பரசுராமக்கவிராயர் எழுதிய
"சித்திராங்கதை விலாசம் "
cittarAngkatai vilAcam by
paracurAmak kavirAyar
In Tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
We thank Tamil Virtual Academy, Chennai for providing a scanned PDF version of this work
Our sincere thanks go to Dr. Meenakshi Balaganesh, Bangalore, India for her assistance
in the preparation of this work
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2023.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
பரசுராமக்கவிராயர் எழுதிய
"சித்திராங்கதை விலாசம் "
Source :
சித்திராங்கதை விலாசம்
இஃது பரதநாட்டிய முதலிய சங்கீதசாஹித்ய வித்வாம்ஸராகிய
குண்டையார் தண்டலம்-மா மஹா-ஸ்ரீ. பரசுராமக்கவிராயரவர்கள் இயற்றியதை.
திருவண்ணாமலை அருணாசலவையரால் பார்வையிடப்பட்டு.
மேற்படி கவிராயரவர்கள் உத்தரவின்படி,
பெரியகாஞ்சீபுரம் வேதகிரிமுதலியாரவர்கள் கருத்துக்கிணங்க.
தஞ்சாவூர் கன்னைய செட்டியாரவர்களால் ஐதிகமான படங்களுடன்
கொண்ணூர் மாணிக்கமுதலியாரவர்களது மநோன்மணிவிலாசவச்சுக்கூட்டத்திற்
பதிப்பிக்கப் பட்டது.
பவ வரு 1874 - வைகாசி மீ உவ.
-------------------------------
சித்திராங்கதை விலாசம்.
சிவமயம்.
மதுரை மீனாட்சியம்மன் றுணை.
விநாயகர் துதி
காப்பு - வெண்பா
சீரார்மதுரையில்வாழ் சித்திராங்கதையெனும் பெண்
பாராளுஞ் சீரதனைப் பாடவே - காரார் ..
தந்திமுகத்தெந்தைமலர்த் தாமரைபொற்றாளிணையை
அந்திபகலுந் துதி செய்வாம்.
-------
இதுவுமது - விருத்தம்.
பாண்டியன்ற னக்குப்பின்பு பட்டமுந்தரித் துச்செங்கோல் ...
வேண்டியிவ் வுலகையாளு மெல்லியை விஜயன்வந்து ...
தீண்டியே மாலையிட்ட சித்ராங்கதை விலாசம் பாட
ஆண்டருள் விநாயகன் சேவடியிணைப் போற்றிசெய்வாம்
-------
முருகர் துதி- விருத்தம்.
திசையிரு நான்குமற்றத் தேவர்களி டுக்கந்தீர
இசைபெறு முலகமூன்று மிந்திரனாளப் பொல்லா
வசையுறு மசுரர்வாழ்வு மலைகளுமொ டுங்கச்சற்றே
அசையும்வேன் முருகன் திவ்ய வடியிணை போற்றிபோற்றி
-------
பரமசிவ வணக்கம் – விருத்தம்.
நறைமிடல விழுங்கொன்றை நாகவெண்டலை யெருக்கு ...
பிறையொடு தும்பைகங்கைப் பெருகுசெஞ்சடை யாய்போற்றி
மறைமுடிவி னிற்கூத்தாடு மாதுமைபாகா போற்றி
கறைமிடற் றண்ணலேநின் கழலிணை போற்றிபோற்றி
-------
உமையவள் வணக்கம் - விருத்தம்
அமையுமிவ்வு லகையல்லா மளித்திடுமவளே போற்றி
இமயமால் வரைபயின்ற யெங்களீஸ்வரியே போற்றி
சமயமாறினு னீங்காத சத்திசாம்பவியே போற்றி
உமையவளெனும் பேர்கொண்ட வுத்தமிபோற்றி போற்றி
-------
திருமால்வணக்கம் - விருத்தம்.
ஞாலமேலு லகளந்த நளினபொற் பாதம்போற்றி
நீலமேகம் போலெங்கு நிறைமணி வண்ணாபோற்றி
ஓலமிட்ட ழைக்குஞான வும்பருக்கு தவுமாதி
மூலமேபோற் றியுன்றன் முளரிபொற் பாதம்போற்றி
-------
காளிவணக்கம் - விருத்தம்,
வாளியே போற்றிதுட்ட மகிடசம் மாரிபோற்றி ....
யாளியூர்ப வளேபோற்றி யரனொடு நடனமாடும்
காளியேபோற் றிச்சொன்மா தங்கியே போற்றிபத்ர
காளியேபோற் றியுன்றன் கமலபொற் பாதம்போற்றி
-------
சரஸ்வதிவணக்கம் - விருத்தம்.
சீரதாம் பிரமனாவிற் சென்றுவாழ் பவளேபோற்றி
பாரதாதிபு ராணங்கள் படித்தருள் பவளேபோற்றி
பேரதாமுல கமெல்லாம் பெற்றமாதா வேபோற்றி
சாரதாம்பாளே யெங்கள் சரஸ்வதி தாயேபோற்றி
-------
அவையடக்கம் - ஆசிரியவிருத்தம்.
மன்னவனாம் பாண்டியன்றன் மகளாய்வந்து ...
மணம்வேண்டா மென்றவள் தென்மதுரையாள
பொன்னவரத் தினமிழைத்த முடி தரித்து
பூவைசித் ராங்கதைசரிதைப் புவியின் மேலோர்
சொன்னவட நூன்மொழியைப் புலவர்பாதத்
துகளதிலுஞ் சிறியேன் செந்தமிழ் விலாசம் ...
இன்னவகை யெனவறிந்து மறியாச்சொன்ன
ஏழையென் மேற்பிழைபொறுப்பீ ரிகத்துளோரே
-------
விநாயகர் வருகிற - பொதுவிருத்தம்:
சராசரபுவன மியாவும் தந்தளித்தழித் துண்டாக்கும்
பரபரப்பொரு ளேசெல்வப் பாலன்வேலவற்கு மூத்தோன்
மராமரந்து ளைத்தசெங்கண் மால்திரு மருகனென்ன
சுராசுரர் முநிவோரியாருந் துதிகண வதிவந்தாரே
-------
வசனம்.
உலகமெல்லாம் துதிக்கும்படியான சாம்பசிவனருள் செல்வவிநாயகர்
முதலில் வருகிற விதங்காண்க.
-------
விநாயகர் வருகிற தரு – இ- ம் தோடி. தாளம் - மட்டயம்,
பல்லவி,
விநாயகர் வந்தா- ரிதோ- செல்வவிநாயகர் வந்தார்
அநுபல்லவி,
வில்வமணமி ந்த - மேதினியெங்கும்
வீசு மதுரைசொக்கேசர்வாசல் தங்கும் – (செல்வ)
சரணங்கள்.
அங்கயற்கண்ணி பரமங்கையுமையவட்
கானபிள்ளை கலி தீர்த்தோன் சொல்லும்
ஆகமமெய்ப்பொருளாக விளங்குமோ
றாறுமுகவற்கு - மூத்தோன் - சிவ
கங்கையருண்மகன் வெங்கயமாமுகன்
காசினிமுழுதும் – காத்தோன் - மலர்க்
கண்ணன் மருகன் முக்கண்ணனடியவர்
கண்முன்னின்றாடிய - கூத்தோன் – திவ்ய
மங்களஞ்சேரெழில்பெண்கள் - சிரோமணி
மாதுவல்லபைசமேதனற் - கிண்கிணி
தங்கச்சதங்கையிலங்கும் - தண்டையணி
தாளிணையாவரும் நாளும் - வந்துபணி (செல்)
-------
உம்பர் துதிக்குமோர் கொம்பன்னடியவ
ருள்ளெனுமாலய - வாசன் வரும்
ஊழ்வினையாமத வேழங்களைக்கடிந்
தொட்டுமங்குச - பாசன் - மத
கும்பகெம்பீரனேரம்பனெனும்பெயர்
கொண்ட சூரியப்பிர - காசன் - இன்னம்
கூறுங்கஜமுகசூரனோடசுரர்
குலத்தை வென்றக - ணேசன் நந்தி
நம்பனெ னுந்திரியம்பக - சங்கரன்
நாதநருள்கண நாயக - னைங்கரன்
அம்பிகை புத்திரன் கம்பவி – சித்திரன்
அகட னுக்ரகர விகட - சக்ரதர (செல்)
-------
கட்டியக்காரன் வருகிற பொது விருத்தம்.
தட்டியையிறுக்கிவெள்ளித் தடியுங்கைப் பிடித்துப்போர்க்குக்
கிட்டியேயெழும்பிமேலே கிளம்பியேபாயுஞ்சிங்கக் –
குட்டியைப்போலபாண்டியன் கொலுவலங்காரஞ்செய்யக் –
கட்டியக்காரன் வந்து களறியிற்றோன்றினானே
-------
வசனம்.
அகோதெப்படியென்றால் இராஜாதிராஜன் ………..
கொலுவலங்காரஞ் செய்யுங் கட்டியக்காரன் ……………
-------
கட்டியக்காரன் வருகிற தரு
இராகம் சங்கராபரணம்- தாளம்-ஆதி.
-------
பல்லவி
வாசற்கட்டியக்காரன் வந்தான் ராஜவாசற்கட்டியக்காரன் வந்தான்
பாபல்லவி
ராஜராஜன் பாண்டிய மஹாராஜராஜன்கொலு – (வாசற்கட்)
சரணங்கள்
கேசரிபோற்கெர்ச்சித்து - - - - -- - - - ஆஜரெனயெச்சரித்து
கிளம்பிலகுவாய்க் குதித்து - - - - - - - - - - - - - - - - - சேற்
கெண்டையைப்போற் பாய்ந்து - - - கண்டக்கரையாராய்ந்து
கிடுகிடெனவே - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - காய்ந்து
வாசலில் நின்றுறுக்கி. - - - - - - - - - - - மீசைமுனை முறுக்கி
வாகுவல்லயமிறுக்கி - - - - - - - - - - - - - - - - - - - - - - - நல்ல
வரிசைச்சல்லடந்தட்டி- - - - - - - - - - - - சிரசிற்பாகையுங்கட்டி,
மண்டலீகரையதட்டி - - - - - - - - - - - - - - - - - - - - - - எங்கும்
பூசும் வெண்ணீறுநெற்றிப் - - - பொட்டுமிட்டெங்கும் வெற்றி
வீசுங்கையினில் கத்தி - - - - - - - - - - - வெள்ளித்தடியும் பற்றி
விண்டலமென கொலு - - - - - - - - - - - - - மண்டல மலங்கிருத
அண்டருமதைக்கண் - - - - - - - - - - - - - - - - - டதிசயிக்கப்பின்
வெகுபராக்குயெச்சரிக்கையென- - - - - - - - - - - - - - பாண்டிய
மகராஜன் கொலுவலங்காரஞ் செய்யவேண்டிய - - - - -(வாசற்)
-------
கட்டியக்காரன் - கட்டியங்கூறல்.
பேரிகை முழங்கபல மேளதாளத்துடன் பெண்கள் நடனங்களாட
பேசுமறை முனிவோர்களாசி கூறச் சிலபேர் சோபனங்கள்பாட
காரியமறிந்தோது மந்திரிகள் புடை சூழ கவிவாணர் புகழ்கூறவே
கட்டியக்காரர் தடிதட்டியெச்சரிக்சையென கவரிகால் மணியாறவே
மாரிபொழிவது போல தேவருங்கற்பக மலர்களும்மிக தூவவே
மண்டலிகரெதிர்கொண்டு தெண்டமெனவேயிரு மருங்குநின்றடி தாழவே,
பாரில் நவரத்தின மிழைத்த சிம்மாதனப் பதியினிற் கொலுவிருக்கப்
பகருமெழில் பாண்டிய மகராஜன்வருகிறார் படைமன்னரெச்சரிக்கை.
-------
பாண்டியராஜன்வருகிற பொது விருத்தம்
வெங்கயமுகனை வேலனையிந்த மேதினியெவையுந் தந்தருளும்
அங்கயற்கண்ணி யரனிடமமர்ந்த வரலய மணிமதிலழகும் -
கங்கையிலுயர்ந்த காவிரிநதியுங் கற்பகவனங்களுங்கமழும் -
பங்கயத்தழகுஞ் சூழ்மதுரையினிற் பாண்டியன் கொலுவில்வந்தனனே.
-------
கட்டியக்காரன் வசனம்,
அகோதெப்படியென்றால் இராஜராஜேஸ்வரனாகிய பாண்டிய மகாராஜன்
தன்னுடைய கொலுவுக்கு வருகிறவிதங்காண்க.
-------
பாண்டியராஜன் வருகிற தரு - இ-ம் மோகனம். தாளம் திரிபுடை
பல்லவி
ராஜராஜர்பரவியகொலு மருவியபாண்டிய மஹாராஜன்வந்தா
அநுபல்லவி
வாசத்தருமலர் வனஞ்சூழெழிலார் மதுராபுரிவாசன்
அதி பலமதில் மிகும்ஜெகதீசன்- மதிகுலபதியெனுமக (ராஜரா)
சரணங்கள்.
சிரசுதனிலணி- மகுட முடியணி- தீபங்களை, … யேச இரு.
செவியிற்குண்ட-மிரவியினொளியென … செகமெங்கணும்வீச
உரைசெய்மலையெனுமுயர்ந்த புஜகிர்தி…ஒளிரும்பொற்பிரகாச இந்த
உலகீரேழையும் விலைகொள்ளார் மணிரத்தமலர் ... வாசநல்ல
வரிசைபெறு நிலையங்கி … சூஸ்திரமும்
வாள்வில்லேந்திய மலர்க்கை … யஸ்திரமும்
அரசரடிபணிந்துரைசெய் … தோத்திரமும்
அளகைநேர்மதுரைநகர்சேர் … க்ஷேத்திரமும்
பணிவளர் பிரதாபன் - திகழ் நவ - மணிவிளங்குமார்பன் - மிக்க
ஆரபாரர்படை -வீர சூரர்புடை …
சாரர் நேர் வெண்குடை-- சேர்கெம்பீரன்
ஆகம்மகிழுற்றிடு மோகன ராகம் புகழ் சித்திரவாகன (ராஜராஜர்)
-------
இராஜன் கடவுளைப்போற்றிய விருத்தம்.
ஆழிசூழுலகம் போற்றி அருமறையவர்கள் போற்றி
ஆழிமாலயனுங்காணா அரனடிகளையெனாளும்
ஊழியஞ்செய்யுமன்பர் உழுபயிர்குடிகள்போற்றி
ஊழியவினையறுக்கும் உமையொருபாகாபோற்றி
-------
கட்டியக்காரன் - இராஜனுக்குப்போற்றி கவி.
சட்டமுடன வரத்தினமிட்ட சிம்மாசனத் தலைவனே எச்சரிக்கை
தரணியீரேழுமோர் குடை நிழலிலரசாளுந் தயாபரா எச்சரிக்கை
திட்டமுடனெழின் மதுரை பட்டணந்தனில் வாழும்தீரனே எச்சரிக்கை,
திங்கள்குல வீரனேமங்கள குணங்கள்மிகு தேவனே எச்சரிக்கை,
மட்டருமலர் மாலையணியும் புயாசல மன்னனே எச்சரிக்கை
மாதுமீனாட்சியிருபாதமலர் துதிசெயுமகிபனே எச்சரிக்கை
பட்டவர்த்தனர்கள் கைகட்டியெதிர்நின்று பணிபாதனே எச்சரிக்கை,
படைமன்னர் ஒருகோடி, புடைசூழவேவரும் பாண்டியாவெகுபராக்கு.
-------
முதல் மந்திரி இராஜனுக்குச்சொல் - மட்டுவிருத்தம்.
ஏதமில்லரசரேறே போற்றி
நீதிவழுவாத நிருபா போற்றி
ஆதரித்தெனையாள் அமுதேபோற்றி
சோதிசேர்பாண்டிய துரையேபோற்றி
இரண்டா மந்திரி- இராசனுக்குப் போற்றி விருத்தம்
பொதியமலை வளரொருபால் பொற்பதுமத் தடமொருபால்
பொங்கும் வைகை
நதியொருபாலைந் தருவினந்தவனங்களுமொருபால்
நவில் சொக்கேசர்
வதியுமொருதலமொருபால் வாழ் மாடக்கூட முஞ்சூழ்
மதுரையென்றும்..
பதியிருந்தர சாளும்பாண்டி யனேநின் கமலப்
பாதம்போற்றி
இராஜன் தேசவிசாரணையும் மந்திரிவிடையும்.
சீர்பரவுமிவ்வுலகின் மாதமும்மாரியும்
தேசமெங்கும்பெய்யுதா
தெண்டனிட்டுரை செய்வேன் கொண்டன்மும்மாரியோர்
திங்களிற் பெய்யுதையா
ஜெகதலந்தனின் மன்னர் மண்டலிகர் கப்பஞ்
செலுத்தி வருகின்றார்களா
செல்லாமற்காசளவு பாக்கியில்லாமற்
செலுத்துகின்றார்களையா..
ஏர்பரவு நமது லகிலுழுது பயிர்செய்குடிக
ளெல்லாரு மிகக்ஷேமமா
ஏகசக்ரேஸ்வரா பயிர்செயுங்குடிகளுக்
கிடரொன்று மில்லையையா
இன்பமிகு செம்பொன்றானங்கள் முதலாயன்ன
மிட்டுண்டிருக்கிறாரா
இயலாக முப்பத்திரண்தெருமங்களும்...
ஈய்ந்து வருகின்றார்களே
பார்பரவுதேவாலயங்கள் பிரம்மாலயப்
படித்தரங்கள் நடக்குதா
பகர்பிர மோச்சவமுதல் நித்யோச்சவம்பஞ்ச
பருவமும் நடக்குதையா
பட்டவர்த்தனர் மகுடவர்த்தனங்களும் எனைப்
பணிந்து வருகின்றார்களா
பகவனென்றுன்னை துதிசெய்து மனமொருமிக்க .....
பக்கம் நிற்கின்றார்களே
நீர்பரவுமோர் துறையில் கோவும் புலி யுஞ்சென்று
நீரைக் குடித்துவருதா
நேமியாக்கினைகளின் படியதுகள் தப்பாது
நிலை நீர் குடித்ததையா
நிலைமையாய்ப் பிராமணாள் ஆசாரகிருத்தியதிய
நெறியினிற்கின்றார்களா
நியமமது தப்பா துஸ்நாநஜெபதபமதில்
நிற்கிறார்மகராஜனே
-------
இராஜன் மந்திரிகளுக்குச்சொல் விருத்தம்.
மதிமந்திரிமாரேகேளிர் வளமிகு மதுரையென்னும் ....
பதியரசாளயென்பின் பட்டத்துக்காளில்லாமல்
சுதையிருந்தென்ன செங்கோல் துரைத்தனஞ்செய்யலாமா
விதியறிந்தெனக்கு நன்றாய் விளம்புவீர்விளம்புவீரே ...
-------
வசனம்
கேளுங்கள் மதியில் மிகுந்த மந்திரிகளே, இந்த மதுரைப்பட்டணம்
இளவரசாளும்படியாய் பிள்ளையில்லாமல் பெண் பிறந்திருக்குதே,
யெனக்குப்பின்பு பெண் அரசாட்சிசெய்வது இந்தப் பூலோகத்திலுண்டா?
அதற்கென்ன செய்யலாம் முன்னோர் வேதசாஸ்திரங்களில் மொழிந்திருப்பார்களே
இதையறிந்து ஓராலோசனை சொல்லுங்கள் மந்திரிகளே.
-------
முதல் மந்திரிசொல் விருத்தம்.
வெண்ணெயிங் கிருக்கநெய்தான் வேண்டியதென்ன அந்தப்
பெண்ணை யோர்மன்னர்க் கீய்ந்துப் பிள்ளையைச் சீக்கிரம் பெற்று
மன்னராட்சி செய்ய மணிமுடிதரிக்கலாமென்
றெண்ணியே வேதசாஸ்திரம் எடுத்து ரைக்கின்றதையா
-------
வசனம்
கேளும் இராஜபரமேஸ்வரா வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கழ
வேண்டியதென்ன பட்டத்துக்குப் பிள்ளையில்லாமல் பெண் பிறந்திருந்தால் அந்தப்
பெண்ணை ஒரு இராஜகுமாரனுக்கு விவாகம் பண்ணிவைத்து அவள் வயிற்றிற் பிறந்த
பிள்ளையைப் புத்திரசிகாரம் பெற்று இளவரசு பட்டங் கட்டலாமென்ற அனேக
வேதசாஸ்திரங்களில் முறையிடுகிறது ஆகையால் அப்படிக்கே செய்வது
சர்வோத்தமம் சுவாமி
-------
இரண்டாமந்திரிசொல் -விருத்தம்.
சர்க்கரைப்பானைக்கீய்கள் தான்றேடவேண்டியதென்ன
அக்கறையாக மன்னர் அனந்தம்பேர் மதுரைவாழும்
சொக்கரைக் காணவந்துன் சுதையைவேண்டுவர்கள் அஷ்ட
திக்கரை நொடிக்குள் நாமே ஜெயித்தரசாளலாமே
-------
வசனம்
கேளும் இராஜபரமேஸ்வரா, சர்க்கரைப்பானைக்கு ஈக்களைப் பிடித்து
விடவேண்டுமா, வேண்டியதில்லை. அதுகள் தனக்குத்தானே வந்து மொய்த்துக்கொள்வது
போல் மதுரை சொக்கநாத சுவாமியைத் தெரிசிக்கும்பொருட்டாய் அனந்த இராசாதிபதிகள்
வந்து நமது அம்மாளாகிய சித்திராங்கதையை விவாகம் பண்ணிக்கொள்ள வருவார்கள்.
அவர்களில் ஒருவருக்கு விவாகம்பண்ணிவைத்து அவள் வயிற்றிற் பிறந்த பிள்ளையை
புத்திரசிகாரம் பெற்று இளவரசுப் பட்டங்கட்டினால் அஷ்டதிக்கும் செயித்து அரசாளலாம்
சுவாமி.
-------
இராசன் மந்திரிகளுக்குச்சொல் விருத்தம்.
யோசனை சரிதான் சொன்ன தொன்றுக் கொன்றுயர்ந்தவார்த்தை
வாசனை மலரெடுத்து மதுரைவாழ் சொக்கரென்னும்
ஈசனையங் கயற்கண்ணெனு மமையவளை நாளும்
பூசனை செய்துபெற்ற புத்திரியை யழைத்துவாரீர்
-------
வசனம்.
வாருங்கள் மந்திரிகளே மதிமந்திரிமார்களென்பது உங்ககளுக்கே தகும்,
ஆ -ஆ-ஆ நல்ல ஆலோசனையறிந்து சொன்னீர்கள். இதுவே சரி. இந்த மதுரை
சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மன் இவர்களது கிருபா கடாட்சத்தினாலே நான்
பெற்ற புத்திரியாகிய சௌந்திர சவுபாக்கியவதி சித்திராங்கதை இந்த ஆலோசனைக்குச்
சம்மதிக்கவேண்டுமே. ஆகையால் அவளை அதிசீக்கிரமாய் இச்சபைக்கு அழைத்துவரும்படி
செய்யுங்கள், மந்திரிமார்களே,
-------
மந்திரி கட்டியனுக்குச்சொல்- விருத்தம்.
கையினிற்றடியைக்கொண்ட கட்டியக்காராகேளாய் ...
ஐயன் பாண்டியன் தான்முன்செய் அருந்தவமதனால் வந்த
தையல்சித்திராங்கதையைத் தந்தை தானழைத்தாரென்று
வையகம் புகழ்சபைக்கு மகிழுடன ழைத்துவாராய் ....
-------
வசனம்.
வாராய் கையிற்ற டிடயுடைய கட்டியக்காரா - பாண்டியமகராஜன் அழைத்து
வரச் சொன்னாரென்று சித்திராங்கதை யம்மாளை அதிசீக்கிரமாய் இச்சபைக்கு
அழைத்து வாரும் பிள்ளாய் (அப்படியே அழைத்துவருகிறேன் சுவாமி.)
-------
கட்டியக்காரன் சித்திராங்கதைக்குச்சொல் - விருந்தம்.
உருவளரங்கயற் கண்ணுமையவளருளினாலே
மருவளர் கமலமேவும் மாதெனவுனையளித்த
திருவளர் மதுரையாளும் தந்தைபேரவைக்கிப்போது
திருவுளமகிழ்ந்தெழுந்து சித்திராங்கதையே வாராய்
-------
கட்டியக்காரன் சொல்-வசனம்.
கேளுஞ் சித்திராங்கதைத்தாயே உன்னையுங்கள் தகப்பனார் சபைக்கழைத்துக்
கொண்டுவரச் சொன்னார் அதிசீக்கிரமாய்வாருமம்மா
-------
சித்திராங்கதை கட்டியக்காரனுக்குச்சொல்- மட்டுவிருத்தம்.
தந்தை சொல்லுக்குத்தாட்சியொன் றுண்டோ
விந்தையாயிப்போ விரைந்துமே போவோம்
-------
வசனம்
கேளும் கட்டியக்காரா, என பிதாவழைத்தாரென்றாற் பேசுவதற்கும் வாய்வருமா
ஆகையாலுடனே போவோங் கட்டியக்காரா
-------
சித்திராங்கதை சபைக்குவருகிற பொது விருத்தம்.
வலம்புரிதவமுஞ் செந்நெல் வயல்கள்சூழ் மதுரையென்னும்
தலம்பயில் சொக்கனாதர் தாளிணை பணிந்தென்னாளும்
நலந்தரு மங்கையற்கண் ணாயகியாதம் போற்றி
சிலம்பொலி கலகலென்னச் சித்திராங்கதை வந்தாளே
-------
கட்டியக்காரன் சொல் வசனம்.
அகோதெப்படியென்றால் இராஜராஜேஸ்பரனாகிய பாண்டியமகாராஜன்
புத்திரியாகிய சித்திராங்கதையம்மன் கொலுவுக்கு வருகிற விதங்காண்க.
-------
சித்திராங்கதை வருகிற தரு-இ-ம் பந்துவராளி - ஆதிதாளம்.
பல்லவி.
மாரனிரதியேங்கி- தாரணியெழில் தாங்கி
மாதுசித்திராங்கதை வந்தாள் - வடிவழகி –
மாதுசித்திராங்கதை வந்தாள்
அநுபல்லவி.
பாரினிலி வட்கிணையாரெனஅர …….. சாட்சி
பண்ணப்பாண்டியனொரு பெண்ணைவேண்டி மீனாட்சி
சீரினிலுயர் பாதாம் போருகமலர் …………. காட்சி
தினமுங்கண்டு தரிசிக்க ... உமையவள் தந்த
வனமிதென் றுவடி ....... வழகதனில் மிகுந்த (மார)
சரணங்கள்.
கொண்டலளகபாரம்-கண்டலரிக்கணிரை
குவலயந்தனிற் … … றுளிக்க இளங்
குழவிவெண்டிங்கணுத - லெழில்கண்டு தனிமுதல்
கொன்றை வேணியி ... லொளிக்க - சேற்
கெண்டைக ளிருவிழிக் – கண்டையி லணுகாமல்
கேணிநீரினிற் … … குளிக்க - நல்ல
கிளர் பூரணச்சந்திரன்- ... ஒளிந்தனங்கண்டஸ்த
கிரியிற் சென்றுதத் … … தளிக்க - இந்த
மண்டலத்திற் செவ்வாம்பல் மலர்வாய் மொழிக்குப்பஞ்ச
வர்ணக்குயில்களுந் தேமாங்குயில்களுங் கொஞ்சத்
தண்டரளமணிக்குத் தந்தங்களெழின் … மிஞ்ச
தடமலைகளுந் தங்கக்குடமுலைகளுக் கஞ்ச
தாமலர்மலர்செங் … கையும் - மாந்
தளிரென வொளிர் … மெய்யும் - வல்லி
சரதக்கொடியினு … நையும் - இடை
தனில்மின்னலுந்துதி … …செய்யும் அல்குல்
சற்பப்படத்தையும் … பழிக்கும் - மணித்துடை
பொற்பின் வாழையிற் … செழிக்கும் - கணைக்கால்
கெற்பவிரால்களை … நகைக்கும் மென்னடைக்க
கொப்பிலை யனமென … சொற்பதந்தனிலணி
தண்டை சதங்கை … கலீரெனமனமகிழ்
கொண்டுவந்தவள் தனைக் ... கண்டு சுந்தரந்திகழ்
தந்தைசொற்றவறாமல்- சிந்தையில் மகிழ்ந்து கொண்டு
வந்தவள் தன்னைக்கண்டு... … பந்துவராளிவிண்டு (மார)
-------
சித்திராங்கதை - தந்தையைப் போற்றுகிற - பத்தியம்.
இ-ம்-புன்னாகவராளி.
ஐயனேயெழின் மேவு மெய்யனே யென்னையருள்
அப்பனேயுன் றனிணையடிகள் போற்றி
அரசனேமணிமகுட சிரசனே பரமசிவன்
அன்பனேயுன்ற னிணையடிகள் போற்றி
அத்தனே தேகபரி சுத்தனேயெனையாளும்
அண்ணலே யுன்றனிணை யடிகள்போற்றி
ஆதியேபுகலுமனு நீதியேவடிவார்ந்த
அம்புஜநிகர்த்தவுன் அடிகள் போற்றி
சிந்தைமகிழ்வாய்ப்பரம சிவன் பதத்தை
சந்ததமுந்துதிசெய்தென்றனையளித்த
எந்தையே போற்றியிணையடிகள் போற்றி
தந்தையே நின்கமல சரணம்போற்றி
-------
இராஜன் குமாரத்திக்குச்சொல் - விருத்தம்:
மந்திரமுனிவர் போற்றும் மதுரைவாழ் சொக்கநாதர் …
சுந்தரியெனுமீனாட்சி சுகந்தபங்கயப்பதத்தை ……
ஐந்தருமலர்களானல் லருச்சனை செய்து நாளும்
செந்திருவெனவுதித்த சித்திராங்கதையேவாழி...
-------
வசனம்
வாழிவாழி சித்திராங்கதைத்தாயே எழுந்திருமம்மா.
சித்திராங்கதை தந்தைக்குச்சொல் -கொச்சகம்.
மதிநதியும் புனை சடையார் மதுரை சொக்கநாதரையும் ...
கதிதரு மீனாட்சியையும் கருதிநெடுங்காலமதாய்
துதி செய்தென் றனையளித்த துரைகள் சிரோன்மணியே
அதிசயமேதெனையழைத்த தறியவுரைசெய்வீரே
-------
வசனம்.
சந்திரனையும் கங்கையையும் தரித்தசடாபாரத்தோடு கூடிய
மதுரை சொக்கநாத சுவாமியையும் மீனட்சியம்மனையும் நெடுங்காலம்
நினத்து அரியதவஞ்செய்து என்னை யளித்த ஐயனே அடியாளை
இச்சபைக்கு அழைத்ததென்ன அருளிச்செய்யும் என்றந்தையே
-------
இராஜன் சித்திராங்கதைக்குச்சொல் விருத்தம்.
திருமகள் நிகராய் வந்த சித்திராங்கதை யேயுன்னை
மருமணஞ் செய்வித்துன்றன் மைந்தனைச் சிகாரம் பெற்று
தருமசாஸ்த்திரப்படிக்குத் தங்கமாமகுடஞ்சூட்ட
ஒருமையாய்மனதில் நல்ல யோசனை செய்தேனம்மா
-------
வசனம்.
திவ்வியமங்கள மாணிக்க மகாலட்சுமிக்கு நிகராய் வந்தவதரித்த சித்திராங்கதை
அம்மணி உன்னையொரு இராஜகுமாரனுக்கு விவாகம்பண்ணிவைத்து உன் வயிற்றிற்
பிறந்த பிள்ளையை நான் புத்திர சிகாரம் பெற்று இளவரசுபட்டங்கட்ட எண்ணங்
கொண்டிருக்கிறேன் அம்மணி,
-------
சித்திராங்கதை தந்தைக்குச்சொல் விருந்தம்.
சிவசிவாசொக்க நாதா தெய்வமேகதியென்றெண்ணி
பவனிவாரணஞ்செய் நல்ல பதிவிரதங்கள் பூண்டு –
தவனிலை தன்னில்யானும் சங்கராவென்றிருக்க
அவனியிற்றந்தை சொன்ன அன்னீதிக்கென்னசெய்வேன்
-------
வசனம்.
சிவசிவா சொக்கநாதசுவாமி மீனட்சித்தாயே தெய்வமே கதியென்று பாபநிக்கிரகம்
செய்யும் நல்ல பதிவிருதத்தில் நானிருக்க என்றந்தையாகிய பாண்டிய மகாராஜன்
சொன்ன அன்னீதிக்கு நான் என்ன செய்வேன் தெய்வமே.
-------
சித்திராங்கதை சொல்-தரு -இடம்-ஆனந்தபைரவி-தாளம்- ஆதி.
தந்தைசொல்வார்த்தையைத்தள்ளி விந்தை வேறுரைக்குங்கள்ளி
தானவள் நானாகினேனே சங்கரா - இந்தத்
தாரணியெங்கும் புகழும் - நீறணிக்கடவுளே என்
சத்தியம் பொய்த்துப் போகாதோ.--- சங்கரா
என்றனை யொருவர்க்கீய்ந்தென் - மைந்தனைசிகாரம் பெற்று
இளவரசினைச்செலுத்த சங்கரா - தந்தை
எண்ணின ஆலோசனைக்கு புண்ணிற் கோலிட்டாற்போலானேன்
எதிர்மொழியென்னசொல்லுவேன் சங்கரா
பதிவிரதங்கள் பூண்டு - மதுரையிளவரசு
பட்டமும் நான் கட்டியல்லோ சங்கரா - இந்த
பாரெலாமொரு குடைக்கீழ் ஆளலாமென் றிருந்தேனே
பரமனே நின்செயலோ சங்கரா
மதி பிசகோ என் றலை விதி வசமோ தந்தைசொல்
வார்த்தைக்கு நானென்ன செய்வேன் சங்கரா பெற்ற
மாதாபிதாவும்சொக்க நாதா நீயாயிருக்க
மறுமணமென்றனுக்கேன் சங்கரா
நதிமதியணிவோணி-யதிபதியாய்க்காணி
நானரசாளவேனும் சங்கரா
ஞானந்தனி லுயரும் ஆனந்தபைரவி
ராகமருளச் செய்வாய் சங்கரா
-------
சித்திராங்கரை- தந்தைக்குச் சொல் விருத்தம்,
அப்பனே யென்னையீன்ற ஐயனேபொய்வாழ்வென்னும்
இப்பிறப்பிறப்பொழிக்க ஈசன் பொற்பாதந்தேடிக்
கற்பெனும் விரதம் பூண்டேன்காமக்குரோதத்தையென்றன்
சொற்பனந்தனிலு மந்தச்சுகத்தை தான் நினைக்கமாட்டேன்
-------
வசனம்.
கேளும் என்றந்தையே பூலோகமாய்கையென்னும் பொய் வாழ்வுக்குட்பட்டு
இப்பிறப்பையொழித்து பேரின்பத்துக்குரிய பரமசிவன் பாதாரவிந்தந்தைச் சேர
பதிவிரதமென்னும் தவநிலையைக் கைக்கொண்டு பேரரசாளுவேனேயல்லாமல்-
காமம்-குரோதம்- லோபம்-மோகம்- மதம்-மாச்சரியமென்றுசொல்லப்பட்ட சிற்றின்ப
சுகத்துக் குட்பட்டு ஒருவருக்கும் மணமாலை சூட்ட மாட்டேன் என்றந்தையே.
-------
இராசன் கடவுளை நினைந்து சொல் விருத்தம்.
அரகரா சொக்கநாதா ஆட்சிமீ னாட்சித்தாயே
பெருமை சேருலகையாளப் பிள்ளையை யீந்திடாமல்
மருமணம் வேண்டாமென்னும் மகளையென்றனுக் களிக்கத்
திருவுளந்தனி லிசைந்தச் செயலை நானறிகிலனே
-------
வசனம்.
அரகரா சொக்கநாத சுவாமி மீனாட்சித்தாயே இந்த மதுரைப்பட்டணம்
இளவரசாளும்படியாய் ஆண்பிள்ளை வேண்டியதற்கு ஒரு பெண்பிள்ளையை
அருளிச்செய்தீர்களே திருவுளச்செயலிப் படியிருந்தால் நானென்ன செய்வேன் தெய்வமே.
-------
இதுவும் பாண்டியன் கடவுளை நினைத்து விசனப்படுகிற தரு
இ-ம் - புன்னாகவராளி - அடதாளம்
கண்ணிகள்.
வெங்கயமுகனையருள் கங்கையொடு திங்களணி
வேணியே - சூல பாணியே -வடி
வேல் முருகனையுதவும் சேல்விழியுமை மருவும்
மெய்யனே - என்ற னையனே
பங்கயனுமாலு முல கெங்குந்தேடறியாமலர்ப்
பாதனே - சொக்க நாதனே ஒரு
பாலனில் லாப்பாக்கியமினிமேலென்ன சிலாக்கிய மென்றன்
பட்டமும் செங்கோல் திட்டமும்
நிகரில்லா எழின் மதுரை நகரில் பொன் முடிதரித்து,
நிலத்திலே - சந்திர குலத்திலே
நீதிவழுவாமலிந்த மேதினியாள்வதென்னுடன்
நின்றுதே - காலம் சென்றுதே
பகருமென்வார்த்தையைக்கேளாய் மகளைப் பெற்றும்
பிள்ளையில்லாப் பாவினான் படு பாவினான் - இந்தப்
பாரினிலெனக்குப் பின்னிங் காரினி ராச்சியபாரம்
பண்ணுவார் பிள்ளை யெண்ணுவார்
சித்திராங்கதைக்கு மணம் செய்யவும் அனேகவார்த்தை
செப்பினேன் மிகுந்த கற்பினால் அவள்
சிவனிரு பாதத்தைக் காணும் - தவநெறியைக் கண்டுமனந்
தேறினாள் - வார்த்தை கூறினாள்
மகள் வயிற்றினிற் பிறந்த மைந்தனைப் புத்திரசிகாரம்,
வாங்கவே - செங்கோல் தாங்கவே இந்த
மண்ணிளவரசுசெய்ய எண்ணின எண்ணமும்பொய்யாய்
வாச்சதே - தப்பிப் போச்சுதே
இகபரந்தனிலுமின்பம் சுகந்தருங் கதியைக்காண்ப
தெப்படி முன்னோர் சொற்படி கையால்
எள்ளுந்தண்ணீருமிறைக்கப் பிள்ளையில்லாப்பாவியானேன்
ஈஸ்வரா ஜெக தீஸ்வரா
பாலனற்றப்பாவியென்று பாரிலெலைன்னயேச காலம்
பலித்ததோ - மனஞ் சலித்ததோ - விட
பன்னகாபரணனேநான் புன்னாகவராளிராகம்
பாடினேன் மெத்த வாடினேன்
-------
இராஜன் சித்திராங்கரைக்குச் சொல் - விருத்தம்,
கதிதரும் சொக்கநாதர் கழலடியிணை யைக்காண
பதிவிரதங்கள் பூண்டபாவை சித்திராங் கித்தாயே
துதிபெறுநமது செங்கோல் துரைத்தன மழிந்துதானால்
மதிபெறுமுல கையாளும் மன்னர்கள் நகைத்திடாரோ
-------
வசனம்.
பேரின்பத்துக்குரிய சொர்கபதவியைக் கொண்டிருக்கும் சொக்கநாதசுவாமி
திருவடியைக்காணத் திவ்விய பதிவிரதங்கொண்டிருக்கும் சித்திராங்கதை அம்மணி
இந்த மதுரைப்பட்டணம் அரசாளும் நமது செங்கோலும் துரைத்தனமும் அழிந்து
போச்சுதானால் நம்மைப் பூலோகத்திலிருக்கப்பட்ட இராசாதிபதிகள் நகைக்க
மாட்டார்களா நானென்ன செய்வேன் அம்மணி
-------
சித்திராங்கதை - தந்தைக்குச் சொல் விருத்தம்,
நகைத்து முப்புரமெரித்த நாதர் தன்னருளால் நம்மை
பகைத்த சத்துருவை வென்று பாரரசாள் வேனல்லால்
வதைத்திடு முலகிற்பொய் வாழ்கைமெய் யெனச்சிற்றின்பம்
சுகத்திற்குட் பட்டுமாலைச் சூட்டவு மாட்டேனையா
-------
வசனம்.
கேளும் என்றந்தையே நம்மை நகைக்கின்றவர்களும் பூலோகத்தி லிருக்கின்றார்களா?
நானென்ற ஆணவங்கொண்ட முப்புராதிகளைச் சிரித்தெரித்த பரமசிவன் கிருபையினாலே
தம்மைப் பகைத்த சத்திராதிகளைச் செயித்து இளவரசு பட்டங் கட்டிக்கொண்டுவா
ராச்சியபாரம் பண்ணுவனேயல்லாமல் பூலோக மாய்கை யென்னும் பொய்வாழ்வுக்குரிய
சிற்றின்ப சுகத்திற்குட்பட்டு ஒருவருக்கும் மாலைசூட்ட மாட்டேன் என்னுடையதந்தையே,
-------
சித்திராங்கதை தந்தையினருகில் வியசனப்படுகிற தரு
இ-ம் புன்னாகவராளி - அடதாளம்
(கண்ணிகள்)
சிவசிவா நானிந்தத் தீமொழிக்கேட்கவோ – தந்தையே - பெண்
செனனமெடுத்துத் தெருவில் வந்தேனையோ தந்தையே - இந்தப்
புவனத்தில் தானொரு புருஷனைத் தேடியே - தந்தையே - நல்ல
பூமாலை சூட்டிப் புணரவுமாட்டேனான் - தந்தையே காமக்
குரோதலோப மோகமத மாச்சரியமெனுந்தந்தையே - பொல்லாக்
கர்மவலையினிற் கட்டுப்பட்டுமலாமல் - தந்தையே- சோம
சேகரனென்று சொல் சொக்கநாத சுவாமி – தந்தையே - மலர்த்
துணையடி கண்டவற் கிணையுண்டோசொல்லுமென் - தந்தையே
மாயஞ்சேருமுலகவாழ்வினை மெய்யென்று - தந்தையே - நல்ல
மருமணஞ் செய்வதில் வருகுணமேதையா தந்தையே - ஒரு
சேயைப் பெறுவதும் செல்வத்தைப்பெறுவதும் தந்தையே - வருஞ்
செனனமரண மென்றுதீவினைக்கிடமல்லோ தந்தையே - நல்ல
பதிவிரதங்கொண்டிப் பாவத்தைப்போக்கினால் தந்தையே - ஆதி
பரமசிவனு நல்லவரமெனக்குத் தருவார் - தந்தையே - ஆதி
மதுரை மீனாட்சி பொற்பாத மலரைக்கண்டு - தந்தையே - இந்த
மானிலமுன்றன்பின் நானர சாளுவேன் - தந்தையே - தீர
மன்னர்க்குயீடாய் மணிமுடி சூட்டுமென்- தந்தையே - செங்கோல்
கன்னிச்செலுத்த புன்னாகவராளிச் சொன்னேன் தந்தையே
இராசன் - சித்திராங்கதைக்குச்சொல் விருத்தம்,
இளவரசா ளுவேனென் றியம்பு மென்மகளே நீதான்
உளமகிழ்ந் துலகையாளும் உன்றனுக் கனித்தியம்வந்து
களங்கறுத் தவருக்காளாங் காலத்திலுனக் குப்பின்பு
வளமிகுமதுரை யென்னும் மாநக ராள்வதாரோ
-------
வசனம்
கேளாய் சித்திராங்கதை அம்மணி நல்ல பதிவிரதத்திலிருந்து இந்த மதுரைப்பட்டணம்
இளவரசாள் வேனென்று சொல்லுகிறாய். உனக்கு
அனித்தியகாலஞ் சம்பவித்து கண்டங்கறுத்த பரமசிவன் ஆட்கொள்ள
வருங்காலத்தில் இந்த மதுரைப்பட்டணம் அரசாள்வது ஆர் எனக்குத்
தெரியச்சொல் அம்மணி.
-------
சித்திராங்கதை தந்தைக்குச் சொல் விருத்தம்
பதிவிரதங்கள் கொண்டிருப்பாரரசாளுநாளில்
நதிமதியணியுஞ் சொக்கநாதர் மீனாட்சியம்மன்
கதிதந்தென்றனையாட்கொள்ளுங்காலம் வந்துற்றபோது
மதிமந்தரி குமாரர்கட்கு மணிமுடி சூட்டிவைப்பேன்
-------
வசனம்
கேளும் என்றந்தையே நான் கொண்ட பதிவிரதா தபோபலத்தால் இந்த மதுரைப்பட்டணம்
இளவரசாளும் எனக்கு அனித்தியத்தில் கங்கையையும் மூன்றாம் பிறைச்சந்திரனையும்
தரித்த கடவுளாகிய சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மன் சமேதராய் எழுந்தருளிவந்து
பாததரிசனம் தந்து என்னையாட்கொள்ள வரும்போது நம்முடைய மந்திரிகுமாரர்களுக்கு
இந்த மதுரையைப் பட்டங்கட்டி வைப்பேன் என் தந்தையே,
-------
இராசனுக்கும் சித்திராங்கதைக்கும் சம்வாதம்
முகாரி இ-ம்-அட தாளம்
மந்திரிகளிந்த மதுரையரசாள
மணிமுடி சூட்டுவே னென்றாய் - ஈசன்
றுணை யடிகாட்டுவே னென்றாய் - சொல்லும்
தந்திரமிகுந்த மகேந்திரசாலவித்தை
தானெங்கே கற்றாய் - என்மகளே
சித்திராங்கதை - இராசனுக்குச்சொல் - தரு
மேற்படி ராகம் தாளம்,
கற்றதிந்திர ஜாலவித்தையென்றீர் முடி
காணியையாள சூட் -டேனோ - கொன்றை
வேணிகளாக மாட் டேனோ - என்னைப்
பெற்றதகப்பனுடன் கற்றவித்தைகளை நான்
பேசுதெவ்விதம் தந்தையே
இராசன் - சொல்லல்,
பேசினதாலொன்றும் மோசமில்லையென்றன்
பெண்ணரசே நீயிப்போது இந்த
மண்ணரசாளத் தகாது புகழ்
காசினிதன்னிலோ ராசகுமாரனைக்
கல்யாணஞ்செய்து கொள் - மகளே
சித்திராங்கரை சொல்லல்
கல்யாணமென்று நீசொல்லவேண்டாம் வரும்
கணவனுக்குட்பட மாட்டேன் - ஒரு
மணவனுக்கே மாலை சூட்டேன்- இந்த
எல்லையிற் பிறப்பென்னும் அல்லலறுத்தென் வஜென்மம்
ஈடேறவே வேணுமென் - தந்தையே
இராசன் - சொல்லல்
சென்மம் ஈடேற நற்சின் மயமாம்பொருள்
தேடவுமெய்ந்நெறிக் கண்டாய் முடி
சூடவும் பொய்வெறி - கொண்டாய் இனி
உன்மனதின்படி பொன்முடிசூட்டினால்
உலகரசாள்வாயோ - மகளே
சித்திராங்கதை சொல்லல்
உலகரசாள தான் பலகலைக் கியானங்கள்
ஓதிக்கல்விக - ளறிந்தேன் மநு
நீதியெல்லாம் - தெரிந்தேன் படு
கொலைகளவு செய்வோர் தலைகளைக்கொய்து செங்
கோலும் செலுத்துவன் - தந்தையே
இராசன் சொல்லல்,
செங்கோல் செலுத்துமுன்னே இங்கோர் மன்னவனுன்னைத்
தேடி வந்தாலென்ன - செய்வம்-விதி
கூடிவந்தால்சொன்ன - தெய்வம் ஒருவர்
பங்கோ உன்றனுக்கென்ன பெரங்கோ முகாரிராகம்
பாடியழ வேண்டா - மகளே
சித்திராங்கதை சொல்லல்.
