pm logo

T. A. ராஜரத்தினம் பிள்ளை எழுதிய
சி. வை. தாமோதரம் பிள்ளை அவர்கள் சரித்திரம்


The Life of Rao Bahadur C.W. Thamotharam Pillai
by T.A. Rajarathnam Pillai
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
We thank Tamil Virtual Academy, Chennai for providing a PDF copy of this work
The text for this work was generated using Google OCR tool and subsequent proof-reading of the OCR output.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2023.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

T. A. ராஜரத்தினம் பிள்ளை எழுதிய
சி. வை. தாமோதரம் பிள்ளை அவர்கள் சரித்திரம்

Source:
ஸ்ரீமான் ராவ்பகதூர் சி. வை. தாமோதரம் பிள்ளை அவர்கள் சரித்திரம்
ஆசிரியர் : T. A. ராஜரத்தினம் பிள்ளை
(The Life of Rao Bahadur C.W. Thamotharam Pillai, B.A., B.L.,
By T.A. Rajaruthinam Pillai)
Published by N. Muniswamy Mudaliar, Proprietor, "Ananda Bodhini",
Madras, Copyright, 1934.
Printed at the Ananda Bodhial Press. Madras. !
-----------
"கண்ணுடையரென்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லாதவர்''.
Dedicated to the Revered Memory of the late
Sri La Sri Arumuga Navalar Avergal
,
As a token of Love and Esteem to His Person and
As a Humble Tribute to His Valuable Services towards the
Revival of Tamil Literature.
----------------

Preface

The study of the lives of great men wło have left their foot-prints in the sands of time enable the readers to emulate them and make themselves worthy citizens by following their example closely. The object of this volume is to enable the readers to appreciate in some degree the work of one of the greatest Tamil scholars of the nineteenth century, who by his profound learning, 'characteristic energy, great love for the Tamil language and literature and unswerving devotion to duty has earned a name scarcely paralleled in the history of Tamil Literature. It is therefore but right that the life and work of such an eminent Tamil Scholar 'should be recorded in Tamil for the benefit of the Tamil World.

The cold reception accorded in these days to Tamil publications coupled with the very little encouragement Biographers meet with, made the present author to hesitate for a while, but on the assurance of friends who happen to be acquainted personally with the subject of this biography the author boldly comes forward with this volume.

In writing out this book the author who has been associated with, the late Rao Bahadur Thamotharam Pillai for a long time puts matters clearly and concisely dividing the book into several chapters according to the subjects dealt with. The narrative begins with a full description. of the island of Ceylon and proceeds to detail the ancient history of the peninsula of Jaffna, the birth place of Mr. Thamotharam Pillai. A brief description of his family follows and then the birth, childhood, student career and official life are dealt with in succession, taking care to emphasise his work for the revival of Tamil Literature. His thoroughly disinterested labours in that cause holds him up to public esteem and honour and in order to give that fact a wide recognition the author has given a detailed history of the supposed origin of the Tamil language, its gradual development, the disasters it underwent, its subsequent triumph and its final decay, and has also mentioned the names of several important Tamil works which at one time served as invaluable jewels that added to the natural beauty of the Tamil nymph.. The author then traces the gradual decay of Tamil down to the present time and has fully described the labours of the subject of this life in redeeming ancient Tamil works which were at the verge of extinction. Sufficient information about each of the works so redeemed is also given and the whole narrative concludes with a summary of his life as man.

The book is written in elegant and chaste Tamil to suit Tamil student of the higher classes and contains enough matter for careful study. The various immemoriums composed by competent Tamil scholars at the time of the demise of Mr. Thamotharam Pillai have been also appended and the book has been made very interesting in every way.

The late Rao Bahadur C. N. Thamotharam Pillai has been known all over India and Ceylon for his scholarly attainments in Tamil. He combines in himself deep learning with practical work which is both rare and admirable. It is therefore hoped that this little volume will be cheerfully received by the Tamil world.

MADRAS,
5-5-34.       THE AUTHOR.
------------
தமிழுலகம் எங்ஙனும் புகழ்பெற்ற உத்தமதானபுரம்,
மகாமகோபாத்தியாய டாக்டர். உ. வே. சாமிநாத ஐயர் அவர்கள் எழுதிய முன்னுரை


ஒவ்வொரு வகையில் நற்காரியங்களைச் செய்து புகழ்பெற்ற லோகோபகாரிகளுடைய சரித்திரங்களைப் படித்தலால் நாம் அடையும் பயன்கள் மிகப் பல.

ஏறக் குறைய நாற்பது வருஷங்களுக்கு முன் சென்னையிலும் புதுக்கோட்டையிலும் கும்பகோணத்திலும் வெவ்வேறு லௌகிகத்துறைகளில் அமர்ந்தவரும், சென்னை ஸர்வகலாசாலையில் தமிழ்ப் பாஷா சம்பந்தமான சங்கங்களில் அங்கத்தினராக நெடுங்காலம் இருந்தவருமான யாழ்ப்பாணம் ராவ்பகதூர் சி. வை. தாமோதரம் பிள்ளையவர்களைப் பற்றித் தமிழறிஞர்கள் பலர் கேள்வியுற் றிருக்கலாம்.

இவரைப்போல் ஆங்கில பாஷையில் விசேஷமான பாண்டித்திய மடைந்து தமிழிலும் நல்ல பயிற்சியைப் பெற்றிருப்போர் இக்காலத்தில் மிகச் சிலரே யாவர். இவருடன் நான் நெருங்கிப் பழகியிருக்கிறேன்.

தமது ஓய்வு நேரத்தைத் தமிழாராய்ச்சியிற் பெரும்பாலும் செலவிட்டு வீர சோழியம், தொல்காப்பியச் சொல்லதிகாரம், தொல்காப்பியப் பொருளதிகாரம், இறையனாரகப் பொருள், இலக்கண விளக்கம், கலித் தொகை என்பவற்றின் மூலங்களையும் உரைகளையும், திருத்தணிகைப் புராணம், சூளாமணி என்பவற்றின் மூலங்களையும் பல ஏட்டுச் சுவடிகளைக் கொண்டு பரிசோதித்து முதன் முறை அச்சிற் பதிப்பித்து வெளியிட் டவர் இவரே.

இக்காலத்தில் தமிழில் பல துறைகளில் ஆராய்ச்சி செய்வோருக்குப் பெருந்துணையாக இருப்பன இவர் வெளியிட்ட புத்தகங்களாகும்.

இவருடைய சரித்திரத்தை விரிவாக வசன நடையில், ஸ்ரீமான் T. A. ராஜரத்தினம் பிள்ளையவர்கள் எழுதி அச்சிட்டிருக்கிறார்கள். இப் புத்தகத்தின் சில பகுதிகளை நான் படித்துப் பார்த்ததில், ஸ்ரீ தாமோதரம் பிள்ளையவர்களின் முக்கிய வரலாறுகளெல்லாம் நன்றாக சேர்க்கப் பெற்றுள்ளன வென்று தெரியவந்தது. யாவரும் நன்றாக அறிந்து கொள்ளும்படி கூடிய வரையில் நல்ல நடையில் இவ்வசன நூல் எழுதப் பெற்றுள்ளது.

தமிழ்ப் பயிற்சி யுள்ளவர்கள் இப்புத்தகத்தை வாங் கிப் படித்து இன்புறுவார்களென்று நம்புகிறேன்.

இங்ஙனம், வே. சாமிநாதையர்.
--------------------
பொருள் அடக்கம்

1 ஈழச் சிறப்பு – ஆரம்பஉரை 11 சூளாமணி
2 பிள்ளை அவர்களின் ஜனனம் 12 தொல்காப்பியம் எழுத்ததிகாரம்
3 இல்வாழ்க்கைச் சிறப்பு 13 குடும்ப விஷயங்கள்
4 பிள்ளையவயர்கள் ஏற்றகடமை 14 அரசினர் மதிப்பு
5 தொல்காப்பியம் 15 அகநாநூறு
6 வீர சோழியமும் தணிகைப் புராணமும் 16 வசன சூளாமணி
7 தொல்காப்பியம் பொருளதிகாரம் 17 பிள்ளையவர்கள் பிற்காலமும் மரணமும்
8. கலித்தொகை 18 முடிப்புரை
9 பிள்ளையவர்கள் நீதியதிபரானது அநுபந்தம் - சரம கவிகள்.
10 இலக்கண விளக்கம்
----------------------

ஸ்ரீமான் ராவ்பகதூர் சி. வை. தாமோதரம் பிள்ளை அவர்கள் சரித்திரம்

பரமபதி துணை
கடவுள் வணக்கம்

நேரிசை வெண்பா.
நித்தியனே நிட்களனே நின்மலனே யென்றுலகோ
ரித்திரையி லேதுதிக்கு மெம்பெருமான் -சித்துருவன்
முன்னோது வேத முழக்கிடநின் றாண்டருளு
முன்னோன் றுணையே முதல்.

ஆசிரிய வணக்கம்
நிலைமண்டில ஆசிரியப்பா.
செந்தமிழ் சற்றுஞ் செறிந்திலா வெனக்கி
னந்தமிழ் புகட்டிய நாவலன் வெண்மரைப்
பூமகள் வாழும் பொன்னகர்க் கணிதரு
சீர்பெறு தெல்லிச் செழுநக ருதித்தோன்
அம்பிகை பாக னடியிணை பரவுதும்
செம்பொருள் விளக்குந் தமிழ்ச்சுடர் விரித்து
மக்கட் களித்தநம் வித்தகன் றாமோ
தரப்பெரு மான்றன் றிருச்சரி தக்கே.
-----------

நூல் ஈழச் சிறப்பு
1. ஆரம்ப உரை

பூமலி தடங்களும் பொலன்மிகு வனங்களும்
தூமரு மைதவழ் வரைகளுமுடைத்தாய்க்
கள்ளவிழ் வெண்மரைக் காரிகை மேவும்

புண்ணியபூமியா மிப்பரதகண்டத்துக்குத் தென் பாலுள்ளதும், திருக்கேதீச்சரம், திருக்கோணேசர்மலை, ஏமகூடம் என்னும் மூன்று ஸ்தலங்களையும் மூன்று நேத்திரங்களாக வுடையதும், கடல்படு மமுதுங், கான்படுமமுதுந் தடவரையமுதுமென் றுலகராற் புகழப்படும் பல்திறத்தவாகிய வமுதங்கள் மலிந்து பொலிந்து விளங்குவதும், திருமால் இராமபிரானாயவதரித்து இராவண வதஞ்செய்த பெருஞ் சிறப்பினை- யுடையதும், இலங்கா தீவென்றுங் கந்ததீபமென்றும் மறுநாமம் பூண்டதும் ஈழ மண்டலமேயாம். இத்தீவு, புண்ணிய பூமியென்று புகழ்ந்து கொண்டாடப்படும் பரதகண்டமென்னும் இந்தியாவின் தென்கிழக்கில் சுமார் 36-மைல் தூரத்திலுள்ளது. இது சுமார் 172- மைல் நீளமும் 140- மைல் அகலமுமுடையதோர் சிறிய புராதன தீவு.

இலங்கைத் தீவு பல்வளங்களும் பொருந்தியதாதலின் சகல விதமான செல்வங்களுக்கும் உறைவிடமானது. அது முற்காலத்தில் இந்தியாவோடு சேர்ந்த ஒரே நாடாயிருந்தது. அதைப் புகழாத ஜாதியாரில்லை. ஸ்ரீ இராமபிரான் இராவணனைச் சங்கரித்த தேசமென்று இந்துக்கள் இலங்கையைச் சிறப்பித்துக் கூறுவர். ஆதியில் சிருஷ்டிக்கப் பட்ட முதல் மனுஷனும் ஸ்திரீயு மென்று கிறீஸ்தவர்கள் கூறும் ஆதாமும் ஏவாளும் பாதீசு என்னும் பூங்காவனத்தை விட்டுத் துரத்தப்பட்ட பின்னர் இலங்கையில் வந்து தங்கினார்களென்று மகமதியர் அதைப் பாராட்டுவர். கௌதம புத்தர் மும்முறை அதைத் தரிசித்தமையாலும், புத்த மதத்திற்கு உறை விடமா-யிருப்பதாலும் புத்த மதத்தவர்கள் இலங்கையைப் பரிசுத்தமான தேசமென்பர். சீனர் அதற்கு இரத்தின துவீபம் என்றும், பாரஸீகர் மாணிக்க துவீபம் என்றும், கிரேக்கர் பதுமராக துவீபம் என்றும் வெவ்வேறு பெயரிட்டிருக்கின்றனர்.

ஆங்கிலேயர் இலங்கையின் இயற்கை யமைப்பையும் செல்வாக்கையும் கருதி அதற்குக் கிழக்குத் தேசத்தின் ஏதேன் என்று பெயரிட்டிருக்கின்றனர். ஆயினும் பிற்காலத்தில் அதற்கு இலங்கை என்று இட்ட பெயரும், ஐரோப்பியர் சிலோன் என்று இட்ட பெயருமே இப்பொழுது வழங்கி வருகின்றன.

இவ்வழகிய தீவின் எவ்வெப் பகுதியினும் தென்னை, கமுகு, பலா, மா, கதலி முதலியவற்றா னிறைந்த சோலைகளும், மல்லிகை, முல்லை, இருவாட்சி சண்பகம் முதலியவற்றா னிறைந்த நந்தவனங்களும், முதிரை, பாலை, கருங்காலி, சந்தனம் முதலிய தருக்கணிறைந்த காடுகளும், அணியணியாகக் காணப்படும். ஈங்கு மகாமேருவின் பொற்சிகரம் பொருந்தப் பெற்றமையானும், ஈங்குள மலைநாடுகளின் கண் காப்பிச்செடி, தேயிலைச்செடி, கறுவா முதலியன ஏராளமாகப் பயிரிடப் படுகின்றமை யானும், சமுத்திரத்தின்கண் முத்து, பவளம், சங்கு முதலியன விளைகின்றமையானும், அடவிகடோறும் மதகரி மருப்பு, மான் கொம்பு, மயிற்றோகை முதலியன சிந்திக் கிடக்கின்றமையானும், ஆங்காங்கு நெல் வயல்களும் பண்டையரசினரா லியற்றப்பட்ட பெருந்தடாகங்களும் நிறைந்துள்ளமையானும் இஃதை ஈழமென்றல் காரணம் பற்றியேயாம்.

சீர மரீழச் சிரமென யாருஞ் சிறப்பித்துக் கூறத் தகுந்ததாய், அதன் வடதிசைக்கண் ணுள்ளதும், சிவாலயம், விஷ்ணுவாலயம், சுப்பிரமணியராலயம் முதலியவற்றாற் சிறப்புற்றதும், நகுலேசர்மலை, வில்லூன்றி யமுனாந்தி முதலிய புண்ணிய தீர்த்த ஸ்தலங்கள் நிறைந்துள்ளதும், செந்தமிழ்ப் புலவசிகாமணிகட் குறை விடமாம் பான்மையால் தமிழ்மாதுக் காடாங்கமாய் நின்றிலங்குவதும் யாழ்ப்பாண நன்னாடென்ப. பண்டைச் சிறப்பினும் இதிகாச மாண்பினும் மிக்கதாய் விளங்கு மிந்நாடு சேர சோழ பாண்டிய நாடுகள் போல் தமிழாசின பால் நெடுங்காலம் இராச்சிய பரிபாலனம் பண்ணப்பட்டு வந்தமையானும், இந்நாட்டின்கண் ஆதியிற் குடியேறினோர் மேற்கூறிய நாடுகளினின்றும் அவ்வந் நாட்டரச ராலனுப்பப்பட்ட உயர்தர வேளாளரும் பிராமணருமே யாதலானும், யாழ்ப்பாணம் தென்னிந்தியாவோடு மிக்க சம்பந்தமுடைத்தென்பது நன்கு புலப்படும்.

கிறீஸ்துவுக்கு 544- வருடங்களுக்கு முன் இலங்கா புரியை அரசாண்ட விஜயராஜன் மரபிற்றோன்றிய உக்கிரசிங்கன் எனும் மன்னன், சோழ தேசவதிபதியாகிய 'திசையுக்கிர சிங்கசோழனி’ன் புத்திரி மாருதம் புரவீகவல்லியை மணந்து இன்புற்றிருக்குங்காலை இவர்கட்கு, ஜெயதுங்கவர ராஜசிங்கனெனும் சுதனும், சண்பகவதி யெனுஞ் சுதையும் பிறந்தனர். அரசனும் தன் செல்வப் புதல்வனுக்குத் திருமுடிசூட்டி உலகாள வைத்துச் சின்னாட் பின்னரிறந்தனன் .

ஜெயதுங்கவர ராஜசிங்கன் திருமுடிசூடி அரசனா யினனெனுஞ் செய்தி சோழநாட்டிற் கெட்டியதும் அந் நாட்டுப் பிரபல வித்துவானும், கவிபாடி முன்னர் அநேக பரிசுகள் பெற்றவனும், யாழ்வல்லோனுமாகிய யாழ்ப்பாடி என்னும் பாணர் குலத்தானொருவன், அவ்வரசன் மீது புகழ்மாலையாக ஓர் பிரபந்தம் பாடி இராஜ சமஸ்தானஞ்சென்று யாழ் வாத்தியங்கையிலேந்தித் தன் கண்டத்தொனியா முதற்கருவியினாலும், யாழெனுந் துணைக் கருவியினாலுஞ் சங்கீதசாகித்திய முறைப்படி பாடிக் கொண்டாடினன். அரசனும் அவையுள்ளோரும் தத்தஞ் செவிகளை வாய்களாகக் கொண்டு கானரசத்தை அமிர்தம் போற்பருகிப் பாட்கன் கண்டத் தொனிக்கும் யாழ்த்தொனிக்கும் பேதமின்மைகண்டு வியப்புற்று ஆனந்தக்களிப் பெய்தினர்.

பின்னர் அரசன் பாடகனுக்குப் பரிசளிப்பான் கருதி தன்னாட்டினோர் பாகமாகிய ''மணற்றிடல்" என்னும் இந்நாட்டை யாழ்ப்பாடிக்குப் பரிசாக வீந்தனன். யாழ்பாடிப் பெற்ற காரணத்தால் யாழ்ப்பாடியும் இந் நாட்டிற்கு யாழ்ப்பாணமெனப் பெயர் சூட்டித் தென்னிந்தியாவிலிருந்து தன் மரபினரான சில பாணர்களைக் கொண்டு வந்து நாட்டைத் திருத்திக் குடியேற்றினான். அவர்கள் வெகு சிலரேயாவர். அவர்கள் மீன் பிடித்து ஜீவனம் செய்துவந்தனர். இவன் பின் சூரிய குலத் தோன்றலும் திசையுக்கிர சிங்க சோழனின் குடும்பத் துள்ளோனுமான சிங்கையாரின் என்பான், பின்னு மநேக தமிழ்க்குடிகளைத் தென்னிந்தியாவினின்றுங் கொணர்ந்து யாழ்ப்பாணமெங்கணும் பரப்பி நாட்டைச் சிறப்பித்தாசியற்றினன்.

இவ்வாறு தென்னிந்தியாவின் பற்பல பாகத்தி னின்றும் சென்ற உயர்தர வேளாளரே யாழ்ப்பாணத்துப் பிரதம தமிழ்க்குடிகளாமாதலின் யாழ்ப்பாணத்தார் இந்துக்களும் தக்கவேளாண் மரபினருமேயாவர். இவ்விதமாய் அக்காலத்தில் வந்து குடியேறினோர் யாழ்ப்பாணத்தின் ஒவ்வொரு கிராமத்தினுங் குடியேற்றப் பட்டு காலக்கிரமத்திற் பெருகி ஈற்றி லெங்குஞ் செறிந்தனர். இவர்கள் புரோகிதத்தின் பொருட்டு வரிக்கப் பட்ட அந்தணரும் ஆங்காங்குச்சென்று குடியேறிக் கோயிற் கடமைகளையேற்று நடாத்திவந்தனர். இதுவே யாழ்ப்பாண வரலாறு.

இவ்வியாழ்ப்பாணத்தின் திலகமே போன்று புண்ணிய தீர்த்த ஸ்தலமென்று ஈழமண்டல முழுதுங் கொண்டாடப்படுவது கீரிமலையின்கணுள்ள சிற்றருவி யாம். பூர்வகாலத்திற் சிவன் பார்வதி சமேதரா யிங்கு வந்து இவ்வருவிக் கணித்தாயுள்ள திருத்தம்பலைப்பதியில் வசித்துத் தமதுநாயகி ஸ்நானஞ் செய்தற் பொருட்டுக் கண்டகி தீர்த்தத்தை யழைத்து வைத்தமையே இவ்விடத்துத் தீர்த்தமகிமைக்குக் காரணமா மென்றும், பின்னர் அறு சக்கரவர்த்திகளி-லொருவனான முசுகுந்தன் காலத்திற், கீரிமுக முடைமைபற்றி நகுலமுனி யென் றழைக்கப்பட்ட தவத்தர் இச்சிற்றாற்றில் ஸ்நானம் பண்ணினமையால் அம்முகம் மாறிச் சிறந்த வதனத்தாரயின ரென்றும், அக்காரணத்தினால் 'இவ்வருவியும் அதைச்சார்ந்த சிறுகுன்றும் கீரிமலையெனப் பெயர் பெற்றதென்றும், எழுவள்ளலி லொருவனும் நிடத நாட்டு வேந்தனுமாகிய நளன் சூதாடி நாடுநகரிழந்த பின்னர் ஈங்குவந்து தீர்த்தமாடிக் கலிதொலைந்து சென்றன னென்றும், அர்ச்சுனன் தீர்த்தயாத்திரை செய்த போது இச்சிற்றருவியிலும் ஸ்நானஞ்செய்து போயின னென்றும் இதிகாசங்கூறும்.
-------------

2. பிள்ளை அவர்களின் ஜனனம்

இத்தகைய சிறப்பினையுடைய யாழ்ப்பாணத்திலே புத்தூரென்னு மரும்பதியைச் சார்ந்த சிறுப்பிட்டியென்னுஞ் சிறுகிராமத்தில் மாப்பாணமுதலி என்பாரொருவ ரிருந்தனர். இவர் பகீரத கோத்திரத்தோரும், வேளாண் மரபினரும் சன்மார்க்க நெறிபூண்டோரும், திரண்ட பூஸ்திதி யுடையரும் 'தொழுதூண் சுவையி னுழுது ணினிது'' என்னு முதுமொழியைக் கடைப்பிடியாக் கொண்டு பயிரிடுந்தொழிலையே யுடையராயு மிருந்தனர். இவர்தந் திருக்குமாரனாயுதித்தவர் வேலாயுதனென்பார். இவர்க்கு நெடுநாட் புத்திரசந்தான மில்லாதிருந்து ஈற்றில் அம்பலவாணன் என்னுமோர் பிள்ளை குலக்கொழுந் 'தாய்த் தோன்றியது. அன்னோர் புதல்வன் மூத்த தம்பி யெனும் அருங்கலை வினோதன். அவர்தந் தனையனா யவதரித்தவர் குருநாதர் என்னுந் திருநாமமுடையர். அவருதரக்கனியா அவதரித்த வயிரவ நாதபிள்ளை தமிழ்க் கல்வியை நன்குகற்றுத் தக்கபாண்டித்திய மெய்தியவோர் தமிழ்ப்பண்டிதர். ஆகவே வித்தியாதரிசித் தொழில் நடாத்திவந்தார். பின்னர் மன்றல் புரிவான் கருதித் தங்கிராமத்துக் கணித்தாயுள்ள ஏழாலைப்பதிமேவி மயில்வாகனன் புதல்வியாகிய பெருந்தேவி அம்மாளை மணந்து இன்புற்றிருந்துழி எழுவர் மகார் பிறந்தனர். இவருண் மூத்தவரே தாமோதரம்பிள்ளை யெனப்படுவர்.

ஆகவே பிள்ளையவர்கள், வேளாண்மரபினரும், தாளாண்மை , தயாளம், தருமசிந்தை முதலியவற்றிற் சிறந்தோருமாக விளங்கிய மாப்பாண முதலியார் வமிசத்தவரென்பது தானே பெறப்படூஉம். இஃது, பிள்ளையவர்கட்குப் பௌத்திரன் ஜனன மாயின்போது ஆனந்த 'மேலீட்டினால் அவர்கூறிய பின்வருஞ் செய்யுளானுந் தெளியக்கிடக்கும்:

'சிற்றூர்ப் பகீரதி கோத்திரனாய் வேளாண்
      டிகழ்மாபோன் மாப்பாண முதலி மேனாட்
பெற்றனன்வே லாயுதனை யவன்றன் மைந்தன்
      பேர்மலியம் பலவாணன் மூத்த தம்பி
யுற்றானன் னோற்கவன் சேய் குருநா தேந்த
      லுதவுவயி ரவநாதா சிரியன் றந்த
சொற்றார்தா மோதரனுக் கமிர்த லிங்கன்
      சுதன்றியாக ராசனவன் றோன்றன் மாதோ.''

தாமோதரம்பிள்ளை 1832௵, செப்டம்பர் 12௴ பிறந்தனர். பிறந்த இப்பிள்ளைக்கு உரியகாலத்தே நாம கரணம், அன்னப் பிராசனம், வித்தியாரம்பம் முதலிய சுப கருமங்கள் செய்யப்பட்டன. பின்னர்த் தமது தந்தை யாரிடத்தே வாக்குண்டாம், நன்னெறி மூதுரை முதலிய நீதி நூல்களையும், திவாகரம், உரிச்சொல் நிகண்டு முதலிய வேனைய நூல்களையும் கற்பாராயினார். கற்குகாளிலே தமிழ்க் கல்வியைப் பின்னுமதிகமாகக் கற்றல் வேண்டு மென்னும் பேராசை மேலிட்டமையால், தம திருப்பிடத்துக் கருகாமையிலிருந்தவரும் அக்காலத்துச் சிறந்த வித்துவான்களி- லொருவருமான முத்துக்குமார நாவலரிடத்தணுகி, நைடதம், இராமாயணம், பாரதம், கந்தபுராணம் முதலிய அரிய நூல்கட்குப் பொருள் கேட்டும், இலக்கணப் பயிற்சி செய்தும் வந்தார். நாவலரும் தம்பால் நண்ணிய மாணவன் திறமையை வியந்து சிறிதும் லோபகுணமின்றிக் கல்விபயிற்றினராகவே இவரே பிள்ளையவர்களின் பிரதமவாசிரியராயினர். இஃது தாமோதரம் பிள்ளையவர்கள் தாம் பிற்காலத்துப் பதிப்பித்த தொல்காப்பியப் பதிப்புரையின்கண் ஆசிரிய வணக்கங் கூறுமிடத்து,

"கற்றறி வில்லாக் கடையனேன் றனக்கு
நற்றமிழ் கொழுத்திய நாவலன் சுன்னை
முத்துக் குமார வித்தக னடியிணை
சித்தத் திருத்தி'' '

என்று கூறியவாற்றானே நன்கு புலப்படும்.

இப்படியே தமிழ்க் கல்வி கற்று வருநாளில் ஆங்கில கல்வியையுஞ் சிறிது கற்றல் வேண்டுமென்னு, மபிப்பிராயங் கொண்டு யாழ்ப்பாணத்துப் பேரூராய் விளங்குந் தெல்லியம்பதிமேவி ஆங்குள்ள அமெரிக்கன் மிஷன் கலாசாலையிற் சிறிதுகாலம் கல்விகற்றார். பின்னர் உயர்தரக் கல்விகற்பான் கருதி, அப்பதிநீத்து வட்டு நகர் மேவினர் யாழ்ப்பாணச் சர்வசாஸ்திர கலாசாலை (Jaffna seminary) என்னுந் திருநாமம் பூண்டதும், 1824௵ அமெரிக்கன் மிஷன் சங்கத்தாராலனுப்பப் பட்ட பூர் பண்டிதரால் (Doctor Poor) ஸ்தாபிக்கப் பட்டதுமான அக் கலாசாலையே யாழ்ப்பாணம் முழுவதிலும் அக்காலத்தில் உயர்தரக் கல்வி பயிற்றுவதில் முதன்மை பெற்று விளங்கியது. கல்வியின் மகிமை நன்கு புலப்படாத அந்நாட்களில், பரசமயிகளாகிய யாழ்ப்பாணி-கட்குக் கல்வியறிவுறுத்தும் வண்ணம் அக் கல்விக் கழகத்தை ஸ்தாபித்த அமெரிக்கன் மிஷனைச் சேர்ந்த பாதிரிமார் செய்த பெருநன்றி தலைமுறை தலை முறைக்கும் எம்முளத்தை விட்டகலற்பாற்றோ?

பண்டைக் காலத்து மதுரைச் சங்கமே போன்று ஆங்கில மாதினாடாங்கமெனப் பெயர் பெற்று, பெருங் கீர்த்திவகித்த இக் கலாசாலையில், கணித சாஸ்திரம், தத்துவ சாஸ்திரம், நியாய சாஸ்திரம், ககோள சாஸ்திரம், இரசாயன சாஸ்திரம், பூபந்த சாஸ்திரம், இலக்கணம், இலக்கியம் முதலிய பல் திறப்பட்ட உயர்தர வித்தைகள் தக்க வாசிரியரால் நன்கு கற்பிக்கப்பட்டன. தமிழெனும் மாது தன்னொளி பரப்பி, உறைதரும் பான்மையா லுலகெலாம் பெயர் பெறும் முத்தமிழ்க் கவி சொல்லுத்தமக் கவிகள் செறிந்துள்ளது யாழ்ப்பாணமே யாதலின் இக்கலாசாலையிற் றமிழ்க் கல்வியும் விசேஷமாய்க் கற்பிக்கப்பட்டு வந்தது. இக் கலாசாலையில் தாமோதரம்பிள்ளை 1844 ௵ அக்டோபர் தமது பன்னிரண்டாம் பிராயத்திற் சேர்ந்தனர்.

சேர்ந்ததின முதற் தங்கல்வியிற் கண்ணுங் கருத்து முடையவராய்க் கற்று வந்தனர். இக் கலாசாலையில் இவர் ஆசிரியராயிருந்தோர் கனம், சீ.டீ. மில்ஸ், ஆசிரியர் நெவின்ஸ், ஆசிரியர் லைமன், ஆசிரியர் றயிஸ்; ஆசிரியர் பிறைக்கென்றிச், ஆசிரியர் காறல், வித்துவான் கதிரைவேற்பிள்ளை முதலியோரே. "வளரும்பயிரை முளை யிலே தெரியும்" என்ற முதுமொழிக் கிணங்கத் தாமோ தரம் பிள்ளையும் தாம் பிற்காலத்திற் பிரசித்தி யடையக் கூடியவ ரென்பதை அப்பொழுதே காட்டி வந்தனர். வகுப்பின் முதன் மாணவனாயிருந்ததுமன்றித் தமக்குக் கலை பயிற்றிய ஆசிரியர்தம் பெருமதிப்பையும் அன்பை யும் பெற்று அவர்பா லிடையறாப் பத்தியுடைய ராயினர். தினந்தோறுந் தாம் படிக்க வேண்டிய பாடங்களைக் கற்று, இடையில் நேருங் காலங்களைத் தம்முடன் கூடக் கல்வி கற்கும் மாணவருக்குத் தெரியாத் விஷயங்களை விளங்கப் படுத்துவதிலும், தமக்குத் தெரியாத விஷ யங்களைத் தம்மாசிரியரிடத்தில் வினாவித் தெளிவதினுங் கழித்து வந்தார். அவப்பொழுதினுந் தவப்பொழுதே விசேடமுடைத் தாகலின் அவர் தமக்குக் கிடைத்த காலத்தில் ஒரு கணமேனும் விண் பொழுதாகக் கழிக் காது தமது வேலையிற் சிரத்தை யுடையவராயிருந்தமை யால் அவராசிரியர் அவர்மீது விசேஷ பிரீதியுடையவரா யினர். கலாசாலைப் பரீட்சைகளில், தாமோதரம் பிள்ளை யவர்கள் கணித சாஸ்திரம், தத்துவ சாஸ்திரம், வான சாஸ்திரம், ஆங்கிலம் முதலியவற்றில் முதன்மை யடைந்து பரிசுகள் பெற்றுக் கீர்த்தியடைந்தனர்.

பிரபல தமிழ் வித்துவானாகவிருந்து இறந்துபோன நெவின்ஸ் ஆசிரியர், பிள்ளையவர்களுக்கு அக்காலத் திருந்த தமிழ்ப்பாண்டித்தியத்தை நன்கு மதித்து, அவர் மாணாக்கனா யிருந்தகாலத்தே அவருக்குப் பண்டித' னெனுந் திருநாமஞ்சூட்டித் தமிழ் பாஷை அவரால் மிக்க சிறப்படையுமென்றுங் கூறினர். அவர் கூறிய திருவாக்கு எவ்வாறு பயன்பட்ட தென்பதைத் தமிழுலகத் துள்ளோர் யாவருமறிவர். கலாசாலையில் மாணவராயிருந்த காலத்தில் இவர் மற்றைய வித்தியார்த்தி கட்கோர் முன் மாதிரியாய் விளங்கினமையால் யாவருமிவரிடத்து மிக்க அன்பு பாராட்டி இடையறாப் பற்றுடையராயி னர். சில காலம் சென்னையின் கண் புரசபாக்கத்தில் வசித்த ம-ள-ள-ஸ்ரீ சிந்தாமணி வேலுப் பிள்ளை, திருக் கோணேசர் மலையின்கண் பிரபல நியாய துரந்தரராக விருந்து இறந்துபோன ம--ள-ள-ஸ்ரீ வயிரவநாத பிள்ளை அம்பலவாண பிள்ளை, அவர் சகோதரரும் நெல்லூர் அரசாங்க வயித்திய சாலை இரண வயித்தியரு மாக விருந்து இறந்துபோன வயிரவநாத பிள்ளை சிதம் பரம் பிள்ளை ஆகிய இம்மூவரும் தாமோதரம் பிள்ளை யவர்களுடன் ஒரு சாலை மாணவராய் கல்வி பயின்றன ராகவே இந்நால்வரும் மிக்க நண்பராயினர்.

