"புள்ளிருக்கு வேளூர் வைத்தீஸ்வரர் பதிகம், ஸ்ரீ தையநாயகியம்மன் பதிகம் & ஸ்ரீ முத்துக்குமரசாமி பதிகம் (in Tamil script, unicode format)"
pm logo

புள்ளிருக்கு வேளூர் வைத்தீஸ்வரர் பதிகம்.
ஸ்ரீ தையநாயகியம்மன் பதிகம் &
ஸ்ரீ முத்துக்குமரசாமி பதிகம்


vaitIsvarar patikam, taiyanAyakiyamman patikam &
muttukkumAracAmi patikam
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
We thank Dr. Mrs Meenakshi Balaganesh, Bangalore, India for her assistance in the preparation
of the soft copy of this work for publication.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2023.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

புள்ளிருக்கு வேளூர் வைத்தீஸ்வரர் பதிகம்.
ஸ்ரீ தையநாயகியம்மன் பதிகம் & ஸ்ரீ முத்துக்குமரசாமி பதிகம்

Source:
வைத்தீஸ்வரன்கோயில் என்று வழங்கும்
புள்ளிருக்கு வேளூர் வைத்தீஸ்வரர் பதிகம்.
ஸ்ரீ தையநாயகியம்மன் பதிகம் & ஸ்ரீ முத்துக்குமரசாமி பதிகம்
இம்மூன்றும் அடங்கியிருக்கின்றன.
இவை மகா-ஸ்ரீ முருகேசதாசர் என்னும் வ. சாமினாத கவிராயரவர்கள் இயற்றியதை
சிதம்பரம் புஸ்தக வியாபாரம், சா. கோவிந்தசாமிபிள்ளை அவர்களால்
பிரசுரிக்கப்பட்டது.
ஸ்ரீ வேலன்பிரஸ், சிதம்பரம்
----------------------------

1. புள்ளிருக்குவேளூர் வைத்தீஸ்வரர் பதிகம்.


திருச்சிற்றம்பலம்.
புள்ளிருக்குவேளூர் வைத்தீஸ்வரர் பதிகம்.

காப்பு.
      வெண்பா
புள்ளிருக்கும் வேளூர்ப் புகழ்வைத்தி யேசுரன்மேற்
தெள்ளியசீர் நற்பதிகம் செப்பமுதள் - வள்ளலெனும்
அத்திமுகத் தோர்கொம் பனைந்துகர னால்வாயான்
கத்தன்மலர்ச் செஞ்சரணங் காப்பு.

ஆசிரிய விருத்தம்.
அரியயனுன தினடிமுடிதேடி யறிந்திடா தமர்ந்தசங்கரனே
      ஆலமுண்டவனே மாவமழுவேந் துமாதியே பூதவாகனனே
திரிபுரமெரித்த சூலபாணியனே சேவகர்கள் பணிநாயகனே
      திங்கள்சூடியனே கங்கைவேணியனே திரியம்பகச் சோதியானவனே
கரியுரித்தவனே கபாலருத்திரனே காமனையெரித்த வித்தகனே
      காலனையுதைத்த கைலைவாழ்பரனே கத்தனேயத் தனேசிவனே
வரமருள்வேளூர்த் தையநாயகியை மருவிய வைத்தியநாதா
      வல்வினையோட்டி நன்மருந்தூட்டி வசீகரக்கிருபை புரிவாயே. (1)

தினமுனைப்பணிந்து துதிக்கவுமறியேன் றீயர்கணேயமதாகிச் செகதலமெகுந்
      திரிந்தலைந் துழன்று தீவினை மேலிடச்சலித்து
மனதுகலங்கி மதிமிகமயங்கி வறுமையால்வாடி மெய்தளர்ந்தேன்
      மறுவினைய தட்டிவாந்தனைப்புகட்டி மட்டிலாக்கருணையே புரிவாய்
அனந்தஞானியனே சிறந்தபூதியனே யம்பலத்தாடிய வரனேஅரகர
      சிவனே வரம்புரிபவனே யப்பனே யொப்பிலாதவனே
மனமகிழ்வேளூர்த் தையநாயகியை மருவிய வைத்தியநாதா
      வல்வினையோட்டி நன்மருந்தூட்டி வசீகரக்கிருபை புரிவாயே. (2)

பதறியேயுலகை யெனக்களிப்பதுவும் பார்த்தன்மேல்வில் லெடுப்பதுவும்
      பாலனைக்கொன்று கறியிடச்சொல்லவும் பாரினிலிவ் வதிகாரம்
சதிருடனுக்கா ரளித்தவாரனே சஞ்சலக்கலக்கமே யகற்றத்தான்
      செயலிலையே கோபமோவறியேன் தயவுடன்மனக் கசப்பதனைச்
சிதறவேயடித்து மதுரமேகொடுத்துன் சீரருள் பக்தர்கள்தாதா
      தேவர்கணாகா காளியின்வாதா செகமகிழ் நடனவிநோதா
மதிதவழ்வேளூர்த் தையநாயகியை மருவிய வைத்தியநாதா
      வல்வினையோட்டி நன்மருந்தூட்டி வசீகரக்கிருபை புரிவாயே (3)