என் பங்கில் மீனாட்சி அன்பிங்கிருக்கத்தாட்சி
ஏளிதமோசம் - வராது வந்தால்
தூளிதமாகும் - சேராது - பேர்
இன்பங் கிடைக்கும் திரேகம் அன்பாய்முகாரிராகம்
இயம்புவன்கேளுமென் -- தந்தையே
-------
இராசன் மந்திரிக்குச் சொல் விருத்தம்
காலமோர் மூன்றுமுள்ளங் கைநெல்லிக்கனி போற்றேர்ந்து
ஞாலமாள் பவர்க்குரைக்கும் நல்லமைச்சர் களேகேளிர்
சீலமாம் எனது பெண்ணாம் சித்திராங்கதைக்கிப் போது
கோலமாமகு டஞ்சூட்டக் குறிப்பறிந்துரை செய்விரே
-------
வசனம்
வருங்காலம் நிகழ்காலம் செல்காலம் என்னும் திரிகாலமும் உள்ளங்கை நெல்லிப்பழத்தைப்
போலக் காண்பிக்கும் மந்திரிகளே வாருங்கள் எனது பெண்ணாகிய சித்திராங்கதையை
விவாகம் பண்ணிக் கொள்ளச் சொல்லி எத்தனை சொன்னாலும் கேளாமல் நம்முடைய
இராச்சியம் நானே ஆள்வேனென்று பிடிவாதமாய்ச் சொல்லுகிறாள். ஆகையால்
கர்த்தருடைய செயல் இப்படிக்கிருந்தால் நாமென்ன செய்வோம் நீங்கள் ஒருயோசனை
சொல்லுங்கள் மந்திரிகளே,
-------
மந்திரி - இராசனுக்குச் சொல் விருத்தம்
சொல்லிய வார்த்தை தள்ளிச்சுடர் முடிசூட்டுமென்ற
மெல்லியையென்ன செய்வோம் மேதினிமுழுதுமாள
வல்லவள் போலே சொன்ன வார்த்தையால் தெரியாதிந்த
சல்லியம் நமக்கேன் பாரத் தலையினிலிரக்குவோமே.
-------
வசனம்
கேளும் இராசபரமேஸ்பரா நாம் விவாகம் பண்ணிக்கொள்ளென்றுச் சொன்ன வார்த்தையைத்
தள்ளிப்போட்டு நானே இராச்சியபாரம் பண்ணுகிறேனென்று சொன்ன சித்திராங்கதையம்மாள்
திராணியைச் சிலகாலம் பார்ப்போம் சுமை எடுத்த பிறகல்லவோ தெரியும்.
எடுக்காமற்போனால் சொல்லுக்குசளுவுதான் சும்மா மகுடாபிஷேகஞ் சூட்டுவீர் சுவாமி.
-------
இராசன் சித்திராங்கதைக்குச்சொல்—விருத்தம்.
திருமகள் நிகராய் வந்த சித்திராங்கதையே நீயும்
ஒருமகளாயெனக்கு உதித்ததால் உன்றனுக்கு
தருமசாஸ்திரப்படிக்குத் தக்கமாமகுடஞ் சூட்டி
பெருமை சேருலகமெல்லாம் பெண்ணரசாள வைப்பேன்
-------
வசனம்
கேளாய் என்னம்மா சித்திராங்கதையே உன்மனதின்படியே. மகுடாபிஷேகந்தரித்து
இராச்சியபாரம் பண்ணும்படி செய்விக்கறேன் நீ ஒன்றுக்கும் அஞ்சவேண்டாம் அம்மணி,
சித்திராங்கதை சொல் - வசனம்,
அப்படியே செய்வது என் பாக்கியம் ஐயா சுவாமி
மந்திரிகளுக்குச்சொல் விருத்தம்,
வந்தனஞ் செய்து நிற்கு மந்திரிமாரே கேளிர்
செந்திருநிகராய் வந்த சித்திராங்கதைக்கிப்போது
சுந்தரமகுடஞ் சூட்ட சோசியம்பார்த்துச் சொல்லும்
அந்தணர் தம்மையிப்போ அழைப்பீரமைச்சமாரே
-------
வசனம்
கேளுங்கள் மந்திரிமார்களே நமது அம்மாள் சித்திராங்கதைக்கும் இந்த
மதுரைப்பட்டணத்தை யரசாளும்படியாய் பட்டந்தரிக்க வேணும் ஆகையால்
திதி- வாரம்- நட்சத்திரம்- யோகம்- கரணம் என்று சொல்லா நின்ற பஞ்சாங்கப்
பிராமணாளை அதிசீக்கிரமாய் அழைப்பியுங்கோள்-மந்திரிகளே,
மந்திரிகள் சொல் வசனம்.
அப்படியே அழைப்பிக்கிறோம் மகாராசனே
-------
மந்திரிகள் கட்டியக்காரனுக்குச்சொல் விருத்தம்
இட்டமாந்தன துபுத்திரி யினியசித்திராங்கதைக்குப்
பட்டமுங்கட்டி வைத்துப் பாரரசாளச்செய்ய
வட்டவாரிதி குழிந்த வளமை சேர் மதுரைமன்னன்
பொட்டெனவழைத்தா ரென்று புரோகிதர்க்கறிவிப்பாயே
-------
வசனம்
ஆரடா அடா ஆசாரவாசற்காக்குங் கட்டியக்காரா நமது இராச
குமாரத்தியாகிய சித்திராங்கதையம்மாளுக்குத் திருமுடி சூட்ட வேண்டுமென்று
சொல்லி நமது புரோகிதனை அதிசீக்கிரத்திலழைத்துக் கொண்டுவாடா,
-------
கட்டியம்- மந்திரிக்குச் சொல்- வசனம்,
அப்படியே அழைத்துவருகிறேனையா
-------
கட்டியன்- வேதியருக்குச்சொல் விருத்தம்,
வண்மையாய் மதுரைநாட்டில் வாழ்புரோகிதரே போற்றி
பெண்மயிலெனுஞ் சித்ராங்கதை பேருலகாளவேண்டி..
உண்மையாய் சாஸ்திரங்கள் ஓதபாண்டியன் றானும்மை
தன்மையா யழைத்துக்கொண்டு க்ஷணமதில் வரச்சொன்னாரே
-------
வசனம்
தெண்டம் தெண்டம் சுவாமி புரோகிதரே பாண்டிய மகாராசன் தன்
மகளுக்குப் பட்டங்கட்ட நல்ல நாள் பார்க்கவேண்டியிருப் பதினாலும்மை
அழைத்துவரச் சொன்னார் வாருமையா சுவாமி,
-------
புரோகிதர் சொல் வசனம்.
அப்படியே இதோவருகிறேன் கட்டியக்காரா.
-------
புரோகிதர்வருகிற பொது சந்தவிருத்தம்,
பூசியசந்தனவாசமு மார்பினிற்பொற்புரி நூலொடுகை
வீசியபுத்தகநேசமு மெய்யில் விளங்கிய வெண்ணீறும்
சோசியரெனும் விசுவாசபிரகாசமும் சொற்பகராமுன்னம்
ஆசையனேகமும் பேசியபுரோகித அந்தணர் வந்தனரே.
-------
புரோகிதர் வருகிற தரு -இம் கல்யாணி-சாப்புதாளம்,
பல்லவி,
புரோகிதர்நாங்களே -வேத புரோகிதர் நாங்களே
அநுபல்லவி,
பிராமண குலசிரோன் மணியென
பேசும்புகம் ஒங்கவிசும்பஞ்சாங்க (புரோகி)
சரணங்கள்.
அகத்தில் நினைத்தப்பொருளேயின்னதென்
றறிந்து சொல்லுவோம் - இந்த
ஜகத்திலெங்களைப்பகைத்த அந்தணர்
திரளை வெல்லுவோம் - நாலு
யுகத்திலுமண முகூர்த்தம் பார்ப்போம்
ஊரில் ஒருபிழைவாராமல் கார்ப்போம்
சுகத்தில் கர்மஞ்செய் தவத்தைத் தீர்ப்போம்
சூட்சத்திலேமுத்தி மோட்சத்திற் சேர்ப்போம் (புரோ)
ஞாயிறுதிங்கள் செவ்வாய்புதன்வியாழம்
நல்லவெள்ளிசனியை - மிக்க
தீயராகு கேதுக்களை யுள்ளங்கைச்
சேரும் நெல்லிக்கனியைப் போல
தூய மேஷ முதல்ரிஷப மிதுனம்
துங்கக்கடகமும் சிங்கங்கன்னிதினம்
சாயும்விருச்சிகம் தனுசுமகரம்
சம்பிரமதாகிய கும்பமீனமெனும் (புரோ)
பட்சத்திலோர் பதினைந்தும்தினராசி
பன்னிரண்டுங் குறித்து வான
நட்சத்திரம் பகரிருபத்தேழு
நாள்களையும் பிரித்து நல்ல
சொட்க்ஷேத்திரத்திற் சுபகிரகமேவ
துஷ்ட கிரகங்கள் அஷ்ட முந்தாவ
லட்சத்தெண்பத்து நாலாயிரஞ்சீவ
ராசிபேதங்களைப் பேசுங்கல்யாணியிற் (புரோ )
இராசன் புரோகிதருக்குச்சொல் விருத்தம்,
ஐயரேபோற்றி போற்றி ஆகமக்கடலேபோற்றி
பொய்யுரையாத வேதபுரோகித வாழ்வேபோற்றி
மையிருவிழி சித்திராங்கி மகுடாபிஷேகஞ் செய்ய
தையலாள் பேர்வழிக்குச் சாஸ்திரம் பார்த்துச் சொல்வீர்
-------
வசனம்
தண்டம் தண்டம் சுவாமி தண்டம் வாருங்கள் இந்த சிம்மாசனத்தில்
உட்காருங்கள் என் மகளாகிய சித்திராங்கதைக்கு இளவரசுப்பட்டம் தரிக்க
வேணும். ஆதலால் அவள் பேர்வழிக்குப் பஞ்சாங்கப் பலன் பார்த்து சொல்ல
வேணும் சுவாமி.
-------
புரோகிதர் வசனம்,
அப்படியே பார்த்துச் சொல்லுகிறோம் மகாராசனே
-------
புரோகிதர் - இராசனுக்குச்சொல் விருத்தம்,
பட்டமுந்தரிப்பேனென்ற பாண்டியா ஆசீர்வாதம்
மட்டவிழ்குழல் சித்திராங்கிமாது பேர்வழிக்குப் பார்த்தால்
அஷ்டம சுத்தியில்லை ஆதலால் அவள் தன்செங்கோல்
முட்டவும் நில்லாதென்றே மொழியு சோசியங்கள்
-------
வசனம்
ஆசீர்வாதம் பாண்டியமகாராசனே, உன் மகளாகிய சித்திராங்கதைக்கு
இளவரசு பட்டங்கட்டும்படியாய் அவள் பேர்வழிக்குப் பஞ்சாங்கப் பலனைப்
பார்த்தால் எட்டாமிடஞ்சுத்தியில்லை. ஆதலால் அவள் பட்டம் முழுதிலும் நிற்கமாட்டாது.
அவள் வயிற்றிற் பிறந்த பிள்ளை இளவரசாளும்படியாயிருக்குது. ஈஸ்வர யெத்தனம்
எப்படி முடியுமோ தெரியாது. ஆகிலுங் குறைவில்லை பட்டங்கட்டலாம் மகராசனே.
-------
இராசன் வேதியருக்குச்சொல் விருத்தம்.
குறைவில்லை யென்றபிர்ம்ம குலசிரேஷ்டர்களே அந்த
இறைவனுக்கடிமையான என் மகள் சித்திராங்கிக்கு
மறை மொழிப்படிக்கு ரத்தினமகுடாபிஷேகஞ்செய்ய
நறைமலர் விரியுமார்பா நல்ல நாள் பாருமையா.
-------
வசனம்
கேளும் சுவாமி புரோகிதரே பாமசிவன் பாதாரவிந்தத்திற் கஉமையான பதிவிரதத்திலிருக்கும்
சித்திராங்கதைக்குப் பட்டாபிஷேகஞ் செய்ய நல்ல நாள்
பார்த்து சொல்லுமையா சுவாமி
-------
புரோகிதர் வசனம்,
அப்படியே சொல்லுகிறோ மகாராசனே.
புரோகிதர் பட்டாபிஷேகத்திற்கு நாள் பார்க்கிற தரு
இராகம் – மோகனம். தாளம் - மீசுரம்.
பட்டாபிஷேக நாளாய்ப் பஞ்சாங்கத்தைப் பார்த்துச் சொல்வோம் கேளாய்
அஷ்டாங்க யோகங்கண் டாகாத நாள் போக்கி
மட்டாரும் பூங்குழல் மாது சித்திராங்கதைக்குப் (பட்டாபி)
சித்திரை யஸ்த மிருகசீரிஷம் ரோகணி சுவாதி
உத்திரமா திரையுந் திருவோண மவிட்டம் ரேவதி (பட்டாபி)
திதியிற் பஞ்சமியுடன் திரையோத சிதனை நாடி
விதித்திருதியைச் சத்தமி வியாழம் வெள்ளி வாரந்தேடி (பட்டாபி)
துஷ்டகோளாறும் பன்னொன்றும் சொல்லுமூன்றினுமதிக்க
இஷ்டகோளொன்பது பன்னென்றேழு மோகனம்படிக்கப் (பட்டாபி)
-------
புரோகிதர் நாள் வைத்துச் சொல் ஆசிரிய விருத்தம்
சித்திரை மாதந்திடத் தொருபத் தாந்தேதியி ன்மேதினியில்
சீர்பெறுநற்குருவாரமுதற்றிரையோதசி யாந்திதியில்
உத்திரமெனும் நட்சத்திரமுஞ் சுபயோகமும் சொற்கரணம்
ஊனமிலாமலே மானவதனில் வந்துதித்திடும் நாழிதனைப்
பற்றியிலக்கணம் வைத்தமுகூர்த்தமோர் பதினெழுநாழிகைமேற்
பார்புகழ்கடகவிலக்கின்மெனமறைபகருமிச் சுபதினத்தில்
க்ஷத்திரியகுலத்தி லுதித்திடும் பாண்டியன்றன் மகள் சித்திராங்கதை
சதுர்மறை சொற்படி மதுரையில் மணிமுடி தாங்குவதின்னாளே.
-------
இதுவுமது
சீறு நல்லிராகுகேது சேய் சனியிரவிமூன்றும்
ஆறும்பன்னொன்று நிற்க அஷ்டமஞ்சுத்தியாக
தேறுசந்திரன் வியாழந்திகழ் வெள்ளி புதன் நாலேழும்
கூறுமொன்பதும்பன்னொன்றுங் கொள்ளலாமகுடந்தானே
-------
வசனம்.
கேளும் பாண்டியமகாராசனே- சித்திரைமாதம் பத்தாந்தேதி வியாழக்கிழமை
திரயோதசி நாழிகை உத்திர நட்சத்திரம் - கட்டுதாம். சுபநாமயோகம் கவுலவாகரணம் -
இராத்திரி- மேல் -தியாச்சியம் இராகுகாலம்பூச்சியம்- லக்கினத்திலே சுக்கிரனிற்க,
அஞ்சாமிடத்தில் சந்திரனிற்க, ஏழாமிடத்திலே குருநிற்க, ஒன்பதாமிடத்திலே புதனிற்க,
இப்படிச் சுபக்கிரகங்கள் நிற்க, பாபக்கிரகங்களாகிய இராகு-கேது சனி- செவ்வாய்
சூரியன் இவர்கள் மூன்றாமிடத்திலும் பாபக்கிரகங்களும் நிற்க இப்படிக்கிரகங்கள்
பகை நீச்சமில்லாமல் உச்சத்தில் நிற்க எட்டாமிடம் சுத்தியாயிருக்க இச்சுபதினத்தில்
உதித்த பதினைந்துநாழிகைக்கு மேல் கடகலக்கினத்தில் பட்டாபிஷேகத்திற்கு நாள்
பார்த்து வைத்திருக்கிறேன். இனிமேல் நடக்கவேண்டிய காரியம் பார்க்கலாம்
பாண்டியமகாரானே,
சமஸ்த மங்களானி பவந்து.
-------
இராசன் மந்திரிக்குச்சொல் விருத்தம்
எழில்பெறு மந்திரிமாரே யென்னிட மகட்கிப்போது
அழகுள முடிதரித்து அவனியை யாளச்செய்ய
பொழில்மிகு வேதங்கற்ற புரோகிதர் சொன்னதாலே
இழிவுளதானம்வாங்கு மெல்லோர்க்கும் தெரிவிப்பாயே
-------
வசனம்.
கேளும் எனது புத்திக்கிசைந்த உத்தமமந்திரி எனது குமாரத்தியாகிய சித்திராங்கதையம்மாளுக்குப்
பட்டாபிஷேகஞ் செய்விக்கும்படியாய் சோசியப்பிராமணர் சொன்னபடியினாலே ஆதுலர்
முதலாகிய அனைவரையும் இவ்விடம் வரும்படியாய்த் திட்டஞ்செய்வியு மந்திரி
-------
மந்திரி -இராசனுக்குச் சொல் வசனம்
அப்படியே மகாபாக்கியம் பாண்டிய மகாராசனே
-------
மந்திரிகட்டியனுக்குச்சொல் விருத்தம்.
கட்டியக்காரா கேளாய்கன்னிசித்திராங்கதைக்கும்
பட்டமுந் தரித்து வேண்டும் பரிசமுங்கொடுக்கவேண்டும்
மட்டிலாப் பிச்சைக்காரர் மறையோரும் வருவிரென்றும்
திட்டங்கள் செய்வதன்றி ஜெயகண்டி யறைவிப்பாயே
-------
வசனம்.
ஆரடா வாசற்கட்டியக்காரா நமது சித்திராங்கதை அம்மாளுக்குப்
பட்டாபிஷேகஞ் செய்து அனேக தானதருமங்கள் கொடுக்க வேண்டும்.
ஆதலால் பூமியிலுள்ள பிராமணாள் முதலாகிய பிச்சைக்காரர்கள்
வரும்படியாய்த் திட்டஞ்செய்வதுமன்றியில் செயகண்டி போட்டுவையும்
பிள்ளாய்,
-------
கட்டியன் சொல் வசனம்.
அப்படியே செய்து வைக்கிறேன் சுவாமி.
-------
கட்டியக்காரன் – யாவருக்குஞ்சொல் - விருத்தம்,
பூதலமெங்கும் புகழும் பாண்டியன்றன் புத்ரி சித்திராங்கதை சொக்க
நாதர் தன்னருளால் மணிமுடி தரித்து நவில் பலதான செய்கின்றார்.
ஆதலாலுலகில் வாழ் மறையோர்கள் அனைவரும் வருவதல்லாமல்
காதலாயன்ன மளிக்கின்றோம். பிச்சைக்காரரும் வந்தருள்வீரே.
-------
வசனம்,
பாண்டிய மகாராசன் குமாரத்தியாகிய சித்திராங்கதை அம்மைக்கு நாளையதினம்
பட்டாபிஷேகமானபடியினாலே அனேக தானங்கள் கொடுக்கப்போகிறார்கள்.
ஆதலாலந்தத் தானங்கள் வாங்கிக்கொள்ளும்படியாய் பூமியிலுள்ள பிராமணகூட்டங்கள்
வருவதல்லாமல் அனேகம் பிச்சைக்காரர்களும் வரக்கடவீர்கள்.
-------
பொது மட்டுவிருத்தம்,
பறையறைந் துரைத்த உரையதுகேட்டு
நிறையவே யெங்கும் மறையவர் வந்தார்
-------
கட்டியக்காரன் சொல்-வசனம்,
அகோதெப்படியென்றால் சித்திராங்கதை யம்மாளுக்குப் பட்டாபிஷேகம் செய்யப்
போகிறபடியினாலே அதற்காக சர்வத்திராளும் வருகிற விதங் காண்க.
பிராமணாள் யாவரும் வருகிற தரு: இ-ம் மோகனம் அடதாளம்.
-------
கண்ணிகள்
சித்திராங்கதைபட்டாபிஷேகத்திற்கெல் ...லோரும்
திரளாய்ப் போக … … வேணும் - நல்ல
சத்திய சம்பன்னனாம் பாண்டியமகாராசன்
சற்புத்திரனாங் … … காணும்
குருட்டுக்கண்ணா வரதா முரட்டுக் குப்பாகிருஷ்ணா
கூட நடந்து ... ... ... வாரீர் - பொல்லாத்
திருட்டுத்தனமுங் கெட்டப் புரட்டுத்தனமுஞ்செய்யும்
சேஷன்வாரானோ ... ... பாரீர்.
நீண்ட வழியெல்லாம் தாண்டி நடந்தொரு
நிமிஷத்திற்போக … … வேணும் தொம்பைக்
கூண்டுபோலசைக்க வேண்டாம் நடந்து நீர்
கூடவாருங் … … காணும்
கொள்ளை கொள்ளையாக வெள்ளியுஞ் செம்பொன்னும்
கோடிகொடுப்பா … … னாம் - வந்த
கள்ளரையப் புறந்தள்ளி முக்கோணத்தில்
கட்டியடிப்பா … … னாம்
கட்டுவர்க்கங்களில் பட்டஞ்சுதோவத்தி
சட்டமாக … …. எடுப்பான் இந்த
அஷ்டதிக்கும்புகழ் பாண்டியராசன்
அனைவருக்கும் … ….கொடுப்பான்
தட்சணை யென்ன வோர் லட்சம்பொன்னைவாரித்
தட்டிலெடுப்பா … … னாம் எடுத்த
தட்சணம் பிராமணாள் பட்சமுடன்கொள்ள
தாராளமாய்க் கொடுப்பா ... ... னாம்
தன்மையதாய்க் கட்டிப் பொன்முகப் பல்லக்கை
நமக்களிக்க சொன் … …னால் அதை
என் மகனுக்கும் எனக்கும் தந்தாற்குறை
எப்படி போனா … … லென்ன
ஆத்திரமென்னகாண் சுரோத்திரிய அப்பண்ண
ஐயங்காரே … …. நீரும் வயதில்
மூத்திடுங் குப்பண்ண சாஸ்திரியையுடன் கூட்டி
முன்னம் நடந்து .... ..... வாரும்
விங்களமில்லாமல் தங்கப் பவுத்திரம்
விரலுக்கிடுவா ... ... னாம்-ஜெய
மங்களம்பாடிய மாதருக்குமுத்து
மாலைகள் போடுவா ... .... னாம்
இத்தனை தானம் அளித்தும் மறையோரை
இன்னமுந்தேடுவா ... .... னாம்
கற்றபுலவர்க்கு ரத்தினக்குண்டலம்
காதிற்குப்போடுவா ... .... னாம்
பைம்பொன் அனேகமும் சம்பிரம தாயள்ளிப்
பார்த்துக் களிப்பா ... ... னாம் - நந்தி
நம்பனடியவர் செம்பொற்பதங்களை
தன்மோகனத்தாற் பாடி ... ... னான்
-------
கட்டியன் சொல் - பொது விருத்தம்
ஜெகதலமைம்பத்தாறு தேசத்தில் வாழுமன்னர்
சகலரும் வந்துசித்திர சபைதனிற்சேர்ந்தபின்பு
நகரலங்காரஞ் செய்து ஞானசித்திராங்கதைக்கு
பகருலகங்களாளப் பட்டமுந் தரிக்கின்றாரே.
-------
வசனம்.
இவ்விதமாக - அங்கம் அருணம் – அவந்தி- ஆந்திரம்- இலாடம் – ஏவளம் -ஒட்டியம் -கருமம்
கலிங்கம் கன்னடம் கன்னாடம்- காசம் -காஸ்மீரம்- காந்தாரம்-காம்போஜம்- திராடம்-குருகு-
குடகம் - குந்தளம்-குரு- குளிந்து -கூற்சரம்- கேகயம்- கேரணம்- கொங்கணம்- கொல்லம்-
கோசலம் -சரகம்- சவ்விரம்- சாளவம் -சிங்களம் –
சிந்து – சிணம்- சூரசேனம்-சோனகம்- சோஷம் -திராவடம்- துருவம் - தெங்கணம் –
புளிகதம்- போடம்- மகதம்- மராடம்- மலையாளம் - மாளவம் -மச்சவம்- யுகந்தம்-
வங்கம்- வங்காளம்- விற்பம்- பாண்டிய தேசம்- முதாலாகிய ஐம்பத்தாறு தேசத்தரசர்களும்
அநேக பிராமணக் கூட்டங்களும் தேவரிஷிகள் முதலாகிய சமஸ்தமானபேரும் மதுராபுரி
பட்டணத்தில் வந்து நிறைந்திருக்கப் பட்டணமெங்கும் அலங்காரஞ்செய்து சித்திராங்கதைக்குப்
பட்டாமஷேகஞ் செய்கின்ற விதங்காண்க.
இராஜன் சித்திராங்கரைக்கு சொல் கவி,
கண்மணிச்சித்திராங்கதையெனு மென்றன்
அம்மணியிப் பெரியாசனந் தன்னில்
பொன்மணியிருந்து பேருலகாளச்
செம்மணி மகுடம் சிரமணிவாயே
வாராய் என் கண்மணியாகிய சித்திராங்கதையே
நீ இந்தச் சிம்மாதனத்திலிருந்து இந்தத்
திருமதுரையை இளவரசாள கையிலே செங்கோலும்
சிரசிலே தங்க மகுடமுந் தரித்துக்
கொள்ளுவாய் அம்மணி.
-------
சித்திராங்கதைசொல் - வசனம்.
அப்படியே மகா சந்தோஷம் என்றந்தந்தையே.
நகரலங்காரம் செய்கிற தரு இ-ம் தோடி- ஆதி தாளம்,
பல்லவி
பட்டணம் அலங்கரித்தார் சித்திராங்கதைக்குப்
பட்டம் நுதலிற்றரித்தார்
அனுபல்லவி
அஷ்டலட்சமிகளும் இஷ்முடனென்னாளும்
அகமகிழ் பாண்டியன் மகளாந்தருமதுரை
செகமெங்கும் புகழ்செங்கோல்
செலுத்தத் திருமதுரை (பட்டணம்)
சரணங்கள்
வேழமுகனைப்போற்றினார் திகழொளிதரு நவமணி
விளக்கனந்தங்களேற்றினார் - செழிக்குமிள
வாழைக்கமுகுநாட்டி - மரகதப்பந்தல் பூட்டி
காழகிற்புகையூட்டி - கமழ் பரிமளங்கூட்டி
கற்பகப்பூமலர் - பொற்பதியெனசிலர்
சொற்பகருமநேக அற்புதமாக (பட்டணம்)
புண்ணியதீர்த்தங்கள் அமைத்தார் வேதபூசுரரனந்தம் பொற்
பூரண கும்பங்கள் சமைத்தார் பரோகிதர்கள்
நண்ணியதற்பையைக் கொய்ய நவக்கிரகவோமஞ்செய்ய
புண்ணிய குண்டத்திற்றுய்ய - பொற்பசுவின் நெய்யைப் பெய்ய
பரிகரியிரத பதமனந்தங்கள் சூழ
வருசிலையேந்திவரும் மாதரசுகந்து வாழ (பட்டணம்)
அந்தரதுந்துமிமுழங்க - திந்திமிதிமியென
அழகிய வாத்தியங்கள் வழங்க - விளங்குசெங்கோல்
தந்தை கொடுக்கவாங்கித் தங்கமகுடந்தாங்கி
மந்திரிகளான பாங்கி மார்களுடனேயோங்கி
மண்டலமெங்கும் புகழ் கொண்டரசாட்சி செய்ய
பண்டிதர் தோடிராகம் பதமலர்மழைபெய்ய (பட்டணம்)
-------
முதற்றோழி அரசிக்குப்போற்றி - விருத்தம்,
பார்புகழ் மதுரையாளப் பட்டாஷே கங்கொண்டு
கார்குழல் தனைமறைத்து கதிர்மணிம குடந்தாங்கி
ஏர்பெறுமாசனத் தில்இருந்து செங்கோ லொன்றேந்தி
சீர்பெறும் அரசுசெய்யும் சித்திராங்கதையே போற்றி
இரண்டாவது தாதி நாயகிக்குச் சொல் விருத்தம்.
க்ஷேமத்தைத் தருஞ்சொக்கேசர் தேவிமீனாட்சியம்மன்
நாமத்தை யோதியிந்த நகரரசாள் வேனென்று
நேமத்தை மறவாதிந்த நெஞ்சினில் நினைத்துப்பொல்லாக்
காமத்தை யொழித்தசித்ராங் கதையெனுந் தாயேபோற்றி
சித்திராங்கதை - தாதிகளுக்குச்சொல் விருத்தம்.
மந்திரிகளென் னுந்தாதி மார்களே சொல்லக்கேளிர்
சுந்தரிபாகனான சொக்கேசர ருளாலென்றன்
சிந்தையில் நினைத்தவெண்ணம் சீக்கிரமாய் முடிந்ததம்மா
தந்தைதேடின பொன்னெல்லாந் தானங்களளிப் போம்வாரீர்
-------
வசனம்.
வாருங்கள் என் மந்திரிகளாகிய தாதிப்பெண்களே மதுரை மீனாட்சியம்மன் சமேதராய்
விளங்காநின்ற சொக்கநாதசுவாமி கிருபாகடாட்சத்தினாலே எனது எண்ணம் முடிந்து
ஈடேறியது. இனி என்றந்தையாகிய பாண்டியமகாராசன் சம்பாதித்த திரவியமெல்லாம்
பிராமணாளுக்கும் இன்னம் மற்ற சனங்களுக்கும் பூரி கொடுப்போம் வாருங்களம்மா,
-------
தோழிகள் சொல் வசனம்.
அப்படியேகொடுப்போம்வாருமம்மணி.
சித்திராங்கதை-பூரி கொடுக்கிற தரு இம்-தோடி தாளம் - ஆதி
பல்லவி.
பூரிகொடுக்கிறோம் ... ... வாருங்கள் - கையால்
வாரிக்கொடுக்கிறோம் ... பாருங்கள்
அநுபல்லவி.
பாரினில்வாழ்கின்ற பார்ப்பாருக்கு முன்னம்
பட்சமு டன்தந்த தட்சணை யோடின்னம் (பூரி)
சரணங்கள்,
பூதான முதலான போற்றுமனேகதானம்
கோதானமும் அன்பாய்க் கொடுத்திடுவோம்நாம் (பூரி)
அன்னமும் சொர்ணமும் ஆடைகளும் பூணும்
ஆபரண மும்திவ்ய பூஷணமும்வேண (பூரி)
சந்தனந் தாம்பூலம் தாகந்தண்ணீ ருந்தேடி.
அந்தணர்க்கின்ன மளித்துந் தோடியைப்பாடி (பூரி)
-------
சித்திராங்கதை தோழிகளுக்குச் சொல் விருத்தம்,
நீதிமந்திரி களென்ன நெருங்கியென் மருங்கினின்ற
தாதிகளெல் லாம்வாரீர் தரணியின் மதுரைச்செங்கோல்
சேதிகள் யாவருக்கும் தெரிந்திட செய்வதல்வால்
வீதிகளெல் லாங்கோலம் விளங்கவே வருவோம் வாரீர்
-------
வசனம்.
நீதிமந்திரிகளாக இரண்டுபக்கமும் நெருங்கி நிற்கின்ற தாதிப்பெண்களே வாருங்கள்
என்றந்தையாகிய பாண்டிய மகாராஜனுக்குப் பிறகு நாம் இளவரசாட்சி செய்யும்
செங்கோற்றிட்டம் யாவருக்கும் தெரிவிப்பதுமல்லாமல் இந்த மதுரைப்பட்டணம்
தெருவீதிக்கெல்லாம் சிங்காரகோலம் வருவோம் வாருங்களடி சகிகளே.
-------
சகிகள் சொல் வசனம்.
அப்படியேபோகலாம் வாரும் அம்மணி
-------
சித்திராங்கதை-திருவோலக்கம் வருகிற தரு
இ-ம் அடாணா- திரிபுடை நாளம்.
பல்லவி.
கோலங்கொள்ளுவோம்வாரீர்-மகிழ்
கூறுந்தாதிகளே நாமனைவருந் தெருவீதியிலேகன (கோல)
அநுபல்லவி,
ஞாலம்புகழ் விசாலமாமதுரை
நகராள்மதி வெண்குடை தாழ செகராசர்களும் புடைசூழ (கோ)
சரணங்கள்
பொன்மணி மகுடமிலங்க - மின்
பொங்குந் திரைகடல்படை சூழுல
கெங்கும் ஒருகுடைய தனிழல் பெற
புரக்குஞ் செங்கோ லுந்துலங்க நாளும்
சென்மப்பிணி தரும் மன்மதனுங்கிட்டம்
சேராமலுங் கற்பினுக் கோர்குறை
வாராமலும் பொற்பெனும் பொன்னிறை (கோல)
செங்கையில் வளையல் மின்னவே கமழ்
சீதப்பரிமள மலர்கொண்டைப்
பாதப்பரிபுரமெனுந்தண்டை
சிலம்பு கலகலென்னவே- இளங்
கொங்கைக் குடங்களும் குலுங்க நடமிடும்
கொள்ளும் மனங்களைப்போல் நடந்து
மெள்ளத் தெருவினங்களைக் கடந்து (கோல)
நிகரில் வாளும்பிடித்து மநு
நீதியுடன் ரதகஜ துரகப
தாதிகளுஞ் சூழவென் செங்கோல்
நிலையை யாவருக்கும் படித்து - எழில்
பகருந் தென்மதுரை நகரை யரசாள
பட்டாபிஷேகமே சூடி
அடாணா ராகமேபாடி (கோல)
-------
சித்திராங்கதை கடவுள் போற்றி விருத்தம்,
மாத மும்மாரி பெய்ய மாநிலஞ் செழிக்க வேணும்
மாதரசாட்சி செய்ய மனிதர்கள் வாழவேணும்
மாதவர் முனிவர் போற்றும் மதுரை மீனாட்சியென்னும்
மாதுமை பாகரவுன்றன் மலரடிபோற்றி போற்றி
சித்திராங்கதை - தேசவிசாரணை,
மதிபரவுமென் மந்திரிமார்களாய் நிற்கின்ற
மாதரேசொல்லக்கேளீர்
மந்திரிகள் விடை
மகராசராச பரமேஸ்வரி யுன்றனது
வாய்மலர்ந்தருளுமம்மா
சித்திராங்கதை சொல்லல்.
நிதிபரவுநமது திருமதுரை யிளவரசுமது.
நீதியெங்குஞ் செல்லுதா
மந்திரிகள் விடை.
நீடாழிசூழுலக-மோர் குடையினீழலில்
நின்றரசு செல்லுதம்மா
சித்திராங்கதை சொல்லல்.
கதிபரவுதேவா லயங்கள் பிர்மாலயக்
கட்டளையெல்லாம் நடக்குதா
மந்திரிகள் விடை
கருதுநித் யோற்சவம் வருபூசை யிருமூன்று
காலமுந டக்குதம்மா
சித்திராங்கதை சொல்லல்.
துதிபரவு மென்றன் துரைத்தனத் திற்கள்ளர்
சோரரெனுஞ் சொற்களுண்டா
மந்திரிகள் - விடை
துஷ்டர்களை வெட்டிப்பலி யிட்டுதலை யைக்கட்டித்
தூக்கிவிடுவோம் அம்மணி
-------
சித்திராங்கதை மந்திரிக்குச்சொல் விருத்தம்.
வருமநு நீதியென்றும் வழுவாமலரசுசெய்ய.
வரமெனக் கருளுமந்த மதுரைசொக் கேசர்பாதம்
பரிவுடநி னைத்துப்பூசை பண்ணுவோம் தந்தைவாழும்
அரண்மனைக் கேகுவோம்பெண் ணழகியரெல் லாம்வாரீர்
-------
வசனம்.
கேளுங்கள் என் மந்திரிகளான தாதிகளே நாமிந்த மதுரைப்பட்டணம் இளவரசாளும்படியாய்
வரப்பிரசாதந் தந்த சொக்கநாத சுவாமியையும் மீனாட்சியம்மனையும் நினைந்து பூசை
பண்ணவேணும், ஆதலால் நமது தந்தையாகிய பாண்டிய மகாராஜனிருக்கும்
அரண்மனைக்குப்போகலாம் வாருங்களடியம்மா தாதிமார்களே.
-------
மந்திரிகளாகிய பாங்கிகள் சொல் வசனம்.
அப்படியே போய் வருவோம் அம்மா.
-------
அர்ச்சுனன் வருகிற பொதுவிருத்தம்
போற்றிய தாதிமார்கள் புகழ்சித்ராங்கதை யுமிப்போ
நாற்றிசையெங் குஞ்செங்கோல் நடாத்தியே வருகுங்காலை
சாற்றிய மறையோர்சூழச் சந்நியாசி வேஷங்கொண்டு
யாத்திரைப் போகவேண்டி யர்ச்சுனராஜன் வந்தான்
-------
கட்டியன் சொல்-வசனம்.
அகோதெப்படியென்றால் இவ்விதமாகச் சித்திராங்கதை தாதிகளுடனே மதுராபுரி
பட்டணம் இளவரசாட்சி செய்து கொண்டிருக்கும்போது அஸ்தினாபுரத்திலிருக்கும்
பாண்டுமகாராஜாவின் குமாரர்களாகிய பஞ்சபாண்டவர்களில் ஒருவனாகிய அர்ச்சுன
மகாராஜன் அநேக பிராமணக் கூட்டங்களுடனே தீர்த்தயாத்திரை செய்யவேண்டிய
ஸ்தலங்கள் ஆலயங்கள் தோறும் தரிசனஞ் செய்து கொண்டு மதுரைக்கு வருகிற
விதங்காண்க.
-------
அர்ச்சுனன் வருகிற தரு-இ-ம்-கலியாணி தாளம் மட்டயம்
பல்லவி
அர்ச்சுனராஜன்வந்தான் - ஜெய
அர்ச்சுன ராசன்வந்தான்
அநுபல்லவி.
மெய்ச்சுமறையவர் தம்மில் சந் நியாசி
வேஷங்கொண்டுமெய்யில்- வெண்பொடிபூசி (அர்ச்)
சரணங்கள்.
காசிஸ்தல முதல் மாசிலாத்திருவாலங்
காடும் காளஸ்திரியும் - மறை
பேசும் விரிஞ்சிபுரமும் எங்கும் பெயர்
பெற்றகாஞ்சிப் புரியும் - நல்ல
வாசந்தருந்திரு வொற்றியூர் தனில்மேவி
மயிலையீசரிருமலர்ப்பதந்தனைத்தரவி
தேசந்தன்னிற்புண்ய தீர்த்தமும் வாவி
சென்று திருக்கழுக்குன்றமுலாவி (அர்ச்)
திருவந்திப்புரம் பெருந்துறையாரூர்
தில்லைச் சிதம்பரமும் நதி
பரவுமயூரங்கும்ப கோணஞ்சேது
பதிராமேஸ்வரமும் புகழ்
மருவுந்திருவாவடு துறைதனைக்கண்டு
மன்னுமடிமுடி யென்னுமொருபண்டு
அரியயனுமறியா வழற்குன்றும்
அண்ணாமலையென்னும் வெண்ணெய்
நெல்லூர்ச் சென்று (அர்ச்)
கங்கையமுனை நிர்மதைகிருஷ்ணை
கன்னிசரஸ்வதியும் - இன்னம்
துங்கபத்திரிகோ தாவரிதாமரைத்
துய்ய நவநிதியும்- திவ்ய
பங்கயவாவிகள் எங்கணும் நாடி
பார்த்து நல்ல தீர்த்த யாத்திரைகளாடி
மங்கைமீனாட்சியோர் பங்கயரைத்தேடி
வாணிமகிழ் கலியாணிராகம்பாடி (அர்ச்)
அர்ச்சுனன் பிராமணாளுக்குச்சொல்- விருத்தம்,
அருமறைய வர்களேநாம் அநேகதூரங்கள் சென்றோம்
திருவளர் மதுரைபோலச் செகத்தினிற் கண்டதில்லை
உருவமீதென்ன சொல்வேன் உமைவளெனு மீனாட்சி
மருவிய சொக்கநாதர் மலரடிபணிவோம் வாரீர்
-------
வசனம்.
ஆ ஆ-ஆ-வாருங்கள் என் அருமறையோராகிய பிராமணர்களே நாம் அனேக தூரஞ்சென்று
அனேக புண்ணிய தீர்த்தங்களிலே ஸ்நானஞ் செய்து தேவஸ்தல முதலான தரிசனஞ்
செய்துவந்தோம் -ஆ.ஆ-ஆ-இந்தமதுராபுரி பட்டணத்தின் அழகே அழகு அரஹரா
சொக்கநாத சுவாமியார் திருக்கோபுர தரிசனமே தரிசனம். ஆ-ஆ-ஆ-இந்தப்புண்ணிய
தீர்த்தமாடி மதுரை சொக்கநாத சுவாமியையும் மீனாட்சியம்மனையும் தரிசனஞ்செய்து
வருவோம் வாருங்கள் பிராமணர்களே.
-------
பிராமணர் சொல் வசனம்.
அப்படியே போவோம் வாருங்களையா
அர்ச்சுனன் கடவுளைத் தரிசிக்கிற தரு-இ-ம் -நீலாம்புரி - அடதாளம்
கண்ணிகள்
அரனேநின் பாதமலர் சரணம் இன்று
வரமெனக்கருள நீவரவிது தருணம்
திரிபுரமெரிசெய்த நாதா மத
கரியுரித்தரிக்கயற்கண்ணிச மேதா
ஆலகால விஷமுண் டாய்-திரு
சூலகபால நீல கண்டா
அம்புலிக்கொன்றையுந்தரித் தாய்- வரும்
வெம்புலியென்றுசொல் வேங்கையையுரித்தாய்
சங்கராசாம்ப சிவனே மகிழ்
கங்காதராதேவர்கடவுளென் பவனே
பொங்கும் அரவா பரணா மரு
தங்கும் அரவிந்தத் துங்கச்செஞ் சரணா
மன்மதனையெரித் தோனே- நல்ல
மானுமருவும் வளர்கரத் தோனே
சென்மவினை களைத் தீராய்உன்றன்
சேவடியைக்காண தெரிசனந் தாராய்
சதிகாளியொடு செய்த வாதா - இந்
தரணியையெல்லாமாள்சொக்க நாதா
மதுரைமீனாட்சியென் றாயே - என்றன்
வல்வினை தீர்த்துவரந்தரு வாயே
நாலாம்பதவிக்கு நாதா - சொல்லும்
மேலாம் பதவியில் விளங்கும்வி நோதா
பாலாம்பிகைமதுரைத் தாயே - திவ்ய
நீலாம்பரிராகம் நீயருள் வாயே
இதுவும் அர்ச்சுனன்சொல் - கொச்சகம்
மதுரை சொக்கநாதரையும் மாது மீனாட்சியையும்
சதிருடனா மனையோரும் தரிசனஞ்செய் தோமுலகில்
எதிரொருவரில் லெனப்பெண்ணி ளவரசுசெய்துவைத்த
கதிர்முடிசேர் பாண்டியனைக் கண்டுவருவோம் வாரீர்.
-------
வசனம்
வாரும் மறையவர்களாகிய பிராமணர்களே நாமிந்த மதுரைச் சொக்கநாதரையும்
மீனாட்சியம்மனையும் தரிசனம் செய்து வந்துதாம். இனி நாம் இங்கிருக்க வேண்டியதென்ன
புண்ணியஸ்தலங்கள் தோறும் போகவேணும். ஆதலால் இந்த மதுராபுரியாளும்படித்
தன்மகளுக்கு இளவரசு பட்டம் கட்டிவைத்த பாண்டியமகாராசன் இதோயிருக்கிறார்
பார்த்தீர்களா. ஆ-ஆ-ஆ-இவருடைய தருமமே தருமம் இவரையும் கண்டு போகலாம்
வாருங்கள் மறையவர்களே.
-------
பிராமணாளுக்கு இராஜன் சொல் - விருத்தம்.
வந்தமாதவ ரேயுங்கள் மலரடித்தெண்டம் சுவாமி
எந்தத் தேசங்கள் நீங்கள் எங்கிருந் திங்குவந்தீர்
முந்தமாதவ மெனக்குமு டிந்துதோ தேவரீர்கள்.
அந்தமாம் அடியேன் வாழும் அரண்மனைக் குள்ளேவாரீர்
-------
வசனம்.
தெண்டம் தெண்டம் சுவாமிகளே - தேவரீர்கள் எந்தத் தேசங்களிலிருந்து வந்தீர்களோ.
சுவாமிகள் வந்தபோதே அடியேன் ஜன்மம் சாபல்யமாச்சுது. அடியேனுடைய அரண்மனைக்கு
எழுந்தருள வேணும் சுவாமிகளே.
-------
அர்ச்சுனன் - இராசனுக்குச்சொல் விருத்தம்
தெண்டமென் றுரைத்தமன்னா சிரஞ்சீவி ஆசீர்வாதம்
அண்டர்கள் புகழுங்காசி யருமறையவர் கள்நாங்கள்
தெண்டிசை நதிகள்தோறும் தீர்த்தங்க ளாடியிந்த
மண்டல முழுதுஞ்சென்றுன் மதுரைமா நகர்க்குவந்தோம்
-------
வசனம்
சிரஞ்சீவி சிரஞ்சீவி ஆசீர்வாதம் மகாராஜனே நாங்களோ காசியாத்திரைப்
பிராமணாள். இந்தப் பூலோக முழுதும் புண்ணிய தீர்த்தம் ஆடி மதுரை சொக்கநாத
சுவாமியையும் மீனாட்சியம் மனையும் தெரிசனம் செய்ய வந்தோம் மகாராசனே.
-------
இராசன் பிராமணாளுக்கு சொல் விருத்தம்,
சொற்பக ராசிகூறும் துய்யமா தவரேநீங்கள்
நற்பசுவனங் கள்போல நடந்திந்தத் தூரம்வந்தீர்.
தற்பர சொக்கநாதர் தரிசனஞ் செய்து நாயேன்
கற்பகக்காவில் கொஞ்சங்காலங்களிருக்கலாமே
-------
வசனம்
வாருங்கள் ஆசீர்வாதம் கூறும் அருமறையோர்களே - நீங்கள் காசிதேசம்விட்டு அநேக தூரம்
திரிந்து தென்மதுரைக்கு வந்தீர்களே. இவ்விடத்தில் சொக்கனாதசுவாமி தரிசனம்
செய்துகொண்டு அடியேன் கற்பகப் பூங்காவில் சிலகாலமிருந்து தங்களுடைய
ஆலயங்களுக்குப் போகலாம் சுவாமிகளே.
-------
பிராமணாள் சொல் வசனம்.
ஆனால் கற்பகப்பூங்காவுக்குப் போவோம் வாரும் பாண்டியமகராசனே,
-------
பிராமணாள் நந்தவனத்துக்குப்போகிற தரு
இ-ம் - பைரவி - ஆதிதாளம்.
பல்லவி.
கற்பகப் பூங்காவுக் கேகுவோம் - பிராமணாளே நாம்
கற்பகப் பூங்காவுக் கேகுவோம்
அநுபல்லவி
தற்பரனெனுஞ் சொக்க நாதரை நா முய்ய
பற்பலமலர்களைப் பறித்துப் பூசை செய்ய (கற்பக)
சரணங்கள்.
சங்கரன் பூசையும் சம்பிரமாய்ப் பண்ண லாம்
மங்களமாகதிவ்ய வனபோசன முண்ண லாம் (கற்பக)
இளந்தென்றல் வந்து நமக்கிளப்பாறும்படி வீச
குளிர்ந்த நிழலைமிகக் கொடுக்கும் பூஞ்செடி வாச (கற்பக)
அந்தணர்க ளெல்லோரும் அழகாய் வாரீர் மிகுந்த
சந்தனமரமெங்கும் தழைத் துவளர் சுகந்த (கற்பக)
கயிரவமலர்வாயார் கனவலையைக் கடந்து
பயிரவி ராகத்தைப் பாடிக்கொண்டு நடந்த (கற்பக)
-------
இராஜன் மந்திரிகளுக்குச் சொல் விருத்தம்.
