையுடன் கூறிவிட்டு வந்த வார்த்தைகள் யாவும் கடலில் கரைத்த சர்க்கரை போல் மறைந்துவிட்டன. திரண்ட செல்வமும், அழகிய பெண்ணும், போக வாழ்க்கை யுமே அவன் முன்பு பிரும்மாண்ட உருவில் தோன்றின.

“ஹல்லோ!" என்று டாக்டர் மகாதேவன் சங்கரனின் கையைப் பிடித்துப் பலமாகக் குலுக்கினார். பதிலுக்குப் புன்சிரிப்புடன் அவர் கையைப் பிடித்துக் குலுக்கி விட்டு மரியாதையாக நின்றான் சங்கரன்.

"அப்படியானால் முகூர்த்தம் வைத்து விடுகிறேன், மிஸ்டர் சர்மா! என்ன சங்கரா?" என்று கம்பீரமாகக் கேட்டார் அவர்.

சங்கரனும், அங்கு இருந்த பெரியோர்களும் தலை அசைத்து ஆமோதித்தனர்.

உள்ளே.குழந்தை பானு மூச்சு விட முடியாமல் திணறு வதைக் கண்டு சம்பகம் கைகால் பதற ஹாலுக்கு வந்தாள்.

தாயின் கடுகடுப்பையும், தமக்கையின் நிஷ்டூரத்தை யும் பொருட்படுத்தாமல் சங்கரன் ஓடிப் போய் டாக்டரை அழைத்து வந்தான். பானுவுக்கு 'டிப்தீரியா' வியாதி என்றும், உடனே சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் டாக்டர் கூறிவிட்டு, இஞ்செக்ஷன் கொடுத்துச் சென்றார்.

"நாளை சாயங்காலம் சம்பந்தி வீட்டார் கல்யாணம் சொல்ல வரப் போகிறார்கள், இங்கே இவ்வளவு அமர்க்களப் படுகிறதே?" என்று அலுத்துக் கொண்டாள் ருக்மிணி.

'என்றைக்குத் தான் நேரே இருந்தது எல்லாம். வயிற்றிலே இருக்கும் போதே அப்பனைக் கண் காணாத இடத்துக்கு ஓட்டி விட்டது. சித்தப்பன் கல்யாணத்துக்கும் தடங்கலாக இருக்கிறது இப்போ” என்று மீனாட்சி அம்மாள் பட படவென்று ஆத்திரத்துடன் பொரிந்து தள்ளினாள். "வருகிற வியாதியாவது சாதாரணமாக வருகிறதா? நூறு நூறாய்ச் செலவழிக்கும்படியல்லவா இருக்கிறது?" என்று ருக்மிணி அலுத்துக் கொண்டாள். அவளைவிட சம்பகத் துக்கும், பானுவுக்கும் அந்த வீட்டில் உரிமை அதிகம் உண்டு என்பதை அவள் மறந்தே விட்டாள்.

உணர்ச்சி மேலீட்டால் சர்மா பேசும் சக்தியை இழந்து, தம் அறையில் சாய்வு நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்து விட்டார். பிள்ளையால் அனாதையாக விடப்பட்ட குழந்தையைத் தான் கூட மனைவிக்குப் பயந்து அதிகமாகக் கவனிக்காமல் இருந்து விட்டோமே என்று அவர் மனச்சாட்சி அவரைக் குத்திக்கொண்டேயிருந்தது.

சம்பகம் துக்கம் ஒரு எல்லையை மீறிப் போகும்போது ஏற்படும் ஒரு வித தைரியத்தை அடைந்திருந்தாள். குழந்தைக்கு டாக்டர் கூறியபடி ஆகாரம் கொடுத்தும், கண் இமைக்காமல் அவள் அருகில் உட்கார்ந்தும் சிகிச்சை செய்தாள். கொடிய தொத்து வியாதி ஆதலால், அதைச் சாக்காக வைத்துக் கொண்டு பானு இருந்த அறைப் பக்கம் யாருமே வருவதில்லை..

"குழந்தையிலே நானும், அவனும் ஒன்றாக விளையாடு வோம். எடுத்ததற்கெல்லாம் அவன் என்னுடன் சண்டை பிடிப்பான்" என்று நாலு பேர் முன்னிலையில் பானுவின் தகப்பானரைப் பற்றி ருக்மிணி பெருமையாகப் பேசுவாள். அவள் அன்று உடன் பிறந்தானின் குழந்தை சாகக் கிடக் கிறதே என்றும் பார்க்கவில்லை. பானு இருக்கும் அறைப் பக்கம் பார்த்தால் கூட வியாதி ஒட்டிக் கொள்ளும் என்கிற நோக்கத்துடன் நடந்து கொண்டாள் அவள்.

இவ்வளவு அலட்சியங்களையும், வேதனைகளையும் சம்பகம் எதற்காகச் சகித்துக் கொள்ள வேண்டும்? என்றாவது ஒரு நாள் தன் துன்ப வாழ்வுக்கு விடிவுகாலம் ஏற்படும் என்கிற நம்பிக்கை தான் காரணம். பிறந்த இடத்தைவிடப் புகுந்த இடத்தை உயர்வாகக் கருதும் பாரத நாட்டுப் பெண்களின் பெருமை தான் அவளை அவ்விதம் எண்ணிஅளவு கடந்த துன்பத்தையும் பொறுத்துக் கொள்ளும் படி செய்தது.

ஆனால், எதற்கும் ஒரு அளவு இருக்கிறதல்லவா? நாட்டுப் பெண்ணின் துரதிர்ஷ்டத்தால் பிள்ளையை உயிருடன் இழக்கும்படி நேரிட்டிருந்தாலும், ஒன்றும் தெரியாத குழந்தை இவர்களை என்ன செய்தது? பிள்ளையின் குழந்தை, உடன் பிறந்தானின் குழந்தை என்கிற பாசம் கூட இல்லாமல் போய் விட்டதல்லவா?

வீட்டில் ஒரே அமர்க்களம்! விருந்துச் சாப்பாடும்' கல்யாணப்பேச்சும், சீர் சிறப்புக்களின் பெருமையும் காதைத் துளைத்தன. சம்பகம் என்று ஒரு மனுஷி இருப்பதாகவோ அவள் குழந்தை சாகக் கிடப்பதாகவோ ஒருவரும் நினைக்க வில்லை. சம்பகத்தின் மனம் குமுறியது. இப்படி உதாசீனம் செய்பவர்கள் மத்தியில் இருப்பதைக் காட்டிலும் தன் கூடப் பிறந்தவன் தன்னை எப்படி நடத்தினாலும் அவனுடன் போய் இருந்து விடலாம் என்று தோன்றியது அவளுக்கு.

கூடத்தில் எல்லோரும் சாப்பிட்டு விட்டு, அமர்ந்து தாம்பூலம் தரித்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்தார்கள். "சம்பகமும், சமையல்கார மாமியும் வீட்டைப் பார்த்துக் கொண்டு இருக்க வேண்டியதுதான்!” என்றாள் மீனாட்சி அம்மாள்.

"கல்யாணத்துக்கு மதனி வர வேண்டாமா அம்மா?" என்று சங்கரன் கேட்டான்.

குழந்தையை மாத்திரம் அழைத்துப் போனால் போனும்!" என்றாள் ருக்மிணி.

குழந்தை இருக்கிற இருப்பிலே கல்யாணத்துக்கு அழைத்துப் போகிறார்களாம்!” என்று மனத்துக்குள் வேதனைப்பட்டாள், அவர்கள் பேச்சை அரையும் குறையுமாகக் கேட்ட சம்பகம்.

அதற்குப் பிறகு நாலைந்து தினங்கள் கழித்து சம்பகம் மாமனாரிடம், தான் ஊருக்குப்போய் வருவதாக உத்தரவு கேட்டாள்.

''உனக்கு இந்த வீட்டில் என்ன கஷ்டமிருந்தாலும் கொஞ்ச நாளைக்குப் பொறுத்துக் கொண்டிருக்கக் கூடாதா அம்மா?" என்று சர்மா கேட்டார் நாட்டுப் பெண்ணிடம்.

“இல்லை மாமா! குழந்தைக்கும் இடம் மாறுதல் ஏற்பட்டால் நல்லது. கொஞ்ச நாளைக்கு என் தமையன் வீட்டில் இருந்து விட்டுத்தான் வருகிறேனே?' என்று அவள் வற்புறுத்தவும் சர்மா அவளை ஊருக்கு அனுப்பி வைக்க இசைந்தார்.

பானுவையும், சம்பகத்தையும் ரயிலேற்றி விடச் சென்றிருந்த சடகரன் அவளிடம், "மதனி! என்னவோ அம்மாவின் திருப்திக்காக இந்தக் கல்யாணம் நடக்கிறது. நீங்களும் இல்லாமல் போகிறீர்களே?" என்று கேட்டான் மனத்தாங்கலுடன்.

சம்பகம் பெருமூச்சு விட்டாள்.

“ஒருவருக்காக உங்கள் வாழ்க்கையைப் பாழாக்கிக் கொள்ளாதீர்கள். நான் இருந்து என்ன ஆகவேண்டும்? ஆசையுடன் என்னை யாராவது இருக்கும் படி கூறினார்களா? கொஞ்ச காலம் கண் மறைவாகத் தான் இருந்து விட்டு, வருகிறேனே" என்று கூறிவிட்டு கண்ணில் ததும்பும் நீரை முந்தானையால் துடை த்துக் கொண்டாள்.

சங்கரனுக்கு வேதனை தாங்கவில்லை. அக்னி சாட்சி யாகக் கைப்பிடித்த மனைவியை மறந்து வாழத் தன் தமையனால் முடிந்த போது,அவனை மறந்து வாழ சர்பகத்தால் முடியவில்லை காமுவை மறந்து இன்னெருத்தியைத் தான் மணந்து கொண்டாலும், காமு தன்னை மறந்து விட மாட்டாள். தான் மறக்கலாம், அவள் மறக்கக் கூடாது. இது என்ன சுயநலம்?

சங்கரன் கேவலம் பணத்தின் முன்பு கோழையாக மாறி விட்டான். ஆயிரம் மனக் கோட்டைகள் கட்டிக் கொண் டிருக்கும் காமுவை ஒரு நொடியில் அவனால் உதற முடிந்தது.

"ரயில் வண்டி 'கூ' என்று கத்திக் கொண்டு புறப் பட்டது.பானு,வியாதியால்மெலிந்து போன தன் பிஞ்சுக்கை சுளை ஜன்னலுக்கு வெளியே நீட்டி சித்தப்பாவுக்குக் 'டாடா` காட்டினாள்.
---------------------

5. சம்பகம் திரும்பினாள்!

பொன்மணி கிராமத்தின் தெருக்கோடியில் தபால்காரனின் தலையைக் கண்டதும் காமு உள்ளம் பதைக்கச் கொல்லைக் கிணற்றங் கரையில் நின்று அவன் அவர்கள் வீட்டிற்கு ஏதாவது தபால் கொண்டு வருகிறானா என்று பார்த்துக் கொண்டிருப்பாள். அடுத்த வினாடி. அவள் மனக்கண் முன்பு முத்துப் போன்ற எழுத்துக்களில் சங்கரன், "அப்பாவும், அம்மாவும் நான் காமுவைக் கல்யாணம் செய்து கொள்வதைப் பற்றி ஆட்சேபணை கூறவில்லை. கூடிய சீக்கிரம் உங்கள் சௌகரியம் போல் முகூர்த்தம் வைத்துக் கொள்ளலாம்" என்று எழுதிய கடிதம் ஒன்று திரைப் படம்போல் தோன்றும். ஒன்றுமில்லாத ஏழைப் பெண்ணை மனம் உவந்து ஏற்றுக்கொள்ளும் அந்தப் பெரியோர்களுக்குத் தன் சரீரத்தைச் செருப்பாகத் தைத்துப் போட்டாலும் ஈடாகாது என்று நினைத்துக் கொள்வாள் காமு.

ராமபத்திரய்யரும் தினம் சங்கரனிடமிருந்து கடிதத்தை எதிர்பார்த்துக் கொண்டுதான் இருந்தார். சங்கரனின் மௌனத்துக்குக் காரணம் விளங்காமல் அவர் திகைத்துக் கொண்டிருந்தபோது, தபால்காரன் சாவகாசமாக இரண்டாம் கல்யாணக் கடிதங்களை அவரிடம் கொடுத்து விட்டுப் போனான்.

ஒன்று முத்தையாவின் மூன்றாந்தாரக் கல்யாணக் கடிதம். மற்றொன்று சங்கரனின் கல்யாணக் கடிதம்!

"டாக்டர் மகாதேவன் அவர்களின் குமாரத்தி சௌ. நீலாவை கடிதத்தைக் கையில் வைத்துக் கொண்டு ஆழ்ந்த யோசனையில் உட்கார்ந்து விட்டார் ராமபத்திர அய்யர்.

பணம் பணத்துடன் சேர்ந்து விட்டது. அவருடைய ஆசையை நினைத்து அவருக்குச் சிரிப்பு வந்தது. யாராவது சாதாரணவரனாக ஒன்று பார்த்துச் சொல்லும்படித்தானே அவர் சங்கரனைக் கேட்டார்? ஆசையையும்,நம்பிக்கையை யும் ஏற்படுத்தியவன் அவன் தான்.

கொல்லையிலிருந்து திரும்பிய காமு தகப்பனாரின் வே தனை படர்ந்த முகத்தைக் கவனித்தாள். ஊஞ்சல் பலகையில் இரண்டு மஞ்சள் கடுதாசிகள் கிடந்தன.

"குழந்தை! ஆசையும், பாசமும்தான் மனுஷனுக்கு விரோதிகள். எதிலும் பற்றில்லாமல் இருப்பவன் தான் ஞானி" என்று ராமபத்திரய்யர் வேதாந்தம் பேச ஆரம்பித்தார்.

காமு கடிதங்களை எடுத்துப்பார்த்தாள் மூன்றாந்தார மாக எந்த இளம் பெண்ணின் வாழ்க்கையையோ பாழாக்க முயலும் கல்யாணக் சுயநலக்காரனின் கடிதத்தைப் படித்ததும் அவளுக்குச் சிரிப்பு வந்தது. வாய் வேதாந்தம் பேசிவிட்டுப் பெரிய லட்சியவாதி போல் நடித்த சங்கரனின் கயநலத்தைக் கண்டும் அந்த ஏழை சிரிக்கத்தான் செய்தாள்.

ஆனால், சிறிது நேரத்துக்கெல்லாம் அவள் மனம் அளவு கடந்த துயரத்தில் ஆழ்ந்தது. ஹிருதயத்தை யாரோ கசக்கிப் பிழிவது போன்ற வேதனையை அனுபவித்தாள் காமு. "நீலா, நீலா" என்று பலமுறை தனக்குள் பேசிக் கொண்டாள். தனக்கு எதிரியாகத் தன்மீது வஞ்சம் தீர்க்கவே நீலா என்று ஒரு பெண்ணை பிரும்மதேவன் சிருஷ்டி செய்து அனுப்பி இருக்க வேண்டும் என்று நினைத்தாள். இல்லாவிடில் அவ்வளவு உறுதியாகத் தன்னை மணப்பதாகக் கூறிச் சென்ற சங்கரனின் மனம் இவ்வளவு சடுதியில் மாறி விடுமா? வெறும் மேடைப் பிரசங்கம் செய்யும் லட்சியவாதியா அவன்? ஆமாம், வாய் கிழியப்பேசி விட்டு, எவ்வளவு பேர் ரகசியமாக வரதட்சணை வாங்கவில்லை? பேசுவது என்னவோ வரதட்சணைக் கொடுமையை எதிர்த்து!

காமுவின் கண்களிலிருந்து பல பலவென்று கண்ணீர் உதிர்ந்தது. அவள் ஏன் அழுகிறாள்? எதற்காக அழுகிறாள்? இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒன்றும் அறியாதிருந்தவளின் மனத்தில், ஆசை வித்தை ஊன்றி அது முளைத்துத் தழைப்பதற்கு முன்பு அதைக் கிள்ளியும் எறிந்தாயிற்று.

காமுவும் ஆழ்ந்த யோசனையில் ஊஞ்சலில் உட்கார்ந்து விட்டாள்.

இது வரையில் வெளியில் யார் வீட்டுக்கோ போய் இருந்த விசாலாட்சியும் வந்து சேர்ந்தாள். அவள் முகம் எப்போதும் போலவே கடுகடுவென்று இருந்தது.

"முத்தையா வேறு கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போகிறானாம். கல்யாணமும் ஏற்பாடாகி விட்டதாம். அந்தப் பிள்ளை சொன்னதை நம்பிக் கொண்டு நீங்கள் பாட்டுக்குப் பேசாமல் இருக்கிறீர்களே?” என்று கணவனிடம் கேட்டாள் விசாலாட்சி.

"இனிமேல் எனக்கு யார் வார்த்தையிலும் நம்பிக்கை இல்லை" என்று 'சூள் கொட்டிவிட்டு எழுந்தார் ராமபத்திரய்யர். திடீரென்று ஏற்பட்ட அதிர்ச்சியால் அவர் இன்னும் பத்து வயது அதிகமானவர் போன்று தோற்றம் அளித்தார். சாந்தம் ததும்பும் அவர் கண்களிலும் கண்ணீர் ததும்பிக் கொண்டிருந்தது.

"என்ன" என்று பதட்டத்துடன் கேட்டாள் விசாலாட்சி.

"நடேசனின் பிள்ளைக்கும் கல்யாணம் நிச்சயம் ஆகி இருக்கிறது. கடுதாசி வந்திருக்கிறது" என்று வருத்தம் தோய்ந்த குரலில் கூறினார் அவர்.

"பின்னே என்னவாம்? உங்கள் பெண்ணை ஓடி வந்து பண்ணிக் கொள்ளுவான் என்று பார்த்தீர்களா? எனக்கு அப்பவே தெரியுமே?" என்று நீட்டி முழக்கினாள் விசாலாட்சி.

தாயின் கடுஞ் சொற்கள் ஊசி கொண்டு குத்துவது போல் இருந்தது காமுவுக்கு. வேதனையும் துயரமும் மனத்தை அழுத்த, அவள் பூஜை அறைக்குள் சென்று தரையில் படுத்து மாலை மாலையாகக் கண்ணீர் உகுத்தாள். அவள் வேதனைக்கு அந்த ஆண்டவனாவது முடிவு ஏற்படுத்துவானோ என்பது அவளுக்கே புரியாத புதிராக இருந்தது!
----

நாட்கள் ஓடின. சங்கரன் - நீலா கல்யாணப் புகைப் படம் ஒரு தினசரி, வாரப் பதிப்பு, மாத சஞ்சிகை பாக்கி இல்லாமல் பிரசுரமாயிற்று. அப்பிரதிகளில் சில காமுவின் கைகளிலும் அகப்பட்டன. பெண்ணும், பிள்ளையும் அருகில் ஒட்டி நின்று எடுத்திருந்த அந்தப் படத்தைப் பல தடவைகள் காமு திருப்பித் திருப்பிப் பார்த்தாள். யாருக்கும் தெரியாமல் படத்தைக் கத்தரித்துத் தன் பெட்டியில் புடவைகளுக்கு அடியில் வைத்துக் கொண்டாள். புஸ்தகம் படிக்கக் கொடுத்தவர்களுக்குப் புஸ்தகத்தை எலி கடித்திருக்க வேண்டும் என்று பொய்யும் கூறினாள். இது பைத்தியக்காரத்தனமான செய்கை என்பது அவளுக்குத் தெரிந்துதான் இருந்தது. இருந்தபோதிலும் அதில் அவள் மனத்துக்குக் கொஞ்சமாவது ஆறுதல் கிடைக்கவே, அந்தப் பைத்தியக்காரச் செய்கையைச் செய்தாள் காமு.

ஒரு தினம் ராஜம்பேட்டைக்குப் போய் வந்த ராமபத்திரய்யர் சங்கரனுக்கு அவன் மாமனார் செய்த சீர் வரிசைகளைப் பற்றி யாரோ கூறியதை வீட்டில் வந்து சொன்னார். "தங்கத்தில் பஞ்ச பாத்திரமும், உத்தரணியும் செய்தார்களாம். பாத்திரமும், பண்டமும் கடை மாதிரியே இருந்ததாம்” என்று கூறிப் பெருமூச்சு விட்டார் அவர்.

"கல்யாணமும் அமர்க்களமாகத்தான் நடந்திருக்கும்" என்று விசாலாட்சி அபிப்பிராயப் பட்டாள்.

"ஆமாம், இரண்டு பக்கத்திலும் பணம் குவிந்து கிடக்கிறது. அமர்க்களத்துக்குக் கேட்பானேன்?" என்று தன்னையே தேற்றிக் கொண்டார் ராமபத்திரய்யர். என்னதான் அவர் தன் மனசுக்கே ஆறுதல் அளித்துக் கொண்டாலும் ஏமாற்றம் அவர் கண்களிலும் பேச்சுக் களிலும் தோன்றிக் கொண்டு தான் இருந்தன.

"பெண் ரொம்ப நாகரிகமாம். 'ரிஸப்ஷன்' போது ‘பஞ்சாபி உடையில் தான் உட்காருவேன்' என்று அப்படியே உடை அணிந்து உட்கார்ந்தும் விட்டாளாம்! நடேசன் மனைவியைப் பற்றித்தான் உனக்குத் தெரியுமே! ராத்திரி சாப்பிட வர மாட்டேன் என்று ரகளை பண்ணி விட்டாளாம்!" என்றார் அய்யர்.

"பணக்கார வீட்டுக் கல்யாணங்களிலும் சம்பந்திச் சண்டை இருக்கிறது. பணமில்லை, சீர் இல்லை, பாத்திர மில்லை, காபி நன்றாக இல்லை என்கிற காரணம் அங்கே இல்லாவிட்டாலும் சண்டைக்கென்று வேறு காரணம் ஏதாவது அவர்களுக்கு அகப்படும்" என்று காமு நினைத்துக் கொண்டாள், தகப்பனார் கூறுவதை யெல்லாம் கேட்டுக் கொண்டிருந்து விட்டு.

"மூத்த நாட்டுப் பெண்ணை அவள் ஆட்டி வைக்கிற ஆட்டத்துக்கு இந்த மாதிரிப் பெண்தான் சரி. நான் முத்தையா கல்யாணத்துக்குப் போய் இருந்தேனே, அங்கே பார்த்தேன் அந்தப் பெண் சம்பகத்தை! 'ஏண்டி! நீ மீனாட்சி நாட்டுப் பெண் சம்பகம் தானே? உன் கொழுந்தனுக்குக் கல்யாணமாமே? நீ எங்கேடி வநதாய், கல்யாணத்துக்கு இல்லாமல்?' என்று கேட்டேன் அவளை என்ன தான் பொறுமைசாலியாக இருந்தாலும் கஷ்டத்தை எத்தனை நாளைக்கு மனசிலேயே வைத்துப் பூட்டிவைக்க முடியும்? பாவம், அவள் குழந்தை செத்துப் பிழைத்ததாம். அதற்கு வியாதி வந்திருந்த போது யாருமே கவனிக்க வில்லையாம். நாளைக்கு இரண்டு தடவைகளாவது 'பிறந்த வீட்டுக்குப் போவது தானே' என்று மீனாட்சி எரிந்து விழுந்து கொண்டிருந்தாளாம். நடேசன் சமாசாரம் தான் உங்களுக்குத் தெரியுமே. எருமை மாட்டின் முதுகில் மழை பெய்கிற மாதிரி எதையும் லட்சியம் பண்ணமாட்டார் அவர் கொளுந்தனின் கல்யாணத்துக்குக் கூட இராமல் குழந்தையை அழைத்துக் கொண்டு தமையன் வீட்டிற்கு வந்திருக்கிறது அந்தப் பெண்" என்றாள் விசாலாட்சி.

காமு, சுவாமி விளக்கைத் துடைத்துத் திரியிட்டு எண்ணெய் ஊற்றிக் கொண்டே இதைக் கேட்டுக் கொண் டிருந்தாள். "சங்கரன் படித்தவராக இருந்தாலும். படித்தவர் என்று பெருமையாகக் காட்டிக் கொள்ள மாட்டார். நம் தன்னிந்தியக் கலாசாரங்களில். பற்றுடையவர். நீலா அவள் எப்படி இருப்பாளோ? பஞ்சாபி உடையாமே? கிள்ளுக் கிள்ளாய்க் கொசுவம் வைத்துக் கண்ணைப் பறிக்கும் ரகங்களில் புடவைகள் வாங்கிக் கட்டிக் கொண்டால் அழகாக இராதா?" என்று காமு நினைத்துக் கொண்டாள்.

ராமபத்திரய்யரின் காதில் விசாலாட்சி சொன்னவை விழுந்ததாகத் தெரியவில்லை. சரிக்குச் சரியான சம்பந்தம் வேண்டும் என்றுதானே, அதில் உள்ள குறைகளைக் கூடப் பாராட்டாமல் கல்யாணம் பண்ணிக் கொண்டிருக்கிறார் கள்? தங்கப் பதுமை மாதிரி நிற்கும் காமுவைத் திரஸ்கரித்த தற்கும் இந்த அந்தஸ்தின் ஏற்றத் தாழ்வு மனப்பான்மை தானே காரணம்? ராமபத்திரய்யர் ஏற்கெனவே ஏழைதான். ன்றும் ஏழையாகத்தான் இருக்கிறார். ஆனால், குருடனை, "நீ குருடன், நீ குருடன்" என்று கத்தினால் அவன் மனம் எவ்வளவு புண்படும்? அது போலவே சங்கரன் காமுவைத் திரஸ்கரித்து நீலாவை மணந்து கொண்டது ராமபத்திரய்யரை, "நீ தரித்திரன், நீ ஏழை" என்று யாரோ ஏசுவதுபோல் அவருக்குத் தோன்றியது. மனத்தில் எழும் உணர்ச்சிகளை வாய் விட்டுக் கூறாமல்சுவாமி படத்து, அருகில் தீபம் ஏற்றி விட்டு உட்கார்ந்து, "சியாமளா தண்டகம்" படிக்கும் பெண்ணை காமு!" என்று கூப்பிட்டார் உருக்கமாக.

“ஏன் அப்பா?" என்று ஆதுரத்துடன் கேட்டாள் காமு தகப்பனாரைப் பார்த்து.

''காமு! சங்கரன் உன்னை ஏமாற்றியதற்கு நீ வருத்தப் படவில்லையா அம்மா? உனக்கு அது வருத்தமாக இல்லையா?'' என்று கேட்டார் அவர். விசாலாட்சி அப்பொழுது அங்கு இல்லை. உள்ளே சமையலறையில் வேலையாக இருந்தாள்.

"நான் எதற்காக அப்பா வருத்தப்பட வேண்டும்? என்னவோ வாய்ப்பேச்சாகச் சொல்லி விட்டுப் போனார். நாம்தான் அதை நிஜம் என்று நம்பிவிட்டோம்" என்றாள் மலர்ந்த முகத்துடன் காமு.

ஆனால், ராமபத்திரய்யரின் மனதுக்குச் சாந்தி கிடைக்கவில்லை இந்த ஏமாற்றமும் அவருக்குப் பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது. அன்றிலிருந்து அவர் சித்தப் பிரமை பிடித்தவர் மாதிரி தமக்குத் தாமே பேசிக் கொள்வதும், சிரிப்பதும் வழக்கமாகி விட்டது.
---

கல்யாணம் முடிந்த பிறகு மூன்று மாதங்கள் வரையில் நீலா புக்ககம் வரவில்லை. காலேஜில் சேர வேண்டும் என்று தகப்பனாரிடம் கேட்டுப் பார்த்தாள். "இனிமேல் உன் புருஷன் வீட்டு மனுஷர்கள் சொல்லுகிற மாதிரிதான் கேட்க வேண்டும்" என்று கூறி விட்டார் அவர். மாலை சரியாக ஐந்து மணிக்குத் தன் வீட்டுக் காரை சங்கரனுக்காக அனுப்பி வைப்பாள். அதில் இருவரும் உட்கார்ந்து வெளியே உலாவப் போய் விட்டு வருவார்கள். அவள் மட்டும் மாமியார் வீட்டிற்கு என்று வந்து சாதாரணமாக ஒருவருட னும் பேசுவதில்லை. சங்கரன் தினம் அவள் வீட்டிற்குப் போய் வரவேண்டும்!

''மகாராணி மாதிரி அவள் அங்கே இருந்து உத்தரவு போடுவது. இவன் அதைக் கேட்டுகொண்டு ஆடுவது!" என்று ஏதாவது மீனாட்சி முணுமுணுத்துக் கொண்டே இருப்பாள்.

"வீட்டில் நாலு பேர் கல்யாணம் விசாரிக்க வருகிறார் கள். பத்து நாளைக்கு நீலாவை இங்கே விட்டு வையுங்கள்" என்று மீனாட்சி அம்மாள் சம்பந்தி அம்மாளிடம் கேட்டுக் கொண்டாள்.

"அவள் யார் சொன்னாலும் கேட்க மாட்டாள். நீங்களே கேட்டுப் பாருங்கள்' என்று கூறிவிட்டாள் அந்த அம்மாள்.

"கல்யாணம் விசாரிக்க வருகிறவர்கள் எதிரில் நான் என்ன கொலு பொம்மை மாதிரி நிற்க வேண்டுமா?' என்று ஒருவித அலட்சியத்துடன் கூறிவிட்டுத் தாயுடன் காரில் போய் ஏறிக் கொண்டாள் நீலா.

மீனாட்சி அம்மாள் தன் பெரிய உடம்பைக் குறுக்கிக் கொண்டு, சுண்டைக்காய்போல் முகம் வற்ற உள்ளே போய் விட்டாள். "பார்த்தாயா அவள் பேசுகிறதை?" என்று அழ முடியாத குறையாக ருக்மிணியிடம் சொல்லிக்கொண்டாள்.

"பார்க்கிறது என்ன? பெரிய இடத்து சம்பந்தம் எல்லாம் அப்படித்தான் இருக்கும்!" என்று சர்மா ஒரு போடு போட்டார் மனைவியைப் பார்த்து.

“இருக்கும், இருக்கும்! என்னை யார் என்று அவர்கள் தெரிந்து கொள்ளவில்லை. நன்றாக இருக்கிறதே. மட்டு மரியாதை இல்லாமல்! ஆகட்டும்! சாயங்காலம் சங்கரன் அவாள் வீட்டுக்குப் போகிறதைப் பார்க்கிறேன். இவனுக்கு என்ன சுரணை இல்லையா? பெண்டாட்டி வா என்று காரை அனுப்புகிறது, இவன் பறந்து கொண்டு ஓடுகிறது?" என்று பெரிதாகக் கத்தினாள் மீனாட்சி அம்மாள்.

"பத்துவருஷம் குடும்பத்தின் கஷ்டசுகங்களைப் பகிர்ந்து சகித்து வாழ்ந்து வந்த சம்பகத்துடனும் சண்டை, நேற்று கல்யாணம் ஆகி, இன்றோ நாளையோ புக்ககம் வரவிருக்கும் புது நாட்டுப் பெண்ணிடமும் சண்டை என்று சமையல் அறையில் வேலையாக இருக்கும் சமையற்கார மாமி நினைத்துக் கொண்டாள்.

தன் கட்சியை யாரும் ஆமோதிக்கவில்லை என்பது தெரிந்ததும் மீனாட்சி அம்மாள் சமையலறைப் பக்கம் வந்தாள். சம்பகம் இருந்தபோது இருந்த சமையலறையாக இல்லை அது. சாமான்கள் வைத்திருக்கும் டப்பாக்களின் மேல் தூசி படிந்து மங்கிப் போய் இருந்தது. கண்ணாடி ஜாடிகளில் ஊறுகாய் சுண்டி உலர்ந்து கிடந்தது. குழாய் அடியில் சற்றே தவறினால் வழுக்கி விழுந்து விடும்படி பாசி படிந்து கிடந்தது. இரண்டு வேளை சமைத்து, இடை வேளை சிற்றுண்டி காபி போட்டு விட்டு, சலையற்கார மாமி கதை, புராணம் கேட்க எங்காவது போய் விடுவாள். சமையலறையைத் துப்புரவாக ஒழித்து வைக்க வேண்டும் என்று அவளுக்கு என்ன அக்கறை?

வீட்டில் இருக்கும் மற்றப் பெண்கள் புடவைகளைப் பற்றியும் நகைகளைப் பற்றியுமே பேசிப் பொழுதைக் கழித் தார்கள். சாமான் அறையில் மூலைக்கு மூலை தேங்காய் உரித்த நாரும், குப்பையும் இறைந்து கிடந்தன. மாதத்துக்கு இரண்டு தடவைகள் அந்த அறையைச் சுத்தம் செய்வது சம்பகத்தின் வேலையாக இருந்தது. குடும்பத்தைப் பாதுகாப்பவர்கள் பெண்கள். வீட்டை சுவர்க்கமாக மாற்றுவதோ நரகமாக்குவதோ அவர்கள் வேலை.

காமரா அறையில் மூலைக்கு மூலை கொடியில் புடவை களும், ரவிக்கைகளும் தொங்கிக்கொண்டிருந்தன. வெளியில் போகும்போது மட்டும் பகட்டாக உடுத்திக்கொண்டு போய் விட்டு, வீட்டுக்கு வந்து அவைகளைக் கொடியில் தொங்க விட்டிருந்தார்கள் ருக்மிணியும்,அவள் தாயாரும். சர்மாவின் வேதாந்த புஸ்தக அலமாரி மீது தூசு படிந்து ஒட்டடை கூடப் படிய ஆரம்பித்து விட்டது. புஸ்தகம் எடுக்கும் போதெல்லாம் சர்மா நாட்டுப் பெண் சம்பகத்தை நினைத்துக் கொண்டார். சோம்பல் இல்லாமல் சுற்றிச் சுற்றி வேலை செய்த அந்தப் பெண்ணை மாமியாரும், நாத்தனாரும் விரட்டி விரட்டி வேலை வாங்கினார்கள். அவளுக்கு வேலையைத் தவிர வேறு எந்த விஷயமும் தெரிய வேண்டியதில்லை என்று நினைத்திருந்தார்கள். சம்பகம் வீட்டை ஒழுங்காக வைத்துக் கொள்ளத் தெரிந்து கொண் டிருந்தாள். ருசியாகச் சமைக்கத் தெரிந்து கொண்டிருந்தாள். பெரியவர்களிடம் அன்பும், மரியாதையையும் காட்டத் தெரிந்து கொண்டிருந்தாள். ஒழிந்த பொழுதில் வீட்டிற்குத் தேவையான துணிமணிகளைத் தைக்கவும் தெரிந்து கொண்டிருந்தாள்.

மீனாட்சி அம்மாள் சமையலறைக்குள் நுழைந்தபோது, இடைவேளைச் சிற்றுண்டி வேலையை முடித்துவிட்டுச் சமையற்கார மாமி எங்கோ புறப்பட்டுக் கொண்டிருந்தாள். அதைப் பார்த்ததும் மீனாட்சிக்குக் கோபம் வந்தது. "என்ன அம்மா இது? வாரத்தில் பத்து நாட்கள் மத்தியானம் எங்கேயாவது புறப்பட்டு விடுகிறீர்கள்?" என்று கோபமாகக் கேட்டாள் மீனாட்சி

"புறப்படாமல் இருக்க முடியுமா, நீங்களே சொல்லுங்கள்!" என்று நிதானமாகக் கேட்டாள் அந்த அம்மாள்.

"புறப்பட வேண்டுமா என்ன? அதிசயமாகத்தான் இருக்கு!" என்று அகங்காரப்பட்டாள் மீனாட்சி.

"நான் சொல்லுகிறேனே என்று கோபித்துக் கொள்ளா தீர்கள் மாமி. சம்பகம் இருக்கும் போது எனக்கு அவள்கூட மாட ஏதாவது ஒத்தாசை செய்வாள். இப்பொழுது ஒரு துரும்பைக்கூட ஒருத்தரும் அசைக்கிறதில்லை. வீட்டிலே சம்பந்திகள் வரதும் போகிறதுமாய் இருக்கிறது. உங்கள் சின்ன நாட்டுப் பெண், காபி குடித்த பாத்திரத்தைக் கூட மேஜை மீதே வைத்துவிட்டுப் போய் விடுகிறாள். கொஞ்சங் கூட அந்தப் பெண்ணுக்குக் குடுத்தனப் பாங்கே தெரிய வில்லை!"

மீனாட்சி அம்மாளுக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது. "சும்மா பேசாதீர்கள் அம்மா. நம் வீட்டில் வேலை செய்யவா நீலு வந்திருக்கிறாள், இத்தனைப் பணத்தோடும், பாக்கியத்தோடும்! பணக்கார இடத்துப்பெண். செல்லமாய் வளர்ந்தவள்" என்று நீலாவுக்காகப் பரிந்து பேசினாள் மாமியார்.

சமையற்கார மாமி மீனாட்சியின் மனத்தையும், குணத்தையும் நினைத்துத் தனக்குள் சிரித்திருக்க வேண்டும். இல்லாவிடில் அடுப்பங்கரையில் மீனாட்சி பேசிக் கொண்டிருக்கும் போதே, சர்மாவிடம் உத்தரவு பெற்றுக்கொண்டு தன் வேலையைக் கவனிக்க வெளியே போவாளா?

"நீங்கள்தான் வேலைக்காரிக்கும் சமையல்காரிக்கும், நாட்டுப் பெண்ணுக்கும் இடம் கொடுத்து எனக்கு மரியாதை இல்லாமல் செய்கிறீர்கள்?" என்று கணவன் மீது கோபத்தைக் காட்டினாள் மீனாட்சி.

"சமையற்காரிதான். நாம் தான் மாதம் இருபது ரூபாய் அவளுக்குச் சம்பளம் கொடுக்கிறோம். எதற்காகத் தெரியுமா? வீட்டை உன்னாலும், உன் பெண்ணாலும், வரப் போகும் நாட்டுப் பெண்ணாலும் கவனித்துக் கொள்ள முடியாது என்றுதான்! இருந்தாலும் அவளும் மனுஷிதானே? சற்று காற்றாடப் போய்விட்டு, இரவு சமையலுக்கு வந்து விடுகிறாள்!" என்றார் சர்மா. முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடிக்க மீனாட்சி எழுந்து போய் விட்டாள்.

பெண்ணால் இரண்டு இடங்களும் விளங்குவதாகப் பெரியவர்கள் கூறுகிறார்கள். உலகத்தை இயக்கும் மகா சக்தியைப் பெண் வடிவில் போற்றுகிறோம். பூமியைப் பெண்ணாக மதிக்கிறோம். பிறந்த நாட்டைத் தாய் நாடு என்று கௌரவிக்கிறோம். 'அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம்' என்று அன்னையை முதலில் தொழுகிறோம். இன்றும் நம் சமூகத்தில் பெண்ணின் வாழ்வு அவலமாகத் தான் இருக்கிறது. தினசரியைப் பிரித்தால் தினம் மனைவி மக்களை ஏதோ ஒரு காரணம் கொண்டு கொலை செய்து, பிறகு தாங்களும் மடியும் ஆண்களைப் பற்றி வாசிக்கிறோம். பெண்களைத் தாய்மார்களாகவும், சகோதரிகளாகவும் பாவிக்கும் குணம் அநேகரிடம் இல்லை. கணவன் வீட்டில் சுகதுக்கங்களை அனுபவிக்க வரும் மருமகள் பல குடும்பங்களில் கேவலமாக நடத்தப்படுகிறாள். சில குடும்பங்களில் மாமியின் நிலையும் இவ்வாறாக இருக்கின்றது. ஒருவரோடு ஒருவர் சரிக்கட்டிப் போகும் சுபாவம் இல்லாமையே இதற்குக் காரணம்.

சம்பகம் மனச் சாந்திக்காக வந்து தங்கினாள். மண வாழ்க்கையில் பல வருஷங்கள் மாமியாரின் ஏச்சுப் பேச்சுக் களைக் கேட்டுப் புண்பட்டுப் போன மனத்துக்கு ஆறுதலைத் தேடி அங்கே வந்தாள். அங்கே அவள் மதனி- அவளைப் போன்ற ஒரு பெண் - அவளுக்கு கௌரவம் தர மறுத்தாள். வாழா வெட்டி என்கிற அலட்சிய மனப்பான்மையுடன் அவளை ஏசினாள். குழந்தை பானுவுக்குக் கூட அங்கே சுதந்தரம் இல்லாமல் போய்விட்டது.

ஒரு நாள் மாமா குழந்தையின் மோட்டாரை அவள் தான் உடைத்ததாக மாமி கூறினாள். விளையாட்டுச் சாமான் களைத் தொடக்கூடாது என்று குழந்தைக்குத் தெரியுமா என்ன? குழந்தை மனத்துக்கு பேதம் தெரியக் காரணம் இல்லையே! சம்பகத்தின் தமையனும் தங்கையிடம் ஒரு மாதிரியாகப் பேச ஆரம்பித்தான்.

"எத்தனை நாளைக்குத்தான் ஒருத்தரிடம் ஏச்சும் பேச்சும் கேட்டுக் கொண்டிருப்பாய்? பேசாமல் நர்ஸ்கள் பள்ளிக்கூடத்தில்' சேர்ந்து விடு. நீ மாத்திரம் ஒண்டிக் கட்டை இல்லை, பார்! குழந்தை வேறு இருக்கிறது" என்று தமையன் ஆலோசனை கூறினான்.

கணவன் வீட்டில் செல்வம் இருக்கிறது. ஒவ்வொரு வேளையும் வீட்டில் இருப்பவர்கள் சாப்பிட்டு வெளியார் நான்கு பேர்கள் வேறு சாப்பிடுகிறார்கள். சம்பகமும், அவள் பெண்ணும் தண்டச்சோறு தின்பதாகவே மீனாட்சி அம்மாள் கூறி வந்தாள்! இங்கே தமையன் வீட்டிலும் செல்வம் கொழிக்கிறது. மாதம் நாலு பங்களூர் 'கிரேப்' புடவைகள் மதனி வாங்குகிறாள். வானத்து நட்சத்திரங்களும், மரத்தில் காய்க்கும் காய்களும், இலைகளும், பூவும் அவள் கழுத்தில் தங்க ஆபரணங்களாகத் துவண்டு கொண் டிருந்தன. ஆனால், கணவனால் நிராதரவாக விடப்பட்ட நாத்தனார் தன் வீட்டில் தண்டச்சோறு தின்பதாகவே மதனி நினைத்தாள்.

தமையனும் வீட்டில் தங்கை என்ற ஒருத்தி இருப்ப தாகவே நினைக்கவில்லை. அவளாகவே பேச வந்தாலும் முகம் கொடுத்துப் பேசுவதில்லை.

சம்பகம் தன் துர்ப்பாக்கியத்தை நினைத்து மனம் கலங்கினாள். தனிமையில் கண்ணீர் வடித்தாள். ராமனைப் பிரிந்த சீதா தேவியைப் போல் சோகமே உருவாக இருந்தாள். குழந்தை பானுவுக்காகவே தான் ஜீவித்திருக்க வேண்டும் என்று அவள் அடிக்கடி மனத்தைத் திடப்படுத்திக் கொள்வாள்.

சம்பகம் பிறந்த வீடு வந்து நான்கு மாதங்கள் ஆயின. அங்கிருந்து யாரும் அவளை மறுபடியும் வரும்படியோ, அவள் க்ஷேமத்தை விசாரித்தோ ஒரு வரி கூட எழுதவில்லை. மாமனார் மனம் நோகக் கூடாதென்று அவள் எவ்வளவு பணிவிடை செய்திருப்பாள்? மாமியாரின் கடும் சொற்களை எவ்வளவு தாங்கியிருப்பாள்? நாத்தனாரின் முகம் கோணாமல் அவளுக்கும், அவள் குழந்தைகளுக்கும் எவ்வளவு செய்திருப்பாள்? எல்லாவற்றிற்கும் மேலாக சங்கரனிடம் வைத்திருந்த பிரியமும் அன்பும் கூட அல்லவா மறைந்து போய்விட்டன! மைத்துனன் என்று எண்ணாமல் உடன்பிறந்த சகோதரனைப் போல அல்லவா அவனிடம் அன்பு பூண்டிருந்தாள்! இன்று அவளைப் பற்றி யாரும் அந்த வீட்டில் நினைப்பவர் சாட்சியாக இல்லை. அக்கினி மணந்து 'வாழ்வின் சுகதுக்கங்களில் உன்னைக் கைவிடேன்' என்று சத்தியம் செய்தவனே அவளை மறந்தபோது, மற்ற உறவினர் மறந்து போனது ஆச்சர்யப்படக்கூடிய விஷயமில்லை அல்லவா?

சம்பகம் தமையன் கூறிய ஆலோசனைப்படி நடக்கச் சித்தமாகத்தான் இருந்தாள். இருந்தாலும், ஒரு நாள் இல்லாவிடில் ஒருநாள் தனக்கு விடிவு காலம் கிட்டுமென்று நம்பியிருந்ததால், மறுபடியும் கணவன் வீட்டிற்கே போய் அங்கு இருப்பவர்களிடையே வசிக்க வேண்டும் என்கிறஆசை ஏற்பட்டது அவளுக்கு. தன் கருத்தைத் தமையனிடமும், மதனியிடமும் வெளியிட்டபோது, அவர்கள் வெறும் 'உபசாரத்துக்காக முதலில் அவளை அனுப்ப மறுத்தார்கள்.

"அங்கே போய் என்ன செய்யப் போகிறாய் சம்பகம்?" என்று தமையன் நிஷ்டூரமாகவே கேட்டான்.

'இல்லை அண்ணா! நான் இருக்க வேண்டிய இடம் அது தானே? உன்னையும், குழந்தைகளையும் பார்க்க வேண்டும் என்கிற ஆவலினால் வந்தேன். பார்த்தாகி விட்டது. கொழுந்தன் கல்யாணத்துக்குக்கூட இராமல் வந்து விட்டேன. அந்தக் கோபம்தான் போல் இருக்கிறது, அவர்கள் கடிதம்கூடப் போடவில்லை" என்று கணவன் வீட்டாரை விட்டுக் கொடாமல் பேசினாள் சம்பகம்.

"ஆமாம், ஆமாம். இல்லாவிட்டால் ரொம்ப கவனித்து விடுபவர்கள் தான்!” என்று கோபமாகப் பேசினான் தமையன். ஆனால், தடுத்துச் சொல்லாமல் அன்று ரயிலிலேயே அவளையும் பானுவையும் அனுப்பி விட்டான்.

சம்பகம் மறுபடியும் புக்ககம் வந்து சேர்ந்தாள். அழையாத வீட்டுக்கு வரும் விருந்தாளியை வரவேற்பது போல் அவளை அவர்கள் கண்ணெடுத்துக் கூடப் பாராமல் இருந்தனர். மாமனார் மட்டும், "வந்தாயா அம்மா! ஊரிலே உன் தமையன் எல்லோரும் சௌக்கியம் தானே?'' என்று விசாரித்தார். மாமியார் மீனாட்சியும், நாத்தனார் ருக்மிணியும் அவளை ஏன் என்று கூடக் கேட்கவில்லை. 'பாட்டி!' என்று கூப்பிடும் குழந்தை பானுவைக்கூட அந்த அம்மாள் கவனிக்கவில்லை.

"சம்பகம்! நீ இல்லாமல் திண்டாடி விட்டேண்டி அம்மா. வரவாளும்,போறவாளுமாய் என் பாடு ஓய்ந்து விட்டது போ!" என்று சமையற்கார மாமிதான் தன் மட்டற்ற மகிழ்ச்சியை வெளியிட்டாள் அவளிடம்.

சம்பகத்தின் மனம் தன் புது ஓரகத்தியைக் காண ஆசைப்பட்டது. "மிகவும் படித்தவள். பெற்றவர்களுக்கு ஒரே பெண். பணக்கார வீட்டுப் பெண். சாதுவும், வெகுளியுமான சங்கரனின் மனைவி" என்று பலவாறாக நினைத்துக் கொண்டாள் சம்பகம்.

"மாமி! என் ஓரகத்தி வீட்டிற்கு வந்து விட்டாளோ இல்லையோ? காலையிலிருந்து கண்ணிலேயே பட வில்லையே?" என்று மெதுவாக விசாரித்தாள் சமையற்கார மாமியை சம்பகம்.

"வந்திருக்கிறாள்! வராமல் என்ன? அடியே சம்பகம்! உன்னை இவாள் படுத்தி வைக்கிற பாட்டுக்கு அவள் தான் சரி, இந்த வீட்டுக்கு!" என்று விரலை ஆட்டி உற்சாகமாகப் பேசினாள் சமையற்கார மாமி.
----------------------

6. இடமாற்றம்

சங்கரன் பொன்மணி கிராமத்தை விட்டு வந்து ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டன. அவனுடைய வாழ்க்கை யில் இந்த ஆறு மாதங்கள் பல மாறுதல்களைச் சிருஷ்டித்து விட்டன. மாமனாரால் பரிசாக அளிக்கப்பட்ட நீல வர்ணக் காரில் அவன் மனைவியும், அவனும் உல்லாசமாக பவனி வருவது சகஜமாகி விட்டது. அவள் கொண்டு வந்த சீர் சிறப்புகளை ஊராரிடம் காட்டி மகிழ்வது மீனாட்சி அம்மாளுடைய வேலை. ஆனால், பொன்மணி கிராமத்தில் ராமபத்திர அய்யரின் மனத்துக்கு ஏற்பட்ட அதிர்ச்சியால் அவர் சித்த சுவாதீனத்தை இழந்தார்.

காமுவின் வாழ்வில் மட்டும் எந்தவிதமான மாறுதலை யும் இந்த ஆறு மாதங்கள் சிருஷ்டிக்கவில்லை. வசந்த காலம், கல்யாண மாதங்கள் எல்லாம் உருண்டு ஓடிக்கொண்டிருந்தன. கல்யாணமாகாமல் தனக்குப் பளுவாக இருக்கும் மகள் மீது தாய்க்கு வெறுப்பு ஏற்பட்டது. "கிழவனுக்கா கொடுப்பேன் காமுவை? உன் தம்பிக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது!" என்று ஏசிய ராமபத்திர அய்யர் மனம் உடைந்து இருந்தார். 'முத்தையா மாமாவையே கல்யாணம் பண்ணிக் கொண்டிருந்தால் ஊராரின் கேலிப் பேச்சுகளைக் கேட்காமல் இருந்திருக்கலாம். கட்டிக் கொள்ளக் கூடச் சரியான புடவை இல்லாமல் இப்படிச் சீரழிய வேண்டாம்' என்றெல்லாம் நினைத்து வருந்தினாள் காமு.

