சிற்றிலக்கியத் திரட்டு - பாகம் 2
ஆற்றுப்படை நூல்கள் (5)
பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை தொகுப்பு
ciRRilakkiyat tiraTTu, part 2
ARRuppaTai (5)
edited by vaiyApurip piLLai
In Tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
We thank Tamil Virtual Academy, Chennai for providing a scanned PDF version of this work
Our sincere thanks go to Dr. Meenakshi Balaganesh, Bangalore, India for her assistance
in the preparation of this work
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2023.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
சிற்றிலக்கியத் திரட்டு - பாகம் 2
ஆற்றுப்படை நூல்கள் (5)
பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை தொகுப்பு
Source :
பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை பதிப்பித்த
சிற்றிலக்கியத் திரட்டு
பொதுப்பதிப்பாசிரியர் இ. சுந்தரமூர்த்தி
பேராசிரியர் & தலைவர், தமிழ் இலக்கியத்துறை
சென்னைப்பல்கலைக் கழகம்
நூலகத்திற்கு அன்பளிப்பு
சென்னைப்பல்கலைக்கழகம் , 2001
Chitrilakkiyath thirattu
First Edition: November - 2001
University of Madras
வடிவமைப்பு: வே.கருணாநிதி
PRINTED IN INDIA
The PARKAR , 293, Ahamed Complex 2nd Floor
Royapettah High Road, Chennai - 600 014.
----------------
II. ஆற்றுப்படை நூல்கள்
2. அணிமுருகாற்றுப்படை (1937)
3. அருள் முருகாற்றுப்படை (1937)
4. திருமுருகாற்றுப்படை -1 (புதிய உரையுடன்) (1933)
5. திருமுருகாற்றுப்படை -2 (உரையாசிரியர் உரையுடன்) (1943)
6. பொருள் முருகாற்றுப் படை (1937)
7. வருமுருகாற்றுப்படை (1937)
----------------
2. அணிமுருகாற்றுப்படை
பரங்குன்றிற் பன்னிருகைக் கோமான்றன் பாதங்
கரங்கூப்பிக் கண்குளிரக் கண்டு - சுருங்காமல்
ஆசையால் நெஞ்சே அணிமுருகாற்றுப்படையைப்
பூசையாக் கொண்டே புகல்.
பொன்னிற மேனியும் பொற்பமர் வடிவு
மின்னறு மூகமும் விழிபன் னிரண்டும்
நீறணி நெற்றியும் நீணகை வாயுங்
கூறொணா வடிவுங் கூரிய மூக்கு
மாரஞ் செறிந்த வணிதிருக் கழுத்தும்
பார குண்டலமும் பற்றிய குழையு
முந்நூல் மார்புமுழுமணி வடமும்
பன்னிரு கரத்திற் பதித்த வாயுதமும்
வேல்வாள் சக்கரம் வெயிலொளி வக்கிரம்
பால்நிறை குக்குடம் பரிசைபொற் றண்டம் 10
வரதமபயமிருதலைச் சூலஞ்
சரமொடு சக்கரந் தன்கரத் திலங்க
செச்சை மாலையுஞ் சீரார் மருங்குல்
வச்சுடுத் தியதோர் மையில் வண்டுகிலுஞ்
சதங்கையுந் தண்டையுந் தனியணி கின்ற
பதங்க ளிடமது பதமடி வைத்து
மற்ற வலப்புறமதன்புற நீட்டி
யுற்றதோ ரட்சர முறுதி யாக
ஆறுகொண் டட்சர மதனிலா றெழுத்து
நடுவே நிறுத்தி நடுவோங் கார 20
றீங்காரத் தாற்கொண் மாமறை யோர்குலாவு
ரூங்காரத் தாற்பூண் வளைத்துப்பெம் மானிட
தெய்வ யானையைச் சீர்வலப் புறத்தினு
முய்ய வைத்தங் குயிர்பெற வணைத்தும்
மற்றதோர் பாகம் வள்ளி நாயகியை
யுற்றங் கணைத்து வுக்கிரமொ டிருத்தி
யிரட்டைக் கவரியிருபுறத் தசைய
மருட்டினை நீக்கி மனத்தொடு மன்பொடுந்
தேவர் தானவர் சித்தர் வித்தியாதரர்
பாவையர் கின்னரர் பன்னகர் முனிவர்கள் 30
சரவண பவனிவனென்று நின்னுள
முரமுள மந்திர முறுதியொ டுரைத்துச்
சூழநின் றிருபுறந் தூய்மலர் கொடுத்து
வாழியென்றேத்தி மலரடி பணிந்து
வேண்டிய வரங்கள் விரைந்தளித் தருளு
மண்டர் நாயகவே யற்புதக் கொழுந்தே
யறுமுகத்தரசேயெமதுயிர்த்துணையே
நின்னை உன்னிடதெய்வயானையு
மன்னிடப்புறத்தினில் வள்ளிநா யகியும்
பச்சை மயிலும் பரிந்தெனிருதயத் 40
திச்சை யுடனே யினிதிருந் தருளே.
அணிமுருகாற்றுப்படை முற்றும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
3. அருள்முருகாற்றுப்படை
என்னுடைய நாத னெழுத்தாறு பாவாறு
மின்னுந் தலந்தாமுமீராறு- மன்னுமுக
மோராறு வேதத்தி னுள்ளாறு பொன்னெடுந்தோ
ளீராறு கண்ணா றிரண்டு.
இந்திர ரிடமுஞ் சந்திரர் வலமு
மெழுகட லீட்டமும் வழுவறு வானமு
மாசறு மதியமும் வீசிய வேலும்
தாமரைத் தடமும் பூமலர்ப் பொழிலும்
பற்பராகமுங் கற்பகக் காவும்
வண்டமிழ் மறையுஞ் சண்ட மாருதமுந்
தவநெறிச் செல்வமுஞ் சிவநெறிச் சைவமுஞ்
சக்கர பாணியும் விக்கின விநாயகனும்
வலம்புரியோனுநலம்புரி வாக்கனும்
போற்றிய பொய்மெய்யாக்கிய மகிபரு 10
மெழுதறற் றீசரு மெழுகடற் சுருதியு
மெண்டிசைத் திகிரியு மங்குசத் தவனும்
பெருக்கிய பெருமறை சுருக்கிய தோன்றலு
மச்சுத வடிவு மிச்சுர வருளு
மாகத் தோன்றி யேகத் தோருரு
வான்ற பச்சை யீன்ற சுடர்மணி
மரகத வயிரம் விரைசெறி கழனியி
னீர்த்தலம் பவளஞ் சேர்த்துட னிலங்கல்
சொல்ல வரியதோர் கல்லைப் பதியு
ளீன்ற மேக மூன்றிய பொழிலுள் 20
தேனமர் குழலியை வானவர் முன்னே
மணமது கொண்டு பிணியது தீர்த்து
வருவன மேனியெரிகன லாகி
உம்பர் பாதம் ஐம்பொனூர
முரான நதது கணைக்கா லிந்து
குறங்கு யரை தாள் மறலி திருமால்
ரோமம் எரிவ வாய வயிறு
புனலே எழுச்சிமனமே மலரோ
னெழுத்தினில் மாரன் கழுத்தினி லய்யன்
ஒருதோளீசனொருதோள் மாதவன் 30
ஒருதோள் நான்முக னொருதோ ளாதித்தன்
ஒருதோள் சந்திர னொருதோ ளிந்திர
னொருதோள் நாமக ளொருதோள் பூமக
ளொருதோள் சுருதி யொருதோள் பருதி
யிருதோள் சத்தரிடி வருணனு மாகப்
பன்னிரு தோளின் பன்னருஞ் சிறப்பே
ஓங்கிய திருக்கையில் வாங்கிய வேலு
மங்குச மயில்வே லோங்கிய சூலமும்
பாசஞ் சங்கும் வீசுஞ் சக்கிரம்
வச்சிர மழுவாள் விச்சர மெனவே 40
துலங்கிய வெற்றி நலங்கொடு விலங்கல்
சீராறுப்பு மீராறு வகையுங்
கூறவரியதோராறு முகத்தில்
ஒருமுக மீசன் ஒருமுக மாதவன்
ஒருமுக னான்முகன் ஒருமுக மாதித்தன்
ஒருமுகஞ் சந்திரன் ஒருமுகம் விநாயகன்
பேர்த்த திருமுகம் பெற்றதோர் கருணையன்
தூர்த்த காதில் ஆர்த்த தோட்டினன்
அண்டரு மறியா எண்டிசை யாதி
நஞ்சணிகண்டன் பிஞ்சணி பிறையன் 50
கொன்றைச் செங்குரவ மன்றல ரெருக்கந்
தோய்ந்த செஞ்சடையனாய்ந்த முடியினன்
பவளம் பூத்த தவள மேனியன்
ஆடும் பாம்பணிபேடு விநாயக
னயில்மேற்பச்சை மயில்மேலேறி
காலக் கோலம் போலத் திரியுஞ்
சூரனுடலை வேரறத்துணித்துங்
கணங்கொள் பூதம் வணங்கி யேத்த
பையவா ளரவ மையவா யேத்தின
னீன்ற மணியார் தோன்றிய சுடரே 60
ஒப்புனக் கெதிரிலை யெப்புவியிடத்து
மாமனேனு முரிமை பூண்டு
வள்ளி பாக மெள்ளென வைத்து
பூங்கொடி மகிழ வீங்கிள முலைமேல்
மணந்தும் புணர்ந்தும் மகிழ்ந்தும் புகழ்ந்து
மேத்த வரியதோரெம்பெரு மானே
கூத்தன் றந்தருள் கோமளக் கன்றே
வாக்கு மனமும் பிறவுந் திருவு
மாக்கிய குமர உனையலதிலையே.
பாலைப் பதியுரைவாய் பன்னிரண்டு தோளுடையாய் 70
மாலைக் கடம்புபடர் மார்புடையாய் - காலையினுஞ்
செய்யாய் வரைகிழியச் செவ்வேல் விடுத்தருளுங்
கையா கடைபோகக்கா.
அருள்முருகாற்றுப்படை முற்றும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
4. திருமுருகாற்றுப்படை -1 (மூலமும் உரையும்)
*குறிப்பு - இது புலவர் ஆற்றுப்படை எனவும் வழங்கும் இதை திரு+முருகு+ஆற்று + படை எனப் பிரித்து
ஆன்றோர் பொருள் உரைப்பர். முருகக் கடவுளுடைய திருவருள் பெற்ற ஒரு புலவன், மற்றொரு புலவனுக்கு,
அக்கடவுள் எழுந்தருளி யிருக்கும் இடங்கள், அக்கடவுளது இயல்பு, புகழ் முதலியவற்றை விளக்கி,
அவரை எவ்வாறு அடைந்து வழிபடின் திருவருளைப் பெறலாமென்று கூறி, அவனை அவர்பால்
செலுத்தியதாக, மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரரால் இது பாடப்பெற்றது இந்நூலின் வரலாறு
பின்வருமாறு கூறப்படுகிறது:-
இமயமலையென்று சீகாளத்தி புராணமும், திருப்பரங்கிரியென்று திருப்பரங்கிரிப் புராணமும் வெவ்வேறாகக்
கூறுகின்ற ஒரு மலைச்சாரலில், ஒரு தடாகக் கரையில், ஓர் ஆலமரத்தின்கீழ் நக்கீரர் சிவபூஜை செய்து
கொண்டிருக்கும்பொழுது, மரத்திலிருந்த ஒரு பழுத்த இலையின் ஒரு பாதி தண்ணீரிலும் மற்றொரு பாதி
கரையிலுமாக விழுந்தன. உடனே நீரில் விழுந்த ஒரு பாதி, மீன் வடிவமும், புறத்தே விழுந்த மற்றொரு
பாதி, பறவை வடிவமும் பெற்று, பறவை மீனை இழுத்துக் கொண்டிருக்க, நக்கீரர் இக்காட்சியில் கருத்தைச்
செலுத்தினதால் சிவபூஜைக்குப் பங்கம் உண்டாயிற்று. அதற்கு முன்பு இவ்வாறு சிவபூஜையில் வழுவிய 999
பேரை ஒரு குகையில் அடைத்து இன்னும் ஒருவர் வேண்டுமெனக் காத்திருந்த ஒரு பூதம் நக்கீரரையும்
கொண்டு போய் அடைத்து, தனது நியமப்படி இவ்வாயிரம் பேரையும் உண்ணுவதற்குமுன் நீராடப்
போயிற்று.
அப்போது அதுவரை உணவு பெற்றுப் பிழைத்திருந்த 999 பேரும் நக்கீரர் வருகையால் தாங்கள்
இறக்கவேண்டி நேரிட்டதை, அவர்க்குத் தெரிவித்து அழுதார்கள். அவ்வழுகையைக் கேட்ட நக்கீரர்,
அவர்கள் நிலைக்கு இரங்கித் திருமுருகாற்றுப் படை என்னும் இப்பாட்டைப் பாடினார். உடனே
முருகக்கடவுள் அவர்கள் எதிரில் தோன்றி எல்லோரையுங் குகையிலிருந்து வெளிப்படுத்திக்
காப்பாற்றினார்.
ஒருமுருகா என்றென்னுள்ளங் குளிர உவந்துடனே
வருமுருகா என்று வாய்வெருவா நிற்பக் கையிங்ஙனே
தருமுருகா என்று தான்புலம்பா நிற்பத் தையல்முன்னே
திருமுருகாற்றுப் படையுடனே வருஞ் சேவகனே.
திருச்சிற்றம்பலம்
நக்கீரதேவநாயனார் அருளிய திருமுருகாற்றுப்படை
1. திருப்பரங்குன்றம்
உலகம் உவப்ப வலன்ஏர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடல்கண் டாஅங்கு
ஓஅற இமைக்கும் சேண்விளங்கு அவிர்ஒளி
உறுநர்த் தாங்கிய மதன்உடை நோன்தாள்
5 செறுநர்த் தேய்த்த செல்உறழ் தடக்கை
மறுஇல் கற்பின் வாள்நுதல் கணவன்
கார்கோள் முகந்த கமம்சூல் மாமழை
வாள்போழ் விசும்பின் வள்உறை சிதறித்
தலைப்பெயல் தலைஇய தண்நறுங் கானத்து
10 இருள்படப் பொதுளிய பராரை மராஅத்து
உருள்பூந் தண்தார் புரளும் மார்பினன்
மால்வரை நிவந்த சேண்உயர் வெற்பில்
கிண்கிணி கவைஇய ஒண்செம் சீறடிக்
கணைக்கால் வாங்கிய நுசுப்பின் பணைத்தோள்
15 கோபத்து அன்ன தோயாப் பூந்துகில்
பல்காசு நிரைத்த சில்காழ் அல்குல்
கைபுனைந்து இயற்றாக் கவின்பெறு வனப்பின்
நாவலொடு பெயரிய பொலம்புனை அவிர்இழைச்
சேண்இகந்து விளங்கும் செயிர்தீர் மேனித்
20 துணையோர் ஆய்ந்த இணை ஈர்ஓதிச்
செங்கால் வெட்சித் சீறிதழ் இடைஇடுபு
பைந் தாள் குவளைத்தூ இதழ்கிள்ளித்
தெய்வ உத்தியொடு வலம்புரிவயின் வைத்துத்
திலகம் தைஇய தேம்கமழ் திருநுதல்
25 மகரப் பகுவாய் தாழமண் ணுறுத்துத்
துவர முடித்த துகள் அறு முச்சிப்
பெருந் தண் சண்பகம் செரீஇக் கரும் தகட்டு
உளைப்பூ மருதின் ஒள் இணர் அட்டிக்
கிளைக் கவின்று எழுதரு கீழ்நீர்ச் செவ்வரும்பு
30 இணைப்புறு பிணையல் வளைஇத் துணைத்தக
வண்காது நிறைந்த பிண்டி ஒண்தளிர்
நுண்பூண் ஆகம் திளைப்பத் திண்காழ்
நறும்குறடு உரிஞ்சிய பூங்கேழ்த் தேய்வை
தேம்கமழ் மருதுஇணர் கடுப்பக் கோங்கின்
35 குவிமுகிழ் இளமுலைக் கொட்டி விரிமலர்
வேங்கை நுண்தாது அப்பிக் காண்வர
வெள்ளிற் குறுமுறி கிள்ளுபு தெறியாக்
கோழிஓங்கிய வென்று அடு விறற்கொடி
வாழிய பெரிது என்றுஏத்திப் பலருடன்
40 சீர்திகழ் சிலம்பகம் சிலம்பப் பாடிச்
சூர்அர மகளிர் ஆடும் சோலை
மந்தியும் அறியா மரன்பயில் அடுக்கத்துச்
சுரும்பு மூசாச் சுடர்ப்பூங் காந்தள்
பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன்
45 பார்முதிர் பனிக்கடல் கலங்க உள்புக்குச்
சூர் முதல் தடிந்த சுடர் இலை நெடுவேல்
உலறிய கதுப்பின் பிறழ்பல் பேழ்வாய்ச்
சுழல்விழிப் பசுங்கண் சூர்த்த நோக்கின்
கழல்கண் கூகையொடு கடும்பாம்பு தூங்கப்
50 பெருமுலை அலைக்கும் காதின் பிணர்மோட்டு
உருகெழு செலவின் அஞ்சுவரு பேய்மகள்
குருதிஆடிய கூர் உகிர்க் கொடுவிரல்
கண்தொட்டு உண்ட கழிமுடைக் கருந்தலை
ஒண்தொடித் தடக்கையின் ஏந்தி வெருவர
55 வென்றுஅடு விறற்களம் பாடித்தோள் பெயரா
நிணம்தின் வாயள் துணங்கை தூங்க
இருபேர் உருவின் ஒருபேர் யாக்கை
அறுவேறு வகையின் அஞ்சுவர மண்டி
அவுணர் நல்வலம் அடங்கக் கவிழ்இணர்
60 மாமுதல் தடிந்த மறுஇல் கொற்றத்து
எய்யாநல் இசைச் செவ்வேல் சேஎய்
சேவடி படரும் செம்மல்உள்ளமொடு நலம்புரி
கொள்கைப் புலம் புரிந்து உறையும்
செலவுநீ நயந்தனை ஆயின் பலவுடன்
65 நன்னர் நெஞ்சத்து இன்நசை வாய்ப்ப
இன்னே பெறுதிநீ முன்னிய வினையே
செருப்புகன்று எடுத்த சேண்உயர் நெடுங்கொடி
வரிப்புனை பந்தொடு பாவை தூங்கப்
பொருநர்த் தேய்த்த போர்அரு வாயில்
70 திருவீற் றிருந்த தீதுதீர் நியமத்து
மாடம்மலி மருகில் கூடற் குடவயின்
இரும்சேற்று அகல்வயல் விரிந்துவாய் அவிழ்ந்த
முள்தாள் தாமரைத் துஞ்சி வைகறைக்
கள்கமழ் நெய்தல் ஊதி எல்படக்
75 கண்போல் மலர்ந்த காமர் சுனைமலர்
அம்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும்
குன்றுஅமர்ந்து உறைதலும் உரியன்; அதாஅன்று,
-----------
2. திருச்சீரலைவாய்
வைந்நுதி பொருத வடுஆழ் வரிநுதல்
வாடா மாலை ஓடையொடு துயல்வரப்
80 படுமணி இரட்டும் மருங்கின் கடுநடைக்
கூற்றத்து அன்ன மாற்றரும் மொய்ம்பின்
கால்கிளர்ந்து அன்ன வேழம்மேல் கொண்டு
ஐவேறு உருவின் செய்வினை முற்றிய
முடியொடு விளங்கிய முரண்மிகு திருமணி
85 மின்உறழ் இமைப்பில் சென்னிப் பொற்ப
நகைதாழ்புதுயல் வரூஉம் வகைஅமை பொலம்குழை
சேண்விளங்கு இயற்கை வாண்மதி கவைஇ
அகலா மீனின் அவிர்வன இமைப்பத்
தாவுஇல் கொள்கைத் தம்தொழில் முடிமார்
90 மனன் நேர்பு எழுதருவாள் நிறமுகனே
மாஇருள் ஞாலம் மறுஇன்றி விளங்கப்
பல்கதிர் விரிந்தன்று ஒருமுகம், ஒருமுகம்
ஆர்வலர் எத்த அமர்ந்து இனிதுஒழுகிக்
காதலின்உவந்து வரம்கொடுத் தன்றே, ஒருமுகம்
95 மந்திர விதியின் மரபுளி வழாஅ
அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே, ஒருமுகம்
எஞ்சிய பொருள்களை ஏம் உறநாடித்
திங்கள் போலத்திசை விளக்கும்மே, ஒருமுகம்
செறுநர்த் தேய்த்துச் செல்சமம் முருக்கிக்
100 கறுவுகொள் நெஞ்சமொடு களம் வேட்டன்றே, ஒருமுகம்
குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின்
மடவரல் வள்ளியொடு நகை அமர்ந்தன்றே, ஆங்குஅம்
மூவிரு முகனும் முறைநவின்று ஒழுகலின்
ஆரம் தாழ்ந்த அம்பகட்டு மார்பில்
105 செம்பொறி வாங்கிய மொய்ம்பில் சுடர்விடுபு
வண்புகழ் நிறைந்து வசிந்துவாங்கு நிமிர்தோள்
விண்செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது
ஒரு கை; உக்கம் சேர்த்தியது ஒருகை;
நலம்பெறு கலிங்கத்துக் குறங்கின் மிசை அசைஇயது ஒருகை;
110 அங்குசம் கடாவ ஒருகை; இரு கை
ஐயிரு வட்டமொடு எஃகு வலம் திரிப்ப; ஒரு கை
மார்பொடு விளங்க; ஒரு கை
தாரொடு பொலிய; ஒரு கை
கீழ்வீழ் தொடியொடு மீமிசைக் கொட்ப; ஒருகை
115 பாடுஇன் படுமணி இரட்ட; ஒருகை
நீல்நிற விசும்பின் மலிதுளி பொழிய; ஒரு கை
வான்அர மகளிர்க்கு வதுவைசூட்ட; ஆங்குஅப்
பன்னிரு கையும் பாற்பட இயற்றி
அந்தரப் பல்லியம் கறங்கத் திண்காழ்
120 வயிர் எழுந்து இசைப்பவால் வளைஞரல
உரம் தலைக்கொண்ட உரும்இடி முரசமொடு
பல்பொறி மஞ்ஞை வெல்கொடி அகவ
விசும்பு ஆறாக விரைசெலல் முன்னி
உலகம் புகழ்ந்த ஓங்குஉயிர் விழுச்சீர்
125 அலைவாய்ச் சேறலும் நிலைஇய பண்பே; அதாஅன்று,
-----------
3. திரு ஆவினன் குடி
சீரை தைஇய உடுக்கையர் சீரொடு
வலம்புரி புரையும் வால் நரை முடியினர்
மாசு அற இமைக்கும் உருவினர் மானின்
உரிவை தைஇய ஊன் கெடு மார்பின்
130 என்பு எழுந்து இயங்கும் யாக்கையர் நன்பகல்
பல உடன் கழிந்த உண்டியர் இகலொடு
செற்றம் நீக்கிய மனத்தினர் யாவதும்
கற்றோர் அறியா அறிவினர் கற்றோர்க்குத்
தாம் வரம்பு ஆகிய தலைமையர் காமமொடு
135 கடும் சினம் கடிந்த காட்சியர் இடும்பை
யாவதும் அறியா இயல்பினர் மே வரத்
துனி இல் காட்சி முனிவர் முன் புகப்
புகை முகந்து அன்ன மாசு இல் தூ உடை
முகை வாய் அவிழ்ந்த தகை சூழ் ஆகத்துச்
140 செவி நேர்பு வைத்த செய்வு உறுதிவவின்
நல் யாழ் நவின்ற நயன் உடை நெஞ்சின்
மெல் மொழி மேவலர் இன் நரம்பு உளர
நோய் இன்று இயன்ற யாக்கையர் மாவின்
அவிர் தளிர் புரையும் மேனியர் அவிர்தொறும்
145 பொன் உரை கடுக்கும் திதலையைர் இன் நகைப்
பருமம் தாங்கிய பணிந்து ஏந்து அல்குல்
மாசு இல் மகளிரொடு மறு இன்றி விளங்கக்
கடுவொடு ஒடுங்கிய தூம்பு உடை வால் எயிற்று
அழல் என உயிர்க்கும் அஞ்சு வருகடுந்திறல்
150 பாம்பு படப் புடைக்கும் பல் வரிக் கொடுஞ்சிறைப்
புள் அணி நீள் கொடிச் செல்வனும் வெள் ஏறு
வலவயின் உயரிய பலர் புகழ் திணிதோள்
உமை அமர்ந்து விளங்கும் இமையா முக்கண்
மூ எயில் முருக்கிய முரண் மிகு செல்வனும்
155 நூற்றுப் பத்து அடுக்கிய நாட்டத்து நூறு பல்
வேள்வி முற்றிய வென்று அடு கொற்றத்து
ஈர் இரண்டு ஏந்திய மருப்பின் எழில் நடைத்
தாழ்பெருந்தடக் கை உயர்த்த யானை
எருத்தம் ஏறிய திருக் கிளர் செல்வனும்
160 நாற்பெருந் தெய்வத்து நல்நகர் நிலைஇய
உலகம் காக்கும் ஒன்று புரி கொள்கைப்
பலர் புகழ் மூவரும் தலைவர் ஆக
ஏமுறும் ஞாலம் தன்னில் தோன்றித்
தாமரை பயந்த தாவுஇல் ஊழி
165 நான்முக ஒருவற் சுட்டிக் காண்வரப்
பகலில் தோன்றும் இகல் இல்காட்சி
நால் வேறு இயற்கைப் பதினொரு மூவரோடு
ஒன்பதிற்று இரட்டி உயர் நிலை பெறீஇயர்
மீன் பூத்து அன்ன தோன்றலர் மீன் சேர்பு
170 வளிகிளர்ந்து அன்ன செலவினர் வளி இடைத்
தீ எழுந்து அன்ன திறலினர் தீப்பட
உரும் இடித்து அன்ன குரலினர் விழுமிய
உறுகுறை மருங்கில் தம் பெறு முறை கொண்மார்
அந்தரக் கொட்பினர் வந்து உடன் காணத்
175 தாவு இல் கொள்கை மடந்தையொடு சில் நாள்
ஆவினன் குடி அசைதலும் உரியன்; அதா அன்று,
----------
4. திருவேரகம்
இரு மூன்று எய்திய இயல்பினின் வழாஅது
இருவர்ச் சுட்டிய பல் வேறு தொல்குடி
அறு நான்கு இரட்டி இளமை நல் யாண்டு
180 ஆறினிற் கழிப்பிய அறன் நவில் கொள்கை
மூன்று வகைக் குறித்த முத்தீச் செல்வத்து
இரு பிறப்பாளா பொழுது அறிந்துநுவல
ஒன்பது கொண்ட மூன்று புரி நுண் ஞாண்
புலராக் காழகம் புலர உடீஇ
185 உச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்து
ஆறெழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி
நா இயல் மருங்கில் நவிலப்பாடி
விரை உறு நறுமலர் ஏந்திப் பெரிது உவந்து
ஏரகத்து உறைதலும் உரியன், அதா அன்று
-----------
5. குன்றுதோறாடல்
190 பைங்கொடிநறைக்காய் இடை இடுபு வேலன்
அம்பொதிப்புட்டில் விரைஇக் குளவியொடு
வெண் கூதாளம் தொடுத்த கண்ணியன்
நறும் சாந்து அணிந்த கேழ் கிளர் மார்பின்
கொடுந் தொழில் வல்வில் கொலைஇய கானவர்
195 நீடு அமை விளைந்த தேக் கள் தேறல்
குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து
தொண்டகச் சிறு பறைக் குரவை அயர்
விரல் உளர்ப்ப அவிழ்ந்த வேறுபடு நறுங்கால்
குண்டு சுனை பூத்த வண்டுபடு கண்ணி
200 இணைத்த கோதை அணைத்த கூந்தல்
முடித்த குல்லை இலை உடை நறும் பூச்
செங்கால் மராஅத்த வால் இணர் இடை இடுபு
சுரும்பு உணத் தொடுத்த பெருந் தண் மாத் தழை
திருந்து காழ் அல்குல் திளைப்ப உடீஇ
205 மயில் கண்டு அன்ன மடநடை மகளிரொடு
செய்யன் சிவந்த ஆடையன் செவ்வரைச்
செயலைத் தண் தளிர் துயல் வரும் காதினன்
கச்சினன் கழலினன் செச்சைக் கண்ணியன்
குழலன் கோட்டன் குறும் பல் இயத்தன்
210 தகரன் மஞ்ஞையன் புகர் இல் சேவல் அம்
கொடியன் நெடியன் தொடி அணி தோளன்
நரம்பு ஆர்த்து அன்ன இன் குரல் தொகுதியொடு
குறும் பொறிக் கொண்ட நறும் தண் சாயல்
மருங்கில் கட்டிய நிலன் நேர்பு துகிலினன்
215 முழவு உறழ் தடக் கையின் இயல ஏந்தி
மென் தோள் பல் பிணை தழீஇத் தலைத்தந்து
குன்று தோறாடலும் நின்றதன் பண்பே; அதாஅன்று,
------
6. பழமுதிர் சோலை
சிறுதிணை மலரொடு விரைஇ மறி அறுத்து
வாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇ
220 ஊர் ஊர் கொண்டசீர் கெழு விழவினும்
ஆர்வலர் ஏத்த மேவருநிலையினும்
வேலன் தைஇய வெறி அயர் களனும்
காடும் காவும் கவின் பெறு துருத்தியும்
யாறும் குளனும் வேறு பல் வைப்பும்
225 சதுக்கமும் சந்தியம் புதுப்பூம் கடம்பும்
மன்றமும் பொதியிலும் கந்து உடைநிலையினும்
மாண் தலைக் கொடியொடும் மண்ணி அமைவர
நெய்யோடு ஐயவி அப்பி ஐது உரைத்துக்
குடந்தம் பட்டுக் கொழுமலர் சிதறி
230 முரண்கொள் உருவின் இரண்டு உடன் உடீஇச்
செந்நூல் யாத்து வெண் பொரி சிதறி
மத வலி நிலைஇய மாத் தாள் கொழு விடைக்
குருதியொடு விரைஇத்தூ வெள் அரிசி
சில் பலிச் செய்து பல் பிறப்பு இரீஇச்
235 சிறு பசு மஞ்சளொடு நறு விரை தெளித்துப்
பெரும் தண் கணவீர நறுந் தண் மாலை
துணை அற அறுத்துத் தூங்க நாற்றி
நளி மலைச் சிலம்பின் நல் நகர் வாழ்த்தி
நறும் புகை யெடுத்துக் குறிஞ்சி பாடி
240 இமிழ் இசை அருவியொடு இன் இயம் கறங்க
உருவப்பல் பூத் தூஉய் வெருவரக்
குருதிச் செந்தினை பரப்பிக் குறமகள்
முருகு இயம் நிறுத்து முரணினர் உட்க
முருகு ஆற்றுப்படுத்த உரு கெழு வியன் நகர்
245 ஆடுகளம் சிலம்பப்பாடிப்பல உடன்
கோடு வாய் வைத்துக் கொடு மணி இயக்கி
ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி
வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட
ஆண்டு ஆண்டு உறைதலும் அறிந்த ஆறே
250 ஆண்டு ஆண்டு ஆயினும் ஆகக் காண்தக
முந்து நீ கண்டுழி முகன் அமர்ந்து ஏத்திக்
கை தொழூஉப் பரவிக் கால் உற வணங்கி
நெடும் பெரும் சிமையத்து நீலப் பைஞ்சுனை
ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப
255 அறுவர் பயந்த ஆறு அமர் செல்வ
ஆல்கெழு கடவுள் புதல்வ மால் வரை
மலை மகள் மகனே மாற்றோர் கூற்றே
வெற்றி வெல் போர்க் கொற்றவை சிறுவ
இழை அணி சிறப்பிற் பழையோள் குழவி
260 வானோர் வணங்கு வில் தானைத் தலைவ
மாலை மார்பநூல் அறிபுலவ
செருவில் ஒருவ பொரு விறல் மள்ள
அந்தணர் வெறுக்கை அறிந்தோர் சொல் மலை
மங்கையர் கணவ மைந்தர் ஏறே
265 வேல்கெழு தடக் கைச் சால் பெரும் செல்வ
குன்றம் கொன்ற குன்றாக் கொற்றத்து
விண்பொரு நெடு வரைக் குறிஞ்சிக் கிழவ
பலர் புகழ் நன் மொழிப் புலவர் ஏறே
அரும் பெறல் மரபிற் பெரும் பெயர் முருக
270 நசையுநர்க்கு ஆர்த்தும் இசை ஆள
அலந்தோர்க்கு அளிக்கும் பொலம் பூண் சேஎய்
மண்டு அமர் கடந்த நின் வென்று ஆடு அகலத்துப்
பரிசிலர்த் தாங்கும் உரு கெழு நெடு வேஎள்
பெரியோர் ஏத்தும் பெரும் பெயர் இயவுள்
275 சூர் மருங்கு அறுத்த மொய்ம்பின் மதவலி
போர் மிகு பொருநகுரிசில் எனப்பல
யான் அறி அளவையின் ஏத்தி ஆனாது
நின் அளந்து அறிதல் மன்உயிர்க்கு அருமையின்
நின் அடி உள்ளி வந்தனன் நின்னொடு
280 புரையுநர் இல்லாப் புலமையோய் எனக்
குறித்தது மொழியா அளவையில் குறித்து உடன்
வேறு பல் உருவிற் குறும் பல் கூளியர்
சாறு அயர் களத்து வீறு பெறத் தோன்றி
அளியன் தானே முது வாய் இரவலன்
285 வந்தோன் பெரும நின் வண் புகழ் நயந்து என
இனியவும் நல்லவும் நனி பல ஏத்தித்
தெய்வம் சான்றதிறல் விளங்கு உருவின்
வான் தோய்நிவப்பின் தான் வந்து எய்தி
அணங்கு சால் உயர் நிலை தழீஇப் பண்டைத் தன்
290 மணங் கமழ் தெய்வத்து இள நலம் காட்டி
அஞ்சல் ஓம்புமதி அறிவல் நின் வரவு என
அன்பு உடைநன் மொழி அளைஇ விளிவு இன்று
இருள் நிற முந்நீர் வளைஇய உலகத்து
ஒரு நீ ஆகித் தோன்ற விழுமிய
295 பெறல் அரும் பரிசில் நல்கும் மதி பலவுடன்
வேறு பல் துகிலின் நுடங்கி அகில் சுமந்து
ஆரம் முழு முதல் உருட்டி வேரல்
பூ உடை அலங்கு சினை புலம்ப வேர் கீண்டு
விண்பொரு நெடு வரைப் பரிதியில் தொடுத்த
300 தண் கமழ் அலர் இறால் சிதைய நன்பல
ஆசினி முதுகளை கலாவ மீமிசை
நாக நறுமலர் உதிர யூகமொடு
மா முக முசுக் கலை பனிப்பப் பூநுதல்
இரும் பிடி குளிர்ப்ப வீசிப் பெருங்களிற்று
305 முத்து உடைவான் கோடு தழீஇத் தத்துற்று
நன்பொன் மணி நிறம் கிளரப் பொன் கொழியா
வாழை முழு முதல் துமியத் தாழை
இளநீர் விழுக் குலை உதிரத் தாக்கிக்
கறிக் கொடிக் கருந் துணர் சாயப் பொறிப்புற
310 மடநடை மஞ்ஞை பலவுடன் வெரீஇக்
கோழி வயப் பெடை இரியக் கேழ லொடு
இரும் பனை வெளிற்றின் புன்சாய் அன்ன
குரூஉ மயிர் யாக்கைக் குடா அடி உளியம்
பெருங் கல் விடர் அளைச் செறியக் கருங் கோட்டு
315 ஆமா நல் ஏறு சிலைப்பச் சேண் நின்று
இழுமென இழி தரும் அருவிப்
பழம் முதிர் சோலை மலை கிழவோனே.
உரை
உரை:: (1-6) உலகத்திலுள்ள உயிரினங்களெல்லாம் மகிழும்படியாக எழுந்து மகா மேருவை வலமாகச் சுற்றி வரும், பலர் புகழ்கின்ற சூரியன் கடலிடத்தே (சூரியன் புற இருளைக் கெடுக்குமாறு போலத் தன்னை மனத்தால் நோக்குவாரது அகவிருளை (= மலத்தை) முருகன் எளிதில் கெடுத்து விடுகிறான் உதய சூரியனை நோக்குவாருக்குக் கடலின் நீலமும் சூரியனது செம்மையும் தோன்றுவது போல, முருகனை நோக்குவாருக்கு மயிலின் நீலமும் அவனது திருமேனிச் செம்மையும் தோன்றும்.) தோன்றினாற் போல, நீக்கமின்றி எப்போதும் நெடுந்தூரம் சென்று விளங்கும் ஒளியையுடையவன் முருகன். அவனது அழகும் வலிமையுமுள்ள திருவடிகள் வந்தடைந்தோர்களுடைய தீவினையையும் அறியாமையையும் போக்கி அவர்களைக் காக்கும் அவனுடைய திருக்கரங்கள் இடியைப் போலப் பகைவரை அழிக்க வல்லன. அவன் குற்றமற்ற கற்பினையும் ஒளி பொருந்திய நெற்றியினையுமுடைய தெய்வ யானையின் கணவன்
(7-11) கடலிலே நீரை முகந்து கொண்ட சூல் முதிர்ந்த கருமேகம், சூரியனும் சந்திரனும் இருளை நீக்கும் ஆகாயத்தே நின்று, பெருந்துளிகளைச் சிதறிக் கார் காலத்து முதல் மழையைப் பொழிந்த குளிர்ந்த மணம் பொருந்திய காட்டிலே, இருள் மிகும்படியாகத் தழைத்தோங்கிய பருத்த அடிப்பாகத்தையுடைய வெண்கடம்பினது பூவால், தேருருள் போலச் செய்யப்பட்ட குளிர்ந்த உருண்ட பூமாலைகள் அவனது மார்பில் அசைந்து கொண்டிருக்கும்
(12,40,41, 13-19) பெரிய மூங்கில்கள் ஓங்கி வளரும் ஆகாயத்தை அளாவுகின்ற மலையிலேயுள்ள சோலையில், தெய்வத்தன்மையால் அச்சத்தை விளைவிக்கின்ற தெய்வப் பெண்கள் பலருங்கூடி, அழகு விளங்குகின்ற மலையிடமெல்லாம். எதிரொலி எழும்படியாகப் பாடியாடுவர். கிண்கிணி சூழ்ந்த ஒளி பொருந்திய சிவந்த சிறிய பாதங்களையும் திரண்ட கால்களையும், வளைந்து ஒடுங்கிய இடையையும் உடையவர்கள் இப்பெண்கள். இவர்களுடைய தோள்கள் மூங்கிலைப் போன்றிருக்கும்; இவர்களது பூந்துகில் இந்திரகோபப் பூச்சியின் நிறத்தைப் போல இயல்பாகச் சிவந்திருக்கும்; அது சாயந்தோய்க்கப் பெற்றதன்று. பல மணிகள் கோத்த ஏழுவடங்கள் கொண்ட மேகலையை இவர்கள் அரையில் அணிந்திருப்பார்கள். இயற்கையாகவே இவர்கள் மிகுந்த அழகுடையவர்கள். இவ்வித அழகைச் செயற்கையில் தோன்றச் செய்வது அரிது. இவர்களணிந்த ஒளிமிக்க ஆபரணங்கள் சாம்பூநதமென்ற பொன்னால் செய்யப்பட்டவை. இவர்கள் நிறம் குற்றமற்றது; நெடுந்தூரத்தைக் கடந்து செல்லும் காந்தியையுடையது.
(20-39) இவர்கட்குத் துணை செய்யும் தோழிப் பெண்கள், கோதி வகிர்ந்து ஒழுங் காயமைந்த நுனிகளையும் மென்மையையும் பளபளப்பையும் உடைய இவர்களது கூந்தலிலே, சிவந்த காம்புகளையுடைய சிறிய வெட்சிப் பூக்களின் இதழ்களை விடு பூவாகத் தூவி, அதற்கு நடுவே பசும் காம்பினையுடைய குவளைப் பூவின் மாசற்ற இதழ்களைக் கிள்ளியிட்டு முடிப்பர்; சீதேவியென்னும் தலையாபரணத்தையும் வலம்புரி வடிவாகச் செய்த தலையாபரணத்தையும் வைத்தற்குரிய இடத்தே வைப்பர்; திலகமிட்ட மணங்கமழும் இவர்களது அழகிய நெற்றியிலே சுறாமீனின் திறந்த வாய்போலச் செய்த ஆபரணம் தங்கும்படி அலங்கரிப்பர்; நன்றாக முடித்த இவரது கொண்டையிலே பெரிய குளிர்ந்த சண்பகப்பூவைச் சொருகுவர்; கரிய புறவிதழ்களையும் பஞ்சு நுனி போன்ற மேற்பக்கத்தையுமுடைய பூக்களுள்ள மருதின் ஒளி பொருந்திய பூங்கொத்துக்களை அதன் மேலே இட்டு வைப்பர்; நீர்க்கீழுள்ள பசிய கிளையினின்றும் மேலே எழுந்து தோன்றுகின்ற சிவந்த அரும்புகளைச் சேர்த்துக் கட்டிய மாலையை அதன் மேலே வளைவாகச் சூட்டுவர்; அசோக மரத்தின் ஒளி பொருந்திய தளிர்களை ஒரே அளவாகத் திருத்தி இவர்களது வளமை பொருந்திய காதிலே இட்டு நிறைத்திருப்பர். நுட்ப வேலையையுடைய ஆபரணங்களையணிந்த இவர்களது மார்பிடத்தே அத்தளிர்கள் அசைந்து கொண்டிருக்கும். திண்ணிய வைரத்தையுடைய வாசனைமிக்க சந்தனமுரைத்த குழம்பை மணம் வீசும் மருதம் பூவை அப்பினாலொப்பத் தமது அழகிய மார்பில் இவர்கள் அப்பியிருப்பர்; விரிந்த மலரையுடைய வேங்கையின் நுண்ணிய மகரந்தத்தையும் அதன்மேலே அப்புவர்; விளா மரத்தினது சிறிய தளிரைக்கிள்ளி அழகுபெற ஒருவர் மேலோருவர் தெறித்து விளையாடுவர்; 'வஞ்சியாது எதிர்நின்று கொல்லுகின்ற வெற்றியையுடைய கோழிக் கொடி நெடுங்காலம் வாழ்வதாக" என்று கூறி வாழ்த்துவர்.
(42-44) இத்தகைய சிறப்புவாய்ந்த சோலையையுடைய மலைச்சரிவிலே, குரங்கு களுங்கூட ஏறியறியாதபடி மரங்கள் அடர்ந்து நெருங்கியிருக்கும்; அவ்விடத்தே காந்தள் பூக்கள் பூத்திருக்கும். அவைகளை வண்டுகள் மொய்ப்பதில்லை. ஒளி வீசுகின்ற அக் காந்தளின் பூக்களாலாகிய பெரிய குளிர்ந்த மாலையானது முருகன் திருமுடியிலே விளங்கிக் கொண்டிருக்கும்.
(45,46,57-60) விளங்குகின்ற இலை வடிவான நுனியையுடைய (முருகனது) நீண்ட வேலாயுதம், நிலத்திலே பழமையாகவுள்ள குளிர்ந்த கடலும் நிலை குலையும்படி அதனுள்ளே புகுந்து, அங்கே ஒளிந்துக் கொண்டிருந்த சூரபன்மனை இரு கூறாகப் பிளந்தது. குதிரைத் தலையும் மனிதவுடலுமாகிய இரண்டு ஒன்றாயமைந்த அச்சூரபன்மனுடைய சரீரம் உடனே அறுபட்டு வேறு வேறாகத் துண்டித்துப் போயிற்று. கவிழ்ந்து தொங்கும் பூங்கொத்துக்களையுடைய மாமரமாக அவன் மாறிநின்றான். அச்சம் தோன்றப் போரிலே மண்டிச்சென்று, அவுணர்கட்கு நல்வெற்றியே இல்லாமற் போகும்படி, முருகன் அவனைக் கொன்றான்.
(47-56) அப்போர்க்களத்தில் வந்து கூடிய பெண் பேய்கள் காய்ந்த மயிரையுடையன; ஒழுங்கற்ற பல்வரிசையையும் பெரியவாயையும் உடையன; சுழல்கின்ற விழிகளையும், ஊன் வடிவதால் பசுமையான கண்களையும், கொடும் பார்வையையும் உடையன; பிதுங்கிய கண்ணுடைய ஆந்தையும் கடும் பாம்பும் தொங்கிக் கிடக்க, பெரிய மார்பை அலைக்கின்ற காதுகளையுமுடையன. அவை, இரத்தத்தை அளைந்த, கூரிய நகமுடைய, வளைந்த, தம் விரல்களினாலே, இறந்துபட்ட அவ்வவுணர்களுடைய முடை நாற்றம் மிக வீசுகின்ற பெரிய தலைகளிலுள்ள கண்களைத் தோண்டிப் புசித்து, அத்தலைகளை, ஒள்ளிய வளைகளையணிந்த தம்முடைய அகன்ற கைகளிலே ஏந்தி, நிணத்தைத் தின்று கொண்டிருக்கும் வாய்களையுடையனவாக, அச்சந்தோன்ற, முருகன் வஞ்சியாது அவுணர்களின் எதிரே நின்று அவர்களைக் கொன்ற வெற்றிக்களத்தைப் பாடித் தமது தோள்களையசைத்துத் துணங்கைக் கூத்தாடின.
(60-77) இத்தகைய குற்றமற்ற வெற்றியினையும், ஒருவராலும் அளந்தறிய வொண்ணாத நல்ல புகழினையும், சிறந்த வேலாயுதத்தையும் உடையவன் முருகன். அவனுடைய திருவடியை நினைக்கின்ற, நன்மை பொருந்திய கொள்கையுடைய சிறந்த உள்ளத்தோடு அவனிடம் போதலை நீ விரும்பினையாயின், நற்குணங்கள் பலவும் சேருதலால் நன்மை பொருந்திய நெஞ்சத்திலே உண்டான உன் இனிய விருப்பமானது கைகூடும்படி நீ கருதிய செயலை இப்பொழுதே பெறுவாய். அதைப் பெறுதற்கு அவன் எங்கே உளன் என்னில், திருப்பரங்குன்றிலே நெஞ்சார விரும்பி அமர்ந்திருத்தலும் உரியன். போரில் வெற்றிக் குறியாக விரும்பிக் கட்டி வானுற ஓங்கிய நீண்ட கொடியையும், வரிந்து கட்டிய பந்தும் பாவையும் (பகைவரை மகளிர் கோலம் பூணச்செய்து, வாயிலிலே இருத்தி, அங்கே அவர் விளையாடுதற்காக நூலால் செய்யப்பட்ட பந்தும் பொம்மையும் தொங்கவிட்டு வைப்பர்.) இப்போது பகைவரின்மையால் அப்பந்து முதலியன பயனற்றுக் கிடந்தன. பயனற்றுக் கிடக்கும்படி பகைவர்களை அழித்தவிட்டபடியினாலே போர்த்தொழில் அரிதாகி விட்ட வாயிலையும், திருமகள் வீற்றிருக்கும் குற்றமற்ற கடை வீதியையும், மாடங்கள் மிக்க தெருக்களையுமுடைய மதுரைக்கு மேற்கேயுள்ளது இத்திருப்பரங்குன்றம். அழகிய சிறகுகளையுடைய வண்டின் அழகான திரள்கள், கருஞ்சேறு நிறைந்த அகன்ற வயல்களிலே முறுக்கு அவிழ்ந்து மலர்ந்த முள் செறிந்த தண்டுகளையுடைய தாமரைகளிலே இராப்போது உறங்கி, விடியற்காலத்திலே தேன் மணக்கின்ற நெய்தற் பூவையூதி, சூரியன் தோன்றியவுடன் கண்களைப்போல மலரும் அழகிய சுனைப் பூக்களிலே சென்று ரீங்காரம் செய்கின்ற வளத்தினையுடையது இது. முருகன் இங்கே இருப்பது மன்றி.
(124,125,78-88) நன் மக்கள் புகழ்ந்த நன்மை ஓங்கிய உயர்ந்த சிறப்பையும் புகழையுமுடைய திருச்செந்தூர் என்னும் பதியிலே எழுந்தருளியிருத்தலையும் (முருகன்) தனது நிலை பெற்ற தன்மையாக உடையவன். தாழ்ந்து கிடக்கும் மணிகள் மாறிமாறி ஒலிக்கின்ற பக்கங்களையும், வேகமான நடையையும், கூற்றுவனது வலியை ஒத்துப் பிறரால் தடுத்தற்கரிய வலியினையும், காற்று எழுந்ததைப் போலவுள்ள வேகத்தையுமுடைய யானையின் மேலே, கூரிய நுனியுடைய தோட்டி (= அங்குசம்) வெட்டின வடுவழுந்திய புள்ளியையுடைய அதன் மத்தகத்தே பொன்னரிமாலையும் பட்டமும் கிடந்து அசையும்படி, அவன் ஆங்கு ஏறியிருப்பன்; ஐந்துவகை யுறுப்புக்களையும் நிரம்பிய வேலைப்பாட்டையுமுடைய கிரீடத்திலே, வெவ்வேறு நிறங்களோடு விளங்குகின்ற அழகிய மணிகள் மின்னலைப் போல ஒளிவிட்டு அவனது சிரசை அழகு படுத்தும். நெடுந்தூரம் பிரகாசிக்கும். இயற்கையையுடைய வெண்மதியைச் சூழ்ந்து, அதை விட்டு நீங்காத நக்ஷத்திரங்களைப் போல, ஒளி நிரம்பி வகையாயமைந்த பொற் குண்டலங்கள் அவன் காதுகளில் அசைந்து விளங்கும்.
(89-103) வருத்தங்களைப் பொருட்படுத்தாத கொள்கையோடு தமது தவத்தொழிலை முடிக்கின்றவர்களுடைய மனத்திலே, காந்தி மிக்க அவனது திருமுகங்கள் தோன்றும். அம்முகங்களுள் ஒன்று, இருள் மிக்க இப்பேருலகானது மாசு சிறிதுமில்லாது விளங்கும்படியாகப் பல கிரணங்களைத் தோற்றுவிக்கும்; ஒரு முகம், அன்பர்கள் துதிக்க, அவர்கட்கிணங்கி இனிதாகத் தோன்றி, மகிழ்ந்து, அன்போடு வரங் கொடுக்கும்; ஒரு முகம், மந்திரத்தையுடைய வேதமுறையினின்றும் வழுவாத அந்தணர்களுடைய யாகங்களில் இடையூறு வாராதபடி நோக்கம் செலுத்தும்; ஒரு முகம், மக்கள் அறிவினுள் அகப்படாது எஞ்சி நின்ற பொருள்களையெல்லாம் உலகம் இன்புறும்படியாக உணர்த்திக் கலை நிரம்பிய சந்திரன் போலத் திசைகளையெல்லாம் விளக்கிக் கொண்டிருக்கும்; ஒரு முகம், பகைவர்களையழித்து அவர்கள் பிறர் மேற்செய்யும் போரைக் கெடுத்துத் தீராத கோபங் கொண்ட நெஞ்சத்தோடு போர்க்களத்தை விரும்பும்; ஒரு முகம் கொடி போன்ற இயுடையவளாயும் குறவரது இளம் பெண்ணாயுமுள்ள வள்ளியோடு மகிழ்ச்சியை நாடியிருக்கும். இப்படி அவனுடைய ஆறுமுகங்களும் அவ்வவற்றிற்குரிய தொழில்களை முறைப்படச் செய்துவருவன.
(104-118) மாலை தாழ்ந்து கிடக்கும் அழகிய பெருமை பொருந்திய அவனது மார்பிலுள்ள உத்தம லக்ஷணமாகிய ரேகைகள் அவனுடைய தோள்கள் வரை நீண்டிருக்கும் அந்தத் தோள்கள் மிக்க வலிமையுடையனவாய் ஒளி பொருந்திப் புகழ் நிறைந்து வளைந்தும் நிமிர்ந்துமிருக்கும் அவன் கைகளில் ஒன்று, ஆகாயத்திலே செல்லுகின்ற ஒழுக்கத்தினையுடைய தெய்வ இருடிகளுக்குப் (சூரியனது முழு வெப்பம் உயிர்களாற் பொறுக்க முடியாததெனக் கருதி, சூரியனோடு சுற்றி வந்து தமது அருளினால் அவ்வெப்பத்தைச் சில முனிவர்கள் குறைக்கின்றனரென்பது பழைய வரலாறு) பாதுகாவலாக ஏந்தியது; ஒரு கை, இடுப்பிலே வைத்தது; ஒரு கை, அழகிய ஆடையணிந்த தொடையின் மேலே கிடப்பது; ஒரு கை, அங்குசத்தைப் பிடித்துச் செலுத்துவது; இரண்டு கைகள், அதிசயமான கரிய கேடகத்தையும் வேலாயுதத்தையும் சுழற்றிக் கொண்டிருப்பன; ஒரு கை, மார்பிலே தங்கி விளங்குவது; ஒரு கை, மாலையோடு அழகு பெறத் தோன்றுவது; ஒரு கை, உயர்த்தப்பட்டதால் நழுவித் தாழ்கின்ற தொடியோடு மேலே சுழன்று கொண்டிருப்பது; ஒரு கை, இனிய ஓசையையுடைய ஒலிக்கின்ற மணியை மாறி மாறி ஒலிக்கச் செய்வது; ஒரு கை, நீல நிறத்தையுடைய மேகத்திலிருந்து நிரம்பிய நீர்த்துளிகளைப் பொழியச் செய்வது. ஒருகை, தெய்வப் பெண்களுக்கு மணமாலையைச் சூட்டுவது. இவ்வாறு பன்னிரண்டு கைகளும் தத்தமக்குரிய முறையிலே தொழில் செய்கின்றன.