வருதுறையறிந் துரைக்கும் மந்திரிமாரே கேளீர்
அருமறையவர்களிங்கே யமுது செய்திருக்கநாளும்
தருமறை சாமக்கிரிகள் தந்தின்னம்வேணதெல்லாம்
ஒருகுறை களுமில்லாமல் யுண்மையாயளித்திடீரே.
-------
வசனம்
கேளுங்கள் நாளை வருவதறிந்து சொல்லும் மந்திரிகளே வாருங்கள்
காசியாத்திரைப் பிராமணாள் நமது கற்பகப்பூங்காவனத்திலிருக்கிறவரைக்கும் அவர்களுக்கு
வேண்டிய அமுது செய்யும் சாமான்கள் முதல் வஸ்திரபூணங்களும் குறைவு வராமல்
வேண்டியவரையிலும் கொடுத்துவைத்திருங்கள் மதிமந்திரிகளே.
-------
மந்திரிகள் சொல்- வசனம்,
அப்படியே மகாபாக்கியம் சுவாமி,
-------
கட்டியன் சொல் - பொதுவிருத்தம்.
காசிவேதிய னைப்போல காளையர்ச் சுனனிருக்க
மாசிலாமுடி தரித்து வரிசிலை வாளுமேந்தி
பேசிய தாதிமாரும் பெண்சித்தி ராங்கதை யும்வாசம்
வீசிய கற்பகக்கர விரைமலரெ டுத்துவாரார்
-------
வசனம்.
அகோதெப்படியென்றால் இவ்விதமாக காசியாத்திரைப் பிராமணாள்
வடிவங்கொண்டு வந்த அர்ச்சுன மகாராஜன் அந்தக் கற்பகப் பூங்காவிலே அநேகம்
பிராமணாளும் தானும் ஜெபதப நேமநிஷ்டைகள் வனபோசன முதலாகியதும்
செய்துகொண்டிருக்க சித்திராங்கதையம்மன் தன் மந்திரிமார்களான தாதிமார்கள்
சூழும்படியாய் மாணிக்கமகுடமும் வாளாயுதமுந்தரித்துக் கொண்டு அனேகந் தாதிகளுடனே
பந்து விளையாடக் கற்பகப்பூங்காவனத்துக்கு வருகிறவிதங் காண்க.
-------
சித்திராங்கதை தனது மந்திரிகளுக்குச்சொல். கலிப்பா
மந்திரிகளெனுந் தாதிமார்களே நாமெல்லோரும்
கந்தமிகுங் கற்பகப்பூங் காவனத்திற் சென்றுமுத்து
பந்துவிளை யாடிமலர் பறித்து மீனாட்சியம்மன்
சிந்தைமகி ழர்ச்சனை நாம்செய்து வருவோம்வாரீர்
-------
வசனம்.
வாருங்கள் என் மந்திரிகளான தாதிமார்களே நாமெல்லோரும் கற்பகப்
பூங்காவனத்திற்குப் போய்ச் சற்றுனேரம் பந்துவிளையாடி, பொற்றாமரைத் தடாகத்தில்
குளித்து நந்தவனத்திற்குட் புகுந்து திவ்ய சுகந்தபுட்பங்களைப் பறித்து உலகமாதாவாகிய
மீனாட்சியம்மன் பாதத்தில் அர்ச்சனை செய்து பின்பு நமதரண்மனைக்குப்போகலாம்
வாருங்கள் தாதிமார்களே (அப்படியே போகலாம் வாரும் அம்மணி)
-------
சித்திராங்கதை தாதிகளுக்குச் சொல் தரு இ-ம்-தோடி, ஆதிதாளம்.
பல்லவி
வனத்திற்கு வாரு மாதரே- பரிமள சததளமலர்களும் பலவுள - நந்த
வனத்திற்கு வாரு மாதரே
அநுபல்லவி
இனத்துடன் கூடிக்கொண்டிருக்கும் பெண்களிற் சிலர்
தனித்துப் பந்தடிக்கலாம் சண்பகப் புட்பங்களலர் (வனத்)
சரணங்கள்
வாசமல்லிகை மலரெடுக்க .... லாம் நல்ல
வண்மையுடனே சரந்தொடுக்க .... லாம் வெகு
நேசமுடன் கிளிகள் பேசுமொழியைப் பாங் .... காய்
நின்று கேட்கலாம் நாம் இன்றனைவோரும் .... பூங்கா (வனத்)
மங்கையரே யொன்றாய்க்கூட .... லாம் அங்கே
மனதின்படியே விளையாட .... லாம் இனி
சங்கையென்னடி பாத பங்கய மீ .... னாட்சி
தருவளம்பெறலா நன்மரு வளரிரு .... வாட்சி (வனத்)
மிக்க முல்லைமலரைக்கொய்ய .... லாம் - மணி
மேடையிற் சிவபூசைசெய்ய .... லாம்-திரு
சொக்கர் மீனாட்சி பாதந்துதி செய்வதற் .... குகந்த
தோடிராகப் பதங்கள் பாடிக் கொண்டு .... சுகந்த (வனத்)
-------
சித்திராங்கதை மந்திரிகளுக்குச் சொல் கொச்சகம்.
இம்மாநிலங்கள் புகழ் ஏர்பெறுங் கற்பகவனத்தில்
நம்மால் நினைந்து சொக்க நாதரடி யிணைப்பணிந்து
சும்மாயிராமலடி தோகைய ரேயிப்பொழுது
அம்மானாராடிப் பொற்பந் தாடி வரலாம் வாரீர்.
-------
வசனம்
வாருங்கள் என் மந்திரிகளென்னுந் தாதிகளே நாமனைவோரும் இந்தக் கற்பகப்
பூங்காவனத்திற்கு வந்து சும்மாயிருக்கப் போகாது சற்றுநேரம் அம்மானாராடிப் பிறகு
பொற்பந்தடிக்கலாம் வாரும் அம்மா.
-------
மந்திரிகளாகிய பாங்கிகள் சொல் - வசனம்
அப்படியே நல்லது அம்மணி
சித்திராங்கதை - அம்மானாராடுகிற தரு
இ-ம் புன்னாகவராளி அடதாளம்,
பல்லவி
ஆடுவோம் வாரீர் அம்மானார்
ஆடுவோம் வாரீர்
அநுபல்லவி.
நாடும் மதுரை மீனாட்சியு மையவளைப்
பாடும் பதங்கள் கொண்டாடும் பெண்களே விளை (ஆடு)
சரணங்கள்
பம்பரம்போல் சுழன்றும் பரிலுரு கவே
அம்பரந்தனி லிருந்திம் பரில் வரு கவே (ஆடு)
கொங்கைக் குடங்கள் குலுங்க மனந்தன் னில்
சங்கையில்லாமல் இச்சண்பகவனத் தன் னில் (ஆடு)
பிள்ளையார்க் கென்றுநாம் பேசியதோ ராட் டம்
மெள்ளப் பந்தெடுத்திங்கே வீசியதாராட் டம் (ஆடு)
விசையாக நானிதோ வீசியெறிந்த செண்டை
அசையாமற் பிடித்துக்கொண்டா லதற்கென்ன சண்டை(ஆடு)
வள்ளல் சொக்கேசரை மருவுங்கயற் கண்ணியை
உள்ளந்தனிலென்னாளும் உண்மையாயெண்ணியே (ஆடு)
இந்நாகமரத் தின்கீழ் இருந்தனை வருங்கூடி
புன்னாக வராளியிற் புகலும்ப தங்கள்பாடி (ஆடு)
சித்திராங்கதைசொல் கலிப்பா,
அந்தமுள்ள மாதர்களே அம்மானா ராடிவந்தோம்
இந்தவிளை யாட்டெல்லாம் இருக்கட்டு மினியொருக்கால் சிந்தைமகிழ்ந் திருவகுப்பாய்ச் சேர்ந்தநா மனைவோரும்
பந்துவிளை யாடிமலர்ப் பறித்தினிதாய் நாம்வருவோம்
வசனம்.
வாருங்கள் அழகின்மிகுந்த தாதிமார்களே அம்மானராடுவது இருக்கட்டும். இனிமேல் நாம் அனைவரும் இருவகுப்பாய் எதிர் நின்று சற்று நேரம் முத்துப்பந்தடித்துப் பிறகு திவ்ய சுகந்த பரிமளமான புட்பத்தைப் பறிப்போம் வாருங்களடியம்மா,
தோழிகள் சொல்-வசனம்,
அப்படியே போவோம் வாரும். அம்மணீ
சித்திராங்கதை பந்தாடுகிற - தரு; இ - ம் மத்தியமாவதி - அடதாளம்,
பல்லவி.
பந்தெடுத்தாடுவோம் வாரீர் - பொற்பதுமைகள் போலநற் புதுமலர்ச்சாலையில்
பந்தெடுத்தாடுவோம் வாரீர்
அநுபல்லவி.
வந்தெடுத்தவர்க்குப்பொன் வழங்குங் கற்பகக்காவு
இந்திடங்களுக்குமேல் எங்கிருக்குது தாவு (பந்)
சரணங்கள்.
பிள்ளையார்க்கென்று நான் போடுகிறேனோ ராட்டம்
பெண்களேயிதன்மேலே உங்களுக்குமன நாட்டம்
வள்ளல் சொக்கேசர் மருவுங்கயற்கண் ணியை
உள்ளந்தனிலென்னாளும் உண்மையாயெண் ணியே (பந்)
விசையாக நானிதோ விடுகிறேன்பார் பந்து
வித்தகிமார்களே யித்தனைபே ரிருந்தும்
அசையாமலெதிர் நின்று பிடிக்கவு முங்களால்
ஆகாது யிந்தாட்டம் போகாது பெண்களா (பந்)
இதுவும் சித்திராங்கதை சொல் விருத்தம்.
ஆவியொன் றடலிரண்டாய் அமர்ந்த தாதிகளேயிந்த
காவியங்களுஞ் செவ்வாம்பல் கமலமும் நிறைந்துநின்ற
வாவியிற்குளித்து நந்த வனத்தினிற் புகுந்துதிவ்ய
பூவினில திசுகந்த புஷ்பங்களெடுப்போம்வாரீர்.
வசனம்.
உயிரொன்று உடலிரண்டென்று சொல்வது போல் என் உயிருக்குயிராய் நின்ற சகிகளே வாருங்கள் நாம் பந்தடித்த இளைப்புத் தீரும்படி நீலோற்பல புட்பங்களும் செவ்விய புட்பங்களும் செந்தாமரைப் புட்பங்களும் செங்கழுநீர் புட்பங்களும் நிறைந்து குளிர்ச்சி பொருந்திய இந்தத் தடாகத்திலே குளித்து நந்தவனம் புகுந்து கற்பகப் புட்பங்களெடுத்து சொக்கநாதசுவாமியையும் மீனாட்சியம்மனையும் பூசைபண்ணிய
பின்பு நமதரண்மதைக்குப் போகலாம் வாருங்கள் சகிககளே.
இதுவும் சித்திராங்கதை சொல் தரு-இ-ம் மோகனம்- அடதாளம்.
பல்லவி.
கற்பகப் பூப்பறிப்போம் - அம்மாநாம்
கற்பகப் பூப்பறிப்போம்
அநுபல்லவி
தற்பரனெனுஞ் சொக்கசுவாமி யங்கயற் கண்ணி
பொற்பத நளினங்கள் பூசை செய்யவு மெண்ணி (கற்பக)
சரணங்கள்.
மல்லிகை முல்லை மருவுங் குரு வேரும்
மெல்லியரே பலவிதமா யெடுப்பம் வாரும் (கற்பக)
பாரிசாதமலர் பறித்தோடி வாருங்கள்
நாரிபாகன் பாத நளினத்திற் சேருங்கள் (கற்பக)
மந்தாரபுஷ்பங்கள் மடியினிற் கட்டுங்கள்
சிந்தாம லோரிடஞ்சேரவே கொட்டுங்கள் (கற்பக)
கோக நகமாது குலவுமிந்தத் தினத்தில்,
மோகனராகத்தை மொழிந்துநந்த வனத்தில் (கற்பக)
பொது - வசனம்.
இவ்விதமாய் சித்திராங்கதை விளையாடிக்கொண்டிருக்கையில்
அர்ச்சுனராஜன் வருகிறவிதங்காண்க.
அர்ச்சுனன் பிராமணாளுக்குச்சொல் - விருத்தம்.
காசிவேதிய ரேயிந்த கற்பகவனத்தைக் கண்ட
ஆசையால் முழுதும்பார்க்க அகத்தினில் நினைக்கு தென்றன்
பூசையுமுடித்துப் பொற்பூம் பொய்கையில் மூழ்கிதிவ்ய
வாசனை மலரெடுத்து வருகிறே னிருந்திடீரே.
வசனம்.
ஆ-ஆ-ஆ-வாருங்கள் காசிப்பிராமணாளே – நானிந்தக் கற்பக வனத்திலிருக்கின்ற அற்புதத்தைக்கண்ட ஆசைமுழுதும் போய்ப் பார்க்கலாமென்று என்மனம் எண்ணுது. ஆகையால் இந்தப் பொற்றாமரைத் தடாகத்தில் தீர்த்தமாடி தேவதார்ச்சனைக்கு உகந்த திவ்விய பரிமளமான புஷ்பங்களைக்கொண்டு வருகிறேன். நீங்களெல்லோரும் இவ்விடத்தில் தானே யிருங்கள் சுவாமிகளே.
பிராமணாள் சொல் - வசனம்.
அப்படியே போய்வாரும் பிராமண சந்தியாசியே
அர்ச்சுனன் சொல் – வசனம்.
ஆ-ஆ-ஆ-இந்தவனம் இந்திரலோகத்திலிருக்கின்ற நந்தவனமோ -ஆ ஆ ஆ-என்ன சுந்தரமோ -ஆ-ஆ-ஆ-ஆ இந்த புஷ்ப விருஷங்களெல்லாம் கற்பகவிருஷங்களோ-ஆ-ஆ-ஆ- என்ன லக்ஷணம் ஆ-ஆ-ஆ-ஆ- பாரிசாதப்புஷ்பத்தின் பரிமளமே பரிமளம். இதைவிட வேறொரு வனமுண்டா ஒருவனம் ஆஆ.ஆ.ஆ இந்த மந்தார மலரின் மணமே மணம்-ஆ-ஆ-ஆ-ஆ இதுவே நல்ல குணம் -ஆ-ஆ-ஆ-ஆ" இந்த முல்லைமலரின் முகையே முகை – இதுவே நல்லவகை ஆ-ஆ - ஆ-ஆ இந்த மல்லிகை மலரின் வாசமே வாசம், இதுவே நல்ல ப்ரகாசம். ஆ-ஆ-ஆ – இந்த வனத்திலிருக்கின்ற இருவாட்சியே இருவாட்சி, இதைவிட வேறுண்டா ஒரு காட்சி, ஆ-ஆ-ஆ ஆ - இந்தவனத்தின் மருவே மருவு, இதுவே நல்ல திருவு, ஆஆ ஆ-ஆ-இவ்வனத்திலிருக்கின்ற சித்திரப்பதுமையே பதுமை, ஆ ஆ-ஆ-இதோ விச்சித்திரப்பதுமை போல் தோற்றுதே இதென்ன ஆச்சரியம்.
கட்டியன் சொல்-பொதுவிருத்தம்.
கற்பினிலுயர்ந்த சித்ராங்கதையுந் தாதிகளுங்கூடி
பற்பலவித புட்பங்கள் பறித்துக் கொண்டிருக்கும்போது வெற்பினுமுயர்ந்த தோளான் விசயனு மிவளைக்கண்டு
அற்புதமென்ன வென்று ஆசைகொண் டுருகுவானே.
வசனம்
இந்தப் பிரகாரம் சித்திராங்கதையும் தன் தாதிகளும் கற்பகப் பூங்காவனத்திலே புஷ்பமெடுத்து விளையாடிக் கொண்டிருக்கும் போது அவ்வனத்தில் யாத்திரையாய் வந்திருக்கின்ற அர்ச்சுன மகாராஜன் சித்திராங்கதையினுடைய அதிரூப சவுந்தரியங்களைக் கண்டு மோகிக்கிற விதங்காண்க.
அர்ச்சுனன் சொல்-கொச்சகம்.
பார்மகளோ வர்ணப்பசுங் கிளியோ பரவுதிரை
நீர்மகளோ ரத்தினமோ நித்திலமோ விளம்புசுரர்
ஊர்மகளோ நல்ல உரகர்மக ளோயிவளை
ஆர்மகளோ வென்றிங்கறிய மொழி கூறுவனே.
வசனம்.
ஆ-ஆ-கா-இவள் யார்மகளோ, பார்மகளாகிய பூமிதேவியோ பச்சைப்பசுமை பொருந்திய கிளியோ பரந்த திரையலை யோடுங் கூடிய திருப்பாற்கடலிற் பிறந்த மகாலட்சுமியோ, அல்லது மாணிக்கப் பிரதமையோ, ஆணிமுத்தோ, கார்மகளாகிய தேவகன்னியோ உரகர்மகளென்றுஞ் சொல்லப்பட்ட நாககன்னியோ, ஆ-ஆ-ஆ இவளாரோ, இவளுடைய அதிரூபசவுந்தரியம் என்னென்று சொல்வேன். ஆ-ஆ.
அர்ச்சுனன் சித்திராங்கதையைக் கண்டுமோகிக்கின்ற தரு
இ-ம் அசாவேரி தாளம்- ஆதி.
பல்லவி.
அதிரூப சவுந்தர்ய - ரதிசிரோன் மணியிவள்
ஆரெனத்தெரியேனே - இனிநாமிந்தப் - பாரினிற்றிரியேனே
அநுபல்லவி.
கதிருதயம்போல் முழு - மதிவதனமாதுபூங்
காவிற்பாவைபோலு - லாவிதன் சகிகளைக்
கூவிமேவிய பூவைத் தாவிக்கொய்யுகின்ற (அதி)
சரணங்கள்.
பத்தரை மாற்றுத்தங்கத்தை யொத்தெழிலி வளங்கத்தைப்
பார்க்கக்கண்கள் கூசுதே நல்ல
பாரிசாதமலரை வாரிமுடித்த கூந்தல்
பரிமளங்களும் வீசுதே
சித்திரப்பது மையென்ன உச்சிதலட்சணமாது
சேடியருடன் கூடிவிளை யாடியிங்கு வந்து நான்
செய்தயாத்திரையின் எய்தியபலனுள்ளங்
கைதனில் நெல்லியங் கனியெனக்கண்டுகொள்ளும் (அதி)
துவளுங்கொடியிடை இவளுக்குண்டோயில்லை
துணையிள முலைப் பாரம் - நாளும்
சுமந்தெந்தவிதமாக நிமிர்ந்துநடந் துவந்தாள்
தோகையித்தனை தூரம் - கருங்
குவளையங்களுஞ்செம் பவளவாயும் பல்லுங்
கோத்தமுத்துக்களைப்போல் வாய்த்ததிவள் சொல்லும்
குயில்போல மொழி கூறுகிறாள் மட
மயில்போல மிர்துமலர்வன அன்ன நடை (அதி)
கொண்டையினழகுஞ் சேற்கெண் டைவிழிகளும் பொன்
குமிழைக்கடிந்த மூக்கும் - தங்கக்
குடமுலை களாமிருதட மலைகளு மிளங்
குயிலைப்பழிக்கும் வாக்கும் - பொற்
றண்டையுஞ் சதங்கையும் வெண்டயமும் ஒலிக்கும்
சரணியிவணல்லவிதரணி யெண்ணம் பலிக்கும்
தசாவதார நாராயணன் கணைக்கு கந்த
அசாவேரி ராகம் ஆலாபிக்க வந்த (அதி)
அர்ச்சுனன் சொல்-கலிப்பா.
மானோமரகதமோ மடமயிலோ மான் குயிலோ
தேனோமதுரமிகுஞ் செங்கரும்போ செண்பகமோ
வானோர்க்கமுதோ வளர்மதியோம தன்ரதியோ
ஏனேமலர்வனத்தில் இருக்கின்றா ளேந்திழையே.
இதுவும் அர்ச்சுனன் சொல்பத்தியம் இ-ம் புந்நாகவராளி.
கொண்டை கருமேகமோ கண்டரிளம் பூகமோ
குழைகளும் வெள்ளையோ குறியிவட்கு
முண்டகக்கண்கள் சேற்கண்டையோ யிவள் முகம்
முழுமதி யென்னவே மொழியலாகும்
வெண்டரளமணிகளோ ரைண்டையிதழ் வாய்நகை
விற்புருவமோ யிந்தமெல்லியற்கு
செண்டுநேர் குரும்பையோ இாண்டுமா மலைகளோ
செங்கமலமோ கரங்கள் சேயிழைக்கு-இந்த
மண்டலந்த னிலிவட்கு மருங் கொன்றில்லை
உண்டெனவு முண்மையாய் உரைக்கலாமோ
கண்டுபே சாதிருந்தால் என்காமம் விடுமோ
அண்டையிற் போய்நீ யாரடியென் றறிகுவேனே.
இதுவும் அர்ச்சுனன்சொல்- இரட்டை-சீசபத்தியம்.
கொண்டலை வண்டினத் தண்டலை வென்றகார்
கூந்தலழகுக்கொரு கோடி சரணம்
குழவிப் பிறை நெற்றியில் கழைவிற் புருவத்தினில்
குலவுமழகுக் கொருகோடி சரணம்
கூறயிலைக் கயலைநேர் விழிகளுக் கும்பொன்
குமிழ்மூக் கழகிற்கு முக்கோடி சரணம்
குளிர்வள்ளைக் காதிற்கும் ஒளிர்மதி முகத்திற்கும்
கோவையிதழ் வாய்க்கும் நாற்கோடி சரணம்
குயில்கள் கிள்ளைகள் நாணபயின் மொழிகட்கும்வேண
கோவை நகைக்கோ ரைந்துகோடி சரணம்
குன்றுகள் குமிழ்சிமிழை வென்றுபம் பரம்பூண்ட
கும்பமலைக் கிரு மூன்றுகோடி சரணம்
கோளரியு மின்னலை வேளுடம்பை யும்வென்ற
கொடியிடைக் கோரேழு கோடி சரணம்
கொடிஞ்சித் தேனுதட்டையும் அடஞ்செய் அரவப்பையை
கூறுமல் குலுக்கு எண்கோடி சரணம்
சரணம் நவகோடி செந்தாமரைப்பூம்
கரங்கள ழகிற்குஞ் செங்கரதல விரல்கட்கும்
சரணம் அன்னநடைக்கும் மயிலெனங் சாயலுக்கும்
சரணமொருகோடி சரணமீதே
தருணமினி யென்மீதில் தயை செய்யுமானே
இதுவும் அர்ச்சுனன்சொல்-தரு – இ-ம்-தோடி தாளம் மட்டயம்
பல்லவி.
நீயாரடி பெண்ணே - உன்றன்
நிலையைக் கூறடிகண்ணே.
அநுபல்லவி
தாயார்தந்தை யாரவர்கள் பெயர்
தானென்னமோனந்த ஆனந்தத் தினில்வந்த (நீயாரடி)
சரணங்கள்.
உன்றன் பெய ரென்னமோ-எனக்
குரைப்பதுனக்குச் சின்னமோ-மிகச்
சுந்தரஞ்சே ரன்னமோ -நாளும்
சோதியைத் தருஞ் சொர்ன்னமோ -திவ்ய
நந்தவனத்தில் சுகந்தபுட் பங்களை
நாடிப்பந்து விளையாடிய பெண்களே
மந்திரிகளாய்க் கொண்ட தந்திர விதங்களை
மங்கையே நீர்சொல்லும் அங்கஜனை வெல்லும் (நீயாரடி)
செய்கையினில்வில் லேது - சரிசெய்
தேவரையும் வெல் லாது-இந்தத்
தங்கமகுடம் நில்லாது - அடி
தையலேசெங்கோற் செல்லாது
மங்களமிகு மசுபங்களைக் கண்டு
வாழ்வ துலகினில் மாதருக் குண்டு
சம்சையென்னாடி உன்கொங்கைக ளிரண்டும்
தாளங்குமிழ்சக்கிரவாளஞ்சிமிழ்ச் கொண்டு (நீயாரடி)
செம்பவளவா யார - மொழி
செப்புக்காமப்பசி தீர - நான்
வம்பனல்ல உனைச் சேர - மையல்
கொள்ளுதடி சிங் கார - சந்திர
விம்பவதன தரிசனந் தாடி
மேதினியெங்குத் திரிந் துன்னைத் தேடி
நம்பவந்தேன் புஷ்ப கொம்பனையைத் தோடி
ராகம் பகரும்விவேகமுடன் வாடி (நீயாரடி)
இதுவும்- அர்ச்சுனன்சொல்-கலிப்பா.
அன்னமே தேனேயமுதே சொல்லாணி முத்தே
சொர்ணமொழி மிகுந்த துரைப்பெண் சிரோன்மணியே
வர்ணமே யுன்றனது வாய்திறந்து பேசாமல்
இன்னமேன் சும்மா யிருக்கின்றா யேந்திழையே
வசனம்.
நீயாரடி -அன்னமே தேனே- அமிர்தமே தெள்ளமுதே- பசுங்கிளியே சொர்ணமே -துரைப்பெண்களுக் கெல்லாம் சிரோரத்தினமே நீ இந்தக் கற்பகப் பூங்காவனத்திலே என்னுடன் கலந்து பேசியென் காமத்தைத் தீரடி பெண்ணே, என் கண்ணே, என் கண்மணியே, என் காமரமே.
சித்திராங்கதை தன் தோழிகளுக்குச் சொல் கலிப்பா
கன்னியரே நாமிந்தக் கற்பகப் பூங்காவனத்தில்
மன்னிய சுகந்தமருமல ரெடுக்கவந்திடத்தே.
அன்னிதமி தென்னமோ அந்தணன்போ லிங்கிருந்த
சன்னியாசி யிவனாரோ சமர்த்தெல்லாம் பேசுகின்றான்
வசனம்.
வாருங்கள் என் சகிகளே நாம் பூலோகமாய்கையையொழித்து பேரின்பத்திற் குரியதாகிய மதுரை சொக்கநாத சுவாமியையும் மீனாட்சியம்மனையும் பாதமே கதியென்று சுகந்த புஷ்பங்களெடுத்து அர்ச்சனை செய்ய நாம் நந்தவனத்துக்கு வந்தயிடத்திலே இவனாரோ ஓர் பிராமண சந்நியாசியைப் போல் காணுது. நம்மைப்
பெண்ணேயென்றும் கண்ணேயென்றும் சற்றே பேசடியென்றும் மெத்த மோசடியாய்ப் பேசுகிறான் இவன் ஆரடி சகிகளே.
சித்திராங்கதை தோழிகளுக்குச்சொல் – தரு- ஸ்ரீராகம்- ஆதிதாளம்.
பல்லவி.
சகிகளேயிங்கிவ னாரடி- கற்ற
சமர்த்தெல்லாம் பேசுகிறான் பாரடி
அநுபல்லவி.
மகிதலந் தனைப்பெண்கள் ஆளக்கூடுமோ வென்றான்
மையலைத் தீர்க்க அடிதையலேவா வென்றான் (சகி)
சரணங்கள்.
தங்கமுடியுனக்குத் தகாதடி யென்றும்
தாரணியாள வுன்னாலா காதடி யென்றும்
செங்கோற்செல்லாதென்றும் உன்கைவில்லே தென்றும்
செப்புகிறான் கல்வி அப்புறம்போகச் சொல்வீர் (சகி)
தந்தைதாய்பெயரும் என்றன்பெய ரிவனோ
தனித்துக்கேட்கின்றவன் சந்நியாசி யெவனோ
இந்திடத்திலிவனை இருக்க வொட்டாமற் கையை
இழுக்கப்பிடித்துக்கொள்வீர் கழுத்தைமடக்கித்தள்வீர்.
குஷ்டிக்கன் னமில்லாமல் முஷ்டியெடுத்தெந் நாளும்
குவலய மெங்குத்திரிந் திவனிங்கேன் வந்தான்கேளும்
பிட்சைக்கு வந்தவன் பெண்டுக்கழைத்தா னென்ற
பேச்சிதுபோல்ஸ்ரீராகம் வாச்சுதிங்கருக் கின்ற (சகி)
இதுவும் -சித்திராங்கதைசொல் - கலிப்பா
மெல்லியரே நமக்கிந்த மேதினியிலீ டொருவர்
இல்லையெனச் செங்கோ லொன்றேந்தி மணிமுடி தரித்து
மல்லிகையு முல்லை மலரெக்க வந்திடத்தே
சல்லியமி தென்னமோ தானறிந்து வாரீரோ.
வசனம்.
வாருங்கள் மந்திரிகளான சகிகளே நமக்கிந்த பூலோகத்தில் எவரும் எதிரில்லை யென்று இளவரசு பட்டமும் தங்கமகுடமுஞ் செங்கோலு மேந்திக்கொண்டு மதுரைப் பட்டணம் ஆண்டு இந்த நந்தவனத்திற்கு வந்த நம்மைக்கண்டு சற்றும் பயமில்லாமல் பெண்ணேயென்றும் கண்ணெயென்றும் சற்றேபேசடியென்றும் மெத்த மோசடியாய்ப் பேசுகிறான். இந்த பிராமண சந்நியாசியை நீ யாரென்று கேட்போம் வாருங்கள் என் சகிமார்களே.
சகிகள் சொல் வசனம்.
அப்படியே கேட்போம் வாரும் அம்மணி.
சித்திராங்கதை சந்நியாசிக்குச்சொல் கலிப்பா.
மாதரசுசெய்யுமிந்த மதுரையெனுந்தலத்தில் சொக்க
நாதரையும் அங்கயற்கண் நாயகியையுந் துதிக்கும்
காதன் மிகுமெங்களை நீ கண்டுமயல் கொண்டுநின்ற
சூதென்னமௌனியரே சொல்லும் பிராமணரே.
வசனம்.
பெண்ணரசாட்சிசெய்யும் இந்த மதுராபுரி பட்டணமென்னும் ஸ்தலத்தில் வாழ்கின்ற சொக்கநாதசுவாமியையும் மீனாட்சியம்மனையும் தரிசிக்கும் பொருட்டாய் வந்த நந்தவனத்தில் எங்களக்கண்டு மையல் கொண்டேனென்றும் வம்புவார்த்தைப் பேசிய பிராமணா நீ யார் எங்கிருந்து யிங்குவந்தாய்சொல்லுஞ் சந்நியாசி.
சித்திராங்கதைக்கும் - அர்ச்சுனனுக்கும் - வாது தரு.
இ-ம் நாதநாமக்கிரியை - அடதாளம்.
அந்தணன் போலிந்த நந்தவனத்தில்வந்த
தாருன் நின்னூரதுங் காசியோ - உன்றன்
பேரும்பிராமணசந்நி யாசியோ - இங்கே
வந்திடத்திலுனக் கிந்தக் கேடுமதி
வந்ததென்னடா சொல்லும் பிராமணா
அர்ச்சுனன்சொல்- தரு -இ-ம் மேற்படி
சொல்லுவதென்னடி மெல்லியேகேள் வெகு
தூரமென்னூரதுகாசி தான்- என்றன்
பேரும்பிராமணசந்நியாசி நான் - இந்த
எல்லையில்யாத்திரை நல்ல தீர்த்தமாடி,
இங்குவந்தேனடி பெண்ணே
சித்திராங்கதை சொல்லல்.
அடிப்பெண்ணே யென்றுங்கள் குடி பெண்ணைப்போலெண்ணி
அழைக்கிறாயென்னடா வேதியா - தப்பிப்
பிழைக்கமாட்டாய் மரியாதை யாய் ஒரு
நொடிப்போதிலுன் னுயிர் மடிப்பார்கள் முப்புரி
நூலோன் என்றுஞ்சொல்லும் பிராமணா
அர்ச்சுனன் சொல்லல்.
முப்புரி நூலோனென்றிப் புவியெங்கும்
மொழிவதும் நிஜந் தானடி - உன்னை
தழுவியணையவந் தேனடி இந்தக்
கற்பகவனத்தில் சப்பிரமஞ்சத்தினிற்
கலந்தணை வோம்வாடிகண்ணே
சித்திராங்கதை சொல்லல்,
கண்ணேயென் றும்அடி பெண்ணே யென்றுங்கற்ற
கல்வியெல்லா மிங்கேன் கழட்டுராய் - வித்தை
சொல்லியேன் கண்ணை சுழட்டுராய் நீ
யெண்ணிவந்த பெண்ணங்குண்ணி யிந்தமண்ணில்
இறப்பாயிருபிறப்பாளாய்
அர்ச்சுனன் சொல்லல்.
இருபிறப்பாளாவுன் உருவிறப்பாயென்றிங்
கிகழ்ச்சியாய்ப் பேசத்தப் பாது உன்றன்
மகிழ்ச்சியழிப்பேனிப் போது ஐந்
தருமறப்பா யிருவருஞ் சிறப்பாயிங்கே
தழுவியணைகுவோம் வாடி
சித்திராங்கதை – சொல்லல்.
தழுவுங்கைகளுக் கிழித்தொழுவும் விழுமடா
தப்பிலாப் பார்ப்பானென் னும் மாதவா- உன்னைத்
திப்பாதிப்பவென்ன மோதவா காலுக்
கழுவிலங் கிட்டுயிர் கழுவில் மாட்டியுன்றன்
ஆண்மையை யழிப்பேனான் அந்தணா
அர்ச்சனன் – சொல்லல்.
அந்தணனென்றென்னை வந்தனஞ் செய்யாமல்
ஆண்மைக்குலைப்பேனென்று நொடிக்கிறாய் சும்மா
வீண்மலப் பேனிங்கே யடிக்கிறாய் -இந்த
நந்தவனத்தினில் தந்ததுன் மோகமே
நாதநாமக்கிரியை ராகமே
சித்திராங்கதை அர்ச்சுனனுக்குச்சொல் விருத்தம்.
இவ்விடம் விட்டுப்போகா திருந்தா லுன்வாயின் மண்ணில்
கவ்விடத்தள்ளி யுன்றன்காலுக்கு விலங்கைப்பூட்டி
எவ்விதத் தாலிவ்வாளுக் கிரையிடுவார்கள் பெண்கள்
அவ்விடம் விட்டு நீங்கி யறிவுகெட்டவனேபேடா
வசனம்
ஆரடா அறிவு கெட்டபிராமணா நீ இந்தக் கற்பகவனத்தில் இன்னஞ் சற்றுநேரம் வம்புவார்த்தைகள் பேசிக்கொண்டிருந்தாயே யானால் உன்னால் உன்வாய் இந்த மண்ணிற் கவ்விக்கொள்ளும்படிக் கழுத்தைமடக்கித் தள்ளிக் காலுக்கு அழுவிலங்கு பூட்டி எவ்விதத்தாலும் எனது தாதிமார்கள் உன்னை இவ்வாளுக் கிரையிடுவார்கள் ஆகையால் இப்பொழுதே ஓடிப்போடா பிராமணா.
அர்ச்சுனன் சித்திராங்கதைக்குச்சொல் விருத்தம்.
ஓடிப்போவென் றாலின்னம் ஒருநொடிதனி லேயுன்னைக்
கூடிப்போகா மற்போனால் குவலயந்தனி லென்னாவி
வாடிப்போகா தோபாவி மன்மதபாணம் பட்டுத்
தேடிப்பூங்கா வனத்திற் சேர்ந்தணைந் திடுவம்வாராய்.
வசனம்.
வாடி பெண்ணே - என்கண்ணே – என் கண்மணியே இன்னம் என்னை ஓடிப்போவென்று சொல்லுவது உனக்குத் தர்மமா, உன்னைக்கூடிப் போகிக்காமற் போனால் மழையில்லாத பயிர்போல் எனது உயிர்வாடிப் போகாதா, இனியாகிலும் என்பேரில் தயவு செய்து இந்தக் கற்பகவனத்தில் என்னை நீ மருவியணையாமற் போனால் என் மையல் மட்டுப்படாதடி, என் கண்மணியே,
இதுவும் அர்ச்சுனன் சொல்வது - தரு
இ-ம்-மத்தியமாவதி - அடதாளம்
மட்டுப்படாதென்றன் மையலே-என்னை
மருவியணையடி தையலே-இனி
கட்டியணைத் துமுத்தம் இட்டுக்கொள்ளடி சற்றே
சட்டிச்சுட்டாற்போற் கைவிட்டுவிடாதேமுத்தே (மட்டுப்)
சித்திராங்கதைசொல் - தரு-இ-ம்-மேற்படி.
தத்தித்தலை கீழாய் விழுகிறாய்-காம
சமுத்திரத்திலேண்டா முழுகிறாய் என்னைச்
சுற்றி வருகின்றமாதர்கண்டால் மேலே
தூக்கிமண்ணுக்கிரை யாக்குவரொருக்காலே (தத்தி)
அர்ச்சுனன் சொல்லல்
ஒன்றிற்கிரண்டாகப் பேசுறாய்- இன்னம்
ஓஓஎன்னடிமெத்த வீசுறாய்-இந்த
மண்ணுக்கிரையாக்க எண்ணியிருந்ததெல்லாம்
மாதரசேயுன்றன் ஆதரவில்லாமல் (மட்டுப்)
சித்திராங்கதை சொல்லல்
ஆதரவென்னடா வேதியா- சும்மா
அப்புறம்போமரி யாதையாய்- எம
காதகனென் றொருதாதிகண்டால் கன்னம்
கலங்க அடிப்பாருன்னை மலங்கப் பிடிப்பார்சொன்னன் (தத்தி)
அர்ச்சுனன் - சொல்லல்.
கன்னங்கலங்க அடிப் பாரோ- பெண்கள்
கையால்மலங்கப்பிடிப்பா ரோ -மட
அன்னமேநீயென்னைச்சொன்னதெல்லாஞ் சொல்லு
அங்கஜன் கைவில்லும் மங்கையே நீவெல்லும் (மட்டுப்)
சித்திராங்கதை சொல்லல்.
என்கைவில் லாலுன்னைக் கொல்லுவேன் - இன்னம்
எதிர்த்தவரைக்கூட வெல்லுவேன் -இந்த
தங்கமகுடமுஞ் செங்கோலுக்குறியாமல்
தாரணியாளுவ தாரென்றறியாமல் (தத்தி)
அர்ச்சுனன் சொல்லல்
மாதரசாளுவ தேது- தாதி
மந்திரிகளென்னத் தகாது- இந்தப்
பூதலமாதர்கள் காதினிற்கேட்கவும்
புத்திகெட்டவனென்று குத்துவர் தவடையில் (மட்டுப்)
சித்திராங்கதை சொல்லல்
தவடையில் குத்துவ தாரடா- இன்னம்
சற்றுநேர மிருந்து பாரடா-நீ
இவடத்திலென்ன மோகவடத்தனஞ் செய்ய
எண்ணிமத்தியமாவதியை நண்ணினாயதை நீமெய்யை (தத்தி)
சித்திராங்கதை- தோழிக்குச்சொல் - விருத்தம்.
சகிகளே கெட்டீரோ விச்சந்நியாசி சொன்னசொல்லை
மகிலந்தனை நானாள மந்திரிகள் நீங்களாக
விகிதமீ தெல்லாஞ்சும்மா வீணென்றானி வனைக்கொல்ல
வசையது வென்ன நீங்கள் வார்த்தையொன்றுரைசெய்வீரே.
வசனம்.
வாருங்கள் என் சகிகளே, இந்தப் பிராமண சந்நியாசி சொன்ன வம்புவார்த்தையைக் கேட்டீர்களா,
நானிந்த மதுரைப்பட்டணம் ஆளக்கூடாதென்றும் நீங்களெனக்கு மந்திரிகளாகத் தகாதென்றும், தன்னமருவி யணையவாடி யென்றும் போடியென்றும் இன்னம் வம்புவார்த்தைகளைப் பேசுகிறதைப்பார்த்தால் நமது பட்டணத்திற்கு என்னமோ கபடமாய் மோசஞ் செய்யவந்தவனைப்போல் காணுதம்மா, ஆகையால் இவனைக் கொல்ல வேணும் இதற்கொரு உபாயஞ் சொல்லுங்கள் சகிகளாகிய மந்திரிகளே.
சித்திராங்கதைக்கு முதல்தாதி சொல் - விருத்தம்.
சிசுவைவே தியனையின்னஞ் சிறந்திடுந் தந்தைதாயைப்
பசுவையுங் கொன்றாற்பஞ்ச பாதகமென் பார்முன்னோர்
அசைவிலாந மதுசெங்கோற் கனித்தியம் வாராதம்மா
இசையவே யிவனைத்திட்டி யிவிடம்விட் டோட்டுவோமே
வசனம்.
கேளும் இராஜ பரமேஸ்வரி குழந்தையை- பிராமணரை- தாய் தந்தையை- பசுவை-இவ்வைந்தையும்
கொல்வது மகாபஞ்ச பாதகமென்று பெரியோர்கள் சொல்வார்கள். ஆகையால் நாம்
இவனைக் கொல்லலாகாது. நமது பட்டணத்திற்கு ஒரு தாழ்வும் வராது. இவனைத் திட்டிமிரட்டி
இந்த நந்தவனத்தை விட்டோட்டி விடுவோமம்மணி.
சித்திராங்கதைசொல் வசனம்.
ஆனால் உங்கள் மனதிற்குச் சம்மதியெப்படியோ அப்படியே செய்யுங்கள் சகிகளே.
இரண்டாவது தோழி-சித்திராங்கதைக்குச் சொல்-விருத்தம்,
கஞ்சமாதரசே சித்திராங்கதை யெனுந்தாயே சொன்ன
பஞ்சமா பாதகத்திற் பார்ப்பானைக் கொல்வதென்ன
கொஞ்சமாங் கொலையொன்றல்லால் கோள் பொய்க்கட்களவும் பொல்லா
வஞ்சமாம் பாவமெல்லாம் வரும் நமக்கிது நன்றல்ல
வசனம்.
கேளாய் செந்தாமரைக் கமலத்தில் வாசம் செய்யும் மகாலட்சுமியைப்போலும் விளங்காநின்ற
சித்திராங்கதையம்மணி-குழந்தை- பிராமணன்-தாய் தந்தை-பசு-இவ்வைந்தையும் கொல்லப்
போகாதென்று இவள் சொன்ன வார்த்தை சரிதான் இதனிலும் பிரம்மத்தி செய்வதென்ன
கொஞ்சமா, மேலும் கோள் – பொய் -கள் - களவு என்று சொல்லும் பஞ்சபாதகம்
வருவதுமன்றியில் பொல்லாத வஞ்சனை துரோகஞ் செய்த பாதகமும் வருமாகையால்
பிரம்மத்தி செய்வது தர்மமல்ல தாயே,
அர்ச்சுனன் சித்திராங்கதைக்குச் சொல் - விருத்தம்.
யோசனை பலவு மெண்ணியுனது தாதிகளோடின்னம்
பேசினிதிருந் தாற்காமம் பிராணனை வாட்டுதென்றன்
ஆசைநீ தீர்க்கவெண்ணி அகமகிழ்ந் தணையவாராய்
காசினிபுகழுஞ்சித்திராங் கதையெனுமயி லென்கண்ணே
வசனம்.
வாராய் பெண்ணே நீயுனது தாதிகளுடனே பலபல ஆலோசனை பண்ணிக்கொண்டிருந்தால்
என்னுயிர் பிழைக்குமா, இனிமேலாகிலும் என் காமவிகாரத்தைத் தீர்த்து என்னுயிர் பிழைக்கச்
செய்கின்றவனானால் நாமிருவரும் மருவியணைவோம் வாராய்பெண்ணே என்கண்ணே.
அர்ச்சுனனுக்கும் சித்திராங்கதைக்கும் - வாது - தரு
இ-ம்-தந்யாசி- அட தாளம்.
ஏதுக்கோயோசனை பண்ணுறாய் பெண்ணேயின்னம்
என்னடி மோசங்ளெண்ணுறாய்
மாதர்க்கரசியேயுன் மணவாளனா னல்லவோ
மையலாலின்னமுமடிதையலேயென்னைக்கொல்லவோ (ஏது)
சித்திராங்கதை சொல் - தரு-இ-ம் மேற்படி
வாதுக்கிடமு மாச்சுதே-ஐயையோ வென்றன்
மதியுங் குலைந்து போச்சுதே
சூதுக்காரனென்றுன்னைத் தொழுவிலங்கிற்போடாமல்
காது மூக்கையுங்கொய்துக் கடக்கவோட்டி விடாமல் (வாது)
அர்ச்சுனன் சொல்லல்.
ஓட்டிவிட்டாலும் போவனோ உன்னைக் கூடாமல்
உயிரைக்கொன்றாலுஞ் சாவனோ
நாட்டிலுள்ளோரறிய நல்லமணம் நடக்க
கூட்டியுன்னையுங் கூடக் கொண்டுபோகாமற் கடக்க (ஓட்டி)
சித்திராங்கதை - சொல்லல்.
இதற்கோவுனை வைத் திருந்தார் - என்றன்றந்தை
என்ன துன்மதி நினைந்தார்
சதிக்கார நீயென்றுந் தன்மனதிற் சற்றும்
மதிக்காம லிவனாரோ மறையவனென் றழைத்து (இதற்)
அர்ச்சுனன் சொல்லல்.
வைத்திருந்ததற் கென்னமோ-பெண்ணே நானுன்றன்
மணவாள னென்பதாற் சின்னமோ
உற்றது சொல்கிறேன் உண்மையாயிதுதா னடி
க்ஷத்திரியக் குலத்தில் வந்த தநஞ்சயனா னடி (வை)
சித்திராங்கதை சொல்லல்.
தனஞ்செயப் பெருமா னுக்கு- நீயீடோ அவர்
தாமரைப்பாதத் தூளிற்கு
தினஞ்செய்வோனுதயம் போல் திரேகத்தழகைக்காண
மனம் சலிக்குமே கண்கள் மாதர்க்கனேகம் வேணும் (தனஞ்)
அர்ச்சுனன் சொல்லல்,
ஈடவனே நான் றானடி- பிராமணவேஷம்
எடுத்தாத்திரைவந் தேனடி
தேடவுங்கிடைக்குமோசேயிழையே நாளைக்
கூட வருவாய் நல்லக் குணத்தில் மிகுந்த காளை (ஈட)
சித்திராங்கதை சொல்லல்
கொண்டவன் போலழைக்கி றாய் பொல்லாதபண்டர்
குலைப்பிழைப்பேன் பிழைக்கிறாய்
உண்ட வீட்டிற் கெந்நாளும் ரெண்டகஞ்செய்ய நாடி
சண்டை செய்யவே வந்தாய் தந்நியாசிராகம் பாடி (கொ)
அர்ச்சுனன் சொல் - விருத்தம்.
மறையவ னென்றுசற்று மனதினிலெண் ணவேண்டாம்
குறையொன் றில்லாமல் வாழும் குருகுலத்தர சர்தம்மில்
பொறையினின் மிகுந்த தர்மபுத்ரன் பின்னுதித்தோன் தம்பி
அறையுமென் பேரெல்லோரும் அர்ச்சுனனென்பார்பெண்ணே.
வசனம்
கேளடி பெண்னே சித்திராங்கதை நான் பிராமணனென்று எண்ணவேண்டாம். எங்கள்
பூர்வோத்திரஞ் சொல்லுகிறேன் கேள். எங்கள் குலம் குருகுலம். என் தகப்பன் தேவேந்திர
மகாராஜன். என் தாய் குந்தி போஜராஜன் குமாரத்தி. என்றமையன் தர்மபுத்திர மகாராஜன்.
வீமசேனன். என் தம்பிமார்கள் - நகுலன் சகாதேவன். எங்கள் பட்டணம் இந்திரபுரி. என் பெயர்-
அர்ச்சுன மகாராஜன் என்று சொல்லுவார்கள். நான் பிராமண சந்நியாசி வேஷங்கொண்டு
பூலோகத்தில் புண்ணிய தீர்த்த யாத்திரைக்கு வந்தேன். ஆகையால் என்னை முஷ்டியெடுக்கிற
பிராமணனென்றெண்ணிச் சந்தேகப்பட வேண்டாம். இனி மறுவார்த்தைப் பேசாமல் என்னை
மருவியணைய வாடி பெண்ணே.
