pUnAkam (short stories)
by cu. camuttiram
In Tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
We thank Tamil Virtual Academy, Chennai for providing a PDF copy of this work
The text for this work was generated using Google OCR tool and subsequent proof-reading
of the OCR output.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
Source:
பூநாகம் (சிறுகதைகள்)
சு. சமுத்திரம்
கங்கை புத்தகநிலையம்
13, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை - 600017
முதற் பதிப்பு : ஆகஸ்ட், 1993 உரிமை ஆசிரியருக்கு
விலை: 21-00
அச்சிட்டோர் : ஜீவோதயம் அச்சகம்
65, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னை 5.
MK Color Process, Madras-14.
---------------- சங்கநாத எழுத்தாளர்
"மனிதனுடைய கடவுள் மனிதனே தான்''-20ஆம் நூற்றாண்டின் மராத்திய
மறுமலர்ச்சி கர்த்தாக்களில் ஒருவராகிய திரு. வி.ஸ. . காண்டேகருடைய மனித நேயக்
கருத்து இது.
"மனிதனுடைய முன்னேற்றத்திற்கும் எங்கே மனிதன் பாடுபடுகிறானோ அந்த புனித
இடம்தான்,
நான் வணங்கும் கோயில்
நான் பிரார்த்திக்கும் கிறித்துவ தேவாலயம்
தொழுகின்ற இஸ்லாமிய பள்ளி வாசல்"
மனிதனுடைய விடுதலைக்கும் விமோ சனத்துக்கும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்
கொண்ட நவஇந்தியாவின் சிற்பி நேருஜியினுடைய வாசகங்கள் இவை.
மனித நேயம் இறுக்கமான அழுத்தமான மனித பாசம் இந்த இரண்டு மேற்கோள்களிலும்
மேலோங்கி யிருக்கிறது, மின்னுகிறது.
புத்தனிலிருந்து அண்மையில்மறைந்த சின்மயானந்தா ஸ்வாமிகள் வரை வலி யுறுத்தப்பட்டு
வந்து கொண்டிருக்கிற மிகவும் எளிதான, அதே நேரத்தில் மனிதனை தேவனாக்கும் அரிய
பண்புதான் மனித நேயம் என்பது. மனித நேயத்தின் விரிவான பரிணாமம் சமூகப் பிரக்ஞை
என்பார்கள்.
இந்த இரண்டு பண்புகளும், சொல்லோடு செயலோடு ஓடும் இரத்தத்தில் ஒவ்வொரு
'செல்' லோடும் இலட்சிய பூர்வமாக கலந்துவிட்ட காட்சியைத்தான் எழுத்தாள நண்பர்
திரு.சு. சமுத்திரம் அவர்களிடத்தில் அவருடைய மாணவப் பருவத்திலிருந்தே நான் கண்டு
வியந்த பெருமைப்பட்ட அருங்குணமாகும்.
அமெரிக்கப் பெரும் கவிஞன் வால்ட் விட்மேன் ஒரு இடத்திலே குறிப்பிடுகிறார்: இதை
(அவருடைய புத்தகத்தை) தொடுபவன் ஒரு மனிதனைத் தொடுகிறான்” என்பதை உணரட்டும்.
"Any one who touches this touches a Man '"
திரு. சமுத்திரம் அவர்களுடைய உயிரோட்டமான படைப்புகள் எதுவாக இருந்தாலும்
என்னுள் இயல்பாக எழுகின்ற உணர்வு இதுதான். மனிதனை பல கோணங்களில் பார்க்கிறார்.
அவனைப் பற்றி பீடித்திருக்கின்ற அழுக்கு இழுக்கு அவமரியாதைகளை துடைத்தெறிய
சிறு கதை இலக்கியத்தை ஒரு போர்க் கருவியாக உபயோகிக்கிறார். அவனோடு சேர்ந்து
அவனுடைய குற்றமற்ற மகிழ்ச்சியில் திளைக்கிறார் சிரிக்கிறார். அவனோடு சேர்ந்து
அழுகிறார். தன்னையே வறுத்திவதைத்துக் கொள்கிறார்- அவருடைய எழுத்துக்களை
உணர்வு பூர்வமாக படித்தவர்கள் இதை உணர்வார்கள்.
மனிதனுக்காக மட்டும்தானா அவர் அழுகிறார், அங்கலாய்க்கிறார்? இந்த கதைத் தொகுப்பில்
ஒரு அற்ப காகத்தினுடைய அவல நிலைக்காக அவர் அல்லலுறுவதை முதல் கதையில்
"இரையும் இறை யும்" உணர முடியும். காக்கையின் ஆன்மாவைப் பற்றி இந்த இளம்
சித்தர் விளக்குகிறார்.
உளமாற சகோதர பாசத்தோடு சாகித்திய அகாடமி பரிசு பெற்ற இந்த சங்கநாத எழுத்தாளரை
மேன் மேலும் செழித்து கொழித்து சிறப்படைய வேண்டுகிறேன்.
இது நீண்ட நெடிய நட்பின் உந்துதல் அல்ல. உயிரோட்டமான மனிதநேய மிக்க
எழுத்துக்களுக்கு தன்னடக்கத்துடன் நான் அர்ப்பணிக்கின்ற காணிக்கை யாகும்.
பகத்சிங்
(தேசிய முழக்கம்)
-------------------
பொருளடக்கம்
1. இரையும் இறையும்
8. தாயாகிப் போன மகள்
2. கூடுவிட்டுக் கூடு
9. சுண்டைக்காய் சுமப்பவர்கள்
3. கோபுரம்
10. பூநாகம்
4. புதிய போதை
11. அடுக்காத மாடி
5. பன்னாடை
12. குடிக்கள்ளன்
6. பனிப் போர்
13. அவளுக்கு அவசரம்
7. ஒரு குடியின் வரலாறு
14. தோழி செய்த புரட்சி
---------------------
1. இரையும் இறையும்
காற்றில் ஏறி விண்ணைச் சாடும் அந்தக் காகம். இ போது மண்ணில் கிடந்தது வரிசை
வரிசையாய் இருந்த கடைகளில் ஓர் இரும்புக் கடைக்கு அருகே வெட்ட வெளியில் ஓர்
ஓரமாய்ப் போடப்பட்டுள்ள இரும்புச்சுருள் கம்பிகளுக்கும், சரளைக் குவியலுக்கும்
இடையே பள்ளத்தாக்கு மாதிரியான இடத்தில் 'தலை' மறைவாய்த் தவித்தது.
தள்ளாடும் முதுமையில், சதிராடும் இளமையும், அல்லாடும் அலுவலகத்தில் ஆட்டம்
போட்ட கல்லூரியும, நமக்கு விலகி நின்று வேடிக்கை காட்டுவது போல் அந்தக்
காக்கைக்கும் ஓர் அனுபவம்; பட்டறியும் அனுபவம். அதன் அலகிற்குள் ஆயிரக்கணக்கில்
சிக்கக்கூடிய தட்டாரப் பூச்சிகளில் ஒன்று, அதோ அந்தக் காக்கையின் தலைக்கு
மேல் வட்டமிட்டுத் தரிகிறது. அதன் இறக்கை விரிப்பே இதற்கு ஒரு விஸ்வரூப
மாயையாய்த் தோன்றுகிறது. அதன் கால் நகங்களுக்குள் சிக்கித் தவிக்கும் வெட்டுக்
கிளிகளில் ஓர் அற்பக்கிளி, அந்தக் காகம் கொத்தும் தொலைவிலேயே துள்ளிக் குதிக்கிறது.
ஆனாலும் அந்தக் காகம், மேலே பறக்கும் பூச்சியையும், கீழே திரியும் வெட்டுக்கிளியையும்
இரையாகப் பார்க்காமல், 'இறையாகவே' பார்க்கிறது. வெள்ளைக் கொண்டையும் கருப்பு
மேனியும் முரண்பாடாக, அந்த முரண்பாடே ஓர் அழகாகவும் தோன்ற, கால்களை அடி
வயிற்றில் இடுக்கி வைத்துக்கொண்டு, ஆகாயத்தைத் துழாவி, இறக்கைகளை மேலும்
கீழுமாய் அடித்தடித்து, அதன் களைப்பிலோ அல்லது உழைப்பின் அனுபவிப்பாகவோ
அந்த இறக்கைகளை ஆடாமல் அசையாமல் விரிய வைத்து அந்தரத்திலேயே 'சுவாசனம்'
செய்யும் அந்தக் காகம் இப்போது பழைய நினைவுகளை நினைத்துத் தன்னையே
பரிதாபமாகப் பார்ப்பது போல் முகத்தைச் சுருட்டி வைத்துக் கொண்டது. பத்து
நிமிடத்திற்கு முன்புவரை உயிரோட்டத்திற்கு இறக்கை கட்டி விட்டதுபோல்
வெட்ட வெளியில் ஒரு கருப்புக் கட்டியாய் சுற்றி வந்த இந்தப் பறவை ஜீவன்
சாய்ந்து கிடந்தது. தென்னை மரத்தில் முறிந்தும் முறியாமலும் எப்போது வேண்டுமானாலும்
அற்றுப் போகலாம் என்பது மாதிரி அந்த மரத்தில் தொங்கிக் கிடக்கும் பச்சை ஓலைபோல,
அதன் ஒரு பக்கத்து இறக்கை சரிந்து கிடந்தது.
இவ்வளவுக்கும், அந்தக் காகம் எச்சரிக்கையோடுதான் செயல்பட்டது. அந்த இரும்புக்
கம்பிச் சுருளுக்கு அப்பால் கிடந்த, ஒரு போண்டாத்துண்டைச் சர்வ ஜாக்கிரதையாகத்தான்
வட்டமிட்டது. அதன் அருகே உள்ள ஒரு மணல் குவியலில் பறக்கும் யத்தனத்துடன் தான்
அதைப் பார்த்தது. பிறகு கர்ப்பிணிப் பெண்போல், பையப் பைய நடந்து, அந்த எச்சில்
போண்டா எங்கேயும் போய்விடக் கூடாது என்று நினைப்பதுபோல் அதற்கு இரண்டு
கால்களாலும் வேலியிட்டுக் கொண்டே மீண்டும் ஒருமுறை சுற்றுமுற்றும் பார்த்து
விட்டே, அதன் வாயலகு கொத்தத் துணிந்தபோது, அதன் ஒற்றைக் கண் கடை
முன்னால் நின்ற மனிதக் காலடிகளை அளவெடுத்துக் கொண்டுதான் இருந்தது.
இதற்குள் கண்ணுக்கு அப்பால் தெரிந்த அந்தப் போண்டாவைக் ஒரு சொறி நாய்
வருவதற்குள், கொத்திக் கொண்டு அப்படியே அங்குமிங்குமாய்
இன்னொரு தடவை பார்த்துக்கொண்டு தெற்கு நோக்கி நாற்பத்தைந்து டிகிரி சாய்வில்
பறக்கப் போனது. நாலடிச் சரிவு உயரத்தில் பறந்துவிட்டது; ஆனால், ஒரு ஆறடி
பக்கத்துச் சுவரில் இருந்த பூனை அதே நாற்பத்தைந்து டிகிரி சாய்வில் பாய்ந்தது.
இந்த இரண்டிற்கும் இடைவெளி இரண்டே இரண்டு அடிதான். விநாடிக்குள்
விநாடியான நேரத்தில் அந்தக் காகம் அலறியடித்து மேற்குப் பக்கமாகப் பறக்கப்போனது.
ஆனால் அப்போதுதான் ஓர் ஆசாமி, நாலைந்து கம்புகளை உயரவாக்கில் தூக்கிக்
கொண்டு பயமுறுத்துவது போல் போய்க் கொண்டிருந்தான். இதனால் அந்தக்
காகம் பின்பக்கமாய் உள்வாங்கி, அப்படியே ஆகாயத்தில் எம்பத்தான் போனது.
ஆனால் அதன் அச்ச வேகத்தில் இரும்புக் கம்பிகளுக்குள் சிக்கிக்கொண்டது. அது
அங்குமிங்குமாகத் துடித்தபோது, கீழே குதித்த பூனை இப்போது அந்தக் காகம்
எங்கேயும் போய்விடக் கூடாது என்ற நிதானத்தில் உருமக்கூட சோம்பல்பட்டு,
நிதானமாய் முன் கால்களை நகர்த்தி நகர்த்திப் போட்டது. அது எச்சல் போண்டா
எங்கேயும் போகாது என்பதுபோல் கால்களை வேலியாக்கிப் பார்த்ததே ஒரு பார்வை,
அதே மாதிரியான பார்வை.
அந்தக் காகம், இந்த ஆபத்தைப் புரிந்துகொண்டது போல், உடம்பை அங்கும்
இங்குமாய் சுழற்றியது. இரண்டு கால்களையும் இரும்புச்சுருள் வளையங்களுக்குள்
அழுத்திப் பிடித்தபடியே உடம்பைக் கரகாட்டக்காரி போல் அங்குமிங்கு மாய் சுற்றி,
அக்கர் பக்கத்து மனிதர்களைப் பரிதவிக்கப் பார்த்து அவர்களின் அசட்டையில் அசந்து,
பிறகு உயிர் காக்கும் வேகத்தோடு என்ன செய்ததோ, ஏது செய்ததோ, கண்ணிமைக்கும்
நேரத்தில் அந்தக் கம்பியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டது உடம்பை
அங்குமிங்குமாய் சுற்றிச் சுற்றி இரும்புக் குவியலுக்கும் மண் குவியலுக்கும் இடையில்
போய் விழுந்தது ஆனந்தமாய் பறக்கப் போனது. அப்போது தான், அதற்குத்
தெரிந்தது, இந்தத் தப்பிப்பு ஒரு தற்காலிக மரண விடுதலை மட்டுமே. ஒரு மரணம்
உடலிலிருந்து ஏற்படும் ஓர் உயிர் விடுப்பே அன்றி ஆன்ம விடுவிப்பு அல்ல என்பதை
அந்தக் காகமும் புரிந்து கொண்டதுபோல் தலை யாட்டியது. இப்போது, தான் காகம்
இல்லை என்பதை கண்டு கொண்டது.
அந்தக் காகம், ஆகாயத்தையே அண்ணாந்து பார்த்தது. அங்கே நாலைந்து காகங்கள்
வட்டமடித்தன. அவற்றைக் கரைந்து கரைந்து கூப்பிட வேண்டும் போன்ற ஓர் உணர்வு.
பிறகு, 'எங்கப்பன் குதிருக்குள் இல்லை' என்பது போல், அவை அங்கே வந்து
மாரடித்துக் கத்தி இது இருக்கும் இடத்தைக் காட்டிக் கொடுக்குமே அனறி, இதை
உய்விக்க முடியாது எனபதைப் புரிந்ததுபோல் சும்மாவே கிடந்தது. முன்பு ஒரு
குடியிருப்பு அருகில் இன்னொரு காகம் இப்படிக் கிடந்தபோது, மற்றொரு காகம்
அதன்மேல் உட்கார்ந்து அதன கொண்டையைக் கொத்தியதும், இது அந்தக் காகத்தை
விரட்டியதும் நினைவுக்கு வந்தது. ஆகையால் 'வாழ்ந்து கெட்டவர்கள் தமது
உறவுக்காரர்களைப் பார்க்கக் கூசி ஒதுங்கிக் கொள்வதுபோல்' கூனிக் குறுகிக் கிடந்த
அந்தக் காகம் திடீரெனறு கத்தியது.
அந்த சரளைக்கல் மேட்டில் அதே பூனை, சுட்ட சங்கு நிறம் ; இடையிடையே வெள்ளையும்
ஊதாவுமான புள்ளிகள். கழுத்தில் கறுப்பு வளையம் நான்கு கால்களையும் ஒன்றாகக்
குவித்துக்கொண்டு வாலை முன்பக்கமாய் சுருட்டி ஒரு யோகி மாதிரி உட்கார்ந்து
கொண்டு அந்தக் காகத்தைக் கண்களால் தேடியது. நீண்ட நாட்களாக இந்தக்
காகம் பார்த்திருக்கும் பூனைதான். அது மரத்தில் ஏறும்போது இதே இந்தக் காகம்,
அதன் மேல் தாழப் பறந்து, தனது நகக் கால்களால், அதன் தலையைப் பிராணடியிருக்கிறது.
சத்தம் போட்டு மற்ற பறவைப் பிராணிகளை உஷார்ப்படுத்தி யிருக்கிறது. அவ்வப்போது
அதன் முதுகைத் தட்டி, 'உன்னால் இப்படிப் பறக்க முடியுமா' என்பதுபோல் கேட்டிருக்கிறது.
ஆனால், இப்போதோ... காலம் கலிகாலம்.
அந்தப் பூனை, இந்தக் காகத்தை இப்போது பார்த்து விட்டது. அதன் அசைவில் இரண்டு
கற்கள் உருண் டோடின. அது ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்தது. அதனருகே நெருங்கியது.
கால்களால் இழுத்துப் போட்டு அந்தக் காகத்தை வாயால் கவ்வ வேண்டியதுதான்
பாக்கி. உடனடி யாக, இதனைப் புரிந்துகொண்ட அந்த முடக் காகம், அங்கு மிங்குமாய்ப்
பார்த்துப் பார்த்து அரற்றியது பிறகு, தத்தித் தத்தி, துள்ளித் துள்ளி எப்படியோ குதி
போட்டு நகர்ந்த போது, எங்கிருந்தோ வந்த சொறிநாய், அந்தப் பூனையைத் தடுத்தது.
இரண்டு எதிர்மறைகள் ஒரு நேர்மறையாக, அந்தக் காகம் அந்தக் கட்டடக் கடைப்
படிகளில் லேசு லேசாய் குதித்து, ஒரு பிளாஸ்டிக் கடையின் மூகப்பில் போய் நின்றது.
அங்கேயும் இங்கேயுமாய் நடமாடிய மனிதர்களின் காலடிக்குள் சிக்காமல் தலையை
வளைத்தும், உடம்பை நெளித்தும், அந்த பிளாஸ்டிக் கடையின் எல்லை காட்டும்
தடித்த மடிப்புத் தளத்திற்கு நடந்தது.
அந்தக் பிளாஸ்டிக் கடையில் குடத்தை ஒருத்தியிடம் காண்பித்துவிட்டு, அந்தக் காகத்தைப்
பார்த்த ஒரு லுங்கிக்காரன், அதைக் காலால் இடறி, கையை ஓங்கினான். அதுவோ,
இரண்டு கைகளாலும் மாரடித்தது. இதற்குள், இன்னொரு முண்டாசு பனியன், "பாவம்
பறக்க முடியாம அடிபட்டுட்டு போல.... வாயில்லா ஜீவன்.... நாமா எதுவும் செய்ய
வேண்டாம்" என்றான். இதற்குள் அந்தப் பூனை அதற்கு எதிரே ஒரு
சிமெண்ட் தூணின் அருகே இதையே குறி வைத்துப் பார்த்தது. உடனே இந்தக் காகம்
உள்ளே ஓடிப்போய் அந்தக் கடையின் சாத்தி வைத்த கதவுக்கு மறைவில் போய் நின்று
கொண்டது. அவ்வப்போது எட்டி எட்டிப் பார்த்து, அந்தப் பூனையை நோட்டமிட்டது.
அதுவோ, அங்கேயே தவம் இருப்பது போல் இருந்தது.
ஆயிற்று மஞ்சள் சூரியன் மங்கிப் போய் மெல்லிருள் பரவியது. மாநகராட்சியின்
எரியாத் தெருவிளக்குகள் இருளுக்கு இருள் சேர்ந்தன. கடைகளில் மங்கலாக எரிந்த
விளக்குகள் மஞ்சள் வெயிலாய் அடித்தன. மனித நடமாட்டம் உச்சக்கட்டத்திற்குப்
போய் ஓய்ந்தது. செவியையும், புவியை கிழிப்பதுபோல் பாய்ந்த வாகனங்கள் ஆடி
அடங்கின. இதற்குள் கடை முதலாளி வந்துவிட்டார். வேலைகாரர்களை திட்டியபடியே
அவர்களை வெளியேறச் சொன்னார். ரத்தைக் காட்டி, 'இன்னுமா கடய மூடலை'
என்பது மாதிரி கத்தினார்; வேலையாட்களில் ஒருவன் வாசற் கதவை இழுத்தபோது
இந்தக் காகம், வாசலில் வந்து நின்றது. கடை முதலாளி அதட்டினார்.
"ஒப்பன் கடைன்னா இப்படிச் சொல்வியா....முட்டாள் முட்டாள்... காக்கா வீட்டுக்குள்ளேயோ,
கடைக்குள்ளேயோ வந்தா, சனீஸ்வரன் வந்த மாதிரி... சனியனைத் தூக்கி வெளியே
போடு.... இப்பத்தான் புரியுது, வழியில ஒரு நாளும் கேட்காத வரி ஆபீசரு இன்னைக்கு
ஏன மாமூல் கேட்டான்னு....
அந்த லுங்கிப்பையன், பூவைப் பிடிப்பதுபோல், அந்தக் காகத்தை மெல்லப் பிடித்து
அதைத் தூக்கக் கடைக்கு அப்பால் இருந்த சமதளத்தில் விட்டுவிட்டு, கதவை பூட்டினான்.
வேலையாட்கள், முதலாளியோடு, போனபோது, அந்தக் காகம் கத்தியது. எதிரே
இருக்கும் பூனையைப் பார்த்து விட்டு அவர்கள் காலடியில் போய் விழுந்தது. அது,
கடை முதலாளியின் காலடி என்பதால், அந்தக் காகம் எதிர் வேகத்தில் தள்ளப்பட்டது.
இதற்குள், அவர்கள் போய்விட்டார்கள். மனித நடமாட்டம் அற்றுப் போய்விட்டது.
ஆகக்கூடியது எதுவும் இல்லை என்பதுபோல், அந்தக் காகம் கண்ணை மூடிக்கொண்டு
சுவரோடு சுவராகச் சாய்ந்தது. அப்போது உறுமல் சத்தம். அந்தப் பூனை அடிமேல்
அடியெடுத்து அதை நோக்கிவந்தது. அதைப் பார்த்து விட்ட காகம், அந்த சொறி
நாயையேஒரு கடவுளாக அனுமானித்து, அது வரவேண்டும் என்று பிரார்த்திப்பது
போல் தலையைத் தூக்கியது. அதற்குள் அந்தப் பூனை பாய்வதுபோலிருந்தது.
அதன் சீற்றச் சத்தம் அதன் காதில் காற்றில் மோதியது. இறக்கையின் பின்னலகில்
ஏதோ ஒன்று உரசுவது போலிருந் தது. ஏற்கெனவே வலித்த புண்ணில் வேல் பாய்வது
போலிருந்தது. அவ்வளவுதான்.
அந்தக் காகத்திற்கு எப்படி அந்த வேகம் வந்ததோ, தரைப்பட்ட இறக்கையைத் தூக்க
முடியாமல் தூக்கிக்கொண்டு அரற்றியபடியே ஓடியது. ஒரு தூண் மறைவில் போய்
நின்றது. சிறிது நேரம்... சிறிதே சிறிது.... அந்தப் பக்கமாகப் பூனையின் கண்கள் கலர்
பல்ப் போல் மீண்டும் தோன்றவே அங்கிருந்து ஓடி, ஒரு செங்கல் அடுக்கிற்குள்
நுழையப் போனது. அதற்குள் அந்தப் பூனை இன்னொரு பக்கமாய் வந்து தலையில்
நகம் போடப் போவதுபோல் இருந்தது. உடனே, அந்த நகக் காலுக்குக் கீழே தலையை
லாகவமாகக் குவித்து, பூனையின் வாலுக்குப் பின்னால் ஓடி ஒரு வைக்கோல் குவியலுக்குள்
போய் தன்னை மறைத்துக்கொண்டு மூச்சுவிட்டது. அருகேயே அந்தக் குவியலின் ஒரு
பகுதி அங்குமிங்குமாய் அசைவதைப் பார்த்த அந்தக் காகம், அங்கிருந்து பீறிட்டு,
தத்தித் தத்திக் குதித்துக் குதித்து ஓடியது. உயிர் வலி, உடம்பு வலியைத் துரத்த,
அது ஓடி ஓடி ஒரு மின்சாரக் கம்பத்தின் அருகே களைப்புத் தாங்க முடியாமல் லேசாய்
தலையைச் சாய்த்தது. அதற்கு முன்னாலேயே அதை எதிர்பார்த்து அங்கு வந்தது
போல் அந்தப் பூனை, இப்போது கோபாவேசமாகப் பார்த்தது. இதுதான் அதை வம்புச்
சண்டைக்கு இழுத்ததுபோல், உறுமல் சத்தத்தை இரட்டிப்பாக்கி, புலி பதுங்குவது
போல் பதுங்கி ஒரே பாய்ச்சலாய் ....
அந்தக் காகத்திற்கு எங்கிருந்து அவ்வளவு அசுர பலம் வந்ததோ, எப்படித்தான் வந்ததோ,
வாயுவேகத்தைவிட, ஒலி வேகத்தைவிட அதிகமான ஒரு வேகம். அதுதான் மனோவேகமோ?
இறுதி வேகமோ? ஏதோ ஒரு வேகம். அந்த வேகம் அதை உயரத் தூக்குகிறது ஏழடி
உயரத்தில் அதைத் தூக்கி நிறுத்துகிறது. ஒடிந்த இறக்கையை ஒட்ட வைக்கிறது. பிறகு
இருபதடி இடைவெளிவரை அதைப் பறக்க வைக்கிறது. மனம் அடிக்கடி மாறக்
கூடியதுதானே? அந்தப் பூனையை இப்போது நினைத்துப் பார்க்கக்கூட அதற்குத்
திராணி இல்லை. எங்கே நிற்கிறோம் என்று தெரியாமலே, அந்தப் பூனை, எங்கே
நிற்கிறது என்பதை, இப்போது போன பயம் வட்டியும் முதலுமாய் திரும்பிவர, சுற்று
முற்றும் பார்க்கிறது. ஒரு சின்னக்குச்சி பட்டதைக்கூடப் பூனையின் நகமோ என்று
மீண்டும் கத்தியபடி உற்றுநோக்கி விட்டு, அது பூனை இல்லை என்பதால் எதிர்ப்புறத்தைப்
பார்க்கிறது... என்ன அது?
சற்று நேரத்திற்கு முன்பு வரை, அதற்கு எமபயம் கொடுத்த அந்தப் பூனை ஏதோ ஒரு எமச்
சக்கரத்தில் சிக்கி, அந்த நடுச்சாலையில் சதைப் பிண்டமாய்க் கிடக்கிறது. சந்தேகமில்லை.
லேசாய் நின்ற காக்கைக்குப் புரிகிறது ஒரு மோட்டார் பைக், கர்ஜித்தபடியே பயணத்தைத்
தொடர்கிறது.
அந்தக் காகம், அலகைச் சாய்த்துப் பார்க்கிறது.
அந்தப் பூனைச் சதை மேல் ஏறிக் கொள்கிறது. பிறகு வெறி பிடித்தது போல், அதைக்
கொத்துக் கொத்தென்று கொத்துகிறது. அந்தக் காகம், கொத்திய சதையைத் தின்ன
வில்லை. ஆனாலும் கொத்திக் கொண்டே இருக்கிறது.
----------------------
2. கூடு விட்டுக் கூடு...
அதுவரை மேல்வரிசை பற்களையும், கீழ்வரிசைப் பற்களையும் ஒரே வரிசை பற்களாக்கி,
அவற்றுக்கு மேல் படிந்த இரு உதடுகளையும் ஒரே உதடாய் ஒட்ட வைத்து, தனக்குத்தானே,
வலுக்கட்டாயமாக தாக்குப் பிடித்துக் கொண்டிருந்த கதிர்மணி, இப்போது
முன்னெச்சரிக்கைகளை தூக்கி எறிந்துவிட்டு, அழுத்தம் திருத்தமாக அவர்களை
பார்த்துக் கேட்டான்.
"பத்து மணிக்கு செய்தியாளர் கூட்டமுன்னு பேரு இப்போ பதினொன்று பத்து....
இதுக்கு மேலயும் நாம காத்திருந்தா நமக்குப் பேரு ப்ரஸ்டு மேன் இல்ல. பிரஸ்சுடு
மேன் லெட் அஸ் கோ....வாங்க போகலாம்!"
அந்த செவ்வக அறைக்குள் வியாபித்திருந்த முட்டை வடிவ மேஜையை சுற்றி போடப்பட்ட
முதல்வரிசை மெத்தை நாற்காலிகளில் அந்த காலத்து ஜமீன்தார்கள் மாதிரி சாய்ந்து
கிடந்தவர்கள், கத்தியவனை கண்களால் ஒரு குத்து குத்தி விட்டு, மீண்டும் தமக்குள்ளேயே
பேசிக் கொண்டிருந்தார்கள். அதே சமயம், இரண்டாவது வரிசை பிரம்பு நாற்காலிக்
காரர்கள் எழுந்திருக்கப் போவதைப் போல் உடம்பை நெளித்தார்கள்.
அந்த முதல் வரிசை நிருபர்கள், இந்த இரண்டாவது வரிசைக்காரர்களுடன் இந்த
அறையை நோக்கி வரும்போது ஆரம்பத்தில் நாசூக்காய் நடந்து, அப்புறம் முண்டியத்தும்
பிறகு வெட்கத்தை விட்டுக் கொடுத்தும் முதல் வரிசையை பிடித்துக் கொண்டார்கள்.
இப்படி பிடித்துக்கொண்டு தங்களை பிரபலப்படுத்துபவர்கள் என்பது அல்லாமல்
பிரபல பத்திரிகைகளை சேர்ந்தவர்கள் அல்ல. இன்னும் சொல்லப் போனால் அதற்கு
ஏறுக்குமாறு ... முன்னூறு பிரதிகளை மட்டுமே அச்சிட்டு அமைச்சர்களுக்கும்,
அதிகாரிகளுக்கும் விநியோகிக்கும் 'தினக்குத்து' பத்திரிகையாளன் மோகனன் முதல்
வரிசையில் முதல் நாற்காலியில் அட்டகாசமாக உட்கார்ந்திருந்தான்.
நாலு பேருக்குத் தெரியக்கூடாது என்ற வைராக்கியத்தில் பத்திரிகையை 'ரகசியமாக'
அச்சடித்து மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகத்திற்கும், செய்தி பத்திரிகை
ஆணையாளருக்கும், வாரத்தில் ஒரு கட்டாக அனுப்பும் 'தினக்கன்' பத்திரிகை நிருபன்
அடுத்த நாற்காலியை ஆக்கிர மத்திருந்தான். ஆக மொத்தத்தில் தத்தம் பத்திரிகைப்
பெயர்களையே மறந்து போகும் பல செய்தியாளர்கள்; காதில் நுழையாத பெயரை
வாய் வழியாக விடும் நிருபர்கள் முதல் வரிசைக்காரர்களானார்கள்.
பின் வரிசை பிரம்பு நாற்காலிகளில் பிரபல பத்திரிகை நிருபர்களும், ஏஜன்சி
செய்தியாளர்களும் இடது கையில் ஒரு குறிப்பேட்டுடனும், வலது கையில் ஒரு
பேனாவுடனும் ஆயத்த நிலையில் இருந்தார்கள்.
கதிர்மணி, நெளிந்து கொண்டிருந்த தனது சகாக்கள் மீண்டும் நிலைகொண்டதைப்
பார்த்துவிட்டு, மீண்டும் கத்தினான். ஓங்கிக் கத்தினால், அந்தச் சத்தத்திலேயே கீழே
விழுவது மாதிரியான பூஞ்சையான உடம்பு. மூக்குக் கண்ணாடி மட்டும் இல்லையென்றால்
அவன் முகத்தில் இருக்கும் கண்களை பார்க்க முடியாது. ஆனால், அவன் உடம்பே
ஒரு ஏ.கே.47 போல் துள்ளியது.
‘நாம என்ன ஐ.ஏ.எஸ்., அதிகாரியா? காத்துக்கிடக்கறதுக்கு - நாம அவுங்கள மாதிரி
அடிவருடிகளும் இல்ல- ஆணவக்காரர்களும் அல்ல - நெய்தர் சைக்கோபான்ட் நார்
அரகண்ட் லெட் அஸ் கோ. திஸ் ஈஸ் டூ மச்!"
கதிர்மணி, கைக்கெடிகாரத்தைப் பார்த்தபடியே வாசலோரம் வந்தபோது பல
செய்தியாளர்கள் எழுந்துவிட்டார்கள். இதுவரை அவனை 'கண்டுக்காமல்' இருந்த
பி.ஆர். ஓ., பதறிப் போனார். மாண்புமிகு அமைச்சர் வருகை புரிவ தற்கு திட்டமிட்ட
பத்து மணியில் நிற்காமல், பதினோரு மணியைத் தாண்டிய தனது 'இன்சபாடினேட்'
கடிகாரத் திடம் விளக்கம் கேட்பது போல் அதைத் தட்டினார். இதற்குள் அமைச்சர்
அந்தப் பக்கமும், செய்தியாளர்கள் இந்தப் பக்கமும் நடுச்சந்தியில் சந்திக்கும் நிலைமை
ஏற்படப் போனது.
பி.ஆர்.ஓ., செய்தியாளர்களின் மோவாய்களை ஆட்டி, உடம்பை மூன்றடியாய் குழைத்து,
அவர்களை வாசலுக்கு சிறிது வன்முறையோடு தள்ளிவிட்டு, அமைச்சர் வரும் திக்கை
நோக்கினார். மாண்புமிகு அமைச்சர் அவர்கள், அண்டர், அசிஸ்டென்ட், டெபுடி,
ஜாயிண்ட், அடிஷனல் செகரட்டரிகளோடும், மேலும் ஒரு முழு செகரட்ரியோடும்
சாவகாசமாக வந்தார். இரு பக்கமும் புடைசூழ்ந்த சின்னச் சின்ன அதிகாரிகள்.
ஒரு கையால் தத்தம் வாயில் பாதியை அடைத்து அதன் மேல் பகுதியை 'பட்டையிலிருந்து
பதனி குடிப்பது' போல் வைத்துக்கொண்டு, மீதி வாயால், அமைச்சரிடம் எதையோ
சொல்லிக் கொண்டும், சொல்லிக் கொடுத்துக் கொண்டும் கூடவே வந்தார்கள். பி.ஆர்.
அமைச்சரைப் பார்த்து ஒரு பெரிய கும்பிடும், செகரட்டரியை பார்த்து ஒரு சுமார் கும்பிடும்,
அடிஷனலைப் பார்த்து சின்ன கும்பிடும் போட்டார். கும்பிடுகளிலேயே டிகிரி கணக்கைப்
பார்ப்பவர்.
மாண்புமிகு அமைச்சர், முட்டை மேஜையின் முன்பக்கம் கிடந்த மூன்று 'ராஜா நாற்காலிகளில்'
நடு நாற்காலியில் உட்கார்ந்தார். முழு செகரட்டரியும், அடிஷனல் செகரட்டரியும்
இரு பக்கமும் உட்கார்ந்தபோது, ஒவ்வொரு செய்தியாளர் முன்பும் முந்திரிக்
கொட்டைகளையும், லட்டையும், மெது பக்கோடாவையும் சுமக்கும் தட்டுக்கள்
தோன்றின. பெரும் பாலானோர் அமைச்சரைப் பார்க்காமலே அவற்றை அசை
போட்டபோது, கதிர்மணி ஒருவிதமான இடிப்புக் குரலில் கேட்டான்.
"மணி இப்போ பதினொன்னு இருபது.'
மாண்புமிகு அமைச்சர் கழுத்தில் போட்டிருந்த மஸ்ட்டர் கலர் துண்டை தலைக்கு மேல்
கொண்டு போய் "எட்டு வீடு கட்டும்' சிலம்பு போல் ஆட்டிக் கொண்டே, இருபுறமும்
இருந்த உயர் அதிகாரிகளைப் பார்த்துவிட்டு, பின்பு கதிர் மணியை நோக்கி
புன்னகையோடு பதிலளித்தார்.
"எஸ்.... நீங்க சொன்னது போல மணி பதினொன்னு இருபதுதான்.யு ஆர் கரெக்ட்."
செய்தியாளர்கள் சிரித்தார்கள். மாண்புமிகு அமைச்சரும் தன்னையறியாமலே அவர்களோடு
சேர்ந்து சிரித்தார். பிறகு. பி.ஆர்.ஓ., அவர் அருகே போய், காதைக் கடித்த பிறகு தான்,
அவருக்கு தான் சிரித்திருக்கக் கூடாது என்று தோன்றியது. 'என்னடா நினைச்சே',
என்று கோபாமாக வந்த வார்த்தையை 'சாரி லேட்டாயிட்டு... உள்ளபடியே வருந்துகிறோம்',
என்று மேக்கப் போட்டு வெளிப்படுத்தினார். இதற்குள், அமைச்சரின் அறிக்கை நகல்களை
பி.ஆர்.ஓ. செய்தியாளர்களிடம் விநியோகித்தார். அதைப் படிக்காமலே ஒரு நிருபர்
கருத்து சொன்னார்.
"மாண்புமிகு அமைச்சர் பதவியேற்ற குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய சாதனைகளை
புரிந்திருக்கிறார். நிருபர்கள் சார்பில் என் வாழ்த்துக்கள்!"
கதிர்மணி பல்லை கடித்தபோது இன்னொரு விளம்பரப் பிரியன் (அதாவது தனது
பத்திரிகைக்கு) ஓடிபோய் அவரது கையை குலுக்கினான். 'தினக்கன்' மோகனன் ஒரு
கேள்வி கேட்டான்.
"அமைச்சரான பிறகு ஒருத்தருக்கு அடி வயிறு பெருக்கும். கன்னங்கள் கண்களை
மறைக்கும். ஆனால், நீங்க என்னடான்னா துரும்பா இளைச்சிட்டீங்களே.... இதுக்கு
என்ன காரணம்?”
மாண்புமிகு அமைச்சர் பெருத்திருந்த தனது அடி வயிற்றை முட்டை மேஜைக்குள்
மறைத்துக் கொண்டு, சுகப் பிரசவமாய் சிரித்துக் கொண்டு பதிலளித்தார்.
"என்ன பண்றது.... இரவெல்லாம் மக்களுக்கு எப்படி சேவை செய்யணும் என்கிற சிந்தனை.
பகலெல்லாம் அந்த சிந்தனையை செயல்படுத்த டிஸ்கஷன், செமினார், சிம்போசியம்,
கருத்தரங்கு, உரை கோவை... அப்பப்பா எவ்வளவு வேலை...."
"அப்போ ஆக்ஷன் இனிமேல் தான்."
மாண்புமிகு அமைச்சர், சாதாரணமாய் சொல்வது போல் குத்தலாய் கேட்ட கேட்ட
கதிர்மணியை, நோக்கி கோபச் சிரிப்பை உதிர்த்தபோது, ஒரு நிருபர் ஏற்கனவே
சொல்லிக் கொடுத்தது போன்ற ஒரு 'பிளாண்டட்' கேள்வியை கேட்டார்.
"உங்களுக்கு முன்னால் பதவி வகித்த மாற்றுக் கட்சி அமைச்சர் காளமேகம் மீது ஊழல்
விசாரணை நடைபெற்று வருவதாகவும், அப்பப்பா அதில் பல திடுக்கிடும் உண்மைகள்
தெரியவரும் என்றும் அறிக்கை விட்டீங்க. இப்போ அது எந்தகட்டத்துல இருக்குது?’’
மாண்புமிகு அமைச்சர் புளகாங்கிதப்பட்டார் கையாளாக எவருக்கு வேலை செய்தாரோ,
அவரது கழுத்தையே இப்போது தனது கையில் பிடித்திருப்பது போல் மேஜையை
அங்குமிங்கும் குத்தினார். பேப்பர் வெயிட்டை வைத்து மேஜையில் கோலியாடினார்.
பிறகு ஆனந்தமாகவும், அப்புறம் அந்த ஆனந்தமே ஆவேசமாகவும் பேச்சைத். துவக்கி
அதைக் கத்தலாக நிறைவு செய்தார்.
‘“எனக்கு முன்னால் பணியாற்றிய, இல்ல இல்ல.... பிணியாற்றிய திருவாளர் காளமேகம்
அசல் குடிலர். எங்க அமைச்சக கஜானாவை அந்தப் பெட்டியோடு சூரையாடிய
கொள்ளையர். தோல் இருக்க சுளை விழுங்கி.... முழுப்பாய் சுருட்டி என்பது உள்ளங்கை
நெல்லுக்கனி.”
ஒரு ஏஜன்சி நிருபர் திடுக்கிடக் கேட்டார்.
“புதுக்கவிதை பாணியில் பதில் வேண்டாம் சார். ஆதாரங்களை அடுக்குங்க.”
'ஒன்றா, இரண்டா... விரல் விட்டுச் சொன்னாலும் பத்து கைகள் பத்தாது."
"ஒரு பானை சோற்றுக்கு ஒரு அரிசி மாதிரி சொல்லுங்களேன்.
‘‘இது சோறு அல்ல சேறு.”
"சரி... சேற்றை வாரித்தான் இறையுங்களேன்!"
ஒரு சைக்கிள் கடையில் பம்ப் அடித்துக்கொண்டிருந்த காளமேகத்திற்கு இப்போது
மகாபலிபுரம் அருகே மனைவி பெயரில் இரண்டு நட்சத்திர ஓட்டல் எப்படி வந்தது?
தியாகராய நகரில் ஒரு அடுக்கு மாடி வீடு எப்படி கிடைத்தது? ஏழெட்டு அம்பாசிடர்கள்
எப்படி வந்தன? இப்போகூட சென்னையில் கேந்திரமான ஒரு இடத்தில் கட்டப்பட்டு
வரும் ஒரு ஏர்கண்டிஷன் சினிமா தியேட்டர் அவரோட பினாமி சொத்து. இன்னும் ஒரு
வாரத்தில் விசாரணை அறிக்கை கிடைக்கும். அப்போது காளமேகத்தின் தகிடுதத்தங்கள்
அரங்கேற்றமாகும். சரி, லஞ்சுக்கு நேரமாயிட்டுது. இந்தாப்பா பி.ஆர்.ஓ., லஞ்சுக்கு
எங்க ஏற்பாடு? சோழாவா இல்ல... சவேராவா. ?”
"எல்லாரும் எழுந்திருக்கப் போனார்கள். கதிர்மணி தான் அவர்களை கையமர்த்திவிட்டு,
"ஒன் மினிட் சார்," என்றான். எழுந்த அமைச்சர் இருக்க மனமில்லாமல் நின்ற படியே
அவனை பார்த்தார்.
கதிர்மணி ஒரு வேட்டு போட்டான். "போன வாரம் உங்க வீட்டில் இன்கம் டாக்ஸ் ரெய்டு
நடந்து கணக்கில் வராத பங்கு பத்திரங்களும், ஐம்பது லட்ச ரூபாய் ரொக்கமும்
கைப்பற்றப்பட்டதாய் அதே காளமேகம் அறிக்கை விட்டிருக்கார். இதுபற்றி உங்க
கருத்து என்ன சார்....?"
"சந்திரனை பார்த்து நாய் குலைக்கிறது மாதிரி இது. "
"அப்படிச் சொல்றது சரிப்படாது சார். ஏன்னா, நீங்க சாட்டுற குற்றச்சாட்டுக்கு காளமேகமும்
இதே பாணியில் பதில் அளிக்கலாம் பாருங்க...."
"இன்னும் ஒரே நிமிஷம் சார்.... மாற்றுக்கட்சி காள மேகம் உங்க வீட்டுல ரெய்ட் நடந்ததா
மட்டும் அறிக்கை விடல... பால் விற்றுக் கொண்டிருந்த உங்களுக்கு இவ்வளவு குறுகிய
காலத்திலேயே ஐம்பது லட்சம் ரூபாய் கணக்கில் வராத பணம் எப்படி கிடைத்ததுன்னு
மட்டும் கேட்கல - இந்தக் குற்றச்சாட்டை அவதூறாக கருதி தன் மீது வழக்கு போடும்
துணிச்சல் உங்களுக்கு இருக்குதா என்று சீண்டி யிருக்கிறார். அதனால அவர் மேல நீங்க
அவதூறு வழக்கு போடலாமே....
"யோசிக்க வேண்டிய விஷயம்....
"இதுல யோசிக்கறதுக்கு என்ன இருக்குன்னே எனக்குத் தெரியல..''
மாண்புமிகு அமைச்சர் மடார் என்று எழுந்தார். அவருடன் அதிகாரிகள் மட்டுமல்ல, பல
முதல் வரிசை செய்தி யாளர்களும் எழுந்து விட்டார்கள். பி.ஆர்.ஓ.,அறிவித்தார்:
மாண்புமிகு அமைச்சர் அண்ணன் அவர்களுக்கு உடல்நிலை சரியில்லை. அதனால்
அவரால லஞ்சத்துக்கு... மன்னிக்கணும் லஞ்சுக்கு வரமுடியல. அவரை மன்னிக்கும்படி
கேட்டுக்கச் சொன்னார். வாங்க போகலாம், ஒரு வேனும், நாலு அம்பாசிடர் காரும் ரெடி.”
மாண்புமிகு அமைச்சர், தன்னால் லஞ்சுக்கு வர முடியாது என்று பி.ஆர்.ஓ.விடம்
தனிப்பட்ட முறையில் இரண்டு வார்த்தைகளில் சொன்னதை, அந்த பி.ஆர் ஓ பத்து
வார்த்தைகளாக்கிச் சொல்லி விட்டானே என்று ஆத்திரப் பட்டார். ஆனால், அந்தச்
சமயத்தில் அதை காட்டிக் கொள்ள முடியாது என்பதால், உண்மையிலேயே நோய்வாய்
பட்டவர் போல் இருமிக்கொண்டும், முன் நெற்றியை அழுத்திக்கொண்டும் எழுந்தார்.
சில நிருபர்கள், "சீக்கிரம் உங்களுக்கு குணமாகட்டும் சார்," என்றார்கள்.
மாண்புமிகு அமைச்சர் தனது அறைக்குள் வந்தார். அவரை அங்கே எதிர்நோக்கிக்
காத்திருந்த உதிகள் போட்ட வணக்கங்களை ஏற்றுக் கொள்ளாமலே அதிகாரிகளுடன்
தமது அறைக்குள் நுழைந்தார். அவருடன் ஒப்புக்கு பேசிய உயர் அதிகாரிகளுக்கு, தத்தம்
வீடுகளில் ஐ.டிக் காரன், ஈட்டிக்காரன் மாதிரி ஆயுதபாணியாக வருவானா என்ற பயம்;
நழுவி விட்டார்கள். அமைச்சர் டெலிகாமில் பி.ஏ.,விடம் கத்தினார்.
"முந்தா நாள் என்னைப் பார்க்க வந்தானே, அவன் தினத்தகவல் உரிமையாளன்தானே....
லைன் போட்டுக் கொடு ..."
அமைச்சர் அந்த டெலிபோனால் முதலாளியை அடிக்கம் போவது போல் கத்தினார்.
"அலோ... வணக்கம்.... வணக்கம்... நான் அமைச்ச ரோட பி.ஏ., இல்ல. அமைச்சரேதான்.
என்ன தம்பி இது, நீங்க புதுசா பத்திரிகை ஆரம்பிச்சிருக்கிறதாயும் அது நடு நிலை
பத்திரிகைன்னும் என்கிட்ட சொன்னீங்க. இப்போதைக்கு பிரபல பத்திரிகைகளோட
போட்டி போடணு முன்னா, அரசு விளம்பரம் வேணுமுன்னும் கெஞ்சினீங்க, நானும்
பச்சாதாபப்பட்டு, உங்களுக்கு விளம்பரம் கொடுக்கும் படி சி.எம்.,க்கு நோட்
போட்டிருக்கேன். யாருக்கு வேணும் உங்க தேங்க்ஸ்.... சொல்றதக் கேளுங்க, உங்க
நிருபர் கதிர் மணியோ, பதர்மணியோ... இன்றைய பிரஸ் கான்பிரன்ஸ்ல என்னைப்
பார்த்து கேட்காத கேள்வியெல்லாம் கேட்டுட் டான். வேட்டிய உருவாதகத்தான். என்
வீட்டுல ரெய்ட் நடந்தா இவனுக்கு என்னய்யா, என்ன, ஒங்களுக்கு அவனைப் பற்றி
இது மாதிரி பல கம்ப்ளையன்ட் வந்திருக்குதா... அப்போ ஏன் அவன வெச்சிருக்கீங்க; -
டிஸ்மிஸ் ஆனது மாதிரிதானா,ரெய்ட் நியூஸ் வராம பார்த்துக்குங்க. நானிருக்க
விளம்பரத்திற்கு பயம் ஏன்?”