(119-123,125) ஆகாய துந்துபி ஒலித்துக் கொண்டிருக்க, திண்ணிய வைரம் பாய்ந்த ஊது கொம்புகள் சப்திக்க, வெண்மையான சங்குகள் முழங்க, வலிமையைத் தன்னிடத்திலே கொண்ட இடியேற்றினைப் போன்ற முரசத்தோடு, பல புள்ளிகளையுடைய மயிலானது அவனுடைய வெற்றிக் கொடியிலேயிருந்து ஒலித்துக் கொண்டிருக்க, ஆகாய வழியாக விரைவாய்ச் செல்லுதலை மேற்கொண்டு அவன் இங்கே (திருச்செந்தூரிலே) வந்து தங்குவான். அதுவுமன்றி,
(175,176, 164-168,173,174) முருகன், வருத்தமில்லாத அருட் கற்பினையுடைய தெய்வயானையுடன் ஆவினன்குடி என்னும் திருப்பதியிலே சிலநாள் இருத்தலும் உரியன் தாமறையிற் பிறந்தவனாயும், கேடில்லாத காலத்தையுடையவனாயுமுள்ள நான்முகன் (முருகக் கடவுள் அசுரரையழித்து இந்திரன் மகள் தெய்வயானையை மணந்த பொழுது தம் கையிலுள்ள வேலாயுதத்தை நோக்கி "நமக்கு எல்லாம் தந்தது இவ்வேல்" என்று கூறினார். அப்போது அருகேயிருந்த பிரமன் "இவ்வேலுக்கு இப்பெருமை என்னால் வந்ததே" என்றான். உடனே முருகர் "நம் கை வேலுக்கு சக்தி கொடுப்பவன் நீயா?" என்று கோபித்து "இங்ஙனம் கூறிய நீ பூலோகத்துப் போ" என்று சபித்தார். இச்சாபத்தை நீக்கும் பொருட்டுத் திருமால் முதலியோர் இவ்வுலகத்துக்கு வந்தனர் என்பது பழைய வரலாறு.) காரணமாக, உற்ற குறையானது தீரும் பொருட்டு, திருமால் முதலியோர், பகல்போலத் தெளிவாக மயக்கமற்றிருக்கின்ற அறிவுடையுடையவராயும் நால்வகையான இயற்கையை யுடையராயும் உள்ள முப்பத்து மூன்று தேவர்களோடும், பதினெட்டு வகையான உயர் நிலையைப் பெற்ற கணங்களோடும் அந்தர மார்க்கமாக வந்தார்கள்.
(137, 126 - 136) அவர்களுள் வெறுப்பில்லாத அறிவையுடைய முனிவர்கள் விருப்பத் தோடு கூடி முன்னே சென்றார்கள். அவர்கள் மரவுரியைத் தைத்து உடையாக அணிந்தவர்கள்; வலம்புரிச் சங்கை ஒத்ததாய் அழகாய் முடிக்கப்பட்ட வெண்மையான நரை முடியையுடைவர்கள்; அழுக்கின்றி விளங்கும் மேனியையுடையவர்கள்; மான்தோலைப் போர்த்துக் கொண்டிருக்கிற தசையற்ற மார்பையுடையவர்கள்; எலும்புகள் மேலே எழுந்து தோன்றும் சரீரத்தையுடைவர்கள்; பல நாட்கள் கழிந்தபின் உண்ணும் இயல்பையுடைவர்கள்; பகையும் கோபமும் நீங்கிய மனத்தை யுடையவர்கள்; எல்லாவற்றையும் கற்றுணர்ந்தோருங் கூட அறிய முடியாதபடியுள்ள அறிவை-யுடையவர்கள்; கற்றவர்கட்கெல்லாம் எல்லையாயிருக்கின்ற தலைமையை-யுடையவர்கள்; காமத்தையும் கடுஞ்சினத்தையும் நீக்கின அறிவாளர்கள்; மனவருத்தம் என்பதைச் சிறிதும் அறியாத தன்மையை யுடைவர்கள்.
(138 - 147) அப்போது, அன்புநிறைந்த நெஞ்சையும் மென்மையான மொழியை யுமுடைய கந்தருவர்கள் இனிய யாழை வாசித்துச் சென்றார்கள். புகையைப்போல நுண்ணியதாயும் மாசற்றதாயுமுள்ள தூயவுடையை இவர்கள் தரித்தவர்கள்; அரும்பு மலர்ந்த மாலையை மார்பிலே அணிந்தவர்கள். செவியினாலே அளந்து வைத்துக் கூட்டிள நரம்புகளையுடையது அவர்களுடைய யாழ். இக் கந்தருவர்களோடு இவர்களது பெண்டிரும் விளங்கித்தோன்றினார்கள். அவர்கள் நோயின்றி அமைந்த சரீரத்தையுடையவர்கள்; விளங்குகின்ற மாந்தளிரைப் போன்ற நிறத்தையுடையவர்கள்; பொன்னுரை விளங்குவதைப் போன்ற அடிவயிற்று வரிகளையுடையவர்கள்; கண்ணுக்கினிய ஒளியோடு கூடிய பதினெண் கோவை மேகலையை யணிந்த அரையையுடைவர்கள்; மாசற்றவர்கள்.
(160 - 163) இவ்வாறு இவர்கள் உடன் வர, திருமாலும், உருத்திரனும், இந்திரனும், நான்கு பெருந் தெய்வங்களாகிய திக்குப்பாலகர்களையுடையதும், பல நன்னகர்களை நிலையாகவுடையதும், உயிர்களைக் காக்கும் ஒரே கொள்கையையுடைய பலரும் புகழ்கின்ற திரிமூர்த்திகளும் தலைவராக இருத்தலினாலே இன்புறுகின்றதும், ஆன இப்பூமியிலே தோன்றினார்கள்.
(148-159) அவர்களுள், விஷம் தங்கியிருக்கிற துளையையுடைய வெண்மையான நச்சுப் பற்களையும், நெருப்புப்போல மூச்சுவிட்டு யாவருக்கும் பயமுண்டாகும்படி வருகின்ற கொடிய வலிமையினையும் உடைய பாம்புகள் அழியும்படி, புடைக்கின்ற பல வரிகளையுடைய வளைந்த சிறகுகளோடு கூடிய கருடனை, நீண்ட கொடியாகக் கொண்டவன் திருமால். வெண்ணிறமான ரிஷபத்தை வலப்பக்கத்திலே கொடியாக உயர்த்தியவனாயும், பலரும் புகழ்கின்ற வலிமைமிக்க தோளையுடையவனாயும், உமாதேவி ஒரு பக்கத்திலே வீற்றிருக்க விளங்குபவனாயும், இமையாத முக்கண்களையுடையவனாயும், திரிபுரங்களையும் அழித்த மிகுந்த வலிமையை யுடையவனாயும் இருப்பவன் உருத்திரன் ஆயிரம் கண்களையுடையவனாயும், நூறு யாகங்களைச் செய்து முடித்தவனாயும், அதனால் பகைவர்களை வென்று கொல்கின்ற வெற்றியையுடையவனாயும், நான்கு கொம்புகளோடும் பெருந்தோற்றத்தோடு கூடிய நடையோடும் உயரத் தூக்கிய நீண்ட பெரிய தும்பிக்கையோடுங் கூடிய (ஐராவதம் என்னும்) யானையின் பிடரியிலே ஏறியவனாயும், செல்வம் மிகுந்தவனாயும் இருப்பவன் இந்திரன்.
(169 - 172) நக்ஷத்திரங்கள் வானத்தில் பூத்ததுபோன்ற தோற்றத்தையுடையவராயும், அவை உலாவுகின்ற விண்ணிடத்தைச் சேர்ந்து காற்று எழுந்தாலொத்த வேகத்தையுடையவராயும் காற்றிலே நெருப்பு எழுந்தாலொத்த வலிமையை யுடையவராயும், நெருப்புப் பிறக்கும்படி இடியேறு இடித்தாற் போன்ற குரலை உடையவராயும் இவர்கள் சென்றார்கள்.
(176) இவர்கள் யாவரும் இங்ஙனமாக வந்து காணும்படி இங்கே (திரு ஆவினன் குடியில்) தங்கியிருப்பான் அதுவுமன்றி,
(177-189) ஏரகம் என்னும் திருப்பதியிலே முருகன் எழுந்தருளியிருத்தலும் உரியன். இங்கே அவனை இருபிறப்பாளராகிய அந்தணர் உரிய காலத்தைத் தெரிந்து துதிப்பர். இவர்கள் தாய் வழியிலும் தந்தை வழியிலும் நன்கு மதிக்கப்பட்ட பழைய குடிகளிலே தோன்றியவர்கள்; தங்களுக்குரிய ஆறு (ஆறுதொழில்கள் - ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல்.) தொழில்களிலும் இலக்கணம் வழாது நடப்பவர்கள்; தங்கள் இளமையில் நாற்பத்தெட்டு வருடங்களைப் பிரமசரியத்திற் கழித்தவர்கள்; அறத்தைச் சொல்லும் கொள்கையுடையவர்கள்; மூன்று வடிவாக அமைத்து வளர்க்கும் முத்தீயாகிய (முத்தி ஆகவனீயம், தக்கிணாக்கினி, காருக பத்தியம்) செல்வத்தையுடைவர்கள்; ஒன்பது இழைகளைக் கொண்டு முப்புரி அமைந்த நுண்ணிய பூணூலையுடையவர்கள்; இவர்கள் ஈரமான ஆடை உடம்பிலே கிடந்துலரும்படியுடுத்து, கைகளை உச்சியிற் குவித்து, முருகனைப் புகழ்ந்து, ஆறெழுத்தாகிய மந்திரத்தை வாய்க்குள்ளே உச்சரித்து, மணம் பொருந்திய நல்ல புஷ்பங்களை ஏந்தி வழிபடுவார்கள். இவ்வழிபாட்டுக்கு மிகவும் மகிழ்ந்து முருகன் இங்கே திருவேரகத்தில்) தங்கியிருப்பான். அதுவுமன்றி
(217, 193 - 205) குன்றுதோறும் வேலனாக (வேலன் = படிமத்தான் = தேவராளன் கோயிலிற் பூசை செய்பவன். இவன் ஆவேசம் பெற்று ஆடிக்குறி முதலியன சொல்லுதல் பண்டைக்கால வழக்கு. வேலைக் கையிற் பிடித்து ஆடுவதால் இவனுக்கு வேலன் என்பது பெயராயிற்று மலைநாட்டில் வேலன் என்ற பெயரோடு இப்பூசகன் இன்றும் வழங்கப்படுகிறான்.) நின்று ஆடலையும் முருகன் தனது நிலை பெற்ற குணமாக உடையவன் குன்றுகளிலே கொலைத்தொழிலைச் செய்யும் வலிமை பொருந்திய வளைகின்ற வில்லையுடைய வேடர்கள் மணமுள்ள சந்தனத்தை பூசி, நிறம் விளங்கும் மார்பினராய், நெடுங்காலமாக மூங்கிலிலே விளைந்த இனிய கள்ளின் தெளிவை அங்கே சிற்றூர்களிலுள்ள தங்கள் சுற்றத்தாருடன் கூடி உண்டு மகிழ்ந்து, தொண்டகம் என்னும் பறையைக் கொட்டி, குரவைக் கூத்தாடுவார்கள். இவர்களுடைய பெண் மக்கள், விரலால் வலிந்து மலரச் செய்ததாயும் ஆழமான சுனையிலே பூத்ததாயும் வண்டுகள் நெருங்கி மொய்த்ததாயுமுள்ள கண்ணியை (தலை மாலையை) உடையவர்கள்; இதழ் பறித்துக் கட்டிய மாலையைச் சூடியவர்கள். சேர்த்துக்கட்டின கூந்தலையுடைவர்கள்; இலைகள் செறிந்ததாயும், சிவந்த தண்டினையுடையதாயுமுள்ள மராமரத்தின் வாசனை மிக்க பல வெண்மையான பூங்கொத்துகளையும், கஞ்சங் குல்லையையும், இடையிடையே விரவிக் கட்டின வண்டுண்ணும் பெரிய குளிர்ந்த தழையாடையை மணிவடங்கள் பூண்ட அரையிலே அசையும்படி உடுத்தவர்கள். மட நடையையுடையவர்கள்; மயிலினங்களைப் போன்ற இவர்களும் குரவைக் கூத்தாடுவார்கள்.
(216, 215, 217, 190 - 192, 206 - 274, 277) மெல்லிய தோள்களையுடையவர்களாயும் மான்பிணைகளைப் போன்றவர்களாயும் உள்ள இப்பெண்களைத் தன்னுடைய முழவையொத்த பெரிய கையினோலே தழுவி எடுத்து வேலனும் ஆடுவான். இவன் பச்சிலைக் கொடியிலே சாதிக்காயை இடையேயிட்டுத் தக்கோலக்காயைக் கலந்து காட்டு மல்லிகையுடனே வெண்தாளியைக் கட்டின கண்ணியையுடையவன்; சிவந்த மேனியையுடையவன்; செவ்வாடை யணிந்தவன்; சிவந்த அடிப் புறத்தையுடைய அசோக மரத்தின் குளிர்ந்த தளிரானது அசைகின்ற காதையுடையவன்; கச்சைக் கட்டிக் கழலணிந்து வெட்சி மாலை சூடியவன்; குழலையும் கொம்பையும் ஊதிச் சிறிய இசைகளை உண்டாக்குபவன்; ஆட்டுக்கிடாவையும் மயிலையுமுடையவன்; குற்றமற்ற கோழிக் கொடியுடையவன்; உயரமான வடிவத்தையுடையவன்; தோளிலே கடகத்தையணிந்தவன்; இடுப்பிலே இறுகக்கட்டிய கச்சையின் மேலே உடுத்ததாயும் நிலத்தின் வரை தாழ்ந்து புரளுவதாயுமுள்ள ஆடையையுடைவன்; நரம்புஒலித்தது போன்ற இனிய குரலிலே பாடும் பெண்களோடு ஆடுபவன்.இவ்வாறு குன்று தோறும் ஆடுதலுமன்றி,
(218-226) சிறிய தினையரிசியைப் பூக்களோடு கலந்து பிரப்பரசியாக (தெய்வத்தின் முன்பு குறுணி வீதம் கொள்கலன்களில் நிவேதனமாகப் பரப்பி வைக்கும் அரிசி முதலிய தானியங்கள்.) வைத்து, ஆட்டையறுத்து, கோழிக்கொடியை நிறுத்தி, ஊர்கள் தோறும் எடுத்த சிறப்புடைய திருவிழாக்களிலும் அவன் (முருகன்) இருப்பான். அன்பர்கள் தன்னை ஏத்துதலினாலே தான் மனமுவந்த இடங்களிலும் அவன் வசிப்பான். படிமத்தானாகிய வேலன் செய்த வெறியாடு களத்திலும், காட்டிலும், சோலையிலும், ஆற்றின் நடுவிலுள்ள அழகு வாய்ந்த திட்டுக்களிலும், ஆறுகளிலும், குளங்களிலும், இன்னும் பல்வேறிடங்களிலும், நாற்சந்தி முதலிய சந்திகளிலும், புதுப் பூக்களையுடைய கடம்ப மரத்திலும், ஊர் நடுவிலுள்ள மரத்தின் அடியிலும், அம்பலத்திலும், பசுக்கள் உராய்ந்து கொள்ளும் தறிகள் உள்ள இடங்களிலும் அவன் இருத்தற்குரியன்.
(243,244,227-248) அன்றியும், பகைவர்களஞ்சுமாறு தான் வந்து தோன்றும்படி வழிப்படுத்தின அச்சத்தைத் தருகின்ற மலைக் கோயில்களிலும் முருகன் உறைவான். ஆங்கே குறப்பெண்கள் மாட்சிமை தங்கிய சிறப்புள்ள கோழிக்கொடியை அமைப்பர்; நெய்யோடு வெண் சிறு கடுகை அப்புவர்; வெளியே கேட்காதபடி மந்திரத்தை உச்சரிப்பர்; வணங்கி அழகிய மலர்களைத் தூவுவர்; வெவ்வேறு நிறங்களையுடைய இரண்டு உடைகளை உடுத்துவர்; சிவப்பு நூலைக் காப்பாகக் கட்டி, வெண் பொரியைத் தூவி, மிக்க வலிமை பொருந்திய பெரிய கால்களையுடைய கொழுத்த மாடுகளின் இரத்தங் கலந்த வெண்மையான அரிசியைச் சிறு பலியாகச் கொடுத்துப் பிரப்பு வைப்பர்; அக்கோயிலில் பசு மஞ்சள் நீரையும் வாசனை நீரையும் தெளித்து, பெரிய குளிர்ந்த செவ்வலரி மாலைகளை ஒரே அளவாகத் துண்டித்துத் தொங்க விடுவர்; தூபம் காட்டுவர், குறிஞ்சிப் பண்களைப் பாடுவர்; இனிய அருவியொலியும், வாத்திய ஒலியும் ஒன்றாக முழங்க, பல நிறப் பூக்களைத் தூவுவர்; இரத்தங்கலந்த செந்தினையைப் பரப்புவர்; முருகன் விரும்புகின்ற வாத்தியங்களை வாசிக்கச் செய்வர்; 'மலையிலுள்ள சிற்றூர்களெல்லாம் வாழ்க' வென்று வாழ்த்துவர்; வெறிபாடும் களம் முழுவதும் ஆரவாரிக்கும்படி பாடுவர்; கொம்புகள் பலவற்றையும் ஊதி, வளைந்த மணிகளை ஒலிப்பித்து, கெடாத வலிமையையுடைய பிணிமுகம் என்னும் யானையை வாழ்த்துவர். அப்பெண்கள் இங்ஙனம் சாந்தி செய்ய, முருகனை வேண்டிக் கொண்டவர்கள் தாங்கள் வேண்டினவெல்லாம் பெற்றதால் அவனை வழிபட்டு நிற்பர்.
(249-252) முருகன் இவ்வாறு ஆங்காங்கே உறைந்திருத்தலும் உரியன். நான் அறிந்த அளவு இது மேற்கூறிய இடங்களில் அவன் உறைந்தாலும் சரி, அல்லது வேறிடங்களில் உறைந்தாலும் சரி, நீ அவனை நேரிற் காணும்பொழுது இனிய முகத்தோடு அவனைத் துதித்துக் கையினால் தொழுது வாழ்த்தி, அவன் திருவடிகள் உனது தலையிற் பொருந்தும்படி வணங்கிப் புகழ்வாயாக.
(253-287) "நெடிய பெரிய இமயத்தின் சரவணப் பொய்கையில், கார்த்திகைப் பெண்கள் அறுவரும் (இறைவனிடத்திருந்து இந்திரன் வாங்கிய கருவினைச் சப்தரிஷிகள் தாங்க முடியாது முத்தீக்குண்டத்திலிட்டுப் பிறகு அருந்ததி நீங்கலாக மற்ற ஆறு ரிஷி பத்தினிகட்கும் (இவர்களே கார்த்திகைப் பெண்கள்) தர, அவர்கள் அதனை விழுங்கிக் கருவுற்று சரவணப் பொய்கையிலே பதுமப் பாயலிலே ஆறு வடிவாக ஈன்றனர் என்பது வரலாறு) பெற்று, அக்கினி தன் கையிலே தாங்கிய ஆறு வடிவு பொருந்திய செல்வனே! கல்லாலின் கீழிருந்த கடவுளின் புதல்வனே! பெரிய பர்வதராஜனது புத்திரியின் மகனே! பகைவர்கட்குக் கூற்றம் போன்றவனே! வெற்றியைத் தரும் போரைச் செய்யவல்ல துர்க்கையின் புதல்வனே! ஆபரணங்களணிந்த சிறப்புடைய காடுகிழாளின் புதல்வனே! வளைந்த வில்லுடைய வானவர் படைக்குத் தலைவனே! கடம்பமாலை யணிந்த மார்பினனே! நூல்களையுணர்ந்த அறிஞனே! போரில் ஒப்பற்றவனே! பொருகின்ற வெற்றியுடைய வீரர் வீரனே! அந்தணர்க்குச் செல்வமாயிருப்பவனே! அறிவாளர்கள் புகழ்ச்சிச் சொற்களெல்லாம் ஒன்றாகக் குவிந்த மலையே! (வள்ளி தெய்வயானை யென்ற) மங்கையரின் கணவனே! வீரருட் சிறந்தவனே! வேல் தரித்த அகன்ற கையினையுடைய பெருஞ் செல்வனே! கிரவுஞ்சகிரியை அழித்ததனால் குன்றாத வெற்றியை யுடையவனே! ஆகாயத்தையளாவும் பெரிய மலைகளிருக்கும் குறிஞ்சிநிலத் தலைவனே! பலரும் புகழ்கின்ற நம்மொழிப் புலவர்களுட் சிறந்தவனே! பெறுதற்கரிய தன்மையுடைய முத்தி தரும் முருகனே! முத்தியை விரும்பினோர்க்கு அதைக் கொடுக்கும் பெரும் புகழாளனே! பிறரால் வருந்துவோர்க்கு அருள் புரியும் பொற்பணி பூண்ட சேயே! நெருங்கிய போர்களிலே வெற்றி கொண்ட தனது மார்பினாலே பரிசில் வேண்டுவோரைப் பாதுகாக்கும் நெடுவேளே! பயத்தைத் தருபவனே! கற்றறிந்த பெரியோர் துதிக்கும் பெரும் புகழ்பெற்ற கடவுளே! சூரபன்மாவின் குலத்தை வேரோடறுத்த வலிமை மிக்கவனே! மதவலி யென்ற பெயருடையோனே! போரில் வல்ல வீரனே! தலைவனே!" என்று நீ பலவாறாக நான் கூறிய முறைமையிலே விடாது அவனைப் புகழ்ந்து "உனது பெருமையை அளந்தறிதல் உயிர்கட்கு அரிதான காரியம், ஆகவே என்னால் உனது புகழை முழுதுங் கூறுதல் இயலாது, உன் திருவடியை நினைந்து இங்கு வந்தேன், ஒப்பற்ற புலமையுடையோனே!" என் று உனது விண்ணப்பத்தைத் தெரிவித்துக்கொள்.
(281-295,317) உனது விண்ணப்பத்தைச் சொல்லி முடித்தவுடனே, பல்வேறு வடிவங்கொண்ட சிறு பூதங்கள் பல, திருவிழா நிகழும் அவ்விடத்தே பெருமை மிகத் தோன்றி "இவன் தேவரீர் கிருபைக்குப் பாத்திரமானவன், அறிவு முதிர்ந்த சொல்வளமுடைய புலவன், தேவரீரது செழும்புகழை நாடி இங்கே வந்திருக்கின்றான் பெருமானே!" என்று இனிய நல்ல சொற்களால் பலவாறாக ஏத்தும். அப்போது தெய்வத் தன்மை நிரம்பியதாயும், வலிமை மிக்கதாயும், ஆகாயத்தை யளாவுகின்றதாயுமுள்ள உயர்ந்த வடிவோடு அவன் (முருகன்) தோன்றுவான். தோன்றி, அச்சம் தரவல்ல தனது பெருநிலையை உள்ளடக்கி, மணங்கமழும் தெய்வத் தன்மையுடைய, பழமையான தனது இளமை நலங்காட்டி, "உனது வரவை நான் அறிவேன், பயத்தை விட்டுவிடு" என்று அன்புள்ள நல்ல மொழிகளைப் பலகாலும் அருள்வான். கெடாத நீல நிறமுடைய கடல் சூழ்ந்த உலகத்தில் உனக்கொப்பாக ஒருவருமில்லையென்று கூறும்படி, பெறுதற்கரிய சிறந்த பரிசிலையும் அறிவுகள் பலவுடன் பழமுதிர்சோலை மலை கிழவோனாகிய அவன் கொடுத்தருள்வான்.
(296 - 317) அவனுடைய மலையிலுள்ள அருவி பல நிறம் பொருந்திய ஆடைகளைப் போல ஒடுங்கி அசைந்து வரும்; அகில்மரங்களைச் சுமந்து வரும்; சந்தன மரத்தின் அடித்தூர்களை உருட்டும்; பூக்கள் நிறைந்த மூங்கிற் கிளைகள் அசைந்து புலம்ப வேரைப்பறிக்கும்; தேவருலகையளாவும் நெடிய மலையில் தொடுக்கப்பட்டு, சூரிய பிம்பம் போலத் தோன்றுவதாயும் குளிர்ந்ததாயும் மணம் வீசுவதாயுமுள்ள தேன் கூடுகளைச் சிதைக்கும்; நல்ல ஆசினிப் பலாவின் முதிர்ந்த சுளைகள் பலவும், மலையுச்சியிலுள்ள சுரபுன்னை மரத்துப்பூக்களும் அவ்வருவிமேல் உதிர்ந்து விழ, கருங்குரங்கும் கருமுகக் கடுவனும் நடுங்க, அழகிய நெற்றியுடைய கரிய பெண்யானை குளிரால் ஒடுங்க, அவ்வருவி அலைவீசிச் செல்லும். பெரிய ஆண் யானையினது முத்துடைய வெண் கொம்புகளை வாரியெடுத்து, பொன்னிறமும் மணி நிறமும் விளங்கப் பொன்னைக் கொழித்துக் கொண்டு குதித்துச் செல்லும்; வாழையின் அடித்தூரைச் சாய்க்கும்; தெங்கின் பெரிய இளநீர்க்குலை உதிரும்படி தாக்கும்; மிளகுக் கொடியின் கரிய கொத்துக்களைச் சாய்த்துக் கவிழ்க்கும்; புள்ளியுடைய பீலியும் மடநடையுமுள்ள பல மயில்களை மருட்டும்; பெட்டைக் கோழிகளை வெருட்டும்; பனஞ் செறும்பின் புல்லிய கருநிறத்தைப் போன்ற மயிர் செறிந்த உடலையும் வளைந்த அடியையும் உடைய கரடியும், ஆண் பன்றியும் பெரிய கற்பிளவாகிய குகையிலே அஞ்சி ஒடுங்கும்படி செய்யும்; கரிய கொம்பினையுடைய காட்டெருமைக் கிடாக்கள் கதறும்படி மிக உயரத்திலிருந்து இழும் என்ற ஓசையுண்டாகும்படி அருவியானது விழுந்து செல்லும். இவ்வாறு அருவி விழுந்தோடும் மலைக்குத் தலைவனாகிய முருகன் உனக்கருள் புரிவான்.
----------
வினைமுடிபு
கணவன் (6) மார்பினன் (11) சென்னியனாகிய (44) சேயுடைய (61) சேவடிபடரும் உள்ளத்தோடே (62)
செல்லுஞ் செலவை நீ நயந்தனை யாயின் (64) நன்னர் நெஞ்சத்து இன்னசை வாய்ப்ப (65) இன்னே
பெறுதி (66) அது பெறுவதற்கு அவன் யாண்டுறையுமென்னில், குன்றமர்ந் துறைதலுமுரியன்; (77),
அலைவாய்ச் சேறலும் நிலை இய பண்பு; (125) ஆவினன்குடி அசைதலு முரியன்; (176) ஏரகத்துறைதலு
முரியன்; (189) குன்றுதோறாடலும் நின்றதன் பண்பு : (217) விழவு, நிலை, களன், காடு, கா, துருத்தி,
யாறு, குளன், வேறுபல்வைப்பு, சதுக்கம், சந்தி, கடம்பு, மன்றம், பொதியில், கந்துடைநிலை,
வியனகர் (220-244) முதலிய இடங்களில் ஆண்டாண்டுறைதலு முரியன்; இதை யானறிந்தவாறே
கூறினேன்; (249) முந்து நீ கண்டுழி ஏத்தி (251) பரவி வணங்கி (252) பல யானறி அளவையினேத்தி (277)
நின்னடியுள்ளி வந்தனனென (279) குறித்தது மொழியா வளவையில் (281) கூளியர் (282) தோன்றி (283) வந்தோன் பெரும நின் வண்புகழ் நயந்தென (285) மலைகிழவோன் (317) வந்தெய்தி (288) தழீஇ (289) இளநலங்காட்டி (290) அஞ்சல் அறிவன் நின்வர வென (291) நன்மொழி யளைஇ (292) பரிசில் நல்கும் (295) என வீடு பெறக்கருதிய இரவலனை நோக்கி வீடுபெற்றானொருவன் ஆற்றுப் படுத்தியதாக வினைமுடிபு செய்க.