சித்திராங்கரை தாதிகளுக்குச்சொல் விருத்தம்.
மறையவனென்று வந்தான் மகிழ்வுடன் அன்னபானம்
குறையறக் கொண்டு பின்னும் குருகுலமன்ன னென்றான்
முறையினால் நம்மைக்கூடி மோகமுந் தீர்ந்தாற்பின்பு
பறையனென் றுரைப்பானிந் தப்பாவியை யென்னசெய்வோம்
வசனம்.
கேளுங்கள் எனது தாதிகளே இவனைக் கொன்று போடுங்களென்று சொன்னால் பிரமத்தி
செய்யப் போகாதென்று சொன்னீர்களே இப்போது இவன் சொன்ன சொல்லைக் கேட்டீர்களா?
முன்னேவரும் போது பிராமண சந்நியாசி வேஷங் கொண்டுவந்தான். வந்தவனுக்கு
என்றந்தையாகிய பாண்டிய மகாராஜன் சாமக்கிரிகைகள் வஸ்திர பூஷண முதலானதும்
கொடுத்து நமது கற்பகவனத்தில் வனபோசனம் செய்து கொண்டு சிலகாலமிருந்து
போகலாமென்று சொன்னார். அப்படியிராமல் அடிமடியிற் கையைப் போட்டது போல்
நாம் பூப்பறிக்க வந்தயிடத்தில் என்னைக்கண்டு மோகித்து நான் பிராமணனல்ல; குருகுல
வங்கிஷ சிகாமணியாகிய அர்ச்சுன மகாராஜனென்று சொல்கிறான். அதைக்கேட்டு
பூலோகமாய் கைக்குள் அகப்பட்டு இவன்பேச்சை நம்பிச் சம்மதித்தால் பின்பு தாதிகளை
யெல்லாரையும் விட்டு நீங்கும்பொருட்டு நான் பறையனாச்சேயென்று சொல்லுவான்
போற்காணுது. இந்தப்பாவியை யென்ன செய்யலாம் சகிகளே.
முதல்தோழி நாயகிக்குச் சொல் விருத்தம்.
கொக்கிலுந்தோஷிக்கொக்குங்கூட்டத்தைக்கெடுத்ததென்று
திக்கில் வாழ்பார்ப்பார் தம்மில் திருடன்போலிவன் பிறந்த
அக்குலந்தனையனைத்தும் அழிக்க வந்ததினாலின்னம்
சக்கிலியென்றுஞ்சொல்வான் சந்தேகமில்லையம்மா.
வசனம்.
கேளும் இராஜபரமேஸ்வரி கொக்குக்கூட்டத்தில் ஒருதோஷி கொக்கிருந்து அதன்
குலத்தனைத்தையும் கெடுத்ததென்று சொல்லுவார்கள். அதற்கு சரியாய் தான் இவன்
நல்ல பிராமண குலத்திற் பிறந்தவனைப்போலே காணுது. அப்படிக்கிருந்தும் தான்
க்ஷத்திரியனென்று சொல்லுகிறபடியினால் இவனை நம்பக்கூடாது இன்னஞ்
சக்கிலியென்றும் சொல்லுவான். இதற்குச் சந்தேகமில்லை அம்மணி.
இரண்டாந்தோழி - அரசிக்குச்சொல்- விருத்தம்.
சைவசொக் கேசர்நாட்டில் சாதியிலுயர்ந் தோரென்றும்
ஐவர்சோதர னென்றும்பேர் அர்ச்சுனனென்றும் உன்னைக்
கைவசப்படுத்த வேண்டிக் காரணமெண்ணிப் பார்த்தால்
வைசியனென்றும்சொல்லு வானென்றுந் தோணுதம்மா.
வசனம்.
கேளும் இராஜபரமேஸ்வரி திவ்யசைவ சிவசொக்கநாதசுவாமி வாசஞ்செய்யும் திருமதுரையென்னும்
புண்ணியக்ஷேத்திரத்தில் தீர்த்தயாத்திரை பிராமண சந்நியாசியாய் வந்தவன் இந்தக்
கற்பகவனத்தில் உன்னைக்கண்ட தட்சணம் க்ஷத்திரியகுலமென்றும்
தர்மபுத்திர மகாராஜனுக்குத் தம்பியென்றும் அழகில் மிகுந்த அர்ச்சுன மகாராஜனென்றும்
உறவின்முறை கொண்டுவந்து வகை மோசஞ்செய்ய நினைத்தவன் க்ஷத்திரிய குலமென்று
மாத்திரமா சொல்வான் போலே தோணுது அம்மணி.
முதல் தோழி நாயகிக்குச்சொல் விருத்தம்.
சாஸ்திர மறையோனென்றும் சந்நியாசியென்று மின்னம்
கோத்திரமு ரைக்கின்றானற் குருகுலத்தரசர் தம்மில்
யாத்திரைப் போகவந்த அர்ச்சுன னென்றவன்றான்
சூத்திரனென்றும் நாளைச் சொன்னாலுஞ் சொல்வானம்மா
வசனம்.
கேளும் இராசபரமேஸ்வரி இவன் பிராமண சந்நியாசியாய் வந்தவன் இப்போது க்ஷத்திரிய
குலமென்றும் தர்மபுத்ரமகாராசனுக்குத் தம்பியென்றும் அர்ச்சுன மகாராசனென்றும்
சொல்லத் துணிந்தவன் வைசிய குலமாத்திரமா சொல்லுவான் சூத்திரகுல மென்றும்
சொன்னாலுஞ் சொல்லுவான் அம்மணி.
இரண்டாவது தோழி - அரசிக்குச்சொல் - விருத்தம்
வானச்சந்திரன் போல் வந்து வளர் சித்திராங்கதையே நல்ல
ஞானசங்கரர் சொக்கேசர் நகரில் அந்தணனைப்போல் வந்
தானசக்கிலி யல்லாமல் தனஞ்செயனென் றானின்னம்
ஈனசக்கிலி யென்பானை யிவளைநம் பொண்ணாதம்மா
வசனம்.
கேளும் பரமேஸ்வரி சீதளப் பிரகாச சந்திரனைப்போல் தினமொரு மேனியாய் வளர்ந்த
சித்திராங்கதையம்மணி, நல்ல சிவஞான சொக்கநாத சுவாமி வாசஞ்செய்யுந் திருமதுரைப்
பட்டணத்தில் இவன் பிராமணனைப் போலே வந்து நம்மைக் கண்டச்ச மென்கிற பயமுங்
கிலியும் இல்லாமல் க்ஷத்திரிய குல அர்ச்சுனனென்று சொன்னவன் சக்கிலியென்றுஞ்
சொல்லுவான். இன்னஞ் சற்றுநேரமிருந்தால் ஈனச்சக்கிலி யென்றுஞ் சொல்லுவான்.
இவன் பேச்சை எவ்வளவும் நம்பப் போகாதம்மணி.
அர்ச்சுனன் சித்திராங்கதைக்குச்சொல் விருத்தம்.
மலைக்கும் பாரியக்கன் மேலே வழுதலைக் காய்க்குமோ வென்றால்
கொலைக்கு மோராயிரங்காய்க் கொத்துக்கீ ராயிரங்காய்
இலைக்கு மூவாயிரங்காய் எனச்சொலிக் குடித்தனத்தைக்
கலைக்கு மாதர்கள் தன் பேச்சைக் காதினுங் கேட்கலாமோ
வசனம்.
கேளடி பெண்ணே சித்திராங்கதை மலைக்கும் பெரிதாயுயர்ந்த கல்லின் மேலே வழுதலைக்
காய்க்குமோ வென்றால் கொலைக்கா யிரங்காய் கொத்துக்கிரண்டா யிரங்காய் இலைக்கு
மூவாயிரங்காய் இப்படிக் கெல்லாங் காய்க்குமென்று சொல்வதுபோல் பிராமண குலத்திற்
பிறந்து க்ஷத்திரியகுலமென்று சொல்கிறானென்று நீ சொன்ன வார்த்தையைக்கேட்ட
தாதிப்பெண்கள் க்ஷத்ததிரியகுலமென்று மாத்திரமா சொல்லுவான் வைசியனென்றுஞ்
சொல்லுவானென்றுஞ் சூத்திரனென்றுஞ் சொல்லுவானென்றுஞ் சொல்லிக் குடியைக்
கெடுத்து ஒருகுடியை ஒன்பது குடியாக்கும் பெண் பெண்சாதிகளுடைய பேச்சைக்
காதிலுங் கேட்கலாமா உன்னுடைய தாதிப் பெண்களுக்கும் உனக்குந் தெரிந்தது
இவ்வளவுதானா. இனி நானுன் மேற்கொண்ட ஆசையைத் தீரடி பெண்ணே.
சித்திராங்கதை புலம்பல் -தரு- இ-ம் நீலாம்பரி- ஆதிதாளம்,
அரகராசிவனேயென் விரதந் தப்பினாலிந்த
அகிலம் நகைத்திடாதோ தெய்வமே -இனி
ஆதரவுன்றனளின பாதமலரன்றி வேறிங்
காரெனக்குத் துணை தெய்வமே
புரமெரியச் சிரித்த பரமசிவனேயுன்றன்
பொற்பாதந்தனை நாளுந் தெய்வமே- சிவ
பூசைசெய்யவு மெண்ணி வாசமிகுங்கற்பகப்
பூப்பறிக்கவந்தேனே தெய்வமே
காமக்குரோதலோப மதமோகமாச்சரிய
கர்மவலையிற்சிக்கித் தெய்வமே-என்
கற்பழிந்து போகாமல் தற்பரா சொக்கநாதா
சரணம் என்னைக்காரும் தெய்வமே
மாமலர்ச் சோலையுஞ் செந்தாமரை வாவியுஞ்சூழ்
மதுரை மீனாட்சியென்னுந் தெய்வமே
வாலாம்பிகை பொற்பாக நீலாம்பரி யிராக
மறையோதிய விவேக தெய்வமே
அர்ச்சுனன் சித்திராங்கதைக்குச்சொல் - விருத்தம்.
மங்கைபங்காள னென்றாய் மதுரைவாழ் சொக்கநாதர்
அங்கயற்கண்ணி யென்னும் அம்மையும் அருகிருக்க
கங்கையைச் சடையில்வைத்த கதையை நீகேட்டிருந்தும்
சங்கையென்னடி யுனக்குத் தழுவநாம் அணைவோம்வாடி.
வசனம்.
கேளடி பெண்ணே சித்திராங்கதை அந்த மங்கைபங்காளனாகிய மதுரை சொக்கநாத
சுவாமியை நினைந்து அழுகிறாயென்னடி. அவர் இடப்பாகத்திலே எந்நாளும்
பிரியாமலிருக்கின்ற மீனட்சியம்மனை அறியாமல் கள்ளத்தனமாகக் கங்காபவானியைச்
சடாபாரத்திலொளித்து வைத்திருக்கின்றதை நீ கேட்டிருந்தும் இன்னமேன் சந்தேகப்
படுகிறாய் என்னைத் தழுவியணையடி பெண்ணே,
சித்திராங்கதைக்கும் அர்ச்சுனனுக்கும் வாது தரு
இ-ம் கேதாரகௌளம்- ஆதிதாளம்.
மாதவாவுனக் கென்ன கேடா-நந்த
வனத்தை விட்டப் புறம் போடா
பாதகா உன் முகம் பார்க்கவும் போகாது
பார்ப்பானுக்கு வழி கூப்பவும் போகாது (மாதவா)
அர்ச்சுனன் சொல் - தரு-இ-ம். மேற்படி.
பெண்ணே உன்னை விடு வேனோ- மற்றப்
பேதையை நான்றொடு வேனோ- எந்தன்
கண்ணேயுன்னைத்திருக் கலியாணஞ்செய் யாமல்
மண்ணாள நீ பெற்ற மைந்தனைவை யாமல் (பெண்)
சித்திராங்கதை- சொல்லல்.
கலியாணஞ் செய்யவோ வந் தாய்- இந்தக்
கற்பகக்காவிலிருந் தாய்
அல்லி அரசாணியாரென்று நீபார்த் தாய்
அறியா யோ சேதி வெறியாயிங்கேன்பார்த் தாய் (மாதவா)
அர்ச்சுனன் சொல்லல்
அல்லியரசாணி நீயே- பூமி
ஆளலாமோ பெண் பேயே
வில்லிலுயர்ந்தவன் வீமற்கிளை யவன்
விஜயனானல்லவோ நிசமாகச் சொல்ல வோ (அல்லி)
சித்திராங்கதை சொல்லல்
விசயனென்றாலிங்குச்செல்வை யோ-மாய
வேஷங்கொண்டு வாயால் வெல்வை யோ நன்றாய்
இசையும்பிட்சையெந்நாளும் இரப்பவர்க்கே கொடுக்கும்
திசையெங்கும் திரிந்தின்னம் வசமாய்முஷ்டியெடுக்கும் (வி)
அர்ச்சுனன்- சொல்லல்.
முஷ்டியெடுபேனென்றெண் ணாதே- என்னை
முழுதும்பரியாசம்பண் ணாதே- பார்க்கும்
திஷ்டிக்குப் பிராமணன் திரேகம் நாரதன் சொல்லால்
தீர்த்தமாகிடவுலகில் யாத்திரை வந்தேனல் லால் (முஷ்டி)
சித்திராங்கதை சொல்லல்
தீர்த்தமாடவந்த பேச்சு- உன்றன்
திருட்டுத்தனம்வெளி யாச்சு- சொல்லும்
வார்த்தைநிசமென்றால் மயலுனக்கே தடா
வம்புக்காறாவுன்னை நம்பக் கூடா தடா (தீர்த்த)
அர்ச்சுனன் சொல்லல்.
வம்புத்தனமீதல்ல மானே - என்றன்
வார்த்தையைக் கேளடி தேனே - உன்றன்
குரும்பைக்குறியின்மேல் கூட மிக மோகம்
கூரச்செய்யுமிந்த கேதாரகௌள ராகம் (வம்பு)
சித்திராங்கதை - அர்ச்சுனனுக்குச்சொல் விருத்தம்
விடுவேனோவென்று மற்றோர் மெல்லியர் தம்மைக்கையால்
தொடுவனேயென் றுமெத்தத் துள்ளுறாயென்ன நீதான்
கெடுவான் முன்னொருவருக்குக் கேடுசெய்வானென்பார்கள்
படுவானிங் குனைப்பிடித்தப் பயித்தியமேதுரைசெய்வாயே
வசனம்.
ஆரடா அறிவுகெட்ட பிராமணா என்னடா உன்னை விடுவேனோவென்றும் மற்றொரு
பெண்ணைத் தொடுவேனோவென்றும் சரிப்போனமட்டும் பினாத்துகிறாய் என்னடா
கெடுவான் கேடுநினைப்பானென்பதற்குச் சரியாய் நீ தீர்த்தயாத்திரை வந்தவனுக்கு
ஏனிந்தக்கேடு அடாபடுவான் உனக்கென்ன பயித்தியம் பிடித்ததோ
ஆ ஆ ஆ ஆ நன்றாயிருக்குது,
அர்ச்சுனன் சித்திராங்கதைக்குச்சொல் - விருத்தம்,
பயித்திய மீதல்லமானே பாவிமன்மதன் றானென்மேல்
உயித்தியம் செய்வதனால் ஆவி யுருக்கிய காமத்தீயை
சயித்தியுபசாரம் செய்யத் தரணியில் உனையல்லால்
வயித்தியம் வேறில்லையே நீயேமருந்தென்னைமருருவாயே,
வசனம்.
கேளடி. பெண்ணே சித்திராங்கதை எனக்குப் பிடித்தது பயித்தியமல்ல உன்னைக் கண்ட
தட்சணம் பிடித்த காமப்பயித்தியமிது இனியிதற்கு உந்தன் குரும்பைக்குறியைச்
சேர்ந்தணைவதே வைத்தியம் கோவைக்கனியிதழ் தேனூறலைக் குடிக்கின்றதே மருந்து.
இதைவிட வேறே வயித்தியமில்லை. என்னை மருவி அணையவாடியென் கண்ணே கண்மணியே.
சித்திராங்கதைக்கும் அர்ச்சுனனுக்கும் வாது -தரு
இ-ம்-தோடி - அடதாளம்,
வாடியென்றென்னை மதியாதழைக் கிறாய்
வம்புகள் பேசியுன் வாயேன்புழுக் கிறாய்
சேடியராலுன்றன் சென்மம் ஒழிக் கிறாய்
திருடன் போலேண்டாநீ தேங்கிமுழிக் கிறாய்
செற்றவனே தவம் அற்றவனே மத
முற்றவனே பேச்சுக் கற்றவனே சீசீ
போடாபோடா பிராமணா வுன்றனுக்கென்ன
போங்கால மோபிராமணா
அர்ச்சுனன் சொல்- தரு-இ-ம்
சீச்சீப்போவென்றென்னைச் செப்பினாலு முன்றன்
செடியராலென்னைத் தெரித்தினாலும் இந்தப்
பூச்சிக்கு நானோடிப் போகமாட்டேன் சொந்தப்
புருஷனாகியுன்னைப் புணரவும்நான் வந்தேன்
பூவினிலற்புத வாவிசூழ் கற்பகக்
காவிலிருவோருங் கூடிமேவியத்தோடியைப் பாடி
வாரும் வாரும் அன்னமே மருவிமையல்
தீரும் தீரும் சொர்ணமே
சித்திராங்கதை புலம்பல் தரு-
(இ-ம்) – ஆனந்தபைரவி-அட தாளம்.
புருஷன் வேண்டாமென்று பெண்ணரசாட்சி செய்து
பூரிப்பாயிருந்தேனே தெய்வமே -ஒரு
பூசுரன் இவனாரோ புணருவோம் வாடியென்று
பூங்காவில ழைக்கிறான் தெய்வமே
ஒருட்சணப் போதிலிவன் உயிரைக்கொல்லாமற் சும்மா
ஓட்டிவிட் டேனேயானால் தெய்வமே- இது
உள்ளப்படி யிவட்கு கள்ளப்புரு ஷனென்றில்
வுலகெங்கும் பழியாதோ தெய்வமே
செங்கோலும் ஆண்மையும் இங்கேயெனக்கெந் நாளும்
செல்லுமென் றிருந்தேனே தெய்வமே- இந்த
செகதலமன்ன ரென்னை நகைக்கவு டம்பெடுக்கத்
தீவினையென்செய்தேனோ தெய்வமே
மங்களமாகத் தாதிப் பெண்களுடனே மன
மகிழ்ச்சியாயிருந்தேனே தெய்வமே
மதுரை மீனாட்சித்தாயே சதிசெய்யலாமோ நீயே
வந்தெனைக்காக்கவேணும் தெய்வமே
மாநிலமெங்கும் புகழ் ஆனந்தபைரவி
ராகமருளவேணும் தெய்வமே
அர்ச்சுனன் சித்திராங்கதைக்குச்சொல் விருத்தம்
மதுரை மீனாட்சியம்மன் மகேசுரர்பிரிந்தா ரென்றே
கதிதரு தவஞ்செய்தந்தக் கடவுள் தன்னிடப்பாகத்தில்
சதிருடன் கலந்து வாழும் சங்கதிகேட்டிருந்தும்
எதிர்மறைபேசவேண்டாம் இருவரும் அணைவம் வாடி.
வசனம்.
கேளடி பெண்ணே சித்திராங்கதை இந்த மதுரை மீனாட்சியம்மனாகிய மகேஸ்வரிக்குக்
தகப்பனென்று சொல்லப்பட்ட தக்கன் அகங்கொண்டு செய்த மகாவேள்வியில்
அவன்றலை யாட்டுத் தலையானபடியினாலே அப்பேர்ப்பட்டவன் மகள் நமக்கான
தென்று சுவாமி தன்னிடப்பாகத்தி லேயிருக்கின்ற ஈஸ்பரியைப் பிரிந்தபோது அம்மனானவள்
இமயகிரி பர்வதராசன் வயிற்றிற்பிறந்து பார்வதியென்னும் பெயர் பெற்று பரமேஸ்வரனை
நோக்கி அனேககாலந் தவஞ்செய்து பிறகு சுவாமியிடப் பாகத்தில் எப்பொழுதும்போலே
ஏகத்திரேகமாய்க் கூடிக் கலந்திருக்கிறதும் அறிந்திருந்தும் எதிர்மொழி பேசவேண்டாம்.
நாம் இருவரும் கூடியணைவோம் வாடி பெண்ணே .
சித்திராங்கதைக்கும் அர்ச்சுனனுக்கும் வாத தரு
இ-ம் -தோடி -அட தாளம்
எதிர்மொழி பேசா திருக்கவுன்றன் குணம்
எல்லாந் தெரிந்ததே பொல்லாதபிரா மணா
பதரேயுன்னைப்போலே பட்டுவிழுப் பிணம்
பாரினிற்சொல்லவும் ஆருமில்லையோ ரொணம்
பாதகனேயெம காதகனே துஷ்ட
சாதகனே கெட்ட மாதவனே சீச்சீ
போடா போடா பிராமணா உனக் கென்ன
போங்காலமோ பிராமணா
அர்ச்சுனன்சொல் தரு-இ-ம்-மேற்படி
சித்திராங்கதையெனு ம் பேர் செல்லுமோயா வரும்
செப்பு மொழியென்றும் தப்பல்லவே பாரும்
க்ஷத்திரிய குலத்தினிற் றனஞ்செயனென் பேரும்
சங்கையென்னடி வுனக்கிங்கே சுய மரம்
சாட்டிவைப்பேன்மாலை சூட்டிவைப்பேன் கோலம்
காட்டிவைப்பேன் லீலைப் பூட்டிவைப்பேன் இனி
வாரும்லாரும் அன்னமே லீலைசெய்து
பாரும் பாரும் சொர்னமே
சித்திராங்கதை புலம்பல் -தரு- இ -ம்- முகாரி- ஆதி தாளம்
அரிகரி கோவிந்தா முர அரிவைகுந்தா
அச்சுதானந்த முகுந்தா ரகுநாதா-சொல்லும்
ஆதிமூலமே வுன்றன் பாதமலர் நம்பினேன்
ஆபத்தைக் காருமையா ரகுநாதா
திருமகளுறை மார்பா மருவளர் பத்மநாபா
ஜெகம் புகழும் பிரதாபா ரகுநாதா
தேவதேவ மகானுபாவ தேவகிதந்த
சேயாமாயா சகாய ரகுநாதா- மணி
வண்ணா வாசமலர்க் கண்ணா கேசவ கிருஷ்ணா
மச்சக்கூர்மாவதாரா ரகுநாதா
ஸ்ரீதரா தாமோதராசொல் லாதரவுன் பாதமல்லாமல்
செகத்திலெனக்காரையா ரகுநாதா- வெகு
சென்மவிகாரமோகம் கன்மங்கள் நிர்வாகம்
செய்யுமுகாரி ராகம் ரகுநாதா
அர்ச்சுனன் சித்திராங்கதைக்குச் சொல் - விருத்தம்,
இரகுநாத சுவாமியந்த நந்தகோபாலன் வீட்டில்
மகனாகி வளர்ந்து முல்லை மாதரைமருவிக்கூடி
வெகுநாள் மட்டிற்குப்பால் மோர்வெண்ணையுந் திருடியுண்டு
செகமீதிலின்னஞ் செய்த சேதி நீயறிகிலாயோ
வசனம்.
கேளடி பெண்ணே இரகுநாதசுவாமியை மிகவும் நம்பித் துதிசெய்கிறாய் என்னடி
அவர்தானே ராதா ருக்குமணி – சத்தியபாமா முதலாகிய அஷ்டபட்ட ஸ்ரீகள் இருக்க
அதுவுமல்லாமல் தன்மார்பில் எந்நாளும் பிரியாமல் மகாலட்சுமியிருக்க அது போதாமல்
அனந்தகோபாலரென்றும் சொல்லப்பட்ட இடையர் வீட்டில் பிள்ளையாய்ப்
பிறந்து பால்- மோர் - தயிர் வெண்ணெய் முதலாகியதும் திருடித்தின்பதுமல்லாமல்
பதினாயிரம் கோபஸ்த்ரீகளை வகை மோசஞ்செய்து மருவியணைந்தும் இன்னம்
பூலோகத்தில் அவர் செய்த கபட வஞ்சனைகள் உனக்குத் தெரியாதா அப்பேர்ப்பட்டவரை
நம்பியழுகிறாய் என்னடி நான் பிக்ஷையெடுக்கிற பிராமணன் அல்ல என்னை மருவி
அணையவாடி பெண்ணே மைதிரண்ட கண்ணே.
சித்திராங்கதைக்கும் அர்ச்சுனனுக்கும் வாது - தரு
இ-ம் தோடி- அடதாளம்,
பிச்சையெடுப்பாய் பிணத்தையுந் தின்னு வாய்
பெருகுசமுத்திரத்தைப் பேய்போலேயுண்ணு வாய்
நட்சத்திரங்களை நன்றாக எண்ணு வாய்
நமனையுங் கூடப் பலகாரம்ப ண்ணு வாய்
நம்புவேனோ சொல்லியம்புவேனோ மெத்த
வம்பனல்லால் சத்திய சம்பன்னனோ சீச்சீ
போடா போடா பிராமணா உனக் கென்ன
போங்காலமோ பிராமணா
அர்ச்சுனன் சொல்லல்
மருங்குமரியாதை வையாமற்றிட்டு றாய்
மாதரசே சொல்மழை யெனக்கொட்டு றாய்
குரங்குபோ லென்றனைக் கூத்தாட்டமாட்டு றாய்
கொல்லுவேனென்று நீ சொல்லி மிரட்டு றாய்
கொம்பன்னையே சத்திய சம்பன்னியே சந்திர
விம்பவதனியே நம்பினே னுன்னையே
வாரும் வாரும் அன்னமே மருவியென்
மையல் தீரும் சொர்ணமே
சித்திராங்கதை சொல் தரு-இ-ம் ஆனந்தபைரவி ஆதிதாளம்
வேதியனால் என் விரதம் பாதியில் போகத் தலையில்
விதித்தவிதியிதுவோ பிரம்மதேவா- நல்ல
வெத்தியு மெனது செங்கோல் சத்தியமும் இவ்வுலகில்
வீணாகப் போகுமையோ பிரம்மதேவா
ஆதியில்எனது தந்தை ஓதியவாசகமும்பொய்
ஆச்சுதென் செய்வேனையோ பிரம்மதேவா சொல்லும்
அன்னவாகனா வென்னாகம் நன்னயமிகும் விவேகம்
ஆனந்தபயிரவிராகம் பிரம்மதேவா
அர்ச்சுனன் -சித்திராங்கதைக்குச்சொல்- விருத்தம்.
சதுமுகப்பிர்மாவுந்தான் சரஸ்வதிதேவியைப்பிரிந்து
தான் சிருஷ்டித்த
மதிமுகமார் திலோர்த்தமையை மகளென்று பாராமல்
மையல் கொண்ட
புதுமைகள் நீயறிந்திருந்தும் புத்தியில்லாப் பேதையைப்போல்
புலம்புகின்றாய்
விதி செகமெல்லாம் படைத்த விதி தனையும் ஒருநாளும்
விடுமோ பெண்ணே
வசனம்.
கேளடி பெண்ணே சித்திராங்கதை என்னடி நீயின்னம் பிரமதேவனை நினைந்து
அழுகிறாய். அந்த பிரமதேவன் தானே தன்னாவில் என்னாளும் பிரியாமலிருக்கின்ற
சரஸ்வதிதேவியைப் பிரிந்து தேவேந்திரன் சொற்படிக்கொரு காரணமாய்த் திலோர்த்தமை
யென்றொரு பெண்ணச் சிருஷ்டித்துத் தன் மகளென்றும் பாராமல் அவள் பேரில் அதிக
மையல் கொண்டு தன்னை மருவி யணையச்சொல்லி அனேக நாள் வாது செய்த கதையை
நீ கேட்டிருந்தும் இன்னம் ஏன் அந்த பிர்மதேவனை நொந்தழுகிறாய். விதிப்பயனாகப்
பட்டது இந்த ஈரேழு பதினாலு புவனத்தையும் அதிலுண்டாகிய எண்பத்து நான்கு லட்சஞ்
சீவராசிகளையும் சிருஷ்டிக்கும் பிரம்மதேவனைக் கூட காமவிகாரம் விடமாட்டாது
சும்மா என்னை மருவியணைய வாடி பெண்ணணே என்மையல் தீரடி என் கண்ணே
என் கண்மணியே,
சித்திராங்கதைக்கும் அர்ச்சுனனுக்கும் வாது தரு
இ- ம் தோடி- அட தாளம்.
வார்த்தைக்கனேகம் வகைசொல்கிறாய் ஈடு
மனிதனும் அல்லாநீ மாட்டிற்கிடா மாடு
பார்த்திபனென்றுன்னைப் பகரலாமோ சோடு
பார்ப்பானுக் கேனிந்தப் பாரில்படும் பாடு
பட்டவனே வீடு விட்டவனே கேடு
கெட்டவனே - காடு சுட்டவனே சீச்சீ (போ)
அர்ச்சுனன் சொல்லல்,
ஒன்றிற்கிரண்டாய் உதாசினம்பேசு றாய்
ஓ ஓ ஓ என்ன ஒருக்காலேவீசு றாய்
எண்ணிப்பாராமல் நீ ஏதேதோபேசு றாய்
எரி நெருப்பில் மெழுகிட்டாற்போற்காச்சு றாய்
எப்படியு முன்றன் -சொற்படியுன் மன
தொப்பிட செய்துன்றன் கைப்பிடிப்பேன் இனி (வாரு)
சித்திராங்கதை புலம்பல்- தரு-
இம்- காம்போதி -ஆதி தாளம்.
காசிதேசப் பிராமணசன்னியாசி வேஷங்கொண்டிருந்த பூங்
காவினில் வரச்செய்தாயோ தெய்வமே என்றன்
கற்பழிக்க நீயேசதி சற்பனை செய்தாயிதென்ன
காரணமோ ஐயோபாவி தெய்வமே
வேசியைப் போலென்னையிவன் பேசியவார்த்தைக்குன் மனம்
மிகமகிழ்ந்திருந்தாயோ தெய்வமே இதை
மேதினியிற்பெண்கள் காம் போதியைப் பாடி நகைக்க
விதித்தாயோ ஐயோபாவி தெய்வமே
அர்ச்சுனன் சித்திராங்கதைக்குச் சொல் விருத்தம்.
தெய்வமேன் செய்யும் பெண்ணே தேசத்திலில்லா வாழ்க்கை
கையினிற் செங்கோலேந்தி கணவனில்லாமல் வீணாய்
வையகந் தன்னையாள மணிமுடி தரித்துக்கொண்டாய்
தையலேயிது வுனக்குத் தகுமோ சொல்லடியென் கண்ணே
வசனம்,
கேளடி பெண்ணே சித்திராங்கதை என்னடி இன்னம் தெய்வம் தெய்வமென்று தெய்வத்தை
நொந்தழுகிறாய். ஆதியில் நீயொரு இராசகுமானை விவாகம் பண்ணுகிறதை
அந்த தெய்வம் வேண்டாமென்று சொல்லிற்றதோ தான் ஆகிலும் பெண்ணாய்ப்
பிறந்தவள் புருஷனில்லாமல் பூலோகம் ஆளத்தகுமா சொல்லடிபெண்ணே என்
விரகதாபத்தை வெல்லடி கண்ணே,
சித்திராங்கதைக்கும் அர்ச்சுனனுக்கும் வாது தரு
இ-ம் புன்னாகவராளி- அடதாளம்
பிராமணா ஈதென்னவம் போ- சீ சீ சீ
பினத்தாதே நீ நந்தவனத்தை விட்டப்புறம் போ (பிரா)
காமமென்னும் இட ரேது - அந்தக்
கர்மமெனைத்தொட ராது- நானோ
கற்பழியாமட மாது – என்றன்
கனவிலும் இதுநட வாது - நல்ல
பூமலர் கொண்டெங்கள் சொக்கநாதர்க் கிஷ்ட
பூசை செய்யும் என்மேல் ஆசைகொண்ட துஷ்ட (பிராம)
அர்ச்சுனன் சொல் - தரு- மேற்படி
ஆசைகொண்டேனடி மாதே உன்றன்
அம்பொன் முகச்சந்த்ரபிம்பம் கண்ட போதே ஆசை
ஈசனைக் கண்டவள் நானே என்றாய்
ஏனமும் அன்னமும் தானே - ஆனல்
இருவருங்காணா என் கோனை நீ
எப்படி கண்டாய் ஏர் மானே- நல்ல
வாசமிகுந்த மலர்வனந்தன் னிலே
வந்தவளே மோகந் தந்தவளேஉன் மேல் (ஆசை)
சித்திராங்கதை சொல்லல்
ஆசையென் மீதிலேன் கொண் டாய்- உன்றன்
ஆண்மையழிப்பேனாங்கண் டாய் - எனை
யாளவோ வந்தாய்நீபெண் டாய்- வாளால்
அறுப்பேனுன்னைத் துண்டிரண் டாய்- இன்னம்
வேசியனந்தம்பேர் பேசிப்படுப்பார் கள்
வீட்டிற்குப்போய்ப் பெண்ணை கூட்டிக்கொடுப்பார்கள் (பிராம)
அர்ச்சுனன் சொல்லல்
வேசியர் வீடறி யேனே- வேறோர்
மெல்லியறைக் குறி யேனே -உன்னை
விட்டுப்பிரிவேனோ நானே ஆசை
வெட்கமறியுமோ மானே பணம்
காசுமில்லை யென்றன் கையின்மையலுக் கேத்த
கட்டழகிசாந்துப்பொட்டழகி மெத்த (ஆசை)
சித்திராங்கதை சொல்லல்
பணமேதென்றெனக்கென்று சொல் கிறாய் என்னைப்
பார்த்துப்பார்த்து வாயைமெல் கிறாய் இந்த
பாரின்மலையையும் கெல் கிறாய் படு
பாவியேண்டாவாயால் வெல் கிறாய் செத்தப்
பிணமேயுன்ற னுக்கெங்கும் பிராமணசாதி யில்
பெண்ணில்லாமற்சொந்த மண்ணில்லாமல் வந்த (பிராம)
அர்ச்சுனன் சொல்லல்
பெண்ணுன்னையல்லாமல்வே றில்லை- உன்னைப்
பிரியவென்றால் என்மனம் வல்லை - அடி
பேதையே கேளென்றன் சொல்லை - இந்த
பேருலகிலெங்கள் எல்லை சொந்த
மண்ணிந்திராபுரி வாசவன்மைந்த னான்
மைத்துனன்மாலென்பார் அர்ச்சுனன் என்றன்பேர் (ஆசை)
சித்திராங்கதை - சொல்லல்
அர்ச்சுனராசனிவ் வேஷம் கொண்டு
யாத்திரைவந்தாலும்பெண் தோஷம் - இந்த
ஆண்பிள்ளை க்கேனில்லை ரோஷம் - தந்தை
அறிந்தால் வரும் மெத்த திரேஷம்
துற்சன பிராமணா தூரநில் இருப்புத்
தூணைச் செல்லெறியாதுவீணிற் சொற் செரியாது ( பிராம)
அர்ச்சுனன் சொல்லல்
வீணான ஞாயஞ்சொல் லாதே உன்றன்
வித்தை உபாயம் வெல் லாதே - என்றன்
விரகத்தின் மாயம்பொல் லாதே - உன்னை
விட்டாலென் காயம் நில் லாதே- அடி
நாணாமலிருவராய் நந்தவனத்தில் நல்ல
நாளின்புன்னாகவராளின் ராகஞ்சொல்ல (ஆசை)
சித்திராங்கதை - விசனப்படுகிற தரு இ-ம்- பிலஹரி- ஆதிதாளம்.
கற்பகப் பூங்காவனத்தில் எப்படியி வனைச்சில
காலமிருக்கச் சொன்னீரோ தந்தையே - நல்ல
காசிவேதியன் போல்மாய வேஷங்கொண்டுவரச்சொல்லிக்
கட்டளையிட்டிருந்தீரோ தந்தையே
சொற்படிகேளாத பெண்ணென்றிப்படி யிவனைக் கொண்டு
சோபனஞ்செய்யச் சொன்னீரோ தந்தையே - பொல்லாச்
சூதுபொய் பேசியனேகம் வாதுசெய்தேசி நிர்வாகம்
சொல்கிறான்பிலஹரி ராகம் தந்தையே
அர்ச்சுனன் சித்திராங்கதைக்குச்சொல் – விருத்தம்.
தந்தையென் செய்வார் இந்தத் தரணியையாள் வேனென்றுன்
சிந்தையிலெண்ணிக் கேட்டாய் சிறுபிள்ளை விளையாட்டாய்
விந்தையிதெல்லாஞ் சும்மா வீணல்லோ மோருக்குப்போய்
மொந்தையை யொளிக்கவேண்டா மோகத்தைத் தீராய்பெண்ணே
வசனம்,
கேளடி பெண்ணே சித்திராங்கதை இன்றல்லோ உன்றந்தையை நினைந்தழுகி
ஒழுகிப்போகிறாய். அன்று உன்றந்தையாகிய பாண்டியமகாராஜன் உன்னை ஒரு
இராஜகுமாரனுக்கு விவாகம்பண்ணி வைத்து உன்வயிற்றிற் பிறந்தபிள்ளையைப்
புத்திர சீகாரம் பெற்று இளவரசு பட்டங்கட்டி வைக்கிறேனென்று அனேக விதத்திலுஞ்
சொன்ன வார்த்தையைத் தள்ளிப்போட்டு நானே யிந்த மதுரைப் பட்டணம்
அரசாளுவேனென்று சிறுபிள்ளை விளையாட்டாய் மகுடாபிஷேகந் தரித்துக்கொண்டு
கெட்டாய். மோருக்குப் போய் மொந்தையை யொளிக்கவேண்டாம். என்மோகத்தைத்தீரடி பெண்ணே.
சித்திராங்கதை சொல் – கந்தார்த்தம் -இ-ம்-மோகனம்,
மோகேந்திரன் மொழியும் நின்வாய்களை கிழிக்க
திரேகந்தனைச் சின்னபின்னங்களாய்க் கிழிக்க
காகம்போய்பெருங்கழுகுடல்நாய் நரியிழுக்க
வேகாமயுன்னை வெளியிற்கொடுபோய் தலைகளை
வெட்டிப் பலியிடச்சொல்ல இனியெனக்கொ
ரட்டியில்லை யுனைக் கொல்ல
மட்டியித்தனை நாளாய்வாழ்ந்திருந்த நிலையை
விட்டிவ்விடத்தில் வந்திவ் வேதியாவுன்றன் தலையை (வெட்)
அர்ச்சுனன்சொல் கந்தார்த்தம் - மோகனம்.
தலையைவெட்டவுன்றரமல்ல கேளடிமானே.
நிலையைக்கூறுவனின்னிலத்தரசரில் நானே
சிலைக்கை அரிச்சுனன் தீர்த்தயாத்திரைக்குவந்து
கொலைசெய் வாளினாலென்னை கொல்லுவே னென்றாயடி
கொன்றாலென்னுயிர்ச்சாகுமோ-அப்படி அல்ல
வென்றாலுன்னாலே யாகுமோ
குன்றைப்பார்த்து நாய்குலைக்கிறாப் போல் நீட்டி.
நன்றாய்ச்சொன்னாய்த் தலையைஞாயங் கேளாமல்வெட்டி . (தலை)
சித்திராங்கதை சொல்- கந்தார்த்தம் - மோகனம்
ஞாயமென்னடா வுன்னடத்தை யெல்லாந் துர்நடத்தை
மாயவேஷமோர் மறையவனாகி யிவ்விடத்தில்
தீயவஞ்சனை செய்ய வந்தென் மனதிடத்தை
நீயறிந்திட நினைந்தத்தினாலுன்றன்
நெஞ்சந்திறக்க அடிப்பேன்-காற்றிலிலவம்
பஞ்சாய்ப்பறக்க அடிப்பேன்
மிஞ்சிப்பேசும் உன்னாக்கை விழ அறுப்பதுமல்லாமல்
நஞ்சுநஞ் சாயுன்றனை நறுக்கிப்பிழியக் கல்லால் (நெஞ்ச)
அர்ச்சுனன் சொல்லல்.
நறுக்கிநீயெனைப்பிழிந்தா லுந்தானுன்மேற்கொண்ட
வெறிக்கு இன்ன மிவ்வுலகினில்மருந்துவேறுண்டோ
முறுக்கியப்படித் திருப்பிமோடிசெய்கின்ற
சிறுக்கியுன்னிடசேவகத்திறமையை யறிவேனென்னைச்
சேராதிருப்பதென்னடி - திரும்பிமுகம் ...
பாராதிருப்பதென்னடி
பேரால்நமதுசொந்தப் பிள்ளைக்குப்பட்டங்கட்ட
பாராய்மோகனராகம் பாடியணையக்கிட்டச் (சேரா)
சித்திராங்கதை - அர்ச்சுனனுக்குச்சொல் விருத்தம்,
திரும்பியுன் முகத்தைப்பார்த்துச் சேர்ந்தணைந்திடுவேனென்று
விரும்பிவந்தெதிரே நின்ற வேதியாவுனக்கிப்போது
வருங்கதியறிந்திடாமல் வாயினால் வதறவேண்டாம்
துரும்பேயுன்றலையைவெட்டித் தூக்கிடச்சொல்லுவேனே.
வசனம்.
கேளாய் அறிவு கெட்ட பிராமணா நானுன் முகத்தைப் பார்த்துப்பேசி உன்னை மருவியணைவே
னென்று ஆசைகொண்டிருப்பதும் இன்னம் க்ஷணப்போதிலே வருங்கதியைத் தெரியாமல்
மதிமயங்கிக் கெட்டுப்போகவேண்டாம் எனது தாதிகளை விட்டு உன்றலையை வெட்டிக்கட்டித்
தூக்கிப்போடச் சொல்கிறேன்பாரடா.
அர்ச்சுனன் சித்திராங்கதைக்குச்சொல் விருத்தம்,
வெட்டியென்றலையைத் தூக்கி விடச்சொல்வேனென் றாயின்னம் அட்டியென்னடி
யென்தற்குன் அருகினிலிருக்கமாதர்
கெட்டிக்காரிகள்தானென்றுங் கேள்வியுண்டெனக்குமுன்னே கட்டிக்கொண்டணைந்து
பொல்லாக் காதலைத்தீராய்பெண்ணே
வசனம்.
கேளடிபெண்ணே சித்திராங்கதை என்றலையை வெட்டிக்கட்டி தூக்கிப்போடச் சொல்வேனென்று
இன்னம் மொட்டச்சி மிரட்டுமிரட்டுகிறாய். அதற்கென்னடி தாமஷம் உன்னண்டையிலிருக்கிற
தாதிப்பெண்கள் உன்னைப்பார்க்கிலுங் கெட்டிக்காரிகளென்று எனக்குங் கேள்வியுண்டு.
நல்லதப்படியே ஆகட்டும். எனைக்கட்டியணைந்து நான் கொண்ட காதலைத் தீர்ப்பாயடி
பெண்ணே.
சித்திராங்கதை - தோழிகளுக்குச்சொல்- விருத்தம்.
துதிசெய்தென் னருகில்நின்ற தோழியர்கே ளீரென்றன்
விதிசெய்யும்வாறோ முன்றீவினையோ வந்தணன் போல்வந்து
சதிசெய்தான வனைவெட்டித் தலைத்தூக்கச் சொன்னேனென்ன
அதிசயந்தன் னைக்கட்டி யணைந்திடச் சொன்னானம்மா
வசனம்.
கேளுங்கள் மந்திரிகளாகிய தாதிகளே என்றலைவிதியோ அல்லது நான் முன்செய்த
தீவினையோ என்னுடைய பதிவிரதத்தை யழிக்கக் காசிப்பிராமணன்போல் மாயவேஷங்
கொண்டுவந்தென்னை சதிசெய்ய நினைத்து வாடியென்றும் போடியென்றும் வம்பு
வார்த்தைப் பேசினவனை மிரட்டி அப்புறத்தையோட்டி விடுகிர நிமித்தியம் தலையை
வெட்டித் தூக்கிப்போடுவேனென்று நான் சொன்னதற்குத் தன்னைத் தழுவியணையச்
சொன்ன அதிசயத்தைக் கேட்டீர்களா.
தாதி – நாயகிக்குச்சொல் -வெண்பா. இ- ம்- சங்கராபரணம்.
பந்தியிலேவேண்டாமப்பாலெ ழுந்துப்போவென்றால்
இந்தஇலைப்பொத்த லெறியெனச்சொல் - வித்தையிலே
ஈதோரதிசயந்தான் ஏந்திழையேயின்னமென்ன
சூதோபிராமணன்றன் சொல்.
வசனம்.
கேளும் இராஜபரமேஸ்வரி நல்ல ஆச்சரியமிது. சாப்பிடுகிற பந்தியிலே உட்காரவேண்டாமென்று
கழுத்தைமடக்கிஅப்புறத்தே தள்ளச்சே இலைபொத்தல் இலைபொத்தலென்று சொல்லி
வேறேயிலை கொண்டுவாவென்ற சாமார்த்தியமாய் தலையை வெட்டித்தூக்கிப் போடச்
சொல்லுகிறபோது தன்னைத்தழுவி யணையென்று சொன்ன பிராமணனுடைய சாமர்த்தியமே
சாமர்த்தியம். இன்னமென்னமோ சூது நடக்கப்போகுது அறியவேணுமம்மா.
இரண்டாவது-தோழி சொல்-வெண்பா இ-ம்-சங்கராபரணம்.
சூதிவன் செய்தாவதென்ன சுத்திவளைத்துக்கொண்டு
மாதவனே நாங்கள் மறிக்கின்றோம், பாதகனை
மெல்லியரே நீபிடித்து மேவியெங்கள் கைகொடுத்தால்
கொல்லுகிரோம்பார் தலையைக் கொய்து.
வசனம்.
கேளும் இராஜபரமேஸ்வரி இவன் சூது நம்மைச் செய்யவேண்டியதென்ன நாங்களனைவரும்
இவனைச் சுத்திவளைத்துக் கொள்ளுகிறோம் நீ மெள்ளபிடித்து எங்கள் வசஞ்செய்துப்போடு.
ஒருக்ஷணப்போதில் இவனைச் சிரசாக்கினைச் செய்துப் போடுகிறோம். எங்கள்
திராணியைப்பாரும் அம்மா தாயே.
அர்ச்சுனன்-சித்திராங்கதைக்குச் சொல் வெண்பா.
கொக்கின்றலையில் வெண்ணெய்க்கொண்டுபோய் நாங்கள் மெள்ள,
வைக்கிறோம் நீபிடித்து வாவென்ன - பக்குவஞ்சொல்
தாதிகளும் நீயும் நல்ல சாமார்த்தியமென்று சொன்ன
சேதிகளும் போச்சே தெரிந்து.
வசனம்.
கேளும்பெண்ணே சித்திராங்கதை. கொக்கின்றலையில் வெண்ணையைக் கொண்டுபோய்
வைத்தால் அந்த வெண்ணைவுருகி அதன் கண்ணில் விழுந்த தட்சணம் பிடித்துக்கொள்ளலாமென்று
கொக்கு பிடிக்கிற மந்திரஞ் சொல்லுவார்கள். அதற்குச் சரியாய் உன் தாதிகள் சொன்ன
சாமார்த்தியமும் உன்னுடைய சமர்த்தும் இதோவெட்ட வெளியாய் எல்லாந் தெரிந்துபோச்சு.
இனிமேலாகிலும் என்னைச்சேர்ந்து அணையடி பெண்ணே.
சித்திராங்கதைக்கும் அர்ச்சுனனுக்கும் - வாது தரு
இம்-சங்கராபரணம்-அடதாளம்.