மாண்புமிகு அமைச்சர் மறுநாள் அந்த பத்திரிகையில் ரெய்ட் செய்தி வராததில்
திருப்திப்பட்டார். அடுத்தடுத்து நடந்த இரண்டு செய்தியாளர்கள் கூட்டத்தில
கதிர்மணியை காணாததில் கம்பீரப்பட்டார். இதற்குள் காளமேகத்தின்மீது ஊழல்
விசாரணை முடிந்து சி.ஐ.டி.யின் அறிக்கை அரசுக்கு கிடைத்தது. அதன் விவரங்களை
வெளிப்படுத்துவதற்காக அதே முட்டை மேஜையில் ஒரு செய்தியாளர் கூட்டம். போலீஸ்
அறிக்கை நகல்கள் அனைத்து செய்தியாளர்களுக் கும் விநியோகிக்கப்பட்டு விட்டன.
ஏதாவது கேள்வி இருக்கிறதா என்று மாண்புமிகு அமைச்சர் அதிகார தோரணையில்
கேட்டார். ஒரு கேள்வி வந்தது.
"என் பெயர் கதிர்மணி. டே டுடே' என்கிற வடநாட்டு இங்கிலீஷ் பத்திரிகையின்
தமிழ்நாட்டு கரஸ்பாண் டென்ட். உங்க வீட்டுல இன்கம்டாக்ஸ் ரெய்ட் நடந்ததா தான்
அம்பலப்படுத்தியதாலதான் நீங்க காவல்துறை மூலம் ஒரு பொய்யான அறிக்கையை
தயார் பண்ணியிருக்கிறதா காளமேகம் இன்னிக்கு காலையில ஒரு அறிக்கை விட்டிருக்கார்.
ஐம்பது லட்ச ரூபாய் கணக்கில் வராத பணத்துக்கு ஐ.டி. டிபார்ட்மென்ட் கொடுத்த
ஒப்புதல் நகல் நம்பரையும் சுட்டிக்காட்டி யிருக்கார். இதுபற்றி மாண்புமிகு அமைச்சர்
அவர்கள் பதில் அளிப்பாரா..?"
--------------------------
3. கோபுரம்
அந்த நால்வரும், அந்த வீட்டில் உள்ளவர்களை மிருகங்களைப் போலக் கட்டிப்
போட்டிருந்தார்கள். குடிசை வாசிகளுக்கு பங்களாவாகவும் பங்களாக்காரர்களுக்கு
அவுட் ஹவுஸாகவும் தோன்றும் அந்த வீட்டின் பின்கதவின் அருகே போடப்பட்டிருந்த
இரும்புக் கட்டிலோடு சேர்த்து கோமதி கட்டப்பட்டிருந்தாள். அவள் வாயில் தரையைத்
துடைப்பதற்காகப் பயன்படுத்தும் அழுக்குத் துணி அப்பிக் கிடந்தது. இரண்டு
கைகளையும் எடுத்துக் கட்டில் கால்களில் கட்டிப் போட்டிருந்தார்கள். கண்களில் நீரூற்றாகி,
கன்னங்களில் அருவி போல் பொழிந்த நீர், தரையில் துளித் துளியாய் விழுந்து கொண்டிருந்தது.
வாயில் துணி இருந்ததால் மஞ்சள் பூத்த அவள் முகம் வாயற்ற வடிவமாய் வதங்கிக் கிடந்தது.
அந்தப் பின்னறையின் ஒரு மூலையில் தள்ளாத வயது மூதாட்டி காமாட்சியின் இரண்டு
கைகளும் கால்களோடு சேர்த்துக் கட்டப் பட்டிருந்தன. முட்டிக்கால்களே வாய்ககு
அடைப்பாக, அவள் குறுக்கப்பட்டிருந்தாள். பேத்தியையும் பேரனையும் பிரிக்கக் கூடாது
என்று பெரிய மனது வைத்தது போல் அவளருகே அதே மாதிரி பதினைந்து வயது பையன்
ரவி, ஒயர் கயிறால் முடக்கப்பட்டுக் கிடந்தான். கோமதிக்கு முன்னால் ஒருவன் கசாப்புக்
கத்தியோடு நின்றான். இன்னொருத்தன் பாட்டியின் பக்கம். மூன்றாமவன் அங்கு மிங்குமாக
நோட்டமிட்டுக் கொண்டிருந்தான். நான்காவது ஆசாமி முன்னறையில் மீனாவைச் சுவரோடு
சுவராக நிறுத்தி, அவள் கழுத்தில் கத்தியை வைத்துக் கொண்டிருந்தான். அவள்
தொண்டையில் லேசாக ரத்தக் கோடு தெரிந்தது. அவர்கள் கையிலிருந்த கத்திகள்
அவர்கள் கண்களையே கூச வைத்தன.
எல்லாம் ஏழெட்டு நிமிடங்களில், சினிமாவில் நடப்பதை விட, படு வேகமாக நடந்துவிட்டது.
மணி இரவு எட்டுத்தான் இருக்கும். ஆனால் பலத்த மழை. ஒவ்வொரு மழைக்கோடும்
வெள்ளிக் குச்சியாய் பூமியை விளாசிக் கொண்டிருந்த நேரம் மின்னல்கள் இடி இடியாய்
இடித்துக் கொண்டிருந்த வேளை வழக்கம்போல் கார்ப்பரேஷன் தெரு விளக்குகள்
கண் பார்க்க வில்லை.
மழையைப் பார்த்த உடனேயே மயிலாகிறவள் மீனா. வீட்டின் வராந்தாவில் மூங்கில்
நாற்காலியில் உட்கார்ந்தபடி பூமி கிரகித்த மேக வெள்ளத்தையும், அந்த வெள்ள
அருவியின் சங்கீத நர்த்தனத்தையும் தவளைகளின் மிருதங்கச் சத்தத்தோடு ரசித்துக்
கொண்டிருந்தவள், மின்னல் வெடிப்பு களுக்குப் பயந்து போய், நாற்காலியைக் கூட
எடுக்க மறந்து போய், உள்ளே போய் கதவை மூடிக் கொண்டாள். சமையலறைக்கு
அடுத்த அறையில் ஒரு ஜன்னல் கதவைத் திறந்து வைத்து, மழையை ரசித்துக் கொண்டு
தண்ணீரைத் தரையில் விட வைத்த தம்பி சிவாவை, ஓர் அதட்டுப் போட்டு, அவனையே
அந்த ஜன்னலை மூடும்படி செய்தாள். பின் பக்கம் உள்ள தாழ்வார அறையில்
காமாட்சிப் பாட்டி இருமிக் கொண்டிருந்தாள். அவளுக்கு மழை வாடையே ஆகாது.
ஆகையால், மூக்கு மழை பொழிய வாய் இடிகளாக, அந்த முதியவள் தானே ஒரு தனி
மழை என்று காட்டிக் கொண் டிருந்தாள்.
சமையலறையில் கோமதி, பாத்திரங்களைக் குடையும் சத்தத்தில் அதிகமாகக் கேட்கவில்லை.
சத்தம் மழைச் சத்தத்தில் ஆனாலும், ஒவ்வொரு பாத்திரக் கழுவலுக்கும் ஒரு தடவை 'அவரைக்
காணமே, இந்த மழையிலே எங்க நிக்கறாரோ' என்று தன் பாட்டுக்குப் புலம்பிக்
கொண்டாள். பிறகு அவர் வருகிறாரா என்று பார்ப்பதற்கு ஜன்னல் கதவு ஒன்றின்
கொக்கியை அகற்றியபோது, அந்தக் கண்ணாடி ஜன்னல் பட்பட்டென்று அந்த வீட்டிற்கு
மாரடிப்பதுபோல் அடித்தது. பின்பக்கம் கிடந்த பாட்டியம்மாள் 'சீனி வரலியா, சீனி
வரலியா' என்று இருமல்களுக்கு இடையே கேட்டாள். உடனே மருமகள் காரி, மகள்
இருந்த அறைப் பக்கம் போய் "அப்பாவைக் காணுமே' என்றாள். 'வந்துடுவாரும்மா
என்று மகள் சொல்வதை கேட்க வேண்டும் என்று ஒரு ஆறுதல். அந்த மகளோ, 'வந்துடுவார்'
என்று ஒற்றை வரியில் பதில் சொல்லிவிட்டு முகத்தைப் பின்பக்கமாகத் திருப்பி, 'பாட்டி....
பாட்டி ஸ்விட்சை தொட்டு வச்சுடாதே.... நல்ல நாளுலேயே ஷாக் அடிக்கும். மழை
சமயத்துல கேட்க வேண்டாம்' என்று சொன்னாள். பிறகு தம்பியைப் பார்த்து 'அப்பாவைப்
போய் பார்த்து விட்டு வாயேண்டா தடியா' என்றாள். அவன் அவள் மீது தடிப்பார்வையைப்
போட்டுட்டுப் புறப்படப் போனபோது, அக்காக்காரி அவனை இழுத்துப் பிடித்துக்
கொண்டாள். எல்லோரும் அவரைக் காணுமே என்று கவலைப்பட்ட நேரம்.
அதே சமயம் மழைக்கு எங்கேயாவது ஒதுங்கியிருக்கலாம்.
இந்தச் சமயத்தில்தான் காலிங்பெல் சப்தம் கேட்டது. பையில் வைத்திருக்கும்
டிரான்ஸிஸ்டர் ரேடியோ செட் மாதிரி கதவின் மேல்புறச் சுவரில் பொருத்தி வைக்கப்
பட்டிருந்த ஒரு சின்ன செவ்வகப் பெட்டியின் அடிவாரம் தீப்பிடித்தது போல் எரிந்தது.
அதற்கு மேலே இருந்த ஒரு பறவை பொம்மை இடைவிடாது ஒலித்தது. வீடு கட்டிய
கையோடு, இந்த காலிங் பெல்லை சீனிவாசன் வாங்கி வந்த போது, கோமதி 'சப்தம்'
போட்டாள். ‘என்ன இப்படி அப சகுனமா? தீனிக்கு அலையுற பருந்துப் படம். அதே
மாதிரி 'சத்தமும்' என்றாள். உடனே அவர், 'இப்போ நீ பேசறது தான் அபசகுனம்' என்றார்.
அவள் கோபப்படப் போன போது சிரித்தார். இப்படித்தான்... அசாதாரண விஷ யத்தை
சாதாரணமாகச் சொல்லிவிட்டு, பிறகு ஒரு சிரிப்புச் சிரிப்பார். அவரோடு சேர்ந்து
கோபப்படுகிறவர்களும் சிரிப் பார்கள். அப்படிப்பட்ட அழுத்தமான நிர்மலமான முகம்.
காலிங் பெல் குரலிட்டுக் கொண்டே இருந்தது. சீனிவாசன், அந்த யந்திரப் பறவையை
ஓரிரு தடவைதான் குரலிட வைப்பார். இப்போதோ அது ஓயாமல் ஒலித்தது. இந்த
வித்தியாசம் புரியாமல் தாயும் மகளும் போட்டி போட்டுக்கொண்டு பேய் மழையில்
வாசல் படியோடு, ஒட்டிக் கொண்ட கதவைப் பிய்த்தெடுப்பது போல் பாதி திறந்தபோது
நான்கு பேர் உள்ளே ஒட்டு மொத்தமாக வந்தார்கள். ஒருவன் தாயையும் மகளையும்
கதவு இடுக்கில் தள்ளிவிட் டான். இன்னொருத்தன், அந்தக் கதவை அவர்கள் மேல்
கொண்டு வந்து வாய் பேச முடியாமல் அழுத்தினான். இருவரும் செயலற்று நின்றபோது;
ஒருவன் ஒரு கத்தியை எடுத்து அவர்களின் கழுத்துக்களில் சாத்தி வைத்து, பிடியை
மட்டும் பிடித்துக் கொண்டான். நாலாவது ஆசாமி கதவை ஓசைப் படாமல் மூடினான்
அந்தப் பெண்கள் மேல் கத்தி வைத்திருந்தவன், கோமதி கழுத்திலிருந்த கத்தியை
விடுவித்த போது இன்னொருத்தன் அவள் முடியை மூன்பக்கமாகக் கொண்டு வந்து
முறுக்கி, கையில் வைத்துக்கொண்டு கசாப்புக் கத்தி போல் இடுப்பில் இருந்த ஒன்றை
எடுத்து அவள் பிடறியில் வைத்துக்கொண்டு பின்னறைக்குள் இழுத்துச்
சென்றான். இன்னொருத்தன் சிவா இருந்த அறைக்குள் போய், அவன் கரங்களைப்
பின்புறமாக வளைத்து நகர்த்திக் கொண்டிருந்தான். ஒரே ஒருத்தன் மட்டும் அந்த வீடு
முழுவதையும் நோட்டம் போட்டுக்கொண்டிருந்தான். காமாட்சிப் பாட்டி கத்தப்
போகிற சத்தம் கேட்டது. பிடிபடும் கோழி ஆடி அடங்குவது போல் அவள் சத்தமும்
அடங்கியது. தள்ளிக்கொண்டு வரப்பட்ட, கோமதி இரும்பு மேஜையுடன் கட்டி
வைக்கப்பட்டாள். வீட்டை நோட்டம் போட்டவன்; எல்லா விளக்குகளையும்
அணைத்துவிட்டு, ஒரு ஜீரோ வாட் சிவப்பு விளக்கை மட்டும் எரிய விட்டான்.
கதவுப் பக்கத்துச் சுவரில் கத்தி முனையில் நிறுத்தப்பட் டிருந்த மீனாவை, 'காவல்'
காத்தவன், அந்தக் கத்தியை எடுத்து ஒரு கையில் கொடுங்கோலாய்த் தூக்கிக்கொண்டு,
இன்னொரு கையால் அவளை அரை வட்டமாய்ச் சுற்றித் தனக்கு முன்னால் கொண்டு
வந்து நிறுத்தினான். தூக்கிப் பிடித்த கத்தியை அவள் பிடறியில் வைத்துக்கொண்டு
"உம்....நட" என்று சொல்லிவிட்டு, பிடறிபட்ட கத்தியை லேசாய் அழுத்தினான்.
கண்களில் மீன் குஞ்சுகளை, பேருக்கு ஏற்றாற்போல் நீந்த விட்டிருப்பது போல்
தோற்றம் காட்டும் மீனா, இப்போது கண்களே அற்றுப் போனதுபோல் குனிந்து
நடந்தாள். நிமிர்ந்தால் பிடறி அறுபடும் நிலை. பிராண வலி. முகமே கண்களுக்கு
மூடியாகப் போன அவளை அம்மாவுக்கு முன்னால் நிறுத்தினான். தாயும் மகளும்
விம்மி னார்கள். மகளின் வாயை அவன் கைகளால் பொத்தினான். இருமலை
வெளிப்படுத்த முடியாமல் திண்டாடிய பாட்டியும், அவள் பேரனும், காதுக்குச் சரியாய்
கேட்காத கலவைச், சத்தங்களை எழுப்பினார்கள்.
.
இதற்குள் மீனாவுக்கும் கோமதிக்கும் இடையே இரண்டு பேர் வந்தார்கள். மீனா
கண்களால் அம்மாவைச் சுட்டிக் காட்டி, அவர்கள் தலைவன் போலிருந்த ஒருவனைப்
பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டாள். அவன் கிருதா மீசைக் காரனும் அல்ல. இந்த
மாதிரியான காரியங்களுக்கான உடம்பனும் இல்லை. அசல் சாதாரணம். நீலப் பாண்ட்
பச்சை சட்டை. இருட்டில் டாலடித்த கடிகாரம். ஆக மொத் தத்தில் ஜென்டில்மேன்-கேடி.
மீனாவிடம், சாவகாசமாகச் சொன்னான்.
"ஒங்க உயிருக்கு இவங்ககிட்ட யிருந்து நான் காரண்டி கொடுக்கிறேன். ஆனா அதுக்கு
நீங்க நான் சொல்றதைச் செய்யணும்.''
மீனா, தயங்கினாள். அவள் தயங்கத் தயங்க, அவள் பிடறியில் கத்தி அழுத்தியது அவள்
பொறுக்க முடியாமல் சிணுங்கினாள். உடம்பை நெளித்தாள். அந்த அவஸ்தையைப்
பார்த்த அம்மா, மகளைத் தன் பக்கம் வந்து ஆக வேண்டியதைச் செய்யும்படி தலையசைத்தாள்.
இதற்குள் ஒருத்தன் அவள் ஆட்டிய தலையை இரும்புச் சட்டத்தில் அசைவற்று வைத்து
அழுத்தினான். இப்போது, அம்மாவின் அவஸ்தையைப் பார்க்க முடியாததுபோல்
மனா யந்திரகதியில் செயல்பட்டாள். அம்மாவின் மூக்குத்தியையும், கை வளையல்களையும்
கழுத்துச் செயினையும், வேக வேகமாகக் கழற்றி ஜென்டில்மேன் - கேடியிடம்
கொடுத்தாள்.
அடுத்து, மீனா பீரோ இருந்த அறைக்குக் கொண்டு வரப்பட்டாள். இப்போது அவள்
கத்தியின் உந்துதல் இல்லாமல் தானாகவே நடந்தாள். குடும்பத்தினரின் கட்டுக்கள்
சீக்கிரம் அறுபட வேண்டும் என்று ஒரு ஆவேசம். பீரோவின் அலமாரிக்குள் இருந்த
கல் அட்டியல், எட்டுப் பவுன் உருட்டுச் செயின், நான்கு தங்க வளையல்கள் ஆகியவற்றைப்
பாராமுகமாக எடுத்து 'ஜென்டில்மேன்- கேடியிடம்' கொடுத்தாள். அவன் அவற்றை
வலது கையில் வைத்துக் குலுக்கிக் கொண்டே 'கவரிங்கா, தங்கமா?' என்று கேட்டுச்
சிரித்தான்.
எல்லாம் முடிந்து விட்டது. அவர்களுக்குத் திருப்தி. மீனாவை வாயோடு சேர்த்து
உடம்பையும் கட்டிப் போட்டு விட்டு வெளியே கதவை சாத்தி விட்டுப் போக வேண்டியது
தான் பாக்கி. திடீரென்று காலிங் பெல் சப்தம். தலைவன், கதவைத் திறக்காமல்
முன்னறைக்குள்போய் ஒரு ஜன்னலை லேசாய்த் திறந்து ஊடுருவிப் பார்த்தான். ஒற்றை
ஆள் தான். அதுவும் புல் தடுக்கி மாதிரி.
தலைவன், கதவுப் பக்கம் போனான். அதன் தாழ்ப் பாளை மெல்ல விலக்கி ஒரு ஆள்
நுழையும் அளவுக்கு ஒடுக்கமாக வைத்துக் கொண்டான். உள்ளே வந்தவரின் கையைப்
பிடித்திழுத்து அப்படியே அவரைத் தரையில் மல்லாக்காகக் கிடத்தினான். ஈரம்பட்ட
துணியால் தரையையும் ஈரமரக்கி யவரை அவன் தூக்கி நிறுத்தியபோது, ஒருவன்
கதவைப் பூட்டிவிட்டு சீனிவாசன் கழுத்தைச்சுற்றிக் கத்தியை வளைத்தான். பிறகு
அந்தக் கத்தியை நேராக்கிவிட்டு அவர் நெஞ்சில் நேராக அதன் முனையைக் குத்தவிட்டபடி
நின்றான். சீனிவாசன் மோவாயைத் தடவினார். கண்ணெதிரில் தன்னைப் பார்த்துத்
துடித்துக் கொண்டிருந்த கோமதியை துடிப்போடு பார்த்தார். 'அப்பா' என்று கேவிக்
கொண்டு அவர் பக்கம் போகப் போன மகள் மீனாவின் வாய் கத்தியின் பின் புறத்தால்
அடைபட, இன்னொருத்தன் அவளைச் சிறை யெடுத்தது போல், தோளையும்
வாயையும் சேர்த்துப் பிடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார்.
சீனிவாசன், அடிதடிக்கு உரிய உடம்புக்காரர் அல்ல. பூஞ்சை என்று சொல்ல முடியா
விட்டாலும் ஒல்லி என்று சொல்லலாம். ஆனால், உடம்பை ஈடுகட்டுவது போல்
கூர்மையான பார்வை. நாற்பத்தெட்டு வயதிருக்கலாம். மனைவி கட்டப்பட்டிருக்கும்
திசையை அவர் மேல்நோக்கிப் பார்த்தபோது, கோபுரம் போல் தோன்றிய படங்கள்
அவர் கண்களில் தென்பட்டன. குறுக்காய் அடிக்கப்பட்ட வரி வரியான இடைவெளிகளுக்கு
இடைவெளி விட்ட சட்டங்கள். அடியில் ஒரு பக்கம் மீசை முறுக்கோடு பாரதி.
இன்னொரு பக்கம் நறுக்கு மீசை பாரதிதாசன். அதற்கு மேல் கையை மடக்கி வைத்துக்
கொண்டு வீறாப்பாய் நிற்கும் விவேகானந்தர். இந்த மூன்று படங்களுக்கும் மேல்
இரட்டைப்படம்.... ஒரு பக்கம் சுபாஷ் சந்திரபோஸ். மறுபக்கம் பகத்சிங். இந்த இரண்டு
படங்களுக்கும் மேல் ஒரு சின்னப்படம். ஒரு பொக்கை வாய்க் கிழவனின் படம்....
சீனிவாசன், அந்தப் படங்களையே பார்த்தார். "அச்ச மில்லை அச்சமில்லை' என்று
மீசைக்காரன் பாடுவது காதில் ஒலித்தது. 'கொலை வாளினை எடுடா' என்று நறுக்கு
மீசைக்காரன் அவரை உற்றுப் பார்த்தான். 'எழுமின், விழி மின்' என்றார் விவேகானந்தர்.
'ஒரு நாட்டுச் சுதந்திரத்தைப் போல் வீட்டுச் சுதந்திரமும் அது பறிபோகும்போது
மௌனிப்பவன் கோழை' என்றார் சுபாஷ். அந்த பொக்கை வாய்க் கிழமோ, 'செய்
அல்லது செத்துமடி' என்றார். வெள்ளையனே வெளியேறு என்பது 'கொள்ளையனே
வெளி யேறு' என்பது போல் கேட்டது.
சீனிவாசன் யோசிக்கவில்லை. கழுத்தில் பட்ட கத்தியை தன் பங்குக்கும் தடவிக்கொண்டே
அவர்களைப் பார்த்து அமைதியாகப் பேசினார்.
"நல்லாக் கேளுங்களப்பா... நான் உங்களைப் போகவிடா விட்டால் நீங்க என்னைக்
கொல்ல வேண்டியது வரும். என் குடும்பத்தையும் சின்னாபின்னமாகச் சிதைக்க முடியும்.
இதைத் தெரிந்துதான் சொல்றேன். எனக்கு ஆபீஸ் உத்தியோகம் மாதிரி - உங்களுக்கும்
இது ஒரு உத்தியோகம். நீங்க கொள்ளையடிச்சுட்டு போனதா, நாளைக்கு போலீஸ்ல
புகார் கொடுப்போம் என்கிறதும் உங்களுக்குத் தெரியும். அதனால் நாய்தான் வருமே
தவிர நகை வராதுன்னு உங்களுக்குத் தெரிஞ்சது மாதிரியே எனக்கும் தெரியும்.
போலீஸ்காரன் உங்களுக்குக் கூட்டாளியா இல்லாவிட்டாலும், பகையாளியா இல்லை
என்பதும் எனக்குத் தெரியும். இன்னும் ஒங்களுக்குத் தெரிஞ்ச ஒண்ணே ஒண்ணையும்
சொல்லிடறேன்... களவுன்னு வந்தா கவலைப்படாத போலீசும், இந்தத் தெருவும்,
கொலைன்னு வந்தா உங்களை கூண்டுல ஏத்தாம விடாது. பத்திரிகைக்காரங்க சும்மா
இருக்க மாட்டாங்க.... உங்களுக்குத் தூக்குத் தண்டனை இல்லாவிட்டாலும் ஆயுள்
தண்டனை வராமப் போகாது. சும்மா இந்த மாதிரி கத்தியை வச்சு மிரட்டாதே
உன்னால் ஆனதைப் பாரு... எனக்கு நீங்க நகையை எடுத்துப் போறது பெரிசில்லேடா....
ஆனா, நீங்க எந்த வீட்ல வந்து வேணுமுன்னாலும் வந்து அங்க இருக்கறவங்களை
எப்படி வேணுமுன்னாலும் செய்து அட்டூழியம் பண்ணலா முனு உங்ககிட்ட ஒரு
அகங்காரம் இருக்கு பாருங்க... அதுக்குத்தாண்டா நான் கோபப்படறேன்... ஆறிலேயும்
சாவு. நூறிலேயும் சாவு. லட்சக்கணக்குல வந்த மாமூல்களை உதறிட்டு என் மகளுக்காக
வேர்வை சிந்தி கிராம் கிராமாச் சேர்த்த நகைகளை உங்களுக்குக் கொடுக்கறதைவிட
என் உயிரைக் கொடுக்கத் துணிஞ்சிட்டேன். உம்.. ஏண்டா சும்மா நிக்கறீங்க...
ஆனதைப் பாருங்கடா....”
* * *
அந்தக் கொள்ளையர்கள் அசந்து போய் விட்டார்கள். அவர் முகத்தை சுவரோடு வைத்து
இடிக்கப் போன ஒரு தடியனை ஜென்டில்மேன் - கேடி தடுத்து விட்டான். கையைக்
குறுக்கும் நெடுக்குமாக வைத்துக்கொண்டு அங்குமிங்குமாக உலாத்தினான். அவர்
சொல்வது அவனுக்கு நன்றாகவே பட்டது. ஒரு கொலையைச் செய்தால் நகைக்கு நகையும்
போய்
தூக்குக்கு தூக்கும் கிடைக்கும் என்பதைத் தெரிந்து வைத்திருந்தவன் போல் தலையை
அங்குமிங்கும் வட்டமடித் தான். அவன் முடிவையே பிறர் ஆவலோடு எதிர்பார்த்தார்கள்.
மீனா பிடறியில் பட்டிருந்த கத்திகூட கால் அங்குல இடைவெளி விட்டு நின்றது.
ஆனால் கட்டிப்போட்ட கோமதி முண்டியடித்தாள்.
சீனிவாசன், மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. கைகளை அந்த விவேகானந்தர் மாதிரி
கட்டிக் கொண்டார். பார்வையை அந்த பாரதி விட்டுக் கொண்டார். மனைவி அப்படி
கட்டுப்பட்டுக் கிடப்பதைக் கூட சாதாரணமாகப் பார்ப்பது போல் பார்த்தார். ஒருத்தனின்
பிடிக்குள் திமிறிய மகளை அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என்பது மாதிரியும்
எதிர்பார்த்த விஷயம் என்பது மாதிரியும் பார்த்தார். பார்வைக்கிடையே, "நீ பாரத மாதாடி...
அழக்கூடாது" என்றார் கம்பீரமாக.
கேடிகளுக்குப் புரிந்துவிட்டது. ஒரு கொலையைச் செய்யாமல் அங்கிருந்து போக
முடியாது. இப்போது எதையோ பறிகொடுத்தவர்கள் போல் அவர்களே தவித்தார்கள்.
இறுதியில் ஜென்டில்மேன் கேடி அவன் முன்னால் வந்து மரியாதையோடு கேட்டான்.
"என் வீட்டுக்கு அத்துமீறி வந்தவங்களை வெளியேத்தறது மட்டும்தான் என் வேலை...''
சீனிவாசன் அவர்களைத் திரும்பிப் பார்க்காமல் நின்ற போது, அந்த நால்வரும் ஓரளவு
தைரியப்பட்டு அவரைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே கதவைத் திறந்தார்கள்.
ஓடாமலே நடந்தார்கள் சீனிவாசனுக்கு அந்த கோபுரப் படங்கள் மீது எவ்வளவு
நம்பிக்கையோ, அவ்வளவு நம் பிக்கை இந்த சீனிவாசன் மீது அந்தத் திருடர்களுக்கு.
*** *** ***
4. புதிய போதை
அந்த வீடு முழுவதையும் அசைவற்றதாய் ஆட்டிப் படைத்த நிசப்தம், பல கூக்குரல்களில்
கலைந்து ஒப்பாரியாய் ஓலமிட்டது.
கட்டிலில் கிடந்த கன்னையாவின் கைகால்கள், அங்கு மிங்குமாய் வெட்டின. ஆனாலும்,
வலக்கையை வலுக் கட்டாயமாக, லேசாய் முகம் சுழித்துத் தூக்கி, அங்குமிங்குமாய்
ஆட்டினார். கண்களை அவர் பக்கம் படரவிட்டு வாசல்படியில் நின்ற சொர்ணம்மா,
அலறியடித்து அவர் பக்கம் ஓடிவந்தாள். சமையல் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்த
மோகனா, பாத்திரத்தை அப்படியே கீழே போட்டிருக்க வேண்டும். அது எழுப்பிய ஒலி
வேகத்திற்கு ஏற்ப ஓடிவந்தாள். அப்போதுதான பீடியும் தட்டுமாய் வந்த கனகா,
ஓடிப்போய் அப்பாவின் கையைப் பிடித்துக் கொண்டாள். நோட்டில் எதையோ கிறுக்கிக்
கொண்டிருந்த குமரகுரு அதை வீசியடித்துவிட்டுக் கட்டிலருகே பாய்ந்து வந்தான்.
அந்த வீட்டின் மூத்த மகன் கலைச்செல்வன் அந்த அறைக்கு வெளியே அசையாமல்
நின்றபடி தந்தையைப் பார்த்தான்.
கன்னையா, மீண்டும் வலக்கையைத் தூக்கி அங்குமிங்குமாய் ஆட்டியபோது, சொர்ணம்மா,
அதை எடுத்துத் தனது மாங்கல்யத்தோடு சேர்த்து வைத்துக் கொண்டு விம்மினாள்.
அந்தக் கைக்குரிய கண்கள், மகள்களையும், மகனையும் ஒவ்வொரு பக்கமும் நின்று
நின்று, ஆழம் போட்டுப் பார்த்தன. பிறகு மனைவியின் மாங்கல்யத்திலிருந்து விடுபட்ட
ஈரம் பதிந்த உள்ளங்கையை வலப் பக்கமாய் வளைத்து, கலைச்செல்வன் நிற்கும்
பக்கமாகத் திசை மாற்றி ஆடியது. உடனே மோகனா ஓடிப்போய் அண்ணன் கலைச்
செல்வனை இழுத்துக் கொண்டு வர, அந்த அறையைவிட்டு தாவினாள்.
இந்த மாதிரி சந்தர்ப்பங்களில், பிரபல நடிகர் அக்கினி நாத் எப்படி நடந்து கொள்வானோ,
அப்படி நடந்து கொண்டான் இந்தக் கலைச்செல்வன். இரும்பால் செதுக்கியது போன்ற
உடம்பில், பனங்காய் மாதிரியான பிடறியில் இரணடு கைகளையும் பின்புறமாக
வளைத்துக் கோத்துக் கொண்டான். இப்படித்தான் 'அம்மாவே தெய்வம்' என்ற படத்தில்
அக்கினிநாத் அப்படி கையை வைத்துக் கொள்வான் மோகனா பலமாக முதுகில்
குத்தியதால் திரும்பியவன், அவள் கை பிடித்து இழுக்க, அசல் மாடு மாதிரியே உள்ளே
வந்தான்.
கன்னையா, அவனைத் தமது அருகே வரும்படி கையசைத்தார். அவனும் அசல் அக்கினிநாத்
இந்த மாதிரி சோக மான சந்தர்ப்பத்தில் எப்படி அடிமேல் அடியாய் நடப்பானோ, அப்படி
நடந்தான். இதற்குள் கன்னையா மனைவிகளையும் மகள்களையும் சின்னப் பயல் குமரகுருவையும் மோவாயை நீட்டித் தலைமாட்டிற்கு வரச் சொன் னார். பிறகு, அவர்களது
கைகளைச் சேர்த்துப் பிடிக்கப் போனார். அது முடியாமல் போகவே, அவரது அனைவரது
ஆள் காட்டி விரல்களையும் ஒன்றாகச் சேர்த்துப் படித்து அவற்றை ஒரே கை போலாக்கினார்.
அவற்றை வளைத்து வளைத்துத் தம் மார்புக்கு மேல் வளைவாகக் கொண்டு வந்து
இன்னொரு கையால் தட்டுத் தடுமாறி கலைச் செல்வனின் கையை எடுத்து, அதில்
நான்கு விரல் குவியல்களையும் எடுத்துக் கொடுத்தார். கட்டிலில் மல்லாந்து கிடந்த
அவர் கண்களிலிருந்து இரு பக்கமும் கண்ணீர் பெருக் கோடியது.
அவரையே பிரமை பிடித்துப் பார்த்துக் கொண்டிருந்த சொர்ணம்மா, மகனிடமிருந்து
விரலை விடுவித்து மாறி மாறித் தலையிலடிததுக் கொண்டு, "என் ராசா, என் ராசா"
என்று அரற்றினாள். மோகனா, "அப்பா அப்பா'' என்று விம்மினாள். கனகா,
செய்வதறியாது திகைத்து நின்றாள். சின்னப்பயல் குமரகுரு, அப்பா ஏற்கெனவே இறந்து
விட்டது போல் தடாரென்று தரையில் விழுந்து தானே செத்துக் கொண்டிருப்பது
போல் தரையில் அங்கு மிங்குமாகப் புரண்டான். கலைச்செல்வன், அசல் அக்கினி நாத்
இதே மாதிரியான ஒரு காட்சியில் முகத்தை மூடிக் கொண்டு, தலையை அங்குமிங்குமாய்
ஆட்டிக் கொண்டு நிற்பது போல் நின்றான்.
கெட்டகை மாதிரியான தாழ்வாரத்தை ஒட்டிய அந்த அறைக்குள் பலர் ஓடோடி வந்தார்கள்.
வீட்டில் எழுப்பிய கூக்குரல் அவர்களை அங்கே வரவழைத்து விட்டது. சுவரோடு ஒட்டிப்
போட்ட தேக்குக் கட்டிலில் ஒரு காலத்தில் அந்தக் கட்டில் முழுவதும் வியாபிக்கப்
படுத்துக் கிடக்கும் கன்னையா, இப்போது ஒரு கயிற்றை நீட்டிப் போட்டது போல்
ஒடுங்கிக் கிடந்தார். ஏழெட்டுப் பேராய் நின்ற கூட்டத்தைப் பார்த்துச் சொர்ணம்மா
விம்மி விம்மிச் சொன்னாள் :
“எம் மவராசாவுக்கே பிழைக்க மாட்டோம்னு தெரிஞ்சிட்டுப் போலிருக்கு. பத்து நாளைக்கு
முன்னால தேர் மாதிரி நடமாடின மனுசனுக்கு இப்படி வெட்டு வெட்டா
வரும்னு நினைக்கலியே... காணி நிலம் இல்லாட்டாலும், சந்தை சந்தையா ஊர் ஊரா,
மஞ்ச மசாலாவை வித்து வித்து எங்களை முற்றத்து நிழலு முதுகுல படாம வச்சிருந்த என்
ராசாவே....நாங்க யாருகிட்ட சொல்லுவோம் - அடிச்சுக் கொன்னாலும் ஆறு மாசம்
ஆகுமே.... பத்து நாள் ஜூரத்துல இப்படி ஆயிட்டியளே ...
அம்மாவின் விம்மலால் மோகனா வார்த்தைகளை வெளிப்படுத்தாமலே, அழுகை
ஒலியெழுப்பினாள். அவள் வாயடைத்த விரல்களையும் மீறி ஒலி வெளி வாங்கியது.
கடந்த ஆறு மாதங்களாக, தமக்கு ஏற்றவனைக் கண்டு பிடிப்பதற்கு நடையாய் நடக்கும்
அப்பாவை நினைத்ததும் போய்விடப் அவளுக்குத் தனது எதிர்காலமும் அவரோடு போவது
போல் தோன்றியது. 'என் மவளுக்கு என்ன மாதிரி அலயறவன் வரப்படாது ... சொர்ணம்.
இருந்த இருந்த இடத்துல இருந்தே அஞ்சோ பத்தோ சம்பாதிச்சா கூடப் போதும்.
அப்படிப்பட்டவனைத்தான் தேடிக்கிட்டிருக்கேன்' என்று சொன்ன தந்தை, தேட முடியாத
இடத்திற்குப் போகப் போவது கண்டு அவள் பொருமினாள். அப்பா படுகிற அலைச்சலையும்
அவருக்குள் ஏதோ ஒரு நோய் புகைச்ச லாகிக் கொண்டிருப்பதையும் அம்மா சொனைதைக்
கேட்ட ஒன் தாவது வகுப்பு கனகா-வகுப்பிலே முதலில் வந்தவள், அவர் வாரத்தில்
ஒரு நாளாவது அலையக கூடாது என்பதற்காகப் பள்ளிக்கூடப் பையைப் பீடித் தட்டாக
மாற்றிக் கொண்டவள்.
* * *
பலசரக்குச் சாமான்களை வட்டமான கூடையில சுமந்து கொண்டு நாளைக்கு ஒரு
சந்தையாக அலைந்து திரிந்த அப்பாவை அந்த ஏழு நாட்களில் ஒருநாள் ஆசையோடு
பார்த்துவிட்ட அவள், இனி அந்த ஆசை, நிராசையாகப் போவதாக நினைத்துக் கூடப்
பார்க்க முடியாமல் அழுதாள். எட்டாவது படிக்கும் குமரகுரு, அம்மாவும், சகோதரிகளும்
அழுவது தொற்றிக் கொள்ள, அங்குமிங்குமாய்த் தரையில் உருண்டான். ஆனால்,
கலைச்செல்வனோ உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான். அந்தக்
குடும்பத்தின் அழுகை அவனையும் ஆட்படுத்தியது. ஆனாலும், எந்த மாதிரி
சமயத்திலும் அழக்கூடாது. அழவே கூடாது. அழுவது கோழைத்தனம்' என்று தனது
ஆத்மார்த்த நடிப்புக் குரு அக்கினிநாத் ஒரு ரசிகர் மன்றக் கூட்டத்தில் பேசியது
அவனுக்கு அப்போது பார்த்து நினைவுக்கு வந்தது. ஆகையால், ஏதோ சுமக்க முடியாத
பாரத்தைத்தலையில் சுமப்பது போலவும், அதைக் கீழே விழாமல் பார்த்துக் கொள்வது
போலவும் இரண்டு கைகளையும் தலையில் கூடாரம் போல ஆக்கிக் கொண்டான்.
இதற்குள், ஏற்கெனவே சத்தம் கேட்டாலும், பலர் நிதானமாக அங்கே வந்தார்கள்.
வயலிலிருந்து அப்போது தான் வந்த கன்னையாவின் அக்கா, ஒவ்வொரு நடைக்கும்
ஒரு தடவை தலையில் அடித்துக் கொண்டு உள்ளே வந்தாள். தம்பியை அந்தக்
கோலத்தில் பார்த்ததும் அவளால் தாள முடியவில்லை. மாறி மாறி முகத்தில் அடித்துக்
கொண்டாள். சுவரில் தலையை மோதிக் கொண்டாள். அவளை அசைய விடாமல்
பிடித்துக் கொண்ட ஒரு குண்டம்மா, 'போன வாரம் பண்ணையார் மாமா ராமசாமியும்
இப்படித்தான் துள்ளத் துடிக்கப் போயிட் டார். எழுதாக் குறைக்கு அழுதா முடியுமா
ஆண்டவன் படியளக்காமலா விடுவான்?' என்றாள். முகத்தில் ஒரு சின்னத் துயரச்சாயல்
கூட இல்லாமல். திடீரென்று ஒரு குரல் எவரும் பேசப்படாது என்பது போல் பேசியது.
"பண்ணையாரு ராமசாமியையும் கன்னையா அண்ணாச்சியையும் ஒரு தட்டுல வச்சா பேசுறே?
அவருக்கு மூணுகோட்டை நிலம் இருக்கு. ஆண்டவன் அது மூலம் படியளப்பான். இந்த
வீட்டுக்குக் கன்னையா அண்ணாச்சியோட உடல்தான் மொதலு. ஒரு பணக்காரன்
உடம்பைவிட ஒரு ஏழை உடம்புதான் முக்கியம். அதுலயும் இப்படி ஒரு தறுதலைப்
பிள்ளையை பெத்தவன் போயிட்டா, குடும்பமே சின்ன பின்னமாயிடும். சரி, சரி..
காத்தை அடைக்காம வழியை விடுங்க."
அந்தக் காலத்து வில்லுப்பாட்டாளியான பெரிய ஆறுமுகம், கன்னையாவின் அருகே
போனார். அவர் கன்னங்களைத் தடவி விட்டார். அவரைப் பார்த்து, கன்னையா மூச்சால்
பேசுவது போல் ஏதேதோ உளறிய போது, அவர் ஆறுதல் சொன்னார்.
"எங்க அண்ணன் மகன் ஒரு வாரத்துக்குப் பிறகு இன்னிக்குத்தான் வந்திருக்காக. அதுவும்
கட்டுலுல கிடக்கிற பெத்தவனப் பார்க்கறதக்கு இல்லே எதோ அக்கனிநாத்தோ
கிக்கினிநாத்தோ, அவனுக்குச் சங்கம் அமைக்கப் போறாகளாம். இவுக கவலையிலேயே
எங்கண்ணாச்சி, கட்டுலுல விழுந்துட்டாக...”
கன்னையாவின் தங்கை அமிர்தவல்லி, வந்ததோடு வந்த கையாய் வாயைப் பேசவிட்டாள்
அவளையே உற்றுப் பார்த்த பெரிய ஆறுமுகம், பிறகு ராமசாமி என்ற கலைச்செல்வனின்
பறட்டைத் தலை முடியைச் செல்வமாகப் பிடித்து அங்கும் இங்குமாய் ஆட்டிக் கொண்டே
பேசினார்.
"இனிமேலாவது புத்தியோட இருடா.... சீக்கிரமா போய் டாக்சிய கூட்டிட்டு வா.
கைக்காவலுக்கு எதுக்கும் ஐம்பது ரூபா எடுத்துட்டுப் போ... ஏன்னா கோணச்சத்திரத்தில்
இருக்கிற வாடகைக் கார்க்காரங்க எல்லோரும் கூடிப் பேசி நம்ம ஊருக்கு வாறதா
இருந்தா... டிபாசிட் வாங்கணும்னு தீர்மானம் போட்டிருக்காங்களாம். ஏன்னா ஊருக்கு வார
காருங்களை நம்ம பயல்வ பஞ்சராக்கறாங்களாம். சிலரு இதோ வந்துட்டேன்னு எங்கோ
ஓடிப் போயிடறாங்களாம். ஒன்ன மாதிரி நம்ம ஊரும் அவ்வளவு பிரசித்தம். சீக்கிரமா
போ..
* * *
குடும்பத்தில் மகத்தான பொறுப்பைத் தியாக மனப் பான்மையோடு ஏற்றுக் கொள்வது
போல் அங்குமிங்குமாய்ப் பார்த்த கலைச்செல்வன், சட்டைப் பைக்குள் கையை விட்டான்.
அவன் போட்டிருந்த ஸ்போர்ட் பாண்டிற்குள் ஒரு பையில் ஒரு கிழிந்த சினிமா டிக்கெட்டும்,
இன்னொரு பையில் ஒரு பாக்கெட் சிகரெட்டுமே மிஞ்சி இருந்தன. பெரிய ஆறுமுகம்
குத்தலாக உபதேசித்தார்.
"துரை கையில செக்குதான் இருக்கும். அத இப்போது மாத்த முடியாது. ஏளா கனகா.
ஒங்கிட்ட இருந்தாக் கொடு."
கனகா, அப்போதுதான் பீடிக்கடையிலிருந்து கூலியாக வாங்கி வந்திருந்த பணத்தில்
சில்லறை நோட்டுக்களைத் தக்க வைத்துக் கொண்டு, ஒரு முழு நூறு ரூபாய் நோட்டை
அண்ணனிடம் நீட்டினாள். பெரிய ஆறுமுகம், கோதிமுடித்த கொண்டையைத் தடவி
விட்டுக்கொண்டே, "வெளியில் என் சைக்கிள் இருக்கு. எடுத்துட்டுப் போயி ஜல்தியா
வாடா" என்றார்.
அசல் அக்கினிநாத் போல் கைகள் இரண்டையும் கட்டிக் கொண்டு, அதன் மேல்
தலையைக் கவிழ்த்துப் போட்டு நின்று கொண்டிருந்த, கலைச்செல்வன் முகத்தை ஒரு
வெட்டு வெட்டிக் கொண்டே வீட்டை விட்டு வெளியே தான். அப்போது வீட்டுக்குள்
அழுகைச் சப்தம் பலத்தது. உள்ளே போகப் போனவன், மனசை அக்கினிநாத் மாதிரி
வைத்துக் கொண்டு சைக்கிளை எடுத்தான். விடுத்தான்.
* * *
தெருவில் பம்பரமாடிக் கொண்டிருந்த பிள்ளைகள் அலறியடித்து ஓடும்படியும், மண்
குடத்தில் தண்ணி ஏந்தி வந்த ஒரு பரமசாதுப் பெண், தான் தப்பிக்க குடத்தைக் கீழே
போடும்படியும், கலைச்செல்வன் சைக்கிளை வேக வேகமாய் ஓட்டினான். அண்ணன்
அக்கினிநாத் ஒரு படத் தில் இதே மாதிரியான கிளைமாக்ஸ் காட்சியில், எப்படி மோட்டார்
பைக்கில் பாய்ந்தானோ, அதே போல் அந்தச் சைக்கிளையே ஒரு மோட்டார் பைக்
ஆக்கினான். அது கீழே விழுந்து அவனைப் புறமுதுகு காட்டும்படி தட்டிவிட் டது.
மீண்டும் அவன் சைக்கிளில் ஏறி, "தந்தையைப் போல் ஒரு தெய்வமுண்டோ" என்று
அக்கினிநாத் பாடிய பாடலை மனசுக்குள்ளேயே ஒலிக்க வைத்துக்கொண்டு, கோணச்
சத்திரத்திற்கு வந்துவிட்டான். சைக்கிளை உருட் டிக்கொண்டே வெள்ளை வண்ணத்தில்
முண்டியடித்து நின்ற வாடகைக் கார்கள் பக்கம் நெருங்கினான்.
அங்கு என்ன கூட்டம்? தெரிந்த மொகங்களா தெரியுது? அது என்ன லாரி? ஒரே தலை
மயம். கலைச்செல்வன் சைக்கிளை உருட்டிக்கொண்டே போனான்.
அங்கு லாரியில் இடுப்பளவு சுற்றுப் பலகைக்கு உள்ளே நாற்பது தலைகள் நெருக்கியடித்து
நின்றன. அத்தனையும் விடலைத் தலைகள். சிலர் தலையில் அடித்துக்கொண்டு அழுதார்கள்.
பலர் மௌனமாய்க் கண்களைத் துடைத்துக் கொண்டார்கள். அவனை அடையாளம்
கண்டுகொண்ட பல வாய்கள் விவகாரத்தை மாறி மாறிச் சொல்லப்போனதில், அந்தக்
கூட்டததின் சத்தம் சந்தைச் சத்தமாய் ஒலித்த தால், கலைச்செல்வன லாரியின்
முன் இருக்கைப் பக்கம் இருக்கைப் போனான். டிரைவருக்கு அடுத்து, அக்கினிநாத் மாவட்ட
ரசிகர் மன்றத் தலைவன அககினிநாத் தாசன சோகப்பட்டுக் கிடந்தான். அவனுக்கு அருகே
இருந்த லாரி உரிமையாளர் பெருமாள், இந்த மாதிரி ரசிகர் மன்ற நடவடிக்கைகளில்
முன்னணியில் நிறகும் கலைச்செல்வனின் வருகையை அங்கீகரித்தது போல் விவரத்தை
விளக்கினார்.
"ஒங்க ஆருயிர் அண்ணன் அக்கினிநாத் மதுரைப் பக்கம் வெளிப்புறப் படப்பிடிப்புல ஒரு
விபத்துல சிக்கிக் கிட்டாராம். லேசான காயமாம். மதுரை ஆஸ்பத்திரியில் சேர்ந்திருக்குன்னு
திருச்சி ரேடியோ சொல்லிச்சு..."
