pm logo

தவத்திரு குன்றக்குடி அடிகளார்
சொற்பொழிவுகள் :
அருள் நெறி முழக்கம்

arulneRi muzakkam
by kunRakkuTi aTikaLAr
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
A raw text file was generated using Google OCR and the text was subsequently corrected for any OCR errors.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2024.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

தவத்திரு குன்றக்குடி அடிகளார்
அருள் நெறி முழக்கம்
(சொற்பொழிவுகள் தொகுப்பு)

Source.
அருள் நெறி முழக்கம்
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
பதிப்பாசிரியர் தவத்திரு பொன்னம்பல அடிகளார்
அருள்நெறிப் பதிப்பகம்
குன்றக்குடி - 630 206
சிவகங்கை மாவட்டம்.
------------------
நூல் விபரம்
நூலின் பெயர் : அருள் நெறி முழக்கம்
நூலின் தன்மை : பொழிவுத் தொகுப்பு
ஆசிரியர் : தவத்திரு குன்றக்குடி அடிகளார்
பதிப்பாசிரியர் : தவத்திரு பொன்னம்பல அடிகளார்
உரிமை : திருவண்ணாமலை ஆதீனம்
குன்றக்குடி
பதிப்பாண்டு : முதற்பதிப்பு:செப்டம்பர் 2006
படிகள் : 1200
பக்கங்கள் : 96 விலை : ரூ. 40 /-
நூல் வடிவாக்கம் : சொ. அருணன்
அச்சிட்டோர் : வெற்றிவேல் ஆப்செட் பிரிண்டர்ஸ்
பாண்டிச்சேரி - பேச: 9345452912
வெளியீடு : அருள்நெறிப் பதிப்பகம்
குன்றக்குடி-630 206, சிவகங்கை மாவட்டம்
-----------
குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனக் குருபூசை விழாவில் தவத்திரு பொன்னம்பல அடிகளார் அவர்களால் வெளியிடப்பெற்றது.
---------------

பதிப்புரை


தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளா

அருள்நெறி முழக்கம்! இருள்படர்ந்த தமிழகத்தில் உதய ஒளிக்கீற்றாய் உலாவந்த அருள்ஞான உரைகளின் தொகுப்பு! உதய ஞாயிற்றுக்கு வரவு கூறிய புரட்சியின் புதிய பூபாளங்கள்! நாத்திகத்தின் நெருக்கடியால் சனாதனம் சரிந்து விழுந்தபொழுது உண்மையான ஆன்மிகத்தை உயர்த்திப்பிடித்த ஆன்மிக உயிர்த்துடிப்பு! கோலத்தாலும் உள்ளத்தாலும் துறந்த துறவுச்சிங்கத்தின் கர்ஜனை காற்றில் கரைந்த கற்பூரமாய்க் காணாமல் போய்விடாமல் வரலாற்றுக் கல்வெட்டாய்ச் செதுக்கும் முயற்சிதான் தங்கள் கரங்களில் தவழும் அருள்நெறிமுழக்கம் என்ற இந்த சீரிய சிந்தனை நூல்! வரலாற்றைப் படைத்தவரை வரலாறாய் வாழ்ந்தவரின் வார்த்தைகளே வருங்கால வரலாற்றுக்கு வழிகாட்டும் என்ற நம்பிக்கையில் முகிழ்த்ததுதான் அருள்நெறி முழக்கம் எனும் இந்நூல்!

தம் ஊனில் உயிரில் மகாசந்நிதானம் எண்ணிப் பார்த்த இலட்சிய, சமய, சமுதாயத்தினைப் படைக்க விரும்புவதே இந்நூலின் நோக்கம்! மகாசந்நிதான்த்தின் உரைகளின் வாயிலாகக் கடந்த காலத் தமிழகத்தின் சமய, சமுதாய வரலாறு ஊடும் பாவுமாக இழையோடியிருப்பதை உணர முடிகின்றது. பிரார்த்தனையைப் பாருங்கள்! ஆசைகளின், அபிலாஷைகளின் கூடங்களாக வழிபாட்டு நிறுவனங்கள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. இதுவா நம் பிரார்த்தனை? சிவபூசையினால் ஏதாவது நன்மை உண்டாகுமேயானால் அதைத் தாங்கள் ஏற்றுக்கொள்ளாமல், 'ஆண்டவரே நீயே ஏற்றுக் கொள்வாயாக!' என்று சைவசமயக்குரவர்கள் கூறிச் சென்றது பூசை தொண்டு இவற்றின் பயன் தங்களுக்கு வந்துவிடக்கூடாது என்ற பற்றற்ற, பற்று நிலையில்தான்! பாரதி கடவுளிடம் வேண்டிய பிரார்த்தனை பொதுநலம், உலக உயிர்க்குல நாட்டம் சார்ந்தது. அப்படிப் பிரார்த்தனை அமைய வேண்டும் என்று மகாசந்நிதான்ம் கூறுவது நனவாக வேண்டும் என்பதே நம் பிரார்த்தனை!

'சமயக் கொள்கைகள் பெட்டியினுள் அடைக்கப்பட்டிருந்தால் மக்களுக்கோ அவர்கள் வாழ்கின்ற நாட்டிற்கோ பயன்தர முடியாது. அவற்றால் நாடும், மக்களும் பயன்பெற வேண்டுமானால் சமயக் கொள்கைகளை ஒர் இலட்சியத்தின் அடிப்படையில் நின்று மக்களுக்கு எடுத்துக்கூற வேண்டும்' என்ற மகாசந்நிதானத்தின் வாக்குத்தான் அப்பரடிகள் காட்டிய ஆன்மிகத்தடம்! 'எல்லோரும் மந்திரத்தைச் செபியுங்கள்' என்று இராமாநுஜர் காட்டிய புரட்சியில் பூத்த பொதுமைத் தடம்! 'மண்ணில் நல்லவண்ணம் வாழ' வழிகாட்டிய நற்றமிழ் வல்ல ஞான சம்பந்தர் காட்டிய நல்தடம்! எம்பிரானை ஏவல் கொண்ட நற்றமிழ்ச் சுந்தரர் காட்டிய தனித்தமிழ்த்தடம்!

உடைக்கப்போகும்
நாத்திகனையும்
ஒருகணம் நிற்கவைத்து
அழகு பார்த்து ரசிக்க வைக்கின்றது
சிலை!

என்ற கவிவரிகள், கடவுள் மறுப்புக் கொள்கைகூட கடவுளின் மீதுள்ள கோபத்தால் தோன்றியது அல்ல; கடவுளின் பெயரால் நடைபெற்ற கயமைகளால்தான் என்பதை அறிவுறுத்துகின்றன!

அண்ணல் காந்தியடிகளின் பிரார்த்தனையைப் பற்றி நம் அடிகள் பெருமான் விளக்குகின்றார். என்னே! உன்னதமான மகாத்மாவின் பிரார்த்தனை மரணத்தின் பிடியிலும் மருத்துவரைத் தேடாமல் ஆண்டவனைத் தேடும் மகாத்மாவின் பிரார்த்தனை எதைக்காட்டுகிறது? உடல்நோயை மருத்துவர் குணப்படுத்துவார், உயிர் மருத்துவர் ஆண்டவனால் மட்டுமே உயிர்நோயைக் குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையைக் காட்டுகின்றார். உயிரின் மருத்துவர் புறத்தே இருந்து வருவதில்லை. உயிரின் உள்ளே இருந்து எழுகின்றார்.

உயிர் மருத்துவர் ஆசையைச் சுடுகின்றார்!
கோபத்தைச் சுடுகின்றார்!
பொய்யைச் சுடுகின்றார்!
பொறாமையைச் சுடுகின்றார்!
தணலில் இட்ட தங்கமென

மனிதனைப் புனிதன் ஆக்குகின்றார்!
மனிதாத்மா மகாத்மாவாக மாறுகின்றது!
மகாத்மாவின் உயிர்குடித்தவை துப்பாக்கிக் குண்டுகளா?
அல்ல! அல்ல!
மதவெறித் தீயே மகாத்மாவைக்
காவுகொண்டது!

தலைப்பிரசவத்தில் குழந்தையை ஈன்று தாய் இறந்ததைப் போல, சுதந்திர இந்தியாவின் ஜனனத்தில் மகாத்மா மரித்துப் போனார்!

எல்லோரும் காந்தி ஆகுங்கள் என்பதல்ல நம் பிரார்த்தனை! இயன்றவரை மனிதனாக வாழுங்கள் என்பதே நம் பிரார்த்தனை!

இந்தப் பிரார்த்தனையைத்தான் - அருள்நெறி முழக்கமாய் மகாசந்நிதானம் முழங்கிச் சென்ற வயிர வார்த்தைகளைத்தான் தாய் பாலை (தாய்ப்பாலை)த் தன் குழந்தைக்குச் சேமித்துத் தருவதைப்போல, வருங்காலத் தலைமுறைக்கு ஆதீனக் கவிஞர் மரு.பரமகுரு வழங்கியுள்ளார். அருள்நெறிப் பதிப்பகத்தின் ஆணிவேராய்ச் செயல்படும் ஆதீனக் கவிஞர் மரு. பரமகுரு பணிசிறக்க வாழ்த்துக்கள்! அருள்நெறிப் பதிப்பகத்தின் துடிப்புமிக்க செயல்வீரராக மகாசந்நிதானத்திடம் தாம் பருகிய தாய்ப்பாலை, வளரும் தலைமுறையும், வரும் தலைமுறையும் பருகட்டும் என்று அருள்நெறி முழக்கத்தை அச்சில் பதிவு செய்ய ஆதாரமாய் விளங்கிய கிருங்கை சேதுபதி அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!

அருள்நெறி முழங்கட்டும்!
அன்பு பரவட்டும்!
அருள் சிறக்கட்டும்!
என்றும் வேண்டும் இன்ப அன்பு

குன்றக்குடித் திருவண்ணாமலை ஆதீனம்
குன்றக்குடி (பொன்னம்பல அடிகளார்)
25.03.2006
-----------------
முழக்கங்கள்
1.       வாழ்வின் கடமை
2.       முன்னோர்கள் வாழ்ந்த நெறி
3.       பிரார்த்தனை என்னும் மருந்து
4.       தமிழகம் காட்டும் செந்நெறி
5.       கற்பவை கற்க...
6.       இலக்கியமும் கடவுள் நெறியும்
      பின்னிணைப்புகள்
------------

1. வாழ்வின் கடமை

“உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்"

என்று வள்ளுவப் பெருந்தகை சொல்வதற்கேற்ப, இற்றைநாள் இங்குக் குழுமியிருக்கின்ற இந்தப் பெருவிழாவினை எடுக்கின்ற ஆயிர வைசிய சமூகத்தினர் உள்ளத்தில் கண்ணன் இருந்து வருகின்றான். “உள்ளத்திலே ஒளியுண்டானால் வாக்கினிலே ஒளியுண்டாம்” என்ற பாரதியின் அருள் வாக்கிற்கேற்ப நீங்கள் வாழ்வது குறித்து மட்டற்ற மகிழ்ச்சி.

கண்ணன் கீதையைச் செய்த ஒரு செல்வன் என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். கண்ணனின் கீதையைப் பற்றித் தெரிந்து கொள்ளாதவர்கள் இவ்வுலகினில் இருக்க முடியாது. கண்ணன் கீதையின் மூலம் உலகிற்குப் பல நீதிகளை உணர்த்தினான். “கண்ணன் காட்டிய வழி செல்வாயாக’ என்று இன்று ஒர் பழமொழி வழங்குகின்றது. அந்தப் பழமொழி கண்ணனின் பெருமையையும் தரத்தையும் நமக்கு நன்கு விளக்குகின்றது.

கண்ணன் மக்கள் உள்ளத்தில் அழியா இடம் பெறுதல் வேண்டும் என்று எண்ணிய மகாகவி பாரதி “கண்ணன் என் தோழன்” என்று ஆரம்பித்து கண்ணனைப் பல்வேறு பெயர்களில் பாடி, முடிவில் “கண்ணன் என் ஆசான், கண்ணன் என் குலதெய்வம்” என்று முடிக்கின்றான். மனித மனம் பல்வேறுபட்ட கோணங்களில் ஒடும் பண்பு வாய்ந்தது.

அவரவரது உள்ளத்திற்கேற்ப ஆண்டவனைக் காண்பதுதான் வழிபடுவதுதான் நன்மை தரும்; வன்மையுமாம். அந்த உயரிய கொள்கையை அறிந்த பாரதி மக்கட் சமுதாயத்தின் நலங்கருதி கண்ணனைப் பலவிதமாகத் தனது கற்பனை உலகில் கண்டு மகிழ்ந்து பாடி இருக்கின்றான். பாரதி பாடிய கண்ணன் பாட்டு தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவர் உள்ளத்திலும் இடம்பெறவேண்டும் கண்ணன் பஜனை எங்கும் முழங்க வேண்டும். கண்ணனின் கீதை எங்கும் வெற்றி முரசொலிக்க வேண்டும்.

தமிழகம் தெய்வமணம் கமழும் தெய்வத் திருநாடு; பெரும்புலவர்கள் வாழ்ந்திருந்த பொன்னாடு. தமிழ்மக்கள் பழைய இலக்கியங்கட்கு எடுத்துக்காட்டாக, கடவுள் நம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாக, என்றும் குன்றாப் புகழுடன் விளங்க வேண்டும் என்ற நல்ல எண்ணம் படைத்த தரும சிந்தனையாளர்களால் - பழம் பெரும் மன்னர்களால் எழுப்பப்பட்ட பழம்பெரும் கோயில்கள் என்றென்றும் நின்று நிலவக் காண்கின்றோம்.

அன்பும், அருள்நெறியும் நாட்டினில் நல்லன காணத் துணை புரியும். அவை இரண்டும் மக்களிடம் நிலைபெற வேண்டும். அன்பும் அருள்நெறியும் நாட்டில் நல்லதொரு இடத்தைப் பெற்று நல்லன காண வேண்டும் என்ற குறிக்கோளில் உழைக்கத்தான் திருமடங்கள் உண்டாயின.

கிராம மக்களின் போக்கிற்கும் - வாழ்விற்கும் - பண்பாட்டிற்கும், குறிப்பாகச் சொல்லப்போனால் அவர்களின் அறிவுத் திறனுக்கும், அன்பினையும் அருள்நெறியினையும் பரப்பத்தான் பஜனைமடங்கள் எழுப்பப் பெற்றன என்பதை யாரும் மறந்து விடக்கூடாது. வழிபாட்டுத் துறையில் மக்களை அதிக ஈடுபாடு உடையவர்களாகச் செய்து அவர்களிடம் வழிபாடும் பக்தியும் வளரப் பாடுபட ஏற்பட்டவைதாம் திருமடங்கள் என்பதை எந்தச் சமயப்பற்றுடைய மனிதனும் மறுக்கவோ, மறக்கவோ முடியாது. அவைதாம் திருமடங்களின் கடமை என்பதை அதன் தலைவர்களும் உணர்ந்து நடத்தல் வேண்டும். நாட்டு மக்களை என்றும் பக்தியிலும்- அன்பிலும் அறத்திலும் பற்றுடையவர்களாகச் செய்வதுதான் திருமடங்களின் கடமையாகும். அவை கடமை தவறினால் மக்கட்சமுதாயமும் கடமை தவறித் தவறான பாதையில் சென்று விடும் என்பதை நாம் இன்று உலகியல் வாழ்வில் கண்கூடாகக் காண்கின்றோம்.

மக்களின் அன்றாட வாழ்வைக் கவனித்து வரவேண்டி பொறுப்பு சமயத் தொண்டர்களுக்கு உண்டு. மக்களோடு மக்களாகப் பழகி அருள்நெறியைப் புகுத்தவேண்டிய சமய நிலையங்கள் தங்கள் கடமையை உணர்ந்து சரிவரத் தொண்டாற்ற வேண்டும். ஆண்டவனின் திருநாமங்களைப் பாடி மகிழ்வதற்காகவும் பேசி மகிழ்வதற்காகவும்தான் பஜனை மடங்கள் நாட்டில் எழுந்தன. அந்த உயரிய கருத்துக்களுக்கு இன்று நாட்டில் எதிர்ப்புக்கள் எழுந்து கொண்டேயிருக்கின்றன. அதனை இங்குக் குழுமியிருக்கின்ற அத்தனை மக்களும் நன்கு தெரிந்து கொண்டிருக்கலாம். அவர்களின் எதிர்ப்பு நம்மையும் நமது கடவுட்கொள்கையையும் எதுவும் செய்துவிட முடியாது. நாம் நமது காரியத்திலேயே கண்ணோட்டம் செலுத்தினால், தானாக விரைவில் நம்முடைய லட்சியங்கள் வெற்றிபெறும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. நமக்குப் புறம்பான காரியத்தின் நலத்திலோ தீதிலோ நமது கருத்தினைச் செலவிடாது இருத்தல் வேண்டும்.

தமிழ்நாட்டு ஆத்திகத்தை எத்தனை எதிர்ப்புகளும் - எரித்தல்களும் உடைத்தல்களும் மாற்றிவிட முடியாது. மாற்றி விடலாம் என்று கருதிச் செயலாற்ற முனைதல் பயன்தராது என்பதைத் துணிவுடன் - அதே நேரத்தில் அன்புடைத் தோழர்களுக்கு மனம்கனிந்த நன்றியுடன் எடுத்துக் கூறுகின்றோம்.

அறிவுடைய ஒருவன் எக்காலத்தும் பயன்தரக்கூடிய காரியத்தில்தான் முனைவான். சில தோழர்களின் அறிவின் போக்கு விசித்திரமாகவும் வினோதமாகவும் இருக்கின்றது. எவ்வளவுதான் நாத்திகனாக இருந்தபோதிலும் அவனுடைய முதுமைக் காலத்தில் அல்லது அவனைத் துன்பம் சூழ்ந்த காலத்தில் அவன் ஆண்டவனை நினைத்துத்தான் தீருவான். இதனை, நம் முன்னோர்கள் வாழ்வில் நன்கு காணலாம். தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் தமிழன் எவ்வளவுதான் நாத்திகனாக இருந்தாலும் முடிவில் “சிவசிவா” என்ற சொல்லிற்கு வந்துதான் தீர்வான்

ஆங்கில நாட்டின் நாத்திகன் ஒருவன் துன்பம் தாங்காமல் முடிவில் ஓ கடவுளே! என்று கத்தினான். கடவுள் உண்டா இல்லையா என்று அங்கு நம்பிக்கைக்கும் தன்மானத்திற்கும் போராட்டம் எழுந்தது. பிறர் தன்னைப் பரிகாசம் செய்யக்கூடாது என்பதற்காக நாளடைவில் அவன் தன்னுடைய பிரார்த்தனைக்குத் திருத்தம் செய்யத் தொடங்கினான். ஏ கடவுளே! நீ என்னைக் காப்பாற்று என்று கூறினான். அதிலும் அவன் வெளியுலகிற்கு அஞ்சினான். முடிவில் அந்த ஆங்கிலேயன் "ஓ கடவுளே நீ இருப்பது உண்மையானால் என்னைக் காப்பாற்றும்" என்று கூறி வழிபடத் தொடங்கினான்.

மறுப்பதின்மூலம் - வெறுப்பதின்மூலம் - உடைப்பு, எரித்தலின்மூலம் சிலர் ஆண்டவனை நினைந்து அவனது நாமத்தைக் கூறி வருகின்றார்கள். இவ்வாறாகத்தான் இன்றைய உலகில் கடவுள் தன்மைக்கும் தன்மானத்திற்கும் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இந்தத் தன்மான உணர்ச்சிதான் இன்று பலரைக் கடவுள் நம்பிக்கைக்குக் கொண்டுவர முடியாத நிலையில் வைத்திருக்கிறது.

“என்னடா இது! இருபத்தைந்து வருட காலமாக பத்திரிகையில் கடவுள் இல்லை என்று எழுதியும் மேடையில் பேசியும் வந்தோமே! இன்று கடவுள் நெறியில் சென்றால் - அருள்நெறியைப் பின்பற்றினால் பிறர் நம்மை மதிக்க மாட்டார்களே” என்று இன்று பல தன்மான இயக்கத் தோழர்கள் கருதுகின்றனர். சீர்திருத்தம் பேசிச் சிந்தனையைப் பறிகொடுத்து கருத்தை இழந்து நிற்கும் தோழர்கள் கருதுகின்றனர். அவர்கள் எண்ணிய எண்ணத்தைச் செயலில் கொண்டுவரத்தான் நாளடைவில் அவர்கள் பல மாறுபட்ட செயல்களைக் கையாளத் தொடங்கினார்கள்.

தன்மானம்தான் நம்மையெல்லாம் ஒன்றுபட்டு இயங்காமல் செய்கிறது. தன்மானம்தான் கடவுள் நெறி என்ற ஒன்று நன்றாகத் தெரிந்தும் அவர்களை ஒத்துக்கொள்ள முடியாமல் செய்கிறது. எனவே, இந்தத் தன்மானம் நீடிக்கக்கூடியதன்று. நாளடைவில் காலமும் கருத்தும் ஒன்றுபட்டு இயங்குகின்ற காலத்து கடவுள் நெறியை அவர்கள் புரிந்து கொண்டு விடுவார்கள். புரிந்து கொண்டுள்ள மக்கள்தொகை அதிகமாகின்ற காரணத்தால் நாட்டினின்றும் இந்த மாறுபட்ட கருத்துக்கள் தானாக அகன்று விடும். இந்தத் தன்மானத்தின் குணம் என்றாவது தணிந்துதான் ஆகும். தன்மானம் தலைகுனிந்து கடவுள் நெறியின் முன் மண்டியிருக்கின்ற காலத்தில் அருள்நெறி மக்களிடம் நல்லதொரு இடத்தைப் பெற்றுத்தான் தீரும் என்பதில் சந்தேகமில்லை. மனித சமுதாயத்தின் ஆசைகள் தேவைகள் பூர்த்தியாகின்ற வரை தன்மானமும் இருக்கத்தான் செய்யும். இது. உலகப் பெருமக்கள் கண்ட முடிவு.

கண்ணனுக்கு ஆபத்து என்று சிலர் கருதுகின்றனர். தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் இந்தப் பயம் மக்களுக்கு இருத்தல் வேண்டியதில்லை. தமிழ் மண்ணில் கடவுள் நம்பிக்கை ஊறிக்கிடக்கிறது. தமிழ்நாட்டுக் கற்களிலும் கூடக் கடவுள் நம்பிக்கை பொதிந்து விளங்குகிறது.

இந்த மதுரை மாநகரத்து மண்ணும் நீரும் நெருப்பும் தேவாரம் திருவாசகம் போன்ற நூல்களின் சுவையை நன்கு அறிந்து இருக்கின்றன. கல்லும் மண்ணும் அதன் சுவையை அறிந்திருந்தும் மனிதர்கள் மட்டும் அதன் சுவையை அறிய மறுக்கின்றனர். கருங்கற்களுக்கு இருக்கின்ற பண்பாடு கூட ஆறறிவு படைத்த மனித சமுதாயத்திற்கு இல்லையே என்றுதான் வருந்தவேண்டி இருக்கின்றது.
கோவில்களின் மண்டபங்களினுள் இருந்து ஒருமுறை பிரார்த்தனை செய்தால் அந்தப் பிரார்த்தனையின் பக்திப் பாடல்களைச் சிறிதளவும் ஒசை குறையாமல் அங்கு இருக்கின்ற கருங்கற்கள் திரும்ப ஒலிக்கின்றன. ஒருமுறை அல்ல பன்முறை எடுத்துக் கூறினாலும் அதனை உணர்ந்து கொள்ளும் சக்தி மனித சமுதாயத்திற்கு இல்லாது போய்விட்டதே என்றுதான் எண்ண வேண்டியிருக்கின்றது. சிலர் உணர்ந்திருந்தும் ஏதோ சில பிடிவாத குணத்தினால் அதன்வழி நடக்க மறுக்கின்றனர். தமிழ்நாட்டு மக்களின் உள்ளப்போக்கும் அறிவுத்திறனும் இத்தகு நிலைமைக்கு மாறிவிட்டதே என்றுதான் வருந்த வேண்டியிருக்கின்றது.

இன்று சிலர் கண்ணனுக்கு ஆபத்து வந்துவிட்டது என்று கருதுகின்றனர். தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் கடவுள் நெறிக்கும் பக்திப்பாடல்களுக்கும் - ஏன் நன்மையான காரியங்கள் அனைத்திற்கும் ஆபத்து வருவதும் போவதும் இயற்கைதான்.

மக்கட்சமுதாயம் நன்றாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். முன்காலத்துச் சரிதைகளைப் படித்துப் பார்த்தால் இவர்கள் சொற்கள் அனைத்தும் போலிச் சொற்கள் என்று நன்றாகத் தெரியும். கம்சனைவிட இவர்கள் எல்லாம் பெரிய எதிர்ப்பாளர்கள் என்று கருதமுடியாது. கம்சன் செய்த கொடுமைகளை விடவா இவர்கள் இழிவான செயல்கள் செய்துவிட்டார்கள்? என்னைப் பொருத்தவரையில் கம்சனைவிட இந்தத் தன்மான இயக்கத்தினர்கள் நல்லவர்கள் என்றுதான் கூறவேண்டும்.

அன்பிற்கும் அறத்திற்கும் இலக்காக வாழ்ந்து உலகிற்கு உணர்த்தி வாழ்ந்தது - வாழ்வது தமிழினம்தான்் என்பதை யாரும் மறுக்கவோ, மறக்கவோ முடியாது. அத்தகு பெருமைதரும் குலத்தில் பிறந்த நாம் உலகில் உண்டான அனைத்துயிர்களிடத்தும் அன்பாக இருந்தால் கண்ணன் கழல் இணைகள் என்றும் நம்மைக் காக்கும் என்பதில் சந்தேகமில்லை.

கண்ணன் நல்லவர்களைத்தான் காப்பான். அல்லவர்களை நிச்சயமாக வெறுத்து ஒதுக்கித் தண்டிப்பான் - இன்னலுக்கு உள்ளாக்குவான். தவறு செய்கின்ற மக்களைத் தாங்களே தங்கள் தவறுகளை உணர்ந்து திருந்திவிடச் செய்வதுதான் கண்ணனின் வேலை என்று நமக்கு வரலாறு காட்டுகின்றது. கம்சனுக்கும் இரணியனுக்கும் அவன் கொடுத்த தண்டனைகள் மூலம் நாம் இதனை நன்கு அறிந்து கொள்ள முடிகின்றது. இதனால் கண்ணன் கொலைகாரன் என்று மக்கள் சிலர் கருதுகின்றனர். புரிந்து கொள்ளாப் பகுத்தறிவுக் கூட்டத்தினர், இல்லாத வேண்டாத சில கேள்விகளை எழுப்பிக் காலத்தை வீணாக்குகின்றனர்.

அன்புடைத் தோழர்கள் கேள்விகேட்கும் முன்னர் வாழ்க்கை வரலாறுகளை நன்கு படித்துணர்ந்து பார்த்தால் நலம்பயக்கும் என்று கருதுகின்றேன்.

கண்ணன் கொலைகாரன் என்று அவர்கள் கருதியதோடன்றி நாளடைவில் மேடைகளில் பேசவும் எழுத்துக்களில் எழுதவும் முற்பட்டு விட்டனர்.

எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்று கூறுகின்ற இந்நாளிலே - ஜனநாயக அரசிலே - கொள்ளைக்கும் களவிற்கும் இடம் கொடுக்க முடியுமா? அது உரிமையாகுமா? ஜனநாயகச் சட்டப்படி அது சரியாகுமா? இன்றைய நாட்டின் நிலைமையை வைத்துக் கண்ணனின் சரிதையைப் படித்துணர்ந்து பார்த்தால் கண்ணன் நம்மை எல்லாம் வாழ்விக்கும் கடவுள் என்று நன்கு விளங்கும்.