இந்நண்பு காரணமாகவே முன்னர்க்கூறிய வேலுப் பிள்ளையவர்கள், இவருடன் நெடுங்கால சம்பந்தமுடை யராய் எங்குச் சென்றாலும் எங்கிருந்தாலும் இருவரும் ஓரன்னை யுதரத் தவதரித்த புத்திரரே போன்று ஒரு வரையொருவர் மனப்பூர்வமாய் நேசித்துப் பூரண கேண் மையின் றன்மை இஃதென விளக்கிக் காட்டினர். இரு வருஞ் சென்னையில் வசித்த காலத்து நேரிலும், இவருள் ஒருவர் வெளியூரில் வசித்த காலத்துக் கடித மூலமாக வும் தங்கள் சிநேகத்தைப் பலப்படுத்திக் கொண்டே வந்தமையால் தாமோதரம் பிள்ளையவர்கள் தமது பிற் காலத்தைச் சென்னையிற் கழிக்குமாறு தீர்மானித்து, சென்னையிற்றாம் வசிப்பதற்கேற்ற வேறிடங்களிருப்பினும் அங்குச் செல்லாது தமது நண்பர் வசிக்கும் புரச பாக்கத்தையே சார்ந்து அவாகத்துக் கணித்தாயுறைந் தனர். இவர்கள் சிநேகம் இவர் மட்டினில்லாது இவர்கள் குடும்பங்களுக்கும் தாவியதால் இரு குடும்பங்களு மொரே குடும்பமா மென்றே பார்ப்போர் கருதுவர். எவ் வித இரகசிய விஷயமாயினும் குடும்ப காரியத்திலும் மற்றெவ் விஷயத்திலும், ஒருவர்க் கொருவர் சொல்லி நன்றாய் ஆலோசனை செய்த பின்னன்றிச் செய்யார். இவ்வாறு ஒருவரை யொருவர் நன்கு மதித்த இருவரை இங்குள்ள எம் யாழ்ப்பாணத்தவர்களுட் காண்பது அரி தென்றே சொல்லுவோம். தாமோதாம் பிள்ளையவர்கள் 'நோயாளியாயிருந்த காலத்தும், இறந்த காலத்தும் வேலுப் பிள்ளையவர்களும் அவர் குடும்பத்தாரும் பிள்ளை யவர்கள் குடும்பத்தாரோடு கூடவிருந்து தம்மாலாக வேண்டிய வுதவி யாவும் புரிந்து, தம் நண்பருக்குச் செய்யவேண்டிய கடமை யாவையும் மித்திர பங்கம் நேராது நிறைவேற்றினர். தஞ்சிநேகித ரென்று முரித் தைக் கொண்டன்றோ தாமோதரம் பிள்ளையவர்களும் தாமியற்றிய மாண சாதனத்தில் இவரை முக்கிய அதிகாரியாக நியமித்து, தமது ஆஸ்தி முழுவதையுமிவர் பராமரிப்பின் கீழ் விடுத்திறந்தனர்.

இத்தகைய நண்பரோடு தாமோதரம் பிள்ளையவர்கள் கலாசாலையில் தமக்குக் குறிப்பித்த எட்டு வருட காலத்தைப் பூர்த்தி செய்து 1852-ம் 5 செப்டெம்பர்மீ 23உ தமது இருபதாம் பிராயத்தில் கலாசாலைக் கல்வியை அதிக கீர்த்தியோடு முடித்து அரங்கேறினர். அரங்கேறிய பின்னர் யாழ்ப்பாணத்துக் கோப்பாய்ப் போதனா சக்தி வித்தியாசாலை ஆசிரியருளொருவராய் நியமனம் பெற்று அக்கடமையை நடாத்தி வந்தார். இதுவே இவர் முதன் முதலேற்ற உத்தியோகம். இவ் வுத்தியோகத்தை வகித்துச் சிறிது காலம் கடமை பார்த்துவாவே, இவரைக் குறித்து அடிக்கடி கேள்விப் பட்டிருந்த பேர்சிவல் துரையவர்கள் (Rev. P. Perci val) இந்தியாவிற்றாம் நடாத்தி வரும் “தினவர்த்தமானி" என்னுந் தமிழ்ப் பத்திரிகையின் பத்திரிகாசிரியராக வருமாறு பலகாலும் வேண்டினமையானும், கோப்பாய்ப் பதியிற்றாம் நடாத்திவரு முத்தியோகம் போதியவாறு ஊதியந்தாராமையானும், அவ்வுத்தியோகத்தைப் பரித் தியாகஞ் செய்து, சென்னையம்பதி மேவி, பழம் நழுவிப் பாலில் விழுந்தாலொப்பத் தினவர்த்தமானிப் பத்திரிகா சிரியராயினர்.

தமிழ்ப் பத்திரிகைகள் மிகக் குறைவுற்றிருந்த அந் நாட்களில் இத் தினவர்த்தமானி யொன்று மாத்திரமே சென்னை இராஜதானி யெங்கணும் பிரசித்தி பெற்று நாளாந்தரம் பிரசுரஞ் செய்யப்பட்டு வந்தது. தாமோ தர்ம் பிள்ளை தினவர்த்தமானிப் பத்திராதிபரானதும் பத்திரிகைக்கு நல்ல யோகம் பிறந்ததெனப் பலர் கரு தினர். இவரால் எழுதப்பட்டு அப்பத்திரிகையின்கட் டோன்றிய அநேக கடிதங்கள் பல முக்கிய விஷயங் களைக் குறித்தனவாயும் பொதுஜன நலங் கருதியனவாயும், பாஷை நடையிற் சிறந்தனவாயும், அணியலங்கா சம் பொருந்தியனவாயும் விளங்கினவென்பது, பிள்ளை யவர்களிடத்திருந்து எமக்குக் கிட்டிய சில கடிதங்களால் நன்கு புலப்படுகின்றன. தமிழ்ப் பாஷையைச் சிறந்த தெளிந்த நடையில் அணிபெற வமைத்தெழுதும் பெரும் பாக்கியம் இவரிடத் திருந்தமையானே பத்திரிகை நாளாவட்டத்தில் மிகத் திருத்தமடைந்து இணை யிலாப் பத்திரிகையெனப் பிரசித்தி பெற்றது.

பத்திரிகாசிரியரா யிருப்பதோடுமாத்திரம் நில்லாது பிள்ளையவர்கள் ஆங்கிலேயருக்குத் தமிழ்கற்பித்தலினுந் தம்புலனைச் செலுத்திவந்தார். அக்காலத்திற் பேர்போன ஆங்கிலேயப் பிரபுக்களும், தக்க மரபினரும், சிறந்த உத்தியோகஸ்தருமாயிருந்த பேர்ணல் பண்டிதர் , சேர் உவால்றர் எலியெற், மிஸ்டர் லஷ்சிங்டன் முதலினோர் இவரிடத்தே தமிழ்க்கல்வி பயின்றனராம். ஆகவே ஆசிரியராய்த் தங்கடமையைச் செலுத்தியதோடுங்கூட அப்பெரிய பிரபுக்கள் நண்பையும் பெருமதிப்பையும் பெற்றனர்.

இவ்வாறு பிரசித்தியடையவே தமிழ்ப்பாஷையில் இவருக்குள்ள திறமை இராசாங்கத்தார்க்கு எட்டினமையால், அவர்களும் இவரைச் சென்னை இராசதானிக் கல்லூரித் தமிழ்ப் பண்டிதராய் வருாறு வேண்டினர். அவ்வேண்டுகோளுக் கியைந்து பிள்ளை யவர்கள் அக் கலாசாலைத் தமிழ்ப்பண்டிதராக நியமனம் பெற்றார். ஈங்கு தமிழ்ப்புலமை நடாத்தி வருங்காலத்துச் சென்னைச் சர்வகலாசாலை ஸ்தாபிக்கப் பெற்றமையால் அதன் பரீட்சைகளுக்குச் சென்று சித்தியடைய வேண்டுமென்னும் பெருவாஞ்சை அவர்பாற் குடிகொண்டதாகவே சர்வசலாசாலையாரால் 1857௵ முதன் முதல் நடாத் தப்பட்ட பிரவேச பரீட்சைக்குச் சென்று சித்தி யெய்தினர். இவ்வருடம் அப்பரீட்சையிற்றேர்ந்த மூவரில் இவர் ஒருவர். அடுத்த நான்கு திங்களுட் சர்வ கலாசாலையாரின் முதல் பி-ஏ, பரீட்சையும் நடத்தப்பட்டது.

இப்பரீட்சைக்கும், பிள்ளையவர்களும், யாழ்ப்பாணத் துச் சர்வசாஸ்திர கலாசாலையில் அவர் ஆசிரியராயிருந்த விசுவநாத பிள்ளையுமாகிய இருவருமே சென்று கீர்த்தி யோடு சித்தியடைந்தனராகவே, பிரதம பரீட்சையைக் கடந்து, "யாங்கடந்து சென்றோம் எம்வழியே நீவிரும் வம்மின்" என்று மற்றையோர்க்கு வழிகாட்டிப் புகழ் நாட்டி ஈழமண்டலத்துக்கு வாகை மாலை சூட்டிய விரு யாழ்ப்பாணத்தாருள் ஒருவர் இவரேயன்றோ?

பி - ஏ. பரீட்சையிற் சித்தியெய்தியவுடன் பிள்ளை யவர்கள் கள்ளிக்கோட்டையிலுள்ள இராசாங்க வித்தி யாசாலை உதவியாசிரியராக மாற்றப்பட்டு ஆங்குச் சென்றார். அவர் அங்குச்சென்ற ஆறுமாசங்களுள் வித்தியா சாலையில் எவரும் பிரமிக்கும்படியான விசேட திருத்தங்கள் காணப்பட்டன. அக்காலத்தில் வித்தியாதரிசி யாயிருந்த கர்னல் . ஏ .சி. பீயேர்ஸ் துரையவர்கள் அவ் வித்தியா- சாலையைத் தரிசித்தபோது அவரால் அக்கலாசாலைக்கு விளைந்த நன்மைகளை நேரிற்கண்ணுற்று அவரை வியந்து கொண்டாடியது மன்றி, கலாசாலையைக் குறித் துத் தாமெழுதிய அறிக்கைப் பத்திரத்தில் அவரைப் பல வாறு புகழ்ந்து மெழுதியிருக்கின்றனர். இவ்வாறு ஆசி சியராய்ப் பிரசித்து பெற்று வருநாளில் பிள்ளையவர்களி டத்துத் தமிழ்க்கல்வி கற்றவரும் அவரிடத்து மிக்க வபிமான முடையருமான லஷ்சிங்டன் துரையவர்கள் அவரிடத்துள்ளவரும் பெருங் குணங்களை யுணர்ந்து அவ ரைச் சென்னையின்கணுள்ள இராஜாங்க வரவு செலவுக் கணக்குச் சாலையில் உயரியதோர் உத்தியோகத்தமைத்தனர்.
----------------

3. இல் வாழ்க்கைச் சிறப்பு

இவ்வாறு உத்தியோக உயர்வு பெற்றுச் சிறப்புற்று வருநாளில் அவர் உறவினர் அவரை இல்வாழ்க்கைக்குட் படுத்தவுன்னி விவாகஞ் செய்துகொள்ளுமாறு பலகாலு மேவினர். இல்லறம் துறவற மென்னுமிரண்டனுள் இல்லறமே சிரேஷ்டமென்னுங் கொள்கையுடைய ராதலின் அவரும் அதற்குடன்பட்டு, தெல்லியம்பதிமேவி காலிங் கராய முதலியார் கோத்திரத் துதித்தவரும், தம் பள்ளித் தோழராய்க் கல்விகற்றவருமான மேற்கூறிய வயிரவ நாதர் அண்பலவாண பிள்ளை யவர்களோடு தமக்குக் கலாசாலையின் கண்ணே யுண்டாய நட்பை நிலை நிறுத்துமாறு அவர் சிற்றன்னையாரு தரத்தில் புத்திரியா யவ தரித்த வள்ளியம்மையைப் பாணிக்கிரகணஞ்செய்து சின்னாளின் புற்றிருந்தனர். பின்னர் இவர் மனைவியார் இரண்டு குழந்தைகளைப் பெற்று நோய்வாய்ப்பட் டிறக் கவே, அவர் சகோதரியாகியநாக முத்தம்மாளை 1860௵ மணம் புரிந்தனர். இம்மாது சிரோமணியும் பர்த்தாவுக்கேற்ற பதிவிரதையாய், நாண் மடம் அச்சம் பயிர்ப்பு என்னும் நான்கிலக்கணங்களும் விளங்கப் பெற்றவராய், "ஒழுக்க முயர்குலத்தினன்று'' என்னு மூதறிவாளர் மொழி தனக்கேற்ப மிக்க ஒழுக்க முடையரும், ஈஸ் வரபக்தியுடையரும், சாந்தசீலியும், தரும சொரூபியும், எவரையும் இதவுரையாற் பிரியப்படுத்துஞ் சற்குண பூஷணியுமாகி "குலமகட்குத் தெய்வங் கொழுநனே'' என்னும் ஆன்றோர் திருவாக்கைச் சிரமேற்கொண்டு தன் சுயமதியே மதியென்று கந்து சாயாது தன்கணவ னைத் தெய்வம் போலப் பூசித்து அவர் திருவாக்குக்கெதிர் வாக்கிடாது ஒருயிரு மீருடலும் போன்று இல்லற தருமத்தை நடாத்திவந்தார். இம்மன்றற் பேறாயுதித்த குழந்தைகள் அறுவர். அவருண் மூத்தோராகிய சி.தா. கனகரத்தினம் பிள்ளை பாலவயதிலிறந்தனர்.

இரண்டாவதான சி.தா. அமிர்தலிங்கம்பிள்ளை யென்பார் ஆங்கிலம் தமிழெனு மிரண்டினும் வல்லவ ராய் எவராலும் மதிக்கப்பட்டுத் தந்தைக்கேற்ற மைந்தனாகி விளங்கினர். சாலை விநாயகர் பிள்ளைத் தமிழ் என்னும் பிரபந்தத்தைச் சிறுபிராயத்தே பாடி வெளியிட்ட வருமிவரே. இல்வாழ்க்கைக்குட்பட்டுத் தியாகராசன் என்னும் ஒரு புத்திரனையும், அன்னம்மாள் என்னும் ஒரு புத்திரியையும் பெற்று, 1889௵ தமது 26 - ம் வயதில் நோய்வாய்ப் பட்டிறந்தனர். இரண்டாவது குழந்தையா யுதித்த பொன்னம்மாள் என்னும் புத்திரி, யாழ்ப்பாணத்துத் தெல்லிப்பழை மு. இராசரத்தினம் பிள்ளையவர்கட்கு மனைவியாகிச் சின்னாள் இல்லற தரும் நடாத்திப் புத்திரபாக்கியம் பெறாதிறந்தனள். மூன்றாவதாய சி.தா. சோமசுந்தரம் பிள்ளையும் தமது பதினாறாவது வயதில் இறந்தனர். நான்காவதாயுதித்த சி.தா. அழகசுந்தரம் என்பவரே தற்காலத்தில் உயிரோடிருப்பவர். ஐந்தாவ தாயுதித்த சிவபாக்கியம் என்னும் புத்திரியும் தாமோதரம்பிள்ளை யவர்களின் மைத்துனரும், நெல்லூர் இரண வைத்தியருமாயிருந்து இறந்துபோன ச. வ. சிதம்பரம் பிள்ளை யவர்களுடைய கனிஷ்ட குமாரன் தெ.சி. தில்லை நாயகம் பிள்ளையை மணந்து சின்னா ளின்புற் றிருந்து பிரசவத்தில் நேர்ந்த நோய் காரணமாய் 1896௵ இறந்தனள். முதற்றாரத்துப் பிள்ளைகளிருவரும் தம தன்னையாரிறந்து சிறிது காலத் துள்ளிறந்தனராகவே சி. தா . அழகசுந்தரம் ஒருவரே அவர் பிள்ளைகளுள் இக் காலத்தில் எஞ்சி நின்றனர். இவர் மேற்கூறிய டாக்டர், ச. வை. சிதம்பரம் பிள்ளையவர்கள் கனிஷ்ட குமாரத் தியை மணந்து இரு புதல்வரைப் பெற்று ஈழமண்ட லத்தின் இராசதானியாகிய கொளும்பில் வசிக்கின்றார்.

இடிமேலிடி யிடித்தாற்போல ஒருவர் பின்னொருவ பாய் மனைவியரிருவரு முயிர் துறந்தமை பிள்ளையவர்கட் குப் பெரு வியாகுலத்தைத் தந்ததாயினும், அம்மனை வியர்பாலுதித்த குழந்தைகள் அக்காலத் துயிரோடிருந் தமையால் அவர் துயர் ஒருவாறு நீங்கியது.

பிள்ளையவர்கள் தந்தையார்க்குச் சற்புத்திரரா யுதித்தவர் எழுவரென்றும் இவருள் தாமோதரம்பிள்ளை யவர்களே சிரேஷ்டரென்றும் முன்னர்க் கூறியுள்ளேம். பிள்ளையவர்கள் சிறுபிராய முடையரா யிருந்தபோதே தந்தையார் இறந்தமையாற் குடும்ப சம்ரட்சணை செய் தல் தமது கல்விப் பொறுப்பு, தம்பிமாருக்குக் கல்வி கற்பித்தல், அவர்கட்கு உத்தியோகஞ் சம்பாதித்துக் கொடுத்தல், விவாகஞ் செய்துவைத்தல் ஆதியாங் குடும்ப கடமைகள் யாவும் அவர்மேற் பொறுத்தன.

ஆயினும் நமது பிள்ளையவர்கள் அக்கடமைக ளனைத்தையும் செவ்வனே நிறைவேற்றிச் சகோதரரனை வரும் தக்கவாறு, கல்வி பயிலச் செய்து, அவர்களைத் தக்க பெரிய உத்தியோகங்களில் அமர்த்தி, ஒவ்வொருவருக்கும் மணஞ்செய்து பேருவகை யடைந்தனர். அவர்களனைவரும் பின்னால் இறந்து பட்டனரே யாயி னும் அவர்களுடைய குடும்பங்கள் ஆங்காங்கு பெரும் புகழோடு விளங்கிக் கொண்டிருக்கின்றன. பிள்ளையவர்கள் தஞ்சோதரர் பொருட்டு இயற்றிய சற்கருமங்கள் யாவும், பிள்ளையவர்கள் மாட்டு அவர்கள் கொண்டிருந்த பேரன்பும், அவர்களுடைய சகோதரர்களிலொருவரான சி. வை. சின்னப்பா பிள்ளை தமது சகோதர ரிறந்த போது சொல்லிய பின்வரும் கவியாற் புலப்படும் :

"தந்தை யெமை யிளவயதிற் றணத்திடநீ .
      யன்று முதற் றந்தை யாகி
வந்தபல விடாகற்றி வாழ்வெமக் கீண்
      டளித் துவந்து வந்தாய் யுன்றன்
சிந்தைமிக நொந்திடயாஞ் செய்தபிழை
      பலவெனினும் சிந்தியாது
முந்தையினு மருள்சுரந்த முன்னவனே
      யினியென்றுன் முகங்காண் போமே.''

மேற்கூறிய சி. வை. சின்னப்பா பிள்ளையவர்கள் தமிழ்ப் பாஷையை நன்கு கற்றுத் தக்க தமிழ் வித்துவா னாயும் விளங்கியவர். இக்காரணத்தினாலேயே நமது தாமோதரம் பிள்ளை அவர்களும், அவர்மீது விசேஷ பிரீதியுடையவராய், அவருக்குத் தமிழ்க் கல்வியை நன்கு புகட்டியதுமன்றித் தாம் பதிப்பித்த நூல்கள் ஒவ்வொன்றினும் முதற் பிரதியை அவருக்கு அனுப்பு வித்தும் வந்தார். செய்யுளிலக்கணத்தில் விசேஷ பயிற் சியும் பாண்டித்தியமு முடையராகலின் இவரியற்றிய பாக்கள் செவிக்கின்பம் பயத்தலானும் நுதலிய பொருளைச் செவ்வனே தருதலானும் மிகச் சிறந்தனவெனக் கொண்டாடத் தக்கனவா யிருக்கின்றன.

பிள்ளையவர்கள் குடும்பம் மிகப் பெரியதென்பது ஈண்டு கூறியவாற்றானே தெளிவாகின்றது. தம் சகோ தாருக்குக் கல்வி பயிற்றுவித்தல், உத்தியோகம் சம்ப தித்தல், விவாகஞ் செய்துவைத்தல் முதலிய கடமைக ளைச் செலுத்தியதோடு தம் மைத்துனர், சாதாரண சுற் றத்தவராகிய அநேகருக்கும் இவ்வித அரியவுதவிகள் செய்யும் பொருட்டு அவரையேவிய பெருங்குணம் வியக் கற்பாலதே. கல்வி கற்பதில் மெய்விருப்புடையரா யிருந்து அவ்வாறு கற்பதற்கு நிர்வாகமில்லாது தம்மை . "யடைந்தவர்க்கு உதவி செய்யாது மறுத்தாரென்பதை யாம் கேட்டதில்லை. இவர் முழுப்பொறுப்பிலும், பெரும் பாலும் இவர் உதவியைக் கொண்டும் கல்விகற்றுச் சிறந்த பதவியை யடைந்தவர் அநேகருளர். இக்காரணத்தினாலும், தமிழ் ஆங்கிலம் எனுமிரண்டினும் அவருக்குள்ள பூரணபாண்டித்தியத்தினாலும் பிள்ளையவர்கள் சென்ற விடமெல்லாம் சிறப்புடன் கணிக்கப்பட்டு வந்தனர்.

"மன்னனு மாசறக் கற்றோனுஞ் சீர்தூக்கின்
மன்னனிற் கற்றோன் சிறப்புடையன் - மன்னனுக்குத்
தன்றேய மல்லாற் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்றவிட மெல்லாஞ் சிறப்பு.''

என்னு முதுமொழியின் சிறப்பு இவரிடத்தே காண்ட லாகும். ஆகவே அதிகண்ணியமுற்றுச் சிறப்படைந்த யாழ்ப்பாணத்தவருள் இவர் ஒருவரென் றுறுதியாய்ச் . சொல்லுதல் கூடும்.

சென்னை வரவு செலவுக் கணக்குச்சாலையின்கண் உத்தியோகத் தமர்ந்த பின்னர், பிள்ளையவர்கட்கு அவ்விடத்தில் அதிக வேலையிருந்தாலும் தமக்ககப்பட்ட சாவகாசம் முழுவதையும் பண்டை நூலாராய்ச்சிக் கென்றே செலவிடத் தீர்மானித்து "தொட்டனைத் தூறு - மணற்கேணி மாந்தர்க்குக், கற்றனைத் தூறு மறிவு'' என்னும் திருவள்ளுவர் வாக்கின் சாரத்தை யுணர்ந்து, தாம் முன்னர்க் கல்லாத அநேக விஷயங்களை ஏட்டுப் பிரதி கள் மூலமாகவும் தம்போ லொத்த பண்டிதர் மூலமாகவும் கற்றுவந்தார். ஆயினும் தாமேற்ற கடமையில் ஒரு குறைவும் நேராது நடாத்தி வந்ததுமன்றித் தாமுத்தி யோகத்தை வகித்த காலத்து, தமக்கு மேலதிகாரிகளா யிருந்த துரை மக்களுடைய நண்பையும் அன்பையும் பெற்று அவரால் நன்கு மதிக்கப் பட்டனரென்பது அவர்களிருவருக் களித்த யோக்யதா பத்திரங்களாற் றெள்ளிதிற் புலப்படுகின்றது. இவர் உத்தியோக சாலை விலுள்ள துரைமக்கள் உத்தியோக சம்பந்தமான எவ் விஷயத்திலும் இவரிடத்தே ஆலோசனை செய்வர். கஷ்டமும் சிக்குமான விஷயங்களில் இவர் யோசனையே அவர்களுக்கு வழிகாட்டும். தமக்குச் சரியெனத் தோன்றும் எவ்விஷயத்தையும் எவ்வாற்றானும் செய்தே முடிப்பர். இவரிடத்து விளங்கிய நேர்மை, சத்தியம், விடாமுயற்சி, விஷயங்களைப் பகுத்தறியும் விசேஷ சக்தியாதியா மிலக் கணங்கள் இவருடைய மேலதிகாரிகட்கு ஆச்சரியத்தை விளைக்கும்.

ஒருகால் இவர் உத்தியோகசாலைத் தலைவர் ஏதோ ஒரு கணக்கை அதிவிரைவில் முடிக்க வேண்டுமென்று தீர்மானித்துப் பிள்ளையவர்களே அவ்வேலைக்குத் தக்கவரென்று தேர்ந்து அவரை அழைத்து "இந்த வேலை அவசியம் முடிய வேண்டி யிருப்பதால் நீரே அதற்குத் தக்கவரென்று கருதி உம்மை யழைத்தேன். யானே இவ்வேலையை முடிப்பதாயின் ஒருவாரஞ் செல்லும்; நீர் அதைப் பத்துத் தினத்தில் முடித்துத் தாவேண்டும்'' என்று கூறினர். பிள்ளையவர்களும்' "அவ்வண்ணமே யாகுக" என்று விடைபகர்ந்து, அக்கணக்கை நான்கு தினங்களுள் முடித்துத் துரையவர்களிடத் தளித்தனர். துரையவர்களும் அவர் தம் வேலையிற் காட்டிய துரிதத்தை வியந்து, "நீர் இவ்வேலையை உமது இருகரங்களானுஞ் செய்து முடித்தீரா?" என வினாவியது மன்றி அவர் போன்ற பிறிதோர் உத்தியோகஸ்தர் தமது உத்தியோகசாலையிலிருப்பரேல் இராசாங்கத்தாருக்கு மிகுந்த லாபமுண்டென்றுங் கூறினராம்.

இவ்வாறு கணிக்கப்பட்ட தாமோதரம்பிள்ளை யவர்கள் படிப்படியாக உத்தியோக வுயர்வு பெற்று ஈற்றில் அவ்வுத்தியோகசாலை விசாரணைக் கர்த்தராயினர். இவ்வுத்தியோகசாலையி லிருக்கும் போது நியாய சாஸ்திரங் கற்றுச் சர்வகலாசாலையாரால் நடத்தப்படும் பி.எல் பரீட்சையையும் கடத்தல் வேண்டுமென்னுமாசை இவர்பாற் குடிகொண்டது. ஆகவே அதற்கு வேண்டிய புஸ்தகங்களை வாங்கிக் கிரமமாகப் படித்து வந்தார். பின்னர் 1871௵ நடத்தப்பட்ட நியாயசாஸ்திர பரீட்சைக்குச்சென்று சித்தியெய்தினர். எங்கிருந்தாலும், எங்குச் சென்றாலும், எப்பதவியை யடைந்தாலும் எப் பரீட்சையைக் கடந்தாலும் தாம் பார்த்து வரும் கடமை. யினும் ஆயிரமடங்கு விசேடமுடைய பிறிதோர் கடமை தமக்குள தென்பதைப் பிள்ளையவர்கள் ஒருபோதும் மறந்திலர்.

"மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்டுஞ்சார்
எவ்வெவர் தீமையு மேற்கொள்ளார் - செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார்
கருமமே கண்ணாயி னார்.''

என்றாங்கு, கற்றுணர்ந்தோர் யாதேனுமோர் நல்விஷ யத்தில் மனதை நிறுத்திப் பின்னர் அதைவிடுத்துப் பிறி தோர் விஷயத்திற் புலனைச் செலுத்துவரோ?. தாமேற்ற கடமை அதிக பண நஷ்டத்தை விளைக்குமென்பதை அவர் நன்குணர்ந்தவராயினும் அது காரணமாக அக்கடமையைச் செலுத்தல் வேண்டுமென்னு மெண்ணத் தைத் தமதுள்ளத்தினின்று மகற்றினாரல்லர். இப்பெருங் கடமையைக் குறைவறச் செலுத்தினமையானே அவர் * இறந்தும் இறவாதவராகித் தமிழுலகத்துள்ளோர் பெருமதிப்புக் காளாகினர்.
----------------

4. பிள்ளையவர்கள் ஏற்ற கடமை.

இப்பரத கண்டத்து நிலைபெறூஉம் பற்பல பாஷைகளுள் ஆரியம் தமிழ் எனுமிரண்டுமே ஈஸ்வரன் ஆதி யில் மன்பதைகட் கருளியனவாகலின் இவ்விரண்டும் ஓரன்னைபாலுதித்த ஈரிளங் குழவிகளே போல்வன. ஆகவே இவ்விரண்டும் சமத்துவமுடையனவாகும். இஃது வடமொழி தென்மொழி மகோததி பருகிப் - படிமிசைத் தமிழ்மகா பாடியம் வகுத்துக் - குசை நுனி யதனினுங் கூரிய மதிபெறீ இத் - திசையெலாந் தன் பெரு மிசைநிறீ உயர்ந்த, சிவஞான யோகீஸ்வரர்,

"இருமொழிக்கும் கண்ணுதலார் முதற்குரவ ரியல்வாய்ப்ப
இருமொழியும் வழிப்படுத்தார் முனிவேந்தரிசைபரப்பும்
இருமொழியுந் தழீஇயினா ரான்றவரே யென்றாலிவ்
இருமொழியு நிகரென்னு மிதற்கைய முளதேயோ!!

என்று கூறியவாற்றானே வெள்ளிடை மலைபோற் றெள் ளிதிற் புலப்படும்.

இவை தம்முள் ஆரியம் வேதாகம அதிகாரத்தா னும், உச்சாரணவன்மையானும், மந்திரோபதேசப்பயிற். சியானும் ஆடூஉ லக்ஷணம் பெற்றது. தமிழ் என்பது, தனக்கிணையிலாப்பாஷை, இனிமையுள்ள மொழி எனப் பொருள் படுதலின் ஆரியத்தினுஞ் சிறந்ததென்பது பெறப்படுதலானும், கன்னடம் தெலுங்கு மலையாள மாதி யாம், மகப்பேறுடைமையானும், தன் இனிய வோசை யானும் மிருதுத் தன்மையானும் தேவார திருவாசக வசீகரணத்தானும் மகடூஉ லக்ஷணம் பெற்றது. ஆரியம் வடதிசைச் சென்று வடமொழியெனப் பெயர் பெற்று ஆதியில் நைமிசாரணிய ரிஷீஸ்வரர் கோட்டத்தானும் பின்னர் வேதிய வித்தகர்களானும் பரிபாலிக்கப்பட்டுச் சிறப்புற்றும் ஈற்றில் உலக வழக்கின்றி இறந்தது. தமி ழணங்கோ தென்றிசைச் சென்று, தென்மொழியெனப் பெயர்பெற்று மங்கைப் பருவமுற்று என்றும் இளமைத் திறம் பொருந்தித் தேவாமிர்தமோ வென்றையுறுமாறு இனிமை பயந்து, ஆரியம்போல் உலக வழக்கழிந்து சிதையாது இன்றும் விளங்குகின்றது.

இத்தகைய சிறப்பினையுடைய தமிழ் மாதின் உண்மையழகை யுணர்ந்து அவளைப் பின்னுஞ் சிறப்பிப்பான் கருதி, அகத்தியர்பாற் சிற்றகத்தியம் பேரகத்தியம் என்னும் இரண்டினையும் முற்றக் கற்றுணர்ந்த ஆசிரியர் தொல்காப்பியர் முதலிய பன்னிரு சீஷரும் புறப்பொருட் பன்னிருபடலம், தொல்காப்பியம், காக்கைபாடினியம் முதலிய இலக்கண நூல்களா மணிகளையியற்றி அவள் தன் சிரசினும் மார்பினுங் கழுத்தினு மணிவித்து, அவள் பேரழகு கண்டுவந்தனர். இயற்கையழகோடு செயற்கை யழகும் பெற்ற தமிழ் மாது பின்னர் மதுரைச் சங்க மாம் நாயகனை மணந்து ஆடையாபரணாலங்காரம் பெற் றுப் பெருஞ் சீருஞ்சிறப்புமுற்றனள். இச்சங்கத்தார் மேற்கூறிய விலக்கணவணிகளை அரங்கேற்றி மெருகேற்றியதுமன்றிப் பின்னுமாயிரக் கணக்கான மானன தத்துவ சாஸ்திர நூல்களையுமியற்றி அவளை யணிபெறச் செய்து மென்மேலுஞ் சிறப்பித்தனர். இதுவே தமிழ் மாது உச்சநிலை யடைந்த காலம்.