எல்லாந்தெரிந்துதென் றுல்லாசமாய்மெத்த
இகழ்ச்சியாய்பேசுறான் உங்களை-மனம்
இகழ்ச்சியாலேசுரான் பெண்களே- இவனைக்
கொல்லாமலிருப்பது பொல்லாதகாரியம்
குடிகெட்டுப்போகுமே ஐயையோ
அர்ச்சுனன்சொல்லல். தரு-இ-ம்-மேற்படி
குடிகெட்டுப்போகுமென்றடிக்கவோ சொல்கிறாய்
கோதையரடிப்பதும் நோகுமோ- செய்யும்
வாதைலென்னுயிர்ச் சாகுமோ
அடிக்கிறேனெனக்கல்வி நொடிக்காதே நான் கொண்ட
மையலைத்தீரடி கண்ணே
சித்திராங்கதை-சொல்லல்.
மையலைத்தீர்க்கவே தையலர்கள்காசி
வாங்கிக்கொண்டுவருவார் போடா-என்றன்
பாங்கிமார்களுக்குநீ யீடா அவர்கள்
கையினிலகப்பட்டு ஐயையோவுனக்குப்போங்
காலம்வந்துதடா பிராமணா
அர்ச்சுனன் சொல்லல்.
போங்காலம்வந்துதென் ராங்காரத்தால்மனம்.
பொங்கிநீயேவழி யாதே போடி
தங்கிவாயாலழி யாதே-தின்னும்
மாங்காய்ப்புளித்துதோ வாய்புளித்துதோவென்னும்
வார்த்தையடிக்கடி பெண்ணே
சித்திராங்கதை- சொல்லல்.
வார்த்தைகளின்னம் வளர்த்தியுன்னையுமிந்த
வாளுக்கிரை கொடுப் பேனே-தலை
மூளைச்சிதற அடிப் பேனே தீர்த்த
யாத்திரை வந்தாலிம் மாத்திரத்தோ டுன்றனை
யனுப்புகிறேன் ஓடிப்போ வேதியா
அர்ச்சுனன்- சொல்லல்.
வேதியனானல்ல சாதியிற்குருகுல
வேந்தனின்றந்தைக்கிப் போது-கிட்ட
சேர்ந்தவுறவிதுதப் பாது-உள்ள
சேதியையுன்னுடன் செப்பினே னென்றனைச்
சேர்ந்தணைந்திடுவாயென் கண்ணே
சித்திராங்கதை-சொல்லல்
சேர்ந்தணைந்திடநல்ல வேந்தர்க்குல மென்றும்
செப்பினவார்த்தைகள் மெய்யோ-என்றன்
கற்பழியாதோ ஐயையோ-புகழ்
சார்ந்த குருகுல வேந்தர்களின்பெயர்
தானென்னமோசொல்லும் பார்ப்போம்
அர்ச்சுனன் சொல்லல்.
பார்ப்பதென்னபரி யாசகமோபஞ்ச
பாண்டவர்தனில் சொல்லு மென்பேர் - புகழ்
நீண்டவில் அர்ச்சுன னென்பேர் மோசம்
பார்ப்பதும் அன்பரைக் கார்ப்பதும் சங்கரா
பரணராகமென்றன் கண்ணே
சித்திராங்கதை அர்ச்சுனனுக்குச்சொல்-விருத்தம்.
விசையனென்றுரைத் தாய்மாய வேஷங்கொண்டெலனோயிந்த
திசையெங்குந் திரிந்துபுண்ய தீர்த்தங்கள் ஆடவந்தாய்
நிசமல்ல உன்றன் வார்த்தை நிகரிலா அர்ச்சுனன்றன்
இசைபுஜ பலமும்சீரும் எழிலும் நீயியம்புவாயே.
வசனம்.
வாராய் பிராமண சந்நியாசி நல்ல குருகுல வங்கிஷ சிகாமணியாகிய அர்ச்சுன மகாராஜனென்று
சொல்லுகிறாய். நல்லது நீயந்த அர்ச்சுன மகாராஜனென்பது மெய்யானால் பிராமண சந்நியாசி
வேஷங்கொண்டு தீர்த்தயாத்திரைக்கு வந்த காரணமென்ன. இப்போது உன்வார்த்தையை
நிசமென்று நம்பமாட்டேன். ஆகிலும் அந்த அர்ச்சுனமகாராஜன் அழகையும் கீர்த்திப்
பிரதாபத்தையும் அவர் குணாதிசயத்தையும் சொல்லும் பார்ப்போம்.
அர்ச்சுனன்-தன்வரலாறு-சித்திராங்கதைக்குச்சொல் தரு.
இராகம் - சாவேரி- ஆதிதாளம்.
கேளும்பெண்ணேசித்திராங் .... கதையே - மதுரை
யாளும்பாண்டியன்பெற்ற .... சுதையே
நாளும் உலகைவெல்ல நறுமலர்க்கணை .... வெல்ல
வேளும் இங்கிணையல்ல விசையனழகைச் .... சொல்ல (கேளும்)
வாரணாபுரி யிந்திரப்பிரஸ்தமே .... பிரஸ்தம்
மைவந்தி அஸ்தினாபுரி .... க்ஷேத்திரம் நல்ல
வளமிகுந்த அளகேசன்றனையும் .... வென்றான்
வழங்கும்பொருளருள் சற் .... பாத்திரன்-கலை
பூரணச்சந்திரனை நேரென .... எவராலும்
புகலொணாத்திருமுக .... குஷ்திரன்-விற்
புருவமும்பிறைநுதலுருவமும் .... மிலகிய
புண்டரீகமலர் .... நேத்திரன்- கலை
ஆரணன் முதற்கல்வி அறிந்துரைக்கும் .... நன்னேயன்
அபயமென்றடைந்தவர் அனைவற்குஞ் .... சகாயன்
நாரணன்மலர்ப்பாதம் நம்புநினையு .... பாயன்
நாவில்நட்சத்திரம் மேவுஞ்செங்கனி .... வாயன்
நவமணியாரவி .... நோதன்- செய்யும்
தவமுயலும்வரப்பிர .... சாதன்-எழின்
நலமதற்கிணையிந்த நலமதி .... யெனவரும்
புலவர்கள் துதிசெய்யும் பலவித .... அதிசயம் (கேளும்)
குருமரபினிற்றோன்றிவரும் .... அரசரென்றெங்கும்
கொண்டாடும்பாண்டு .... குமாரன்-சொல்
குந்தமாதேவிதன் மைந்தர்க .... ளைவரில்
கூறும்அழகிய .... கெம்பீரன்-உயர்
தருமராசனுக்கும் வீமசேன .... னுக்கும்
தம்பிகுணசம்பிரம .... தீரன் இன்னம்
சகாதேவனுக்கும் நகுலனென்பவ .... னுக்கும்
தமயனர்ச்சுனனென்னும் .... பேரன்- செந்
திருமறுமார்பன் மைத்துனன் நல்ல .... அனுகூலன்
தேவேந்திரமகராசன் .... சிந்தித்தருளும்பாலன்
அருமறைமுனிவர்கள் .... ஆசீர்பெறும்விசாலன்
ஆதிசிவன்றனையும் .... அன்பாய்ப் பூசைசெய்சீலன்
அழகியமன்மத .... சுரூபன்-ருசி
பழகிய இன்சொற்பிர .... தாபன்-நல்ல
அற்புதவிற்பன சற்புரு .... ஷோத்த
பொற்புதுமையிதெனும் .... நற்புதுமையையினம் (கேளும்)
போருக்குமுலகினில் யாருக்கும் அடங்காத
புஜபலத்தின்மிகுந்த காளை-செய்த
புண்ணியவசத்தால் நின்கண்ணிற் காணக்கிடைத்தான்
போகவொட்டாய் இந்த ஆளை
பாருக்குள் இனியிருவோருக்கும் அயன்விதிப்
பயன்கூட்டிவைத்ததேயிவ் வேளை-இளம்.
பருவத்தில் பயிர்செய்யென்றெளவையுரைத்தமொழி
பழுதுவரப்போகாது நாளை-இன்னம்
தேருக்குளனந்தம் விச்சித்திரங்களுண்டு
சிறுபிள்ளை விளையாட்டாய்ச் செய்காரியமிரண்டு
நீருக்குள்ளாழத்தை அறியலாங்கோல்கொண்டு
நெஞ்சாழமறிவது கொஞ்சமோநிலைகண்டு
நிகரிலாமதுரைச்செங் கோலை உன்றன்
மகன்ஆளுவான்இனி மேலே - இது
நிஷயம் முதுகினில்மட்சரேகை பெறும்
அர்ச்சுனன் வைபோகம் சொற்சில் சாவேரிராகம் (கேளும்)
அர்ச்சுனன்-சித்திராங்கதைக்குச்சொல்-விருத்தம்.
கற்பினிலுயர்ந்த சித்திராங்கதை யெனுமயிலேகேளாய்
வெற்பினிலுயர்ந்த தோளான் விசயனென்பவனும் நானே
பொற்பினுக்குலமையிந்தப் புவியில் வேறில்லை நல்ல
அற்புதமாகக்கூடி யணைகுவோம் வாராய்பெண்ணே.
வசனம்.
கேளாய் பதிவிரதத்தில் மிகுந்த சித்திராங்கதையென்னும் மயிலே. மலையைப் போலுயர்ந்த
புசபலத்தில் மிகுந்தஅழகினையுடைய அர்ச்சுன மகாராசனென்பவனும் நானே. இன்னம்
யாரோவென்று சந்தேகப்படவேண்டாம். இனி நாமிருவருங்கூடி யணையலாம் வாடி பெண்ணே.
சித்திராங்கதை தோழிகளுக்குச்சொல் விருத்தம்.
துணையிள முலையீரென்றன் தோழியர் கேளீர்ஐந்து
கணைமதன் றன்னைவென்ற காளையர்ச் சுனன்றன்பேரும்
இணையிலா அழகுஞ்சொல்ல எங்கையோ கேட்டுவந்திங்
கணைகுவோம் வாடியென்று அந்தணனுரைத் தான்பாரீர்.
வசனம்.
கேளுங்கள் இளமைபொருந்திய இரண்டு ஸ்தனத்தோடுங் கூடிய தோழிகளே. ஐந்து புஷ்ப
பாணத்தையுடைய மன்மதனழகைவென்ற அர்ச்சுனன் பெயரையும் அழகையும் புஜபல
பராக்கிரமத்தையும் பூலோகத்திலே ஆரோ சொல்லக் கேட்டுவந்து நான்றான் அர்ச்சுனன்
என்னை மருவியணையடியென்று இந்தப்பிராமணன் சொன்ன வார்த்தையைக் கேட்டிர்களா
இதற்கென்ன செய்யலாம் பெண்களே.
தாதிகள் சித்திராங்கதைக்குச்சொல்-விருத்தம்.
சந்நியாசியைப்போல் வேஷம் தான்கொண்டு வருவதுண்டு
அன்னியானல்லவென்றிங் கரணையிட் டுரைப்பதுண்டு
கன்னியர் பார்த்துக்கூடிக் கலியாணஞ் செய்தபின்பு
உன்னையார் கண்டதென்ப துலகினில னேகமம்மா
வசனம்.
கேளும் இராஜபரமேஸ்வரி பூலோகத்திலே சந்நியாசியைப்போல் மாயவேஷங்
கொண்டு வருவதுமுண்டு. வந்து உங்கள் குலத்திலேபிறந்த பிள்ளையேயொழிய நான்
வேறல்லவென்று ஆணயிடுவதுமுண்டு. அவாள்வீட்டிலிருக்கிற கன்னிகழியாதப் பெண்களைப்பார்த்து
கலியாணஞ்செய்து அந்தப்பெண்ணைச்சேர்த்து தன் அக்கறை தீர்ந்தபின்பு உன்னை
யார்கண்டார்களென்று வேறே வேஷமெடுத்துக்கொண்டு ஓடிப்போவது இந்த உலகத்தில்
விஸ்தாரம் ஆகையால் இவனை நம்பக்கூடாதம்மணி.
அர்ச்சுனன் -தாதிகளுக்குச்சொல்-விருத்தம்.
நம்பவுங்கூடாதென்று ஞாயங்கொண் டுரைப்பார் போல்வீண்
சம்பங்களாய்த் தடுக்குத் தள்ளியிங்கி ருந்துமெத்த
கும்பலுங் கூடிக்கொண்டு குடிகளைக் கெடுக்கவாயால்
வம்புகள் பேசுந்தாதி மார்களுங்களைப் போலுண்டோ
வசனம்.
கேளுங்களடி தாதிப்பெண்களே இந்த சித்திராங்கதை உங்களுடனே சொல்லிக்
கொண்டவார்த்தைக்கு நல்லஞாயங்கொண்டு சொன்னீர்களல்லவா. இதற்குத்தானா
வீண்ஜம்பங்கள் அடித்துத் தடுக்குத் தள்ளிக்கொண்டு மெத்தக்கும்பல் கூடி குடியைக்
கெடுக்க நாள்தோறும் வம்புவார்த்தை பேசுந்தாதிகள் உங்களைப்போலிந்த பூலோகத்திலுண்டா .
ஆ -ஆ-ஆ நன்றாயிருக்குது.
தாதிகளுக்கும் அர்ச்சுனனுக்கும்-வாது-தரு
இ-ம்-மோகனம்-அடதாளம்-
உண்டோவென் றுரைத்தெங்கள் உத்தமிதன்னை நீ
பெண்டாள வந்தாயே பிராமணா போபோ ...
அர்ச்சுனன்சொல்-தரு-இ-ம் மேற்படி.
பெண்டாளவந்தது பிழையோவுங்களைக்கூட
கொண்டாளவும்வந்த கொற்றவன்நானே...
தோழிகள்- சொல்லல்
கொற்றவன் நானென்று கூறிக்கை நீட்டியே
மெத்தவும்பேசாதே வேதியாபோபோ
அர்ச்சுனன்-சொல்லல்.
வேதியாபோவென்று விளம்பவேண்டாஞ்சொன்னேன்
ஆதியாங்குருகுல அர்ச்சுனன் நானே
தோழிகள்- சொல்லல்,
அர்ச்சுனன் நீயானால் யாத்திரை புறப்பட்டு
தற்சுருபம்விட்டுச் சந்நியாசியானாய்
அர்ச்சனன் சொல்லல்
சந்நியாசியாய்நதி தாரணிதன்னிலே
கன்னியா தீர்த்தங்கள் கண்டாடவல்லோ...
தோழிகள் - சொல்லல்,
கன்னியா தீர்த்தங்கள் கண்டாடினாலுனக்
கென்னப லன்வரும் இயம்புவாய் பார்ப்போம்.
அர்ச்சுனன் சொல்லல்.
பலனென்னமதுரையில் பாண்டியன்றனக்குப்பின்
குலம் விளங்கப்பாலன் கொடுக்கவந்தேனே
தாதிகள் - அர்ச்சுனனுக்குச்சொல்-விருத்தம்,
பாலன்போ லுருவெடுத்துப் பதிவிரதங்க ளென்னும்
சீலங்கொண் டிருக்குமெங்கள் சித்திராங்க தைத்தாயிந்த
ஞாலங்கள் ஆள்வேன் என்றுநவமணி மகுடஞ்சூட்டி
கோலங்கொண்ட வட்குவேறோர் குழந்தையேன் வுரைசெய்வாயே
வசனம்.
கேளாய் பிராமணசந்நியாசியே புருஷவேஷங்கொண்டு பதிவிரதமென்னும் சீலத்தை
நிலைநிறுத்தவேண்டியிருக்கும் எங்கள் சித்திராங்கதை அம்மையே இந்த பூலோக
முழுதும் அரசாள்வேனென்று மகுடாபிஷேகஞ் செய்துகொண்டு உலகையாளும் அழகைக்கண்டு
மகிழ்ச்சியடைந்திருக்கின்ற பாண்டியமகாராஜனுக்கு வேறே குழந்தை வேண்டியதென்ன
வீண்பேச்சுப் பேசவேண்டாம். அப்புறம்போம் பிராமண சந்நியாசியே.
அர்ச்சுனன் - தாதிகளுக்குச்சொல் விருந்தம்.
குழந்தையேனென்றீர்மெள்ளக் குந்தினால் முழங்காற்பற்றி
எழுந்திருக்கின்றபெண்க ளிவ்வுலகா ளலாமா
தழைத்த புத்திரர்களில்லாச் சம்பத்தேனென்று முன்னோர்
மொழிந்த வாசகங்கேளா நிர்மூடிகள் நீங்கள் தானே.
வசனம்
கேளுங்களடி பாண்டியன்குடியை மாளவைக்கவந்த மந்திரிகளான தாதிப் பெண்களே
உட்கார்ந்தால் முழங்காலைப்பிடித்துக்கொண்டு எழுந்திருக்கும் பெண்ணாய்ப் பிறந்தவள்
இந்த பூலோகத்தை யாளத்தகுமா மேலும் மக்களில்லா வாழ்வு என்ன வாழ்வென்று
பெரியோர்கள் சொன்ன வார்த்தையைச் காதிலேயுங் கேட்டறியாத நிர்மூடிகளென்பதும்
நீங்களே இதற்குச் சந்தேகமில்லை. போங்களடி பயித்தியக்காரிகளே.
சித்திராங்கதை- தாதிகளுக்குச்சொல்-தரு.
இ-ம்-பைரவி -அடதாளம்.
நிர்மூடிகளென்று நிந்தைவழங்கிறான்
நிட்சயமாக நான் அர்ச்சுனனென்கிறான்
கர்மத்தினால் நம்மைச் கண்டுமயங்கிறன்
காமங்கொண்டேவொருக் காலிவன்பொங்கிறான்.
கட்டுங்கடியின்னம் திட்டுங்கடிதலைக்
குட்டுங்கடி வாளால் வெட்டுங்கடியடி... (ஆரடி தாதிகளே)
அர்ச்சுனன்சொல்- தரு-இ-ம்-மேற்படி.
அந்தணனான அதிசயஞ்சொல்லவோ
அர்ச்சுனனென்பது நிச்சயமல்லவோ
நிந்தனையாலென்னை நீங்களும்வெல்லவோ
நினைந்திந்திருந்த வனந்தனிற்கொல்லவோ
நீட்டுகிறீர் பூச்சிக் காட்டுகிறீர்கும்புக்
கூட்டுகிறீர்சண்டை மூட்டுகிறீர் சீச்சீ
போங்களடி பெண்களாய் என்னை வெல்லப்
போகுமோவடியுங்களால்.
சித்திராங்கதைசொல்-தரு.
வெல்லப்போகாதென்று வீண்மலப்படிக்கிறான்.
வேதியனின்னமும் விண்ணாணம்படிக்கிறான்
கொல்லப்போகாதென்று கல்விநொடிக்கிறான்
கோதையர்மேலாசைக் கொண்டு துடிக்கிறான்
குத்துங்கடிசும்மாய் மொத்துங்கடி கோபம்
முத்துங்கடியப்பால் ஒத்துங்கடியடி. (ஆரடி தாதிகளே.)
அர்ச்சுனன்-சொல்- தரு,
குத்திக்கொழிந்ததைக் கூழுசோ றாக்குவீர்
கும்புகளாய்க்கூடிக் கொண்டுவிழுங்குவீர்
தத்தித்தலைகீழாய்த் தானேவிழுகிறீர்
சண்டையைக்கண்ணினா கண்டாலழுகிறீர்
சாதிப்பீரோ மனம் பேதிப்பீரோகண்டு
சோதிப்பீரோஎதிர்போய் நிற்பீரோ சீச்சீ (போங்க)
சித்திராங்கதைசொல்-தரு.
எதிர்நிற்கமாட்டீரென் றின்னமுடுக்கிறான்
எக்கச்சக்கம்பேசி வெட்கங்கெடுக்கிறான்
மதியாமலேதேதோ வார்த்தையடுக்கிறான்.
வாய்திறந்தால்நம்மை வந்துதடுக்கிறான்
வாட்டுங்கடி தொழு மாட்டுங்கடிவிலங்கு
பூட்டுங்கடியப்பால் ஓட்டுங்கடியடி (ஆரடி தாதிகளே)
அர்ச்சுனன் சொல்-தரு,
தொழுவிலங்குபூட்டத் துள்ளிக்கொழுக்கிறீர்
தொம்பரிச்சிகள்போல் வம்புக்கிழுக்கிறீர்
கழுமரத்தினில்மாட்டக் கனவுகண்டுழைக்கிறீர்
கண்டபடியேபேசிக் கொண்டுவாய்ப்புழுக்கிறீர்
கள்ளிகளே தடுக்குத் தள்ளிகளே சித்திரக்
குள்ளிகளேவாய்க் கொள்ளிகளேசீச்சீ ... (போங்களடி)
சித்திராங்கதை சொல் -தரு,
கள்ளிகளென்று கடூரமாய்க் காச்சிறான்
காமங்கொண்டொருக்காலே கவிழ்ந்துதான்வீசுறான்
கொள்ளிகளென்றுசொற் கூறியங்கேசுறான்
கொண்டுவிட்டுப்போன பெண்டெனப்பேசுறான்
கூறுங்கடிமனம் தேறுங்கடி கோபம்
ஆறுங்கடிமகிழ் மீறுங்கடியடி (ஆரடி தாதிகளே)
அர்ச்சுனன் சொல்-தரு.
சேதிகளெல்லாந் தெரியப்படிக்கிறேன்
க்ஷணத்திற்கலியாணஞ் செய்துமுடிக்கிறேன்
தாதிகளைக்கூடத் தவடையிலடிக்கிறேன்.
தையலேயுன்னையும் கையைப்பிடிக்கிறேன்.
தள்ளவேண்டாம்மெத்த துள்ளவேண்டாம்பங்கம்
கொள்ளவேண்டாம் வாயால் வெல்லவேண்டாம் சீச்சி
முதல்தோழி சொல்-விருத்தம்,
கையையும்பிடித்துச் சித்திராங்கதையை யுன்தனைக்கல்யாணம்
செய்யவும்வந்தேனென்றசேதியை யெண்ணிப் பார்த்தால்
ஐவரிலெ ருவனான அர்ச்சுனனிவனேயம்மா
வையவும்போமோ சும்மா மறையவனல்லவம்மா.
வசனம்,
கேளும் இராஜபரமேஸ்வரி இவனை நாம் திட்டி மிரட்டினதற்கு எவ்வளவும் பயப்படாமல்
எதிரே நின்றுகொண்டு நம்மை நானாவித வித்தியாசமாய்ப் பேசினதுமல்லாமல் கையைப்
பிடிக்கிறேனென்றும் கட்டியணைகிறேனென்றும் கலியாணஞ் செய்கிறேனென்றும் இவன்
சொல்லுகிறதை ஆலோசனை செய்து பார்த்தால் அந்த அர்ச்சுன மகாராசனென்பதற்கு யாதொரு
சந்தேகமுமில்லை இனி நாம் திட்டி மிரட்டினால் மோசம்வரும் போலே காணுதம்மணி.
இரண்டாவது-தோழி சொல்-விருத்தம்
ஆமிது மெய்தானம்மா அந்தணனிவனேயானால்
நாமிதுவரைக் குமுன்னோர் நவில்சதுர்விதங்களென்னுஞ்
சாமபேதங்கள் தான தண்டனைக்கஞ்சிடானோ
காமவேதனை யால்வந்த காளையர்ச்சுனன் றானம்மா
வசனம்.
கேளும் இராஜபரமேஸ்வரி இவன் பிராமண சந்நியாசியானால் நம்மைக்கண்டு மோகித்தது
முதல் இதுவரைக்கும் பெரியோர்கள் சொல்லப்படா நின்ற இராஜநீதி முறைமை வழுவாமல்
செய்த சாம-பேத தான-தண்டமென்னும் சதுர்வித உபாயதந்திரங்களுக்குப் பயந்தோடிப்
போகாமல் எதிர்வார்த்தை பேசுவானோ பேசமாட்டானே. ஆகையால் இனி அர்ச்சுன
மகாராசனென்பதற்கு எவ்வளவும் சந்தேசமில்லை அம்மணி.
சித்திராங்கதை - தோழிகளுக்குச்சொல்-விருத்தம்
அர்ச்சுன னென்றுநம்மா லறியமாட்டா மற்சொன்ன
துற்சனவார்த் தையென்றன் தோழிகள் நாமெல்லோரும்
சற்சன்ன பயபத்தியாய்ச் சாஷ்டாங்க தண்டஞ்செய்து
தற்சரூபத்தைக் கொண்டு தான்வரச் சொல்லுவோமே
வசனம்.
கேளுங்கள் நற்றோழிமாரே, நாம் அர்ச்சுனமகாராச னென்றறியாமல் துற்பாஷையால்
திட்டிமிரட்டிச் செய்தகுற்றம் நீங்கும்படியாய் அவர்பாதத்திலே மிகுந்த சற்சன்னிய
பயபத்தியுடனே சாஷ்டாங்கமாகத் தண்டஞ் செய்வதுமன்றில் அவர் தற்சுருபத்தைக் காண்பிக்கச்
சொல்லுவோம் தோழிமார்களே.
சித்திராங்கதை-அர்ச்சுனனுக்குச் சொல்-விருத்தம்.
சந்தனவ னத்திலின்னஞ் சன்னியாசி யனந்தம்பேர்கள்
வந்தவரவ ரில்நீரோர் மறையவரென்று நாங்கள்
நிந்தையாய்த் திட்டிப்போட்டோம் நிசமதை யறியமாட்டோம்
சிந்தையிற் பொறுப்பதல்லால் திருவுரு காட்டலாமே.
வசனம்.
இந்த கற்பகவனத்திலே அனந்தம் பிராமண சந்நியாசிகள் வந்திறங்கிருந்தவர்களில் நீரும்
அவரிலொருவராய்இருந்து எங்கள் பேரில் மோகித்து வாது செய்தபடியினாலே நாங்களும்மை
பாஷையாய்த் திட்டி மிரட்டினோம். இந்தப்பிழை பொறுத்து இனி மேலாகிலும் உமது திருவுரு
தரிசனம் காட்டலாஞ்சுவாமி.
அர்ச்சுனன் - சித்திராங்கதைக்குச்சொல்-விருத்தம்.
காட்டலாமென்ற சித்திராங் கதையெனுமயிலே பெண்கள்
நீட்டலாமறி வேன்வார்த்தை நிசமெனுஞ் சுயமரத்தை
நாட்டலா மென்றுங்கூடி நாமிரு வோருமாலை
சூட்டலாமென் றால்யென்றன் சுரூபத்தைக் காண்பிப்பேனே.
வசனம்.
கேளாய் எனது சுரூபத்தைக் காட்டலமென்று சொன்ன சித்திராங்கதையெனு மயிலே, பெண்
பெண்சாதிகள் நீட்டு அனேகமு முண்டாகையால் அதை நிசமென்று நம்பக்கூடாது. இனி
நாமிருவரும் இந்த கற்பகவனத்திலே காந்தர்வ விவாகஞ்செய்து கூடியணைந்து சுயமரம்
நாட்டி மாலை சூட்டலாமென்று நம்பிக்கையாய் சொன்னையேயானால் எனது சுரூபத்தைக்
காண்பிப்பேன் அடிபெண்ணே.
சித்திராங்கதை-அர்ச்சுனனுக்குச் சொல்-விருத்தம்.
காண்பிப்பே னென்றீர் அந்தக் காளையர்ச்சு னனல்லாமல்
ஆண்பிறப்பு களில்வேறோர் அழகெங்கே யுண்டுசொல்லும்
வீண்பிறப் பானபேரை விரும்பவு மாட்டேனிந்த
தேன்புவியறியச் சொன்னேன் திருகொன்றும் இல்லையையா
வசனம்:
கேளும் நாமிருவரும் காந்தருவ விவாகஞ்செய்து கூடிக் கலியாணஞ் செய்வது நிட்சயமென்றாலும்
தற்சுரூபம் காண்பிப்பேனென்றுசொன்னீர் இந்த பூலோகத்தில் அந்த அருச்சுன மகாராசனுக்கு
மிகுந்த அழகு மற்றொருவருக்கில்லையென்று சொல்ல எனக்குக் கேள்வியுண்டு.
அப்படியிருக்க வீண்பிறப்பான பேர்களை நான்விரும்பி மாலை சூட்டுவதெவ்விதம்.
இதோ ஆகாயம் பூமியறியச் சொல்லுகிறேன். அந்த அர்ச்சுன மகராசனே புருஷன். நானே
பெண்சாதி. இதற்கொரு திருகில்லை சுவாமி.
அர்ச்சுனன் சித்திராங்கதைக்குச்சொல்-விருத்தம்.
திருகில்லை யென்று சொன்ன சித்திராங்கதையே நான்போய்
வருகிறேனரை நொடிக்குள் மறையவன் வேஷமாறி.
தருகிறேன் தற்சுரூபத் தரிசன முதலாயின்னம்
அருகினி லிருக்குமாதர் அனைவரும் அறியத்தானே
வசனம்.
கேளாயென்னைச் சேர்த்தணைந்து திருக்கலியாணஞ் செய்வதற்கு யாதொரு தடையுமில்லையென்று
சொன்ன சித்திராங்கதையென்னும் கண்ணே இதோ நான் இந்தப் பிராமணவேஷமாறி
தற்சுரூபம் எடுத்துக்கொண்டு வருகிறேன். வந்துனக்கு முகதரிசன முதலாகிய இன்ப
சுகமுந் தருகிறேன். நீயும் உன் தாதிகளும் அறியப்பாரடிபெண்ணே.
பொது விருத்தம்.
அருமறைய வன்போல்வந்த அர்ச்சுனன் தற்சுரூபம்
வருமுறை யாதிமூல மந்திர முச்சரித்து
உருமறைந் திட்டபோது ஒண்டொடி மாரைக்கூவி
திருமகள் நிகராய்வந்த சித்திராங்கதை சொல்வாளே
வசனம்.
இவ்விதமாக பிராமண சந்நியாசி வேஷங்கொண்டிருந்த அர்ச்சுன மகராசன் தற்சுரூபம்
வரும்படியாய் ஆதிமூல மந்திரத்தைத் தியானம் பண்ணி மாயசுரூபத்தை மறைத்தபோது
எதிரே நின்றிருந்த சித்திராங்கதை மெத்தவும் பயப்பிராந்தியடைந்தவளாய் தன் தாதிகளுடனே
சொல்லுகிறவிதங் காண்க.
சித்திராங்கதை சொல்-தரு- இ- ம் காம்போதி அடதாளம்.
ஆஆஆஇந்த ஆச்சரியங்காணேன் தாதிமாரே-காசி
அந்தணனானவ ரெந்தவழி போனார் தாதிமாரே
தாதிகள்சொல்-திரு-இ-ம்- மேற்படி
ஓஓஓ நாங்களொருவரும் அறியோம் சித்திராங்கதையே - எங்கே
ஓடிப்போனாலுந்தான் தேடிப்பிடிப்போம் சித்திராங்கதையே
சித்திராங்கதை-சொல்லல்
தேடிப்பிடிக்கவுந்திருடனோகள்ளனோ தோழிமாரே - நல்ல
திருவுருவங்கொண்டு வருகிறேனென்றாரே தாதிமாரே
தாதிகள் - சொல்லல்.
வருகிறேனென்றுசொன்னவார்த்தையொன்றல்லால் சித்திராங்கதையே-போன
வழிதெரியா திந்தவிழி இருந்தென்ன சித்திராங்கதையே
சித்திராங்கதை-சொல்லல்.
வழிதெரிந்தாலோடி மறித்துக்கொள்ளலாமடி தாதிமாரே-என்ன
வார்த்தை சொன்னீர் அபகீர்த்திக்காளானோமே-தாதிமாரே
தாதிகள் சொல்லல்.
அபகீர்த்திக்காளாகி அவரைத்தி ட்டினத்தால் - சித்திராங்கதையே கொண்ட
ஆசையாலே சும்மா பேசலாமம்மா சித்திராங்கதையே
சித்திராங்கதை-சொல்லல்.
பேசலாமென்று சொல்ல பிராமணன் அவரல்ல தாதிமாரே-செய்த
பிழைபொறுத்த வரினியழைத்தாலும் வருவாரோ - தாதிமாரே
தாதிகள் சொல்லல்,
அழைத்தாலும் வரமாட்டார் அர்ச்சுனனென்றால் சித்திராங்கதையே-நம்மால்
அறியாமற் செய்தகுற்றம் அனந்தமுண்டம்மா - சித்திராங்கதை
சித்திராங்கதை தாதிகளுக்குச்சொல் - விருத்தம்.
தாதியர் கேளீரின்று தழைத்த பூஞ்சோலை தன்னில்
வேதியனா கவந்த விசயனென் பவனைக் காணோம்
நீதிசேர ரசுங்கற்பும் நிலைகுலைந் தழிந்துபோச்சு.
ஆதியிற் றாதை சொன்ன அனுபோக முடிந்து தம்மா
வசனம்.
கேளுங்கள் என் தாதிமார்களே, இந்த கற்பகவனத்தில் பிராம்மண சந்நியாசி
வேஷங்கொண்டு வந்தென்னுடன் வாதுசெய்தபிறகு, நான் அர்ச்சுனமகாராசன் இதோ
தற்சுரூபங் காண்பிக்கிறேனென்று இருந்தவர் போனவழி தெரியவில்லை. எனது இராச்சிய
பாரமும் பதிவிரதா தருமமும் நிலைகுலைந்து அழிந்துப்போச்சுது. இதை யெண்ணிப்
பார்க்குமளவில் ஆதியில் எனது தந்தையாகிய பாண்டிய மகாராஜன் சொன்ன அனுபோகம்
இன்று சரியாய் முடிந்தது. இனியென்ன விபரீத முடியுமோ அறியமாட்டேன் தோழிகளே.
தோழிகள் - சித்திராங்கதைக்குச் சொல்-விருத்தம்.
எண்ண முன்னுக்குவாரா தென்பதைக் கேட்டிருந்தும்
மண்ணர சாட்சிசெய்ய மணவனில் லாமல்நாமே
பெண்ணிள வரசுசெய்து பிடித்தவர்க் கெல்லாம்பெண்டாய்
கண்ணின் முன்கண்டோ மிந்தக்காட்சியை யென்னசெய்வோம்*
வசனம்.
கேளும் இராஜபரமேஸ்வரி. எண்ணம் முன்னுக்கு வராதென்று உலகத்தில் சொல்வதைக்
காதிலே கேட்டிருந்தும் இந்தப்பூலோகம் அரசாள ஒரு புருஷனையும் விவாகம் பண்ணிக்
கொள்ளாமல் சிறுபிள்ளை விளையாட்டாய் நாமே இராச்சியபாரம் பண்ணினபடியினாலே
கண்டவர்க்கெல்லாம் பெண்டென்றுசொல்லுங் கண்காட்சியை இப்பொழுதே திஷ்டாந்திரமாய்க்
கண்ணிற் கண்டோம் இனியென்ன செய்வோம் அம்மணி.
தோழிகள் - சித்திராங்கதைக்குச்சொல் விருத்தம்.
காட்சியென் றுரைக்கவேண்டாம் கலியாணஞ் செய்துக்கொண்டால்
தாட்சியொன் றில்லையந்தத் தனஞ்சயன் தன்னைக் கூடி
ஆட்சியோடுலகையாள அருமை மைந்தரையும்பெற்று
சூட்சியாய் மகுடஞ்சூட்டிச் சுகமனு பவிக்கலாமே.
வசனம்,
கேளும் இராஜபரமேஸ்வரி. இப்பொழுதிந்தக் கண்காட்சியைக் கண்டோமென்று
விசாரப்படவேண்டியதில்லை. இனிமேலாகிலும் அந்த அர்ச்சுன மகாராசனை விவாகம்
பண்ணிக்கொண்டால், அதனால் ஒரு தாட்சியும் வரப்போகிறதில்லை இந்த மதுரைப்
பட்டணம் அரசாளும்படியாய் மக்களையும்பெற்று மகுடாபிஷேகமும் சூட்டிவைத்து நாமும்
திவ்விய சம்போகத்தை அனுபவித்திருக்கலாம்அம்மணி.
பொது அகவல்-இ-ம்- மத்தியமாவதி.
இவ்விதமாக எண்ணங்கொண்டவளாய்
செவ்வியில்மிகுந்த சித்திராங்கதை தன்
தாதிகளுடனே தழைத்திடுவனத்தில்
சேதிகள்பலவும் செப்பியங்கிருக்க
மறையவன் வேஷ மாற்றியர்ச்சுனனும்
முறையினால் கிருஷ்ண மூர்த்தியை நினைந்து
வேதவியாசர் விளம்பியமந்திரம்
ஓதவும்முன்போல் உருவமதாகி
செகதாடுகுச்சும் செவியிற்குண்டலமும்
வாகைசேர்செங்கனி வாயும்வெண்டரள
பல்லுகளொளிவும் பளபளபளென
சொல்லுகள் மதுர சுவைவிழுந்தொழுக
கலைமதிமுகம் கமலநேத்திரமும்
சிலைநுதற்புருவமும் நிகழ்குமிழ்மூக்கும்
பொற்பினிலுயர்ந்த புசகிரிதிகளும்
விருப்பங்கொளொளியும் வீசவேமார்பில்
மரகதவைடூரிய மணிவடமசைய
உரசுரத்தினங்களும் ஒளிமிகவீச
இடையினிற்கச்சை இறுக்கியசங்கும்
துடையிரண்டினிலும் சொகுசுடனாட
மெய்யெழில்கண்ட வேள்பயந்தோட
கையினில்வில்லும் கமலபொற்பாதமும்..
தண்டைவெண்டையமும் சதங்கையும்வீர
கண்டாமணியும் கலகலகலென
விரிகதிர்வீசும் மெய்ந்நிலை அங்கி
சரிகைவஸ்திரங்களும் தகதகதகென
வாகைசேர் துளப மாலையுமச்ச
ரேகையுமுதுகில் நிகநிகநிகென
நாவினிலிலங்கும் நட்சத்திரமுடன்பூங்
காவில்வந்துதித்த கதிரவனென்ன
அர்ச்சுனராசன் அரிவையர் முன்னே
தற்சுருபங்கொண்டு தானுதித்தனனே
அர்ச்சுனன்-தற்சுருபங் கொண்டு வருகிற-தரு
இ-ம்-கலியாணி அடதாளம்.
பல்லவி.
அர்ச்சுனமகாராஜன் தற்சுருபப்பிரகாசன்
ஆகியிதோ வந்தான்
அநுபல்லவி,
சற்சனர்க்கனுகூலன் தரணிபுகழ் விசலான்
துர்ச்சனர்க்குலகாலன் சுரர்பதியருள் பாலன்
சுந்தரமிலகிய செந்திரு மலர
விந்தபதந்தனை அந்திபகலும் நினை
துதிபரவிய நல்ல மதிமரபிற்சி றந்த
அதிபனாந் தருமபூ பதிதன்னுடன்பி றந்த (அர்ச்சுன)
சரணங்கள்.
சிரத்திற் பிறையிரண்டும் தரித்தவுச்சிதக் கொண்டையும்
செகதாடுகுச்சு மின்னவே-செந்
தினகரனுதயம்போல் கனகமணிகுண்டலம்
செவிஇரண்டினுந் துன்னவே
பருத்தபுஜகிர்திகள் திருத்தமுடன்மணி
தீபம்போற்பிரகாச மின்னவே-இந்த
பாரெங்கும்விலைகொள்ளும் ஆரங்களுடன்மார்பில்
பதக்கம்பளப ளென்னவே செங்
கரத்திற்கரும்புவிற்பூங் கணையைக்கண்டவுருவம்
காமனும்அழகினைக் கண்டொளித்து வெருவ
வரத்தினாலேவந்த தரித்தமங்கைப் பருவ
மாதுசித்திராங்கதையும் காதல்கொண்டு மருவ
மையல் மீறி மதிமயங்கி அரு கிருந்த
தையன்மாருந்துதி செய்துமிக வருந்த
மங்கையர் தங்கள் அலங்கிருத குங்கும
கொங்கையிரண்டும் நெருங்க புயங்களில்
மருமலர்மாலைக ளாட ஐந்
தருமலர்ச்சோலையிற் கூட-செந்
திருநிகர்பெண்களுந் தேட -கந்
திருவம்மகிழினை நாட-வந்த
மகுத்துவமென்னென்று மிகுத்தமுநிவர் சொல்ல
செகத்திலந்தணரும் அகற்றிவந்திடும் நல்ல (அர்ச்சு)
பொது விருத்தம்.
ஆதித்தனுதயமென்ன அர்ச்சுனன்றற்சுரூபம்
சோதிச்சித்திராங்கதைக்குத் தோற்றமெய்ம் மறந்து சோர்ந்து
ஏதித்தனைப்பிரகாசம் என்றவள் அருகிருந்த
தாதிக்கூட்டங்களெல்லாந் தலைகுனிந்துரை செய்வாரே.
வசனம்.
அகோதெப்படியென்றால் இவ்விதமாக சூரியபகவான் உதயமானதுபோல் அர்ச்சுன மகாராசன்
தற்சுரூபங்கொண்டு நின்ற சோதியைச் சித்திராங்கதை தன் கண்ணிற் கண்டு அதிக மையல்மீறி
மெய்ம்மறந்து உயிர்ச்சோர்ந்து மூற்சையடைந்தவளாய் பூமியில் விழுந்து அவள் பக்கத்திலேயிருந்த
தாதிக்கூட்டங்கள் எல்லோரும் இந்தப் பிரகாரத்தில் எதிரில் கண்களை மிழிக்கமாட்டாமல் தலையை
குனிந்துக்கொண்டு சொல்லுகிற விதங் காண்க.
முதல்தோழி மற்ற தோழிகளுக்குச் சொல்-விருத்தம்.
பெண்ணினல்லாரே இந்தப் பேரெழில் தன்னைக்காணக்
கண்ணின்னம் வேணும் சித்திராங் கதையு மெய்ம்மறந்துவாடி
மண்ணினிற் சோர்ந்துவீழ்ந்த மாதினியெழுந்துபேசு
எண்ணிநம் மாலேயான ஏதுவைச் செய்வோம்வாரீர்.
வசனம்
கேளுங்களடி பெண்களே இந்த அர்ச்சுனமகாராஜன் அதிரூப சவுந்தரியங்களைப் பார்க்க
நமதுகண்கள் போதுமா, போதாதே இன்னம் அனந்தங்கண்கள் வேணுமே அப்படியிருக்க இதோ
சித்திராங்கதையம்மையும் இவர் அழகைப்பார்த்து அதிக மையல் கொண்டு மெய்ம்மறந்து பூமியிலே
விழுத்நாளே விழுந்தவள் பேசும் படியாய் நம்மாலான ஏதுவை செய்வோம் அம்மமாரே.
இரண்டாவதுதோழி சொல் -விருத்தம்.
ஏதினி நம்மாற்செய்யும் இனமொன்றுங் காணோமிந்த
மாதினை எடுத்து மெள்ள மடியிலுட் காரவைத்து
மேதினிதனில் வளர்த்தி மெய்யெங்குந் துடைத்துவீசி
காதினிற் சுக்குசேர்த்துக் களை தெ ளிந்திடச்செய்வோமே -*
வசனம்
கேளுங்களடி பெண்களே இனி நம்மாற்செய்யும் எண்ணம் என்ன இருக்குது. இந்த
சித்திராங்கதையம்மனை மெள்ள எடுத்து மார்போடணைத்து மடிமேல் உட்காரவைத்துக்
கொண்டு அழைத்துப்பார்ப்போம். அதினாலேயும் களைதெளிந்து பேசாமலிருந்தால் இந்த
கற்பகவிருட்சத்தின் நிழலிலே சுகந்த புஷ்பங்களைப்பரப்பி அதின்பேரில் வளர்த்தி சரீரமெங்கும்
துடைத்து குளிர்ச்சி பொருந்திய விசிறிகளால்வீசி காதிலே சுக்குவைத்து வாயினால் ஊதினமானால்
இந்தக் காமக்களை தெளியுமடி பெண்களே.
பொது-விருத்தம்.
பாங்கிமாரவர்சள்செய்த பக்குவங்களினால் மூர்ச்சை
நீங்கி சித்திராங்கதைக்கு நினைவுவந்தெழுந்துபொற்பின்
வீங்கு தோள்மார்பன் தன்னை வென்ற அர்ச்சுனனைப்பார்த்து
தாங்கியே வெட்கத்தோடுந் தரணியைப் பார்த்துச்சொல்வாள்.
வசனம்
இவ்விதமாகத் தோழிமார்கள் செய்த நானாவித பக்குவத்தினாலே சித்திராங்கதை மூர்ச்சை
தெளிந்துஎழுந்திருந்து அழகிலே மன்மதனை வென்ற அர்ச்சுன மகாராஜனைப் பார்த்து
வெட்கங்கொண்டு பூமியைப் பார்த்துச் சொல்லுகிறவிதங்காண்க.
சித்திராங்கதை தோழிகளுக்குச்சொல்-கலிப்பா.
காமனோ கமலமலர்க் கண்ணனோ கலைநிறைந்த
சோமனோ யிந்திரனோ சுப்பிரமணி யன்றானோ
வீமனுக் கிளையதம்பி விஜயன்றன்அழகைப்பார்க்க
நாமன வோரும்படைத்த நயனமின்னம் போதாதே.
வசனம்.
கேளுங்களடி தோழிமார்களே இதென்ன நமக்கெதிரே நிற்கின்ற சோதிப் பிரகாசமான புருஷன்
மன்மதனோ மகாவிஷ்ணுவோ சந்திரனோ அல்லது தேவேந்திரனோ – சுப்பிரமணிய சுவாமியோ-
புசத்தில் மிகுந்த வீமனுக்கு இளையதம்பியாகிய இந்த அர்ச்சுன மகாராசன் அதிரூப
சவுந்தரியங்களைப்பார்க்க நமது கண்கள்போதுமா இன்னம் அனேக கண்களும்வேணுமே
இவரழகைப்பார்க்க.
சித்திராங்கதை- தாதிகளுக்குச் சொல் தரு.
இ-ம்-பைரவி-ஆதிதாளம்.
பல்லவி.
காணஅனந்தங்கண் … களே-வேணும் நமது
கண்கள் போதுமோ பெண் … களே
அநுபல்லவி
ஆணழகிற்சொல்லும் பிராமணமிகுந்த சம்பிர
அதிரூப வர்ச்சுனமக ராசன்
எதிர்சேர்வை தந்திருக்கும்பிர காசன் (காணஅனந்)
சரணங்கள்.
கலைமதிமுகத் தொளிவை அயிலைவென்ற
கமலக்கண்களி னொளிவை
சிலைநுதற்புருவத்தை திகழிளம் பருவத்தை
செவிதங்கிய மணிகுண்ட லங்களை
புவியெங்கணும்விலைகொண்ட கலன்களை (காண அனந்)
மல்லாடுத்தடந்தோள் களை விளங்குமணி
மார்பைமலர்பொற்றாள் களை
வில்லெடுத்த செங்கையை வேளைப்பழித்த மெய்யை
மிளிர்சுங்குகள் மேவுமுன்றொ டையை
களிறென்னவுலாவுநன்ன டையை (காண அனந்)
கண்ணினிற்கண்டால்விடு வாரோ-மங்கையைர் தங்கள்
கணவர்கள் கைக்குட்படு வாரோ
எண்ணிப்பார்த்து பெண்தோஷம் என்றோந்தணவேஷம்
எடுத்தெங்குந் திரிந்திந்தமலர் வனம்
அடுத்திங்குவத்தவன்றருந்தரி சனம் (காண அனந்)
சித்திராங்கதை - தோழிகளுக்குச்சொல்-விருத்தம்
தையன்மார்களை மயக்கும் தனஞ்செயன் அழகைக்கண்டு
மையல் மீறினதாற் றோழிமார்களே மதன் அம்பென்றன்
மெய்யலாந் துளைத்துக்கொங்கை மேலும்பட்டுருகு தென்ன
செய்யலா மிந்தக்காமந் தீரவோர்மருந்து சொல்வீர்.
வசனம்,
கேளுங்களடி யெனது தோழிமார்களே. நல்ல பதிவிரத பத்தினிகள் முதல் மற்றப் பெண்கள்
அனைவரையும் மயக்கச்செய்யுமிந்த அர்ச்சுன மகாராஜன் தற்சுரூபத்தைக் கண்டேன். எனக்கு
அதிக மையல்மீறி சரீரமெல்லாம் மன்மதபாணம் பட்டுத் துளைப்பதும் அல்லாமல்
ஸ்தன்னியத்துக்கு நடுவே தைத்து உருகிப்போகுதே இதற்கு என்ன செய்யலாம்.
