கரவை வ. சிவராசசிங்கம் இயற்றிய
நயினை நாகபூஷணியம்மை பிள்ளைத்தமிழ்
nayinai nAkapUshaNiyammai piLLaittamiz
by karavai civarAcacingkam
In Tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
We thank noolaham.org for providing a PDF copy of this work
We thank Dr. Meenakshi Balaganesh, Bangalore, India for her assistance in the preparation
of this work for publication in Project Madurai.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2023.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
கரவை வ. சிவராசசிங்கம் இயற்றிய
நயினை நாகபூஷணியம்மை பிள்ளைத்தமிழ்
Source:
நயினை நாகபூஷணியம்மை பிள்ளைத்தமிழ்
கரவை வ. சிவராசசிங்கம் இயற்றியது
குறிப்புரை. கரவை க. கணபதிப்பிள்ளை
குமரன் பதிப்பகம், கொழும்பு.
முதற்பதிப்பு - 1977, பிரதிகள் - 1000
உரிமை: கழகத்திற்கே
விலை: ரூபா 3.00
வெளியீடு: சைவத் தமிழ்க் கழகம்
கிடைக்குமிடம்: விஜயலட்சுமி புத்தகசாலை -வெள்ளவத்தை.
ஸ்ரீ லங்கா புத்தகசாலை - யாழ்ப்பாணம்.
---------------------
உ
நயினை ஸ்ரீநாகபூஷணியம்மை தேவஸ்தானம் பிரதிஷ்டாபூஷணம்
சிவஸ்ரீ.ஐ. கைலாசநாதக் குருக்கள் அவர்கள் வழங்கிய ஆசியுரை
திருவருள் மிக்க அருட்சக்தியாகிய நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்மை பக்தர்களுக்கு
வேண்டிய அனுக்கிரஹங்களை வாரிவழங்கிக் கொண்டிருக்கிறாள் என்பது உலகறிந்த
உண்மை. அதனால் சர்வலோகநாயகியாகி விளங்கும் அம்மைமீது எத்தனையோ
அன்பர்கள் பாமாலை சூட்டி வணங்குகின்றார்கள். இப்பொழுது அன்பர் திரு. வ.
சிவராசசிங்கம் அவர்கள் அம்பிகைமீது பாடிய பிள்ளைத் தமிழைப் பார்வையிட்டோம்.
பிள்ளைத்தமிழ்ப் பாமாலையால் கொஞ்சு தமிழ் மொழியில், விஞ்சும் அம்மை புகழை
நெஞ்சை அள்ளும் வகையில் இயற்றியுள்ளார் நூ லாசிரியர். வேதப்பொருளையும்,
புராண வரலாற்றினையும், தத்துவ உண்மைகளையும், அம்பிகையின் அருளாடல்களையும்
ஆங்காங்கு பொதித்துள்ளமை படித்தின்புறுதற்குரியது.
காப்புப் பருவத்திற் காக்கவைத்து, செங்கீரையாட வைத்து விமலையைத் தாலாட்டி,
சப்பாணி கொட்டியருளவைத்து; "அலை முத்தெறியும் நயினைவளர் அமுதை முத்தந்தர
வைத்து, 'கருவிற் புகுதாவகை கருத்திற் புகுந்துள்ளொளி பெருக்கிக் கதிபெற்றுய்யும்
நெறி காட்டும் கதிரை" வருக என அழைத்து, "விண்ணுலவுடற்குறைப் பணியுண்டுமிழ்ந்திடு
விதத்தித் தலத்து மேவும் விடவரவு நீவரிற் கவ்வுமென்றஞ்சாதே'' என அம்புலியை
ஆட அழைத்து, "திசைதோறு மொளிபரந்திருள் பருகுமாறு மென் செந்தளிர்க் காந்தன்
மேலும் சிவப்பேறுமாறும்” அம்மானை ஆடவிரந்து, "பேரன்பர் நெஞ்சங் குழைந்தென்புநெக்கு
பேராயிரங்கள் கூறிப் பரவுதொறும் விழிகள் பொழியுமானந்தப் பலாலி சேர் வெள்ளத்தில்
நீராடியருள வைத்து, "வெங்கோப வினையிருளை நினதருட்பிரகாச விழி நோக்கு
நீக்கு வகையிற் பொன்னூசல் ஆடியருளே" எனத் தமரநீர்ப் புவனம் முழுதொருங்கீன்ற
அகிலாண்ட கோடிப் பிரமாண்ட நாயகியை ஆராதித்து, ஆரா அன்பின் நிறைந்த
பாமாலையைத் தெய்வத் தமிழ் மணக்கக் கவிஞர் தொடுத்துள்ளார்.
உள்ளம் உவக்க அம்பிகையின் அருளை மடுத்து இன்னமுதக் கனியின் சாற்றில்
தேன் கலந்து பக்தர்களுக்குப் பருகத்தந்துள்ளார் இப்பிள்ளைத்தமிழ் ஆசிரியர்.
நாகபூஷணி அம்மையின் பிள்ளைத்தமிழைப் படிப்போர்க்கு வல்வினை பறந்தோடும்;
நெஞ்சிற் பதிப்போர்க்குத் துன்பம் மறையும்; நாவில் துதிப்போர்க்குச் செல்வம் பலிக்கும்;
பலர்நடுவே எடுத்தோதுவார்க்கு இகலோகபரலோக இன்பம் பெருகும் என்பது துணிபு.
ஆகவே, சுயம்புமூர்த்தியும், நினைத்தவர் உள்ளத்தில் உடன்தோன்றி அவர்கட்கு
வேண்டிய வரங்களை அருள் பவளும் ஆகிய அன்னை ஸ்ரீநாகபூஷணி அம்மை இம்
மெய்யடியாரின் பிள்ளைத்தமிழ் என்னும் பாமாலையை ஏற்று அனுக்கிரஹம்
செய்ய வேண்டுமென்று அம்பாளைப் பிரார்த்தித்து ஆசீர்வதிக்கின்றேன்.
இங்ஙனம்,
ஐ. கைலாசநாதக் குருக்கள்
-----------------
அணிந்துரை
நயினை நாகபூஷணி அம்மை பிள்ளைத்தமிழ், கவித்துவம் - கற்பனை – சொல்லோட்டம் -
பல்வேறு சந்தம் என்றின்னோரன்னவற்றால், மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழை
நினைவுகூரச் செய்கின்றது. இவ்வாற்றால், அம்மையின் அருட்பார்வை பிள்ளைத்
தமிழ்க் கவிஞர்பாற் பதிந்தது என்கின்ற கருத்து உண்டாகிறது.
கவிஞரைப் 'பிள்ளைக்கவி' என்று பாராட்டுவோமாக. பிள்ளைக்கவி திரு. வ. சிவராசசிங்கம்
அவர்கள், ஆங்கிலப் புலமையில் நிறைவு பெற்றவர்கள். தமிழ்ப் புலமையின் நிறைவை
இப்பிள்ளைத்தமிழ் வாய் திறந்து சொல்லும்.
திரு. க. கணபதிப்பிள்ளை அவர்கள் இயற்றிய தச்சைச் சிலேடை வெண்பாவுக்கு
நல்லுரை செய்து 'உரை விற்பன்ன' ராயும் விளங்குகின்றார்கள் திரு.சிவராசசிங்கம்
அவர்கள்.
பிள்ளைக் கவியின் பிள்ளைத்தமிழ் குறிப்புரையோடு கூடியது. குறிப்புரை ஆசிரியர்
மேலே குறிப்பிட்ட ‘கவிதாரத்தினம்' இருவரும் சகோதர முறையினர்.
இவர்களைத் தந்த கரவெட்டிப் பதியின் இருந்தவப் பேறு இருந்தவாறு!
பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை
கலாசாலை வீதி, திருநெல்வேலி.
1-06-1977
------------------------
முகவுரை
எட்டுத்தொகை பத்துப்பாட்டாம் பழைய தமிழ் இலக்கியங்களில் நாட்டுப் பாடல்
வடிவங்களையொட்டி அமைக்கப்பெற்ற பிள்ளைப்பாடல்கள், பாட்டுடைத் தலைவனையும்
பாடுவதற்குப் பயன்படுத்தப்பெற்றதைக் 'குழவி மருங்கினும் கிளவதாகும்" எனும்
தொல்காப்பிய விதி சான்று பகர்ந்து உறுதிசெய்கின்றது. ஆயினும், அத்தகைய
பழைய புறப்பாடல்கள் கிடைக்கவில்லை, பக்தி இயக்கம் சிறப்புற்று ஓங்கிய பல்லவர்
காலத்தில் வைணவ அடியார்கள் தம் உள்ளத்து ஆராமையை உணர்த்துமுகமாகத்
தம் இறைவனைப் பிள்ளையாகக் கருத்திற் பாவனை செய்து பாடியுள்ளார்.
குலசேகரவாழ்வார், திருமங்யைாழ்வார் ஆகியோரிலும் பெரியாழ்வார் இப்பாவனையில்
அனேக பாசுரங்களை உள்ளம் நெகிழ்ந்து, பாடியுள்ளார். பிறவா யாக்கையனாம்
சிவனை நாயன்மார் பிள்ளையாகக் கருதிப் பாட முடியாதபோதும், மூத்தபிள்ளையாரை
அதிராவடிகள் சப்பாணிக்கொட்டவும் செங்கீரையாடவும் செய்துள்ளார் என்பது
குறிப்பிடத்தக்கது.
இன்று காணப்பெறும் பிள்ளைத்தமிழ்ப் பிரபந்தங்களிற் காலத்தால் முற்பட்டது
இரண்டாம் குலோத்துங்கசோழன் மீது கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த
ஒட்டக் கூத்தர் பாடிய பிள்ளைத்தமிழேயாம். பதின்மூன்றாம் நூற்றாண்டின்
முற்பகுதியிற் கொடிகொண்டான் பெரியன் ஆதித்ததேவன் என்பவன் கந்தன்
உதயஞ் செய்தான் காங்கேயன் மீது காங்கேயன் பிள்ளைக்கவியைப் பாடியுள்ளான்
என்று சாசனவாயிலாய் அறிகிறோம். இவற்றின் பின்பு கிடைக்கும் பிள்ளைத்தமிழ்ப்
பிரபந்தங்கள் பெரும்பாலும் பதினேழாம் நூற்றாண்டிற்கும் தொடர்ந்துவரும்
நூற்றாண்டுகளுக்கும் உரியனவேயாகும்.
ஈழவளநாட்டிலே இருபது பிள்ளைத்தமிழ்ப் பிரபந்தங்கள்வரை தோன்றியுள்ளன.
இவற்றிலே ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தின் இறுதியில் வாழ்ந்தவராகக் கருதப்படும்
இணுவில் சி. சின்னத்தம்பிப் புலவர் பாடிய இணுவில் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழே
காலத்தால் முற்பட்டது என்று கருத இடமுண்டு. இப்பிரபந்தம் இற்றைவரை
அச்சுவாகனம் ஏறியதாகத் தெரியவில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டிலே
ஐந்து பிள்ளைத்தமிழ்ப் பிரபந்தங்கள் வரை ஈழத்தவராற் பாடப் பெற்றுள்ளன.
வசாவிளான் பிரான்சிஸ்பிள்ளை என்பவர் யேசுநாதர் மீது பாடிய பிள்ளைக்கவி
அச்சிடப்பெற்ற போதும் கிடைக்கப்பெறுமாறில்லை. சிறுப்பிட்டி தா. அமிர்தலிங்கம்
பிள்ளை பாடிய சாலைவிநாயகர் பிள்ளைத்தமிழின் இயல்பு உணருமாறில்லை.
அச்சுவேலி அ. வைத்தியநாதச் செட்டியார் (1759-1844), நல்லூர் சி. அப்புக்
குட்டியார் (1788-1863) ஆகியோர் முறையே பாடிய அச்சுவேலி நெல்லியவோடை
அம்மாள் பிள்ளைக்கவியும் நல்லூர் சுப்பிரமணியர் பிள்ளை த்தமிழும் கிடைக்குமாறில்லை.
வல்வை ச. வயித்தியலிங்கப் பிள்ளை (1843-1900) பாடிய செல்லச்சன்னிதி
பிள்ளைத்தமிழ் அவருடைய தொண்டைமானாற்றுச் செல்லச்சன்னிதித்
திருமுறையில் இடம்பெறுகின்றது.
இந்நூற்றாண்டில் மறைந்தவர்களிலே அருள்வாக்கி ஆ. பி. அப்துல் காதிறுப்புலவர்,
வட்டுக்கோட்டை சிதம்பரநாதன், அல்வாய் க. சின்னத்தம்பி உபாத்தியாயர்,
அல்வாய் மு. செல்லையா. சிவன் கருணாலய பாண்டியனார் முதலியோர்
பிள்ளைத்தமிழ் பாடியுள்ளார்கள். அப்துல் காதிறுப்புலவர் (1866-1918) காரணப்
பிள்ளைத் தமிழையும், தைக்காசாகிபு ஒலியுல்லா பிள்ளைத்தமிழையும் இசுலாமியப்
பெரியார்மீது பாடியுள்ளார். வட்டுக்கோட்டை க.சிதம்பரநாதனும் (1890-1932)
சிவங்கருணாலய பாண்டியனாரும் (1903-1976) கதிரைவேலர்மீது பிள்ளைத்தமிழ்
பாடியுள்ளார். அல்வாய் சின்னத்தம்பி உபாத்தியார் (1864-1955) அல்வாய்
வேவிலந்தை முத்துமாரியம்மைமீது பிள்ளைத்தமிழ் பாடியுள்ளார். மு. செல்லையா
(1906-1966) ஈழகேசரியை வரவேற்று ஈழகேசரிப் பிள்ளைத் தமிழைப் பாடினார்.
மாவைப் பிள்ளைத்தமிழ் (1967) சுவாமி பிள்ளைத் தமிழ் (1969), திருக்கேதீச்சரத்துக்
கௌரிநாயகி பிள்ளைத் தமிழ் (1976), கீரிமலைப் பிள்ளைத்தமிழ் என்பன தற்காலத்துப்
புலவர்களால் ஆக்கப்பெற்றனவாம்.
ஈழத்தில் பழமையும் பிரபல்லியமுமிக்க திருத்தலங்களுள் ஒன்று நயினை. நயினை
நாகபூஷணி அம்மாள் மீது பதிகம், ஊஞ்சல்,இரட்டைமணிமாலை, நிரோட்ட யமக
வந்தாதி, மான்மியம் முதலிய பிரபந்தங்கள் பாடப்பெற்றுள்ளபோதும், இக்காலம்வரை
பிள்ளைத்தமிழ் பாடப் பெற்றதாகத் தெரியவில்லை. குமரகுருபர சுவாமிகளின்
பிள்ளைத்தமிழ் பெற்று உகந்த அம்பாளுக்கு நயினையில் பிள்ளைத்தமிழ் இல்லாத
குறையை ஆசிரியர் நீக்கியுள்ளார். அல்வாய் வேலிலந்தை முத்துமாரியம்மை மீது
பத்து வருடங்களுக்கு முன்னர் பிள்ளைத்தமிழ் பாடிய ஆசிரியர் இன்று நயினை
நாகபூஷணியம்மை மீது பாடியுள்ளார்.
தமிழ்க்கவிதை தடம்புரண்டு நலிந்து நிற்கும் வேளையில், இலக்கிய இலக்கண
பாரம்பரியம் என்பது யாது என்பதை உணர்த்தும் படைப்பாக நயினை
நாகபூஷணியம்மை பிள்ளைத்தமிழ் அமைகின்றது. இதுவரை காலமும் குடத்துள்
விளக்காய் இருந்த ஆசிரியரின் கவித்துவ சாமர்த்தியம் இந்நூலிலே சிறப்பாக
வெளிப்படுகின்றது. ஆசிரியர் கையாளும் யாப்பமைதிகளின் லாவகமும்
கற்பனையின் செழுமையும் போற்றத்தக்கவை. மரபுவழி வந்த பிரபந்த வடிவமாயினும்,
ஆசிரியரின் தனித்துவம், தலக் காட்சிகள், பிரதேச வருணனைகள், வாழ்க்கைச்
செய்திகள், ஐதீகக் கதைகளின் ஆட்சி முதலியனவற்றிலே சிறப்பாக வெளி
வருகின்றது. ஆயினும் ஆசிரியரின் தமிழ் இலக்கியப் பயிற்சி முன்னைய
இலக்கியங்களின் சிறப்பியல்புகள் சிலவற்றை ஆங்காங்கே நினைவுக்குக்
கொண்டு வரச் செய்துவிட்டது என்பதை மறுப்பதற்கில்லை.
ஈழத்து இலக்கிய ஆய்வுகள் வளர்ச்சி பெற்றுவரும் இற்றை ஞான்று, நயினை
நாகபூஷணியம்மை பிள்ளைத்தமிழின் வெளியீடு வரவேற்கத்தக்கது. ஈழத்துத்
தமிழ் மக்களிடையே பிரதேசப் பற்று வளர்ச்சியடைவதற்கும் இத்தகைய
பிரபந்தங்கள் உதவுவன என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.
தமிழறிவும் இறையுணர்வும் கொண்ட ஆசிரியர் சுவையும் உணர்ச்சியும்
பொருந்திய வேறு பல படைப்புக்களையும் அளித்துத் தமிழும் சைவமும் ஈழத்திலே
சிறப்புற்றோங்கத் தம்மாலான பணிகளையாற்ற அம்பாள் அருள்புரிவாளாக.
கலாநிதி பொ. பூலோகசிங்கம்
இலங்கைப் பல்கலைக்கழகம்,
கொழும்பு வளாகம்.
15-6-77.
--------------------
மதிப்புரை
பக்தி மார்க்கத்தில் இறைவியைத் தாயாகவுஞ் சேயாகவும் பாவனை செய்து வழிபடும்
முறை தூய்மையானதும், புனிதமானதும், இலகுவானதுமாகும். சேயாக வழிபடும் போது
இனிமையும் மேலோங்கி நிற்கும். சின்னஞ் சிறு குழந்தைகளின் ஆடல் பாடல்களை
யெல்லாம் தெய்வத்திற்கு அமைத்துப் போற்றி செய்யும் பாமாலைகளாக விளங்குவது
'பிள்ளைத்தமிழ்'. பிள்ளைத்தமிழ் தமிழிற்கே சிறப்புரிமை தரும் தோத்திரமாகும்.
