pm logo

T. V. சதாசிவ பண்டாரத்தார் எழுதிய
தமிழ் இலக்கிய வரலாறு (கி. பி. 250 - கி. பி. 600),


tamiz ilakkiya varalARu
by cAtAciva paNTArattAr
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2023.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

தமிழ் இலக்கிய வரலாறு (கி. பி. 250 - கி. பி. 600)
T. V. சதாசிவ பண்டாரத்தார்

Source:
தமிழ் இலக்கிய வரலாறு (கி. பி. 250 - கி. பி. 600)
(இரண்டாம் பதிப்பு)
ஆக்கியோர் : ஆராய்ச்சிப் பேரறிஞர் T. V. சதாசிவ பண்டாரத்தார்,
தமிழாராய்ச்சித்துறை விரிவுரையாளர், அண்ணாமலைப் பல்கலைக் கழகம்
1957
முதற் பதிப்பு 1955, இரண்டாம் பதிப்பு 1957
அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ் நூல் வெளியீடு
-----
ANNAMALAI UNIVERSITY TAMIL SERIES
A HISTORY OF TAMIL LITERATURE (250-600 A. D.)
BY
T. V. SADASIVA PANDARATHAR
Lecturer, Tamil Research Department, Annamalai University
ANNAMALAI UNIVERSITY, ANNAMALAINAGAR
1957
----------

இரண்டாம் பதிப்பின் முகவுரை


இவ் விலக்கிய வரலாறு 1955-ஆம் ஆண்டில் முதலில் வெளி வந்தது. இதனை யான் எழுத நேர்ந்தமைக்குரிய காரணத்தை முதற் பதிப்பின் முகவுரையில் தெரிவித்துள்ளேன். முதற் பதிப்புப் புத்தகங்கள் செலவாகிவிட்டமையாலும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இது பாடமாக வைக்கப்பெற்றிருத்தலாலும் இவ் விரண்டாம் பதிப்பு இப்போது விரைந்து வெளியிடப்பட்டுள்ளது.

இதனை இரண்டாம் பதிப்பாக வெளியிட்ட அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தார்க்கும் அன்புடன் ' புரூப்' திருத்தியுதவிய என் அரிய நண்பர் தமிழாராய்ச்சித்துறை விரிவுரையாளர் வித்வான் க. வெள்ளைவாரணர் அவர்கட்கும் எனது நன்றி உரியதாகும்.

அண்ணாமலைப் பல்கலைக் கழகம்.)         இங்ஙனம்,
அண்ணாமலை நகர், 12-9-57         T. V. சதாசிவ பண்டாரத்தார்
-------------

முதற் பதிப்பின் முகவுரை


சில ஆண்டுகளுக்கு முன் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தார் தமிழ் இலக்கிய வரலாறு ஒன்று சிறந்த முறையில் எழுத வேண்டுமென்று தமிழாராய்ச்சித் துறைத் தலைவர்க்குத் தெரிவித்தார்கள். அந்நாட்களில் அப்பகுதிக்குத் தலைவராயிருந்த டாக்டர் A. சிதம்பரநாதச் செட்டியார் M. A., Ph. D. அவர்கள் ஆராய்ச்சித் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த ஆசிரியர் ஐவர்க்கும் அதனை அறிவித்து எழுதத் தொடங்குமாறு கூறிச் சில வரையறைகளும் செய்தார்கள். தொல்காப்பியர் காலமுதல் கி. பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு முடியவுள்ள இலக்கிய வரலாற்றை முதலில் எழுதவேண்டும் என்பதும், அதனைச் சில பகுதிகளாகப் பிரித்து ஆராய்ச்சித்துறை ஆசிரியர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பகுதியை எழுதவேண்டும் என்பதும், அவற்றுள் இன்னார், இன்னார், இன்ன இன்ன பகுதியை எழுதவேண்டும் என்பதும் அப்போது செய்யப்பட்ட வரையறை-களாகும். அதில் எனக்குக் கொடுத்த பகுதி, கடைச்சங்கத்தின் இறுதிக் காலத்திற்குப் பிறகு கி. பி. 610 வரையிலுள்ள இருண்டகால இலக்கிய வரலாறேயாகும்.

இவ்விருண்டகாலப் பகுதியில் தோன்றிய இலக்கியங்களை உணர்ந்துகோடற்குத் தக்க ஆதாரங்களின்மை அறிஞர் பலரும் அறிந்ததே. எனினும், கடைச் சங்க காலத்திற்குப் பின்னர், தமிழ் நாட்டில் ஏற்பட்ட அன்னியர் ஆட்சியில் வடமொழியில் எழுதப்பெற்ற சில சைன நூல்களும், பாலி மொழியில் இயற்றப் பெற்ற சில பௌத்த நூல்களும், பிராகிருதத்திலும் வடமொழியிலும் வரையப்பெற்ற சில செப்பேடுகளும் இக் கால நிலையை அறிந்துகொள்வதற்குப் பெரிதும் பயன்பட்டன. அன்றியும், கி. பி. ஆறாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்ட தமிழ் நூல்களிலும், பேராசிரியர் நச்சினார்க்கினியர் முதலான உரையாசிரியர்களின் உரைகளிலும் காணப்படும் குறிப்புக்களும், சில தமிழ் நூல்களின் காலங்களை உணர்தற்குத் துணைபுரிந்தன.

தமிழ்நாட்டில் கி. பி. ஏழாம் நூற்றாண்டு முதல்தான் கல் வெட்டுக்கள் கிடைத்துள்ள-மையால் - அந் நூற்றாண்டிற்கு முற்பட்டுள்ள இருண்டகாலப் பகுதியில் நிலவிய நூலாசிரியர்களின் காலங்களை ஆராய்ந்து காண்பதற்கு அவை பயன்படவில்லை. ஆயினும், கிடைத்த அகச்சான்றுகளையும் புறச்சான்றுகளையும் உறுதுணையாகக் கொண்டு இவ்விலக்கிய வரலாறு எழுதி முடிக்கப் பட்டது.

இந்நூலில் - கடைச் சங்கத்தின் இறுதிக் காலமும், சங்கம் அழிந்தமைக்குக் காரணமும், அக்காலத்தில் தமிழ் நாட்டில் நடை பெற்ற அன்னியர்களின் ஆட்சியில் ஏற்பட்ட பல பல மாறுதல்களும், அப்போது அருகித் தோன்றிய சில தமிழ் நூல்களும், அவை தோன்றியமைக்குரிய ஏதுக்களும், அந் நூல்களின் வரலாறுகளும் இயன்றவரையில் விளக்கப்பட்டுள்ளன.

இத்தகைய வரலாற்று நூல்களில் சில இடங்களில் கருத்து வேறுபாடுகள் நிகழ்வதும் எதிர்காலத்தில் கிடைக்கும் ஆதாரங்களால் காலக் குறிப்புக்களுள் சில மாறுபடுவதும் இயல்பேயாம் என்பது அறிஞர்கள் உணர்ந்ததே.

இந் நூலை எழுதுவதற்கு வாய்ப்பளித்த அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தார்க்கும் தமிழ்ப் பேராசிரியர் டாக்டர் A. சிதம்பரநாதச் செட்டியார் M.A., Ph.D. அவர்கட்கும் என்றும் நன்றியுடையேன். இஃது அச்சாகும்போது ' புரூப்' திருத்தியுதவிய ஆராய்ச்சித்-துறை விரிவுரையாளர் வித்வான் திரு. க. வெள்ளைவாரணர் அவர்களையும் இது போன்ற நூல்களை வெளி யிடுவதில் பேரார்வங்காட்டிச் செயலாற்றிக் கொண்டிருக்கும் பல்கலைக் கழக வெளியீடு அலுவலாளர் திரு. J. M. சோமசுந்தரம் பிள்ளை B. A., B. L. அவர்களையும் எஞ்ஞான்றும் மறவேன்.

அண்ணாமலை நகர் )         இங்ஙனம்,
        T. V. சதாசிவ பண்டாரத்தார்
-----------------

உள்ளுறை
--------------

தமிழ் இலக்கிய வரலாறு
(கி.பி. 250-கி.பி. 600)

பாண்டியரது தலைநகராகிய மதுரையம்பதியில் நடைபெற்ற கடைச்சங்கத்தின் இறுதிக்காலத்திற்குப் பின்னரும் சைவ சமய குரவர்களாகிய திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் தோன்றிய காலத்திற்கு முன்னரும் அமைந்த ஒரு காலப் பகுதியே தமிழ் இலக்கிய வரலாற்றில் இருண்ட காலம் என்று கூறப்படும். அது, கி. பி. 250 முதல் கி.பி. 600 வரையில் அமைந்த ஒரு காலப் பகுதியாகும். மதுரையிலிருந்த கடைச் சங்கம் கி. பி . மூன்றாம் நூற்றாண்டின் முதற் பகுதியில் முடிவெய்தியிருத்தல் வேண்டும் என்பது ஆராய்ந்து கண்டதோர் உண்மையாயினும், அதுபற்றி அறிஞர்களுக்குள் சில கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஆகவே, அதனை ஈண்டு ஆராய்வதும் இன்றியமையாததொன்றாம்.
----------

I. கடைச்சங்கத்தின் இறுதிக்காலம்

கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் இடையில், பல்லவர் என்னும் ஓர் அரசர் மரபினர் தமிழகத்தின் வடபகுதியைக் கைப்பற்றிக் காஞ்சியைத் தலைநகராகக்கொண்டு, அதனைச் சூழ்ந்த பகுதியையும் வடக்கே கிருஷ்ணை என்ற பேராறு வரையிலுள்ள பகுதியையும் ஆட்சி புரியத் தொடங்கினர்.[1] அவர்கள் தமிழ்நாட்டின் வடபகுதியை வென்று கைப்பற்றியபோது சோழமன்னரோடும் பிற சிற்றரசரோடும் நிகழ்த்திய போர்கள் பலவாதல் வேண்டும்: அப்பல்லவரின் தமிழ்நாட்டுப் படையெழுச்சியையாதல் அவர்கள் தமிழகத்தில் நடத்திய போர்களையாதல் கடைச்சங்கப் புலவர்கள் தாம் இயற்றியுள்ள பாடல்களில் யாண்டும் கூறவில்லை. வட வேந்தரான மௌரியர் தென்னாட்டின் மீது படையெடுத்து வந்த செய்தியையும்[2] முடியுடைத் தமிழ் - வேந்தர் மூவரும் தமிழ் நாட்டுக் குறுநில மன்னர்களும் ஒருவருக்கொருவர் பகைமை கொண்டு ஆங்காங்கு நிகழ்த்திய போர்களையும் தம் பாடல்களில் குறித்துள்ள கடைச்சங்கப் புலவர்கள், பல்லவர் தமிழ்வேந்தரோடு புரிந்த போர்களுள் ஒன்றையாவது குறிப்பிடாமை ஊன்றி நோக்கற்பாலதொன்றாம். அன்றியும், பல்லவர் என்ற பெயரே சங்கத்துச் சான்றோர் பாடல்களில் காணப்படவில்லை. இவற்றை யெல்லாம் நுணுகியாராயுங்கால், கி. பி. மூன்றாம் நூற்றாண்டினிடையில் பல்லவர் தமிழகத்திற்கு வந்து காஞ்சியைக் கைப் பற்றுவதற்கு முன்னர் மதுரைமாநகரில் நிலவிய கடைச் சங்கம் முடிவெய்தியிருத்தல் வேண்டுமென்பது நன்கு வெளியாதல் காண்க.

அன்றியும், கடைச்சங்கத்திறுதிக் காலத்தில் இயற்றப்பெற்ற சிலப்பதிகாரத்தில் இலங்கை வேந்தனாகிய கயவாகு என்பான் ஆசிரியர் இளங்கோவடிகளால் கூறப்பெற்றுள்ளனன். இவ்வடிகளின் தமையனாகிய சேரன் செங்குட்டுவன் என்பவன், கடைச் சங்கப் புலவராகிய பரணரால் பதிற்றுப்பத்தினுள் ஒன்றாகிய ஐந்தாம் பத்தில் பாடப்பெற்றவன். இவன் தன் தலைநகராகிய வஞ்சியில் கட்டுவித்த கண்ணகிதேவியின் கோயிலுக்குக் கடவுண் மங்கலம் நிகழ்த்திய நாட்களில் இலங்கையரசனாகிய அக் கயவாகும் அங்கு வந்திருந்தான்.[3] அவன் தன் நாட்டிற்குத் திரும்பிச் சென்ற பிறகு சேரன் செங்குட்டுவனைப்போல் பத்தினிதேவியாகிய கண்ணகிக்கு அங்குக் கோயிலொன்று அமைத்து வழிபாடு புரிந்தான்.[4] இச் செய்திகள் எல்லாம் ஆசிரியர் இளங்கோவடிகளால் சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டிருத்தல் அறியத்தக்கது. எனவே, கடைச்சங்கத்தின் இறுதிக்காலத்திலிருந்தவன் கடல் சூழ் இலங்கைக் கயவாகுமன்னன் என்பது நன்கு தெளியப்படும். இலங்கையில் கயவாகு என்ற பெயருடன் இரண்டு அரசர்கள் ஆட்சி புரிந்துள்ளனர் என்பது அந்நாட்டு வரலாற்றாராய்ச்சியாளர் கண்ட முடிபாகும். அவ்விருவருள் முதல் கயவாகு, கி. பி. 171 முதல் கி. பி. 193 வரையில் அரசாண்டவன்.[5] இரண்டாம் கயவாகு என்பான், கி. பி. 1137 முதல் கி. பி. 1153 வரையில் ஆட்சிபுரிந்தவன்.[6] இவ்விரண்டாங் கயவாகு சோழ இராச்சியத் தில் இரண்டாங் குலோத்துங்க சோழன் அரசாண்ட காலத்தில் கி. பி. பன்னிரண்டாம் நூற்றாண்டினிடைப்பகுதியில் இருந்தவனாதலின், இளங்கோவடிகளால் சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப் பெற்றவன் முதற் கயவாகுவே யாதல்வேண்டும் என்பது நன்கு துணியப்படும். எனவே, அம் முதற் கயவாகுவின் காலமாகிய கி. பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மதுரைமாநகரில் கடைச்சங்கம் இருந்திருத்தல் வேண்டும் என்பது திண்ணம். அச் சங்கப்புலவர்கள் பல்லவரையாதல் அன்னோர் தமிழகத்தில் நிகழ்த்திய போர்களையாதல் தம் பாடல்களில் யாண்டுங் கூற வில்லை என்பது முன்னர் விளக்கப்பெற்றது. எனவே, அவர்கள் தமிழ்நாட்டின்மீது படையெடுத்து வந்து அதன் வட பகுதியைக் கைப்பற்றிய காலத்தில் மதுரையம்பதியில் கடைச்சங்கம் இல்லை என்பது தெள்ளிது. பல்லவர் தமிழ் நாட்டிற் புகுந்து ஆட்சி புரியத் தொடங்கிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் இடைப்பகுதியேயாம் என்பது வரலாற்றாராய்ச்சியில் வல்ல அறிஞர்களது கருத்து.[7] ஆகவே, மூன்றாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் மதுரையில் கடைச்சங்கம் இல்லை என்றும் அதற்கு முன்னரே அஃது அழிந்திருத்தல் வேண்டும் என்றும் ஐயமின்றிக் கூறலாம். எனவே, கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் முதற் பகுதியில் அச் சங்கம். முடிவெய்தியிருத்தல் வேண்டும் என்பது நன்கு வலியுறுதல் காண்க.

இனி, கடைச்சங்கத்தின் இறுதிக்காலம் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டாகும் என்று சில ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். [8] அன்னோர் கொள்கை பொருந்துமா என்பது ஈண்டு ஆராய்தற் குரியதாகும். அவர்கள் தாம் கண்ட முடிபிற்கு இரண்டு ஆதாரங்கள் எடுத்துக் காட்டியுள்ளனர். அவற்றுள் ஒன்று கங்கைக்கரையிலுள்ள பாடலிபுரம் என்னும் மாநகர் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டில் வெள்ளப்பெருக்கால் அழிவுற்ற செய்தியைக் கடைச்சங்கப் புலவருள் ஒருவராகிய மாமூலனார் என்பார்,

என்ற அகநானூற்றுப் பாடலில் குறிப்பிட்டுள்ளனர் என்பது ; பிறிதொன்று, சமுத்திரகுப்தன் - என்பான் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டில் [9] தமிழ் நாட்டின் மீது படையெடுத்த நிகழ்ச்சியை அப்புலவர் பெருமானே,

என்ற மற்றோர் அகநானூற்றுப் பாடலில் கூறியுள்ளனர் என்பது. கி. பி. ஐந்தாம் நூற்றாண்டில் நிகழ்ந்த இவ்விரு நிகழ்ச்சிகளையும் தம் பாடல்களில் குறித்துள்ள மாமூலனார் நிலவிய கடைச்சங்கத்தின் இறுதிக்காலமும் அவ்வைந்தாம் நூற்றாண்டாகவே இருத்தல் வேண்டும் என்பது அன்னோர் கொள்கையாகும்.

அவர்கள் தம்முடிபிற்கு ஏதுவாக எடுத்துக்காட்டிய அக நானூற்றுப் பாடற்பகுதிகள் இரண்டனுள், 'பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்-சீர்மிகு பாடலிக்குழீ இக், கங்கைநீர்முதல் கரந்த நிதியங் கொல்லோ' என்ற பகுதியின் பொருள் , 'பல் வகைப் புகழ் நிறைந்த போர் வெல்லும் நந்தர் என்பார், சிறப்பு மிகுந்த பாடலிபுரத்தில் திரண்டிருந்து கங்கையாற்றின் நீரின் கீழ் மறைத்துவைத்த நிதியமோ' என்பதாம். ஆகவே, அது, பாடலிபுரத்தில் ஆட்சிபுரிந்த நந்தர் என்பார் கங்கைப் பேராற்றின் கீழே பெருநிதியம் ஒளித்துவைத்திருந்த செய்தியை உணர்த்துகின்றதேயன்றி அவர்கள் கருதுவதுபோல் நந்தரது பாடலிபுரம் கங்கை வெள்ளத்தால் அழிந்ததை உணர்த்தவில்லை என்பது நன்கு தெளியப்படும். எனவே, மாமூலனார் பாடலிபுரம் ஆற்றுப் பெருக்கால் அழிந்த நிகழ்ச்சியைக் கூறவில்லை என்பது - தேற்றம். அம் மாநகரில் வீற்றிருந்தரசாண்ட நந்தர், மோரியர்க்கு மற்பட்டவராவர். அவர்கள் ஆட்சிக்காலம் கி.மு. 413-க்கும் கி. மு. 322-க்கும் இடைப்பட்டதென்பது ஆராய்ச்சியாளர்களது. கருத்து.[10] ஆகவே, கடைச்சங்ககாலம் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டெனக் கோடற்குக் காட்டப்பெற்ற ஆதாரங்களுள் ஒன்று வலியற்றொழிந்தமை காண்க.

இனி, 'முரண்மிகு வடுகர் முன்னுற மோரியர் - தென்றிசை மாதிர முன்னிய வரவு' என்று மாமூலனார் மற்றோர் அகநானூற்றுப் பாடலில் கூறியிருப்பது, வடுகரைத் துணையாகக்கொண்டு மோரியர் தென்னாட்டின் மேல் படையெடுத்த செய்தியைக் குறிப்பிடுகின்றதேயன்றி அவ்வாராய்ச்சியாளர் கருதுவதுபோல் சமுத்திரகுப்தன் [11] படையெழுச்சியை உணர்த்த வில்லை என்பது தேற்றம். மோரியர் படையெழுச்சியைக் குப்தர் படையெழுச்சி என்று அன்னோர் தவறாகக் கருதிவிட்டமையால் கடைச்சங்ககாலம்பற்றி அத்தகைய பிழைபாடு நேர்ந்தது எனலாம். குப்தர் காலத்திற்கு ஏறக்குறைய ஐந்நூறு ஆண்டுகளுக்கு முற்பட்டவர் மோரியர் என்பது வரலாற்றாராய்ச்சியாளர் யாவரும் அறிந்ததொன்றாம்.[12] குப்தர் என்னும் பெயரே கடைச்சங்க நூல்களில் யாண்டுங் காணப்படாமை குறிப்பிடத்தக்கது. ஆகவே, கடைச்சங்க காலத்திற்கு அவர்கள் காட்டியுள்ள பிறிதோர் ஆதாரமும் தவறாகப் போயினமை அறியற்பாலது. எனவே, கடைச்சங்ககாலம் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டெனக் கூறுவது எவ்வாற்றானும் பொருந்தாமை காண்க.

இனி, கடைச்சங்க காலம் கி. பி. எட்டாம் நூற்றாண்டென்பர் ஒரு சிலர்[13]. அன்னோர் தம் கொள்கைக்கு ஆதாரமாக எடுத்துக்காட்டுவன, சிலப்பதிகாரத்தில் இரண்டு இடங்களில் காணப்படும் காலக்குறிப்புக்களும் அவற்றுள், ஒன்றிற்கு அடியார்க்கு நல்லார் எழுதியுள்ள உரைக்குறிப்புமேயாம். அவை,

'அந்தச் சித்திரைத்திங்கட் புகுதிநாள்- சோதி ; திதி மூன்றாம் பக்கம், வாரம்--ஞாயிறு. இத்திங்கள் இருபத்தெட்டிற் சித்திரையும் பூரணையுங் கூடிய சனிவாரத்திற் கொடியேற்றி 'நாலேழ் நாளினும் ' என்பதனான் இருபத்தெட்டு நாளும் விழா நடந்து கொடியிறக்கி வைகாசி இருபத்தெட்டினிற் பூருவபக்கத்தின் பதின்மூன்றாம் பக்கமும் சோமவாரமும் பெற்ற அனுடத்தில் நாட்கடலாடி ஊடுதலின் வைகாசி இருபத்தொன்பதிற் செவ்வாய்க்கிழமையும் கேட்டையும் பெற்ற நாசயோகத்து நிறைமதிப் பதினாலாம் பக்கத்து வைகறைப் பொழுதினிடத்து நிலவுபட்ட அந்தரத்திருளிலே யென்றவாறு, அது பூருவபக்கமென்பது தோன்றக் காரிருணின்ற கடைநாட்கங்கு' லென்றார்" என்பனவாம்.

இவற்றில் காணப்படும் சோதிடக் குறிப்புக்களைக் கணித்துப் பார்த்த காலஞ்சென்ற திரு. எல். டி. சாமிக்கண்ணுப் பிள்ளை அவர்கள் மதுரை மாநகர் எரியுண்ட.து கி. பி. 756-ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 23-ஆம் நாளாகும் என்றும் ஆகவே, கடைச்சங்க காலமும் அதுவேயாதல் வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.[14] அவ்வறிஞரே அடியார்க்கு நல்லார் உரையில் காணப்படும் சோதிடக் குறிப்புக்கள் சிறிது தவறுடையன என்பர். எனவே, தவறாகவுள்ள குறிப்புக்களின் துணைகொண்டு கணிக்கப் பெறும் காலமும் தவறுடையதேயாம் என்பது திண்ணம். அவ்வுரைக் குறிப்புக்களைக்கொண்டு கடைச் சங்க காலத்தை ஆராய்ந்த திரு. கே. ஜி. சங்கரையர் என்ற அறிஞர், கி. பி. முதல் ஆண்டு முதலாக ஆயிரத்து நானூறாம் ஆண்டு வரையில் ஓராண்டாவது அவற்றோடு முழுவதும் பொருந்தி வரவில்லை என்றும், ஆகவே அடியார்க்கு நல்லார் உரையிற் காணப்படும் சோதிடக் குறிப்புக்கள் தவறுடையனவேயாம் என்றும், அவற்றின் துணைகொண்டு திரு. எல். டி. சாமிக்கண்ணுப் பிள்ளை அவர்கள் ஆராய்ந்து கண்ட முடிவு ஒப்புக்கொள்ளத் தக்கதன்று என்றும் மிக விரிவாக ஆராய்ந்தெழுதியிருப்பது[15] ஈண்டுக் குறிப்பிடுதற்-குரியதாகும்.

இனி, சைவசமய குரவருள் ஒருவராகிய அப்பரடிகள் தம்முடைய பாண்டி நாட்டுத் திருப்புத்தூர்ப் பதிகத்தில் ‘நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறி நற்கனகக் கிழிதருமிக் கருளினோன் காண் '[16] என்று கடைச்சங்க கால நிகழ்ச்சி யொன்றைக் கூறியுள்ளனர். அன்றியும், அவ்வடிகள் காலத்தில் நிலவியவரும் சமயகுரவருள் முதல்வானாகிய திருஞான சம்பந்த சுவாமிகள் தம் திருப்பாசுரத்தில் 'அந்தண்மதுரைத் தொகையாக்கினானும்........ பெற்றொன்றுயர்த்த பெருமான் '[17] என்று மதுரையம்பதியிலிருந்த கடைச்சங்கத்தைக் குறித்துள்ளார். இப்பெரியார் இருவரும் கி. பி. ஏழாம் நூற்றாண்டின் முதல்- இடைப்பகுதிகளில் நம் தமிழகத்தில் விளங்கியவர்கள் என்பது வரலாற்றாராய்ச்சி யாளர்களால் ஐயமின்றித் துணியப் பட்ட செய்தியாகும்.[18] எனவே, கடைச்சங்க காலம் கி. பி. ஏழாம் நூற்றாண்டிற்கு முற்பட்டதாதல் வேண்டும். ஆகவே, அச் சங்ககாலம் கி. பி. எட்டாம் நூற்றாண்டென்பார் கூற்றுச் சிறிதும் பொருந்தாமை காண்க.

இதுகாறும் ஆராய்ந்தவாற்றால் கடைச்சங்ககாலம் கி. பி. . ஐந்தாம் நூற்றாண்டெனவும் கி. பி. எட்டாம் நூற்றாண்டெனவும் கூறுவோர். கொள்கைகள் தக்க ஆதாரங்களின்றித் துணியப்பெற்றவை என்பது நன்கு தெளியப்படும். ஆகவே, முதலில் ஆராய்ந்து கண்டவாறு, மதுரைமாநகரில் நிலை பெற்றிருந்த கடைச்சங்கம், கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் முதற் பகுதியில் தான் அழிவெய்தியிருத்தல் வேண்டும். என்பது பல்வகையாலும் உறுதிபெற்று நிற்றல் உணரற்பாலதாம்.