காமவேதனைதீர ஒருமருந்து சொல்லுங்களடியம்மா எனது மந்திரிகளான தாதிப்பெண்களே.
முதல்தோழி-சித்திராங்கதைக்குச்சொல் விருத்தம்,
உரலுபோய் மத்தளத்தோ டோலமிட்டழுத பேச்சாய்
விரகநோய்க் கொருமருந்து விளம்புமென்று ரைத்தீர்மாரன்
சரமதுதைத்துவாடி தலைகுனிந் துயிருஞ் சோர்ந்து
பரதவித் துனக்குநாங்கள் பயந்திருக்கின் றோமம்மா.
வசனம்.
கேளும் இராஜபரமேஸ்வரி, உரலுபோய் மத்தளத்தோடே அழுததென்று உலகத்திலே
சொல்லுவார்கள். அதற்குச் சரியாயிருக்குது எங்களை நீ விரகநோய்களுக்கு மருந்து
கேட்கவந்தது. நாங்கள் அந்த அர்ச்சுன மகாராஜன் அழகைக்கண்டு அதிக மையல்கொண்டு
உயிர்சோர்ந்து உனக்குப் பயப்பட்டு உலாவிக்கொண்டிருக்கிறோம் அம்மணி.
இரண்டாவது-தோழிசொல்-விருத்தம்
முருந்துறழ் மூரலாய்நின் மோகத்தைத் தீர்க்கவேறோர்
மருந்துகளி ருக்குமென்று மனதினிலெண் ணவேண்டாம்
திருந்தசெங் கதிரவன்போல் செழித்தபூஞ் சோலைதன்னில்
பொருந்தும் அர்ச்சுனன்பொற்பாதம் போற்றிசெய் திடுவோம்வாரீர்
வசனம்.
கேளும் இராஜபரமேஸ்வரி. உனது விரகதாபத்தைத் தீர்க்க வேறேமருந்து
இருக்குதென்றெண்ண வேண்டாம். இந்த கற்பகவனத்திலே பாலசூரியன்போல்
உதயஞ் செய்திருக்கின்ற அர்ச்சுன மகாராஜனே மருந்து. ஆகையால் அவிடம்போய்
அவர் பாதத்தை தரிசிப்போம் அம்மணி.
சித்திராங்கதை சொல் - வசனம்.
அப்படியே போவோம் வாரும் தோழி.
சித்திராங்கதை அர்ச்சுனனுக்குச் சொல் -கண்ணிகள்.
இ-ம் புன்னாகவராளி -சாப்புதாளம்.
மாதவனென் றெண்ணியும்மை ஏதேதோ வைதேன்- உன்றன்
மகத்துவமறியாமலே நான் மிகுத்தப்பிழை செய்தேன்
பாதகிநான் செய்தகுற்றம் பரிகரித்தின் னேரம் - இனி
பட்சமோடுன்னடியாளை ரட்சிப்பதுன் பாரம்
பெண்புத்திப் பின்புத்தியென்னும் பேதைமையினாலே-இந்த
பெரும்புவியை யரசாள விரும்பினேன்செங் கோலை
கண்பெற்ற பேறெனவுமது கமலமுகங்கண் டேன் - இனிக்
காசினியாள்வதை விடுத்துன்றன் ஆசைமிகவுங் கொண்டேன்
எந்தை தவஞ்செய்ததனால் வந்துதவும் நலனோ- நான்
இதுவரைக்குங் கொண்டிருந்த பதிவிரதப் பலனோ
சிந்தை மகிழ்ந்துமையருளிச் செய்ததென்றன் கையில் - மெள்ளச்
சிக்கினதும் பக்குவந்தான் தீரும் என்றன் மையல்
காசிதேசப் பிராமண சந்தியாசியைப்போல் – வந்தீர்-என்னைக்
கண்டுமையற் கொண்டு நீரும் காட்சியிங்கே தந்தீர்
வாசம்வீசும் கற்பகப்பூங்கா வனத்திலெனைச் சேரும் - இந்த
மதுரை நகர் ஆள ஒருசுதன் பெறக்கண் பாரும்
இதுவும் சித்திராங்கதை சொல்-விருத்தம்.
அந்தணவேஷங் கொண்டென் அன்புசோதித்தாய் போற்றி
சந்தனவனத்திலுன்றன் தனிசுரூபமெடுத்தாய்போற்றி
வந்தணைந்துத் தன்மேற்கொண்ட மையலைத்தீர்ப்பாய் போற்றி
என்றனை யடிமைகொள்ளும் இணையடிபோற்றி போற்றி.
வசனம்.
காசியாத்திரை பிராமண சந்நியாசி வேஷங்கொண்டு அடியாளை மனஞ் சோதித்தவரே
சரணம். பிறகு நல்ல தற்சுரூபம் தந்தவரே சரணம். நான் கொண்ட காமவிகாரம்
தீரும்படியாய் மருவியணைய வந்த உமது திருவடிக் கனந்தசரணம் என்னை யடிமை
கொள்ளவேணுஞ் சுவாமி சரணம்சரணம்.
அர்ச்சுனன் – சித்திராங்கதைக்குச் சொல்-விருத்தம்.
இணையடியைப் பணிந்தேற்றும் எழில்சித்திராங் கதைமயிலே
யெய்யுமாரன்
கணையடிபட் டுன்மீதிற் காதலுடன் கற்பகப்பூங்
காவிற்கட்டி
அணையடியென்றதற்கு சற்றும் அஞ்சாமற்றிரட்டி சிர
சாக்கினைசெய்து
துணையடிகளுக்கு தொழுவிலங்கதனை மாட்ட துணிந்
தவளேபோடி.
வசனம்.
கேளாய் என் இரண்டு பாதத்தையும் துதிசெய்து நிற்கின்ற சித்திராங்கதையே
நானிந்த கற்பகவனத்திலே உன்னைக்கண்டு மோகித்து காமன் கணையினால்
அடிபட்டு அனைக விதத்தினாலும் என்னைக்கூடி யணையடியென்று சொன்னதற்குச்
சற்றும் அஞ்சாமல் திட்டவும் சிரசாக்கினை செய்யவும் தொழுவிலங்கு போடவும்
மனந்துணிந் திருந்தவள் இப்போது எவ்விதமாக உன்னை மருவியணைந்து மையலைத்
தீர்க்கச் சொல்லுகிறாய் போடிபோடி பெண்ணே.
சித்திராங்கதைக்கும் அர்ச்சுனனுக்கும்- வாது-தரு.
இ-ம் தோடி-அடதாளம்.
மறையவனென்ன வோர்மாயவேஷங்கொண்ட மெய்யா-உம்மை
மட்டில்லாவார்த்தை நான் திட்டின பிழைபொறும்-ஐயா
அர்ச்சுனன்சொல்- தரு-இ-ம்-மேற்படி
பிழையொன்றும் உன்றன் மேல் பேசப்போகாதிளமானே சொல்லும்
பேதமையென்பது மாதர்க்கணிகலந் தானே
சித்திராங்கதை சொல்லல்.
பேதமையாற் செய்த பெரும்பிழை பொருத்தருள் நீதா மையல்
பெருகுதென்றனைக் கூடிமருவியணையும் பிராண நாதா
அர்ச்சுனன் சொல்லல்.
மருவியணை குவோம்வாடியென்றார்புவி மீதே-உன்றன்
மகிட்சியாலென்றனை இகட்சியாய் பேசினாய்மாதே
சித்திராங்கதை-சொல்லல்.
இகட்சியுன்றனைச் செய்யஎண்ணினால் பொறுக்குமோ பூமி-இந்த
ஏழையின்மேற் பிழையியம்ப வேண்டாஞ் சுவாமி
அர்ச்சுனன் சொல்லல்.
இயம்பவேண் டாமென்று நயம்பெற இச்சகம் பாடி மெள்ள
எத்தவந்த உன்றன் வித்தையறிவேனீ போடி
சித்திராங்கதை-சொல்லல்.
வித்தையொன்று மில்லை சித்தம்மகிழ்ந்திரு வோரும் நல்ல
வேடிக்கையாயிங்கே கூடியணைகுவோம் வாரும்
அர்ச்சுனன் சொல்லல்.
அணைகுவோம் வாருமென்றிணையடி பணியவும் ஆச்சே-கட்டி
அடிக்கிறேனென் றுனைமடிக்கிறே னென்றசொல் போச்சே
சித்திராங்கதை சொல்-சீசபத்தியம் இ-ம் காம்போதி.
ஐயனென்றறியாமல் வைதவையென்றன்மேல்
அபசாரமிது பொருத்தருள வேணும்
செய்யனே நின்றலையைக்கொய்யுவேனென் றுநான்
செப்பினது என்றன்மேல் தப்பிதந்தான்.
துய்யமலர்ப் பாதங்களை விலங்கதுபூட்ட
சொன்னதுவும் யென்றன்மேல் அன்னிதந்தான்
மெய்யனே யென்றனதுநொய்யபுத்தி யினாலிம்
மேதினியை யாண்டபிழை மிகவுமுண்டு
குற்றமற்ற வனையும் மனங்கொண்டிருந்த
உத்தமனையுமது திருவுருவைக்கண்டு
மெத்தமயல்மீறி மென்மேலுங்காம
பித்தந்தலைக்கேறுதென்பிராணநாதா
வசனம்.
கேளுஞ்சுவாமி உம்மை நான்விசேஷ வித்தியாசமாகத் திட்டிய அபசாரமும்
உம்மை சிரசாக்கினைச் செய்துப்போடுவேனென்று சொன்ன தப்பிதமும்
உமது திருவடிகளில் தொழுவில் மாட்டுவேனென்று சொன்ன அந்நீதமும் எனது
கொஞ்சபுத்தியினாலே இந்த மதுரையை இளவாரசாட்சி செய்திருந்த பிழையும்
இன்னம் அனந்தங் குற்றங்களையும் பொறுத்துக் கொண்டிருந்த உத்தமனே
உமது தற்சொரூபத்தைக் கண்டு அதிக மையல் மீறினேன் ஆதலால் அடியாளை
மருவி அணையும் பிராண நாதா.
அர்ச்சுனன்சொல் சீசபத்தியம்-இ-ம்-புன்னாகவராளி.
தையலே நான்கொண்ட மையலால் நீசெய்த
தப்பிதமெலாம்எனக்கற்புதந்தான்
செய்யவாய்த்திறந்து நீ வைதவை யென்னிரு
செவிக்கின்பமாய் அனுபவிக்கலானேன்
வெய்யவாள் கொண்டுதலை கொய்யுவே னெனுஞ்சொல்லை
விரும்பினேன் அமிர்தசெங்கரும்புபோல
கையினாற் பிடித்தென்றன் மெய்யின் மேலடிப்பதைக்
கண்டனன் கமலமலர்ச்செண்டுபோலே
ஆதலால்நீ செய்த அன்னிதத்தை
பூதலந்தனின்மனம்பொறுத்திருந்தேன்
காதலனிலாமனீ யிக்காணியாண்ட
சூதெலாம்நான் அறியச்சொல்லுவாயே.
வசனம்.
கேளாய் பெண்ணே சித்திராங்கதை, நானுன்மேல் மோகித்த படியினாலே நீ செய்த
தப்பிதமெல்லாம் எனக்கற்புதம்; திட்டினதெல்லாஞ் செவிக்கின்பம்; சிரசாக்கினைச் செய்துப்
போடுவேனென்று நீசொன்ன வார்த்தையே செங்கரும்பு. உன் கையினாற் பிடித்
தென்னையடிப்பதே செந்தாமரைப் பூச்செண்டு; ஆதலால் நீ செய்த குற்றங்களெல்லாம்
மனம் பொறுத்துக் கொண்டிருந்தேன். இப்பவும் நீ பூலோகவாழ்க்கை தப்பிப் பெண்ணரசாட்சி
செய்ய சிரசிலே தங்கமகுடமும் கையிலே செங்கோலும் பிடித்திருக்க வேண்டியதென்ன
எனக்குச்சொல்லடி பெண்ணே.
சித்திராங்கதை தன்வரலாறு-அர்ச்சுனனுக்குச்சொல்- அகவல்
இ-ம் எதுகுலகாம்போதி.
ஐந்தருவனத்தில் அருமறையவன்போல்
வந்திருந்தவ்வுரு மாற்றியிவ்வுலகில்
பருவமங்கையற்கோர் பஞ்சபாணனை நேர்
உருவமுங்காட்டியென் னுளந்தனை மயக்கும்
மன்ன வாநானிம் மணிமுடிபூண்ட
தின்னவாறென்ன இயம்புவேன் கேளும்
வைகைமா நதியும் வாசசெங்கமல
பொய்கை சூழ் மதுராபுரி யரசாளும்
சித்திரவாகன னெனச் செப்பும்பாண்டியனும்
புத்ரவாஞ்சையினால் புரிந்த நற்றவத்தால்
கங்கையையணிந்த கடவுள் தன்னிடம்வாழ்
அங்கையற்கண்ணி அருளினாற்பிறந்தேன்
ஆதலாலெந்தை யவர்பெயர்விளங்க
காதல்கூர்சித்திராங் கதையெனவுரைத்தார்
தினமொருமேனியாய்த் திங்களைப்போல்நான்
மனமகிழ்வாக வளரெழுவயதில்
கல்வியாஞ்சகல கலைகளுந்தேர்ந்து
செல்வியாய்த்தெருவிற் செண்டுகளாடி
எந்தைபேரவைக்கு யானொருநாள்போய்
விந்தைசேருலா விசேஷங்கேட்பவள்போல்-
விசயனென்றவன்றன் மெய்யெழில்கேட்டு
திசையின் மற்றொருவரை தீண்டாமனல்ல
பதிவிரதத்தினாற் பாராள வெண்ணி
கதிதரும் அங்கயற் கண்ணிபொற்பாத
பத்திசெய்திரண்டு பருவமுஞ்சென்று
புத்தியறிந்தேனப் போதெனையீன்ற
அப்பனவ்வார்த்தையை யறிந்தமைச்சர்களால்-
கொப்பனஎண்ணங் கொண்டதென்னென்னில்
எனையொருமன்னனுக் கீயவுமென்றன்
றனையனைச்சிகாரந் தான்பெறுவதவும் -
மதுரைமாநகரம் மைந்தனளுவதும்
விதிகளாற்றேர்ந்திடும் மேதினியறிய
சுயமரநாட்ட சம்மதித்தென்னை
நயமதாயழைத்து நாளையதினம் நீ
திருக்கலியாணம் செய்துகொள்ளென்ன
உருக்கிய செம்பை யூத்தினாற்போலென்
செவியினிலுரைக்கத் தீமொழிகேட்டு –
புவியினில்இன்னோர் புருஷனை வேண்டேன்
கற்பினாலிந்தக் காணியாள்வேனொ
சொற்படிமகுடஞ் சூட்டுவீரென்ன
பெண்ணரசாள்வது பிழையெனஎந்தை
எண்ணிசொல்வார்த்தைக் கெதிர்மொழிநானும்
பேசினேனந்தப் பிழையையும்பொறுத்து
யோசனை செய்து உயர்மணிமகுடம்
தரித்தனரென்றன் றலையினிற்சுமையை
இருத்தினர் செங்கோல் ஈந்ததாலுலகிற்
களவுகட்கொலை பொய்க் கடுங்கோளிலாமல்-
இளவரசாள என்றன்பாங்கியரை
மதி மந்திரிமார்களாய் மருங்கினில்வைத்து
சதர்விதவுபாய தந்திரங்களினால்-
அரியணைமீதில் அமர்ந்துல கெல்லாம்-.
ஒருகுடைநிழலின் உண்மையைச்செலுத்தி
மல்லிகை முல்லை மருவிருவாட்சி
பல வகைவிதப்பூ பறித்தரசாட்சி
நிலைபிசகாமல் நிற்கமீனாட்சி
மலரடி துதிசெய வந்துநின்காட்சி
கண்டனன்என்றன் கதையிதான்மையல்
கொண்டவென்றனை நீர் கூடுவதல்லால்
பொறைமிகுதரும புத்ரனோடுதித்து
மறையவனாகியும் மானிலந்தன்னில்
தீர்த்தயாத்திரைக்குச் சென்றநின் சேதி
பார்த்திபாஎனக்குப் பகர்ந்தருளையா
வசனம்.
கேளும் என் சுவாமி தேவரீர் பொறுமையில் மிகுந்த தருமராசன் தம்பியாய்
விளங்குகின்றவர். பிராமண சந்நியாசியாய்த் தீர்த்தயாத்திரை செய்யவந்த விருத்தாந்தம்
அடியாளுக்குத் தெரிவிக்கவேணும் என்பிராணநாதா.
அர்ச்சுனன்- தன்வரலாறு சித்திராங்கதைக்குச் சொல் - அகவல்
இராகம். தோடி.
பொற்பினிலிரதி புகழுமற்புதையே
கற்பினிலருந்ததி வருதுமிங்கினையே
பற்பலர்களுந்துதி பாண்டியன்சுதையே
ஐவர்களுடனே அவதரித்தாளாய் -
மைவருங் கண்ணார் மயல்கொளவேளாய்
பொய்யல்ல யாத்திரை போந்ததின்னாளாய்
தையலே என்றன் சரிதையைக் கேளாய்
இந்திரபிரஸ்தம் என்னுமாநகரில்
வந்தொருநாரத மாமுநிநல்ல
சந்தோஷவார்த்தை தருகுவனென்றால்
சுந்தோப சுந்தா சுரர்குலத் துதித்தோர்
இருவருமூவரை எண்ணிசெய்தவத்தால்
ஒருவரும் நிகரிலா உயர்வரம்பெற்று
வருவுரு திலோர்த்தமை மையலால் மாண்டார்
அரிவை அரோபதையை ஐவரும்பெண்டாய்
வைத்திருப்பதுவும் வண்மையோதரும்
புத்திரனேயென்று புகலும்அம்முனியை
உத்திரங்கேட்க ஓராண்டுக்கொருவர்
பற்றி மற்றோரில் பார்த்தவர் தீர்த்த
யாத்திரை செய்வீரென் றறைந்தவர்போனார்
மூத்தவன்றன்னிட முறையினிலங்கநார்
சாஸ்திரக் குருக்கள் தன்மாடு மீட்க
அஸ்திரமெடுக்கும்போ தடியினைக்கண்டு
வேடுவர்களையும் வென்றரன் கோயில்
மாடுகள் திருப்பி மறையவருடனே
கூடுமவ்வேடம் கொண்டு யாத்திரையாய்
நாடுகள்திரிய நான்புறப்பட்டு
காசியிற்சென்று கங்கையில் மூழ்கி
வாசுகிபெற்ற மங்கையுலூகி
தேசுகண்டங்கே திகைமயலாகி-
பேசியஅவள்பின் பிலவழியேகி
பாதலமென்னும் பதியினிற்சென்று ...
காதலன் நாகக் கன்னியை மணந்தேன்.
ஆதலாலவளும் அரவானைப்பெற்றாள்.
பூதலந்தனினான் புகும்பில வழியால்
குன்றருவிகளும் குளங்களுந்தேடி
நன்றி செய்பலபல நதியினீராடி
தென்றிசைமறையோர்ச் சிலருடன்கூடி
மன்றல் சேர் நாக மலையையுண்ணாடி
திருக்காளஸ்திரியும் திகழொற்றியூரும்
வருகழுக்குன்றமும் மயிலை மாநகரும்
பெருகுகம்பாநதி பிரபலமாங் காஞ்சி
புரமலங்காரமும் புனலெழுவிதமும்
பிரமன் செய் யாகமும் பெருந்தவ நிலையும்
பரமன்வந் துமைக்கோர் பாகந்தந்ததுமா
மரமதின் மகிமையும் மகிழ்ந்து கொண்டாடி
அண்ணாமலையிணை அடியையும்போற்றி-
உண்ணாமுலையெனும் உமைபதம்பணிந்து
பெண்ணையில் மூழ்கி பெருந்துறையாடி
வெண்ணைநல்லூரும் வீரட்டானமும்
ஆவடு துறையும் அணிதிருவாரூர்
மாவடுகண்ணார் மகிழ்வடமருதூர்
நாவலூர்செந்தூர் நடம்பயிலம்பலம்
நாவலராலும் நவிலவுமரிதாம்
பாரெங்குந்தெய்வ பதிபணிந்தப்பால்
நீரெங்கும் பொங்கும் நிகரில் காவிரிசூழ்
சீரங்கம்வந்து சிலநாளிருந்து
சாரங்கபாணிபொற் தாளிணைபணிந்து
வண்டிசைபயில்வரு வைளையாற்றில்
எண்டிசை புகழ எழுதேடெதிரேற
தண்கடலத்தையும் தாண்டினான் அந்த
மண்விட்டனந்த மானதிதோய்ந்து
பங்கயவாவியும் பகர்சொக்கநாதர்
அங்கையர்க் கண்ணோடமர் திருக்கோயிலும்
மங்கையர் வாழ் நான் மாடகூடங்களும்
தங்கியமதுரைத் தலமதின்பெருமை
காவிரி யமுனை கங்கை சரஸ்வதி
பூவிரி தாமரை புகலும் புஷ்கரணி
கோவியங் கன்னியா குமரியாந் தீர்த்தம்
தாவியே வைகைத்தனிலும் நீராடி
வந்தனனிந்த வாசமிகுந்த
நந்தவனத்தில் இரதியெனவந்த
உன்றனைக்கண்டு உளமகிழ்ந்திருந்த
என்றன்வரலா றிதுவுனைத்தந்த
பாண்டியனின்னம் பண்ணுபசாரம்
வேண்டிய துண்டு விளம்பவும்பெண்ணே
சித்திராங்கதை சொல் -கந்தார்த்தம்-இ ம்-மத்தியமாவதி.
நின்மகிமையறியாமல் துன்மதியால் நான்
சொற்பிழை யனந்தமும் பொறுத்து
என்மனதின் படிக்கிசைந்து மன்மதலீலை செய்ய
வாருமென் சுவாமி மருவி முத்தந்
தாருமென் சுவாமி
காரும் அலைகட நீரும் போலவிரு
வோருங் கலவியாற் சேருவோம் அருகினில் (வாரும்என்)
அர்ச்சுனன்சொல் கந்தார்த்தம்-இ ம் தோடி-அடதாளம்.
செண்டார்முலையாய் நின்னருகினிற்
றொண்டாரனந்தந்தோழிக ளிருக்கிறாரவர்கள்
கண்டார்நகைப் பார்களிந்த
வண்டார் மலர்வனத்தில்
மறைவாகவாடி மருவுவோம்.
உறவாகக்கூடி..
நினைவாக மனதினில் நினைத்திருந்தபடி
குறைவறாமலின்று கூடலாம்பூஞ்செடி (மறைவாகவாடி)
சித்திராங்கதை சொல் -கந்தார்த்தம்-இ-ம்-தோடி.
தாதிகளிந்தத் தழைத்தசோலையிற்
போதலர்பூவணைப் போட்டப்புறம் போவார்
ஆகலாலொருவரும் அறியாமல் இருவரும்
மாதவி மரத்தருகினில்
மருவுவோம் வாரும் கனியிதழ்
பருகுவோம் வாரும்
திருவு நெடுமாலும் திகழிரதியும் நினை
பொருவு மன்மதனும்போல் உருகொண்டஇருவரும் (மரு)
அர்ச்சுனன் சொல் - கந்தார்த்தம்.
அனியாரிங் கொருவருமில்லை
தனியாய் நாமிருவரும் கூடிச் சம்போகமதாய்
பனியார் பூவணையினிற் படுத்துக்
கனிவாயிதழமுதுண்டு
களிக்கலாம் பெண்ணே இன்பக்கடல்
குளிக்கலாங்கண்ணே
அளிக்குமலரும் பன்றலர்ந்ததுபோலே
கிளிக்குப் பொற்கிண்ணப்பால் கிடைத்தாற்போலினிமேலே [களி]
பொது-விருத்தம்-இ-ம் தோடி
கந்தனும் வள்ளியும்போற் காளையர்ச்சுன னுமங்கைப்
பந்தெனுமுலையாளென்னப் பகர்சித்திராங்கதையுங் கூடி
ஐந்தருவனத்திலின்பம் அனுபவித்தவர் களிப்பால்
வந்தொருவருக்கொருவர் வாய்மலர்ந்திருக்கின்றாரே!
வசனம்.
இவ்விதமாக சுப்பிரமண்ணிய சுவாமியும் வள்ளியம்மனுங் கானகத்திலே
மருவியணைந்ததுபோல் அந்த கற்பகவனத்திலே அர்ச்சுன மகாராஜனும்
சித்திராங்கதையும் காந்தருவ விவாகமாகச் சேர்ந்து அதிக திவ்ய சம்போகத்தை
அடைந்தவராய் அந்த குருக்கத்தி மரத்தடியைவிட்டு இப்புறம்வந்து ஒருவருக்கொருவர்
கனி வாய்மலர்ந்து கலந்துபேசுகின்ற விதங்காண்க.
சித்திராங்கதை அர்ச்சுனனுக்குச்சொல்-விருத்தம்.
வேளை வெல்லெழில்மிகுந்த விஜய நான் இங்குவந்த
வேளை நல்லது காந்தர்வ விவாகமு முடிந்துதெந்தை
நாளைய தினம் நமக்கு நன்மணஞ்செய்வார் நின்மின்
நாளை கொண்டரண்மணைக்கு நடந்துவந்தருளுவீரே
வசனம்
கேளும் அழகில் மிகுந்த அர்ச்சுன மகாராஜனே நானிந்த நந்தவனத்திற்கு வந்தவேளை
நல்லவேளை யாகையால் உமது தரிசனமுங்கண்டு காந்தர்வ விவாகமும் முடிந்தது.
இனியென் றந்தையாகிய பாண்டியமகாராஜன் நாளையதி னம் திருக்கலியாணம்
செய்து போடுவார். இனி நாமிருவருங் கைகோர்த்துக் கொண்டு அரமனைக்குப்
போக எழுந்தருளவேணும் சுவாமி.
அர்ச்சுனன்-சித்திராங்கதைக்குச்சொல்-விருத்தம்.
இ -ம் ஆனந்தபைரவி.
திருவென வுருவமைந்த சித்திராங்கதையே கேளைந்
தருவனந்தனினா னுன்றன் றந்தை சொற்படிக்கிருந்த
உருவமாற் றினதல்லாமல் உன்னையுங்கூடி அங்கே
வருவது நன்றோநீ போய் வாழ்மனை சேருவாயே
வசனம்.
கேளாய் ஸ்ரீமகாலட்சுமியைப்போலும் அழகைப் படைத்த சித்திராங்கதை யென்னும்
கண்ணே. நான் பிராமண சந்நியாசியைப் போல்வந்து உன்றந்தையாகிய பாண்டிய
மகாராஜன் சொற்படிக்கிருந்த ரூபத்தை மாற்றி இராஜரூபமெடுத்து உன்னையுங்
கூடி நான் உன்றந்தை முன்வருவது நன்றல்ல. நீவாழும் அரண்மனைக்குப் போய்ச்சேரும் பெண்ணே.
சித்திராங்கதை-புலம்பல் தரு இ-ம்-ஆகிரி - அடதாளம்.
வாழும் அரண்மனை போவென்பவரெனை
வந்துதொட லாமோ-கூட
வரமனதில்லாமல் ஸ்திரமாயிங்கிருந்து
வாயால்வழிவிட லாமோ
ஊழியஞ்செய்யுமென் றோழிகள்வார்த்தை
யுண்மையாச்சு தே நான்
உன்றனைப் பிரியே னென்றுசொன்ன பேச்
சுடனேபோச்சு தே
பதிவிரதங்கொண்டதிபதியாயிப்
பாரினில் வாழ்ந்தே னே-கல்வி
பல்லியைப்போலெல்லாம் சொல்லியின்றுகாடிப்
பானையில்வீழ்ந்தே னே
சதிசெய்யாமலென் மதிமயங்கி நின்றன்
மையல் தீர்த்தே னே-மனஞ்
சற்றிலேமகிழ்ந்து தயிரிலழகு
முற்றிலும் பார்த்தே னே
சக்கரையென்னும்வாய் நக்கிறவர்போலும்
சம்மதிப்பட்டே னே - செங்கோல்
சத்தியமும்தெய்வ பக்தியும்கற்பும்பெண்
புத்தியாற் கெட்டே னே
அக்கரை தீர்ந்தபின் நிக்கிரகித்து முன்போல்
அந்தணனாக வோ- இவள்
ஆசையினால் வந்த வேசியென்று தீர்த்த
யாத்திரைக்குப்போக வோ
சிந்தையிலெண்ணி யென்றந்தை முன்வாராமல்
திருடனவனைப்போ லே- மலர்
செழித்தவனத்தி லொளித்திருந்தாலென்
செய்வேனினிமே லே
எந்தையினாலொரு நிந்தைவருமென்
றெண்ணவேண்டாம் வாரும்- இந்த
ஏழையுடன் கூடி வாழும்படிமனம்
இசைந்து கண்பா ரும்
இதுவும் – சித்திராங்கதை சொல்-விருத்தம் -இ-ம் - ஆனந்தபைரவி
இலையினிற் பாலோடன்னம் இட்டதை யுண்ணாமுன்னம்
தலையினை வெட்டுமென்ற தகமைபோ லுன்றனாசை
வலையினிற் பட்டஎன்னை மருவவா ராமனீரின்
நிலையினி லிருப்பதென்ன நீதியென் பிராணநாதா
வசனம்.
கேளும் சுவாமி இலையிலே நல்லபாலோடு அன்னமிட்டதை உண்ணுகிறத்திற்கு
முன்னே கழுத்தையறுத்த தகைமைபோல் உன்றன் ஆசையிலகப்பட்ட என்னை
மருவியணைய மனைக்கு வாராமல் நீரிந்த நந்தவனத்தில் இருப்பதென்ன நீதி
எழுந்திருந்து வாரும் என் பிராணநாதா.
அர்ச்சுனன்-சித்திராங்கதைக்குச்சொல் விருத்தம்
இராகம் - ஆனந்தபைரவி.
வாருமென்ற ழைத்தால்கண் மணிசித்திராங்க தையேயுன்னை
சேரும்அக்கரை யெனக்குத் தீர்ந்துதென் றெண்ணவேண்டாம்
நாரும்பூவும் போற்கூட நன்மணஞ் செய்வேனிந்த
பாரும்வானமுந் தான்சாட்சி பதியிற்போய் சேர்வாய் பெண்ணே.
வசனம்.
கேளாய் சித்திராங்கதை யென்னுங் கண்மணியே! நானுன்னைச் சேர்ந்தணையும்
ஆசையும் அக்கரையும் எனக்குத்தீர்ந்து போச்சுதென்று எண்ண வேண்டாம். இனி
நாமிருவரும் நாரும் பூவும் போல மருவியணைய நாளைய தினம் வந்து உன்னைத்
திருக்கலியாணஞ் செய்துக்கொள்ளுகிறேன். இந்தபூமி ஆகாசம் தான் சாக்ஷி. வியசனப்
படவேண்டாம். அரண்மனைக்குப் போய்ச் சேரும் பெண்ணே.
சித்திராங்கதை தாதிகளுக்குச்சொல்-விருத்தம்.
மருமலர்க் குழலீர்தோழி மார்களே யிவரென்கூட
வரமனதி லாமற்பூமி வானமுமறிய நாளை
திருமணஞ் செய்வேனென்று செப்பிய மொழியைநம்பி
அரண்மனைக் கேகலாமா அனைவரு முரைசெய்வீரே.
வசனம்.
கேளுங்கள் என்சகிகளே, இந்த அர்ச்சுனமகாராஜன் நம்முடனேகூட மனைக்குவர
மனதில்லாதவர் நாளையதினம் வந்து உன்னைத் திருக்கலியாணஞ் செய்துக்
கொள்ளு கிறேனென்று பூமி ஆகாசம் அறியச் சொன்ன சத்தியவார்த்தையை நம்பி
இவரையிங்கே விட்டு விட்டு நாம் அரண்மனைக்குப்போகலாமா நீங்களனைவரும்
ஒரு ஆலோசனை சொல்லுங்களம்மா.
தோழிகள் – சித்திராங்கதைக்குச் சொல்-விருத்தம்.
வரையின்மேல் விளைந்தாலும்இவ்வையகந் தனினெற்குத்தும்
உரலிற்றான் மதியும்எங்கும் ஓடிப்போகு துன்றன்கை ...
விரலினைப் பிடித்துநல்ல விவாகஞ்செய் தணையநாளை
வருகிறே னென்றுசொன்ன வாய்மையுந் தப்பாரம்மா
வசனம்.
கேளும் இராஜபரமேஸ்பரி மலையின்மேல் விளைந்தாலும் உரலிலேதான்
மசியவேணும். எங்கேயும் ஓடிப்போகாது. நாளைய தினம் உன் கைவிரலைப்பிடித்துத்
திருக்கலியாணஞ் செய்து சேர்ந்தணைகிறேனென்று சொன்னவர் எங்குந்தப்பி
ஓடிப்போகமாட்டார். நாம் அரண்மனைக்குப் போய்ச்சேருவோம் வாரும் அம்மணி.
இதுவும் தோழிகள்சொல்-விருத்தம்.
உருசியைக்கண்ட பூனை யுரியைத்தாவுவது போனின்
சரச சிற்றின்பலீலை தானின்னம் வேண்டியிந்த
விரை செறிமலர்வனத்தை விட்டிவர் போகமாட்டார்
வரிசையா நாமெல்லோரும் வாழ்மனைக் கேகலாமே.
வசனம்.
கேளும் அம்மணி உருசிகண்ட பூனை உரியைத் தாவுவதுபோல் உன்னை
மருவியணைய இன்பசுக சம்போகத்தை வேண்டினவராகிய இவர் இந்த
நந்தவனத்தைவிட்டு அப்புறம்போகமாட்டார். நாம் வந்து வெகுநோமாச்சுது.
அரண்மனைக்குப் போய்ச் சேருவோம்வாரும் அம்மா தாயே.
சித்திராங்கதை - தோழிகளுக்குச்சொல்-விருத்தம்.
சகிகளே நீங்கள் சொன்ன சாமர்த்திய வார்த்தை நல்ல
விகிதந் தானிவ்வனத்தில் விஜயனை விட்டெல்லோரும்
சிகிரியிலுயர் மனைக்குச் சீக்கிரமதாகச்சென்று
மகிதலமறிய நாளை மணமென வுரைப்போம்வாரீர்
வசனம்.
கேளுங்கள் என் சகிகளே நீங்கள் சொன்ன வார்த்தையே சரி. இந்த கற்பக வனத்திலே
அர்ச்சுனமகாராசனை விட்டு நாம் அனைவரும் அரண்மனைப் போய்ச்சேர்ந்து
நாளையத்தினம் திருக்கலியாணமென்று பூலோகமெங்கும் அறியச்செய்வோம்
வாருங்களம்மா.
தோழிகள்சொல்-வசனம்.
அப்படியே போவோம்வாரும் அம்மணி.
சித்திராங்கதைசொல்-தரு-இ ம் அசாவேரி அடதாளம்
பல்லவி.
அரமனைக் கேகுவோம்வாரீர்- நாம்
அனைவருமிந்த நந்தவனமதை விட்டுச்சொந்த (அரம)
அறுபல்லவி.
பரமனை நினைந்துமுன் பண்ணபூசையி னாலே
பார்த்தீபனிங்குவந்து வாய்த்தானே இனி மேலே (அரம)
சரணங்கள்.
கனமோகமயலின்னன் கொள்ளுதே-வர
காலெழாமற்பின்னே தள்ளுதே-நல்ல
இனமாக துரைமக்கள் எல்லோரும் என்னாளும்
இருமருங்குஞ்சூழ பெருமையா யரசாளும் (அரம)
தாதிகளே சுருக்காய்ச் செல்லுவீர்-என்றன்
தந்தைக்கிவ் வார்த்தையைச் சொல்லுவீர் மாட
வீதிகளெங்கும் விளங்கச் சிங்காரிக்க
விஜயன்றனக்கு மணம் இசையவே பூரிக்க (அரமனைக்)
நாளைய தினமாலைச் சூட்ட-மதுரை
நகரெங்கும்எனைக்கோலங் காட்ட-அந்த
காளையர்ச்சுனனை என் கமலக்கண் களி கூர
கண்டவுடனே மையல் கொண்டஇளப்பு தீர (அரமனைக்)
பொது விருத்தம்-இ-ம்தோடி.
ஐந்தருவனத்தி லர்ச்சுனன் தனைவிட்
டரிவைசித்திராங்கதை மயில்போல்
வந்தரண்மனையிற் புகுந்தனள்பானு
மறைந்தபின் மதன்கணையாலும்
சந்திரனாலும் சகிக்கமாட்டாமற்
றணலிடுமெழு கெனத் திரேகம்
நைந்துருகியதும் இராத்திரிகாலம்
நடந்தசேதிகளையும் உரைப்பாம்
வசனம்
இவ்விதமாகக் கற்பகவனத்தைவிட்டு தன் தோழிமார்களுடனே சித்திராங்கதை
அரண்மனை வந்துசேர்ந்து சூரியபகவானும் அஸ்தமனம் ஆனபின்பு விரகாக்கினி
சகிக்க மாட்டாதவளாய் தேகமெங்கும் மெழுகாயுருகி அவ்விராத்திரி காலமெல்லாந்
துயரப் படுகின்ற விதங்காண்க.
சித்திராங்கதை சகிகளுக்குச்சொல் விருத்தம்- ஆகிரிராகம்.
வாழ்மனைக்கென் னைக்கொண்டு வந்ததோழிகளேயிந்த
பாழ்மனைதனிற் படுக்கும் பஞ்சணைசுடுவதென்றன்
ஊழ்வினைப்பயனோ ஊணுமுறக்கமும் இழக்கவந்த
தாழ்வினையொ ழிக்கவந்த தனஞ்செயனெங்கேசொல்வீர்.
வசனம்.
கேளுங்கள் என்தோழிகளே இந்த பாழ்மனையிற் படுத்து நித்திரைசெய்யும்
பஞ்சணை நெருப்புப்போல் என் திரேகத்தைச் சுட்டுப்போடுவது நான் பூர்வஞ்
செய்த பாவமோ மேலும் அன்னமும் வேண்டியதில்லை நித்திரையும் வரவில்லை.
இனியென்ன செய்வேன். இந்தத் துயரத்தைந் தீர்க்க அந்தத் தனஞ்செயனெங்கே
யிருக்கிறார் சொல்லுங்களடி பெண்களே.
தாதிகள் நாயகிக்குச் சொல்விருத்தம்.
தனஞ்செயனெங்கே யென்னுந் தாயேயுன் றனக்குநாளைத்
தினஞ்செய்வோ னுதிக்குமுன்னர் திருமணஞ் செய்துகூட
இனஞ்செய் வண்டிமிர் பூங்காவில் இருந்தவர் வரவுங்காண்பாய்
மனஞ்சலியாமல் நித்திரை மலரணை தனிற்கொள்வாயே.
வசனம்.
கேளும் அம்மணி அந்த அர்ச்சுனமகாராஜன் நாளையதினம் சூரிய உதயத்திற்கு
முன்னே உன்னைத் திருமணஞ்செய்து சேர்ந்தணைய கவனத்தைவிட்டு வருவார்
நீ விசனப் படவேண்டாம். பஞ்சணையை விட்டு இப்புறம்வந்து இந்த மலரணையில்
சற்றுநேரம் நித்திரை செய்யும் அம்மா தாயே.
சித்திராங்கதை - மன்மதவேதைப்படுகிற-தரு
இ-ம்-தோடி-தாளம்-மட்டயம்
பல்லவி.
மலரணையிற் படுக்க-வசமல்லவே தோழிமார்களே
அநுபல்லவி.
அலர்க்கணையின் மேலே-எனை
அமர்த்திநீர் அத னாலே (மலர)
சரணங்கள்.
பஞ்சணையாகா தோ- இதிற்
படுத்தாலங்கம் வேகா தோ
நஞ்சணையென்பதை நறுமல ரென்று
நம்பலாமோ மதன் அம்பல்லவோ இன்று (மலரணை)
செந்தணற்குழம்பி தேது- நீங்கள்
செய்வதெல்லாமெத்த சூது
சந்தணக்குழம்பிதென்று வாரி
தடகுறீர் என்னைச்சுடுகிறீர் மரு (மலரணை)
கனத்தமையலைத் தந்த எழிற்
காளைவிஜயன் நந்த
வனத்திற்கேகியிட்சனத்தி லழைத்து
வாங்களடி நீங்கள் போங்களடி யிந்த (மலரணை )
சித்திராங்கதை- தாதிகளுக்குச் சொல்- விருத்தம்- இ-ம் முகாரி
மலரணையென்ன வோர்பேர் வைத்த தாதிகளே மாரன்
அலர்கணைத் தனைப்பரப்பி யதன் மீதிலெனை வளர்த்தி
பலர்களுஞ் சுத்திசுத்திப் பார்த்திருப்பதுவும் போதும்
சிலர்கள்போய் விஜயன்றன்னைச் சீக்ரமாயழைத்துவாரீர்
வசனம்.
கேளும் என்றோழிமார்களே புஷ்ப அணையென்ற பேரை மாத்திரம் வைத்து
மன்மதனுடைய புஷ்பபாணங்களின் பேரில் என்னைப்படுத்து நித்திரை
செய்யச்சொல்லி நீங்களனைவரும் சுத்திசுத்திப் பார்த்துக்கொண்டிருப்பது
போதும். சிலபேர்கள் அந்த நந்தவனத்திற்குப்போய் அர்ச்சுன மகாராஜனை
இந்தட்சணம் அழைத்து வாருங்களடி பெண்களே.
தாதிகள் - நாயகிக்குச்சொல்-விருத்தம்-இ ம்-ஆனந்தபைரவி
அழைத்து வாருங்களென்றால் அர்த்தராத்திரியில் நாங்கள்
தழைத்த பூவனத்திற்கேகத் தகுமோ நின்னருகில் இன்னாள்
பிழைத்தது போதுந் தாதிப் பெண்களாய் பிறக்க முன்னாள்
இழைத்த தீவினையோ ஐயோ இனியென்ன செய்வோம் அம்மா
வசனம்.
கேளும் அம்மணி நீங்கள் உத்தரவு செய்த இராத்திரிவேளையில் இருண்ட கற்பகவனத்திற்கு
எங்களைப்போய் அவரையழைத்து வரச்சொல்லத் தகுமோ மேலும் ஒருவருக்கு
ஊழியஞ் செய்யுந் தாதிப்பெண்களாய்ப் பிறக்க நாங்களென்ன தீவினை செய்தோமோ
ஐயையோ இனியென்ன செய்வோம் அம்மா.
சித்திராங்கதை சொல் - கந்தார்த்தம் இ-ம்- மத்தியமாவதி.
மன்றவமிகுந்த நற்சந்தணமரம் வளர்பொதியக்
குன்றிலெழுந் திருந்தென்றன் மேற்கொடுங்கனல் வீசும்
தென்றலெனுந் தேரேறி யெண்டிசைகளும் அதிர
வன்றிரல் கொண்டதி வேகமதாகன (மாரன்)
துதிக்குமால்குமாரன்
கொதிக்குங்கோபக்காரன்
எதிர்க்குமரண சூரன்-இந்த
பாரினிலெவர்களும் நேரிலையெனவரு
போரினில் முனைந்தெதிர் சாரியாவாரவன் (மாரன்)
இதுவுமது.
வாரிகளோ ரெழுவகையும் பலவாத்திய மென்னும்
பேரிகையார்ப் பரித்திடும்படி பிறப்படும் பிரயாண
பூரிகைதாரை புள்ளாங்குழ லூதபூங்கொடியாங்
காரிகையார் நடமாடக் கருங்குயில் (காளம்)
வண்டிசைகளும்பூபாளம்
எண்டிசைமுழங்குமேளம்
தண்டிற்கீதடையாளம்-மின்னுமண்ட
கோளமுயர் சக்ரவாள மதிருவரு
வெளெதிருதுயெந்நால்தாளக்கூடாதமேக (காளம்)
இதுவுமது.
மகரகேதனமசைய தென்மாருதமென்னும்
சிகரதேர்மிசைத் திங்கள் வெண்குடை யெனக்கவிய
பகர்பசுங்கிளி பரிகளார்ப்பரிக்க காரிருளாம்
புகர்முகக்களிறு புடைநெருங்கிடபடை (பொங்க)
செயவிருதிலங்க
மயல்கொண்டோர்கலங்க
புயல்வண்ணந்துலங்க- வரும்
அங்கசன் படையெனும் மங்கையரொடுசது
ரங்கபெலங்கள் நிலங்களி லெங்கணும் (பொங்க)
இதுவுமது
கரும்பெனும் வில்லை வளைத்து கடூரமதாக
சுரும்பெனும் நாணேரிட்டு குணத்தொனி செய்து
அரும்பலர் முல்லையோ டைங்கணை பூட்டியர்ச்சுனனை
விரும்பு மென்றன் மேல்வீசும் அம்புகளென்னும் (வேகம்)
திடுக்கிடுதென்னாகம்
நடுக்கிடுதென்தேகம்
தொடுக்கிறான் சோகம்-கையில்
சேகரமாக அனேகமங்கையர்கள்
தோகையென்மீதினில் வாகை மன்மதன்விடு (வேகம்)
இதவும் - சித்திராங்கதை சொல் சீசபத்தியம்-இ-ம் புன்னாகவராளி.
சகிகளே யென்மீதில் பகைகொண்டு மன்மதன்
சாடுறான்முல்லை யாற்றலை பிளக்க
விகிதமாங் கரும்புவிற் பிகிந்த சோகக்கணை
விடுகிறான்என்றன் தண் விழுதெறிக்க
தொகையிலா அரவிந்த முகையெனும் பூங்கணை
தொடுக்கிறான் யென்மனந் திடுக்கிட்டலற
மகிதலந்தனில் சோனதமாம் பூவெனும் பாணம்
வாங்கிறான் கொங்கை மேற்றாங்கியுருக
நிதம்பத்தின் மேல்விட்ட நீலபாணம்
அதம்பண்ணு தெனையவ னன்னீதங் குலைய
கதம்பமுலை கண்ணிற்பூங்கணை களெய்யும்
மதமுற்ற பாவிமன் மதனை வைவேன்
இதுவும்-சித்திராங்கதைசொல்- அகவல்-இ ம் -முகாரி.
மன்மதா நீநெடு மான்மக னாகையால்
உன்மதா மதமெத்த வுண்டடா துஷ்டா
என்மீதி னிற்பகை யேதடா பொல்லாத்
துன்மதி யெனுமுன் றுட்டபுத் தியினால்
கன்னல் வில்லினிற் பூங்கணை களைப்பூட்டி
மின்னல் சர்ச்சனைமிகும் மேகம்போற்சின்ன
பின்னலாய்ச் சரமாரி பெய்ததுபோதும்
இன்னல்செய்பாணங்கள் இனிமேலாகிலும் நீ
எடுக்க வேண்டாமடா ஏழையின்மேற்றகம்
தொடுக்க வேண்டாம் பெண்தோஷங் களுண்டு
படுக்கும்பாயலும்நின் பாணம் போற்றைக்க
அடுக்குமோ அடடாஉன் ஆண்மைகளழிய
கண்ணுதன் மூர்த்திதன் கனல்விழியாலிம்
மண்ணினி லெரிந்துநீ மாண்டதுமெய்யென்
றெண்ணி னானிருந்தேன் ஏந்திழைமார்கள்
பண்ணினபாவம் நின் பாரியாமிரதி
உன்றனை யெழுப்பி உளவுகள் சொல்லி
என்றனைக் கொல்ல ஏவினாள்பாவி
மன்றல்சேர் பொதிய மாமலையுயிர்க்கும்
தென்றற் றேதனைச் சீறரவருந்த
புரவியாங் கிளிகளைப் பூனைகள் விழுங்க
இரவியால் மதகரி யிருள்களு மொதுங்க
பாவிய நீலோற் பலமெனும் அம்பும்
அரவிந்தபாணமும் அசோகுபூங்கணையும்
முல்லையுஞ் சூதமும் முகங்கரிந்துலர
சொல்லும் ஓலைப்பூச் சுருள்வாள் வதங்க
வில்லெனுங்கரும்பை வெடுக்கென்றொடித்து
பல்லுளோர்தின்று பாரினிலுமிய
கொடியெனும் கரங் குளத்தினி லொளிக்க
கடிமுர சரையுங் கடலொலி யுறங்கப்
படிமிசை நீவாள் பதிபொழி லாய்ப்பூஞ்
செடிவளர்ந் திடவுன் றேகமு மாற
திங்கள் வெண்குடையுந் தேய்ந்து தேய்ந்தழிய
பெண்களெனும்படை பிள்ளைகள்பெற்று
மங்களாகரமா மனையினில் வாழக்
கண்களிப்பாக நான் கண்டதெப் போதடா
பாவியே யினிபுட்ப பாணம்விட் டென்றன்
ஆவியைவாங்காதே யப்புறம்போடா
சித்திராங்கதை சொல் கவி-இ ம்-நாட்டை.