சித்தசுவாதீனம் இல்லாத தகப்பனாருடனும், சதா சிடுசிடுக்கும் தாயாருடனும் காமுவின் வாழ்க்கை நடந்து கொண்டிருந்தது. சங்கரனின் நினைவு மாத்திரம் அவள் மனத்தில் பசுமையுடன் இருந்தது. 'சங்கரன் உன்னுடை யவன்' என்று யாரோ அவள் காதில் கூறுவது போன்ற பிரமை சதா அவளுக்கு ஏற்பட்டு வந்தது. இந்த ஆசை அநியாயமானது என்பதை உணர்ந்தே காமுவின் மனம் ஆசைப் புயலில் சிக்குண்டு தவித்தது.

கிராமத்தில் வேத அத்யயனம் செய்யும் பிராம்மணப் பிள்ளை ஒருவன் அவளைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள முன் வந்தான். தன் புத்தி நிதானத்துக்கு வந்தபோது ராமபத்திர அய்யர் காமுவைக் கூப்பிட்டுக் கேட்டார். மெளனமாகக் கண்ணீர் வழிய நிற்கும் காமுவைப் பார்த்ததும் அவள் மனநிலை அவருக்கு விளங்கியது. தானே அவளிடம் ஆசைப் பயிரை நட்டுத் தண்ணீர் ஊற்றி வளர்த்து, அதை வேருடன் பிடுங்கி எறிய முற்பட்டது எவ்வளவு மகத்தான பாவம் என்பதை விவேக்சாலியான அவர் மனது அறிந்து கொண்டது. "காமு! காமு!" என்று மனம் உருகிக் கண்ணீர் விட்டார்.

இதுவரையில் பேசா திருந்த காமுவும் தகப்பனார் அருகில் வாஞ்சையுடன் உட்கார்ந்து, "அப்பா! என்னைவிட வயசான எவ்வளவோ பெண்கள் கல்யாணமில்லாமல் இருக்கிறார்கள். படித்துவிட்டுஉத்தியோகம் செய்கிறார்கள். போன வாரம் கூட கிராம ஆஸ்பத்திரிக்கு டாக்டர் ஒருவர் வந்திருந்தார். அந்த அம்மாளுக்கு இருபத்தைந்து வயசு இருக்கும். கல்யாணம் ஆகவில்லையாம். நானும் ஏதாவது படித்து வேலை பார்க்கிறேனே அப்பா? இந்த ஊரிலே நமக்கு என்ன வைத்திருக்கிறது? பட்டினத்துக்குத் தான் போய் இருக்கலாமே!" என்று கேட்டாள் தகப்பனாரிடம். பிறந்தது முதல் வளர்ந்து வந்த கிராமத்தை விட்டுப் போவதற்கு வருத்தமாகத்தான் இருந்தது அவளுக்கு.

அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டு வந்த சுப்பரமணி, "என்னம்மா காமு! இந்த ஊரில் இருக்கிற வரைக்கும் தான் உனக்குக் கல்யாணமாகவில்லை. பட்டினம் போன பிறகாவது சீக்கிரமாக நடக்கட்டும்" என்று தன் வெள்ளை மனத்துடன் காமுவை ஆசீர்வதித்தார்.

அதற்குள் காமுவின் யோசனையை ஏற்பதென முடிவு செய்த ராமபத்திர அய்யர், "நீதான்' பார்த்துக்கொள் அப்பா பசுமாட்டை!" என்று கறவைப் பசுவைச் சுப்பரமணி யிடம் விட்டுவைத்தார். வாயில்லாத பிராணியான அதுகூட கண்களில் கண்ணீர் வழியத் தன் எஜமானரைப் பிரிய மனமில்லாமல் பிரிந்தது. மணம் வீசும் மல்லிகைக் கொடியும், ருசி மிகுந்த வாழை, கொய்யா மரங்களும், குளிர்ச்சி.யான கிணற்றங்கரையும், தொலைவில் சமுத்திரம் போல் தளும்பி வழியும் ஏரியும், பொன்மணி கிராமத்தின் ஜனங்களும் சேர்ந்து காமுவையும், அவள் குடும்பத்தாரையும் பிரிய மனமில்லாமல் விடை கொடுத்தார்கள். "ஆயிரம் உருண்டைகள் இருந்தாலும் விசாலம் மாமி வந்தால் நொடியில் தீர்ந்துவிடும்" என்று அப்பளக் கச்சேரிப் பெண்கள் கண்களில் கண்ணீர் வழியக் கூறினார்கள்.

ஓட்டு வீடானாலும் சகலவிதமான சுதந்திரத்துடனும் அந்த வீட்டில் அவர்கள் வாழ்ந்து வந்தார்கள். தெற்குப் பக்கமாக இருந்த திண்ணையில் கடுங்கோடை காலத்தில் கூட 'சில்'லென்று காற்று வீசும். ராமபத்திர அய்யர் அடிக்கடி "வடக்குப் பார்த்த அரண்மனையைவிடத் தெற்குப் பார்த்த தெருத் திண்ணை உயர்வு'' சொல்லி மகிழ்வார். நாள் தவறாமல் குடலை நிறையப் பூத்துக் குலுங்கும் நித்திய மல்லிகைக் கொடி தெரு பூராவும் பந்தல் போட்டது போல் படர்ந்து மணம் வீசிக் கொண் டிருக்கும். வீட்டிற்குத் தேவையான கீரை, காய்கறிகள் காய்க்கும் கொல்லைப்புறம், கரும்பைப் போல் இனிக்கும் கிணற்று நீர், அதைச் சுற்றிலும் அடர்த்தியாக வாழை மரங்கள், மத்தியான வேளைகளில் 'கீச் கீச்' சென்று சதங்கை ஒலி எழுப்பும் சிட்டுக் குருவிகளும், அணிற்பிள்ளைகளுமாக அந்தக் கிணற்றங்கரை இன்ப வனமாக இருந்து வந்தது.

"இனிமேல் பட்டண வாசத்தில் ஒரு அறைக்கு மாதம் பதினைந்து ரூபாய் வாடகை கொடுக்க வேண்டும். வீட்டுச் சொந்தக்காரருக்குப் பயந்து நடக்க வேண்டும். வாடலும், சொத்தையும், உலர்ந்ததும் தான் சாப்பிட வேண்டும். பச்சைப் பசேல் என்று காய்கறிகள் எங்கே கிடைக்கிறது?" விசாலாட்சி யோசனையில் ஆழ்ந்தவளாகக் கன்னத்தில் கை ஊன்றி வண்டியில் உட்கார்ந்திருந்தாள். ராமபத்திர அய்யரின் மனம் பலவிதமான யோசனைகளில் ஆழ்ந்து கிடந்தது. காமு ஒருத்திதான் உற்சாகமாக இருந்தாள். பணம் இல்லாத குறைவால் தன் வாழ்வு தாழ்வடையக் கூடாது. எப்படியாகிலும் முன்னுக்கு வரவேண்டும் என்கிற ஆசையால் தானே அவள் பட்டினம் போகிறாள்?

''வீடு விற்ற பணத்தை என்ன செய்யப் போகிறீர்கள்?'' என்று கேட்டாள் விசாலாட்சி, கணவனைப் பார்த்து.

"என்னத்தைச் செய்கிறது? எனக்கு என்ன தெரியும்? நடேசனைப் போய்ப் பார்க்கிறேன்" என்றார் ராமபத்திர அய்யர்.

“த்சூ” என்று சூள் கொட்டினாள் விசாலாட்சி.

''பணக்காரர் உறவே நமக்கு வேண்டாம் அப்பா!" என்றாள் காமு கண்டிப்பாக.

"முன் பின் தெரியாத ஊருக்குப் போகிறோம். யார் உதவியால் முன்னுக்கு வருவது?” என்று கேட்டார் தகப்பனார்.

'அவரைப் போல் ஆயிரம் பேர்கள் இருக்கும் பட்டினத்தில் அவர்கள் வீட்டைத் தேடிக் கொண்டுதான் போக வேண்டுமாக்கும்! சத்திரம் சாவடி ஒன்றும் கிடையாதா என்ன, அங்கே?'' என்று கோபத்துடன் கேட்டாள் காமு தகப்பனாரைப் பார்த்து. பெண்ணின் மனம் எவ்வளவு தூரம் புண்பட்டிருக்கிறது என்பதை ராமபத்திர அய்யர் உணர்ந்து கொண்டார் அதன் பிறகு காமுவாவது அவள் பெற்றோராவது ஒன்றும் பேசவில்லை.

ரயில் வண்டியில் காமுவுக்குப் பேச்சுத் துணைக்காகப் படித்த பெண் ஒருத்தி அகப்பட்டாள்.

ஆடம்பரம் இல்லாத ஆடைகளை உடுத்தியிருந்த அவள் தேகத்தில் அதிகமாகத் தங்கம் வைரம் எதுவும் மின்ன வில்லை. கையில் மெல்லிய தங்க வளையல்கள் இரண்டும், கழுத்தில் மெல்லிய தங்கச் சங்கிலியும் பூண்டிருந்தாள். கல்வியின் மேதையால் ஆழ்ந்து ஜ்வலிக்கும் கருவிழிகள். மஞ்சள் பூசிக் குளித்த மாதிரி தாழம்பூ நிறம். மரியாதையும் விநயமும் உருவாக உட்கார்ந்திருந்தாள், அந்தப் பெண்மணி.

முதலில் இரண்டு மூன்று ஸ்டேஷன்களை வண்டி தாண்டுகிற வரையில் அந்தப் பெண்மணி பேசவில்லை. கொட்டுக் கொட்டென்று உட்கார்ந்திருக்கும் காமுவைப் பார்த்து அந்த வாரத்திய தமிழ்ப் பத்திரிகை ஒன்றை எடுத்துக் கொடுத்தாள் அவள். காமு அதை வாங்கிக் கொண்டு, "பரவாயில்லை, நீங்கள் படித்துவிட்டுத் தாருங்கள்" என்றாள்.

"நான் படித்து விட்டேன்" என்று பதில் கூறினாள் அந்தப் பெண்மணி. பிறகு மெதுவாகப் பேச ஆரம்பித்த வர்கள் பல விஷயங்களைப் பற்றியும் பேசினார்கள். உயர்தரக் கல்வி பயின்றுவிட்டு அந்தப்பெண், கலாசாலை ஒன்றில் ஆசிரியை வேலை பார்ப்பதாகக் கூறினாள். மாதம் இருநூறு ரூபாய்களுக்கு மேல் சம்பாதிப்பதாகவும், அவளுடைய கணவன் சர்க்கார் வேலையில் இருப்பதாகவும், கல்யாணமாகி ஒரு வருஷம் ஆயிற்று என்றும் கூறினாள். காலேஜ் படிப்பு இல்லாவிட்டாலும் காமு சுமாராகப் படித்து வேலை பார்க்கலாம் என்றும் தைரியம் கூறினாள்.

என்னைப் பார்க்க வந்தபோது என் கணவர் வீட்டார். ஆயிரம் ரூபாய் வரதட்சிணை கேட்டார்கள். எனக்குக் கோபம் பற்றிக் கொண்டு வந்தது. 'நானும்தான் படித்திருக்கிறேன். எனக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்துக் கல்யாணம் பண்ணிக் கொள்ளுங்களேன்' என்று அவர்களை நான் திருப்பிக் கேட்டேன்!" என்று கூறிவிட்டு அவள் கலகல வென்று சிரித்தாள். இப்படி ரயிலில் பொழுது போவது தெரியாமல் காமுவும், அந்தப் பெண்ணும் நெருங்கிப் பழகினார்கள்.

பட்டினம் வந்ததும் அவள் காமுவிடம் தன் விலாசத் தைக்கூறி, ஏதாவது உதவி தேவையானால் தன்னை வந்து பார்க்கும்படி சொல்லிவிட்டுப் போனாள்.
-----

மத்தியானம் சாப்பிடுவதற்காக நீலா மாடி அறையி லிருந்து கீழே இறங்கி வந்தாள். முழங்கை வரை நீண்டிருக்கும் 'லினன் சோலி' மீது வெண்மையான மஸ்லின் புடவை காற்றில் பறந்து கொண்டிருந்தது. உதடுகளில் வெற்றிலைக்குப் பதிலாகச் சிவப்பு சாயத்தைத் தீட்டி இருந்தாள். இரட்டைப் பின்னல்களை எடுத்து முன்புறம் போட்டிருந்தாள் அவள். சமையற்கட்டின் போஜன கூடத்தில் அவள் வருவதற்கு முன்பே வெள்ளித் தட்டை வைத்து மணை போட்டிருந்தாள் சமையற்கார மாமி. தூங்கி வழிந்த கண்களோடு நீலா மணையில் வந்து உட்கார்ந்து கொண்டாள். குடும்பப் பெண்ணுக்கு இருக்க வேண்டிய அன்போ, அடக்கமோ எதுவுமில்லாமல், யாரையும் லட்சியம் பண்ணாமல் அவள் இருப்பதைப் பார்த்ததும் சம்பகத்துக்கு ஆச்சரியமர்க க இருந்தது. 'கணவன் எழுந்திருப்பதற்கு முன்பு தான் எழுந்து, கணவன் உறங்கிய பின்பு உறங்கும்' பாரத நாட்டுப் பெண்களின் பண்பாடு எங்கே? பகல் பதினோரு மணிவரை அரைத் தூக்கத்தில் கழிக்கும் இந்த நீலா எங்கே?

"ஏனம்மா? உன் ஓரகத்தி ஊரிலிருந்து வந்திருக்கிறாளே, பார்த்தாயா?" என்று கேட்டுக் கொண்டே சாப்பிடும் கூடத்தை அடைந்தார் சர்மா. சமையலறை வாசற்படியில் உட்கார்ந்திருந்த சம்பகம் மரியாதையாக எழுந்து நின்றாள். நீலா அதற்கு அவரிடம் நேரிடையாகப் பதில் ஒன்றும் கூறாமல், 'ஓஹோ!” என்று தன் வில் போன்ற புருவங்களை நெரித்துச் சம்பகத்தை ஏறிட்டுப் பார்த்தாள். "பலரால் அலட்சியம் செய்யப்பட்டும் லட்சியம் நிறைவேறும் வரையில் அலட்சியத்தைச் சகித்துக் கொள்ளுவேன்” என்று கூறுவது போல் சம்பகமும் நீலாவைப் பார்த்தாள். பிறகு, “இன்று காலையில் தான் வந்தேன்" என்றாள்.

சில நிமிஷங்களில் சாப்பாட்டை முடித்துக் கொண்டு நிலா வெள்ளித் தட்டிலேயே கை அலம்பி விட்டு எழுந்தாள். கடனே சமையற்கார மாமியைப்பார்த்து, 'மூன்று மணிக்கு சினிமாவுக்குப் போகிறேன் மாமி. அதற்குள் காபி போட்டு விடுங்கள்" என்று கூறி விட்டு, 'அவள் ஏதாவது தன்னுடன் பேசுவாளா? என்று நிற்கும் சம்பகத்தைக் கவனியாமல் மாடிக்குச் சென்று விட்டாள் நீலா. சமையற் கார மாமி 'ஹும்' என்று ஒரு பெருமூச்சு விட்டாள்.

பார்த்தாயாடி அம்மா? தட்டை எடுத்து அலம்பி வைக்கக் கூட உன் ஓரகத்திக்கு ஒழிவில்லை. ஒரு நாளைக்கு ஆறு தடவைகள் முகம் அலம்பிப் பவுடர் பூச ஒழிவிருக்கிறது! இவள் தட்டை அலம்புவுதற்காக உன் மாமியாரை ஐந்து ரூபாய் சம்பளம் கூடப் போட்டுத் தரச் சொல்லி கேட்கப் போகிறேன். ஆமாம்!" என்று கோபமாகக் கூறினாள், மாமி.

"இப்படியும் குடித்தனப் பாங்கு தெரியாமல் பெண்களை வளர்க்கிற பெற்றோர்கள் இருக்கிறார்களா? படித்துப் பட்டம் பெற்று சமூக சேவை செய்கிறேன் என்று ஜம்பமாக நாலு பேர் எதிரில் வந்து விடுகிறார்கள் இந்தப் பெண்கள்! அவர்கள் வீட்டைப் போய்ப் பார்த்தால் நாய் கூட அங்கு தலை வைத்துப் படுக்கும் ஸ்திதியில் இருக்காது. மாலையில் களைத்து வீட்டுக்கு வரும் கணவனுக்கு ஒரு கோப்பை தண்ணீர் கொடுப்பதற்கு மனைவி வீட்டில் இருக்க மாட்டாள். அவர்கள் வழியைப் பின் பற்றுபவள் தான் நீலாவும்" என்று ஏதேதோ எண்ணமிட்டாள் சம்பகம்.

இதற்குள் இடை வேளை சாப்பாட்டிற்காகப் பள்ளிக் கூடத்திலிருந்து வந்த பானு தன் தாயாரிடம் வந்து, அம்மா! சித்தியைப் பார்க்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டு இருந்தாயே? அதோ பார் அம்மா, மாடிக்குப் போகிறாள் சித்தி!" என்று கூறிவிட்டு ஆவல் ததும்பும் குரலில், "சித்தி, சித்தி! இங்கே வாயேன்" என்று கூப்பிட்டாள் குழந்தை.

நீலா ஒரு வித மிடுக்குடன் திரும்பிப் பார்த்தாள். "ஆகட்டும் வருகிறேன். இப்போது ஒன்றும் முழுகிப் போய் விடவில்லை பார்" என்று கூறி விட்டு, விடுவிடு என்று மாடிப் படிகளைக் கடந்து சென்று விட்டாள். அவள் பேச்சைக் கேட்ட சமையற்கார மாமி முகத்தை ஒரு குலுக்குக் குலுக்கினாள். அவள் முகபாவம். "பார்த்தாயா அவள் கர்வத்தை ?" என்று கேட்பது போல் இருந்தது.

"ஏன் அம்மா சித்தி ஒருத்தருடனும் சரியாகப் பேச மாட்டேன் என்கிறாள்?" என்று பானு சம்பகத்தைக் கேட்டாள்.

''எனக்கும் தெரிய வில்லையே, பானு. புதுசு பாரு. பழக வேண்டாமா?" என்று பதில் கூறினாள் சம்பகம். அவள் மனம் மட்டும் நீலாவின் போக்கை வியந்து கொண்டே இருந்தது.

'குழந்தையோடு பேசுகிறதுக்குக் கூட வருஷக் கணக்கில் பழக வேண்டுமா சம்பகம்? கபடமில்லாதவர் களைக் குழந்தை மனம் படைத்தவர்கள் என்று நாம் சொல்லுவதில்லையா?"

சமையற்கார மாமி நீலாவின் பேரில் ஏதோ சொல்ல ஆசைப்படுகிறாள் என்பது சம்பகத்துக்குத் தெரிந்து விடவே பேச்சை வளர்த்த விரும்பாதவள் போல் அவள் அப்பால் போய்விட்டாள்.

பகல் மூன்று மணிக்கு நீலா காபி சாப்பிட கீழே வந்தாள். அப்பொழுது அவள் உடை அலங்காரம் வேறு தினுசாக மாறி இருந்தது. பதினெட்டு முழப் புடவையை மடிசார் வைத்துக் கட்டிக் கொள்ளும் மீனாட்சி அம்மாள் - படு கர்னாடகமான மீனாட்சி அம்மாள்-தன் நாட்டுப் பெண் பைஜாமாவும், ஜிப்பாவும் அணிவதை ஆட்சேபிக்க முடியவில்லை! காபி அருந்திவிட்டு, நீலா சினிமாவுக்குக் இளயபினாள் அவள் சமையற்கட்டைத் தாண்டுவதற்குள் மீனாட்சி அம்மாள் தயங்கிக் கொண்டே அவள் எதிரில் வந்து நின்றாள். பிறகு மென்று விழுங்கிக் கொண்டே, "ஏனம்மா சங்கரனும் வருகிறானோ உன்னோடு சினிமா விற்கு?" என்று கேட்டாள்.

"நான் ஒன்றும் அவரை வரச் சொல்ல வில்லையே? இந்த வீட்டிலே பொழுது போகவில்லை எனக்கு! திடீரென்று நினைத்துக் கொண்டேன். புறப்பட்டு விட்டேன்” என்றாள் நீலா.

தமிழ் நாட்டில் மாமியார் ஸ்தானம் வகிக்கும் எந்தப் பெண்மணியும் நாட்டுப் பெண் தன் கணவனிடம் கூடக் கூறாமல் வெளியில் போவதை ஆட்சேபிக்காமல் இருக்க மாட்டாள். மீனாட்சி அம்மாளின் முகம் ஜிவுஜிவு என் வெந்தது. யோசித்தக் கொண்டே நிற்பவளை மதிக்காமல் நீலா விடுவிடு என்று நடந்து, தெருக் கதவைத் திறந்து கொண்டு போய் விட்டாள். நிமிர்ந்து பார்க்கும் மீனாட்சி அம்மாளின் எதிரில் ருக்மிணிதான் நின்று கொண்டிருந்தாள்!

"பார்த்தாயாடி!" என்று அதிசயத்தோடு பெண்ணைக் கேட்டுவிட்டு மீனாட்சி அம்மாள் மோவாயில் கையை வைத்துக் கொண்டு நின்றாள்.

"பார்க்கிறேனே அந்த வேடிக்கையை தினமும்தான்! சங்கரனை அவள் ஒரு சொல்லாக் காசுக்குக் கூட மதிக்க மாட்டாள். ஆமாம், சொல்லி விட்டேன். இப்பொழுதே அவனிடம் சொல்லி. கொஞ்சம் கண்டித்து வைக்க வேண்டும் ஆமாம்" என்றாள் ருக்மிணி.

தாய்க்கும். மகளுக்கும் இடையில் மறுபடியும் சர்மா வந்தார். வீட்டிலே இன்னும் கொஞ்ச நாளைக்குள் ஏற்படப் போகும் புயலின் அறிகுறிகள் ஏற்கெனவே தோன்ற ஆரம்பித்திருப்ப- தாகத்தான் அவர் நினைத்தார். கையில் சதா பகவத் கீதையை வைத்துக் கொண்டு வேதாந்த விசாரணையில் அவர் மூழ்கி இருப்பதால் புயலையும், அமைதியையும், இன்பத்தையும், துன்பத்தையும், ஆசையையும், நிராசையையும், சகலத்தையும் சிருஷ்டிப்பவன் அவனே என்று மனத்தைத் தேற்றிக் கொண்டு விடுவார் சர்மா.

மீனாட்சி அம்மாள் தன் கணவனை வெட்டும் பார்வையில் ஒரு தடவை பார்த்து விட்டு முகத்தை வேறுபுறம் திருப்பி ஒரு பெருமூச்சு விட்டாள்.

"பார்த்தீர்களா?" என்று ருக்மிணி உதடு அசங்காமல் தந்தையைப் பார்த்து சமிக்ஞை மூலம் கேட்டாள். புது நாட்டுப் பெண்ணின்மீது தங்கள் இருவரின் அபிப்பிராயமும் சரியாக இல்லை என்பதை சம்பகம் தெரிந்து கொள்ளக் கூடாதென்பது அவர்கள் தீர்மானம் . "நான் தான் முன்பே சொல்லி விட்டேனே; விரலுக்குத் தகுந்த வீக்கம் வேண்டும். நம் அந்தஸ்திற்குத் தகுந்த இடத்தில் சம்பந்தம் செய்ய வேண்டும் என்று? ஸ்ரீதன சொத்து லட்ச ரூபாய்க்கு இருக்கும் என்று நீதானே வாயைப் பிளந்தாய்? இந்தப் பெண்ணை "பாற்கடலிலிருந்து மகாலட்சுமியே உன் வீட்டிற்கு வந்து விட்டான்' என்றும், அந்தப் பெண் சம்பகத்தை மூதேவி என்றும் பழிக்கிறது நீதானே?" சர்மா நிதானமுள்ளவரானாலும் சமயம் அறிந்து பேசுபவர். ஒரு வார்த்தை சொன்னாலும், ஆணித்தரமாகவே பேசுவார்.

சர்மா கூறிய வார்த்தைகளைக் கேட்டதும் அடிபட்ட நாகத்தின் பெருமூச்சைப் போல் 'புஸ்' என்று பெரு மூச்சு விட்டுக்கொண்டு மீனாட்சி அம்மாள் அடுப்பங்கரைப்பக்கம் போய் விட்டாள். ருக்மிணிக்குத் தகப்பனாரின் வார்த்தை அவ்வளவாக மனத்தைப் பாதிக்கவில்ல லை. அவளுக்கு வேண்டியது பிறந்த வீட்டின் உபசாரங்கள்தானே? அது இன்றளவும் குறையாமல் இருக்கும் போது அவளுக்கு வேறு விஷயங்களைப் பற்றி என்ன அக்கறை?

மீனாட்சி அம்மாளின் மனோபாவம் புது நாட்டுப் பெண்ணிடமும் சரியாக இல்லை என்பதைச் சம்பகம் புரிந்து கொண்டாள். நீலாவின் போக்கு அவ்வளவு நல்லதாக அவள் மனத்திற்குத் தோன்றாவிட்டாலும், மாமியாரிடம் அவள் நடந்து கொள்ளும் முறை சம்பகத்தின் மனப் புண்ணைச் சிறிது ஆற்றியது. ஒன்றும் அறியாத தன்னை அவர்கள் கண்ணில் விரலைக் கொடுத்து ஆட்டும்போது, அவர்களை ஆட்டிப்படைக்க ஒருத்தி வந்திருப்பது அவளுக்கு ஒரு விதத்தில் திருப்தியாகத்தான் இருந்தது.

எவ்வளவு தான் பொறுமையை வகிப்பவளானாலும் அவளும் கோப தாபம், அன்பு, ஹிம்சை முதலிய உணர்ச்சிகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பவள்தானே? அவள் இருதயம் மனிதப் பண்பை உடையதுதான். தன் விடிவு காலத்தை எதிர்பார்த்து அந்த வீட்டில் அவள் இருந்து வருகிறாளே தவிர. மாமியாருக்கு அடிமையாக இருப்பதற்கு அல்ல.

சமையற்கட்டிலிருந்தபடி பெரியவர்கள் மூவருக்கு மிடையே நடந்த பேச்சைக் கவனித்தாள் சம்பகம். அவள் மனம் மீனாட்சி அம்மாளுக்காக இரங்கவில்லை. தன் சுகத்திலேயே நாட்டமுடைய ருக்மிணிக்காகவும் இரங்க வில்லை. நீலாவுக்காகவும் அவள் மனம் பச்சாதாபப்பட வில்லை. பிறர் துன்பம் கண்டு மனம் இரங்கும் தன் கொழுந்தன் சங்கரனுக்காகவே அவள் மனம் இரங்கினாள் "மதனி” என்று அன்புடன் மரியாதை செலுத்தும் சங்கரனின் சரளமான சுபாவம் அவள் மனத்தைக் கலக்கி அவள் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.
------

காமுவின் தகப்பனாரும், யாருடைய உதவியுமின்றி அந்தப் பெரிய நகரத்தில் ஊரில் விற்ற வீட்டின் பணத்தை வைத்துக்கொண்டு ஒரு சிறிய மளிகைக்கடை ஆரம்பித்தார். சங்கரன் அவரை ஏமாற்றிய பிறகு வாழ்க்கையில் எவரை யுமே நம்பக்கூடாது என்கிற தீர்மானத்துடன் கடனுக்காகச் சாமான்கள் கொடுக்காமல் நாணயமுள்ளவர்களை வாடிக்கைக்காரர்களாக வைத்துக் கொண்டு வியாபாரம் செய்தார். செல்வம் அபரிமிதமாகப் பெருகாவிட்டாலும் வறுமை அவர்களை விட்டுப் போய் விட்டது.

காமுவும் கிராமத்தில் கல்யாணத்தை எதிர்பார்த்து எட்டாவது வகுப்புடன் படிப்பை நிறுத்திக் கொண்டவள். மறுபடியும் பள்ளியில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தாள். ஒழிந்த வேளைகளில் தையல் வகுப்பில் சேர்ந்து துணிகள் தைப்பதற்குப் பழகிக் கொண்டாள். கல்யாணம் வாழ்க்கைக்கு அவசியம் தான் என்றாலும் கல்யாணம் செய்து கொண்டால் தான் வாழ முடியும் என்கிற எண்ணம் அவள் மனத்தை விட்டு அகன்று விட்டது.

ரயிலில் சந்தித்த பெண்மணியின் விலாசத்தைத் தேடிக் கொண்டு அவள் வீட்டிற்குப் போனாள் காமு. அழகிய சிறு தோட்டத்தின் நடுவில் சிறிய வீட்டில் அந்தப் பெண்மணியும் அவள் கணவனும் வசித்து வந்தார்கள். வீடு சிறியதே தவிர அங்கு அன்பும் ஒற்றுமையும் நிலவி இருந்தன. பணத் தின் ஆடம்பரம் இல்லாமல் பணத்துக்கு அடிமை ஆகாமல் பணத்தைக் கொண்டு வாழ்வை வளமுள்ள தாக்கிக்கொள்ள முடியும் என்பதை அத்தம்பதி உணர்த்தினர்.

அவர்கள் வீட்டுக் கூடத்தில் அன்பே உருவான புத்தரும், அஹிம்சை அண்ணல் காந்தி அடிகளும் மேஜைமீது வீற்றிருந்தனர். அறிவை வளர்க்கும் புஸ்தகங்கள் நிரம்பிய அலமாரி ஒரு புறம் வைக்கப்பட்டிருந்தது. உலகத்தைத் தன் ஆட்டத்தால் ஆட்டி ஊக்குவிக்கும் இறைவன் நடராஜனின் திரு உருவப்படம் மாட்டப்பட்டு, அதன் அருகில் நந்தா விளக்கும், அதில் புகையும் ஏற்றி வைக்கப்பட்டிருந்தது. கூடத்துக்கே ஒரு தேஜஸை அளித்தது.

உள்ளே நுழைந்தபோது காமு கூடத்தின் அலங்காரத் தைப்பார்த்து வியந்து சிறிது நேரம் நின்றாள். சமையல் அறையில் கணவனுக்கு உபசரித்து உணவு பறிமாறும் தன் சிநேகிதியின் இனிமையான குரல் காதில் ஒலித்தது.

"கமலா! என்ன, ரஸத்தில் கொஞ்சம் தாராளமாய் உப்பை அள்ளிப் போட்டிருக்கிறாய்?" என்று மனைவியைக் கணவன் கேலி செய்து கொண்டே ரஸத்தை வாங்கி உறிஞ்சிக் குடிப்பது காமுவுக்குக் கேட்டது.

'இந்தக் காலத்தில் உப்பு ஒன்று தான் மலிவாக விற்கிறது! அது சரி. உப்பு அதிகமாகவா போட்டிருக் கிறேன்?' என்று கேட்டுக் கலகலவென்று சிரித்தாள் கமலா.

ரயிலில் காமுவுடன் / பழகிச் சிரித்த அதே சரளமான சிரிப்பு. சாப்பாட்டில் ருசி குறைந்து விட்டது என்று கணவ னும் கோபிக்கவில்லை. அதை எடுத்துக் காட்டிக் கேலி செய்தாரே கணவர் என்று மனைவியும் கோபிக்கவில்லை. சரிக்கட்டிக் கொண்டு போகும் இந்த சுபாவம் குடும்ப வாழ்க்கைக்கு மிகவும் அவசியம். நம் வீட்டில் அப்பா ஒன்று சொன்னால் அம்மா ஒன்று சொல்கிறாளே என்று காமு ஆச்சரியப்பட்டாள்.

சாப்பாடு முடிந்து கூடத்துக்கு வந்ததும் அங்கே நின்ற காமுவைப் பார்த்து கமலா சிறிது யோசித்தாள். அன்று ரயிலை விட்டு இறங்கிய பின்பு பிரிந்தவர்கள் ஏறக்குறைய ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு அல்லவா சந்திக்கிறார்கள்? சிறிது யோசித்தவள் சட்டென்று, "ஓ! நீங்களா? அன்று ரயிலில் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தோமே! மறந்தே போய் விட்டேன். உட்காருங்கள்” என்று உபசரித்தாள். கமலா, காமுவைப் பார்த்து. காமுவும் பதிலுக்கு வணக்கம் செலுத்தி விட்டு உட்கார்ந்தாள்.

காமு தன் தகப்பனாரின் கடை வியாபாரத்தைப் பற்றி கமலாவிடம் கூறினாள். அதில் கிடைக்கும் வருமானம் குடும்பச் செலவுக்கே போதாமல் இருப்பதையும், மேலும் தான் பள்ளிக்கூடத்தில் படிப்பதற்காக ஆகும் செலவைப் பற்றியும் சொன்னாள்.

இதையெல்லாம் காமுவிடமிருந்து கேட்டதும், கமலா தனக்கு தெரிந்த சில யோசனைகளைக் கூறி, "தையல், சிறு குழந்தைகளுக்குப் பாடம், பாட்டு சொல்லிக் கொடுப்பது போன்ற காரியங்களைச் செய்வதால் ஏதாவது கொஞ்சம் மேல்வரும்படி கிடைக்கும்; செய்து பாரேன்!" என்றாள். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு, மறுபடியும் வருவதாகக் கூறி விடை பெற்றுக்கொண்டு சென்றாள் காமு.

அதற்குப் பிறகு காமு கமலாவின் வீட்டிற்கு ஒழிந்த சமயங்களில் போய் வந்தாள். நாளடைவில் கமலாவின் கணவனும், சங்கரனும் நண்பர்கள் என்பது அவளுக்குத் தெரிய வந்தது. அடிக்கடி நண்பர்கள் ஒருவரையொருவர் சந்திப்பது உண்டு என்பதும் தெரிந்து போயிற்று.

நாளடைவில் காமுவின் மனம் நீலாவைப் பற்றி கமலா விடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று துடி துடித்தது.நீலா அவளை விட அழகியா? நீலாவின் குணம் காமுவின் குணத்தை விடச் சிறந்ததா? நீலா கணவனிடம் அன்பு பூண்டு வாழ்கிறாளா? இருவரும் சந்தோஷமாக, ஒற்றுமையாக இருக்கிறார்களா? இப்படிப் பலவிதமான கேள்விகள் அவள் மனத்துள் எழுந்து அவளை வேதனைப் படுத்தின.
-----------------

7. பாவம், சங்கரன்!

கமலாவின் வீட்டுக்குக் காமு சென்றிருந்தபோது அவள் கவனம் கூடத்துச் சுவரில் மாட்டப்பட்ருந்த ஒரு படத்தின் மீது விழுந்தது. நீலாவும், சங்கரனும் மாலையும் கழுத்துமாக எடுத்துக் கொண்ட புகைப்படம்-பல பத்திரிகைகளில் முன்பு பிரகரமாகிக் காமுவைப் பார்த்து எள்ளி நகையாடிய அதே பகைப்படம் அங்கே காட்சி அளித்தது. காமு தன் உள்ளத்தில் எழும்பய பல உணர்ச்சிகளை எவ்வளவோ கட்டுப்படுத்தினாள். கட்டுப் படுத்தவும் முயற்சித்தாள். ஆனால் ஆசைதான் வெற்றி கொண்டது.

"நீலா உங்கள் வீட்டுக்கு அடிக்கடி வருவது உண்டா?" என்று புகைப்படத்தைக் காண்பித்துக் கொண்டே கமலாவிடம் கேட்டாள் காமு.

"அந்தப் பெண் அவ்வளவாக யாரையுமே மதிப்ப தில்லை, காமு!" என்று கமலா தன் அபிப்பிராயத்தை அறிவித்ததும், காமுவின் கொந்தளிக்கும் உள்ளம் சற்று ஆறுதல் அடைந்தது. காமுவைவிட நீலா எந்த விதத்தில் உயர்ந்தவள்? கலாசாலைப் படிப்பு படித்திருக்கிறாள். வசதி இருந்தால் காமுவும் படித்து இருக்க மாட்டாளா என்ன? ஏழை உபாத்தியாயரின் பெண்ணாக மட்டும் காமு பிறக்காமல் இருந்தால், கலாசாலை என்ன உயர்தரக் கல்விக்காகக் கடல் கடந்து கூடப் போயிருப்பாளே? காமுவின் தாழம்பூ மேனியைவிட நீலாவின் வெள்ளை நிறம் ஒன்றும் பிரமாத அழகு வாய்ந்ததில்லை. காமுவின் கருமணிக் கண்களைவிட நீலாவின் பூனைக்கண் அவ்வளவு பிரமாதமில்லை. கண்களுக்கு எவ்வளவு தான் மையைத் தீட்டிக் கொண்டாலும், இயற்கையாக நீண்டு விளங்கும் கண்களைப் போல் ஆகிவிடுமா என்ன? நீலாவுக்குச் சற்றுப் பூனைக்கண் சற்றுப் பூனைக்கண் தான்! நாழிக்கொரு உடையும், வேளைக்கொரு அலங்காரமுமாக, பகட்டால் அவள் அதிக அழகிபோல் தோற்றமளிக்கிறாள், அவ்வளவு தான்!

அப்பப்பா! சிந்தனையின் வேகம்தான் எவ்வளவு? நொடிப்பொழுதில் நீலாவையும், தன்னையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டுவிட்டாள் காமு.

"என்ன காமு, ஒரே யோசனையில் ஆழ்ந்துவிட்டாய்?” என்று அவள் சிந்தனை வேகத்துக்குக் கமலா கடிவாளம் போட்டு இழுத்த பிறகுதான் காமு இந்த உலகத்தைப் பற்றி நினைக்க ஆரம்பித்தாள்,

"நீலாவுடன் உனக்குச் சிநேகம் செய்து கொள்ள வேண்டுமா என்ன? என்றைக்காவது ஒருநாள் சங்கரன் எங்கள் வீட்டிற்கு வரும்போது சொல்லி அனுப்புகிறேன், வருகிறாயா?" என்று அன்புடன் கேட்டாள் கமலா.

‘நீலாவுடன் சிநேகம் செய்துகொள்ள வேண்டுமா? அது அவசியம் தானா?' என்று தன்னையே கேட்டுக் கொண்டாள் காமு. மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் நீலாவுக்கும் தனக்கும் ஏற்பட்டிருக்கும்போது, அவளுடன் நட்புக் கொள்ள வேண்டிü. அவசியம் என்ன என்பது காமுவுக்கே புரியவில்லை.

“ஆகட்டும் பார்க்கலாம். அவ்வளவு பெரிய இடத்துச் சிநேகிதம் கிடைத்துவிடுமா?" என்று கமலாவுக்குக் கூறி விட்டு, அவளுக்குத் தேவையான தையல் புஸ்தகங்களில் சிலவற்றை வாங்கிக் கொண்டு புறப்பட்டாள் காமு.

அவள் மனத்தில் நீலாவைப் பார்க்க வேண்டும் என்கிற ஆவலைவிடச் சங்கரனைப் பார்க்க வேண்டும் என்கிற எண்ணம்தான் ஓங்கி நின்றது.

வீட்டிற்கு வந்ததும் காமு தன் தகப்பனாரிடம் சங்கரனைப் பற்றியும் அவன் மனைவியைப் பற்றியும் கூற வேண்டுமென்று நினைத்துக் கொண்டாள். அவளைத் திரஸ்கரித்த சங்கரனுக்கு அவளைவிட அதிக அழகான மனைவியோ, அவளைவிடக் குணத்தில் சிறந்தவளோ வாய்க்கவில்லை. இந்த எண்ணம் ஏனோ அவள் மனத்தில் ஒருவித திருப்தியை ஏற்படுத்தியது. பகல் சாப்பாட்டிற்காக ராமபத்திர அய்யர் கடையை மூடிக்கொண்டு வீட்டிற்கு வந்தார். இலை போட்டுப் பரிமாறிய பின்பு, காமு அவர் எதிரில் உட்கார்ந்து கொண்டாள். "காலையில் யார் வீட்டிற்கோ போக வேண்டுமென்று சொன்னாயே அம்மா, போயிருந்தாயா?” என்று பெண்ணை விசாரித்தார் ராமபத்திர அய்யர்.

எதைப் பற்றித் தானாகவே வலுவில் கூறவேண்டும் என்று நினைத்திருந்தாளோ அதே விஷயத்தைப் பற்றி தகப்பனாரே கேட்டதும், காமுவுக்கு உற்சாகம் பொங்கி வந்தது.

"போயிருந்தேன் அப்பா. என் சிநேகிதியின் கணவருக்கு நம் சங்கரனை நன்றாகத் தெரியுமாம்!" என்றாள் காமு.

'நம் சங்கரன்' என்கிற வார்த்தையில் பொதிந்திருந்த அர்த்தத்தில் ராமபத்திர அய்யர் காமுவின் மனோநிலையை ஒருவாறு ஊகித்துக் கொண்டிருந்தார். சங்கரனைப் பற்றிய நம்பிக்கை எங்கோ ஒரு மூலையில் காமுவின் இருதயத்தில் நிலைபெற்று விட்டது. அது அசங்காமல் ஆடாமல் இருந்து வருகிறது. சங்கரன் வேறொருத்திக்குச் சொந்தம் என்று தெரிந்ததும் அந்த நம்பிக்கை மாறவில்லை. இதன் காரணம் என்ன என்பது அவருக்குப் புரியவில்லை. மனித எண்ணங் களுக்கும், மனத்துக்கும் புரியாத சக்தி ஒன்று இருக்கிற தல்லவா?

"அப்படியா?” என்று கேட்டு விட்டுச் சிறிது நேரம் பேசாமல் இருந்தார் அவர். மறுபடியும் காமுவே பேச ஆரம்பித்தாள்.

"அவர் மனைவி நீலா ரொம்பவும் நாகரிகமாம் அப்பா. யாரையுமே லட்சியம் பண்ண மாட்டாளாம்."

'பணக்காரர் வீட்டுப் பெண் இல்லையா அம்மா? அவர் களில் பெரும்பாலோர் அப்படித்தான் இருக்கிறார்கள் இந்தக் காலத்தில்!'' - அவர் பதில் பட்டதும் படாததுமாக இருந்தது காமுவுக்கு!

அதற்குப் பிறகு ராமபத்திர அய்யர் ஒன்றும் பேச வில்லை. எந்த விஷயத்தையும் அவர் பிரமாதப்படுத்த மாட்டார். அவர் சுபாவம் அப்படி. அநேகமாக ஆண்களின் சுபாவமே அப்படித்தான்! பெண்கள்தான் எதையும் கண், காது, மூக்கு வைத்துப் பேசும் பழக்கம் உள்ளவர்கள். காமு இதே விஷயத்தை அவள் அம்மாவிடம் கூறியிருந்தால் அது இதற்குள் தெருக்கோடி வரைக்கும் பரவியிருக்கும். எந்த ரகசியத்தையும் மனத்துள் வைத்துக் காக்கும் சக்தியைப் பெண்கள் அதிகமாகப் பெறவில்லை.

காமு தையல் இயந்திரத்தின் முன்பு உட்கார்ந்தாள். இயந்திரத்தில் தைப்பதற்கு - அவள் முயன்றாலும், அவள் மனம் - சங்கரன் பற்றியே எண்ணமிட்டது. பொன் மணியில் இருந்தபோது சங்கரனின் கல்யாணப் பத்திரிகை யைப் படித்தவுடன் ஏற்படாத தாபம், கல்யாணமான கவின் புகைப்படத்தைப் பத்திரிகைகளில் பார்த்தபோது ஏற்படாத ஆவல், பட்டணம் வந்த பிறகு அவளுக்கு ஏற்படக் காரணம் என்ன என்பது அவளுக்கே புரியவில்லை.

'பணத்தால் மனிதன் உயருவதுமில்லை, தாழ்வதும் இல்லை' என்று அறிஞர்கள் கூறும் வார்த்தையைக் கமலா அடிக்கடி அவளிடம் சொல்லிச் சொல்லிக் காமுவின் மனத்தில் ஏற்பட்டிருந்த தாழ்வு மனப்பான்மை அகன்று விட்டது. சமூகத்தில் அவள் தன்னையே உயர்வாக நினைக்க ஆரம்பித்தாள். கல்யாணம் ஆகவில்லை என்று நாலு பேருக்குநடுங்கி அடுப்பங்கரையில் அடைக்கலம் புகுந்த காமு இல்லை அவள் இப்போது. நல்ல குணங்கள் மனத்தில் எழும்போது, கூடவே அகங்காரம், கர்வம் என்ற தீய குணங்களும் ஏற்படும் அல்லவா? நன்மையும், தீமையும் ஒன்றை யொன்று அடுத்து உறவு கொண்டாடுவது தானே உலக இயல்பு?

யார் வீட்டிலோ கல்யாணப் பெண்ணுக்கு ரவிக்கைகள் தைப்பதற்குக் காமுவிடம் கொண்டு வந்து நாலைந்து துணிகள் கொடுத்திருந்தார்கள். ஆழ்ந்த நீலப் பட்டில் ஜரிகைப் பொட்டுகள் வைத்த நுணி ஒன்று. ரோஜா வர்ணத்தில் நட்சத்திரங்கள் போல் மின்னும் ஜரிகை ரவக்கை ஒன்று. பால் வர்ணத்தில ஜரிகைக் கீற்றுகள் போட்ட துணி ஒன்று. 'உடம்போடு ஒட்டினாற் போல் தைத்துவிடு அம்மா. தஸ் புஸ் எனறு தைத்து விடாதே. ஒரு ரவிக்கைக்கு இரண்டு ரூபாய் வேண்டுமானா லும் கூலி தந்து விடுகிறேன்! என்று அந்தக் கல்யாணப் பெண்ணே காமுவிடம் நேரில் வந்து கூறியிருந்தாள்.

"அவள் வீட்டுக்காரர் உத்தரவு அப்படி!" என்று கல்யாணப் பெண்ணுடன் வநதிருந்த இன்னொரு பெண் கண்ணைச் சிமிட்டிச் சிரித்தாள்.

வாழ்க்கையில் தாம்பத்ய ஒற்றுமையைப் போல் இன்பம் தரக்கூடியது வேறொன்றும் இல்லை. வண்டியில் பூட்டிய மாடுகள் இரண்டும் சமநோக்குடன் வண்டியை இழுக்க வேண்டும். முன்னுக்குப் பின் முரணாக ஒரு மாடு மிரண்டா லும் வண்டி குடை சாய்ந்து விடும்.

மறுபடியும் நீலாவையும், சங்கரனையும் காமுவின் மனம் ஒப்பிட்டுப் பார்த்தது. திடும் திடும் என்று அவள் சிந்தனை யைக் குழப்பும் அந்த நீலாவை அவசியம் நேரில் பார்த்து விட வேண்டும் என்று உறுதி கொண்டாள் காமு. கல்யாணப் பெண்ணின் ரவிக்கைகளை ஒழுங்காகத் தைத்து மடித்து டிராயரில் வைத்துப் பூட்டிவிட்டு, மாலை வகுப்புக்காகப் புஸ்தகங்களை எடுத்துக் கொண்டு பள்ளிக்கூடத்துக்குப் புறப்பட்டாள் காமு.

அவள் வாயிற்படி இறங்குவதற்கு முன்பு, அங்கு வந்து நின்ற ரிக்ஷா வண்டியிலிருந்து கமலா அவசரமாகக் கீழே இறங்கினாள். பெருமூச்சு வாங்க, "இதோ பார் காமு! அன்றே உன்னிடம் கூறவேண்டும் என்றிருந்தேன். நீலாவும், சங்கரனும் நாளன்றைக்கு எங்கள் வீட்டிற்கு டீ சாப்பிட வருகிறார்கள். அதுவும் கல்யாணம் ஆன பிறகு முதல் முறை இப்போதுதான் எங்கள் வீட்டிற்கு வருகிறார்கள். விருந்து சாப்பிடுகிறார்கள். வெறுங்கையுடன் அனுப்பினால் நன்றாக இராது. இந்தப்பட்டுத் துணியை வாங்கி வந்தேன். நீலாவிடம் போய் ரவிக்கைக்காக அளவும் வாங்கி வந்திருக் கிறேன். அழகாகத் தைத்துவிடு. என்ன தெரிந்ததா?" என்று மருதாணிச் சிவப்பில் கண்ணைப் பறிக்குப் பட்டு ஒன்றைக் காமுவிடம் கொடுத்தாள் கமலா.

காமுவின் மனத்தில் க்ஷண காலத்தில் ஆயிரமாயிரம் எண்ணங்கள் தோன்றின. வாழ்க்கையில் முதன் முதலாகக் காலடி வைக்கும்போதே அவளுக்குப் போட்டியாக வந்த நீலாவுக்கா அவள் ரவிக்கை தைத்துக் கொடுக்க வேண்டும்? அந்த அழகிய சிவப்பு வர்ணப் பட்டு ரவிக்கையை அணிந்து கொண்டு சங்கரனின் மனத்தை அவள் மகிழ்விக்கப் போகிறாள். அவர்கள் மகிழ்ந்தால் என்ன? மகிழாமல் இருந்தால் காமுவுக்கு என்ன? பணமில்லாத ஏழைப் பெண் என்று ஒதுக்கி வைத்த பணக்கார வீட்டுப் பெண்ணுக்கு, பணக்கார வீட்டு மருமகளுக்கு அவள் ரவிக்கை தைத்துக் கொடுக்க வேண்டுமா? கையில் வைத்திருந்த பட்டை லேசாகத் தடவியபடியே காமு யோசிப்பதைப் பார்த்து, "என்ன காமு! ஒரே யோசனையில் ஆழ்ந்து விட்டாய்? முடியுமா இல்லையா? உனக்கு முக்கியமான வேலை இருந்தால் நானே தைத்து விடுகிறேன்!" என்றாள் கமலா.

வருவாய் போதாமல் கஷ்டப்பட்ட காமுவுக்குத் தையல் இயந்திரமும், அதற்குத் தேவையான துணிகளும், புஸ்தகங் களும் கொடுத்து உதவிய கமலாவின் வார்த்தையைத் தட்ட முடியவில்லை."இதென்ன பிரமாதம்! தைத்து விடுகிறேன்' என்று கூறி. துணியை உள்ளே எடுத்துப்போய் வைத்தாள்.

ஊரில் எத்தனையோ பேர்களுக்குத் துணி தைக்கும் காமுவுக்கு அந்தப் பட்டை மட்டும் பிரத்தியேகமான முறை யில் அழகாக வெட்டித் தைக்க வேண்டும் என்கிற ஆவல் தோன்றியது. மிக உயர்ந்த மாதிரியான். மோஸ்தரில் அதை வெட்டி அழகான ரவிக்கையாக ஒரு மணி நேரத்துக்குள் தைத்து முடித்து விட்டாள். ரவிக்கையை மடித்துக் கையில் எடுத்துக் கொண்டு சமையல் அறையில் ஏதோ வேலையாக இருந்த தாயிடம் சென்றாள் காமு. பட்டினம் வந்த பிறகு அம்மாவின் குணமும் அநேகமாக மாறி இருந்தது காமுவுக்கு ஆச்சரியமாக இருந்தது. முன்னைப் போல் எடுத்ததற் கெல்லாம் முணுமுணுக்காமல் விசாலாட்சி, தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்தாள். கிராமத்தைப்போல் வெளியில் நாள் தவறாமல் அப்பளக் கச்சேரிக்கு அவள் போவதற்கு இங்கே இடம் எதுவும் இல்லை.