-----
[1]. Administration and Social Life under the Pallayas by Dr. C Minakshi pp. 2 and 6.
[2]. அகம். 69, 251, 281; புறம். 175.
[3]. சிலப்பதிகார்ம், வாந்தருகாதை, அடிகள் 160-164.
[4]. இலங்கையிலிருந்து கிடைத்த கண்ணகியின் செப்புப்படிமம் ஒன்று, லண்டன் மாநகரில் பிரிட்டிஷ் பொருட்காட்சிசாலையில் இருந்தது. அது கி. பி.1830 ஆம் ஆண்டில் அங்குக் கொண்டுபோகப்பட்டதாம். முதற் கயவாகு தன் நாட்டில் எடுப்பித்த பத்தினிக் கோட் டத்தில் எழுந்தருளுவித்த கண்ணகிதேவியின் படிமமாகவே அஃதிருத்தல் வேண்டும் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். அஃது இப்போது இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டுவிட்டது என்று தெரிகிறது. (Selected Examples of Indian Art, Plate 33)
[5]. The Mahavamsa or the great Chronicle of Ceylon, translated by Wilhelm Geiger, Ph. D. Intr. p. 33.
[6]. Epigraphia Zeylanica, Vol III, No. 1 A Chronologilcal Table of Ceylon Kings.
[7]. (a) The Successors of the Satavahanas in Lower Deccati by D. C Sirkar, p. 175. (b) The Pallavas by G. J. Dubreuil, p. 10.
(c) Administration and Social Life under the Pallavas! pp. 6 & 10
[8] திருவாளர் ராவ்சாகிப் மு. இராகவையங்கார் அவர்கள் எழுதிய சேரன் செங்குட்டுவன் என்ற நூலில் செங்குட்டுவன் காலம் என்பதைப் பார்க்க,
[9] . சமுத்திரகுப் தனது தென்னாட்டுப் படையெழுச்சி கி. பி. நான்காம்
நூற்றாண்டின் இடையில் நிகழ்ந்தது என்பது சரித்திர ஆசிரியர்களின் கருத்து.
[10]. The Early History of India by Vincent A. Smith, (4th Edition) p. 51
[11]. சமுத்திரகுப்தன் என்பான் குப்தர் மரபினனேயன்றி மோரியா - மரபினன் அல்லன் என்பது அறியத்தக்கது.
[12]. மோரியர் என்பார், கி. மு. 322-க்கும் கி.மு. 185-க்கும் இடையில் ஆட்சிபுரிந்தோர் ஆவர். குப்தர்களோ கி. பி. 320 முதல் கி.பி. 455 வரையில் அரசாண்டவர்கள். (The Early History of India by Vincent A. Smith, pp. 206, 207 ang 295.) எனவே குப்தர்க்கு ஏறக்குறைய ஐந்நூறு ஆண்டுகட்டு முற்பட்டவர் மோரியர் என்பது தெள்ளிது,
[13]. An Indian Ephemeris, Vol. 1, part I, pp.459-468.
[14]. An Indian Ephemeris by Diwan Bahadur L. D. Swamikannu Pillai Vol. 1, part I, pp. 459-468.
[15]. செந்தமிழ்த் தொகுதி 15.
[16]. திருப்புத்தூர்த் திருத்தாண்டகம், பா. 3.
[17]. திருப்பாசாம், பா. 11
[18]. Tamilian Antiquary, No. 3. Date of Gnana Sambandar
-------------

II. கடைச்சங்க வீழ்ச்சிக்குக் காரணம்

மதுரைமாநகரில் நடைபெற்றுவந்த கடைச்சங்கம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் முதற் பகுதியில் அழிவுற்றமைக்குக் காரணம் யாது என்பது ஈண்டு ஆராயற்பாலதாகும். பாண்டிநாட்டில் பெரும் பஞ்சம் ஒன்று தோன்றிப் பன்னிருயாண்டு மக்களைத் துன்புறுத்தியது எனவும், அக்கொடிய காலத்தில் பாண்டி வேந்தன் சங்கப்புலவர்களைப் பாதுகாத்தற்கியலாமையால் சேரநாடு, சோழநாடு, நடுநாடு, தொண்டைநாடு ஆகிய புறநாடுகளுக்கு அன்னோரை யனுப்பி விட்டனன் எனவும் அதன் பின்னர் மதுரையம்பதியில் தமிழ்ச் சங்கமே நடைபெறாமல் முடிவெய்தியது எனவும் செவிவழிச் செய்திகளில் நம்பிக்கையுடையோர் சிலர் கூறுகின்றனர். பிறிதொருசாரார், தமிழ்ப் புலவர்கள் சங்கத்தில் அரங்கேற்றுவதற்குக் கொண்டுவரும் நூல்களை அவர்கள் படித்து விளக்கும் போது, சங்கப்புலவர்கள் கீழறையிலுள்ள சிலரைக்கொண்டு அவற்றை எழுதுவித்து, பிறகு அந்நூல்கள் சங்கத்திலும் உள்ளன என்று கூறி அவற்றை எடுத்துக்காட்டி, அன்னோரை அவமதித்து அனுப்பி வந்தனர் என்றும், அவ்வடாத செயலை ஒழிக்க வேண்டி இடைக்காடனாரும் ஆசிரியர் திருவள்ளுவனாரும் முறையே ஊசிமுறியும் திருக்குறளும் இயற்றிக்கொண்டு தமிழ்ச் சங்கத்திற்குச் சென்றனர் என்றும், அப்போது ஊசிமுறிப் பாடல்களைக் கீழறையிலிருந்தோர் தம் செவியுணர்வுகொண்டு எழுத முடியாமையால் சங்கப் புலவர்கள் தம் செயலில் தோல்வியுற்றனர் என்றும், பிறகு திருக்குறள் அரங்கேற்றப் பெற்றபோது அந்நூலாசிரியரோடொப்பச் சங்கப் புலவர்கள் வீற்றிருக்க இயலாமையால் சங்கம் அழிவுற்றதென்றும், எனவே திருக்குறள் அரங்கேற்றமே கடைச்சங்கம் வீழ்ச்சி எய்தியமைக்குக் காரணமாகும் என்றும் கூறுகின்றனர். அன்னோர் கொள்கைகள் வலியுடை யனவா என்பது ஆராயற் -பாலதாகும்.

கடைச்சங்க நாளில் பாண்டி நாட்டில் பஞ்சமொன்று தோன்றியது என்பதும் அக்காலத்தில் சங்கப் புலவர்கள் வேறு நாடுகளுக்குச் சென்று உயிர்வாழ நேர்ந்தது என்பதும் இறையனார் அகப்பொருளுரையால் நன்கறியக் கிடக்கின்றன.[1] அவ்வுரை கி. பி. எட்டாம் நூற்றாண்டிற்குப் பின்னரே எழுதப்பெற்ற தாயினும், அதில் கூறப்பட்டுள்ள கடைச்சங்க காலத்து வற்கட நிகழ்ச்சியை மறுத்துரைத்தற்கு ஏது சிறிதுமில்லை எனலாம். அன்றியும், அந்நிகழ்ச்சி, 'பன்னீராண்டு பாண்டி நன்னாடு மன்னுயிர் மடிய மழைவள மிழந்தது' என்று மணிமேகலையிலும் சொல்லப் பட்டுள்ளது[2]. ஆகவே, கடைச்சங்க நாளில் பாண்டி நாட்டில் ஒரு வற்கடம் தோன்றி அந்நாட்டு மக்களைப் பெரிதும் துன்புறுத்தியிருத்தல் வேண்டும் என்பது ஐயமின்றித் தெளியப்படும். அந்நாட்களில் சங்கப் புலவருள் பலர் தமிழகத்தில் பற்பல ஊர்கட்குச் சென்று, ஆங்காங்கு நிலவிய வள்ளல்களின் ஆதரவில் தங்கியிருந்திருத்தலும் இயல்பேயாகும். அக்காலத்தில் தமிழ் நாட்டில் வாழ்ந்து கொண்டிருந்த பெருங்கொடை வள்ளல்களையும் அரசர்களையும் புலவர் பெருமக்கள் நன்கறிந்திருந்தனர் என்பதற்கும் அவர்கள் புலமைத்திறத்தையும் பெருமையையும் அச்செல்வர்கள் தெள்ளிதின் உணர்ந்து போற்றியுள்ளனர் என்பதற்கும் பத்துப்பாட்டு, புறநானூறு, பதிற்றுப்பத்து முதலான கடைச்சங்க நூல்கள் இன்றும் சான்றாக நிற்றல் காணலாம். எனவே, கடைச்சங்கப் புலவர்கள் வற்கடம் நிகழ்ந்த ஞான்று தமிழகத்தில் யாண்டும் ஆதரவுபெற்றுச் செவ்விதின் வாழ்க்கை நடத்தியமையில் சிறிதும் ஐயமில்லை. அவ்வற்கடம் நீங்கிப் பாண்டிநாடு செழிப்பெய்திய பின்னர், அந் நாட்டரசன் விரும்பியவாறு சங்கப் புலவர்கள் மதுரையம்பதிக்குத் திரும்பிச் சென்று விட்டமை, அவ்வகப் பொருளுரையாலேயே உணரக்கிடக் கின்றது.[3] வெளிநாடுகளுக்குச் சென்றிருந்த சங்கப் புலவருள் சிலர் இறந்துபோயிருத்தலும் கூடும். எனினும், எஞ்சியிருந்த புலவர்கள் பாண்டிவேந்தன் அழைப்பிற்கிணங்கி மதுரைக்குச் சென்று சங்கத்தில் வீற்றிருந்து தமிழாராய்ச்சி செய்திருத்தல் வேண்டும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. ஆகவே, வற்கட மொன்றால் கடைச்சங்கம் முடிவெய்தியது என்று கூறுவது ஏற்புடைத்தன்று.

கடைச்சங்கப் புலவர்கள் திருக்குறளை நன்கு பயின்றவர்கள் என்பதை, அவர்கள் அந்நூற் சொற்பொருள்களைத் தாம் இயற்றிய செய்யுட்களில் ஆங்காங்கு அமைத்துப் பாடியிருத்தலால் இனிதுணரலாம். இவ் வுண்மையைச் சங்க நூல்களைப் பயின்றோர் யாவரும் அறிவரெனினும், எடுத்துக்காட்டாகச் சிலவற்றை ஈண்டுக் குறிப்பிடுதல் பொருத்தமுடையதேயாம்.

திருக்குறளில் நட்பாராய்தல் என்னும் அதிகாரத்திலுள்ள 'நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்- வீடில்லை நட்பாள் பவர்க்கு'[4] என்ற குறள் வெண்பாவைக் கடைச்சங்கப் புலவருள் ஒருவராகிய கபிலர் 'பெரியோர் நாடி நட்பினல்லது- நட்டு நாடார் தம் மொட்டியோர் திறத்தே' (நற்றிணை, பா. 32) என்ற பாடலில் எடுத்தாண்டிருத்தல் காண்க. திருக்குறளில் கண்ணோட்டம் என்னும் அதிகாரத்திலுள்ள 'பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர். நயத்தக்க- நாகரிகம் வேண்டுபவர்' [5] என்ற குறள் வெண்பாவின் சொல்லையும் பொருளையும் கடைச்சங்கப் புலவர் ஒருவர், 'முந்தை யிருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனிநா கரிகர்' [6] என்று நற்றிணைப் பாட லொன்றில் அமைத்துப் பாடியிருத்தல் அறியத்தக்கதாகும். திருக்குறளில் செய்ந்நன்றியறிதல் என்னும் அதிகாரத்திலுள்ள 'எந்நன்றி கொன்றார்க்கு முய்வுண்டா முய்வில்லை- செய்ந்நன்றி கொன்ற மகற்கு' [7] என்ற குறள் வெண்பாவின் பொருளைக் கடைச்சங்கப் புலவராகிய ஆலத்தூர்கிழார்,

என்னும் புறநானூற்றுப் பாடலில் தெளிவாக விளக்கியிருப்பதோடு ஆசிரியர் திருவள்ளுவனாரது திருக்குறளை அற நூல் என்று பாராட்டியிருப்பதும் உணரற்பாலதாம். நல்லிசைப் புலமை மெல்லியல் நங்கையாராகிய காக்கைபாடினியார் நச்செள்ளையார் தாம் பாடியுள்ள 'நரம்பெழுந்துலறிய நிரம்பா மென்றோள் '[9] என்று தொடங்கும் புறநானூற்றுப் பாடலின் இறுதியிலுள்ள 'ஈன்ற ஞான்றினும் பெரிதுவந்தனளே' என்ற சொற்றொடரை ‘ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும்'[10] என்னுங் குறள் வெண்பாவைக் கருத்திற்கொண்டு அமைத்திருத்தல் அறிந்து கோடற் குரியது.

இதுகாறும் விளக்கியவாற்றால் கடைச்சங்கப் புலவர்கள் திருக்குறளை நன்கு பயின்றவர்கள் என்பது தெள்ளிதிற் புலப் படுதல் காண்க. ஆகவே, கடைச்சங்கத்தின் இறுதிக்காலத்திற்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே திருக்குறள் என்னும் ஒப்புயர்வற்ற நூல் அதன் ஆசிரியரால் இயற்றப் பெற்றிருத்தல் வேண்டும் என்பது திண்ணம். எனவே, அந்நூல் அரங்கேற்றப் பட்ட நாளில் கடைச்சங்கம் அழிவுற்றது என்றுரைப்பது எவ்வாற்றானும் பொருந்தாது. திருக்குறளுக்கு மதிப்புரையாகவுள்ள திருவள்ளுவ-மாலையில் காணப்படும் வெண்பாக்கள் எல்லாம் அந் நூல் அரங்கேற்றப்-பட்டபோது சங்கப் புலவர்களால் இயற்றப் பெற்றவையல்ல. அவற்றைப் பாடிய புலவர்களுள் பலருடைய பெயர்கள் சங்கத் தொகை நூல்களில் காணப்படாமை அறியத் தக்கது. அப் பாடல்களுள் பல, சங்கப்புலவர்களின் வாக்கு என்பதற்கேற்றவாறு அத்துணைச் சிறப்பும், பொருளமைதியும் உடையனவாகக் காணப்படவில்லை. எனவே, அப்பாடல்களின் துணைகொண்டு திருக்குறள் கடைச்சங்கத்தில் அதன் இறுதிக் காலத்தில் அரங்கேற்றப்பட்டதென்று கூறுவதற்குச் சிறிதும் இடமில்லை. ஆகவே, அந்நூலின் அரங்கேற்றத்தால் கடைச் சங்கம் அழிந்தொழிந்தது என்பதும் ஆராய்ச்சியறிவுடையோர் எவரும் ஒப்புக்கொள்ளத்தக்கதன்று.

ஆனால், மதுரையில் பாண்டி வேந்தர்களின் பேராதரவினால் நிலைபெற்றுத் தமிழாராய்ச்சி செய்துவந்த கடைச்சங்கம் அழிவுற்றமைக்குத் தக்க காரணம் இல்லாம-லில்லை. ஒரு நாட்டின் மேல் படையெடுத்துவந்து அதனைத் தம்மடிப்படுத்தும் அயல் நாட்டார், வென்ற நாட்டின் மொழி, கலை, நாகரிகம் என்பவற்றை இயன்றவரையில் அழித்தும் சிதைத்தும் விடுவதையே தம் முதற்கடமையாக மேற்கொள்வது வழக்கம் என்பது வரலாற்றாராய்ச்சியாளர் யாவரும் அறிந்ததோர் உண்மையாகும். அதனை உலகிலுள்ள பல நாடுகளின் வரலாறுகளும் உறுதிப் படுத்தி நிற்றல் உணரத்தக்கது. எனவே, ஏதிலார் படை யெழுச்சியொன்றால் பாண்டிநாட்டில் அத்தகைய நிலையொன்று ஏற்பட்டு, அதனால் மதுரையிலிருந்த கடைச்சங்கமும் அழிவெய்தியிருத்தல் வேண்டும் என்பது தேற்றம். அதற்கேற்ப, பிறமொழியாளரான களப்பிரர் என்பார், பாண்டி நாட்டின்மேல் படை யெடுத்துவந்து, அதனைத் தொன்றுதொட்டு ஆட்சிபுரிந்துவந்த - தமிழ் வேந்தர்களான பாண்டியரைப் போரில் வென்று, அவர்கள் நாட்டையும் கைப்பற்றி அரசாண்டனர் என்று வேள்விக்குடிச் -செப்பேடுகள் கூறுகின்றன.[11] அன்னோர் ஆட்சியில், பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி முன் செய்திருந்த அறச் செயல் அழிக்கப்பட்டுப்போயிற்று என்றும் அச் செப்பேடுகள் அறிவிக்கின்றன. ஆகவே, களப்பிரர் படையெழுச்சியும் ஆட்சியும் பாண்டிநாட்டில் எத்துணையோ மாறுதலையும் புரட்சியையும் உண்டுபண்ணித் தமிழ்மொழி, தமிழ்க்கலை, தமிழர் நாகரிகம் ஆகியவற்றை வீழ்ச்சியுறச் செய்துவிட்டன என்பது அச்செப்பேடுகளால் நன்கறியக் கிடக்கின்றது. எனவே, கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிகழ்ந்த களப்பிரர் படை யெழுச்சியினால் தான் மதுரைமாநகரில் நிலவிய கடைச்சங்கம் அழிவுற்றது என்பது ஐயமின்றித் துணியப்படும்.

----
[1]. இறையனார் அகப்பொருளுரை, பக். 8 (பவாநந்தம் பிள்ளை பதிப்பு).
[2]. மணிமேகலை, பாத்திரமாபு கூறிய காதை, அடி 55, 56.
[3]. இறையனார் அகப்பொருள் உரை, (பவாநந்தர் பதிப்பு) பக்கங்கள் 8-11.
[4]. திருக்குறள், நட்பாராய்தல், 1
[5]. ஷ கண்ணோட்டம், 10.
[6]. நற்றிணை, 355.
[7]. திருக்குறள், செய்ந்நன்றியறி தல், 10
[8]. புறம். 34.
[9]. புறம். 278.
[10]. திருக்குறள், புதல்வரைப் பெறுதல், 9.
[11]. Epigraphia Indica, Vol. XVII, No. 16.
---------

III. கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் தமிழகத்தின் அரசாங்க நிலையில் ஏற்பட்ட மாறுதல்கள்

கி. பி. மூன்றாம் நூற்றாண்டில் தமிழகமானது அதற்கு முன்னர் என்றும் கண்டறியாத துன்ப நிலையை எய்துவ தாயிற்று. இப் பெருநிலப்பரப்பானது முதல் முதல் பிற மொழியாளராகிய அயலாரது ஆட்சிக்குள்ளாகித் தன் சீருஞ் சிறப்பும் இழந்த காலம் இதுவே எனலாம். இக்காலப் பகுதியில் தமிழ்நாடு ஏதிலாரது புதிய அரசியல் முறைக்கு உட்பட்டதோடு தனக்குரிய கலை நாகரிகங்களையும் பிற சிறந்த பண்புகளையும் இழந்துவிடும்படி நேர்ந்தமையும் குறிப்பிடத்தக்க தாம். தமிழகத்தின் தென்பகுதியாகிய பாண்டிநாடு கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாண்டியர் ஆட்சியை இழந்து களப்பிரர் ஆளுகைக்கு உட்பட்ட செய்தி முன்னர் விளக்கப்பட்டது. அங்ஙனமே, தமிழகத்தின் வட பகுதியாகிய தொண்டைநாடும் நடு நாடும் கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் இடையில் பல்லவர் ஆட்சிக்குள்ளாயின[1]. நடு நாட்டிற்கும் பாண்டி நாட்டிற்கும் இடையிலுள்ள சோழ நாடும் களப்பிரர் ஆளுகைக்கு உட்பட்டதாயிற்று. ஆகவே, இக்காலப் பகுதியில் தமிழ்நாடு முழுவதும் வேற்றரசர் இருவரது ஆட்சிக்குள்ளாகி விட்டமை தெள்ளிது. அவ்விருவரும் தமிழ்மொழியைத் தம் தாய்மொழியாகக் கொண்டவரல்லர். அவர்களது ஆட்சிக் காலத்தில் பிராகிருதமே அரசாங்கமொழியாக அமைந்திருந்தது. களப்பிரர் ஆட்சியில் பாலிமொழியும் அரசாங்கத்தின் பேராதர விற்குரியதாயிருந்தமை அறியத்தக்கது. ஆகவே, கி. பி. மூன்றாம் நூற்றாண்டில் தமிழகத்தில் ஏற்பட்ட ஏதிலார் ஆட்சி, தமிழ் மக்களின் வீழ்ச்சிக்கு எத்துணையோ வகைகளில் அடிகோலியது எனலாம். எனவே, கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் இடைப்பகுதி முதல் கி. பி. ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதிவரையில் நடை பெற்ற அயலார் ஆட்சியில் தமிழ்மொழி போற்றுவாரற்றுத் தன் வளர்ச்சியும் பெருமையும் இழந்து தாழ்ந்த நிலையை எய்தியிருந் தமை உணரற்பாலதாகும்.
----
[1]. The Pallavas by G. J. Dubreuil, p. 10 ; Administration and Social Life under the Pallavas by Dr. C. Minakshi, p. 6.
---------
IV. அயலார் ஆட்சியில் பிறமொழிகளும் புறச்சமயங்களும் பெருமை யெய்தி வளர்ச்சியுற்றமை :
கி. பி. மூன்றாம் நூற் றாண்டின் இடைப்பகுதியில் தமிழகத்தின் வடபகுதிகளாகிய தொண்டை நாட்டையும் நடுநாட்டையும் பல்லவர்கள் கைப் பற்றி அரசாண்டுவந்தமை முன்னர் விளக்கப்பட்டது. அவர் களுடைய செப்பேடுகள் முதற்காலப் பகுதியில் பிராகிருத மொழியிலும்[1], இடைக்காலப்பகுதியில் வடமொழியிலும், கி. பி. ஏழாம் நூற்றாண்டிலிருந்து தொடங்கும் பிற்காலப்பகுதியில் வட மொழி தமிழ் ஆகிய இருமொழிகளிலும் வரையப்பெற்றுள்ளன. ஆகவே, முதற்கால இடைக்காலப் பகுதிகளில் அவ்வேந்தர்கள் பிராகிருதத்தையே தம் அரசாங்க மொழியாகக் கொண்டு வட மொழியைப் பெரிதும் ஆதரித்து அம் மொழிவளர்ச்சியில் தம் கருத்தைச் செலுத்திவந்தனர் எனலாம். அன்னோர் தம் தலைநக ராகிய காஞ்சியில் வடமொழியிலுள்ள கலை நூல்களையும் பல் வகைப்பட்ட சமய நூல்களையும் வடபுலமக்களும் வந்து கற்கு மாறு ஒரு பெருங்கல்லூரி நிறுவி அதனை நன்கு புரந்துவந்தமை அறியத்தக்கது. காஞ்சிமாநகரில் அரசாங்க ஆதரவில் நிலைபெற் றிருந்த அவ் வடமொழிக் கல்லூரி அந்நாட்களில் ஒரு பெரிய பல்கலைக்கழகம்போல் விளங்கிக்கொண்டிருந்தது. அங்கு மாணவர்கள் எல்லோரும் உண்டியும் உறையுளும் இலவச மாகப் பெற்று எத்தகைய கவலையுமின்றி வடமொழியில் தாம் விரும்பிய கலை நூல்களைப் பயின்று வந்தனர். அக் கல்லூரியின் பெருமை வடநாடு முழுமையும் பரவியிருந்தது என்று ஐயமின்றிக் கூறலாம். கடம்பர்குல முதல்வனும் வேதங்களை நன்கு பயின்றவனும் கி. பி. 345 முதல் கி. பி. 370 வரையில் இருந்தவனுமாகிய மயூரசர்மன் என்பான், காஞ்சியி லிருந்த வடமொழிக் கல்லூரியில் படிக்கும் பொருட்டுத் தன் ஆசிரியராகிய வீரசர்மரோடு சென்றான் என்று தாளகுண்டாவி லுள்ள கல்வெட்டொன்று[2] கூறுகின்றது.

பௌத்தர்களால் அமைக்கப்பெற்ற நாலந்தாப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக விளங்கிய தர்மபாலர் என்பவர் காஞ்சியிலிருந்த திக் நாகருடைய மாணவர் ஆவர். இவர், காஞ்சியிலிருந்த வடமொழிக் கல்லூரி யில் முதலில் கல்வி பயின்று, பிறகு அப்பல்கலைக்கழகத்திற்குச் சென்று, சில ஆண்டுகள் வரையில் அங்குப் படித்து, பின்னர் அக் கழகத்திற்கே தலைவராயினர் என்பது உணரற்பால தொன்றாம்.[3] தொண்டை மண்டலத்தில் சோழ சிங்கபுரத் திற்கு அண்மையிலுள்ள கடிகாசலம், புதுச்சேரியைச் சார்ந்த வாகூர் ஆகிய ஊர்களில் வட மொழிக்கல்லூரிகள் இருந்தன என்பது நந்திவர்மப் பல்லவமல்லனது திருவல்லத்துக் கல் வெட்டினாலும்[4] நிருபதுங்கவர்மனுடைய பாகூர்ச் செப்பேடுக ளாலும் நன்கறியப்படுகின்றது. அக்கல்லூரிகள், வடமொழி வளர்ச்சி கருதி நான்கு ஐந்தாம் நூற்றாண்டுகளிலேயே இடைக் காலப் பல்லவ மன்னர்களால் அமைக்கப்பெற்றிருத்தல் வேண்டும் என்பது திண்ணம். அவற்றில் வடமொழியிலுள்ள பல கலை களும் சிறந்த ஆசிரியர்களால் மாணவர்கட்குக் கற்பிக்கப்பட்டு வந்தமையோடு அன்னோர்க்கு உணவும் உடையும் உறையுளும் பிறவும் இலவசமாகக் கொடுக்கப்பெற்றுவந்தமையுங் குறிப் பிடத்தக்கதாகும். வாகூர்க் கல்லூரியில் வடமொழியிலுள்ள பதினான்கு வித்தைகள் கற்பிக்கப்பட்டு வந்தன என்பதும் அக் கலைக்கூடத்தின் ஆண்டுச் செலவிற்காக அந்நாட்டில் மூன்றூர் கள் இறையிலியாக வழங்கப்பட்டுள்ளன என்பதும் பாகூர்ச் செப்பேடுகளால் தெள்ளிதிற் புலப்படுகின்றன.[5]

பல நூற் றாண்டுகள் தமிழ்ச் சங்கம் நிலைபெற்றிருந்ததும் பாண்டி வேந்தர் களின் தலைநகராக விளங்கியதுமாகிய மதுரையம்பதியைச் சிறி தும் அறிந்து கொள்ளாத வடநாட்டு மக்கள், காஞ்சிமா நகரை மாத்திரம் நன்கு அறிந்துள்ளமைக்கும் அதனைப் பரதகண்டத்தி லுள்ள ஏழு புண்ணிய நகரங்களுள் [6] ஒன்றாக ஏற்றுக்கொண்டு பாராட்டியுள்ளமைக்கும் காரணம், அந்நகரில் பல்லவ அரசர் கள் அமைத்திருந்த வடமொழிக் கல்லூரியின் பெருமையும் சிறப்பும் அக்காலத்தில் வடபுலம் முழுவதும் பரவியிருந்தமையே யாகும்.[7] வடமொழிப் புலவராகிய காளிதாசர் என்பார் நகரங் களுள் சிறந்தது காஞ்சி என்று கூறியிருப்பதும் முற்காலத்தில் அந்நகரில் நடைபெற்றுவந்த வடமொழிக் கல்லூரியின் சிறப்புப் பற்றியேயாம் என்பது ஈண்டுணரற்பாலது. வைதிகர், சைவர், வைணவர், சமணர், பௌத்தர் ஆகிய பல்வகைச் சமயத்தினரும் காஞ்சிமா நகரிலிருந்த வடமொழிக் கல்லூரியில் தத்தம் சமய நூல்களையும் அளவை நூல்களையும் பிற வடமொழி நூல்களை யும் நன்கு பயின்று சமயவாதம் புரிவதில் பேராற்றலுடையவர் களாய் விளங்கிவந்தமையால் கி. பி. ஏழாம் நூற்றாண்டின் முற் பகுதியில் நிலவிய சைவ சமயகுரவராகிய திருநாவுக்கரசு அடிகள் 'கல்வியிற் கரையிலாத காஞ்சிமாநகர் '[8] என்று தம் கச்சித் திருமேற்றளிப் பதிகத்தில் குறிப்பிடுவாராயினர். இரண்டாம் சிம்மவர்மன் என்னும் பல்லவ மன்னன் காஞ்சியிலிருந்து அரசாண்டுகொண்டிருந்த காலத்தில் அவனது ஆட்சியின் இருபத்திரண்டாம் ஆண்டாகிய கி. பி. 458-ல், திருப்பாதிரிப்புலியூர் என்று இக்காலத்தில் வழங்கிவரும் பாடலிபுத்திரத்திலிருந்த ஓர் அமண்பள்ளியில் ' லோகவிபாகம்' என்ற திகம்பர சைன நூல் படி எடுக்கப்பெற்றது என்னும் செய்தி அந்நூலில் காணப்படு கின்றது.[9] எனவே, அந்நூலின் ஆசிரியர் அவ்வாண்டிற்கு முன் னரே தம் நூலை எழுதி முடித்திருத்தல் வேண்டும் என்பது திண் ணம். கி. பி. ஐந்தாம் நூற்றாண்டில் பிராகிருதத்திலும் வட மொழியிலும் பெரும்புலமை எய்தியிருந்த சிம்மசூரி ரிஷி, சர்வ நந்தி என்ற இரண்டு அறிஞர்கள் அவ்வமண்பள்ளியில் தங்கி அவ்விரு மொழிகளையும் பலர்க்கும் கற்பித்து வளர்த்துவந்தமை அறியத்தக்கது.[10] கி. பி. ஆறாம் நூற்றாண்டில் காஞ்சியிலிருந்து ஆட்சிபுரிந்து கொண்டிருந்த சிம்ம விஷ்ணு என்ற பல்லவ அரச னுடைய அவைக்களப் புலவராக விளங்கியவர் பாரவி என்னும் வடமொழிப் புலவர் ஆவர்.[11] அம்மன்னனால் நன்கு ஆதரிக்கப் பெற்று நல்வாழ்வு பெற்றிருந்த இப்புலவர் தலைவர் வடமொழி யில் கிராதார்ச்சுனீயம் முதலான நூல்கள் இயற்றித் தம் புகழை யாண்டும் பரப்பியிருத்தல் உணரற்பாலதாம். இச் செய்திக ளெல்லாம், கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் இடையில் தமிழகத் தின் வடபகுதியைக் கைப்பற்றிக் காஞ்சிமாநகரைத் தலைநகராகக்கொண்டு அரசாண்டுவந்த பல்லவ அரசர்கள் கி. பி. ஏழாம் நூற்றாண்டு வரையில் வடமொழிப் பயிற்சி எங்கும் பரவும்படி செய்து வந்தமையோடு[12] அம்மொழியில் வல்லுநரைப் போற்றிப் புரந்தும் வந்தனர் என்பதைத் தெளிவாகப் புலப்படுத்துதல் காண்க. எனவே, அவ்வேந்தர்கள் பொதுமக்களின் தாய்மொழி யாகிய தமிழ் மொழியின் வளர்ச்சியில் சிறிதும் ஈடுபடவில்லை என்றும் தமிழ்ப் புலவர்களை ஆதரித்துச் சிறந்த தமிழ் நூல்கள் தோன்றும்படி செய்யவில்லை என்றும் ஐயமின்றிக் கூறலாம். தமி முகத்திற்குப் புதியவர்களாகவும் வேறு மொழி பேசுவோ ராகவும் இருந்த பல்லவர்கள் தமிழ்மொழியின் சிறப்பினை எங்ஙனம் உணரக்கூடும்? ஆதலால், தமிழகத்தின் வட பகுதியில் முற்கால இடைக்காலப் பல்லவர்களின் ஆட்சியில் - தமிழ் மொழியில் சிறந்த நூல்கள் தோன்றுவதற்கு இடமில்லாமற் போயினமை காண்க.