தொன்மை வாய்ந்த நயினாதீவு நாகபூஷணி அம்மனின் ஆலய வரலாறு சரித்திர
காலத்திற் கப்பாற்பட்டது. மணிமேகலை என்னும் நூலில் குறிக்கப்படும் 'மணிபல்லவம்
நயினாதீவுதான் என்பது ஆராய்ச்சியாளர் கூற்று. பராசக்தியின் அம்ஸங்களில்
ஒன்றாகிய மானஸாதேவியின் மறுபெயர்களாக 'நாகாபரணபூஷிதை', 'நாகவாஹினி'
என்னும் நாமத்தோடு சம்பந்தப்பட்ட நாமங்கள் பல தேவி பாகவதத்தில் வருகின்றன.
'நச்சுவாய் அகிமாலினி' என்று அபிராமிப்பட்டரும் 'நாகபூஷணத்தி அண்டமுண்ட
நாரணி' என்று அருணகிரிநாதரும் போற்றுகின்றனர். நாகபூஷணிக்கு ஆலயம்
ஒன்று வேறெங்கும் இருப்பதாகத் தெரியவில்லை.
நயினை நாயகியாக விளங்கும் ஸ்ரீநாகபூஷணி அம்மனின் அருள் வெள்ளத்தில்
மூழ்கித் திளைத்தவர்கள் பலகோடி. இயற்கையிலேயே பாடும் நாவுடைய அன்பர்
சிவராசசிங்கம் அவர்கள் பலதோத்திரப் பாமாலைகள் புனைந்துள்ளார்கள்.
அவை யாவும் அருட்டுணை கொண்டு பாடப்பட்டவைகளே இந்த வரிசையில்
இப்போது ஸ்ரீநாக பூஷணி அம்மன் பெயரில் பிள்ளைத்தமிழ் ஒன்று பராசக்தியின்
தூண்டுதலினால் அவர் உள்ளத்திலிருந்து வெளி வந்துள்ளது.
நமஸ்காரம், ஆசீர்வாதம், விபூதி, பராக்கிரமம், சித்தாந்தம், பிரார்த்தனை ஆகிய
ஆறு அம்ஸங்கள் தோத்திர லட்சணங்கள் என்று கூறப்படுகின்றன. இந்த அம்ஸங்கள்
அத்தனையும் ஒருங்கே அமையப்பெற்றதாக இருக்கின்றது. 'ஸ்ரீநாகபூஷணி அம்மை
பிள்ளைத்தமிழ். தோத்திர வரிசைக்கு அணியாக அமைந்திருக்கிறது.
ஸ்ரீ நாகபூஷணி அம்மனின் பூர்ணகடாட்சம் திரு. சிவராசசிங்கம் அவர்கட்குக்
கிட்டவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.
செ. விசாகப்பெருமான்
நயினாதீவு
12.6.77.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பதிப்புரை
‘என்னை நன்றாய் இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாய்த் தமிழ்ச் செயுமாறே'
என்பது திருமூலர் அருள்வாக்கு. இதற்கேற்ப தமது கவியாக்குந்
திறனை எல்லையிலாப் பெருங்கருணைப் பரம்பொருளைப் பாடுதற்கே அர்ப்பணித்த
பாவலர் பலர். அத்தகையோர் ஆக்கிய பக்தி இலக்கியம் காலத்தால் அழியாத
பெருமையுடையது.
கலியுகத்தில் அதர்மங்கள் மலிந்து காணப்படும் என்பது ஆன்றோர் கருத்து. அதர்ம
மேலீட்டைக் குறிக்கும் வகையில் தருமதேவதை ஒற்றைக் காலில் நிற்குமென்பது
புராண நூலோர் முடிபு. பழிபாவங்கள் எம்மை நெருங்கா வண்ணமும் அதர்ம
காரியங்களில் அறிந்தோ அறியாமலோ நாம் ஈடுபடாமலும் ஒதுங்கிக் கொள்ளுதற்குச்
சிறந்த உபாயம் இறைவன் புகழ்பேசும் நூல்களில் நம்மனத்தைச் செலுத்துவதே.
பன்னிரு திருமுறைகள் நமது பக்தியுணர்வைப் பெருக்குவதற்குப் பெருந்துணை
செய்கின்றன. தெய்வீக மணங் கமழும் இந்நூல்கள் பெருக்கும் பக்தி வெள்ளத்தில்
திளைத்த சான்றோர் பலர், அப்பக்திப் பெருக்கால் உந்தப்பெற்று தமது அன்பு
வெளிப்பாடாக அரியபக்தி மாலைகளைப் புனைந்து பரம்பொருளுக்கு அணிசெய்து
மகிழ்வாராயினர். இந்த வகையில் எழுந்ததே நயினை நாகபூஷணியம்மை
பிள்ளைத்தமிழ்.
பக்திச்சுவைப் பனுவல்களைப் பதிப்பித்தலை நோக்கமாக வுடையது இக்கழகம்.
எமது கன்னிப் பதிப்பாக வெளி வரும் இப்பிள்ளைத்தமிழ்ப் பாமாலையை
அன்னையின் பாத கமலங்களில் சார்த்துவதில் பெருமகிழ்வடைகிறோம்.
வே. ந. சிவராசா
சைவத் தமிழ்க் கழகம்
கொழும்பு.
----------------
நயினை நாகபூஷணியம்மன் கோயில் வரலாறு
ஆழ்கடல்சூழ் வட இலங்கையில் ஏழுதீவுகள் சூழ்ந்திருக்க எழில் பொதுளி விளங்குவது
நயினாதீவு. இத்தீவு பரப்பில் சிறியதாயினும் வரலாறு, இதிகாசம், புராணம்
இலக்கியம் ஆகியவற்றில் புகழ்ந்து பேசப்பட்ட பெருமையுடையது. மணித்தீவு,
மணிநாகதீவு, மணிபல்லவம், மணிபுரி, நாக நயினாதீவு, நாகதீவு, நாகேஸ்வரம்,
நயினா தீவு ஆகிய பல பெயர்களும் இத்தீவையே குறிப்பன என்பது வரலாற்றறிஞர்
கருத்து.
நயினாதீவுக்கு நந்தாப் புகழை அளிப்பது அங்குள்ள நாகபூஷணியம்பாள் ஆலயம்.
ஈழநாட்டைப் பொறுத்த மட்டில் எமது மதத்தைச் சார்ந்த அளவில் சக்திவழி பாட்டின்
பழமைக்கும் பெருமைக்கும் தன்னிகரிலாச் சான்றாக இவ்வாலயம் விளங்குகிறது.
எனலாம். மூர்த்தி தலம் தீர்த்தம் என்னும் மூன்றினாலும் சிறந்து விளங்குகிறது
நாகபூஷணி அம்பாள் ஆலயம். அறுபத்துநான்கு சக்தி பீடங்களுள் ஒன்றாகிய
'புவனேஸ்வரி பீடம்' அமைந்திருந்த திருத்தலம் இதுவென நம்பப்படுகிறது. காசி
விசாலாட்சி, காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி என வருவனபோன்று 'மணித்தீவு
புவனேஸ்வரி' என ஆதியில் அழைக்கப்பட்ட மூர்த்தமே தற்போது "நயினாதீவு
நாக பூஷணி' என வழங்கப்படுகிறது என்பதற்கு ஆதாரங்கள் உண்டு.
நாகபூஷணி அம்மாள் ஆலயம் தோன்றிய வரலாற்றுக்கான கர்ணபரம்பரைக்
கதையொன்றுண்டு. முன்னொரு காலத்தில் நயினாதீவில் உள்ள அம்பிகையை
நாகம் ஒன்று பூசித்து வந்தது எனவும், அதனை ஒருநாள் கருடனொன்று கொல்ல
முயன்றதெனவும், அவ்வழிச் சென்ற வணிகனாருவன் பாம்பைக் காப்பாற்றினான்
எனவும் கூறப்படுகிறது. வீடு சென்ற வணிகன் துயில்கொண்டு எழுந்த போது
வீடு நிறைய நாகரத்தினமணிகள் இருந்ததாகவும் இச்செல்வங்கொண்டு வணிகனே
இவ்வாலயத்தைக் கட்டுவித்தான் எனவும் கதை வழங்குகிறது.
வர்த்தகர்களின் பேணுகையால் வளமுற்றுத் திகழ்ந்த இக்கோயிலினை மத வெறியும்
பொருள்வேட்கையுங் கொண்ட அந்நியநாட்டினர் இடித்துத் தரைமட்ட மாக்கினர்.
இச்செயல்கண்டு மனமுடைந்த மக்கள் அம்பிகையின் உருவத்தையும் அர்ச்சனைப்
பொருட்களையும் எடுத்துச் சென்று மறைத்து வைத்தனர். அந்நியர் கோயிலை
இடித்தனரேனும் அம்பாள் தொழுகையை நிறுத்த முடியவில்லை. அடியார்
மனக்கோயிலில் வீற்றிருந்து அங்கயற்கண் அம்மை அருளாட்சி செலுத்தி வந்தாள்.
நாசகாரர்களின் ஆட்சி ஒழிய நாகம்மாள் கோவில் மீண்டும் கட்டப்பட்டது. இப்புதிய
கோயில் இராமலிங்கர் இராமச்சந்திரர் என்பவரால் 1788இல் கட்டப்பட்டதென
யாழ்ப்பாணக் கச்சேரியிலுள்ள கோயில்கள் பதிவு இடாப் பிரிவிலிருந்து தெரியவருகிறது.
அருளுடையாரின் அயராத உழைப்பினாலும் ஊக்கத்தாலும், திருவுடையாரின்
மனமுவந்த நன்கொடைகளினாலும் காலத்துக்குக் காலம் இக்கோயிலில் பல திருப்
பணிகள் நடைபெற்று வந்துள்ளன. திருக்கோயிலின் கீர்த்திக்கமைய கிழக்கு வாயிலில்
வானுறவோங்கி நிற்கிறது அழகிய ஒரு கோபுரம். தெற்கு வாயிற் கோபுர வேலைகள்
நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன,
இவ்வாலயத்தில் ஐந்து வேளை நித்திய பூசை ஒழுங்காக நடைபெறுகின்றன. சிவன்,
அம்பிகை, விநாயகர், சுப்பிரமணியர், திருமால் ஆகிய ஐந்து தெய்வங்களுக்கும் உரிய
பூசைத்தினங்கள் மாதந்தோறும் அனுட்டிக்கப்படுகின்றன. ஆண்டுதோறும்
ஆயிரக்கணக்கான அடியாரைக் கவரும் திருவிழா ஆனிமாதத்தில் பதினாறு நாட்களுக்கு
வெகு விமரிசையாகக் கொண்டாடப்பெறுகின்றது. புரட்டாதி மாதத்தில் நவராத்திரி
விழா, சங்காபிஷேகம், அம்பாயுத பூஜை ஆகியவற்றுடன் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றது.
சிவராத்திரி போன்ற விசேட தினங்களும் இங்கு முறைப்படி அனுட்டிக்கப்படுகின்றன.
இப்புனித தலத்தின் தொன்மைக்கும் மகிமைக்கும் ஏற்ற சிறந்ததொரு சித்திரத்தேர்
அம்பிகையின் திருவருளாலும் சைவ நன்மக்களின் பெருமுயற்சியாலும் ஏவிளம்பி
ஆண்டில் உருவாக்கப்பெற்றது. தேர்த் திருவிழாவன்று அம்பாள், விநாயகர், முருகன்
மூவரும் தத்தம் சித்திரத்தேரிலே பவனிவரும் அற்புதக் காட்சி கண்டு அகமுருகாத
அடியார் இல்லை.
பல்லாயிரக்கணக்கான மெய்யடியார்களது யாத்திரைத் தலமாக விளங்கும்
நயினையம்பதியில் அன்றுபோல் இன்றும் அன்னை நாகராஜேஸ்வரி அற்புதங்கள்
புரிந்த வண்ணம் இருக்கின்றாள். நெடுங்காலம் பிள்ளைப்பேறு அற்றிருந்த
தம்பதிகள் அம்பிகையின் அருளால் நன்மக்கட் பேறு வாய்க்கப்பெறுகின்றனர்,
தீராத பிணிகள் போக்கும் திருப்பதியாகவும் இத்தலம் திகழ்கிறது.
நயினையம் பதியில் எழுந்தருளியிருந்து, நாடித்தொழும் அடியார் நாடும் வரமருளும்
நாகபூஷணியம்மை, அன்று மட்டுமல்ல இன்றும் கவிவாணர் கருத்தில் நிறைந்தும்
ஆக்கமளிக்கின்றாள். வெவ்வேறு காலத்தில் பல்வேறு பாமாலைகளை ஏற்ற
அன்னை இப்போது சூட்டப்பெறும் பிள்ளைத்தமிழ்க் கவிமாலை கண்டு
பேருவகை கொண்டு பேறுகள் அளிப்பாள் என்பதில் ஐயமில்லை.
புவனேஸ்வரி அருணாசலம்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நயினை நாகபூஷணியம்மை பிள்ளைத்தமிழ்
உ
சிவமயம்
விநாயகர் துதி
ஆரணத் தனிமுதலை வாரணத் திருவதன
ஆதியைப் பாதிமதிசூ
டையனிமை யோருக்கு வெய்யகய மாமுகன்
ஆற்றுதுயர் மாற்றுகின்ற
காரணத் தாலுதவு கூரணிக் கோட்டனைக்
கருத்தினி லிருத்துமடியார்
கவலையொடு நலிபிணிகள் நவையெலாம் போக்கிடும்
களிறுதனை அஞ்சலிப்பாம்
ஏரணத் தாலறியொ ணாதசீர் நாடகனி
டப்பால் மடப்பாவையை
ஏடவிழு மலர்வனச மேடைதனி லுறைமாதர்
இருவரும் மருவி நீங்கா
நாரணற் கிளையபரி பூரணக் களிமயிலை
நாகமொடு பூகமோங்கும்
நயினைவரு நாகம்மை தன்னைத் துதித்திடும்
நற்றமிழ்க் கவிதழையவே.
இப்பாடல் பொது விநாயக வணக்கம். பின்னர் காப்புப்பருவத்தில் இடம்பெறுவது
பிள்ளைத்தமிழ் இலக்கணத்தோடு பொருந்துவது. எனவே இது வழிபடு கடவுள்
வணக்கம் என்க. யாதாயினும் ஒரு செய்யுள் நூல் புனையப் புகுவோர் முதற்கண்
மங்கலமொழி அமைத்தல் நூல்மரபாதலின் அதற்கு இணங்க இந்நூலாசிரியரும்
'ஆரணம்' என்னும் மங்கலச் சொல்லை முதற்கண் வழங்கியுள்ளார். "பொன்பூத்
திருமணி புனல் ஆரணம் கடல்' எனத் தொடருகின்றது பன்னிரு பாட்டியல்.
ஆரணம் - வேதம். - ஆரணத்தனிமுதல் - வேதமுதல்வன். வாரணம் - யானை.
வாரணத் திருவதனம் – பிரணவ வடிவம் கொண்ட திருமுகம். எனவே விநாயகர்
பிரணவ வடிவினர் என்க. கோடு – கொம்பு; அஃது இங்கு ஒற்றைக்கொம்பு. '
'அடியார் கவலையொடு நலிபிணிகள் நவையெலாம் போக்கும் மூர்த்தம்
விக்கினேஸ்வர மூர்த்தம். நவை - குற்றம். அவை காமம், வெகுளி, மயக்கம்
என்னும் முக்குற்றங்களாம். சீர் நாடகன் - பண்டரங்கம் என்னும் கூத்தினை ஆடும்
சிவன். அவனது கூத்து அண்ட வெளிக்கூத்து என்க. இடப்பால் மடப்பாவை -
உமையம்மையார். ஏடு - பூவிதழ்; வனசம் - தாமரை. வனசமேடை - பண்புத்
தொகை. வனச மேடைதனில் உறை மாதர் - திருமகளும் கலைமகளும்; இருவரும்
மருவி நீங்கா நாரணர் எனக்கூட்டுக. நாகம் - புன்னைமரம். அன்றி, பாம்புகளுமாம்;
பூகம் - கமுகு பாவையை, மயிலை, நாகம்மை தன்னைத் துதித்திடும் கவி தழைய,
முதலை ஆதியை கோட்டனை களிறுதனை அஞ்சலிப் பாம் என வினை முடிவு கொள்க.
~~~~~~~~~~~~~~~
உ
சிவமயம்
அவையடக்கம்
பொன்னா ரிதழி யுடனொக்கப்
பூமத் தணியும் பெருமானார்
பொறிக்கும் பாதச் சுவட்டொழுகு
பொற்பினாலும் இமயமலை
மன்னன் மகளாய் விளங்குகையில்
வண்ணப் பொற்பூண் அணிந்ததன்றி
வலைஞன் மகளா யுதித்திப்பி
வளைகள் தரித்த செயலாலும்
கன்னற் பாகு நேருமருட்
கவிஞர் பாடல் விரும்புமன்னை
கடையேன் படைத்த பொருளில்லாக்
கவிதை தனையும் அறுசுவையுள்
துன்னும் கசப்புச் சுவையாகத்
துய்க்கும் வகையி லேற்குமெனும்
துணிவால் புனைந்த தொடையலிதைத்
தூற்றா துலகம் போற்றிடுமே.
~~~~~~~~~~~~~
நூல்
1. காப்புப் பருவம்
திருமால்
நீங்காது வரிவண்டு ரீங்கார மிடுகின்ற
நீள்துளவ மலர்மாலையும்
நெஞ்சுருகு மடியரிசை கொஞ்சுதமிழ் மாலையும்
நிறையப் புனைந்தபின்னும்
பூங்கோதை தொடையலுக் கேங்கித் தவிக்கின்ற
புயல்வண்ண மாமாயனைப்
பொறியரவ மணைமீதில் அறிதுயில்கொள் தேவனைப்
போற்றித் துதித்துநிற்பாம்
தாங்காது கனிகள்பல தூங்குபூங் கொம்பர்கள்
தண்டனிடும் அடியார்கள்போல்
தாழ்ந்துமண் மேல்விழும் தண்ணறும் சோலைசூழ்
தடமதில் நயினைதனில்வாழ்
வாங்காத விற்சடில னீங்கா திடத்திலுறை
மரகதச் சோதிவீசும்
மயிலிளஞ் சாயல்கூர் அயில்பொரும் போர்க்கயல்
மானைப் புரக்கவென்றே.