"அப்டா எப்படியோ பிழைச்சார்
"அப்படியும் சொல்ல முடியாது. இந்த ரேடியோக்காரன் எல்லாச் செய்திகளையும்
லேசாத்தான் சொல்லுவான். இந்திராகாந்தி செத்ததையே ரெண்டு நாள் சொல்லலியே.
இதே மாதிரி அக்கினிநாத்துக்கும் ஏதாவது ஏற்பட்டு, அதை ரேடியோக்காரன் மூடு
மந்திரமா சொல்லி யிருக்கலாம் இல்லையா? அதனால இப்பவே மதுரைக்குப் போறோம்
ஆருயிர் அக்கினிநாத்தைக் கண்ணால கண்ட பிறகுதான் நிம்மதி வரும். நீயும்
வேணும்னா ஏறிக்கோ ... ஐம்பது ரூபாய் தான்.'
கலைச்செல்வன், பையிலிருந்த நூறு ரூபாய் நோட்டை இரண்டு கையிலும் பிடித்து லாரி
உரிமையாளரிடம் சுண்டி விட்டான். பிறகு கையிலிருந்த சைக்கிளைத் தொப்பென்று
கீழே போட்டான். அதன் மட்கார்டு, பக்கத்தில் நின்ற ஒரு சின்னப் பையனின் தோளில்
ரத்தக் களறியை ஏற்படுத்தி அந்தப் பையனைக் கீழே வீழ்த்தியது. கலைச்செல்வனுக்கு
அது கண்ணில் படவில்லை. கீழே குனிந்து நான்கைந்து கற்களைப் பொறுக்கிக் கொண்டு
அங்குமிங்குமாக ஓடியோடி எறிந்தான். பல கார்கள் ரிவர்சில் போயின. அப்படியும்
திருப்திப்படாமல் ஐந்தாறு கடைகளை நோக்கிக் கல்லெறிந்தான். லாரியிலிருந்தும்
சில பையன்கள் குதித்தார்கள். ஒரே கல்லெறி, சோடா பாட்டில்கள், மெட்ராஸ் ஸ்டைலில்
எறியப் படாமல் கிராமத்துப் பாணியில் எறியப்பட்டன. இதனால் கடைகள் மூடப்பட்டன.
போக்குவரத்து ஸ்தம் பித்தது. மக்கள் அங்குமிங்கும் சிதறி ஓடினார்கள்.
கண்ணகி மதுரையை எரித்துத் திருப்திப்பட்டது போல், கல்லெறிந்து திருப்திப்பட்ட
கலைச்செல்வன், லாரியின் பின் பக்கமாக வந்தான். 'அங்கினிநாத் அக்கினிநாத்' என்று
லாரியில் அடிவயிற்றிலிருந்து குரலெழுப்பினான். உடனே நின்ற விடலைகள் ‘வாழ்க
வாழ்க' என்று கோஷமிட்டார்கள். கீழே நின்ற லாரியின் பலகையில் முகம் போட்டுக்
களைப்பாறிய கலைச்செல்வனை, கழுத்தைப் பிடித்து லாரிக்குக் கொண்டு வந்தார்கள்.
அந்தக் கூட்டத்திலிருந்து ஒவ்வொருவரும் நடிகர் அக்கினிநாத்தின் கல்யாண குணங்களைத்
தங்கள் தரத்திற் கேற்றவாறு விளக்கிக் கொண்டிருந்ததைக் கலைச்செல்வன் உன்னிப்பாகக்
கேட்டதால், லாரி ஓடுகிற உணர்வே அவனுக்கு வரவில்லை. ஒரே ஒருமுறை அப்பாவை
நினைத்துப் பார்த்தான். அதற்குள் லாரி ஐம்பது கிலோ மீட்டரைத் தாண்டிவிட்டது.
* * *
-----------------
5. பன்னாடை
வாழ்ந்து கெட்ட வயதான ஸ்ரீராமர் போல், அந்த பிரமாண்டமான பங்களாவை, பிரமிப்பு
ஏதுமின்றி ஏறிட்டுப் பார்த்தார் கந்தய்யா.
வில்மாதிரி வளைந்திருந்த தளைநார், வலது தோளுக்கு வளையமாகி இடுப்பைத் தொட்டது
தென்னைம்பாளையால் கட்டப்பட்ட கூம்புப் பெட்டி, இடது தோளில் அம்பராத்
துணிப்போல தொங்கியது. இந்த 'பாளைச் சதையை' இழுத்துப் பிடிப்பது மாதிரியான
மூங்கில் எலும்புகள், இரண்டையும் இழுத்துக் கட்டிய பனை நார் நரம்புகள். இடுப்பில்
ஒரு பாடாதி பெல்ட். முட்டியோடு முடிந்துபோன தார்ப் பாய்த்த வேட்டி. கை முட்டிகளிலும்,
கணுக்கால்களிலும் கருந்திரட்சையான காய்ப்புகள். கொட்டாங்குச்சியை வாயளவு
இடைவெளியில் வளைத்துப் பிடித்து வைத்திருப்பது மாதிரியான மோவாய். ஸ்ரீராமர்
வனவாசம் செய்த போது வந்திருக்கக்கூடிய சிண்டு சிடுக்குமான முடி எலும்போடு
ஒட்டிய உடம்பு ஏறிட்டுப் பார்த்தால்தான் முகம் தெரியும் என்கிற மாதிரியான உயரம்.
நாற்பதுக்கு மேலே நாற்பத்தைந்துக்கு கீழே.
"இங்கேயே நில்' என்று சொல்லிவிட்டு உள்ளே போன 'பிள்ளையாண்டானை இன்னும்
காணவில்லை என்பது போல், கந்தையா உடம்பை எக்கி, கேட்டுக்கு மேலே தலையை
தூக்கிப் பார்த்தார். மாடியில் பாப் மியூசிக் பாடிய சல்வார் கம்மீஸ்காரிகளின் சத்தம்
அவர் கவனத்தைக் கவர வில்லை. தெருவில் கிரிக்கெட் ஆடிய சிறுவர்களின் கூச்சல்
அவரது காதுகளில் எட்டவில்லை. விலாவில் விழுந்த கிரிக்கெட் பந்தின் தாக்கம்
ஏதுமின்றி அவர் தன்பாட்டுக்கு நின் றார். ஒரே ஒரு சமயம் இடையில் சாத்தி வைத்த
பாளை அரிவாளை எடுத்து அவர் விரலால் கூர் பார்த்தபோது, கிரிக்கெட் பையன்கள்
பயந்து போய், 'ஸ்டம்பை' வேறு பக்கம் கொண்டு போனதோ அவருக்குத் தெரியாது.
கூப்பிட்டு வந்தவனுக்கும், குரல் கொடுக்கலாமென்றோ, பால்கனியே மாடியானது
மாதிரியான இடத்தின் முன்பகுதியில் நின்ற பெண்களிடம் விசாரிக்க வேண்டுமென்றோ
தோன்றாமல் சுத்த சுயப்பிரகாசமாய் நின்ற இடத்திலேயே நின்றார்.
நல்ல வேளையோ, கெட்ட வேளையோ, குரோமிய தகட்டால் வேயப்பட்ட கேட் இரண்டாக
பிளந்து அவருக்கு வழிகாட்டியது. கூத்துக்கு முன்னால் கட்டியங்காரன் போல். அவரை
குடிசை தேடி கூட்டி வந்த இளைஎன் இப்போது செடிகளுக்கு நீர்ப்பாய்ச்சும்
குழாயை கையாக்கி அவரை உள்ளே வரும்படி அதையே வளைத்துபிடித்து சைகை
யாக்கி னான். அப்படி குழாயை ஆக்குவது ஒரே மாதிரியான நீர்ப் பாய்ச்சல் என்று
நினைத்த கந்தய்யா. சும்மாவே நின்றபோது சொன்ன அந்த இளைஞன் "உள்ளே
வாய்யா” என்று படியே வீட்டுக்கு உள்ளே பார்த்தான்.
உள்ளே போய்க் கொண்டிருந்த கந்தய்யாவை, எல்லா பங்களாக்களிலும் இருப்பது போல
ஒரு சடை நாய் குறுக்கே வந்து குலைத்தது. அந்நாயின் குலைப்பு சத்தத்தை காதுகளில்
உள்வாங்காமல் அவர் தன்பாட்டுக்கு முன் ஏறிய போது, அந்த நகரத்து நாய் வாலை
பின்காலுக்கு மத்தியில் நுழைத்துக்கொண்டு, குலைப்புச் சத்தத்தை ஊளைச் சத்த மாக்கியது.
அதாவது அவரிடம் 'சரண்ட்டராம்'.
பங்களா முகப்பின் ஒரு கிரவுண்ட் பகுதியில், எதுவரை நடப்பது, என்று புரியாமல்
கறுத்தய்யா, தயங்கியபோது, அந்த நீர்ப்பாய்ச்சி இளைஞன் உள்ளே ஓடினான். சிறிது
நேரத்தில் வெளியே வந்து அவரை நின்ற இடத்திலே நிற்கும்படி சைகை செய்துவிட்டு,
மீண்டும் உள்ளே ஓடினான்.
கந்தய்யா சுரணையற்றபடியே நின்றார். வலது பக்கம் நின்ற இரண்டு மாருதி கார்களோ
அவற்றை ஈரத்துணியால் துடைத்துக் கொண்டிருந்த வேலைக்கார டிரைவர்களோ அவர்
கண்களில் படவில்லை. வலது பக்கம் நின்ற அம்பாஸிடர் காரில் 'என்னடி ராக்கம்மா'
தூள் பரப்ப முழங்குவதை அவர் காது கொடுத்து கேட்கவில்லை. இரண்டு 'கைநெட் டிக்
கொண்டாக்களும், மூன்று சேட்டக்களும்', அவர் மனதில் பதியவில்லை. 'உள்ளேயிருந்து
அம்மா எப்போ வருவாங்கோ எடுத்த எடுப்பிலேயே மரத்துக்கு எவ்வளவுன்னு ரேட்
பேசிக்கணும்....
திடீரென்று பேசிக்கொண்டே நின்ற டிரைவர்கள் பேச்சற்று செயல்பட்டார்கள். அம்பாஸிடர்
காரில் ராக்கம்மா மௌனமானாள். அந்த அம்மா நான்கு அடி தூக்கலில் உள்ள மேடை
திண்ணையில் பிரசன்னமானாள். அவளது உடம்புக்கு 5 வயது என்றால், லிப்ஸ்டிக்குக்கோ
20 தேறும். ஜாக்கெட்டுக்கு பதினாறு. ஒட்டகச்சிவிங்கி மாதிரியான உடம்பு. தொட்டால்
ரத்தம் கொட்டுகிற மாதிரி சிவப்பு. தங்கமுலாம் போட்ட பிரேமில் மூக்குக்கண்ணாடி.
"முனுசாமி.... அந்த ஆள பின்னால் கூட்டிக்கொண்டு வா..
அந்த அம்மா அவ்வளவு பேசியதே, முனுசாமிக்கு தான் காட்டும் ஒரு சலுகை என்பது மாதிரி
உள்ளே போய்விட்டாள். 'முனுசாமி' கந்தய்யாவை புல்வெளிகளுக்கு மத்தியில் வளைந்து
நெளிந்து போன மெட்டல் பாதையில் நடக்க வைத்தான். முன்னால் நடந்து நடந்து
பின்னால் நடந்த வரை திரும்பி திரும்பிப் பார்த்துக் கொண்டான்.
அந்தப் பங்களாவின் பின்பக்கம் வந்த கந்தய்யா, தற்செயலாய் நிமிர்ந்தார். அங்குள்ள
குட்டி தென்னைத் தோப்பைப் பார்த்து, உடம்பை நிமிர்த்தினார். வளைத்து வைத்த
கால்கள் நிமிர்ந்தன. கழுத்தை மறைத்து தொங்கிய முகம் இப்போது உயரமானது.
பெரிய பெரிய தேங்காய்களை சுமந்த 'அதிகமான' தென்னைகளையும், பச்சையும்
சிகப்பும் கலந்து மின்னும் பெங்களூர் குட்டை தென்னைகளையும், கோணல் மானலான
நக்குவாரி தெங்குகளையும், அவர் உற்று உற்றுப் பார்த்தார். மயில்கள் விசுவரூபம்
எடுத்து ஆடுவதுபோல் தோன்றிய அத்தனை தென்னைகளையும், பார்க்கப்பார்க்க,
அவருள் ஏதோ ஒன்று விஸ்வரூபம் ஆனது. தென்னை மரங்களைவிட தானே அதிகப்
பச்சை என்பது போல் பப்பாளி காய்களை சிலுக்கி மினுக்கி குலுக்கி காட்டும்
பப்பாளி மரங்களை அலட்சியமாகப் பார்த்தார். ஒரு தென்னையின் 'தூரில்' வேரூன்றி
அதன் மேல் பாம்பு போல் சுற்றிய பசலைக்கொடியை உதாசீனமாகப் பார்த்தார். ஒரு
தென்னையை உயர விடுவது இல்லை என்பது போல் மேலே குடை போல் விரிந்த
மாமரத்தை சினந்து பார்த்தார். காய்க்காமல் கருகி தலைகீழாக தொங்கிய
பாளைகளையும், பழுப்பு ஓலைகளையும் கோபமாக பார்த்தார். அந்த வீட்டுக் காரர்களை
திட்ட வேண்டுமென்பது போல் கூட அவருக்கு ஒரு எண்ணம் தோன்றியது. இப்படியா -
மரங்களை - அம்போன்னு விட்றது...
தென்னைகளோடு தென்னையாகிப் போனவர். அந்த அம்மா, தனது சோடியோடு அங்கே
நிற்பதை கண்டுக்காமல் நிற்பதை கண்டு கொண்ட முனுசாமி, கந்தய்யாவின் தோளை
தடவினான். தட்டினான் பிறகு அடித்தான். அந்த குட்டித் தோப்பிலிருந்து கண்களை
விருப்பத்திற்கு விரோதமாக மீட்டிய கந்தய்யா, அந்த அம்மாவைப் பார்க்காமல்
அவளுக்கு பக்கத்தில் டவுசர் பனியன் என்ற அரை நிர்வாணத்தோடு நின்ற ஒருவரை
அசைவற்றுப் பார்த்தார். உடனே அவரும் "இந்த தென்னை மரத்திலே இரண்டு பச்சை
பாம்புங்க லவ் பண்ணிக்கிட்டு இருக்குப்பா. சிலர் கொம்பேறி மூக்கன்னு சொல்றாங்க
பார்த்து ஏறு” என்று சொல்லப் போனார். அப்படி சொன்னால், அந்த மரமேறி
நடைபாதைவாசியாகி விடுவார் என்று நினைத்தோ அல்லது வீட்டுக்காரி ‘உங்களுக்கு
எந்த இடத்திலே என்ன பேச வேண்டுமென்று தெரியாது' என்று கொடுக்கப் போவதை
வாங்கிக்கொள்ள மறுத்தோ அவரும் கந்தய்யா மாதிரியே நின்றார். பிறகு அந்த
பச்சை பாப்புகளைப் பற்றிச் சொல்ல வில்லை என்றால், தலை வெடித்து விடும் போல்
தோன்றியதால், நாக்கு சுமந்ததை வார்த்தைகளாக்காமல் 'வாக்கிங்’ போய்விட்டார்.
அவர் போன பிறகுதான், பேசுவது என்று தீர்மானித்த அந்த அம்மாவும் இப்போது
பேச்சைத் துவக்கினாள். "எத்தனை தென்னைங்களை சீவி விடணும்பா. மொத்தம்
இருபது மரங்களையாவது சீவணுமுன்னு நெனைக்கேன் இல்லையா!"
கந்தய்யா, அந்த தென்னைகளை மேற்கொண்டு பார்வையிட வேண்டியது இல்லை
என்பது போல் அந்த அம்மாவையே பார்த்தார். இருபத்தைந்து என்று சொன்னாலும்
அந்த அம்மா நம்புவாள். மரத்தக்கு உள்ள மாமூல் ரேட் டான ஐந்து ரூபாய் என்று
பார்த்தாலும், நூறு ரூபாய்க்கு மேல போகும். வருஷப்பிறப்பு என்று சொல்றாங்க...
தமிழ் வருஷமோ.. தெலுங்கு வருஷமோ.... வாயிலே நுழையாத வருஷம். ஆனாலும்
நல்ல நாளு குச்சையிலே அயுற பசங்க ளுக்கு பிரியாணி வாங்கிக்கினு போகணும்...
சம்சாரத்துக்கு ஒரு காடா சேலை வாங்கணும். அதுக்காக பொய் சொல்றதா. எவனுக்கு
வேணும் இந்த பொழைப்பு. நாயமாவே சொல்லுவோம். ரேட்ட வேணுமின்னா ஐந்து
இருந்து ஆறாக கேட்போம்.
கந்தய்யா உதடுகளை சரியாக திறக்காமலே ஏதோ உச்சரித்தார். அது அந்த அம்மாவுக்கு
புரியவில்லை.
"இந்தாப்பா - முனுசாமி. இவன் என்ன சொல்றான் கேளு.
"பதினைந்து மரத்துக்கு மட்டும் போதுமாம்மா."
கந்தய்யா தோளில் தொங்கிய பாளை அரிவாளை கையில் எடுத்தபடியே முனுசாமியிடம்
மேலும் ஏதோ பேச, முனுசாமியும் அந்த உச்சரிப்பை அந்த அம்மாளிடம் அர்த்தப்
படுத்தி பேசினான்.
"ஒரு மரத்துக்கு எவ்வளவு ரேட்டுன்னு கேட்காரும்மா...."
"என்னப்பா இது, ஒரு தொழிலாளி வயத்திலே அடிப்பவளா நான்?
''நீயே சொல்லக்கூடாதா?" நல்ல வேளை வயிறுன்னதும் ஞாபகம் வந்துட்டுது. பாவம்
இந்த மரமேறி வயிற்றைப் பாரு. எம்ட்டி கிண்ணம் மாதிரி தோணுது. ஏய் இந்தாடி
சுதாமா.... கொஞ்சம் பழைய சாதம், நார்த்தங்காய் ஊறு காய் எடுத்துட்டு வாடி. உன்
பேரு என்னப்பா."
"கந்தய்யா"
'முதல்லே சாப்பிடு கந்தப்பா. உன் காசை பிடித்து தானா நான் கோட்டை கட்டப்போறேன்.
'ஏய சுதாமா ஒன்னைத்தாண்டி'
சுதாமா ஒரு ஈயப் பாத்திரத்துடன் வெளிப்பட்டாள்.
இந்த பதினாறு வயசுப் பெண்ணுக்கு அம்மா இட்ட பெயர் லட்சுமி ஆனால் இவள் டிவி
மகாபாரதத்தில் பாலகிருஷ்ணனின் தோழனாக வருவானே சுதாமா. அவனை மாதிரியே
குதிரை வால் முடி காட்டி தோன்றுபவள். ஆகையால் எசமானி அம்மாளின் பெயர்,
பெத்த அம்மாவின் பெயரை துரத்திவிட்டது. என்றாலும் இப்போது முனுசாமி முன்னால்
அப்படிப்பட்ட பெயரை வாங்கிக்கொள்ள அவளுக்கு இஷ்டம் இல்லை. ஆகையால்
வீட்டுக்காரியை வாய்க்குள் “பூசணிக்காய் பொந்தி" என்று திட்டிக் கொண்டே
ஈயப்பாத்திரத்தை கந்தய்யாவிடம் சந்தோஷத்துடன் நீட்டினாள். பஞ்சு மாதிரி திரண்ட
கஞ்சியில் நூற்கலாம். அப்படிப்பட்டதை, சாப்பிட்டதாக பேர் பண்ணி, அம்மாவுக்கு
தெரியாமல் குப்பைத் தொட்டியில் ஊற்ற நினைத்த சுதாமா; இப்போது கந்தய்யாவை
ஒருவாய் உள்ள குப்பை தொட்டியாக நினைத்தாள். அவர் இரண்டு கையையும் திருவோடு
மாதிரி ஆக்கியபோது அவள் ஈயப் பாத்திரத்தை தலைகீழாக கவிழ்த்தாள். கந்தய்யா
நாலே மடக்கில் கஞ்சியை காலி செய்துவிட்டார்.
இந்த மரமேறி மனிதர் வயிறு காட்டிய குளிர்ச்சியை அந்த அம்மாளின் மீது ஒரு
பார்வையாக்கினார். முன் கூட்டியே ரேட் பேச வேண்டும் என்ற எண்ணத்தை செஞ்சோற்றுக்
கடனுக்கு எதிரான செயலாக நினைத்து அந்த அம்மாவின் கண் முன்னாலேயே ஒரு
அந்தமான் தென்னை மீது உடம்பை போட்டார். நாகர மாட்டிக் கொண்டு, ஒரு கையை
தென்னையின் முதுகை வளைத்து, றுகையை, அதன் மார்பில் ஊன்றியபடியே
அனாசியமாக தாவினார். இடையில் இன்னொரு தென்னையில் வழி மறித்த ஒலைக்கையை
ஒரே சுண்டால் சுண்டி அதை கீழே சாய்த்தபடியே அந்தக் கோணைத் தென்னையில்
தத்தித் தத்தி, தாவித் தாவி, குதித்துக் குதித்து படுத்துப் படுத்து மேலே போனார்.
உச்சிக்குப் போய் ஒரு நோட்டம் போட்டார். எம்மா பெரிய பன்னாடைங்கோ....
நயினா நல்லாத்தான் சொன்னார். 'அடே... கந்தய்யா தென்னை மரத்து சில்லாடைங்க
தேங்காய்களுக்கு, குழந்தைகளுக்கு, தொட்டில் மாதிரிடா. ஆரை அதே தொட்டில்
சேலை பின்னிக்கிட்டா குழந்தைக்கு மூச்சு முட்டி அதுவே பாடை யாகி விடும்.
அதனாலே இந்த பன்னாடைங்களை பக்குவமா எடுடா' என்று அந்தக் காலத்திலே
கூத்துப் போட்ட அப்பாக் காரர் சொல்லுவார். இவரைக் கூட, கூத்தில் திரௌபதி
வேடம் போட கூப்பிட்டார்கள். இவருக்குத்தான் பிடிக்க வில்லை. சேலை கட்டி,
அப்புறம் அதையும் அவிழ்க்க விட்டு... சீச்சி...
கந்தய்யா, சிந்தனையிலிருந்து விடுபட்டு, பட்டுப்போயிருந்த ஒலைகளை பிய்த்து
எறிந்தார். தென்னங்குறும்பல்களை, முட்டைகளை அடை காக்கும் கோழி போல் அடை
காத்த ஒரு பாளையைச் சுற்றிய பன்னாடைகளை குறும்பல்கள் தெரியும்படி பக்குவமாக
அகற்றினார். அடி உச்சியில் கோணல் மாணலாய்க் கிடந்த சில்லாடைகளை அரிவாளால்
கூறு போட்டு அப்புறப்படுத்தினார். அனாவசியமாக தோன்றிய பச்சை ஒலைகளின்
அடிவாரங்களை பாளை அரிவாளால் கோடு போட்டார். அந்த ஓலைகள் அடியற்று
வீழ்ந்தன. அதன் அடிவாரங்கள் இப்போது ஜோதி போல் மின்னின. பன்னாடை
போன பாளைப் பூக்கள், தங்கச் சரட்டில் தொங்கும் முத்துக்கள் மாதிரி மின்னின.
இப்போது அந்த மரமே 'கிராப்பு' வெட்டப்பட்ட மனிதர்கள் போல் நவீனப்பட்டது.
நீண்ட நாளைய தாடி எடுத்தால் முகம் எப்படி மின்னுமோ அது போல், அதன்
தேங்காய்களும் உச்சியும், ஒரு சேர மின்னின.
கால் மணி நேரத்தில் கந்தய்யா கீழே இறங்கினார். அவரையே பார்த்துக் கொண்டிருந்த,
அந்த அமமாவை பார்க்காமல், இன்னொரு மரத்தல் ஏறப் போனார். அந்த அம்மாவும்,
அவருடன் வேலை வாங்குவதற்கு நிற்க வேண்டிய அவசியம் இல்லை என்பது போல்
போய் விட்டாள்.
கந்தய்யா, மரம் மரமாய் தாவினார். ஒரு சில மரங்களில் முற்றிப் போன தேங்காய்களை
கீழே வீழ்த்தினார். வருத்தப் பட்டு பாரம் சுமக்கும் பட்டுப் போன பாளைகளையும்,
குறும்பல்களையும் கீழே தள்ளினார். நான்கு மரங்களில் ஏறி முடித்துவிட்டு ஐந்தாவது
மரத்தை அவர் பார்த்தபோது அந்த அம்மா மீண்டும் அங்கே வந்தாள். இப்பொழுது
அவள் கையில் ஒரு குவளை டம்ளர். அதன் கொள்ளளவு முழுவதும் நெய் மணக்காத
மோர்.
''கந்தய்யா. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோ. இந்த மரங்க எல்லாம எங்கே போகப்
போகுதுப்பா... முதல்லே மோர் சாப்பிடு,"
கந்தய்யா, அந்த மோர் டம்ளரை ஒரே மடக்கில் காலி செய்தார். அந்த அம்மாவுக்கு
மரியாதை கொடுக்கும் வகையில், தண்ணீர் தொட்டிக்கு அருகே போடப்பட்ட
கல்லில் உட்கார்ந்தார். அந்த அம்மா, போன உடனேயே எழுந்தார். பெல்லட்டை சுறுக்கிப்
போட்டார். அடுத்த தென்னைக்கு தாவினார். ஏதோ ஒரு தென்னையில் மட்டும் அவர்
பாளை அரிவாள படவில்லை. இவ்வளவுக்கும் அந்த மரம் ஜடாமுனியாகவே இருந்தது.
ஆனாலும் தேங்காய்களுக்கு தேவையில்லாத சில்லாடைகளை ஆதரவாக வைத்து ஒரு
குருவிக்கூடு இருந்தது. அதற்குள் இரண்டு குருவிகள் வாய்களை தீப்பந்தங்களாக
காட்டின. அவருக்கு அந்த கூட்டை சிதைக்க மனம் வரவில்லை. அப்படியே இறங்கி
விட்டார். மற்றபடி அத்தனை மரங்களையும் சீராக்கி விட்டார். பழுப்பேறியவை
பளபளத்தன. வெள்ளை யும் தொள்ளையுமாய் மின்னின.
-
கந்தய்யா வேலை முடித்த களைப்பில் - அதுவே ஒரு திருப்தியைக் கொடுக்க தேங்காய்களை
பொறுக்கிக் கொண்டு முன்புறமாக வந்தார். எதையோ பெருக்கிக் கொண்டு இருந்த முனுசாமி
உள்ளே ஓடினான். அந்த அம்மாவும் சிம்மாசன மேடைக்கு வந்தாள்.
"பரவாயில்லையே மூன்று மணி நேரத்திலே முடிச்சுட்டியே....
"என்ன முனிசாமி இவன் என்ன சொல்றான்,"
"வீட்டுக்கு சீக்கிரமாகப் போகணுமாம். கொஞ்சம் பிரச்சினையாம்.
"பிரச்சினை இல்லாத நாடு எது வீடு எது.... ஏய் சுதாமா... நம்ப கந்தப்பாவுக்கு பக்கடாவும்
டீயும் கொண்டு வாடி பாவம்... ரொம்ப கஷ்டப்பட்டுட்டான்.
சுதாமா சொல்லப் பொறுக்காமல் ...ஏற்கனவே சொல்லப் பட்டவள் போல், ஒரு ஈயத்தட்டில்,
பக்கடாச் சிதைவுகளை யும் கண்ணாடி டம்ளரில் டீயும் கொண்டு வந்தாள். இப்போது,
தன் பங்கு குறைந்து போன ஆத்திரத்தில் அந்த தட்டை கந்தய்யாவின் கையில் சுடச்சுட
வைத்தாள். ஆனால் காய்ப்பு கைக் கொண்ட கந்தய்யா டீயை ஒரே மடக்கில் குடித்தார்.
பக்கடாவை பசங்களுக்காக மடிக்குள் வைக்கப் போனார். பிறகு, அதுகளுக்கு பிரியாணி
வாங்க போவதை நினைத்துக் கொண்டார். குருவி கூடு கொண்ட மரம் போக மீதி
பதினான்கு மரத்துக்கு ஐந்து ரூபாய ரேட் படி எழுபது ரூபாய். அம்மா ஆறு ரூபாய் ரேட்
போடுவாங்க. அப்போ சே கணக்கு வர மாட்டேங்க.... வந்த காலத்திலே எழுபதுக்கு
மேலே எண்ணிப் பார்த்தேன்
"ஏய் சுதாமா இந்த ரூபாயை கந்தப்பனிடம் கொடு. மூணு மணி நேரத்துக்கு மூவைந்து
பதினைந்து ரூபாய்தான். பாவம் நல்லவன். பொழைத்துப் போறான்.
சுதாமா, கையில் திணித்த இரண்டு பத்து ரூபாய் நோட்டுக்களை கந்தய்யா நம்ப
முடியாமல் பார்த்தார். ஒரு வேளை, ஆறேழு ஐந்து நோட்டுக்கள் ஒன்றோடு ஒன்று
ஒட்டி இருக்குமோ என்று அந்த நோட்டுகளை பிதுக்கினார். அவை கிழியப் போவது
போல் தோன்றின. அவர் அந்த அம்மாவை லேசான ஆத்திரத்தோடு பார்த்தார்.
அவளோ இப்பொழுது மங்களகரமாக சிரித்தபடியே சொன்னாள்.
"உன் பிள்ளைகளுக்கு ஒரு தேங்காய் வேண்டுமானால் எடுத்துட்டுப் போ. சமையலுக்கு
ஆவும். உன் சம்சாரம் சந்தோஷப்படுவாள்."
சம்சாரத்தை நினைத்தவுடனே, அவள் காடா துணி இல்லாமல் வரும் தன்னைப் பார்த்து
கத்தப்போகிறாள் என்ற பயம் கந்தய்யாவை பற்றிக் கொண்டது. இதயத்தில் கோபம்
ஊற்று எடுத்தது. அதில் கொதித்தெழுந்த வார்த்தைகளை வயிற்றில் இருந்த பழைய
சாதம் இழுத்துப் பிடித்தது. அப்படியும் மேலே போன், ஒரு சில வார்த்தைகளை,
தொண்டைக்குள் இருக்கும் பக்கடா கீழே தள்ளியது. இதை மீறி வாய்க்கு வந்த
வார்த்தைகளை அந்த அம்மாவின் கருணையான பார்வையும், தாய்மையான
தோரணையும் ஆவி ஆக்கின. இந்தச் சமயம் பார்த்து ஒரு போலீஸ் ஜீப் "வணக்கம்
அம்மா, அய்யா இருக்காங்களா...” என்ற குரல் காரர்களோடு உள்ளே வர. அந்த அம்மா
சிம்மாசனத் திண்ணையில் நின்றபடியே அவர்களை ஆசீர்வதித்தாள். பிறகு,
வீட்டுக்குள் அலட்சியமாகப் போய் விட்டாள்.
வேலைக்கார இளைஞன் முனுசாமி, உதடுகளைக் கடித்துக் கொண்டான். இவன்,
'அந்த அய்யா' வேலை பார்க்கும் அலுவலகத்தில் கேஷுவல் அதாவது அன்றாட கூலி.
இந்த வீட்டில் எடுபிடி வேலைகளை செய்து கொண்டே அந்த அலுவலகத்தில்
வேலை பார்ப்பதாக ஒரு ரிஜிஸ்டர். ஆபிஸ் வேலையில் நிரந்தரமாக வேண்டும்
என்பதற்காக வீட்டுச் சாக்கடையை கழுவி விடுவதிலிருந்து சகல சில்லறை வேலைகளையும்
செய்யும் அவன், இப்போது அந்த அம்மாவை மனதுக்குள் கெட்ட வார்த்தைகளினால்
திட்டினான். பிறகு அந்த வார்த்தை அவளுக்கு கேட்டாலும் கேட்கும் என்று பயந்து
போனான். நேரம் கிடைக்கும் போது, இன்றைக்கே, கந்தய்யாவின் வீட்டிற்குப் போய்
அவரைக் கூட்டி வந்ததற்கு அபராதமாக தன் சொந்த பணத்தில் கொஞ்சம் கொடுக்க
வேண்டும் என்று நினைத்துக் கொண்டு, கந்தய்யாவையே, கண்ணிமைக்காமல்
பார்த்த போது...
கந்தய்யா, அந்தப் பிச்சை தேங்காயை எடுக்க வேண்டும் என்ற சொரணை கூட இல்லாமல்,
இரண்டு பத்து ரூபாய் நோட்டுக்களையும், காதுக்கு ஒன்றாய் சுருட்டி, வைத்தபடி,
அந்த பங்களாவைவிட்டு சுருண்டு சுருண்டு, நடந்து கொண்டிருந்தார்.
-------------------
6. பனிப் போர்
அன்று இரவு, எனக்குத் தூக்கம் பிடிக்கவில்லை. காரணம், என்னவென்றும் சொல்லத்
தெரியவில்லை.
இப்போது தூக்கத்திற்கே என்னைப் பிடிக்கிறது. ஆனால் எனக்குத்தான் இந்தத் தூக்கத்தைக்
கண்டாலே பிடிக்கவில்லை. தூங்கக்கூடாது என்று ஒரு எண்ணம். தூக்கத்தின்மீது ஒரு எரிச்சல்.
என்ன வந்தது எனக்கு?
இந்தப் பூமியில் விழுந்த அந்த நாளிலிருந்து, இதோ இப்போது எழுந்து நிற்கும் இந்த நாள்
வரை நானும் தூக்கமும் கடும் சினேகிதர்கள். கடும் சிநேகிதம் கண்ணைக் கெடுக்கும்
என்பது போல் ஆகிவிட்டதா? தூங்குகிற ஒரு காரியத்தை மட்டும்தான் நான் உருப்படியாய்
செய்ததாய் அந்தக் காலத்தில் அம்மாவும், இந்தக் காலத்தில் 'அவளும்' சொன்னதுண்டு;
சொல்வதுண்டு அடர்ந்த முடியும் படர்ந்த முகமும், சர்க்கரை வள்ளிக்கிழங்கின் நிறமும்
கொண்ட என் அம்மா, காதுகளில் பாம்படங்கள் ஊஞ்சலாட பள்ளிக்கூட மணியடிக்கிற
சப்தம் கேட்டு என்னை உசுப்புவாள். பிறகு செம்பில் தண்ணீர் கொண்டு வந்து முகத்தில்
ஊற்றுவாள் அப்படியும் நான் அசைவற்றுக் கிடப்பதைக் கண்டு, தன் முந்தானையால்
என் முகத்தைத் துடைத்து விடுவாள். அம்மா சொல்லித்தான் பொழுது விடிந்தது எனக்குத்
தெரியும். ஆனாலும், சின்ன வயசிலேயே நிரந்தரத் தூக்கமான என் அம்மாவை
நினைக்கும்போதெல்லாம், இடம் தெரியாத ஒரு இடத்திலிருந்து, உருத்தெரியாத ஒரு சுகச்
சோகமான தென்றல் முகத்தை வருடிக் கொடுக்கிறது கண்களை ஈரப் படுத்துகிறது.
இதை ஒரு தடவை என்னுடைய சைக்யாட் ரிஸ்ட் மைத்துனனிடம் விளையாட்டாகச்
சொன்னபோது அவனோ, "அம்மாவின் பிரிவு உங்கள் அடி மனதில் தேங்கி உங்களுக்கு
'ஃபீலிங்க் ஆப் இன்செக்கூரிட்டி'-- அதாவது பயப்பிரமையை ஏற்படுத்தியிருக்கிறது"
என்றான். நான் அட்டகாசமாகச் சிரித்துக்கொண்டே அவனை பயமுறுத்துவது போல்
பார்ப்பேன். பக்கத்தில் நின்ற மனைவிகூட 'இவரா பயப்படுறவரு?.... நம்ம பயமுறுத்தாம
இருந்தா சரி தான்' என்றாள்.
இந்த கடந்தகால நினைப்போடு நின்ற எனக்கு, தலை தரையில் விழுவது போல் துடித்தது.
தூங்க வேண்டுமென்று உடல் தன்னை வளைத்துக் கொண்டது. ஆனால், உள்ளமோ
தூங்கக்கூடாது என்று என்னுள்ளே சொல்லிச் சொல்லி உடம்பை நிமிர்த்தியது.
படுத்த உடனே தூங்கக்கூடியவன் நான். என் மனைவி கூட 'ராமாயணத்துல ராமபிரான்
வில்ல ஒடிச்சது தான் சொன்னது தெரியும். எடுத்தது தெரியாதுன்'னு கம்பன் மாதிரி
நீங்க தூங்கறதுதான் தெரியுது. படுக்கையிலே விழுகறது தெரியல. என்ன ஜென்மமோ'
என்பாள். நான் தூக்கத்தில் புரள்வதை தப்பாக நினைத்துக்கொண்டு, 'நான் ஒண்ணும்
அந்த அர்த்தத்துல சொல்லலே' என்று தோளில் கையைப் போட்டுக்கொண்டு சொல்வது
லேசாய் ஒலிக்கும். ஆனாலும் இந்த தூக்க சுகத்தைவிட, அந்த 'சுகம்' எனக்கு பெரிதாய்
பட்டதில்லை. அதை ஈடுகட்ட பகலில் அவளிடம் பல்லைக் காட்டுவேன். அவள் பார்க்கும்
பார்வையில் வாயை மூடிக் கொள்வேன். இல்லையானால் அந்தப் பற்களை அவளே
கிள்ளியெறிந்து வெளியே போட்டிருப்பாள். அப்படிப்பட்ட எனக்கு, இன்றைக்கு தூக்கம்
வந்தாலும் அதை வரவிடக் கூடாது என்று ஒரு வைராக்கியம். காரணம் என்னவாக
இருக்கும்?
அந்த படுக்கையறையில் அப்படியே அசைவற்றிருந்த நான், அந்த அமாவாசை இருட்டில்
மங்கிய பச்சை பல்பின் ஒளி அவள் சிவப்பு முகத்தில் சிந்தி ஒரு அதிசய கலவை நிறத்தை -
சிவப்பு வட்டத்திற்கு பச்சை வேலி போட்டது போல் காட்டியதுண்டு. சில வேளைகளில்,
என் மனைவி என் காதுகளை திருகி, கண்ணிமைகளை நிமிர்த்தி, இறுதியில் மூக்கையும்
வாயையும் தனது உள்ளங்கையால் ஒருசேர அடைத்து என்னை விழிக்கச் செய்து,
முகத்தில் முகம் போடுவாள். அந்த மாதிரி அத்திப்பூ சந்தர்ப்பங்களில் அவள், அழகு
தேவதையாய் தோன்றுவாள். அவளின் பிரிந்த உதடுகள் அற்புதப் புன்னகையாய்
கோடு காட்டும். ஆனால், இப்போது தூங்கிக் கொண்டிருக்கும் அவளைப் பார்க்க
என்னவோ போலிருந்தது. செத்துப் போனவள் போல் வாய் பிளந்திருந்தது. ஒரு காலை
செங்குத்தாய் தூக்கி, மறுகாலை, முப்பது டிகிரியில் சாய்த்து அசிங்கம் அசிங்கமாய்...
அதுவும் உருமி மேளம் மாதிரியான குறட்டை .... என் பார்வைகூட தாளமாட்டாது
மார்பகத்தை முந்தானையால் மூடிக் கொள்கிறவள் இப்போது.... இதையெல்லாம்
சொல்லப்படாது... அவள் திருக்கோலத்தை இந்தத் தூக்கம் அலங்கோலமாக்கி
விட்டது. தூக்கம் உயிரினத்தை மூச்சை முடிக்காமலே பிணமாக்கும் எமதூதன். வருவதை
உரைக்கும் ஆரூடம். இந்தத் தூக்கம் எனக்கு வேண்டாம். வேண்டவே வேண்டாம்.
நான் படுக்கை அறையிலிருந்து வெளிப்பட்டேன். கூடத்தில் அங்குமிங்குமாய் நடமாடினேன்.
பிறகு எதிர்த்திசையில் சுவரோடுசுவராக அதே நிறத்தில், இருந்த கதவை தள்ளிக்கொண்டு,
உள்ளே போனேன். அங்கே என் மகள் 'பிளஸ் டூ' மீனா, மோவாயையும் முன்
தலையையும் படுக் கையில் மறைத்து குப்புறக் கிடக்கிறாள். பாவாடை தாவணி
யானாலும், சல்வார்கமீஸானாலும் சரி, தன்னாலேயே அவை அழகுபடுகின்றன என்ற
தோரணை காட்டும் அவள், இப் போது இரு கண்களிலும் ஊளை பிறள உதட்டோரங்களின்
இரு பக்கமும் எச்சில் நோடுகள் செதில் செதிலாக அருவருப் பாய் கிடக்கிறாள். அவள்
பக்கத்துப் படுக்கையில் படுத் திருக்கும் எனது மகன் முள்ளம்பன்றி மாதிரி உடம்பைச்
சுருக்கிக் கொண்டு கிடக்கிறான். மூக்கு ஒழுகுகிறது ஏறும் போதும் இறங்கும் போதும்
ஒவ்வொரு படியாய் துள்ளிக் குதிக் கும் என் மகன் பல திரைப்படங்களைப் பார்த்ததாலோ
என் னமோ, ஸ்லோ மோஷனில் ஓடுவது போல் நடந்தும், நடப் பது போல் ஓடியும்
அழகு காட்டும், என் மகனை இந்தத் தூக்கம் இப்படி தாற்காலிக பிணமாக்கிவிட்டது.
என்னால் தாள முடியவில்லை. அவர்களை எழுப்பி விடப் போனேன். மகள், மகனையும்,
மகன், மகளையும் தூக்கத் தொல்லைகளாக நினைத்து கண்களை மூடிக் கொண்டே ஒருவரை
ஒருவர் திட்டிக் கொண்டார்கள். அவர்களை அந்தக் கோலத்தில் பார்க்க மனமில்லாமல்,
வெளியே பால்கனி பக்கம் வந்தேன். மார்பளவு உயர்ந்த இரும்பு கிராதிகளின் மேல்
உடம்பு வளைத்துப் போட்டுக்கொண்டு அந்தத் தெருவை கீழ்நோக்கி பார்த்தேன். ஒரே
இருள் மயம். தெருவோர கார்ப்பரேஷன் விளக்குகள் எலும்புக்கூட்டிற்கு மேல்
கண்ணாடித் தோல் போர்த்தப்பட்டு லேசு லேசான வெள்ளையாய் தோன்றின. ஆனாலும்,
அவற்றையும் தூக்கம் பிடித்துக் கொண்டது. உள்ளே ஒளியில்லை. வெளியே வியாபித்த
இருட்டுக்கு அது பயந்துவிட்டது.எல்லாம் இந்தத் தூக்கமே காரணம். தூங்காமைதான்
ஆன்மாவுக்கு அழகு சேர்ப்பது.
எனக்கு ஏனோ அங்கு நிலவிய இருள் பிடித்தது. இருளா அல்லது இருட்டா? இரண்டுக்கும்
வேறுபாடு உண்டு. பகலில் நிழல் இருள் சூரியனின் சடலம் இருட்டு. எதுவோ எனக்கு
இந்த இருள் பிடிக்கிறது. இந்த இருளுக்குள் ஒரு ஒளியைக் காண்கிறேன். நான் தூங்க
மாட்டேன். நான் ஏன் தூங்கக்கூடாது? அசையும் பொருள், அசையாப் பொருள்
அத்தனையும் தூங்கும்போது, எதிரே உள்ள வீடு களை முழுமையாக மறைத்து இருள்
மயமாய் தோன்றும் தாவர சங்கமம் அசையும் நிலையிலிருந்து அசையா நிலைக் குச் சென்று
தூங்கும்போது, நான் ஏன் தூங்கக்கூடாது? ஏனோ? எதுவோ?
நான் லேசாய் பயந்து போனேன். ஆனாலும் 'தூங்காதே, தூங்காதே' என்று என்னுள்ளே
ஏதோ ஒன்று சொல்லச் சொல்ல, நானும் எனக்குள்ளே அப்படி திருப்பி சொல்லிக்
கொண்டேன். கண்களைத் திறந்து வைத்து தூக்கத்தை வழிமறித்தேன்.
அந்த அந்தகார இருளில், நிசப்தமே சப்தமாகியது. புறத்தில் ஏற்பட்ட அசைவின்மை,
அகத்தை அசைவித்தது. ஏதோ ஒன்றுடன்-இருளுக்கும் ஒளிக்கும் அப்பாற்பட்ட ஒன்றில்
ஐக்கியமானது போன்ற நினைப்பு ... அந்த இருட்டே ஒளியானது போன்ற எண்ணம்.
தனித்துப் போவதை நினைவூட்டும் தனிமை. அதுவே அங்கும் இங்கும், எங்கு மாய்,
ஏகமாய், அநேகமாய், பிரகாசிக்கிறது. தலையின் உட்பக்கம் ஒரு குகையாகிறது.
உச்சியில் ஒரு ஒளி. அந்த ஒளி வெள்ளத்தில் பிரபஞ்சம். நட்சத்திரக் குவியல்கள்.
அண்ட அடுக்குகள்.... பேரடுக்குகள்.... நான் நிரந்தரம் என்ற ஒரு பூரிப்பு.... இருள்
ஓளியாகவும், ஒளியை இருளாகவும் பார்த்துப் பழக வேண்டும் என்ற ஒரு தத்துவச்
சிந்தனை. தனிமையிலேயே, ஒரு தனித்துவம், நிரந்தரத்தைப் பற்றிய நினைப்பு.
கூடவே ஒரு பயம்.... நான் ஏன் தூங்கக்கூடாது? இப்படி இருப்பதே ஒரு நிரந்தரம்
என்றால்....இது ஒரு நரக மாகாதோ?
எனக்கு லேசாய் பயம் பிடித்தது. வாழ்ந்தது தற்காலிகம். வாழப்போவது நிரந்தரம் என்ற
எண்ணம் இல்லை, இல்லை. வாழ்வுமில்லை. வாழப் போவதுமில்லை என்ற சிந்தனைச்
சிக்கல். அது உள்ளத்தைப் பின்னப் பின்ன, அந்தப் பின்னலை பிரிக்கும் முயற்சியாக
சிந்தனையைத் திசை திருப்ப முயற்சித்தேன். எனது அலுவலக தனியறைக்குள் மானசீகமாக
நுழைந்தேன். அன்று பகலில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது நான் என்
அறைக்குள் நுழையும்போது, வெளியே உள்ள ஊழியர்கள் எனது அறையை உற்றுப்
பார்த்துவிட்டு என்னைப் பார்க்கிறார்கள். லேசாய் சிரிக்கிறார்கள். நான் உள்ளே நுழைந்தால்,
நான் மகளாய் நேசிக்கும் என் அந்தரங்க உதவியாளிப் பெண் 'அந்தப் பித்துக்குளி இன்னும்
வரலை. அது இருந்தா இப்படிப் பேச முடியுமா" என்று டெலிபோனில் பேசிக் கொண்டிருக்கிறாள்.
என்னைப் பார்த்ததும் டெலிபோனை தொப்பென்று மேஜையில் போட்டுவிட்டு,
பேச்சற்று மூச்சற்று வெளியேறுகிறாள். எனக்கு லேசாய் கோபம் வருகிறது. ஆனாலும்
சிரித்துக் கொள்கிறேன். அவளின் அநாகரீகத்திற்கு நான் அநாகரிகத்தாலேயே பதில்
அளிக்கக்கூடாது என்று உறுதியாக இருக்கிறேன். அதோடு; சின்ன வயதில் அம்மா
என்னை தவிக்கவிட்டுச் சென்ற நாளிலிருந்து இத்தகைய அவமானங்கள் எனக்கு
அத்துப்படி. ஆனாலும் மனசு ஏனோ கேட்கவில்லை. இந்தச் சமயத்தில் எனது இன்னொரு
உதவியாளர் மாரிமுத்து உள்ளே வந்தான். எடுத்த எடுப்பிலேயே என்னைச் செல்லமாக
இப்படி திட்டி னான்.
"என்ன ஸார் அநியாயம். உங்க காதுபடவே இந்த பத்தினித்தங்கம் இப்படி பேசிட்டுப் போவுது.