தரணியினரனாய்ச் செனனமதெடுத்துச் சற்குணந்தன்னையும் விடுத்து
     சங்கடத்தொழில்க டன்னையேவிரும்பி சபலனாய்த்திரிந்த லைந்துழன்றேன்,
பரமனேயடியேன் பவமதுதீர்த்துப் பல்பிணிகளை யுமேயகற்றிப்,
      பதசரோருகக்கைப் பணிந்திடத்தயவு பார்ப்பதெப்போ தருள்புரிவாய்,
அரவுடனறுகு தும்பையுந்தரித்த வப்பனேவொப் பிலாமணியே,
      அரகரசிவனே கரியுரித்தணிந்த வனாதியாய் நின்றதற்பரனே,
வரமிகுவேளூர் தையநாயகியை மருவிய வைத்தியநாதா
      வல்வினையோட்டி நன்மருந்தூட்டி வசீகரக்கிருபை புரிவாயே. (4)

பரிவுடனோட்டை யேந்தியேபிச்சைப் பாரினிற்றிரிந் திரந்துண்டும்
      பண்டுகோளாகனு மளித்திடவெச்சில் பருகியுரவயற்றி னிற்குறைவாய்ப்,
பிரியமாய்ப்பிட்டைத் தின்னமண்சுமந்து பிரம்படிப பட்டுநீர்பிழைத்த
      பெருமையைப்போலே யெண்ணியேயிருந்தால் பேதைநான் பிழைப்பதெப்படியோ,
அருமையையறிந்து மௌனமாயிருப்ப தழகலவுமக் கிதுவையா,
      அல்லலையகற்றிச் செல்வமேயளித்திங் கன்புடனென் னையாளையா,
மருநிறைவேளூர்த் தையநாயகியை மருவிய வைத்தியநாதா
      வல்வினையோட்டி நன்மருந்தூட்டி வசீகரக்கிருபை புரிவாயே. (5)

உந்தனுக்கடிமை யாகிநானிருக்க வுவந்துநீ வரந்தராதிருக்க
      ஊழ்வினைநோயும் வறுமையும்பெருக்க வுலகினிலெவர் களும்பழிக்கத்,
தந்தைதாய்சலிக்கக் கண்டபேர்நகைக்கத் தமியனுந்தயங்கி யேதவிக்கத்,
      தமக்கடமோவென் சஞ்சலத்துயரைத் தவிர்க்கவு முனக்கிதுவரிதோ,
எந்தனைக்காக்க நினதுளமுவந்தே னிருவினை நீக்கிடவருவா
      யீசனேவுமையா னேசனேகைலைக் கிறைவவுல்லா சனேநமனும்,
வந்திடாவேளூர்த் தையநாயகியை மருவிய வைத்தியநாதா
      வல்வினையோட்டி நன்மருந்தூட்டி வசீகரக்கிருபை புரிவாயே. (6)

அல்லுமேபகலுந் தையலைத்துதித்தே யவடுணையென்றுமே யிருந்தேன்,
     அவளுமென் றுயரையறிக்கையிட் டுன்பாலடைவுடன் சொலவரிதாச்சோ,
வல்வினையனைப்போன் மகனையீனாத மலடியோமனது கல்லாச்சோ,
      வர்மமென்மேலே வைத்துநின்றனளோ மனமகிழ்ந்துனக் கவள்சொன்ன,
சொல்லைநீமறந்து தோன்றிடாதென் மேற்சூதிநான் மதிப்பிசகாச்சோ,
      சூதையும்விடுத்து மாதுமைமகிழத் துயர்பறித் தருள்புரியையா,
வல்லியாள்வேளூர்த் தையநாயகியை மருவிய வைத்தியநாதா
      வல்வினையோட்டி நன்மருந்தூட்டி வசீகரக்கிருபை புரிவாயே. (7)

ஆதரவெனக்கா ரென்றனுக்குன்னை யல்லதோர் தெய்வமுமுண்டோ,
      ஆகையாலுனையேநம்பினே னென்கிறனருந்துயர் தன்னையே தவிர்ப்பாய்,
மாதன்முராரி யச்சுதானந்தன் மாயவன் சீதரனெடியோன்,
      மச்சனற்கூர்மன் வராகவதாரன் மலருறை திருமகள்கொழுனன்,
சோதரிபூதவராகிநீ வராகிசுந்தரி பார்வதிபங்கா சுந்தரன்றூதா
      கங்கையரணாதா தூக்கியே நடித்திடும் பாதா,
மாதெனும்வேளூர்த் தையநாயகியை மருவிய வைத்தியநாதா
      வல்வினையோட்டி நன்மருந்தூட்டி வசீகரக்கிருபை புரிவாயே. (8)