அப்பால் சங்க ஸ்தானம் தக்ஷண மதுரையினின் றும் கபாட புரத்துக்கு மாற்றப்பட்ட போது தமிழ்மாது தனக்குரிய எண்ணிறந்தனவாய அணிகலன்களோடும் அங்குச் சென்று குலாவுவாளாயினள். ஆயினும் கபாட புரம் ஆழிவாய்ப் பட்டழியவே அக்காலத்து அரிய பெரிய தமிழ் நூல்கள் யாவும் இறந்துபட்டனவாக, இப் பெரு விபத்தினின்றுந் தப்பிய பண்டைத் தமிழ் நூல்கள் மிகச் சிலவேயாம். கபாடபுரம் சமுத்திரத்தா வழி வெய்தியதற்கு முன்னர்ச் சங்கமருவிய நூல்களாயிருந்தவை எண்ணாயிரத்து நாற்பத்தொன்பதாமென்று சங் கப் புலவரு ளொருவரான நக்கீரர் கூறிப்போந்தனர். இணையிலாப் பாஷையென் றிறுமாப்படைந்த தமிழ் மாதுக்கு இது ஓர் பேரிடியே போலும்.

ஆயினும் உத்தரமதுரையின்கண் ணுதித்த கடைச் சங்கத்தார் காலத்து அவர் தாமாக நமக்கருளிய எட்டுத் தொகை, பத்துப்பாடல், பதினெண் கீழ்க்கணக்கு என்னும் மூவகைய நூல்களானும், பாண்டி நாட்டின்கண் சிதறுண்டு குலாவிய சிற்சில சிறுகிரந்தங்களானும், சிறுவர் கல்வித் தேர்ச்சியின் பொருட்டு வழங்கிய சிறு நூல்களானும், வாகடசோதிட சாஸ்திரங்களானுந் தமிழ்மாது சற்றுச் சிறப்புற்றனள். பின்னர் சங்கமொழியவே தமிழ் மாது கைமையெய்தி ஆதரவொன்றின்றிச் சேர சோழ பாண்டியர் அவைக்களத்து மன்னிச் சற்றுக் தலை கவிழ்ந்தனள். நாயகனை யிழந்த நாயகிக்குச் சற்புத் திரர் கைகொடுத்தாற்போலப் பற்பல சமண வித்துவா மிசர் தோன்றித் தமிழிலே சிறந்த விலக்கியமெனக் கற்றோர் மற்றோர் யாவரானுங் கருதப்படும் ஜீவகசிந்தா மணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண் டலகேசி ஆதியாம் பெருங் காப்பியங்களையும் சூளா மணி, நீலகேசி, உதயணன் கதை, நாககுமார காவியம், யசோதர காவியம் என்னுஞ் சிறு காப்பியங்களையும் நிகண்டு, நன்னூல், காரிகை ஆதியாஞ் சிறு கிரந்தங்களையுமியற்றி அவளை மகிழ்வித்தனர். இவர்கள் காலத் துக்கடுத்த இதிகாச காலத்தும் கல்விச் செல்வரான கம்பர், ஒட்டக்கூத்தர் முதலிய கவிவாணரும் சைவ சமய பரம குரவரும் சந்தானாசாரியர்களும் தோன்றிப் புராண காவியங்கள் சமயாசார தத்துவ நூல்கள் பற்பல ஸ்தல புராணங்கள் முதலியனவற்றையும் சமஸ்கிருதத் தினின்றும் மொழி பெயர்த்தனவாய எண்ணிறந்த நூல்களையு மியற்றுவாராயினர். ஆகவே பதின் மூன்றாம் நூற்றாண்டளவிற் றமிழ்மாது பெரும்பான்மையும் தன் பண்டைச்சிறப்பெய்தி, தொல்காப்பியமே இரத்தின. கிரீடமாகவும், நீலகேசியே இருண்டு பரந்த கேசமாகவும், சூளாமணியே சிகையின் கண் தரிக்கப் பெறும் இரத்தினப் பிறையாகவும், தேவாரமே தெய்வீக மாலையாகவும், திருக்கோவையார் முதலிய கோவைகளே விரிசிகை முதலிய கோவை வடங்களாகவும், குண்டல கேசியே சிறந்த காதணியாகவும், வளையாதிபதியே கை வளையாகவும், மணிமேகலையே கனமணியழுத்திய தங்க ஒட்டியாணமாகவும், சிலப்பதிகாரமே காற்சிலம் பாகவும், திருக்குறள் ஈடியே இணையடியாகவும், திருவாசகமே திருவாசக மாகவும், திருமந்திரமே அரணாகியமந்திர மாகவும், முதுமொழிக் காஞ்சியே காஞ்சியாகவும், நற் றிணையே ஜாதியாகவும், புறப்பொருளே புறப்பொருளாக வும், அகப்பொருளே அகப்பொருளாகவும், கந்தபுராணமே - சேர்க்கப்பட்ட பழம்பொருளாகவும், பெரிய புராணமே பெரும் பொருளாகவும், திருவிளையாடலே திருவிளையாட் 'டாகவுங்கொண்டு, தன் திருவாயினின்றும் தமிழ்க் கீர்த் தன மாதியாங் கானாமிர்தஞ்சொரியத் தமிழ்நாடென்னு மரங்கத்து நின்று நர்த்தனஞ் செய்து பார்ப்போர் . மனதைப் பரவசப்படுத்தினள்.

இவ்வாறு சிறப்பெய்திய தமிழுக்குப் பின்னுமோர் விபத்து நிகழ்ந்தது. தென் இந்தியாவிற் படை யெடுத் துச் சென்ற மகமதியர், தமிழ் நாடெங்கணும் புகுந்து தமது கோறான் வேதத்துக்குமாறாய எந்நூல்களையுமழித் தல் வேண்டுமென்னும் போவாக் கொண்டு சென்றன ராக, எதிர்ப்பட்ட அரிய தமிழ் நூல்களுளநேகம் குரங்கின் கைப்பூமாலையே போன்று, தீயில் வெந்து சாம்ப ராயின. இவர்கள் கையினின்றும் தப்பித் தற்காலத்து நிலைபெறுவன இலக்கண இலக்கிய நூல்கள், காப்பியம், வீரகாவியம், ஸ்தலபுராணம், கலம்பகம், நீதி நூல், வாகடம், கோவை, அந்தாதி, தேவாரதிருவாசகம், முதலிய னவும் சிற்சில கணித சோதிட வான சாஸ்திரங்களுமே யாம். தர்க்க வியாகரண நூல்களாய் நமக்குள்ளவை பெரும்பாலும் ஆதீனகாலத்தில் பற்பல மடாதிபதிக ளாலும் அவர் பரிபாலனத்தின் கீழிருந்த தமிழ் வித்து வான்களாலு மியற்றப்பட்டனவாம்.

இவ்வாறெஞ்சிய தமிழ் நூல்கள் பனையோலைச் சுவடிகளின்கட் சிறைப்பட்டுத் தமிழை அவாவிக் கற் போர் கண்ணுக்குப் புலப்படாது ஏட்டுப் பிரதியாம் நிலையோடு கரந்துறைவதானும், காலமும் செல்லும் இடையறாது தாக்குவதானும் அவையாவும் இறந்தும், இறக்குந் தசையை யடைந்து கொண்டும் வருகின்றன. இறக்குந் தசையை யடைந்திருப்பனவோ கரலிகிதங்க ளாலேற்பட்ட வழுக்கள் நிறைந்தனவாய் இஃது தப்பு இஃது ஒப்பு என்று நிச்சயித்தற்கிடனில்லாது கிடக்கின்றன. இவ்வாறு மறைந்து கிடக்கின்ற அரிய நூல் களைப் புதுப்பித்து அச்சினிற் புகுத்தி உயிர்ப்பித்தல் உலோகோபகாரமாவதுமன்றித் தமிழ் மாதுக்குப் பெரு மகிமையு மன்றோ ? இதுவே பிள்ளையவர்கள் ஏற்றபெருங் கடமை.

இப்பெருங்கடமையைப் பிள்ளையவர்கள் தாம் யாழ்ப்பாணத்துக் கோப்பாய் வித்தியாசாலை யாசிரியரா யிருக்கும் போதே யேற்று, குமரகுருபர சுவாமிகளியற்றிய சிறந்த நூலாய நீதிநெறிவிளக்கத்தை உரையோடு அச்சிட்டு வெளியிட்டனர். சாவகாச மின்மையால் அவர் அவ்வேலையைத் தொடர்ச்சியாய்ச் செய்து வருதல் கூடாதாயிற்று. ஆயினும் யாழ்ப்பாண வாசரும், வேதாகமோக்த சைவசித்தாந்தப் பிரவர்த்தகரும், தமிழிலக்கண விலக்கியக் கடலை நிலைகண்டுணர்ந்தவரும், 'தமிழ்நர் டெங்கணும் மெய்யறிவுறுத்திய ஆசாரியரும், மகா வித்துவ சிரோமணியுமாகிய ஸ்ரீ.ல. ஸ்ரீ. ஆறுமுக நாவலரவர்கள் இப்பெருங் கடமையிற் கையிட்டு அநேக நூல்களைத் திருத்தியும் விளக்கியும் விரித்தும் அச்சிடுவித்து வருவதைப் பிள்ளையவர்கள் கண் ணுற்று, அவருக்குத் தம்மாலியன்றவு தவி யாவும் புரிந்து பேருவகை யெய்தினர்.

அவ்வித வுதவியை நாவலரவர்கள் மிகவு மன்புட னங்கீகரித்தது மன்றிப் பிள்ளையவர்கட்குத் தாமெத் துணை கடன்பாடுடைய ரென்பதை விளக்கியு மிருக்கின் றனர். பிள்ளையவர்களும் நாவலரவர்கள் தமிழ்ப் பாஷை யின் மீது வைத்த பேரன்பை நினைந்து அவர்பாலிடை யறாப்பற்றும் பெருமதிப்பு முடையராயினர். கற்றாரைக் கற்றாரே காமுறுவராகலின் இவர்தம் நட்பு அதிசயிக்கற் பாலதன்று. நாவலரவர்கள் பின்னுஞ் சிலகால முயிரோ டிருந்து இம்மேலான வேலையை நடத்தாதிறந்தது பிள்ளையவர்கட்குப் பெருவிசனமே. பிள்ளையவர்கள் நாவலரவர்களிடத்து எத்துணை மதிப்புடையரென்பது நாவலரவர்களிறந்தபோது அவர் சொல்லிய பின்வருஞ் செய்யுட்களால் வெளிப்படும்.

விருத்தம்.

"வேதம்வலி குன்றியது மேதகுசி வாகம
      விதங்கள் வலி குன்றி னவடற்
சூதன் மொழி மூவறுபு ராணம் வலி குன்றியது
      சொல்லரிய சைவ சமயப்
போதம்வலி குன்றியது பொற்பொதிய மாமுனி
      புகன்றமொழி குன்றி யதுநம்
நாதனிணை ஞாலமிசை நாடரிய ஆறுமுக
      நாவல ரடைந்த பொழுதே

வெண்பா

''நல்லைநகர் ஆறுமுக நாவலர்பி றந்திலரேற்
சொல்லுதமிழெங்கே சுருதியெங்கே - எல்லவரும் -
ஏத்துபுரா ணாகமங்க ளெங்கேப்ர சங்கமெங்கே
ஆத்தனறி வெங்கே யறை.''

அக்காலத்தில் பிள்ளையவர்கள். சென்னையில் தினவர்த்தமானி என்னும் தினசரிப் பத்திரிகை யொன்றின் பொறுப்பையேற்று நடத்திவந்தார்.

ஒருமுறை அத்தினவர்த்தமானிப் பத்திரிகையின் கண் நாவலரவர்களைக் குறித்தெழுதியபோது அவரை "ஒப்பாரும் மிக்காருமில்லாத நாவலர் பெருமான்'' என்று கூறினர். அதைக் கண்ணுற்ற தொழுவூர் வேலா யுத முதலியார் கோ. இராசகோபால பிள்ளை முதலிய தமிழ் வித்துவான்கள் தம்மோடு முறணினமை கண்டு தாம் கூறியது தக்கதெனச் சாதிப்பான் கருதி "நல்லறி வுச் சுடர்கொளுத்தல்" என்று மகுடமிட்டெழுதிய வாசகத்தால் நாவலருடைய பெருமை அறியப்படும்.

' நாவலரவர்கள் இப்பெரு முயற்சியிற் கையிட்டன ராயினும் பிள்ளையவர்கள் அவர் கையிட்டிருப்பது போதுமென்று வாளாவிருந்தவரன்று. நாவலரவர்க ளுக்கு முன்னரே தாம் இவ்வேலையிற் கையிட்டவ ராக லின் தமக்குச் சாவகாசம் நேரும்போதெல்லாம் இம் மேலான வேலையையே செய்தல் வேண்டுமென்னுந் தீர் மான முடையவராயினர். பண்டைக் காலத்தனவாய் இறக்குந் தசையை யடைந்து வரும் நூல்களைப் பரிசோதித்து அச்சிட வேண்டுமென்பதே பிள்ளையவர்கள் பெரு விருப்பாகலின் முதலில் எந்நூலை எடுத்துத் தம திஷ்டத்தைப் பூர்த்தி செய்வதென்பது நெடுங்காலம் அவர் மனதின்கண் ணிகழ்ந்த ஓர் வினாவா யிருந்தது. இலக்கணத்துக்கு முற்பட்டது இலக்கியமே யாயினும் இலக்கணமின்றி இலக்கியஞ் சிறப்புறாதாகலின் தாம் அதிகமாய்க் கவனிக்க வேண்டியது இலக்கணமே யென்று தேர்ந்து, முன்னர் தொல்காப்பியம் என்னும் பண்டை இலக்கண நூலிற் கையிட்டார்.
----------------

5. தொல்காப்பியம்.

தமிழும் ஆரியமும் பூர்வீக பாஷை யென்பதை முன்னர்க் குறிப்பித்துள்ளோம். தமிழ்ப் பாஷைக்கு ஆதியிலிலக்கணஞ் செய்தவர் அகத்தியர். ஆகவே அஃது அகத்தியம் எனும் பெயர்த்தாகி இயல் இசை நாடக மெனும் முத்தமிழ் தழீஇயதும் ஆதியிற்றமிழ்ப் பாஷைக்குப் பேரிலக்கணமாக விளங்கியதுமே யன்றி, முதற் சங்கத்தார் காலத்துப் பேரிலக்கணமாக நிலவியதும் இஃதொன்றேயாம். இஃது யாதோர் நியதிபற்றி இயைக்கப்- பட்டிலதாகலானும், நேர்ந்தவாறு சூத்திரங்களை யொருங்கே தொகுத்தலால் அடிதலை மாறிக்கிடந்ததோர் பரந்த நூலாகலானும், ஆழியதோர் கடலே யனையதாய்க் கற்போர்க் கரியதாய்க் கிடந்ததாயிற்று. அகத்தியர்பாற் சிற்றகத்தியம் பேரகத்திய மெனுமிரண்டையு மோதி யுணர்ந்த பன்னிரு மாணவரும், அதனை முறைப்படுத்துவான் கருதித் தத்தம் பெயரால் வெவ் வேறிலக்கணமும், அனைவரு மொருங்கு சேர்ந்து பிறி தோரிலக்கணமுஞ் செய்தனர். அம்மாணவர் பன்னிரு வருட்டிறமை பெற்ற திரண தூமாக்கினி என்னு மியற் பெயரையுடைய தொல்காப்பிய முனிவரர் அவ்வகத்தியத்தின் வழித் தந்தருளிய இலக்கணமே தொல்காப்பிய மெனப்படும்.

சங்கத்தார் காலத்துக்கு முற்படத் தோன்றிய விர் நூல் முதற் சங்கத்தார் காலத் தரங்கேறி நிலை பெற்றும் அகத்தியமே அச்சங்கத்தார் ஆதாரமாக் கொண்ட நூலாம். இந்நூலின் உண்மையுயர்வை யுணர்ந்தறிந்த அகத்தியனார் சற்று விரோதஞ் சாதித்தமையானே அஃது சிலகாலம் பிரகாசமற்றிருந்தது. ஆயினும் காலக் கிரமத்தில் அதன் மகத்துவம் தோன்றத் தோன்ற, அஃது அகத்தியத்தோடு சமத்துவமுடையதாகி இடைச் சங்கத்தார் காலத்து இவ்விரண்டுமே தமிழுக்குப் பேராதாரமாய விலக்கண நூல்களாயின. பின்னர் அகத்தியம் மகத்துவம் குறைந்து இறந்தொழியவே, தொல்காப்பிய மொன்று மாத்திரமே கடைச்சங்கத்தார் காலத்துத் தனிமையாய் நிலைபெற்று அன்று தொட்டு இன்று காறும் தமிழுக்குப் பேரிலக்கணமாக விளங்குவது.

கடைச்சங்கம் இற்றைக்கு சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் அரசாண்ட உக்கிரப் பெருவழுதி காலத்தே யொழிந்தமையானும், கடை இடை தலைச் சங்கங்களின் காலம் முறையே இரண்டாயிரம், மூவாயிரத்தைஞ்னூறு நாலாயிரத்தைஞ்னூறு வருடங்களே யாகலானும், தொல்காப்பியத்தின் வயது பன்னீராயிரம் வருடங்களுக்கு மேற்பட்டதன்றிக் குறைந்ததன் றென்பதற்கு எட்டுணையேனுஞ் சந்தேகமில்லை யென்பது பிள்ளை அவர்களுடைய கருத்து. கால நிருணயம் எவ் வாறு பெறப்பட்டதோ வெனின், தலைச்சங்கம் இரீஇய பாண்டியர் எண்பத்தொன்பதின்மரெனவும் அவர்காலம் நாலாயிரத்தைஞ்னூறு வருட மெனவும், இடைச்சங்கம் இரீஇய பாண்டியர் ஐம்பத்தொன்பதின்ம ரெனவும், அவர்காலம் மூவாயிரத்தைஞ்னூறு வருடமெனவும், கடைச்சங்கம் இரீஇய பாண்டியர் நாற்பத்தொன்பதின் மரெனவும் அவர்காலம் இரண்டாயிரம் வருடமெனவும், ஆகமப்பிரமாணமா யிருத்தலானேயெனப் பிள்ளையவர்களே கூறியுள்ளார்.

இந்நூற்கு உரையாசிரியராய்த் தோன்றியவர் நச்சினார்க்கினியர், சேனாவரையர், . கல்லாடர், பேராசிரியர், இளம்பூரணர் என ஐவர். இவருள் நச்சினார்க்கினியருரையே மற்றையோருரைகட்கு மிகவும் பிந்தியதென்பது, அஃது சமணர் காலத்துத் தோன்றியமையானும் அவ்வுரையாசிரியரும் பரிமேலழகரும் ஏககாலத்தின ரென்பதானும் தெளிவாகின்றது. இவ்வுரை மிகவும் விரிவாக எழுதப்பட்டமையால் இதுவே யாவரானுஞ் சிறந்த தெனக் கொண்டாடப்பட்டு வருகின்றது.

சேனாவரையர் சொல்லதிகாரம் ஒன்றற்கே மிகச் சிறந்தவுரை செய்திருக்கின்றனர். கல்லாடருரையோ மிகவுஞ் சுருக்கமுடையது. மற்றையோர் உரைகளுள் யாதும் பூரணமாக எங்கைக் ககப்பட்டிலது. பழமையும் சிறப்பு மொருங்கே யமைந்ததும், பலவித்துவான்கள் பரி சோதித்து அச்சிட முயன்றும் சந்தேக நிகழ்ந்தமை காரணமாகக் கைவிடப்பட்டதுமான இந்நூலைப் பிள்ளை யவர்கள் கையேற்றது, அவரிடத்துக் குடிகொண்டிருந்த செந்தமிட் பாஷாபிமானத்தை நன்கு விளக்குகின்றது. பிள்ளையவர்கள் தாம் தொல்காப்பியம் அச்சிடப் புகுந்த தற்குக் காரணங் கூறுமிடத்துப் பின்வருமாறு கூறுகின்றார்:--

"பன்னீராயிர வருஷ காலத்திற்கு மேற்பட நிலை பெற்றோங்கித் தமிழ்க்கோர் தனிச் சுடர்போலப் பிரகா சித்துவந்த தொல் காப்பியமும், தற்காலத்து இலக்கணங் கற்போர் அனைவரும் அதன் வழித்தோன்றிய சிற்றிலக் கணங்களையே கற்று அம்மட்டோடு நிறுத்தி விடுவதால் எழுதுவாரும் படிப்பாரு மின்றிப் பழம் பிரதிகளெல் லாம் பாணவாய்ப்பட்டுஞ் செல்லுக்கிரையாகியுஞ் சிதைவுப் பட்டும் போக, யாவராயினும் ஒருவர் வாசிக்க விரும் பிய வழியுங் கிடைப்பதருமையாய் விட்டது. தமிழ் நா டனைத்தினுமுள்ள தொல்காப்பியப் பிரதிகள் மிகச்சிலவே. அவையாவும் மிக்க ஈனஸ்திதி அடைந்திருப்பதால் இன்னுஞ் சிலவருடத்துள் இறந்துவிடுமென்று அஞ்சி யே அதனை உலோகோபகாரமாக அச்சிடலானேன். "இதுவும் யாம் மேற்கூறியதை வற்புறுத்தும். இந்நூலை அச்சிடும்படி பிள்ளையவர்களால் ஏவப் பட்டவர் யாழ்ப்பாணத்து மகாவித்துவ சிரோமணியும் சைவசித்தாந்தப் பிரவர்த்தகருமென்று யாம் முன்னர்க் கூறியுள்ள ஸ்ரீ.ல. ஸ்ரீ.ஆறுமுக நாவலரவர்களே. நாவலரவர்கள் உயிரோடிருந்து தாம் மேற்கொண்ட வேலை யை நடாத்திவந்திருப்பராயின் பிள்ளையவர்கள் இதை அவருக்கு முற்றிலும் விடுத்துத் தாம் வேறு நூல்களிற் 'பிரவேசித்திருப்பாரென்பது திண்ணம். நாவலரவர்கள் அதைப் பூரணமாகச் செய்து முடிக்கக்கூடியவ ரென் 'பதை, ஒப்பாரும் மிக்காருமின்றி உயர்வுற்றுக் கலை 'மாதின் சிரோரத்தினமென்றும், அன்பு பரோபகாரமாதி யாஞ் சிறந்த குணங்கள் வாய்ந்தவரென்றும், பரத கண்ட முழுவதுங் கொண்டாடப்படுகின்ற எம்மாசிரியர் மில்லர் பெருமான் பெருங்கணையா னிலைபெறுஉம் சென்னைக் கிறீஸ்தவ. கலாசாலையில், பிள்ளையவர்கள் தமிழ்ப்பாஷைச்சிறப்பு விஷயமாக உபந்நியாசித்த போது தாம் தொல்காப்பியம் அச்சிடுவதற்குத் தலையிட்ட பின் னர், தம் மனதின்கண் ணிகழ்ந்த சந்தேகங்களை நிவார ணஞ் செய்வாரிலராகவும் நாவலர் பெருமான் சிக்கிய நூல்போற் கிடந்த தொல்காப்பியத்தின் ஒரு பாகத்தை யேனும் பரிசோதித்து அச்சிற் றோன்றச் செய்தது அவர் மகத்துவத்தை நன்கு விளக்குகின்ற தெனக் கூறி னமை சாலவும் வற்புறுத்துகின்றது.

தாம் இந்நூலைப் பரிசோதித்து அச்சிடுவதற்குத் தகுந்தவரா யிருந்தும் பிள்ளையவர்கள் அவ்வாறு செய் 'யாது நாவலரவர்களை ஏவியதற்குக் காரணம் யாதோ வெனின், அக்காலத்து இராசாங்க வுத்தியோகம் வகித் திருந்த தமக்குத் தமிழ்நா டெங்கணுஞ் சென்று ஏட்டுப் 'பிரதிகள் தேடுவதற்கும், அவைகளை யொருங்கிட்டுப் பரிசோதிப்பதற்கும் வேண்டிய சாவகாச மின்மை யானும் புத்தகம் அச்சிடுவதே தம் வேலையாகக் கொண்டுழைத்த நாவலர் பெருமானே அதற்குத் தக்கவரென அவர் கருதினமையானுமாம்.

தொல்காப்பியம் எழுத்ததிகாரம் சென்னைச் சகல கலாசாலைத் தமிழ்ப்புலமை நடாத்திய மழவை மகாலிங் கையரவர்களால் இந்றைக்குச் சுமார் தொண்ணூறு வருடங்களின் முன்னர் அச்சிடப்பட்டிருந்தமையானும் தொல்காப்பியம் முழுவதும் எவ்வாற்றானும் அச்சுவாக - னமேறித் தமிழ் நாட்டின்கண் பவனிவரவேண்டுமென்பது மாத்திரமே ஆதியிற் பிள்ளையவர்கள் பெருவிருப் பாகலானும் ஒரு முறை அச்சிட்டதையே திரும்பியு மச்சிடுதல் அநாவசிய மெனக் கொண்டு அடுத்த பாகமாகிய சொல்லதிகாரத்தை, மற்றையவுரைகளினுஞ் சிறந் ததெனக் கொண்டாடப்படும் சேனாவரையர் உரை யோடு நாவல ரவர்களைக்கொண்டு பரிசோதிப்பித்து. விபவ வருடம் புரட்டாசிமாசம் தம்பெயரால் அச்சிட்டு வெளியிட்டனர். நாவல ரவர்களாற் பரிசோதிக்கப்பட்ட தாயினும் பிள்ளையவர்கள் தமக்குச் சாவகாசம் நேரும் போதெல்லாங் கூடவிருந்து தம்மா லியன்ற வுதவியாவும் புரிந்தே இவ்வேலையை நிறைவேற்றின ரென்பதற்குப் போதிய சான்றுளது.

சொல்லதிகாரம் அச்சாயினபின்னர் நாவலரவர்கள் தாம் முன்னர்க் கையேற்றிருந்த வேலைகளை நடத் துவதினும் ஊரூராச்சென்று சைவப் பிரசங்கங்கள் செய்வதினும் வித்தியா சாலைகளை ஸ்தாபித்தற்குப் பணஞ் சேகரிப்பதினும் முயற்சியாயிருந்து 1879-ம் வருடமாகிய பிரமாதி வருடம் கார்த்திகை மாசம் 21-ம் திகதி சுக்கிரவாரம் இகவாழ்வை யொருவிப் பரவாழ்வை மருவினர்.

தமிழ் மாதின் வலக்காமே போன்ற நாவலரிறந்து படவே தமிழ்ப் பாஷையின் பொருட்டு அவராற் செய்யப்பட்ட வேலைகள் யாவுங் குன்றின. தமிழைச் சிறப்பித்தலே தம் வாணாட் கடமையென மதித்த பிள்ளையவர்கள் தங்கடமையை வகித்தற்கிதுவே தக்க கால மெனக்கொண்டு பின்னும் பல தமிழ் நூல்களைத் தாமே பரிசோதிக்கவும் அச்சிடவுந் தொடங்கினார்
------------

6. வீரசோழியமும், தணிகைப் புராணமும்

தொல்காப்பியத்தைத் தொடர்ச்சியாக அச்சிடுவ தற்கு அப்போது போதிய வசதிகளில்லா திருந்தமை யால் வீரசோழியம் என்னும் பண்டை இலக்கண நூலை அச்சிட முயன்றனர். பழைய காலத்தனவாய நூல்களுள் மிக்க ஆபாச நிலையை யடைந்ததும் விரைவிலிறந் தொழியுமோ வென்று ஐயுறுதற்கிடனாய் நின்றதும் இதுவே. இது விக்கிரம சோழன் எனப் பெயர் வழங்கிய வீரசோழன் காலத்து அவன் கீழ்ப் பொன்பற்றியூரிற் சிற்றரசுபுரிந்த புத்தமித்திரன் எனும் அரசனால் எழுதப் பட்டு அவ் வீரசோழனது பெயர் வகிக்கப் பெற்றமை காரணமாக வீரசோழியம் எனப் பெயர் பூண்டதும், ஸ்ரீ கச்சியப்ப சிவாசாரியர்' கந்தபுராணம் அரங்கேற்றிய போது திகடசக்கரம் என மொழி புணர்ந்ததற்கு விதி யளித்தருளிய பெரும் சிறப்புப் பொருந்தியதுமாகி இலக்கண மனைத்து மொருங்கிட்டுப் பிழிந்தசாறே போல்வது. முன்பின் 2000 வருடங்களுக்கு முன்ன ரியற்றப் பட்டதும், பெயரைக் கேட்டதே யன்றி நூலைப் பார்த்திலேமென்று தக்க வித்துவான் கடாமுங் கூறக்கிடந்த துமான பழமை வாய்ந்த இந்நூலை அச்சிடுவதற்கு ஏட் டுப்பிரதிகள் சேகரித்தலினும், படிப்பாரும் எழுதுவாரு மின்றிப் பரணவாய்ப்பட்டுந் தேடுவாருந் தொடுவாரு மின்றிச் செல்லுக்கிரையாகியும், எழுத்தழிந்துஞ் சிதைந் துங் கிடந்த அப்பிரதிகளி லுள்ளவற்றை உள்ளவாறு நிதானித் தமைத்தலினும், பிள்ளையவர்கள் எடுத்துக் கொண்ட பிரயாசை இத்துணை யென்றுரைக்கும் பான் மையதன்று.

இம் மேலான வேலையை நிறைவேற்றுவதற்கு வேண்டிய ஏட்டுப் பிரதிகளை யுபகரித்தவருள் திருக்கைலாச பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனத்துப் பெரிய சற்குருநாத சுவாமிகள் செய்த பெரு நன்றி எஞ்ஞான்றும் மறக்கற்பால தன்றென்று பிள்ளையவர்கள் தம் பதிப்புரையின்கண் கூறியிருக்கின்றனர். சுவாமிகள் கொடுத்தருளிய பிரதியையே யாதாரமாகக் கொண்டும், அகப்பட்ட வேறு பிரதிகளை உதவியாக வைத்துப் பரி சோதித்தும், நூலாசிரியர் எழுதிய சுத்த ரூபத்தையே எவ்வாற்றானும் தழுவித்தாம் எடுத்த முயற்சியை ஒருவாறு நிறைவேற்றினராகவே வீரசோழியம் 1881௵ வெளிப்பட்டது. பிள்ளையவர்கள் வீரசோழியப் பதிப் பில் எடுத்த பெருமுயற்சியை யுணர்ந்தே அக்காலத்தில் பிரசித்தி பெற்றிருந்த சதாவதானம் இராமசாமிச்செட் டியாரும்,

"இறந்த பூம் பாவை யெலும்பினைச்சம் பந்தர்
சிறந்த பெண்ணாய்ச் செய்த சிறப்பா --திறம்பலசேர்
தாமோ தான்வீர சோழியத்தார் சாற்றுருவம்
பூமீ தியைந்த தெனப் போற்று.''

என்று கூறியுள்ளார்.

அடுத்த வருடமாகிய 1882ல் தமது இரண்டாவது மனைவியும் அம் மனைவி வயிற்றிலுதித்த மூன்றாவது புத்திரனாகிய சி.தா. சோமசுந்தரம் பிள்ளையும் ஒருங்கே இறந்தமையானும், தாம் உபகாரச் சம்பளம் பெறுதற்கு வேண்டிய காலம் பூர்த்தியாயினமையானும், தமிழைச் சிறப்பித்தற் பொருட்டுத் தாம் பின்னுமுழைத்தல் வேண்டுமென்னுந் துணிவு மிகுதியு மிருந்தமையானும், இராஜாங்க வுத்தியோகத்திற்றமது வாணாட்களின் உத் தம பாகமாகிய இருபத்தைந்து வருடங்களைக் கழித்து இவ்வருடத்தோடு உபகாரச் - சம்பளம் பெற்றிளைப் பாறினர்.

உத்தியோகத்தி னின்றும் நீங்கிய பின்னர் தாம் கையேற்ற வேலையை நடாத்துவதற்கு அவருக்கு முன்னிலுமதிக சாவகாசம் சிடைத்தது. வீரசோழியம் பதிப்பிக்கும் பொருட்டு ஏட்டுப் பிரதிகள் சேகரித்த போது சில தணிகைப் புராணப் பிரதிகள் அவர் கைக்குக் கிட்டினமையானும், சிரேஷ்ட பிரதியொன்று முன்னரே தமது கையிலிருந்தமையானும், அத்தணிகைப் புராணம் சமண நூலாகிய ஜீவக சிந்தாமணியின் மாட்சி மைக்கீடு செய்வா னியற்றப்பட்டுச் சொல்வளம் செய்யுணடை சந்தம் என்றின்னன மலிந்து பொலிந்து விளங்கு மோரரிய நூலாகலானும், திருக்கைலாச பரம்பரைத் திருவாவடு ஆதீனத்துக் கச்சியப்ப முனிவரர் அருளிச் செய்த சிறப்பினை யுடையதாகலானும், குமரக் கடவுள் எழுந்தருளியிருக்கப்பெற்ற புண்ணிய ஸ்தலமென்று சைவ சமயத்தவராற் கொண்டாடப்படும் திருத்தணிகை மிக்க கீர்த்தியுடையதாகலானும், அப்புராணத்தைப் பதிப் பிக்க முயன்று பின்னுஞ் சில பிரதிகள் தேடிப் பரிசோதித்து 1883௵ வெளியிட்டனர். இந்நூல் அச்சிடும் போது "மால்வரை புனையு மாடக் கூடலாலவாயிற் பால் புரை பசுங்கதிர்க் குழவித் திங்களைக் குறுகுங் கண்ணி யாகவுடைய அழலவிர்சோதி அருமறைக் கடவுளை'' ஆக்கியோனாகப் பெற்ற இணையிலாச் சிறப்பினையுடைய இறையனாரகப்பொருள் எனும் தொன்னூலையும் பிழை யறப் பரிசோதித்து இதே வருடத்தில் அச்சிட்டு வெளிப்படுத்தினர்.