இனி, அக்காலத்தில் தமிழகத்தின் தென்பகுதி எத்தகைய நிலையில் இருந்தது என்பது ஆராய்தற்குரியது. கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிகழ்ந்த களப்பிரர் படையெழுச் சியினால் பாண்டிநாடு அன்னோர் ஆட்சிக்குட்பட்டதோடு அந் நாட்டின் தலைநகராகிய மதுரையம்பதியில் நெடுங்காலமாகப் புகழுடன் நடைபெற்றுவந்த தமிழ்ச்சங்கம் அழிந்துபோயினமை யும் முன்னர் விளக்கப்பட்டுள்ளது. ஆகவே, அக்காலப்பகுதி யில் பாண்டி நாட்டிலும் தமிழ்மொழி ஆதரிப்பாரற்றுத் தன் பெருமையிழந்து வீழ்ச்சியடைந்தமை தெள்ளிது. பௌத்த சமயத்தினரான களப்பிரர்கள், பிறகுசோழநாட்டையும் கைப் பற்றி ஆட்சிபுரிவாராயினர். அந்நாட்களில் அவர்கள் தாம் மேற் கொண்டிருந்த பௌத்தசமயத்தைத் தமிழகத்தின் தென் பகுதி யில் யாண்டும் பரப்புவதற்குப் பெரிதும் முயன்றனர். ஆகவே. அக்களப்பிரரது ஆட்சியில் பௌத்த சமய நூல்கள் நம் தமிழ் நாட்டில் தோன்றுவவாயின. அந்நூல்களும் தமிழ் மொழியில் எழுதப்படாமல் பாலி மொழியில் எழுதப்பெற்றமை குறிப்பிடத் தக்கதாகும். கி. பி. நான்காம் நூற்றாண்டில் சோழர்களின் பழைய தலைநகராகிய உறையூரில் பிறந்து வளர்ந்த புத்த தத் தன் என்பவன் இருமுறை ஈழநாட்டிற்குச் சென்று, பௌத்த சமய நூல்களை நன்கு பயின்று, பிறகு சோழநாட்டிற்குத் திரும்பிவந்து, அபிதம்மாவதாரம், விநயவிநிச்சயம் என்ற இரு நூல்களையும் பாலி மொழியில் எழுதி வெளியிட்டுள்ளனன்.[13] அவற்றுள், அபிதம்மாவதாரம் என்ற நூலை, அரண் மனைகளும் பூஞ்சோலைகளும் செல்வம் நிறைந்த வணிகர்களும் உள்ள காவிரிப்பூம்பட்டினத்தில் கண தாசனால் அமைக்கப் பட்டிருந்த ஒரு பெரிய பௌத்தப்பள்ளியில் தான் தங்கியிருந்த காலத்தில் சுமதி என்ற மாணவன் வேண்டிக்கொண்டவாறு எழுதிமுடித்த செய்தியை அதன் இறுதியில் புத்த தத்தன் கூறி யிருப்பது குறிப்பிடத்தக்கது.[14] அன்றியும், சோழநாட்டில் காவிரியால் வளம்பெற்ற பூதமங்கலம் என்றநகரில் வெணுதாசன் என்பவனது சிறந்த பள்ளியில் தான் இருந்த நாட்களில் எளிதில் தன் மாணவர்களும் பௌத்த பிட்சுக்களும் சுருங்கிய காலத்தில் கற்றுணருமாறு விநயவிநிச்சயம் என்னும் நூல் இயற்றப் பெற்றது என்றும், அது களப்பிரகுல வேந்தனாகிய அச்சுத விக் கந்தன் என்பவன் தமிழ் நாட்டில் ஆட்சிபுரிந்துகொண்டிருந்த போது தொடங்கி எழுதி முடிக்கப்பெற்றது என்றும் அந்நூலின் இறுதியில் அவ்வாசிரியன் குறித்திருப்பது அறியற்பாலதாகும்.[15]

இவற்றால் சோழநாடு களப்பிரர் ஆட்சிக்குட்பட்டிருந்த உண்மை யும் அவர்களது ஆளுகையில் பௌத்த சமயமும் பாலிமொழியும் ஆதரிக்கப்பெற்று அவை எங்கும் பரவிய செய்தியும் நன்கு புலப் படுதல் காண்க. தமிழ் நாட்டில் அக்காலத்தில் நிலவிய பௌத்த சமயகுரவர் பதின்மர் பல்வகை நூல்கள் எழுதியுள்ளனர் என்றும் காஞ்சிமாநகர் ஒன்றில்மாத்திரம் வேறு பௌத்த ஆசிரியர் இருபதின்மர் பாலிமொழியில் பல பௌத்த சமய நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளார்கள் என்றும் கந்தவம்சம் என்ற பௌத்த நூலொன்று கூறுகின்றது.[16] அன்றியும், பாலி மொழிக்கு முதலில் இலக்கணம் வரைந்த காச்சாயனரும் தமிழ் நாட்டவரே என்பது அறியத்தக்கது.[17] இவற்றையெல்லாம் கூர்ந்து நோக்குங்கால், கடைச்சங்க காலத்திற்குப் பிறகு கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் இடைக்கால முதல் ஏதிலார் ஆகிய களப்பிரரும் பல்லவரும் நம் தமிழ்நாட்டைக் கைப்பற்றி அரசாண்ட காலத்தில் பாலி, பிராகிருதம், வடமொழி ஆகிய பிற மொழிகளும் பௌத்தம் சமணம் ஆகிய புறச்சமயங்களும் எத் துணை உயர்வெய்திப் பெருமையுற்றன என்பது நன்கு விளங்கும். ஆகவே, அவ்வயலாரது ஆட்சிக்காலம் முழுவதும் தமிழ் மொழிக்கு ஆதரவும் வளர்ச்சியும் இல்லாமற் போயின எனலாம். எனவே, அக்காலப் பகுதி தமிழ் மொழிக்கு ஓர் இருண்டாகால மாகவே இருத்தல் காண்க.

---------
[1]. Epigraphia Indica, Vol. I, No. 1.; Ibid, Vol. VI, No. 8; Ibid, Vol. VIII, No. 12.
[2]. Epigraphia Indica, Vol. VIII, pp. 24-36.; Epigraphia Carnatica, Vol. VII, p. 200.
Indian Antiquary, Vol. XXV, p. 27.
[3]. Administration and Social Life under the Pallavas, p. 225
[4]. Ibid, pp. 197-199. II-2
[5]. Epigraphia Indica, Vol. XVII1, No, 2.
[6]. பரதகண்டத்தில் புண்ணிய நகரங்களாகக் கருதப்பட்ட ஏழனுள் காஞ்சி
யைத் தவிர மற்ற ஆறும் வடநாட்டூர்கள் என்பது உணரற்பாலது.
[7] Dr. Krishnaswami Aiyangar Commemoration Volume, pp. 306 and 307.
[8]. திருக்கச்சி மேற்றளிப்பதிகம், பா. 8.
[9]. Administration and Social Life under the Pallavas, pp. 227-230.
[10]. Ibid, p. 229.
[11]. The Pallavas by Mr. R. Gopalan M.A., p. 158.
[12]. Ibid, p. 157.
[13]. Dr. S. Krishnaswami Aiyangar Commemoration Volume, pp. 242 & 244.
[14]. Ibid, p. 243; The Colas, Vol. I, p. 119.; History of the Tamils -Mr. P. 'T. Srinivasa Aiyangar, pp. 528 and 529.
[15]. Ibid, pp. 529 and 530.
[16]. Dr. S. Krishnaswami Aiyangar Commemoration Volume.p. 244.
[17]. Dr. S. Krishnaswami Aiyangar Commemoration, Volumes p. 245.
--------

V. இருண்டகாலத்தினும் சில தமிழ் நூல்கள் தோன்றியமை:

வட்வேங்கட முதல் தென்குமரி வரையிலுள்ள பெரு நிலப்பரப்பு முழுவதும் பிறமொழியாளராகிய பல்லவரும் களப் பிரரும் அரசாண்ட காலப் பகுதியிலும் சில தமிழ் நூல்கள் தோன்றுவதற்குச் சிறிது வாய்ப்பு ஏற்பட்டமை மகிழ்ச்சிக்குரிய தொன்றாம். அக்காலப் பகுதியில் தமிழ் மொழிக்கு அரசாங்க ஆதரவு ஒரு சிறிதுமின்மை முன்னர் விளக்கப்பட்டது. எனி னும், செந்தமிழ்ப் புலமையிற் சிறந்த சிவனடியார் சிலர், அக் காலப்பகுதியில் இருந்துள்ளனர். அத்தகைய பெரியோர்களுள் காரைக்கால் அம்மையார், திருமூலநாயனார் என்போர் குறிப் பிடத்தக்கவராவர். அவர்கள் இயற்றியுள்ள அற்புதத் திரு வந்தாதி, இரட்டை மணிமாலை, திருலாலங்காட்டு மூத்த திருப் பதிகங்கள், திருமந்திரம் ஆகிய நூல்கள் அந்நாட்களில் தோன்றி யவை என்பது ஐயமின்றித் துணியப்படும். அக்காலப்பகுதியில் சில நீதி நூல்களும் தமிழில் இயற்றப்பட்டுள்ளன. தமிழ் மொழியில் முதலில் நீதி நூல்கள் தனியாக எழுதப்பெற்ற காலம் கடைச்சங்க காலமாகும். கடைச்சங்க நாளில் தமிழில் தனி நீதி நூல்கள் தோன்றியமைக்குக் காரணம் யாது என்பது ஈண்டு ஆராயற்பாலதாம்.

தமிழ் மக்கள் தம் நாட்டில் வந்து தங்கும் அயல் நாட்டா ரோடு அன்புடன் கலந்து பழகும் இயல்பினர் என்பது யாவரும் அறிந்ததொன்று. கடைச்சங்க காலத்தில் யவனர், வடவாரியர், கடார நாட்டினர், அருமண தேயத்தார், சோனகர் முதலானோர் தமிழகத்திற்கு அடிக்கடி வந்து தங்கியிருந்த செய்தி, சங்கத்துச் சான்றோர் பாடல்களாலும் உரையாசிரியர்களின் குறிப்புக்க ளாலும் அயல்நாட்டாருடைய யாத்திரைக் குறிப்புக்களாலும் நன்கறியக் கிடக்கின்றது. அந்நாட்களில் அவ்வயலாரோடு நெருங்கிப் பழகி வந்த தமிழ்மக்களுள் சிலர் தம் நாகரிக நிலையினின்று மாறி ஒழுக்கங்களிலும் தவறுவார் ஆயினர் ; எனவே, அவ்வயலாருடைய தீய இயல்புகளையும் தீயொழுக்கங்களையும் அன்னோர் மேற்கொள்ளத் தொடங்கியமை தெள்ளிது. அத் தகையோரைத் திருத்தி நல்வழிப் படுத்துவதும், தமிழருடைய தொன்றுதொட்டுவந்த அறவொழுக்கமும் நாகரிகமும் சிதைந் தொழியாதவாறு காப்பாற்றுவதும், அக்காலத்தில் தூய வாழ்க்கை நடத்திவந்த தொல்லாணை நல்லாசிரியன்மாரின் மாபெருங் கடமையாகிவிட்டமை அறியற்பாலதாம். கடைச் சங்ககாலத்தில் நிலவிய பேரறிஞராகிய ஆசிரியர் திருவள்ளுவனார் அக்கடமையை நிறைவேற்றும்பொருட்டுத் திருக்குறள் என்ற சிறந்த நீதி நூலொன்று இயற்றி, அதன் மூலமாகத் தமிழ்மக்கட்குப் பல அரிய உண்மைகளை அறிவுறுத்தி, அன்னோர் தம் அற வொழுக்கங்களிலும் நாகரிக நிலையிலும் தவறாதவாறு அரண் செய்வாராயினர். ஒப்பற்ற அப்பெருநூலை அக்காலத்திலிருந்த புலவர் அரசர் முதலான எல்லோருமே நன்கு பயின்று நல்ல பயன் எய்தினர். அந்நூற் பயிற்சியின் பயனாகக் கடைச்சங்க நாளில் தமிழ்மக்களின் அறவொழுக்கங்களும் நாகரிகமும் பெரும் பாலும் குன்றாமல் நிலைபெற்றன என்று உறுதியாகக் கூறலாம்.

அதனையுணர்ந்த வேறு அறிஞர் சிலரும் அவ்வரிய நூலைப் பின் பற்றி மற்றுஞ் சில நீதிநூல்களை அக்காலத்தில் இயற்றியுள்ளனர். அவைகள் எல்லாம் தமிழ்மக்கள் தம் பண்டை அறவொழுக்கங் களைப் பொன்னேபோற் போற்றி அவற்றின் வழியே நல்வாழ்க்கை நடத்தி இன்புறுவதற்குப் பெரிதும் பயன்பட்டுவந்தன வெனின்,
அச்செய்தி வெறும் புனைந்துரையன்று.

கடைச்சங்ககாலத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் ஏற்பட்ட அன்னியர் ஆட்சியில் பெளத்தரும் சமணரும் அரசாங்க ஆதரவு பெற்றுப் பெருஞ் செல்வாக்கு எய்தியிருந்தமை முன்னர் விளக் கப்பட்டது. அந்நாட்களில் தமிழ் மக்களுட் சிலர் பௌத்த சமண சமயங்களில் பெரிதும் ஈடுபட்டு அவற்றைச் சார்ந்தொழு கத் தலைப்பட்டமையோடு தம் ஒழுக்க வழக்கங்களையும் கைவிடத் தொடங்கினர். அந்நிகழ்சிகளை நன்குணர்ந்த சைவ வைணவப் புலவருட் சிலர், தமிழர்களுடைய வழக்க வொழுக் கங்களும் நாகரிகமும் இழுக்குறாவண்ணம் சிறு நீதி நூல்கள் இயற்றி மக்களிடையே பரப்புவாராயினர். சங்ககாலத் தமிழ் மக்கள், கலப்பற்ற தூய தமிழில் பேசியும் எழுதியும் வந்தமை யோடு சிறந்த தமிழறிவு வாய்க்கப்பெற்று மிருந்தனர். எனவே, அவர்கள் உயர்ந்த நீதி நூலாகிய திருக்குறளைப் படித்து உண் மைப்பொருளை உணர்ந்து கொள்ளும் ஆற்றல் படைத்தவர்களா கத் திகழ்ந்தனர். ஆனால், கடைச்சங்க காலத்திற்குப் பிற்பட்ட இருண்டகாலத் தமிழ் மக்கள் சிறந்த தமிழறிவு பெறுவதற்கு வாய்ப்பில்லாமற்-போயினமையின் அத்தகைய ஆற்றல் இல்லா தவராயிருந்தனர். அதுபற்றியே அக்காலத்தில் நிலவிய அறிஞர் கள் அன்னோர்க்கு ஏற்றவாறு எளிய வெண்பாக்களில் சிறு சிறு நீதிநூல்கள் இயற்றியுள்ளனர் என்பது அறியற்பாலதாம். அவ் வாறு தோன்றிய நூல்கள் இனியவை நாற்பது, இன்னாநாற்பது, திரிகடுகம், நான்மணிக்கடிகை என்பனவாம். அந்நூல்களை அவ்விருண்டகாலத் தமிழ்மக்கள் படித்துத் தம் வழக்க வொழுக்கங்கள் குன்றாதவாறு நடந்துவந்தனர் என்பதற்குச் சான்றுகள் இல்லாமலில்லை. அந்நிலையை யுணர்ந்த சமணர்கள் தாமும் அம்முறையைக் கைக்கொண்டு மறைமுகமாகத் தம் சமயக் கொள்கைகளைத் தமிழ்மக்களிடையே பரப்பக் கருதினர். அதற்கேற்ப, கி. பி. ஐந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ்நாட்டில் பௌத்தசமயம் வீழ்ச்சி யடைந்தது. பாண்டி நாட்டையும் சோழ நாட்டையும் ஆட்சிபுரிந்த களப்பிரரும் பௌத்தசமயத்தைத் துறந்து, சமண சமயத்தை மேற்கொண்டு ஒழுகத் தொடங்கினர். ஆகவே, சமணர்கள் தம் கருத் தினை நிறைவேற்றிக் கோடற்கு அதுவே தக்க காலமாக அமைந்தது. எனவே, தமிழ்நாட்டில், அமண்பள்ளிகளில் தங்கி யிருந்த சமண முனிவர்கள் தமிழ் இலக்கண இலக்கியங்களை நன்கு பயின்று சிறந்த புலமை எய்தித் தமிழ் நூல்கள் இயற்றும் ஆற்றலும் பெற்றனர் ; பிறகு தமிழ் மொழியில் நூல்கள் இயற்றி, அவற்றின் மூலமாகத் தம் சமயக்கொள்கைகளைத் தமிழ்நாட்டில் யாண்டும் பரப்ப முயன்றனர். அதற்கு உறுதுணை யாக, கடைச்சங்கம் நிலவிய பாண்டிநாட்டு மதுரையம்பதியில் பூஜ்யபாதருடைய மாணாக்கர் வச்சிரநந்தி என்ற சமண முனிவர் ஒருவர் கி. பி. 470 ஆம் ஆண்டில் திராவிட சங்கம் ஒன்று நிறுவி னர். இச் செய்தி, திகம்பர தரிசனசாரம் என்னும் சைன நூலொன்றால் நன்குணரக் கிடக்கின்றது. [1] அத்திராவிட சங் கம், சமணரது தமிழ்ச்சங்கமேயாகும். அது தமிழ்நாட்டில் அவர்கள் அமைத்த பிற சைன சங்கங்களுக்கெல்லாம் தலைமைச் சங்கமாக இருந்திருத்தல் வேண்டும் என்பது திண்ணம். அந்நாட் களில் தமிழ்ச் சான்றோர்கள் எழுதிய நீதி நூல்களைத் தமிழ்மக்கள் பெரிதும் விரும்பிப் படித்துவந்தமையறிந்த அச் சங்கத்தார் முதலில் தாமும் தமிழ்மொழியில் நீதி நூல்கள் இயற்றுவாரா யினர். (பழமொழி, சிறுபஞ்சமூலம், ஏலாதி என்பவை, அப் போது தோன்றிய நூல்களேயாம். அவை நீதிநூல்களாகக் கருதப்பட்டுவரினும் அவற்றில் எல்லாச் சமயங்கட்கும் ஏற்ற பொது நீதிகளோடு இடையிடையே சைனசமயக் கொள்கைகளும் ஒழுக்கங்களும் கூறப்பட்டிருத்தலைக் கற்றோர் யாவரும் காணலாம்.

அந்நூற்றாண்டுகளில் சைவரும்வைணவரும்சமணரும் தம்தம் சமயத்தொண்டுகளைத் தமிழ்மொழிவாயிலாகச் செய்ய நேர்ந்தமை யால் கி.பி. மூன்றாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்ட இருண்டகாலப் பகுதியிலும் சில தமிழ் நூல்கள் தோன்றுவவாயின. ஆனால், அந்நூல்கள் எல்லாம் இக்காலத்தில் நமக்குக் கிடைக்கவில்லை ; அவற்றுள் சிற்சில நூல்களே இப்போது நம் கைக்கு எட்டி யுள்ளன. அவையெல்லாம் சமயச் சார்புபற்றி எழுந்தனவாயி னும் அவற்றின் ஆசிரியர்கள் தமிழ் மொழிக்குத் தொண்டுபுரிந்த நல்லறிஞரேயாவர். சமயத் தொண்டர்களாகிய அப்பெரியோர் கள் பல்வகைப்பட்ட தமிழ் நூல்களை அந்நாளில் இயற்றியிருத் தல்கூடும். பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு எத்துணையோ இடையூறுகட்கும் ஆட்சி மாறுதல்கட்கும் நடுவில் அவை நமக் குக் கிடைக்காமற் போயினமை இயல்பாக நிகழக்கூடியதேயன்றி வியப்பிற்குரியதன்று. ஆயினும், பண்டைத் தமிழ் நூல்களுக்கு உரைகண்ட பேராசிரியன்மார், தம் தம் உரைகளில் மேற் கோளாக எடுத்துக்காட்டியுள்ள நூல்களுள் சிலவும் புறத்திரட் டிற் காணப்படும் நூல்களுள் சிலவும் இருண்டகாலப் பகுதியில் இயற்றப்பட்டிருத்தல் வேண்டும் என்று கருதுவதற்கு இடம் உளது. அவை; எலிவிருத்தம், நரிவிருத்தம், கிளிவிருத்தம், முத் தொள்ளாயிரம் என்பனவாம். அவற்றுள், நரிவிருத்தத்தைச் சைவசமயகுரவருள் ஒருவராகிய திருநாவுக்கரசு அடிகளும், எலிவிருத்தம் கிளிவிருத்தம் ஆகிய இரண்டையும் அவ்வடிகள் காலத்தவராகிய திருஞான சம்பந்தரும் முறையே ஆதிபுராணத் திருக்குறுந்தொகையிலும் திருவாலவாய்ப் பதிகத்திலும் குறித்துள்ளமையின், அந்நூல்கள் மூன்றும் கி. பி. ஏழாம் நூற்றாண்டிற்கு முற்பட்டனவாதல் வேண்டும். எனவே அவை கி. பி. ஐந்தாம் நூற்றாண்டில் மதுரைமாநகரிலிருந்த சைனரது தமிழ்ச்சங்கத்தில் உறுப்பினராக நிலவிய அமண் சமயப்புலவர்களால் இயற்றப்பட்டிருத்தல் வேண்டும் என்பது நன்கு துணியப்படும். அந்நூல்கள் இந்நாளில் கிடைக்காமற் போயினமையின் அவை இறந்தனபோலும். சிந்தாமணியின் ஆசிரியராகிய திருத்தக்க தேவரால் இயற்றப்பெற்ற நரிவிருத் தம் என்னும் நூல் திருநாவுக்கரசு அடிகளால் கூறப்பெற்ற நரிவிருத்தத்தினும் வேறானதொன்று என்பது ஈண்டுணரற் பாலதாகும்.

அக்காலப்பகுதில் எழுதப்பட்ட நூல்களுள், புலவர் பெரு மக்கள் எல்லோருடைய உள்ளத்தையும் பிணிக்கும் தன்மை வாய்ந்தது முத்தொள்ளாயிரம் என்ற அரிய நூலேயாம். அது, தமிழ் மூவேந்தர்களாகிய சேர சோழ பாண்டியர்களின் பெருமை களை எடுத்துக்கூறும் ஒரு பெரு நூலாகும். அந்நூல் முழுவதும் இக்காலத்திற் கிடைத்திலது. எனினும், பண்டை உரையாசிரி யர்களால் மேற்கோளாக எடுத்தாளப்பெற்ற சில பாடல்களே இந்நாளில் தேடித் தொகுக்கப்பெற்று முத்தொள்ளாயிரம் என்ற பெயருடன் வெளியிடப்பட்டிருப்பது அறியத்தக்கது. இந் நூலைப்பற்றிய பிற செய்திகள் பின்னர்க் கூறப்படும்.

இனி, இருண்டகாலப் பகுதியில் இயற்றப்பெற்றனவாக இதுகாறும் ஆராய்ந்து காணப்பட்ட இலக்கியங்களின் வர லாறுகளைத் துருவி நோக்கி உண்மைச் செய்திகளையுணர்ந்து கொள்வது இன்றியமையாததாகும். இலக்கிய வரலாற்றில் விளக்கப்பட வேண்டியவை, நூல் வரலாறு, நூலாசிரியர் வர லாறு, நூல் இயற்றப்பெற்ற காலம், நூலால் நுவலப்படும் பொருள் என்பனவாம். இவற்றை உணர்த்தும் பொருட்டு நூல் தோன்றிய காலத்திலேயே இயற்றப்பெற்றுள்ள சிறப்புப் பாயிரப் பாடல்கள் இவற்றுள் சிலவற்றை மாத்திரம் எடுத்துக் கூறுகின்றன. எனவே, அவை இலக்கிய வரலாற்றிற்குரியன வாக ஈண்டுக் குறிப்பிடப்பெற்ற எல்லாவற்றையும் உணர்த்து வனவாயில்லை. ஆயினும், ஓரளவு பயன்படும் நிலையிலுள்ள சிறப்புப்பாயிரப் பாடல்களையும் நூலகத்துக் காணப்படும் சில அகச்சான்றுகளையும் பிற சான்றுகளையும் துணையாகக் கொண்டு இலக்கிய வரலாற்றை ஆராய்ந்து துணிதல் ஏற்புடையதேயாம்.

கி. பி. 250 முதல் கி. பி. 600 வரையில் அடங்கிய காலப் பகுதியில் இயற்றப் பெற்றனவாக ஆராய்ந்தறியப்பெற்ற தமிழ் நூல்கள் முன்னர்க் கூறப்பட்டன. அவற்றுட் சில, சமய நூல் களாகவும், ஒன்று சேர சோழ பாண்டியரின் பண்டைப் பெருமை களைக் கூறும் நூலாகவும் ஏனைய வெல்லாம் நீதி நூல்களாகவும் இருத்தல் உணரற்பாலதாம். அந்நூல்களெல்லாம் எவ்வெவ்வாண் டில் எழுதப்பெற்றன என்பதை அறிந்து கோடற்கு ஆதா ரங்கள் கிடைக்கவில்லை. அன்றியும், அவை எந்த எந்த நூற்றாண்டில் தோன்றியிருத்தல் கூடும் என்பது கூட உய்த் துணர்ந்து கூறவேண்டிய நிலையில் தான் உளது. ஆகவே, கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் இடைப்பகுதிக்கும் கி. பி. ஆறாம் நூற் றாண்டின் கடைப்பகுதிக்கும் இடைப்பட்ட காலத்தில் தோன் றிய தமிழ் இலக்கியங்களில் முதலில் நீதி நூல்களை ஆராய்வோம்.