நாட்டில் தீமைகள் மலிந்து இருப்பதைக் கண்ட கண்ணன் தீமைகளை அகற்றத்தான் அவ்வாறு செய்தான் என்பது உண்மைக் கண்கொண்டு பார்க்கின்ற தோழர்களுக்கு நன்கு தெரியும், தீயன தானாக வளரும் என்பது உலகில் நாம் காண்கின்ற உண்மை; எனினும் தீமைகளைக் களைந்தெறியாவிட்டால் நாளடைவில் நாட்டில் தீமைகள்தான் தலைவிரித்தாடும். இந்த உயரிய கொள்கையை உணர்த்தத்தான் கண்ணன் சரிதை நம்மிடம் இருக்கின்றது. கம்சனுக்கும் இரணியனுக்கும் கிடைத்த தண்டனை நமக்கெல்லாம் கிடைக்கும் முன்னர் நாமெல்லாம் நல்லவர்களாக வாழ வேண்டும். நம்மால் இயன்ற நன்மைகளை நாட்டிற்குச் செய்ய வேண்டும். நன்மை செய்ய முடியாவிட்டால் தீமையாவது செய்யாதிருப்பது நல்லது. இல்லையேல் மனித சமுதாயம் கண்ணனின் தண்டனையின்றும் தப்பமுடியாது.

தமிழ்நாட்டு வரலாற்று ஏடுகளைப் புரட்டிப் பார்த்தால் தமிழனம் உயர்ந்த கொள்கைகளைத்தான் ஏற்றுக் கொண்டு வாழ்ந்து வந்திருக்கின்றது என்பது நன்கு தெரிய வருகின்றது. தமிழ்நாட்டில் எந்தக் கொள்கையும் மக்களின் வாழ்வோடு கலந்து ஒன்றி இருந்தால்தான் மக்கள் சமுதாயத்தில் இவைகளுக்கு மதிப்பும் தகுதியும் கொடுக்கப்படும். இப்படிப்பட்ட கொள்கைகள்தான் நாட்டிற்கும் இந்நாட்டில் வாழ்கின்ற மக்களுக்கும் நலம்பல பயக்கும். இந்த உயரிய கருத்துக்களைப் பண்டைய மக்களின் வாழ்க்கை வரலாறு நன்கு உணர்த்துகின்றது. மக்களின் வாழ்வோடு வாழ்வாக ஒன்றிக் கலந்து நின்று நலம்பல பயக்கின்ற கொள்கைகள்தான் இன்றைய நாட்டிற்குத் தேவை. வாழ்வோடு - கலக்கப்படாத எந்தக் கொள்கையும் தமிழ்நாட்டு மக்கள் ஏற்கமாட்டார்கள். ஆகையால்தான் விண்ணவர்களும் காணமுடியாத அந்த உயரிய பரம்பொருளை மண்ணகத்தே காட்டினார்கள். ஏன் அப்படிச் செய்தார்கள் என்றால் வாழ்விலே தொடர்ந்து நின்று துன்பத்தை அறிந்தும் அனுபவித்திருந்தும் இன்பம் கொடுக்கக்கூடிய பொருளாக இருந்ததால்தான் அவர்கள் அவ்வாறு செய்தார்கள். இதுதான் தமிழகத்தின் கடவுள் தத்துவம். எனவே, தமிழகத்து மக்கள் கடவுளோடு கடவுளாகவும், தமிழகத்துக் கடவுள் மக்களோடு மக்களாகவும் ஒன்றிக் கலந்திருப்பது நன்கு தெரிகின்றது.
உடலில் நோய் ஏற்பட்டால் அதனை நீக்க வேண்டும் அல்லவா? மக்கட்சமுதாயம் ஓர் உடல்போல. அந்த உடலில் நோய் ஏற்பட்டு விட்டால் அதற்குத் தகுந்த மருத்துவம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அந்த உடலில் பல்வேறுபட்ட வியாதிகள் பெருகிக் கொண்டே போய் முடிவில் உடலே அழிந்து இருந்த இடங்கூடத் தெரியாமல் போய்விடும்.

கண்ணன் பிறந்ததன் மூலமாகத்தான் துரியோதனன் அழிந்தான். அது நோய் நீக்கத்திற்குக் கொடுத்த மருந்து போலத்தான். அந்த மருந்தினை வேண்டாம் என்றால் - வெறுத்து ஒதுக்கினால் - சாப்பிட மாட்டேன் என்று சொன்னால் - இதனைச் சாப்பிட்டால் நோய் நீங்கும் என்று தெரிந்தும் அதனை உண்ணேன் என்று பிடிவாதம் செய்தால் அவர்களை என்ன என்று சொல்வது! நோய் நீக்கம் வேண்டியதில்லை. நோய் இருந்து கொண்டே இருக்கட்டும். அந்த நோய் வளர்ந்து கொண்டே போய் இந்த முழு உடலையும் அழிக்கட்டும் என்று தான் கூறுகின்றார்கள் என்று எண்ண வேண்டியிருக்கின்றது.

கண்ணனுடைய கீதை அவன் காட்டுகின்ற வழி மக்கட் சமுதாயம் உய்வதற்குரிய சிறந்த தானம் என்பதை அனுபவம், ஆராய்ச்சி, உண்மைக் கண்கொண்டு பார்த்து உணர்கின்ற திறனுடைய மக்கள் தான் புரிந்து கொள்வார்கள். இதனைத்தான், சென்னை முதன் மந்திரி இராஜாஜி அவர்கள் “வழிகாட்டி" என்ற தலைப்பில் அழகுபட எழுதியிருக்கின்றார். “பலனில் பற்றின்றிச் செய்க" என்று கூறியதிலிருந்து மக்கட்சமுதாயம் சேவையைப் பெரிதாகக் கருதிப் பணியாற்ற முன்வருதல் வேண்டும். சேவையில் இறங்கிப் பணியாற்றுகின்ற காலத்து அந்தப் பணிக்காக எதையும் எதிர்பார்த்துச் செய்தல் கூடாது. இந்த ஒப்பற்ற சூழ்நிலை சமுதாயத்தில் உண்டாக வேண்டும். ஆக்க வேலைகளில் சேவை அதிகம் காண வேண்டும். நாம் செய்ய முனைகின்ற பணிகள் - சேவைகள் அனைத்தும் உயர்ந்தனவாக இருத்தல் வேண்டும். அந்தப் பணி செய்கின்ற காலத்து நாம் எவருடைய உதவியையும் எக்காரணத்தைக் கொண்டும் எதிர்பார்த்திருத்தல் கூடாது. பிறர் ஒருவனின் உதவியை நாடினால் அந்தக்காரியம் செம்மையாக நடைபெறும் என்று எதிர்பார்க்க முடியாது.

ஒருசிலர், தங்களுடைய எண்ணங்கள் கைகூட வேண்டும் என்பதற்காக ஆலயங்களுக்குச் செல்கின்றார்கள். அவர்கள் கருதிச் சென்ற காரியம் நிறைவேறாவிட்டால் ஆலயத்திற்குச் செல்வதை நிறுத்திவிடுகின்றார்கள். இது தவறுடைய செயலாகும். இம்மாதிரியான எண்ணம் மக்களிடம் பரவக்கூடாது என்பதற்காகத்தான் சைவ சமயக்குரவர்கள் சிவபூசையினால் ஏதாவது நன்மை வருமேயானால் உண்டாகுமேயானால் - அதைத் தாங்கள் ஏற்றுக் கொள்ளாமல், "ஆண்டவனே! நீயே அதனை ஏற்றுக் கொள்வாயாக" என்று கூறியிருக்கிறார்கள். இவைகளை எல்லாம் நாம் மறந்து நம்முடைய தேவைகளையெல்லாம் நிறைவு செய்ய வேண்டும் என்று ஆண்டவனை வழிபடுகின்ற மக்கட் கூட்டத்தில் குறிப்பிட்டவர்கள்தான் மனம் நெக்கு நெக்குருகிப் பாடி வழிபடுகின்றனர். உள்ளம் தோய்ந்த பிரார்த்தனையுடன் வழிபடுபவர்கள் ஒருசிலர்தான். மக்கட்சமுதாயம் ஆண்டவனை வாழ்விக்கும் முழுமுதற் பொருள் என்று கருதாமல் தேவையைப் பூர்த்தி செய்பவன் என்று கருதுவது கூடாது. இன்றைய மக்கட் சமுதாயத்தின் போக்கை வழிபாட்டை நன்கு ஓர் மேல்நாட்டு அறிஞன் எடுத்துக் கூறுகின்றான். “இன்றைய வழிபாடு எல்லாம் - பிரார்த்தனை அனைத்தும் தேவையின் நலமான முடிவைக் கருதித்தான். உண்மைான உள்ளம் தோய்ந்த பிரார்த்தனையை இன்று நாம் காண முடியவில்லை. உள்ளம் தோய்ந்த பிரார்த்தனை இந்த நாட்டை விட்டு ஓடிவிட்டதோ என்று ஐயப்பட வேண்டி இருக்கின்றது” என்று அழகுபட எடுத்துக் கூறுகின்றான்.

நாம் ஆண்டவன் முன்னர் நமது தேவையைப் பூர்த்தி செய்க என்று வழிபடுவது நமது வழிபாட்டிற்கே இழிவைத் தருகின்றது. அவ்வாறு வழிபடுவது சுயநலமாகிவிடும். நாம் நமது சுயநலம் கருதிப் பிரார்த்தனை செய்வது கூடாது. ஆண்டவன் முன்னர் வழிபடுங்காலத்துக் கனவிலும் சுயநலம் தலைகாட்டக் கூடாது. எக்காலத்தும் நாம் ஆண்டவனாக வாழ்த்துதல் வேண்டும். அவனுடைய உண்மைப் பித்தனாக உள்ளம் தோய்ந்த பிரார்த்தனை செய்தல் வேண்டும். அவனை வாழ்த்துவது நாம் வாழத்தான் என்பதை இன்றைய மக்கட் சமுதாயம் மறந்து விட்டது. ஆண்டவனை யாரும் வாழ்விப்பது இல்லை. ஆண்டவனை வாழ்விப்பதாக எண்ணித் தனக்கே வாழ வழி வகுத்துக் கொள்கின்றான். அவனை வாழ்த்தினால்தான் நாம் வாழ முடியும். மனிதகுலம் ஆண்டவனை வாழ்த்துவதும் வழிபடுவதும் - வணங்குவதும் நாம் வாழத்தான். நம்முடைய வாழ்வின் வளம் குறித்துத்தான் என்பதை மறந்து ஆண்டவன் முன்னர்ச் சுயநலப் பாட்டுப்பாட முற்பட்டு விட்டோம். இதனை மாற்றி அமைத்து ஆலயங்களில் எங்குநோக்கினும் பல்வேறுபட்ட இன்னிசை முழங்கச் செய்ய வேண்டும். உண்மை அன்பர்களைக் காணுதல் வேண்டும். மக்கட் சமுதாயம் திருந்திவாழ முற்படல் வேண்டும்.

ஆலயங்களில் உள்ள நகைகளை விற்றுவிடுங்கள். திருஉருவங்களுக்கு நகைகள் எதற்கு? மக்கள் பஞ்சத்தால் பசியால் வாடுகின்ற இக்காலத்தில அவற்றால் நாட்டிற்கு எத்தனையோ நன்மைகள் செய்ய முடியுமே. அனேக மக்கள் வாழ்வதற்கு வழிகான முடியுமே. அவை அங்கு இருப்பதைவிட மக்கள் வாழ்விற்குப் பயன்தருவதுதான் நல்லது. ஆகையால் அவற்றை விற்றுவிடுங்கள். விற்றுவிட்டால் மக்கள் நலமுடன் வாழ முடியும் என்று சிலர் கூறுகின்றார்கள். புதுமையின் பெயரால் புரட்சிப் போர்வையைப் போர்த்திக்கொண்டு நாம் என்ன செய்கின்றோம் என்ன சொல்கின்றோம் என்றும் சிந்தித்துப் பாராமல் செய்ய முற்பட்டுவிட்ட காரணத்தால் அவர்கள் கருத்துப்படி ஆலயங்களில் உள்ள நகைகளை விற்றுவிட்டால், குறிப்பிட்ட காலத்திற்குத் தானே அவை பயன்படும். இந்தக் கருத்தையும் அவர்களே தானே கூறுகின்றார்கள்- ஏட்டிலும் எழுதுகின்றார்கள். அவர்கள் எழுதுகின்றபடி கூறுகின்றபடி ஆலயங்களில் இருக்கின்ற நகைகளை விற்றுவிட்டால் குறிப்பிட்ட காலத்திற்குப் பின் என்ன செய்வது என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஆலயங்களின் பெயரால் பஜனை மடங்களின் பெயரால் நிதி திரட்டுங்கள். இவைகள்தான் தமிழ்நாட்டின் பொதுஉடமைச் சொத்து ஏனைய அனைத்தும் தனிமனிதனின் வாழ்வு கருதித்தான் என்பதை மறந்துவிடாதீர்கள். ஆலயங்களில் உள்ள சொத்துக்கள் அனைத்தும் பொதுமக்களின் வாழ்விற்குத்தான் பயன்படும் என்பதை எல்லோரும் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.

கண்ணனை வாழ்வின் லட்சியமாகக் கொண்டு கீதை வழியைப் பின்பற்றி வாழ்க்கையை நடத்தினால் நம்முடைய அன்றாட வாழ்வில் நம்மை வந்து சேருகின்ற துன்பங்கள் அனைத்தும் விரைவில் விலகிவிடும். துன்பம் சூழ்ந்து நின்ற இடத்தில் எல்லாம் இன்பம் பெருக்கெடுத்தோடும். “உன் வாழ்வில் துன்பமெனும் திரை அகன்று அங்கு இன்பமெனும் ஒளி உண்டாக வேண்டுமானால் நீ எக்காலத்தும் ஆண்டவனை மறவாதே. மறந்ததினால்தான் நீ இவ்வுலகில் துன்பத்திற்கு ஆளானாய்” என்று ஒரு பெரியார் எழுதியிருப்பது நம் உள்ளத்தில் அழியாத இடத்தைப் பெறுதல் வேண்டும். இவ்வுலகில் கண்ணன் நாமத்தை நாம் உள்ளத்தூய்மையோடு தினந்தோறும் பிரார்த்தனை செய்து வந்தால் கண்ணன் பாரதி பாடியபடி பல்வேறு உருவங்களில் தோன்றி நமக்கு உதவிபுரிவான் என்பதில் சந்தேகமில்லை.

இந்நகர் ஆரிய வைசிய சமூகத்தினர் சிறுகச் சிறுகச் சேர்க்கின்ற பண்பை மேற்கொண்டு பெரியதோர் திட்டமான கல்வித் திட்டத்தை நல்லதொரு முறையில் நடத்துவது கண்டு மட்டற்ற மகிழ்ச்சி. குறைந்த திட்டத்தில் மகமை வசூலிலிருந்து இக்காரியம் செய்து வருவது நாட்டிற்கே ஒரு பெரிய தொண்டாகும். பண்டைத் தமிழகத்தில் சிறுகச் சிறுகக் கொடுக்கின்ற பண்பைத் தலையான தொண்டாகக் கருதிக்கொடுத்தார்கள். அதனைத் தொண்டர் குழாமும் வசூலித்து நல்ல முறையில் செலவிட்டது. அதனால் மக்களும் நாடும் பயன் அடைந்தார்கள்(?). புறத்து நாகரீகம் என்ற ஒன்றிற்குக் கட்டுப்பட்டு வாழ்கின்ற இன்றைய மக்கட்சமுதாயம் சிறுகச் சிறுகக் கொடுக்கின்ற பண்பாட்டை மறந்து விட்டது. மக்கட் சமுதாயம் மறக்கத் தலைப்பட்ட காரணத்தால், அதனை வாங்கிப் பணி செய்கின்ற தொண்டர் குழாமும் மறந்துவிட்டது. அதனால்தான் மக்கட் சமுதாயம் நாளடைவில் கீழான நிலையை அடைந்தது என்பதை யாரும் மறுக்கவோ - மறக்கவோ முடியாது. இவ்வளவு அறுதி உறுதியிட்டுக் கூறக் காரணம் உண்டு. இன்றைய நாட்டின் நிலைமையை நாம் அனைவரும் கண்கூடாகக் காண்கின்றோம். கண்கூடாகக் கண்டும் விதண்டாவாதத்தால் மறுக்க யாரும் முற்பட மாட்டார்கள் என்றுதான் அவ்வளவு உறுதியிட்டுக் கூறினோம். மக்கட் சமுதாயம் கொடுக்கின்ற பண்பையும் தொண்டர்கள் வசூலித்து நல்ல முறையில் செலவிடும் பண்பாட்டையும் மறந்திருத்தால் - இருகூட்டத்தாரும் கடமை தவறாதிருந்தால் இன்று நாட்டில் சராசரியாகக் காண்கின்ற பிச்சைக்காரர்கள் கூட்டத்தைக் காணவே முடியாது. அந்த உயரிய திட்டத்தை மக்கட் சமுதாயாம் கடைப்பிடித்து வாழ முற்பட்டால்தான் வருங்காலச் சமுதாயம் நல்லதொரு முறையில் வாழ முடியும்.

வீட்டிற்கு ஒருபடி அரிசியும் ஒரு ரூபாயுங்கொடுத்தால் மதுரை நகரில் பிச்சைக்காரச் சகோதரர்களேயில்லாமற் செய்து விடலாம். “ஏழையென்றும் அடிமையென்றும் எவருமில்லை சாதியில்” என்ற எடுப்பான சமுதாயத்தையுருவாக்க வேண்டும். உங்கள் வீட்டிற் சிந்துகின்ற அரிசியைக் கொடுங்கள்; சினிமாக் காட்சிக்குச் செலவிடும் பணத்தில் சிறிது செலவிடுங்கள். அருளுள்ளமுடைய பெருமக்கள் இத்திட்டத்தை நிறைவேற்றிப் பிச்சைக்காரர் பிரச்சினையைப் போக்க முன்வருவார்கள் என்று நம்புகிறேன்.

மனிதனாகப் பிறந்தும் நல்லறிவு படைத்தும் இறைவன் உண்டா இல்லையா என்ற ஐயப்பாடு ஏன்? ஆலயங்களில் உள்ள சொத்துக்கள் அனைத்தும் மக்கட் சமுதாயத்தின் நலங்கருதித்தான். ஆலயங்களில் செலவிடும் பொருள்கள் அனைத்தும் வீண் என்று சிலர் கருதுகின்றனர் கூறுகின்றனர் - எழுதுகின்றனர். நன்றாகச் சிந்தித்துப் பார்த்தால்தான் அதன் உண்மைப் பொருள் விளங்கும். ஆலயங்களின் பெயரால் செலவிடப்படும் பொருள்கள் அனைத்தும் மக்களின் நலனுக்காகத்தான் செலவிடப்படுகின்றன. தவறான எண்ணத்தில் - குறுக்கு எண்ணத்தில் மாற்றுக் கருத்துக் கொண்டு நோக்காமல் உண்மைக்கண்கொண்டு நோக்கினால்தான் அவைகளை வீண் என்று கருதாமல் நீலம் என்று என்று எண்ணத் தோன்றும், மாற்று எண்ணம் கொண்டவர்கள் கூறுகின்றபடி அங்கு ஒன்றும் வீணாகச் செலவிடப்படவில்லை என்பதைக் கூறிக்கொள்ள ஆசைப்படுகின்றோம். ஆலயங்களைப் பற்றியும் அங்கு நடக்கும் விஷயங்களைப் பற்றியும் நல்லறிவு படைத்த பெருமக்கள் நன்கு அறிந்திருப்பார்கள்.

சிவபெருமானும் - திருமாலும் போட்டியில்லாத - மக்கள் விரும்பாத பொருள்களைத்தான் தமக்கெனத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். இதிலிருந்து நாமறியும் நீதிகள் பலவாம். மக்கட் சமுதாயத்தில் ஒருவர் விரும்புகின்ற ஒன்றினை மற்றவர் விரும்பக் கூடாது. விரும்பினால் நாட்டில் போட்டியும் பொறாமையும்தான் வளரும். ஆதலால் நாட்டினில் நாம் எவரும் விரும்பாத போட்டி, பொறாமை வளரத் துணைசெய்யாத ஒன்றினைத்தான் ஏற்றுக்கொள்ள விரும்புதல் வேண்டும். இதன்மூலம் மக்கட் சமுதாயம் உள்ளத்தைப் பண்படுத்திக் கொள்ளல் வேண்டும். இப்படிப்பட்ட தத்துவங்களைப் புரிந்து கொள்ளாமல் புரிந்து கொள்ள மனம் இல்லாமல் அவைகளைப் பற்றிக் குறைகூறுதனால் யாருக்கு என்ன பயன்?

கண்ணனை நினைக்கும் பொழுது சேவையை நினைத்துக் கொள்ளுங்கள். தீயனவற்றை ஒதுக்கி நல்லனவற்றை வளர்க்கும் அவன் தன்மையை உணருங்கள். எளியார்ககும் எளியன் அவன். தொண்டர்க்கும் தொண்டன் அவன். மக்கட் சமுதாயம் கண்ணனை வழிபடுவது போற்றத்தக்கது; வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில் கண்ணன் காட்டிய வழியைப் பின்பற்றி நடக்கவேண்டும். பின்பற்றி நடக்காமல் வேற்று வழிகளில் சென்றால் அவன் நாமத்தைச் சொல்லி அவன் திருஉருவத்தை வழிபடுவதில் பயன் இல்லை. நீங்கள் எல்லோரும் தொண்டுள்ளம் படைத்தவர்களாக பொது நலப்பணியை மேற்கொண்ட தொண்டர்களாக வாழ வேண்டும். எளியார்க்குச் சேவை செய்வதுதான் கண்ணனுக்குச் செய்யும் தொண்டு. அந்த உயரிய வழியில் மனத்தைப் பழக்கி அதன் வழியில் உறுதியாகச் செலுத்த வேண்டும். எல்லோரும் பாண்டவர்களைப் போலப் பக்தியை வளர்க்க வேண்டும். ஒவ்வொரு சமயப் பற்றுடையவனும் தான் சமயப்பற்றுடையவனாக இருத்தல் மட்டும் போதாது. தன்னைச் சுற்றி வாழ்கின்ற மக்களையும் சமயப் பற்றுடையவர்களாக - பிரார்த்தனையைப் பின்பற்றுகிறவர்களாக - பக்தியுள்ளவர்களாகச் செய்ய வேண்டும். இதுதான் வாழ்வின் கடமை என்று ஒவ்வொரு தமிழனும் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். பக்தியுடையவர்களுக்குத் தான் இனித்தமுடைய பொற்பாதம் கிடைக்கும். அவர்களின் வாழ்வுதான் நன்கு அமையும்; இன்பம் பெருகும். சமயப்பற்று இல்லாதவனுக்கு இனி இந்த நாட்டில் வாழ உரிமை கிடையாது என்ற சூழ்நிலையை உண்டாக்க வேண்டும்.

எல்லோரும் பிரார்த்தனையின் துணைகொண்டு அன்பும் அறமும் உடையவர்களாக வாழ்வோமாக. மக்கட் குலம் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ்க! உங்கள் அனைவரின் தொண்டுள்ளமும் பரிபூரண சேவையும் நாட்டுக்கு நலம்பல தருவதாகுக.

மதுரை நவநீதக் கண்ணன் பஜனைக் கூட 8 ஆம் ஆண்டு விழாவில்
தவத்திரு அடிகளார் நிகழ்த்திய தலைமையுரை
---------------

2. முன்னோர்கள் வாழ்ந்த நெறி

கண்ணார் நுதலோர் கழலிணைகள்
      கண்டேன் கண்கள் களிகூர
எண்ணா திரவும் பகலும்நாள்
      நவையே எண்ணும் அதுவல்லால்
மண்மேல் யாக்கை விடுமாறும்
      வந்துன் கழற்கே புகுமாறும்
அண்ணா எண்ணக் கடவேனோ
      அடிமை சால அழகுடைத்தே.

அன்புடைப் பெருமக்களே!

நாட்டில் நல்லன பெருகி இன்பம் காண வேண்டும் என்ற எண்ணம் கொண்டுள்ள இளைஞர் உள்ளங்கள் முதலில் பழங்காலத் தமிழகம் எப்படி வாழ்ந்தது? இற்றைத் தமிழகம் எப்படி வாழ்கின்றது? நாளைத் தமிழகம் எப்படி வாழும்? என்ற மூன்று வினாக்களை எழுப்பி அந்த வினாக்களுக்கு நல்லதொரு முடிவைக் காண முற்பட வேண்டும். உங்கள் முடிவு நல்லதொரு முடிவாக இருக்குமேயானால், அறிஞர் பெருமக்களும், அருளுடைப் பெருமக்களும் ஒப்பத்தக்க முடிவாக இருக்குமேயானால் புனிதமான தமிழகத்தை - அன்பும் அறமும் கூடிய தமிழகத்தைக் காண முடியும்.

இன்றுள்ள வறுமைக்காட்சியைப் பார்க்கின்றபொழுது - நலிந்த தமிழகத்தைப் பார்க்கின்றபொழுது நம் கருத்து தடுமாற்றம் காண்கின்றது; நெஞ்சம் நெகிழ்கின்றது. பாரதி கண்ட பாரதநாடு இலக்கியம் கண்ட இன்பப் பெருநாடு இதுதானா என்ற சந்தேகம் உண்டாகின்றது. வேறு ஒரு தமிழகம் - பாரதி கண்ட தமிழ்நாடு எங்கேனும் இருக்கின்றதா என்ற ஐயப்பாடு உண்டாகின்றது. அற்றைத் தமிழகத்தில் வான் வற்றாத மழையைப் பொழிந்த காரணத்தால் எங்கும் வளமான ஆட்சியைக் காண முடிந்தது. இன்று அதற்கு நேர்மாறாக ஆறுகள் எல்லாம் பாலைவனமாகக் காட்சி அளிக்கின்ற, பழந்தமிழகத்தைப் படித்தும் இற்றைத் தமிழகத்தின் நிலையைக் கண்கூடாகக் கண்டும் அதனை மாற்றி அமைக்க முடியவில்லை. வாழ்ந்த தமிழகம் வீழ்ந்ததன் காரணம் என்ன? ஏன் இந்த நிலை? சிந்தித்துப் பாருங்கள்!

ஆழ்ந்ததொரு சிந்தனைக்குப் பின் இத்தகைய நிலை ஏற்பட்டதன் காரணம் நாட்டில் கல்வி நிலையங்கள் நல்லனவாகக் காட்சி அளிக்காதிருப்பதுதான் என்று நன்கு தெரியும். அறிவியல் வளரத் தொடங்கிற்றே அன்றி, அருளியல் வளரவில்லை. அறிவும் ஆராய்ச்சியும் எந்தவிதப் பயனையும் தர முடியாது. அறிவியலில் அருளியல் கலக்க வேண்டும். அருளியல் கலவாத அறிவியல் அழிவைத்தான் தரும். விவசாய முறையிலும் எத்தனையோ அறிவியல், கலக்கப்பட்டு விட்டது - புகுத்தப்பட்டு விட்டது. எனினும் பழந்தமிழகம் கண்ட விளைச்சல் இல்லை. பழந்தமிழ் உழவர் கையாண்ட- கையாண்டு பலன்கண்ட தழைகளுக்குப் பதில் அமோனியம் சல்பேட் உபயோகப்படுத்தியும், ஜப்பானிய விவசாய முறையைக் கையாண்டும் சமுதாயத்திற்கு வேண்டிய உணவு கிடைத்தபாடில்லை. மக்களின் அறிவு பெருகிற்றே ஒழிய தேவை பூர்த்தியானபாடில்லை. ஆராய்ச்சி பெருகிற்றே ஒழிய அதனால் பலன் ஒன்றுமில்லை.

இன்றைய சமுதாயத்தில் அருளியலைத் தவிர எல்லாம் பெருகின. உடம்பில் உறுப்புக்கள் அனைத்தும் இருந்தும் உயிர் இல்லை என்பது போலத்தான் இருக்கிறது. உயிர் இல்லாத உடம்பினால் என்ன பயன்? அறிவும் ஆராய்ச்சியும் பயன்தர முடியாது. அறிவிற்கு ஒர் எல்லை உண்டு என்பதை யாரும் மறந்து விடக்கூடாது. அருளியல் கலவாத அறிவியல் அழிவைத்தான் தரமுடியும் என்று முன்னர்க் கூறியது எல்லோர் உள்ளத்திலும் அழியாத இடத்தைப் பெறுதல் வேண்டும்.

