திருப்பரங்கிரி முருகக் கடவுள் யமகப் பதிகம் &
பழைஞநல்லூர் பெரியநாயகியம்மன் பதிகம்.
tiruparangkiri murukak kaTavul yamakap patikam &
periyanAyakiyamman patikam
In Tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
We thank Dr. Mrs Meenakshi Balaganesh, Bangalore, India for her assistance in the preparation
of the soft copy of this work for publication.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2023.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
திருப்பரங்கிரி முருகக் கடவுள் யமகப் பதிகம் &
பழைஞநல்லூர் பெரியநாயகியம்மன் பதிகம்.
Source:
1. திருப்பரங்கிரி முருகக் கடவுள் யமகப் பதிகம்.
இஃது அருப்புக்கோட்டைச் சேகரம் பொன்னுச்சாமிபுரந் தெருவிலிருக்கும்
மகா ஸ்ரீ க. மா. முத்துச்சாமி மூப்பனாரவர்கள் இயற்றியது.
மேற்படியூர் மாகாளியம்மன்கோவில் தெருவிலிருக்கும் சோதிட மஹா வித்வான்
மகா- ஸ்ரீ மா. ச.முத்துக்குமார முதலியாரவர்களால் பார்வையிடப்பெற்று,
அருப்புக்கோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் அச்சுயந்திரசாலையிற் பதிப்பிக்கப்பெற்றது.
1925.
2. தென்னாற்காடுஜில்லா சிதம்பரம் தாலுக்காவை சேர்ந்த பழைஞநல்லூரெனும் நகரில்
திருக்கோயில் கொண்டிருக்கின்ற "பெரியநாயகியம்மன் பதிகம்"
இஃது மேற்படியூர் க்ஷத்திரிய குலதிலகர் அ. துரையப்பதேவரவர்கள் வேண்டுகோட்கிணங்கி
இராமநாதபுரம் சமஸ்தான வித்வான் P. சிவசாமிசேருவைகாரரால் இயற்றி
சிதம்பரம். ஸ்ரீகுஞ்சிதசரண அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது,
1930 வரு ஆகஸ்டுமீ 1 ௨
உ
சிவமயம்.
1. திருப்பரங்கிரி முருகக் கடவுள் யமகப் பதிகம்
சாற்றுக்கவி
இஃது அருப்புக்கோட்டை சின்னப்புளியம்பட்டி
சைவப்பிரசங்கவித்வான் மகா-ஸ்ரீ சண்முகசுந்தரம் பிள்ளையவர்கள் முதல் மாணாக்கரும்,
இந்நூற் பரிசோதகருமாகிய சோதிட மஹாவித்வான் மகா- ஸ்ரீ மா. ச. முத்துக்குமார
முதலியாரவர்களால் இயற்றப்பெற்றது.
(எக பாத அறுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்)
பிரபந்த மோதினனா ரகந்தனத்தப் பிரசங்கப் பிரியற்கம்மா
பிரபந்த மோதினனா ரகந்தனந்தப் பிரசங்கப் பிரியற்கம்மா
பிரபந்த மோதினனா ரகந்தனந்தப் பிரசங்கப் பிரியற்கம்மா
பிரபந்த மோதினனா ரகந்தனந்தப் பிரசங்கப் பிரியற்கம்மா.
--------------
உ
வேலுமயிலுத் துணை.
திருப்பரங்கிரி முருகக் கடவுள் யமகப் பதிகம்.
காப்பு.
யானைமுக நாதனுக்கன் றுபதேசம் புரிந்தவனை
யெளியேன் சிந்தை
யானைமுகந் தனிற்கோடி பரங்களுடை
யான்றனைப்பன் னிரண்டு செங்கை
யானைமுக மாறானைப் பரங்கிரிவாழ்குகன்றனைப்பா
டிடவே நல்கும்
யானைமுகம் படைத்திலகு பெருங்கருணைத்
தடங்கடலின் னருளைத்தானே.
நூல்.