----------
[1] History of the Tamils by Mr. P.T. Srinivasa Aiyangar M. A. p.247.

1. நான்மணிக்கடிகை

இது நூற்று நான்கு பாடல்களைத் தன்னகத்துக்கொண்ட ஒரு நீதி நூல். ஒவ்வொரு பாடலிலும் நந்நான்கு உண்மைப் பொருள்கள் சொல்லப் பட்டிருத்தலால் இது நான்மணிக் கடிகை என்னும் பெயர் எய்தியது. இந்நூல் வெண்பா யாப்பில் அமைந்தது. இஃது, ஆசிரியர் தொல்காப்பியனார் கூறியுள்ள எண்வகை நூல் வனப்புக்களுள் அம்மை என்னும் வனப்பின் பாற்படும் என்பது பேராசிரியர் நச்சினார்க்கினியர் ஆகிய இரண்டு உரையாசிரியர்களின் கருத்தாகும்.[1] அன்றியும், இது: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று என்பது ' நாலடி நான்மணி' என்று தொடங்கும் பழைய பாடலொன்றால்[2] அறியப்படுகின்றது. ஆனால், பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எக்காலத்தில் யாரால் தேர்ந்தெடுத்துத் தொகுக்கப்பட்டன என்பது புலப்படவில்லை. உரையாசிரியர்களுள் குணசாகரர், பேராசிரியர், நச்சினார்க்கினியர் ஆகியோரைத் தவிர மற்றை யோர் பதினெண் கீழ்க்கணக்கைக் குறிப்பிடாமை உணரத் தக்கது.

இனி, நான்மணிக்கடிகையின் ஆசிரியர் விளம்பிநாகனார் என்ற அறிஞர் பெருமான் ஆவர். எனவே, இவர் விளம்பி என்னும் ஊரில் பிறந்தவர் என்பதும் நாகன் என்ற இயற் பெயர் உடையவர் என்பதும் நன்கு அறியப்படும். இவர் வைணவ சமயத்தினர் என்பது நூலின் தொடக்கத்தில் -- காணப்படும் கடவுள் வாழ்த்துப் பாடல்கள்[4] இரண்டினாலும் தெள்ளிதிற் புலனாகின்றது. இவருடைய விளம்பி என்ற ஊர் யாண்டுள்ளது என்பது தெரியவில்லை. இவருடைய பெற்றோர் யாவர் என்பதும் இவரது வாழ்க்கை வரலாறும் புலப்பட வில்லை. இவர் கி. பி. நான்காம் நூற்றாண்டில் இருந்திருத் தல் வேண்டும் என்பது உய்த்துணரப்படுகின்றது. இது போன்ற நீதி நூல்கள் தமிழ் மொழியில் இயற்றப்பட்டமைக் குக் காரணம் முன்னர் விளக்கப்பட்டுள்ளது. இவ்வாசிரியர் எடுத்துரைக்கும் பல சிறந்த உண்மைகளும் அறிவுரைகளும் இவருடைய புலமைத்திறத்தையும் பரந்த உலகியலறிவையும் உள்ளத்தின் தெளிவுடைமையையும் நன்கு புலப்படுத்து கின்றன. ஆசிரியர் திருவள்ளுவனாரைப்போல், இவர் தம் நூலை ஒருமுறைப்படுத்தி அமைக்கவில்லை. எனினும், இவர் தம் புலமையினாலும் அனுபவத்தினாலும் அறிந்த அரிய உண்மைகளையும் உலகியல்புகளையும் நீதிகளையும் மக்கள் - எளிதில் உணர்ந்து பயனெய்துமாறு அவ்வப்படியே இனிய வெண்பாக்களில் கூறியுள்ளனர். ஆதலால், ஒரே கருத்து வெவ்வேறு பாடல்களில் வெவ்வேறு சொற்றொடரால் குறிக் கப்பட்டிருத்தலை இவருடைய நான்மணிக்கடிகையில் சில இடங்களிற் காணலாம். மக்களாகப் பிறந்தோர் எல்லாம் இம்மையிற் பொன்றாப்புகழை நிலைநிறுத்தி, மறுமையில் உயர்ந்த வீட்டுலகம் புகுதலையே தம் குறிக்கோளாகக் கொள் ளல் வேண்டும் என்பதையும், அதற்குறுதுணையா யிருப்பது கல்வியேயாம் என்பதையும், 'கற்பக் கழிமடமஃகும்'[5] என்று தொடங்கும் பாடலில் இவர் உணர்த்தியிருப்பது அறியத் தக்கது.

இனி, 'ஊனுண்டல் - செய்யாமை செல்சாருயிர்க்கு'[6] எனவும், ' இனிதுண்பானென்பான் உயிர்கொல்லா துண் பான் '[7] - எனவும், ' விலைப்பாலிற் கொண்டூன் மிசைதலும் குற்றம் '[8] எனவும், ' கொலைப்பாலுங் குற்றமேயாம்'[9] எனவும் இவர் கூறியிருப்பதை நோக்குமிடத்து, புலாலுண்ணாமை கொல்லாமை ஆகியவை தலைசிறந்த இரு பேரறங்கள் என்பதும் அவை உலகில் என்றும் நின்று நிலவவேண்டும் என்பதும் இவரது உள்ளக்கிடக்கையாதலுணர்க. இவ்வாசிரியர் கூறியுள்ள அறிவுரைகள் சில, என்றென்றும் நினைவில் வைத்துக்கொள்ளுதற்கு உரியனவாகும். அவை,
என்பனவாம்.

----
[1]. 'வனப்பியல் தானே வகுக்குங் காலைச்
சின்மென் மொழியாற் றாய பனுவலோ
டம்மை தானே அடிநிமிர் பின்றே ' (தொல். செய். 235)
என்ற சூத்திரத்தின் உரையில் இவ்விரு உரையாசிரியன் மாரும் கூறியிருப்பது காண்க.
[2]. 'நாலடி நான் மணி நானாற்ப தைந் திணைமுப்
பால்கடுகங் கோவை பழமொழி மாமூலம்
இன்னிலைசொல் காஞ்சியோ டேலாதி யென்பது உம்
கைந்நிலையு மாங்கீழ்க் கணக்கு'
[3]. யாப்பருங்கலக் காரிகை, 40-ஆம் செய்யுளின் உரை; தொல். செய்யுளியல், சூ. 547 உரை. வீர சோழிய உரையிலும் (சூத். 145) கீழ்க்கணக்குக் காணப்படுகிறது.
[4]. 'மதிமன்னு மாயவன் வாண்முக மொக்கும்
கதிர்சேர்ந்த ஞாயிறு சக்கர மொக்கும்
முதுநீர்ப் பழனத்துத் தாமரைத் தாளின்
எதிர்மலர் மற்றவன் கண்ணொக்கும்
பூவைப் புதுமல ரொக்கு நிறம்.' (நான்மணி. கடவுள் வாழ்த்து , 1)
[5]. நா. கடிகை, பா. 28.
[6]. நா. கடிகை , பா. 38.
[7]. ஷை பா. 59.
[8] & [9]. ஷ பா. 26.
----------

2. இன்னா நாற்பது


இது, கடவுள் வாழ்த்து உள்பட நாற்பத்தொரு வெண் பாக்களையுடைய ஒரு நீதி நூல். இதிலுள்ள ஒவ்வொரு பாடலும் இன்னது இன்னது துன்பம் பயக்கும் என்று கூறுவதால், இஃது இன்னாநாற்பது என்னும் பெயர் பெறுவ தாயிற்று. இது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று ; ஆசிரியர் தொல்காப்பியனார் கூறியுள்ள அம்மை என்னும் வனப்பினைத் தன்பாற் கொண்டு விளங்குவது ; எல்லா மக்கட்கும் உறுதிபயக்கும் பொது நீதிகளையும் உண்மைகளையும் எடுத்துக் கூறுவது. இதன் ஆசிரியர் கபிலர் என்னும் பெய ரினர் ; கள்ளுண்ணாமையையும் புலாலுண்ணாமையையும் தம் நூலில் மூன்று பாடல்களில் வற்புறுத்திக் கூறியுள்ள இவ் வாசிரியர், வேள் பாரியின் உற்ற நண்பரும் கடைச்சங்கப் புலவருமாகிய கபிலர் [1] அல்லர் என்பது தேற்றம். எனவே, இவர் அப்பெயருடன் பிற்காலத்தில் நிலவிய வேறொரு புலவர் ஆவர். இவர் நூலை நுணுகி யா ராயுங்கால், கடைச்சங்கம் அழிந்த பிறகு கி. பி. நான்காம் நூற்றாண்டில் சமண் சமயத் தினரின் செல்வாக்கு நம் தமிழகத்தில் காலத்தில் இவர் இருந்திருத்தல் வேண்டுமென்ப னாகின்றது. இவர் துன்பின் மூலங்களை ஆய்ந்துணர்ந்து ……. மாத்திரம் தம் நூலில் தொகுத்துக் கூறியுள்ளமைக்குக் காரணம், அவற்றை மக்கள் அறிந்துகொண்டு அவற்றினின்று நீங்கி இன்பம் எய்தல் வேண்டும் என்னுங் கருத்தினைத் தம் உள் ளத்திற் கொண்டமையே எனலாம். துன்ப நீக்கமே இன்பப் பேறாம் என்பது அறிஞர் எல்லோரும் உணர்ந்ததோர் உண்மையன்றோ ? - இவ்வாசிரியரும், தம் அனுபவத்தாலும் ஆராய்ச்சியாலும் இவ்வுலகில் ' இன்னா' என்று கண்டவற்றை அவ்வப்படியே இன்னிசை வெண்பாக்களில் கூறிச் செல்லு கின்றனரேயன்றி அவற்றை யெல்லாம் ஒருமுறைப் படுத்தி அமைத்தாரில்லை. எனவே, ஒரே கருத்து வெவ்வேறு பாடல் களில் அமைந்து கூறியது கூறல் எனப்படுமாறு இருத்தலை இவ ருடைய நூலில் காணலாம். அதுபற்றி இவர் புலமைத் திறமை யும் அருளுடைமையும் இழுக்குடையனவா கா... அக்கருத்தின் உயர்வுநோக்கி, அதனைப் பலரும் நினைவில் வைத்துக்கொள்ளல் வேண்டும் என்பதை வலியுறுத்தற்பொருட்டே அங்ஙனம் கூறி யுள்ளனர் என்று கொள்வது அமைவுடைத்து.

இவர் தம் கடவுள் வாழ்த்துப் பாடலில் சிவபெருமான், பலராமன், மாயோன், முருகவேள் ஆகிய நால்வரையும் குறித் துள்ளமையின்,[2] இவர் சமயக் கொள்கையில் கடைச்சங்கப் புலவராகிய நக்கீரனாரைப்போல்[3] பொது நோக்குடையவர் ஆவர். எனினும், இவர் ' முக்கட் பகவன் அடிதொழாதார்க் கின்னா' என்று சிவபெருமானை அப்பாடலில் முதலில் கூறி யிருத்தலால் சிவநெறியில் ஒழுகிய செந்தமிழ்ப் புலவரா தல் தெள் ளிது. இவர், பலதேவனையும் மாயோனையும் தனித்தனியாக, அக்கடவுள் வாழ்த்தில் குறிப்பிட்டிருப்பது ஒன்றே, இவர் கடைச்சங்க காலத்திற்குப்பிறகு அதனை யடுத்துள்ள காலப் பகுதியில் இருந்திருத்தல் வேண்டும் என்பதை நன்கு புலப்படுத் தும் எனலாம். பதினோராந் திருமுறையில் காணப்படும் மூத்த நாயனார் திருவிரட்டை மணிமாலை, சிவபெருமான் திருவிரட்டை மணிமாலை, சிவபெருமான் திருவந்தாதி என்ற நூல்கள் மூன்றும் பாடியுள்ள கபிலதேவ நாயனார் என்பவர் இக்காலப் பகுதிக்குப் பிறகு பல்லவர் ஆட்சிக்காலத்தில் கி. பி. ஏழாம் நூற்றாண்டிற்குப் பின்னரிருந்த வேறொரு புலவர் ஆவர். அவர் மூத்த பிள்ளையார்[4] மீது இரட்டை மணிமாலை இயற்றியிருப்பதும் அவரது சிவபெரு மான் திருவந்தாதியிலுள்ள பாக்கள் எல்லாம்,மடக்கு, திரிபு ஆகிய சொல்லணிகளை யுடையனவாக இருப்பதும் அவர் தம் அந்தாதி யில் திருச்சிராப்பள்ளிக் குன்றைச் சிவபெருமானுக்குரிய இட மாகக் கூறியிருப்பதும்2 அவர் கி. பி. ஏழாம் நூற்றாண்டிற்குப் பின்னர் இருந்தவர் என்பதை நன்கு உறுதிப்படுத்துவனவாகும். எனவே, இன்னாநாற்பது பாடிய கபிலரும் இரட்டை மணிமாலை களும் அந்தாதியும் இயற்றிய கபிலதேவ நாயனாரும் நம் தமிழகத் தில் வெவ்வேறு காலங்களில் விளங்கிய வெவ்வேறு புலவர் ஆவர். பெயர் ஒற்றுமை யொன்றே கருதி இவ்விரு புலவரையும் ஒருவ ரெனக் கோடல் சிறிதும் பொருந்தாதென்க. - இவ்வாசிரியரைப் பற்றிய பிற செய்திகளெல்லாம் தெரியவில்லை.

இனி, இவர் இந்நூலில் எடுத்துக் கூறியுள்ள சில உண்மைகள் மறவாமல் என்றென்றும் உள்ளத்திற் கொள்ளத்தக்கனவாகும். அவை,

என்பனவாம்.

----
[1]. 'மட்டுவாய் திறப்பவும் மைவிடை வீழ்ப்பவும்
அட்டான் றானாக் கொழுந்துவை யூன்சோறும்
பெட்டாங் கீயும் பெருவளம் பழுதி
நட்டனை மன்னோ முன்னே ' (புறம். 113)
என்ற கபிலரது பாடலால் அவர்க்கு ஊனும் மதுவும் உண்ணுதல் உடன் பாடாதல் காண்க.
[2]. 'முக்கட் பகவ னடிதொழா தார்க்கின்னா
பொற்பனை வெள்ளையை யுள்ளா தொழுகின்னா
சக்கரத் தானை மறப்பின்னா வாங்கின்னா
சத்தியான் தாள் தொழா தார்க்கு ' (கடவுள் வாழ்த்து.)
[3]. ஆசிரியர் நக்கீரனார் 56 ஆம் புறப்பாட்டில் இக் காற்பெருந் தெய்வங்களை யும் கூறியிருத்தல் காண்க.
[4]. மூத்த பிள்ளையாராகிய விநாயகரது வழிபாடும் வணக்கமும் கி. பி. ஏழாம்
ஏற்றாண்டில் தான் முதலில் தமிழகத்தில் தோன்றின என்பது ஈண் டுணரற்பால தாகும். (தமிழ்ப் பொழில் 15-ஆம் துணரில் யான் எழுதி யுள்ள ' விநாயகர் வழிபாடும் தமிழ் நாடும் ' என்ற கட்டுரையில் இதனைக் காண்க.)
[5]. திருச்சிராப்பள்ளிக் குன்றின் மேல் சிவாலயம் அமைத்தவன் முதல் மகேந்திரவர்மன் என்ற பல்லவ வேந்தன் ஆவன். (செந்தமிழ் 45.ஆர் தொகுதியிலுள்ள திருச்சிராப்பள்ளி என்னும் எனது கட்டுரையாக இதனை நன்கறியலாம்.)
--------

3. இனியவை நாற்பது

இதுவும் கடவுள் வாழ்த்துட்பட நாற்பத்தொரு வெண் பாக்களையுடைய ஒரு நீதி நூல். இதிலுள்ள ஒவ்வொரு பாட லும் இன்னது இன்னது இனியவை என்று உணர்த்து தலால் இஃது இனியவை நாற்பது என்னும் பெயர் எய்தியது. இந்நூலை இனியது நாற்பது' எனவும் ' இனிது நாற்பது ' எனவும் அந் நாளில் வழங்கியுள்ளனர் என்று தெரிகிறது. இந்நூல் பதி ணென்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று ; ஆசிரியர் தொல் காப்பியனாரால் கூறப்பெற்றுள்ள ' அம்மை' என்னும் வனப்பு அமையப்பெற்றது. இதன் ஆசிரியர் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார் ஆவர். இவர், சேந்தன் என்னும் பெய ரினர் என்பதும் இவருடைய தந்தையார் பூதன் என்ற பெயருடை யவர் என்பதும் அவர் மதுரைத் தமிழாசிரியர் என்னுஞ் சிறப்புப் பெயருடன் அந்நாளில் விளங்கியவர் என்பதும் மேலே குறித் துள்ள தொடர் மொழிகளால் நன்கறியக் கிடக்கின்றன. பூதஞ் சேந்தன் என்பது பூதனுடைய மகன் சேந்தன் என்று பொருள் படும் என்பதைத் தொல்காப்பியம் எழுத்ததிகாரம் புள்ளி மயங்கியலிலுள்ள ' அப்பெயர் மெய்யொழித்து' என்று தொடங்கும் ஐம்பத்தைந்தாம் சூத்திரத்தினால்[1] தெள்ளிதின் உணர்ந்து கொள்ளலாம். எனவே, இனியவை நாற்பதின் ஆசிரியராகிய சேந்தனாரின் தந்தையார் பூதனார் என்பவர், கடைச்சங்க காலத்திற்குப் பின்னர் மதுரையில் புகழுடன் நில விய ஒரு தமிழாசிரியராக இருத்தல் வேண்டும் என்பது ஒருதலை. சேந்தனார் தம் நூலில் கடவுள் வாழ்த்துச் செய்யுளில் சிவ பெருமான், திருமால், பிரமதேவன் ஆகிய முப்பெருங் கடவுளரையும்[2] கூறியிருத்தலால் இவர் இன்னாநாற்பதின் ஆசிரியுராகிய கபிலரைப்போல் சமயக் கொள்கையில் பொது நோக் குடையவர் என்பது தேற்றம். கபிலருடைய கடவுள் வாழ்த் திற்கும் இவ்வாசிரியருடைய கடவுள் வாழ்த்திற்கு முள்ள வேறு பாட்டை நோக்குமிடத்து,[3] இவர் கபிலருக்குப் பின்னர் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்திருத்தல் வேண்டு மென்பது நன்கு வெளியாகின்றது. எனவே, இன்னாதவற் றைத் தொகுத்து ஒரு நூல் இயற்றிச் சென்ற கபிலரைப் பின்பற்றியே, பூதஞ் சேந்தனாரும் இனியவை பலவற்றைத் தொகுத்து இந்நூலை இயற்றியுள்ளனர் என்பது நன்கு துணியப் படும். மதுரைத் தமிழாசிரியர் என்று பாராட்டப் பெற்றுள்ள தம் தந்தையாரிடம் இவர் தமிழ் நூல்களைப் பயின்று புலமை யெய்தியவராதல் வேண்டும். இவரைப்பற்றிய பிற செய்திகள் புலப்படவில்லை.

கபிலர், இன்னா நாற்பதில் கூறியுள்ள 'ஊனைத்தின் றூனைப் பெருக்குதல் முன்னின்னா', 'கல்லா ருரைக்குங் கருமப் பொரு ளின்னா', 'குழவிகளுற்ற பிணியின்னா' என்னும் தொடர்களோடு இவ்வாசிரியர் இனியவை நாற்பதில் கூறியுள்ள 'ஊனைத் தின் நூனைப் பெருக்காமை முன்னினிதே', 'கற்றறிந்தார் கூறுங் கருமப் பொருளினிதே', 'குழவி பிணியின்றி வாழ்த லினிதே' என்ற தொடர்கள் சொல்லாலும் கருத்தாலும் ஒற்றுமை-யுடையனவாய் அமைந்திருத்தல் காண்க. இவர் தம் தூலில் எடுத்துரைத்துள்ள அறிவுரைகள் எல்லாம் பொன்னே போல் போற்றத்தக்கனவாம். அவற்றுள்,


என்பவை எல்லோரும் என்றும் நினைவிற் கொள்ளத்தக்க பொருளுரைகளாகும்.
---
[1]. 'அப்பெயர் மெய்யொழித் தன்கெடு வழியும்
நிற்றலு முரித்தே யம்மென் சாரியை
மக்கண் முறைதொகூஉ மருங்கினான'
(தொல். எழுத்து. புள்ளி மயங்கியல், சூத். 55.
[2]. 'கண்மூன் றுடையான்றாள் சேர்தல் கடி தினிதே
தொன்மாண் டுழாய்மாலை யானைத் தொழலினிதே
முந்துறப் பேணி முககான் குடையானைச்
சென்றமர்ந் தேத்த லினிது ' (இனியவை. கடவுள் வாழ்த்து . )
[3]. கபிலர் தம் கடவுள் வாழ்த்தில் பலதேவனையும் மாயோனையும் தனித்தனி யாகக் கூறியிருப்ப, பூதஞ்சேந்தனார் திருமாலை மாத்திரம் சொல்லிவிட் டுப் பிரமதேவனையும் சேர்த்திருத்தல் உணரற்பாலது.
----------

4. திரிகடுகம்

இது கடவுள் வாழ்த்துட்பட நூற்றொரு வெண்பாக்களை யுடைய ஒரு நீதிநூல். ஒவ்வொரு பாடலும் மக்கட்கு நலம் பயக்கும் மும்மூன்று உறுதிப்பொருள்களைக் கூறுகின்றது. இந் நூலில் ஒவ்வொரு வெண்பாவிலும் மூன்றாம் அடியின் ஈற்றுச் சீர் ' இம்மூன்றும் ' என்றாதல் - இம்மூவர் ' என் றாதல் தொகை கூறுதல் குறிப்பிடத்தக்கதாம்.

இனி, திரிகடுகம் என்ற தொடர், சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூன்றையும் குறிக்கும் என்பது, ' திரிகடுகம் சுக்கு மிளகு திப்பிலி ' என்ற திவாகரச் சூத்திரத்தினால்[1] நன்கறி யப்படும். எனவே, சுக்கு மிளகு திப்பிலியாலாகிய திரிகடுகம் என்னும் மருந்து, உடல் நோய் நீக்கி மக்கட்கு நலம் புரிவது போல், அன்னோர்க்குறுதிப் பொருள்களை அறிவுறுத்தி அறியா மையாகிய மனவிருளைப் போக்கி, இம்மை மறுமை இன்பங்களை அளிக்கவல்லது இத்திரிகடுகம் என்னும் நூல் என்பது ஆசிரிய ரது கருத்தாதல் வேண்டும். இதன் ஆசிரியர் நல்லாதனார் என்ப வர் ; ஆதன் என்ற இயற்பெயர் கடைச்சங்க காலத்திற்கு முன்னரே நம் தமிழ் நாட்டில் வழங்கி வந்தது என்பதைத் தொல்காப்பியம் எழுத்ததிகாரம் புள்ளி மயங்கியலில் ' ஆதனும் பூதனும்' என்று தொடங்கும் ஐம்பத்து மூன்றாம் சூத்திரத்தினால்[2] அறியலாம். கடைச்சங்க நாளில் அப்பெயர் சேரநாட்டில் தான் மிகுதியாக வழங்கியுள்ளது என்பது சங்கத்துச் சான்றோர் பாடல்களால் நன்கு புலப்படுகின்றது. ஆகவே, நல்லாதனார் என்பார், சேரநாட்டிற்கு அண்மையிலுள்ள தென்பாண்டி நாட் டில் திருநெல்வேலியைச் சார்ந்த திருத்து என்னும் ஊரினர் என்று பழம்பாடல் ஒன்று[3] கூறுவது பொருத்தமுடையதேயாம். இவர் வைணவ சமயத்தினர் என்பது இவர் கூறியுள்ள கடவுள் வாழ்த்துப் பாடலால் உணரக்கிடக்கின்றது. இவர் தம் நூலில் ஒவ்வொரு செய்யுளிலும் மும்மூன்று பொருள்கள் ஒரு சிறந்த பொது உண்மைக்கு உட்படுமாறு அமைத்துக் கூறியுள்ளமைக் கேற்ப, தம் கடவுள் வாழ்த்துப் பாடலில் திருமாலின் திருவடி கள், ஞாலம் அளந்தமை, குருந்தஞ்சாய்த்தமை, சகடம் உதைத் தமை ஆகிய மூன்று செயல்களையும் நிகழ்த்தியதைப் பாராட்டி யிருத்தல்[4] அறிந்து மகிழ்தற்குரியதாகும்.