'அம்மா! இந்த ரவிக்கை நன்றாக இருக்கிறதா சொல்லுங்கள்?" என்று காமு தன் கையிலிருந்த ரவிக்கையைத் தாயிடம் காண்பித்தாள்.

"நன்றாக இருக்கிறது. 'உன் சிவப்பு உடம்புக்கு எடுப்பாக நன்றாக இருக்கும்" என்று கூறி, மகளின் சிவந்த மேனியை ஆசையுடன் பார்த்தாள் விசாலாட்சி.

"இதன் விலை என்ன தெரியுமா? கஜம் ஏழு ரூபாயாக் கும்! நமக்கு ஒரு ரூபாய் கொடுத்துத் துணி வாங்கவே. கஷ்டமாக இருக்கிறதே" என்று மனம் விட்டுப் பேசிய காமு, "இது யாருக்காகத் தைத்திருக்கிறேன் சொல், பார்க்கலாம்" என்று கேட்டாள்.

"யாருக்காகத் தைத்தால் எனக்கு என்ன? நீ போட்டுக் கொண்டு நான் பார்த்து மகிழப் போகிறேனா என்ன? சாதாரண சீட்டியும், வாயிலும் தான் நீ கொடுத்து வைத்தது. நீ படித்து உத்தியோகம் பண்ணி சம்பாதித்து இந்த மா திரி விலை உசந்த துணிகளை உடுத்திக் கொள்ளும்போது நான் இருக்கமாட்டேன் காமு! எனக்கு என்னவோ வர வர உடம்பு தள்ளவில்லை. உன் அப்பாவின் உடம்பு பட்டினம் வந்த பிறகு தேறி விட்டது. என் உடம்புதான் பலவீனமாகி விட்டது!" என்று கூறினாள் விசாலாட்சி.

உண்மையும் அதுவே தான். விசாலாட்சியின் உடம்பு மெலிந்து தான் போயிருந்தது. திரண்டு உருண்டிருந்த தோள்கள் மெலிந்து, முழங்கை வரையில் ரவிக்கை தொள தொளவென்று தொங்கியது. முகம் களையிழந்து வெளுத் திருந்தது. பட்டினம் வந்து இரண்டு மாதங்களுக்கெல்லாம் விசாலாட்சி பத்து வயது அதிகமாகத்தோற்றம் அளித்தாள். 'காமுவுக்குக் கல்யாணமாகவில்லையே' என்கிற கவலை அவளையும் அறியாமல் அவள் உடலையும், மனத்தையும் அரிக்கத் தொடங்கி இருந்தது."பெண்கள் படிக்கிறார்களாம். சுயமாகச் சம்பாதிப்பதாம். ஒருவர் தயவு இன்றி வாழ்வதாம்!" என்பவை போன்ற பேச்சுக்களைக் கேட்டு விசாலாட்சி மனதுக்குள் சிரித்திருக்கிறாள். 'வீடும் விளக்கும், அன்பும் அறமும், இன்பமும், காதலும் ஒன்றோடு ஒன்று இணைந்து காணப்படும் இல்லறத்தை விட இவர்கள் படித்துச் சம்பாதித்து நடத்தப் போகும் தனி வாழ்வு சிறப்புடையதா என்ன?' என்று நினைத்துப் பார்த்திருக்கிறாள். இந்தக் காலத்துப் பெண்களின் போக்கு அவள் மனத்துக்கு ஒன்றும் புரியவில்லை.

காமுவைப் போன்ற பெண்கள் இரண்டு குழந்தைகளுடன் தெருவில் போகும்போது அவர்களைப் பார்த்துப் பெருமூச்சு விடுவாள் விசாலாட்சி. அடுத்த வீட்டுப் பெண் நொடிக் கொருதரம் “என் ஆத்துக்காரருக்கு இது பிடிக்கும், அது பிடிக்கும்' என்று அன்புடன் சமைப்பதைப் பார்த்து அவள் ஏங்கி இருக்கிறாள். கொடிய க்ஷயரோகக் கிருமிகளை விட மனோ வியாகூலம் மனத்தை இன்னும் துரிதமாகத் துளைத்து விடக் கூடியது. விசாலாட்சியும் அதற்குத்தான் இலக்காகிக் கொண்டிருந்தாள்.

மெலிந்து சோகமே உருவாக உட்கார்ந்திருக்கும் தாயைப் பார்த்ததும் காமுவின் கண்களில் பலபலவென்று நீர் வழிந்தது.

"அம்மா! நீ இப்படியெல்லாம் மனசை அலட்டிக் கொள்ளக்கூடாது. என்னை உன் பிள்ளை என்று நினைத்து கொள்ளேன்" என்று காமு வாத்ஸல்யத்துடன் கூறிவிட்டுத் தாயின் கழுத்தைக் கட்டிக் கொண்டாள். தாயின் மனம் மேலும் துயரத்தில் ஆழ்ந்தது.
----

விடியற்கால வேளை. கிழக்கே அருணோதயம் ஆகிக் கொண்டிருந்தது. வசந்த காலமாதலால் மரங்களெல்லாம் புஷ்பித்து ‘கம்'மென்று வாசனையை எழுப்பிக் கொண் டிருந்தன. சம்பகம் துளசி மாடத்தை மெழுகிக் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள். முதல் நாள் இரவைப் பற்றி நினைத்தாலே அவளுக்கு உடம்பு ஒரு தரம் நடுங்கியது.

முதல் நாள் மாலை, சங்கரன் காரியாலயத்திலிருந்து வருவதற்கு முன்பே நீலா ‘எக்ஸிபிஷன்' பார்க்கத் தன் சிநேகிதிகளுடன் புறப்பட்டு விட்டாள். அவள் உடுத்திக் கொண்டு மாடியிலிருந்து கீழே இறங்கி வந்ததுமே மீனாட்சி அம்மாள் அவளைப் பார்த்து ஒரு மாதிரியாக விழித்தாள்- பிறகு, "இந்தாடி அம்மா! எங்காவது போகிறதானால் முன்னாடியே அவனிடம் ஒரு வார்த்தை சொல்லி விடு. இல்லா விட்டால் ஒரு கடுதாசியானாலும் எழுதி வைத்து விட்டுப் போ. இந்த மாதிரியெல்லாம் சட்டை பண்ணாமல் இருந்தால் அவனுக்கும் பிடிக்காது எனக்கும் பிடிக்காது!' என்றாள்.

"வெளியில் போகக் கூட சுதந்திரமில்லையா என்ன எனக்கு? நீங்கள் தான் கர்னாடகம். அவர் கூடவா படிக்க வில்லை?" என்று கேட்டு விட்டு நீலா, பிறந்தகத்தில் அவளுக்கு ஸ்ரீதனமாகக் கொடுத்திருந்த காரில் கொண்டு புறப்பட்டாள்.

'நீங்கள் தான் கர்னாடகம், அவர் கூடவா படிக்க வில்லை' என்று அவள் கேட்ட வார்த்தைகள் மீனாட்சியின் மனத்தில் சுருக்கென்று குத்தின. 'கர்னாடகமா? வீட்டை வாசலைக் கவனித்து, கணவ்னுக்குப் பணிவிடை செய்வது கர்னாடகமா? தான் பெற்ற குழந்தைகளைச் சீராட்டி வளர்ப்பது கர்னாடகமா? தன்னைவிட நீலா எந்த விதத்தில் உயர்ந்தவள்? சர்மாவுக்கும், தனக்கும் பல விஷயங்களில் அபிப்பிராய பேதம் இருந்தாலும் சர்மாவைக் கேட்காமல் தான் ஒன்றும் செய்வதில்லையே! குடும்ப விஷயங்களில் எவ்வளவு தான் சச்சரவு ஏற்பட்டாலும் பிறத்தியார் பார்த்துச் சிரிக்கும்படி தான் ஒரு போதும் கணவனைத் தாழ்வு படுத்தியதில்லை. இவ்வாறெல்லாம் எண்ணமிட்டுக் கொண்டே, கோபம் நிறைந்த கண்களுடன் மீனாட்சி திரும்பிப் பார்த்ததும் அவள் எதிரில், சம்பகம் தான் காணப் பட்டாள்.

"நான் கர்னாடகமாம். இவள் நாகரிகமாம். கேட்டயாடி சம்பகம்? நீயும் இந்த வீட்டுக்கு வந்து பன்னிரண்டு வருஷங்கள் ஆயிற்றே? உன்னை எத்தனை சொல்லி இருப்பேன்? உன் வாயில் அந்த மாதிரி வார்த்தை இது வரையில் வந்தது உண்டா?" என்று தன் மனத்திலிருந்த ஆத்திரம் பூராவையும் கொட்டித் தீர்த்தாள் மீனாட்சி.

"சிறிசு அம்மா. கொஞ்ச நாளைக்கு அப்புறம் எல்லாம் சரியாகிவிடும்” என்று சம்பகம் கூறியதும், 'சிறிசா? இந்த நாளில் கல்யாணமாகிற போதே இருபது வயசு ஆகிவிடுகிறதே! சிறிசாம் சிறிசு! பத்தா பன்னிரண்டா வயசு?" என்று அவள் பேரில் சீறி விழுந்து விட்டு கூடத்துக்குப்போய் விட்டாள் மீனாட்சி.
----

அதற்குப் பிறகு அந்த வீட்டில் பயங்கர அமைதி நிலவ ஆரம்பித்தது. 'ராத்திரி என்ன சமையல் செய்வது?' என்று கேட்ட சமையற்கார மாமிக்கு மீனாட்சியிடமிருந்து பதில் ஒன்றும் கிடைக்கவில்லை. "கடைத்தெருவுக்குப் போய் ஏதாவது புடவை பார்த்து வரலாம்" என்று கூப்பிட்ட ருக்மிணியிடம் கூடப் பேசவில்லை மீனாட்சி. சரியாக மணி ஐந்தே முக்காலுக்கு வாசல் ஹாலில் போட்டிருந்த நாற்காலியில் உட்கார்ந்து, சங்கரனின் வரவை எதிர் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"எனக்கு நிச்சயதாம்பூலம் மாற்றின அன்றைக்கே தெரியும்" என்று சமையற்கார அம்மாமி தலையைப் பலமாக ஆட்டினாள், சம்பகத்தைப் பார்த்து.

"பாரேன், உன் மாமியார் அதிகம் பேசினால் அவள் தனிக் குடித்தனம் போகாவிட்டால் என் பெயரை மாற்றி வைத்துக் கொள்ளுகிறேன்” என்று மேலும் தன் அபிப்பிராயத்தை ஊர்ஜிதப்படுத்தினாள் அவள் .

"இந்த மாதிரி சுபாவக்காராளோடு அதிகம் வைத்துக் கொள்ளக்கூடாது மாமி" என்றாள் சம்பகம்.

மாலை ஆறு மணிக்கு சங்கரன் காரியாலயத்திலிருந்து வீடு வந்தான். வரும்போதே முகமெல்லாம் வாடிப் போயிருந் தது. என்றுமில்லாமல் தெருப் பக்கம் நாற்காலியில் உட்கார்ந்திருந்த தாயைக் கண்டதும், அவன் மனம் திடுக் கிட்டது. எள்ளும், கொள்ளும் படபடவென்று பொரிந்து தள்ளி விடும் கடுங்கோபத்துடன் முகம் சிவக்க மீனாட்சி உஸ்ஸென்று ஒரு பெருமூச்சு விட்டாள்.

"என்ன அம்மா?" என்று கேட்டுக் கொண்டே தலையை இரு கைகளாலும் தாங்கிக் கொண்டு தாயின் அருகில் உட்கார்ந்தான்

"சாயங்கால வேளையில் தலையில் கையை வைத்துக் கொண்டு இதென்னடா அவலட்சணம்!" என்று கேட்டுக் கொண்டே. தாயாருடன் சேர்ந்து ஒந்துப் பாட ருக்மிணியும் அங்கு வந்து சேர்ந்தாள்.

"பெண்டாட்டி அமைந்திருக்கிற லட்சணம் மாதிரி இதுவும் ஒன்று” என்று மீனாட்சி மேலும் 'புஸ்' ஸென்று பெருமூச்சு விட்டாள்.

"ஏண்டா! நானும் தான் பார்க்கிறேன்; வீட்டில் யாரையும் மதிக்கிறதில்லையே அவள்? இந்த மாதிரி இருந்தால் நன்றாக இருக்கிறதா? நாலு பேர் பார்த்தால் என்ன சொல்ல மாட்டார்கள்?" என்று அடுக்கிக் கொண்டே போனாள் ருக்மிணி

தாயும், மகளும் மாறி மாறி யாரைப் பற்றிப் பேசு கிறார்கள் என்பது புரியாமல் சங்கரன் திகைத்துப் போனான்.

வாயைத் திறக்கிறானா பாரடி! இவன் கொடுக்கிற இடம் தானே இத்தனைக்கும் காரணம்!" என்று மீனாட்சி ஆத்திரத்துடன் கூறினாள்.

அதற்குள் பானு அங்கு வந்து சேர்ந்தாள். "சித்தப்பா! சித்தி பாட்டியை ‘எக்ஸிபிஷ'னுக்குக் கூட்டிக் கொண்டு போகவில்லை என்றுபாட்டிக்கும் அத்தைக்கும் ஒரே கோபம்" என்று சங்கரனின் சங்கடமான நிலையை ஒருவாறு தீர்த்து வைத்தாள் அவள்.

“எனக்கு 'எக்ஸிபிஷ'னும் வேண்டாம், ஒண்ணும் வேண்டாம். நீயே கேளடா நியாத்தை! பொழுது விடிந்து பொழுது போனால் ‘அங்கே போகிறேன், இங்கே போகிறேன்' என்று கிளம்பி விடுகிறாள் உன் பெண்டாட்டி! கிளம்புகிற வரைக்கும் யாரிடமும் சொல்லுகிறதில்லை. இன்றைக்கும் புறப்படும்போது சொன்னேன், அவனிட மாவது ஒரு வார்த்தை சொல்லி விட்டுப் போகக்கூடாதா என்று. அதற்கு நான் கர்னாடகமாம். நீ படித்தவனாம். அவள் எங்கு போனாலும் ஒன்றும் சொல்ல மாட்டாயாம்.''

நெஞ்சழுத்தமும் அகம்பாவமும் நிறைந்த மீனாட்சியின் கண்கள் கலங்கின. சங்கரன் ஒருமுறை நீலாவை மனதார வாழ்த்தினான்! பரமசாதுவாக இருக்கும் சம்பகத்தைத் தன் தாய் படுத்தும் பாட்டிற்கு இப்படி வாயாடியாக ஒரு மருமகள் இருக்க வேண்டியது தான்! இருந்தாலும், மாமியார் என்று ஒரு மதிப்பு வேண்டாமா? ஆயிரம் பெற்றாலும் அடக்கம் வேண்டாமா?

"நாளையிலிருந்து அவள் ஜோலிக்கு நான் போக மாட்டேன். தெரிந்ததா? அடக்கிக் குடித்தனப் பாங்குக்கு நீ கொண்டு வருவாயோ, இல்லை, நீயே அவளுக்கு அடங்கி நடப்பாயோ?'' என்று கூறிவிட்டு மீனாட்சி உள்ளே எழுந்து போய் விட்டாள்.

சங்கரனுக்கு ஏற்கெனவே தலையை வலித்துக் கொண்டிருந்தது. பணக்கார வீட்டுப் பெண் என்கிற அகம்பாவத்தைச் நீலா சில காலமாகவே கணவனிடம் காட்டத் தொடங்கி இருந்தாள். இன்று தன் தாயையும் அவள் உதாசீனமாகப் பேசிவிட்டுப் போயிருந்தது வேறு அவன் கோபத்தை அதிகமாக்கி விட்டது.

மணி ஏழு, எட்டு என்று கடிகாரத்தில் ஆகிக் கொண் டிருந்தது. வழக்கத்துக்கு மாறாக அன்று எல்லோரும் சீக்கிரமே சாப்பிட்டு விட்டுப் படுத்துக் கொண்டு விட்டார்கள். சமையற்கார மாமியிடம் மீனாட்சி, நீலாவின் சாப்பாட்டை சாப்பிடும் கூடத்தில் ஒரு மூலையில் வைத்து விட்டுப் படுத்துக் கொள்ளச் சொல்லி விட்டாள், அந்த வீட்டில் தினம் யாராவது சினிமாவுக்கோ, நாடகத்துக்கோ கண்காட்சிக்கோ போய் விட்டு இரவு பத்து மணிக்கு வந்து சாப்பிடுவார்கள். சமையற்கார மாமி காத்திருந்து உணவு பரிமாறுவாள். இன்று நீலாவை அவமதிக்க வேண்டும் என்று மீனாட்சி அம்மாள் இந்த உத்தரவை சமையற்காரிக்கு இட்டாள்.

கோடை காலமாதலால் வெப்பம் அதிகமாக இருக்கவே சம்பகம் பானுவை வைத்துக் கொண்டு தோட்டத்துப் பக்கம் நிலா வெளிச்சத்தில் உட்கார்ந்திருந்தாள். மல்லிகைப் பந்தலிலிருந்து 'கம்'மென்று வாசனை வீசியது. வெள்ளை வெளேர் என்று மலர்ந்திருந்த மல்லி மலர்கள் நிலவொளியில். வெள்ளி மலர்களைப் போல் பிரகாசித்தன. வானவெளியில் சந்திரன் ஊர்ந்து செல்வதைக் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் சம்பகம். தொலைவில், ஆயிரமாயிரம் மைல்களுக்கு அப்பால் வசிக்கும் கணவனை நினைத்து ஏங்கியது. அவள் மனம்! 'உலகத்துக்குப் பொதுவாக ஒளிவீசும் சந்திரன், தன் துயரை தன் மனக்கசப்பை அங்கு களிப்புடன் வாழும் கணவனிடம் கூறுவானோ?' என்று நினைத்துப் பார்த்துப் பெருமூச்சு விட்டாள். கவலையால் முகம் வாடி இருந்தாலும், களை நிறைந்த அந்த முகம் பார்ப்பதற்கு இனிமையாகத் தான் இருந்தது.

தாயின் சிந்தனையைக் கவனித்த பானு,"அம்மா!நான் உன்னைப் போல் இருக்கிறேனா?" அப்பாவைப் போல் இருக்கிறேனா?" என்று கேட்டாள். குழந்தை வளர்ந்து பெரியவள் ஆக ஆகக் கேள்விகளும் பிரமாதமாக இருந்தன. பானு அநேகமாகத் தாயைப் போலத்தான் இருந்தாள். ஆனால் நீண்டு தடித்த இமைகளுடன் இருக்கும் கண்கள் அவள் தகப்பனாரைப் போல் இருந்தன. சதா துயிலில் ஆழ்ந்த தோற்றமளிப்பவை. "கண்களும், புருவங்களும் அவரைப் போல் தான் இருக்கின்றன" என்று சம்பகம் வாய் விட்டுக் கூறினாள்.

ஒரு தடவை அவள் கணவன் சம்பகத்தைப் பார்த்து 'இப்படி, தொட்டால் ஒட்டிக் கொள்ளும் கறுப்பாக இருக்கிறேனே? பலாச்சுளை மீது ஈ உட்கார்ந்த மாதிரி இருக்கிறதே உன்னையும் என்னையும் பக்கத்தில் பக்கத்தில் நிறுத்தினால்! எதைக் கண்டு என்னிடம் மயங்கி விட்டாய் சம்பகா?" என்று கேட்டான்.

சம்பகம் வெட்கத்துடன் தலையைக் குனிந்து கொண்டாள். ஆழ்ந்து தன்னையே நோக்கும் புருஷனின் கண்களின் குளுமையான பார்வையைச் சந்திக்கும் சக்தியை இழந்துதான் அவள் தலையைக் குனிந்து கொண்டாள். மீண்டும் அவன் அவளை வற்புறுத்திக் கேட்டதும், "உங்கள் கண்களின் அழகில் மயங்கித்தான்!” என்று உதடு அசங்காமல் சம்பகம் கூறினாள். அவை யெல்லாம் இன்று கனவு போல் ஆகிவிட்டன. மேல் படிப்புக்காக அயல் நாடு போனவன், மனைவி குழந்தையை மறந்து விட்டான்!

பானு தூங்கி விட்டாள். அவள் தூங்கியதையும் கவனியாமல் சம்பகம் இறந்த காலத்தைப் பற்றியே எண்ண மிட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். மனைவியின் வரவை எதிர்பார்த்துக் கண்: பூத்துப் போய், தோட்டத்துப் பக்கம் வந்தான் சங்கரன். மல்லிகைப் பந்தலின் கீழே உட்கார்ந்திருந்த சம்பகத்தைப் பார்த்ததும், 'மன்னி! நீலா உங்களிடமும் சொல்லிவிட்டு வெளியே போகவில்லையா?” என்று கேட்டான்.

நீலாவைப் பற்றி அவனிடம் என்ன கூறுவது? "உன் மனைவி யாரைத்தான் மதிக்கிறாள்? அவள் மகா கர்வக்காரி, அகம்பாவம் பிடித்தவள்” என்று அவனிடம் சொல்வது சரியாகுமா? சம்பகத்தின் பெருந்தன்மையான குணம், பொறுமை, நிதானம் முதலியவை அவளை அவ்விதம் கூறவொட்டாமல் தடுத்தன.

'கிளம்புகிற போது நான் சமையலறையில் வேலையாக இருந்தேன். உலக அனுபவமும் குடும்பப் பொறுப்பும் ஏற்பட இன்னும் கொஞ்ச காலம் ஆகவேண்டும். பிறகு தன்னால் திருந்திவிடுவாள், பாருங்கள்” என்று இருவருக்கும் பொதுவாகப் பேசினாள் சம்பகம்,

தெருவில் பளபளவென்று மின்னிக் கொண்டு நீலாவின் கார் வேகமாக உள்ளே வந்தது. அதிலிருந்து இறங்கி கையிலிருந்த அழகுப் பையைச் சுழற்றிக் கொண்டே ஒய்யார நடை போட்டுக் கொண்டு வந்தாள் நீலா
-----------------------

8. காமு கலங்கவில்லை!

தோட்டத்தில் நிலா வெளிச்சத்தில் மைத்துனனும், மன்னியும் என்ன ரகசியம் பேசுகிறார்கள்? பால்போல் நிலா காய்கிறது. செ. கொடிகள் புஷ்பித்து வாசனையை வீசுகின்றன. கணவன் இல்லாமல் பாலைவனத்து நிலவு போல் குன்றிப் போகும் இளமையுடன், சங்கரன் எதிரே மன்னி சம்பகம் உட்கார்ந்திருக்கிறாள். நீலா படித்த பெண் தான்! சமத்துவம் பேசுபவள்தான். இருந்தாலும் அவள் கணவனுடன் இன்னொரு பெண் தாராளமாகத் தனிமையில், நிலவு வீசுபு இரவில் உட்கார்ந்து பேசுவதைச் சகிக்கும் தியாக உளத்தைப் படைத்தவள் இல்லை. 'சரக் சரக்’ கென்று ஈருப்பு பூமியில் வேகமாய் உராய மாடிப் படிகளில் ஏறிச் சென்றாள் நீலா.

உடை மாற்றிக்கொண்டு கீழே அவள் இறங்கி வந்த போகூடத்தில் வழக்கமாக எரிந்து கொண்டிருக்கும் குழல் விளகும் அணைக்கப்பட்டிருந்தது. தனது அறை வாசல் தியை நீக்கி நீலாவைப் பார்த்து விட்டு, ருக்மிணி 'விசுக், ஒன்று தலையை உள்ளே இழுத்துக் கொண்டாள்.

சாப்பிடும் இடத்தை நீலா அடைந்தபோது, மையற்கார மாமி சுகமாகக் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தாள். சமையலறையைச் சுத்தமாக அலம்பி, கோலம் போட்டு வைத்திருந்தது. அந்த அறையின் மூலையில் பாத்திரங்கள் மூடி வைத்திருப்பதிலிருந்து, அவளுக்காக சாப்பாட்டை மூடி வைத்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டாள் நீலா. குடத்திலிருந்து ஒரு டம்ளர் நீர் எடுத்துக் குடித்துவிட்டுக் கோபத்துடன் மாடிக்குத் திரும்பும்போது அவள் எதிரில் சம்பகம் வந்தாள்.

"சாப்பிட வா அம்மா. நான் கையில் பிசைந்து. போடுகிறேன்" என்று உரிமையுடனும். அன்படனும் அவள். ஓரகத்தியை அழைத்தாள்.

நீலாவின் உள்ளத்தில் வெந்தழல் போல் கோபம் ஜ்வாலைவிட்டு எரியத் தொடங்கியது. அது ஒன்றுதான் குறைச்சல் எனக்கு" என்று கூறிவிட்டு சம்பகத்தின் பதிலை எதிர்பாராமல் மாடிக்குப் போய் விட்டாள் நீலா.

"இப்படியும் ஒரு சுபாவமா!" என்று அதிசயித்தாள் சம்பகம். மைத்துனன் மனத்தில் மனைவியைப் பற்றி மாமியாரும் நாத்தனாரும் ஏதோ கருவேற்றி இருக் கிறார்கள் என்பது சங்கரன் சற்றுமுன் தோட்டத்தில் அவளைப் பார்த்து நீலாவைப் பற்றிக் கேட்டதும் தெரிந்து சம்பகம் கவலையோடு மறுபடியும் தோட்டத் துக்குப்போய் உட்கார்ந்து கொண்டாள். மாடியிலே மைத்துனன் அறையில் கணவனும் மனையும் தர்க்க மிடுவது பட்டதும் படாததுமாக அவள் செவியில்விழுந்தது. அறையின் ஜன்னல் திரையை விலக்கிவிட்டு அதன் அருகில் நாற்காலியில் உட்கார்ந்திருந்தான் சங்கரன்.

"சாப்பிட்டாயா?"

"................"

"உன்னைத்தான் கேட்கிறேன்!"

"ரொம்பவும் கரிசனம் உங்களுக்கு!" நீலான் வார்த்தைகள் மெதுவாக, ஆனால் அழுத்தமாக வெளிவந்தன.

''உனக்குத்தான் என்னிடம் கரிசனம் அதிகம் என்று சங்கரன் பாதி கேலியாகவும், பாதி கோபமாகவும் கூறினான்

"நம் இரண்டு பேருக்கும்தான் ஒருத்தர் மேல் ஒருத்தருக்கு அக்கறை இல்லையே; உங்களுக்காவது உங்கள் மதனி பேரில் அன்பு பொங்கி வழிகிறது!"

"ஆமாம், பாவம்! அவளைப் பார்த்தால் எனக்கு க்கமாகத்தான் இருக்கிறது. பாவம்!” என்று சங்கரன் தொண்டை கரகரக்கக் கூறினான்.

"அதான் தோட்டத்தில் இரண்டு பேரும் தனியாகப் பேசிக் கொண்டிருந்தீர்கள் போல் இருக்கிறது!»

நீலா இந்த வார்த்தைகளைக் கூறும்போது வழக்கத்தை விட உரக்கப் பேசினாள் சம்பகத்தின் உள்ளமும், உடலும் பலமுறை நடுங்கின.

"அதிகப்பிரசங்கி! வாயை மூடு! பெரியவர்கள் என்று மரியாதை இல்லாமல் என்னவெல்லாமோ உளறுகிறாய்!" சங்கரன் ஆத்திரத்துடன் எழுந்தான்.

நீலாவும் விசுக்கென்று எழுந்தாள். ஆத்திரத்துடன் படுக்கையைக் கட்டிலிலிருந்து எடுத்துத் தரைமீது வீசி எறிந்தாள். தொடர்ந்து விளக்கும் அணைக்கப்பட்டது. புதிதாக மணமான தம்பதியின் அறையில் நிலவ வேண்டிய அழகும், ஆனந்தமும் அந்த இருளில் மூழ்கி, மறைந்து போயின.
-------

மறு தினம் பகல் கமலாவின் வீட்டிலிருந்து சிறிய கடிதம் ஒன்றை வேலைக்காரி காமுவிடம் கொண்டு வந்து கொடுத்தாள். அதில் 'அன்று மாலை தேநீர் விருந்துக்கு நீலாவும் சங்கரனும் அவர்கள் வீட்டிற்கு வரப் போவதாகவும், நெடு நாளாக நீலாவை அவள் பார்க்க வேண்டும் என்று விரும்புவதால் தவறாமல் மாலை வர வேன்டும்' என்றும் காமுவுக்கு கமலா எழுதி இருந்தாள், காமுவுக்கு நீலாவைப் பார்க்க வேண்டும் என்று ஆசை தான். ஏன், எதற்காக ஆசை எழுந்தது என்பதை அவளால் ஊகிக்க முடியவில்லை. கட்டாயம் போக வேண்டும் என்று தீர்மானம் பண்ணிக் கொண்டாள். அங்கே சங்கரனும் வருவார். அவரைப் பார்த்து, அவர் எவ்விதம் நடந்து கொள்வார் பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டாள் காமு. "ஏறக்குறைய ஒரு வருஷத்துக்கு முன்பு பொன் மணியில் அன்பும், கருணையும் உருவாகப் பேசிய சங்கரனாக இருக்கிறாரோ? இல்லை, பணக்கார மனைவியைப் படைத்த பெருமையால் மாறிப் போய் இருக்கிறாரோ? அதையும் பார்த்துவிட வேண்டும்" என்ற உறுதியுடன், அன்று போகத்தான் வேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்டாள்.

மாலை நாலு மணி முதற்கொண்டே தலை வாரிப் பின்னி, பூச்சூட்டிக் கொண்டு அழகிய வாயில் புடவையை உடுத்திக் கொண்டாள் காமு. அவள் கண்களே அழகானவை. மேலும் அவைகளுக்கு அழகு செய்தது போல் மை தீட்டி பொட்டிட்டுத் தன் உருவததைக் கண்ணாடியில் பார்த்தாள். மெல்லிய கோடுகள் போட்ட வாயில் ரவிக்கை அவளுக்கு மிகவும் எடுப்பாக இருந்தது.அந்த ரவிக்கையைப் பார்த்ததும் இரண்டு, மூன்று மா தங்களுக்கு முன்பு நீலாவுக்காக அவள் தைத்துக் கொடுத்த பட்டுரவிக்கையின் நினைவு வந்தது அவளுக்கு.

அலங்கரித்துக் கொண்டு முடிந்ததும் தாபிடம் சென்று, “அம்மா! இன்றைக்கு நான் எங்கே போகிறேன் சொல் பார்க்கலாம்?'' என்று கேட்டாள் காமு.

விசாலாட்சி குழி விழுந்த கண்களால் மகளைப் பார்த் தாள். எழிலோடு யௌவனத்தின் வாயிலில் பரிப்புடன் நிற்கும் அவளைப் பார்த்ததும் அவள் கண்களில் ஒளி வீசியது.

"அலங்காரமெல்லாம் பலமாக இருக்கிறதே, எங்கே போகிறாயோ? யாராவது சிநேகிதிக்குக் கல்யாணமாக இருக்கும்" என்றாள் விசாலாட்சி.

"இல்லை அம்மா! கமலாவின் வீட்டிற்குப் போகிறேன். அங்கே நமக்குத் தெரிந்தவர்கள் வருகிறார்கள். உனக்கும் அப்பாவுக்கும் கூடத் தெரிந்தவர்கள். நம் சங்கரனும், அவர் மனைவியும் கமலாவின் வீட்டிற்குச் சாயந்தரம் வருகிறார்களாம்" என்று கூறி முடித்தாள் காமு.

விசாலாட்சி, பெண் கூறியதைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை என்பதை அவள் முகபாவம் காட்டியது. "சீக்கிரம் வந்து விடு காமு. அப்பா கடையை மூடிக் கொண்டு வந்து விடுவார். சாதம் போட வேண்டும்" என்று கூறினாள்.

"எல்லா வேலைகளையும் செய்து விட்டேன் அம்மா! நீ எழுந்திருக்கவே வேண்டாம்" என்று சொல்லி விட்டு காமு கமலாவின் வீட்டிற்குப் புறப்பட்டாள்.
------

விசாலாட்சியின் உடல் நிலை நாளுக்கு நாள் மிகவும் மோசமாகிக்கொண்டு வந்தது. ஆயிரக்கணக்கில் அப்பளம் இட்டு, சலிக்காமல் வீட்டு வேலைகள் செய்து பழக்கப் பட்டவள். இன்று இரண்டு பேருக்குச் சமைப்பதற்குக் கூடக் கஷ்டப்பட்டாள். உடலில் சதைப் பிடிப்பு வற்றிப் போய் எலும்புக் கூடாக இருந்தாள். எடுத்ததற்கெல்லாம் 'பிலு பிலு' வென்று கணவனுடன் சண்டை பிடித்து வாதாடுபவள், தான் உண்டு தன் வேலை உண்டு என்று அடங்கிக் கிடந்தாள்.

அவளுக்கு நேர்மாறாக ராமபத்திரய்யர் பட்டினம் வந்த பிறகு திடமாக நோய் நொடி இல்லாமல் இருக்க ஆரம்பித்தார். வாழ்க்கை பூராவும் ஏழை உபாத்தியாயரை மணந்து கொண்டு, அவருடன் வறுமையில் வாடிய விசாலாட்சியைப் பார்க்கும் போதெல்லாம் அவர் மனம் கஷ்டப்படும். பணத்தைப் பணம் என்று பாராமல் பெரிய வைத்தியர்களிடம் அவளை அழைத்துச் சென்று காண்பித் தார். அவர்கள் அவளுக்கு வியாதி ஒன்றும் இல்லை யென்றும், குடும்பக் கவலையால் அவள் மனம் இடிந்து மெலிந்து வருகிறாள் என்றும் கூறி விட்டார்கள்.

காமு கமலாவின் வீட்டை அடைந்த போது தெருவில் ஒரு அழகிய நீலவர்ணக் கார் நின்று கொண்டிருந்தது. மனம் படபடவென்று அடித்துக் கொள்ள காமு தயங்கிக் கொண்டே படி ஏறி உள்ளே சென்றாள். கூடத்தில் மேல் நாட்டுப் பாணியில் இல்லாமல் அழகிய ரத்தினக் கம்பளம் விரித்து, அதன் மீது சிற்றுண்டிகளும், டீயும் வைக்கப்பட் டிருந்தன. கமலாவின் நெருங்கிய நண்பர்களில் இரண்டு மூன்று பேர் வந்திருந்தார்கள்.

காமு உள்ளே நுழைந்ததும் கமலா அவசரமாக எழுந்து வந்து அவள் கைகளைப் பிடித்து உட்காரும் இடத்துக்கு அழைத்துப் போனாள். சங்கரனுக்கு எதிரில் காலியாக இருந்த இடத்தில் அவளை உட்கார வைத்தாள்.

சங்கரன் திகைத்துப் போனான்! கண் இமைக்காமல் காமுவைப் பார்த்தான். ஆனால், காமுவோ சங்கரனைத் தெரிந்த மாதிரியாகவே காட்டிக் கொள்ளவில்லை. இவள் தான் நீலா! காமு, நீ தைத்துக் கொடுத்த ரவிக்கை ரொம்ப ஜோராக இருக்கிறதாம். உன்னிடம் சொல்லும்படி என்னிடம் சொல்லி இருந்தாள்" என்று நீலாவை அறிமுகம் செய்வித்தாள் கமலா.

“ரவிக்கை சரியாக இருக்கிறதோ இல்லையோ என்று பல தடவை நினைத்துக் கொண்டேன்!" என்று கூறிவிட்டு காமு, நீலாவைப் பார்த்துப் புன்னகை புரிந்தாள். எந்த மோகனச் சிரிப்பையும், மருளும் கண்களையும் பார்த்து மயங்கித் தன் அந்தஸ்தையும் மறந்து பல உறுதிமொழி களைச் சொல்லிவிட்டு வந்து, பிறகு மறந்தானோ, அந்த சிரிப்பையும், மயக்கும் கண்களையும் பார்த்துத் தலையைக் குனிந்து கொண்டான் சங்கரன்.

காமு அவனை நேருக்கு நேர் சகஜமாகப் பார்த்தாள். பொன்மணியில் பார்த்த காமுவா அவள்? நாகரிகம் என்றால் என்ன என்று தெரியாமல் பரம சாதுவாக யாருடனும் எதுவும் பேசாமல் அடுப்பங்கரையில் பதுங்கிக் கொண்ட காமு இல்லை அவள். அவள் எல்லோருடனும் சகஜமாசுப் பேசுவதிலிருந்தும் பழகுவதிலிருந்தும் அவள் பட்டினவாசத்து நாகரிகத்தை அறிந்துக் கொண்டிருக்கிறாள் என்பது சங்கரனுக்குத் தெரிந்து போயிற்று. சிற்றுண்டி சாப்பிட்டு முடிகிறவரைக்கும் சங்கரன் அவளைத் தெரிந்து கொண்டதாகவே காட்டிக் கொள்ளவில்லை.

எல்லோரும் கை அலம்பிவிட்டுக் கூடத்தில் வந்து உட்கார்ந்தபோது, காமு கொல்லைப் பக்கம் கமலாவுக்கு உதவியாகப் பாத்திரங்களையும், கோப்பைகளையும் அலம்பி ஒழுங்கு படுத்தும் வேலையில் முனைந்தாள். சரசரவென்று பீங்கான் கோப்பைகளை அலம்பி அவள் ஒழுங்கு படுத்துவதே ஒரு அழகாக இருந்தது.

கூடத்தில் நீலா தன் அழகுப் பையைத் திறந்து அதிலிருந்து சிறிது 'மாவு' எடுத்து முகத்துக்கு ஒற்றிக் கொண்டாள்.உதடுகளுக்குச் சிவப்புச் சாயத்தை லேசாகத் தடவிக் கொண்டாள். இப்படி வந்த இடம் போன இடம் இல்லாமல் நாகரிகம் முதிர்ந்த பெண்கள் அலங்காரம் பண்ணிக் கொள்வது சிறிது அருவருப்பைத் தரக்கூடிய விஷயம்தான்.

சங்கரன் கூடத்துக்கும், கொல்லைப் பக்கத்துக்கும் இடையில் இருந்த தாழ்வாரத்தில் நின்று காமுவையும், நீலா வையும் மாறி மாறிப் பார்த்தான். “காமு பட்டின வாசத்து நாகரிகத்தைத் தெரிந்து கொண்டாலும் அதற்கு ஓர் அளவு கொடுத்து வைத்திருக்கிறாள். பண்டையப் பண்பாட்டுடன் நவீனத்தின் அழகும் கலந்து அவளிடம் பிரகாசிக்கிறது” என்று எண்ணினான் சங்கரன். களைத்துப் போன தன்மனப் தோழி கமலாவுக்காக உதவும் அவள் பான்மை அவளுடைய பழைய கிராமிய வாழ்வைக் காட்டியது. நாலு பேருடன் சரளமாகப் பழகும் அவள் சுபாவம், புது நாகரிகத்தின் பழக்கத்தைக் காட்டியது.

காமு பாத்திரங்களை அலம்பி முடித்ததும் முகத்தில் அரும்பிய வியர்வையைக் கைகுட்டையால் துடைத்துக் கொண்டு கூடத்துக்கு வந்தாள். வரும் போது, வராந்தாவில் தனியாக நிற்கும் சங்கரனை அவளால் கவனிக்காமல் செல்ல முடியவில்லை.

''காமு! என்னை நினைவிருக்கிறதா உனக்கு? பட்டினத் துக்கு எப்போது வந்தாய்?" என்று சங்கரன் மெதுவாகக் கேட்டான். காமு அவள் பெற்றோருடன் பட்டினம் வந்திருக்கிறாளா அல்லது அவளுக்குக் கல்யாணமாகிக் கணவனுடன் வந்திருக்கிறாளா என்று அறிந்து கொள்ள வேண்டுமென்கிற காரணத்தாலேயே சங்கரன் அவளை அவ்விதம் கேட்டான்.

"நாங்கள் பட்டினம் வந்து கிட்டத் தட்ட ஒரு வருஷத்துக்கு மேல் ஆகிறதே. கிராமத்தில் வீட்டை விற்று விட்டோம். அந்தப் பணத்தை வைத்து அப்பா ஒரு கடை வைத்திருக்கிறார். நான் 'டிரெயினிங்' படிக்கிறேன்". காமு பழைய சம்பவங்களை மறந்துவிட்டு அவனுடன் பேசினாள். பிறகு, "அம்மாவுக்குத்தான் உடம்பு சரியாக இல்லை. அவளுக்கு ஒரே கவலை என்னைப்பற்றி, எனக்குக் கல்யாணம் ஆக வில்லையாம். உருகிப் போகிறாள்!" என்றாள்.

அதற்குள் கமலா நீலாவுடன் பேசிக் கொண்டு அந்தப் பக்கம் வருவது கேட்கவே அவசரமாக; "எங்கள் வீட்டிற்கு வாருங்கள். அப்பாவுக்கு உங்களைப் பார்த்தால் சந்தோஷ மாக இருக்கும்” என்று கூறிவிட்டு காமு அங்கிருந்து போய் கமலாவுடன் சேர்ந்து கொண்டாள்.

பொன்மணியில் பார்த்த காமுவா அவள்? ஒரு வார்த்தை பேசுவதற்கு எவ்வளவு திணறிப் போய்விட்டாள் அப்போது? அவளை ஏமாற்றியவனை எவ்வளவு அன்பாக தன் வீட்டிற்கு வரும்படி அழைக்கிறாள்? என்ன கள்ளமற்ற உள்ளம்? போதாததற்கு அவனைப் பார்த்தால் அவள் தாப்பனாரும் சந்தோஷப்படுவார் என்று வேறு பெருமை அடித்துக் கொள்கிறாள்!

சங்கரன் சிறிது நேரம் தன்னைப் பற்றியே நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். படித்துப் பட்டம் வாங்கிய வனாக இருந்தாலும் ராமபத்திரய்யருக்கு இருக்கும் கபட மற்ற குணமும், பெருந்தன்மையும் தனக்கு இருக்கின்றனவா என்று சிந்தித்தான். குண விசேஷம் அலாதியாக வாய்ப்பது. கல்லூரிகளிலும், கலாசாலைகளிலும் அதை விலைகொடுத்து வாங்க முடியாது என்று தோன்றியது அவனுக்கு.

"மிஸ்டர் சங்கரன்! உங்களை உங்கள் மனைவி நெடு நெரமாகத் தேடறாளே, இருட்டில் இங்கே என்ன பண்ணு கிறீர்கள்?” என்று கேட்டுக்கொண்டு கமலா வந்தாள். 'பார்டி'க்கு வந்தபோது இருந்த உற்சாகம் குறைந்து சங்கரனின் முகம் வாடிப் போயிருந்தது.

"கொஞ்சம் தலைவலியாக இருந்தது! காற்றாட வந்து நின்றிருந்தேன்” என்று கூறிவிட்டு, "புறப்படலாமா நீலா?" என்று மனைவியின் பக்கம் திரும்பிக் கேட்டான். அங்கே அவளுக்குப் பக்கத்தில் காமு நின்றிருந்தாள்.

“துணிகளை மிகவும் அழகாகத் தைக்கிறாள், இந்தப் பெண். ஓ! 'ஸாரி!' மிஸ் காமு என்று சொல்ல வேண்டும். ஒரு நாளைக்கு நம் வீட்டிற்கு வரச் சொல்லியிருக்கிறேன். என்னிடம் நிறையத் துணிகள் இருக்கின்றன. தைக்க வேண்டும்" என்று நீலா, காமுவை அவர்கள் வீட்டிற்கு அழைத்ததைச் சங்கரனிடம் கூறினாள்.

காமுவைச் சங்கரன் அவர்கள் வீட்டிற்கு விரும்பி அழைக்கவில்லை. ஆனால், நீலா, அழைக்கிறாள், சாதாரண மாக நட்பு முறையில் அல்ல. 'தையற்காரி' என்கிற முறையில்! காமு துணி தைத்துக் கொடுத்து நீலாவிடம் கூலி வாங்கப் போகிறாள்!

சங்கரனால் அதற்கு மேல் அங்கு நிற்க முடியவில்லை. "நான் வருகிறேன் அம்மா" என்று கமலாவுக்கும், காமுவுக்கும் சேர்த்து ஒரு கும்பிடு போட்டு விட்டுக் காரில் மனைவியுடன் போய் ஏறிக் கொண்டான்.

காமு தன் தோழியின் தோள்மீது ஆசையோடு கையைப் போட்டு அணைத்தபடி நீண்ட சாலையில் வேகமாகச் செல்லும் மோட்டாரைக் கவனித்தபடி நின்றாள்.

"கூட்டத்தில் கூடி நின்று கூவிப் பிதற்றலின்றி
நாட்டத்தில் கொள்ளாரடி கிளியே!"

என்று பாடிக் கொண்டே, தையல் இயந்திரம் கடகட வென்று ஒலிக்க ஏதோ தைத்துக் கொண்டிருந்தாள் காமு. கடைக்கு அன்று விடுமுறை ஆதலால் ராமபத்திர அய்யர் தினசரி ஒன்றைப் படித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார். விசாலாட்சி மணைக்கட்டையைத் தலைக்கு உயரமாக வைத்துக்கொண்டு தூங்கிக் கொண்டிருந்தாள்.

சங்கரனை அன்று கமலாவின் வீட்டில் பார்த்த பிறகு காமுவின் மனம் ஒரு நிலையில் இல்லை. இவ்வளவு நாகரிகமும் டம்பமும் நிறைந்த மனைவியுடன் சங்கரனால் எவ்விதம் வாழ்க்கை நடத்த முடிகிறது? என்று திருப்பித் திருப்பி தன்னையே கேட்டுக் கொண்டாள் காமு.

தமிழ் நாட்டுப் பெண்களுக்குத் திடீரென்று பஞ்சாபி உடை மீது காதல் ஏற்படுவானேன்? தமிழ் நாட்டு உடை முறை நன்றாக இல்லையா? அழகிய கரை போட்ட பாவாடையும் தாவணியும் வயிற்றைக் குமட்டுகின்றனவா? கிள்ளு கிள்ளாகக் கொசுவம் வைத்துக் கட்டிக்கொள்ளும் பட்டு, நூல் சேலைகளைப் பார்த்தால வயிற்றைப் புரட்டு கிறதா? யாரைப் பார்த்தாலும், ஐந்து வயதுக் குழந்தையி லிருந்து இருபது. வயதுக் குமரி வரையில் பஞ்சாபி உடை அணிந்து உலாவுகிறார்களே! பஞ்சாப் சகோதரிகள் மீது நமக்கு ஒன்றும் கோபமில்லை. நீலாவின் அந்த 'பஞ்சாப்' நாகரிகம் காமுவுக்கு அருவருப்பாக இருந்தது. கர்னாடக மீனாட்சி மனுஷியான அம்மாளின் நாட்டுப் பெண் இவ்வளவு நாகரிகமாகவும், அதுவும் வடக்கத்திப் 'பாணி'யில் உடை அணிவதும் மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

நீலா அவளைத் தன் வீட்டிற்கு அழைத்திருந்தாள். அவள் அவர்கள் வீட்டிற்குப் போவதா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தாள். தன் உத்தேசத்தைத் இகப்பனாரிடம் கூறியபோது, அதெல்லாம் வேண்டாம். அம்மா! நமக்கு அங்கே என்ன ஜோலி இருக்கிறது. வேண்டு மானால் அவர்களே வரட்டும்" என்று அவர் கூறிவிட்டார்.

''காமு! என்னை நினைவிருக்கிறதா உனக்கு?" என்று சங்கரன் கேட்ட வார்த்தைகள் திரும்பத் திரும்பக் அணீரென்று அவள் செவிகளில் ஒலித்தன.

சங்கரனை மறந்து விடுவாளா காமு? அப்படி மறக்கிற வளாக இருந்தால் பத்திரிகையில் பிரசுரமான அவன் கல்யாணப் படத்தை எதற்குப் பெட்டியில் பத்திரப்படுத்தி வைக்கிறாள்? அவனையும், அவன் மனைவியையும் நேரில் பார்க்கவேண்டும் என்று கமலாவின் வீட்டிற்கு எதற்காகப் போகிறாள்? சங்கரன் அவள் மனத்தில் நிலையாக இடம் பெற்று விட்டான். அந்த இடத்தை வேறு யாருக்கும் அவளால் அளிக்க முடியாது. மெலிந்து வாடி வரும் தாயின் அபிலாஷையைக் கூடப் பூர்த்தி செய்ய வேண்டும் என்கிற எண்ணமில்லாமல் காமு 'டிரெயினிங்' படித்து உபாத்தி யாயினி வேலையை ஏற்கப் போவதும் சங்கரனை மறக்க முடியாத காரணத்தால் தான்!
---

தெருவில் பழம் விற்பவரும், சாமான்கள் விற்பவர் களும் அசந்து உட்கார்ந்து ஓய்வு எடுத்துக் கொள்ளும் பகல் நேரம் வெய்யில் கடுமையாகத்தான் இருந்தது. மண் கூஜாவில் இருந்து தீர்த்தம் எடுத்துச் சாப்பிட்டு விட்டு மறுபடியம் தையல் இயந்திரத்தின் முன்பு வந்து உட்கார்ந்தாள் காமு. அப்போது தெருவில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. சிறிது நேரத்துக்கெல்லாம் வாயிற் கதவைத் திறந்து கொண்டு சங்கரன் உள்ளே வந்தான். காமு ஒரு கணம் திகைத்துப்போனாள். உடனே சமாளித்துக்கொண்டு அரைத் தூக்கத்தில் இருந்த தகப்பனாரிடம், ' அப்பா யார் வந்திருக்கிறார் பாருங்கள்” என்று கூறினாள்.

ஆவல் ததும்பும் கண்களுடன் காமுவைப் பார்த்துவிட்டு சங்கரன், அங்கு இருந்த ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டான்.

'சௌக்கியமா அப்பா? உன் மனைவியையும் அழைத்து வந்திருக்கிறாயா?" என்று அவனை விசாரித்தார் ராமபத்திர அய்யர்.

"சௌக்யந்தான் மாமா. நீங்கள் இங்கு வந்து ரொம்ப நாள். ஆகிறதாமே? வீட்டுப் பக்கம் வராமல் இருந்து விட்டீர்களே?"

காமு மிஷினை மூடி வைத்துவிட்டு எழுந்தாள், காபி போடுவதற்காக. "அப்பாவுடன் பேசிக் கொண்டிருங்கள். இதோ வந்து விட்டேன்" என்று சொல்லி விட்டுச் சமையல் அறைக்குள் சென்றாள்.

