பள்ளிகொண்டான் பிள்ளை
இயற்றிய பிரபந்தத் திரட்டு - பாகம் 2
எதிராசமாமுனிகள் நான்மணிமாலை &
முதலாழ்வார்கள் மும்மணிக்கோவை.
etirAcamAmunikaL nAnmaNimAlai &
mutalAzvAr mummaNimAlai by
paLLikoNTAn piLLai
In Tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
A raw text file was generated using Google OCR and the text was subsequently corrected
for any OCR errors. We thank Mr. Rajendran Govindasamy, Chennai, India for his assistance
in the proof reading of this work for publication.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2023.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
பள்ளிகொண்டான் பிள்ளை
இயற்றிய பிரபந்தத் திரட்டு - பாகம் 2
எதிராசமாமுனிகள் நான்மணிமாலை &
முதலாழ்வார்கள் மும்மணிக்கோவை.
Source:
ஸ்ரீமதுபயவேதாந்த ப்ரவர்த்தகராகிய
ஸ்ரீமாந் - கச்சிக்கடாம்பி – இராமாநுஜாசார்ய ஸ்வாமிகள்
திருவடி சம்பந்தியும், எதிராஜதாஸரென்னும் தாஸ்ய நாமியுமாகிய
ப்ரபந்ந வித்வான் கொ. பள்ளிகொண்டான் பிள்ளையவர்கள் இயற்றிய
பிரபந்தத் திரட்டு
இஃது -- ம-ள-ள- ஸ்ரீ அ- இரத்தினவேலு பிள்ளையவர்கள் முயற்சியால்
ப்ரபந்ந வித்வான் - காஞ்சீபுரம், ஸ்ரீமாந் - ராமஸ்வாமி நாயுடவர்களாற்
பார்வையிடப்பட்டு திருமணம் - செல்வகேசவராய முதலியார் M.A. அவர்களால்
சென்னபட்டணம், செங்கல்வராயநாயகர் ஆர்பனேஜ் அச்சுக்கூடத்திற்
பதிப்பிக்கப்பட்டது.
1899 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்
Registered copyright.
----
3. எதிராசமாமுனிகள் நான்மணிமாலை.
ஸ்ரீ ஸ்ரீமதேராமாநுஜாய நம:
எதிராசமாமுனிகள் நான்மணிமாலை.
காப்பு.
வான்மணிவாரணம்வாய்வயற்பூதூர்வளம்பதிக்கண்
வான்மணிபோல்வந்தநம்மெதிராசவரோதயற்கோர்
நான்மணிமாலைநவிலநல்லோருறைநற்குருகைக்
கோன்மணிக்கோகநகத்திருத்தாளுளங்கொள்ளுவனே.
எதிராயவாதியிபங்கட்கரிமாவெனவிசைக்கும்
எதிராயமாமுனிநம்மிதயத்திருளீர்க்குமதிக்
கதிராயவற்கொருநான்மணிமாலைகழறவவன்
சதிராயதாமரைத்தாளேநமக்குநற்றஞ்சநெஞ்சே.
நூல்.
வெண்பா.
பூமலியும்பூம்பொழில்சூழ்பூதபுரிபோந்தவள்ளல்
பாமலியுஞ்சீர்த்திப்பரவையான் - நேமலியும்
எந்தையெதிராசமுனியென்வினையைத்தீர்க்கவென்றன்
சிந்தைகுடிகொண்டிருப்பன்சேர்ந்து. (1)
கட்டளைக்கலித்துறை .
சேர்ந்தாரைவாழ்விக்கும்பூதூரெதிபதிச்செம்மலருள்
ஆர்ந்தாரைபோற்சூழவித்தைக்கனலியருவினைக்குக்
கூர்ந்தாரைவாளவ்வினைவாதனைக்கநுகூலஞ்செய்யாச்
சேர்ந்தாரைக்கொல்லியெனநன்குநம்புதிதிண்ணநெஞ்சே. (2)
எண்சீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்.
திண்ணநெஞ்சேதிருமால்சேநேசன்சேடன்
றிகழுமைம்படைக்கலைகடிரண்டொன்றாகி
மண்ணவரைவாழ்விப்பானிளையாழ்வாராய்
வந்தபெருமந்தணத்தைமறந்திழுக்கா
வண்ணநீநிற்றியெனின்வடியாச்சன்ம
வாரிதியில்வருந்துதலைவரைந்தெந்நாளுங்
கண்ணனடித்தொண்டுசெயும்பேரானந்தக்
கடலெனுமந்தாமத்தைக்கலக்கலாமே. (3)
நேரிசையாசிரியப்பா.
கலக்கமுந்தேற்றமுங் களிப்புங்கவர்வும்
விலக்கொணாப்பகைமையும் வேட்குறுங்கேண்மையும்
ஆக்கமும்வறுமையு மறத்தொடுமறமுஞ்
சுவர்க்கமுமழுங்குறும் பவர்க்கமுமாகிய
முரணியல்பறாத தரணியிற்பிறந்துழல்
மன்பதையுறும்பவத் துன்பதைத்துடைப்பான்
செம்பியனாட்டினில் வம்பியன்மலர்களெக்
காலையுங்கமழ்தருஞ் சோலையின்மாலைய
இருகரையிடித்துறப் பெருகலைக்காவிரி
உந்தியினனந்தலை யுந்திவந்தவனொடும்
இரவணையிமகர னெழினிறத்தைந்தலை
யரவணையறிதுயி லமர்ந்தருளமலனுந்
தேங்கடாத்திரிநிகர் சிந்துரங்காத்தருள்
வேங்கடாத்திரிமிசை விளங்குறும்விமலனும்
நூன்முகமாகமுன் னான்முகனியற்றிய
அரிமகத்தவிசொரி யெரிமுகக்குண்டத்
தண்டர்களருந்தவர் தொண்டர்கள்வணங்குபு
துதித்திடுஞ்செவ்வியி னுதித்தவனாகிய
பேரருளாளனுங் கூரிருளிரித்தெழும்
விரிச்சிகன்றண்கதி ரரிச்சிகன்றவழ்தருஞ்
சீதமார்கொடுமுடி யாதவாத்திரியுறை
திருநாராயணப் பெருமானும்மதி
காலையுமுச்சியு மாலையுமாதவர்
நூலையோதித்தொழுஞ் சோலையோதிமத்துறைஇ
வரமெச்சிடவருள் பரமச்சுவாமியுந்
தெறுங்கொடுவினைகளைத் தீர்த்தருள்புரிதிருக்
குறுங்குடிநம்பியுங் குருகைநம்மாறனும்
வேதவாதியா நாதமுனிகளுஞ்
சென்னியாமன்னவன் பன்னிமுன்பகர்ந்தருள்
சூளவம்போக்கா வாளவந்தாரும்
அரியபுகழ்கெழூஉம் பெரியநம்பியுங்
கோட்டமிலிசைத்திருக் கோட்டியூர்நம்பியுங்
கருமலையுந்தெருட் டிருமலைநம்பியும்
மாலைவென்றருடிரு மாலையாண்டானுங்
கருவரங்காதெமைக் காத்தருளாழ்வார்
திருவரங்கப் பெருமாளரையரும்
மன்றுபடுத்திய துன்றுசீர்ப்பெருமையை
உடையவர்நம்மையா ளுடையவராகிய
எதிபதியிலங்குறு மிருவிபூதிக்கும்
அதிபதியடிகளே யடைக்கலமென்றுணர்ந்
தொண்மையினெஞ்சமே திண்மையினெண்ணிநீ
இருத்தியெனினனி விருத்திசேர்மதிநலம்
பூத்திடுநமைநனி யாத்திடும்வினைகளும்
மாய்ந்தறுமாயையு மோய்ந்தறுமதனால்
உறவுகொண்டென்று மோவாப்
பிறவியும்பெயர்ந்தறும் பெற்றித்தாமே. (4)
வெண்பா.
ஆமுதல்வனீங்கிவனென்றாளவந்தாரென்னுமுனிக்
கோமுதல்வன்கூறுங்குணக்கடனம்- பாமுதல்வன்
ஈனநெறிநீக்குமெதிபதிநெஞ்சேவிதித்த
ஞானநெறிநமக்குநன்று. (5)
கட்டளைக்கலித்துறை .
நன்றென்பதோராநவையோர்சிலர்நாரணன்முதல்வன்
அன்றென்பதையறுத்தாமென்றறையவடைந்தகுணக்
குன்றென்னுநங்களெதிபதிதாளுளங்கொண்டவர்கட்
கின்றென்பதின்றவ்வெழிற்பரந்தாமத்திருஞ்சுகமே. (6)
எண்சீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்.
இருஞ்சுகந்தேரிருவகையிந்தியமேயென்ற
னிதயமேநும்மையானீறில்வீட்டுப்
பெருஞ்சுகத்துக்கேகுங்கால்விரசைவிட்டுப்
பேர்வனென்றுபிணங்காதெற்பெற்றோர்மாது
தருஞ்சுவர்க்கமுண்ணாதெற்றடுத்தாட்கொள்ளத்
தரணிவந்தவெதிபதிதாள்சாருங்காறும்
அருஞ்சுகிர்தவதரிலியானமைந்திருக்க
வருளினுமக்கழியாதவறமுண்டாமே. (7)
நேரிசையாசிரியப்பா.
அறநெறியிற்றெனுந் திறனறிபவராம்
வடுவொன்றில்லா வடுகநம்பியும்
நெறியார்கணியனூர்ச் சிறியாச்சானும்
அம்புவிபோற்றரு ளாளப்பெருமா
ளெம்பெருமானா ரென்னுஞ்சீயரும்
வள்ளற்றன்மைப் பிள்ளைப்பிள்ளை
யாழ்வானும்மிள காழ்வான்றானும்
நம்பார்க்கும்மளி நல்குமெம்பாரும்
சிட்டர்கடொழுமதித் தெட்புடைப்பட்டரும்
நெஞ்சினுயிர்க்கரு ணிறைந்தநஞ்சீயரும்
கும்பியினதரினைக் குறுக்குநம்பிள்ளையும்
பெருகிடுஞ்சீர்த்திருக் குருகைப்பிரானுந்
துப்பார்கோமடத் துப்பிள்ளானுந்
துங்கமாஞானத் தெங்களாழ்வானுஞ்
சாரந்தேர்நடா தூரம்மாளும்
நடுவுநிலைமை கொணடுவிலாழ்வானுங்
கியாதிசேர்வேத வியாதபட்டரும்
விற்பனராநடு விற்றிருவீதிப்
பிள்ளையுமாகிய வள்ளலாரியர்கள்
பெருமிடல்வாய்மையி னொருமிடறாகச்
சித்தமுகப்புறத் தத்தந்திருவடித்
துணைதமைத்தமக்குநற் றுணையெனப்பற்றிய
ஆணவமில்லா மாணவர்களை
நோக்கியுலகினை நோக்கவந்தருளிய
எம்பெருமானார் தந்திருவடிகளே
சரணமென்றிருமி னரணதுநுமக்கென்
றோதியவிதிதனை நீதிகளுரைமறை
விதியினுஞ்சிறந்த விதியெனக்கடைப்பிடித்
தொழுகுதியேலென் னுள்ளமேயவ்வணம்
ஒழுகியசான்றோ ரொப்புயர்வில்லா
எப்பெரும்பேற்றினைத் துப்பினெய்தினரோ
அப்பெரும்பேற்றினை யறவுஞ்சிறிதுந்
தடையொன்றின்றிச் சார்ந்தின்
றடைவதற்கொன்று மையுறவிலையே. (8)
வெண்பா.
ஐயமறவேதத்தரும்பொருளெலாம்விளங்கச்
செய்தவெதிராசவள்ளல்சீர்நிலையின் -
மெய்யெவர்க்குந் தோற்றப்பிரமமண்ணைதொல்யாதவற்குரைத்த
ஏற்றந்தனைநெஞ்சேயெண். (9)
கட்டளைக்கலித்துறை .
எண்ணில்பவமெடுத்தெய்த்தனநெஞ்சேயிலங்குமதிக்
கண்ணில்லவருரைகட்டுரைகேட்டகரிசறுப்பான்
மண்ணில்வணங்கிமறைபுகுவோமறையோரிதய
விண்ணில்விளங்குறும்விண்மணியாமெதிவேந்தனையே. (10)
எண்சீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்.
வேந்தர்கள்வாழ்வியன்கச்சிப்பதியின்மேவும்
விண்டுவின்றன்றொண்டர்குலம்விளங்கவந்த
சாந்தனெனுங்குணிப்பிள்ளைசின்னாளங்குத்
தான்காணாதிருந்துபின்னத்தலத்தோர்காணப்
போந்தெவர்க்கும்பூதபுரிப்புண்ணியன்சீர்
புகன்றதனையுணர்ந்தநெஞ்சேபுவியிலின்னும்
மாந்தர்தமிற்பதடியாய்மாயாதச்சீர்
மறவாமைநமக்கமுதம்வழங்கற்பாற்றே. (11)
நேரிசையாசிரியப்பா.
பாற்கடலுறைதரும் பலமயிலையுமதன்
பாற்படுபானிறப் பசுங்கதிர்த்தேவையுந்
தத்தமரபினிற்சார்ந்த தொன்றாத்தஞ்
சித்தத்துணர்ந்திடுந் திறனெனப்படியின்முற்
பவப்பிறப்புடையயா தவப்பிரகாசனும்
மறைமுடிப்பொருளெலா நிறையுளத்தறிஞர்கண்
மொழிமனமாதிதம் வழிபடவழிபடும்
விழுமியமான்மியங் கெழுமியவெவர்தமைத்
தனைப்போற்றன்னுளந் தனினினைந்தனனோ
சாந்தவொணாதிருந்துபின் அயன் சீர்.
