pm logo

பள்ளிகொண்டான் பிள்ளை
இயற்றிய பிரபந்தத் திரட்டு - பாகம் 3
5. திருக்குருகூர் நம்மாழ்வார் நான்மணிமாலை &
6. கோதைநாயகித்தாயார் மாலை

paLLikoNTAn piLLai pirapantat tiraTTu - part 3
tiruvallikkENi pArtacAratip perumAn mAlai &
kOtainAyakittAyAr mAlai In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
A raw text file was generated using Google OCR and the text was subsequently corrected for any OCR errors.
We thank Mr. Rajendran Govindasamy, Chennai, India for his assistance
in the proof reading of this work for publication.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2024.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

பள்ளிகொண்டான் பிள்ளை
இயற்றிய பிரபந்தத் திரட்டு - பாகம் 3
5. திருக்குருகூர் நம்மாழ்வார் நான்மணிமாலை
6. கோதைநாயகித்தாயார் மாலை

Source:
ஸ்ரீமதுபயவேதாந்த ப்ரவர்த்தகராகிய
ஸ்ரீமாந் - கச்சிக்கடாம்பி – இராமாநுஜாசார்ய ஸ்வாமிகள்
திருவடி சம்பந்தியும், எதிராஜதாஸரென்னும் தாஸ்ய நாமியுமாகிய
ப்ரபந்ந வித்வான் கொ. பள்ளிகொண்டான் பிள்ளையவர்கள் இயற்றிய
பிரபந்தத் திரட்டு

இஃது -- ம-ள-ள- ஸ்ரீ அ- இரத்தினவேலு பிள்ளையவர்கள் முயற்சியால்
ப்ரபந்ந வித்வான் - காஞ்சீபுரம், ஸ்ரீமாந் - ராமஸ்வாமி நாயுடவர்களாற்
பார்வையிடப்பட்டு திருமணம் - செல்வகேசவராய முதலியார் M.A. அவர்களால்
சென்னபட்டணம், செங்கல்வராயநாயகர் ஆர்பனேஜ் அச்சுக்கூடத்திற்
பதிப்பிக்கப்பட்டது.
1899 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்
Registered copyright.
----

5. திருக்குருகூர் நம்மாழ்வார் நான்மணிமாலை

ஸ்ரீ
ஸ்ரீமதேராமாநுஜாயநம:

காப்பு.

திருக்கிளர்தென்குருகூர்வாழ்வகுளச்செழுந்தொடையன்
மருக்கிளர்மாறற்கோர்நான்மணிமாலைவகுத்தணியக்
குருக்கிளர்வேத்திரமேந்துகைச்சேனையர்கோன்கமலத்
துருக்கிளரொள்ளடியுன்னிப்புனைவனென்னுச்சியினே.

குருகூர்வருநங்குணநிதிமாறன்குலவுந்தெய்வ
முருகூர்மகிழ்த்தொடைமொய்ம்பினன்மொய்சிறைமோட்டெகினக்
குருகூர்தியஞ்சனெஞ்சேநங்கவிகளைக்கொள்வனென்றும்
பெருகூருணியெனப்பேசிடும்பேரருட்பேறளித்தே.

நூல்.

வெண்பா.
திருக்கிளருமெய்ஞ்ஞானதேசிகனம்மாறன்
உருக்கிளர்நற்சீருரைக்கவொண்மைப்-பெருக்குடையோர்
தம்மாலுமாகாதோர்சற்றுமவ்வொண்மையிலா
நம்மாலென்னாநெஞ்சேநாடு.       (1)

கட்டளைக்கலித்துறை .
நாடுறுமுத்தத்துவமுணர்ஞானிகணாயகனற்
சேடுறுதென்குருகைப்பெருமான்றேன்செறிவகுளத்
தோடுறுதொங்கற்றுணைத்தோட்பராங்குசன்றொல்லியற்சீர்
பீடுறப்பேசநினைத்தனெஞ்சேபெரும்பேதைமைத்தே.       (2)

எண்சீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்.
பேதைநெஞ்சேபெருநிலத்தோர்பிறவிபேர்ந்து
      பெரும்பதத்தைப்பெற்றுய்யும்பெற்றித்தான
மேதைநெஞ்சில்விண்மணியின்விளக்கவேண்டி
      மெய்ப்பொருளின்மெய்யுறையாம்வேதந்தன்னைப்
போதையுறுசெந்தமிழாற்புனைந்ததெய்வப்
      புலமைசால்சடகோபன்பூவாரிக்கோர்
பாதையாம்பராங்குசன்சீர்பயமொன்றின்றிப்
      பரவவொருப்பட்டதவாப்பரப்பின்பாற்றே.       (3)

நேரிசையாசிரியப்பா.
பரப்புற்றென்று முரப்புற்றோங்கி
நசிக்காவுயிர்களை விசிக்காவருத்துறூஉம்
அசித்தெனப்பெயரிய முசித்திடாப்பொருடான்
நகுமறிவிலதாய்ப் புகும்விகாரக்கே
இருப்பிடமாகி யொருப்பட்டென்றும்
இருக்குமதனிலைப் பெருக்கினைவிரிக்கின்
கலப்பறுசத்துவங் கலப்புறுசத்துவந்
தத்துறுகாலமாஞ் சத்துவசூனியம்
என்னவெடுத்துப் பன்னிடுமூன்று
விதமெனப்புகல்ப நுதலியவற்றின்
எழுவாய்கடைகளி னியம்பியனவொரீஇக்
கழியாதிடையுறுங் கலப்புறுசத்துவம்
முக்குணமுடைத்தாய் முரணுறக்கட்டுறீஇ
மட்குறுமுயிர்களின் மதிநலமறைப்பதாய்
ஒன்றும்வீற்றுணர்வினை யுண்டாக்குவதாய்
என்றுமுள்ளதா யிருடிகேசற்கு
மருவியகிரீடைக் கருவியினிருப்பதாய்ச்
சத்துவமிராசதந் தாமதமெனச்சொலுங்
குணவேற்றுமைகளின் கூட்டுறாவிடமொடு
குணவேற்றுமைகளின் கூட்டுறுவிடத்தின்
பேதத்தானும் பெருகிடுங்கால
பேதத்தானும் பிறங்கிப்பிறந்திடும்
ஒத்ததுமொவ்வா ததுமெனவுரைத்திடுஞ்
சூக்குமவிகாரமுந் தூலமாம்விகாரமும்
விளைத்திடக்கடவதாய் வீவிலாப்பகுதி
இளைத்தலில்வித்தை யிகுத்தலின் மாயை
யென்னும்பெயர்களை மன்னிக்கலப்புறு
சத்துவமென்னுமச் சத்துவவசித்தால்
வீக்குண்டதன்குண வேற்றுமைதம்மாற்
றாக்குண்டுழலுமித் தமியனேனித்தகை
அவித்தையாவரணமு மதன்குணப்பரிசமுங்
கவித்துநிற்றொடாவணங் கனன்றபெருந்தகாய்
அபயமுயிர்க்கரு ளரிந்தமனருளால்
உபயவிபூதியு மொருங்குறக்காணுறூஉ
மெய்யுணர்வாம்பெரு வீரையையுடையோய்
ஐயுணர்வயின்றிடு மைம்பொறியவித்தோய்
அலகோர்ந்துரைத்திடற் காகாவகத்தராம்
உலகோர்க்காபபா னொருப்பட்டென்றும்
முருகார்மலர்ப்பொழில் மூவாதொளிர்தருங்
குருகாபுரிவருங் குணக்குன்றனையோய்
மாறன்பராங்குசன் மறைச்சடகோபனா
வீறன்வகுளவீ விரைத்தொடையணிகலன்
அன்னவூர்தியென் றறைந்திடும்பெயரோய்
நின்னைவழுத்தி நினைத்திடநேர்ந்ததென்
முன்னைநற்பாலினோ முழுப்பேதைமையினோ
என்னையோவெளியனே னிதனினென்றுணர்ந்திலன்
அன்னையொத்தென்பிழை யனைத்தையும்பொறுத்தென்
முன்னையூழ்வினைகளை முற்றவுமுருக்குபு
பின்னரும்பின்னரும் பிழைசெயாதிருந்திடும்
உள்ளமுந்தந்ததில் வெள்ளமெய்ஞ்ஞானமும்
பூத்திடச்செய்தெப் போதுங்
காத்தனின்கரையிலாக் கருணையின்கடனே.       (4)

வெண்பா.
கடனுணர்த்துமாமறைகள்கட்டுரைக்குங்காட்சித்
திடனுணர்ந்து தேறியென்சிந்தை -- யிடனிகழீர்
தன்கொருக்கிநின்சரணேசார்ந்துய்யவோர்மாற்றந்
தென்குருகைமாறவெற்குச்செப்பு.       (5)

கட்டளைக் கலித்துறை.
செப்புறழ்கொங்கையர்ச்சேர்வழிசெல்லவென்சிந்தைதனைக்
கப்புறழ்வாங்கலிமாயைக்கடலைக்கடந்துநின்றன்
துப்புறழ்தூவடிதுன்னிடவோர்துறைசொற்றிபொறி
வெப்புறழ்வில்லார்தொழுங்குருகாபுரிவித்தகனே.       (6)

எண்சீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்.
வித்தகத்தவியனுலகந்தனக்குமூன்று
      விதமானகாரணமாய்விரிந்துநிற்கும்
வத்தகத்தமலயமிழிபொருநலுந்தி
      வளரவாசிக்கரைவண்குருகைமாற
குத்தகத்தகுக்கிக்கேகுழைவேனின்றன்
      கோகநகக்குரைகழற்கேகுழைந்துநையும்
பத்தகத்தனாய்ப்பவவாரிதியிகந்து
      பரந்தாமப்பதவிநண்ணப்பணித்திடாயே .       (7)