அடையாளம் தெரியாமல் உருமாறி, கூடத்து மூலையில் சுருட்டிப் படுத்துக் கொண்டிருக்கும் விசாலாட்சியைப் பார்த்ததும் சங்கரனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. அவளையே உற்றுப்பார்த்து விட்டு, "மாமி என்ன இப்படி இளைத்துப் போயிருக்கிறாள் மாமா? என்ன உடம்பு?" என்று விசாரித்தான்.

“ஏதாவது உடம்பு என்று தெரிந்தால் தானே, வைத்தியம் பண்ணுவதற்கு? கிராமத்தை விட்டு வந்த பிறகு இப்படி இளைத்துப் போய் இருக்கிறாள்” என்று கூறிவிட்டு, அப்பாவை வந்து பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். சர்மா என்னை நினைவு வைத்துக் கொண்டிருக்கிறானோ இல்லையோ என்று பேசாமல் இருந்து விட்டேன்" என்று சொல்லி விட்டு, ராமபத்திர அய்யர் சங்கரனைப் பார்த்தார்.

சங்கரனுக்கு அவர் தன்னைக் குத்திக் காட்டுவதாகவே தோன்றியது. இதற்குள் காமு இரண்டு டம்ளர்களில் காபியைக் கொண்டு வந்து வைத்தாள். காபி சாப்பிட்டு முடிந்ததும் மேலும் அவருடன் என்ன பேசுவது, எதைப் பற்றிப் பேசுவது என்பது புரியாமல் திகைத்தான் சங்கரன். ராமபத்திர அய்யர் சிறிது யோசித்தபடி உட்கார்ந்திருந் தார். பிறகு ஏதோ நினைத்துக் கொண்டவர்போல், 'சங்கரா! உன் மன்னி குழந்தையோடு பிறந்த வீட்டில் இருந்தாளே, அங்கே தான் இருக்கிறாளா, வந்து விட்டாளா?" என்று கேட்டார்.

"அவள் வந்து ரொம்ப நாளாச்சே! இங்கே தான் இருக்கிறாள். அவள் இராவிட்டால் அப்பாவுக்குச் சரிப்படு கிறதில்லை. அவருடைய வேலை யெல்லாம் மன்னிதான் கவனித்துக் கொள்கிறாள்" என்றான் சங்கரன்.

''பாவம்! ரொம்பவும் செல்லமாக வளர்ந்த பெண். நல்ல இடத்தில் தரின் வாழ்க்கைப் பட்டாள்; இருந்தாலும் அதிர்ஷ்டம் என்பது அலாதியாக இருக்கிறது அப்பா" என்றார் அவர்.

"வீட்டிலே எல்லா வேலைகளையும் கவனித்துக் கொள்கிறாள் மாமா, ரொம்பவும் பொறுமைசாலி.'

"பொறுமைசாலியாக ஒருத்தி இராவிட்டால் அடங்காப் பிடாரிகளின் ராஜ்யம் குடும்பத்தில் நடக்குமா!" என்று காமு மனத்துக்குள் நினைத்துக் கொண்டாள். சங்கரன் எதற்காக அவர்கள் வீட்டிற்கு வந்திருக்கிறான் என்பதே தகப்பனார் பெண் இருவருக்கும் புரியவில்லை.

மத்தியானத் தூக்கம் கலைந்து விசாலாட்சி விழித்துக் கொண்டபோது கூடத்தில் சங்கரன் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தாள். இதென்ன விசித்திரம்! யாரால் காமுவின் வாழ்வு பாதிக்கப் பட்டதோ, யாரைக் காமு மறக்க முடியாமல் திண்டாடுகிறாளோ அவன் இங்கு உட்கார்ந்திருக்கிறான். திரும்பவும் சங்கரன் இங்கு எதற்காக வர வேண்டும்? பட்டினம் வருவதற்குப் பொன்மணியில் வண்டி ஏறிப் புறப்பட்டு வந்து கொண்டிருக்கும் போது, 'அவர்களால் நமக்கு என்ன ஆகவேண்டும் அப்பா, அவர்கள் வீட்டுக்கு நாம் ஏன் போசு வேண்டும்?' என்று கூறிய காமு, இன்று அதே சங்கரனுக்குக் காபி கொடுத்து உபசரிக்கிறாளே?"
இன்று விசாலாட்சிக்கு இது விசித்திரமாகத் தான் இருந்தது. புடவைத் தலைப்பை உதறிக் கட்டிக்கொண்டு எழுந்திருந்த வளைப் பார்த்துக் கைகூப்பி, "மாமி! என்னைத்தெரிகிறதா உங்களுக்கு? ரொம்பவும் இளைத்துப் போயிருக்கிறீர்களே?” என்று கேட்டான் சங்கரன்.

'இவன் ஏன் இங்கு வந்தான்? காமு இன்று வைராக்கியத் துடன் விவாகத்தை மறுக்கும் அளவு அவள் மனத்தைப் புண்ணாக்கியவன் எதற்காக இங்கே வந்திருக்கிறான்?' இவ்வித ஆத்திரத்தோடு விதெரியாமல் என்ன அப்பா? மனுஷாளை மறந்து போகும் அளவு நினைவு தப்பி விடவில்லை எனக்கு!" என்று கூறிவிட்டு சமையலறைக்குள் சென்று விட்டாள்.

சங்கரனின் மனம் மறுபடியும் வெட்கியது. உணர்ச்சி வசத்தில் ஏதேதோ கூறிச் சென்று பிறகு, அவைகளை மறந்தவன் சங்கரன் தானே?

"நேரமாகி விட்டது மாமா! நீங்கள் அவசியம் எங்கள் வீட்டிற்கு வாருங்கள். அப்பாவிடமும் சொல்லுகிறேன். காமுவையும் அழைத்து வாருங்கள். என் மனைவி அழைத்து வரச் சொன்னாள்" என்று கூறி விட்டு காமுவிடம் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டான் சங்கரன்.

ஆகட்டும், பார்க்கலாம். மாமி சொன்னதை மனத்தில் வைத்துக் கொள்ளாதே சங்கரா! காமுவுக்குக் கல்யாணம் ஆகவில்லை என்று கண்டவர்கள் பேரில் எரிந்து விழுந்து கொண்டிருக்கிறாள் என்று இன்னும் ஏதேதோ சொல்லிக் கொண்டு வாசல் வரையில் வழி அனுப்ப வந்தார் ராமபத்திர அய்யர்.
----

காரில் சென்று கொண்டிருக்கும் போது சங்கரன் பல தமாக எண்ணமிட்டான்: காமு அவனை மறக்கவில்லை. அவன் கூறிய வார்த்தைகளை மறக்கவில்லை. சொல்லுக்கும், செயலுக்கும் மதிப்பு வைத்திருக்கிறாள். காமு அவனை மறக்காததைப் பற்றி அவன் மனம் சந்தோஷப் பட்டது. அந்தச் சந்தோஷம் அற்பமானது. தகாதது என்று அவனுக்குத் தெரிந்துதான் இருந்தது. இருந்தாலும் அவன் அதனால் திருப்தி அடைந்தான். காமு கன்னிகை யாகவே காலங் கழிக்கப் போகிறாளா? ஏன்? யாருக்காக அவள் தன் வாழ்க்கையைத் தியாகம் செய்கிறாள்? சங்கரனுக்காகவா? சங்கரனை விட அவள் படித்தவள் அல்ல. அவனை விட விஷயம் தெரிந்தவள் இல்லை. இருந்த போதிலும் காமுவின் மனம் உண்மைக்கும், அன்புக்கும் கட்டுப்பட்டிருக்கிறது.

சங்கரனின் மண்டை கனத்தது. காரின் "ஸ்டீயரிங் வீல்" கைப்பிடியிலிருந்து நழுவி விடுவது போன்ற பிரமை ஏற்பட்டது. அவன் இவ்விதம் எண்ணமிட்டுக் கொண்டு செல்லும் போது, கடற்கரை சமீபத்தில் வந்து கொண்டிருந்தான். மனத்தைச் சுதாரித்துக் கொண்டு மேலும் செல்லலாம் என்று வண்டியைக் கரையோரம் நிறுத்திவிட்டு, மரங்கள் அடர்ந்த இடத்தில் சென்று அமர்ந்தான் சங்கரன். மாலை சுமார் நான்கு மணி இருக்குமாதலால் கடற்கரையில் கூட்டம் அதிகமில்லை.
-----------------

9. சர்மா வீட்டில் சம்பகம்

வருஷப் பிறப்புப் பண்டிகை நெருங்கி வந்து கொண் டிருந்தது. சொல்லி வைத்தாற் போல் புடவைக்காரன் ஒரு மூட்டைப் புடவையோடு சர்மாவின் வீட்டிற்கே வந்திருந் தான். அடுக்கடுக்காகப் பீரோவிலும், பெட்டியிலும் பட்டுப் புடவைகள் மக்கிப் போய்க் கொண்டிருக்கும் போதே மேலும் மேலும் வாங்கிப் பெட்டியில் அடைத்து வைப்பதில் பெண்களுக்கு ஒரு திருப்தி. கோவிலிலோ, பெண்கள் சங்கத்திலோ, கடைத்தெருவிலேர் தெரிந்தவர்கள் பார்த்து "பண்டிகைக்கு என்ன புடவை வாங்கினாய்?" என்று கேட்டால், "மாம்பழக்கலர், தாமரைக்கலர், "பட்டன் சாட்டர்" மாங்காய்க் கரை, விலை நூறு ரூபாய், நூற்றைம்பது ரூபாய்" என்றெல்லாம் பெருமையாகச் சொல்ல வேண்டாமா? அதற்காகவே மேலும் மேலும் வாங்கிக் கொண்டிருந்தார்கள். புடவைக்காரனிடம் புடவைகளை வாங்கிக் கொண்டு சர்மாவிடம் சொல்லி விட்டால், பணத்தை அவர் கொடுத்து விடுவார்.

மீனாட்சி அம்மாள் புது நாட்டுப் பெண்ணுக்கு உயர்ந்த விலையில் புடவை வாங்கினாள். நாலு பேருக்கு நடுவில் பெருமையாக இருக்க வேண்டாமா? சம்பந்திகளுக்கு அவள் எந்த விதத்திலும் அந்தஸ்தில் குறைந்தவள் இல்லை என்பதைக் காட்டவே சாண் அகல ஜரிகைக் கரைப் போட்ட புடவையை வாங்கி இருந்தாள். இல்லாவிடில் பைஜாமாவும், ஜிப்பாவும் சதா அணிந்து ஊர் சுற்றும் பெண்ணுக்கு இவ்வளவு விலை உயர்ந்த புடவை எதற்கு?

ருக்மிணி அவளுக்கு வேண்டியதைப் பொறுக்கி எடுத்துக் கொண்டாள். மதிப்பாக நாலு பேர் எதிரில், "அடுத்த மாசம் அவர் பணம் அனுப்பியதும் கொடுத்து விடுகிறேன்' என்று புடவைக்காரனிடம் சொல்லிக் கொண்டாள். அவள் வாங்கும் புடவைகளுக்கும் சர்மாதான் பணம் கொடுத்து வந்தார். ஆனால் ஒவ்வொரு தடவையும் அவள் அப்படித் தான் சொல்லுவது வழக்கமாக இருந்தது.

புடவை அமர்க்களத்தில் சம்பகம் பங்கெடுத்துக் கொள்ளவில்லை. பகட்டான சேலைகளையும், வித விதமான அலங்காரங்களையும் அவள் விட்டு வெகு காலம் ஆயிற்று. சாதாரண நூல் புடவையையும், பசேல் என்று மஞ்சள் பூசி நெற்றிக்கு இட்டுக் கொள்வதையுமே பாக்கியமாகக் கருதுபவள் அவள்.

புடவை பேரம் நடந்து கொண்டிருந்த போது சங்கரன் வராந்தாவில் உட்கார்ந்து கொண்டிருந்தான். கணவன் வீட்டில் இருப்பதையும் லட்சியம் பண்ணாமல் நீலா பிறந்த வீட்டிற்குப் போய் இருந்தாள். பகல் சாப்பாடு மாமியார் வீட்டில் இருந்தால், இடைவேளை சிற்றுண்டி பிறந்த வீட்டில் என்று வைத்துக் கொள்வது அவள் வழக்கம். பிறகு இஷ்டமிருந்தால் மாலையில் வந்து கணவனைத் தன்னுடன் வெளியே உலாவ அழைத்துப் போவாள்; இல்லாவிடில் இரவு சாப்பாட்டையும் பிறந்த வீட்டிலேயே சாப்பிட்டு விட்டு வந்துவிடுவாள். ஊதா வர்ணத்தில் நீலாவுக்காக வாங்கியிருந்த புடவையைக் கொண்டு போய்ச் சங்கரனிடம் காண்பித்தாள் மீனாட்சி அம்மாள்.

“ஐந்து கஜம்! நூற்றைம்பது ரூபாய்!" என்று பெருமையுடன் சொல்லிவிட்டு, உனக்குக் கலர் பிடிக்கிறதாடா?" என்று கேட்டாள்.

“எனக்குப் பிடித்து என்ன ஆகவேண்டும்? நானா கட்டிக்கொள்ளப் போகிறேன்? அதுவும் உன் நாட்டுப் பெண் சதா 'பைஜாமா' போட்டுக் கொண்டே திரிகிறாளே? அவளுக்கு எதற்குப் புடவை?" என்று கேட்டான் சங்கரன்.

“அது எப்படியாவது இருக்கட்டுமடா! நாம் செய்வதை நாம் செய்தால்தான் நன்றாக இருக்கும். எத்தனையோ புடவைகள் அவள் பிறந்தகத்தில் வாங்கியிருக்கிறார்கள். நாம் ஒன்றுகூட வாங்காமல் இருந்தால் நன்றாக இருக்குமா?” என்று கேட்டாள் மீனாட்சி.

“ஊருக்காகப் பால் குடிப்பதா? உடம்புக்காகப் பால் குடிப்பதா?" என்று சொல்வார்கள். இருதயப் பூர்வமான அன்புடன் புடவையை நீலாவுக்கு வாங்கி அளிக்கவில்லை மீனாட்சி. நாலுபேர் மெச்சிப் பேசுவதற்குத்தான் அந்தப் புடவையை வாங்கி இருக்கிறாள்.

வியாபாரம் முடிந்ததும் புடவைக்காரன் மூட்டையைக் கட்டிக் கொண்டு போய் விட்டான். அவன் போன பிறகு தான் இவர்கள் சம்பகத்துக்கு ஒன்றுமே வாங்கவில்லை என்று சர்மாவுக்கு நினைவு வந்தது. அடுப்பங்கரையில் வேலையாக இருந்த சம்பகத்தைத் தேடிப் போனார் சர்மா. ''ஏனம்மா! புடவைக்காரன் வந்திருந்தானே, நீ ஒன்றும் வாங்கிக் கொள்ளவில்லையா? அந்தப் பக்கம் பக்கம் வரவே இல்லையே நீ?” என்று கேட்டார் சம்பகத்தை இரக்கமாகப் பார்த்து.

“எனக்கு இப்போது எதற்குப் புடவை? வேண்டியது இருக்கிறதே" என்று பதில் கூறிய நாட்டுப் பெண்ணின் முகத்தைப் பார்த்ததும், "எனக்குப் பொன்னும், புடவையும் வேண்டியதுதானா? யாருக்காக நான் அவைகளை அணிந்து உலாவ வேண்டும்? கணவனால் ஒதுக்கப்பட்டவளுக்கு ஆடையும், அலங்காரமும் வேண்டுமா?" என்று கேட்பது போல் இருந்தது அந்த முக பாவம்.

சர்மா நிலைப்படியைக் கையால் தாங்கிக் கொண்டு நின்றார். பிறகு மனத்தை அ.ழுத்தும் கஷ்டத்துடன் அங்கிருந்து ஹாலுக்குச் சென்று விட்டார்.

தகப்பனாருக்கும், மன்னிக்கும் நடந்த பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தான் சங்கரன். வீட்டில் பண்டிகை அன்று எல்லோரும் புத்தாடை உடுத்திக் குதூகலமாக வளைய வரும்போது, அவள் மட்டும் பழைய ஆடையுடன் நிற்கலாமா என்று தோன்றியது அவனுக்கு. அன்று மாலையில் வெளியே சென்று திரும்பிய சங்கரன் கையில் ஒரு காகிதப் பொட்டலத்துடன் வந்தான்.

நேராக சமையற்கட்டுக்குப் போய் சம்பகத்தினிடம் பொட்டலத்தைக் கொடுத்தான். சம்பகம் ஒன்றும் தெரியாமல் விழித்தாள்! "என்ன இது?” என்று தடுமாறிக் கொண்டே கேட்டாள். பொட்டலத்துக்குள் கறுத்த பச்சையில் மஞ்சள் கோடு போட்ட நூல் புடவை ஒன்று இருந்தது. "உங்களுக்காகத்தான் வாங்கி வந்தேன். நீங்கள் பண்டிகைக்காக ஒன்றுமே வாங்கிக் கொள்ளவில்லையே!" என்றான் சங்கரன்,

'விசுக் விசுக்'கென்று பட்டுப் புடவை உராய ருக்மிணி அந்தப் பக்கம் வந்தாள். இரண்டு படி தவலை போல் முகத்தை 'உப்'பென்று வைத்துக் கொண்டு, "என்னடா! மன்னியோடு ரகசியம் பேசுகிறாய்? யாருக்குப் புடவை வாங்கி இருக்கிறாய், நீலாவுக்கா? அம்மா தான் நூற்றைம்பது ரூபாய் கொட்டி வாங்கி இருக்கிறாளே? நீ வேறு வாங்கினாயா என்ன?" என்று
சட்டசபையில் அடுக்கடுக்காக உதிரும் கேள்விகளைப் போல் கேட்டு அவனைத் திணற வைத்தாள்.

"நீலாவுக்கு இல்லை, மன்னிக்குத்தான் வாங்கினேன்! அவள்தான் பட்டுப் புடவையே உடுத்துவது இல்லையே!”

உப்பி இருந்த ருக்மிணியின் முகம் சப்பென்று வாடியது. ''சம்பகத்துக்குச் சங்கரன் புடவை வாங்கிக் கொடுக்கவாவது வயசு வந்த மைத்துனன் மன்னிக்குப் புடவை வாங்கிக் கொடுக்க என்ன கரிசனம் அவனுக்கு? பூனை மாதிரி இருந்து கொண்டு இந்தச் சம்பகம் என்ன ஆட்டம் ஆட்டி வைக்கிறாள் மாமனாரையும், சங்கரனையும்! அவனானால் வீட்டை, வாசலை விட்டு விட்டு எங்கோ கண் காணாத சீமையில் போய்க் கிடக்கிறான்! இந்தப் பீடை அவன் பங்கையும் சேர்த்துச் சாப்பிட்டு விட்டு நீலி வேஷம் போடுகிறாளே?"

பஞ்சுப் பொதியில் நெருப்பு பிடித்தது போல் புடவை விஷயம் வீடு பூராவும் ஒரு நொடியில் பரவியது. "தலைக்குத் தலை நாட்டாண்மையா?" என்று கறுவிக் கொண்டு மீனாட்சி அம்மாள் ஆத்திரத்தோடு வந்தாள் புடவையைப் பார்க்க! 'த்சூ' என்று சூள் கொட்டிவிட்டு, வழக்கத்தை விடச் சீக்கிரமாகவே நீலா தன் மாடி அறைக்குச் சென்று விட்டாள்.

'சங்கரா! நீ புத்திசாலி அப்பா. வீட்டிற்கு வாழ வந்த பெண்ணை மனம் நோக வைக்காமல் சுமாரான விலையிலாவது புடவை வாங்கி வந்தாயே?" என்று சர்மா பிள்ளையிடம் கூறிச் சந்தோஷப்பட்டுக் கொண்டார். ஆனால், மாடி அறையில் புயல் அடிக்கப் போகிறது என்று அவருக்குத் தெரியுமா என்ன?

இரவு சாப்பாட்டுக்கு அப்புறம் அம்மா வாங்கி இருந்த புடவையுடன் மாடி அறைக்குச் சென்றான் சங்கரன். நீல விளக்கொளியில் பிரித்த ஆங்கிலப் புஸ்தகம் ஒன்றை மார்பின் மீது வைத்துக் கொண்டு ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாள் நீலா. விவாகமான ஒன்றரை வருஷங்களுக்கு அப்புறம், என்றுமில்லாத ஆசையுடன், காதலுடன் தன் மனைவியை நெருங்கி அவள் நெற்றியில் அன்பாகக் கை வைத்து அவளையே உற்றுப் பார்த்தான் சங்கரன். அவன் கரஸ்பரிசம் பட்டதும் நீலா விழித்துக் கொண்டாள். எரியும் நெருப்பிலிருந்து சிதறி விழுந்த இரண்டு நெருப்புத் துண்டுகளைப் போல் அவள் கண்கள் கதகத வென்று கோபத்தில் பிரகாசித்தன. அவன் கையை உதறிவிட்டுச் சடக்கென்று படுக்கையில் எழுந்து உட்கார்ந்தாள். "என்னை நீங்கள் ஒன்றும் தொட வேண்டாம்!" என வெடுக்கென்று கூறிவிட்டு, ஜன்னல் ஓரம் போய் நின்றாள் நீலா.

"ஏன் இந்த மாதிரி மகாராணி உத்தரவு போடு கிறாளோ?" என்று நாடக பாணியில் கேட்டுச் சிரித்தான் சங்கரன்.

"நான் ராணியுமில்லை. நீங்கள் ராஜாவும் இல்லை நான் ஒரு ஏமாந்தவள். நீங்கள் ஏமாற்றியவர்!" என்று அழுத்தமாகக் கூறிவிட்டு, மறுபடியும் தகிக்கும் பார்வையில் அவனைச் சுட்டெரித்து விடுவது போல் பார்த்தாள்.

"என்ன சொல்கிறாய், நீலா? கொஞ்சம் புரியும்படி தான் பேசேன்! அம்மா உனக்குப் புடவை வாங்கி இருக்கிறாளே? அதைப் பார்க்கவே இல்லையே நீ?" என்று சொல்லிப் புடவையை எடுத்து நீலா மேல் மடித்து வைத்து அழகு பார்த்தான் சங்கரன். தகதகவென்று பிரகாசிக்கும் ஜரிகைக் கரையுடன் அந்தப் புடவை நீலாவுக்கு எடுப்பாக இருந்தது.

"அம்மாதான் எனக்குப் புடவை வாங்கவேண்டும்! நீங்கள் உங்கள் மன்னிக்குப் புடவை வாங்குங்கள்! அப்படித் தான் போல் இருக்கிறது உங்கள் வீட்டு நியாயம்!"

பாவம்! சம்பகம் துர் அதிர்ஷ்டம் பிடித்தவள். பிறந்த சில வருஷங்களில் தாயை இழந்தாள். அதன் பிறகு அன்புடன் வளர்த்த தந்தையை இழந்தாள். அதன் பிறகு கணவனால் கைவிடப்பட்டாள். அவளிடம் நியாயமாக அன்பு செலுத்த வேண்டியவர்கள் அவளை மறந்து விட்டார்கள். சங்கரன் அவளிடம் காட்டும் அன்பு நியாய மானது இல்லையா? ' அன்பே சிவம்' என்று பெரியவர்கள் சொல்லுகிறார்கள். அன்பு அழியாதது, நிலையானது, பவித்திரமானது என்று பேசுகிறார்கள்.

சங்கரன் சம்பகத்திடம் காட்டும் 'அன்புக்கு அவன் குடும்பத்தார் களங்கம் ஏற்படுத்த முயலுகிறார்கள். படித்தவள் என்று பெயர் வாங்கிய மனைவி அவன் அன்புக்குமாசு ஏற்படுத்துகிறாள். நாளைக்கு ஊரார் ஏதாவது சொல்லப் பார்ப்பார்கள்.

சங்கரன் சிறிதுநேரம் செய்வது இன்னதென்று அறியாமல் நின்றான். காமுவைப் போய் அடிக்கடி பார்த்து வந்தாலும் இதே பேச்சுத்தான் ஏற்படப்போகிறது. கூடப் பிறந்த சகோதரியிடம் செலுத்தும் அன்பைப் போல் சம்பகத்திடம் காட்டும் அன்புக்கே களங்கம் ஏற்படுத்தும் உலகம், காமுவிடம் தான் காட்டும் அன்பை என்னவென்று மதிப்பிடும்? கல்யாணமாகாத ஒரு இளம் பெண்ணுடன் ஒரு இளைஞன்,அவன் விவாகம் ஆனவனாக இருந்தாலும், பழகுவதை உலகம் எப்படி எடைபோடும்?

வானத்தில் நட்சத்திரங்கள் மின்னின, நீலவானில் பதித்த வைரங்கள் போல் சுடர் விட்டன அவை. இயற்கை அன்னை ஏற்றிய ஆயிரமாயிரம் தீபங்கள் போல் இருந்தன. சங்கரன் வானத்தைப் பார்த்துப் பெருமூச்சு விட்டான். ருகில் காளி ஸ்வரூபமாக நிற்கும் மனைவியைப் பார்த்தான். தா கணவனை நினைத்து உருகும் மன்னி சம்பகத்தையும் நினைத்தான். தன்னால் ஏமாற்றப்பட்ட காமுவின் களை நிறைந்த மோகன உருவத்தை நினைத்துக் கொண்டான். அவன் கையிலிருந்து உதறிக் தள்ளிய பட்டுப் புடவை மடிப்புக் கலைந்து கீழே விழுந்து கிடந்தது.

கீழே சம்பகத்துக்காக அவன் வாங்கி வந்த புடவை மடிப்புக் கலையாமல் சுவாமி. அலமாரியின்கீழ் வைக்கப் பட்டிருந்தது. கொதிக்கும் உள்ளத்திலிருந்து பொங்கி வரும் துக்கத்தைஅடக்க முடியாமல் சம்பகத்தின் கண்கள் இரண்டு துளி கண்ணீரைச் சிந்தின. புதுப் புடவையின் மீது, அதுவும் கரும்பச்சைப் புடவை மீது அவை முத்துப் போல் உருண்டு நின்றன.

இவ்வளவு பேச்சுக்களையும் சகித்துக் கொண்டு அவளுக்கு அந்த வீட்டில் வாழ்வதற்கு என்ன காத்துக் கிடக்கிறது? என்றாவது அவள் கணவன் தாய் நாடு திரும்பி வருவான். சம்பகத்தின் வரண்டு போன வாழ்க்கை பசுமை பெறும் என்னும் நம்பிக்கை தான் காரணம். கணவன் வரவை எதிர்பார்த்து வாடும் மங்கையும், கணவன் தயவின்றித் தன்னால் வாழ முடியும் என்கிற பெண்ணும் ஒரே வீட்டில் வாழ்ந்தார்கள். காதலும், அன்பும் கொண்டு கணவனுடன் வாழ வேண்டியவள் அவனை உதறித் தள்ளுகிறாள். காதலும். அன்பும் கிட்டாதா என்று ஏங்கி மடிகிறாள் சம்பகம். அதற்காகவே இவ்வளவு பேர்களுடைய கொடுமை களையும் அவள் சகித்து வந்தாள். கொடுமைகளைச் சகிக்க லாம், நிஷ்டூரங்களைப் பொறுக்கலாம். அலட்சியங்களைச் சமாளித்து விடலாம். ஆனால், பெண்மைக்கே மாசு கற்பிப் பதைக் சகிக்க முடியுமா? அதுவும் படித்த ஒரு பெண்ணாலேயே அவ்விதம் சந்தேகிக்கப்படும்போது சம்பகத்தின் மனம், நொந்த ஒவ்வொரு சொல்லும் ஊசி போல் அவள் உடலெங்கும் குத்தியது.

நீலா அவனைச் சந்தேகிக்கிறாள். சங்கரனின் தூய அன்பையும் குரோதக் கண்கொண்டு பார்க்கலாம். நாளடைவில் இந்த அற்ப சந்தேகங்கள் விசுவரூபம் எடுத்துவிடும். பிறகு வெறும் வாயை மெல்லும் மாமியாருக்கு ஒரு பிடி அவல் அகப்பட்ட மாதிரிதான். நாத்தனார் வேறு அதற்குக் கண், காது, மூக்கு வைத்து விடுவாள். இன்னொரு தடவை சங்கரன் அவளிடம் பேசவரும் போதோ, அல்லது அவளாகவோ அவனிடம் நிலைமையைக் கூறிவிட வேண்டியது. இல்லாவிடில் எவ்வளவு கஷ்டங்கள் இருந் தாலும் பிறந்த வீட்டுக்காவது சென்று இருந்து விடுவது. அதுவும் சௌகரியப்படாவிடில் நர்ஸ் உத்தியோகத்துக்கோ, உபாத்தியாயினி தொழிலுக்கோ படித்து, வேலைக்குப் போய் விடவேண்டும்.

சம்பகம் துயரத்துடன் சுவாமி அலமாரிக்கு அருகிலேயே படுத்திருந்தாள். புடவை வேண்டுமென்று அவள் யாரிட மாவது சொன்ன ாளா, என்ன? நேரம் போவது தெரியாமல் அவள் தீவிரமாக யோசித்தாள். பெண்ணின் வாழ்வு சமூகத் தில் இன்றும் அவலமாகத்தான் இருக்கிறது. சகலமும் பொருந்தி இருந்தால் தான் அவள் மதிப்புடன் இருக்க முடியும். சம்பகமும் மதிப்புடன் வாழவேண்டும். சந்தேகம் தோன்ற ஆரம்பித்த பின்பு மதிப்பும், மரியாதையும் எதிர் பார்க்க முடியுமா? சாதாரணமாக ஏதோ பேசிக் கொண்டி ருந்ததற்கே அன்று நீலா ஏதேதோ பேசினாள் இன்று ஆசை யுடனும், அனுதாபத்துடனும் சங்கரன் யாரும் கூறாம் லேயே புடவை வாங்கி வந்திருக்கிறான். நீலா இதற்குப் பேசாமல் இருந்து விடுவாளா? ஏற்கெனவே, அவள் பிறந்த வீட்டில் பெண்ணைச் சரியாகக் கவனிக்கவில்லை. சங்கரன் மனைவியிடம் பிரியத்துடன் நடந்து கொள்ளவில்லை என்று புகார் செய்கிறார்களாம். "கடவுளே! இவ்வளவு பெரிய உலகத்தைச் சிருஷ்டித்து அதில் எனக்குப் புகலிடம் இல்லா மல் செய்து விட்டாயே! என்னை அன்புடன் 'வா!' என்று அழைப்பவர்கள் இல்லாமல் செய்து விட்டாயே!” என்று சம்பகம் மனம் வெடிக்கப் புலம்பினாள்.

கண்களில் அருவி போல் கண்ணீர் பெருகியது. தாயின் அன்பணைப்பில் சுகமாகத் தூங்கும் பானுவின் மெல்லிய மூச்சு வேதனை தரும் அவள் நெஞ்சில் பரவியது. இவ்வளவு துக்கத்துக்கும் நடுவில் கடவுள் ஒரு குழந்தையைக்கொடுத்து இருக்கிறார். அதை தன்னுடையது என்று உரிமை பாராட்டிக் கொள்ளலாம். பால் வடியும் அதன் முகத்தைப் பார்த்து மனச் சாந்தி பெறலாம். அதன் பேச்சில் ஈடுபட்டுக் கவலைகளை மறக்கலாம். கள்ளங் கபடமற்ற அதன் வார்த்தைகளைக் கேட்டுச் சந்தோஷிக்கலாம். குழந்தை மனம் குழந்தை உள்ளம் என்று சொல்லுகிறார்களே, அந்தக் குழந்தை மனத்தைப் புரிந்துகொள்ளும் சக்தி பலருக்கு இருப்பதில்லை.

நீலாவும் கலாசாலைப் படிப்பு படித்தவள்தான் நான்கு தினங்களுக்கு முன்பு குழந்தை பானு ஏதோவிளையாட்டாக மாடியில் நீலாவின் அறைக்குள் சென்று விட்டாள். அங்கு இருந்த பொருள்கள் யாவும் அவளுக்கு வினோதமாக இருந்திருக்க வேண்டும். நீல வர்ணத்தில் இருந்த சோட்புப் பெட்டியை அவள் எடுத்து அழகு. பார்த்துக் கொண்டிருக்கும்போது நீலா வந்து விட்டாள்.

நீலா சித்தி என்றால் பானுவுக்கு மிகவும் பயம். கைகள் பதற பெட்டியைப் கீழே போட்டு விட்டாள் குழந்தை 'பிளாஸ்டிக்' பெட்டி தானே? சுக்கு சுக்காக உடைந்து போயிற்று. நீலாவுக்குக் கோபம் பற்றிக் கொண்டு வந்தது. குழந்தையின் கன்னத்தைத் திருகிக் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு கீழே வந்தாள்.

"பாருங்கள் மன்னி! உங்கள் பெண் செய்திருக்கிற வேலையை! குழந்தைகளுக்குச் சிறு வயசிலிருந்தே நல்ல 'டிரெய்னிங்' கொடுக்க வேண்டும்!" என்று படபடப்பாகப் பேசி விட்டுப் போனாள் நீலா.

"மாமா வீட்டிற்குப் போய்விட்டு வந்த பிறகு விஷமக் கொடுக்காக ஆகி இருக்கிறது!" என்று பாட்டியும், அத்தையும் வேறு 'ஸர்ட்டிபிகேட்' கொடுத்தார்கள்.

"கிடக்கிறது விடு, நாலணா பெட்டிதானே? வீட்டில் எத்தனையோ இரைபடுகிறது” என்று தாத்தா சிபாரிசுக்கு வராமல் இருந்தால் அவர்கள் இன்னும் ஏதாவது சொல்லி இருப்பார்கள்.

கண்களில் கண்ணீர் தளும்ப ஒரு பக்கமாக நின்று கொண்டிருந்த குழந்தையை மறைவில் போய்ச் சம்பகம் அணைத்து கொண்டாள். "இனிமேல் மாடிப் பக்கம் போகாதே, அம்மா!" என்று கண்ணீர் வடித்தாள்..

முன்பு ஒரு நாள் வாசனைத் தைல புட்டியைக் கீழே போட்டு உடைத்து விட்டாள், நீலா. அதைப் பற்றி வீட்டில் எல்லோருக்கும் கோபமாக இருந்தாலும், "போகிறது போ. கை தவறிப் போய்விட்டது. பூமிதேவி ஆசைப்பட்டாள்!” என்றெல்லாம் மீனாட்சி அம்மாள் பேசினாள். 'குழந்தை யைக் கண்டாலும் தான் இவர்களுக்கு ஆகவில்லை. என்னைக் கண்டாலும் பிடிக்கவில்லை' என்று அதைக் கேட்டதும் சம்பகம் உருகினாள்.

தூங்கிக் கொண்டிருந்த குழந்தையின் கைகளை அன்புடன் வருடினாள் சம்பகம். தூக்கத்தில், தாயை ஆவலுடன் கட்டிக் கொண்ட பானுவின் ஸ்பரிசம், நொந்து போன சம்பகத்தின் மனத்துக்கு ஆறுதலாக இருந்தது. கண்களை அழுத்தி மூடிக் கொண்டாலும் அவளுக்குத் தூக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்துக் கொண்டே இருந்தாள்.

கூடத்தில் மாட்டி இருந்த கடிகாரம் 'டாண், டாண்' என்று இரண்டு அடித்தது. கோடை காலமாதலால் இறுக்கமாக இருக்கவே, பானுவுக்குப் போர்த்திவிட்டு விட்டு, சம்பகம் முற்றத்தில் வந்து உட்கார்ந்தாள். பகலெல்லாம் வேலை செய்து அலுத்துப் போய் இரவு தூக்கம் வராததால் தலையை வலித்தது அவளுக்கு. தலையை இரு கைகளாலும் தாங்கிக் கொண்டு உட்கார்ந்திருந்த அவள் எதிரில் சங்கரன் நின்றிருந்தான்.

“தூங்காமல் இந்த நேரத்தில் இங்கே என்ன பண்ணுகிறீர்கள் மன்னி?” என்று கேட்டான் அவன்.

''நள்ளிரவில் சங்கரன் கேட்பதற்கு அவனுடன் உட்கார்ந்து கொண்டு பதில் சொல்லலாமா? அவன் ஏன் கீழே இறங்கி வந்தான்? இரவு நேரத்தில் மாடியிலிருந்து ஏன் கீழே இறங்கி வர வேண்டும்?" என்றெல்லாம் சம்பகம் எண்ணித் தவித்தபோது, சங்கரன் தொடர்ந்து பேசினான்.

"நீலா குடிப்பதற்கு தண்ணீர் கொண்டு வந்து வைப்பதற்கு மறந்து விட்டாள். என் பேரில் ஏதோ கோபித்துக் கொண்டு தூங்குகிறாள். குடித்து விட்டுப் போவதற்கு வந்தேன் நீங்கள் தூங்காமல் இப்படி உடம்பைக் கெடுத்துக் கொள்ளலாமா மன்னி? என்றாவது நீங்கள் அண்ணாவுடன் சேர்ந்து சந்தோஷமாக இருக்கப் போகிறீர்கள்" என்று இன்னும் ஏதோ பேச வாயெடுத்தான் சங்கரன்.

மாடி அறையில் பளிச்சென்று நீல விளக்கு எரிய ஆரம்பித்தது. மாடிப் படிகளின் கைப்பிடிச் சுவரைத் தாங்கிப் பிடித்தபடி நீலா நின்றிருந்தாள்.

"போய்ப் படுத்துக் கொள்ளுங்கள். நீலா எழுந்து விட்டாள்!" என்று கூறிவிட்டுச் சம்பகம் அவசரமாக எழுந்து குடத்திலிருந்து ஒரு டம்ளர் தண்ணீரைக் கொண்டு வந்து சங்கரன் எதிரில் வைத்துவிட்டு உள்ளே போய் விட்டாள். மறுபடியும் மாடிக்குச் சங்கரன் போன போது உள்ளே விளக்கு அணைக்கப்பட்டு இருந்தது. தாழ்ப்பாளும் உட்புற மாகப் போட்டுக் கொண்டு நீலா படுத்துக் கொண்டு விட்டாள்.

சங்கரன் லேசாக இரண்டு முறை கதவைத் தட்டி, 'நீலா" என்று அழைத்தான். பிறகு பலமாக இரண்டு முறை கதவைத் தட்டினான். 'படக்'கென்று தாழ்ப்பாளை விலக்கிய நீலா, சரசரவென்று மாடிப் படிகளில் இறங்கி கூடத்தில் விரித்திருந்த ரத்தினக் கம்பளத்தின் மீது பொத் தென்று விழுந்து படுத்துக் கொண்டாள்.

சம்பகத்தின் நெஞ்சம் காய்ந்து வரண்டது. நீலாவின் கால்களைப் பிடித்துக் கொண்டாகிலும், சற்று முன் நடந்த வைகளை மறந்து தன்னை மன்னிக்கும்படி வேண்டிக் கொள்ளலாமா என்று அவள் மனம் ஆத்திரப்பட்டது.
-------------------

10. சினிமாவில் நீலா!

வருஷப் பிறப்புக்கு முதல் நாள் கமலா காமுவின் வீட்டிற்கு வந்தாள். அடுத்த நாள் பண்டிகைக்காக, அவள் அப்பா அப்பொழுதுதான் கடையிலிருந்து அனுப்பி இருந்த மளிகைச் சாமான்களை எடுத்துப் புடைத்துத் தகர டப்பாக் களில் நிரப்பிக் கொண்டிருந்தாள் காமு. ஒன்று துணி தைப்பது, இல்லாவிடில் புஸ்தகங்களைப் படிப்படி, அதுவும் இல்லாவிடில் வீட்டு வேலைகளைச் செய்வது என்று காமுவுக்கு அந்த வாழ்க்கையே அலுத்து விட்டது. சினிமாவுக்குப் போகிறேன்' என்றால் அவள் அம்மா உடனே, "சினிமாவுக்கா? உனக்குத்துணை வருவதற்கு யார் இருக்கிறார்கள்? இருட்டு வேளையிலே வயசுப் பெண் சினிமாவுக்கும், டிராமாவுக்கும் போய் விட்டுத் தனியாக வரவாவது? அதெல்லாம் வேண்டாம், காமு!" என்று தடுத்து விடுவாள்.

அன்று கமலா வந்ததும் காமுவுக்குச் சற்றுத் தெம்பாக இருந்தது. சரசரவென்று டப்பாக்களை அலமாரியில் ஒழுங்காக அடுக்கி வைத்து விட்டு, அவளுடன் வாசல் அறையில் போய் உட்கார்ந்தாள். இதுவரையில் காமு பரபர வென்று செய்து வந்த வேலைகளைக் கவனித்த கமலா ஆச்சரியம் நிறைந்த மனத்துடன் அவளைப் பற்றியே எண்ணமிட்டாள். "இந்தக் காமுவுக்குத்தான் எவ்வளவு திறமை இருக்கிறது? துணிகள் தைத்தே மாதம் நாற்பது ஐம்பது என்று சம்பாதித்து விடுகிறாள். 'டிரெயினிங்' வேறு படிக்கிறாள். வீட்டில் வியாதிக்காரியான தாயாரைக் கவனித்துக் கொள்கிறாள். திரும்பத் திரும்ப ஓயாமல் குடும்ப வேலைகளையும் செய்து வருகிறாளே. இந்தப் பெண்ணுக்கு, இப்படி ஒரே மாதிரி பம்பரம் சுற்றுவது போல் சுற்றி வரும் வாழ்க்கை அலுக்காதா?” என்று தீவிரமாக ஏதோ யோசிக்கும் கமலாவைப் பார்த்துக் காமு சிரித்துக் கொண்டே, "என்ன,ஒரேயடியாக யோசனை? நாளைக்கு ஆபீஸ் லீவாயிற்றே? ஆத்துக்காரரை அழைத்துக் கொண்டு எந்த சினிமாவுக்குப் போகலாம் என்கிற யோசனை யாக்கும்?" என்று கேட்டாள்.

"சே,சே, அதெல்லாம். ஒன்றுமில்லை, நாளைக்குப் பண்டிகை அல்லவா? என் கணவருடைய நண்பர்கள் இரண்டு பேர் எங்கள் வீட்டுக்குச் சாப்பிட வருகிறார்கள். பாவம், அவர்கள் கல்யாணமாகாதவர்கள். 'தினம்தான் ஹோட்டல் சாப்பாடு சாப்பிடுகிறார்கள். பண்டிகை தினத்திலாவது நம் வீட்டில் சாப்பிடட்டுமே' என்று அழைத்திருக்கிறார். சாப்பாடு முடிந்து வெளியே கிளம்ப எனக்கு ஒழிவு இருக்காது காமு. இன்றுதான் ஏதாவது சினிமாவுக்குப் போகலாம் என்று கிளம்பினேன். தனியாகப் போய் உட்கார்ந்து எதையுமே என்னால் ரசிக்க முடியாது" என்றாள் கமலா.

காமு குறும்பாகச் சிரித்தாள். பிறகு கண்களைச் சிமிட்டிக் கொண்டே, "தனியாகப் போவானேன்? உன்னுடைய 'அவரி'டம் ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் ஆபீஸில் ஏதாவது சாக்குச் சொல்லி 'பர்மிஷன்' வாங்கிக் கொண்டு வந்து விடுவாரே!” என்றாள்.

வெட்கத்துடன் சிரித்துக்கொண்டே தன் சிநேகிதியின் கன்னங்களைத் திருகினாள் கமலா.

"இவ்வளவு பொல்லாத குணமா உனக்கு? இந்தக் குறும்பும், பேச்சும் பட்டினம் வந்த பிறகுதான் உனக்கு வந்திருக்க வேண்டும். அன்று ரயிலில் கபடம் இல்லாமல் பேந்தப் பேந்த விழித்த காமுவா நீ?" என்று ஆசையுடன் அவள் கன்னத்தில் தட்டினாள். பிறகு அன்புடன், "காமு தான் என்னுடன் இன்று சினிமாவுக்கு வாயேன். இப்படி வீட்டிலேயே அடைந்து கிடக்கிறாயே?" என்று அழைத்தாள் கமலா.

காமுவின் மனத்தில் 'எங்கேயாவது போய்வரவேண்டும். என்று எண்ணியிருந்த ஆசை மறுபடியும் பீறிட்டுக்கொண்டு கிளம்பியது. ஆகவே, அவள் உற்சாகத்துடன், "வருகிறேன் கமலா. தனியாகத்தான் என்னை எங்கேயும் அம்மா போக விடுகிறதில்லை. உன்னோடு கூட என்னை அனுப்ப மாட்டாளா? கேட்டுப் பார்க்கிறேன்” என்று கூறிவிட்டுத் தன் தாயைத் தேடிப் போனாள் அவள்.

கூடத்தில் ஒரு ஓரமாகப் படுத்திருந்த விசாலாட்சி அப்பொழுதுதான் தூங்கி விழித்துக் கொண்டிருந்தாள் காமு தயக்கத்துடன் தன் தாயின் அருகில் வந்து உட்கார்ந்து கொண்டு, "அம்மா! நான் உன்னை ஒன்று கேட்கப் போகிறேன். சரியென்று உத்தரவு தருவாயா?" என்று பலமான பீடிகையுடன் ஆரம்பித்தாள்.

விசாலாட்சி, உலர்ந்து போயிருந்த தன் உதடுகளை நாக்கினால் தடவிக் கொண்டே ஆயாசத்துடன், "என்னடி அம்மா என்னைக் கேட்கப் போகிறாய்? பட்சணமும், பலகாரமும் பண்ணிக் கொடு என்று கேட்கப் போகிறாயா? தலை வாரிப் பின்னி விடு என்று சொல்லப் போகிறாயா? நான் தான் ஒன்றுக்குமே உபயோகமில்லாமல் போய் விட்டேனே? நடைப் பிணமாக விழுந்து கிடக்கிறேனடி, காமு. உனக்கு என்னால் என்ன ஆகவேண்டும்?" என்றாள்.

சற்று முன்பு, சினிமாவுக்குக் கிளம்ப வேண்டும் அதற்காகத் தாயிடம் உத்தரவு வாங்க வேண்டும் என்று குஷியுடன் வந்த காமுவின் மனம் வேதனையில் ஆழ்ந்தது. 'தன் குழந்தைக்குத் தலை வாரவில்லையே' என்று அந்தத் தாய் உள்ளம் எப்படி வேதனைப்படுகிறது? பட்சணமும், பலகாரமும் செய்து கொடுக்க முடியவில்லையே என்று எப்படி விசாலாட்சி மனம் குன்றிப் போகிறாள்? தாயின் அன்பை, அந்தப் பரந்த மனப்பான்மையை எதற்கு உவமை கூற முடியும்? அலையெறிந்து குமுறும் ஆழ்கடலுக்கு உவமையாக அவள் குமுறும் உள்ளத்தை வேண்டுமானால் கூறலாம். அவளுடைய அன்பை எதற்கு உவமையாகக் கூறமுடியும்? எல்லையற்ற நீல வானத்தைக் கூறலாமா? காமு யோசனையில் மூழ்கி அம்மாவின் தலையை வருடிக் கொண்டே உட்கார்ந்திருந்தாள்.

காமுவைத் தேடிக் கொண்டு வந்த கமலா விசாலாட்சி யின் அருகில் வந்து நின்றாள். பிறகு நிதானமான குரலில், "அம்மா! இன்று காமுவை என்னுடன் சினிமாவுக்கு அனுப்புங்கள்” என்று கேட்டாள்.
என்று
விசாலாட்சி, வியாதிக்கிடையே சிரித்தாள். அவள் சிரித்தே வெகு காலம் ஆயிற்று. 'அழைத்துப் போயேன். குழந்தை எங்கே தான் போகிறாள்? எனக்கு உழைக்கவே அவளுக்குப் பொழுது சரியாக இருக்கிறதே!' என்று கூறினாள்.

காமு சரசரவென்று கும்மட்டி அடுப்பைப் பற்றவைத்துக் கஞ்சியைச் சுட வைத்து தாய்க்குக் சொடுத்தாள். அப்பாவுக்குக் காபி போட்டு மூடி வைத்தாள். கமலாவும் அவளும், காபி அருந்தி விட்டு 'மாட்னி' காட்சிக்குக் கிளம்பினர்.
------

கொட்டகைக்குள் சென்று அவர்கள் உட்கார்ந்த பிறகும் படம் ஆரம்பிக்க அரைமணி அவகாசம் இருந்தது. புதிதாக விவாகமான தம்பதிகள் அநேகர் அங்கே வந்திருந்தனர். அவர்களைச் சுட்டிக் காட்டி காமு கமலாவைக் கேலி செய்து கொண்டே இருந்தாள்.
படம் ஆரம்பிக்க ஐந்து நிமிஷங்கள் இருக்கும்போது, வாசல் திரையை விலக்கிக் கொண்டு, அவர்களுக்குப் பின்னால் சற்றுத் துலைவில் இருந்த மேல் வகுப்புக்குச் சென்று நீலா உட்காருவதைக் காமு கவனித்தாள். ஆகாய வர்ணச் சேலை உடுத்தி, முதுகுப்புறம் பித்தான் வைக்கப்பட்ட 'சோலி' அணிந்து ஒய்யாரமாக நடந்து வந்தாள் நீலா.

அவள் வழக்கமாகப் பின்னிக் கொள்ளும் இரட்டைப் பின்னல்களுக்குப் பதிலாகக் கூந்தலை இரு பிரிவுகளாகப் பிரித்து 'ரிப்பன்' கட்டி இருந்தாள். காற்றில் அலைக்கப் பட்ட அவள் கூந்தல் பறந்து கொண்டிருந்தது. அவள் பின்னால் யார் வருகிறார்கள் என்று அறியும் ஆவலினால் கழுத்து வலி எடுத்துவிடுகிற மாதிரி காமு அந்தப் பக்கமே பார்த்தாள். ஒரு வேளை சங்கரனும் அவளுடன் வந்திருக்க லாம் அல்லவா? அருகில் உட்கார்ந்திருந்த கமலாவிடம் காமு மெதுவாக பின்னால் பாரேன்! யார் வந்திருக்கிறார்கள் என்று” என்றாள். கமலா திரும்பிப் பார்த்தாள்.

"த்சூ,நீலாவா? இதென்ன அதிசயம்? வாரத்தில் ஐந்து நாட்கள் அவளை இந்தப் பட்டினத்தில் இருக்கும் எந்தத் தியேட்டரிலாவது பார்க்கலாமே?" என்றாள்.

"அப்படியா? அதுவும் தனியாகவே தான் வருவாளா?" காமு ஆச்சரியத்துடன் கேட்டாள்.

"நீயும், நானும்தான் தனியாக வர யோசிக்கிறோம். நீ விவாகம் ஆகாத இளம் பெண், எனக்கோ தனியாக எதை யுமே ரசிக்க முடியாது."

“அவருடன் வந்தால் தான் ரசிப்பாயாக்கும்! பாரேன், நீலா ‘ஜம்’மென்று வந்து தனியாக உட்கார்ந்திருப்பதை? கணவனுடன் வந்து சினிமாப் பார்க்க வேண்டும் என்று ஒரு பெண்ணுக்கு ஆசை இருக்காதா?" என்றாள் காமு.