கயக்குறவெவரையு மயக்குறுமாயையின்
கரவசப்பட்டுப் பரவசனாகி
அழுக்காறென்னு மிழுக்கா றுடையனாய்
வசிட்டாதியர் துதி விசிட்டாத்துவைத
நன்மதமொறுத்துத் தன்மதநாட்டுவான்
எவரைத்தவர்க ளியங்குறுங்கங்கையின்
றெருணனியுடைமணிக் கருணிகைக்கட்டத்
தெருக்குவானெண்ணிப் பொருக்கெனத்தன்னுடன்
கொடுசெலுங்காலெவர் கூரனாமவன்
கொடுவினைப்புணர்ப்பினைக் கொய்திடுமெம்மான்
அருளுருவாம்புணர்ப் பரணினையுடையராய்
ஒற்றையாழித்தே ரூர்சுடர்க்கற்றையோன்
அத்தமனமெனு மத்திரியடைந்திட
மாலைமயங்குறும் வேலையினண்டிகங்
கொடுவரிகுடாவடி யடுதொழிற்கோளரி
குஞ்சரமாதிய சஞ்சரித்திருப்பதாய்
வெம்பியமேவலர் வேனுதியெனநனி
வெம்பரலுறுத்திடும் வெவ்வதருடையதாய்
வெருவந்தந்தரும் விந்தியவிபினத்
தொருவந்தத்திடை யுபாதியாமியக்கம்
இரண்டினொன்றினையோ ரிடத்தினில்விடுத்துத்
தொடுநீர்தேடித் துயக்குறுமெல்வையிற்
கங்குலெங்கணுங் கலத்தலான்மங்குலும்
மண்டலமுங்காண் கண்டலம்புதைதர
வழிதிகைத்தயர்ந்திவ் வுழிநமக்குத்துணை
ஆவாரெவரென வழுங்குறுமவ்வயிற்
றேவாதிபனா மூவாமுதல்வனும்
முருகவிழ்சததளத் திருமலர்ச்செல்வியும்
வேடனும்வேடு விச்சியுமாகிய
வேடம்பூண்டருள் விளங்குறவெவர்க்குமுன்
றோன்றியெவருளத் தூன்றியவுட்கினை
மடித்தொருதிருமர வடித்தலத்திருந்துநள்
ளிரவினைக்கழித்தெழுந் திரவிவந்தெழுமுனம்
அண்ணிதாகிய புண்ணியகோடியாம்
விமாநம்விளங்குறு மமானப்பெருமைசால்
மச்சணிமாடமா மாளிகையோளிசூழ்
கச்சிமாநகர்வயிற் கலந்துவிடுத்தவண்
மறைந்திடவெவரம் மாயமானுடர்தமை
நிறைந்தபேரன்புட னேடிக்காணா
தலமந்திருக்கையி லவ்வழிவருநராஞ்
சிலவரையன்பொடு சிறப்புறநோக்கியீ
தெவ்வூரெத்தல மெனக்கடாவிடவவர்
இவ்வூர்காஞ்சியென் றிறுத்திடவச்சொல்
உவப்புறுநியாசத் தவத்தராமெவர்க்குத்
திசைமுகம்பழித்திடுந் தசமுகன்வதத்தினைச்
செவியுறுபிராட்டியின் சவிபெறுமுவகையும்
விண்டநஞ்சீதையைக் கண்டனனென்றசொற்
கேட்டவெம்பெருமான் மாட்டுறுமுவகையும்
முதுவனாஞ்சதமகன் மதுவனம்புகுந்துழிப்
பெருவடிவெடுத்தநந் திருவடியுவகையும்
போன்றதோருவகையா மான்றமாவளக்கரை
அடைவித்தேயதிற் குடைவித்திடவெவர்
விரவியகானினள் ளிரவினிலிருந்துணை
நேயமாய்வந்திவண் மாயமானவர்தமை
எம்பெருமானெம் பிராட்டியாமெனத்
திண்ணமெண்ணிநங் கண்ணன்குணங்களின்
முருகூர்மகிழ்த்தொடைக் குருகூர்ப்புங்கவன்
ஈடுபட்டுப்பெரும் பீடுபெற்றறுமதி
மோகித்திருந்தவம் முறைமையின்மோகித்
திருந்தனரோவெவர் திருந்திடாவுலகோர்
திருந்திடநல்லருள் செய்யவந்தவரோ
அவராகியநம் மண்ணலெதிபதித்
துவரார்தாமரைத் துணையடிகளைநிதம்
வஞ்சகமிலாமலென் னெஞ்சகமேநனி
எண்ணிப்பூசனை பண்ணியேத்தெடுக்கும்
நன்னிலைநிற்றியே னானிழந்திருந்ததாம்
என்னிலையெனக்குறு மீறிலாநாளெலாஞ்
சீர்த்ததோர்சினத்தினெற் போர்த்தமாமாயையுங்
கழிந்திடும்பிறவியு மொழிந்திடுமித்தகைக்
கடப்பாடியற்றிய திடப்பாடுறுநினக்
கேற்றதோர்கைம்மா றியற்றவல்லேனலேன்
ஆதலினாலிப் பூதலந்தன்னிற்
றிடம்பெறயானிவ் வுடம்பினிலுறைதருங்
காலமெலாநினைக் கோலி
அஞ்சலிபுரிகுவன் றஞ்சமாநினக்கே. (12)
வெண்பா.
நினக்கேதமியேனெடுந்தொண்டுபூண்டென்
மனக்கேதமாற்றமகிழ்வாய் - வனக்கோதை
நாயகன்பார்க்கவிசெய்நல்லறங்கள்செய்யுமெதி
நாயகனேயெந்நாளுநன்று. (13)
கட்டளைக்கலித்துறை .
நன்றாதரஞ்செய்தநாதமுனிகட்கென்னன்னெஞ்சமே
குன்றாதசெல்வக்குருகையர்கோனருள்கூர்ந்தளித்த
பொன்றாதசீரெதிர்வாரியவிக்ரகப்புண்ணியனாம்
பின்றாதசீர்த்தியெதிராசனைநிதம்பேணுதியே. (14 )
அறுசீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்.
பேணுறயாதவனாதிநன்னூற்குரைபெட்டுரைவெட்டியவன்
நாணுறமெய்ப்பொருணல்கியநம்மெதிநாயகனல்லருளே
வேணுறுமிவ்விளையாட்டுவிபூதியின்வெருளையொழித்தழியா
தேணுறுநித்யவிபூதியினின்பினையீந்திடுமென்னுளமே. (15)
நேரிசையாசிரியப்பா.
என்னுளமேநினக் கின்னறீர்த்திடுஞ்சீர்
ஏற்றமார்மாற்றமொன் றிசைக்குவல்கேட்டியிம்
மண்ணகந்தன்னினம் மண்ணலெதிபதி
குருகுலக்குரவையிற் குளிர்மதியெனவந்
துதித்தலைக்காணூஉத் துதித்திடத்தக்கவாம்
வேதவேதாந்தமாம் வேலைகள்யாவுமா
மோதந்தன்னான் முதிர்ந்தொலித்தோங்கின
விதியார்மிருதிக ளிதிகாசங்களாங்
காவியுமல்லியும் பூவிற்பொலிந்தன
புராணமாஞ்சகோரப் புட்களுட்கொரீஇப்
பிராணனையடைந்திடம் பெயர்ந்துதிரிந்தன
நங்குகதேவர் டங்கர்திரமிடர்
ஆதியகுரவர்க ணீதிசேர்வசநமாஞ்
செயிரிலாதநற் பயிர்தழைத்தோங்கின
வாதியர்கணாத ராதியர்தம்மதக்
கருவரிசாலவுஞ் சருவரியடைந்தது
சாங்கரீயமா யோங்குபங்கயங்க
டேம்பிச்சாம்பிச் சூம்பிக்கூம்பின
பாற்கரமதத்தராம் படிறர்தம்வாதந்
தோற்றுநீளிடை தொலைந்துமறைந்தனர்
யாதவன்மாதவ யஞ்ஞமூர்த்திகள்விழி
இந்துகாந்தச்சிலை நைந்தறல்கான்றன
உபநிடதங்களுக் குள்ளீடாகிய
சுபகரத்திருமா றொல்லைப்பரத்துவம்
மங்குதலொரீஇ யெங்கணுமொளிர்ந்தது
கூரநாதனங் குருகாதிநாதன்
வேரமின்மனக்கோ விந்தநற்பாதன்
முதலியாண்டான் முதலியமோக்க
இச்சையுடையவர் மிச்சையால்விளைந்ததம்
பிறவிமுத்தாபத் துறவியுமிழ்ந்திடுந்
திண்மையுருப்பினை யெண்மையிற்றீர்ந்தனர்
ஆதலினீயுமவ் வருந்தவனடித்துணை
காதலின்வணங்கிநின் கண்ணன்கிருத்தியெப்
போதுந்துதித்தியேற் பூதியுந்துறக்கமும்
போதலும்வருதலுஞ் சாதலும்பிறத்தலும்
ஒருவுமந்தாமத் தோங்குந்
திருவும்பெறலாந் திண்ணமீதாமே. (16)
வெண்பா.
திண்ணநெஞ்சேநம்புதிநற்சீர்கொள்யமுனைத்துறைவர்
வண்ணவடிகள்வணங்கியுய்ந்த - அண்ணன்மனக்
கோட்டமிலாவெதிகள்கோமானடித்தமர்கள்
ஈட்டந்துணையென்றுமென்று. (17)
கட்டளைக்கலித்துறை .
என்றூழினெங்குமிலங்கிடுஞ்சீர்த்தியெதிபதிதாள்
நன்றூழினண்ணியெந்நாளுநண்பாகநயத்தியெனிற்
றுன்றூழித்தீயிற்சுடுநம்வினையின்றொடர்புமறுஞ்
சென்றூழினெய்தலுமாந்திருநாட்டுச்சிறப்பினையே. (18)
எண்சீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்.
சிறப்போங்கும்வாதராயணர்நம்மாழ்வார்
சித்தாந்தநிலைநிறுத்துந்திறலோனாய்ந்தோர்
பிறப்போங்குநற்போதாயநர்கோட்பாட்டைப்
பீடு பெறத்திகழ்விப்போன் பெட்பை வென்ற
விறப்போங்குநாதமுனியாளவந்தார்
வியந்தொழுகுநல்லொழுக்கவிரதந்தன்னின்
மறப்போங்குமனனிலானென்னுநங்கள்
வள்ளலெதிபதிதாளைவழுத்தென்னெஞ்சே. (19)
நிலைமண்டிலவாசிரியப்பா.