காப்புப் பருவம் என்பது பிள்ளைத்தமிழ் பாடுவோர் திருமால் முதலாகப் பல கடவுளரை,
பிள்ளையைக் காக்குமாறு வேண்டுவது. இப்பருவம் இரண்டாம் மாதத்தோடு
தொடர்புடையது. காத்தற்கடவுள் திருமாலாதலின் முதற்கண் அவரை நற்றாயும்
செவிலியரும் வேண்டுகின்றனர் என்க. வரிவண்டு - வரிகளையுடைய வண்டு; ரீங்காரம்
இடுதல் - முரலுதல். தொடையல் - மாலை; தொடுக்கப்படுவதாதலின் அது காரணப்
பெயராயிற்று. அல் - சாரியை; பொறி. புள்ளி; அரவம் - பாம்பு; அறிதுயில் - ஞானநித்திரை.
வாங்காத-வளையாத, வில் - ஒளி,சடிலன் - சடாமுடியன்; அயில் - வேல். அடியரிசை
கொஞ்சுதமிழ்மாலை - பன்னிரு ஆழ்வார்களும் பிறரும் பாடிய பாமாலைகள்.
பூங்கோதை - ஆண்டாளாகிய சூடிக்கொடுத்த நாச்சியார். அடியார்கள் மண்ணில்
தாழ்ந்து வணங்குதலுக்குக் காரணம் அவர்தம் பக்திப் பெருக்கம். அதுபோல்
நயினையில் உள்ள சோலைக்கொம்பர்கள் தாழ்வதற்குக் காரணம் அவற்றின்கண்
உள்ள கனிகளின் மிகுதி என்க. மயிலிளம் சாயல் கூர்மான் - இல் பொருள் உவமை.
மயிலிளம் சாயல் ஈண்டு மென்மையும் அழுத்தமும் குறித்தது. அயில் பொரும் -
அயில்போல் பொரும்; பிறழ்வு: பொதுத்தன்மையாய் அமைதலின் கயல் மான் -
தயல்போலும் கண்களையுடைய மானையொத்த உமையம்மையார். அவள்
கயற்கண்ணியாகிய மீனாட்சி என்க. எனவே மதுரை மீனாட்சியே நயினையில்
எழுந்தருளியுள்ளார் என்பது ஆசிரியர் கருத்து. 1
சிவபிரான்
பிரமதே வன்சிரசு கிள்ளியத் தக்கனது
பெருவேள்வி முழுதழித்துப்
பேரெழிற் காமனைப் பொடிசெய்து கூற்றுயிர்
பிரியச் செறுத்தந்தகா
சுரனுர மழித்துச் சலந்தரன தாருயிர்
தொலைத்துப் புரங்கள்செற்றே
சுரர்களுக் கிடர்புரி கயாசுரனை மாய்த்துலகு
தொழுமட்ட வீரனாகி
கருவமுறு வோர்தமக் கிடர்நிலையு மின்னருள்
கண்ணிநிற் பார்க்கினிமையும்
காட்டுபொற் கொன்றையந் தோட்டலர்ப் பிரபுவைக்
கருதிவழி பாடுசெய்வாம்
இருவிழிகள் பொழிகருணை மழையினால் உலகுயிர்கள்
இனிதோம்பும் அமுதாம்பிகை
இமையவர்கள் பணியவரு மெழில் நயினைமருவிவாழ்
இறைவியைக் காக்கவென்றே.
கூற்று - யமன்; ஆன்மாக்கள் பிறப்பெடுத்து இறக்கும் காலங்களைக்
கூறுபடுத்துபவன் யமன் ஆதலின் அவன் கூற்றுவன் ஆயினான். கருவம் - ஆணவம்;
கண்ணிநிற்றல் - கருதி நிற்றல்; தோடு - இதழ்; இப்பாடலில் சிவனது எட்டு வீரங்கள்
குறிக்கப்பட்டுள்ளன. இவ்வீரங்கள் புரிந்தமைக்கு இடமாக ஒவ்வோர் தலம்
குறிக்கப்படும். அவை வீரட்டானங்கள் எனப்படும். அவற்றுள் இயமனைக்
கொன்ற மைக்கு கடவூர் வீரட்டமும், பிரமன் சிரசு கிள்ளியமைக்குக் கண்டியூர்
வீரட்டமூம், தக்கசங்காரத்திற்கு திருப்பறியலூரும் சலந்தராசுரனது அழிவுக்குத்
திருவிற்குடியும், முப்புர மெரித்தமைக்குத் திருவதிகையும் இடம்பெறும்.
ஏளையவை திருக்கோவலூரும் குறுக்கையுமாம். 2
விநாயகர்
பங்க யாசனன் அன்பர் தலையினில்
பண்டு தீட்டும் எழுத்தினை மாற்றிடும்
துங்க மாமுகன் பாத நறுமலர்
சூழ்ந்து தாழ்ந்து வணங்கித் துதித்தனம்
சங்கி னங்கள் தவழும் தடங்கரை
தாள லம்ப நயினையிற் கோயில்கொள்
அங்க யற்கண் அருள்மொழி கின்றநா
கம்மை தம்மை யினிது புரக்கவே.
முருகன்
வாசங் கலந்தநறு நீபம்பு னைந்த மணி
மார்பன் குறச்சிறுமி மணவாளன்
வானம் பொருந்துசுரர் ஈனம்பொ ருந்தசுர
ரானொந் திடும்பையுறு வதுதேரா
தேசொன்று கூரயிலை நீசென்று சூரனுயிர்
தீரென்று கூறிவிடு மயில்வீரன்
தேனுந்து வண்துளப வாரம் புனைந்தவொரு
சீரங்க நாதன்மரு மகனானோன்
பேசுஞ் செழுங்குடிலை யாதென்று ரைக்கவறி
யானின் றயிர்த்தவயன் சிறைமேவ
பீடொன்று நுண்பொருளை ஈசன்தனக் கருள்செய்
வேளின் பதத்துணைகள் தொழுவோமே
பாசங் கலந்துமலர் தூவும் தொழும்பரது
பாவம் படர்வினைபல் பிணிநோய்கள்
பாறும்வகை கருணை யூறும் நயினையுறை
பாகைப் புரந்திடுக இனிதென்றே.
நீபம் - கடம்பு; அஃது ஆகுபெயராய் மலரைக் குறித்தது. மணி - அழகு; ஈனம் -
இழிவு; தேரா - அறிந்து; தேசு - ஒளி; விடு மயில்வீரன் - விடுகின்ற வேலினையுடைய
வீரன்: அன்றி - மயில் வீரனுமாம். தேன் வண்டு; அன்றித் தேனுமாம். ஆரம் - மாலை;
ஒருசீரங்கன் - ஒப்பற்ற ஸ்ரீரங்கநாதன்; குடிலை - பிரணவம்; அறியான்நின்ற - முற்று
எச்சமாகியது. பிரணவப் பொருள் தெரியாது திகைத்தவன் பிரமா. அப்பொருளை
திருக்கயிலைப் பெருமான் வினவ அதனை இறைவனுக்குச் சொல்லிக் காட்டியமையால்
முருகன் சிவகுருவும் சாமிநாதனுமாயினான் என்க. பாகு - கற்கண்டு; உவமையாகு
பெயராய் அம்பாளைக் குறித்தது. 4
கலைமகள்
புவியைப் படைக்கும் மறைக் கேள்விப்
போதன் நாவா சனம்நீங்கிப்
புறம்போந் தினிமை மலிந்து சந்தம்
பொங்கித் ததும்பும் சொன்னயங்கூர்
கவிஞர் நாவி லூற்றெ டுக்கும்
கவிதை யமுதம் அருந்திவெள்ளைக்
கமலப் போதி லினி தயரும்
கலையோ திமத்தை யஞ்சலிப்பாம்
செவிகா றோடி மீண்டு வயற்
பிறழ்ந்து மருட்சிகொண்டு
திகழுந் தடங்கண் ணமுது தனைச்
சிவனார் கரத்தில் குடியேறி
நவிமான் குலத்தின் பிரதிநிதி யாக
நண்ணிப் பயின் றிருக்கும்
நயஞ்சேர் நயினைப் பதிவா ழும்
நாகம்மாளைப் புரக்க வென்றே.
போதன் - பிரமா; போது - தாமரைப்போது. நாவாசனம் - பண்புத் தொகை.
தன் நாயகராகிய பிரமாவின் நாவில் இருக்கும்வரைக்கும் வேதங்களின் சுவையன்றி
வேறு சுவைகளைக் கலைமகளால் சுவைக்க முடிவதில்லை. அச்சுவையினும் கவிஞர்
கவிச்சுவை இனிதென்பதனால் அதனை அருந்தும் பேரவாவினால் அவள் போதன்
நாவாசனம் நீங்கிப் புறம் போந்து கவிஞர் கவிதை அமுதம் அருந்த வந்தவள்
என்கிறார் ஆசிரியர். அமுதம் - நீண்டகாலம் உயிர்வாழச் செய்வது. இங்கே
கலைமகளுக்கு நீண்டவாழ்வை அளிப்பவை கவிஞர் தம் கவிதை அமுதம் என்க.
அவள் கவிதை அமுதம் அருந்தும் பீடம் வெள்ளைக்கமலமாதலின் அதில்
வீற்றிருக்கும் கலைமகளை ஓதிமம் என்றார் ஆசிரிய மரபுநோக்கி. ஓதிமம் - அன்னம்.
அன்னம் வீற்றிருப்பது தாமரை மலர்களிலென்க. செவிகாறு - செவி வரைக்கும்;
காறும் என்பதன்கண் உள்ள உம்மை தொக்கது. சேலிற் பிறழ்ந்து - செல்மீனையொத்துப்
பிறழ்ந்து; இல் – உவம உருபு; சேலிற் பிறழ்ந்து மருட்சிகொண்டு திகழும் தடங்கண் -
கயற்கண்; அக்கண்களைக் கொண்டுள்ளவள் மீனாட்சி. சிவனார் கரத்தில் எப்போதும்
இருப்பது நவ்வியாகிய சிறுமான். அது ஆன்மாவைக் குறிப்பது. ஆனால் அதனைப்
பெண்ணினத்தின் பிரதிநிதியாக ஆக்குகின்றார் ஆசிரியர். காரணம் நாகபூஷணி
மானை ஒத்து இடப்பாகத்தில் இருத்தலாம். இஃது தற்குறிப்பேற்றம். 5
-----------
2. செங்கீரைப் பருவம்
வாசமுறு பளிதநன் னீரிற் குளிப்பாட்டி
மலர்மேனி ஈரத்தினை
வண்ணமென் துகிலால் துவட்டிநற் சாந்தவகை
மட்டித் தணிந்து கந்தம்
வீசுமலர் குஞ்சியிற் சூட்டிவெண் பிறைநேரும்
வில்நுதலில் திலகமிட்டு
விண்மகளிர் சீராட்டி அணிநலம் பாராட்டி
மென்குதலை கேட்டுநிற்ப
காசுலவு வளையணிகை புவிபதித் தொருமுழங்
காலினை மடக்கிமற்றக்
கால்நிறுத் திக்கமல முகநிமிர்த் திக்கயற்
கண்களிற் களிதுளும்ப
தேசுலவு நெற்றியிற் சிறுவேர்வு முத்திடச்
செங்கீரை யாடியருளே
தெள்ளுதமிழ் நயினைவளர் கிள்ளைமொழி நாகம்மை
செங்கீரை யாடியருளே.
செங்கீரைப் பருவம் என்பது செங்கீரை ஆடும் பருவம் ஆகும். இப்பருவத்தில்
குழந்தையானது ஒருகாலை மடக்கி ஒருகாலை நீட்டி இருகைகளையும் நிலத்தில்
ஊன்றி தலை நிமிர்த்தி முகம் அசைய ஆடுதல் இடம்பெறும். இதனையே நாம்
தவழுதல் என்போம். இஃது ஐந்தாம் மாதத்தில் நிகழும்.
பளிதம் - பச்சைக் கர்ப்பூரம்; மட்டித்தல் - பூசுதல், குஞ்சி - கூந்தல். வில் -
ஒளி, நயினைவளர் பசுங்கிள்ளையாகிய நாகபூஷணிக் குழவிக்கு பளித நன்னீரிற்
குளிப்பாட்டியும் ஈரம் துவட்டியும், சாந்தவகை அணிந்தும். மலர் குஞ்சியிற் சூட்டியும்,
பிறைநுதலில் திலகமிட்டும், அணிநலம் பாராட்டியும், குதலை கேட்டும் மகிழ்ந்த
விண்மகளிராகிய செவிலியர்க்கு உள்ளம் தெவிட்டாமையால் குழந்தையைச்
செங்கீரை ஆடியருளே என வேண்டுகின்றனர் என்க. 6
---------
நெய்தடவி வாரிச் செறித்திட்ட நீலமணி
நேர்கின்ற கொண்டையாட
நிலவுமிழு கலைமதியி னொளிர்நித் திலச்சுட்டி
நெற்றியில் வயங்கியாட
வெய்யகயல் விழிசென்று போராடி மீள்செவி
விளங்குகுழை மகரமாட
வெண்சங்கு வளையுடன் பரியகம் சூடகம்
மென்மலர்க் கையிலாட
ஐயர்திரு மேனியைத் தழுவிக் குழைக்கவென்
றமைந்தமணி மார்பகத்தே
ஆணிமுத் தாரமும் அடியர்பா மாலையும்
அசைந்திசைந் தொலிசெய்தாட
செய்யமல ரடிதனிற் கிண்கிணி சிலம்பிடச்
செங்கீரை யாடியருளே
தெள்ளுதமிழ் நயினைவளர் கிள்ளைமொழி நாகம்மை
செங்கீரை யாடியருளே.
செறித்திட்ட - திணித்திட்ட; அன்றிப்பதித்தலுமாம்; பொற்றை - அழகு,
பொன்; கலைமதியின் ஒளிர் - கலைகள் நிரம்பிய சந்திரனை ஒத்து ஒளிரும்; இன் -
உவம உருபு. சுட்டி - நெற்றியில் அணியப்படுவது. பரியகம், சூடகம் என்பன கையில்
அணிவது; ஐயர் - நாயகராகிய சிவன். ஐயர் திருமேனியைத் தழுவியது கயாசுரனை
அழித்தபோதும், காஞ்சி புரத்தில் இறைவி பூசை செய்யும்போது கம்பையாறு பெருகி
வரக்கண்டு நடுங்கிய போதும் என்க. ஆணிமுத்து - முத்துக்களுட் சிறந்தது. ஆரம் -
மாலை; சிறந்த முத்துக்களால் ஆக்கப்பட்டது நாகம்மையின் மாலை என்க.
மகரக்குழை என்பது குழை மகரமாயிற்று. மகரம் - மீன், மீன்போலும் வடிவினையுடைய
குழை என்னும் காதணி என்க. 7
---------
வண்டுழுது விளையாட விண்டுமல ரிழிதேறல்
மகரந்த மோடுசிந்தி
மண்டுபுன லொழுகுவடி கால்கள்வழி மறிபட்டு
வளவயலில் மடைகள்தேங்க
அண்டையி லிருந்திடும் தண்டலை மிகுந்தாழை
யவிழ்மடல் மலர்க்கொத்தினை
அஞ்சிறக ருறுவெள்ளை நாரையென் றெண்ணிமீன்
அஞ்சிநீர் மடுவில்தூங்க
முண்டக மலர்ந்தனைய மண்டல முகத்தினிடை
முகிழ்கருணை நறவமாந்தி
முறுகிக் கதித்த பேரடியவர்கள் விழியென்ன
மொய்ம்மலரில் நறவுதூங்க
தெண்டிரையி னடுவிலுறை யண்டர்நா யகிதலைவி
செங்கீரை யாடியருளே
தெள்ளுதமிழ் நயினைவளர் கிள்ளைமொழி நாகம்மை
செங்கீரை யாடியருளே.
விண்டு - விடுபட்டு; அஃது இங்கு மலர் இதழ்கள் கட்ட விழ்ந்து விரிவடைதல்;
தேறல் - தேன். மண்டுபுனல் - மிகுதியான நீர். முண்டகம் - தாமரை, மண்டலம் - வட்டம்;
நறவம் - தேன். மாந்தி - அருந்தி; தாழை மலரின் மடல் நாரைகளின் சிறகுக்கும்,
மலர்க்கொத்து நாரைகளின் உடலுக்கும் உவமைகள் ஆயின. கரையினும் மடுவின்
நடுப்பகுதி நீர் மிகுந்திருப்பது மீன்களுக்குப் பாதுகாப்பாகின்றது. இதனால்
அங்குள்ள நீர்வளம் புலனாயிற்று. முண்டக மலர்ந்தனைய மண்டல முகம்
நாகபூஷணியின் திருமுகமென்க. 8
------
வேறு
அலையமு தக்கடல் அமளிமி சைத்துயில்
அணிதுள வத்திருமால்
அருணம லர்த்தவி சுறைபவ ளக்கொடி
அமுதொடு முற்றனன்வான்
உலகுப ரித்திடு மயிரவ தக்களி
றுடைமரு தக்கிழவன்
ஒளிரும திப்பொலி வுறுவத னச்சசி
யுடனய லுற்றனன்மா
மலர்வன சத்துறு சதுர்முக னுற்றனன்
மருவுக லைப்பெணுடன்
மறிகடல் சுற்றிடு முலகு நடத்திடு
வகையில் வர்க்கொருநாம்
அலகிடு தற்கரு வினைபுரி விப்பவள்
ஆடுக செங்கீரை
ஆர்கலி சூழ்நயி னாபுரி வாழ்மயில்
ஆடுக செங்கீரை.
அமுதக்கடல் - அமுதம் எடுக்கப்படும் கடல்; கடல் அமளி - கடலாகிய அமளி;
அமனி - படுக்கை, அருணம் - செம்மை, அருணமலர்த் தவிசுறை பவளக்
கொடியமுதம் - இலக்குமி. பரித்தல் - பாதுகாத்தல், சுமத்தலுமாம்; அயிராவதம்
என்பது அயிரவதம் எனக் குறுக்கல் விகாரம் பெற்றது. அது தேவேந்திரனுடைய
யானை. பக்கத்திற்கு இரண்டு கொம்புகளையுடையது; மருதக்கிழவன் -
மருதநிலத்துக்குரிமை பூண்ட இந்திரன்; கிழவன் - உரிமையன்; சசி தேவி -
இந்திரன் தேவி. இங்கே திருமாலும் இந்திரனும் பிரமாவும் தத்தம் தேவியருடன்
வந்து நிற்கின்றனர், நாகபூஷணியின் செங்கீரையாடலைக் கண்டு மகிழ்வதற்கென்க.