-----------------
தனி வெண்பாக்கள்
குன்றம் எறிந்தாய் குரைகடலில் சூர்தடிந்தாய்
புன் தலைய பூதப் பொருபடையாய் - என்றும்
இளையாய் அழகியாய் ஏறூர்ந்தான் ஏறே
உளையாய்என் உள்ளத் துறை. 1
குன்றம் எறிந்ததுவும் குன்றப்போர் செய்ததுவும்
அன்றங்கு அமரரிடர் தீர்த்ததுவும் - இன்றென்னைக்
கைவிடா நின்றதுவும் கற்பொதும்பில் காத்ததுவும்
மெய்விடா வீரன்கை வேல். 2
வீரவேல் தாரைவேல்விண்ணோர் சிறைமீட்ட
தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் - வாரி
குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்
துளைத்தவேல் உண்டே துணை. 3
இன்னம் ஒருகால் எனதிடும்பைக் குன்றுக்கும்
கொன்னவில்வேல் சூர்தடிந்த கொற்றவா - முன்னம்
பனிவேய் நெடுங்குன்றம் பட்டுருவத் தொட்ட
தனிவேலை வாங்கத் தகும். 4
உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்
பின்னை ஒருவரையான் பின்செல்லேன் - பன்னிருகைக்
கோலப்பா வானோர் கொடியவினை தீர்த்தருளும்
வேலப்பா செந்தி வாழ்வே. 5
அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சல்என வேல்தோன்றும் - நெஞ்சில்
ஒருகால் நினைக்கில் இருகாலும் தோன்றும்
முருகா என் றோதுவார் முன். 6
முருகனே செந்தி முதல்வனே மாயோன்
மருகனே ஈசன் மகனே - ஒருகைமுகன்
தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்
நம்பியே கைதொழுவேன் நான். 7
காக்கக் கடவியநீ காவா திருந்தக்கால்
ஆர்க்குப் பரமாம் அறுமுகவா - பூக்கும்
கடம்பா முருகா கதிர்வேலா நல்ல
இடங்காண் இரங்காய் இனி. 8
பரங்குன்றிப் பன்னிருகைக் கோமான் தன் பாதம்
கரங்கூப்பிக் கண்குளிரக் கண்டு - சுருங்காமல்
ஆசையால் நெஞ்சே அணிமுருகாற்றுப்படையைப்
பூசையாக் கொண்டே புகல். 9
நக்கீரர் தாமுரைத்த நன்முருகாற்றுப்படையைத்
தற்கோல நாடோறும் சாற்றினால் - முற்கோல
மாமுருகன் வந்து மனக்கவலை தீர்த்தருளி
தான்நினைத்த எல்லாம் தரும். 10
(குறிப்பு: இவ்வெண்பாக்கள் சங்க நூல்களுள் ஒன்றாகிய பத்துப்பாட்டு மட்டுமுள்ள பழைய ஏட்டுப்
பிரதிகளிலில்லை; பத்துப் பாட்டில் ஒன்றாகிய திருமுருகாற்றுப்படை மட்டுமுள்ள புதிய ஏட்டுப்
பிரதிகளிலும் அச்சுப் பிரதிகளிலும் உள்ளன. இவற்றுள் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரது பதினொராந்
திருமுறைப் பதிப்பில் முதல் ஏழு வெண்பாக்களும், திரு.சுப்பராய செட்டியாரது மேற்படி திருமுறைப்
பதிப்பில் முதல் இரண்டு வெண்பாக்களும் மட்டும் அச்சிடப்பட்டுள்ளன. டாக்டர் உ. வே.
சாமிநாதையரவர்கள் தமது பத்துப்பாட்டுப் பதிப்பில் இவ்வெண்பாக்கள் அனைத்தையும்
வெளியிட்டிருக்கிறார்கள். திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் 44ஆம் திருவிளையாடல்
27ம் விருத்தம் "குன்ற மெறிந்தாய்" என்ற வெண்பா அக்காலத்தில் வழங்கியதை ஒருவாறு தெரிவிக்கிறது.
இவ்வெண்பாக்களின் மோனை எதுகை செய்யுட் போக்கு பொருட்போக்கு முதலியவற்றை
ஆராய்ந்த ஆராய்ச்சியாளர் இவை நக்கீரர் வாக்கல்ல வென்கின்றனர். இவ்வெண்பாக்கள்
17ம் திருமுறையின் மொத்த பாடற்றொகை எண்ணிக்கையிற் சேர்க்கப்படவில்லை)
=======================
5 . திருமுருகாற்றுப்படை - 2
(உரையாசிரியர் உரையுடன்)
உலக முவப்ப வலனேர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறுகடற்கண் டாஅங்கு
ஓவற விமைக்கும் சேண்விளங் கவிரொளி
உறுநர்த் தாங்கிய மதனுடை நோன்றாட்
5 செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை
மறுவில் கற்பின் வாணுதல் கணவன்
கார்கோள் முகந்த கமஞ்சூல் மாமழை
வாள்போழ் விசும்பில் வள்ளுறை சிதறித்
தலைப்பெயல் தலைஇய தண்ணறுங் கானத்து
10 இருள்படப் பொதுளிய பராரை மராஅத்து
உருள்பூந் தண்டார் புரளும் மார்பினன்
மால்வரை நிவந்த சேணுயர் வெற்பிற்
கிண்கிணி கவைஇய வொண்செஞ் சீறடிக்
கணைக்கால் வாங்கிய நுசுப்பிற் பணைத்தோட்
15 கோபத் தன்ன தோயாப் பூந்துகிற்
பல்காசு நிரைத்த சில்கா ழல்குற்
கைபுனைந் தியற்றாக் கவின்பெறு வனப்பின்
நாவலொடு பெயரிய பொலம்புனை யவிரிழைச்
சேணிகந்து விளங்கும் செயிர்தீர் மேனித்
20 துணையோ ராய்ந்த இணையீரோதிச்
செங்கால் வெட்சிச் சீறித ழிடையிடுபு
பைந்தாட் குவளைத் தூவிதழ் கிள்ளித்
தெய்வவுத்தியொடு வலம்புரி வயின்வைத்துத்
திலகந் தைஇய தேங்கமழ் திருநுதல்
25 மகரப் பகுவாய் தாழ மண்ணுறுத்துத்
துவர முடித்ததுகளறு முச்சிப்
பெருந்தண் சண்பகஞ் செரீஇக் கருந்தகட்டு
உளைப்பூ மருதினொள்ளிண ரட்டிக்
கிளைக்கவின் றெழுதரு கீழ்நீர்ச் செவ்வரும்பு
30 இணைப்புறு பிணையல் வளைஇத் துணைத்தக
வண்காது நிறைந்த பிண்டி யொண்டளிர்
நுண்பூணாகந்திளைப்பத் திண்காழ்
நறுங்குறடுரிஞ்சிய பூங்கேழ்த் தேய்வை
தேங்கமர் மருதிணர் கடுப்பக் கோங்கின்
35 குவிமுகிழிளமுலைக் கொட்டி விரிமலர்
வேங்கை நுண்டா தப்பிக் காண்வர
வெள்ளிற் குறுமுறி கிள்ளுபு தெறியாக்
கோழி யோங்கிய வென்றடு விறற்கொடி
வாழிய பெரிதென் றேத்திப் பலருடன்
40 சீர்திகழ் சிலம்பகஞ் சிலம்பப் பாடிச்
சூரர மகளிராடுஞ் சோலை
மந்தியு மறியா மரம்பயில் அடுக்கத்துச்
சுரும்பு மூசாச் சுடர்ப்பூங் காந்தட்
பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன்
45 பார்முதிர் பனிக்கடல் கலங்க வுள்புக்குச்
சூர்முதல் தடிந்த சுடரிலை நெடுவேல்
உலறிய கதுப்பிற்பிறழ்பற் பேழ்வாய்ச்
சுழல்விழிப் பசுங்கட் சூர்த்த நோக்கிற்
கழல்கட் கூகையொடு கடும்பாம்பு தூங்கப்
50 யலைக்குங் காதிற் பிணர்மோட்டு
உருகெழு செலவினஞ்சுவரு பேய்மகள்
குருதியாடிய கூருகிர்க் கொடுவிரற்
கண்டொட்டுண்ட கழிமுடைக் கருந்தலை
ஒண்டொடித் தடக்கையி னேந்தி வெருவர
55 வென்றடு விறற்களம் பாடித் தோள்பெயரா
நிணத்தின் வாயோள் துணங்கை தூங்க
இருபேருருவினொருபேரியாக்கை
அறுவேறு வகையினஞ்சுவர மண்டி
அவுணர் நல்வல மடங்கக் கவிழிணர்
60 மாமுதல் தடிந்த மறுவில் கொற்றத்து
எய்யா நல்லிசைச் செவ்வேற் சேஎய்
சேவடி படரும் செம்மலுள்ளமொடு
நலம்புரி கொள்கைப் புலம்புரிந் துறையும்
செலவுநீ நயந்தனை யாயிற் பலவுடன்
65 நன்னர் நெஞ்சத் தின்னசை வாய்ப்ப
இன்னே பெறுதிநீ முன்னிய வினையே
திருப்பரங்குன்று
செருப்புகன் றெடுத்த சேணுயர் நெடுங்கொடி
வரிப்புனை பந்தொடு பாவை தூங்கப்
பொருநர்த் தேய்த்த போரரு வாயில்
70 திருவீற்றிருந்த தீதுதீர் நியமத்து
மாடமலி மறுகிற் கூடற் குடவயின்
இருஞ்சேற் றகல்வயல் விரிந்துவா யவிழ்ந்த
முட்டாட் டாமரைத் துஞ்சி வைகறைக்
கட்கமழ் நெய்த லூதியெற்படக்
75 கண்போல் மலர்ந்த காமர் சுனைமலர்
அஞ்சிறை வண்டின் அரிக்கண மொலிக்கும்
குன்றமர்ந் துறைதலு முரியன்; அதாஅன்று
திருச்செந்தூர்
வைந்நுதி பொருத வடுவாழ் வரிநுதல்
வாடா மாலை ஓடையொடு துயல்வரப்
80 படுமணியிரட்டும் மருங்கிற் கடுநடைக்
கூற்றத் தன்ன மாற்றரு மொய்ம்பிற்
கால்கிளர்ந் தன்ன வேழ மேல்கொண்டு
ஐவேறுருவிற் செய்வினை முற்றிய
முடியொடு விளங்கிய முரண்மிகு திருமணி
85 மின்னுற ழிமைப்பிற் சென்னிப் பொற்ப
நகைதாழ்பு துயல்வரூஉம் வகையமை பொலங்குழை
சேண்விளங்கியற்கை வாண்மதி கவைஇ
அகலா மீனின் அவிர்வன இமைப்பத்
தாவில் கொள்கைத் தந்தொழின் முடிமார்
90 மனனேர் பெழுதரு வாணிற முகனே
மாயிருண்ஞாலம் மறுவின்றி விளங்கப்
பல்கதிர் விரிந்தன்றொமுகம், ஒருமுகம்
ஆர்வல ரேத்த அமர்ந்தினி தொழுகிக்
காதலினுவந்து வரங்கொடுத் தன்றே; ஒருமுகம்
95 மந்திர விதியின் மரபுளி வழாஅ
அந்தணர் வேள்வியோர்க்கும்மே, ஒருமுகம்
எஞ்சிய பொருள்களை யேமுற நாடித்
திங்கள் போலத் திசைவிளக் கும்மே, ஒருமுகம்
செறுநர்த் தேய்த்துச் செல்சமம் முருக்கிக்
100 கறுவுகொ ணெஞ்சமொடுகளம்வேட்டன்றே, ஒருமுகம்
குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின்
மடவரல் வள்ளியொடு நகையமர்த் தன்றே; ஆங்கம்
மூவிரு முகனும் முறைநவின் றொழுகலின்
ஆரம் தாழ்ந்த அம்பகட்டு மார்பிற்
105 செம்பொறி வாங்கிய மொய்ம்பிற் சுடர்விடுபு
வண்புகழ் நிறைந்து வசிந்துவாங்கு நிமிர்தோள்
விண்செலன் மரபின் ஐயர்க் கேந்திய தொருகை
உக்கஞ் சேர்த்திய தொருகை
நலம்பெறு கலிங்கத்துக் குறங்கின்மிசையசை இயதொருகை
110 அங்குசங் கடாவ வொருகை இருகை
ஐயிரு வட்டமொடெஃகுவலந் திரிப்ப
ஒருகை மார்பொடு விளங்க
ஒருகை தாயொடு பொலிய வொருகை
கீழ்வீழ் தொடியோடு மீமிசைக் கொட்ப வொருகை
115 பாடின் படுமணி யிரட்ட வொருகை
நீனிற விசும்பின் மலிதுளி பொழிய வொருகை
வானர மகளிர்க்கு வதுவை சூட்ட ஆங்கப்
பன்னிருகையும் பாற்பட வியற்றி
அந்தரப் பல்லியங் கறங்கத் திண்காழ்
120 வயிரெழுந் திசைப்பவால்வளை ஞரல
உரந்தலைக் கொண்ட உருமிடி முரசமொடு
பல்பொறி மஞ்ஞை வெல்கொடியகவ
விசும்பாறாக விரைசெலன் முன்னி
உலகம் புகழ்ந்த வோங்குயர் விழுச்சீர்
125 அலைவாய்ச் சேறலும் நிலைஇய பண்பே; அதா அன்று
திருவாவினன்குடி
சீரை தைஇய உடுக்கையர் சீரொடு
வலம்புரி புரையும் வானரை முடியினர்
மாசற இமைக்கும் உருவினர் மானின்
உரிவை தைஇய ஊன்கெடும் மார்பின்
130 என்பெழுந் தியங்கு மியாக்கையர் நன்பகற்
பலவுடன் கழிந்த வுண்டியர் இகலொடு
செற்றம் நீக்கிய மனத்தின ரியாவையும்
கற்றோ ரறியா அறிவினர் கற்றோர்க்குத்
தாம்வரம் பாகிய தலைமையர் காமமொடு
135 கடுஞ்சினங் கடிந்த காட்சியர் இடும்பை
யாவது மறியா வியல்பினர் மேவரத்
துனியில் காட்சி முனிவர் முற்புகப்
புகைமுகந் தன்ன மாசில் தூவுடை
முகைவா யவிழ்ந்த தகைசூ ழாகத்துச்
140 செவிநேர்பு வைத்த செய்வுறு திவவின்
நல்லியாழ் நவின்ற நயனுடை நெஞ்சின்
மென்மொழி மேவலர் இன்னரம் புளர
நோயின்றியன்ற யாக்கையர் மாவின்
அவிர்தளிர் புரையும் மேனியர் அவிர்தொறும்
145 பொன்னுரை கடுக்கும் திதலையர் இன்னகைப்
பருமம் தாங்கிய பணிந்தேந் தல்குல்
மாசின் மகளிரொடு மறுவின்றி விளங்கக்
கடுவொடொடுங்கிய தூம்புடை வாலெயிற்று
அழலென வுயிர்க்கும் அஞ்சுவரு கடுந்திறற்
150 பாம்புபடப் புடைக்கும் பல்வரிக் கொடுஞ்சிறைப்
புள்ளணி நீள்கொடிச்செல்வனும் வெள்ளேறு
வலவயின் உயரிய பலர்புகழ் திணிதோள்
உமையமர்ந்து விளங்கும் இமையா முக்கண்
மூவெயின் முருக்கிய முரண்மிகு செல்வனும்
155 நூற்றுப்பத் தடுக்கிய நாட்டத்து நூறுபல்
வேள்வி முற்றிய வென்றடு கொற்றத்து
ஈரிரண் டேந்திய மருப்பி னெழினடைத்
தாழ்பெருந் தடக்கை யுயர்த்த யானை
யெருத்த மேறிய திருக்கிளர் செல்வனும்
160 நாற்பெருந்தெய்வத்து நன்னகர் நிலைஇய
உலகங் காக்கும் ஒன்றுபுரி கொள்கைப்
பலர்புகழ் மூவரும் தலைவ ராக
ஏமுறுஞாலந் தன்னுட் டோன்றித்
தாமரை பயந்த தாவி லூழி
165 நான்முக வொருவற் சுட்டிக் காண்வரப்
பகலிற் றோன்றும் இகலில் காட்சி
நால்வே றியற்கைப் பதினொரு மூவரொடு
ஒன்பதிற்றிரட்டியுயர்நிலை பெறீஇயர்
மீன்பூத் தன்ன தோன்றலர் மீன்சேர்பு
170. வளிகிளர்ந் தன்ன செலவினர் வளியிடைத்
தீயெழுந் தன்ன திறலினர் தீப்பட
உருமிடித் தன்ன குரலினர் விழுமிய
உறுகுறை மருங்கிற்றம் பெறுமுறை கொண்மார்
அந்தரக் கொட்பினர் வந்துடன் காணத்
175. தாவில் கொள்கை மடந்தையொடு சின்னாள்
ஆவினன்குடியசைதலு முரியன்; அதாஅன்று
இருமூன் றெய்திய இயல்பினின் வழாஅது
இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி
அறுநான் கிரட்டி யிளமை நல்லியாண்டு
180 ஆறினிற் கழிப்பி அறநவில் கொள்கை
மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்
திருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல
ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண்
புலராக் காழகம் புலர வுடீஇ
185 உச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்து
ஆறெழுத் தடக்கிய அருமறைக் கேள்வி
நாவியன் மருங்கின் நவிலப் பாடி
விரையுறு நறுமல ரேந்திப் பெரிதுவந்து
ஏரகத் துறைதலு முரியன்; அதா அன்று
குன்றுதோறாடல்
190 பைங்கொடி நறைக்கா யிடையிடுபு வேலன்
அம்பொதிப்புட்டில் விரைஇக் குளவியொடு
வெண்கூதாளம் தொடுத்த கண்ணியன்
நறுஞ்சாந் தணிந்த கேழ்கிளர் மார்பிற்
கொடுந்தொழில் வல்விற் கொலைஇய கானவர்
195 நீடமை விளைந்த தேக்கட் டேறல்
குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து
தொண்டகச் சிறுபறைக் குரவை யயர
விரலுளர் பவிழ்ந்த வேறுபடு நறுங்காற்
குண்டுசுனைப் பூத்த வண்டுபடு கண்ணி
200 இணைத்த கோதை அணைத்த கூந்தல்
முடித்த குல்லை யிலையுடை நறும்பூச்
செங்கால் மராஅத்த வாலிண ரிடையிடுபு
சுரும்புணத் தொடுத்த பெருந்தண் மாத்தழை
திருந்துகா ழல்குற்றிளைப்பவுடீஇ
205 மயில்கண்டன்ன மடநடை மகளிரொடு
செய்யன் சிவந்த வாடையன் செவ்வரைச்
செயலைத் தண்டளிர் துயல்வருங் காதினன்
கச்சினன் கழலினன் செச்சைக் கண்ணியன்
குழலன் கோட்டன் குறும்பல் லியத்தன்
210 தகரன் மஞ்ஞையன் புகரில் சேவலங்
கொடியன் நெடியன் தொடியணி தோளன்
நரம்பார்த்தன்ன இன்குரற் றொழுதியொடு
குறும்பொறிக் கொண்ட நறுந்தண் சாயன்
மருங்கிற் கட்டியநிலனேர்பு துகிலினன்
215 முழவுறழ் தடக்கையின் இகல்வே லேந்தி
மென்றோட் பல்பிணை தழீஇத் தலைத்தந்து
குன்றுதொறாடலு நின்றதன் பண்பே; அதா அன்று
திருச்சோலைமலை
சிறுதினை மலரொடு விரைஇ மறியறுத்து
வாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇ
220 ஊரூர் கொண்ட சீர்கெழு விழவினும்
ஆர்வலரேத்த மேவரு நிலையினும்
வேலன் றைஇய வெறியயர் களனும்
காடும் காவும் கவின்பெறு துருத்தியும்
யாறுங் குளனும் வேறுபல் வைப்பும்
225 சதுக்கமும் சந்தியும் புதுப்பூங் கடம்பும்
மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையினும்
மாண்டலைக் கொடியொடு மண்ணியமைவர
நெய்யோ டையவி யப்பியை துரைத்துக்
குடந்தம் பட்டுக் கொழுமலர் சிதறி
230 முரண்கொளுருவின் இரண்டுட னுடீஇச்
செந்நூல் யாத்து வெண்பொரிச்சிதறி
மதவலி நிலைஇய மாத்தாட் கொழுவிடைக்
குருதி யொடு விரைஇய தூவெள்ளரிசி
சில்பலிச் செய்து பல்பிரப் பிரீஇச்
235 சிறுபசு மஞ்சளொடு நறுவிரை தெளித்துப்
பெருந்தண் கணவீர நறுந்தண் மாலை
துணையற வறுத்துத் தூங்க நாற்றி
நளிமலைச் சிலம்பின் நன்னகர் வாழ்த்தி
நறும்புகை யெடுத்துக் குறிஞ்சி பாடி
240 இமிழிசை யருவியோ டின்னியங் கறங்க
உருவப் பல்பூத் தூஉப் வெருவரக்
குருதிச் செந்தினை பரப்பிக் குறமகண்
முருகியம் நிறுத்துமுரணின ருட்க
முருகாற்றுப் படுத்தவுருகெழு வியனகர்
245 ஆடுகளஞ் சிலம்பப் பாடிப் பலவுடன்
கோடுவாய் வைத்துக் கொடுமணி யியக்கி
ஓடாப் பூட்கைப்பிணிமுகம் வாழ்த்தி
வேண்டுநர் வேண்டியாங் கெய்தினர் வழிபட
ஆண்டாண் டுறைதலும் அறிந்த வாறே.
250 ஆண்டாண் டாயினுமாக காண்டக
முந்துநீ கண்டுழி முகனமர்ந் தேத்திக்
கைதொழூஉப் பரவிக் காலுற வணங்கி
நெடும்பெருஞ் சிமயத்துநீலப் பைஞ்சுனை
ஐவரு ளொருவ னங்கை யேற்ப
255 அறுவர் பயந்த வாறமர் செல்வ
ஆல்கெழு கடவுட் புதல்வ மால்வரை
மலைமகண் மகனே மாற்றோர் கூற்றே
வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ
இழையணி சிறப்பிற் பழையோள் குழவி
260 வானோர் வணங்குவிற்றானைத் தலைவ
மாலை மார்ப நூலறி புலவ
செருவி லொருவ பொருவிறன் மள்ள
அந்தணர் வெறுக்கை அறிந்தோர் சொன்மலை
மங்கையர் கணவ மைந்த ரேறே
265 வேல்கெழு தடக்கைச் சால்பெருஞ் செல்வ
குன்றங் கொன்ற குன்றாக் கொற்றத்து
விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ
பலர்புகழ் நன்மொழிப்புலவ ரேறே
அரும்பெறன் மரபிற் பெரும்பெயர் முருக
270 நசையுநர்க் கார்த்தும் இசைபே ராள
அலந்தோர்க் களிக்கும் பொலம்பூட் சேஎய்
மண்டமர் கடந்தநின் வென்றா டகலத்துப்
பரிசலர்த் தாங்கும் உருகெழு நெடுவெஎள்
பெரியோ ரேத்தும் பெரும்பேரியவுள்
275 சூர்மருங் கறுத்த மொய்ம்பின் மதவலி
போர்மிகு பொருநகுரிசி லெனப்பல
யானறியளவையின் ஏத்தியா னாது
நின்னளந் தறிதன் மன்னுயிர்க் கருமையின்
நின்னடியுள்ளிவந்தனென் நின்னொடு
280 புரையுந ரில்லாப் புலமையோயெனக்
குறித்தது மொழியா அளவையிற் குறித்துடன்
வேறுபல் லுருவிற் குறும்பற் கூளியர்
சாறயர் களத்து வீறுபெறத் தோன்றி
அளியன் றானே முதுவா யிரவலன்
285 வந்தோன் பெருமநின் வண்புகழ் நயந்தென
இனியவும் நல்லவும் நனிபல வேத்தித்
தெய்வஞ் சான்ற திறல்விளங் குருவின்
வான்றோய் நிவப்பிற் றான்வந் தெய்தி
அணங்குசா லுயர்நிலை தழீஇப் பண்டைத்தன்
290 மணங்கமழ் தெய்வத் திளநலங் காட்டி
அஞ்ச லோம்புமதி யறிவம்நின் வரவென
அன்புடன் நன்மொழி யளைஇ விளிவின்று
இருணிற முந்நீர் வளைஇய வுலகத்து
ஒருநீ யாகத் தோன்றி விழுமிய
295 பெறலரும் பரிசில் நல்குமதி பலவுடன்
வெறுபஃறுகிலின் நுடங்கி யகில்சுமந்து
ஆர முழுமுதல் உருட்டி வேரற்
பூவுடையி லங்குசினை புலம்பவேர் கீண்டு
விண்பொரு நெடுவரைப் பரிதியிற் றொடுத்த
300 தண்கமழ லரிறால் சிதைய நன்பல
வாசனை முதுசுளை கலாவ மீமிசை
நாக நறுமலர் உதிர வூகமொடு
மாமுக முசுக்கலை பனிப்பப் பூநுதல்
இரும்பிடி குளிர்ப்ப வீசிப் பெருங்களிற்று
305 முத்துடை வான்கோடு தழீஇத்தத் துற்று
நன்பொன் மணிநிறங் கிளரப்பொன் கொழியா
வாழை முழுமுதல் துமியத் தாழை
இளநீர் விழுக்குலை உதிரத் தாக்கிக்
கறிக்கொடிக் கருந்துணர் சாயப் பொறிப்புற
310 மடநடை மஞ்ஞை பலவுடன் வெரீஇக்
கோழி வயப்பெடை இரியக் கேழலொடு
இரும்பனை வெளிற்றின் புன்சா யன்ன
குருஉமயிர் யாக்கைக் குடாவடி யுளியம்
பெருங்கல் விடரளைச் செறியக் கருங்கோட்டு
315 ஆமா நல்லேறு சிலைப்பச் சேணின்று
இழுமென இழிதரும் அருவிப்
பழமுதிர் சோலை மலைகிழ வோனே.
----------------
உரையாசிரியருரை
1. உலகம் உவப்ப வலன் நேர்பு திரிதரு - உலகத்திலுள்ள பல்லுயிர்களும் மகிழ மேருவை
வலமாக, யாவர்க்கும் நேராகச் சுழலும்
2. பலர் புகழ் ஞாயிறு கடற் கண்டா அங்கு - தனது ஒளியாற் காட்சியின் பயன் கொள்வார் பலரும்
புகழும் ஞாயிற்றைக் கடலிடத்துக் கண்டாற் போல கடலிற் பசுமையும் ஆதித்தன் திருமேனியும்
போன்று மயிலிற் பசுமையும் பிள்ளையார் திருமேனியும் மனத்தாற் கருதுவோர்க்குப் புலப்படலால்
இவ்வண்ணம் உவமை கூறப்பட்டது.