நீங்க, அவளை இன்னும் விட்டு வச்சிருக்கீங்களே ....உங்க இடத்தில் நான் மட்டும் இருந்தால்,
இந்நேரம் அவள் சீட்டைக் கிழிச் சிருப்பேன். அதைக் கிழிக்கிறதுக்கு எவ்வளவோ
காரணங்கள் இருக்கு.... ஒரு வார்த்தை சொல்லுங்க. நான் பார்த்துக்கறேன்.... ஏன் சார்
இப்படி சிரிக்கிறீங்க? உங்களுக்கு நீங்களே இப்படி கண்டிப்பா இருக்கிற மாதிரி,
பிறத்தியார் கிட்டேயும் கண்டிப்பா இருக்காட்டால் அந்த கண்டிப்பு ஒரு நடிப்பா யிடும்.
சிறுமை வரும்போதெல்லாம் அப்பப்ப வெடிக்கணும். மனசில இருக்கிற வெடிகளை
வாய் வழியா விடணும் இல் லேன்னா ஒரேயடியா வெடிச்சுப் போயிடுவோம்"
நான் அசட்டையாய் இருப்பதைப் பார்த்துவிட்டு, அவன் போய்விட்டான். அவன் வாய்
முனங்கியது. ஒரு வேளை அவள் எனக்கு கேட்கும்படி பேசியதை இவன் கேட்காமல்
பேசுகிறானோ என்னமோ? மனம் சங்கடப்பட்டது. அனைவரையும் சமமாக பாவிக்கும்
என்னைப் பற்றிய அவனது மதிப்பீடு என்னை எனக்குள்ளே தாழ்த்திக் கொண்டே
இருந்தது. இப்படித்தான் அம்மா இறந்த சமயத்தில் வாத்தியார் 'ஏ.சி.சி.ல சேர
விரும்புறவங்கல்லாம், எழுந் திருங்க' என்றார் நான் மற்ற மாணவர்களோடு எழுந்தேன்.
உடனே பக்கத்தில் இருந்த டிரில் மாஸ்டர் 'உன் உடம்பு தாளாது... உட்காருடா' என்றார்.
நான் கூனிக் குறுகி உட்கார்ந்தேன். இப்போது ஏனோ எனக்கு அந்த நினைப்பு வந்தது.
நான் சிறுமை கண்டு தவித்தபோது கடைநிலை ஊழியனான கண்ணன் உள்ளே வந்தான்.
நான் முகத்தை கேள் வியாக்கிய போது 'ஸார்.... வீட்டில சொகமில்லே பிள்ளைத்தாய்ச்சி ...
சிசேரியன்ல முடியுமோ என்னமோ. டெலிபோன் வந்தது.... கொஞ்சம் பெர்மிஷன்' என்று
இழுத்தான். உடனே நான் பதைபதைத்து இருக்கையிலிருந்து எழுந்தபடியே 'உடனே
டாக்டரன்டே கட்டிட்டுப் போ.... பணம் தேவையா' என்று கேட்டுவிட்டு, மீண்டும்
அவனைப் பார்த்தபடியே உட்கார்ந்தேன். அவனோ ‘எனக்கு ஒண்ணும் வேணாம்
ஸார்.... என் வீட்டுக்காரிக்கு சுகப்பிரசவம் ஆகணும்னு கடவுள வேண்டிக்குங்க... நீங்க
என்ன வேண்டினாலும் அது நடக்கும்... போன தடவை என் தம்பிக்கு வந்த
இண்டர்வியூ பற்றி உங்ககிட்ட சொன்னேன். நீங்க ஆசீர்வாதம் செய்தீங்க...
அதனாலேயே எந்த சிபார்சும் இல்லாமலே அந்த வேலை அவனுக்கு கிடைச்சுது பாருங்க....
நீங்க அநுமான் மாதிரி. உங்க சக்தி உங்களுக்குத் தெரியாது .!
என் அறையைவிட்டுப் போகும் அவனை ஸ்ரீராமனைப் பார்ப்பது போல் பார்த்தேன்.
என்னுள்ளே ஒரு பூரிப்பு... ஆமாம்.... எனக்குள்ளும் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது. என்
வாயிலிருந்து வருபவை எல்லாம் பலிக்கின்றன என்று பல நண்பர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
எனக்கு தியானம் சிறிது பழக்கம் .. மூன்றாவது கிராஸ் தெருவில் மூலையில் ஒரு குடிசை.
அங்கே ஒரு சாமியார். குடிசை சாமியார் என்பதால் கோபுரக்காரர்கள் பார்வை படாதவர்.
ஒருநாள் மனைவியைக் காணவில்லை என்று அவள் போகாத கோவிலுக்குள் நான்
போனபோது, அந்த சாமியாரைப் பார்த்து சிரித்து ஒரு வணக்கம் போட்டேன். உடனே அவர்,
எனக்கு ஒரு தியான முறையைச் சொல்லிக் கொடுத்தார். ஒலியை உருவகப் படுத்தி, வாய்,
தொண்டை, இருதயம், ஈரல், தொப்புள், ஆசனவாய், முதுகுத்தண்டு, பின் தலை, நெற்றி,
காதுகள், கண்கள், மூக்கு முனைகள் வழியாய் கொண்டு செலுத்தி உச்சந்தலைக்கு
உட்புறம் ஜோதி மயமாய் நிறுத்தி தரிசனம் காண வேண்டுமென்று சொல்லிக் கொடுத்தார்.
அதற்குக் கை மாறாக பத்து ரூபாய் கொடுத்தபோது 'நீ எனக்கு தருவது சந்தோஷம் நான்
உனக்குத்தருவது மகிழ்ச்சி. மகிழ்ச்சிக்கு சந்தோஷம் ஈடாகாது' என்று சொல்லிவிட்டு,
அந்தப் பத்து ரூபாயை சந்தோஷமாகவோ, மகிழ்ச்சியாகவோ வாங்கிக் கொண்டார்.
இந்தத் தியான முறையை என் நண்பர் அருண் வீரப்பனிடம் சொன்னபோது "காலையில்
மூன்று மணிக்கும் நாலரை மணிக்கும் இடையேயுள்ளது பிரம்ம முகூர்த்தம்; இதில், சரஸ்வதி
தேவி மகா விஷ்ணுவுக்கு வீணை வாசிப்பதாக ஐதீகம். இந்தச் சமயத்தில் தியானியுங்கள்.
ஆனால், அதற்குப் பிறகு தூங்கக் கூடாது. அப்படித் தூங்கினால் உடம்பிலிருந்து
வெளியேறுவதற்காகக் கிளம்பும் நோய் நொடிகள் உடம்புக்குள்ளேயே மறு இடங்களில்
படிந்து கொள்ளும்" என்றார். ஆனாலும், ஆழ்ந்த தியானத்திற்குப் பிறகு என்னால்
தூங்காமல் இருக்க முடியவில்லை. இதனால் தியானத்தைக் கைவிட்டேன். இப்போது
தியானிக்கலாமா? வேண்டாம். மீண்டும் தூக்கம் வரும். இந்த விழிப்புணர்வே ஒரு
தியானம் தான். நான் அணுவினுள் அணு. அண்டத்தின் பேரண்டம். நானே பக்தன்.
நானே கடவுள்.
நான் பால்கனி தரையில் உட்கார்ந்தேன். எல்லாமே நான் என்றால், எதற்காக தூங்காமல்
இருக்க வேண்டும்? இருக்கத்தான் வேண்டும். அதுவே ஞானம். அதுவே மோட்சம். நான்
அண்டசராசரங்களை என் தலைக்குள்ளே சுற்றவிட்டேன். நெற்றிப் பொட்டை விசும்பாக்கி,
அடி வயிற்றை நிலமாக்கி, கண்ணை அக்னியாக்கி, மூச்சை வாயு வாககி, ஆனந்தக்
கண்ணீரை நீராக்கி, பஞ்சேந்திரியங்களின் ஒட்டு மொத்த உருவாக என்னைப்
பாவித்துக் கொண்டேன். திடீரென்று உடுக்கையுடன் சிவன் தோன்றினான். நான் எழுந்து
ஒரு காலைத் தூக்கி அங்குமிங்குமாய் ஆட்டினேன். ஊழிக்கூத்தனுக்கேற்ற ஞானக்கூத்து.
பிறகு அப்படியே உட்கார்கிறேன். தூங்க வேண்டும், தூங்கக் கூடாது என்ற துவைத
நிலையற்று அத்வைதமாக இருக்கிறேன்.
மனைவி என்னை உசுப்பவதை உணர்கிறேன். அவள் படபடப்பாய் பேசுவதைக் கேட்கிறேன்.
"என்ன இங்க வந்து உட்கார்ந்திருக்கீங்க.... கண்ணெல்லாம் சிவப்பா இருக்கே?
ராத்திரி தூங்கலியா? என்னங்க, உங்களைத் தான... ஏன் இப்படி பித்துப்பிடிச்சி இருக்கீங்க?”
அவள் சப்தம் கேட்டு, மகனும், மகளும் வருகிறார்கள். நான் உபன்யாசம் செய்வது போல்
அமைதியாக பதிலளிக்கிறேன்.
"பயப்படாதேம்மா - தூக்கம் விழிப்பின் சத்துரு... ஞானத்தின் எதிரி. தூங்காமல் தூங்கும்
சுகத்தை கற்றுக் கொண்டேன். எனக்குக் கிடைத்த ஞானோதயம் உங்களுக்கும்
கிடைக்க வேண்டும் என்பதே என் ஆசை. ஆனாலோ ஆசை கூடாது. புத்தர் மற்றவர்களுக்காக
தனது நிர்வாணத்தை தானே மறுத்தது போல் நானோ உங்களுக்காக என் ஆசையை
நானே விடாமலே வைத்திருக்கிறேன்.
என் மனைவி அழுவதைப் பார்த்தேன். அவள் விம்மலைக் கேட்டேன். அவள் உள்ளறைக்குள்
ஓடினாள். டெலிபோனை எண்களைச் சுழற்றினாள். "சீக்கிரம் வாண்ணா....சீக்கிரம்
வாண்ணா' என்று அழுது கொண்டே அரற்றினாள். பிறகு என்னிடம் மீண்டும் வந்து
மகனையும், மகளையும் என் இரண்டு தோள்களிலும் சாத்திக் கொண்டு விம்மினாள்.
இதற்குள், என் டாக்டர் மைத்துனன் ஒரு காரோடு வந்தான். நன்றாக நடக்கடிய என்னை,
அவனும் அவளும் கைத்தாங்கலாய் படியிறக்கி காருக்குள் திணிக்கிறார்கள் குழந்தைகள்
அம்மாவைப் பார்த்தபடியே அழுகின்றன. அவளோ, அக்கம் பக்கம் பார்த்தபடியே
கண்களைத் துடைத்துக் கொள்கிறாள். கால் மணி நேரத்தில் ஒரு மருத்துவமனையில்
தனி அறைக்குள் திணிக்கப்படுகிறேன் ஸ்டெதாஸ்கோப் மாட்டாத ஒரு டாக்டர் என்
மைத்துனனிடம் "ட்ரான்ஸ்குலைஸர் கொடுத்தா சரியாயிடும். அதுல முடியாட்டா ஷாக்
ட்ரீட்மெண்ட் கொடுக்கலாம்! உங்க ஸிஸ்டருக்கு ஆறுதல் சொல்லுங்க... அவரை
எப்படியும் குணப்படுத்திடலாம்" என்கிறார்.
என்னுள்ளும் ஒரு பயம். நேற்றிரவு முதல் என்னுள் ஏற்பட்டது அந்த கடைநிலை ஊழியன்
சொன்னது போல் ஞானமா? அல்லது அந்த பெண் சொன்னது போல் பித்துக் குளித்தனமா?
ஒரு வேளை ஒருவனுக்கு பைத்தியம் பிடித்தால், அவன் சிந்தனை இப்படித்தான் இருக்குமோ?
சிந்தாதிரிப்பேட்டை ஆறுமுகம், 'நான் கடவுள், நான் கடவுள்' என்று பைத்தியத்தில்
புலம்பியது மாதிரி புலம்புகிறேனோ? நான் பைத்தியமோ? அதனால்தான் மனைவி
இப்படி அழுகிறாளோ? இல்லை .. ஆமாம். அவள் அஞ்ஞானி. அப்படித்தான் அழுவாள்.
நான் பைத்தியம் என்றுதான் நினைப்பாள். ஆனால் நானோ -ஞானி. புத்தனாய்
ஆனவன். ரமணரிஷியாய் போனவன். ரமணரைக் கூட பைத்தியம் என்று ஆரம்ப
காலத்தில் அவர் மீது சிறுவர்கள் கல்லெறிந்தார்களாமே? சேஷாத்திரி சுவாமிகளைக் கூட
பைத்தியம் என்று போலீஸ் ஸ்டேஷனில் அடைத்தார்களாமே? அவர்களைப் போலத்தான்
நானும். நான் பைத்திய மில்லை. ஞானி. ஞானவான். அது சரி, ஞானத்திற்கும்
தூக்கமின்மைக்கும் என்ன சம்பந்தம்? தட்சிணாமூர்த்தி கூட கண்ணை மூடிக் கொண்டு
தானே இருக்கிறார்? அனந்த சயனம் கூட பாற்கடலில் அரிதுயில் கொள்கிறானே. நான்
ஏன் தூங்கக் கூடாது? தூங்கக் கூடாது என்று ஏன் அப்படி ஒரு எண்ணம்? ஞானத்திற்கும்,
தூக்கமன்மைக்கும் என்ன சம்பந்தம்? ஒருவேளை எனக்கு பைத்தியம் பிடித்து விட்டதோ?
இல்லை. ஞானம் என்னைப் பற்றிக் கொண்ட து... ஞானமா? பைத்தியமா?....
பைத்தியத்தின் முற்றலா? அல்லது ஞானத்தின் துவக்கமா?
மனைவியின் அழுகைச் சப்தம் என்னை நிமிர்த்துகிறது. அந்த அறை வாசலுக்குள்
மாயமாய் மறைந்து போன, டாக்டர் இப்போது ஊசி மருந்தோடு வருகிறார். நடந்ததைக்
கேள்விப்பட்டோ என்னமோ, அந்த குடிசை சாமியாரும், விபூதிப்பையோடு வருகிறார்.
இருவரும் என்னை நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த பனிப்போரில் யாருக்கு
வெற்றி என்று பார்ப்போம்.
----------------
7. ஒரு குடியின் வரலாறு
அந்த மோட்டார் பைக்கிலிருந்து இடது பக்கமாக சரிந்து சரிந்து கீழே விழாமல் தொற்றிக்
கொண்டிருப்பவர் போல் அந்த வாகனத்தைத் திருப்பாமல் தன்னைத் திருப்பிக் கொண்டிருந்த
ராமசாமி தனது வீடு உள்ள தெருவில் மாடி பால்கனியில் மனைவியைப் பார்த்ததும்,
மேல் அதிகாரியை பார்த்தால் எப்படி நிமிருவாரோ அப்படி நிமிர்ந்தார். வழக்கம் போல்
இன்று காலையில் கூட "ஹாண்டில லேசா திருப்பினா வண்டி தானா திரும்பிட்டுப் போகுது.
நீங்க எதுக்காக தலைகீழா தொங்குறீங்க - லூஸ்சு - லூஸ்சு’> என்று மட்டும் அந்தம்மா
சொல்லவில்லை. "தென்னை மரத்தில இருக்கிற ஓணான் காத்துல மரம் ஆடுப்போது
அந்த மரத்தை தான் ஆட்டுறதா நினைச்சு தலைய ஆட்டுமாம். நீங்க என்னடான்னா
உடம்ப முழுசும் இல்ல ஆட்டுறீங்க' என்று உதாரணத்தோடு அந்தம்மா, பேச்சை
முடித்தாளா என்றால் அதுதான் இல்லை. "எதுக்கும் பரம்பரை பரம்பரையா சின்ன
வயசிலயிருந்தே ஓட்டியிருந்தாத் தானே பழக்கம் வரும்'' என்றும் சொல்லி வைத்தாள்.
இது வரை எந்த வாகனத்தையும் வாங்காமல், அவளையும் பின்னால் தூக்கிக்கொண்டு
போகாமல், இந்த ஐம்பது வயதில் அவள் உட்கார முடியாதபடி குலுக்கி எடுக்கும் ஒரு
பைக்கை வாங்கியதை விவகாரமாக்கிக் கொண்டிருக்கிறாள். ஆகையால் இந்த
ராமசாமிக்கும் பைக்கைத் திருப்பும்போதெல்லாம் மனைவியின் ஞாபகம் வரும்.
போதாக்குறைக்கு ஒரு ஓணான் வேறு பூவரச மரத்திலிருந்து தலையை ஆட்டும்.
ராமசாமி தலையை 90 டிகிரியிலும், முதுகெலும்பை நேர்கோடாகவும், வைத்துக் கொண்டு
உட்கார்ந்து கொண்டே ஓடுகிறவர் போல் பைக்கை ஓடவிட்டபோது, அந்தம்மா
மாடிப்படிகளில் அவசர அவசரமாய் இறங்கி கேட்டைத் திறந்து கொண்டிருந்தாள்.
அவர் ஆச்சரியப்பட்டு - அதைக் காட்டும் வகையில், பைக்கிற்கு சடன் பிரேக் வேறு
போட்டு விட்டார். மோட்டார் பைக்கை உருமவிட்டுக் கொண்டு பால்கனியில் இருக்கும்
மனைவியைப் பார்த்து "கொஞ்சம் கேட்டைத் திற, கேட்டைத் திற” என்று அவர் பலதடவை
சொன்னாலும், அந்தம்மா ஒரு தடவை கூட திறந்ததில்லை. 'பேசாம திறந்துக்கிட்டு வாங்க'
என்பாள். அந்தப் பயல்களாவது கேட்டைத் திறப்பார்களா....? என்றால் அம்மாவின்
பேச்சை கைகொட்டி ரசிப்பார்கள். ஆனால், இப்போ என்ன வந்தது, எதற்காக இவள்
மோட்டார் பைக் வேகத்திற்கு எதிர் முனையிலிருந்து ஓடி வராள்.
ராமசாமி காலை பிரேக்கில் தேய்த்தபோது, அந்தம் மாள் ஓட்டிவந்த கால்களை தரையில்
தேய்த்தபடி மூச்சு முட்ட அந்த பைக்கின் முன்னால் நின்றாள். பிறகு வாயையே
மூக்காக்கி, மூக்கை வாயாக்கிப் பேசினாள்.
ராமசாமி மெய்யாகவே அதிர்ந்து போனார். ஆகையால், தான் மச்சினியின் வீட்டுக்காரனை
திட்டாமல் இருப்பதற்காகவே தனது வீட்டம்மாள் அவனை அதிகமாகவே திட்டுகிறாள்
என்ற சூட்சமம் அவருக்குப் புரியவில்லை. அவளால் சொல்லப்பட்டவன், குடித்துவிட்டு
எப்படி ஆடுவான் என்பதை கற்பனை செய்து பார்க்கப் பார்க்க அவருக்கே குடிகாரன் போல்
கண்கள் சிவந்தன. தலை சுற்றியது. சிறிது நேரம் பேச்சற்று மனைவியைப் பார்த்தவர்,
பிறகு ஒரு முடிவுக்கு வந்தவர் போல் சாவகாசமாய்ச் சொன்னார்.
'சரி வழிய விடு, எவனும் எக்கேடு கெடட்டும்!... இதுக்கு தான் பாத்திரம் அறிஞ்சு பிச்சையிடு
என்று பழமொழி வந்தது. வழிய விடுடி கேட்ட பழையபடி மூடு, நானே திறந்து பைக்கத்
தள்ளுறேன்.'
இப்போது அந்த அம்மாவுக்கு லேசாய் அழுகை வந்தது. அவரது கடிக்காரக் கையை வருடி
விட்டபடியே பட்டும் படாமல் பேசினாள்.
"பாலைப் பார்க்கிறதா, பால் காய்ச்ச பானையை பார்க்கிறதா....? உங்களுக்கே தெரியும்:
நமக்கு கல்யாணம் ஆன - புதுசுல நம்ம பெரியவனை எடுக்குறதுக்காக பத்து வயசுலேயே
படிப்ப விட்டுட்டு நம்ம கூடவே இருந்தவள் சுந்தரி. அவள் முகத்துக்காகவாவது-'
வேறு சமயமாக இருந்தால், அந்தம்மா அவரை நாரு நாராகக் கிழித்திருப்பாள். இன்றைக்குப்
பார்த்து அவர் காட்டில் மழை. ஆகையால், அவள் கண்களிலும் மழை. ஒரு கன்னத்தில்
பொங்கி வந்த நீரை துடைத்துவிட்டு, மறு கன்னத்தில் அதையே அருவியாய் ஓடவிட்டபடி
அவரையே பார்த்தாள். அவர் ஒரு கமென்ட் அடித்தார்.
தங்கைக்காக ஒரு கண் அழுவுது, மச்சினனுக்காக மறு கண் கொதிக்குதோ....?'
'அப்புறம் என்னை நீங்க என்ன வேணும்னாலும் திட்டிக்கலாம், நான் (இன்னிக்கி மட்டும்)
பதிலுக்கு திட்ட மாட்டேன் அந்த பேயன யாராவது போலீசுல் ஒப்படைக்குறதுக்கு
முன்னால சீக்கிரமா போங்க!'
'சரி... நீயும் வா
'நான் பம்புல தண்ணியடிக்கணும். அப்பத்தான் நீங்க முகம் கழுவ முடியும், ஒங்களுக்குக்
காப்பிப் போட முடியும். அதோட நீங்க ஒருத்தர் போதாதா...?”
ராமசாமி மளைவியையே உற்ருப் பாத்தார்! உடம்பைப் போலவே தடித்த குரல். மோட்டார்
பைக்கின் ஹெட்லைட் போலவே ஏறிட்டுப் பார்ப்பவர்களை கூசவைக்கும் கண்கள். இவள்
போனாலே, அவன் பெட்டிப் பாம்பாய் ஆயிடுவான். ஆனாலும், வர மாட்டாள்; அந்தஸ்து
பார்ப்பதில் அசல் ராணி. தங்கச்சி வீடு ஒரு குடிசைப் பகுதி என்பதற்காக, ஒரே ஒரு தடவை
அதுவும் அவள் குடித்தனம் போகும்போது தெருவில் நின்று வீட்டை எட்டிப் பார்த்துவிட்டு
வந்தவள் அதே சமயம் அங்கிருப்பவர்கள் யார், எவர் என்று தங்கையின் மூலம் கிடைத்த
தகவல்களை வைத்து அவர்கள் சம்பந்தமாக சில அபிப்பிராயங்களை வைத்திருப்பவள்
சிறிது நேரம் அவளை எடை போட்டுப் பார்த்துவிட்டு பைக்கை அங்கேயே நிறுத்திவிட்டு
அந்தத் தெருவையும், அடுத்த தெருவையும் இணைக்கும் ஒரு அசிங்கம் பிடித்த பள்ளத்திள்
வழியாக நடந்தார். அந்தம்மா, கௌரவத்தை மனதில்வைத்து அறிவுறுத்தினாள்.
"பைக்கிலேயே போறது?'
'எனக்கு வார கோபத்துல; இடையில யார் மேலயாவது ஏத்திடுவேன். நடந்தே போய்
தொலைக்கிறேன். பைக்கைத் தள்ளி உள்ளே கொண்டு நிறுத்து!'
ஆணையிட்ட கணவனை, அந்தம்மா அசுரத்தனமாய் பார்த்துவிட்டு, அந்த பைக்கை
தன் வயிற்றால் இடித்து இடித்து தள்ளிக் கொண்டே போனாள். ராமசாமிக்கு அதை
பார்க்க சந்தோஷமாய் இருந்தது. அதே சமயம் அவள் மோதி, அந்த பைக்கு
கூடாதே என்ற பயமும் வந்தது. அதுவும், அவளும் கீழே விழப் போவதைப் பார்க்க
சகிக்காதவர் போல், மைத்துனி வாழும் தெருவில் விறுவிறுப்பாய் நடந்தார். மைத்துனியின்
கணவன் மீது கோபம் கோபமாய் வந்தது. ஆனாலும், அவன் நல்லவன் என்ற எண்ணமும்
ஏற்பட்டது. ஆனாலும், நல்லவன் குடிக்கப்படாதா என்ன? நல்லாவே குடித்தான்.
கிராமத்தில் பல் தேய்ப்பதிலிருந்து,
படுக்கப் போவது வரைக்கும் குடித்தான்...ஆனாலும், இந்த ராமசாமி, லீவிலோ அல்லது
கேம்ப்பிலோ ஊருக்குப் போகும்போது நாலு நாளைக்கு குடியை விட்டுவிடுவான்.
சதா லுங்கியையே கொசுவ வைத்த புடவை போல் கட்டிக் கொண்டிருப்பவன், வேட்டிக்கு
வந்துவிடுவான். இவருக்கு அதில் பெருமை. ஒருதடவை ஒரு லோக்கல் பஞ்சாயத்து
ஆசாமி "நீங்க இருக்கும்போதெல்லாம் குடிக்க மாட்டேங்கிறான். பேசாம மெட்ராஸுக்குக்
கூட்டிக்கிட்டு போய் ஒரு கடை யோ, கன்னியோ வைத்து கரையேத்தி விடுங்க.'' என்று
சொன்ன வாயோடு வாயாய், 'ஏய்... தங்கதுரை உங்க ஆபீசரு அண்ணாச்சிய உடும்புப்
பிடியா பிடிச்சுகடா' என்றார். இவருடைய மனைவியும் 'நம்மால கமலசுந்தரியோட
படிப்புதான் போயிட்டது. அவள் வாழ்க்கையும் போயிடக் கூடாது' என்றாள் அதட்டலாக.
கமலசுந்தரியும், அவள் கணவனும் கூடவே வந்துவிட் டார்கள். இவரும் வேறு வழியில்லாமல்
அவள் புருஷனுக்காக வேலைக்கு அலைந்தார். மைத்துனியும் தனது பிள்ளைகளையே
சுற்றிச் சுற்றி வந்தாள். துணி தோய்க்க வேண்டுமா....? பம்ப் அடிக்க வேண்டுமா ..?
டிபன் பாக்ஸ்களை நிரப்ப வேண்டுமா....? அத்தானுக்கும் அக்காளுக்கும் இடையே போர்
நிறுத்தம் செய்ய வேண்டுமா....? எல்லாம்அவளே!
ராமசாமி, தனது செல்வாக்கில், சென்னையிலேயே அவர்களுக்கு ஒரு மளிகைக்கடை
ஏற்பாடு செய்து கொடுத்தார். டெலிபோன் டிபார்ட்மென்டில் தெரிந்தவர் ஒருவர் மூலம்
ஒரு பொதுத் தொலைபேசியையும் வாங்கிக் கொடுத்தார். ரூபாய்க்கு நாற்பது பைசா
கமிஷன். ஆக மொத்தம், ஆயிரத்து ஐநூறு ரூபாய்க்கு மேல் மாத வருமானம். இப்போது
அவர்களே இவர்களுக்கு 'கைமாத்துக்' கொடுப்பது வாடிக்கையாகி விட்டது. ஆனாலும்,
ஒரு சின்ன வருத்தம் அவளுக்கு. இந்த கமலசுந்தரி எதுக்கொடுத்தாலும் 'எங்க அக்காவால்
இந்த நிலைக்கு வந்திருக்கோம்' என்று அவர் கண் படும்படி முகம் காட்டி, காது கிழியும்படி
முழங்குவாள். இதனால், ஒருதடவை டெலிபோன் பில் 'கால்-களுக்கு' அதிகமாக,
கைக்கு வந்தபோது, அவர் கண்டுக்கவில்லை. ஆனாலும், இன்று அவர் மனசு
கேட்கவில்லை. அவரால் புதிதாக உருவாக்கப்பட்ட அந்த தங்கதுரை, இப்படி மீண்டும்
குடிக்க போய் விட்டானே என்கிற ஆதங்கம் ஆத்திர மாகியது.
ராமசாமி மைத்துனியின் வீட்டு வளாகத்திற்குள் நுழைந்தபோது, தங்கத்துரை தூள்
பரப்பிக் கொண்டிருந் சோடாவை. தான். சாராயத்தில் கலப்பதற்காக வாங்கிய
கர்லா கட்டை மாதிரி கழற்றியபடியே, "ஏய்.... தடிச்சி, ஏய்.... கூனி, ஏய்.... குறுங்கழுத்தி -
வாடி... ஒன்ன இன்னிக்கி உண்டு இல்லைன்னு பண்ணுறேன் பார்..'. என்று சொன்னதையே
சொல்லிக் கொண்டு முன்னாலும் பின்னாலும் போய்க் கொண்டிருந்தான். கமலசுந்தரி,
அந்த வளாகத்திற்குள் அவளே பூமத்திய ரேகை மாதிரி ஒரு கற்பனைக் கோட்டை வரைந்து
கொண்டு, அவன் அந்தக் கோட்டைத் தாண்டி வீட்டுக்கார அம்மாவை நெருங்கப்
போகும்போது பின்னால் தள்ளிவிடுவாள். அவனும்,பின்பக்கமாய் நகர்ந்து நகர்ந்து
கார்ப்பரேஷன் குழாயின் எல்லைச் சுவரில் கால் இடறி, மீண்டும் முன்னுக்கு வருவான்.
மனைவியைப் போலவே அவனுக்கும் வாட்டசாட்டமான உடம்பு. மதம் பிடித்த யானை
போல் இதுவரை 'மாவுத்தனம்' செய்த வீட்டுக்கார அம்மாவை விலாவாரியாக
விமர்சித்துக் கொண்டிருந்தான்.
`யேய் ஒன்னால முடியாட்டி ஒன் டப்பா புருஷன வரச் சொல்லுடி... நீயாச்சு, நானாச்சு -
ஏண்டி, கிழவி.... தெரியாமத்தான் கேக்குறேன்-நீ கக்கூஸ் கதவ பூட்டி வைக்கணும்,
நாங்க வயிறு வீங்கி சாகணுமா...? நீபைப்பு குழாய்க்கு பூட்டுப் போடணும், நாங்க
தாகத்துல துடிக்கணுமா அந்தத் தண்ணி கிடைக்காததுனாலதாண்டி இந்தத் தண்ணி
போட்டேன். நாங்க ராத்திரியில் சாப்பிட்டுக்கிட்டு இருக்கும்போது நீ லைட்ட ஆஃப்
செய்யணும், கண்ணு குருடாகணுமா...? வீட்டுக்கு வரவங்கள நீ...நாயே, பேயேன்னு
திட்டனும், நாங்க அம்மணம் ஆனது மாதிரி தலை குனியணுமா....? சொல்லுடி....
சொல்லுமே.... கரன்ட் பில்ல விட இரண்டு மடங்கா நீ காசு வசூலிக்கணும், நாங்க
எங்க கணக்குக்கூட கேட்கப்படாதா, அதான் இனிமே நடக்காது. ஏண்டி கெழவி ஒத்தைக்கு-
ஒத்தையா வாறியா, நீயாச்சு, நானாச்சு'
கமலசுந்தரி கண்களால் கிழித்த கோட்டைத் தாண்டி அவன் எகிறியபோது அவள் அவனை
மல்லாக்க விழத் தட்டினாள். பிறகு, அவளே அவனை தூக்கிவிட்டு தூசித் தட்டி விட்டாள்.
மீண்டும் அவன் முன்னுக்கும், பின்னுக்கும், தள்ளாடித் தள்ளாடி நடை பயின்றான்.
மழலைத் தமிழும், சென்னைத் தமிழும் நெல்லைத் தமிழும் விரவிக் கலக்க சாராயச்
சூட்டோடு சவுக்கடி கொடுத்துக் கொண்டிருந்தான்.
வீட்டுக்கார அம்மா பயந்து விட்டாள். சற்றே குள்ள மானவள், கர்ப்பிணி பசு மாதிரி
முதுகுக்கு அப்பாலும், இப்பாலும் விரிந்த வயிறு. மலைப்பாம்பு மாதிரியான பார்வை,
பார்த்தாலே பயங்கொடுக்கும் தோரணைக்காரி. ஆனால், இப்போது அடங்கி ஒடுங்கி
'மாரியாத்தா.... மாரியாத்தா' என்று ஆகாயத்தைப் பார்த்து கும்பிட்டாள். கமலசுந்தரியின்
சகக் குடித்தனக்காரிகளான மல்லிகா, கமலா, ஜோதி ஆகிய முப்பெரும் அழகிகளும்,
சந்தோஷம் தாங்காமல் வாயைப் பொத்தினார்கள். வீட்டுக்காரியின் கணவன்,
மனைவியை அடக்கவும் ஒருவன் பிறந்திருக்கிறான் என்ற மகிழ்ச்சியில்
குத்துக்காலிட்டு சும்மாவே உட்கார்ந்துகொண்டு ஒரு டப்பாவை தரையில்
தேய்த்துக் கொண்டிருந்தார். கிழவியின் இரண்டு மகள்கள் கமலசுந்தரியின் பக்கம்
வந்து 'எக்கா... எக்கா....' என்று தடுமாறினார்கள்.
br>
தங்கத்துரை எகிறிக்கொண்டே இருந்தான். ராமசாமி தான் அங்கே நிற்பதை எவரும்
பொருட்படுத்தாததினால், கோபப்படப் போனார். இறுதியில் ஒரு எச்சரிக்கை விடுத்தார்.
ராமசாமி, சொன்னதைச் செய்யப் போகிறவர் போல் நடக்கப் போனபோது,
குடித்தனக்காரிகளில் ஒருத்தியான மல்லிகா சிரிக்க, வீட்டுக்கார அம்மா "வேணாம் சார்,
வேணாம் சார்" என்றாள். எவளோ ஒருத்தி தன்னைப் பொருட்படுத்தி விட்டாள்
என்கிற மகிழ்ச்சியில், ராமசாமி நின்ற இடத்திலேயே நின்றார். கீழே இருந்த வீட்டுக்கார
அம்மா, கமலசுந்தரிக்கு முன்பு வாடகைக்கு இருந்த ஒருத்தியை அரிவாள் மணையால்
வெட்டி, விவகாரம் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் ஆயிரம் ரூபாய் மாமூலோடும்,
'அரக்கி, அடங்காபிடாரி' என்ற அர்ச்சனைகளோடும் முடிந்தது. இப்போது அங்கே
போனால், வீட்டுக்கார அம்மா தெருக்காரியாக ஆகவேண்டி வரும்.
அப்போதுதான், “அண்ணன்" ராமசாமி அங்கே நிற்பதை பார்த்தது போல், தங்கத்துரை
விக்கல்களைக் கக்கிய படியே அவரை உற்றுப் பார்த்தான். பிறகு அவர் கால்களில்
நெடுஞ்சாண்கிடையாக விழுந்தான்.'ஒங்களுக்குக் கொடுத்த வாக்க மீறிட்டேனே,
மீறிட்டேனே' என்று அவர் பாதத்தில் தலையை போட்டு அங்குமிங்குமாய் ஆட்டினான்.
இப்படி, அவன் தன்னை ஒரு முன்னாள அரிச்சந்திரனாக பாவித்துக் கொண்டபோது,
ராமசாமி விசுவாமித்திரர் ஆனார். 'நீ ஆயிரம் சொன்னாலும் ஒன்ன மெட்ராசுல
வைக்கப் போற்துல்ல, கடையையும் ஒன்ன நடத்த விடமாட்டேன்' என்று கத்தினார்.
தங்கத்துரை தலையை நிமிர்த்தி ராமசாமியை கூச்சத்தோடு பார்த்தான். பிறகு அவர்
காலிலேயே தனது தலையை வைத்து இடித்தான். 'அய்யோ....அய்யோ...' என்று அரற்றினான்.
அவனை முன்பெல்லாம் நாயி, அதுவும் சொரி நாயி, எருமை மாடு என்று விமர்சித்த வீட்டுக்காரி
அவரு மவராசனா அடுத்த மாசம் காலி பண்ணட்டும், இல்லாட்டி இருக்கட்டும். நானும் அவரு
சொல்லுறது மாதிரி நடந்துக்க மாட்டேன் கொஞ்சம் திட்டம் செய்துவை சாரே...." என்று
ராமசாமியைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டாள். இதனால், ராமசாமிக்கு இன்னும்
கோபம் அதிகமாகியது. கடித்த பற்களைத் திறக்காமலே நின்றபோது, கமலசுந்தரி,
கைகளைப் பிசைந்தாள். ராமசாமி கடித்தப் பற்களை திறக்காமலே அவற்றை உதடுகளால்
போர்த்திக் கொண்டு சிறிது நேரம் அங்கேயே இருந்தபோது, தங்கத்துரை வாந்தியெடுத்தான்.
அவர் அசூயை தாங்க முடியாமல் கால்களை அவன் மோவாயிலிருந்து விடுவித்துக்
கொண்டே "இப்பவே கடையை சீல் வைக்கிறேன், நாளைக்கே டெலிபோனை கட்
பண்ணுறேன்" என்று சொல்லிக் கொண்டே வெளியேறினார்.
ராமசாமி தன்னைப் பார்த்து சிதறி ஓடிய பன்றிகளுக் கிடையே நடந்தபோது ‘எத்தான்....
எத்தான்....' என்ற சத்தம் கேட்டுத் திரும்பினார். கமலசுந்தரி அவரை வழி மறிப்பது
போல் முன்னால் போய் நின்றாள். அவர் சூளுரைத்தார்.
'விபரீத காலம் வினாச புத்தியாம்' நீ வேணும்னா இருந்து கடையை நடத்து, ஆனா,
உன் புருஷன் இனிமே மெட்ராசுலயே இருக்கப்படாது.... இருக்கவிடமாட்டேன்.'
"சும்மா கிடங்கத்தான், மொதல்ல நான் சொல்லுறத கேளுங்க,... இந்த வீட்டுக்காரி
அட்டூழியம் தாங்க முடியல, இது'க்கிட்ட சொல்லிச் சொல்லிப் பார்த்தேன்... இது
கண்டுக்கல்ல, போட்டா புலி ... போடாட்ட பூனை.. இந்த பூனைய ஒரு நாளாவது
புலியாக்கணும்னு நான்தான் 'அதப் ' போடச் சொன்னேன். இல்லாட்டி இதுவும்
இந்த குதி குதிச் சிருக்காது, அவளும் அந்த மாதிரி அடங்கியிருக்க மாட்டா.
இனிமேல் இத குடிக்க விடாமப் பார்த்துக்கிறது என்னோட பொறுப்பு. சரி.... வீட்ல
வந்து காப்பி சாப்பிட்டுட்டும் போங்க."
"வேண்டாம்மா, ஒன் புருஷன் மிச்சம் மீதி சரக்கு வச்சிருப்பான் அத....நீயே எனக்குத்
தந்தாலும் தருவ..."
"எய்தவள் நான் இருக்கும்போது அம்பைப் போய் நோகறீங்களே.... "அதை குடிக்கச் சொன்னதும் நான்
குடிக்க வெச்சதும் நான்தான். ஒருத்தர் குடிச்சால் குடிக்கிற அந்தக் காரியத்தை மட்டும்
பார்க்கக்கூடாது- அதற்கான காரணத்தையும் கண்டு பிடிக்கனும். இதுக்கு மேலேயும்
நீங்க விரட்டுறதா இருந்தால் என்னைத்தான் விரட்டனும். அந்த வீட்டுக்கார ராட்சசியைப்
பற்றி உங்களுக்கு என்ன தெரியும்."
ராமசாமி பதிலுக்கு கோபமாக பேசப்போனார். ஆனால், அவரையும் மீறி சிரிப்பு வந்தது.
மகளாய் வளர்த்த மைத் துனியின் முதுகை தடவிக் கொடுத்தபடியே, வீட்டை. நோக்கி
நடந்தார்.
-------------------------
8. தாயாகிப் போன மகள்
இந்த முதலாவது தவணை பெண் பார்க்கும் படலத்திலேயே ஒருவேளை மணப்பெண்ணாக
மாறக்கூடிய பவானியை, வழக்கப்படி எவரும் அலங்கரிக்கவில்லை. அவள் தன்னைத்
தானே அலங்காரம் செய்யத் துவங்கினாள். இந்த மாதிரிச் சந்தர்ப்பங்களில், கன்னித்
தன்மை கழியப் போகும் எல்லாப் பெண்களும் சிணுங்குவது போல் சிணுங்கி, நாணிக்
"மாப்பிள்ளைப் கண் புதைக்கத்தான் செய்தாள் பவானி. பையனை எவ்வளவு நேரமாய்
காக்கவைக்க உத்தேசமாம்!" என்று கொக்கரித்தபடியே இடுப்பில் கையை வில்லாக்கி
கண்ணை நெருப்பாக்கினாள் அண்ணி.
பவானி வெட்கத்தைத் தூக்கிக் குப்பையில் போட்டு விட்டு, சமையலறைக்குள் ஓடினாள்.
அண்ணிக்காரி நீட்டிய, அவளது கல்யாணப்பட்டை உடம்பில் சுற்றினாள். அந்தப் பச்சைப்
புடவைக்கு மஞ்சள் ஜாக்கெட் மேட்சாகவில்லை. இதனால் வருகிற மேட்ச் போய்விடக்
கூடாதே....!
மைத்துனி ஜாக்கெட்டைப் பார்ப்பதைப் பார்த்ததும் புரிந்து கொண்ட அண்ணி கனகம்,
"பரவாயில்லை... சேலையை இழுத்து முடினால் சரியாப் போயிடும். இழுத்துத் தான்
மூடணும்” என்றாள்.
பவானி புடவையை ஜாக்கெட் போடாதவள் போல, இழுத்து மூடிக் கொண்டாள்.
அண்ணிக்காரி இப்போதுதான் கண்ணில் காட்டும் பவுடரை பூசிக்கொண்டாள்
"மாப்பிள்ளை பையன் சினிமாக்காரின்னு ஓடிப் போறதுக்கா? இவ்வளவு போதும்.
காதுல விழுகிற முடியை துக்கணும் - கன்னத்தை உப்பி உப்பி பார்க்கப்படாது. காபி
கொடுத்தமா வந்தமான்னு வரணும். இங்கே நின்னு அவனை உற்றுப் பார்க்கறது மாதிரி
அங்கேயும் பார்க்கப்படாது. மாப்பிள்ளை பொண்ணைப் பார்க்கற ஏற்பாடே தவிர பொண்ணு
மாப்பிள்ளையை பார்க்கிறதுக்காக இல்ல... எனக்கும் கொஞ்சம் பூக் கொடுக்கறது'
கொடுக்கிற குடும்பத் துப் பொண்ணுக்குத்தானே இதெல்லாம் தெரியும்..."
மகிழ்ச்சியான எதிர்பார்ப்பில் அல்லாடிய பவானி, தலையில் வைத்த மல்லிகைப் பூவை
ஒட்டு மொத்தமாக அண்ணியிடம் நீட்டிவிட்டு, கையறு நிலையில் தவித்தாள்.
அந்தத் தவிப்பு தாங்கமாட்டாது அண்ணியிடமே ஆறுதல் தேடுபவள் போல் பார்த்தாள்.
வெளியறையில் அண்ணனின் கலகலப் வான சத்தம்.
“ஏதோ என் சக்திக்கு ஏற்ப என் ஸிஸ்டருக்கு கண்டிப்பா செய்வேன் "
"என்ன உளறுறாரு... உளறத் தெரியாமல்.... யாருகிட்ட சக்தி இருக்கு... சிவமேன்னு
பேசாமல் இருக்காமல், இந்த மனுஷனுக்கு இந்தப் பேச்செல்லாம் எதுக்கு....?’
"எங்களுக்குப் பொண்ணு நல்லா இருக்கணும். குடும்பத்துக்கு அடக்கமாய் இருக்கணும்.
அதுவும் முக்கியமுன்னு சொல்லல. அது மட்டும்தான் முக்கியமுன்னு சொல்ல வாறேன்!"
"யாரு இந்த மாதிரி பேசறது... பையனோட அப்பா வா.... முருகா, இவன் குணத்தை
மறைச்சுடலாம். ஆனால் அழகை மறைக்க முடியாதே இந்த மூஞ்சைப் பார்த்து
சம்மதிப்பாங்களா?"
"எங்கப்பா சாதாரண கிளார்க்..அதுவும் கிம்பளம், லஞ்சமுன்னு வாங்காமல் நேர்மையாய்
வாழ்ந்த கிளார்க். இதனால் நானும் கிளார்க்காய்த்தான் வேலையில் சேர முடிஞ்சது....
என் ஸிஸ்டர் எஸ்.எஸ்.எல்.சி.க்கு மேல படிக்க முடியல...
"அப்பா... பொல்லாத அப்பா. தன்னோட லட்சியத்த மற்றவங்க கஷ்டத்துல சோதிக்கறதையே
தொழிலாய்க் கொண்ட மனுஷன். அவரு புத்திக்குத்தான் இப்போ கட்டிலும் உடம்புமாய்
கிடக்காரு. அவர் நடந்துகிட்ட முறைக்கு இவருக்கு ப்யூன் வேலை கூட கிடைச்சிருக்காது.
எப்படியோ எங்கப்பா ஏற்பாட்டுல கிடச்சுது. இதுலவேற எங்கப்பாவாம்.... எங்கப்பா....
எங்கப்பாவுந்தான் வேலை பார்த்தாரு. கிளார்க் வேலைதான். பங்களா கட்டலியா....
மகன்களை பெரிய பெரிய வேலையில் வைக்கலியா, என்னைத் தான் பாடாதி வீட்ல....
பவானிக்கு, கோபம் வழக்கமாக வருவது போல் வந்து, அதுவே பின்னர் இயலாமையாய்
நெஞ்சுக்குள் போய் நெருப்பாய் எரிந்தது. 'ஒரு சமயம் வீட்ல வந்து பத்தாயிரம் ரூபாயை
வச்சுட்டு ஒருத்தன் கெஞ்சுறான். அவனை உடனே போறீயா, போலீஸ்ல ஒப்படைக்கட்டுமான்னு
விரட்டுன எங்கப்பாவையா இப்படிக் கேட்டுட்டே.... ஒன்னைக் கட்டும்போது அதே
பத்தாயிரம் ரூபாயை நீட்டுன ஒங்கப்பாவின் கையைத் திருகி, ரூபாயைப் பறித்து,
அவரோட சட் டைப் பைக்குள்ளேயே திணித்த எங்கப்பாவையா அப்படிக் கேட்டுட்டே...?
ஒங்கப்பா, எங்கப்பாவை அப்போ கைநீட் டிக் கும்பிட்டதை மறந்துட்டியா, இரு....இரு...
எனக்குக் கல்யாணம் ஆகி இந்த வீட்டை விட்டுப் போகும்போது ரெண்டு கேள்வியாவது
கேட்டுட்டுப் போறேன்.'
பவானியின் அலங்காரம் கால்மணி நேரத்திற்குள் முடிந்தது. அண்ணி திட்ட முடியாத
அலங்காரம். இந்த பத்தாண்டு காலத்தில், இன்றைக்கு மட்டுமே உடம்பைச் சுற்றிப்
பட்டுப் புடவை. இன்றைக்கு மட்டுமே கொண்டை சுமக்கிற அளவுக்கு பூ மொந்தை...
* * *
சதாசிவம் ஒரு ஒழுங்குப் பிரச்னையைக் கிளப்பினார்.
"எப்படியோ அப்பாவைப் பற்றிச் சொல்லிட்டேன். இப்போ அவரையும் இங்கே உட்கார
வைக்கணுமே... என்ன சொல்றே...?'”
"தத்துப் பித்துன்னு உளறிப்புட்டு என்கிட்டே வந்து பின் யோசனை கேட்டால் எப்படி?
படுத்த படுக்கையாய் கிடக்கிறவரை மியூஸியத்தில் காட்டுறது மாதிரி காட்டணு மாக்கும்....
அவங்க அபசகுனமாய் நெனைச்சு ஓடணுமாக்கும்"
"அதுக்கில்ல... அவரும் மாப்பிள்ளையை ஒரு தடவை பார்த்தால் நல்லது.... பெண்ணைப்
பெற்றவராச்சே....?>
"அதுதான் அதிர்ஷ்டம் இருந்தால் மணவறையில் பார்த்துக்கலாமே....?"
"சரி, ஒன்கிட்டே சண்டை போட எனக்கு நேரமில்ல. இந்த ஸ்வீட்ஸை எடுத்துக்கிட்டு வா.
பவானி, கடைசியில் காபித் தட்டோட வந்தால் போதும்."