இவ்வாசிரியர் தம் நூலுக்குத் திரிகடுகம் என்னும் வட மொழித்தொடரைப் பெயராக அமைத்திருத்தலை நோக்கு மிடத்து, இவர் கடைச்சங்க காலத்திற்குப் பிறகு வடமொழிக்கு அரசாங்க ஆதரவும் ஏற்றமும் மிகுந்திருந்த காலப்பகுதியில் இருந்திருத்தல் வேண்டும் என்பது நன்கு தெளியப்படும். ஆகவே, இவர் , கி. பி. ஐந்தாம் நூற்றாண்டின் இறுதியில் இருந் தவர் எனலாம். இவர் திருக்குறளைத் தெளிவாகப் பயின்று அந் நூலிலுள்ள அரிய கருத்துக்களையும் தொடர்களையும் தம் நூலில் பல இடங்களில் அமைத்துள்ளமை அறியத்தக்கது. அன்றியும், இனியவை நாற்பது என்ற நூலிலுள்ள பல கருத்துக்களும் தொடர்களும் இவர் உள்ளத்தைப் பிணித்து, இவர் நூலாகிய திரிகடுகத்தில் இடம்பெற்று விட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

எனவே, இவர் தம் காலத்திற்கு முற்பட்ட நீதிநூல்கள் பல வற்றையும் கற்றுத்தெளிந்தவர் என்று ஐயமின்றிக் கூறலாம். இவர் தம் நூலாராய்ச்சியாலும் வாழ்க்கையனுபவத்தாலும் உணர்ந்த பல பல உண்மைகளுள் மும் மூன்று, ஒவ்வொரு தலைப்பிற்குள் அடங்குமாறு அமைத்து வெண்பாயாப்பில் இந் நூலை இயற்றியிருப்பது பெரிதும் பாராட்டற்பாலது. இவரது வாழ்க்கை வரலாறு முதலியன புலப்படவில்லை. இவரது நூலா கிய திரிகடுகம் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று என்பதும் ஆசிரியர் தொல்காப்பியனார் கூறியுள்ள அம்மை என் னும் வனப்பிற்கு இலக்கியமாய் அமைந்ததென்பதும் ஈண்டு உணரற்பாலனவாம். இந்நூல் பல உண்மைகளையும் நீதிகளையும் மக்கட்கு அறிவுறுத்தும் சிறப்புடையதாதலின் இஃது எல்லோ ரும் படித்தற்குரிய ஓர் அரிய நூலாகும். இந்நூலிற் கூறப்பட்டுள்ளவற்றுள்,

-----
[1]. திவாகரநிகண்டு, XII, சூத்திரம் 31.
[2]. 'ஆதனும் பூதனுங் கூறிய வியல்பொடு
பெயரொற்றகரத் துவரக் கெடுமே ' (தொல், எழுத்து, புள்ளிமயங்கியல், 53)
[3]. 'செல்வத் திருத்துளார் செம்மல் செருவடுதோள்
நல்லாத னென்னும் பெயரானே - பல்லார்
பரிவொடு நோயவியப் பன்னியா ராய்ந்து
திரிகடுகஞ் செய்த மகன்.'
இப்பாடல், சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழாராய்ச்சித் துறைத் தலைவராயிருந்த திருவாளர் ராவ்சாகிப். வையாபுரிப்பிள்ளை அவர்கள் தம் திரிகடுகப் பதிப்பில் புதிதாகக் கண்டு வெளியிட்டுள்ள தொன்றாம்.
[4]. 'கண்ண கன் ஞாலம் அளந்த தூஉம் காமருசீர்த்
தண்ணறும் பூங்குருந்தம் சாய்த்த தூஉம் - நண்ணிய
மாயச் சகடம் உதைத்த தூஉம் இம்மூன்றும்
பூவைப்பூ வண்ணன் அடி ' (திரிகடுகம் - கடவுள் வாழ்த்து .)
-----------

5. ஆசாரக்கோவை


இது கடவுள் வாழ்த்தோடு நூற்றொரு பாடல்களையுடைய ஒரு நூல். இந்நூலின் கண் குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடைவெண்பா ஆகிய வெண்பாவகைகள் எல்லாம் காணப்படுகின்றன. இதில் ஒவ்வொரு வரும் தம் வாழ்நாட்களில் மேற்கொள்ளுதற்குரிய முறைகளும் ஒழுக்கங்களும் விலக்கத்தக்க செயல்களும் கூறப்பட்டுள்ளன. இன்னவை செயற்பால என்றும் இன்னவை விலக்கற்பால என் றும் இந்நூல் கூறுவதை நோக்குங்கால், இது வடமொழியி லுள்ள ஸ்மிருதி நூல்களைப்போன்றதொரு நூல் என்பது நன்கு விளங்கும். இந்நூலில் சொல்லப்பட்டுள்ள உணவு கொள்ளும் முறை, ஆடையணியும் முறை, நீராடும் இயல்பு, தூங்கும்முறை, படிக்கத்தகாத நாள்கள், நன்மாணாக்கர் செயல் முதலானவற்றை இக்காலத்துள்ள தமிழ்மக்களுள் பலர் ஒப்புக்கொள்ளமாட்டார் கள் என்பது ஒருதலை எனினும், உலகியலை நன்குணர்ந்து உயர் நிலையை எய்த விரும்புவோர் அறிந்து கோடற்குரிய செய்தி களும் இந்நூலில் கூறப்படுகின்றன. ஆகவே, இஃது எல்லோரும் படித்துப் பார்த்தற்குரிய நூல்களுள் ஒன்று எனலாம். இது, பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாக இருப்பதோடு ஆசிரியர் தொல்காப்பியனார் கூறியுள்ள அம்மை என்னும் வனப் பினைத் தன்பாற் கொண்டதுமாகும். இதன் ஆசிரியர் கயத்தூர்ப் பெருவாயில் முள்ளியார் எனப்படுவார். இவருடைய முன்னோர்கள் கயத்தூரில் இருந்தவர்கள். இவர் வாழ்ந்துவந்த ஊராகிய பெருவாயில் என்பது புதுக்கோட்டை நாட்டில் குளத் தூர்த் தாலூகாவில் இருந்திருத்தல் வேண்டும் என்பது அந் நாட்டிலுள்ள சில கல்வெட்டுக்களால்[1] அறியப்படுகின்றது. இவர் வடமொழியை நன்கு கற்றுத் தேர்ச்சி எய்தியுள்ள ஒரு தமிழ்ப்புலவர் ஆவர். இவர் வடமொழியில் இருடிகள் சொல் யுள்ள ஆசாரங்களைத் தொகுத்து ஆசாரக்கோவை என்ற இ தமிழ்நூலை இயற்றியிருப்பதாக இதிலுள்ள சிறப்புப்பாயிர செய்யுளொன்று[2] கூறுவது அறியத்தக்கது. இந்நூற் பெயரும் இதில் கூறப்படும் ஆசாரங்களும் இது வடமொழி நூல்களை ஆதாரமாகக்கொண்டு எழுதப்பெற்றிருத்தல் வேண்டும் என் பதை நன்கு வலியுறுத்துவனவாகும். இதன் ஆசிரியர் சிவபெரு மானுக்குத் தம் நூலில் வணக்கம் கூறியிருத்தலால் சைவ சமயத்தினர் என்பது தெள்ளிது. இவர் கி. பி. ஐந்தாம் நூற் றாண்டின் இறுதியில் விளங்கியவராதல் வேண்டும். இவர் தாம் எடுத்துரைக்கும் ஆசாரங்கள் பலவற்றை ' முந்தையோர் கண்ட முறை' எனவும், 'யாவருங்கண்டநெறி' எனவும், ' பேரறி வாளர் துணிவு' எனவும், மிக்கவர் கண்ட நெறி' எனவும், ' நல்லறிவாளர் துணிவு' எனவும் உரைத்துள்ளமையால், அவை யனைத்தும் அறிஞர்கள் தம் அனுபவத்தாலறிந்துணர்த்திய உண் மைகள் என்பதும், அவர்கள் நூல்களை நன்கு பயின்று அவற் றைத் தொகுத்து இவர்தம் நூலில் கூறியுள்ளனர் என்பதும் வெளியாதல் காண்க. இவ்வாசிரியரது வாழ்க்கை வரலாறும் பிறவும் இக்காலத்தில் தெரியவில்லை.

இவர், நன்றியறிதல், பொறையுடைமை, இன்சொல் கூறல், எவ்வுயிர்க்கும் இன்னாதவற்றைச் செய்யாமை, கல்வி, ஒப்புரவாற்றல், அறிவுடைமை, நல்லினத்தாரோடு நட்டல் ஆகிய இவை எட்டும் ஆசாரங்கட்குவித்து என்று கூறியிருப்பது. உணரற்பாலதாம்.

----
[1]. Inscriptions of the Pudukkottai State, No. 442, 518, 525, 853 .
[2]. 'ஆரெயில் மூன்று மழித்தான் அடியேத்தி
ஆரிடத்துத் தானறிந்த மாத்திரையான் ஆசாரம்
யாரும் அறிய அறனாய மற்றவற்றை
ஆசாரக் கோவை யெனத்தொகுத்தான் தீராத்
திருவாயி லாய திறல்வண் கயத்தூர்ப்
பெருவாயின் முள்ளியென்பான் '
(ஆசாரக் கோவை, சிறப்புப்பாயிரப்பாடல்)
-----------

6. பழமொழி

இது கடவுள் வாழ்த்துட்பட நானூறு வெண்பாக்களை யுடைய ஒரு நீதி நூல். ஒவ்வொரு வெண்பாவிலும் இறுதியில் ஒவ்வொரு பழமொழி அமைக்கப்பெற்றுள்ள காரணம்பற்றி இந்நூல் பழமொழி என்னும் பெயர் எய்தியது. அப்பழமொழி கள் எல்லாம் பண்டைக்காலத்தில் நம் தமிழகத்தில் வழங்கி வந்தவை என்பதில் ஐயமில்லை. அப்பழமொழிகளின் துணை கொண்டு எத்துணையோ அரிய உண்மைகளும் நீதிகளும் இந் நூலில் இதன் ஆசிரியரால் தெள்ளிதின் விளக்கிக் கூறப்பட்டுள்ளன. சிறந்த நீதி நூல்களாகிய திருக்குறள், நாலடியார் என் பவற்றோடு ஒருங்குவைத்து எண்ணத்தகும் பெருமையுடையது இந்நூல் என்று கூறலாம். ' அவ்விரு நூல்களிலும் காணப் படாத அரிய உண்மைகள் சிலவற்றை இதன் ஆசிரியர் தம் நுண் ணறிவாலும் அனுபவத்தாலும் அறிந்து கூறியிருப்பது பெரிதும் பாராட்டற்குரியதாகும். தமிழ் மொழியின் பழமையையும் தமிழ் மக்களின் பண்டை நாகரிகத்தையும் அறிய விரும்புவோர், இந்நூலாசிரியரால் ' பண்டைப் பழமொழி' என்று எடுத்தாளப் பெற்றுள்ள எல்லாப் பழமொழிகளையும் நுணுகியாராய்ந்து பார்ப்பின் பல அரிய செய்திகள் புலப்படும் என்பது திண்ணம். அன்றியும், சேர சோழ பாண்டியருள் சிலரையும் கடையெழு வள்ளல்களுள் சிலரையும் பற்றிய செய்திகளும், இதிகாச புராணங்களில் சொல்லப்படும் சில கதைகளும் இந்நூலில் காணப்படுகின்றன. அவற்றுள் பல்யானைச் செல்கெழுகுட்டுவன்[1], மனுநீதிகண்ட சோழன்,[2] தூங்கெயிலெறிந்த தொடித் தோட்செம்பியன்,[3] சோழன் கரிகாலன்,[4] பொற்கைப் பாண்டியன்,[5] பாரி,[6] பேகன் [7] ஆகியோரின் வரலாற்றில் குறிக்கப் படுதற்குரிய சில செய்திகள் இந்நூலில் காணப்படுதல் அறியத் தக்கது. எனவே, இந்நூல் வரலாற்றாராய்ச்சியாளர்க்கும் பயன் படக்கூடியதோர் அரிய நூலாகும். பதினெண் கீழ்க்கணக்கு நூல் களிலுள்ள மூன்று பெருநூல்களுள் இதுவும் ஒன்று.

இதன் ஆசிரியர் முன்றுறையரையர் என்பார். இத் தொடரை நோக்குங்கால், இவர் முன்றுறை என்ற ஊரில் வாழ்ந்துகொண்டிருந்த ஒரு குறுநில மன்னராயிருத்தல் வேண் டும் என்பது உய்த்துணரக் கிடக்கின்றது. இவர் குறுநில மன்ன ரல்லராயின், அரையர் என்னும் பட்டம் பெற்ற ஓர் அரசியல் அதிகாரியாயிருத்தல் வேண்டும் என்பது திண்ணம். எனவே, இவருடைய இயற்பெயர் யாது என்பது இப்போது புலப்பட வில்லை. அன்றியும் இவரது முன்றுறை என்னும் ஊர் எவ்விடத் தில் உள்ளது என்பதும் தெரியவில்லை. காலஞ்சென்ற தமிழ்ப் பேராசிரியர் திருமணம் செல்வக்கேசவராய முதலியார் அது பாண்டி நாட்டில் உள்ளதோர் ஊர் என்று தாம் வெளியிட்ட பழமொழி நூலின் பதிப்புரையில் எழுதியுள்ளனர். ஆனால், அது பாண்டி நாட்டில் எவ்விடத்தில் எப்பெயருடன் இப்போது உள் ளது என்பதை அவ்வறிஞர் விளக்கினாரில்லை.

அப்பெயருடைய ஊர் ஒன்று இந்நாளில் பாண்டிநாட்டில் உளதா என்பதே தெரியவில்லை. எனினும், முன்றுறை என்ற தொடரை நோக்கு மிடத்து, இவ்வாசிரியரது ஊர், கொற்கை முன்றுறை காவிரி முன்றுறை, திருமருத முன்றுறை, கழார் முன்றுறை, என் பவற்றைப்போல் தீர்த்தச் சிறப்புவாய்ந்து ஒரு பேராற்றங்கரை யில் இருந்திருத்தல் வேண்டும் என்பது நன்கு அறியக்கிடக்கின் றது. இவர் தம் நூலில் அருகக் கடவுளுக்கு வணக்கம் கூறி யிருத்தலாலும் இந்நூலில் காணப்படும் தற்சிறப்புப்பாயிரப் பாடலொன்றாலும்[8] இவர் சமண சமயத்தினர் ஆவர் என்பது தெளியப்படும். எனவே, கி. பி. ஐந்தாம் நூற்றாண்டில் சமண முனிவராகிய வச்சிரநந்தி என்பவரால் மதுரைமாநகரில் நிறுவப் பெற்ற தமிழ்ச் சங்கத்தை ஆதரித்து வளர்த்துவந்தவர்களுள் இப்புலவர் தலைவரும் ஒருவராக இருத்தல் கூடும். அங்ஙன மிருப்பின், இவர் பாண்டி நாட்டிலிருந்த ஓர் அரசியல் தலைவ ராக இருத்தல் வேண்டும் என்பது தேற்றம்.

இவர் ஆசிரியர் திருவள்ளுவனாரைப்போல் தம் நூலைப் பால் இயல்களாக வகுக்கவில்லை. ஆயினும் இவரது நூல் சிறந்ததொரு நீதி நூல் என்பதில் ஐயமில்லை.
இவர் சங்க நூல்களையும், சைவ வைணவ புராணங்களையும் இராமாயணம் பாரதம் ஆகிய இதிகாசங்களையும் சமய வேறுபாடு கருதாமல் பயின்றவர் என்பது, இவர் அவற்றில் காணப்படும் வரலாறுகளைத் தம் நூலில் ஏற்ற பெற்றியமைத்துப் பண்டைப் பழமொழிகளை விளக்கிக் காட்டுவதால் நன்கு துணியப்படும். அவ்வரலாறுகளுள் சில, இவர் நூலிலன்றி வேறு யாண்டும் காணப்படாத அருமையும் பெருமையும் உடையனவாயிருத் தல் அறியத்தக்கது. அவற்றைத் தக்க ஆதாரங்களில்லாமல் இவர் எடுத்துக் கூறமாட்டார் என்பது ஒருதலை. ஆகவே, அவ் வரலாறுகளுக்கு இவ்வாசிரியர் காலத்தில் சான்றுகள் இலக்கி யங்களிலாதல் வழக்காற்றிலாதல் இருந்திருத்தல் வேண்டும் எனலாம். பழமொழிகளையே நூல் முழுவதும் அமைத்து இயற் றப்பெற்ற நூல்களுள் மிக்க தொன்மைவாய்ந்தது இவருடைய நூலேயாகும்.


இந்நூலுக்குப் பழைய உரை ஒன்றுண்டு. அது பொழிப் புரையாக அமைந்தது. அதனைப் பதவுரையாக்கிக் கருத்துரையும் இன்றியமையாக் குறிப்புக்களும் மேற்கோளும் சேர்த்து, அதி காரங்களாகிய உட்பிரிவுகளும் வகுத்து ஆசிரியர் செல்வக்கேசவ ராய முதலியார் வெளியிட்டிருப்பது பெரிதும் மகிழ்தற்குரியது. அன்றியும், செந்தமிழ்ப் பத்திராசிரியராக நிலவிய காலஞ்சென்ற திரு. நாராயண ஐயங்கார் இந்நூலின் முதல் இருநூறு பாடல் களுக்குச் சிறந்த பேருரை ஒன்று வரைந்து மதுரைத் தமிழ்ச் சங்கப் பதிப்பாக வெளியிட்டிருப்பது போற்றத்தக்கதாகும். அவ் வறிஞர் எஞ்சியுள்ள இருநூறு பாடல்களுக்கும் தம் விளக்க உரையை எழுதாமல் காலஞ்சென் றமை மிகவும் வருந்துதற் குரியது. இந்நூல், தனக்குப் பிற்பட்ட புலவர் பெருமக்கள் பலர் உள்ளத்தைக் கவர்ந்துள்ளது என்பது அன்னோர் இயற்றி யுள்ள நூல்களால் அறியப்படுகின்றது. இதில் காணப்படும் பண்டைப் பழமொழிகளுள்,

இனி, ' கூறுங்கால் இல்லையே - ஒன்றுக்குதவாத ஒன்று'[9] எனவும், ' எக்காலும் - செய்யா ரெனினும் தமர் செய்வர்'[10] எனவும், ' தாநட் டொழுகுதற்குத் தக்கார் எனல் வேண்டா + யார் நட்பே யாயினும் நட்புக் கொளல்வேண்டும் '[11] எனவும் போதரும் இவருடைய கருத்துக்கள் தொல்லாசிரியன்மார் கருத்துக்களுக்கும் உலகியல் நிகழ்ச்சிகளுக்கும் முரண்பட்டு நிற்றல் போல் காணப்படினும் சிறுபான்மைபற்றி அவற்கை. ஏற்றுக் கோடலில் இழுக்கொன்றுமில்லை என்றுணர்க.

----
[1]. பல்யானைச் செல்கெழுகுட்டுவன் பாலைக் கௌதமனார்க்கு வீடளித்தது. (பா. 31)
[2]. மனுநீதிகண்ட சோழன் கன்றூர்ந்த புதல்வனைத் தேரால் ஊர்ந்த து (பா. 93)
[3]. சோழன் ஒருவன் தூங்கெயில் எறிந்தது. (பா. 49)
[4]. (a) கரிகாலன் நரைமுடித்து முறைசெய்தது (பா. 21)
(b) யானை கருவூரிற் சென்று கரிகாலனைக் கொணர்ந்தது. (பா. 62)
(c) கரிகாலன் இரும்பிடர்த்தலையார் உதவியால் செங்கோலோச்சியது. (பா. 105)
[5]. பொற்கைப்பாண்டியன் தன்கையைக் குறைத்தது. (பா. 102)
(6) பாரிமுல்லைக்குத் தேர் கொடுத்தது. (பா. 361)
(7) பாரி மகளிரின் கொடைச்சிறப்பு. (பா. 171)
பேகன், மயிலுக்குப் போர்வை கொடுத்தது. (பா. 361)
[8]. பிண்டியி னீழற் பெருமா னடிவணங்கிப்
பண்டைப் பழமொழி நானூறும் கொண்டினிதா
முன்றுறை மன்னவன் நான்கடியும் செய்தமைத்தான்
இன்றுறை வெண்பா விவை. (பழமொழி, தற்சிறப்புப்பாயிரப் பாடல் )
[9].பழமொழி, பா. 111. [10]. பழமொழி, பா. 109,
[11]. பழமொழி, பா. 14.
-----------

7. சிறுபஞ்சமூலம்

இந்நூல் சிறப்புப்பாயிரப் பாடல்கள் இரண்டோடு நூற்று நான்கு பாடல்களையுடையது. ஒவ்வொரு பாடலும் மக்கள் வாழ்க்கைக்குப் பயன்படும் ஐந்தைந்து பொருள்களைக் கூறுகின் றது. கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகிய ஐந்தின் வேர்கள் சிறந்த மருந்தாகி மக்கள் உடற்பிணியைப் போக்கி நலம்புரியும் என்பது மருத்துவ நூலில் காணப்படுவதோர் உண்மையாகும். அவ்வைந்தையும் மருத்துவ நூல் வல்லார் சிறுபஞ்சமூலம் என்று கூறுவர். அவற்றைப் போல் ஒவ்வொருவெண்பாவிலும் சொல்லப்பட்டுள்ள ஐந்தைந்து பொருள்கள் கற்போரின் உள்ளப் பிணியாகிய அறியாமையை நீக்கி நன்னெறியில் ஒழுகச் செய்து இம்மை மறுமை இன்பங் களை அளிக்க வல்லனவாதலின், இந்நூல் சிறுபஞ்சமூலம் என்ற பெயரினை எய்தியது என்பது அறியற்பாலது. இந்நூல் பதி னெண் கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்றாயிருப்பதோடு ஆசிரியர் தொல்காப்பியனார் கூறியுள்ள அம்மை என்னும் வனப்பினை யுடையதுமாகும். இதன் ஆசிரியர் காரியாசான் எனப்படு வர். இவர் சைன சமயத்தினர் ஆவர்.[1] இவருடைய ஆசிரியர் மாக்காயனார் என்னும் பெயரினர் என்பது இந்நூலின் இறுதியி லுள்ள பாயிரப் பாடலால் நன்குணரக் கிடக்கின்றது.[2] அவர், மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனார் என்று அந்நாளில் வழங்கப் பட்டிருத்தலால், அப்புலவர் மதுரையம்பதியில் வாழ்ந்த ஒரு தமிழாசிரியராதல் வேண்டும். எனவே, அந் நகரில் கி. பி. 470-ஆம் ஆண்டில் வச்சிரநந்தி என்ற சமண முனிவர் நிறுவிய தமிழ்ச் சங்கத்தில் உறுப்பினராகி மாணவர் பலர்க்குத் தமிழ் நூல்களைக் கற்பித்து வந்த ஒரு நல்லாசிரியராக அம் மாக்காயனார் இருந்திருத்தல் வேண்டும் என்பது திண்ணம்.

அவர்பால் கல்வி பயின்று புலமை எய்தியவரே, திணைமாலை நூற்றைம்பது ஏலாதி என்னும் இரு நூல்களும்' இயற்றியுள்ள கணிமேதாவியார் என்பார். ஆகவே, சிறுபஞ்சமூலம் என்ற இந்நூலின் ஆசிரியராகிய காரி யாசானும் கணிமேதாவியாரும் ஒருசாலை மாணாக்கர்கள் என்பது தெள்ளிதிற் புலனாதல் காண்க. எனவே, காரியாசான் மதுரை யிற் பிறந்து வளர்ந்தவராகவும் இருக்கலாம் ; அன்றேல் கல்வி கற்றற் பொருட்டு மதுரைக்குச் சென்று, சமயத் தொண்டு குறித்து அங்குத் தம் வாழ்நாள் முழுமையும் வதிந்தவராதல் வேண்டும். இவரது நூலில் சைனருடைய சிறப்பு நீதிகள் சிறுபான்மையாகவே காணப்படுகின்றன. எனவே, இவர் தம் நூலில் பெரும்பான்மை-யாகக் கூறியுள்ளவை, எல்லாச் சமயத் தினரும் படித்தற்கேற்ற பொது நீதிகளே என்று கூறலாம். இவர் செல்வம் மிகுந்தவராகவும், பெருங் கொடையாளராகவும் இருந்திருத்தல் வேண்டும் என்பது இந் நூற்பாயிரத்தால் அறியக் கிடக்கின்றது. இவர் ஆயுர்வேத நூற்பயிற்சியும், வடமொழிப் புலமையும் ஒருங்கே யுடையவர் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து. பொதுவாகப் பார்க்குமிடத்து, சமணசமயப் புலவர் எல்லோரும் வடமொழிப் பயிற்சியுடையவராக இருந்தனரென்று தெரிகிறது. இவரைப் பற்றிய பிற வரலாறுகள் புலப்படவில்லை.

இனி, சிறந்த கவிஞனுக்குரிய இலக்கணம் யாது என்பதை இவ்வாசிரியர் தம் சிறுபஞ்சமூலத்தில் ஒரு பாடலில்[3] நன்கு விளக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். அப்பாடலின் கருத்து: பல நூல்களையும் தக்க ஆசிரியர்பால் கேட்டுப் பொருள் உணர்ந் தவனே பெரும்புலவன் ஆவன் ; அவன் சிந்தையின் பெருமையி னாலே தான் அவன் பாடும் பாட்டுச் சிறப்படையும்--என்பதாம் மற்றொரு பாடலில் செந்தமிழ் நன்கறியாதவன் கவிபாடு நகைப்பிற்கு இடமாகும் என்னும் பொருள்பட, ' செந்தம் தேற்றான் கவிசெயலும் - நாவகமே நாடின் நகை' என்று கூறியிருப்பது[4] உண்ரற்பாலதாம். எனவே, ஓர் ஆசிரியனுடைய செந்தமிழ்ப் புலமையும் தூய விரிந்த உள்ளமுமே அவனது நூல் உலகில் என்றும் நின்று நிலவிச் சிறப்புறுவதற்கு ஏதுக்களாம் என்பது இவரது அரிய கருத்தாதல் காண்க. இவர் தம் நூலில் ' தானத்தாற் போகம் தவத்தால் சுவர்க்கமாம்- ஞானத்தால் வீடாகும் நாட்டு '[5] என்றுரைத்-துள்ளமையால் மெய்யுணர்தல் ஒன்றால்தான் வீடு பேற்றை எய்தலாம் என்பது இவரது உறுதி யான கொள்கையாதல் உணர்க.

இனி, இவ்வாசிரியர் கூறியுள்ள தான் பிறரால் - சாவ வென வாழான் சான்றோரால் பல்யாண்டும் - வாழ்க வெனவாழ் தல் நன்று '[6] என்ற பொருள் பொதிந்த அறிவுரை ஒவ்வொரு வரும் தம் வாழ்நாளில் மறவாமல் கடைப்பிடித் தொழுகுவதற் குரிய சிறப்புடையதாகும். தோற்கன்றைக் காட்டிக் கறந்த பசுவின் பாலை நன்னெறியில் ஒழுகுவோர் உண்ணமாட்டார்கள் என்று இப்புலவர் பெருந்தகையார் ஒரு பாடலில் கூறியிருப்பது[7] அறியத் தக்கது. தோற் கன்றைக் காட்டிப் பசுக்களைக் கறக் கும் வழக்கம், சென்னை போன்ற நகரங்களில் இக்காலத்தில் மிகுதியாக இருத்தலைக் காணலாம். இக்கொடுஞ் செயல்கள் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டிலும் நிகழ்ந்து வந்தன என்பது இவ்வாசிரியர் கூற்றால் நன்கறியப்படுகின்றது. எனவே, எந்தத் தீமையும் எந்தக் காலத்தும் நிகழ்தல் உலகியற்கை போலும். கொல்லாமை, புலாலுண்ணாமை ஆகிய இரு பேரறங்களையும் இவர் பல இடங் களில் வற்புறுத்திக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. பொது வாகவே, சைன சமயப் பேராசிரியர் எல்லோரும் தம் நூல்களில் அவ்வறங்களைக் கூறாமல் செல்லார் என்பது ஒருதலை. இவ்வாசிரியர் பலி என்னும் சொல்லைக் குழந்தைகளுக்குக் கொடுக் கும் சோறு என்ற பொருளில் வழங்கியுள்ளனர். அதனைக் ' குழவி பலி கொடுப்பான் - எண்பதின் மேலும் வாழ்வான் '[8] என்னும் அடிகளால் அறியலாம். இவர், திருக்குறள், பழமொழி ஆகிய இரு நூல்களையும் நுணுகி யாராய்ந்தவர் என்பது இவருடைய நூலால் தெள்ளிதிற் புலனாகின்றது. இவர் காலத்திற்குப் பிற் பட்ட புலவர் பெருமக்கள், இவர் நூலை நன்கு பயின்று இதி லுள்ள சொல்லையும் பொருளையும் பெரிதும் போற்றித் தம் தம் நூல்களில் அமைத்துள்ளனர் என்பது அன்னோர் நூல்களால் அறியப்படுகின்றது. இவருடைய ஆசிரியராகிய மாக்காயனாரைப் போல் இவரும் ஆசிரியர் என்று மக்களால் பாராட்டப் பெற்ற பெருமையுடையவர் என்பது உணரற்பாலதாகும்.
----
[1]. 'முழுதுணர்ந்து மூன்றொழித்து மூவாதான் பாதம்
பழுதின்றி யாற்றப் பணிந்து- முழுதேத்தி
மண்பாய ஞாலத்து மாந்தர்க் குறு தியா
வெண்பா வுரைப்பன் சில ' (சிறுபஞ்ச. கடவுள் வாழ்த்து) .
[2]. 'மல்லிவர்தோள் மாக்காயன் மாணாக்கன் மாநிலத்துப்
பல்லவர் நோய் நீக்கும் பாங்கினா-கல்லா
மறுபஞ்சந் தீர்மழைக்கை மாக்காரி யாசான்
சிறுபஞ்ச மூலஞ்செய் தான் ' (ஷை நூல், பாயிரப் பாடல்)
[3]. சிறுபஞ்சமூலம், பா. 33
[4]. சிறு பஞ்சமூலம், பா. 12. [5]. சிறு பஞ்சமூலம், பா. 36.
[6]. சிறு பஞ்சமூலம், பா, 68. [7]. சிறு பஞ்சமூலம், பா, 84.
[8]. சிறு பஞ்சமூலம் பா. 79.
-----------

8. ஏலாதி

இது கடவுள் வாழ்த்தோடு எண்பத்தொரு பாடல்களை யுடைய ஒரு நீதி நூல். இந்நூலில் ஒவ்வொரு பாடலிலும் அவ்வாறு பொருள்கள் கூறப்பட்டுள்ளன. ஏலம் ஒரு பங்கும், இலவங்கப்பட்டை இரண்டு பங்கும், நாககேசரம் மூன்று பங் கும், மிளகு நான்கு பங்கும், திப்பிலி ஐந்து பங்கும், சுக்கு அறு பங்குமாகச் சேர்த்துச் செய்யப் பெற்ற ஏலாதி சூர்ணம் மக்க ளுடைய நோயை நீக்கி உடலுக்கு வலிமையளித்தல் போல, பாடல் தோறும் அவ்வாறு பொருள்கள் அமைந்த ஏலாதி என் னும் இந்நூல், அன்னோரின் அறியாமையைப் போக்கி உயிர்க்கு உறுதி பயக்கும் மெய்யுணர்வை அளிக்கவல்லது என் பது இந்நூற் பெயரால் அறியக்கிடப்பதோர் உண்மையாகும். இக்கருத்தினைத் தம் உள்ளத்திற்கொண்டே இதன் ஆசிரியர் இதற்கு ஏலாதி என்னும் பெயரை இட்டனர் எனலாம். இது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று ; ஆசிரியர் தொல் காப்பியனார் கூறியுள்ள அம்மையென்ற வனப்பிற்கு இலக்கிய மாய் வெண்பா யாப்பில் அமைந்தது. இதன் ஆசிரியர் கணி மேதாவியார் எனப்படுவர். இந்நூலின் சிறப்புப்பாயிரப் பாட லால் இவர் கணிமேதையார் எனவும் வழங்கப்பெற்றனர் என்று தெரிகிறது.[1] தமிழ்ப்புலவராகிய இவர் சோதிடத்திலும் வல்லு நராயிருந்தமை பற்றிக் கணிமேதையார் என்று வழங்கப்பெற் - றிருத்தல் வேண்டும் என்பது தேற்றம். அங்ஙனமாயின் இவரது இயற்பெயர் வேறொன்றாதல் வேண்டும். அஃது இந்நாளில் புலப்படவில்லை. திணைமாலை நூற்றைம்பதின் ஆசிரியரும் இவரே யாவர். அகப்பொருளுக்கு இலக்கியமாயுள்ள அந்நூல் இவரது பொருளிலக்கணப் பயிற்சியையும், ஆராய்ச்சியையும் நன்கு விளக்குவதாகும். இவர் மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனார் மாணாக்கர் என்று பாயிரத்தில் கூறப்பட்டிருத்தலால் இவரும் சிவபஞ்ச மூலத்தின் ஆசிரியராகிய காரியாசானும் ஒரு சாலை மாணாக்கர்கள் என்பது தெள்ளிது. ஆகவே, மதுரைமா நகரில் சமண சமயத்தினர் நடத்தி வந்த தமிழ்ச் சங்கத்தில், உறுப்பின ராக அமர்ந்து, தமிழ் மொழி மூலமாகச் சமயத் தொண்டு புரிந்து வந்த சைனப் புலவருள் இவரும் ஒருவர் ஆவர். இவரைப் பற் றிய பிற வரலாறுகள் தெரியவில்லை.