மாதவனு மெழின்மிகுந்தா மரையோனா மறையோனும்
வணங்கி யேத்து
மாதவனுந் தண்பொதிகை மலையிருந்து பூமிசம
மாகச் செய்த
மாதவனும் புகழ்ந்துபுகழ்ந் தோதவுபதேச மதை
வைத்திட் டானம்
மாதவனுந் தனதுதிரு மைத்துனனாம் பரங்கிரித்தே
வன்றா னம்மா. (1)
காயமது நிலைமையிலா தெனத் தெரிந்து
மதையோம்பிக் கழித்தே னாள்வா
காயமது ரையம்பதியின் மேல்பாங்குன் றாகருணைக்
கடலே யென்கேன்
காயமதுன் படைந்திடுங்கா லதைவிலக்க
வருமோ நின்கழற்கால் பாரா
காயமது நிறைந்தமலர் கொண்டுதொழ
வருள் செயுஞ்செங் கதிர்வேலோனே. (2)
பரங்குன்றா வேன்முருகா பன்னிருகை
யாகயிலைப் பதியைச்சேர்ந்தன்
பரங்குன்றா தையினிடம்வாழ் வதுபோனா
னினதிடம்வாழ் பவனாதற்குன்
பரங்குன்றா வருள்வேண்டும் புரிந்திலையே
லெவருமெனைப் பாவன்றானென்
பரங்குன்ற குடிபழனி திருத்தணிகை திருச்செந்தூர்ப்
பதியாள்வோனே. (3)
கந்தனையே நினைத்தவன கந்தனையே
வலஞ்செயவெக் காலுமேசு
கந்தனையே கொடுத்துவஞ்ச கந்தனையே
கெடுத்தெழில்சேர் கன்னிமார்மோ
கந்தனையே யொழித்துநல்ல கந்தனையே
யளித்தருள்வான் கதிர்சேர்மாதங்
கந்தனையே நிகர்த்திடுமங் கந்தனையே
படைத்தமிகு கந்தன்றானே. (4)
சனத்தானை மிகுந்தவெழி லமைந்தரதி
தேவிதனைத் தழுவுமங்க
சனத்தானை வழுதியின்றன் குலத்துதித்து
மதுரையர சாண்டசிங்கா
சனத்தானை யடியர்களை யென்றென்றும்
புரப்பனெனச் சாற்றுமெய்வ
சனத்தானை யளவிறந்த தனத்தானைப்
பரங்கிரியிற் றரிசித்தேனே. (5)
சம்பந்தா திகள் புகழ்ச் சீகாழிப்பதியிலவ
தரித்த ஞான
சம்பந்தா தினைவனத்தைத் தாதியர்கள்
சூழ்ந்திடக்காத் தவள்சரீர
சம்பந்தா திருப்பரங்குன் றத்ததிபா வித்ததிபார்
தமியனேன் பா
சம்பந்தா திகளாற்றட் டழியாதுன்றிருக்கருணை
தந்தாள் வாயே. (6)
சங்கரியா னவர்மருகா சகலவகிலாண்டமெலாந்
தானே யீன்ற
சங்கரியா னவர் புதல்வா தமியேன்றன்
குறைகளையிட் சணத்திலேயே
சங்கரியா னதனாலே சஞ்சலங்க
ளடைந்ததுவேற் சாமியேநி
சங்கரியா னனன்றுணைவா திருப்பரங்குன்
றினில்வாழுந் தம்பிரானே. (7)
தேவாரம் பகர்ந்தெலும்பைத் தேவியின்றன்.
வடிவமெனச் சிறக்கச் செய்த
தேவாரம் பயருலகந் திகில்கொளச் செய்
யசுரர்களைச் சினந்துகோபித்
தேவாரம் பலசெல்லா தாறே நாட்குள்ளாகச்
சிதைத்து வென்று
தேவாரம் பணைமுலையா னையை மணந்த
பரங்கிரித்தே சிகமேலோனே. (8)
ஆண்மையிலே சிறந்தோனே யரக்கர்களைக்
கந்தல்கந்த லாக்கினோனே
ஆண்மையிலே றுங்குகனே திருப்பரங்குன்
றாதிபனே யடி யேன்றன்னை
ஆண்மையிலே மிகுந்தோனென றகற்றாது
தயைபுரிந்தா தரிப்பா யையா
ஆண்மையிலே நறுங்களபங் கஸ்தூரி.
முதலியன வணிசீ மானே. (9)
வனத்தானை யுரித்தார்க்கு மைந்தமைந்த
மைந்தனென வந்துதோன்றும்
வனத்தானை வள்ளியம்மை மலரடியிற்
கோடிசலா மகிழச் செய்யவ்
வனத்தானை யெழிற்பரங்குன் றானையடி
யேன் குடும்ப வாழ்விலேக
வனத்தானை யெனதுமுழு மனத்தானைச்
சென்மமெல்லா மறவேனானே. (10)
திருப்பரங்கிரி முருகக் கடவுள் யமகப் பதிகம்.முற்றிற்று.