தமிழ் நூல்களைச் சேகரிப்பதற்கும் பரிசோதிப் பதற்கும் தென் தேசங்களிற் சஞ்சாரஞ் செய்வது அவ சியமாகத் தோன்றினமையால், பிள்ளையவர்கள் தாம் இதகாறும் வசித்த சென்னை நகரை விடுத்துச் சோழவள நாட்டின்கண் காவிரி தீரத்துள்ள திருக்குடந்தை நகரே தக்க வாசஸ்தல மெனக்கொண்டு 1885. ஆங்கு மேவிக் காவிரியாற்றின் மேற்புறத்துள்ள கருப்பூரின் கண் வசிப்பாராயினர். அங்குச் சென்ற பின்னர், தாம் முன்னரே பி-எல் பரீட்சையில் தேறியவராகலின் செந் தமிழ்ப் பரிபாலனத்தோடுங்கூட நியாய துரந்தரராங் கடமையையும் நடாத்திவந்தனர். தமக்குக் கிடைக்கு முபகாரச் சம்பளம் தமது குடும்ப சம்ரட்சணைக்கு மாத்திரம் போதியதாயிருந்தமையால், தாம் அதற்குமேலதிக மாகச் சம்பாதிக்கும் ஒவ்வொரு பைசாவையும் தமி ழைச் சிறப்பிப்பதன் பொருட்டுச் செலவு செய்தல் கூடுமென்னும் நோக்கத்தோடேயே அக்கடமையைத் தாம் நடாத்தியதாக அவர் கூறி யிருக்கின்றனர்.

இங்கு வசித்தகாலத்தில் பிள்ளையவர்கள் குடும்பத் திற் பின்னுமோர் துக்க சம்பவம் நிகழ்ந்தது. அவருடைய சிரேஷ்ட குமாரத்தியும், தெ. மு. இராஜரத்தினம் பிள்ளையவர்கள் அரிய மனைவியுமாகிய பொன்னம் மாள், பிள்ளையவர்கள் குடந்தைமேவிய சிறிது காலத்து ளிறந்தனள். முன்னரிரு மனைவியரையும் பின்னர் மூன்று புத்திரரையும் ஒரு புத்திரியையு மிழந்து துக்கசாகரத்துள் மூழ்கியிருந்த அவருக்கு இப்புதிய துயர் பின்னு மதிக வருத்தத்தைக் கொடுத்தது. ஆயினும் ''தலைக்கு மேற் பட்ட நீர் சாணேறி யென் முழமேறி யென்'' என்னுங் கருத்துடையராய்த் தமக்கு நேர்ந்த துயரை யொருவா றகற்றித் தாமேற்ற கடமையிலேயே தங் கவனத்தைச் செலுத்தி வந்தார்.
------------

7. தொல்காப்பியம் பொருளதிகாரம்.

திருக்குடந்தையைச் சார்ந்தபின் ஏட்டுப் பிரதிகள் சேகரிப்பதற்கும் அதன் பொருட்டுத் தென்னாடுகளின் கண் சுற்றுவதற்கும், மடாதிபதிகளை அடிக்கடி தரிசிப்பதற்கும் போதிய சாவகாச மிருந்தமையால், தொல் காப்பியம் பொருளதிகாரத்தை உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர் உரையோடும் அச்சிட வெண்ணிப் பற்பல ஏட்டுப்பிரதிகள் கொண்டு அதைப் பரிசோதித்து வந்தார். இவ்வேலை யாரம்பித்த தக்ஷணமே தமக்கிருந்த துயானைத்தும் பரிதியைக் கண்ட பனிபோற் பறந்தோடின வென்றும் குடும்பத்தில் நேர்ந்த துக்க சம்பவங்களாற் பெரிதும் வருந்திய தமக்குத் தொல்காப்பியம் பொரு ளதிகாரமே மிக்க ஆறுதலைத் தந்ததென்றும் பிள்ளையவர்கள் பல்காலுங்கூற யாம் காதாரக் கேட்டிருக்கின்றோம்.

கடைச்சங்கத்தார் காலத்து உக்கிரப்பெருவழுதி எனுமன்னன், தன்னாடு பன்னிருயாண்டு வற்கடஞ் சென்றமை காரணராகச் சிட்டானைவரும் வேற்றூர் சென்றபின் நாடு செழிக்க மழை பொழிந்தமையால் "நூல் வல்லாரைக் கொணர்க" என்று எல்லாப் பக்கமும் போக்கினன். அப்பொழுது எழுத்ததிகாரமும் யாப்பதி காரமும் வல்லாரைத் தலைப்பட்டுக் கொணர்ந்து, பொரு ளதிகாரம் வல்லாரை எங்கும் தலைப் பட்டிலேமென்று வந்தார். வர, அரசனும் புடைப்படக் கவன்று என்னை? எழுத்துஞ் சொல்லும் யாப்பும் ஆராய்வது பொருளதி காரத்தின் பொருட்டன்றே! பொருளதிகாரம் பெறேமே யெனின், இவைபெற்றும் பெற்றிலேம்" எனமொழிந்து அதன்பாற் றமக்குள்ள பெருமதிப்பை விளக்கின னென்று புலவர் சிகாமணியாகிய நக்கீரர் இறையனாரகப் பொருளுரையிற் கூறிப் போந்தனராக, இப்பொருளதி, காரத்தின் மகிமை சொல்லவும் படுமோ?

இந் நூலைப் பரிசோதித்து அச்சிட முயன்ற பின், கம்பர் இதிகாச சிரோரத்தினமாகிய இராமாயணத்தை அரங்கேற்றுவதன் பொருட்டுப் பாவோடுங் காலாய் நாடோறுந் திரிந்தவாறுபோற் பிள்ளையவர்களும் ஏட்டுப் பிரதி தேடுவான் றமிழ் நாடெங்கணுந் திரிந்து பெரும் பிரயாசை யெடுத்தனர். இவ்வேலையிலும் அவருக்குக் கைகொடுத் துபசரித்தது திருக்கைலாச பரம்பரைத் திருவாவடுதுறை யாதீனமே.

ஆதீனத்து மகா சந்நிதானமும் பெருங்கருணைத் திருவுருவமுமாகிய ஸ்ரீ ல ஸ்ரீ. சுப்பிரமணிய தேசிக மூர்த்திகள் தமது மடத்துப் பிரதிகளனைத்தையும் பிள்ளையவர்கள் பரிசோதனைக் களித்ததுமன்றி, வேறு நாடுகளிலிருந்தும் பிரதிகள் தருவித்துக் கொடுத்து, அவர் பதிப் பிக்கும் நூல்க ளொவ்வொன்றினும் இருபது பிரதிக்குக் குறையாமல் கிரயத்துக்கு வாங்கிக் கொள்ளுவதாகவும் வாக்களித்தனர். இவையன்றி யாழ்ப்பாணம் க. க. சதா சிவம்பிள்ளை திருநெல்வேலித் தாசில்தார் ஸ்ரீ கணித சிங்கம் வை. சின்னத்தம்பியா பிள்ளை முதலினோரும் பல பழைய ஏட்டுப்பிரதிகள் அழைப்பித்துக் கொடுத்தனர். இவற்றோடு திருத்தணிகைச் சரவணப்பெருமாளையர் பௌத்திரர் துரைசாமியையர் பிரதியொன்றும், பிள்ளை யவர்களிடத்திருந்த பிரதியொன்றும் புரசை சாமுவேற் பண்டிதர் பிரதியொன்றுஞ் சேர்த்துப் பன்னிரண்டு பிரதிகொண்டு பரிசோதித்த பின்னரே பொருளதிகாரம் அச்சிடப்பட்டது.

ஆயினும் அஃது இன்னும் ஆங்காங்கு வழுவுளதாகவே யிருக்கின்றது. பிள்ளையவர்களுக்குச் சந்தேகம் பிறந்துழி-யெல்லாம் பெயர்போந்த வித்துவான்களை வினவியும், அயனூற்றுணிபுகள் மேற்கோள்களோடு சீர் தூக்கியும் இன்னும் ஐயமறுத்துக் கொள்ளாத விடங்கள் பலவுளவென்று அவர் தாமே கூறியிருக்கின்றனர். பிரதிகளின் சுத்த ரூபத்தையே எவ்வாற்றானும் தழுவி யும், அப்பிரதிகளனைத்தும் மாறுகொண்டவழி அம்மாறு பாடுகளனைத்தையு மொருங்கே நிரைத்தும், யாதுங் காண்டற் கிடந்தாராது எழுந்தழிந்து சிதைந்தவழி " இவ்வாறிருத்தல் வேண்டும்" என்று தஞ் சுயமதி கொண்டு நாட்டியும் கரலிகிதங்களா லேற்பட்ட வழூஉக்களை யோட்டியும் பிரசுரித்த இந்நூலினருமை செந்தமிழமுதம் பருகியவற்கன்றோ தெரியும்.

இவ்வாறாய சிறப்புடன் தொல்காப்பியம் பொருளதிகாரம் காலன் கைப்பட்டவுயிர் அவன் கையினின் றும் விடுபட்டுத் தப்பிப்பிழைத்தா லொப்பப் பிழைத்து, 1885௵ வெளியேறியது. பொருளதிகாரம் அச்சாயின் பின்னர் பழைய தமிழ் நூல்களைப் பரிசோதித்து அச் சிடுவதற்குத் தாம் அதுவரையிற் செலவுசெய்த தொகை மூவாயிரத்தைஞ்னூறு ரூபாயாமென்றும், புத்தக விற்ப னையாலேனுந் தமிழ்ப் பாஷாபிமானிகளின் நன்கொடை யாலேனும் அத்தொகையின் மூன்றிலொரு பாகந்தா னும் வரவில்லையென்றும் இவ்விதமாய் யாதோர் பரிபாலனமு மின்றித் தஞ் சொந்தச் செலவிற் புத்தகங்களைப் பதிப்பித்தல் தமக்கு மிக்க நஷ்டத்தை விளைக்குமென் றுங் கண்டு தமிழ்ப் பாஷாபிமானிகட்கும் சென்னைச் சர்வகலாசாலை வித்தியாபட்டம் பெற்றாங்கேறினோர்க்கும் இதர தமிழருக்குமென்று ஓர் விண்ணப்ப பத்திரத் தை அங்கிலேய பாஷையிலெழுதி அச்சிட்டு 1886௵ சூலை 15௳ விடுத்தனர்.

அப்பத்திரத்தின்கண், தமிழ்ப் பாஷையின் பூர்வோத்திரம் பண்டைச்சிறப்பு முதலியன விவையென் றும், ஆரியம் போற் றமிழுந் தனிப் பாஷையே யன்றி அதனின்று முற்பத்தியாய பிறிதோர் பாஷையன் றென்றும், இலக்கண காலம் சமுதாய காலம் சமணர் காலம் ஆதீனகாலம் எனுங்காலங்களில் அஃதடைந்த சிறப்பு இத்துணைத் தென்றும், அஃது உச்ச நிலை யடைந்தபின்னர் அதற்கு நேர்ந்த விபத்துகள் இன்னின் னன வென்றும், அது காரணமாக அது சற்று மங்கிய தென்றும், தமிழுக்குப் பெருமகிமையாய் நின்று நில விய பலபண்டைத் தமிழ் நூல்கள் இறக்குந் தசையை யடைந்தும் இறந்தும் வருகின்றனவென்றும் விரித்துக் கூறினர். இறக்குந்தறுவாயை யடைந்திருக்கும் நூல்களை அச்சிடுவித்து இறவாது தடுப்பது தமிழர் பேரில் வீழ்ந்த பெருங் கடனென்றும் தமக்குக் கிடைக்கும் சாவகாசத் தையும் திரவியத்தையும் இம்மேலான வேலைக்கென்றே தத்தஞ்செய்வதாகத் தாம் தீர்மானித்திருப்பதாகவும் கற்றுணர்ந்தவராய்த் தக்க பதவியிலுள்ள பெரியோர் தமக் கிஷ்டமான வோர் நூலைத் தக்க பண்டிதரைக் கொண்டு பரிசோதித்து அச்சிட்டு வெளியிடுவது அவருக்குள்ள செந்தமிழ்ப் பாஷாபிமானத்தை விளக்குவதுமன்றி உலோகோபகாரமுமா மென்றும் தாம் அதுவரையிற் பதிப்பித்த நூல்களைத் தக்கவாறு பரிபாலித்துத் தம்மை யாதரிப்பது கற்றோர் மற்றோராகிய யாவர்மீதும் வீழ்ந்த கடனென்றும் வற்புறுத்தினர்.

பிள்ளையவர்கள் ஆருயிர் நண்பராய் அளவளாவிய இருவர் இவ்விண்ணப்ப பத்திரம் விடுப்பதற்கு முன் னரே அவரடைந்த நஷ்டத்தை யுணர்ந்து தொல்காப்பியம் பொருளதிகாரம் அச்சிடுவதற்கு வேண்டிய காகிதச் செலவு முழுவதையும் தாமே கொடுத்து உபகரித்தனர். இவருள் ஒருவர் சென்னை இராஜதானிக் கலா சாலைக் கணிதாசிரியரும், ஆங்கிலம் தமிழ் எனுமிரண்டினும் பூரணபாண்டித்திய முடையவரும், அது காரணமாக ஆங்கிலேயர் இந்துக்கள் என்னு மிருதிறத்தாராலு மொருங்கே மதிக்கப் பெற்றவருமாகிய றாவ் பஹதூர் பூண்டி. அரங்கநாத முதலியாரென்னுங் கலாநிதியே. மற் றவர் மைசூர் சீவ் கோர்ட்டு நியாயாதிபதி- களிலொருவய கௌரவ அ. இராமச்சந்திரையாவர்கள். இவ்விருவருக்கும் பிள்ளையவர்கள் தக்கவாறு நன்றி கூறியிருக்கின்றனர்.

மேற்கூறிய விண்ணப்ப பத்திரம் விடுத்த பின்னர் பிள்ளையவர்கள் இந்து பத்திரிகை வாயிலாகவும் தங்குறை களை முறையிட்டனர். இவ்விரு விண்ணப்பங்களையுங் கண்ணுற்ற இராசா. சர். த. மாதவராவ், இராசா. சர். சவலை. இராமசாமி முதலியார், கௌரவ, நியாயாதிபதி சர். எஸ். சுப்பிரமணிய ஐயர், கௌரவ பி. சென்சல்றாவ், பேரூர் ஜமின்தார் முத்துவிஜய ரகுநாத தும்பையசாமிதும் பச்சி நாயக்கர், ஊற்றுமலை ஜமீன்தார் இருதாலய மரு தப்பதேவர், கும்பகோணம் சப்கோர்ட் நீதியதிபதி தி. கணபதி ஐயர், சென்னை இராசதானிக் கலாசாலை சிரேட்டாசிரியர் ஜே. பி. பில்டர் பெக் துரை, ஆசிரியர் சாது. சேஷையர், கௌரவ , குமாரசாமி முதலியார், கௌரவ , பொ. இராமநாத முதலியார், கௌரவ, பொ. அருணாசல முதலியார், திருப்பனந்தாள் ஆதீனம் குமாரசாமித் தம்பி ரான், கு. நாகோஜிராயர், கவித்தலம் துரைசாமி முப்ப னார், ராவ் சாகிப் சேலம், இராமசாமி முதலியார் முதலினோர் பிள்ளையவர்கள் பெருமுயற்சியையும் பிரயாசை யையும் வியந்து தங்களாலானவாறு பொருளுதவி செய்துபசரித்தனர். ஆகவே பிள்ளையவர்கள் தாமடைந்த நஷ்டம் ஒருவாறு நிவர்த்தியாயினமை கண்டு பேருக்க மடைந்தனர்
-------------

8. கலித்தொகை.

இல்வூக்கத்தா லுந்தப் பெற்றமையால் பிள்ளை யவர்கள் பின்னுஞ் சில நூல்களைப் பதிப்பிப்பதில் மிக்க முயற்சி யுடையராயினர். தொல்காப்பியப் பரிசோதனைக்காகப் பிரதிகள் தேடிய போது ஸ்ரீ ல ஸ்ரீ, ஆறுமுக நாவலரவர்கள் கலித்தொகைப் பிரதியொன்று அவர்கைக் ககப்பட்டது. அது கொண்டு கலித்தொகையினருமை யுணர்ந்து அதை எவ்வாற்றானு மச்சிடல் வேண்டு மென் னுங் கருத்துடையராய்ப் பற்பல மடாதிபதிகட்கு விண் ணப்பஞ் செய்தனர். ஈண்டும் திருவாவடுதுறை ஆதீனத்துச் சற்குருகாத சுவாமிகளே பிள்ளையவர்களுக்குப் பேருபகாரியாய் நின்றவர். பிள்ளையவர்களும் அந்நன் றிக்குப் பின்வருமாறு கைம்மாறு செய்திருக்கின்றனர்:

"விண்ணாடு கைலை வழித்தேசிகர் வெவ்வினைக்கு நெற்றிக்
கண்ணா னன சுப்ர மண்ய சுவாமிகள் கான் மலரை
நண்ணாத் தலையினசை நீரத்தாங்க நற்கோகழிவாய் .
மண்ணாய்ப் பிறந்திலனே ஐயகோ ! இந்த வையகத்தே.''

''சிரமாலையாகவுஞ் சின்முடியாகவுஞ் செய்ய கண்ட
சரமாலையாகவும் யானடி யேனினையேன் தருவாய்
பாமார் கயிலைப் பரம்பரைக் கோகழிச் சுப்ரமண்யா
மரமாய் நின்பாத குறடாய் வருதற் கொருவரமே."

காருண்ணியமுங் கலாபரிபாலனமுமே தமது திருமேனி யாகக்கொண்டு விளங்குந் திருவாவடுதுறைச் சற்குரு நாத சுவாமிகள் பிள்ளையவர்கள் செய்த விண்ணப்பத்தைச் சிரமேற்றாங்கி தமது கையிலிருந்த கலித்தொகைப் பிரதி இரண்டும் தென்றேசப் பிரதி இரண்டுமாக நான்கு பிரதிகள் அவருக்களித்து அவ்வேலையைத் தொடங்குமாறு ஆக்யாபித்தனர்.

திருக்குடந்தையில் வசித்தமையால் அந்நகர் வாசரும் தொண்டமான் புதுக்கோட்டை மகாராஜாவின் மந் திரியும் பிரதிகாவலருமாகிய கௌரவ அ. சேஷைய சாஸ்திரியாரவர்கள், பூர்வக்கிரந்த பரிபாலனங் காரணமாக அவர் படும் பிரயாசையைக் கண்ணுற்று அவர்மீது, மிக்க அன்புடையராயினர். புதுக்கோட்டையை உத்தியோக ஸ்தானமாகவுடைய சாஸ்திரியாரவர்கள் திருக்குடர் . தைக்குச் செல்லும் வேளைகளிற் பிள்ளையவர்களைக் காண்பதும் சம்பாாஷிப்பதும் வழக்கம்.

ஒருகால் இருவரும் சம்பாஷித்துக் கொண்டிருக்கும்போது தமிழ்ப் பாஷையடைந்த நிலையையும், பூர்வ கிரந்த பரிபாலனங் காரணமாகத் தாம்படும் பிரயாசையையும், அதனாற் றமக்கு நேரிடும் நஷ்டத்தையும் பிள்ளையவர்கள் வாயிலிருந்தே கேட்ட சாஸ்திரிகள், ''யான் யாது செய்தல் வேண்டும்" என்று கடைக்கணித்தனர். ''யாதேனு மொரு பழைய நூலைத் தங்கள் செலவிற் பதிப் பித்தல் நலம்" என்று பிள்ளையவர்கள் கூறாமுன்னரே சாஸ்திரிகளும் "அவ்வண்ணமே யாகுக'' என்று விடை பகர்ந்து, சங்கத்தார் காலத்துப் பேரிலக்கியமாயுள்ள - தொன்றைத் தெரிந்து கொள்ளுமாறு ஆஞ்ஞாபித்தமையால் "கற்றறிந்தா ரேத்துங் கலியே'' அவ்விலக்கண முடைய தெனவும், அதை அச்சிடுவதற்குத் தாம் முன்னரே கொண்ட வெண்ணம் பூர்த்தியாவதற்குத் தக்க காலம் வந்ததெனவுங் கொண்டு அக்கலித்தொகையைப் பரிசோதிக்க வாரம்பித்தனர்.

இந்நூல் மதுரைக் கடைச்சங்கத்துப் புலவர் நாற்பத்தொன்பதின்மருள் ஒருவரான நல்லந்துவனார் இயற்றியது. அச்சங்கத்தார் நமக்கருளிய எட்டுத்தொகை, பத்துப்பாட்டு பதினெண்கீழ்க் கணக்கு என்னு மூன் றனுள் இஃது எட்டுத்தொகையின்பாற் படுமென்பது,

"நற்றிணை நல்ல குறுந்தொகை யைங்குறுநூ .
றொத்த பதிற்றுப்பத் தோங்கு- பரிபாடல்
கற்றறிந்தா ரேத்துங் கலியே யகம்புறமென்
றித்திறத்த வெட்டுத் தொகை.''

என்னுஞ் செய்யுளாற் றெளியக் கிடக்கும். சங்கத்தார் காலத்து இலக்கியங்களுளெல்லாம் இது பேரிலக்கிய மாக மதிக்கப்பட்டதென்பது "கற்றறிந்தா ரேத்தும்" என்னும் விசேடணத்தாற் பெறப்படும்.

இந்நூல் வடமொழிச் சம்பந்த மில்லாதியல்வது , தமிழ் தனிப்பாஷை யென்பதற்கோர் பேராதாரமாகவு மிருக்கின்றது. இது கடைச்சங்கத்தார் காலத்து நடுக் கூற்றின்கட் தோன்றியமையானும், அச்சங்கமொழிந்து 'தற்போது இரண்டாயிரம் வருடங்களுக்கு மேற்பட்ட மையானும் இதன்வயது மூவாயிரம் வருடங்களுக்குச் சற்றுங் குறைந்ததல்ல வென்பது தானே போதரும். இதற்கு உரையெழுதிச் செந்தமிழை உய்வித்தவர் மதுரையாசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியார் என்னும் மகா வியாக்கியானியே. ஆகவே இதன் சிறப்பு இத் துணைத்தென்று எம்போலியர் எடுத்துக் கூறுதலியலாது.
--------------------

9. பிள்ளையவர்கள் நீதியதிபரானது

குடந்தையம்பதியிலிருந்து இந்நூலைப் பரிசோ தித்து வருநாளில் பிள்ளையவர்களிடத்துள்ள அரும் பெருங் குணங்களையும் ஆங்கிலேய கல்வித் திறனையும், தமிழ்ப் பாண்டியத்தையும், நியாயசாஸ்திர உணர்ச்சியையும், பெருந்தன்மையையு மறிந்துணர்ந்த சாஸ்திரி யாரவர்கள் அவரைப் புதுக்கோட்டை சமஸ்தான : மகரமன்றத்து நியாயாதிபதிகளி லொருவராக நியமித்தனர். தமது உபகாரச் சம்பளத்துக்கு மேலதிகமாகத் - தாம் சம்பாதிக்கும் திரவியத்தைத் தமிழ் நூற்பதிப்புக் கே செலவு செய்ய வேண்டுமென்று முன்னர்த் தீர்மானித் திருந்தமையால் இப்பொழுது கிடைத்த பதவி அத்தீர்மானத்தை நிறைவேற்றுவதற்குச் சிறந்த வழி யாகுமென்று கருதி, அவ்வுத்தியோகத்தை அங்கீகரித்து 1887௵- தமது புத்திரரையும் மருகரையும் கல் வியின் பொருட்டுச் சென்னை நகருக்கனுப்பிவிட்டுத் , தாம் புதுக்கோட்டை சென்று நீதிபதித்துவத்தை வகித்தனர். அவருக்கு இவ்வுத்தியோக மமைந்தது அவர் நண்பர் சுற்றத்தவராதியோர்க்குப் பெருமகிழ்வைத் தந்தது.

புதுக்கோட்டை சுமஸ்தானத்து மகாமன்றத்து நியாயாதிபதிகளாயிருந்த மூவரில் அவர் ஒருவராய்க் கடமை பூண்டு தமது வேலையைக் குறைவற நடாத்தி வந்தமையால் மகாராஜா அவர்களின் மந்திரியும் பிரதி காவலருமாகிய மேற்கூறிய சாஸ்திரியாரவர்கள் இவ ரிடத்து மிக்க பிரீதியுடையராயினர். அஸ்தமன வேளை யில் நீதியதிபர் மூவரும், மந்திரியாரும் ரதவாகனாரூடராய்த் தேகவப்பியாசத்தின் பொருட்டு, சமஸ்தான இராஜ வீதியிற் சவாரி செல்வதும், பந்தடிக்குஞ் சாலையிற் சென்று பந்து விளையாடுவதும், பின்னர் தம்முள் |ளொருவ ரகத்துச்சென்று விநோத சம்பாஷணை செய்வதும், அடிக்கடி இராச சமுகஞ்சென்று கொண்டாடுவதும் அக்காலத்துச் சிறுவராயிருந்து பிள்ளையவர்கள் பராமரிப்பின் கீழ்வளர்ந்த எமது கண்களைவிட்டின் னுமகன்றபாடில்லை. மகாராஜா அவர்கள் கலாசாலையில் மாணவராய்க் கல்விகற்ற எமக்கும் நீதியதிபர் வீட்டுப் பிள்ளைகளென்னுங் கண்ணியமும் விசேஷ மதிப்புங் கிடைத்தன.

பிள்ளையவர்கள் புதுக்கோட்டையில் நான்கு வருடம் நீதியதிபராயிருந்தனர். நீதிஸ்தானத்துக் கடுத்த வேலையில் முன்னாதிக பயிற்சியில்லாதவராயினும் நியாயாசனத்திற் றமது கூட்டாளிகளாயிருந்த மற்றையோர்க்கு அவர் ஒரு சிறிதுங் குறைந்தவராகக் காணப்பட்டிலர். கூர்ந்தபுத்தியும் திடசித்தமும் ஆழ்ந்த - நியாய சாஸ்திர வறிவும் உண்மையிது பொய்யிது - வென்றும் நியாயமிது அநியாயமிது என்றும் பகுத் தறியுஞ் சக்தியும் அவர்பாற் குடிகொண்டிருந்தமையா னே நீதியதிபர் கடமையைச் செலுத்துவது அவருக்கு எளிதாகவே யிருந்தது. இக்கண்ணியமான வேலையை வகித்து நடத்திய காலத்துப் பிள்ளையவர்கள் நடுவுநிலை . குன்றாது தமது நாளாந்தர வேலையைக் கிரமமாக நடத் , தியது மன்றிச் சர்வ ஜனங்களாலும் நீதிமான் தர்ம வான் என்று : புகழ்ந்து கொண்டாடப்பட்டும் வந்தனர்.

தமக்குக் கிடைக்கும் சாவகாச முழுவதையும் கலித்தொகைப் பரிசோதனைக்கே செலவிட்டு வந்தமை யால் அஃது அதிவிரைவில் முடிவெய்தியது. ஆகவே அதை ஸ்ரீ தொண்டமான் புதுக்கோட்டை மகாராசா வின் மந்திரியும் பிரதி காவலருமாகிய கௌரவ, அ. சேஷைய சாஸ்திரிகளின் காருண்யதிரவியோபகாரத் . தைக்கொண்டு 1887௵ ஆடிமீ அச்சிட்டு வெளியிட்ட னர். இந்நூற் பதிப்பிற் பிள்ளையவர்கள் தம் யுக்திக் கியைந்தவாறு சிற்சில விகற்பங்களைச் செய்துளரென்பது அவர் பதிப்புரையிற் காணக்கிடக்கின்றது. ஏட்டுப்பிர தியாயுள்ள முதனூலை அச்சினிற் புகுத்திய பிரகடனா சிரியராகிய அவர் அதனை அச்சொரூபமாகவே பதிப்பியாது, தமக்குத் தோன்றியவாறு விகற்பித்தது. பெருந் தவறென்றும், அவ்வாறு விகற்பித்தல் வழிநூல் சார்பு நூல் என்றின்னன செய்வோர்க்கே தக்கதென் றும் சிலர் கூறினர். சிலர் அவர் அவ்வாறு செய்தது தவறென்று வாஸ்தவமாகவே பிள்ளையவர்கட்கு நேரிற் கடிதமெழுதிக் கண்டித்தனர்.

சில வாக்கியங்களை இடமாற்றி வைத்ததேயன்றி ஆசிரியர் மொழி நடைகளில் ஓரெழுத்தேனும் மாற்றில ரென்பதைக் கண்டாராகவும், தாம் செய்த சிறுவிகற் பங்களுக்குப் போதிய நியாயந் தந்திருப்பவும் அவர்கள் அவ்வாறு முரணியது தக்கதன்று. அடியோடழிந்து போகும் பழைய நூற்களைத் தஞ் சிற்றறவிற் கெட்டிய மட்டும் பரிசோதித்து நிலை நிறுத்தப் புகுந்த பரிசோதனாசிரியர்மேற் குறைகூறுவது மிகவு மக்கிரமமென்பது சொல்லவும் வேண்டுமா?

கலித் தொகைப் பதிப்பில் பிள்ளை யவர்கட்கு நேர்ந்த பிரயாசை சிறுபான்மையதன்று. வீரசோழியப் பிரதிகளைப் போலாகாது கலித்தொகைப் பிரதிகள் ஆங்காங்கு அகப்பட்டன வாயினும் முழுப் பிரதிகளாக வகப்பட்டன மிகச்சிலவே. அவையும் அதிகப் பிரயா சையோடும் பணச்செலவோடுமே சம்பாதிக்கப்பட்டன. இந்நூற் பதிப்பில் பிள்ளையவர்கள் தாம் பத்துப் பிரதி கள் கொண்டு பரிசோதித்த தாகவும் அவற்றுட் பெரும் பான்மையானவை குறைப்பிரதிகளென்றுங் கூறியிருக் கின்றனர்.
------------

10. இலக்கண விளக்கம்.

தமக்குச் சாவகாசம் நேரும்போதெல்லாம் பழைய தமிழ்நூற் பிரதிகள் தேடும் வண்ணம் தமிழ் நாடெங்க ணுஞ் சுற்றுவதும், மடாதிபதிகளை யடிக்கடி தரிசிப்ப தும் பிள்ளையவர்கள் வழக்கமென்பதை முன்னரே கூறி யுள்ளேம். மடாதிபதிகளுக்கும் திருவாவடுதுறை யாதீனத்து மகா சன்னிதானத்திடத்து மிக்க பற்றுடைய ராகலின் அவ்வாதீனத்தை விசேஷமாய்த் தரிசித்து வந் தார். கலித்தொகையைப் பரிசோதித்துக் கொண்டிருக் குங்காலத்து ஒருகால் அவ்வாதீனத்துக்குச் சென்றனர்.

அக்காலத்து அவ்வாதீனத்து மகா சந்நிதான மாக வெழுந்தருளிய ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிக மூர்த்திகளும் வழக்கப்பிரகாரம் தமது மடத்து ஓதுவா ரை முன்னரே அயரதவீதிஸ்தானத்திற் கனுப்பிப் பிள் ளையவர்களை எதிர்கொண்டு சென்று தக்க மரியாதையோடு அழைத்துவருமாறு பணித்தனர். பிள்ளையவர்க ளும் மடத்திற் சேர்ந்து சின்னாட்டங்கிய பின்னர் ஒரு நாள் சுவாமிகள் பண்டைத் தமிழ் நூல்கள் விஷயமாகப் பிள்ளையவர்களோடு சம்பாஷித்தபோது இலக்கண விளக்கத்தைக் குறித்தும் பேசவேண்டியதாயிற்று. அப் பொழுது பிள்ளையவர்கள் இலக்கண விளக்கத்து மகி மையைப் பெருகக்கூறிச் சமண நூலாகிய நன்னூல் போலாகாது அஃது பஞ்சலக்ஷணமும் மாணாக்கருக்குப் போதியளவு செறிந்துள்ளதென்றும், அங்ஙனஞ் சிறப் புற்ற வோர் அரியவிலக்கண நூலின் மகிமையைத் திருவாவடுதுறை யாதீனத்தார் குறைக்க நினைந்து, தமதிஷ் டத்தைப் பூர்த்தி செய்வதற்கு நன்னூலை மேன்மைப் படுத்துவதே தக்க வழியெனக் கொண்டு தமதாதீனத் துச் சங்கர நமச்சிவாயப் புலவரால் ஒரு விருத்தியுரை எழுதுவித்ததும், அவ்வுரை சிறக்கும் வண்ணம் சிவஞான முனிவராற் புத்தம் புத்துரை எழுதுவித்ததும், பின்னர் அம்முனிவரால் இலக்கண விளக்கச் சூறாவளி என்று ஓர் அநியாயகண்டன மியற்றுவித்ததுமாகிய இன்னோ ரன்ன செய்கைகள் அவ்வாதீனத்தார்மாட்டெஞ் ஞான்றும் மாறாது விளங்குமோர் களங்கமேயா மென்றுங் கூறினார்.