3. ஓவற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளி - ஞாயிற்றின் ஒளி போலப் போதுசெய்யாமல்,
எக்காலமும் ஒழிவற விளங்குவதாகி மனவாக்கையும் கடந்த தூரத்திலே விட்டு விளங்காநின்ற
ஒளியினையும்.
இதற்கு சோமசூரியாக்கினி யொளிசெல்லாமல் ஒழிவற இயல்பான ஒளியை யுடைய தேவருலகத்திலே
அகமும் புறமுமாகி விட்டு விளங்கா நின்ற ஒளியென்றுமாம்.
4. உறுநர்த் தாங்கிய மதனுடை நோன் தாள் - தன்னையடைவோரைத் தாங்கும் யான் எனது
என்னுஞ் செருக்கைக் கெடுக்கும் வலிய தாளினையும்
5. செறுநர்த் தேய்த்த செல் உறழ் தடக்கை - தனது அருள்வழி நில்லாது மாறுபட்டோரை அழித்த, (பிரதிபேதம் - அழித்து) இடியேறு போன்ற பெரிய கையினையும் உடைய.
6. மறுஇல் கற்பின் வாணுதல் கணவன் - குற்றமில்லாத அ(ற)க் கற்பையுடைய இந்திரன்மகள் தெய்வயானையார் கணவன்
7. கார்கோள் முகந்த கமஞ்சூல் மாமழை - கடலிலே நீர்முகந்ததனாலாகிய நிறைந்த சூலையுடைய கரிய மேகமானது
8-9. வாள் போழ் விசும்பில் வள் உறை சிதறித் தலைப்பெயல் தலைஇய தண் நறுங்கானத்து - சந்திராதித்தருடைய ஒளியை நீக்கி ஆகாசத்திலே வளவிய துளிகளைச் சிந்தி முதன்மழைபெய்து அம்மழைவிட்ட குளிர்ந்த மணமுடைய காட்டிடத்து
10. இருள்படப் பொதுளிய பராரை மராஅத்து - இருளுண்டாம்படி தழை நெருங்கிய பருத்து அரையையுடைய செங்கடம்பினது.
11. உருள்பூந் தண் தார் புரளும் மார்பினன் - வட்டம்பொருந்திய பூவாற் செய்த குளிர்ந்த மாலை அசையும் மார்பினையுடையவன்.
12. மால் வரை நிவந்த சேண் உயர் வெற்பில் - பெரிய மூங்கில்கள் உயர வளர்ந்த தூரவுயர்ந்த மலையிடத்து
13. கிண்கிணி கவைஇய ஒண் செஞ் சீறடி - சிறு சதங்கையைச் சூழக் கட்டின ஒள்ளிய சிவந்த சிறிய அடியினையும்
14. கணைக்கால் வாங்கிய நுசுப்பின் பணைத்தோள் - திரண்டகாலையும் நுடக்கத்தால் (பி-ம்-அடக்கத்தால்) வளைந்த இடையையும் மூங்கில்போன்ற தோளையும்.
15. கோபத்தன்ன தோயாப் பூந்துகில் - இந்திரகோபத்தையொத்த சிவப்பையுடைய சாயம்பிடியாத பூத்தொழில்களையுடைய தெய்வத்தன்மையான துகிலையும்
16. பல் காசு நிரைத்த சில்காழ் அல்குல் - பல மணிகளாற் கோத்த இரண்டு வடம் பொருந்திய காஞ்சியை யணிந்த அல்குலினையும்
17. கைபுனைந்து இயற்றாக் கவின்பெறு வனப்பின் - கையால் அலங்கரித்துப் பிறப்பியாத தெய்வத்தன்மையான அழகைத் தமக்கு இயல்பாகவே பெறுகின்ற அழகையும்
18. நாவலொடு பெயரிய பொலம்புனை அவிர் இழை - சாம்புநதமென்னும் பெயரைப் பெற்ற பொன்னாற் செய்யப்பட்ட விளங்காநின்ற பூணினையும்.
19. சேண் இகந்து விளங்கும் செயிர்தீர் மேனி - தூரநிலத்தைக் கடந்து விளங்குங் குற்றமில்லாத வடிவையும்.
20. துணையோர் ஆய்ந்த இணை ஈர் ஓதி - தோழியர் நன்றென்றாராய்ந்த கடையொத்த நெய்ப்புடைய மயிரிலே
21-22. செங்கால் வெட்சி சீறிதழ் இடையிடுபு பைந்தாட் குவளைத்தூ இதழ் கிள்ளி - சிவந்த தாளையுடைய வெட்சிப்பூவினது சிறிய இதழ்களின் நடுவே பசுத்த தண்டினையுடைய நெய்தற்குவளையினது தூய இதழைக் கிள்ளியிட்டு
23. தெய்வ உத்தியொடு வலம்புரி வயின்வைத்து – சீதேவி வடிவாகச் சமைத்த தலைக்கோலத்துடனே வலம்புரிச்சங்குவடிவான அணியையும் வைத்தற்குரிய இடங்களிலே தலைக்கோலமாக வைத்து.
24. திலதம் தைஇய தேம் கமழ் திருநுதல் - திலதமணிந்த மணநாறுகின்ற அழகிய நெற்றியிலே.
25. மகரப்பகுவாய் தாழ மண்ணுறுத்து - சுறாவினது பெரிய வாயினது வடிவாகச் செய்த பணியைத் தங்கும்வண்ணம் அலங்காரம் பெறச்செய்து.
26. துவர முடித்த துகள் அறுமுச்சி - செய்தொழில் முற்றுப்பெற முடித்த குற்றமற்ற கொண்டையிலே
27. பெருந் தண் சண்பகம் செரீஇ - பெரிய குளிர்ந்த சண்பகப்பூவைச் சொருகி.
28. கருந்தகட்டு உளைப்பூ மருதின் ஒள் இணர் அட்டி - கரிய தகடு போன்ற இலைகளையுடைய உளைபோன்ற மருதம்பூவினது ஒள்ளிய கொத்துக்களைச் செண்பகப்பூவின் நடுவே யிட்டு
29. கிளைக் கவின்று எழுதரு கீழ்நீர்ச் செவ்வரும்பு - பலவான கிளையரும்பீன்று அழகுபெற்று மேலே தோன்றுகின்ற நீர்க்கீழ்ச் சிவந்த அரும்பினாலே.
30. இணை உறு பிணையல் வளைஇ - கட்டுதலுற்ற மாலையைக் கொண்டையைச் சூழக் கட்டி.
30-31. துணைத்தக வண்காது நிறைந்த பிண்டி ஒண் தளிர் - இணையொத்த வளவிய காதிலே நிறைந்த அசோகினது ஒள்ளிய தளிர்களை
32. நுண்பூண் ஆகம் திளைப்ப - நுண்ணிதான அணிகளையுடைய மார்பிலே செறியும் வண்ணம் அணிந்து.
32-33. திண்காழ் நறுங்குறடு உரிஞ்சிய பூங்கேழ்த் தேய்வை - திண்ணிய வயிரத்தை
யுடைய சந்தனக்குறடு அரைத்த அழகிய நிறத்தையுடைய குழம்பை
34. தேம் கமழ் மருதிணர் கடுப்ப - மணம் நாறுகின்ற மருதினது பூங்கொத்தை
அப்பினாற்போல்.
34-35 கோங்கின் குவிமுகிழ் இளமுலைக் கொட்டி - கோங்கினது குவிந்த அரும்பு
போன்ற இயன்ற முலைகளிலே அப்பி
35-36. விரிமலர் வேங்கை நுண் தாது அப்பிக் காண்வர - விரிந்த மலரையுடைய வேங்கையினது நுண்ணிய பூந்தாதுகளையும் அச்சந்தனக் குழம்பின் மேலே அழுத்தி அழகு காட்சிவர.
37. வெள்ளிற் குறு முறி கிள்ளுபு தெரியா விளாவினது இளந்தளிர்களைக் கிள்ளி
யொருவர் மேலொருவர் தெறித்து
38. கோழி யோங்கிய வென்று அடு விறற்கொடி - கோழியை உயரக் கொண்டிருக்கிற வெற்றிப்பாட்டாற் கொன்றெடுத்த வீரக்கொடி
39. வாழிய பெரிது என்று ஏத்திப் பலருடன் - மிகவும் வாழ்வதாக என்று வாழ்த்திப்
பலபெண்கள் கூட
40. சீர் திகழ் சிலம்பகம் சிலம்பப் பாடி -அழகு ஒளிபெற்றமலையிடத்து ஆரவாரிக்கப் பாடி.
41. சூர் அரமகளிர் ஆடுஞ் சோலை - கொடிய வஞ்சனைகள்வல்ல தெய்வமகளிர் விளையாடப்பட்ட சோலையினையுடைய.
42. மந்தியும் அறியா மரம்பயில் அடுக்கத்து ஆதித்தனையுங் காணாத மரம் நெருங்கின பக்கவரையிடத்து.
43. சுரும்பு மூசாச் சுடர்ப் பூங்காந்தள் - வண்டுகள் மொய்யாத நெருப்பையொத்த காந்தட்பூவினது.
44. பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன் - மிகவும் குளிர்ந்த மாலையைச்
சூடிய திருமுடியையுடையவன்
45. பார் முதிர் பனிக் கடல் கலங்க உள்புக்கு – பூமியைச் சூழ்ந்த குளிர்ந்த கடல் கலங்கும் வண்ணம் உள்ளே சென்று
46. சூர்முதல் தடிந்த சுடர் இலை நெடு வேல் - சூரபன்மவாகிய தலைவனைக்
கொன்ற எரிகின்ற இலைத்தொழிலையுடைய நெடிய வேலாலே
47. உலறிய கதுப்பிற் பிறழ்பற் பேழ்வாய் - காய்ந்த மயிரினையும் நிரையொவ்வாத
பல்லையும் பெரிய வாயையும்.
48. சுழல் விழிப் பசுங் கண் சூர்த்த நோக்கின் - சுழன்ற விழியையும் பசுத்த கண்ணி னையுமுடைய கொடியவஞ்சனையாகிய பார்வையோடு.
விழி - மிண்டை.
49. கழல் கண் கூகையொடு கடும் பாம்பு தூங்க - கழல் போன்ற கண்ணினையுடைய
கோட்டானுடனே கடிய பாம்பு தூங்குதலால்.
கண் - எண்ணுமாம் (?)
50. பெரு முலை யலைக்கும் காதிற் பிணர்மோட்டு - பெரிய முலைகளை யசைக்குங்
காதினையும் சற்சரையும் பெருமையுமுடைய
51. உருகெழு செலவின் அஞ்சுவரு பேய்மகள் - வடிவைப் பொருந்தின நடையினாலே கண்டார்க்கு அச்சமுண்டாம் பெண்பேய்கள்
52. குருதி ஆடிய கூர் உகிர்க் கொடுவிரல் - உதிரந்தோய்ந்த கூரிய உகிரினையுடைய கொடிய விரலாலே
53. கண்தொட்டு உண்ட கழிமுடைக் கருந்தலை - கண்களைத் தோண்டியுண்ணப்பட்ட மிக்க நாற்றத்தையுடைய பெரிய தலையை.
54. ஒண் தொடித் தடக்கையின் ஏந்தி வெருவர - ஒள்ளிய வளையும் பெருமை யுமுடைய அங்கையிலேந்தி அச்சமுண்டாக.
55. வென்று அடு விறற்களம் பாடித் தோள் பெயரா - வெற்றிப் பாட்டாற் கொன்ற
வெற்றிக்களத்தைப் பாடித் தோளை அசைத்து.
56. நிணம்தின் வாயோள் துணங்கை தூங்க – நிணந்தின்னப்பட் வாயையுடையளாகித் துணங்கைக்கூத்தையாட
57. இருபேர் உருவின் ஒரு பேர் யாக்கை - மக்கள் வடிவும் விலங்கு வடிவுமான இரண்டு பெரிய வடிவினையுடைய ஒன்றாயிருக்கிற பெரிய சூரனுடல்
58. அறு வேறு வகையின் அஞ்சுவர மண்டி - வேறுவேறாக அறும்படி அதற்குப் பொருந்திய கூறுபாட்டாலே சூரன் அஞ்சும் வண்ணம் நெருங்கிச் சென்று.
59. அவுணர் நல்வலம் அடங்க - அவுணரெல்லாருக்கும் நல்ல வெற்றி இல்லையாக கவிழ் இணர் - கீழ்நோக்கின பூங்கொத்தையுடைய.
60. மா முதல் தடிந்த - மாவடிவாகிய சூரபற்மாவென்னும் முதல்வனைக் கொன்ற இந்த மாவை அவுணர்க்கு வரங்கொடுக்கும் தனிமாவென்று சொல்லுவார்கள்.
60-61. மறு இல் கொற்றத்து எய்யா நல்லிசைச் செவ்வேற் சேஎய் - குற்றமில்லாத வெற்றியையும் ஒருவராலும் அளந்தறியப்படாத நல்ல புகழையும் சிவந்த
வேலினையும் உடைய முதிராவடிவை முடையவன்.
62. சேவடி படருஞ் செம்மல் உள்ளமொடு - அவனது சிவந்த திருவடியிலே செல்லும் தலைமையான உள்ளமொடு
63. நலம்புரி கொள்கைப் புலம்புரிந்து உறையும் - நன்றான அறங்களைச் செய்யா
நின்ற கோட்பாட்டினாலே அவன் விரும்பித் தங்குமிடத்துக்கு
64. செலவு நீ நயந்தனையாயின் - வழியை விரும்பினையாயில்
64-65 பலவுடன் நன்னர் நெஞ்சத்து இன் நசைவாய்ப்ப - நற்குணங்கள் பலவுமுடைய உன்மனத்தில் இனிய ஆசைப்படியே பேறாக.
66. இன்னே பெறுதி நீ முன்னிய வினையே - இப்பொழுதே பெறுவை நீ கருதிய கருமம்
-------------
திருப்பரங்குன்று
67. செருப் புகன்று எடுத்த சேண் உயர் நெடுங்கொடி - போரைக் கருதியெடுக்கப்
பட்ட தூரத்திலே ஓங்கிய நீண்ட கொடியும்.
68. வரிப்புனை பந்தொடும் பாவை தூங்க - வரிந்து ஊசித்தொழிலாற் புனையப் பட்ட
69. பொருநர்த் தேய்த்த போர் அருவாயில் - பொருவாரையழித்து விடுதலால்
போர்த்தொழில் இல்லையான மதில்வாயிலையும்
70. திருவீற்றிருந்த தீதுதீர் நியமத்து - திருமகள் மற்றுமுள்ள இடங்களின்று நீங்கி
வந்திருந்த குற்றமற்ற அங்காடித்தெருவையும்
71. மாடம் மலி மறுகிற் கூடற் குடவயின் - மாடங்கள் நெருங்கிய மற்றுள்ள தெருக்களையுமுடைய மதுரைக்கு மேற்றிசையிடத்து
72. இருஞ்சேற்று அகல்வயல் விரிந்து வாய் அவிழ்ந்த பெருமையையும் சேற்றையும்
உடைய அகன்ற வயலிலே இதழ் முறுக்கு நெகிழ்ந்து தாது தோன்ற மலர்ந்த.
73. முள் தாள் தாமரைத் துஞ்சி - முள்ளைத் தண்டிலேயுடைய தாமரைப் பூவிலே துயின்று. வைகறை - இருள்புலருங்காலை
இருள்புலருங்காலை யென்றது நாலாஞ்சாமம்
74. கள் கமழ் நெய்தல் ஊதி - தேனாறுகின்ற நெய்தலின் பூவின் மதுவுண்டு ஏற்பட ஞாயிறு தோன்றும்பொழுது.
75. கண்போல் மலர்ந்த காமர் சுனைமலர் கண்ணைப்போல் மலர்ந்த அழகிய
சுனைப்பூக்களிலே பந்தும் பாவையும் தூங்க.
பகைவரை மகளிராக்கி அவர்கள் கொண்டு விளையாடுதற்குத் தூக்கியது
76. அம் சிறை வண்டின் அரிக் கணம் ஒலிக்கும் - அழகிய சிறகையுடைய வண்டினது அழகிய திரட்சி ஆரவாரிக்கும்.
77. குன்று அமர்ந்து உறைதலும் உரியன் - திருப்பரங்குன்றிலே திருவுள்ளம்
பொருந்தித் தங்குதலும் உரிய தன்மையன்;
அத்தன்மையாகச் சொல்லப்பட்ட ஒளியையும் (3) தாளையும் (4) கையையும் (5) உடையனாகித் தேவயானையார் கணவனாகி (6) மாலை யசையும் மார்பனாகி (11) காந்தள் மாலையைச் சூடிய திருமுடியை யுடையனாகி (44) நெடிய வேலாலே பெண் பேய் களித்துப் பாடியாடும் வண்ணம் (56) அசுரனைக் கொன்ற வெற்றியினையும் (60) புகழையும் சிவந்த வேலையும் உடைய முதிரா வடிவையுடைய பிள்ளையார் (61) திருவடியிலே செல்ல வேணுமென்கிற மனத் தோடு (62) நீ செய்த நல்லறத்தினாலே அவன் விரும்பித் தங்குமிடத்துக்கு (63) நீ வழியை விரும்பினையாகில் (64) உன்னுடைய ஆசைப்படியே (65) இப்பொழுதே பெறுவை நீ நினைத்த கருமம் (66) (இதற்கு அவன் உறையுமிடம்:) மதுரைக்கு மேற்குத் (71) திருப்பரங்குன்றிலே தங்குதலும் உரியதன்மையன் (77);
அதா அன்று-அதுவன்றி,
------------
திருச்செந்தூர்
78. வை நுதி பொருத வடு ஆழ் வரி நுதல் - கூரிய நுனித்தலையையுடைய துறட்டியாலே குத்தப்பட்ட தழும்பு ஆழ்ந்திருக்கிற புகரையுடைய மத்தகத்தே
79. வாடாமாலை ஓடையோடு துயல்வர - பொன்னரிமாலை பட்டத்தோடே அசைய
80. படுமணி இரட்டும் மருங்கின் கடுநடை - பெருமையுடைய மணிகள் மாறியொலிக்கும் பக்கத்தையும் கடிய நடையையும் உடைய பாடென்பது குறுகி நின்றது
81. கூற்றத்தன்ன மாற்றரும் மொய்ம்பின் - கூற்றுவனையொத்த பிறரால் தடுத்தற் கரிய வலியினையும் உடைத்தாய்
82. கால் கிளர்ந்தன்ன வேழம் மேல் கொண்டு - செல்லுமிடத்துக் காற்றெழுந்தாலொத்த யானையின் மேல் ஏறி
83. ஐவேறு உருவின் செய்வினை முற்றிய - ஐந்து தொழிற்கூறாய வேறுபட்ட
வடிவினையுமுடைத்தாய செய்யத்தக்க தொழில்கள் முடிவும் பெற்ற
84. முடியொடு விளங்கிய முரண்மிகு திருமணி - முடியோடுகூட விளக்கத்தையுடைய நிறங்கள் வேறுபட்டு மிகுத்த அழகையுடைய பல இரத்தினங்களும்
85. மின் உறழ் இமைப்பிற் சென்னிட் பொற்ப - மின்னலொத்திருக்கிற விளக்கத்தினாலே திருமுடியிலே பொலிவுபெற.
86. நகை தாழ்பு துயல்வரூஉம் வகையமை பொலங்குழை - மணியொளி தங்கியசையும் தொழிற்கூறுபாடுநிறை பொன்னாற் செய்த மகரக் குழையானவை
87. சேண் விளங்கு இயற்கை வாய் மதி கவைஇ - உயர்ந்த தூரநிலத்திலே விளங்கும் இயல்பினையுடைய ஒளியையுடைய திங்களைச் சூழ்ந்து.
88. அகலா மீனின் அவிர்வன இமைப்ப - நீங்காத மீன்கள் போல ஒளியை விடுவனவாகி விளக்கஞ்செய்ய.
89. தா இல் கொள்கைத் தம் தொழில் முடிமார் - கேடில்லாத விரதக் கோட்பாட்டை யுடைத்தாகிய தவஞ்செய்தலை முடிப்பவருடைய
90. மனன் நேர்பு எழுதரு வாள் நிற முகனே - மனங்களிலே நேராகித் தோற்றுதலையுடைய ஒளியையும் நிறத்தையும் உடைய முகங்களிலே.
91-92. மா இருள் ஞாலம் மறுஇன்றி விளங்கப் பல்கதிர் விரிந்தன்று ஒரு முகம்- பெருமையையும் இருட்சியையும் உடைய உலகம் குற்றமின்றாய் விளங்கும்படி சோமசூரியாக்கினியிடத்திற் பலவாகிய கிரணங்களை விரித்தது ஒருமுகம்;
92-94. ஒருமுகம் ஆர்வலர் எத்த அமர்ந்து இனிது ஒழுகிக் காதலின் உவந்து வரம் கொடுத்தன்றே - ஒரு முகமானது தன்மேல் விருப்பமுடைய அடியார் துதிக்கத் திருவுள்ளம்பொருந்தி அவர்கட்கு இனிதாக நடந்து விருப்பத்துடனே மகிழ்ந்து வேண்டுகோள்களைக் கொடுத்தது;
94-96. ஒருமுகம் மந்திர விதியின் மரபுளி வழாஅ அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே - ஒருமுகமானது மந்திரங்களை விதிக்கப்பட்ட வேதத்தினது முறைமையாராய்ந்து அவ்வொழுக்கந் தப்பாத பிராமணருடைய யாகங்களைத் தீங்குவாராமல் ஆராயாநிற்கும்;
உள்ளியென்றது நடுக்குறைந்தது.
96-98. ஒருமுகம் எஞ்சிய பொருள்களை ஏமுற நாடித் திங்கள் போலத் திசை விளக்கும்மே - ஒருமுகமானது ஆய்ந்தறியப்படாமலொழிந்த ஆழ்பொருள்களைத் தெய்வவிருடிகள் இன்புறும்வண்ணம் ஆராய்ந்து சரற்கால சந்திரன் போல அத்திக்குக்களை விளக்காநிற்கும்;
98-100. ஒருமுகம் செறுநர்த் தேய்த்துச் செல் சமம் முருக்கிக் கறுவுகொள் நெஞ்சமொடு களம் வேட்டன்றே - ஒரு முகமானது செறற்குரிய அசுரர் முதலோரை அழித்துத் திருவுள்ளத்திலே நடந்துபோதுகிற நடு நிலைமையைக் கெடுத்துக் கறுவுதல் கொண்ட மனத்தோடு போர்க்களத்தை விரும்பாநின்றது.
100-102. ஒருமுகம் குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின் மட வரல் வள்ளியொடு நகையமர்ந்தன்றே - ஒரு முகமானது மலைக்குறவருடைய பேதைமையுடைய மகளிரில் கொடியையொத்த இடையினையும் பேதைமையுண்டாதலையுமுடைய வள்ளிநாய்ச்சியாருடனே மகிழ்ச்சி பொருந்திற்று.
102-103. ஆங்கு அம்மூவிரு முகனும் முறை நவின்று ஒழுகலின் - அவ்விடத்து அவ்வாறு முகமும் அம்முறைமகளைப் பயின்று நடத்தலால் அவ்வாறுமுகங்கட்கும் பொருந்தும் வண்ணம்
104. ஆரம் தாழ்ந்த அம் பகட்டு மார்பின் - பதக்கம் தங்கின அழகையும் பெருமை
யையும் உடைய மார்பிடத்து.
105. செம்பொறி வாங்கிய மொய்ம்பின் சுடர்விடுபு - சிவந்த மூன்று வரியாகிய உத்தம இலக்கணத்தை(யும்) தன்னோடெதிர்த்தார்கள் வலியை வாங்கப்பட்ட வலியையும் (உடைய), ஒளிவிட்டு.
106. வண்புகழ் நிறைந்து - வளவிய புகழ் நிறையப்பட்டு; வசிந்து வாங்கு நிமிர் தோள் - திரண்டு வளையவேண்டுமிடம் வளைந்தும் நிமிரவேண்டும்மிடம் நிமிர்ந்தும் உயர்ந்த தோள்களில்
பகைவரைப் பிளந்து அவருயிரை வாங்கும் உயர்ந்த தோள்களில் என்றுமாம்
107. விண்செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது ஒருகை - ஆகாயத்தே இயங்கும் முறைமையுடைய தேவர்கட்குப் பாதுகாவலாக உயர்ந்தது ஒருகை;
108. உக்கம் சேர்த்தியது ஒருகை - மருங்கில்வைத்தது ஒருகை;
இக் கைகள் பலகதிரையும் விரித்த திருமுகத்திற்கேற்பக் கதிர்களையுடைய சோம சூரியாக்கினி முதலான தேவர்கட்கு அசுரரால் துன்பம் வாராமல் பாதுகாவலாக நின்றனவென்றறிக
109. நலம்பெறு கலிங்கத்துக் குறங்கின்மிசை அசைஇயது ஒருகை - நன்மையைப் பெற்றிருக்கிற திருப்பரிவட்டத்தையுடைய துடையின் மேலே தங்கியது ஒருகை; 110. அங்குசம் கடாவ ஒருகை - ஆனைத்துறட்டியாலே யானையைச் செலுத்தாநிற்க
ஒருகை;
ஆனைமேலேறுவார்க்கு ஒருகை துடையிலே தங்குதல் இயல்பாதலான் அத் தன்மையாக அறிந்துகொள்க, இக் கைகள் வரங்கொடுத்த திரு முகத்திற்கேற்ப ஆனையின்மேலே எழுந்தருளிவந்து வரங்கொடுத்து ஆனையைச் செலுத்தியவாறு கண்டுகொள்க.
110-111. இருகை ஐயிரு வட்டமொடு எஃகு வலம் திரிப்ப - இரண்டு கைகள் அழகையும்
பெருமையையுமுடைய பரிசையுடனே வேலையும் வலமாகச் சுழற்ற
இக்கைகள் வேள்வியோர்க்கும் என்ற திருமுகத்திற்கேற்ப வேள்வியில் அசுரரால் தீங்குவாராமல் பாதுகாத்தன.
112. ஒருகை மார்பொடு விளங்க - உண்மையாகிய உரையிறந்த பொருளை யுணர்த்திய மவுனமுத்திரையாயிருத்தலான் ஒருகை மார்போடு விளக்கஞ் செய்ய.
113. ஒருகை தாரொடு பொலிய - ஒருகை மாலையோடுசேர்ந்து அழகு பெற
இக்கைகள் தெரியாத பொருள்களை ஆராய்ந்து விளக்கிநின்ற முகத்திற்கேற்ப முடிவாயிருக்கிற மவுனமுத்திரையைப் பொருந்தியவாறு கண்டு கொள்க
113-114. ஒருகை கீழ்வீழ் தொடியொடு மீமிசைக் கொட்ப - (ஒருகை) பகை வருடலைக் கிழித்து விரும்பி அணியப்பட்ட வளையுடனே மே(ன்) மேலே படைக்கலமெறித(ல)ற் சுழலாநிற்ப
114-115. ஒருகை பாடின் படுமணி இரட்ட - (ஒருகை) பெருமையும் இசை யினிமையும்
உடைய வீரமணியை முழக்க.
இக்கைகள் போர்க்களம் விரும்பிய திருமுகத்துக் கேற்றவாறு கண்டு கொள்க.