கமலா கலகலவென்று சிரித்தாள்.

"ஏதேது காமு? உனக்குக் கல்யாணமாகி விட்டால் ஆத்துக்காரரை விட்டுப் பிரியவே மாட்டாய் போல் இருக் கிறதே" என்று கமலா காமுவைக் கேலி செய்தாள்.

படம் ஆரம்பித்து ஓடிக் கொண்டிருக்கும்போது இருவரும் அதிகமாக ஒன்றும் பேசவில்லை. திரையில் வேகமாக முன்னேறும் சம்பவங்களைப் போலவே காமுவின் வாழ்க்கையிலும் எத்தனை சம்பவங்கள் நடந்து விட்டன?

பொன் மணி கிராமம். அவர்கள் வீடு, அதன் தோட்டம் கறவைப் பசு, சங்கரனின் பேச்சுக்கள், முத்தையாவின் கடிதம்... காமு சென்னைக்கு வந்து இப்போது 'டிரெயினிங்' படிப்பது எல்லாம் அவள் மனத் திரையில் படங்களாக, ஓடின. 'ஒவ்வொருத்தர் வாழ்க்கையிலும் நேரும் சம்பவங்களையே ஒரு அழகான திரைப் படமாக எடுத்து விடலாமே' என்று எண்ணமிட்டாள் காமு.

இடைவேளையின் போது கமலாவே காமுவடன் பேச்சுக் கொடுத்தாள்.

“திடீர் திடீர் என்று நீ இப்படி மௌனத்தில் ஆழ்ந்து விடுகிறாயே காமு? படத்தைப் பார்க்கிறாயா, இல்லை ஏதாவது கற்பனையில் இறங்கி விடுகிறாயா என்று எனக்குச் சந்தேகமாக இருக்கிறதே" என்று கேட்டாள் கமலா.

"கற்பனையும், காவியமும் எனக்கு உதயமாகுமா கமலா? என்னவோ நினைத்துக் கொண்டிருந்தேன்” என்று காமு சற்று சலித்த மாதிரி பதில் கூறினாள்.

'ஆமாம், அன்று நீ எங்கள் வீட்டுக்கு வந்திருந்தபோது நீலா உன்னை அவள் வீட்டுக்கு வரும்படி கூப்பிட்டாளாமே நீ போகவில்லையா? அவள் அதைப் பற்றி என்னிடம் நிஷ்டூரமாகச் சொன்னாள்” என்று கூறினாள் கமலா.

"போக வேண்டும், கமலா. ஆனால், அவ்வளவு பெரிய மனுஷர்கள் வீட்டுக்கு எப்படிப் போவது என்கிற தயக்கம் தான் காரணம். அப்பாவும் அவர் நண்பர் சர்மாவைப் பார்த்து வர வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். நாளைக்குக் கடைக்குக் கூட விடுமுறை. போய் விட்டு வரலாம் என்று இருக்கிறோம்” என்று கூறினாள் காமு.

படம் முடிந்து, கூட்டத்தைக் கடந்து அவர்கள் வெளியே வருவதற்குள் நீலர தன்னுடைய காரில் ஏறிக்கொண்டு போய் விட்டாள். கமலாவும் காமுவை அவள் வீட்டு வாசல் வரைக்கும் துணையாக வந்து அனுப்பி விட்டுத் தன் வீட்டுக்குச் சென்றாள்.

காமு தன் வீட்டுக்குள் நுழைந்தபோது ராமபத்திர அய்யர் வாசல் வராந்தாவில் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்திருந்தவர், "என்ன அம்மா! படம் நன்றாக இருந்ததா?" என்று கேட்டுக் கொண்டு, மகளின் பின்னால் உள்ளே சென்று சமையலறையில் உட்கார்ந்தார்.

“ஹும்... நன்றாகத்தான் இருந்தது. சினிமாவிலே நம் சங்கரன் மனைவி நீலாவைப் பார்த்தேன், அப்பா. நான் அவர்கள் வீட்டுக்கு வரவில்லை என்று அவள் கமலாவிடம் குறைப்பட்டுக் கொண்டாளாம். நாளைக்கு என்னோடு நீங்களும் வாருங்களேன். போய் விட்டு வரலாம்."

ராமபத்திர அய்யர் பதில் கூறுவதற்கு முன்பு கூடத்தில் படுத்திருந்த விசாலாட்சி சற்று உரக்கவே, "நீ அங்கெல்லாம் ஒன்றும் போக வேண்டாம். காமு உனக்கும் அவளுக்குகும் என்ன சிநேகம் வைத்துக் கிடக்கிறது? நம்முடைய தகுதிக்குத் தக்கபடி நாம் சிநேகம் செய்ய வேண்டும். எங்கே வேண்டுமானாலும் போகிறேன் என்று கிளம்பி விடுகிறாயே, உன் அப்பாவும் உனக்குச் சரியென்று தலை ஆட்டுகிறார்" என்றாள்.

படபடப்பாகப் பேசிய தனால் அவளுக்கு பெருமூச்சு வாங்கியது.

"அம்மா!..." என்று காமு ஏதோ சொல்ல வாயெடுத் தாள். அதற்குள் ராமபத்திர அய்யர் காமுவின் சமீபத்தில் சென்று மெதுவாக, "கர்மு! ஏற்கெனவே பலவீனமடைந் திருப்பவளிடம் நீ ஒன்றும் பேசாதே, அம்மா. நாம் அங்கே போகப் போகிறோம் என்பதே அவளுக்குப் தெரிய வேண்டாம். நாளைக்குப் போய்விட்டு வரலாம்" என்றார்.

அதைக் கேட்ட காமுவின் மனம் மகிழ்ச்சியால் பூரித்தது.

'சங்கரனின் வீட்டுக்குப் போகப் போகிறோம்' என்கிற எண்ணம் அவள் மனத்துள் பலவித உணர்ச்சிகளை எழுப்பி யது. 'சங்கரன் வீட்டுக்குப் போக வேண்டுமா? ஏன் போசுக் கூடாது? போனால் என்ன?' என்று பல கேள்விகள் தோன்றி அவளை அன்று இரவு பூராவும் தூங்க விடாமல் அடித்தன..

வருஷப் பிறப்பு அன்று சர்மாவின் வீட்டில் எல்லோரும் புத்தாடை உடுத்திக் கொண்டார்கள். சம்பகம் மட்டும் புடவையைப் பிரித்துக் கட்டிக் கொள்ளவில்லை. "நீ ஏன் புடவை உடுத்திக் கொள்ளவில்லை?" என்று அவளை யாரும் கேட்கவில்லை. எல்லோரும் பகல் சாப்பாட்டுக்கு அப்புறம் வெற்றிலை போட்டுக் கொண்டு வானொலியில் மத்தியான நிகழ்ச்சியைக் கேட்டுக் கொண்டிருந்தனர் சப்தப்படுத்தாது வாயிற் கதவைத் திறந்து கொண்டு ராமபத்திர அய்யரும், காமுவும் உள்ளேவந்தனர். சர்மா எப்பொழுதும் ‘வராந்தா’ விலேயே இருப்பவராதலால் யார் வீட்டுக்கு வந்தாலும் அவர் கண்ணில் படாமல் போக முடியாது. வந்தவர்களைக் கூர்ந்து கவனித்து விட்டுச் சிறிது யோசித்தார் சர்மா. சட்டென்று நினைவு வந்தவராக, "அட! நீயா? வா, அப்பா ராமபத்திரா! எத்தனை வருஷங்கள் ஆய்விட்டன உன்னைப் பார்த்து!" என்று ராமபத்திர அய்யரை வரவேற்றார் அவர். தயங்கிக் கொண்டே தகப்பனாரின் பின் னால் நின்று கொண்டிருந்த காமுவை, "இவள் தான் என் பெண் காமு" என்று சர்மாவுக்கு அறிமுகம் செய்து வைத்தார் ராமபத்திர அய்யர்.

ஏற்கெனவே சங்கரன் அவர்களைப் பற்றி சர்மாவிடம் கூறி இருந்ததால் பழைய விஷயங்களை ஒன்றும் அவர் அதிகமாகக் கேட்கவில்லை. கூடத்தில் காது செவிடாகும் படி அரட்டைக் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. வானொலியில் நடக்கும் சினிமா கீதங்களைத் தோற்கடித்து விட்டது எனலாம், அவர்கள் பேசிய பேச்சுக்கள்!

கீழே விரித்திருந்த உயர்ந்த ரத்தின கம்பளத்தைப் பார்த்து அதிசயித்தார் ராமபத்திர அய்யர். மெத்து மெத்து என்று பஞ்சின் மேல் நடப்பது போல் இருந்தது. கால்களில் மண் முதலிய தூசி ஒட்டக் கூடாது என்றும், வீட்டுக்கு அலங்காரமாக இருக்கவும் இத்தகைய கம்பளங்களை விரிக்கிறார்கள். கல்லும், முள்ளும், பாறையும், சேறும், சகதியும் நிறைந்த வயல்வெளிகளில் முரட்டுத் தனமாக நடந்து உழைக்கும் பாட்டாளி மக்களைப் பற்றி நினைத்துக் கொண்டார் ராமபத்திர அய்யர். காலில் ஜோடுகள் இல்லாமல் அரை மணியில் பொன்மணியிலிருந்து ராஜம் பேட்டைக்கு நடந்து விடுவார் அவர். உயர்வான பானங் களை அவர் சாப்பிட்டது இல்லை. நல்ல வெய்யில் வேளை யில் குளிர்ச்சியாக ஒரு டம்ளர் மோர் இருந்தால் போதும் அவருக்கு.

நண்பர்கள் இருவரும் பேசிக் கொண்டே உட்கார்ந்தனர். காமு தயங்கியபடியே கூடத்தை நோக்கிச் சென்றாள்.

"பட்டினம் வந்து விட்டாயாமே. இங்கே என்ன செய்கிறாய்! பெண் 'டிரெயினிங்' படிக்கிறாளாமே?” என்று சர்மா என்னென்னவோ விசாரித்தார் தம் பால்ய நண்பரை.

இப்படி இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந் தனர். உள்ளே இருந்த தன் மனைவியை அழைத்தார் சர்மா.

தலைப்பை இழுத்துப் போர்த்திக் கொண்டு மீனாட்சி அம்மாள் வராந்தாவுக்கு வந்தாள். .

“மீனா! இவரை யார். என்று தெரிகிறதா உனக்கு?” என்று கேட்டார் சர்மா, தமது மனைவியைப் பார்த்து.

"தெரியாமல் என்ன? விசாலத்தின் அகத்துக்காரர். பார்த்து எத்தனையோ வருஷங்கள் ஆயிற்று. வயசாகி விட்டது தெரிகிறதே ஒழிய வேறு மாறுதல் ஒன்றும் தெரிய வில்லை. விசாலம் சௌக்யமாக இருக்கிறாளா? உள்ளே வந்திருக்கிறாளே அந்தப் பொண்ணுக்குத்தான் கல்யாணம் ஆக வேண்டுமா?" என்று விசாரித்தாள் மீனாட்சி அம்மாள்.

"ஆமாம்" என்கிற பாவனையாகத் தலையை அசைத் தார் ராமபத்திர அய்யர். மீனாட்சிதான் அடையாளம் தெரியாமல் எப்படிப் பருத்து விட்டாள்! ஒடிந்து விழுகிற மாதிரி இருந்தாளே? முகத்திலே அலாதியாகக் களை வந்து விட்டது.லட்சுமீ கடாட்சம் என்பது இதுதான் போலும்! விசாலம் எவ்வளவோநன்றாக இருந்தாள். இப்போது பல்லும், பவிஷுமாகப் பார்க்கச் சகிக்கவில்லை. 'கொடிது கொடிது வறுமை கொடிது' என்று குழந்தைகள் பள்ளிக் கூடத்தில் பாடுவார்களே அது சரியாகத்தான் இருக்கிறது.

அவர் சிந்தனையைக் கலைப்பது போல் சர்மா, "மீனாட்சி! ஒரு தடவை புயல் காற்றினால் ரயில் கவிழ்ந்து தண்டவாளம் பெயர்ந்து நாம் பொன்மணி கிராமத்து ரயில் நிலையத்தில் சாப்பாடு இல்லாமல் தவித்தோமே. தற்செயலாக அந்தப் பக்கம் வந்த ராமபத்திரன் கீரைக் குழம்பும், மாவடுவும் கலந்த சாதத்தை வீட்டிலிருந்து கொண்டு வந்து போட்டிராவிடில் அப்போது என்னமாதிரி தவித்திருப்போம்? தேவாமிர்தம் மாதிரி இருந்தது அந்தச் சாப்பாடு! 'விசாலத்தின் கையால் கீரைக் குழம்பு வைத்துச் சாப்பிட வேண்டும்' என்று நீ கூட அடிக்கடி கூறுவாயே?" என்று, இருபத்தி ஐந்து வருஷங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை நினைவூட்டினார் தம் மனைவிக்கு.

சுதாமர் கையால் அவல் வாங்கிச் சாப்பிடத் துடித்த ஸ்ரீ கிருஷ்ண பகவானின் நினைவு வந்தது ராமபத்திர அய்யருக்கு. '

"பேசிக் கொண்டே நிற்கிறேளே. காபி கொண்டு வருகிறேன், இருங்கள்” என்று கூறிவிட்டு, மீனாட்சி உள்ளே சென்றாள்.

புதிதாக வந்திருக்கும் தம் நண்பருக்கு சங்கரனின் மனைவியை அறிமுகப்படுத்த வேண்டி சர்மா நீலாவை அழைத்தார். புதிதாகக் கல்யாணமானவர்களைப் பெரியவர்கள் யாராவது பார்க்க வந்தால் அவர்களை நமஸ்காரம் பண்ணுவது வழக்கம். தயங்கியபடியே வந்த நீலா, ராமபத்திர அய்யரைக் கண்டதும் இரண்டு கைகளையும் கூப்பி, "நமஸ்தே" என்று கூறினாள். அவள் அருகில் நின்றிருந்த காமு, "அப்பா, இது. யார் தெரியுமா? சங்கரனின் மனைவி நீலா” என்று வேறு சொல்லி வைத் தாள், “அப்படியா? மிகவும் சந்தோஷம். குழந்தை நன்றாக படிக்கிறாள் போல் இருக்கிறது" என்று தன் சந்தோஷத் தைத் தெரிவித்தார் ராமபத்திர அய்யர்.

எல்லோரும் காபி சாப்பிட்டு முடிந்ததும் காமு உள்ளே இருப்பவர்களிடம் விடை பெற்றுக் கொண்டாள். வெற்றிலைத் தட்டில் வெற்றிலை, புஷ்பம், பழத்துடன் சம்பகம் அவள் எதிரில் வந்து நின்று குங்குமத்தை எடுத்து அவள் அழகிய பிறைச் சந்திரன் போன்ற நெற்றியில் பொட்டு இட்டாள்.

"அடிக்கடி வந்து போய்க்கொண்டிரு அம்மா.உனக்கு எந்தெந்த மாதிரி தைக்க வேண்டுமோ, நான் சொல்லித் தருகிறேன். எனக்கும் பொழுது போக்காக இருக்கும்" என்றாள் சம்பகம்.

இது யார் என்று சொல்ல வில்லையே நீலா? இவ்வளவு அன்புடன் பழகும் இவர்களைப் பற்றி நான் தெரிந்து கொள்ள வேண்டாமா?” என்று கேட்டாள் காமு, நீலாவைப் பார்த்து.

"யாரா? என் 'ஹஸ்பெண்டி'ன் தமையன் மனைவி. என் ஓரகத்தி. சம்பகம் என்று பெயர். போதுமா விவரம்?" என்று கேட்டு விட்டு நீலா, ''ஆமாம், ரவிக்கைகளைச் சீக்கிரம் தைத்துக் கொடுத்து விடுவாயோ இல்லையோ? 'பில்' போட்டு அனுப்பி விடு. பணத்தை அனுப்பி விடுகிறேன்" என்று கூறினாள்.

"ஆகட்டும்" என்று தலை அசைத்து விட்டு, காமு தகப்பனாருடன் கிளம்பினாள்.

வீட்டிலே சம்பகம் அழகாகத் துணி தைக்கும்போது வெளியே யாரிடமோ தைப்பதற்குக் கொடுத்துக் கூலி கொடுப்பதாகச் சொல்லுகிறாளே நீலா? அவள் ஏன் சம்பகத்திடம் வித்தியாசம் பாராட்ட வேண்டும்? அவள் அயல் வீட்டிலிருந்து வந்தவள்; நீலாவும் அப்படித்தான். இருவரும் ஒத்து இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? கொடுமையும், துன்பமும் நிறைந்த சம்பகத்தின் வாழ்க்கைக்கு எவ்வளவோ இதமாக இருக்குமே! சம்பகம் வெற்றிலைத் தட்டைக் கொண்டுபோய் சுவாமி அலமாரியின் கீழ் வைத்துவிட்டு யோசித்தபடி நின்றாள்.

அன்று இரவு, ராமபத்திர அய்யர் வந்திருந்ததைப் பற்றி சர்மா சங்கரனிடம் கூறினார். "மனுஷன் கொஞ்சம் கூட மாறவில்லை பார்த்தாயா? அதே பேச்சு. அதே வினயம். பாவம், வாழ்க்கை பூராவும் கஷ்டப்படுகிறான். பெண். படித்துவிட்டு வேலைக்குப் போகப் போகிறாளாம். நன்றாகக் 'கிளி மாதிரி இருக்கிறதடா, அந்தப் பெண் அதைத்தானே உனக்குக் கொடுக்கிறேன் என்று சொல்லிக் கொண்டதாக நீ கிராமத்திலிருந்து வந்ததும் முன்பு என்னிடம் கூறினாய்?" என்று கேட்டார் சர்மா, பிள்ளை யைப் பார்த்து.

ராமபத்திர அய்யரா சங்கரனுக்குத் தன் பெண்ணைக் கொடுப்பதாகக் கூறினார்? ஒருகாலும் இல்லை. பணத்தின் குணத்தையும், பணக்காரர்களின் குணத்தையும் அறியாதவரா அவர்? சங்கரனே அவரைப் பார்த்துப் பரிதாபப்பட்டுக் கூறிய வார்த்தை அது. காமுவின் சௌந்தர்யம் அவனை அவ்விதம் பேச வைத்தது. உணர்ச்சிப் பெருக்கில் அவன், பின்னால் தன்னுடைய வார்த்தையைக் காப்பாற்றும் உறுதி தன்னிடம் இருக்கிறதா என்பதையும் யோசியாமல், பேசிய பேச்சு அது. ராமபத்திர அய்யர் தன் அந்தஸ்தை மீறி மகளுக்கு மணம் முடிக்க வேண்டும் என்று ஒருபோதும் கருதியவர் இல்லை. ராமபத்திர அய்யர் அந்தப் பேச்சை என்றோ மறந்து விட்டார். மறக்காமல் இருந்தால் சர்மாவின் வீடு தேடி வருவாரா? சங்கரனை வாய் குளிர அழைத்துப் பேசுவாரா?

தலையைக் குனிந்தபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தான் சங்கரன். அவன் மனத்துள் பல எண்ணங்கள் தோன்றின.
-----
பொன்மணி கிராமத்தின் ஏரியும், வயல்களும், பெருமாள் கோவிலும் அவன் கண் முன்னே தோன்றின. 'யாரோ இவர் யாரோ' என்று பாடிக்கொண்டே அவனை முதன் முதலில் வரவேற்ற காமு ஒய்யாரமாக ஊஞ்சல் சங்கிலியைப் பிடித்துக் கொண்டு அவன் எதிரில் பூங்கொடி போல் வந்து நின்றாள். அப்புறம் அவள் காபி கொண்டு வந்து வைத்து விட்டு நாணத்துடன் உள்ளே போனது அவன் நினைவுக்கு வந்தது. காமரா அறையில் உட்கார்ந்து கதவு இடுக்கின் வழியாக மருண்டு அவனையே பார்த்துக்கொண்டு, தாமரைச் சவுக்கம் பின்னும் காமு அவனைப் பார்த்துச் சிரித்தாள். "காமு! என்னைக் கல்யாணம் பண்ணிக்கொள்ள உனக்குச் சம்மதமா" என்று அவன் கேட்டபோது அவள் வெட்கத்துடன் தலையைக் குனிந்து கொண்டாளே, அந்தக் காட்சி அவன் மனத்தை என்னவோ செய்தது.

ராமபத்திர அய்யர், அவன் பொன்மணியை விட்டுக் கிளம்பும் போது, , "சங்கரா! என்னவோ எங்களுக்குத் தகுந்த இடமாக ஒரு வரன் பார்த்துச் சொல்லப்பா ; அது போதும்" என்று தானே கேட்டுக் கொண்டார்? தன்னால் ஏதோ பிரமாதமாகச் சாதித்து விட முடியும் என்கிற நோக்கத்துடன் அவன் காமுவைத் தானே கல்யாணம் செய்து கொள்வதாகக் கூறிவிட்டு வந்தான். சங்கரன் இளகிய மனம் படைத்தவன்; தவிர காமுவின் அழகும் நற்குணங்களும் அவ்விதம் அவனைப் பேச வைத்தன. அவள் ஏழ்மையில் வாடி வதங்குவதைப் பார்த்து எழுந்த பரிதாப உணர்ச்சிதான் அது. அதற்கு வேண்டிய உறுதியும், தைரியமும் தன்னிடம் இருக்கின்றனவா என்று சங்கரன் அப்பொழுது யோசிக்கவில்லை.

பொன்மணியை விட்டு பட்டினத்தில் அவன் வீட்டுக்குள் நுழைந்தபோதே காமுவின் வீட்டுக்கும் அவன் வீட்டுக்கும் பெரிய அளவில் இருக்கும் வித்தியாசம் தெரிந்தது. அவன் திரும்பி வந்த தினத்தன்று, கையில் காபியைக் கொடுத்துக் கொண்டே மீனாட்சி அம்மாள் பேச ஆரம்பித்தாள்.

"டாக்டர் மகாதேவனின் பெண்ணைப் போய்ப். பார்த்துவிட்டு வந்தோம். பெண் நன்றாக இருக்கிறாள். நன்றாகச் செய்து கல்யாணம் பண்ணிக் கொடுப்பார்கள். நமக்கு ஏற்ற சம்பந்தம்" என்று வாய் நிறையச் சொன்னாள் அவள்.

சங்கரன் முதலில் திடுக்கிட்டான்.

'ஆமாண்டா! அவர்கள் வீட்டைப் பார்த்துக் கொண் டிருந்தாலே போதும். நமக்கு ஏற்ற சம்பந்தம்தான் அது ' என்று சொல்லிக்கொண்டே ருக்மிணி அங்கு வந்தாள்.

"நமக்கு ஏற்ற சம்பந்தம் என்றால் ராமபத்திர அய்யர் நமக்கு ஏற்ற சம்பந்தம் செய்யக்கூடிய நிலையிலா இருக்கிறார்? பெரிய அளவிலே திட்டம் போட்டு அதை நிறைவேற்ற இருக்கும் அம்மாவிடம் ராமபத்திர அய்யரைப் பற்றிச் சொல்வதா? அவர்கள் வீட்டு இடிந்த சுவரைப் பற்றிச் சொல்வதா? காமுவைப் பற்றிப் கருகமணி மாலையுடன் நிற்கும் பேசுவதா?"-சங்கரன் ஒன்றும் புரியாமல் விழித்தான்.

மீனாட்சி அம்மாள் மேலும் பேசிக்கொண்டே போனாள்.

"உன் அண்ணாவுக்கு வந்து வாய்த்ததே அதைப் போல இவள் இருக்க மாட்டாள்! எல்லா விதத்திலும் நமக்கு ஏற்ற சம்பந்தம்."

"நமக்கு ஏற்ற சம்பந்தம்! நமக்கு ஏற்ற சம்பந்தம்!" என்று திருப்பித் திருப்பி இதையே சொல்லிக் கொண்டான் சங்கரன்.

நிதானமாகப் புன்சிரிப்புடன் பேசும் காமுவை அம்மாவுக்குப் பிடிக்குமா? அம்மாவை மீறி அவளுக்குப் பிடிக்காத எதையும் அவன் இதுவரையில் செய்ததாகவே அவனுக்குத் தெரியவில்லை. ஆகவே, அவன் உறுதிப் பேச்சுக்கள் யாவும் அவனுக்கே மறந்து போயின. ராமபத்திர அய்யரேதான் பலமுறை அவனிடம் கூறினாரே? “நீ என்னவோ சொல்கிறாய். இதெல்லாம் நடக்கக் கூடியவையா?".என்று. ஆகையால், தான் வார்த்தை தவறினாலும் அவர்கள் அதை அதிகமாகப் பொருட்படுத்த ""மாட்டார்கள் என்று நம்பினான்.

ராமபத்திர அய்யர் அவன் வார்த்தைகளை உண்மையாக எடுத்துக் கொள்ளாமல் இருக்கலாம். ஆனால், காமுவோ அவன் வார்த்தைகளை எவ்வளவு தூரம் உண்மையென்று எடுத்துக் கொண்டு விட்டாள்? அவனால் அவள் இன்னும் கல்யாணம் செய்து கொள்ளாமலேயே இருக்கிறாள்.

இதை நினைத்துப் பார்க்கையில் சங்கரனின் மனம் வேதனை அடைந்தது. நமக்கு ஏற்ற சம்பந்தம் என்று அம்மா பண்ணி வைத்த கல்யாணத்தின் பலனை அவன் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறான்.

மேலே சாப்பிடப் பிடிக்காமல் இலையை விட்டு எழுந்து சென்றான் சங்கரன்.
--------------------

11. நீலாவின் மனக்கசப்பு


வருஷப் பிறப்பிற்கு 'அடுத்த நாள் மத்தியானம் சம்பகம் பகல் சிற்றுண்டியை எடுத்துக் கொண்டு, வாசல் அறையில் உட்கார்ந்திருக்கும் சர்மாவின் எதிரில் வைத்து விட்டுத் திரும்பினாள். உற்சாகம் இல்லாமல் களை இழந்து வாடிப்போய் இருக்கும் அவள் முகத்தைச் சிறிது நேரம் கவனித்து விட்டு சர்மா, “ஏனம்மா! நேற்று நீ மட்டும் ஏன் புதுப்புடவை உடுத்திக் கொள்ளவில்லை? உன் மனசிலே சந்தோஷம் இல்லை என்பது எனக்குத் தெரியும். உன் புருஷன் குணத்தோடு இருப்பான், உன்னை ஆசையுடன் வைத்துக் கொள்வான் என்று நம்பியே அவனுக்குக் கல்யாணம் செய்து வைத்தேன். வெளிநாடுகளுக்குப் போகிறவனுக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணி வைத்துவிட வேண்டும் என்று எல்லோரும் சொன்ன யோசனையை ஏற்றுக் கொண்டுதான் அதன்படி செய்தேன். அவன் இப்படி இருப்பான்; ஒரு பெண்ணின் இதயம் வேதனையால் குமுறப் போகிறது என்றெல்லாம் என் அறிவுக்கு அப்பொழுது எட்ட வில்லை" என்று அவளை நிற்க வைத்துப் பேசினார்.

சம்பகம் தலைகுனிந்து கொண்டே நின்றிருந்தாள். முத்துக்கள் போல் கண்ணீர் அவள் கண்களிலிருந்து பெருகிக் கீழே விழுந்தது. அன்பு உள்ளமும், பரந்த நோக்கமும் கொண்ட சர்மாவினால் அவள் அழுவதைப் பொறுக்க முடியவில்லை. அவர் கண்களிலும் நீர் நிறைந்து விட்டது

அவர் அன்புடன், "சமபகம்! இந்த வீட்டில் புகுந்த உனக்கு எந்தவிதமான குறையையும் நான் வைக்க மாட்டேன். நான் பணத்தாலும் காசாலும் எத்தனை செய்தும் என்ன அம்மா பிரயோசனம்? அவைகளினால் உன் மனசுக்கு ஏதாவது ஆறுதல் கிடைக்கப் போகிறதா?. ஐந்தாறு வருஷங்கள் பொறுமையுடன் இருந்து விட்டாய். இன்னும் சிறிதுகாலம் பொறுத்துப் பார்ப்போம்” என்றார். பிறகு எதையோ நினைத்துக் கொண்டவராக, "சங்கரன் வாங்கி வந்த புடவையை உடுத்திக் கொள் அம்மா. எனக்காகவாவது நீ சந்தோஷத்துடன் இருக்க வேண்டும்'' என்று கூறிவிட்டு சிற்றுண்டியைச் சாப்பிட ஆரம்பித்தார்.

அங்கிருந்து உள்ளே வந்த சம்பகம் தன் அறைக்குள் சென்று சங்கரன் வாங்கி வந்த அந்த நூல் புடவையை எடுத்து மஞ்சள் தடவி உடுத்திக் கொண்டாள். அவள், சிவந்த மேனிக்கு அந்தப் புடவை எடுப்பாக இருந்தது. நேராக அவள் சர்மாவின் அறைக்குச் சென்று அவரை நமஸ்கரித்தாள். சர்மாவுக்கு அவளுடைய அடக்கமும் பணிவும் ஆனந்தத்தைக் கொடுத்தன.

பண்டிகை தினத்தை விட்டுத் திடீரென்று இன்று புதுப் புடவை சலசலக்க நடந்து வரும். சம்பகத்தை ருக்மிணி அதிசயத்துடன் பார்த்தாள். அவள் தன் நெற்றியைச் சுளித்துக் கொண்டு முகத்தில் ஆச்சரியம் ததுப்ப இந்த அதிசயத்தைக் கண் கொட்டாமல் பார்த்தாள். அவள் வாரம் ஒரு புதுப் புடவை வாங்குவதெல்லாம் அதிசய மில் லை. நீலா ஒரு நாளைக்கு மூன்று முறைகள் உடை மாற்றுவதும் அந்த வீட்டில் அதிசயமில்லை. பழைய புடவையுடன் நிற்கும் சம்பகம் அபூர்வமாகப் புதுப் புடவை உடுத்திக் கொண்டு நிற்பது தான் அவளுக்கு அதிசயமாக இருந்தது!

சம்பகம் சமையலறைப் பக்கம் தன் மாமியாரைத் தேடிப் போனாள். மாமனாருக்கு மட்டும் நமஸ்காரம் செய்து விட்டு இருந்துவிட முடியுமா? சமையலறையில் மீனாட்சி அம்மாள் இல்லை. புதுப் புடவையுடன் வரும் சம்பகத்தைப் பார்த்துச் சமையற்கார மாமி புன்சிரிப்புடன் தலையை ஆட்டினாள்.

''என்னடி! இன்றைக்குத் திடீரென்று உனக்கு மனசில் மாறுதல் ஏற்பட்டு விட்டது? நேற்று என்னால் ஆனவரைக்கும் உன்னைப் புதுப் புடவையைக் கட்டிக் கொள்ளச் சொன்னேன். மாட்டேன் என்று விட்டாயே?" என்று அதிசயித்தாள் அந்த அம்மாள்.

"இன்றைக்கு மட்டும் என்ன மாமி?என் மாமனார்தான் நான் இப்படி இருப்பதற்கு வருத்தப்பட்டுக் கொள்கிறார். பெரியவர் சொல்லும்போது கேட்காமல் இருக்கலாமா என்று தான் புதுப் புடவையைக் கட்டிக் கொண்டேன்."

“உன்னுடைய பொறுமைக்கும். நிதானத்துக்கும் பகவான் உன்னைக் கைவிட மாட்டார், சம்பகம்! பாரேன், சீக்கிரத்திலேயே உன் ஆத்துக்காரர் உன்னைத் தேடிக் கொண்டு ஓடோடியும் வரப் போகிறார். 'சம்பகா! நான் தெரியாமல் அந்த மாதிரி யெல்லாம் செய்து விட்டேன்' என்று உன்னிடம் சொல்லப் போகிறார். பார்த்துக் கொண்டே இரு" என்று (அந்தரங்கமான அன்புடன் அந்த அம்மாள் பேசிக் கொண்டே போனாள்.

சம்பகம் ஒரு கணம் யேர்சனையில் ஆழ்ந்தாள். என்றைக்காவது ஒரு நாள் அவள் கணவன் வந்து அவளை அரவணைத்து ஆதரவுடன் இல்லறம் நடத்துவான் என்பது அவளுடைய அசைக்க முடியாத நம்பிக்கை. "அவர் எப்படி யெல்லாம் நடந்துகொள்வாரோ? எப்படியெல்லாம் மாறிப் போய் இருப்பாரோ? அவள்?...கடல் கடந்த அந்த நாட்டில் அவருக்குப் போட்டியாக முளைத்த அந்தப் பெண்ணும் அவருடன் வருவாளோ? வரட்டுமே. வந்தால் என்னுடன் இருந்துவிட்டுப் போகிறாள்” என்றெல்லாம் நினைத்துக் கொண்டு சம்பகம் மெய்ம்மறந்த நிலையில் இருந்த போது கூடத்தில் பலமான பேச்சுக் குரல் கேட்டது.

கூடத்தில் இருந்த ஒரு விசாலமான அறையில் மீனாட்சி அம்மாள் இரும்புப் பெட்டியைத் திறந்து வைத்துக் கொண்டு நகைகளையும், புடவைகளையும் ஒழுங்குபடுத்தி வைத்துக் கொண்டிருந்தாள். சம்பகம் சமையலறைக்குள் சென்றதும் ருக்மிணி பரபரவென்று அங்கே வந்தாள். வந்தவள் உரத்த குரலில், "இந்த வீட்டிலே நடக்கிற அதிசயங்கள் ஒன்றா இரண்டா? உனக்கும், எனக்கும் இல்லாத கரிசனம் அப்பாவுக்குத் தன் மூத்த நாட்டுப் பெண்ணிடத்தில் பொங்கி வழிகிறது போ!" என்று அலட்சியத்துடன் கூறி, கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு நின்றாள்.

மீனாட்சி அம்மாளுக்கு அவள் என்ன சொல்லப்போகிறாள் என்பதே புரியவில்லை.

"நேற்று பூராவும் புதுப் புடவையை உடுத்திக் கொள்ளாதவள் இன்று புதுசைக் கட்டிக்கொண்டு மாமனாருக்கு நமஸ்காரமும் பண்ணி விட்டு வருகிறாள்! நேற்று நாமெல்லாம் கட்டிக் கொண்டபோதே இவளும் புடவையைக் கட்டிக் கொள்வது தானே? ஆனாலும், இப்படி ஒரு வயிற்றெரிச்சலும், பொறாமையும் வேண்டாம என்றாள் ருக்மிணி.

பெண்ணுக்கு தாயார் பதில் கூறுவதற்குள் சர்மா அந்த அறையின் வாசற்படி அருகில் வந்து நின்றார். பிறகு சற்றுக் கண்டிப்பான குரலில், “என்ன இது, ருக்மிணி! வீடே அதிர்ந்து போகிற மாதிரி இந்த விஷயத்தைப் பிரமாதப் படுத்துகிறாய்? பிரமாதப்படுத்த வேண்டிய விஷயங்களை மென்று விழுங்கி மறைத்து விடுகிறீர்கள். ஒன்றும் இல்லாததைப் பெரிதாக்கிப் பேசுவதே உங்களுக்கு வழக்க மாகிவிட்டது. நான்தான் சம்பகத்தைப் புதுப் புடவையைக் கட்டிக் கொள்ளச் சொன்னேன்!' என்று கூறிவிட்டு, அங்கிருந்து வெளியே போய்விட்டார்.

வீட்டை விட்டு சர்மா வெளியில் சென்று விட்டார் என்று தெரிந்ததும். ருக்மிணியின் ஆத்திரம் அளவு கடந்து போயிற்று. கோபத்தால் முகம் சிவக்க அவள், "உனக்கும் தான் வயசாகிறது அம்மா. எங்களுக்கெல்லாம் புடவை வாங்கும்போதே மன்னிக்கும் வாங்கி விட்டுப் போகிறது தானே? அவளுக்காக சங்கரன் 'ஸபெஷ'லாக வாங்கிவர வேண்டுமா என்ன? நமக்கெல்லாம் இல்லாத அக்கறை இவனுக்கு என்னவாம்? தூ! கொஞ்சங்கூட இதெல்லாம் நன்றாகவே இல்லை ல நாலு பேர் காதில் விழுந்தால் நம்மைப் பார்த்துத்தான் சிரிப்பார்கள்" என்றாள்.

சமையலறையில் நின்றிருந்த சம்பகத்தின் உடம்பில் அந்தப் புடவை முட்களாகக் குத்துவதைப் போன்ற உணர்ச்சியை உண்டாக்கியது. வெறுப்புடன் அவள் தன்னையே ஒருமுறை பார்த்துக் கொண்டாள். மனத்தில் எழும் வெறுப்பையும், துக்கத்தையும் எப்படியாவது அடக்கிச் சகித்துக் கொள்ள வேண்டும் என்று அவள் முயன்று கொண்டிருந்த போது, மீனாட்சி அம்மாள் கணீரென்ற குரலில் பேசினாள்.

"இதெல்லாம் உன் அப்பா கொடுக்கிற இடம். சங்கரன் தான் புடவை வாங்கி வந்தான் என்றால் அதை இவள் ஏன் எடுத்து உடுத்திக் கொள்ள வேண்டுமாம்?"

"அதற்குத்தான் சொல்கிறேன்! நம் வீட்டை பார்த்து நாலு பேர் சிரிக்கப் போகிறார்கள், பாரேன்! இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ?" என்றாள் ருக்மிணி ஏளனம் தொனிக்கும் குரலில்.

இதுவரையில் மாடியில் இருந்தபடி கீழே நடக்கும் பேச்சுக்களைக் கேட்டுக் கொண்டிருந்த நீலா, வேகமாக மாடிப்படிகளில் இறங்கி வந்தாள். வந்தவள் தைரியமாகத் தன் நாத்தியின் எதிரில் போய் நின்று, "இதெல்லாம் ஒரு அதிசயமா என்ன இந்த வீட்டில்? நான் தனியாகச் சினிமாவிற்குப் போகிறதும், கண்காட்சிக்குப் போகிறதும் தான் உங்களுக்கெல்லாம் அதிசயமாக இருந்தது! அதை விடப் பெரிய அதிசயங்களை நான் கவனித்து வருகிறேனே! நிலாவிலே உட்கார்ந்து மைத்துனனிடம் ரகசியம் பேசுவதும், கட்டிய மனைவி இருக்கும் போது மன்னியைத் தேடிப் போய் தண்ணீர் கேட்டு வாங்கிச் சாப்பிட்டு வருவதும் பெரிய அதிசயங்கள் தானே? படித்தவள் நான், 'ப்ளெயி'னாக இருந்தால் உங்களுக்குப் பிடிக்கவில்லை!" என்றாள்.

சமையலறையில் நின்றிருந்த சம்பகத்தின் உள்ளத்திலே இந்தச் சொல்லம்புகள் சுருக்கென்று தைத்தன. அவள் செயல் இழந்து நின்ற சமயம், அப்பொழுதுதான் பள்ளிக் கூடத்திலிருந்து வந்த பானு, கண்ணீர் வழியும் தாயின் முகத்தைப் பார்த்துப் பிரமை பிடித்தவள் போல் அருகில் வந்து நின்றாள்.

"அம்மா! அம்மா!" என்று பல முறைகள் கூப்பிட்டுத் தன் சின்னஞ்சிறு கைகளால் தாயின் கைகளைப் பிடித்து உலுக்கினாள் பானு. சம்பகம் தன் சுய நினைவை அடைந்தவள் போல் திடுக்கிட்டாள். அடுத்து சரசரவென்று காரியங்கள் நடைபெற்றன. தன் பெயருக்குக் களங்கம் கற்பிக்கும் அந்தப் புடவை அவள் கண்களுக்கு விஷசர்ப்பம் போல் காட்சி அளித்தது.

"தூ சனியன்!" என்று சொல்லிக் கொண்டே அதைத் தூர எறிந்து விட்டு, எப்பொழுதும்போல அவளுடைய பழைய புடவையை எடுத்து உடுத்திக்கொண்டாள் சம்பகம். அப்புறமும் அவளுக்கு அந்த வீட்டில் இருக்க மனம் ஒப்ப வில்லை. கையில் கிடைத்த இரண்டு புடவைகளை எடுத்து ஒரு பையில் திணித்துக் கொண்டு, தன்னுடைய ஒரே ஆதாரமான பானுவைக் கையைப் பிடித்து அழைத்தவாறு சம்பகம் வாசல் 'கேட்'டை நோக்கிச் சென்றாள்.

"எங்கே போகிறோம், யாருடைய ஆதரவை நாடிப் போகிறோம்? யார் ஆதரவுடனும், அன்புடனும் தன்னைப் பராமரிக்கப் போகிறார்கள்?" என்றெல்லாம் அவள் யோசிக்கவே இல்லை.

சம்பகம் 'கேட்'டைத் தாண்டுவதற்குள் சங்கரன் காரியாலயத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தவன் அவள் எதிரில் வந்தான். அளவுக்கு மீறிய துக்கத்தினால் பெருகும் கண்ணீருடன் 'கேட்' அருகில் நிற்கும் சம்பகத்தைப் பார்த்ததும் அவனுக்குத் தூக்கிவாரிப் போட்டது.

"சித்தப்பா!" என்று ஆசையுடன் அழைத்தவாறு பானு ஓடிப்போய் அவனைச் சேர்த்துக் கட்டிக் கொண்டாள்.

"என்னம்மா, கண்ணு! மன்னி! நீங்கள் எங்கே போகிறீர்கள்? இதெல்லாம் என்ன, மன்னி?" என்று கேட்டான் அவன்.

சம்பசும் யௌனமாகவே நின்றாள். இதற்குள் சம்பகத்தைக் காணோமே என்று தேடிக்கொண்டு வந்த சமையல்கார மாமி அங்கு வந்து சேர்ந்தாள்.

"சம்பகம்! இதெல்லாம் என்ன அம்மா? உன் கஷ்டங்களுக்கு விடிவு ஏற்பட்டு விட்டது என்று சற்று முன் நான் சொல்ல வில்லையா? அளவுக்கு மீறிய சோதனைக்கு நீ ஆளாகி விட்டாய். இனிமேல் இந்த மாதிரி அபவா தத்தைக் கேட்ட பிறகு- உனக்கு வேறு கஷ்டம் ஒன்றும் வராது. உள்ளே வா. இந்த வீட்டில் உன்னிடம் அக்கறை காட்டும் உன் மாமனாரை மறந்து அவர் உத்தரவு இல்லாமல் நீ எங்கேயும் போகக்கூடாது. வா, அம்மா!" என்று அவள் கைகளைப் பற்றி உள்ளே அழைத்துப் போனாள்.

சங்கரன் காரியாலயத்திலிருந்து வீட்டுக்கு வரும் முன் அன்று தன் மாமனார் வீட்டுக்குப் போயிருந்தான். அவனுக்கு அங்கு வரவேற்பும், உபசாரங்களும் பலமாக நடைபெற்றன. டாக்டர் மகாதேவன் அவன் காரியாலய சம்பந்தமான பல விஷயங்களைப்பற்றி அவனை விசாரித்தார் .நீலாவுடன் அவன் தங்கள் வீட்டிலேயே வந்து இருந்து விடலாம் என்றெல்லாம் கூறினார். அவருடைய இந்தப் பேச்சுக்களும், உபசாரங்களும் அவனுடைய எந்தவிதமான மனத்தில் எந்தவிதமான உணர்ச்சியையும் ஏற்படுத்த வில்லை. அவன் கிளம்புவதற்கு முன்பு அவர் கூறிய விஷயம் அவனைத் திடுக்கிட வைத்து விட்டது.

"குழந்தைக்கு வளைகாப்பு செய்ய வேண்டுமாம். அதோடு அவள் உடம்பும் கொஞ்சம் பலவீனமாக இருப்ப தாகத் தெரிகிறது. நல்ல நாள் பார்த்து அழைத்து வர வேண்டும் என்று அவள் தாயார் சொல்லிக் கொண்டிருக் கிறாள்" என்று டாக்டர் மகாதேவன் தன் மாப்பிள்ளையிடம் கூறினார்.

"இன்னும் இரண்டு நாட்களுக்கு அப்புறம் நல்ல நாள் பார்த்திருக்கிறது. வந்து அவளை அழைத்து வருகிறோம். உங்கள் தாயாரிடம் சொல்லி விடுங்கள்" என்று நீலாவின் அம்மா மாப்பிள்ளையிடம் சொன்னாள்.

"நீலாவுக்கும், தனக்கும் எவ்வளவுதான் மனக் கசப்பு இருந்தாலும், இனிமேல் அவைகளைக் குறைத்துக் கொண்டு தான் ஆகவேண்டும். தாம்பத்ய உறவு பலமாக அமையவே இம்மாதிரி ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கிறது போலும்'' என்றெல்லாம் சங்கரன் நினைத்துக் கொண்டான்.

வீட்டுக்கு வந்ததும் நீலாவைத் தனிமையில் சந்தித்துத் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொள்ள வேண்டும் என்கிற தீர்மானத்துடன் வந்தான். ஆனால், அதற்கு நேர்மாறாக விஷயங்கள் வீட்டில் நடைபெற்றன.

எப்பொழுதும் துக்கத்தைக் கண்ணீராக வடிக்கும் மன்னி சம்பகம் அன்று வீட்டை விட்டு எங்காவது போய்த் தன் துயரத்துக்கு ஒரு முடிவு தேடிக் கொள்ளலாம் என்று கிளம்பி வாசல் வரைக்கும் வந்து விட்டாள். அவன் சிறிது தாமதித்து வந்திருந்தால் அந்த வீட்டில் அன்று என்னென்ன விபரீதங்கள் எல்லாம் நேர்ந்திருக்குமோ?

சம்பகம் ஏன் வீட்டை விட்டுக் கிளம்ப வேண்டும்? அப்படி வீட்டில் என்ன தான் நடந்து விட்டது என்று சங்கரன் தீவிரமாக யோசித்துப் பார்த்தான். அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. அவன் கூடத்தில் சென்று உட்கார்ந்தவுடன் வழக்கம் போல் சமையற்கார அம்மாள் சிற்றுண்டியும், காபியும் கொண்டு வந்து வைத்து விட்டுப் போனாள்.

ஒரு வேலையும் இல்லாமலேயே வீட்டைச் சுற்றிவரும் ருக்மிணியைக் காணவில்லை. மீனாட்சி அம்மாளின் பேச்சுக் குரல் வழக்கத்துக்கு விரோதமாக மிகவும் சாந்தமாகச் சமையலறையிலிருந்து கேட்டது.

சம்பகம் சுவாமி விளக்கை ஏற்றிவிட்டு ஏதோ ஒரு புஸ்தகத்தை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். யாரிடமிருந்து வீட்டில் அன்று நடந்த தகவல்களை அறியலாம் என்பதே சங்கரனுக்குத் தெரியவில்லை• கூடத்தில் கவலையுடன் உட்கார்ந்திருக்கும் சித்தப்பாவைப் பார்த்து பானு அங்கு வந்தாள். ஆசையுடன் அவன் அருகில் வந்து நின்று, "சித்தப்பா! நானும், அம்மாவும் திரும்பவும் மாமா வீட்டுக்குத்தான் போக வேண்டுமாமே? அம்மா சொல்கிறாள்'' என்றாள்.

"ஏனம்மா அப்படி?" என்று கேட்டான் சங்கரன் அந்தப் பிஞ்சு உள்ளத்தில் நிகழும் போராட்டங்கள் எத்தனையோ என்று சங்கரனின் மனம் வருந்தியது.

"'இனிமேல் இந்த வீட்டில் எனக்கு எந்தவிதமான கௌரவமும் இருக்காது. போய் விடலாம் பானு' என்று அம்மா தான் சொல்கிறாள் சித்தப்பா!" என்றாள் குழந்தை.

கௌரவம், அவமரியாதை, மானம், அவமானம் என்கிற வார்த்தைகளுக்கெல்லாம் அந்தக் குழந்தைக்கு அர்த்தம் தெரிந்திருக்காது. இருந்தாலும், தன் தாயை அவர்கள் கொடுமைப் படுத்துகிறார்கள், அவள் துக்கம் தாங்காமல் கண்ணீர் வடிக்கிறாள் என்பது மட்டும் பானுவுக்குப் புரிந்து தான் இருந்தது.

சங்கரன் அன்று சாப்பிடாமலேயே மாடிக்குச் சென்றான். பல பிரச்னைகள், பலதரப்பட்ட குழப்பங்கள் தோன்றி அவன் தலையைக் குடைந்தன.

நீலா மாடிக்கு வந்தபோது, என்றுமில்லாத உற்சாகத்துடன் வந்தாள். ஆனால், சங்கரன் அவளை உற்சாகத்துடன் வரவேற்கும் நிலையில் இல்லை. நீலாவின் முகமும், காமுவின் முகமும் மாறி மாறி அவன் மனக்கண் முன்பு தோன்றி மறைந்தன. படபடப்பும், கர்வமும் நிறைந்த நீலா அவனை ஏசுவது போல் பார்த்தாள். நிதானமும், அன்பும் பூண்ட காமு அவனைப் பரிதாபமாக நோக்கினாள். நீலா அறைக்குள் வந்ததைக்கூடக் கவனியாமல் கன்னத்தில் கை வைத்தபடி உட்கார்ந்திருந்தான் சங்கரன்.

அறைக்குள் நுழைந்த நீலா, கணவனாகவே தன்னுடன் பேசுவான் என்று சிறிது நேரம் எதிர்பார்த்தாள். தீவிரமான யோசனையில் சங்கரன் ஆழ்ந்திருப்பதைப் பார்த்ததும் தானாகவே வலுவில் சென்று பேசக்கூடாது என்று தீர்மானித்துப் படுக்கையை விரித்து அதன்மீது சாய்ந்து கொண்டு புஸ்தகம் ஒன்றைப் படிப்பதில் முனைந்தாள்.

சங்கரனின் மனம் தனிமையை நாடியதே தவிர உள்ளத்தில் பல எண்ணங்கள் எழுந்தன. அன்பில்லா மனைவி, அவளுடைய பணக்காரப் பெற்றோர், ஆசை பிடித்த தாய், எதிலும் பற்றில்லாத தகப்பனார் நிராதரவாக விடப்பட்ட மன்னி சம்பகம், தன்னால் புறக்கணிக்கப்பட்ட காமு முதலியவர்கள் அவன் மனத்தில் தட்டாமாலை சுற்றி வந்தனர்.
தானாகவே நீலா புஸ்தகத்தை மூடி வைத்து விட்டு, மறுபடியும் திரும்பிப் பார்த்தாள். வெறி பிடித்தவனைப் போல் எங்கோ பார்த்துக் கொண்டிருந்த சங்கரனைப் பார்த்துப் பயந்து விட்டாள் அவள். முதலில் அவள்தான் பேசி ஆகவேண்டும் என்கிற தீர்மானம் ஏற்பட்டு விட்டது. இல்லாவிடில் சங்கரன் இன்று முதலில் வலுவில் பேசுபவனாக அவளுக்குத் தோன்ற வில்லை.