சுவாமிகளும் தமதாதீனத்தார் செய்தது தவ றென்று ஒப்புக்கொண்டது மன்றி இலக்கண விளக்கம் அச்சிடப்படுமாயின் பண்டைச் சிறப்படைவது திண்ண மெனக்கூறி அதனை எவ்வாற்றானும் பரிசோதித்து அச் சிடல் வேண்டுமென்று பிள்ளையவர்கட்குக் கட்டளை யிட்டருளினர். இத்தோடுங்கூடச் சிறுகாப்பியங்களி லொன்றாகியதும் இறந்துபோகுந் தசையை அப்போதடைந்துள்ளதுமான சூளாமணியையும் அச்சிடுதல் உலோகோபகாரமாமெனப் பணித்தருளினர். உடனே பிள்ளையவர்களும் அப்பணிகளைச் சிறமேற்றாங்கி,

''குறிப்பினாலரிய குரவெண்ணமது கூறுமுன்புரி குணத் தினேன்,
பொறுப்பனோவடிகள் புவியிலென்னையொரு பொரு ளெனக்கொடு புகன்ற நூல்,
சிறப்புறப்பிழை திருத்தியச்சில் வெளிசெய்தொரோர் பிரதிதேவரீர்,
நறைப்பெருஞ்சரண நளின சந்நிதியி னல் கிடாதினி யென்னாளினே."

என்று விண்ணப்பஞ் செய்தனராம்.

சுவாமிகளும் பிள்ளையவர்களுடைய பேரன்பையும் குருபத்தியையும் வியந்து பாராட்டித் தமது மடத்தி லிருந்த இலக்கண விளக்கப் பிரதிக ளனைத்தையும் சூளாமணிப் பிரதியொன்றும் அவரிடத்திற் கொடுத்தருளியது மன்றி, வழக்கப் பிரகாரம் மடத்திற்காக வாங்கும் பிரதிக ளின் கிரயத்தோடு இந்நூல் ஒவ்வொன்றிற்காக நூறு ரூபா நன்கொடையளிப்பதாகவும் வாக்களித்தார்கள். பிள்ளையவர்கள் முயற்சிகட் கெல்லாங் கைகொடுத்துப் பேருபகாரியாய் நின்ற சுவாமிகள் இந்நூல்கள் அச்சில் வெளிவருவதற்கு முன்னரே யடைந்தமை அவருக்குப் பெருவிசனமே.

இலக்கண விளக்கத்தை மூலமும் உரையுமாகச் செய்தவர் திருவாரூர் அபிஷேகத்தர் மரபிற் சிறப்புற் றோங்கிய ஸ்ரீ வன்மீகநாத தேசிகர் குமாரர் வைத்திய நாத தேசிகர். உரையும் பாயிரமும் சில சூத்திரங்க ளும் வைத்தியநாத தேசிகர் குமாரர் சதாசிவ தேசிகரால் இயற்றப்பட்டன வெனச் சிலர் கூறாநிற்பர். அது தக்க தன் றென்பதைப் பிள்ளையவர்கள் உள்ளங்கையில் நெல் லியங் கனிபோற் றெள்ளிதிற் புலப்படுமாறு காட்டி.. யிருக்கின்றனர்.

இந்நூலாசிரியர் கல்வித்திறமையை வியந்து, அவர் காலத்து வித்துவான்களி லொருவர் பின்வருமாறு கூறியுள்ளார்;

"ஐம்பதின்மர் சங்கத்தர் ராகிவிடா ரோநாற்பத்
தொன்பதின்ம ரென்றே யுரைப்பாரோ-இம்பர்புகழ்
வன்மீக நாதனருள் வைத்தியநா தன்புடவி
தன்மீதந் நாட்சரித்தக் கால்."

ஆகவே இவர் கல்வி சாமானியமான தல்லவென்பது தெளிவாகிறது. ''முன்னூ லொழியப் பின்னூல் பல வினு, நன்னூ லார்தமக் கெந்நூலாரு , மிணையோ வென் இகமதிய னுந் துணிவே மன்னுக" என ஈசானதேசிகராற் சிறப் பிக்கப் பட்ட நன்னூலிற்குச் சைனமுனிவ ரெழுதிய வுரை தக்க தன்றெனக்கொண்டு, முன்னர் அதற்குரை யெழுதுவான் றொடங்கிய ஆசிரியர், அந்நூலாரோடு தம் மதம் மாறுபட்டமைகண்டு, பஞ்சலக்ஷணமும் செறிந்து விளங்கும் பிறிதோரிலக்கணஞ் செய்யக்கருதி இலக்கண விளக்கத்தை யியற்றினர். இந்நூலாசிரியர் படிக்காசுப் புலவர் போதகாசிரியராகலானும், அப்புலவர் சிகாமணி 1685-3 முதல் 1723- வரையில் அரசுபுரிந்த இரகுநாத சேதுபதியின் சமஸ்தான வித்துவானே யாக லானும், திருவாவடுதுறை யாதீனத்துச் சங்கர நமச்சிவாயப் புலவரது இயற்றமிழாசிரியராகிய சாமிநாததேசிகர் இவர் காலத்துச் சிறுவயதினராகலானும், இவை போன்ற பிறகாரணங்களானும் ஆசிரியர் காலம் ஏறக் குறைய 280- வருடங்களுக்கு மேற்பட்டதென்று துணியப்படும்.

இந்நூல் தோன்றியவுடன் நன்னூல் முதலிய சிற் றிலக்கணங்கள் யாவு மொருவாறு குன்றவே, இதுவே அற்றைநாட் டொடங்கி சுமார் அறுபது வருடங்க ளுக்கு முற்பட்ட காலம் வரையிலும் தமிழ்நா டெங்க ணும் பிரசித்திபெற்று நின்றது. ஆயினும் யாது காரணம் பற்றியோ திருவாவடுதுறை யாதீனத்தார், நன்னூ லைச் சிறப்பித்து இதன் மகிமைபை யொருவாறு குறைத் தமையால் இந்நூல் அச்சில் வாராது பயிற்சி குன்றியது. "சூறாவளி மாறாய் மோதியென்? சூத்திர விருத்திவான் ஆர்த்ததிர்த் திடித்தென்? கன்ன துரோண சயித்திரதர் என்ன துரோகம் இயைத்திடினுந் தேரொன்று கிடை யாத குறையன்றோ களத்தவிந்தான் சிறுவன் ! அச்சு வாகனங் கிடையாத குறையன்றோ இலக்கண விளக் கம் மடங்கியது'' எனப் பிள்ளையவர்களே குறிப்பித் திருக்கின்றனர். அன்றியும் இந்நூலுக்குத் தமிழ் நூல் வல்ல சான்றோரால் அன்று தொட்டின்றுகாறும் வழங்கி வரும் குட்டித் தொல்காப்பிய மென்னும் பெயரானே இதன் மாட்சிமை நன்கு பெறப்படும்.

ஆகவே பின்னூலெவற்றிலு மிந்நூல் சிறப்புடைத் தென்பது தெற்றெனப் புலப்படுகின்றது. இத்தகைய சிறப்புடைய விலக்கண நூலைத் தாழ்த்துவாள் கருதிச், சித்தாந்த சாஸ்திரத்தை நன்கு விளக்கும் சிவஞான பாடியமெனும் மகா கிரந்த கர்த்தாவாகிய சிவஞான யோகீஸ்வரர் இலக்கண விளக்கச் சூறாவளியெனுங் கண்டன மெழுதிப் போந்தது, தமிழை நன்குணர்ந்தோர்க்கு எஞ்ஞான்றும் விசனமாகவே யிருக்கு மென்பதற்கியாது மையமில்லை. தாமோதரம் பிள்ளையவர்களும் இவ்விசன மேலீட்டா லுந்தப்பெற்று, யோகீஸ்வரரும் அவர் மரபி னோரும் உவந்து சிரமேற்கொண்ட நன்னூலுக்கு இலக் கண விளக்கம் ஒரு சிறிதும் இழிவுடைத் தன்றென்ப தைத் தக்கவாதாரங்கொண்டு நிலைநிறுத்தி யிருக்கின்ற னர். ஆகவே பிள்ளைவர்கள் யோகீஸ்வரரிடத்து வெறுப் புடையரென்று கொள்ளற்க. ஆண்டு பிள்ளையவர்கள் யோகீஸ்வரரைக் குறித்துக் கூறிய பின்வரும் வாக்கியங்கள் அவர் யோகீஸ்வாரிடத்து எத்துணை மதிப்புடைய ரென்பதை விளக்குகின்றன.
"அகத்திய முனிவர் வரத்தினாற் றோன்றித் தென் மொழி வடமொழிக் கடல்களின் நிலை கண்டுணர்ந்து முன்னும் பின்னும் தமக்கிணையின்றி வீறித் தமிழிலுள்ள நூல்களுக்கெல்லாஞ் சிரோரத்தினமாய்ச் சொலியாநிற் கும் மகா பாடியத்தை அருளிச்செய்த யோகீஸ்வரரது பேரறிவு இமாசலமொப்பது. . எளியேன் சிற்றறிவு அதன்முன் ஒரு பூதூளிபோல்வது. அன்னோர், தப்பை ஒப்பென்று தாபிக்கவும் ஒப்பைக் தப்பென்று வாதிக்க வும் வல்லவர். அஃது அவர் காஞ்சீபுரத்து வைஷ்ணவ வித்துவான்கள் கொண்ட இறுமாப்பை ஒழித்தற் பொருட்டு அவர்கள் தலைமேற்கொண்ட இராமாய ணத்து நாந்திச் செய்யுளை முதலிற் பங்கப்படுத்திப் பின் னர் அதனையே அவர்கள் தலைவணங்கித் தம்பிழையைப் பொறுத்தருள்க வென்று வேண்டிய பொழுது சரி யென்று நாட்டியதனான் விளங்கும்.

ஆதலால் இன்னோரன்ன பெருஞ் சிறப்பினரை எதிர்த்து, இலக்கிய இலக்கணப் படைக்கலங்கள் தாங்கி, அவர் சூறாவளியை மாறாயழிக்கப் புகுந்தேனென்று கொள்ளன்மின். அவரும் அவர் மரபினோரும் உவந்து பாராட்டிய நன்னூற்கு இந்நூல் இழிவுடையதன் றெனும் மாத்திரையே யான் சொல்லலாயினேன்' என்று கூறியிருக்கின்றனர். அங்ஙனர் தாபிக்கப்புகுந்த பிள்ளை யவர்கள், யோகீஸ்வார் தெரிந்த குற்றங்களில் ஐந்தினை அவர் சொற்ற முறைப்படியே பெடுத்துப் போதிய நியாயங்காட்டித் தர்க்க விலக்கணஞ் சிதைவுறாது எவரு மங்கீகரிக்கும் வண்ணம் கண்டித்து, அவையும் அவை போன்ற பிறவும் போலிக் குற்றங்களே யன்றி நியாய மானவையல்ல வென்றும், வாதஞ் செய்யப் புகுங்கால் நிலையாதனவா மென்றும் காதலாமலகம் போற் காட்டி இலக்கண விளக்கத்து மகிமையை நாட்டினர்.

சிவஞான முனிவர் சூறாவளி யியற்றிய வழியும் இலக்கண விளக்கம் எட்டுணையுந் தாழ்வடையாது மிக்க பிரசித்திபெற்று வந்தும் பின்னர் திருத்தணிகைச் சாவணப் பெருமாளையர் நன்னூற்றுக்குக் காண்டிகை யுரை யியற்றி அச்சிட்டனராக, அஃது தமிழ் கற்போர்க்கு எளிதிலகப்பட்டமையானும் இலக்கண விளக்க மவ்வாறு அகப்படுதல் கடினமாயினமையானும் சற்றுக் குன்றி யது. அதைச் சிறப்பித்தற் பொருட்டே பிள்ளையவர் களும் அதைப் பரிசோதித்து அச்சிடத் தலையிட்டனர்.

கலித்தொகை அச்சாகி வருங்காலத்தே இலக்கண விளக்கப் பரிசோதனையும் நடந்து கொண்டே வந்தமை யாற் கலித்தொகை வேலை பூர்த்தியாயினவுடன் தமக்ககப் படுங்காலத்தில் பெரும்பான்மையை இலக்கண விளக் கத்துக்கும் சிறுபான்மை சூளாமணிப் பரிசோதனைக்கும் செலவிட்டு வந்தார். அதிகாலையிலெழுந்து தந்தசுத்தி முதலிய நித்திய கருமங்களை முடித்தபின்னர் பரிசோதிக் கும் நூலின் சிரேட்ட பிரதியைத் தமது கையிற்றாங்கி, அந்நூலின் மற்றைய பிரதிகளைத் தாங்கிய பலர் தம் மைச் சூழ்ந்திருக்க அவரவர் கையிலுள்ள பிரதிகளிலுள்ளவற்றைத் தமது கையிலுள்ள பிரதியிலுள்ளவற் றோடு சீர்தூக்கியும், ஒரு பிரதியின் கட் சிதைந்துள்ளதை ஏனைய பிரதிகள் கொண்டு நிச்சயித்தும், அப்பிரதிகளை யனுசரித்து அடியிற்கண்டவற்றைத் தமது கையாலெழு தியும், இன்னன முயற்சி யுடையராயிருப்பதும் பின்னர் ஸ்நானஞ் செய்து பூசை முதலியவற்றை முடித்துக் கொண்டு நியாயஸ்தலஞ் சென்று தமது கடமையைச் செலுத்துதலும் மாலைப் பொழுதில் வீடு வந்து சேர்ந்த பின்னர் சிறிது இளைப்பாறிப் பின்னர் தாம் விசாரணை செய்யும் வழக்குகளைக் குறித்துப் படிப்பதும், அவைகளைக் குறித்துத் தீர்மானங்கள் எழுதுவதுமாகிய வேலைகள் அவருக்கு அதிக கடினமாகவே யிருந்ததென் பது அவருடன்கூட வசித்த எமக்கு நன்றாய்த்தெரியும். ஆயினும் தமிழை வளர்த்தல் வேண்டுமென்னும் பேரா சையினாற் றமக்குள்ள வேலைகள் எவ்வளவு கஷ்ட மானவையாயினும் அவை யனைத்தையும் விடா முயற்சியோடு நிறைவேற்றி வந்தார்.

இலக்கண விளக்கம் அதிவிரைவிற் பரிசோதனை யாகி வருகையிற் பிள்ளையவர்கள், அதை அச்சிட ஆயி ரம் ரூபா பிடிக்குமென்றும் யாவரேனும் அதை அச்சிடுவதற்கு வேண்டிய திரவியோபகாரஞ் செய்தல் மிகவும் உலோகோபகாரமாகு மென்றும் ஓர் விளம்பர பத்திரம் அச்சிட்டு வெளிப்படுத்தினர். அதனைக் கண்ணுற்ற அவர் சகோதரரும் இரங்கூன் கமிஷனர் உத்தியோக சாலைச் சிரேட்ட கணக்கருமாயிருந்த சி.வை. இளைய தம்பிப்பிள்ளை யவர்களும் ஆங்குள்ள வேறு சில நண்பரும் ஒருங்கு சேர்ந்து ஐந்நூறு ரூபா உபகரித்தனர். அது கொண்டு இலக்கண விளக்கத்தை அச்சிட்டு முடிக்க வெத்தனிக்கும்போது மதுரை போடி நாயக்க னூர் ஜமீன்தார் ஸ்ரீ திருமலை போடய காமராசபாண்டிய நாயக்கர் துரையவர்கள் இலக்கண விளக்கப் பிரகடனச் செலவு முழுவதும் தாமே தருவதாகவும் வாக்களித்தனர்.

தாம் வகித்த பெருங்கடமைக்கு ஜமீன் தாரவர் கள் கைகொடுத்தது ஈஸ்வர கடாக்ஷமெனத் துணிந்து பிள்ளை யவர்களும் அவர்கள் பேருதவியைக் கொண்டு இலக்கண விளக்கத்தையும், தமது சகோதரர் சி. வை. இளையதம்பிப் பிள்ளையவர்களுதவிய தொகை யைக்கொண்டு சூளாமணியையும் அச்சிடத் தீர்மானித் தனர். இலக்கண விளக்கமும் மேற்கூறிய ஜமீன்தாரவர்கள் காருண்ய திரவியோபகார சகாயத்தால் அச்சாகி 1889-ம் வருடமாகிய விரோதி வருடந் தமிழ் நாட்டின் கண் பவனி வந்தது.

இலக்கண விளக்கப் பதிப்பு விரைவில் நடந்தேறு மாறு ஸ்ரீமத் ந. க. சதாசிவம் பிள்ளை , ம-- -ஸ்ரீ, த. கனகசுந்தரம் பிள்ளை எனு மிருவரும் தக்க உதவி புரிந்தனர். பிள்ளையவர்களும் தமது பதிப்புரையின்கண் அன்னோர்க்கு மிக்க நன்றி கூறியிருக்கின்றனர். இப்பதிப்பு விஷயமாகப் பிள்ளையவர்கட்கு மிக்க உதவிபுரிந்த பிறிதொருவருளர். ஆயினும் அவர் பெயர் தாமும் பதிப் புரையின்கண் காணப்படவில்லை. நெருங்கிய உறவின ரெனக் கருதி அவர் பெயரை யொழித்தனர் போலும்.
-------------------

11. சூளாமணி.

இலக்கண விளக்கம் முற்றுப் பெற்றபின், தமது சாவகாச முழுவதையும் சூளாமணிக்கே செலவிட்டமை யால் அதுவும் அதிவிரைவில் நடைபெற்று வந்தது. இது சிறுகாப்பியங்களில் மிகச் சிறப்புடைய தென்பதூஉம் இதனை யியற்றியருளியவர் தோலா மொழித் தேவ ரென்பதூஉம்

"பொழிந்து பொருள் விளக்கும் போழ்ந்திருக்கால் சீக்கும்
இழிந்தவரை யேற்றி நிறுத்தும் - செழுந்தரளத்
தோளாமணியை நகுந்தோலா மொழி தொகுத்த
சூளாமணி யகத்துச் சொல்''

திக்கெட்டும் புகழ்படைத்த திறல் விசயன்
      புயலனைய கையன் றெவ்வைக் கைக்கொட்டி நகைக்குமிகற் கார்வெட்டி
      யரைவன்வள நாடற் கேற்பப் பொக்கெட்டும் பத்துமிலான் புகழ்தரும்
      தீர்த்தன்மலர்ப் பதம்பூ சிப்போன் சொற்கெட்டா வரன்றோலா மொழிசூளா
      யணியுணர்வோர் துறைகண் டோரே." எனும் செய்யுட்களால் வெளியாகின்றன. இந்நூலின் காலம் மேற்கூறிய செய்யுளிற் கண்டிருக்கும் வண்ணம் கார்வெட்டி நகரில் அரசுபுரிந்த விஜயராசன் காலமென் பது தெளியக் கிடத்தலானும், கார்வெட்டி நகரின் காலம் உறந்தைக்கு முந்தியதாகலானும், யாப்பருங்கல் விருத்தியிலும் அதன் வழித் தோன்றிய காரிகைக்குக் குணசாகரர் சகாப்தம் 200-300 அளவில் எழுதிய விரித் துரையிலும் சூளாமணியிலிருந்து அநேக செய்யுட்கள் இலக்கியமாக எடுத்தாளப் பட்டிருக்கின்றமையானும், இந்நூலின் வயது ஆயிரத் தைந்நூற்றுக்குக் குறைந்த தன்றென்று பிள்ளையவர்கள் துணிகின்றனர். இரண் டாயிரமென்று துணினருமுளர்.

இந்நூற் பரிசோதனைக்காகப் பிள்ளையவர்கள் சேக ரித்த பிரதிகள் ஐந்து. இவற்றுள் முதற் பிரதி திருவா வடுதுறை யாதீனத்து சுவாமிகள் கொடுத்தருளியது. பின்னர் கருவூர்ப் பண்டிதர் ஸ்ரீமத் வெங்கட்ட ராமையங்காரவர்கள் தமது பிரதியொன்றனுப்பினர். அப் பால் வேதாரணியம் ஸ்ரீ அனந்தவிஜய முதலியார் பிரதி யொன்றும் பெருமண்டூரிலுள்ள ஒரு சைன வித்துவா னுடைய பிரதியொன்றும் பிள்ளையவர்களுக்கு அகப்பட் டது. பின்னர் வீடுர் சைன வித்துவசிரோமணி ஸ்ரீமான் அப்பாசாமி சாஸ்திரிகள் பிரதியுங் கைக்குக் கிட்டியது.

ஆகவே அகப்பட்ட பிரதிகள் ஐந்தேயாயினும் “அவற்றுள் இரண்டு வீடுர்ப் பிரதியைப் பார்த் தெழுதப் பட்டனவாதலின் எஞ்சிய மூன்றுமே பரிசோதனைக் குபயோகப் பட்டன. இம்மூன்று பிரதிகள் கொண்டு பரிசோதித்து ஏறக் குறைய நூறுபக்கம் அச்சாயின ' பின்னர் யாழ்ப்பாணம் ம- - -ஸ்ரீ , வி. கனகசபைப் பிள்ளை யவர்களுடைய பிரதியொன் றகப்பட்டது.

அதற்கும் ஏனைய பிரதிகட்கும் அதிக வேறுபா டிருந்த 'மையாற் பின்னும் சில ஏட்டுப் பிரதிகள் சேகரித்து, இந் நூலை நன்றாய்ப் பரிசோதிப்பான் கருதிச் சமணர் வசிக் கும் இடங்களுக்கெல்லா மோர். சுற்றுப் பிரயாணஞ் செய்கையில் காஞ்சிபுரத்தில், ஒருமிகப் பழைய சூளா மணிப் பிரதி கண்டு அதை வாங்கிக்கொண்டு வந்து மற்றைய பிரதிகளோடு ஒத்துப் பார்த்ததில், முன்னர் அச் சிட்ட பாக முழுவதும் மறுபடி திருத்தி அச்சிடவேண் - டியதாயிற்று. சூளாமணியும் சொல்லற்கரிய வனப் புடன் 1889ம் வருடமாகிய விரோதி வருடம் கார்த்திகை மாதம் வெளியாயிற்று. இதன் பிரகடனச் செலவு முழு வதும் யாம் முன்னர்க் கூறியபடி பிள்ளையவர்கள் சகோ தார் ம ---ஸ்ரீ, சி வை. இளையதம்பிப் பிள்ளையவர்க ளானும் அவர் நண்பினரானு முபகரிக்கப்பட்டது.

சூளாமணி அச்சாகி வரும் பொழுது, பிள்ளையவர்க ளும். சிலகால உத்தரவு பெற்றுத் தேகாரோக்கியத்தி னிமித்தம் ஜனனதேசஞ்செல்லக் கருதினர். இணையற்ற வித்தியாபிமானியும் பரோபகாரியு மென்று யாவரானுங் கொண்டாடப்படும் எம்மாசிரியர் மில்லர் துரையவர்க ளின் அதிபத்தியத்தின்கீழ் நின்று நிலவிச் சென்னை இராஜதானியின் சிரேட்ட கல்லூரியாய் விளங்கும், சென்னைக் கிறிஸ்தவ கல்லூரியில் அக்காலத்துக் கல்வி கற்றுக் கொண்டிருந்தவரும், அதுகாரணமாகச் சமுசார சகிதமாய்ச் சென்னையின்கண் வசித்தவரும், பிள்ளையவர்கள் சிரேட்ட குமாரனுமாகிய சி.தா. அமிர்தலிங்கம் பிள்ளை ஏதோ சுவாசப்பையைச் சார்ந்த நோயுற்று வைத்தியஞ் செய்வித்ததற் பொருட்டுத் திருக்குடந்தைபின்கண் அப்பொழுது பிரபல வைத்தியராயிருந்த தமது சிறிய தந்தையாராகிய சி வை. நல்ல தம்பி பிள்ளை யவர் களிடத்துக்குச் சென்றிருந்தனர். அங்கே சென்றிருப் பதை யறிந்த பிள்ளையவர்கள், சிலமாத உத்தரவு பெற்று அங்குச் சென்றார். சென்ற பின்னர் தமது குமாரன் சிறி சௌக்கிய மடைந்தமை கண்டு, யாழ்ப்பாணத் துக்கு அவரையழைத்துச் செல்வது தேகாரோக்கியத் தைத் தருமெனக் கொண்டு, அங்குச் சென்று புண்ணிய தீர்த்த ஸ்தலமென்று கொண்டாடப்படுங் கீரிமலையில் வசிப்பாராயினர்.

தாமொன்றை நினைக்கத் தெய்வம் தானென்றை நினைத்தாற்போல, அங்குச் சென்றபின் நோயதிகப் பட் டமையால் அவர் சிரேட்ட குமாரரும் 1889-ம் சித்திரைம் இறந்தனர். புத்திரரனைவருள்ளும் இவரே தமது தந்தையாரால் மிகவு மருமையாய் வளர்க்கப் பட் டவர். சிரேட்ட புத்திரனென்னும் விசேஷ பிரீதியோ டுங்கூட, சிறந்தரூபம், ஆழ்ந்த கல்வியறிவு, தெய்வபத்தி நல்லொழுக்கம், பெரியோரைப் பூசிக்கும் குணம், தரும சிந்தை முதலிய பிறவற்றாலுண்டாய நேசமும் இவர் பாற் பொருந்தி யிருந்தன. பிள்ளையவர்கள் யாது செய் யினும் இவரனுமதியின்றிச் செய்யார். எவ்வித காரியங் களினும் தமது புத்திரனோடு முற்ற வாலோசியாது பிர' வேசிப்பதரிது. பி. ஏ. வகுப்பில் அப்பொழுது கல்வி கற்றுக்கொண்டிருந்த தமது குமாரன், தமது இருபத் தாறாவது பிராயத்து யௌவனதசையில் இளம் மனைவியையும், இருகுழந்தைகளையும், தமது தந்தையையும், எண்ணிறந்த சுற்றத்தவரையும் பரிதபிக்க விட்டிறந்தது பிள்ளையவர்கட்கு ஆற்றொணாத் துயரைத் தந்தது.

ஆயினும் மிக்க திடசித்தமுடையாதலின் அதை யும் ஒருவாறு சகித்தார். சகித்துமென்! தமது புத்திய னிறந்த பின்னர் உத்தியோகம் வகித்தல் தக்கதும் அவ சியமுமன்றெனக் கொண்டு அதைப் பரித்தியாகஞ் செய்யத் தீர்மானித்தனர். ஆயினும் தீர்மானித்தவுடனே அதை விடுத்தல் தமதுடன்படிக்கைக்கு மாறாகு மெனக் கருதிப் பின்னுஞ் சிலமாத காலம் உத்தியோ கம் நடாத்திய பின்னர் 1890-ம் அதைவிட்டு நீங்கினர்.

உத்தியோகத்தை விட்டு நீங்குவதற்கு முன்னரும், தமது குமாரனிறந்தபின்னரும் சிலகாலம் தமது ஜனன தேசமாகிய யாழ்ப்பாணத்திற்றங்கினார். அங்கு வசிக்கும் ' போது, தமக்குப் பேராதாரமாயிருப்பரென்று தாமெதிர் பார்த்திருந்த புத்திரசிகாமணி இறந்து பட்டமையானும், கொளும்பில் இப்பொழுது வசிக்கும் அவருடைய இரண்டாவது குமாரனாகிய சி.தா. அழகசுந்தரம்பிள்ளை அப்பொழுது சிறுவயதினரா யிருந்தமையானும், தமது குடும்ப காரியங்களை நடத்துவதற்கும், புருஷனையிழந்து கைமையடைந்த தமது மருமகளுக்கும் அவர் குழந்தை கட்கும் ஆதரவு செய்ய யாருமில்லையென்றுங்கண்டு, இவ் வருடத்தில் மூன்றாவது தரம் விவாகஞ் செய்தனர். இம் ', மனைவியால் அவருக்கு சிங்காரவேலு வெற்றிவேலு எனவிரு புதல்வருளர்.

விவாகஞ் செய்த பின்னர் தமது மனைவி, மகள், மருமகள், அவர் குழந்தைகள் முதலினோரோடுங்கூடப் புதுக்கோட்டைக்குச் சென்று, தமது நீதியாதிபதியாங் கடமையைச் சிலகாலஞ் செலுத்திவந்தார். 1882-ம் ௵ அவருடைய இரண்டாவது மனைவி பிறந்தபோது நிலை குலைந்து தத்தளித்த அவர் குடும்பம் இக்காலத்து ஒருவாறு பழைய சிறப்பையடைந்து பார்ப்போ ரெவர்க் கும் சந்தோஷத்தைத் தந்ததாயினும், புத்திரசோகம் அவரைப் பெரிதும் வருத்தினமையானும், நேத்திரத்தின் கட் டோன்றிய சிறுநோயானும் அவர் தமது உத்தியோ கத்தைப் பரித்தியாகஞ்செய்து, 1890-ம் வருடத்து முற் கூற்றிற் சென்னையம்பதிமேவினர். இக்கால வாரம்ப முதல் அவர் தேகசௌக்கியமும் சற்றுக் குன்றியே வந் தது. தமிழ் நூல்களை இதுவரையிற் பதிப்பித்ததில், அவர் அநேக ஏட்டுப்பிரதிகள் சேகரித்திருந்தமையால், இனிமேற்றமிழ் நாடுகளிற் சுற்றுவது அநாவசிய மென் றும், அவ்வாறு செய்ய நேர்ந்துழியும் சென்னையில் வசித் தல் அதற்கிடையூறாகா தென்றுங் கண்டு, எஞ்சிய தமது வாணாட்களையும் தமிழுக்கே தத்தஞ் செய்யக்கருதி, நூல்களைப் பரிசோதிப்பதற்கும் சென்னையே தக்கவிட மெனக்கொண்டு அங்குச் சென்றனர்.

சென்னையைச் சார்ந்தவுடன் தொல்காப்பியம் எழுத்ததிகாரத்தை நச்சினார்க்கினிய ருரையோடு மச்சிட வெண்ணி அதனைப் பரிசோதித்து வந்தார். சென்னை யைச் சார்ந்த பின்னர் தமிழைக் குறித்த விஷயங்களிற் சர்வகலாசாலையாருக்கும் தம்மாலியன்ற உதவி புரிந்து வந்தார். பிரவேச பரீட்சைக்குப் பாடமாக ஏற்படுத்த வேண்டியனவற்றைத் தெரிந்தெடுத்து அச்சிடுவது பல் லாண்டுகளாக இவர்பேரில் வீழ்ந்த பெருங் கடமை யாயிற்று. சென்னைச் சர்வ கலாசாலைத் திராவிட கிரந்த பரிபாலன சபையின் விசேட அங்கத்தவரு ளொருவரா யிருந்ததுமன்றித் தமிழ்ப் பாஷையில் ஓர் போதிகாரியாயு மிருந்தார். மேற்கூறிய சபையாரின் கூட்டங்களில் தமிழ்ப்பாஷையில் மிக்க நிபுணரெனப் பெயரெடுத் தார். மேற்கூறிய சபையாரின் கூட்டங்களில் தமிழ்ப் பாஷை சம்பந்தமாக நடக்கும் எவ்வித விவகாரங்களி லும் பிள்ளை யவர்க ளபிப்பிராயமே விசேஷமாக மதிக்கப்பட்டு வந்தது.

அநேக வருடங்களுக்கு முன்னர் சர்வ கலாசாலை யாரின் கண்ணிய கூட்டத்தவரு ளொருவராய் நியமிக் கப்பட்டவ ராதலின் அச்சபையாரின் மிகப் பழைய அங்கத்தினரு ளொருவராகி, அநேக வாண்டுகளாகச் சர்வ கலாசாலையாரின் பொது நடவடிக்கைகளிலுந் தமது திறமையையும் பாண்டித்யத்தையு முபயோகப் படுத்திப் பிரசித்திபெற்று விளங்கினார். நியாய சாஸ்திரப் பரீட்சையிற் றேறியவராகலானும், நியாயாதிபதியாகச் சிலகாலமேனுங் கடமை செலுத்திப் பயிற்சி யடைந்தவராகலானும், நியாய சாஸ்திர பரிபாலன சபையின் அங் கத்தவராகவும் துலங்கினர். -

சர்வ கலாசாலையாரின் தமிழ்ப் பரீட்சகராகவிருந்து பரீட்சைகளை நடாத்தினமையால், அச்சபையாரும் இவ ரைத் தமிழ்ப் பரீட்சா சங்கத்து அக்கிராசனபதியாகப் பலமுறையும் நியமித்து வந்தனர். மாணாக்கர் தலை தடு மாறி, இடர்ப்படும் வண்ணம், கடின கேள்விகளைக் கொடுத்து வித்தியா வகங்காரங் காட்டித் தம் சுயக்கியா னத்தைக் காட்டப்பகுஞ் சில பரீட்சகர்போ லாகாது, பரீட்சைகட்குத் தக்க வளவாய் மாணவர் அறியற்பா லன் விவையென வோர்ந்து, தெள்ளிய தமிழில் அர்த் தம் தெற்றெனப் புலப்படுமாறு கேட்குந் திறமையும், மாணவர் தரும் விடைகளைச் சரியாக நிதானித்துத் தக்க வாறு மதித்தலுமாகிய விசேஷ விலக்கணங்களால் அவர் மாணவரைப் பெரிதும் வசீகரித்தனர்.