அன்பியலும் அருளியலும் இல்லாத காரணத்தால் நாடு காலப்போக்கில் வறண்டு பிற்போக்கான நிலைக்கு வந்து விட்டது. அறத்தின் அடிப்படையில் - அன்பின் அடிப்படையில் - அருளியலின் துணைகொண்டு நாட்டிற்கும் நமக்கும் நல்லன காண முடியும். அணுகுண்டு சகாப்தத்தில் அன்பினாலும் பிரார்த்தனையினாலும் இந்தியா சுதந்திரம் பெற்றதை எல்லோரும் கண்கூடாகக் கண்டோம். பழமை அனைத்தும் பொய் என்று கூறுகின்றவர்கள் சற்றுச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். "அணுகுண்டு உலகிலேயே உலகம் எங்கும் ஒரு கொடிகட்டி அரசு செலுத்திய ஆங்கில ஆட்சியாளரிடம் பிரார்த்தனையின் துணை கொண்டு காந்தியடிகள் சுதந்திரம் பெற்றார்” என்ற செய்தியை அடுத்த நூற்றாண்டில் நம்ப முடியாது என்று சொல்லுவார்கள் என்று கருதுகின்றேன்.

கண்கூடாகக் கண்டு பயன் அடைந்த காந்தியத் தத்துவத்தை இன்று மறந்து வாழ்கின்றோம். அதனை இழந்து கொண்டே வருகின்றோம். இந்த நிலையை மாற்றி அமைத்துக் காந்தியடிகள் கண்ட நாடாக இருக்க வேண்டுமானால் அருளியலும் அறிவியலும் ஒருங்கே தரும் கல்வி நிலையங்கள் எங்கும் எழுப்பப் பெறுதல் வேண்டும். அத்தகு கல்வி நிலையங்கள் என்று எழுப்பப்படுகின்றனவோ அன்றுதான் நாம் அண்ணல் காந்தியடிகள் கண்ட இன்பப் பெருநாட்டைக் காண முற்பட்டவர்களாவோம் - அடிகோலியவர்களாவோம். அந்தநாள் தான் தமிழகத்தின் நன்னாளாகும். ஏன்? பொன்னாள் என்று கூடச் சொல்ல வேண்டும்.

கல்வி நிலையங்களில் சமயப் பாடம் கற்பிக்கப் பெறுதல் வேண்டும். சமயம் வளர்ந்தால்தான் சமுதாயம் வளம் பெறும் என்ற உறுதிப்பாடு எல்லோர் உள்ளத்திலும் எழும்ப வேண்டும். இன்றைய இளைஞர்கள்தாம் நாளைய நாட்டின் தலைவர்கள் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது. இன்றைய இளைஞர்கள் தாம் நாளைய தமிழகத்தை - நல்லதொரு நாட்டை - உருவாக்கப் போகின்றவர்கள். அவர்களை நல்லவர்களாக ஆக்கும் பொறுப்பு கல்வி நிலையங்களுக்குத்தான் உண்டு. சமயக் கல்வி இல்லாத கல்வி மக்கட் சமுதாயத்தில் தீமை பெருகவே துணை செய்யும். நம் எண்ணத்தின் எதிரொலியின் வழிதான் நம் வாழ்வு. நாம் நல்லனவற்றை எண்ணினால் நாம் நலமுடன் வாழ முடியும். நமது எதிர்காலச் சமுதாயம் இன்பமுடன் வாழ-வேண்டுமானால் வான் வற்றாத மழையைப் பொழிந்து வளம்பெருகி வாழவேண்டும் என்று ஆசைப்படுவோமானால் 'பகைவனுக்கருள்வாய் நன்நெஞ்சே' என்ற உயரிய கொள்கையைப் பின்பற்றி வாழ்ந்தால்தான் நலம் காண முடியும்.

“இனவெறி மக்கட் சமுதாயத்தைக் கெடுக்கும் நஞ்சு"; “ஒன்றே குலமும், ஒருவனே தேவனும்” என்று உலகிற்கு உணர்த்தியது யார்? தமிழ்நாட்டுச் சமயப் பெரியார்கள்தான். “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்று உலகம் வாழ வேண்டும் என்ற எண்ணத்தை - உயரிய கொள்கையைப் பரப்பியது யார்? தமிழ்நாட்டுச் சமயப் பெரியார்கள்தான் என்றால் யாரும் அதனை மறுக்கவோ மறக்கவோ முடியாது. இன்றல்ல - நேற்றல்ல - மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்த உயரிய கொள்கையைச் சமயம் கண்டது. அன்றைய மக்கட் சமுதாயம் அதன்வழி வாழ்ந்து இன்பம் பெருக்கெடுத்தோடக் கண்டார்கள்.

இன்று நாம் பழமையைப் புறக்கணித்துப் புதுமையை வளர்க்க முற்படுகின்றோம். பழமையின்றிப் புதுமை இயங்க முடியாது. இயங்கினாலும் நல்லதொரு காரியத்தைச் சாதிக்க முடியாது. இதுவரை அப்படிச் சாதித்ததாகத் தெரியவில்லை. சாதித்தவை ஒன்று இரண்டு இருக்குமேயானால் அவை அழிவான முடிவைத்தான் தந்திருக்குமே அல்லாது நல்லனவாக இருக்க முடியாது. புதுமையை வளர்க்கும் காலத்து அதன் தாயகமான பழமையை மறந்து விடக்கூடாது. அதன் துணைகொண்டுதான் புதுமையை வளர்க்க வேண்டும். அதுதான் பயனைத் தரும்.

தமிழ்நாட்டுக் கோயில்களில் பார்ப்பனர்களை வாகனம் தூக்கவும் - தமிழனை நைவேத்திய சாலைகளில் வேலை செய்யவும் சொன்னால் என்ன என்று பகுத்தறிவாளர் பத்திரிகை கேட்கிறது. செய்தால் தவறு ஒன்றுமில்லை. உள்ளம் தூய்மை உடையவனாக ஒழுக்கம் உடையவனாக இருந்தால் ஆண்டவன் முன்னர் வித்தியாசம் கிடையாது. பார்ப்பன அன்பர்களையும் வாகனம் தூக்க முன்வாருங்கள் என்று அழைப்போம். நிச்சயமாக அவர்களும் வருவார்கள். மக்கட் சமுதாயத்தின் நலம் கருதி ஆண்டவனே மண் சுமந்திருக்கும் பொழுது இவர்கள் வாகனம் தூக்க மறுப்பார்களா? ஆனால் இன்னும் ஒரு நூற்றாண்டு கழித்து இதைப்போல மாற்ற உணர்ச்சி வந்தால் திரும்பவும் மாற்றி அமைக்கத்தான் வேண்டும். அடிக்கடி ஏற்படும் மாற்றம் பண்பட்ட அனுபவத்தைக் கெடுத்துவிடும். தொழிலில் உயர்வு தாழ்வு கற்பிப்பது விரும்பத்தக்கதன்று. வீதி கூட்டுகின்ற தோட்டியும் சமுதாயத்தில் ஒத்த உரிமையும் - பெருமையும் பெற்ற தகுதியுடையவனாக இருத்தல் வேண்டும். யார் எத்தொழில் செய்தாலும் அவன் சமுதாயத்தில் பெருமையாகவே நடத்தப் பெறுதல் வேண்டும். தொழில்களும் நடக்க வேண்டும். தொழிலை நோக்காது மனிதனுக்கு மதிப்பு நல்கும் உணர்ச்சி பெருக வேண்டும். தொழில் வளர்ந்தோங்க வேண்டுமேயானால் மனிதன் தொழிலால் மதிப்புக் கருதுவது கூடாது.

இந்தக் காரியத்தை இன்று செய்து செயலிலும் கொண்டு வந்து விடலாம். இன்று இருக்கின்ற கிளர்ச்சி நாளையும் ஏற்படாதா? என்று சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். கடமை வேறு உரிமை வேறு என்பதை உணர்ந்து நாம் எல்லோரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும். இன்றைய சமுதாயத்தில் முக்கியமாக மக்களினத்திற்கு ஒன்றுபட்டு வாழும் உணர்ச்சி வேண்டும். ஒற்றுமையின் பெருமையை விளக்கும் புரட்சிக்கவி பாரதி,

“ஒன்று பட்டால் உண்டு வாழ்வே, நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே"

என்று அழகுபடவும் ஆணித்தரமாகவும் அதே நேரத்தில் கண்ணியமாகவும் எடுத்துக் கூறுகின்றார்.

ஒன்றுபட்டு இயங்குகின்ற நல்ல உள்ளங்கள் இல்லாதவரை நாம் நலங்காண முடியாது. தொழில் துறையில்தான் சமுதாயம் பிரிந்தியங்குகிறது. கடமையை உணர்ந்து நடக்கும் நல்லதொரு பண்பாடு நம்மிடம் வளரவேண்டும். வெறுப்பும் - வெறியும் சமுதாயத்தினின்றும் ஒதுக்கப்பட வேண்டியவை. அன்பும் அருளும்தான் நலம் பயப்பன. அன்றுதொட்டு இன்றுவரை மக்கட் சமுதாயத்தில் அன்பும் அருளுந்தான் நலம் தந்திருக்கின்றன. இதனை அறிவியல் காணவில்லை. அருளே காணும்.

நாய்கள் வாழ்கின்ற வாழ்க்கை வெறிவாழ்க்கை, காக்கைக் கூட்டங்கள் வாழ்கின்ற வாழ்வு அன்பு வாழ்வு - கூட்டுறவு வாழ்வு. மனித சமுதாயமும் அத்தகைய வாழ்க்கையையே மேற்கொள்ள வேண்டும். இத்தகு உயரிய பண்பாட்டைப் பின்பற்றிச் சமுதாயத்தைக் காப்போம். அந்த உயரிய கொள்கையை ஒவ்வொருவரும் உறுதிப்பாடாக எடுத்துக் கொள்ளல் வேண்டும்.

அன்று காந்திஅடிகள் அருள் நெறியின் அடிப்படையில் அரசியல் புரட்சியை நடத்தி வெற்றி பெற்றார். இன்று வினோபாஜி அருள்நெறியின் அடிப்படையில் பொருளாதாரப் புரட்சி செய்து வருகின்றார். சமுதாயத்தின் தேவை அனைத்தும் அருள்நெறியின் அடிப்படையில் சரிசெய்ய முடியும். இந்தத் தத்துவம் உலகப் பெருமக்கள் கண்ட முடிவு. துன்பமும் தொல்லையும் வருவது உலக இயற்கை. அதற்காக நாம் மனந்தளரக்கூடாது. "துன்பத்தைக் கண்டு அஞ்சுபவன் மனிதனல்லன்” என்கிறார் சுவாமி விவேகாநந்தர். அருள்நெறி காட்டும் பாதையைப் பின்பற்றி வாழ்ந்தால் எல்லாம் இன்பமாக முடியும். இந்த எண்ணம் எல்லோர் உள்ளத்திலும் குடிகொள்ள வேண்டும். இதனைத் துணையாகக் கொண்டு உழைக்க முற்பட்டால் ஆண்டவன் நமக்கு நிச்சயமாக வெற்றியைத் தருவான். "கடவுளை நம்பினோர் கைவிடப்படார்” என்ற பழந்தமிழ்ப் பழமொழியும் உண்டு. “அவனன்றி ஒர் அணுவும் அசையாது” என்பதும் எல்லோரும் படித்த ஒன்றேதான். நாம் நம்பிக்கையுடன் அவன்தாள் பணிந்து வாழ்த்தி வணங்கி வழிபட்டால் அவன் நிச்சயமாக நமக்கு உதவி புரிவான் என்பதில் சந்தேகம் இல்லை.

சந்தேகம் இன்றி வாழ்வதுதான் மனித வாழ்வு. "சந்தேகம் மனிதர்களுடன் பிறந்த ஒரு தொற்றுநோய். சந்தேகம் தங்குகின்ற நெஞ்சு தவறுடை நெஞ்சு" என்று ஒரு மேல்நாட்டு அறிஞன் கூறுகின்றான். ஆதலால் நாம் நமது வாழ்க்கையில் சந்தேகத்திற்கு இடங்கொடுத்தல் கூடாது. சந்தேகத்திற்கு நாம் இடங்கொடுத்தால் நாம் முன்னேற முடியாது. அதனின்றும் தப்பி வாழ வழியும் கிடையாது.

கடவுள் நெறி வாழ்க என்பது நாம் வாழத்தான் என்பதை எல்லோரும் நன்கு உணர வேண்டும். வெள்ளம் ஆற்றில் சென்றாலும் அது தானாக நம்முடைய வீட்டிற்கு வாராது. அன்பான கடவுள் எங்கும் பரந்து இருப்பினும் நாம் உள்ளத் தூய்மையுடன் அவன்தாள் பணிந்து வழிபட்டாலன்றி அவனருள் கிடைக்காது.

கடவுள் வழிபாடு எப்பொழுது தோன்றியது? ஏன் தோன்றியது? என்ற வினாக்களைக் கண்டு, அதற்கு அறிவின் துணைகொண்டு - அருளின் துணை கொண்டு விடையைக் காணுங்கள். நீங்கள் காணுகின்ற முடிவு அறிஞர் பெருமக்களும், அறிவுடைப் பெருமக்களும் ஒப்பத்தக்கதாக இருக்க வேண்டும். அந்த ஒப்பற்ற முடிவில் உயரிய கருத்துக்கள் இருப்பதால் கடவுள் வழிபாடு தோன்றிய காலமும் காரணமும் நன்கு தெரியவரும். காலமும் காரணமும் கண்டபின்னர் எவரும் அதனைப் பற்றித் தவறாகக் கருத முடியாது. தவறாகக் கருதுகின்ற தோழர்கள் திருந்திவாழ வழி கிடையாது.

“மனிதன் இயற்கையை வென்று விட்டான்” என்று கூறுவது சரியன்று. மனிதன் இயற்கையை வென்று விடவில்லை. அவன் இயற்கையைக் கண்டு மகிழ்ந்து அதை அனுபவிக்கின்றான். இயற்கையின் அடிப்படையில் வாழ்கின்றான். உலகம் ஆண்டவனின் திருமேனி அந்தத் திருமேனியின் முழுஉருவத்தையும் கண்டு அனுபவித்தது யார்? உலகம் கண்ட நாள்முதல் இதுவரை அவனுடைய திருமேனியைக் கண்டு அனுபவித்தவர்கள் எங்கும் எவரும் கிடையாது. டென்சிங் இயற்கையை வென்றான் என்றால் அவன் பிறிதொரு இமயத்தை உண்டாக்கியிருக்க வேண்டும். அப்படி உண்டாக்கியிருந்தால் அவன் இயற்கையை வென்றவன் என்பதை அறிஞர் உலகமும் - அருளியல் உலகமும் ஒப்பும். டென்சிங் இயற்கையை வென்றான் என்பதைவிட இயற்கையை அனுபவித்தான் - அறிவித்தான் என்று கூறுவதுதான் பொருந்தும்.

மனிதன் ஒரு அறிவுப் பிண்டமே அன்றி அருளியல் பிண்டமல்லன். அறிவின் துணைகொண்டோ - ஆராய்ச்சியின் துணை கொண்டோ - உரிமையின் துணைகொண்டோ இந்த உலகம் எந்தக் காரியத்தையும் சாதித்து விடமுடியாது. இதுவரை அப்படிச் சாதித்ததாகத் தெரியவில்லை. அப்படி ஒன்று - இரண்டு இருக்குமேயானால் அதன் முடிவு அழிவாக இருக்கமுடியுமே அல்லாது நல்லதாக இருக்கமுடியாது. இது உலகம் காட்டும் உண்மை. ஒருகாரியத்தைச் சாதித்து நன்மையாக முடிக்க வேண்டுமேயானால் அருளியலின் துணை வேண்டும். அறிவியலில் அருளியல் கலக்க வேண்டும்.

மனிதன் இயற்கையை ஒட்டித்தான் வாழ்கின்றான். செயற்கையில் இயந்திரத்தின் உதவிகொண்டு மழையைப் பெய்விக்கலாம் என்பது ஒரிரு இடங்களில்தான் முடிகின்றது. ஆண்டவனின் நியதிப்படி உலகம் முமுவதும் செய்ய முடியவில்லை. இயந்திரத்தின் உதவிகொண்டு செய்வதும் இயற்கையின் நியதியை ஒட்டித்தான் செய்ய முடிகின்றதே அன்றி மனிதனின் அறிவு தானாக ஒன்றைச் செய்யவில்லை. நியூட்டன் ஆகர்ஷண சக்தியைக் கண்டான் என்றால் அதுவும் இயற்கையின் நியதியை ஒட்டித்தான் என்பதை யாரும் மறுக்கவும்-மறக்கவும் முடியாது. இயற்கையின் நியதிகளுள் ஒன்றான ஆகர்ஷண சக்திக்கு நியூட்டனின் அறிவு பெயர் கொடுத்தது. நியூட்டனின் அறிவு புதிதாக ஒன்றைக் கண்டுபிடித்ததில்லை.

கடவுள் நெறியை ஒதுக்கி - அருள்நெறியை அகற்றி மனிதன் வாழலாம். எப்பொழுது என்றால் மனிதனின் அறிவு உயிருள்ள ஒன்றை உண்டாக்கினால்தான். அப்படி இல்லாது போனால் மனிதன் இயற்கைக்குக் கட்டுப்பட்டான் என்பதை எல்லோரும் உணர வேண்டும். அறிவுக்கு ஒர் எல்லையுண்டு. அது எல்லையைக் கடக்குமானால் அழிவுப்பாதையில்தான் கொண்டுபோய் முடிக்கும். ஒன்றின் கழிவை, ஒன்றின் உணவாக்கியவன் ஆண்டவன். எல்லாம் ஒரே நியதியில் இருந்தால் உலகம் எப்படி வாழ முடியும்? ஆதலால்தான் ஆண்டவன் கூட்டுறவு வாழ்வை அமைத்துக் கொடுத்தான்.

மனிதனால் - மனிதனின் அறிவால் - ஆராய்ச்சியால் செய்யமுடியாத ஒன்றைச் செய்யும் ஆற்றல் அருளியலுக்குத்தான் உண்டு. அந்த அருளியலின் திறமையைக்கான வேண்டுமானால் திருவுருவங்களை வாழ்த்தி வணங்கி வழிபட வேண்டும். நமக்கு அப்பாற்பட்ட கடவுளைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை என்று சிலர் கூறுகின்றார்கள். அவனைப் பற்றிக் கவலைப்படாமலிருக்க முடியுமா? கவலைப்படாமலிருப்பது நன்றி மறந்த செயலாகும். மனித உணர்ச்சி இருக்குமானால் அருளியலைக் கண்டு வணங்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். அவனைக் கண்டவர்கள் - அவனது நியதியை அறிந்தவர்கள் அவன் மறுக்கக் கூடிய பொருள் அல்லன் என்பதை நன்குணர்வார்கள். அவனை மறக்காமலிருப்பது மனிதனின் கடமை. ஏ! மனிதனே, உனக்கு வேண்டிய அனைத்தும் ஆக்கித்தந்த கடவுளுக்கு நீ நன்றி செலுத்தக் கடமைப்பட்டவன் என்பதை மறவாதே.

“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு”

என்ற குறளை நினைவுறுத்திக் கொள்வாயாக. நன்றியை மறவாதே! மறந்தால் வாழ்வு இல்லை என்பன ஆன்றோர் அருள்மொழிகள், உலகமே தலைகீழாக மாறினாலும் ஒருவன் செய்த நன்றியை மறவக்கூடாது. நன்றியை மறந்து வாழ்பவன் மனித உருவில் வாழ்கின்ற மற்றொன்று தான் கண்ட கடவுளை ஒன்றில் கண்டு மகிழ்ந்து , வாழ்த்தி, வணங்கி வழிபட்டு நின்று நன்றி செலுத்த நினைத்தான் பழங்காலத் தமிழன். இது அறிவியல் கூறவில்லை; அருளியல் கூறுகின்றது. பரிபூரணமாகப் பயன்தர உருவகத்தை உண்டு பண்ணினான். கோவில்களில் இருக்கின்ற காணப்படுகின்ற அனைத்தும் விஞ்ஞானத்தைக் காட்டுகின்றன.

மனித சமுதாயம் கடவுளைக் காண வேண்டுமேயானால் மக்களினத்திற்கு அருளியல் கலந்த அறிவியல் வேண்டும். கடவுளைக் கல்லில் கண்டு வணங்க மறுக்கின்றவர்கள் ஒரு கொடிக்கு மதிப்புக் கொடுத்து வணக்கம் செலுத்துகின்றார்கள். அதனை ஒப்புக்கொள்ளும் அவர்கள், உலகம் கண்ட முழுமுதற் கடவுளை உருவங்களில் கண்டு வணங்குவதை மறுக்கின்றனர். சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்! அப்பொழுதுதான் எது பகுத்தறிவு? எது பைத்தியக்காரத்தனம்? என்பது நன்கு தெரியும். அரிச்சுவடி படிக்காதவரிடம் வித்வான் படிப்பைப் பற்றிக் கூறினால் என்ன தெரியும்?

அதனைப் போலவேதான் அருளியல் கலவாத வெறும் அறிவியற் பிண்டமானவர்களின் கடவுட் கொள்கையைப் பற்றிக் கூறுவதுமாகும். இந்த உலகில் ஒரே கடவுள்தான் உண்டு. சமயப் பெரியவர்கள் காலத்திற்கும், கருத்திற்கும், சூழ்நிலைக்கும் ஏற்ப வெவ்வேறு பெயர் கொடுத்து அதன் வழியில் மக்களைப் பழக்கி நல்வழியில் இட்டுச் செல்கின்றார்கள். உடல் வியாதிக்கு ஏற்ப மருந்துகளைக் கொடுத்து வியாதியைப் போக்க கடவுள் நெறியென்னும் மருந்தைப் பல்வேறு பெயர்களால் பயன்படுத்தினார்கள் சமயப் பெரியார்கள்.

அறம் மக்களிடம் குடிகொள்ள வேண்டும் என்ற காரணத்தால் தென்முகக் கடவுளைக் காட்டினார்கள். மக்கட் சமுதாயத்திற்கு வீரத்தை முருகக்கடவுள் மூலம் உணர்த்தினார்கள். தடையற்ற நல்வாழ்வு வேண்டுமானால் விநாயக மூர்த்தியை வழிபடு என்று கூறினார்கள். இன்பமும் துன்பமும் இன்றி நடுநிலை வேண்டுமானால் சிவபெருமானை வழிபடு என்றார்கள். எல்லோரிடத்தும் அன்பாக இருக்கவேண்டும் என்பதற்காக அன்பின் உருவமான அம்மையைக் காட்டினார்கள். மக்கள் உள்ளத்தில் நல்லனவற்றைக் கற்பிக்கப் பல்வேறுபட்ட உருவங்களை உண்டாக்கினார்கள். மனிதனின் அறிவுதான் தனது உபயோகத்திற்கு ஏற்றவாறு கடவுளுக்குப் பெயர் கொடுத்தது. இதனைத்தான், மாணிக்கவாசகர் “ஒரு நாமம் ஒர் உருவம் ஒன்றுமில்லார்க்கு” என்று பாடியருளினார். சமயம் அப்பழுக்கில்லாதது. தீமையும் பொய்மையும் இல்லாத ஒன்று எது . என்றால் அது "சமயம்" தவிர வேறு இல்லை. அது சமயப் பெரியோர்களால் அன்பின் உருவமான அடியவர்களால் - பணிமேற்கொண்ட தொண்டர் குழாத்தால் உருவாக்கப்பட்டது. அது பலருக்குச் சொந்தமானது. ஒரு சாராருக்கென்று கருதுவது சரியன்று.

சமயக் கொள்கைகள் பெட்டியினுள் அடைக்கப்பட்டிருந்தால் மக்களுக்கோ அவர்கள் வாழ்கின்ற அவர்கள் வாழ்கின்ற நாட்டிற்கோ பயன்தர முடியாது, அவற்றால் நாடும் மக்களும் பயன்பெற வேண்டுமேயானால் சமயக் கொள்கைகளை ஒரு இலட்சியத்தின் அடிப்படையில் நின்று உலக மக்களுக்கு எடுத்துக்கூற வேண்டும். ஒவ்வொரு மனிதனுக்கும் கொள்கையும் லட்சியமும் மிக மிக முக்கியம் என்பதை எல்லோரும் உணர வேண்டும். நம்முடைய கொள்கைகள் எல்லாம் அன்பின் அடிப்படையில்-அறத்தின் அடிப்படையில் பரவவேண்டும்.அந்தக் கொள்கைகளைப் பரப்புகின்ற தொண்டர்களும் தலைவர்களும் அன்பின் உருவமாகத்தான் மக்களிடங் கலந்து உறவாட வேண்டும்.

நம்முடைய வழிபாடு நெஞ்சம் கலந்த வழிபாடாக இருக்க வேண்டும். நம்முடைய இருதயம் பரிசுத்தமானதாக இருந்தால்தான்் ஆண்டவன் நமக்குக் காட்சி கொடுப்பான். நமது இருதயம் பரிசுத்தமாக இருந்தாலன்றி ஆண்டவனின் காதுகள் செவிடாக மாட்டா. பிரார்த்தனைதான் நம்மை எல்லாம் வாழ்விக்கும். இது வரலாற்றின் தத்துவம். நாம் எல்லோரும் பிரார்த்தனையைப் பின்பற்றி வாழ்வோமாக.

இளம் உள்ளங்கள் என்றென்றும் நல்லனவற்றைப் படித்துக் கேட்டு மகிழ்ந்தால்தான் தூய உள்ளமுடையவர்களாக வாழ முடியும். வருங்காலத் தமிழகத்தை உருவாக்கப் போகின்ற பொறுப்பும் கடமையும் உள்ள இளம் உள்ளங்கள் சமயத்தின் அடிப்படையில் வாழ வேண்டும். சமயம் வாழ்ந்தால்தான் மக்கட் சமுதாயமும், நாடு - நகரங்களும் நலங்காண முடியும். துள்ளித் திரிகின்ற பருவத்தில் கேட்கின்ற - படிக்கின்ற அனைத்தையும் அள்ளிப் பருகுகின்ற உள்ளம் படைத்த நீங்கள் நல்லனவற்றையே கேட்க வேண்டும். நாளைய சமுதாயத்தை உருவாக்கப் போகின்ற நீங்கள் நல்ல முறையில் பழக்கப் பெற வேண்டும். நீங்கள் எல்லோரும் எக்காலத்தும் உங்களது வருமானத்தை அறிந்து செலவு செய்தல் வேண்டும். எல்லோரும் தங்களது வருமானத்தில் சேமிப்பு நிதி என்று சிறிதளவு ஒதுக்கி வாழ்ந்தால்தான் நலம். அத்தகு வாழ்வினை வாழ நாம் எல்லோரும் கற்றுக் கொள்ள வேண்டும். மக்கள் எல்லோரும் ஒன்றுபட்டு நன்முறையில் வாழ வேண்டும்.

அண்ணல் காந்தி அடிகள் ஹரிஜன சேரியை - தாழ்த்தப்பட்ட மக்களின் காலணியைத் திருத்தப் பாடுபட்டார். அண்ணல் காந்தி அடிகள் செய்த அந்த அரும்பெரும் பணியை மேற்கொண்டு நடத்தி வெற்றி காணவேண்டியது நமது தலையாய கடமையாகும். எந்தக் காரியத்தையும் நீங்களாகச் செய்து முடித்து வெற்றியைத் கண்டு அதன் பயனை உலகம் பெற்றுவாழ ஒற்றுமை அவசியம் என்பதை எல்லோர்க்கும் உணர்த்தி ஒற்றுமையை வளர்க்கப் பாடுபட வேண்டும். ஒற்றுமை இல்லாத நாடு எக்காலத்தும் முன்னேற்றம் காண முடியாது. கூட்டுறவு வாழ்வு வெற்றியைத் தரப் பிரார்த்தனையின் உதவியை நாடுங்கள். அது நிச்சயமாக வெற்றியைத் தரும். அதற்கு ஆண்டவன் நிச்சயமாகத் துணை செய்வான் என்று நம்புங்கள். அந்த நம்பிக்கைதான் நம்மையும்- நானிலத்தையும் வாழ்விக்கும்.