"நேற்று காமு வந்திருந்தாளே வீட்டிற்கு...?”. என்று பேச்சை ஆரம்பித்தாள் நீலா.

"ஊஹும், அப்படியா?" என்று தலையை ஆட்டினான் சங்கரன்.

"சம்பகம் மன்னி கூட அவளை அடிக்கடி நம் வீட்டிற்கு வரும்படி சொல்லியிருக்கிறாள். ஏதோ தையல் சொல்லிக் கொடுக்கப் போகிறாளாம்."

காமு இங்கே எதற்காக வரவேண்டும்? சங்கரனின் மனத்தைக் குழப்பவா?

"இன்றைக்கு என்ன பேசவே மாட்டேன் என்கிறீர்கள்? என்று கூறி, நீலா அவன் அருகில் போய் நின்றாள்.

"நான் பேசும் போது நீ ரொம்பவும் கலகலப்பாகப் பேசி விட்டாய்? நான் காரியாலயத்திலிருந்து களைத்து வீடு வரும் போது வீட்டில் இருந்து ரொம்பவும் என்னைக் கவனித்து விட்டாய்? நீ பேச வரும்போது ரொட்டித் துண்டு கண்ட நாயைப் போல் வாலைக் குழைத்துக் கொண்டு எஜமானி எதிரில் நான் நிற்க வேண்டும்? அப்படித்தானே உன் நியாயம்?" என்று சற்று உரக்கவே கேட்டான் சங்கரன் அவளைப் பார்த்து.

நீலாவின் சுபாவமான முன் கோபம் சடாரென்று. அடிபட்ட நாகம் போல் கிளம்பியது.

"என்னோடு நீங்கள் பேசுவீர்களா? உங்கள் மன்னியுடன் பேசுவதற்குப் பாதி ராத்திரியில் எழுந்து ஏதாவது பொய் சாக்கு சொல்லிக்கொண்டு கிளம்புவீர்கள். கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்த காமுவுடன் பேசுவதற்கு வெயிலையும் லட்சியம் பண்ணாமல் விழுந்தடித்துக்கொண்டு ஓடுவீர்கள்." இன்னும் ஏதோ சொல்லுவதற்கு அவள் வாய் எடுப்பதற்கு முன்பு சங்கரன் அவள் கன்னத்தில் 'பளீர்' என்று அறைந்தான்.

நீலாவுக்கு ஒரு கணம் தலை கிறு கிறு என்று சுழலுவது போல் இருந்தது. கீழே சாய்ந்து விழவிருந்த நீலாவைத் தாங்கிப் பிடித்துக் கொண்டே, மாடியிலிருந்து, "அம்மா, அம்மா" என்று தாயைக் கூப்பிட்டான் சங்கரன். "அவள் உடம்பு பலஹீனமாக இருக்கிறதாம். கொஞ்சம் கவனிக்க வேண்டும்" என்று மாலை அவள் தகப்பனார் தன்னிடம் கூறியதை நினைத்துப் பார்த்தான் சங்கரன். "பாவம்! கர்ப்பிணியை அடித்து விட்டோமே" என்று மனம் தவித்தான். இதற்குள் அவன் தாய் மாடிக்கு வந்து விட்டாள். "என்னடா இது?" என்று அவள் போட்ட கூச்சல் வீட்டில் எல்லோரையும் அங்கு வரும்படி செய்து விட்டது.

“நானே அவளைப் பிறந்த வீட்டுக்கு அனுப்பலாம் என்று இருந்தேன். பிள்ளைத்தாச்சி ஆயிற்றே. நல்ல நாள் பார்த்து அழைத்துப் போகட்டும் என்று பேசாமல் இருந்து விட்டேன். உன் மாமனார் வந்து கேட்டால் என்னடா சொல்லுகிறது?" என்று கையைப் பிசைந்தாள் மீனாட்சி.
"கோபத்தில் நான் தான் அடித்து விட்டேன். அதனால் தான் மயக்கம் போட்டுக் கீழே விழுந்து விட்டாள்" என்று தன் குற்றத்தை ஒப்புக் கொள்வதா? அல்லது "எனக்கும் அவளுக்கும் கல்யாணமான நாள் முதல் அபிப்பிராய பேதம் இருந்து வருகிறது. நாங்கள் ஒற்றுமையாக இல்லை என்று அம்மாவிடம் கூறிவிடுவதா?” அவனைப் பத்து மாதம் சுமந்து பெற்று வளர்த்த அன்னை தான் மீனாட்சி அம்மாள். க்ஷ்ட, சுகங்களைத் தாயிடம் கூறி ஆறுதல் அடையும் படியான வயசு கடந்து விட்டதே.. 'சங்கரன் மனைவியுடன் சந்தோஷமாக இருக்கிறான். கை நிறைய சம்பாதிக்கிறான் பணக்கார இடத்திலிருந்து நாட்டுப் பெண் வந்திருக்கிறாள்' என்றெல்லாம் பெற்றவள் பூரித்து இருக்கும் போது, 'நான் சுகமாக இல்லை. நானும், அவளும் தனிமையில் சண்டை பிடிக்கிறோம்' என்றெல்லாம் கூறிக்கொள்ள முடியுமா? 'தோளுக்கு மிஞ்சினால் தோழன்' என்று சொல்லுவார்களே?

"பேசாமல் நிற்கிறாயே. உன் மாமனாருக்கு 'போன் செய்து அவரை வரவழைத்து விடு அப்பா. ஏதாவது நேர்ந்தால் பிறகு பெரியவர்களைக் குறை கூறுவார்கள் பார்!' என்று மீனாட்சி அம்மாள் பிள்ளையைக் கோபித்துக் கொண்டாள்.

சங்கரன் மாமனாருக்கு 'போன்' செய்த பதினைந்து நிமிஷங்களில் அவரும் அவர் மனைவியும் மனைவியும் வந்து சேர்ந்தார்கள்.

"வர வர அவள் உடம்பு இளைத்துக் கொண்டே வந்தது. நானே வந்து அவளை அழைத்துப் போக வேண்டும் என்று இருந்தேன்" என்று அலுத்துக் கொண்டாள் நீலாவின் தயார்.

காரில் நீலாவைப் படுக்க வைத்து அழைத்துப் போகும் போது, "நீயும் அவர்களுடன் கூடப்போய் விட்டு, வாடா!" என்று வற்புறுத்தி (அனுப்பினாள் மீனாட்சி அம்மாள் சங்கரனை. "கல்யாணமானவுடன் மனைவியின் பின்னாலேயே இந்தக் காலத்துப் பிள்ளைகள் சுற்றுகிறார்களே? இந்தப் பிள்ளை என்னவோ பட்டதும் படாததுமாக இருக்கிறானே' என்று நினைத்து ஆச்சரியம் அடைந்தாள் மீனாட்சி அம்மாள்.
----

நீலாவுக்கு மயக்கம் வந்து, அவளை டாக்டர் மகாதேவன் தம்முடைய 'நர்ஸிங் ஹோமி'லேயே வைத்து வைத்தியம் பார்ப்பது முதலிய விஷயங்கள் கமலாவினால் காமுவுக்கு எட்டின. வருஷப்பிறப்பு அன்று நீலாவின் வீட்டிற்குப் போய்த் துணிகளை எடுத்து வந்த காமு, அதன் பிறகு விசாலாட்சிக்கு உடம்பு அதிகமாக இருந்ததால் 'டிரயினிங் பள்ளிக் கூடத்துக்குக் கூடப் போகவில்லை. நீலாவின் துணிகளையும் அவளுக்குத் தைக்க ஒழிவு ஏற்பட வில்லை. அடிக்கடி அம்மாவுக்குக் கஞ்சியும் வெந்நீரும் வைத்துக் கொடுத்து, வேளை தவறாமல் வைத்தியர் கொடுத்த மருத்தைக் கொடுப்பதற்கே பொழுது சரியாக இருந்தது.

டாக்டர் எழுதிக் கொடுத்திருந்த ‘இஞ்சக்ஷன்’ மருந்தை வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்த ராமபத்திர அய்யரின் முகம் வாடிப் போய் இருந்தது. கூடத்தில் ஒரு பக்கம் சுருட்டிப் படுத்துக் கொண்டிருந்த மனைவி உயிருக்கு மன்றாடுகிறாள். டாக்டர் இருபத்தி ஐந்து ரூபாய்க்குக் குறையாமல் மருந்து எழுதிக் கொடுத்து விட்டுப் போய் விட்டார். "வயதானவர்களுக்கும், பலஹீனமானவர் களுக்கும்' 'நிமோனியா' ஜுரம் வந்தால் கவனித்து வைத்தியம் செய்ய வேண்டும், கட்டாயம் மருந்தை வாங்கி வையுங்கள்" என்று வேறு கண்டிப்பாகச் சொல்லி விட்டுப் போயிருந்தார். மாதக் கடைசி. காலண்டரில் தேதியைப் பார்த்துக்கொண்டே காலம் கழிக்கும் பகுதி மாதம் இருபது தேதியிலிருந்து முப்பது தேதி வரைக்கும் தான் ..மத்தியதர வகுப்பினர் இந்த அவதியை நன்கு உணர்ந்திருப்பார்கள். கையில் பத்து ரூபாயை வைத்துக் கொண்டு மனைவிக்கு வைத்தியம் பார்ப்பதா? வீட்டுச் செலவைக் கவனிப்பதா? அதிலும் எட்டு ரூபாய் சில்லறைக்கு இஞ்சக்ஷன் மருந்து வாங்கியாயிற்று.

மருந்துப் புட்டியைக் கையில் வாங்கிக் கொண்ட காமு தகப்பனாரைப் பார்த்து, "இன்னொரு மருந்து தான் முக்கியமானது அப்பா! அதை வாங்கி வரவில்லையே நீங்கள்?” என்று கேட்டாள்.

"எங்கேயிருந்து வாங்குகிறது, அம்மா? பத்து ரூபாயில் மீதி ஒன்றரை ரூபாய் இருக்கிறது. இன்னும் ஏழெட்டு தினங்கள் இருக்கின்றனவே முதல் தேதிக்கு? கடையில் சாமான் வாங்குகிறவர்கள் முதல் தேதிக்குத் தானே பணம் கொடுப்பார்கள்? அதுவும் மாசக் கடைசியில் யார் அதிகமாகச் சாமான்கள் வாங்குகிறார்கள்?” என்று கேட்டார் அவர்.

எப்படியும் மருந்து வாங்கி வைத்தாக வேண்டும். இல்லாவிட்டால் டாக்டர் கோபித்துக் கொள்வார். ஏற்கெனவே வியாதி முயற்றிய பிறகு அவரை அழைத்ததற்காகக் காமுவைக் கோபித்துக் கொண்டார் அவர். "படித்த பெண்ணாக இருந்தும் நீ கூட இப்படி அசட்டை யாக இருந்து விட்டாயே கா கா மு?" என்று காலையில் வந்த போது கடிந்து கொண்டார், டாக்டர். தகப்பனாரும், பெண்ணும் தீவிரமாக யோசித்தார்கள். திடீரென்று ஏதோ நினைத்துக்கொண்டவர் போல் ராமபத்திர அய்யர்,

"ஏனம்மா? சங்கரனைப் போய்ப் பார்த்து வருகிறேனே. அவன் மாமனார் கூடப் பெரிய டாக்டராமே? அவன் சிபார்சு செய்தால் தற்சமயம் பணமில்லாமல் வைத்தியம் பார்க்க மாட்டாரோ?" என்று கேட்டார் காமுவைப் பார்த்து.

காமு அவசரத்துடன், "உங்களுக்குத் தெரியாதா அப்பா? அவர் மனைவி நீலாவுக்கு உடம்பு சரியில்லையாம். நினைவில்லாமல் தகப்பனாரின் 'நர்ஸிங்ஹோமி'ல் கிடக் கிறாளாம் அந்தப் பெண். நேற்று கமலா சொன்னாள். இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் வேறு தொந்தரவு செய்தால் நன்றாக இருக்குமா?" என்றாள். பிறகு தன் தோழி கமலாவைப் போய் ஏதாவது பணஉதவி கேட்கலாமா என்று நினைத்துக் கொண்டாள். அவ்விதமே செய்யலாம் என்கிற தீர்மானத்துடன் அம்மாவுக்கு ஆகாரம் கொடுத்து விட்டுக் கிளம்பினாள் காமு.
-------------------

12. விசாலாட்சியின் மறைவு

காமு வாயிற்படி தாண்டுதற்கு முன்பு விசாலாட்சி இரண்டு தடவை பலமாக இருமினாள். அப்புறம் சிறிது சுதாரித்துக் கொண்டு, "காமு!" என்று கூப்பிட்டாள். காமு வந்து அவள் அருகில் உட்கார்ந்ததும் அவள் தலையை அன்புடன் வருடிக்கொண்டே, "சாயங்கால வேளையில் என்னைத் தனியாக விட்டுவிட்டு எங்கே போகிறாய் காமு என்று கேட்டாள் விசாலாட்சி.

அவள் கண்கள் முன்னைக் காட்டிலும் பிரகாசமாக இருந்தன. எப்பொழுதும் பெருமூச்சு விட்டுக் கொண் டிருத்தவள் நிதானமாகமூச்சுவிட ஆசம்பித்தாள்.காலையில் டாக்டர் கொடுத்து விட்டுப் போன 'பெனிஸிலின்' ஊசியின் விளைவால் அம்மாவுக்குக் குணம் ஏற்பட்டிருக்கிறது என்று காமு சந்தோஷப்பட்டாள். கட்டாயம் கமலாவிடம் சென்று பணம் பெற்று வந்து இன்னொரு மருந்தையும் வாங்கி வந்துவிட வேண்டும் என்கிற உறுதியுடன் காமு, தகப்பனாரை அழைத்து அம்மாவின் பக்கத்தில் உட்கார வைத்து விட்டுக் கிளம்பினாள். ஆனால் மறுபடியும் விசாலாட்சி காமுவைக் கூப்பிட்டுத் தன்னை விட்டு விட்டுப் போக வேண்டாம் என்று பிடிவாதம் பிடித்தாள்.

"போய் விட்டு வரட்டும் விசாலம். டாக்டர் உனக்காக இரண்டு மருந்துகள் வாங்கி வைக்கச் சொல்லியிருக்கிறார்! அவள் போய் வாங்கி வரட்டும்! வெறுமனே நாள் பூராவும் உன் பக்கத்திலேயே இருந்தால் அவளுக்கும் அலுப்பு ஏற்படாதா? என்று ராமபத்திர அய்யர் கூறிய பிறகு விசாலாட்சி தன் கண்களில் நீர் பெருக முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு படுத்து விட்டாள்.

"விசாலம், ஏன் அழுகிறாள்? குழந்தை காமு கஷ்டப் படுகிறாளே என்று அழுகிறாளா, வியாதி இப்படிப் பலமாக வந்துவிட்டதே என்று அழுகிறாளா?" என்று ராமபத்திர அய்யர் இவ்விதம் எண்ணமிட்டுக் கொண்டே விசாலத்தின் படுக்கையில் அவளுக்கு வெகு அருகாமையில் போய் உட்கார்ந்தார். அன்புடன் அவள் முகத்தைத் திருப்பி அவள் தலையை வருடினார் அவர். விசாலாட்சி அவர் மடியில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டு வெகுநேரம் அழுதாள். ராமபத்திர அய்யரின் கண்களிலும் நீர் பெருகி வழிந்தது. பிறகு சிறிது மனத்தைத் தேற்றிக் கொண்டு, "என்ன இது விசாலம்,உடம்பை இப்படி அலட்டிக் கொள்கிறாயே! ஏன் இப்படி அழுகிறாய்?" என்று வாத்சல்யத்துடன் கேட்டார் அவர்.

விசாலாட்சி அவரையே உற்றுப் பார்த்தாள். "இன்றைக்கு என்னவோ எனக்குப் பயமாக இருக்கிறது. காமுவை ஏன் என்னை விட்டுப் பிரித்து வெளியே அனுப்பி விட்டீர்கள்? இன்றைக்கு . ஒரு நாள்தானே நானும், அவளும் சேர்ந்து இருக்கப் போகிறோம்?" என்று சம்பந்த மில்லாமல் பேசினாள்.

ராமபத்திர அய்யர் அவள் நெற்றியில் கை வைத்துப் பார்த்தார். ஜுரம் ரொம்பவும் குறைந்து இருந்தது. நெற்றி யில் முத்து முத்தாக வியர்வை அரும்பி இருந்தது. பக்கத்தில் கிடந்த துண்டினால் அவள் முகத்தைத் துடைத்து விட்டார் அவர்.

"உனக்கு மருந்து வாங்கத்தான் அவள் வெளியே போய் ருக்கிறாள் விசாலம். இன்னும் அரை மணியில் வந்து விடுவாள். கண்டமாதிரி பேசாதே!" என்று கூறி விட்டுப் பாலைச் சுட வைத்து எடுத்து வரச் சமையலறைக்குள் சென்றார் ராமபத்திர அய்யர். அவர் பாலை எடுத்துக் கொண்டு வெளியே வந்த போது விசாலாட்சி கண்களைப் பரக்க விழித்துப் பெருமூச்சு விட்டாள். அடிக்கடி 'காமு காமு' என்று பிதற்றவும் ஆரம்பித்தாள்.

காமுவை ஏன் அனுப்பினோம் என்று ஆகிவிட்டது ராமபத்திர அய்யருக்கு. பரபரப்புடன் வாசலுக்கும் உள்ளுக்குமாக அலைந்து விசாலத்தைத் தொட்டுத் தொட்டுப் பார்த்துக் கொண்டிருந்தார் அவர்.

காமு சமலாவின் வீட்டிற்குச் சென்று அவளிடம் ணத்தைப் பெற்றுக் கொண்டு கடைத்தெருவுக்குப் போய் மருந்து வாங்கிக் கொண்டு கையுடன் டாக்டரையும் அழைத்து வந்தபோது, விசாலாட்சியின் நிலைமை கவலைக் கிடமாகி விட்டது. உள்ளே வந்ததும், "வந்துவிட்டாயா அம்மா? உன் அம்மாவைப் பாரேன், என்னமோ போல் இருக்கிறாளே!" என்று கூறி முகத்தை மூடிக் கொண்டு தேம்பித் தேம்பி அழுதார் ராமபத்திர அய்யர்.

டாக்டர், விசாலாட்சியின் கை நாடியைப் பரிசோதித்துக் கொண்டிருக்கும் போது, காமு அவளை ஆதரவுடன் அணைத்துக் கொண்டு, "அம்மா! நான் வந்து விட்டேனே, என்னைப் பார் அம்மா!” என்று முடிக்கும் முன்பு விசாலாட்சி போய் விட்டாள். 'காமுவுக்குக் கல்யாணமாக வில்லையே ; காமு அழகான புடவைகளையும் நகைகளையும் அணிந்து கொள்ள வில்லையே' என்கிற தீராக் குறையுடன் விசாலாட்சி போய் விட்டாள். காமுவின் கண்கள் கண்ணீரைப் பெருக்கவில்லை. கல்லாகச் சமைந்து, தாயின் உடலுக்கு அருகில் வருவார் போவோரையும் லட்சியம் பண்ணாமல் உட்கார்ந்திருந்தாள் காமு.

'காமுவுக்குக் கல்யாணம் பண்ணியிருந்தேனானால் விசாலம் இவ்வளவு சீக்கிரம் போய் இருக்க மாட்டாள்' என்று வருபவர்களிடம் கூறி அங்கலாய்த்துக் கொண்டார் ராமபத்திர அய்யர்.


உலகத்திலே மனிதனால் தடுக்க முடியாத நிகழ்ச்சிகள் அநேகம் நடைபெறுகின்றன காமுவுக்கு மூன்று வருஷங் களுக்கு முன்பே ராமபத்திர அய்யர் வரன்கள் பார்த்து வந்தார். மாதம் ஐம்பது ரூபாய் சம்பாதிக்கும் பிள்ளையாக இருந்தாலும் போதும் என்று தேடினார். சம்பாதிப்பது ஐம்பது ரூபாயாக இருந்தாலும் அவனைச் சார்ந்தவர்கள் ஆயிரம் ரூபாய்க்குமேல் வர தட்சிணை கேட்டார்கள் பிறகு முத்தையா காமுவை மூன்றாந்தாரமாக மணக்க முன் வந்தார். அதிலும் மனைவிக்கும் அவருக்கும் அபிப்பிராய பேதம் எழுந்தது. எதிர்பாராத விதமாக சங்கரன் இவர்கள் குடும்பத்தில் தலையிட்டான். ஏழைப் பெண்களைப் பணக்காரப் பிள்ளைகள் தான் கல்யாணம் செய்து கொண்டு, சமூகத்துக்கு வழி காட்ட வேண்டும் என்று பேசி, அதைச் சடுதியில் மறந்தும் போனான்.

காமுவால் அவனை மறக்க முடியவில்லை. கிராமத்தில் ஏச்சையும் பேச்சையும் பொறுக்க முடியாமல் உரிமையுடன் வாழ்ந்து வந்த வீட்டையும், மாடு கன்றையும் விற்று விட்டுப்
பட்டினத்துக்கு வந்து சேர்ந்தார் ராமபத்திர அய்யர். காமு கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டும் என்கிற நினைவையே ஒழித்து விட்டு, வேலைக்குப் போய்ச் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்துத் தாயின் மனக் கஷ்டத்தைக் கூடப் பாராட்டாமல் இருந்து விட்டாள். விசாலாட்சி இதை நினைத்தே ஏங்கினாள், உருகினாள். அவள் மனக்கஷ்டத்துக்கும் ஒரு முடிவு ஏற்பட்டு விட்டது. கவலையும், கண்ட மும் தெரியாத உலகத்தை நாடிச் சென்று விட்டாள் அவள். இவ்வளவு காலம் கவலை தேங்கியிருந்த அவள் முகம் அன்று நிஷ்களங்கமாக இருந்தது.

எந்தக் குடும்பத்தை விசாலாட்சி மனதார வெறுத்து வந்தாளோ, எவனால் அவள் பெண்ணின் வாழ்வு தடைப் பட்டுக் கிடக்கிறது என்று நினைத்தாளோ அந்தக் குடும்பத் தினர், அவள் இறந்து போனதற்காக காமுவின் வீட்டிற்கு வந்தனர். சங்கரன் பத்து ரூபாய் நோட்டுகளாக இருபது நோட்டுகளை எடுத்து வந்து, ராமபத்திர அய்யர் தனியாக இருக்கும் சமயம் பார்த்து, "மாமா! செலவுக்கு வைத்துக் கொள்ளுங்கள். முன்பின் தெரியாத இடத்தில் என்ன செய்வீர்கள்?” என்று வருத்தத்துடன் கூறி, கொடுத்துப் போனான்.

''அம்மா, குழந்தை! வெறுமனே அம்மாவை நினைத்து வருத்தப்படாதே! அப்பாவை நீதான் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று சர்மா காமுவைத் தேற்றினார்.

''அவள் போனதற்காக நான் நான் வருத்தப்பட வில்லை அப்பா, காமுவுக்குக் கல்யாணம் ஆகவில்லை என்கிற குறையோடு போய் விட்டாளே என்று தான் கஷ்டமாக இருக்கிறது” என்று கூறி ராமபத்திர அய்யர் மளமள வென்று கண்ணீர் பெருக்கினார்.

எல்லோரும் அவரவர் வீட்டிற்குப் போய் விட்டார்கள். வீடு வெறிச்சென்று கிடந்தது. கூடத்து மூலை பாழாகி விட்டது. நொடிக்கொரு தரம் 'காமு', 'காமு' என்று அழைத்த குரல் மறைந்து விட்டது. 'உன் சிவப்பு உடம்புக்கு இந்த ரவிக்கை நன்றாக இருக்காது. நீ பட்டுப்பட்டாக உடுத்தும் போது நான் பார்க்கப் போகிறேனா?" என்று விசாலாட்சி நேற்றுத்தான் கூறியது போல் இருந்தது. அந்த வார்த்தை எவ்வளவு சீக்கிரம் பலித்து விட்டது?

பகலில் அலைந்த அலைச்சலினால் ராமபத்திரய்யர் ஒரு பக்கம் முடங்கிப் படுத்துத் தூங்கி விட்டார். தகப்பனாருக்கு அருகில் காமு தன்னுடைய படுக்கையை விரித்துப் படுத்துக் கொண்டாள். வெகு நேரம் அவளுக்குத் தூக்கம் வரவில்லை. நேற்று இந்த நேரத்தில் பளிச் பளிச்சென்று பேசிக் கொண் டிருந்தவள் இன்று பிடிசாம்பலாகப் போய் விட்டாள். 'காமு காமு' என்று ஆசையுடன் அழைத்தவளின் மூச்சு இன்று காற்றோடு கலந்து விட்டது. 'சீ!என்ன வாழ்வு இது?' என்று காமு மனத்துக்குள் எண்ணி வேதனை அடைந்தாள்.

கூடத்து மூலையில் அவள் தாயின் உயிர் பிரிந்த இடத் தில் குத்து விளக்கு ஒன்று ஏற்றி வைக்கப்பட்டிருந்தது. ஆடாமல், அசங்காமல் சுடர் விட்டு அது அந்த இடம் பூராவும் ஒளியைப் பரப்பிக் கொண்டிருந்தது.

விளக்கின் சுடரையே உற்றுப் பார்த்தாள் காமு. அவளுக்குப் புத்தி தெரிந்த நாட்களாக வெள்ளிக்கிழமை தோறும் விசாலாட்சி அதைப் பள்பளவென்று துலக்கி, குங்குமப் பொட்டிட்டு கொல்லையில் புஷ்பிக்கும் பாரிஜாத மலர்களை மாலை கோத்து அதற்குப்போட்டு நெய் ஊற்றித் திரியிட்டு விளக்கேற்றி பூஜிப்பாள். அழகிய பெண் ஒருத்தி மாலை அணிந்து உட்கார்ந்திருப்பது போ சுற பிரமையை அந்த விளக்கு ஏற்படுத்தி வந்தது 'அந்தி விளக்கே, அலங்காரப் பெண்மணியே' என்று மெல்லிய குரலில் ஸ்தோத்திரம் பாடி, தேங்காய் உடைத்து, சுற்பூரம் கொளுத்தி நமஸ்கரிப்பாள் விசாலாட்சி. நவராத்திரியின் போது ஒன்பது நாட்களும் இரவும், பகலும் அணையாமல் கொலுப் படிகளின் அருகில் எரிந்து கொண்டிருக்கும் அந்த விளக்கு. தீபாவளிப் பண்டிகையின் பேது காமுவுக்கு எண்ணெய் தேய்ப்பதற்கு முன்பு மணை போட்டு, கோலம் இட்டு, குத்து விளக்கேற்றி வைத்து விட்டு, மகளை எழுப்புவாள் தாய். கார்த்திகை தீபத்தின்போது நடுக்கூடத் தில் மற்ற தீபங்களுக்கெல்லாம் அரசியாக நடுவில் கொலு விருக்கும் குத்துவிளக்குதான் அது. இன்று தாயின் மரணப் படுக்கை அருகிலும் அவளுக்கு ஒளியைத் தந்து நின்றது.

''ஒளியே! உன்னைப் பூஜித்து வந்த என் தாய் உன் ஒளியுடன் கலந்து விட்டாளா? அந்த ரகசியத்தை என்னிடம் சொல்ல மாட்டாயா நீ?” என்று காமுவின் மனம் விளக்கைப் பார்த்துக் கேட்டது. விளக்கு, சுடரை உதறிவிட்டு மறுபடியும் ஆடாமல் நின்றது. அது அவ்விதம் நின்றது மணப்பெண் ஒருத்தி முதன்முதல் கணவனுடன் பேசும் போது புரியும் புன்னகையைப் போல் இருந்தது.-வெண்கல விளக்கின் கீழ் அழகான பெண்மணி ஒருத்தி வந்து 'உட்கார்ந்து கொண்டாள். "என்ன கேட்கிறாய் காமு?" என்று வினாவினாள் 'உன் ஒளியோடு என் அன்னையின் உயிரும் கலந்து விட்டதா என்றுதான் கேட்கிறேன். ஏனென்றால், வாரம் தவறாமல் வெள்ளிக்கிழமைகளிலும், தினம் மாலையிலும் உன்னைப் பார்த்து பயபக்தியோடு வணங்கி உன் அழகில் லபித்து இருந்த என் தாய் உன்னை விட்டு எப்படிப் போய்விட முடியும்?" காமுவின் மனம் பளிச் சென்று இப்படிக் கேட்டது.

"என்னை விட்டுப் போய் விட்டாள் என்று யார் கூறியது? கடைசி மூச்சின்போது கூட அருகில் நிற்கும் உன்னைக் கவனியாமல் என்னையே வெறித்துப்பார்த்தாளே உன் தாய். அவள் என்னிடம்தான் இருக்கிறாள்."

"உலகத்தைப் படைத்துக் காத்து அழிப்பது இந்த ஒளிதானா? அவனுக்கு 'ஒளி மயமானவன்' என்றுதானே வேதங்களும், உபநிஷத்துக்களும் பெயர் கொடுத்திருக் கின்றன? அந்த ஒளி நீதானே? உலகைப் பிரகாசமூட்டும் சூரியனிலிருந்து இருளை விரட்டும் விளக்கிலும் வியாபித்து இருப்பது நீதானே? உண்மையைச் சொல்லி விடு" என்று கேட்டாள் காமு.

"ஏதேது பெரிய கேள்வி யெல்லாம் கேட்கிறாய் இப்போது? தாய் இறந்து போனதும் 'ஸ்மசான வைராக்கியம்' என்று கூறுவார்களே அது ஏற்பட்டுவிட்டதா உனக்கு? நாளைக்குக் கல்யாணமானால் அம்மாவை எங்கே நீ நினைக்கப் போகிறாய்?"- ஒளிப் பெண் இவ்விதம் சொல்லி விட்டு மெல்லச் சிரித்தாள்.

''கல்யாணமா? அம்மா இருந்தபோது செய்து கொண் டிருந்தால் அவள் மனசுக்காவது ஆறுதலாக இருந்திருக்கும். இப்படி ஏங்கிச் செத்திருக்க மாட்டாள். இனிமேல் யாருக்காக நான் கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டும்?" காமுவின் மனம் பதட்டத்தோடு கேட்டது இப்படி.

உனக்காகவே நீ கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டியதுதான். இப்படி இருந்த எத்தனை பேர்களை நான் பார்த்திருக்கிறேன்.”.

"தர்க்கம் பண்ணுவதற்கு வந்திருக்கிறாயா என்ன?"

'உண்மையைத் தான் சொல்லுகிறேன். பாரேன் நீ வேண்டுமானால்" என்று கூறிவிட்டுத் தண்டை ஒலிக்க எழுந்தாள் ஒளிப் பெண்.

"போகாதே அம்மா. நீ வந்து பேசிக் கொண்டிருந்தது எனக்கு எவ்வளவோ ஆறுதலாக இருந்தது. போகாதே!" ராமபத்திர அய்யர் தூக்கம் கலைந்து விழித்துக் கொண்டார். காமு தூக்கத்தில் பிதற்றுவதைப் பார்த்து அன்புடன், "காமு, பயந்து விட்டாயா அம்மா? விழித்துக் கொள். பொழுது விடிந்து விட்டதே! உனக்கு இந்த வீட்டில் இருப்பதற்குப்பயமாக இருந்தால் சர்மாவின் வீட்டில் போய் இருக்கிறாயா அம்மா?” என்று கேட்டார் அவர்.

இங்கே காமு தாயை நினைத்து வருந்திக் கொண் டிருக்கும்போது நீலாவின் வீட்டில் வளைகாப்புக் கல்யாணம் அமர்க்களப்பட்டது. நீலாவுக்கு உடம்பு கொஞ்சம் தேறி பிறந்த வீட்டில் இருந்தாள். நல்ல நாள் பார்த்து வளைகாப்புக்கு முகூர்த்தம் வைத்திருந்தார்கள் அவள் பெற்றோர். எதற்கெடுத்தாலும் பிரத்தியேகமான மரியாதையை விரும்பும் மீனாட்சி அம்மாள் வளைகாப்புக்குச் சம்பந்திகளே நேரில் வந்து அழைக்க வேண்டும் என்று விரும்பினாள். இரண்டு பக்கத்திலும் சம்பந்திகளின் உறவு முன்னைப்போல் இல்லை

நீலாவுக்கு உடம்புக்கு வந்ததே மாமியார் வீட்டில் கவனிக்காததனால்தான் என்று அவள் தாயார் நிஷ்டூரப் படுதினாள். சங்கரன் மனைவியிடம் போதிய அக்கறை காட்டவில்லை என்று டாக்டர் மகாதேவன் மாப்பிள்ளை மீது குறைப்பட்டார். 'திடீரென்று மயக்கம் போடுவானேன்? எதிர்பாராத அதிர்ச்சிதான் அதற்குக் காரணம்' என்று வாதித்தார் அவர். பெண்ணை அதைப்பற்றித் தனிமையில் எத்தனையோ தடவைகள் கேட்டும் பார்த்தார், 'அன்று காலையிலிருந்தே உடம்பு சரியாக இல்லை அப்பா' என்று அவள் ஏதோ கூறி மழுப்பி விட்டாள்.

சங்கரன் கன்னத்தில் அறைந்த அறை அவள் கன்னத்தை மட்டும் வலிக்கவில்லை. இருதயத்தையும் வலித்தது. கணவன், மனைவியின் பிணைப்பு இன்னும் பலமாக அமைய வேண்டிய சமயத்தில் - நீலா ஒரு குழந்தைக்குத் தாயாக வேண்டிய சமயத்தில் - அந்தப் பிணைப்பு அறுந்து விட்டது. அவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்டிருந்த சா தாரணப் பிளவு இப்போது அதலபாதாளமாகி விட்டது. நாட்டுப் பெண்ணை ஒரு தினம் மீனாட்சி அம்மாள் பார்க்கப் போயிருந்தபோது டாக்டர் மகாதேவன் மிகவும் கோபித்துக் கொண்டார்.

"உங்கள் வீட்டில் இருந்தபோது அவளை நீங்கள் சரியாகக் கவனிக்கவில்லை. இங்கே ஓய்வு எடுத்துக் கொள்ள அனுப்பி விட்டுத் தினம், நீங்களும் உங்கள் பிள்ளையும் வந்து தொந்தரவு செய்கிறீர்களே?" என்றார் அவர்.

மாமியாரை வேண்டுமானால் வரவேண்டாம் என்று சொல்லி விடலாம் கணவன் வருவதைக்கூட அவர் ஆட்சேபிக்கிறாரே. கொதித்துப் பொங்கிக் கொண்டே வீடு வந்து சேர்ந்தாள் மீனாட்சி அம்மாள். சங்கரன் வந்ததும் ஆத்திரம் தீர இரைந்தாள்.

"என்னை வேணுமானால் வர வேண்டாம் என்று சொல்லட்டும். உன்னையே வரக் கூடாது என்கிறாரே, உன் மாமனார்! உன் மனைவிக்கு 'ரெஸ்ட்' வேண்டுமாம். நீயும் நானும் போய் தொந்தரவு கொடுக்கிறோமாம். நீதான் பார்த்துக் கொண்டிருந்தாயே உன் கண்களால் அவள் இந்த வீட்டில் ஒரு வேலை செய்திருக்கிறாளா? குடும்பத்துக்கு என்ன வேண்டும் வேண்டாம் என்று கவனித்திருக்கிறாளா? பிள்ளைத்தாச்சி நாள் தவறாமல், வேளை சமயமில்லாமல் ஊர் சுற்றிக் கொண்டிருந்தால் உடம்புக்கு ஆகுமாடா? நீயே சொல்லேன்.”

"அண்டை அசலில் நம் வீட்டைப் பார்த்துச் சிரிக்கப் போகிறார்கள் அம்மா. இப்படிக் கத்துகிறாயே, நானும் அவர்கள் வீட்டுக்குப் போகவில்லை, நீயும் போக வேண்டாம்!'' என்று கூறினான் சங்கரன்.

நீலா 'நர்ஸிங் ஹோமி'லிருந்து வீடு வருவதற்கு முன்பே சங்கரன் அங்கு போவதை நிறுத்திக் கொண்டு விட்டான். "இருக்கிறது ஒரு குழந்தை. அவள் ஏன் அங்கு போக வேண்டும்? மாப்பிள்ளை தான் நம் வீட்டோடு வந்து இருக்கட்டுமே?" என்று நீலாவின் தாயார் 'ஷரத்'துப் பேசினாள். இதைப் போய் யாரோ ஒன்றுக்குப் பத்தாக மீனாட்சி அம்மாளிடம் முடிந்து விட்டார்கள். "மாப்பிள்ளை அவர்கள் வீட்டோடு வந்து இருக்க வேண்டுமாம். ஒரு பிள்ளையைத்தான் உயிரோடு பறிகொடுத்து வருஷக் கணக்கில் ஆகிறது. இவனையும் அவர்கள் வீட்டுடன் அனுப்பிவிட வேண்டுமாம். நன்றாக இருக்கிறதோ இல்லையோ நியாயம்?” என்று பொருமினாள் மீனாட்சி.

சில நாட்களில் நீலா உடம்பு தேறி ஊரெல்லாம் காரில் சுற்றி வந்தாள். 'உங்கள் நாட்டுப் பெண் கச்சேரிக்கு வந்திருந்தாள் பார்த்தேன்' என்றும், 'சினிமாவில் பார்த்தேன்' என்றும், தெரிந்தவர்கள் மீனாட்சி அம்மாளிடம் வந்து சொன்னார்கள். “ஊரைச் சுற்றத்தெரிகிறதே, இங்கே வருவதற்குத் தெரியவில்லையா அவளுக்கு? பணத்திமிர் அப்படியெல்லாம் ஆடச் சொல்லுகிறது" என்று பிள்ளை யிடம் புகார் செய்தாள் தாயார்.

சங்கரன் எதையுமே காதில் போட்டுக் கொள்கிற தில்லை. நீலா இருந்த வீடும், இல்லாத வீடும் ஒன்றாகத் தான் இருந்தது அவனுக்கு. மனைவி வீட்டில் இருக்கிறாளே, கொஞ்சம் முன்னாடிப் போகலாம் வீட்டுக்கு என்று நினைத்து முன்பு சீக்கிரம் வருவான். இப்பொழுது அவன் நினைத்த போது வீட்டுக்கு வருவது, சாப்பிடுவது என்று ஆகிவிட்டது. கல்யாணம் நடந்து நீலாவுடன் வாழ்க்கை நடத்தியதே சொற்ப காலம். அதுவும் சண்டையும் பூசலுமாகக் கழிந்து விட்டது. கல்யாணம் நடந்ததே ஒரு கனவு போல் தோன்றியது அவனுக்கு.

இந்தச் சமயத்தில் தான் நீலாவுக்கு வளைகாப்புக்கு முகூர்த்தம் வைத்துக் கொண்டார்கள். ஊரெல்லாம் அழைத்து வெகு அமர்க்களமாகச் செய்தார்கள் அவர்கள். எல்லோருக்கும் அனுப்பிய அழைப்பிதழைச் சம்பந்தி களுக்கும் அனுப்பிவிட்டுப் பேசாமல் இருந்து விட்டார்கள் நீலாவின் பெற்றோர்.

வளைகாப்பு முகூர்த்தத்தன்று காலை வரையில் ருக்மிணியும், மீனாட்சி அம்மாளும் யாராவது அழைக்க வருவார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். யாரும் வரவில்லை. பதினோரு மணிக்குமேல் நீலா மட்டும் வளை அடுக்கிக் கொண்டு காரில் புக்ககம் வந்தாள். வாசலில் உட்கார்ந்திருந்த மாமனாருக்கு நமஸ்காரம் செய்தாள். உள்ளே வந்ததும் நாத்தனாரும், மாமியாரும் உட்கார்ந் திருந்தார்கள் மாட்டுப் பெண் வந்ததும் விசுக்கென்று மீனாட்சி அம்மாள் எழுந்து நின்றாள். ருக்மிணி முகத்தைத் தோள் பட்டையில் இடித்துக் காட்டி விட்டுப் போய் விட்டாள். ‘எனக்கு ஒன்றும் நமஸ்காரம் பண்ண வேண்டாம்' என்று கூறி முகத்தைத் திருப்பிக் கொண்டாள் மீனாட்சி அம்மாள். நீலா நாத்தனாரை என்றுமே மதிப்பவள் இல்லை. ஆகவே அவளைத் தேடாமல் மாடி அறைக்குச் சென்றாள்.

அன்று சங்கரன், மாமனார் வீட்டிலிருந்து தன்னை அழைக்க யாராவது வருவார்கள் என்று எதிர்பார்த்துக் காரியாலயத்துக்கு விடுமுறை எழுதியிருந்தான். நீலாவிடம் ஏற்பட்ட அன்பினால் அல்ல அது. அவள் வயிற்றில் வளரும் குழந்தை அவனுடையது. அது பிறப்பதற்கு முன்பே தகப்பனால் திரஸ்கரிக்கப்படக் கூடாது என்கிற வாஞ்சை தான் காரணம்.

தயங்கிக் கொண்டே அறையில் நுழைந்த நீலாவை ஏறிட்டுப் பார்த்தான் சங்கரன். புதுப்புடவை உடுத்தி இரண்டு கைகளிலும் கண்ணாடி வளையல்கள் விதவிதமாக அடுக்கிக் கொண்டு வந்திருந்தாள் நீலா. இரண்டு மாதங் களுக்கு அப்புறம் இருவரும் சந்திப்பதால் யார் முதலில் பேசுவது என்று விளங்கவில்லை அவர்களுக்கு நீலாவே தன் பிடிவாதத்தை விட்டு விட்டு, முதலில் பேச. ஆரம்பித்தாள்.

"என்னுடைய முத்து மாலையை இங்கேயே வைத்து விட்டேன், எடுத்துப் போகலாமென்று வந்தேன்" என்றாள் நீலா.

"ஆஹா! தாராளமாய் எடுத்துப் போயேன். இத்தனை நாட்கள் இந்தப் பக்கம் வரத் தோன்றவில்லை உனக்கு. இன்றைக்காவது வந்தாயே!" என்றான் சங்கரன்.

"நீங்கள்தான் எங்கள் வீட்டிற்கு வருகிறதுதானே?" என்று நிஷ்டூரமாகக் கேட்டாள் நீலா.

சங்கரனுக்கு மனத்துக்குள் குமுறிக் கொண்டிருந்த கோபம் குபீரென்று கிளம்பியது. நாற்காலியை வேகமாகப் பின்னால் தள்ளி விட்டு எழுந்தான்.

"உன் வீட்டுக்கு நான் வருகிறதா? என்னை வர வேண்டாமென்று உன் அப்பாதான் தடை உத்தரவு போட்டு விட்டாரே? தேவியின் உடம்பு கெட்டுப் போகும் என்று சொன்னாராமே! என் பேரில் அன்பிருந்தால் நீ அப்பாவிடம் மறுத்துப் பேசி இருக்க மாட்டாயா?"

நீலா விழிகளில் நீர்த்திரையிட அவனை ஏறிட்டுப் பார்த்தாள். "உங்களுக்கு என்னைப் பார்க்க வேண்டும் என்று இருந்தால் கட்டாயம் வந்திருப்பீர்கள்.”

சங்கரனின் கோபம் உச்ச நிலையை அடைந்தது. "இதோ பார் நீலா! நான் கைப்பிடித்து மணந்த மனைவி நீ என்பதை நான் மறந்து விடவில்லை. கடமை உணர்ச்சி என்னை விட்டுப் போய்விடவில்லை. ஆனால், அகம்பாவம் நான் 'சலாம்' போட பிடித்த உன் பெற்றோருக்கு வேண்டுமா? என்னுடன் வாழவேண்டும் என்கிற ஆசை இருந்தால் இனிமேல் நீ அங்கே போகக் கூடாது என்ன? நான் சொல்லுவது புரிகிறதா?” என்று உரக்கக் கேட்டான் சங்கரன்.

அன்று அவள் வீட்டில் ஊரில் தெரிந்தவர்கள் அவ்வளவு பேரும் கூடி இருந்தார்கள். வளைகாப்பு செய்து கொண்ட பெண் "மாமியார் வீடு சென்றவள் திரும்பி பிறந்த வீட்டுக்கு வரவில்லை" என்று நாலு பேர் பேசிச் சிரிப்பார்கள் ஏற்கெனவே ஊரில் இதைப் பற்றிக் கசமசவென்று பேச்சு நடந்து கொண்டிருந்தது.

"என்னைத் தடுப்பதற்கு உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? ஒரு நாட்டுப் பெண்ணை வேலைக்காரி மாதிரி நடத்தும் வீட்டில் இன்னொருத்தி அதைவிடக் கேவலமாகத் மட்டும் அக்காவுக்கு தான் நடத்தப்படுவாள். உங்கள் அக்காவுக்கு மட்டும் என்றும் இந்த வீடு ஏகபோக உரிமை. உரிமையுடன் வாழ வந்தவர்கள் மட்டும் அடிமை போல இருக்க வேண்டும்!” நீலா படபடப்புடன் பேசி முடித்ததும் சங்கரனுக்குக் கோபம் அதிகமாயிற்று.

"என்னடி சட்டம் பேசுகிறாயே? உன் அப்பா டாக்டர் என்றுதான் நினைத்திருந்தேன். உனக்குச் சட்டமெல்லாம் சொல்லிக் கொடுத்திருக்கிறாரா அவர்?" என்று கூறி அவள் கைகளைப் பலமாகப் பிடித்துக் கையை ஓங்கினான் சங்கரன், சுபமாக. அழகின் அறிகுறியாகக் கை நிறைய அடுக்கி இருந்த பல ரக வளைகள் 'சிக்'கென்று உடைந்து கீழே சிதறின.

வயிறும் குழந்தையுமாக வந்த பெண்ணை வெறும் வயிற்றுடன் அனுப்பக் கூடாதென்று சமையற்கார மாமி கூறவே, சம்பகம் நீலாவின் அலட்சியத்தைப் பொருட் படுத்தாமல் அவளை அழைத்து வர மாடிக்குப் போனாள். அங்கே உடைந்து சிதறிய வளைகளின் நடுவில் மாலை மாலையாகக் கண்ணீர் உகுத்துக் கொண்டு நிற்கும் நீலாவைப் பார்த்ததும் அவளுக்குத் தூக்கி வாரிப் போட்டது.

அழுகையை நிறுத்தி விட்டு நீலா அசட்டையாகக் கணவனைப் பார்த்தாள். பிறகு வேறொன்றும் பேசாமல் மாடிப்படிகளில் விடுவிடு என்று இறங்கித் தெருவில் காத்துக்கொண்டிருந்த காரில் போய் ஏறிக் கொண்டாள். வாசல் வராந்தாவில் உட்கார்ந்திருந்த சர்மாவுக்கு ஒன்றும் புரியவில்லை புழுதியைக் கிளப்பிக் கொண்டு செல்லும். காரைப் பார்த்தார். வெறிச்சென்று கிடந்த மாடியைப் பார்த்துவிட்டுப் பெருமூச்செறிந்தார் அவர்.

சாதாரணமாக இருந்த மனஸ்தபாம் முற்றிப் போய் விட்டது. 'வயிற்றில் வளரும் குழந்தைக்கு க்ஷேமமாக வளைகாப்பு செய்தால் வளையல்களை நொறுக்கியா அனுப்புவார்கள்?' என்று ஊரார் பேசிக் கொண்டார்கள் 'மீனாட்சியிடத்தில் பெண் வாழ்ந்த மாதிரிதான் என்று எனக்கு அப்பவே தெரியுமே' என்று டாக்டரின் உறவினர்கள். அவரை. ஏசிக் காட்டினர். 'என்ன உயர்வான இடம் என்று கொண்டு போய்க் கொடுத்தீர்களோ? உங்களுக்கு இருக்கும் சொத்தில் மூன்றில் ஒரு பாகம் காணாது' என்றெல்லாம் பேசினார்.

"இனிமேல் என் பெண் அவர்கள் வீட்டு வாசற்படியை மிதிக்க மாட்டாள். குழந்தையும், மனைவியும் வேண்டு மானால் என் வீட்டுக்கு அவன் தான் வரவேண்டும்" என்று டாக்டர் மகாதேவன் சொன்னார். ஒரு தினம் காரை அனுப்பி சர்மாவுக்குக் கோபமாக ஒரு கடிதமும் எழுதி அனுப்பினார். ஆயிரக்கணக்கில் மதிப்புப் பெறும் வெள்ளி, பித்தளை பாத்திரங்களையும், நகை, புடவைகளையும் உடனே அனுப்பிவிட வேண்டும் என்று அதில் கண்டிருந்தது.

"அகமுடையானுடைய உறவே வேண்டாமா அவளுக்கு? குழந்தையைப் பற்றி பாத்யதை நமக்கும் உண்டு, தெரியுமா" என்று மீனாட்சி பேசினாள்.

"பிறப்பதற்கு முன்பு அதைப்பற்றிப் பேசுவானேன்? அவர்கள் வீட்டு சாமான்களை அனுப்பி விடலாம். திரும்பவும் அவளே இங்கு வந்தால் கொண்டு வரட்டும். இல்லை. உன் பிள்ளை அங்கு போனால் இருவரும் வைத்துக் கொள் கிறார்கள். நமக்கு இதெல்லாம் எதற்கடி பைத்தியமே நாட்டுப் பெண் சீர் கொண்டு வந்தால் அவள் வைத்துக் கொண்டு ஆளப் போகிறாள். இல்லாவிட்டால் இல்லை. உனக்கும் எனக்கும் என்ன வந்தது, சொல் பார்க்கலாம்?" என்றார் சர்மா.

கல்யாணச் சீர் வரிசைகளை ஒரு அறை முழுவதும் பரத்தி ஊராருக்குக் காட்டித் தம்பட்டம் அடித்தவள் ஆயிற்றே, மீனாட்சி அம்மாள்! அதனால் புருஷன் யோசனையை ஏற்காமல் எதோ பேசினாள். உடனே சர்மா, ''சீ, சீ, புத்திகெட்டவளே! கோர்ட்டுக்குப் போய் நிற்பது நீயா, நானா? அவர்கள் வீட்டுத் தூசி கூட இங்கே இருக்கக் கூடாது தெரியுமா?" என்று பெரிதாக இரைந்தார். பண மில்லை என்று காமுவை ஒதுக்கினோமே, ராமபத்திரன் இப்படி கௌரவக் குறைவாக நடந்து கொள்வானா? காமுதான் இப்படி இருப்பாளா?' என்று அவர் நினைத்தார்.