பஞ்சமாபாவஞ் செய்துநானிந்தப் பாரினிற்செனன மதெடுத்துப்,
      பலவகைப்பிணியை மிகவனுபவித்துப் பஞ்சையாய்மனது நொந்தலைந்தேன்,
வஞ்சகப்பிணிக ளினிப்பெறேனையா வருத்தமதனைத் தையுந்தவிர்த்துன்,
      மலரடிதினமும் பணிந்துநானிருக்க வரமது மகிழ்ந்துநீவருளாய்,
நஞ்சணிகண்டா நடனப்ரசண்டா நரிபரிசெய்த வுத்தண்டா,
      நாகவாபரணா பதினெண்புராணா நந்திவாகன வொளிசரணா,
வஞ்சியாவேளூர்த் தையநாயகியை மருவிய வைத்தியநாதா
      வல்வினையோட்டி நன்மருந்தூட்டி வசீகரக் கிருபைபுரிவாயே. (9)

பாரினின்மேவு மாலயமெல்லாம் பணிந்துநான் பாடியேசலித்தேன்,
      பரிவுடனென்றன் மிடியினைத்தீர்த்துப் பலன்றருந்தெய்வ முமிலையே,
சீரதுவெனக்கு நீகதியல்லால் செகத்தினி லார்தரவல்லார்,
      சிறுமையும்பிணியுஞ் சிதறவேயடித்துச் செழித்திடக் கிருபைபாரையா,
தாரணிமகிழ முப்புராதியரைத் தணலெழநகைத் தெரித்தவனே,
      சரவணபவனை யருளியவிமலா சர்வஜீ வாத்துமஞான
வாரியாம்வேளூர்த் தையநாயகியை மருவிய வைத்தியநாதா
      வல்வினையோட்டி நன்மருந்தூட்டி வசீகரக்கிருபைபுரிவாயே. (10)

வையகமெல்லாம் திரிந்துநானங்கம் வளர்க்கவு நாடொறுமயங்கி
      வாடியானிருக்கப் பாவிநோயுற்று வாதனையாக வேவருந்தச்
செய்கையாலடியே னிடுக்கமேகவிர்க்கத் திக்கெனக் கொருவருமில்லை,
      சிறுமையும்பிணியுஞ் சிதறவேதுரத்திச் செழித்திடக்கருணை பாரையா,
தையலாள்மகிழ வுன்னருடன்னாற் சாற்றுனேன் பதிகமாயிதனில்,
      தமிழ்ப்பிழைபொறுத்தே யடியனீடேறத் தயவுதந் தென்னையாளையா,
மையலாள்வேளூர்த் தையநாயகியை மருவிய வைத்தியநாதா
      வல்வினையோட்டி நன்மருந்தூட்டி வசீகரக்கிருபை புரிவாயே. (11)

வைத்தீஸ்வரர் பதிகம் முற்றிற்று.
--------------------

2. தையநாயகியம்மன் பதிகம்.

காப்பு - நேரிசை வெண்பா.
நீர்வளங்க ளெப்பொழுது நீங்காத வேளூர்வாழ்
நார்வளங்கொ ளெங்கள்தைய னாயகிமேற்- சீர்விளங்குஞ்
செந்தமிழ்ப்பா மாலைசொலச் செல்வக்கணேசனர
விந்தமலர்த் தாள் துணையாமே.

      ஆசிரிய விருத்தம்.
திருவளர்ந் தோங்குமதி வதனமுஞ் சுகவருட்
     டிறம்வளர்ந் தோங்குவிழியுஞ்,
சீர்வளர்ந் தோங்குமறை மொழிசொலும் பவளவுச்
     சிதம்வளர்ந் தோங்குவாயும்,
உருவளர்ந் தோங்குமணி மருவுகுழை யாதியணி
     யொளிவளர்ந் தோங்குசெவியும்,
உன்னதம் வளர்ந்தோங்கு கனசுவர்க் கங்களும்
     உரம்வளர்ந் தோங்குதோளும்,
மருவளர்ந் தோங்குபூஞ் சரமும்விண் டருமலரின்
     மணம்வளர்ந் தோங்குதாளும்,
மைந்தனேன் காணவெள் விடையினின் பதியோடும்
     வந்தருட் சேவைதருவாய்,
தருவளர்ந் தோங்குபொழி லிங்கண்மா மயில்கணிர்ந்
     தனமோங்கு வேளூரில்வாழ்
சையமால் வரைகுமரி வையம்யா வையுமுதவு
     தையநாயகி கௌரியே. (1)

அருள்பெருகு நயனஸ்ரீங் காரிமதி யணிவேணி
     யணிமணிப் பூணிவிமலி,
ஆனந்தபயி ரவிதிரிபு ராந்தகி சுகிணி
     யகிலகாரணி நாரணி,
மருளறுந் திவ்யத்ரி கோணியம் புஜபாணி
     மாதங்கி மரகதாங்கி,
மந்த்ரபஞ் சாட்சரி மகேஸ்வரி மனோன்மணி
     மருவுமெய்ஞ் ஞானசீலி,
தெருளிலகும் வேதமுடி மீதிலுறும் வித்தகி
     தீராதவினை களெல்லாந்,
தீர்த்தருள் வைத்யநா தன்பங்கி லன்னையே
     சிறியனேன் வினைதவிர்த்தாள்,
தாளமணி முறுவன்மட மாதர்பா லன்னநடை
     தான்பயிலும் வேளூரில்வாழ்,
சையமால் வரைகுமரி வையம்யா வையுமுதவு
     தையநாயகி கௌரியே. (2)