நேரிசையாசிரியப்பா.
ஆய்ந்தோரமர்ந்திடு மரவரசமளியிற்
சாய்ந்தோனுந்தியந் தாமரைப்பூவரும்
அயற்கொருநாளிரண் டாயிரஞ்சதுர்யுகம்
இயற்படவவ்வகை யெண்ணிக்கணிக்குநாண்
மொழியுமைந்துடன்சேர் முந்நூற்றறுபான்
கழியினோராண்டாங் கணித்திடுமவ்வகை
ஆண்டுநூறாயிடி ன ன்னமாவூர்தியாம்
ஆண்டகையந்தணற் காயுளினவதியாம்
பாயிரமறைசொலப் பாரதிகொழுநனுக்
காயிரஞ்சதுர்யுக மாம்பகற்பொழுதினின்
மதித்திடுமீரேழ் மனுக்களிவ்வையத்
துதித்ததையுவப்புட னோம்பியொடுங்குவர்
அன்னவரொவ்வொரு வற்குமாயுடான்
உன்னுறுமெழுபா னொன்றெனுஞ்சதுர்யுகம்
என்னநூலுணர்ந்தோர் பன்னுவரெண்கணர்
இன்னணம்பிறந்திருந் திறந்தவர்கடற்கரை
துன்னுநுண்மணலெனத் தொகையிழந்தோர்களாம்
இப்பொழுதிருந்திடு மிரணியகருப்பனுக்
கொப்புமாயுட்சமை யொருசதத்தளவையில்
ஐம்பான்சமைகழிந் தைம்பானொன்றெனுஞ்
சமைமுதனாடனிற் சமைபகற்பொழுதினின்
மறுவிலாமனுக்களோ ரறுவர்கண்மாய்ந்தனர்
ஏழாமனுவென விப்பொழுதிருந்திடுங்
காழார்கதிரவன் கான்முளைவைவச்
சுதமனுவாயுட் பதமெனுஞ்சதுர்யுகங்
குழுமாககூடிடு மெழுபானொன்றினில்
இருபானேழ்கழிந் திருபானெட்டினில்
ஒன்றுந்துவாபர யுகத்தொடுக்கத்தில்
என்றுமபாவல ரிசைத்திடுமிசைகெழூஉம்
நாவலந்தீவினின் மேவுதென்றிசையுழி
எண்டவர்ககருள்புரி விண்டுவின்கேத்திரம்
ஐந்தனுளொன்றாய் முந்திடுந்தாந்தக்
கேத்திரந்தன்னிற் கிளக்குறுமலயமென்
கோத்திரநின்றுங் குரைத்திழிபொருநையாம்
ஆறுபாய்தலினா லூறுகாய்கில்லாக்
களனார்வழுதி வளநாட்டின்கட்
டிருக்கிளர்ந்தோங்குந் திருக்குருகூர்க்கட்
டிருமகள்கொழுநனாந் திருநாராயணன்
திருமுகந்திருத்தோ டிருத்துடைதமையொரீஇத்
திருவடியுதித்தவர் திருக்குலந்தன்னிற்
றொழுதிப்புகழ்த்திரு வழுதிக்கிழவனார்
என்போருயிர்கண்மாட் டன்போரிருந்தனர்
அன்னவர்சேயறந் தாங்கியாரவர்மக
பன்னிடுஞ்சக்கர பாணியாரவர்கால்
அச்சுதரவர்முளை மெச்சுசீர்ச்சேந்தனார்
அருள்குடிகொளுமுளத் தவர்தரும்பிறங்கடை
செந்தாமரைக்கணர் செப்பிவர்நந்தனர்
போர்க்கழியாரிவர் புதல்வராமவர்
கார்க்கைவள்ளலாங் காரியாரிவர்முனம்
இலையாற்றீயளிக் குலையால்வளவிய
கதலியாற்கமுகாற் கதலிகைதம்மாற்
காவணமலர்களாற் கைசெய்தியற்றிய
காவணநீழலிற் கணிதநூலோர்சொலும்
பன்னாடம்மினு நன்னாளமைதரும்
பொல்லாக்கோளிலா நல்லோரையினிற்
றண்டுலம்விரித்துநற் றருப்பைமேலணிந்து
விண்டலர்மலர்தூய் விதியுளிக்குரியதா
வகுப்பனயாவையும் வரன்முறைவகுத்து
நல்விநயந்தருங் கல்வியாற்கேள்வியாற்
சான்றோர்தங்குலச் சட்டகங்கொண்மறை
போன்றோர்பொய்த்தலில் புடவித்தேவர்கள்
ஏம்பலினெழுச்சியா னோம்பியசெந்தீக்
கரியாவிதிமுறை கனிந்துகைப்பற்றிய
ஒண்புகழ்சேர்திரு வண்பரிசாரப்
பெருவாழ்வமைந்திடுந் திருவாழ்மார்பர்
விருப்பன்னவமெனுந் திருப்பின்னவராந்
தருப்பாசனத்தர் தவத்துயரில்லவள்
கருப்பாசயம்வரு கற்புருவானோள்
உடையநங்கைப்பெய ருடையோள்பல்பகல்
நோற்றநோன்பின்பய னோன்மையாலேற்றமார்
அறத்துருவாமவ ளகடாங்கீட்டிசை
திறச்சேனையர்கோன் செழுங்கலைதனைக்கொடு
புகுந்துகலியுகம் புகுந்தநாளெண்ணைந்
தொருமூன்றதனிலு முரைபிரமாதி
வருடம்வைகாசி வான்மதிமழைக்கோள்
வாரம்விசாகநா ணேருமுன்பக்கம்
பன்னஞ்சாந்திதி பகர்ந்திடுங்கவைத்தாள்
என்னுமோரையினு மிருள்வலித்திடுமினன்
இராமதிவாகர னிராமாநுசவொளி
தோன்றலிற்றொலையா தேன்றுறைந்திருந்ததாம்
உள்ளிருளுட்குறீஇப் பொள்ளெனப்பேரவும்
வற்றாப்பவக்கடல் வற்றிவறளவும்
மலராநெஞ்செனு மரைமலர்மலரவும்
மகிழணிப்பருதி வானவனென்னவிம்
மகிதலத்துதித்தருண் மாறபராங்குச
எனைப்போற்கொடியோ ரிவ்வுலகத்தினும்
எனைத்தோருலகினு மெக்காலத்தினும்
இருந்தோரிருக்கின் றவரிருப்பவர்களில்
வருந்தித்தேடினும் வாய்ப்பவரிலரால்
இத்தகைக்கொடியனே னிவ்வுலகத்தினில்
எத்தனைபிறவியோ வெடுத்தெடுத்தெய்த்தனன்
எல்லாரையும்போ யிரந்தனனவரெலாம்
பொல்லானிவனெனப் புரந்திடாதொழிந்தனர்
இன்னும்பிறவிக ளெதிர்வதையெண்ணினென்
முன்னந்திடுக்கென முசிந்துசோர்கின்றது
வெய்யபிறவிகள் வேண்டேனாகிநின்
செய்யதாமரைத் திருவடியடைந்தனன்
மருளருணவந்தனை மானுமெற்கிரங்கி
அருளருணவமே யனையோயடியனேன்
உய்யும்விரகொன் றொல்லை
செய்தனின்னருட்குச் சிறப்புடைத்தாமே.       (8)

வெண்பா.
உடையநங்கைசேய்மணியையுன்னிற்பொறிகள்
அடையநங்கைவயமாமைம்பூப்--படையநங்கன்
போதன்மறலிபயம்போகுநெஞ்சேபுண்டரிகை
நாதன்பதமுநண்ணுநாடு.       (9)

கட்டளைக்கலித்துறை.
நாட்டிலெங்கேனுந்தனை நல்குநாரி நகிலுறுபால்
ஊட்டினுமுண்ணாதுறங்காதியோகினுறுகுழவி
ஈட்டியசீர்த்திநம்மாறனல்லாமலிருந்ததென்று
கேட்டதுண்டோகவிகாடுலைக்கோலிற்கிளத்துமினே.       (10)

எண்சீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்.
கிளக்குமிரண்டியக்குமின்றிக்குத்துமின்றிக்
      கிளர்நீர்வேட்கையுமின்றிக்கிடைத்தமெய்யை
வளர்க்குமவையயில்வாஞ்சைதானுமின்றி
      மாசுணமன்னாமுறங்காமரப்புளிக்கீழ்
வளக்கமலாதனனாய்ச்சின்முத்திரைக்கை
      வயங்கிடயோகத்திருந்தமாறன்றன்னை
உளக்கமலத்துன்னுவோருற்பவத்தி
      னுறுகணுறாருலைவில்வீடுறுவர்தாமே.       (11)

நிலைமண்டிலவாசிரியப்பா.
உறுவர்களெவர்க்கு முளத்தொன்னலராம்
அறுவரையைவரை யகத்தடைத்தோர்க்கும்
மறைகளின்முடிவினி லுறைதருமிறைநிலை
உணர்வரிதாமெனி னுணர்வினுதயமே
உறாதேனுடற்றுறு முபயச்செருக்கையும்
அறாதேனலைக்குறு மைம்பொறிக்கள்வரைச்
செறாதேன்சீரிய தேசிகர்திருவருள்
பெறாதேன்பேர்க்கொணாப் பெற்றித்தாமவா
மறாதேன்மனம்போ மார்க்கம்போதலை
ஒறாதேனுண்மையை யுணர்த்துங்கலைகளைக்
கல்லாதேன்கலை கழறியவிதிவழி
நில்லாதேனுயிர் நேயநெஞ்சினில்
இல்லாதேனிரப் பாளர்க்கின்சொலுஞ்
சொல்லாதேன்மனத் தூயோரிணக்கினைப்
புல்லாதேன்பிறர் புன்கணைப்போக்கிட
ஒல்லாதேனுயிர்க் குறுகணேயுஞற்றிடத்
தேடுவேன்றெரிவையர் சிற்றின்பத்தையே
நாடுவேனல்லவர் நற்பணிசெய்திட
ஊடுவேனுறாததை யுற்றிடவுனியுனி
வாடுவேன்வளனிலா வச்சையர்தம்மொடுங்
கூடுவேன்குலப்பொருள் குவித்திடவெங்கணும்
ஓடுவேனதற்கென துறையெலாமொழிப்பேன்
உண்ணத்தகாததை யுகந்துகந்துண்ணுவென்
பருகத்தகாததைப் பரிவுடன்பருகுவென்
எண்ணத்தகாததை யியற்றியினெண்ணுவென்
சொல்லத்தகாததைத் துணிவுடன்சொல்லுவென்
செய்யத்தகாததைச் செப்பமாச்செய்குவென்
இத்தகையியல்பினை யெய்தியவேழையேன்
அத்தகையிறைநிலை யறிகிலேனாதலால்
அருளுருவாகிய வமலமெய்ஞ்ஞானத்
தெருளுருவாகிய சிற்பரதெள்ளியர்
போற்றும்புணையடிப் புண்ணியவடுத்தோர்த்
தேற்றிக்காத்திடுந் திருவருட்சிந்தைய
எண்டிசையெங்கணு மிலங்குறுஞ்சீர்த்திய
வண்டிசையறாமண வகுளமாமாலைய
நன்குருகூர்நளிர் நளினநற்றடஞ்சூழ்
தென்குருகூர்வருந் தேசிகர்தேசிக
சொன்னிலையிலாப்பெருந் துட்டனாகிய
என்னிலைக்கிரங்கி யினிதருள்புரிந்தெனைத்
தூயோனாக்கியம் மாயோனிறைநிலை
ஒள்ளிதினுணர்தரத் தெள்ளிதினுணர்த்தியிவ்
வடல்வினைக்குரியதா முடல்விடுமளவும்
இகந்துபடாததை நுகர்ந்தினிதிருக்கச்
செய்வதுமன்றியித் தேகம்விட்டபின்
அர்ச்சிரவதர்தனின் மெச்சிடக்கொடுபோய்
ஒளிமயமாகிய தெளிவிசும்பதனில்
நித்தர்கணிலவிய முத்தர்கள்குழுவினில்
உறைதரச்செய்வது முன்றன்பரமென
மறைபுகுந்தனனின் மரைபுரையடிக்கே .       (12)

வெண்பா.
அடிநாளடைந்தவவித்தைவினையாதி
முடிநாளுண்டாகநெஞ்சேமுன்னிற் - கடிநாண்
மகிழ்மாலைமாறன்மலரடிசிந்தித்து
நெகிழ்மாலையையாய்நீநில்.       (13 )

கட்டளைக்கலித்துறை.
நின்றுமதுரகவிப்பெருமான்முன்றன்னெஞ்சகத்தில்
ஒன்றுமயிர்ப்பறக்கேட்டவினாவிற்குரியவிடை
மன்றுபடச்சொன்னமாறனடியைமனத்திருத்தல்
நன்றுநமர்கட்கெனநவில்வார்மறைநாவலரே.       (14)

எண்சீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்.
வல்லவராய்ப்பண்டிருந்தவான்மீகாதி
      வடமொழிதென்மொழிக்கவிஞர்வரப்பண்பில்லாப்
புல்லவராகக்குணத்துப்போதனாதிப்
      புத்தேளிர்முனிவரருள்புக்கோரென்றும்
பல்லவப்பூம்பொழில்சூழ்தென்குருகைவந்த
      பராங்குசமாமுனிக்கவிஞன்பரநூறேர்ந்த
நல்லவர்சொனாரணனல்லருளின்மாட்சி
      நண்ணினோனென்றும்வல்லோர்நவிலுவாரே.       (15 )

நேரிசையாசிரியப்பா.
ஆருயிர்ச்சொருபஞ் சீரியதாமுடல்
பொறிமனம்பிராண னறிபுத்தியெனக்
கூறுமிவைக்கு வேறாயுள்ளதாய்த்
தனக்குத்தானே தயங்குந்தகைத்தாய்
அகலாவியற்கைச் சுகமாயிருப்பதாய்
ஒன்றியகால மென்றுமிருப்பதாய்
வளமாரணுவி னளவாயிருப்பதாய்ப்
பொறிகளினுணர்வா னறியவொண்ணாததாய்
அசித்தின்குலத்ததாய் நினைக்கவொண்ணாததாய்
அசித்தெனவென்று முசித்திடும்விகாரந்
தட்டாதொருபடிப் பட்டிருப்பதாய்த்
திடஞானக்கிருப் பிடமாயிருப்பதாய்த்
துன்றவயவக்குழு வின்றியிருப்பதாய்ச்
சீரியநியாமியந் தாரியஞ்சேடமாம்
என்னுமிவற்றையு மன்னியிருப்பதாய்
இருக்குமிலக்கண வருக்கமுடைத்தென
உத்தமராகிய தத்துவதரிசிகள்
ஒருமிடறாகத் தெருளுறத்தெரிக்கினுங்
காலதத்துவமெலாங் கணக்கிலாப்பிறவிகள்
ஞாலமீதெடுத்து நவிற்றுறுமிற்றைநாள்
காறுமவ்விலக்கணங் களிலொன்றேனும்
வீறுமவித்தையின் விறலிலகப்பட்
டுணர்ந்திலன்றத்துவ வுணர்ச்சியோரிணக்கமும்
புணர்ந்திலனெடுத்தவப் புலைப்பிறவிகடொறுஞ்
சிதடனாய்மக்கட் பதடியாயினன்
இத்தகையேழையேற் கிரங்கியிருக்குணர்
வித்தகர்வியக்குறும் விழுப்பொருளுணர்ந்தவ
சடத்தைச்சினந்தவ தாககுமைம்பொறிமேய்
விடத்தைப்போன்றதீ விடயமொறுத்தவ
இணக்கித்தம்வழி யெவரையுமீர்த்திடுங்
குணத்தைக்கடந்தவ குணநிதியானவ
முருகூர்மலர்ப்பொழிற் குருகூர்க்கொற்றவ
மோனிகடுதிபத ஞானதேசிக
வணக்குடைத்தவநெறி யிணக்கர்தந்தலைவ
என்னிலையானுறு நன்னிலையுணர்த்தித்
துறவுச்சுடர்கொளீஇப் பிறவிப்பிணியொரீஇ
அந்தாமத்தெனை யமைத்தல்
எந்தாய்நின்னருட் கேற்றதோர்செயலே.       (16)