சரியாயுய்த்து நோக்கு மிடத்துத் தமிழிலக்கண விலக்கியங்களை நன்குணர்ந்தும், அரிய பழைய தமிழ் ரல்களைப் பரிசோதித்துப் பதிப்பித்தும், ஆங்கிலத்தி னும் மற்றையோர்க்குச் சமானமான தேர்ச்சி யடைந் தும் சர்வ கலா சாலையின் முதல் வித்தியார்த்தியெனுங் கண்ணிய பட்டம் பெற்றும், பி.எல். பரீட்சையிற் றேறி யவராகலின் நியாய சாஸ்திரியெனப் பெயர் வகித்தும், சத்தியம், நேர்மை, பெருமை, சிறுமை யறிதல் , தன்னை பொறுத்தல், சுய பாஷாபிமானம், விடாமுயற்சி, உலக வறிவு ஆதியாஞ் சிறந்த குணங்க ளமையப் பெற்று மிலங்கிய விவரைச் சர்வ கலாசாலையாம் நட்சத்திர மண் டலத்து மிக்க சுடர்க்கொழுந் தெரிந்து மன்னியதோர் தாரகையாமெனக் கூறுதல் சால்புடைத்தேயாம். இவர் தமிழறிவும் பரீட்சிக்குந் திறமையையு மெத்துணைத் தென்பதற்கு, யாம் கூறுவதன்று, தமிழுலகமே சாட்சி பகரும். இத்தகைய அதிகண்ணிய வேலைகளோடு தாங் கையேற்ற தொல்காப்பியம் எழுத்ததிகாரத்தையும் அதிக விரைவிற் பரிசோதனை செய்து அச்சிட்டு வந்தனர்.
--------------

12. தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.

எழுத்ததிகாரவுரை யாம் மேற்கூறியவாறு மழவை மகாலிங்கையரால் இற்றைக்கு அறுபது வருடங்களின் முன்னர் அச்சிடப்பட்டது. பின்னர் எழுத்ததிகாரத்துக்கு இளம்பூரணருரையும் அச்சிடப்பட்டது. ஆகவே பிள்ளை யவர்கள் சொல்லதிகாரத்தை அச்சிடத் தொடங் கும்போது, அவர் நண்பர் சிலர், சொல்லதிகாரம் அச் சிட்ட பின்னும் தொல்காப்பியவுரை பூரணமா யகப் படுவதற்கு எழுத்ததிகாரப் பிரதி கிடையா தென்றும், அதையுஞ் சேர்த்து அச்சிடுதல் பிள்ளை யவர்கள் கட னென்றுங் கூறினமையானே அவர் எழுத்ததிகாரத்தை அச்சிடலாயினர். அது பெரும்பாலும் மகாலிங்கையர் பிரதியை யாதாரமாகக் கொண்டும், தென்றேசப் பிரதி களை உபகரணமாகவைத்தும் அச்சிடப்பட்டது. முன்ன ரொருவர் பதிப்பித்த நூலைத் திருப்பியும் பதிப்பித்தல் தகாதென்பது பிள்ளையவர்கள் பிரமாணம். இவ்வெழுத் ததிகாரம் மாத்திரம் அப் பிரமாணத்துக்கோர் புற நடையே போலும். இது பிள்ளை யவர்கள் எழுத்ததி காரப் பதிப்புரையின்கட் கூறியுள்ள பின் வருவனவற் றாலும் தெளிவாகும்.

''ஒரு முறையாயினும் பிறர் பிரசுரித்த நூல்களை மீள அச்சிடுவிக்காத எனக்கு இவ்வெழுத்ததிகாரம் ஒரு விலக்காயிற்று. அன்றியும் ஒரு பெரு நூலின் முதலிலே யுள்ளதோர் சொற்பபாகத்தை மாத்திரம் ஒருவர் பிர சுரஞ்செய்து காலகதி யடைந்து விட்டால், பின்னர் அந் நூல் முழுவதையும் அச்சிடுவோர் முதற்பாகத்தையுஞ் சேர்த்து அச்சிடுதல் தவறன்றாகும். உலகவழக்கமும் அதுவே".

இந்நூல் அச்சிடுவதற்குப் புதுக்கோட்டை சமஸ் தானத்து நீதியதிபருள் ஒருவரான ம- - - ஸ்ரீ.ம. அண் ணாமலைப்பிள்ளை யவர்கள் மிக்க திரவியோபகாரஞ் செய்தனர் - ஆகவே எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியருகை யோடு 1891 வைகாசிமீ வெளிப்போந்தது.

தாம் சென்னையில் வசிக்குங் காலத்தே தமது கனிஷ்ட சகோதரரும் அப்பொழுது திருக்குடந்தையிற் பிரபல வைத்தியருமாயிருந்து தற்போது இறந்துபோன சி. வை நல்லதம்பிப்பிள்ளை அவர்களையும் சென்னைக்குக் கொண்டுவந்து ஸ்தாபிக்க வேண்டுமென்னும் நோக்கத் தோடு அவரையும் அவ்விடத்துக் கழைப்பித்தனர். நல்ல தம்பிப்பிள்ளை யவர்களும் அவர் சகோதரர் கருதியவாறு சென்னையிற் சிறிது காலந்தங்கினாராயினும், அவ்வூர் அவ ருடைய மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் சௌகரியப்படா மையால் அவர் திரும்பியும் குடந்தை நகர்க்கேகினார்.

இக்காலத்தில் பிள்ளையவர்கள் தமது கனிஷ்ட குமாரத்திக்கு வதுவை செய்வான் கருதித் தமது ஜன னதேசஞ் செல்லக்கருதினர். இரங்கூன் கமிஷனர் உத் தியோக சாலைச் சிரேட்ட கணக்கரான இவர் சகோதரர் சி. வை. இளைய தம்பிப்பிள்ளையும் தமது சிரேஷ்ட குமா ரத்திக்கு மன்றல் புரியக்கருதித் தமது சகோதரனனுமதி பெறும் நோக்கமாகச் சென்னைக்குச் சென்றனர். பிள்ளை யவர்களும் அவர் சகோதரரும் இவ்விவாக விஷயங்க ளைக் குறித்துத் தீர்க்காலோசனை செய்தபின்னர், அப்பொழுதே யாழ்ப்பாணஞ் சென்று இருவிவாகங்களையும் ஒரே முறையில் நடத்தத் தீர்மானித்து 1892 யாழ்ப் பாணம் சென்றனர்.

அங்குச் சென்ற பின்னர் பிள்ளையவர்கள் குமாரத் திக்கென்று குறிப்பிடப்பட்டிருந்த மணமகன் தக்க வா னன்றென்று பிள்ளையவர்கள் சகோதரருட்சிலர் அவரோடு மாறுபட்டமையாற் பிள்ளையவர்களும் அம்மண மகனை நீக்கவேண்டியதாயிற்று. பிள்ளையவர்களுடைய மருகர் ச. வை. சிதம்பரம்பிள்ளையவர்கள் கனிஷ்ட குமாரரும் பிள்ளையவர்கள் மருகருமான தெ.சி. தில்லை நாய கம் பிள்ளை அவர்களே அப்பெண்மணிக்கு மணமாலை சூட்டினர்.

இவ்விரு விவாகங்களும் நிறைவேறிய பின்னர் பிள்ளையவர்கள் திரும்பியும் சென்னையைச் சார்ந்து வழக் கப்பிரகாரம் புரசபாக்கத்தில் வசிப்பராயினர். செந்தமிழ்ப் பரிபாலனமே பொழுது போக்காக வுடையவ ராகலானும், முன்னர் தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியத்தையும் பின்னர் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியத்தையும் அச்சிட்டு முடித்தவராகலானும், சொல்லதிகாரத்தையும் அச்சிடுதல் அவசியமெனக் கொண்டு அதைப் பரிசோதித்து அச்சிட்டு வந்தனர்.
----------------

13. குடும்ப விஷயங்கள்

பிள்ளையவர்கள் முன்னர் பதிப்பித்த சூளாமணிக்கு யாராவது தக்க உரைசெய்தல் நலமெனக்கொண்டு, யாவரேனுமோர் தமிழ்ப்பண்டிதர் அவ்வேலையைச் செய்து முடித்தல் பரோபகாரமாமென்றும், அவ்வாறு பூர்த்தியான வோருரை செய்து முடிப்பவர்க்குத் தாமும் இரு நூறு ரூபா பரிசளிப்பதாகவும், புதுக்கோட்டை- யிலிருக்கும்போதே ஓர் விளம்பாஞ் செய்திருந்தனர். அன்று தொட்டு அதுகால வரையில் யாவரேனுமவ்வாறு செய்ய முன்னேறி வாராமைகண்டு, தாமே அதைச் செய்வதற்குப் போதிய சாவகாச மின்மையாற் பிறிதொரு தமிழ்ப் பண்டிதரைக் கொண்டு ஒருரை இயற்றுவித்தும் வந்தனர். இவ்வுரை முடிவெய்தியும் அச்சில் வராமுன்னர் பிள்ளையவர்கள் இறந்தது தமிழ் மாது புரிந்த தவக்குறையென்றே சொல்லவேண்டும். அச் சிறந்த வுரை இன்றுங் கையெழுத்துப்பிரதியாகவே யிருக்கின்றது.

இக்காலத்திற் பிள்ளையவர்கள் ஆருயிர் நண்பரும் ஆங்கிலம் தமிழ் எனுமிரண்டினும் பூரண பாண்டித்திய முடையவருமான ராவ் - பகதூர் பூண்டி. அரங்கநாத முதலியாரவர்கள் இயற்றிய கச்சிக் கலம்பகம் முடி வெய்தி வெளிப்பட்டது. வெளிப்பட்டவுடன் ஓர் கடிதர் சென்னைக் கிறீஸ்தவ கலாசாலைச் சமாசார பத்திரிகையின் கட்டோன்றி முதலியாரவர்கள், கல்வியறிவு நாகரீகம் முதலியவை மிகுந்த அக்காலத்துக் கலம்பக மியற்றப் புகுந்தது தக்கதன்றென்றும், அதன்கட்கூறிய சிற்சில உபமான உபமேயங்கள் தகாதனவென்றும், அக்கலம்பகம் இன்னின்ன வழுக்கள் செறிந்துள்ள தென்றும் பாக்கக்கூறி உரக்கமுழங்கினர்.

கலம்பகத்தை இயற்றிப்போந்த நூலாசிரியர் அதை அச்சிடா முன்னரும், அச்சிட்ட காலத்தும் பிள்ளை யவர்களோடு அடிக்கடி ஆலோசனை செய்தவராகலானும், அவர் தம் முக்கிய நண்பரேயாகலானும், அப்பத்திரிகை யின்கட் டோன்றிய ஆட்சேபனைகள் யாவும் நிலையற் றனவென்று பிள்ளையவர்கள் தேறியமையானும், அவற்றைத் தக்கவாறு கண்டித்தல் தமது கடமையெனக் கொண்டு அங்கிலேய பாஷையில் ஓர் சிறந்த கண்டன மியற்றுவித்து, "தற்கால கலம்பகப் பிரதிவாதம் (Adefence for the modern Kalambakam) எனப் பெயர் தந்து வெளியிட்டனர். அத்தோடு அக்கலம்பகத் தைக்குறித்த வாதம் நீங்கியது.

1893ம் - வருடத்திற் பிள்ளையவர்களுக்கு அதிகவியா குலத்தைத் தந்த பிறிதோர் சம்பவம் அவர் குடும்பத்து நிகழ்ந்தது. அவருக்குப் புத்திரசிகாமணிகளாக வுதித்தோர் யாவருமிறந்துவிட சி.தா. அழக சுந்தரம் என்னு மொருவரே எஞ்சி நின்றனர். ஆகவே பிள்ளையவர்களும் அக்குமாரரிடத்து மிக்க அன்பு பாராட்டி வந்தனர். பிள்ளையவர்கள் சிவபெருமானே முழுமுதற்கடவுளென்று துணியும் சைவராகலின் அப்பெருமான் திருவடிகளை யடைதற்குறிய மார்க்கமாகிய சரியை கிரியை யோகம் ஞானம் எனு நான்கினுள் முதலிரண்டினாலும் அப்பெருமானை வழிபட்டுச் சமய தீட்சை, விசேட தீட்சை, எனுமிரண்டும் பெற்றுச் சிவலிங்க மெழுந்தருளச் செய்து பூசித்து வந்தனர், ஆகவே அவர் குமாரரும் சிறுவயது முதல் சைவ சமயத்தில் மிக்க பற்றுடையராகிச் சமய தீட்சை பெற்றுச் சிவபெருமானையே பூசித்து வந்தனர்.

ஆயினும் இக்குமாரர் பிரவேச பரீட்சை கடந்து எம். ஏ. வகுப்பிற் கல்வி கற்கும் காலத்து, அவருடைய மனத்தின்கண் மதவிஷயமாகச் சில சந்தேகங்கள் நிகழ்ந்தன. ஆயினும் அவர் அதை வெளியிற் காட்டாது வழக்கப் பிரகாரம் தமது கடமைகளைச் செவ்வனே செலுத்தி வந்தார். ஆயினும் நாளடைவில் அம்மத சந்தேகங்கள் வளர்ந்து கொண்டே வந்தமையால், அவர் விபூதி தரித்தல், சந்தியாவந்தனம் பண்ணுதல் முதலியவற்றை நிறுத்திவிட்டனர். இச்சமயத்தில் தமது தாயாருடைய திதி வந்தது. இவரே திதியினன்று நடக்க வேண்டிய சடங்குகள் யாவையும் செய்ய வேண்டியவராகிலின், பிள்ளையவர்களும் தமது குமாரர் வழக்கப்பிரகாரம் செய்ய வேண்டியவற்றைச் செய்து முடிப்பரென்றெதிர் பார்த்திருந்தனர். ஆயின் குமாரரோ தாம் வீட்டில் அன்று தங்கினால் தமக்குச் சிறிதும் சம்மதமில்லாத சிரார்த்தச் சடங்குகளைச் செய்ய நேரிடுமென்று நினைந்து, . அன்றையத் தினத்தில் அதிகாலையிலெழுந்து தமது - தந்தையா ரனுமதியின்றி வெளிப் போந்தனர்.

பிள்ளையவர்கள், புரோகிதர் வந்தவுடன் குமாரரைத் தேடியுங் காணாது தாமே அச்சடங்கை நிறை வேற்றினர். அதன் பின்னர் பிள்ளை யவர்கள் தமது குமாரரிடத்திலிருந்து ஓர் கடிதம் பெற்றனர். அக் கடிதத்தில், தாம் வீட்டை விட்டு அன்றைய தினத்தில் வெளிப்போந்ததற்குக் காரணம் இன்னதென்றும், தமக்குச் சைவ சமயம் திருப்தியைத் தரவில்லையென்றும், அது காரணமாகத் தாம் கிறிஸ்தமதப் பிரவேசஞ்செய்ய நிச்சயித்திருப்பதாகவும், அவ்வாறு செய்யத் தந்தையா ரனுமதி தரல் வேண்டுமென்றும், அவ்வண்ணம் தாம் கிறிஸ்த மதத்தைச் சார்ந்த பின்னர், தந்தையாருக்கு யாதும் தடையிராத பட்சத்தில் அவரோடு தாம் வசிப்பதற்குச் சித்தமாயிருப்பதாகவும் குமாரர் தெரிவித்தனர். பிள்ளை யவர்கள் இக்கடிதத்தைப் பார்வையிட்டு மிக வருந்தினராயினும், கிறிஸ்தமதப் பிரவேசஞ் செய்த பின்னர் தம்மோடுகூடத் தமது குமாரர் வசித்தல்ல தகாதென மறுத்ததுமன்றிக் குமாரர் கருதியவாறு அம்மதப் பிரவேசஞ் செய்வதற் கனுமதியு மளித்திலர். அதுவுமன்றித் தமது புதல்வர் இவ்விதமாகக் கிறிஸ்தவ மதத்திற் பிரவேசிப்பதற்கு யாதேனு மோர் முக்கிய நியாய மிருத்தல் வேண்டுமென்றும், அஃது இன்ன தென வுணர்ந்தறிந்து பரிகரித்து அவரை அவ்வாறு செய்யாது தடுப்பது தமது கடமையென்றுங் கொண்டு அதற்கு வேண்டிய பிரயத்தனங்கள் யாவுஞ்செய்தனர். ஆயினும் அழகசுந்தரம் தாம் கொண்டதே சரியெனக் கொண்டு அம்மதத்தைத் தழுவினர். ஆகவே தந்தை யாருடன் வசித்தலுங் கூடாததாயிற்று.

தாம் சைவரென்றும் சிறந்த தமிழ் வித்துவானென் றும் பெயர் வகித்தும், தமது குமாரர் கிறிஸ்தவரானது தமக்குப் பெருங்குறைவென்று பிள்ளையவர்கள் நினைந்து மிக வருந்தினர். அவர் குமாரரோ, தமக்கு உண்மையான மனப்பாக்கியத்தை யளிக்கவல்ல மெய்ச் சமயத்தைக் கண்டோமென்று மகிழ்ந்தனர். ஆகவே தகப்பனாரும் புத்திரரும் சிறிதுகாலம் ஒருவரை யொருவர் பார்ப்பதும் பேசுவதும் இல்லையாயிற்று. இச் சம்பவத்தைப் பிள்ளையவர்கள் தமது நண்பர் சிலரிடத்துத் தமது கண்களினின்றும் நீர் பெருக எடுத்துக் கூறியு மிருக்கின்றனர்.

நம் இந்துக்கள் தம் முன் ஒருவர் எவ்வித துன்மார்க்கராயினும், அவரைத் தங்கூட்டத்தி னின்றும் நீக்கி விடார். கொலை, களவு, கள், காமம் முதலிய கொடிய . பாதகங்களைச் செய்தவரும் அவை நிகழ்ந்த காலத்துச் சிறிது அவமதிக்கப் பெறினும், ஜாதியைவிட்டு நீக்கப் பெறார். ஆயின் ஒருவன் கிறிஸ்தவனாயினானெனின், உடனே அவனைப் பகைப்பர். வித்துவ சிரோமணியாகிய பிள்ளையவர்களும், தமது குமாரர் கிறிஸ்தவரான தினிமித் தம் அவரைப் புறக்கணித்தது அவர் மாட்டு என்றும் நீங்காதவோர் களங்கமேயாம். ஏனெனில் அவர் குமாரர் உண்மையான விசுவாசத்தோடும், மெய்ப் பத்தி யோடுமே கிறிஸ்தவ மதத்தைத் தழுவினா ரென்பதும், அவ்வாறு தழுவிய பின்னர் அவரிடத்து அநேக நன்மாறுதல்கள் காணப்பட்டிருக்கின்றன வென்பதும் அவர் தாம் புதிதாயங்கீகரித்த மதத்தில் உறுதியாயிருக்கின்றன ரென்பதும் அவருடைய ஜீவியத்திலிருந்து நன்கு விளங்குகின்றன.

கிறிஸ்தவரான பின்பு அவரிடத்து அநேக விசேட நற்குணங்கள் காணப்படுவதாகப் பிள்ளை யவர்களம் வெளியிட்டிருக்கின்றனர். தமது குமாரருக்கு ஒரு முறை கடித மெழுதியபோது, அக் குமாரர் மெய்யான பத்தியினாற்றான் கிறிஸ்த மதத்தைச் சார்ந்தன ரென்பதைத் தாம் அப்பொழுது தான் கண்டதாகவும், தன் மனச் சாட்சியைத் திருப்திப் படுத்தும் பொருட்டு அவ்வாறு செய்த தம் புத்திரரோடு தமக்கு அச்செய்கையளவில் யாதும் விரோதமில்லையென்றும், சைவ சமயத்துண்மைகளைக் கற்றறியாது அதை நீத்ததே தமக்குப் பெரு விசனமென்றும், செய்யவேண்டிய பிராயச்சித்தங்களைச் செய்து திரும்பியும் சைவமதத்தை யனுசரித்தால், தாம் அவரை ஏற்றுக்கொள்ளத் தடையில்லை யென்றும் கூறியிருக்கின்றனர். இவ்வித கேள்விகளுக்கு அவர் குமாரர் சிறிதும் இடந்தாராது தாம் அங்கீகரித்த மதத்திலேயே இன்று முறுதியாக நிற்கின்றனர்.
----------------

14. அரசினர் மதிப்பு.

பிள்ளையவர்கள் தமிழ்ப் பாஷையை அணிபெறச் செய்யும் நோக்கமாகக் காட்டி வரும் பெரு மூக்கத்தை யும், பரிசோதித்துப் பதிப்பித்த அருந்தமிழ் நூல்களை யும் சென்னைச் சர்வ கலாசாலையில் தமிழ்ப் பரீட்சகராக வும், வித்துவ சிரோமணியாகவும் காட்டிய திறமையை யும் கண்ணுற்ற சென்னை இராசாங்கத்தார், அவர் பதிப் பித்த நூல்களைப் பரிபாலித்தும், இயன்ற மட்டும் பொரு 'ளுதவி செய்தும் வந்தனர். அன்றியும் ராவ் பஹதூர் (Rou Bahadur) என்னுங் கண்ணிய பட்டத்துக்கும் அவர் அருகரென மதித்து, அப்பட்டத்தை 1895௵ அவருக்குச் சூட்டினர். அரசின ரளித்த இப்பட்டம், பிள்ளையவர்களுக்கும் அவர் சுற்றத்தவர் நண்பராதி யோர்க்கும் மிக்க சந்துஷ்டியைக் கொடுத்தது மன்றிப் பொதுஜன நலங்கருதி உழைத்து வருபவர்களை இராசாங்கத்தார் ஒருபோதும் மறப்பவால்ல. ரென்பதற்கோ ரடையாளமாகவு மிருந்தது.

மைசூர் இராசாங்கத்தாரும் பிள்ளையவர்கள் கீர்த்தியைக் குறித்துப் பலகாலுங் கேள்வியுற்றவர்களாகலின், அவரை இராச சமூகத்துக்கழைத்துச் சன்மானித்துக் கண்ணியப்படுத்தினர். அங்கிலேய பிரபுக்கள் துரைமக்கள் யாவருமவரை அதிக மரியாதையோடு நடத்தி வந்தனர். இராசாங்கத்தாராற் கண்ணியப் பட்டமளிக்கப் பெற்றதும், மைசூர் புதுக்கோட்டை திருவனந்தபுரம் முத லிய தென்நாட்டு வேந்தரின் விசேட மதிப்புக்காளானதும், புற்பல சுதேச பிரபுக்கள் மடாதிபதிகள் முதலியோராற் புகழ்ந்து கொண்டாடப் பட்டதுமாகிய இத்தகைய கண்ணியங்களனைத்துக்குங் காரணம் தமிழின் கண் அவருக்குள்ள போறிவும் செந்தமிழ்ப் பரிபாலன முமேயாம்.

தமிழைக் குறித்துத் தமிழ் நாட்டின்கண் யாது வாதம் நிகழினும், பிள்ளையர்கள் அபிப்பிராயமே முன்னிற்கும். தமிழைக்குறித்த விஷயமாக ஏற்படுத்தப்படும் எச்சங்கமும் அவர் உதவியை எதிர்பார்க்கும். தமிழ் நூல்களியற்றுவோர்க்கு, அவர் கைச் சாற்றுகவி தேவாமிர்தமோ வெனக்கொள்ளும் பான்மையது. பிள்ளையவர்கள் பார்வையிட்ட நூலெனில், எந்த நூலும் விசேஷ மதிப்படைந்து வந்தது. இவ்வாறு கீர்த்தியெய்திய தமிழ் வித்துவ சிரோமணிகள் மிகச் சிலரே. ஆகவே இராஜாங்கத்தார் அவருக்குப் பட்டமளித்துச் சன்மானித்தது மிகவும் தக்கதேயாம்.

சென்னையில் வசிக்குங்காலத்து, 1896 தேக சௌக்கியத்தின் பொருட்டுத் தமது ஜனன தேசஞ் சென்றார். அங்குச் செல்லும் காலங்களிற் கீரிமலையின்கண் வசிப்பது வழக்கமாகலின் இம்முறையும் அங்ஙனே வசிப்பாராயினர். சென்று சிறிது காலத்துள் அவருக்கு இராச கட்டி யென்னும் ரோகம் கண்டது. முன்னர் இருமுறை பிள்ளையவர்கட்கு இவ்வுரோகங் கண்டும் சௌக்கிய மடைந்தன ராயினும், இம்முறை கண்ட ரோகம் தம்மைக் கொல்லுமென்றே கருதினர். பிரபல அங்கிலேய வைத்தியரென்று யாழ்ப்பாணம் முழுவதும் பெயர் பெற்றுள்ள டாக்டர் ஸ்கொற் (Dr Scott) அவர்களே பிள்ளையவர்களுக்கு வைத்திய உதவி புரிந்த னர். நோய் வரவர அதிகரித்தமையாற் றமது கடைசி காலம் அதுவெனக்கொண்டு, தேவார திருவாசகங்களை யோதியும் ஓதக் கேட்டும் வந்தனர். இந்நோயினால் அவ ரிறப்பரென்றே அவர் சுற்றத்தவானைவருங்கருதி யேங்கினர். ஆயினும் அவர் இன்னுஞ் சிறிதுகால முயிரோ டிருந்து தாம் கையேற்ற வேலைகளை முடிக்க வேண்டு மென்பது பகவத் சங்கற்பமே யாகலானும், தமிழ் மாது புரிந்த தவப்பேறாகலானும் இம்முறையும் அவ்வபாய நிலையினின்றும் நீங்கி உயிர் பிழைத்தனர்.
பின்னர் சிறிதுகாலம் யாழ்ப்பாணத்திலே தங்கித் தமது சௌக்கியம் பூரணமாயினவுடன் அவ்வருட முடிவில் மறுபடியும் சென்னைக் கேகினர். யாழ்ப்பாணத்திலிருக்கும் போது பிள்ளையவர்களை மிக்க வருத்திய பின்னுமோர் துக்க சம்பவம் நிகழ்ந்தது. அவருடைய கனிஷ்ட குமாரத்தி சிவபாக்கியம் அம்மாள் பிரசவ காலத்து நேர்ந்த நோய் காரணமாக இறந்தனள். பெண்கள் மூவருள் இருவரிறக்க எஞ்சி நின்று பிள்ளை யவர்கட்குப் புத்திரிவாஞ்சையைத் தீர்த்தவராகலின் இவர் மரணம் அவரைத் தாங்கொணாத் துயருக்காளாக்கினது.
--------------

15. அக நானூறு.

சென்னையம்பதி மேவிய பின்னர் வழக்கப்பிரகாரம் தமிழ் நூல்களைப் பரிசோதிக்கவும் அச்சிடவும் தலைப் பட்டனர். எட்டுத்தொகையுள்ளடங்கிய நூல்களைப் பரிசோதித்து அச்சிட வேண்டுமென்பது பிள்ளையவர்கள் பெருவிருப்பு. அவ்வேட்டுத் தொகையுள் மிக்க சிறப்புடைய கலித்தொகையை முன்னர் அச்சிட்டு வெளிப் படுத்தினர். புறநானூறு கும்பகோணம் : இராஜாங்க கலாசாலைத் தலைமைத் தமிழ்ப் போதனாசிரியர் மகா உத்தமதானபுரம் மகோபாத்தியாய வே. சாமிநாதய்யர் அவர்களால் அச்சிடப்பட்டு வெளிப்பட்டது. ஆகவே அகநானூறு என்னும் சிறந்த நூலைத் தாமச் சிடக்கருதி, அதைப் பரிசோதித்து வந்தார். இக்காலத்தில் பிள்ளையவர்கள் தேக சௌக்கியம். நாளடைவிற் குன்றி வந்தமையானும், அதிக வேலை செய்தல் அவராற் கூடாமையானும் தக்க தமிழ்ப் பண்டிதரிருவரைக் கூட வைத்துக்கொண்டே இப் பரிசோதனையை நடத்தி வந்தார்.

இந்நூல் பற்பல புலவ சிகாமணிகளா லியற்றப்பட்ட செய்யுட்களை ஒருங்கே திரட்டியதோர் தொகுதி. அகநானூறு என்றதற் கேற்ப, இஃது நானூறு அகவற் பாக்கள் கொண்டது. கடவுள் வணக்கச் செய்யுளையுஞ் சேர்த்து நானூற்றொன்றாகிறது. இந்நூல் கடைச் சங்கத்துப் பாண்டியன் உக்கிரப் பெருவழுதியின் உத்தரவால் மதுரை உப்பூரி குடிகிழார் மகனாவான் உருத்திர சன்மனாற் றொகுக்கப்பட்டது. இது தொகுதி யென்பதூஉம், இதன்கணுள்ள செய்யுட்கள் யாவும் பற்பல புலவர்களாற் செய்யப்பட்டன வென்பதூஉம், அவ் வச்செய்யுளின் கீழ்க் குறிக்கப்பட்டுள்ள ஆக்கியோன் பெயராற் றெளிவாகும்.

கடவுள் வாழ்த்துச் செய்யுள் பாரதம் பாடிய பெருந்தேவனாராற் செய்யப் பட்டதென்பது தமிழ் வித்துவான்களுட் பெரும்பான்மையோர் கொள்கை. நூலின்கணுள்ள செய்யுட்களை இயற்றியவர் மாமுலனார் முதல் உலோச்சனா ரிறுதியாகவுள்ள புலவர் பலராகவும், அவற்றைத் தொகுத்தோன் உருத்திரசன்மனாகவும், தொகுப்பித்தோன் உக்கிரப் பெருவழுதியே யாகவும், பெருந்தேவனார் கடவுள் வாழ்த்து மாத்திரம் கூறிப் போந்ததற்குப் போதிய காரணம் புலப்படவில்லை. இந் நூலின்கணுள்ள செய்யுட்களுட் கடவுள் வாழ்த் தொழிந்த முதல் நூற்றிருபது பாக்கள் களிற்றியானை நிரையெனவும், அவற்றின் பின்புள்ள நூற்றெண்பது பாக்கள் மணிமிடைபவளமெனவும், எஞ்சிய நூறு பாக்கள் நித்திலக்கோவை யெனவும் பெயர் பெறும்.

இந்நூல் பரிசோதனையாகுங் காலத்துப் பிள்ளையவர்கள் தேக அசௌக்கியத்தினிமித்தமும், சூளாமணியை வசன ரூபமாக அச்சிடும் பிறிதோர். வேலையிருந்த மையானும், வாரத்தில் ஒருநாள் இப்பரிசோதனைக்குச் செலவிட்டு வந்தனர். ஆகவே இந்நூல் முற்றுப்பெறாது குறை வேலையாக நின்றுவிட்டது. மணிமிடை பவளம் வரையிற் பரிசோதனையடைந்து சுத்தமாக வெழுதப் பட்டிருக்கு மிந்நூலை முற்றுவிக்கும் பெரும்பாக்கியம் பின்னால் மற்றொரு ஆசிரியருக்குக் கிடைத்தது.
-------------

16. வசன சூளாமணி.

சூளாமணி, பிள்ளையவர்கள் புதுக்கோட்டையில் நியாயாதிபதியாக விருந்த காலத்து வெளிப்பட்டது. அக்காலத்திற் பிள்ளையவர்கள் நண்பர் பலர் அச்சூளாமணியைக் கத்திய ரூபமாகவுமியற்றி அச்சிடவேண்டு மென்று அவரைக் கேட்டுக்கொண்டனர். தமக்கு அப்பொழுது போதிய சாவகாச மின்மையால், தம்மோடு அப்பொழுது கூடவிருந்த வித்துவான் தாவடி ஸ்ரீ அம்பிகைபாக உபாத்தியாயரைக் கொண்டு அதனைக் கத்திய ரூபமாகத் தெள்ளிய நடையி லெழுதுவித்தனர். பின்னர் அதனைச் சர்வகலாசாலைப் பிரவேச பரீட்சைக்குப் பாட புத்தகமாக வேற்படுத்தக் கருதித் திராவிட சபையாருக்கு அனுப்பினர்.

பண்டைத் தமிழ் நூல்களில் பெரும்பாலும் தற்கால வித்தியா கிரமத்திற்கு ஒவ்வாதனவும், பூகோள ககோள சாஸ்திர வுண்மைகட்கு மாறானவையுமான விஷயங்க ளிருப்பதியற்கை. பத்திய ரூபமாகவுள்ள முதனூலைத்தழுவிக் கத்தியரூபமாக வெழுதுவோர், அக் கோட்பாடுகளை அனுசரித்து எழுதுதல் பெரு வழக்கு. ஆகவே சூளாமணியைக் கத்திய ரூபமாகச் செய்த விடத்தும், முதனூலின்கணுள்ள ஒவ்வாத கோட்பாடுகளனைத்தும் அதன் கண்ணுங் காணப்பட்டன. அது நோக்கித் திராவிடபாட சபையார் அதனைப் பாடபுத்தகமாக வேற் படுத்தாது மறுத்து விட்டனர்.