ஆறெனுந் தையலை யணிந்தவே ணிப்பிராற்
     கன்றுகுரு மூர்த்தியாகி,
ஐந்தையலை யாதடக்கித் தவம்புரிப வர்க்களிர்
     நான்குதைய லைப்பொன்,
கூறவாவொ ழியவொளி வீசுமுத் தையலை
     கொழிக்குநற் செந்திமுதலாங்,
கோலநார் மேவியிரு தையலைப் புறமதிற்
     கொண்டுமொரு தையலைத்தாந்
தேறும் படிசெய்து வெட்டுண்ட கையையுஞ்
     சீருறத்தந் தவமல,
சிவசுப்ர மணியமுத் தையனைப் பெற்றமா
     தேவியேஎனை யாளுவாய்.
தாறுடைக் கமுகுபூந் தாழை யெனநீடித்
     தழைத்துவளர் வேளூரில்வாழ்
சையமால் வரைகுமரி வையைம்யா வையுமுதவு
     தையநாயகி கௌரியே. (3)

ஆகமபுரா ணகலை யோதியறி யேன்கருதி
     வாய்ந்தவசை யண்டியறியேன்,
ஆனநின் மெய்யன்பர் நேசமறி யேனினக்
     காம்பூசை செய்துமறியேன்,
தேகமதெ டுத்துவரைக் குநற்கரு மங்கள்சிந்
     தையினினைத் துமறியேன்
சிவபுண்ணி யஞ்செய்கு வோர்கள்பா லொருகாசு
     செங்கையா லீந்துமறியேன்,
பாகமுத மொழிநாலார் மோகமே கதியெனும்
     பாமரரிலென் போலுமிப்,
பாரிலெவ ருண்டுநன் மார்க்கநி லையேபெறப்
     பண்ணுவதுனக் கருமையோ,
தாகமூன்றுந் தணந்தோங் குமுனிவ ரர்கள்
     வாசஞ்செயும் வேளூரில்வாழ்
சையமால் வரைகுமரி வையம்யா வையுமுதவு
     தையநாயகி கௌரியே. (4)

நாயேன்ப டுந்துயர மிவ்வள வெனப்பகர
     நாவொன்றுபோ தாதுமேல்
நாடிவந் தென்குறை யகற்று வார்நீயலால்
     நானிலத் தொருவரில்லை,
பேயேனு மொருபோத கங்கரையு நின்னகம்
     பெரும்பாறை யோவிரும்போ,
பெற்றிட்ட பிள்ளைமேற் றாய்க்கலோ நாடொறும்
     பிரியமதிருக்க வேண்டும்,
நீயேது மறியாது போலிருப் பதுவுமொரு
     நியாயமோ தயவில்லையோ
நெஞ்சத்து நினைவையோ லணுவுமக மேருவாய
     நிமிடத்தி லாடாதோ,
தாயேநின் னாதரவு நம்பினே னருள்புரிவை
     தரணிபுகழ் வேளூரில்வாழ்,
சையமால் வரைகுமரி வையம்யா வையுமுதவு
     தையநாயகிகௌரியே. (5)

அடுத்தவர்க டம்மையொரு நிமிடமுங் கைவிடா
     தாண்டருளல் நீதியெனவே,
தாகமபுரா ணகலை தன்னினீ சொன்னதென்
     றறிஞரால் கேட்டுமிகவுந்
திடத்துட னுனதுபதம் நம்பிவந் தண்டினேன்
     சீற்றமதுறா மலினிய,
திருவுளமி ரங்கியெ னையாதரித் திடுவது
     சிறந்தவுன் கடமையலவோ,
இடத்துநீ ரையுமொரு குளத்துநீ ரென்பரோ
     குவலயத்துன் னடிமையைக்
கூறும்வே றொருவர்தம் மடிமையென் பார்களோ
     குணாகரி மகாவித்தகி,
தடத்துதிறு மாம்பலெழின் மாதர்வெண் ணகைகண்டு
     தாம்மலரும் வேளூரில்வாழ்
சையமால் வரைகுமரி வையம்யா வையுமுதவு
     தையநாயகி கௌரியே. (6)

கருணைக் குவித்தா யிருப்பதுந் துயரைக்
     களைந்தினிக் குறைவராமற்,
காத்தன் பர்தமை யிரட்சிப்பதும் பொய்யல்ல
     கருதுநின்னியற் கைக்குணம்,
வருணக்க லாபமயில் வடிவுற்ற வல்லியென்
     வறுமைபிணி துயரம்யாவும்,
மாற்றிநித் தியசெல்வம் அருள்வை யெனநிதநான்
     வருந்திநின் பாலுரைக்க,
இருணீக்கு மொளிவயிர குண்டல மிலங்குசெவி
     யிற்கேட்டிடா திருத்தல்
என்பொலாக் கன்மமோ ஈதுகலி காலத்தியற்
     கையோர்வடி மையலவோ,
தருணத்தி லுதவிசெய் யாததுந்தகு தியோகண்
     ணருள்செய் வேளூரில்வாழ்
சையமால் வரைகுமரி வையம்யா வையுமுதவு
     தையநாயகி கெளரியே. (7)