திருவும் திருமதியுமான சதாசிவங்கள், ஒரு பெரிய டிரேயில் ஸ்வீட் தட்டுகளையும்
மிக்ஸர் தட்டுகளையும் சேர்ந்தாற்போல் எடுத்துக்கொண்டு சமையலறையைத் தாண்டிய
போது, அவர்கள் பெற்றுப் போட்ட இரண்டு செல்வங்கள், பெற்றோரை வழிமறித்து,
ஒரு தட்டைக் கீழே வீழ்த்தி புதிய புறநானூற்றைப் படித்துக் கொண்டிருந்தபோது-
அப்போதுதான் அப்பா ஞாபகம் வந்ததற்காக, பவானி சங்கடப் பட்டாள். அதற்காக
தன்னைத் தானே தண்டிப்பவள் போல், தலையில் அடித்துக் கொண்டாள். அப்பாவை
அப்போதே பார்த்து பிராயச்சித்தம் செய்யத் துடித்தவளாய், கொல்லைப்புறத்திற்குப்
போகும் வழியில் இருந்த ஒரு சிற்றறைக்குள் போனாள். ஒரு காலத்தில் இது அப்பாவின்
பூஜையறை. இன்னும்கூட ஒரு திட்டில் சில சாமி படங்கள் இருந்தன. அப்பா
மெத்தையில்லாத மல்லாந்து கிடந்தார். கண்களில் ஒரு டேப் கட்டிலில் கொசு மொய்த்தன.
அவற்றை விரட்டி விரட்டி அடித்து களைத்தவர் போல், இரண்டு கைகளையும் மார்பில்
போட்டிருந்தார்.
பவானி, பெண் பார்க்கும் படலம் நடக்கப் போகிறது என்ற நினைப்பையும் மீறி
பிள்ளைபோல் கிடந்த பெற்றவரை தாய்போல் தவிதவித்துப் பார்த்தாள். அண்ணனையும்
தன்னையும் இடுப்புக்கு ஒன்றாக வைத்துக்கொண்டு ராட்டினம் சுற்றியவர். இப்போது
அச்சறுந்து குப்புறக் கிடக்கும் குடை ராட்டினம் போல் கிடப்பதைப் பதைபதைத்துப்
பார்த்தாள். பத்தாண்டுகளுக்கு முன்பு ரிடையரானவர். ஒங்களுக்கா ஐம்பத்தெட்டு....
நம்ப முடியாத உண்மை 'என்று பிரிவு விழாவில் பேசியவர்கள் எல்லாம் பெரிசாய்ப்
பேசினார்கள். மனதைப் போல் வைரப்பட்ட உடம்பு.
எலும்பும் சதையும் ஒன்றாகி, இறுகிப் போயிருந்த அந்த உடம்புக்குள்ள இருக்கும்
இதயத்திற்கும் ஒரு அட்டாக வந்து விட்டது அநுஷம் போலி மாதம், நீரிழவு இல்லை.
ரத்த அழுத்தம் இல்லை. அப்படியும் பயங்கரமான தாக்குதல்.... அவரை நடமாட
விடாமல் செய்துவிட்டன. லேசாய் எழுந்து, கட்டிலில் உட்கார்ந்து சாயலாம். அதுவும்
உரிய நேரத்தில் உரிய மருந்தைக் கொடுத்தால்....
பவானி, வெட்கத்தையும் மீறி எதையோ சொல்லத் துடி துடித்தாள். "எப்பா, எப்பா"
என்றுகூட பேசிவிட்டாள். ஆனால் கட்டிலோடு கட்டிலாய் அதன் இற்றுப்போன சட்டம்
போல் கிடந்த அந்த மனிதர், தனக்கு எல்லாம் தெரியும் என்பதுபோல், கையைத் தூக்கி,
விரல்களைச் சேர்ந்தாற் போல் குவித்தபோது, பவானி அவர் பாதங்களில் முகம் போட்டாள்.
அவர் பெருவிரல் தூசியையே திலகமாக்கிக் கொண்டாள். அப்போது-
அண்ணிக்காரி ஓடிவந்தாள், "அம்மாவுக்கு கல்யாணம் செய்துக்கிற நெனப்பு இல்லையா....
பொண்ண வரச்சொல்லுங்கன்னு சொல்றது கேட்கலியா?" என்று பல 'இல்லியா'க் களைப்
போட்டபோது, இல்லை இல்லை என்பது போல் பவானி சமையலறைக்குள் போய்,
டிசைன்போட்ட பக்கத்து வீட்டு டிரேயை நீட்ட, அண்ணி காபி டம்ளர்களை அதில்
வைத்தாள்.
தயங்கி நின்ற பவானி, பிறகு யந்திரமாய் நடந்தாள். ஏதோ பணிப்பெண் போல்
எல்லோருக்கும் காபி டம்ளரை நீட்டினாள். மாப்பிள்ளையைப் பார்க்க வேண்டும் என்ற
பேரவா எழவில்லை எவனோ ஒருத்தன்.... நல்லவனோ கெட்டவனோ....கிடைத்தால்
போதும். இந்த நரகத்தில் இருந்து விடுபட்டால் போதும்....
* * *
பவானி ஒவ்வொருவர் முன்னாலும் சற்றே குனிந்து, டிரேயுடன் நின்றாள். பின்னர்-
நாணப்படாமல், நளினப் படாமல், சிற்றுண்டி விடுதி சேவகர் போல், மடமடவென்று
நடந்து சமையலறைப் பக்கம் வந்து நின்று கொண்டாள். அம்மா இல்லாக் குறையை
அழுது தீர்த்தாள். அப்போது-
மாப்பிள்ளைக்குப் பெண்ணை பிடித்துவிட்டது போலும். அப்பாவிடம் எதையோ சொல்ல,
அவர் ஆனந்தக்கூத்தாய் சொன்னார்.
"என் மகனுக்குப் பெண்ணை ரொம்பப் பிடிச்சிருக்கு .. மிலிடேரிக்காரன் பாருங்க....
சட்டுப் புட்டுன்னு சொல்லிட்டான். அவனுக்கு லீவு முடியப் போகுது....அதனால
அடுத்த வாரம் கல்யாணத்தை வச்சுக்கணும். பெண்ணையும் அவன் லூதியானாவுக்கு
கூட்டிட்டுப் போறான். குவார்ட்டர்ஸ் கிடைச்சுட்டதாம். என்னடா சொல்றே! ....ஓ
அப்படியா... சதாசிவம் ஸார்! பையன் என்ன சொல்றான்னா, இது பெண் விடுதலை
காலமாம். அதனால பெண்கிட்டே நேருக்கு நேராய் கேட்கணுமாம். சரி, பொண்ணைக்
கூட்டிட்டு வாங்க.
பவானிக்கு உச்சி குளிர்ந்தது. சமையலறையில் இருந்து வெளிப்பட்டு அந்த அறையின்
பின்சுவரில் சாய்ந்தபடியே, ‘அவரை' ஓரக்கண் போட்டு பார்த்தாள், ராணுவக்காரனுக்கே
உரிய குளோஸ்கட், சிலிர்த்து நின்ற மீசை- லட்சணக் கருப்பு - அதாவது பளபளப்பான
கருப்பு....
"அப்பா, ஒங்க மகளுக்கும் ஒரு காலம் வந்துட்டு..." என்று சொல்லப் போனாள். என்னை
அவருக்குப் பிடித்திருக்குப்பா" என்பதை எப்படிச் சொல்வது என்று தெரியா மல்,
கட்டிலின் விளிம்பில் உட்கார்ந்து, தந்தையின் கையை எடுத்து முத்தமிட்டாள். பிறகு,
மாத்திரையைத் தூளாக்கி அவர் வாயில் போட்டு, டம்ளரின் விளிம்பிலேயே அவர்
உதடுகளைப் பிரித்து மருந்தூட்டியபோது - அண்ணிக்காரி, ஆவேசமாக வந்தாள்.
ஆத்திரமாகக் கத்தினாள்.
"பொல்லாத அப்பா... பொல்லாத மருந்து.... மருந்து வாங்கியே இந்த வீடு மட்டமாப்போயிட்டு.
மனசு இருந்தால் எழுந்து உட்காரலாம்.
பவானியும் தந்தையும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். திடீரென்று அந்தப் பெரியவர் வாய்க்குள் போய்க்
கொண்டிருந்த மருந்தை வெளியே துப்பினார். ஒரு சொட்டுகூட உடம்புக்குள்
போகப்படாது என்பது போல், காறிக் காறித் துப்பினார். இதற்குள், "பெண்ணை வரச்
சொல்லுங்கள்" என்று ஒரு சத்தம்.
பவானி எழுந்தாள். அப்பாவை லட்சியத்தோடும், உதட்டைப் பிதுக்கி நின்ற அண்ணியை
அலட்சியத்தோடும் பார்த்தபடியே நடந்தாள். பிள்ளை வீட்டாருக்கு முன்னால் வந்து,
அவர்கள் கேள்வி கேட்கும் முன்னாலேயே பதிலளித்தாள்.
"நான் யாரையும் அவமானப்படுத்தும் நோக்கத்துல பேசல... இப்போ எனக்கு கல்யாணம்
தேவையில்லன்னு தீர்மானிச்சுட்டேன்.... எல்லாரும் என்னை மன்னிக்கணும்.
பவானி, மனதில் மணவாளனாக சில நிமிடங்களுக்கு முன்பு கற்பிக்கப்பட்டவனைப் பார்த்து
கையெடுத்துக் கும்பிட் டாள். பிறகு கம்பீரமாய் திரும்பி வந்தாள். அண்ணி அமர்க்களப்
பட்டாள். கைகளை நெறித்தாள். அண்ணன், சொல்லாமல் கொள்ளாமல் எழுந்து
போன பிள்ளை வீட்டார் பின்னால் சிறிது நடந்துவிட்டு, மீண்டும் வீட்டுக்குள் வந்து
தலையில் கைவைத்து நின்றபோது, அவர் கையைப் பிடித் தவள் இப்போது கத்தோ
கத்தென்று கத்தினான்.
"இவள் கெட்ட கேட்டுக்கு இந்த பிடிக்கலியாக்கும். எவனைக் கூட்டிட்டு ஓட திட்டம்
போட்டிருக்கான்னு கேளுங்க. பாவி, நம்மை தலைகுனிய வச்சுட்டாளே... இந்த வீட்டுல
இவள் இனிமேல் இருக்கப்படாது.”
பவானி, அண்ணியின் பேச்சை காதில் வாங்காதவள் போல், தந்தையைநெருங்கினாள்.
அவருக்கு விஷயம் புரிந்துவிட்டது.
செத்துக் கொண்டிருந்த தன் கையைத் தூக்க முடியாமல் தூக்கி, மகளின் இடுப்பில்
அடித்தார் அப்பா. சின்னக் குழந்தை பிஞ்சு விரலால் அடித்தால் எப்படியோ அப்படி
இருந்தது அந்த பிஞ்சு விரல் பட்டது. பவானி அழுத்தம் திருத்தமாக அத்தனை
விளைவுகளையும் எதிர்நோக்கத் தயாராக இருப்பவள் போல் கர்ஜித்தாள். அண்ணன்
அண்ணிக்குக் கேட்கும்படி ஒலித்தாள்.
"உங்களை இந்த நிலையில் விட்டுப் போக எனக்கு மனசு வரலப்பா. வேளா வேளைக்கு
மருந்தில்லாமலும் சோறு இல்லாமலும் நீங்க தவிக்கப் போறத நினைச்சால் என்னால்
எப்படிப்பா வடநாட்டில் போய் வாழ முடியும்? உங்களைவிட எனக்கு யாரும்
உசத்தியில்லப்பா. நான் தாயாகிப் போன மகளப்பா... இந்த வீட்ல இடமில்லன்னா....
வேறு எந்த வீட்லயாவது தங்கி கூலி வேலை செய்தாவது உங்களைப் பாதுகாப்பேன்
அப்பா."
* * *
-------------
9. சுண்டைக்காய் சுமப்பவர்கள்
அந்த நட்சத்திர ஹோட்டலில் இரண்டாவது மாடியில், கால் பகுதியை ஆக்கிரமித்திருக்கும்
'கான்பரன்ஸ் ரூம்' எனப்படும் ஆலோசனைக் கூடம். திகில் திரைப்படங்களில்
காட்டப்படுவது போன்ற ஒரு சதி ஆலோசனை அறை போலவே தோன்றியது.
அங்கேதான், தென்னக அரசு அதிகாரிகள் எப்படி எப்படி சிக்கனத்தைக் கடைப்பிடிக்கலாம்
என்று ஆலோசிப்பதற்கு மாநாடு போட்டிருக்கிறார்கள்.
அந்த ஆலோசனைக் கூடத்தை எவரும் எளிதில் கண்டு பிடிக்க முடியாது. அதன்
வெளிப்பகுதி, அப்போதுதான் வார்னிஷ் செய்யப்பட்டது போன்ற வரைவரையான
தேக்குச் சுவராய் எழுந்திருந்தது. அதன் மேல் தேக்குக் கோடுகளும், வெள் அந்தக்
கோடுகளுக்கு இடைப்பட்ட பள்ளத்தாக்கு ளைப் பலகைகளாலும் கலையழகுடன்
காட்சி காட்டியது. இப்படிப்பட்ட இந்தத் தேக்குச் சுவரில் ஒரு மத்திய இடத்தில்
ஒரு சின்ன எவர்சில்வர் பொம்மை. பழகாதவர்களுக்கு அது கலைப் படைப்பாக சும்மா
ஒரு அழகிற்காய் வைப்பது போல் தோன்றும். ஆனால், பழகியவர்களோ, அதை ஒரு
பிடி பிடித்தால், அந்த இடத்திலேயே தேக்குச் சுவர் வாய் திறக்கும். கதவு, நாக்கு மாதிரி
வளைந்து உள்ளே பற்கள் மாதிரியான மின்சார பல்புகளை காட்டும்.
இப்படிப்பட்ட இந்த அறையின் வாய்க்குள் பலர் விழுந்து கொண்டிருந்தார்கள். உள்ளே
சைபர் வடிவத்தில் இரு பக்கமும் நாற்பதடி நீளத்தில் வளைந்துள்ள மேஜை போடப்பட்டு,
இரு முனைகளிலும் அது ஒட்டிக் கொண்டிருந் தது. அவற்றிற்குப் பின்னால் இருபுறமும்
நாற்காலிகள். இரும்போ மரமோ இல்லாதது போல், இலவம் பஞ்சு சுகம் கொடுக்கும்
லெதர் நாற்காலிகள். மேஜைகள் பருவப்பெண் போல் சன்மைக்காவில் மின்னின.
பல இடங்களில் பல்வேறு மைக்குகள். அவற்றின் அடிவாரத்தில் பச்சை, சிவப்பு
கண்ணாடிக் கோளங்கள். மேலே பிரபஞ்சமே தரிசனம் கொடுப்பதுபோல் விதவிதமான
மின்சார விளக்குகள். நட்சத்திர பல்புகள்... நில பல்புகள் கேலெக்ஸி பல்புகள்...
இப்படிப்பட்ட இந்த அறைக்குள் முன் பகுதியில் போடப் பட்ட மூன்று நாற்காலிகளில்
மூன்று கிளாஸ் ஒன்தலைகள் உட்கார்ந்திருந்தன. அவர்களுக்கு எதிர்த்தாற் போல்
பத்து பன்னிரண்டு கெஜடெட் தலைகள். அத்தனை பேரும், நடுவில் உட்கார்ந்திருக்கும்
ஜாயிண்ட் டைரக்டர் ராமானுஜத் தின் வாயையே கண்களால் கொத்தினார்கள்.
அந்த ஐம்பத்தி நான்கு ஜாயிண்டோ, அவசரத்தில் டை அடித்த தனது மீசையின்
இரு நுனிகளும் அணில் வால் மாதிரி கொசுறு முடிகளை காட்டிக் கொண்டிருப்பதை,
'ஜென்டில்மென் அறையில் போய் கண்டுபிடித்ததால், இப்போது அந்த மீசையின்
இரண்டு பக்கத்தையும் இரண்டு கைகளாலும் மறைத்தார். அதை ஒரு சிந்தனைச்
செயலாக இதர அதிகாரிகள் நினைத்தபோது, அஸிஸ்ட்டெண்ட் டைரக்டர் சுந்தரம்
லேசாக இருமினார். அதாவது, நேரம் ஆகிக் கொண்டே இருக்கிறதாம். இதனால்,
கவனம் கலைந்த ராமானுஜம் மீசையை மறைத்தபடியே வாயை வட்டவடிவமாக்கிக்
கொண்டு பேசினார்.
"உங்களோட திறமையை எடுத்துக்காட்ட இது ஒரு சந்தர்ப்பம். இந்த மாநாட்டுக்கு
வரக்கூடியவர்கள் நமது விருந்தாளிகள் என்பதை மறந்துவிடக்கூடாது பெரிய பெரிய
அதிகாரிகள் என்பதையும் மறந்துவிடக்கூடாது. அரசாங்கமே நம்மை நம்பியிருக்கு.
அதுக்கு நாம் இப்போது பக்கபலமாய் நிற்க வேண்டும். நிர்வாகத்தில் எப்படி
சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது என்பதை ஆலோசிக்கும் இந்த மாநாடு வெற்றி
பெற நாம் ஒவ்வொருவரும் சபதம் ஏற்றுக்கொள்ளணும். இதுக்கு எவ்வளவு
செலவானாலும் சரி."
"இந்தச் சந்தர்ப்பத்தில், மாநாட்டின் பூர்வாங்க பணிகளுக்கு பொறுப்பேற்றிருக்கும்
டெபுடி டைரக்டர் மிஸஸ் காயத்திரி மகாதேவன் ஒரு பைலை எடுத்து ஜாயிண்ட்
டைரக்டரிடம் நீட்டினாள். அதைப் புரட்டிக்கொண்டே ராமானுஜம் கேள்விக்
கணைகளைத் தொடுத்தார்.
"அதிகாரிகளுடைய ஹாஸ்பிட்டாலிட்டிக்கு ஓவர் ஆல் இன்சார்ஜ் பாமாதானே?
சொல்லும்மா.... மொத்தம் எத்தனை ஆபீஸர்ஸ் வாராங்க?''
பாமா, தனக்குக் கொடுத்திருக்கும் புதிய பொறுப்பால் பூரிப்படைந்தது போல்,
கன்னங்களை பூரிபோல் உப்ப வைத்தபடி எழுந்து, உபசரிப்புக் குரலில் பதிலளித்தாள்.
"கேரளாவிலிருந்து முப்பது பேர் 20 கெஜட்டட்; பத்து கிளாஸ் ஒன். கர்நாடகாவிலிருந்து
33 பேர்; ஆந்திராவிலிருந்து 35 பேர்; நம்ம ஸ்டேட்டிலிருந்து 33 பேர்; பாண்டிச்சேரியிலிருந்து
ஒன்பது பேர்....ஆக மொத்தம் 117 பேர் '
"இருக்காதே...கூட வருமே... எதுக்கும் கால்குலேட் டரை வைத்து கணக்குப் பாரு.
பாமா, இடுப்புக்குள் மணிபர்ஸ் மாதிரி வைத்திருந்த கால்குலேட்டரை வைத்துக் கணக்குப்
போட்டபோது, புரோகிராம் அதிகாரியான லிங்கன், ஒரு யோசனை சொன்னார்.
"இனிமேல் சிக்கனம் எவ்வளவு பிடிக்கிறோம்னு அடிக்கடி மானிட்டர் பண்ணணும் ஸார்.
அதனால் நம்ம 20 அலுவலகத்திலிருக்கிற 2000 ஊழியர்களுக்கும் கால்குலேட்டர்கள்
வாங்கிக் கொடுத்துடணும். அப்பதான் சிக்கனத்தை சரியாக் கணக்கிட முடியும்."
ஜாயிண்ட் டைரக்டர் ராமானுஜம் அதை ஒப்புக் கொள்வதுபோல் தலையாட்டிவிட்டு,
பேச்சைத் தொடங்கினார்.
"அப்புறம்.... அக்காமடேஷனுக்கு ஏ.ஓ.தானே இன்சார்ஜ்? சொல்லுங்க மிஸ்டர்.... யார் யாரை
எங்கெங்கே போட்டிருக்கீங்க.”
வயிறு முட்டிய நிர்வாக அதிகாரி, 'பணிவன்போடு' பதிலளித்தார்.
"கிளாஸ் ஒன் அதிகாரிகள் நாற்பத்தெட்டு பேர் இவங்களை நுங்கம்பாக்கத்திலுள்ள
ஸ்டேட் பாங்க் கெஸ்ட் ஹவுசிலேயும், அண்ணா சாலையிலுள்ள உணவு கார்ப்பரேஷன்
கெஸ்ட் ஹவுசிலேயும், சென்னை துறைமுக டிரஸ்ட் கெஸ்ட் ஹவுசிலேயும் புக்
பண்ணியிருக்கேன்... கெஜட்டட் ஆபீஸருங்களுக்கு தமிழ்நாடு கூட்டுறவு யூனியன்ல
புக் பண்ணியிருக்கேன். பட்....
"கிளாஸ் ஒன் ஆபீஸர் எல்லோருக்கும் ஏஸி ரூம்... வாடகை நூறு ரூபாய்க்கு மேல..."
"என்னப்பா நீ கூட உன் வீட்டிலே இருந்து படியளக்கற மாதிரி பேசுறே.. இதென்ன
சாதாரண மாநாடா? சிக்கனம் பற்றிய மாநாடு எக்கானமி இன் கவர்ன்மெண்ட்
எக்ஸ்பெண்டிச்சர் கான்பரன்சுக்கு வருகிற அதிகாரிங்களுக்கு, நல்ல நல்ல வசதி செய்தி
கொடுத்து, நல்லதோர் அட்மாஸ்பியர் கொடுக்கிறது நம்ம பொறுப்பாச்சே... செலவப்
பார்த்தா முடியுமா? ஓ.கே. இந்த மகாநாட்டில் கலந்துகொண்டு கெய்டு பண்ண வருகிற
நம்முடைய செகரட்டரி, அடிஷனல் செகரட்டரி, ஜாயிண்ட் செகரட்டரி, டெப்டி
செகரட்டரிகள் எல்லோருக்கும் மேல நம்ம டைரக்டர்-ஜெனரல்-இவங்களுக்கு சேப்பாக்கம்
கெஸ்ட் ஹவுசிலதான் புக் பண்ணியிருக்கு...?”
"யெஸ் சார் பட் எல்லோரையும் சேப்பாக்கத்துல அக்காமடேட் செய்ய முடியாது. அதனால்,
சிந்தாதிரிப்பேட்டையில் இருக்கிற கெஸ்ட் ஹவுசில் மூன்று பேரைப் போட்டாகணும் .
ஆனால் அங்க ஒரே கொசு சார்.பேசாமல் டெப்டி செகரட்டரிகள போட்டிடலாமா?"
"அவங்கதாய்யா சித்ரகுப்தங்க.. சிந்தாதிரிப்பேட்டை தேவையில்ல.... காரணம், நம்ம
செகரட்டரி, சிக்கனத்தை மேலும் எப்படிச் செம்மைப்படுத்தலாம்னு பயிற்சி பெறதுக்காக
நியூயார்க் போயிருக்கார்.... அடிஷனல் செகரட்டரி மிஸ்டர் ராமலிங்கம் இதே
காரணத்துக்காக டோக்கியோவுக்கு போயிருக்கார். ரெண்டு பேரும் வரமாட்டாங்க,”
"அப்போ ....நம்ம டைரக்டர் ஜெனரல் மட்டும் இளிச்ச வாயரா?"
"இல்ல ... அவரு போன வாரம் பெர்லின் போய்ச் சிக்கனத்தைப் பற்றி ஆறு நாளாய்த
தெரிஞ்சுட்டு வந்திருக்கார். அப்படிப்பட்டவர் இந்த மாநாட்டுக்கு வாரது நம்மோட
பாக்கியம்... பாமா, இன்னுமா கணக்கு பண்ணுறே.''
"இந்தக் கால்குலேட்டர் ஒர்க் பண்ண யோசிக்குது சார். ஒரு பேப்பர்ல எழுதி கணக்குப்
பார்த்து இதோ சொல்லிடறேன் சார்...."
பாமா பேப்பர் கிடைக்காமல் தனது உள்ளங்கையிலேயே. பச்சை குத்தியபோது, ஒரு
ஓரமாக உட்கார்ந்திருந்த அஸிஸ்டெண்ட் டைரக்டர் சுந்தரம், தன்பாட்டுக்கு பேசினார்.
"கொட்டேஷன்ஸ் வாங்குற பொருட்கள் எல்லாம் இப்படித்தான் இருக்கும். இதனால
சிக்கனம் பிடிக்க முடியாது. மாமூல்தான் வசூலிக்க முடியும்."
இந்தச் சமயத்தில் என்ஜீனியர் மோகன் எழுந்து நின்றே ஒரு யோசனை சொன்னார்.
"ஏ.டி. சொல்றது கரெக்ட் ஸார். இனிமேல் எந்த பொருள் வாங்கினாலும் மார்க்கெட்ல
வாங்கணும், நம்மோட டிஸ்கிரிஷனரி பவர்ல வாங்கறதுக்கு பெர்மிஷன் கேக்கணும்.'
நாற்காகாலியின் பின்பக்கமாக சாய்ந்திருந்த ராமானுஜம், முன்பக்கமாகச் சரிந்து எரிந்து
விழுந்தார். அதோ இருக்கிற அஸிஸ்டெண்ட் டைரக்டர் சுந்தரத்தை அவர் எதுவும்
செய்ய முடியாது. காரணம், கடவுளே வந்தாலும் இனிமேல் அவருக்குப் புரோமோஷன்
கொடுக்க முடியாது அந்த அளவுக்கு அவரது அந்தரங்க குறிப்பேடுகள் பழுதுபட்டுப்போனது
பகிரங்க ரகசியம். அதோடு, ஒரு காலத்தில் தனக்கே அதிகாரியாக இருந்தவர் இந்த
சுந்தரம். இப்படி எல்லோரிடமும் ஏடாகூடமாகப் பேசி தண்ணியில்லாத காடுகளைப்
பார்த்துவிட்டு, இப்போதுதான் சென்னைப்பக்க வந்திருக்கிறார். ஆனால் இந்த மோகனுக்கு
என்ன வந்தது?
"இந்த மாதிரி ஸில்லியாப் பேசப்படாது மோகன்... மாமூலைப் பற்றி இல்ல.... மாநாடு
விவாதிக்கப் போவது கொட்டேஷன் முக்கியமா, முக்கியம் இல்லையா என்கிறதும்
இல்ல.... இன்று நம் நாட்டுக்கு மிகத் தேவையான சிக்கனத்தைப் பற்றி ஆலோசிக்கவே
மாநாடு கூடுது. அப்புறம் சோமாஜுலு-நீதானே டிரான்ஸ்போர்ட்டுக்கு இன்சார்ஜ்...
செப்பு...."
சோமாஜுலு பித்தளை மாதிரி இளித்துக்கொண்டே செப்பினார். "செகரட்டரி,
அடிஷனல் செகரட்டரி, ஜாயிண்ட் செகரட்டரி, டெப்டி செகரட்டரிங்க, நம்மோட
டைரக்டர் ஜெனரல் இவங்களுக்கு தனித்தனியா ஏழு ஏசி கார் புக் செய்திருக்கேன் அதோட
இவங்களுக்காக ரெண்டு ஸ்பேர் கார் புக் செய்திருக்கேன்... அப்புறம் எழும்பூர்ல
இறங்குற ஆபீஸர்களை பிக் அப் செய்ய ஆறு கார்.... சென்ட்ரலுக்கு ஏழு கார் நமக்கு
மூணு கார்.. எமெர்ஜின் ஸிக்கு ரெண்டு கார்... அப்புறம் ஒரு விஷயம் சார்.... நம்ம
கிட்ட காண்ட்ராக்ட் எடுத்திருக்கிற கம்பெனிக்காரங்ககிட்ட, நீங்க கண்டிப்பா
சொல்லிடணும்.... இந்த மாதிரி சமயங்களிலே பத்து லிட்டர் பெட்ரோலோட
காருங்களை அம்போன்னு விட்டுடறான்... ரெண்டு ஹெட்லைட்ல ஒண்ணு எரியாது.
ரெண்டு கதவுல ஒண்ணு திறக்காது."
பேசப்படாது மோகன்... மாமூலைப் பற்றி இல்ல....
கார் கம்பெனியோடு, 'இஸ்குனி தொஸ்து' வைத்திருக்கும் ஜாயிண்ட் டைரக்டர் பேசாமல்
இருந்தபோது, பாமா நெளிந்தாள்.... " அதுதான் செகரெட்டரியும் அடிஷன் செகரட்டரியும்
வரலையே.... அவங்களுக்கு எதுக்கு கார்" என்று சொல்லப் போனவள், அப்படிக் கேட்பது
ஒழுங்கீனமாக கருதப்பட்டு, தமிழ் புத்தாண்டிற்கு ரீலிஸாவதாக எதிர் பார்க்கப்படும்
தனது புரோமோஷன் பொங்கலாகிவிடக் கூடாது என்று பயந்தவள் போல், எல்லோரையும்
போல் பலமாகத் தலையாட்டினாள். அப்போது, ஜாயிண்ட் டைரக்டர் லேசாய் முதுகை
வளைத்தபடியே பொதுப்படையாய் கேட்டார்.
'இந்த மாநாட்டில், மூக்கிலே விரல் வைக்கிறது மாதிரி சிக்கனத்திற்கு யாராவது ஒரு
தீவிர வழி சொல்ல முடியுமா? யாராயிருந்தாலும் சரி...”
அஸிஸ்டெண்ட் டைரக்டர் சுந்தரம் நல்ல சந்தர்ப்பத்தை நழுவவிட விரும்பவில்லை.
எழுந்தார். இயல்பாய் பேசுவது போல எங்கேயோ போனார்.
"இந்த மாநாடே ஒரு வேஸ்ட். இருந்தாலும் இதிலயும் சிக்கனத்தை மேற்கொள்ளலாம்...
தில்லியிலிருந்து பெரிய அதிகாரிகள் ஒரே பிளைட்லதான் வராங்க. ஒரே கெஸ்ட்
ஹவுசிலதான் தங்குறாங்க. அவங்களை ஒரு காரிலேயோ, ரெண்டு காரிலேயோ பிக்கப்
செய்யலாம். மீதி நாலு கார் வேஸ்ட். ரயில்வே ஸ்டேஷன்களில் கெஜட்டட் அதிகாரிகள்
ரஷ் இல்லாத காலையிலேயே வந்துடறாங்க. அவங்கள பஸ்ஸிலேயே கொண்டு வந்துடலாம்.
அதோட, இந்த கான்பரன்ஸ இங்க போடறதவிட நம்ம ஆபீசுலேயே ஒரு ஷாமியானா
பந்தல் போட்டு நடத்திருக்கலாம். மெட்ராஸ்ல சொந்த வீடுகளிலும், சொந்தக்கார
வீடுகளிலேயும் தங்கப் போற அதிகாரிங்களுக்கு ரூம் புக் பண்ணியிருக்க வேண்டாம்.
அவங்களும் போலி ரசீது கொடுத்து ரூம் வாடகையை வசூலிக்கப் போறாங்க. எனக்குத்
தெரிஞ்ச நிர்வாகச் சிக்கனம் இதுதான்."
ஜாயிண்ட் டைரக்டர் ராமானுஜத்தின் ரத்த அழுத்தம் கூடியது. ஏற்கனவே அந்த வியாதி
உள்ளவர். சுந்தரத்தைப் பார்த்து கத்தப் போனார். வாய்தான் திறந்ததே தவிர
வார்த்தைகள் வரவில்லை. உடனே அவரது வலது பக்கமி மிருந்த டெப்டி, டைரக்டர்
கோபம் கோபமாய் கத்தினார். ஜாயிண்ட், ஒரு மாத்திரையை எடுத்து போட்டுக் கொண்டார்.
"நாம யோசிக்க வேண்டியது மாநாட்டின் விவாதம் பற்றித்தான்.... மாநாட்டிற்கான
பணிகளைப் பற்றி இல்ல.... அதோட சிக்கனத்துக்கான, இன்றைய செலவு நாளைய
நாட்டின் சேமிப்பு.... நாம விருந்தோம்பல் செய்யுறவங்க. பாவம்.... பிள்ள குட்டியை
விட்டுட்டு பஸ்ட் கிளாசில் வருகிற சகாக்களை நாம கவனிக்காட்டி யாரு கவனிப்பாங்க....
அவங்களுக்கில்லாத ஏஸி ரூம் இருந்தெனை போயென்ன? சிக்கனத்துக்கான உடனடிச்
செலவுக்குப் பயந்தால் நம் எதிர்காலம் ஊதாரிக் காலமாயிடும்.
ஜாயிண்ட் டைரக்டரால் இதுவரை ஓரம் கட்டப்பட்ட அந்த ஆண் டெப்டி டைரக்டர்
பெருமிதமாகப் பேசியதை, முகர்வது போல் மூக்கை உறிஞ்சினார். இறுதியாய் லோசனைக்
கூட்டம் விமான நிலையத்திற்கும், ரயில்வே நிலையத்திற்கும், விருந்தினர் விடுதிக்குமாய்
சிதறியது.
* * *
பிற்பகல் மூன்று மணி அளவில், தென்னக அரசுஅதிகாரிகளின் நிர்வாகச் சிக்கன மாநாடு
துவங்கி விட்டது. அந்த மாநாட்டின் பெயர்ப் பலகையை பல்வேறு வண்ண பல்புகள்
சிக்கனமில்லாமல் மின்னி மின்னிக் கட்டின.... மேடையில் முதலில் உள்ள இரண்டு
நாற்காலிகளில் ஜாயிண்ட் செகரட்டரி எஸ்.பி.லாலும், இயக்குநர் திலகம், (அதாவது
டைரக்டர் ஜெனரல்) சுரேஷ் குப்தாவும் கம்பீரமாக உட்கார்ந்திருந்தார்கள். அந்த இரண்டு
நாற்காலிகளுக்கும் பின்னால் போடப்பட்டிருந்த ஒரு நாற்காலியில், ராமானுஜம்
நெளிந்து கொண்டிருந்தார். முன்னால் இருப்பவர்கள் இரண்டு பேருமே அவரது
பதவியின் தலைவிதியை எழுதுகிறவர்கள். ஏற்கனவே அவர்கள் கீரியும், பாம்பும் மாதிரி.
இவர்களில் ஒருவருக்கு முக்கியத்துவம் கொடுத்தால் மற்றவர் கடித்து விடுவார்.
என்ன செய்யலாம் என்று ராமானுஜம் தலையைப் பிய்த்தபோது, ஜாயிண்ட் செகரட்டரி
இயக்குநர் திலகத்திற்கு சந்தர்ப்பம் கொடுக்காமல் மேடை ஓரமாக உள்ள மைக் முன்னால்
போய் பேசத் துவங்கினார்.
"இன்று நம் நாடு திருப்புமுனையில் இருக்கிறது. வெளி செலாவணியை நிலைப்படுத்த
வேண்டும். விலைவாசியைக் கட்டுப்படுத்த வேண்டும். நாட்டின் பொருளாதாரத்தை,
உற்பத்தியை நோக்கி இட்டுச் செல்ல வேண்டும். இதற்கு முக்கியமான ஒரே வழி
சிக்கனம். சிக்கனம்... சிக்கனமே ....
ஜாயிண்ட் செகரட்டரி இப்படிப் பேசிக் கொண்டிருந்த போது, இலாகா தலைவரான
டைரக்டர் ஜெனரல் பின்புறமாய் திரும்பி ராமானுஜத்திடம் ஒரு சந்தேகம் கேட்டார்.
"திருப்பதி கோயில் நிர்வாகத்தினர், ரொம்ப சிக்கனம் கடைப்பிடிக்காங்களாமே! சீப்
அன்ட் பெஸ்ட் என்கிற மாதிரி செலவையும் குறைத்து, சேமிப்பையும் கூட்டி சேவையின்
தரத்தையும் உயர்த்தியிருக்காங்களாமே... இஸிட்,”
ராமானுஜம் புரிந்து புரிந்து கொண்டார். நேரிடையாகவே பதிலளித்தார்.
"எஸ் ஸார்.... நீங்க கூட திருப்பதிக்கு போய் நிர்வாகச் சிக்கனத்தைப் பத்தி தெரிஞ்சுட்டு
வரலாம் .. இதனால் நாடே பலன் பெறும்... ஏற்பாடு செய்யட்டுங்களா?"
இயக்குநர் திலகம், ஆமோதிப்பதாய் தலையாட்டிய போது பேச்சை முடித்த ஜாயிண்ட்
செகரட்டரி, தனது இருக்கையில் வந்து உட்கார்ந்து ராமானுஜத்திடம் ஒரு கேள்வி
கேட்டார்.
"திருப்பதிக்கு காஞ்சிபுரம் வழியாப்போகலாம் இல்ல....``
"ஆமா ஸார்... காஞ்சிபுரம் போய் அரசாங்கத்தோட சிக்கனம் வெற்றி பெற சங்கராச்சாரியார்
சுவாமிகள் கிட்ட ஆசிர்வாதம் வாங்கிட்டு அப்படியே கோயில் குளங்களையும் பார்த்துட்டு
திருப்பதி போய் சிக்கனத்தைப் பத்தி தெரிஞ்சுக்கிட்டு வரலாம். இன்னைக்கே
போயிடலாம் ஸார்
இலாகா தலைவரான டைரக்டர் ஜெனரல் பாம்புக் காதனான ஜாயிண்ட் செகரட்டரி,
தன்னோடு ஒட்டிக் கொண்டதில் அதிருப்திப்பட்டார். அந்த அதிருப்தியை மறைக்கும்
வகையில் மேடை முன்னால் போனார். பொதுப் படையாகக் கேட்டார்.
"இந்த சிக்கன மாநாட்டில் ஆக்க பூர்வமான யோசனைகள் இருந்தால் யாரும் சொல்லலாம்....
ஆனாலும் அது, சிக்கனத்தை சீர்படுத்துறதா மட்டுமே இருக்கணும் ஓ.கே. ஒன் பை ஒன்...."
ஆடியன்ஸ் - அதிகாரிகள், ஒருவர் ஒருவராய் எழுந்து, சிக்கனத்திற்கான சீரிய
யோசனைகளைச் சொன்னார்கள்.
'இனிமே சிக்கனமே நமது உயிர் மூச்சு- இதைக்கே கடை பிடிக்க உங்களோட கெய்டன்ஸ்
அவசியம். அதனால், ஹெட் குவார்ட்டர்ஸோடு சிக்கனம் பற்றி தெரிவிக்கவும்,
தெரிந்து கொள்ளவும் ஒவ்வொரு பிராஞ்ச் ஆபீஸிலயும் ஒரு பேக்ஸ் மிஷன் வைக்கணும்...
அதை கட்டிக்காக்க ஏஸியும் இருக்கணும்...'
"சிக்கனத்தைக் கண்காணிக்க ஒவ்வொரு ஆபீஸிலேயும் ஒரு கம்ப்யூட்டர் வைக்கணும்....
இந்த கம்ப்யூட்டரை தேசிய சர்க்யூட்ல இணைக்கணும்.
"ஊழியர்கள் எப்படி சிக்கன நடவடிக்கையில் ஈடுபட்டிருக்காங்க என்பதை கண்காணிக்க
இனிமேல் புரோகிராம் ஆபீஸர்களுக்கும் வீட்டுக்கு டெலிபோன் கொடுக்கணும்...”
இயக்குகர் திலகம், அவர்கள் சொன்னதை ஒப்புக் கொண்டது போல், தலையாட்டினார்.
பிறகு ஜாயிண்ட் செகரட்டரியை விட தான் பெரிது என்பதைக் காட்டும் வகையில்
பேசினார்
"உங்க ஆலோசனைகளை செயல்படுத்துவோம். எனக் கென்னவோ இந்த மாதிரி மூச்சு
முட்டுற அறையில் இந்த முக்கிய பிரச்சினையை விவாதிக்கக்கூடாது என்று நினைக்கிறேன் .
அதனால, நாளைக்கு நீங்க மகாபலிபுரம் போய் நல்ல சுற்றுப்புறச் சூழலில் சிக்கனத்தைப்
பற்றி தெளிவான முடிவுக்கு வரணும். இதுக்காக ஐந்து டீலக்ஸ் பஸ்களை அரேஞ்
செய்யும்படி ஜாயிண்ட் டைக்டருக்கு இப்பவே இங்கேயே உத்தரவிடறேன்."
ஆடியன்ஸ் அதிகாரிகள், பலமாக கைதட்டினார்கள். இந்த கைதட்டலுக்கு மத்தியில்,
பின் வரிசையில் உட்கார்ந்.திருந்த நமது அஸிஸ்டெண்ட் டைரக்டர் சுந்தரம்,
முன்வரிசைக்கு வந்து இன்னொரு யோசனை சொன்னார்.
"மகாபலிபுரத்துக்குப் பக்கத்திலேயே திருக்கழுக்குன்றம் என்ற திருத்தலம் இருக்குது...
அங்கே ஒரு மகா புருஷர் கழுகு வடிவத்தில் அந்த கோயிலுக்கு தினமும் சென்று குருக்கள்
கொடுக்கிற எண்ணெயை அலகால் தேய்த்து, அவர் நீட்டுகிற பஞ்சாமிர்தத்தை உண்டுவிட்டு
போகிறார். இந்த திருக்கழுகு பஞ்சுவாலிட்டிக்கு பேர் போனது. இதையும் நமது அதிகாரிகள்
அங்க போய் பார்க்கணும். இதனால், லேட்டா வந்து பழக்கப்பட்ட நமக்கு ஒரு இன்ஸ்ரேஷன
கிடைக்கும். இந்த இன்ஸ்பிரேஷஸ் சிக்கனத்தை சிக் னப் பிடித்துக் கொள்ளலாம்...
பஞ்சுவாலிட்டியை பற்றிக் கொள்ளலாம்....``
கிண்டலாகச் சொன்னதை, சீரியஸாக எடுத்துக் கொண்ட கூட்டம், மீண்டும் பலமாகக்
கைதட்டியது. இப்போது ஜாயிண்ட் செகரட்டரி தான் டைரக்டர் ஜெனரலுக்கு
இளைத்தவரில்லை என்பதைக் காட்டும் வகையில், மைக்கிற்கு வந்து சிறிது கடுகடுப்பாக
உபதேசித்தார்.
"நான் சொல்றதை நீங்க எல்லோரும் கண்டிப்பாக கடைப் பிடிக்கணும். இனிமேல் உங்க
டிரைவர்களுக்கு ஓட்டி கொடுக்கப்படாது ... கிளாஸ் போர் பியூன்களுக்கும் நோ ஓட்டி.
இந்த ரெண்டு தரப்பையும் ஷிப்ட் டூட்டியில் போடுங்க. விடுமுறை நாள்ல வேலை
பார்க்கிறதுக்கு, இன்னொரு வேலை நாளில லீவு கொடுங்க... இனிமே இவங்களுக்கு ஓ.டி.
என்ற பேச்சே இல்லை. அண்டர்ஸ்டாண்ட்....? அதோட பெட்ரோல்ல சிக்கனம் வேணும்....
கூடுமானவரை ஆபீஸ் காருங்களை அதிகமாப் பயன்படுத்தக்கூடாது. நோ... பெர்ஷனல்
யூஸ்!"
ஜாயிண்ட் செகரட்டரி பேசி முடித்துவிட்டு, தமது இருக்கையில் உட்கார்ந்தார். அவர்
பிரமாதமாய் பேசியதாய், டைரக்டர் ஜெனரல் அவருக்கு கைகொடுத்தபோது, இருவரின்
தோள்களுக்கும் இடையில் மூக்கை நீட்டிக்கொண்டு ஜாயிண்ட் டைரக்டர் ராமானுஜம்
குழைவாய் பேசினார். பக்கத்தில் தலையை சொரிந்துகொண்டு நிற்கிற ஒருவரை சுட்டிக்
காட்டியபடியே பேசினார்.
"ஸார்.. ஸார்.... (இரண்டு பேராச்சே.... அதனால் ரெண்டு ஸார்), காஞ்சிபுரம் வழியாக
திருப்பதி போறதுக்கு கார் ரெடியா இருக்கு.... அதோ நிக்காரே அவர் ஸ்பேர் கார்ல்
வந்து எல்லா ஏற்பாடுகளையும் கவனிச்சுக்குவார்... புறப்படலாம் ஸார்.. இருட்டிடப்
போகுது."
----------------------
10. பூநாகம்
மாடியில் நின்றவர்களைப் பார்த்து உற்சாகமாகக் கையாட்டிவிட்டு டிரைவர் இருக்கையில்
உட்கார்ந்தான் ரவிக்குமார். அவனையும், மேலே நின்ற தன் பெற்றோரையும் அண்ணன்,
தம்பி தங்கைகளையும், அவனது பெற்றோரையும் கூச்சத்தோடு பார்த்தாள் மல்லிகா.
அந்த கார் கதவு, அவன் கைபடாமலே தானாகத் திறப்பதைப் பார்த்து விட்டு, கூச்சப்பட்ட
பார்வையை ஆச்சரியமாக்கினாள் அதற்குள் ரவிக்குமார், "கமான்...." என்று சொன்னபடி
அவளை நோக்கி லேசாகக் கையை நீட்டி, பிறகு 'அதற்கு இன்னும் உரிமை வரவில்லை
என்பது போல் மடக்கிக் கொண்டான்.
அவள் மீண்டும் மாடிக்காரர்களைத் தயக்கத்தோடு பார்த்தபோது, மேலே நின்ற அவள்
தந்தை பேராசிரியர் பெருமாள், "இதுல என்னம்மா இருக்குது? ஏறிக்கோ...
ஐம்பதாண்டுக்கு மேல குடும்பம் நடத்தறதுக்கு அரை நாள் பரீட்சை எழுதறதுல
தப்பில்லையே..." என்றார்.
மல்லிகா அந்த காரில் ஏறிக் கொண்டதும், அதன் கதவு தானாக மூடியது. இறக்கி
வைக்கப்பட்ட ஜன்னல் கண்ணாடிகள் முழுமையாக மூடிக்கொண்டு, அந்த காரையே
ஒரு தனி உலகமாகக் காட்டியது. இதுவரை அவள் பார்த்தறியாத கார். இருக்கைகள்
கூட வெல்வெட் மெத்தைகளாக மின்னின. அதில் உட்கார்ந்தவுடனேயே மயிலிறகில்
உடகார்ந்தது போன்ற சுகம்.
"இப்போதான் இந்த காரைப் புதுசா மார்க்கெட்ல விட றோம். கதவு, கண்ணாடிகளை
ஆட்டோமாடிக்கா திறக்கலாம்... மூடலாம். இதோ, இந்த ஸ்டியரிங்கைக்கூட நம்ம
உயரத்துக்கு ஏற்றபடி அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம். ஸீட்டைக்கூட முன்னாலும்
இழுத்துப் போட்டுக்கலாம்" என்று அவன் சொல்லிவிட்டு ஏ.ஸி.யைப் போட்டான்.
அந்த கார், அந்தத் தார்ச்சாலையில் குண்டு குழிகளை யெல்லாம் மறைத்துக்கொண்டு,
அந்தத் தெருவுக்கே ஒரு தனிக் கம்பீரம் கொடுத்தபடி மெள்ள மெள்ள நகர்ந்து ஓடத்
துவங்கியது. இருவரும் ஒருவரையொருவர் ஆழம் பார்ப்பது போல் பார்த்துக் கொண்டார்கள்.
வாயில் புடவையிலும் அவள் அசத்தலாய்ப் பார்த்த அந்தப் பார்வை அவனுக்கு
ஆச்சரியத்தைக் கொடுத்தது. அவன் பார்வையைத தாள முடியாது அவள் அங்குமிங்குமாய்
நெளிவதைப் பார்த்து விட்டு, அவளை கார் கண்ணாடியில் பார்த்தான அவன்.
கட்டிய புடவையைப் போலவே, எளிமைக்கும் கவர்ச்சிக்கும் இடைப்பட்ட தோற்றம்.
அவள் உள்ளடக்கத்துக்குச் செவ்வளிப் பூவால் உருவம் கொடுத்தது போன்ற நேர்த்தி.
எதோ ஒன்று ஒளியோ அல்லது அதுபோலான ஒன்றோ அவள் உடம்பு
முழுவதிலுமிருந்து ஜொலித்துக் கொண்டிருந்தது. முன் பற்களில் 'கிளிப்' போட்ட
அடையாளங்களையும், அவளது சிறிது அதிகப்பட்ட உயரத்தையும் வேண்டுமானால்
குறைகளாக எடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்தான்.
நிழலில் பட்டவளை நிஜமாகப் பார்க்கப் போனபோது, அவளும் அவனை உள்வாங்கிக்
கொண்டிருந்தாள். அந்த கார் கண்ணாடி மாதிரி உன்னிப்பாக பார்த்தால் மட்டும்
தெரியக்கூடிய தங்கப் புள்ளிகளைக் கொண்ட பாண்ட்-சட்டையில் இருந்தான்.