பின்னர் அவையனைத்தையும் நீக்கி, மகாராணி என்னும் பத்திரிகையின்கண் பாகம் பாகமாக அச்சிட்டு வந்தனர். பத்திரிகையிற் றோன்றிய பின்னர் சபை யோருட் சிலர் பின்னும் அதன் நடையைச் சற்று உயர்த்தினால் நலமெனக் கூறினர். அவ்வாறே பிள்ளை யவர்களும் உபாத்தியாயர் நடையை முழுவதும் மாற்றி எழுதலாயினர். இது அவர் அந்நூற் புறவுரையின்கட் கூறியுள்ள பின் வருவனவற்றால் விளங்கும்:

"அச்சில் வந்தபின் சபையார் சிலர் நடையை மெச் சிச் சரித்திரத்தை இன்னும் பெருக்கியும், பஞ்ச தந்திரக் கதை போலத் திரிசொற் பிரயோகத்தால் அர்த்தத்தைச் சற்றே அருக்கியும், ஒரு பொருட் பன் மொழிகள் நெருக்கியும் வரைந்தால் வித்தியாபரீட்சைக்கு இனி நியமிக்க அருகமாகுமெனக் கருதினர். ஆதலால் முத னூற்கு விரோதமாகாது கதையைப் பல்லாற்றால் அகல விரித்தும், நடையைப் பெரும்பாலும் உயரத் திரித்தும், இடைக்கிடையே ஒரு பொருட்குப் பல பரியாயங்களைத் தெரித்தும், மூல நூலிலுள்ள அநேகஞ் செய்யுட்கள் அங்கும் இங்கும் கமழ வரித்தும் முழுவதும் மாற்றி எழுதலாயினேன்"

இவ்வாறு பிள்ளையவர்கள் எழுதிய வசன சூளாமணி 1898௵ அச்சாகி வெளிப்போந்தது. சர்வகலா சாலையாரும் அதை இரண்டுவருடம் பிரதம கலா பரீட் சைக்குப் பாடமாக வேற்படுத்திப் பிள்ளையவர்களைக் கண்ணியப்படுத்தினர்.

மேற்கூறிய வசன சூளாமணி அச்சிடப்பட்டு வெளிப்பட்ட பின்னர், பிள்ளையவர்கள் தாம் பின்னும் வேலை செய்தல் தமது தேக சௌக்கியத்துக்கு விரோத மென வுணர்ந்தும், அதைப் பொருள் பண்ணாது தாம் தொடங்கிய நூலைப் பரிசோதித்து வந்தார். ஆயினும் வரவர அதிக துர்ப்பலமுடையவராய் வெளியே நடமாடு வதற்கும் சக்தியற்றவராயினர். புரசை இந்து ஜனோபகார சாஸ்வதநிதியின் அக்கிராசனபதியாகலின், அக்கடமையைச் செலுத்துவதற்கு மாத்திரம் தமது வீட்டுக்குப் பக்கத்திலிருக்கும் நிதியின் உத்தியோகசாலைக்குப் போய் வருவதேயன்றி, வேறெங்கும் போவது அவருக்குச் சாத்தியப் படவில்லை.

அதிகமாக ஏட்டுப்பிரதிகளைப் பார்ப்பதனால் நேத்திரத்திலும் சில நோய்கள் காணப்பட்டன. இக்காரணத்தினால் இராக்காலத்திற் படித்தல் எழுதுதல் முதலியவற்றை முழுவதும் நிறுத்திவிட்டனர். பகற் காலத்திற் சிறிது நேரம் எழுதல் படித்தல் முதலியவற்றிற் போக்குவதும், இராக்காலத்திற் பத்திரிகைகளை மற்றையோர் படிக்கக் கேட்டலுந் தவிர, வேறு எவ்வித கடின வேலையும் அவர் செய்வதில்லை. தமது தேகம் எவ்வித ஸ்திதியிலிருப்பினும், பாலியப் பருவந்தொடங்கித் தாமிறக்கும் வரையும் தமது நண்பராக விருந்தவரும் தமது பக்கலில் வசித்தவருமாகிய ம -ள - ள- ஸ்ரீ சிந்தா மணிவேலுப் பிள்ளையவர்களைப் பிரதிதினமும் சந்தித்துச் சிறிதுநேரமாவது சம்பாஷிப்பதும், சிநேகங் கொண்டாடுவதும் அவர் வழக்கம். அதிக துர்ப்பல மடைந்தமையால் அதுவும் நிறுத்தப்பட்டது. பிள்ளையவர்களும் தாம் அதிக காலம் உயிரோடிருத்தல் கூடாதெனத் தேர்ந்து வேண்டிய ஏற்பாடுகள் யாவுஞ் செய்துகொண்டே வந்தனர் . .
--------------

17. பிள்ளையவர்கள் பிற்காலமும் மரணமும்.

இவ்வாறு பிள்ளையவர்கள் சுகம் நாளுக்குநாட்குன்றி 1900௵ கார்த்திகைமாத மளவில் மிக்க கேவலஸ்திதியை யடைந்தது. இத்தோடு அவருக்கு ஒரு விதமான இருமல் உண்டாயிற்று. ஜீரண சக்தியும் மிகக் குன்றியது. தாம் எவ்வித நோயாற் பீடிக்கப்பெறினும் வைத்தியஞ் செய்வித்துச் சுகமடைய வேண்டுமென்றாவது, தஞ்சுற்றத்தவர். நண்பராதியோர்க்குத் தமது அபாய நிலையைத் தெரிவிக்க வேண்டுமென்றாவது கருதும் வழக்கம் அவரிடத்து என்றுங் கிடையாது. ஆகவே இப்பொழுதும் தம்மைத்தாக்கிய நோயைப் பெரிதும் அசட்டை செய்து வாளாவிருந்தனர்.

பிள்ளையவர்களை அடிக்கடி சந்தித்துக் கொண்டாடும் ம-ள-ள - ஸ்ரீ வேலுப் பிள்ளையவர்களும் அவருடைய அஜாக்கிரதையையும் நோயின் தன்மையையும் கண்ணுற்று, தக்க வைத்தியரைக் கொண்டு வைத்தியஞ் செய்விக்குமாறு கூறியவழியுங் கவனித்திலர். ஈற்றில் வேலுப்பிள்ளையவர்கள் தாமே வைத்தியரை அழைப்பித்து வைத்தியஞ் செய்விக்குமாறு வற்புறுத்திக் கூறிய பின் உடன்பட்டனர். சிறிது காலம் டாக்டர் வி. வரதப்ப நாயுடு அவர்கள் வைத்தியஞ் செய்தும் அதனால் யாதுங் குணங்காணப் பட்டிலது. நோய் வரவர அதிகரித்துச் சிறிது சிறிதாக அவரைப் பலவீனப் படுத்தினமையால் படுக்கையே தஞ்சமென் றடையுமாறு நேர்ந்தது. அவர் நோயாளியாக விருக்கிறாரென்பது அவர் இந்நிலையடையும் வரையில் அவருக்கருகாமையில் வசித்த எமக்குந் தெரிந்திலது.

வைத்தியர் அவர்களும் பிள்ளையவர்கள் அபாய நிலையிலிருக்கின்றாரென்றும், தேறுதல் மிக்க சந்தேக மென்றுங்கூறினர். ஆகவே, பிள்ளையவர்கள் மூன்றாவது சகோதரரும் அப்பொழுது கொத்தப் பட்டணத்தில் ஓவர் சீயருமாகவிருந்த சி. வை. சின்னப்பாபிள்ளை அவர்கட்கு இச்சமாசாரங்க ளனைத்தும் தெரிவிக்கப்பட்டன. அன்றியும் பிள்ளையவர்கள் குமாரராகிய சி.தா. அழக சுந்தரத்துக்கும் கடிதமனுப்பப் பட்டது.

சின்னப்பா பிள்ளையவர்களும் குமாரராகிய அழக சுந்தரமும் சமுசார சகிதமாக உடனே வந்து சேர்ந்தனர். இவர்கள் வந்த காலத்துப் பிள்ளையவர்கள் பேசும் சக்தியை முற்று மிழந்துவிட்டனர். ஆயினும் தமக்கு முன்னிருப்பவர்கள் யாரென்றும் அவர்கள் யாது கூறுகின்றனரென்றும் பூரணமாயறியக் கூடியவராக விருந்தனர். ஆகவே தமது சகோதரரும் குமாரரும் வந்து சேர்ந்தது அவருக்கு மிக்க சந்தோஷமே. தங்குமாரர் கிறிஸ்தவ பானது பற்றிச் சிறிதுகாலம் அவரை வெறுத்தவராயினும், இச் சமயத்தில் அவர் அவ்வித வெறுப்பொன்றுங் காட்டாது, தமது குமாரர் கையிலிருந்து மருந்து பால் முதலியவற்றை வாங்கி உட்கொண்டு தமதன்பைக் காட்டினர். குமாரரும் தமது தந்தையார் இந்நோயினின்றும் பிழைப்பது மிகவுமரிதென்று தேர்ந்து, அவருக்குத் தாம் செய்ய வேண்டியன யாவையும் செய்து முடித்துத் தமது கடமையைக் குறைவறச் செலுத்த வேண்டுமென்னும் நோக்கத்தோடு ஏறக்குறைய ஒரு மாதமளவிற்றங்கிச் சகல காரியங்களையும் நடப்பித்து வந்தார்.

எமது குடும்பங்களில் நெடுங்காலம் மிக்க அனுகூலத்தோடு வைத்தியஞ்செய்து பெருமதிப்படைந்த டாக்டர் வரதப்பநாயுடு அவர்களுடைய வைத்தியத்தினால் இவரிடத்தில் யாதுங் குணங்காணப்படாமையால் வேறு வைத்தியரைக்கொண்டு வைத்தியஞ் செய்வித்தல் நலமெனத் தோன்றியது. ஆகையால் டாக்டர் கிவ் வார்ட் (Dr. Giffard) அவர்கள் அழைப்பிக்கப் பட்டனர். துரையவர்கள் வந்து பார்வையிட்டதன் மேல் நமது பிள்ளையவர்களுடைய சுவாசாசயங்கள் அதிகமாகத் தாக்குண்டமையானும், இரைப்பை சீர்குலைந்து கெட்டுப் போயினமையானும், பிள்ளையவர்கள் பிழைப்பது மிகவுமரிதென்று கூறிப்போந்தனர். வரதப்ப நாயுடு அவர்களும் அவ்வாறே கருதினர்.

அங்கிலேய வைத்தியம் யாதும் பயன்படாமை கண்டு, யூனானி வைத்தியஞ்செய்து பார்க்கலாமென்று கருதி, ஓர் பிரபல மகமதிய வைத்தியரை அழைப்பித்தனர். வரவர மருந்து சாப்பிடுவதும் பிள்ளையவர்கட்கு வெறுப்பாக விருந்தது. வேலுப்பிள்ளை யவர்களோடு சிறுவயது முதல் மிக்க சிநேகம் பூண்டொழுகியவராகலின், அவரிடத்துப் பிள்ளையவர்களும் பிள்ளையவர்களிடத்து அவரும் மிக்க மதிப்புடையரென்பதை முன்னர்க் கூறியுள்ளேம். ஆகவே வேலுப்பிள்ளை யவர்கள் அவர் பக்கத்திலிருந்து அவருக்கு வேண்டிய வுதவி யாவும் புரிந்தனர்.

யூனானி வைத்தியத்தினாற் சிறிது குணம் காணப் பட்டாலும், பின்னர் நோய் வரவர அதிகரித்துக் கொண்டே வந்து ஈற்றில் மருந்தும் உட்செல்லுதல் கடினமா யிற்று. பிள்ளையவர்கள் அபாய நிலையைக் கேள்வியுற்ற சுற்றமித்திரர் பலதிசைகளினின்றும் வந்தீண்டினர். தாம் இந்நோயினா லிறந்துவிடுவது திண்ணமென்று பிள்ளையவர்களு முணர்ந்து, தமது கடைசி மனைவிபா லுதித்த இருகுழந்தைகளைக் குறித்து மிகவருந்தித் தமது சகோதரரிடத்து, அவ்விரு புதல்வரையு மொப்புவித்து ஏதோ சொல்லவுன்னியும் நாவெழாது அதனை எழுதித் தெரிவிக்கும் பொருட்டுக் காகிதம் கொண்டு வரும்படி கைச்சைகை காட்டினர். காகிதத்திலும் அதனை எழுதித் தெரிவிக்க அவரால் முடியவில்லை.

இன்று முதல் அவர் சுயவறிவில்லாதவராகித் தம் முன் நிற்பவர்கள் யாரென்றும் யாது கூறுகின்றன ரென்றும் நிதானித்தறியக் கூடாதவராயினர். டிசம்பர் ௴ 26௳ அளவில் மகமதிய வைத்தியரும் பிள்ளையவர்கள் விரைவில் இறந்து விடுவரெனக் கூறினர். அடுத்த நான்கு தினங்களிலும் வேறு விசேட மாறுதல்களொன்றுங் காணப்படவில்லை. 31-ந்௳த திங்கட்கிழமை சிறிது குணமிருப்பதாகத் தோன்றியது. சர்வகலாசாலையாரால் அவ்வருடத்துத் தமிழ்ப்பரீட்சா சங்கத்து அக்கிராசன பதியாக நியமிக்கப்பட் டிருந்தமையானும், பி. ஏ. பரீட்சைக்குத் தமிழ்ப் பரீட்சகராக விருந்தமையானும், அவ்வாண்டும் பரீட்சைக் காகிதங்கள் அநேகம் வந்து சேர்ந்தன. பிள்ளையவர்கள் நோயாளியாக விருக்கின்றாரென்று சர்வகலாசாலையாருக்குத் தெரிவிக்கப்பட்டபின் அப்பரீட்சைக் காகிதங்கள் யாவும் இதரபரீட்சகர் கட்கனுப்பப்பட்டன.

திங்கட்கிழமை இரவு மறுபடியும் பழைய ஸ்திதியை யடைந்து, அடுத்த தினமாகிய இருபதாம் நூற்றாண்டின் முதல் மாதம் முதற்றேதி செவ்வாய்க்கிழமை காலை ஒன்பதரைமணியளவில், வைகுந்த ஏகாதசியெனும் புண்ணியகாலத்தில், சுற்றமித்திரர் புடைசூழ, இருமருங்கினும் தமது சகோதரர், குமாரர், பத்தினி முதலாயினோர் நின்று பரிதபிக்க, தேவார திருவாசகம் இடையறா தொலிக்க, இகவாழ்வையொருவிப் பரவாழ்வை மருவினர்.

புது நூற்றாண்டின் முதற்றினத்திற் றமிழணங்கு, தன் கிரீடத்தின்கண் ணிழைக்கப்பெற்ற விலையுயர்ந்த இரத்தினத்தையிழந்து ஒளிமாழ்கினளென்பதைச் செவி யுற்ற பண்டிதர், பாவலர், நாவலர், நண்பராதியோர் சென்னையின் நானா பக்கத்தினின்றும் வந்து ஆண்டுக்குழூஉமினர். அன்று பன்னிரண்டு மணியளவிற் பிள்ளையவர்கள் திருமேனி புண்ணிய தீர்த்தங்களினால் அபிஷேகம் பண்ணப்பட்ட பின்னர், விபூதி உருத்திராக்கம் முதலிய சிவசின்னங்களாலும் பிறவற்றாலும் அலங்கரிக்கப் பெற்றது. சென்னையிலுள்ள சைவாசாரியார் ஒருவரால் சமய விசேட அந்தியேட்டிகள் நடைபெற்றன. பிள்ளையவர்கட்குச் செய்யவேண்டிய கிரியைகள் யாவும் அவர் சகோதரர் சி. வை. சின்னப்பாபிள்ளை யவர்களாற் செய்யப்பட்டன. பின்னர் புஷ்பத்தினாலியற்றியதோர் அழகிய பூம்பல்லக்கின் மீதேற்றப்பட்டு எண்ணிலா நண்பர்கள் சூழ்ந்துவா, அருட்பாக்களை ஓதுவார் ஓதிக் கொண்டு முன்னும் பின்னுஞ் செல்ல, வெண்சங்கு சேமக்கலம், தாரை முதலியன வொலிக்க, புரசபாக்கத்திலுள்ள மயானத்தின் கண்ணே கொண்டு போய்த் தகிக்கப்பட்டது.

பிள்ளையவர்கள் உத்தாகிரியைகள் ஜனுவரி 18-ந் தேதி சுக்கிரவாரம் புரசை ஸ்ரீகங்காதரேஸ்வரர் கோயிற் பூந்தோட்டத்து நடைபெற்றன. அன்றுமாலை 6-மணி யளவில் சுபஸ்வீகரண சடங்கு புரசபாக்கம் வினைதீர்த் தான் முதலி தெருவிலுள்ள பிள்ளையவர்கள் வாசஸ் கலத்து நிறைவேறியது. இச்சடங்குகளும் பிள்ளையவர்கள் சகோதரர் சி. வை. சின்னப்பா பிள்ளையவர்களாலே நடத்தப்பட்டன.

அச்சமயத்தும் பற்பல தமிழ் வித்துவான்கள் பிள்ளையவர்கள் மீது சரமகவிகள் பாடி அவர்மீது தமக்குள்ள அன்பையும் பெருமதிப்பையும் விளக்கிக்காட்டி னர். அவையனைத்தும் அனுபந்தத்தின்கண் காண்டகும். அவற்றுட்சில அன்றைய தினத்தில் சென்னைக் கிறிஸ்தவ கலாசாலைத் தமிழ்ப் பண்டிதர். பிரமஸ்ரீ வி. கோ. சூரிய நாராயணசாஸ்திரி அவர்களாலும் யாழ்ப் பாணம் மேலைப்புலோலி வித்துவான் மாயாவாத தும்ச கோளரி நா. கதிரைவேற் பிள்ளை அவர்களாலும் விரித்துப் பிரசங்கிக்கப் பட்டன.

சாஸ்திரிகள் தாமியற்றிய சரமகவிக்குக் கையறு ரிலை யெனப்பெயர் தந்து பரக்க உபந்நியாசித்தனர். கதிரைவேற் பிள்ளையவர்கள், கையறு நிலையெனக் கூறுதல் தகாதென மறுத்ததுமன்றி, அங்ஙனம் நமது சாஸ்திரியவர்கள் கையறு நிலையென்று கூறியது "கழிர் தோர்தேஎத் தழிபடருறீஇ - யொழிந்தோர் புலம்பிய கையறு நிலையும்" என்று ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியனார் அருளிய விதிக்கும், அதற்கு உச்சிமேற் புலவர்கொளும் நச்சினார்க்கினியர் நிலைநாட்டிய உரைக்கும் மாறாயிற்றென்றும், ஈண்டுத் தாபதநிலையே சாற்றலாந் தகைத்தென்றும், கணவனிறந்து மனைவி கைம்மையாய வழியும் கையறுநிலை கூறலாமெனில், ஆசிரியர் தொல் காப்பியனார் தாபதநிலை தபுதாரநிலை கூறிய போகாரென் றும், புறப்பொருள் வெண்பாமாலைக்காரர் கூறியது நவீ னமாய்த் தொல்காப்பியத்திற்கு முரணாமென்றும் மறுத்தனர்.

பிள்ளையவர்கள் தாமிறப்பதற்குச் சிறிது காலத்திற்கு முன்னர் தமக்கு மரணம் சமீபித்த தென்றுணர்ந்து ஆஸ்தி விஷயமாகத் தமது குடும்பத்து யாதொரு விவகாரமும் நேரிடாவண்ணம் ஓர் மரணசாதன மியற்றி அச்சாதனத்திற் கண்டவற்றை நிறைவேற்றும் பொருட்டு ம-ள- ள-ஸ்ரீ, சி. வேலுப் பிள்ளை அவர்கள் ம-ள-ள-ஸ்ரீ, ப. ஐயாசாமி முதலியார் அவர்கள் ம-ள-ள -ஸ்ரீ எஸ். தியாகராஜ ஐயர் அவர்கள் என்னும் மூவரைக் காரியகாரராகவு மேற்படுத்தி யிருந்தனர். யாதுகாரணம் பற்றியோ பின்னர்கூறிய விருவரும் அவராற் குறிப்பிக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்ற வுடன்படாது மறுத்து விட்டனர். ஆகவே பிள்ளையவர்கள் ஆருயிர் நண்பராகிய வேலுப்பிள்ளை யவர்கள் மீது அக்கடமைகள் யாவும் பொறுத்தன.

தமது முதுவயதில் பல்வேறு கடமைகள் மத்தியில் இத்தகைய வொழுங்கீனமானவோர்.. மரண சாதனத்தையெடுத்து நிறைவேற்றும் பெருங்கடமையை எம் வேலுப் பிள்ளையவர்கள் வகித்தது, பிள்ளையவர்களிடத்து அவருக்குள்ள போன்பை விளக்குகின்றது. ஒழுக்கம் நேர்மை சத்தியம் ஆதியாஞ் சிறந்த குணங்கள் வாய்ந்த விவர் அவையனைத்தையுஞ் சிறப்புற நடத்தினரென்ப தற் கெட்டுணையேனுஞ் சந்தேகமில்லை.

பிள்ளையவர்களியற்றிய சாதனத்தில் அவர் சில நிபந்தனைகளேற் படுத்தித் தமது கடைசித்தாரத்து மனை வியின்பாலுதித்த இருபுத்திரரும் அந்நிபந்தனைகளை நிறைவேற்றுவரேற் றமது ஆஸ்திமுழுவதும் அவர்கள் பக்குவசாலிகளாகுங் காலத்து அவர்களிடத்து ஒப்பு விக்கப்படவேண்டியதென்றும், அன்றேற் செந்தமிழ்ப் பரிபாலனத்தின் பொருட்டு இலங்கா தீவின்கண் ஓர் கலாசாலை நாட்டும் வண்ணம் இராசாங்கத்தாரிடத்து ஒப்புவிக்கப்பட வேண்டுமென்றும், தமது ஏட்டுப்பிரதி, கைப்பிரதி முதலியன திருவாலங்காட்டிலுள்ள செந்தமிழ்ப் பரிபாலன மடத்திற்கு அனுப்புவிக்கப்படல் : வேண்டுமென்றும், தாம் பூசித்துவந்த சிவலிங்கமும் அணிந்த உருத்திராக்கமாலையும் தமது ஆசாரியரையடை ய வேண்டியன வென்றுங் குறிப்பித்திருக்கின்றனர். தமது குமாரர் சி.தா. அழகசுந்தரம் என்பார் கல்விகற்றுத் தக்க வுத்தியோகத் தமர்ந்திருப்பதால் அவருக்குத் தமதாஸ்தியில் யாதும் பாகமில்லை யென்றுங் கூறியிருக் கின்றனர்.
----------------------

18. முடிப்புரை.

தமிழ்நாட்டின்கண் தமிழ்ச் சுடர் விரித்து, நிலை பெற்று அநேக வருடங்களாக மிக்க பிரகாசந்தந்து நின்று நிலவிய தாமோதரம்பிள்ளை யென்னும் ஞான சூரியன் இந்நூற்றாண்டின் துவக்கத்தோடு தன்னொளி குன்றி மறைந்தது. இதுபோன்ற சூரியர் இன்னும் சிலருளரேனும் இதுபோல் பூரண வொளிதந்து நின்ற பிறிதொன்றிலது.

பிள்ளையவர்கள், ஈழநாட்டின் கண்ணுள்ள யாழ்ப் பாணத்தையே ஜனன தேசமாக வுடையவராயினும், தமது வாணாட்களின் விசேட பாகத்தைத் தென்னிந்தியாவிலே கழித்துத் தமிழை வளர்க்கும் பொருட்டு இடைவிடாது கஷ்டப்பட்டவோர் பெரும்பாஷாபிமானி. பொது ஜன நலங்கருதி யுழைப்பவ ரெவரும் பெருமதிப்புக்கும் கணிப்புக்கும் அருகராவர். பிள்ளையவர்களைக் குறித்து உய்த்து நோக்குமிடத்து 'இவர் நம்மதிப்புக்கு எவ்வாறருகராயினர்'' என்னும் வினா, எம்முளத் தெழுகின்றது. நம்மில் ஒவ்வொருவரும் இவ் வுலகின்கண் பிறக்கும் பொழுது பொதுஜன தன்மைக் காக நாம் இங்கு செய்து நிறைவேற்ற வேண்டிய ஒவ்வொரு வேலை கடவுளால் நமக்கு அருளிச்செய்யப் படுகிறது. அவ்வேலை இன்னதென்று தேர்ந்து அதைச் செய்து முடிப்பவரே பொதுஜன மதிப்புக் கருகராவர்.

பிள்ளையவர்கள் தமிழை வளர்த்துச் சிறப்பித்தலே தமது வேலையெனக்கொண்டு தம்வாணாள் முழுவதையும் அதற்கென்றே செலவிட்டு வந்தவர். அதன்பொருட்டு அவர்பட்ட கஷ்டமோ உரைப்பின் விரியும். பதிப்பித்த அரிய பண்டைத் தமிழ் நூல்கள் இன்னின்னவை யென்பதும் அவற்றின் வரலாறும் இச்சரித்திரத்தின்கண் ஆங்காங்கு போதிய வளவாய்க் கூறப்பட்டிருக்கின்றன. இதனால் நேர்ந்த பண நஷ்டமோ மிக்க அதிகம். இவை யனைத்திலும் மேலாக அவருடைய தேக சௌக்கியமும் இவ்வேலையினால் அதிகமாகத் தாக்குண்டு, ஈற்றில் அவர் மரணத்துக்கும் அதுவே காரணமாயது. உத்தியோகத் தை விட்டு உபகாரச் சம்பளம் பெற்றிளைப்பாறிய பின்னர், பிள்ளையவர்கள் இவ்வாறு கடின வேலை செய்யாது தம் வேலைகளை மட்டுப்படுத்தி யிருப்பரேல், இன்னுஞ் சிலகாலம் உயிரோடிருந்திருப்பரென்பது திண்ணம். ஆகவே தமிழ்ப்பாஷையை உய்விக்கும் வண்ணம் தமது பிராணனையும் அவர் கொடுத்தனரென்று கூறுவது மிகையாகாது. இவ்வாறு பாடுபட்டவர் மிகச்சிலரே யாதலின், பிள்ளையவர்களும் தமிழுலகினர் பெருங்கண்ணியத்துக் குரியராகின்றனர்.

தமிழ் வித்துவானென்னும் நிலையில் அவரை நோக்குமிடத்து, அவர் திறமையை யெடுத்துக் கூறுவது அனாவசியம். வித்துவான், பண்டிதர், நாவலர், புலவர் முதலிய பட்டங்களைத் தாமே சூட்டிக்கொள்ளும் சில போலிப் புலவர் போலாகாது, தமக்கு என்றுமுள்ள தாமோதரம் பிள்ளை என்னும் பெயர் மாத்திரையானே நின்றனர். இத்தகைய விசேடகுணம் தற்காலப் பயிற்சி பெற்ற இன்னுஞ் சில மகான்களிடத்தும் காணக்கிடக்கின்றது. :

பிள்ளையவர்கள் தமிழறிவும், அதைப் பண்படுத்துமாறு அவரிடத்தமைந்த ஆங்கிலேய நூலறிவும் தமிழ் நூலாராய்ச்சித் திறனும், பண்டை நூற்பயிற்சியுமாகிய வனைத்தையும் போதியவாறு ஆங்காங்கு எடுத்துக் கூறியுள்ளேம். இவ்விஷயங்க ளனைத்தையு மொருங்கே திரட்டி யாராயுமிடத்து, பிள்ளையவர்கள் போன்ற வித்துவான்கள் மிகச் சிலரென்றே கூறுவாம். செந்தமிழை வசன நடையாக எழுதுவதினும் பிள்ளையவர்கள் விசேட சக்தியுடையராக விருந்தாரென்பது இவர் பதிப்பித்த நூல்களின் கண்ணுள்ள பதிப்புரையானும், அவர் கத்திய ரூபமாக வெழுதிய சூளாமணியானும் எவருக்கும் புலப்படும். வசன சூளாமணியின் நடையழகும், பொருட் பொலிவும், உபமான உபமேயச் சிறப்பும், முதனூலின்கணுள்ள செய்யுட்களின் தொகுப்பும், படிப் போரெவர்க்கும் வியப்பைத்தரும். அவர் பதிப்பித்த நூல்களின் பதிப்புரைகள் ஒவ்வொன்றும் ஒவ்வோர் இரத்தின மணியாகவே கொள்ளும் பான்மையன. இத்தகைய சிறந்த வித்துவான் தாமே யாதும் முத நூலியற்றித் தமிழ்ப் பாஷையை உய்விக்காததற்குக் காரணம் யாதோவெனச் சிலர் வினாவுவர். தமிழில் அநேக சிறந்த நூல்களிருக்கின்றன வென்றும் அவற்றைப் புதுப்பிப்பதும் இறவாது தடுப்பதுமே தமது கடமை யென்றும் பிள்ளையவர்கள் கொண்டனர்.

அடைந்து போன ஸ்ரீலஸ்ரீ . ஆறுமுக நாவலர் அவர்கள் கருத்தும் அதுவே. தாம் எவ்வாறு முயன்றாலும் பண்டைக்காலத்து வித்துவ சிரோமணிகளையொப்ப, நூல்களியற்றுதல் இயலாதென்பதும் அவர்கட்குத் தெரியும். ஆகவே, பண்டை நூலாசிரியர்கள் இயற்றியுள்ள நூல்களைப் பரிசோதித்து அச்சிட்டு வெளிப்படுத்துவதே போதியதென் மதித்துத் தாமே யாதும் பெருநூல் செய்திலர். ஆயினும் கட்டளைக் கலித்துறை என்னு மிலக்கண நூலையும், சைவ மகத்துவம் என்னும் சைவ நூலையும், ஆறாம் வாசக புத்தகம், ஏழாம் வாசக புத்தகம், நட்சத்திரமாலை, ஆதியாகம கீர்த்தனம் முதலிய வேறு சில சிறு நூல்களையும் செய்துள்ளார். இத்தகைய மேன்மையான வேலைகளை நிறைவேற்றினமை காரணமாக அவர்க்குப் பெரும் புகழுண்டாயிற்று.

இவர் இறந்தபோது ஞான போதினிப் பத்திராதிபர், தமது நான்காம் ' ஸம்புடம் ஆறாவது புத்தகத்து 203-ஆவது பக்கத்தில், தமிழுலகம் என்று மகுடமிட்டு, சென்னைக் கிறீஸ்தவ கலாசாலைத் தமிழ்ப் பண்டிதர் பிரமஸ்ரீ வி. கோ. சூரியநாராயண சாஸ்திரிகள் பிள்ளை யவர்களைக் குறித்து எழுதிய சரித்திரச் சுருக்கத்தைப் பதிப்பித்துக் கண்ணியப் படுத்தின துமன்றிப் பிள்ளையவர்கள் படமொன்றுஞ் சேர்த்து அச்சிட்டு வெளியிட்டனர். பிள்ளையவர்களிடத்து ஏனைய புலவர். கொண்ட மதிப்பைக் கூறுமிடத்து ஞான போதினி, ''பற்பல நாட்டுத் தமிழ்ப் பண்டிதர்களும் இவரைச் சலஞ்சலத்தைச் சூழும் வலம்புரியெனச் சூழ்வராயினர்" என்று கூறுகின்றது. வித்துவ சிரோமணியெனும் பெருஞ்சிறப்போடு பிள்ளையவர்களிடத் திலங்கிய வொழுக்கங்கள் பலவுள. இவ்விஷயமாகவும் ஞான போதினி பின்வருமாறு கூறுகின்றது:

''இவரால் (பிள்ளையவர்களால்) ஆதரிக்கப்பட்டோரும் இவர்க்கு நண்பராய் நண்ணினோரும் பலதிறத்தினர். தென்னாடெங்கும் இவரை யறியாதார் எவருமில்லை. இவர் உண்மை தோன்ற வாதஞ்செய்வுழித் தமது நண்பர்களுக்காகச் சார்ந்து பேசியும், பிறருக்காக விலகிப் பேசியும் ஒழுகுறு மியல்புடைய சில போலிமாக்கள் போலாது, எப்பொழுதும் நடுவு நிலமை குன்றாதவாறு நடந்துவந்த நற்றமிழாளர். தவறுநர் நண்பரே யாயினும் நொதுமலரேயாயினும் அவரை, நல்லறிவூட்டித் தெருட்டுவார் இவர்.

நம்பிள்ளையவர்களும் திவான் பஹதூர் - வி. கிருஷ்ண மாசாரியரவர்களும் நண்பர்களேயாயினும் மாறுபட்ட இடங்கள் பலவுள். இன்னும் இவர் தற்காலத்துப் பிறர் வன்மைகண்டு அழுக்காறடையும் புன்மக்கள் போலாது, பிறரது பேராற்றல் கண்டுழியெல்லாம் அன்னாரை வியந்தும், ஆதரித்தும், பரிசிலளித்தும், போற்றியும் கொண்டாடியும் ஒழுகிவந்தனர். அந்தோ ! இத்தகைய அன்புடையண்ணலை இழந்த தமிழ்வாணர் பெரிதும் கறவையிற் பிரிந்த கன்றெனக் கையற்று அயர்வார்கள் என்ப தொருதலை''.