அண்ணல் காந்தி அடிகள் காட்டிய-கையாண்ட நூற்புப் பயிற்சி ஒவ்வொரு மனிதனின் சுயதேவையையும் பூர்த்தி செய்கிறது. வேலையில்லாத் திண்டாட்டத்தை அகற்றி உடலுக்கும் உயிருக்கும் வழிகாட்டுகிறது. உடலுக்கு உணவு வேண்டியது போலத்தான் உயிருக்கும் பிரார்த்தனை வேண்டும் என்பதை அண்ணல் காந்தி அடிகள் நமக்கு நன்கு போதிக்கின்றார். அண்ணலின் வாழ்வினைப் பின்பற்றி வாழ்ந்து அவர்கள் கையாண்ட பிரார்த்தனையை வளம்பெறச் செய்ய வேண்டியது நமது கடமையாகும். நூற்பில் கவனம் இருப்பதால் சிந்தனை ஒருநிலைப்பட்டதாக இருக்கிறது. சமயப் பெரியார் - சமூகப் பெரியார்களின் பெயரால் ஆங்காங்கு இயங்குகின்ற கழகங்கள் அனைத்தும் ஒன்றுபட்டு நாட்டின் நலம் கருதி நாட்டு மக்களின் நலம் கருதி- சமய வளர்ச்சி குறித்துத் தொண்டாற்ற வேண்டும்.

ஒர் இலட்சியத்தை நாடிச் சென்று பணியாற்றும் நாம் எல்லோரும் தனித்துத் தனித்து நின்று செயலாற்றுகின்ற காரணத்தால் நமது செயல்கள் எல்லாம் பிரிவுபட்டுப் போகின்றன. ஆதலால்தான் குறிப்பிட்டவெற்றியைக் காண முடியவில்லை.நல்ல வெற்றியைக் காண வேண்டுமானால் நம்முள் ஒற்றுமை வேண்டும். சமயத் தொண்டு வீடுகளில் இருந்து கிளம்பி எங்கும் பரவிப் பணியாற்ற வேண்டும். சிறுகச் சிறுகச் சேர்க்கின்ற பண்பை நாமும் மறக்கத் தலைப்பட்டோம். சமுதாயமும் மறந்தது. இந்த உயரிய கொள்கையை உலகிற்கு உணர்த்தியது சமயப் பெரியார்தான். அதனைப் பின்பற்றி பிடி அரிசித் தொண்டை மேற்கொண்டு சமுதாய நலத்திட்டத்தைப் பின்பற்றி பிரார்த்தனையின் வழிநின்று அருள்நெறியின் துணைகொண்டு வாழ்வோமாக.

கலை வேறு கடவுள் வேறு அல்ல. கலை கலைக்காகவும் அல்ல, கலை வாழ்க்கைக்காகத்தான். கலை வேறு கடவுள் வேறு என்று என்றும் இருந்ததில்லை. இன்றும் இல்லை. நாளையும் இருக்க முடியாது. தமிழ்மொழியைப் பழமை என்று கருதுவதுபோல கலையும் பழமைதான் என்பதை யாரும் மறக்கவோ - மறுக்கவோ முடியாது. பரந்து கிடக்கின்ற மக்கள் வாழ்க்கையிலும் கலை உண்டு.

இன்று கலை பொழுதுபோக்காக வந்துவிட்ட காரணத்தால் நாம் கலையை அனுபவிக்கின்ற உணர்ச்சியை இழந்து விட்டோம். கலை கலைக்காகத்தான் என்று மேல்நாட்டு அறிஞன் கூறினான். அவனது சொல் தமிழர்களது கலையின்முன் ஆட்டம் கண்டுவிட்டது. சிற்பத்தைச் சிற்பம் என்று கருதியது மேல்நாடு. சிற்பத்துடன் கலந்து வாழ்க்கையை நடத்தியது தமிழ்நாடு. இதனை உணர்த்துவதுதான் உருவ வழிபாடு, திருக்கோவில்களில்தான் கலையும் - இசையும் ஒன்றுபட்டு வளர்ந்தன. சிற்ப விழாவிற்கு எதுவும் இணையில்லை என்பதை திருக்கோயில்களில் காணப்படும் சிற்பங்கள் நமக்கு உணர்த்துகின்றன. கலை தமிழ்நாட்டில்தான் தோன்றியது - வளர்ந்தது - வளம்பெற்றது என்பதையும் அவை நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.

நாம் புதிதாகக் கலையை உண்டாக்க வேண்டியதில்லை. இருக்கின்ற கலையைக் காப்பதுதான் நமது கடமை. சமயத்தின் அடிப்படையில் எழுந்தது கலை. கலையுடன் வாழ்ந்தனர் அன்றைய தமிழர். அவர்களின் வாழ்வைப் பின்பற்றி வாழ்ந்தால்தான் பண்டைய நாகரிகத்தைக் காக்க முடியும். நமது முன்னோர்களின் வாழ்வும் தாழ்வும் கலையில்தான் இருந்தன. நன்றாகக் கலைக்கண் கொண்டு உருவாக்கப்பட்ட சிற்பத்தில் கடவுளைக் கண்டனர். கலையை வாழ்க்கையில் கண்ட தமிழினம் கடவுள் நெறியில் வாழ்ந்து கலையைக் காக்க வேண்டுமேயானால் பழம்பெரும் மன்னர்களால் எழுப்பப்பெற்ற திருக்கோயில்களில் இருக்கின்ற காணப்படுகின்ற சிற்பங்களையும் சித்திரங்களையும் காக்க வேண்டும்.

கலை இரண்டு விதம். கலையில் அழகை மட்டும் காண்பது ஒருவிதம், அழகுடன் இன்பமும் பயனும் பெறுவது ஒருவிதம். கலை பொழுது போக்கிற்கல்ல; வாழ்விற்குத்தான். அவர்கள் வாழ்த்தியதும் - வணங்கி வழிபட்டதும் கலையில் கண்ட கடவுளைத்தான். நாம் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையையும் மறந்தோம் - அவர்கள் வாழ்த்திய வணங்கிய கடவுளையும் மறக்கத் தலைப்பட்டோம் அதனால் வாழ்வும் இழந்தோம். இன்னும் எஞ்சி இருக்கின்ற பண்பாட்டையும் இழந்து கொண்டே வருகின்றோம். மொழி - கலை - எல்லை - நாகரிகம் - பண்பாடு - அனைத்திலும் பின்னேதான் நிற்கின்றோம். அத்தகு நிலையை மாற்றி அமைக்க வேண்டுமானால் நமது முன்னோர்கள் வாழ்ந்த நெறியில் நின்று கடவுளை வழிபட்டுக் கலையைக் காக்க வேண்டும்.

இந்த முயற்சியின் சின்னம்தான் தமிழ்நாடு அருள்நெறித் திருக்கூட்டம், திருக்கூட்டத்தின் அருள் முழக்கம் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் கேட்கிறது. நூற்றுக்கணக்கான அன்பர்கள் தம்மையும் தம் வாழ்வையும் மறந்து இத்திருத்தொண்டில் ஈடுபட்டிருக்கின்றனர். அவர்களுக்கு நம் இதயங்கலந்த வாழ்த்து. இது நன்முறையில் வளர்ந்து தமிழ்நாட்டின் நலங்கருதித் தொண்டாற்றும் என்ற நம்பிக்கை நமக்கு உண்டு. இன்றைய சூழ்நிலையில் தமிழ்நாடு அருள்நெறித் திருக்கூட்டம் மேற்கொண்டிருக்கிற பெரும் பணிகளுக்கு, சமய வாழ்வு கருதித் தொண்டாற்றும் கழகங்களும் பக்கபலமாக இருந்து வருகின்றன. தொண்டர் குலம் அனைத்தும் ஒன்று என்ற உண்மையை அருள்நெறித் திருக்கூட்டமும், அதனுடன் இணைந்து நின்று தொண்டாற்றுகின்ற கழகங்களும் மெய்ப்பித்து வருகின்றன. இத்தகு பேரன்பு படைத்த கழகங்களுக்கு நமது உளங்கலந்த வாழ்த்து. மீண்டும் ஒருமுறை சமயவாழ்வுடையார் அனைவரும் ஒன்றுபட்டுத் திருத்தொண்டின் நெறி பேணி வளர்க்கத் துணைசெய்யும் வண்ணம் எல்லாம்வல்ல இறைவனை வாழ்த்தி வணங்கி வழிபட்டு நிற்கின்றோம். அவனது இணையடிகளை நோக்கி இதயம் கலந்த பிரார்த்தனையைச் செய்கின்றோம். அன்பர்களது அன்பு பொருந்திய ஆர்வம் நிறைந்த ஒத்துழைப்பை வேண்டி நிற்கின்றோம். பணியைத் தலைமேற்கொண்டு தொண்டு செய்யும் தொண்டர்களுக்கு எமது உளம் கலந்த நன்றியும் வாழ்த்தும்.

வாழ்க தமிழ்!
வளர்க அருள்நெறி!
“என்றும் வேண்டும் இன்ப அன்பு”

தூத்துக்குடியில் தவத்திரு அடிகளார் ஆற்றிய உரை
-------------------

3. பிரார்த்தனை என்னும் மருந்து

சந்தேகம் மனிதர்களின் நேரிடையான சத்துரு. அது நம்முடன் உடன்பிறந்த ஒரு தொற்றுநோய். அதற்கு நாம் எளிதில் ஆளாகி விடுகின்றோம். சந்தேகம் என்ற ஒன்றினையே நாம் நம் வாழ்நாளில் காணாது வாழ முயற்சிக்க வேண்டும். அது நம் வாழ்வில் நம்மை அறிந்தும் அறியாமலும் இடம் பெற்று விடுகின்றது.

சந்தேகம் உண்டாவதனால் விளைகின்ற தீமைகள் பலப்பல. அதனை மக்கட் சமுதாயம் உணருவதில்லை. சந்தேக எண்ணம் கொண்டவர்கள் - புரிந்து கொள்ளாமல் சந்தேகத்திற்கு ஆளாகின்றவர்கள் - பிறப்பாலேயே சந்தேகப் பிராணியாகத் தோன்றி வாழ்கின்ற அன்பர்கள் செய்கின்ற செய்ய முனைகின்ற பேசுகின்ற- எழுதுகின்ற காரியங்கள் அனைத்தும் நாட்டில் எவ்வளவு தீமையை விளைவிக்கின்றன என்பதை அவர்கள் எள்ளளவும் சிந்தித்துப் பார்ப்பதில்லை. அவர்கள் செய்ய முனைந்திருக்கின்ற -செய்கின்ற காரியம் நாட்டின் போக்கை சீர்கேடான நிலைக்குக் கொண்டு வந்து விட்டுவிட்டது.

கடவுளும்-அதன்பாதையும் - அருள்நெறியும் அதுகாட்டும் வழியும் - அன்பும் - அதனால் உண்டாகும் நன்மைகளும் நல்லனதாம். அவைகளைப் பற்றிய உண்மைக் கருத்துக்களை இன்றைய உலகில் அருளுடைப் பெருமக்களும், நாட்டில் வாழ்கின்ற நல்லன்பர்களும், அறநெறிச் செல்வர்களும் நன்கு உணர்ந்திருப்பர் என்பதில் சந்தேகமில்லை.

கடவுள்நெறி போன்றவற்றைத் தெரிந்து கொள்ளாத மக்கள் செய்கின்ற காரியங்கள் பேசுகின்ற பேச்சுக்கள் அனைத்தும் எத்தகைய முறையில் இருக்கின்றன என்பதும் அன்பர்கள் அனைவரும் அறிந்த ஒன்றுதான். அதனைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியவர்கள் அவைகளைச் சந்தேகக் கண்கொண்டு பார்க்கின்ற காரணத்தால் அவர்களுக்கு அதனைப்புரிந்து கொள்ளும் திறனும்-அறிவும்-போக்கும் கிடையாது. உண்மையான அறிவுக்கண்கொண்டு-மாற்றுக் கருத்துக்களை அகற்றி மனம் அனைத்தும் ஒரு திறனாய்ப் பண்டைய இலக்கியங்களைப் படித்துணர்ந்தால் இலக்கியங்களில் பொதிந்து கிடக்கின்ற கடவுட் கொள்கைகள் - சொல்லோவியங்கள் - பெருமக்களின் வாழ்க்கை வரலாறுகள் நமக்குத் தெள்ளெனப் புலனாகும்.

நாம் எந்தத் துறையில் அறிவைச் செலுத்துகின்றோமோ அத்துறையில்தான் நமக்குக் காட்சி தர முடியுமே அல்லாது வேற்றுத்துறையில் காட்சிதர முடியாது. மனம் போல வாழ்வு என்பதனைக் கொண்டு ஒருவனின் வாழ்வை நிர்ணயித்தார்கள் நமது பெருமக்கள். இன்றைய உலகில் இந்த இருபதாம் நூற்றாண்டிலே மனிதனின் அறிவு பல்வேறுபட்ட போர்வைகளைப் போர்த்திக்கொண்டு செல்லாநின்ற நிலை விபரீதமாகவும் - விசித்திரமாகவும் இருக்கின்றது.

இத்தகு காலத்திலும் இங்குக் கூடியிருக்கின்ற மாபெருங்கூட்டம், தமிழ்நாடும் - தமிழ்நாட்டு மக்களும் தமிழ்நாட்டுப் பண்பாட்டை, கலாசாரத்தை - தமிழர்களின் நாகரீகத்தை - குறிப்பாகச் சொல்லப் போனால் தமிழ் இலக்கியப் பற்றை இன்னும் இழக்கவில்லை என்பதை நன்கு எடுத்துக்காட்டுகின்றது.

வரலாற்று ஏடுகளிலே இடம்பெற்ற இந்த இருபதாம் நூற்றாண்டிலே மனிதன் அதனை மறந்தோ - ஒதுக்கியோ தனிஇடம் கொடுத்தோ வாழ முடியாது. வாழ முற்பட்டாலும் அவனுக்கு வாழ்வதற்குத் தகுந்ததோர் வழி கிடைக்காது என்று உறுதியாகக் கூறலாம். விஞ்ஞானம் - அணுகுண்டு - அறப்போர். போர் - அஹிம்சை - அன்பு அறம் - பொருள் - பிரார்த்தனை - படஉலகம் - மேடைப்பேச்சு சமயப் பெரியார்களின் தொண்டுள்ளம் - தியாகிகளின் சேவை அனைத்திலும் இந்த இருபதாம் நூற்றாண்டு மிக மிக முக்கியத்துவம் பெற்று விட்டது என்பதை எவரும் நன்குணர்வர். மனித சமுதாய வாழ்விற்கு வேண்டிய அனைத்திலும் முக்கியத்துவம் தகுதியான இடம்பெற்ற இந்த இருபதாம் நூற்றாண்டினை எப்படி நாம் ஒதுக்கி வாழ முடியும்?

மனிதர்களின் கருத்தும் - சிந்தனையும் நாட்டை வாழ்விக்க முடியாது. காலமும் கருத்தும் சிந்தனையும் நாட்டை நல்ல நிலைமையில் இட்டுச் செல்லும் என்று மக்கட் சமுதாயம் கருதுவது சரியன்று. காலமும் - கருத்தும் - சிந்தனையும் செயலும் ஒத்து நின்று இயங்கினால் ஓரளவுதான் பயனைத் தர முடியும். இவை அனைத்தும் நாட்டிற்கும் நமக்கும் பயனைத் தர வேண்டுமேயானால், அருளியல் கலவாத எதுவும் பயனைத் தர முடியும் என்று எதிர்பார்த்துச் செயல் செய்ய முனைதல் முடிவில் ஏமாற்றத்தைத் தான் தரும் என்பதை மக்கட் சமுதாயம் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். அருளியல் கலவாத அறிவு அழிவைத்தான் தரும்.

மதம் நாட்டின் நச்சுக்கோப்பை - அது வேண்டாத ஒன்று என்று கூறுவதன் காரணம் என்ன? மதம் எதற்காக ஏற்படுத்தப்பட்டது? அது எப்பொழுது தோன்றியது? என்ற பல கேள்விகளை எழுப்பி நன்கு சிந்தித்துப் பார்த்துப் பின்னர் முடிவுக்கு வாருங்கள். நீங்கள், காணுகின்ற நல்லதொரு முடிவு உங்களுக்கு விடையைத் தரும் என்பதில் சந்தேகமில்லை.

தமிழ் வாழ்க! தமிழ் வாழ்க! என்று கூறுகின்றவர்கள் இடித்தலையும், எரித்தலையும்.துணையாகக் கொண்டிருந்தால் அவர்கள் எடுத்திருக்கின்ற குறிக்கோள் செய்ய முனைந்திருக்கின்ற காரியங்கள் - அவர்களின் இலட்சியத்தில் எழுப்பப்பட்ட கொள்கைகள் அனைத்தும் எவ்விதம் நன்மையாக முடியும்? நன்மையாக முடியும் என்று எதிர்பார்த்து இத்தகு காரியங்களில் ஈடுபட்டிருப்பதும் தவறுடையது என்பதை நம்முடைய மதிப்பிற்குரிய தோழர்கள் மறந்துவிடக் கூடாது.

இடித்தலும், எரித்தலும், உடைத்தலும், அழித்தலும் எந்தக் காரியத்தையும் சாதித்து விட முடியாது. நாட்டின் நன்மையைக் கருதித் தொண்டில் ஈடுபடுகின்ற அன்பர்கள் எக்காலத்தும் எந்தவிதக் காரணத்தைக் கொண்டும் தீய செயல்கள் செய்ய முனைதல் கூடாது. ஏன்? சிந்தனையில் - கருத்தில் கூட தீய கருத்துக்கள் தோன்றக் கூடாது. நமது எண்ணத்தின் எதிரொலிதான் நம் வாழ்வில் பிரதி பலிக்கும். எண்ணம்தான் சிந்தனையாக மாறும் -சிந்தனை உருப்பெற்ற பின் செயலில் உருவெடுக்கின்றது. ஆதலால் நாம் எந்தக் காரணத்தைக் கொண்டும் நம் மனதில் தீய கருத்துக்களுக்கு இடம் கொடுத்தல் கூடாது. பகைவர்களிடம் அன்பு சொரியும் பண்பாட்டுடன் நடந்துகொள்ளும் உளப் பண்பு நன்றாக வளரவேண்டும்.

ஒரு நாட்டின் நாகரிகம் - கலாசாரம் - பண்பாடு - வளம் - மொழி - நாகரீகம் முதலியவற்றை அந்நாட்டின் இலக்கியங்களின் மூலந்தான் தெரிந்து கொள்ள முடியும். உண்மையான இலக்கியங்கள்தான் அந்நாட்டின் படப்பிடிப்பு. நம் நாட்டு இலக்கியங்கள் பாதுகாப்பின்றி இருந்த காரணத்தால் கடலாலும் - கறையானாலும் சூறையாடப்பட்டன. எஞ்சியிருக்கின்ற ஒன்று இரண்டு உண்மையான இலக்கிய ஏடுகளையும் இற்றைப் பகுத்தறிவுவாதிகள் எரிக்க முற்பட்டு விட்டார்கள். செய்யத்தகாத - நினைக்கவும் முடியாத காரியத்தையெல்லாம் புதுமையின் துணைகொண்டு அறிவினால் செய்துவிட முடியும் என்று கருதவுந் தொடங்கி விட்டனர்.

இச்செய்தியைக் கேட்டதும் - உண்மையாகத் தமிழ் தமிழ்நாடு - தமிழ்க் கலாசாரம் - ஏன் குறிப்பாகச் சொல்லப் போனால் தமிழ் இலக்கியப் பற்றுடைய ஒவ்வொரு தமிழனின் குருதியும் கொதிப்பேறுகின்றது. அவர்கள் கூறுகின்ற கருதுகின்றபடி எஞ்சியிருக்கின்ற உண்மை இலக்கியங்கள் ஒன்று இரண்டையும் எரிக்கத்தலைப்பட்டு விட்டால் பண்டைத் தமிழகம், இற்றைத் தமிழகம், நாளைத் தமிழகம் பற்றி அறிந்து கொள்ள என்ன இருக்கின்றது?

அவர்கள் செய்ய முனைந்திருக்கின்ற-செய்கின்ற ஒவ்வொரு காரியத்தாலும் கலாசாரம் - பண்பாடு முதலியவற்றிற்கு அழிவே இல்லை என்பதை நாம் கண்கூடாகக் காணமுடிகின்றது. அவர்கள் எதனை எதிர்பார்த்துச் செய்கின்றார்களோ அதற்கு மாறாகத்தான் நாடு இயங்கி வருகின்றது என்பதை உணர்ந்த பின்னர்தான் அவர்கள் தாங்கள் முயற்சித்த அந்தந்தக் காரியங்களை விடுத்துப் புதுப்புதுக் காரியங்களில் முனைகின்றனர் என்பதை யாவரும் நன்கு அறிந்திருக்கலாம்.

அழிவு ஏற்படும் என்று கருதிய உள்ளம் மேன்மேலும் நன்கு வளர்ச்சியைக் கண்டு மயங்குகின்றது. அவர்கள் செய்ய முனைந்த செயலால் நல்லதொரு வளர்ச்சிதான் காணமுடிகின்றது. குறிப்பாகச் சொல்லப்போனால் பிள்ளையார் உடைப்பு - கம்பராமாயண எரிப்பு முதலியவற்றால் இன்றைய மக்களிடம் புதியதோர் மறுமலர்ச்சி எழும்பி இருக்கின்றது. மக்களிடம் காணப்பட்ட மகத்தான் மறுமலர்ச்சியால் இன்றைய நாட்டில் இலக்கியப் பற்றும், திருவுருவ வழிபாடும், சமயப்பற்றும் வளர்ந்தோங்கியுள்ளன. மக்கள் உள்ளத்தில் பற்றுதல் உண்டான காரணத்தால் நல்லதொரு வெற்றிதான் கிடைத்திருக்கின்றது என்பதை எல்லோரும் நன்கு அறிதல் வேண்டும்.

"கல்லிலும் செம்பிலுமா கடவுள் இருக்கின்றார்” என்று இதுவரை கூறி வந்தவர் இன்றைய தினம் அதற்கு மாறாக நடந்து காட்டி விட்டனர். நீங்கள் காட்டும் கல்லிலும் செம்பிலும் மட்டும் கடவுள் இல்லை. நாங்கள் செய்கின்ற-செய்து உடைக்கின்ற களிமண் பொம்மையிலும் கடவுள் இருக்கின்றார் என்று கூறுகின்றார்கள். கடவுள் இல்லை என்றால் அவர்கள் செய்த அந்தக் களிமண் விநாயகர் பொம்மையை உடைத்திருக்க வேண்டியதில்லையே! “கடவுள் அந்தக் களிமண் பொம்மையிலும் இருக்கின்றார்” என்ற நம்பிக்கையால்தான் அவர்கள் பிள்ளையார் உடைப்புத் தொழிலை மேற்கொண்டார்கள் என்பதை இன்றைய உலகில் யாவரும் நன்குணர்வர்.

என்றும் நம்பிக்கை இல்லாதவனை நம்பிக்கை உள்ளவனாக நம்பும்படி செய்வதுதான் - நம்புகின்ற ஒரு மனித உருவாகச் செய்வதுதான் முடியாத காரியம். நம்பிக்கை உண்டானபின் எந்தக் காரியத்தையும் எளிதாகச் சாதித்து விட முடியும். “உருவத்திலும் கடவுள் இல்லை"யென்று இதுவரை கூறிவந்தார்கள். இன்று “உருவத்திலும் கடவுள் இருக்கின்றார்” என்று கூறும் நிலைமைக்கு வந்து விட்டார்கள். உருவத்திலும் கடவுள் உண்டு என்று கூறும் அவர்களை நம்பிக்கையில் உள்ள அவர்களை வழிபாட்டில் கொண்டு வருவது எளிது. நமக்கு உறுதியான நம்பிக்கை இருந்தால் யார் செய்கின்ற எச்செயலும் நம்மை எதுவும் செய்து விட முடியாது. நம்மிடம் நேர்மையும் - நம்பிக்கையும் - தன்னடக்கமும் - கட்டுப்பாடும் - உறுதியும் தகுதியான இடத்தைப் பெறுவதோடு நன்முறையில் நம் உள்ளத்தில் வளம் பெற வேண்டும்.

யார் எதனைச் செய்தாலும் அதனை அன்புடன் - முக மலர்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளுங்கள். எது வந்தாலும் பொறுத்துக் கொள்ளும் நல்லிதயம் வேண்டும்.துன்பஞ் செய்தாரிடத்தும் அன்பு காட்டுங்கள். இன்னல் செய்தாரிடத்தும் அன்புமொழி பேசுங்கள். மாற்றாரிடத்தும் உற்றார் உறவினர் என்ற உள்ளத்துடன் பழகுங்கள். அதுதான் நம்மையும் நானிலத்தையும் வாழ்விக்கும் என்பதை மறந்து விடாதீர்கள். ஆடும் புலியும் ஒரே துறையில் நின்று நீர் அருந்திய தமிழ்நாட்டில் பிறந்தவர்கள் நாம் என்பதை நினைவுறுத்திக் கொண்டு வாழுங்கள்.

நீங்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் எக்காலத்தும் உங்கள் வாழ்நாளில் வெறுப்பிற்கும் - வெறிக்கும் ஆளாகி விடாதீர்கள். வெறுப்பும் வெறியும் மக்கட்சமுதாயத்தைக் கெடுத்து விடும். அது மக்கட் சமுதாயத்தின் துரோகி என்பதை யாரும் மறந்து விடக் கூடாது. மாற்றெண்ணம் கொண்டு அறிந்தோ அறியாமலோ அவர்கள் நம்மை எது கூறினாலும் அதனைப் பொருட்படுத்தாதீர்கள். அவர்கள் கூறுகின்ற அனைத்தும் அன்பின் வாழ்த்து வேறு விதத்தில் நம்மை நாடி வருகின்றது என்று எண்ணுங்கள். அந்த எண்ணந்தான் நம்மை அன்புடையவர்களாக என்றென்றும் வாழ்விக்கும்.

நாம் அன்புடையவர்களாக வாழ்ந்தால்தான் நாடும் அன்புடை நாடாக வாழமுடியும். மாற்றெண்ணங்கொண்டு அவர்கள் கூறுகின்ற அனைத்தும் நம்மை அல்ல.ஆக்கவும் காக்கவும் வல்ல அனைத்திற்கும் மூலகாரணமாக இருக்கின்ற கடவுளைத் தான் கூறுகின்றார்கள் என்று நம்புங்கள். அந்த உயரிய நம்பிக்கை தான் நம்மையும் நானிலத்தையும் வாழ்விக்கும்.

பிள்ளையார் உடைப்புச் செய்தவர்கள் யார் என்று சிந்தித்துப் பார்த்தால் நன்கு தெரியும். அவர்கள் நமது சாக்கிய நாயனார் பரம்பரையைச் சேர்ந்தவர்கள். சாக்கியனார், தனது மதத்திற்குத் தெரியாமல் இந்துமதத்தில் பற்றுக் கொண்டு சமயக் கொள்கையில் பற்றுக் கொண்டு நமது திருவுருவங்களை அன்புடனும் அருளுடனும் வழிபட்டு வந்தனர். அதுபோலத்தான் இன்றைய பிள்ளையார் உடைப்புக் கட்சிக்காரர்களின் போக்கும் போய்க் கொண்டிருக்கின்றது.

இதுநாள்வரை உருவவழிபாடு கூடாது என்று கூறிய நாம் இனிக் கடவுள் வழிபாட்டை மேற்கொண்டால் உலகம் நம்மை நிலையில்லாதவன் என்று தூற்றுமே நாம் நமது அன்பை ஆண்டவனிடம் உடைப்பின் மூலமாகத்தான் தெரிவிக்கலாம் என்ற எண்ணத்தில்தான் அவர்கள் பிள்ளையார் உடைப்புத் தொழிலை மேற்கொண்டார்களே-யன்றி வேறில்லை. சாக்கிய நாயனார்க்கு இடம் கொடுத்த சமயம் இவர்களுக்கும் இடம் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.

“உண்மையுமாய் இன்மையுமாய்” இருக்கின்ற ஆண்டவன் “ஒளியாகவும் ஒலியாகவும் இருக்கின்ற ஆண்டவன்" தின்கின்ற வெற்றிலையாகவும் உண்கின்ற சோறாகவும் காட்சி தருகின்ற ஆண்டவன் “உடைப்பாரிடத்தும் எரிப்பாரிடத்தும்" உறுதியாக அன்பு காட்டுவான். அடக்கம்தான் என்றும் நன்மையைத் தரும்.