இரண்டு, மூன்று தடவைகளாக கார் வந்து சாமான் களை எடுத்துப் போயிற்று. "இதெல்லாம் என்னங்க எஜமான். பெண்டாட்டி புருசனுக்கு விட்டுப் போவுங் களா? நீலா அம்மா எப்பவுமே இப்படித்தாங்க. புருசப் பிள்ளை மாதிரி வளர்ந்திடுச்சு. இப்ப புருசனுக்கே அடங்க மாட்டேங்குது” என்று டிரைவர் அழமாட்டாத குறையாகச் சர்மாவிடம் கூறி வருந்தினான்.
----

இந்தவிஷயங்கள் அறைகுறையாக ராமபத்திர அய்யர் காதுகளில் விழுந்தன. 'காட்டு மிராண்டிகள்' என்று ஒரு ஜாதியாரை ஒதுக்கி வைத்திருக்கிறார்களே, அவர்கள் கூட இப்படிக் கேவலமாக சண்டை பிடித்துக்கொள்வதாகக் கேட்டதில்லை. ஊரறிய நாடறிய தடபுடலாகக் கல்யாணம் செய்து, வரவேற்பும், டின்னரும், சங்கீதக் கச்சேரியும் அமர்க்களப் படுத்துவது? பிறகு 'நான் நீ' என்று சண்டை போட்டுக் கொண்டு கோர்ட்டுக்குப் போவது? இது ஒரு நாகரிகமாக இருக்கிறது இந்தக் காலத்தில்! ஒன்றிரண்டு தடவைகள் சர்மா ராமபத்திர அய்யரைப் பார்க்க வந்த போது அவர் தம் குடும்பத்தின் அவலமான நிலைமையைக் கூறி வருந்தினார்.

"முதலிலேயே சொன்னேன் அப்பா, நமக்கு அவ்வளவு பெரிய இடத்துச் சம்பந்தம் வேண்டாம் என்று. மீனாட்சி கேட்கவில்லை" என்று வருந்தினார் சர்மா.

"நடந்ததை இனிமேல் மாற்ற முடியாது அப்பா, சங்கரனையாவது அங்கு போய் இருக்கச் சொல்லேன்' என்றார் ராமபத்திர அய்யர்.

"எப்படியாவது போகிறார்கள் போ. நான் பாட்டுக்கு சம்பகத்தை அழைத்துக்கொண்டு யாத்திரை போய் விட்டு வரலாமென்று இருக்கிறேன். ஒவ்வொருத்தர் ஒவ்வொரு வழி. யாருக்கு' என்று நான் புத்தி சொல்வது?” என் அலுத்துக் கொண்டார் சர்மா.

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது பள்ளிக்கூடத் திலிருந்து காமு வந்தாள். சர்மா அப்பாவிடம் விடை பெற்றுக் கொண்டு கிளம்புகிறதைப் பார்த்து உள்ளே சென்று, நீலாவின் ரவிக்கை துணிகளை எடுத்து வந்து அவரிடம் கொடுத்தாள்.

'இதெல்லாம் என்ன அம்மா?" என்று கேட்டார் சர்மா.

"உங்கள் நாட்டுப் பெண்ணிடம் கொடுத்து விடுங்கள் மாமா! பரீட்சை சமயமாக இருக்கிறது, தைக்க முடிய வில்லை. என்னை மன்னித்துக் கொள்ளச் சொல்லுங்கள்" என்று வினயமாகக் கேட்டுக் கொண்டாள் காமு.

"இந்த விஷயமெல்லாம் எனக்குத் தெரியாது. நீயே அவைகளைக் கொண்டு வந்து சங்கரனிடம் கொடுத்து விடு. நீலா பிறந்த வீட்டுக்குப் போய் நாலைந்து மாசங்கள் ஆகின்றன. அவள் நம் வீட்டுக்கே வருகிறதில்லை" என்று பதில் கூறிவிட்டு சர்மா புறப்பட்டார். அவர் சென்ற பிறகு தகப்பனாருக்குக் காபி கொடுத்துக்கொண்டே, "நீலா வீட்டாருக்கும், சர்மா வீட்டினருக்கும் ஏதோ சண்டையாமே? மாமா ஒன்றும் சொல்லவில்லையா உங்களிடம்?" என்று கேட்டாள் காமு.

"சர்மா சொல்லித்தான் எனக்குத் தெரிய வேண்டுமா அம்மா? அதுதான் ஊரெல்லாம் பேச்சாக இருக்கிறதே? பைத்தியக்காரப் பையன்? இந்த வைராக்கியத்தோடு அப்போதே உன்னைக் கல்யாணம் பண்ணிக் கொண் டிருந்தால் மற்ற சச்சரவுகள் எப்படி இருந்தாலும் அவன் வரைக்கும் சந்தோஷமாக இருந்திருப்பானோ இல்லையோ? அம்மாவுக்கும், அப்பாவுக்கும் நடுங்கிக் கொண்டு தலையை ஆட்டி விட்டுப் பேசாமல் இருந்தான். இப்பொழுது அவஸ்தைப் படுகிறான். படித்து விட்டால் மட்டும் போதுமா அம்மா? எது நல்லது எது கெட்டது என்று பகுத்தறியும் சக்தி வேண்டாமா?" என்று சங்கரன் மீது இவ்வளவு காலம் அடக்கி வைத்திருந்த ஆத்திரத்தை யெல்லாம் கொட்டித் தீர்த்தார் ராமபத்திர அய்யர்.

"நீலா பிறந்த வீட்டிலேயே இந்தால் சங்கரன் என்ன பண்ணுவார் அப்பா?'' என்று குழந்தையைப் போல் கேட்டாள் காமு.

''குழந்தையைப் பற்றி எனக்கும் பாத்யதை உண்டு. அதனால் மனைவி என்னுடன் குழந்தையோடு வந்து வாழ்க்கை நடத்த வேண்டும்' என்று கோர்ட்டில் கேஸ் போடுவான். அவள் படித்தவளாயிற்றே, அதற்கு சும்மா இருப்பாளா? பணம் தான் இறக்கை முளைத்துக் கிடக்கிறது. செலவு வேண்டுமே அதற்கு? அனாவசியமாக மனைவியை அடித்துத் துன்புறுத்துகிறார் என்று அவள் கோர்ட்டில் வாதிப்பாள்.நீதிபதி எவ்விதம் தீர்ப்புக் கூறுகிறாரோ அப்படி நடந்து கொள்வார்கள். ஆனால், அப்புறம் ஒற்றுமையாக இருந்து விடுவார்களா என்ன? நீதி ஸ்தலமும், நீதிபதிகளும் மனிதர்களை ஒரு கட்டுப் பாட்டுக்குள் அடங்கி இருப்பதற்கு ஏற்படுத்தப் பட்டிருக்கிறார்களே தவிர, மனிதர்களின் மனத்தைத் திருத்தி விடுவார்கள் என்று சொல்ல முடியுமா, காமு? கணவன், குடும்பம் என்று அன்புடன் இல்லறத்தை நடத்த மனைவிக்கு ஆசையும்,பக்தியும் வேண்டும். மனைவி என்று காதல் செலுத்தக் கணவனுக்கு உயர்ந்த மனம் வேண்டும். இரண்டும் பொருந்தியிருந்தால் மூன்றாவது மனிதர்களுக்கு அங்கு என்ன வேலை இருக்கிறது சொல், பார்க்கலாம்!”

"நானும்,உன் அம்மாவும் எத்தனையோ தடவைகள் சண்டை பிடித்திருக்கிறோம். உன் அம்மா என் பேரில் கோபித்துக் கொண்டு சாப்பிடாமல் இருந்திருக்கிறாள். நான் அவள் பேரில் கோபித்துக் கொண்டு சாதத்தை வீசி எறிந்து விட்டுப் பட்டினியாக வயலுக்குப் போய் இருக்கிறேன். அவள் கோபம் தணிந்து தயிர் சாதத்தைப் பிசைந்து எடுத்துக் கொண்டு வெயிலையும் லட்சியம் பண்ணாமல் என்னைத் தேடிக் கொண்டு வருவாளே! இன்னொருத்தருக்கு எங்கள் சண்டையைப் பற்றித் தெரியுமா?"

ராமபத்திர அய்யர் தம் பால்ய வாழ்க்கையையும், விசாலாட்சியையும் நினைத்து வருந்தினார். வயதாகி ஒளி குறைந்த அவர் கண்களிலிருந்து நீர் வடிந்தது. பெற்ற பெண் எவ்வளவு தான் ஆசையுடனும், அருமையுடனும் தகப்பனாரைக் கவனித்துக் கொண்டாலும் மனைவி ல்லாத குறையை அவரால் மறக்க முடியவில்லை.

காமு மிகவும் கவனமாகத் தகப்பனார் சொல்லி வந்தவைகளைக் கேட்டுக் கொண்டிருந்தாள். அவர் அம்மாவைப் பற்றி நினைத்து வருந்தும் போது அவளுக்கும் வருத்தமாகத்தான் இருந்தது. ராமபத்திர அய்யரும் சிறிது நேரம் காமுவையே பார்த்துக் கொண்டிருந்தார்.அப்புறம் ஏதோ நினைத்துக் கொண்டவர்போல், "காமு! அம்மா உனக்குக் கல்யாணம் ஆகவில்லையே என்று நினைத்து ஏங்கி இறந்து போனாள். உன் அம்மா சாகிற வரைக்கும் எனக்குக் கொஞ்சங்கூட உன்னைப் பற்றிக் கவலை ஏற்படவில்லை. வீட்டு மூலையில் வியாதிக்காரியாக அவள் படுத்திருந்தாலும் பெரிய துணை ஒன்று இருக்கிறது என்று இருந்தேன். அவள் போன பிறகு உன்னைப் பற்றிய கவலை மனத்தைச் சதா அரித்துக் கொண்டே இருக்கிறது. உன் கூடப் பிறந்த சகோதரிகளுக்கு அவர்கள் குடும்பம்தான் பெரிதே ஒழிய உன்னை அவர்கள் கவனிக்கப் போகிறார்களா? சீக்கிரத்தில் உனக்குக் கல்யாணம் பண்ணிவிட வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறேன். பழைய விஷயங்களையே மனசில் வைத்துக் கொண்டு நீ பிடிவாதம் பிடிக்கக் கூடாது. என்ன, தெரியுமா?" என்று சுவாதீனமாகவும், கண்டிப்பாகவும் கூறினார் அவர்.
--------------------

13. வேற்றுமையின் எல்லை...

நீலாவின் பிறந்த வீட்டாருடன் மனஸ் தாபம் ஏற்பட்ட பிறகு மீனாட்சி அம்மாளுக்குப் பாதிக் கொட்டம் அடங்கி விட்டது. யார் எங்கே அவளைப் பார்த்தாலும், "உங்கள் பிள்ளை நாட்டுப் பெண்ணின் வளையல்களை நொறுக்கி விட்டாராமே?" என்று கேட்டார்கள்."ஆயிரம் இருந்தாலும் சமயத்தில் விட்டுக் கொடுத்ததுபோல் நீங்களும், உங்கள் பெண்ணும் வரவே இல்லையே!" என்று வேறு கேட்டார்கள்.

சம்பகம் சங்கரனின் நிலையைக் கண்டு வருந்தினாள். அவனும், அவன் மனைவியும் சந்தோஷமாக இருப்பதைப் பார்த்து அவள் ஆறுதல் அடையலாம் என்று நினைத் திருந்தது போக எக்கச்சக்கமாக அல்லவா நேரிட்டிருக் கிறது? கொழுந்தன் கொஞ்ச காலம் போய் மாமியார் வீட்டில் இருக்கட்டுமே என்று கூட நினைத்தாள் அவள். மனைவியிடம் அன்போ, ஆசையோ உடையவனாக இருந் தால் மாதக் கணக்கில் அவளைப் பாராமல் இருப்பானா? அதுவும் உள்ளூரிலேயே அவள் இருக்கும்போது, அவளைப் பாராமல் எப்படி இருக்க முடிகிறது அவனால்? 'இவர்கள் கூட்டத்துக்கே மனைவியிடம் அபிமானம் இருக்காதுபோல் இருக்கிறது. வெளிநாட்டுக்குச் சென்றவ அடியோடு மனைவி, குழந்தை, பெற்றோர் என்பதை மறந்து போய் விட்டார். கொழுந்தன் என்னடாவென்றால் உள்ளூரிலேயே மனைவி இருப்பதை மறந்து உற்சாகமாக இருக்கிறாரே' என்று வியந்தாள் சம்பகம்.

தினம் மாலையில் பானுவை வெளியே அழைத்துப் போவான் சங்கரன். அவளுக்கு விளையாட்டுச் சாமான்கள் வாங்கிக் சொடுத்து அழைத்து வருவான். கவலை இல்லாமல் திரியும் அந்தக் குழந்தையைப் பார்க்கும் போதெல்லாம் குழந்தைப் பருவம் எவ்வளவு நிஷ்களங்க மானது என்று நினைத்து சந்தோஷிப்பான் சங்கரன். ‘அவனுக்கும் குழந்தை பிறக்கப் போகிறது. 'அப்பா' என்று ஆசையுடன் அது அழைக்கும். உரிமையுடன் அவனிடம் முரண்டு பிடிக்கும். வீடு முழுவதும் தவழ்ந்து விளையாடும். தத்தித்தத்தி நடக்கும், அதற்கு நடை பழக்கிக் கொடுக்கும் போது அவனும் குழந்தையைப் போல் நடக்கலாம். நீலா என்ன குற்றம் செய்திருந்தாலும் குழந்தைக்காக அவளை மன்னித்து விடலாம் என்று கூட அவன் நினைத்தான். துன்பத்தை, கவலையை மறக்க இளங்குழந்தை வீட்டில் ஆடி ஓடிவிளையாடப் போகிறது' என்றெல்லாம் சங்கரன் பானு விடம் பேசும்போதும் விளையாடும் போதும் எண்ணிக் கொண்டான்.

"குழந்தை பிறந்து விட்டது என்று தெரிந்தால் எல்லாம் விழுந்தடித்துக் கொண்டு ஓடுவான். ஏன், நான் கூடத்தான் போய்ப் பார்ப்பேன், குழந்தை நம்முடையது தானே? அதன் மேல் எனக்கு என்ன கோபம் இருக்கப் போகிறது?" என்று மீனாட்சி அம்மாளும் சொல்லிக் கொண்டிருந்தாள்.

"நாட்டுப் பெண்ணைக் கண்டால் ஆகிறதில்லை சில பெருக்கு! பேரன் பேத்திகளை மாத்திரம் எடுத்துக் கொஞ்சு வார்கள். நல்ல அதிசயம் இது?" என்று சமையற்கார மாமி சம்பசுத்திடம் கூறிச் சிரித்தாள்.

எல்லோரும் நீலாவுக்குக் குழந்தை பிறந்தால் குடும்ப நிலை சீர் திருந்தி விடும் என்று எதிர்பார்த்தார்கள். ராமபத்திர அய்யரும் அப்படித்தான் நினைத்தார். அவர் சர்மாவைப் பார்க்கும் போதெல்லாம், "எத்தனை கோபம் இருந்தாலும் புதிதாகப் பிறந்த குழந்தையை உதாசீனம் செய்யக் கூடாது அப்பா. மீனாட்சியையாவது அவர்கள் வீட்டுக்கு அனுப்பிவை. பிறகு எல்லாம் தன்னால் சரியாகி விடும்" என்று சொல்லி வந்தார்.

நீலா பிரசவித்த செய்தி கடைசியாக அவர்களுக்கு எட்டியது. அதுவும் அரை குறையாக வந்து யாரோ சொன் னார்கள். அவர்களும் விவரமாகக் கூறவில்லை. சங்கரன் மனம் சந்தோஷத்தால் தவித்தது. "பிறந்திருப்பது ஆணா, பெண்ணா? அது யாரைப் போல் இருக்கிறதோ? நீலாவைப் போல அழகாக இருக்கட்டும் ஆனால், குணத்துக்கு மட்டும் அவளைக் கொள்ள வேண்டாம்" என்று எண்ணினான். மாமனார் மாப்பிள்ளைக்கு நேரடியாக ஒன்றும் சொல்லி அனுப்பவில்லை. பெரியவராக இருக்கும் சர்மாவுக்கும் அவர் ஒன்றும் தெரிவிக்கவில்லை. யாராவது வருவார்கள் என்று வீட்டில் எல்லோரும் ஆவலுடன் காத்திருந்தார்கள். கெளரவத்தை விட்டுக்கொடுத்துக் கொண்டு முதலில் போகக்கூடாது என்று ருக்மிணி தாயாருக்குச் சொன்னாள்

காரியாலயத்துக்குச் சென்ற சங்கரனுக்கு இருப்பே கொள்ளவில்லை ஆபீஸ் காகிதங்களைக் கட்டி ஒரு பக்கம் வைத்து விட்டு, மேஜை அருகில் பேசாமல் உட்கார்ந்திருந் தான். நண்பர் ஒருவர், "என்ன அப்பா! மனைவி பிரசவித்து விட்டாளா?' என்று வேறு கேட்டு வைத்து விட்டார். விஷயம் தெரிந்துதான் ஒரு வேளை தன்னைக்கேட்கிறாரோ என்று சங்கரன் நினைத்தான். ' பிரசவித்து விட்டாள்' என்று கூறினால், "பெண்ணா, பிள்ளையா? எனக்குக் கல்கண்டு எங்கே! பூந்தி எங்கே" என்று நாலு பேரிடம் சொல்லி மானத்தை வாங்கி விடுவார். அவருக்கும் சண்டை மனஸ் தாபத்தைப் பற்றி ஏதோ கொஞ்சம் தெரியும். "மாசம் ஆகவில்லைபோல் இருக்கிறது ஸார்” என்று ஏதோ சொல்லி வைத்தான். “என்ன ஓய்! ஒரேயடியாய் மறைக்கிறீர். வளைகாப்பு நடந்து மூன்று மாசம் ஆகப் போகிறதே, கஜ கர்ப்பமா என்ன சார்?" என்றார் நண்பர்.

மத்தியான வேளைகளில் நாலு பெண்கள் சேர்ந்து ஏதாவது பேசினால் "வம்பு பேசுகிறீர்கள்" என்கிறார்கள் இந்தப் புருஷர்கள்! இவர்கள் ஆபீசில் பேசிப் கொள்வது எந்த ரகத்தைச் சேர்ந்த பேச்சோ புரியவில்லை!

வீட்டிற்கு வரக்கூடாதென்று தடை உத்தரவு போட்ட மாமனார் வீட்டைத் தேடி சங்கரன் போவதற்குத் தயங்கினான். குழந்தையைப் பார்க்க வேண்டும் என்கிற ஆவல் அவனுடைய சுயமரியாதையையும் விட்டுக் கொடுக்கச் செய்து விட்டது. மாலை நான்கு மணிக்கு முன்பே காரியாலயத்தில், தான் அவசரமாக எங்கோ போக வேண்டும் என்று கூறி விட்டு நேராக 'நர்ஸிங் ஹோமு'க்குக் கிளம்பினான் சங்கரன். போகும் வழியில், நீலா தன்னிடம் எவ்வளவு அசட்டையாகவும் மரியாதைக் குறைவாகவும் நடந்து கொண்டாலும் அவைகளைப் பாராட்டாமல், கூடுமானவரையில் அவளுடன் சந்தோஷமாகப் பேசிவிட்டுக் குழந்தையைப் பார்த்து வருவது என்று தீர்மானித்துக் கொண்டான்.

நர்ஸிங் ஹோமு'க்குள் அவன் நுழையும் போதே அவனைப் பார்த்துக் ஈசமசவென்று நர்ஸ்கள் பேசிக் கொண்டு அவனுக்கு வழி விட்டனர். நேராக நீலா படுத்து இருந்த அறைக்குள் சென்றான். கட்டிலுக்கு அருகில் இருந்த தொட்டில் காலியாக இருந்தது. நீலா அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். ஒரு வேளை பால் புகட்டு வதற்காகத் தாதி குழந்தையை வெளியே எடுத்துப் போயிருப்பாளோ? கட்டிலுக்கு அருகிலிருந்த நாற்காலியில் உட்கார்ந்து நீலாவையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந் தான் சங்கரன். வெளுத்துப்போய்களை இழந்து மிகவும் இளைத்துப் போய்இருந்தாள் அவள். தலைச்சன் பிரசவத் துக்கே இவ்வளவு பலவீனம் ஏற்படுமா என்ன என்று தோன்றியது அவனுக்கு. சிறிது நேரம் கழித்து நீலா விழித்துக் கொண்டாள். எதிரில் கணவன் உட்கார்ந் திருப்பதைப் பார்த்து ஆவலோ, பதட்டமோ அடையாமல் மௌனமாக இருந்தாள். இன்று சங்கரனே முதலில் பேயினான். “உடம்புக்கு ஒன்றுமில்லையே நீலா? எனக்கு ஏன் சொல்லி அனுப்ப வில்லை?" என்று சுவாதீனமாகக் கேட்டான்.

"நீங்கள் வருவீர்கள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அதனால் சொல்லி அனுப்பவில்லை” என்றாள் நீலா.

சங்கரனுக்கு அவள் கூறும் வார்த்தைகளின் அர்த்தம் சரியாக விளங்கவில்லை. சங்கரனின் கோபம் தணிந்து அவர்கள் வீட்டிற்கு வருவான் என்று அவர்கள் யாரும் எதிர்பார்க்க வில்லையா? அல்லது சங்கரனின் வரவை அவர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லையா? சங்கரன் அதைப் பற்றிக் கவனியாமல், "சொல்லி அனுப்பாவிடாமல் போகிறது. குழந்தை எங்கே? நான் பார்க்க வேண்டும் என்று தான் ஓடி வந்திருக்கிறேன் நீலா!" என்று கேட்டான்.

நீலாவின் கண்கள் ஆஸ்பத்திரிக் கட்டடத்தின் மேல் கூரையைப் பார்த்தன. வருத்தம் கலந்த பார்வையுடன் அவனைப் பார்த்து, "குழந்தை இறந்தே பிறந்தது. நான் கூடப் பார்க்கவில்லை" என்றாள் அவள்.

சங்கரனின் மனம் ஒரு வினாடி 'திக்'கென்று அடித்துக் கொண்டது. கர்ப்பிணியாக இருக்கும் பெண்களுக்கு மன அமைதியும், சந்தோஷமும் எவ்வளவு முக்கியமானது, நீலா சதா அவனுடனும் சண்டையிட்டுத் தனக்கும், அவனுக்கும் சுகம் இல்லாமல் செய்துகொண்டாள் அல்லவா?

“குழந்தை திடமாக இருந்ததாமா? அதுவும் இல்லையா?" என்று கொஞ்சம் வெறுப்புடன் கேட்டான் அவளை.

"குழந்தை நன்றாகத்தான் இருந்ததாம்! எனக்கு மாசம் ஆன பிறகு 'ரத்த அழுத்த' வியாதி வந்து விட்டது, அதனால்தான் அது ஜீவித்திருக்கவில்லை என்று அப்பா சொன்னார்."

டாக்டர் ஆனதால் அவர் அவ்விதம் அபிப்பிராயப் பட்டார், அம்மாவுக்குத் தெரிந்தால் அவள் நீலா பேரில் குற்றம் சொல்லுவாள். மொத்தத்தில் குழந்தை போய் விட்டது. தாம்பத்ய வாழ்க்கை இனியாவது நன்றாக இருக்கும் என்று சங்கரன் நினைத்திருந்தது வியர்த்தமாகப் போயிற்று. சங்கரன் யோசித்தபடி உட்கார்ந்திருந்தான்

காலையில் ஆபீசில் நண்பர் கல்கண்டும், பூந்தியும் அவனுக்குக் குழந்தை பிறந்திருப்பதற்காகக் கேட்டார். குழந்தையைப் பார்த்து விட்டு வீட்டுக்குப் போகும்போது கடைத்தெருவில் அவைகளை வாங்கிப் போகவேண்டும் என்று சங்கரன் நினைத்துக் கொண்டு 'நர்ஸிங்ஹோமு'க்கு வந்தான். ஆனால், எதிர்பார்த்ததற்கு மாறாக வேறு செய்தியுடன் நீலா அவனை வரவேற்றாள். சலித்த மனத் துடன், ''“நான் போய் வருகிறேன் நீலா உடம்பைக் கவனித்துக் கொள். பழைய விஷயங்களை மறந்து விட்டு உடம்பைத் தேற்றிக்கொண்டு சீக்கிரம் நம் வீட்டுக்கே வந்து விடு' என்று கூறிவிட்டுப் புறப்பட்டான் சங்கரன்.

அவன் வீட்டை அடைந்தபோது நன்றாக இருட்டி விட்டது. வீட்டில் எல்லோரும் வெளியே போயிருந்தார்கள். சம்பகம் ரேடியோவைத் திருப்பி வைத்து விட்டுக் கூடத்தில் உட்கார்ந்திருந்தாள். ரேடியோவிலிருந்து யாரோ தீங்குரலில்,
"ஆடி நடந்திடவே-யசோதை
ஆனந்தங் கொண்டர்ளாம்
ஆழியும் சங்கமுமாய் - யசோதை
அடித்தடங் கண்டாளாம்”
என்று பாடிக் கொண்டிருந்தார்கள். அங்கே பாட்டிற்கேற்ப பானு நடனம் ஆடிக் கொண்டிருந்தாள். தான் பெற்ற குழந்தையைக் கண்டு ஆனந்தப்படுவதே மகா பாக்கியமாக எவ்வள்வோ பேர் நினைக்கின்றனர். நம் பெரியோர்கள் பகவானையே குழந்தையாக நினைத்து ஆடியும், பாடியும் மகிழ்ந்தார்கள். பக்திக்கும் அவர்கள் குழந்தைக் காதல் தூண்டுகோலாக அமைந்திருந்தது. சம்பகமும் ஆயிரம் கவலைகளை மறந்து பானு ஆடுவதைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தாள்.

கொழுந்தன் வீட்டிற்குள் வந்ததும் சம்பகம் ஆவலுடன் அவனைப் பார்த்து, "நீலா பிரசவித்து விட்டாளாமே? நீங்களாவது போய்ப் பார்த்து வருகிறதுதானே?" என்று கேட்டாள்.

“பார்த்து விட்டுத்தான் வருகிறேன். குழந்தை இறந்தே பிறந்ததாம். நம்முடைய அதிர்ஷ்டம் அவ்வளவு தான்!” என்று கூறிவிட்டு, அங்கிருந்த நாற்காலியில் உட்கார்ந்தான் சங்கரன்.

சம்பகத்துக்கு சங்கரனின் ஜாதகத்தை நீலாவின் தகப்பனாரிடம் கொடுத்த அன்று சுவாமி அறையில் படம் விழுந்து உடைந்ததும்,பிறகு வளைகாப்பு தினம் நீலாவின் கை வளையல்கள் நொறுங்கி உடைந்ததும் படலம் படலமாக நினைவுக்கு வந்தன.
-------

இதெல்லாம் நடந்து மூன்று மாதங்களுக்குப் பிறகும் நீலா புக்ககம் வரவில்லை. அவளாகவே வரட்டும் என்று சங்கரன் பேசாமல் இருந்து விட்டான். "அவர்கள் சொல்லி அனுப்புவதற்கு முன்பே விழுந்தடித்துக் கொண்டு ஓடினானே? அவனே போய் அவளை அழைத்தும் வருவான்" என்று மீனாட்சி நிஷ்டூரமாகச் சொல்லிக்கொண்டிருந்தாள். எது எப்படியோ போகட்டும். இனி மேலாவது ஒற்றுமை யாக இருங்கள் அப்பா. நீதான் போய் அவளை அழைத்து வாயேன்" என்று சர்மா பிள்ளையிடம் சொன்னார். 'நீங்கள் வருவீர்கள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை' என்று நீலா கூறிய வார்த்தைகள் அவன் மனத்தை அறுத்துக் கொண்டிருந்தன. அவர்கள் சொல்லி அனுப்பா மலேயே அவன் அன்று குழந்தையைப் பார்க்க வேண்டும் என்கிற ஆசையால் போயிருந்தான். மறுபடியும் அவன் அந்த வீட்டிற்குச் சென்றால் அங்கு எந்தவிதமான வரவேற்புக் கிடைக்குமோ என்று பயந்தான்.

"எப்பொழுதடா நீலாவை அழைத்து வரப் போகிறாய்? நீ வருவாய் என்றுதான் அவள் காத்துக் கொண்டிருக் கிறாளாம்!" என்று ருக்மிணி கேலி செய்தாள் சங்கரனை.

"இதிலே என்ன தவறு?” என்று நினைத்துச் சம்பகம், ''அவர் தான் போய் அழைத்து வரட்டுமே!' என்றுசொன்னாள்.

"தவறு ஒன்றுமில்லைதான். அவள் பிற்பாடு தலைமேல் ஏறுவாளே? அவ்வளவு கர்வம் பிடித்தவள் ஆயிற்றே அவள்?" என்று மீனாட்சி கோபித்துக் கொண்டாள்.

ஊரிலும் நண்பர்கள் அவனைப் பற்றியும் அவன் மனைவியைப் பற்றியும் பலவிதமாகப் பேசிக் கொண்டனர். “வீட்டுக்கு அழைத்து வந்த பிறகு பிறந்த வீட்டுக்கே போகக் கூடாது என்று கண்டித்து வையுங்கள் சார்!" என்று நெருங்கிய நண்பர் ஒருவர் கூறினார். சங்கரன் வீட்டு மனஸ்தாபத்தைப் பற்றி நண்பர்கள் அவன் எதிரிலேயே தைரியமாகப் பேசும் அளவுக்கு மனஸ்தாபம் முற்றிப் போயிருந்தது! நாலு பேருக்காகவாவது மனைவியை அழைத்து வந்தாக வேண்டும். இல்லாவிட்டால் ஊர் சிரிக்கும்.

இதற்கிடையில் அவன் தாயார் ஒரு தினம் அவன் காரியாலயத்துக்குக் கிளம்பும்போது, "ஏண்டா சங்கரா! உன் மனைவி டாக்டருக்குப் படிக்கிறாளா மேடா? காலேஜிலே சேர்ந்து விட்டாளாம். சமையற்கார மாமி பார்த்ததாகச் சொன்னாள்” என்றாள்.

“படிக்கட்டுமே! அதனால் தவறு ஒன்றுமில்லையே. அங்கே இருந்து படிப்பதை இங்கே வந்து படிக்கட்டும்'' என்று தாயாருக்குப் பதில் கூறினான் சங்கரன்.

அன்றே நீலாவின் வீட்டுக்கு அழையா விருந்தாளியாகப் போனான் சங்கரன். வீட்டில் அவள் தகப்பனார் இல்லை. தாயார் மட்டும் இருந்தாள். ஒரு மாதிரியாகத் தலையை அசைத்துவிட்டு அந்த அம்மாள் மாடிக்குப் போனாள். சிறிது நேரத்துக்கெல்லாம் நீலா மாடிப் படிகளில் நிதானமாக இறங்கி வந்து அவன் எதிரில் இருந்த சோபாவில் உட்கார்ந்து கொண்டாள். இருவரும் சிறிது நேரம் தலையைக் குனிந்த வண்ணம் பூமியைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சிறிது நேரம் கழித்து நீலா அவனைப் பார்த்து, "உங்களோடு கொஞ்சம் பேச வேண்டும். வெளியே போய்விட்டு வரலாமா?" என்று கேட்டாள்.

சங்கரன் 'சரி' என்று தலை அசைத்துவிட்டு, எழுந்திருந்து வெளியே போய் அவளுடன் காரில் ஏறிக் கொண்டான்.

கார் நகரத்தின் சந்தடியான இடங்களைக் கடந்து அழகிய நீண்ட ரஸ்தாவில் வளைந்து வளைந்து போய்க் கொண்டிருந்தது. நீலா வெகு நேரம் வரையில் 'ஸ்டீயரிங் வீலை' விட்டுத் தன் பார்வையைப் பக்கத்தில் அமர்ந்திருந்த சங்கரன் பக்கம் திருப்ப வில்லை. அவன் அவள் அருகாமையில் நெருங்கி உட்கார்ந்ததால் அவள் உடம்பைக் கூசிக் கொண்டாள். கடைசியாக அடர்ந்து பசுமையாக வளர்ந்திருந்த மாந்தோப்பு ஒன்றின் அருகில் நீலா காரை நிறுத்திவிட்டு, இறங்கி நடக்க ஆரம்பித்தாள்.

சங்கரனுக்கு இதெல்லாம் புதுமையாகவும், ஆச்சரிய மாகவும் இருந்தன. அவளுடைய நீண்ட மௌனம் அவன் மனத்தில் அச்சத்தை எழுப்பியது. ஒரு விதமாக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, "இதெல்லாம் என்ன நீலா? அவ்வளவு பெரிய உன் வீட்டில் நாம் தனித்துப் பேசுவதற்கு இடமில்லையா என்ன? இவ்வளவு தூரம் என்னைக் கூட்டி வருவானேன்?" என்று கேட்டான்.

நீலா விழிகளை உயர்த்தி அவனை வரண்ட ஒரு பார்வை பார்த்தாள். பிறகு, "என்னை உங்கள் வீட்டுக்கு அழைப்பதற்காகத் தானே நீங்கள் இன்று வந்திருக்கிறீர்கள்?” என்ற கேட்டாள் அமைதியாக.

'ஆமாம், நீயாகவே வருவாய் என்று எதிர்பார்த்தேன். வரவில்லை. நாம்தான் வந்து அழைத்துப் போவோமே என்று கூப்பிட வந்தேன்" என்றான் சங்கரன்.

"நான் உங்களுடன் வர முடியாது" என்று அழுத்தமாகக் கூறிவிட்டு அவன் முகத்தையே உற்றுப் பார்த்தாள் நீலா,

"நான் உன் வீட்டில் வந்து இருக்க வேண்டும் என்பது உன் அபிப்பிராயமா?” என்று திருப்பிக் கேட்டான் சங்கரன்.

"அப்படிச் சொல்லவில்லையே? மணவாழ்க்கை எனக்குப் பிடிக்கவில்லை. நான் சுதந்தரமாக இருக்க ஆசைப்படுகிறேன். கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசை ஏற்படும் முன்பே நம் கல்யாணம் நடந்தது. இருவருடைய மனமும் ஒத்துப் போகவில்லை. ஒரு வேளை, பிறந்த குழந்தை உயிரோடு இருந்திருந்தால் நம்முடைய பிணைப்பு பலப்பட்டிருக்கலாம். இன்னொரு தடவை நான் அதைப் பரீட்சை பார்க்க விரும்பவில்லை. நான் டாக்டருக்குப் படிக்க காலேஜில் சேர்ந்திருக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். கல்யாணத்துக்கு முன்பே என் அபிப்பிராயம் அவ்விதம் தான் இருந்தது. நீங்கள் உங்கள் மனத்துக்குப் பிடித்த பெண்ணாகப் பார்த்துக் கல்யாணம் பண்ணிக் கொள்ளுங்கள். உங்கள் சந்தோஷமான வாழ்க்கையில் நான் தலையிட மாட்டேன் என்றாள் நீலா.

நீலா கூறியதைக் கேட்டதும் சங்கரனின் மனம் வியப்பாலும், ஆச்சரியத்தாலும் தடுமாறியது. நீலா என்ன சொல்லுகிறாள் என்பதே அவனுக்குப் புரியவில்லை. அவன் கேட்பது உண்மையா அல்லது பிரமையா என்பதும் விளங்க வில்லை. 'மனைவி அழகாக இல்லை. படித்தவளாக இல்லை' என்றெல்லாம் காரணங்கள் கூறி, கணவன்மார்கள் மனைவிகளை ஒதுக்கி வைத்தார்கள். ஆனால், நீலா வனை ஒதுக்கி வைக்கிறாள், 'எனக்கும், உங்களுக்கும் ஒத்துவராது' என்கிறாள். 'நான் டாக்டருக்குப் படித்துப் பல ஆராய்ச்சிகளைச் செய்ய ஆசைப்படுகிறேன்' என்கிறாள்.

சங்கரன் குழம்பிய மனத்துடன் நீலாவைப் பார்த்தான். பிறகு தடுமாறும் குரலில், "நீலா! கல்யாணத்தை ஆயிரங் காலத்துப் பயிருக்கு நம் முன்னோர்கள் ஒப்பிட்டிருக்கிறார்கள். அதன்படி யோசித்தே எதையும் செய்து வந்தார்கள். பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு நடந்த நம் கல்யாண பந்தத்தை நீ இவ்வளவு சீக்கிரம் தகர்த்துவிட முயலுவது சரியென்று எனக்குப் புலப்படவில்லை.உன் பெற்றோரைக்கேட்டாயா? அவர்கள் என்ன சொன்னார்கள்! அவர்கள் அபிப்பிராயம் என்ன என்று று எனக்குத் தெரிய வேண்டாமா?" என்று கேட்டான் சங்கரன்.

நீலாவின் முகத்தில் சலனம் ஏதும் ஏற்படவில்லை. வைராக்கியத்தின் எல்லைக் கோட்டிலே நிற்கும் ஞானியின் முகத்தைப் போல் அது அவ்வளவு தெளிவாக இல்லா விட்டாலும், உணர்ச்சியற்ற முகமாகக் காட்சி அளித்தது. கணவன் என்றோ, காதலன் என்றோ எந்த விதமான உணர்ச்சிகளையும் அந்த முகம் காட்டவில்லை. ஆசைக் கணவனைக் கண்டதும் அகமும், முகமும் மலர வரவேற்கும் அன்பு மனைவியின் முகபாவம் எதுவும் அந்த முகத்தில் காணப்படவில்லை. காதலனின் பெயரைக் கேட்ட மாத்திரத்தில் மனத்தில் எழும் இன்ப நினைவுகளால் பொங்கிப் பூரிக்கும் காதலியின் எழில் ததும்பும் முகபாவத் தையும் நீலாவின் முகம் காட்டவில்லை. 'உனக்கும் எனக்கும் உறவு உண்டு என்பதே உண்மை தான்T? அந்த உறவின் பிடிப்புக்குள் நாம் சிக்கித்தான் தவிக்க வேண்டுமா?' என்று கேட்பது போல் நீலா நின்றிருந்தாள்.

கணவன், மனைவி என்கிற உறவில் ஏற்படும் அன்பில் சிக்கித் தவிப்பது ஒருவிதமான பந்தம். அந்த அன்பு இருவருக்கும் பூரணமாக அமைந்து விட்டால், பிறகு எத்தனையோ சண்டைகள், சச்சரவுகள், பிளவுகள் எல்லாம் சரிப்பட்டுப் போய்விடும். பூரணமான அந்த மன ஒற்றுமை நீலா-சங்கரன் வாழ்க்கையில் ஏற்படவில்லை. அந்தக் காலத்தில் கூட இம்மாதிரி தவிப்புகளும், சிக்கல்களும் நிறைய ஏற்பட்டிருக்கின்றன. ஆனால், மனத்தைத் திறந்து மனைவி வெளியே சொல்ல அஞ்சினாள். அவளை வெளியே தைரியமாகப் பேசவிட அன்றைய சமூக நிலையும் இடங் கொடுக்கவில்லை.

மெளனமாக நின்றிருந்த நீலா. "நான் இந்த முடிவுக்கு இன்று, நேற்று வரவில்லை. வளைகாப்பு அன்று என் கையிலிருந்த வளையல்கள் உடைந்தவுடன் என் மனமும் உடைந்து போயிற்று. அதன் பிறகு பல நாட்கள் என் மனசிலே போராட்டங்கள் நடந்தன. பிறகுதான் என் தீர்மானத்தை அம்மாவிடமும், அப்பாவிடமும் கூறினேன். படித்துப் பட்டம் பெற்று, மேல் நாடுகளுக்குச் சென்று பல ஆராய்ச்சிகள் செய்ய வேண்டும் என்று நான் எவ்வளவோ ஆசையுடன் இருந்தேன். குடும்ப வாழ்க்கையில் பற்றுக் குறைவான எனக்கு அவர்கள் கல்யாணம் செய்து வைத்ததே தவறு. அதை அப்பா ஒப்புக் கொண்டார்?" என்றாள் நீலா.

சூரியாஸ்தமனம் ஆவதற்கு முன்பே தோப்புக்குள் இருட்டி விட்டது. 'கிரீச் கிரீச்' என்று கத்திக் கொண்டு நானாவித பட்சிகள் சிறகை அடித்துப் பறந்து வந்து மரங்களில் அடைந்தன. அடிவானத்தில் பூர்ண சந்திரன் மெல்ல மெல்ல மேலே எழும்பிக் கொண்டிருந்தான். இருட்டி இருந்த தோப்புக்குள் சிறிது நேரத்துக் கெல்லாம் சந்திர வெளிச்சம் பரவியது. அப்பொழுதும் இருவரும் பேசவில்லை. நீலா கை விரல்களால் நிலத்தில் கோடுகள் கிழித்துக் கொண்டிருந்தாள். சங்கரன் கீழே உதிர்ந்து கிடந்த மாவிலையைக் கிள்ளிப் போட்டுக் கொண்டிருந்தான். சந்திரனும் இவ்வதிசய தம்பதியைப் பார்த்துக் கொண்டே வானத்தின் மேலே மேலே எழும்பி வந்து கொண்டிருந்தான்.
"நேரமாகிறது" என்று கைகளை உதறிக் கொண்டு எழுந்தாள் நீலா.

"நானும் வருகிறேன்” என்று கூறிவிட்டு எழுந்தான் சங்கரன். இப்பொழுது அவன் அவளுடைய காரில் சுவாதீனமாக உட்கார்ந்து செல்லவில்லை. அந்த வழியாக நகரத்துக்குப் போகும் பஸ்ஸில் ஏறி, வீட்டை அடைந்தான் சங்கரன்.

அவன் வீட்டை அடைந்தபோது இரவு ஒன்பது மணிக்கு மேல் ஆகி விட்டது எதிர்பாராத மன அதிர்ச்சியால் சங்கரன் யாருடனும் பேசப் பிடிக்காமல் 'சித்தப்பா' என்று அழைக்கும் பானுவையும் லட்சியம் செய்யாமல் மாடி அறைக்குள் சென்று கட்டிலில் 'பொத்' தென்று சாய்ந்து வானத்தையும், சந்திரனையும் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனையும் அறியாமல் நித்திரையில் ஆழ்ந்த போது அவன் கண் முன்பு இன்பலோகம் ஒன்று உதயமாயிற்று. அதில் அன்பே உருவான காமு புன்னகை முகத்துடன் அவனை எதிர் கொண்டழைத்தாள். "அடியோடு என்னை மறக்கப் பார்க்கிறீர்களே?" என்று கேலிப் புன்னகையுடன் அவள் அவன் எதிரில் அசைந்தாடும் பொற்கொடி என நின்று கேட்பது போல் இருந்தது அவனுக்கு.
.
நீலா சங்கரனிடம் கூறியதெல்லாம் உண்மை.

பத்து தினங்களுக்கு முன்பு ஒரு நாள் பகல், வைத்தியக் கல்லூரியிலிருந்து நீலா வீட்டுக்கு வந்ததும் நேராக மாடிக்குச் சென்று உடை மாற்றிக் கொண்டாள். சமையற்காரன் கொண்டு வந்து வைத்த சிற்றுண்டியையும், குளிர்ந்த பானத்தையும் அருந்தி விட்டு, அங்கிருந்த சோபாவில் சாய்ந்து, அன்று கல்லூரியில் நடந்த பாடங்களைப் படித்துக் கொண்டிருந்தாள். சில காலமாகவே அவள் மனம் கடந்த இரண்டு வருஷங்களில் இழந்திருந்த நிம்மதியை அடைந்திருந்தது. காலையில் எழுந்ததும் சிறிது நேரம் படிப்பு. பிறகு குளித்து ஆடை அணிந்து சாப்பிட்டு விட்டுக் கல்லூரிக்குப் போவது. அதன் பிறகு அங்கு நண்பர்களுடன் உற்சாகமாகப் பொழுதைக் கழிப்பது, மாலை வீட்டுக்கு வந்ததும் சிறிது ஓய்வு எடுத்துக் கொண்டு மறுபடியும் பாடங்களைப் படிப்பது என்று அவள் வாழ்ககை ஒரு ஒழுங்கான முறையில் நடை பெற்று வந்தது. இந்த 'சுதந்தரமான வாழ்க்கையே அவள் மனத்தைப் பெரிதும் கவர்ந்திருந்தது.

கையிலிருந்த புஸ்தகத்தை மேஜைமீது வைத்துவிட்டு, அவள் கீழே இறங்கி வந்தபோது கூடத்தில் அவள் உட்கார்ந்திருந்தனர். ஏதோ முக்கியமான பெற்றோல் விஷயத்தைப் பற்றி அவர்கள் பேசிக் களைத்துப் போயிருக் கிறார்கள் என்பதை அவர்களுடைய முகபாவமே காட்டியது. அம்மாவின் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள் நீலா பிறகு அவளுடைய மடியில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டாள். அந்தஅம்மாளின் கண்களிலிருந்து கண்ணீர் பெருகி வழிந்தது. நீலா தன் தாய் துக்கத்தை அடக்க முடியாமல் விசும்புவதைக் கேட்டு நிமிர்ந்து, "ஏனம்மா அழுகிறாய்?” என்றுகேட்டாள்.
.
அந்த அம்மாளின் மனத்தில் அவளுடைய பால்ய காலத்து நினைவுகள் எழுந்தன. நீலாவுக்கு முன்பு நான்கு ஆண் குழந்தைகள் அவளுக்குப் பிறந்து இறந்து போயின. ஒவ்வொன்றும் தங்க விக்ரகம் மாதிரி இருந்தது. பெட்டி பெட்டியாக வித விதமான உடுப்புக்களாக வாங்கி வைத்திருந்தாள். ஒவ்வொரு மகனும் படித்துப் பட்டம் பெற்று ஒவ்வொரு துறையில் பிரகாசிப்பான் என்று கனவு கண்டாள். முதல் குழந்தை தவறிப்போனதும், சில காலமே அந்த வருத்தம் இருந்தது. இரண்டாவது குழந்தை மூன்று வயசுவரை வளர்ந்து போய்விட்டது. மூன்றாவது குழந்தை கார் விபத்தில் சிக்கி மாண்டு விட்டது. நான்காவது பிள்ளையும் ஏதோ நோயினால் போய்விடவே அந்தத் தாய் உள்ளம் பூர்ண ஆயுளைப் படைத்த ஒரு குழந்தைக்காக ஏங்கித் தவித்தது. பிறகுதான் நீலா பிறந்தாள்.

நீலா வளர்க்கப்பட்ட சூழ்நிலையே வேறு. பிறந்த ஐந்தாறு வயசு வரையில் அவளை ஆணா பெண்ணா என்று யாருமே கண்டுபிடிக்க முடியாது, தலையை 'கிராப்' வெட்டி, நிஜாரும், சட்டையும் போட்டுப் பார்த்து மகிழ்ந்தாள் தாய். அவள் பெரியவளாகி படிப்பில் நிவிரமான ஆசையை வெளியிட்டபோது, அவளுடைய மனம் ஆனந்தத்தில் ஆழ்ந்து விட்டது.

''குழந்தையை அழைத்துக் கொண்டு நாம் இருவருமே அயல் நாடுகளுக்குப் போய் வரலாம்" என்று அவள் தன் கணவனிடம் கூறினாள். வைத்திய சாஸ்திரத்தில் பிரத்யேகமான முறையில் அவள் பயிற்சி பெற அவளை அமெரிக்காவுக்கு அனுப்புவதாகப் பெற்றோர் தீர்மானித்து வைத்திருந்தார்கள்.

வீட்டில் அவளைப் பற்றிப் பேசும் போதெல்லாம் அவளு டைய கல்வியைப் பற்றியே பேசினார்கள். சமையல் அறையை வைத்துக் கொள்ள வேண்டிய முறை எப்படி? கல்யாண மானால் கணவனுடன்சுக துக்கங்களில் வாழ்க்கையை எப்படிப் பகிர்ந்து கொள்வது? தாயாகி மக்களைப் பெற்று வளர்க்கும் போது ஏற்படும் கடமைகள் ஒன்றையும் நீலா கவனித்தவள் இல்லை. அவளுக்குப் பிறகு அந்த வீட்டில் குழந்தையே இல்லையே! பதினெட்டு வயசு ஆன பிறகு கூட அவளே ஒரு குழந்தை போலத் தானே இருந்து வந்தாள்?

திடீரென்று டாக்டர் மகாதேவன் தன் பெண்ணுக்குக் கல்யாணத்தை நிச்சயம் செய்து, முடித்தும் வைத்தார். இம்மாதிரி சூழ்நிலையில் வளர்ந்த பெண்ணைக் குடும்ப வாழ்க்கைக்கு எப்படித் திருப்புவது என்பதே அந்த அம்மாளின் துக்கத்துக்குக் காரணமாக இருந்தது.

கண்களைப் புடைவைத் தலைப்பால் துடைத்துக் கொண்டே, "ஒன்றுமில்லை அம்மா! நீ மறுபடியும் புக்ககம் போக வேண்டாமா? உன் புருஷன் வந்து கூப்பிட்டால் என்ன சொல்லப் போகிறாய்? அப்பாவும்,பெண்ணுமாக ஏதோ தீர்மானம் பண்ணிக் கொண்டு பேசாமல் இருக்கிறீர் களே ! நீ வேறு காலேஜில் சேர்ந்து விட்டாய்" என்று கேட்டாள் தாய்.

நீலா தன் அகன்ற கண்களால் தாயை ஏறிட்டுப் பார்த்தாள். பிறகு நிதானமும் உறுதியும் தொனிக்கும் குரலில், "அம்மா! எனக்கு விவரம் தெரிந்த நாளாக ஒரு ஆண் குழந்தையைப் போல என்னை வளர்த்தது நீ தானே? நீலா! வாடா கண்ணா! என்று என்னை அன்புடன் அழைத்ததும் நீதானே? நான் பெரிய டாக்டர் ஆகி, பெரிய மேதையாகவும் ஆக வேண்டும் என்று நீயும், அப்பாவும் ஓயாமல் பேசி வந்தீர்களே? என் மனத்துக்குள் நீங்கள் இட்ட வித்து நன்றாக ஊன்றி முளைக்கும்போது என்னைப் பல கட்டுப்பாடுகளுக்கிடையில் வாழச் சொன்னால் அந்த <வாழ்க்கை எனக்கு ஒத்து வரவில்லையே அம்மா? அன்பில்லாத கணவன் அல்லது என்னைப் புரிந்து கொள்ளாத கணவன், பழைய வழக்கங்களில் ஊறிப் போன மாமியார், குடும்ப வாழ்க்கையில் இருக்கும் அநேகக் கட்டுப் பாடுகள் இவை யெல்லாம் என்னுடைய மனசுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. காதல் என்றளவில் கதைகளிலும், காவியங்களிலும் தான் இருக்கிறது என்று சொல்லத் தோன்றுகிறது. அம்மா! நான் உன் மகனாகவே இருக் கிறேன். திடீரென்று என்னை மாற்றி விட முயலாதே!" என்றாள் நீலா.