இனி, இவ்வாசிரியர் தம் நூலில் கொல்லாமை, புலாலுண் ணாமை ஆகிய அறங்களைப் பல பாடல்களில் வற்புறுத்தி யிருத் தல்போல் எளியோர்க்கு உணவும் உடையும் வழங்குவோர் அடையும் பயனையும் பன்முறை எடுத்துக் கூறியுள்ளமை அறி யற்பால தொன்றாம். அவை, கூறியது கூறலாகக் காணப்படி னும் அவற்றின் சிறப்பும் பயனும் நோக்கி அங்ஙனம் கூறி யுள்ளனரென்றுணர்க. உலகில் அரசராகப் பிறந்து ஆட்சி புரி வதும், இல்லறத்திலிருந்துகொண்டு மனைவியோடு இன்புற்று வாழ்வதும் மக்களாகப் பிறந்தோர் பெறுதற்குரிய பெரும்பேறு கள் என்பது இவர் கருத்து. இதனை,

எனவும்,
எனவும்,
எனவும்,
எனவும்,
எனவும்,
எனவும்,
எனவும்
எனவும்,
எனவும் போதரும் பல பாடற் பகுதிகளால் நன்குணரலாம். சமண சமயத்தினரான கணிமேதாவியார் இத்தகைய கருத்துக்களைத் தம் நூலில் வலியுறுத்திச் செல்லுதல் பெருவியப்பிற்குரியதாகும். இப்பிறப்பில் தம் வரலாற்றைப் புலவர் பெருமக்கள் விரும்பி எழுதுமாறு பெருவாழ்வெய்தியுள்ளவர்கள், முற் பிறப்பில் மாண வர்கட்கு உணவு, உடை, எழுத்தாணி, புத்தகம் முதலியவற்றை வழங்கியவர்கள் என்று இவ்வாசிரியர் ஒருபாடலில் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கதொன்றாம்.[2] இவர் ஏலாதியில் ஒரு வெண்பா வில் வீடுபேற்றை மிகத் தெளிவாக விளக்கியுள்ளனர். அப்பாடல்,

என்பதாம்.

இதன் கருத்து ஐயனாரிதனாரது புறப்பொருள் வெண்பா மாலையிலுள்ள

என்ற பாடலின் கருத்தோடு பெரிதும் ஒத்திருத்தல் காண்க.

இந்நூலில் ' மாண்டவர் மாண்ட' என்று தொடங்கும் பாடலொன்று[4], தமிழ் மக்களின் அறவொழுக்கங்களுக்கும் பழைய நாகரிக நிலைக்கும் முற்றிலும் முரண்பட்ட செய்திகளைக் கூறுவதாயுள்ளது. அவ்வெண்பாவிற் காணப்படும் வடமொழிப் பெயர்கள், அது வடமொழியிலுள்ள ஸ்மிருதி நூல்களைப் பின் பற்றி எழுதப்பட்டிருத்தல் வேண்டும் என்பதை நன்குணர்த்து கின்றன. எனவே, அதில் சொல்லப்பட்டுள்ள செய்திகள் தமிழ் நாட்டுப் பழைய வழக்க வொழுக்கங்களைக் குறிக்கவில்லை என்பது அறியற்பாலதாம். இந்நூல் சமணசமயத்தார்க்குரிய சிறப்பு நீதி களைத் தன்னகத்து மிகுதியாகக் கொண்டுள்ளது. ஆகவே, அச் சமயக்கொள்கைகள் பலவற்றை இந்நூலால் தெள்ளிதின் உணர்ந்து கொள்ளலாம். இதன் ஆசிரியராகிய கணிமேதாவியார்
என்பார் சிறுபஞ்ச மூலத்திலுள்ள சில பாடல்களின் கருத்துக் களையும் சொற்பொருள்களையும் அப்படியே தம் நூலில் அமைத் திருத்தலால் இவர் அந்நூலை நன்கு படித்திருத்தல் வேண்டும் என்பது திண்ண ம். ஒளரதன், கேத்திரசன், கானீனன், கூடன், கிரிதன், பௌநற்பவன், தத்தன், சகோடன், கிருத்திரமன், புத்திரிபுத்ரன், அபவித்தன், உபகிருதன், தேவாதிதேவன், வைசிரவண்ணன் ஆகிய வடமொழிப் பெயர்களை இவர் எடுத் தாண்டிருத்தலால் அம்மொழிப்பயிற்சியும் இவருக்கு இருந்திருத் தல் வேண்டும் என்பது ஒருதலை. இவர் தொண்டு என்னுஞ் சொல் ஒன்பது என்று பொருள் படுமாறு அதனை ஏலாதியிலுள்ள ஒரு வெண்பாவில்[5] அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

----
[1]. இல்லற நூ லேற்ற துறவற நூ லேயுங்கால்
சொல்லற நூல் சோர்வின்றித் தொக்குரைத்து - நல்ல
அணிமேதை யாய்நல்ல வீட்டு நெறியுங்
கணிமேதை செய்தான் கலந்து ' (ஏலாதி, பாயிரப்பாடல்)
[2]. 'ஊணொடு கூறை யெழுத்தாணி புத்தகம்
பேணொடு மெண்ணு மெழுத்திவை - மாணொடு
கேட்டெழுதி யோதிவாழ் வார்க்கீந்தா ரிம்மையான்
வேட்டெழுத வாழ்வார் விரிந்து '. (ஏலா . பா. 63)
[3] 'ஏலா. பா. 66. 3. ' புறப்பொருள் வெண். பொதுவியல், 4.
[4]. 'மாண்டவர் மாண்ட அறிவினான் மக்களைப்
பூண்டவர்ப் போற்றிப் புரக்குங்கால்-பூண்ட
ஔாதனே கேத்திரசன் கானீனன் கூடன்
கிரிதன்பௌ நற்பவன்பேர் ' (ஏலா. 30.)
[5]. ஏலாதி, பா. 72.
------------

9. கார் நாற்பது


இந்நூல் நாற்பது வெண்பாக்களையுடையது ; கார்காலத் தின் சிறப்புக்கள் இந்நூலில் விதந்து கூறப்பட்டிருத்தலால் இது கார் நாற்பது என்னும் பெயர் எய்துவதாயிற்று. இது காலம் பற்றித் தோன்றிய ஒரு நூல் என்பதை,

'காலம் இடம்பொருள் கருதி நாற்பான்
சால வுரைத்தல் நானாற் பதுவே'

என்னும் இலக்கண விளக்கப்பாட்டியற் சூத்திரத்தால் நன் கறியலாம். கார்காலம் முல்லைத்திணைக்குரிய பெரும்பொழு தாகும். எனவே, முல்லைத்திணைக்குரிய அகவொழுக்கமே இந் நூலில் யாண்டும் கூறப்பட்டிருத்தல் காணலாம்.

இனி, இல்லறம் நிகழ்த்தும் தலைவன் ஒருவன் வேந்தற் குற்ற துணையாய்ப் பகையரசரோடு போர்புரியப் போகவேண்டி யிருந்தமையால், தன் பிரிவினைக் காதலிக்குரைத்து, கார்ப்பருவத் தொடக்கத்தில் தான் மீண்டுவருவதாகவும் அதுகாறும் அவள் பிரிவாற்றி யிருக்குமாறும் கூறிச்செல்லவே, அங்ஙனமே ஆற்றி யிருந்த தலைவி அவன் குறித்த பருவத்தில் வாராமைகண்டு பெரிதும் வருந்தினாளாக, அதனைக் கண்ட தோழி தலைவியைப் பலவாறாக மென்மொழிகளால் ஆற்றுவித்துக் கொண்டிருக்க, பிரிந்து சென்ற தலைமகனும் மீண்டுவந்து தலைமகளை யடைந்தான் என்ற வரலாறு இந்நூலில் விரித்துக் கூறப்பட்டுள்ளது. நாடக வழக்குப்போல், தோழி, தலைமகள், தலைமகன், பாகன் என்போர் கூற்றுக்களை இவ்வரலாற்றில் நூலாசிரியர் முன்னிலையில் வைத் திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். கார்காலத்தின் சிறப்பை யெல்லாம் தனித்தனியாகக் கூறினால் அவை படிப்போர்க்கு இன்பம் பயவாவாதலின் அவற்றை முல்லைத் திணைக்குரிய உரிப் பாருளாகிய இருத்தலை நிலைக்களனாகக் கொண்ட வரலாறொன் பால் அமைத்து இந்நூலை ஆசிரியர் இயற்றியிருப்பது மிகப் பாராட்டற்பாலது.

காற்நாற்பது என்னும் இந்நூலின் ஆசிரியர் மதுரைக்கண் எங் கூத்தனார் என்ற புலவர் ஆவர். இவர் சிறந்த புலமையுடையவர் என்பது இந்நூலால் நன்கறியக்கிடக்கின்றது. இப் புலவர் பெருமான் மதுரைமாநகரில் வாழ்ந்தவர் என்பதும் இவ ருடைய தந்தையார் கண்ணனார் என்ற பெயருடையவர் என் பதும் இவர் கூத்தனார் என்னும் இயற் பெயருடையவர் என் பதும் தெளிவாகப் புலப்படுகின்றன. இவர் தம் நூலின் முதற் பாடலில்[1] திருமாலையும் பத்தொன்பதாம் பாடலில் பலராமனையும்[2] கூறியிருத்தலால் சமயக் கொள்கையில் வைணவராயிருத் தல் வேண்டும் என்று கருதுவதற்கு இடமுளது. ஆனால், இவர் கார்த்திகைத் திங்கள் கார்த்திகை நாளில் நாடெங்கும் மக்கள் விளக்கேற்றி வைத்துக்கொண்டாடும் சிவபெருமானுக்குரிய பண்டை விழாவை இருபத்தாறாம் பாடலில் குறிப்பிட்டுள்ளனர். திருமால் முல்லை நிலத்திற்குரிய தெய்வமாதல் பற்றி அக்கடவுளை இவர் முதற்பாடலில் குறித்துள்ளனர் என்றும் கூறலாம். இவற்றையெல்லாம் ஆராயுமிடத்து, இவர் பிறப்பால் வைணவர் என்பதும் ஆனால் சமரசக் கொள்கையினர் என்பதும் நன்கு தெளியப்படும். இவர் இயற்றிய வேறு நூலாதல் செய்யுளாதல் இக்காலத்தில் கிடைக்கவில்லை. இவரைப்பற்றிய பிற செய்தி களும் புலப்படவில்லை.

இவரது கார்நாற்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இது கடைச்சங்க காலத்திற்குப் பிற்பட்ட இருண்ட காலத்தில் கி. பி. நான்காம் நூற்றாண்டில் தோன்றிய நூல் என லாம். ஆகவே, இந்நூல் திணைமாலை நூற்றைம்பது, ஐந்திணை எழுபது முதலான நூல்களுக்கு முற்பட்டது என்பது ஒருதலை. இந்நூலிலுள்ள வெண்பாக்கள் பெரும்பாலும் ஒருஉஎதுகை மிகுந்தும் பலவிகற்பமாகவும் இன்னிசையாகவும் இருத்த லொன்றே, இது மேலே குறிப்பிட்ட நூல்களுக்குக் காலத்தால் முற்பட்டது என்பதை வலியுறுத்துவதாகும். இந்நூலின் சிறப்பினை,


என்ற பாடலால் அறிந்துகொள்ளலாம்.
---------
[1]. 'பொருகடல் வண்ணன் புனைமார்பிற் றார்போல்
திருவில் விலங்கூன்றித் தீம்பெயல் தாழ
வருது மெனமொழிந்தார் வாரார்கொல் வானம்
கருவிருந் தாலிக்கும் போழ்து.' (கார்நாற்பது, பா.1)
[2]. ‘நாஞ்சில் வலவ னிறம்போலப் பூஞ்சினை
செங்கால் மராஅக் தகைந்தன-பைங்கோற்
றொடிபொலி முன்கையாள் தோள் துணையா வேண்டி
நெடுவிடைச் சென்றதென் னெஞ்சு ' (காற்நாற்பது, பா. 19)
[3]. கார்நாற்பது, பா. 26,
-------

10. ஐந்திணை ஐம்பது

இஃது, ஒவ்வொரு திணைக்கும் பத்துப்பாக்களாக ஐந்து திணைகட்கும் ஐம்பது பாக்களைத் தன்னகத்துக் கொண்டமை பற்றி ஐந்திணை ஐம்பது என்னும் பெயர் எய்தியது ; அகத்திணை யொழுக்கங்களைச் சுருங்கச் சொல்லி விளங்கவைக்கும் இயல்பி னது. இதிலுள்ள செய்யுட்களுள் பல நேரிசை வெண்பாக்க ளாகவும், சில இன்னிசை வெண்பாக்களாகவும் உள்ளன. அவ் வெண்பாக்கள் சிறந்த நடையும் பொருள்வளமும் கொண்டு மிளிர்வதால் கற்போர் நெஞ்சத்தைப் பிணிக்குந் தன்மையவா யுள்ளன. எனவே, இந்நூற்பாயிரத்தில் ' ஐந்திணையைம்பது மார்வத்தின் ஓதாதார் -- செந்தமிழ் சேரா தவர் ' என்று கூறப் பட்டிருப்பது சாலப்பொருத்தமுடையதேயாம். இந்நூல் பதி னெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இதன் ஆசிரியர் மாறன் பொறையனார் என்னும் பெயரினர் என்பது இதிலுள்ள பாயிரப் பாடலால்[1] அறியப்படுகின்றது. மாறன் பொறையனார் என்ற தொடர் மாறனுடைய மகனார் பொறையனார் என்று பொருள் படுவதாக உள்ளது. ஆகவே, மாறன் பொறையன் என்ற இரண்டு பெயர்களும் இயற்பெயர்களாதல் வேண்டும். இந் நிலையில், மாறன் என்பது பாண்டியனையும் பொறையன் என்பது சேரனையும் குறிக்குஞ் சிறப்புப் பெயர்களாகவும் காணப்படு கின்றன. எனவே, இவ்வாசிரியர் தென்பாண்டி நாட்டினரா யிருத்தல் வேண்டும் என்று கருதற்கு இடமுளது. இவரை 'வண் புள்ளி மாறன் பொறையன்' என்று பாயிரங் கூறுவது கொண்டு, இவர் அரசியலில் வரவு செலவு தொடர்புடைய ஓர் அதிகாரியா யிருந்தவர் என்று சிலர் கூறுகின்றனர். இவர் தம் நூலின் முதற் பாடலில்,[2] மேகங்கள் கண்ணபிரானது நிறத்தைப்போல் இருண்டெழுந்து, முருகவேளின் வேற்படையைப்போல் மின்னி, சிவபெருமானுக்குரிய மாலையாகிய கொன்றைப் பூக்கள் மலரும் படி வலமாக எழாநின்றன என்று தோழி கூற்றில் வைத்துக் - கூறியிருப்பதை நோக்குமிடத்து, இவர் சமயக் கொள்கையில் பொது நோக்குடையவர் என்பதும் ஆனால், புத்த சமண சமயத் தினர் அல்லர் என்பதும் நன்கு புலனாகின்றன. இவரைப்பற்றிய பிறசெய்திகள் தெரியவில்லை.

இவ்வாசிரியருடைய புலமைத்திறத்தையும் இவர் இயற்றி யுள்ள. ஐந்திணை ஐம்பது என்ற நூலின் அருமை பெருமை களையும்,

என்னும் பாடல்களால் நன்கறியலாம்.

இந்நூலில் காணப்படும் சில உலகியல் உண்மைகள் ஈண்டுக் குறிப்பிடத்தக்கனவாகும். அவை,

என்பனவாம்.

பிறமொழியாளரான ஏதிலார் ஆட்சியில் நம் தமிழ்மொழி சிறிதும் ஆதரிக்கப்படாமல் புறக்கணித்தொதுக்கப்பட்ட கி. பி. நான்காம் நூற்றாண்டில் அகப்பொருளுக்கு ஓர் அரிய இலக்கிய மாக இனிய வெண்பாக்களில் இத்துணைச் சிறப்புவாய்ந்த இந் நூலை இயற்றிய மாறன் பொறையனார் என்ற கவிஞர் கோமான் இருவேறுலகத்-தியற்கையோடிகலி, கல்விச் செல்வமும் பொருட் செல்வமும் ஒருங்கே படைத்து, வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த ஓர் அறிஞராயிருத்தல் வேண்டும் என்பது திண்ணம்.

-------
[1]. 'பண்புள்ளி நின்ற பெரியார் பயன்றெரிய
வண்புள்ளி மாறன் பொறையன் புணர்த்தியாத்த
ஐந்திணை யைம்பது மார்வத்தி னோதா தார்
செந்தமிழ் சேராதவர் ' (ஐந்திணை ஐம்பது, பாயிரப்பாடல்.)
[2]. 'மல்லர்க் கடந்தா னிறம்போன் றிருண்டெழுந்து
செல்வக் கடம்பமர்ந்தான் வேன்மின்னி- நல்லாய்
இயங்கெயி லெய்தவன் றார்பூப்ப வீதோ
மயங்கி வலனேருங் கார் ' (ஐந்திணை ஐம்பது, பா. 1.)
---------

11. திணைமொழி ஐம்பது

இது, திணையொன் றிற்குப் பத்துப் பாக்களாக அகத்திணை ஐந்துக்கும் ஐம்பது பாக்களைத் தன்பாற் கொண்டது. இது பற்றியே இந்நூல் திணைமொழியைம்பது என்னும் பெயர் பெற்றது எனலாம். இதிலுள்ள ஐம்பது பாடல்களுள், நாற்பத் தாறு இன்னிசை வெண்பாக்களாகவும் நான்கு நேரிசை வெண் பாக்களாகவும் உள்ளன. இது பதினெண் கீழ்க்கணக்கு நூல் களுள் ஒன்றாகும். ஐந்திணையைம்பதைப்போல் இதுவும் சொற் பொருள் நயங்கள் நிறைந்த ஒரு சிறந்த நூல் என்பது தேற்றம். இந்நூலின் ஆசிரியர் கண்ண ன் சேந்தனார் ஆவர். இவர் சாத் தந்தையார் என்பவருடைய புதல்வர் என்று தெரிகிறது. இவ் வாசிரியரின் இயற்பெயரை நோக்குங்கால் இவர் சமண சமயத் தினர் அல்லர் என்பதும் சைவம் வைணவம் ஆகிய இரு பெரு நெறிகளுள் ஒன்றைக் கைக்கொண்டொழுகியவராதல் வேண்டும் என்பதும் நன்கு துணியப்படும். கடைச்சங்ககாலத்தில் வாழ்ந்த வரும் சோழன் போரவைக்கோப் பெருநற்கிள்ளியைப் பாடிய வரும் ஆகிய சாத்தந்தையார் என்ற புலவரே இவருடைய தந்தை யாராயிருத்தல் வேண்டுமென்று சிலர் கூறுகின்றனர். இக் கொள்கையை வலியுறுத்தும் சான்றுகள் இல்லாமையால் இதனை ஒருதலையாகத் துணிய இயலவில்லை.

இனி, இந்நூலிலுள்ள

என்னுந் தோழி கூற்றுக்களும்

என்னுந் தலைமகள் கூற்றும் இந்நூலின் தெளிவுடைமையை நன்கு புலப்படுத்து-வனவாகும். அன்றியும்,

என்ற பாடலால் இந்நூலின் அருமை பெருமைகளைத் தெள்ளி தின் உணர்ந்து கொள்ளலாம். இதிலுள்ள ' ஊரறிகௌவை தரும்' என்னும் ஈற்றடி, முத்தொள்ளாயிரத்தில் ' குன்று விளக்கேபோல்' என்று தொடங்கும் பாடலின் ஈற்றடியாகிய 1 நாடறி கௌவை தரும்' என்பதனோடு சொல்லாலும் பொரு ளாலும் ஒத்திருத்தல் காண்க. இந்நூல் கி. பி. நான்காம் நூற் றாண்டில் இயற்றப்பெற்றதாதல் வேண்டும்.
------------

12. ஐந்திணை எழுபது


இஃது அகப்பொருள் துறைகளுக்கு இலக்கியமாயுள்ள ஒரு சிறந்த நூல். ஒவ்வொரு திணைக்கும் பதினான்கு பாக்களாக ஐந்து திணைகட்கும் எழுபது பாக்களைத் தன்னகத்துக் கொண்டமை பற்றி இந்நூல் ஐந்திணை யெழுபது என்ற பெயர் எய்தியமை அறியத்தக்கது. இதில் இப்போதுள்ள பாடல்கள் அறுபத்தாறேயாம். எஞ்சிய நான்கும் சிதைந்தழிந்தன போலும். இந் நூலிலுள்ள செய்யுட்கள் இன்னிசை வெண்பாக்களாகவும் நேரிசை வெண்பாக்களாகவும் உள்ளன. இந்நூல் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. ஐந்திணையைம்பதைப்போல் இதுவும் கற்போர் உள்ளத்தைக் கவரும் இயல்பினதாகும். இதில் கடவுள் வாழ்த்துப் பாடல் ஒன்றுளது. அது யானைமுகக் கடவு ளாகிய பிள்ளையார்க்கு உரியதாகும்.[1] பிள்ளையாரென்று வழங் கப்பெற்றுவரும் விநாயகக் கடவுளின் வழிபாடு கி. பி. ஏழாம் நூற்றாண்டில் தான் நம் தமிழ் நாட்டில் தொடங்கியது என்பது ஆராய்ச்சியால் அறிந்ததோர் உண்மையாகும். எனவே, அக் கடவுளுக்கு வாழ்த்துக் கூறப்பட்டுள்ள பாடல் இந்நூலாசிரிய ரால் இயற்றப்பட்டதன்று என்பது தேற்றம். அக் கடவுள் வாழ்த்துச் செய்யுள் நூலின் புறத்தேயுள்ளமையும், அதற்குப் பழைய உரை காணப்படாமையும் இவ்வுண்மையை நன்கு வலியுறுத்துதல் அறியற்பாலதாம்.

இந்நூலின் ஆசிரியர் மூவாதியார் என்று கூறப்படுவர். இவர் சமண சமயத்தினர் என்று சிலர் கருதுகின்றனர். அவ் வாறு கொள்வதற்கு இந்நூலகத்துச் சான்றுகளின்மை உணரற் பாலது. இவ்வாசிரியரைப்பற்றிய செய்திகள் எவையும் இந் நாளில் கிடைக்கவில்லை. மூவாதியார் என்ற இவரது பெயர் கூட இவருடைய இயற்பெயரா அல்லது ஏதேனும் ஓர் ஏதுப் பற்றி இவருக்கு வழங்கிய பெயரா என்பது புலப்பட வில்லை.

இனி, இவரது நூலாகிய இவ்வைந்திணை எழுபதில் தலை மகள் கூற்றாக அமைந்துள்ள பாடலொன்று உள்ளத்தைப் பிணிக்கும் தன்மையதாக உளது. அது,

என்பதாம்.

ஐந்திணை யைம்பதின் முப்பத்தெட்டாம் பாடலிலுள்ள

என்னும் இரண்டடிகளும் இந்நூலில் முப்பத்தாறாம் பாடலில் காணப்படுகின்ற

என்ற அடிகளோடு பெரும்பாலும் ஒத்திருத்தல் காணலாம். இவ்விரு நூலாசிரியர்களுள் மாறன் பொறையனார் காலத்தால் சிறிது முற்பட்டவர் எனலாம். ஆகவே, மூவாதியார் என்பார் ஐந்திணையைம்பதை நன்கு பயின்று அதிலுள்ள தொடர்களை அப்படியே தம் நூலில் சில பாடல்களில் அமைத்துக் கொண் டிருத்தல் வேண்டும் என்று கூறுவதில் இழுக்கொன்றுமில்லை. இவர் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டில் இருந்தவர் ஆவர்.

---------
[1]. 'எண்ணும் பொருளினிதே யெல்லா முடித்தெமக்கு
கண்ணுக் கலையனைத்து நல்குமால்-கண்ணு தலின்
முண்டத்தா னண்டத்தான் மூலத்தா னாலஞ்சேர்
கண்டத்தா னீன்ற களிறு.
[2]. ஐந்திணை. எழுபது, பா. 14.
---------

13. திணைமாலை நூற்றைம்பது

இது நூற்றைம்பத்துமூன்று வெண்பாக்களையுடைய ஒரு நூலாகும் ; அகத்துறைகள் பலவற்றிற்கு இலக்கியமாயமைந்தது. குறிஞ்சித்திணைக்கு முப்பத்தொரு பாடல்களும் நெய்தல் திணைக்கு முப்பத்தொரு பாடல்களும் பாலைத்திணைக்கு முப் பது பாடல்களும் முல்லைத்திணைக்கு முப்பத்தொரு பாடல் களும் மருதத்திணைக்கு முப்பது பாடல்களுமாக நூற்றைம்பத்து மூன்று பாடல்களைத் தன்பாற் கொண்டது. இந்நூல் பதி னெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இதன் ஆசிரியர், கணிமேதாவியார் ஆவர். இவரே ஏலாதி என்ற நூலுக்கும் ஆசிரியர் என்பது முன்னர் விளக்கப்பட்டுள்ளது. இப்புலவர் வரலாற்றுள், இஞ்ஞான்று அறியப்படும் சில செய்திகளை ஏலாதி யென்னும் தலைப்பில் காணலாம். சமண சமயத்தினராகிய இவ் வாசிரியர் அகச்சுவையமைந்த இன்பப் பாடல்களையுடைய இந் நூலை இயற்றியிருப்பது, இவரது பரந்த நோக்கத்தையும் அகத் துறைப் பாடல்கள் நிறைந்த சங்கநூற் புலமையையும் இனிது விளக்குவதாகும். இந்நூலிலுள்ள நான்காம் பாடலில் ' கோடாப் புகழ் மாறன் கூடலனையாள் ' என்று இவர் கூறியிருப்பது[1], இவ் வாசிரியர் பாண்டிவேந்தன் ஒருவனால் ஆதரிக்கப்பெற்றவர் என்பதை நன்கு புலப்படுத்துவதாக உளது. எனவே, அப்பாண்டி யன் களப்பிரர் ஆளுகைக்குட்பட்டிருந்த ஒரு குறுநில மன்னன் ஆதல் வேண்டும். அவன் யாவன் என்பது இப்போது தெரிய வில்லை. அன்றியும் அத்தொடர், இப்புலவர் பாண்டிநாட்டில் மதுரையம்பதியில் வாழ்ந்தவராதல் வேண்டும் என்பதை ஓரளவு உணர்த்துதல் காண்க[2]. இவர் காமவேளின் ஐந்தம்புகளையும் ஒரு பாடலில்[3] குறிப்பிட்டிருத்தலும், அளகம், வகுளம், சுவர்க் கம், அலங்காரம் ஆகிய வடசொற்களைத் தம் நூலில் எடுத்தாண் டிருத்தலும் இவர் கடைச்சங்க காலத்திற்குப் பிற்பட்டவர் என் பதை உறுதிப்படுத்துதல் உணரத்தக்கது.