வெண்பா.
ஓர்ந்தோர்ந்துளத்துள்ளியோத்தின்பொருளையெலாந்
தேர்ந்தோர்தொழுங்குருகைத்தேசிகன்றாள் - சார்ந்தோரே
உய்யும்விரகரென்பருள்ளமேயுண்மையினீ
செய்யுங்கடமையஃதேதேர்.       (17)

கட்டளைக் கலித்துறை.
தேர்ந்தோரைக்காக்கத்திரைக்கடற்றேயத்திற்றென்குருகை
சேர்ந்தோன்றமிழ்மறைசெய்தோன்சினந்துதெறுஞ்சடத்தைத்
தீர்ந்தோன்றிருவடிக்கத்தாணிச்சேவகஞ்செய்துவக்க
நேர்ந்தோர்பெருமைநிகழ்த்தவல்லாரெவர்நீணிலத்தே.       (18)

அறுசீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்.
நிலத்தோங்கிவருங்கருமகைங்கரியமெனுமிவற்றி
      னிகழ்த்துங்கன்மங்
குலத்தோங்கும்வருணக்குங்கைங்கரியந்தொண்டிற்குங்
      குறித்ததென்று
தலத்தோங்குந்தென்குருகைச்சடகோபன்றிருவுள்ளந்
      தன்னையோர்ந்த
நலத்தோங்குநல்லோர்கணவில்வரிதைநாடோறு
      நாடென்னெஞ்சே.       (19)

நிலைமண்டிலவாசிரியப்பா.
நாடுங்காலைப் பீடுசானூல்கள்
கருமமுஞானமு மருமையாம்பத்தியும்
புரையிலதாக வுரைபிரபத்தியும்
ஆசரிப்பித்திடு மாசாரியாபி
மானமுமாமிவை ஞானநல்வீடடை
நெறிகளென்றெவரு மறிதரவுரைக்கும்
முதலின்மொழிந்தவம் மூன்றுநெறிகளும்
முதல்வருணத்தோர் முயன்றிடத்தக்கவாம்
நான்காநெறியையா னடத்தவல்லேனலேன்
ஐந்தாநெறிக்கே யமைந்தவனானவென்
சிந்தாகுலங்கெடத் திருவருளுட்கொளீஇ
எந்தாயெம்மோ யென்குலதெய்வமே
இயங்குதிணையியங் காத்திணையாகிய
உயிர்க்குயிராகி யுறைபவனுந்தனக்
குயிர்ப்பொருளெனமதித் துரைத்திடத்தக்கோய்
நான்மறைச்சாரமா நயந்துநீயருளிய
நான்குகலைகளு நான்குநகில்களா
மோக்கவிருப்பெனுந் தூக்கனல்வாதைகொண்
மன்னுமாறரிசன வாய்மைதேரும்பிர
பன்னராகியபரி பக்குவக்கன்றுகள்
உண்டுதேக்கிடவருள் கொண்டநவரதமும்
ஊனமிலைம்பொருண் ஞானமாம்பால்பொழி
அழிவில்பேரின்பமே யொழிவிலாதொளிர்பரந்
தாமநின்றிழிதருங் காமதேநுவே
ஆரியரபிமா னத்திலமைந்துவாழ்
சீரியர்தமக்குநற் றெளிவிசும்பதனில்வாழ்
திருமகணாயகன் றிருவடிக்கடிமைசெய்
அன்பெனப்பெயரிய வழிவிலாக்கந்தர
முருகூர்மலர்ப்பொழிற் குருகூரெனும்பெயர்க்
கற்பத்துறைதரு கற்பகத்தருவே
அடியனேன்றன்னைநின் னபிமானத்தினில்
ஒடிவிலாதென்று மொதுங்கிவாழ்தரச்செய்
தளித்தியேல்யாவருங் களித்திடுநின்புகழ்
முன்னர்நிலையினு நன்னர்நனிதழைத்
தண்டங்களினுமவ் வண்டத்தொகைகளை
எண்ணிற்படைத்தவ னண்ணிக்களித்துவாழ்
உரந்தாங்கியவொளிப் பரந்தாமத்தினில்
இடமுடைத்தலத்திலோ ரிடம்விடாதெங்கணும்
மன்றுபட்டென்றினு நன்றொளிர்தருமே.       (20)

வெண்பா.
ஒளியுருவாயுதக்கிலொண்டிருக்கோளூரற்
களியுடன்முன்சேவைதந்தவண்ணால் - ஒளிர்குருகை
மன்னேமரகதமேமாமணியேமாற்றுயர்ந்த
பொன்னேயெனதுபவம்போக்கு.       (21)

கட்டளைக்கலித்துறை.
போக்குதிபொய்க்கலைபுந்திபுகுவித்தபொய்யுணர்வைத்
தேக்குதிமெய்யுணர்வைத்திருவாய்மொழிச்செம்பொருளால்
நீக்குதிநெஞ்சினிறைந்தவவித்தையைநின்னடிக்காள்
ஆக்குதியென்னைத்திருக்குருகூருறையாண்டகையே.       (22)

எண்சீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்.
ஆண்டகைகளாமரசர்பொறியும்வேண்டே
      னணிமாதிசித்திகளுமவாவகில்லேன்
ஏண்டகையிந்திரதிருவுமிவறகில்லே
      னெண்கணன்றன்னிரும்பதமுமெண்ணகில்லேன்
மாண்டகையதிருக்குருகூர்வந்தமாற
      மகிழ்மாலைச்சடகோபமறையோர்வாழ்த்திப்
பேண்டகையநின்றிருத்தாட்டொண்டியற்றும்
      பெருஞ்செல்வப்பேற்றினையேபேணினேனே.       (23)

நேரிசையாசிரியப்பா.
ஏனத்துருவெடுத் திருநிலமிடந்ததன்
தானத்துய்த்தவெந் தண்ணளித்தனிமுதல்
எண்ணிலண்டங்களை யியற்றியளித்திடுங்
கண்ணன்கருமணி வண்ணன்செம்மணி
நிறத்தினன்றோற்றியிந் நிலமிசையறங்களைத்
திறப்படச்செய்துளத் தெள்ளியர்ப்புரப்போன்
பாமகணாயகற் படைத்தோன்பரிமளப்
பூமகணாயகன் பொறைப்புருடோத்தமன்
திடப்படநிற்பன நடப்பனவாகிய
ஆருயிர்க்கெலாமோர் பேருயிராயவன்
மறைமுடிவுரைத்திடு மிறைநிலைக்குரியோன்
திருவருடன்னாற் றிருக்குருகூர்தனிற்
றிருவவதரித்தருள் செந்தமிழ்க்கரசன்
வேரியார்மகிழ்த்தொடைக் காரிமாறப்பிரான்
நிலவுறுநிலமிசைக் குலவிவாழ்பவர்மனம்
வாய்மலமறத்திரு வாய்மலர்ந்தருளிய
வெண்பாநண்பா வியக்குமாசிரிய
வொண்பாவுவப்புட னுரைக்குமாசிரிய
விருத்தமப்பெயரினால் விரித்திடத்தகுந்துறை
வஞ்சிப்பாவஞ் சித்துறைவிருத்தங்
கலிப்பாகலிவிருத் தத்துடன்கலித்துறை
என்னும்பெயரினா லிசைப்பனவாகியுந்
துன்னும்பவநோய் துடைப்பவராகிய
மருத்துவரவர்தரு மாண்புறையென்னவும்
வயங்கிநாடொறு மியங்கிப்புறத்துறை
நள்ளிருடன்னிலு நலிந்திடுந்தகைத்தாம்
உள்ளிருளொழித்தலி னுதயர்களென்னவுங்
கண்மையினனிபரிந் துண்மையுணர்த்தலின்
மாத்தகைக்குரியரா மாத்தர்களென்னவும்
பெரியர்களுரைத்திடற் குரியனவாகியுந்
திகழ்ந்திடுந்தகையவா யிகழ்ந்திடும்பிறவிப்
பையுளைப்பாற்றிடுஞ் செய்யுளாமாக்கள்
ஐம்பொருளாகிய செம்பொருட்டீம்பால்
சொல்லச்சுரந்திடு நல்லியல்புளவா
அங்கண்மாஞாலத் தெங்கணுநிலையுறீஇ
இருக்கெனப்பெயரிய திருக்கிளர்செழுமறைச்
சாரமாய்த்தயங்குறுந் தகைத்திருவிருத்தமும்
போதமாரெசுர் வேதசாரமா
மருவாவொளிர்தருந் திருவாசிரியமும்
பதரதர்தொலைத்துநல் லதரினைக்காட்டுறும்
அதர்வணவேதத் தமைந்திடுஞ்சாரமாம்
உருவந்தனைக்கொளுந் திருவந்தாதியுங்
கீதமார்சாம வேதசாரமாப்
பெருவாழ்வளித்திடுந் திருவாய்மொழியுமாம்
மேனிலைக்குரியதா மானிலைத்தலந்தொறும்
வணக்குடைத்தவநெறி யிணக்குடையவராங்
கன்றுகணேடியே நின்றிருக்கின்றன
அத்தவநெறிக்கே யமைந்தவராகிய
சுத்தமாந்திருவுளத் தொண்டர்காள்பண்டைநாள்
பாண்டியனவைக்களத் தீண்டியபுலவர்முன்
மேன்மையைக்குறித்திடு நோன்மைசாலாரண
வாக்கியபரம்பரைத் தூக்கெடுத்துரைத்துத்
திருமால்பரத்துவஞ் செய்தவராகிய
பெரியாழ்வாரும் பிறங்கிடுமவர்திரு
நந்தனையாகிநன் னந்தனவனந்தனிற்
றிருத்துளவடிதனி லருத்தியினுலகினர்
வாதை தீர்தரவருங் கோதைநாயகியுமுன்
பேய்ச்சிபாலுண்டநம் பெருமான்பெட்புறூஉம்
ஆய்ச்சியர்பிறப்பினை யவாவியமுறைமையின்
நீவிர்கள்யாவரு மேவியவினைக்குறுஞ்
சாதனமாகிய கோதனவுருவராம்
பாவனமாகிய பாவனையுளங்கொளீஇ
வம்மின்வந்தெனக்குநும் வடிவச்சேவையைத்
தம்மின்றந்தபின் றடையொன்றின்றியே
வேதமெய்யுணர்ந்தோர் விரிஞ்சனாதியர்
கோதறுஞானக் கொழுந்தின்முன்செல்கினும்
ஏதமின்றிலங்குறு மெக்கவிகளினோர்
பாதமுன்செல்லுமே பரஞ்சுடரெனவோர்
கடவுட்புலவன் கழறுதற்குரியவாங்
கடவுட்டன்மைசால் கவிக்குழாமாகிய
குடஞ்சுட்டுகளுறை யிடஞ்சுட்டிச்சென்
றோதுதலாகிய ஆட்டுங்கடமையைச்
செய்துமவைபொழி தீம்பாலமுதுண்
டுய்துமுடனின் றுடற்றுறும்வினைகளை
ஒழிதுமொழிவிலா வுற்பவவாரியைக்
கடத்துமெடுத்தவிக் கடவினைகழிந்தபின்
நடத்துமர்ச்சிர நடவையைநணிச்செலீஇ
நலமந்தமில்லதோர் நாட்டில்
உலவுமும்பர்களோ டுடன்குழீஇவாழ்துமே.       (24 )