ஆரடிபெண்களே யனைவரும் அனங்கனுக் குளவாய்ப்
போரிடவோ லெனைப் புடைசூழ்ந் திருக்கிறீர் நீங்கள்
வீரிடவாளினால் வீசியேயென்றன் கைத்தண்டால்
ஓரடியாயடித் துங்களைக்கொல்லு வேனானே
வசனம்.
ஆரடியடி தாதிப்பெண்களே நீங்களனைவரும் மன்மதனுக் குளவாயிருந்து அவன்
பெரும் படையைப் போலெனைப் புடைசூழ்ந்து போர்செய்யத் துணிந்தீர்களல்லவா
நல்லதாகட்டும். உங்களை வாளினலே வெட்டி கதையாலடித்துக் கொல்லுகிறேன்
பாருங்களடி வெள்ளாட்டிகளே.
தாதிகள் சொல்-விருத்தம்.
பனிமலரணையின்மீது படுத்து நித்திரை செய்யாமல்
முனிவுகொண் டெங்கள்பேரில் மோதியிங் கடிக்கவந்தால்
இனியென்ன செய்குவோம்நல் லெழினிலா மணியிழைத்த
தனியரண் மனைக்குப்போவோம் தாயே நீயெழுந்து வாராய்
வசனம்.
கேளும் அம்மணி குளிர்ச்சி பொருந்திய புட்பவணையின் பேரிலும் படுத்து
நித்திரைசெய்யாமல் எங்கள்பேரில் அதிக கோபங் கொண்டடிக்கவந்தால்
நாங்களென்ன செய்வோம் மிகுந்த தளம் பாவிய சந்திரகாந்தக் கல்லினாற்
கட்டியிருக்கின்ற அரமனை க்குப் போய்ச் சற்றுநேரம் யிருந்துபார்ப்போம்
மெள்ள எழுந்துவாரும் அம்மணி.
சித்திராங்கதை சொல்-விருத்தம்-இ ம்ஆகிரி.
இந்து கரந்தங்களென்றில் விரவிமாமணியாற்றேகம்
வெந்து காந்தர மனைக்கேன் மேவினேன் மலர்வனத்தில்.
வந்து காந்தருவமென்னும் மணஞ் செய்து மருவி மையல்
தந்த காந்தனை யழைத்திந் தட்சணம்வருகுவீரே
வசனம்.
கேளுங்களடி பெண்களே குளிர்ச்சிபொருந்திய சந்திரகாந்த மேடையென்று
சொன்ன உங்கள் வார்த்தையை நம்பி யதிக தீட்சணங்களை ஜொலிக்குஞ்
சூரியகாந்த மெத்தையின் பேரில் வந்த மாத்திரத்தில் எனதுதேகம் எங்கும்
வெந்து காய்ந்துரிகிப் போகுதே. அந்த அர்ச்சுன மகாராஜனை இந்தட்சணம்
அழைத்து வந்தீர்களானால் என்னுயிர் பிழைக்குமடி பெண்களே.
இதுவும் சித்திராங்கதை சொல்- தரு இ-ம்-கலியாணி:- திரிபுடை தாளம்
பல்லவி.
மதியுமிப்படி காய்வ தென்னமோ மாயம்-பாவி
மதன்செய்யுஞ் சதிக்கி துவுமென்ன சகாயம் (மதி)
அனு பல்லவி..
பொதியவெற் பெனும்சர்ப்பவயிற் பலை
போலே மோதுததின்மேலேயேது கலை (மதி)
சரணங்கள்.
தாதியர் இதற்குத்தகுமாலோசனை செய்யுங்கள்-நல்ல
தங்கப்படிமக் கலமதைவாசலில் வையுங்கள்-இந்தச்
சேதியறியாமல்வந்து புகுந்துவெண்
டிங்களைப்பிடித்துப் பங்கஞ் செய்யுங்கள் தண் (மதி)
கடல்வட அன இடன்பிறந்தழ லேந்தி- நுதல்
கண்ணழல்சினேகம்பண்ணதினாலிந்தக் காந்தி-மேலும்
விட வரவதின்வா வாயினி லுறைந்த
வெங்கனலோமிகுதண்கலை நிறைந்த (மதி)
அம்புலியென்றினி நம்பவொண்ணாதிது மெய்யே வரும்
ஆயிரங்கதிரோன் காயுரானென்பதும் பொய்யே- கொல்லும்
வெம்புலியிதல்லால் வேறெங்கே யுண்டு
வெங்கதிரோனுடன் தங்குங்கனல் கொண்டு (மதி)
சித்திராங்கதை சொல் சீசார்த்தம்-இ-ம்-மோகனம்.
எங்கள் தமிழ்க்குன்றிலே பொங்கு மிளந்தென்றலே
ஏன்வந்து மோதுராய் என்றன்மேலே
எங்கள் பூம்பொழிலிலே தங்குமாங்குயில்களே.
ஏன்கூவுறீர்களோ எமனைப்போலே
எங்களூழியத்தோழிப் பெண்களே நீங்களே
எதிரியானீர்கள் ததுன் மதியினாலே
எங்கள் குலமென்னும் வெண்டிங்களேயிப்படி.
ஏன்காய்ந்துருகிறா யென்றனுடலை
நாற்றிசையினின்றுரு நடத்தை பண்டு
கீர்த்திகுரு துரோகியென கேழ்வியுண்டு
பாத்திபனைக்காயடாபாவிபந்த
கார்த்திகையைச்சேர்ந்த
அடுங்கனலைக்கொண்டுகாயாதே
வெம்புலியைப்போல் பாயாதே
அம்புலியே நீ மாயாதே
பெண்பாவங்கொண்டுதேயந்தே
சந்திரதூஷணை-அகவல் இ-ம் நாட்டை.
நீயென்றன்மேற் றணலெனக்காயும்
உன்திராணிபானு உதிக்குமுன்றானே
அப்புறமுன்கதிர் அழிந்தொளிமழுங்கி
கொப்பென நாட்குநாள் குறைந்துபோகாதோ
குறைந்தாலும் நீநல்ல குளிர்மழைமுகிலில்
மறைந்தாலு முன்றணல் மாறாது கண்டாய்
சங்கர னுன்றழல் சகிக்கமாட்டாமல்
கங்கையைச் சடையினிற் கலந்தல்லோ தரித்தார்.
சூரியனைமெத்த துஷ்டனென்றறிந்து
பாரியசினேகம் பண்ணாமல்விட்டான்
குருவின் பெண்சாதியை கூச்சமில்லாமல்
மருவினபாவிமகிழ்வுடன் பெற்ற
மெந்தனுக்கனலை மதித்து செங்கதிரோன்
சந்ததந்தேர்பரி சாரதியானான்
அரவுனை விழுங்கி யாற்றமாட்டாமல்
விரவுடனுமிழ்ந்து விட்டுதேமுன்னாள்
தேவர்கள்கடைந்த திரைகடலமுதை
யாவருமுண்டுனை அகற்றிவிட்டனரே
இருபதினெழுபெண் டெனும் அவரவரை
வருபதினிரண்டு மனையில்விட்டகன்றாய்
இன்னிலமெங்கும் எழில்பெறும்அங்கம்
கன்னிரோகணியாற் களங்கமுமானாய்
கொல்லுநின்னெருப்பால் குளிர்ந்துகாந்தக்
கல்லும் வெந்துருகி கனற்குழம்பானால்
என்றனைக்காயா திருப்பாயோபாலி
உன்றனை நம்பவு மொண்ணாது போடா
சித்திராங்கதைசொல்-சந்தவிருந்தம்.
மதியுமிளந்தென்றலும் வாரிதியுங் கூவு
மாங்குயிலும்பூங்கிளியும் மதனும்வண்டும்.
துதியயிருக்குயிராமென் றோழிமாரும்
துயிலிரவும்பயில்வாழுந் துலங்கவாழும்
பதியுமலர்ப்பாயலும் பஞ்சணையுமென்மேல்
பகையென்றாலினிபிழைக்கும்வகையென்னீங்கள்
கதிருதிக்குமுன் விஜயன் றனையென் கண்ணிற்
காட்டுவீர்மலரணையிற்கூட்டுவீரே
வசனம்.
சந்திரன்- தென்றல் . சமுத்திரம் - குயில் - கிளி - மன்மதன் - வண்டுகள் -
தோழிகள் - இராத்திரிகாலம் - அரமனை - புஷ்ப அணை - பஞ்சணை - இத்தனையும்
என்மேற் பகையானால் இவ்விரகாக்கினையை நானெப்படி சகிப்பேன் இனியென்னுயிர்
பிழைக் கும்படியாய் அந்த அர்ச்சுனமகாராஜனை அழைத்துவந்து பள்ளியறையிற்கூட்டி
வையுங்களடி பெண்களே.
தாதிகள் நாயகிக்குச்சொல் - விருத்தம்.
அன்னையே நாங்களிப்போ தைந்தரு வனத்திற்கேகி
நன்னயமாகவிங்கே நடந்த சேதியையுரைத்து
மன்னியவிஜயனென்னும் மகராஜன்றன்னையின்று
கன்னியேயுன்றன் கண்ணிற் காட்டுவோ மிருந்திடாயே
வசனம்.
கேளும் அம்மணி நாங்கள் அப்படியே கற்பக வனத்திற்குட்போய் அந்த
அர்ச்சுனமகாராஜனை அழைத்துக்கொண்டு வந்து உனது கண்ணிற் காண்பிக்கிறோம்.
சற்றுநேரம் நித்திரை செய்யும் அம்மாதாயே.
பொது-விருத்தம் இ - ம்- தோடி.
வாய்மொழி தடுத்தால் மோசம் வருமென வளர்த்தெடுத்த
தாய்மன தெண்ணியீன்ற தந்தையோரைக்கச் சென்றாள்
தூய்மலர் அமளியின்மேல் துடிப்பவள் வைவளென்றே
காய்மதி கடற்புகுந்தான் கதிரவன் தானெழுந்தான்
வசனம்
இவ்விதமாக அர்ச்சுனமகாராஜனை அழைத்துவரச்சொன்ன சித்திராங்கதை
வார்த்தையைத் தடுத்தால் மோசம் வருமென்றவளை வளர்த்தெடுத்த தாய்மார்கள்
பாண்டியமகாராஜனுடனே இந்தச் சேதியைச் சொல்வோமென்று அவர்கள்
போனபின்பு இனி நாம் காய்ந்தோமானால் இவள் திட்டுவாளென்று சந்திரன்
அஸ்தமனமானான். சூரியபகவான் உதயமானான் மேல் நடந்தது காண்க.
தாதிகள்-பாண்டியனுக்குச்சொல்-விருத்தம்.
ஐயனே போற்றி மலர்வனத் திற்காசி
அந்தணன்போல் வந்திருந்த அர்ச்சுனன்றன்
மெய்யழகைக் கண்டு சித்திராங்கதையுஞ் சோர்ந்து
மேதினியில் மூர்ச்சையினால் விழுந்துமிக்க
மையல்கொண்டு காந்தருவ மணத்தாற்கூடி.
மனை சேர்ந்து மதியாலு மாரனாலும்
தையல் மெழுகெனத் திரேக முருகியின்னந்
தவிக்கின்றாள் துயரமனு பவிக்கின்றாளே
வசனம்.
சரணஞ் சரணம் மகரராஜ ராஜபரமேஸ்வரா நமது நந்தவனத்தில் காசி யாத்திரைப்
பிராமண சந்நியாசியைப்போல் இருந்தவன் அர்ச்சுன மகாராஜனென்று தற்சுரூபங்
காண்பித்த படியினாலே நமது சித்திராங்கதையம்மாள் அவர்பேரில் அதிக மையல்
கொண்டு மருவி அணைத்து மனைவந்து சேர்ந்ததுமுதல் இதுவரைக்கும் சந்திரனாலும்
மன்மதனாலும் தேகமெழுகாய் உருகிப்போறாளையா சுவாமி
பாண்டியன் -தாதிகளுக்குச்சொல்-விருத்தம்.
தோழிகள் நீங்கள் வந்து சொன்ன நன்மொழியாலின்றே
ஆழிசூழலக மெல்லாம் அரசாளு மகனும்நல்ல
வாழ்வுஞ் சம்பத்து முத்தி மார்க்கமு மகிழ்வும் பெற்றேன்
தாழ்வொன்றுமில்லை நான் போய்த்தனஞ்செயன்றனைக்காண்பேனே
வசனம்.
கேளுங்கள் தோழிப்பெண்களே நீங்கள் சொன்ன சுபசந்தோஷ வார்த்தையால்
சமுத்திரஞ் சூழ்ந்த பூலோகமெங்கும் அரசாளும் பிள்ளையும் மிகுந்தவாழ்வும்
சம்பத்தும் சாயுச்சிய பதவிக்குவழியும் மனமகிட்சியும் அஷ்டதயிஸ்வரியமும்
இன்றேபெற்றேன். இனியொரு தாழ்வுமில்லை. அந்த அச்ச்சுனமகாராஜனை
நானே போய்க் கண்டழைத்துக் கொண்டு வருகிறேனடி பெண்களே.
இதுவும் - பாண்டியன் - மந்திரிகளுக்குச் சொல் - விருத்தம்.
அமைச்சரே கேளிர்முன்னோ ராலோசனைக்காய் நீங்கள்
சுமைச்சுமைந்திடும்போதல்லோ தோற்றுமென்றுரைத்தீர்தெய்வ
அமைச்சுதந்தப்படிக்கே யர்ச்சுனன் றன்னைக்காண
இமைப்பொழுதினிற்பூங்காவுக் கேகுவோம்வரு குவிரே.
வசனம்.
கேளுங்கள் என்மந்திரிகளே சித்திராங்கதை பூலோகமுழுதும் நானேயரசாளு
கிறேனென்று சொன்னதற்குச் சுமைசுமந்த பிறகல்லவோ தெரியுமென்று நீங்கள்
சொன்ன ஆலோசனைப்படிக்குத் தெய்வம் அர்ச்சுனமகாராசனைக் கொண்டுவந்தமைச்சுது.
இனி நாம் சும்மாயிருக்கப் போகாது கற்பகவனத்திற்குப்போய் அவரைக் கண்டு
அழைத்துக் கொண்டுவருவோம் வாருங்கள் மந்திரிகளே.
மந்திரிகள் - ராஜனுக்குச்சொல்-கவி.
அப்பனே போற்றி அர்ச்சுனன்றன்னை
கொப்பெனக்கண்டு கொள்ளுவோம் வாரீர்.
வசனம்.
கேளும் இராசபரமேஸ்வரா அந்த அர்ச்சுன மகாராஜனை சீக்கிரமாகப்
போய்க் காணலாம் வாருஞ்சுவாமி.
இதுவும் மந்திரிகள்சொல்-கவி.
அரசனே போற்றி அம்புவியாளும்
துரை சிரோன்மணியே துணையடி போற்றி
விரைசெறி வனத்தில் விஜயனைக்கண்டு
வரிசையா யழைத்து வருகுவோம் வாரீர்
வசனம்.
சரணம் சரணம் மகாராஜ ராஜபரமேஸ்வரா சரணம் மிகுந்த வாசனை
பொருந்திய கற்பகவனத்திலிருக்கும் அர்ச்சுன மகாராஜனைக் கண்டழைத்துக்கொண்டு
வருவோம் வாரும் சுவாமி.
இராஜன்சொல்-தரு இ-ம் ஆரபி அடதாளம்.
பல்லவி.
வாருங்கள்மதிமந்திரி யினங்களே-இன்னம்.
மதுரையில் வாழ்பந்து செனங்களே
அநுபல்லவி.
தேருங்களிற்புரவி சேனைமாநகர் விட்டு
தீர்த்தயாத்திரை செய்ய பார்த்தீபன் பின்புறப்பட்டு (வாரு)
சரணங்கள்
காசிப்பிராமணனெனக் கண்டவர்மகிழ் பூண
கற்பகவனத்தில்வந்து பொற்பினில் மன்மதன் நாண
மாசிலாக்குருகுலமன்னவன் போற் - றோண
மங்கைசித்திராங்கதையை மருவினவனைக் காண (வாருங்க)
பஞ்சவரி லொருவன் பார்த்திபன்அவன் பேரும்
பரமன் பொற்பதந் துதி வரம்பெற்றவனைப் பாரும்
மஞ்செனுங் குழற்குந்த மாதேவி தாயா - ரும்
மகபதி தனக்குமோர் மகனிவனனைவோ ரும் (வாருங்க)
புத்திரவாஞ்சையென்னும் புணரிதனிற் கிடந்து
புலம்பும்பாவி யென்றன் சஞ்சலம்போகவும் கடந்து
சித்திராங்கதைக்குந் தனஞ்செயனுக்குமே தொடர்ந்து
சுபதினமதனிலே பெருமணஞ் செய்குவோம் நடந்து (வாருங்)
பொதுவிருத்தம்.
மனமகிழ்ந்திவ் வாறுரைக்கும் மன்னன்றந்த
மாது சித்திராங்கதையுடனே மருவவந்த.
தனஞ்செயனவ் விரவினிற்பூம் பொழிலிற்றானுந்
தனியிருந்து சுடுங்காமத் தணலால்வாடி-
கனமயல்கொண்டுருகி யெழுந்துதயகாலக்-
கடன்கழித்துப் பாண்டியினைக் காண்போமென்று
எனமனதி லெண்ணியெதிர் வந்தோன்றங்கு
மினந்தந்தான் ரத்தினசிம்மா சனந்தந்தானே
வசனம்.
இவ்விதமாக மனமகிழ்ச்சி கொண்டு நந்தவனத்திற்குப்போக மந்திரிகளை
அழைக்கும் பாண்டிய மகாராஜன் புத்திரியாகிய சித்திராங்கதையைக்கண்டு
அதிக மயக்கங்கொண்ட அர்ச்சனமகாராசனும் அன்றையதினம் இராத்திரி
காலமுழுதும் மன்மதவேதையால் நித்திரையில்லாமல் ஒருத்தனுந்
துயரமனுபவித்துக்கொண்டு இருந்து சூரிய உதயகாலம் ஆனவுடனே
சந்தியாவந்தனம் நேமநிஷ்டை அனுஷ்டான முதலாகியதும் முடித்து
இன்றையதினம் பாண்டியமகாராஜனைப் போய்க் காண்போமென் றெதிரே
வருகிற அர்ச்சுன மகாராசனைக் கண்டதிக சந்தோஷப்பட்டு புசத்தோடு புசம்
அணைத்துக்கொண்டு இருக்க தன்ரத்தின சிம்மாசனத்தையும் கொடுத்தான்.
மேல் நடந்தது காண்க.
பாண்டியன்சொல்-விருத்தம்.
வேதியனெனவிருந்த விஜயனே வாரும்க்ஷத்ரிய
சாதியிலெழின்மிகுந்த தனஞ்செயாவாரும்யாத்திரை
பாதியிலிவ்வூர் வந்த பார்த்திபா வாருமென்றன்
ஆதினம் விளங்கவந்த அர்ச்சுனாவாரும்வாரும்.
வசனம்
பிராமண வேஷங்கொண்டிருந்த வில் விஜயனே வாரும். மேலும்
இராஜகுலங்களில் அழகில் மிகுந்த தனஞ்செயனே வாரும். தீர்த்தயாத்திரை
நடுவில் மதுரைக்குவந்த பார்த்திபா வாரும். என் நன்செங்கோலாதினம் விளங்க
என்மகளைத் திருமணஞ் செய்ய வந்த அர்ச்சுனமகாராஜனே வாரும். இந்த
சிம்மாதனத்தில் உட்காரும்.
அர்ச்சுனன் சொல்-விருத்தம்.
மன்னர்கள் மன்னாநாமிவ் மாநிலமெங்குஞ்சுத்தி
நின்னகர்தன்னில்வந்து நீடுநாளிருந்துதந்த
அன்னமுன்டுறங்கவிந்த வைந்தருவனத்தினாசை
இன்னமுமிதைவிட்டேகா திருக்கவே சொல்லுதையா.
வசனம்
கேளும் மகாராஜராஜபரமேஸ்வரனாய் விளங்காநின்ற பாண்டிய மகாராஜனே
நான் பூலோகமுழுதும் தீர்த்தயாத்திரை செய்து மதுரைப்பட்டணத்திற்கு வந்து
நெடுநாளாயிருந்தும் நீர்கொடுத்த சாமக்கிரிகைகள் சமைத்துண்டு
நித்திரை செய்ய குளிர்ந்த நிழலைக் கொடுக்கும் கற்பகவனத்தின்
ஆசை இன்னமும் இதை விட்டப்புறம் போகாதிருக்கச் சொல்லுதே. ஆதலால் சில
பிராமணர்களும் நானும் இதுவரைக்கும் இவ்விடத்திலிருந்தனம் பாண்டிய மகாராஜனே.
பாண்டியன்-அர்ச்சுனனுக்குச் சொல்-விருத்தம்.
இருந்தன மென்ற சொல்லை ஏழையின் செய்தபாக்கியம்
மருந்தெனு மொழியா ளென்றன் மகளை நீர்மகிழ்ந்துகூடி
பெருந்தன மென்னப் பெற்றப் பிள்ளையைச் சிகாரமாக
தருந்தன நீரேயிந்தத் தரணியை யளித்திடீரே.
வசனம்
கேளும் அர்ச்சுனமகாராஜனே நீரிதுவரைக்கும் இங்கிருந்தது நான்செய்த பாக்கியம்
இனியென் குமாரத்தியாகிய சித்திராங்கதையை விவாகம் பண்ணிக்கொண்டு அவள் வயிற்றிலே
பிறந்த பிள்ளையை இந்த மதுரைப்பட்டணம் இளவரசாளும்படியாய் எனக்கு புத்திரசிகாரம்
அளித்திடவேணும் அர்ச்சுனமகாராஜனே.
அர்ச்சுனன் பாண்டியனுக்குச்சொல்-விருத்தம்.
அளித்திடுமென்றுசொன்ன அரசனேயுமது சிந்தை
களித்திடும்படி நானுன்றன் கன்னியை மணந்துதீர்ந்தேன்
அளித்திடு மொழியாள்பெற்ற சுதனை நீர்மஞ்சநீராய்
குளித்திடுஞ் சிகாரமென்றே கொடுத்தனன் மன்னர்கோவே.
வசனம்:
கேளும் பாண்டியமகாராஜனே அப்படியே யுமது மனமகிழ்ச்சியடையும் படியாய் உன்
குமாரத்தியை நான் விவாகம் பண்ணிக்கொண்டு அவள் வயிற்றிற் பிறந்த பிள்ளையை இந்த
மதுரை இளவரசாளும்படியாய் உமக்குப் புத்திரசிகாரம் இன்றையத் தினமே
கொடுத்தேன் இனிவியசனப்படவேண்டாம் மகாராஜனே.
பாண்டியன் மந்திரிகளுக்குச்சொல். விருத்தம்.
மனு விக்கியானங்கள் தோய்ந்த மந்திரிகாள் நமதுபுண்ணியந்
தனு விஜயனையுங் கையில் தந்துதேயென்றன்புத்திரி
எனுஞ் சித்திராங்கதையை மாலை யிடுவதிவ்வுலகின் மன்னர்
அனைவருமறிய இங்கே அதிர்முரசறையச்செய்வீர்.
வசனம்
கேளுங்கள் என் மந்திரிமார்களே நாம்செய்த புண்ணியத்தினாலே அந்த அர்ச்சுன
மகாராஜனுக்கும் சித்திராங்கதைக்கும் திருக்கலியாணமென்று இந்தத் தேசமெங்கும் அறிய
பேரிகை அடிக்கச் சொல்லுங்கள் மந்திரிமார்களே.
மந்திரிகள் கட்டியனுக்குச்சொல்-கவி.
அடிபரவியகை நடிகொள்கட்டியரே
படியரசர்கள்வர கடிமுரசறைவீர்.
வசனம்.
ஆரடா வாசற் கட்டியக்காரரே நமதாண்டவனுத்தாரப்படிக்குத் திருக்கலியாணமென்று
செகதலமெங்கும் அறியும்படியாய்ப் பேரிகை அடிக்கச் சொல்லும் பிள்ளாய்.
கட்டியன்சொல் கவி.
காரிகை சித்திராங் கதைகலியாணப்
பேரிகை யறையும் பேரொலி கேட்டு
வாரிகள் சூழிவ் வையகற் றரசர்
சாரியா யிந்த க்ஷணம் வருவீரே-
பொது-விருத்தம்.
கன்னிசித் திராங்கதைக்கும் காளையர்ச்சு னன்றனக்கும்
இன்னிலந் தனிற்கல்யாணம் இசைந்தபேரி கையினோசை
சென்னியென் றுரைக்குஞ்சோழன் சேரனோடே ழெண்டேச
மன்னருஞ் செவியிற்கேட்டு மதுரைக்கு வருகின்றாரே.
வசனம்.
இவ்விதமாக சித்திராங்கதைக்கும் அர்ச்சுன மகாராஜனுக்கும் திருக்கலியாணமென்று
அறையும் பேரிகை சப்தம் ஐம்பத்தாறு தேசத்து ராஜாக்களும் காதிற்கேட்டு
மதுராபுரிப்பட்டணத்திற்கு வரு கின்ற விதங்காண்க.
இராஜர்களனைவரும்-பாண்டியதேசத்துக்கு வருகிற-தரு
இராகம் - சங்கராபரணம்-அடதாளம்,
பல்லவி,
சேரனும்சோழனும்பாரிலெண்ணேழென்னும்
தேசாதிபர்களும்வந்தார் இன்னமனந்த-ராஜாதிபதிகள்வந்தார்.
அநுபல்லவி.
மாரனுமிரதியும் நேரில்லாமல் நாண
மணஞ்செய் சித்திராங்கதையை தனஞ்செயனுடன் காண
மண்டலர்தனில் பண்டருந் தமிழ்
தொண்டரும்உயர் அண்டருங் கமழ்
புண்டரீகனும் விண்டுவுங் கறைக்
கண்டனும்மகிழ் கொண்டமதுரை யிற் (சேர)
சரணங்கள்.
சிகர பொன்முடிகளும் மகரகுண்டலங்க ளும்
தினகரனென வுதிக்க நல்ல
சீதளச்சந்திரன்போல் மீதலமெங்கணும்
திகழ்வெண்குடைகள் பதிக்க
பகர்நவமணிதக தகெனும்புயகீர்த்திகள்
பாரெங்கும்விலை மதிக்க தமிழ்
பாவலர்செயங்கூற ஏவலரெச்சரிக்கைப்
பண்ணபலர்கள் துதிக்க-இன்னம்
புகர்முகவேழங்கள் புரவிகள் தேர்க
புடைகுழ்ந்துவருகின்ற படைமந்திரிமார்க ளும்
நிகரிலெழில்மதுரை நகரமுதலூர்க ளும்
நிறைந்துலகெங்கணும் பரந்தனை வோர்க ளும்
நீடுகடலெனபொங்கே ரிகை
யோடுடோலுமுழங்க பூ - ரிகை
சரடுங்கிடுகுடமாரமூ வகை
நாடுங்கிறகிடென்றதிரகா ரிகை
நிர்த்தஞ் செய்திடுமத்தளத் தொனி
மெத்தவழங்கவும் இத்தலந் தனில் (சேர)
பாண்டியன்- வந்த ராஜர்களுக்குச் சொல் விருந்தம்,
முரசறைந்ததினால் இன்றே முகுர்த்தமென்றறிந்துவந்த
அரசரே வாரீர் நீங்களனை வரும் மதுரைத்தேடி
வரசிறியேன் முன்செய்த மாதவப்பயன்றான்கண்டீர்
வரிசையாய்ச் சிம்மாசனத்தில் மகிழ்ந்திருந் தருளுவீரே.
வசனம்,
வாருஞ் சேரமகாராசனே சோழமகாராசனே ஐம்பத்தாறு தேசாதிபதிகளே வாருங்கள்.
நீங்களனைவரும் இந்த ஏழை கலியாணநிமித்தம் மதுராபுரி பட்டணத்திற்கு வந்ததே நான்
முன்செய்த பாக்கியம். அவரவர் அலங்கார ஆசனத்திலெழுந்தருளுங்கள்.
மண்டலாதிபதிகளே இருந்தருள்வீர்கள்.
இராஜாதிபதிகள்-பாண்டியனுக்குச்சொல்-விருத்தம்.
இருந்தருள் வீர்களென்றும் ஏழையேனென் றுமுன்செய்
அருந்தவப் பயனால் நீங்க ளனைவரும் வந்திரென்றும்
வருந்தவும் வேண்டாமிந்த மதுரைவாழ் சொக்கநாதர்
தருந்தரிசனம் போலுன்றன் றனியுருக்காண வந்தோம்
வசனம்.
கேளும் பாண்டிய மகாராஜனே இந்த ஆசனத்திலிருந்தருள் வீர்களென்றும் ஏழையேன் செய்த
தவப்பயனால் நீங்களனைவரும் வந்தீர்களென்றும் நீர் மெத்தவும் எங்களை யுபசாரம்
பண்ணவேண்டாம். இந்த மதுரை சொக்கநாத சுவாமியார் தரிசனம் போல் ஒப்பற்ற உமது
திருரூப தரிசனங் காணக் கிடைத்தது எங்கள் பாக்கியந்தான் மகாராஜனே.
பாண்டியன்சொல்-விருத்தம்,
மகராஜனென்று சொன்ன மன்னரே கேளீரிந்த
செகராஜர் தம்மில் நானோர் சேயிலாப் பாவியாயின்
நகராளப் பெண்ணை பெற்று நங்கமுற்றிருக்கும் என்னை
நிகராருமில்லை யென்று நீங்கள் கொண்டாடலாமா
வசனம்.
கேளுங்கள் என்னை மகாராஜனென்று புகழும் மண்டலாதிபதிகளே இந்த பூலோகம்
அரசாளும் பிள்ளையில்லாத பாவியாய் நானொரு பெண்ணை மாத்திரம் பெற்றதினாலே
மிகவும் மனத்தாழ்வு கொண்டிருப்பதுவுங் கண்டு உமக்கு நிகராரென்று நீங்கள் கொண்டாடத்
தகுமா மன்னர்களே.
இராஜாதிபதிகள்-பாண்டியனுக்குச்சொல்-விருத்தம்,
தகுமாவென்றுரைத்த வேம்பின் தாரணிமார்பா இந்த
இகுமானந் தாழ்வும் எந்த விதத்தினால் நீங்கிற்றென்ன
வகைமானந் தேடிப்பெண் மணஞ்செய்து கொடுக்கப் போறீர்
தொகையாக எங்களுக்குச் சொல்லுவீர் அரசர்கோவே
வசனம்.
கேளும் வேப்பமாலையணிந்த பாண்டியமகாராஜனே உமக்குப்பின் இந்த
வுலகையாளும் பிள்ளையில்லையென்கிற மனத்தாழ்வு எப்படி நீங்கிப்போச்சுது. மேலும்
அதற்கென்ன வகைமானந் தேடி அந்தப்பெண்ணை ஒருவருக்கு விவாகம்பண்ணிக்
கொடுக்கிறீர். அதையெங்களுக்கும்தெரிய அருளிச் செய்யும் மகாராஜனே,
பாண்டியன் இராஜாதிபதிகளுக்குச் சொல்-விருத்தம்,
சேரனே சோழனே யெண்டிசையின் மன்னவரே கேளீர்
மாரனேர் விசையனுக்கும் மங்கை சித்திராங்கதைக்கும்,
பாரினிற் றிருக்கல்யாணம் பண்ணவும் அவர்கள் தந்த
பேரனைச் சிகாரமாதான் பெற்றிடவெண்ணினேனே.
வசனம்.
கேளும், சேரமகாராஜனே சோழமகாராஜனே ஐம்பத்தாறு தேசாதிபதிகளே கேளுங்கள்
அழகில் மன்மதனுக்கு நிகராகிய அர்ச்சுன மகாராஜனுக்கு என்பெண்ணை விவாகம்
பண்ணிக்கொடுத்து அவள் வயற்றிற் பிறந்தபிள்ளை யெனக்குப் பேரனாகையால்
அவனைப் புத்திரசிகாரம் பெற்று இளவரசு பட்டங்கட்டி வைக்கலாம் என எண்ணங்
கொண்டிருக்கிறேன் மன்னர்களே.
இராஜாதிபதிகள்-பாண்டியனுக்குச்சொல் விருத்தம்.
எண்ணின வெண்ணம் நன்றே இதைவிட வேறொன்றில்லை
பெண்ணின் மைந்தனைச் சிகாரம் பெற்றர சாளச்செய்வோர்
மண்ணினில னந்தமுண்டும் மகளுக்கும் விசையனுக்கும்
கண்ணின்முன் மணஞ்செய்வித்துக் கடிநகர்க் கேகுவோமே
வசனம்.
கேளும் பாண்டிய மகாராஜனே ஆ ஆ நல்ல ஆலோசனைப் பண்ணினீர் பிள்ளையில்லாமற்
போனால் பெண்ணின் வயற்றிற் பிறந்த பிள்ளையைச் சிகாரம் பெறுவது இந்த பூலோகத்தில்
அனேகமுண்டு. அதற்கொரு தீங்கில்லை. இனி நடக்க வேண்டிய காரியம் நமது கண்ணின்முன்
இருவருக்கும் திருக்கலியாணஞ்செய்து முடிக்க வேணும் பாண்டியமகாராஜனே.
பாண்டியன் மந்திரிகளுக்குச் சொல்-விருத்தம்.
மன்னவருரைத்த வார்த்தை மதிமந்திரி நீ முன்னெண்ணி
சொன்ன சொற்படி வேறில்லைத் தோழிக டம்மைக்கூவி
பொன்னணி யாவும்பூட்டி பூம்புனலாட்டி வைத்துக் கன்னியை யழைத்துக் கொண்டோர் கணத்தினில்வரச் சொல்வீரே.
வசனம்.
கேளாய் மதிமந்திரி வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கழ வேண்டிய தென்னவென்று
நீ சொன்ன ஆலோசனைப்படிக்குச் சேரன் சோழன் முதலாகிய ஐம்பத்தாறு தேசத்து
ராஜாதிபதிகளும் அப்படியே செய்விக்கலாமென்றதிக சந்தோஷப் பட்டார்கள். இனி
நடக்க வேண்டிய காரியம் பார்க்க வேண்டும். தோழிகளை அழைத்து சித்திராங்கதையை
இச்சபைக்கு அழைத்துவரச் சொல்வாய் மந்திரி.
மந்திரி பாண்டியனுக்குச் சொல்-கவி.
ஆண்டவா வுன்றன் அடியிணை போற்றி
பூண்டவா பரணம் பொருந்து நின்மகளை
வேண்டவர் கொண்ட விஜயன் முன்னழைத்து
நீண்டவார் குழலார் நிமிஷத்தில் வருவார்
வசனம்.
கேளும் என்னாண்டவனே உன்மகளாகிய சித்திராங்கதையம்மையை வேண்டிய ஆசை
கொண்டிருந்த இச்சபையிலிருக்கும் அர்ச்சுன மகாராஜன் முன்னே தோழிகள் ஒரு
நிமிஷத்திலே அழைத்துக்கொண்டு வருவார்கள் ஐயனே.
மந்திரி தோழிகளுக்குச்சொல்-விருத்தம்.
தோழிகள் கேளீர் துரைவுத் திரவோர்
நாழியில் முகுர்த்தம் நலமுடன் செய்ய
ஆழிசூ ழுலக மரசர்கள் சபைக்கு
வாழியை யழைத்து வந்திடு வீரே
வசனம்.
கேளுங்கள் தோழிகளே நமதுஆண்டவன் உத்திரவு படிக்கு ஒரு நாழிகைக்குள்ளே சித்திராங்கதை
யம்மையை இச்சபைக்கு அழைத்துக்கொண்டு வாருங்கள் பெண்களே.
தோழிகள் - சித்திராங்கதைக்குச் சொல் கவி.
அங்கயற்கண்ணி யருளினாற்பிறந்த
மங்கையர்க்கரசே மணமது கொள்ள
கங்கையில் மூழ்கி காவிரியாடி
சங்கை யில்லாமற் றான் வருவாயே
வசனம்.
கேளும் அம்மணி, உன்மனதின்படிக்கு இனி அந்த அர்ச்சுன மகாராஜனுக்கு
மணமாலை சூட்ட புண்ணிய தீர்த்தங்களாடி வஸ்திராபரண முதலாகிய புஷ்பாதிகளும்
தரித்துக்கொண்டு மகாராசர் சபைக்குப் போகவேணும் எழுந்தருளும்அம்மணி.
சித்திராங்கதை சொல்-வசனம்.
அப்படியே போகலாஞ் சகிகளே.
பொது விருத்தம்.
நீடியமயலாலங்க நிலைகுலைந்தழிந்து சோர்ந்து
வாடியேமனதுமெத்த மகிழ்ச்சிகொண்டெழுந்துதீர்த்தம்
ஆடியற்புதமிகுந்த ஆபரணங்கள் பூண்டு
சேடியருடனேகூடி சித்திராங்கதை வந்தாளே
வசனம்.
இவ்விதமாக விரகதாபத்தினாலே துயரம் அனுபவித்துக் கொண்டிருந்த
சித்திராங்கதையம்மை தனக்குக் கல்யாணமென்கிறதையும் பேரிகை சப்தங் காதிற் கேட்டது
மன்றியில் தோழிகள் வந்தழைக்குஞ் சந்தோஷ வார்த்தையினாலே மனமகிழ்ச்சி கொண்டு
யெழுந்து புண்ணிய தீர்த்தங்களாடி வஸ்திராபரண முதலாகிய புட்பசாதிகளுந் தரித்துக்
கொண்டு இராஜசபைக்கு வருகிற விதங்காண்க.
சித்திராங்கதை-வருகிற-தரு- இ-ம்-பயிரவி-ஆரிதாளம்.
பல்லவி
கன்னி சித்திராங்கதை வந்தாள் - வந்துநிறைந்த
மன்னர் சபையிற்புகுந்தாள்
அனுபல்லவி.
சென்னிவணங்கி மணஞ் செய்துக்கொண்டினி வாழ
அன்னமென்னடை நடந்தரிவையர் புடைசூழ (கன்)
சரணங்கள்.
தங்கமகுடம் வாங்கி-அதினால் வரும்
தங்கமிகவும் தாங்கி-தன்.
அங்கமெங்கும்பின் கொண்ட ஆசையினாற்குண்ணி
மங்களவிஜயனை மாலைசூட்ட வுமெண்ணி (கன்)
நண்ணியபூம்புன லாடிகருங்குழலி
நறுமலர்களை சூடி முன்
எண்ணிய எண்ணங்களில் எண்ணின துவும் கண்டு
பண்ணியபூசையுஞ்செய் புண்யமென்றுளங்கொண்டு (கன்னி)
முழுமதிமுகந் துலங்க-மார்பினிலொளி
கெழுமதியார மிலங்க நல்ல
செழுமதிமார்பினில் சிறந்தநகையைக் கண்டு.
தொழுமதிக சுபசந்தோஷ சிந்தையைக்கொண்டு (கன்னி)
சித்திராங்கதை - பாண்டியனுக்குச்சொல்-விருத்தம்.
எந்தையேபோற்றி மன்னர் ஏறே நின்னடிகள்போற்றி
விந்தைசிம் மாசனத்தில் வீற்றிருப்பவனே போற்றி
சிந்தையினினைந்த வெண்ணம் சீக்கிரமாய் முடித்தாய்போற்றி
தந்தையேபோற்றியுன்றன் தாமரைப்பாதம் போற்றி *
வசனம்.
சரணம் சரணம் என்னேயின்ற தந்தையே சரணம்.
பாண்டியன்-சித்திராங்கதைக்குச்சொல் விருத்தம்.
அளவறு பெண்கள்தன்னில் அழகிய ரதியேவாழி
வளரருந்ததிக்கு மேலாய் வளருங் கற்புடையாய்வாழி
இளவரசாளச் செங்கோல் ஏந்துமா மதியேவாழி
களவறுத் துலகாள் சித்திராங்கதை செல்வவதியேவாழி
இராஜன்-மந்திரிகளுக்குச்சொல்-கவி
மந்திரிகேளாய் சுந்தரபஞ்சாங்க
அந்தணனிங்கே வந்திடச்செய்வாய்
வசனம்.
வாராய் மந்திரி, இதோ சித்திராங்கதையும் வந்தாள். இனி திருக்கலியாணஞ்
செய்யவேணும். பஞ்சாங்க புரோகிதரை அழைத்து வரச் சொல்வாய் மந்திரி.
மந்திரி கட்டியனுக்குச்சொல்-கவி.
வாசல்கட்டியனே மாசில்பஞ்சாங்க
பூசுரர்வர மஹாராஜனுத்தரவே
வசனம்.
ஆரடா வாசற்கட்டியக்காரா நமது இராஜன் உத்தரவுபடிக்குப் பஞ்சாங்க புரோகிதரை
க்ஷணப்போதினில் அழைத்து வாரும்பிள்ளாய்
கட்டியன்சொல் - வசனம்.
அப்படியே அழைத்துவருகிறேன் சுவாமி.
கட்டியன் புரோகிதருக்குச் சொல் கவி
மேதினிதனிலே-சாதியிலுயர்ந்த
நீதிபஞ்சாங்க - வேதியாவாராய்
வசனம்.
தெண்டன் சுவாமி வாரும் புரோகிதரே உம்மை எங்களாண்டவராகிய பாண்டிய
மகாராஜா அழைத்துவரச் சொன்னார் வாரும்.
பொது-விருத்தம்.
கீறுசந்தனமுமிட்டுக் கிளர்மதி முகத்திலே வெண்
நீறும் அட்சதையும் சாத்தி நிகரிலா வாரமார்பில்
வீறு முன்னூலுங்காவி வேஷ்டியும் இலங்க நன்றாய்த்
தேறும் பஞ்சாங்கங் கொண்டு தெய்வ புரோகிதர் வந்தாரே.
புரோகிதர் சபைக்கு வருகிற-தரு-இ-ம்-தோடி ஆதிதாளம்.
பல்லவி
பஞ்சாங்க புரோகிதனானே-உலகிற்சொல்லும்
பட்சந்திதி முதல்வார நட்சத்திர யோககரணி (பஞ்சா)
அநுபல்லவி.
கருதும்பொருளைக் கண்ணிற்காட்ட வெனக்கு
பெரிதல்ல விந்தமண்ணினில் யார்க்கும்- நாளை
வருதுன்பமிகுந்து வாழ்வுமறிந்து சொல்ல
சரிதைகிரியை யோகஞான தற்க சாஸ்திரங்களும் வல்ல (பஞ்)
சரணங்கள்.
மணத்திற்கென்றன் மிராசு இவ்வள வென்னும்
பணற்கொரு காசு குறைந்தாலதை
க்ஷணத்தில் வாங்குவேனிந்த ஜெகதலத்தின் மிகுந்த
கணித்த நூல்களனந்தங் கண்டு சோதித்து வகுத்த (பஞ்)
சோபனக் கலியாணஞ் செய்விப்பேன்-நல்லமுகுர்த்த
தீபமனந்த மெத்திவைப்பேன்-சர்வ
பாபநிக்கிரகமாகும்படி செபதபங் கொள்ள
சாபானுக்கிரகமென்னும் சாமர்த்திய மிகமுள்ள (பஞ்)
பாண்டியன் வேதியர்க்குச் சொல்-கவி.
தெண்டமென் சுவாமி தேவரீர்வந்து
பண்டுரைசெய்த பாலனையென் கண்ணில்
கண்டனன் சித்திராங் கதைக்கும் அர்ச்சுனர்க்கும்
மண்டலம்புகழ மணஞ்செய்து வைப்பீர்
-------
வசனம்
தெண்டம் தெண்டம் சுவாமி தேவரீர்வந்து கண்டுரைசெய்த பலனை யென்கண்ணிற்
கண்டனன் வாருமிந்த ஆசனத்திலுட்காரும் தேவரீ சித்திராங்கதை பட்டமும் முட்ட
நிற்கமாட்டாதென்று முன்சொன்ன பஞ்சாங்க பலனைத் திருன்டாந்தமாகக் கண்ணிற்
கண்டேன். இனி சித்திராங்கதைக்கும் அர்ச்சுன மகாராசனுக்கும் திருக்கலியாணஞ்
செய்விக்கவேணும் சுவாமி.
-------
புரோகிதர் - பாண்டியனுக்குச்சொல்-கவி.
ஆசீர்வாதம் அரசனெ யின்னம்
மாசீர்மை யிம்மை மகிழ்வு முண்டாக
தேசாதிபதிகள் சிறந்திடுஞ் சபையில்
தேசறாத் திருமணஞ் செய்துவைப்பேனே
-------
வசனம்.
ஆசீர்வாதம் பாண்டிய மகாராஜனே அஷ்ட ஐஸ்வரியமும் உண்டாகவேணும்
அப்படியே திருமணஞ்செய்து முடிக்கிறேன் மகாராஜனே.
-------
புரோகிதன் - அர்ச்சுனனுக்கும் சித்திராங்கதைக்கும் சொல்- விருத்தம்.
குந்தமாதேவிமைந்தா குருகுல மன்னவாசீர்
கந்தமார் குழலார்சித்திராங் கதையெனுமயிலே நீயும்
அந்தமார் மண்டபத்தோ ராசனந்த னிலிருந்து
வந்தமா தவரைப்போற்றி வாழ்மணஞ் செய்துகொள்வீர்
-------
வசனம்.
ஆசிர்வாதம் குருகுல சிகாமணியாகிய அர்ச்சுனமகாராசனே, நீரும் சித்திராங்கதையும்
இருவரும் இந்த அலங்கார மண்டபத்தில் ஓராசனத்தில் நின்று தேவப்பிராமண தரிசனஞ்செய்து
மணமாலைசூட்டிக்கொள்ளுங்கள். அர்ச்சுன மகரராஜனே.
-------
சபையோர்கள் சொல்-தரு-இ-ம்-கலியாணி-அடதாளம்.
பல்லவி.
கல்யாண மண்டபஞ் சேர்ந்தார் சித்திராங்
கதையும் விசையனும் இரதியு மதனுமென (கல்யா)
அநுபல்லவி
நல்லியார்க் குழலினும் நவரசமொழி யெனும்
அல்லியர சாணியும் அர்ச்சுன மகாராஜனும்
அந்தரதுந்துபி திந்திமிதிமி யென
வந்திருவருமால் செந்திருவுருவம் போல (கல்யா)
சரணங்கள்.