வழுத்துறுங்காரண வத்துவானவனெவன்
பிழைப்பில்சீர்த்தரிசனம் பேதமோவபேதமோ
பாடியைந்திடுபிர பன்னநிட்டர்களடை
வீடிப்பிறப்பினோ வேறோர்பிறப்பினோ
வீட்டைவித்திடும் விழுப்பமாநெறியெது
நாடிப்பற்றிடு நல்லாரியனெவன்
கடும்போர்புரிநோய்க் கணத்தாலுயிருடல்
விடும்போழ்தத்துநம் விண்டுவைநினைத்திடல்
வேண்டற்பாற்றோ வேண்டாப்பாற்றோ
என்னுமிக்கடாக்களை யிதயத்துட்கொளீஇக்
கைக்கோலம்பெறக் காழகச்சிறுமுறி
முக்கோலேந்திய முனிவரர்பெருமநீ
பன்னிடுமுக்கப் பணித்திருக்கச்சி
நம்பிதன்வம்பவி ழம்புயமலர்புரை
யடிகளைவணங்கி யடிகாளடியனேன்
சிந்தையினிந்தையில் சில்பொருளுள்ளன
அவற்றையவனியோர் தவற்றைத்தணப்பான்
ஆழமாமலைகட லறிதுயிறனையொரீஇ
வேழமாமலையுறை விபுர்தம்வேந்தனை
வினவிநன்றெற்கு விழைந்தறிவுறுத்தனின்
கனவியகருணையின் கடனெனக்கழறிட
நம்பியும்பிற்றைநா ணயந்துநண்ணுபு
தும்பிமாமலையவற் றொழுதுதன்பணியெலாம்
முற்றியபிற்றிரு முன்னர்நின்றிடப்
பற்றியவடியவர் பவப்பிணிபாற்றிடும்
எம்பெருமானுநன் கிதயக்களிப்பொடு
நம்பிநீயிற்றைநா ணம்மைச்சில்பொருள்
கேட்பான்வேட்டுநிற் கின்றனைபோலுமால்
என்ன நம்பியு மினிதிளையாழ்வார்
சொன்னசொல்லெலாஞ் சொல்லித்…
வளையாழிக்கை வரதநிரதனும்
இளையாழ்வார்கொளு மெண்ணநாமறிகுதும்
அன்னவர்யாவு மறிந்தவராயினும்
மன்னறம்யாவையு மரபினாட்டுவான்
பெருமைசால்சாந்தீ பினிக்குரவன்பால்
அருமைசானூல்க ளனைத்தையும்யாமுனந்
தீதுதபும்வண மோதியமுறைமையின்
மிடைந்தநற்கலையெலா மேதாவியருழி
அடைந்தாய்கின்றன ரஃதன்றியுந்தான்
ஏண்பெறவிதயத் தெண்ணியபொருள்களை
மாண்பினம்முகமா மன்றுபடுத்திடின்
யாவருந்தேறுவர் யாணர்யாண்டும்மென
மேவருநுந்தமை விடுத்துவினாயினர்
ஆதலானவற்றையாங் காதலிற்கூறுதும்
உலககாரணனா யிலகுவோன்யானே
கரிசிலாதநந் தரிசனம்பேதமே
பிரபன்னப்பெயர் வரநன்னடையினர்
மோக்கமுறுவதிவ் யாக்கையின்முடிவினே
முத்தித்துறைபிர பத்தித்துறையே
அரியநற்குரவனும் பெரியநம்பியே
கடைமுறைநினைத்தலும் விடுமுறைமைத்தே
என்றிபமலைமுடி யிலங்கருளாளனும்
மன்றவுணர்த்திய வார்த்தையோராறும்
அச்சுதன்முகமா நிச்சயமாதலின்
நித்தியநிலைபெறுஞ் சத்தியமென்பதும்
அருச்சையுருவினில் வருச்சியாநாரணன்
காரணஞானமும் பூரணமென்பதும்
இத்தகைஞானக் கேற்றநம்பன்புடை
வித்தகர்க்கேயது விளங்குமென்பதுங்
களங்கமில்லாததை விளங்கக்கண்டவர்
பம்புசீர்க்கச்சி நம்பியென்பதும்
அவரருளாளனோ டமர்வேறிடத்திருந்
தார்த்திதீர்தரநிதம் வார்த்தைநன்காடுவர்
என்பதுமவர்க ளிருவருக்கும்பேர்
அன்புடைநீவி ராத்தரென்பதும்
ஒளிப்பறவெவர்க்கும் வெளிப்படுதலினாற்
சந்திரதிலகச் சுந்தரப்பொழில்சூழ்
பூதபுரியுறை போதமாரெதிபதிப்
புண்ணியவன்பர்கட் கண்ணியநின்னடி
நண்ணியவிரும்பெனு நாயடியேனைநின்
சுத்தமாக்கருணையாஞ் சித்தமாக்குளிகையாற்
றொட்டுச்சுட்டநற் சுவணநேர்பவனென
ஆக்கிப்பணிகொளீஇ மோக்கமாகுநல்
வீட்டினிலமைத்தனின் பீட்டினுக்குரித்தே. (20)
வெண்பா.
பீடுபெறுநித்தியரும்பீழையறுமுத்தரும்வாழ்
வீடுபெறநீவிரும்பினால் - ஓடுநெஞ்சே
நின்றென்றுநீத்தோர்நிருபனற்றாடொழுதல்
நன்றென்பர்நன்கதையேநாடு. (21 )
கட்டளைக்கலித்துறை
நாடுதிநம்மெதிராசனைநண்ணன்னடவைதனைக்
கூடுதிமற்றவன்கோதிலடியர்குழாமதனைப்
பாடுதிநெஞ்சேயவர்புகழ்பன்னுநற்பாக்கடமை
ஆடுதியாநந்தத்தாண்டவமன்னோரடிநினைந்தே. (22)
பன்னிருசீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்.
அடிநினைத்திடுமடியரகமறுத்தடிமைகொள
வரவவெற்பு றையுமமலன் –
அமர் திருப்பதியிலுறை பொழுததிற்
கோதனத் தாநிரைபுரக்குமாயர்
குடிநினைக்குந்தும்பையூர்க்கொண்டியென்பவள்
கொழிப் பிலா நற்குணத்தாள் –
கொடுத்ததயிரமுதிற்குரித்தாம்
விலைப்பணங் கொள்ளாதிருக்குமெல்வை
படிநினைக்குந்தனது பாததீர்த்தந்தரப்
பருகிநன் ஞானமெய்திப் –
பணயம்வேண்டாதுபர கதிவேண்டவப்பரம
பதவாழ்வையன்னளடையும்
படிநினைத்தொருபனைச் சிறுமுறிவரைந்ததைப்
பாந்தண்ம லையாற்களித்த –
பரமகல்யாணகுணவெதிபதியைவிதி
யுடைப் பாவநர்பழிச்சுவரரோ. (23)
நிலைமண்டிலவாசிரியப்பா.
பழிச்சற்குரியராம் பண்புடைப்பெரியோர்
பழிச்சுறும்பதயுகப் படிவர்தம்பெரும
புவனி யோர்க்காப்பான் பூதமாபுரிதனில்
அவதரித்தருளிய வருட்கொடையண்ணால்
அடிநாட்டொடங்கி யடியனைப்பகுதியாம்
ஆமயமடைந்துவெந் தீமயமாயெழீஇ
வருத்துகின்றது மற்றதன்குணங்கடாம்
விருத்தமாரியல்பினெவ் வேளையும்விடமித்
தநவரதமுமறா வரந்தையாம்பிரளயக்
கனவிரதத்தாற் கவற்றுகின்றன
இதனானாநா விதமாயெய்துமோர்
தனையிலாத்துன்பந் தனைநுகர்கின்றனன்
அப்பிணிப்பண்பையு மதன்வரலாற்றையுந்
தப்பிலாநூல்வழிச் செப்பமாச்சிந்தையில்
அறிந்தவாரியர்களா மாயுள்வேதியர்களிற்
சிறந்தவனெனும்பெருந் தேசுடைமருத்துவன்
நின்னையன்றியிந் நெடுங்கடல்வளாகத்
தென்னையிடைவிடா தெருக்குமிந்நோய்தனை
நறுமொறுப்புடனே மறுவலும்வராது
போமாறியற்றிடு மாமாத்தியரிலை
அடியேனகதி யகிஞ்சநனருளால்
நெடியோயென்னையா னினக்குச்செயவலேன்
நின்னறக்குணத்தினா னின்னளியெனச்சொலுங்
குடிநீர்கொணர்ந்து குடிப்பித்துடங்குநின்
சீபாததீர்த்தமாஞ் சித்தசூதத்துறை
மாபாவநமுற மடுத்திடச்செய்வித்
தென்றுநினக்கே நன்றுநிவேதநம்
புரிந்திடுமடிசிலை யருந்திடலாகிய
பத்தியமுறைமையி னித்தியமெனைநிறீஇ
உயத்தகுவிரசையின் பயத்தினாரோக்கிய
நானநூனமா நன்குசெய்வித்தியான்
அந்நாட்டொடங்கி யிந்நாட்டுணையும்
பெற்றுணற்கரிதாம் பெற்றியினிருந்ததாம்
பரமமாகிய பிரமமாமடிசிலை
மற்றதன்குணங்களா யுற்றநல்லறுவகைப்
பெறுஞ்சுவைக்கறியொடு நறுஞ்சுவைக்கனியொடுங்
கூலமொன்றிலாக் காலதத்துவமெலாம்
நித்தியவிபூதியி னித்தியவுருவுடன்
உண்டதறாதென மண்டுமுட்கின்றியே
கட்புலன்றன்னாற் கண்டநுபவித்தும்
உட்புலன்றன்னா லுண்டநுபவித்தும்
துன்பமறும்பே ரின்பமயத்தனாச்
செய்வித்தடியனை யுய்வித்திடுஞ்செயல்
நளிர்கடலுலகெலா நனிநிறைந்தொளிர்தரும்
அரும்பெறலாகுநின் பெரும்புகழ்க்கழகே. (24)
வெண்பா .
புகழார்புயங்கப்பொருப்பப்பன்மேனாள்
இகழாதுகைத்தலத்தினேந்தத் - திகழாழி
சங்கமளித்தானைச்சார்பிலார்பற்றுமெதி
புங்கவனையென்றுநெஞ்சேபோற்று. (25)
கட்டளைக்கலித்துறை .
போற்றுதிநம்மைப்புரந்திடக்கங்கணம்பூண்டவனைச்
சாற்றுதிநெஞ்சேயெதிகள்சிகாமணிதன்பெயரை
ஊற்றுதியன்னோன்புகழ்க்கூழையுண்போருளங்களிக்க
ஆற்றுதியன்னோனடிப்பணிமோக்கத்தறம்பெறவே. (26 )
எண்சீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்.
அறமமருந்திருப்பதிகளொருநூற்றெட்டு
மரிந்தமனுக்கிடமென்பரவனவற்றோ
டுறவியங்கியெதிபதிதன்னுளத்தானென்ப
துண்மையாதலினாலவ்வுறுவர்கோனை
உறவணங்கிவலமொருகாலுஞற்றினெஞ்சே
யுரைத்ததிருப்பதிகளையுமுவண்வாழ்கின்ற
திறமிகுநம்பெருமானம்பிராட்டிமாரைத்
திருவலஞ்செய்பயன்பெறுதறிண்ணமாமே. (27 )
நேரிசையாசிரியப்பா.
திண்ணமிவ்வுலகரைத் திருத்தியுய்வித்திடும்
வண்ணம்வண்பூதூர் வருமெதிப்பெரும
போதமெவ்வுலகினும் பொருத்திடுநிகில
வேதவேதாந்த விழுப்பொருளுணர்ந்தோய்
கந்தளவைப்பர தந்திரனாகுநீ
ஆரியன்கூறிய சீரியவாணையுங்
கடந்ததனால்வரு மிடும்பையுங்கைக்கொள
ஒருப்பட்டென்று மொழியாக்குடும்ப
அருப்பச்சேற்றில் விருப்புற்றழுந்துபு
அறமறக்கடையெனுந் திறவினையிரண்டினான்
மீண்டுமீண்டும் யாண்டுமீண்டிடு
நால்வகையோனியின் பால்வரும்யாக்கையை
யெடுத்தலும்விடுத்தலு மிருணரகடைதலும்
ஆகியவவத்தையில் வேகமாரூசலின்
ஒழுகைக்காலி னுழன்றுமேல்கீழ்
எழுகையும்விழுகையு மியல்பின்மேற்கொண்ட
சேதநராகிய பூதலத்தவர்பால்
அருளுருவாகுநின் றிருவுளமிரங்கி
அதிகாரிகளவ ரல்லராயினும்
விதிவாய்த்திருத்தலின் விழைந்தவர்தமக்கெலாம்
மந்திரமெவற்றினு மாட்சிமைத்தாகிய
மந்திரமுரைத்துநன் மாக்கதியளித்தலின்
வெருட்சியைநீக்குறு மருட்கடலெனும்பெயர்
நினக்கேதக்கது நினக்கேதக்கது
தோமுடைமையினாற் பாமரராகி
அவிக்கப்படாத வவித்தையினாற்றலாற்
கட்டுண்டவரையக் கட்டினின்றும்
நீக்கிக்காத்திட வீக்கியகங்கணன்
என்னநம்மான்றோர் பன்னிடுந்திருப்பெயர்
மனத்தாயுங்கா னினக்கேதக்கது
முறைமைகள்யாவு மொழியும்
மறைமொழிக்குரிய நிறைமொழியோயே. (28)
வெண்பா.
நிறைமொழியாளர்க்காக்கநீணிலத்தில்வந்தெம்
இறைமொழிக்குப்பாடியஞ்செய்தீந்த -
மறைமொழிவாய் எம்மானிராகவன்பினீடணைகடீரெதிகள்
பெம்மான்புகழைநெஞ்சேபேசு. (29)
கட்டளைக்கலித்துறை .
புகழ்ந்திடத்தக்கதுபூதபுரிப்புண்ணியன்புகழே
திகழ்ந்திடத்தக்கதுசிந்தையிலன்னோன்றிருவுருவே
நிகழ்ந்திடத்தக்கதுநெஞ்சத்தவனுரைநீதியென்றும்
அகழ்ந்திடத்தக்கதவித்தையன்னோன்றன்னருள்பெறவே. (30)
எண்சீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்.
அருளுறுமைந்தாம்வேதம்பருவமூவா
றாமதன்சாரக்கீதையவ்வெண்பெற்ற
தெருளுறுமத்தியாயமாமதிற்றெட்புற்ற
சீர்ச்சரமசுலோகச்செம்பொருளைமேனாள்
பொருளுறுநங்கோட்டியூர்நம்பிபானம்
பூதபுரிவரும்வேதப்புலவர்கோமான்
இருளறக்கேட்டதும்பதினெண்முறைபோந்தென்ப
விச்செயலினருமையெண்ணின்றும்பூதாமே . (31)
நிலைமண்டிலவாசிரியப்பா.
ஆமோதத்துள வணிந்திடுமரிந்தமன்
மாமோதத்துடன் மகிழ்ந்துதன்னினுந்
தன்னடியார்களாஞ் சநகாதியரையுங்
கொன்னுறுமன்புடைக் குகப்பெருமானையும்
அத்தனருட்கிலக் காஞ்சபரியையும்
வித்தகனாச்சொலும் விதுராழ்வானையும்
ஞானவானென நவில்குசேலனையுஞ்
சூனுவையிழந்துளஞ் சோர்வைதிகனையும்
உற்றவராகிய மற்றுஞ்சிலரையும்
வியந்தேயென்று முயர்ந்தோரெனக்கொளீஇ
அகமுகமலர்ச்சியின் முகமன்மொழிசொலித்
தன்கினைவிடுத்து நன்குறமதித்தவர்ப்
பெருத்தவன்போடுப சரித்தநன்முறைமையின்
பவக்கட்டறுத்திடும் பண்டிதசிகாமணி
தவக்கட்டழகார் தபோதனசிகாமணி
தெட்புறுஞான தேசிகசிகாமணி
நட்பினன்பர்க்கரு ணல்குசிந்தாமணி
….