இனி,

என்னும் பாடற்பகுதியில் மறிகடலுக்கு மாயோனையும் வெண் மணலுக்கு முன்னோனாகிய பலராமனையும் இவர் உவமானங் களாக அமைத்திருப்பது, படித்தின் புறற்பாலதாகும்.

ஒருவன் இப்பிறப்பின் கண் செய்த தீவினை, இப்பிறப்பிலேயே அவனையடைந்து பயன் கொடுக்கும்போல் தெரிகிறது ; அறியா தவர்கள் அது மறுபிறப்பில் தான் பயனளிக்குமென்று கூறு வார்கள் என்னுங் கருத்தினை இவ்வாசிரியர்,

என்ற பாடற்பகுதியில் குறித்திருப்பது அறியத்தக்கது. சைவ சமயகுரவருள் ஒருவராகிய சுந்தரமூர்த்திகளும் 'செற்றொருவரைச் செய்த தீமைகள் இம்மையே வரும் திண்ணமே'[6] என்று இக்கருத் தினைத் தம் அருட்பாடலொன்றில் வலியுறுத்தியுள்ளமை காண்க.

இனி, உடன்போக்கினை மேற்கொண்ட தலைவனையும் தலை வியையும் தேடிச்சென்ற செவிலித்தாய்க்கு அவர்களை எதிரே கண்ட ஒரு கணவனும் அவன் மனைவியும் அச்செய்தியை யுணர்த் துவதாகக் கணவன் கூற்றில் வைத்து இவ்வாசிரியர் இயற்றி யுள்ள அரிய பாடலொன்று[7], பண்டைத் தமிழ் மக்களின் உள் ளத் தூய்மையையும் ஒழுக்கத்தின் ஒப்புயர்வற்ற நிலையையும் நன்கு புலப்படுத்துவதாக உள்ளது. அது,

என்பதாம்.

இப்பாடலில் ஆண்மகனது பிறன்மனை நோக்காத பேராண் மையும் பெண்மகளது பிற ஆடவரைக் கண்களாற் காணாத கற்புடைமையும் தெள்ளிதிற் குறிப்பிடப்பட்டிருத்தல் உணரற் பாலதாம். இக்கருத்தினைச் சைவசமய குரவருள் ஒருவராகிய மணிவாசகப் பெருமான்,

என்று தம் திருக்கோவையாரில், ஒரு பாடலில் கூறியிருத்தல் அறியற்பாலதாகும்.

இந்நூலின் இறுதியில் புறவுரையாக ஒரு வெண்பா உளது.[9] அதனை நோக்குமிடத்து, இவ்வாசிரியர் காலத்தில் அகப்பொரு ளாகிய களவியலை வெறுத்துக்கொண்டிருந்த ஒரு குழுவினர் நம் தமிழ்நாட்டில் இருந்திருத்தல் வேண்டும் என்பதும் அவர்கட்கு அதன் சிறப்பினை விளக்கி அன்னோர் கொண்டிருந்த வெறுப் பினைப் போக்கவேண்டியே இவ்வினிய நூலை இவர் இயற்றி யிருத்தல் வேண்டும் என்பதும் நன்கு வெளியாகின்றன. இவர் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டில் இருந்தவர் என்பது முன்னர் விளக்கப்பட்டுள்ளது.

-------
[1]. ஏலாதி, பா. 72.
[2]. திணைமாலை நூற்றைம்பது, பா. 4.
[3]. க்ஷ பா. 8.
[4]. திணைமாலை நூற்றைம்பது, பா. 58.
[5]. ஷ பா. 123.
[6]. சுந்தரமூர்த்திகள் தேவாரம் - திருப்புறம்பயப்பதிகம், பா. 4.
[7]. திணைமாலை நூற்றைம்பது, பா. 89.
[8]. திருக்கோவையார், பா. 244.
[9]. 'முனிந் தார் முனிவொழியச் செய்யுட்கண் முத்துக்
கனிந்தார் களவியற் கொள்கைக்-கணிந்தார்
இணைமாலை பீடிலா வின் றமிழால் யாத்த
திணைமாலை கைவரத் தேர்ந்து. (திணைமாலை நூற்றைம்பது, பாயிரம்)
--------

14. கைந்நிலை


இஃது அறுபது வெண்பாக்களையுடைய ஒரு நூல் ; ஐந்திணைக்குரிய அகவொழுக்கத்திற்கு இலக்கியமாயமைந்தது. எனவே, ஒவ்வொரு திணையும் பன்னிரண்டு பாடல்களையுடைய தாகும். இந்நூல் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இதிலுள்ள பல வெண்பாக்கள் சிதைந்தழிந்து போயின. இந் நூலின் ஆசிரியர் மாறோகத்து முள்ளி நாட்டு நல்லூர்க்காவிதியார் மகனார் புல்லங்காடனார் என்பார். இவரது இயற்பெயர் புல் லங்காடனார் என்பது. இவரது ஊர் முள்ளி நாட்டு நல்லூராகும். அவ்வூர் மாறோகத்து முள்ளிநாட்டு நல்லூர் என்று கூறப்பட் டிருத்தலால், அது திருநெல்வேலி ஜில்லாவில் பாண்டியரின் பழைய தலைநகராகிய கொற்கையின் பக்கத்திலிருந்ததோர் ஊரா தல் வேண்டும். மாறோகம் கொற்கையைச் சூழ்ந்த நாடு என்பது உணரற்பாலதாகும். கைந்நிலையின் ஆசிரியராகிய இப் புல்லங் காடனார் தென்பாண்டி நாட்டில் கொற்கைக் கண்மையில் வாழ்ந்தவராதல் வேண்டுமென்பதை இந்நூலின் இறுதிப்பாடல்[1] குறிப்பாக உணர்த்துதல் அறியத்தக்கது. இவருடைய தந்தை யார் காவிதியார் என்ற பட்டம் பெற்றவராயிருத்தலால் இவர் பாண்டியர்க்கு வழி வழி அமைச்சுரிமை பூண்டொழுகிய ஒரு தொல்பெருங் குடியில் தோன்றியவர் என்பது நன்கு தெளியப் படும். இவரைப்பற்றிய மற்றைச் செய்திகள் புலப்படவில்லை. இந்நூலில், பாசம், ஆசை, இரசம், கேசம், இடபம், உத்தரம் ஆகிய வட சொற்கள் பயின்றுவருதலை நோக்குமிடத்து, இது கடைச்சங்க காலத்திற்குப் பின்னர்த் தோன்றிய நூல் என்பது நன்கு துணியப்படும். ஆகவே, இதன் ஆசிரியர் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டில் இருந்தவராதல் வேண்டும்.

இதுகாறும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் கடைச் சங்க காலத்திற்குப் பிறகு கி. பி. ஆறாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில் தோன்றியுள்ள பதினான்கு நூல்களைப் பற்றிய செய்திகளும் அந்நூல்களை இயற்றிய ஆகிரியன்மாரின் வரலாறு களும் ஒருவாறு விளக்கப்பட்டன. பதினெண் கீழ்க் கணக்கில் எஞ்சியுள்ள நூல்கள் திருக்குறள், களவழி நாற்பது, முது மொழிக்காஞ்சி, நாலடியார் ஆகிய நான்குமேயாம். அவற்றுள், திருக்குறள் கடைச்சங்க நாளில் கிறித்துவ ஆண்டு தோன்றுவ தற்கு முன்னே இயற்றப்பெற்றது என்பதும், கடைச்சங்கப் புலவர்களுள் சிலர் அந்நூற் சொற்பொருள்களைத் தம் பாடல் களில் அமைத்து அவ்வரிய நூலின்பால் தமக்குள்ள ஈடுபாட் டைப் புலப்படுத்தியுள்ளனர் என்பதும் ‘ கடைச்சங்க காலம்' என்ற பகுதியில் எடுத்துணர்த்தப்பட்டுள்ளன.

களவழிநாற்பது என்ற நூலை இயற்றிய பொய்கையார் என்பார், கடைச்சங்கப் புலவருள் ஒருவர் என்பது புறநானூற்றி லுள்ள 48, 49-ஆம் பாடல்களாலும் நற்றிணையிலுள்ள 18-ஆம் பாடலாலும் நன்கறியப்படுகின்றது. அன்றியும், இப்புலவரால் சிறை மீட்கப்பெற்ற சேரன் கணைக்காலிரும் பொறையின் பாட லொன்று புறநானூற்றில்[2] காணப்படுவதும் இவ்வுண்மையை உறுதிப்படுத்துவதாகும். எனவே, சோழன் செங்கணான் மீது இப்புலவர் பெருமான் பாடிய களவழி நாற்பதும் கடைச்சங்க காலத்து நூல் என்பது தேற்றம். ஒரு சாரார் சோழன் செங்க ணான் கடைச்சங்க காலத்திற்குப் பிற்பட்டவன் என்று கூறுவர். அவ்வேந்தற்கு நல்லடி என்ற புதல்வன் ஒருவன் இருந்தனன் என்பது அன்பிற் செப்பேடுகளால்[3] அறியக் கிடக்கின்றது. அந் நல்லடியைக் குறிக்கும் பாடலொன்று,[4] சங்கத் தொகை நூல்களுள் ஒன்றாகிய அகநானூற்றில் காணப்படுகின்றது. ஆகவே, நல்லடியின் தந்தையாகிய சோழன் செங்கணான் என் பான் கடைச்சங்க காலத்திலிருந்தவன் என்பது நன்கு துணியப் படும். எனவே, அவன் கடைச்சங்க காலத்திலிருந்தவனல்லன் என்று கூறுவது எவ்வாற்றானும் பொருந்தாத தொன்றாம்.

முதுமொழிக்காஞ்சி இயற்றிய கூடலூர் கிழார் என்பவர், சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை இறந்த பொழுது வருந்திப்பாடிய பாடலொன்று[5] புறநானூற்றில் காணப்படுகின்றது. அன்றியும், அவ்வேந்தன் விரும்பியவாறு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகிய ஐங்குறு நூறு தொகுத்த வரும் இப்புலவரேயாவர். எனவே, இவர் கடைச்சங்கப் புலவ ருள் ஒருவர் என்பது தேற்றம். ஆகவே, இவரது முதுமொழிக் காஞ்சியும் கடைச்சங்க காலத்தில் இயற்றப் பெற்ற நூலாதல் வேண்டும்.

இதுகாறும் விளக்கியவாற்றால் திருக்குறள், களவழி நாற்பது, முதுமொழிக்காஞ்சி ஆகிய மூன்று நூல்களும் கடைச்சங்க காலத் தில் தோன்றியவை என்பது நன்கு புலனாதல் காண்க. அக் காரணம்பற்றியே இவ்விருண்டகாலப் பகுதியில் அம்மூன்று
நூல்களின் வரலாறும் ஆராய்ச்சியும் சேர்க்கப்படவில்லை.

இனி, நாலடியார் என்ற நூலில் முத்தரையர் என்னும் பட்டத்துடன் திகழ்ந்த குறுநில மன்னரின் கொடைத் திறமும் சிறப்பும் இரண்டு பாடல்களில்[6] கூறப்பட்டுள்ளன. முத்தரையரைப்பற்றிய செய்திகள் கி. பி. எட்டாம் நூற்றாண் டில் தான் முதலில் கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன. ஆகவே, அன்னோரைப் புகழ்ந்துரைக்கும் நாலடியாரும் கி. பி. எட்டாம் நூற்றாண்டில் இயற்றப்பெற்ற நூலாதல் வேண்டும் என்பது ஒருதலை. எனவே, அந்நூல் தமிழகத்தின். வடபகுதி யில் பல்லவரும் தென் பகுதியில் பாண்டியரும் பேரரசர்களாய்ச் சிறப்புடன் ஆட்சிபுரிந்துகொண்டிருந்த காலப் பகுதியில் தோன் றியது என்பது நன்கு தெளியப்படும். அதனால் இவ்விருண்ட காலப் பகுதியில் நாலடியாரைப் பற்றிய வரலாறு எழுதப்பட வில்லை.

இன்னிலை என்னும் நூலொன்று பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் சேர்த்து ஆராய்ச்சியாளர் சிலரால் கணக்கிடப்பட் டுள்ளது. அன்னோர் கருத்தின்படி அதனைச் சேர்த்துக்கொண் டால் கைந்நிலை என்ற நூலைக் கீழ்க்கணக்கு நூல்களிலிருந்து விலக்கவேண்டும். ஆனால், பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் இவை என் றுணர்த்தும் ' நாலடி நானாற்பது' எனத் தொடங் கும் பழைய வெண்பாவில் மெய்ந்நிலைய காஞ்சியொடு ' - இன் னிலை சொல் காஞ்சி யொடு ' என்ற பாடங்கள் காணப்படுகின் றன. அவற்றை நோக்குங்கால், இன்னிலை என்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றெனக் கோடற்கு இடமில்லை என்க. இன்னிலைச் செய்யுட்களுள் ஒன்றாதல் பழைய உரை யாசிரியர்களால் மேற்கோளாக எடுத்துக் காட்டப் பெறாமையும் இக்கருத்தை வலியுறுத்துவதாகும்.

------
[1]. 'பொன்னம் பசலையும் தீர்ந்தது பூங்கொடி –
தென்னவன் கொற்கைக் குருகிரிய- மன்னரை
யோடு புறங்கண்ட வொண்டாரான் தேரிதோ
கூட லணைய வரவு ' (கைந்நிலை, பா. 60.)
[2]. புறம். 74.
[3]. Epigraphia Indica, Vol. XV, No, 5. (Anbil Plates of Sundara Chola.)
[4]. 'நற்றேர்க் கடும்பகட்டு யானைச்சோழர் மருகன்
நெடுங்கதிர் நெல்லின் வல்லங் கிழவோன்
நல்லடி யுள்ளா னாகவும் ஒல்லார்
கதவ முயறலு முயல்ப' (அகம். 356, பாணர்.)
[5]. புறம். பா. 229. [6]. நாலடி, 200, 296.
--------

15. காரைக்காலம்மையார் நூல்கள்


காரைக்காலம்மையார் இயற்றியனவாக இப்போது பதி னோராந் திருமுறையில் காணப்படும் நூல்கள் நான்காகும். அவை, அற்புதத் திருவந்தாதியும் திருவிரட்டை மணிமாலையும் திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் இரண்டுமாம். இவற் றுள், அற்புதத்திருவந்தாதி நூற்றொரு வெண்பாக்களைத் தன்ன . கத்துக் கொண்டது. திருவிரட்டை மணிமாலை, வெண்பாவும் கட்டளைக் கலித்துறையுமா கவுள்ள இருபது பாடல்களைத் தன் பால் உடையது. இவை இரண்டும் அந்தாதித் தொடையில் அமைந்தவை; சிவபெருமானுடைய பல்வகைச் சிறப்பினையும் ஒப்புயர்வற்ற நிலையையும் எடுத்துரைப்பவை. திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் இரண்டும் இருபத்திரண்டு செய்யுட்களை யுடையவை. இவை, தொண்டை மண்டலத்திலுள்ள வட திருவாலங்காடு என்னுந் திருப்பதியில் அண்டமுற நிமிர்ந்தாடும் கூத்தப்பெருமான் மீது பாடப்பெற்றவையாகும். இப்பதிகங்கள் இரண்டிலுமுள்ள இறுதிப்பாடல்களிலும்[1] அற்புதத் திருவந் தாதியின் கடைசிச் செய்யுளிலும் [2] காரைக்காலம்மையார் தம்மைக் காரைக்காற்பேய் என்று கூறிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இவ்வம்மையார் சிவபெருமானிடத்தில் வைத் திருந்த பேரன்பினை அற்புதத் திருவந்தாதியிலுள்ள இரண்டு பாடல்களால் நன்கறிந்துகொள்ளலாம். அவை,

காரைக்காலம்மையார் நூல்கள்

என்பனவாம்.

இவ்வம்மையாரின் வரலாறு, திருத்தொண்டர் புராண மாகிய பெரிய புராணத்தில் சேக்கிழாரடிகளால் கி. பி. பன்னி ரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் அறுபத்தாறு பாடல்களில் பத்திச் சுவையொழுகப் பாடப்பட்டுள்ளது. அவ்வரலாற்றின் சுருக்கமாவது :

காரைக்காலம்மையார், சோழமண்டலத்திலே கீழ்கடலைச் சார்ந்த காரைக்கால் என்னும் பெரும்பதியில் எல்லாச் செல்வங்களிலும் சிறந்து விளங்கிய தனதத்தன் என்ற வணி கற்குப் புனிதவதி என்னும் பெயருடைய புதல்வியாய்த் தோன்றி, நாகையம்பதியிலிருந்த நிதிபதியின் புதல்வன் பரம தத்தன் என்பவனை மணந்து இல்லறம் நிகழ்த்திவரும் நாட் களில், அவன் கொண்டுவந்த இரு மாங்கனிகளுள் ஒன்றினைத் தம் வீட்டில் உண்ட சிவனடியார் ஒருவர்க்கு அளித்துவிட்ட மையால், அதனைக் கணவன் கேட்ட ஞான்று சிவபெரு மான் திருவருள் துணை கொண்டு வேறு ஒரு பழம் வருவித்துக் கொடுக்க, அப்பழம் முதலில் உண்டதைக் காட்டிலும் பெருஞ் சுவையுடையதாயிருத்தலை யுணர்ந்த கணவன் ஐயுற்றுக் கேட்டபோது, அம்மையார் இன்றியமையாமைபற்றி உண்மை நிகழ்ச்சியை யுணர்த்தினாராக, அவன் அதனைச் சோதிக்க வேண்டி மற்றொரு மாங்கனி வருவிக்குமாறு கூற, அங்ஙனமே மற்றொன்றும் வந்து விரைவில் மறைந்துபோகவே, அதனால் பேரச்சம் எய்திய கணவன் தக்க சமயம் பார்த்து வாணிகத்தின் பொருட்டுச் செல்பவன்போல் அம்மையாரைவிட்டு நீங்கிப் பாண்டி நாட்டிற்குச் சென்று மறு மணம்புரிந்து வாழ்ந்துகொண் டிருந்த காலத்தில், உறவினர் அம்மையாரை அழைத்துக் கொண்டு அங்குச் சென்றபோது, அவன் அம்மையாரைத் தெய்வமென்று கூறி அடிகளில் வீழ்ந்து வணங்குதலும், அதனைக் கண்ட அம்மையார் பெருநாணமுற்று இல்வாழ்க்கையில் பற் றின்றி அதனைத் துறந்து, சிவபெருமானை வேண்டிப் பேய் வடி வம் பெற்றுக் கயிலைக்குச்சென்று அப்பெருமானால் ' அம்மையே' என்றழைக்கும் பேறு பெற்று, வட திருவாலங் காட்டிற்குத் திரும்பிவந்து ஆடவல்லான் றன் எடுத்த திருவடிகளின்கீழ் என்றும் இருந்து இன்புறும் பெருநிலை யெய்தினர்- என்பதாம்.

இவ்வம்மையார் பேய்வடிவம் பெற்றனர் என்பது உடலில் தசை மிகவுங் குறைந்து போகவே, எற்புச் சட்டகமாக நிலவினர் என்பதை உணர்த்துமென்று கூறலாம். கி. பி. ஏழாம் நூற்றாண் டில் நம் தமிழகத்தில் விளங்கிய சைவசமய குரவராகிய திருஞான சம்பந்தர், இவ்வம்மையார் தலையால் நடந்து சென்று வழிபட்ட திருவாலங்காட்டில் தாம் அடிவைத்து நடத்தற்குப் பெரிதும் அஞ்சிப் புறத்தேயுள்ள பதியொன்றில் தங்கியிருந்தனரென்று சேக்கிழாரடிகள் தம் திருத்தொண்டர் புராணத்தில் கூறியுள்ளனர்.[5] எனவே, திருஞான சம்பந்தருக்கு முற்பட்டவர், காரைக் காலம்மையார் என்பது தேற்றம். ஆகவே, கி. பி. ஏழாம் நூற் றாண்டிற்கு முற்பட்ட இருண்டகாலப் பகுதியில் இருந்தவர் இவ் வம்மையார் என்பது தெள்ளிது. எனவே, இவர் அற்புதத் திரு வந்தாதி, இரட்டைமணிமாலை, திருவாலங்காட்டு மூத்த திருப்பதி கங்கள் ஆகிய நான்கு நூல்களையும் கி. பி. ஐந்து அல்லது ஆறாம் நூற்றாண்டில் இயற்றியிருத்தல் வேண்டும் என்பது ஒருதலை. இந்நூல்களில் இவ்வம்மையார் ஆண்டுள்ள சங்கரன், வேதியன், உமை, அரன், ஈசன், இயமானன், சேமம், கணம், ஆரம், அந்தரம், சிரம், சோதி, கமலம், சிரமம், அந்தி, சரணாரவிந்தம், அட்டமூர்த்தி, ஞானமயம், அந்தாதி ஆகிய வடசொற்களும் தொடர்களும், அற்புதத் திருவந்தாதி என்ற நூற்பெயரும், வட மொழி தமிழகத்தில் மிகப் பரவியிருந்த கி. பி. ஐந்து அல்லது ஆறாம் நூற்றாண்டில் இந்நூல்கள் தோன்றியிருத்தல் வேண்டு மென்பதை உறுதிப்படுத்துதல் காண்க.

அம்மையாரது அற்புதத்திருவந்தாதியிலுள்ள

என்ற வெண்பாக்கள் சைவ நெறியின் சீரிய கொள்கைகளை அறிவுறுத்து தல் உணரற்பாலதாகும்.

-------
[1]. (a) ' அப்பனை யணி திருவாலங்காட்டு ளடிகளைச்
செடி தலைக் காரைக்காற் பேய்-செப்பிய செந்தமிழ் பத்தும்
வல்லார் சிவகதி சேர்ந்தின்ப மெய்துவாரே ' (மூத்த திருப்பதிகம், 11)
(b) ' காடுமலிந்த கனல்வாயெயிற்றுக் காரைக்காற் பேய் தன்
பாடல் பத்தும் பாடியாடப் பாவ நாசமே ' (மூத்ததிருப். 11)
[2]. 'உரையினா லிம்மாலை யந்தாதி வெண்பாக்-கரைவினாற்
காரைக்காற் பேய்சொற்- பரவுவார் - ஆராத
வன்பினோ டண்ணலைச் சென் றேத்துவார்-பேராத காதல் பிறந்து '
(அற்புதத் திருவந்தா. பா. 101)
[3]. அற்புதத்திருவந்தாதி பா. 2.
[4]. ஷை பா. 6.
[5]. திருத் தொண்டர் புராணம், திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள் புராணம், பா. 1008.
---------

16. திருமந்திரம்

இது மூவாயிரம் பாடல்களையுடையது ; சைவத்திருமுறை --கள் பன்னிரண்டனுள் பத்தாந்திருமுறையாகத் திகழும் சிறப் புடையது. இஃது ஒன்பது தந்திரங்களாக வகுக்கப்பெற்றது. ஒவ்வொரு தந்திரமும் பல அதிகாரங்களைத் தன்னகத்துக் கொண் டது. இவ்வொன்பது தந்திரங்களிலும் இருநூற்று முப்பத் திரண்டு அதிகாரங்கள் உள்ளன. இந்நூல் கிடைத்த வரலாறு ஒன்று செவிவழிச் செய்தியாகத் தொன்றுதொட்டு வழங்கிவரு கின்றது. அது, திருஞான சம்பந்தர் திருவாவடுதுறையில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை வணங்கும் பொருட்டு அங்குச் சென்றபோது, திருக்கோயிலின் பலிபீடத்திற் கண்மையில் தமிழ்மணம் கமழ்தல் கண்டு அவ்விடத்தில் அகழ்ந்து பார்க்கும் படி செய்தாலும், அதனடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்தது திருமந்திர நூலா-யிருத்தலையறிந்து பெருமகிழ்ச்சியுற்று இவ்வரிய நூலின் அருமை பெருமைகளை எடுத்துக்கூறி இது தமிழ் நாட்டில் யாண்டும் பரவி யாவர்க்கும் பயன்படுமாறு செய்தருளினர் என்ட தாம். இவ்வரலாற்றால் தமிழகத்தில் திருமந்திர நூல் ஒரு காலத் தில் கிடைக்காமற் போயிருத்தல் வேண்டும் என்பதும், பிறகு திருவாவடுதுறைக் கோயிலிலிருந்து ஒரு பிரதி திருஞானசம்பந்த சுவாமிகள் காலத்தில் கிடைத்திருத்தல் வேண்டும் என்பதும் நன்கு புலப்படுதல் காண்க.

தமிழ் நாட்டில் ஏதிலாராகிய களப்பிரரின் ஆட்சி நடை பெற்ற காலப்பகுதியில் பல தமிழ் நூல்கள் அழிந்தும் அழிக்கப் பட்டும் போயின. அக்காலத்தில் தோன்றிய இத் திருமந்திர நூல் அழிந்துபோகாதவாறு செப்பேடுகளில் எழுதப்பெற்று ஒரு பேழையில் அடக்கஞ் செய்யப்பட்டுத் திருவாவடுதுறைத் திருக் கோயிலின் பலிபீடத்திற்கருகில் புதைத்துவைக்கப் பெற்றிருத்தல் வேண்டும் என்பதும், பிறகு தமிழ்வேந்தர் ஆட்சியின் கீழ் நாடு அமைதியெய்தியஞான்று திருஞான சம்பந்தப் பெருமானது பேரருள் திறத்தினால் இந்நூல் வெளிவந்து யாண்டும் பரவியிருத் தல் வேண்டும் என்பதும் நன்கு துணியப்படும். செவிவழிச் செய்திகள் காலப்போக்கில் பல மாறுதல்களுக் குள்ளாதல் இயல்பேயாம்.

இந்நூலின் ஆசிரியர் திருமூலநாயனார் ஆவர். இவர் திருக் கயிலையில் நந்தியின் திருவருள் பெற்ற சிவயோகிகளுள் ஒருவர் என்றும் எண்பெருஞ் சித்திகளில் வல்ல பெருஞ் சித்தர் என்றும் திருவாவடுதுறைக் கோயிலின் மேல்புறத்துள்ள அரசமரத்தடி யில் மூவாயிரம் ஆண்டுகள் சிவயோகத்திலமர்ந்து ஆண்டிற் கொரு பாடலாக மூவாயிரந் திருமந்திரப் பாடல்களை அருளினார் என்றும் சேக்கிழாரடிகள் திருத்தொண்டர் புராணத்தில் கூறி யுள்ளனர். இச்செய்திகளுள் சில,

எனவும்,

எனவும் போதரும் திருமந்திரப் பாடற்பகுதிகளால் உறுதியாதல் காண்க. ஆனால், இவர் மூவாயிரம் ஆண்டுகள் சிவயோகத்தி லமர்ந்து ஒவ்வோர் ஆண்டிற்கு ஒவ்வொரு பாடலாக மூவாயிரம் பாடல்களைக் கூறியருளினார் என்பதற்குத் திருமந்திர நூலில் அகச்சான்றுகள் காணப்படவில்லை. எனினும், இவர் சிவயோகி யாதலால் நெடுங்காலம் இருந்திருத்தல் வேண்டும் என்பது திண்ணம். இவ்வுண்மையை, 'ஒப்பில் எழுகோடி யுகமிருந்தேனே'[1] என்றும் ' இருந்தேன் இக்காயத்தே எண்ணிலிகோடி’[2] என்றும் இவர் தம் திருமந்திரத்தில் கூறியுள்ளவற்றால் நன்கறியலாம்.