உலக இயக்கம் சக்தியின் இயக்கமாதலின் "உலகு நடத்திடும் வகையில்
அவர்க்கொரு நாம் அலகிடுதற் கருவினை புரிவிப்பவள்" எனப்பட்டது. ஆர்கலி -
சமுத்திரம். 9
------------
வேறு
தடவரை குடையென உடையவர் அளிமுரல்
தண்டேன் விண்டேபாய்
தழைமலி துளவணி மரகத வடிவினர்
தங்காய் வெங்கோபக்
கொடுவிடம் அமுதென நுகர்பவர் மருவுறு
கொம்பே செம்போதில்
குலவுறு திருமகள் கலைமகள் பணிவிடை
கொண்டோய் அண்டாதே
கடுவினை தருபிற விகளுறு துயர்துகள்
கண்டே தொண்டானோர்
கதிபெற அருள்பொழி யிமகிரி யுதவும
ருந்தே செந்தேனே
செடிதள வடர்பொழில் நயினையில் வருமயில்
செங்கோ செங்கீரை
திரைபொரு கடனடு வினில்வளர் பகவதி
செங்கோ செங்கீரை.
தடம் - விசாலம்; இமகிரி உதவு மருந்து - இமயமலை நமக்கு வழங்கிய மருந்து.
அஃது உமையாகிய நாகபூஷணி என்ப. தங்காய், கொம்பே, கொண்டோய்,
மருந்தே என்பன விளி ஏற்றன; செடி - மலர்ச் செடிகள்; தளவு - முல்லை. உடையவர்
வடிவினர் தங்காய் எனக்கூட்டுக. தடவரை - கோவர்த்தனகிரி; ஆநிரைகளைக்
காத்தற்குத் திருமால் தூக்கிய மலைக்குடையே கோவர்த்தனம் ஆகும். 10
-------
3. தாலப் பருவம்
வெள்ளிப் பனிமால் இமயமலை
வேந்தன் தேவி மங்கலஞ்சேர்
மேனை குறங்கு வறிதுறங்க
விட்டு நீங்கிக் கயிலாய
வள்ளல் தன்னை யடையுநசை
மனத்திற் கொண்டே அஞ்செழுத்தை
வாயோ தியிடத் தவயோக
மௌன விரதம் பூண்டிருந்த
கிள்ளை வண்ணத் திருமேனி
கிளரும் வெயிலால் வாடாதோ
கீத மிசைத்துத் துயில் கொள்ளக்
கெஞ்சி நின்றார் மலர்மகளிர்
வெள்ளக் கருணை பொழியமுத
விழியாய் தாலோ தாலேலோ
விதிசெல் நெறிமாற் றிடுநயினை
விமலாய் தாலோ தாலேலோ.
தாலப்பருவம் என்பது குழந்தையைத் தொட்டிலில் வளரச் செய்து உரிமை மகளிர்
நாற்புறமும் சூழநின்று தம் நாவினாற்பாடி அத்தொட்டிலை ஆட்டும் பருவம். தாலு
என்னும் வடசொல் தமிழில் தால் என நின்றது. தால் என்பது "நா" என்னும்
பொருளையுடையது. நாவசைத்துப் பாடுதலையே தால் ஆட்டுதல் என்பர்.
இப்பருவத்துப் பாடல்கள் "தாலோ தாலேலோ" என்னும் சொற்றொடரால்
முடிவடையும். இது ஏழாந் திங்களில் நிகழ்வது.
பனி - பனிக்கட்டிகள்; குளிர்மையுமாம். குறங்கு தொடை; வறிது -
வெறுமை; நசை - விருப்பு. இமயமலை அரசன் செய்தவத்தினால் குழவியுருக்கொண்டு
அவன் மனைவி மேனை வளர்க்க வளர்ந்து வந்தவர் உமையம்மையார். இதன்
பின்னர் மலயத்துவச பாண்டியன் செய்த யாகத்தில் தோன்றினார். இவ்வாறு
தோன்றி வளர்ந்த தடாதகைப் பிராட்டியாரைத் திருமணஞ் செய்தவர் சிவபெருமான்
என்னும் திருவிளையாடற் புராண வரலாறு இங்கு குறிக்கப்பட்டுள்ளது.
11
------
அருமா தவர்க்கும் அலந்தவர்க்கும்
அனமீவதுவே இல்லறத்தின்
அமைந்த சிறந்த பயனென்ப
ததனையோர்ந்து திரைகடல்போய்
இருமா நிதியம் திரட்டுகின்ற
எண்ணத்துட னாருயிர்க்கணவர்
இகந்து நீங்க மடவார்கள்
இரவோடுருத்து வெண்மதியம்
வருதல் கண்டு மிகவழுங்கி
வாய்விட் டரற்றி யிரங்கிடநா
வாய்கள் அதிகம் பயிலுகின்ற
வாய்மையதனால் எதிர்இரங்கும்
பரவை சூழும் நயினைவளர்
பரையே தாலோதாலேலோ
பணிவார் துயரம் போக்குதயா
பரியே தாலோதாலேலோ.
அலந்தோர் - துன்புறுவோர்; ஈண்டு பசியால் வருந்துவோர்; அன்னம் இடைக்குறைந்து
அனமாயது, ஓர்ந்து - சிந்தித்து. நாவாய் - கப்பல். தலைவர்களாகிய கொழுநர்கள்
இன்மையால் இராக்காலமும் வெண்மதியும் தலைவியரை வருத்துகின்றன.
அதனால் அவர்கள் அழுங்குகின்றனர். அவ்வாறு அழுங்கும்போது தலைவியர்
தம் நாவும் வாயும் தம்மையறியாமலே தலைவன் திருப்பெயரைக் கூறுவதில்
பயிற்சியடைகின்றன என்னும் பொருளையும் தர நாவாய்கள் அதிகம்
பயிலுகின்ற வாய்மை என்றார். பரவை- கடல்; பரை - மேலானவர்.
12
----
கொத்துக் கொத்தாய் மலர்ந்த பொலங்
கொன்றை மரத்தின் மீதுமிகக்
குழைத்துச் செழித்து மணிப் பசுமை
கொண்ட குருக்கத் திச்செடிபோய்த்
தொத்திப் படர்ந்து கிடக்க நெடுந்
தூரம ணக்கும் மல்லிகைமேல்
தொங்க லிட்டுச் சூழ்ந்தி ருக்கும்
தோற்றம் நோக்கும் அடியவர்க்கு
முத்து விரித்த விதான முறு
முழுமா மணித்தே ரூர்ந்துவரு
முக்கண் மூர்த்தி நின்னொ டருள்
முகிழ்த்த கோலம் அளிக்கின்ற
சித்ரப் பொழில்சூழ் நயினை வளர்
செல்வி தாலோ தாலேலோ
சிவனார் இடம் வாழ்நா கம்மைத்
தேவி தாலோ தாலேலோ.
பொலம் - பொன்; மணிப்பசுமை - அழகிய பசுமை; விதானம் - தேரின் ஓர்
உறுப்பு. அது மேற்கட்டி; சித்ரம் - சித்திரம்; சித்ரப் பொழில் - சித்திரம் போலும்
பொழில்: கொன்றை மரத்தின் மீது குருக்கத்தி படர்ந்திருக்கின்றது. அதனை
வெண்ணிறப் பூக்களையுடைய மல்லிகை போர்த்துள்ளது. இவற்றில் கொன்றை
சிவனையும், பசுமைகொண்ட குருக்கத்தி சாமளையாகிய நாகபூஷணியையும்,
மல்லிகை நாகபூஷணியின் புன்முறுவல் பூக்கும் வெண்ணிறப் பற்களையும்
நினைவுபடுத்துகின்றன ஆசிரியருக்கு. கொன்றையும் குருக்கத்தியும் இணைந்த
வடிவம் அம்மை அப்பர் வடிவக் காட்சியாகும். 13
------------
வேறு
வேதபு ராதன நூலறி வாளர்மெய்
வித்யா லங்காரர்
மேதகு பாவலர் ஞானிகள் யோகிகள்
விண்ணா ளுந்தேவர்
மாதவர் மாமுனி வோரிசை வாணர்கள்
வந்தே வண்டூதா
மாமலர் நேர்விழி யாயருள் வாய்துயர்
மாற்றாய் தேற்றாயென்
றாதர வோடுரை நீளொலி போயலை
யாழியின் மீதிலெழும்
ஆர்கலி யோடுறழ் சீர்நயினாபுரி
ஆலய மேவியமென்
தாதவிழ் தாமரை யார்சர ணாயகி
தாலோ தாலேலோ
சந்திர சேகரர் பங்குறை சாம்பவி
தாலோ தாலேலோ.
புராதனம் - பழமை; வேதபுராதன நூல் - வேதமாகிய பழைய நூல். வித்யாலங்காரர் -
வித்தையாகிய கலையை அணியாகக் கொள்ளும் நூலறி புலவர்கள். ஆதரவு -
அன்பு; ஆர்கலி - ஆரவாரம்; தாது - மகரந்தம்; தாமரை ஆர் சரண் - தாமரை
போலும் திருவடி; தாமரை பொருளாகு பெயராய் மலரைக் குறித்தது. சந்திரசேகரர் -
சந்திரனைச் சூடி யிருப்பவர்; சாம்பவி - உமையம்மையார்; விழியாய் - விளிப்
பெயர்; அருள்வாய், மாற்றாய், தேற்றாய் என்பன ஆய் விகுதி பெற்ற ஏவல்
வினைகள். மாதுமையாகிய நாகபூஷணியே கலைவாணியாதலின் அவளிடம்
அருள்பெற வேத புராதன நூலறிவாளர் தொடக்கம் இசைவாணர் ஈறாக
யாவரும் வந்துள்ளனர் என்க. மலர் - நாகபூஷணியின் விழிகளுக்கு உவமையாயது.
வண்டூதும் மலர் வண்டெச்சில் உடையது. எனவே அது உமையின்
திருவிழிகளுக்கு உவமையாகும் பெரும் பேற்றைப் பெறமுடியாதொழிந்தன.
ஆர்கலியோடு உறழ்தல் - ஆரவாரத்தோடு ஒத்திருத்தல். 14
-------
தாழை விரிந்து வெண்கொற்றத்
தண்ணார் கவிகை தாங்கிநிற்கச்
சயிலத் தென்றல் மலரிழிதேன்
தண்ணீர் தெளிக்க மடல்விரிந்த
பாளை வெண்சா மரையிரட்டப்
பழுக்காய்ச் செங்கேழ் மணிவிளக்கம்
பைங்கால் கமுகு பரித்திடப்பொற்
படிகம் அலரிச்செடி தாங்க
காளங் கருங்கோ கிலமூத
கானக் கிளிகட் டியங்கூற
களிதூங் களியா ழிசையெழுப்ப
கார்மா மயில்நாட் டியம்நிகழ்த்த
நாளும் பொழில்பூ சனையியற்றும்
நயினைப் பதியாய் தாலேலோ
நம்புமடியார் வினை படுக்கும்
நாகேஸ் வரியே தாலேலோ.
தாழை - தாழை மரங்களன்றித் தென்னைகளுமாம். கவிகை - குடை; சயிலம் - மலை;
சயிலத் தென்றல் - பொதிய மலையினின்றும் எழுந்துவரும் காற்று. தென்றல் -
தெற்கிலிருந்து வருவது. பழுக்காய் - பாக்கு; கேழ் - நிறம்; விளக்கம் - தீபங்கள்;
பரித்தல் - தாங்குதல். காளம் - எக்காள வாத்தியங்கள்; குடைதாங்குதல்,
சாமரையிரட்டுதல், விளக்குகள் ஏற்றுதல், படிகமாகிய காளாஞ்சி ஏந்துதல்,
வாத்தியங்கள் இசைக்கப்படுதல், கட்டியங் கூறுதல், யாழிசைத்தல், நடனமாடுதல்
என்பன தேவ உபசாரங்கள் என்க. அஃறிணைப் பொருள்களே பூசனை
நிகழ்த்துகின்றன என்பது தற்குறிப் பேற்றம். நாளும் பொழில் பூசனை நடத்துதல் -
நித்திய பூசை ஆகும். எனவே, நைமித்திய பூசனையின் சிறப்புச் சொல்லும்
தரத்ததன்று. 15
------
4. சப்பாணிப் பருவம்
எற்றியலை சுற்றிவளை வுற்றகில முற்றுமுண்
டேப்பமிடு மூழிநாளோ
எனவுல கிருந்திடு முயிர்த்தொகை யயிர்த்துநெஞ்
சேங்கியல் மந்தழுங்க
பற்றொளி படர்ந்திலகு பனிமால் நெடுங்கயிலை
பழமறைகள் முழுதுமறியாப்
பாதிமதி வேணியிறை நாலுவகை யேழ்பிறப்
பாமுயிர்த் தொகைகளின்பம்
பெற்றிட வருட்பொலிவொ டுற்றிடும் காலையில்
பிறங்குபுவ னங்களெல்லாம்
பேரிருள் கவிந்துமூ டிப்போர்த் திடும்வகை
பிரான்விழிகள் பொத்திமுன்னே
சற்றுவிளை யாட்டயர்த ளிர்க்கையொடு நாகம்மை
சப்பாணிகொட்டியருளே
சங்கின முழங்குபழ னங்களுறு நயினைமயில்
சப்பாணிகொட்டியருளே.
சப்பாணிப் பருவம் என்பது குழந்தை இருகையும் ஒருங்கு சேர்த்துக் கொட்டும்
பருவம். பாணி - கை; சப்பாணி கொட்டியருன்க - 'சப்' என்னும் ஒலி வருமாறு
கைகளைக் கொட்டியருள்க.
அகிலம் - உலகம்; ஊழிநாள் - பிரளயநாள்; அயிர்த்தல் - சோருதல்;
அழுங்கல் - மிகவருத்துதல்; அன்றி வாய்விட்டு அழுதலுமாம்; நாலுவகைத் தோற்றம் -
கருப்பை, முட்டை, நிலம், வியர்வை என்பன. ஏழ் பிறப்புகள் - தேவர், மக்கள்,
நரகர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர் வாழ்வன. பிறங்கு புவனம் - விளங்குகின்ற
உலகங்கள்; முன்னே - இடமுன்; பிராட்டியார், கயிலை இறைவரது திருக்கண்களைப்
பொத்திய பொழுது அவரது பத்து விரல்களினின்றும் வியர்வைகள் துளித்து
ஆறாகப் பெருகியோடி உலகை அழிக்க வந்தன. அதனையே உயிர்த்தொகை
அழுங்கப்பிரான் விழிகள் பொத்தி விளையாட்டயர் நாகம்மை என்றார்.
ஊழிநாளோ என உயிர்த்தொகை அயிர்த்து ஏங்கி அலமந்து அழு அழுங்க,
வேணியிறை பொலிவொடுற்றிடும் வேளையில் புவனங்கள் எல்லாம்
போர்த்திடும்வகை விழிகள் பொத்தி முன்னே விளையாட்டயர் நாகம்மை
சப்பாணி கொட்டியருள் என வினைமுடிபு கொள்க. 16
---------
முத்தமிழ் வளர்த்தமது ரைப்பதி யிடத்தளிகள்
முரல்வேப் பலர்த்தாருடன்
முத்தார முறழ்மார்பு மலையப் பொருப்பனது
முன்னைத்த வத்தினாலே
தத்தைமொழி பயில்குழவி யாயவத ரித்துத்
தடாதகைப் பேர்தரித்துச்
சந்த்ரவட் டக்குடைக் கீழரசு செய்திடும்
தலைமைதாங் கித்தாதவிழ்
கொத்துமலி கொன்றைப் பிரானைநின் கொழுநராய்க்
கொண்டிடு குறிப்பினிற்போர்க்
கோலம்பு னைந்துசௌந் தரமாற னாய்வந்த
குழகருக் கெதிராகவிற்
சக்தியொடு கோட்டிச் சரந்தொட்ட கையினால்
சப்பாணி கொட்டியருளே
சங்கினமு ழங்குபழ னங்களுறு நயினைமயில்
சப்பாணி கொட்டியருளே.
வேப்பலர்தார் - வேப்பமாலை; வேம்பு பொருளாகுபெயராய் மலரைக்
குறித்தது. உறழ்தல் - செறிதல். மலையப் பொருப்பன் - பொதிய மலைக்குத் தலைவன்.
அவன் இங்கே மலயத்துவச பாண்டியன். தத்தை - கிளி. சத்ரவட்டக்குடை- மதிக்குடை,
குழகர் - இளமையானவர்: அன்றி அழகருமாம்; மதிக்குடை தண்ணளி பரப்புவது.
அஃதொப்பவே தடாதகைப் பிராட்டியாரும் தண்ணளியாகிய கருணையினால்
உலகாண்டவர் என்க. தத்தை பயில்சொல் - கிளிகள் கேட்டுப் பழகும் இனியசொல்;
தடாதகைப் பிராட்டியார், செளந்தரமாறனாய் வந்த சிவபிரானைத் திருமணம்
செய்த வரலாற்றைத் திருவிளையாடற்புராணத்திற் காண்க. 17
---------
விட்டொளிவி ளங்குமர கதசோதி வடிவெலாம்
மெய்ம்மயிர் பொடிப்புக்கொள
விற்பிறை நுதற்கணிரு பக்கமும் சிறுவேர்வு
மென்திவலை பூத்தரும்ப
மட்டுவிரி குழல்மலர் கிடந்துநற வுண்டயரு
வண்டினம் எழுந்தார்த்திட
மலரடியி னூபுரம் கிண்கிணி புலம்பியிட
மார்பிலுறு மாலைபுரள
கட்டுக் கடங்காது பிரவகித் தார்ப்போடு
கம்பைநதி பம்பிவருகை
கண்டுநெஞ் சம்வெருக் கொண்டுகாஞ் சிப்பதிக்
கம்பனார் திருமேனியைச்
சட்டென எடுத்தணைத் திட்டவிரு கைகளால்
சப்பாணி கொட்டியருளே
சங்கின முழங்குபழ னங்களுறு நயினைமயில்
சப்பாணி கொட்டியருளே.
மரகதசோதி - மரகதமணியினின்றெழும் பிரபை. திவலை - சிதறும் நீர்த்துளி. மட்டு -
தேன். நூபுரம், கிண்கிணி என்பன காலணிவகைகள். பிரவகித்து - பெருகி; பிரவாகித்து
என்பது பிரவகித்து எனக் குறைந்தது. பம்பி - நெருங்கி; வெருக் கொண்டு - பயந்து,
கம்பனார் - ஏகம்பர்.