பேணாவகத்திருள் பேர்க்கும்விண்மணி
காணாப்பொருளினைக் காட்டுங்கண்மணி
என்னுநீயுநின் னன்பரிலவாவெனும்
அள்ளையையொழித்தநற் பிள்ளையுறங்கா
வில்லிதாசன்கரம் மெல்லிதாகுநின்
மாணுறுபாணியாற் பேணிப்பிடித்தவன்
பாவனபாவன னாவதையெவர்க்கும்
மன்றுபடுத்தினை துன்றுசீர்பெறுமவன்
பன்னியின்மனநிலைப் பண்பறிவிப்பான்
மன்னியவைணவ மாந்தரைவிடுத்தவள்
ஊனமில்லாதநல் லுள்ளத்தொளிர்தரும்
ஞானபூர்த்தியையு நன்னர்விளக்கினை
[*] தாசரதியெனப் பேசிடும்பெருந்தகை
நிலமிசையாவருந் தலைமிசைக்கொளத்தகும்
நிலையினனென்னவும் நீடுநல்லிசைகெழூஉந்
[+] திருமறுமார்பனாஞ் செம்மலான்முத்தியும்
மருவியகைத்தலம் வாய்ந்ததென்னவுங்
களிப்புடனெவர்க்கும் வெளிப்படவுரைத்தனை
ஆதலாலடியனேன் போதமாரன்னவர்
நத்திடுமபிமா நத்தினிலொதுங்கிநின்
றெப்பொழுதும்மவர் துப்புறழ்சேவடிப்
பணிசெய்தவரிசை பழிச்சியென்பிறவிப்
பணியொரீஇவீட்டை பெருந்திருவினனாய்
அமையும்வண்ணநின் கமையார்திருவுளத்
தெண்ணியெண்ணியாங் கென்னைநின்சீரருள்
தேக்கிடுங்கடைக்கணா னோக்கினின்னிறைபுகழ்
நாட்டியவிவ்விளை யாட்டுவிபூதியின்
வகுந்துவினுழைந்து புகுந்துநிறைந்திவண்
இடம்பெறாதெழீஇத் தடம்பெறுமண்ட
பித்தியைப்பொதுத்ததைப் பத்தியிற்சூழேழ்
ஆவரணப்பெயர் மாவரணத்தையும்
இடந்துகடந்து படர்ந்ததன்மேலுறை
நித்தியர்வாழ்தரு நித்தியவிபூதியிற்
குலவியெப்பொழுதினு நிலவியுலவுமே (32)
----
[*] முதலியாண்டான் [+] கூரத்தாழ்வான்
----
வெண்பா
உலப்பறுமாமாயைக்குரியகுணத்தின்
கலப்பறுத்துய்யக்கருதி - நலத்தடைந்தேன்
எம்பெருமான்றன்புகழேயேத்துங்குணத்தெதிகள்
தம்பெருமான்றன்சீர்ச்சரண்
கட்டளைக்கலித்துறை
சரணமடைந்தோர் தமக்குநற்சால்பினைச்சாருமந்தக்
கரணமடைவித்துக்காப்போன்கரிகிரிக்கண்ணன்மலர்ச்
சரணமடைந்தவன்சார்பானல்லாரியர்தண்ணருளா
பரணமடைந்தநம்பூதூரெதிபதிப்பண்ணவனே (33)
பன்னிருசீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்
பண்ணவர் தமைக்காக்கு மெண்ணின்வட
மதுரையாம் பதிவருமிராமாநுசன்
பகரகிலவேதவேதாந்தநற்சாரமாப்
பல்கலைப்புலமைசான்றோர்
எண்ணவருகீதைநூலினையுரைத்தொருநரனை
யின்பமுறு முத்திநிலையில்
இருத்தவல்லவ னல்லனாயினானது நிற்க
வெண்ணில்பல் காலமெல்லாம்
மண்ணவர்செய்மாதவப் பெருமையிற்
பூதபுரிவருமிராமாநுசாநீ
வரையுமெண்ணுக்கடங்காநரரை மெய்ஞ்ஞானம்
வாய்க்கத்திருத்தியவரை
கண்ணவருமைத்தென்று நான்மறையுமுரைசெய்திரு
நாட்டில்வைத்தனையாதலால்
நலந்திகழுமத்தகையநின்ஞானவாற்றனிலை
நவிலவெவாதரமாகுமே (34)
நிலைமண்டில வாசிரியப்பா
தரம்பெறுநெஞ்சே திரம்பெறுமன்புடன்
விதிநலத்துடன்கெழு மதிநலமுடையோர்
துதிபதிபாதத் தெதிபதிதனைநீ
அகரப்பொருளை யறைவோய்போற்றி
அகதிகள்களைக ணாவாய்போற்றி
அகிஞ்சநர்க்கைந்தரு வளையாய்போற்றி
அகிலவேதாந்தத் தரும்பொருணிகிலரும் (35)
அறிதரவறுதியிட் டருள்வோய் போற்றி
அச்சுதற்கணையா யமைந்தோய் போற்றி
அடியாரரில்களை யரிப்போய் போற்றி
அடைந்தோரிடுக்க ணறுப்போய் போற்றி
அபவர்க்கத்தத ரறைவோய் போற்றி
அப்பனுக்காழிசங் களித்தோய்போற்றி
அமிதமாமகிமை யமைந்தோய் போற்றி
அமுதனார்கவித்தொடை யணிந்தோய் போற்றி
அரங்கனாடற்கொடி யானோய் போற்றி
அரிக்குபதானமா யமைந்தோய் போற்றி
அரிந்தமனடிநிலை யானோய் போற்றி.
அனந்தாவதார னானாய் போற்றி
ஆதிமாற்காதப மானோய் போற்றி
ஆதிரைநாளவ தரித்தோய் போற்றி
ஆய்ச்சிக்கமுத மளித்தோய் போற்றி
ஆரியரிலக்கண மமைந்தோய் போற்றி
ஆளவந்தாரரு ளடைந்தோய் போற்றி
இராகவபிரானுக் கினியோய் போற்றி
இராமாநுசமுனி யேந்தால் போற்றி
இலக்குமணாரிய னென்போய் போற்றி
இளையாழ்வாரெனு மிலாஞ்சநிபோற்றி
ஈடணைமூன்று மிலாதாய் போற்றி
உபயவிபூதியு முடையாய் போற்றி
உபயவேதாந்தமு முணர்ந்தோய் போற்றி
உலகோர்வந்தனைக் குரியோய் போற்றி
ஊமைக்கருள வுகந்தோய் போற்றி
ஊர்த்துவபுண்டர மொளிர்வோய் போற்றி
எண்ணினற்குணங்க ளியைந்தோய் போற்றி
எம்பார்க்கருள்செயு மியல்போய் போற்றி
எம்பெருமானா ரென்போய் போற்றி
எழுபானான்கெனு மெறுழரியாதனர்
என்றும்வழுத்துறு மிறைவபோற்றி
ஐம்படையவதா ரத்தனே போற்றி
ஐம்பொறிவாயி லவித்தோய் போற்றி
ஒழுக்கநெறிநிலை வழுக்கிலோய் போற்றி
ஓத்தின்பொருளொருங் குணர்ந்தோய் போற்றி
ஒளவியமில்லா வகத்தோய் போற்றி
கச்சிநம்பிபாற் காதலோய் போற்றி
கட்டுணுமுயிர்களின் கட்டினைக் கடிந்திடக்
கட்டியகங்கணக் கரனே போற்றி
கத்தியமூன்றுங் கழறினோய் போற்றி
கரையிலாக்கருணைக் கடலே போற்றி
கலியன்றமிழ்மறை கற்றோய் போற்றி
கலிவிடதரந்தடி கலுழ போற்றி
காந்திமதிமகிழ் கான்முளை போற்றி
கிழியறுத்தோன்பாற் கேண்மையோய் போற்றி
கீதையினுட்பொருள் கிளத்தினோய் போற்றி
குருகுலக்குரவைக் குளிர்மதிபோற்றி
குலசேகரனருள் குறிப்போய் போற்றி
குறுங்குடிநம்பிதன் குரவபோற்றி
கூரநாதன்றொழுங் குருபர போற்றி
கைதவமொன்றிலாச் செய்தவபோற்றி
கோட்டியூர்நம்பிசீர் கூறுவோய் போற்றி
கோதைநாயகியருள் கொண்டோய் போற்றி
கெளவையில்புகழணி கலத்தோய் போற்றி
சாந்தகுணப்பெருந் தகையே போற்றி
சிகையுபவீதச் செம்மால் போற்றி
சித்தகுளிகையின் செயலோய் போற்றி
சின்முத்திரைக்கைத் தேசிகபோற்றி
சீவகாருணியஞ் சிறந்தோய் போற்றி
சீவேச்வரர்திறந் தெரிப்போய் போற்றி
செந்தமிழ்மறைப்பொருட் சிந்தையோய் போற்றி
சேடாவதாரத் தீர்த்த போற்றி
சேனையர்கோன்கலை செறிந்தோய் போற்றி
ஞானிகளுள்ள நயந்தோய் போற்றி
தத்துவஞானிக டலைவபோற்றி
திருமலைநம்பிதாள் சேர்ந்தோய் போற்றி
துவர்க்கலையுடுத்தரு டூய போற்றி
துன்மதநிவாரணத் தோன்றால் போற்றி [*]
தேசிகர்தேசிக சிகாமணிபோற்றி
தொண்டர்தாட்பொடிதனைத் தொழுவோய் போற்றி
நல்லோரவைக்கள நாயகபோற்றி
நாதமுனிபுகழ் நவில்வோய் போற்றி
நித்தியர்முதல்வனா நெடுந்தகாய் போற்றி
நீதிநெறிநிலை நிறுவினோய் போற்றி
பட்டர்பாலென்றும் பரிவோய் போற்றி
பணவப்பொருடனைப் பகர்வோய் போற்றி
பராங்குசன்பாதுகைப் படிவபோற்றி
பரிசவேதிப் பார்வையோய் போற்றி
பவப்பிணியொழித்திடும் பண்டித போற்றி
பாண்பெருமாளடி பரவுவோய் போற்றி
பாமகண்முகமன் படைத்தோய் போற்றி
பிரபத்தியோகப் பெரியோய் போற்றி
பிரமசூத்திரப்பொருள் பேசினோய் போற்றி
பிரமஞானிகடம் பெரும போற்றி
பூதத்தாழ்வார்ப் புகழ்வோய் போற்றி
பூதபுரிமகிழ் புண்ணியபோற்றி
பேயாழ்வாரடிப் பெட்பினோய் போற்றி
பேரருளாளனைப் பேணுவோய் போற்றி
பொய்கைப்பிரானடி போற்றுவோய் போற்றி
பொறைக்குணக்குன்றமாம் புங்கவ போற்றி
மதுரகவிகளை வழுத்துவோய் போற்றி
மந்திரமணிப்பொருள் வழங்குவோய் போற்றி
மழிசைப்பிரானடி வணங்குவோய் போற்றி
மாறனுரைசெய் மகிமையோய் போற்றி
மாறன்றமிழ்மறை வளர்த்தோய் போற்றி
முக்கோலேந்துகை முனீந்திர போற்றி
முதலியாண்டான்றொழு மூதுவபோற்றி
முமூக்குவுக்கருள்புரி முதல்வபோற்றி
யதீந்திரனெனும்பெய ரியைந்தோய் போற்றி
யதுகிரியான்பிதா வென்போய் போற்றி
வாக்குக்கெட்டா வைபவபோற்றி
வாமனசீலனாம் வள்ளால் போற்றி
விசிட்டாத்துவைத விளக்கே போற்றி
விண்டுதரிசன வித்தே போற்றி
விண்டுவின்பணிசெயும் விநோத போற்றி
வியாதனுண்மகிழ்ச்சியை விளைத்தோய் போற்றி
என்றெடுத்தொருநூற் றெட்டுமுறைநிதம்
நன்றுரைத்தேத்தி நயந்துவழிபடின்
எப்பயன்பெறவிவ் யாக்கையெய்தினமோ
அப்பயனடைத லணித்தயிர்ப்பின்றே. (36)
------
வெண்பா .
அயிர்ப்பிலாவன்பர்பாலாறிரண்டா[*] மாசும்
பயிர்ப்பினியற்றாதிருத்தல்பண்பென்-றுயிர்க்குழுவுக்
கெம்பெருமானாரிசைத்தவிதியைநெஞ்சே
நம்பிநடத்தனலம். (37)
-----
[*] 1. ஜந்மநிரூபணம், 2. சரீரநிரூபணம், 3. பாகநிரூபணம்,
4. ஆசிரமநிரூபணம், 5. அவயவநிரூபணம், 6. ஆலஸ்யநிரூபணம்,
7. வாஸநிரூபணம், 8. பந்துநிரூபணம், 9. ப்ரகாசநிரூபணம்,
10. ப்ரகாரநிரூபணம், 11. வர்த்தகநிரூபணம், 12. தோஷநிரூபணம்.