வெண்பா.
வாழ்வோங்குந்தென்குருகைமாறன்றாளுச்சியாற்
றாழ்வோர்களாந்தொண்டர்தாட்டுணையை - வீழ்வோ
நடப்போநெஞ்சேயவர்சொன்ஞானநெறியேநாங்
கடப்போம்பிறவிக்கடல்.       (25)

கட்டளைக்கலித் துறை.
பிறவிப்பிணிதனைப்பேர்த்திடுஞானப்பிடகபெருந்
துறவித்தலைவசுடராழிமாலைத்துதிகவிஞ
அறவிப்பிரர்தொழுமாறநின்றாளையகத்திலுன்னா
மறவிப்பகையினைமாய்த்தெனைக்காக்கமகிழ்ந்தருளே.       (26)

எண்சீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்.
அருள்கொளுநல்லகத்தராமடியார்தங்கட்
      காரமுதாய்த்தேனாயண்ணிக்கும்பாலாய்
மருள்கொண்மனத்தோர்மாறாப்பிறவிநோயை
      மறுவலும்வாராதொழிக்குமாமருந்தாய்த்
தெருள்கொளுஞ்செம்பொருட்கலையின்றிரள்கடம்மிற்
      சீரியதாய்ப்பயில்பவர்க்குச்சிறந்தினிக்கும்
பொருள்கொளுநின்றமிழ்மறையாம்போதவைப்பைப்
      புந்திவைத்துமாறநிதம்போற்றுவேனே.       (27 )

நிலைமண்டிலவாசிரியப்பா.
போற்றுங்கலியெனும் புருடன்பெரும்பகை
ஆற்றல்சான்றென்று மலைக்குமாயைப்பகை
கவித்துக்கெடுத்திடு மவித்தைக்கொடும்பகை
வினைப்பகைவினையால் விளையுமுடற்பகை
காமப்பகைதெறும் வீமப்பொறிப்பகை
பசிப்பகைநோய்ப்பகை விசிக்குமவாப்பகை
இவைமுதலெண்ணிலாக் குவைகெழூஉம்பகைகளின்
வருக்கந்தன்னி னெருக்குண்டுழறரும்
ஏழையேன்மூவகைப் பீழையேன்கோழையேன்
நாராயணநித நாடுறுந்தமிழ்மறைப்
பாராயணவுயிர்ப் பரிவுறும்பராங்குச
குருகூர்வந்தநற் குணச்சடகோபநன்
முருகூர்மகிழ்த்தொடை மொய்த்திடுமொய்ம்ப
மாறநாவீற மராளவூர்திய
அச்சுதனறிஞர்கண் மெச்சிடுமரிந்தமன்
திருத்தகுமருப்பொழி திருத்துழாய்மோலியன்
சங்குசக்கரந் தங்குகைச்சநார்த்தனன்
பதுமநாபன்செம் பதுமவிலோசனன்
மாயவன்றூயவன் மால்புருடோத்தமன்
முகுந்தனிருஞ்சிறைச் சகுந்தக்கோனையூர்
இந்திராவரசனெம் மிந்திரைநாயகன்
சீதரனருட்டா மோதரன்செளரி
வாசுதேவன்வை குந்தன்கேசவன்
அனந்தசயந னநந்தமாம்பெயரினன்
உந்திபூத்தெண்கணற் றந்தநாராயணன்
கமலமாமலர்புரை விமலமாம்பதங்களை
அருத்தியினேத்திடுந் திருத்தகுதெய்வப்
புலவநற்றாமரை புரையுநின்கழல்களிற்
புலமையேயில்லாப் பூரியன்புனைந்திடுஞ்
சொற்றொடையதனிற் சொற்பொருளாதிய
குற்றவகைகள் குழூஉக்கொண்டிருக்கினும்
அன்னவையாவையு மளித்திடுந்தந்தையர்
அன்னையர்தத்த மருங்குழவிகள்சொலும்
மழலைச்சொற்களைக் குழலிசைதன்னினும்
ஏழிசைபாடுறும் யாழிசைதன்னினுங்
கனியினுந்தேனினுங் கண்டினும்பாலினும்
இனிதெனச்செவியுற் றிதயங்களித்தல்போல்
அத்தனுமன்னையும் வித்தகக்குரவனும்
வாகுறுதேவுமெற் காகுநீநின்றன்
கள்ளமிலாவருள் வெள்ளமாருள்ளத்
தருத்தியினங்கீ கரித்தத்தொடைதனை
அணிதியெனநின் னம்புயக்கழலிணை
பணிகுவல்பரசுவல் பன்முறையெண்ணுதல்
செய்குவனீயது செய்யிலுய்குவலே.       (28 )

வெண்பா.
உய்யவூறொன்றுமிலையுள்ளமேநம்புதியாற்
பையவரவுபெய்தபைங்குடத்தும் - வெய்ய
அழலினுங்கைவைப்பலருட்காரிமாறன்
கழலின்மறைபுகுந்தக்கால்.       (29)

கட்டளைக்கலித்துறை.
காலினுருளிற்கறங்கும்பிறவிக்கலாம்விளைக்கும்
மாலினுழலுமனனேயஃதறவாருணத்தில்
ஆலினிலையமர்வோன்கவிமாறனருளியதீம்
பாலினினியபசுந்தமிழ்மாமறைபாடுதுமே.       (30)

எழுசீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்.
பாட்டிரதந்தேர்தருந்திருக்கோளூர்ப்
      பண்ணவன்கைக்கொள்பட்டோலை
தீட்டிடநூனான்குரைத்திடத்திருவாய்
      திறந்தருள்செந்தமிழ்க்கரசே
கூட்டுயிரெம்மான்றனைநுகர்பொருளாக்.
      கொள்ளலுமல்லதெம்பெருமான்
சேட்டுடனுயிரையன்னதாக்கொளலுந்
      தெரித்தியாறிருவருள்சிறந்தே.       (31)

நிலைமண்டிலவாசிரியப்பா.
திருவருள்சுரந்திடுந் திருமகணாயகன்
அத்தனுமன்னையு மாயாடியவர்க்கருள்
வைத்தமாநிதிப்பிரான் வைகலும்வைகுறூஉம்
ஒப்பிலாவொளிகெழூஉந் திப்பியதேயமாய்
மாயையில்வல்லனோர் தீயவன்பொருட்டுமுன்
பந்துரச்சுரிமுகப் பணிலமானுறூஉங்
கந்தரத்திதிபெறுங் கடவுளர்வேண்டலாற்
கரையிலாக்கடலையங் கைக்கொளுமோர்துளி
வரையதாக்கொண்டுதன் வாய்மடுத்தருளிய
கும்பசம்பவனாங் குறுமுனிவரனுறை
வம்பவிழ்சோலைசூழ் மலயநின்றிழிதரும்
பொருநையாறெங்கணும் போந்தொழுகுதலாற்
பொருவில்பல்வளங்களும் பொங்கிடுந்தகைத்தாய்ப்
பூவலயத்திற் புகழ்கெழீஇயறங்கரை
நாவினராகிய நான்மறையாளர்கள்
இருக்கோதுஞ்சீர்த் திருக்கோளூர்க்கண்
ஆயிரங்கதிர்கொடு மாயிருநிலமிசை
விரிதரும்புறவிருள் வீட்டுவோனாகிய
அரியுதயக்குமுன் னருணோதயமென
ஆயிரஞ்சாகைகொ ளருமறைப்பொருளுறும்
ஆயிரஞ்செய்யுளா மங்கதிர்களைக்கொடு
தெண்டிரையெறிதருங் குண்டுநீர்க்குரவை
சூழுங்குவலயம் வாழுமன்பதைகடம்
உள்ளிருளொழிப்பான் கள்ளவிழ்விரைகமழ்
வகுளபாற்கரனென மகிமிசைவந்தநின்
உதயந்தனக்குமுன் னொளிர்ந்திடுமருண
உதயமென்ன வுதித்தவனென்னவுஞ்
சேலாயுலகினைச் செவ்விதிற்காத்தமால்
நூலோர்மகிழ்தரு நாலாயிரங்களாம்
அருமைசான்மறையெனும் பெருமைசானூல்கள்
தழங்குநீருலகினில் வழங்குதலின்றிக்
கிலமாய்க்கழிந்து கிடக்கவவைதமை
எப்போதையும்போ லிலங்குறச்செய்திட
முப்போதுஞ்சீர் முனிவரரேத்திடு
நாராயணனுறை நகரெனும்வீர
நாராயணபுர நண்ணிநலனுறூஉம்
நாதமுனிகளாம் போதமாநிதிக்கு
மூலகாரணமாய் ஞாலமீதிருந்த
கண்ணிநுண்சிறுத் தாம்பெனுங்கலைதனை
அண்ணித்திடமுன் னாக்கியோனென்னவு
நந்தாநலந்தரு மைந்தாநெறிதனின்
முட்டொன்றில்லா நிட்டையனென்னவும்
அறிஞர்களாரண நெறிஞர்களுரைத்திடும்
மதுரகவிப்பெயர்ச் சதுரனைச்சாற்றுமெம்
பெருந்தகைதனையவன் றிருந்துறுமன்பையே
அடியுறையாக்கொண் டடிநிலையாக்கிய
புண்ணியகுருகா புரியுறைபுங்கவ
அண்ணியவாத்த வருட்சடகோபவென்
செடியார்வினைகளா மொடியாமலைகளை
நொடியார்பொழுதினி னுவலுநின்னருளெனும்
வச்சிரவேதியால் வகிர்ந்தொழித்தடியனேன்
உச்சிமீதுநின் னொளிர்ந்திடுந்திருக்கழல்
உபயமும்வைத்தெனை யோம்புதியெனவந்
தபயம்புகுந்தன னக்கழல்களுக்கே.       (32)

வெண்பா.
கழலுந்தகைத்தாமிக்காயநிற்குங்காறும்
உழலுமென்னுள்ளம்முழலாதுன்றா - டொழுதுநிற்க
நன்குருகுசிந்தையராநல்லோர்கணாடுஞ்சீர்த்
தென்குருகைமாறவருள்செய்.       (33 )

கட்டளைக்கலித்துறை.
அருளாக்கமுநல்லறவாக்கமுமரிலல்லதுதேர்
தெருளாக்கமுஞ்சிறிதேனுங்கொள்ளாதுதெறுமவித்தை
இருளாக்கங்கொண்டவிழிதகையாகியவென்னையுமோர்
பொருளாக்கியாட்கொண்டவன்குருகாபுரிப்புண்ணியனே.       (34)

பன்னிருசீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்.
புண்ணியப்புலவர்புகழ் மாறநிற்பொருவுவோர் பூதலந்த
      னிலுமில்லை - பொற்பரந்தாமத்து மில்லைநின்னிலை
      நூல் புகன்றதோர்சாதனத்தை
நண்ணிப்படைத்ததல் லாமையாற்றென்குருகை நாதநீ
      தானுமறியாய் - நானிலத்துன்போ லிருப்பவரிலாமை
      யா னரருமறியார்கடன்சீர்
ஒண்மைக்குணங்கணின் னுழியன்றிவேறொருழி யொளிர்
      தரக்காணாமையால் - உந்திபூத்தவனுமறி யானாதலா
      லிந்த வுலகோர்களொளிவிசும்பிற்
பண்ணவர்கடம்மினும் வேறாய்விளங்கிடும் பான்மையோ
      னென்றுநின்னைப் - பழமறைப்பொருளையை யந்திரி
      பறக்கண்ட பருணிதர்பணிப்பர்மாதோ.       (35)