----------------------------
2. சிவசாமிசேருவைகாரரால் இயற்றிய
"பெரியநாயகியம்மன் பதிகம்"
உ
வேலுமயிலுந்துணை.
முன்னுரை.
***********
தேடரும்புகழா னோங்கிய தவத்தான்
திகழ்தரு முயரிய நலமே
நாடருங் குணவான் நவையறு நடையான்
நளினவா தனியுறை யுரவோன்
நீடரும் பெலவான் நிகழ்தரு கொடையான்
நிலமகள் தவமென வொளிருஞ்
சேடரும் புகழ்தற் கரிதென வளமார்
சேதுநன் நாட்டிறை சமுகம்
மன்னிய புலவோர் குருமுனி வனினும்
மாண்புறு திறத்தின ரவருள்
நன்னயப் புலமை நிரம்பில னெனவே
நானறிந் தவையைவிட் டகன்று
பொன்னிநன் நாட்டின் தலம்பல காண்பான்
போந்திடும் நாளகத் தொருநாள்
உன்னியவளமார் கொள்ளிடக் கரையின்
ஒளிர்திரு நாரையூ ருறவே. 1
பொன்னரும் புனித நாவலந் தீவாம்
பூவையி னெழில் பெறுவதன
மன்னரும் புகழார் சென்னிநன் னாடாம்
மதிபுரை யொளியுறு நுதலில்
பன்னருந்திலத மெனப்பொலி வுறுமால்
பழைஞநல் லூரெனும் பதியங்
குன்னருஞ் சிறப்பார் வன்னியி லுதித்த
அயரிரண் டாம்வரு ணமதில், 2
வார்தரு கொடையான் துரையப்ப னெனும்பேர்
வாய்ந்திடுந் தேவ ரினினிய
சீர்தரு புகழின் திறத்தினைப் பலருஞ்
செப்பிடக் கேட்டுள மகிழ்ந்து
தார்தரு நிறத்தா னவன்றனை யடைந்தோம்
தாங்கனி வுடனெமை நோக்கி
பேர்தரு மவர்கள் குலதெய்வ மாகும்
பெரியநா யகியின்மேற் பாட. 3
வேண்டுமென் றெமையே கேட்டன னாக
விருப்புட னதனைநன் கியற்றி
யீண்டிய கலியை யாயிர முப்பா
னேகமாம் பிரமோ தூத
வாண்டினி விடப மதியினி லாறைந்
தாமொன்று சேர்தரு புகர்நாள்
தீண்டிய துதியை சிறந்தபூ ராடஞ்
சேர்தர வரங்கேற் றினனே. 4
மன்னும் பழைஞநல்லூர் மாசனங்கள் வாழியவே
தென்னார் துரையப்ப தேவருமே-நன்னயஞ்சேர்
மக்கள்மனை சுற்றமொடு மானிலத்தில் நீடூழி
தக்கபடி வாழி தழைத்து. 5
~~~~~~~~~~~~~~~
உ
சிவமயம்.
வேலுமயிலுந்துணை.
பழைஞநல்லூர், பெரியநாயகியம்மன் பதிகம்.
காப்பு.
நேரிசை வெண்பா.
நல்வளஞ்சே ரும்பழைஞ நல்லூரின் பால்விளங்குந்
தொல்பெரிய நாயகியின் றோௗணியப்-பல்வளமார்
செந்தமிழ்ப்பா மாலைசொலச் சீர்தருமொற் றைக்கொம்பார்
தந்திமுகன் செய்ய திருத்தாள்.
__________________________
நூல்.
எழுசீர்க்கழிநெடிலாசிரிய விருத்தம்.
சீர்மருவு பழைஞநல் லூரிலடி யேன்முனோர்
செய்தவத் துற்ற பயனே
கார்மருவு கொண்டலங் காடுபடர் மின்னலே
கருணா கடாக்ஷி யுமையே
பேர்மருவு தருகளான் நிதிமணிக ளொப்பவே
பிறங்குமொரு தேவி வருவாய்
ஏர்மருவு பெரியனாயகி யென்னு மம்மையே
யெங்கள் குல தெய்வ மணியே. (1)
தொழுமரிய நின்பதச் சேவைமற வாதுநான்
தொண்டுசெய் தென்று மகிழ்வேன்
முழுதுமொரு வின்பவடி வானபர மேஸ்வரி
முத்திதரு கின்ற பரையே.