-----
கட்டளைக்கலித்துறை
நலனொன்றுநல்வளப்பூதூருறையெதிநாதன்முன்னாள்
பலனொன்றப்பன்னுநியமங்களென்பன[+]பன்னிரண்டும்
புலனொன்றப்புந்திபுரிந்தாசரிக்கின்முன்போற்றுபுகர்க்
குலனொன்றுநம்முழிக்கூடாதிதனைக்குறிக்கொணெஞ்சே. (38)
-----
[+] 1. ஆஹாரநியமம், 2. அநாஹாரநியமம், 3. அந்நநியமம்,
4. போஜநநியமம், 5. ஸ்நாநநியமம், 6. ஸ்வரூபநியமம்,
7. உபாயநியமம், 8. உபேயநியமம், 9. வாஸநியமம்,
10. போகநியமம், 11. ஆசாரநியமம், 12. ஸம்ஸர்க்கநியமம்.
-----
எண்சீர்க் கழிநெடிலாசிரியவிருத்தம்.
நெஞ்சமேயாத்துமயாத்திரைசங்காழி
நேமியோனதீநமொன்று நெகிழவேண்டா
புஞ்சமாநெகிழினுயிர்ச்சமர்ப்பணந்தான்
பொய்யாகுந்தேகயாத்திரையோவென்னில்
வஞ்சமாவிருவினையின்வயத்ததாகும்
வருந்தினானாத்திகனாமெனநமக்குத்
தஞ்சமாவெதிபதிசொல்விதியைநன்னர்த்
தழுவியொழுகிடின்முத்திசாரலாமே. (39)
நிலைமண்டிலவாசிரியப்பா.
முத்தியடையவிம் மூதுலகோர்க்குப்
புத்தியளித்துப் புரக்கவிப்புவிமிசைச்
சிந்தைமகிழ்ந்து வந்தவெந்தையாம்
எதிபதிப்பேருடை மதிநலவாரியே
ஞான நூலொன்று நூனமாவறிந்திலன்
ஆத்துமகுணங்களை நீத்தவனக்குணம்
அல்லாக்குணங்களைப் புல்லாப்பூண்டவன்
நன்றெனப்படுவ தொன்றுமறிந்திலேன்
சந்தமாரிலக்கண மைந்தினொன்றேனுங்
கற்றவர்பாற்போய்க் கற்றறிந்திலேன்
ஆதலானின்மீ தோதுமிக்கவிகளில்
வருக்கப்பிழைக ளிருக்கினுமவைகளைப்
பாராட்டாதுநீ சீராட்டுடனின்
மனமகிழ்ந்தெனதசொன் மாலையாங்கவிகளைத்
தந்தைதாய்தமது மைந்தர்தம்மழலைச்
சொற்களைத்திவவுறு நற்கிளையாழிசை
குழலிசையிவற்றினுங் கூரவினிதெனக்
கேட்டுநனியுளக் கிளர்ச்சியடைதல்போல்
அகிஞ்சநனகதி யாகியவெனக்குத்
தந்தையுந்தாயுஞ் சற்குருதெய்வமும்
யாவுமாகியே மேவியிருக்கு நீ
கேட்டெடுத்தென்றும் வாட்டமில்சூட்டென
அங்கீகரித்துநின் செங்கேழடிகளிற்
றிணிந்தவுவகையி னணிந்திடவேண்டுமென்
றடியனேன்முடிமிசை யணிகுவனத்திருத்
தாளெனுந்தெய்வத் தாமரைப்பூவே. (40)
பல்வளமுங்கெழுமியசீர்ப்பெரும்பூதூரென்
பதியில்வாழெதிபதிதன்பதாம்புயத்திற்
சொல்வளநான்மணிமாலையொன்றியற்றிச்
சூட்டினனைம்பொறியென்னுந்துட்டர்தம்மை
வெல்வளஞ்சேர்விரகராம்விண்டுசித்தர்
விமலவபிமானமெனும்வீவில்செல்வ
நல்வளங்கொண்டோன்பள்ளிகொண்டானென்னு
நாமங்கொண்டோன்கல்விநலங்கொண்டோனே. (41)
எதிராசமாமுனிகள் நான்மணிமாலை முற்றிற்று.
------------
4. முதலாழ்வார்கள் மும்மணிக்கோவை.
ஸ்ரீ ஸ்ரீமதேராமாநுஜாய நம:
முதலாழ்வார்கள் மும்மணிக்கோவை.
காப்பு.
பூவர்க்கருள்செயப்போந்தநம்பொய்கைப்புனிதன்முதன்
மூவர்க்குமும்மணிக்கோவைமொழியவென்முச்சிவைப்பன்
நாவர்க்குளோங்கிய நாவீறனானிலநண்ணகில
சீவர்க்குநல்லருள்செய் மாறனம்பொற்றிருவடியே.
ஆதியாகியவருமறைச்சிரத்தினிலமர்ந்த
ஆதிமால்பரனெனவறிந்தகலிடத்தவர்தம்
ஆதியாதிநோய்தவிர்ந்துயவருமறைதமிழ்செய்
ஆதியோகிகளடியிணைமுடிமிசையணிவாம்.
நூல்.
நிலைமண்டிலவாசிரியப்பா.
திருமலர்ச்சேக்கைத்திசைமுகன்படைத்தவிவ்
வுருகெழுமும்மையுலகினிலொன்றாம்
பூவலயத்துவர்ப் பொருதிரைப்புணரிசூழ்
நாவலந்தீவினி னவவருடத்தோர்
வருடமாம்பாரத வருடவளாகத்
தூழுறவொளிர்ந்திடு மேழுமாபுரிகளுள்
ஒன்றாயென்றும் பொன்றாப்புகழ்பெறூஉம்
நாஞ்சியாரைசூழ் காஞ்சிமாபுரிவயின்
பழமறைமுறையிடப் பைந்தமிழ்ப்பின்படர்
கிழமையோன்றிருமலர்க் கிழத்தியோடுறைதரும்
அஃகாவளத்திரு வெஃகாப்பதியுழிக்
கள்ளுணமூசுறூஉம் புள்ளறைவள்ளவாய்
முள்ளரையாடக முளரிக்கருவிடை
ஏழாவரணமுஞ் சூழாவொளிர்தரும்
அண்டமுமவற்றுறை யண்டராதியரும்
நினைவினுதித்திட வனைதலாதிக்குக்
காரணனாகிய நாரணனருள்வழிப்
பூத்திடக்கொப்பூழ் பூத்தோனெடுத்துச்
சீர்பெறுமணிமறு மார்புறத்தழீஇ
மெச்சிமுச்சியி னுச்சியைமோந்து
நானக்கருங்குழ னளினக்கிழத்திதன்
ஞானப்பாறரு நகிலுமுண்பித்து
நோக்காரருள்விழி நோக்கிநந்நேயத்
தாழ்வீரவித்தையைப் போழ்வீர்நமைச்சொலும்
அந்தமின்மறைப்பொருள் யாவையுமமைத்துச்
செந்தமிழ்முதற்பாச் செய்தவற்றானும்.
இருளறவேயா மருளியநியாச
வித்தையினானுமிவ் வத்திசூழுலகரைத்
திருத்திநந்தாள்களிற் பொருத்தியவர்நன்
குயத்தகுநெறியினை நயத்தொடுகாட்டுவான்
விருப்பொடுநாமுறை திருப்பதிதொறுமே
விஞ்சியவன்பொடு சஞ்சரித்தென்றுநீர்
இருத்திரென்றுரைத்த விருத்திபெற்றுளமகிழ்
பொய்கைமாமுனிவர பொய்கைபூம்பொழில்சூழ்
திருக்கடன்மல்லைத் திருப்பதிவயினிசைப்
பாட்டுளரளியளி கூட்டுணுநறுவிரைத்
தாதவிழ்ந்தலர்ந்ததோர் மாதவிச்சுமநசக்
கருவுழியுதித்திடப் பெருவிறலுவணமாக்
கேதநன்கமலமாப் போதில்வாழ்பவளுடன்
வந்துதன்சேவையைத் தந்தருட்பெருக்குறூஉங்
கடைவிழியாற்பரிந் தடைவுடனோக்குபு
தகர்ச்சியிலாநந் நுகர்ச்சியிலாழ்வீர்
ஆதிநூற்சார மனைத்தையுந்திரட்டிநன்
னீதிசேர்செந்தமிழ் நிறையிலக்கணமுதற்
பாக்களாலோர்நூல் பணித்ததுபயன்பட
ஊக்கமாயெவர்க்கு முரைப்பதினானும்
விதியுடனாநும் மதியுறவருளிய
பதிபன்னிக்குள பந்தத்துணர்வையுஞ்
சத்தையார்பிர பத்திவித்தையையுஞ்
செப்பமாவுபதே சிப்பதினாலுமிவ்
வுலகினர்தமைமதி நலமுறத்திருத்திநுந்
தாட்கமலங்களுக் காட்படும்வணநாம்
உகந்துறைநிலங்களி னகந்தொறுமகந்தொறும்
இயங்கியிருமெனும் வயங்கெழுநியமநம்
பூண்டபூதப்பெய ராண்டகாய்புகழ்கெழூஉம்
மயிலைமாநகர்வயி னயிலைநேர்பெருவிழி
நொசி நுண்மருங்குற் சசிதன் கொண்கனாம்
வாசவன்முதலியோர் வணங்குபுவழிபடுங்
கேசவப்பெருமான் கேண்மையிற்கிளர்ந்துறை
கோட்டத்தமர்ந்பூந் தோட்டக்கிணற்றறல்
அலர்ந்தசெவ்வல்லியி னலந்திகழ்கருவயின்
விதித்தவனருள்வழி யுதித்திடமற்றவன்
மாண்டகுதிருக்கரந் தீண்டியேந்துபு
மன்னுயிர்க்கெலாமோ ரன்னையாகிய
எம்பெருமாட்டியின் வம்பவிழ்காந்தணேர்
அத்தத்தளித்திடச் சித்தமுவந்தவள்
பீனக்கொங்கைசேர் ஞானப்பாலளித்
திருநிலக்கிழத்திபா லிருமெனவிடுத்திட
முந்தைமாமறைதொழூஉ மெந்தையெம்பெருமான்
நளிரருள்விழியாற் குளிர்தரநோக்கியெம்
ஆழ்வீர்நீவிர்நம் வாழ்வார்திப்பிய
தேசந்தோறும் வாசஞ்செய்தவண்
பொருந்தியசேதநர் திருந்துறவருமறைக்
குருத்தினற்பொருள்களைப் பொருத்திநன்கமைத்துப்
பைந்தமிழ்ப்பாக்கள் பணித்தவற்றானுநுந்
நெஞ்சுறநுமக்கியாந் தஞ்சமாவருளிய
விஞ்சுசீர்ப்பிரம விஞ்சையினானும்
நூனமுத்தத்துவ ஞானத்தானும்
இமைக்குமுயிர்க்கு நமக்குமென்றும்முள
சரீரசரீரிக் குரீஇயநட்பையுங்
கிளக்குஞானத்தைக் கிளத்தலினானும்
வையகமாந்தர்தம் பையுடவிர்ந்துயச்
செயக்கடவீரெனு நயத்தகுமாணையை
மேற்கொண்டொழுகுபு மேதினிமாக்கடம்
நாற்கதிப்பிறப்பினை நசித்திடச்செய்துவிச்
சிராந்தியடைந்திடும் பிராந்தித்தபோதன
பாவனப்பொருள்களுட் பாவனமானவும்
முடிக்கருந்தவத்தவர் முடிக்கணியானவும்
ஆர்த்தர்கடங்கட் கடைக்கலமானவுந்
தீர்த்தர்கடமக்குநற் சேமவைப்பானவும்
என்னையொத்தவர்கட் கன்னையொத்தனவும்
ஆகிய பெரும்புகழ்க் காகரமாகுநுந்
திருவடிகளையென் னொருமனச்சினகரம்
விதிப்படிநன்னர்ப் பதிட்டைசெய்வித்துத்
துளக்கமின்மெய்ம்மதி விளக்கநன்கமைத்
தன்பெனுமஞ்சன மின்புறவாட்டுபு
பத்திமைத்தேமலர்க் கத்திகைசூட்டுபு
தவாதுமேன்மேல்வள ரவாவின்மையெனும்
அறுசுவையடிசினன் னெறிமுறைநிவேதித்
திழுக்குறாதநல் லொழுக்கத்தூபமுந்
தூய்மையினீங்கா வாய்மைத்தீபமும்
வழங்குவல்வணங்குவல் வாழ்த்துவல்மாயா
அவித்தைத்தமமுனங் குவித்தவினைப்பிழம்
பதனாலடிநாண் முதலாவெனக்குநேர்ந்
தீர்தருபவப்பிணி தீர்தரற்பொருட்டே. (1)
வெண்பா.
பொருள்கொண்மறையின்பொருண்முடிவுதோன்றும்
இருள்கொளிருவினையுமீண்டா -
அருள்கொண்முத லாழ்வார்கடாளிலடைக்கலமென்றேயடைந்து
தாழ்வார்களுள்ளந்தமக்கு. (2)
கட்டளைக்கலித்துறை .
உள்ளத்துறையுமொருமுதறந்தவுணர்வுநல
வெள்ளத்துறைதருநம்மாதியோகிகள்வீழ்கழல்கள்
கள்ளத்துறைவிட்டுநெஞ்சேகருதுதியேற்றிமிரப்
பள்ளத் துறையிற்படாதுநமைக்கொளும்பான்மையவே. (3)
இணைக்குறளாசிரியப்பா.