காஞ்சிப்பதியில் சிவலிங்கப்பூசையில் மனமொன்றி நிற்கின்றார் காமாட்சியம்மையார்.
அப்போது கம்பைநதி பெருகி வருவது கண்டு அம்மையார் அஞ்சித் தமது
தொழுநராகிய ஏகம்பரைக் கட்டித்தழுவினார் என்பது காஞ்சிப்புராண வரலாறு.
மெய்ம்மயிர் பொடித்தல், சிறுவேர்வை அரும்புதல் என்பன அச்சக்குறிகள்.
அம்மையார் கம்பரைத் தழுவுதல் சக்தி சிவத்தோடு ஒன்றி நிற்கும் நிலை.
18
-------------
அரிபிரம ரிந்திரன் முதலாய தேவர்முனம்
அவுணபதி சூரபன்மன்
ஆற்றிடும் பேரிடர்க் காற்றாது கயிலைவாழ்
அண்ணல்துயர் தீர்த்தருளெனப்
பரிவுகொடு நுதல்விழியில் அக்கினிப் பொறியாறு
பண்ணவன் தோற்றுவித்துப்
பவனனின் பாலளித் திடவெம்மை யாற்றாது
படர்கங்கை தன்னிலுய்க்கச்
சரவணப் பொய்கையினி லவைகங்கை வைத்திடத்
தழைத்திடும் மதலையாறாய்த்
தவழ்தல்கண் டாதுரத் தொடுவாரி யன்பொழுகு
சண்முகச் சீருருதிகழ்
தருமாற ணைத்திட்ட திருமாமலர்க் கைகொடு
சப்பாணி கொட்டியருளே
சங்கினமு ழங்குபழ னங்களுறு நயினைமயில்
சப்பாணி கொட்டியருளே.
அரி - திருமால்; அண்ணல் - பெருமையிற் சிறந்தவன். கயிலைவாழ் அண்ணல் -
சிவன்; பரிவு - இரக்கம், பண்ணவன் - கடவுள்; பவனன் - வாயுதேவன். ஆதுரம் -
அன்பு; சண்முகம் - ஆறுமுகம். இங்கு முருகனின் திருவவதாரம் சொல்லப் பட்டது.
19
-----------
வேறு
தமிழ்வளர் மதுரையில் விழியுறழ்
துவசமு யர்த்தேமா
சயமொடு மரசுசெய் துயர்புக
ழுற்ற தமிழ்ப்பாவாய்
அமிழ்தினு மினியசொல் மலர்கொடு
கட்டுமி சைப்பாடல்
அணிகொடு தொழுதிடு மடியவ
ருளமடு விற்பூவாய்க்
குமிழ்விடு மரகத மணிவடி
வத்தும யிற்றோகாய்
குவலய முயவற முழுதும்வ
ளர்த்தவ ருட்தாயே
இமையவர் பரசுற வளர்மயில்
கொட்டுக சப்பாணி
இரைதிரை நயினையில் வருபரை
கொட்டுக சப்பாணி
மாசயம் - பெருவெற்றி; அது முன்னாளில் திருக்கயிலை இறைவரால் தடாதகைப்
பிராட்டியாருக்கு வழங்கப்பட்ட வரத்தால் இடைத்தது. மரகதமணி - பச்சைமணி;
அஃது ஈண்டு நாகபூஷணியின் திருமேனி வண்ணத்தைக் குறித்தது. குவலயம்
உய - உலகம் உய்வடைய; அறம் - தருமம். அது முப்பத்திரண்டென்க. காஞ்சிபுரக்
காமாட்சி இருநாழி நெற்கொண்டு முப்பத்திரண்டறங்களைச் செய்தனர்
என்பது காஞ்சிப்புராணச் செய்தி. இதனை "இருநாழி நெற்கொண்டு
முப்பத்திரண்டறமும் எங்குமுட் டாதளக்கும் இறைவி" என்பர் பகழிக்கூத்தர்.
பரசுற - துதிக்க. 20
--------------
5. முத்தப் பருவம்
வடித்த செழுந்தேன் நறும்பாகு
வருக்கை கதலிமா வென்னும்
வளமுக் கனிகள் இவைசேர்த்து
மட்டித்தெ டுத்த அமுதமெனப்
படிக்கத் படிக்கத் தெவிட்டாது
பயில்வார் நெஞ்சில் பேருவகை
பரப்பும் சங்கத் தமிழினிமை
பழுத்த பிள்ளைத் தமிழ்மாலை
தொடுத்துக் குமர குருபரனாம்
தோலா நாவிற் பெருங்கவிஞன்
சூட்டமகிழ்ந்து முல்லை மொக்குத்
தொடைபோல் மூரல் எழுங்குமுதம்
அடுக்கும் பவளச் செங்கனிவா
யதனால் முத்தந் தருகவே
அலைமுத் தெறியும் நயினைவளர்
அமுதே முத்தந் தருகவே.
முத்தப் பருவம் என்பது குழந்தையை முத்தம் தருமாறு நற்றாயும் செவிலியரும் பிறரும்
வேண்டுதல். இது பதினோராந் திங்களில் இடம்பெறும் என்பர்.
பாகு - சர்க்கரை; வருக்கை - பலா; மட்டித்தல் - பிசைதல்; தோலா - தோற்காத; தேன்,
சர்க்கரை, முக்கனிகள் சேர்ந்த சுவையாகப் பொலிவது சங்கத் தமிழ். இது சுருதியே
முது தமிழ் கிழவியாம் ஒளவையாரும் 'பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன். நீ எனக்குச் சங்கத் தமிழ் மூன்றுந்தா' என
வேண்டினார் போலும் விநாயகரை; இத்தகைய சங்கத் தமிழ் இனிமை பழுத்துச்
சுவைப்பன. குமரகுருபரன் சாத்திய மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழும் பிறவுமென்க.
முல்லை மொக்கு, குமுதம், பவளம் என்பன இணைந்து வருதல் அமுதமென்க.
21
--------------------
இமய வரசன் மகளாகி
இருக்கும் பருவத் திறையைநினைந்
தியற்றுந் தவத்தி லுணர்வொன்றி
ஏந்தல் பேரை நெஞ்சுருகிச்
சமயா தீதக் கங்கையணி
சடையாய் கொன்றை மலர்த்தாராய்
சந்த்ர சூடா மணியரசே
தவத்தின் பேறே தனிமுதலே
இமையா முக்கட் பரம்பொருளே
என்று பலவா றிசைப்பதயல்
இருந்து மடுத்து மீண்டவற்றை
இயம்பும் கிளிக்கு மகிழ்ச்சியினால்
உமையே முத்த மளித்தகனி
யுகுவாய் முத்தந் தருகவே
உரகம் பரவும் நயினைதனில்
உறைவாய் முத்தந் தருகவே.
இமயவரசன் - இமய மலைக்கு அரசன்; ஏந்தல் - பெருமையிற் சிறந்தவன். ஈண்டு
அது சிவனைக் குறித்தது. அதீதம் - கடந்த நிலை; உரகம் - பாம்பு. சடையாய், தாராய்,
அரசே, பேறே, முதலே, பொருளே என்பன விளிப் பெயர்கள். மடுத்து - உண்டு;
உமையே - உமையம்மையே, அன்றி பிராட்டியாகிய உம்மையே முத்தமாகக்
கொடுத்த என்றும் பொருள்கொள்க. கனி - கொவ்வைக் கனி. 22
----------------
தாதை கரத்தில் நாரதர்முன்
தந்த நறுமாங் கனியதனைத்
தனக்கே கொள்ள நினைந்துசிவன்
சாற்றும் சபதந் தனிற்சயிக்கச்
சோதி மயில்மீ திவர்ந்துலகைச்
சுற்றி வருமுன் வேழமுகன்
சுலப மாக வத்தனைமுற்
சூழ்ந்து கனியைக் கரங்கொள்ள
மோதிக் கவலை யுளம்வருத்த
முனிவு கொண்டு கண்பிசைந்து
முருகன் அழுதல் கண்டணைத்து
முத்தங் கொடுத்த கனிவாயால்
ஆதிமூலப் பரம் பொருளே
அன்னாய் முத்தம் தருகவே
அலைகள் விளைக்கும் நயினைவளர்
அம்மா முத்தம் தருகவே.
தாதை - தந்தையாகிய சிவன்; அத்தன் - தந்தை. கடவுளுமாம். பரம்பொருள் -
மேலான பொருள்; ஆதிமூலப் பரம் பொருள் - ஈண்டு ஆதிபராசக்தி என்க.
இப்பாடலில் பழநித் தல வரலாறு கூறப்பட்டது. 23
---------------
வேறு
கலைமணக்கும் புலவருக்கின்
னருள்சுரக்கும் கவுரியே
கவுணியர்க்கன் றமுதருத்தும்
கயிலையிற் பைங்குதலையே
கொலையரக்கன் மகிடனைக்கொன்
றுலகளிக்குங் குமரியே
குவலயத்தண் ணிதயமொக்கும்
குளிர்வயற் கம்பமதிலே
சிலையினைத் தண்குடையெனக்கொண்
டிடுமரிக்கும் மறையினாற்
சிரசனுக்கும் நிலமளிக்கும்
நெறிபுகட்டும் தலைவியே
அலைவளைக்கும் நயினையிற்பைங்
கிளியொர் முத்தந்தருகவே
அதிரசச்செங் கனிநிகர்க்கும்
அதரமுத்தந் தருகவே.
கவுணியர் - சம்பந்தப்பிள்ளை; குவலயம் - பூமி. இதயம் - இருதயம். இதயமொக்கும் -
இதயமாக ஒன்றியிருக்கும். கம்பம் - ஏகம்பம்; அது காஞ்சிபுரம். சிலை - கல்,
ஈண்டு கோவர்த்தனகிரி; அது பசுக்களைக் காப்பதற்கு குடையாயிற்று. அரி -
திருமால், மறையின் நால் சிரசன் - வேதம்வல்ல நான்கு சிரசுகளையுடைய
பிரமதேவன். நிலம் அளித்தல் - புவியைப் படைத்துக் காத்தல். சிரசனுக்கும்
புகட்டும் தலைவியே எனக்கூட்டுக. அலை - கடலலை; அதிரசம் - மிக்க இனிமை.
புலவர்க்கு அருள் சுரக்கும் கலைவாணியும் சம்பந்தப் பிள்ளையார்க்கு
ஞானப்பால் கொடுத்த திருநிலை நாயகியும், மகிடனைக் கொன்று உலகு
காத்த கொற்றவையும், அரி அயன் என்னும் இருவருக்கும் நெறிபுகட்டும்
காமாட்சியுமாகி நிற்பவள் நாகபூஷணி என்க. 24
-------------
இருமலர்ச்செஞ் சரணினைத் தஞ்
சிரசினிற் கொண் டொழுகுவார்
இனிநமக்கென் குறைநிலத் தென்
றுவகையுட் கொண் டுருகுவார்
கருவினிற்சென் றுருவெடுக் கும்
கவலை தொற்றும் செயலையாம்
கடிதினிற்செய் திடமுடுக் கும்
மனமயக்கம் களை யெனா
இருபுறத்தும் அடியரித் தன்
மையிலிரக்கும் தொனி யறா
இரவகற்றும் பணில முத்தம்
இடநெருக்கும் நயினை வாழ்
அருள் சுரக்கும் இருகயற்கண்
அழகி முத்தந் தருகவே
அதிரசச் செங்கனி நிகர்க்கும்
அதர முத்தந் தருகவே.
செஞ்சரண் - கிவந்தபாதங்கள்; இரவு - இருள்; பணிலம் - சங்கு; ஒழுகுவாரும்
உருகுவாரும் தொழுவாரும் இத்தன்மையில் இரக்கும் தொனியறா நயினை என்க.
உருகுவார் உவகை கொள்ளக்காரணம் நாகபூஷணியின் திருவருள் தமக்குவரும்
இடையூறுகளையும் பிறவித் துன்பங்களையும் போக்கும் என்னும் நம்பிக்கை
என்க. மனமயக்கம் - உலக இன்பங்கள் நிலையானவை என்று எண்ணும் மயக்கமாம்.
களை -ஆய்விகுதி கெட்ட ஏவல்வினை. ஒழுகுவார் உருவார், தொழுவார் என்பது
அர் விகுதி பெற்றது. பணிலமுத்தம் இடம் நெருக்குதல் என்பது மக்களும்
பிறவுயிர்களும் நடமாட முடியாதவகையில் இடந்தோறும் முத்துக்கள்
செறிந்திருத்தல் என்க. 25
----------------
6. வருகைப் பருவம்
சேலுமயி லும்பின்ன டையும்
திறல்கொண் டெழுந்து செவியளவும்
சென்று மீண்டு சிவன்கழுத்தில்
திகழுங் கொடிய கருநீல
ஆலுமயி லும்விண்ண முதும்
அமைந்த அழகு விழிபொழியும்
அருளால் ஆன்மப்பயிர் வளர்க்கும்
அமுதக்கொடியே வருக ஒளிர்
வேலுமயி லுமுடை யவனை
விண்ணோர்க் காகப் பயந் தளித்த
விமலாய் வருக வேதநெறி
வித்தே வருக அடியேங்கள்
மாலுமெயி லும்பொடி படுத்த
வள்ளல் வாழ்வே வருகவே
வளமார் நயினைப்பதி யமர்ந்த
மயிலே வருக வருகவே.
வருகைப் பருவம் என்பது குழந்தை சிறு நடை எய்தும் வயதில் தாய் தந்தையர்
இருகரம் நீட்டி வருக என அழைத்தலைத் குறிப்பதாகும். இது பன்னிரண்டாந்
திங்களிலோ பதின்மூன்றாந் திங்களிலோ நிகழ்வது.
சேல் - கயல்மீன்; அயில் - வேல்; ஆல் - நஞ்சு, அம்முச்சாரியை பெறாது நின்றது.
அயிலும் விண் அமுது - உண்ணுகின்ற தேவாமிர்தம்; நாகபூஷணியின் திருவிழிகள்
சிவனை வருத்துதலால் நஞ்சமும் உயிர்களைக் காப்பதால் அமுதும் ஆயின.
ஆன்மப் பயிர் - பண்புத்தொகை; ஆன்மாவாகிய பயிர் என்க. நாகபூஷணியை
அமுதக்கொடி என்றார் ஆன்மப் பயிர்வளர்த்தல் கருதி. அமுதம் - நெடுநாள்
உயிரோடு வாழச் செய்வது. அது தேவருணவு.
பயத்தல் - மகப்பேறு; விமலாய் - மலபந்தம் நீங்கியவளே. விமலம் - அழுக்கின்மை;
மால் - மயக்கம்; எயில் - மதில். இங்கு சினை ஆகுபெயராய் முப்புரங்களைக் குறித்தது.
எங்கள் உலக மயக்கம் அழித்து வீட்டின்பம் வழங்குவதாலும், முப்புரங்களை
அழித்துத் தேவர் துயர் துடைத்தமையாலும் சிவன் பெருங்கருணைக் கொடையாளி
என்பது தோன்ற வள்ளல் என்றார் ஆசிரியர். இந்த நிலையில் உமையம்மையாரும்
தேவர் துயர்போக்க மயில் உடையானை உலகுக்கு அளித்ததால் அவரும்
கொழுநராகிய சிவனது அடிச்சுவட்டிற் செல்பவர் என்பது பெறப்பட்டது.
26
--------------
கைதைநெடு வழிபடரு மடியவர்க் குச்சோறு
கையினில் தாங்கி நீழல்
காட்டியா தரவுசெய் காருண்ய நெய்தலங்
கானல்சேர் நயினை தனிலே
உய்திபெற வேண்டுமெனில் வந்துகை தொழுகவென
ஓயாது மறுகு தோறும்
உலவுவெண் பணிலங்க ளார்ப்பரித் தோலிடும்
ஊருளார் புண்ணி யங்கள்
செய்திறச் செம்மையால் எங்களுக் கெட்டாத
திருவரு ளிவர்க்கு வாய்த்த
தென்றுவிண் ணாடர்மன மங்கலாய்த் திடுமாறு
திகழ்தலத் துறை தேவியே
தைதையென ஒலிமருவு கிண்கிணி புலம்பிடத்
தாள்பெயர்த் தேவரு கவே
சதுர்மறையு மெயிலும்வளை நயினைவரு மொருசெல்வி
தாள்பெயர்த் தேவரு கவே.
கைதை - தாழை; வழிபடருதல் - வழிச்செல்லுதல்: சோறு - தாழையின் மகரந்தம்;
அன்றி அன்னமுமாம். கானல் - உப்பங்கழிகள்; மறுகு - வீதி; ஓலிடுதல் - ஒலித்தல்;
நயினையில் உள்ள அஃறிணைப் பொருள்களான தாழைகளும் வழிநடந்து
களைத்து வருவோருக்கு உண்டியும் நிழலும் வழங்குவதால் அங்குள்ளார் காருண்யச்
செயல் சொல்லுந் தரத்ததன்று என்கிறார் ஆசிரியர். நயினையில் உள்ளார் புண்ணியக்
கருமங்கள்
ஆற்றுவதற்குத் தேவி எழுந்தருளியிருக்கும் தலப்பெருமை காரணம் என்க. இச் சிறப்புத்
தேவர்க்கின்மையால் அவர் பெரிதும் அங்கலாய்க்கின்றனர் என்க.
தைதை - ஒலிக்குறிப்பு; நயினையின் சிறப்புக்கள் இரண்டு. அவை மதிலும், சதுர்மறையும்
வளைந்திருத்தலாம். சதுர்மறை வளைந்திருத்தலால் அங்கு எப்போதும் வேதமுழக்கம்
பெரிதென்க. 27
------------
போற்றும் உண்மைத் தொழும்பருளப்
போதில் உறையும் மடவனமே
பொய்யில் புலவர் கவிமழையால்
புளகித் தாடும் இளமயிலே
ஆற்றைப் பிறையைக் கொன்றையினை
அணியும் பெருமான் இடப்பாகம்
அகலாப் பச்சைப் பசுமேனி
அழகு மிளிரும் ஆரமுதே
சேற்றில் புதையும் மதகரிபோல்
தீய ஆசைக் கடலிடையே
சிக்கி உய்யும் நெறியின்றித்
திணறும் அடியேன் மனமயக்கம்
மாற்றும் இமய மலைபயந்த
மருந்தே வருக வயல்பொழில்சேர்
வளமார் நயினைப்பதி அமரும்
வாழ்வே வருக வருகவே.