பரீட்சிக்கும் திறமைக்குறித்தும் ஞானபோதினி பின்வருமாறு கூறுகின்றது. "சென்னைச் சர்கலாசாலையில் தமிழ்ப் பரீட்சைக் கர்த்தர்களாயிருந்த கனவான்களெவரும் இவரது கல்விக்கு ஈடாவாரல்லர். இவர் பரீட்சை வினாக்க ளெல்லாம் மாணாக்கரது நுட்ப மதியினைப் புலப்படுத்துவனவாம். மாணாக்கர் இயல்பறிந்தும், வகுப்பின் தரமறிந்தும் ; குறித்த காலவளவறிந்தும், வினாப் பத்திரிகை கொடுக்கும் பரீட்சாதிகாரியை இழந்த தமிழ் மாணாக்கரின் துரதிர்ஷ்டத்தை யென்னென் போம் !" '

இத்தகைய விசேட விலக்கணங்க ளமையப்பெற்ற பிள்ளையவர்களிடத்துக் குறைகளுஞ் சிலவுள. இப்பூவுலகின்கண் யாதுங்குறையிலாது நிலவுநர் யாவர்?. விசேட வொழுக்க முடையோரிடத்துறூஉம் சிறு குறைவுகள் குறைவாக மதிக்கப் பெறாவாயினும் அவற்றையு மெடுக்துக் கூறுதல் அவசியமாகின்றது. எம் பிள்ளையவர்கள் மிக்க கடின சிந்தையுடையவான்று. யாவரேனும் தமக்குத் தீங்கிழைப்பின் அதை அன்றே மறக்கும் சுபாவ் முடையவர். தமது குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொருவ சிடத்தும் மிக்க அன்புடையர். தம் உறவினருள் அநேகரைத் தக்க பதவியை யடையுமாறு செய்தவரும் அவரே. தமது சொந்தக் குழந்தைகளுக்கும் பிறர் குழந்தைகட் கும் யாதொரு விதமான வித்தியாசங் காட்டி நடக்கும் இயல்புடையரல்லர்.

இத்தகைய சிறப்புடைய பிள்ளையவர்கள், தமது மரண சாதனத்தின்கண் செய்துள்ள இரண்டொரு குறைகளை மாத்திரம் இங்கு எடுத்துக்கூறாது இச்சரிதத்தை, முடிப்பது சரியன்று. தமது சந்ததியின் பெயரைத் தாங்குவதற்குத் தமது சிரேஷ்ட குமாரன் சி.தா. அமிர்தலிங்கம்பிள்ளை யுதரக் கனியாயுதித்த புத்திரனொருவ னிருப்பவும், தாமியற்றிய மாண சாதனத்தில் அச்சிறுவனுக்குத் தமது ஆஸ்தியில் யாதொரு பாகமுங் காட் டாது விடுத்தது அவர்மாட்டுள்ள பிறிதோர் பெருங் களங்கமேயாம். பிள்ளையவர்கள் இதற்கு யாதுகாரணம் கற்பிக்க விருந்தனரோ வறியேம். அஃது யாதாயிருப்பினும் அச்சிறுவன் பிள்ளையவர்கட்கு யாதும் தீங்கு இழைத்திலனாகவே அவர் செய்கை மிகக்கொடிதென்றே வற்புறுத்துவாம்.

இனிப் பிள்ளையவர்களியற்றிய சாதனமும் நிறைவேற்ற முடியாததாகவே யிருந்தது. தமது மூன்றாவது தார மனைவிபாலுதித்த சிறுவர் தக்க பருவத்தினராகி, இந்திய சர்வகலாசாலைகளில் ஏதேனுமொன்றில் பி.ஏ. பட்டம் பெற்று, விவாகஞ் செய்த பின்னர் தமது ஆஸ்தி அவர்களிடத்து ஒப்புவிக்கப்பட வேண்டுமென்றும், இவைகளில் ஏதேனு மொன்றிற் றவறினால் அவர்கள் தமது ஆஸ்திக்கருகராகா ரென்றும், அவ்வாறு அவர்கள் தமது ஆஸ்தியை யடையாத காலத்து, அவ் வாஸ்தியைக் கொண்டு இலங்கா தீவின்கண் தமிழ்ப் பரிபாலனத்தின் பொருட்டு, ஓர் கலாசாலை ஸ்தாபிக்கப் படல் வேண்டுமென்றும், சிறந்த தமிழ் வித்துவானென்று பெயர்வகித்த அவர் தமது புஸ்தகங்கள் முதலியன ஏலத்தில் விற்கப்பட்டுத் தமது ஆஸ்தியோடு சேரவேண்டுமென்றும் குறிப்பித்ததின் சாதுரியம் என்னோ வறியேம்.
இதுபோன்ற அநேக நவீன விஷயங்கள் அவரியற்றிய சாதனத்திற் பொதிந்து கிடக்கின்றன. தமது சிரேஷ்ட புத்திரர் குமாரரும் தமது பௌத்திரனுமாகிய சி. அ. தியாகராஜனையும் தமது இரண்டாவது புத்திர பாகிய சி.தா அழக சுந்தரத்தையும் அவர்களுடைய நியாயமான சுதந்தரத்தினின்றும் நீக்கத் துணிந்த அவர் தமது ஆஸ்தியின் பெரும்பாகத்தைத் தக்ஷணமே தம்மால் ஸ்தாபிக்கப்பட்டு இப்போது இறக்குந்தசையை யடைந்திருக்கும் ஏழாலைச் சைவப்பிரகாச வித்தியாசாலைக்கேனும், வேறு தரும் விஷயங்களுக்கேனும் விட் டிருத்தல் நலமாயிருக்கும். இவர் வைத்திருந்த அரிய தமிழ் நூல்களையும் இதர புத்தகங்களின் தொகுதியை யுங்கொண்டு ஒரு புத்தகசாலை ஏற்படுத்துமாறு ஏற்பாடு செய்திருப்பரேல் மிக்க பிரயோசனமாக விருக்கும்.

பிள்ளையவர்க ளியற்றிய சாதனத்தை நடுவு நிலைமை குன்றாது நோக்குழி அவர் அதன்கண் செய்தன யாவும் மிக்க தவறென்றே புலப்படும். ஆயினும் அவை யனைத்தையும் யாம் குற்றமாக் கொள்ளேம். அவர் பொதுஜன நலங்கருதிச் செய்தனயாவும் அவரை இறந்தும் இறவாதவராக்குகின்றன. அவர் எவ்வித தொழில் புரிந்தாரோ அவ்வித தொழில் புரிவதற்கு இன்னும் வேண்டிய விட மிருக்கின்றது. பிள்ளையவர்கள் முன் மாதிரி இன்னுமசேகரை அவ்வாறு செய்ய ஏவுமென்று நம்புகின்றேம்.

தாமோதரம் பிள்ளையவர்கள் சரித்திரம் முற்றுப்பெற்றது.

சுபம்! சுபம்!! '
-----------

அநுபந்தம்

யாழ்ப்பாணம், மகாவித்துவ சிரோமணி
ராவ்பகதூர் :: சி. வை. தாமோதரம்பிள்ளை பி-ஏ, பி-எல்,
அவர்கள் இறந்தபொழுது பற்பல வித்துவான்கள் சொல்லிய சரமகவிகள்

இஃது கும்பகோணம், இராஜாங்க கலாசாலைத் தலைமைத் தமிழ்ப்பண்டிதரும்
பிள்ளையவர்களின் நண்பருமான பிரமஸ்ரீ டாக்டர், உ. வே. சாமிநாத
ஐயரவர்கள் சொல்லியது

வெண்பா

தொல்காப் பியமுதலாந் தொன்னூல்களைப்பதிப்பித்
தொல்காப் புகழ்மேவி யுய்ந்தபண்பி - னல்காத.
தாமோ தரச்செல்வன் சட்டகநீத் திட்டதுன்பை
யாமோ தாமியம்ப வே.
------------------
இவை சென்னைக் கிறிஸ்டியன் காலேஜ் தலைமைத் தமிழ்ப் பண்டிதர்
பிரமஸ்ரீ வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியா ரவர்கள் சொல்லியன

கையறு நிலை அறுசீர்க்கழி நெடிலடி யாசிரிய விருத்தம்.

பொன்னவிருஞ் செய்ய நறுந் தமிழுலகிற் புலவரெலாம்
      புது நூற் றாண்டு
துன்னியது கண்டுகொண்ட மகிழ்வனைத்துந் தொலைதா
      தூய்மை சான்று
பன்னரிய நகர் நடுவட் பழுத்ததொரு பயன்மாந்தான்
      பறிப்புண் டாங்கே -
தன்னிலையின் வீழ்ந்ததெனத் தாமோத ரக்குரிசல் .
      சாய்ந்தா னந்தோ . . . : 1

புலமையெனு நீர்நிறைந்த வூருணியின் கரையுடைந்து
      போயிற் றென்னக்
கலைமதியங் காரிருளைக் கடியாது விசும்பினின்றுங்
      கரந்த தென்ன
விலகினிய விசையெழுப்பும் யாழினுறு நாம்பிடையி .)
      னிற்ற தென்னச்
சிலையினினா ணற்றதெனத் தாமோத ரக்குரிசில் -
      சென்றா னந்தோ . ... 2

செந்தமிழ்ப்பா வலர்களெனும் பயிர்வாடச் சிறப்புமிகு
      சென்னை யின்கண்
விந்தைநலச் சாலைதன துறுப்பிழப்ப மாணாக்கர் -
      மிகவ ருந்தச்
சந்தமலைத் தமிழணங்குந் தலை குனிய வீழமுகந்
      தான்க விழ்ப்ப
நந்துபுகழ்ந் தாமோத ரக்குரிசில் சிவலோக
      நண்ணி னானால் . 3

தரவு கொச்சகக் கலிப்பா.

காமோதி வண்டர் கடிமலர்த்தேன் கூட்டுதல் போ
னாமோது செந்தமிழி னன்னூல் பலதொகுத்த
தாமோ தரம்பிள்ளை சால்பெடுத்துச் சாற்றவெவர்
தாமோ தரமுடையார் தண்டமிழ்ச்செந் நாப்புலவீர்.
---------------

இவை பிள்ளையவர்கள் சைவப்பிரகாச வித்தியாசாலைச் சிரேட்டாசிரியரும்,
வித்துவ சிரோமணியுமான யாழ்ப்பாணத்துச் சுன்னாகம் அ. குமாரசாமிப் புலவர்
சொல்லியன

வெண்பா.

சார்வரியின் மார்கழியிற் சார்பதினென் டேதிசெவ் (வாய்
சார்வுறுமுன் னேகா தசியாரல்- பேர்பரவுந்
தாமோ தாநாம சாதுசன சங்கநிதி -
நாமோ தானடி சேர் நாள். 1

கற்றோரு மித்திரருங் கல்விகற்க நல்லுதவி
பெற்றோருஞ் சோகம் பெரிதடைந்தார் - கற்றோருண்.
மிக்குயர்தா மோதாவேண் மீளாத மேற்கதியிற் '
புக்கடைந்தா னென்றுரைத்த போழ்து. 2

சென்னைநகர் சென்று சிறந்தவதி காரதர
மன்னவனா யோங்கு மலைவிளக்காய் - மன்னியசீர்த்
தக்கோனைத் தாமோ தரனையறி யாரறியார்
தக்கோ ரெலாமறிவார் தாம். 3

மன்ன வருந்தேற மாணாக் கருந்தேறப்
பன்னு தமிழ் நூல் பலநாட்டிச் சென்னைச்
சருவகலா சாலையினிற் றாமோ தான் போன்
மருவுதமிழ் யார்வளர்ப்பார் மற்று. 4

தொல்காப் பியமெங்கே சூளா மணிமுதலாந்
தொல்காப் பியமெங்கே தொன்னூல்கள் - பல்குமோ
தாமோ தரவள்ளல் தந்திலனே லச்சினிடை
நாமோது மாறெங்கே நன்கு. 5

மன்னைக்காஞ்சி.

பாவலன்மன் னாங்கிலய பண்டிதன்மன் செந்தமிழ்க்குங்
காவலன்மன் யார்க்குமுப காரகன்மன்- பூவுலகோர்
மித்திரன்மன் வித்தகன்மன் வேதாந்த
சித்தாந்த தத்துவந்தேர் தாமோ தான். 6

கட்டளைக் கலித்துறை.

பாடுங் கவியிற் பழந்தமிழ் நூற்பரி பாலனத்திற்
கூடும் வலியி லறிவிற் பொறையிற் குணநிறைவிற்
றேடும் புகழி லதிகார மேன்மையிற் சீரியர் யார் -
நீடும் புவியினிற் றாமோ தாற்கு நிகர் சொலவே. 7

தேரும் புலவர் தரு நூல் பரந்து சிறந்திலங்கை
யூரும் பரந்துறு சென்னை யாசினுக் குள்ள வெலாப்
பாரும் பரந்துயர் தாமோ தானென்று பாடநின்ற.
பேரும் புகழு மழிவதன் றூழி பெயரினுமே. 8

ஏட்டி லிருந்த வ்ருந்தமிழ் நூல்க ளெனைப்பலவுந் -
தீட்டி வழுக்களைந் தச்சினி லாக்குபு செந்தமிழ்சேர்
நாட்டி லளித்துயர் தாமோ தரேந்திர னண்ணுபுகழ்
பாட்டி லடங்குந் தகைத்தோ புலவர்கள் பாடுதற்கே 9

காராளர் மாமணி கற்றோர் சபையிற் ககனமணி
பாராளு மன்னர் சிகாமணி சைவம் பதிந்தமணி
பேராளர் கண்மணி யாழ்ப்பாண தேசம் பிறந்தமணி
வாரா நெறிமணி தாமோ தரமணி வையகத்தே. 10

வெண்பா.

சகத்துயர்ந்த தீதென்றே சாதித்துச் சைவ
மகத்துவஞ்சொற் றீசன் மலர்த்தா-ளகத்திருத்திப்
பூசை புரிந்துநிதம் போற்றியதா மோதரனைப்
பாசதர னஞ்சானோ பார்த்து. 11

எத்தனையோ மித்திரரு மில்லாளுந் தம்பியரும்
புத்திரருஞ் சோகம் புகுந்தரற்ற - முத்தியுற்றான் -
மன்னுஞ் சிறுவை வயிரவநா தன் புதல்வன்
தன்னனைய தாமோ தான் . 12

-----------------
இவை. 'யாழ்ப்பாணத்து மேலைப்புலோலி மாயாவாத தும்சகோளரி
நா. கதிரைவேற்பிள்ளை அவர்கள் சொல்லியன

அறுசீர்க்கழி நெடிலடி யாசிரிய விருத்தம்.

ஆயிரத்தொன் பது நூற்றொன் றதற்குநிகர் சார்வரியிற்
      பதினெட்டான
சேயினோடு மனலார்முற் றிதியர்பதி னொன்றாகச்
      செறிந்த வீர்பத்
தாயுசத மென்கலிக்கா லரைவீழ்த்தி யுயிர்க்கருள
      வண்ணல் பாத
மேயினன்றா மோதாவே ளென்னாதிங் கெமாங்காள் :
      விளம்ப லென்னே. 1

கேதாரங் கோணமொரு கதிரைநகர்த் தலமூன்றுங்
      கெழுமி யீசன் - -
மாதார்முக் கணனிகரு மிலங்கைநாட் டொருசிறுப்பிட்
      டிக்கண் வாழும்
போதாருங் குவளை செறி புயக்களமர் குலப்பொருவி
      றிலகம் போலத்
தாதாடு மணிமார்பன் வைரவநா தப்பெருமான்
      றவந்து வந்தோய். 2

அகத்தியன்றன் றமிழணங்குக் கணங்குய்ப்பா னெண்
      கண்ணல் போலச் [ணுபுவிங்
சகத்தியலு முருவெடுத்து வளர்ந்து முத்துக் குமானெ [னுஞ்
      சதுரன் மாட்டு
மகத்திலகுங் கதிரைவேற் பிள்ளையெனு மாசிரியன்
      மாட்டும் போற்றி
யகத்தியன் முத் தமிழுமரும் புத்தமுதா யாய்ந்தாய்ந்திங்
      கண்டுங் கோவே. 3

ஆங்கிலத்தில் வித்தியா விநோதனெனும் பட்டமுன
      முன்னா வண்டும்
பாங்குற்றா யாசாங்கக் கழகமதிற் பண்டிதனாய்த்
      தமிழ்பா லித்தாய்
தாங்குபீ எல்லெனும்பேர்ப் பட்டமதுந் தரித்து துரந்
      தானாய் மிக்க
'வோங்குபுதுக் கோட்டையினி லுயர்நீதித் துரையைச்
      ரொன்றா சொல்ல. 4

அம்மானத் தொழில்களின் முன் சென்னைப்பிர தமகணி (தர்
      கந்தோ ரார்ந்து
வெம்மானுங் கீழாக விருக்குமதி பதியெனவு
      மியன்றாய் பின்னர்த்
தம்மானச் சர்வகலா சாலையங்கி யுந்தமிழ்க்குத்
      தலையு மாகி
யெம்மானு மெவரானு மெண்ணுதற்கு மரியபல
      வியல்செய் துற்றாய். 5

ஞானசம் பந்தமணி தனைப்போல நடுக்கலியிற்
      றோன்றி மேன்மை
யானசைவ சமயமதை விளக்குமிரண் டொளிமான
      வார்ந்த தெய்வப்
யானுவா மாறுமுகப் பெருநாவொண் மணிக்கொருகண்
      மணிப்பாங் குற்றா
யேனையோ ரறிவாரோ நின்பெருமைக் கிலக்குண்டோ
      வென்னான் சொல்கோ. 6

செந்தமிழி னகப்பொருளும் திருத்தணிகைப் புராண - [மதுந்
      தெளிவி ளக்க
வந்தமிழி னியனூலு மெவர்க்குமுனற் கரியதொல்காப்
      பியத்தினைந்தும்
வந்தசூளாமணியுங் கலித்தொகையுஞ் சோழியமும்
      வாய்க்க நாடித்
தந்தபெருங் குணக்குன்றே தமிழ்க்கடலே நினக்குலகு
      தருமா றென்னே . 7

கலிவிருத்தம்.

சூளாமணி வசனத்தொடு தொல்சைவ மகத்வ
போளாமணிச் சூறாவளி புகையும்மறுப் போகி
நாளாமணி நட்சத்திர மாலை சுடர்க் கொளுவை
மாளாக்கலித் துறையாதிய தருமோதரவள்ளால். 8

வஞ்சித்துறை.

கனவர்த் தமென்றமிழ்த் - தினவர்த் தமானியை
முனம்வைத் துஞற்றிய - மனவித் தகத்தனே. 9

அறுசீர்க்கழி நெடிலடி யாசிரிய விருத்தம்.

ஆந்திரமும் வடமொழியு மாங்கிலமு
      மினியதமி ழதுவுஞ் சேர்நான் காந்திரத்தா மோதரத்தெ மணீயிறாவ்
      பகதரெனு மரும்பட்டத்தை
யேந்தரசர் பொன் போல வளித்திட்டா
      ராதீனத் தியன்முற் றேசி
காந்தரத்தர் விபூதிமணி பொறிவிருப்பி
      னளித்திட்டா ரறிந்தே யின்று. 10

மேலுலகர் நினைவிரும்பி யழைத்திட்டா
      ரவரிவரென் றுணரேம் வேதத்
தோல்கிளரு மார்கழிநீர்த் தினத்தேழை
      யொன்றோகிர்த் திகையொன் றிட்ட
காலத்தாற் குறச்சிறுமிக் கள்வனோ
      வேகதசிக் கயனோ செவ்வாய்
நீலியோ விவைகலந்த தினத்தாலங்
      கவர்ப்பேறே நிகழ்த்தாய் நீயே. 11

உலகமெலாந் திருவிழந்த தமிழணங்கு
      வானிழந்தா ளுற்ற சைவக்
குலமகடன் னணியணியைக் கொளைவிட்டா
      ளிலங்கைமங்கை குருடாய் நின்றாள்
புலவரெனு மணிகணடு நாயகத்தைப்
      போக்கிட்டார் புண்ணி யாபா
வலனொருசின் னப்பவேண் முதலர் துணை
      யிழந்தார்நின் மறைவா னச்சோ. 12

பாடையே றினுமேடு கைவிடே
      லெனுமொழியைப் பரித்தே யென்ற
னோடையா வகப்பாட்டை யாயுபுநின்
      றகப்பொருளி னுண்மை நாடித்
தேடவோ போந்திட்டா யுணர்ந்தெவருக்
      'தியங்கவோ தெரியே மந்த
வீடையோ வடைந்தைதா மோ தரநா
      வலவிதியோ விதியோ விள்ளாய். 13

முத்தமிழின் வல்லமைக்கோ வெண்டிசையு
      மிசையிசைக்கோ முதுநின் னூன் முன்
வைத்ததற்கோ வுறுதிக்கோ சித்தாந்த வளர்ப்புக்கோ
      ' வொழுக்கம் வாய்மை
பத்திக்கோ வவையஞ்சாப் பெருமைக்கோ
      வாசால வுபகா ரக்கோ
வெத்துக்கோ யாமுள்வைத்திங் கேங்குவந்தா
      மோதரத் தெமேறே யேறே.
----------

௸ பிள்ளை அவர்கள் சகோதரரும், மாணாக்கரும் ஆகிய சி. வை. சின்னப்பாபிள்ளை அவர்கள் சொல்லியன

நேரிசை வெண்பா.
தாதுதிருங் கொன்றையான் றன்னடிமைக் கோர்கரிநா மேவநத நம
மோதுபல நற்குணங்க ளுற்றகலன் - சூதொடவ
தந்திரங்க டானறியாத் தாமோதரன் மேல
ரந்தணுல கத்தேறி னான்.

நாற்பத்தெண்சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்.

பொன்னிலங் காபுரியி னன்னலஞ் செறிபல
      பொலன்பெறு நிலங்கடம்முட்
புகலுநல் வளமெலாந் திகழியாழ்ப் பாணமாம்
      பொழிறனக் கெழிலதாகிப்
பொங்குசெல் வம்விளைவு தங்கின்ப மேமமும்
      புன்பிணியி னின்மையைந்தும்
பூவசிய ரேர்மிகுதி கோவசிய ராநிரை
      புரந்திடல் பாந்துகாணும்
புத்தூர் சிறுப்பிட்டி யுய்த்தவன் மாப்பாண
      புநிதனருள் வேலாயுதன் புதல்வனம் பலவாண னிதயமகிழ் மதலையாய்ப்
      போற்றவரு மூத்ததம்பி
புத்திரன் குருநாதன் பெற்றவயி ரவநாத
      போதனெழு காதலர்க்குட்
புந்திபொறை யத்தண்மை சிந்தா விருந்தோம்பல் :
      போற்றியற மாற்று முதல்வன்.

சொன்னலஞ் சேரினிமை மன்னுசெந் தமிழொடு .
      சுகம்பல வகங்களிப்பத்
துய்த்திடுந் தனியாங் கிலத்தையுங் கசடறத்
      தூயவரி னாய்தல் செய்தே
சொல்லுசட் சாத்திரம் வல்லவெண் ணெண்கலைச்
      சுவைபருகி யவைமதிப்பத்
தூக்கிமற் றொன்றுமெதிர் தாக்கிடா தறைதருஞ் -
      சொல்வன்மை மல்குபுலவன்
தொன்னிலம் பேரின்பு தன்னிலுற றான் தண்டு
      சோகமுறு மாகவிகளைத்
துய்ய புத் தமுதமென வையத்தி னாட்டியும் -
      துங்கமுச் சங்கமருவித்
தொண்டுபெற் றுள்ளபல வண்டமிழி னூல்களின்
      றுஞ்சுநிலை யஞ்சியரியுண்
டுளைகளுட னெழுதுபிழை களை நீக்கி யுலகிற்
      றுலக்கிய கலைக்கியானன்

சென்னையம் பேர்நகரி தன்னரச தானித்
      திருக்கலா சாலையின்கண்
செந்தமிழ்ப் போதனையி லெந்தமா ணவரையுந்
      தேற்றுதற் கேற்றவாசான்
செய்யவர சாட்சியோர்க் கையமற வேவரவு
      செலவுக் கணக்குகளெலாஞ் *
செப்பமுட னரசின ருவப்பத் தெளித்திடுந்
      திறலினர்கள் விறலதிபதி
சீர்த்திபெறு தொண்டைமா னேத்துமொரு நீதவான் '
      தீயபழி பாவமஞ்சித்

தேடுபொருள் பாத்தைந்து கூறுபட வில்வாழ்க்கை
      செய்தெட்டு மொய்மகாரைச்
சிந்தைகளி கூரவே தந்தவ னிவன் பிதாச்
      செய்ததவ மென்கொல்லெனாத்
தேசமதி நேசமொடு பேசுமொரு மாசிலாத்
      தேவர்புகழ் தாமோதரன்
கன்னலஞ் சோலைகளி லன்னமென் பெடைகடங்
      கருவிடும் புரசையம்பாக்
கத்திலோ ரையா யிரத்திரண் டாங்கலிக்
      கழறு சார் வரிமுன்பனிக்
கார்முகம் பதினெட்டி லாரல்வா ரத்திலே
      காதசியி னாவிதன்சேர்
காலைதனி லேபம்பை யாலவட் டம்பேரி
      காலவுற் சவகோலாய்க்
கண்டமெல் லாந்துதிவை குண்டநா தன்றனொடு
      கங்காத ரெசுபரனுங்
கனகமுட னொளிர்மணிக ளணிவிமா னங்கள் மிசை .
      காட்சிதந் தாட்சிகொள்ளக்
கருதரிய சித்தாந்த நிபமமெய்க் கண்டுபொய்க்
      காசினியி னாசையொருவிக்
கர்த்தன்பரி சுத்தனொரு முத்தனெனு நித்தியன்
      காய்கயிலை மேயினனரோ 2

கட்டளைக்கலித்துறை.

சார்வரி யாண்டு தனுவறு மூன்றழ றங்களக்கர்
'பூர்வபக் கத்துற்ற வேகா தசிதிதி பூதவுடல்
சோர்வுற மற்றுப் புகழுட லோங்கித் துலங்கியசீர்த்
'தார்மலி மார்பினன் றாமோ தான்பதி சார்தினமே. 3

கற்றார்க் கினிமையுஞ் சைவர்க்கு மாண்புங் கருது செல்வ
மற்றார்க் குதவியுங் கல்விகற் போருக் கரும்பொருளு
முற்றார்க்குக் கீர்த்தியு நாட்டார்க் குறுதி யுடனறியும்
பற்றாருக்கச்சமுந் தாமோ தான் பின் பறந்தனவே. 4

எழுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்.

திருவொடு வாணி யொருமித்து வாழுஞ்
      சிறுப்பிட்டி தன்னில் வேளாளர்
மரபினி லுதித்த வயிரவ நாதன்
      மகார்சின்னத் தம்பியா மயனுந்
தருமனே ரப்புக் குட்டியோ டிளைய
      தப்பிசின் னக்குட்டி சிற்பத்
தரியசின் னப்பெனொடு நல்லதம்பி யாமறு
      கனுட் டரும் போற்றி. 5

உரிமையின் வணங்கு பதத்தின னாகி
      யோது போன் பொடு நாணொப்
புரவுகண் ணோட்டம் வாய்மையா மைந்தூண்
      பொறுத்தசால் பாகியெஞ் ஞான்றும்
பெரிமித மினிமை யரியநல் லொழுக்கப்
      பெற்றிக ளுற்றவன் றாமோ
தானெனு மொருபேர்ப் பண்டித னுலகிற்
      றானளி யுடன் பிறந் திலனேல். 6

நீப்பரு நீதிநெறி விளக்கத்தை
      நேர்சைவ மகத்துவத் தொடுதொல்
காப்பியந் தன்னை வீரசோழியத்தைக்
      கலித்தொகை யுடன் திருத்தணிகை
மாப்புரா ணத்தை யிலக்கண விளக்க
      மான்மியத் தொடு சூளாமணியை
நாப்பயி லிறைய னாரகப் பொருளை
      நானிலங் காண்பதிங் கெவனே. 7

எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.

பானுதவக் குறுமுனிபா லுதித்தபேதை பாண்டியர்
      பலகையிலே வளர்ந்து மங்கைப் (பொற்
பருவமுற வடமொழியை மணந்து மூன்று பண்புறு
      புதல்வியரைப் பயந்து வாழ்ந்தே (சீர்ப்
வானிறந்து சீரழிந்து மாயுங் காலை மருந்துட்டி
      யுயிர்நிலைக்க வைத்த தாமோ தரமருந்தே
நீயுமுயிர் தணந்தா யந்தோ தமிழ்புரிந்த
      தவக்குறைவு தான் கொன் மாதோ 8

சோதரரிரங்கல்.
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்.

தந்தையெமை யிளவயதிற் றணந்திட நீ
      யன்றுமுதற் றந்தை யாகி
வந்தபல விடாகற்றி வாழ்வெமக்கீண்
      டளித்துவந்து வந்தா யுன்றன்
சிந்தைமிக நொந்திடயாஞ் செய்தபிழை
      பலவெனினும் சிந்தி யாது .
முந்தையினு மருள்சுரந்த முன்னவனே
      யினியென்றுன் முகங்காண் போமே.

சீதரனுஞ் சங்கானுந் தேவியரோ
      இன்வாயிற் றெருவெய் தித்தா
மோதானே யெனவழைத்த மொழியொன்றே
      'யுன்காதின் முழங்கிற் றல்லாற்
சோதரனும் புத்திரனும் பத்தினியும் பாலரொடு
      துயரின் மூழ்கி
யாதரவிங்கா ரெமக்கென் றாற்றுமொலி
      கேட்டிலையெம் மண்ண லேயோ.
-----------------
௸ பிள்ளையவர்கள் குமார் சி.தா. அழகசுந்தரம் பிள்ளை சொல்லியன.

கொச்சகக் கலிப்பா.

தாயில்லா னென்றென்னைத் தாரணியோர் செப்பிடினும்
நேய உடன்பிறப்பில் நீசனெனப் பேசிடினும்
பேயேனுக் குண்டோர் பிதாவென்று நானிருந்தேன்
நீயோ எனையிந்த நீணிலத்தில் விட்டகன்றாய். 1.

என்றினிமே லுன்றன் எழிலார் முகங்காண்பேன்
என்றினிமே லுன்றன் இனிய குரல் கேட்பேன்
என்றினிமேல் நீதான் எழுதுநிரு பம்பெறுவேன்
என்றினிமேல் இவ்வுலகில் எந்தாய் எனவிளிப்பேன். 2

சென்னைக்குச் சென்றார் சினேகர்பல ரைக்காண்பே
னென்னைப் படிப்பித்த என்குரவ ரைப்பார்ப்பேன்
உன்னை யினியிவ் வுடலோடு யான்காணேன்
என்னே இதுவென் னிறைவ னருளாமால். 3

என்னன் புடைய எந்தாய் எங்குற்றாய் நின்க்ஷேமம்
என்னை அதையறிவி என்றனக்கே இங்குள்ளேம்
அன்னை யனையான் அருட்கடலால் நன்குற்றேம்
என்னச் சிலசொல் எழுதுவன்யா னுன்றனக்கே. 4

ஆனந்தங் கொண்டேன் அரதனம் பெற்றாள் மணியென்
றானந்தத் தோடே யனுப்பினநின் கைக்கடிதம்
போன வருடமிந்நாள் புந்திகுளி ரப்பெற்றோம்
போன விடத்திருந்து போடாயோ ஓர்கடிதம். 5

மன்னுங் கமலமென வைப்பா யொரு பெயரே
உன்னுடைய பிள்ளைக்கென் றோர்கடிதம் நீவரைந்தாய்
மன்னுங் கமலமவள் வாய்திறந்து தாதாவென்
றுன்னையழைக்கின்றாள் ஒளித்தெங்கே சென்றாய் நீ. 6

பிள்ளைகடாந் தேடப் பெரியார் ஒளித்தாடல்
உள்ள துநம் நாட்டில் ஒருவரில்லை யீதறியார்
பிள்ளைமுடி யாது பெரியாய் வருகவெனிற்
பிள்ளைக்கு முன்னிற்றல் பெற்றியன்றோ நீபகராய். 7

அத்தனடி கண்டடியேன் யானுய்யுமுன்னர்
எத்தனையோ பாதகங்கள் நித்த மியற்றிவந்தேன்
அத்தனையும் நீ பொறுத்தாய் ஐயா அவனியுள்ளார்
எத்தனைதான் சொன்னாலென் என்னன் புனக்குண்டே.8.

வெண்பா.
தொள்ளாயிரத்தொன்று தோன்று முதனாள் செவ்வாய்
விள்ளுபகல் ஒன்பதரை மேவினபின் - தெள்ளு
தமிழ் மணக்கும் வாயான் சீர்த்தாமோத ரேந்தான்
எமை மறந்து துஞ்சினான் என்.
-----------

This file was last updated on 4 December 2023.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)