நிலைமண்டில வாசிரியப்பா.
பணித்தடங்காப்புகழ்ப் பராங்குசப்பண்ணவ
மணித்தடமாளிகை மன்னும்வண்வீர
நாராயணபுர நண்ணிவாழ்வோன்மறைப்
போதமுன்னீரெனு நாதமுனிகளாம்
அடிகளுக்கடிநா ளவனியோர்க்காப்பான்
கோலமாவருமெதிர் காலவாரிய
விக்கிரகந்தனைப் பொக்கறவருளிய
கருணையாரகத்தமுக் காலமுமுணர்ந்தவ
தெருணிதியானவ தேசிகர்தேசிக
முப்புடைக்காய்க்குலை யெப்புடைதம்மினுந்
தாக்குற்றுதிர்தர மேக்குற்றெழீஇப்பெரு
வாளைமீன்பாய்தரு நாளிகேௗத்தருத்
தோட்டமுங்கோட்டமுஞ் சுற்றுறும்பழனமும்
முட்புறக்கனித்தொகை விட்புறக்கோடரங்
கோடிறக்குதிபலாக் கோடரப்படப்பையும்
அகந்தொறுமூட்டிடு மகினறும்புகையும்
மகந்தொறும்வேதியர் மறைமுறைவழாது
தீம்பல்லவிசொரிந் தோம்பிடுஞ்செந்தீக்
குண்டந்தோறும் விண்டெழுந்தூமமுங்
கண்ணுடையாலையிற் கண்ணுடைத்திழிந்த
கன்னற்சாற்றினைக் கன்னலுங்குளமுமா
அடுதருஞ்சாலையி விடுபெருந்தீயிடை
எழுதந்தெழுதந் துழிதருபுகையும்
மங்குலெங்கணு மங்குலின்மொய்த்தலாற்
கண்டுதஞ்சிறகரை விண்டிடவிரித்துச்
சிகாவளமகவிடு முகாவளப்பொழில்களுந்
திக்குந்திகந்தமுஞ் செலீஇமணங்கமழ்தரும்
இக்குறுநறுமலர் மொய்க்குநந்தனமும்
மேற்பான்முதலிய நாற்பாற்பாங்கருஞ்
சூழ்தருங்குருகையில் வாழ்தருந்தலைவ
கணக்கறநிகழ்ந்திடுங் காலதத்துவமெலாம்
உணக்குறுபவப்பிணி யொழித்தெனைக்காத்திடல்
வேண்டும்வேண்டும் வேண்டுமென்றேத்தி
உலகினில்வாழ்தரு மலகிலாவுயிர்கட்
கொருதாயாகி யரிதாவளர்த்திடும்
பொங்குறுகொங்குறை பங்கயமாமலர்
வீட்டில்வாழெம்பெரு மாட்டிதனக்கும்
இயங்கியனிலையிய லெனுமிருவுருக்களில்
வயங்கெழுமாயையின் மயங்குபுதிரிதரும்
ஆருயிர்தமக்கெலா மோருயிராயவை
அறியாநன்மைக ளமைத்தோர்பிறப்பிற்
குறியாநோக்கிநன் னெறியரோடிணக்கிக்
குரவனருளையுங் கொளச்செய்தவற்றின்
கருமாறுடைக்குமெம் பெருமான்றனக்கும்
பூமிப்பிராட்டியின் பொற்கலைதன்னால்
நேமிப்பிரான்றிரு நெஞ்சகமகிழ்தரப்
பூத்தொடைபாத்தொடை புனைந்திடவந்த
மேதைநாயகியெனுங் கோதைநாயகிக்குங்
காளமாமுகிலெனக் கருணைபொழிகுண
வாளனாகியமண வாளமாமுனிக்கும்
மருட்படலத்தான் மறைந்திருப்பவர்தமைத்
தெருட்படத்திருத்தித் திருநாடுறச்செயத்
திருவநந்தாழ்வான் றிருவவதாரமா
வந்தவருட்கட லெந்தையெதிகடம்
பெருமானெனுமெம் பெருமானார்க்கும்
மங்கையர்கொங்குறு கொங்கையிளம்பிறை
நுதலாழ்மாந்தரை நோக்கவந்தருளிய
முதலாழ்வார்களா மூவர்கடமக்கும்
எனக்கம்மனைபிதா விறைவன்றெய்வமா
நினக்குநெஞ்சக நெகிழ்தரூஉம்வணமெலாஞ்
சொன்முறையெடுத்துப் பன்முறைபகர்ந்தனன்
கொடியேனாகிய வடியேனுள்ளக்
குறைகளையெடுத்துறக் கூறிமிக்கிரந்து
முறையிடத்தக்கவர் முறைமையினோக்குறின்
நுமக்குமேலாயவ ரமைக்குமெவ்வுலகினும்
இலரிலரிலரெனு மிதுசத்தியநீ
காக்கினுமலதுகா வாதுகைவிட்டு
நீக்கினுநின்பர நின்பரமென்றுநின்
சரணந்தன்னிற் சரணமடைந்தனன்
பொக்கறநன்கெணித் தக்கதுசெய்தியால்
அரணாகியவச் சரணாகதிப்பேர்
அறத்துறையறிந்த வறத்துருவோயே.       (36)

வெண்பா.
அறமுமறத்தாறடைந்தோரொழுக்கத்
திறமும்வளர்தென்குருகைச்செம்மால்- மறமே
பெருத்துதிக்குமாயைதனைப்பேர்த்துநன்ஞானம்
இருத்துதியென்னெஞ்சத்திடை.       (37)

கட்டளைக்கலித்துறை.
இடையாட்டங்கொங்கையிணையாட்டம்பொற்சிறையேந்தெகின
நடையாட்டங்காட்டிடுநாரியர்போகநரலைதனிற்
குடையாட்டநீக்கிக்குருகைமன்னாநின்குணக்கடலிற்
குடையாட்டமென்னுளங்கொள்ளத்திருவுளங்கொண்டருளே.       (38)

எழுசீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்.
அருளுருவென்கோவமுதுருவென்கோ
      வறுசுவையவியுருவென்கோ
தெருளுருவென்கோவாழைமாவருக்கைத்
      தீஞ்சுவைக்கனியுருவென்கோ
பொருளுறும்பானெய்தேனயிர்கண்டாம்
      பொருள்களினுருவென்கோவவித்தை
இருள்வலித்தலினொண்மதிக்கதிரென்கோ
      வெழிற்குருகூரிறைவனையே.       (39)

நிலைமண்டிலவாசிரியப்பா.
இறைமைநிலைதனக் கின்றியமையா
முறைமைசாலிலக்கண முற்றவுமுடையோன்
நறைநிறைநறவ நளினக்கிழத்தியும்
பொறைநிறைபுந்திப் பூதலக்கிழத்தியும்
நிறையிறைநீங்கா நீளைக்கிழத்தியும்
அறைவலமிடமுற வகட்டில்வீற்றிருப்போன்
மாவுறைவெண்டா மரைமலர்க்கிழத்தியை
நாவுழைவைத்திடு நான்முகக்கடவுளும்
பூவுறையாகிப் பொலிதருமைந்தருக்
காவுழைவைகுறுங் கடவுளர்கூட்டமுந்
தாவருந்தெய்வத் தாபதரீட்டமும்
மூவறும்பிரம முனிவரர்கோட்டமும்
பணிந்துவழங்குறூஉம் பாத்தொடைபூத்தொடை
அணிந்தழகலர்ந்திடு மம்புயக்கழலினோன்
ஆரணமுடிமிசை யமர்ந்தருணாரணன்
காரணமிலாததோர் கருணையினியாவையுங்
கண்கூடாகக் கண்டவமுயலின்
றண்கூடலரி தவழ்தருந்தண்டலை
நிறையுங்குருகூ ருறையும்பராங்குச
மூலமென்றடிநா ளோலமிட்டழைத்த
ஆனைக்கோனிட ரகற்றியவரிந்தமன்
சேனைக்கோனெனச் செப்புறுஞ்செம்மல்
சேடசயநனுண் சேடாசநன்மறைத்
தோத்திரவாணியன் வேத்திரபாணியன்
சூத்திரவதியிரு நேத்திரமணியனான்
வழுக்கிலாதநல் லொழுக்குடையுரவோர்
சடங்கெனுமோர்வினை தொடங்குறுமெல்வையில்
இடைநேர்வனவா மிடையூறிரிந்திட
மொழிமனமுடலால் வழிபடுமண்ணல்
தோற்றமாஞான சூரியவாரிய
ஆற்றல்சான்றநல் லருட்கடலானவ
தொக்கவென்னாளெலாந்தொடர் வினைத்தொடர்பால்
துக்கவெம்பரம்பரை துய்த்தனன்றுய்த்தனன்
எடுத்துக்கலையுரை யெல்லாப்பிறவியும்
எடுத்துச்சாலவு மெய்த்தனனெய்த்தனன்
வெய்யபிறவிகள் வேண்டேன்வேண்டேன்
ஐயபவப்பிணிக் காற்றேனாற்றேன்
முடிவில்பல்வகையாங் கொடியபிறவிகள்
எதிர்தருமோவென வெண்ணினென்னுள்ளந்
துண்ணென்றுட்கிச் சோகாக்கின்றது
விண்ணென்றதிர்ந்து விதிர்விதிர்க்கின்றது
சுளிவருபிறவியிற் சுழன்றுதிரியுமென்
எளிவருநிலைதனை யெண்ணியிரங்கிநின்
பெருகருள்விழியினா லரிலறநோக்கியென்
மூவகைவினைகளு மோவிடச்செய்தெனைச்
சுத்தனாக்கியென் சூழலிற்பெறவொணா
முத்தவிலக்கண முற்றுமுண்டாக்கிச்
சிந்தாகுலமிலா வந்தாமத்தினில்
நித்தியர்குழுவிடை வைத்திடநினைதியேற்
பகட்டுறுமாயை புகட்டுறுமவிஞ்சையான்
மருண்மதிமாற்றிநின் மரைபுரைகழலினெற்
கருண்மதியழிவில்பே ரன்பெனுந்திருவே.       (40)
----------
வழுதிநாட்டிற்குருகாபுரியில்வந்த
      வள்ளலெங்கள்பராங்குசமாமுனிவனுக்கோர்
வழுவினான்மணிமாலையென்னும்வாடா
      மாற்றமாமாலையொன்றுவனைந்தணிந்தான்
தழுவியசீரெதிராசதாசனென்னுந்
      தாசியநாமமுந்தாசர்தாசனுகி
எழுமையுமேமாப்புடையபள்ளிகொண்டா
      னெனுமியற்பேரும்படைத்தவியல்வல்லோனே.       (41)

நம்மாழ்வார் நான்மணிமாலை முற்றிற்று.
---------------

6. கோதைநாயகித்தாயார் மாலை

ஸ்ரீ
ஸ்ரீமதேராமாநுஜாய நம:
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.

காப்பு.

விதுவைநிகராநநத்தாள் வேயர்குலதீபப்
புதுவைநகர்க்கோதை புனைய - முதுதமிழ்ச்சொற்
பாமாலைபன்னப் பணித்தருள்வன்றண்வகுளப்
பூமாலைமாறன் புரிந்து.

நூல்.

நிலமங்கைதன்கலையானிலமுய்யநினைத்துவந்த
குலமங்கையர்க்கரசாகியகோதைகுரைகழலிற்
பலமங்கலக்கவிபாடிப்புனைபவர்பார்மிசைநற்
பலமங்கைபெற்றுமறுமையிற்சேர்வர்பராங்கதியே.       (1)

செல்லுங்கலியினிற்றொண்ணூற்றின்மேனளச்செய்யசமை
புல்லுங்கடகக்கணைநாளில்வில்லிபுத்தூரடிகள்
கல்லுந்திருத்துளவத்தடியாங்கலசக்கடலிற்
சொல்லுஞ்சுதாகரன்போற்றோன்றினாளைத்தொழுதிநெஞ்சே.       (2)

மட்டார்குழன்மடவார்மையல்வாஞ்சைமகோததியிற்
பட்டாழுநம்மைப்புரப்பான்றிருப்பாற்பரவைதனை
விட்டாளைவிண்டுசித்தன்விரையார்விருந்தாவனத்தை
நட்டாளைநம்புதிநெஞ்சேநமக்கோர்நலிவில்லையே.       (3)

தூண்டாமணிவிளக்கைத்துளங்காதசுடர்க்கொடியை
ஆண்டாளைப்புத்தூரவதரித்தாளையணிமணிப்பூண்
பூண்டாளைப்போற்றிற்புராணவினைப்பயன்போந்துநம்மைத்
தீண்டாமற்செய்தருள்வாடிண்ணமாமிதுதேர்திநெஞ்சே.       (4)

சாதித்தருமஞ்சதுமறைத்தன்மந்தழைக்குமநு
நீதித்தருமநிகரிலதாம்பிரபத்திநிட்டை
ஆதித்தருமநிலைக்கவடியரகவிருடீர்
ஆதித்தனில்வந்தவாண்டாள்சரணேயரணமக்கே.       (5)

பூதத்தலைவன்புவியோர்ப்புரக்கும்பொருளுரைக்கும்
வேதத்தலைவன்விரிஞ்சித்தலைவன்விண்ணோர்விரும்பும்
பாதத்தலைவன்பணியாலுயிர்க்குப்பரிந்துவந்த
போதத்தலைவியெனுங்கோதைபாதத்தைப்போற்றுநெஞ்சே.       (6)