பான்மொழிமான்விழிப் பாவையரகட்டினிற்
பத்துத்திங்களு முற்றிப்பிறந்துழல்
அலகிலராகிய வுலகினர்போலா
தலர்தருமுருகவிழ் மலர்வயினுதித்திடும்
அருமையிலருமையாம் பெருமையிற்சிறந்தீர்
ஞானமும்பத்தியு நயப்பின்மையுமாம்
ஊனமின்மணிப்பூ ணுள்ளத்தணிந்தீர்
ஏட்டையுமிந்தியச் சேட்டையுமொழித்தீர்
ஆகியநீவிர்
துறவியராதலிற் றொல்லுலகோர்தம்
உறவினைக்காண்டொறு முள்ளத்தாற்றா
தொருவரையுணரா தொருவரெங்கணும்
ஓரிரவேனு மோருழித்தங்கா
தெம்பெருமான்றன் வம்பவிழ்மலரடிக்
குரியபேரன்புடன் றிரிதருங்கானுமை
உயிர்நிலையாக்கொளெம் முயிர்க்குயிராயவன்
நும்மைக்கொண்டிச் சும்மைநீருலகினைத்
திருத்துவானருத்தியைக் கருத்துட்கொளீஇத்
தீமனங்கெடுத்தருள் வாமனக்கேத்திரத்
தோவலிலாச்சீர்க் கோவலூருறைதருந்
தன்னைக்கண்டு தரிசித்திடுவான்
புத்தியளித்திடப் பத்தியினீ விரும்
அப்பதியடைகால் வெப்பமார்கரக்கதிர்
குடகடல்குளித்திடப் படரிருண்மிடைதலிற்
பூசுரனாமோர் மாசிலாவைணவன்
நடைபெறுமாளிகை யிடைகழிதனில்வந்
திருக்கையிலிறைவனும் பொருக்கெனநும்முழி
வகுந்துவினன்றியே புகுந்துமீதூர்ந்திடக்
கழியநமக்கிடங் கழிமைசெய்பவன்
யாவனென்றுணர்வா னீவிர்மூவிரும்
இடிஞ்சினெய்திரியினான் முடிந்திடாத்தீவிகை
மண்ணுறவேற்றிக் கண்ணுறுங்கானுமை
நெருக்கியோன்றிருக்கிளர் மருக்கமழ்நறுந்துழாய்க்
கண்ணியனண்ணியன் புண்ணியனுண்ணியன்
நாரணன்பூரண னவிற்றுமேழுலக
பாரணன்காரணன் பகர்மறைச்சிரத்தினிற்
றுணிபொருள்யாவையு மணிபொருளறிஞர்கள்
பணிபொருளெவற்றினும் பரந்துறையும்பொருள்
முப்பரம்பொருட்கு முதற்பொருளாமம்
மெய்ப்பொருடனைநுங் கைப்பொருளெனக்கண்
டுள்ளத்தடங்கா வெள்ளக்களிப்பாழ்ந்
தவசராயெழுந்துட லரும்பியபுளகக்
கவசராய்ப்பழிச்சுறுங் கருத்துடையவராய்ச்
சேமமாரிருக்கெசுர் சாமவேதத்துறூஉம்
ஈரமாம்பொருள்களுட் சாரமாம்பொருளமைத்
தமிழ்தினுமினியசெந் தமிழ்முதற்பாக்களால்
ஏவரும்புகழ்தரு நீவிர்மூவிரும்
முதலிரண்டுடனே நுதலியமூன்றாந்
திருவந்தாதிகள் கருவந்துழலுமெம்
போலியருய்வான் வாலியகருணையின்
அருளிச்செய்தீ ரரியவாமுப்பொருட்
டெருளிற்சிறந்தநற் றெய்வப்புலவீர்
எழுத்துஞ்சொல்லும்
பொருள்யாப்பணியுந் தெருளுறக்கிளக்குறு
நூலினுமேனைய வாலியநூலினும்
எட்பகவன்னதோ ரொட்பமுமில்லாக்
கழுதிரதத்தைநீர்க் கயமெனுமிழுதையேன்
உறுதியாநாணஞ் சிறிதுமின்றியே
அறவுஞ்சிறிதா முறவியொன்றெழுந்து
குசத்தீவைத்தன் வசத்தாய்ச்சூழ்தரும்
இழுதம்போதியை முழுதுமுண்குபு
புக்கெனவிணையினும் புகழ்க்கவிபாடுவான்
புக்கனனென்பிழை பொறுத்தெளியேனைநுந்
திருத்தாட்டொண்டு செய்யத்
திருத்தியாட்கோடனுங் கருத்தருட்குரித்தே. (4)
வெண்பா.
அருட்கடல்களாகுமுதலாழ்வீர்காளென்னெஞ்
சிருட்கடலைவற்றுவித்தென்றுந் - தெருட்கடலென்
புந்திக்குட்டேக்கிநுந்தம்புண்டரிகப்பொன்னடிகள்
வந்திக்கச்செய்வீர்மகிழ்ந்து. (5)
கட்டளைக்கலித்துறை.
மகியைச்சுசிசெய்துவாழ்விக்கவந்தருண்மாமுனிகாள்
அகியைப்படுக்கையமலற்கிடமாமகத்திரெனை
யகியைப்பொன்னாக்கலெனத்தூயனாக்கியயனவஞர்ச்
சிகியைத்தணித்தனுஞ்சீரருண்மாரிச்செயலென்பவே. (6)
நேரிசையாசிரியப்பா.
என்னகந்தன்னை யிறுக்கித்துதைந்து
மன்னகந்தன்னை மடித்தோட்டிடுவான்
மண்டியதிற்குடி கொண்டுமகிழ்தரூஉம்
ஆதியோகியீர் நீதியினீவிரகள்
ஆழிசூழுலகத் தாழியான்புதல்வனைத்
திருவயோத்தியினிற் றிருவடிதொழுதெழுந
தருளியிருக்கையி லிருடருமிலம்பா
டுற்றொருபொருளு மற்றவனாகிய
மறையவனொருவ னிறையன்புடனுமை
வழிபடவவற்குப் பழிபடாவிம்மைச்
செல்வமுமோக்கச் செல்வமுமளித்தபின்
மங்கலிலாப்புகழ்க் கங்கையின்கரைமேல்
வதிதருகின்ற வதரியாச்சிரமத்
துறைதருநரநா ராயணவுறுவரைக
கண்டுகளிப்புட் கொண்டபின்னீவிர்
பென்னம்பெருத்த பிறங்கற்குகைக்குட்
டன்னந்தனியே தானிருந்தியோகு
புரியுங்காலையில் வரியளிமுரன்றெழும்
ஒண்மலர்ச்சேக்கைவாழ் மண்பொதுத்தந்தை
வாராவரநர நாராயணரெனும்
இருடிகளானும் பொருடிகழ்பெருமையைக்
கேட்டதைத்தெளிவான் வேட்டரம்பைக்கவான்
அரம்பைமேநகை யாதியோர்க்கொண்டும்
முரம்புறுகானத் துரம்பெறத்திரிதரு
முடங்குளைச்சீயங் கடங்கலுழ்கைம்மா
அடுதொழுலுகிர்க்கரக் கொடுவரிகொண்டும்
உம்பலிற்சிறந்ததாஞ் சிம்புளைக்கொண்டுங்
கடைநாளெழுகடு நடையார்மருத்துடன்
சென்மழைமின்மழை செறிந்திடைவிடாதுபெய்
கன்மழைமுதலிடர்க் காரணங்கொண்டும்
நுங்கள்யோகினைப் பங்கப்படுத்துவான்
வற்புறுமுயற்சிகள் பற்பலவியற்றியும்
நிட்டையினீவிரோர் முட்டுமின்றியே
சலியாதிருத்தலிற் றன்னாள்வினையெலாம்
பலியாப்பான்மையைப் பார்த்தப்பங்கயன்
விண்டுவைப்போலவன் றொண்டருமொருவரால்
வேறற்கரியவர் தேறற்கரியவர்
என்றுதன்னுளந்தனின் மன்றமாத்தெளிபு
பன்முறைபணிந்துமை மும்முறைவலம்வந்
தென்பிழையாவையு மன்பினாற்பொறுத்துக்
காத்தனுங்கடனெனத் தோத்திரித்தபூந்
தாமமார்ந்தசெந் தாமரைத்தாளீர்
விரிஞ்சிக்கரியநும் பெருஞ்சீர்வண்மையைக்
காமரத்தடுபதங் கலிங்கந்தமக்குழல்
பாமரனெங்ஙனம் பகுத்தறிந்துய்குவல்
ஓவலிலருளினா னீவிரேயதைத்தெரித்
தல்கவில்பத்திமைச் செல்வப்பெருக்குடன்
மல்குநன்ஞானமு மாவைராக்யமும்
நாத்திகவென்னுளம் பூத்திடச்செய்துபுன்
பிறப்பிறப்பாதிய விறப்பென்றுந்தரும்
மாயையின்விறலுமம் மாயையையொழித்திடும்
புண்ணியனாம்புரு டோத்தமனொண்மையும்
என்னுடையியற்கையு மென்னுளந்தெளிதர
உணர்த்துவீரென் றும்மை
மணத்தபேரன்புடன் மறைபுகுந்தனனே. (7)
வெண்பா.
மறைபுகுந்தோர்தம்மையோர்மங்கைக்கருப்பச்
சிறைபுகுதாவண்ணஞ்செயுமால் - நிறைபுகழ்சேர்
எம்மடிகளெந்தையர்களென்னுமுதலாழ்வார்கள்
தம்மடிகளீதுசரதம். (8)
கட்டளைக்கலித் தறை.
சரதத்தைநிற்குரைத்தேன்றேர்ந்துகோடிதருணியர்கள்
சுரதத்தழுந்துநெஞ்சேநந்துயரந்துடைக்கவந்த
வரதத்துயர்முதலாழ்வார்கள்வண்புகழ்வாழ்த்தெடுக்கும்
விரதத்தினிற்றியெனிற்பெறலாமின்பவீட்டினையே. (9)
இணைக்குறளாசிரியப்பா.
இன்பமென்பதோ ரெட்டுணையிலதாத்
துன்பமென்பதே தொகுதியினுளதாக்
குடும்பினிப்பெயர்த்த கொடும்புலியானுஞ்
சந்ததியெனச்சொலு மந்தமாவானும்
ஆளுறுமவித்தைக் கோளரியானும்
அண்டியதீவினை யண்டிகத்தானும்
பீடுறாமனமெனுங் கோடரத்தானும்
பொறிகளெனும்பெயர்ப் பொறையிலரானும்
நயந்தருமவாவெனும் வியந்தரத்தானும்
மண்டியகுடும்பக் கண்டகந்தன்னிற்
புகுந்துமீளுமோர் வகுந்துவையுணரா
தலமந்தென்று முலமந்துழறரும்
உயிர்கடத்தஞ் செயிர்கடீர்ந்துய்வான்
ஐப்பசியோண மவிட்டஞ்சதயத்
திப்புவிவந்த வியற்றமிழ்ப்புலவீர்
நீவிர்
கருமலைமருந்திக் காசினியோர்க்கெனுந்
திருமலைதனில்வாழ் திருமறுமார்பனை
ஆவிக்கொருதுணை யாகியவமலனைச்
சேவித்திடுவான் றிருவுளங்கொளீஇச்
சென்றகாலையிலக் குன்றரசனந்தன்
பெருமைசான்ற திருவுருவாதலின்
அடிதொட்டன்னதன் முடிமட்டுந்நும
தடியிட்டேறுத லரிலெனவெணியதன்
காழ்வரையோங்கிய தாழ்வரைக்கண்ணிருந்
துள்ளமுருகுற வுள்ளிவாழ்த்தெடுப்பவப்
பூவைப்பூநிறப் புண்ணியனடைந்துதன்
சேவைத்திருவினைச் செவ்விதினளித்திடக்
கண்டுகளிப்புட் கொண்டவருக்குங்
காலையிற்காலையு மாலையுமுச்சியும்
விண்டுவினடிக்கே தொண்டுபூண்டொழுகுவோன்
பெரிதாசற்றொளிர் பீடுடையொழுக்கினன்
அரிதாசப்பெய ரந்தணனொருவன்
நுந்தம்
அடிக்கமலங்கடன் முடிக்கணிகலமா.
வணிந்துநாடொறுந் திணிந்தபேரன்புடன்
மொழிமனமுடலெனு முக்கரணத்தினும்
வழிபடவவற்குக் கழிபேரருளுடன்
உந்திபூத்தவற்கு முயிர்க்குமுள்ளதாஞ்
சந்தமார்சரீர சரீரிசம்பந்த
வுணர்வினையுளத்துற வுணர்த்திவிண்டுவின்
பூசனைசிறந்தது புகலதனினுமவன்
நேசர்தம்பூசனை நெடிதுசிறந்ததாம்
ஆதலினவற்றையும் வீதலாராலயம்
புதுக்குதல்பொய்கைகள் புதுக்குதன்முதலிய
கருப்பிணிகளைந்திடுந் திருப்பணிதம்மையும்
பேர்கெழுமரங்கப் பெரும்பதிமுதலிய
சீர்கெழுதிப்பிய தேசத்தலந்தொறும்
அருளுருவெடுத்துநின் றன்னதோர்தன்மையின்
றிருமலைதனிலுறை செல்வனைச்சிந்தைசெய்
தன்னவனருள்வழி மன்னுமோரக்கய
பாத்திரமும்மதைப் படிறர்வவ்வாது
காத்திடத்தக்கதோர் கனலுமிழாழியுங்
கண்டளித்திவ்வக் கயபாத்திரநிதந்
தொண்டநினக்குச் சுரந்திடும்பொருள்கொடு
பரிந்தமனத்துடன் புரிந்துநீவருதியென்
றருளியவருட்கட றெருட்கடலன்னீர்
தவத்தாலுயரரி தாசற்போலா
தவத்தாளழுந்திய வாதனேனாயினும்
என்னாரியர்கா ளிண்டைநேர்நுமது
பொன்னாரடிகளிற் புகல்புகுந்தனனென்
பண்டைவல்வினை பாற்றித்
தொண்டுகொண்டருளனுந் தொல்லருட்குரித்தே. (10)
வெண்பா.