அன்னையே நீமுனஞ் செய்திட்ட நாலெட்டறந்
     தனின்மருந் தென்பதோ,
ரறமான தஃதன்றி நின்கணவ னாரும்அடுத்
     தவர்கள்நோய் தீர்ப்பரென்,
றின்னிலமெ லாஞ்சொல்ல வில்லடிமை யேன்றனது
     இன்னல்நோய் தீர்த்திடாத,
தென்னவித மோதரும ருந்தினிற் சாரமது
     மில்லையோ மண்மருந்தோ
மன்னுநீ தருமச்சொ ரூபியென் றும்பதி
     வைத்யநாதீ சரென்னும்
வாய்ந்தபேர் கொண்டது வும்ஏதுகார ணத்தினால்
     வாய்மலர்ந் தருளவேண்டும்,
தன்னிகரி லட்டாங்க யோகியர்கள் வந்துதுதி
     சாற்றுநல் வேளூரில்வாழ்,
சையமால் வரைகுமரி வையம்யா வையுமுதவு
     தையநாயகி கௌரியே. (8)

தந்தொடுந் தம்பெரிய தனமதைக் காட்டித்
     தமக்குரிய பணிகள்செய்யத்
தகுதொழிற் காட்டி மிஞ்சாதடக் கிக்கொடிய
     சங்கடங்காட் டிமிகவும்
வெந்தபுண் ணிற்கோலை யிட்டதைப் போலவே
     வீண்வம்பு வார்த்தைகாட்டி
வீரமுள் ளோர்மனதும் நையும்வகை செய்யுமை
     விழியார்கள் மீதுவாஞ்சை,
எந்தவித முங்கொளா துனதுபய சரணமல
     ரிடைவிடா தேத்தும்வாமே
ஏழையேற் கீந்துகாத் தருள்செய்ய வேண்டும்
     இலங்குநித்யகல்யாணி,
சந்தமுற வந்தணரும் வந்துநன் மறைகள்
     சந்ததமோதும் வேளூரில்வாழ்
சையமால் வரைகுமரி வையம்யா வையுமுதவு
     தையநாயகி கௌரியே. (9)

சுரர்களொரு பாற்போக பூமியர்களொரு பாற்றுறந்த
     முனிவரவர்க ளொருபாற்
றுறங்கவிஞ் சையர்களொ ருபாலசுர ரொருபாற்
     றுலங்குமந்தரர் களொருபால்
சரகரொரு பாற்றயித்தி யர்களொரு பாலிசையி
     லோங்குகாந் தருவரொருபால்
உத்தமவி யக்கரொரு பாற்சித்த ரொருபா
     லுவந்தகின்னரர்க ளொருபாற்
கருட்டொரு பாற்கிம்புரு டர்களொரு பாற்பெருங்
     கனவாசியர் களொருபாற்
……….. …………….. ……………….. …………….
     கறைகொள் பைசாசரொருபாற்
றரமொடு துதிக்கநற் சேவைதரு நின்பெருமை
     சாற்றரிது வேளூரில்வாழ்
சையமால் வரைகுமரி வையம்யா வையுமுதவு
     தையநாயகி கௌரியே. (10)

நலமிகு விளங்குசீ காழியிலு தித்ததிரு
     ஞானசம் பந்தமூர்த்தி
நவிலரியமெய்ச்சிவா நந்தமே வத்துங்க
     நசமுலைப் பாலளித்த
சலசலோ சனபால சுந்தரி மகாமந்த்ர
     தந்த்ரவெந்த் ராடம்பரி,
சயிலபுப மார்வைத்திய நாதர்பாரி பூந்தாரி
     யொய்யா ரிவீரி,
பலனுதவு நின்னுடைய சரணாம்பு யத்தினிற்
     பரிவுடன் சாத்துமிந்தப்,
பாமாலை யைப்புனைந் தருள்செய்ய வேண்டும்
     பவானியுயர் ஜெகதீஸ்வரி,
தலைமைபெறு மோங்காரி கருணாச முத்ரியே
     தருபுகழ்கொள் வேளூரில்வாழ்
சையமால் வரைகுமரி வையம்பா வையுமுதவு
     தையநாயகி கெளரியே. (11)
      ~~~~~~~~~~~~~
தையநாயகியம்மன் பேரில் பாடிய கட்டளைக்கலித்துறை.
கான்கொண்ட கற்பகக்காமலர் நின்பூங்கழற் கணிதம்
வான்கொண்ட தேவர்களர்ச்சித்து வாழ்த்த வரமளிக்குந்
தேன்கொண்ட மென்மொழிப் பாவாய்விதித்தவிச் சென்மத்தினில்
நான்கொண்ட சஞ்சலஞ் தீர்த்தருள்வாய் தையநாயகியே.