ஆவிசெங்கஞ்சவணிவிளக்கேந்தவலர்ந்துநிற்குங்
காவிகணோக்கக்களிவண்டுபாடக்கலாபமஞ்ஞை
மேவிநடிக்கநம்விண்டுசித்தன்வனவேரில்வந்த
தேவியையேத்துதிநெஞ்சேநந்தீவினைதீர்ந்திடுமே.       (7)

அன்னையிற்பைந்துளவந்தேனளிக்கவருகுநிற்கும்
புன்னைமுதலபொழிமலர்த்தொட்டிலிற்பூங்குயில்கள்
தன்னைகளாமெனத்தாலாட்டக்கண்வளர்தாய்தனைநம்
முன்னைவினையறநெஞ்சேவழுத்தமுயலுதியே.       (8)

வெள்ளைச்சிறகர்விரித்தன்னநின்றுவெயின்மறைக்கக்
கிள்ளைக்குழாங்கண்மழலைக்கிளவிகிளத்திநிற்கக்
கொள்ளைப்பசுந்தென்றல்வீசவிருந்தநங்கோதையன்னைப்
பிள்ளைப்பருவப்பெருமைபிரமற்கும்பேசரிதே.       (9)

செந்தாமரைத்திருவோதிருப்பாற்கடற்றெள்ளமுதோ
நந்தாதொளிர்விளக்கோசெய்யஞானத்தினற்கொழுந்தோ
சிந்தாமணியோவெனவிண்டுசித்தன்றினமுமகிழ்
கொந்தார்குழற்கோதையைவாழ்த்திவாழென்றன்கோழைநெஞ்சே.       (10)

கற்றவர்கண்மணியோவெண்கமலக்கலைமகளோ
உற்றிடுமன்பர்க்குயிரோவுயிர்த்துணையோவுலகைப்
பெற்றுவளர்ப்பவளோவென்றுபட்டர்பிரான்புகழ்ந்த
பொற்றொடிக்கோதைதன்பூங்கழலென்றும்புகனமக்கே.       (11)

பூதாதியானபொருட்கும்புவனக்கும்பொங்குயிர்க்கும்
ஓதாதியானவொருபொருளோவுயிரைப்புரக்கும்
வேதாதிநூலுருவோவென்றுவிண்டுசித்தன்வியந்த
மாதாதிகழ்புகழ்க்கோதையைநெஞ்சேவழுத்துதியே.       (12)

பட்டர்பிரான்வடபத்திரப்பாயற்பரனருளாற்
சிட்டர்தொழுந்தன்றிருமாளிகைதனிற்சேர்த்துநிதம்
இட்டமுடனேவளர்க்கவளர்ந்தவளேயியற்கை
மட்டவிழ்கோதையன்னாய்நின்னையேத்தவரமருளே.       (13)

பாலோகரும்போபழமோசெந்தேனோபரம்பொருள்சேர்
நூலோவதன்பயனோவிவ்வுருவினைநோற்றதென்று
மாலோடும்பார்ப்பனமங்கையர்பேசிமகிழுநங்கள்
சேலோடியகட்டிருக்கோதைபாதநஞ்சேமவைப்பே.       (14)

தெள்ளமுதத்திரட்டோபெரியாழ்வார்தினஞ்செய்தவ
வெள்ளமுருக்கொண்டதோவென்றுவேதியர்மெல்லிழையார்
மெள்ளவெடுத்துக்கொண்டாடுநங்கோதைவிரைமலர்த்தாள்
உள்ளமதனில்வைப்பாருண்மையாகவுயர்தவரே       . (15)

மாசறுநீதிகருணைதிரண்டவடிவமென்றும்
ஆசறுஞானியரன்பர்களந்தணராவியென்றும்
வாசவனாதியர்வண்செல்வமென்றுமதிபடைத்தோர்
பேசுபெரும்புகழ்க்கோதையடியென்றும்பேணென்னெஞ்சே.       (16)

அண்டமனைத்தினுமுள்ளவழகையணைத்தெடுத்துப்
புண்டரிகத்தவனோருருவாக்கியிப்பூவிடுத்தான்
கண்டிர்நமர்காளெனக்காரிகையார்களித்துரைக்கும்
ஒண்டொடிக்கோதையையுன்னுவர்முத்திக்குரியவரே.       (17)

உலகிருணீக்குஞ்சுடர்விளக்கென்றுமுணர்வுதரும்
பலகலைமாதின்படிவமிதென்றும்பரம்பரன்றன்
இலகுயிரின்வடிவீதென்றுமன்பர்களெண்ணநின்ற
அலகில்புகழுடையாண்டாளையேத்துவரந்தணரே       . (18)

பின்னைகொல்பூமிப்பிராட்டிகொலெம்மான்பிரியையெனும்
அன்னைகொலோவென்றயிர்க்கும்படியிவ்வவனியில்வந்
தென்னையடிமைக்கிசைவித்தகோதையிறைவிதன்றாண்
முன்னைவினையறநெஞ்சேமுதமொடுமுன்னுதியே.       (19)

தாழ்வாருடலுயிரென்போர்நன்றாகத்தமையுணர்ந்தோர்
ஆழ்வார்கள்பட்டர்பிரானிலுமொண்மையறிவின்செல்வ
வாழ்வார்ந்தவண்மைத்திருக்கோதைநாயகிமாமலர்த்தாள்
வீழ்வார்கண்மாயைவிறலினைவென்றிடும்வித்தகரே       . (20 )

எந்தையுணர்த்தித்தனைக்காட்டக்கண்டவிதயத்தராந்
தந்தையர்போலன்றித்தானேசென்றன்னோன்றனையெழுப்பிச்
சிந்தைக்குறையைத்தெரிவித்தசெல்வியைச்சிந்தைவைப்போர்
நிந்தைப்பிறவிநெடுங்கடனீந்துவர்நிச்சயமே.       (21)

ஆடவராடவரைக்காமுறுதலினங்கனைமார்
ஆடவரைக்காமுறுதலியற்கையைந்தாண்டுதொட்டுப்
பாடவத்தோடெம்பரன்பண்பளக்கர்படிந்துருகி
நீடவசம்பெறுநின்மலைபாதநினைதிநெஞ்சே.       (22)

கோனானபட்டர்பிரான்மகளாய்வந்தகொள்கையினுந்
தானானதன்மையினானும்பெருகித்தழைத்துநிற்கும்
ஆனாதஞானமுமன்பும்வடிவிலமைந்தநங்கள்
தேனார்குழலியைநாடோறுஞ்சிந்தனைசெய்திநெஞ்சே.      (23)

மானுடர்வாழ்வைமறுத்துவடபெருங்கோயில்வளர்
கோனுடன்கூடக்குறித்தநங்கோதைகுரைகழலிற்
கானுடைமாமலரிட்டுவணங்குங்கருத்தினரே
வானுடையார்நிதம்வந்துவணங்கிடும்வண்மையரே.      (24)

கண்டுமொழியர்க்கலந்ததுகண்ணன்முன்கண்ணுமவர்க்
கொண்டவன்சென்றசுவடுநதியுங்குலவரையுங்
கண்டுதரிக்கக்கருதியகோதைகழலிணையிற்
றொண்டுசெய்வோரைத்துதிப்பார்கணித்தியசூரிகளே.       (25)

சாற்றுஞ்சனகன்றனயைநப்பின்னைதவர்விடையால்
ஆற்றும்படிக்கோரவதிபெற்றுய்ந்தனரங்ஙன்றன்னைத்
தேற்றும்விரகென்னெனத்தேடியசெல்விசேவடியைப்
போற்றும்புனிதரடிநிலையென்முடிப்பூடணமே.       (26)

குரவைபிணைத்தபின்கோவிந்தனீங்கிடக்கோவியர்கள்
அரவிலவனடித்தாங்குநடித்தார்ந்தமைவினவி
விரவியநுகரித்துத்தேறவெண்ணியவித்தகிதாள்
பரவுமவரெனையெம்மையுங்காக்கும்பரமர்களே .       (27)

இடமுடைப்புத்தூரிடைப்பாடிபெண்களிடைச்சியர்கள்
வடபெருங்கோயில்வளநந்தன்வீடதில்வாழுமவன்
குடமுடைக்கோவிந்தனென்றெண்ணுங்கோதையைக்கூர்ந்துநெஞ்சிற்
றிடமுடன்வைப்பவர்தேவர்கள்யாரினுஞ்சீரியரே.      (28)

கூறியவண்ணந்திருவுள்ளம்பாடிகுடிபுகுந்து
தேறியபாவனையாலநுகாரஞ்சிறந்துமுற்றி
நாறியவாய்ச்சிநடைநொடியாதியநன்குறப்பெற்
றாறியகோதையடியேசரணமடைந்தனனே.       (29)

மார்கழித்திங்களின்மாயவன்றன்னைமணந்தொழுகும்
நார்கழியாவதிகாரிநெறிபலனற்சொருபச்
சீர்கழியாதுசுருக்கினிற்செப்பியசிற்பரைதன்
பேர்கழியாவன்பிற்பேசுதனாவிற்பெறும்பயனே .      (30)

வையத்துவாழ்வினின்மேலதிகாரிகள்வாய்த்தவண்ணஞ்
செய்யத்தகுந்ததகாதவிவையென்றுசெப்பியதைக்
கையத்தமென்னக்கழறியகோதைகழலிணையை
உய்யத்துதிப்போரடியனையாட்கொளுமுத்தமரே.       (31)

ஓங்கியுலகினிலவ்வதிகாரிகளூக்கமுற்றுத்
தீங்கின்றிநோன்பினைநோற்கவநுமதிசெய்தவர்க்குப்
பாங்கில்வரும்பயன்பன்னியதைச்சொலும்பண்ணவிதன்
பூங்கழல்பூசிப்பவரெனைநாளும்புரப்பவரே .      (32)

ஆழியிலாய்ச்சியர்பான்மழைத்தேவனடைந்தடியேன்
வாழிசெயத்தக்கசொன்மினெனவிவ்விவ்வண்ணஞ்செய்தி
பாழிமொய்ம்போயென்றவர்கள்பணித்தபரிசைச்சொன்ன
வீழியிதழிவிரைமலர்ப்பாதம்விரும்புநெஞ்சே.       (33)

மாயனிற்கோவியொருத்திமறுத்திடமற்றொருத்தி
மாயனன்னாமசங்கீர்த்தனஞ்செய்யமதிக்கினங்கள்
தீய பவந்தீத்துகிலாகுமென்றதைச்செப்பியநம்
வேயர்குலக்கொழுந்தின்பெயர்சொல்லவினையறுமே.      (34)

புள்ளுமுதலெல்வரைமுன்னர்ப்போந்தபொதுவியர்கள்
எள்ளலில்கண்ணனைக்கூடிக்களிக்கமற்றேனையரை
நள்ளியெழுப்பியவாற்றையெமக்குநயந்துரைத்த
தெள்ளியகோதைதன்சீரேயெமக்குச்செவியுணவே       (35)

நாயகனென்பதிற்கோவியர்நந்தனளிர்மனையும்
வாயிலுங்காக்குநர்க்கூய்நீவிர்வந்துமணிக்கதவ
நேயமொடுதிறவீரென்றிரந்ததைநேர்ந்துரைத்த
தூயவளைத்தொழுவார்க்குப்பிறவித்துயரிலையே.       (36)

அம்பரத்தேநந்தகோபாலனையுமசோதையையும்
எம்பெருமானையுமூத்தபிரானையுமிப்பர்பெண்கள்
அம்பரெழுப்பியவாற்றையறைந்தவருட்கடலாம்
எம்பெருமாட்டிசரணேசரணென்றுமென்றனக்கே.      (37)

உந்தினிற்கோவியர்நப்பின்னைதன்னையுகந்தெழுப்பிக்
கந்தக்குழலிநின்கைவளையேங்கக்கடைதிறவாய்
வந்தெனக்கூறியவாற்றைநமக்குவகுத்துரைத்த
பைந்தொடிக்கோதைபதம்பணிவார்வினைப்பற்றறுமே.      (38)

குத்துவிற்கண்ணநின்வாய்திறவாயென்றுங்கோலப்பின்னாய்
ஒத்துநின்னாதற்றுயிலெழவொட்டாயொருவகில்லாய்
தத்துவமன்றுதகவென்றுகோவியர்சாற்றியதை
நத்துநமக்குரைகோதைபொற்றாணங்கணற்றுணையே.       (39)