தொழும்பர்- தொண்டர்; மட அன்னம் - இளமையான அன்னம்; நாகபூஷணியை
அன்னம் எனக்கூறியமையால் அவள் வீற்றிருக்கும் பீடம், தொழும்பர் உளப்போது
எனப் பட்டது, புலவர் - அறிவு நிரம்பியவர்கள்; அதனால் அவர்தம் கவிகள்
மழையாயின. மழைகண்டு மகிழ்வன மயில்கள்; இங்கே கவிமழை கண்டு
மகிழும் மயில் நாகபூஷணி என்க. பெருமான் இடப்பாகம் அகலாப் பச்சைப்
பசுமேனியள் - உமையம்மையார். இஃது அர்த்தநாரீச்சுர வடிவமென்க. அடியேன்
மனமயக்கத்துக்கு மருந்து இமயமலை பயந்த மருந்தென்க. மலைமருந்து
மாண்புடையது. அது நாகபூஷணி என்கிறார் ஆசிரியர். 28
-------------
கருவிற் புகுதா வகையெனது
கருத்திற் புகுந்துள் ளொளிபெருக்கிக்
கதிபெற் றுய்யும் நெறிகாட்டும்
கதிரே வருக கயிலைமலை
மருவு மொருத்தல் நிதம்சுவைக்க
வளருங் கரும்பே வருகசதுர்
மறைக்கற் பகத்தில் அலர்ஞான
மலரே வருக மலர்மகளிர்
இருவர் தொழும்பு செயவிளங்கும்
இறைவீ வருக இன்புலவோர்
இயற்றுஞ் செஞ்சொற் கவிமாலை
இறைக்குஞ் செழுந்தே னுடன்பயிலும்
மருவே வருக இமயவரை
மானே வருக வருகவே
மறிக்குந் திரைசூழ் நயினைவ்ளர்
மாதே வருக வருகவே.
கரு - பிறப்பு: புகுதாவகை - புகாமல்; உள் ஒளி - அகவொளி, அது ஞான ஒளி என்க.
ஒருத்தல் - யானை, மரு - நறு மணம்; அஞ்ஞான இருள் போக்கி ஒளிபெறச்
செய்பவள் அம்பாள் ஆதலின் அவளைக் கதிர் என்றார். கதிர் - கிரணங்களையுடையது;
கரும்பைச் சுவைத்துண்பது யானை. எனவே கயிலை மலை இறைவரை
ஒருத்தல் என்றும் தேவியைக் கரும்பென்றும் உவமையாற் கூறியுள்ளார்
ஆசிரியர். சதுர்மறைகள் கற்பகதரு; நாகபூஷணி அதில் பூக்கும் மலர் என்க. மலர்
மாலையில் தேன் இருந்தும் நறுமணம் இல்லையேல் அதற்குச் சிறப்பில்லை.
அக்குறை போக்கி, கவிஞர் கவிமாலையில் நறு மணமாகி நிற்பவர் நாகபூஷணியாதலின்
அவரை 'செழுந்தேனுடன் பயிலும் மரு' என்றார். மறிக்கும் திரை - நாவாய்களையும்
பிறவற்றையும் மறிக்கின்ற திரை என்க. 29
--------------
வெள்ளை எகினம் நடைகற்பான்
விரும்பிப் பின்னே வரமயில்கள்
மென்சா யலினை வேட்டுவர
மிகுபே ராசை யுடன்துவர்வாய்க்
கிள்ளை நின்றன் கண்டுமொழி
கேட்டுக் கிறியுற் றருகுவர
கெண்டை விழியின் மருட்சியினை
கிஞ்சித் தேனும் பெறுவமெனத்
துள்ளிப் பிணைமா னினம்தொடரத்
தொண்டைக் கனிவாய்க் குரலிசையிற்
சொக்கிக் கருங்கோ கிலம் படர
சோரா திமைகள் இருவிழியால்
அள்ளிப் பருகத் தெவிட்டாத
அழகின் உருவே வருகவே
அன்பர் உளம்போல் நயினையில்வாழ்
அரசே வருக வருகவே.
எகினம் - அன்னப்புள்; வேட்டுவருதல் - விரும்பிவருதல்; துவர்வாய்-பவளம் போலும்
வாய். கண்டு - கற்கண்டு; முதற் குறையாயிற்று. கிறி - மயக்கம்; கோகிலம் -
குயில்; தொண்டை - கொவ்வை; தேவியின் நடை, சாயல், மொழி. விழி, குரலிசை
என்பவற்றைத் தாமும் பெறவேண்டும் என்னும் பெருவிருப்பால் அன்னம், மயில்,
கிளியினம், பெண்மான்கள், குயில்கள் என்பன நயினைப்பதிக்குவந்து
தேவியைத் தொடர்கின்றன என்பது ஆசிரியர் தற்குறிப் பேற்றம். 30
--------------
7. அம்புலிப் பருவம்
வையகந் தன்னைப் புரந்திடுத லால்கலைகொள்
மாட்சியால் மலையில் வரலால்
மாலைய னதலால் மீனாட்சி யுடைமையால்
வாய்த்தகற் புரமருவலால்
ஐயநீ அம்பிகையை ஒத்திடு திறத்தினால்
ஆதுரத் தோடழைத்தாள்
அளவுக்கு விஞ்சிவிலை வைக்காமல் விரைவாக
அன்னையுட னாடவந்தால்
துய்யவடியார் தமது மனமாசு போக்கிடும்
தோகைக்கு நின்களங்கத்
தூசைத் துடைத்திடுதல் எளிதாகு மாதலால்
துயர்கெடுத் தாண்டருளுவாள்
வெய்யிலெறி பசுமணித் திருமேனி யம்மையொடு
வெண்மதிய மாடவாவே
மின்னிலங் கும்நயினை மன்னுநா கம்மையொடு
வெண்மதிய மாடவாவே.
நீலவானத்தில் உள்ள தண்ணிலவைக் குழந்தையுடன் விளையாடவரும்படி செவிலியரும்
பிறரும் அழைக்கின்ற பருவம் அம்புலிப்பருவம் ஆகும். இது பதினைந்தாம் திங்களில்
நிகழ்வது. பதினெட்டாந்திங்களில் நிகழ்வதாகவும் கூறுவர். இதில் இளமதியை
அழைக்கும்போது சாமம் பேதம் தானம் தண்டம் என்னும் நான்கு உபாயங்களையும்
பயன்படுத்தி அழைத்தல் பிள்ளைத்தமிழ் மரபாகும்.
வையகம் - பூமி, உரோகிணிநாள்; புரந்திடுதல் - காத்தல்; நாகபூஷணி பூமியைக்
காப்பதுபோல் சந்திரனும் உலகிற்குத் தண்ணிலவுதந்து உலகைக் காக்கின்றான்.
அன்றி, தக்கன் மகளிர் இருபத்தேழுபேர்களுள் உரோகிணியிடத்தில் சந்திரனுக்கு
விருப்பம் மிக்கிருந்ததால் அவன் உரோகிணியைக் காத்தனன் என்பது புராண
வரலாறு. கலை - சந்திரனுக்காகும்போது அவனது பதினாறு கலைகளையும்
குறிக்கும். நாகபூஷணிக்காகும்போது கலாபேதங்களாகும். அன்றி, மேகலை என்னும்
அணி பொருந்தியிருத்தலுமாம். மலையில்வருதல் - இமயமலையில் உமையம்மையார்
தோன்றி வருதல்; சந்திரன் மலைகளுக்கும் மேலாக வருதல்; பூஷணிக்கு மால் ஐயன்
ஆதல் - திருமால் தமையனாகி வருதல்; சந்திரன் - மாலைக்காலத்துக்கு உரியவனாகி
வருதல்; அன்றி மனமயக்கம் உடையவனாகி வருதலுமாம்; சந்திரனுக்கு மீனாட்சி
உடைமையாதல், மீன் - நட்சத்திரங்களை, ஆட்சி - ஆளுதல்; இதனால் அவன்
உடுபதியாயினன். நாகபூஷணிக்கு மீன் ஆட்சி எனப்பிரித்து மீன்போலும்
விழிகளையுடைய எனப்பொருள் கொள்க. நாகபூஷணிக்கு கற்புரம் மருவல் - கற்பு உரம்
எனப் பிரித்து மகளிர் நிறையாகிய உறுதிப்பாடு பொருந்துதல் எனப்பொருள்
கொள்க. அன்றி கல்வியறிவு, தியானம் என்பன நெஞ்சத்தில் பொருந்துதல் எனவும்
பொருள் கொள்க; சந்திரனுக்குக் கற்புரம் மருவல் கல்புரம் எனப்பிரித்து கல்லால்
ஆகிய பாறைகள் பொருந்தியிருத்தல் எனப்பொருள் கொள்க. அன்றி கல்லால்
ஆகிய உயர்ந்த நகரங்களையும் பொருந்திவருதல் எனவும் பொருள் கொள்க.
ஆதுரம் - அன்பு; துய்ய - தூய்மையான; தோகை - மயில், இங்கு உவமையாகு
பெயராய் நாகபூஷணியைக் குறித்தது. களங்கம் - கறை; பசுமணித்திருமேனி - மரகத
மணிபோலும் அழகியமேனி. வெண்மதி விளியேற்றது. சிலேடை மூலம்
இருவர்க்கும் பொதுவாய அம்சங்கள் புலப்படுத்தியவாற்றால் இப்பாடலில் சாமம்
என்னும் உபாயம் கைக்கொள்ளப் பட்டது. 31
--------------
மங்கலா மேனைசுவை பொங்குபால் தருதங்க
வண்ணமார் கிண்ணமென்றோ
மாதரெழில் நோக்கிமகிழ் கொண்டாட ஏய்ந்தவொளி
வயங்குகண் ணாடியென்றோ
சங்கவொண் காதரணி திருநீறு வைத்திடத்
தக்கசம் புடமிதென்றோ
தமையனா ரானவரி தாங்கிடுஞ் சக்ராயு
தம்போலவே கருதியோ
அங்குமிங்குஞ் சுழல விட்டுவிளை யாடுதற்
கமைந்தபம் பரமதென்றோ
ஆவலோடு காந்தள்மலர் போலுமென்கை நீட்டி
அன்பாய ழைத்துநின்றாள்
திங்களே செங்கனக மங்கைநா யகியினொடு
சேர்ந்துநீ ஆடவாராய்
திரைமருவு நயினை வளர் தேவிநா கம்மையொடு
தெண்ணிலா வாடவாராய்.
மங்கலாமேனை - மலையரசன்மனையாள். ஏய்ந்த - பொருந்திய; வயங்குதல் - விளங்குதல்;
சங்கம் ஒண்காதர் - சங்கக் குழையணிந்த ஒளிபொருந்திய திருச்செவிகளைக்
கொண்ட சிவன்; அணிதிருநீறு - வினைத்தொகை; இப்பாடலில் சந்திரன் பால்
பருகும் குவளையாகவும், கண்ணாடியாகவும், சம்புடமாகவும், சக்ராயுதமாகவும்
இழிவு தோன்றக் கூறப்படுதலால் பேதம் என்னும் உபாயம் குறிக்கப்பட்டது.
32
-----------------
கொத்துநீ டியகுவடு பலவுடைத் தாய்விளங்
குங்கயிலை மால்வரையிலே
கொன்றைமலர் வான்கங்கை பயில்செஞ் சடாடவிக்
குழகருட னுமையம்மையார்
சித்தமகிழ் வுறவீற்றி ருக்குந் திருக்காட்சி
தெரிசித்து நீமகிழலாம்
சிந்துரமு கத்தவர்மு னிட்டசா பத்தினைச்
செப்பியவள் வாயிலாக
அத்தரின் கோபத்தை யாற்றுவித் துச்சாப
மகலுவித் துய்திபெறலாம்
ஆசையோ டிவளுன்னை வாவென் றழைத்தனள்
அரியவாய்ப் பிதுபோலவே
இத்தலத் தாருக்கு மெளிதினிற் கிட்டுமோ
எழில்மதிய மாடவாவே
இனியபொழில் பயில்நயினை தனில்வளரு மொருபிடியொ
டெழில்மதிய மாடவாவே.
கொத்து - தொகுதி; குவடு - மலையுச்சி; மால்வரை - பெரிய மலை; வான்கங்கை -
ஆகாயகங்கை; செஞ்சடாடவி - சிவந்த சடையாகிய காடு; சிந்துரம் -யானை;
அத்தர் -கடவுள்; இங்கு விநாயகர் என்க. இப்பாடல் சந்திரனுக்கு விநாயகர்
சாபத்தினை நாகபூஷணி போக்கி அருள்செய்வாள் என்பதைக் கூறுதலால்
தானம் என்னும் உபாயம் இங்கே மேற்கொள்ளப்பட்டது. 33
------------
செய்மதிகள் விண்வெளியி லேராள முலவிடும்
செய்திநீ யறியாததோ
திங்களுல கினிலொருவன் நீயென்ற தற்பெருமை
தீர்ந்தபா டின்னுமிலையோ
மைவிழி சிவப்பேற வாய்விம்ம லுறவெம்பி
மதலையுமை நெடிதுவீக்கம்
வாங்கியழ முற்படின் வையகம தாற்றுமோ
மதியென்றுபெயர் கொண்டநீ
உய்திபெற வேண்டுமெனில் அகிலகோ டிகளெலா
முதவிடுங் கருணைநிதியாம்
உமையம்மை எமையிம்மை யம்மையுங் காத்திடும்
ஒருதனிச் செல்வியாகும்
ஐயைசிவ காமியபி ராமிமலை மாதுடன்
அம்புலீ யாடவாவே
அரவுதொழு நயினைவரு மருமலர்க் குழலியுடன்
அம்புலீ யாடவாவே.
செய்மதிகள் - வினைத்தொகை; மதலையுமை - மதலையாகிய உமை; மதி -
சந்திரன், புத்தி; அகிலகோடி – புவித்தொகுதி; இம்மை - இப்பிறப்பு; அம்மை -
மறுபிறப்பு; ஐயை - தலைவி, துர்க்காதேவி என்னும் பொருள்களில் வரும்.
சிவகாமி - சிவனை விரும்புபவள்; அபிராமி - அழகுடையவள்; இன்று மானிடர்
செய்யும் செயற்கை மதிகளும் வானில் அதிகம் உலவுவதால் உனது பண்டைய
தனித்தன்மை குறைந்துள்ளது. எனவே நீ அம்மையுடன் விளையாடவருதல் உனக்குப்
பெருமை என்பதாம்.
நீ வாராதொழியின் நாகபூஷணியாகிய குழந்தை அழும். அவ்வாறு அந்தக்குழந்தை
அழுமாயின் வையகமாகிய இந்தப் பூமியும் ஏனைய பிரபஞ்சத் தொகுதிகளும்
அதனைத் தாங்கமாட்டாது அழிந்தொழிந்துவிடும். அவ்வாறு அழியும்போது
இந்தப் பிரபஞ்சத்தின் ஓர் உறுப்பாகிய நீயும் அழிந்தொழிந்து விடுவாய். எனவே
உனக்கு மதியிருப்பின் அம்மையோடு வந்து விளையாடுதல்தான் நீ உய்திபெறும்
வழியாகும். மேலும் உலகமெல்லாவற்றையும் காக்கின்ற கருணைத் தாயாகிய
நாகபூஷணி நின்னையும் காப்பாள். எனவே நீ வந்து விளையாடுதல்தான்
உனக்கு மதியாகும் என்கிறார் ஆசிரியர். எனவே இப்பாடல் தண்டம் என்னும்
உபாயத்தைக் குறித்தது. 34
---------
விண்ணுல வுடற்குறைப் பணியுண் டுமிழ்ந்திடு
விதத்தித்த லத்துமேவும்
விடவரவு நீவரிற் கவ்வுமென் றஞ்சியோ
விலகிவிலகிச் செல்கிறாய்
மண்ணுலகு பாரித் திடுங்கட் செவிக்கிறையை
மலர்விரலி லாழியாக
வட்டித் தணிந்திருக் கின்றவரு ளம்மைபெரு
மாட்டிபால் பெரிதுநேயம்
கொண்டுவணி கன்றனைப் பண்டால யம்படைக்
கும்படிபணித் தபணிநீ
குறுகிவரி னிடையூறு புரியாதுநீ பயம்
கொள்ளாம லகிலகோடி
அண்டின வுயிர்த்தொகைகள் வாழ்விக்கு மம்மையுடன்
அம்புலீ யாடவாவே
அழகொழுகு நயினைவளர் மழவிளம் பிடியினோ
டம்புலீ ஆடவாவே.
விண் உலவு உடற் குறைப் பணி - இராகு; அதற்கு உடற்குறை விட்டுணு அகப்பையால்
அடிக்க ஏற்பட்ட தென்க. பாரித்தல் - தாங்குதல்; கட்செவி - பாம்பு, கண்ணையே
செவியாகவுடையது; கட்செவிக்கு இறை - ஆதிசேடன். - அதனை அம்மை தனது விரலில்
மோதிரமாக அணிந்திருக் கின்றாள் என்பது புராண வரலாறு.
அம்புலியே! நீ இங்கு விளையாடவரின் இத்தலத்து விடவரவு, முன்னர் உன்னை
விழுங்கிய இராகு கேதுக்கள் காரணம் போல விழுங்குமென்று அஞ்ச வேண்டியதில்லை
இத்தலத்துப் பாம்பு அம்மையிடத்தில் மிகுதியும் அன்புடையது. மேலும் புவியைத்
தாங்கும் ஆயிரம் சிரசுகளையுடைய ஆதிசேடனையே தமது விரல் மோதிரமாகக்
கொண்ட அபிராமிக்கு இத்தலத்துப் பாம்பு எம்மாத்திரம். எனவே நீ பயமின்றி
இவருடன் விளையாடவருக என அழைக்கின்றார்கள் செவிலியரும் பிறரும்.
இத்தலத்து நாகம் அம்மையிடத்தில் பேரன்புடையது என்பதைக்
குறிக்கும் வரலாறு: நாகமொன்று அம்மையை நாள்தோறும் சென்று வழிபடும்
வழக்கம் பூண்டிருந்தது. அந்த நாகம் புளியந்தீவிலிருந்து பூவெடுத்து வழிபட
வருங்காலை ஒருநாள் கருடன் ஒன்று எதிர்ப்படவே, பாம்பு பயந்து கல் மறைவில்
பதுங்கியிருந்தது. அது கண்ட கருடனும் விலகிச் செல்லாது காத்திருந்தது.