நீலாவின் தாய் பல குழப்பங்களிடையே சிக்கித் தவித்தாள். பெண்ணை இப்படி வளர்த்தது தன் தவறு என்பதை ஓயாமல் மனத்துக்குள் சொல்லிக் கொண்டாள். குடும்பச் சூழ்நிலையிலே ஒவ்வொரு பெண்ணும் தாயிட மிருந்து அறிய வேண்டிய பாடங்கள் ஒன்றையும் தான் நீலாவுக்குப் போதிக்காமல் விட்ட தவறை உணர்ந்தாள். சுட்ட மண்ணைப் போல் ஒட்டாமல் போன அவளுடைய மணவாழ்க்கையைப் பார்த்துக் குழந்தை வளர்ப்பில் தாயினுடைய பங்கு எவ்வளவு முக்கியமானது என்பதை நினைத்து வியந்தாள் அவள்.

டாக்டர் மகாதேவனுடைய மனம் அவருடைய மனைவி யின் மனத்தை விட இன்னும் முதிர்ச்சியை அடைந்திருந்தது. 'மனைவியை ஒதுக்கி, வேறு கல்யாணமே செய்து கொண்டு நம் நாட்டில் வாழ ஆண்களுக்கு மட்டும் உரிமை உண்டு. பெண், ஏதோ அவசியமான சில காரணங்களால் கணவனிடமிருந்து விலகி வாழக்கூடாதா என்ன' என்று நினைத்தார்.
நீலா சங்கரனிடமிருந்து விலகி வாழ விரும்புகிறாள் என்பதை அறிந்து கொண்டு அதை அனுசரித்தே அவளைக் காலேஜில் சேர்த்து விட்டார்.
----------

14. எதிர்பாராத சம்பவங்கள்

அன்று மாசி நோன்பு. 'ஒருக்காலும் கணவனை விட்டுப் பிரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காகப் பெண்கள் அன்னை கௌரியை வணங்கிப் பூசிக்கும் தினம். அதிகாலையில் எழுந்து சம்பகம் நோன்புக்காக ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தாள். பலபலவென்று பொழுது விடியும் வேளையில் வீட்டில் இருப்பவர்கள் பூஜை செய்து, மங்களகரமான மஞ்சள் சரட்டைக் கழுத்தில் கட்டிக் கொண்டார்கள். சம்பகத்தின் மனத்திலே தேவியை வணங்கும்போது, ஒரு விதத் தாபம் ஏற்பட்டது.

''கணவனைப் பிரிந்து வாடுவது எத்தனை துயரமான விஷயம்! அந்தப் பிரிவு சகிக்க முடியாததாக இருந்தால் நோன்புகள், விரதங்கள் செய்து தேவியின் அருளை யாசித்துப் பெற முயற்சி செய்கிறோம். அவள் கணவன் உயிருடன் அவளைப் பிரிந்து போய் எத்தனை வருஷங்கள் ஆயின? இனிமேல் வாழ்க்கையில் அவனுடன் அவள் சேர்ந்து வாழப்போகிறாளா" என்றெல்லாம் கேள்விகள் எழுந்து, சுடு சரமாக அவள் இதயத்தைப் பொசுக்கின.

இலையிலே வைத்திருந்த பலகாரங்களைக் கூடச் சாப்பிடாமல் உட்கார்ந்திருந்த சம்பகத்தைத் தேடி சர்மா சமையலறைக்கு வந்தார். பணிவும், அடக்கமும் உருவான சம்பகம் அவரைக் கண்டதும் மரியாதையுடன் எழுந்து நின்றாள்.

''அம்மா சம்பகம்! உன் பெயருக்கு ஒரு கடிதம் வந்திருக்கிறது. உன் புருஷன் தான் எழுதி இருப்பான். எழுத்தைப் பார்த்தால் அப்படித்தான் இருக்கிறது. எனக்கும் ஒரு கடிதம் போட்டிருக்கிறான்" என்று கூறி, அவளிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்து விட்டுப் போனார். சம்பகம்அவசரமாக எழுந்து தன் அறைக்குள் சென்று கடிதத்தைப் பிரித்து வாசிக்க ஆரம்பித்தாள்.

“அன்புள்ள சம்பகத்துக்கு ஆசீர்வாதம். அன்புக்கும் ஆசைக்கும் அர்த்தம் தெரியாத எனக்கு உன்னை 'அன்புள்ள சம்பகம்' என்று அழைக்கவே தயக்கமாக இருக்கிறது. உன்னுடைய நலனையோ, நம்முடைய குழந்தையின் நலனையோ இத்தனை வருஷங்களாக அறிந்து கொள்ளாமல் இருந்த என்னை மன்னித்து விடு...!"

இதுவரையில் படித்தவுடன் கண்களில் நீர் வழியத் தன் மனதுக்குள், "மன்னிப்பா? அதெல்லாம் எதற்கு? கணவன் என்று கைப்பிடித்த நாளாய் யாருடைய அன்பை சதம் என்று நம்பி இருக்கிறேனோ அந்த அன்பர் என்னை நினைவு வை'த்துக் கொண்டிருக்கிறார் என்பது ஒன்றே போதாதா?" என்று எண்ணினாள் சம்பகம். பிறகு மேலும் தொடர்ந்து படிக்க ஆரம்பித்தாள்.

"நான் சீக்கிரமே தாய்நாடு திரும்புகிறேன். மனிதன், மனத்தை அடக்கத் தெரியாததனாலும், சந்தர்ப்பக் கோளாறுகளாலும் வாழ்க்கையில் நெறி தவறி விடுவது சகஜம்தான். பகவானே தன்னுடைய அவதாரங்களுக்குத் தகுந்தபடி தர்மங்களை அனுசரித்ததாக நாம் கதைகளில் படிக்கிறோம். இங்கே என்னுடன் வாழ்ந்த பெண் என்னை விவாகரத்துச் செய்து விட்டாள். இந்த நாட்டில் அதற்கெல்லாம் அவசியமான காரணங்கள் தேவையில்லை. ஒரே கால்சாரங்களை அனுஷ்டிக்கும் தம்பதிகளில் சிலர், றம் நாட்டில் ஒத்து வாழ முடியாமல் சண்டையும், பூசலுமாக வாழ்க்கை நடத்துவது உனக்குத் தெரியும். ஆகவே, வெவ்வேறு பழக்க வழக்கங்களில் ஊறிப் போன எங்களுக்குள் நாளுக்கு நாள் அபிப்பிராய பேதம் தான் திகமாயின. முடிவில் அவளும் நானும் விலகி விட்டோம்! இது இங்கே சர்வ சகஜமான நிகழ்ச்சி. இதனால் எங்கள் இருவர் மனத்திலும் வருத்தமோ, அனுதாபமோ எதுவும் எழவில்லை.

"சம்பகா! நான் பிறந்து வளர்ந்து பெரியவனாகி உன்னைக் கைப்பிடித்த பொன்னாட்டைத் தேடி வருகிறேன். பூப் போன்ற உன் மனத்தை எவ்வளவோ நோக வைத்து விட்டேன். அழகே உருவான உன் கண்கள் கண்ணீரை ஆறாகப் பெருக்க நான் காரணமாகி விட்டேன். என்னை நீ எப்படி ஏற்றுக் கொள்வாயோ, எனக்குத் தெரியவில்லை."

சம்பகம் அப்படியே பிரமை பிடித்தவள் போல் அந்தக் கடிதத்தைக் கையில் வைத்துக் கொண்டு உட்கார்ந் திருந்தாள். பிறகு அதை ஆவலுடன் மார்பில் அணைத்துக் கொண்டாள். கண்களில் ஒற்றிக் கொண்டாள். குழந்தை பானு அப்பொழுது வீட்டில் இல்லை! பள்ளிக்கூடம் போயிருந்தாள்.

"கண்ணே! உன் அப்பா வருகிறாராமடி, உன்னைப் பார்க்க! உனக்கு 'வெள்ளைக்கார' பொம்மை யெல்லாம் வாங்கி வருவார். வைத்துக் கொண்டு விளையாடலாம்?" என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்.

உவகை நிறைந்த மனத்துடன் சமையலறைக்குள் சென்று சமையற்கார அம்மாளிடம், "மாமி! என் கஷ்டம் எல்லாம் விடிந்து விட்டது. அவர் வருகிறாராம்" என்று கூறினாள். சமையற்கார மாமி கையில் பிடித்த கரண்டியுடன் அப்படியே ஸ்தம்பித்து நின்றாள். "அப்படியா சம்பகம்! அந்தக் கற்பகாம்பிகை கண் திறந்து விட்டாளடி!" என்றாள்.

அந்தச் சந்தோஷ செய்தியைச் சம்பகம் வேறு யாரிடத்திலும் தெரிவிக்கவில்லை. கணவன் வருகிறான் என்கிற பூரிப்பில் எழுந்த அந்த இன்பத்தை அவளே அனுபவித்தாள். அதை வேறு ஒருவருடனும் பகிர்ந்து கொள்ள அவள் மனம் இடம் கொடுக்கவில்லை. கணவனை வருஷக் கணக்கில் பிரிந்து இருந்த பிறகு ஒன்று சேரும் தம்பதிகளுக்குத் தான் அந்த இன்பத்தைப் பற்றிப் புரியும்.

சர்மாவின் வீட்டில் சில மாதங்களாகவே எதிர்பாராத சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. எவ்வளவோ ஆசையுடன் சீரும் சிறப்புமாகப் பணக்கார இடத்தில் பிள்ளைக்குக் கல்யாணம் பண்ணி வைத்தாள் மீனாட்சி அம்மாள். அவர்களின் வாழ்க்கை பிளவு பட்டுப் போனதையும் பார்த்தாள் அவள். அன்பும், ஆசையும் பணத்தால் விலை கொடுத்து வாங்க முடியாது என்பதையும் அவள் தெரிந்து கொண்டுதான் இருக்க வேண்டும். தகப்பனாரிடம் சங்கரன், நீலாவுக்கும், தனக்கும் நடந்த பேச்சைப் பற்றிக் கூறியபோது, அவ்வளவு வயதானவராக இருந்தாலும் அவருக்கே திகைப்பு உண்டாகியது. "அப்பொழுதே சொன்னேன். உன் அம்மாதான் கேட்க வில்லை. நமக்கு மிஞ்சிய சம்பந்தம் செய்யக் கூடாது என்றும் சொன்னேன். அவள் தான் கேட்கவில்லை" என்று தம் மனைவி எதிரிலேயே அவளைப் பழித்தார் சர்மா.

நான் என்னத்தைக் கண்டேன்? நீங்கள் தான் வேண்டாம் என்று உறுதியாகத் தடுத்து விடுவதுதானே?" என்று பதிலுக்கு அவரைப் பழித்தாள் மீனாட்சி.

''நன்றாய் இருக்கிறதோ இல்லையோ அதிசயம்? புருஷனுடன் வாழ முடியாது என்று விட்டாளாமே? அதுவும், அதன் கர்வமும்..!" என்று சமையற்கார மாமி வெறுமனே நொடிக்கு நூறு தரம் சொல்லிக் கொண்டிருந்தாள் சம்பகத்தினிடம். தற்கால அணுகுண்டு உலகத்தில் நடக்கும் அதிசயங்களை எல்லாம் அந்த அம்மாள் அறிந்திருந்தால் இதைப்போய் ஒரு பிரமாதமான அதிசயம் என்று சொல்லி இருக்க மாட்டாள்.

"அவள் வேண்டாமென்று சொன்னால் நீ சரியென்று சொல்லி விட்டாயாடா? பெரிய மனுஷாள் என்றால் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாமா?" என்று ருக்மிணி ஆத்திரத்துடன் கேட்டாள் சங்கரனைப் பார்த்து.

"என்னைத்தான் வேறு கல்யாணம் பண்ணிக் கொள்ளச் சொல்லி விட்டாளே?'' என்று கூறி, சங்கரன் கேலியாக நகைத்தான்,

"போகிறது! அவ்வளவாவது பெரிய மனசு பண்ணினாளே?" என்று மீனாட்சி முகத்தைக் கோணி அழகு காட்டுவது போல் வைத்துக் கொண்டாள்.

சங்கரனுக்கு நீலா அவனிடம் கூறிய வார்த்தைகள் சில காலம் வரையில் மனத்தை மிகவும் வரூத்திக்கொண். டிருந்தன. பொன்மணியிலிருந்து திரும்பியதும் உறுதியுடன் தாயின் எதிர்ப்பைச் சமாளித்து காமுவையே கல்யாணம் பண்ணிக் கொண்டிருந்தால் தன் வாழ்க்கை வேறு விதமாக அமைந்திருக்குமே? அன்பு நிறைந்த மனைவியோடு ஆனந்தமாக இருந்திருக்கலாமே? இப்போது ஊரில் எல்லோரும் பேசிச் சிரிக்கும்படி ஆகிவிட்டதல்லவா? கஷ்டமோ சுகமோ ஒரு எல்லையை மீறிப் போகும்போது மனம் ஒருவித வைராக்கிய நிலையை அடைந்து விடுகிற தல்லவா? சங்கரனின் மனத்திலும் வைராக்கியம் நிறைந் திருந்தது. நாலுபேர் பேசிச் சிரிக்கும்படியாக அவன் வாழ்க்கை மாறிவிட்ட பிறகு அவன் நெஞ்சில் ஒரு விதத் துணிவும், உறுதியும் ஏற்பட்டன. இவ்வளவுக்கும் காரணம் அந்த நீலா தானே? புருஷனின் மான அவமானத்தில் இஷ்டமில்லாத-சுயநலம் பிடித்த-ஒரு பெண்ணுடன் தன் வாழ்க்கை அமைவதை விட, அவளை விட்டுப் பிரிந்ததே மேல் என்று சங்கரன் தீர்மானித்தான். நாளடைவில் சங்கரனின் மனம் நீலாவின் வார்த்தைகளை மறக்க ஆரம்பித்தது.

இவ்விதமே ஒரு வருஷம் ஆயிற்று. காமு தன்னுடைய 'டிரெயினிங்' முடிந்து ஒரு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தாள். சங்கரன் காரியாலயத்துக்குப் போகும்போது அவளைப் பல முறைகள் வழியில் சந்தித் திருக்கிறான். பட்டிக்காட்டுப் பெண்ணாக இருந்த காமு சில வருஷங்களில் அடியோடு மாறிப்போய் படித்த பண்பாடுள்ள யுவதியாக இருப்பது அவனுக்கு மகிழ்ச்சியை அளித்தது. வழியில் எங்காவது பார்த்தால், "சௌக்யந் தானே? வேலையெல்லாம் எப்படி இருக்கிறது?" என்று கேட்பான் சங்கரன்.

"ஹூம்... சௌக்யந்தான். வேலையா? கஷ்டமாக ஒன்றுமில்லை. குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்து அவர்களுடன் பழகுவதில் ஒருவித இன்பம் சென்று என்று பதில் கூறிவிட்டு காமு ஏற்படுகிறது" விடுவாள்.. புன்சிரிப்புடன் அவள் பேசுவதும், அவனைக் கண்டதும் கைகளைக் கூப்பி 'நமஸ்காரம்' என்று சொல்வதுமே ஒரு தனி அழகாக இருந்தது.

இப்படியிருக்கையில், சர்மாவின் வீட்டில் அவரும் அவர் மனைவி மீனாட்சி அம்மாளும் நீலா கூறியதை அப்படியே நம்பவில்லை. 'என்னவோ கோபத்தினாலும், அவசரத்தினாலும் அந்தப் பெண் அப்படிப் பேசி இருக்கிறது. தானாக இங்கே வந்து சேரும்' என்று மீனாட்சி அம்மாள் சொல்லிக் கொண்டிருந்தாள்.

"அவள் வேண்டாம் என்று சொன்னால் நாம் விட்டுவிட முடியுமா? அவள் அப்பாவும், அம்மாவும் பேசாமல் இருந்து விடுவார்களா?" என்று சர்மாவைக் கேட்டாள் அந்த அம்மாள்.

'அதெல்லாம் உன் காலம், நான் உன்னை வேண்டாம் என்று சொல்லி இருந்தால், உங்கள் பிறந்தகத்து ஊர் பூராவும் திரண்டு எனக்குப் புத்திமதி கூற வந்திருப்பார்கள். நீயும் கதவு மூலையில் கண்ணைக் கசக்கிக் கொண்டு நின்றிருப்பாய். இப்பொழுது நடப்பது ஜனநாயக யுகம். திரேதாயுகம், துவாபரயுகம் மாதிரி ஜனநாயக யுகத்தில் நம் காலத்துப் பேச்சுகள் எல்லாம் செல்லாது. புருஷனுக்கு மனைவியை வேண்டாம் என்று தகுந்த காரணங்களுடன் சொல்லவும். மனைவி புருஷனை வேண்டாம் என்றுஒதுக்கவும் சட்டமே வந்துவிட்டது" என்றார் சர்மா.

"அந்தச் சட்டம் நம் வீட்டிலேதான் முதலில் வந்து நுழைய வேண்டுமா? எனக்கு ஒன்றுமே தெரிய வில்லையே! வெளியில் போகக் கூட தயக்கமாக இருக்கிறது. ஆனால் நம் சம்பந்திகள் மட்டும் காரில் ஊரை ஒரு நாளைக்கு. மூன்று சுற்றுகள் சுற்றுகிறார்கள். "புருஷனுடன் ஒத்துக் கொள்ளவில்லை. படிக்கிறாள். இதில் என்ன தவறு?'' என்று அந்த டாக்டர் வேறு நாலு பேரிடம் சொல்லு கிறாராம். ஐயோ பெருமையே!" என்றாள் மீனாட்சி,

"இப்பொழுது நீ என்னைப் படிக்க விடாமல் தொண தொணவென்று பேச வந்து விட்டாயே? இந்தத் தொந்தரவு அளவுக்கு மீறிப் போனால், நானும் உன்னை விலக்கித்தான் வைக்க வேண்டும்! விஷயம் என்னவென்று சொல்!" என்று அலுத்துக் கொண்டே கேட்டார் சர்மா.

"எதற்கும் நீங்கள் சம்பந்திக்கு ஒரு கடிதம் எழுதிக் கேட்டு விடுங்கள். பிறகு என்ன செய்வது என்று யோசிக்க லாம்" என்று கூறினாள் மீனாட்சி அம்மாள்.

சர்மாவுக்கு மனைவி கூறுவதில் நியாயம் இருப்பதாகத் தோன்றவே, அன்றே டாக்டர் மகாதேவனுக்கு ஒரு கடிதம் எழுதினார். சங்கரன் கூறியவைகளை எழுதி, நாட்டுப் பெண்ணின் படிப்புக்குத் தாம் ஒன்றும் ஆட்சேபணை செய்யவில்லை என்றும் எழுதினார், பரஸ்பரம் இரு குடும்பங்களின் நலனையும் இது பாதிக்கிறது என்றும் தெரிவித்தார்.

ஆனால், சம்பந்தியிடமிருந்து அதற்கு ஒன்றும் பதில் வரவில்லை.

சங்கரனுக்கோ, 'நீங்கள் வேறு கல்யாணம் பண்ணிக் கொள்ளுங்கள். உங்கள் சந்தோஷ வாழ்க்கையில் நான் தலையிட மாட்டேன்' என்று நீலா கூறிய சொற்கள் மணி அடிப்பது போல் அடிக்கடி செவிகளில் ஒலித்தன. 'தான் வேறு கல்யாணம் பண்ணிக் கொண்டால் என்ன? அதுவும் காமுவையே கல்யாணம் பண்ணிக் கொண்டால் என்ன?' என்று நினைத்தான் சங்கரன்.

இவ்வாறு நினைக்கும்போதெல்லாம் அவன் மனம் என்று மில்லாத சந்தோஷத்தால் நிரம்பியது. ஆனால், காமு அவனை மணப்பதற்குச் சம்மதிப்பாளா? ராமபத்திர அய்யர் நியாயத்துக்குக் கட்டுப்பட்டவர் ஆயிற்றே? அவர் இந்த விவாகத்துக்குச் சம்மதிப்பாரா? சங்கரனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. காமுவின் அபிப்பிராயத்தை யார் தெரிந்து கொண்டு வந்து சொல்லுவார்கள்? அவன் நியாயத்தை மீறி நடப்பதாக அவனுக்குத் தோன்றவில்லை. நீலாவே அவனை வேண்டாம் என்று கூறி ஒதுங்கிப் போகிறாள், ஆகவே குற்றம் அவனுடையது அல்லவே?

இந்த எண்ணம் தோன்றிய பிறகு, சில தினங்கள் வரை யில் சங்கரன் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துக் கொண்டிருந்தான். பிறகு துணிந்து தகப்பனாரிடம் தன் கருத்தை வெளியிட்டான் அவன்.

சர்மா சந்தோஷத்துடன் அவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டார். "உனக்குச் சம்மதமானால் எனக்கும் திருப்தி தான் அப்பா. பணத்துக்காக ஆசைப் பட்டுச் செய்து கொண்ட கல்யாணம் தான் இவ்வளவு லட்சணமாக இருக்கிறது. ராமபத்திரனைப் போய் நீயே கேட்டுப்பார். காமுவையும் நேரில் கேட்டு விடு. அவர்கள் சம்மதித்தால் ஒருவருக்கும் தெரியாமல் ஏதோ கோவிலில் போய்க் கல்யாணத்தைப் பண்ணிக் கொண்டு மனைவியை அழைத்து வந்து சேர்" என்றார் சர்மா பிள்ளையிடம்.

காமுவும், அவள் தகப்பனாரும் சரி என்று கூற வேண்டுமே என்று தெய்வங்களை எல்லாம் பிரார்த்தித்துக் கொண்டான் சங்கரன்.

அடுத்த நாள் அதிகாலையில் காரியாலயத்துக்கு விடுமுறை எழுதி விட்டு ராமபத்திர அய்யரைப் பார்ப்பதற் குக் கிளம்பினான் சங்கரன். அவன் தெருவுக்கு வரும்போது தந்திச் சேவகன் ஒருவன் சங்கரனிடம் தந்தி ஒன்றைக் கொடுத்து விட்டுச் சென்றான். சர்மாவின் பெயருக்குத் தந்தி வந்திருந்தது. 'யாரிடமிருந்து வந்திருக்கும்' என்கிற கலக்கத்துடன் தந்தியைப் பிரித்து வாசித்த சங்கரன

சந்தோஷ மிகுதியால் பேச முடியாமல் தவித்தான். சற்று நிதானித்து, பிரித்த கடுதாசியை எடுத்துக் கொண்டு பின் கட்டில் வேலையாக இருந்த சம்பகத்தைத் தேடிச் சென்று "மன்னி! உங்களுக்கு அதிர்ஷ்டகாலம் ஆரம்பமாகி விட்டது, சூரியனைக் கண்ட பனித்துளி போல் உங்களுக்கும் விடிவு காலம் ஆரம்பமாகி இருக்கிறது. பம்பாயிலிருந்து அண்ணா தாய் நாடு திரும்பி விட்டதைத் தெரிவித்திருக்கிறார். கூடிய சீக்கிரம் இங்கே வருகிறாராம்" என்று சங்கரன் நாக் குழறக் கூறி முடித்தான்.

சம்பகம் சிலை போல் வாயடைத்து நின்றாள். அசோக வனத்தில் துயருடன் வாடிய லோகமாதாவிடம் அனுமன் ராமனைப் பற்றிய செய்தியை அறிவித்த போது, அந்த ராமதூதனை மனதார வாழ்த்தினாளாம் சீதாதேவி. அது போல சங்கரனை எப்படி எந்த விதமாக வாழ்த்துவது என்பது புரியாமல் திகைத்தாள் சம்பகம். பல முறை சுவாமி படத்தருகில் விழுந்து வணங்கினாள். ஆனந்த மிகுதியால் அவள் கண்களில் நீர் பெருகி வழிவதைப் பார்த்து சங்கரன், தான் ஒன்றும் இந்தச் சமயத்தில் பேசக் கூடாது என்று தீர்மானித்து சந்தோஷம் பூராவையும் சம்பகமே அனுபவிக் கட்டும் என்று நினைத்து அங்கிருந்து போய் விட்டான்.

சர்மா திருப்பித் திருப்பி தந்தியை வாசித்தார்.

"அடியே! உன் பெரிய பிள்ளை வருகிறானாம். தெரியுமா சேதி?" என்று மனைவியை இரைந்து கூப்பிட்டுப் பிறகு இருவருமாக அந்தச் சந்தோஷச் செய்தியை அனுபவித்தார்கள்.

சங்கரன் காமுவின் வீட்டிற்குக் காரில் போய்க் கொண் டிருந்தாலும் அவன் மனம் அதை விட வேகமாக அவ்விடத்தை நோக்கிச் சென்றது. எதிர்பாராத விதமாக அதுவும் காலை வேளையில் சங்கரன் திடும் என்று வந்தது காமுவுக்கும், அவள் தகப்பனாருக்கும் ஆச்சர்யமாக இருந்தது

"உட்கார் சங்கரா! ரொம்ப நாட்களாக உன்னைக் காணவே இல்லையே?" என்று விசாரித்தார் ராமபத்திர அய்யர்.

"வீட்டிலே ஏகப்பட்ட மாறுதல்கள் நடந்து விட்டன மாமா!" என்றான் சங்கரன். ராமபத்திர அய்யருக்குத் தூக்கிவாரிப் போட்டது!

"எல்லோரும் சௌக்யம்தானே அப்பா? நீலா உங்கள் வீட்டுக்கு வந்து விட்டாளா? குழந்தை போய் விட்டதாமே? என்னவோ எதற்கும் கொடுத்து வைக்க வேண்டாமா அப்பா?" என்று குடும்ப விஷயங்களையெல்லாம் விசாரித்தார்.

சங்கரன் ஆவலுடன் சமையலறைப் பக்கமே பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு அவர் பேசும் பேச்சுக்கள் ஒன்றும் சுவாரஸ்யப் புடவில்லை. இதற்குள் காமு ஏதோ வேலையாகக் கூடத்துக்கு வந்தவள் சங்கரனை பார்த்து, "ஏதேது! அத்தி பூத்தது. போல் வந்து விட்டீர்கள்? ரொம்ப நாட்கள் ஆயிற்றே?" என்று கேட்டாள் குறும்பாகச் சிரித்துக் கொண்டு.

பொன்மணி கிராமத்தில் எந்தச் சிரிப்பை தன்னுடைய தாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்று நினைத்திருந் தானோ அதே கபடமற்ற குறும்புச் சிரிப்பை இன்று பார்த்து ஆனந்தமடைந்தான் சங்கரன். காமு சரேலென்று சமையல் அறைக்குள் சென்று விட்டாள். மறுபடியும் ராமபத்திரய்யர் ஏதோ தொணதொணவென்று பேச ஆரம்பித்தார்.

"மாசக் கணக்கில் பிறந்த வீட்டில் நீலாவை விட்டு வைத்திருக்கிறாயே சங்கரா. அழைத்து வந்து விடுவது தானே?” என்று கேட்டார் ராமபத்திர் அய்யர்,

''அழைத்து வருவதா? இனிமேல் அதெல்லாம் இல்லை மாமா. அவளுக்கும் எனக்கும் ஏற்பட்டிருந்த பந்தம் நீங்கி விட்டது. அவளுக்கு என்னுடன் வாழ்க்கை நடத்துவதற்கு இஷ்டம் இல்லையாம். திரும்பத் திரும்ப சண்டையும் பூசலும்தான் ஏற்படுமாம். நான் போய் அவளை அழைத்த தற்கு அவள் கூறிய பதில் இது" என்றான் சங்கரன்.

ராமபத்திர அய்யருக்கு இதெல்லாம் வினோதமாக இருந்தது.காலம் எப்படித் தலைகீழாக மாறி இருக்கிறது என்பதை நினைத்து ஆச்சர்யப்பட்டார் அவர்.

அடுப்பங்கரையில் அவசர வேலையில் ஈடுபட்டிருந்த காமு கூட அதை அப்படியே போட்டுவிட்டு ஓடி வந்து கேட்டாள். ஆச்சர்யத்தில் அழகிய விழிகள் மலர சங்கரனை விழித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
----------------

15. காமுவின் கல்யாணம்

நீலாவா சங்கரனை வேண்டாம் என்கிறாள்? இந்திர பதவியை வேண்டாம் என்றானாம் ஒருவன்! அதைப்போல அல்லவா இருக்கிறது இந்த விஷயம்? அழகும், படிப்பும், குணமும் நிரம்பிய சங்கரனை மணந்த பாக்கியசாலி அவள் என்று அல்லவா நீலாவைக் காமு நினைத்திருந்தாள்? அந்த பாக்கியம் தனக்குக் கிட்டவில்லையே என்று அவள் ஏங்குவது கொஞ்சமா? காமுவின் மனம் இவ்விதம் எண்ண மிட்டது.

சங்கரன், தான் அங்கு வந்திருக்கும் காரணத்தைக் கூறி ராமபத்திர அய்யரை எப்படிக் கேட்பது என்று புரியாமல் விழித்தான். தன்னுடைய மறு விவாகத்தைப் பற்றி அவராகவே கேட்பாரா என்றும் எதிர்பார்த்தான். ஆனால் பரந்த மனமுடைய ராமபத்திர அய்யர் ஒன்றும் பேசவில்லை.

“பிறகு என்ன செய்யப் போகிறாய்? வயசான காலத் தில் உன் அப்பாவுக்குத் தான் இதெல்லாம் கஷ்டம். மீனாட்சி எப்பொழுதுமே பணத்துக்குத் தான் மதிப்பு கொடுத்து வருகிறாள் அப்பா. சம்பகம் பணக்கார இடத்துப் பெண்தான். இருந்தாலும் பதவிசாக இல்லையா? பாவம்?” என்று சம்பகத்துக்காக அனுதாபப்பட்டார். அவர். அவர் சம்பகத்தைப் பற்றி பேசியதும் சங்கரனுக்குக் காலையில் வந்த தந்தியின் நினைவு வந்தது. "மாமா! என் மதனிக்கு விடிவு காலம் வந்து விட்டது. அண்ணா இன்னும் சில தினங்களில் இங்கே வரப் போவதாக இன்று காலையில் தந்தி வந்தது" என்றான்.

'அப்படியா? ரொம்ப சந்தோஷம் சங்கரா! அந்தப் பெண்ணின் பொறுமைக்குப் பலன் இல்லாமல் போகுமா? அதிர்ந்து ஒரு வார்த்தை பேசமாட்டாள் சம்பகம்" என்று அவள் குணத்தைப் புகழ்ந்து பேசினார் ராமபத்திர அய்யர்.

மறுபடியும் சங்கரனுக்கு இக்கட்டான நிலைமை ஏற்பட்டது. "காமுவை எனக்குக் கல்யாணம் பண்ணித் தருகிறீர்களா?” என்று அவன் எப்படிக் கேட்க முடியும்? ஏற்கெனவேயே அவன் வார்த்தைக்குத்தான் மதிப்புக் குறைந்து விட்டதே? "வருகிறேன் மாமா. இன்றோ நாளையோ அப்பா வந்து உங்களைப் பார்க்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்" என்று கூறிவிட்டுப் புறப்பட்டான் சங்கரன்.

மூத்த பிள்ளை ஊரிலிருந்து வரப் போகிறான் என்று கடிதம் வந்தவுடன் சர்மா அவனை வரவேற்பதற்கு ஆயத்தம் செய்ய ஆரம்பித்தார். அவர் அடிக்கடி வெளியில் போவதும், தம் அறையில் உட்கார்ந்து யாருடனோ பேசுவதும் மீனாட்சி அம்மாளுக்கு ஒன்றுமே புரியவில்லை.

என்றும் போலவே சம்பகம் நடந்து கொண்டாள். அவளுடைய மனத்தில் பொங்கித் ததும்பும் மகிழ்ச்சியை அவள் ஒவ்வொரு பேச்சும் செய்கையும் காட்டிக் கொண்டிருந்தன. ஆனால் சிறிதாவது கர்வமோ, அகம்பாவமோ அவளிடத்தில் காணப்படவில்லை. அளவுக்கு மீறிய கஷ்டங் களினாலும், சோதனைகளினாலும் அவள் மனம் பக்குவம் அடைந்திருந்தது.

வழக்கம்போல் அவள் சர்மாவின் அறைக்குள் சென்று அவருடைய புஸ்தக அலமாரியை ஒழித்துச் சுத்தம் செய்து, அவைகளை ஒழுங்காக அடுக்கிக் கொண்டிருந்தாள். வெளியே போயிருந்த சர்மா வீடு திரும்பியதும் நேராகச் சமையலறைக்குள் சென்று சம்பகத்தைத் தேடினார். பிறகு வாசலில் தன் அறைக்குள் அவள் இருப்பது தெரியவே அங்கு வந்தார்.

'கருமமே கண்ணாயினார்’ என்கிறபடி சம்பகத்தின் உள்ளம் தன்னுடைய கடமைகளிலிருந்து நழுவாமல் இருப்ப தைப் பார்த்து சர்மா உளம் கனிந்தார். இன்றோ, நாளையோ புருஷன் ஊரிலிருந்து வரப்போகிறான். மேல் நாட்டில் படித்துப் பட்டம் பெற்றவன், இங்கே வந்த பிறகும் ஆயிரக் கணக்கில் சம்பாதிக்கும் திறமை உள்ளவன். ஒருதரம் பிழை செய்து அதிலிருந்து மீண்டு புதுவாழ்வை நாடி வருகிறான். 'கணவன் வரப்போகிறான். தன்னுடைய கஷ்ட காலத்துக்கு விடிவு ஏற்பட்டு விட்டது. இனிமேல் இந்த மனிதர்களின் தயவு நமக்கு எதற்கு' என்று அவள் இறுமாந்து விடவில்லை. காலையில் சர்மா குளிக்கும் வெந்நீரிலிருந்து இரவு அவர் சாப்பிடும் பால் வரையில் ஆக வேண்டியதைக் கவனித்துச் செய்துதான் வருகிறாள். பெரியவர்களுக்குத் தொண்டு செய்யும் பண்பு அவள் உள்ளத்தில் புதைந்து விட்டது. நாளை கணவன் வந்த பிறகும் சம்பகம் மாற மாட்டாள்.

உள்ளம் நெகிழ்ந்ததால் கண்களில் துளித்த நீரைத் துடைத்துக் கொண்டே சர்மா, அம்மா, சம்பகம்! உனக்கென்று மாம்பலத்தில் ஒரு வீடு வாங்கி விட்டேன். அவன் வந்தால் நீ அங்கே உன் குடும்பத்தை நடத்த ஆரம்பிக்கலாம்" என்றார். பெரியவர் சொல்வதைக் கேட்டு சம்பகம் பேசாமல் நின்றாள்.

"நீயும், அவனும் இனிமேல் தனியாகத்தான் இருக்க வேண்டும். உனக்கு அவன், அவனுக்கு நீ. இடையில் நாங்கள் எல்லாம் அவசியமில்லை. விருந்தாளிகளைப் போ ல் வருவோம், போவோம். நீயும், அவனும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ்க்கை நடத்தத்தான் இந்த ஏற்பாடு. அதோடு, உனக்குச் சோதனைகள் ஆரம்பமான இந்த வீட்டில் இருந்து உன் மன நிம்மதியை மேலும் குறைத்துக் கொள்ள வேண்டாம்" என்றார்.

சம்பகம் தன்னுடைய அபிப்பிராயத்தைக் கூறுமுன், மீனாட்சி அம்மாள் அங்கு வந்தாள். சம்பகத்தைக் கவனித்து விட்டுச் சர்மாவைப் பார்த்து, "மாம்பலத்தில் வீடு வாங்கி யிருக்கிறீர்களாமே?" என்று கேட்டாள்.

"ஆமாம், விலை படிந்து வாங்கிய பிறகு உங்களிடம் சொல்லலாம் என்று இருந்தேன். நாளை மத்தியானம் அவன் வருகிறான். அதற்கு அடுத்த நாள் சம்பகமும், அவனும் அங்கே தனிக் குடித்தனம் ஆரம்பிக்கட்டும்" என்றார் சர்மா.
மீனாட்சி அம்மாளின் சுபாவமான கோபம் தலையெடுத்தது. “வீடுதான் வாங்கியாகி விட்டது. வந்ததும் வராததுமாக இருக்கும் போதே தனிக் குடித்தனத் துக்கும் ஏற்பாடு பண்ணி விட்டீர்களா? நான் அவனைப் பார்த்து எத்தனை வருஷங்கள் ஆயின? அவனோடு எவ்வளவோ பேச வேண்டும் என்று எனக்கு ஆசையாக இருக்காதா?" என்றாள்.

‘ஆசையாக இருந்தால் அவன் வீட்டிலே போய்ப் பேசுகிறது. உன்னை அங்கே போகக்கூடாது என்று நான் சொல்லவில்லையே. அதுவும் உன் வீடு தானே?" என்று சாந்தமாகவே பேசினார் சர்மா.

'ஆமாம்... எல்லாம் என்னுடையதுதான்! பேசுவீர்கள்! அப்படி என்றால், ஒன்றாக எல்லோரும் இருந்து விட்டுப் போகிறோம், எதற்காகப் பிரித்து வைக்கிறீர்களாம்?"

சர்மா சிரித்தார். பிறகு அலட்சியம் நிறைந்த குரலில், "ஒன்றாக இருப்பதா? இத்தனை வருஷங்கள் சம்பகம் நம்முடன் ஒன்றாக இருந்தது போதுமே! இனிமேல் அவள் அவளுடைய வீட்டிலேயே இருக்கட்டும். உனக்குப் பெரிய பிள்ளையிடம் போய் இருக்க ஆசையாக இருந்தால் அங்கே போய் இரு. சங்கரனிடம் இருப்பதானாலும் இங்கேயே இருக்கலாம். ஒற்றுமையும் ஐக்யமும் இருக்கும் வரையில் தான் கூட்டுக் குடும்பம் நடத்த முடியும். அது இல்லை என்று ஏற்பட்ட பிறகு மனஸ்தாபங்களை வளர்த்துக் கொண் டாவது ஒன்றாகத் தான் இருக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல" என்றார் சர்மா.

தாய்க்குப் பின்னால் வந்து இதுவரையில் இவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த ருக்மிணி, "அப்பாவுக்கு எப்பொழுதுமே அண்ணா பேரிலே ஆசை அதிகம். அதுவும், அவன் சீமைக்கெல்லாம் போய்ப் படித்துவிட்டு வருகிறான் என்றால் அவரைப் பிடிக்க முடியுமா இனிமேல்?" என்றாள்.

சர்மா மகளைக் கேலியாகப் பார்த்தார். "என்னை நீங்கள் எல்லோரும் புரிந்து கொண்டது இவ்வளவுதான்! எனக்கு எல்லோருமே ஒன்றுதான். நாளைக்கு உன் புருஷன் ரங்கூனை விட்டு இங்கே வருகிறான் என்றால் உனக்கும் ஒரு வீடு வாங்கி வைத்து விடுவேன். அப்பொழுது உன் அம்மா பாடுதான் திண்டாட்டமாக முடியும். பெரிய பிள்ளையிடம் இருப்பதா, சங்கரனிடம் இருப்பதா அல்லது உன் வீட்டுக்கு வருவதா என்று புரியாமல் திணறிப் போவாள்” என்றார்.

திணறவும் வேண்டாம், திண்டாடவும் வேண்டாம். யார் வேண்டுமானாலும் எங்கேயாவது போகட்டும். நான் சிவனே என்று உங்களோடு இருந்து விட்டுப் போகிறேன், வயசான காலத்தில் நாம் இருவரும் ஒருவரை விட்டு ஒருவர் தனியாக இருப்பானேன்?" என்று கூறி மீனாட்சி அம்மாள் அங்கே நடந்து வந்தவாக்குவாதத்தை முடித்துவைத்தாள்.

அடுத்த நாள் சம்பகத்தின் கணவன் ஊரிலிருந்து வந்தான். அவனும், அவன் மனைவியும், குழந்தையும் தனிக் குடித்தனம் போகும் முன் மீனாட்சி அம்மாள் வீட்டுக்கு வேண்டிய பண்டங்களை எடுத்து வைத்தாள்.

"போனதும், போகாததுமாக நீ ஒன்றுக்கும் கடைக்கு அலைய வேண்டாம். ஒரு மாசத்துக்கு மேல் காணும்படி சமையல் பண்டங்கள் அந்தக் கூடையில் வைத்திருக்கிறேன்'' என்றாள்.

"சங்கரா! அண்ணா வீட்டிற்கு இரண்டு மூட்டை அரிசி அனுப்ப வேண்டும். வண்டி பார்த்துக் கொண்டு வந்தாயானால் தேவலை. இன்றைக்குத் தேவையான சாப்பாட்டை 'காரிய'ரில் கொண்டு போங்கள். நாளைக்கு வெள்ளிக்கிழமை. காலையில் அடுப்பு மூட்டலாம். ஒரு பாயசம் வைத்து விடு சம்பகம்" என்றாள்.

தாயாரையும், தகப்பனாரையும் நமஸ்கரித்து நின்ற சம்பகத்தையும், பிள்ளையையும் பார்த்துக் கண் கலங்கினாள் மீனாட்சி அம்மாள்.

"என்னவோ அப்பா! இனிமேலாவது நீ குடியும் குடித்தனமுமாக இருக்க வேண்டும். போய் விட்டு வா சம்பகம். அவனைப்பார்த்துக் கொள்" என்றாள்.

பேயாக இருந்தாலும் தாய் என்பார்கள். தாயின் அன்புக்கு முன் அவளுடைய கொடுமைகள், துர்க்குணங்கள் யாவும் மறைந்து போயின. நாட்டுப் பெண்ணின் அதிர்ஷ்டத் தினால்தான் பிள்ளை தங்களை விட்டுப் போய் விட்டான் என்று தன் வெறுப்பைச் சம்பகத்தின் பேரில் காட்டி வந்தாள் மீனாட்சி அம்மாள். இது ஒருவிதமான அறியாமை என்றுதான் சொல்ல வேண்டும். இப்பொழுது அவளுக்கு நாட்டுப் பெண்ணின் அதிர்ஷ்டத்தில் அபாரமான நம்பிக்கை விழுந்து விட்டது.

மறுபடியும் பொன்மணி <கிராமத்துப் பெருமாள் கோவிலுக்கு முன்பு நாம் சந்திக்கிறோம். சங்கரனும் காமுவும் அங்கு சந்தித்து மணம் செய்து கொள்ளும் போது நாமும் சந்திக்க வேண்டியது அவசியமல்லவா? சங்கராந்தி கழித்து ஆறேழு தினங்களே ஆகி இருந்தபடியால் கிராமத்தின் சுற்றுப் புறங்களையும், வயல் வெளிகளையும், வீடுகளையும் பனிப்படலம் லேசாக மறைத்துக் கொண்டிருந்தது. மூலஸ்தானத்தில் திருத்துழாய் மார்பும். அதில் பிரியாமல் வாசம் செய்யும் ஸ்ரீ மகாலட்சுமியுடனும் எம்பெருமான் வீற்றிருந்து சேவை தந்தார். 'சத்தியத்தை நிலைநிறுத்தவும், அன்பை வளர்க்கவும் ' பகவான் யாருக்கும் எந்த சமயத்திலும் துணை புரிகிறான். ராமபத்திர அய்யர் எளிய வாழ்க்கை நடத்தினாலும் உண்மை தவறாதவர். அன்பில் சிறிதும் குறைவில்லாதவர். அவர் பங்கில் பகவான் இராமல் போவானா? கல்யாண மண்டபத்தில் பொன்மணி கிராமத்து ஜனங்களில் சில பேர் கூடி தம்பதியை ஆசீர்வதிக்க வந்திருந்தார்கள்.

இரண்டு தினங்களுக்கு முன்பு சர்மா தம் நண்பரைக் கண்டு, பிள்ளையின் கருத்தை வெளியிட்டார். காதும் காதும் வைத்தமாதிரிக் கோவிலில் கல்யாணத்தை முடித்துக் கொண்டு வந்தால் போதும் என்று ராமபத்திர அய்யரிடம் தெரிவித்தார். இந்த விஷயத்தை ராமபத்திர அய்யர் காமுவிடம் தெரிவித்தபோது, காமுவுக்கு ஒன்றும் புரிய வில்லை. கனவு காண்கிறோமா என்று நினைத்தாள். அன்று விடியற்காலம் கண்டதுதான் கனவு. இது நிஜம் என்று தீர்மானித்துக் கொண்டாள் காமு.

விடியற்காலம் சுமார் நான்கு மணிக்குக் காமு ஒரு சுப் சொப்பனம் கண்டாள். சுடர் விடும் குத்துவிளக்கின் ஜோதியிலிருந்து அழகிய பெண் ஒருத்தி எழுந்து காமுவை நோக்கி வந்தாள். அவள் கையில் அழகிய செந்தாமரை பலர் இருந்தது. 'இந்தா! இதை வாங்கிக் கொள்" என்று கை நீட்டி அவளிடம் கொடுத்தாள் மலர் மங்கை. ஆஹா! அந்த மலரின் சௌந்தர்யம் தான் எப்படிப்பட்டது! அதையே உற்றுப் பார்த்து ஆனந்தம் அடைந்தாள் காமு. "இதை இப்போதே கொண்டு போய்ச் சங்கரனிடம் கொடுத்து விட்டு வரவேண்டும்" என்று சொப்பனத்தில் கூட அவள் மனம் எண்ணியது. மலரைக் கையில் வைத்து அதன் அழகில் ஈடுபட்டிருக்கும்போது, மலர்மங்கை மறைந்து போனாள்.

கண்களைக் கசக்கிக் கொண்டு காமு எழுந்தவுடன் தகப்பனாரிடம் இந்தச் சொப்பனத்தைப் பற்றிக் கூறினாள். அவரும் இது ஏதோ நல்விளைவுக்காக ஏற்பட்டது என்று நினைத்து இருந்து விட்டார்.

அன்று பகல் தான் சர்மா, ராமபத்திர அய்யரின் வீட்டைத் தேடி வந்தார். அவரைக் கல்யாணத்துக்குச் சம்மதிக்கவும் வைத்தார். அடுத்த நாள் காலை பொன்மணி கிராமத்தின் பெருமாள் கோவிலில் காமுவும், சங்கரனும் சந்தித்தனர். தெய்வ சன்னிதானத்தில் ஆடம்பரமில்லாமல் காமுவின் கரம் பிடித்தான் சங்கரன்.

நிறைந்த உள்ளத்தோடும், ஆசையோடும் ராமபத்திர அய்யர் அட்சதை தூவித் தம்மை நமஸ்கரித்த தம்பதியை ஆசீர்வதித்தார். "விசாலாட்சி இருந்தால் அவள் எவ்வளவு பூரித்துப் போவாள்?" என்று சிறிது நேரம் மனைவியையும் நினைத்து வருந்தினார் அவர்.

"ராமபத்தி! குழந்தைக்குக் கல்யாணம் ஆவதற்கு நாட்களானாலும் நல்ல இடமாக வாய்த்து விட்டது" என்று குடும்ப நண்பர் சுப்பரமணி தம் சந்தோஷத்தை அறிவித்தார்.

"எல்லாம் அவன் கிருபை அப்பா" என்று மூலஸ்தானத் தில் இருக்கும் பகவானைச் சுட்டிக் கைகளைக் கூப்பிக் கொண்டார் ராமபத்திர அய்யர்.

கல்யாணம் முடிந்தவுடன் ராமபத்திர அய்யரையும் தன்னுடன் பட்டணத்துக்கே வந்து விட வேண்டும் என்று அழைத்தான் சங்கரன். எளிய வாழ்க்கையில் பற்றுடைய அவர் கெட்டகாலம் பொன்மணியிலேயே இருப்பதாகக் கூறி விட்டார். தகப்பனாரைப் பிரிந்து செல்லும் காமு அன்று சகுந்தலை கணவர் ஆசிரமத்தில் அடைந்த துயரை அடைந்தாள். சீதை ஜனகரைப் பிரிந்தபோது ஏற்பட்ட துயரம் காமுவுக்கும் ஏற்பட்டது. "அப்பா!" என்று கண்ணீர் பெருக அவர் தோளில் முகத்தைப் புதைத்துத் தேம்பினாள் காமு. "நீங்கள் எங்களோடு வந்து விடுங்கள் அப்பா. உங்களை யார் கவனிப்பார்கள்!" என்று குழந்தை போல் அவர் கைகளைப் பற்றி அழைத்தாள்.

"அம்மா! புக்ககம் உன்னுடைய வீடு. என்னுடையது அல்ல. சரீரத்தில் தெம்பு இருக்கிற வரையில் இங்கே இருக் கிறேன். முடியாமல் போனால் பிறகு வருகிறேன். நீ புத்திசாலியாக நடந்து கொண்டு பிறந்த இடத்துக்கும், வீட்டுக்கும் பெருமையைக் கொண்டு வா காமு" என்றார்.

காரில் தன் பக்கத்தில் உட்கார்த்து யோசனையில் ஆழ்த்திருந்த காமுவின் அழகிய வாடிய முகத்தை ஒரு கையால் பிடித்துத் தன் முகத்துக்கு நேராகத் திருப்பினான் சங்கரன். அகன்ற அவள் கண்களில் நீர் திரண்டு நிற்பதைப் பார்த்ததும் அவன் மனத்தைக் கசக்கிப் பிழிவது போல் இருந்தது. நீலா அழும்போது அவ்வித உணர்ச்சி அவனுக்கு ஏற்படவில்லை. இது அதிசயம் தானே?

'காமு! அப்பாவை விட்டு விட்டு வந்திருக்கிறோமே என்று வருந்துகிறாயா? ஒவ்வொரு விடுமுறை நாளிலும் உன்னைப் பொன்மணிக்கு அழைத்து வருகிறேன். எங்கே என்னைப் பார்த்துச் சிரிக்க வேண்டும்?' என்று கொஞ்சினான் சங்கரன்.

முத்துப் போன்ற தன் பற்கள் தெரிய இளநகை புரிந்த காமுவை சங்கரன் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே வந்தான். தூரத்தில் பொன்மணி கிராமம் மறைந்து கொண்டே வந்தது. சாலையில் இரு பக்கங்களி லும் இருந்த வயல்களில் பயிர்கள் மீது பனித்துளிகள் சிதறி ஜ்வலித்துக் கொண்டிருந்தன. கிழக்கே சூரியன் உதயமாகி மேலே எழும்பி வந்ததும் அத்துளிகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயின. வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்களும் பகவானின் அருளின் முன்பு பனித்துளிக்குச் சமானம்தான் என்று காமு சங்கரன் இருவரும் புரிந்து கொண்டார்கள்.

பனித்துளி முற்றும்
------------------

This file was last updated on 11 April 2023.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)