முப்பத்துமூவரின்முல்லையர்பெண்கண்முகுந்தனையும்
நப்பின்னையையுமெழுப்பிநங்காய்நின்றனாதனையும்
வெப்பியவெம்மையுநீராட்டுதியென்றுவேண்டியதைச்
செப்பியகோதைதிருவடியேநிதஞ்சிந்திநெஞ்சே      . (40)

ஏற்றகலத்திலிடைச்சியர்கண்ணனிருங்குணத்திற்
றோற்றவர்தோற்றினசொல்லியவனைத்துயிலுணர்த்தும்
மாற்றநமக்குமகிழ்ந்துரைகோதைமலரடியைத்
தேற்றமுடன்சிந்தித்தேத்துநெஞ்சேவினைதீர்ந்திடுமே.      (41)

அங்கணிற்கண்ணனையாய்ச்சியரண்மியமலநின்றன்
பங்கயக்கண்ணிணைகொண்டுபரிவொடுபார்த்தியெனின்
எங்கடஞ்சாபமிழியுமெனலையிசைந்துரைத்த
திங்கள்வதனத்திருக்கோதைதாணஞ்சிரக்கணியே.       (42)

மாரியிலாய்ச்சியர்மாயநின்பள்ளிமனைவிடுத்துச்
சீரியசிங்காதனத்திருந்தெம்முடைச்செய்திகளை
ஆரியவாராய்ந்தருளென்றதைநமக்காய்ந்துரைத்த
காரியல்கோதைகழலிணையென்மனக்கண்ணனவே.      (43)

அன்றிலடைந்தகருமம்பொச்சாந்தந்தவாய்ச்சியர்கள்
நன்றுநங்கண்ணனடைச்செவ்விக்காப்புநவிற்றியதை
ஒன்றவுரைத்ததிருக்கோதைநாயகியொண்மலர்த்தாண்
மன்றநெஞ்சேநம்பவப்பிணிமாற்றிடுமாமருந்தே .       (44)

ஒருத்தியிற்கண்ணனுரைத்திர்நும்முள்ளத்துவந்தவென்ன
அருத்தியினாய்ச்சியர்சொற்றவையாவையுமன்புடனே
திருத்தமுறச்சொல்லியகோதைநாயகிசேவடிநம்
பருத்தவஞ்ஞானவிருள்பாற்றுஞானப்பகலவனே.      (45)

மாலேமணியிற்றந்நோன்புக்குவேண்டுவனபொருளைச்
சேலேய்கண்ணாயச்சிறுமியர்தேவகிதன்சிறுவன்
பாலேயிரந்ததைப்பன்னியகோதைச்செம்பங்கயநேர்
வேலேய்விழியருணெஞ்சேநம்பேற்றைவிளைவிக்குமே.      (46)

கூடாரைவெல்லினிற்கூறியகோவியர்கோவிந்தன்பால்
பீடார்ந்திடப்பெறத்தக்கநற்பெட்புடைப்பேறுகளை
நாடாவிரந்ததைநல்கியகோதைநயப்புகழைப்
பாடாதநாவினர்பல்பிறப்பும்பவம்பண்ணவரே .      (47)

கறவையிற்கோவியர்கண்ணனைக்கண்டுகழற்றவொண்ணா
உறவினைக்கூறித்தம்முத்தேசியத்தையுரைத்ததைநம்
பிறவியைப்பேர்த்திடப்பேசியகோதைப்பிராட்டிநற்சீர்
மறவியையின்றிமனத்துவைப்பார்மிக்கமாட்சியரே.       (48)

சிற்றமதிலாய்ச்சிறுமியர்கண்ணனைச்சேவித்துத்தாம்
பெற்றிடும்பேறுஞ்சுவையுமப்பேறுபெறும்பரிசும்
மற்றையகாமங்கண்மாற்றலும்பேசிமகிழ்ந்ததனைச்
சொற்றிடுங்கோதைதுணையடியென்றுந்துணைநமக்கே.      (49)

வங்கத்தினிற்றிருப்பாவைமுழுதும்வழாதுகற்றோர்
செங்கட்டிருவதனத்திருமாலருள்சேர்ந்தெவணுந்
துங்கச்சுகந்துன்னுவரென்றகோதைசுடர்க்கமலப்
புங்கக்கழனம்பவக்கடனீந்தும்புணைநெஞ்சமே.      (50)

தையொருதிங்கடலையாக்கருப்புவிற்றான்கடையாச்
செய்யொருபத்திற்றிருமாலுடன்றனைச்சேர்க்கும்வண்ணங்
கையொருவாதகணைமலர்க்காமனைக்கைதொழுத
மையொருவாக்கண்மடமல்லிநாடியைவாழ்த்தென்னெஞ்சே.       (51)

சிற்றிடையாயச்சிறுமியர்கண்ணவெஞ்சிற்றிலுன
சிற்றடியாற்சிதையேலென்றிரந்ததைத்தெள்ளியர்கள்
கற்றிடநாமமென்றோதியபத்திற்கனிந்துரைத்த
பொற்றொடிக்கோதைபுகழ்நெஞ்சமேசெவிப்போனகமே.       (52)

அடுத்து றுபத்திலறலாடுமாய்ச்சியராடைகளை
எடுத்துக்குருந்திடையேறிநங்கண்ணனிருக்கவவர்
கொடுத்தியெங்கூறையெனக்கூறியதைமுற்கோழியென்று
தொடுத்துரைகோதையைநெஞ்சேநினைநந்துயரறவே.      (53)

கோவியர்கோவிந்தனைக்கூடக்கூடவிழைத்ததனைத்
தேவியலுந்தெள்ளியார்பலர்கைதொழுந்தேவனெனும்
பாவினம்பத்திற்பகர்ந்தநங்கோதைபனிமலர்த்தாள்
நாவியலாற்றுதிப்பார்கண்ணுவார்முத்திநன்னகரே .       (54)

மன்னுபெரும்புகழ்ப்பத்திற்குருக்கத்திவண்செருந்தி
புன்னைப்பொதும்பினில்வாழ்குயிலேயெங்கள்பூவைவண்ணன்
றன்னைவரக்கூவுதியென்றுசாற்றுந்தமிழ்த்தலைவி
அன்னைநங்கோதையடிகளென்சென்னிக்கணிமுடியே.      (55)

தூயர்குலமறைச்சொற்படித்தோழிக்குச்சொப்பனத்தில்
ஆயர்குலமுதல்வேட்டதைவாரணத்தாய்ந்துரைத்த
வேயர்குலக்கொழுந்தானநங்கோதையைவேண்டுநெஞ்சே
தீயர்குலத்தையிரீஇத்தெள்ளியரொடுஞ்சேர்த்துவளே.       (56)

கருப்பூரமென்றெடுத்தோதும்பதிகத்திற்கார்க்களிற்றின்
மருப்பூறுசெய்தவன்செவ்வாயின்வாசமும்வண்சுவையும்
விருப்பூர்ந்துவெண்சங்கைக்கேட்டநங்கோதைவிரைவிரிக்குந்
திருப்பூங்கழனினைநெஞ்சேநன்முத்தித்திருப்பெறவே.       (57)

விண்ணீலப்பத்தினம்வேங்கடவாணற்கென்வேட்கையெல்லாம்
ஒண்மூரலோடுமுறுஞ்செவ்விநோக்கியுரைத்திரென்று
கொண்மூக்குழாந்தமைத்தூதுவிடுத்தநங்கோதையந்தாள்
கண்மூடியோர்கணஞ்சிந்திநெஞ்சேநங்கசடறுமே.      (58)

அத்தன்றிருமாலிருஞ்சோலைவெற்பனவயவங்கட்
கொத்தபொருள்களுடற்றநங்கோதையுடன்மெலிந்து
சித்தங்கரைஇச்சிந்துரமென்றெடுத்துத்தெரித்தசெய்யுள்
பத்தும்படிக்கவல்லார்படர்வார்நற்பரகதிக்கே.      (59)

தெரித்தபருவம்பருவப்பொருள்கள்செகுக்கவினித்
தரித்துயிர்வாழ்தலரிதெந்தையாற்கண்ணன்றாளடைதல்
உரித்தெனவுட்கொண்டுகார்க்கோடலென்றெடுத்தோதும்பத்தும்
பரித்தநற்சிந்தையர்பாரோரைக்காக்கின்றபாவனரே.       (60)

அரங்கத்தமலனருளாமையாற்றானடைந்தநிலை
இரங்கத்தன்றாய்க்குமிகுளைக்குஞ்சுட்டுமின்னாமையைப்பாற்
றரங்கத்தைவிட்டவடாமுகக்கும்பத்திற்சாற்றியதை
இரங்குற்றுளம்பதிப்பாரின்பவீட்டினையெய்துவரே      . (61)

மற்றிருந்தீரென்னும்பத்தினிற்கோதைமதுரைமுதன்
மற்றிருந்தீரிருதோட்கண்ணன்வாழும்வளம்பதிகட்
குற்றிருந்தீரென்னையுய்த்திடுமென்றதையுள்ளமதிற்
பெற்றிருந்தீடுபடுவோரெமக்குப்பிராப்பியரே.       (62)

கண்ணனிற்கோதையெங்காரிகையீரென்னைக்காக்கநுமக்
கெண்ணமிருக்கினவனாடையாதியவேந்திவந்தென்
கண்ணவிடரைக்களைஇக்காமினென்றதைக்கற்றுணர்ந்தோர்
திண்ணநமரைத்திருத்திப்பணிகொள்ளுந்தேசிகரே.      (63)

கருந்தாம்புதரற்கண்டீரோவென்கின்றகடாவினுக்கு
விருந்தாவனத்திற்கண்டோமென்றுசொல்லும்விடையிறுத்து
மருந்தாமெனப்பட்டிப்பத்திற்சொல்கோதைவண்மாற்றம்வல்லார்
திருந்தாவெனைத்திருத்திப்பணிகொண்டிடுஞ்சீரியரே.       (64)

பூமாலைவேய்ந்தெம்பிராற்களித்தாளைப்பொய்யாமொழியைப்
பாமாலையாகப்பணித்தாளைப்பார்த்தன்றன்பாகனுழி
மாமாலையேற்றுமணந்தாளைவாழ்த்துதியேன்மனனே
தோமாலைத்தாயபிறவித்துயரந்தொலைந்திடுமே.       (65)

சுருப்பார்குழலியைச்சுந்தரத்தோகையைத்தூயவளைத்
திருப்பாவைபாடியசெல்வியைத்தேவியைச்சேயிழையை
விருப்பாகவேண்டுதிநெஞ்சேயினியோர்விளங்கிழையாள்
கருப்பாசயம்புகவொட்டாமற்காப்பள்கடைக்கணித்தே .       (66)

கருக்கோதைநீக்கக்கருதுதியேலென்றன்காதனெஞ்சே
யிருக்கோதையென்றுமிரியாப்புத்தூர்வந்தவேந்திழையாந்
திருக்கோதைநாயகிதாள்களிற்செய்யுட்டெரியலொடு
மருக்கோதைவேய்ந்துவழிபட்டுநின்றுவழுத்துதியே.      (67)

தீமகள்வேண்டிடச்சித்ரவிசித்திரச்சேலைதந்த
பாமகள்மாமற்குப்பல்லாண்டுபாடியபட்டர்பிரான்
மாமகளைப்புவியோர்தமைவாழ்விக்கவந்தவருட்
கோமகளைத்தொழுவார்க்கொருநாளுங்குறைவில்லையே.      (68)

முத்தத்துவநிலைமும்மறையின்கண்முடிந்தபொருள்
அத்தத்திலங்காமலகம்பழுத்தவருங்கனியிற்
சித்தத்திலங்கச்சிறியேனுணருந்தெருட்சிதந்தாள்
முத்தத்தொளிர்நகையாய்கோதைநாயகிமுன்னவியே.      (69)

சுருதிமுடிவினிற்சொல்லும்பரம்பொருடோய்சுகத்த
பருதியநந்தத்தொளிரும்பரமபதந்தருவான்
கருதியிக்காயங்கழல்கின்றகாலத்தென்கண்களிக்க
வருதிநின்சேவைதரக்கோதைநாயகிவானவியே.       (70)

உறிக்கொண்டவெண்ணெயுண்டோன்பண்டுபார்த்தற்குரைத்தருள்பின்
னெறிக்கொண்டநின்னடியார்க்கடியார்கணிகழொழுக்கக்
கிறிக்கொண்டொழுகக்கிருபைசெய்தந்தகன்கிட்டிடுங்காற்
குறிக்கொண்டுகோதையன்னாயெனைக்காக்கக்குணித்தருளே.      (71)