புற்றரவப்பணி வேணிப்பிரான் மும்புராதியரை
யுற்றநகைப்பி லெரித்தபிரான் றோலுரித்துடுக்குங்
கொற்றமிகு மெம்பிரான் யென்றுங்குலவுதற்கு
நற்றவமெத்தனை செய்தனோ தையநாயகியே.

பொன்னேயப் பொன்னினொளியே சகலபுவனத்திற்கும்
அன்னே யறஞ்செயுமம்பிகையே யிருளற்றொளிரும்
மின்னே மாணிக்கமேமதி மாமுகவித்தகிநீ
நன்னேசங்கொண்டெனை யாண்டருள்வாய் தையநாயகியே.

வைத்தீஸ்வரர்பேரில்பாடிய கட்டளைக்கலித்துறை.

மெய்யணிநீறொடு வெம்புலியாடை விரிசடையும்
கையினின்மான் மழுவற்றுமையோடு கயிலைவிட்டு
வையம்புகழ் நல்லவேளூரில்வந்த வைத்தியநாதனே
தையம்மை யார்ந்துமுத் தையனையீன்ற தயாபரனே.

பரனென்றுனை யடைந்தேனைப் பிறவிப்பாவைனெறி
வரவைத்தலித் தருள்செய்திடும் வைத்தியநாதமன்னா
அரவின்பொறிப் பணமானுநிதம் பவரிவையர்க்கிங்
குருமுளத்தினனே னும்பிறப்பையின் றுத்தமனே.

உத்தமர்போற்றுன் பதந்தந்துகளு முடலினிடை
யொத்துவருபிணி யெல்லாமொழிய வொளிரன்பினார்
பத்திபுரிந்துமெய்ஞ் ஞானவின்பத்தினைப் பற்றிநிற்கச்
சித்தம்வைத்தாள் தையநாயகிமதிடஞ் சேர்த்தவனே

சேர்ந்தவனேயுன்றன் சேவடிபோற்றுஞ் சிறியனெனைக்
காத்தவனேபனி மாமலையாளோடு கண்ணனையும்
ஆர்த்தவனேசர்வ பூதகணாதி பரஞ்சலிக்கப்
பார்த்தவனேமுப் புரமெரிந்தேவிடப் பண்ணவனே.

பண்ணவனே புவனங்களை முத்தற்பணியுநெற்றிக்
கண்ணவனே தையனாயகியாளெனுங் கருதிமையப்
பெண்ணவனே யம்பிரியாதவனே பெருமுலகை
யுண்ணவனே பணியையவெனக் கருளுத்தமனே.

உத்தமனேபர் சுந்தர்க்கரோடி லகிற்யாமாணி
சித்தமனே கஞ்சிகையா திருக்கச்யாநுபவம்
வைத்தமனே யெனுஞ்சம்பந்தர் பாடியவக்கதனுக்
கத்தமனே கங்கொடுத்தோ யெனக்கின்றருளுவையே.

      வாழி
      நேரிசைவெண்பா.
சீர்வேளூர்வாழி திகழ்வைத்திய நாதனெழில்
வார்மேவுதையம்மை வாழியே - ஏற்மேவு
நான்வறையோர்வாழி நவின்மன்னர் செங்கோலுந்
தான்வாழி வாழி சுகம்.
கட்டளைக்கலித்துறை முற்றிற்று.
-----------------

3. புள்ளிருக்கு வேளூர் ஸ்ரீ முத்துக்குமரசாமி பதிகம்.


திருச்சிற்றம்பலம்.
புள்ளிருக்கு வேளூர் ஸ்ரீ முத்துக்குமரசாமி பதிகம்.
விநாயகர் துதி
காப்பு
வெண்பா
செனனமர ணந்தீரும் செய்தவினை யகற்றும்
மனனநெறிப் பயிற்றும் வாழ்கத் - தினமும்
விடமருந் துமீசன் விரும்பிய ருள்வேளூர்
குடவறை விநாயக னைக்கூறு.

ஆசிரிய விருத்தம்
சீர்கொண்ட மதிமௌனி யானசற் குருவாய்ச்
      சிறந்தசங்கத் தலைவனாஞ்,
   சித்தாந்த முத்திமுதல் வற்றாப்பெ ருங்கருணைத்
      தெள்ளமுத வரருத்தியுமா,
யேர்கொண்ட மயில்வாகனக் கடவுளாகி யுமெழில்
      வேலுடைக் கடவுளாய்
   இயல்பாக வடியவரை ரெட்சித்தி டச்சேவலே
      கரங்கொடி கொண்டதால்,
பார்கொண்ட மெய்ப்புகழ் சரவண பவாவென
      பற்றிபலர் நினைக்கின்றதால்
   பனிமுறுவல் நகையொளிரு மாதிடம் வலம்கொண்ட
      பாங்கான கிருபாகரா
மூர்கொண்ட புகழுளேர யென்கலிய கற்றிடவு
      மொழிதந்து நீயுதவுவாய்
   முத்தமிழ்க் கிறைவசங் கத்தமிழ்த் தலைவனே
      முத்திதரு முத்தையனே.       (1)