உலகில் இருளை ஒட்ட யாரும் முற்படுவதில்லை. ஒளியினை உண்டாக்கினால் இருள் தானாக ஓடிவிடும். நமக்கு வேண்டிய ஒன்றிலேயே அதன்வளர்ச்சி குறித்துக் கண்ணோட்டஞ் செலுத்தினால் வேண்டாத - விருப்பப்படாத ஒன்று தானாக விலகிச் செல்லும் என்பதை இளமையுள்ளங்கள் உணர்ந்து வாழ முற்பட வேண்டும். மாற்றாரின் தகாத செயல்களுக்குப் பரிகாரம் தேட முனைகிற காலத்து அவைகளைப் பற்றிச் சிந்திப்பதை விடுத்து நாம் நமது காரியங்களிலேயே கண்ணோட்டம் செலுத்தினால் நலமுண்டு. உங்களுடைய பிரார்த்தை உள்ளம் தோய்ந்ததாக இருக்கட்டும்.

சந்தேகப் பிராணிகள் எது வேண்டுமானாலும் கூறிக் கொள்ளட்டும். அவர்களின் கூற்றைப் பெரிதென மதித்து நாம் செவி சாய்க்கக்கூடாது. “சந்தேகம் தங்குகின்ற நெஞ்சு தவறுடை நெஞ்சு” என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. நாம் சந்தேகம் என்ற ஒன்றிற்கு எக்காரணத்தைக் கொண்டும் இடங்கொடுத்தல் கூடாது. நாம் சந்தேகத்தைக் கைக்கொண்டிருந்தால் நம்முடைய வாழ்வில் நாம் முன்னேற்றம் காணமுடியாது. முன்னேற்றம் காண்பது ஒருபுறமிருக்க இருக்கின்ற தகுதியையும் இழக்க நேரிடும். சந்தேகப் பேய்க்கு இடங்கொடுத்தால் அதனின்றும் தப்பி வாழ வழி கிடையாது.
தத்துவங்கள் சடங்குகள் - சின்னங்கள் சம்பிரதாயங்கள். கடவுள் கொள்கைகள் முதலியனபற்றித் தெரிந்து கொள்ளாமலோ குறை கூறுவதனால் என்ன பயன்? அதனால் விபரீதங்கள்தான் விளைகின்றன.

கடவுள் என்பது ஆதி மனிதன் காலத்தில் கற்காலத்தில் - கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தில் தோன்றிய மூத்த தமிழ்க் குடியினர் கண்டது. கடவுள் நெறி - அன்பு நெறி - அருள் நெறி ஆதிமனிதனால் கண்டுபிடிக்கப் பட்டது. அவன்தான் கண்டுபிடித்த அப்பாற்பட்ட சக்திக்குக் கடவுள் என்ற பெயர் கொடுத்தான். அதனை உருவத்தில் கண்டு மகிழ்ந்து வாழ்த்தி வணங்கி வழிபட்டான்.

அந்த உயரிய தத்துவத்தை இன்று இருக்கின்ற புதுமை விரும்பி என்ற பெயர் கொண்டவர்கள் - தத்துவம் புரியாதவர்கள் - அழுக்கு மனம் படைத்தவர்கள் - குறுக்குப் புத்திக்காரர்கள் - மாற்றெண்ணம் கொண்டு வேற்றுருவில் நடமாடுகின்ற மனித உருவங்கள் குறைகூறுகின்றன. இயற்கையின் படைப்புக்கு மனிதனின் அறிவும் - கருத்தும் - சிந்தனையும் பெயர் கொடுத்ததே யன்றிப் புதிதாக இந்த உலகில் இதுவரை ஒன்றையும் காணவில்லை. அடிப்படைத் தத்துவத்தை “பழமை” என்ற பெயரால் பிரிவுபசாரப் பத்திரம் வாசித்து வெறுத்தொதுக்குவதேன்?

மனிதனின் அறிவு உயிரற்ற ஒன்றைத்தான் கண்டுபிடிக்க முடியும். ஆண்டவன் படைப்பில் உயிர் உள்ளதும் - உயிர் இல்லாததும் இருக்கின்றன. மனிதனின் அறிவிற்கும் ஆண்டவனின் படைப்பிற்கும் உள்ள வேறுபாடு இதுதான். பழமை இன்றிப் புதுமை இயங்க முடியாது. வேண்டாத ஒன்று என்று பழமையை வெறுத்தொதுக்குகின்றவர்கள் பழமை, புதுமையின் தாயகம் என்பதை நன்கு உணர வேண்டும். புதுமையின் தாயகமான பழமையை மறந்து விடக்கூடாது.
இன்றையப் பகுத்தறிவுவாதியர், சின்னங்களையும் சடங்குகளையும் வெறுத்தொதுக்குகின்றனர். சின்னங்களும் சடங்குகளும் இன்றி எதுவும் காண முடியாது. அவர்கள் கருதுகின்றபடி செய்தால் காலமும் பொருளும் குறைவாக இருக்கலாமே அன்றி அவைகள் இன்றி எந்தக் காரியமும் செய்ய முடியாது. ஒவ்வொரு தனிமனிதனின் வாழ்விலும் சின்னங்களும் - சடங்குகளும் பின்னிக் கிடக்கின்றன. சின்னத்தையும் சடங்கையும் ஒதுக்குகின்றவர்கள் போடும் ஆரவாரமும் மந்திரமும் அதனுட் கட்டுப்பட்டன என்பதை மறந்து விடாதீர்கள்.

குறை கூறும் மக்கள் எதனையும் முழுதும் படிப்பதில்லை. பண்டைய இலக்கியங்களை முழுதும் படித்து அறிந்துணரும் திறன் இல்லை என்பதை அவர்கள் கூறாமல் கூறிக் கொள்ளுகின்றார்கள்.

மனிதனின் அறிவு, இரும்பை மைக் ஆகவும் அரிசியைச் சோறாகவும் - துணியைச் சட்டையாகவும் கண்டது. அதுபோல, அருளுடைப் பெருமக்களின் அறிவு கல்லைக் கடவுளாகக் கண்டது. இதில் என்ன தவறு? அறிவும் ஆராய்ச்சியும் ஓரளவுதான் பயன்தர முடியும். திருக்கோயில்களில் காணப்படுகின்ற அனைத்தும் விஞ்ஞானத்தை விளக்குகின்றன என்று தெளிவாக - ஆணித்தரமாக - துணிவுடன் எடுத்துக் கூறுங்கள். சமயச் சின்னங்களை அணிந்து தெருவில் வாருங்கள்.

இலக்கியத்தின்மூலம் சமயக் கொள்கைகளுக்கு மறுப்புக் காட்டினால் அது உண்மையான தமிழ் இலக்கியமாக இருக்க முடியாது. போலி இலக்கியங்களின் துணைகொண்டுதான் மறுக்க முடியும். பிளாட்டோ - இங்கர்சால் - ஜேம்ஸ் போன்ற மேலை நாட்டு அறிஞர்களின் துணைகொண்டு மறுக்க முற்படலாம். அவர்களும் உண்மைச் சமயத்தை வெறுத்தார்கள் அல்லர். சமயத்தில் காணப்பட்ட குறைகளைத்தான் கண்டித்தார்கள். அறிவுலக மேதை பெர்னாட்ஷாவும் சமயத்தின் மறுமலர்ச்சிக் - காகவேதான்் பாடுபட்டார். சமயம் மண்னோடு மண்ணாகி மக்கி மடியவேண்டும் என்று அவர் கருதினாரல்லர். சமயம் திருந்தினால்தான் சமூகம் திருந்தி வாழ முடியும் என்ற காரணத்தால் அறிஞர் பெருமக்கள் அருளுடைய பெருமக்கள் காட்டிய கண்டு வாழ்ந்த உண்மைச் சமயத்தையும் அதன் அடிப்படைக் கொள்கையையும் - உண்மை இலக்கிய ஏடுகளையும் காண முற்பட்டார்கள்.

“சமயத்தில் பெருமையைத் தேடி தோல்வி யுற்றவன்தான் கடவுள்மேல் - மதத்தின்மேல் - சமயக் காப்பாளர்கள் மேல் குறை கூறுகின்றான். தோல்வியுற்றவன் கண்டதுதான் நாத்திகம். விதி - வினை முதலியவற்றை வெல்ல முடியாத உனக்கு இவ்வுலகில் வாழ்வில்லை. வாழத் தெரியாத நீ துணிவு இல்லாத நீ சமயத்தைப் பற்றிக் குறை கூறுவதேன்?.."என்று அழகுபட மாவீரன் மாஜினி எழுதுகின்றான். குறைகூறுகின்ற மக்கள் அனைவரும் குறைகூறுமுன் சமயத்தைப் பற்றி நன்கு தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த ஜனநாயகத்தில் இவ்வாறு இல்லாதிருக்க வேண்டுமேயானால் அரசு மதச்சார்பற்றதாக இருக்கட்டும். ஆனால் அதே நேரத்தில் மதச்சார்புடை அரசாகத்தான் இருந்தாக வேண்டும். அரசாங்கத்திற்கு வரி கொடுப்போரில் நூற்றுக்குத் தொண்ணுாறு பேர் மதத்தின் அடிப்படையை பின்பற்றி வாழ்கின்றவர்கள். ஜனநாயக அரசு அவர்களுக்காக இருக்க வேண்டுமே அல்லாது சிறுபான்மையோரின் அரசாக இருத்தல் கூடாது. பெரும் பான்மையோரின் வாழ்விற்குப் புறம்பாகப் பேசவோ எழுதவோ படவுலகில் காட்டவோ இசையின் மூலம் பரப்பவோ உரிமை கொடுப்பதும் தவறுதான்.

பள்ளிகளில் பிறநாடுகள்போல, சமயப் பாடம் கற்பிக்கப் பெறுதல் வேண்டும். "சமயப் பாடமே கற்பிக்கப்படாத பள்ளிகளே இந்திய நாட்டில் இல்லை” என்ற சூழ்நிலையை உண்டாக்க வேண்டும். பள்ளிகளில் சமயப்பாடம் சட்டபூர்வமாக என்று கொண்டுவரப்படுகின்றதோ அன்றுதான் காந்தியடிகள் கண்ட நாட்டிற்கு அடிகோலியவர்களாவோம்.

காந்தியடிகள் கண்ட நாட்டை அமைத்தால்தான் நாமும் - பிற்காலச்சந்ததியார்களும் இன்புற்று வாழ முடியும். மேலும் உலகப் பெரியாரின் பொன்மொழியைக் காப்பாற்றிய - இலட்சியத்தை நிறைவேற்றிய பெருமையும் நம்மைச் சேரும்.

காந்தியடிகள் கண்ட நாட்டைக் காண எல்லோரும் பிரார்த்தனையைக் கைக்கொள்வோமாக.

மக்கட் சமுதாயத்தில் பிரார்த்தனை என்று வளம் பெறுகின்றதோ அன்றே இயற்கையும் வளம் பெறும் என்பதில் சந்தேகமில்லை. பிரார்த்தனைதான் அண்ணல் காந்தியடிகளின் மருந்து.

அண்ணல் காந்தியடிகள் நோயுற்றிருந்த காலத்து உடனிருந்த அனைவரும் மருத்துவரை அழைத்து வர எண்ணினர். அவர்களின் எண்ணத்தை அண்ணல் காந்தியடிகளிடம் தெரிவித்தனர். அதற்கு அண்ணல் காந்தியடிகள், “என்னுடைய உயிரை இந்த மருத்துவர்களால் காப்பாற்ற முடியாது. காப்பாற்றக் கூடிய ஒரு மருத்துவன் இருக்கின்றான். அவனை அழையுங்கள். அவன் நினைத்தால்தான் முடியும். அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது. ஆக்கவும் காக்கவும் வல்ல மாபெரும் சக்தி அவனுக்குத்தான் உண்டு. ஆதலால் நீங்கள் எல்லோரும் உலகின் நலம் கருதிப் பிரார்த்தனை செய்யுங்கள்” என்று கூறினார். அண்ணல் காந்தியடிகள் பிரார்த்தனையை வலியுறுத்திக் கூறுங்காலத்து, "என்னால் பல நாள் உணவின்றி இவ்வுலகில் வாழ முடியும். ஆனால் ஒருநாட்கூடப் பிரார்த்தனையின்றி வாழ முடியாது” என்று கூறினார்.

நாம் அனைவரும் உளந்தோய்ந்த பிரார்த்தனையுடன் ஆண்டவனை வழிபட்டால் அவன் உறுதியாக நமக்கு வாழ்வளிப்பான் என்பதில் சந்தேகமில்லை.
பிரார்த்தனை வீடுகள்தோறும், தெருக்கள்தோறும் கிளம்ப வேண்டும். பிரார்த்தனைதான் நம் உள்ளத்தைத் துய்மைப்படுத்தும் நமது பிரார்த்தனைதான் நம் உள்ளத்தில் உள்ள மாசுமறுவினைப் போக்க - வியாதியினைப் போக்க ஏற்றதொரு மருந்தாம். உள்ளத்து வியாதியினைப் போக்கப் பிரார்த்தனையைத் தவிர வேறு மருந்தில்லை. நமது பிரார்த்தனை உளங்கனிந்த பிரார்த்தனையாக இருக்கட்டும். ஒவ்வொரு தனிமனிதனும் பிரார்த்தனையைப் பின்பற்றி வாழ்ந்தால் சமுதாயம் தானே திருந்தி வாழும்.

 திருச்சிராப்பள்ளியில் தவத்திரு அடிகளார் ஆற்றிய உரை
---------------

4. தமிழகம் காட்டும் செந்நெறி

தமிழரசுக் கழகத்தினர் ஆதரவில் நடைபெறும் இவ்விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றோம்.

தமிழன் புதுமைக்கும் புதுமையானவன்; பின்னைப் பழமைக்கும் பழமையானவன். அவனது வாழ்வு எவ்வளவு உயர்ந்திருந்தது - அவன் எத்தகு பீடும் பெருமையும் சீரும் சிறப்புங் கொண்டு வாழ்ந்து வந்தான் என்பது மொழியிலக்கணத்தின் அடிப்படையில் கலாசாரத்தின் அடிப்படையில் எழுந்த நல்ல பல தமிழிலக்கியங்களை உண்மைக் கண்கொண்டு படித்துணர்ந்து சிந்தித்துப் பார்த்தால் நன்கு புலப்படும்.

தமிழரிடையே இடைக்காலத்தில் ஏற்பட்ட உறக்கத்தால் காலத்திற்கும் கருத்திற்கும் ஒவ்வாத சில மாறுதல்கள் காணப்பட்டன. அத்தகு மாறுதல்கள் தமிழினத்திற்கே இழிவு தரும் நிலையிலிருக்கின்றன. பண்டைத் தமிழ் மகன் அனைத்திலும் சீரும் சிறப்பும் பெற்று வாழ்ந்தான் என்பதைப் படித்தும் அறிந்தும் நாம் வாளாவிருக்கின்றோம்.

இமயத்திலே தமிழ்க்கொடியைப் பறக்கவிட்ட தமிழினம் - போரிலே வென்று கனகவிசயர் தலைகளில் கல் சுமக்கச் செய்து அந்தக் கல்லால் கண்ணகிக்குக் கோவில் எடுத்த தமிழினம் இன்று நம் நாட்டின் எல்லையைக் கூட இழந்து எல்லைக் குழுவினரின் தீர்ப்பை எதிர்பார்த்து நிற்கின்றது. ஏன்? இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால் தனக்கே உரித்தான் தனதிருப்பிடத்தையும் வேற்று மொழிக்காரருக்கு விட்டுவிட்டு வாளாவிருக்கின்றது. புத்துலகக் கவி பாரதி பாடியபடி நாமெல்லோரும் நாமமது தமிழரென வாழ்கின்றோமேயன்றிப் பண்டைத் தமிழகங்கண்ட உண்மைத் தமிழர்களாக ஒருவருமில்லை. இத்தகு இழிவு நிலைமையைப் போக்கிச் செங்குட்டுவன் கண்ட வீரத் தமிழகத்தை - இளங்கோவடிகள் கண்ட இன்பத் தமிழகத்தைக் காண இளைஞர்கள் முன்வரல் வேண்டும்.

வாழ்ந்து பெருமைப்பட வேண்டிய தமிழினம் இன்று தாழ்ந்து கிடக்கின்றது. பெருமையின் எல்லைக்கோட்டையே தமது இலட்சியத்தின் இருப்பிடமாகக் கொண்ட தமிழினம் இன்று சிறுமையின் அடிக்கோட்டில் நின்று விளையாடுவதேன்? அங்குதான் அருளுடைப் பெருமக்கள் நன்கு சிந்தித்து பார்த்தல் வேண்டும். நமது சிந்தனை நல்லதொரு முடிவைக் காண வேண்டும். நாம் காண்கின்ற முடிவு அறிவுடைப் பெருமக்களும் - அருளுடைப் பெருமக்களும் . ஏன் படித்தோர் முதல் பாமரர் வரை ஒப்பத் தக்கதாகவும் இருக்க வேண்டும். நமது முடிவில் நல்ல பல கருத்துக்களிருப்பதால் வாழ்ந்த தமிழினம் வீழ்ந்த காரணம் நன்கு தெரியும்.

தென்றல்காற்று வீசிய பூஞ்சோலையிலே எக்காரணத்தால் வாடைக்காற்று வீசிற்று என்பதை நன்கு சிந்தித்துப் பாருங்கள். சந்தன வியாபாரம் செய்துவந்த தமிழினத்தார் சாக்கடை வியாபாரியாக மாறியதேன்? மக்கள் மனதில் - நல்லன காணவேண்டியவிடத்தில் வேண்டாதன-ஒதுக்கப்பட வேண்டியன - வளர்க்கப்பட்ட காரணத்தால் நாட்டிலும் விரும்பாதன பல உண்டாகத் தொடங்கின என்பது நாடும் நல்லன்பர்களும் நன்கறிந்த செய்தி.

மனம் பொய்த்தது - மாரியும் பொய்த்தது. மாரி பொய்த்த காரணத்தால் வளமை இருக்க வேண்டிய இடத்தில் வறுமை தலைவிரித்தாடத் தொடங்கிற்று. பண்டைத் தமிழினம் வறுமை வளமை என்ற வேறுபாடே கண்டதில்லை. கண்டிருக்கவும் முடியாது. காரணம் அன்றைய மக்களும் நாடும் வளமைக் கோட்டிலேயே வாழ்ந்து வந்தமையே.

இன்று எங்கு நோக்கினும் இந்த வேறுபாட்டுக் குரலைத்தான் கேட்க முடிகின்றது. நாட்டின் வளம் அத்தகு நிலைமைக்கு மாறி விட்டது. மக்கள் பல்வேறுபட்ட திக்கை நோக்கி ஒடிக் கொண்டிருக்கின்ற காரணத்தால் அவர்களிடம் வெறியும் வெறுப்புணர்ச்சியும் வளரத் தலைப்பட்டன.

இனவெறி மக்கட் சமுதாயத்தைக் கெடுக்கும் நஞ்சு. அதனை மக்களிடம் பரப்புதல் கூடாது. பரப்புவதும் தவறு என்பதை உணர்ந்து தக்க காலத்தில் தமிழ் மொழியின் பெயரால் தமிழினத்தின் நலங்கருதித் தோன்றியது தமிழரசுக் கழகம். வேறுபட்ட கருத்துக்களைப் பரப்பியதால் மக்கள் சிந்தனையை இழந்ததால் தவறான பாதையில் செல்லத் தலைப்பட்டனர். மக்களின் வாழ்வைப் பொருத்துத்தான் நாட்டின் போக்கும். அதனைப் போலவேதான், நமது மனம் மாறுபட்ட பல கருத்துக்களைப் பின்பற்றியதால்தான் நாட்டிலும் பல தவறான செயல்கள் நடக்கத் தொடங்கின.

தமிழ் மொழி - தமிழினம் - தமிழ் நாகரிகம் - தமிழ்க் கலாசாரம். தமிழர் பண்பாடு - அருள்நெறி - அன்பு நெறி சமரச சன்மார்க்க வழி - கடவுள் வழிபாடு முதலியவற்றிற்கெல்லாம் தமிழின் பெயராலும் தமிழ் இலக்கியத்தின் பெயராலும் ஊறு விளைவிக்க முற்பட்டார்கள் சிலர். மக்கள் மனதில் இத்தகு தவறான செயல்கள் இடம் பெறுமேயானால் நாட்டின் போக்கைச் சீர்கேடான நிலையில்தான் கொண்டுவந்து முடிக்குமென்பதை அறிந்த தமிழ்ச் செல்வர் - காலம் அறிந்த அறிஞர் ம.பொ.சி. அவர்கள் தமிழரசுக் கழகத்தை ஏற்படுத்தினார்கள்.

இன்றைய இளைஞர்கள் மொழியின்மேலுள்ள ஆர்வத்தால் தவறான சில செயல்களுக்கு ஆளாக முற்பட்டனர். அத்தகு இளமையுள்ளங்களைத் தட்டி எழுப்பி, “நீ செய்ய முனைந்திருக்கின்ற செயல் நல்லதுதான். அதே சமயத்தில் நீ செல்லுகின்ற பாதை தவறுடையது” என்பதை எடுத்துக்காட்டி அவர்கள் உள்ளத்திற்கு ஒரு புத்துணர்ச்சி கொடுத்து அவர்களை நல்ல வழியில் இட்டுச் செல்கின்ற பெருமை ம.பொ.சி அவர்களுக்கும் அவர்கள் நிறுவிய தமிழரசுக் கழகத்திற்குமே உரித்தானது என்பதை நல்லறிவு படைத்த பெருமக்கள் யாவரும் ஒப்புக் கொள்ளுவர் என்பதில் எள்ளத்தனையளவும் ஐயமில்லை.

இருண்ட தமிழகத்தில் புத்தொளி வீசத் தொடங்கிய ம.பொ.சி அவர்களும் அவர்கள் நிறுவிய தமிழரசுக்கழகமும் வாழ்கவென மனமார வாழ்த்துகின்றோம். எனது நெஞ்சங்கலந்த வாழ்த்து அவர்களுக்கு நல்லதொரு வாழ்வைக் கொடுக்குமென்ற நம்பிக்கையில் மேலே செல்ல முனைகின்றோம்.

பண்டைத் தமிழினம் தீமையினையும் ஏற்று வாழ்ந்து வந்தது. அதனைப் போலத்தான் நீங்களும் வாழ முற்பட வேண்டும். மறந்தும் நெறி பிறழ்ந்து வாழாதீர்கள். நெறியினின்றும் தவறி வாழுகின்ற வாழ்க்கை வாழ்க்கையாகாது. “மானம் போனபின் வாழ்வதுமொரு வாழ்வாமோ” என்ற குறிக்கோளில் அந்த உயரிய அடிப்படைக் கோட்டைப் பின்பற்றி வாழ்ந்தவன் தமிழன் - அவனது இலட்சியத்துக்கு எந்தவித இடையூறும் வராமல் பாதுகாப்பது அவர்களின் வழித்தோன்றலாகிய நம் கடமை.

தித்திக்கும் தேன் மொழி தமிழ் மொழி தமிழ்மொழியின் மூலம் தமிழ்நாட்டில் கடவுட் கொள்கை பரவிற்று. தித்திக்கும் தீஞ்சுவைத் தமிழை, ஊட்டி வளர்க்கின்ற தாயாகவும் உலகனத்தையும் ஆக்கிக் காக்கின்ற கடவுளாகவும் தமிழர்கள் கருதினர்; வாழ்த்தி வணங்கி வழிபட்டனர்.

எத்தனையோ மொழிகள் இன்று நாட்டில் உலவுகின்றன. அத்தனையும் படித்துப் பார்த்தால் இன்று உலகப் பொதுமொழியெனப் பேசப்படுகின்ற ஆங்கில மொழிக்குத் தனித்ததொரு சிறப்பில்லை. ஏனென்றால் தமிழ்த்தாயை வாழ்த்துகின்ற பாக்கள் - தமிழறிஞர்களை, தமிழ்ப் புலவர்களைப் பாராட்டுகின்ற பாக்கள் - தமிழில் இருப்பது போல வேறெந்த மொழியிலும் காண முடியவில்லை. தமிழைத் தாயென்றெண்ணித் தெய்வமென்று உளமார வாழ்த்தி வணங்கி வழிபட்டவன் தமிழன்.

தமிழ்நாட்டில்தான் இம்முறை தொன்று தொட்டு இருந்திருக்கின்றது. உலகினை ஒரு கொடியின்கீழ் ஆட்சி செலுத்திய ஆங்கில நாட்டிற்கூட இத்தகு பண்பாடு இருந்ததில்லை. இதிலிருந்து நமது முன்னோர்கள் அழுத்தமான தமிழ்ப் பற்றுக் கொண்டிருக்கிறார்களென்று தெரிந்து கொள்ள முடிகின்றது. அவர்கள் ஆக்கித் தந்த தமிழிலக்கியங்கள் அருள் நெறியில் அமைந்துள்ளன. பிற மொழிகளில் அவ்வாறில்லை.

கடவுள் தன்மைக்கு மாறுபட்ட எதிரான கருத்துக்கள் நமது நாட்டிலே தோன்றியிருப்பதை மக்கள் எல்லோரும் நன்கு அறிந்திருக்க முடியும். ஏனெனில் இன்றையத் தமிழகம் தமிழ் மொழியினை முற்றிலும் உணரவில்லை. வேற்று நாட்டவரின் நுழைவால் தமிழர்கள் தங்கள் மொழிப்பற்றை இழந்து விட்டார்கள். தமிழர்களின் தளர்ந்த நிலையைப் பயன்படுத்திக் கொண்டு வேற்று நாட்டவர்கள் தங்கள் மொழிச் சொற்களை இங்குப் புகுத்தினார்கள். இன்று தமிழர்கள் தங்கள் மொழியென்று சொல்லக்கூடிய அளவிற்கு வேற்றுமொழிகள் நம் நாட்டில் இடம் பெற்றுவிட்டன. இளைஞர்கள் ஏனைய மொழிகளைக் கற்றுக் கொள்வதால் தவறு ஒன்றுமில்லை. ஆனால் அதே நேரத்தில் தமிழகத்தின் தேசிய மொழியாகத் தமிழ்மொழிதான் இருத்தல் வேண்டும். தமிழ்மொழி அரசின் மொழியாக ஆதல் வேண்டும்.

நல்ல தூய தமிழ்மொழியில் எழுதினாலும் பேசினாலும் அதை இன்று பல தமிழர்கள் வரவேற்கவில்லை. தமிழ்மொழியில் பேசுவது கூட இன்று அரிதாகி விட்டது. தமிழர் தமிழ் மொழியினைக் கருத்திற்கொண்டு அதன் வளர்ச்சியிலேயே கண்ணோட்டம் கொண்டு நல்ல தூய தமிழில் பேசவும் எழுதவும் முனைந்தால் உறுதியாகத் தமிழ்மொழி ஆளுகின்ற மொழியாக மாறிவிடும். இம்முயற்சியில் ஒவ்வொரு தமிழனும் ஈடுபட வேண்டும்.

தமிழ்நாடு, தமிழ்மொழியென்று பேசுவதால் எழுதுவதால் பயனொன்றுமில்லை. அதன் வளர்ச்சி குறித்து ஆக்க வேலையின் முனைய வேண்டும். அந்தத் தாரக மந்திரச் சொற்கள் உள்ளக் கிளர்ச்சியை உண்டு பண்ண வேண்டும். கடவுள் நெறியின் அடிப்படையில் வாழுகின்ற நம்மிடம் சமயப் பற்று வளம் பெற வேண்டும். சிறந்த இலக்கியங்களும் இலக்கணங்களும் ஒருங்கே அமையப் பெற்றது தமிழ் மொழி ஒன்றுதான். இன்றைய இளைஞர்கள் அனைவரும் தமிழ்மொழிப் பற்றுடையவராய் இருப்பது போல் சமயப் பற்றுடையராயுமிருத்தல் வேண்டும்.