பழுதினியோ ரெள்ளளவு மெங்களுக் கெய்தாது
பழைஞநல் லூரி லமரும்
எழுதரிய வடிவமே பெரியநா யகியெனும்
எங்கள் குல தெய்வ மணியே. (2)
நாதமய மாகியகி லத்துநிறை கிறதொரு
நாரணி வாமி யுமையே
வேதமுரை பூரணி பழைஞநல் லூரிலே
விளங்குமபி ராமி விமலி
சீதகள பத்தனச் சின்மயா நந்தியே
திகழுமுன் றன்கி ருபையால்
ஏதமற வினிதருள் பெரியநா யகியெனும்
எங்கள்குல தெய்வ மணியே (3)
நன்றுவள மேவுதிரு பழைஞநல் லூரிலே
நவில்காலி கன்று பலவும்
துன்றுமுன தடிமையா மெங்கள்மனை மக்களுங்
துலங்குநில மும்ப யிர்களும்
ஒன்றுபல வாகநெடு நாள்தழைத் தோங்கவே
வுவந்தருள வேண்டு மனையே
என்றுமுள சத்தியே பெரியநா யகியெனும்
எங்கள்குல தெய்வ மணியே. (4)
பங்கயா தனமுறையும் வேதமுரை நாவலும்
பாம்பணையின் மேவு மரியும்
சங்கைபிறை சூடிநின் பக்கமுறை நக்கனுங்
கருதரிய வேத முதலே
துங்கமிகு பழைஞநல் லூரில்வளர் செல்வியே
துகளறுத் தின்பு தருவாய்
எங்குநிறை ஜோதியே பெரியநா யகியெனும்
எங்கள்குல தெய்வ மணியே. (5)
பன்னரிய வாழையொடு மாபலா வென்னுமுப்
பழமுகுத் திட்ட ரசமும்
கன்னல்கறி மேதிகடை வாயொழுகு சாறுமே
கலந்த நறும்ஓடை பாயச்
சொன்னலம லிந்துவிளை பழைஞநல் லூரிலருள்
சூல்கொண்ட நீலி வருவாய்
இன்னமுத மென்னவொளிர் பெரியநா யகியெனும்
எங்கள்குல தெய்வ மணியே. (6)
நாடரிய புகழ்பரவு பழைஞநல் லூரிலோர்
நலம்பெருக வந்த தருவே
தேடரிய செல்வமே தீஞ்சுவைக் கட்டியே
திகழ்கின்ற தூய மறையுங்
கூடரிய அருவமே வுருவமே அருவுருவு
குலவுமொரு வஞ்ச வெளியே
ஈடரிய தாகிவரு பெரியநா யகியெனும்
எங்கள்குல தெய்வ மணியே. (7)
அன்புவலை யிற்புகுந் தொளிர்கின்ற கிள்ளையே
யானந்த மான மயிலே
யென்புமற வுருகுமொரு தொண்டருள மலரிலே
யினிதுவிளை யாடு மனமே
மன்புனித ரூபியே பழைஞநல் லூரிலோர்
மாண்புபெற நீடு சிவையே
இன்புறு குணாகரப் பெரியநா யகியெனும்
எங்கள்குல தெய்வ மணியே. (8)
பஞ்சான னன்றனது மெய்யிலொரு பாதியைப்
பற்றிநிறை கின்ற கொடியே
அஞ்சாத சண்டனடி யாரிடத் தெங்கணு
மணுகாது பேணு முதல்வீ
செஞ்சவே வளமருவு பழைஞநல் லூரிலே
தேங்குமொரு ஞான வடிவே
எஞ்சவே யருள்செயும் பெரியநா யகியெனும்
எங்கள்குல தெய்வ மணியே (9)
கண்டுகனி யமுதுசற் கரைபாகு தேனிவை
கலந்தசுவை நோக்கில் நுகர
கொண்டுதரு மன்பர் முன்வந்துதவு நிமலையே
தோகைபெறு பச்சை மயிலே
மண்டுவள மார்கழனி பழைஞநல் லூரிலே
மருவுநிச் சேப நிதியே
இண்டுமுடி யான்மருவு பெரியநா யகியெனும்
எங்கள் குல தெய்வ மணியே. (10)
வாழ்த்து.
வானமும் மாரிபெய்க வார்பழைஞ நல்லூரார்
தானதரு மஞ்செழித்துத் தானோங்க-கோனுயரப்
பன்னுமறை யோங்கப் பதிகநன் றேவிளங்க
அன்னுபுவி வாழி யுவந்து.
முற்றும்.
---------------------------------
This file was last updated on 13 May 2023.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)