வேதவே தாந்தமுடி வானநிற் சோதிமய
      வெட்டவெளி யானதுவு
   மெய்ப்பொ ருட்சரவணப வாயனே மெஞ்ஞான
      வேதமுடி வானதுவுநீ
நாதநா தாந்தமுடி வானஆ றுதல்நாட்ட
      நீநடு வுநீயே
   நாடுமே லாதாரதுரி யங்கடந்த தோர்நாட்ட
      முளபரவெளி யுநீபதமும்
பேதமும் பிரணவ சொரூபமாய் பேச்சு
      மூச்சத்த விடம்நீ
   பெரிதான சைவசம யத்தினெறி யானநீ
      பேரின்ப சுகவாரிநீ
மூதண்ட கூடத்து ளொளிவான நான்குபத
      மோட்சத்தின் வழியும்நீயே,
   முத்தமிழ்க் கிறைவசங் கத்தமிழ்த் தலைவனே
      முத்திதருமுத் தையனே.       (2)

எழுதாத புத்தகம் பேசாதவெ ழுத்துமாய்
      எழில்பெறாச் சூனியமதாய்
   எங்குநிறை கின்றபொருள் சமயங்க டந்தோ
      ரிரவுபகலற்ற விடமாய்,
பழுதற விளங்குநற் பரவெளியி னொளியாகி
      பரிபூரண கடலதாய்
   பார்க்குமிட மெங்குநின் மயமாகவே நிறைபதியில்
      பலவுரு வாகியும்,
தொழுதுபல விதமாக வறியோர் கள்பலமுறைக்
      கோற்றத்தி னிறைவானநீ,
தூய்காமை கல்வியொரு துணிவுடை மையிம்மூன்றும்
    தோதாயமர்ந் தகெங்கும்,
முழுதுநிறை யயண்டப் பரப்பெலாம் நிறைகின்ற
      மூர்த்தியே கீர்த்திமுதலே
 முத்தமிழ்க் கிறைவசங் கத்தமிழ்த் தலைவனே
      முத்திதரு முத்தையனே.       (3)

பொய்களவு கொலையுறா மனதாக்கி யென்னையும்
      புனிதனென வடிமைகொண்டும்,
 புகலுமுன் னூழினைப் பொடியாக்கி யன்பனென
      போதகத்த ருள்புரியவும்,
மெய்யைவலு வாகவே நின்பதத் தறியவு
      மேதினியிலே செனனமாய்,
 மிகவும்பி றந்துமிறவா தபடிபே ரின்ப
      மெய்மையை விளக்கவருவாய்,
ஐயமிட்டுண் டுபலருக்கு முபகார னாயாக்கு
      வாயன்பு வைத்து,
 அங்குமே புகழ்பெறத் திங்குளார்பு கழவரு
      ளற்புதப ரஞ்சோதியே,
பொய்குழலி னாளிடஞ் சேர்ந்துவுற வாடினு
      முற்றுநின்னு டைமையலவா,
 முத்தமிழ்க் கிறைவசங்கத் தமிழ்த் தலைவனே
      முத்திதரு முத்தையனே,       (4)

வறுமைநோய்த் தீர்த்திடவும் வகைகளறி யாதவன்
      வைத்தியனெனும் பேருளான்,
   வடிவமதை யெவர்புகழ் மாசனத்தின் னிச்சை
      வழக்கவே தாமுளவா
சிறுமையென் பதையெணா மற்பிச்சை வாங்கி
      சையுமன மலவேனின்
   சித்தமுமறியாததோ, ………………….
      …………. …………….
மறுமையுட னிம்மையிற் றருமமும்பொருளின்ப
      மார்க்கமு மிகத்திலுளதால்
   வழங்கல்நின் னடியார்க்கு முந்தனுக் குமுதவ
      மகிழுளன்ம னவுமறியாய்,
முறுவவி லன்னிகை மாதுயிச்சை கிறியாச்சத்தி
      முறைமையிரு பாதமைத்த
   முத்தமிழ்க் கிறைவசங் கத்தமிழ்த் தலைவனே
      முத்திதரு முத்தையனே.       (5)

நிற்குண நிரஞ்சனமு நிஷ்களங்க முமிலா
      நிற்கவிகற்ப முமிலாமல்,
   நின்றாதி மூலமாய் காரணப் பொருளாகி
      நீதமாய்நின்ற வெளியே
சற்சனசன் மர்க்கமொடு சாலோக சாமீபசாரூப
      சாமீபசா யுச்சியமுஞ்
   சாசனம் பெறுமன்பர் தற்பரா னந்தமய
      சாசுவதநீ யருள்குவாய்
உற்பனமி குத்துளருச் சிகப்பொரு ளாகியுடலி
      னுயிரள வாகியும்,
   உம்பர்புக ழின்பவெளி யம்பரம கானநிறை
      யற்பவக் கருணைவாழ்வே,
முற்பவம ருந்துவள ரிப்புவியில்யார் புகழுமும்பை
      வைத்தருள் செய்குகனே,
   முத்தமிழ்க் கிறைவசங் கத்தமிழ்த் தலைவனே
      முத்திதரு முத்தையனே.       (6)