அவ்வமயம் அவ்வழிப்போந்த வணிகன் ஒருவன் பாம்பின் நிலைகண்டு விலகிச்
செல்லுமாறு கருடனை வேண்ட, வணிகன் தனது பொருள் முழுவதையும்
அவ்விடத்திலேயே இறக்கிச் செல்வதானால் தான் விலகிச் செல்வதாக கருடன்
கூறியது. வணிகன் அதற்கியைய, கருடன் விலகிச் சென்றது. பின்னர், பாம்பும்
அம்பிகையை வழிபட்டுச் சென்றது. வணிகனும் அம்பாளை வணங்கி
வாக்களித்தவாறு தன் திரவியங்களைக் சொண்டு திருப்பணி செய்வித்தான்
என்பதாம். 35
------------
8. அம்மானைப் பருவம்
இசைமேவு காஞ்சியில் தர்மசம் வர்த்தனி
யெனும்பெயரொ டறமீரிரண்
டெட்டான வகைவளர்க் கின்ற காலத்திலே
இரவலர்கள் பசிபோக்குவான்
பசைமேவு செந்நிறப் பச்சரிசி யமுதினைப்
பக்குவஞ் சேருண்டையாய்ப்
பண்ணியீந் ததுமான மாணிக்க மணிகள்பல
பதித்தியற் றியவம்மனை
திசைதோறு மொளிபரந் திருள்பருகு மாறுமென்
செந்தளிர்க் காந்தள்மேலும்
சிவப்பேறு மாறுநின் சேடியர்கள் தம்முடன்
சேர்ந்துகை வளையொலிப்ப
அசலா பதிக்குமரி கமலாகரத் தலைவி
அம்மானை ஆடியருளே
அலைநாலு திக்குமெறி நயினாபுரிக்கிறைவி
அம்மானை ஆடியருளே.
அம்மானை என்பது மகளிா விளையாட்டுக்களில் ஒன்று. பந்துபோன்றதோர்
விளையாட்டயரும் காய்களை அது வானில் எறிந்து விளையாடுவதாகும்.
செவிலியரும் பிறரும் பெண் குழந்தையை நோக்கி அம்மானை எடுத்தாடும்படி
வேண்டுவது அம்மானைப்பகுவ உறுப்பாகும். இசை - புகழ்; தர்மம் - அறம்,
சம்வர்த்தனி -மிகப்பெருக்குபவள். இதனை அறம் வளர்த்த நாயகி என்பர்.
ஈரிரண்டெட்டு அறம் -முப்பத்திரண்டு அறங்கள்; வெம்பசி - கொடும்பசி; உருண்டைஆ
என்பதில் ஆக என்பதன் ஈறு குறைந்தது. உருண்டைக்கு வேண்டிய அரிசி
இருநாழி நெற்கொண்டு சமைக்கப்பட்டதாகும். மான - ஒப்ப: காந்தள் - தோன்றி
மலர்; அஃது அம்மையின் கரங்களைக் குறித்தது: அசலபதிக்குமரி-மலையரசன்
மகள்; அசலபதி என்பது ஓசைநோக்கி அசலாபதி என நீண்டது; குமரி - என்றும்
இளமையானவள்; அகரம் -உறைவிடம்; கமலாகரத் தலைவி - தாமரையாகிய
உறைவிடத்தைக் கொண்ட தலைவி. தாமரை - வெண்டாமரை செந்தாமரை
என்னும் இரண்டுமாம். எனவே கலைவாணியும் செந்திருவு மாகியிருப்பவள்
நாகபூஷணி என்க. தாமரை - அடியர் உளத்தாமரையுமாம். அன்றியும் காஞ்சியிற்
காமாட்சி எனப் பொருள் கோடலுமொன்று. கமலாகரம் -காஞ்சிப்பதி;
உலகிருளை ஓட்டுவது மாணிக்க மணிகள் பதித்த அம்மனை என்கிறார் ஆசிரியர்.
அம்மையின் காந்தள் மலர்க்கரங்கள் மேலும் சிவப்படைதல் உலக இருள்
நீங்குவதற்குரிய அம்மனைகளை வீசி எறிதலால் என்க. எனவே அம்மையின்
உளக்கருணை பெரிதாயிற்று. சேடியர் - தோழியர்; அவர்கள் ஈண்டு நவசக்தி
பேதங்களானோர் என்க. உருண்டையாப் பண்ணி ஈந்ததுமான அம்மனை ஆடியருள்க
எனக் கூட்டுக. 36
----------
வேறு
தாருக வனத்துமுனி வோர்தமது பத்தினியர்
தாமவச முற்று மயலாய்த்
தாவினிறை கற்பொருவு மாறழகு மிக்கவொரு
சாதுவடி வத்தி னுடனே
சேரிதொறு முற்றுமட வீரெனை யுடற்றுபசி
தீருமென நிற்ப வரனார்
சீரழிவெ மக்கிவரி னாலென வுருத்துணவு
தேர்வுறு பலிக்கல னைமுன்
தீரமொடு பற்றிரவி சீதமதி யுற்றுலவு
சேணுயர விட்டெறிதல் போல்
சேலுறழ் விழிக்கடைகொள் பார்வைசுழ லப்பசிய
சீகர வளக்க ருறுவால்
ஆரமணி தைத்தவொளி வீசமனை யெற்றியினி
தாடியருள் அம்மா னையே
ஆரஞர் துடைக்குநயி னாபுரித னக்கிறைவி
ஆடியருள் அம்மா னையே.
அவசம் - தன்வசப்படாமை; அது பரவசமென்க. மயல் - மயக்கம்; தாஇல் நிறை கற்பு -
குற்றமில்லாத நிறையாகிய கற்பு. ஒருவுமாறு - நீங்குமாறு; தாருகாவனத்து முனிவர்
பத்தினியர் தாமாகவே இச்சைகொண்டு கற்பு நீங்கும் இயல்பினர் அல்லர். ஆயினும்
இறைவன் செயலால் கற்பு நீங்கினர் என்பது கருத்தாகும். இதனாலேயே ஆசிரியர்
அவர்களைப் பத்தினியர் என்றார். பத்தினி - கணவனைத் தெய்வமாகப் பூசிப்பவள்;
சேரி தொறும் முற்றும் - சேரும் இடங்கள் தோறும் என்னை வளைத்துக்கொள்ளும்;
மடவீர் - இளமையையுடையவர்களே; மடம் - அறியாமையுமாம். உடற்றுதல் -
வருத்துதல்: உருத்து - கோபித்து; உணவு தேர்வுறு பலிக்கலன் - உணவு பழகுகின்ற
பிட்சாபாத்திரம். ரவி - சூரியன், சேண் - ஆகாயம்; சேல் உறழ் - சேல்மீனை ஒத்த:
பசிய சீகரம் அளக்கர் - குளிர்மையான நீர்த்துதுளிகளையுடைய சமுத்திரம்;
வால் - வெண்மை; ஆரமணி-முத்தமணிகள்; ஒளி வீசு அமனை - ஒளிவீசுகின்ற
அம்மனை; அமனை - இடைக்குறைந்தது. 37
----------------
கயிலைமலை யுறையிறைவ னிருவிழிகள் முன்பொத்து
காரணத்தா லவனியோர்
கலுழவிரி ககனவிருள் தனையுருளை யாக்கியெறி
காட்சியென வுங்காஞ்சியிற்
செயுமரிய தவமகிழ்வு தருதலின்மு னருளவரு
தியாகேசர் திருமேனியைச்
சிமயநகில் கொடுகுழைவு படஞெமுங் கப்புல்லு
சீர்த்தியாற் காளிவருணம்
வெயிலினிரி கொடியவிரு ளெனவகல வன்னதை
மேவுபந் தாக்கிவிண்ணில்
விரைவுபட வெறியுமொரு செயலெனவு நீலமணி
மேயவம் மனைவீசியே
அயில்விழியி னருள்கொடினி துயிர்புரக் குந்தேவி
அம்மானை ஆடியருளே
அலைதரள மெறிகடலி னுறுநயினை வருமுதல்வி
அம்மானை ஆடியருளே.
கலுழ - வருந்தும்படியாக; விரிககனம் - பரந்த ஆகாயம்; தியாகேசர் -திருவாரூர்ப்
பெருமான்; ஈண்டு ஏகம்பரைக் குறித்து நின்றது; சிமயம் - இமயமலை; நகில் -
கொங்கைகள்; ஞெமுங்க - அழுந்துமாறு; காளிவருணம் - கருமைநிறம்; தரளம் -
முத்து; அம்மையார் வீசி எறியும் அம்மனை நீலமணியால் இழைக்கப்பெற்றதற்கு
கயிலை இறைவர்தம் திருவிழிகளைப் பொத்தியபோது தோன்றிய ஆகாய
இருளையும் காஞ்சியில் ஏகாம்பரநாதரைத் தழுவியபோது விலகிய உலகில் உள்ள
கார்வண்ணத்தையும் உவமையாக்கியுள்ளார் நூலாசிரியர். எனவே அகவிருள்
போக்கும் ஞான ஒளியாக நிற்பவள் நாகபூஷணி என்பது குறிப்புப் பொருள்.
38
------------
வேறு
தோடலர் மல்லிகை மாலை யினம்பல
தோளில சைந்தாடத்
தூவிய னம்மயில் மானின மன்னநின்
தோழியர் கொண்டாட
கோடிர மொன்று சுரும்ப ரெழுந்து
கலைந்து பறந்தோட
கூனலி ளம்பிறை நேர்நுத லம்பொடி
வேர்வை யரும்பாட
கூடல்வ ளம்பதி யாள்கையில் மன்றிறை
யார்வரல் முன்தேரக்
கூடல்பு னைந்திடு பாடல மெல்லடி
தூளிது தைந்தாட
ஆடக வல்லிம னோன்மணி அம்பிகை
ஆடுக அம்மனையே
ஆர்கலி சூழ்நயி னாபதி வாழ்பரை
ஆடுக அம்மனையே.
தோடு - இதழ்; தூவி அளம் - சூட்டினையுடைய அன்னம்; அனம் - இடைக்குறையாயிற்று:
மானினம் அன்ன மான் கூட்டங்களை ஒத்த: கோடிரம் - கூந்தல்; கோடிரம் ஒன்று
சுரும்பர் - கூந்தலோடு ஒன்றியிருக்கின்ற வண்டுகள். நுதலம் - நெற்றி; அம் சாரியை
பெற்றது; கூடல் வளம்பதி – மதுரை; ஆள்கை - ஆளுதல்; முன் தேர - முன்னரே
அறிந்து; கூடல் - பிரிந்து சென்ற தலைவன் வந்து கூடுவானோ எனத் தலைவியால்
மண்ணில் எழுதிப்பார்ப்பதோர் குறி; மதுரையில் தடாதகைப்பிராட்டியாக
வளர்ந்த பொழுது திருக்கையிலை இறைவர் தம்மாட்டு வருவாரோ என்றறிதற்குக்
கூடல் இழைத்துப் பார்த்த பாதம். அடிக்கடி கூடல் இழைத்தமையால் பாதம்
சிவந்தது. அதனைக் குறிக்கவே பாடலமெல்லடி என்றார். அன்றி, பாடலம்
என்பதற்குப் பாதிரி மலர் என்றும் பொருள் கொள்க. 39
---------------
ஆதிபழம் பதியாகு சிதம்பர
வாடகமன்றில் நடம்
ஆடுபரம் பொருள்வாமம மர்ந்திடு
வாலச வுந்தரியே
தாதுசொரிந் திடுநீபம ணங்கமழ்
தாமமணிந் தசுரர்
தானையுடம் பிடியால் முனம்வென்றிடு
சண்முகர் தம்மனையே
மேதினிமீது நிலாவிருள் மாறி
விரைந்து புகுந்திடல்போல்
வெண்டர ளங்கருநீல மியன்றவை
விண்ணில் வலம்வரவே
ஆதவர்தங் குலமாதவர் தங்கையர்
ஆடுக அம்மனையே
ஆடரவந்தொ ழுநாகச வுந்தரி
ஆடுக அம்மனையே.
ஆதி - முதல்; ஈண்டு பிரபஞ்ச முதல்வராகிய சிவனை ஆதி என்பது குறித்தது.
ஆதிபழம் பதி - ஆதிக்குரிய பழமையான பதி; ஆடகமன்று - கனகசபை; வாமம் -
இடப்பக்கம்; வால சவுந்தரி - இளமையோடு கூடிய அழகினையுடையவள்;
நீபம் - கடம்பு; அசுரர்தானை - அசுரரதுசேனை; உடம்பிடி - வேல்; அனை - தாய்;
இடைக்குறைந்துவந்தது. சண்முகர்க்கும் தாயாகலின் நாகபூஷணி ஆதிபராபரை
என்க; நிலா இருள் - உம்மைத்தொகை; மயங்கி - கலந்து; முத்தினாலும்
நீலமணியாலும் இயன்ற அம்மானைக் காய்களை மாறிமாறி எறிய அவை
ஒன்றன்பின் ஒன்றாக வருதல் நிலவும் இருளும் மாறி வருதலை ஒக்குமென்க.
ஆதவர் தங்குல மாதவர் - கண்ணபிரான்; யாதவகுலம் - இடையர்குலம்: யாதவர்
என்பது ஆதவர் ஆயிற்று. யகரத்துக்கு அகரம் போலி என்க. 40
---------------
9. நீராடற் பருவம்
அரவிந்த மலர்மேவு கலைஞான ஓதிமம்
அருள்கின்ற சொல்விற்பனம்
ஆட்சியா கப்பெற்ற குமரகுரு பரருடன்
அபிராமிப் பட்டரோதும்
பிரபந் தலங்கார மாலைக ளளப்பில
பிலிற்றுதேன் வெள்ளத்தினும்
பேரன்பர் நெஞ்சங்குழைந் தென்பு நெக்குநின்
பேராயிரங்கள் கூறிப்
பரவுந்தொ றும்விழிகள் பொழியு மானந்தப்
பலாலிசேர் வெள்ளத்தினும்
படிகின்ற மரகதத் திருமேனி புளகுறப்
பைவளைகள் பாணிகொட்ட
விரைசந் தனம்பளிதம் உரைமஞ்சள் கொண்டபுது
வெள்ளநீ ராடியருளே
விரிதிரைகள் பரிபுரமெ யொலிசெய்நயி னையிலிறைவி
வெள்ளநீ ராடியருளே.
நீராடற்பருவம் என்பது பெண்குழந்தையை ஆற்று வெள்ளத்தில் நீராடும்படி மகளிர்
வேண்டிக் கொள்ளும் பருவம்.
அரவிந்தம் - தாமரை; கலைஞான ஓதிமம் - சரஸ்வதி; ஓதிமம் - அன்னம்:
வெள்ளோதிமப்பேடே என்பர் குமரகுரு பரர். கலைவாணியின் அருளால்
சொல்விற்பனம் பெற்று வடநாட்டில் மொகலாயர் ஆட்சியில் சைவம் பரப்பியவர்
குமரகுருபரர்.
"பிரபந்தாலங்காரம்' பிரபந்தலங்காரம் எனச் செய்யுள் விகாரம் பெற்றது. சக்தியின்
திருவருள் பெற்றவர் பலர் இருப்பினும் குமரகுருபரரும் அபிராமிப்பட்டரும் சிறப்பிடம்
பெறுவர். ஏனையோர் கூத்தரும் கம்பரும் பிறருமாவர். எனவே ஏனையோர்
கவிமாலைகளையும் குறிக்கவே மாலைகள் அளப்பில என்றார்; அன்றி மணம்வீசும்
மலர் மாலைகளுமாம். பேராயிரம் - சகஸ்ர நாமம்; பல ஆலி - பல நீர்த்துளிகள்:
பாணி - தாளம்; பளிதம் - பச்சைக்கர்ப்பூரம்
பரிபுரம் - சிலம்பு; பரிபுர மெய் ஒலிசெய் - பரிபுரத்தின் உண்மை ஒலியைச் செய்கின்ற.
41
-----------------
பந்தமுறு பிறவியினில் ஓயா திழைத்திட்ட
பல்வகைய வினையின் விளைவால்
பற்றித் தொடர்ந்திடும் பாவத் தொடக்கறப்
பரிகார மாகப் புகல்
விந்தைமிகு தீர்த்தங்கள் ஐம்பத்து மூன்றிலும்
மேவியா டுதலி னுன்றன்
விரைகமழ் திருமேனி படிதலால் சக்திபெறு
மேலான மஞ்ச னத்தைச்
சிந்தைமகிழ் வுடனள்ளி மேலே தெளித்திடின்
தீர்ந்திடும் வினைக ளென்றே
திண்ணமுற நம்புமெய் யடியவர்கள் நீயாடு
தீர்த்தத்தை வேண்டி நின்றார்
விந்தமொடு சந்தளவு பைம்புனல் குடைந்தினிது
வெள்ளநீ ராடி யருளே
விரிதிரைகள் பரிபுரமெய் யொலிசெய்நயி னையிலிறைவி
வெள்ளநீ ராடி யருளே.
மஞ்சனம் - நீர்; அது திருமஞ்சனம் என்க. விந்தம் - பச்சைக்கர்ப்பூரம்; சந்து -சந்தனம்;
அம் சாரியை கெட்டு நின்றது. தீவினை புரிந்தோர் அதற்குப் பரிகாரமாகப் புண்ணிய
தீர்த்தங்கள் ஆடித் தம் பாவம் போக்குவர். அதற்குத் தலங்கள்தோறும் சென்று
வழிபடல் வேண்டும். அவ்வாறு சென்று வழிபடினும் பாவம் பெரிதாயின் தீர்த்தங்கள்
ஆடியும் பயனில்லாமற் போவதும் உண்டு. காரணம் உன் திருமேனி அத்தீர்த்தங்களில்
படியாமையாகும். ஆனால் நயினைத் திரைக் கடலில் நீ படிந்து நீராடினால்
அந்தப் புனித தீர்த்தம் எங்கள் பாவங்களைப் போக்கும் என்பது எங்கள் அசையாத
நம்பிக்கை. எனவே இறைவி நீ ஆடியருள்க என வேண்டுகின்றார்கள்
அடியவர்கள். ஆடுதலின் - ஒப்புப்பொருளில் வந்தது. 42
----------------
மடல்பெரிய தாழைமர முறைதூ துணக்குருவி
வனப்புற வமைத்த கூட்டில்
வைத்தவெண் முத்தொளியை விடிவெள்ளி என்றெண்ணி
வணிகர் கடல்மீது செல்லும்
இடநெடிய விந்த்ரவா மம்பயிலு நயினைவளர்
இறைவியே இனிய மதலைக்
கேற்படும் பிணிநோய்கள் மாற்றுதற் குயிரன்னை
ஏற்புடைய மருந்துண்ணல் போல்
தொடர்வினைகள் எமையடர்தல் தொலையும்வகை புண்யநதி
தோய்ந்தாடு கின்ற தேய்ப்ப
துய்யசாந் தம்பளித குங்கும மளாவுநீர்
தோகையர்கள் நின்னை யாட்ட
விடமுமிழு மணியரவு பணிகின்ற நாகம்மை
வெள்ளநீ ராடி யருளே
வேதநா யகிகமலை யாதிநா யகிபொங்கு
வெள்ளநீ ராடி யருளே.