அருளுருவங்கொண்டனையவாதியோகிப்பெரியீர்
மருளுருவமாமென்மனத்தைத் - தெருளுருவம்
பூணச்செய்வீரெனிலப்போதன்மறலிதமை
நாணச்செய்வீராநனி. (11)
கட்டளைக்கலித்துறை .
செய்வீர்பிறந்தெனமால்சொற்றதைச்செய்திராதிர்சினத்
தைவீரரைப்புறங்கண்டவராமுதலாழ்விரென்பால்
மெய்வீரங்காட்டிமெலிவிக்குமாயையின்மேவுஞ்சன்ம
மொய்வீரைமுற்றும்வறண்டிடநீவிர்முயன்றிடினே. (12)
நிலைமண்டிலவாசிரியப்பா.
முயன்றமர்புரிவா னியன்றெழுமொன்னலர்
இதயம்போழ்தர விம்மென்றதிர்தருஞ்
சங்குநற்றண்டொளி தங்கும்வாட்கலைகளில்
அவனியோர்க்கருள்வா னவதரித்தருளிய
ஆதியோகியிர் வேதியர்தொழுதிருக்
கச்சியிற்கரிகிரி யுச்சியிற்றிகழ்தருங்
காரணவத்துவைப் பூரணப்பொருளினைத்
தேவர்கடொழுதெழு மூவர்கண்முதல்வனை
ஓரிருமறைதுதி பேரருளாளனை
விண்ணவர்விழுமமும் விரிதிரைவேலைசூழ்
மண்ணவர்மம்மரு மாற்றிடற்குரியவாம்
வரதாபயகரச் சரதாசிரியனைத்
திருவடிதொழுதவண் மருவியகாலையில்
விண்டுவர்த்தனனெனும் வேந்தர்கோனுந்தாட்
டொண்டுபூண்டநுதினந் தொழுது வழிபா
டியற்றியிருந்திடு மெல்வையிற்பற்பல
இயற்றியுடன்படை யெடுத்துவந்தயற்
றேயத்தரசர்கள் மாயப்போர்விளைத்
தன்னவன்றனையவர் வெந்நிடச்செயவம்
மன்னவன்வந்துநும் மரைபுரையடிகளின்
மறைபுகநீவிரவ் வாகுசற்கிரங்கிநான்
மறைமுடிப்பொருளெனும் வாரணமாமலை
எம்பெருமானடி யிறைஞ்சியேதிக
டம்பெருமானெனச் சாற்றிடுந்தகைத்திரு
வாழியாழ்வான்றனை யடைந்ததையவற்களித்
தாழிசூழகலிடத் தரசருக்கரசனாம்
விண்டுவர்த்தனவிதைக் கொண்டுநின்பகைவரை
வென்றுநின்னகரியிற் சென்றுநின்றமருடன்
அரசவையடைந்தரி யாதனமீதிருந்
தொருகுடைநீழலி லுலகெலாம்பல்பகல்
ஆண்டுவாழ்ந்ததற்பின் மாண்டகுமோக்கமும்
அடைதியென்றாசிக ளடைவுடனருளிய
தத்துவவுணர்ச்சித் தாபதத்தலைவீர்
வித்துருமொக்குள்வான் வில்லெனநிலையிலிக்
காயத்தெற்குள காதலைக்கழித்துநுந்
நேயப்பெருக்கையென் னெஞ்சத்திருத்தியந்
நெஞ்சத்துறைதரும் புஞ்சத்தமத்தினைச்
சீர்த்தவானகந்தனைப் போர்த்தபுன்பனிதனைப்
பருதிவானவன் பாற்றல்போற்பாற்றிமெய்ச்
சுருதிநூற்சாரமாத் தூயவர்சொற்றிடும்
அஞ்சுபொருளையு மறிந்திடுமறிவையுஞ்
செஞ்செவேயளித்தெனைத் திருத்தியாட்கொளீஇ
நித்தியவிபூதியி னித்தியர்தம்மொடு
நித்தியச்சுகத்தினை நித்தியந்துய்த்திடற்
குரியனல்லேனையு முரியனாச்செய்வீர்
ஆயினச்செய றாயினுமினியனாம்
மாமகணாயகன் பூமகணாயகன்
அகமலர்ச்சியையு முகமலர்ச்சியையுஞ்
சுருங்கலின்றியே யொருங்குசெயவற்
றாமெனமொழிப சேமநூலோரே. (13)
வெண்பா.
சேமமாம்வைப்பிற்சிறந்ததென்றேதெளிதி
காமநோய்கொண்டவென்கன்னெஞ்சே -
நேமமார் ஆதிகவிகணமதாதியாம்யோகிகடந்
நீதிசேர்பாதநிழல். (14)
கட்டளைக்கலித்துறை.
நிழலினருமையைவெய்யினின்றோர்கணினைப்பர்கண்ணன்
குழலினருமைகுழாத்துயிரோருங்கொடும்பவமூன்
றழலினருமையறியாதியோகியடிகணுஞ்சீர்க்
கழலினருமையைக்காண்போர்முத்திக்கரைகாண்பவரே. (15)
நேரிசையாசிரியப்பா.
கரைகாண்பரிதாய்த் தரைகாண்பரிதாய்ச்
செடிகுடிகொண்ட மிடியுடையுளத்தோர்க்
கடியிதுவென்று முடிவிதுவென்றுங்
கூர்ந்தமதிகொடு மோர்ந்தறிவரிதாய்
நெருங்கியபிறவிப் பெருங்கடலழுந்துபு
மோக்கக்கரையினை நோக்கவுமூக்கம்
இறையுமிலவா யுறைதருமுயிர்களை
நீதிகணிகழ்த்துறு மாதிநூல்வேதந்
துளக்கமின்றியே விளக்கமாக்கிளக்குறும்
பன்னெறிகளினு நன்னெறிநடாத்தி
வீக்கியதீவினை நீக்கிக்காப்பான்
சென்னிநாட்டிற் பொன்னியாற்றிடைக்குறைத்
திருவரங்கம் பெரியகோயிலில்
வனந்தாழ்சுதைத்திரு வனந்தாழ்வான்மிசை
அறிதுயிலமர்ந்திடும் பொறிமறுமார்பனை
அரணியலிலார்க்குச் சரணியன்றனை
அடர்ந்தபொருடொறும் படர்ந்துறைபவனை
பயிர்க்குநீர்நிலைபோற் பயின்றேயவ்வவ்
வுயிர்க்குயிராகி யோங்கொளியுருவனை
அண்டகோடிகளைக் கண்டகாரணனை
அவற்றுள்ளுறைதரு மெவர்க்குமெவைக்கும்
முதல்வன்றனைமுத லாழ்வீர்முதமுடன்
நீவிர்மூவிரு மேவியவிருவகைப்
பார்வைபடைத்த பயன்பெறும்வண்ணஞ்
சேவைசெய்துநுஞ் சிந்தைநைந்துருகிடக்
களிப்பெனுங்கடலுட் குளிப்பினையெய்தி
அவ்விடத்தெழுந் தருளியிருக்கையிற்
றெவ்விடமெனச்சொலுந் தீவினைவயத்தாற்
புழுநோய்விளைத்திடுந் தொழுநோய்த்தொடர்பினால்
அடியிடந்தொடங்கி முடியிடங்காறும்
புண்ணாராக்கையிற் புண்ணாயெங்குஞ்
சீயொடுசிலைநீர் வாய்தொறுமசும்பலில்
நீளிடைவீசுறூஉங் கோளுடைமுடைத்தீ
நாற்றங்கெழுமிய நரபதியொருவனுஞ்
சீரார்மான்மியச் சிறப்பினைச்செவியுற்
றாராவன்பி னவசனாகியிப்
பார்த்திவந்தன்னைப் பாவனஞ்செயவரு
மூர்த்திகளாகுநும் முண்டகமலரடி
தோய்ந்தபொடிகளிற் றோய்ந்திடவப்பொடி
குட்டநோய்தந்தவக் குற்றவகையெலாம்
பொட்டெனப்போக்கியப் புரவலன்புரத்தினை
மாரவேள்புரத்தினுஞ் சீரிதாச்செய்திட
நறும்பூந்தொடைப்புய நரேந்திரனதைக்கண்
டிறும்பூதெய்திநும் மிணையடிப்பெருமையை
வாழ்த்திவாழ்த்தியவ் வண்கழல்களிற்றலை
தாழ்த்தித்தாழ்த்திநுந் தாசனெனும்பெயர்
பெற்றுநுந்தாட்கே யுற்றவனாகிநற்
றொண்டுபூண்டொழுகுமம் மண்டலீகனை
ஆட்கொண்டருளிய வருட்சிறப்புடையீர்
வாட்கண்மடந்தையர் மால்வலையழுந்திக்
கருப்பநரகினு முருப்பமாரேனைய
விருணிலந்தொறுநனி மருளுறீஇயுழறரும்
அடியனேனுநும் மடியிணைக்காட்பட்
டுய்யும் விரகொன் றுஞற்றுதிராயின்
மெய்யரணத்தான் மிளிர்ந்திடுநும்புகழ்
எவ்வுலகத்தினு மேறி
இவ்வுலகத்தினு மியங்கிமல்கிடுமே. (16)
வெண்பா.
இயங்குதிணையோடியங்காத்திணையின்
மயங்கியதுபோதுமிம்மட்டும் - வயங்குமுத
லாழ்வீரடியனமுதமுறவென்மருளைப்
போழ்வீரருட்கண்புரிந்து.. (17)
கட்டளைக்கலித்துறை .
அருட்கண்ணைநீவிரடியேனுழிச்சற்றமைக்கினென்றன்
மருட்கண்மடிந்திடுமாயாதமாயையுமாயுநல்ல
தெருட்கண்டிறக்குமுத்தத்துவஞானஞ்சிறக்குமுதற்
பொருட்கண்புரிவுபுகுமாதியோகிப்புனிதர்களே . (18)
நேரிசையாசிரியப்பா.
கள்ளவிழ்நறுவிரை முள்ளரைமுண்டகச்
சேக்கையிற்சேக்குமெண் ணோக்குடைப்போதனும்
ஆதிமனுவென வறைசுவாயம்புவுஞ்
சோதிமயனெனச் சொற்றிடுஞ்சூரனும்
மெச்சுசீர்கெழுவை வச்சுதமனுவுங்
காண்டாவனனொடு மாண்டாபதர்களுந்
திக்கெலாநிறைபுக ழிக்குவாகுவும்
இரவிதன்மரபினில் வருநரபதிகளும்
வீடணனெனும்புகழ்ப் பூடணவள்ளலுங்
கழிபேரன்புடன் வழிபாடியற்றிய
தரங்கக்காவிரித் தரங்கிணிநனந்தலை
அரங்கத்தரவணை யறிதுயிலமர்ந்தருள்
அப்பனையன்பெனு மலரணியாடையின்
ஒப்பனைசெய்துள வொண்மலராதனத்
திருத்தியெப்பொழுதினு மருத்தியினனிநுகர்ந்
தீதியொன்றிலா வாதியோகியீர்
ஓவலிலன்புட னீவிர்மூவிரும்
இருக்குங்காலையிற் றிருக்கிளர்கிள்ளிநுஞ்
சவிபெறுமான்மியஞ் செவியுறீஇத்தனது
மனைவியொடுஞ்சத் தநயைகடம்மொடும்
விரிவார்நால்வகைப் பரிவாரத்தொடும்
மிடைந்தபேரன்புட னடைந்துநுஞ்சேவடி
பற்றிடவவனிரு பற்றுமற்றிட
நோக்காரருள்விழி நோக்கிமாநியாச
வித்தையையுபதே சித்திடவவற்குப்
பொய்ஞ்ஞானக்கண் பொருக்கெனப்புதைஇ
மெய்ஞ்ஞானக்கண் மிளிர்ந்துவிளங்கிட
யாக்கையுமிளமையு நோக்குறுமரசர்தம்
ஆக்கமுமழிந்தறும் போக்கினையுடையன
என்றுமனந்தனின் மன்றமாத்தெளிந்துவர்த்
தேறெழில்பெருந்தன நூறுநந்தனைகளுங்
கண்டவுடன்மயல் கொண்டுவேட்டிடவவாம்
வாகுவான்மதனையும் வாகைகொண்டவனெனும்
யோகிதாசப்பெயர் யூகிமன்னவன்றனக்
குதகபூர்வகமா வதுவைசெய்தீந்துதன்
அரசையுமரசினுக் குரியனயாவையும்
அவ்வரனுக்கே யளித்துநுந்திருவடி
நவ்வினைக்கொளீஇத்தன் னடலைப்பவக்கடல்
கடப்பானறிவின் றிடப்பாடருளிய
அருணிதிகாளிவ் விருடிணியிதயத்
திழுதையேன்பவக்கட றெழுநாமண்டிய
வழுதுவான்போரென மாய்ந்திடச்செய்தறாக்
கருவடிகளையுநுந் திருவடிகட்கே
ஆனாவன்பொடு தேனார்மலர்தூய்
வணங்கிவாழ்த்தெடுத் திணங்கியெண்ணியிவ்
வழும்புறுசட்டகம் விழும்பொழுதளவுநுந்
தொழும்புபூண்டுயவருள் சுரத்தல்
அறமெனவறைகுவ ரறிந்திசினோரே. (19)
வெண்பா.