பத்திக்கி சைந்திடா பாவியே னோயிடினும்
      பட்சம்வைத் தென்னையாள்
   பதிபுகழ வேயன்னை யீன்றிடுஞ் சேயிலொரு
      பதிதனா னாலுனக்கு
வெத்தியாய் பலவுநீ வியாபகம் வையாவிடில்
      விண்ணுளோ ருனையிகழுவார்
   மெய்மையாய்க் கொண்டுநின் னன்புதைத் தேயெனை
      வெறுக்காது மவைகண்டிட
நத்திடு மின்மையிற் மாறிடா துவன்
      னாட்டமு முனக்குளதே
   நானெனக் குளறுவது நீயன்றி வேறிலை
      ஞாயமோ வறுமையுறுதல்
முத்திக்கு வித்தாய் முளைத்திடுஞ் சோதியே
      மூர்த்தியே கீர்த்திமுதலே
   முத்தமிழ்க் கிறைவசங் கத்தமிழ்த் தலைவனே
      முத்திதரு முத்தையனே.       (7)

என்சொ லைக்கேட்டு நெஞ்சிரக்கம் வையாவிடி
      லேழையேற்கா ருதவுவா
   ரிட்டமித் திராளொடுஞ் சுத்தமுற வாழ்வுநீ
      யெந்தைநீ யன்னைநீயே
தன்சொல் மனைவியு மருள்பிள்ளைநீ யுருவுநீ
      தன்னுடலு யிர்த்துணையுநீ
   சாசுவதப் பொருளும் யாவும் சட்சமய
      சாங்கநீ சகலநீயே
புன்சொலா யிடினுமது நற்சொலாய்ச் செவிகொண்டு
      பூரணக டாட்சம்வைத்து
   பூவுலகிலே யெவர்க ளும்மதிக் காவிடில்
      பொன்னுலகி லெவர்மதிப்பார்
முன்சொலன் பர்களிச்சை யாவுமுதவுன் தருவின்
      முக்கட்சுடர்க் கொழுந்தே
   முத்தமிழ்க் கிறைவ சங்கத்தமிழ்த் தலைவனே
      முத்திதரு முத்தையனே.       (8)

இனிநானு னக்கெவ்வி தஞ்சொல்வேன் யேழையே
      னெந்தையே னுந்தனுக்கு
   யிசையவே கொண்டென் னையான்றிடுங் கருணைரச
      யின்பத்தி லுள்ளநிறைவே
தனிநானெச் சொலேன் சட்சமய கோளரித்
      தாருதேசங் ககுருவே
   தாவித்து வுடலாவி யுயிருனக் கேதந்து
      சகலமும ளித்தபோதே
கனிவா யிதழ்க்கஞ்சி கானகந்த னிலோல
      காருண்ய வுதவிநீயே
   காத்தலு முனக்கபய மெவ்விதஞ் செய்யினும்
      கவலையைநி னைந்துகொள்ளேன்
முனிவரது துதிகொண்ட தனிமுதலு மானநின்
      மொழியையு மறக்காதருண்
   முத்தமிழ்க்கி றைவசங் கத்தமிழ்த் தலைவனே
      முத்திதரு முத்தையனே.       (9)

மெத்தப்ப டித்தவன் போலுநான் பலதமிழை
      வினவினேனுன் கருணையால்
   வீணனாய்ப் பலரையுந் துதியாமல் நின்னையே
      மெய்மையா கத்துதித்தேன்
சித்தமுற வேகொண்டு நற்கருணை செய்திடுஞ்
      செல்வச்செ ருக்குநடுவே
   செந்தமிழ்க் கிறைவனே வந்தனஞ் செய்துநான்
      செப்பினே னொப்பாவிடில்
பெத்தவ டனக்குவருள் பிள்ளைகொச் சைச்சொலைப்
      பேணுவா ரின்பமாய்க்கொள்
   பெரிதான வாருதிச் சலதாரை புலநீர்கள்
      சேர்த்திடுதல் நலமென்னவே
மொத்தமனு வின்மலைக ளெங்கும்வி யாபகமுள்ள
      வேலவா வேளூர்வளர்
   முத்தமிழ்க் கிறைவசங் கத்தமிழ்த் தலைவனே
      முத்திதரு முத்தையனே.       (10)

      வெண்பா.
செந்தூர் திருப்பழனிச் சேர்பரங்குன் றேகரமு
முந்தூர் பழமாமு திர்சோலை - கந்தபுரி
குன்றுதோ றாடுங் குமரவேள் தாடதனை
என்று மறவா திரு.
      வேலுமயிலுந்துணை.
புள்ளிருக்கு வேளூர் ஸ்ரீ முத்துக்குமரசாமி பதிகம். முற்றிற்று.
----------------

This file was last updated on 13 May 2023.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)