ஒட்டகமானவுரிபோர்த்தவூன்மச்சையுற்றவெற்புச்
சட்டகநாறுமலமூத்திரங்குடர்சான்றபுழுப்
பெட்டகமாம்பரந்தாங்கிநலிகின்றபேதைநின்றாள்
நட்டகம்வைத்துத்தொழக்கோதைநாயகிநல்குதியே.      (72)

கருப்படுமென்வினைக்காட்டைக்களைந்துகமலமலர்த்
திருப்படுநின்னடிப்பத்திமைச்செல்வந்திளைக்குமன்பர்
மருப்படுபாதம்வணங்கிவழிபடுவானென்சிந்தை
ஒருப்படுமாறருள்செய்கோதைநாயகியுத்தமியே .      (73)

புண்ணியவில்லிபுத்தூர்வந்தபொன்னேபொலந்துகிரே
மண்ணியமாமணியேமுத்தமேநன்மரகதமே
திண்ணியநெஞ்சந்திருந்தியடியனின்சீர்நிதமும்
உண்ணியவண்ணமருள்கோதைநாயகியுத்துங்கையே.      (74)

விண்மணியென்னவிளங்கிவளர்சீர்விரிவிபுலைப்
பெண்மணிபச்சைப்பெருமணிபேணும்பெரியருளக்
கண்மணிநங்கடிருக்கோதைநாயகிகற்பகமாம்
ஒண்மணித்தாளிலுயரன்பலர்பெய்வருத்தமரே.      (75)

அருளுருவேநல்லணியுருவேயறமாமுருவே
தெருளுருவேசின்மயவுருவாந்திருமந்த்ரமுதற்
பொருளுருவேபுண்ணியவுருக்கோதைப்பொலனுருவே
மருளுருவேய்ந்தவிம்மைந்தனுய்வண்ணமகிழ்ந்தருளே.       (76)

வனமாலைமாமணிமாலைவயங்குமணியுரத்த
கனமாலைக்காமித்துக்கள்ளவிழ்மாலைகவின்செயும்பா
வினமாலைசூடியும்பாடியுந்தந்தவிறைவியையென்
மனமாலைநீக்கத்தினமாலைவேய்ந்துவணங்குவனே.      (77)

கற்பகமேவியகாரிகையார்சிரங்கைகுவிக்குங்
கற்பகமேயென்னைக்கட்டிக்கவற்றுங்கனவிருளாங்
கற்பகமேதைகனத்தோங்கநின்னடிக்காமருசீர்
கற்பகமேவவருள்கோதைநாயகிக்காருணியே.      (78)

நெருங்கநிமிர்ந்துநிரந்தரநீங்காநிகளவினை
முருங்கவெனைமுற்றுமூடிமுருக்குமும்மோகவிருள்
ஒருங்கநின்சேவடியொண்மலர்த்தேனையுவந்தெனுளப்
பிருங்கமுணச்செய்தருள்கோதைநாயகிப்பேரன்னையே.       . (79)

தாநந்தருமந்தவஞ்சத்தியந்தத்துவமுணர்மெய்ஞ்
ஞாநந்தயைசற்றுமில்லாதநாயடியேற்கிரங்கிக்
கோநந்தன்மைந்தன்மகிழ்கோதைநாயகிநின்குணச்சீர்
ஆநந்தவாரியமைந்தாடுவானின்னருள்புரியே.      (80)

சேனேடியோடிச்செவிகாறுநீண்டதிருக்கணியைப்
பானேடியோடிப்பழிக்குமதுரப்பணிமொழியைக்
கோனேடியோடுங்கொடியன்னவேயர்குலக்கொழுந்தை
மானேடியோடுமனத்தாளைவாழ்த்தென்மடநெஞ்சமே.      (81)

இடைச்சிநடையுமுடையுநொடியுமிச்சித்தருள்சிற்
றிடைச்சியையெங்குமிலங்குமிருங்குணத்தாளையன்ன
நடைச்சியைநாடுமவர்வினையீர்ந்திடுநல்லருளாம்
படைச்சியைவாழ்த்துமென்னாவென்னபாக்கியம்பண்ணியதே.      (82)

சுரிகுழற்கட்டுந்துவர்ந்தசெவ்வாயுஞ்சுடர்முகமும்
சுரிவளைக்கண்டமுந்தொல்லருளார்ந்ததுணைவிழியுஞ்
சரிவளைக்கையுமிடையுமுடையுந்தயங்குங்கஞ்சப்
பரிபுரத்தாளுமெனக்கென்றுமுன்னிற்கும்பான்மையவே.      (83)

வேதத்தலைவிநல்வேள்வித்தலைவிவிளங்குநுண்ணூற்
போதத்தலைவியிப்பூமித்தலைவிபொருவில்விண்ணாம்
நாதத்தலைவிநன்ஞானத்தலைவிநகைமுகஞ்சேர்
கோதைத்தலைவிகுரைகழனங்கள்குலதனமே.      (84)

சீரார்கலுழனைக்கண்டையசென்றுதிருவரங்கத்
தாராவமுதைக்கொணர்கெனவவ்வாறவனிழைக்க
மாராயமோடம்மணவாளன்றன்னைமணந்துகந்த
பேரார்ந்தகோதையென்கண்ணுளம்விட்டென்றும்பேர்கிலளே .      (85)

நாகாசனனைநயந்தேயரங்கநன்னாயகனோ
டேகாசனத்திலிருத்தியகோதையிறைவியென்றுஞ்
சோகாசனமுணுந்தொண்டனின்பாதச்சுகாநந்தமாம்
போகாசனமுண்டுபூரிக்கும்வண்ணம்புரிந்தருளே.       (86)

இந்திரன்சென்றுமகட்பேசவெண்கணனோமஞ்செய்ய
மந்திரக்கோடிமணமாலைகொண்டுமகிழரங்க
மந்திரச்சுந்தரன்கைப்பற்றவுள்ளமகிழ்வதன
சந்திரக்கோதைதளிரடியென்றைக்குஞ்சார்பெனக்கே.      (87)

இருக்கோலமிட்டுரைக்கும்பேரரங்கனிடவருகில்
உருக்கோலப்புள்ளிறைநீவலப்பாகத்துறைந்திருக்குந்
திருக்கோலந்தன்னைத்திருக்கோதைநாயகிசெவ்வனுள்ளத்
திருக்கோயில்வைத்தென்றும்பூசனைசிந்தனைசெய்குவனே      . (88)

கடிந்ததிற்செல்லுளங்கோதைகல்யாணகுணக்கடலிற்
படிந்துகுடைந்தாடியபின்னரென்னைப்படுத்தவினை
மடிந்ததுவாளாமயக்கித்துயக்கியமாயக்கங்குல்
விடிந்ததுதித்ததுமெய்ஞ்ஞானமாகியவிண்மணியே.      (89)

இங்கூழ்வினையினிடர்படுமேழையிதயச்செய்யிற்
றங்கூர்மியாங்களைகட்டன்புநீர்பெய்துசாரியற்கைக்
கொங்கூருங்குந்தளக்கோதைகல்யாணகுணகணமாம்
பைங்கூழ்வளர்ப்பனவளுகப்பாகும்பயன்பெறவே.      (90)

கடலேய்கட்காரிகைகாஞ்சனங்காசினிக்கண்ணசையாங்
கடலேயழுந்திக்கவலடியேற்குன்கழற்கண்ணன்பு
கடலேயச்செய்துதிருக்கோதைநாயகியாங்கருணைக்
கடலேபிறவிக்கடனீந்துமாறுகடைக்கணியே.      (91)

பவநெறிநோக்கிப்படருமிப்பாரினர்பற்றிநிற்கும்
அவநெறிநீக்கியருளினருமையதாகுமுத்தத்
துவநெறிகாட்டித்தன்றொல்லடியாரைத்தொழுதுயுநற்
றவநெறிகாட்டியகோதைசரணேசரணெனக்கே.      (92)

மங்கையர்கோன்முதலாழ்வார்கணாளூமகிழ்மகளைச்
செங்கைமுக்கோல்கொண்டசீரெதிராசசிகாமணிதன்
தங்கையைநங்கண்ணன்றாரத்தையன்பர்தந்தாயைப்புத்தூர்
நங்கையைக்கோதையைநாடோறும்போற்றுவர்நல்லவரே.       (93)

ஆராதகாதனம்பாண்பெருமாளினணியரங்கத்
தாராவமுதனொடுமோரமுதாயணைந்துநிதம்
பேராச்சுகாநந்தப்பேரின்பவாரிபெருகவுணுஞ்
சீரார்ந்தகோதைதிருவடியென்னுட்டிகழ்ந்திடுமே.       (94)

சிட்டர்கள்போற்றும்புதுவைநகர்வந்ததெள்ளமுதே
பட்டர்பிரான்செய்தவவுருவாகியபைங்கிளியே
துட்டர்சிகாமணியாகியவென்னைநின்றொண்டரடிக்
கிட்டர்கள்சங்கத்திருத்திப்புரந்திடவெண்ணுதியே.      (95)

அழுத்தாளையள்ளலிலன்பரையாண்டைந்திலன்பறிவிற்
பழுத்தாளைப்பட்டர்பிரான்பந்தனையைப்பரும்பணிலக்
கழுத்தாளைக்கண்ணறைக்கஞ்சனைக்காய்ந்தநங்கண்ணன்கஞ்ச
விழுத்தாளையேத்தும்விமலையையேத்தென்விதேயநெஞ்சே      . (96)

மக்கண்மகார்தம்மழலைச்சொற்கேட்டுமகிழ்வதென
இக்கள்வன்சொல்லையுமேற்றுமகிழ்தியிரும்பழனம்
புக்கள்ளற்கண்ணிரைதம்பிள்ளைக்கூட்டும்பொருட்டுச்சின்மீன்
கொக்கள்ளுமல்லிக்குளப்பதிக்கோதைக்குணமணியே.      (97)

கலித்துறைக்காலத்தடியேனியற்றுமிக்கட்டளைசேர்
கலித்துறைநூற்றையுமேற்றடியாருளக்கஞ்சமதிற்
சொலித்துறைகின்றதிருக்கோதைத்தாயென்றன்றொல்வினையை
மெலித்துறையாமளிதந்தென்பவப்பிணிவீட்டுவளே      (98)

பத்தியில்லாதவன்பாமரன்பாவப்பசைப்பதகன்
புத்தியில்லாதவன்பொய்யன்பொல்லாதவன்பொங்குமனச்
சுத்தியில்லாதவன்கோதையன்னாய்நின்சுகிர்தஞ்சொல்லச்
சத்தியில்லாதவன்செய்நூலுமேற்றுத்தயைபுரியே.       (99)

சொற்பிழையோடுபொருட்பிழைநின்னடியைத்தொடரா
முற்பிழைமுன்னைவினைப்பயன்மூட்டமுயன்றுசெய்த
பிற்பிழையாவும்பொறுத்தாளநிற்கேபெருங்கடனாம்
அற்பிழையெங்கடிருக்கோதைநாயகியம்மனையே.      (100)

ஆவாழ்கவந்தணர்வாழ்கவவர்களறங்கரைநன்
னாவாழ்கநான்மறைவாழ்கநயக்குநல்லோர்பதின்மர்
பாவாழ்கவப்பாப்படிப்பவர்வாழ்கபரிக்குமிந்தப்
பூவாழ்கவாழ்கதிருக்கோதைநாயகிபொன்னடியே .      (101)

திருப்பதிவாழ்கதிருவாழ்கநூற்றுடன்சேர்ந்தவெட்டுத்
திருப்பதிவாழ்கதிருத்தொண்டர்வாழ்கதெறுஞ்சிறையாங்
கருப்பதியாமனமைக்காக்குங்கோதைகழலிணையாம்
மருப்பதிமாமலர்வாழ்கவென்னுள்ளமடுவகத்தே      . (102)
----------
ஆடிப்பகவதிநாளிலவதரித்தாயர்தங்கள்
பாடிச்சவுரிக்குப்பாமாலைதந்துபைம்பூம்படலை
சூடிக்கொடுத்தசுடர்க்கொடிக்கோர்சதச்சொற்றொடையல்
பாடிக்கொடுத்தனன்பள்ளிகொண்டானெனும்பாவலனே.       . (103)
----------

கோதை நாயகித் தாயார் மாலை முற்றிற்று.
----------------

This file was last updated on 20 December 2023.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)