வச்சிரமணித்தூண் கூட்டி இள
வாழைகமு கொடுநற் காழகிற் சந்தன
மரங்களெங்கணும் நாட்டி-மிக
விச்சித்திரமாகவும் மேல்விட்டங்கள் தரித்து
பச்சைமரகதத்தாற் பந்தலலங் கரித்து
பவளமணி கொடுங்கைப் பதித்துச்சந்திர கிரண
திவளொளி தரும்பட்டை திருத்துஞ் சுந்தர பூர்ண (கல்யா)
அரசாணிக்காற்றோடு வார் -எழில்
அற்புதவலங்கிருத கற்புடைமங்கையர்
ஆயிரம்பேர் நலங்கிடுவார் - நல்ல
துரைசாணி மார்கள்வந்து தூயம்புனலாட்ட
விரைசாரு மணிமேடை மேனின்றுமாலை சூட்ட
வேதியர்களு மறை யோகியர்களும் பொறை
ஆதியர்களுமனு நீதியர்களும் நிறை (கல்யா)
பாலிகை முமுளைசமைத் தார் -வானிற்
பரந்தெழுந் தொளிர்நட்சத் திரங்களென வனந்தம்
பலவிளக்குகளமைத் தார்-தங்க
சால்கரக முன்னாகச் சம்ப்ரமுடன் பூச்செண்டு
மாலைகள் மாற்றி மனமகிழ்ந்தருந்ததி கண்டு
மங்களகரசோப னங்களைப் பாடி
பெண்களுட னெல்லோரும் கண்களி கூரதிருக் (கல்யா)
-------
பொது விருத்தம்
மாலையுஞ் சூட்டிக்கொண்டு மகிழ்ந்திருந் ததியும்பார்த்து
ஆலயங்களைச் சேவித்து அரசாணி வலமாய்வந்து
காலையம்மியின் மேல்வைத்துக் கணையாழி மாற்றிவஸ்திர
சேலையை முடிந்துகோலந் தெருவெங்கும்வந்து சேர்ந்தார்.
-------
வசனம்.
இவ்விதமாக அர்ச்சுன மகாராஜனும் சித்திராங்கதையம்மையும் ஒருவர்க்கொருவர்
மணமாலை சூட்டிக்கொண்டு அருந்ததியையும் பார்த்து ஆலயதரிசனமுஞ் செய்து அரசாணி
வலமாக வந்து அம்மியின் மேலே காலைவைத்துக் கணையாழி மாத்தி இருவர் வஸ்திர
முந்தாணியை ஒன்றாய் முடிந்து தெருவீதிகளெங்குக் திருக்கோலம் வந்து மறுபடியும்
கல்யாண மண்டபம் சேர்ந்தார்கள்.
-------
மங்களத்- தரு- இ-ம் -அசாவேரி-அடதாளம்.
பல்லவி.
ஜெயமங்களம் நித்திய சுபமங்களம்
அநுபல்லவி,
ஜெயமங்களம் வில்விஜயற்கும் நயசித்திராங்கதைக்கும். (ஜெய)
சரணங்கள்
யாத்ரைசெய்த புண்ணியனா-ரர்ச்சுனராஜ னுக்கும்.
கீர்த்தி மேவு பாண்டியன்பெற்ற கிளிமொழி சித்திராங்கதைக்கும்()
மஞ்சுவாகனனென்னு மகபதிகுமார னுக்கும்
மஞ்சுநிகர் கருங்குழல் மாதுசிரோன் மணிக்கும் (ஜெ)
பஞ்சவனெனும் பாண்டியன்-பயின்றசித்திராங்கதைக்கும்
பஞ்சவர்களுடன் பிறந்த பார்த்தீ பன்றனக்கும் (ஜெ)
-------
பாண்டியன்-மந்திரிகளுக்குச்சொல் விருத்தம்.
சீலத்தில் மிகுந்த புண்ய தீர்த்தயாத்திரை செய்திந்த
ஞாலத்தின் மதுரையென்னும் நகரிலென் மகளைக்கண்டு
கோலத்திலுயர் கல்யாணங் கொண்ட அர்ச்சுனன்றனக்கு ஆலத்தியேந்தும்பெண்கட் கணிகலமளிப்பாய் மந்திரி
-------
வசனம்.
கேளாய் மந்திரி பூலோகமுழுதும் புண்ணியதீர்த்த யாத்திரைக்குப்போய் இந்த
மதுரைப்பட்டணம் வந்து சேர்ந்து என் மகளாகிய சித்திராங்கதையை விவாகம் பண்ணிக்
கொண்டிருந்த அர்ச்சுன மகாராஜனுக்கெதிரே ஆலத்தி எடுக்கும் பெண்களுக்கு ஆடை
ஆபரணங் கொடுத்தனுப்பி வைக்கச் சொல்வாய் மந்திரி.
-------
அர்ச்சுனன் - பெரியோர்களுக்குச்சொல்-வணக்க- விருத்தம்.
சோமனாரணிந்தவேணி சொக்கேசர்பாகம் போற்றி
ஸ்ரீமன்நாராயணன்தன் திருவடிபோற்றி தேவப்
பிராமணாட் கனந்ததெண்டம்பெண்ணை யென்றனுக்களித்த
மாமனாரென்னும் பாண்டியன் மலரடிபோற்றி போற்றி
-------
வசனம்.
மூன்றும் பிறைச்சந்திரனையும் கங்காபவானியையும் தரித்த சடாபாரத்தோடும்
கூடிய மதுரை சொக்கநாதசுவாமி பாதமே போற்றி. ஸ்ரீமன் நராயணன் திருவடியே போற்றி,
தேவப்பிராமணாள் அடியிணைக்கு அனந்த நமஸ்காரம். உன்றன்பெண்ணை யெனக்குத்
திருக்கலியாணஞ் செய்துகொடுத்து என் மாமனாராகிய பாண்டிய மகாராஜனே சரணம்.
-------
பாண்டியன்-அர்ச்சுனனுக்குச் சொல்-ஆசீர்வாதவிருத்தம்.
குருமரபரசர் கோவே வாழி
தருமகபதிதன் றனையா வாழி
திருமகள் கொழுனன் சினேகா வாழி
மருமகனே நீ மால்போல் வாழி
சித்திராங்கதை-பெரியோர்களுக்கு- வணங்குகிற விருத்தம்.
அங்கையற்கண்ணி பாக ரடியிணைக் கனந்தம் போற்றி
மங்கை லட்சுமியை மார்பில் வைத்த மாலடிகள் போற்றி
செங்கை ஆசீர்வழங்குந் தேவப்பிராமணரேபோற்றி
சங்கை தீர்த்திருக்குமென்றன் றந்தையே போற்றி போற்றி
-------
வசனம்.
மதுரை மீனாட்சியம்மன் சமேதராய் விளங்காய் நின்ற சொக்கநாத சுவாமியே சரணம்.
ஸ்ரீமகாலட்சுமியை மார்பிலே தரித்திரா நின்ற அரிநாராயணனே சரணம். என்றனக்கு
ஆசிர்வாதந் தந்திராநின்ற தேவப்பிராமணாளே சரணம். தங்களுடைய மனதில் சங்கையிராமற்
படிக்கு அர்ச்சுன மகாராஜனுக்கு என்னைக் கொடுத்துத் திருக்கலியாணஞ் செய்துவைத்த
என்றந்தையே சரணஞ் சரணம்.
-------
பாண்டியன் சித்திராங்கதைக்குச் சொல் விருத்தம்.
அலைகடல் தனிலுதித்த அமுதேபெண்ணரசே வாழி
நிலைகொள் கற்பினுக் கெந்நாளும் நிகரருந்ததியே வாழி
சிலைகொள் பார்த்திபன்றன் மார்பில் சேர் நவமணியேவாழி
கலைகளுந் தேர்ந்த சித்திராங்கதையே யென்சுதையே வாழி
-------
வந்த-அரசர்கள் பாண்டியனுக்குச் சொல்- விருத்தம்.
மன்னவா மதுரையாளும் மகிப பாண்டியனே கேளாய்
நின்னவா வின்படிக்கு நிலைமணம் முடிந்துதந்த
அன்னவா கனன்விதித்தால் ஆராலும் விலக்கொணாது
தென்னவா வெங்களுக்குச் செலவுதந்த னுப்புவீரே
-------
வசனம்.
கேளும் பாண்டிய மகாராஜனே உமது மனேயிஷ்டப்படிக்கே அர்ச்சுன
மகாராஜனுக்குஞ் சித்திராங்கதைக்கும் திருக்கலியாண முடிந்தது. இனி எங்களுக்குச்
சிலவு தரவேணும் மகாராஜனே.
-------
பாண்டியன் வேதியர் முதலாகிய - அரசருக்குச்சொல் - விருத்தம்.
தேவப்பிராமணருக் கெல்லாந் தெண்டம் இவ்வுலகின்மன்னர்
யாவத்தி ராளுமென் மேலனுக்கிரக மிருக்கவேனும்.
பாவை சித்திராங்கதைக்கும் பார்த்திபன்றனக்கு மேவும்
ஆவல் புத்திராதி பாக்கியம் அருள்புரிந் தேகுவீரே
-------
வசனம்.
வாரும் பிராமண சேர சோழ மகாராஜாக்களே ஐம்பத்தாறு தேசாதிபதிகளே
நீங்களனைவரும் வந்து திருக்கலியாணஞ் செய்து வைத்தது அர்ச்சுன மகாராஜனுக்கும்
சித்திராங்கதைக்கும் புத்திரபாக்கியமும் மிகுந்த வாழ்வும் வரும்படியாய் அனுக்ரகம் பண்ணி
அவரவர்கள் பட்டணத்திற்குப் போய்ச்சேருங்கள் மன்னர்களே.
-------
அர்ச்சுனன் சித்திராங்கதைக்குச்சொல் - விருத்தம்.
கார்பெறுகுழலாய் சித்திராங்கதை யெனுங்கண்ணேவாசத்
தார்பெறு மணஞ்செய்வித்த தனிமுதலெனுஞ் சொக்கேசர்
பேர்பெறு மதுரையாளப் பிள்ளையுமருள்வார் நல்ல
சீர்பெறு மனையில் நாம் போய்ச்சேருவோம் வாராய்பெண்ணே
-------
வசனம்.
கேளாய் எனது பிராண நாயகியாகிய சித்திராங்கதை யென்னுங் கண்ணே நமக்கு
மணமாலை சூட்டிவைத்த சொக்கநாதசுவாமி இந்த மதுரையரசாட்சி செய்யப் பிள்ளையையும்
அருளிச் செய்வார். இனி நாம் அரண்மனையைப் போய்ச் சேருவோம் வாராய் பெண்ணே.
-------
சித்திராங்கதை அர்ச்சுனனுக்குச்சொல்-கலிப்பா
இ-ம் புன்னாகவராளி.
நஞ்சடையுங் கண்டமுந்தண் ணதிமதியுங் கொன்றையுஞ்சேர்
செஞ்சடையுந் திகழ்பரமன் றேவிமீ னாட்சியம்மன்
மஞ்சடையும் பூம்பொழில் சூழ்மதுரை நகராசாள
மஞ்சனையும் அருள்வார்நாம் வாழ்மனை போய்ச்சேருவமே.
-------
வசனம்.
கேளும் என் பிராணநாதா, சொக்கநாதசுவாமி யென்னும் பரமசிவன் தேவியாகிய
மீனாட்சியம்மணி மதுரையிளவரசாளும் பிள்ளையை எப்படியும் அருளிச்செய்வாள்.
இனி நாம் அரண்மனையாகிய பள்ளியறைக்குப் போய்ச்சேருவோம் வாருஞ் சுவாமி.
-------
அர்ச்சுனன்சொல்-தரு இ-ம் தோடி-ஆதிதாளம்.
பல்லவி.
சிந்தை மகிழ்ந் தந்தப்புரஞ் சேருவோம் வாரும்-அதி
செயசுப லட்சண-நய விலட்சண குண
சித்திராங்கதையே வாரும்
அநுபல்லவி,
விந்தைமிகு மைந்தருஞ்சு-கந்தமலர்மாலை சூடி
வந்ததினாலின்று முதற் சந்ததியுண்டாகக் கூடி
மருவசமயமிளம் பருவமமையுங் கன
உருவமிகுந்திடுஞ்செந் திருவுமாலு மென (சிந்)
சரணங்கள்.
சுப்பிரமணியரும் வள்ளியுந்துடர்ந்தது போலே நல்ல
பொற்புடனாமிருவரு புணர்ந்ததி னாலே-இனி
சப்பிரமஞ்சத்தின்மீது சரச சுகங் காணலாம்
இப்பிரபஞ்சத்தின் வாழ்க்கை யென்னுமின்பம் பூணலாம்
இதைவிடவென்ன சௌபாக்கியமென்று
முதன்முதனீர் சொன்னவாக்கியமின்றிங்
கிசைந்தவென் மீதினிற் துசந்தொடுத்தெய்கின்ற
வசந்தனைங்கணைகளும் அசந்துசுகந்தரு
மங்கைப்பருவமெனுங் கொங்கைக்குடத்தைக் கண்டு.
சங்கையில்லாமலினி செங்கைப்பிடித்துக் கொண்டு (சிந்)
-------
பொது-கொச்சகம்.
செந்திரு மாலுமென திவ்வியம லரமளியின் மேல்
வந்திருவர்களுமருவி வாழ்ந்திருக்கும் அந்நாளில்
சுந்தர சித்திராங்கதைக்குச் சொக்கேசர் தன்னருளால்
வந்து கர்ப்பந்தரித்து பத்துமாதமும் நிறைந்ததுவே.
-------
வசனம்
இவ்விதமாகச் சித்திராங்கதையும் அர்ச்சுன மகாராஜனும் அந்தப்புரத்திக்கு வந்து
சேர்ந்து அதிதிவ்விய பரிமளமான புஷ்ப மெத்தையின் பேரில் அனேக லீலா விநோதத்துடனே
மருவி வாழ்ந்திருக்கின்ற நாளில் சொக்கநாதசுவாமி கிருபையினாலேசித்திராங்கதை
வயிற்றில் கர்ப்பந்தரித்து பத்துமாதமும் நிறைந்து கர்ப்ப வேதனைப்படுகின்ற விதங்காண்க.
-------
சித்திராங்கதை தோழிகளுக்குச்சொல்-விருத்தம்.
தோகையே யின்றைக்கேதோ தொடையிரண்டொடு கால்கையு
தேகமும் நடுக்குதாகந் திடுக்கிடு திடுப்பும்விட்டுப்
போகுதென் னடிவயிற்றிற் புடைபுடைத் திருமருங்கும்....
நோகுது சிவசிவாவோர்நொடியும் நான்பொறுத்திடேனே
-------
வசனம்.
கேளுங்கள் என் சகிகளே இன்றையத்தினம் என்னமோ எனது தொடை கால் கைகள்
சரீரமெங்கும் அசதிகண்டு விடவிடென்று நடுக்குது. இடுப்பும் விட்டுப்போகுது.
அடிவயிறும் புடைபுடைத்து இரண்டுபக்கமும் நோகுது, சிவசிவா சொக்கநாதசுவாமி
மீனாட்சி தாயே இந்த வாதையை நானொரு நொடிப்போதும் பொறுத்திருக்க மாட்டேன்
இனியென்ன செய்வேன்தெய்வமே.
-------
தோழிகள் சித்திராங்கதைக்குச் சொல்விருத்தம்.
ஆட்சியாய் சொக்கநாதர் அருகினிலமர்ந்துவாழ்மீ
னாட்சியை மனதிலெண்ணி நல்லறைப் புகுந்தாலேகர
மாட்சிகண் பார்ப்பாள் நீயும் மனத்தயிரியம் விடாதே
தாட்சியொன் றில்லையுன்றன் தந்தையோடுரை செய்வோமே
-------
வசனம்.
கேளும் அம்மணி இந்த மதுரை மீனட்சியம்மனை மனதிலே நினைந்துக்கொண்டு
அறைபுகுந்து இருப்பையே யானால் காமாட்சி கண்பார்ப்பாள். உனக்கொரு தாட்சியுமில்லை.
மனத்தயிரியத்தை விடாமல் இருமம்மா. நாங்களுன் தந்தையாகிய பாண்டிய மஹாராஜருடனே
சொல்லி மருத்துவச்சியை அழைப்பிக்கிறோம் அம்மணி.
-------
தோழிகள் பாண்டியனுக்குச்சொல்-விருத்தம்.
பற்பலர் மன்னர்போற்றும் பாண்டிய துரையே கேளும்
நற்பரனருளால் வந்த தையல் சித்திராங்கதைக்குக்
கற்பவேதை களிப்போது காணுதாகை யினால்நல்ல
விற்பன மருத்துவச்சி விரைவுடன் வரச்செய்வீரே
-------
வசனம்.
கேளும் பாண்டியமஹாராஜனே நமதம்மாள் சித்திராங்கதை கர்ப்ப வேதையால் மிகவுத்
தவிக்கிறாளாகையால் மருத்துவச்சியை வெகுசீக்கிரத்தில் அழைத்துவரச் சொல்ல
வேணும் ஐயனே.
-------
இராஜன் சொல்-கவி.
மதிமந்திரிகேள் -மருத்துவச்சியையிங்
கதிசீக்ரமதாய் அழைத்துவரச்சொல்.
-------
வசனம்.
கேளாய் மதிமந்திரி நமதம்மாள் சித்திராங்கதை கர்ப்பவேதைப்படுகிற படியால் அதற்குத்
தகுந்த மருத்துவச்சியை அதிசீக்கிரமாய் அழைத்துவரச்சொல் மந்திரி.
-------
மந்திரி கட்டியனுக்குச் சொல்-கவி.
கட்டியக்காரா கைதேர்ந்தவரில்
கெட்டிக்காரியிலும் கிழவியாய்ப்பார்த்து
மட்டில்காரிகையார் மருத்துவமாதை
அட்டியில்லாமல் அழைத்தோடிவாராய்.
-------
வசனம்.
வாராய் கட்டியக்காரா நமதம்மாள் சித்திராங்கதை கர்ப்ப வேதைப்படுகிற படியினாலே
முன்பின் கைதேர்ந்து கெட்டிக்காரிகளாய் இருந்தபோதிலும் அனந்தம் பெண்களுக்குக்
கர்ப்பவேதையை யொழித்த கிழவியாய்ப் பார்த்திந்த மதுரைப் பட்டணத்தில் வாழும்
மருத்துவச்சியை நொடிப்போதில் அழைத்து வாரும் பிள்ளாய்.
-------
கட்டியன்சொல் வசனம்
அப்படியே அழைத்து வருகிறேன்சுவாமி.
-------
கட்டியக்காரன் மருத்துவச்சிக்குச்சொல்-விருத்தம்.
மருத்துவமாதே மன்னவன்மகளை
வருத்துங்கருப்ப வாதையையொழிக்க
திருந்துமுன்பின்கைத் தேர்ந்தவளாக
ஒருத்தியிங் கெழுந்து வோடியேவருவாய்
-------
வசனம்
இந்த மதுரைப்பட்டணத்தில் வாழும் மருத்துவமாதே கேள் மஹாராஜ குமாரத்தியாகிய
சித்திராங்கதையம்மாளுக்கு வந்த கருப்பவேதையைத் தீர்க்க முன்பின் கைதேர்ந்த
கிழவியாயொருத்தி எழுந்து அதிசீக்கிரமாய் ஓடிவாடி, மருத்துவமாதே.
-------
மருத்துவச்சி-வருகிற பொதுவிருத்தம்,
நரைத்தலையசையக் கூனு நடுக்குங்கை கோலுமுணி
சுரைக்கனி போலேகொங்கை தொடைமிசைப்படவும் வாயில்
நுரைத்து சொள்ளொழுக கர்ப்ப நோயொழித்திடுவேனென்று
மருத்துவக் கிழவிவந்து மாதுமுன் றோன்றினாளே
-------
கட்டியன்சொல்-வசனம்.
அகோதெப்படியென்றால் நரைத்த தலையும் சுரைக்காயைப் போன்ற கொங்கையும்
வாயிலே வடிந்த சொள்ளுமாக மருத்துவக்கிழவி சித்திராங்தையினிடம் வருகிற விதம்காண்க,
-------
மருத்துவச்சி வருகிற-தரு-இ-ம் - பந்துவராளி ஆதிதாளம்.
பல்லவி.
வந்தாள் மருத்துவக்கிழவி கை
மகுத்துவங் களிற்புகழ் மிகுந்தசஞ்சீவி (வந்)
அநுபல்லவி
வந்தாள் மாதர்க்குமகிழ் தந்தாளெங்கணுந் திகழ்
செந்தாமரைமலர் முகம் வேர்க்க
நொந்தாள் கருவேதையைத் தீர்க்க (வந்)
சரணங்கள்.
நாணற்பூவதுபோனரைத் தலையும் - தினையத்தினை
காணலாமெனும்விழியுஞ்... சிலையும் -ஒட்டகமும் போல்
கோணலாய்விளைந்து கூனிலையும் சுரைக்காய்தலைக்
காணியைப் போற்றொங்கும் இருமுலையும் நடுக்குங்கையில்
ஊணியகோலுடனே ஒருமூன்றுக்காலும் இவளுலகில் ....
தோணியபின்பொரு குறைவிலி யென்றதினாலும் மற்றோர்வீணார
வீணியைப் போலிவள் போறவளல்லவே மேலும்
தொடுமவள் போற் பாணியினாற் பிள்ளை பழுதிலை
மன்மதன் போலும் பெறுவர்முன்பின்
பழக்கமுண்டென்பலருங் கொண்டாட
வழக்கமாக நீவரவெனத் தேட
பிழைக்கு நன்மகப் பேறினை நாட
அழைக்க வந்தவாளுடன் கூட (வந்தாள்ம)
-------
மருத்துவச்சி சித்திராங்கதைக்குச்சொல்-விருத்தம்.
அம்மையே யஞ்சவேண்டாம் அங்கத்தின் குறிகளெல்லாம்
செம்மையா யிருக்குதின்னம் க்ஷெணநேரம் பொறுத்திருந்தால்
கொம்மை வெம்முலையாய் நீயாண் குழந்தையைப் பெறுவதாக
நம்மையாள்மதுரை சொக்க நாதரும் அருள் செய்வாரே
-------
வசனம்.
அம்மா நீ யஞ்சவேண்டாம் உனது தேகக்குறிப்புக ளெல்லாம் செம்மையாய்த் தானிருக்குது.
இன்னம் க்ஷெணநேரம் இவ்வேதையைப் பொறுத்துக்கொண்டிருந்தை யானால் நல்ல
ஆண்பிள்ளையைப் பெறும்படியாய் இந்த மதுரைசொக்கதசுவாமி அருளிச் செய்வார்
நீ பயப்படாதே,
-------
சித்திராங்கதை கருப்பவேதனையால்-பிரலாபிக்கிற தரு.
இ-ம் புன்னாகவராளி-ஆதிதாளம்.
பல்லவி.
அம்மா எப்படி சகிப்பேன்-எவ்விதத்தாலிவ்
வாபத்தை நிக்கிரகிப்பேன்
அநுபல்லவி.
இம்மாநிலந்தனில் யானறியேனிச் சூதை
பெம்மானருளிய பிள்ளைப்பேறெனும் வாதை (அம்)
சரணங்கள்
பக்கமிரண்டு நோகுது மூச்சுத்திணறி
திக்குமுக்காடிப் போகுது சற்றே
உட்கார்ந்திருப்ப மென்றால் உடம்பெங்கும் உளைக்குது
நிற்கப்போனா லென்திரேகம் நிமிஷத்திற் களைக்குது (அம்மா)
அடிவயிற்றினில் முட்டுது உடம்பெங்கும்
ஓடியப்பஞ்சுபோற் கொட்டுது - என்றன்
துடியிடையு மென்னமோ துலம்போல் பெருத்துது.
இடிஇடியென் றிடித்து என்றனை வருத்துது (அம்)
தண்ணீர் தாகமெடுக்குதே-என்னடியடி
பெண்ணே நோயுமுடுக்குதே-அங்கம்
குண்ணினதும் போதாமல் குலைமார்புமுடையுது
புண்ணென அடித்துடை புடைபுடைத்திடியுது (அம்)
-------
இதுவும் சித்திராங்கதை சொல்-விருத்தம்.
எடுக்குதே இடுப்புநோயும் இன்னமு மெத்தமெத்த
முடுக்கு தென்னடி வயிற்றில் முட்டுதே யென்றனாவி
திடுக்கிடு துலகினிற்பெண் சென்மமும் பொல்லாதையோ
நடுக்குதே திரேகமெங்கும் நானென்ன செய்வேனம்மா.
-------
வசனம்.
அரகரா சொக்கநாதசுவாமி மீனாட்சித்தாயே. இன்னமும் இடுப்பு நோய் எடுத்து வரவர
மெத்தவுமுடுக்குதே என்னுயிர் திடுக்கிட்டுப் போகுதே. பூலோகத்திலே பெண் சென்மம்
பொல்லாதென்று சொல்லுவது சரியே. திரேகமெங்கும் நடுக்குதே நானென்ன
செய்வேனம்மா.
-------
மருத்துவச்சி-சித்திராங்கதைக்குச்சொல்-விருத்தம்.
தலைச்சுமை யென்றாலத்தைத் தாங்கிக் கொண்டிருக்கலாமித்
தலைச்சன் பேறதுவாய்ச் சொல்லோ தாகமுமெடுக்கு மேலும்
அலைச்சலைச் சிடுப்புநோகும் அடிவயிருளைக்குஞ் சற்றே
அலைச்சலைக் கொடுக்குங் கண்டாய் அஞ்சவும் வேண்டாமம்மா
-------
வசனம்.
கேளும் அம்மணி தலைச்சுமையென்றால் அதை ஒருவருக் கொருவர் சற்றே தாங்கிக்
கொள்ளலாம். அதுவுமல்லாமல் பிள்ளைப்பேறுகளில் தலைச்சன் பேறென்பது வாய்ச்
சொல்லல்ல. தாகமு மெடுக்கும். மேலும் வெகு அலைச்சலைக்கொடுக்கும். சற்றே மனம்
பொறுத்தால் இந்த கருவு வெளிப்படும். நீயஞ்சவேண்டா மென்னம்மா.
-------
சித்திராங்கதை- பிரசவவேதைப்படுகிற-தரு-ஆகிரி-அடதாளம்,
பல்லவி,
என்ன செய்குவேன் அம்மா ஐயோ-ஆ ஆ நான்
ஏது செய்குவேன்
அநுபல்லவி,
என்ன செய்வேனம்மா இருங்களடி சும்மா
இளைக்குதென்னுடல் களைக்குதடிவயி
அளைக்கு திடுப்பையும்-துளைக்குதே ஐயோ(என்ன)
சரணங்கள்
தையலரே யுங்களால் மெய்யெங்கு முறியுதே
ஐயையோ என்கூச்சல்-வையகம் அறியுதே
அடியடி யிடுப்பை பிடியடி
உடம்பைத் துடையடி-யப்பா லிடையடி (என்)
-------
மருத்துவச்சி-சித்திராங்கதைக்குச் சொல்-வசனம்.
என்னம்மா பயப்படாதே பயப்படாதே காகமேறின கொம்பு அசையாதா? கைப்பட்ட
கண்ணருகாதா? அதற்கதற்குக் காலம் வந்தால் நிற்குமோ பத்தெட்டுப் பெற்றவளெல்லாம்
என்னமோ ஏதோவென்று ஏக்கமுற்றீடி விழுந்து கிடக்கச்சே தலைச்சன் பிள்ளைக்காரிக்குத்
தயிரியமிருக்குமா? இதோ குழந்தை வெளிப்பட்டுப் போச்சுது. இனி சும்மாயிரு மம்மணி.
-------
பொது-விருத்தம்,
புவனமீரேழும் போற்றிப் புகழ்திரு மதுரைவாழும்
சிவனருளாலுதித்த சித்திராங்கதை வயிற்றில்
எவன மோர்உருவுகொண்ட தென்னமன் மதனுமேங்கி
மவுனமுற் றொளிக்கநல்ல மைந்தன்வந்து தித்தானன்றே
-------
கட்டியன்சொல் வசனம்.
இவ்விதமாக ஈரேழு பதினாலு லோகமும் போற்றிக் கொண்டாடாநின்ற மதுரை
சொக்கநாதசுவாமி கிருபாகடாட்சத்தினாலே சித்திராங்கதை வயிற்றில் அழகெல்லாம்
ஒரு ரூபமெடுத்து வந்ததுபோல் மன்மதனும் வெட்கிப்போகும்படியாய்த் திவ்யபுத்திரன்
பிறந்தான். மேல் நடந்தது காண்க.
-------
தோழிகள் - பாண்டியனுக்கும் அர்ச்சுனனுக்கும் சொல்-விருத்தம்.
வேம்பணிமார்பா போற்றி விஜயனே போற்றிபோற்றி
நாம்பணி மதுரைசொக்கநாதர் தன்னருளினாலே
காம்பணி தோளி சித்திராங்கதை திருவயற்றிலின்று
பாம்பணை யவன்மகன் போல் பாலன்வந்து தித்தானையா
-------
வசனம்.
கேளும் வேப்பமாலையணிந்த பாண்டிய மகாராஜனே சரணம் சரணம் அர்ச்சுன மகாராஜனே
சரணம். மதுரை சொக்கநாதசுவாமி கிருபா கடாட்சத்தினலே சித்திராங்கதை யம்மாள்
வயற்றிலே மன்மத விக்கிரகம் போலே ஒரு பிள்ளை பிறந்ததையா சுவாமி.
-------
பாண்டியன்-அர்ச்சுனன் முதலாகியவர்களுக்குச் சொல்விருத்தம்
மருமகனே நின்பாக்கிய மந்திரிகாள் நமதுபுண்யம்
திருமக ளெனவுதித்த சித்திராங்கதை வயிற்றில்
ஒருமகன் பிறந்தானென்றிங் குரைத்தமாதர்களே நீங்கள்
தருவகிழ் வார்த்தைக்கென்றன் தரணியைக் கொடுக்கலாமே.
-------
வசனம்
கேளும் என் மருமகனாகிய அர்ச்சுன மகாராஜனே உமது புண்ணியமே புண்ணியம்
மந்திரிகளே நமது பாக்கியமே பாக்கியம். சித்திராங்கதை வயிற்றிலே ஒருபிள்ளை பிறந்த
தென்றோடி வந்து சொன்ன தோழிப்பெண்களே உங்களுக்கிந்த உலகத்தைக் கொடுக்கிறேன்
வாங்கிக் கொள்ளுங்களடி பெண்களே.
-------
தோழிகள் சொல் வசனம்
அப்படியே மகாபாக்கியஞ்சுவாமி
-------
அர்ச்சுனன்தோழிகளுக்குச்சொல்-விருத்தம்,
மஞ்செனுங் குழலீர்தோழி மார்களே மைந்தனுக்கு
மஞ்சனமாட்டி வைத்து மண்பொட்டு மிட்டுப்பின்னும்
அஞ்சனப் பொட்டுமிட்டு அணிமணி பணிகள் பூட்டி
மஞ்சனைத் தொட்டிலேற்றி மகிழ்ந்து தாலாட்டுவீரே
-------
வசனம்.
கேளுங்களடி தோழிப்பெண்களே குழந்தைக்கு ஸ்நானம் பண்ணிவைத்து மண்பொட்டு
மைப்பொட்டுமிட்டு நவரத்தினங்களைப் பூட்டி தங்கத்தொட்டிலில் வளர்த்தி தாலாட்டுங்களடி
பெண்களே.
-------
தோழிகள்சொல்-வசனம்.
மகாபாக்கியம் மகாபாக்கியம்.
-------
தோழிப்பெண்கள்- பப்புருவாகனனை - தாலாட்டுதல்,
சித்திராங்கதையும் தோழியர்-தாலாட்டுகிற தரு -இம்- நீலாம்பரி
பல்லவி.
ஆராரோ ஆராரோ
ஆராரோ ஆராரோ
அநுபல்லவி.
சீரார்மதுரையில்வாழ் சித்திரவாகன பாண்டியன்
போரார் தனஞ்சயன்றன் பிள்ளையே கண்வளராய் ஆராரோ
சரணங்கள்.
பார்புகமும் பஞ்சவரில் பார்த்திபன்றனை மருவும்
கார்குழலாள் சித்திராங் கதைமகனே கண்வளராய் ஆராரோ
சன்னியாசி போல்வேஷம் தான்கொண்டிந் தாரணியில்
கன்னியாதீர்த்தங் களெல்லாம் கண்டுவந்தோன் கண்மணியே ஆராரோ
மறையவனைப் போலிருந்து மலரெடுக்கவந்த வென்னை
முறையதினாற் கண்டவுடன் மோகங்கொண்டோன் கண்மணியே ஆராரோ
ஐந்தரு வனந்தனில்தன் அதிருபங் காட்டியெனைக்
கந்தருவ மணமதினால் கலந்தவர்தன் கண்மணியே ஆராரோ
சித்திரவாகன பாண்டியன் செல்விமனந் தனிலிருந்த
புத்திரவாஞ்சை யையொழித்த புண்ணியனே கண்வளராய் ஆராரோ
-------
அர்ச்சுனன் பாண்டியனுக்குச் சொல்-விருத்தம்.
சித்திராங்கதை யையீன்ற தென்னவா கேளுமிந்த
புத்திரன்பெயர் தானின்று பூர்வமா யுங்களுக்கு
வித்தையா ரம்பஞ்செய்து வில்லினிற்பூட்டி யெய்யும்
அஸ்திரப் பரிட்சையெல்லாம் அறிவிப்பதார் சொல்வீரே.
-------
வசனம்.
கேளும் பாண்டியமகாராஜனே, இந்தக் குழந்தை பெயரென்ன? வித்தியாரம்பம், வில்வித்தை,
அஸ்திரப்பரிட்சை முதலாகியதும் கற்பிக்குங் குலகுரு ஆர்? எனக்குத் தெரியச் சொல்லவேணும்
என்மாமாவே.
-------
பாண்டியன் அர்ச்சுனனுக்குச்சொல்-விருத்தம்.
குருகுலமன்னா யெங்கள் குலக்கொரு சொக்கநாதர்
வருகலை முறையிற்பப்புரு வாகன னிந்தப்பிள்ளை
தருகலைக் கியானத்தோடு தனுவஸ்திரப் பரிட்சையெல்லாம்
ஒருகுறை வில்லையீச ரூபதேச மருளுவாரே.
-------
வசனம்.
கேளும் என் மருமகனாகிய அர்ச்சுன மகாராஜனே எங்கள் குலகுரு சொக்கநாத
சுவாமிதான். இந்தப்பிள்ளையின்பெயர் பப்புருவாகன பாண்டியனென்று சொல்லலாம்.
மேலும் அறுபத்து நான்கு கலைக்கியானமும் வில்வித்தை அஸ்திரப்பரிட்சையெல்லாம்
பரமசிவன் அனுக்கிரகம் பண்ணுவார். அதற்கொரு குறைவுமில்லை மருமகனே.
-------
அர்ச்சுனன்-பாண்டியனுக்குச்சொல்-விருத்தம்.
நாற்றிசை புகழுஞ்சொக்க நாதர்தன் னருளிருந்தால்
வேற்றொரு வர்களால் நம்மை வெல்லவும் போமோவுன்றன்
கோத்திரம் விளங்கவென்றன் குழந்தையை யீந்தேன் மற்ற
யாத்திரை நான் போய்வாறேன் அன்புட னனுப்புவீரே
-------
வசனம்.
கேளும் பாண்டிய மகாராஜனே இந்த மதுரை சொக்கநாத கவாமி கிருபா
கடாட்சமிருந்தால் நம்மை ஒருவராலேயும் வெல்லப் போகாது. இப்பவும் நான் பெற்ற
குழந்தையை உமது கோத்திரம் விளங்கும்படியாய்ப் புத்திரசிகாரங் கொடுத்துவிட்டேன்
இனி மற்ற தீர்த்தயாத்திரையும் போய்வருகிறேன். சிலவு தந்தனுப்பி வைக்க வேணும்
என் மாமாவே.
-------
பாண்டியன்-அர்ச்சுனனுக்குச் சொல் விருத்தம்.
மருகனே நீர்வந்தென்றன் மகளையு மணந்துநல்ல
முருகனேர் சுதன்சிகார முகமலர்ந்தளித்தத்தாலே
பெருகுமென் குலம் விளங்கப் பெற்றனன்யாத்திரைபோகத்
திருகுசொல்வது மொன்றுண்டோ சென்றுநீர் வருகுவீரே.
-------
வசனம்
கேளும் என் மருமகனாகிய அர்ச்சுன மகாராஜனே நீர் தீர்த்த யாத்திரைக்கு வந்தவிடத்திலே
என்மகளை விவாகம் பண்ணிக்கொண்டு அவள் வயிற்றிற்பிறந்த பிள்ளையை எனக்குப்
புத்திரசிகாரமுங் கொடுத்து இந்த பாண்டியகுலம் விளங்கும்படிச் செய்த உமக்கு ஒரு திருகு
சொல்லலாமா, மகாராஜனாய்ப் புண்ணிய தீர்த்தயாத்திரை போய்வாரும் என்மருமகனே.
-------
அர்ச்சுனன்-மனையாளுக்குச்சொல்-விருத்தம்.
மாதருக்கரசேயென்கண் மணிசித்திராங் கதையேசொக்க
நாதருக்கன்பு செய்தின் னகரரசாளும்பிள்ளை
ஆதரவாகப்பெற்றாய் அகமகிழ்ந்தினிநானிந்த
பூதலமுழுதும் யாத்திரை போய்வரச் சிலவுதாராய்
-------
வசனம்.
கேளாயென் பிராணநாயகியாகிய சித்திராங்கதை யென்னுங் கண்மணியே,
நீ இந்த மதுரை சொக்கநாதசுவாமியையும் மீனாட்சியம்மனையும் பதிவிரத நிலையிலிருந்து
பூசை பண்ணபடியினாலே பூலோகமுழுதும் அரசாளும் பிள்ளையைப்பெற்றாய். இனியுனக்
கொரு தாழ்வில்லை. நான் தீர்த்த யாத்திரைப் போய்வருகிறேன். சிலவு தாராய்பெண்ணே.
-------
சித்திராங்கதை தன் நாயகனுக்குச் சொல்-விருத்தம்.
புண்ணிய தீர்த்தமாடப் போவதே கருமமின்றிங்
கெண்ணி நீருரைத்த வார்த்தைக் கெதிர்மொழி பேசமாட்டேன்
கண்ணினி லினியெப்போதுங் காண்பேனென் பிராணநாதா
மண்ணினில் யாத்திரை சென்று வந்தெனை ரட்சிப்பீரே
-------
வசனம்.
கேளும் என் பிராணநாதா, உமது திருவுளத்தில் தீர்த்தயாத்திரைக்கும் போக
வேணுமென்று எண்ணியிருந்தால் அடியாளதற்கொரு திருகு சொல்லப்போமோ? இனி
எந்தக்காலம் உமது திருவுருவை காண்பேனோ, சுகமாய்ப்போய்வந்து அடியாளை இரட்சியும்
என்சுவாமி.
-------
அர்ச்சனன் தனது குமாரனுக்குச் சொல் - விருத்தம்.
அப்பனேயிங்குவாடா அண்ணலேவாடாசொல்லும்
பப்புருவாகனனே வாடா பாண்டியா வாடா இங்கே
எப்படியுன்னை நான்விட் டேகுவேன் தீர்த்தயாத்திரை
கொப்பெனப் போகவேணுங் கொஞ்சியோர் முத்தந்தாடா
-------
வசனம்.
அப்பா மகனே பப்புருவாகனா இங்கே வாடா, எப்படியுன்னை நான் பிரிந்திருப்பேன்
மகனே. சீக்கிரமாய்த் தீர்த்தயாத்திரை போய்வருகிறேன், ஒரு முத்தங் கொடடா மகனே.
-------
பொது-விருத்தம்.
இந்தவித மகனையெடுத் தணைத்துக் கொஞ்சி
யேந்திழைசித்திராங்கதைசெங் கையிலீந்து
அந்தணன்போல் வேஷங்கொண் டர்ச்சுனனும் போனான்
ஆதிசிவன் றன்னருளால் வயதோரைந்தில்
சந்ததியுஞ் சகலகலைக் கியானந் தேர்ந்து
தனுப்பரிட் சைகளுமறிந்து தனஞ்செயன் போல்
விந்தைபெயர்ப் பப்புருவா கனனென்றோங்க
வெளிவந்தான் அனைவருக்குங் களிதந்தானே.
-------
வசனம்.
இவ்விதமாக மகனையெடுத் தணைத்துக் கொஞ்சிக் குலாவி முத்தமிட்டு
சித்திராங்கதை கையில் கொடுத்துவிட்டு பிராமணவேஷங் கொண்டு அர்ச்சுன மகாராஜன்
யாத்திரை போனபின்பு சொக்கநாத சுவாமி கிருபையினாலே பப்புருவாகன் ஐந்து வயதிலே
சகல கலையும் வில்வித்தையும் அஸ்திரப்பரிட்சையும் கற்றுக்கொண்டு வில் விஜயனைப்
போலே சபைக்குவருகிற விதங்காண்க,
-------
பப்புருவாகனன்-சபைக்குவருகிற- தரு-இ-ம்-தோடி - ஆதிதாளம்
பல்லவி.
தாம்தாம் தகஜெம் தரிகிடதக- தீம்தார தில்லானா ஜெம்தரி
தகணக ஜெம்தரிதிமிதகிடதக
தகஜெணு தகதிமி தகததிங்கிணத்தோம்.
பப்புருவாகனன் வந்தான் இளம்பருவ (பப்புருவாகனன்வந்தான்)
அநுபல்லவி.
தற்பரனருளினால் - சகலகலை படித்து
வெற்பென மலர்க்கையில் - விளங்குஞ்சிலை... பிடித்து (பப்)
சரணங்கள்.
உச்சிக்கொண்டையுந் துலங்க - அதில் வெண்முத்து
குச்சும் அண்டையி லிலங்க நல்ல
விச்சிந்திரமாகச் சந்திரவிம்ப வதனமின்ன
வச்சிரமணி யாரங்கள் மார்பில் நிகநிகென்ன (பப்புரு)
சித்திராங்கதை கண் களிக்க- இவனழகை
சித்தஜனுங்கண் டொளிக்க நவ
ரத்தின குண்டலங்களும் நட்சத்திரம்போ லுதிக்க
இத்தலத்திலி வனுக்கீ டில்லையென் றெங்குந் துதிக்க (பப்)
தண்டைச்சதங்கைகள் .... கஞ்ச மலர்ப்பதத்தில்
வெண்டயங்களுங் .... கொஞ்ச- தனைச்சிகாரம்
கொண்டமதுரைப்பாண்டியன் ... குலமுமென் மேலும்வாழ.
அண்டையில் மந்திரிகுமாரர் .... அனைவரும்புடை சூழ (பப்)
-------
பப்புருவாகனன் சொல் போற்றி விருத்தம்.
நாட்டை மூன்றுடைய சொக்க நாதனே போற்றி நற்செஞ்
சூட்டறவணையின்மீது துயினெடுமாலே போற்றி
கோட்டமார் மதுரையாளுங் குரிசிலே போற்றி யென்றன்
பாட்டனே போற்றிபோற்றிப் பாண்டியபூபதியே போற்றி.
-------
வசனம்
திருநேத்திரதாரியாய் விளங்காநின்ற சொக்கநாத சுவாமியே சரணம். சிரோரத்தினம்
பொருந்திய ஆதிசேஷின் மேற் பள்ளிகொள்ளும் ஸ்ரீமன் நாராயண மூர்த்தியே சரணம்-
நாட்டுவளமை மிகுந்த மதுரைப்பட்டணத்தை யரசாளும் என் பாட்டனாராகிய பாண்டிய
மகாராசனே சரணம்.
-------
இராஜன் பப்புருவாகனனுக்குச் சொல்-வாழி-விருத்தம்
சுப்பிரமணியனைப்போலச் சுதனுருவெடுத்தோய்வாழி
இப்பிரபஞ்சத்தையாள இசைந்த சந்ததியேவாழி
கற்புறுமாது சித்திராங்கதையின் கண்மணியே வாழி
பப்புருவாகனனே வாழி பார்த்தீபன்மகனே வாழி.
பப்புருவாகனன்-பாண்டியனுக்குச்சொல் -விருத்தம்,
பார்த்தீபன் மகனியென்னும் பாட்டனேயெனதுதந்தை
கீர்த்திப் பிரதாபமென்ன கெதிபெறும் அவர்தானங்கே
நாற்றிசையரசுசெய்ய நான்பாண்டியனான தென்ன
போற்றி செய்யடியேன் கேழ்க்கப் புகலுவீர்புகலுவிரே.
-------
வசனம்
கேளும் என்னைப் பார்த்தீபன் மகனென்று சொன்ன பாட்டனாரே எனது தந்தை
கீர்த்திப் பிரதாபமென்ன அவரெங்கே போனார், மேலும் இவ்வுலகையாள நான் பப்புருவாகன்
பாண்டியனானதென்ன அடியேனுக்குத் தெரியச் சொல்லவேணும் ஐயா.
-------
இராஜன் பப்புருவாகன னுக்குச்சொல் - அகவல் இ-ம்- தோடி
ஒப்பொருவர்களை யுரைக்கொணா வெழில்சேர்
பப்புருவாகனனே பகருவேன் கேளாய்
இந்திரப்பிரஸ்தத்தில் இருக்குமைவர்களில்
இந்திரன் மகனென் றியம்பும் அர்ச்சுனனும்
அந்தண வேஷங்கொண் டியாத்திரையாய் மதுரை
வந்தவரென்றன் மகளெனவிருந்த
சித்திராங்கதையைத் திருமணஞ்செய்து
புத்திரசிகாரம் புரிந்தவர்மற்ற
யாத்திரை செய்ய வவர்போனா ரென்றன்
கோத்திரம் விளங்கக் குழந்தை நீயப்பா
-------
பப்புருவாகனன் சொல்-விருத்தம்.
புத்திரசிகாரம்- புரிந்த வென்றந்தை
உத்திரவின்படியிவ் - வுலகையாள்வேனே
-------
இராஜன்-பப்புருவாகனனுக்குச் சொல் விருத்தம்
ஆளுவேனென்ற வப்பனேவாடா
வேளுருகொண்ட விஜயன்கண்மணியே
நீளுலகோர்குடை நீழலிர்ச்செல்வ
நாளுமிம்மதுரை நகரையாள்வாயே
-------
பப்புருவாகனன் பாண்டியனுக்குச் சொல்- விருத்தம்.
தருகுவீரென்றன் தட்சணம்நானே
திருகுசொல்லாமல் செங்கோலு முடியும்
அருகுவீற்றிருக்கும் அரசரும்படையும்
ஒருகுறையினாமல் உமக்களித்தேனே.
-------
பட்டாபிஷேகத்தரு இ-ம்.மோகனம்-ஆதிதாளம்
பல்லவி.
மகுடாபிஷேகங்கொண்டான் பப்புருவாகனன்
மகுடாபிஷேகங்கொண்டான்
அநுபல்லவி.
மகுடாபிஷேகங்கொண் டான்
மானிலம்புகழ்வீசும் - பின்
மகிபதியெனவே தன்
மதுரையாளப்பசும் பொன் (மகு)
சரணங்கள்
விஜயத்துந்துமி முதல் மேளவாத்திய முழங்க
விஜயன்மைந்தனென்ற திசையெங்கணும் வழங்க (மகு)
வேதியர்களும் ஆசி விளம்பப் புத்தி தழைக்க
நீதிமந்திரிகுமாரர் நெருங்க ரத்தினமி ழைத்த (மகு)
சுரர்களு மைந்தருவும் மருமலர் மழைபெய்ய
நகருமடியிணைப் பரவியே துதி செய்ய (மகு)
-------
பப்புருவாகனன் கடவுளைப்போற்றி-விருத்தம்.
திங்கள் மும்மாரிபெய்ய தேசங்கள் செழிக்கவேணும்
திங்கள் தன்மரபிலேதன் செங்கோலும்வாழ வேணும்
திங்கள் வெண்குடையினீழற் சென்றரசாள வேணும்
திங்கள் செஞ்சடையா வுன்றன் திருவடி போற்றி போற்றி.
-------
வாழிவிருத்தம்.
கதிர்மதியரசர் வாழி கங்கையைத் தரித்தோர் வாழி
பதியரசர்களும் வாழி பாவலர் நாளும் வாழி
துதிசெயும் பப்புருவாகன் தொன்மர போரும்வாழி
நிதமிதைப் படித்தோர் கேட்டோர் நீடூழிவாழி மாதோ.
சித்திராங்கதை விலாசம் முற்றிற்று
~~~~~~~~~~~~
This file was last updated on 12 June 2023.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)