குறிப்பாகச் சொல்லப் போனால் தமிழர்களுக்குப் புத்துணர்ச்சி ஊட்டிய ம.பொ.சி யைப் பின்பற்றுகின்ற தமிழரசுக் கழகத்தாரிடம் சமயம் நன்கு வளம் பெற வேண்டும். அதற்கு இவர்கள் ஆவன செய்ய முனைய வேண்டும். “இந்நாட்டில் தமிழரசுக் கழகம் இருக்கும்வரை தமிழும் சமயமும் ஓங்கி வளரும். அதற்கு மாறானவர்கள் இங்கு வாழ வழியில்லை” என்ற சூழ்நிலை உண்டாதல் வேண்டும்.

இளங்கோவடிகள் நமக்கு ஒப்பில்லாத சிலப்பதிகாரத்தைத் தந்தார். அந்த உயரிய நூல் தமிழர் பண்பாட்டையும் அரசியலையும் நன்கு விளக்கிக் காட்டுகின்றது. அத்தகு இலக்கியங்களை மக்கள் படித்து நன்குணர வேண்டும்.

ஜாவா, சுமத்ரா போன்ற நாடுகளையும் தன்னகத்தே கொண்டிருந்த தமிழகம் இன்று தமிழ்நாட்டின் எல்லையைக் காக்க முடியாமல் தவிக்கின்றது. தமிழரசுக் கழகத்தார் இலக்கிய விழா எடுப்பது வரவேற்கத்தக்கதுதான். விழாக்கள் எடுப்பதுடன் சமயப் பற்றும் தமிழ்ப்பற்றும் வளம் பெற்றவர்களாக வாழ்ந்தால் நலம் பயக்கும். ஒவ்வொரு இளைஞனும் தமிழ்ப்பற்றும் தெய்வப்பற்றும் நிறைந்து நாட்டின் நலங்கருதி - சமுதாயத்தின் நலங்கருதி - சமயத்தின் நலங்கருதி நல்லதொரு தொண்டாற்ற முன்வரல் வேண்டும். நாட்டின் நலங்கருதுந் தொண்டர்கள் தமிழரசுக் கழகத்தில் அதிக இடம்பெற வேண்டுமென்று விரும்புகின்றோம்.

தமிழர்கள் பண்டொரு காலத்தில் பீடுடன் வாழ்ந்தார்கள். நாகரிகத்தின் உச்சநிலையில் வாழ்ந்து உலகிற்கு உணர்த்தியவர்கள் தமிழர்கள். இமயத்திலும் கங்கை வெளியிலும் கடாரத்திலும் கன்னித் தமிழொலியை ஒலித்து ஒப்பற்ற புகழுடன் வாழ்ந்தனர். தமிழர்கள் நாட்டின் எல்லை ஒருகால் கங்கை நாடு; மற்றொரு கால் இமயப் பனிவரை. இமயத்தின் உச்சியில் தமிழ்க்கொடி பறந்தது ஒரு காலத்தில். தமிழ்ப் பெருங்குடியினர் கருத்தெல்லை என்றும் உலக எல்லையாகவே இருந்து வந்திருக்கிறது.

இங்ஙனம் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே ஓங்குயர் கீர்த்தியுடன் வாழ்ந்த தமிழினத்தார் காலப்போக்கிலே தளர்வெய்தினர். ஒன்றுபட்டிருந்த தமிழ்க்குலம் ஜாதியின் பெயராலும், சமயத்தின் பெயராலும் சிதறுண்டது. வலியும், பொலிவும் இழந்து நாமமது தமிழரெனக் கொண்டு ஊமையராய்ச் செவிடர்களாய் வாழத் தலைப்பட்டனர். அவர்தம் நாடும் சீரழிந்தது. நாகரிகமும் நலிவெய்தியது. இன்பத் தமிழும் இருப்பிடந் தேடலாயிற்று. தேய்ந்த தமிழகத்தின் எல்லையில் வடவேங்கடத்திற்குக் கூட இல்லை இந்தச் சென்னை நகருக்குக்கூட ஆபத்து ஆந்திர சகோதரர்களால் ஏற்படுகின்ற அளவிற்குத் தமிழரது உறக்கம் நீடித்து விட்டது. உறக்கத்திற்கும் ஒரு விடிவுகாலம் வரத்தானே வேண்டும்! தமிழர்களைப் பேருறக்கத்தினின்றும் தட்டியெழுப்பி ஆக்கத்துறையில் அன்புடன் அழைத்துச் செல்லும் தமிழரசுக் கழகத்தினரை வாழ்த்துகின்றோம்.

நாட்டில் இன்றைய நிலையைப் பொறுத்துச் சில தலையான பிரச்சினைகளைப் பற்றிக் கூறத்தான் வேண்டியிருக்கின்றது. தமிழுக்காகவும் தமிழ் நாட்டிற்காகவும் வாழ்ந்து நல்ல பல செய்ய வேண்டிய ஓர் ஒப்பற்ற தலைவரை இன்று நாம் இழந்து விட்டோம். தாயை இழந்த சேய்கள் போன்று தவிக்கின்றோம். தமிழ்த் தந்தை திரு.வி.க அவர்கள் ஓர் உண்மைத் தமிழர்.

சமயம் - சமுதாயம் - சமூகம் - நாடு - பொருளாதாரம் - அரசியல் ஆகிய எல்லாத்துறைகளிலும் புதியதோர் மாற்றங்காண நினைத்துத் தொண்டாற்றினார். சாதிப் பிணக்குகள் நம்மைக் கெடுத்தொழிக்கும் என்பதை உலகிற்கு உணர்த்திய பெருமை தமிழர் தந்தை திரு.வி.க அவர்களுக்கே உரித்தாகும். பெரியார் திரு.வி.க மறைவு சமயவுலகிற்கே ஈடுசெய்ய முடியாத நட்டமாகும் என்று யாம் கருதுகின்றோம்.

திருவிக அவர்கள் சமயவுலகிற்கே மாறுபட்டவர்கள் எனச் சைவவுலகம் மதித்தது. மாற்றுக்கண் கொண்டு மதிப்பிட்ட சைவவுலகம் தமிழ்த்தந்தை திருவிக அவர்களை வெறுத்து ஒதுக்கத் தலைப்பட்டது. திரு.வி.க அவர்கள் சைவமும் தமிழும் பற்றி வரைந்த நூல்கள் தமிழன்னையின் மணிமுடிகளாக மிளிர்வன. அவர்கள் வரைந்த மடாதிபதி என்ற நூலே எம்மை இக்கோலம் பூணச் செய்தது.

அவர்கள் விதைத்த நல்லறவுணர்ச்சியில் மக்கட் சமுதாயம் விழிப்படையத் தொடங்கியது. அவர்களின் பேருணர்வால் அவர்வழி வந்த தமிழினத்தார் வாழ்வில் அவர் வாழ்ந்து வருகின்றார் என்ற சொல்லை நாம் படைத்துத் தரவேண்டும். "மீண்டும் திரு.வி.க அவர்கள் தமிழகத்தில் தோன்ற வேண்டும்” எனப் பிரார்த்தனை செய்யுங்கள். அவர்களின் எழுத்தும் சிந்தனையும் நம்மிடம் உண்டு. திரு.வி.க அவர்கள்போல் எல்லோரும் தமிழும் சைவமும் நிரம்பப் பெற்ற அன்பர்களாக வாழ ஆசை கொள்ளுங்கள். ஒவ்வொரு தமிழனும் தமிழ்நாட்டிற்குத் தன்னால் என்ன செய்ய முடிந்தது என்பதை நாளும் சிந்தியுங்கள். தமிழரசுக் கழகத்தாரின் குறிக்கோள் - ஏன்? தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவன் குறிக்கோளும் நாடு, மொழி, கலாசாரம் என்ற அடிப்படையில்தான் இருத்தல் வேண்டும்.

சமுதாயத்தில் புரையோடிக் கிடக்கும் நோயைப் போக்கத் தமிழ்த்தந்தை திரு.வி.க அவர்களின் நூலே சிறந்த மருந்தாகும்.

நிற்க. தமிழாட்சி வேண்டுமென்று கேட்பது வெறுப்பால் அன்று. அவரவர் மொழியில் அரசு நடந்தால் எதனையும் எளிதில் முடித்துக் கொள்ள முடியும் என்ற காரணத்தால்தான் தமிழரசு வேண்டும் என்று கேட்கின்றோம். நாங்கள் எல்லா மொழிகளும் வளரவேண்டும் என்றுதான் ஆசைப்படுகின்றோம். முதற்கண் எங்கள் தாய்மொழியாம் தமிழ்மொழியை வளப்படுத்திய பின்னர் தான் நாங்கள் வேறு எதனையும் கைக்கொள்வோம். எல்லாவற்றிற்கும் வாழ உளமார இடங்கொடுக்கும் நாங்கள் வேற்றாரால் எங்கள் தாய்மொழிக்கு இடையூறு ஏற்பட்டால் அதைப் பார்த்துப் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டோம். மாற்றாரின் செயல்களனைத்தும் அவர்களின் சின்னாட் பிழைப்பிற்குத்தான் என்பதை எல்லோரும் நன்கு உணர வேண்டும்.

ஒவ்வொரு மனினும் நேர்மையுடனும் தன்னம்பிக்கையுடனும் வாழ்தல் வேண்டும். எதனையும் நாம் வெறுத்து ஒதுக்குதல் ஆகாது. வெறுத்து ஒதுக்குவோமாயின் நம் வாழ்வில் போட்டியையும் பொறாமையையும் வளர்த்துக் கொண்டவராவோம்.

தமிழ்நாட்டிலே பல அருமையான இலக்கியங்கள் இருக்கின்றன. அதனைப் படித்துப் புரிந்து கொள்ளுகின்ற பயன் பெறுகின்ற நல்லுள்ளம் படைத்த பெருமக்களைத்தான் காண முடியவில்லை. வேண்டாத ஒன்றைப்பற்றி ஆராய முற்படுகின்றார்களேயன்றி “நாட்டின் நிலைமையறிந்து நாம் யாது செய்தல் கூடும்” என்று ஆராய்வாரைக் கண்டிலேம். எங்கோ தோன்றும் சிலரும் காலப் போக்கிற் சுயநலக்காரர்களாக மாறி விடுகின்றனர். நாட்டின் சூழ்நிலையும் மக்களின் போக்கும் அவர்களை மாற்றி விடுகின்றன.

இன்றைய நிலையில் எத்தனையோ தோழர்கள் அழகுபடப் பேசுவார்கள் - எழுதுவார்கள். ஆனால் அதன்வழி நடப்பாரைத் தான் காண முடியவில்லை. இலக்கிய ஏடுகளைப் படிக்கின்ற காலத்து அதன் பொருள்களை நன்கு புரிந்து கொண்டால்தான் அதனை நம் வாழ்வில் அனுபவித்தல் இயலும். அனுபவிக்கும் உள்ளத்தையிழந்த காரணத்தால்தான் இக்காலத் தமிழர்கள் பண்டையிலக்கியங்களைப் புரிந்து கொள்ளாமல் வாழ்கின்றனர்.

"நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரமென் றோர்மணி,
யாரம் படைத்த தமிழ்நாடு"

என்று பாரதி பாடுகின்றான். சிலப்பதிகாரத்தில் காணப்படும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு முத்துக்கள். நம் நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் வகையில் அம்முத்துக்கள் ஒளிவீசுவதை அனைவரும் படித்துணர்ந்து நம் வாழ்விற் சிலப்பதிகாரத்துக்கு முதலிடம் கொடுத்தல் வேண்டும். பொய்மை நிறைந்த புரட்டிற்கும், வேண்டாத ஆராய்ச்சிக்கும் நாம் இடம் கொடுத்தல் கூடாது. "ஆக்கவுங் காக்கவும் வல்லான் ஒருவன் இருக்கின்றான்; அவனே தலையாவான்” என்று உளமார நினைத்து வாழ்த்தி வணங்குங்கள்.

பண்டையிலக்கியங்கள் போன்று இற்றை நாளில் நந்தமிழகத்துப் புதுமையான காப்பியம் ஏதேனும் தோன்றியது உண்டா? ஒன்றிரண்டு தோன்றியிருப்பினும் அவை மாறுபட்ட கருத்துக்களையும் இடக்குச் சொற்களையும் பரப்புவனவாக இருக்குமேயன்றிப் பண்டைத் தமிழர் பண்பாட்டைச் செவ்வனம் விளக்குவனவாக இருக்க மாட்டா. பண்டையிலக்கியங்கள் இன்றுவரை அழியாதிருப்பதன் தலையாய காரணம் என்னை? அவற்றை இயற்றியருளிய ஆசிரியர்கள் தலையான அருள் உள்ளம் படைத்த பெருமக்களால் ஆக்கப்பட்ட காப்பியங்களுக்குத் தனித்ததோர் தெய்வீக சக்தியுண்டு.

நூற்புலமை மட்டும் பெற்றோர் சொல்லடுக்கு இணைத்து எழுதும் நூல்கள் சிரஞ்சீவிக் காப்பியங்கள் ஆகமாட்டா. அந்நூல்கள் புத்தக உருவில் இருக்க முடியுமல்லாது, மக்கள் வாழ்வில் நலங்காணச் சிறிதும் பயன்பட மாட்டா. வெறும் புலமையால் இயற்றப்படுவது காப்பியமாகாது. புலமையுடன் அருள் உள்ளமும் கலக்கப் பெற்றால்தான், அன்னார் காப்பியங்கள் என்றென்றும் நிலைத்து நிற்கும். இரண்டும் கலக்கப் பெறாத காப்பியங்கள் காலப்போக்கில் மறைந்தொழியும்.

சிலப்பதிகார ஆசிரியர் பெரும் புலமையும், ஆராய்ச்சியும் அனுபவமும், அருள் உள்ளமும் கனிந்து விளங்கிய பெருமகனார். இளங்கோவடிகள் தந்த சிலப்பதிகாரக் காப்பியத்தில் முத்தமிழும் நடம் புரியும். இதற்கு இணையான முத்தமிழ்க் காப்பியம் ஒன்று இன்றுவரை தமிழர் கண்டிலர். சிலப்பதிகாரப் பெயர்க் காரணத்தை ஒவ்வொரு தமிழனும் நன்குணர்தல் வேண்டும்.

ஒருநூலைப் பயிலத் தொடங்குமுன், அந்நூற் பெயர்க் காரணம், நூலின் முன்னுரையாகியவற்றை நன்கு பயின்று நூலுட் புகுந்தால்தான் உண்மைப் பொருள் விளங்கும்.

“ஊழ்வினை உருத்துவந் தூட்டும்;
உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்;
அரசியல் தவறியவர்க்கு அறமே கூற்றாம்”

என்னும் கொள்கைகளை வற்புறுத்தவே சிலப்பதிகாரம் எழுந்தது என ஆசிரியர் கூறியிருக்கின்றார். சிலப்பதிகாரத்தின் உயிர்நாடி சிலம்புதான். சிலம்பொன்றைக் கொண்டு ஒரு பெருங்காப்பியம் முடித்துத்தந்த பெருமை இளங்கோவுக்கு உண்டு.

பண்டை இலக்கியங்களைப் படித்துப் பார்க்காதவர்கள் - படித்தும் உணர்ந்து கொள்ளத் திறனற்றவர்கள் உணர்ந்தும் சொல்வாதம் புரிகின்றவர்கள் ஆகிய வகையினரே அவைகளைப் பற்றிக் குறை கூறுகின்றார்கள். “அனுபவிக்கத் தெரியாதவன் குறைகூற முனைகின்றான்” என்றான் ஒரு அறிஞன். இன்றைய மக்கட் சமுதாயம் தவறான பாதையிற் செல்கின்றது. இற்றைப் பகுத்தறிவுவாதியர் கொண்டுள்ள மாற்றெண்ணத்தால் விளைகின்ற செயல்களை எண்ணும்பொழுது நம்மையும் அறியாது கண்கள் நீர் மல்கும். இத்தகு நிலையை மாற்ற வேண்டுமானால் ஒவ்வொரு மனிதனும் தத்தம் கடமையை உணர்ந்து நடக்க வேண்டும்.

கருத்துவளம் எங்கு உண்டோ அங்கு வாழ்வும் வளம் பெறும் என்பதை உணர்ந்து வாழ முற்பட்டால் விரைவில் தமிழகத்தில் நல்லதொரு மாற்றம் ஏற்படும். ஒவ்வொரு மனிதனும் தான் செய்கின்ற செயல் எத்தகையது என்பதை நன்கு சிந்தித்துப் பின் செயலில் முனைதல் வேண்டும். ஒவ்வொரு மனிதனும் தன் குற்றத்தைத் தான் உணர்ந்த பின்னர் வாழ்வதை விட உயிர் விடுவதே மேல். அங்ஙனம் தன் உயிரைப் போக்கிக் கொள்வதிலும், உடலிலிருந்து உயிர் தானாகப் பிரிதல் எத்துணை விழுமியது என்பதை உன்னுங்கள். இதுவே தமிழகங்காட்டும் செந்நெறி. இத்தகைய முறையில்தான் பண்டைத்தமிழகம் வாழ்ந்து வந்தது என்பதை எல்லோரும் நன்குணர வேண்டும்.

நீதிக்கு முதலிடம் கொடுத்த நாடு நம் நாடு. குற்றத்தை உணர்ந்த பின் அவனையும் அறியாமல் உடலிலிருந்து உயிர் நீங்கிய வரலாற்றை இளங்கோ, பாண்டிய மன்னன் வாயிலாக உணர்த்துகின்றார்.

"யானோ அரசன்? யானே கள்வன்!
மன்பதை காக்குத் தென்புலங் காவல்
என்முதற் பிழைத்தது கெடுகனன் ஆயுள்என
மன்னவன் மயங்கி வீழ்ந்தனனே.”

என்பது சிலப்பதிகார அடிகள். இதன்மூலம் “மக்கட் சமுதாயம் குற்றம் நிகழ்கின்ற இடத்தில் குற்றத்தை ஒப்புக்கொள்ளும் மனப்பான்மையும், குற்றங்காண்கின்றவிடத்தில் அதனை விடுத்துக் குணத்தைக் காணும் பண்பாட்டையும் பெறுதல் வேண்டும்" என்பதை உணரலாம்.

அறக்கடவுள் முன்னிலையில் மாறுபட்ட செயல்கள் செய்கின்ற கூட்டம் விரைவில் அழிந்து விடும். இதனைத்தான் இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தின் மூலம் உலகிற்கு எடுத்துக் கூறினார்.

மக்கள் வாழ்வில் அறத்திற்குத்தான் முதலிடம் கொடுக்கப் பெறுதல் வேண்டும். காலப்போக்கில் நாம் அறத்தின் பெருமையை மறந்து வாழ முற்பட்டோம். நாமும் வாழ்வில் தாழ்ந்தோம் என்பதை அன்றாட உலகியல் வாழ்வில் கண்கூடாகக் காண முடிகிறது.

மனிதன் பொருளின் பின்னே செல்கின்றான். சிலவேளைகளில் அதற்கு அடிமையும் ஆகின்றான். ஆனால் பொருள் பெறுதற்குரிய நல்ல வழிகளை இளங்கோ போன்றவர் உணர்த்தியிருந்தும் அதன்வழி செல்லாமல் இடர்ப்படுகின்றான்.

மக்கள் வாய்மைநெறி தவறாது வாழ வேண்டும்; நிலைத்த உயிர்களுடன் நேசம்மிக்க அவற்றைப் பாதுகாத்தலும் வேண்டும். இங்ஙனம் ஒழுகுவாரானால் அவர்க்குப் பொருள் மட்டுமோ கிடைக்கும்? யாரும் அடைய முடியாத எல்லாப் பொருள்களும் கிடைக்கும் என்று அறுதியிட்டுக் கூறுகின்றார் இளங்கோ.

“வாய்மையின் வழாது மன்னுயிர் ஓம்புநர்க்கு
யாவதும் உண்டோ எய்தா அரும்பொருள்"

என்பது இளங்கோ கூற்று. மேலும், ஆசிரியர் அறவுரை கேண்மின்;

“தெய்வம் தெளிமின்; தெளிந்தோர்ப் பேணுமின்:
பொய்யுரை அஞ்சுமின்; புறஞ்சொல் போற்றுமின்;
ஊனுண் துறமின்; உயிர்க்கொலை நீங்குமின்;
தானம் செய்மின்; தவம்பல தாங்குமின்;
செய்ந்நன்றி கொல்லன்மின்; தீநட்பு இகழ்மின்;
பொய்க்கரி போகன்மின்; பொருண்மொழி நீங்கன்மின்;
அறவோர் அவைக்களம் அகலாது அணுகுமின்;
பிறவோ ரவைக்களம் பிழைத்துப் பெயர்மின்;
பிறர்மனை அஞ்சுமின்; பிழையுயர் ஒம்புமின்;
அறமனை காமின்; அல்லவை கடிமின்;

கள்ளுங் களவுங் காமமும் பொய்யும்
வெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின்;
இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா
உளநாள் வரையாது ஒல்லுவது ஒழியாது
செல்லுந் தேளத்துக் குறுதுணை தேடுமின்;
மல்லன்மா ஞாலத்து வாழ்வீர் ஈங்குஎன்”

தெய்வத்தைக் காண வேண்டுமானால் நம் உள்ளம் தூய்மையாக இருத்தல் வேண்டும். குழப்பமான உள்ளத்தில் இறைவன் குடிகொள்ளான். தெய்வத்தைக் கண்டுணர்ந்த பெருமக்களின் தொண்டு பூண்டொழுகி அவர் வாழ்வைப் பின்பற்றிச் சிறப்படை-வீர்களாக! பொய்மொழிகளைக் கூற அஞ்சுவீராக! புறங்கூறா அறத்தைப் போற்றுவீராக! புலால் உண்டலைத் தவிர்வீராக! உயிர்க்கொலை மறந்தும் புரியாது வாழ்க! தான்மும் தவமும் தக்கவாறு இயற்றுக! செய்ந்நன்றி மறவாச் சீலம் பெறுக கூடா நட்பைக் கோதெனத் தள்ளுக! பொய்ச்சாட்சி பகர்வதையொழித்துப் பொலிக பெரியோர் பொருள்மொழி பேணிக் கேட்க அறவோர் அவையில் அனைத்துங் கேட்க! பியர் மனையஞ்சும் பேராண்மை பெறுக! அல்லற்படும் உயிரையாதரித் துயர்க! இல்லறம் பேணி இசை நனி பெறுக! கள், களவு, காமம், பொய், வீணர்குழு இவற்றை அறவே விட்டொழிப்பீராக! மறுமைக்குரிய இன்றியமையாத் துணையைத் தேடிக்கொள்க!

உள்ளந்தொடும் இத்தகு அரும்பெரும் அறவுரைகளை இளங்கோவின் அருள் உள்ளம் வாரி வழங்குகின்றது.

"கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க
அதற்கு தக"

என்ற வள்ளுவர் வாக்கிற்கேற்ப, ஒவ்வொருவரும் இப்பொன்னான கருத்துக்களைப் படித்துணர்ந்து அவற்றைத் தம் வாழ்விற் கலக்கச் செய்தல் தலையான கடமையாகும்.

வாழி தமிழன்னை வாழி தமிழர்குலம்
வாழி சிலம்பின் வளம்.

மதுரைத் தமிழரசுக்கழகத்தில் தவத்திரு அடிகளார் ஆற்றிய உரை.
--------------

5. கற்பவை கற்க...!

நாள்தோறும் புற்றீசல்கள்போல் நூல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்தச் சூழ்நிலையில் வாசகசாலை எத்தகைய தொண்டு செய்ய வேண்டும் என்பதை எண்ணித்தான் “கற்பவை கற்க” என்று பேச விரும்புகின்றோம். இன்று இலக்கிய வளர்ச்சியைப் பற்றிச்சொல்ல வேண்டியதில்லை. நேற்று முன்தினம் சென்னை நகரிலே நடைபெற்ற பாரதி விழாவிலே அமைச்சர் ஒருவர், “முன்னைய இலக்கியங்களைப் போற்றிக் கொண்டிருப்பதிலே பயனில்லை. இன்னும் புதுப்புது இலக்கியங்கள் தோன்ற வேண்டும். திருவள்ளுவரைப் போல், கம்பரைப் போல் இலக்கியங்கள் ஆக்கித்தர முன்வருதல் வேண்டும்” என்று பேசி இருக்கின்றார். அதைப் பற்றி நமது கருத்தைச் சொல்கின்றோம்.

பழைய இலக்கியங்களை உணர்ந்து பேசுகின்ற படிக்கின்ற - பாராட்டுகின்ற நிலை இன்னும் இந்த நாட்டில் வளரவில்லை. திருவள்ளுவரை முற்றிலும் இன்னும் உணர்ந்தாரில்லை. ஒருசிலர் உணர்ந்திருந்தாலும் மாறுபட்ட நிலையில்தான் உணர்ந்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் திருவள்ளுவரைப் போல் இலக்கியம் செய்ய வேண்டும் என்றால் நிச்சயமாகப் பகற்கனவுதான். முதலில் பண்டைத் தமிழ் இலக்கியங்கள் நாட்டிலே நன்றாகப் பரவவேண்டும். அதனுடைய அறநெறிக் கொள்கைகள் பரவவேண்டும். அதன்பின்தான் புது இலக்கியங்கள் தோன்ற வழிவகுத்துக் கொடுக்கலாம். அப்படி இல்லாமல் இலக்கியம் தோன்றினால் அது இலக்கியமாக இராது.

சிறந்த இலக்கியத்திற்கு ஒரு சான்று அறிஞர் ஒருவர் சொல்லுகின்றார்: "உன்னுடைய இலக்கியத்தைக் குறைந்தது ஒன்பதாண்டுகளுக்கு மக்கள் முன் வை. அதன் பிறகும் மக்கள் அதனை விரும்பிப் படிப்பார்களேயானால் உன்னுடைய இலக்கியம் சிரஞ்சீவி இலக்கியம்” என்றார். இன்று தோன்றுகின்ற இலக்கியங்கள் இப்படிக் காட்சியளிக்கவில்லை. இந்தச் சூழ்நிலையில் “கற்பவை கற்க” என்று சொன்னால் பிழையில்லை அல்லவா?

திருவள்ளுவர் பிறர் மனம் நோகக்கூடாது என்று நூல் செய்த பெருந்தகையாளர். "கசடறக் கற்க” என்று சொல்லி நிறுத்த மனம் வரவில்லை. "கற்க கசடறக் கற்பவை” என்று சொல்லுகின்றார். கற்க வேண்டுவனவற்றைக் கற்க என்று ஆணையிடுகின்றார். திருவள்ளுவர் காலத்தில் அப்படிச் சொல்ல வேண்டிய நிலை இருந்திருக்க முடியாது. திருவள்ளுவர் எதிர்காலத்தை நோக்கிச் செய்த குறள்களில் இதுவும் ஒன்றாகும்.

திருவள்ளுவர் காலத்தில் ஏடெடுத்தவர்கள் எல்லாம் எழுத்தாளர்கள் அல்லர் - பாடத் தெரிந்தவர்கள் எல்லாம் கவிஞர்கள் அல்லர். உலகம், உலகமக்கள், வாழ்க்கை இவையெல்லாங் கருத்திற்கொண்டு, சிந்தித்து நாட்டு மக்களை நல்லாற்றுப் படுத்துதற்காக இலக்கியங்கள் ஆக்கினார்கள். நல்ல நீண்டகால அனுபவத்திற்குப் பின்தான் இலக்கியங்கள் தோன்றின. எனினும் திருவள்ளுவரது அனுபவ உள்ளம் “கற்பவை கற்க” என்று சொல்லிற்று.