115-116. ஒருகை நீல் நிற விசும்பின் மலிதுளி பொழிய - ஒருகையானது நீலநிறத்தை
யுடைய மேகத்தால் மிக்க மழையைப் பெய்ய.
116-117.ஒருகை வான் அரமகளிர்க்கு வதுவை சூட்ட - ஒருகையானது தேவருலகத்தில்
தேவமகளிராகிய தெய்வ(யா)னையார்க்கு மணமாலையைப் புனைய.
இக் கைகள் வள்ளியொடு மகிழ்ச்சியைப் பொருந்தின திருமுகத்திற் கேற்பப் போகத்தின்பொருட்டு
மழைபெய்வித்து மணமாலையும் சூட்டியவாறு கண்டு
கொள்க
117-118. ஆங்கு அப் பன்னிருகையும் பாற்பட இயற்றி - அவ்விடங்களில் அத்தன்மை யான
பன்னிரண்டுகையும் திருமுகங்கட்கு ஏற்ற முறைமையிலே பொருந்தத் தொழிலைச் செய்து
119. அந்தரப் பல்லியம் கறங்க - ஆகாசத்துப் பலவாகிய தோற்கருவி ஒலிப்ப.
119-120. திண் காழ் வயிர் எழுந்து இசைப்ப வால் வளை ஞரல - திண்ணிய வயிரத்தை
யுடைய கொம்பு மிக்கொலிப்ப வெள்ளிய சங்கு முழங்க
121. உரம் தலைக்கொண்ட உரும் இடி முரசமொடு - வலியைத் தன்னிடத்தே
பொருந்தின உருமேற்றினது இடியையொத்த வீரமுரசுடனே
122. பல் பொறி மஞ்ஞை வெல் கொடி அகவ - பல பீலிகளையுடைய மயிலும்
வெற்றிக் கொடியாகிய கோழியும் ஆலிக்க.
123. விசும்பு ஆறாக விரைசெலல் முன்னி - ஆகாசமே வழியாக விரைந்த நடை
யினைக் கருதி.
124. உலகம் புகழ்ந்த ஓங்கு உயர் விழுச் சீர் - உயர்ந்தோராலே புகழப்பட்ட மிகவும்
உயர்ந்த சீரிய புகழையுடைய.
125. அலைவாய்ச் சேறலும் நிலைஇய பண்பே - திருச்செந்தில் எழுந்தருளுதலும்
நிலையுடைய குணம்;
நாமனூரலைவாயென்னும் திருப்பதியே இது
இத்தன்மையான ஆனையின் மேலேறி (82) ஆறு திருமுகமும் (103) பன்னிரண்டு திருக்கைகளும்
(118) அத்தொழில்களைச் செயத் துந்துபி கொம்பு சங்கு முரசு இவ்வொலியுடனே (121) மயிலும் கோழியும் ஆரவாரிக்க (122) ஆகாசம் வழியாக விரைந்தநடையைக் கருதி (123) நாம னூரலைவாய் என்னும் திருச் செந்திலேற வெழுந்தருளுதலும் நிலையுடைய குணம் (125);
அதா அன்று - அதுவன்றி,
----------
திருவாவினன்குடி
126. சீரை தைஇய உடுக்கையர் - மரவுரியைச் சேர்த்துத் தைத்த உடையினையுடையர்
126-127. சீரொடு வலம்புரி புரையும் வால்நரை முடியினர் - அழகொடு வலம்புரிச்
சங்கையொக்கும் வெள்ளிதாக நரைத்த முடியினையுடையர்.
128. மாசு அற இமைக்கும் உருவினர் - அழுக்கற விளங்கும் வடிவையுடை யவர்.
128-129. மானின் உரிவை தைஇய ஊன்கெடும் மார்பின் - மானின் தோல் தைவரப்
பட்ட விரதப்பட்டினியால் தசை கெடுகின்ற மார்பின்
130. என்பு எழுந்து இயங்கும் யாக்கையர் - எலும்பு தோன்றப்பட்டு உலாவும்
உடம்பினையுடையர்
130-131. நன் பகல் பல உடன்கழிந்த உண்டியர் - நன்றான பகற் பொழுது பலவும்
சேரநீங்கிய உணவினையுடையர்
மாதவுபவாசமுடையர்
131-132. இகலொடு செற்றம் நீக்கிய மனத்தினர் - மாறுபாட்டோடு நெடுங்காலம்
நிற்கும் கோபத்தையும் போக்கிய மனத்தினையுடையவர்.
132-133. யாவையும் கற்றோர் அறியா அறிவினர் - கற்கவேண்டுவன நூல்கள் யாவையும்
கற்ற கல்வியுடையோரால் அறியப்படாத அறிவை யுடையவர்
133 -134. கற்றோர்க்குத் தாம் வரம்பாகிய தலைமையர் - பல நூல்களையும் கற்ற கல்வி யுடையோர்க்கு மயக்கமறப் பிரிவுசெய்து அந்நூற்பொருள்களை அறுதியிட் டுணர்த்தலாற் கல்விக்குத் தாமே யெல்லையாயிருக்கிற தலைமையையுடையர்.
134-135. காமமொடு கடுஞ்சினம் கடிந்த காட்சியர் போகப் பொருளிச்சையுடனே
கடிய சினத்தையும் போக்கின அறிவினையுடையர்.
135-136. இடும்பை யாவதும் அறியா இயல்பினர் - மன வாக்குக் காயங்களால் வரும்
துன்பங்கள் சிறிதும் அறியாத இயல்பினையுடையவர்.
136-137. மேவரத் துனியில் காட்சி முனிவர் முற்புக திருவுள்ளத்துக்குப் பொருத்தம் வர
யாவரிடத்தும் வெறுப்பில்லாத அறிவையுடைய இத்தன்மையராகிய முனிவர் எல்லார்க்கும்
முன்னே செல்ல, அதன் பின்னாக
138. புகை முகந்தன்ன மாசில் தூ உடை - புகையை அடைத்தாற்போன்ற மெல்லிய
அழுக்கில்லாததாய ஆடையையும்.
139. முகை வாய் அவிழ்ந்த தகைசூழ் ஆகத்து - நாளரும்பு கிண்கிணியாகக் கொண்ட
மலரைக்கட் டிய மாலைசூழ்ந்த மார்பையும்.
140. செவி நேர்பு வைத்த செய்வுறு திவவின் - செவியால் நேர்ந்து உறுப்புக்களை எல்லைகளிலேயிருத்தி
வைத்த தொழின்மிக்க இறுக்கிய வார்க்கட்டையும்
உடைய
செவியால் நேர்ந்து என்றது சுருதியை உற்றறிந்து என்றவாறு
141. நல்லியாழ் நவின்ற நயனுடை நெஞ்சின் - நல்ல பாழினோசையிலே பயின்ற
ஈரமுடை நெஞ்சையும்.
142. மென் மொழி மேவலர் இன் நரம்பு உளர - மெல்லிய வார்த்தையையும் பொருந்திய கந்திருவர்
இனிய யாழ்நரம்பை வாசிக்க, இவருடனே.
143. நோயின்று இயன்ற யாக்கையர் எக்காலமும் பிணியின்றி இயலப்பட்ட
உடம்பினராய்.
143-144. மாவின் அவிர் தளிர் புரையும் மேனியர் - மாவினது விளங்கா நின்ற
தளிரையொக்கும் நிறத்தையுடையராய்.
144-145. அவிர்தொறும் பொன்னுரை கடுக்கும் திதலையர் - விளங்குந் தோறும்
பொன்னுரை விளக்கத்தைப்போலும் சுணங்கையுடையராய்.
145-146. இன் நகைப் பருமம் தாங்கிய பணிந்து ஏந்து அல்குல் - இனிய ஒளியினை யுடைய
பதினாற்கோவை மேகலையாகிய அதனைத் தாங்கப்பட்ட தாழ வேண்டு மிடம் தாழ்ந்தும்,
உயரவேண்டுமிடம் உயர்ந்து மிருக்கிற அல்குற்றடத்தை யுடைய.
147. மாசுஇல் மகளிரொடு மறு இன்றி விளங்க - குற்றமில்லாத காந்திருவ மகளிரோடு குற்றமற்று
விளங்க, அதன்பின்.
148. கடுவொடு ஒடுங்கிய தூம்புடை வால் எயிற்று - நஞ்சுடனே மறையப்பட்ட உள்ளே துளையையுடைய
வெள்ளிய பல்லினையும்.
149. அழல் என உயிர்க்கும் அஞ்சுவரு கடும் திறல் - நெருப்புப்போலே நெடுமூச்சாகப் படுவிக்கும்
கண்டார்க்கு அச்சம்வரத்தக்க கடிய கோபத்தையும் உடைய
150. பாம்பு படப் புடைக்கும் பல்வரிக் கொடும் சிறை - பாம்பைப்படும் படியடிக்கும் பல
வரியையுடைத்தாகிய வளைந்த சிறகையுமுடைய.
151. புள் அணி நீள் கொடிச் செல்வனும் - கெருடனை அணிந்த நீண்ட கொடியையுடைய திருமாலும்
151-152. வெள் ஏறு வலவயின் உயரிய பலர் புகழ் திணி தோள் - வெள்ளையெருத்தை
வெற்றிக்களத்தில் உயரக்கொண்டிருக்கிற பலராலும் புகழப்பட்ட திண்ணிதான தோள்களையும்.
153. உமை அமர்ந்து விளங்கும் இமையா முக்கண் - இறைவிபொருந்தி விளங்கிய பக்கத்தையும்
இமையாத மூன்றுகண்ணையும் உடைய.
154. மூஎயில் முருக்கிய முரண்மிகு செல்வனும் - மூன்றுமதில்களையுடைய வூர்களை
யொழிக்கப்பட்ட வலிமிக்க உருத்திரனும்
155. நூற்றுப்பத்து அடுக்கிய நாட்டத்து - நூறென்னும் இலக்கத்தைப் பத்தென்னும்
இலக்கத்தோடேயேற்றிய ஆயிரங்கண்ணையும்.
155-156. நூறு பல் வேள்வி முற்றிய வென்று அடு கொற்றத்து - நூறாகி யெண்ணப்பட்ட
பல யாகங்களையும் செய்துமுடித்த வெற்றியினால் பகைவரைக் கொன்ற வெற்றியினையும்
(உடையனாய்).
157. ஈரிரண்டு ஏந்திய மருப்பின் எழில் நடை நாலு ஏந்தப்பட்ட கொம்பினையும்
அழகிய நடையையும்.
158. தாழ் பெரும் தடக்கை உயர்த்த யானை - தாழ்ச்சியையும் பெருமையையும் அளவினையும்
உடைய துதிக்கையையும் உடைத்தாய் உய(ர்த்துச் சொல்ல)ப் பட்ட யானையினது.
159. எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வனும் - புறக்கழுத்தில் ஏறியிருக்கப்பட்ட
அழகுமிக்க தேவேந்திரனும்
160. நால் பெரும் தேஎத்து நன்னகர் நிலைஇய - நாலாகிய பெருந்திசைகளையுடைய நன்றாகிய
ஊர்கள் நிலைபெற்ற
161. உலகு அங்கு ஆக்கும் ஒன்றுபுரி கொள்கை - உலகத்தை அவ்விடத்துப் படைக்குந் தொழிலொன்றை விரும்பிய கோட்பாடுடையராகி, இதனாலே
162. பலர் புகழ் மூவரும் தலைவர் ஆக பலரும் புகழப்பட்ட இந்திரன் திருமால் உருத்திரன் என்னும் இம் மூன்றுபேரும் தலைமையராகவேண்டி
163. ஏமுறு ஞாலந்தன்னுள் தோன்றி - மயக்கமுறுகின்ற பூமியிலே பிள்ளையார் சாபத்தினாலே வந்து பிறந்து
164. தாமரை பயந்த தா இல் ஊழி - திருமால் உந்தித்தாமரையிலே யுண்டாகப்பட்ட
இடையீடில்லாத ஊழிக்காலத்தையுடைய.
165. நான்மக வொருவற் சுட்டிக் காண்வர - நாலுமுகத்தையுடைய வொருவனாகிய
பிரமனைப்படைக்குந் தொழிலாலே நிறுத்தக்கருதிப் பிள்ளையாரைக் காண வரும் வண்ணம்
166. பகலில் தோன்றும் இகல் இல் காட்சி ஒருபொருளின் உண்மையைப் பகுத்துக்
காணுமிடத்து அறிவின் மயக்கத்தால் வேறுபடத்தோன்றுவதில்லாத அறிவினையும்
167. நால்வேறு இயற்கைப் பதினொரு மூவரொடு - ஆதித்தர் உருத்திரர் வசு மருத்துவர் இந்நால்வகையால் வேறுபட்ட இயல்பினையுடைய பதினொன்றாகிய மூவ(முப்பத்துமூவ)ரோடு
168. ஒன்பதிற்றிரட்டி உயர்நிலை பேறீஇயர் - பதினெண்கணங்களாகிய உயர்ந்த
பதங்களைப் பெற்றிருப்பாராகியவர்கள்.
169. மீன் பூத்தன்ன தோன்றலர் - நெருக்கத்தான் மீன்பொலிவுபெற்றுத் தோன்றினாற் போன்ற தோற்றத்தையுடையராய்
169-170. மீன் சேர்பு வளி கிளர்ந்தன்ன செலவினர் - மீனைச்சேர்ந்து காற்றெழுந்தாலொத்த நடையினையுடையராய்.
170-171. வளியிடைத் தீ எழுந்தன்ன திறலினர் - காற்றிடத்தே நெருப்புத் தோன்றினாற்
போன்ற போர்வலியை வல்லராய்
171-172. தீப்பட உரும் இடித்தன்ன குரலினர் - நெருப்புண்டாக இடியேறு இடித்தாற்
போன்ற குரலினையுடையராய்.
172 -173. விழுமிய உறு குறைமருங்கில் தம் பெறுமுறை கொண்மார் - சீரிய குறையுற
லென்னப்பட்ட வேண்டுகோள்களைப் பிள்ளையாரது இரண்டு பக்கத்திலும் நின்று தாம் பெறுமுறைமையினாலே முடித்துக்கொள்வாராக. -
174. அந்தரக் கொட்பினர் வந்து உடன்காண ஆகாசத்திலே சுழற்சியுடையராய்
வந்து எல்லாரும் கூடிக் காண.
175-176. தா இல் கொள்கை மடந்தையொடு சின்னாள் ஆவினன்குடி அசைதலும் உரியன் - இடையீடில்லாத அருட்கற்பினது கோட்பாட்டையுடைய தெய்வ (யா)னையாருடனே சின்னாள் ஆவினன்குடி யென்னும் திருப்பதியிலே தங்குதலும் உரியன்;
இந்தத் திருப்பதிக்குச் சித்தன்வாழ்வென்றும் பெயர்.
முனிவர் முன்னே செல்ல (137), அதன்பின் காந்திருவர் யாழ்வாசிக்க (142), இவர்களுடனே கந்திருல் மகளிரும் கூடவிளங்க (147), அவ்வெல்லையில் திருமாலும் (157), உருத்திரனும் (754), இந்திரனும் (159) படைக்குந் தொழிலாலே தாம் தாம் தலைமையராகவேண்டி (162) இதற்குப் பிரமனைத் தொழிலிலே நிறுத்தக்கருதிப் (165) பதினெண்கணங்களும் (768) தாமும் தோன்ற ஆகாயச் செலவினராய்த் (170) திறலினராய்க் (171) குரலினராய்த் (172) தமது வேண்டு கோளை யிருபக்கத்திலும் நின்று தாம் பெறுமுறைமையிலே முடித்துக்கொள்வாராக (173), ஆகாசத்திலே சுழற்சியையுடையராகச் சேரக் கூடிவந்து காணத் (174) தெய்வ (யா)னையாருடனே ஆவினன்குடியிலே தங்குதலும் உரியன் (176);
அதா அன்று - அதுவன்றி,
-----------
திருவேரகம்
177. இருமூன்று எய்திய இயல்பினின் வழா அது - ஓதல் ஓதுவித்தல் வேட்டல் வேட்பித்தல்
ஈதல் ஏற்றல்: என்னும் ஆறுதொழிலையும் பொருந்திய முறைமையிற் றப்பாது.
178. இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி தாயார் தந்தையார் என இருவர் மரபுமு(ல)கம்
நன்றென்று மதித்த கோத்திரங்கள் பலவாய் வேறுபட்ட பழைய குடியின்கட் பிறந்த
179. அறுநான்கு இரட்டி இளமை நல்லியாண்டு - ஆறாகிய இலக்கத்தை நாலிலே கூட்டி
யேற்ற இருபத்துநாலதனை இரட்டிக்க நாற்பத்தெட்டு நல்ல இளமைப் பருவமாகிய காலத்தை.
180. ஆறினிற் கழிப்பி அறம் நவில் கொள்கை - வேதநெறியிலே பிரமசரியத்திலே
கழித்து அதன்பின் மனையறத்தைப் பயின்ற கொள்கையராகி
181. மூன்றுவகைக் குறித்த முத்தீச்செல்வத்து - நாற்சதிரம் முச்சதிரம் வில்வடிவமாகிய
மூன்றுவகையினைக் கருதியிட்ட குண்டத்தில் ஆகவ நீயம் தெக்கணாக்கினி காருகபத்தியம் என்று பேர்பெற்ற மூன்றுதீயைப் பொருந்திய செல்வத்தையுடைய
182. இருபிறப்பாளர் பொழுது அறிந்து நுவல - பூணூற்சடங்குக்கு முன் ஒரு பிறப்பும்
பின் ஒருபிறப்பும் ஆகிய இருபிறப்பையுடைய அந்தணர் தாம் ஓதத்தக்க பொழுது களை அறிந்து வேதங்களையோதுதற்கு
183. ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண் - ஒன்பது நூலைப் பொருந்திய
மூன்றுபுரியாகிய நுண்ணிய பூண நூலையுடையராய்
184. புலராக் காழகம் புலர உடீஇ - நீராடுங்காற் றோய்க்கப்பட்ட சேலையை உலர
உடுத்து.
185. உச்சிக் கூப்பிய கையினர் - தலையிலே கூப்பிய கையையுடையராய்
185-186. தற்புகழ்ந்து ஆறெழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி - பிள்ளையாரைத்
துதித்து, ஆறெத்தாலுண்டான (பி-ம்-ஆறெழுத்தாலுண்டானவர்) பிள்ளையார்
மந்திரத்தை அடக்கிக்கொண்ட, அரிய மறைகளை ஆசாரியரிடத்தே கேட்ட கேள்விப்படியே
187. நா வியன் மருங்கின் நவிலப் பாடி - நாவானது அகன்றபடைகளிலே ப(டி)ய ஓதி
188. விரை உறும் நறு மலர் ஏந்தி - மணமிக்க நறுவிய பூக்களை யேந்தி வழிபட
188-189. பெரிது உவந்து ஏரகத்து உறைதலும் உரியன் - மிக மகிழ்ந்து ஏரகமென்னும்
திருப்பதியிலே இருத்தலும் உரியன்;
இருபிறப்பையுடைய அந்தணர் (182) பூணூலுடையராய்ச் (183) சேலையைப் புலர
உடுத்தித் (184) தலையிலே கூப்பிய கையையுடையராய் (185) வேதங்களையோதி (187) நறுமலரேந்தி (வழிபட) (188) ஏரகத் துறைதலும் உரியன் (189); அதா அன்று அதுவன்றி,
---------
குன்றுதோறாடல்
190. பைங்கொடி நறைக்காய் இடையிடுபு வேலன் - பச்சிலைக்கொடியாலே
சாதிக்காயை நடுநடுவேயிட்டு வெறியாட்டாளன்
191. அம் பொதிப் புட்டில் விரைஇக் குளவியொடு -அழகுபொதிந்த புட்டில்
போன்ற தக்கோலக்காயும் காட்டுமல்லிகையுடனே கலந்து
192. வெண் கூதாளம் தொடுத்த கண்ணியன் - வெண்டாளியையும் தொடுத்துக்
கட்டின நெற்றிமாலையை யுடையனாய்
193. நறும் சாந்து அணிந்த கேழ் கிளர் மார்பின் - நறிய சந்தனம் பூசப்பட்ட நிறம்
விளங்கித்தோன்றப்பட்ட மார்பினையுடைனாய்.
194. கொடும் தொழில் வல் வில் கொலைஇய கானவர் - கொடிய தொழிலையுடைய
வல்லிய வில்லாலே கொலைத்தொழிலைச் செய்யப்பட்ட மலைக்குறவரும்.
195. நீடு அமை விளைந்த தேக்கள் தேறல் - நீண்ட மூங்கிலிலேயிருந்து முற்றின
தேனாற்செய்த கள்ளினது தெளிவை
196. குன்று அகச் சிறு குடிக்கிளையுடன் மகிழ்ந்து மலையிடத்துச் சிற்றூரில் தம்
சுற்றத்துடனே உண்டு மகிழ்ந்து
197. தொண்டகச் சிறு பறைக் குரவை அயர - குறிஞ்சிநிலத்துக்குரிய தொண்டக
மென்னும் பெயரையுடைய சிறுபறையொலியுடனே ஒருவர்க்கொருவர் கைகோத்தாடலைச் செய்ய
198. விரல் உளர்பு அவிழ்ந்த வேறுபடு நறும் கான் - விரல்நுனியால் தடவவாய்
நெகிழ்ந்து வேறுபட்ட நறுவிய மணத்தினையுடைத்தாகி.
199. குண்டு சுனைப் பூத்த வண்டு படு கண்ணி - ஆழ்ந்த சுனைகளிலே பூத்த வண்டு
வீழ்கின்ற நெற்றிமாலையையும்
200. இணைத்த கோதை அணைத்த கூந்தல் - பலவாக இணைத்த மாலையுடனே
சேர்த்த மயிரையும்
201. முடித்த குல்லை யிலையுடை நறும்பூ - மயிரின் மேலே முடிக்கப்பட்ட கஞ்சங்
குல்லையினையும் இலைகளுடனே நறிய பூக்களையும்.
துளபமெனினும் அமையும்;
202. செங்கால் மராஅத்த வால் இணர் இடையிடுபு - செவ்விய காலையுடைய
கடம்பினிடத்துளவாகிய வெள்ளிய பூங்கொத்துக்களை நடுவேவைத்து.
203. சுரும்பு உண்ணத் தொடுத்த பெரும் தண் மாத்தழை வண்டுகள் தேனுண்ணும்
படி தொடுத்த மிகவும் குளிர்ந்த பெரிய தழையை
204. திருந்து காழ் அல்குல் திளைப்ப உடீஇ - திருந்திய மணிவடமுடைய மேகலை
பொருந்திய அல்குற்றடத்திலே பயில் உடுத்து
205. மயில்கண்டன்ன மடநடை மகளிரொடு - சாயலுடைமையாலே மயிலைக்
கண்டாற்போன்ற அறியாமைபொருந்திய ஒழுக்கத்தினையுடைய மகளிரோடு.
குரவைக் கூத்தையாடவென முடிக்க. அவ்வெல்லையில்;
206. செய்யன் சிவந்த ஆடையன் செவ்வரை - சிவந்த திருமேனியுடையனாகிச்
சிவந்த உடையினனாகிச் சிவந்த அரையினையுடையனாகி
207. செயலைத் தண் தளிர் துயல்வரும் காதினன் - அசோகினது குளிர்ந்த தளிர்
பொருந்தி அசையப்பட்ட காதையுடையனாகி.
208. கச்சினன் கழலினன் செச்சைக் கண்ணியன் - கட்டின கச்சையுடையனாகி வீரக்
கழலையுடையனாகி வெட்சிமாலையையுடையனாகி.
209. குழலன் கோட்டன் குறும் பல்லியத்தன் - குழலோசையுடையனாகிக் குறிக்கப்பட்ட
கொம்பினையுடைனாகிச் சிறிதாகிய பலவான தோற்கருவி துளைக்கருவிகளுடைய ஓசைகளுடையனாகி
210. தகரன் மஞ்ஞையன் - வளர்கிடாயை யுடையனாகி மயில்வாகனத்தையுடையனாகி.
210-211. புகர் இல் சேவலங்கொடியன் நெடியன் தொடியணி தோளன் குற்றமில்லாத
கோழியாகிய அழகிய கொடியையுடையனாகி நெடுகியிருப்பானாகி வளையணிந்த தோளையுடையனாகி
212. நரம்பு ஆர்த்தன்ன இன்குரல் தொழுதியொடு - நரம்பு ஆரவாரித்தாற் போன்ற
இனியகுரல்களையுடைய கந்திருவமகளிர்கூட்டத்தோடு
213-214. குறும் பொறிக் கொண்ட நறும் தண் சாயல் மருங்கில் கட்டிய நிலன் நேர்பு
துகிலினன் - நுண்ணிதாகிய எழுத்துத்தொழில் பொருந்திய நறிய குளிர்ந்த
மென்மையுடையதாகிக் கச்சைகட்டிய மருங்குலிலே சிக்கென வுடுத்த தொங்கல்
நிலத்திலே பொருந்திய துகிலையுடையனாகி.
215. முழவு உறழ் தடக்கையின் இகல் வேல் ஏந்தி - முழந்தாளைப் பொருந்திய கையிலே
போர்வேலேந்தப்பட்டவன்
216. மென் தோள் பல்பிணை தழீஇத் தலைத்தந்து - மெல்லிய தோள்களையுடைய
பலவாகிய மான்பிணைகள் போலும் மெய்தீண்டி விளையாடுதற்குரிய தெய்வ
மகளிரோடு தழுவிக்கொண்டு அவர்கள் களவறிந்து அவர்கட்கு இருப்பிடங் கொடுத்து.
217. குன்றுதொறு ஆடலும் நின்ற தன் பண்பே - மலைகடோறும் சென்று விளை
யாடுதலும் தனக்கு நிலைமைபெற்ற குணம்;
வெறியாட்டாளனும் (190) நெற்றிமாலையுடையனாகி (192) மலைக் குறவரும் (194) தம்சுற்றத்தோடு
கள்ளுண்டு மகிழ்ந்து (196) தொண்டக மென்னும் பறை யொலிக்கும் குரவைக்கூத்தை (197)
மயில்கண்டன்ன மட நடைமகளிரோடும் (205) ஆட (197), அவ்வெல்லையில் சிவந்த மேனியும் சிவந்த ஆடையும் (206) முதலாகிய அங்கப்பிறத்தியங்களை யுடையோனாகி வேலையேந்தப்பட்டவன் (275) தெய்வமகளிரோடு தழுவிக்கொண்டு (212) மலைகடோறும் சென்று விளையாடுதலும் நிலைபெற்றகுணம் (217)
அதா அன்று - அதுவன்றி,
---------------
திருச்சோலைமலை
218. சிறுதினை மலரொடு விரைஇ மறி அறுத்து - சிறிய தினையரிசியைப் பூக்க
ளோடே கலந்து இடப்பட்ட ஆட்டை அறுத்து
219. வாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇ - கோழிக்கொடியுடனே அவ்விடத்தில்
தான் உண்டாகும்வண்ணம் நிறுத்தி
220. ஊர் ஊர் கொண்ட சீர்கெழு விழவினும் - ஊர்தோறும் ஊர்தோறும் எடுத்துக்
கொண்ட சீர்மைபொருந்திய விழாவினிடத்தும்
221. ஆர்வலர் ஏத்த மேவரும் நிலையினும் - தன்மேலார்வமுடையார் துதிக்க
அதற்குப் பொருந்துதல்வருகிற இடத்தினும்
222. வேலன் தைஇய வெறி அயர் களனும் - வெளியாட்டாளன் அலங்கரித்து வெறி
யாட்டைச் செய்யுமிடத்தும்
223. காடும் காவும் கவின்பெறு துருத்தியும் - காட்டிடத்தும் சோலையிடத்தும்
அழகுபெறப்பட்ட ஆற்றிடைக்குறையினும்.