மடல் பெரிய தாழை மடல்களைப் பெரிதாகவுடைய தாழைகள்; அன்றி, தென்னைகளுமாம்.
தூதுணக்குருவி - தூக்கணங்குருவி; இந்திரவாமம் - நெய்தல் நிலம்; நாகம்மை,
நாயகி, கமலை என்பன அண்மை விளிகள்.
தூக்கணங்குருவி தனது கூட்டில் ஒளிவேண்டி வெண்முத்தைப் பதித்து
வைத்திருந்தது. வைகறைக்கு முன்னரே எழும் வணிகர் இதன் ஒளியை விடிவெள்ளி
என மயங்கி மரக்கலத்தோடு கடல்மீது செல்லப்புறப்படுவர் என நெய்தல் நிலவளம்
விதந்து கூறப்பட்டது. இதனால் அங்குள்ள முத்துக்களின் பேரொளி புலனாயிற்று.
குழவியர்க்குப் பிணி நேருங்கால் நற்றாயர் தாமே மருந்துண்ணுதலும் புண்ணிய
தீர்த்தங்கள் ஆடுதலும் உலக வழக்கு. அஃதொப்ப எமக்குள்ள பண்டைய ஊழ்வினை
போக உலகமாதாவாகிய நீ தீர்த்தமாடியருள்க வேண்டுகின்றனர் அடியவர்கள் என்பதாம்.
43
-------------
வேறு
இந்திரநீல மெனப் பொலி குஞ்சி
இழிந்து சரிந் தாட
இந்திர கோப மெனத்திகழ் செச்சை
இதழ்கள் வெளுப் பேற
இந்திர சாபம்வ ளைத்தையர் மீதினில்
ஏவுமயற் கணை நேர்
இந்திவ ரம்பவ ளம்பயில் செந்நிறம்
எய்தி இலங்கி யிட
சிந்துர சாந்து சுகந்த மளாவிய
சீதந றும் புனலைச்
சிவிறியி னால்நின் சேடியர் மீது
தெளித்திட வோடி யவர்
அந்தர டித்திட ஆடல்பு ரிந்தினி
தாடுக நன் னீரே
அடியவர் மிடிகெட நயினையில் வருமயில்
ஆடுக நன் னீரே.
இந்திரநீலம் - நீலமணி; குஞ்சி - கூந்தல்; இந்திர கோபம் - தம்பலப்பூச்சி; செச்சை -
சிவப்பு; இந்திரசாபம் - வானவில்; இங்கு பிராட்டியார் விழிப்புருவங்களை அது
குறித்தது. பயல்கணை - மயக்கத்தைச் செய்யும் அம்பு; இந்திரவரம் - கருங்குவளை;
சிந்துரசாந்து - செஞ்சந்தனம்; சிவிறி – விசிறி; துருத்தி. மொழிப்போலி; அந்தரடித்தல் -
தலைகுப்புற வீழ்தல்; நீண்டநேரம் நீராடுமிடத்து செவ்வாய் இதழ்கள் வெளுப்
படைதலும், கருங்குவளை ஒத்த கண்கள் சிவப்படைதலும் இயல்பென்க.
திருமஞ்சனநீர் மேலும் குளிர்மையடைய வேண்டி சந்தனக்குழம்பும் வாசனை
வீசும் மலர்களும் இட்டு வைத்தல் வேண்டும் என்பது ஆகமவிதி. 44
---------------
ஏட்டி லடங்கா எழில் வடிவம்
இருநீர்ப் படிந்து மூழ்கிஎழல்
ஈரேழு லகம் மாயை யினின்
றெழுந்து மடிதல் கடுப்பவும்பொன்
தோட்டுக் கொன்றைத் தொடையல் புனை
தோன்றல் கொண்ட யோகநிலை
துடைத்துப் புவனம் படைத் திடற்குத்
துணையாம் இன்ப வுணர்வுநிலை
ஊட்ட மிகவும் உயர்ந்த நெறி
ஒண்ணீர்க் கிரீடை எனவுளத்தில்
உன்னி மன்னர் பிரானை யுந்த
முடனா டுதற்கு விழிச்சாடை
காட்டிப் புகுந்த தெனவும் விரைக்
களபப் புதுநீ ராடுகவே
காட்சிக் கினிய நயினை வளர்
கரும்பே புதுநீ ராடுகவே.
ஏடு - புத்தகம்; இங்கு அம்மையின் அழகினை எழுதுவதற்குரிய நூல்;
இருநீர் - சமுத்திரம்; கீரிடை - விளையாட்டு, அம்மையின் திருமேனி நீரில்
மூழ்கி எழும் தோற்றம், உலகம் அனைத்தும் மாயையினின்றும் தோன்றி
மறைவதை நினைவு படுத்துகிறது. அன்றியும் சனகாதி முனிவர்க்கு உபதேசம்
செய்ய யோகநிலையிலமர்ந்த இறைவனை உலகிற்குப் போக நிலை புலப்படுத்த
வேண்டி; அதனில் அவரை ஈடுபடுத்தத் தூண்டுமாறு சிருங்கார உணர்வு
ஊட்ட நீராடல் சிறந்ததெனக் கருதி சலக்கிரீடையில் இறங்கியதாகவும்
கற்பிக்கின்றார் ஆசிரியர். 45
--------------
10. ஊசற் பருவம்
வானுயரு கற்பகக் காடுசெறி பந்தரிடை
வள்ளொளிப் பவளத்தினால்
வட்டித் தியன்றவுயர் தூணட்டு வில்வீசு
வயிரநெடு விட்டமாட்டி
மீனினமொ ராயிரம் கோத்தொளி யிலங்கிடும்
வெண்தரள வடமிழைத்து
விரிகதிர்ப் பச்சையொடு செச்சைமணி நிரையிட்டு
வேய்ந்த பொற் பலகைமேவிக்
கானமரு பூங்குழற் சுற்றைபின் னாடமின்
கலனிரைகள் மார்பிலாட
கட்கயல்கள் பாய்ந்தோடி உந்திடு திறத்தினால்
காதிலணி மகரமாட
போனகநி னடியருக் கருளன்ன பூரணி
பொன்னூச லாடியருளே
பொறிநாக மருள்பெற மெய்ந்நெறிகாட்டு நாகம்மை
பொன்னூச லாடியருளே.
ஊசற்பருவம் - குழந்தை ஊஞ்சல் ஆடுதற்குரிய பருவம். இதில் மகளிர் குழந்தையை
ஊஞ்சல் ஆடும்படி வேண்டுதல் மரபாகும்.
கற்பகக்காடு செறிபந்தர் - கற்பகக் காட்டோடு நெருங்கும் பந்தல்; வள் ஒ
ளிப் பவளம் - வளம்மிகுந்த ஒளியினையுடைய பவளம்: வில் - ஒளி; மீன் இனம் -
நட்சத்திரக் கூட்டம்; வெண்தரளம் - வெள்ளிய முத்துக்கள்; செச்சை - சிவப்பு;
கான் அமரும் - நறுமணம் பொருந்தும்; கானம் என்பதில் அம்சாரியை கெட்டுவந்தது.
கலன் - ஆபரணம்; போனகம் - உணவு. கற்பகக்காட்டையும் பந்தர் நெருங்குதலால்
பந்தலின் உயர்வும் பந்தல் தேவருலகையும் வானில் மின்னும் நட்சத்திரங்களையும்
பொருந்தியிருப்பதால் பிரபஞ்சமெல்லாம் கலந்து நிற்பவள் அவள் என்பதும்
பெறப்பட்டன: பூ என்பதற்கு அழகு என்னும் பொருளைக்கொண்டு கான்
என்பதனைக் கூந்தலுக்கு அடையாகக் கொள்ளுமிடத்து தேவியின் கூந்தல்
இயற்கை மணம் உடையதென்பதும் பெறப்படும். காதில் அணியப்படும்
மகரக்குழைகள் இயற்கையாக ஆட அவை கட்கயல்கள் ஓடியுந்துவதால்
ஆடுகின்றன என்கிறார் ஆசிரியர். இது தற்குறிப்பேற்றம்; காஞ்சியில் அறம்
வளர்த்தகாலை அன்னமும் அளித்தமையால் பூஷணி அன்னபூரணியாயினாள் என்ப.
46
-------------
இருசதுர நெடுவரைகள் இட்டகம் பங்களா
இலகுவா னம்பந்தரா
இபமெட்டி னீள்பனைக் கைநெடு வடங்களா
இருநிலம தேபலகையா
உருவுற வமைத்தபொல னூஞ்சலினி தேறிமரு
வொன்றுமலர் வாழ்மகளிரோ
டுயரைந் தருச்செல்வி வடமசைத் துன்சீர்த்தி
ஓதுவகை ஓங்குசிமயப்
பருவதகு மாரியருள் மாரிசுக வாரிநேர்
பகர்வரிய ரூபதாரி
படர்வினைகள் களைகின்ற கட்டாரி யென்றுனது
பல்லாயிரம் பேர்சொலிப்
பொருவரும் புகழ்பாடி யாடவுல கோம்பிறைவி
பொன்னூச லாடியருளே
பொறிநாக மருள்பெறமெய்ந் நெறிகாட்டு நாகம்மை
பொன்னூச லாடியருளே.
இருசதுர நெடுவரைகள் - அட்டகிரிகள். கம்பம் - தூண்; மலர்மகளிர் - திருமகள்;
கலைமகள்; ஐந்தருச்செல்வி - இந்திரன் தேவி; சிமயப்பருவதகுமாரி - இமயப்
பருவதத்திற்குரிய குமாரி; அருள்மாரி - அருளாகிய மாரியைப் பொழிபவள்;
அன்மொழித் தொகை; சுகவாரி - இன்பவெள்ளமாயிருப்பவள்; நேர் பகர்வரிய
ரூபதாரி -உவமை சொல்லுதற்கரிய வடிவினை உடையவள். கட்டாரி - குத்துவாள்.
ஓம்புதல் - வளர்த்துக்காத்தல்.
இங்கு அட்டகிரிகள், வானம், அட்டமா யானையின் பனைக்கைகள்,
இருநிலம் என்பன தேவியின் ஊஞ்சலுக்கு அங்கங்களாகக் கூறப்பட்டமையின்
தேவியின் தடத்தநிலை பெறப்பட்டது. பகர்வரிய ரூபதாரி என்பது அதீதநிலை.
வினைகள் களையப்படுதலால் பிராட்டியின் கருணையைக் கட்டாரி என்றார்.
47
--------
சங்காழி மான்முதல தேவரொடு மடியர்நிற்
சார்ந்தற நெருங்கி யுறலால்
தரைமீது படிகின்ற நெடுநிழலை வானுறத்
தாவிநீபுவி மீள்கையில்
கங்காளர் விடமுண்டு பட்டவே தனைதீர்த்த
கனிவாயின் முத்த நிலவும்
கனகபா ரக்குவடு மீதுலவு நித்திலங்
கான்றநில வும்போக்குதல்
வெங்கோப வினையிருளை நினதருட் பிரகாச
விழிநோக்கு நீக்கல் ஏய்ப்ப
மேதினியெலா மகிழுமா றமரர் மாதரார்
வெண்தரள வடமசைக்க
பொங்கோதை யடிவருடு நயினைவளர் ஒருசெல்வி
பொன்னூச லாடியருளே
பொறிநாக மருள்பெறமெய்ந் நெறிகாட்டு நாகம்மை
பொன்னூச லாடியருளே.
சங்கு ஆழி மால் - சங்கினையும் சக்கராயுதத்தையும் தரித்த திருமால்; கங்காளர் –
கபாலந்தரித்த சிவன்; களக பாரக்குவடு - பொன்மலைக்குவடு; அது பிராட்டி கொங்கை
களைக் குறித்தது. கான்ற - கக்கிய; ஏய்ப்ப - பொருந்த; ஓதை - சமுத்திரம்.
தேவியின் ஊஞ்சல்கண்டு மகிழ வந்தவர்கள் மாலும் தேவரும் அடியரும்
ஆவர். விநாயகரது சாபம் பெற்ற திருமாலுக்கு அருள்புரிந்தவர் பிராட்டியாதலின்
அவரை முதற்கண் வைத்து அவர்மூலம் நன்றி தெரிவிக்கப் பட்டது. தேவியை
வணங்கவும் ஊஞ்சல்கண்டு மகிழவும் வந்தோர் தொகை அதிகம். அதனால் நிழல்
தோன்றும். நிழல் பெரிதாக இருள் சூழும். அதனால் தேவியின் ஊஞ்சல் அழகு
கெட்டுவிடும். ஆனால் அது கெடவில்லை. காரணம் தேவியின் கனிவாய் முத்த
ஒளியும் தனபாரங்களில் அசையும் முத்துமாலைகளின் ஒளியும் பரவுதல் என்க. ஆழி
தேவியின் பாதங்களைத் தடவுகின்றன என்பதை 'பொங்கோதை அடிவருடு நயினை'
என்றார். ஓதை – பொருளாகு பெயராய் கிளைகளாகிய அலைகளைக் குறித்தது.
நெடுநிழலை நிலவு போக்குதல் வினையிருளை விழிநோக்கு நீக்கல் ஏய்ப்ப என
வினைமுடிபு செய்க. 48
-----------
பொன்னடி விளக்கிவழி படுகின்ற மகளிர்கர்ப்
புரகலச மேந்து மகளிர்
பூமாரி சொரிமகளிர் வீதிவலம் வருகையிற்
புகழ்பாடு மகளிரோடும்
என்னவர மெண்ணிவிண் ணப்பிக்கி னும்பெறுவ
தேலுமென் னும்நோக்கினால்
இடையின்றி யுந்தனது புடையொன்றி நின்றுருகி
யேத்துமடி யார்க ளோடும்
பன்னரிய வித்தல மடைந்தவர்கள் வெய்யவினை
பாறுவது கண்டுவிண் தோய்
பங்கயா சனனவனி கேள்வனிந் திரனாதி
பண்ணவர் திரண்டளியரேம்
புன்மை தவிர் என்றுதொழு மெல்லடி யுதைத்தினிய
பொன்னூச லாடியருளே
பொறிநாக மருள்பெறமெய்ந் நெறிகாட்டு நாகம்மை
பொன்னூச லாடியருளே.
கர்ப்புரகலசம் - கர்ப்பூரம் எரிக்கும் மட்பாத்திரம்; உந்தனது புடை - உமது பக்கம்;
தன் - சாரியை; வினை பாறுதல் - வினை அழிதல்; அவனி கேள்வன் - பூமி நாயகர்;
அவர் திருமால் என்க; பண்ணவர் - தேவர்; அளியரேம்புன்மை - அன்பராகிய
எங்களது சிறுமை; பொன்னடி விளக்குதல், கர்ப்பூரக்கலசம் ஏந்துதல், பூமாரி சொரிதல்,
புகழ்பாடுதல், உருகி ஏத்துதல் என்பன அங்குள்ளார் கிரியை வழிபாடுகள்.
வரம் கிடைத்தல் நிச்சயமாதலின் அடியவர்கள் பிராட்டியாரின் புடை ஒன்றி
நிற்கின்றனர் என்க. நயினையில் உள்ளவர்கள் மானிடர்; யாமோ தேவர்கள்.
அவ்வாறிருந்தும் யாம் உமது கருணையைப் பெற்றிலம். அது நமக்கு இழிவு
தருகின்றது. எனவே அதனை நீக்கியருள்க என்று வேண்டுபவர் தேவராதலின்
அதனைக் குறிக்க “அளியரேம் புன்மைதவிர்” என்றார் நூலாசிரியர். தேவியின்
மெல்லடிக்கு மாண்பு பங்கயாசனனும் அவனிகேள்வனும் இந்திரனும் தாழ்ந்து
தொழுதல் என்க. 49
--------
வையம் நலிக்கும் கலிதளர
மல்கி யறங்கள் மிகவளர
வாழ்த்தும் கவிஞர் உளம்குளிர
மாறாப் பிணிநோய் முழுதொழிய
வெய்யசனன விடாய் தணிய
வென்றுன் னடிதஞ் சிரசணிய
விழைந்து வருவார் வினைகழிய
விழிசூலருள் கொண் டுறக்கரிய
மையார் குழற்கார் இடைமின்னல்
மணிமே கலையின் முழக்குநெடு
வானச் சிலைவெம் புருவமிவை
வயங்கக் காட்டி உயிர்வளர்க்கப்
பொய்யா தென்றும் கருணைமழை
பொழிவாய் ஊசல் ஆடுகவே
புவன மனைத்தும் தொழுநயினைப்
பொன்னே யூசல் ஆடுகவே.
வையம் - உலகம்; இடவாகுபெயராய் மக்களைக் குறித்தது. நலிக்கும் - வருத்தும்;
கலி - துன்பம்; சனன விடாய் - பிறவித்தாகம்; தம் சிரசு அணிய - தமது தலையிற்
சூடிக்கொள்ள; சூல் - கருப்பம், விழி சூல் அருள் கொண்டு - விழிகளில் கருவாகிய
அருளைக்கொண்டு; கரியமை ஆர் குழல் கார் - மிகுந்த கருமை பொருத்திய
கூந்தலாகிய முகிற் கூட்டம் கருணைமழை பொழிகிறது. அதற்கு கருக்கொள்ளுராட்டியின்
திருவிழிகளென்க. கார், மின்னல், முழக்கம், வானவில், மழை என்பவற்றிக்குத்
தேவியின் கூந்தல், இடை, மேகலை, கட்புருவம் சுருணை என்பன உருவகிக்கப் பட்டன.
இப்பாடல் மங்கலவாழ்த்துப் பாடலாக அமைந்துள்ளது. 50
------------
This file was last updated on 01 December 2023.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)