கழுத்தில் தொங்கிய தங்க நிற டை! அவன் முகத்தில் தன்னம்பிக்கையைக் காட்டும்
ஒரு தோரணை. கூர்மையாகப் பார்க்கும் கம்பீரம். இத்தகைய பல ஆண்களை, பல
'செமினார்'களில் அவள் பார்த்திருந்தாலும் இப்போது வித்தியாசமான
காரணத்துக்காகப் போவதால், அவனை வித்தியாசமாகவே பார்த்தாள்.
அவன் என்ன பேசுவது என்று யோசித்துவிட்டு "டை' யைத் தளர்த்தி சட்டையைத் தூக்கி
ஊதியபடியே ஒரு காமெண்ட் அடித்தான். “க்ளைமேட் ரொம்ப மோசமா இருக்குல்ல ...
ஒரே சல்ட்ரி... வியர்க்குது."
அவள் கன்னங்கள் பெரிதாக வாயால் ஊதி லேசாகச் சிரித்தாள்.
"எதுக்காக சிரிக்கிறீங்க மேடம்?"
“ஏ.ஸி. குளுகுளுன்னு இருக்குது. உங்களுக்கு எப்படி வியர்க்கும்?''
“நான் ஒரு இடியட்! தர்மசங்கடமான சமயத்துல முதல்ல எல்லாரும் பேசறது மாதிரி,
நானும் இந்த க்ளை மேட்டை பேசிட்டேன். ஆனா, ஒண்ணு. நீங்க பக்கத்துல இருக்கிறதனால
எனக்கு க்ளைமேட் மறந்து போச்சு - ஏதோ பேசணுமேன்னு தத்துப்பித்துன்னு பேசிட்டேன்...."
இதற்குள், அந்த கார் மூன்று கிலோ மீட்டர் தாண்டி ஒரு திருப்புமுனையில் வந்து நின்றது.
அதுவே அந்த வாகனத்துக்கு இருப்பு முனையாகிவிட்டது. முப்பரிமாண சிக்னல்
விளக்குகளை அணைத்துப் போட்டுவிட்டு, இருபது இருபத்தைந்து வெள்ளை
யூனிஃபாரகாரர்கள் விசிலடித்துக் கொண்டிருந்தார்கள். இடதுபக்க, வலதுபக்க,
எதிர்ப்பக்க வாகனங்கள் அனைத்தும் ஓர் ஓரமாக முடக்கப்பட்டன. ரவிக்குமார்
ஆச்சரியத்தோடு கேட்டான்.
"வாட் இஸ் திஸ் .. எதுக்காக இப்படி எல்லா கார்களையும் காயலாங்கடை சாமான்
மாதிரி இந்த மூலையில நிறுத்தி வெச்சிருக்காங்க..."
"சி.எம். வெளியூர் போறாங்களாம். இந்த வழியா ஏர் போர்ட் போவாங்க. இன்னும்
ஒரு மணி நேரத்துக்கு இங்கேயேதான் கிடக்கணும்..."
சென்னை நகர மக்களே இப்போ திறந்தவெளி ஜெயிலுல இருக்கிறது மாதிரிதான்
இருக்கிறாங்க. சரி, டிராக்ஃபிக் கிளியர் ஆக ஒரு மணி நேரம் ஆகும்.... என்ன செய்யலாம்?
காரை நிறுத்திவிட்டு காலார கொஞ்சம் வெளியில நிக்கலாமா?"
"வேண்டாம்....இங்கேயே பேசிட்டிருக்கலாமே."
"சரி .... பேசுவோம்...."
"உங்க அப்பாவை என்னால புரிஞ்சுக்கவே முடியல். ங்க பேரண்ட்ஸ், என்னோட பேரண்ட்ஸ்
எல்லாரும் உட்கார்ந்திருக்கும் போது, எங்க டாடி, 'பெண்ணைக் கூட்டி வாங்க'ன்னு
சொல்ல உங்க டாடி என்னன்னா துண்டு சோபாவுல குத்துக்கல்லு மாதிரி
உட்கார்ந்திருக்கிற உங்களைப் பார்த்து `இதான் பொண்ணு'ன்னு சொல்றார். நிஜமாவே
நான் அதிர்ந்து போயிட்டேன்....
"நான் காபியும் டம்ளருமா, நாணமும் முகமுமாய், பின்னாலிருந்து அம்மா தள்ள, அருமைத்
தங்கை கையப் பிடிச்சு முன்னால இழுக்க, அசல் மாட்டுப்பெண் மாதிரி வருவேன்னு
நினைச்சிருப்பீங்க. நான் என்னடான்னா வேலைக்காரப் பெண் கொண்டு வந்த
லட்டை நீங்க எடுக்கறதுக்கு முன்னாடியே எடுத்துக் காக்கா கடியா கடிக்கறேன்.
நல்லா ஏமாந்தீங்க இல்ல....”
"எங்கப்பா 'நாமார்க்கும் குடியல்லோம்' என்கிற திருநாவுக்கரசு அடிகள் பாடலையும்,
'கண்மூடிப்பழக்கம் மண் மூடிப் போக' என்கிற ராமலிங்க சுவாமிகள் பொன்மொழியையையும்
சின்ன வயசிலிருந்தே எங்களுக்கு ஞாபகம் ஊட்டுகிறவரு.!"
``சரி என்னைப் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?''
"நீங்க ஒரு நல்ல டிரைவர்``.
``வாட்?"
"உண்மையாத்தான் சொல்றேன் .. ஒரு நல்ல டிரைவருக்கு இலக்கணம்... அவரு வண்டியை
ஓட்டும்போது உட்கார்த்திருக்கிறவங்களுக்கு அவர் ஓட்டறது மாதிரி தெரியப் படாதாம்.
அதாவது, சடன் பிரேக் போடறது....குண்டு குழியில் வண்டிய விடறது.... அடுத்த
வண்டிக்காரனைப் 'போடா கய்தே'ன்னு திட்டறது. இந்த மாதிரி தெருக் காரியங்களைச்
செய்யாமல், ஓட்டுறவரே நல்ல டிரைவர். இதே இலக்கணத்தைத்தான் ஒரு தலைவருக்கும்
சொல்வாங்க. நல்ல தலைவர் என்கிறவரு, தான் தலைமை தாங்கி நடத்தறோம் என்பதைக்
காட்டிக்காமலே, மக்களுக்கு வழி காட்ட ணும்... இந்தத் தலைமைக் குணம், அகில உலக
அளவுல லெனினுக்கும் தேசிய அளவில் சாஸ்திரிக்கும் இருந்ததாகச் சொல்றாங்க."
"லெனினைப் பற்றியும், சாஸ்திரியைப் பற்றியும் பேச லட்சக்கணக்கான பேர் இருக்காங்க
நம்மைப்பற்றிப் பேசத்தான் நாம் ரெண்டு பேரு மட்டும் இருக்கோம்."
"அப்படீங்களா...``
"ஆமாம்....நீங்க என்னை டி வி.யில் வர்ற விருந்தினரா நெனைச்சுக்கிட்டு என்னைப்பற்றி
உங்களுக்குத் தெரிஞ்சதையெல்லாம் சொல்லுங்களேன்....”
"உங்க பேரு.... எனக்குத் தெரியும். ரவிக்குமார்.... உங்க படிப்பு.... அதுவும் தெரியும்....
இன்ஜினீயர். நீங்க பிரபல கார் தயாரிக்கும் கம்பெனில விற்பனை அதிகாரி... டெல்லியில்
நாராயணாவுல வீடு. இன்கம்டாக்ஸ்காரங்களை ஏமாத்த அடிப்படைச் சம்பளம்
ஆயிரம் ரூபாய்னு சொல்வீங்க...ஆனா, பெர்க்ஸ் எல்லாம் சேர்த்து வாங்குறது
எட்டாயிரம்....``
கார் புறப்பட்டது.
மல்லிகா, தன் வழக்கமான இயல்பில், மனம் விட்டுச் சிரித்தாள். கல்லூரியில் மற்ற
சகாக்களிடம் தனது மாணவ மாணவிகளிடமும் எப்படிப் பேசுவாளோ அப்படி
நையாண்டியாய் பேசிச் சிரித்தாள். பிறகுதான், தான் ஒரு வித்தியாசமான காரணத்துக்கு
வந்திருப்பது நினைவுக்கு வர, அவள் சிரிப்பதை குறைத்துக் கொண்டாள். இதற்குள்
அவனோ, ஸ்டியரிங்கிலிருந்து இரண்டு கைகளையும் எடுத்து, கைதட்டினான்.
பிறகு முன்னெச்சரிக்கையாக ஒரு கையால் ஸ்டியரிங்கைப் பிடித்துக்கொண்டு, இடது
கையால் அவள் தோளில் "சபாஷ் ... சபாஷ்" என்று சொன்னபடி பட்டும் படாமலும்
தட்டிவிட்டான்.
கார் மீண்டும் ஒரு மும்முனைக்கு வந்தது. அவன் கேட் டான். "மகாபலிபுரம் வரைக்கும்
வண்டியை விடலாமா?"- அவள் தலையாட்டினாள். அப்படி ஆட்டும்போது அவள்
தனக்கே சொந்தம் என்பது போலவும், அவன் தன் பக்கம் வரவேண்டும் போலவும்
இருந்தது.
அந்த கார் பத்து கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்திருக்கும். காவல்துறையினர் பத்துப்
பதினைந்து பேர் தாங்களே சாலை மறியலில் ஈடுபட்டது போல் சாலையின் குறுக்கே
மனிதச் சங்கிலியாக நின்றனர். ஒரு காக்கி யூனிஃபாரக் காரர், அந்த காரின் முன்னால்
வந்து நின்றார். ரவிக்குமார் ஒரு பட்டனை அழுத்தி வலது பக்க கண்ணாடி ஜன்னலை
கீழே இறக்கினான். அப்போது அதிகாரி போல் தோன்றிய இன்னொரு காக்கிக்காரர்,
உள்ளே எட்டிப் பார்த்து மிடுக்காகக் கேட்டார்.
"நீங்க யாரு? இவங்க யாரு?``
"மொதல்ல எதுக்காக எங்களை நிறுத்தினீங்க.... அதைச் சொல்லுங்க..``
"உங்ககிட்ட சொல்லணும்னு அவசியமில்லே...."
"என்ன சார் இது.... அடாவடியாய்ப் பேசுறீங்க... நாங்க இந்த நாட்டோட பிரஜைங்க ...
வோட்டுப் போட்டவங்க.... எங்களை எதுக்காக நிறுத்துனீங்கன்னு தெரியணும்....
இது எங்கள் அடிப்படை உரிமைகளைப் பறிக்கிற குற்றம்.... புரியுதா..?"
இத்தகைய தமிழ்ப் பண்பாட்டுக் காரியங்களுக்குப் பழக்கப்பட்டுப் போன மல்லிகா,
வண்டியை எடுக்கும்படி ரவிக்குமாரின் தோளில் தட்டினாள். தட்டிய கையை தட்டப் பட்ட
இடத்திலேயே வைத்துக் கொண்டாள். அவளது ஆண் சகாக்கள் பலர் 'போலீஸ்' என்றதும்
புறமுதுகிடுவதைப் பார்த்தவளுக்கு அவன் அப்படி வீராவேசமாகவும், எதையும் எதிர்கொள்ளத்
தயாரான தோரணையிலும் பேசிய விதத்தில் அவள் அசந்துவிட்டாள். இப்போது அவன் வித்தியாச மானவனாக மட்டும் தெரியவில்ல. அவள் கற்பனையில் தனது வருங்காலக் கணவன் எப்படி இருக்க வேண்டுமென்று கோலப்புள்ளிகள் போட்டு கோலமிடாமல் வைத்திருந்ததற்கு, இப்போது முழு வடிவம் கிடைத்தது போல்
தோன்றியது. அவன் தனது தோளில்பட்ட அவள் கையைப் பிடித்து அந்த விரல்களை நெருடி
விட்டுக் கொண்டே சிறிது உணர்ச்சி வயப்பட்டுப் பேசினான்.
"நீங்க என்னைக் கல்யாணம் பண்ணினால் நான் அதிர்ஷ்டக்காரன். நமக்குக் கல்யாணம்
நடந்த பிறகு, சும்மா ஒரு வாதத்துக்குத்தான் சொல்றேன். நீங்க வேலையை விட
வேண்டியதிருக்கும். சரியா?"
'ஒரு பெண்ணுக்கு வேலை என்கிறது பணம் சம்பந்தப் பட்டது மட்டுமல்ல.... அதுல ஒரு
ஆத்ம திருப்தியும் இருக்கு.... டெல்லியில் எனக்கு ஒரு வேலை கிடைக்காமலா போகும்?
அதோட நீங்களே இங்கே வேலையை மாத்திட்டு வந்தால் என் வேலை பிழைக்குமே?"
"சரி... அதைப் பற்றியெல்லாம் அப்புறமா பேசிக்கலாம்... இப்போ கொள்கை முடிவு
எடுத்திருக்கோம். அதாவது, நாம் கல்யாணம் பண்ணிக்கப் போறோம்.... சரியா?"
அவள் 'சரி' என்று சொல்லவில்லை. அவன் தோளில் சரிந்து விழுந்தாள். அவன் காரை
ஆகாயத்தில் விடுவது போல ஓட்டி எதிரே ஒரு லாரி வந்தபோது சுதாரித்தான்.
"மகாபலிபுரம் வந்துடுச்சு.. முதல்ல நாம எங்கே போறோம்?” என்று கேட்டாள்.
"எங்க கம்பெனி கெஸ்ட் ஹவுஸுக்குப் போறோம். உன்னைப் பார்த்த ஜோர்ல உங்க
வீட்ல தந்ததுல எதையுமே சரியா சாப்பிடல... "
கார், மகாபலிபுரத்தில் தென்னந்தோப்பு மாதிரி இருந்த ஒரு பகுதிக்குள் சென்றது.
அதற்குள் விசாலமான ஒரு கட்டடம். சுற்று முற்றிலும் மலர்ச்செடிகள். காரிலிருந்து
அவர்கள் இறங்கினார்கள். அவன் ஒரு ரோஜாவைப் பறித்து ஆங்கிலப் பணியில்
மண்டியிட்டு அந்த மலரை அவளிடம் நீட்டினான். அவள் சிரித்துக் கொண்டே அதை
வாங்கி, அவன் சட்டை பட்டனில் சொருகினாள்.
இருவரும், வரவேற்பறைக்கு வந்தார்கள். பொதுவாக, அவனைப் பார்த்ததும் அலறியடித்து
எழுகிறவர்கள் ஏதோ சொல்ல முடியாத துக்கத்தைச் சுமப்பது போல தோன்றினார்கள்.
அவன், சிறிது ஆச்சரியப்பட்டு அதட்டினான்.
"என்னப்பா... அசிரத்தையாய்...."
மல்லிகாவின் இடையில் பட்டும் படாமலும் கையைப் போட்டபடி ரவிகுமார், வரவேற்பாளர்
சொன்ன ‘குடிலை’ நோக்கி நடந்தான். அவள் காதுகளில் மெள்ளக் கிசுகிசுத் தான்.
"எம்.டி. நல்லவரும்மா.... ஆனால், கொஞ்சம் 'மூடி டைப். எனக்கு மெட்ராஸுக்கு
டிரான்ஸ்ஃபர் வேணுமுன்னு என் சார்பா நீயும் கேளு. பிரமோஷன்னு சொல்லாமல்
டிரான்ஸ்ஃபர் மட்டும் கேளு.... ஆனால் நான் சொன்னது மாதிரி அவருக்குத்
தோணப்படாது....சரியா....
அவன், தன்னாலேயே இயக்கப்படுகிறான் என்பது போல் அவள் பெருமிதமாகத் தலையை
ஆட்டினாள். அந்த காட்டேஜுக்கு வந்ததும் வெளியே அவன் விரல்பட, உள்ளே ஒரு
சங்கீதம் எழும்பியது. ஓரிரு நிமிடங்களில் கதவு திறக்கப் பட்டது. திறந்தவருக்கு
நாற்பத்தைந்து வயது இருக்கும். அழகான தோற்றம். வெட்டும் கண்கள், ஆக்கிரமிக்கும்
பார்வை. அவனைப் பார்த்து ஆச்சரியப்பட்டது போல் கண் உயர்த்தி, ``அடடே....
நீயாப்பா? இந்நேரம் ஏதோ ஒரு வீட்டில பொண்ணு பார்க்கிற சாக்கில் சொஜ்ஜியும்
பஜ்ஜியும் தின்னுட்டு இருக்கணுமே....!" என்றார்.
ரவிக்குமார், மல்லிகாவை அவருக்கு அறிமுகம், செய்து வைத்தான்.அவர், அவளை
அங்கீகரித்துக் கொண்டே ரோஜா நாற்காலி' மாதரியான தலைக்கு மேல் உயர்ந்த
ஒரு நாற்காலியில் உட்கார்ந்து எதிரே உள்ள சோபா- செட்டில் அவர்களையும் உட்காரச்
சொன்னார். அவன், அவரிடம்... பெண் பார்க்கும் படலம், அதே சாக்கில் பிக்னிக்
படலமான தைக் ‘கீழ்ப்படியும்' குரலோடு விவரித்தான். அவர் சிரித்துக் கொண்டார்.
பிறகு, அவளைப் பார்த்து "யு ஆர் லக்கி’ என்றார். உடனே, மல்லிகாவும் "ஹி இஸ்
ஆல்ஸோ லக்கி' என்றாள். அவர் கடகடவென்று சிரித்தார். அவளைப் பார்த்து ரசித்தார்.
பேச்சு எங்கெல்லாமோ போனது. அத்தனை உலக விவகாரங்களையும் அவர் சொல்லச்
சொல்ல அவற்றில் உள்ள தப்புகளையும் பொருட் படுத்தாமல் அவர்கள் கேட்டுக்
கொண்டிருந்தார்கள். இறுதியில் மல்லிகா எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் அவரிடம்
ஒரு வேண்டுகோளை விடுத்தாள்.
"அங்கிள். அங்கிள்.... இவரை மெட்ராஸுக்கு மாற்றிப் போடுங்க அங்கிள்... அதனாலே
நான் கஷ்டப்பட்டு தேடிக் கிட்ட அசிஸ்டெண்ட் புரொபசர் வேலையைக் காப்பாத்திக்கலாம்.
உங்க மகள் மாதிரி எனக்கு’’
"நோ பிஸினஸ் டாக் ப்ளீஸ்....``
எம்.டி.யின் குரலே மாறி விட்டது. சிறிது மௌனத்துக்கு பிறகு, ரவிக்குமாரிடம் அவனுக்கு
விடை தெரியாத கேள்விகளாகக் கேட்டுத் திணறடித்தார். பிறகு எழுந்து நின்றார்.
ரவிக்குமாரும் மல்லிகாவும் வெளியே வந்தார்கள். அவன் உடம்பெல்லாம் ஆடியது.
அவளைச் செல்லமாகக் கண்டித்தான்.
'காரியத்தை கெடுத்துட்டியே மல்லி.... எங்க எம்.டி.க்கு மனசிலே பெரிய மன்மதன்னு
நெனைப்பு. எல்லாப் பெண்ணுங்களும் தனக்காக ஏங்குறதா ஒரு எண்ணம்... அப்படிப்
பட்டவரைப் போய் `அங்கிள்.... அப்பா....'ன்னு அழைச் சிட்டியே... "சார்.... சார்'னு
ஒரு இழுப்புப் போட்டுக் குழைந்திருக்க வேண்டாமா? நட....ஏய் மல்லி.... நீ ஏன் அப்படி
ஓடுறே...?'"
"உங்ககிட்ட சொல்றது அநாவசியம்; ஆனாலும் சொல்றேன். நான் பல்லவன் பஸ்ஸைப்
பிடிக்கணும். வர்றேன்.... என்னை நீங்க மட்டும்தான் உங்களுக்காக மட்டும்தான்
கல்யாணம் செய்துக்கப் போறதா நினைச்சேன்..."
அந்த மூவரும் ஆட்டோவில் இருந்து விடுபட்டார்கள். ஆட்டோ, 'கொஞ்சே கொஞ்சம்
நில்லுப்பா' என்று கலைச் செல்வி ‘கான்பூர் தமிழில்' கேட்டாள் ‘ரன்னிங் டயம், சீக்கிரமாய்
வாங்கோ' என்றான் டிரைவர்.
கலையழகு வாய்ந்த கட்டிடங்கள் நிமிர்ந்து நின்ற அந்தத் தெருவைப் பார்ப்பதற்கே
பெருமிதமாக இருந்தது அழகம்மாவிற்கு. இந்தத் தெருவில் நிலம் வாங்கிப் போட்டதற்காக
கணவனைப் பெருமை பொங்கப் பார்த்தாள். கலைச்செல்வி வியந்தபடி தந்தையின்
கையைப் பற்றிக் குலுக்கி `கங்கிராட்ஸ் டாடி பீட்டிபுல் லொகேஷன்' என்றாள்.
ஒரு குறிப்பிட்ட இடத்தில் முத்துவேல் நின்றார். மேலும் கீழுமாய் பார்த்தார். சந்தேகமில்லை
அது அவரது இடந்தான். தெற்குப் பக்கம் அதே சக்தி வித்யாலயா. இரண்டு வருஷத்துக்கு
முன்பு ஓடு போட்ட கட்டிடம்.... இப்போது காங்கிரீட் மாளிகையாகி விட்டது.
முத்துவேல் தலையை ஆட்டி ஆட்டிப் பார்த்தார். அவர் வாங்கிப் போட்ட இரண்டு
கிரவுண்டு இடத்தையும் சாலையில் மூன்றடியையும் ஆக்கிரமித்து 'அன்பு இல்லங்கள்;
என்ற பிளாஸ்டிக் பெயர் ஒட்டப்பட்ட காம்பவுண்ட் சுவரைப் பார்த்தார். ஆறடுக்கு மாடி.
ஒரு அரண்மனையின் கம்பீரம். பத்துப் பதினைந்து கார்கள், ஸ்கூட்டர்கள், வாசலில்
கூர்க்கா.. என்ன இதெல்லாம்.
அதிர்ச்சியடைந்து கீழே விழப் போனவரை தாயும் மகளும் தாங்கிப் பிடித்தார்கள்.
அழகம்மா, "என்னங்க... என்னங்க' என்று அரற்றியபடியே அங்குமிங்குமாய் சுற்றிய
போது, சக்தி வித்யாலயா சண்முகம், அவரைப் பார்த்துச் சிரித்தபடி வந்தார். முத்துவேல்
மனைவியையும் மகளையும் உதறிப் போட்டுவிட்டு அவரிடம் ஓடினார்.
"ஸார்.... ஸார்.... அது என்னோட நிலந்தானே....?"
"ஒரு காலத்துல....அப்புறம் அதை சேட்டுக்கு வித்துட் டீங்க போலிருககே... என்ன
ரேட்டுக்கு கொடுத்தீங்க. என் கிட்ட சொல்லியிருந்தா நானே நல்ல ரேட்டுக்கு
வாங்கியிரும்பேனே."
முத்துவேல் தலைக்குள் ஏதோ ஒன்று உட்கார்ந்து தலையோட்டை பிய்த்தெறிவது
போல் பிரமை. அந்த அடுக்கு மாடிக் கட்டிடத்தை தானும் மகளும் மனைவியும்
கல்தூண்களாய் தலையில் வைத்து பாரம் தாங்காமல் பரிதவிப்பது போன்ற
உடல்வலி... அழகம்மா தான் முன்பின் பார்த்திராத சக்தி வித்யாலயாரைப் பார்த்து
"என்ன ஸார் சொல்லுங்க' என்று பதறியடித்துக் கேட்டபோது அந்த ஆசாமி
'ஸார் இந்த இடத்தை அந்த சேட்டுக்கு வித்துட் டாருன்னு நெனச்சேன். அவர்
என்னடான்னா விக்கலன்னு சொல்றார்.
முத்துவேல் சிறிது சுயத்திற்கு வந்தார்.
‘நான் விக்கல ஸார். விக்கவே இல்ல ஸார். ஒங்ககிட்டக் கூட என் அட்ரஸக் கொடுத்தேனே
ஸார். ஒரு வரி எழுதிப் போட்டிருக்கலாமே ஸார்``.
"வார்த்தய வியர்த்தமா கொட்டாதீங்க ஸார்.... யார் வீடு கட்டினா எனக்கு என்ன? ஏதோ
எனக்கு பவர் ஆப் அட்டர்னி எழுதிக் கொடுத்தது மாதிரி அதட்டுறீங்க....?"
"அதட்டல ஸார்.... அதட்டல. ஒரு ஆறுதலுக்காகக் கேட்டார்."
"சரி சரி .. அதோ ஷெட்டு முழுசயும் அடச்சிட்டு நிற்கிற கான்டசாவுல ஏறப்போறான்
பாருங்க.... அவன் தான் சேட்டு. அவங்கிட்டே போய்க் கேளுங்க. ஆனால் நான் சொன்னேன்
சொல்லாதீங்க. அவனுக்கு அடியாளுங்க அதிகம்.;
சக்தி வித்யாலயர் சேட்டுக்கோ அவரது அடியாள்களுக்கோ அஞ்சுபவரல்ல. ஆனாலும்
வீட்டுக்குள் போய் தன்னை மறைத்துக் கொண்டார். அந்த சேட்டு அப்பப்ப கார்ல
லிப்ட் கொடுக்கிறான். அதோட இந்த வாத்திப் பசங்க வேற....வம்பு பண்றாங்க...
சேட்டுக்குப் பிரண்டாய் இருந்தால் தான் லேடி டீச்சருங்களாவது பயப்படுவாளுங்க.
சேட்டு கெட்டிக்காரந்தான். எங்கேயோ இருந்து ஒரு பிச்சைக்காரனாய் வந்து ஒரு
ராசாவாயிட்டான். பலர பிச்சைக் காரங்கனாகவும் ஆக்கிட்டன். எம்.பி.யும் வேற ஆகப்
போறானாம்..
முத்துவேலர் குடும்பத்துடன் கேட் பக்கம் வந்தபோது கூர்க்கா வழி விட்டான்.
இன்னும் பாக்கியிருக்கும் பிளாட்களில் ஒன்றை வாங்க வந்திருப்பதாக நினைத்து,
சேட்டு சொல்லிக் கொடுத்தது போல் தலையைக் குனிந்து அதையே கை போலாக்கி
ஒரு சல்யூட் அடித்தான்.
முத்துவேல் முக்கியடித்து ஓடினார். காரில் ஏறப் போன சேட்டின் குறுக்கே கையை
நீட்டியபடியே அவனை வெறித்துப் பார்த்தார். தேவிலால் மாதிரியான தோற்றம்.
ஆனால் வயிறு மட்டும் உடம்பின் விகிதாச்சாரத்திற்கு அதிக மாக விம்மியிருந்தது.
சேட் அவரைப் பார்த்ததும் அவசரத் தனமான நிதானத்துடன் விளக்கமளித்தான்.
"அதோ ரிஜிஸ்தரோட நிற்கிறார் பாருங்க... அவர்கிட்டே எல்லா விவரமும் கேளுங்க...
நாலு பிளாட்டையும் நல்லா பாருங்கோ....நான் அரை மணி நேரத்துக்குள்ளே வந்துடுறேன்.
அட்வான்ஸ் கொண்டு வந்திருக்கீங்களா?”
முத்துவேல் விண்ணதிர மண்ணதிரக் கத்தினார்.
"அடே.. பாவி.... இது என்னோட நிலம்டா.... அஞ்சு வருஷத்துக்கு முன்னால முப்பதாயிரம்
ரூபாயக்கு வாங்கிப் போட்ட கிரவுண்டுய்யா.... பொண்டாட்டி நகையவித்து ஜி.பி.எம்.
லோன் போட்டு குருவி சேர்த்தது மாதிரி சேர்த்து வச்ச பணத்தையும் போட்டு வாங்கிப்
போட்ட இடம்டா....
சேட்டு, முத்துவேல் தன்னைப் புகழ்வது போல் வாயை ஒரு கோடாக்கினான். இதற்குள்
பல்வேறு பிளாட் பால்கனிகளில் பல்வேறு உருவங்கள் தோன்றின. சிலருக்கு சேட்டு
மாட்டிக் கொண்டதில் சந்தோஷம். சேட்டை விரும்பாத மற்றும் பலருக்கு புது வருத்தம்.
இந்த வில்லன் செய்த வில்லங்கத்தால், லட்சககணக்கான ரூபாயில் வாங்கி போட்ட
பிளாட்டுக்குக் கேடு வந்துவிடக் கூடாதே என்ற பயம். அந்த பயத்தின அடிப்படையில்
வில்லாதி வில்லனான அந்த சேட்டை கதாநாயகனாகப் பார்த்தார்கள். தங்கள்
விருப்பத்திறகு விரோதமாகவே சேட்டுக்கு ஆதரவாளராய் மாறினார்கள். சேட்டுக்கும்
ஒரு பிரச்னை. அதையே ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டான். இவனை
விரட்டுகிற விரட்டில்... பிளாட்டுகளில் பிளாட் போடுற பசங்க பயப் படணும். ஆடாமல்
அசையாமல் முத்துவேலை பார்த்துக் கேட்டான்.
'கண்மணி ராமச்சந்திரன் கிட்டே. காந்தி நகர்ல இருக்காங்களே அந்தம்மாகிட்டே...!
‘அவங்ககிட்டே போய்க் கேளு!`
'அவங்க இறந்துட்டதாய்...!'
"அப்போ அவங்க சமாதியத் தேடிப் பிடிச்சு... அங்க போய்க் கேளு...என்னய்யா நீ
நிசமாவே, ஏமாந்துட்டியா இல்ல ஏமாத்துறியா? எப்படி இருந்தாலும் எனக்கென்ன?
இந்த இடம் திருவான்மியூருல... இன்னும் உயிரோடு இருக்கிற மகோன்னதனோட
இடம்.. வில்லங்க சர்டிபிகேட் வாங்கி சப் ரிஜிஸ்திரார் ஆஃபீஸ்ல பத்திரம் பதிஞ்சு....
கிரவுண்டுக்கு அஞ்சு லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கேன். மெட்ரோபாலிட்டன்
ஆபீஸ்ல கார் மேல கார் போட்டு அலஞ்சு திரிஞ்சு பிளான் அப்ரூவலோடு எண்பது
லட்சத்துல கட்டுன அடுக்குமாடி வீடு - நீ எவ்வளவு ஈஸியா ஒன்னோட இடமுன்னு
சொல்ற . ஒன்ன மாதிரி ஆளுங்கள எல்லாம்.... ஏய் கூர்க்கா ஒனக்கு வேலயக்
காப்பாத்திக்க ஆச இல்லயா.... இந்த மாதிரி ஆளுங்கள ஏய்யா விடுற....' சட்டப் பேரவை
மார்ஷல் மாதிரி கூர்க்கா முத்துவேல் பக்கம் ஓடி வந்தான். அவரது மனைவியும்
மகளும் பயந்து விட்டார்கள். அவனைக் கையெடுத்துக் கும்பிட அந்தக் கும்பிடு
அவன் வேகத்தைப் பின்னாலும், சேட்டின் எசமானப் பார்வை முன்னாலும், இழுக்க
அவன் அல்லாடியபோது அழகம்மாவும், கலைச் செல்வியும் முத்துவேலை இழுத்துக்
கொண்டு வெளியே வந்தார்கள்.
அதில் அதிக சிரமமும் இல்லை. முத்துவேலர் அவர்கள் இழுத்த இழுப்பிற்கு உடன்பட்டார்.
'அய்யோ. அய்யோ....' என்று அரற்றிக் கொண்டார். பெரிய பணக்காரி என்று தான்
நம்பிய கண்மணி ராமச்சந்திரன் ஏமாற்றி விட்டாளே என்று துடித்துப் போனார்.
இல்லாவிட்டால் அந்தச் சேட்டு அப்படி பயப்படாமல் பேசியிருக்க மாட்டான் என்ற
அனுமானம்...
கேட்டுக்கு வெளியே வந்தவர்களை இடிக்கப் போவது போல், சேட்டின் ‘செட்டுக்கார்'
வாசலில் இருந்து ஒரே துள்ளலாய்த் துள்ளி அப்புறம் பாய்ந்தது. அங்கிருந்து விலகிய
மூவரும் சாலையின் மறுமுனை விளிம்பில் நின்றார் கள். சக்தி வித்யாலயர் ஜன்னல்
வழியாகப் பார்த்தான். பிளாட் அடுக்குமாடிவாசிகள் சந்தோஷப்பட்டார்கள். பிழச்சுட்டு...
பிழைச்சுட்டு... ஆனாலும் அங்கிருந்த ஒரு நடுத்தர ஆசாமி, நாலாவது மாடியின்
ஓரத்திற்குப் போய் லிப்ட்டின் மூலம் கீழே வந்தார். சேட்டின் கார் தெருவைத் தாண்டுவதற்கு
அவகாசம் கொடுத்து நின்றார். பிறகு கேட்டுக்கு வெளியே வந்து அங்குமிங்குமாய்
பாவ்லா காட்டிவிட்டு சக்தி வித்யாலயர் இப்போது குனிந்து போயிருப்பதை
அனுமானித்துக் கொண்டு முத்துவேலர் பக்கம் வந்தார். அவரைப் பார்த்ததும்
ஆறுதல் தேடிப் பேசப் போனவரிடம் அவரே பேசினார்.
"கவலைப்படுறத விட்டுட்டு.... காரியத்தப் பாருங்க.... இந்த நிலம் கண்மணி
ராமச்சந்திரனுக்குத்தான் சொந்தம். ஏதோ பெரிய பைனான்ஸ் விவகாரத்துல
மகோன்னதன் மாட்டி, அவனோட இந்த நிலம் ஜப்திக்கு வந்தது. கண்மணி
ராமச்சந்திரன் அதை ஏலத்துல எடுத்துருக்காங்க. இந்த சேட்டுப் பயல். மகோன்னதத்திற்கு
ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து ஜப்தி விவகாரத்த மூடி மறச்சு....
மகோன்னதனோட ஒரிஜினல் பத்திரத்த மட்டும் காட்டி இந்த நிலத்தை வாங்கிட்டதா
பத்திரம் பதிவு செஞ்சுட்டான். எவ்வளவு அநியாயம் பாருங்க. எந்த சப் ரிஜிஸ்திரார்
ஆபீஸ்ல யாரு எந்த நிலத்த வாங்கினாரோ அதே நிலத்த வாங்குனதாய் பதிவு
செய்துட்டான்.''
கலைச்செல்வி முதல் தடவையாகப் பேசினாள்.
`சப் ரிஜிஸ்திரார் ஆபீஸ்ல எப்படி அங்கிள் சம்மதிப்பாங்க. சட்டத்துககு தப்பாச்சே.'
'நீ வேறம்மா.... சப் ரிஜிஸ்டிரார் ஆபீஸ்ல பெண்டாட்டி, புருஷன விக்கிறதாயும், புருஷன்
பெண்டாட்டிய விக்கிறதாயும் எழுதிக் கொடுத்தாலும் பதிவு செய்வாங்க.... என்ன கொஞ்சம்
வாய்க்கரிசி போடணும்.
‘நீங்க இங்கே பிளாட்ல இருக்கீங்களா'
"அங்க இருந்தா இப்படி உங்ககிட்ட அன்பா பேசுவனா நான் ரியல் எஸடேட் புரோக்கர் -
இந்த சேட்டுப்பயல .. நம்பி அவன் ஆயிரம் சதுரடின்னு சொன்ன பிளாட்ட ஒருத்தருக்கு
வாங்கிக் கொடுத்தேன். கடைசில மொத்தமே எஎழுநூறு சதுரடி...வாங்குனவர் சேட்டத்தானே
போலீஸ்ல புகார் செய்யணும்....? அதுக்குப் பதிலா என்மேல் கம்ப்ளெயிணட் கொடுக்கப்
போறதாய் மிரட்டுறான். கமிஷன் கேட்டால் குலைக்கிறான். அவனைப பார்க்கத்தான்
வ ந்தேனா. மொதல்ல போலீஸல போய கம்பளெயின்ட குடுங்க. எனக்குக் கமிஷன்
கொடுக்காத பயல் - பிளாட்ட விட்டுட்டு நடு ரோட்ல திரியணும்... அப்போதுதான நம்மதி....
சீக்கிரமாப் போங்க...
முத்துவேலர் வேக வேகமாகப் போன அந்த மனிதனின் மூதுகைப் பார்த்தபடியே நிமிரந்தார்.
அவர் பதிவுப் பத்திரத்தில் இந்த மகோன்னதன் இடத்தை அந்தக் கண்மணி ராமச்சந்திரன் எப்படி ஏலத்தில் எடுத்தாள்
என்ற விவரம் எழுதப்பட்டிருந்தது நினைவுக்கு வரவர அவருள் ஒரு போர்க்குணம் எழுந்தது.
அவரையே உற்று நோக்கிய மனைவியையும், மகளையும் 'வாருங்கள்' என்று மோவாயை
ஆட்டிக் காண்பித்துவிட்டு முன் நடந்தார்.
அவரைப் பார்த்து திட்டப்போன ஆட்டோக்காரன், அவர் வந்ததும் வராததுமாய்
போலீஸ் ஸ்டேஷனுக்குப் போப்பா என்று போர்க்குரல் எழுப்பியபடி ஆட்டோவிற்குள்
உட்கார்ந்த தோரணையில் அசந்து விட்டான். அவர்களும் ஏறிக் கொண்டார்கள்.
அப்போது தூரத்தைப் பற்றிக் கவலைப்படாத முத்துவேல் இப்போது அந்தக் காவல்
நிலையம் கண்ணில் படுவதற்காக துடியாய்த் துடித்தார். அங்குமிங்குமாய் நெளிந்தார்.
இப்போது அழகம்மா வாய்விட்டே அரற்றினாள்.
'குருவி சேர்த்தது மாதிரி சேர்த்த பணமெல்லாம் போயிட்டே. கடைசில தெருவுல நிக்கோமே.
நான் எத்தன தடவ சொன்னேன். மெட்ராஸ் ஒத்து வராதுங்க. கான்பூர்லயே இருந்துடலாம்னு.
சொன்னனே கேட்டீங்களா.... தமிழ் தமிழ்நாடுன்னு மூச்சுக்கு மூச்சு பேசுற ஒங்களுக்கு
என்ன நடந்திருக்குன்னு பார்த்தீங்களா. தமிழ் நாட்ல வாழத்தான் முடியல சாவுறதயாவது
அங்க வச்சிக்கலாமுன்னு நீங்க விளையாட்டாச் சொன்னது வினையாயிட்டே. சாகாமச்
சாகப் போறோமே.... அய்யோ ஒங்களுக்கு பிளட் பிரஷர்னு தெரிஞ்சும் நான்
திட்டுறேனே. என் மனசு கேட்க மாட்டக்கே. கலை.... ஒங்கப்பாவுக்கு மாத்திரை
கொடுடீ....
அழகம்மா மீண்டும் பேசி விடுவோமே என்று பயந்து போய் வாயில் வலது கையால்
அழுத்திக் கொண்டாள். கலைச்செல்வி அம்மாவை அணைத்துக் கொண்டாள். மூத்துவேல்
விறைத்தும் விக்கித்தும் சிறிது வீறாப்போடும் நிமிர்ந்து நின்றார். ஆட்டோ டிரைவர்
இளைஞன் கேட்டான்.
‘அந்த சேட்டு பிராடு.... அவன் கிட்டவா மாட்டினீங்க.... என்ன நடந்தது....`
வாயை வலுக்கட்டாயமாக மூடிய அழகம்மா மீண்டும் அரற்றினாள்.
`அதை ஏன் கேக்குற தம்பி... இவரு ஊர்ல அனாதயா பிறந்து எப்படியோ
எஸ்.எஸ் எல்.சி.டடிச்சுட்டு கான்பூர்ல ஒரு தோல் கம்பெனில சேர்ந்தாரு.
பக்கத்து ஊர்ல இவரப் போலவே அநாதரவாப் போன என்னையும் கல்யாணம்
பண்ணிக்கிட்டாரு. இவள் கான்பூர்லதான் பிறந்தாள். இவருக்கு இந்த மண்ண
மறக்கமுடியல. மகளுக்குக் கலைச்செல்வின் பெயரிட்டாரு. கம்பெனி விஷயமா
இந்த சி எல்.ஆர்.ஐயில வருஷத்துக்கு ஒரு தடவ வருவாரு. அப்போ யாரோ....
சொன்ன இந்த இடத்த வாங்கிப்போட்டாரு வருஷா வருஷம் நிலத்த பார்க்கிற
மனுஷன் போன வருஷம் பார்க்கல. அதே சமயத்துல 'அழகம்மா.... அழகம்மா ...
நம்ம நிலத்தோட மதிப்பு.... இப்போ பத்து லட்சம். அஞ்சு கிரவுண்ட் வித்து....
ரெண்டு லட்சத்துல ஒரு சின்ன வீடு கட்டி, மூணு லட்சத்துல நம்ம மகளுக்கு தமிழ்
நாட்டிலேயே ஒரு நல்ல
பையனாப் பார்ச்கலாமுன்னாரு. அடம் பிடிச்ச எங்கள எப்படியோ கூட்டி வந்துட்டாரு.
கான்பூர் கம்பெனில கணக்கு வழக்கை முடிச்சுட்டு. போன வாரந்தான் மெட்ராஸ் வந்தோம்.
சொந்தமும் இல்ல பந்தமும் இல்ல. ஒரு லாட்ஜ்லதான் இருக்கோம். வாடகை வீடு பார்த்துட்டு
வர்றோம். அதுக்குள்ள இந்த அநியாயத்த பார்த்துட்டோம்.`
'மம்மி அழாதீங்க... டாடி... இந்தாங்க மாத்திரை....` அந்த டிரைவர் பாதிக்கப்பட்டதை
அந்த ஆட்டோ நின்று காட்டியது. பிறகு அங்குமிங்குமாய் அலை மோதி, அந்தக் காவல்
நிலையததிற்கு முன்பாக நின்றது.
முத்துவேல் மனைவியையும், மகளையும் - பற்றியபடியே அந்த செஞ்சிவப்புக் கோடுகள்
போட்ட கட்டிடத்தின் மாடிகளில் ஏறினார். வாசலில் துப்பாக்கியுடன் வழிமறித்த
ஒரு காவலரிடம் அத்தனையையு சொல்லச் சொல்ல அவன் தலையாட்டிக் கேட்டான்.
அப்புறம் அதோ போய்ச் சொல்லுங்க, என்று கை காட்டினான்.
இடுப்புத் துப்பாக்கியோடு ஏதோ செக்யூரிட்டி டியூட்டிக்குப் புறப்பட்ட இன்ஸ்பெக்டர்
முத்துவேலரை சுழிபோட்டுப் பார்த்தார். சத்தமாய்ப் பேசப் போனவரை, 'மெதுவாப்
பேசுங்க எனக்குக் காது கேட்கும்' என்று ஸ்பீட் பிரேக் போட்டார். முத்துவேலும்
அழகம்மாவும் அவரிடம் மாறி மாறி முறையிட்டார்கள். ‘என்ன நெஞ்சழுத்தம்
இருந்தால் அந்தப் பொண்ணு பேசாமல் அரோகன்டா நிற்பாள்' என்று கலைச்செல்வியை
கர்வத்தோடு பார்த்தார். இதற்குள் ஒரு டெலிபோன். 'ஹலோ.... நான்தான்..
இதுக்குப் பேர்தான் டெலிபதி... இப்போதான் அந்தப் பார்ட்டியும் வந்திருக்கு.
டோண்ட் ஒர்ரி. ஒங்க காம்ப்ளெக்சுக்கு செக்யூரிட்டி ஏற்பாடு செய்யறேன். இன்னிக்குக்
கமிஷனர் ஆபீஸ்ல டூட்டி... நாளைக்கு வச்சுக்கலாம். எங்க ஆட்கள அனுப்பி வைக்கிறேன்.
அப்பதான் ஒங்க பிளாட் ஆளுங்களுக்கும் ஒங்க மேல ஒரு 'இது' வரும்...'
இன்ஸ்பெக்டர் அந்த மூவர் பக்கமும் நெருங்கி வந்து கத்தினார்.
'பெரிய மனுஷங்க மேல பழி போடுறதுக்கு இப்படி எத்தன பேருய்யா கிளம்பி இருக்கீங்க.
அடுத்த தெருவுல ஏழைப் பிள்ளையாரை பத்து லட்சத்துல பணக்காரராய் ஆக்குனவரே
அவரு... வேணுமின்னால் தாசில்தாரப் பாருங்க... அப்படி இல்லாமல் அங்க போய்
கலாட்டா செய்தீங்கன்னா இ பி கோ. 427-வது செக்ஷன்படி அத்துமீறி பிரவேசித்ததற்காகவும்,
செக்ஷன் 147-படி சட்ட சட்ட விரோதமாய் கூடியதுக்காகவும், செக்ஷன் 327-படி விரோத
செயலுக்காகவும் செக்ஷன் 41-படி வன்முறையில் ஈடுபட்டதுக்காகவும், நடவடிக்கை
எடுக்க வேண்டியதிருக்கும். போலீஸ் ரிமாண்டும் ஏழாண்டு ஜெயிலும் கிடைக்கும்.
காரணம். ஒரு பொருள் அல்லது உடைமை யார்கிட்ட இருக்குதோ அதுக்கும்
அவங்களுக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டியது போலீஸ் டூட்டி... ஓ.கே.. எனக்கு
தலைக்கு மேல வேல..போங்க...போங்க..
அந்த மூவரும் தள்ளாடித் தள்ளாடி இன்ஸ்பெக்டரின் அமானுஷ்யமான ஒரு சக்தி
தள்ளிவிட்டது போல ஆட்டோவுக்கு வந்தார்கள். முத்துவேல் சுருதி குறைந்து பேசினார்.
'ஒனக்கு எவ்வளவு பணமுன்னாலும் தர்றோம். தாசில்தார் ஆபீஸ் விடுப்பா'.
நீதிமன்றத்தில் போட்டுக் கொள்வதற்கும் காவல் நிலையத்தில் கையில் வைத்துக்
கொள்வதற்கும் பயன்படும் கறுப்புக்கோட்டோடு வந்த சிவப்பு மனிதர், அவர்களை
வரவேண் டாம் என்று சொல்லிவிட்டு, அவரே வந்தார். முத்துவேல் விபரமாக
எடுத்துரைத்துப் பேசினார் அவர் பேச முடியாமல் தத்தளித்தபோது அழகம்மாவும்
கலைச்செல்வியும் அவருக்கு உதவிக்கு வந்தார்கள். வக்கீல் எந்தவிதச் சலனமும்
இல்லாமல் ஏற்கனவே செத்துப் போய், இப்போது அவர் ஆவி மட்டுமே பேசுவது
போல பேசினார்.
"தாசில்தார் ஆபீஸ்ல... அவரையும் அவரோட ரெவின்யூ இன்ஸ்பெக்டரையும்
தேடுறதுக்கு ஒரு மாசமும்...அவர்கள் முகம் கொடுத்துப் பேச ஒருவருஷமும் ஆகும்.
இது அசல் கிரிமினல் கேஸ். ஆனால், போலீஸ் சேட்டுப் பக்கம் இருக்கறதுனால
ஒண்ணும் பண்ண முடியாது. ஆனால், கோர்ட்ல ஒரே சமயத்துல, சிவில், கிரிமினல்
கேஸ் போடலாம். பத்து லட்சம் ரூபாய் நஷ்டஈடு கேட்டு வழக்குப் போடுவோம்.
அப்புறம் கேட்கிற ஒவ்வொரு நூறு ரூபாய்க்கும் ஏழார் ரூபாய்க்கு ஸ்டாம்ப் பேப்பர்
வாங்கணும். பத்து லட்சம் ரூபாய்க்கும் எழுபத்தைந்தாயிரம் ரூபாய் ஆகும். என் பீஸ்
வேற. அந்த சேட்டு அப்பவும் போகாட்டால் அஞ்சு வருஷத்துல ஜெயிச் சுடலாம்.
இதுதான் ஒரே வழி, வீரலுக்கு ஒரு எம்.எல்.ஏ.வை யும் கைக்கு ஒரு மந்திரியையும்
பிடிச்சு வச்சிருக்கிற சேட்டை வேற வழில மடக்க முடியாது. ஓ.கே...எனக்கு
இன்ஸ்பெக் டர்கிட்ட ஒரு கஞ்சா கேஸ் இருக்குது..'