224. யாறும் குளனும் வேறு பல் வைப்பும் - ஆற்றங்கரையிலும் குளங்கரையினும்
வேறுபட்டுப் பலவாகிய முற்கூறிய திருப்பதிகளையொழிந்த ஊர்களினும்
225. சதுக்கமும் சந்தியும் புதுப்பூங் கடம்பும் - நாற்சந்தியினும் முச்சந்தியிலும் ஐஞ்
சந்திகளிலும் புதிய பூக்களையுடைய கடம்பின் அடியிலும்.
226. மன்றமும் பொதியினும் கந்து உடை நிலையினும் - ஊர்நடுவாகியெல்லாரு
மிருக்கும் மரத்தடியினும் அம்பலத்தினும் ஆதீண்டு குற்றி முதலான தறிகள் நின்ற இடத்தினும்
227. மாண் தலைக் கொடியொடும் மண்ணி அமைவர - அழகையும் தலைமையை
யுமுடைய கோழிக்கொடியுடனே அலங்கரித்து நன்றாக நிறைவுவர.
228. நெய்யோடு ஐயவி அப்பி ஐது உரைத்து - நெய்யுடனே சிறுகடுகைக் கலந்து
பேய்கட்குப் பலியிட்டு அழகிய மந்திரங்களை உச்சரித்து
229. குடந்தம்பட்டுக் கொழு மலர் சிதறி - வழிபட்டு நாண்மலர்களைத் தூவி
230. முரண்கொள் உருவின் இரண்டு உடன் உடீஇ - பகைத்தலைப் பொருந்திய
நிறத்தையுடைய இரண்டாடையை உள்ளொன்றும் புறம்பொன்றுமாக உடுத்து
231. செம் நூல் யாத்து வெண்பொரிச் சிதறி - சிவந்த நூலாலே காப்புக்கட்டி வெள்ளிய
பொரிகளைத் தூவி.
232. மத வலி நிலைஇய மாத் தாட் கொழு விடை - தருக்குதலையும் வலியையும்
நிலைபெற்ற பெரிய கால்களையும் உடைய கொழுவிய கிடாயினது.
233. குருதியொடு விரைஇய தூவெள் அரிசி - உதிரத்துடனே கலந்த தூய வெள்ளரிசியை
234. சில் பலிச் செய்து பல் பிரப்பு இரீஇ - சிறுபலியாக இட்டுப் பல தானிய வித்துக்
களையுடைய கொள்கலங்களையும் வைத்து.
235. சிறு பசுமஞ்சளொடு நறுவிரை தெளித்து - அரைத்த சிறிய பசு மஞ்சளோடே
நறிய சந்தனக்குழம்பைக் கலந்து தெளித்து.
236. பெருந்தண் கணவீர நறும் தண் மாலை - மிகவும் குளிர்ந்த அலரிப் பூவாற்
கட்டிய மணவிய குளிர்ந்த மாலைகளை.
237. துணை அற அறுத்துத் தூங்க நாற்றி - தம்மில் ஒக்க அறும் வண்ணம் அறுத்து
நாலும் வண்ணந் தூக்கி.
238. நளி மலைச் சிலம்பின் நல் நகர் வாழ்த்தி - செறிந்து பக்கவரைகளையுடைய
மலையினிடத்து நல்ல ஊர்களைப் பகை பிணி பசி நீங்குக வென வாழ்த்தி
239. நறும் புகையெடுத்துக் குறிஞ்சி பாடி - நறுவிய தூபம் கொடுத்து அந்நிலத்திற்
குரிய குறிஞ்சிப்பண்ணைப் பாடி
240. இமிழ் இசை அருவியோடு இன்னியம் கறங்க - இம்மென்று இழியப்பட்ட
ஓசையுடைய அருவியுடனே இனிய வாத்தியங்கள் முழங்க
241. உருவப் பல் பூத் தூஉய் வெருவர - நிறவிய பல பூக்களையும் தூவி அச்சம் வரும்
வண்ணம்
242. குருதிச் செந்தினை பரப்பிக் குறமகள் - உதிரத்தோடே கலந்த சிவந்த தினை
யரிசியையும் பரப்புதல்செய்து குறச்சாதியில் மகள்.
243. முருகு இயம் நிறுத்து முரணினர் உட்க முருகனுவக்கும் வாத்தியங்களை
நின்று முழங்கப்பண்ணி மாறுபாடுடையார் அஞ்ச
244. முருகு ஆற்றுப்படுத்த உருகெழு வியன் நகர் - பிள்ளையார் வரும் படி வழி
படுத்தின நெஞ்சுள் உருகுதல்பொருந்தின அகன்ற நகரின்கண்
245. ஆடு களம் சிலம்பப் பாடி - வெறியாடும் இடம் ஆரவாரிக்கப் பிள்ளையாரைப்
பாடி
245-246. பலவுடன் கோடு வாய்வைத்துக் கொடுமணி இயக்கி - கொம்புகள் பலவும்
சேர ஊதி, கோடிய மணிகளையும் முழங்க அசைத்து
247. ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி - அஞ்சியோடாது மேற்கோளையுடைய
மயிலை வாழ்த்தி
248. வேண்டுநர் வேண்டியாங்கு எய்திவழிபட வேண்டுவார்கள் வேண்டினாற்
போலப் பெற்று வழிபட
249. ஆண்டாண்டு உறைதலும் அறிந்தவாறே - யான் முற்கூறிய விழவின் கண்ணும்
காடும் காவும் முதலிய அவ்(வவ்)விடங்களிலே அவன் உறைதலும் யான் அறிந்த வழி
250. ஆண்டாண்டு ஆயினும் ஆக காண்டக - அவ்விடங்களிலுமாகப் பிற இடங்களி
லுமாக உனது காட்சிக்குத் தக.
251. முந்து நீ கண்டுழி முகன் அமர்ந்து ஏத்தி - முற்படக்கண்ட விடத்து முகமலர்ந்து
துதித்து
252. கைதொழூஉப் பரவிக் கால் உற வணங்கி கைகளாலே தலைமேலே கூப்பித்
தொழுது வாழ்த்தித் திருவடியிலே தலையுறும்வண்ணம் தெண்டம்பண்ணி
253. நெடும் பெரும் சிமயத்து நீல பைஞ்சுனை - மிகவும் பெரிய இமவானுச்சியில்
நீலநிறத்தையுடைய அழகிய சுனையிடத்து
254. ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப - பிரமன் திருமால் உருத்திரன் மகேசுவரன்
சதாசிவன் என்னப்பட்ட அஞ்சுபேரில் உருத்திரன் அக்கினியிடமாக நின்று தனது
அங்கையை யேற்க.
255. அறுவர் பயந்த ஆறமர் செல்வ - இருடிகள் அக்கினியில் இட்ட கருப்பத்தை
உருத்திரன் கையிலும் வாங்கிப் பொறுக்கலான அளவிலே அருந்ததி யொழிந்து
நின்ற ஆறுமனைவியர் கையிலும் கொடுத்து அவர்கள் வாங்கிக் கொண்டு
சூன்முதிர்ந்தபின் அவ்வறுவராலும் பெறப்பட்ட ஆறுவடிவைப் பொருந்திய செல்வனே,
256. ஆல்கெழு கடவுள் புதல்வ - கல்லாலின்கீழ்ப் பயின்றிருந்த கடவுளினது
புதல்வனே,
256-257. மால்வரை மலைமகள் மகனே மாற்றோர் கூற்றே - உயர்ந்த மூங்கில்கள்
நெருங்கின இமையப் பருவதராசன்மகளாகிய பரமேசுவரி புத்திரனே, பகை
வருக்குக் கூற்றுவனே,
258. வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ - வெற்றிப்பாட்டானே வெல்போரைச்
செய்யும் துற்கை சிறுவனே,
259. இழையணி சிறப்பிற் பழையோள் குழவி - பூணினது அழகினால் சிறப்பை
யுடைய காடுகிழாளுடைய மைந்தனே,
260. வானோர் வணங்கு வில் தானைத் தலைவ - வணங்கும் வானவர்க்கும் வில்லை
யுடைய சேனைக்கும் தலைவனே
261. மாலை மார்ப நூல் அறி புலவ - மாலை செறியும் மார்பனே, எல்லா நூல்
களையும் அறியும் புலவனே,
262. செருவில் ஒருவ பொரு விறல் மள்ள - போர்த்தொழிலில் ஒப்பில்லா தானே,
பொருகின்ற வெற்றியையுடைய வீரனே,
263. அந்தணர் வெறுக்கை அறிந்தோர் சொல்மலை - அந்தணர்களுடைய செல்வ
மாயிருப்பாய், அறிந்தோர்கள் வாக்குக்குச் சொன்மலையாயிருப்பாய்,
264. மங்கையர் கணவ மைந்தர் ஏறே - தேவயானையார்க்கும் வள்ளி நாய்ச்சியார்க்
கும் கணவனே, வலியோர்க்கு இடபமே
265. வேல் கெழு தடக்கைச் சால் பெருஞ் செல்வ - வேல்பொருந்திய பெரிய
கையாலுண்டான மிகவும் பெரிய வெற்றிச்செல்வனே,
266. குன்றம் கொன்றகுன்றாக் கொற்றத்து - அசுரன் ஒதுங்கின கிரவுஞ்சகிரி யென்
னும் மலையைப் பிளந்த குறைவுபடாத வெற்றியையுடையவனே,
267. விண் பொரும் நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ - தேவருலகத்தை யொக்க வளர்ந்த
மலைகளையுடைய குறிஞ்சிநிலத்துக்கு உரியவனே,
268. பலர் புகழ் நன்மொழிப் புலவர் ஏறே - பலராலும் புகழப்பட்ட நல்ல சொற்களை
யுடைய கவிப்புலவோர்க்குச் சிங்கத்தின் முதன்மை யுடையாய்,
269. அரும் பெறல் மரபின் பெரும் பெயர் முருக - பெறுதற்கரிய முறைமையினை
யுடைய பெரும்பொருளாகிய வீட்டினையுடைய முருகனே,
270. நசையுநர்க்கு ஆர்த்தும் இசை பேராள - வீட்டின்பத்தை விரும்பினோர்க்கு
அதனை நுகர்விக்கும் பெரிய புகழையுடையாய்,
271-272. அலந்தோர்க்கு அளிக்கும் பொலம் பூட் சேய் மண்டு அமர் கடந்த நின் வென்று
ஆடு அகலத்து - துன்பமுற்றோர்க்கு அருள்செய்வானாய்ப் பொன்னாற் செய்த
பேரணிகலங்களை நெருங்கிய போர்களை முடித்த நின் மிகுந்த
வெற்றியையுடைய மார்பிலே அணியப்பட்ட சேயே,
273. பரிசிலர்த் தாங்கும் உருகு எழு நெடுவேள் - இரந்துவந்தோரை வேண்டியது
கொடுத்துப்பாதுகாக்கும் கண்டார்க்கு உருகுதல் தோன்றப்பட்ட பெரியவனே,
274. பெரியோர் ஏத்தும் பெரும் பேர் இயவுள் - தேவர் முனிவர் துதிக்கப்பட்ட
பெரிய திருநாமத்தையுடைய புகழாளனே,
275. சூர் மருங்கு அறுத்த மொய்ம்பின் மத வலி - சூரன்கிளையை வேரறுத்த
தோளிடத்து மிக்க வலியாலே.
276. போர்மிகு பொருந குரிசில் எனப் பல - மிக்க போரிடங்களில் உவமித்தற்கான
வனே, தலைவனே, என்று பலவாக.
277. யான் அறி அளவையின் ஏத்தி ஆனாது - யானறிந்து நினக்குக் கூறிய அளவினால்
நீயும் ஒழியாது ஏத்தி.
278. நின் அளந்து அறிதல் மன் உயிர்க்கு அருமையின் - நின்னை அளவிட்டு அறி
கிறது மிக்க உயிர்கட்கு அரிதாகையால்
279-280. நின் அடி உள்ளிவந்தனன்; நின்னொடு புரையுநர் இல்லாப் புலமையோய், என -
நின் திருவடியைப் பெறவேணுமென்று கருதிவந்தேன்; நின்னோடு
உவமிப்பாரில்லாத மெய்ஞ்ஞானத்தையுடையாய், என்று
281. குறித்தது மொழியா அளவையில் - நீ கருதியது தன்னைச் சொல்லுவதன்
முன்னே.
281-282. குறித்து உடன் வேறு பல் உருவில் குறும் பல் கூளியர் - உடனே அறிந்து
வேறுபட்ட பல வடிவினையும் சிறிய பல்லையும் உடையராய்ப் பிள்ளையாரைச்
சேவித்துநிற்பார்.
283. சாறு அயர் களத்து வீறு பெறத் தோன்றி - விழவுசெய்யப்பட்ட களத்திலே
தனிப்பெறத் தோன்றி
284. அளியன்தானே முதுவாய் இரவலன் - அருள்செய்யத்தக்கான்றானாய் அறிவு
முதிர்ந்த வாயையுடையனாகிப் பரிசில்பெறத் தக்கான்
285. வந்தோன் பெரும நின் வண் புகழ் நயந்து - வந்தான் பெருமானே நின் வளவிய
புகழைக் கேட்டு விரும்பி.
286. இனியவும் நல்லவும் நனி பல ஏத்தி என - கேட்டோர்க்கு இனியனவும் உறுதி
பயப்பனவும் ஆகிய மிகவும் பலவற்றை வாழ்த்தி யென்றுகூற, அவ்வெல்லையில்
287. தெய்வம் சான்ற திறல் விளங்கு உருவின் - தெய்வத்தன்மை அமைந்த வலி
விளங்கும் வடிவினையும்
288. வான் தோய் நிவப்பில் தான் வந்து எய்தி - வானைத் தீண்டும் உயர்ச்சியை
யுமுடைய தான் வந்து குறுகி.
289. அணங்கு சால் உயர் நிலை தழீஇ - அத்தெய்வத்தன்மையமைந்த உயர்ந்த நிலை
மையை உள்ளடக்கி
289-290. பண்டைத் தன் மணம் கமழ் தெய்வத்து இளநலம் காட்டி தனது முன்புண்டாகிய
மணநாறுகின்ற தெய்வத்தன்மையையுடைய இளைய அழகைப் புலப்படுத்தி.
297. அஞ்சல் ஓம்புமதி அறிவம் நின் வரவென - உனது அஞ்சுதலைப் பரிகரி,
நின்னுடைய வரவு யாம் அறிந்தோமென்று
292. அன்புடன் நன்மொழி அளைஇ - அன்புடனே நல்ல வார்த்தைகளைக் கலந்தருளிச் செய்து
292-293. விளிவின்று இருள் நிற முந்நீர் வளைஇய உலகத்து - அழிவின்றி யிருண்ட
நிறத்தையுடைய கடல்சூழ்ந்த உலகத்தில்.
294-295. ஒரு நீயாகத் தோன்றி விழுமிய பெறலரும் பரிசில் நல்கும் - நீ ஒப்பில்லாத
வனாம்வண்ணம் வெளிப்பட்டுச் சீரிய பெறுதற்கரிய வீட்டின்பத்தைத் தருவன்
295-296. பலவுடன் வேறு பல் துகிலின் நுடங்கி - பலவாய்ச் சேர்ந்து வேறுபட்டிருக்கிற
கொடிகள்போல் அசைந்து.
296-297. அகில் சுமந்து ஆர முழு முதல் உருட்டி - அகில்மரத்தை மேல் கொண்டு
சந்தன முழுமரத்தைத் தள்ளி.
297-298. வேரல் பூவுடை யிலங்கு சினை புலம்ப வேர் கீண்டு - மூங்கில்களும்
பூக்களையுடைய விளங்காநின்ற மரக்கோடுகளும் நடுங்க வேரைப்பிளந்து
299. விண் பொருநெடு வரைப் பருதியின் தொடுத்த - தேவருலகத்தைத் தீண்டப் பட்ட
நெடிய மலையிடத்து ஆதித்தமண்டலம்போலத் தொடுத்து வைக்கப்பட்ட
300. தண்கமழ் அலர் இறால் சிதைய - குளிர்ந்து மணக்கின்ற விரிந்த பெருந் தேன்கூடு
கெட
300-301. நன் பல வாசனை முது சுளை கலாவ - நல்ல பலாவினது வாசனைகளையுடைய
முற்றிய சுளைகள் விரவ
301-302. மீமிசை நாக நறுமலர் உதிர - மிகவும் உயர்ந்த சுரபுன்னையினது நறுமலர்கள்
உதிர
302-303. ஊகமொடு மாமுக முசுக்கலை பனிப்ப - கருங்குரங்கோடே கரிய முகத்தை
யுடைய ஆண்முசுக்களும் நடுங்க
303-304. பூ நுதல் இரும்பிடி குளிர்ப்ப வீசி புகரழகையுடைத்தாகிய மத்தகத்தையுடைய
பெரிய பிடியானை குளிரும்வண்ணம் மோதி
304-305. பெருங் களிற்று முத்துடை வான் கோடு தழீஇத் தத்துற்று - பெரிய களிற்
றானையினது முத்துடைய பெரிய கொம்புகளை உள்ளடக்கிக் குதித்தலைப் பொருந்தி.
306. நன் பொன் மணி நிறம் கிளரப் பொன் கொழியா - விளைபொன்னும் நிறத்தை
யுடைய மணிகளும் மேற்றோன்றப் பொடிப்பொன்னைக்கொழித்து.
307-308. வாழை முழுமுதல் துமியத் தாழை இளநீர் விழுக்குலை உதிரத்தாக்கி -
பெரிய முதல் துணியவும் தெங்கிளநீரையுடைய சீரிய குலைகள் உதிரவும் எற்றி
309. கறிக்கொடிக் கருந்துணர் சாய - மிளகுகொடிகளினது கரிய கொத்துக்கள்
சாய்ந்துபோக
309-310. பொறிப் புற மட நடை மஞ்ஞை பல உடன் வெரீஇ - பீலியுடைய புறம்பையும்
மடப்பம் பொருந்திய ஒழுக்கத்தையும் உடைய மயில்கள் பலவும் சேர வெருவி
311. கோழி வயப்பெடை இரிய - காட்டுக் கோழிகளுடைய வலிய பெடைகள் இரிய
311-313. கேழலொடு இரும் பனை வெளிற்றின் புன் சாய் அன்ன குரூஉ மயிர் யாக்
கைக் குடாவடி உளியம் - காட்டுப்பன்றியோடு வெளிற்றினையுடைய பெரிய
பனையினது புல்லிய செறும்பைப் போன்ற கரிய மயிரினையுடைய
உடம்பினையும் வளைந்த அடியையுமுடைய கரடி
314. பெரும் கல்விடர் அளைச் செறிய - பெரிய கல்லு நீங்கிய முழையிலே சேர.
314-315. கருங் கோட்டு ஆமா நல் ஏறு சிலைப்ப - கரிய கொம்பினையுடைய
காட்டாலினது நல்ல ஏறுகள் முழங்க
375-316. சேண் நின்று இழுமென இழிதரும் அருவி - தூரமாகிய மலையினுச்சி
யினின்று இழுமென்னும் ஒசையுடனே விழும் அருவியை யுடைத்தாய்
317. பழம் உதிர் சோலை மலை கிழவோனே - நற்கணிகள் உதிரப்பட்ட சோலை
களையும் உடைய மலைக்கு உரிமையுடையோன்
இவற்றைத் தொகுத்துப் பொருண்முடிவு தோன்ற முடிக்குமிடத்து இடைப்பிறந்தனவற்றை யொழித்து,
அத்தன்மையாகச் சொல்லப்பட்ட ஒளியையும் (3) தாளையும் (4) கையையும் (5) உடையானாகித் தெய்வ
யானைக்குக் கணவனாகி (6) மாலை அசையும் மார்பனாகிக் (17) காந்தள் மாலைசூடிய
திருமுடியையுடையனாகிய (44) சேயினது திருவடியிலே செல்லவேணுமென்கிற மனத்தோடு (62)
அவன் தங்குமிடத்துக்கு (63) வழியை விரும்பினையாகில் (64) உன்னுடைய ஆசைப்படியே (65)
இப்பொழுதே பெறுவை நீ நினைகருமம் (66) இதற்கு அவன் உறையும் இடம் திருப்பரங்குன்றிலே அமர்ந்திருத்தலும் உரியன் (77), அதுவன்றி, அலைவாயென்னும் திருச்செந்தூரிலே எழுந்தருளுதலும் நிலையுடைய குணம் (125), அதுவன்றி, ஆவினன்குடியிலே தங்குதலும் உரியன் (176), அதுவன்றி ஏரகத்துறைதலும் உரியன் (189), அதுவன்றி, மலைகடோறுஞ் சென்று விளையாடுதலும் நிலைபெற்றகுணம் (217), அதுவன்றி, விழாவின்கண்ணும் (220), அன்பர் ஏத்தப் பொருந்துமிடங்களிலும் (221), வெறியாடும் இடங்களிலும் (222), காடும் சோலையும் முதலாகச் சொல்லப்பட்ட அவ்விடங்களிலும் உறைதற்குரியன் (249), இம்முறைமையாக யான் அறிந்தவழி; அவ்விடங்களிலே யாயினுமாக, பிற இடங்களிலே யாயினுமாக (250), முற்படக் கண்டபொழுதே முக மலர்ந்து துதித்துப் பரவி வாழ்த்தி வணங்கி (252), ஆறுவடிவைப் பொருந்திய செல்வனே! (255), கல்லாலின் கீழிருந்த கடவுட் புதல்வனே! (256), என்று துடங்கிக் குரிசிலளவாக (276), நினக்குக் கூறிய அளவால் ஏத்தியொழியாதே துதித்து (277), நின் திருவடியைப் பெறவேணுமென்று கருதி வந்தேன் என்று நீ கருதிய அதனைச் சொல்லுவதன் முன்னே (281), பிள்ளையாரைச் சேவித்து நிற்பார் தோன்றி (283), அறிவுமுதிர்ந்த வாயையுடைய புலவன் வந்தான் நின்புகழைக் கேட்டென்று கூற (285), அவ் வெல்லையில் தான் வந்து அணுகித் (288), தெய்வத்தன்மையால் நின்ற நிலைமையுள்ளடக்கித் தனது இளைய அழகைக் காட்டி (290), 'அஞ்சு தலைப் பரிகரி (291), நின் வரவு யாம் அறிந்தோம்' என்று அன்புடனே நல்லவார்த்தை அருளிச்செய்து (292), உலகத்தில் நீ ஒப்பில்லாதவனாம் வண்ணம் வீட்டின்பத்தைத் தருவன் (295), அருவியையும் சோலைகளையும் உடைய மலைக்குரியோன் (317) என்று எதிர்கண்ட பாணனுக்குப் பரிசில்பெற்றுவந்த பாணன் கூறியதாகப் பொருண் முடிக்க.
முருகாற்றுப்படை யென்றது முருகனிடத்திலே செல்ல வழிபடுத்துதல்.
திருமுருகாறு முற்றும்.
==============================
திருமுருகாற்றுப்படை - நூற்பொருளகராதி
அந்தணர்
ஆறுதொழிலையும் பொருந்திய முறையிற்றப்பாதவர்; தாய் தந்தையர் கோத்திரங்கள் பலவாய மதித்த
பழைய குடியின்கட் பிறந்தவர்; நாற்பத்தெட்டியாண்டு பிரமசரிய நிலையில் நின்றவர்; முத்தீச்
செல்வமுடையவர்; இருபிறப்பாளர் வேதங்களை ஓதுவதற்குப் பூண நூலை யுடையவராய்,
ஆறெழுத்தறிந்து மலர் தூவி ஓதி முருகனை வணங்குவர். 177-188
அருவி
கொடிகள் போலசைந்து, அகில் மரத்தையும் சந்தனமரத்தையும் தள்ளி, மூங்கில்வேரைப் பிளந்து,
தேனிறால் சிதையப் பலாச்சுளைகள் விரவச் சுரப்புன்னைமலர்கள் உதிரக் குரங்குகள் நடுங்கப் பிடிகள்
குளிர, மோதி, யானைக் கொம்புகளைக் கொண்டு, பொன்னும் மணியும் கொழித்து, வாழையையும்
தெங்கையும் ஏற்றி, மிளகுகொடிகள் சாய, மயில்வெருவக் காட்டுக் கோழிகள் இரியக் காட்டுப் பன்றியும்
கரடியும் முழையிலே சேர, ஆமாவின் ஏறு முழங்க, மலைகளில் அருவி இழுமென இறங்குதல்.
296 - 316
இந்திரன்
ஆயிரங்கண்ணையுடையவன்; நூறாகிய பல வேள்விகளை முடித்துப் பகைவரை வென்ற
வெற்றியினையுடையவன்; நாலு கொம்பையும் அழகிய நடையையும் தாழ்ந்து பெரிதான
துதிக்கையையும் உடைய யானையின் புறக்கழுத்திலே ஏறியிருப்பவன். 155 - 159
உருத்திரன்
வெள்ளையெருத்தை வெற்றிக்களத்தில் உயரக் கொண்டிருக்கிறவன்; திண்ணிய தோள்களையுடையவன்;
உமாதேவியைப் பாகத்துக் கொண்டவன்; இமையாத மூன்று கண்ணையுடையவன்; திரிபுர மெரித்தவன்.
151 - 154
கந்திருவர்
மெல்லிய அழுக்கில்லாத ஆடையையுடையவர்; மாலை சூழ்ந்த மார்பினர்; யாழோசையிற் பயின்ற
ஈரநெஞ்சமுடையவர்; மெல்லிய வார்த்தையை உடையர், அவர் இனிய யாழ் நரம்பைக் காந்திருவ
மகளிரோடு வாசித்தல், 138 - 142
காந்திருவ மகளிர்
நோயில்லாத உடம்பினர்; மாவின் தளிர் போன்ற நிறமுடையவர்; பொற்சுணங்குடையர்; மேகலையணிந்த
குற்றமில்லாத மகளிர், அவர் கந்திருவரோடு விளங்குதல். 143 - 147
குறமகளிர்
சுனையிற் பூத்த பூக்களாலாகிய நெற்றி மாலையினையுடையர்; கூந்தலையுடையர்; கஞ்சங்குல்லை,
இலை, நறிய பூக்கள், கடம்பின் வெள்ளிய பூங்கொத்துக்கள்: இவைகளாலாய தழையை உடுத்தவர்;
மயில் போன்ற சாயலவர்; மடைமையுடையர். அவர் குறவரோடு கைகோத்து, ஒலிக்கும்
தொண்டகப் பறைக்கு ஏற்பக் குரவையாடுதல்.
194 - 205
கூடல்
மதுரையின் வாயில் நீண்ட கொடியினையுடையது; பந்தும் பாவையும் தூங்கப் பெற்றது;
பகைவரையழித்துப் போர்த்தொழில் இல்லையான மதில் வாயிலை உடையது. அந்நகர்
திருவிளங்கும் அங்காடித் தெருவையும் மாடங்கள் நெருங்கின தெருக்களையும் உடை யது
தன் மேற்றிசையிடைத்துத் திருப்பரங்குன்றையுடையது. 67 - 71
கூளியர்
வேறுபபட்ட பலவடியினையும் சிறிய பல்லையும் உடையராய்ப் பிள்ளையாரைச் சேவித்து நிற்போர்.