ஓர்ந்துளமேகோடிநீயுய்வமுதலாழ்வார்கள்
வார்ந்தபெருவாரிதிசூழ்வையகத்துப் - போந்தசெயல்
நம்மைப்போனாளுநலிவுபடுவோரையெலாந்
தம்மைப்போலாக்கவென்றுதான். (20)
கட்டளைக்கலித்துறை .
என்றும்பிறவியிடும்பைகொணெஞ்சேயிளம்புனிற்றுக்
கன்றுன்னுமாவிற்கனிந்திந்தக்காசினிக்கண்ணுதித்த
துன்றுங்கருணையுளத்தாதியோகிகடொல்கலைச்சீர்
ஒன்றும்பொருணமையோர்திநல்வீட்டின்பத்துய்க்குமென்றே. (21)
நேரிசையாசிரியப்பா.
என்றுமென்றூழு மிலங்கிமகரனுந்
துன்றுறுகோள்களுந் துலங்குடுக்கணங்களும்
மேகமுமுயங்கிடு மாகமார்க்கத்தால்
அயிர்ப்பிலியோகப் பயிற்சியினாற்றலாற்
படர்ந்துபல்வளங்களு மடர்ந்திடுஞ்சுவேதத்
தீவினையடைந்தவண் மேவிவாழுநர்நிதம்
பூசனைபுரிந்திடு மீசனைமலர்மகள்
நேசனைநீவிர்நுந் நெஞ்சகந்தனினினைந்
தாடிப்பரிவுடன் பாடிப்பணிந்தவண்
விட்டுப்பெயர்ந்தலை வீசுறும்பாற்கடற்
கிட்டித்துதித்ததிற் கெழுமியநனந்தலை
மணிமயமாத்திகழ்ந் தணிபெறுகோயிலிற்
றிகழ்தருமிரசதச் சிலோச்சயமிசையோர்
மகிழ்தருநீலமா மணிச்சிலோச்சயந்
திருவடிமுதலாத் திருமுடியளவுள
அவயவத்தொகுதிக ணவநவமாக்கொளீஇக்
கிடந்தெனக்கிடக்குநங் கேசவன்றன்னைப்
படர்ந்துறுநறுந்துழாய்ப் படலையன்றனை
மாவாழ்மார்பனை மூவாமுதல்வனை
மண்டியவுலகெலா முண்டசெவ்வாயனை
யிருவிபூதிக்கு மொருபெருந்தலைவனை
நாரணனாகிய காரணபூதனைப்
புண்டரீகாக்கனைப் புருடோத்தமன்றனை
வண்டறாமும்மத வாரணேந்திரன்
ஆதிமூலமென் றழைத்திடவக்கணஞ்
சோதிமயத்ததாஞ் சுதரிசனத்தைவிட்
டிடங்கரையெருக்கியவ் விபத்தினின்னாங்
கடங்கலுமகற்றிய வருளுடையமலனை
ஓவலிலன்புட னுளத்துளிவாழ்த்தெடுத்
தாவயினின்றெழீஇ யாயிரஞ்சோதிதன்
மண்டலம்படர்ந்ததின் மன்னிருகமலநேர்
கண்டலமுடையனாய்க் காஞ்சனநிறத்தனாய்ச்
சுடர்விடுமங்கதத் தோணான்குடையனாய்
அடல்பெறுமாழிசங் கணிதிருக்கரத்தனாய்
மணிமுடியுடையனாய் மகரகுண்டலத்தனாய்
அணிபெறுமாடகாம் பரனாயந்தணர்
பரசுறும்விண்டுவைத் தரிசித்தேத்திய
ஆதியோகியீர் நீதிநெறிநிலா
தடிநாட்டொடங்கியிவ் வண்டவகுப்புகண்
முடிநாட்காறுமோர் முடிவிலாப்பல்வகைப்
பிறப்பாமளக்கரிற் பேதுற்றலமருஞ்
சிறப்பேயுடையவித் தீவினையேனையும்
ஆட்கொண்டருள்வா னணிநுந்
தாட்கமலங்களிற் சரண்புகுந்தனனே. (22)
வெண்பா.
சரண்புகுந்தோர்தம்மையித்தாலத்தின்மாயை
முரண்புகாவண்ணமுதிரன் - பரண்புகுவித்
தாதிமாலபாதமடைவிப்பர்நெஞ்சேநம்
ஆதியோகிப்பெரியோராம். (23)
கட்டளைக்கலித்துறை.
பெரியோர்கள்பேணுறுநம்மாதியோகிகள்பீடுசொலற்
குரியோருலகத்தொருவருண்டேமனத்தொட்பமிலார்க்
கரியோரடியர்க்கெளியோரவர்பேரறையினளற்
றெரியோருமேறுவரித்திரைகோன்றன்னிருப்பிடத்தே. (24)
நேரிசையாசிரியப்பா.
இடங்கொண்மாலுந்தியா மிண்டைவந்தவனாய்த்
தடங்கொளெண்கண்ணுடைச் சதுராநநனாய்
மேவியவைவகைத் தாவரசிட்டியுந்
துலங்குநாலேழ்வகை விலங்கின்சிட்டியும்
விண்ணகத்தியங்குறும் விபுதர்தம்படைப்பும்
மண்ணகத்துழிதரு மாநுடர்படைப்பும்
அவித்தையுமசத்தியுங் கவித்தசந்துட்டியுஞ்
சித்தியுமாகிய திரவரசிட்டியுஞ்
சமானமில்லவராங் குமாரர்தம்விதிப்பும்
மற்றும்பல்வகைப் பெற்றியர்விதிப்பும்
ஆற்றுறுஞானமு மாற்றலுமுடையனாம்
ஓதிமவூர்தியின் சேதிமமோங்கிய
மெத்தியவொளிகெழூஉஞ் சத்தியவுலகினை
நண்ணியந்நான்முக னலங்கெழுமன்பினால்
எண்ணியிறைஞ்சியேத் தெடுத்துப்பூசனை
புரிந்திடும்பூமகள் பொருந்தியமார்பனை
விரிந்திடுபெரும்புகழ் விண்டுவைமாயனை
அச்சுதாநந்தனை யநந்தசயநனைப்
பேராயிரமுடை நாராயணன்றனைப்
பின்னைகேள்வனைப் பீதாம்பரன்றனை
அன்னையொத்தெவர்க்கு மருள்செயுமமலனைக்
கேசவனைப்பர வாசுதேவனைச்
சகுந்தக்கோனையூர் முகுந்தக்கோனைநம்
மநார்த்தியைமாய்க்குறுஞ் சநார்த்தநமூர்த்தியைப்
பஞ்சாயுதன்றனைப் பற்றற்றோர்கடந்
நெஞ்சால்வணங்குநீ னிறநெடியோன்றனைப்
பரவிச்சுரர்தொழுந் திரிவிக்கிரமனைத்
தாமரைக்கண்ணனைச் சம்புவைச்செளரியைச்
சாமளவண்ணனைத் தத்துவத்தலைவனை
மாலைமாதவன்றனை மணத்துழாய்மோலியை
கண்கள்களித்திடக் கண்டுளமகிழ்ச்சியாற்
பண்கடலைக்கொளப் பாடிநட்டமிட்
டாநந்தக்கட லழுந்தியவகத்தீர்
மோநந்தலைக்கொளூஉ முனிவரர்தலைவீர்
ஆதியோகியீ ரருந்தமிழ்ப்புலவீர்
நீதியோகத்தினி னிலைநிற்பவர்தம்
மனமொழிக்கெட்டா மாட்சிமையுடையீர்
சினமொழியாமனத் தீயனேன்பேயனேன்
நீசனேன்வஞ்சக நெஞ்சனேன்மகளிர்பால்
நேசனேனிசாரண நிசாசரரியல்புடைத்
துட்டனேன்றுட்டரைத் தூயவராக்குநும்
மட்டவிழ்மரைமலர் மாணடிசேர்ந்தனன்
ஆதலாலடியனே னரில்களெலாம்பொறுத்
தீதிசேரென்னுளத் திருடனையிரித்துமெய்ஞ்
ஞானமும் பத்தியு நாரணன்பரனெனும்
நூனமாமதியையு நொடிப்பொழுதினிலளித்
தச்சுதனடியிணை யிச்சையினெணியெணி
நெக்குநெக்குருகிடு நெஞ்சப்
பக்குவியாக்கனும் பரம்பரம்பரமே. (25)
வெண்பா.
பரமேட்டிபாசகரன்பஞ்சபாணன்றம்
உரமேட்டிமைநம்பாலோவும் - வரமூட்டும்
ஆதியோகிக்கவிகளங்கழலைச்சிந்திக்கு
நீதியோகத்தினெஞ்சேநில் (26)
கட்டளைக் கலித்துறை .
நிற்றிநெஞ்சேமுதலாழ்வார்கட்போற்று நிலையிலென்றுஞ்
சொற்றியவர்திருநாமமெப்போதுந்தொடர்ந்துநமைப்
பற்றியபாவப்பரப்பாற்படரும்பவப்பரவை
வற்றிவடிந்திடும்வைகுந்தநங்கைவயப்படுமே. (27)
நேரிசையாசிரியப்பா.
வயப்படாப்பொறிகளும் வயப்படாமனமும்
வயப்படாமாயையும் வயப்பட்டெவர்கட்
குரைப்படிநிற்குமோ வுரைத்திடுமெவர்கள்
ஆமோதந்தனை யளிக்குமாமோதமும்
சம்மோதந்தனைத் தருஞ்சம்மோதமும்
பிரமோதந்தரும் பெற்றிப்பிரமோதமும்
ஆகிய வுலகுகட் கன்புடன்முறைமுறை
யோகினாற்றலா லுற்றவணுறைந்தருள்
சிங்கலினல்லிசை பொங்குசங்கருடணன்
பிறங்கியபெரும்புகழ் பெறும்பிரத்யும்நன்
அறங்கெழுமநிருத் தன்னெனும்வியூக
மூர்த்திகளாகிய மூவர்கடம்மையும்
ஆர்த்தியிற்கண்டுளத் தாநந்தங்கொண்
டாடியாடி யயர்த்தவர்சீர்த்தியைப்
பாடிப்பாடிப் பணிந்தவர்தம்முழி
விடைகொண்டவரருட் கொடைகொண்டிவ்வுழி
மீட்டுமெய்திய தீட்டொணாவைபவச்
சிறப்புடையவரோ தெய்யவவர்களாம்
ஆதியோகிக ளருளாமரண்பெற
நீதியினெஞ்சமே நிச்சலுமவர்திருப்
பாததாமரைகளைப் பழிச்சி
நீதமாய்வழிபட னின்கடனாமே. (28)
வெண்பா.
நின்புரிவாங்கடனைநெஞ்சமேநீசெய்யின்
முன்புகத்தில்வந்தமுனிவரா - மன்புகழ்சேர்
ஆதியோகிப்பெரியோராரருளாந்தங்கடனை
நீதியாச்செய்வர்நினைத்து. (29)
கட்டளைக்கலித்துறை .
நினைத்துணைகொண்டனனெஞ்சேநீராழிநெடுநிலத்தோர்
வினைத்துணைக்காரணமாயையைவீழ்த்திடவேட்டுவந்தோர்
அனைத்துணையன்புடைநம்மாதியோகிகளென்றறிந்து
தினைத்துணையேனுஞ்செய்யன்பவர்பாதத்திருமலர்க்கே. (30)
-----
பொய்கைபூதன்பேயாரென்னுமுதலாழ்வார்கள்
பொருவிறாளில்
உய்கைபெறவுன்னிமும்மணிக்கோவையென்னுநூ
லுரைத்தணிந்தான்
செய்கையாற்றிகழ்கச்சியிராமாநுசாரியன்றாள்
சேருளத்தோன்
மெய்கையாவிரதத்தோன்பள்ளிகொண்டானெனுமியற்பேர்
மேதக்கோனே. (31)
-----
உண்மைபெறுபார்க்கவமென்னுபபுராணத்
துத்தரகண்டந்தன்னிலோதிரண்டாம்
வண்மைபெறுமத்தியாயத்தொடங்கி
வகுத்திடுமெட்டாமத்தியாயங்காறும்
ஒண்மைபெறுநித்தியசூரிகளாமாதி
யோகிகடம்மொப்பில்சீர்வைபவத்தைத்
திண்மைபெறச்செப்புமுண்மைதேறவேண்டுஞ்
சிந்தையரந்நூல்படித்துத்தெளியலாமே. (32)
முதலாழ்வார்கள் மும்மணிக்கோவை முற்றிற்று.
---------------
This file was last edited on 25 Nov. 2023.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)