அந்த ஆட்டோ திகைத்து திசையற்று ஓடியது. அதோ அந்தத் தெருப் பக்கம் வந்தபோது
அழகம்மா டிரைவரின் முதுகைத் தட்டி ஆட்டோவை நிறுத்தச் சொன்னாள். அது
நின்றதும் அதிலிருந்து குதித்தாள். அவள் முகம் இறுகிப் போய் உடம்பு முறுக்கேறியது.
அந்தத் தெருவில் நிதானமாக நடந்தாள் . டிரைவர் உட்பட அந்த மூவரும் அவளை
இழுத்துப் பிடிக்கப் போனார்கள். அழகம்மா அவர்களைத் தட்டிவிட்டு விட்டு அந்த
அடுக்குமாடி வீட்டுக்கு முன்னால் போய் நின்றாள். கீழே குனிந்தாள். ஒரு கை நிறைய
மண்ணை அள்ளினாள். மேலே நிமிர்ந்தாள். மண்ணோடு உளங்கையை
வாய்க்கருகே கொண்டுவந்து மூன்றுதடவை ஊதிவிட்டாள். ஒவ்வொரு ஊதலும்,
ஒரு புயலாகி, ஒவ் வாரு பிடி மண்ணையும் அந்த அடுக்கு மாடிக் கட்டிடத்தை நோக்கி
அணுத்துகள்களாக அனுப்பிக் கொண்டிருந்த போது-அந்த அடுக்குமாடி வீட்டிற்கு
'செக்யூரிட்டி' கொடுக்க, போலீஸ் வேன் ஒன்று அந்தத் தெருவுக்குள் நுழைந்தது.
----------------
12. குடிக்கள்ளன்
'ஏய் சாய்பு...'
அப்துல்காதர் லேசாய் ஆச்சரியப்பட்டார். உடைமரக் காடு வழியாக நடப்பித்த
கால்களுக்கு அந்தத் தெருப் புழுதி தரையில் நங்கூரம் பாய்ச்சிபடியே எதிர்திசையை
வியப்பாகப் பார்த்தார். அப்துல்லா என்ற வார்த்தைக்கு அடுத்த வார்த்தை பேசாத
பிச்சாண்டி அனைவரின் சம்மதத்துடன் ஏன் அப்படி அழைக்கிறான் என்பது அவருக்கு
புரியவில்லை. பாதிச் சந்தேகமாகவும், மீதி நம்பிக்கையாகவும் உடம்பை வலது
பக்கமாக வளைத்துப் பார்த்தார். இதுவரை கேட்டறியாக அந்த வார்த்தை ஒரு
கெட்ட வார்த்தையா, அல்லது தற்செயலாய் இருதயத்தில் சம்பந்தப்படாமல்,
வாய்க்குள்ளேயே ஊறி, தவறி விழுந்த வார்த்தையா என்ற புதிருக்கு விடை கேட்பவர்
போல் தன்னோடு நடந்து வந்த தங்கை நசீமாவை நோக்கி உடம்பை இடது பக்கமாக
வளைத்துப் பார்த்தார். அருகேயுள்ள மலைப் பகுதியில் பாய் நெய்வதற் சூரிய
கோரைகளை வெட்டு வெட்டாய் வெட்டி, கட்டிக் கட்டாய் கட்டி, வெறுந்தலையில்
சுமந்து வந்த நசீமா, ஊருக்குள் நுழைந்ததும் அந்தக் கோரைக் கட்டை கும்பக் காரி
போல் தலையை வளைத்து சரி செய்தாள். இதனால் எதிர்திசையின் சாவடியில் பேச்சோ
அல்லது அண்ணனின் தவிப்போ அவளுக்குப் புரியவில்லை. இந்த எதிர்திசை
வம்பளந்து விட்டுத்தான் அண்ணன் வரும் என்பது அறிந்து வைத்திருந்த, நசீமா
தன்பாட்டுக்கு நடந்தாள். ஆனால் அந்த திசையில் மீண்டும் ஒலித்த குரல் அவளையும்
திடுக்கிட வைத்து, அண்ணன் பக்கம் ஓடி அவனோடு ஒட்டி நிற்க வைத்தது.
"ஒன்னத்தாண்டா சாய்புப் பயலே.... வாடா இங்கே.`'
எதிர்சாவடியில் பிச்சாண்டி எகிறிக் கொண்டிருந்தான் நான்கு பேர் அவனை ஒப்புக்கு
பிடித்தாலும், வேட்டி கீழே விழுந்து கால்களில் சிக்க, அவன் வெறும் டவுசரோடு
நின்றான். முன்பெல்லாம் “அப்துல்லா இல்லடா என் பேரு. அப்துல் காதரு. எதுக்குடா
அப்துல்லா அப்துல்லான்னு கூப்புடுறே” என்று இதே இந்த அப்துல் காதர் அவனை
செல்லமாக அதட்டும்போது, அதே அந்தப் பிச்சாண்டி "ஒன்னைப் பார்த்தா அல்லா
மாதிரி தெரியுது. அதனால் தான் நீ அப்துல்லா” என்று இவர் தோளில் கை போட்டுப்
பேசுவான். ஆனால் இன்றைக்கோ, வெறும் டவுசரை வேட்டியாக நினைத்து, தார்பாய்ப்பது
போல் டவுசர் பட்டை யை அவன் தூக்கியதில் அந்தப் பாடாதிப்பட்டை அவன்
கையோடு மேலே போனது. அந்தச் சுரணைகூட இல்லாமல் அங்குமிங்குமாகத்
தாவினான்.
"ஒன்னை இன்னைங்க்குவிடப் போறதில்லடா..."
அப்துல் காதர் இன்னும் புரியாமல் விழித்தார். வறட்சி மாங்காய் நிறத்து மனிதரான
அவர், வேல் போன்ற தனது தாடியைத் தடவிவிட்டுக் கொண்டே, ஒரு ஆட்டின்
லாகவத்தோடு கண்களை இடுக்கிப் பார்த்தார். நசீமாவோ, எதிர் திசையை பார்த்தும்,
ஊர் திசையை பார்த்தும், அண்ணனை பார்த்தும் கோரைக் கட்டோடு ஒரு சுற்றுச்
சுற்றியபோது அந்த கோரை கூட அப்துல் காதர் முகத்தில் போய் இடித்தது.
பிச்சாண்டியை நான்கு பேர் பிடிததுக் கொண் டார்கள்.
இப்படிப் பிடித்த நான்கு பேர்களின் காலடிகளின் இடை வெளியில் ஒரு சில முகங்கள்
சட்டம் போட்ட சதை முகங்களாய் தென்பட்டன. அந்த முகங்களும், அப்துல்காதரை,
அசை போட்டு பார்த்தன. ஆசாமிகள் இருந்தபடியே கண்களில் மிரட்டினார்கள்.
அந்தச் சாவடிச் சுவரை ஒட்டியிருந்த ஒரு குத்துக் கல்லில் உட்கார்ந்திருந்த முத்துலிங்கம்,
தனக்கும் அங்கே நடைபெறுவதற்கும் சம்பந்தமில்லை என்பது போலவும், அது தனது
தரத்திற்கு தாழ்ந்தது என்பது போலவும் அண்ணாந்து பார்த்தார். அதே சமயம் மேல்
நோக்கிய முகத்திலிருந்து கண்கள், அந்தப் பக்கமாய் கீழ் நோக்கின ஒருத்தன் மேல்
கண்ணணா இருப்பன்'. இல்லன்னா 'கவு கண்ணணா இருப்பான். ஆனா இந்த
முத்துலிங்கம் கீழே பார்த்துக் கிட்டே மேல பார்க்கார். மேல பார்த்துகிட்டே கீழே
பார்க்கார். இவரு எந்தக் கண்ணுல சேத்தி என்று ஒரு 'வாலன் ஒரு தடவை கேட்டபோது,
'ரெட்டைக் கண்ணன்' என்று இந்த பிச்சண்டிதான் அப்போது பெயர் வைத்தான்.
இதுவே அவருக்கு வக்கணையாக ஊர் வாயில் பதிவாகிப் போனது. ஆசாமி
குத்துக்கல்லோடு குத்துக்கல்லாக அதன் தொடர்ச்சி போல் அமர்ந்திருந்தார்.
பிச்சாண்டி வாய் வீச்சில் தன் பேருக்கு எதிர்மறைவாய் விளாசினார்.
`அடே நம்பிக்கைத் துரோகி. இன்னிக்கு நீ பதில் சொல்லாம ஊருக்குள்ள போக
முடியாதுடா. ஒப்பனை உதைக்கிற பயலே. ஈரத் துணியைப் போட்டு கழுத்தறுக்கிற
கவர்மெண்டு பயலே.'
அப்துல் காதருக்கு, இது அதிகபட்சமாகத் தோன்றியது. செயினை பிசைந்தபடி வானத்தை
நோக்கிய நசீமாவை முதுகைப் பிடித்துத் தள்ளியபடியே அந்த இடத்தைவிட்டு
அகலும்படி சமிக்ஞை செய்துவிட்டு, ஏதுவுமே நடக்காதது போல் அப்படி நடக்கவிடப்
போவதில்லை என்பது போல் பேசினார். ஆனாலும், அவர் குரல் லேசாய் நடுங்கியது.
சென்னையிலே உறை என்றும், மதுரையில் பாக்கெட்டு என்றும் ஆகு பெயராகி, மலிவு
விலை மது என்ற பெயரை மறைத்து, நாட்டுச் சாராயம் என்ற புனைப் பெயராக்கிய
திரவத்தை குடித்துவிட்டுத்தான், பிச்சாண்டி பேசுகிறான் என்ற அனுமானத்தில்
பதிலளித்த அப்துல்காதரை, அருகே உள்ள நாச்சிமுத்து நல்லதுக்கு சொல்வது
போல் பொல்லாப் பாய் பேசினான். இரண்டு பாக்கெட்டுக்களை உறிஞ்சிக்
குடித்துவிட்டு, மூன்றாவது பாக்கெட்டை உள்ளேயிருக்கும் சாராயத்தோடு கடித்து
குடிக்கும் மனிதர் இவர். வாய்க்கு மேலே சாராயம் எட்டிப் பார்க்கும், கண்களில்
சிவப்புப் சிவப்பாய் தேக்கி வைத்திருக்கும் நடுத்தரம். நல்ல உயரமும், செட்ட
அகலமும், கொண்டவர் ஆனாலும் போதையில் லாமலே அதட்டினார்
"அவன் என்னடான்னா, நம்பிக் கெட்டுட்டோமேன்னு க்கான். நீ எரிகிற தீயிலே எண்ணையா
ஊத்துறே? அவன் உடம்பு தாங்காதுன்னா என்னய்யா அர்த்தம்? அவனை அடிச்சுப்
பாரு பார்க்கலாம். உன் கச்சத்துக்குள்ள நாங்க நுழையுறோம்."
அப்துல்காதர் அழாக் குறையாக கேட்டார். நசீமா அவர் முன்னால் போய் நின்று
கொள்ள, அவர் தங்கையின் கழுத்து வழியாக முகத்தை நீட்டிக் கேட்டார்.
நான் எப்போய்யா அடிப்பேன்னு சொன்னேன்... உங்க ளுக்கு என்னய்யா வந்திட்டு?
குடிச்சா நம்ம உறவு முறை கூட மறந்துடணுமா? ஏய் பிச்சாண்டி என் மொகத்த ஒரு
தடவ பார்த்துப் பேசுடா உனக்கு நான் என்னடா கெடுதி பண்ணிணேன்?"
அப்துல் காதர் நேருக்கு நேராய் பார்த்து இப்படிக் கேட்டதில் பிச்சாண்டி அதிர்ந்து
போனான். ஆறடி உடம்பை வைத்திருந்தால், கொக்கன் என்று பெயர் கொண்ட அவன்,
இப்போது குருவி போல் குறுகி நின்றான். அப்துல்காதருடன், அவன் மேற்கொண்ட
பஸ் பயணங்கள், அண்ணன் தம்பியாய் ஒரே கட்டிலில் தூங்கிய இரவுகள், அவன்
கோபத்தை தணித்தன. அதைப் புரிந்துகொண்ட குத்துக்கல்லு ரெட்டை கண்ணன்,
முத்துலிங்கம், லேசாய் செருமினார். 'இதுக்கு மேல என்ன கெடுதி இருக்க முடியும்?
பாலாவப் பாரு பாவ்லாவா என்று ஆகாயத்தைப் பார்த்து ஒரு அம்பை வீசினார். அது
பிச்சாண்டியை உந்த, அவன் ஸ்கட் ஏவுகணையானான்.
"இன்னிக்கு ஒன் கணக்கை முடிக்காம விடப் போற தில்லடா.”
"இந்தா பாரு பிச்சாண்டி.. நாம தாயா பிள்ளையா பழகுகிறோம். எந்தக் காலத்துல ஒரே
சாதியில் இருந்தமோ தெரியாது. ஆனா அப்போயிருந்தே அண்ணன், தம்பி, மாமன்,
மச்சான் உறவுல வழி வழியாப் பழகுகிறோம். என்னை வேணுமுன்னா நாயே
பேயேன்னு திட்டு. ஆனா சாய்புன்னு மட்டும் சொல்லாதே. இந்த வார்த்தை இந்த
பட்டியிலே கேட்டறியாத வார்த்தை... ஒன்ன கள்ளப் பயலேன்னு நான் சொன்னா
நீ சம்மதிப்பியா? உங்க சாதி சனம்தான் சம்மதிக்குமா? கேடு வரும் பின்னே, மதி
கெட்டு வரும் முன்னே."
பிச்சாண்டியைப் பிடித்து கொண்டிருந்த நான்கு ஐந்து பேர், இப்போது அவனை தள்ளிப்
போட்டுவிட்டு அப்துல் காதரைப் பார்த்து பாய்த்தார்கள். அந்தச் சமயம் பார்த்து
அந்தப் பக்கமாய் வந்த கான்ட்டிராக்டர் காதர் மொகைதீன், அது வினை என்று
தெரிந்தாலும் அதை விளையாட்டாக எடுத்துக் கொண்டது போல், குத்துக்கல்
மனிதரைப் பார்த்து பல்லோடு சேர்த்து வாயைக் காட்டிவிட்டு தன் பாட்டுக்கு
நடந்தார். அப்துல்காதர் விவேகானந்தர் போல் கைகளை மடக்கிக் கொண்டு
அசைவற்று நின்றார். ஆனால் நசீமா கோரைக் கட்டைக் கீழே போட்டுவிட்டு
அண்ணனை நோக்கி வந்தவர்களைப் பார்த்துக் கும்பிட்டாள் குத்துக்கல் மனிதரைக்
கண்களால் கெஞ்சினாள். பிறகு ஆகாயத்தைப் பார்த்து 'அல்லா, அல்லா' என்று
அரற்றினாள்.
இதற்குள், அப்துல்காதரைத் தாக்க வந்த ஐவர் அணியில் பீமனாக முன் நடந்த
உதிரமாடனின் காலில் ஒன்று இடறியது. எங்கிருந்தோ ஓடி வந்த ஒரு ஒத்தக்கால்
இளைஞன் கீழே விழுந்து அவரது கால்களை தனது கைகளால் பிடித்துக்கொண்டு
முழுமையான காலையும் அவரது காலோடு வளைத்துக் கொண்டு கத்தினான்.
‘விட்டுடு மச்சான். விட்டுடு. இவரு நம்ம காதரு. போன வருஷம் கார்ல என் காலு தூர
விழுந்தப்போ நீங்கள் ளாம் 'உனக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்' என்கிற
மாதிரி பேசீனீக. ஆனா இந்த காதருதான் எனக்கு செய்ப்பூரு காலை பொருத்தின
மனுஷன். என்ன கொல்லாம. அவரை கொல்ல முடியாது'.
இந்த ஐவரும் அசைவற்று நின்றபோது-
சாவடியிலிருந்த வேறு ஒருவன் ஓடி வந்து பாம்பு போல் கால்களை சுற்றிக் கொண்டே
அந்த இளைஞன் கையை ரத்தம் வரும்படி கிள்ளினான். வலிபொறுக்க முடியாத அந்த
இளைஞனின் ஒத்தக்காலும், அரை குறைக்காலும் ஒருங்காய் துடித்தபோது, பிச்சாண்டி
அவனை எட்டித் தள்ளினான். அப்போதும், அந்த இளைஞன் சுருண்டு சுருண்டு அவர்கள்
முன்னால் நகர்ந்தான். இவர்கள் காலால் இடறித்தள்ளி னாலும் அவர் உடம்பு
முழுவதையும் ஆமை போல் சுருட்டி அவர்கள் முன்னால் முட்டுக்கட்டையானபோது-
நசீமா, அண்ணனைச் சுற்றிச் சுற்றியே வந்தாள். அல்லாவைத் தொழும் அந்தக் கரங்கள்
அந்த கூட்டத்தைப் பார்த்து தொழுதன. அவர் ஆற்றாமையை சகிக்கமாட்டாது, பாய்ந்து
வந்த கூட்டம் பதுங்கியது போல பார்வையிட்ட போது 'குத்துக்கல்லு மனிதர்' செருமிக்
கொண்டே எழுந்தார். உட்கார்ந்திருந்த கல்லில் ஒரு காலை வைத்து உதைத்தபடியே
கத்தினார். 'ஏமுலு ... பேடி பயலு மாதிரி நிக்கிறீங்க. அவர் சாதிக்கு நாம பொறந்தோமா?
நம்ம சாதிக்கு அவர் பொறந்தாரா?'
ஏவல் கூட்டம் இப்போது அப்துல் காதரின் அழுத்தம் திருத்தமான எதிரிக் கூட்டமாகியது.
நசீமாவைப் பார்த்து நகரச் சொல்லி சைகை செய்தது.
நசீமா வீறிட்டுக் கத்தினாள். அண்ணனுக்கு கேடயமானாள். இரண்டு பேர் அவளைப்
பிய்த்தெறியப் போவது போல் கைகளை கொக்கி போல் குவித்து 'சிரேன்களாக்கினார்கள்'.
இதற்குள் அந்த பக்கமாய் வந்த இரண்டு மூன்று பேர் தாக்க வந்தவர்களை, தங்கள்
மார்புகளில் தாங்கிக் கொண்டே சமாதானப்படுத்துகிறார்கள்.
இந்த இடைவெளியில் என்ன செய்யலாம் என்பதுபோல் நசீமா இங்கும் அங்குமாய்
சுழன்றாள். பிறகு 'இரு இரு' என்று கையாட்டிச் சொல்வது போல் முகமாட்டி பார்த்து
விட்டு...
வண்டிப் பாதை வழியாக ஊர்ப்பக்கம் ஓடினாள். ஒடி ஒடி, நிற்பதும், அண்ணனை
திரும்பிப் பார்ப்பதுமாய் ஓடிக் கொண்டே இருந்தாள். ஊர்க் கிணற்றில் வாளியைப்பிடித்த
பெண்கள் அவளை வளைந்து பார்த்தனர். கடைக்காரர்கள் வளைகளுக்குள் இருந்து
எட்டிப் பார்க்கும் எலிபோல் தலையைக் காட்டினார்கள். சிலர்; 'என்னம்மா ஆச்சு,
என்னம்மா ஆச்சு' என்று அவள் பின்னால் ஓடினார்கள். எதிர் திசையில் வந்தவர்கள்
அவளை ஆற்றுப்படுத்துவது போல் கைகளை நேராய் நீட்டி விரல்களை உயர்த்தி
உள்ளங்கைகளைக் காட்டினார்கள். ஆனால் அவளோ, வண்டிப்பாதை வளைந்த
இடத்திலிருந்து பிரிந்து, மேற்குப் பக்கமாய் ஓடி, தென் கிழக்காய் பாய்ந்து கூட்டுறவுச்
சங்கத்தை தாண்டி, குறுக்காய் கிடந்த புறம்போக்கு தரிசுக் காட்டில் தாவி, பள்ளி
வாசல் முன்னால் வந்து நின்றாள். பரக்கப் பரக்கப் பார்த்தாள். அப்போது
தொழுகைக்கு பாங்கு சொல்லும் லப்பை அவளைப் பரிவோடு பார்த்து, அவள் சொல்லப்
போவதைக் கேட்க ஆயத்தம் காட்டினார். நசீமா என்ன நினைத்தாளோ, அங்கிருந்து
ஓடி, பீடிக் கடையைத் தாண்டி, பள்ளிக்கூடத்தை கடந்து ஊரின் இன்னொரு
மூலையில் கிடந்த ஒரு ஓலை வீட்டுக்குள் புகுந்தாள்.
வீட்டு முற்றத்துடன் ஒட்டியிருந்த தொழுவில் ஒருகாளை மாட்டிற்கு "உன்னி" (மாட்டுப்பேன்)
எடுத்துக் கொண்டிருந்த மூக்கையா, நசீமாவைப் பார்த்துப் பதறினார். மாட்டை அதன்
பிட்டத்தில் ஒரு குத்துகுத்தி தள்ளிவிட்டு அவள் பக்கமாக ஓடி வந்தான்.வியப்பொன்றும்
புரியாமல், அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். இப்படி எந்த வீட்டிற்கும்
வந்தறியாதவள். என்ன ஆச்சு...
அடர்ந்த கூந்தலுடன் 'மஞ்சளை அரைத்து மருதாணி'யில் தேய்த்தது போன்ற லாகவத்துடன்
மான்குட்டி போல் தேம்பிய நசீமாவைப் பார்த்தபடியே 'ஏ ராசம்மா இங்க வா" என்று
சொல்லிவிட்டு, மீண்டும் 'என்னம்மா ஆச்சு? வாப்பாவுக்கு ஏதாவது....' என்ற துக்கச்
செய்தியை வானொலிச் செய்தியாளர் குரலைத் தாழ்த்துவதுபோல் தாழ்த்தினார்,
மூக்கையா. இதற்குள் மூக்கையாவின் மனைவி ராசம்மா, தங்கை மீனாட்சி, தம்பித்
தடியன்களான பாண்டியன், செல்லமுத்து ஆகியோர் அங்கே திமுதீமுவென்று
வந்தார்கள்.
நசீமாவால் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் பேச முடியவில்லை. ‘அண்ணன்,
அண்ணன்' என்று தான் சத்தம் வந்தது. சிறிது விலகிப் போய் நின்று கொண்டு
அண்ணன் இருந்த திசையைக் காட்டி 'அடிக்காங்க, அடிக்காங்க' என்று அழுதழுது
சொன்னாள். எப்படியோ அவசர அவசரமாய் நடக்கிறதைச் சொல்லி விட்டாள்.
உடனே மூக்கையா சாட்டைக் கம்பை எடுத்துக்கொண்டு "சரி நட' என்றான். தம்பிகளில்
ஒருவன் வெட்டரிவாளையும் இன்னொருத்தன் வேல் கம்பையும் எடுத்துக் கொண்டான்
பிள்ளை குட்டிகளும் சேர்ந்து கொண்டன.
நசீமாவுடன் ஒரு குடும்பமே ஊர்வலமாகி, அந்தச் சாவடிப் பகுதிக்கு வந்தது.
ஏழெட்டுப் பேரின் வியூகத்திற்குள் மாட்டிக் கொண்ட அப்துல் காதர், மூக்கையாவைப்
பார்த்துவிட்டு சத்தம் போட்டே அழுதார். மூக்கையா, அந்த வியூகத்தை
அபிமன்யூ மாதிரிப் பார்த்தான். ஒவ்வொருவனையும் முதுகைப் பிடித்தும், மார்பைப்
பிடித்தும் தள்ளினான். உள்ளே பாய்ந்து காதரை தோளோடு இழுத்துக் கொண்டு
துள்ளினான்.
குத்துக்கல்லில் உட்கார்ந்திருந்த ரெட்டைக் கண்ணனும், முத்துலிங்கமும் எழுந்தார்கன்.
மூக்கையாவுக்குச் சொல்வது போல் கூட்டத்தில் நின்ற நாச்சிமுத்து சொன்னார்.
"குலத்தக் கெடுக்குமாம் கோடாறிக் காம்பு. இந்த பயல் கொழுந்தியா புருஷன் பிச்சாண்டியை
ஏமாத்தினது பெரிசா தெரியலை பாரு.. நிலச் சீர்திருத்தத்துல நம்ப அம்பலத்துக்கிட்டே
இருந்து கிடைச்ச உதிரி நிலத்துல அரை ஏக்கரை பிச்சாண்டிக்கு கொடுக்கறதா
இந்தக் காதரு பய வாக்குக் கொடுத்துட்டு கடைசியிலே பாய் விக்கிற மொய்தீனுக்குக்
கொடுத்துட்டான் அடுத்துக் கெடுத்த பய. இந்த அநியாயத்தைக் கேக்க துப்பில்லே.
வந்துட்டானுவ பெரிசா...."
மூக்கையா, பதில் சொல் என்பது மாதிரி கூட அப்துல் காதரைப் பார்க்கவில்லை.
காதரே இப்போது அழுகையை அடக்கிக் கொண்டு மூக்கையா விடம் ஒப்பித்தார்.
"அல்லாவுக்குத்தான் எல்லாம் தெரியும். அம்பலக்காரர் நிலத்துல உபரியான அரை
ஏக்கரை நம்ம பிச்சாண்டிக்குக் கொடுக்கணுமுன்னுதான், அசிஸ்டெண்ட் கமிஷனர்கிட்டே
சொன்னேன். இதுக்காகவே இந்த பிச்சாண்டியையும் கூட்டிக்கிட்டுப் போய்
அவருகிட்டே ஒரு கும்பிடு போட வெச்சேன். ஆனால் நான் யாரு, சாதாரண பியூன்.
நாலு ஜில்லாவுக்கு பைல்களைத் தூக்கிட்டு லொக்கு லொக்குன்னு அலையுற எளியவன்.
எனக்குத் தெரியாமலே பாய் விக்கிற கலெக்டர்கிட்ட மீரான் ஒரு பெரிய ஆளோட
சிபாரிசுலே போயிட்டாரு. அவரும் ஆடரு போட்டுட்டாரு. கலெக்டர் கிட்ட என்
சொல் எடுபடுமா, இல்ல மீரான் கூட்டிக்கிட்டுப் போன யூனியன் சேர்மன் சொல்லு
எடுபடுமா? நீயே சொல்லு மூக்கையா.... இவ்வளவுக்கும் இந்த பிச்சாண்டி நானே
டிக்கெட் எடுத்து மதுரைக்கு கூட்டிப் போனேன். அவன் சாப்பாடு சௌகரியத்துக்கு
நானே செலவளிச்சேன்.
இவன்கிட்டே அதுக்கு காசு கேட்டு கை நீட்டியிருப்பேனா? அப்படிப்பட்ட என்னப்
போயி கைநீட்டவரான் மூக்கையா... தாலூக்கா ஆபீஸ்ல பியூனா இருந்த என்னை
நாலு ஜில்லாவுக்குப் போட்டு டி.ஏ. பணமும் கொடுக்காமல பந்தாடுறாங்க. நான்
அந்தக் கவலையில் துடிச்சுக்கிட்டிருக்கேன்... இந்த பிச்சாண்டிக்கு இது தெரியல ...
இவனைவிட எந்த மீரானும் எனக்கு ஒசத்தியில்ல என்கிறதும் அவனுக்குப் புரியல.
குத்துக்கல் மனிதர், மீண்டும் உட்கார்ந்தபடியே சவால் தோரணையில் ஒரு மிரட்டலை
விட்டார். 'இவன் ஜாலம் போடுகிறான். நம்பாதீய. என்ன செய்வானோ, ஏது செய்வானோ
...மீரானுக்கு கிடைச்ச அரை ஏக்கர் சொத்து நம்ம பிச்சாண்டிக்குக் கிடைச்சாகணும்.
அதுக்கு முன்னால இந்த அப்துல் காதா இந்த எடத்திலேருந்து ஒரு அடிகூட நகர
முடியாது. எந்தக் கொம்பன் வந்தாலும் சரி."
அப்துல் காதரை தன் உடம்போடு உடம்பாக சேர்த்துக் கொண்டு, மூக்கையா பீறட்டான்.
குத்துக் கல்லருககுச் சொல்வது போல் 'கொழுந்தியா புருஷன' பிச்சாண்டிக்கு
பதிலளித்தான்.
"ஏல பிச்சாண்டி ஊரு உலகத்தல எவனுக்கு... இந்தப் பேர் பொருந்துமோ இல்லியோ
ஒனக்குப் பொருந்துமுல. நம்ம மாதிரி ஒரு ஏழைக்கு கிடச்ச நிலத்துக்கு ஏமுல இப்படி
நாக்க தொக்கப் போடுறே. அப்படியே அந்த நிலம் பிடிச்சா லும் ஒன்னால கட்டிக
காப்பாத்த முடியுமாடா.... 'ஓ எப்படா நிலம் கடக்கும். அதே குழிதோண்டி
புதைக்கலாமுன்னு சில பயலுவ காத்துக் கிடக்கது தெரியாதாடா. பத்து கிலோ
இறைச்சி தின்னக் கொடுத்ததும் பதினைஞ்சு பாக்கெட் ஊத்தி கொடுத்ததும் அதை
உற்சாகத்துல இருந்த சொத்தை யெல்லாம் வித்தவன் நீ... ரெட்டக் கண் ணு பயலுவ
பேச்சக் கேட்டு... கெட்டுப் போகாதடா.... விக்கிறத்திற்கு பாய் இருந் தாலும் படுக்கத்துக்கு
ஒரு தரை கூட இல்லாத மொய்தின் தான் வச்சுட்டுப் போட்டோன்டா.
பிச்சாண்டி, அப்துல் காதருக்குப் பயந்தது போல் கண்களைத் தாழ்த்தியபோது
குத்துக்கல்லர் இன்னொரு அம்பை எய்தார்.
‘காதருக்கு வால் பிடிக்க இவன் யாருன்னு கேளேம்ல சாதி கெட்ட பயல'.
மூக்கையா இப்போது ஒரு காலில் நிமிர்ந்து நின்ற, அந்த ஒன்றைக் கால் இளைஞனுக்குச்
சொல்வதுபோல் குத்துக்கல் ரெட்டைக் கண்ணனை, பேச்சுப் பேச்சாய் குட்டினார்.
"நான் யார்னு சொல்றேன்.... இனிமேலாவது எருமை மாட்டுப் பயல்வளுக்கு
சொரணை வரட்டும்... நான் இந்த மூக்கையா அவன் தம்பி தங்கச்சிகளோட பெண்டாட்டி
பிள்ளைகளோட இந்த அப்துல் காதர் குடும்பத்துக்கு ஒரு குடிக்கள்ளன். ஆதி
காலத்திலிருந்தே இந்த சுற்று வட்டாரத்துல இருக்கிற ஒவ்வொரு முஸ்லீம்
குடும்பத்துக்கும், கள்ளர் சாதில ஒரு குடிக்கள்ளன் இருக்கது சில பயலுவளுக்குத்
தெரியுமோ தெரியாதோ? நாலு காடு சுத்தி கால ஒடிச்சுக் கிட்ட ஒனக்கு தெரியும்னு
நெனக்கேன். இந்த வகையறாவுல எம்பாட்டன், முப்பாட்டன் காலத்துல இருந்தே
அப்துல் காதர், பாட்டன் முப்பாட்டனுக்கு நாங்க குடிக்கள்ளன் வம்சம். அண்ணன்
தம்பி முறையில் பழகுறோம். அவன் நான் மொதல்ல நிப்பேன் வீட்டுக் கல்யாணத்துல
வீட்டுக் கல்யாணத்துல இவன நிப்பான். போன வருஷம் அவன் தங்கச்சி பாத்திமா
கல்யாணத்துக்கு மொதல் வெத்திலை எனக்குத்தான் தந்தான். என் தங்கச்சி நசீமா,
குடிக் கள்ளன் அண்ணன்கிட்டே முறையிடும்போது என்னால் சாதி அபிமானத்தைப்
பாக்க முடியாது நான் சாதி கெட்ட வனா இருக்கலாம். ஆனா சில பயலுவள மாதிரி
எளியவன் சொத்த அமுக்குற கெட்டவன் இல்ல. இப்போ எங்க காதர் அண்ணனை
கூட்டிட்டுப் போறேன். இந்த குடிக்கள்ள னோட அவன் இப்பவும் நடப்பான்,
எப்பவும் நடப்பான். இதோ நடக்கப் போறான். எந்தப் பயலாவது தடுங்க பார்க்கலாம்.
மீசையை எடுத்துடுறேன்.."
---------
13. அவளுக்கு அவசரம்
இரவு மணி ஏழு இருக்கும்.
அவள் கழுத்தில் மட்டும் அந்த மஞ்சள் சரடு தெரிய வில்லையானால், அவளைத்
திருமணமானவள் என்று சொல்ல முடியாது. அந்த அளவிற்கு வாளிப்பான உடற் கட்டில்,
குறுகுறுப்பான கண்கள் அங்குமிங்கும் சுற்றிக் கொண்டிருக்க ஒரு விதமான கம்பீரம்
கலந்த அழகில் அவள் உருவெடுத்திருந்தாள். எடுப்பான மஞ்சள் புடவையில்
செண்பக மலர் போன்ற மேனி. எழும்பூர் ரயில் நிலையத்தின் வெளிப்புறத்தில் நிறுத்தி
வைக்கப்பட்டிருந்த அந்த ஆட்டோ ரிக்ஷாவில் ஏறி உட்கார்ந்த தோரணையில்,
டிரைவரே அசந்து போய் விட்டார். அவள் கையில், ஒரு சின்னஞ்சிறிய சூட்கேஸ் மட்டுமே
இருந்தது.
"இந்திரா நகர்க்குப் போப்பா," என்று அவள் சொன்னதும், ஆட்டோ ரிக்ஷா உறுமிக்
கொண்டு புறப்படத் தயாரானது. அந்தச் சமயத்தில் ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி
அவளிடம் வந்து, "என்ன ராஜம், ஜேம்ஸ் பாண்ட் மாதிரி திடுதிடுப்புனு வர்றே? எங்கே
போயிருந்தே?" என்று கேட்டான்.
"ஒரு கல்யாணத்துக்காகத் திருச்சிக்குப் போயிருந்தேன். இன்னைக்குக் கல்யாணம்,
குழந்தைக்குச் சுகமில்லன்னு 'அவர்' டெலகிராம் அனுப்பியிருந்தார். அடிச்சிப் புரண்டு
புறப்பட்டுட்டேன். உங்களுக்கு ஏதாவது தகவல் தெரியுமா அக்கா?''
"அடேடே! ஐ ஆம் ஸாரி. போன வாரங்கூட நல்லாத் தானே இருந்தான்?"
ஆட்டோ ரிக்ஷாவில் உட்கார்ந்தவளின் கண்கள் கலங்கின. புடவைத் தலைப்பால் கண்களை
ஒற்றிக் சொன்னேன். கொண்டே, "அவரிடம் படிச்சிப் படிச்சிச் மேரேஜுக்கு நீங்க
போயிட்டு வாங்கன்னு. அவர் கேட்கல. ஆபீஸ்ல ஏதோ ஆடிட்டாம். இப்போ என்
குழந்தைக்கு எப்படி இருக்கோ."
"டோண்ட் ஒர்ரி. ஏதாவது விபரீதமா இருந்திருந்தால் எனக்குச் சொல்லியிருப்பாரே.
மனசை வீணா அலட்டிக்காதே. டிரைவர், தயவு செய்து கொஞ்சம் குயிக்கா இவளைக்
கொண்டு விட்டுடுங்க."
ஆட்டோ ரிக்ஷா கிளம்பிற்று. பின்னால் குரல் கொடுத்த பல்லவனுக்கு வழிவிடாமலே
பறந்தது.
* * *
திருவான்மியூரில், எல்லாப் 'பல்லவன்'களும் உறுமிக் கொண்டிருந்தபோது, எழும்பூர்
செல்ல வேண்டிய அந்த பஸ் மட்டும், அலட்டிக் கொள்ளாமல் நின்றது இத்தனைக்கும்
அந்த பஸ்தான் முதலில் செல்ல வேண்டும். பிரயாணிகள் பொங்கி வழிந்து புட்போர்டிலும்
தங்கினார்கள். கண்டக்டர் எல்லோருக்கும் டிக்கெட் கொடுத்து விட்டார். டைம்
கீப்பர் விசிலில் கத்திக் கொண்டிருந்தார். ஆனால் டிரைவரைக் காணவில்லை.
பிரயாணிகளின் கண்கள் டிரைவர் ஸீட்டை மொய்க்க, கண்டக்டரோ விடாமல்
விசிலடித்துக் கொண்டி ருந்தார். அந்த விசில், நல்லதோர் நாதஸ்வரத்தை மோசமான
ஆசாமி வாசிப்பது போல் ஒலித்தது. என்னதான் விசில் விம்மினாலும், டிரைவர் பத்து நிமிட
நேரம் கழித்தே வந்தார்.
உறிஞ்சிக் கொண்டிருந்த பீடியை வீச மனமில்லாமல் வீசி விட்டு, டிரைவர் தமது
ஆசனத்தில் உட்கார்ந்து என்ஜின் ஸ்விட்சைப் போடப் போனபோது, கண்டக்டர் ஊதிக்
கொண்டிருந்த விசிலை எடுத்துவிட்டு, டிரைவரிடம் 'யோவ் அம்மாம்பேட்டை!
உனக்குக் கொஞ்சமாவது பொறுப்பு இருக் காய்யா? இந்நேரம் பஸ் பெஸண்ட் நகர்ல
இருக்கணும். எங்கேய்யா போயிருந்தே?" என்று கத்தினார்.
டிரைவர், பதிலேதும் பேசாமல், எஞ்சினை ஆன்செய்து, கியரைப் போட்டார் மனைவியிடம்
அரிசி வாங்கப் பணம் கொடுத்ததையோ, அவள் பணம் போதாது என்று வாதாடியதையோ,
அவர் அவளிடம் ஆத்திரமாகப் பேசியதையோ இந்த விவகாரம் பத்து நிமிடத்தை
விழுங்கி விட்டதையோ, அவர் அந்தப் பிரம்மசாரியான கண்டக்டர் இளைஞனிடம்
சொல்ல விரும்பவில்லை.
எழும்பூருக்கும், திருவான்யூருக்கும் இடையே இருந்த அந்த ரோட்டில், 'டாணா' வளைவுக்கு
அருகில் ஒரு கிலோ மீட்டர் தொலைவு வரைக்கும், சாலையின் பாதிப் பகுதி ரிப்பேரில்
இருந்தது. இரு முனையிலும் கட்டப்பட்டிருந்த சிவப்புக் கொடிகள் அந்த இருட்டில்
தெரியவில்லை. காரணம் கார்ப்பரேஷன் லைட்டுகள் ‘மஸ்டர் ரோல் ஸ்கேண்டலுக்கு'
வெட்கப்பட்டது போல் ஆச்சரியப்படத்தகாத முறையில் எரியாமல் இருந்தன. இரண்டு
சிவப்புக் கொடிகளுக்கு மத்தி யில் காண்டாமிருகம் போல் காட்சியளித்த ரோலர் மிஷின்
ஒரு பகுதியை அடைத்திருந்தது. அதை ஒட்டினாற் போல் ஜல்லிக் கற்களையும்,
சிமெண்டையும் கலக்கும் மிக்ஸர் யந்திரம் யானைக் குட்டி மாதிரி, நான்கு மீட்டரை
அடைத்திருந்தது. போதாக்குறைக்கு, தார் நிறைந்த டிரம்கள் வரிசையாக அடுக்கப்
பட்டிருந்தன. இவற்றைச் சுற்றிச் சம தளத்தில் இருந்து அரையடி வரிசையாகத் தணிந்திருந்த
கிளறப்பட்ட அந்தச் சாலையில் பெரிய கற்கள் குவிந்து கிடந்தன. இடையிடையே,
ஜல்லிக் கற்கள், குவியல் குவியலாகக் கிடந்தன. இரண்டு பஸ்கள் தாராளமாகச்
செல்லக் கூடிய அந்தச் சாலையில், இப்போது ஒரு பஸ் மட்டுந்தான் கூனிக் குறுகிச்
செல்ல முடியும்.
சாலையோரத்தில் போடப்பட்டிருந்த டென்ட்டில் சிமெண்ட் அடுக்கி வைக்கப்பட்டிருந்த
மூட்டைகள் மேல் துண்டை விரித்துப் போட்டு உட்கார்ந்திருந்த மேஸ்திரி கன்னையன்
வேலையாள் ஒருவனிடம் பேசிக் கொண்டிருந்தான். சாலையின் இரண்டு பகுதிகளிலும்
லாந்தர் விளக்குகளை வைப்பதற்காக, அவன் மந்தவெளியில் இருந்து அங்கே வந்திருந்தான்.
வேலை ஆரம்பமாகி ஒருவாரம் ஆகி விட்டது. இன்றைக்குத்தான் வண்டிகளுக்கு
எச்சரிக்கை விடுக்கும் விளக்குகளை அவனால் வைக்க முடியும். 'மென் அட் ஒர்க்'
என்ற போர்ட், பகலில்கூடச் சரியாகத் தெரியாது.
வேலை துவங்கியவுடனே, விளக்குகளைப் பொருத்துவதற்காக, இரண்டு கம்பங்களை
நடவேண்டும் என்று 'ஒர்க் அஸிஸ்டெண்டிடம்' அவன் சொல்லியிருந்தான். அவர்,
கண்டிராக்டருடன் 'பிஸியாக' இருந்ததால், அவன் சொல்வதைச் சரியாகக் கேட்கவில்லை
மறுநாளும் விடாமல் கேட்டான் கன்னையன். அவர் ஆபீஸிலே போய் இரண்டு
கம்புகளை எடுத்து வருமாறு சொன்னார். அவன் ஆபீஸிற்குப் போய், கம்புகளை
எடுக்கப் போனபோது, விளக்குகளுக்கு மண்ணெண்ணெய் வாங்க சம்பந்தப்பட்ட
சூபர்வை ஸரிடம் பணம் கேட்டான். அவர், முறைப்படி விண்ணப்பிக் காமல்
ஏடாகூடாமாய்க் கேட்பது முறையல்ல என்று முறைத்தார். மறுநாள், அதற்கான
நோட்டை எழுதி, ஒர்க் அஸிஸ் டெண்ட்டிடம் கையெழுத்து வாங்கச் சென்றபோது,
அவர் "பிரெஞ்சு லீவில்" போய்விட்டார்.
இன்றுதான், கன்னையனுக்கு இரண்டு கொம்புகளும், இரண்டு லாந்தர் விளக்குகளும்,
மண்ணெண்ணெய் வாங்குவதற்குரிய கன்டின்ஜெண்ட் பணமும் கிடைத்தன.
வேலையாட்களை வைத்து, கொம்புகளை நட்டுவிட் டான். லாந்தர் விளக்குகளில்
மண்ணெண்ணெயை ஊற்றி விட்டான். மீதியிருந்த எண்ணெயில் திரிகளைத் தேய்த்து,
லாந்தர் விளக்குகளில், அவற்றை ஏற்றினான், விளக்கைப் பொருத்துவதற்காக வத்திப்
பெட்டியை எடுத்தான்.
* * *
ஆட்டோ ரிக்ஷா ஸ்டர்லிங்ரோடிற்கு வந்துவிட்டது. இந்திரா நகரை நெருங்க நெருங்க,
ராஜம் தாய்ப் பாசத்தின் நெருக்கம் தாங்க முடியாமல் தவித்தாள். குழந்தைக்கு இப்போ
எப்படி இருக்கோ? அவரே ஒரு குழந்தை. அவர் எப்படி கவனிச்சாரோ? "சீக்கிரமாப்
போப்பா" என்றாள். டிரைவர் அவளைத் திரும்பிப் பார்த்தான்.
"ஒண்ணு சொல்ல மறந்துட்டேன். நீங்க டபுள் சார்ஜ் கொடுக்கணும். இந்திரா நகரலே
சவாரி கிடைக்காது. எம்டி யாத்தான் வரணும்.
"என்னப்பா இது. அநியாயமா இருக்கே. முதல்லே நீ கேட்டிருந்தால் நான் பஸ்ல
போயிருப்பேனே...."
"அதெல்லாம் முடியாது. மீட்டர் சார்ஜுக்கு மேலேஒரு நயா பைசாகூடக் கொடுக்க முடியாது."
“இப்படிச் சொன்னா எப்படிம்மா? எல்லோரும் வாங்கறததான் நானும் கேட்கிறேன். 'புச்சா'
ஒண்ணும் கேட்கல.``
"அந்தக் கதையே வேண்டாம். உங்களையெல்லாம் என்ன செய்யணும் தெரியுமா?''
ராஜத்திற்கும் டிரைவருக்கும் விவாதம் சூடேறிக் கொண்டிருந்தது. என்றாலும் டிரைவரின்
பழக்கப்பட்ட கைகள், இயல்பான முறையில் ஆக்ஸ்ல ரேட்டரை அழுத்த அந்த ஆட்டோ
ரிக்ஷா கரடி மாதிரி கத்திக்கொண்டே எட்வர்ட் எலியர்ட்ஸ் ரோடில் தக்காரு
மிக்காருமின்றி ஓடிக் கொண்டிருந்தது.
திருவான்மியூரில் புறப்பட்ட அந்த பஸ், இந்திரா நகரில் வந்து நின்றது. ஏற்கனவே லேட்டாகி
விட்டது. எழும்பூர் டைம் கீப்பர் சரியான எமன். டிரைவரை மட்டு மில்லாமல்,
கண்டக்டரையும் சேர்த்துத் திட்டுவார். இந்தச் சமயத்தில் 'ஃப்ரண்ட் டோர்' வழியாக ஏறிய
பிரயாணியை நோக்கி, 'ஸார் படிச்ச நீங்களே இப்படிப் பண்ணினால் எப்படி ஸார்?
இறங்கி வந்து இந்த வழியாய் ஏறுங்க" என்று கண்டிப்பு கலந்த வினயத்துடன் கூறினார்.
ஆனால் ஏறிய பிரயாணி ஒரு விடாக் கண்டன். கண்டக்டர் சொன்னதைக் காதில்
வாங்காத கல்லுளி மங்கன் மாதிரி பேசாமல் நின்று கொண்டிருந்தார். கண்டக்டருக்கு
இது ஆத்திரத்தைக் கொடுத்தது. புறப்படத் தயாரான வண்டியை விசிலடித்து நிறுத்தினார்.
பின்னர், "ஸார்.... நீங்க அங்கிருந்து இறங்கி இங்கே வந்து ஏறப் போறீங்களா இல்லியா?"
என்றார்.
ப்ரண்ட் வழி பிரயாணி, அசருவதாகத் தெரியவில்லை.
"என்னப்பா பொல்லாத சட்ட திட்டமெல்லாம் பேசு றீங்க. நீங்க மட்டும் யோக்கியமா
நடந்துக்கிறீங்களா?"
"இறங்கவும் முடியாது, ஏறவும் முடியாது. நீ என்ன வேணுமானாலும் பண்ணிக்கோ”
"நல்லதாப் போச்சு. நீ இறங்காட்டி வண்டி நகராது."
தகராறு தீர்ந்து, ஃப்ரண்ட் ஆசாமி இறங்கி பின்வழியாக ஏறுவதற்குள் ஐந்து திமிடம்
வீணாகிவிட்டது.
* * *
"குயிக்கா போண்ணே. டைம் கீப்பர் கத்துவான்' என்று கண்டக்டர் கத்தினார்.
திருவான்மியூரில் தாமதமான பத்து நிமிடத்தையும், இந்திரா நகரில் ஏற்பட்ட ஐந்து
நிமிடத்தையும் ஈடுகட்டும் வகையில் டிரைவர் ஆக்ஸிலேட்டரை அழுத்தினார். ஸ்பீடா
மீட்டர் எழுபது கிலோ மீட்டரைக் காட்டியது. டபுள் விசில் ஒலிக்க, உள்ளே இருந்த
பிரயாணிகள் களிக்க, பஸ் ஸ்டாண்ட்களில் நின்ற பிரயாணிகள் முகம் சுளிக்க,
அந்தப் பல்லவ பஸ், "அப்பல்லோ' வாகிக் கொண்டிருந்தது.
* * *
மேஸ்திரி கன்னையன், இரண்டு லாந்தர்களிலும் திரிகளைப் பற்ற வைத்து விட்டான்.
சிம்னிகளைப் பொருத்தி விட்டு, இரண்டு விளக்குகளையும் ஒவ்வொரு கைகளிலும்
பிடித்துக் கொண்டு எழுந்தபோது, ஒர்க்- அஸிஸ்டெண்ட் வெங்கடசாமி, வேர்க்க
விறுவிறுக்க சைக்கிளில் வந்து இறங்கினார்.