வள்ளுவனாரின் இந்த அருமையான கருத்தை நகைச்சுவைபடச் செல்லுகின்றார் "ரஸ்கின்” என்ற பேராசிரியர். “நாள்தோறும் நோய்கள் மலிந்து கொண்டிருக்கின்றன. எந்த மனிதனை எடுத்துக் கொண்டாலும் ஏதாவது ஒருநோய் இருந்து கொண்டுதான் இருக்கிறது. வீட்டில் ஒருபகுதியிலே மருந்து சாமான்கள் இருக்கத்தான் செய்கின்றன. இருக்கின்ற மருத்துவ நிலையங்கள் போதாவென்று புதிதாக மருத்துவ நிலையங்கள் கட்ட அரசியலார் திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

செய்தித்தாளை எடுத்துக் கொண்டால் பெரும்பாலும் மருந்து விளம்பரங்கள்தான் இருக்கின்றன. நோயால் வருந்துகின்ற ஒருவன் அந்த விளம்பரங்களைப் பார்த்து மருந்து சாப்பிட்டால் அவன்நிலை என்னவாகும்? ஒரே வயிற்று வலிக்குப் பலப்பல மருந்துகள் விளம்பரம் செய்யப்படும். இன்று வருகின்ற ஒரு விளம்பரத்தைப் பார்த்து அந்த மருந்தை வாங்கிச் சாப்பிட்டவன் அடுத்த வாரத்தில் மற்றொரு மருந்தின் விளம்பரம் வந்தால் அதையும் வாங்கிச் சாப்பிட்டால் அவன் நிலை என்னாகும்? சில நாட்களுக்குப் பின் மரிக்கவிருக்கின்றவன் சில நாட்கட்கு முன்னேயே மரித்து விடுவான். அதைப் போலத்தான் புத்தங்களும்.

“பெயரைக் கண்ட மாத்திரத்தில் மட்டும் அதனைப் படிக்கத் தொடங்காதே" என்று கூறுகின்றார் ரஸ்கின். “தன்னுடைய நோய் எது? அதற்கு ஏற்ற மருந்து எது?” என்று மருத்துவரை நாடிச் சென்று அவர் ஆலோசனையின் பேரில் மருந்து உண்டால்தான் அது பயன்தரும். அதைப்போல, அறிஞர் பெருமக்களின் ஆலோசனையின் பேரில் நூல்களைப் படித்தால்தான் கல்வி பயன்தரும் என்று ரஸ்கின் சொல்லுகின்றார்.

படிக்கத் தக்கவை எவை என்ற துறையில் பல பேராசிரியர்கள் தமது கருத்துக்களைச் சொல்லியிருக்கின்றார்கள். "பிரான்சிஸ் பேக்கன்” என்பவர் “ஒருசில நூல்கள் படிக்கத்தக்கவை; ஒரு சில அனுபவிக்கத்தக்கவை” என்று சொல்லுகின்றார். இன்றைய சூழ்நிலையில் ஒரு சில பார்க்கத்தக்கவை என்று சொல்லலாம். பேக்கன் காலத்தில் இப்படிச் சேர்த்துக் கொள்ள வேண்டிய இன்றியமையாமை இருந்திராது. இன்று வரும் இலக்கியங்கள் இந்த நிலைமையில் இருக்கின்றன. நச்சுக் கருத்துக்கள் மிக மிக எளிதாக வீடு தேடி வருகின்ற நிலையில் பரப்பப்படுகின்றன.

நம்முடைய வரலாற்றைப் படித்துப் பார்த்தால் அதிகமாகக் காணப்பெறுவது போரே. அறத்திற்கும் அறத்திற்கு மாறுபட்டவற்றுக்கும் போராட்டம். ஆனால் என்றும் அறம் பிறரால் பாராட்டப்படுகின்ற நிலையில் போர்க்களத்தில் வெற்றி பெற்றதில்லை. அறத்தை மறம்தான் போலி வெற்றி கொண்டது. அறத்தின் உயிர்ப்பு நிலையில் பல உத்தமர்கள் பலி கொடுக்கப்பட்டிருக்கின்றார்கள். பலி கொடுக்கப்பெற்ற அவர்கள் கருத்து, சிந்தனை இன்றும் உலகத்தில் வாழ்கின்றது. இன்னும் பல்லூழிக் காலம் வாழும். அதனால்தான் இப்போராட்டம் இலக்கியங்களிலெல்லாம் பேசப்பெறுகின்றன.

சீனஞானி "கன்பூஷியஸ்” என்பார். அவருக்கும் திருவள்ளுவருக்கும் எத்தனையோ இடங்களில் ஒன்றுபட்ட எண்ணங்கள். அறத்தைத் தென்றல் என்று சீனஞானி கூறுவார். அறத்திற்கு மாறுபட்டனவற்றை வாடையென்பார். இந்நாட்டில் தான் தென்றலை அனுபவித்திருக்கின்றோம் என்று எண்ணியது உண்டு. ஆனால் தென்றலும் வாடையும் அங்கே பேசப் பெறுகின்றது. உடல் நலத்துக்கு ஏற்றது. தென்றல். அதற்கு மாறுபட்டது வாடை. அதுபோல, அறம் இன்பம் தரும். மறம் துன்பம் தரும். இவ்வாறு சீனஞானி விளக்கியிருக்கின்றார். இத்தகைய அறவுணர்ச்சியையூட்டும் இலக்கியங்கள்தான் தேவை. இன்று ஆங்கில மொழிக்கு ஒரு சிறப்பு உண்டு. எது இலக்கியம் என்று அவர்கள் அறிந்து சொல்லியிருக்கின்றனர். "வாழ்க்கை முறையை எடுத்துக் காட்டுவது இலக்கியம்” என்று அட்சன் சொல்லுகின்றார்.

திருவள்ளுவர், இந்த நாட்டிற்குக் கொடுத்த ஆணை "கற்பவை கற்க” என்பது. இதனை நீங்கள் கடைப்பிடியுங்கள். புதிதாக இலக்கியங்கள் தோன்றத்தான் வேண்டும். பண்டை இலக்கியங்கள் படிப்பாரற்றுக் கிடக்கப் புதிதாக இலக்கியம் செய்தவதென்றால் அதைவிடப் பித்தேறிய செயல் வேறு எதுவுமில்லை.

தமிழ்நாட்டின் இலக்கியத்திற்குத் திருவள்ளுவர் குறள் ஒன்றே போதும். அதற்கு ஒப்பத் திருவாசகம் உண்டு. இதனை எரியில் இடவேண்டும் என்று சொல்கின்றார்கள். ஏன் என்று நமக்குப் புரியவில்லை. முன்னெல்லாம் ஏதோ புராணங்களைக் கொளுத்த வேண்டுமென்று பேசிக் கொண்டு வந்தனர்.

புராணங்களில் மெய்யானவையும் உண்டு. பொய்யானவையும் உண்டு. சாதாரணமாகக் குழந்தைகட்கு ஏதேனும் கற்பனை மூலந்தான் அறிவு புகட்டல் இயலும், அப்படிப் புகட்டுதலே பயன்தரும். அப்படிப் பொய்யான இலக்கியங்கள் பல இருக்கலாம். நாட்டு மக்களுக்கு நல்லன சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் அங்ஙனம் செய்திருக்கலாம்.

இன்று மக்கள் அறிவு வளர்ந்து விட்டது என்று சொல்கின்றனர்.அறிவு வளர்ச்சி பெறாத காலத்தில் கற்பனை மூலம் - கட்டுக் கதைகளின் மூலம் பலவற்றைச் சொல்லி-யிருக்கலாம். ஆனால் “மனிதனை மனிதனாக வாழ வைக்கின்ற” உள்ளத்திலிருந்து எழுந்த நல்ல அன்பு பொருந்திய அறந்தழுவிய வாழ்க்கையிலிருந்து வந்த மொழியை எரியில் இட வேண்டும் என்று சொன்னால் “விலங்கொடு அனையர் மக்கள்” என்று வள்ளுவர் சொல்லுகின்ற சொல்லைத்தான் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். அறத்திற்கு மாறுபட்டன வருகின்றபொழுது வள்ளுவனார் தம்மையும் அறியாது தமிழ்நாட்டு இரத்தம் ஒடுவதால் கோபமாகப் பேசுகின்றார்.

அந்தக் கோபம் அல்லவர் தம்மையும் நல்லவர் ஆக்குதற்காகவே. எரியில் இட வேண்டும் என்று சொல்லுகின்றவர்களைப் பார்த்து எச்சரிக்கின்றார். இவ்வாறெல்லாம் சொன்னால் பேய்த்தன்மையைப் பெறுகின்றாய் என்று சொல்லுகின்றார். சமயத்தைப் பரப்புவதற்கென்றே பாடுபட்ட மாணிக்கவாசகர் கூட இப்படிப்பட்டவர்களை, "ஆப்தமானார்” என்று பரிவுடன் பேசுகின்றார். ஆனால் திருவள்ளுவரோ, பேய்க்கூட்டம் என்று சொல்லுகின்றார்.

“உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும்”

உலகத்தார் உண்டு என்று சொல்லுகின்ற பொருளை இல்லை என்று சொல்லுகின்ற-வர்கள் வையத்தில் பேயாக மதிக்கப்படுவார்கள்.

திருவள்ளுவர் நூலைப் போலத் தலைசிறந்த நூல் வேறில்லை என்று சொல்லலாம். அதிலே கூடச் சில பகுதிகளை எடுத்துக் கொண்டு அவர்களுக்கு வேண்டாத பகுதிகளைத் தள்ளி விடுகின்றார்கள். அவர்கள் திருவள்ளுவரை முழுதும் கண்டார்களா என்றால் இல்லை. திருவள்ளுவரைப் பற்றி இன்று வருகின்ற ஆராய்ச்சியைப் பார்த்தாலே நீங்கள் வருத்தம் கொள்வீர்கள். தமிழகத்திலே பிறந்த திருவள்ளுவருக்கு இந்த நிலை. “ஒரு நல்ல மனிதனைக் கொல்லுவதை விட ஒரு நல்ல புத்தகத்தைக் கொல்லுதல் கொடுமையுடையது” என்று மில்டன் கூறுகின்றார். ஒரு நல்ல மனிதரைக் கொன்றுவிட்டால் அவரைச் சார்ந்தவர் அவரோடு தொடர்புடைய பலர் இந்த நாட்டிலே அந்த உணர்ச்சியைப் பரப்புவார்கள். ஏசு கிறித்து மறைந்து விட்டாலும்கூடப் பல ஆண்டுகளாக அவருடைய அறவுரைகள் உலகம் எங்கும் பரப்பப்பெறுகின்றன.

திருவள்ளுவர் நூலுக்குப் பத்துப்பேர் உரை எழுதியிருக்கின்றார்கள். குழந்தையுரை என்று ஒன்று வெளிவந்திருக்கின்றது. திருவள்ளுவர் இன்று இந்த நாட்டில் வாழ்ந்தால் இவ்உரையைப் பார்த்துத் தற்கொலை செய்து கொண்டிருப்பார். இப்படியெல்லாம் நூல்கள் வெளிவந்து கொண்டிருக்கும்பொழுது கற்பவை கற்க என்று சொல்ல வேண்டுவது அவசியம் எனக் கருதுகின்றோம். கடைப்பிடிக்க வேண்டிய மொழியது.

பண்டைத் தமிழக இலக்கியங்கள் அனைத்தும் நன்மையையே அடிப்படையாகக் கொண்டு எழுந்தன. தீமையின் பெயரைச் சொல்லக்கூடத் திருவள்ளுவர் அஞ்சி நல்லனவற்றின் பெயரை வைத்துத் தீமையை உணர்த்துகின்றாரே தவிரத் தீமையை நாவால் சொல்ல முன்வரவில்லை. இந்தநிலையிலே, பண்டைத் தமிழ் இலக்கியங்களைப் பார்த்தல் வேண்டும்.

இன்று வருகின்ற இலக்கியங்களைப் பற்றிச் சிந்திப்போம். பழம்பெரும் இலக்கியங்கள் எப்படித் தோன்றின? தமிழ்நாட்டு இலக்கியங்கள் அனைத்தும் சிறந்த அறத்தை அடிப்படையாகக் கொண்டு தோன்றின. தமிழன் என்று அறிவுடன் உலவத் தொடங்கினானோ அன்றே காதலொடு வாழ்ந்தான். தலைவனும் தலைவியும் இக்காலத்துத் தலைவன், தலைவிபோல் காட்சியளிக்கமாட்டார்கள். அடிப்படை வாழ்க்கை முறையிலேயே இருக்கும். அகநானூறு, கலித்தொகை, குறுந்தொகை எல்லாம் அகத்துறை இலக்கியங்கள். அவைகளைப் படித்துப் பார்க்க வேண்டும். எளிமையான முறையில் நல்லன சொல்லிய பெருமை நமது புலவர்களுக்குண்டு.

நீங்கள் திருவள்ளுவரை இலட்சிய புருடராகக் கொள்ளுங்கள். திருவள்ளுவர் இந்த நாட்டிலே அன்பு நிலவ வேண்டும் என்பதற்காக வேறெந்த எண்ணமும் கொள்ளாது ஒப்பற்ற எண்ணங்களைக் கொடுத்தார். திருவள்ளுவர் தொடங்குகின்றபோதே அறத்தை வலியுறுத்துகின்றார். அறம்தான் மனிதனை முன்னேற்றும் என்று சொல்லுகின்றார். அறத்திற்கு அடிப்படைக் குணம்தான் அன்பு என்பதை எல்லோரும் உணர்ந்து வாழவேண்டும். உள்ளத்தில் தூய்மை நிலவவேண்டும் என்றெண்ணி,

“மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற"

என்று பாடிய பெருமை வேறு எந்த இலக்கிய ஆசிரியருக்கும் இல்லை. தனிப்பட்ட மனிதனிடத்திலே அறத்தை வைத்துப் பேசிய பெருமை திருவள்ளுவருக்குத்தான் உண்டு. அதனை உணர்ந்து நடவாததால்தான் நாடு வறுமைப்படுகின்றது. வள்ளுவர் கூறிய அறம் இந்த நாட்டில் வளருமானால் இன்பம் பெருகும்.
“அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல

அறத்தினால் வருவதுதான் தலைசிறந்த இன்பம். அதனால் வரும் புகழ்தான் புகழ் என்று வற்புறுத்திக் கூறுகின்றார்.

திருவள்ளுவர் ஒப்பற்ற நாகரிகத்தைப் பேசுகின்றார்.

“பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்”

நாகரிகம் என்ற சொல் இன்று மிக எளிமையாகி விட்டது. ஆனால் வள்ளுவர் நஞ்சூட்டுவார்க்கும் நல்லருள் பொழியும் உளப் பண்பை “நாகரிகம்” என்ற சொல்லாற் குறிப்பிடுகின்றார்.

சில சமயங்களிலே சிறந்த சிறுகதை ஆசிரியராகத் திருவள்ளுவர் காட்சியளிக்கின்றார். நம்மேல் ஒருவர் பொறாமை கொண்டு நஞ்சு வைத்து விடுகின்றார் என்று வைத்துக் கொள்வோம்; ஏன்? சாக்ரடீசுக்குக் கிடைத்தது. அதுதானே? நாம் அதை உண்ண வேண்டுமாம்! அப்படி எண்ணாது உண்ண வேண்டுமாம். எப்பொழுதும் வள்ளுவர்க்கு உள்ளத்தில் ஒரு பற்று. ஆகையால் நஞ்சு என்று எண்ணாதே. அப்படி எண்ணினால் உன்னுடைய முகம் பேசும் என்ன இருந்தாலும் வெறுப்புணர்ச்சி தோன்றினால் முகம் அதனை எடுத்துக்காட்டும் அல்லவா? ஆகையால் நஞ்சு என்று எண்ணினால் அந்த நினைவை முகம் எடுத்துக்காட்டிவிடும். அப்பொழுதும் நம்முடைய முகத்தை நஞ்சு வைத்தவர் பார்த்து விட்டால் வருத்தப்படுவார். அந்த வருத்தத்தைக் கூட அவனுக்குக் கொடுக்காதே என்று சொல்லுகின்றார்.

நஞ்சுண்டமைந்தவர் இந்த நாட்டிலேதான் உண்டு. நஞ்சுண்டு இறந்தவரைத் தான் பிறநாடுகளிலே கேள்விப்பட முடியும். சாக்ரடீஸ் நஞ்சுண்டு மாண்டார். உடனே, அவருடைய தொண்டர்கள் உண்மையைக் கொன்று விட்டார்கள் என்று வருத்தப்பட்டார்கள். ஆனால் நம் நாட்டிலே திருநாவுக்கரசர் இதனை எண்ணித்தானோ என்னவோ நஞ்சுண்டு இறந்துவிட்டால். பிறர்க்கு இழிசொல் கிடைக்கும் என்று எண்ணி இறப்பு வாராதிருக்க வேண்டும் என்று எண்ணி இருப்பார் போலும்.

எப்பொழுதுமே தமிழன் கண்ட அறம் உயர்ந்த அறம். பிறரைச் செய் என்று சொல்ல மாட்டார்கள். செய்தால் நல்லது என்று சொல்லுவார்கள். நல்லது செய் அல்லது தீமையைச் செய்யாமலிரு என்று சொல்லுவது இந்த நாட்டுப் பண்பாடு. இதுதான் இன்று கிராமத்துப் பழமொழியாக விளங்குகின்றது. நரி வலம் போனாலும் சரி, இடம் போனாலும் சரி மேலே விழுந்து கடிக்காமல் இருந்தால் போதும் என்று சொல்லுவார்கள்.

எதிலும் நம்பிக்கை வேண்டும். நமக்குத் தெரிந்தவரையில் எந்த நாட்டை எடுத்துக் கொண்டாலும் நம்பிக்கை நம்பிக்கை என்றுதான் அவர்கள் எல்லாம் மூச்சு விடுகின்றனர். நம்பிக்கை ஒன்றுதான் முதுமைக்காலத்தில் தாதியாய் நின்று துணை செய்யும்.

நான் தமிழன் என்று பூதத்தாழ்வார் சொல்லுகின்றார். வெறும் தமிழன் என்று கூறிலர். பெரும் தமிழன் என்று சொல்லுகின்றார்.

"யானே தவம்செய்தேன் ஏழ்பிறப்பு மெப்பொழுதும்
யானே தவமுடையேன் எம்பெருமான் - யானே
இருந்தமிழ் நன்மாலை யிணையடிக்கே சொன்னேன்
பெருந்தமிழன் நல்லேன் பெரிது"

பெரிய தமிழன் - நல்ல தமிழன் என்று பூதத்தார் புகல்கின்றார். இத்தகைய நெறியில் வாழ்ந்த மக்களைக் கண்ட பெருமக்கள் அதற்கு மாறுபட்ட நெறியிலே வாழ்கின்றவர்களைக் கண்டபொழுது கோபப்படுதல் இயற்கைதானே!

இத்தகைய இலக்கியங்களை ஆக்குவது என்பது முடியாததொன்று. மனச்சுருள் நீக்கி மலர்விக்கும் இத்தமிழ் இலக்கியங்களைச் செம்மையாகக் கற்று, கற்றவாறு ஒழுகி எல்லா நலன்களும் அடைவோமாக!

ஓங்குக தமிழ்! உயர்க ஒழுக்கம்!

- சிவகங்கை கோகலே ஹாலில்
தவத்திரு அடிகளார் ஆற்றிய உரை
------------------

6. இலக்கியமும் கடவுள் நெறியும்

பேரன்புடையீர்!

தமிழர் பண்டொரு காலத்துப் பீடுடன் வாழ்ந்தனர். நாகரிகத்தின் உச்ச நிலையில் உவகையோடு வாழ்ந்தனர். இமயத்திலும் - கங்கை வெளியிலும் - கடாரத்திலும் கன்னித் தமிலொழியை ஒலித்து, ஒப்பற்ற புகழோடு வாழ்ந்தனர். தமிழர் நாட்டின் வட எல்லை ஒருகால் கங்கை நாடு - மற்றொருகால் இமயப்பனிவரை இமயத்தின் உச்சியில் தமிழர் கொடி பறந்தது ஒருகாலத்தில். தமிழ்ப் பெருங்குடியினரது கருத்தெல்லை என்றுமே உலக எல்லையாகவே இருந்து வந்திருக்கின்றது. இங்ஙனம் கல்தோன்றி, மண்தோன்றாக் காலத்தே தோன்றி - ஓங்குயர் சீர்த்தியுடன் வாழ்ந்த தமிழினத்தார் காலப்போக்கிலே தளர்வெய்தினர். ஒன்றுபட்டிருந்த தமிழ்க்குலம் சாதியின் பெயராலும் சமயத்தின் பெயராலும் சிதறுண்டது. வலிவும், பொலிவும் இழந்து நாமமதே தமிழரெனக் கொண்டு, ஊமையராய் - செவிடராய் வாழத் தலைப்பட்டனர். அவர்தம் நாடும் சீரழிந்தது. நாகரிகமும் நலிவெய்தியது. இன்பத் தமிழும் இருப்பிடம் தேடலாயிற்று. தேய்ந்த தமிழகத்தின் எல்லையாம் வடவேங்கடத்திற்குக் கூட இல்லை - இந்தச் சென்னை நகருக்குக் கூட ஆபத்து ஆந்திர சகோதரர்களால் ஏற்படுகின்ற அளவுக்குத் தமிழரது உறக்கம் நீடித்து விட்டது. உறக்கத்திற்கும் ஒரு விடிவுக்காலம் வரத்தானே வேண்டும். தமிழரைப் பேருறக்கத்தினின்றும் எழுப்பி, ஆக்கத்துறையில் அழைத்துச் செல்லும் தமிழரசுக் கழகத்தினரை வாழ்த்துகின்றோம். தமிழர் வாழ்வே தமது வாழ்வெனக் கருதி, தளராது தொண்டாற்றும் கழகத் தலைவர் ம.பொ.சி அவர்களை நெஞ்சங்கலந்த அன்போடு வாழ்த்துகின்றோம். கழகத்தின் சார்பில் நடைபெறும் இந்தத் தமிழ் இலக்கிய மாநாட்டில் கலந்துகொள்ளும் வாய்ப்பை நல்கிய திருவருளை நினைந்து வந்தித்து வாழ்த்திப் பணியில் மேற்செல்ல விழைகின்றோம்.

தமிழகத்தின் சிறப்பியல்புகள்

தமிழ் தன்னேரில்லாத தனிமொழி. தொன்மை நலஞ் செறிந்த தொன்மொழி. புதுமை நலம் பலவும் பூத்துப் பொலியும் புதுமொழி. பழமையும் புதுமையும் கலந்து களிநடம் பயிலும் ஒரே மொழி. இனிமைப் பண்பிற் சிறந்து விளங்கும் சீர்சான்ற மொழி. தண்ணளியின் தவைவெலாம் பெற்றொளிரும் பெருமொழி. கடவுட்சார்பு பெற்று, காலத்தொடுபடாத கன்னித் தமிழாகக் காட்சியளிக்கும் ஒரு தனிமொழி. இன்பத் தமிழில் இலக்கியங்கள் நிறைய உண்டு. தமிழ் வளர்த்த சங்கங்களுக்கு முன்னும் பின்னும் தமிழ்ப்பெருமக்களின் உணர்வுத் திறனிலிருந்து உருவெடுத்த இலக்கியங்கள் பல. தமிழகத்தில் தோன்றிய இலக்கியங்களிற் பல கிடைக்கவில்லை. அவ்வப்பொழுது எழுந்த கடல்கோள்களால் பல இலக்கியங்கள் கொள்ளப்பட்டன. தமிழர் பெட்புறப் பேணாமையின் காரணத்தால் கறையான்கள் ஒரு சிலவற்றைச் சுவை கண்டழித்தன, என்றாலும் நல்லூழின் காரணத்தால் ஒருசில இலக்கியங்கள் இருந்தன - இருந்து கொண்டிருக்கின்ற வளர்ந்து கொண்டுமிருக்கின்றன.

எது இலக்கியம்

அன்றாட வாழ்க்கை அல்லல் நிறைந்த வாழ்க்கை. துன்பச்சூழல் கவ்விடும் இடும்பையே நிறைந்த வாழ்க்கை. இவ்வாழ்க்கையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் தளர்வு தலைகாட்டும். தளர்வாலும், துன்பத்தின் சூழலாலும் - இன்பத்தின் நிலைக்களனாய வாழ்க்கை, வெறுப்பு நிறைந்ததாக மாறிவிடும். வெறுப்புணர்ச்சியின் காரணமாக நேர்மை என்ற நேர்க்கோட்டிலேயே - செம்மை நலஞ்சிறந்த செந்நெறியிலே செல்ல வேண்டிய மக்கள் வழிதவறிச் செல்ல நேரிடும். அப்பொழுது, நல்ல நினைவையும் அறிவையும் உணர்வையும் ஊட்டித் தளர்ச்சியை நீக்கி நேர்மை பொருந்திய நெறியிலே அழைத்துச் செல்லுந் திறமுடையனவே நல்ல இலக்கியங்கள். நல்லனவே எண்ணும், புலனழுக்கற்ற அந்தணாளர்களின் உணர்ச்சிகளே நல்ல இலக்கியங்கள். நல்லெண்ணங்களின் தொகுப்பே இலக்கிம் என்று கூறுவர் எமர்சன். மக்களுக்கு நல்லொழுக்கத்தைக் கற்றுக் கொடுத்து, வாழ்வாங்கு வாழச் சொல்லிக் கொடுப்பதே நல்ல இலக்கியத்திற்குரிய சான்று. இலட்சியம் நிறைந்த வாழ்க்கை நெறியில் அழைத்துச் செல்லும் ஒப்பற்ற தொண்டைத் திறம்படச் செய்வதே பேரிலக்கியமெனக் கருதினர் தமிழ்மக்கள். அதனால்தான் தமிழர்கள் "இலக்கு" என்ற சொல்லிலிருந்து தொடங்கி வளர்த்துள்ளனர்.

தமிழிலக்கியங்கள்

தமிழ்ப் பெருமக்களது அன்பு பொருந்திய - அறந்தழுவிய-அருள்நலங்கனிந்த வாழ்க்கை அடிப்படையிலிருந்து எழுந்த இலக்கியங்கள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை முதலிய சங்க நூல்கள். பின்னர் தமிழ் இலக்கியப் பூஞ்சோலையில் பல இலக்கிய மலர்கள் பூத்தன. தமிழ் இலக்கிய வளர்ச்சியில் இனம் - மதம் முதலிய மாறுபாடுகளையெல்லாம் கடந்து பல பெருமக்கள் பணி செய்துள்ளனர். திருவள்ளுவர், திருத்தக்கத்தேவர், சேக்கிழார், கம்பர், இளங்கோவடிகள், உமர்ப்புலவர், தேவாரம் பாடிய மூவர், மாணிக்கவாசகர், ஆழ்வார்பெருமக்கள், தாயுமானார், வள்ளலார், பாரதியார் முதலிய பல பெரும் புலவர்கள் - சமுதாயச் சிற்பிகள் எல்லோருக்கும் தெரிந்தவர்கள், தெரிந்து கொள்ள வேண்டியவர்கள். வையகமும் வானகமும் வாழும்வரை இவர்களுடைய கருத்தோவியங்கள் வாழும் தகுதியுடையன.

தமிழிலக்கியம் காட்டும் நெறி

முன்னுரையில் குறித்தோம், தமிழர் இனம் அனைத்தும் ஒரு குலம் என்று. இந்தப் பரந்துபட்ட எண்ணம் தமிழினத்திற்கேயுரிய தனித்த இயல்பு. "யாதும் ஊரே யாவருங் கேளிர்” என்ற உயரிய நாகரிகம் தமிழர் நாகரிகம். இத்தகு புனித நாகரிக வாழ்க்கையினின்று தமிழர் நழுவினர். அதிலும் "ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்று கூறி, "மகவெனப் பல்லுயிரையும் ஒக்கவே பார்க்கும்” பண்பினை நல்கும் சமயத்தின் போரால் குறுகிய பல சாதிப் பிரிவுணர்ச்சிகளையும், வகுப்புவாத உணர்ச்சிகளையும் கற்பித்துக் கொண்டனர். சமயநெறிக்குச் சாதிப்புன்மை உடன் பட்டதல்ல. மக்களினம் அனைத்தும் ஓரினம். அந்த இனத்தில் தமிழர் ஓர் குலம் என்ற பேருண்மையை வலியுறுத்துகின்றன தமிழ் இலக்கியங்கள்.

“பெரியோரை வியத்தலும் இலலே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே”

என்று கூறி, உயர்வு தாழ்வுப் புன்மைகளைப் புறக்கணிக்கிறது தமிழிலக்கியம். ஒரு நாட்டு மக்களது வாழ்க்கையில் இன்பமே பொருந்தி விளங்க அமைதி நிலவும் சூழ்நிலை தேவை. அமைதியும் ஓரிடத்திலிருந்து பூரண இன்பத்தைக் காண முடியாது.