281- 282
கெருடன்
பாம்பைப்படும்படி அடிக்கும் பலவரியையுடைய வளைந்த சிறகையுடையது; திருமால் கொடியில்
அணியப் பெற்றது. 148 - 151
சாம்புநதம்
இப்பெயரைப் பெற்ற பொன்னாற் செய்த பூணினைச் சூரரமகளிர் அணிதல். 18
சூரர மகளிர்
சதங்கை சூழ்ந்த அடியினையுடையர்; திரண்டகாலையும் வளைந்த டயினையும் மூங்கில் போன்ற
தோளினையும் உடையர்; சிவந்த துகிலினையுடையர்; காஞ்சியணிந்த அல்குலினையுடையர்;
இயல்பாகவே அழகையுடையர்; பொற்பூணையுடையர்; தலைக்கோலங்களையுடைய தலையில்
பூக்களையுடையர்; மருதம் பூ, சண்பகப்பூ இவற்றாலாய மாலையைக் கொண்டையைச் சூழக்
கட்டியிருந்தனர்; காதில் அசோகந் தளிரையும் மார்பில் சந்தனக் குழம்பையும் உடையர்;
வேங்கைப்பூவின் தாதை அச்சந்தனக் குழம்பின் மேல் அப்பியிருந்தனர். அவர் விளாவினது
தளிரைக்கிள்ளி ஒருவர்மேல் ஒருவர் எறிந்து கோழிக்கொடியை வாழ்த்தி மலை ஆரவாரிக்கும்படி
சோலையில் விளையாடுதல் 12 - 41
சூரன்
மக்கள் வடிவும் விலங்கு வடிவுமான இரண்டு வடிவையுடைய உடலையுடையவன். அவன் வேறுவேறாக
அறும்படியும் அஞ்சும் படியும் முருகன் அவுணரை மண்டுதல். கீழ் நோக்கின பூங்கொத்தையுடைய
மா வடிவாகிய அச்சூரபன்மாவென்னும் முதல்வனை முருகன் வேலாற் கொல்லுதல்,
57 -60
ஞாயிறு
உலகத்திலுள்ள பல்லுயிர்களும் மகிழ, மேருவை வலமாக, யாவர்க்கும் நேராகச் சுழலும்; தனது ஒளியாற்
காட்சியின் பயன் கொள்வார் பலராலும் புகழப்படும். கடலிடத்து ஞாயிறு, மயிலிடத்து முருகன்
காணப்படுவதற்கு உவமை. 1-3
திருச்சீரலைவாய்
உயர்ந்தோராலே புகழப்பட்ட மிகவும் உயர்ந்த சீரிய புகழை யுடையது. அத்திருச் செந்திலில் முருகன்
ஆகாச வழியாக வந்து எழுந்தருளுதலும் உரியன். 119 - 125
திருப்பரங்குன்றம்
இரவில் வயல்களிலுள்ள தாமரைப்பூவிலே துயின்று காலையில் நெய்தல்பூவின் மதுவுண்டு ஞாயிறு
தோன்றுங் காலத்துச் சுனைப் பூக்களிலே ஆரவாரிக்கும் அழகிய சிறகையுடைய வண்டுகளையுடைய
சுனையினையுடைய திருப்பரங்குன்று. அங்கு முருகன் திருவுள்ளம் பொருந்தித் தங்குதலுமுரியன்.
72-77
திருமால்
கெருடனையணிந்த நீண்ட கொடியினையுடையவன். 151
திருவாவினன்குடி
தேவரும் மூவரும் வந்து தன்னைக் குறையிரக்கும்படி முருகன் இங்குத் தெய்வயானையாருடன்
தங்குதலுமுரியன். 174-176
திருவேரகம்
அந்தணர் தன்னை வழிபட அதற்கு மகிழ்ந்து முருகன் இத் திருப்பதியிலிருத்தலும் உரியன்.
188 – 189
தெய்வயானையார்
குற்றமில்லாத அறக் கற்பையுடைய இந்திரன்மகள்; முருகன் மனைவி. 6
தேனிறால்
நெடியமலையிடத்து ஆதித்தமண்டலம் போலத் தொடுத்துக் காணப்படுதல் அது மலையருவியின்
வேகத்தால் சிதைதல். 299 - 300
நான்முகன்
திருமால் உந்தித்தாமரையிலே உண்டாக்கப்பட்ட இடையீடில்லாத ஊழிக்காலத்தையுடையன்;
நாலுமுகத்தையுடையவன். அவன் பிள்ளையார் சாபத்தினாலே பூமியில் வந்து பிறத்தல்.
நான்முகனைப் படைக்குந் தொழிலில் நிறுத்த வேண்டிச் சிவனும் மாலும் இந்திரனும்
திருவாவினன்குடியில் வந்து முருகணைக் காணுதல். 160 - 165
பதினெண்கணங்கள்
மீன்பொலிவது போன்று நெருங்கித் தோன்றுவர்; உயர்ந்த பதங்களைப் பெற்றிருப்போர்; வாயுவேக
நடையினர்; காற்றில் நெருப்புப் போன்ற போர்வலியை வல்லர்; இடிபோன்ற குரலினர்; பிள்ளையார்
இரு மருங்கினும் நின்று தம் குறையை முடிப்பர். அவர் ஆகாயத்தே சுழற்சியையுடையராய்
வந்து திருவாவினன் குடியிற், கூடுதல். 168 - 174
பேய்மகள்
காய்ந்த மயிரினையும் நிரை யொவ்வாத பல்லையும் பெரிய வாயையும், சுழன்ற விழியையும், காதில்
கூகையையும் பாம்பையும் உடையள். போர்க்களத்தில் கையில் தலையை ஏந்தி நிணந்தின்று
வென்றியைப் பாடித் துணங்கையாடுதல். 47 - 56
மராஅமரம்
இருளுண்டாம்படி தழை நெருங்கின பருத்த அரையையுடைய செங்கடம்பு, மழை பொழிந்து குளிர்ந்த
மணமுடைய காட்டிடத்து உண்டாதல். அதனது வட்டம் பொருந்திய பூவாற் செய்த குளிர்ந்த மாலையை
முருகன் அணிதல். 7 - 11
முப்பத்துழுவர்
அறிவின் மயக்கத்தால் வேறுபடத் தோன்றுவதில்லாத அறிவினைடைய ஆதித்தர், வசு, மருத்துவர்,
உருத்திரர் என்போர். 166 - 167
முருகன்
கடலிடத்துக் காணப்படும் ஞாயிறு போலப் போது செய்யாமல், எக்காலமும் ஒழிவற விளங்குவதாகி
மனவாக்கையும் கடந்த தூரத்திலே விட்டு விளங்காநின்ற ஒளியினையுடையன்; தன்னையடைந்தோரைத்
தாங்கியான் எனது என்னும் செருக்கைக் கெடுக்கும் வலிய தாளினையுடையன்; மாறுபட்டோரை
அழித்த இடியேறு போன்ற கை யினையுடையன்;
3-5
ஆதித்தனையுங் காணாத மரம் நெருங்கின் சூரரமகளிராடுஞ் சோலையிடத்து வண்டுகள்
மொய்யாத நெருப்பையொத்த காந்தட்பூவினது மாலையை முடியிற் சூடியவன்; 41 - 44
குற்றமில்லாத வெற்றியையும் ஒருவராலும் அளந்தறியப்படாத நல்ல புகழையும் சிவந்த வேலினையும்
முதிராவடிவையும் உடையன். அவன் திருவடிகளையடையும் உள்ளமொடு நன்றான அறங்களைச் செய்து
அவன் தங்குமிடத்திற்குச் சென்றால் அவன் அருள் பெறலாம். 60-66
திருப்பரங்குன்றிலே திருவுள்ளம் பொருந்தியிருத்தலுமுரியன். 77
தேவர்களும் மூவர்களும் வந்து தன்னைக் கண்டு குறையிரக்கும்படி கற்புடைய தெய்வ யானையாருடனே
சித்தன்வாழ்வென்னும் ஆவினன் குடிப்பதியில் தங்குதலும் உரியன். 174-176
அந்தணர் பூக்களை ஏந்தி,ஆறெழுத்தோதித் தன்னை வழிபட மிக மகிழ்ந்து ஏரகம் என்னும் திருப்பதியிலே
இருந்தலும் உரியன். 188 - 189
சிவந்த மேனியன்; சிவந்த உடையன்; சிவந்த அரையினன்; காதில் அசோகின் தளிர் அசையப் பெற்றவன்;
கச்சினன்; கழலினன்; வெட்சி மாலையையுடையன்; குழலும் கொம்பும் தோற்கருவிகளும் உடையன்;
கிடாயும் மயிலுமுடையன்; கோழிக் கொடியோன்; நெடியன்; வளையணிந்த தோளையுடையவன்.
206 - 211
நுண்ணிய எழுத்துத் தொழில் பொருந்திய துகிலையுடையன்; வேலேந்தினவன் இனிய குரலினையுடைய
கந்திருவ மகளிர் கூட்டத்தோடு மெய் தீண்டி விளையாடும் தெய்வ மகளிரைத் தழுவிக்கொண்டு
இருப்பிடங்கொடுத்து மலை தோறும் சென்று விளையாடுதலும் உரியன்.
212 - 217
கல்லாலின் கீழிருந்த கடவுளுக்கும் இமையப் பருவதராசன் மகளாகிய பரமேசுவரிக்கும் துர்க்கைக்கும்,
காடுகிழாளுக்கும் மைந்தன். 256 - 259
வில்லையுடைய தேவர் சேனாபதி, மாலைமார்பன், புலவன், போரில் ஒப்பற்றவன், வீரன், அந்தணர்
செல்வம், அறிந்தோர்க்குச் சொன்மலை, தெய்வயானையார்க்கும் வள்ளிநாய்ச்சியார்க்கும் கணவன்,
வலியோர்க்கு இடபம், வெற்றிவேற் செல்வன், கிரவுஞ்ச கிரியைப் பிளந்தோன், குறிஞ்சிக்குரியன்,
கவிப்புலவோர்க்குச் சிங்கம், வீட்டினை யுடையோன், விரும்பினோர்க்கு வீடளித்து விம்மினோர்க்கு
அருள் செய்பவன். 260 - 272
இரந்து வந்தோரைப் பாதுகாத்துக் கண்டார்க்கு உருகுதல் தோன்றப்பட்ட பெரியவன்; பலரும் ஏதகும்
புகழாளன்; அசுர குலத்தை அழித்தவன்; ஒப்பில்லா மெய்ஞ்ஞானமுடையவன். 273-280
இரவலன் வரவைக் கூளியர் கூற அறிந்து வந்து தன் மண நாறுகின்ற தெய்வத்தன்மையையுடைய
இளைய அழகைப் புலப்படுத்தி அச்சம் நீக்கி அன்பு கூர்ந்து அருண்மொழியளைஇ வீட்டின்பத்தைத்
தருவன்; வானைத் தீண்டும் உயர்ச்சியையுடையன். 282 - 295
அருவியையுடைய நற்கனிகள் உதிரப்பட்ட சோலைகளையுடைய மலைக்கு உரிமையுடையோன்.
316 - 317
முருகன் உறையும் இடங்கள்
விழவினும், வெறிக்களத்திலும், அன்பர் துதியின் கண்ணும், காட்டி னும், காவினும், துருத்தியினும்,
யாற்றினும் குளத்தினும், பல சந்திகளிலும், கடம்பினடியிலும், மன்றத்தினும், பொதியினும், கந்தினும்,
குறமகள் முருகாற்றுப்படுக்கும் இடத்தினும் முருகன் உறைதல். 218 - 250
முருகன் ஆறு முகங்கள்
உலகம் இருள் நீங்கி விளங்கும்படி சோம சூரியாக்கினியிடத்திற் பலவாகிய கிரணங்களை ஒருமுகம்
விரித்தது; ஒரு முகம் அடியார் வேண்டுகோள்களைக் கொடுத்தது; ஒருமுகம் பிராமணருடைய
யாகங்களைத் தீங்குவாராமல் ஆராயாநிற்கும், ஒருமுகம் ஆய்ந்தறியப்படாம லொழிந்த ஆழ்பொருள்களை
இருடிகள் இன்புறும் வண்ணம் ஆராய்ந்து திங்களைப் போல அத்திக்குகளை விளக்கும்; ஒரு முகம்
அசுரரை யழித்துப் போர்க்களத்தை விரும்பாநின்றது; ஒரு முகம் வள்ளியுடன் மகிழ்ச்சி பொருந்திற்று.
91 - 102
முருகன் குழை
அவனது மகரக்குழைகள் திங்களைச் சூழ்ந்த மீன்கள் போல் ஒளி விடுவன.
86-88
முருகன் பன்னிருகைகள்
ஒருகை தேவர்களுக்குப் பாதுகாவலாக உயர்ந்தது; மருங்கில் வைத்தது ஒறகை; துடையின்
மேலே ஒருகை தங்கியது; ஒருகை அங்கு சத்தால் யானையைச் செலுத்தியது; இரண்டு கைகள்
பரிசையுடன் வேலை வலமாகச் சுழற்றின; ஒருகை மார்போடு விளங்கிற்று; ஒருகை மாலையோடு
சேர்ந்தது; ஒருகை மேலே படைக்கலம் எறிதலாற் சூழல மற்றொருகை வீரமணியை முழக்கும்;
ஒருகை மழையைப் பெய்ய ஒரு கை தெய்வயானையார்க்கு மணமாலை புனையும்.
107 - 118
முருகன் பிறப்பு
இருடிகள் அக்கினியிலிட்ட கருப்பத்தை அருந்ததி யொழிந்த ஆறு மனைவியரும் கொண்டு சூன்
முதிர்ந்து இமவானுச்சியில் சுனையிடத்தே பெறப்பட்ட ஆறு வடிவைப் பொருந்திய செல்வன்.
253-255
முருகன் மார்பு
பதக்கம் தங்கப் பெற்றது; அழகும் பெருமையும் உடையது; மூன்று வரியாகிய இலக்கணத்தை உடையது.
104 - 105
முருகன் முடி
ஐந்து தொழிற் கூறுகளும் முற்றுப் பெற்றது; பல இரத்தினங்களையுடையது, 83-85
முருகன் யானை
புகரையுடைய மத்தகத்தே மாலையும் பட்டமும் உடையது; மருங்கில் மணியுடையது;
கூற்றம் போன்றது; வாயுவேகமுடையது. 78-82
முருகாற்றுப்படுத்தல்
கோழிக் கொடியுடனே அலங்கரித்து, நெய்யும் ஐயவியும் பலியிட்டு மந்திரங்களை உச்சரித்துச்
செந்நூலாலே காப்புக்கட்டிப் பொரிகளைத் தூவிக் கிடாயினது உதிரங்கலந்த அரிசியைப் பலியாகக்
கொடுத்து, மஞ்சளும், சந்தனமும் தெளித்து, மாலை தூக்கித் தூபங் கொடுத்துக் குறிஞ்சிபாடிக்
குருதிச் செந்தினை பரப்பி மணிகளை அசைத்து, மயிலை வாழ்த்திக் குறமகள் வெறியாடுதல்.
227 - 249
முனிவர்
மரவுரியுடையினர்; நரைத்த முடியினர்; அழுக்கற்று விளங்கும் வடிவினர்; மானின்தோல் தைவரும்
மார்பில் பட்டினியால் எலும்பு தோனறும் உடம்பினர்; மாதவுபவாசமுடையர்; மாறுபாடும் கோபமும்
போக்கியவர்; கற்றோரால் அறியப்படாத அறிவினர்; கல்விக்குத் தாமே எல்லையாயிருக்கிற
தலைமையையுடையர்; போகப்பொரு ளிச்சையுடனே கடிய சினத்தையும் போக்கின
அறிவினையுடையார்; துன்பம் சிறிதும் அறியாத இயல்பினர்; யாவரிடத்தும் வெறுப்பில்லாத
அறிவினை யுடையர்; திருவாவினன்குடி முருகன் கோவிலுக்குள் தேவர்களுக்கு முன் முனிவர்
செல்லுதல். 127-137
வள்ளி
குறவர்மடமகள்; கொடியிடையாள்; பேதைமையையுடையாள்; முருகனது ஒரு முகம் அவளுடன் மகிழ்ச்சி
பொருந்திற்று. 100 -102
விழவு
சிறிய தினையரிசியைப் பூக்களோடு கலந்து இட்டு, ஆட்டை அறுத்துக் கோழிக் கொடி நிறுத்து, ஊர்தோறும்
விழவுகொள்ளுதல். 218 - 220
வெறியயர்தல்
வேலன் வெறியாடுங் களத்தில் முருகன் உறைதல் 222
வேலன்
பச்சிலைக் கொடியாலே சாதிக்காயை நடுவேயிட்டுத் தக்கோலக் காயும் காட்டு மல்லிகையுடனே
கலந்து வெண்டாளியையும் தொடுத்துக் கட்டின நெற்றி மாலையையுடைனாய், சந்தனம் பூசிய மார்போடு,
கள்ளினது தெளிவையுண்டு, குறவர் குரவையாட வெறியாடுபவன். 190-197
------------xx---------
பாடபேதம்
வரி | நச்சினார்க்கினியர் பாடம் |
இப்பதிப்பிற்பாடம் |
1 | வலன் ஏர்பு | வலன் நேர்பு |
63. | புலம்பிரிந்துறையும் | புலம்புரிந்துறையும் |
75 | காமரு | காமர் |
132 | யாவதும் | யாவையும் |
160 | தெய்வத்து | தேஎத்து |
180 | கழிப்பிய | கழிப்பி |
212 | றொகுதியொடு | றொழுதியொடு |
215 | இயலவேந்தி | இகல்வேலேந்தி |
248 | கெய்தினர் | கெய்தி |
274 | பெரும்பெயர் | பெரும்பேர் |
282 | குறும்பல் | குறும்பற் |
291 | அறிவனின் | அறிவம்நின் |
292 | அன்புடை | அன்புடன் |
294 | ஆகித்தோன்ற | ஆகத்தோன்ற |
298 | அலங்குசினை | இலங்குசினை |
301. | ஆசினி | வாசனை |
302. | யூகமொடு | ஊகமொடு |
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
விடுபாடல்கள்
1 குன்றம் எறிந்தாய் குரைகடலிற் சூர்தடிந்தாய்
புன்றலைய பூதப் பொருபடையாய் - என்றும்
இளையாய் அழகியாய் ஏறூர்ந்தான் ஏறே
உளையா பாயென் உள்ளத் துறை.
2 குன்றம் எறிந்ததுவும் குன்றப்போர் செய்ததுவும்
அன்றங் கமரரிடர் தீர்த்ததுவும் - இன்றென்னைக்
கைவிடா நின்றதுவும் கற்பொதும்பிற் காத்ததுவும்
மெய்விடா வீரன்கை வேல்.
3 வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட
தீரவேல் செவ்வேள் திருக்கைவேல்-வாரி
குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்
துளைத்தவேல் உண்டே துணை.
4 இன்னம் ஒருகால் எனதிடும்பைக் குன்றுக்கும்
கொன்னவில்வேற் சூர்தடிந்த கொற்றவா - முன்னம்
பனிவேய் நெடுங்குன்றம் பட்டுருவத்தொட்ட
தனிவேலை வாங்கத் தகும்.
5 உன்னை யொழிய வொருவரையும் நம்புகிலேன்
பின்னை யொருவரையான் பின்செல்லேன் - பன்னிருகைக்
கோலப்பா வானோர் கொடியவினை தீத்தருளம்
வேலப்பா செந்தில்வாழ் வே.
6 அஞ்சு முகம்தோன்றில் ஆறு முகம்தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சலென வேல்தோன்றும் - நெஞ்சில்
ஒருகால் நினைக்கில் இருகாலும் தோன்றும்
முருகாவென் றோதுவார் முன்.
7 முருகனே செந்தில் முதல்வனே மாயோன்
மருகனே ஈசன் மகனே - ஒருகைமுகன்
தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்
நம்பியே கைதொழுவேன் நான்.
8 காக்கக் கடவியநீ காவா திருந்தக்கால்
ஆர்க்குப் பரமாம் அறுமுகவா - பூக்கும்
கடம்பா முருகா கதிர்வேலா நல்ல
இடங்காண் இரங்காய் இனி.
9 பரங்குன்றிற் பன்னிருகைக் கோமான்றன் பாதம்
கரங்கூப்பிக் கண்குளிரக் கண்டு - சுருங்காமல்
ஆசையால் நெஞ்சே அணிமுருகாற்றுப்படையைப்
பூசையாக் கொண்டே புகல்.
10 நக்கீரர் தாமுரைத்த நன்முருகாற்றுப்படையைத்
தற்கோல நாடோறும் சாற்றினால் - முற்கோல
மாமுருகன் வந்து மனக்கவலை தீர்த்தருளித்
தான்நினைத்த வெல்லாம் தரும்.
===========================
6. பொருள் முருகாற்றுப்படை
அருளா லுலகத் தமர்ந்தரு ளளிப்பத்
தெருளாய் பருவத் திரியம்பிகை குமார
கங்கையின் மைந்தா கார்த்திகை சிறுவா
மங்கை பங்கில் வருசுப தேசிகா
வண்ண மரகத மாமயில் வாகனா
கண்ணன் மருகா கணபதி சகோதரா
அமையாக் கருணை யம்பிகை நாட்டத்
திமையாத் தெய்வ யானைக் கிறைவா
வருசிலைக் குறவர் தருசிறு மகளிர்
பரிபுர கமல பாத சேகரா 10
தென்பரங் குன்றுஞ்சீரலை வாயு
மன்பி னேரகமாவினன் குடியும்
பழமுதிர் சோலை மலையினு மாகி
ஆறு நிலையினு மடியவர் மனத்தினுங்
கூறுந் திருத்தணிக் குன்றினும் பதியினு
மினிது வீற்றிருக்கு மிறைவா போற்றி
யென்று மினிய விளையாய் போற்றி
குன்ற மெறிந்த கோவே போற்றி
மாருதி மறுக மகவான் பிழைப்பச்
சூரனை முனிந்த சூரா போற்றி 20
நினைத்ததை முடிக்கு நிமலா போற்றி
வினைப்பகை யறுக்கும் விமலா போற்றி
ஆனா வமுதே யரசே போற்றி
சேனர் பதியே செயசெய போற்றி
ஆதியு நடுவு மந்தமு மில்லாச்
சோதிமெய்ஞ் ஞானச் சுடரே போற்றி
சரவண பவனே சண்முகா போற்றி
குரைகடல் மார்பா குமரா போற்றி
சேந்தா போற்றி செட்டி போற்றி
வேந்தா போற்றி விசாகா போற்றி 30
கந்தா போற்றி கடம்பா போற்றி
சிந்தா மணியே செய செய போற்றி
போற்றி போற்றி புகழ்ந்துனை யெப்போது
மேத்துவார்முன்னிமைப்பினில் வருகவே
சாற்றுவேனின்றாள் தந்தரு ளெனக்கே. 35
பொருள் முருகாற்றுப்படை முற்றும்.
+++++++++++++++++++++++++++
7 . வருமுருகாற்றுப்படை
கருமுரு காருங் குழல்வள்ளி கேள்வன் கருதலரைப்
பொருமுரு காதிபன் காட்டினக் கெனன போந்துசொன்ன
பருமரு காரிப்ப வண்ண மருண கிரியுரைத்த
வருமுருகாற்றுப் படைத்தலை வாசெந்தி மன்னவனே.
ஓம்சிவசெயசெய வருகவருக
முருகா வருக ஆளவா சிரமாறுடைப்
புண்டரீகக் குண்டலக் குழைபல
கண்டமதணியு
மாரமு நூலு மார்பில் நின்றியங்கச்
செச்சைத் தொங்கலுங் கச்சுடை மருங்கும்
வாழி யோங்கிய கோழிப் பதாகையுந்
தண்டையு மணியும் புண்டரீகமும்
வேத வொலிபாடு கீத கிண்கிணியுங்
குலவிதல சுதல நிதல தராதல 10
ரசாதல மகாதல பாதால லோகமு
மண்ட ரண்டங்களு மெண்டிசை பரவச்
சிறகினி லெழுவரைப் பறிய நூறிய
மரகத கலாப நிருதகுல துரக
மேருப்பகுவாய்ப் புயங்கன் பணிவாய்க் கீன்
றாரப் பொசிக்கும் புனிதப் பிறசண்பம
மயிலுங் கடம்பு மயிலும் பிரதாபமும்
பன்னிரு கண்ணு மென்னிரு கண்முன்
நீங்கா திருப்பப் பாங்குடன் வந்து
முன்னின் றருள்க கார்த்தி கேயா 20
சுவாமி நமாமி சுப்பிர மண்ணியா
சரண்சரண் செய்பவ சரண்முன்புகுந் தென்னைக்
காய்ந்த மாந்தரைக் காய்ந்து இந்திரன்
பயந்த சந்தனந் திமிர்ந்த கந்த
கும்ப விம்பக் கொங்கை தங்கு
மம்பிகை குமார அமரர் பெரிய
சிறைதனை விடுத்த தேவ தேவ
தேவ ரகசிய மூவர் மூர்த்தி
அனுவா காரப் பேரருஞ் சோதி கோரா சமைய
மோக மான யோக நாத 30
புட்பாசனத்தியப்பா பரமேசுவரீ
அமலா பலா கமலா சனத்தி
வன்னி மண்டலத்தன்ன சரீரணி
அண்ட பூதல குண்டிர நீலி
கோலா கலத்தி பாலா மனத்தி
மூலா வெழுத்தின் மேலா யுதித்த
சேலார் விழிச்சியேகா வடத்தி நாகார் புயத்தி
ஆலோலா முனி பாலா வேலா யுதா
சால மூலா சலாமா மேலவர்
பேரணி நெருக்கிச் சூரனை மோதிமுது 40
சூர தாருவான மேருவுங் கிழித்து
அகோர கோர சங்கரா கோரா
சமர பயிரவி குமரிகை வீசிக்
குறைத்தலைக் கூளிநறைப் பெரு வெள்ளம்
நள்ளிரு ளாடுங் கொள்ளிக் கண்களும்
மேக வாத பூத பசாசும்
பலபல வேடத்தல கைகை குவித்துப்
பரம சுகத்தின் றமருக மெடுத்து
பயிரவரோடு பவுரி கொண்டாட
மடம விடிலுங் கரடியி டக்கையு 50
மடிமி டடியிட மிடலுக் கம்பிற
…….. ………. தான மூரிமூர்த்தி
அரனருள் குமரா பரம தேசிகா
சூர பயிரவ சூறைக் காறா
வீர துட்ட வீர ராகுத்த
சூரதுட்டசூர ராகுத்த
அரிய வான துரக சூரிய
ஆதி நாரன் மூரி மாதவ
விண்ணவ ரோதுமண் ணில்மகா விருடி
விகட தானவர் சகட மோதிய 60
கீழு மேனிய காளி நாயக
முருகவருக வெனவாய் வெருவா நிற்பப்
போற்றிப் போற்றிப் புகழ்ந்துணை யெப்போது
64 மேத்துவார்முன் னிமைப்பினில் வருக வருகவே.
வருமுருகாற்றுப்படை முற்றும்.
==================================
This file was last updated on 29 July 2023
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)