"நோ, நோ. இப்பவே கையோட வாங்கிக் கொண்டு வரச் சொன்னார். அவரும் அவரு ஓய்பும்
காலையில் அஞ்சு மணிக்கே கோயம்புத்தூர் போறாங்களாம்.... ஜல்தியா போ."
மேஸ்திரி கன்னையன் யோசித்தான்.ஜே.இ. மந்தவெளி யில்தான் இருக்கிறார்.கொஞ்சம்
நடந்தால், அவரே லாண்ட்ரி கடையில் போய் துணியை வாங்கியிருக்கலாம். அடையாறி
லிருக்கும் இவன், மெனக்கிட்டு போய் அலைய வேண்டிய தில்லை. அவ்வளவு ஏன்?
லஸ்ஸில் இருக்கும் இந்த ஒர்க் அஸிஸ்டெண்டே துணிகளை வாங்கிக் கொடுத்திருக்கலாம்.
நோ... நோ... அவர், ஒர்க் - அஸிஸ்டெண்ட். அவருடைய ‘ஸ்டேடஸுக்கு' ‘ஜே.இக்கு
டிக்கெட் புக் பண்ணிக் கொடுக்கலாம். லாண்டரி பில்லை வேண்டுமானால் வாங்கி வரலாம்.
துணிகளைக் கொண்டு போய் கொடுக்க முடியுமா? அது கன்னையன் வேலை.
கன்னையன், லாந்தர் விளக்குகளைக் கம்பங்களில் பொருத்திவிட்டுப் போகலாம் என்று
நினைத்தவன் போல், லாண்டரி பில்லைச் சட்டைப் பைக்குள் திணித்துவிட்டு, ஒர்க் -
அஸிஸ்டெண்ட் அதற்காக கொடுத்த பணத்தை நிஜார் பைக்குள் திணித்துவிட்டு, கீழே
வைத்த லாந்தர் விளக்குகளை மீண்டும் எடுக்கப் போனான். ஒர்க்- அஸிஸ் டெண்ட்
கத்தினார்.
"இதுக்குத்தாய்யா உன்னை முண்டங்கிறது. விளக்கை அப்புறமா வந்து போடய்யா..."
* * *
கன்னையன் லாந்தர் விளக்குகளை அணைத்துவிட்டு ஓர் ஓரமாக வைத்தான். பிறகு,
மடமடவென்று மந்தவெளியை நோக்கிச் சைக்கிளை மிதித்தான்.
ஆட்டோ ரிக்ஷா 'டானா' வளைவை நெருங்கிக் கொண்டிருந்தது. ஆக்ஸிலேட்டர்
எழுபதைத் துரத்திக் கொண்டிருந்தது. அதிகமாக எவ்வளவு கொடுப்பாள் என்று டிரைவர்
மனக்கணக்குப் போட்டுக் கொண்டிருந்தார். குழந்தையைப் பார்க்கப் போகிறோம்
என்ற இனிய எதிர்பார்ப்பும், எப்படி இருக்கிறதோ என்ற அச்ச உணர்வும் பின்னலிட,
ராஜம் இருக்கையின் நுனியில் உட்கார்ந்து, இருப்புக் கொள்ளாமல் தவித்தாள்.
* * *
பல்லவன் பஸ், வேளாங்கண்ணி ஆலயத்திற்கருகே வந்து விட்டது. “டயமாவுது, கட்டை,
வண்டியை ஓட்டுகிற மாதிரி ஓட்டினா..எப்படி?" என்று கண்டக்டர் கத்தினார். டிரைவர்
ஆக்ஸிலேட்டரை அழுத்தினார். என்ன பொருப்பு! எட்டு மணி நேரம் நாயா வேலை
பார்த்தாலும் நல்லா சாப்பிட முடியுதா? பிள்ளிங்கள நல்ல ஸ்கூல்ல சேர்க்க முடியுதா:
போவட்டும். வீட்டுக்காரிக்கு ஒரு சேலை வாங்க முடியல. 'ஒன்னரை ரூபாய்ல எப்படி
சமையல் பண்றது! உனக்கு மூளை இருக்கா?'ன்னு கேட்டாளே ஒரு கேள்வி! கேட்கக்
கூடிய கேள்வியா இது? கேட்டாளே - நாசமாப் போற பொழப்பு! இந்த டிரைவர்
வேலைக்கு.... என்றைக்கு கும்புடு போடுறோமோ அன்னிக்குத்தான் குடும்பம்
உருப்படும்!"
டிரைவரின் மன வேகத்திற்கும், அதன் குழப்பத்திற்கும் ஈடு கொடுக்கும் வகையில்,
அந்த பஸ், வேகமாகவும் அங்கு மிங்கும் ஆடிக் கொண்டும் ஓடியது.
* * *
லாண்டரித் துணிகளைக் கொடுத்துவிட்டு, லாந்தர் விளக்குகளை போடுவதற்காக
மேஸ்திரி கன்னையன் திரும்பி வந்தபோது, சிவப்புக் கொடி கட்டிய இடத்தில், ஒரு
பெரிய கூட்டம் நின்று கொண்டிருந்ததைக் கண்டான். அந்த மையிருட்டில், பஸ்ஸின்
விளக்கு, மின்னல் போல் ஒளி விட்டது.
கன்னையன் விளக்குகளை, எடுக்காமல், அங்கே ஓடினான்.
ஆட்டோ ரிக்ஷா, ரோலர் எந்திரத்தில் மோதி நொறுங்கிக் கிடந்தது. ஆட்டோ ரிக்ஷா
டிரைவர், வாயில் ரத்தம் கசிய, அரை மயக்க நிலையில் கிடந்தார்.
ராஜத்தின் தலை நசுங்கி, ஐந்து கஜ தூரத்திற்கு அப்பால் மூளை சிதறிக் கிடந்தது.
பஸ்ஸின் முன் சக்கரம் அவள் அடி வயிற்றில் ஏறி செம்மண்ணும், செந்நீரும் கலக்க,
இயக்கம் இல்லாத தயக்க நிலையில் நின்றது. பெரும்பாலான பஸ் பிரயாணிகள்,
அந்தக் கோரத்தைக் காணச் சகியாதவராய், வேறு புறமாகத் திரும்பி நின்றார்கள்.
ஆனால் ஆட்டோ ரிக்ஷா, அந்த ரோலரில் மோதிய வேகத்தில் பஸ்ஸிற்கு முன்னால்
அவள் தூக்கி எறியப்பட்டதையும், அதற்குப் பின் நடந்ததையும், அவர்களால்
நினைக்காமல் இருக்க முடிய வில்லை. சுமந்து பெற்ற பிள்ளையைப் பார்க்க
நினைத்தவளின் வயிறு, அந்த பஸ் சக்கரத்தைச் சுமந்து கொண்டிருந்தது.
----------------
14. தோழி செய்த புரட்சி
அந்த சிற்றூர் இருப்பதை, இருகல் தொலைவிலேயே எடுத்துக் காட்டும்படி விளங்கிய
'இருநிலை' மாடங்களைக் கொண்ட வீடுகளில் மிகப் பெரியதோர் வீடு அது. 'வீடு' என்று
சொல்வதைவிட, மன்னன் அலுவல் பொருட்டு வருங் காலை, விறலியருடன் தங்குவதற்குத்
தகுதியாகக் கட்டப் பட்ட மாளிகை போல் தோன்றியது அது. அதற்கு மேற்கு பகுதியில்
பல்வகை கனி மரங்களைக் கொண்ட சோலையும், அங்கே பூத்துக் குலுங்கிய பல்வேறு
மலர்களும் வீட்டின் எழிலுக்கு எழில் கூட்டின. இதரப் பகுதிகளில் இருந்த சிற்றில்களும்,
ஓலையால் வேயப்பட்ட கூரைகளைக் கொண்ட குடில்களும், அந்த வீட்டை, 'பெருவில்கோ'
எனக் காட்டியது.
அத்தகைய வீட்டின் மேல்நிலை மாடத்தில், ஓர் ஓரத் தில் கட்டப்பட்டிருந்த அறைக்குள்
கணைய மரக்கட்டிலில் படர்ந்திருந்த பிரப்பம் பாய் மேலே விரிந்த பட்டு மெத்தையில்,
ஒருக்களித்தவாறு படுத்திருந்த மருதி, மயிற்பீலியால் முகத்தை தடவிக் கொண்டிருந்தாள்.
பாதங்களில் கிண்கிணி மணியொலிக்கும் பரிபுரம் என்னும் பொன்னாபரணம், அவள்
அங்குமிங்கும் புரண்டு படுத்ததால், தாளத்திற்குக் கட்டுப் படாதது போன்ற ஒலியைக்
கிளப்பியது. இதே போல் மார்பை மறைத்திருத்த கச்சையின் பின்புறம், முதுகிற்கு
மேற்பகுதியில் கட்டப்பட்டிருந்த 'சார்வாரம்' என்னும் கச்சின் கடைக் கயிறு அவிழ்ந்து
போயிருந்தது. கச்சையை மறைத்த வெண் துகில் துவண்டு போய் கிடந்தது. துகிலுக்கும்,
கச்சைக்கும் இடையே கழுத்தில் இருந்து தெருங்கிக் கொண்டிருந்த ஆரமும், தொங்கலும்,
தோளணியான அங்கதமும், கா தணியான வல்லிகையும், அவற்றில் படிந்திருந்த
வைரக் கற்களில் எண்ணெய் இறக்கியிருந்ததால், ஒளி குன்றி விளங்கின. அவள்
நெற்றியில் இடப்பட்டிருந்த கலவைச் சாந்தில் பாதி கலைந்து தலை முடியையும் தடவிக்
கொண்டிருப்பது போல் காட்டியது.
மருதி இதைப் பற்றிக் கவலைப்பட்டதாகத் தெரிய வில்லை. வெறி பிடித்தவள் போல்
கட்டிலில் இருந்து எழுந் தாள். அறையில் இருந்து, அவள் வெளியே வந்தா மாட
முனைப்பின் தடுப்புச் சுவரில், தலையைக் குவித்துக் கொண்டு, சாய்ந்தவாறு கீழே
வழிமேல் விழி விட்டாள்.
அங்கே-
கழுதைகளில் உப்பு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு உவணர்கள் போய்க் கொண்டிருந்தார்கள்.
நொய்ச்சிப் பெண்டுகள், தலையில் சுமந்து வந்த உப்பை, நெல்லுக்கு விலை பேசிக்
கொண்டிருந்தார்கள், சிறு சிறார்கள், சிறு தேர்களை உருட்டிக் கொண்டிருந்தார்கள்.
சில செவிலித் தாய்கள், அச்சிறார்களின் கைகளுக்கு மேல் தம் கைகளை வைத்து, தேரைத்
தள்ளினார்கள். இந்த முயற்சியில் முதுகு வலித்த சிலர், முதுகை வானத்தைப் பார்த்து
வளைத்துக் கொண்டே, நெட்டுயிர்த்தார்கள் குறத்தி ஒருத்தி, கையில் ஒரு கோலுடன்
வீதி வழியாகப் பாடிக் கொண்டிருந்தாள். ன்னொரு பெண் போரில் வீழ்ந்த துணைவனுக்கு,
சாணத் தால் மெழுகிய தரையில், அருகம் புல்லைக் குத்திப் பிண்டம் வைத்துக்
கொண்டிருந்தாள் சில மங்கையர், சிற்றில்களில் நெற்குத்திக் கொண்டே பாடிக்
கொண்டிருந்தார்கள்.
மருதி, இத்தனை கூட்டத்திலும் தனிமைப்பட்டாள். அவள், எதிர்நோக்கி ஏக்கத்துடன்
இருந்த, அவளை ஆட் கொண்ட சேந்தன் அங்கே வரவில்லை. அவளுக்கு அழ வேண்டும்
போலிருந்தது. மாடச் சுவரில், அவன் பிரிவு நாட்களைக் காட்டும் அவளே வரைந்திருந்த
கோடுகளைப் பார்த்தாள். இருபது கோடுகள் இருந்தன. அந்தக் கோடுகளை
நோக்கிய வண்ணம் இருந்தாள். பிறகு, இருவரும் சந்தித்த சோலையைப் பார்த்தாள்.
அஙகே தெரிந்த கொன்றை மலர்களும், குரவம் பூக்களும், கோங்கு மலர்க் கொத்தும்,
வேரில் பழுத்த பலாவும், விழுந்து விடுவது போல் குலைதள்ளிக் கொண்டிருந்த
வாழைகளும், அவளுக்கு ஏக் கத்தை இன்னும் அதிகமாக ஏற்றின. அவைகளுக்கு
மறைவில், அவனைச் சந்தித்த நாட்களை, தாகத்தை தணித்துக் கொண்ட மாலைகளை
நினைக்க நினைக்க, அவளுக்கு ஆத்திரமும், அழுகையும், மின்னலிடி மழைபோல்
வந்தன.
எப்படி எல்லாம் பேசியவன், இப்படி மறந்து விட்டான்! கண்களைக் குவளை மலர் என்று
சொன்னவன், இப்போது அதை நீர்வார் கண்களாக்கி விட்டான். வளைகளைப் பிடித்து
அங்குமிங்கும், உருட்டியவன், இப்போது அவை கையை விட்டுக் கழலும்படிச்
செய்து விட்டான். அவள் மேனியை மாந்தளிருக்கு ஒப்பிட்டவன், இப்போது அதில்
பசலை நிறம் பாயும்படி செய்துவிட்டான். கண்களை வேலென்று சொன்னவனே, அந்த
வேலை, தாகும்படி செய்துவிட்டான்.
பின்னாளில் தோன்றிய கலிங்கத்துப் பரணியில் சொல்வதுபோல், 'வருவான்' என்று மாடச்
சுவருக்கு அருகிலும், பிறகு 'வரமாட்டான்' என்று ஒதுக்குப் புறமாக இருந்த அறைக்குள்ளும்
போய் வந்து கொண்டிருந்த மருதி, முடிவில் மாடச் சுவரில் போட்டிருந்த இருபது
கோடுகளுடன் இன் னொரு கோட்டையும் போட்டுவிட்டு, துயரம் சோர்வாக அறைக்குள்
போய்க் கட்டிலில் விழுந்தாள்.
அவளுக்கு நினைக்க நினைக்க அச்சமாக இருந்தது. அவள் அன்னை, அவளுக்குத் திருமணம்
செய்விக்கும் ஏற்பாடுகளைச் செய்து வருகிறாள். குளிர்ந்த பந்தலின் கீழ். வெண் மணல்
பரப்பில், மனைவிளக்கு ஒளிர, நற்பொழுதில், மங்கல மகளிர் நால்வர் அவளுக்கும்
குடநீராட்டி, குலவை யிட்டு, வாழ்த்துக் கூறி, துந்துபி சங்குகள் முழங்க, காளையின்
கரத்தைப் பற்றுவதில் பற்றுவதில் அவளுக்கும் ஆசைதான். ஆனால் அந்தக் காளை,
சேந்தனாகத்தான் இருக்க வேண்டும்.
அவனுடன் களவொழுக்கம் கொண்டதை, இன்னும் மருதி, தன் அன்னையிடம்
சொல்லவில்லை. அவள், இவ ளுக்குச் சூட்டுக் கோலால் சூடு போட்டாலும் போடுவாள்
என்று அஞ்சினாள். அதற்குக் காரணமும் உண்டு. அவள் தந்தை பூப்பெய்திய மகள்
இருப்பதையும் பொருட்படுத்தாமல் பரத்தை ஒருத்தியின் வீட்டில் சரணடைந்திருக்கிறான்.
இதனால் முதலில் அழுது, சுற்றத்தின் ஏச்சிற்கு அஞ்சி, அவன் தானாக வருவான்
என்று நினைத்து, மணமுடிப்பில் மும்முரமாக இருக்கிறாள். மகளுக்கு ஒரு மகவு
பிறந்து விட் டால், அவனும் சொந்த பந்த மரியாதை நிமித்தம் பரத்தை பால் செல்வதை
விட்டு விடுவான் என்று நினைக்கிறாள். ஆக, அன்னைக்கு மகளின் மணமுடிப்பு, அவளுக்கு
மட்டும் மணாளனைக் கொடுப்பது மட்டுமல்ல, தனக்கும் போன வனைத் திரும்பவழைக்கும்
வியூகம் என்பது மருதிக்குச் செவ்வனே தெரிந்தது. இந்த நிலையில் பெற்ற தாயிடம்
சொல்லலாம் என்றால், அவள் சரியான செவிடு. தோழி பாவையோ செருக்கானவள்.
ஆனால் யாரிடமாவது நடந்ததைச் சொல்லவில்லையா னால், நடக்கப் போவது பயங்கரமாக
இருக்கும் என நினைத் துத் தோழியை வரவழைத்து, அவளை சேந்தனிடம் தூது விடுவது
என்று தீர்மானித்தாள். தோழி வீட்டின் அடுக் களைக்குப் போய்த் தன் அன்னையிடம்
உரக்கப் பேசிக் கொண்டிருப்பது அவளுக்கு நன்றாகக் கேட்டது.
"அம்மா! பாவையிடம் பால் கொடுத்து விடு" என்று மாடத்தின் பின்புறச் சுவரில் சாய்ந்து
கொண்டு கத்தினாள். அங்கேயிருந்து, அடுக்களை விவரங்களின் அணுக்களைக் கூடக்
காணலாம்!
மருதி எதிர்பார்த்த நேரத்திற்குள் பாவை வரவில்லை. நிதானமாக, ஒரு கையில் பால்
கொண்ட பொற் கிண்ணத்துடனும், மறு கையில் ஓலைச் சுவடியுடனும் வந்தாள்.
கிண்ணத்தை மருதியிடம் நீட்டிவிட்டி, கட்டில் தூணிற்கு அருகில் போடப்பட்டிருந்த
ஓலைத் தட்டியில் அமர்ந்து கொண்டாள். கட்டில் தூணில் சாய்ந்துகொண்டே ஓலைச்
சுவடியைப் புரட்டினாள்.
"பாவை! பால் பருகுகிறாயா?''
"வேண்டாம்.
“கையில் என்னது ஓலைச் சுவடியா"
"பார்த்தாலே தொயுமே?'
"ஓலைச் சுவடியென்று தெரியும்... ஆனால்
"சொல்லு.'"
"காதல் சுவடியா? காதலன் ஓலையில் கடிதம் வரைந் திருக்கிறானா?"
மருதி, தன் அறிவைத் தானே மெச்சிக் கொண்டாள். கடைசியில், காதல் பேச்சைத்
துவக்கியாகி விட்டது. சேந்த னைத் தொட்டு விடலாம்!
ஆனால் பாவை கொடுத்த பதில், சேந்தனை வெகு தூரத்திற்குத் தள்ளிக் கொண்டிருந்தது.
"இது காதற் சுவடியல்ல அம்மா! சோழ மன்னன் பேரவைக்கோ பெருநற்கிள்ளி,
முக்காவனாட்டு ஆமூர் மல்லனை மற்போரில் வென்றதைப் போற்றியும் விளக்கியும்
சரத் தந்தையார் எழுதிய பாடல்.
மருதிக்கு வெறுப்பேற்பட்டது. எனினும் காரியத்தைக் கருதி, மேலும் மிகுதியாகப்
புன்னகைத்தாள்.
"ஆமாம்... இது எப்படி உனக்குக் கிடைத்தது? புலவர் என்ன கூறுகிறார்?"
"என் இல்லில் இருக்கும் பல சுவடிகளில் இதுவும் ஒன்று. மல்லனின் மார்பு மீது கிள்ளி
ஒரு காலை ஊன்றியதையும் அப்போது மல்லன் அவன் பிடியிலிருந்து மீள முயற்சித்த
போது, மன்னன் இன்னொரு காலால் அவன் முதுகை வளைத்துக் கொண்டதையும்,
பின்னர் அவன் கால்களை யும், தலையையும் முறித்ததையும் இந்தப் பாடல் விளக்குகிறது."
மருதிக்கும் இலக்கியத்திற்கும் வெகு தூரம். இருப்பினும், பாவையை மகிழ வைக்க வேண்டும்
என்ற நோக்கில் பதிலளித்தாள்.
"படி, பார்க்கலாம்!”
பாவை. படித்தாள் மருதி தான் வியந்து போயிருப்பதாகப் பாவனை செய்து கொண்டே,
"கவி நயமும், சொல் நயமும், ஓசை நயமும் கொண்ட அற்புத வரிகள். சரத்தாதை புகழ்
மிக்க புலவர்" என்றாள்.
"சரத்தாதை இல்லை. சரத்தந்தையார்.... நம் புலவர்களுக்கு, காதலையும், போரையும்
தவிர வேறு விவரங்களே தெரியாது போலும்....''
"பாவை! பெரியோரைப் பழித்தல் தவறு.
“இப்படிச் சொல்லியே, சுயமாய் சிந்திக்கும் திறனை இழந்து விட்டோம். மன்னரைப்
பாடுவதும் காதலை மேன்மைப் படுத்துவதும் தேவைதான். ஆனால் அதற்கும் ஓர்
அளவு வேண்டாமா? நம் போர்களில் புற முதுகிடுபவன் யார்? ஒன்றில் பாண்டியனாக
இருப்பான். இன்னொன்றில் சோழனாக இருப்பான். வீரர்களும் நம்மவர்தான்;
கோழைகளும் நம்மவர்தான். இவற்றைப் புகழ்வதிலோ, இகழ் வதிலோ என்ன
இருக்கிறது? களவொழுக்கத்தைப் பற்றிய பாடல்கள் இலக்கியச் சுவையில் ஈடற்றவைதான்;
ஆனால் இவற்றைப் படித்து எத்தனை பெண்கள் கெட்டுப் போயிருக் கிறார்கள்?
இலக்கிய இயல்படியும், மரபியல்படியும், களவொழுக்கத்தை வியந்து பாடலாம்.
ஆனால் உலகியலில் முடியுமா? பாடல்களில் வருகிறதென்று எவனையாவது
காதலித்து, கடைசியில் பத்து மாத்துடன் பாவியாவது நாம் தான்; புலவர்களா?"
"பாவை! காதல் புனிதமானது.உனக்குத் தெரியாது. அது கடலைவிடப் பெரியது.
வானைவிட உயர்ந்தது.
"இதுவும் ஒரு புலவர் பாட்டில் வருவதுதான். எவனோ சொன்னதைக் கேட்டு நீ
ஒப்புவிக்கிறாய்.... அவ்வளவு தான்.''
"நீ என் அறிவைப் புண்படுத்துகிறாய்."
"புண்படுத்தவில்லை அம்மா.... புரிந்ததைச் சொல்கிறேன். என் சுற்றுப்புறத்தை நான்
சிந்திக்கத் துவங்கியதும், எனக்கே வியக்குமளவிற்குப் பல புதிய புதிய உண்மை
புலப்படுகின்றன. எல்லாவற்றையும் அறிந்து வைத்திருப்பவன் அறிஞன்; அவன்
விவரங்கள் கொண்ட யந்திரப் பொறி. இவனால் யாரும் உருப்படப் போதில்லை.
ஆனால் சிந்தனை யாளன், ஒரு தனிச் செம்மல் கருவிலே அறிவுடையார் என்று
யாருமில்லை. அடி நிலை மனிதனுக்கும், மேம்பட்ட மனிதனுக்கும் உள்ள வேறுபாடு,
அவர்கள் தம் சிந்தனைத் திறனை எந்த அளவிற்குப் பயன்படுத்துகிறார்கள் என்பதில்
தான் இருக்கிறது; அறிவில் அல்ல."
மருதி உண்மையிலேயே குழம்பிப் போனாள். அவள் களவொழுக்கத்தைப் பற்றிச்
சொன்னபோது குறுக்கிட்டு, சேந்தனைப் பற்றிச் சொல்ல வாயெடுத்தாள். ஆனால்,
பாவை தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தது மட்டுமல்லாமல், களவொழுக்கத்தையே
விட்டு விட்டாள். இதனால் ஆதங்கப் பட்ட மருதி, "உனக்கு வாய் அதிகம்" என்றாள்.
"வாய் அதிகம் இல்லை அம்மா; சிந்தனை அதிகம்... நம் புலவர்களின் பாடல்கள் தனிப்பட்ட
அகந்தையைத் தீர்க்கத் துடிக்கும் இயல் வேந்தர்களுக்கு வெறியூட்டுகின்றன. ஒரு
புலவன் ஒரு மன்னனைப் புலியென, இன்னொரு புலவன் பிறிதொரு மன்னனைச்
சிங்கமென, இரு மன்னர்களும் தாங்கள் புலவர்கள் 'கூற்றுப்படி விலங்குகள் தான் என்று
மெய்ப்பிப்பது போல் போரில் ஈடுபடுகிறார்கள். இதனால் ஏதுமறியா மக்கள்
உயிரிழக்கிறார்கள். பிறகும் நம் புலவர்கள் ஒப்பாரி வைக்கிறார்கள்.”
நம் புலவர்கள் வேறு பொருட்களைப் பாடவில்லையா?"
பாடியிருக்கிறார்கள். கல்வியைப் பற்றியும், ஆட்சி முறை பற்றியும், பலர் குறிப்பாக
பிசிராந்தையார் போன்றோர் பாடியிருக்கிறார்கள். ஆனால் பெரும்பாலோர் காதலையும்,
போரையும் பிடித்துக் கொண்டு ஊஞ்சலாடுகிறார்கள். இது அவர்கள் தவறு அன்று. நம்
புலவர், அறிஞர்கள் சிந்தனையை அறிவுக்கு உட்படுத்தியதால் விபரீதக் கற்பனைகளும்,
பின் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாத பாடல்களும், ஓர் அனிச்சைச் செயலாக
ஆகிவிட்டன. ஆனால் பிசிராந்தையார் போன்று, அறிவை சிந்தனைக்குப் பயன் படுத்தியவர்
மிகச் சிலர். தலைவன் அழகனாய், வீரனாய் இருக்க வேண்டும் என்றும், தலைவி பேரெழில்
கொண்டவளாய் இருக்க வேண்டுமென்றும் இலக்கியங்களுக்கு வரம் பிட்டுக்
கொண்டார்கள். ஊமையைத் தலைவியாக்கிய புலவன் உண்டா? நொண்டியின
ஏக்கத்தைத் தெரிவிக்கும் பாவலன் உண்டா?"
"பாவை... பிஞ்சில் பழுப்பது நன்றன்று!"
"பிஞ்சாய் இருப்பதும் நன்றன்று. மக்கட் தொகுதி என்பது, நிலைத்த ஒன்று. மனிதர் வருவர்,
போவர். ஆனால் சமூகம் இயங்கிக் கொண்டிருக்கும் ஒன்று. அது குட்டையில் தேங்கிய
நீரல்ல. மாறாக அது ஊழிக்கடலையும் ஊடுருவி ஓடிக் கொண்டிருக்கும் ஆறு. ஆறு
வற்றினாலும், கூடினாலும் அது தேங்கக் கூடாது. அது ஓடிக் கொண்டே இருக்க வேண்டும்.
நம் இலக்கியங்கள், இந்த ஆறுக்கு அணை போடுவது போல், மன்னர்களை தகுதிக்கு மீறிப்
புகழ்வதும், காதலை இயல்புக்கு மீறி விளக்குவதுமாக உள்ளன.
'‘இலக்கியச் சுவையை மட்டும் ரசித்தால் போதாதா?"
"இனிப்பு சுவைக்கிறது என்பதற்காக அளவுக்கு மீறி உண்டால், குடலில்தான் நம்மை
அறியாமல் பூச்சிகள் உண்டாகும். இன்று புலவர்கள், போர்களையும், காதலையும்
அளவுக்கு மீறிப் பாடிவிட்டார்கள். ஈராயிர ஆண்டுகளுக்குப் பின்னர் நம் சந்ததியினர்
இந்த இரண்டையும் மட்டும் பிடித்துக் கொண்டு பழைமை மீட்பு வாதத்தில் இறங்கலாம்!
இதனால் இதர மக்கட் தொகுதிகள் வரும்போது, நம்மவர்கள் மனத்தாலும், செயலாலும்
பின் தங்கிப் போவார்களோ கிறேன். இக்காலத்தில் தமிழர்களாகிய நாம், சீனரைவிட,
யவனரைவிடச் சிலவற்றில் மேலோங்கியும், சிலவற்றில் இணையாகவும் திகழ்கிறோம்.
எனினும், இன்றை நாளில் தோன்றும் அரச வழிபாடும், போர் நிலைப் பாடல்களும்,
பின்னால் தோன்றும் இலக்கியங்களுக்கு வெறுமனே ஆரவாரத்தைக் கொடுத்து
விடலாம். இதனால் பல்லாண்டு காலத்திற்குப் பின்னர் வரும் நம் சந்ததியினர்
நுனிப்புல் மேய்பவராகி, பின் தங்கிப் போவதுடன், இந்த உணர்வு மயமான, அறிவு
வாய்ப்படாத இலக்கியங்களைச் சுட்டிக் காட்டி, சில சுயநலமிகள் மக்களைக் கள்ளுண்ட
நிலையில் வைக்கலாம். இதுவே எனது அச்சம்."
"பாவை! நீயும் நானும் பேதைகள் .... பெரியவர்களைப் பற்றிப் பேசப் பக்குவம்
இல்லாதவர்கள்."
"நானே சில சமயம் இவ்வாறே நினைக்கிறேன். ஆனால் முருகன், தந்தைக்கே பிரணவத்தை
உபதேசித் தான் என்று புலவர்கள் புளகாங்கிதமாய்ச் சொல்லும்போது, நமக்கும்
உபதேசிக்கும் தகுதி ஏன் இருக்கக் கூடாது என்று என்னை நானே கேட்டுக் கொள்கிறேன்."
"யவன நாட்டுடனும், இதர நாடுகளுடனும் ஒப்பிடுகையில் நம் நானிலம் சாலச் சிறந்த
நாடு."
"தமிழ் இலக்கியத்தையே முழுக்க அறியாத உங்களைப் போன்றவரின் கேணித்
தவளைத்தனமான வாதமிது. நம்மைப் போல் யவனரும் முன்னேறியுள்ளனர். நாம் சோதி
வட்டக் கணக்கீடு செய்வது போல், அவர்களும் பல பொறிகளைக் கண்டு பிடித்துள்ளனர்.
நாம் இந்த நாட்டில் பிறந்து விட்ட ஒரு காரணத்தால், நாட்டைப் போற்றி, நம்மை
அறியாமலே நம்மைப் போற்றுவது, நம் குறைபாடுகளை மிகுதி யாக்கி, தகுதிகளைக்
குறைத்துவிடும். சொல்லப் போனால் நாட்டுப்பற்று சுயநலமிகளின் தமிழ் -
வணிகத்திற்கும் நாம் முன்னேறாமல் முடங்கிக் கிடக்கவும் காலப் போக்கில் ஒரு வெறியாகி
நம்மவர்களைக் குட்டை நீராய் ஆக்கி விடலாம்.
மருதியால் பொறுக்க முடியவில்லை. இப்படியே பேச்சுத் தொடர்ந்தால், சேந்தன் நிகழ்ச்சி
என்னாவது! ஆகையால் அவளே வாய் விட்டாள்:
``பாவை! நான் வளை கழன்று, பசப்புப் பட்டுக் களைத்து இளைத்துப் போயிருக்கிறேனே!
ஒரு சொல், ஏன் என்று கேட்டாயா?"
‘“ஏன்?’"
"உனக்குத் தெரியாத ஒன்றை நான் சொல்லப் போகிறேன். ஒரு சமயம், காட்டினின்று
வேடனிடமிருந்து தப்பித்த புலி ஒன்று, நம் வயல் வெளிகளில் உலவியதாக வந்த செய்தி
உனக்குத் தெரியுமா?"
"தெரியுமாவது? ஆடவரின் வீரத்தை .. இல்லை.. வீர வுணர்வைச் சோதிப்பதற்காக
நான்தானே அந்தப் புரளியைக் கிளப்பி விட்டவள்?
"அடி கள்ளி நீதானா?....அப்படியானால் நீதான் என் காதல் நோய்க்கும் காரணம்
சொல்வதைக் கேள். அந்த ஓலைச் சுவடியைக் கீழே எறி. ஒரு நாள் வயற் கேணியில்
நீராடச் சென்றிருந்தேன். அப்போது ஒரு கட்டிளங்காளை என்னையே உற்று
நோக்கினான். நான் அவனைச் சினங் கக்க பார்க்க நினைத்து நோக்கினால், என்
அதரங்கள் என்னை மீறி புன்னகைத்தன. கண்கள் அறிவை மீறி நிலம் நோக்கின.
இதனை அறிந்த அக்கள் வன் மகன் என்னருகே வந்து, 'இங்கே வேங்கை ஒன்று
வெறியில் அலைகிறதாம். அதை நீ பார்த்துவிட்டால், உடனே கூவவும். நான்
அண்மையில்தான் இருக்கிறேன். உடனே வந்து புலியுடன் பொருதுகி றேன்' என்று
சொல்லிவிட்டு போய் விட்டான். நானோ தனிமையில் தவித்தேன். அவன் தோள்களை
நோக்கிகொண்டே இருக்க வேண்டும் போல் தோன்றியது. அவனை என்பால் இழுக்கும்
பொருட்டு 'புலி புலி' கத்தினேன்.
என்று
பொய்யாகக்
'‘அவன் என் குரல் ஓயுமுன்னே வந்துவிட்டான் பொல்லா மகன், மிக அண்மையிலேயே
இருந்திருக்கிறான்! வந்தவன் என் அன்பால் எழுந்த பொய்மையைப் புரிந்து கொண்டாலும்,
உண்மையிலேயே அதிர்ந்தவன் போல் அரிவாளை ஒரு கையில் ஓங்கிக்கொண்டே,
'என் அருகில் வா, இல்லையெனில் அதோ நிற்கிற புலி உன்மீது பாய்ந்துவிடும்' என்று
சொல்லிக்கொண்டே என்னை இழுத்துத் தன் மார்போடு அணைத்துக் கொண்டான். என்
பயத்தைத் தெளிவிப்பதுபோல் பாவனை செய்துகொண்டே என் கன்னங்களை வருடினான்.
முதுகைச் செல்லமாகத் தட்டினான்.'
"அப்புறம்?""
"போடி...அப்புறம் இந்தச் சோலையில் சந்தித்த இரவுகள் ஏராளம்...இருபத்தோரு
நாட்களுக்கு முன்பு பிரிந்தவன் திரும்பவில்லை. நானும் என்னிடம் இல்லை. என்னடி?....
பிள்ளையார் மாதிரி பேசாமல் இருக்கிறாய்?''
‘எனக்குத் தெரியும்?”
"சேந்தனைத் தெரியுமா? எப்படி?'`
"உன்னை விட... அவனைப் பற்றி அதிகமாகத் தெரியும்.”
"ஏண்டி உண்ட வீட்டுக்கே நீ?...."
"வாயை மூடும்மா- உன்னவனை விட என்னவன் வசதியில் வறியவனானாலும், வாழும்
நெறியில் குறைந்தவ னில்லை``
'' நீ என்ன சொல்கிறாய்?"
"என்னவனான வானவரம்பனிடம் சேந்தனின் தோழன் சொன்னானாம். நான், நேரில்
அறிய சோலைக்கு வந்து உங்கள் திருவிளையாடலைப் பார்த்தேன்."
"நீ பார்க்கலாமா? தப்பில்லையா?"
"தப்போ தவறோ? அந்தக் காதற் காட்சியைப் பார்த்ததும் ஒரு பலன் கிடைத்தது
"என்னது?"
"உங்கள் விளையாட்டைப் பார்க்கப் பார்க்க, எனக்கு பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும்
போல் தோன்றியது. ஏன் என்று சிந்தித்தேன். பிறரின் மென்மையான நிகழ்ச்சிகளை அறிய,
எல்லோரும் ரகசியமாக விரும்புகின்றனர். இந்த ரகசியத்தைப் பகிரங்கமாக ரசிக்கத்தான்
'கூத்து' என்ற ஒன்றைக் கண்டு பிடித்திருக்க வேண்டும். முதலில் கூத்தைக் கண்டு
பிடித்தவன், என்னை மாதிரி, பிறர் ஈடு பாட்டை மறைந்திருந்து பார்த்து ரசித்தவனாகத்தான்
இருக்க வேண்டும்!”
''பார்த்தேன். பரத்தை ஒருத்தியுடன் புனலாடியதை!"
"அம்மா... அய்யோ... என் மனம் என்ன பாடுபடுகிறது? ஏமாந்து விட்டேனோ?.... அவனை
நல்லவனென்று நம்பி வீட்டேனே பாவை! அவனை எப்படியாவது நீ சந்தித்து என்
நிலைமையை விளக்க வேண்டும். செய்வாயா?”
"உன் நிலைமை என்ன?"
"நீயும் பெண் தான் - புரிந்து கொள்ளவில்லையா? வனைத் தொட்டுவிட்டு,
இன்னொருவனைத் தொடலாமா?''
"கவலைப்படாதே... சேந்தன் பரத்தையுடன் காவிரிப் பூம்பட்டினம் ஏகியிருக்கிறான்.
இதை, அவன் தோழன் கழாத்தலையன், என்னவர் வானவரம்பனிடம் சொல்லி யிருக்கிறான்.
கழாத்தலையன், நாளை மறுநாள் சேந்தனைத் திருப்பிக் கொணர, அவன் பெற்றோர்
பொருட்டுச் செல்கிறான்.
"பாவை! நீ எப்படியாவது கழாத்தலையனைப் பார்த்து விளக்க வேண்டும். சிந்தித்துப் பார்....
உன் வானவரம்பன் உன்னைவிட்டுப் பிரிந்தால் உனக்கு எப்படி இருக்கும்? எப்படித்
துயரப்படுவாய்?"
"துயரப்பட மாட்டேன். ஏனெனில் எங்கள் காதல் அறிவின்பால் பட்டது. உன்னதைப்போல்
உணர்வின்பால் பட்டது இல்லை. நானும் அவனும் சந்திக்கும் வேளையில், நான் ‘நமது
மக்கட் சக்தியை வலுப்படுத்தி, மன்னன் சார்பைக் குறைக்க வேண்டும்' என்பேன்.
அவனோ, 'யவன நாடு மாதிரி நம் நாடும் சீரழிந்து போகு'மென்பான். பின்னர்,
'மன்னனுக்குத் தனி ஒளி இருக்கிறது; அவன் புறத்தே சென்றாலும் அந்தப்புரம்
சென்றாலும், அந்த ஒளி நாட்டை ஆள்கிறது' என்பான். நான் 'இது பயனில் கொள்கை.
மக்கள் சக்தி முன் மன்னர் சக்தி தூளாகும்' என்பேன். அவன் கோபப்பட்டு
வாளாதிருப்பான். நான் உங்கள் ஒளியை விடவா மன்னனுக்கு ஒளி?' என்பேன். உடனே என்
கன்னத்தைக் கிள்ளுவான். நானும் "அதில் தோற்றவன்; இதில் வெல்லட்டும்?' என்று
சிறிது நேரம் உடன்படுவேன். சிறிது நேரம் மட்டும்தான்!"
"பிரிந்து போனது உன்னவன். நீதான் கழாத்தலைய னைப் பார்க்க வேண்டும்.'
‘“நான் குலமகள். கற்புக் கடன் பூண்டவள் நான். அந்நியன் ஒருவனைப் பார்ப்பது அழகா?``
"அப்படியானால்.... கழாத்தலையன் எனக்கும் அந்நியன். நான் மட்டும் சந்திக்கலாமா?
நான் மனித குல மகளில்லையா?"
"அது வந்து உன் நிலையில் இருப்பவர்கள் சந்திக்கிறார்கள். நீயும் சந்திக்கலாம்.”
"இதனால்தான் நான் புலவர்களைச் சாடினேன். தலைவி, தலைவனின் தோழனைச் சந்தித்து,
நினைத்ததை எடுத்தியம்பியதாகக் காட்டாத கவிஞர்கள், தோழியை மட்டும் தலைவனையோ,
அவன் தோழனையோ சந்திப்பதாக வர்ணிக்கிறார்கள். இது முழுமையான இரட்டை
வேடம். தோழிக்கு ஒரு கற்பு, தலைவிக்கு ஒரு கற்பா? கற்பென்பது சமுதாய ஏற்றத்
தாழ்வுகளுக்குத் தக்கபடி இருக்கக் கூடியதா? என்னம்மா இது?''
மருதி பொறுமை இழந்தாள். கணைய மரக்கட்டிலைப் பார்த்தாள். மயிற் பீலியைப்
பார்த்தாள். மாடச் சுவரையும், தன் இரு நிலை மாட வீட்டையும் பார்த்தாள். அணிந்திருந்த
பொன்னாபரணங்களைப் பார்த்தாள். பிறகு இவை எதுவுமே இல்லாத, கருகுமணி
மாலையும், முரட்டுச் சேலையும் அணிந்திருந்த பாவையைப் பார்த்தாள்.
"பாவை வெங்கர்களுக்கு வீறாப்பு அதிகம் என்பது உண்மை போலும்! நீ எங்களை
அண்டிப் பிழைப்பவள். என் நிலை வேறு. உன் நிலை வேறு. நீ கழாத்தலையனைப்
பார்ப்பதில் தவறில்லை."
"மருதி! நீ இவ்வளவு தொலைவுக்கு வந்ததால், நான் உனக்கு இனிமேல் தோழியாக
இருக்கப் போவதில்லை. இருந்தாலும் பழகிய பாசத்திற்காக உன் பொருட்டு ஒன்று
சொல்ல விரும்புகிறேன்:
"சமூகத்தில் மேல்நிலையில் இருப்பதால் அது பெருமைப் படத் தக்கதுமன்று. கீழ்நிலை
வெறுக்கத் தக்கதுமன்று. உறையூரில் இருந்து சோழ நாட்டை ஆண்ட தீத்தனைப் பற்றி
அறிந்திருப்பாய் என்று நினைக்கிறேன். அவன் மகன் பெருநற்கிள்ளிக்கு செவிலித்தாயாக
இருந்த காயற்பெண்டு என் அய்யாமை (பாட்டி).தித்தனுக்கும் கிள்ளிக்கும் கருத்து
வேறுபாடு ஏற்பட்டு பின்னவன் பட்டத்துக்குரிமை இழந்து அலைந்தபோது அவனுக்காக
உதவி செய்ய முயன்றவள் காவற் பெண்டு. இதனால், தித்தனின் சினத்திற்கு ஆளாகி,
இங்கே வந்து குடில் போட்டுத் தங்கியவள் அவள். அவள் நினைத்திருந்தால் கிள்ளி
பட்டமெய்தியதும், அவனை அணுகி உதவி பெற்றிருக்கலாம். ஆனால் அவள் தான்
இருக்குமிடத்தைத் தெரியப்படுத்தவே இல்லை. ‘என் மகனை இங்கே தேடினால்
எப்படி! அவன் ஏதாவது ஓர் போர்க்களத்தில் இருப்பான் போய்ப் பார்' என்று
மரத்தோடு சாடிய அவள் பாட்டைப் பலர் மெச்சினாலும், நான் வெறுக்கிறேன்.
என்றாலும், அவள் கொள்கையின் நிமித்தம் சுய மதிப்பிற்சாகவும் வளர்ப்பு மகனிடமே
உதவி நாடாதவள். இதனால் பெருமிதப்படுகிறேன்.
"ஆனால் உன் தாய்வழி அன்னையான நக்கண்ணை யார், பெருநற்கிள்ளிமீது பெருங்காமம்
கொண்டு கைக்கிளைப் பாடல்களைப் பாடியவள். கிள்ளி எதிரியான மல்லனின்
தலையை முறிக்கும்போதே, அவனைக் கட்டித் தழுவ நினைத்ததாய் காம மயக்கத்தில்
பாடியவள். கிள்ளி அவளைக் கழித்து கட்ட வேண்டும் என்பதற்காக, இவ்வூரில்
அவளை குன்றேறி நிற்க வைத்து, கண்பட்ட தொலைவு வரை இருந்த காணியையும்
பொற்றாமரையையும் கொடுத் தான். இப்படி வந்த சொத்துதான் உன் குடும்பத்தினது.
காம உணர்வுகளை வெளியே காட்டிப் பலன் பெற்ற ஒருத்தியின் பேத்தி நீ பாச
உணர்வுகளையே அடக்கிப் பலனை எதிர்பாராமல் வாழ்ந்த ஒருத்தியின் பேத்தி நான்.
"இதனால் நீ வழுவணங்காய்த் துவையலுடன், நெய் கலந்த நல்லரிசிச் சோறையும், நான்
புல்லரிசிக் கூழையும் உண்கிறோம். ஆனால், இதன் பின்னணியைப் பார்த்தால், நான்
பெருமிதப்பட வேண்டும். நீ வெட்கப்பட வேண்டும். இப்போது சொல் பொருளியல்
அடிப்படையில் கற்பு நிலை வரையறுக்கப்பட வேண்டுமா?"
மருதியால் பதிலளிக்க முடியவில்லை. ஆகையால் கோபம் கொப்பளிக்க, பாவையைச்
சினந்து பார்த்தாள். பாவை மேலும் பேசினாள்:
"மருதி! உனக்காக, நான் துயரப்படுகிறேன். முறத்தில் நெல் வைத்து, கட்டுவிச்சியை
வரவழைத்து, நிமித்தம் பார்க்கவே நீ அஞ்சுகிறாய் என்பது தெரியும். ஒரு படி நெல்லும்,
தலைக்கு எண்ணெயும், கந்தலாடை ஒன்றும் கொடுத்தால் போதும். கட்டுவிச்சி வருவாள்.
ஒருவேளை, சேந்தன்கிட்ட மாட்டான்' என்று கட்டுவிச்சி எதிர் மறை யில் இயம்பி விட்டால்
அதைத் தாங்க முடியாதே என்று தவிப்பவள் நீ. உன் வேதனை எனக்குப் புரியும்."
"ஆடு நனைவதற்கு ஓநாய் கவலைப்பட்டது போல.... இல்லையா பாவை?"
"வார்த்தைகளை மிதமிஞ்சி விடாதே. தோழிக்கு ஒன்று, தலைவிக்கு ஒன்றென இரு வேறு
கற்பு நிலைகளை அறியாமலே பாடும் புலவர்களையும், மக்கட் தொகுதியையும்
வெறுக்கும் நான், உன் நிகழ்வை ஒரு சமூக நோயாகக் கருதுபவள். என் இப்போதைய
எதிர்ப்பை எவராவது ஒரு புலவர், இலக்கியப் பாவாக்கினால், நம் பிற்கால சந்ததியர்
சிந்திக்க வாய்ப்பேற்படும். எவராவது பாடுவரா? அப்படிப் பாடினால் அது சங்கமேறுமா
என்பது ஐயமே! போகட்டும்
"இறுதியாய் ஒன்று, இது உன் நிகழ்வு; ஆகையால் நீதான் கழாத்தலையனைப் பார்க்க
வேண்டும். உன் பொருட்டு, பழகியதற்காக ஒன்று வேண்டுமானால் செய்கிறேன்.
உன்னோடு நானும் வருகிறேன். உனக்கு நாண மாக இருந்தால், நானே வாதாடுகிறேன்.
அப்படியும் சேந்தன் மனம் மாறவில்லையானால், வானவரம்பனை விட்டு, உன்னவன்
எலும்பை முறிக்கச் சொல்கிறேன். ஆனால் எதற்கும் நீ உடனிருக்க வேண்டும். இன்னும்
மூன்று நாழிகை நேரம் கொடுக்கிறேன். சிந்தித்துச் சொல் ...”
பாவை உணர்ச்சிப் பிழம்பாகப் பேசி, பின்னர் சந்தனம் போல் குளிர்ந்து படியிறங்கிப்
போய்விட்டாள். அவள் நிமிர்ந்த தலையையும், நேரான நடையையும் மருதி பார்த் துக்
கொண்டே இருந்தாள்.
அவள் சொன்னது மருதிக்கு சினத்தைக் கொடுத்தாலும், சிந்திக்கவும் வைத்தது.
கழாத்தலையனைப் பார்க்க, பாவையுடன் போகலாமா என்று சிந்தித்துக் கொண்டிருந்தாள்
என்றாலும், அவள் என்ன முடிவெடுத்தாள் என்று தெரியவில்லை. காரணம், எந்தப் புலவரும்,
அதைப் பற்றிப் பாடியதாகத் தெரியவில்லை.
----------------------- xxxxxx-------------
This file was last updated on 03 December 2023.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)