மக்கள் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் இன்பம் பொலிவதற்கு, வீடு, ஊர், நாடு முதலிய மூன்றிடங்களிலும் அமைதி நிலவ வேண்டும். நிறைந்த அறிவும், ஒப்புரவுப் பண்பாடும், கடமையாற்றும் உணர்ச்சியும் உள்ள மக்களினம் வாழ்தலே அமைதிக்குக் காரணம். இல்லத்தில் அமைதி நிலவ, வாழ்க்கைத் துணைவியும், மக்களும், ஏவலாளர்களும், அறிவுநலம் நிறையப் பெற்றவராய், குறிப்பறிந்து செயலாற்றும் திறமுடையராயிருத்தல் வேண்டும்.

ஊரில் அல்லது நகரத்தில் அமைதிநிலவ ஆன்றவிந்தடங்கிய சால்புடைப் பெருமக்கள் பலர் வாழ்தல் வேண்டும். நாட்டில் அமைதி நில அரசியல், அறத்திற்கு மாறுபட்டன செய்யாத நிலையிலே அமைந்திருத்தல் வேண்டும். இங்ஙனம் இருக்கும் நாட்டில், கவலையற்ற இன்ப வாழ்வும் பூரண அமைதியும் நிலவும் என்பதை, “யாண்டு பலவாக நரையிலவாகுதல்” என்று தொடங்குகின்ற புறப்பாட்டு விளக்குகின்றது. தமிழிலக்கியம் காட்டுகின்ற மற்றொரு பண்புநெறி இன்னாதன செய்தாருக்கும் இனியவே செய்தலாம். கேளிர்போல பயின்றோர் நஞ்சு கொடுப்பினும், உண்பர் நனிநாகரிகர் என்று பேசுகிறது தமிழ் இலக்கியம். இப்பண்பாட்டிதைதான் நமது திருவள்ளுவனார்,

“பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்”

என்று கூறி விளக்குகின்றார். உலகம் ஒன்றையே சார்ந்திருக்கின்றது. அந்தச் சார்பு பற்றியே நிலைபெற்றும் இருக்கிறது. அந்த ஒன்றுதான் பண்பாடு. பண்பாடற்ற நிலையில் மக்கள் வாழும் உலகு இருப்பதைவிட அழிவதே நல்லது என்பது திருவள்ளுவர் கருத்து.

“பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுவின்றேல்
மண்புக்கு மாய்வது மன்”

என்பது திருக்குறள். இங்ஙனம் தமிழிலக்கியங்கள், பரந்துபட்ட - விரிந்த நோக்கத்தையும் - ஒப்புரவுப் பண்பையும் வளர்த்து மக்களினத்தையும் அமைதியும் இன்பமும் நிறைந்த - பண்பாட்டிற் சிறந்த பெருவாழ்வு வாழத் துணை செய்து நிற்கின்றன.

இலக்கியமும் கடவுள் நெறியும்

தமிழ்ப் பெருமக்களது அறிவு, உணர்ச்சி, தெளிவு முதலியன குறைவறப் பொருந்திய வாழ்க்கையின் அனுபவத்தினின்று எழுந்ததுதான் கடவுட் கொள்கை.

தமிழ்க்குடியினர் மிகப் பழங்காலந் தொட்டே, நெஞ்சம் தோய்ந்த சமயவாழ்க்கை வாழ்ந்து, கடவுள் வழிபாட்டில் ஈடுபட்டிருக்கின்றனர். தாம் கண்ட கலைகள் அனைத்தையும், இசை கூத்து, ஒவியம், சிற்பம், இலக்கியம்) கடவுள் நெறியின் சார்பில் நின்று, வளர்த்து, வளம்படுத்தி, இறையருட்பணிக்கே பயன்படுத்தினர். தமிழிலக்கியங்கள் அனைத்திலும், கடவுள் நெறியும், வழிபாட்டுணர்ச்சியும் உயிர்நிலையாக அமைந்து கிடக்கின்றன.

பழங்காலத் தமிழ்ப்பெருமக்கள் நகரமனைய பெருங்கோயில்களை மூவா முழுமுதற்பொருளுக்கு எடுத்திருக்கின்றனர். ஏறக்குறைய இற்றைக்குப் பதினாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே, கடல் தென்குமரி நாட்டிலே, நகரமனைய திருக்கோயில் இருந்ததாகத் தெரிகிறது. பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்பானைக் காரிக்கிழார் என்னும் தமிழ்ப்புலவர் பாடுகின்றார். தமது பாடலின்மூலம் அம்மன்னனுக்கு நல்லுணர்வு கொளுத்துகின்றார். யாருக்கும் தாழாத கொற்றக்குடை தாழ்க என்று கூறுகின்றார். ஆம். மன்னவனுக்கெல்லாம் மன்னவனாக, பிறவா யாக்கைப் பெரியோனாக விளங்கும் முக்கட்செல்வரின் திருக்கோயிலை வலம் வருவதற்காகக் கொற்றக்குடை தாழ்க என்று செவியறிவுறுத்துகின்றார்.

“பணியிய ரத்தை நின் குடையே முனிவர்
முக்கட் செல்வர் நகர்வலஞ் செயற்கே”

என்பன புறநானூற்று அடிகள். திருக்கோயில்கள் நகரமென்று நவிலப்பெறுகின்ற அளவுக்குப் பரந்து, விரிந்து அகன்றதாக அமைந்திருந்திருக்கின்றன.

கற்றவர்கள் போற்றும் கலித்தொகையிலும் “கடவுட் கடிநகர் என்று திருக்கோயில்கள் பேசப்பெற்றுள்ளன. இன்பமும், துன்பமும் கலந்த வாழ்க்கையிலே, நல்லனவே நாடிக் கைக்கொள்ளச் சாதனமாய் இருப்பது கடவுள் நெறியேயாம். கடவுள் நெறியும், வழிபாட்டுணர்ச்சியும் நல்ல தெளிவினின்று உருவாக்கும் உயர்ந்த நெறிகள். அதனால்தான்் முத்தமிழ்க் காப்பியம் ஆக்கித் தந்த இளங்கோவடிகள் "தெய்வந் தெளிமின் தெளிந்தோர்ப் பேணுமின்” என்று அறவுரை கூறி நம்மையெல்லாம் அருள்நெறியிலே ஆற்றுப்படுத்துகின்றார்.

இன்றைய நிலை

இன்று தமிழன்பும், தமிழார்வமும் மக்களிடையே அரும்பி மலர்ந்திருக்கிறது. ஆனால், பழந்தமிழ்க் கொள்கைக்கு முரண்பட்ட நிலையில் ஒரு சாரார் தமிழை வளர்க்க, தமிழர் நிலையை உயர்த்தப்பாடுபடுகின்றனர். தமிழ்வேறு, சமய நெறிவேறு என்று கருதுகின்றனர். வாழ்க்கை வேறு, சமயநெறிவேறு என்று கருதுகின்றனர். தமிழருக்கே உரிய சமய நெறியினைப் பிறருடையது என்று தவறாகக் கருதுகின்றனர். தமிழினத்தின் குருதியிலே கலந்து படிந்திருக்கின்ற சமயப் பண்பினை வேண்டாதன என்று கருதுகின்றனர். சமுதாயத்தின் பொது நிலையங்களாக, உணர்வூட்டும் நிலையங்களாக, கலைவளர்சுடங்களாகக் காட்சியளிக்கும் திருக்கோயில்களைப் புறக்கணிக்கின்றனர். புலவர் பெருமக்களது இலக்கியங்களையெல்லாம், தமது அறிவின் திறத்திலேயே நின்று, ஒவ்வாமை கண்டு இழித்துப் பேசுகின்றனர். திருவள்ளுவரது திருக்குறளிலும் கூட முழுதும் கொள்ளத்தக்கது இல்லை, அதிலும் வேண்டாதன உண்டு என்று சொல்லுகின்ற அளவுக்கு ஒரு சில தமிழர்கள் வந்துவிட்டதை என்னென்று கூறுவது? இதுவா தமிழன் நிலை? இந்த நிலை வளருமானால் தமிழ் வளருமா? தமிழினம் தலைநிமிர்ந்து வாழ முடியுமா? “நல்ல புத்தகத்தை அழித்தல் கொடுமையிலும் கொடுமை" என்று மகாகவி மில்டன் கூறுகின்றான். எனவே, பண்டைத் தமிழ் இலக்கியங்களைப் பாங்குறப் படித்து, வாழ்க்கையில் அமைத்துக் கொள்ள வேண்டியது தமிழரின் கடமை; தலையாய கடமை.

{[larger|நமது கடமை}}

தமிழ்நாடு தனிநாடாக ஆகும் காலம் விரைவில் வருகிறது. தமிழர் தனித்த நாடு பெறுவதோடு அமைதி கொள்வது கூடாது. தனி வாழ்வு, பொதுவாழ்வு இரண்டிலும் தமிழ்மொழி சிறந்த இடம் பெறச் செய்ய வேண்டும். தமிழர்களது வீட்டிலே, மன்றங்களிலே, அரசியலிலே ஆலயங்களிலே எங்கும் தமிழ் முழக்கம் கேட்கப் பெற வேண்டும்.

"வினையே ஆடவர்க்கு உயிரே" என்ற தத்துவ வழிநின்று, உழைப்பால் தமிழகத்தை செல்வங்கொழிக்கும் திருநாடாக ஆக்குதல் வேண்டும். தமிழகத்து மக்கள் அனைவரும், பண்டைத் தமிழ் இலக்கியங்கள் காட்டும் நல்லற நெறிகளைத் தெரிந்து கொண்டு, வாழ்க்கையில் அமைத்துக் கொள்ள வேண்டுவன எல்லாம் செய்ய வேண்டும். அதாவது, நகரங்களிலும், கிராமங்களிலும், நல்ல தொண்டர்களைக் கொண்டு, தமிழ் நாகரிக வாழ்க்கையினைப் பரப்பி வளர்க்க வேண்டும்.

கலை, கலைக்காக என்னும் கொள்கை தமிழர்க்கு உடன்பாடற்றது. கலை வாழ்க்கைக்கே என்பது தமிழர் கொள்கை. ஆதலால், இன்பத் தமிழிலக்கியங்கள்காட்டுகின்ற ஒப்பற்ற அறப்பெருவாழ்வு நெறியில் வாழ்வோமாக, தமிழர் தன் மொழியை வளர்க்கும் முயற்சியில் ஈடுபடுகின்றபொழுது, குறுகிய நோக்கத்தில் தளைப்படா வண்ணம், பிறமொழிகளையும் பேணி, அவற்றின் பண்புகளையும் தழுவிக் கைக் கொண்டு தன் மொழி வளர்ச்சிக்குப் பயன்படுத்துவார்களாக.

அதுபோலவே, சமுதாய உணர்ச்சியோடு, உலக மக்கள் அனைவரையும் உடன்பிறந்தாராகக் கருதிப் பேரன்பு செய்வார்களாக.

தொகுப்புரை

இதுவரையில் இனிமை நலம் மிகப் பெற்றும் இலக்கிய வளம் நிறையப்பெற்றும் சிறந்து விளங்குகிறது. செந்தமிழ் மொழி என்பதையும், மக்களை அன்பு நெறியிலும், அறநெறியிலும் அழைத்துச் சென்று இன்பம் பயக்கின்ற திறமுடையனவே நல்ல இலக்கியங்கள் என்பதையும், தமிழ் இலக்கியங்கள் பரந்துபட்ட விரிந்த மனப்பான்மையையும், அமைதியும், இன்பமும் அளிக்கக் கூடிய நெறிமுறைகளையும், இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யும் பண்பாட்டினையும் கூறி விளக்கி, ஒழுக்கத்திற்கும், நல்லின்பத்திற்கும் பெருந்துணையாக இருக்கும் சமய நெறியினையும், வழிபாட்டுணர்வினையும் வளர்க்கின்றன என்பதையும், இன்றைய தமிழகத்திலே, பண்டைத் தமிழ் இலக்கியங்களுக்குப் புறம்பான கருத்துக்கள் பேசப்பெறுவது தனித் தமிழ் நாகரிகத்திற்கு மாறுபட்ட செயல் என்பதையும் நினைவிற்குக் கொண்டுவந்து, தமிழர் தமது இயல்பு தெரிந்து பண்டைப் பெருமக்கள் வாழ்ந்த பெருவாழ்வினை வாழ வேண்டும் என்பதையும், தமிழர் குறுகிய பல வெறுப்புணர்ச்சிகளுக்கும், சாதிப் பிணக்குகளுக்கும் ஆளாகக் கூடாது என்பதையும் கூறி வந்தோம்.
-----------
முடிப்புரை

பேரன்புடையீர்!

பண்டு தமிழர் வாழ்ந்த நிலை, இடையில் வாழ்ந்த நிலை, இன்று வாழும் நிலை ஆகியவற்றைச் சிந்தித்துப் பார்ப்போம். சிந்தனையின் பயனாக, தளர்ந்துள்ள தமிழ்க்குடியினர் பீடுடைப் பெருவாழ்வு வாழ வேண்டுவன செய்வோமாக. தமிழ்நாடு வாழ, தமிழர் நிலை உயர, தமிழ்மொழி சிறப்புற, தமிழ்ப் பண்பாடு மலர, பல துறைகளிலும் பணியாற்றி வருகின்ற தமிழரசுக் கழகத்தினரைப் பாராட்டுகின்றோம். தமிழ்த் தொண்டே தவத்தொண்டு என்று எண்ணி, இலக்கியத் துறையில் பணியாற்றும் அன்பர் திரு. ராபி. சேதுப்பிள்ளை அவர்கள் இவ்விலக்கிய மாநாட்டின் தலைவராக இருப்பது மிகவும் பொருத்தமானதொன்று.

இந்த வாழ்த்துரை வழங்குகின்ற உணர்விற்கு இளமைக் காலத்திலேயே வித்திட்ட பெருமை திரு.பிள்ளை அவர்களுக்கு உரியது. மாநாட்டைத் தொடங்கி வைக்கும், கலை வளர்க்கும் செல்வர் செட்டிநாட்டரசர் அவர்களுக்கு நமது வாழ்த்து. பன்மொழிப் புலமையோடு அன்றி, பண்பிற் சிறந்த பேருள்ளம் படைத்து, நாளும் நல்லனவே நாடிச் செய்யும் திருத்தொண்டர் திரு. தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் அவர்கள் முன்னிற்கக் கூட்டப் பெற்றுள்ள இம்மாநாடு, தமிழ் மக்களிடையே நல்ல ஒரு புத்துணர்ச்சியை ஊட்டுவிக்கும் என்று நம்புகின்றோம்.

சென்னையில் தமிழரசுக் கழகத்தினர் நடத்திய தமிழிலக்கிய மாநாட்டில் தவத்திரு அடிகளார் ஆற்றிய வாழ்த்துரை.
---------------

பின்னிணைப்பு -1
இதயத்துடிப்பின் எதிரொலி
- ம.பொ. சிவஞானம்

குன்றக்குடி அடிகளாரின் சொற்பொழிவுகளைத் தொகுத்து வெளியிட்டுள்ள இந்நூலைப் படித்தேன். இது வெறும் எழுத்தோவியமன்று. அடிகளாரின் இதயத் துடிப்பின் எதிரொலி எனலாம். அவருடைய தமிழ்ப்புலமையும், வாதத்திறமையும் இந்நூலில் வெளிப்படுகின்றன. சமயமும், தெய்வ நம்பிக்கையும் தோன்றிய முதல் நிலம், “தமிழ்நிலம்" என்பது எனது நம்பிக்கை.

சமயமும், கடவுள் உணர்வும் பிற்காலத்தில் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். தற்காலத்திலும் சமயத்துறைகளில் குற்றங்குறைகள் இருக்கலாம். ஆயினும் அத்தகு குறைகளையே பெரிதாக எண்ணி கடவுள் உண்மையை மறுப்பது, ஒழுக்கத்தை மறுப்பதாகும்.

குன்றக்குடி அடிகளார் நடமாடும் சமயக் கல்லூரியாக விளங்குகின்றார். கடவுள் “இல்லை" என்று சொல்லத் துணிவது சுலபம். மக்கள் அரைகுறை விழிப்புப் பெற்றுள்ள இந்நாளில் கடவுள் “உண்டு” என்ற கொள்கையை நிலைநாட்டுவது கடினம். இந்தக் கடினமான வேலையை அடிகளார் மேற்கொண்டுள்ளார். கடினத்தை எளிதாக்கும் ஆற்றல் அவருக்கு இருக்கிறது. நாத்தீகத்தை எதிர்த்து வாதாடும் இடங்களில் அடிகளாரின் வாயில், வழுக்கியும் வன்சொல் இடம் பெறவில்லை.

குன்றக்குடி அடிகளார் என்னைப் பெரிதும் கவர்ந்து விட்டார். அவருடைய எளிய தொண்டும், இனிய பேச்சுமே என்னைக் கவர்ந்ததற்குக் காரணங்களாகும். போலி வைதீகத்தை அவர் வெறுக்கிறார். அதுபோலவே, புரட்டு நாத்தீகத்தையும் அவர் எதிர்க்கிறார். இரண்டுக்கும் அப்பாற்பட்டுள்ள உண்மை ஆத்தீகத்தையே அவர் பரப்பி வருகிறார். அடிகளாரின் தொண்டுக்கு எனது மனமார்ந்த பாராட்டு.

இந்நூலை, ஒவ்வொரு தமிழரும் - ஏன்? - ஆத்திகர் நாத்திகர் ஆகிய இரு தரப்பாருமே வாங்கிப் படிக்க வேண்டும். இது எனது வேண்டுகோள்.
__________________
தமிழகத்தில் அடிகளார் என்னும் தலைப்பில், மதுரை ஸ்ரீநவநீதகிருஷ்ணன் பஜனைக்கூடக் குழுவினர்வாயிலாக இவ்வுரைகள் நூல்வடிவானபோது எழுதிய அணிந்துரை. (01.11.1953)
--------

பின்னிணைப்பு - 2

தமிழ்மாமுனிவர் அருள்நெறித்தந்தை தவத்திரு
குன்றக்குடி அடிகளார் வாழ்க்கைக் குறிப்புகள்


ஆண்டு நிகழ்வுகள்
1925 தோற்றம்
பூர்வாசிரமம்: தந்தையார்: திரு. சீனிவாசம்பிள்ளை
தாயார் : திருமதி. சொர்ணத்தாச்சி
பிள்ளைத் திருநாமம்: அரங்கநாதன்
தோற்றம் பெற்ற ஊர்: தஞ்சை மாவட்டம்
திருவாளப்புத்தூர் அருகேயுள்ள நடுத்திட்டுக் கிராமம்.
1931–36 சிதம்பரம் அண்ணாமலை நகரில் வாசம்.
சொல்லின் செல்வர் ரா.பி. சேதுப்பிள்ளை, நாவலர் நாட்டார், சுவாமி விபுலானந்தர் ஆகியோர் தொடர்பு.
1937ー42 தமையனார் திரு. கோபாலகிருஷ்ண பிள்ளை வீட்டில் கடியாபட்டியில் வாழ்தல்.
1942 பள்ளியிறுதித் தேர்வு எழுதுதல்.
1942 விடுதலைப்போராட்டத்தில் ஈடுபாடு. "வினோபாவே படிப்பகம்” தொடங்கி நடத்துதல்.
1945 தருமபுரம் ஆதீனம் 25ஆவது குருமகாசந்நிதானம்
கயிலைக்குருமணி அவர்களிடம் கந்தசாமித்தம்பிரான் என்ற தீட்சாநாமத்துடன் தம்பிரானாதல்.
தருமபுரம் ஆதீனம் தமிழ்க்கல்லூரியில் பயிலுதல்.
1947-48 சீர்காழிக் கட்டளைத்தம்பிரான்-திருஞானசம்பந்தர் திருமடம் தூய்மைப்பணி: திருமுறைவகுப்பு, விழா நடத்துதல்.
1949 1949 குன்றக்குடித் திருவண்ணாமலை ஆதீனத்தின் இளவரசு
1951 காரைக்குடிக் கம்பன் விழாவில் புதரிடை மலர் என்ற தலைப்பில் அறிஞர்களின் நெஞ்சம் கவர்ந்த சொற்பொழிவு
1952 குன்றக்குடித் திருவண்ணாமலை ஆதீனத்தின் 45-ஆவது குருமகாசந்நிதான்மாக எழுந்தருளல்.
அருள்நெறித்திருக் கூட்டத்தோற்றம்
"மணிமொழி” என்னும் பெயரில் இயக்கப்பத்திரிகை வெளியிடல்.
1953 ஆதீனத்தின் அருளாட்சியிலுள்ள பிரான்மலைத் திருக்கோயில் சித்திரைத் திருவிழாவின்போது (சங்ககால வள்ளல் பாரி வாழ்ந்திருந்த மலையில்) "வள்ளல் பாரி விழா” தொடங்குதல்.
பல்லக்கில் பட்டணப் பிரவேசம் வருதலைத் தவிர்த்தல்.
இலங்கைப் பயணம்- இரண்டுவாரச் சுற்றுப் பயணம்.
1954 இராசாசிதலைமையில் தேவகோட்டையில் அருள்நெறித் திருக்கூட்டமாநாடு.
திராவிடர் கழகத்தலைவர் பெரியார் சந்திப்பு.
தாய்லாந்து, இந்தோசீனா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் (3 திங்கள்)
1955 அருள்நெறித் திருப்பணி மன்றம் தொடங்குதல்.
"தமிழ்நாடு" நாளிதழ் தவத்திரு குன்றக்குடி அடிகளார் என்ற பெயரை அறிமுகப்படுத்துதல்.
1956 அறிஞர் அண்ணா குன்றக்குடித் திருமடத்திற்கு வருகை.
ஆச்சார்ய வினோபாவே திருமடத்திற்கு வருகை.
1958 குன்றக்குடியில் உயர்நிலைப்பள்ளி தொடங்குதல்.
1959 ஆ. தெக்கூரில் பள்ளிச் சீரமைப்பு மாநாடு நடத்துதல்.
பாரதப்பிரதமர் நேரு மாநாட்டிற்கு வருகை.
1960 மத்தியசேமநலக் குழு உறுப்பினராதல்.
1962 சீனப்போரின்போது தங்க உருத்திராட்ச மாலையைத்
1965 இந்தி எதிர்ப்புப் போராட்டம், அரசு வழக்குத் தொடர்தல்.
1966 தமிழ்நாடு தெய்வீகப் பேரவை தோற்றம்
1967 திருப்புத்தூர்த்தமிழ்ச்சங்கம் தோற்றம்.
திருக்கோயில் கருவறைக்குள் சீலமுடைய அனைவரும் சாதி வேறுபாடின்றி திருமுறைநெறிப்படி-போதொடு நீர் சுமந்தேத்தி வழிபாடு செய்வதெனத் திருப்புத்தூர்த் தமிழ்ச்சங்கம் தீர்மானம் நிறைவேற்றுதல்.
1968 இரண்டாம் உலகத்தமிழ்மாநாடு-"திருக்குறள் உரைக்கோவை" நிகழ்ச்சிதொடக்கவுரை நிகழ்த்தல்-
திருக்குறள் இந்திய மாநாட்டின் தேசிய நூலாக வேண்டுமென்று இம்மாநாட்டில் வலியுறுத்தல். இலங்கைப் பயணம். இரண்டு வாரங்கள், இலங்கை யாழ்ப்பாணத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் திருக்கோயில் நுழைவுக்காக உண்ணாநோன்பிருத்தல்.
கீழவெண்மணித் தீவைப்பு நடந்த இடத்தைப் பார்வையிட்டுப் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறுதல். புத்தாடை வழங்குதல்.
1969 பாபநாசம் பொதிகையடி திருவள்ளுவர் தமிழ்க்கல்லூரி ஏற்பு.
கலைஞர் மு. கருணாநிதி பாரி விழாவிற்கு வருகை. கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் விருப்பத்தின் வழி தமிழ்நாடு சட்டமன்ற மேலவை பொறுப்பேற்றல்.
தமிழ்நாடு தெய்வீகப் பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பெறல்.
1970 சட்டமன்றமேலவையில் இந்து அறநிலையத்திருத்த மசோதா-
சாதி வேறுபாடின்றி அனைவரையும் அர்ச்சகராக நியமனம் செய்தல்பற்றிப் பேசுதல்.
1971 தமிழ்நாடு சமாதானக் குழுத் தலைவராதல்.
1972 பாபநாசம் பொதிகையடி திருவள்ளுவர் தமிழ்க்கல்லூரி,
திருவள்ளுவர் கலைக்கல்லூரியாக உருவாதல். சென்னை, மயிலாப்பூர்திருவள்ளுவர் திருக்கோயில் திருப்பணிக்குழுத் தலைவராக நியமனம். வள்ளுவர் கோட்டம் திருப்பணித் தலைவராக நியமனம்.
குன்றக்குடித் தருமைக் கயிலைக் குருமணி உயர்நிலைப் பள்ளிக்குப் புதிய இடத்தில் கட்டடம் கட்டித்திறத்தல்.
1973 திருக்குறள் பேரவைத்தோற்றம்
திருச்சியில் தமிழ்நாடு தெய்விகப் பேரவை இரண்டாவது மாநிலமாநாடு நடத்துதல்.
"கோயிலைத் தழுவிய குடிகளும் குடிகளைத் தழுவிய கோயிலும்” என்ற முழக்கம் நாட்டளவில் வைக்கப் பெற்றது.
1975 நாகர்கோவிலில் தமிழ்நாடு தெய்விகப் பேரவை
மூன்றாவது மாநில மாநாடு நடைபெறல்.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் சொர்ணாம்மாள் அறக்கட்டளைச் சொற்பொழிவு.
மதுரை காமராசர் பல்கலைக்கழகம் ஏ.பி.சி வீரபாகு சைவசித்தாந்த அறக்கட்டளைச்சொற்பொழிவு.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் சொர்ணாம்மாள் அறக்கட்டளைச்சொற்பொழிவு.
இராமநாதபுரம் இனக்கலவரம்- அமைதிப்பணி.
1982 குமரி மாவட்டம் மண்டைக்காடு கலவரம் - அமைதிப் பணியாற்றல்.
மண்டைக்காடு அமைதிப்பணி பற்றிச் சட்டமன்றத்தில் முதல்வர் மாண்புமிகு எம்.ஜி.ஆர் பாராட்டுதல்.
திருவருட்பேரவை தொடங்குதல்.
மலேசியா, கொரியா, ஹாங்காங், ஜப்பான், செஞ்சீனா முதலியநாடுகளில் சுற்றுப்பயணம்.
புளியங்குடி இனக்கலவரம்- அமைதிப்பணி.
1984 பாரததலமை அமைச்சர் திருமதி. இந்திராகாந்தி
1985 நடுவணரசு திட்ட ஆணைக்குழுப் பிரதிநிதிகள் குன்றக்குடி வருகை.
கிராம வளர்ச்சிப் பணிகளைப் பார்வையிட்டுப் பாராட்டுதல்.
பசும்பொன் முத்துராமலிங்கம் மாவட்டம் வளர்ச்சிப் பணிக்குத் திட்டக்குழு அமைத்தல்
மணிவிழா.
1986 தமிழ்நாடு அரசின் முதல் திருவள்ளுவர் விருது பெறுதல்.
இந்திய அரசு திட்டக்குழு குன்றக்குடித் திட்டப்பணியைப் பாராட்டி. “Kundrakkudi Pattern” என்று அறிவித்தது.
1989 இவர் எழுதிய"ஆலயங்கள் சமுதாய மையங்கள்” என்னும் நூல் தமிழ்நாடு அரசின் முதற்பரிசு பெற்றது.
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் (D.lit) பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.
1991 இந்திய அரசின் அறிவியல் செய்தி பரப்பும் தேசியக்குழு தேசிய விருது வழங்கிச் சிறப்பித்தது.
இலண்டன், அமெரிக்கா சுற்றுப்பயணம், அரபுநாடுகள் பயணம்.
1993 மதுரை காமராசர் பல்கலைக்கழகம் "தமிழ்ப்பேரவைச் செம்மல்" விருது வழங்கிச் சிறப்பித்தது.
1995 இறைநிலையடைதல்.
------------------


This file was last updated on 6 Jan 2024.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)