இனி, 'ஒன்றவன்றானே' என்று தொடங்குஞ் செய்யுள் தான் திருமந்திரத்தின் முதற்பாடல் என்பது சேக்கிழாரடிகள் கூற்றால் உணரப்படுகின்றது. ஆனால், அச்சிடப்பெற்று வெளி வந்துள்ள திருமந்திர நூலில் ' ஐந்து கரத்தனை யானை முகத்தனை' என்று தொடங்கும் விநாயகர் வணக்கம் முதற் செய்யுளாக உள்ளது. மூத்த பிள்ளையாராகிய யானை முகக் கடவுளின் வழி பாடு, கி. பி. ஏழாம் நூற்றாண்டின் இடையில் திருஞான சம்பந் தர் காலத்திலிருந்த சிறுத்தொண்ட நாயனாரால் நம் தமிழ்நாட் டில் முதலில் தொடங்கப்-பெற்றுப் பிறகு தமிழகம் முழுவதும் பரவி, யாண்டும் நிலைபெற்றது என்பது ஆராய்ச்சியில் அறிந்த தோர் உண்மையாகும். எனவே, திருஞான சம்பந்தருக்குக் காலத்தால் முந்தியவரான திருமூல நாயனாரது திருமந்திரத்தில் முதலிலுள்ள யானை முகக் கடவுளைப்பற்றிய பாடல் பிற்காலத் தில் ஒருவரால் எழுதிச் சேர்க்கப்பெற்றிருத்தல் வேண்டும் என்பது நன்கு புலனாதல் காண்க. அங்ஙனமே பல பாடல்கள் இந்நூலில் இடைச் செருகலாகச் சேர்க்கப்பட்டிருக்கின் றமையால், இப்போ துள்ள திருமந்திரத்தில் மூவாயிரத்து நாற்பத்தேழு பாடல்கள் காணப்படுகின்றன. அன்றியும், சைவசிந்தாந்த மகாசமாசத்தார் வெளியிட்டுள்ள திருமந்திரத்தில் இன்னும் இருபத்துநான்கு பாடல்கள் ' அதிகப்பாடல்கள் ' என்ற தலைப்பில் நூலின் இறுதி யில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. ஆகவே, இந்நூலில் இப் போது 3071 பாடல்கள் உள்ளன என்பது உணரற்பாலது. இவற்றையெல்லாம் நோக்குமிடத்து, பிற்காலத்தில் தோன் றிய சைவசித்தாந்தப் புலவர்களுள் ஒருவராதல் சிலராதல் தம் கருத்துக்களைச் செய்யுட்களில் அமைத்து, அப்பாடல்களைத் திருமந்திர நூலில் இடையிடையே சேர்த்திருத்தல் வேண்டும் என்பது தெள்ளிதிற் புலனாதல் காண்க.

இந்நூலில் ஒரே பாடல் இருமுறை அல்லது மும்முறை வெவ்வேறு இடங்களில் வந்துள்ளமை குறிப்பிடத்தக்க தொன்றாம். அவ்வாறுள்ள அதிக பாடல்கள் ஐம்பத்திரண்டாகும்.

இனி, இந்நூலிற் காணப்படும் ஒட்டியாணம்,[3] கடுக்கன்,[4] மல்லாக்கத்தள்ளல்,[5] வட்டி,[6] பொதுக்கென,[7] சிதம்பரம் [8] முதலான பிற்காலச் சொல்வழக்கு இதில் இடைச் செருகலாகச் சேர்க்கப்பட்ட சில பாடல்கள் உண்டு என்பதை உறுதிப் படுத்துதல் அறியத்தக்கது.

இந்நூலாசிரியர் முதலில் ஆகமங்கள் ஒன்பது தோன்றின் என்றும், பின்னர் அவை விரிந்து இருபத்தெட்டு ஆகமங்களாகப் போயின என்றும் திருமந்திரப் பாடலொன்றில் கூறியிருப்பது உணரற்பாலதாகும். (பா. 1429) அன்றியும், இவ்வாசிரியர் தம் முடைய திருமந்திரம் ஓர் ஆகம நூல் என்றும் இது சிவபெருமான் திருவடித்துணை கொண்டு தம்மால் இயற்றப்பட்டதென்றும் ' நந்தியிணையடி' என்று தொடங்கும் எழுபத்துமூன்றாஞ் செய்யுளில் குறித்துள்ளனர். ஆகவே இந்நூல் சைவசித்தாந்தக் கொள்கைகளையுணர்த்தும் பழைய தமிழாகம நூல் என்பதும், இதற்கு வடமொழியில் முதனூல் இல்லை என்பதும் அறியற் பாலவாம். இவர் பழைய சிவாகமங்கள் ஒன்பதையும் உளத்திற் கொண்டே , தம் திருமந்திர நூலை ஒன்பது தந்திரங்களாக வகுத் துள்ளனர் என்று கூறலாம். இவ்வொன்பது தந்திரங்களிலுமுள்ள சில அதிகாரங்கள் எல்லா மக்கட்கும் பொதுவாகவுள்ள யாக்கை நிலையாமை, புலால்மறுத்தல், அன்புடைமை, நடுவுநிலைமை, வாய்மை, அவாவறுத்தல், புறங்கூறாமை முதலான பொது அறங்களை எடுத்துரைக்கின்றன ; பிற அதிகாரங்கள் எல்லாம் சைவசித்தாந்த உண்மைகளைக் கூறுகின்றன. ஆனால் இந்நூலிலுள்ள பல பாடல்கள் பொருள் விளங்காத நிலையில் தான் உள்ளன.

மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் சைவ நூல் பரிசோதகரா யிருந்து காலஞ்சென்ற சேற்றூர்ச் சுப்பிரமணியக் கவிராயர் இந் நூலில் நூறு பாடல்களுக்குச் சிறந்த பேருரை வரைந்து மதுரைத் தமிழ்ச்சங்கப் பதிப்பாக அதனை வெளியிட்டுள்ளமை பாராட்டத் தக்கதாகும்.

இனி,
என்றும்,
என்றும்,
என்றும்,
என்றும்,
என்றும் இவ்வாசிரியர் கூறியுள்ள அரிய உண்மைகள் எல்லாச் சமயத் தினரும், எத்தகைய வேறுபாடுமின்றி எஞ்ஞான்றும் நினைவிற் கொண்டு ஒழுகத்தக்க பொதுவான அறவுரைகளாகும்.

சைவ சமய குரவராகிய சுந்தரமூர்த்திகள், திருமூல நாயனாரைச் சிவனடியார் அறுபத்து - மூவருள் ஒருவராக வைத்துத் தம் திருத்தொண்டத் தொகையில்[9] வணக்கம் கூறியுள்ளனர். நம்பியாண்டார் நம்பிகள் தம் திருத்தொண்டர் திருவந்தாதியில் [10] இவர் வரலாற்றை ஒரு பாடலில் சுருக்கமாக உரைத்துள்ளனர். சேக்கிழாரடிகள் தம் திருத்தொண்டர் புராணத்தில்[11] அவ் வரலாற்றை இருபத்தெட்டு இனிய பாடல் களில் விரித்துப் பாடியுள்ளனர். ஆகவே, இவர்கள் எல்லோர்க்கும் காலத்தால் முந்தியவர் திருமூலர் என்பது தேற்றம். திருஞான . சம்பந்தர் திருவாவடுதுறைத் திருக்கோயிலுக்குச் சென்றபோது பலிபீடத்திற்கண்மையில் நிலத்தைத் தோண்டுவித்து அவ்விடத் திலிருந்து திருமந்திர நூலை எடுத்தனர் என்னும் வரலாற்றை நோக்குங்கால், திருமூலர் கி. பி. ஏழாம் நூற்றாண்டினிடையில் நிலவிய திருஞானசம்பந்தருடைய காலத்திற்கும் முற்பட்டவர் என்பது தெள்ளிது. இவர் சிதம்பரத்தையும் அதிலுள்ள பொன்னம்-பலத்தையும் திருமந்திரத்தில் சில பாடல்களில்[12] கூறி யுள்ளமையால் தில்லை மாநகரில் அவ்வம்பலம் அமைக்கப்பெற்ற பின்னரே இந்நூலை இயற்றியிருத்தல் வேண்டும் என்பது ஒரு தலை. தில்லையம்பதியில் கூத்தப்பெருமானுக்கு அம்பலம் அமைத்து அதற்குப் பொன் வேய்ந்தவன் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டி லிருந்த பல்லவ வேந்தனாகிய சிம்மவர்மன் ஆவன். எனவே, தில்லைப் பொன்னம்பலத்தைத் தம் நூலில் கூறியுள்ள திருமூல நாயனார் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலாதல் ஆறாம் நூற்றாண்டிலாதல் இந்நூலை இயற்றியிருத்தல் வேண்டும் என்பது நன்கு துணியப்படும்.

இனி, இவரது நூலிலுள்ள 204-ஆம் பாடல் யாப்பருங்கல் விருத்தியில் அவ்வுரை-யாசிரியரால் மேற்கோளாகக் காட்டப் பெற்றுள்ளது. சித்தாந்தம் என்னும் வடசொற்றொடரைத் தமிழ் நூலில் முதலில் எடுத்து வழங்கியவர் திருமூலரே என்பது உணரற்பால தொன்றாம். பிற்காலத்தில் இச்சொற்றொடர் சமய நூல்களில் மிகுதியாகப் பயின்று வருதலைக் கற்றோர் பலரும் அறிவர். ஆனால், திருமூலர் காலத்திற்குப் பின்னர் விளங்கிய திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்திகள், திருவாதவூரடிகள் ஆகிய சமய குரவர் நால்வரும் இச் சொற் றொடரைத் தம் திருப்பதிகங்களில் எடுத்தாளாமை குறிப்பிடத் தக்கதாகும். எனினும், ' கடல் சூழ்ந்த உலகெலாங் காக்கின்ற பெருமான் காடவர்கோன் கழற்சிங்க னடியார்க்குமடியேன் ' என்று சுந்தரமூர்த்திகளால் திருத்தொண்டத் தொகையில் பாராட்டப்பெற்ற இரண்டாம் நரசிங்கவர்மன் என்ற பல்லவ மன்னன் தான் காஞ்சியில் எடுப்பித்த கைலாசநாதர் கோயிலில் பொறித்துள்ள வடமொழிக் கல்வெட்டொன்றில்[13] தன்னைச் சைவ சித்தாந்த நெறியைப் பின்பற்றுபவன் என்று கூறி யிருப்பது அறியத்தக்கது. ஆகவே, சமய குரவர் காலங்களில் சித்தாந்தம் என்ற தொடர் வடமொழி நூல்களில் பயின்று வந்ததுபோலும். பழைய தமிழ் நூல்களுள் திருமந்திரத்தைத் தவிர வேறு நூல்களில் இத் தொடர் காணப்படாமை குறிப் பிடத்தக்கதாகும்.

-------
[1]. திருமந்திரம், பாயிரம், பா. 74.
[2]. திருமந்திரம், பாயிரம், பா. 80.
[3]. பா. 818. [4]. பா. 1424.
[5]. பா. 199, [6]. பா. 250
[7]. பா. 2950. [8]. பாக்கள் 1726, 2553, 2722.
[9]. திருத்தொண்டத் தொகை, பா. 5.
[10]. திருத்தொண்டர் திருவந்தாதி, பா. 36
[11]. பெரிய புராணம், திருமூல நாானார் புராணங், 1-23
[12]. திருமந், பாக்கள், 2653, 2722, 2740, 2777.
[13]. South Indian Inscriptions, Vol. I, No. 24 Verse 5.
--------------

17. முத்தொள்ளாயிரம்

இது சேர சோழ பாண்டியர் ஆகிய முடியுடைத் தமிழ் வேந்தர் மூவரையும் பாட்டுடைத் தலைவராகக்கொண்டு அறம் பொருள் இன்பம் பற்றிப் புகழ்ந்து பாடப்பெற்ற ஒரு பழைய தமிழ்நூலாகும். இந்நூல் வெண்பா யாப்பில் அமைந்தது ; ஈரா யிரத்தெழுநூறு பாடல்களை யுடையது ; மூவேந்தரையும் தனித் தனியே தொள்ளாயிரம் தொள்ளாயிரம் பாடல்களில் சிறப்பித் துக் கூறுங் காரணம்பற்றி இது முத்தொள்ளாயிரம் என்னும் பெயர் பெறுவதாயிற்று. புறத்திரட்டு என்ற தொகை நூலி லிருந்து இக்காலத்தில் கிடைத்துள்ள முத்தொள்ளாயிரப் பாடல் கள் நூற்றொன்பதாகும். இச் செய்யுட்களின் இனிமையையும், அருமையையும் உணர்ந்த சேதுவேந்தர் அவைக்களப் புலவர் காலஞ்சென்ற ரா. இராகவையங்கார் இவற்றுள் நூற்றைந்து பாடல்களைத் தொகுத்து ' முத்தொள்ளாயிரச் செய்யுட்கள் ' என்ற பெயருடன் மதுரைத் தமிழ்ச் சங்கப் பதிப்பாக முதலில் வெளியிட்டனர். இதுகாறும் நூல் முழுமையும் யாண்டும் கிடைக்காமையால் இஃது இறந்துபோன தொன்னூல்களுள் ஒன்று என்பது தேற்றம்.

இனி, சங்கப்புலவர்களைச் சங்கத்துச் சான்றோர் எனவும் கடைச்சங்க காலத்திற்குப் பின்னர் நிலவிய புலவர் பெருமக்களைப் பிறசான்றோர் எனவும் பேராசிரியர் தம் தொல்காப்பிய உரையில் குறித்திருப்பதைக் காணலாம். இவ்வுண்மையை ' நெடுவெண் பாட்டே முந்தா லடித்தே- குறுவெண் பாட்டினளவெழு சீரே ' என்னுந் தொல்காப்பியச் செய்யுளியல் சூத்திரத்தின் உரையில் * பதினெண் கீழ்க்கணக்கினுள்ளும் முத்தொள்ளாயிரத்துள்ளும் ஆறடியினேறாமற் செய்யுள் செய்தார் பிறசான்றோரும்' என்று பேராசிரியர் கூறியுள்ளவற்றால் நன்கறிந்துகொள்ளலாம். எனவே, முத்தொள்ளாயிர ஆசிரியர் கடைச்சங்கப் புலவர் அல்லர் என்பதும் அச்சங்க-காலத்திற்குப் பிறகு விளங்கியவர் என் பதும் பேராசிரியரது தொல்காப்பிய உரைப்பகுதியால் தெள்ளி திற் புலப்படுதல் காண்க.

என்னும் முத்தொள்ளாயிரப் பாடலுக்கு மறுப்புரையாகத் திரு மாலடியாருள் ஒருவராகிய நம்மாழ்வர்ர் தம் திருவாய் மொழியில்


என்ற பாடலொன்றைக் கூறியுள்ளனர். எனவே, கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டினிடை-யிலிருந்த நம்மாழ்வார்க்கு முத்தொள் ளாயிர வாசிரியர் காலத்தால் முற்பட்டவர் ஆவர்.


என்ற முத்தொள்ளாயிரப் பாடலிலுள்ள ' பண்டன்று பட்டி னங் காப்பு' என்னுந் தொடரைப் பெரியாழ்வார் தம் திரு மொழியில்

என்பது முதலாகவுள்ள எட்டுச் செய்யுட்களின் இறுதியில் அமைத்துள்ளனர். எனவே, முத்தொள்ளாயிர வாசிரியர் பெரியாழ்வாரின் காலமாகிய கி. பி. எட்டாம் நூற்றாண்டிற்கும் முந்தியவர் என்பது தேற்றம்.

என்னும் முத்தொள்ளாயிரக் கைக்கிளைச் செய்யுளில் 'செய்யா ரெனினுந் தமர் செய்வர் ' என்ற பழமொழித் தொடர் காணப் படுகின்றது. அன்றியும், ' மன்னுயிர் காவல் ' என்று தொடங் கும் கைக்கிளைப்பாட்டில் பழமொழியிலுள்ள தொடர் ஒன்றை ' நீரொழுகப் பாலொழுகா வாறு ' என்று சிறிது மாற்றி அமைத் துள்ளனர். ஆகவே, இந்நூலாசிரியர் பழமொழியின் ஆசிரிய ராகிய முன்றுறை யரையர்க்குப் பின்னர் இருந்திருத்தல் வேண் டும் என்று தெரிகிறது. இதுகாறும் ஆராய்ந்தவற்றால் பழமொழி யாசிரியரின் காலமாகிய கி. பி. ஐந்தாம் நூற்றாண்டிற்குப் பின்ன ரும் பெரியாழ்வார் நிலவிய கி. பி. எட்டாம் நூற்றாண்டிற்கு முன்னரும் இவ்வாசிரியர் இருந்திருத்தல் வேண்டும் என்பது நன்கு வெளியாதல் காணலாம். பிற்காலத்தில் தமிழ் வேந்தர் களின் குதிரைகளுக்கு வழங்கிய கனவட்டம், பாடலம் ஆகிய பெயர்களை இவர் தம் நூலில் கூறியிருத்தலாலும், நாமம், பூமி, பரிசயம், ஓசை, திலகம், வீதி, சேலேகம், சாலேகம், சேனை, உதிரம், விசயன், உபாயம், ஆகம், நேமி, சமம் முதலான வட சொற்களை எடுத்தாண்டிருத்தலாலும் தமிழகத்தில் வடமொழி பரவிப் பெருமை யெய்தியிருந்த கி.பி. ஆறாம் நூற்றாண்டில் இவர் இருந்திருத்தல் வேண்டும் என்று கொள்வது எவ்வாற்றானும் பொருந்தும் எனலாம்.

இவர் சேர சோழ பாண்டியருள் எவ்வேந்தனையும் பேர் குறித்துத் தனியே புகழ்ந்து பாடாமல் அம்மூவேந்தரையும் அன்னோர்க்குரிய பொதுப்பெயர்களால் சிறப்பித்துப் பாடி யுள்ளமையொன்றே, இவர் பரிசில் முதலான பயன் கருதி இந் நூலை இயற்றவில்லை என்பதை நன்கு புலப்படுத்துவதாகும். எனவே, முடியுடைத் தமிழ் வேந்தர் மூவருடைய அறிவு திருவாற் றல்களையும் வீரம் கொடை முதலானவற்றையும் எல்லோர்க்கும் உணர்த்தும் பொருட்டு ஆசிரியர் இந்நூலை இயற்றியிருத்தல் வேண்டும் என்பது ஒருதலை.

இந்நூலாசிரியருடைய பெயரும் வரலாறும் தெரியவில்லை. பெரியாழ்வாரும் நம்மாழ்வாரும் இவர் நூலைப் பயின்றிருத்தலை நோக்குங்கால், இவர் பாண்டி நாட்டிலிருந்த புலவராயிருத்தல் வேண்டும் என்பது தெள்ளிது.

'மன்னிய நாண்மீன்'[1] என்று தொடங்கும் கடவுள் வாழ்த்துப் பாடலாலும், புகழ் என்ற
பகுதியிற் காணப்படும் ' மடங்கா மயிலூர்தி ' எனவும், 'செங்கண் நெடியான் மேல்' எனவும் தொடங்கும் வெண்பாக்களாலும் இந்நூலாசிரியர் சைவ சமயத்தினராயிருத்தல் வேண்டும் என்பது நன்கு துணியப்படும்.

'விருந்தே தானும் - புதுவது கிளந்த யாப்பின் மேற்றே'[2] என்னுந் தொல்காப்பியச் செய்யுளியற் சூத்திரத்தின் உரையில் ‘ புதுவ துகிளந்த யாப்பின் மேற்றென்ற தென்னை யெனின், புதிதாகத் தாம் வேண்டியவாற்றாற் பல செய்யுளுந்தொடர்ந்து வரச்செய்வது ; அது முத்தொள்ளாயிரமும் பொய்கையார் முதலாயினார் செய்த அந்தாதிச் செய்யுளும் எனவுணர்க ' என்று பேராசிரியர் கூறியிருத்தலால், முத்தொள்ளாயிரம் எனப்படுவது ஆசிரியர் தாம் வேண்டியவாற்றால் புதிதாக இயற்றிய தொடர்நிலைச் செய்யுள் என்பது தெளிவாகப் பெறப்படுகின்றது. ஆகவே, இந்நூல், ஆசிரியர் தொல்காப்பிய னார் கூறியுள்ள ' விருந்து' என்னும் வனப்பிற்கு இலக்கியமா யுள்ளது என்பது அறியத் தக்கது. இதிலுள்ள வெண்பாக்கள் பெரும்பான்மை நான்கடியாலும் சிறுபான்மை ஐந்தாறு அடி களாலும் அமைந்தவை என்பதும் அவற்றுள் கைக்கிளைச் செய் யுட்களே மிகுதியாக இருந்தன என்பதும் தொல்காப்பியச் செய்யு ளியலிலுள்ள 158, 159-ஆம் சூத்திரங்களின் உரையிற் காணப் படும் பேராசிரியரின் குறிப்புக்களால் வெளியாகின்றன. இந் நூலில் இக்காலத்தில் கிடைத்துள்ள நூற்றொன்பது பாடல்களையும்[3] ஆராயுங்கால், இது முடியுடைத் தமிழ் வேந்தர் மூவ ருடைய நாடு, நகரம், யானை, குதிரை, வென்றி, கொடை முத லானவற்றைப் புகழ்ந்தும், அவர்கள் பெற்ற திறைப்பொருளைச் சிறப்பித்தும், அன்னோரின் பகைப் புலங்களைப் பழித்துமுள்ள பாடல்களையும், சுட்டியொருவர் பெயர் கொண்ட பற்பல கைக் கிளைச் செய்யுட்களையும் தன்னகத்துக்கொண்டது என்பது நன்கு தெளியப்படும்.

இனி இந்நூலிற் காணப்படும் பழைய வழக்கங்களும் செய்தி களும் ஈண்டுக் குறிப்பிடத் தக்கனவாம். அவை, யானை புறப் பட்டுச் செல்லுங்கால் அதற்கு முன்னே பறையறைந்து சென்றமை (9, 62). தமிழ்நாட்டுப் பெண்கள் கூடலிழைக்கும் வழக்கமுடையராயிருந்தமை (73), பிணியுற்றார்க்குப் பிறந்த நாளில் பிணிமிகும் என்னுங் கொள்கையாண்டும் பரவியிருக் தமை (95), அரசர்கள் குடிகளிடம் ஆறிலொரு கடமை பெற்று ஆட்சிபுரிந்து வந்தமை (57), பாண்டியனது குதிரை கனவட்டம் என்னும் பெயர் எய்தியிருந்தமை (50), தமிழ் வேந்தர்கள் தம் பிறந்தநாள் விழாக்களில் அந்தணர்கட்குப் பசுவும் பொன்னும், புலவர் பெருமக்கட்குக் களிறும் வழங்கியமை (40), பாண்டி நாட்டுக் கொற்கைத் துறையில் சிறந்த முத்துக்கள் கிடைத்து வந்தமை (101), முற்காலத்தில் தமிழ்நாட்டுப் பெண்கள் சங்கு களால் அமைக்கப்பட்ட வளைகளை அணிந்து வந்தமை (41), தமிழகத்தில் இல்லங்கள் தோறும் குடுமிக் கதவுகள் இருந்தமை (43), சோழனுடைய குதிரை பாடலம் என்னும் பெயர் பெற்றிருந்தமை (48) என்பனவாம்.

சோழனுடைய குதிரை கோரம் என்னும் பெயருடையது என்பது,

எனவும்,

எனவும் போதரும் பழைய பாடல்களால் நன்கறியக் கிடக் கின்றது. அன்றியும், சோழர்களின் அவைக்களப் புலவரா யிருந்த ஒட்டக்கூத்தர், விக்கிரம சோழனுலா, குலோத்துங்க சோழனுலா, இராசராச சோழனுலா ஆகிய மூன்றிலும் சோழர் களின் குதிரையின் பெயர் கோரம் என்றே குறித்துள்ளனர். இந் நிலையில் சோழனுடைய குதிரையைப் பாடலம் என்று முத் தொள்ளாயிரமுடையார் கூறியிருப்பது ஆராய்தற்குரியதாகும். இவர் கூற்றிற்கு முரணாகப் பிங்கலந்தை என்ற நிகண்டின் ஆசிரி யர் பாடலம் என்பது சேரனுடைய குதிரையின் பெயர் என்று கூறியுள்ளனர். சங்கத்துச் சான்றோர் பாடல்களில் கன வட்டம் பாடலம் என்னும் பெயர்களே காணப்படவில்லை. ஆனால், மருதக்கலியிலுள்ள 31-ஆம் பாடலில் ' கோரமே வாழி குதிரை' என்று மதுரை மருதனிள நர்கனார் கூறியிருப்பது சிந்திக்கத்தக்க தொன்றாம். தமிழ் வேந்தர்கட்குத் தசாங்கம் கூறும் வழக்கம் ஏற்பட்ட காலத்தில் தான் அன்னோர் குதிரைகளுக்கும் தனித் தனிப் பெயர் இடப்பட்டிருத்தல் வேண்டும் என்பது திண்ணம். ஆகவே, கடைச்சங்க காலத்திற்குப் பிறகு முத்தொள்ளாயிர ஆசிரியர் காலத்தேதான் தமிழ் வேந்தர்களின் குதிரைகட்குத் தனிப்பெயர்கள் வழங்கத் தொடங்கியிருத்தல் வேண்டும். அவர்க் குப் பிற்பட்ட காலத்துப் புலவர்களால் அப்பெயர்கள் எக் காரணம்பற்றியோ மாற்றிக் கூறப்பட்டுள்ளன. ஆயினும் அவ் வக் காலங்களில் வழங்கியவாறே அப்பெயர்களைப் புலவர் பெரு மக்கள் தம் நூல்களில் கூறியுள்ளனராதல் வேண்டும்.

முத்தொள்ளாயிரத்தின் அருமை பெருமைகளையும் ஒப்புயர் வற்ற தனிச் சிறப்பினையும்,

என்னும் பாடல்களால் தெள்ளிதின் உணர்ந்துகொள்ளலாம்.

---------
[1]. 'மன்னிய நாண்மீன் மதிகனலி யென்றிவற்றை
முன்னம் படைத்த முதல்வனைப் பின்னரும்
ஆதிரையான் ஆதிரையான் என்றென் றயருமால்
ஊர்திரைநீர் வேலி யுலகு ' (முத்தொள். கடவுள் வாழ்த்து)
[2]. ' தொல். பொருள். செய்யுளியல், சூ. 239
[3]. ஒரு சிலர் பழைய உரைகளில் தாம் கண்ட சில பாடல்களை முத்தொள்
ளாயிரப் பாடல்கள் என்று வெளியிட்டுள்ளனர்.. அப்பாடல்கள் முத் தொள்ளாயிரத்தைச் சேர்ந்தவை என்பதற்கு அன்னோர் கூற்றே சான்றா வதன்றி வேறு சான்றுகளின்மையின் அவற்றை இந்நூற் பாடல்கள் என்று எங்ஙனம் ஏற்றுக்கொள்ள இயலும் ? அன்றியும், அவை முத் தொள்ளாயிரச் செய்யுட்களாயிருப்பின் அச்செய்தியைப் பண்டை உரையாசிரியர்கள் ஆங்காங்குத் தவறாமல் குறித்திருப்பர் என்பது ஒருதலை.
--------- -----

18. கிளிவிருத்தம், எலிவிருத்தம், நரிவிருத்தம் &
பொருட் குறிப்பகராதி scan illegible – not included

------------


This file was last updated on 09 June 2021.
Feel free to send the corrections to the webmaster.